[] [cover image] ஒரு மாமரமும் மரங்கொத்திப் பறவைகளும் சு.சமுத்திரம் FreeTamilEbooks.com CC0 ஒரு மாமரமும் மரங்கொத்திப் பறவைகளும் 1. ஒரு மாமரமும் மரங்கொத்திப் பறவைகளும் 1. Source 2. Acknowledgements: 3. அணிந்துரை 4. பதிப்புரை 2. ஐம்பெரும் விழா 3. பின்னோக்கிய ஒட்டம் 4. கண்ணுக்குத் தெரிந்த கிருமிகள் 5. மதில் மேல் பூனை 6. ஏவல் பூதங்கள் 7. நிசங்களை விழுங்கிய நிழல்கள் 8. எதிர் பரிணாமம் 9. ஏகலைவன்களைத் தேடி 10. புலித்தோல் போர்த்திய மாடுகள் 11. பொறுத்தது போதாது 12. அன்னை இட்ட தீ 13. ஒரு மாமரமும் மரங்கொத்திப் பறவைகளும் ஒரு மாமரமும் மரங்கொத்திப் பறவைகளும் ஒரு மாமரமும் மரங்கொத்திப் பறவைகளும்   சு.சமுத்திரம்   தமிழாக்கம் -       மின்னூல் வெளியீடு : FreeTamilEbooks.com   உரிமை : CC0 கிரியேட்டிவ் காமன்ஸ். எல்லாரும் படிக்கலாம், பகிரலாம்.   மின்னூலாக்கம் - லெனின் குருசாமி - guruleninn@gmail.com   This book was produced using pandoc   பதிவிறக்கம் செய்ய - http://FreeTamilEbooks.com/ebooks/Oru_Maamaramum_Marangkothi_Paravaigalum} Source ஒரு மாமரமும் மரங்கொத்திப் பறவைகளும் (சிறுகதைத் தொகுப்பு) சு.சமுத்திரம் முதற்பதிப்பு: மே, ’96 கணிப்பொறி அச்சு: தாமரை பாலன் இல்லம், சென்னை- 17 நூல் ஆக்கம்: பாரி ஆப்செட் அச்சகம், சென்னை - 13 . ஏகலைவன் பதிப்பகம், 9, இரண்டாவது குறுக்குத் தெரு. டாக்டர் ராதாகிருஷ்ணன் நகர், சென்னை. 600 04. விலை Rs..40 Acknowledgements: Our Sincere thanks go to the Chennailibrary.com for providing an electronic version of this work for the etext preparation. Preparation of HTML and PDF versions: Dr. K. Kalyanasundaram, Lausanne, Switzerland. © Project Madurai, 1998~2015. Project Madurai is an open, voluntary, worldwide initiative devoted to preparation of electronic texts of tamil literary works and to distribute them free on the Internet. Details of Project Madurai are available at the website http://www.projectmadurai.org/ You are welcome to freely distribute this file, provided this header page is kept intact அணிந்துரை கோவை ஞானி (கி.பழனிச்சாமி) (30.4.1996) “ஒரு கோட்டுக்கு வெளியே” ,“ஊருக்குள் ஒரு புரட்சி”, ஆகிய நாவல்கள் மூலம் தமிழ் நாவல் இலக்கியத்தில் அடித்தள மக்களின் சமூக நீதிக்கான ஆவேசக் குரலாய் தமிழ் வாசகர்களின் நெஞ்சில் இடம் பிடித்தவர் சு.சமுத்திரம் அவர்கள். இவரது படைப்புக்களில் கலைத்தன்மைகுறைவாக இருக்கிறது என்ற முறையில், நான், இவரது படைப்புகளை விமர்சனம் செய்திருக்கிறேன். இறுதியாக வந்த “வாடாமல்லி” நாவல் இக்குறையை பெருமளவில் போக்கியதைக் கண்டு மகிழ்ச்சி அடைகிறேன். அயோத்தி மசூதி தகர்ப்பை அடுத்து, இந்தியாவில் எழுந்த கலவரங்களை மையப்படுத்தி அவர் எழுதிய “மூட்டம்” நாவல் காலத்தினால் செய்த நன்றி என்ற முறையில் நம் போற்றுதலுக்கு உரியது என்பதில் ஐயமில்லை. முற்போக்கு வட்டாரத்தின் முன் வரிசையில் உரிமையோடும், தகுதியோடும் இடம்பெற்றிருக்கும் சமுத்திரம் அவர்கள்,தமிழில் தலீத் இலக்கிய வரிசையிலும் தகுதியோடு இடம்பெறத்தக்கவர். ஏகலைவன் பதிப்பகத்தின் வெளியீடாக வரும், “ஒரு மாமரமும் மரங்கொத்திப் பறவைகளும்” என்ற இந்தச் சிறுகதைத் தொகுப்பு, தமிழ் மக்கள் ஏன் இப்படி வரலாற்றில் தாழ்வுற்று, அடிமைப்பட்டு, அழிந்து கொண்டிருக்கிறார்கள் என்ற பிரச்சினையை முன் நிறுத்துகிறது. தமிழ் மக்களின் அண்மைக் கால அவலம் பற்றி, வேதனையோடு, நெஞ்சப் பொருமலோடு, சமுத்திரம் இந்தக் கதைகளின் மூலம், தமிழ் மக்களின் நெஞ்சோடு உரையாடுகிறார்…. இத்தொகுப்பில் உள்ள பன்னிரண்டு கதைகளில் ஐந்து கதைகள், மேற்கூறியவாறு தமிழ் மக்களின் அவலம் பற்றிப், பேசுகின்றன. அசலான “தமிழ்த்தாய்” விரட்டப்பட்டு, போலித் தமிழ்தாய் அரியணையில் ஏறி அமர்ந்திருக்கிறாள். தமிழ் மக்கள், அவள் காலடியில் தலை வைத்துப் புரள்வதைச் சித்தரிக்கிறார். தமிழ்நாடு என்ற மாமரத்தின் கிளைகளிலும், அடிவாரத்திலும், மரங்கொத்திகள் ஏறி அமர்ந்து, கொத்திக் கொத்தி கிளைகளுக்குள்ளும், அடிமரத்திலும், சுரங்கம் போட்டிருக்கின்றன. மாமரம் கையறு நிலையில் கதியற்று புலம்பித் தவிக்கிறது. தமிழ் மக்கள் ஏன் இப்படி ஆனார்கள்.? தெய்வத்தாயின் திருவுருவ ஒவியத்தில் கையில் இருந்து, குங்குமம் கொட்டுகிறது. தலைவர்கள் போற்றித் திருவகவல் பாடுகிறார்கள்…. இப்படி தமிழ் மக்கள் அவலம்பற்றி உருவகமாக சித்தரிக்கும் இக்கதைகள் தமிழன் இப்படி ஏன் தாழ்ந்தான்,என்ற கேள்வியையும் எழுப்புகின்றன. வீரம், வெற்றிக் களிப்பாகத் தொடங்கி, பிறகு ஆணவமாக, ஆர்பாட்டமாக மாறி, இதன் மூலம், வெற்று ஆரவாரமாகி, இறுதியில் மனிதாபிமானம் அற்று, தன் பலவீனத்தைக் தானே காண இயலாமல் போய், தமிழர்கள் ஆழ்ந்து போயிருக்கிறார்கள் என்று சமுத்திரம் சித்தரிக்கிறார்… தமிழ் மக்களின் அவலம் என்ற உணர்வை, நமக்குள் பதிக்கும், ஐந்து கதைகளை மையப்படுத்தி, இந்தத் தொகுப்பை வாசிக்கும்போது,இந்த தொகுப்பில் உளள, பிற ஏழு கதைகளும், இதே தளத்தில் வந்து விடுகின்றன, என்பதை கவனத்தோடும், தமிழ் மக்களின் அவலம் பற்றிய கரிசனத்தோடும், வாசிக்கும் நண்பர்கள் உணரமுடியும். இத்தொகுப்பின் தனித்தன்மை என இப்பண்பை நாம் வெகுவாகப் பாராட்ட முடியும். சிறப்பாக விழாக் கொண்டாடுவதன் மூலம், ஊர்ப் பணத்தை நாசப்படுத்துகிறார்கள் காடசாமி, மாடசாமி என்பவர்கள். நீதிக்காக போராடும் பழனிச்சாமி, கடல்மணி போன்றவர்கள் நடுத்தெருவில் தவிக்கிறார்கள், சாகிறார்கள். வாச்சாத்தியின் அவலக் கதையை காமக் கதையாக, திரைப்படக் கலைஞன் மாற்றுகிறான். தமிழ் மக்களின் மேன்மையை நெஞ்சில் நிறுத்திய தமிழ் எழுத்தாளன் மனம் வேகிறான்…ரேசன் கடையின் ஊழலைத் தட்டிக் கேட்க, போர்க் குணத்தோடு, கிளம்பும் பெண்கள், திரைப்பட நாயகர்கள், பற்றிய கிசுகிசுப்பில் மனம் இழந்து, போர்க் குணம் மறந்து, எளிமைப்பட்டு மயங்கிக் கிடக்கிறார்கள். இப்படிப்பட்ட கதைகளின் மத்தியில், வித்தியாசமான கதை, “ஏகலைவனைத் தேடி’; ஏகலைவனின் கட்டை விரலை வெட்டியதன் மூலம், துரோணர் உழைக்கும் மக்களின் மாண்பை அழித்தார்.தலீத்மக்களை தந்திரமாக ஒடுக்கினார் என்று படிக்கிறோம், ஆனால், அர்ச்சுனன், துரோணரின் உதவியோடு, இந்தச் சதியை செய்து முடிக்கிறான் என்பது இந்தக் கதை. இதே கதையில், இன்னொரு கோணத்தையும் சிறப்பாக முன் வைக்கிறார் சமுத்திரம். துரோணரையும், ஏகலைவனையும், எதிர்நிலைகளில் நிறுத்தியபடி, கதையின் கோணம் மாறுகிறது. இந்தக் கதையில், அர்ச்சுனனும், ஏகலைவனும், எதிர் நிலையில் காண்பிக்கப் படுகிறார்கள்…காவடி ஆட்டத்தில் தேர்ந்த கலைஞன் முருகன், திறமைசாலிதான். சந்தேகத்திற்கு இடமில்லை. திறமைமோடு திமிர்த்தனமும் சேர்ந்து விடுவதால், விழாவின் நிர்வாகிகளை எதிர்த்தும் நிற்கிறான். நாமும் ரசிக்கிறோம். அதே சமயம், தன் வெற்றிக்கு துணை வரும், சக கலைஞர்களை, இவன் கலைஞர்களாக மதிக்கவில்லை… தன் வெற்றிக்காக அவர்களை உரமாக்குகிறான். ஏகலைவர்களாக ஆக்குகிறான். இப்படி உரமாக்கி, உறுதி அழித்து அர்ச்சுனனாய் முன்னுக்கு நிற்கிறான்… இக்கதையின் கோணம், பிரச்சனைக்கு உரியது மட்டுமல்ல…. ஆழ்ந்த புரிதலுக்கும் உரியது…. திரட்சியான கதைகள்.செறிவும் அழகும் சேர்ந்த தமிழ்நடை. வகை வகையான உத்திகள். எல்லாவற்றிற்காகவும் பாராட்டுக் குரியவர் சு.சமுத்திரம். போலித்தமிழ்த்தாயின் அக்கிரமங்களை துணிவோடு, தமிழ் இலக்கியத்தில் பதித்தவர் என்ற முறையிலும், சு.சமுத்திரம் பாராட்டுக்குரியவர். இம்முறையில், நமது கால வரலாற்றை, அக்கறையோடு, அழுத்தமாக, தமிழ்ச் சிறுகதை இலக்கியத்தில் பதித்திருக்கிறார். தேர்தல் நெருங்கும் சமயத்தில் எழுதப்பட்ட கதைகள் அல்ல இவை. பல மாதங்களுக்கு முன்பே எழுதப்பட்ட கதைகள் இத்தொகுப்பில் உள்ளன. சமுத்திரத்தின் துணிவு, வீரம் பாராட்டுக்குரியது. தமிழ் வாசகர்கள், இதனையும் கண்டு கொள்வார்கள் என்பதில் ஐயமில்லை. மேலும், தமிழர்களில் அர்ச்சுனர்களாகிய சிலர், பெரும் பான்மையான தமிழ் மக்களை ஏகலைவர்களாக மாற்றி, அவர்களை ஏணிப்படிகளாக்கி, உயரத்தில் நிற்கிறார்கள் என்ற முறையிலும் இக்கதைகளை வாசிக்கலாம்… பதிப்புரை ஏகலைவன் பதிப்பகத்தின், இரண்டாவது வெளியீடு இந்தச் சிறுகதைத் தொகுப்பு. சு.சமுத்திரத்தின் “எனது கதைகளின் கதைகள்”, முதல் வெளியீடாக வந்துள்ளது. எங்கள் பதிப்பகத்திற்கு, ஏகலைவன் பெயரை, எதற்காகச் சூட்டினோம்,என்பதைச் சொல்ல வேண்டிய தில்லை. இந்தச் சிறுகதை தொகுப்பில் உள்ள ‘ஏகலைவன்களைத் தேடி’ என்ற சிறுகதை, இந்தப் பெயருக்கு, தக்கதோர் விளக்கமளிக்கும். இந்த ஏகலைவன் பதிப்பகம், தமிழ் இலக்கிய உலகிற்கு, இப்போது தேவைப்படுகிறது. அடித்தள மக்களைப் பற்றி எழுதிய விந்தன் போன்ற மகோன்னத எழுத்தாளர்கள், மேட்டுக்குடியினரால் ஏகலைவன்களாக ஆக்கப்பட்டார்கள். இவர்களுக்குப் பதிலாக, மேட்டுக்குடி மக்களின் ரசனைக்கேற்ப, அடித்தள மக்களின் முதுகில் சவாரி செய்யும், “அர்ச்சுன எழுத்தாளர்கள்” போற்றப்படுகிறார்கள். விந்தனுக்கு ஏற்பட்ட இந்த நிலைமை, சு.சமுத்திரம் போன்ற எழுத்தாளர்களுக்கும் வர இருந்தது. ஆனால், தமிழகத்தில் எண்ணில்லா இலக்கிய ஏகலைவன்களின் பெருவிரல்கள் முஷ்டிகளாகி விட்டதால், சு.சமுத்திரம் போன்றவர்களின் பெருவிரல்கள் பிழைத்துக்கொண்டன. நமது முன்னோன் ஏகலைவனுக்கு ஏற்பட்ட கொடுமையைக் கண்டு சீறிப்பாயும் ஆவேசமாக, இந்தப் பதிப்பகம் உருவாகியிருக்கிறது. ஏகலைவன் பதிப்பகம் உருவாவதற்கு, இன்னொரு முக்கிய காரணமும் உண்டு. தமிழ் மக்களின் இன்றைய அடிமைத் தனத்தை, அவர்களுக்கு சொல்லிக்காட்ட வேண்டும் என்பதே எங்கள் நோக்கம், அன்றைய ஏகலைவன். தனது கட்டை விரலை மட்டுந்தான் கொடுத்தான். ஆனால், இன்றைய தமிழ் ஏகலைவன்களோ, அரசியல்- திரைப்பட கயவாளிகளின் கால்களுக்குள் தலைகளை கொடுத்து குப்புறக் கிடக்கிறார்கள். இவர்களை எழுத்து மூலம், தட்டி எழுப்ப, போராளியாய் புறப்பட்டுள்ளது இந்தப் பதிப்பகம். அடிமைத்தமிழனின் இன்றைய நிகழ்கால வரலாற்று பதிவேடாக, இந்தச் சிறுகதைத் தொகுப்பை வெளியிடுகிறோம். 1974 ஆம் ஆண்டில் தாமரையில், சு.சமுத்திரம் எழுதிய “ஐம்பெரும் விழா” சிறுகதைக்கும், அண்மையில் தமிழன் எக்ஸ்பிரஸில் எழுதிய ‘ஒரு மாமரமும் மரங்கொத்திப் பறவைகளும்’ என்ற சிறுகதைக்கும் இடைப்பட்ட காலத்தில், தமிழன் மேலும், தேய்ந்துகொண்டுதான் இருக்கிறான் என்பதை வாசகர்களே உணர்வார்கள். இந்தச் சிறுகதைத் தொகுப்பிற்கு அணிந்துரை கொடுத்த, கோவை ஞானி அவர்களை நினைத்தால் வள்ளலார் அருளிய, “தோலெலாங் குழைந்திடச் சூழ் நரம்பனைத்தும், மேலெலாங் கட்டவை விட்டு விட்டு இயங்கிட’ என்ற திருவருட்பாவின் கவித்துவ வரிகள் நினைவுக்கு வந்து, எங்களை ஊனுருக வைக்கிறது. முன்னுரையின் அவசரத்தை உணர்ந்து, கண்கள், கரங்களின் இயக்கத்தைச் சரிபார்க்க முடியாத சூழலிலும், சிந்தனை வீச்சு மட்டுமே கரங்களை இயக்க, அரியதொரு அணிந்துரையை எழுதி அனுப்பிய சீரிய சிந்தனையாளர் தோழர் கோவை ஞானி அவர்கள், இந்த பதிப்பகத்தின் நிரந்தரமான நன்றிக்கு உரியவர். ஒரு வாரத்திற்கு உட்பட்ட கால அவகாசத்தில், மெய் வருத்தம் பாராது, அத்தனை கதைகளையும் படிக்கச் சொல்லி, கேட்டு, உடனடியாக தேவைப் படுகிற காரணத்தால், எழுத்துக்களை அனுமானத்தின் பேரில் ஆக்கி, அதை அனுப்பிய அவரது சகோதரத் தோழமைக்குத் தலை வணங்குகிறோம். இந்தத் தொகுப்பிற்கு அழகான, அட்டை படம் ஆக்கித் தந்ததுடன், அரிய யோசனைகளை தந்துதவிய தோழர் இளவேனில், இந்தத் தொகுப்பை, மின் அச்சு செய்து கொடுத்த தாமரை நிர்வாகத்திற்கும், குறிப்பாக தோழர் ஏ.எம்.கோபு அவர்களுக்கும், அவருடன் பணியாற்றும் தோழர்கள் கருத்திருமன், தனசேகரன் ஆகியோருக்கும் எங்கள் நன்றி உரித்தாகும். இவற்றை சரிபார்த்து செப்பனிட்ட, இந்திய அரசின் செய்தி விளம்பர அலுவலரும், இலக்கியத்தில் புலமைமிக்க வருமான நண்பர் தனசேகரன் அவர்களுக்கும் எங்கள் நன்றி உரித்தாகும்.இந்தத் தொகுப்பு பற்றி, வாசகப் பெருமக்கள் ஒருவரி எழுதிப்போட்டால், நன்றியுடையோம். ஏகலைவன் பதிப்பகம், 9 - இரண்டாவது குறுக்குத் தெரு, டாக்டர் ராதா கிருஷ்ணன் நகர், சென்னை. 600 041. ஐம்பெரும் விழா ஊர்க் கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக, அனைவரும் ஐயனார் கோவில் மைதானத்தில் குமைந்தார்கள். பஞ்சாயத்து தலைவர் பரமசிவம், கூட்டுறவு சங்கத் தலைவர், கர்ணம், முன்ஸிப், கல்விக்கூட மானேஜர் உட்பட பல ‘பெரிய தலைவர்கள்’ கூட்டத்தை எதிர்த்தாற்போல், ஒரு ‘கோரம்பாயில்’ உட்கார்ந்திருந்தார்கள். காட்டாம்பட்டி என்று அழைக்கப்படும், அந்த ஊரில் ஒரு வழக்கம். ஊரில் உள்ள ஒவ்வொரு குடும்பத் தலைவரும், மாதாமாதம் பத்து ரூபாய் கட்டி, அப்படிச் சேருகிற மொத்த தொகையை ஏலத்தில் விடுவார்கள். ஏலக் ‘கழிவு’ பொதுப்பணமாகும். இப்படி மாதாமாதம் சேருகிற பொதுப் பணத்தை வருடக் கடைசியில் ஏதாவது ஒரு பொதுக்காரியத்திற்குச் செலவழிப்பார்கள். இந்த ஆண்டு, அவனவன் கிட்டத்தட்ட அசல் அளவுக்கே ஏலம் கேட்டிருந்ததால், மூவாயிரம் ரூபாய் தேறியிருந்தது. அந்த மூவாயிரத்தையும் என்னபாடு படுத்தலாம் என்பதை விவாதித்து, முடிவெடுக்கவே, ‘கூட்டம்’ போடப் பட்டிருந்தது. ‘இந்த மூவாயிரத்தையும், பழையபடி ஏலம் போடணும்’ என்று ஏலத்திலேயே பிழைப்பு நடத்தும் ஒருவர் சத்தம் போட்டார். “சீச்சி! அந்த பேச்சை மாத்திட்டு அடுத்தபேச்சைப் பேசுங்க. நம்ம ஐயனாருக்கு ஜாம்ஜாமுன்னு கொடை குடுக்கணும்” என்றார் கோவில் பூசாரி. இந்த ‘பூர்வாங்க’ ஆலோசனையைப் பற்றி அக்கரைப் படாதது போல், மாடசாமி, காடசாமி, என்ற இரண்டு ‘மஸ்தான்கள்’. ஒருவர் காதை இன்னொருவர் கடித்தார். ரகசியமாய்ப் பேசிக்கொண்டே, சிரித்தும் தொலைத்தார்கள். சமீபத்தில் பாரிஸில் உலக ஜோதிட ஆசாமிகள் கூடி,1985 வாக்கில் உலகில் பேரழிவு ஏற்படலாம் என்று கூறியதை நம்பாதவர்கள் இருப்பதுபோல், காடசாமியும் மாடசாமியும் கூட்டு சேர்ந்தால், ஊரே நாசம் என்பதை நம்பாதவர்கள் உண்டு. அப்படி நம்பாதவர்கள் அந்த இரண்டு ஆசாமிகள் மட்டுந்தான். இருந்தாலும், இந்த மனிதர்களின் விநாசகக்கூட்டால் ஏற்படும் விபரீத விளைவுகளை, ஊர்மக்கள் வேடிக்கை மனப்பான்மையோடுதான் ரசிப்பார்கள். சீரியஸாக எடுத்துக்கொள்வதில்லை. ‘மூவாயிரத்தையும் என்ன செய்யலாம்? சொல்லுங்க நேரமாவுது.’ என்றார் பஞ்சாயத்துப் பரமசிவம். மாடசாமி முன் மொழிந்தார். ’நம்ம ஜனங்களுக்கு… நம்ம பஞ்சாயத்துத் தலைவர் பரமசிவத்தைப் பத்தித் தெரியும்…அவரு. இந்த கிராமத்தில் இருந்து … சென்னைக்குப் போய் வெற்றியோட திரும்பி இருக்காரு… அதுக்கு இந்த ஊர்ப்பணத்தில .ஒரு பாராட்டு விழா வைக்கணும்…" கூட்டத்தில் ஒருவர் எழுந்தார். கூடவே அவர் நாவும் எழுந்தது. “மெட்ராஸுக்குப் போயிட்டு வர்ரது பெரியகாரியமா..? நம்ம ஆளுங்க எத்தனையோ பேரு. மெட்ராஸுக்குப் போயி. அங்கேயே தங்கி. மளிகைக்கடை வச்சிக்கிட்டு இருக்காங்க..இந்த அற்ப விஷயத்துக்கு ஒரு பாராட்டா…” காடாமி எழுந்தார். சென்னைக்குச் சென்று மீளல் அற்ப விஷயமா? கொடுமை கொடுமை!! “அந்த பயலுக மெட்ராஸிலே தங்கிட்டு நம்ம… பட்டியை மறந்துட்டாங்க… (பிரைன் டிரைன்) ஆனால் நம்ம பரமசிவம் சென்னைக்குப்போயி…பல பொதுக்கூட் டங்கள்ல பேசிட்டு. வெற்றியோட திரும்பியிருக்கார்…இதுக்கு பாராட்டு விழா வச்சே ஆகணும்.” “பரமசிவம் பொதுக்கூட்டத்திலே… பேசல கேட்டுட்டுத் தான் வந்திருக்கார், அவ்வளவுதான்” என்றார் ஒருவர். மாடசாமி, சமாளித்தார். “பட்டணத்துல நடக்கிற பொதுக்கூட்டங்கள்ல பேசுறதை விட…அதை கேக்குறத்துக்குத் தான் திறமை வேணும்… பொறுமை வேணும்…இத நம்ம பரமசிவம் செய்திருக்கார். அதுக்கு நாம பாராட்டுவிழா செய்யணும்.” காடசாமிக்கு, ஒரு நல்லமுத்து கேள்விகேட்டான். ’மெட்ராஸ“க்குப் போயிட்டு வர்ரது ஒரு பெரிய விஷயமா? நம்ம மாட்டு வியாபாரி மவன். ரயில்ல.அதுவும் வித்தவுட்ல. போயிட்டு…, எத்தனையோ தடவை பிடிபடாம வந்திருக்கான்…இதுக்கு பாராட்டுன்னா.அதுக்கும் பாராட்டு வேணும்…” பஞ்சாயத்துத் தலைவர் பரமசிவம் கோபத்தை அடக்கிக்கொண்டார். பாராட்டுவிழா இல்லாமல் போயிடுமோ? கூட்டத்தில் ஒருவர் ‘பரமசிவம் ஊரைவிட்டு ஒரேடியா…மெட்ராஸுக்குப் போயிருந்தா பாராட்டு விழா வைக்கலாம்’ என்று அரைகுறையாக முனங்கினார். உடனே மாடசாமி. “என்னவே… சொல்றீரு… சபையில… சத்தம் போட்டுசொல்லும்” என்று சொன்னார். “ஒண்ணுமில்ல…நம்ம பரமசிவம். பட்டணத்தில சிறப்பா என்னத்தப் பார்த்தாருன்னு சொல்லட்டுமே” என்றார். பஞ்சாயத்து பரமசிவம். ‘அதிகப்’ பிரசங்கம் செய்தார். “மெட்ராஸ்ல. ..நல்ல முன்னேற்றம். உதாரணமா… அங்க…செத்தவன.. தேர்ல வச்சி.. ஜோடிக்கிறாக. ..பிறவு… சிலம்பு… மேளம் வச்சி சுடுகாட்டுக்குத் தூக்கிக்கிட்டு போறாங்க. நாம என்னடான்னா. பிணத்தை கட்டிலுல வச்சே சுமந்துக்கட்டுப் போறோம்… அதனால…நாமும், செத்தவன. ..தேர்ல வச்சித்தூக்கி சீர்திருத்தம் செய்யணும்… அப்புறம்….” அப்புறம், அவரை மாடசாமி விடவில்லை. அவரே பஞ்சாயத்தை இடைமறித்துப் பேசினார். நரிக்கு வாயிருந்தால், அதுவும் அப்படித்தான் பேசியிருக்கும். “நம்ம பரமசிவம்… பத்தரைமாத்துத் தங்கம்…ஊரையே உயிரா நினைக்கிறவரு… உசிரதுச்சமா… எண்ணுறவரு…ஊர்ச் சொத்தை தன்னோட சொத்தா பாவிக்கறவரு… சென்னைக்குப் போயி…இந்த காட்டாம்பட்டி பண்பாட. நாகரீகத்த.. நகரத்துல காட்டிட்டி வந்திருக்காரு…முதல் தடவையா ரயில் ஏறி…நம்ம…மானத்தையும். மெட்ராஸ்ல ஏத்திட்டு வந்திருக்காரு.இவருக்கு இந்த மூவாயிரம் செலவுல… பாராட்டு விழா வைக்காட்டா.. ..என் பங்கை பிரிச்சிக் குடுங்கப்பா….என்ன சொல்றீங்க..?” இன்னொரு குரல் சத்தம் போட்டது. “மெட்ராஸ் போயிட்டு வர்றதுக்குத்தான் பாராட்டா? என் கொழுந்தியா மவன்…கண்ணன். ’ஓடிப்போங்க” என்கிற சினிமாவுல நடிச்சிருக்கான்.இதுக்குப் பாராட்டு கிடையாதா..?? “பயமவன்…என்ன வேஷத்தில வாரான்லே?” “வேஷத்தை விடும்… வாரான் அது போதாதா? “ஒ”. அவனா…கூட்டத்துல…ஒரு.மூலையில..நின்னு.. ..ஈரோவுக்கு ‘ஜே’ போடுறான்“. ஒருவர் அலுத்துக்கொண்டார். “நம்ம… பயலுக…பிறத்தியாருக்கு ‘ஜே’ போடத்தான் லாயக்கு. மத்தவங்களே…தனக்கு ‘ஜே’ போடவைக்க மாட்டாங்க…” முன்மொழிந்தவர் ‘பாயின்டுக்கு’ வந்தார். “அது கிடக்கட்டும்… என் கொழுந்தியா மகனுக்கு பாராட்டு இல்லன்னா… ஒரு இழவும் வேண்டாம்” மாடசாமி, காடசாமியைப் பார்க்க, காடசாமி கைநீட்டிப் பேசினார். “மச்சான் சொல்றதும் நியாயந்தான்…நம்ம கண்ணன் பய… அதில சினிமாவுல… ஒருநொடிதான் வாரான்னாலும்… வந்திட்டானே… அவன் அதில வந்ததினாலதான். நம்ம ஊரு டூரிங் தியேட்டர்ல.அந்தப்படம் ஒருவாரம் ஓடிச்சுது…நம்ம ஊர் சரித்திரத்ல எந்த படமும் ஒருவாரம் ஒடுறது கிடையாது. அதனால….கண்ணணுக்கு… பாராட்டு வச்சி. பஞ்சாயத்துத் தலைவரை பொன்னாடை போர்த்தச் சொல்லணும்” “அவன் அண்ணன்…எல்லா டிக்கெட்டையும் வாங்கி… ஆட்களை விட்டான்….அப்படியும் நிறைய பேரு மறந்துட் டாங்க”, என்று முன்பு முணுமுணுதத அதே குரல் இப்போது அதைவிட சன்னமாக ஒலித்தது. அது ஊர் காதில ஒலிக்கவில்லை. மாடசாமி விஷயத்துக்கு வந்தார். “சரி…பரமசிவத்துக்கு…வெற்றி விழா…கண்ணணுக்குப் பாராட்டு விழா…என்ன சொல்றீங்க?” இதுவரை பேசாத மனிதர் ஒருவர் பேசினார். “என் மவன்…ஒரு பேப்பர்ல…ஆசிரியருக்கு கடிதமுன்னு எழுத…அது வந்திருக்கு. காட்டாம்பட்டிக்காசி என்கிற பேர்ல வந்திருக்கு. நம்ம ஊரு பேரு பேப்பர்ல வர அளவுக்கு.. ..எழுதியிருக்கான்.இதுக்கு பாராட்டு வைக்க நாதியில்லையா?” நாதியில்லை என்பதுபோல், ஒரு குரல் இடித்தது. “வே! உம்ம பையன் ரெண்டு பக்கம் எழுதின சங்கதி எனக்குத் தெரியும்…அதை… அந்தப் பேப்பர்காரன் ரெண்டு வரியா குறைச்சதும் எனக்குத் தெரியும்… இதுக்கு ஏன் பாராட்டுங்கறதுதான் எனக்குத் தெரில…” “வே… மாப்பிள்ளை. அந்த ரெண்டு தாளும்… வேற பையன்…எழதிக் கொடுத்தான்… வராதுன்னு நினைச்சி எழுதிக்குடுத்தான்… .வத்துட்டு…..சங்கதி எனக்குத்தான் தெரியும்” “என்னதான் எழதியிருக்கான்? ‘நடிகை நந்திகுமாரி புருஷன துரத்துனதால்..நாடே கொதிச்சிநின்னு…ஐந்தாண்டு திட்டமே ஸ்தம்பிச்சிப் போச்சுன்னு எழுதியிருக்கான் " பேசிய மனிதர் மீண்டும் பேசினார். “பாருங்க … எவ்வளவு நல்லா எழுதியிருக்கான் என் மவன்…அதைவிடுங்க.. காட்டாம்பட்டி காசின்னு பேரு பதிவாகி. நம்ம பட்டிப்பேரு… முதல் தடவையா பேப்பர்ல வந்திருக்கு… இதுக்கு பாராட்டு இல்லன்னா…ஒரு இழவும் வேண்டாம்…எங்க குடும்பத்துப் பங்கை பிரிச்சிடுங்கப்பா” காடசாமி, மாடசாமியைப் பார்க்க, அவர் கூட்டத்தை நோக்கி குரலை ஏவினார். “பெரிய்யா… சொல்றதுசரிதான். நம்ம ஊருப்பேரு பேப்பர்ல வரும் படியா காசி பண்ணிட்டான்….அவனுக்கும் கண்டிப்பா பாராட்டு வைக்கணும்…. என்ன சொல்றீங்க? ரெண்டுல ஒண்ணு தெரியணும்’ ரெண்டுல ஒண்ணு தெரிந்தது. “என்னய்யா…இது.எல்லாம் பெரிய இடத்து சமாச்சாரமா இருக்கு… என் தம்பிமவன்…சாமிக்கண்ணு … காவுடையா ஊரல போயி…கள்ளத் தேங்காய் பிடுங்கும்போது. ஊர்க்காரங்க மறிச்சிட்டாங்க… எங்க பய.அவங்கள நல்லா உதைச்சிட்டு… தேங்காயோட திரும்பியிருக்கான்… ஊரு விட்டு ஊருபோயி… அடிக்கிறது லேசுப்பட்ட காரியமா? அவன் அடிச்சிட்டான்… அதுவும் கள்ளத் தேங்காயோட திரும்பியிருக்கான்…. ’காட்டாம் பட்டிக்காரன்னா…. கை நீட்றவன்னு பேரு வாங்கித்தந்திருக்கான்… இதுக்கு ஒரு இழவும் கிடையாதா? என்னய்யா நியாயம்?” தாத்தா சொல்றது சரிதான்.கள்ளத்தேங்காயோட வந்ததுக்கும் ஒரு விழா வைக்கலாம்…. வைக்கணும் " என்றார் காடசாமி.கூட்டம் கைதட்டி ஆதரவு தெரிவித்தது. பஞ்சாயத்துத் தலைவர் பரமசிவம், முதல் முறையாக வாயைத் திறந்தார். இதுவரை, மற்றவர்கள் மூலமாகப் பேசியவர், இப்போது சொந்தக் குரலில் பேசினார். ’இன்னொன்ன ஜனங்க கேக்கணும்… நாம இவ்வளவு சிறப்பா விழா வைக்கிறதுக்கு… நம்ம ஊர் தெய்வம் காலஞ்சென்ற காளமேகம்தான் காரணம்… நம் ஊர இவ்வளவுதூரம்… முன்னக்குக்கொண்ட வந்தவரு அவரு தான். அவருக்கும் பிறந்தநாள் வருது… அந்த சங்கத் தலைவருக்கு ஒரு நினைவு மேடைவைக்கணும்!" இதுவரை எதுவும் பேசாமல் எல்லாவற்றையும் காதிலேகேட்டு, வயிற்றிலே எரிந்து கொண்டிருந்த ஒரு ‘எழுபது வயது’ முதியவர். தள்ளாமையைத் தள்ளிவிட்டுப் பொறிந்து தள்ளினார். ‘ஏ…மடப்பய மக்கா…அல்ப பயவுள்ளியா…இந்த நாலு விழாவ நடத்தி…எப்படியும்… நாசமா போங்கல…ஆனாஅந்த பெரிய மஷனுன் பேரைச் சேத்து…. அவர அவமானப் படுத்தாதீங்கடா’ காடசாமி காட்ட சாமியானார். ’மாமாவுக்குப் பொறாமை…நம்மள்ல சின்னவருக்கு நினைவு மேடையா என்கிற வயித்தெறிச்சலு… இந்த பதினெட்டு பட்டிகள்ல நம்ம…காட்டாம்பட்டியை முதல் பட்டியா…ஆக்கினவரு காளமேகம்…அவருக்கு நினைவு மேடை இல்லன்னா.ஊர் எதுக்கு?* முதியவர், வேகத்தோடு, பதிலடி கொடுத்தார். “காளமேகம்… என்னைவிட…வயசுல… சின்னவர்தான்… ஆனால் அறிவுல அவரு ஒளி. என்பேரன… தண்ணிப் பாய்க்கச் சொல்லிகையல மம்பட்டியை குடுத்தபோது அந்த புண்ணியவான் வந்து… மம்பட்டியை தூக்கி எறியச் சொல்லி… பள்ளிக்கூடத்துக்கு பயல அனுப்புனாரு. அவரு தெய்வமா நிக்கராரு…எனக்கு பொறாமை கிடையாதுடா… பரமசிவம் வீட்டில கூட அவரு போட்டோ இல்ல… ஆனால் என் வீட்ல இருக்கு… பெரிய மனுஷன் பேரை கேவலப்படுத்தாண்டான்னு நினைச்சிச் சொன்னேன். கெட்டுப் போறதுக்கு பந்தயம் வைக்கிறிய… வைங்கடா… வைங்க… எல்லாமே அல்பங்களா மாறிட்டியே… ஒழிஞ்சி போங்க…” முதியவர் போய்விட்டார்.கூட்டத்தினர், ஐம்பெரும் விழாவிற்கு இசைவு கொடுத்தார்கள். ஒரே ஒருநபர் மட்டும் அதிருப்தி தெரிவித்தார். “என்மவன்சிப்பாய்னு…ஜனங்களுக்குத் தெரியும்…அவன் பாகிஸ்தான் போர்ல…ஒரு காலை இழந்துட்டான்…இதுக்கு ஒரு பாராட்டு கிடையாதா?” காடசாமி, இந்தக் கேள்வியைப் பாராட்டவில்லை! ’கால் போறது… பெரிய காரியமா? அவன்…தலைவிதி… எங்க இருந்தாலும் போக வேண்டிய காலு போயிருக்கும்.இதுக்குப் போயி..விழாவா…விழான்னா ஒரு விஷயம் இருக்க வேண்டாமோ?* கூட்டம், மாடசாமி பேசியதை ஏற்றுக் கொண்டதுபோல், அமைதியாக இருந்தது, அல்லது, அது அமைதியாக இருந்ததை மாடசாமி, தம் பாயின்டுக்கு ஆதரவாக எடுத்துக் கொண்டார். உண்மையைச் சொல்லப் போனால்… எந்த விழாவுமே… ஊர்க்காரர் களுக்கு பிடிக்கவில்லை, என்றாலும், அதை வெளியே சொல்லபயம். அவனவன். பஞ்சாயத்துத் தலைவரிடம் வீட்டு வரியிலும், கூட்டுறவுத் தலைவரிடம் கடன் வகையிலும்… கர்ணத்திடம் நிலம் வகையிலும் அகப்பட்டுக் கொண்டவர்கள். ஆகையால், கும்பலிலே இருந்த எல்லா கோவிந்தா சாமிகளும், அமைதியாக இருந்ததில் ஆச்சரியமில்லையாம். கூட்டம், இப்போது ‘பட்ஜெட்டை’ விவாதத்திற்கு எடுத்துக்கொண்டது. “இந்த மூவாயிரம் ரூபாய்ல…ஐம்பெரும் விழாவையும் சமாளிக்க முடியுமா?” " ஏன் முடியாது? போஸ்டர்கள் …நம்ம பரமசிவம்… டவுன்ல வச்சிருக்காரு சொந்த பிரஸ்ஸு. அதில. அவரே அடிச்சித் தந்திடுவாரு…" “அப்படியும் பணம் உதைக்குமே?” “எப்படி உதைக்கும்? நம்ம ஊரு… வாரச் சந்தைக்கு வந்த வெளியூர் வியாபாரிங்கக் கிட்ட ‘அன்பளிப்ப’ வாங்கணும்… தராதவன்…ஊருக்குள்ள நுழையவிடக்கூடாது….” “அப்படி வச்சாலும்.. கையை கடிக்கும்” “நம்ம மாட்டு வியாபாரிங்க கிட்ட நூறு…காண்டிராக்டர் கிட்ட முன்னூறு… நெல்லு வியாபாரிங்கிட்ட ஐநூறு… நன்கொடையா வாங்கிட்டாப் போச்சு” “நாங்க தரத் தயார்…ஆனால் வீட்டு வரியை பிரசிடென்ட் குறைக்கணும்” என்றார் வியாபாரிகள் தலைவர் மாட்டு வியாபாரி. “நான் பொய் சொல்ல விரும்பல… வரியைக் குறைக்க எனக்கு அதிகாரம் இல்ல… இதுக்குத்தான் பஞ்சாயத்துக்கு அதிக அதிகாரம் வேணுமுன்னு கேட்டு…யூனியன்ல கரடியாய் கத்தறேன். ஒருவனும் கண்டுக்கமாட்டாங்கறான்…” என்றார் பரமசிவம். “சரி வீட்டு வரியை குறைக்க முடியாட்டி… தொழில் வரியை குறைச்சுக்கலாம்” என்று காடசாமி விவகாரத்துக்கு முறறுப்புள்ளியும், நன்கொடைக்கு ஆரம்பப் புள்ளியும் வைத்தார். ஒரு காய்ந்த வயிறுக்காரர், ஜீவமரணப் பிரச்சினை ஒன்றை சபையில் வைத்தார். “ஐம்பெரும் விழா, அஞ்சுநாளு நடக்கும்… வெளியூர்ல இருந்துல்லாம் ஆளுங்க வர்ரதுக்கு நம்ம ஊரு வண்டிகள அனுப்பணும்…வண்டிக்காரனுக்கு வாடகை வேண்டாமா? அது தொலையட்டும். அஞ்சு நாளும் ஜனங்க எங்கேயும் போகாம விழாவிலே கலந்துக்கணும்…நம்ம ஊர்ல முக்கால்வாசி அன்றாடங்காய்ச்சி. வேலைக்குப் போகாட்டா அரிசி வேகாது. அவங்க…சாப்பாட்டுக்க என்ன பண்றது?” பரமசிவம், பெருந்தன்மையோடு பாரியானார். “அதுக்கும் நம் கூட்டுறவுத் தலைவர்கிட்ட பேசிட்டேன். சங்கத்துல கடன் வாங்கினவன் திருப்பித் தரவேண்டாம். வீட்டுவரியை இப்போதைக்கு கட்டாண்டாம். ஏலத்துல பணம் எடுத்தவன்… இந்த அஞ்சு நாளைக்கு கூலியை எடுத்துக்கலாம். வெளியூர்ல இருந்து விழாவுக்கு வர்ரவங்களுக்கு, பள்ளிக்கூடத்துல மூணு மாசத்துக்குப் போடுற மதிய உணவை, அஞ்சு நாளைக்கும் போட்டுடலாம்.” “கஜானா காலியாடுமே.” ஆகட்டுமே….விழாவைவிட….கஜானா முக்கியமா?* “அது தான் சரி.” ஊர்மக்கள், பயத்தாலும், நயத்தாலும், வேடிக்கை மனோபாவத்தாலும் ஐம்பெரும் விழாவில் கலந்து கொண்டார்கள். அந்த ஊர், குளம், பத்து வருடத்துக்கு ஒரு தடவைதான் பெருகும். இந்த ஆண்டு குளத்தில் கொஞ்சம் தண்ணீர் இருந்ததால், நஞ்செய் நிலமும், புஞ்செய் நிலமும் பயிர்களால் பச்சையாயின. குளத்தில் தண்ணீர் குறைவாக இருப்பதால், பயிர்கள் பட்டுப்போகுமோ என்ற ஒரு அச்சம், ஊர்மக்களுக்கு உண்டு. என்றாலும், தண்ணீரை அரிசி மாதிரி நினைத்து சிக்கனமாகப் பயன்படுத்தினார்கள். இந்த சூழ்நிலையில்தான் ஐம்பெரும் விழாதுவங்கியது. காட்டில் இருந்த தேக்குகளை வெட்டி பந்தல் போட்டார்கள். இன்னும் ஒரு மாதத்தில் ‘குலை’ விடப் போகும் வாழைகளை வெட்டி பந்தலில் கட்டினார்கள். கரும்புகளை வெட்டி, முக்கியமான வீதிகளில், ‘வளைவுகள்‘ போட்டார்கள். ஆக பயிர்களில் பெரும்பான்மை சர்வநாசம். சில வாழைகளும், கரும்புகளும் சந்தடியில்லாமல் சில ஆசாமிகள் வீட்டுக்கும் போய்விட்டனவாம். ஊரில் பெண்க ளுடைய சேலைகளையும், ஆண்களுடைய வேட்டிகளையும் எடுத்து ‘பானர்கள்’ உருவாயின. பரமசிவத்தின் பிரஸ்ஸில் உருவான போஸ்டர்கள். வெளியூர்க்காரர்கள், வண்டி வண்டியாகக் குவிந்தார்கள். சுருக்கமாகச் சொல்லப் போனால், எங்கும் விழா- எதிலும் விழா-ஐம்பெரும் விழா ! முதல்நாள் வெற்றிவிழா; சென்னைக்குப் போய் மீண்ட பரமசிவத்துக்கு ‘சென்னை மீண்டுவந்த செம்மல்’ என்ற பட்டம் கொடுக்கப்பட்டது. இரண்டாவதுநாள், கலை விழாவில், பத்துநாள் வெற்றிகரமாக படம் ஓடக்காரணமான கண்ணனுக்கு பொன்னாடை ; மூன்றாவது நாள் இலக்கிய விழா; காட்டாம்பட்டியைக் காட்டிய காசிக்கு ஒரு பேனா பரிசாக அளிக்கப்பட்டது. நாலாவது நாள் வீரவிழா. புறநானூற்றில் கூறப்படும் வீரத்தின் விளைநிலம்போல், கள்ளத்தேங்காய் கையோடு கொண்டுவந்த சாமிக்கண்ணுக்கு தேங்காய் நாரால் செய்யப்பட்ட கேடயம்; இறுதியாக, காலமான காளமேகத்திற்கு நினைவு விழா. ஊர்க்காரர்கள் கிணறுகளில் பம்ப் செட் கட்டுவதற்காக வைத்திருந்த சிமிண்ட்களை எடுத்து, நினைவு மேடை அமைக்கப் பட்டது. நினைவு விழாவில் பேசியவர்கள், காளமேகத்தை மறந்து, பரமசிவத்தையே பேசியதாக ஒரு புகாரும் லேசாகத் துவங்கியதாம். இந்தச் சமயத்தில், காடசாமியும், மாடசாமியும் ஒரு யோசனை சொன்னார்கள். ஒரு காலத்தில் அந்த ஊரை, அந்தகக் கவி ஒருவன் “கலங்கா நீர்சூழ் காடாம்பட்டி” என்று பாடி இருக்கானாம். பண்டைப் பெருமையை படம் பிடித்துக் காட்ட வேண்டாமா? ஆகையால், கால்வாசி தண்ணீர் கொண்ட குளத்தை வெட்டி, நீரை ஊரின் நாலு பக்கமும் விட்டார்கள். சிலர் இதை எதிர்த்தார்கள். நிலம் இல்லாத காடசாமி குதித்தார். “அட மடப்பயங்களா…. பயிர் இன்னைக்க வரும் நாளைக்குப் போகும்… பயிரை விடலாம். நம்ம பழைய பெருமையை விட முடியுமா….இந்த ஊர்ல ஒரிஜனல் குடும்பத்தைச் சேர்ந்த எவனும் இதை எதிர்க்க மாட்டான்” அந்த ஊர்க்காரர்கள் அனைவருக்கும் தாங்கள் ஒவ்வொரு வரும் ஒரிஜனல் என்று நினைப்பு. ஆகையால் " கலங்கா நீர்சூழ்" காட்டாம்பட்டியைச் சுற்றி தண்ணீர் பெருகியது. பொதுமக்கள் விழாக்களில் லயித்து வயல்களுக்கு போக மாட்டார்கள் என்பதை அறிந்த காடசாமியும், மாடசாமியும் இரவோடு இரவாக கையாட்களுடன் வயல்களுக்குப் போய் சவலைப்பிள்ளைகள் போல் நின்ற நெல்லையும, கரும்பையும் அறுவடை செய்து அகற்றினார்கள். குளத்துத் தண்ணீர் திறந்து போனதால், எப்படியும் வாடப்போகிற பயிர்களை சுருட்டுவதில் தவறில்லை என்றும் சொல்லிக் கொண்டார் கள். இன்னும் ஒருவன் கூட வயல் பக்கம் போகாமல் விழாவிலேயே இருக்கிறார்கள். எப்படியோ இந்த விழாவினால் “கல்தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன்தோன்றி மூத்த காட்டாம்பட்டி” பதினெட்டுப் பட்டிகளிலும் தலைசிறந்த பட்டியாக விளங்குகிறதாம். - தாமரை - டிசம்பர் 1974. பின்னோக்கிய ஒட்டம் மாண்புமிகு முதல்வர், புரட்சித் தலைவி டாக்டர் ஜெயலலிதா அவர்களின் புகைப்படத்தில் இருந்து குங்குமம் கொட்டுகிறது என்ற செய்தி, அகில, இந்திய அளவில் பரவலாகவும், தமிழகத்தில் வீடு வீடாகவும் பரவிவிட்டது. இந்த அதிசயத்தைத் தரிசிப்பதற்கு, தமிழர்களுக்கு சொல்லியா கொடுக்கவேண்டும்? கூட்டமென்றால் கூட்டம், அப்படிப்பட்டக் கூட்டம். நாகையில் அன்னை வேளாங்கன்னி திருவிழாவின் போதோ, திருச்செந்தூரில் சூரசம்ஹாரத்தின் போதோ, மதுரையில் கள்ளழகர் ஆற்றில் இறங்கும் போதோ, திருவண்ணாமலை கார்த்திகை தீபத்தின் போதோ கூடாத கூட்டம்; இன்னும் சொல்லப் போனால், இந்த அத்தனை கூட்டங்களையும் ஒன்று சேர்த்தாலும் அவற்றைவிட பருமனான நெட்டையான கூட்டம். ஒவ்வொரு மனிதரும் ஒர் துளியானது போன்ற மனித சமுத்திரம்; அம்மா, அப்பா, அக்கா, தங்கை, வேலை, வெட்டி-ஆகிய அத்தனை பேரையும், அத்தனையையும் உதறிப்போட்டுவிட்டுப் போன அடியார் திருக்கூட்டம். அந்த ‘வாழ்ந்து கெட்ட’ கிராமத்தை விழுங்கி, அதற்கு முன்னாலும், பின்னாலும், பக்கவாட்டிலும் மக்கள் வெள்ளம் வியாபித்தது. எதிர்பார்த்த இந்தக் கூட்டத்தைத் தாக்குப்பிடிக்க, காவல்துறையினர் நன்றாகத்தான் திட்டமிட்டிருந்தனர். டி.ஜி.பி. ஸ்ரீபாலும், கூடுதல் டி.ஜி.பி. தேவாரமும், பரிவார போலீஸ் தேவதைகளோடு அங்கேயே முகாமிட்டனர். அதோடு மாவட்டந்தோறும் இருந்து கூடுதல் காவல் படைகளை வரவழைத்திருந்தார்கள். ஆனாலும் முதல்வர் அவர்கள், அவசர அவசரமாய் டில்லி போவதால், அவரைப் பாதுகாப்பாய் அனுப்பி வைப்பதற்கு, ஸ்ரீபால், பாதிப்போலீஸ் படையுடன் சென்னை போய்விட்டார். போதாக்குறைக்கு, கன்னியாகுமரி மாவட்டத்தில், இன்னும் இரண்டு மாதத்தில் மாண்புமிகு புரட்சித் தலைவி சுற்றுப்பயணம் செய்யப் போகிறார் என்ற சேதியை உள்துறைச் செயலாளர் அந்தக் குக்கிராமத்திற்கு எப்படியோ தெரியப்படுத்த, எஞ்சி இருந்த காவலரில் பாதிப்பேரை, ஒரு ஐ.ஜி. இழுத்துக்கொண்டு நாகர்கோவில் போய்விட்டார்; எஞ்சிய போலீஸ் படை, கூட்டத்திற்குப் பயந்தது. ஒரு பயந்தாங்கொள்ளி எப்படி நடந்து கொள்வானோ அப்படி நடந்துகொண்டது -அதாவது எங்கு பார்த்தாலும் லத்திக் கம்பு வீச்சுக்கள்; கூட்டத்தினரின் அம்மாக்களையும், அக்காக்களையும் விமர்சிக்கும் கெட்ட கெட்ட வார்த்தைகள். என்றாலும், கூடத்தினர் குங்குமம் கொட்டலைப் பார்ப்பதில் குறியாய் இருப்பதால், போலீஸ் கொட்டலைப் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. அதோடு சிறு குழுந்தைகளுக்கு ஊசி போடும் போது, டாக்டர் பேச்சு கொடுத்து கவனம் கலைப்பாரே, அப்படி, போலீஸ்தனத்தை உதாசீனப்படுத்தும் அளவிற்கு, இதரக் கவர்ச்சிகளும் இடம் பெற்றன. மாண்புமிகு ஜெயலலிதா அவர்களின் கோபுரம் தாண்டிய கட்-அவுட்டுக்கள்; அவற்றின் மேல் பக்கம் அந்தப் பகலிலும் அணைந்து, அணைந்து எரியும் கலர் பல்புக்கள்; நாலா பக்கமும் நாட்டப்பட்ட கம்பங்களில் கட்டப்பட்ட, ஒலி பெருக்கிகள் கக்கிய ஜெயலலிதா அம்மன் பக்திப் பாடல்கள்; ஆதிபராசக்தியின் ஆதாரமான ஜெயலலிதா தேவியின் திருமகிமை பற்றி, முன்னாள் ’மாண்புமிகு" டாக்டர். கா.காளிமுத்து, அழகு தமிழில் அற்புதக் குரலில் வழங்கிய விளக்கங்கள்.கலியுக நாயகி, தன்னைத்தடுத்தாட் கொண்ட அருள் பாலிப்பை சொல்லும் போது மட்டும், அவர் குரல் தழுதழுத்தது. மற்றபடி மாணிக்கக் குரல். இவருக்கு இணையாய் காமிரா வெளிச்சங்கள். ஆங்காங்கு டி.வி. பெட்டிகளில், அன்னையின் அற்புதங்களை விளக்கும் வீடியோ படங்கள்… கூட்டம் ‘அம்மா…அம்மா’… என்றும் ‘தாயே… தாயே..என்றும் கண்ணீர் மல்கி, என்புருகி, மெய்சிலிர்த்து, அலைமோதிய திசைக்கு எதிரே, சாமியானாவால் ஒரு கூம்பு வடிவக் கோயில் அமைக்கப்பட்டிருந்தது. அதற்கு வேலியாக, இன்னொரு சாமியானா வெளிச்சுற்று… கூம்புக் கோவிலின் நடுநாயகமான இடத்தில் ஆறடிப் பீடம்.அதில் அன்னை ஜெயலலிதா அம்பாளின் ‘இருந்த’ கோல திருவுருவப் புகைப்படம்; லேசாய் ஒருச் சாய்ந்து, கைகள் இரண்டையும் வலது பக்கமாய் நீட்டி, உள்ளங்கைகளை ஒன்றாய்ச் சேர்த்து, வீதிதோறும் காட்சி தருவாரே அன்னை அப்படிப்பட்ட வடிவிலான லேமினேட்டட் படம். தலைக்கு மேல் மின்சார ஒளி வட்டம் - காலடியின் இருபக்கமும் குத்து விளக்குகள் - படத்தின் இருபக்கமும் கட்டவுட் சிங்கங்கள். பீடத்தின் முன்பக்கம் மூங்கில்களால் வளைத்துப் பிடித்த இடத்தில், அர்ச்சகர்கள் ஒரு பக்கம், ஒதுவார்கள் மறுபக்கம்…கோவில் முகப்பில், நவீன துவார பாலகர்களான இரண்டு ஏ.கே. 47 வீரர்கள்…. சும்மா சொல்லக்கூடாது- அன்னையாம் ஜெயலலிதாவின் திருவுருவப் புகைப்படம், சாயிபாபா சுவாமிகளின் பெண் அவதாரம் போல், படர்ந்த தலையும், விரிந்த குழலுமாய் செக்கச் செவேலென்று, ஜெக ஜோதியாய் மின்னியது. அம்மனின் காலடியில், முக்கனிகள்; வாழைப்பழக் குவியல் மேல், ‘இயல் தமிழ்’ என்ற போர்டு. மாங்கனிக் குவியலில் இசைத் தமிழ் என்று எழுதப்பட்ட அட்டை… பலாப் பழத்தில் நாடகத் தமிழ் என்று ஒட்டப்பட்ட காகிதம்… வேகமாய் எழுந்த சாம்பிராணி புகை மேகங்கள், ‘மந்திர முழக்கங்கள், மணி மணியான பாடல்கள்…. புகைந்து கொண்டிருந்த ஊதுபத்திகள். எல்லாவற்றிற்கும் மேலாய், அதிசயத்தின் அதிசயமாய் அற்புதத்தின் பேரற்புதமாய், மாண்புமிகு முதல்வர் அவர்கள் இடைவெளி இல்லாமல் சேர்த்து வைத்திருந்த இரண்டு கரங்களின் சேர்க்கையில் இருந்து குங்குமம் கொட்டியது. இடையிடையே விட்டு விட்டும், சிற்சில சமயங்களில் விடாமலும், கொட்டிக் கொட்டி, அம்மையின் பாதாந்திர விந்தத்தில் விழுந்து கொண்டிருந்தது. பக்த கோடிகள் முண்டியடித்து அந்த குங்குமம் கேட்டு அலை மோதினார்கள். முன்பக்கம், அர்ச்சர்களுக்கும், ஒதுவார்களுக்கும் மத்தியில் நின்ற ஒரு காவிவேட்டிசுவாமிகள், பரவசமாய் பரபரப்பாகி, ஆதி சங்கரர் அருளிய ஸ்ரீ செளந்தர்ய லஹரியை சர்வ சாதாரணமாய் நமது குங்கம நாயகிக்கு சமர்ப்பித்தார். ’ஹே.. ஜெயலலிதாம்பிகே… எல்லாம்… உனக்கு அர்ப்பணம் என்ற சங்கற்பத்தில், நான் பேசுவது உன் திருமந்திரச் சொல்லாகட்டும்! என் உடல் அசைவு, உன் முத்திரைகளாகட்டும்…என் நடை, உன் மாற்றரியா பிரசன்னமாகவும், நான் உண்பதெல்லாம் உனக்குச் செய்யும் வேள்வியாகட்டும்! நான் படுப்பது, உனக்குச் செய்யும் வணக்கமாகவும், நான் இது மாதிரி என்னென்ன செய்தாலும், அவை உனக்குச் செய்த பூஜையாகட்டும்….. சர்ச் கான்வென்டைப் புனிதப்படுத்திய சர்வேஸ்வரி ! இந்த ஏழையை உன்காலடியில் அண்டவைத்து, என்னை செல்வமழையில் நீராட்டு… பஞ்ச பூத நாயகியே, இந்த பரம ஏழையைப் பாரம்மா….எத்தனை நாளைக்கு, நான் ஏழையாய் இருப்பதம்மா….’ காவிச் சுவாமிகள் கைச்சரக்கை இறுதியில் கலந்து பேசியதைக் கண்ட நவீனத் தமிழ் ஓதுவார்களான சுரதா, காமராசன், இளந்தேவன், புலமைப்பித்தன் போன்றவர்கள், அந்த சுவாமியை, கண்ணாடியில் பார்ப்பது போல் பார்த்து பாடத் துவங்கினார்கள் - அதுவும் குன்னக்குடி வைத்திய நாதனின் இசையமைப்பு என்றால் கேட்க வேண்டுமா. ஜெயலலிதா பிள்ளைத் தமிழ் - ஜெயலலிதா திருப்பள்ளி எழுச்சி-ஜெயலலிதா அந்தாதி- ஜெயலலிதா அனுபூதி…. இவையல்லாது, அவர்கள் தனிப்பாடலாகவும் பாடினார்கள். ’வாரியம் தருபவளே! போற்றி! போற்றி!! வாக்கை மதிப்பவளே! போற்றி! போற்றி!! ஆஸ்தானம் தரும் அம்மா போற்றி!! சொல்தானம் தருகிற அடியார்க்கு பொருள்தானம் தருகின்ற புண்ணியமே போற்றி! போற்றி!" ‘எப்படி எங்கள் பாட்டு’ என்பது போல், நமது ஒதுவார்கள், அந்தக் காவிச் சாமியைப் பார்க்க, அது இன்னொன்றையும் ஒப்பித்தது. ‘ஆங்காரி ஓங்காரி !…முத்திகாந்தாமணி ! மூவுலகுமான ஜோதி! கொத்துதிரி ! கோணத்தி ! மும்மூர்த்திகள் போற்றும் உன்னை, முற்பிறவியில் புண்ணியம் செய்யாதவன், எப்படி துதிக்கமுடியும்?’ கூட்டம் அல்லோலகல்லோலப்பட்டது. அரண் கம்புகள் வழியாய், பொங்கி வழிந்தோடியக் கூட்டத்தில் ஒவ்வொரு வரும் தான் முற்பிறவியில் புண்ணியம் புண்ணியமாய் செய்ததால்தான், இப்பிறவியில் தானைத் தலைவியைத் தரிசித்து, துதிக்க முடிந்தது என்று நம்பினார்கள். அதோடு, தன்னைப் பார்த்துதான், குங்குமம் அதிகமாகக் கொட்டுவதாகவும் எண்ணினார்கள். ஒரு மூதாட்டி, இப்படிப் பேசினாள். ‘ஆத்தாவே… ஜெயலலிதா ஆத்தாவே ! உன் மகிமைய எப்படிம்மா சொல்லுறது? - நேத்து…இந்த பொழுது… இதே நாழிகையில் வந்து ஒன் குங்குமத்தை எடுத்துட்டுப் போய்… என் புருஷனுக்கு வச்சேன் தாயே… கண்ணு தெரியாமல். திண்ணையில் கிடந்த மனுஷன்… என்னை அடையாளம் கண்டு… அடிக்க வர்ற அளவுக்கு அவருக்கு பார்வை வந்துட்டும்மா… பக்க வாதத்துல கிடந்த என் மகன்…நல்லா நடக்கத் துவங்கிட்டாம்மா.. எனக்குதாம்மா இன்னும் போன கண்ணு திரும்ப வர்ல..ஆயிரம் கண்ணுடையாளே! உன் ஒரு கண்ணையாவது எனக்கு கொடும்மா…ஆ.ஊ… அம்மா…நான் என்னசொல்ல..ஏது சொல்ல…இப்போ..இந்த சணத்துல நல்லாவே பாக்கேம்மா..கண்கண்ட ஈஸ்வரி..என் கண்ணத் திறந்துட்ட …திறந்துட்டேம்மா…" ‘பிரஸ்’ என்ற அட்டை ஒட்டிய இடத்தில், மாநில அரசின் வேனில், ஒரு பி.ஆர். ஓ. வின் மறைமுக உதவியோடு அதிகார சார்பற்ற முறையில் கொண்டு வரப்பட்ட பத்திரிகைக்காரர்கள், டீவிக்காரர்கள, அந்த மூதாட்டியைப் பாய்ந்து, ஆளுக்கொரு பக்கமாகப் பிய்த்தார்கள். அந்த பெருமாட்டியிடம் தனிப்பேட்டி வாங்க வேண்டும் என்று ஒவ்வொருவருக்கும் ஒரு வேகம்- பக்த கோடிகளில் பலர், அம்மனின் திருவருள் பெற்ற அந்தக் கிழவியின் காலடியில் தலை போட்டார்கள். அவளும், குறுஞ்சிரிப்பாய் சிரித்தாள். இதற்குள், குங்குமம் கேட்டு, பக்தர்கள் பயங்கரமாய் கத்தினார்கள். மூங்கில் வேலிகளை ஒடிக்கப் போனார்கள். முன்னாள் பேரவைத் தலைவர் முனு ஆதி அவர்கள் ஒவ்வொருவருக்கும் குங்குமம் கொடுக்கத்தான் செய்தார். ஆனாலும் திருப்தியில்லை. பீடத்தில் உள்ள ஜெயலலிதா அம்மனின் புகைப்படமே கீழே விழும் அளவிற்கு நெருக்கடி- ஆனாலும், நமது போலீஸார் உடனடியாய் தலையிட்டு,ஒவ்வொருவரையும் கால் வினாடி தரிசனத்துக்கு மட்டுமே அனுமதித்துவிட்டு, அப்புறம் கழுத்தைப் பிடித்துத் தள்ளினார்கள். காவல் துறையினரின் கடும் பணியை மேற்பார்வையிட்ட தேவாரம் அவர்கள், ஒரு திசையில் முகம் போட்டு, முகம் சுழித்துப் பார்த்தார்…ஐம்பது அறுபது கார்கள்… ஜீப்புகள்… மோட்டார் பைக்குகள்; ‘புரடக் கோல்படி’ பைலட் கார் முன்னாலும், அமைச்சர் கார் பின்னாலும், அப்புறம் அதிகாரிகள் கார்களும் வர வேண்டும்…அப்படித்தான் வந்தன. ஆனால் கோவிலை நெருங்க நெருங்க, ‘சோழவரம் ரேஸ்’ போல் ஓடின. அமைச்சர் கார்கள் பின்னுக்குத் தள்ளப் பட்டு, ஐ.பி.எஸ்., ஐ.ஏ.எஸ். கார்கள் முன்னால் ஓடின. எப்படியோ காவல்துறையினர், அமைச்சர்களை கண்டு பிடித்து தனிப்படுத்தினார்கள். தேவாரமும், தன் மனத்தை ஆக்கிரமித்த வீரப்பனை விரட்டி விட்டு, அதில் அமைச்சர்களை நிறுத்திக் கொண்டு, அவர்களை அம்மனின் முன்னால் நிறுத்த, அவர்களில் நாவலர், எஸ். டி. எஸ். தவிர்த்த ஏனைய அமைச்சர்கள், தரையில் நெடுஞ்சாண் கிடையாய் விழுந்தார்கள். இதனால், அவர்கள் கால்கள் பக்தர்களின் காலில் பட்டன. அந்தப் பக்தர்கள், தங்கள் கால்களில் விழுந்த கால்களை, கால்நகங்களால் கீறினார்கள். ஆனாலும் அமைச்சர்கள், பிராணன் போவது மாதிரியான வலியை அடக்கி, அப்படியே கிடந்தார்கள். முந்தி எழுந்து பதவி பங்கமாகி விடக்கூடாதே என்ற பயம்… புலவர் மாண்புமிகு இந்திர குமாரி மட்டும், தரையில் இருந்து தலையை மட்டும் தூக்கி, அங்கப் பிரதட்சணம் செய்வதற்கு, இடம் ஒதுக்கித் தரும்படி தேவாரத்தைக் கேட்டார். ஆனால், தேவாரமோ, அவரைப் பார்க்காதவர் போல வேறு திசையை நோக்க, அதன் தொலைவில், திருமதி சுலோசனா சம்பத், காரில் இருந்து தன்னைக் கரையேற்றும்படி கையசைக்க, தேவாரம், அதைக் கண்டும், காணாதவர் போல் வேறு பக்கம் திரும்ப… ஒ….மை காட் அந்தப் பக்கம் ஒட் - இஸ். திஸ்…மாண்புமிகு… சேடப்பட்டி முத்தையா… தெய்வத்தின் தெய்வத்திடம், தன்னை ஆற்றுப் படுத்தும்படி, தலையாட, கையாட, குரல் கொடுக்க… தேவாரம், சேடப்பட்டியாரை மீட்பதற்காக ஓடினார். உடனே காவலர்களும் காரணம் புரியாமல் அவர் பின்னால் ஒட, அமைச்சர் பெருமக்கள் கூட்டத்தில் கலந்து காணாமல் போனார்கள். என்றாலும், தேவாரமா-சும்மாவா.. அத்தனை அமைச்சர் களையும், அரும்பாடு பட்டுக் கண்டுபிடித்து, சேடப் பட்டி-யாரையும் சேர்த்து, கோவிலுக்குப் பின்பக்கம் உள்ள விஜபி அறையில் விட்டுவிட்டு ஒதுங்கிக் கொண்டார். சேடப்பட்டியார், அமைச்சகக் கூட்டத்திற்கு தானே தலைவர் என்பது போல் பேசப் போன போது, எஸ்.டி.எஸ்., ‘ஒன்னை இங்கே சேர்த்ததே பெரிசு’ என்பது போல், அவரை அமீனா மாதிரி பார்த்துவிட்டுப் பேசினார். ’முப்பது முக்கோடி தேவர்களுக்கும், நாற்பது நாற்கோடி முனிவர்களுக்கும் மேலானவர்கள் மும்மூர்த்திகள். இந்த மும்மூர்த்திகளுக்கும் மேற்பட்டது சதாசிவமான பிரும்மம். இந்த பிரும்மத்தையும் படைப்பது பரப்பிரும்மம்…நமது புரட்சித் தலைவிதான், இந்த பரப்பிரும்மம் என்பது இப்போது நிரூபணமாகிவிட்டது. ஆகையால், நமது கட்டிடக்கலை வரலாறு காணாத வகையில், நம் அம்மனுக்கு திருக்கோயில் எடுக்க வேண்டும். அந்தக் கோவிலும்… மாண்புமிகு கண்ணப்பன் அவர்கள், எஸ்.டி.எஸ்ஸுக்கு கடுப்பேற்றி இடைச் செறுகலாய் பேசினார். ‘கால்பட்ட உடனே கல்லும் மலராகும் காவல் தெய்வத்திற்கு நாம் கட்டும் கோவில், தஞ்சை பெரிய கோவிலை விடப் பெரிதாக இருக்க வேண்டும். அங்கே வானளாவிய கோயில் நிழல் எப்படிக் கீழே விழ வில்லையோ அப்படி இங்கேயும் விழப்படாது…அங்கே உச்சியில் பொருத்திய கோள வடிவமான சிகரப் பெருங்கல்லைவிட பெரியதாகவும், அழகாகவும் ஒரு கல்லை உருவாக்க வேண்டும். அதோடு அம்மாவின் ஆலயம், ராமேஸ்வரம் கோவில் பிரகாரங்களைவிட கூடுதலாய், மதுரை மீனாட்சிக்கு கிடைத்த கோபுரங்களைவிட அதிகமாய் இருக்க வேண்டும். உலகளாவிய அளவில், இதற்கு டெண்டர் வாங்க வேண்டும்.’ பேசிக் கொண்டே போன கண்ணப்பன் அவர்களை இடைமறித்து, தனக்கும் கோவில் விவரம் தெரியும் என்பது போல் எஸ்.டி.எஸ். பேசினார். ’செம்பியம்மாதேவி திருப் பணி செய்த திருவையாறு தேரைவிட, மிகப் பெரிய தேர் செய்ய வேண்டும்-சரி-மற்ற அமைச்சர்களும், தத்தம் கருத்துக்களை உருப்படியாய் சொல்லலாம்…." ’நெல்லைக்கு அருகே உள்ள கிருஷ்ணபுரத்துச் சிலைகள் மாதிரி நம் காவல் தெய்வத்திற்கு கருவறையில் சிலைவைக்க வேண்டும்" என்றார் அமைச்சர் நடேசன் பால்ராஜ். மீரான் அவர்கள், நெல்லையின் மேற்கு மூலைக்கு பிரதிநிதியானார். ’திருக்குற்றாலத்தில் உள்ள சித்திரக்கூடம் மாதிரி ஒரு கூடம் அமைத்து, அம்மையின் அவதார அற்புதங்களை தீட்ட வேண்டும். குறிப்பாக மகிஷாசுர வதம்…. ஏதோ பேசப் போன ஆர்.எம்.வீ.அவர்கள், தலைமைத் தொங்கப் போட்டுக் கொள்ள, ‘நாட்டுக் கோட்டை’ ரகுபதி அவர்கள் இப்படிச் சொன்னார். ’பிள்ளையார் பட்டி விநாயகர் கோவிலின் கருவறைக்கு ஈசான மூலையில் பிள்ளையார் பெருமானின் வண்ண ஒவியம் உள்ளது. அதை எந்தப் பக்கத்தில் இருந்து பார்த்தாலும், பிள்ளையார் நம்மையே பார்ப்பது போல் தோன்றும்…. அம்மாவுக்கும் அப்படி ஒரு ஓவியம் படைக்க வேண்டும். நடேசன் பால்ராஜ் மீண்டும் பேசினார். ’அம்மா என்றதும், அம்மாவின் அருளாலேயே ஒன்று வருகிறது. இனிமேல் அம்மா என்ற சொல், புரட்சித் தெய்வத்தை மட்டுமே குறிக்கும் சொல்லாக இருக்க வேண்டும்…. ஆனால், மேல் மருவத்தூர் ஆதி பராசக்தி தொண்டரான பங்காரு அடிகளை, செவ்வாடைத் தொண்டர்கள், அம்மா என்று சும்மா சும்மா அழைக்கிறார்கள். இனிமேல் தன்னை அப்படி அழைக்கக் கூடாது என்று அடிகளார், தம் தொண்டர்களுக்கு ஆணையிட வேண்டும் என்று நான் உத்திரவு இடப் போகிறேன். சொல்வதைக் கேட்காவிட்டால், ஆலயத்தை அறநிலையத்துறை எடுத்துக் கொள்ளும் என்றும் மிரட்டப் போகிறேன்-" வனத் துறை அமைச்சர் லாரன்ஸ், அந்த யோசனைக்கு கைதட்டிவிட்டு, தன் பங்குக்கு ஒரு சாதனை படைக்கப் போவதைச் சொன்னார். ’வண்டலூரில் இருந்து இரண்டு நிஜச் சிங்கங்களை, சிங்க வாகினியான நம் அம்மனின் திருச்சிலைக்கு முன்னால் நிறுத்தி விடுகிறேன்….. பக்திமானான அமைச்சர் துரைச்சாமி, ‘ஆகமத்திற்கு’ வந்தார். ’கோவில், ஆகம விதிப்படித் தான் அமைய வேண்டும். ஆகையால், கருவறையின் வெளிச் சுற்றின் இடது பக்கம் தட்சிணாமூர்த்தி இருக்க வேண்டும்…. புரட்சித் தலைவர் வடிவத்தில் ஒரு சிலையை வடித்து. அதுவரைசும்மாஇருந்த அமைச்சர் கே.ஏ.கே., இப்போது சூடுபட்ட பூனையாய் கத்தினார். ‘கூடாது-கூடாது; இந்த மானுட தட்சிணாமூர்த்திகடைசிக் காலத்தில், தனது பரிவாரத் தேவதைகளை நம் தெய்வநாயகியிடம் பேசலாகாது என்று ஆணையிட்டவர், அவரா தட்சிணாமூர்த்தி-அய்யகோ.’ முகவை மாவட்ட சத்தியமூர்த்தி சப்போர்ட் செய்தார். இதனால் ஆகம விதியும் மீறப் படவில்லை. எங்கள் மாவட்டத்தில் உள்ள உத்திரகோசமங்கை என்ற திருத்தலத்தில், நம் சர்வேஸ்வரி, தனது முந்தைய குழல் வாய் மொழி அவதாரத்தில், பிரணவ மந்திரத்தை சிவனால் உபதேசிக்கப் பட்டார். இப்போதைய ஜெயலலிதா அவதாரத்தில், குருவுக்கு மிஞ்சிய சிஷ்யை ஆகிவிட்டார். ஆகவே தட்சிணாமூர்த்தி தேவையில்லை. கூட்டுறவு அமைச்சரான பட்டாபிராமன், ஒரு கேள்வியைக் கேட்டார். ‘சின்னம்மாவையாவது-துர்க்கா தேவியாய்…..’ ‘தேவையில்லை- இருவருமே ஒரு நாணயத்தின் இரு பக்கங்கள். உண்மையில், கருவறையில் இருவருமே இருமுக நாயகியர்-முகம் காட்டி அருள் பாலிப்பவர் ’அம்மா-திருமுகம் காட்டமலே திருவருள் செய்பவர் சின்னம்மா-இருவரும் தத்தம் ஆக்கல், அழித்தல், காத்தல் செயல்களை செவ்வனே செய்கிறார்கள்.’ எஸ்.டி.எஸ். அவர்கள், எல்லாம் தெரிந்தவர் போல் பதிலளித்தாலும், அவருக்கும் உள்ளூர உதைப்பு- சின்னம் மாவை இருட்டடிப்பு செய்துவிட்டதாய் எவரும் கோள் சொல்லக்கூடாதே என்ற முன்னெச்சரிக்கை-ஒரு பக்கமாய் தூங்கிக் கொண்டிருந்த நாவலரை உசுப்பி, ‘நீங்க-என்ன நினைக்கீங்க’ என்றார். அவரோ-அந்த நடமாடும் பல்கலைக் கழகம், இப்படி பதிலளித்தது. “நான் நாத்திகன்-பகுத்தறிவு வாதி-இந்தக் கோயில் குட முழுக்கு விவகாரம் எனக்கு ஒத்து வராது –” ’அப்படியா சங்கதி-இந்தாப்பா ஜெயக்குமார்-வழியில் டாக்டர் விசாலாட்சியம்மாவை பார்த்தேன்-கூட்டி வா." ’நீங்க மிரட்டுறதே போதாதா எஸ்.டி.எஸ்.? நான் ஒத்துவராதுன்னுதான் சொன்னேனே தவிர- ஒத்துழைக்க மாட்டேன்னா சொன்னேன்? எல்லாவற்றையும் கேட்டுக் கொண்டிருந்தேன்-நம் புரட்சித் தெய்வம் ஒன்றாய் அரும்பி பலவாய் நிற்பவள். அவளே சிவன்-அவளே தட்சிணாமூர்த்தி. அவளே விஷ்ணு-அவளில்லாமல் சிவனில்லை. ஆனால் சிவனில்லாமல் அவளுண்டு. வேண்டுமானால், அந்த அருட்பெரும் ஜோதிக்கு தொண்டாற்றும் நம்மைநவீன நாயன்மாராய் சிலையெடுக்கச் செய்து- கிராமத்தின் சேரி போல ஒரு ஒதுக்குபுறமான இடத்தில், சிலைகளாய் நிற்போம்…“. தமிழில் புலவர் பட்டம் பெற்ற இந்திரகுமாரிக்கு ஒரு சந்தேகம்-கேட்டே விட்டார். ‘அறுபத்து மூவரும்-ஈஸ்வரனைத்தான் அதிகமாய் பாடினார்கள்; பராசக்தியை, போனால் போகிறது என்பது போல்தான் பாடினார்கள்-ஆகையால் அம்மையின் திருக்கோவிலில் அவர்களை….’ ‘’என்னம்மா நீ-அன்றைய நாயன்மார்- ஈஸ்வரியை ஒதுக்கி வைத்த பாவத்திற்கு பரிகாரம் தேடத்தான் , நம் வடிவில் நவீன நாயன்மார்களாய் அவதாரம் எடுத்திருக்கிறார்கள். இது கூடவா ஒங்களுக்கு தெரியலே…." டில்லியில் படித்த செல்வகணபதிக்கும் ஒரு சந்தேகம்-நாவலரிடமே கேட்டார். இதையெல்லாம்…. மக்கள் நம்புவார்களா…." ’இந்த மாதிரி பதவி இழப்பு சந்தேகம் ஒனக்கு வரப் படாதுப்பா-நம் மக்கள் யார்? கல் தோன்றி, மண் தோன்றாக் காலத்தே முன் தோன்றி மூத்தவர்கள். ஒவ்வொருத்தனும் தன்னை அறிவாளியாக நினைப்பவன்-ஆகையால் அவர்கள் எதையும் நம்புவார்கள்-இல்லையா எஸ்.டி.எஸ்.? சரிதான் நாவலரே-சைவத்தில் இருந்து சமணத்திற்குப் போய்விட்டு, கடைசிக்காலத்தில் மீண்டும் சைவம் வந்தாரே அப்பர் அடிகள்-அவரின் நவீன அவதாரம் தாங்கள் என்றால் தப்பா –’ ‘தப்பில்லை எஸ்.டி.எஸ்; அதே போல் ஈஸ்வரனால் கண்ணிழந்து, ஈஸ்வரியால் மீண்டும் கண்பெற்ற சுந்தரர் நீ-ஆண்டான் அடிமை தத்துவத்தின் உட்பொருளான மாணிக்கவாசகரின் மறு அவதாரம் நம் சேடப்பட்டி….’ சைவ சமயக் குரவர் லிஸ்டில் ஒரு வேகன்ஸி இருப்பதையும், அதைக் கைப்பற்றும் நோக்கத்தோடும், கே.ஏ.கே.யும், ஆர்.எம்.வீ.யும் போட்டி போட்டுக் கேட்டார்கள். ’சம்பந்தர் யார்? ‘சந்தேகம் இல்லாமல் குற்றாலீஸ்வரன்’ அமைச்சர் செங்கோட்டையன் கோபமாய் கேட்டார். அமாவாசைக்கும்-அப்துல்காதருக்கும் என்ன சம்பந்தம் ‘இருக்கு-இருக்குது-சிறுபிள்ளையான திருஞானசம்பந்தரான சைவத் தளபதி பார்வதி தேவியின் ஞானப் பாலால் ஞானம் பெற்றார்… குற்றாலீஸ்வரனோ, நமது எல்லாம் வல்ல தெய்வத்தின்கட்டவுட்டைப் பார்த்துப் பார்த்தே நீச்சல் சித்தி பெற்றான். இதிலென்ன தப்பு-தென்னவன், அந்தப் பையன் கிட்ட எதுக்கும் முன் கூட்டியே ஒரு ஸ்டேட்மென்ட் எழுதி வாங்குங்க…’ கு.ப.கிருஷ்ணன், மனது கேளாமல் மனுப் போட்டார். “புரட்சி தெய்வத்தின்-கேவலம் ஒரு வறட்சியான புகைப்படம்-கட்சியின் கடைக்கோடி தொண்டரான, இந்த ஊர் பக்கிரிக்கு சொந்தமானது-அவனுக்கும் ஒரு சின்னச் சிலையாய்’ மதுசூதனன் ‘அடித்துப்’ பேசினார். ’ரேடியோ கேட்போம். ஆனால் அதைக் கண்டுபிடிச்சவனைத் தெரியுமா? அரசியல் சாசனத்தின்படி பதவி ஏற்போம். அந்த சாசனம் என்னென்னு தெரியுமா? பக்கிரியாவது கிக்கிரியாவது-அவனுக்கு விளம்பரம் போட் டால்-நம் தெய்வம் நம்மளுல ஒருத்தரை நீக்கிட்டு-அவனை அமைச்சராய் போட்டுடப்படாதே" அமைச்சர்கள் வாயடைத்த போது, அதையும் மீறி முத்துசாமி கேட்டார். ‘அப்போ-நம் எம்.பி.க்கள். எம்.எல்.ஏக்கள் -’ ’கோபுரம் கட்டும்போது கவனிக்கப்படுவார்கள். சரி-சரி-அமைச்சர்கள், வாரியத் தலைவர்கள் கொண்ட நாயன்மார் லிஸ்டை இங்கேயே தயாரித்து அம்மாவுக்கு ஒப்புதலுக்கு அனுப்பி வைப்போம். நல்ல வேளை பழைய நாயன்மார் லிஸ்டில் காரைக்கால் அம்மையார் இருந்ததால் இந்திரகுமாரி தப்பித்தார்." நாவலர், இந்த போடு போடுவதைப் பார்த்துவிட்டு, அனைவரும் சிரித்தபோது, கி.வீரமணி அவர்கள் கருப்புச் சட்டையோடு வந்து கோபமாய் நின்றார். ‘இந்த ஆலோசனைக் கூட்டத்திற்கு என்னை ஏன் அழைக்கவில்லை? ஆனாலும் சொல்கிறேன்- சமூகநீதி காத்த வீராங்கனைக்குக் கோயிலேழுப்ப, எனக்கேதும் தடை யில்லை - ஆனால் அந்த கோவிலின் அர்ச்சக-ஒதுவார் நியமனத்தில், நிச்சயமாய் 60 சதவிகிதம்- தாழ்த்தப் பட்ட-ஒடுக்கப்பட்ட சமூகத்திற்கு வேண்டும்’ ‘அப்படியே ஆகும்- அப்புறம் நாங்கள் தயாரிக்கும் நாயன்மார் லிஸ்டில்-ஒங்களை சேர்க்க எங்களுக்கு ஒரு ஆசை ; தான் பெற்ற பிள்ளையை ஈஸ்வரனுக்கு சமைத்துக் கொடுத்த சிறுத் தொண்டரின் அவதாரம் நீங்கள்-அவர் பரஞ்ஜோதி என்ற அந்தக் கால தளபதி-நீங்கள் ’மானமிகு’ இந்தக் கால தளபதி; என்ன சொல்கிறீர்கள் வீரமணி நாயனார் அவர்களே -’ ‘நாவலரான நீங்களும்-மானமிகு நானும், ஒரே பாசறையில் உதித்தவர்கள். நீங்கள் மூத்தவர். உங்கள் சொல்லைத் தட்டுவானா இந்தப் பெரியார் சீடன்’ ஆலோசனைக் கூட்டம் முடிந்ததும் – மரியாதைக்குரிய வீரமணியும், வணக்கத்திற்குரிய சேடப்பட்டியாரும் இரு பக்கமும் சூழ, அமைச்சர் பெருமக்கள், வெளிப்பக்கம் உள்ள விழா மேடைக்கு வந்தார்கள். நாடகக் காவலர் ஆர்.எஸ்.மனோகரின், ‘குங்கும நாயகி’ என்ற நாடகம், துவங்குவதற்கு சிறிது நேரமே இருந்தது (இந்து அறநிலையத் துறையின் ஏற்பாடு). அந்த மேடையில் ஏறி, நாவலர் நாடக பாணியில் பேசினார். ‘கோடி கோடி அண்டங்களை விநாடி விநாடியாய் படைக்கும் சக்தி, நம் புரட்சித் தெய்வத்தின் புகைப்படத்திற்குக் கூட உண்டு என்பது, உள்ளங்கை நெல்லிக் கனியாகி விட்டது. இப்படி ‘சக்தி கொண்ட குங்குமம் கொட்டியாம்’ நம் புரட்சித் தெய்வத்திற்கு அங்கிங்கெனாதபடி எங்கும் நிறை அம்மனுக்கு அம்பாளுக்கு இங்கேயே கோவில் எழுப்பப் போகிறோம், நீங்கள் இப்போதே வசூலில் இறங்கி…. கோவில் நிதி கொடுக்க வேண்டும் என்று உள்ளபடியே கேட்டுக் கொள்கிறேன்…." நாவலரின் பேச்சை இரைச்சலோடு பேசியபடியே கேட்டுக் கொண்டிருந்த சில புத்திசாலிகள் ’வசூல்’என்றதும் உஷாராகி ஆளுக்கு ஆள் விபரம் சொன்னார்கள். ‘எங்கள் வீட்டு ஜெயலலிதா அம்மாவின் படத்திலும் குங்குமம் கொட்டுது’ ‘எங்கள் வீட்டு புரட்சித் தலைவியின் படத்தில்- குங்குமத்தோடு விபூதியும் சேர்ந்து கொட்டுது’ ‘அடப்போங்கய்யா… எங்க வீட்டுக் காலண்டரில் எழுந்தருளிய தமிழ்த் தாயின் படத்தில் இருந்து குங்குமம் மட்டுமா கொட்டுது-அந்தந்த நாளைக்கு ஏற்ப காலண்டர் தாள் தானாய் சுருங்குது- எங்க ஊர்லயும் கோவில் கட்டணும்-இதுக்கு அரசு உதவி வேணும்-’ ‘எங்க ஊர்லயும். எங்க ஊர்லயும். ‘எங்க டவுனுலயுந்தான்" கூட்டம், இப்போது அலை மோதியது. அமைச்சர்கள், மனித சங்கமத்தில் மூழ்கப் போன வேளை; இந்திரகுமாரி அழுதே விட்டார். இந்தச்சமயத்தில், அருகே நின்ற ஐ.ஏ.எஸ். ஒருத்தர், நாவலர்காதைக்கடிக்க, அவர், அதை, தமக்கே உரிய நாநயத்தோடு, மைக்கில் உரைத்தார். ’ஒடுங்கள்… ஒடுங்கள்…உங்கள் வீட்டில் இருக்கும், ஆயிரம் கோடி சூரியன்களை உச்சித்திலகமாகக் கொண்ட நம் தெய்வத்தின் புகைப்படத்தில் இருந்தும் குங்குமம் கொட் டலாம்… யார் கண்டது…? தங்கம் கூட பவுன் பவுனாய் விழலாம்… அப்படி நேர்ந்தால், அம்மனுக்கு உடனடியாய் ஆலயம் எழுப்ப வேண்டும். ஒடுங்கள்… ஒடுங்கள்… உங்கள் காட்டில் மழை பெய்யும் என்ற ஒரே ஒரு மகிழ்ச்சியில் ஒடுங்கள்…. அந்தக் கூட்டத்தினர், அத்தனை பேரும், சொல்லி வைத்ததுபோல், வந்த வழியிலேயே திரும்பி ஓடினார்கள். இந்நேரம் தத்தம் வீட்டில் குங்குமம் கொட்டியிருக்கும் என்ற அனுமானம்… ஒருவேளை தங்கம் என்ன… வைரமே வந்து விழலாம் என்ற எதிர்பார்ப்பு… அப்படியே விழவில்லை யானாலும், ஜெயலலிதா அம்மனுக்கு கோயில் கட்டி விட்டால், தொட்டதெல்லாம் பொன்னாகும் என்ற நம்பிக்கை…. மாண்புமிகு அமைச்சர் பெருமக்கள் சிரித்துக் கொண்ட போது, மக்கள் பைத்தியம் பிடித்தது போல் தலைதெறிக்க பின்னோக்கி ஒடிக் கொண்டிருக்கிறார்கள். -தாமரை - பிப்ரவரி 1995 கண்ணுக்குத் தெரிந்த கிருமிகள் பழனிச்சாமி, சாப்பிடும்போதும் பேச மாட்டார். சாப்பிடுகிறவர்களிடமும் பேசமாட்டார். அப்படிப்பட்டவர், காலங் காலமாய் கடைப்பிடிக்கும் இப்படிப்பட்ட பழக்கத்தையும் மீறி பேசிவிட்டதில், ஆனந்த வல்லியம்மா, பெயருக்கேற்ப பரவசமானாள். எவர்சில்வர்தட்டில் நிழல் காட்டிய இட்லிகளில் ஒன்றை, ஒரு கிள்ளுக்கிள்ளி, அதை எள்ளுத்துவையலில் ஒரு தள்ளுத் தள்ளி, கத்தரிக்காய் சாம்பாரில் ஒரு முக்கு முக்கி, வாய்க்குள் திணித்துவிட்டு, அதற்கு உடன்போக்காக, ஒரு டம்ளர் தண்ணீரையும் உள்ளே அனுப்பிவிட்டு, இப்படி விமர்சித்தார். ‘சும்மா சொல்லப்படாது… ஆனந்தம்மா… முக்கனிச்சாறு பிழிந்துன்னோ… தேனோடு பால் கலந்தாப் போலன்னோ…. பாடுவார்களே…. அப்படிப்பட்ட டேஸ்டுப்பா…’ ஆனந்தவல்லி, ஒரு படைப்பாளி, எப்போதாவது தனது படைப்பில் தானே பூரித்துப் போவதுபோல் புளகாங்கிதமாகி, புன்சிரிப்போடு கேட்டாள். ‘எள்ளுத் துவையல… இன்னும் கொஞ்சம் வைக்கட் டுமா… ஒங்களுக்காகவே அரைச்சது" நீ ஒருத்தி… நான் எள்ளையும் சொல்லல… எண்ணெயயும் சொல்லல…குடித்த தண்ணீரச் சொன்னேன்… காவிரிய குடிச்சிருக்கேன். யமுனாவ விழுங்கி இருக்கேன். ஆனால் இந்த மெட்ராஸ் மெட்ரோ வாட்டர் டேஸ்டு வராதுப்பா…அடேயப்பா. இன்னும் ஒரு செம்பு நிறைய கொண்டு வாப்பா…’ ஆனந்தவல்லி, அந்தப் பெயருக்கு எதிர்மாறான உணர்வோடு, சமையல் அறைக்குப் போய், ஒரு பால் செம்பு நிறைய தண்ணீர் கொண்டு வந்து, அவரை அடிக்காத குறையாக வைத்தாள். அதற்குள் ஒரு டெலிபோன்சத்தம். ஒரு துஷ்டக் குழந்தையின் குவா குவா சத்தம் மாதிரி. ‘பெட்ரூமுக்குள்’ இருந்த டெலிபோனை எடுத்த ஆனந்தவல்லி, இடையிடையே ‘அய்யய்யோ’….‘அட கடவுளே’.’’’ என்று சொல்லிவிட்டு, ‘ஓ மை காட்’ என்று அதற்கு ஆங்கில அர்த்தமும் சொன்னாள். பிறகு அவசர அவசரமாக, கணவர் பக்கம் ஓடிவந்து, அவர் வாய்க்குமேல் கவிழ்ந்த செம்பை பலவந்தமாகப் பறித்து ஜன்னலுக்கு வெளியே நீரை வீசிக் கடாசினாள். அந்த வேகத்தில், பால் செம்பு, ஜன்னல் கம்பியில் மோதி, ஒரு டப்பாங்கூத்து சத்தத்தை எழுப்பியது. பழனிச்சாமி, காரணம் கேட்குமுன்பே, ஆனந்தவல்லி, வாந்தி எடுக்கப் போவதுபோல் வாயை கோணல் மாணலாய் வைத்துக் கொண்டு கணவரையும் அறுவெறுப்பாய் பார்த்தபடியே விவரித்தாள். ‘மெட்ரோ தண்ணியும் சாக்கடைத் தண்ணியும் ஒண்ணாக் கலந்துட்டாம், ஜானகி மாமி…போன்ல சொல்றாள். தண்ணீர் ஒரு மாதிரி பிசுபிசுன்னு இருக்குதேன்னு… மாமியே… இங்குள்ள மெட்ரோ பிராஞ்சுக்கு போன் செய்து கேட்டாளாம். அங்குள்ள அரிச்சந்திரங்க… மூணு நாளைக்கு முன்னே கலந்துட்டுதே… இப்போதான். ஒங்களுக்கு தெரிஞ்சுதாக்குமுன்னு திருப்பி கேக்குறாங்களாம்…’ பழனிச்சாமி, இப்படிப்பட்ட தண்ணீரிலாக் குளித்தோம்-குடித்தோம் என்கிற மாதிரி தனது உடம்பை தடவி விட்டார். வாயை அகலமாக்கினார். பிறகு ஆத்திர ஆத்திரமாய் எழுந்து, அவசர அவசரமாய் பேண்டைப் போட்டுவிட்டு, சட்டையை மாட்டப் போனபோது, ஆனந்தம்மா இடைமறித்தாள். அவரது சட்டையைப் பிடுங்கி, தனது கைக்குள் வைத்துக் கொண்டு கேட்டாள். “எங்கே புறப்படுறிங்க” “மெட்ரோ வாட்டர் ஹெட்குவார்ட்டர்ஸுக்கு. அவங்கள உண்டு இல்லைன்னு பார்க்கணும்’. “ஓங்களத்தான்.அப்படி ஆக்குவாங்க… எதுக்குங்க வம்பு… நம்ம செர்வண்ட் மெயிட் கிட்ட அஞ்சு ரூபாய நீட்டினால்… அந்த அடுக்கு மாளிகையில் போய் ‘போர் வாட்டர்’ கொண்டு வந்துட்டுப் போறாள்’ “இவ்வளவு கால தாம்பத்தியத்துலயும்… நீ என்னை புரிஞ்சிக்கலே ஆனந்தம்மா… எனக்கு நல்ல தண்ணீர் கிடைக்கலன்னு நான் ஆத்திரப்படுறதா நீ நினைச்சால்… அது தப்பு… சாக்கடை தண்ணீர் கலந்து மூணு நாள் ஆகியிருக்கு… அப்படியும் நம்ம கவர்மென்ட்டோ. அல்லது மெட்ரோ காரங்களோமக்களுக்குத் தெரியப்படுத்தல… இந்த ஏரியாவுல இருக்கிற ஐயாயிரம் பேர்ல…குறைஞ்சது நாலாயிரத்து தொளாயிரம் பேரு…இந்த நாற்றம் பிடிச்ச தண்ணிரைக் குடிச்சிட்டு ஜான்டிஸ்ல அவஸ்தப்படப் போறாங்க…காலராவுல சாகப் போறாங்க… இதைப் பார்த்துட்டு நான் சும்மா இருக்கணும் என்கிறியா…சாக்கடை தண்ணி கலக்குறது. மனித முயற்சிக்கு மீறினதுன்னே வச்சுக்கு வோம்… இந்த அதிகாரிங்க, டேங்கர்ல, தெருத்தெருவா தண்ணீர் கூட தரவேண்டாம். குறைந்தபட்சம் தண்ணீரை குடிக்க வேண்டாமுன்னாவது தெரியப்படுத்தணும் இல்லையா…” “அப்படிச் சொல்லாதவங்க கிட்ட பேசறது… பாறையில் மோதினது மாதிரி. பேசாமல்…. நம்ம வெல்பர் அசோஸியேஸன் கிட்ட சொல்லலாம்.” “இவங்களா….பெட்டிஷன் போடுறதுபற்றி ஆலோசிக்க நிர்வாகக் கமிட்டியை கூட்டலாமுன்னு சொல்லுவாங்க. அந்த கமிட்டி கூடுறதுக்கும்…ஒரு வாரம் நோட்டீஸ் கொடுக்கணுமுன்னு பைலா விதிகளை பேசுற பன்னாடைங்க… பேசாமல் சட்டையைக் கொடு’ “ஏன் இப்படி எக்ஸைட் ஆகிறிங்க? இங்க உள்ள பிராஞ்ச் ஆபீசுக்கே போன் போட்டு கேட்கலாம். திருப்தியான பதில் இல்லாவிட்டால்… போர் வாட்டர் இருக்கவே இருக்குது…” ’ஒன்கிட்ட மனுஷன் பேசுவானா… போன பிறவியில கிளியா பிறந்திருப்பே… சரி…சரி… அந்த பிராஞ்ச் ஆபீஸ் டெலிபோன் நம்பரையாவது கொடுப்பா…" பழனிச்சாமி, மனைவி கோடு கிழித்துக் காட்டிய டெலிபோன் எண்களைச் சுழற்றப்போனார். ஆனாலும் விரல்கள், டயலிலேயே நின்றன…. ஐந்து நிமிடம்… பத்து நிமிடம். …பொறுமை இழந்து வலியப் பேசினார். “ஹலோ… நான் கொஞ்சம் அவசரமாய் பேசணும்…தயவு செய்து டிஸ் கனேக்ட் செய்துட்டு… அப்புறம் டயல் செய்யுங்க… ரொம்ப அவசரம் தம்பி… இந்தாம்மா. நீயாவது தம்பிக்கு சொல்லும்மா… அடி செருப்பால. நானும் வேணுமுன்னா…ஒங்க, ஸ்வீட் ‘நத்திங்கை’ ரசித்து கேட்கலாமா… ஏம்மா. நீயும் ஒரு பெண்ணா… அவனோட சேர்ந்து நீயுமா சிரிக்கே… என்ன… நான் ரசனை இல்லாத முண்டமா… அடேய்.’ ஆனந்தவல்லி, அந்த டெலிபோனை கணவனிடம் இருந்து பறித்து, தனது காதில் வைத்தாள். பிறகு டக்கென்று கீழே வைத்தாள். இப்படி எடுப்பதும், வைப்பதுமாக, கஜினி முகமதுவைவிட ஒரு தடவை அதிகமாக வைத்துவிட்டு, கடைசியில் “அப்பாடா. பேசி முடிச்சுட்டாங்க. லைன் கிடைச்சுட்டு” என்றபடியே டயலைச் சுழற்றினாள். “ஹலோ? கேட்டபோது, பழனிச்சாமி, அந்த டெலிபோன் குமிழை தன் வசமாக்கிப் பேசினார். “ஹலோ. என் பேரு பழனிச்சாமி. மூணாவது கிராஸ்ல நாலாம் நம்பர். டெல்லி செக்கரட்டேரியட்டுல. ரிட்டயர்ட் டெப்டி செக்கரட்டரி. வாறேன். விஷயத்துக்கு வாறேன். மூணு நாளாய் ஏழை ஜனங்க. சாக்கடைத் தண்ணியக் குடிக்கிறாங்க. எஸ். எஸ். ஓங்களுக்கு தெரியுமுன்னு எனக்கும் தெரியும். நீங்க. ஏன் மக்களுக்கு தெரியப் படுத்தலை என்கிறதுதான் என் கேள்வி. அது ஒங்க டுட்டியில்லையா. அப்போ எதுக்காக இருக்கீங்க..? தம்பி. கொஞ்சம் மரியாதையா பேசப்பா. ஹலோ. ஹலோ.” பழனிச்சாமி, டெலிபோன் குமிழை, ஒரு நிமிடம் வரை காதோடு காதாய் வைத்துவிட்டு, மனைவியைப் பாராமலே, ’காலிப் பயல்க.. கட் பண்ணிட்டாங்க… சரி… சரி… சட்டையைக் கொடு… ஸ்கூட்டர் சாவியை எடு…" என்றார். “கடைசியில், காமாட்சி மாமி. டில்லியில சொன்னது சரியாப் போச்சு…” “அந்த கிராக்கு என்ன சொல்லிச்சு…” ஆனந்தவல்லி, கணவருக்கும் பதிலளிக்கவில்லை… அவர், சட்டைப் பித்தான்களை போட்டுவிட்டு, செருப்பை தேடிக் கொண்டிருந்தபோது, இவள் டில்லியில் காமாட்சி மாமி சொன்னதை, மனதில் அசை போட்டாள். இந்த பழனிச்சாமி, அண்டர் செகரட்டரியாக இருக்கும்போது, பலரோடு சேர்ந்து சார்ட்டட் பஸ்ஸில் போவார். அப்புறம் டெப்டி செக்கரட்டரியானதும் ஆபீஸ் காரில் காலையில் ஒன்பது மணிக்குப் போய், இரவு எட்டு மணிக்குத்தான் திரும்புவார். வீடு, அவருக்கு விருந்தினர் மாளிகை… ஆபீஸும் அங்கு நடக்கும் நல்லது கெட்டதுகளுமே, அவர் உலகம்… பால் வாங்குவதில் இருந்து, அமெரிக்க மகனுக்கும், பம்பாய் மகளுக்கும் சோடி சேர்ப்பது வரைக்கும், இவள் பொறுப்பானது… இதை, விரல்விட்டு, சுட்டிக்காட்டிய காமாட்சி மாமி, “ஆனந்தி. ஒன் ஆத்துக்காரர் அசல் கிராக்… மெட்ராஸ்ல இப்போ… அக்கிரமம் அதிகமாயிட்டாம்… ஒன்னுடையவரால… தாக்குபிடிக்க முடியாது… அவரோட அடாவடிய இங்குள்ளவங்க ஒன் முகத்துக்காக விட்டுக் கொடுக்காங்க… அங்கே அப்படி இல்ல… பேசாமல், இங்கேயே செட்டிலாயிடு” என்று சொன்னதின் தாத்பரியம், இப்போதுதான் ஆனந்தவல்லிக்கும் புரிந்தது. இந்த பழனிச்சாமி கேட்டால்தானே… பழனிச்சாமி, மனைவி அழாக்குறையாய் நீட்டிய சாவியை வாங்கிக் கொண்டு, ஸ்கூட்டரை ஸ்டார்ட் செய்தபோது, ஆனந்தவல்லியால் பொறுக்க முடியவில்லை. “நான் சொல்வதைக் கேளுங்க… போர் வாட்டர் இருக்கவே இருக்குது” “நம்ம நாட்டை நோயாளியாக்க… பாகிஸ்தான்… எய்ட்ஸ் நோயாளிகளை இந்தியாவுக்கு அனுப்புறதுக்கு திட்ட மிட்டிருப்பதாய் பேப்பர்ல வந்த நியூஸ் படித்தியா…அந்த பாகிஸ்தானுக்கும். இவனுகளுக்கும் என்ன வித்தியாசம்… சொல்லுடி…” அப்பாவுக்கு பதிலாய் ‘அடி’ போட்டுவிட்டால், கணவர் முன் வைத்த காலை பின் வைக்க மாட்டார் என்பதை புரிந்து கொண்ட ஆனந்தம்மா, சலனமற்ற குரலில் முறையிட்டாள். ’உடம்புல. ஆயிரத்தெட்டு நோய் வச்சிருக்கிங்களே… பிளட் பிரஷ்ஷர், டயா பெடிக்ஸ். இஸ்- கிமியான்னுமொதல்ல மருந்து மாத்திரைகளை விழுங்கிட்டுப் போங்க!…" “இதோ… ஒரு நொடில வந்துடுறேன். ..இரண்டுல ஒன்றைப் பார்க்கும் முன்னால… எனக்குள்ளே எந்த மாத்திரையும் வேலை செய்யாதுப்பா…’ பழனிச்சாமி, ஸ்கூட்டரை விட்டார். அறுபது கிலோ மீட்டர் பாய்ச்சல். அந்த ஏரியாவைத் தாண்டுவது வரைக்கும், கண்ணில் பட்ட அத்தனை பேரையும், அனுதாபத்தோடு பார்த்தார். இடையிடையே கும்பல் உள்ள இடமெங்கும் வண்டியை நிறுத்தி, சாக்கடைக் கலப்பு பற்றி விவரம் சொன்னார். பழனிச்சாமி, ஒரு மஞ்சள் லைட்டின் உதவியோடு, ஒரு சின்னத் தப்பை செய்துவிட்டார். இரண்டு கிலோ மீட்டர் தொலைவுக்கு வந்தபிறகு, சிக்னலில், பச்சை விளக்கு மஞ்சளானபோது, “கிராஸ்” செய்தார்; ஆனால், அடுத்த சாலைக்கு போகுமுன்பே, சிவப்பு விளக்கு வந்துவிட்டது. இதற்கென்றே, எதிர்பார்ப்போடு, மோட்டார் பைக்கில் சாய்ந்து நின்ற வெள்ளை யூனிபாரக்காரர்கள், இவரையும், இவரை நம்பி பின்னால் வந்தவர்களையும் வாகனங்களோடு சேர்த்து ஒரம் கட்டினார்கள். அப்புறம் பழனிச்சாமியை, பக்குவமாய் பார்த்தார்கள். அவரும் பேசினார். ‘’எதுக்காக…. இப்படி?" “ரெட் லைட்… கண்ணு தெரியல…” இதற்குள் எங்கிருந்தோ ஒரு வேன்.அது அங்கே நிற்க, இந்த ‘வெள்ளைக்காரர்கள்’ அங்கே ஒட, அப்புறம் காதோடு வாயுரசல்….சட்டைப் பையோடு நோட்டுரசல்… பழனிச்சாமி கொதித்துப் போனார். ஒரு தடவை, செகரட்டேரியட்டில், ஏதோ ஒரு சலுகைக்கு, ஒரு ‘மதராஸி’ இருபத்தையாயிரம் ரூபாய் கொடுக்க வந்தார். இவர், அவரை போலீசில் ஒப்படைக்கப் போவதாக எச்சரித்தார்…இப்போது அந்த போலீஸே… அந்த போக்குவரத்து வியாபாரிகள் மீண்டும் வந்ததும், பழனிச்சாமி, கொதித்துப் பேசினார். “நான் தப்பு செய்திருந்தால்…ஸ்பாட் பைன் போடுங்க… இல்லாவிட்டால் கேஸ் எழுதிட்டு… என்னை போக விடுங்க… நான் காசு கொடுக்கிற ஜென்மமில்ல… நாடு உருப்பட்ட மாதிரிதான்…” பழனிச்சாமி, இப்படிச் சொல்லிவிட்டு, தன்னோடு பிணைகளான, இதர வாகனக்காரர்களை, ஆதரவாகவும், ஆதரவு கேட்பது போலவும் பார்த்தார். ஆனால், அவர்களோ, அவசர அவசரமாய், சற்று விலகிப் போய் நிற்க, அங்கே வந்த ஒரு ‘போக்குவரத்திடம்’ தள்ள வேண்டியதையும் தள்ளி விட்டு, வாகனங்களையும் தள்ளிக் கொண்டு போய் விட்டார்கள். போலீஸார், இப்போது தனித்து விடப்பட்ட பழனிச்சாமியை, ஏற இறங்க பார்த்தார்கள்… ஆசாமி கிராக்கு.அதோட ஊருக்கு புதுசு….ஆகவே பழசாக்தணும்… “ஸார்…கேஸ் எழுதிட்டு என்னை விடுங்க ஸார்” ….. “அது எங்களுக்கும் தெரியும் ஸார்.இப்போ போக்குவரத்து நெருக்கடில நாங்க பிஸ்ஸி ஸார்…அப்புறம் ஓங்க வெஹிக்கிளையும் செக்கப் பண்ணணும்… ஒர்க்ஷாப்புக்கு கொண்டு போகணும்…வெயிட் பண்ணுங்க ஸார்….” பழனிச்சாமியால், எதுவும் செய்ய முடியவில்லை. அந்த வெள்ளையூனிபாரம்கள், ஒரு மணல் லாரியை கோபத்தோடு மடக்கி, சிரித்தபடியே விடுவதையும், கோணிக்கட்டை கேரியரில் வைத்திருந்த ஒரு அன்னக்காவடி சைக்கிள்காரரை, தலையில் ஒரு தட்டுத் தட்டிவிட்டு, சைக்கிள் டயர்களின் மூச்சைப் பிரிப்பதையும் பார்ப்பதைத் தவிர, வேற வழியில்லை….ஆனாலும், அவரால் பொறுக்க முடிய வில்லை. நேராக, ‘பஞ்சராக்கியவர்களிடம்’ போய், உபதேசித்தார். “சைக்கிள்காரர் கையுல காசு இல்ல என்கிறதுக்காக இப்படி அடாவடி செய்யுறது நியாயமா ஸார். இதனாலதான்..ஏழை எளியவங்ககிட்ட ரவுடி மாதிரி நடக்கிற …ஒங்களை அடக்குறதுக்கு மக்கள் சூப்பர் ரவுடிகளைதேர்ந்தெடுக்காங்க..அப்புறம்-கேஸ் எழுதிட்டு. என்னை போக விடுங்க”… “நீங்க…நினைக்கிற மாதிரி…இது மாமியார் வீடுல்ல…நில்லுன்னா…நின்னுதான் ஆகணும்… இந்தாப்பா…அந்த டுரிஸ்ட் பஸ்ஸை நிறுத்து… கொஞ்சம் தள்ளி… ஒதுக்குப் புறமாய் நிற்கச் சொல்லு…” பழனிச்சாமி, தலையைப் பிடித்துக் கொண்டார். அதற்கு பிரதிபலனாக, உடனடியாய் ஒரு திட்டம் உதித்தது… இவரோடு கல்லூரியில் ஒன்றாகப் படித்த நவரத்தினம், போலீஸ் கமிஷனர் ஆபிஸில் பெரிய போலீஸ்…அவருக்கு, டெலிபோனில் சொன்னால், பறக்கும் படை வரும்… ஸ்கூட்டரை நிறுத்தியதைவிட, இந்த பகல் வேட்டையையே முக்கியப்படுத்திப் பேசணும்… டேய். பசங்களா…இருங்கடா இருங்க…’ பழனிச்சாமி, ஓடாக்குறையாய் நடந்தார்.ஒரு செவ்வகக் கண்ணாடி அறைக்குள் நடந்தார்…அதன் மேல் “எஸ்.டி.டி., ஐ.எஸ்.டி, பி.ஸி.ஓ என்ற ஆங்கில எழுத்துக்கள் மஞ்சளாய் ஜொலித்தன. எதிர் பக்கம் நாற்காலியில் ஒரு அழகான இளம்பெண்… அவள் முன்னால், தப்புத் தப்பாய் அழைக்கப்படும்”கம்ப்யூட்டர்“….அவளின் இடது பக்கம் ’ஷிப்டுக்கு ‘ வந்த ஒருத்தன். அவளுக்காக வந்த இன்னொருத்தன். மறு பக்கம் டெலிபோன்… அந்த இளம்பெண், பழனிச்சாமியை, டயல் செய்ய விட்டாள். அவரும் பேசினார். ’ஹலோ . . . ஹலோ. . . மிஸ்டர். . . நவரத்தினம் இருக்காரா. நானா நான் அவரோட கிளாஸ்மேட்… பழனிச்சாமின்னு சொல்லுங்க.தெரியும்…ஓ.கே…வெயிட் செய்யுறேன்… என்ன… மீட்டிங்ல இருக்காரா…ஒங்க கிட்டயே சொல்லணுமா… சொல்றேன்.சொல்றேன். என்ன ஸார் அக்கிரமம்… உங்க டிராபிக் போலீஸ் அசல் பண வேட்டை நடத்துறாங்க ஸார்… இதோ இப்ப கூட நடக்குது…. ஹலோ. ஹலோ. லைன் கட்டாயிட்டே…" மீண்டும் டெலிபோன் செய்யப்போன பழனிச்சாமி, யோசித்தார். இந்த ‘பி.ஏ.க்களே இப்படித்தான்… பரமசிவன் கழுத்தில் கிடக்குற பாம்பு மாதிரி… அந்த பரமசிவத்தையே, நேர்ல பாத்துடலாம். இந்த லஞ்சத்தை எரிச்சுட மாட்டாரா…" பழனிச்சாமி, அந்த டெலிபோன் பெண்ணிடம், ஒரு பத்து ரூபாய் நோட்டை நீட்டினார். அவள் ஐந்து ரூபாயை நீட்டி விட்டு, எழுந்தாள். பழனிச்சாமி படபடப்பாய் கேட்டார். “என்னம்மா இது… லோகல் கால் ஒரு ரூபாய்தானே… இப்படி வசூலிக்கணுமுன்னு தானே… கவர்மெண்ட் ஒங்களுக்கு டெலிபோன் கொடுத்திருக்கு…” ’இந்த சட்டமெல்லாம் வேண்டாம்… எங்க பூத்தில… ஒரு கால். இரண்டு நிமிஷம் வரை இரண்டரை ரூபாய்… நீங்க அஞ்சு நிமிஷம் பேசி இருக்கீங்க… போனால் போகுதுன்னு ஒரு நிமிஷம் ஓங்களுக்கு போனஸ்… என்ன மணி. கொஞ்சம் சீக்கிரம் வரப்படாது?…" “இந்தாம்மா… மரியாதையா நாலு ரூபாயக் கொடு. நாட்டுக்காக ராஜீவ் காந்தி கண்ட நல்ல கனவுல இது முக்கியமானது…. அதுல கொள்ளை அடிக்காதே… சரி. நாலு ரூபாய எடு… நான் ரெண்டு நிமிஷத்துக்கு மேல பேசல… பணம் தராட்டால். டெலிபோன் டிபார்ட்மெண்ட்ல கம்ளெயின்ட் செய்வேன்…” அந்த இளம்பெண், தூக்கக் கலக்கத்தில், ‘கொண்டவனையும்’, டூட்டி மாற்ற வந்தவனையும் பார்த்தாள். அதையே காதலின் போதைப் பார்வையாக எடுத்துக் கொண்ட காதலன் எகிறினான். “வேணுமுன்னா… கம்ளெயிண்ட் செய்யேய்யா… ஒன்னை மாதிரி எத்தன கம்ளெயின்ட்ட இவங்க முதலாளி பார்த்திருப்பாரு… போ… இப்பவே… போ… அதை விட்டுவிட்டு. வயசுப் பொண்ணுகிட்டே ஏய்யா கலாட்டா செய்யுறே… கேட்பதற்கு ஆள் இல்லன்னு நெனச்சியா… சர்த்தான். போய்யா…’ விவகாரம், விகாரமாவதைப் புரிந்து கொண்ட பழனிச்சாமி, வாயடைத்துப் போய் வெளியே வந்தார். வாயடைத்ததே தவிர, மனம் அடையவில்லை. இதை விடப்படாது. போலீஸ் கமிஷனர் ஆபீஸ் போயிட்டு, அப்படியே டெலிபோன் டிபார்ட்மெண்டுக்கும் போகணும்." பழனிச்சாமி, எதிரே வந்த ஆட்டோவில் ஏறினார். தடைக்கள ஓட்டம்போல் ஓடிய அந்த ஆட்டோ, போலீஸ் கமிஷனர் அலுவலகத்திற்கு முன்னால் போய் நின்றது. மீட்டரை பார்த்துவிட்டு, பழனிச்சாமி பதறிப் பதறிக் கேட்டார். “என்னப்பா அநியாயம்… இருபது ரூபாய் கூட வராது… ஒன் மீட்டர் முப்பத்தஞ்சு ரூபாய் காட்டுது… * ’ஒன்ன மாதிரிஆசாமிங்கள ஏத்துறதே தப்புய்யா. ஊருக்கு புட்சா." “அப்போ… நீயும் மீட்டர்ல சூடு வச்சிருக்கேன்னு சொல்லு” ‘வச்சால் என்ன தப்பு… ஒன்ன மாதிரி ஆசாமிங்களுக்கு சூட்கேஸ் கண்ணுல படாது. சூடுதான்படும்’ “போலீஸ்ல புகார் செய்தால் என்ன ஆகும் தெரியுமா?* “மவராசனா அதை செய்யா… இந்த ஆட்டோவே… ஒரு போலீஸ்காரருக்கு சொந்தம். பெரிய மனுஷனாச்சேன்னு பாக்கேன்… இல்லாக்காட்டி… நடக்கிறதே வேற… ஜேப்பில கை போடும்மா… நானு பிஸ்ஸி.” பழனிச்சாமிக்கு, அந்த ஆட்டோக்கார இளைஞனிடம் சண்டை போட விருப்பமில்லை. இது குறித்தும், கிளாஸ்மேட்டான நவரத்தினத்திடம் விரிவாய் விவாதிக்கலாம் என்று நினைத்து, கேட்ட பணத்தை, மீண்டும் கேட்கப்படும் முன்னாலே கொடுத்துவிட்டு, கமிஷனர் ஆபீஸ் வளாகத்திற்குள் வந்தார். நவரத்தினத்தின் அறையைத் தேடிக் கண்டுபிடித்து, தள்ளுக் கதவை தள்ளியபடியே துள்ளிப் பாய்ந்தவரை, நந்தியான பி.ஏ., கண்களை, கொம்புகள் போல் நீட்டி முட்டப்போனது. ’என்பேரு தான் பழனிச்சாமி. ஒங்களிடம் டெலிபோன்ல." “தெரியும்…. வெயிட் பண்ணுங்க” அந்த பி.ஏ.க்காரரிடம் பழனிச்சாமி, தனது விசிட்டிங் கார்டை கேளாமலே கொடுத்தார். கால் மணி நேரம் கழித்து உள்ளே போன பி.ஏ. அரை மணி நேரம் கழித்து வெளியே வந்தார். நண்பர் நவரத்தினம், அறைக்கு வெளியே வந்து, தன்னை ஆரத் தழுவுவார் என்று எதிர்பார்த்த பழனிச்சாமி, தனது அதிர்ச்சியை உள்வாங்கிக் கொண்டு, அந்த பி.ஏ.வை நெருங்கியபோது, அது “வெயிட் ப்ளீஸ்” என்றது கடுகடுப்பாய்… இவ்வளவுக்கும் பெண் பி.ஏ… பழனிச்சாமி காத்திருந்தார். காத்திருந்தார். நிமிடங்கள், மணிகளாயின. பகல் இரண்டு மணி அள்வில், நவரத்தினமே வெளிப்பட்டார். இவரைப் பார்த்து ‘எஸ்’. என்று இழுத்தார். “நான்… பழனிச்சாமி… ஒன்னோட… ஸாரி… ஒங்களோட கிளாஸ்மேட்…” “என்ன வேணும் சொல்லுங்க…” “ஓங்க டிராபிக் போலீஸ் பகல் நேரத்திலேயே பண வேட்டை நடத்துறாங்க…. ஆட்டோக்காரங்க மக்களுக்கு சூடு போடுறாங்க….இதைப் பற்றி ஒங்க கிட்ட விரிவாய் பேசணுமுன்னு…” “லுக் மிஸ்டர்… பழனிச்சாமி… நீங்க… ‘பிரியா’ இருக்கலாம். ஆனால் நான் அப்படி இல்ல… இவ்வளவு வயசாகியும் நீங்க வளராமலே இருக்கீங்க… அப்போ காலேஜ்லதான் ரேகிங் செய்யப்படாது… பொண்ணுகள… கலாட்டா செய்யப்படாதுன்னு வம்புக்கு வருவீங்க… இன்னும் அந்தப் புத்தி போகலியா… ஓ…கே… பஸ்ட் அண்ட் லாஸ்ட். ..ஓங்களுக்கு… ஏதாவது போலீஸ் பிரச்சினை இருந்தால் சொல்லுங்க… ஊரைச் சுற்றி… தோரணம் கட்டுற வேலை வேண்டாம்… ஓ…கே… என்ன வேணும். பழனி…ஐ அம் பிஸ்ஸி…” ’எனக்குன்னு ஒண்ணுமில்ல நவரத்தினம்; கர்த்தர் ஒன்னையும் இரட்சிப்பாராக…" பழனிச்சாமி, திக்கித் திணறி, தட்டுத் தடுமாறி, வெளியே வந்தார். ’சட்டை நுனியால், கண்களைத் துடைத்துக் கொண்டார். அந்த வளாகத்தை விட்டு வெளியேறி, பிரதான சாலையில், கால் போன போக்கில், நடந்தார். மனமே, அற்றுப்போன சூன்ய நிலை… உடம்பே. காணாமல் போன அரூவ நிலை. பழனிச்சாமிக்கு, எந்த இடத்தில் நடக்கிறோம் என்பது புரியவில்லை… தலை, பம்பரமானது… இருதயம் மத்தளமானது. சில நிமிடங்களில், அந்த குளிரிலும் உடம்பு வியர்த்தது… மார்பும், முதுகும், ஒன்றை ஒன்று பிய்த்துக் கொள்வது போல் வலித்தன… சொல்ல முடியாத வலி. நரம்புகள் தொய்ந்து கொண்டிருந்தன. வாயில் நுரையும் ரத்தமுமாய்… நல்ல தண்ணிரும் சாக்கடையும் கலந்தது மாதிரி. டெலிபோன் போல், மூச்சு கட்டாகி, முகமோ, கோணல் மாணலாகி…. பழனிச்சாமி, புரிந்து கொண்டார். ரத்த அழுத்தம் கூடிவிட்டது. சர்க்கரை அளவு ஏறிவிட்டது. இதன் எதிர் விகிதாச்சாரத்தில் இதயத் துடிப்பு குறைந்து கொண்டிருக்கிறது-இந்த நாட்டைப் போல… பழனிச்சாமி, “ஆனந்தம்மா… ஆனந்தம்மா…” என்று அரற்றியபடியே, தரையில் சாய்ந்தார். காலற்று விழுந்தார். மூச்சற்றுப் போனார். இந்த பழனிச்சாமி, செத்ததே செத்தார், இன்னொன்றை தெரிந்து வைத்துக் கொண்டாவது செத்திருக்கலாம்.- அதாவது, இவரது சடலத்தை, பிரேத பரிசோதனைக்குப் பிறகு, ஆஸ்பத்திரியில் இருந்து எடுப்பதற்குக் கூட, அன்பளிப்பு கொடுக்க வேண்டும் என்பது, சமூகச் சிலுவை சுமந்த பழனிச்சாமிக்குத் தெரியவே தெரியாது. - ஆனந்த விகடன் மதில் மேல் பூனை கடல் மணிக்கு, அந்த நீதிமன்றத்தின் அனைத்துப் படிக்கட்டுகளுமாய், தானே ஆகிப்போனது மாதிரியான வேதனை. ஒவ்வொரு படிக்கட்டாய் ஏற ஏற, தன்னைத் தானே மிதித்துக் கொள்வதுபோன்ற துயரம். படிக்கட்டுகளாகிப்போன தன்னை, ஆரம்பத்தில் சித்தி மிதித்தாள்… அப்புறம் பங்காளித் தம்பிகள்… இலைமறைவு காய் மறைவாய் மனைவிமக்கள்… இப்போது எல்லோருக்குமாய் சேர்த்து அரசாங்கம்… எஞ்சி இருப்பது இந்த நடுவர் மன்றந்தான்… மிதிக்கப் படுவோமோ.. மதிக்கப்படுவோமோ.. என்றாலும், அந்த நடுவர் மன்ற வளாகத்தைப் பார்த்தவுடனேயே, கடல் மணிக்கு ஒரு ரசனை ஏற்பட்டது. அந்த ரசனை வெள்ளத்தில் வேதனை கரைந்து போகவில்லையானாலும், கல்லாய் மூழ்கியது. இது வழக்கமான மாஜிஸ்டிரேட் கோர்ட் மாதிரி இல்லை… ‘ஒங்க வக்கீல் வர்லியா ஸார்… இன்றைக்கு நான் வேணுமுன்னா.. ஆஜராகுறேன் ஸார்’ என்று கெஞ்சும் கறுப்புக் கோட்டு குடுகுடுப்பைக்காரர்களை காண முடியவில்லை… காவல் துறையிடம் மாமா - மச்சான் உறவாடும் ரெளடிகளையோ, கைவிலங்கிடப்பட்ட அப்பாவிகளையோ காணமுடியவில்லை… கோர்ட்டே சிறை வைக்கப்பட்டிருப்பது போல் தோன்றும் பாடாதி தரையையோ.. பத்தாம் பசலி மேஜையையோ பார்க்க முடியவில்லை.. மாறாக கடப்பாக்கல் தளம்… ஓடுகிற சுவர்க் கடிக்காரம்… சுற்றுகிற மின்விசிறி… அந்த வளாகத்திலும், அந்த மன்றத்திலும் இருப்பவை கண்ணில்பட, இல்லாதவை கருத்தில்பட, பராக்குப் பார்த்தப்படியே நடந்த கடல்மணி ‘பார்த்து அண்ணார்ச்சி’ என்ற குரல் கேட்டு, நிமிர்ந்தார்… நிமிர்ந்த வரை, ஏற இறங்கப் பார்த்தபடியே, சீனிவாசன் சிரித்தபடியே சீண்டினார்… ‘என்றைக்கும்… பார்த்து நடக்கணும் அண்ணாச்சி… இல்லாட்டால். இப்படித்தான்.. முட்டிக்கணும்…." கடல்மணி, அந்த சீனிவாசனை, பாதாதிகேசமாய் பார்த்தார். ‘உருவு கண்டு எள்ளாமை வேண்டும்" என்பது போல் ‘உருவு கண்டு நம்பாமை வேண்டும்’ என்ற புதிய பழமொழிக்கு, அவர் வார்த்தைகளாகத் தோன்றினார்… கடந்த நான்கு நாட்களில் கன்னச் சதையிழந்து, கண்ணில் ஒளி இழந்து, கால்கள் வில்லாய் வளைய நின்ற இந்த கடல்மணியைப் பார்த்து, சீனிவாசன் உப்பிப்போன கன்னங்களை, மேலும் உப்ப வைத்தார். தலை நரையை மறைக்கும் கறுப்புச் சாய முடியை தடவி விட்டபடியே கேட்டார். ‘என்னை எதுக்காக அண்ணாச்சி முட்டுறீங்க.." ’முட்ட வேண்டிய நிலைமை ஏற்பட்டால்… முட்டத் தானே செய்யணும்.“அதோட கழுதையாகமலே… குட்டிச் சுவரை முட்ட வேண்டியதாயிற்று பிரதர்.” ’நீங்க..முட்டிக்கிறது குட்டிச் சுவர் இல்ல… காங்கீரிட் கட்டிடம்…" ’நான் கட்டிடத்துல மோதல… அதுல தேங்கிப்போன சாக்கடைக் குழாயைத்தான் திறக்கேன்… இதனால… நீங்கதான் அசுத்தமாவிங்க அண்ணாச்சி…" நான்… அசுத்தப்பட்டாவது… கட்டிடம் சுத்தப்படட்டும். " கட்டிடமே… ஓங்களுக்கு இல்லன்னு ஆகும்போது…" “அப்படிச் சொல்றவன்…என்னை மாதிரி இன்னொரு வேலைக்காரன்… வீட்டுக்காரன் இல்ல…” எரிந்த கட்சியாகக் கடல்மணியும், எரியாத கட்சியாக சீனிவாசனும், லாவணி போட்டுக் கொண்டிருந்தபோது, உயரத்தில் வித்தியாசப் படாமல், அகலத்திலும், வயதிலும் வித்தியாசப்பட்ட இரண்டுபேர், சீனிவாசனின் இருபக்கமும் நின்று கொண்டார்கள். இவர்களில் வயிறு துருத்தியவர் நிர்வாக அதிகாரி… கண்கள்துருத்தியவர் அலுவலக ஜூனியர் அஸிஸ்டெண்ட்… இந்த இருவருமே முந்தாநாள்வரை இந்தக் கடல்மணிக்கு சலூட் அடித்தவர்கள். அலுவலகத் தலைவரான சீனிவாசனுக்குக் கூட போடாத பெரிய கும்பிடு போட்ட வர்கள். ஆனால் இப்போதோ, நிர்வாக அதிகாரி…அவரை பாராததுபோல் அலட்சியமாக நிற்கிறார்.,, அஸிஸ்டெண்ட் இளைஞன் அவரை பார்க்கிறான்… பகையாளியைப் பார்ப்பதுபோல்.. கடல்மணி, சீனிவாசனை விட்டுவிட்டு, அவர்களைப் பார்த்தார். மனம்குமுறி, கண் திமிறிப் பார்த்தார்… இதே இந்த இரண்டு பேர்வழிகளும், கடல்மணியின் அறைக்குள் அடிக்கடி வருவார்கள்… ஒங்க பையனுக்கு வேலை கிடைத்ததா ஸார்… பிழைக்கத் தெரியாதவர் ஸார் நீங்க’ என்பார்கள். உடனே பிழைக்கத் தெரிந்த அவர்களிடம், கடல்மணி, எஸ்.டி.டி. வசதி, கொண்ட டெலிபோனை நீட்டுவார்… நிர்வாக அதிகாரி, பம்பாய் மைத்துணிக்கும், அஸிஸ்டெண்ட் மைனர், பெங்களுர் மாமா பெண்ணுக்கும் குடும்ப விஷயங்களை சொல்லும்போது சும்மா இருக்கும் கடல்மணி, அவர்கள் ‘இன்றைக்கு என்ன குழம்பு… என்ன பொறியல்" என்று கேட்கும்போது ’பேச வேண்டியதை மட்டும் பேசுங்க… கத்தரிக்காய்….கருவாட்டு விவகாரத்தை பேசப்படாது.டெலிபோன்ல ஒவ்வொரு விநாடிக்கும் பணம் பாருங்க’ என்பார். இப்போது அவர்களுக்கு, அவர், பேசவிட்டதை விட, பேச விடாததுதான் நினைவுக்கு வருகிறதோ என்னவோ… அல்லது ஒருவேளை, இப்போது, இவரது அறை காலியாக இருப்பதால், நேர்முக உதவியாளப் பெண்ணை, உருட்டி, மிரட்டி, பம்பாய் மைத்துணியுடனும், பெங்களுர் மாமா பொண்ணுடனும் எஸ்.டி.டி. உறவுகளை அதிகமாய் வைத்துக் கொள்ள முடிகிறதோ.. என்னவோ…. கடல்மணியின் கரங்கள், அவரை அறியாமலே ஆயுதங்களாக ஆகிக் கொண்டிருந்தபோது, சீனிவாசன் கேட்டார். ‘என்ன அண்ணாச்சி இந்தப் பக்கம்…’ ‘தெரியாதது மாதிரி கேட்கிறீங்களே… நீங்க எதுக்காக வந்திங்க…’ ‘நாங்களா….நாங்க…வந்து…’ ஏதோ சொல்லப் போன சீனிவாசனை, நிர்வாக அதிகாரியும், அஸிஸ்டெண்ட் ஆசாமியும் ஆளுக்கொரு பக்கமாய் இடுப்பில் தட்டி, உஷாராக்கிவிட்டு, மிகப்பெரிய ரகசியத்தைக் காப்பதுபோல், வீறாப்பாய் நின்றார்கள். அரசாங்கத்தைதாங்கும் தூண்களாம்…அரசுப் பல்லாக்கு, அவர்கள் இல்லையானால் விழுந்துவிடுமாம்.. கடல்மணி, வாய் வரைக்கும் வந்த உமிழ்நீர், எச்சிலாகும் முன்பே, அதை பின்னோக்கித் தள்ளிவிட்டு, முன்னோக்கி நடந்தார். காற்றில் தென்னை ஆடும்போது, அதில் இருக்கும் ஓணான், அந்த தென்னையை ஆட்டுவதாக நினைத்து, தனது தலையை ஆட்டுமாமே.. அப்படிப்பட்ட அலுவலக ஒணான் பயல்கள்.. இவர்களைப் பார்த்துக் கொண்டே நின்றால், இ.பி.கோ. செக்ஷனில் ‘புக்காகி’ கைவிலங்கோடு செஷன்ஸ் கோர்ட்டுக்குப் போக வேண்டியது வரும். கடல்மணி, நடுவர் மன்ற அரங்கிற்குள் வந்தார். நீதிமேடையையும், அதில் போடப்பட்டிருக்கும் மெத்தை யிட்ட நாற்காலிகளையும் பார்த்தார். முதுகை வளைத்தது போல் அரைவட்டமான நீளவாகு மேஜையையும், அதில் கையூன்றி, கட்டூன்றி, நாற்காலிகளின் அடிவாரம் வரை உடம்பை சாய்த்துப் போட்ட வழக்கறிஞர்களைப் பார்த்தார். அவர்களின் இந்த இருக்கைப் பகுதிக்கு இடைவெளி கொடுத்து, வகுப்பறைபோல் போடப்பட்ட நாற்காலிகள் ஒன்றில் உட்கார்ந்தார்.. சுற்றுமுற்றும் பார்த்தார்.. கட்சிக் காரர்கள்.. வாதிகளோ.. பிரதிவாதிகளோ.. வேட்டிகளைக் காண முடியவில்லை. ஒட்டுப்போட்ட சேலைக்காரிகள் கிடைக்கவில்லை. அத்தனைபேரும் சபாரி… பேண்ட்… சிலாக்கிலோ அல்லது பைஜாமா… பட்டுப் புடவைக்குள்ளோ இருந்தார்கள்… ஆனாலும் பெரும்பாலோர் முகங்களில் கண்கள் தேங்கிக் கிடந்தன.. ஏங்கிக் கிடந்தன.. கைக் கடிகாரங்களையே, கைவிலங்காய் பார்த்துக் கொண்டன. கடல்மணி, வக்கீல்கள் இருக்கைகளை நோட்டமிட்டார். ‘மாப்பிள்ளையை’ காணவில்லை.. ‘மாப்பிள்ளை எங்கே’ என்று, மனதுக்குள்ளேயே சொல்லிக் கொண்டார்.ஒரு வாதிக்கோ அல்லது பிரதிவாதிக்கோ, வழக்கறிஞர்தான் ‘மாப்பிள்ளை’.. அதே முறுக்கு.. அதே வரதட்சணை.. அதே ‘மற்றும் பல’. இயல்பிலேயே ஆரோக்கியமான ரசனைக்காரரான கடல்மணி, தனது உவமையை எண்ணி தானே சிரித்துக் கொண்டார். பிறகு ‘நாம் கெட்ட கேட்டுக்கு, சிரிப்பு ஒரு கேடா’ என்று வாயை மூடாமலே, மனதை மூடிக்கொண்டார். ஆனாலும், அவர் பட்ட அவமானமும், நடத்தப்பட்ட விதமும், வாதைகளாக மனதில் முட்டி மோதின. அதே சமயம் தனது ‘மாப்பிள்ளை’ நல்லவர் என்பதாலும், காசுவாங்கக்கூட மறுத்துவிட்டார் என்பதாலும், மனிதாபிமானம் இன்னமும் இருக்கிறது என்பதில் ஒரு ஆறுதல். கடல்மணி, தன்னை தோளில் தட்டுவதைப் பார்த்து நிமிர்ந்தார். அலறியடித்துஎழுந்தார். எல்லோரும் எழுந்து நிற்கிறார்கள். வடநாட்டுக்காரி என்பதாலோ என்னமோ, அவர் தோளைத் தட்டிய பைஜாமாக்காரி, அவர் தோளில் இருந்து கையை எடுத்துவிட்டு, மோவாயை முன்னோக்கி விட்டு, கண்களை எம்ப வைத்து பரிமொழியாய் பேசுகிறாள். அவள் காட்டிய நீதி மேடையில், இரண்டு நீதிபதிகள் உட்காருகிறார்கள். சிவப்புப் பார்டர் போட்ட கறுப்புச் சிலுக்கு கவுன்மாதிரியான கோட்டுப் போட்டவர்கள்… உள்முகமாய் பார்ப்பது போன்ற பார்வை… நீதி தேவதையின் கண்கள் கட்டப்பட்டது -போல், எவரையும் குறிப்பிட்டுப் பார்க்காமல், எல்லோரையும் பார்க்கும். ‘ஏதிலாப்’ பார்வை. கடல்மணி, தன் பக்கத்தில் நிற்கும் சீனிவாசனையும், அவரது அலுவலக சகலைகளையும், ஆச்சரியமாய் பார்த்தார். எப்போது வந்தார்கள்.. நீதிபதிகள் வந்தவுடனே எழுப்பி இருக்கலாமே.. இவர்களா.. எழுப்புவார்கள்.. அது யார். அடடே… மாப்பிள்ளையா.. வாசலுக்குள் நுழைந்த தனது வக்கீலிடம், கடல்மணி, துள்ளிக் குதித்துப் போனார். சீனிவாசனை முகத்தால் சுட்டிக் காட்டிப் பேசினார். வக்கீல், அவரை முதுகில் தட்டிக் கொடுத்துவிட்டு, முருகன் போல், கையால் அபயம் கொடுத்தார். நீதி பரிபாலனம் துவங்கிற்று. நீதி மேடைக்குக் கீழே, பக்க வாட்டில் போடப்பட்ட நாற்காலியில் உட்காராமலே, உதவியாளர்பெண், ஒவ்வொரு கட்டாக, மாண்புமிகு நீதிபதிகளின் முன்னால் வைத்து விட்டு, சம்பந்தப்பட்ட வக்கீல்களைப் பார்க்கிறார். அவர்கள் எழுந்து நிமிடக் கணக்கில் வாதாடுகிறார்கள். நீதிபதிகளில் ஒருவர் வினாடிக் கணக்கில் பேசி, முடிவைத் தெரிவிக்கிறார். கடல்மணி, ஒவ்வொரு கட்டையும், மூச்சைப் பிடித்துப் பார்க்கிறார். அது, தன் ‘கட்டு’ அல்ல என்றதும் ஒரு ஏமாற்றம். கூடவே ஒரு சந்தோஷம். எதிர்பார்ப்பே ஒரு இனிய சுகம் கொடுக்கும் போது, அந்த தீர்ப்பு தீர்த்து கட்டிவிடக்கூடாது என்ற அடிமன பயமே, வெளிமன சந்தோஷ வெளிப்பாடானது. ஒரு மணி நேரம் கழித்து, உதவிப் பெண், வழக்கம்போல் ஒரு கட்டை எடுத்து, நீதிமேடையில் பயபக்தியோடு வைத்துவிட்டு, கடல்மணியின் வக்கீலை முரட்டுத்தனமாய் பார்க்கிறாள்.அவர் எழுகிறார். கடல்மணி மூச்சைப் பிடிக்கிறார். மூர்ச்சையாகப் போகிறார். பிறகு தட்டுத் தடுமாறி எழுந்து, தனது வக்கீலின் முதுகுப் பக்கம் போய் நிற்கிறார். அவர் வாதாடுவதற்கு வாயைத் திறக்கும் வலதுஇருக்கை நீதிபதி தலையிடுகிறார். “ஓட் இஸ் திஸ்? டிரான்ஸ்பர் கேஸா… அரசாங்க மாற்றல் உத்திரவுகளில்… நடுவர் மன்றம் பொதுவாக தலையிடக் கூடாது என்று சுப்ரீம் கோர்ட் சொல்லி இருப்பது தெரியாதா?” ‘தெரியும் மை லார்ட். ஆனாலும் உச்ச நீதிமன்றம் ‘பொதுவாக’, என்ற சொல்லைத்தானே பயன்படுத்தி உள்ளது? மை லார்ட்… என் கட்சிக்காரர் அவரது நேர்மைக்காக தண்டிக்கப் பட்டிருக்கிறார்…" “டிரான்ஸ்பர் தண்டனையாகாதே.’’ நல்ல எக்போஷர் தானே. அரசு ஒரு தாய் மாதிரி… வளர்ந்து விட்ட பிள்ளைகளை, மாடு முட்டித் துரத்தும்…கோழி கொத்தித் துரத்தும்… அரசு டிரான்ஸ்பர் ஆர்டர் போடும்.” ‘நிசந்தான் மை லார்ட்… இந்த ‘ஒரு தாய் பிள்ளைகளில்’ பலர் இருபதாண்டு கால வளர்ச்சிக்குப்பிறகும், இங்கேயே இருக்கிறார்கள். அவர்களின் பெயர்களைச் சொல்லட்டுமா…’ ‘இது எங்களுக்கு சம்பந்தப் படாத விவகாரம்… ஒங்கள். கட்சிக்காரரை பற்றி மட்டுமே பேசுங்கள்…’ ‘எஸ் மை லார்ட். நீங்கள் குறிப்பிடும் ’அன்னை அரசு’.இவருக்கு போலித்தாயாகவே நடந்து கொண்டது. ஆயர் பாடி கண்ணனுக்கு பாலுட்டினாளாமே பூதகி…அவள் போல’ ’நோ… நோ… டிரான்ஸ்பர் கேஸில் தலையிடுவதாய் இல்லை… இது அரசின் வழக்கமான செயல்பாடு." ’ஒரு ஐந்து நிமிடம் அவகாசம் கொடுங்கள் மை லார்ட்… ஐந்தே ஐந்து நிமிடம்… இந்த மாற்றல் உத்திரவு… ஒரு பழி வாங்கும் நடவடிக்கை என்பதை நிரூபித்துக்காட்டுகிறேன்…’ ‘நத்திங் டூயிங். நெக்ஸ்ட்.’ “மன்னிக்கணும் மை லார்ட்… ஒரு அரசு ஊழியர்… தனக்கு இழைக்கப்பட்ட கொடுமைக்கு நீதி கேட்டு நீதிமன்றத்திற்கு வருகிறார்… அவர், வேவு பார்க்கப் படுகிறார்… அவர் என்ன பரிகாரம் கேட்டாலும், அதை ஆட்சேபிப்பதற்கு என்றே… அலுவலகத் தலைவரும், இரண்டாவது பிரதிவாதியுமான மிஸ்டர். சீனிவாசன், பரிவாரங்களோடு வந்திருக்கிறார்… இது, எந்த இலாகாவும் மேற்கொள்ளாத முயற்சி… நான் வேவு பார்க்கப் படுகிறேன் மை லார்ட், சிறுமைப் படுத்தப்படு கிறேன் மை லார்ட்… நீதிபதிகள், புருவங்களை சுழித்தபோது, ஒரு இளம் வக்கீல் எழுந்தார். லேசாய் தலையைக் குனிந்துவிட்டு, பேசினார். ‘வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொள்வதில் ஆட்சேபம் இல்லை.ஆனால் இடைக்காலத் தடை மட்டும் கொடுக்கலாகாது…’ நான் சமர்ப்பித்ததை … இந்த வக்கீல் நிரூபிக்கிறார் மை லார்ட், அரசு தரப்பு வழக்கறிஞரின் மகனான இந்த இளம் வக்கீல், தனக்கு சம்பந்தப்படாத விவகாரத்தில் தலையிடுவதைக் கூட. நான் ஆட்சேபிக்கவில்லை மைலார்ட்… காரணம் சினிமாவிலும், அரசியலிலும் ஊடுருவிய வாரிசு முறை நீதித்துறையிலும் நுழைவது தவிர்க்க முடியாதுதான். ஆனால், இந்த குறுக்கீடு அரசாங்கத்தின் உள்நோக்கத்தைக் காட்டுகிறது என்பதை மட்டும் குறிப்பிட விரும்புகிறேன் மை லார்ட்…’ “மீண்டும் சொல்கிறேன்… நான், வழக்கை விசாரிப்பதை ஆட்சேபிக்கவில்லை மை லார்ட்…. மாற்றல் உத்திரவிற்கு. இடைக்காலத் தடை கொடுக்கப்படுவதைத்தான் எதிர்க்கிறேன்…’ கடல்மணியின் வக்கீல், வாரிசு பற்றி வாழைப் பழத்தில் ஊசி ஏற்றிப் பேசியதால், இடது இருக்கை நீதிபதி இப்போது பலாப்பழமானார். அந்த இளம் வக்கீலை நோக்கி, சூடாகவே கேட்டார். இது கொடுக்கக்கூடாது, அது கொடுக்கலாம் என்று சொல்ல நீங்கள் யார்..? எச்சரிக்கிறேன்… வாதியின் வக்கீல் தன் தரப்பை… ஐந்து நிமிடத்திற்குள் எடுத்துரைக்கலாம்…’ ‘நன்றி மை லார்ட். .என் கட்சிக்காரரான கடல்மணி, முப்பதாண்டுகாலமாய் அரசுப் பணி புரிகிறவர்.. டில்லியில் இருந்து ஆறு மாதத்திற்கு முன்புதான். சம்பந்தப்பட்ட அலுவலகத்திற்கு நிர்வாக உதவி இயக்குநராக வந்தார்… அவருக்கு முன்பு இருந்தவர், வேலை வாய்ப்பு நிறுவனத்தை அணுகாமலே, ஒரு ஜாயிண்ட் செக்கரட்டரியின் வேலைக்காரியை, அலுவலகத்தை இரவில் காக்கும் செளக்கிதாராய் நியமித்திருப்பதைக் கண்டுபிடித்தார். இவ்வளவுக்கும் அந்தப் பெண்ணுக்கு கையெழுத்து போடக்கூடத் தெரியாது… இதே போல், ஒரு லட்சம் ரூபாய் செலவுக்குக் கூட பெறாத ஒரு கட்டிடம் கட்ட, ஐந்து லட்சம் ரூபாய் கணக்கு காட்டப் பட்டது. பழைய நாற்காலி மேஜைகள் புதுப்பிக்கப் பட்டு, அவை புதிதாய் வாங்கப்பட்டதாய் சித்தரிக்கப் பட்டது. ஒரு பழைய ’பஞ்சிங்’ மெஷின் ‘காயலான்’ விலையில் வாங்கப்பட்டு, அதுவே புது யந்திரமாக காட்டப்பட்டது. இப்படிப்பட்ட லட்சக்கணக்கான ரூபாய் ஊழல்கள் பற்றி என் கட்சிக்காரர், இந்த அலுவலகத் தலைவரான சீனிவாசனுக்கு ‘நோட்’ போட்டார். அவர் கண்டுக்காததால், டில்லி மேலிடத்திற்கு எழுதிப் போட்டார்… விளைவு மை காயும் முன்பே, ஆறு மாதத்திற்கு முன்புதான் பதவிக்கு வந்த என் கட்சிக்காரருக்கு, அந்தமானுக்கு மாற்றல் ஆணை வந்தது. அந்த ஆணை, கடல்மணிக்கு கிடைக்கும் முன்பே, அலுவலகத் தலைவருக்கு, பேக்ஸ் மூலம் அனுப்பப்பட்டது. அவரும் ஐந்து நிமிடத்திற்குள் ரிலீவிங் ஆர்டரை அடித்து, கடல்மணியை, தன் அறைக்கு அழைத்து அந்த ஆர்டரை கொடுக்கப்போனார். உதவி இயக்குநர் பொறுப்புக்களின் கணக்குளை ஒப்படைக்க இரண்டு நாள் அவகாசம் கொடுக்கும்படி என் கட்சிக்காரர் வேண்டிக்கொண்டது நிராகரிக்கப்பட்டது. நாளைக்கோ, மறு மாதமோ… நிர்வாகக் கணக்கில் தப்பிருந்தால் தானும் பொறுப்பு என்பதால், கேஷ் புக்கை முறையாக ஒப்படைக்க ஒரு நாளாவது கொடுக்கும்படி என் கட்சிக்காரர் அழுதது எந்தக் காதிலும் ஏற வில்லை. ஆகையால் இந்த விடுவிப்பு ஆணையை என் கட்சிக்காரர் வாங்க மறுத்து அலுவலகம் போனால், அவரது அறை சீல் வைக்கப்பட்டிருந்தது. " வழக்கறிஞர், சிறிது இடைவெளி கொடுத்து தொடர்ந்தார். ‘தனது வீட்டுக்கு போனாலோ. சீனிவாசன் கையெழுத்திட்ட ரிலிவிங் ஆர்டர், அவரது வீட்டுக் கதவில் ஒட்டப் பட்டி ருக்கிறது… எனது கட்சிக்காரரின் முப்பதாண்டு கால தூய்மை யான பணி, அரைமணிநேரத்தில் அசுத்தப்படுத்தப்பட்டது. ஊழலை சுட்டிக் காட்டியவரை அதற்கு உரியவர் தண்டிக்கிறார். ஆகையால், இந்த ஆர்டரை நிறுத்தி வைக்க வேண்டும். மை லார்ட், தண்டிக்கப்படும் தர்மங்களுக்கு உங்களை விட்டால், வேறு கதி யார்… மை லார்ட்…’ வழக்கறிஞரின் முதுகுக்குப் பின்னால், கண்ணீரும் கம்பலையுமாய் நின்ற கடல் மணியையே, எல்லோரும் ஒட்டு மொத்தமாகப் பார்த்தார்கள். நீதிபதிகள் கூட அவரை, லேசாய் ஏறிட்டுப் பார்த்துவிட்டு, அப்படிப் பார்ப்பது தவறு என்பதுபோல் அவசர அவசரமாய் முகங்களைத் திருப்பிக் கொண்டு, தங்களுக்குள் ஆலோசித்தார்கள். பிறகு வலது பக்கத்து நீதிபதி இப்படி ஆணையிட்டார். ’வழக்கு விசாரணைக்கு ஏற்கப்பட்டு… அடுத்த மாதம் பத்தாம்தேதிக்கு விசாரணைக்கு வருகிறது. அதுவரைக்கும் ஸ்டேட்டஸ் கோ… பராமரிக்கப்படவேண்டும்." வழக்கறிஞர், கடல்மணியின் கரங்களை, நீதிபதிகளுக்குத் தெரியாமலே, பட்டும் படாமலும் குலுக்குகிறார். கடல்மணிக்கு, இத்தனை நாளும் பட்ட கஷ்டங்களும், நஷ்டங்களும், மகிழ்ச்சியின் விதைகளாகி, வேராகி, இப்போது சந்தோஷக் கனிகளானதுபோல் தோன்றுகிறது… நேராக, சீனிவாசனிடம் போகிறார். வெற்றிப் பெருமிதத்தை வெளிக்காட்டாமலே நெருங்குகிறார். “பார்த்திங்களா… பிரதர்! கடைசியில் தர்மம் ஜெயிச்சுட்டது. நான் பட்ட பாடெல்லாம் தீர்ந்திட்டது. உங்கமேல எனக்கு கோபம் இல்லை. ஆனாலும் நீங்க என்னை அப்படி அவசர அவசரமா ரீலீவ் செய்திருக்கக்கூடாது. சரி போகட்டும். இன்னைக்கே டூட்டிலே சேரப்போறேன். சீல் வைச்ச என் ரூமை இன்னிக்கே திறந்து விட்டுடுங்க… ஏகப்பட்ட வேலை இருக்கு… !” சீனிவாசனின் முகம் இருளானது, சிறிது நேரம் அப்படியே இருந்தவர் காதில், நிர்வாக அதிகாரி ஏதோ சொல்ல, அவர் மேகத்தில் ஏற்பட்ட மின்வெட்டுப் போல ஒரு கண்வெட்டுக் காட்டி, அவசர அவசரமாய் அரசு தரப்பின் ‘வாரிசு வக்கீலின் பின்னால் போய், அவரது கழுத்துப் பக்கமாய் முன்னால் குணிகிறார். அவர்காதுகளில் கிசுகிசுக்கிறார். அந்த ’வாலிபம்’ வாயெல்லாம் பல்லாக, சீனிவாசனின் கையை ஓசைப் படாமல் குலுக்குகிறது. பிறகு கிசு கிசுக்கிறது. சீனிவாசன் கடல் மணியை கம்பீரமாகப் பார்க்கிறார். மதயானையைப் போல நடந்து, கடல்மணியை நெருங்கி, நரிபோல் ஊளையிட்டுப் பேசுகிறார். “நீங்க தான் தப்பா புரிஞ்சிக்கிட்டிங்க அண்ணாச்சி…’ஸ்டேடஸ்கோ’ என்றால் நிலைமை இப்ப எப்படி இருக்கிறதோ, அப்படியே இருக்கணும் என்று அர்த்தம். இப்போதைய நிலைமை என்றால் … இன்றைய நிலைமை… முந்தா நாள் நிலைமை இல்லை. அதாவது நீங்க அலுவலகத்தின் பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்ட அதிகாரி. உங்களுக்கும் எங்கள் அலுவலகத்திற்கும் சம்பந்தமில்லை. இதற்குப் பேர்தான் ஸ்டேடஸ்கோ…” கடல் மணி ஆடிப் போனார்… கண்ணிழந்தவன் அதைப் பெற்று மீண்டும் இழந்ததுபோன்ற தசரத நிலை… இன்ப மயமாய் துள்ளிய நாடி நரம்புகள் திடீரென்று துக்கித்தன. தலை லேசாய் கனத்தது. வக்கீலைப் பார்த்தால், அவரோ, வேறோரு வழக்கை விவரித்துக் கொண்டிருக்கிறார். கடல் மணி வேறு வழி இல்லாமல் சீனிவாசனிடமே பேசினார். “நீங்க சரியா புரிஞ்சிக்கல… பிரதர்.. என்னோட வழக்கே மாற்றல் உத்தரவு செல்லாது என்கிறது தானே… எனது முறையீடே ஆர்டரை நிறுத்தி வைக்க வேண்டும் என்பது தானே ….அதனாலே மாற்றல் உத்தரவு வருவதற்கு முன்பு நான் எந்தப் பதவியில் இருந்தேனோ, அந்தப் பதவியில் இருப்பதாய் அர்த்தம். நீங்க என்னை இருக்க விட்டே ஆகணும். இதுக்குப் பேர்தான்”ஸ்டேடஸ்கோ“. ’நீங்க ஆயிரம் அர்த்தம் சொன்னாலும் எனக்கு கவலை இல்லை. என் வக்கீலும் சொல்லிட்டார். ஸ்டேடஸ்கோ என்றால் இப்போது இருக்கிற நிலைமை… அதாவது நீங்க பொறுப்பிலிருந்து விடுவிக்கப்பட்ட நிலைமை “. “சரி..பிரதர்… எதுக்கும் நம்ம வக்கீல்கள் மூலம் இந்த மன்றத்திலேயே விளக்கம் கேட்கலாமா? “எனக்கு தெளிவாவே தெரியும்.” தேவைப்பட்டால் நீங்க போய் விளக்கம் கேளுங்க“. கடல்மணி, நொண்டி அடித்தப்படி, தன் வக்கீல் பக்கம் வந்தார். அவர் காதுகளில் கண்ணீர்த் துளிகள் பட, முணு முணுத்தார்… வக்கீலும், சீனிவாசனைக் கோபமாக பார்த்து விட்டு எழுந்திருக்கப்போன நீதிபதிகளைப் பார்த்தார். அவர்களுக்க எதிரில் நடுப்பக்கமாய் நின்றுகொண்டு, அவர்கள் கவனத்தைக் கவருவதற்காக உரத்த குரலிட்டு முறையிட்டார்." “மன்னிக்கனும் மை லார்ட். இந்த மாமன்றம் எனது கட்சிக்காரரின் வேண்டுகோளை அனுதாபமாய் அணுகி, அவரது மாற்றல் உத்தரவை நிறுத்தி வைப்பதற்கு ஸ்டேடஸ்கோ கொடுத்திருக்கிறது. ஆனால் சாமி வரம் கொடுத்தாலும் அதை பூசாரி தடுப்பதுப்போல்… அலுவலகத் தலைவர், என் கட்சிக்காரரை பணியில் சேர அனுமதிக்க மாட்டாராம்… இதை மை… லார்ட். நீங்களே, இப்போதே கண்டித்து அருளவேண்டும்… என் கட்சிக்காரர் பணியில் சேருவதைத் தடுக்கக்கூடாது என்று வாய் மொழி மூலமாவது ஆணையிடவேண்டும்.” மாண்புமிகு நீதிபதிகள் அரசுத் தரப்பு வாரிசு வக்கீலைப் பார்த்தப்போது.அவர் சர்வசாதாரணமாய் பதில் அளித்தார். “மிஸ்டர் கடல்மணியைப் பணியில் சேர்த்தால், நீதிமன்ற அவமதிப்பாய் ஆகிவிடுமே மை… லார்ட். இவரது கட்சிக் காரர் முந்தா நாளே சென்னை அலுவலகத்திலிருந்து விடுவிக் கப்பட்டார்… இதுதானே ஸ்டேடஸ்கோ… இந்த நிலைமை தானே நீடிக்க வேண்டும் என்று இந்த நீதிமன்றம் ஆணையிட்டது. இதற்குப் பேர்தானே ஸ்டேட்டஸ் கோ என்கிறது” கடல் மணியின் வக்கீல் ஆவேசியானார். நீதிமன்றமே அவமதிப்பாய் கருதும் வகையில் வாதிட்டார். “இல்லவே இல்லை…. மாண்புமிகு நீதிமன்றத்தின் ஆணையின் வார்த்தைகளைப் பார்க்காமல்…அதன் ஆதார சுருதியைப் பார்த்தால், ஸ்டேடஸ்கோ என்பது, என் கட்சிக் காரர் மாற்றல் உத்தரவிற்கு முன்பு எந்த நிலையில் இருந்தாரோ.அந்த நிலை நீடிக்கவேண்டும் என்றே அர்த்தம்…” மாண்புமிகு நீதிபதிகள், வழக்கறிஞர்களை கையமர்த்தி விட்டு, தங்களுக்குள்ளேயே, நின்ற கோலத்தில் ஆலோசித்தார்கள். பிறகு இடதுபக்க நீதிபதி, பாராமுகமாய் கருத்துரைத்தார். “ஸ்டேடஸ் கோ… நீடிக்க வேண்டும் என்று தெளிவாகவே தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது… எது ஸ்டேடஸ்கோ என்பதை இருதரப்பும் பேசித் தீர்த்துக் கொள்ளவேண்டும்”. வணக்கத்திற்குரிய நடுவர் மன்றத்தின் அன்றைய நீதி பரிபாலனம் முடிந்துவிட்டது. மாண்புமிகு நீதிபதிகளும் போய் விட்டார்கள். அரசு வக்கீல். கடல் மணியின் வக்கீல் உள்ளிட்ட அனைத்து வக்கீல்களும் இன்னொரு கோர்ட்டுக்கு போய் விட்டார்கள். கட்சிக் காரர்களும் காணாமல் போனார்கள். ஆனாலும்…? சீனிவாசனும், கடல் மணியும் அங்கேயே நின்று கோழியா முட்டையா என்பது மாதிரி இன்னமும் விவாதிக்கிறார்கள். அது சரி… எதுங்க ஸ்டேடஸ்கோ? -இதயம் பேசுகிறது பொங்கல் மலர்-1996 ஏவல் பூதங்கள் அந்த ஜீப், தன்னை ‘சீப்பாக’, நினைத்துவிடக் கூடாது என்பது மாதிரி அந்த ஓட்டை உடைசல் கடையைவிட்டு சற்றுத் தள்ளியே நின்றது. காக்கி யூனிபாரம் போர்த்தப்பட்ட அந்த ஜீப்புக்குள் சட்டைகளும், ஒரு கலர்த்துணியும் தெரிந்தனவே தவிர, அவை பகிரங்கமாக வெளிப்பட வில்லை- எதையோ எதிர்பார்ப்பது போல. அந்த ஜீப் அங்கே வந்து நிற்கிறது என்ற எண்ணம் கூட இல்லாமல், செல்லையா தனது கடைக்குள் இயங்கிக் கொண்டிருந்தான். வீட்டின் வெளித் திண்ணையின் சிறிது நீட்டிப் போடப்பட்ட அந்தக் கடையில் – குறுக்காய் நீளவாக்கில் போடப்பட்ட சாதிக்காய் பலகையில் உள்ள கண்ணாடிப் பேழைகளை வரிசையாகச் சரிப்படுத்தினான். விதவிதமான கலர் சாக்லெட்களோடு ஒன்று கழுத்துவரை அழகாக இருந்தது. இன்னொன்று பிஸ்கட்கள் பிய்ந்ததும் நைந்தும் மாவாகிப் போனது போல் தோற்றம் காட்டியது. செல்லையா, அவற்றைச்சரிப்படுத்திய கையோடு, கடையில் சாத்தி வைக்கப்பட்ட இரும்புக் கொக்கி போட்ட கம்பை எடுத்தான். கடையின் மகுடமாக அதன் மேல் பக்கம் அடிக்கப்பட்ட பலகையின் ஆணிகளில் தொங்கிய பைகளைக் கீழே கொண்டு வந்து ஒரு பிரஷ்ஷால் துடைத்தான். இதற்குள் ஜீப்காரர்கள் இறங்கிவிட்டார்கள். என்னமோ ஏதோ என்ற பதறி அடித்துக் கொண்டு அவன், ஜீப்புக்கு முன்பக்கமோ, பக்கவாட்டிலோ நிற்பான் என்று எதிர் பார்த்தவர்கள், முகம் கடுக்க தரையிறங்கினார்கள். வந்தவர்களில் ஒருவர் சபாரி போட்டவர். இன்னொருத்தர் சிறிது தடியல்ல; பெரிய தடி; கழுத்துக்கும் தலைக்கும் வித்தியாசம் தெரியாத வீக்கம். ஆனால் கண்கள் மட்டும் பொடி; மூன்றாமவர் டவாலிக்காரர். அவரது காக்கியூனி பாரத்திற்கும் மேல் மூன்று பட்டை உத்தியோகப் பூணூல்; இடது தோளிலிருந்து வலது இடுப்புவரைக்கும் போய் வில் மாதிரி பின்பக்கமாகவும் வளைந்து சென்றது. செல்லையா தன்னைப் பார்ப்பவர்களைப் பார்த்தான். கடையைத்திறந்த இவ்வளவு சீக்கிரத்தில் போணியாகப் போகிறதே என்ற மகிழ்ச்சியில் கேட்டான், “சோடாவா” கலரா சார்…" அவர்களும் அவனைப் போணியாக்கப் போகிறார்கள் போல்தான் பார்த்தார்கள். டவாலி மனிதர் அதட்டினார். “இந்தக் கடைக்கு ஒனர் யாருய்யா?” “என்ன விஷயம்?” டவாலிக்காரர் திணறினார். திக்கினார். கடைவாய்ப் பல் ஒட்டைகளோடு சபாரிக்காரரை அவருக்கு ஏதோ சவால் வந்திருப்பதைப் போல் பார்த்தார். உடனே அவர் அந்த தடியரைப் பார்க்க, அவரோ, டவாலிக்காரர் கரடுமுரடாய்க் கேட்டதைக் கிண்டலும் கேலியுமாகக் கேட்டார். “ஐயா நீங்க தான்கடைக்குச் சொந்தரக்காரரா?” “ஆமாங்க… ஐயா யாருங்க…” “என்னை ஏ.சி.டி.ஓ. அதாவது அசிஸ்டெண்ட்கமர்சியல் ஆபீஸர்னு சொல்லுவாங்க. ஐயா எனக்கு மேலதிகாரி…சுருக்கமாய் சொல்லப்போனால் நாங்க வரி ஆபீஸருங்க..” ‘அப்படிங்களா…சந்தோஷம்..இப்படி முதல்லயே சொல்லியிருந்தால் வருத்தப்படற மாதிரி வராது பாருங்க. என்ன சார் வேணும்…?* “பெருசா ஒண்ணுமில்ல…இந்தபைகளை வாங்குனதுக்கு ரசீதுகள் வேணும். ஒருநாளைக்கு எவ்வளவு விக்குதுன்னு கணக்கெழுதி வச்சிருப்பீங்களே…பேரேடு அது வேணும்…” “இதுகள் எல்லாவற்றையும் எங்க வாங்கினிங்க..? எப்படி வாங்கினீங்க…? எவ்வளவுக்கு வாங்கினிங்க…? எவ்வளவுக்கு வித்தீங்க..? இந்தக் கணக்கு வழக்கு வேணும். அவ்வளவுதான்.” செல்லையா லேசாய் அதிர்ந்து போனான். அவர் பேசப்பேச, அவர் சுட்டிக் காட்டிய பொருட்களையே பார்த்தவன், இப்போதுதானே ஒரு பொருள்மாதிரி நின்றான். முப்பது வயதையும், அதற்குரிய உடம்பையும் திமிறி எடுத்துக் காட்டும் ஸ்லாக் சட்டையின் காலரைப் பிடித்துக் கொண்டே அவர்களைப் பார்த்தான். உடல் லேசாய்க் குழைந்தது. உதவிக்கு யாராவது வருவார்களா என்று அக்கம் பக்கத்துக் கடைக்காரர்களைப் பார்த்தான். அந்தக் கடைகளில் வாயில்களுக்கு வெளியே தலைகள் மட்டும் வாசல் படியில் அடித்து வைக்கப் பட்டதைப் போல் தெரிந்தன. இப்போது டவாலிக்காரர் வட்டியும் முதலுமாக அதட்டினார். “யோவ்… அய்யாவுக்கு உட்கார நாற்காலி போடேன்யா…?? டவாலிக்காரர், சின்ன ஐயாவை விட்டுவிட்டதற்காக முகத்தை ஒரு குலுக்குக் குலுக்கிய போது, செல்லையா அவரை முறைத்த படியே கடைக்குள் இருந்த முக்காலியைத் தூக்கினான். “நாங்க உட்காருறதுக்கு வரலை… உங்க கணக்கு வழக்க பார்க்கத் தான் வந்தோம்… தலைக்கு மேல வேலை இருக்கு… கொஞ்சம் காட்டுறீங்களா?” செல்லையா, ‘காரியமா, வீரியமா’ என்று தனக்குள்ளே ஒரு பட்டிமண்டபம் நடத்தினான். இடதுபக்கமிருந்த அரிசிக் கடையையும், அதனோட ஒட்டியிருந்த பல சரக்குக் கடையையும், வலது பக்கம் உள்ள தேங்காய் கடையையும், எதிர்ப்பக்கங்களில் காணப்பட்ட காய்கறிக்கடையையும், அரவை மிஷினையும், ’சம்பந்தர் ஒயின் ஷாப்’பையும் ஏதோ ஒரு சம்பந்தத்தோடு பார்த்தான். இவர்களுக்குத் தெரியாமல் அவர்களைப் பார்த்து, வாருங்கள் என்பது மாதிரி கையாட்டினான். அவர்களும் வந்தார்கள். அவனுக்கு உதவியாக அல்ல; அவர்களுக்கு உதவியாக ஒருத்தர்; அவன் போட்ட முக்காலியை முறைத்துக்கொண்டே இரண்டு வண்ணபிளாஸ்டிக் நாற்காலிகளைக் கொண்டு வந்து போட்டார். ஒரு கடைக் காரர் இரண்டு கலர் பாட்டில்களையும், இன்னொருத்தர் இளநீரையும் கொண்டுவந்தார். காய்கறிக்காரர் டவாலியின் காதைக் கடித்தார். தடியர் மீண்டும் கேட்டார். “ஐயா, கணக்குப் புத்தகத்தையும் ரசீதுப் புத்தகத்தையும் காட்டுறீங்களா, இல்ல காட்ட வைக்கணுமா?” செல்லையாவுக்கு, காய்ப்புப் பிடித்த உள்ளங்கை வேர்த்தது. நெற்றி நரம்புகள் வெளிப்படையாகத் தெரிந்தன. மூச்சு வயிறின் அடிவாரம் வரை போனது. நீண்ட நெடிய கைகள் வளைந்தன. தட்டுத் தடுமாறிக் கேட்டான். “கணக்கு வழக்கு வைக்கணும்னு தெரியாது சார்…இனிமேல் நீங்க சொன்னபடி வைக்கேங்க..” செல்லையா தடுமாறிக்கொண்டிருந்தான். பிறகு அவர்களைப் பார்த்து ஏதோ சொல்லப்போனான். சைக்கிளில் ஏறி, கடை கடையாய் அலைந்து பீடி வெற்றிலை வகையறாக்களை விற்றுக்கொண்ருந்தான். ஆறு மாதத்திற்கு முன்பு தான், மூதாதையர் பழுது பார்க்காமலே விட்டுவிட்டுப் போன இந்த வீட்டின் முன் திண்ணையை விரிவாக்கி இந்தச் சின்னக் கடையை வைத்திருப்பதாகச் சொல்லப்போனான். இந்தக் கடைக்காகவே தனக்கு ஒருத்தியைத் தாரமாகத் தந்தார்கள் என்று கூடப் பேசியிருப்பான். ஆனால் அவர்களோ, அவனைப் பார்க்கவில்லை. தடியர் வாயின் கீழுதட்டில் வலது கையை விரித்து வைத்துக் கொணடு, சபாரியிடம் ஆலோசனை கேட்டார். பிறகு அரசாங்க முத்திரை பதித்த ஒரு காகிதக் கட்டில் எதையோ எழுதினார். அப்படி அவர் எழுதும் போது டவாலிக்காரர் செல்லையாவைக் கண்ணடித்துப் பார்த்தார். அவன் கண்கள் இவருக்குக் கிடைக்கவில்லை. இதற்குள் தடியர் நீட்டிய காகிதத்தில் சபாரி கையெழுத்துப் போட்டுவிட்டு, அதை செல்லையாவிடம் நீட்டப் போனார். பிறகு அது தன் தகுதிக்குக் குறைவு என்பது போல் தடியரிடம் நீட்ட, தடியர் டவாலியிடம் கொடுக்க, டவாலி அந்தக் காகிதத்தைகோவில் அர்ச்சகர் குங்குமத்தைக் கொடுப்பது போல தனது கைகள் அவன் மேல் படாமல் தூக்கிப் பிடித்துக் கொடுத்தார். தடியர், இப்போது தடித்தனமான குரலில் ஆணையிட்டார். ’இது சம்மன். நாளைக்கு ஆபீஸுக்கு கணக்கு வழக்கோட வரணும்…அப்படி வராவிட்டால் கடையை மூடி சீல் வைத்துடுவோம். மறந்துடாதப்பா…நாங்க ஆபீஸில் இல்லாட் டாலும் காத்திருங்க.." சபாரிக்காரர் வழிநடத்த, அதிகாரிகள் முன்பக்கமும், டவாலிபின்பக்கமும் ஏறிக்கொண்டார்கள். ஒரு புதர்ப்பக்கம் தம்மடித்துக் கொண்டிருந்த டிரைவர் அலறியடித்து ஓடிவந்தார். அந்த ஜீப் ஒரு அரைவட்டமடித்து, வந்த வழியாய் திரும்பிப் போகத் திரும்பியது. செல்லையா, அதை வழி மறித்துக் கேட்கப் போனான். மற்ற கடைகளின் பக்கம் போகாமல், இருப்பவைகளிலேயே சின்னதான தனது கடைக்கு மட்டும் அவர்கள் ஏன் வந்தார்கள் என்று பணிவாகத்தான் வினவப் போனான்.அதற்குள் அந்த ஜீப், அவன் நின்றால் மோதப்போவது போல் பாய்ந்ததால், அவன் விலகிக் கொண்டான். மனைவி அவன் கையைப் பிடித்துக் கேட்டாள். “என்னங்க சீல் சீல்னு பேசிட்டுப் போறாங்க..” செல்லையா, மனைவிக்குப் பதிலளிக்காமல், அக்கம் பக்கத்துக் கடைக்காரர்களைக் கண்களாலேயே கண்ணி போட்டான். அவர்களோ, அதில் சிக்கிக் கொள்ளாதவர்களாய், முகத்தைத் திருப்பிக் கொண்டார்கள். “அகராதிபிடிச்ச பய… இன்னும் மாட்டணும். இது பத்தாதுப்பா!” செல்லையா, மனைவியைக் கடைக்குள் கூட்டிக் கொண்டுபோய் விபரம் சொன்னான். உடனே அவள் ஆலோசனைப்படி ஒரு நோட்டுப் புத்தகத்தை எடுத்தான். அவள் ஒவ்வொரு வகைப் பொருளையும் எண்ணி எண்ணி இலக்கத்தைச் சொல்ல, அவன் குறித்துக் கொண்டான். ஒரு மணி நேரமாக பாதிப் பொருட்களை உருட்டிப் புரட்டி, எழுதிவிட்டார்கள். அவன் கை வலித்துப் போய் விரல்களை நீட்டி மடக்கியபோது. “இந்தாப்பா ஒன் பேரு என்னப்பா.” “நீங்க யாருங்க சார்.” “யோவ் அறிவு கெட்டவனே…. கேட்டதுக்கு பதில் சொல்லேன்யா..” “சார், இது ஜனநாயக நாடு…. ஒருத்தருக்கு ஒருத்தர் மரியாதை கொடுக்கிறதுதான்….” ’ஒகோ… நீ…. சாரி….நீங்க அப்படி போரீங்களோ…. நான் ஹெல்த் இன்ஸ்பெக்டர்… சுகாதார ஆய்வாளர்… ஓங்க வேர்க்கடலை மிட்டாய்ல ஏன் இப்படி ஈ மொய்க்குது…" “அதுங்க ஜாடிக்குள்ளதான் இருக்குது ஸார். ஈக்கள் ஜாடிக்கு வெளியதான் மொய்க்குது…” “அப்போ அந்த ஜாடி அவ்வளவு அசுத்தமா இருக்குன்னு அர்த்தம்… வெளிலஇவ்வளவு அசுத்தம்னா, உள்ள எவ்வளவு இருக்கும்? இந்த மிட்டாய எடுத்து குழந்தைங்களுக்கு கொடுப்பீங்க. அதுங்க காலராவுல சாகும்… சரி. இதாவது போகட்டும். அதோ பாரு வெத்திலை. அதுல ஏன் அப்படி கொசு அரிக்குது? நீ வெற்றிலை விக்கிறியா… கொசுவை விக்கிறியா?* “அதுக்கு நான் என்ன சார் செய்ய முடியும்? அதோ பாருங்க சார் குழாயடிக் திட்டை. அதுல ஒரு சிமெண்ட் திண்ணை கட்டி, ஒரு கால்வாய் விட்டிருந்தால் தண்ணீர் தேங்காது. மாசம் ஒரு தடவை மலேரியா ஒழிப்புன்னு ஒருத்தர் வந்து இந்த சுவர்ல நீள நீள கோடா இருக்கே. இதுல கையெழுத்து போட்டுட்டுப் போறார்… அந்தக் குட்டைத் தண்ணியை எடுக்க முடியாட்டாலும், கொசு மருந்தாவது அடிச்சிருக்கலாம்… ஒரு கால்வாயாவது கட்டி விட்டிருக்கலாம்…” “எதிர்த்தா பேசுறே மிஸ்டர்? எது எதை எப்பப்ப பண்ணணும்னு எங்களுக்குத் தெரியும். இந்த ஏரியாவுல காலரா, மலேரியா வருதுன்னா ஏன் வராது? மொதல்ல அந்த வேர்க்கடலை ஜாடிய எடுய்யா. வெத்தலைய தூக்கி வெளிய எறிய்யா…” செல்லையா, கனத்த மோட்டார்பைக்கில் பருத்த கால்கள் இரண்டையும் இருபக்கமும் போட்டுக் கொண்டு பூட்ஸ் காலால் பூமாதேவியை மிதித்தபடி இருந்தவரைப் பார்த்தான். அவரும் ஒரு அரசாங்க முத்திரை குறிப்பேட்டை எடுத்தார். அவசரஅவசரமாக எழுதி அவனிடம் நீட்டிவிட்டு அவனுக்கு விளக்கமளித்தார். “கடையை சுகாதாரக் கேடாய் வச்சிருக்கிறதுக்காக சார்ஜ்ஷீட், அதாவது குற்றப் பத்திரிகை. நாளைக்கே கோர்ட்டுக்குப் போ… தப்புன்னு ஒத்துக்கிட்டால் நூறு ரூபாய் அபராதம் போடுவாங்க. அப்படி ஒத்துக்காட்டால், ஆறுமாசம் அலையவிட்டு, அப்புறமா ஐநூறு ரூபாய் போடுவாங்க. அது உன்னிஷ்டம். நான் இந்தக் கடைக்கு பழையபடி வரும்போது இந்த மாதிரி ஈயோ, கொசுவோ அரித்தால், கடையை இழுத்து மூடி சீல் வச்சிடுவேன். கோர்ட்டுக்குப் போகாமல் இருக்காதே. போகாவிட்டால் விலங்கோட சம்மன் வரும்.” அந்த மனிதர் பைக்கை விலங்குத்தனமாய்ப் பாயவிட்டார். அதோ பக்கத்து பலசரக்குக் கடையில முகப்பில் வைக்கப்பட்டுள்ள கருப்பட்டிகளில் ஈக்கள் இன்னொரு கருப்பட்டியாய் குவிந்து கிடக்கின்றன. இதோ இந்த அரிசிக் கடையில் அரிசி மூட்டைகளுக்கு ஊசிக்குல்லாய் போட்டது போல் கொசுக்கள் கூடாரமடித்துள்ளன. இந்த ஆளு ஏன் படையெடுப்பு இடங்களை விட்டுவிட்டு படையெடுக்கப் பட்ட இடத்துக்கு வந்தான்? மறுநாள், காலையில் கோர்ட்டுக்குப் போவதா, இல்லை விற்பனை வரி அலுவலகம் போவதா என்று மனைவியும் அவனும் விவாதித்துக் கொண்டிருந்தார்கள். கோர்ட்டுக்குப் போகவில்லையென்றால் விலங்கு. வரி ஆபீஸரைப் பார்க்கவில்லை-யென்றால் வில்லங்கம். அந்தப் பிரச்சினையை அவர்கள் ஒத்திவைக்க கட்டாயப்படுத்தப்பட்டதுபோல் ஒரு டவாலி உள்ளே வந்தான். “யோவ் செல்லையா… வீட்டுக்கு முன்னால நின்னு ஹாரன் அடிச்சோமில்ல… ஒன்காது என்ன செவிடா?… துரை வெளில வந்து என்னணு கேட்க மாட்டிங்களோ?* “வார்த்தைய அளந்து பேசுங்கய்யா. மனுஷனுக்கு மனுஷன் அடிமைகிடையாது. கண்டவன்லாம் கண்டபடி ஆரன் அடிப்பான். அவன் எனக்குத்தான் அடிச்சிருப்பான்னு சோசியமா தெரியும்?” செல்லையா மேற்கொண்டும் சூடாகப் பேசியிருப்பான். அதற்குள் அவன் மனைவி அவன் வாயை தனது முந்தானையை வைத்துப் பொத்திக் கொண்டாள். அவனை விட்டுக்கு வெளியே தள்ளியும் விட்டாள். ஜீப்பில் கால்மேல் கால்போட்டு இருந்த ஆசாமி கீழே இறங்கினார். “இந்தாப்பா… பப்ளிக்ரோட்ல ஒரு அடியை மறிச்சு கடை வச்சிருக்கே. இது என்ன ஒங்கப்பன் வீட்டு இடமா?* “அதோ அந்த மளிகைக் கடை, இந்த அரிசிக் கடை, இந்தக் கடைங்களோட இடம்கூட என்கடையைவிட நீண்டிருக்குதே. சந்தேகமாயிருந்தால் நூல் வெச்சு அளந்துபாருங்க.” “அப்படியா விஷயம்? நான் ஒனக்கு சொல்லணும்னு அவசியமில்ல. எந்தெந்தக் கடை போக்குவரத்துக்கு இடைஞ்சலா இருக்குது, எந்தெந்தக் கடை இடைஞ்சலா இல்லையின்னு தீர்மானிக்கிறது எங்க அதிகாரம். இவ்வளவு பேசுறியே… இந்தத் திண்ணைய கடையாக்குறதுக்கு பிளான் காட்டினியா? பெர்மிஷன் வாங்கி இருக்கியா? என்ன நெனைச்சுக்கிட்ட ஒன்மனசிலே? ஆபீஸ்ல வந்து நோட்டீஸ் வாங்கிக்கோ. ஒரு வாரத்தில கடைய எடுத்துடணும். இல்லாவிட்டால் புல்டோசர் வரும். அதுக்கு, வீட்டுக்கும், கடைக்கும் வித்தியாசம் தெரியாதுப்பா…” செல்லையா, போகப்போன அந்த ஜிப்புக்கு முன்னால் குறுக்காகப் போய் நின்று கொண்டான். “ஸார், ஆபீசருங்க எல்லோருக்கும் பொதுவானவங்க. தப்புதண்டா செய்தால் தட்டிக் கேட்கக்கூடாதுன்னு சொல்லலை. அதே சமயத்துல அந்தத் தப்பு செய்த தொண்ணுற்று ஒன்பது பேரை விட்டுட்டு நூறாவது ஆளை மத்தவங்க தப்புக்கும் சேர்த்து மிரட்டுறது அநியாயம். ஜனநாயகத்துக்கு விரோதமானது. அந்த மளிகைக் கடை வாசலும், இந்த அரிசிக் கடை வாசலும் என் கடை வாசலைவிட மூணு அடி நீண்டிருக்கே, இதப் பார்க்காமல் இருக்கறதுக்கு ஒங்க கண்ணு என்ன குருடா?” “யோவ் வழியை விடுய்யா” அந்த ஜீப் போனதும், கடைக்காரர்கள் அவனைக் கீழே போட்டு விட்டு ஆளுக்கு ஆள் மிரட்டினார்கள். “ஒன் வரைக்கும் பேசணும். எதுக்குடா எங்கள இழுக்குறே? நீ பெரிய மனுஷன் சின்ன மனுஷன் வித்தியாசம் தெரியாமல் வாயை வித்தியானா, இப்படி வம்படி வழக்கடிதான் வரும். ஒன்னால நாங்களும் இழுபடணுமா?* ஆளுக்கு ஆள் அவனைப் பிய்த்தெடுத்தபோது, மளிகைக் கடைக்காரர். “இப்படி நடக்குமுன்னு எனக்கு போன வாரமே தெரியும்” என்றார். அவர் முகத்தில் ஒரு மர்மப் புன்னகை. செல்லையா அந்தக் கூட்டத்தில் ஏதோ கேட்கப் போனான். உடம்பைநிமிர்த்திக் கொண்டு அவன் வீறாப்பாக எழுந்தபோது, அவன் மனைவி கடையை இழுத்து மூடிவிட்டு, அவனை வீட்டுக்குள் இழுத்துக் கொண்டு போனாள். இந்த ஆறு மாதமாக நடக்காத சங்கதி. சொல்லி வைத்ததுபோல் ஒருத்தர் பின் ஒருத்தராய் வந்து எதுக்காக இப்படி வம்புக்கு வரவேணும்? இதுவரை பார்த்தறியதாத முகங்கள் இப்போது ஏன் எதிரி முகங்களாய், பரம்பரை பரம்பரையாய் பகைமை கொண்ட முகங்களாய்ப் பார்க்க வேண்டும்? என்ன இது ஒரே மூடுமந்திரமாய் இருக்கே. செல்லையா சிந்தித்துச் சிந்தித்து தலைக்குள் ஏதோ வீங்குவது போல் தோன்ற, அப்படியே மனைவியின் மடியில் குப்புறப்படுத்தான். அப்போது வீட்டுக்கு முன்னாலேயே ஒரு கோரக் குரல். காக்கி யூனிபாரத்திற்குரிய கரடுமுரடான குரல். அந்தக் குரல் ஒலியின் வேகத்திற்கு ஏற்ப லத்திக் கம்புகள் சிலம்பாட்டம் போட்டன. “யோவ்… நீ தான் செல்லையாவா?’ “ஆமா சார்.ஆமா.என்ன வேணும் சார்…” “செய்யறதையும் செய்துவிட்டு திமுறப்பாரு…” “சார் இது ஜனநாயக நாடு.” வெளியே நின்ற போலீஸ்காரர்கள் மேற்கொண்டு பேசவில்லை. வாரிச்சுருட்டி எழுந்த செல்லையாவை ஒருவர் முடியைப் பிடித்து மாட்டின் மூக்கணாங்கயிற்றை இழுப்பது போல் இழுத்தார். இன்னொருத்தர் அவன் குதிகால்களுக்கு லாடம் போடுவது போல் லத்திக் கம்பால்தட்டினார். “நடடா ஸ்டேஷனுக்கு…நாயே” என்றார். அந்தப் பஜார் வழியாகத்தான் அவன் நடத்தப்பட்டான். பல கண்களில் பரிதாபம் குடிகொள்ளத்தான் செய்தன. கோபம்கூட ஏற்பட்டது. ஆனால், அத்தனையும் செல்லாக் கோபங்கள். செல்லையா மீது குற்றங்கண்டு, அதன் மீது பழிகளைப் போடும் கோபங்கள். அந்தக் காவல் நிலையம் வெளியே ரத்த நிறத்தோடும், உள்ளே வெளுத்துப் போயும் உள்ள கட்டிடம். சிவப்புப் படிகளில் ஏறித் துப்பாக்கி அப்பிய வாசல் வழியே அவன் உள்ளே கொண்டுபோகப்பட்டபோது, அவன் மனைவி வெளியே கைகளை நெரித்துக்கொண்டு அங்குமிங்குமாக அல்லாடினாள். பிறகு அவன் பின்னால் ஓடிப்போனாள். இன்ஸ்பெக்டர் ஒரு ‘எஸ்’ வடிவ நாற்காலியில் உட்கார்ந்திருந்தார். ‘அண்ணன்’ எதிர் நாற்காலியில்; இன்ஸ்பெக்டர் குற்றவாளிபோலவும், அண்ணன் இன்ஸ்பெக்டர் போலவும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டார்கள். அண்ணனின் தலை, இன்ஸ்பெக்டரின் தலையை மறைத்த பம்பைத் தலை. எட்டுமுழ வேட்டியில் முகம் பார்க்கலாம். வெள்ளைச் சட்டையை ஒரு சுண்ணாம்பு டப்பிக்குள் அடக்கலாம். அப்படிப் பட்ட நேர்த்தி. அண்ணனின் பெருவிரல்களில் மட்டும் மோதிரம் இல்லை. இரண்டு கைகளிலும் இரண்டு பச்சைகள். ஒன்று பெண் பச்சை, இன்னொன்று ஆண் பச்சை நாற்பது வயது அண்ணன். புது மோஸ்தர் பார்வை. ‘அண்ணனை’ப் பார்த்ததும் செல்லையாவால் அழுகையை அடக்க முடியவில்லை. அவன் அழுது விட்டான். உடனே ஆசாமி படிந்துவிடுவான் என்பதை அனுமானித்த இன்ஸ்பெக்டர், அண்ணனைப் பெரிசுபடுத்த அவனைச் சிறிசு படுத்தினார். மேஜையை விலக்கிக் கொண்டே துள்ளி எழுந்தார். வார்த்தைகளும் ‘வெண்டை’ மீன்களாய்த் துள்ளின. “என்னடா நெனச்சே பொறுக்கிப் பயலே… ஒரு கவர்மெண்ட் ஆபீசரை அடிக்கப் போயிருக்கே…அவரு ஜீப்புக்கு வழி விடாமல் தடுக்கப் போயிருக்கே. ராஸ்கல்… அவ்வளவு திமிரா ஒனக்கு. யாருப்பா. இந்தப் பயலை விசாரிக்கிற விதமா விசாரியுங்க…முட்டிக்கு முட்டி தட்டுங்க.” செல்லையா தன்னைப் பிடிக்க வந்த போலீஸ்காரரிடம் பிடிபடாமலே அண்ணனிடம் முறையிட்டான். அழுதழுது சொன்னான். ’பாருங்கண்ணே… அவங்க பேசற பேச்சை..என்னை பாடாப் படுத்திட்டாங்க,அண்ணே. என்னை மட்டும் குறி வச்சாங்க அண்ணே.எனக்கு எதுவுமே புரியலை அண்ணே. ஓங்க கண்ணு முன்னாலேயே எப்படி திட்டுறாங்க பாருங்க. இவ்வளவுக்கும் நான் ஒட்டுப்போட்ட வாக்காளன்," ‘அண்ணன்’ கடிகாரத்தைத் துடைத்தபடியே பாலைக் குடிக்காத பூனை போல் ‘அப்பாவித்தனமாகப்’ பேசினார். “என்கிட்டே ஏய்யா கேட்கிறே… நான் யாரு. நீ யாரு… போனவாரம் உன் கடைப்பக்கம் வந்தேன். நாலு பேரோட வந்துதான் கேட்டேன். முதலமைச்சர் வெள்ளத்தைப் பார்வையிட வாராங்க…நம்ம தவப்பயனா வருகிற முதலமைச்சருக்கு வரவேற்பு வளையம் வைக்கணும். கட்அவுட் வைக்கணும், ஒரு ஐநூறு ரூபாய் நன்கொடையா கொடுன்னு கேட்டேன்… எல்லாக் கடைக்காரங்களும் கேட்டதுக்கு மேலேயே கொடுத்தாங்க.ஆனால் நீ எப்படி கொடுத்தே… ‘மக்கள் எழவுல தவிக்கிறது மாதிரி தவிக்கையில, கல்யாண மேளம் எதுக்கண்ணே’ன்னு கேட்டே. சரி, கொடுக்கிறத கொடுத்திட்டாவது கேட்டியா… இல்ல.ஜனநாயக நாட்டில நான் எதுக்கண்ணே நன்கொடை கொடுக்கணுமுன்னு கேட்டே. நான் அப்பவே ஒதுங்கிட் டேன்…ஜனநாயகம் பாடு…உன் பாடு. எனக்கென்ன..’ – குங்குமம் -15.2.93 நிசங்களை விழுங்கிய நிழல்கள் ராக்கம்மா, வயிறு முதல் வாய் வரை மூச்சிழுக்க நின்றாள். கட்டிட வேலைக்குப் போக வேண்டிய கட்டாய நேரத்தை கணக்கில் கொண்டு, காலங்காத்தாலேயேதான் அந்தக் கடையை பார்த்து நடந்தாள். ஆனால், அதற்குள் அந்த கடைக்கே வால் முளைத்தது போல மருண்டும், சுருண்டும் நின்ற மனித வரிசையைப் பார்த்து “அடியம்மா. இம்மாங்காட்டியா.”என்று தன்னையறியாமலேயே சத்தம் போட்டு சொன்னபடியே ஒடிப்போய் நின்றாள்.எதிர் திசையில் பைகளும், கைகளுமாக வந்து கொண்டிருந்த நான்கைந்து பெண்களுக்கு முன்னால் நிற்க வேண்டும் என்ற வேகம் அவளை விரைவு படுத்தியது. ராக்கம்மா, கம்பளி பூச்சி போல் பல்வேறு ஆடைகளோடு நின்ற பெண்கள் கூட்டத்திற்கு பின்னால் நின்றபடியே அந்த நியாயவிலைக்கடையை, வலது கையிலிருந்த பிளாஸ்டிக் கேனை குழந்தையைப் போல் இடுப்பில் வைத்துக் கொண்டு பார்த்தாள். இன்னொரு கையில் பிடித்த துணிப்பையால் வேர்த்த தன் முகத்தை வீசியபடியே அவள் உள்ளே பார்த்த போது:- அவள் நின்ற குண்டும் குழியுமான சாலை கட்டிட வடிவம் பெற்றால் எப்படியோ, அப்படிப்பட்ட பாடாதி கட்டிடம். காவல் நிலைய லாக்கப் கம்பிகள் மாதிரி போடப்பட்ட அறைக்குள்ளே ஒருகிடா மீசைக்காரன் கவுண்டருக்குள் நுழைந்த கைகளில் உள்ள குடும்ப கார்டுகளில் எதையோ ஒன்றைப் பறித்துக்கொண்டிருந்தான். அந்தக் கைகளின் தொடர்ச்சிகளான முகங்களை உற்றுப்பார்த்து, அந்த முகங்களுக்கு ஏற்றாற்போலவே முன்னுரிமை கொடுத்தான். ஆசாமியைப் பார்த்தால் அசல் லாக்கப்பில் இருக்க முழுத்தகுதிப் பெற்றவன் போல் தோன்றினான். ராக்கம்மா, சற்று திருப்தியோடு மூச்சு விட்டாள். அவளுக்கு முன்னால் சுமார் 30 பேர்தான் ஒற்றை ஒற்றையாகவும், இரட்டை இரட்டையாகவும் நின்றார்கள். வரிசையில் முகப்புப் பகுதியில்தான் கரடித்தலை மாதிரி பல்வேறு மனிதத் தலைகள். மனிதக்கால்கள் அங்குலம் அங்குலமாக நகர்ந்தன. சிலர் கிருஷ்ணாயிலை வாங்கிக் கொண்டுதான் போனார்கள். ராக்கம்மா பக்கத்தில் நின்ற சுமதியிடம் கடைக்காரனுக்கு கேட்கட்டும் என்பது மாதிரி பேசினாள். “கிருஷ்ணாயில் இருக்கத்தான் கீது…. பாரும்மே… ஆப்பக்கடை ஆயாவோட பையில அவன் எப்படி திட்டினபடியே அரிசிப் போடறான்பாரு…அவனுக்கு சர்க்கார் அரிசி பூட்ரோம்கிற நினைப்புல்ல. நமக்கெல்லாம் வாக்கரிசி போடறதா நினைப்பு. ஒழிஞ்சுபோறான். கிருஷ்ணாயில் கிடைச்சா சரிதான். எம்மாடி… எம்மாடி… இந்த கிருஷ்ணாயிலுக்காக எத்தனவாட்டிதான அலையறது. நேத்து காத்துநின்னா கடைசில சொல்றான் கஸ்மாலப்பய…இல்லன்னு நல்லாத்தான் கேட்டேன்.முதல்லயே சொன்னா இன்னன்னு.அதுக்கு அவன் எப்படி முறைச்சான் தெரியுமா..? பாருடி.அங்கே.அந்த குப்புப்பய என்ன செய்யறான்னு. ராக்கம்மாவுடன் சேர்ந்து கமலாவும் குப்புவைப் பார்த்தாள். ஒல்லி அதோடு குள்ளம். இப்போதுதான் அங்கே வந்த நகை நட்டுப்போட்ட பெண்களிடமிருந்து கார்டுகளை வாங்கி கவுண்டரில் கொடுக்கிறான். உள்ளே இருக்கின்ற கிடா மீசைக்காரனும் வரிசைபற்றி கவலைப்படாமல் அந்த பெண்களுக்கே பில் போட்டுக் கொடுத்தான். ராக்கம்மாவால் தாளமுடியவில்லை. சத்தம்போட்டே கேட்டாள்… “யோவ். குப்பு! இன்னாய்யா…கூத்து.இவங்க இப்போதான் வந்தாங்க, சட்டப்படி க்யூவில நிக்கணும். நீ என்னடான்னா… எங்க கஷ்டத்த கவலப்படாம அப்படி வாங்கிக்குடுத்தா என்னய்யா அர்த்தம்.’ குப்பு அர்த்தம் சொன்னான். “கடைல ஆம்பள க்யூ, பொம்மனாட்டி க்யூன்னு இரண்டு க்யூ உண்டு. நான். ஆம்பள… வாங்கிக் குடுக்கத்தான் செய்வேன்.” " உன்னால நீ ஆம்பளங்கறதைஇப்படித்தான் காட்ட முடியும்." ’ஏய்…. ராக்கு." ’பின்ன இன்னய்யா… கிருஷ்ணாயில் வாங்கி வீட்ல கஞ்சிகாய்ச்சி குடிச்சிட்டு வேலைக்கி போவணும். இந்த பாயாபோற கிருஷ்ணாயிலுக்கா மூணு நாளா லேட்டா போறேன். நேத்தே அந்த மேஸ்திரி - ராக்கு… உன் கணக்க பார்ப்போமானு சிரிச்ச படியே சொல்லி என்ன அய வெச்சான்… இன்னிக்கும் லேட்டுன்னா அவ்வளதான். நீ என்னடான்னா இரட்டவட சங்கிலி போட்டவங்களா பாத்து ஒத்தாச பண்ணுற. இத நாயமான்னு நீயே பாரு…" தலைகாய்ந்த பெண்கள் மத்தியிலே லேசான முணுமுணுப்பு… ஆனாலும் அந்தப் பெண்கள் இந்த இரட்டை சங்கிலிக்காரிகளிடம் வேலைப்பார்ப்பவர்கள். ஆகையால் அவர்கள் முனங்கல் குறைப்பிரசவமாகியது. ராக்கம்மா விடவில்லை. “யோவ்… குப்புண்ணா. நாங்கல்லாம் பொம்மனாட்டியா உனக்கி தெரியலையா..? பாமாயில் இல்லாட்டியும் சாப்டல்லாம். ஆனா கிருஷ்ணாயில் இல்லாட்டி எப்படி சமைக்கிறதாம். மரியாதையா பூடு… இல்லாட்டி நான் மனுஷியா இருக்க மாட்டேன். ஏமே… சுமதி நீயும் கேளேம்மே…” சுமதி கேட்கலாமா… வேண்டாமா.. என்று யோசித்த போது… எந்த பெண்களிடமும் வேலைப் பார்க்காமல் சுயேட்சையாக மீன் விற்கும் சோதி தனது கடல் வரிசையைக் காட்டினாள். " யோவ்… அடுத்துக் கெடுக்கிற பையா… சோமாரி… கஸ்மாலம்… அந்தண்ட போறியா இல்லாட்டி இந்தண்ட இருந்து நாங்க வாரனுமா..? நீல்லாம் வேற பொழப்பு பொழக்கலாம்." குப்புப்பயல் பயந்து விட்டான்… சோதி. தீப்பிடித்துக் கொள்வது மாதிரி பிடித்துக்கொள்வாள் என்பது அவனுக்குத் தெரியும். அதே சமயம்தான் வீரமாகத்தான் இருப்பதுபோல, அவளுக்குப் பதிலாக ராக்கம்மாவை முறைத்தபடி சில கார்டுகளை சில பெண்களிடம் பெயரை மாற்றிக் கொடுத்துவிட்டு, நிதானமாக நடப்பதுபோல் பாவலா செய்தபடியே நடந்தான். கவுண்டருக்குள் இருந்த கிடா மீசை, சோதியையும், ராக்கம்மாவையும் ஒருச்சாய்த்துப் பார்த்தான். ராக்கம்மா வரிசையோடு வரிசையாக நகர்ந்தாள். திடுக்கிட்டு புடவையைப் பிடித்தாள். “ஐயோ… நின்னு நின்னு கால் வலிச்ச கண்றாவியில ’இடுப்புச் சேல தொப்புளுக்குக் கீழப் போனத கூடப் பார்க்கலப்பாரு நானு… படிச்சப் பொம்மனாட்டிங்க கட்டிக்கறது மாதிரி புடவ கீழப் போகப்போச்சுது பாரு… பாவிப்பய இன்னாம்மா… பாக்கான் பாரு…”யோவ். தாத்தா… கிருஷ்ணாயில் கிடைக்கட்டும். உன் வாயில அரை லிட்டரை ஊத்தரன் பாரு… ஐய்யயோ… என்கி பின்னால எம்மாம் க்யூ…! ’அது… எய்ந்து இன்னேரம் டீக்கி அலமோதுமே. நாஇல்லாத சாக்குல சல்பேட்டாபூட்டாலும் பூடுமே…" ராக்கம்மா, எப்படியோ கவுண்டருக்கு அருகே வந்துவிட்டாள் வானத்திலிருந்த நிலாவைப் பறித்தது போன்ற ஒரு மகிழ்ச்சி. ஒரு நாள் வேலைக்கி போகாமல், வீட்டிலேயே இருந்தது போன்ற ஆனந்தம், “அது,” சாராயம் குடிக்காமல் வீட்டிற்குத் திரும்பியது போன்ற திருப்தி; பிளாஸ்டிக் கேனை எடுத்து கவுண்டரில் வைத்தாள். மூன்று 10 ரூபாய் நோட்டுக்களை எடுத்து கவுண்டருக்குள் கைவிட்டாள். கிடா மீசைக்காரன் கைகளை உதறியபடியே எழுந்தான். ஒருவேளை கால்வலிக்காக அங்கும் இங்குமாக உலாத்திவிட்டு அவன் வரலாமென்று ராக்கம்மா. சிறிது பேசாமல் நின்றாள். ஆனால், அவனோ அவளுக்கு முதுகை காட்டியபடி யாரிடமோ பேசிக் கொண்டிருந்தான். ராக்கம்மா… அவன் முதுகில் குத்துவது மாதிரியான குரலோடு கேட்டாள். “ஜல்தியாதா சாரே…” கிடா மீசை அலட்சியமாக திரும்பியது. அவளை நேருக்கு நேராக பார்த்துப் பேசுவது, தமது அந்தஸ்துக்கு கீழாவது என்று அனுமானித்தபடியே ஜன்னல் கம்பிகளைப் பார்த்தபடி பதிலளித்தது. “ஸ்டாக்… தீர்ந்து போச்சு…” “இன்னா சாரே இப்படி பன்னுறே. மூணு நாளா நாயா அலயறேன் சாரே” ‘’நீ எப்படி அலஞ்சா எனக்கென்ன… ஸ்டாக் இல்லன்னா இல்ல…" “எப்படியாவது பாரு சாரே…’ “உன்னப் பார்க்க எனக்கு நேரமில்ல…” “யோவ் செருப்பு பிஞ்சிடும்…” கிடா மீசை ராக்கம்மாவையே முறைத்தபடி நின்றான். உடனே ஒரு எடுபிடியாள் அவனுக்கு பதிலாக அவளிடம் பேசினான். ’இந்தா பாரும்மா. உனக்குத்தான் பேசத் தெரியும்னு பேசாதே… ஸ்டாக் இல்லன்னா இல்ல… 1200 கார்டுல 500 கிருஷ்ணாயில் கார்டு. 300 கார்டுக்குத்தான் கிருஷ்ணாயில் அனுப்பினான். 200 கார்டுக்கு வந்த பிறகுதான் உனக்கு தரமுடியும்… சும்மா பினாத்திகிட்டு நிக்காத. இடத்த காலிபண்ணு." “நாளக்கியாவது…” “எனக்கென்ன ஜோசியமா தெரியும்” ராக்கம்மா, பதில் பேசுவதற்கு முன்பு சோதி மோதினாள். “நீங்க செய்யற அக்கரமத்துக்கு கட்சில மரத்தடில கிளி ஜோசியத்துக்குத்தான் வரப்போறிங்க… இன்னாய்யா பேச்சு பேசறே கொயுப்பு பேச்சு…” கிடா மீசை, இரங்குவதுபோல், இறங்கிப் பேசியது. “இந்தா பாரும்மா…உன்கிட்ட வாயாட எனக்கு நேரமில்ல..நான் வேணுமின்னா… எங்க பெரிய ஆபீசரோட அட்ரஸ் குடுக்கறேன்… டெலிபோன் நம்பர தாரேன். நானே உன் பேர்ல கம்பளைண்ட் எழுதி கொடுக்கறேன். நீ கையெழுத்துப் போட்டு அனுப்பினாபோதும். சரிதானா..?” “பெரிய ஆபீசர்களுக்கும் இங்க இருந்து கமிஷன் போற தைரியத்திலயா பேசற? அந்த பசங்க ஒய்ங்கா இருந்தா நீ ஏன் இப்படி பேசற… இன்னாய்யா நாடு இது… ஒட்டுப் பொறிக்கி பசங்க ஒர்த்தன் கூட இத கேக்கறதில்ல… சீ… பேஜாறான பொழப்பு.. ஏழைங்க வயித்து நெருப்பு உங்கள சும்மா விடாது. வேணுமின்னா பாரு…” எடுபிடியாள் எகிறினாள். “இதுக்கு மேல பேசினே… அப்புறம் உங்கள போலீசுல ஒப்படைக்க வேண்டியதிருக்கும் ஜாக்கிரத… யாருகிட்ட பேசறோம்கறது ஞாபகம் இருக்கட்டும்.” ஏணிப்படி மாதிரி சிறிது சாய்ந்து தட்டையாக இருந்த அந்த எடுபிடியாள் பேசப்பேச ‘கிடா மீசைக்காரன்’, ஒரு சிகரெட்டை எடுத்து பற்ற வைத்தபடி, ஊதிப்பிடுவேனாக்கும் என்பது மாதிரி ஊதித் தள்ளினான். ஏற்கனவே போலீஸ் என்றதும் பயந்து போன ராக்கம்மாவுக்கும், சோதிக்கும் அந்த புகைந்த சிகரெட் காவல்துறையின் கண்ணீர்ப்புகை போல் தோன்றியது. இருவரும் வெளியேறினார்கள். சோதி, கையிலிருந்த காசில் ஒரு மளிகைக் கடையில் பதுக்கி வைக்கப்பட்ட மண்ணெண்ணெயை ஒட்டிக்கி இரட்டியாய் வாங்கப் போய்விட்டாள். ஆனால் ராக்கம் மாவால் அப்படி முடியாது. காரணம், இவளுக்கும் இவள் பங்களா அம்மாவிற்கும் ஒரு ஒப்பந்தம். கேஸ் சிலிண்டர் காரியான பங்களாக்காரியின்கார்டில், மண்ணெண்ணெய்க்கு ஒதுக்கீடு இல்லை. ராக்கம்மாவின் கார்டில் மண்ணெண்ணெய்யே பிரதானம், இந்தப் பின்னணியில் பங்களா அம்மா மண்ணெண்ணெய் கிடைக்கும் சமயத்தில் ராக்கம்மாவிடம் லிட்டருக்கு இரண்டு ரூபாய் இருபது பைசா வீதம் பத்து லிட்டர் வாங்க இருபத்திரெண்டு ரூபாய் கொடுத்து விடுவாள். முதல் தேதி சம்பளத்திலும் பிடித்துவிடுவாள். இந்தக் கடனுக்கு வட்டியா அந்தம்மாவுக்கு ரெண்டு லிட்டர் கொடுக்கவேண்டும். ஆனானப்பட்ட இந்த நியாய விலைக்கடையில் மண்ணெண்ணெய் இல்லை என்றால், வாங்கிய பணத்தை இந்த ராக்கம்மா பங்களா அம்மாவிடம் உடனடியாக கொடுத்துவிட்டு, எண்ணெய் எப்போது கடைக்கு வருகிறதோ அப்போதுதான் வாங்க வேண்டும். ராக்கம்மா யோசித்தாள். மளிகைக்கடையில், கையிலிருக்கிற பணத்துக்கு, ஐந்து லிட்டர்தான் வாங்க முடியும். இதில் இரண்டு வீட்டுக்காரிக்கு - அதுவும் இவள் கணக்கில். அப்போ மூன்று லிட்டர் இருபத்திரெண்டு ரூபாய்… எப்பாடி …. கட்டுபடியாகாது… ராக்கம்மாவின் மனம் போர்க்களமானது.இந்த மழையில் விறகுவைத்து அடுப்பு மூட்ட முடியாது. எல்லா விறகுகளுமே வாழைத்தண்டுகளாகிவிட்டன. பேசாமல், கடையில் போய் நாலார்ரூபாய்க்கு ஒரு லிட்டர் வாங்கிக் கலாமா. அதெப்படி… பங்களா அம்மா தப்பா நினைப் பாங்களே.. நாக்க புடுங்கற மாதிரி கேட்டா என்னா… பண்ணறது. அப்பால எப்பவுமே துட்டுத் தரமாட்டாங்க… இந்த பாழாப்போற கிருஷ்ணாயில் எப்ப வரும்… எப்ப வராதுன்னு சொல்லிக்க முடியாது… இதுக்காக காசுசேர்த்து வைச்சாலும். அந்த கஸ்மாலம் அத கள்ளச்சாராயமா மாத்திடும். எப்படியோ பேச்சுன்னா பேச்சுத்தான். ஒரே பேச்சுலதான் நிக்கணும். பங்களா அம்மாக்கிட்டே குனிஞ்ச தலையோட போக்கூடாது. சர்த்தான்மே சொல்லிட்டே… இப்போ.வீட்ல போய் கஞ்சிக்காச்சாத் தானே வேல பார்க்க முடியும், அதுவும் இன்னா மாதிரி வேல… சல்லிக்கல்ல கூடைல சுமக்கணும், ஏணியில் ஏறணும், பசி மயக்கத்துல எடறி விழுந்துட்டா…இன்னாமே செய்யறது.ஆ… அதுக்காக வார்த்த மார்றதா.. மனுஷிக்கி மானம்தானேமே முக்கியம்." ராக்கம்மா, உருவமற்று நடப்பதுபோல் நடந்தாள். உறைந்துப் போனவள்போல் சிறிது நேரம் நின்றாள். சூரியன் வேறு நேர்பார்வைக்கு வந்துவிட்டது. இன்றைக்கு மேஸ்திரி கணக்குப் பார்க்கலாமா என்று கேட்கமாட்டான். அவளை நம்பி வேறு சித்தாளை வேலைக்கு வைக்கவில்லை என்றும், இதனால் கட்டிட வேலையே நின்று விட்டதாகவும், அவள் தான் பணம் கொடுக்க வேண்டும் என்றும் பேசுவான். ராக்கம்மா, வழி தெரியாமலேயே நடந்தாள். பக்கத்தில் ஒரு நர்ஸரி, பல்வேறு வண்ணச் செடிகளும் மரக்கன்றுகளும் வியாபித்த தோற்றம். வேலி ஒரமாக சாலையை நோக்கி வளைந்தபடி நீண்ட தென்னை மரத்தில் ஒருபழுப்பு ஒலை வெளியே தலைக்காட்டியது. கைக்கெட்டும் தூரம்; இழுத்துப்போட்டால், விறகாகும். கஞ்சிக்காய்ச்சலாம். கட்டிட வேலைக்கும் போகலாம். ராக்கம்மா குதிகாலில் நின்று கைகளை தூக்கிவிட்டாள்; அப்போது அவள் கண்கள் தற்செயலாக உள்ளே இருந்த குப்புவை பார்த்து விட்டன. அந்தத் தோட்டத்தில் அவன் வேலைக்காரனாய் பரிபாலனம் செய்கிறான். ஒலையை இழுத்தால், சேலையை இழுப்பான். இன்னாய்யா பேஜாரு… தட்டிக்கேட்க நாதியில்லாத நாடுய்யா. “அது சொல்றது மாதிரி எல்லாரையும் நிக்கவைச்சு சுடனும், முதல்ல குப்புவ..அப்புறம் கிடா மீசையை. இல்லல்ல… இந்த குப்பு வவுத்துக்காக வாய விக்கிற பய. சுடனும்னா கிடாமீசையைத்தான் முதல்ல சுடனும், சோமாரி…இன்னாக் கேள்வியா கேட்டான்… இருடா இரு… அதுக்கிட்ட சொல்றேன் பார்… அதப்பத்தி உன்கி தெரியாது. அது கையில ஒரு அரிவாளக் கொடுத்து ஒன்னண்ட அனுப்பிவைக்கறேன் பார்… என் மூஞ்சியப்பாக்க நேரம் இல்லன்னு தெனாவுட்டாயா பேசற… பெரிய மன்மதரு. உன்னப் பார்க்காட்டி தூக்கம் வராது பாரு…தூ….தூ….” ராக்கம்மா. ‘அதை’ ரேக்கி விடவேண்டுமென்ற ஆவேசத்தோடு இப்போது வேகமாக நடந்தாள். எதிரே நான்கைந்துப் பெண்கள் வந்துக்கொண்டிருந்தார்கள். அவள் ஏரியாப் பெண்கள். ஒருத்தி சுமதி, தனி ரகம். ஒன்பதில் பாசாகி, பத்தாவதில் பெயிலானவள். ஆகையால் மற்றப் பெண்களைவிட சற்று வித்தியாசமாக தூக்கலாக ஜாக்கெட் போட்டிருந்தாள். இன்னொருத்தி, கருப்பாக இந்தாலும் லட்சணமாக இருந்தாள். மற்றொருத்தி சிவப்பாக இருந்தாலும் அவலட்சணம்…இன்னொன்னு சின்னப் பொண்ணு, பன்னிரெண்டு வயதிருக்கும். காக்காவின் அலகை வெட்டினால் எப்படியிருக்குமோ அப்படிப்ப்ட்ட முகம். பெயர் லட்சுமி, அவளோடு அவள் ஆயாவும் வந்தாள். எதிரே வந்த பெண் பட்டாளத்தை பார்த்துவிட்டு, ராக்கம்மா நின்றாள். அவர்களிடம் ஆறுதல் தேடி கிருஷ்ணாயில் சமாச்சாரத்தை சொல்வது போல், கையிலிருந்த கேனை தலைகீழாகப் பிடித்தபடி தூக்கிப்போட்டுப் பிடித்தாள். ஆயா கேட்டாள்… ’இன்னிக்கும் கிருஷ்ணாயில் இல்லனுட்டானா..?" ’இன்னிக்கி மட்டுமல்ல என்னிக்கு வரும்னும் சொல்லமாட்டேங்கறான் கஸ்மாலம்…! நாளிக்கும் சேர்த்து இன்னிக்கே கைவிரிச்சுட்டான். இந்தப்பசங்க, பேசாம நமக்கெல்லாம் எதுவும் கிடையாதுன்னு பப்ளிக்கா சொன்னா தேவலை, இப்படி நாயா அலையாம நாம நம் வேலைய கவனிக்கலாம்." இந்த சமயத்தில், சுமதி கண்களை சிமிட்டியபடியே ராக்கம்மாவிடம் கேட்டாள். ‘ஏய்…ராக்கு.அநத கடையோட சைடுல சைக்கிளுங்க நிக்குதா…அதுல பெரிய பெரிய கேரியருங்ககிதா… பராக்குப் பார்க்கிறது மாதிரி நாலஞ்சு கம்மாண்ணாட்டிங்க நிக்கறானுவளா.. அதுல ஒருத்தன் வழுக்கத்தலையா..? இன்னொருத்தன் அம்மதளும்பனா’ ராக்கம்மா யோசித்துப் பார்த்தாள். நிசம்தான்… நாலைந்து பேர் நின்றார்கள். கடைக்கு வெளியே ஒரு மணிநேரத்திற்கும் அதிகமாக அவர்கள் நிற்பதும், அவர்களின் ஒருத்தன் அவ்வப்போது கடைக்கு முன்னால வந்து நோட்டம் பார்த்ததும் அப்போது அவளுக்கு புரியவில்லை. இப்போது தெரிந்தது. அவர்கள் நிற்பதற்குரிய அர்த்தத்தை அறியும் வகையில், அவள் சுமதியை அர்த்தத்தோடு பார்த்தாள். சுமதி விளக்கினாள். “இந்தப் பசங்களுக்கும், கடைக்கார கம்மானாட்டிங்களுக்கும் ஒரு இது இருக்கு. கரெட்டா… பகல் பதினோரு மணிக்கு அவங்க சைக்கிள்ள மூட்டை மூட்டையா போகும் பாரு…! இப்போ..எவ்வளவு சரக்கு தேறும்னு வேவுபார்கக வந்திருக்கானுக… எனக்கு தெரிஞ்சு ஒரு கடைக்காரன் இந்த கடையிலேயே கள்ளச்சரக்கு வாங்கி 2 லட்சத்துல வீடு கட்டியிருக்கான். இன்னொரு வீடு கட்டப்போறான்.” இன்னாமே..இது அநியாயமா கீது. யாருமே கேள்வி கேட்பாரில்லையா..? முன்னால கடைய நடத்தினவங்க இந்தப் பசங்கள விட எவ்வளவோ தேவலை, 10 லிட்டர் கிருஷ் னாயிலுக்கு ஒன்பது லிட்டர்தான் தருவான். பன்னிரெண்டு கிலோ அரிசில பதினொன்னுதான் அளந்துப் போடுவான். ஆனா இந்தப் பசங்க கால்வாசியை அமுக்கிடுறாங்க." இந்த சமயத்தில் சோதி மண்ணென்னை டின்னோடு அங்கு வந்தாள். மோவாயில் கைவைத்து அவள் பேசவதைக் கேட்டுக்கொண்டிருந்தாள். அறுபது வயது ஆயா, இருபது வயது பெண்மாதிரி ஆடி…ஆடி…ஒரு பாட்டைப் பாடினாள். “கூட்டுறவு வாரம் கொண்டாட வாங்க… சீ…இவனுக கெட்ட கேட்டுக்கு ரேடியோவில வேற விளம்பரம்.” “ஆயா… பாட்டுக்கு இதுவா நேரம்?” “இது பாடடுல்லமே ஒப்பாரி…” ராக்கம்மா அக்னி மூச்சு விட்டபடியே பொதுப் படையாகக் கேட்டாள். நாமோ…சும்மா… எத்தனைவாட்டிதான் பொறுத்துகறது… இதுக்கு ஏதாவது பண்ணணும். என்ன சொல்றே…சுமதி.?" “சொல்றேன்…எங்க ஐயா. இவங்க ஆபீசுலதான் பெரிய ஆபீசரா வேலை பார்க்கறார். அவருக்கிட்ட இவனுக போடற ஆட்டத்த விலா வாரியா சொல்னேன். பதினோருமனி சமாச்சாரத்த பட்டுட்ன்னு புட்டு வைச்சேன். அதுக்கு எங்க அய்யா என்ன சொன்னாரு தெரியுமா..? நாம எல்லோரும் ஒன்னாச் சேர்ந்து சைக்கிள் பசங்களை மடக்கிப் பிடிச்சுகணுமாம். யராவது ஒருத்தர் எங்க ஐயாவுக்கு டெலிபோன் செய்யணுமாம். என்ன சொல்றே… செய்வோமா..??? “உங்க ஐயாவ நம்பி இறங்கலாமா..? யார நம்பினாலும், ஆபீசர நம்பக்கூடாதுன்னு ‘அது’ சொல்லும்.” “அது சொல்லுது இது சொல்லுதுனு கேட்காதடி… எங்க அய்யா நெருப்பு. ஆபீசருங்கள்லையும் அத்தி பூத்தாப் போல சிலர் இருக்கத்தான் செய்யறாங்க ஆனா, இருந்த இடத்திலேயே இருப்பாங்க… மேல போகவே மாட்டாங். எங்க அய்யாவும் அப்படித்தான்…அவர்க்கு கீழ இருந்தவனெல்லாம் மேலே போய்டானுங்களாம்.” “நானு மீனு வாங்க போகணும்மே என்ன செய்யணுமோ அதச் சீக்கிரமாச் சொல்லு” “சரி. இன்னிக்கே இந்த சோமாரிங்கள மடக்கிடலாம்… கரெக்டா பத்தரை மணிக்கி நம்ம ராக்குவோட வீட்டுக்கு அல்லாரும் வந்திடுங்க… இந்த லட்சுமிய பத்தரைமணி வாக்குல கடையில நீக்கச் சொல்லுவோம். சரக்கு ஏத்தும்போது லட்சுமி நம்பளண்ட வந்து சொல்லிடணும். நம்ம ஓடிப்போய் வளைச்சுகுவோம். ஆயா…நீ… ஏன் மூஞ்சிய திருப்பற, உன் பேத்திய அனுப்பற மேன்னா..? நல்லக் காரியததுக்குதானே அனுப்புறோம். எத்தனை பொம்மனாட்டிங்க…இவள காதலுக்குத் தூது அனுப்புறாங்க. ஆனாலும் கெட்டிக்காரி. ரொம்ப பேர சேர்த்து வைச்சுட்டாள்.’ “ஏய் விஷயத்துக்கு வா சுமதி…இந்தப் பசங்கள மடக்குற வேலய பொம்மனாட்டிங்க மட்டும் செய்ய முடியுமா..?? “நாம போடுற சத்தத்துல ஆம்பளைங்களும் வந்திடமாட்டாங்ளா..?” ’நீ ஒருத்தி இந்தக் காலத்துல லேசா அடிதடிசத்தம்னா ஆம்பளைங்க தான் மொதல்ல வீட்டுக்குள்ள ஓடி கதவ சாத்துறாணுவ… பொட்டப் பசங்க…" “இப்படியே பேகினு நின்னா…அந்த பசங்கள பிடிச்சமாதிரிதான்’ எல்லாப் பெண்களும், பத்தரை மணிக்கு ராக்கம்மா வீட்டில் சந்திப்பது என்ற தீர்மானத்துடன் தத்தம் வீடுகளுக்குச் சென்றார்கள். ராக்கம்மாவும் மிகப்பெரிய காரியத்தைச் செய்யப்போகிற திருப்தியுடன் வீட்டை நோக்கி நடந்தாள். அக்கம் பக்கத்துப் பெண்களிடம் அடக்க முடியாதபடி சொல்லப்போனாள். பிறகு, எந்த முண்டை யாவது. அந்த பசங்ககிட்ட சொல்லிடப்படாதேன்னு நினைத்தபடியே வீட்டிற்குள் போனாள். வீட்டில் ‘அது’ சாராய மூச்சோடு தூங்கிக்கொணடிருந்தது. அதனையும், கூட்டிக்கொண்டு போகவேண்டும் என்று நினைத்த ராக்கம்மாவுக்கு ஏமாற்றம். “யோவ். உன்ன மாதிரி ஏழை எளியவங்க சாராயம் குடிச்சு தன்பாடு சாராயம் பாடுன்னு இருக்கறாதாலத்தான் ஆபீசர் கம்மனாட்டிங்க அட்டூழியம் பண்ணுறாங்கோ. முதல்ல ஒன்ன நிக்க வைச்சு சுட ணும்யா.,” என்று சொன்னபடியே மூலையில் சாய்ந்தாள். ராக்கம்மா குடிசையில், எல்லாப் பெண்களும் பத்தேகால் மணிக்கெல்லாம் வந்துவிட்டார்கள்; சோதி மீன் வாங்காமலே வந்து விட்டாள். இதரப் பெண்களும் அப்படியே.ராக்கம்மா அங்கலாய்ப்போடு சொன்னாள். “ஓங்களுக்கு டீ கொடுக்க தேயிலைக்கீது…அஸ்காகீது… ஆனா கிருஷ்ணாயில்தான் இல்ல… மனசுக்கு கஷ்டமாகீது… தோ… சுமதி வந்துட்டாளே.” சுமதி, இரண்டு கைகளை நீட்டியபடி வந்தாள். அந்தக் கைகளில் அடுக்கடுக்காக பழைய பத்திரிகைகளும், வாரப்பத்திரிகைகளும் இருந்தன. ‘எங்க அய்யா வீட்டு பழைய பேப்பருங்க.. கடைல போட்டுட்டு வரும் படியா எங்கம்மா சொன்னாங்க; அப்புறமா போட்டுக்கலாம். நம்ம லட்சுமி, சும்மா சொல்லக்கூடாது… அந்தப் பசங்களமாதிரி பராக்குப் பார்த்தபடியே கட முன்னாடி நிக்கறா’’ என்று சொன்னபடியே, அவள் கரங்களிலிருந்த பழைய பத்திரிகைகளை ராக்கம்மா வீட்டு தரையில் போட்டபோது – ஒவ்வொருத்தியும், ஒவ்வொரு பத்திரிகையை எடுத்துப் பிரித்துப் பார்த்தாள். ஒருத்திகையில் ரஜினிகாந்த் இரண்டு பக்க முனைகளில் கால் வைத்தபடி துப்பாக்கியோடு நிற்கும் டபுள்பேஜ் அட்வர்டைஸ்மென்ட். இன்னொரு பத்திரிகையில் விஜயகாந்த் கம்பைப்பிடித்துக் கொண்டு நிற்கும் கம்பீரமான விளம்பரம். போதாக்குறைக்கு டி. ராஜேந்தர் அநியாயங்களை தொலைக்கப் புறப்பட்டது போன்ற தோரணயான படம். இந்தப் படங்களில் தமிழகத்தின் தலை விதியை தீர்மானிப்பது போன்ற சிங்கார வரிகள். இவர்கள் நடித்த படங்களை, இப்போது பார்த்தால் தான் நாட்டில் எந்த பிரச்சினையும் இருக்காது என்பது போன்ற முடிவான வாசகங்கள். இதற்குள் ஒருத்தி, ஒரு வாரப் பத்திரிகைக்குள் முகம் புதைத்தாள். சிறிது நேரத்தில் அவள் முகம் ஆடியது. பிறகு கையிலிருந்த பத்திரிகை ஆடியது. இன்னும் சிறிது நேரத்தில் அந்த பத்திரிகையை மல்லாக்க வைத்தபடியே ஆவேசமாகக் கேட்டாள். ’இதோ பாரடி சுமதி… இந்த கார்த்தி, ஸ்ரீபிரியாவ அம்போன்னு விட்டுட்டான் பாரு…பெருசா நடிக்கமட்டும் தெரியுது. நம்புனவள நட்டாத்துல விட்டுட்டான் பாரு…பாவம் ஸ்ரீபிரியா.." ’பாவம் என்னடி பாவம்… ஒரு தலப்பட்ச காதலுக்கு, நான் பொறுப்பில்லேன்னு கார்த்திதான் சொல்லீட்டானே…இதோ இந்த பேப்பரைப் பாரு…" “இந்தப் பேப்பரைப் பாருடி…ஸ்ரீபிரியா எப்படி குமுறிச் சொல்லியிருக்கா பாரு…இந்த கார்த்திலலாம் ஒரு மனுசனா” அட.. அவனையும் அவளையும் விடுங்கடி. சந்திரசேகருக்கு இரட்டைப்பிள்ளை பிறந்திருக்காம். ஆளப்பாத்தா எவ்வளவு அப்பாவியா இருக்கான் பாரு…" “இங்க பாரடி… ராதிகாவுக்கும், விஜயகாந்துக்கும் இஸ்க்கு தொஸ்க்காம்… நான் படத்தப் பாக்கும்போதே நினச்சேன்… புருசன் பொண்டாட்டி கூட அப்படிக் கிடையாது…” இந்தச் சமயத்தில், சிறுமி லட்சுமி, வேர்க்க விருக்க ஓடி வந்தாள்…தலையிலிருந்தும், நெற்றியிலிருந்தும் பெருக் கெடுத்த வேர்வைத் துளிகள் கழுத்தில் அருவியாகி, தொண்டைக் குழியில் கடலானது… பேசப் போனாள்….மூச்சு முட்டியது…மூச்சை அடக்கி பேசப் போனால், வார்த்தைகள் முட்டின… மூச்சிழுக்க அவகாசம் கொடுத்து பேச வேண்டியதை தள்ளி வைக்க, அவளால் இயலவில்லை. கூப்பாடு போடுவது மாதிரியே அலறினாள். “எக்கோ… எக்கோ அந்த அநியாயவிலைக்கடையில …அஸ்க்கா மூட்ட… அரிசி மூட்ட… கிருஷ்ணாயில் டின்னு ன்னு. அல்லாத்தையும் ஒரு கட்டை வண்டிலே ஏத்திக்கி னுயிருக்காங்க …கட்டையில போறவங்க… புறப்படுங்க… கஸ்மாலங்கள உண்டு இல்லன்னு பண்ணிடலாம்… சுமதிக்கா எயிந்திரி… ராக்கத்தே புறப்படு…” “இவா ஒருத்தி… பேசாம குந்துடி… ஒரு தலக் காதலுக்கு, தான் பொறுப்பில்லேன்னு எப்படி இந்த கார்த்தி சொல்லலாம். ?” “எக்கோ, நான் புறப்படும் போதே பாதிய ஏத்தீட் டாங்க..இன்னேரம் கிளம்பிருப்பாங்க. ரோட்டைத் தாண்டிட்டா, சட்டம் பேசுவானுங்கோ…ஜல்தி…ஜல்தியாப் போயி மடக்குவோம்… எயிந்திரிங்க…” சுமதியும், மற்ற தோழிகளும் காரசாரமான விவாதத்தில் இறங்கியதால், அந்தச் சிறுமியின் சத்தம், அந்த விவாதத்திற்கு ஒரு பின்னணி இசை போலவே அமைந்தது…ஆனாலும் லட்சுமி வயிறு முதல் வாய் வரை விம்மிப் புடைக்க கத்திய போது, ஒரு பளபளப்பான வாரப்பத்திரிகையை வைத்துக் கொண்டு, அதையே ஆதாரமாக, காட்டுவதுபோல் முக் காலியின் மேல் அடித்தடித்து பேசினாள் சுமதி… “ஏன் சொல்லப்படாது…கார்த்தி சொன்னதுல தப்பே இல்ல… “எக்கோ…” “சொம்மா கிடடி…ஆருதான் யோக்கியம்… ஏய் இங்க பாருங்கம்மே..அநியாயத்த தட்டிக் கேட்கிறதுதான் என் வேலைன்னு நம்ம சூப்பர்ஸ்டார் எப்படி சொல்லியிருக்கான் பாரு…” தொட்டால் கை வழுக்கும் அத்தனை பத்திரிகைகளும், நல்ல பாம்பு படமெடுத்தது போல் பக்கங்களை விரித்துக் காட்டிக் கொண்டிருந்தன. அவற்றின் உட்பக்கங்களோ புதை மணலாய் தோற்றங்காட்டின. எதிர் பரிணாமம் உலகம் முழுவதும் ஆட்கொல்லி நோயான ‘எய்ட்ஸ்’ ஒழிக்கப்பட்ட காலம். அதாவது கி.பி. 2140. அப்படியே எவருக்காவது தப்பித்தவறி அந்த நோய் வந்தால், ஒரே ஒரு ஊசி போட்டால் போதும். சம்பந்தப்பட்ட உடலில் ரத்தம் உள்ளிட்ட திரவசெல்களுக்கு கோட்டிங் கொடுக் கப்பட்டு, ஹெச்.ஐ.வி. கிருமிகள் சாகடிக்கப் பட்டு விடும். இதனால், ஆரோக்கியத்தைப் பொறுத்தமட்டில் ஒருசில தொண்டு நிறுவனங்களைத் தவிர, அனைவரையும் மகிழ்வாய் வாழச்செய்யும் மகத்தான மருத்துவப் புரட்சியின் பொற்காலம். ஆனாலும் அந்தக் காலக்கட்டத்தில் – தமிழக மக்களை ஒரு விசித்திரமான நோய் பிடித்துக் கொண்டது. இதுவரை உலகம் கேள்விப்படாத வியாதி. கேலிக்குரிய வியாதி.ஆமாம்…தமிழர்களில் பணம் படைத்தவர்களில் பெரும்பான்மையோர் தரையில் தவழ்கிறார்கள். தரையோடு தரையாய்த் தவழ்ந்து தவழ்ந்து, பிறகு தரைக்குக் கீழேயும் போக விரும்பி தலைகளைத் தரையில் மோதி மோதி, மூக்குகள் உடைபட்டு, முகம் சிதைந்து சிலர்ஆபத்தான நிலையில் இருப்பதாக ஒரு செய்தி. இந்த வியாதி பெண்களைவிட ஆண்களையே அதிகமாய்த் தாக்கி இருப்பதாக ஒரு சர்வே கூறுகிறது. இந்த நோயும் எய்ட்ஸைப் போல பல்வேறு கட்டங்களில் உருவெடுத்துள்ளதாம். ஆஜானுபாகுவாக உள்ள ஆறடி உயரக்காரர்களின் செங்குத்தான முதுகெலும்புகள் வளைந்து வளைந்து, கைகள் தரையில் தானாய் ஊனறும் அளவுக்குக் தரைக்குமேல் நீளக் கோடாய் நிற்கின்றனவாம். அப்படி ஆனவர்கள், தவளைபோல் தரையில் உட்காருகிறார்களாம். தவளையாவது குதித்துக் குதித்துத் தாவும்… இவர்களோ ஒணான் மாதிரி நெடுஞ்சாண்கிடையாக ஊர்ந்து போகிறார்களாம். பெரியவர்கள் இப்படியென்றால், குழந்தைகள் நிலைமை இதைவிடக் கொடுமையாம். பிறந்து ஒரு வருட காலத்தில், அவை தவழ்ந்தது உண்மை. ஆனால், அதற்குமேல் எழுந்திருக்க முடியாமல் தவழ்ந்த நிலையிலேயே தலை பெருத்தும், உடல் வளர்ந்தும் கிடக்கின்றனவாம். இப்படி முப்பது வயதுக்கு உட்பட்ட இருபத்தாறு லட்சம் ‘குழந்தைகள்’ உள்ளனவாம். இதனால், தமிழகம் நிலைகுலைந்து நிம்மதியற்றுப் போயிருக்கும் என்பதைச் சொல்லவேண்டிய தில்லை. உலகம் ஆரம்பத்தில் அக்கறை காட்டியது. வெளி நாடுகளில் இருந்தும், பிற மாநிலங்களில் இருந்தும் மருத்துவர்களும் செய்தியாளர்களும் தமிழகம் வரத்தான் செய்தார்கள். ஆனால், தவழும் தமிழர்கள் இவர்களின் கால்களைக் கட்டிப் பிடித்துக்கொண்டு, அவற்றில் தலைகளை உருட்டினார்களாம். இன்னும் சில டாக்டர்கள், ஆழம் தெரியாமல் காலைக் கொடுத்துவிட்டு அவஸ்தைப் படுகிறார்களாம். இந்த ரிஸ்க்கையும் மீறிச் சில மனிதாபிமானிகள், கால்களில் ஷாக் அடிக்கும் காலணிகளைப் போட்டுக் கொண்டு இவர்களுக்குத் தொண்டாற்ற வந்திருக்கிறார்கள். அவர்களைப் பார்த்துவிட்ட சில தவழும் தாதாக்கள், ‘உலகை ஆண்ட தமிழனிடம் ஒங்களுக்கு என்னடா வேலை…? நாங்கள் இப்போது தமிழ்த் தாய்க்கு வணக்கம் போட்டுத் தமிழுக்குத் தொண்டாற்றுகிறோம்…உயிர் பிழைக்க நினைத்தால் ஓடிப் போங்கடா’ என்று சூளுரைத்திருக்கிறார்கள். எய்ட்ஸ் நோய், ரத்தத்தினால் பரவியதுபோல் அல்லாமல் இந்த தவழும் நோய் வம்சாவழி நோயாக இருப்பதனால் உலகம் முழுவதும் இது வேகமாகப் பரவாமல் இருந்தது. அப்பா, பிள்ளை, பேரன் என்றே இந்த நோய் தாக்கத் தொடங்கியது. முக்கியமாக மூதாதையர் பணக்காரர்களாகவும், செல்வந்தர்களாகவும் உள்ள குடும்பத்தில்தான் இந்த நோய் முக்கியமாக ஆண் வாரிசுகளை அதிகமாகத் தாக்கியது. இதனால் உலகம், ஒதுங்கிக் கொண்டு பாராமுகமானது. ஆனால், அப்படியும் நீண்ட நாள் இருக்க முடியவில்லை. காரணம், இந்த நோய் முதலில் பெங்களூர், பம்பாய், டெல்லி ஆகிய நகரங்களில் வாழும் பணக்காரத் தமிழர்களைத் தவழ வைத்ததுடன், இவர்களோடு தமிழர்களை மணந்துகொண்ட கன்னடர், மராட்டியர், பஞ்சாபியர் என்று ஒரு சிலரையும் குணிய வைத்துவிட்டது. வெளிநாடுகளில் உள்ள பல்வேறு ஐ.நா. அமைப்புகளில் ‘டெபுடேஷனில்’ சென்ற தமிழக ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். அதிகாரிகளும் தவழத் துவங்கி விட்டார்கள். அமெரிக்கத் தமிழர்களும் ஆங்காங்கே அப்படியே. அமெரிக்கத் தமிழரை மணந்த அமெரிக்கப் பெண்மணிக்குப் பிறந்த குழந்தையும் இப்படித் தவழ்வதைப் பார்த்து முதலில் அதிர்ச்சியடைந்தது அமெரிக்கா தான்! உலக நாடுகள் சுதாரித்தன. பல நாடுகளில் தமிழர்கள் செல்வதற்குத் தடை விதிக்கப்பட்டது. சில நாடுகள் அங்கு வாழும் ‘என்.ஆர்.ஐ.’ தமிழர்களை இந்தியாவுக்குத் திரும்பி அனுப்பப் போவதாக அறிவித்தன. இந்தியா இதைக் கடுமையாக ஆட்சேபித்து, ஐ.நா. சபைக்கு விண்ணப்பித்தது. அதன் பாதுகாப்பு சபை, அவசர அவசரமாய்க் கூடியது. உலக சுகாதார நிறுவனத்தின் இயக்குநரும், தென்னாப்பிரிக்கருமான டாக்டர் அந்தோணி போத்தா தலைமையில் சர்வதேச நிபுணர்கமிட்டியை அமைத்து, தமிழகத்தைப் பார்வையிட்டு அறிக்கை சமர்ப்பிக்கும்படி ஐ.நா. ஆணையிட்டது, தன்மானமிக்க தமிழக அரசின் நிர்ப்பந்தத்தால்,இந்திய அரசு ஆரம்பத்தில் இந்த கமிட்டிக்கு ‘விசா" கொடுக்க மறுத்தது. உடனே உலக வங்கிக் கடன் நிறுத்தப்படும் என்றும், பொருளாதாரத் தடைகள் கொண்டு வரப்படும் என்றும் அமெரிக்காவும் ஐரோப்பிய நாடுகளும் மறைமுகமாய் எச்சரித்ததும், இந்த கமிட்டியை வரவேற்பதாக இந்தியா பகிரங்கமாய் அறிவித்தது. சிவப்புக் கம்பளம் விரித்தது. தாவரவியல், விலங்கியல், உடலியல், வேதியியல், மருந்தியல், சமூகவியல், வரலாற்றியல் போன்ற துறைகளில் அத்தாரிட்டிகளான, நிபுணர்களைக் கொண்ட இந்த ஐ.நா.சர்வதேசக் குழு, தமிழகத்தில் மலை முகடுகளைக் கொண்ட சேலம், தர்மபுரி, பெரியார், மலையான நீலகிரி, மலையே இல்லாத தஞ்சை, காய்ந்து கிடக்கும் முகவை, புதுவை, நீர் சிந்தும் நெல்லை, பொதிகைத் தென்றல் தொடும் குமரி ஆகிய மாவட்டங்களையும், அப்புறம் ‘ரெண்டும் கெட்டான்’ சென்னை, செங்கையையும் பார்வையிட்டது. ஒரு மாத காலம் சுற்றிப்பார்த்தது. பல்வேறு பூகோள வேறுபாடுகளைக் கொண்ட இந்த மாவட்டங்களை இணைக்கும் ஒருமைப்பாடாக, தமிழர்கள் எல்லா இடங்களிலும் தவழ்வதைப் பார்த்தது. அத்தனை இடங்களிலும் தவழ்கிற கணவர்களையும், குழந்தைகளையும் பார்த்துப் பார்த்தே கூன்பட்ட நவீன நளாயினிகளான தமிழ்ப் பெண்கள், நிபுணர்களிடம் குய்யோ முறையோ என்று கூப்பாடு போட்டிருக்கிறார்கள். தவழும் பெரிய குழந்தைகள், கமிட்டியிடம் கையெடுத்துக் கும்பிட்டுள்ளன. இதைப் பார்த்து, கமிட்டியில் உள்ள பாகிஸ்தானிய நிபுணரே கண்ணீர் சிந்தியிருக்கிறார். இந்தக் கமிட்டி, தவழாத ஒரு சில விதிவிலக்குத் தமிழர்களைச் சந்தித்து, தமிழனின் பாரம்பரியம் பற்றி விவாதித்திருக்கிறது. இந்த மனிதர்களும் போலீஸ் கெடுபிடிகளையும் மீறி கமிட்டியிடம் பேசியிருக்கிறார்கள். காவல் துறையினரும் தவழ்வதால், அவர்களால் நிமிர்ந்து நின்று நடமாடும் முற்போக்குத் தமிழர்களை நெருங்க முடியவில்லை. நிபுணர் குழு, இதோடு பணி முடிக்கவில்லை. இந்த நோயின் ஒவ்வொரு கட்டத்தையும்பிரதிபலிக்கும் நோயாளிகளைச் சாம்பிளுக்கு ஒன்றாகக் கைப்பற்றி, புதுடெல்லிக்கு கொண்டு வந்தது. மத்திய அமைச்சர்களுடனும், ஐ.ஏ.எஸ். அதிகாரிகளுடனும் ஆலோசனை நடத்தியது. நியூயார்க்கில் ஆலோசனை நடத்தி அறிக்கை தயாரிக்க நினைத்த கமிட்டி, நோயின் கடுமையைக் கருதி புதுடெல்லியிலேயே கூடியது-அவசர அவசரமாய். புதுடெல்லி விஞ்ஞான பவனை, சாஸ்திரி பவனில் வைத்தது மாதிரியான புதுப் பவன். ஒயர்கள் இல்லாத மைக்குகள்… பட்டாலே சுளுக்கை எடுக்கும் பட்டு மெத்தை தரை.ட்ட எல்லாவற்றுக்கும் மேலாக ஒருத்தர் எந்த மொழியில் பேசினாலும், அந்தப் பேச்சை மண்வாசனையுடன் மொழி பெயர்த்துச் சொல்லும் ரோபாட்டுகள். நிபுணர்கமிட்டியின் தலைவரும் தென்னாப்பிரிக்கருமான டாக்டர் அந்தோணி போத்தா, கான்ஃபரன்ஸ் அறையின் மேடையில் உள்ள சாம்பிள் நோயாளிகளை அவ்வப்போது பார்த்துக் கொண்டே முன்னுரையாய் இப்படிப் பேசினார். “இந்த இருபத்திரண்டாம் நூற்றாண்டின் இந்தக் கால கட்டத்தில் மானுடம் மகத்தான சாதனைகளை நிகழ்த் தியுள்ளது. வானிலேயே விண்வெளி ஒர்க்ஷாப் அமைத்து விட்டோம். புது மணமக்கள், நிலாவுக்கே ஹனிமூனுக்காக போய்வருவது சர்வசாதாரணமாகிவிட்டது. பிற பிளானட் உயிரினங்களோடு பேச்சு வார்த்தை துவங்கிவிட்டது. அத்தனை நோயும் ஒழிக்கப்பட்டு, ஒவ்வொரு மனிதரும் இருநூறு ஆண்டுகாலம் உயிர் வாழ வகை செய்துவிட்டோம். ஆனால், அத்தனை முன்னேற்றங்களையும் தவழ வைப் பதற்கு, மன்னிக்கவும் முறியடிப்பதற்கு வந்ததுபோல், மானுடத்தின் மூலக்கூறாகக் கருதப்படும் திராவிட இனத்தின் மூத்தகுடியான தமிழ்க்குடிக்கு இப்படிப்பட்ட நோய் வந்திருப்பது அதிர்ச்சிக்குரியது. ஆகையால் ஒவ்வொரு நிபுணரும் இதற்கான காரணகாரியங்களைச் சுருங்கச் சொல்லி விளங்க வைக்கும்படி கேட்டுக் கொள்கிறோம்.” வரலாற்றில் பேராசிரியரும், பாகிஸ்தானியருமான டாக்டர் ஜனாப்மியான் முந்திக்கொண்டும் முண்டியடித்தும் கருத்துரைத்தார். “வாழ்க்கை என்பது ஒரு வாழ்வாசாவா போராட்டம், ஒரு குறிப்பிட்ட சந்தர்ப்பத்தில், தகுதி உள்ளவையே வாழ்கின்றன என்றார் டார்வின். இந்தத் தத்துவத்தின் படி, வளர்ச்சி கண்ட மானுட பரிணாம உறுப்பினர்களில் தமிழர்கள் இப்படித் தரையோடு தரையாய் ஒட்டிப் போனது ஆச்சரியமே.” தாவரவியல் நிபுணரும் யூதருமான டாக்டர் சாலமன் தாளமுடியாமல் பதிலடி கொடுத்தார். “ஆச்சரியம், ஆதாரமாகாது ஜனாப்…. பிரபஞ்சத்தில் எப்படி மேல் கீழ் என்பது கிடையோதோ… அப்படி பரிமாணத்தில் நாம் நினைக்கும் ‘வளர்ச்சி" என்று ஒன்றைக் கோடு போட்டுக் காட்ட முடியாது… டார்வின் சுட்டிக் காட்டும் ‘குறிப்பிட்ட சந்தர்ப்பத்தில்’, என்ற வாசகம் முக்கிய மானது; அதாவது ஒரு சந்தர்ப்பத்தில் வெற்றி பெறுபவை அடுத்தகட்ட சந்தர்ப்பத்தில் தோல்வியுறலாம். ஆகையால், தமிழர்கள் இப்படி ஆவதற்கான ‘குறிப்பிட்ட சந்தர்ப்பம்’ என்ன என்பதை வரலாற்று வழியாய் விளக்குவதை விட்டுவிட்டு, எனது துறையில் நீங்கள் மூக்கை நுழைப்பது ஆட்சேபத்துக்குரியது!” ஜனாப் மியான் சும்மா இருந்தபோது, விலங்கியல் பேராசிரியரும் சீனருமான டாக்டர் குவான் சுவாங், தனது துறையும் பரிணாமத்தைப் பற்றியது என்று சொல்வதுபோல் மூக்கோடு சேர்த்து முகத்தையும் நுழைத்தார். “பரிணாம வளர்ச்சி போல் எதிர்ப் பரிணாம வளர்ச்சியும் ஏற்படுவது இயற்கை, எடுத்துக்காட்டாக மில்லியன் வருடங்களுக்கு முன்பு இருந்த மிகப் பெரிய மிருகமான டினோஸரஸ்… இப்போது ஓணானாகச் சிறுத்துப் போனது. அன்று மிகப் பெரிய தாவரமான ஒருவித மரவகை இப்போது பெரளிச் செடியாகி விட்டது… இப்படி நடமாடும் பல்கலைக்கழகமான தமிழன், தவழும் நிலைக்குத் தள்ளப்பட்டதும் ஒருவித பரிணாமமே….” கமிட்டி சேர்மன் தலையைப் பிய்த்துக் கொண்டார். “நீங்களும், உங்கள் பரிணாமமும்….தமிழனின் இந்த நிலைமைக்கான காரணங்கள் எவை எவை… இவற்றைப் போக்குவதற்கான வழி என்ன…. என்ன…. இதைக் கோடி காட்டாமல் என்ன பேச்சு இது?” சமூகவியல் நிபுணரான டாக்டர் குவாங் லீ, மலேசிய மொழியில் குறுக்கிட்டார்: “ஒரு உயிரினம், தான் வாழ்வதற்குரிய வழிமுறையைத் தேர்ந்தெடுப்பதற்கு, உருவில் திரிபு செய்து கொள்வது இயற்கை. எடுத்துக்காட்டாக நிலத்தில் ஒரு காலத்தில் நான்கு கால்களால் நடமாடிய திமிங்கிலம், நீரில் வாழ வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டதும், அதன் நான்கு கால்களும் கூம்பிக் கூம்பி நீந்துவதற்கு ஏற்றதுடுப்புகளாக உருமாற்றம் பெற்றன. மனிதனும் இப்படி மாறலாம். திமிங்கிலத்தின் முன் துடுப்பு எலும்பும், மனிதனின் முன் கை எலும்பும் ஒரே மாதிரியான அமைப்பில் இருப்பதே இதற்கு அத்தாட்சி. ஆகையால், தமிழன் உருமாறுவதற்கு டார்வின் குறிப்பிட்ட அந்தக் குறிப்பிட்ட சந்தர்ப்பம் என்பது எது என்பதை வரலாற்றுப் பேராசிரியர் விளக்கினால் விடை கிடைக்கும்.” சேர்மனின் கண்ணசைப்பை ஏற்று வரலாற்றுப் பேராசிரியர் ஜனாப் மியான் விளக்கமளித்தார். அந்தக் காலத்துப் பத்திரிகைகளையும், ஃபிலிம்களையும், கவிதைப் புத்தகங்களையும் பார்த்தபடியே பேசினார். “இருபதாம் நூற்றாண்டின் இறுதியில், அதாவது நூற்றைம்பது வருடங்களுக்கு முன்னால், தமிழர் பண்பாடு தனிநபர் வழிபாடாக, துதிப்பாடலாகவே இருந்திருக்கிறது. கவிதைகள், தலைவர்களின் கால்களில் சரஞ்சரமாய்க் கொட்டப்பட்டன. ஒருவனை வீரனாக்க, முப்பது பேரைப் பேடியாக்கும் சினிமாத்தனம் இருந்திருக்கிறது. தலைவர் காலில் குனிந்து விழுந்தால் நேரமாகும். அவருக்கும் கோபமாகும் என்று தமிழர்கள், தொப்பென்று நெடுஞ் சாண்கிடையாக விழுந்ததாகப் பத்திரிகைத் தகவல்கள் கூறுகின்றன. இன்று தவழ்ந்தபடியே உயிர் வாழும் இவர்களின் மூதாதையர்களின் வாழ்க்கை முறை பற்றி விசாரித்தபோது, அவர்கள் அமைச்சர்களாகவோ, அரசியல் வாதிகளாகவோ, அரசு அதிகாரிகளாகவோ அல்லது உயர் போலீஸ் அதிகாரிகளாகவோ இருந்திருக்கிறார்கள் என்பது தெரிய வருகிறது… அப்படி அவர்கள் இருந்த சமயத்தில், தங்கள் மூளையைக் கொஞ்சமும் செலவு செய்யாமல், நெடுஞ்சாண்கிடையாகக் காலில் விழுந்து விழுந்தே ‘வளர்ச்சி’ பெற்றிருக்கிறார்கள். எவர் அதிக நேரம் தன் தலைமை, தலைவரின் கால்மாட்டில் போடுகிறாரோ, அவரே வி.ஜ.பி. -க்களின் வி.வி.ஜ.பி.யாக வெற்றி மேல் வெற்றி பெற்றிருக்கிறார். இதற்கு கட்-அவுட் ஃபாஸில்களும் ஆதாரம்” மருந்தியல், மருத்துவம், பேதாலஜி எனப்படும் உணர்வியல் - ஆகிய முப்பெரும் துறைகளின் முடிசூடா மன்னரும் சிங்களருமான டாக்டர் விஜயரத்னே, ஆர்க்மிடீஸ் எப்படி ஒரு தத்துவத்தைக் கண்டுபிடித்ததும், நிர்வாணமாக அரச சபைக்கு ஓடி வந்தானோ, அப்படி பேண்ட் நழுவுவதைப் பற்றிக் கூடக் கவலைப்படாமல், ஜட்டியோடு நின்று பேசினார். ‘கண்டுகொண்டேன் சேர்மனே. ..தமிழன் இப்படி ஆனதற்கான காரணத்தைக் கண்டுகொண்டேன் சேர்மனே… உயிரின உடம்பில் ஒவ்வொரு செல்லிலும் சங்கிலி மாதிரியான ஒரு கெமிக்கல் உண்டு. இதற்குப் பெயர்தான் ஜீன்… இந்த ஜீன்களில் ஒருத்தரின் மூதாதையர் சேகரித்த அத்தனை தகவல்களும் உள்ளடங்கி இருக்கும். இது ஒரு இன்ஃபர்மேஷன் சிஸ்டம். தாம் சேகரித்த தகவல்களை இவை அடுத்த தலைமுறையான வாரிசுகளிடம் கொடுக்கின்றன. இதன்படி, காலில் விழுகிறவர்கள் வெற்றி பெறும் தகவலை, இந்த ஜீன்கள் தங்களிடம் ஒரு தகவலாகச் சேர்ந்து வைத்தன. இந்த இன்ஃபர்மேஷன் வாரிசுகளுக்கும் வந்தன. இவை காலில் விழுவதற்கு ஏற்ப சம்பந்தப்பட்டவனின் உடல்வாகை மாற்றுகின்றன. இதோ பாருங்கள், இந்தக் ’குழந்தை மனிதனின் ‘கைகால்கள், ஓணான்கால்களாய் மாறி வருவதை… எப்படி நினைக்கிறோமோ அப்படி ஆகிறோம். உணர்வால் மட்டுமல்ல, உடலாலும்.’ “தாங்க்யூ. டாக்டர் விஜயரத்னே. சரி, இப்படியாக ஆகிப்போனதமிழர்களை மீட்பதற்குரிய சிகிச்சை முறையை யாராவது சொல்ல முடியுமா?’ மனோவியல் நிபுணர் டாக்டர் கெமிங்கோ பதிலளித்தார். ’எந்த இன மக்களும்-மாய ஹிஸ்டிரியாவால் பாதிக்கப்படுவதுண்டு. ஒரு காலத்தில் வாழ்வாங்கு வாழ்ந்த சங்ககாலத் தமிழன், இருபதாம் நூற்றாண்டின் இறுதிக் கட்டத்தில் தனக்கென்று தனி நபர் வழிபாடு என்ற ஒரு போலி உலகைச் சிருஷ்டித்துக் கொண்டான். சுயசிந்தனை யையும் தலைவர்களிடம் அடகு வைத்து விட்டு, வெறும் வெங்காய டப்பாவானான். மூளை குறைந்தவனுக்கு முதுகெலும்பு எதற்கு?" ‘வாருங்கள்… டாக்டர் கெமிங்கோ… சப்ஜெக்டுக்கு வாருங்கள்’ ‘வருகிறேன் சேர்மன்… சிகிச்சைக்கு வருகிறேன். தரையோடு தரையாய் வீழ்ந்த இந்தத் தமிழ் நோயாளிகளின் காதுகளில் ,கணியன் பூங்குன்றன் என்ற அரும்பெரும் புலவன் பாடிய ‘பெரியோரை வியத்தலும் இலமே’ என்ற பாடலை இருபத்து நாலு மணி நேரமும் ஒலிக்கச் செய்ய வேண்டும். பலரை, ஒரே ஒருத்தர்காலில் விழும்படி நடிக்கச் செய்து, அப்படி விழுகிறவர்களை, இந்த நோயாளிகளின் கண் முன்னாலேயே சவுக்கால் அடிக்க வேண்டும்." ‘காலில் விழும் தலைகளை ஏற்றுக் கொள்வோரிடம்’ கயவர்தான், தங்களைத் தாங்களே வியப்பார்கள்’ என்று வள்ளுவர் சொன்ன வாசகத்தை, காதில் குத்தும்படி சொல்ல வேண்டும். கன்னித் தமிழ்நாட்டின் கயவாளியே… எம் மக்களை, காலில் விழ வைத்துச் சிரிக்கிறியே’ என்று ஒரு பாட்டை எழுதி, அதை அந்தக் கால ஏ.ஆர்.ரஹ்மான் மெட்டில் இசைய மைத்து, தமிழகத் தலைவர்கள் அனைவருடைய காதுகளிலும் ஓத வேண்டும். இந்த உணர்வு ஆழ்மனதுக்குச் செல்லும். ஜீன்களில் ஏறும். 270 கோடி தாக்கங்களை உள்ளடக்கும் மூளையின் இயக்கத்தால், இவர்களின் செல்களில் படிப்படியாய் ஜீன் மாற்றங்கள் ஏற்படும். அப்படி ஏற்பட ஏற்பட, படுத்துப்போன தமிழனின் முதுகெலும்பு மீண்டும் செங்குத்தாக ஆகும். இதற்கு மூன்று தலைமுறை ஆகும். அதுவும் இப்போதே சிகிச்சையைத் துவக்கினால் தான், இன்றைய தவழும் தமிழனின் மூன்றாவது தலைமுறை தேறும்… மீளும்…" கமிட்டி சேர்மன் டாக்டர் அந்தோணி போத்தா, டாக்டர் கெமிங்கோவை நன்றியோடு பார்த்தார். அப்புறம் அனைத்து நிபுணர்களையும் ஒருசேரப் பார்த்துவிட்டு, விவாதத்தை இப்படி ‘ரவுண்ட்டப்’ செய்தார். “இங்கே நடந்த விவாத விவரங்களையும், எல்லோரும் ஒப்புக்கொண்ட சிகிச்சை முறையையும் ஓர் அறிக்கை நகலாய் எழுதித் தரும்படி இன்ஃபர்மேஷன் சயன்டிஸ்டான டாக்டர் பரமானந்தராயைக் கேட்டுக் கொள்கிறேன். நம் தலைமுறையிலேயே தவழும் தமிழனை நிற்க வைக்க முடியும் என்று நினைத்தேன். ஏமாற்றமும் வேதனையுமே மிச்சம். என்றாலும் இன்றைய தமிழனின் மூன்றாவது தலைமுறைக்காவது முதுகெலும்பு நிமிர்ந்தால் சரிதான்.” -ஆனந்த விகடன் 14.5.95 ஏகலைவன்களைத் தேடி அந்த மொட்டை மைதானத்திற்கு முடி அலங்காரம் செய்ததுபோல் மனிதமே மலர்களாகவும், செடி, கொடிகளாகவும் வியாபித்திருந்தது. எட்டடி கம்பத்தில் கால்கள் கட்டப்பட்டு, சலங்கைக் கைகளோடு அந்தரமாய் நின்ற ’கெக்கலி" ஆட்டக்காரர்கள்… இறுகக் கட்டிய கண்டாங்கிச் சேலைக்காரிகள்…. சல்வார் கமிசுகள்… பஞ்சக் கச்சமும், மஞ்சள் சட்டையும் போட்டிருந்த தேவராட்டக் காரர்கள்…. கும்மிப் பெண்கள்… கோலாட்டக்காரர்கள்… என்று பட்டிதொட்டியிலிருந்துவந்த மாவட்ட ரீதியான இளம் கலைஞர்கள்; எதிரே தோன்றிய மேடையை முகம் சுழித்துப் பார்த்தார்கள்.ஆனாலும்… கலெக்டரை காணவில்லை என்று தொலைக்காட்சியில் அறிவிக்க வேண்டிய அவசியம் ஏற்படுமோ என்ற நிலைமை… அவருக்காக காத்து நின்ற கால்கள் கோபங் கோபமாய் தரையில் மிதித்தன… கண்கள் பூத்துப் போயின. மத்திய அரசின் இளைஞர்மன்றம் சார்பில் மாவட்ட அளவில் நடைபெறவிருக்கும் இளம் கலைஞர்களின் கலை நிகழ்ச்சிப் போட்டிகளை, காலை பத்து மணிக்கு துவக்கி வைக்க வேண்டிய கலெக்டர், பன்னிரண்டாகியும் வரவில்லை. அந்த மாவட்ட நேரு மைய அமைப்பாளர், பிரசவத்திற்கு அலை மோதும் பெண்ணைப் போலத் துடித்துக் கொண்டிருந்தார். கலெக்டருக்காக ‘இறக்குமதி’ செய்யப்பட்ட கூட்டமும், சுயமாக வந்த அறிவொளி இயக்க கூட்டமும் இப்போது அலைமோதின. இளம் பெண்களில் பலரிடம் ஒரு கலக்கம்… என்னதான் அவர்கள் குடும்பத்தினர் இவர்களை இங்கே அனுப்பி வைக்கும் அளவிற்கு முற்போக்காக இருந்தாலும், காலம் கடந்து வீட்டிற்குப் போனால் அதே குடும்பத்தினர் பார்க்கும் பார்வையை இப்பவே கற்பனை செய்து அல்லாடினார்கள். என்றாலும் பூனைக்கு மணி கட்டுவது யார்? என்ற கேள்வி. மாவட்ட கலெக்டர் இல்லாது போனால், ஒரு பில் கலெக்டரை வைத்தாவது போட்டியைத் துவக்க வேண்டுமென்பது கூட்டத்தினரின் விருப்பம். ஆனால் மாவட்ட அதிகாரிகள் ‘கலெக்டருக்காகவே கலைப் போட்டிகள்’ என்ற பாணியில் எதிர்மாறான விருப்பம் கொண்டிருந்தால் என்ன செய்ய முடியும்…? முடியும் என்பதுபோல், ‘காவடி/ முருகன் கலைக் குழுக்களுடன் கிசுகிசுத்துவிட்டு, காவடியை பயபக்தியோடு சுவர் பக்கம் சாய்த்து விட்டு, மேடையை நோக்கி நடந்தான். எட்டு முழ வேட்டியை தார் பாய்த்துக் கட்டியிருந்தான். துத்தநாக உலோகத்தை உருளையாக்கியது போன்ற உடம்பு… நெற்றியை மறைத்த விபூதி… புருவ நெற்றியை மறைத்த சூரிய குங்குமம்… சாமியானா பந்தல் வழியாக மேடைப் பக்கம் போய் கலெக்டரின் பி.ஏ. (பஞ்சாயத்து)… பி.ஏ. (வருவாய்)… பி.ஏ.(சத்துணவு)… பி.ஏ.(சேமிப்பு) போன்ற அதிகாரிகளை ஊடுருவி, அந்த மாவட்ட நேரு மைய அமைப்பாளரை எப்படியோ பிடித்துவிட்டான். அதுவும் பிடிபிடியென்று பிடித்து விட்டான். “இதுக்கு மேலயும் காத்திருக்கிறதுல அர்த்தமில்ல சார்… இனிமேயும் காத்திருந்தால், அவங்க நம்மளஅவமானப்படுத் துறாங்களோ இல்லையோ… நம்மள நாமே அவமானப் படுத்துறதா அர்த்தம் சார்” மாவட்ட நேரு மைய அமைப்பாளர், கலெக்டரிடம் காட்ட முடியாத செல்லாக் கோபத்தை ‘காவடி’ முருகனிடம் செலவாணியாக்கினார். அவனோடு நியாயம் கேட்க வந்த சக கலைஞர்கள், அவனை முன்னால் தள்ளிவிட்டு பின்னால் போனதில், அவருக்கு, திண்டாட்டமே கொண்டாட்டமாகியது… “இந்தா பாருப்பா… நாய் வேசம் போட்டா குலைச் சுத்தான் ஆகணும்… கலெக்டர வைச்சு நடத்துனா ஆயிரம் கஷ்டம் வரும்… ஆனா அவரு இல்லாம நடத்துனால் ஐயாயிரம் வில்லங்கம் வரும்… பேசாமல் ஒன் இடத்துக்கு போ… சும்மா குலைக்காதே…” “என்ன சார், நாயை துரத்துற மாதிரி துரத்துறிங்க…” “இந்தாம்மா மீரா, இந்த மாதிரி ஆளுங்கள எதுக்காகம்மா செலக்ட் பண்ற…எதுக்கும் நாளைக்கு என்னை நீ ஆபீசுல வந்து பாரு…” மீரா, அந்த அமைப்பாளரைப் பார்த்து கண்களால் கெஞ்சினாள்… காவடி முருகனைப் பார்த்து கைகளை நெறித்தாள். எம்.எஸ்ஸி. படித்த இருபத்தைந்து வயதுக்காரி… சர்க்கார் வேலைகளைப் பொறுத்த அளவில் அவள் மூப்படையாமல் இருக்க இன்னும் ஆறு மாதங்களே உள்ளன… மாதம் அறுநூறு ரூபாய் சம்பளத்தில் நேரு மையத் தில் பகுதி நேர அமைப்பாளராக அவள் சேர்வதற்குக் காரணமே இதன் மூலம் கிடைக்கும் மேலிட பரிச்சயத்தால், ஒரு நல்ல வேலைக்குப் போய் விடலாம் என்ற நம்பிக்கை தான்… ஆனால், இந்த காவடி முருகன் தன்னை பழைய படியும் ’அன்னக்காவடி’யாக்கி விடுவானோ… நல்லவேளையோ, கெட்ட வேளையோ, மைதானத்தின் வாசற்பக்கம் நின்ற சின்ன அதிகாரிகள் பரபரத்து, அங்குமிங்குமாய் நகர்ந்தார்கள். உடனே மேடைப்பக்கம் நின்ற பெரிய அதிகாரிகள் வாசற்பக்கம் தலைவிரிகோலமாய் ஓடினார்கள். ஒரு சிலர் வாய்களில் கலெக்டர்… கலெக்டர்… என்ற வார்த்தைகள் வெட்டுக்கிளியாய் துள்ளின. தானாய் புலம்பிக் கொண்டிருந்த போலீஸ் ஜீப் மேல் சாய்ந்து நின்ற கான்ஸ்டபிள்கள் அலறியடித்து ஓடினார்கள்… கலெக்டர் வருவதாக அனுமானித்த கூட்டத்தினர் கை வலிக்கும்படி தட்டினார்கள். கலைக் குழுக்கள் உஷாராயின… ஆனால் வந்தது ஒரு கழுதை… சின்ன அதிகாரிகளையும் மீறி பெரிய அதிகாரிகளை ஊடுருவி மேடைப்பக்கம் வந்துவிட்டது. ஒலிபெருக்கிகளில் சத்தம் போட்ட ‘அந்த அரபிக்கடலோரம்’ பாட்டை கேட்டோ அல்லது கூட்டத்தைப் பார்த்து மிரண்டோ, அங்குமிங்குமாய் துள்ளியது; அந்தக் கழுதை கூட்டத்தினருக்கு இந்தக் கால திரைப்பட நடனங்களை நினைவுப் படுத்தியிருக்க வேண்டும்… அந்த அப்பாவிப் பிராணிக்கு கைதட்டல்கள் கிடைத்தபோது, காவடி முருகன் அமைப்பாளரை மீண்டும் சீண்டினான்… “கழுதை, துவக்கி வச்சுட்டது சார்.. போட்டியை நடத்தலாம் சார்…” அமைப்பாளர், ஆற்றுக்குள் திணிக்கப்படும் குடம்போல அரைகுறையாய் முக்கினார்… முனங்கினார்… ஆத்திரம் குரலை அடக்கியது. இதற்குள் மேடையின் இடதுபக்கம் உள்ள நடுவர் நாற்காலிகளில் மத்தியிலிருந்த நடுத்தர வயதுப் பெண்ணால் தாள முடியவில்லை… காவடி முருகனை கையாட்டிக் கூப்பிட்டு அருகே வரவழைத்து, அழுத்தம் திருத்தமாக உபதேசித்தார்… “கொஞ்சம் மட்டுமரியாதையை மிச்சம் வை, தம்பி… நீ இந்த மாவட்டம் முழுவதும் கோவில் விழாக்களில், காவடி ஆடுகிற நல்ல கலைஞன் என்பது எனக்குத் தெரியும்… உனக்கு இந்த நிகழ்ச்சி இல்லாவிட்டாலும் எத்தனையோ நிகழ்ச்சி கிடைக்கும்… ஆனால் இங்க வந்திருக்கிற சின்னஞ்சிறுசுகளுக்கு இதான் ஆரம்பத் தளம்…இந்தத் தளத்தை போர் களமாக்கிடாதேப்பா’ இந்தச் சமயத்தில் அமைப்பாளர் குறுக்கிட்டார். “யோவ் இருந்தா இரு, போகணும்னா போ… ஏன்யா பிராணனவாங்குறே… கவர்மெண்ட் நிகழ்ச்சின்னாஇப்படித் தானிருக்கும்… பயணப்படி… பஞ்சப்படி… கொடுக் கோமே… சும்மாவா…” காவடி முருகன் கண் சிவந்து நின்றபோது, கம்புகளில் கால் கட்டிய இரண்டு இளைஞர்கள் வந்து காவடி முருகனின் கைகளை செல்லமாகப் பிடித்திழுத்தார்கள். உடனே அவன் அடிக்கப் போவது போல் கைகளை ஓங்கியபோது அந்த இளைஞர்களில் ஒருவன், வாய் ஓங்கி கத்தினான். “நாங்க காத்திருக்கல?… நீ மட்டுமா காத்திருக்க… ஒரு பானைச் சோத்துக்கு ஒரு பிடி உப்பா இரு… ஒரு குடம் பாலுக்கு ஒரு துளி விஷமாயிடாதே… வந்துட்டான் பெருசா…” இந்தக் குழுவின் மாவட்ட அளவிலான அரங்கேற்றமே இங்குதான்… மாமாங்க-மானாலும் காத்திருக்கத் தயாரான இளைஞர்கள்… எப்படியோ மேலும் அரைமணி நேரம் அலைக்கழிந்து, கலெக்டர் வரமாட்டார் என்று போலீஸ் ஜீப் புலம்பியது… உடனே ஒரு கான்ஸ்டபிள் அருகே வந்த நேரு மைய அமைப்பாளரை ஒரு தள்ளு தள்ளிவிட்டு, ‘டி.ஆர்.வோ." வைத் தேடிக் கொண்டிருந்தார். எப்படியோ போட்டிகள் துவங்கிவிட்டன. பள்ளிக் கூட ‘டிரில்’ மாஸ்டர் மாதிரி ஒரு கலை மாஸ்டர், வாயில் விசிலோடு அங்குமிங்குமாய்ப் பார்த்தார். இதற்குள் ஒரு பகுதிநேர அமைப்பாளப் பெண் ஒருத்தி, கட்டபொம்மன் தேவராட்ட குழுவைப் பற்றி எழுதியதை, வாசிக்க, விசில் சத்தம் அதை முற்றுப்புள்ளியாக்கியது… பத்து இளைஞர்கள் மைதானத்தின் நடுப்பக்கம் நளினமாய் வந்தார்கள். பஞ்சக் கச்சை வேட்டி அவர்களை நெருப்பில் நிறுத்தி, மேல்சட்டை மஞ்சள் ஒளியைக் கேடயமாய்க் கொண்டதுபோல் காட்டியது… ஒரு கையில் சலங்கை கட்டப்பட்டிருந்தது… இரு கைகளிலும் வெள்ளை சிவப்பு செண்டாத்துணிகள்… மத்தியில் நின்ற உறுமி மேளக்காரன், உறுமியை லேசாகத் தடவி, ‘மியாவ்’ போட வைத்தபோது, தேவராட்டக்காரர்கள், இந்த பூனையும் பால் குடிக்குமா என்பது மாதிரி பம்மி நின்றார்கள்… அந்த மேளம் படபடத்து அடித்தபோது இவர்கள் புலிகளானார்கள்… சிறுத்தைபோல் ஓடியும், சிங்கம்போல் கர்ஜித்தும், முயல்போல் தாவியும், ஆமைபோல் அடங்கியும் அவர்கள் ஆடிய ஆட்டத்தைப் பார்த்து கூட்டமே ஆடியது… அடுத்து வந்தது கும்மிப் பெண்கள்… கண்டாங்கி சேலைக்காரிகள்… மண் வாசனைப் பார்வை…மதர்ப்பான தோரணை… முன்பு கையாளப்படாத கால் சதங்கைகள்… மருதாணி போட்ட உள்ளங் கைகள் விரிந்த மலர்களாகவும், விரல்கள் அதன் இதழ்களாகவும், கரங்கள் காம்புகளாகவும் தோற்றம் காட்டின. ஒருத்தி ஒரு பாடலை எடுத்துக் கொடுக்க மற்றவர்கள் தொடுத்தனர்… குறுக்கும் நெடுக்குமாய், வட்டத்துள் சதுரமாய், சதுரத்துள் வட்டமாய், பம்பரமாய் சுழன்றார்கள்.,, பூங்கொடிகள் ஒன்றோடொன்று. பின்னிக் கொண்டது போன்ற நேர்த்தி.,, வேகித்த ஒன்றின் சுழற்சியில் எப்படி ஆட்டம் தெரியாதோ அப்படிப்பட்ட நிலைப்பாட்டு ஆட்டம்.,, நின்றவளே நிற்பது போன்ற வேகச் சுழற்சி.. ‘கலை மாஸ்டர்’ விசிலடித்த போது கூட்டம் பதிலுக்கு விசிலடித்து கண்டித்தது. அடுத்து வந்தது கெக்கலி ஆட்டக்காரர்கள். எட்டடி உயரக் கம்புகளில் மனிதக் கம்பங்களாய் நின்றவர்கள், அந்தக் கம்புகளை நகர்த்தி நகர்த்தி மைதானத்தின் மத்திக்கு வந்தார்கள். கர்ணனின் கவசகுண்டலம் போல் உடம்போடு ஒட்டிய ஜிகினா உடை… ஆண்களும் பெண்களுமாய் விரவிக் கலந்த இந்தக் குழுவினரின் இரண்டு கரங்களிலும் இருவேறு கலர் துணிகள். பக்க மேள ஒலியின் பின்னணியில் கம்புக் கால்களை தாள லயமாக நகர்த்தினார்கள்… அந்தக் கம்புகளே எலும்பும் சதையுமாகி அவர்களை இழுத்துக் கொண்டு போவது போன்ற லாவகம்… ‘ஐயோ விழுந்திடப் போறிங்க..’ என்பதுபோல் கூட்டம் அவர்களை அண்ணாந்து வாயகலப் பார்த்த்து. அவர்கள் குறுஞ்சிரிப்பாய் சிரித்தபடியே, அந்த மரக்கால்களை வேகவேகமாய் நகர்த்தி ஊசி முனை இடைவெளியில் ஒருவரையொருவர் உரசாமல் அங்குமிங்குமாய்ப் பாய்ந்தார்கள். ஆரம்பத்தில் கைதட்டி ஆர்ப்பரித்த கூட்டம், அவர்களின் அடவுகளிலும் அசைவுகளிலும் கட்டுண்டு மெய் மறந்து கிடந்தது. கலை மாஸ்டர் விசிலடித்த பிறகுதான் விழித்துக் கொண்டது… கெக்கலி ஆட்டத்திற்குப் பிறகு, கோலாட்டம். அதையடுத்து, இரும்பு வில்களை சலங்கை மணிகளோடு சேர்த்து ஆடிய ’லஸ்ஜிங்" ஆட்டம்… அப்புறம் நாட்டுப்புற நடனம்… இவைகளுக்கு மத்தியில் திருஷ்டி பரிகாரமாய், குட்டாம்பட்டி இளைஞர்களின் ரிக்கார்டு டான்ஸ். ஏழெட்டு கலை நிகழ்ச்சிகளுக்குப் பிறகு, இறுதியாக வந்தது காவடி முருகனின் குழுவினர். எல்லாக் குழுக்களும் சபைக்கும், நடுவர் குழுவிற்கும் வணக்கம் போட்ட போது, இவனோ, அந்த சபையும், இந்த நடுவர் குழுவும்தான், தனக்கு வணக்கம் போட வேண்டும் என்பதுபோல் ‘கீழ் நோக்கி’ப் பார்த்தான். ஆனாலும் ஆசாமி ஆடக்கூட வேண்டாம்… அப்படியே நின்றால் போதும். பார்த்துக் கொண்டே இருக்கலாம்… அப்படிப்பட்ட லாவகம்… மெருகான கம்பீரம்… ‘காவடி’ முருகன் ஆடுகளத்தின் மத்தியில் நின்றான்… அவன்கூட வந்த இரண்டு ஆண்களும், இரண்டு பெண்களும் நான்கு திசையிலும் போய் நின்று அவனுக்கு சதுராட சதுரம் கட்டினார்கள். கைகளிலும், கால்களிலும் சலங்கை கட்டியவர்கள்… விசில் சத்தத்தை வெளிப்படுத்த முடியாதபடி மேளச் சத்தம்… உடனே முருகன் தனது குழுவினரை அதட்டலாக நோக்கினான். அவர்களும் அப்படிப் பார்க்கப் பொறுக்காதவர்களாய் முன்னாலும், பின்னாலும் நகர்ந்து, கைகளை அவன் பக்கமாய் நீட்டிக் குவித்தார்கள். இவர்களுக்கு மத்தியில் நின்ற முருகன், கையில் வைத்திருந்த காவடியை தலைக்கு கொண்டு வந்தான். மேளம் உச்சத்திற்கு போனது… உடனே தலையிலிருந்த காவடி கழுத்துக்கு வந்தது… அரைவட்டமான அந்தக் காவடி அவன் கழுத்திலும், தலையிலும் மாறி மாறி முழுவட்டமாய்ச் சுற்றியது… அவன் முதுகிலும், தோளிலும் பிட்டத்திலும் குதி போட்டது… தலையிலே தாவி, கழுத்திலே நழுவி ஒற்றைத் தண்டவாளம் போலான வளைத்து வைத்த முதுகெலும்பில், பாலத்தில் ஒடும் ரெயில் போல் ஓடியது… இவனை ஒரு தளமாக வைத்து காவடி மட்டுமே ஆடுவதுபோன்ற கலை மாயை… இந்த மாயையை கலைப்பதுபோல் அவன் தலைக் காவடியுடன் கீழே குனிந்து தரையில் கிடந்த எலுமிச்சை பழத்தை வாயால் கவ்வி, எலுமிச்சை சாறு தெளித்த ஈரமுகத்தோடு நிமிர்ந்தபோது கூட்டம் வஞ்சனை இல்லாமல் கைதட்டியது… அவனை வாஞ்சையோடு பார்த்து ஆர்ப்பரித்தது… ‘ஒன்ஸ்மோர்’ கூட கேட்டது. மூன்று மணி நேரம் இடைவிடாது நடைபெற்ற கலை நிகழ்வு போட்டிகள் நிறைவு பெற்றன. இளம் கலைஞர்கள் வேர்வை துவைத்த உடையோடு நெட்டி முறித்தார்கள். அத்தனை கண்களும் ஒன்றாய்க் குவிந்து நடுவர் குழுவையும், தன் உடம்பை தனது குழுவினர் தூசி தட்ட கொடுத்துக் கொண்டிருந்த முருகனையும் மாறி மாறி பார்த்தது. இதற்குள் நடுவர் குழுவின் சார்பில் அந்த அம்மா எழுந்தார்… நாட்டுப்புற நாட்டிய தேகக் கட்டு… பறவைப் பார்வைக் கண்கள்… மைக்கிற்கு முன்னால் வந்து பற்றற்ற குரலில் பாராமுகமாய் முடிவை அறிவித்தார். “கட்டபொம்மன் கெக்கலி ஆட்டக் குழு, போட்டிகளில் முதலாவதாக வந்து மாநில போட்டியில் கலந்து கொள்ள தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.” கூட்டம் அல்லோகல்லப்பட்டது. பெரும்பாலான கலைக் குழுக்கள் காவடி முருகனின் அருகே வந்து, அவனுக்கு பக்கபலமாய் நிற்பதுபோல் நின்றன. முருகன், முடிவை உள்வாங்க முடியாமல் நிலை குலைந்தான்… இவனை வைத்து பிழைப்பு நடத்துவதாக நினைக்கும் அவன் குழுவினர் அவனுக்கு முன்னால் கேடயமாகவும், பின்னால் அம்பரா துணியாகவும் நின்று கொண்டார்கள். சிறிது நேரத்தில் ‘சுயத்திற்கு’ வந்த முருகன், நடுவர் குழுவின் பக்கம்போய், அவர்களின் கண்களில் விரலாட்டுவதுபோல் வெறுப்போடு அந்த தீர்ப்புக்கு தீர்ப்பளித்தான்… ‘இது பழிவாங்குற தீர்ப்பு. நான் கலெக்டருக்காக காத்திருக்கிறத கண்டிச்சதுக்காக என்னை தண்டிக்கிற தீர்ப்பு…’ காவடி முருகன் பேச்சைத் தொடர்வதற்கு அவசிய மில்லாமல் ,ஆங்காங்கே ஆட்சேபணைக் குரல்கள் எழுந்தன… ’நேரு மைய அமைப்பாளர் அப்போ இவரைப் பாத்து கத்தும்போதே எனக்குத் தெரியும்…ஏதோ கோல்மால் நடக்கும்னு" “இந்த கெக்கலி ஆட்டத்து பயலுக இரண்டுபேரும், காவடி முருகனை கையைப் பிடிச்சு இழுத்து தங்களோட அடிமை புத்தியை காட்டினதுக்காக எஜமான்கள் கொடுத்த பரிசு இது…” “காவடி முருகன் சபைக்கோ, நடுவர் குழுவுக்கோ வணக்கம் போடாதது தப்புதான்… அதுக்காக இப்படியா…” ’அப்பவே… இந்தம்மா… முருகனை கண்டிச்சாங்க… இப்போ நடிக்காங்க…" “சூட்கேஸ்பேசுது. அந்தம்மா பேசல…” “நடுவர் குழு காவடி முருகன் குழு வெற்றி பெற்றதாய் அறிவிக்கணும்… இல்லாட்டால் விசயம் விபரீதத்தில் முடியும்.’ “மாற்று… மாற்று… முடிவை மாற்று…” மாவட்ட அமைப்பாளர்கைகளைப் பிசைந்தார். ‘பி.ஏ…டு கலெக்டர்கள்’ காணாமல் போனார்கள். சட்டம், ஒழுங்கு பாதிக்குமோ என்று பயந்து போன கான்ஸ்டபிள்கள் லத்திக் கம்புகளை கையில் பிடித்து, பயங்கரவாதிகளாய்ப் பார்த்தார்கள்… ஒரே குழப்பம். என்ன நடக்குமோ என்ற கலவரப் பார்வை… இதற்குள் நடுவர் குழுவின் எஞ்சிய இரண்டு உறுப்பினர்கள், அந்தம்மாவின் இரண்டு காதுகளிலும் கிசுகிசுத்தார்கள். நேரு மைய அமைப்பாளர் அந்த குழுவிற்கு முன்னால் போய் மேஜையைத் தட்டித் தட்டிப் பேசினார். கம்புகளை கழட்டி போட்டுவிட்டு சுயகாலில் நடந்து வந்த ஒரு கெக்கலி இளைஞன், “எங்களுக்கு பரிசே வேண்டாம்… இப்படி பாடாப் படவும் வேண்டாம்… எங்களுக்குத் தேவையில்லை” என்றான். அங்குமிங்குமாய் சங்கடமாய்ப் பார்த்த அந்த அம்மா எழுந்தார். முகத்தில் இப்போது லேசாய் சலனம். நடுவர் சகாக்களிடம் மீண்டும் கீழே உட்கார்ந்து கலந்து ஆலோசித்து விட்டு, மைக் முன்னே வந்தார்… புதிய முடிவா… பழைய ஏற்பாடா… புதிய முடிவென்றால் அதற்கு என்ன காரணத் தைச் சொல்லப் போகிறார்… பழைய ஏற்பாடே என்றால் எப்படி சமாளிக்கப் போகிறார்… எல்லாவற்றிற்கும் மேலாக யதார்த்தமாகக் தோன்றக் கூடிய குற்றச் சாட்டு களுக்குப் பதிலளிப்பாரா… மாட்டாரா… கூட்டம் இப்போது கும்பலாகி அந்த அம்மாவையே வைத்த கண் வைத்தபடி பார்த்தது… அந்த அம்மா அமைதியாகவும், அழுத்தம் திருத்தமாகவும் பேசினார்… ’உங்களுக்கு, மகாபாரத அர்ச்சுனன்தான் வெல்ல முடியாத வீரன். அவனைத்தான் ஆராதிப்பீர்கள்… ஆனாலும் அந்த அர்ச்சுனன் வீரனாகவில்லை… வீரனாக்கப்பட்டான்… ஆமாம்… காட்டில் எங்கோ குலைத்த பாண்டவர் நாயை அதன் ஒலியின் திசையறிந்து அதைப் பார்க்காமலே அம்பெய்து அதன் வாயை கட்டிப் போட்டவன் ஏகலைவன் என்ற வேடச் சிறுவன்… இதைப் பொறுக்காத விடலை அர்ச்சுனன், துரோணாச்சாரியைத் தூண்டிவிட்டு ஏகலைவனின் கட்டை விரலை, கட்டை ஆக்கியவன். வியாசர், நன் றாகவே விளக்கி இருக்கிறார். ஆனானப்பட்ட அர்ச்சுனனின் இந்தப் பேடித்தனத்தின் பின் புலத்தில்தான் அர்ச்சுனன் வீரனாக கருதப்படுகிறான்… இதை இங்கு நடந்த கலைப் போட்டிக்கும் பொருத்திக் காட்ட முடியும்…" அந்தம்மா கூட்டத்தினரைச் சுற்றுமுற்றும் பார்த்தார். அந்தக் கும்பல் இப்போது கூட்டமாக மாறி அந்தம் மாவை யும் ஒரு கலைஞராகப் பார்த்தபோது, அவர் தொடர்ந்தார் “காவடி முருகன், அர்ச்சுனன் மாதிரி அற்புதமான கலைஞன்… ஆனால் தன்னைப் போலவே திறமை மிக்க இரண்டு இளைஞர்களையும், யுவதிகளையும் தான் பிரகாசிப் பதற்காக பின்புலத்து இருளாக்கினார். குறிப்பாக அந்தப் பெண்களை வயிறு தெரியும்படி கவர்ச்சி உடையில் காட்டி, அவர்களை சினிமாக்காரிகளாய் நகர வைத்து தன்னை முன்னிலைப்படுத்தினார். ஆனால் கெக்கலி ஆட்டக் கலைஞர்களோ தத்தம்மை முன்னிலைப்படுத்தாமல், குழுவையே முதன்மைப் படுத்தினார்கள். இதில் ஒருவர் மிதமிஞ்சிப் போயிருந்தாலோ அல்லது பின்னடைவு ஆனாலோ ஆட்டம் ஆடிப் போயிருக்கும்… குழு உணர்வை மேன்மையாக வெளிப்படுத்துவதும் ஒரு கலையே… அதோடு இவர்களும் கலை வெளிப்பாட்டில் சோடை போகவில்லை… ஆகையால் இவர்களே வெற்றி பெற்றதாக இப்போதும் அறிவிக்கிறேன்… நடுவர் குழுவின் சார்பில் தெரிவித்துக் கொள்கிறேன்… ஒருவனை வீரனாக்க, ஒன்பதுபேரை பேடியாக்கும் கலை, நமக்குத் தேவை இல்லை…” அர்ச்சுனனையும், ஏகலைவனையும் மனதிற்குள் ஒப்பிட்டு, புதிய சிந்தனைக்கு தளம் கொடுத்த கூட்டம், இப்போது அமைதிப்பட்டதுபோல் தோன்றியது. –மகளிர் சிந்தனை-ஜனவரி 1996 புலித்தோல் போர்த்திய மாடுகள் " வணக்கம் அண்ணே, வணக்கம் அக்கா… ஊனுருகிப் பேசியதுபோல், வாசலுக்கு வெளியே உடல் குழைத்து நின்ற அந்த இளைஞனைப் பார்த்ததும், வெளியே பால்கனியில் நின்ற அந்த அம்மா, அவன் வணக்கத்தை ஒரு சின்னச் சிரிப்போடு ஏற்றுக் கொண்டு உள்ளே வந்தாள். நாற்காலியில் காயப்போட்ட துண்டு, துக்கடாக்களை எடுத்துக் கொண்டே படுக்கையறையில் எதையோ படித்துக் கொண்டிருந்த கணவனை உசுப்பினாள்… எதுவும் பேசாமல் வாசல்பக்கமாக அவள் மோவாயை நீட்டியபோது, மயில்நாதன் வெளியே வந்தார்… அந்த இளைஞனை அடையாளம் காண்பதுபோல் விழி உயர்த்திப் பார்த்தார்… அதற்குள் அந்த இளைஞன். பாசமழை பொழிந்தான். “நான் வந்து அண்ணே…” “முதல்ல உள்ளே வந்து உட்காரப்பா.” பெல்பாட்டமும், தொளதொளப்பான பேண்ட்டும் அகலமாகக் காட்டினாலும், அதற்குள் நோஞ்சானாய் ஒட்டிக் கிடந்த அந்த இளைஞனை அடையாளம் காண்பதுபோல், மயில்நாதன் நோட்டமிட்டார். இலக்கிய ரசிகனோ, அல்லது சிபாரிசுக்கு வந்த உறவுக்காரனோ… இவரைப் போலவே, அந்த இளைஞனும், அவர் தன்னைப் பார்க்காதபோது பார்த்தான்… எழுத்தாளர்களுக்கு இருப்பதாகக் கூறப்படும் வீட்டுக் கூரையை மேயும் கண்களோ, மோவாயை தடவும் கைகளோ இல்லாமல், இயல்பான கண்களோடு, இயற்கையான கையசைப்போடு, வல்லிக்கண்ணனைப் போல சர்வ சாதாரணமாக இருந்த அவரை, பார்த்ததும் அவன் மனம் குதிபோட்டது. இயக்குநர், அரூபசொருபனிடம், “நீ கில்லேடிடா”, என்று நல்ல பெயர் வாங்கிடலாம்… அவர், இவருக்குக் கொடுக்கத் தயாராய் இருக்கும் பத்தாயிரம் ரூபாய் அட்வான்சை ஐயாயிரமாகக் குறைத்து ஆசாமியை கோழியை அமுக்குவதுமாதிரி அமுக்கி விடலாம்… “நான் வந்துண்ணே…” “முதல்ல. காபி குடிங்க, சூடு ஆறிடும்…” தாய்மைக் குரலோடு தட்டில் உள்ள, காபி டம்பளர்களை, கணவனும், அவனும் எடுத்துக் கொள்வதற்கு வசதியாக, இருவர் பக்கமும் லேசாய் குனிந்து, நகர்ந்த, அந்த அம்மாவைப் பார்த்ததும், காபி டம்பளரில் அவன் கண்ணீர்த் துளி விழப் போவதுபோல் இருந்தது… எத்தனையோ சினிமாக்காரர்கள் வீட்டு வாசற்படிகளில் கால்சீட் பிச்சைக்காக மணிக்கணக்கில் காத்துக் கிடந்தவன்… அப்போதெல்லாம் இவனை வரவேற்பு அறைக்குள் வரவழைத்து, இவன் முன்னாலேயே சிக்கன் 65 துண்டுகளை கடித்த வாயோடு, இவனிடம் நிமிடக் கணக்கில் பேசி, எச்சில் பொங்க அனுப்பப்பட்டவன். ஆனால் இந்த வீட்டிலோ… அந்த இளைஞன் தன் திட்டத்தை மாற்றிக் கொண்டான். பத்தாயிரம் ரூபாய் முன் பணத்தை, இயக்குநரிடம் வாதாடி, பதினையாயிரமாய் கூட்டிக் கொடுக்க வேண்டும். ’தம்பி, என்ன விசயமா…" “என் பெயர் கலிங்கன். நீங்க எழுதுன நாவல் இருக்குதே”பங்க மனிதன்’, அதை எங்க இயக்குனர் அரூபசொருபன் படமாக்குவது என்று தீர்மானிச்சுட்டார். ஹோட்டல் வாஞ்சியில் ரூம் போட்டு உங்களுக்காகவே காத்திருக்கார். புறப்படுங்கண்ணே… “பங்க மனிதன்’, நாவலையும் கொண்டு வாங்கண்ணே…” ’தம்பி. நீதப்பா நினைச்சாலும், நான் சொல்லித்தான் ஆகணும்… “மொதல்ல. ஒரு எழுத்தாளன் கிட்ட வரும்போது… நாவலைப் படிக்காட்டாலும், அதோட பெயரையாவது ஞாபகம் வச்சுக்கணும்… நான் எழுதியது ‘மனித பங்கம்’…” ’கோபப் படாதீங்கண்ணே… ஏகப்பட்ட நாவல் படிக்கோமா… மேடையிலும், டி.வி.யிலயும் பலப்பல நாடகத்த பாக்கோமா… அதனால சில சமயம் ஒரு கதை இன்னொரு டைட்டிலுக்கு போயிடுது…" “சினிமாக்காரங்க… அதிகமா படிக்க மாட்டாங்கன்னு கேள்விப்பட்டேன்…” ’தப்புண்ணேதப்பு… நாங்க பாக்காத நாடகங்கள் இல்ல… படிக்காத நாவல்கள் இல்ல… ஆனா உண்மையை ஒத்துக்கிறேன்… பொழுது போக்கிற்காக நாடகம் பாக்கல… ரசனைக்காக நாவல் படிக்கல… எல்லாம் உல்டாவுக்கும், சொருகுறதுக்குந்தான்…" ’அப்படீன்னா…" ’அய்யோ… அண்ணே. நீங்க ரொம்பத் துழாவுறிங்க…இருந்தாலும் சொல்றேன்… ஒரு நாவலைப் படிக்கோம்… அதுல ஒரு ’வித்தியாசமான மாமனார் கேரக்டர் வருதுன்னு வச்சுக்கோங்க… அத சினிமாவிலே மாமியார் கேரக்டரா ஆக்கிடுவோம்… நீங்க எழுதுன உரையாடல்களை லேசா மாற்றி வசனங்களா ஆக்கிடுவோம்… இதுக்குப் பேரு உல்டா… இதே மாதிரி நாடகத்திலேயோ, இல்லன்னா வார பத்திரிகையிலோ வருகிற ஜோக்குகள, படத்துல அங்கங்க காட்சியா காட்டிடுவோம்… இதுக்குப் பேரு சொருகிறது… உல்டாவுக்கும், சொருகிறதுக்கும் பலரை வேலையில் வச்சிருக்கோம்…. உங்களால எங்கள ஒண்ணும் செய்ய முடியாது…" அந்த இளைஞன் கண்ணைச் சிமிட்டினான். மறைமுகமாக எச்சரிக்கை விடுகிறானோ… என்னவோ… மயில்நாதனுக்கு, கோபம் புரையேறியது… அவனைக் கூட ஒரு எதிரியைப் பார்ப்பதுபோல் பார்த்தார்… துடித்த உதடுகளை துண்டை வைத்து மூடிக் கொண்டே மனதை திறந்து பார்த்தார். ஒரு சில திரைப்படங்களை பார்த்திருக்கிறார். அவை தமது நாவல்களின் சாயலில் இருப்பதைக் கண்டிருக்கிறார். அவற்றின் வசனங்கள் கூட தனது நாவல் உரையாடல்கள் உயிர்ப்பிலிருப்பதை கேட்டிருக்கிறார்… அப்போதெல்லாம், ‘கலையும் கற்பனையும் காற்று மாதிரி, எல்லோருக்கும் பொதுவானது தானே’ என்று தன்னைத் தானே சமாதானப்படுத்திக் கொண்டிருக்கிறார். ஆனால் இப்போதுதான் புரியுது. இவனுவ கலைஞர்கள் இல்ல… கொலைஞர்கள்…கயவாளிகள்… சிறையில் திணிக்க முடியாத கொள்ளைக்காரர்கள்… மயில்நாதன் சினிமாக்காரர்களை முணுமுணுத்து திட்டியபோது, அவன் அவசரப்படுத்தினான். “புறப்படுங்கண்ணே. இயக்குநர் செம்மல்” அரூபசொருபன் ,பத்தாயிரம் ரூபாய் அட்வான்ஸ் பணத்தோடு காத்திருக்கார்" “முதல்ல உங்க இயக்குநர் எடுத்த படங்களோட பெயர்களைச் சொல்லு பாக்கலாம்…” “என்ன அண்ணே… நீங்க? அவரு நாடறிந்த பேர்வழியாச்சே… ‘வாடாவாத்தியாரே’, ‘போடாபோக்கிரி’, ‘ராத்திரி வேளை பூஜை’, ‘சவாலடா சவால்’. இப்படி எல்லாமே நூறு நாள் தாண்டுன படங்கள எடுத்தவரு… இதனாலயே”கலைமாமணி’ பட்டம் வாங்குனார். உங்க நாவலைப் படமாக்கி ‘பத்மஸ்ரீ’ பட்டம் வாங்கப் போறார்… புறப்படுங்கண்ணே…" “ஓங்களுக்கும், எனக்கும் சரிப்படாதுப்பா… நீ புறப்படலாம்…” “நீங்க நினைக்கிற மாதிரி ஒங்க நாவலை எடுக்க மாட்டாரண்ணே… கலைப்படமா எடுக்கப் போறார்.’’ நேசனல் அவார்டுக்கு குறி வைச்சிருக்கார்” “ஒரு வாரம் டைம் குடு. யோசிச்சு சொல்றேன்” “கொஞ்சம் வர்றீங்களா…” அந்த இளைஞன், நாற்காலியில் இடித்துவைத்த புளியாய் இன்னமும் இருந்தபோது, மயில்நாதன் சமையலறைக்குள் போனார்… அந்தம்மா கைகளை உதறினார்… குக்கர் சூட்டில் கைபட் டது நிசந்தான்… ஆனால் அதற்காக மட்டும் இப்படி உதறி இருக்க மாட்டாள்… அவரைப் பார்த்ததும், எந்த உள்நோக்கமும் இல்லாமல் தன்பாட்டுக்கு சொல்வதுபோல் சொன்னாள்… ’ஒங்க தங்கைக்கு இது தலை தீபாவளி… நாம்தான் அவளுக்கு அப்பாம்மா…’பிளஸ்-டூ படிச்சது போதுமுன்னு நிறுத்திட்டீங்களே-நம்ம வீட்டு எரும மாடு-அவள் குதியாய் குதிக்கிறாள்-கம்யூட்டர் கோர்ஸ்லயாவது சேர்க்கணுமாம்… இந்த வீட்டு நிலைமையத்தான் சொல்றேன். ஒங்க தீபாவளி மலர் கதைகளுக்கு வரப்போற அன்பளிப்புப் பணம், இந்தச் செலவுல இருபதுல ஒரு பங்குக்கு கூட தேறாது… கதை எழுதுற சமயத்தில எட்டாயிரம் ரூபா பணத்த புரட்டுங்கன்னுதான் சொல்ல வாறேன்… இல்லாட்டால், நாத்தனார் கொடுமைன்னுதான் என்னைச் சொல்லுவாங்க… நான் பேசுறதக் கேட்க வேண்டியது ஒங்க உரிமையா இல்லாட்டாலும், சொல்ல வேண்டியது என் கடமை…" அந்தம்மா, ஒரு ஈயப் பாத்திரத்தை, எவர்சில்வர் அகப்பையால் இடித்தபோது, மயில்நாதன் மோவாயைத் தடவியபடியே வெளியே வந்தார்… சமையலைறைக்குள் தன்னை சிறுமைப்படுத்துவதாக நினைத்துப் பொங்கிய கோபம், அவள் மீது அனுதாபமாகவும், அங்கே ஏற்பட்ட சுய-இரக்கம் இப்போது சுய கோபமாகவும் மாறின. ஒரு நல்ல நாவலாசிரியர் என்ற முறையில், அந்தம்மாவை அவளுடைய தளத்திலேயே நிறுத்திப் பார்த்தார். அவள் சொன்னது நியாயமாகவே பட்டது. அவள் இறுதியாகச் சொன்ன வார்த்தைகளில் மிளிர்ந்த இலக்கிய நயம் அவர் உதடுகளில் ஒரு வெள்ளைக் கோட்டைப் போட்டது… கலிங்கன் தன்னைப் பார்த்து சிநேகிதமாய்ச் சிரித்த எழுத்தாளர் மயில்நாதனை புரிந்து கொண்டான். அவர் கையைப் பிடித்துக் கொண்டு ஆனந்தமாகக் கூவினான். “எக்கா. போயிட்டு வாறோம்… புறப்படுங்கண்ணே…” அந்த நட்சத்திர ஹோட்டலில், மூன்றாவது மாடிக்குப்.போய், ஆறாவது அறையில் நுழைந்தார்கள். அந்த எண்தான் ராசியான எண்ணாம்… ஆறும் மூன்றும் ஒன்பது… வெற்றி… வெற்றி… கலிங்கன்தான் இப்படி அவர் காதைக் கடித்தான். ஆனால் மயில்நாதனோ பல்லைக் கடித்தார். அழகை, அசிங்கமாக்க முடியும் என்பதற்கு அந்த அறையே ஒரு அத்தாட்சி… அங்குமிங்குமாய் பாட்டில்கள் குப்புறவும், நெடுஞ்சாண் கிடையாகவும் கிடந்தன. எச்சில் பொருட்கள் எங்கும் நிரம்பி, அந்த அறையே ஒரு குப்பைத் தொட்டிபோல் தோன்றியது… ஒரு வாலிபன் நாற்காலியில் உட்கார்ந்து காகிதம், காகிதமாய் எழுதுவதும், எழுதியதைக் கிழிப்பதுமாக இருந்தான்… இவரது வருகையை அங்கீகரித்து ஏறிட்டுக் கூட பார்க்கவில்லை. வால்டேர், ரூசோ கூட இப்படி வேகவேகமாய் எழுதியிருக்க மாட்டார்கள். உலகையே தலைகீழாக மாற்றப் போகிற வேகம்… கலிங்கனிடம் விசாரித்தால் அவன், ‘இரட்டை அர்த்த வசனங்களை எழுதிக் கொண்டிருக்கிறானாம். கவுண்டமணியிடம் இருந்த ’பசக்காமெடி’ ஸ்டாக் தீர்ந்து விட்டதாம்… இன்னொருத்தன், ரெட்டை கட்டிலின் இடைவெளிக்கிடையே இருபக்கமும் கால், கைகளைப் பரப்பி குப்புறக் கிடந்தான். சிவப்பு லுங்கி கட்டியிருக்கானோ. இல்லை… இல்லை… பிட்டத்தில் ஒரு துண்டு. மற்றபடி அம்மணம்… ஒரு கட்டில் பெட்டில் சின்னச் சின்ன வளையல் துண்டுகள்… மயில்நாதன், இப்போது மனைவியை மனதிற்குள் திட்டிக் கொண்டே, அவளைக் கலிங்கன் வடிவில் பார்த்து கிட்டத்தட்ட கத்தினார். “இவர்தான் ஒங்க டைரக்டரா… இந்த ரூம்லதான் டிஸ்கஸனா…” வெளியில போகப் போனவரை சுண்டிப்பிடித்தபடியே கலிங்கன் மன்றாடினான். “இல்லண்ணே இல்ல… இவரு அசோசியட் டைரக்டர்… அன்பு வேந்தன்… நைட்ல ஒரே ஒர்க்கு… அதனால தூங்குறார்… ஏண்டா எழுதிக் கிழிச்சான்… டைரக்டர் ரூம்ல இருக்காராடா…” “என்னை டிஸ்டர்ப் பண்ணாத…” “எழுத்தாளர் மயில்நாதன் வந்திருக்கார்…” “அதுக்கென்ன இப்போ… மூடக்கெடுக்காத… இயக்குநர் அரூபசொருப அண்ணன் எப்ப வேணுமுனாலும், எந்த நேரத்துலயும் வருவார்… இதுக்கு மேல தொண, தொணக்காதே…” மயில்நாதனுக்குப் பற்றி எரிந்தது… எழுத்தாளனாக மதிக்காட்டியும், ஒரு மனிதனாகக் கூட அங்கீகரிக்காத அந்தப் ‘பசக் காமெடி’ எழுத்தாளனை பார்க்கவே பிடிக்காமல் வெளியேறப் போனார். அதற்குள் ஒரு டெலிபோன்… தூங்குவது போல் குப்புறக் கிடந்தவன், பாம்பு மாதிரி தலையைத் தூக்கிக் கொண்டே டெலிபோனை எடுத்தான்… பிறகு அலறியடித்து முகத்தைக் கழுவாமல் ஒரு டம்பளரிலிருந்த தண்ணீரையோ, அல்லது விஸ்கியையோ கைகளில் அப்பி, கண்களைத் துடைத்துக் கொண்டு, பீரோவில் தொங்கிய பேண்ட்டை போட்டுக் கொண்டே கலிங்கனிடம் பேசினான். மயில்நாதன் என்ற ஒருவர் அங்கு இருப்பது அவன் கவனத்தைக் கவரவில்லை. “நடிப்புப் புயல் சந்திர பிம்மன்…” கீழே காட்டேஜ்ல தங்கியிருக்காராம்… “அடடே, இங்க எதுக்கு வந்தார்…” “நான் கேள்விப்பட்டது சரியாத்தான் இருக்கு… நேற்று ரசிகைகள் படையெடுப்பால அவருக்கும், அவர் பெண்டாட்டிக்கும் அடிதடியாம்… சரி, இந்தக் கதை நமக்கெதுக்கு… நம்ம இயக்குநர் அங்கே இருக்கார்… நாம இவர… ஒங்க பெயர் என்னங்க… என்னப்பா இவரு ஊமையா… இவரக் கூட்டிக்கிட்டு அங்கே போகணுமாம்; அங்கேதான் ஸ்டோரி டிஸ்கசன்…” “சந்திரபிம்மனுக்கு மூடு சரியில்லாத டைம்ல எதுக்கு டிஸ்கசன்…?” ’ஒனக்கு அறிவிருக்காடா கலிங்கா… இத்தன நாளு சினிமா உலகத்துல குப்பைகொட்டி என்னடா பிரயோசனம்… நம்ம நடிகர்களுக்கு பெண்டாட்டிகளோடு இல்லாத போதுதான்டா மூடே வரும்…. நடிகைகளுக்கும் அடுத்தவள்கள் புருசங்க மேலதான ஆசையே வரும்… முட்டாள்… சரியான முட்டாள்… சரி சரி… புறப்படு… எழுத்தாளரே புறப்படுங்க…" மயில்நாதன் பல்லைக் கடித்து பொறுமையைக் கடித்தார்… அந்த அசோசியேட் டைரக்டரின் டோன்தன்னை கிண்டலடிப்பது போலிருந்தது… என்ன செய்வது. ..பேய்க்கு வாழ்க்கைப்பட்டால் புளிய மரத்துலதான் ஏறணுமாம்… அதோட இவனவைத்து இயக்குநர்அரூபசொருபனை எடை போடக்கூடாதுதான்… மயில்நாதன், தன்னைப் பற்றி கவலைப்படாமல் போய்க் கொண்டிருந்தவர்கள் பின்னால், எக்கி எக்கி நடந்தார். அவர்களோடு லிப்டில் ஏறி ‘கீழ் நோக்கி’, இறங்கி அந்த நட்சத்திர ஹோட்டலின் பின்பக்கம் தலைமறைவாய் உள்ள காட்டேஜ் வந்தார். வாசலிலேயே ஒரு துவார பாலகன்… கலிங்கனும், அன்பு வேந்தனும் அவனிடம் மன்றாட வேண்டியது ஏற்பட்டது… அப்போதுகூட அவர்களோடு இவர் நுழையப் போனபோது கதவை மூடப் போனான்… கலிங்கன்தான் இவர் கையை பிடித்து உள்ளே கடத்திக் கொண்டு போனான். ‘பூலோக சொர்க்கம்’ என்பார்களே அப்படிப்பட்ட வரவேற்பு அறை… கால்களை உள்வாங்கும் தரைக் கம்பளம்… கண்களை வெளிவாங்கும் சுவர் ஒவியங்கள்…. வெல்வெட் சோபாசெட் இருக்கைகள்… செயற்கை பிரபஞ்சம் சிருஷ்டிக்கப்பட்டது போன்ற சூரியபல்பு; கூடவே நட்சத்திர மினி பல்புகள்… எரிந்தனவோ இல்லையோ எரிவதுபோல் தோற்றம் காட்டின. என்றாலும், உள்ளறைக் கதவு அவர்களை வழி மறிப்பதுபோல் சாற்றிக் கிடந்தது. கலிங்கனுக்கோ, அன்பு வேந்தனுக்கோ உள்ளே போகப் பயம்… பல தடவை வசமாக வாங்கிக் கட்டியவர்கள்… போதாகுறைக்கு இவர்கள் போக முடியாத அளவில் ஒரு பெண்ணின் சிணுங்கல் சிரிப்பு… பி.எஸ்.வீரப்பா பாணியில் சிரிப்புகள்… அப்புறம் அழுவது போன்ற உருக்கமான குரல்கள்… ரகசியம் பேசுவது போன்ற முணுமுணுப்பு… இதை அடுத்து அடாதடியான மேஜை தட்டல்கள்… அப்புறம் வசவுகள்… பிறகு வாழ்த்துக்கள்… இதற்கும் பிறகு ஒரே மயான அமைதி… மீண்டும் அந்த அமைதியைக் கிழிக்கும் பூகம்ப சிரிப்புகள்… மயில்நாதன், மற்றவர்கள் நின்றபோது, ஒரு சோபா துண்டில் உட்கார்ந்தார். கதவு திறக்கப்படும்… திறக்கப்படும் என்று காத்திருந்தார். நிமிடக் கணக்கில் நினைப்பு போனதால், மணிகள் சுவடு தெரியாமல் போயின. ஆனாலும் தன்னை சமாதானப்படுத்தி குப்புற விழப்போன சுயமரியாதையை தூக்கிப்பிடித்துக் கொண்டார். ஒரு வேளை இவர்கள் வந்திருப்பது அவர்களுக்கு தெரியுமோ… என்னமோ… மயில்நாதன், கலிங்கனின் காதைக் கடித்தார்… அவனை, அந்தக்கதவுப் பக்கமாகத்தள்ளிவிட்டார். அவனோ கதவைத் திறக்க போவதும், அன்பு வேந்தன் முறைத்த முறைப்பில் திறக்கப்போன கைகளை இழுத்துக் கொள்வதுமாக இருந்தான். ஒரு தடவை கதவை திறந்துவிட்டு அங்கே என்ன கண்டானோ… உடனடியாய் மூடிவிட்டான். என்ன செய்யலாம் என்பதுபோல் அன்புவேந்தனின் அருகே போனான். அவனோ இவன் காதில், ‘போயும் போயும் இந்த மெண்டல்தானடா உனக்குக் கிடைத்தான்’ என்று மயில்நாதனைப் பார்த்து முணு முணுப்பதுபோல் இருந்தது. மயில்நாதனுக்கும் இது புரிந்திருக்க வேண்டும். அதற்குமேல் அங்கிருக்க அவருக்கு பிடிக்கவில்லை. இதற்குமேல் இருப்பது தன்னையே அடமானம் வைப்பதுபோல… அவர் எழுந்து அறையில் குறுக்கும், நெடுக்குமாய் நடந்து, ஒரு முடிவுக்கு வந்தவராய் வெளிக் கதவை திறந்து, வெளியேறப் போன போது- திடீரென்று தாமரைப் பூ வடிவமைப்புகள் பதிக்கப்பட்ட தேக்கு கதவு திறந்தது. ‘நடிப்புப் புயல்’ சந்திரபிம்மனும், ‘இயக்குநர் செம்மல்’ அரூபசொருபனும் வெளிப்பட்டதும் கதவு மீண்டும் பூட்டிக் கொண்டது. நடிப்புப் புயலுக்கு முப்பத்தைந்து வயதிருக்கும். கைத்துப்பாக்கி போட்ட டிசைன் சட்டை போட்டிருந்தார். ஒப்புக்கு சட்டையின் நடுப்பக்கம் மட்டும் பட்டன்மாட்டப்பட்டிருந்தது. மற்றபடி நிர்வாணமான மார்பு… சினிமாவில் தெரியும் உருண்டையான மார்பு, இங்கே தட்டையாகத் தெரிந்தது. ஆனாலும் இருபத்தேழு பவுன் டாலர் சங்கிலி டாலடித்தது. களையான முகம்… அசட்டையான பார்வை… அவர் பக்கத்தில் டைட் பேண்ட் போட்டு, அதற்குள் பனியன் சட்டையை இன் செய்து பூனைக்குட்டி மாதிரி நின்ற அரூபசொருபன், எழுத்தாளர் மயில்நாதனை தனக்குத் தெரியும் என்பதுபோல் லேசாய் சிரித்தார். எல்லோரும் உட்கார்ந்தார்கள். கலிங்கனையும் அன்பு வேந்தனையும் தவிர… அரூபசொருபன், துருத்திக் கொண்டி ருந்த பேண்ட் பையை மெலிதாக்கி, ஒரு கத்தை நோட்டை எடுத்தார். பிறகு நடிப்புப் புயலிடம் பயபக்தியோடு நீட்டி, ’ஒங்க கையால இதை எழுத்தாளர்கிட்ட கொடுங்கண்ணே" என்றார். நடிப்புப்புயல் அதை வாங்கி, மயில்நாதனைப் பார்த்து ஒரு சினிமா சிரிப்பு சிந்திவிட்டு, அதை நீட்டினார். மயில்நாதனும் அதை மரியாதையாக எழுந்து வாங்கிக் கொண்டார். வாங்கிய வேகத்திலேயே வீட்டு லோகத்தில் மூழ்கினார். இந்தப் பணம், மனைவியை, அவரை முத்தமிட வைக்கும்… மகளை நன்றியோடு பார்க்க வைக்கவில்லையானாலும், அவளை சமரசமாக நோக்க வைக்கும்… தங்கையை அவரது கரங்களில் அவள் கண்களை ஒற்ற வைக்கும்… மாப்பிள்ளையை, இவரை சம அந்தஸ்த்தில் பார்க்க வைக்கும்… அய்யய்யோ… நான் ரொம்ப, ரொம்ப சுயநலக்காரனாய் போயிட்டேனே… வாச்சாத்தி வழக்கு நிதிக்கு பாதிப் பணத்தை கொடுத்திடணும்… இயக்குநர் அரூபசொருபன், மயில்நாதனை அவரது வீட்டு லோகத்திலிருந்து, தனது சினிமா லோகத்திற்கு கொண்டு வந்தார். “நம்ம தலைவர் நடிப்புப்புயல், ஒங்க கிட்ட கதை கேட்கணுமுன்னே இன்றைக்கு கொடுத்த கால்சீட்டைக் கேன்சல் பண்ணிட்டார்… அவர்கிட்ட கதையைச் சொல்லுங்க” மயில்நாதனுக்கு, சங்கடமாக இருந்தது… அலுவலகத் தில்கூட மேலதிகாரிகளிடம் தனது நூல்களை கொடுத்தது கிடையாது. அப்படி கொடுப்பது, தானே தனது படைப்பை கொச்சைப்படுத்துவதாகும் என்று நினைப்பவர்… இருந்தாலும் இப்போது வேறு வழியின்றி கதையைச் சொல்லத் துவங்கினார்… மயில்நாதன் கதை சொல்லப் போனபோது, அவருக்கு மாரடைத்தது. வார்த்தைகள் வரவில்லை. இதற்குள் நடிப்புப்புயல் பாசம் பொங்க கேட்டார். “கிளைமாக்ஸ்சை மட்டும் சொல்லுங்க போதும்…” மயிலுக்கு சூடு வந்தது. “நான் கதையைச் சொல்றேன்… நீங்களே எது கிளைமாக்ஸ் என்பதை தீர்மானியுங்க… ஏன்னா எனக்கு அதைப் பத்தியெல்லாம் தெரியாது… ’’ ஆனாலும் இந்த ’மனித பங்கம்” என்கிற நாவல் ஒரு கற்பனைக் கதையல்ல… பெரியார் மாவட்டத்தில் வாச்சாத்தி என்ற மலைக் கிராமத்தில் நடந்த அட்டுழியங்களை…. “நடிப்புப்புயல்’, தனது தங்கச் சங்கிலி டாலரை தூக்கித் தூக்கி போட்டு பிடித்தபடியே இடைமறித்தார்… “இந்தாப்பா.’’ அரூபா! வாச்சாத்தி… அருமையான பெயர். நம்ம புதுமுக கதாநாயகிக்கு இந்தப் பெயரையே வச்சுடு… எழுத்தாளரே நீங்க கண்ட்டினியூ பண்ணுங்க…” மயில்நாதன், எரிச்சலோடு தொடர்ந்தார். “பொதுவாக மலைக்கிராம மக்கள் என்றாலே எல்லோருக்கும் இளக்காரம். ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்களை முதலாளிகள் வளைத்துப் போட்டிருக்கும்போது இந்த அப்பாவி மக்களுக்கு சாகும்போதுதான் நாலடி சொந்தம். வெந்த புண்ணில் வேலைப் பாய்ச்சுவது போல இவர்கள் உயிர் வாழ்வது வரைக்கும் சித்திரவதைக்கு உள்ளாகிறார்கள். இப்படித்தான் பெரியார் மாவட்டத்தில் வாச்சாத்தி என்ற மலைக்கிராமத்தின் மீது ஒரு கொடுமை, கொடூரமாக படையெடுத்தது. பெரிய, பெரிய முதலாளிகள் வனத்துறை அதிகாரிகளின் ஒத்துழைப்புடன் சந்தன மரங்களையும், தேக்கு மரங்களையும் கண்டதுண்டமாக வெட்டும்போது, அந்த துண்டுகளை தலைகளில் ஏற்றி இறக்கும் எடுபிடிகளாக தாங்கள் இருக்கப் போவதில்லை என்று இந்த மலைக்கிராம மக்கள் பிரகடனப்படுத்தி விட்டார்கள். அவ்வளவுதான்… கள்ளச்சாராயம் காய்ச்சுகிறவன் அதை நிறுத்தினால் அவனுக்கு என்ன கிடைக்குமோ அதைவிட அதிகமாகவே இவர்களுக்கு கிடைத்தது… ஆயிரத்து தொளாயிரத்து தொண்ணுற்றிரண்டாம் ஆண்டு ஜூன் மாதம், கொள்ளைக்கார முதலாளிகளின் தூண்டுதலோடு வனத்துறைக் காவலர்கள் ஆயுதபாணியாக படையெடுத்து, இந்த அப்பாவி வாச்சாத்தி கிராமத்திற்குள் நுழைந்தார்கள். மூன்று நாள் முகாமிட்டு கிராமத்து ஆடவர்களை துரத்தியடித்தார்கள். எந்தக் குற்றத்திற்கு இந்த மக்கள் உள்ளாக விரும்பவில்லையோ… அந்தக் குற்றத்தையே சுமத்தி-அதாவது இந்த மலைக்கிராம மக்கள் சந்தனக் கட்டைகளை வெட்டி, கடத்தி மண்ணுக்குள் பதுக்கி வைத்திருப்பதாக, குற்றம்சாட்டி, இவர்களை மண்ணாக்கினார்கள். இந்தக் கிராமத்தில் பதினெட்டு பெண்களை கற்பழித்தார்கள்.” மயில்நாதன் அந்தக் காட்சியை காண விரும்பாதவர்போல் கண்களை மூடினார். பேச்சுக்கு வாய் தடங்கலாகியது. இவரையே குணச்சித்திர பாத்திரமாகப் போட்டு விடலாமா என்று அரூபசொருபன் நடிப்புப் புயலிடம் கிசுகிசுத்தான். இதற்குள் மயில்நாதன் தன்னை சுதாரித்துக் கொண்டு மீண்டும் தொடர்ந்தார். “இந்த அப்பாவி மக்கள் தங்களுக்கு இழைக்கப்பட்ட கொடுமைகளை வெளியே சொன்னால் மேலும் விபரீதம் நடக்கலாமென்று அஞ்சி, ஒடுங்கி அலைக்கழிந்தபோது, மார்க்சிஸ்ட் செயலாளர் தோழர் நல்லசிவன் இந்தக் கொடுமையை நாடாளுமன்றத்தில் எழுப்பினார். பயனில்லாமல் போகவே, மனம் தளராமல் உச்ச நீதிமன்றம் போனார். இந்தக் கொடுமையை சி.பி.ஐ. விசாரிக்க வேண்டுமென்று ஒரு தீர்ப்பை வென்றெடுத்தார்… இந்த தீர்ப்பின் செயலாக்கம் இன்னும் தள்ளி போடப்பட்டுக் கொண்டேயிருக்கிறது. ஆனாலும் நெருப்பை மூடி வைக்க முடியாது… ஏழைகள் தீக்குச்சி மாதிரி… எந்த பெட்டிக்குள் அடைக்கலமாக இருக்கின்றனவோ அந்த தீக்குச்சுகள் ஒரு நாள் அந்தப் பெட்டியிலேயே உரசும் கட்டம் வரும்… இந்த எதிர்கால கட்டத்தைப் பற்றியும், எலிகளாய் பதுங்கிய இந்த மண் மக்களான இந்த மலைமக்கள் எப்படி புலிகளாக உருமாறுகிறார்கள் என்பதையும் என் நாவலில்…’ ‘நடிப்புப் புயல்’, மயில்நாதனின் கதைப் பேச்சுக்கு ஒரு முற்றுப்புள்ளி போடாமல், ஒரு கமா போட்டதுபோல் இடை மறித்தார். “இந்தாடாகலிங்கா. என் வீட்ல போய், அவளோட மூடு எப்படி இருக்குன்னு பாத்துட்டு வா… நான் எங்கே இருக்கேன்னு அது கிட்டயே கேளு… அப்படியே நடிகை வேதியாவுக்கு போன் போட்டு இங்க வரச் சொல்லு…”சாரி எழுத்தாளரே, கன்ட்டினு பண்ணுங்க…அப்போ. ஒங்க கிளைமாக்ஸ்தான் என்ன…" ’இது ஒரே ஒரு ஊர்ல, ஒரே ஒரு ராஜா கதை இல்லங்க… இந்த மக்களோட பழக்க வழக்கங்கள், ஆட்டுக்குட்டியான அவர்களை எப்படி அரசாங்க ஒநாய்கள் வழிமறிக்கின்றன. எப்படி இவர்களது பெண்டுகள் பங்கப்படுத்தப் படுகிறார்கள். எப்படி சமூகப் பிரக்ஞை உள்ளவர்களின் உதவியோடு இந்த மக்கள் போராடத் தயாராகிறார்கள் என்று படிப்படியாய் காட்டியிருக்கேன்… இந்த மக்களை இவர்களுக்கே அடையாளம் காட்டும் ஐந்தாறு தோழர்களில் ஒருவராக நீங்க நடிக்கிறதுக்கு நல்ல வாய்ப்பு இருக்கு… இப்பகூட பாருங்க. கற்பழிக்கப்பட்ட பெண்கள் குற்றவாளிகளை அடையாளம் காட்டுவதற்கு வசதியா இவர்கள் கண் முன்னால் வனத்துறை காவலர்களை அணிவகுப்பாய் காட்ட வேண்டுமென்று நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனாலும், நாலுமுறை திட்டமிட்டாலும் அணிவகுப்பு நடக்கவில்லை. அணிவகுப்பு நீதிபதியின் உயிருக்கே ஆபத்துவந்திருக்கு… கற்பழிக்கப்பட்ட பெண்கள் மிரட்டப்படுகிறார்கள். இந்த கிராமத்தை ஆட்சி செய்யும் வட்டாட்சி அலுவலகத்தில் நான் யூ.டி.சி.யாக இருந்தேன். மலை மக்களோடு நான் உறவுகொண்டிருக்கிற ஒரே காரணத்திற்காக என்னை சென்னைக்கு மாத்தியிருக்காங்க… என் கண் முன்னால நடந்த அட்டுழியங்களைத்தான் எந்தப் பாசாங்கும் இல்லாமல், எழுதியிருக்கேன். இது நாவலா. கட்டுரையா என்பது பற்றி எனக்கு கவலை இல்லை… இந்த மாதிரி அக்கிரமங்களுக்கு முடிவு கட்ட நம்மோட திரைப்படம் ஒரு துவக்கமாய் இருக்க வேண்டும்" நடிப்புப்புயல், எழுத்தாளரைப் பார்க்காமல், நாற்காலியின் பின்பக்கம் தலையை தொங்கப் போட்டார். பிறகு ரெண்டு கைகளையும் சேர்த்து சேர்த்து தட்டினார்… உதடுகளைப் பிதுக்கினார். ஒரு சிகரெட்டை எடுத்துப் பற்ற வைத்தபடியே, இயக்குநர் அரூபசொருபனை ‘ஒரு மாதிரி’ பார்த்தார். அதைப் புரிந்து கொண்ட கலைமாமணி அரூப சொருபன், அவரை ஆற்றுப்படுத்தினார். ’இதுல கதை இல்லியேன்னு நினைக்காதீங்க தலைவரே… கற்பழிக்கப்பட்ட பதினெட்டு பொண்ணுகளையும் எப்படி கதாநாயகியாகாட்ட முடியும்னு… நீங்க நினைக்கிறது எனக்கு புரியுது தலைவரே… எப்படின்னு கேட்கிறீங்களா… இதுக்கு பேர்தான் வேவ் லென்த் என்கிறது. ஆனால்… திரைக் கதை அமைக்க போறது ஓங்களோட அடிமை சொருபன். திரைக் கதையைச் சொல்றேன் கேளுங்க…" “இந்த மலைமக்களுக்கு சேவை செய்றதுக்காக ஒரு அறிவு ஜீவிப் பொண்ணு, அந்தக் கிராமத்துக்குப் போறாள். டில்லியிலிருந்து போறாள். கட் பண்றோம்… அப்புறம் அவளுக்கும் எஸ்டேட் முதலாளியான ஒங்களுக்கும் மோதல் உருவாகி, அதுவே காதலாகுது… டூயட் பாடுறிங்க… துள்ளிக் குதிக்கிறீங்க… அள்ளி அணைக்கிறீங்க.. .கட்….கட்…” “ஒருநாள், ஒங்க காதலி தலைவிரிகோலமாய் கன்னத்துல ரத்தக் கீறலோட ஓங்ககிட்ட வர்றாள்… விக்குறாள்… விம்முறாள்… படபடக்கிறாள் அழுகிறாள்…ஓங்க மேல அப்படியே சாய்கிறாள்… நீங்க படபடத்து, துடிதுடித்து காரணம் கேக்கிறீங்க… கட் பண்றோம்… அப்புறம்”ப்ளாஷ் பேக்’ அண்டை மாநில முரடர்கள் இந்த கிராமத்துக்கு வந்து அப்பாவி பெண்களை கற்பழிக்கிறாங்க… அவர்களோடு அவர்களாய் ஒங்க காதலியும் கற்பழிக்கப்படுகிறாள்… கட்… நீங்க கோப ஆவேசம் கொள்ளுறீங்க… அந்தக் கிராமத்துக்கு போறிங்க… அந்த அப்பாவி மக்கள் பட்டபாட்டை சொன்னவுடன் ஆவேசி ஆகிறீங்க… கட்…கற்பழிக்கப் பட்ட… பெண்களில் ஒருத்தியையும், ஒங்க அறிவு ஜீவி காதலியையும் கூட்டிக்கிட்டு, அடுத்த மாநில காட்டுக்கு போlங்க…கற்பழித்த கயவர்களை கண்டுபிடித்து ஒவ்வொருத்தன் தலையையா வெட்டுறீங்க… வெட்டின தலைகளை கழுத்தில மாலையாப் போடுறீங்க.. .கட் பண்றோம்… கிராமத்துக்கு வாரீங்க… இந்த மாலைத் தலைகளோட ஊழி நடனமாடுறிங்க… உடனே கிராமத்து மக்கள் ஒங்க காலுல விழுறாங்க. .“எப்படிண்ணே கதை”. நடிப்புப் புயல், கன்னங்களை உப்பி யோசித்த போது, அசோசியேட் டைரக்டரான அன்பு வேந்தன் முந்திரிக் கொட்டையானான்… இந்த இயக்குநருக்கு, இந்த திரைக்கதையை சொன்னவனே இவன்… இருக்காதா கோபம்.இவனும் பேசினான். ’இதுல கதை முழுதும் ஒரு செண்டிமென்ட வச்சிருக்கோம் தலைவரே… காதலியோடும், கற்பழிக்கப் பட்ட பெண்ணோடும், நீங்க காட்டுக்குப் போlங்களா… அங்கே கற்பழிக்கப்பட்ட பெண்ணுக்கும் ஒங்க மீது காதல் வந்துடுது… இதனால் அவளுக்கும் ஓங்க காதலிக்கும் கூட மோதல் வருது… நீங்க காதலியை வழக்கப்படி அணைக்காமல் விலகிப் போறிங்க… இதுக்கு கற்பழிக்கப் பட்ட அந்தப் பெண்தான் காரணமுன்னு காதலி நினைக்கிறாள். படம் பாக்கிறவங்களும் நினைக்கிறாங்க.. ஆனால் விசயம் என்னடான்னா, மரணப் படுக்கையில் கிடந்த ஒங்க தாய்க்கு நீங்க ஒரு சத்தியவாக்கு கொடுத்திடுறிங்க. அதாவது கன்னிமை கழியாத ஒரு பெண்ணுக்குத்தான் தாலி கட்டப் போறதா சத்தியம் செய்றிங்க.. ஆனால் ஒங்க காதலியோ கற்பழிக்கப்பட்டவள். இதனால் நீங்க காதலுக்கும், சத்தியத்துக்குமிடையே அல்லாடுறீங்க…. கடைசியில காதலிகிட்டேயும் விசயத்தை சொல்லிடுறீங்க. உடனே அந்த அறிவு ஜிவி காதலி அட்டகாசமாய் சிரிக்கிறாள். ஒங்கள உசுப்பி விடுவதற்காகவே தான் கற்பழிக்கப்பட்டதாய் பொய் சொன்னதாய் சொல்றாள். இதுக்கு அத்தாட்சியாய் கற்பழிக்கப்பட்டநாளுல, அவள் டில்லிக்கு ரெயிலுல போன டிக்கெட்டை காட்டுறாள். நீங்க அப்படியே அவளை அலாக்கா தூக்கி தலையில வச்சு கூத்தாடுறிங்க.. கட்… இதுதான் கிளைமாக்ஸ்…எப்படிண்ணே…" ‘தூள் பரப்பிட்ட கண்ணா தூள் பரப்பிட்டே… தலையும் வாலும் புரியாத ஒரு கதையை அழகா மாத்திட்டே…" ‘நடிப்புப் புயலின்’, தீர்ப்பு மயில்நாதனைப் போல, அரூபசொருபனுக்கும் ஆத்திரத்தைக் கொடுத்தது… கடைசியில் இந்த அன்பு வேந்தன் பயல் அவன் புத்தியைக் காட்டிட்டான்… தட்டணும்… தலையைத் தட்டணும்…. தலையெடுக்காதபடி தட்டணும்… அதற்குள் முந்தியடிச்சு பேசனும்… “யோசிக்காதீங்க தலைவரே, இந்தப் படத்தை வெள்ளி விழாவுக்கு கொண்டு போக வேண்டியது ஒங்களோட ஆசீர்வாதத்தில் என்னோட பொறுப்பு… இதுல கற்பழிப்பு இருக்கிறதனால, அதுலயும் பதினெட்டு பேர் கற்பழிக்கப்படுறதால, ஏ.பி.சி. கிளாஸ் மூணுக்கும் ஒரு ரசனை கிடைக்கும்… அந்தப் பெண்கள் கதறும்போது தாய்க்குலம் கண்ணிர் வடிக்கும். ‘அறிவுஜீவி’ காதலி பேசுற தத்துவங்களை கேட்டுட்டு ‘ஏ’ கிளாஸ் ஆடியன்ஸ்கள் சொக்கிப் போவாங்க… ஒங்க காதலி கற்பழிக்கப்பட்டாள் என்பது தெரிஞ்சதும் ‘பி கிளாஸ்’ ரசிகர்கள் தீக்குளிக்கக் கூடப் போயிடுவாங்க… அதோட புதுமையாய் ஒரு சண்டைக் காட்சி செய்யப் போறேன்… வழுக்கலான பாறையில நீங்க செங்குத்தா நிக்குறீங்க… முடியாதுதான். ஆனாலும் ஒங்களுடைய ‘யோகப் பயிற்சி’, ஒங்களை அப்படி நிற்க வைக்குது… அங்கிருந்தபடியே எதிரிகளை கால்களைப் பின்பக்கமாதூக்கி அவங்கதலைகள்ல கொக்கி போடுறீங்க. இது அபாயகரமான சண்டை… வழக்கமா புக் செய்யுற மாதிரி நம்ம பொன்னனையே சண்டைக் காட்சியில் டூப்பா போட்டுடலாம்… இந்த சண்டை காட்சிகளை பாத்துட்டு ‘சி’ கிளாஸ் ஆடியன்ஸான ஒங்க தொண்டர்கள் கட் அவுட் வைப்பாங்க.. கற்பூரம் கொளுத்துவாங்க… அப்புறம் என்ன. அடுத்த முதலமைச்சர் நீங்கதான்…” இயக்குநர் செம்மல் அரூபசொருபன், அன்பு வேந்தனை இறுமாப்பாய் முறைத்தபடியே மூச்சுவிட்டபோது, நடிப்புப்புயல், அப்போதே முதலமைச்சர் ஆகிவிட்டதுபோல், தலைகள் விழுவதற்கு வசதியாக நிமிர்ந்து உட்கார்ந்து கால்களை நீட்டினார். எழுத்தாளர் மயில்நாதன் எழமுடியாமல் எழுந்தார். கால்கள் தலையை கீழே இழுத்தன…. தலை, கால்களை மேலே இழுத்தது… கண்கள் எரிந்தது. காதுகளில் இரைச்சல் கேட்டது… கால்மேல் கால்போட்டு நடந்தார்… ’தூ’வென்று வந்த ஒத்த வார்த்தையை எச்சிலோடு உள்ளடக்கிக் கொண்டார்… சட்டைப்பைக்குள் வைத்த பத்தாயிரம் ரூபாய் நோட்டு கத்தையை, கைகளை கட்டிக் கொண்டு நின்ற அரூபசொருபனின் கை விளிம்பிற்குள் திணித்துவிட்டு கோபத்தை மெளனமாக்கி வெளியேறினார். திரும்பிப் பார்த்தால், கண்களுக்கு தீட்டுப்பட்டு விடும் என்பதுபோல் கண்கள், கால்களைப் பார்க்க, கால்கள் உடம்பை நகர்த்த அவர் உஷ்ணத்தோடு வெளியேறினார். அந்த உஷ்ணமே நெஞ்சச் சுரப்பை ஆவியாக்கி கண்ணீராய் கொட்டப் போனது. வாச்சாத்தி மக்களுக்காக மனதிற்குள் அழுதவர், இப்போது தமிழகமே ஒரு வாச்சாத்தி ஆகிவிட்டது என்ற எண்ணத்தில் வெளிப்படையாகவே அழுதார். –தினமணி கதிர்- 15.10.95 பொறுத்தது போதாது தென் திசை தாழாமல் தடுத்தாட் கொள்ள, சிவபெருமானால் அன்று அனுப்பப்பட்ட மாமுனி அகத்தியர், இன்று, தன்திசையாம் தமிழ்த் திசை, தன்னையும் மீறி தாழ்ந்துபோன தாளாமையில், பொதிகையில் இருந்து எழுந்து, கடலுக்குள் கால் வைத்தார். ஒரு அலையின் உயரம் கூட இல்லாத, ‘கடல் குடித்த இக்குடமுனி’ கண்டு, ஆழ்கடல் பயந்து, அலைகளை அவரது காலடியில் மட்டும் விழச் செய்தது. பின்னர், அந்த மாமுனியின் யோகச் சிமிட்டலான கண்சிமிட்டலின் பொருள்புரிந்து, அந்த அலைகளே தோணியாகி, அப்புறம் நீர் மூழ்கி கலமாகி, அம் மாமுனியை அடிவாரத்திற்கு கொண்டு வந்தன. ஏழு கடல்களும், எட்டுக் கோணங்களும், நான்கு திசைகளும், ஐந்து பூதங்களும், முக்குணங்களும், பதினோரு இந்திரி யங்களும் சங்கமித்து ஒருமிக்கும், ஆன்மிகப் பாட்டையில் நடைபோட்டார் அகத்தியர்; ஆயிரம் கோடி சூரியப் பிரகாச சுதர்சன சக்கர ஒளியில், இரவென்றே இல்லாத அந்த வைகுண்ட திருத்தலத்தில் அவர் நுழைந்தார். அங்கே - அலைகளே சுவரான ஆயிரமாயிர அண்டச் சுழற்சி மண்டபங்கள்; யுகச் சிப்பிகளால் உருவான கோடி கோடியே ஊழிமண்டபங்கள்…. அந்தச் சிப்பிகளில் இருந்து வெளிப்பட்டு, மும்மலம் அற்று முழுமையாய் ஒளி சிந்தும் ஆன்ம முத்துக்கள்…. இவற்றிற்குள் நரை, திரை, மூப்பில்லாத, காலத்தின் முழுத் தோற்றமாக, நீரில் மிதக்கும் ஆயிரம் தலைகொண்ட ஆதிசேஷன்…. ஒவ்வொரு தலையிலும் ஒரு கோடி சூரிய நகைகள்…. பச்சைக் கடலுள் வெள்ளிமலைத் தோற்றம்…. காலத்தை இயக்கும் கண்சிமிட்டல்கள். பிரணவப் பேரொளி சிந்தும் அக்கினி அண்டங்களான கண்கள்…. பிரபஞ்சமே சங்காக, பிரணவமே சக்கரமாக காட்சி காட்டும் நெற்றிகள்… முத்தொழில் ஆணையைச் செயல்படுத்தும் கற்பக்கோடி பற்கள்… இந்த ஆதிசேச அற்புதத்தின் மேல் - ஆயிரந்தலைகளின் நிழற்குடைக்குக் கீழே, அதன் ஆத்ம தேகத்தில் பரமாத்மாவான ஆதிநாராயணன்… அவர் நெற்றியில், படைப்புக் கடவுளான பிரமன்… தோள்களில் திசைக் காவலர்களான இந்திரன், வருணன், குபேரன், எமன்… வாய்க்குள் பன்னிரண்டு ஆதித்தர்கள். மார்பில் பதினோரு சூத்திரர்கள்… பூலோகம், தேவலோகம், பாதாள லோகம் எனப்படும் முப்பெரு லோகங்களையும், அவற்றில் நடமாடும் முப்பத்து முக்கோடி தேவர்களையும், நாற்பது நாற்கோடி ரிஷிகளையும் கொண்ட உடல்வாகு… பிரபஞ்சத்தை பிரகாசிக்கச் செய்யும் புன்னகை… நரசிம்மத்தின் கோபப் புன்னகையும், வாமனத்தின் சாந்தப் புன்னகையும், கிருஷ்ணரின் மாயப் புன்னகையும் கலந்த பிரணவப் புன்னகை… ஆயிரமாயிரம் கரங்கள்… அவற்றில் கெளமோடகி எனப்படும் கதாயுதம்… நந்தனா எனப்படும் ஊழிப் பெருவாள்… பஞ்சாட்சணையான சங்கு… சுதர்சனச் சக்கரம்… இவற்றை உள்வாங்கி, ஒளியாக்கும் தாயார் காலடியில் இருக்கிறாள். எல்லையற்ற பிரபஞ்ச ரூபங்களைக் காட்டும் அந்த நாராயணியத்தில், அண்ட கோடியாய் நீண்ட ஒரு கரத்தில் விரல்நுனியில், கோடானுகோடி ரிஷிகளில் ஒருவராய், அகத்தியர் தன்னையும் பார்க்கிறார். கடல்துளியாய் ஆனாலும் தனித்துளியாய் தன்னைக் காண்கிறார். வாமன உயரத்தில், வரிந்து கட்டிய மரவுரியும், நிமிர்ந்து நிற்கும் ஜடாமுடியும், தும்பிக்கைத் தாடியும், காவேரியைக் கவிழ்த்த கமண்டலமுமாய் நிற்கும் தமிழ்முனியான அகத்தியர், சுயத்திற்கு வந்து, சொந்த வேலையை மறந்து, பந்தமற்றுப் பேசினார். ’அளப்பறியாக் காலமே! புலன்களில் புத்தியே..! உயிர்களில் உள்ளொளியே… எழுத்துக்களில் அகரமே… ஆதித்தர்களில் விஷ்ணுவே… யோகங்களில் சமாதியே… யட்சர்களில் குபேரனே… யானைகளில் ஐராவதமே… பருவங்களில் வசந்தமே… ஏமாற்றில் பகடையே… பிரபஞ்சம் சுருங்கி, பிரும்மானந்த முட்டையாகும்போது, அந்த முட்டைக்குள் இருக்கும் புருசோத்தமே… நாபிக் கமலத்தில் பிரும்மத்தை தோற்றுவிக்கும் பரப்பிரும்மமே… நீயே… பிரபஞ்சக்கண்ணாடி-தப்பாய் சொன்னேன் பிரபோ… தப்புத்தப்பு… உனக்கு பிரபஞ்சமே கண்ணாடி… உன்னை கடல்களாய், மலைகளாய், கடல்மலை கொண்ட கிரகங்களாய், கிரகங்கள் வட்டமிடும் நட்சத்திரங்களாய், நட்சத்திரங்கள் நடனமிடும் அண்டாதி அண்டங்களாய் காட்டும் கண்ணாடி… பிரபஞ்ச வெளிப்பாடுகள், அசலான உனது நகல்கள்…" உடனே ஆதிநாராயணன், அனந்தங்கோடி சந்திரப் புன்னகையோடு கேட்டார். ’முதுபெரும் சிவபக்தா… சைவப் பெருமுனியே… நீ… ஈஸ்வர எல்லையைத் தாண்டி வர, என்னிடம் என்ன இருக்கிறது? ஒரு வேளை சோதிக்க வந்தாயோ… அதற்கு என்றே நாரதன் இருக்கிறானே…" ’விளங்கிய அறிவின் முனைவன்" என்று தொல்காப்பியரால் பயபக்தியுடன் பாடப் பெற்ற, தமிழிற்கு முதல் நூல் தந்த அகத்தியர், இப்போது சிறிது சூடாகவே கேட்டார். “சோதிக்க வரவில்லை பிரபு… சாதிக்க வந்தேன்… என் தமிழ் இனத்தை மீட்க வந்தேன்… ஆனாலும் இது உங்களுக்கு ஆகாது அனந்தனே… என் மக்கள் மீது உங்களுக்கு ஏன் இத்தனை வெறுப்பு… ஏன் இத்தனைக் கோபம்…” ஆதிகேசவன், ஒரு பாசாங்குப் புருவச் சுழிப்போடு பதிலளித்தார். “உன் தமிழ் இனத்தின் மீது கோபமா… வெறுப்பா… எனக்கா… எப்படி இருக்க முடியும் முனியுங்கவா… நாவலந் தீவிலேயே நல்ல இனமான உன் தமிழ் இனத்தில் ஒரு பகுதியினர், என் ராமாவதாரத்தை காலணியால் அர்ச்சித்தவர்கள்; இப்போது கூட, என்னை வசை பாடுகிறவர்கள்… வம்புக்கு இழுக்கிறவர்கள், என்னை ஈனப்படுத்தும் இந்த ‘இனமான’ தளபதிகளைக் கூட வசதியாகத்தானே வைத்திருக்கிறேன். இவர்கள் மீது பகை கொள்ளப் போன அரசின் மனப்போக்கை மாற்றி… அந்த அரசு மூலமே விருது கொடுக்கச் செய்தேன். பெட்டி கொடுக்கச் செய்தேன். இப்படிப்பட்ட எனக்கு உன் இனத்தின் மீது கோபம் என்கிறாயே… நன்று அகத்தியா நன்று….” “நீங்கள் தான்… எம் மக்களை நிசமான பிரச்சினைகளில் இருந்து திசை திருப்பி விடுகிறீர்கள் என்பதற்கு, உங்கள் பதிலே ஒரு சாட்சி பிரபோ… ஆட்சியின் கேடயமாய் விளங்கும் இந்த ‘அற்புத’ சிந்தனையாளர்களுக்கு உதவி வருவதாக தாங்கள் தம்பட்டம் அடிப்பது நியாயமில்லை, பெருமாளே… நிந்தாதுதி… என்பதும் ஒருவித பக்திதானே… மூலத்துடன் வேகவேகமாய் நெருங்குவதற்கான ஒரு யோக முறைதானே… இப்போது இதுவல்ல விவகாரம்… அது என்னவென்றால், எங்கள் தமிழ் இனத்தை, தாங்கள் ஒரேயடியாய் உழுதுவிட்டீர்கள் என்பதே… உங்களின் சித்து விளையாட்டிற்கு என் மக்கள்தானா கிடைத்தார்கள்? உலக நாதா? இவ்வளவுக்கும், நாலாயிரத்திவ்ய பிரபந்தத்தில் உள்ள ஆழ்வார்களின் பாடல்களை நீங்கள் அறியாதவரா… இந்த ஆழ்வார் பெருமக்களைக் கருதியாவது என் மக்களை மாக்களாக்காது கம்மா இருந்திருக்கலாமே தாமோதரா…, இப்படி வேடிக்கைக் காட்டலாமா விண்ணளந்த பெருமாளே.” ஆதிநாராயணனை, தாயார், “எங்கே பதில் சொல்லுங்கள் பார்க்கலாம்’ என்பதுபோல், வித்யா லட்சுமியாய் பார்த்தாள். உடனே, பாற்கடல் வாசன், பால் குடிக்கத் தெரியாத பூனைபோல் பார்த்து, புனுகாய் கேட்டார். “பழி சுமத்தாதே பைந்தமிழ் காவலா… உன் மக்களுக்கு எப்படி வேடிக்கை காட்டுகிறேன் என்று எங்கே விரல்விட்டுச் சொல் பார்க்கலாம்…” “விரல் மடக்கிச் சொல்ல… உங்களின் கோடி கோடி கரங்களே போதாது புண்ணியனே… ஆனாலும் சுருங்கச் சொல்லி விளங்க வைக்கிறேன். எம் மக்கள், நல்லதைப் பேசி. அல்லதைக் கண்டிக்கும் பிசிராந்தையர்களாய் இருந்தவர்கள்… ‘மன்னவனும் நீயோ’ என்ற கம்பர்களாய் இருந்தார்கள். ‘நாமார்க்கும் குடியல்லோம்’ என்ற நாவுக்கரசர்களாய் திகழ்ந்தார்கள். இவர்களை ஏன் இருகால் முயல்களாய் ஆக்கினிர்கள்…” “முயல் முன்னோக்கிச் செல்லும் பிராணி… அப்படி ஆக்கப்பட்டால், அதற்காக நீ… எனக்கு நன்றியல்லவா சொல்லவேண்டும்.” “இதை, ஆமையிடம் சொல்லுங்கள்-என்னிடம் வேண்டாம் பிரபோ… முயலின் குணம் பற்றி அறியாதவரா தாங்கள்… ஒரு முயலை-எப்படி இம்சித்தாலும், அது கத்தாது… எதிர்ப்புக் காட்டாது… கத்தியால், கழுத்து அறுக்கப்படும்போது கூட, அழத் தெரியாத அப்பாவிப் பிராணி… எத்தனையோ… அக்கிரமங்கள் கண்ணெதிரே நடந்தாலும், கத்தக் கூட வேண்டாம். ஈனமுணங்கலாய் முனங்கக் கூட முடியாமல் மூளை மழுங்கிப் போனதே தமிழ் இனம்… சொந்த வீட்டையே. யாராவது பட்டா போட்டு… பட்டாக் கத்தியை நீட்டினால், அவர்களது காலில் விழுந்துவிட்டு ஒதுங்கிக் கொள்கிறார்களே எம் மக்கள்… ஒரு காலத்தில் கப்பலோட்டிய தமிழர்கள், இப்போது ஆட்டோக்களை கண்டதும், அலறியடித்து ஓடுகிறார்கள்…” அகத்தியர் ஆவேசப்பட்டு பேச்சைத் தொடர்ந்தார். “வேல் பாய்ந்தபோதும், விழியாடாமல் இருப்பதே வீரம் என்ற மூதாதையர் சொல் மறந்து, கை இருப்பது கும்பிட, கால் இருப்பது தரையில் படுக்க, தலை இருப்பது காலில் விழ, வாய் இருப்பது சோறு தின்ன மட்டுமே என்று ஆகிப் போனார்களே… அவர்களை இப்படி ஆக்கிவிட்டீர்களே அனந்த பெருமாளே…” “அகத்தியா… நான் நிரபராதியாக்கும்…” காலடியில் அமர்ந்திருந்த தாயார் எழுந்து, பேசினார். “இவரை நம்பாதே அகத்தியா… சொந்த குலமான நந்தகுலத்தினர்…ஒருவரை ஒருவர் அடித்துக் கொல்லும்படி செய்தவர் இவர்… சொந்த மகனான சம்பாவின் வயிற்றில், ரிஷிகள் சாபத்தால் உதித்த உலக்கை, கடலில் துகள்களாய் போடப்பட்டு பின்னர் கடற்புற்களாய் முளைத்தபோது, அவற்றை எடுத்து, யாதவர்களிடையே வீசி, ஆயுதங்களாய் ஆக்கிக் கொடுத்தவர். தான் அவதரித்த குலத்தையே, ‘தீர்த்த சங்கோத்ரா’ என்ற இடத்துக்கு அழைத்துச் சென்று, அவர்களை கேளிக்கையில் ஆழ்த்தி கெடுமதி கொடுத்தவர்… ஒருவரை ஒருவர் அடித்துக் கொல்ல வைத்தவர்…” “நானும், என்னை உலக்கையின் எஞ்சிய இரும்புக் கம்பியால் கொன்று கொண்டேனே” என்று சொல்லப்போன சொல் விளங்கும் பெருமாளை பேச விடாது, அகத்தியர் இடைமறித்துப் பேசினார். “நீங்கள் குறிப்பிட்டதுபோல், தங்கள் நாயகருக்கு இப்போது தமிழ்க் குலம் கிடைத்துவிட்டது தாயே… எம் மக்களையும் கேளிக்கையில் ஆழ்த்தி, நிழல்களை நிஜங்களாகவும், நிஜங்களை நிழல்களாகவும் ஆக்கி விட்டார் அன்னையே… ஒருவனை வீரனாக்க, முப்பது பேரை பேடியாக்கும் திரையுலகில், என் மக்கள் கதாநாயகனிடம் ஒன்றிப் போய்விட்டார்கள் உத்தமியே… இப்போது, இவர்கள் சொல்வதே இவர்களுக்கு பகவத் கீதையாகப் போய்விட்டது. மாதாவே… ஒரு தாய், மகளாய் நினைத்து நட்ட புன்னை மரத்தை, தமக்கையாய் நினைத்து, அந்த மரத்தடியில் தலைவனைத் தீண்டத் துணியாத அந்தக் காலத் தலைவியின் இந்தக் கால கொள்ளுப் பேரன்களும், பேத்திகளும், ஆபாசதிரைப்பட தொலைக்காட்சிகளைப் பார்த்து ‘ஜொள்ளு’ விடுகிறார்களே தாயாரே….” “அப்படி என்றால்…” “அதை என் வாயால் சொல்ல மாட்டேன் வைகுண்ட நாயகியே… கலை என்ற தேனை மேலோட்டமாக சுவைக்க வேண்டி எம் மக்கள், தேனுக்குள் விழுந்து சிறகிழக்கும் ஈக்கள் போல் பகுத்தறிவை இழந்துவிட்டார்களே பரந்தாமன் தேவியே…” தாயார் தன் கணிப்பைத் தெரிவித்தார். ‘உன் மக்கள் கலைத்தேனில் விழவில்லை… விஷத் தேனில் விழுந்து கிடக்கிறார்கள்… பிரபோ!… அகத்தியன் சார்பில் அடியாள் சொல்லும் விபரத்தையும் கேளுங்கள். தொலைக்காட்சிக்காரர்கள், தமிழர்களை பிச்சைக்காரர்களாய் ஆக்கிவிட்டார்கள். போட்டிகள் என்ற பேரில், பரிசு பரிசு என்று பார்ப்பவர்களை, கண்ணேந்துவதற்குப் பதிலாய் கையேந்த வைத்துவிட்டார்கள். அதுவும் டப்பாப் பரிசுகளைக் கொடுத்து, வாங்கியவர்களை அதிர்ஷ்டசாலிகள் என்று அழைத்து, அதிர்ஷ்ட லட்சுமியான என்னைக் கொச்சைப் படுத்துகிறார்கள்… ஒரு பக்கம் இந்த நிலை… மறுபக்கமோ, சில ’ஆஸ்பத்திரிவாசிகள்’ என்னை சூட் கேஸ்களில் சிறைசெய்து, வெளிநாடுகளுக்கு அனுப்புகிறார்கள்… எந்த மக்களிடம் நான் இருக்க வேண்டுமோ, அந்த மக்கள் பிச்சைக்காரர்களாய் ஆக, நானோ ஆட்சியாளர்களிட மும், ரெளடியார்களிடமும் சிறைபட்டுக் கிடக்கிறேன்… எப்படியாவது என்னை மீட்க வேண்டும் பிரபுவே…" நாரணன், தன் நாயகியை அனுதாபமாய் பார்த்தபோது, நீரடியில் ஒரு சலசலப்பு… ஆதிகேசன், ஆயிரம் தலைகளையும் திருப்பியபோது, நீராரும் கடலுடுத்து, நில மடந்தைக்கு எழிலான ஒரு சீரிளம் பெண் தோன்றினாள்… கரங் கூப்பி தலை தாழ்த்தினாள். அகத்திய, தொல்காப்பிய இலக்கிய கண்களாள். பக்தி இலக்கிய படர் முகத்தாள்… ஐம்பெருங் காப்பியக் கழுத்தாள்… அவள் இடுப்பிலே, சிற்றிலக்கிய ஒட்டியாணம்… விரல்களில், பத்துப் பாட்டு-எட்டுத் தொகை மோதிரங்கள், கால்களில், பாரதி, பாரதி தாச சலங்கைகள்… கால்களில், புதுக் கவிதைக் காலணிகள்… சங்க கால பார்வை… இந்தக் கால அலங்கோலம்… எந்தக் கேள்வியும் இல்லாமலே, இவள் விடையளித்தாள். எல்லோருமாய் தனக்குப் போட்ட, பலவந்தமான சினிமா முக்காட்டை தூக்கிப் போட்டுவிட்டு, துயரோடு கேவிக் கேவி விளக்கம் சொன்னாள். நான்… தமிழன்னை அல்லவாம், தாத்தாவே… எங்களுக்கு ஒரு, அசல் தமிழன்னைக் கிடைத்துவிட்டாள்…. நீ போ… என்று என்னை, என் மக்களே கழுத்தைப் பிடித்து தள்ளிவிட்டார்கள்… அதுவும் முக்காபலா, டேக் இட் ஈஸி, மஸ்தானா… போன்ற கெட்ட கெட்ட வார்த்தைகளால் திட்டி அனுப்பி விட்டார்கள் திருப்பதி நாயகா…" நாராயணருக்குப் பிரதியாய், லட்சுமி, பேத்தியிடம் கேட்டாள். “புகுந்த இடம் விட்டு, பிறந்த இடம் வந்தது தப்பும்மா… நீயே… உன் மக்களை மீட்டி இருக்கலாமே… நீதான் கல்தோன்றி, மண்தோன்றாக் காலத்துக்கு முன்தோன்றிய குடியைப் பெற்றவளாயிற்றே…” “நையாண்டி பேச… இது வேளையில்லை… பாட்டியே… அறியாமையில், கயிறை பாம்பு என்று நினைக்கும் இனத்தை மீட்கலாம்… ஆனால், அகங்காரத்தில் பாம்பையே கயிறாய் நினைக்கும் கயவாளிப்பிள்ளைகளை எப்படி மீட்க முடியும்… தாத்தாவிடம் இருந்து சரியான பதில் கிடைக்குமுன்னர், நானோ… என் மகன் அகத்தியனோ… இந்த இடத்தைவிட்டு அகலப்போவதில்லை…” அப்போதும், ஆதிசேசன்தான் அசைந்து கொடுத்ததே தவிர, அந்த வாகனாதிபதி அல்ல… சிரித்தார்… ஒரே சிரிப்பாகச் சிரித்தார்… பெருஞ்சிரிப்பாய் சிரித்தவர் பின்னர் வாயடக்கிப்பார்த்தார். கண்ணெதிரே, அவருடைய மருமகன் திருமுருகன்… கண்களில், சூரபத்மனை வதம் செய்யப் போனபோது கூட இல்லாத நெருப்புக் கோளங்கள்… தோளுக்கு மேல் போன வேல்… தமிழ்க் கடவுளான முருகன், தாய்மாமனும், மாமனாருமான கேசவனைப் பார்க்காததுபோல் பார்த்து, ‘மாப்பிள்ளை முறுக்கோடு’ பேசினான். பேசவில்லை…. சூளுரைத்தான்…. ‘எல்லா இனத்தையும், வாழ்வாங்கு வாழவிட்டு, என் இனத்தை மட்டும் தளர விட்டவரை விடமாட்டேன்…எல்லா இனத்தையும் பரிணாமப்படி வளர்வதற்கு விதியமைத்து… கன்னடனை நளினமாக்கி, மலையாளியை அறிவாளியாக்கி, சினிமாத் தெலுங்கனையும் மீட்டு, மராட்டியனை மலரச் செய்து, யாதவர்களை எழுச்சியுறச் செய்து, என் தமிழனின் தலைவிதியை மட்டும் மட்டமாக எழுதிய பிருமனை, மீண்டும் சிறையில் அடைக்கப் போகிறேன். என் தமிழ் மக்களின் இந்த நிலைமைக்கு காரணமான அந்த பிரும்மனை நான் சிறையெடுப்பதை, யாராலும் தடுக்க முடியாது…" எல்லாம் வல்ல முருகனின் சூளுரை கேட்டு, நாராயணன் தவிர, அனைவரும் திடுக்கிட்டனர். ஆனால் ஆதி மூலமோ… எகத் தாளமாய், யாருக்கோ சொல்வது போல் விளக்கினார். “பிரமனைக் குற்றம் சொல்வது நன்றன்று. தமிழ் இனத்தின் மேல் ஒரு சாபம் உள்ளது. கனக விசயர் சாபம்… இந்த இரு வடபுலத்து மன்னர்களும் தமிழைப் பழித்தார்கள் என்பதற்காக, சேரன் செங்குட்டுவன், அவர்கள் தலைகளில் கற்களை ஏற்றிக் கொண்டு வந்தான். தற்குறிகளான கனக விசயருக்கு, தமிழை ஊட்டாமல், அவர்களைக் கேவலப்படுத்தி, அவன் இன மக்களை அசிங்கப்படுத்தி, கண்ணகி கோட்டம் அமைத்தான். அதுவும், இவர்களை நாவலந் தீவின் ஒரு பகுதியில் இருந்து இன்னொரு முனைக்கு, கொடூரமாக நடத்திக்கொண்டு வந்திருக்கிறான்… ஆக, கனகவிசயர் தலை சுமந்த கற்களில் ஒன்று, தமிழ் இனத்தின் மீதும் விழுந்தது. வீரத்தைக்காட்ட மனிதாபிமானத்தை பலியிட்ட தமிழினம், இதனால் பேடிகளாய் போய்விட்டது… இதில் நான் செய்வதற்கு ஏதுமில்லை…” நாராயணன் கைவிரித்தபோது, அகத்தியர் இயலாமையால் கைநெரித்தார். ஆனாலும் வாதாடினார். “சும்மா இருப்பதே சுகம் என்று இருந்தால், தங்களுக்கும் சுகக் கேடு ஏற்படும் பிரபோ… தமிழகத்தில் பிறரின் சொத்துக்களை ஆக்கிரமிக்கும் ஒரு பயங்கரக் கும்பல், இங்கேயும் வரும்… நீங்கள், ஆதிசேசனை விட்டு ஒரு அடி நகர்ந்தால் போதும்… உடனே அந்த அதிரடிக் கும்பல்… பிரும்மனையும் மிரட்டி, பட்டா வாங்கி, இந்த ஆதிசேச அற்புதத்தை உரிமையாக்கிக் கொள்ளும்… இது இன்றைய தமிழக யதார்த்தம் பிரபுவே…” தாயாரான லட்சுமி தேவி, திடுக்கிட்டு ‘எங்கேயும் செல்லாதீர்கள்’ என்பதுபோல், தனது நாயகனின் திருப் பாதங்களை கெட்டியாகப் பிடித்துக் கொண்டாள்… லட்சுமணனாகவும், பலராமனாகவும் அவதாரம் மேற்கொண்ட ஆதிசேசன், கோபத்தால் கண் சிவந்து, தனது அண்ட கோடி வாலை எடுத்து, பூலோகத்திற்கு குறிவைத்து கடலில் அடித்தது. அவ்வளவுதான். பூமியில் பேய் மழை பெய்தது…. அணுகுண்டு மேற்பரப்பில் வெடித்தது… பூகம்பங்கள் தோன்றின… அப்போதும், தமிழ் இனம், தொலைக்காட்சிப் பெட்டிகள் முன்னால், முத்தம் கொடுத்தது போல் பேசும் இளம் பெண்களின் அசைவுகளில் லயித்துக் கொண்டும், மேடைகளில் தலைவர்களின் கால்களில் தன் தலைகளைப் போட்டுக் கொண்டும், கிடந்தது… இதை தொலை நோக்காய் பார்த்து, அத்தனை பேரும் முகம் சுழித்தபோது, அகத்தியர் மீண்டும் விடாப்பிடியாய் கேட்டார். “நற்பிறவி எடுத்து இழிபிறவியாய் போன என் இனத்தை மீட்டுக் கொடுங்கள் மேய்ப்பரே…” “சரிபிள்ளாய்… காலம் கனியட்டும்… விரைவில் மீண்டும் தமிழகத்தில் எனது அவதாரம் எடுத்து… உன் மக்களை மீட்கிறேன்…”உலகத்திற்கெல்லாம் ஒவ்வொரு அவதாரமாக எடுத்த யாம் தமிழகத்திற்காக மட்டும், தனி அவதாரம் எடுக்கவேண்டும்." ’நன்றி பிரயோ… நன்றி. நான் தன்யனானேன்.// ஆனாலும், அதிகப் பிரசங்கித்தனமாய், நான் சொல்வதாய் நினைக்காதீர்கள் அலங்காரப் பிரியரே… ஒங்கள் அவதாரம், தமிழ் சினிமாவில் நடிக்க வேண்டும்… அது சாகச நாயகனாய்… காதல் மன்னனாய்… பலரைக் கொல்லும் நாயகனாய். மலைவிட்டு மலைகுதிக்கும் மாவீரனாய் நடிக்க வேண்டும். இல்லையானால், கோவிந்தனான நீங்களே கோவிந்தா ஆவீர்கள்… இன்னும் ஒரே ஒரு கேள்வி கேட்க அனுமதி வேண்டும் பிரபோ… காலம் கனிவதை… நாங்கள் எப்படிக் கண்டுபிடிப்பது… கலியுக வரதா…??" “தேவ ரகசியத்தை சொல்லக் கூடாது… ஆனாலும் சொல்கிறேன்… தமிழகத்தில், இன்னும் இரண்டு தலைமுறைகள் கடந்து, மூன்றாவது தலைமுறையில் கலி முற்றும்… வீடு கட்டி பலனில்லை என்று பெரும்பாலான மக்கள், வீதியில் கிடப்பார்கள்… மருத்துவ மனைகளில் பட்டு மெத்தைகளும், குளிர் சாதனப் பெட்டிகளும் தொலைத் தொடர்பு சாதனங்களும் வைக்கப்படும்… ஆனாலும் மக்கள் அங்கே செல்வதற்கு தடை விதிக்கப் படும்…” வைத்தீஸ்வரன் பிள்ளை பொருள்படப் பார்த்தான். நாரணர் தொடர்ந்தார். “அதோடு, தமிழ்க் கலாச்சாரம் பொங்கி பூரிக்கும். கல்யாண மண்டபங்களில், புதுமணத்தம்பதி அம்மணமாய் ஆடிக் காட்டினால்தான், சமுதாயம் அவர்கள் திருமணத்தை அங்கீகரிக்கும். புதுக் கணவன், பத்துபேரை காசு கொடுத்தாவது தன்னால் அடிபட்டதுபோல் நடிக்க வைத்தால்தான், அந்த ‘வீரக்’ கணவனின் இச்சைக்கு இளம் மனைவி உடன்படுவாள்… வயிற்றில் இருக்கும் குழந்தைக்கு வரவேற்பு வளையம் வைத்தால்தான் அது வெளிப்படும். .நன்றி தாயே நன்றி. என்று பிறந்த குழந்தை, போஸ்டர் போட்டால்தான், பெற்ற தாயே பிள்ளைக்குப் பால் கொடுப்பாள்…’ நாரணர், மருமகனை ஒரு நமுட்டுச் சிரிப்பாய் பார்த்துவிட்டு, தாள லயத்தோடு தொடர்ந்தார். ’எல்லாவற்றிற்கும் மேலாக… தமிழக மக்களின் ஒட்டுமொத்தமான பயபக்தியோடு, திரைப்படங்களில் நிசமான ஒநாய்கள்… பன்றிகள்… கழுதைகள்… காக்காக்கள் நடிக்கும்… இவைகளுக்கு தமிழக மக்கள் பயபக்தியோடு ரசிகர் மன்றங்களைத் தோற்றுவிப்பார்கள்… காலப்போக்கில் இந்த நடிப்புப் பிராணிகளில் ஒன்று குறிப்பாக ஒரு பன்றி முதலமைச்சராகும். எஞ்சியவை அமைச்சர்களாகவும், சர்வகட்சித் தலைவர் களாகவும், ஐ.ஏ.எஸ். அதிகாரி களாகவும் பதவி ஏற்கும். இப்படிப்பட்ட காலத் தோற்றத்தில், நான் கண்டிப்பாய் அவதாரம் எடுப்பேன். நல்லது. சென்று வா அகத்தியா. நல்லதே நடக்கும் என்று நம்பிக்கையோடு போய் வா பேத்தியே…" நாரணர், இனிப் பேசுவதற்கு எதுவும் இல்லை என்பதுபோல் யோக நித்திரையில் ஆழ்ந்தார்… பயங்கரமான புலி ஒன்று மாட்டு மந்தைக்குள் சென்று ஒரே ஒரு மாட்டை மட்டும் தனிப்படுத்தி, அதைத் தாக்குவதுபோல், ஊழ்வினை என்னும் புலி மனித இனங்களுக்குள் பாய்ந்து தமிழினத்தை மட்டும் தனிப்படுத்தி அதைத் தாக்குவது கண்டு, பிரமனை சிறை செய்து, அவன் ஏவி விட்ட அந்தப் புலியையும் வீழ்த்த நினைத்த முருகன் இப்போது வேலாலேயே தன் தலையில் அடித்துக் கொண்டான். இன்றைய தமிழ் இனம் இதை விட மோசமான இழிநிலைக்கு போகப் போகிறதே என்று பொருமினான்… பிறகு, தான் தமிழ் கடவுள் அல்ல என்று பிரகடனம் செய்யலாமா என்று யோசித்துக் கொண்டான். தமிழன்னை அங்கிருந்து போக மறுக்கிறாள்… அகத்தியர் மீண்டும் வடபுலத்திற்கு போகலாமா என்பது போல் யோசிக்கிறார். -வாசுகி பொங்கல் மலர்-1996 அன்னை இட்ட தீ முன்னால் பூனைக்கார தடாலடிகளும், பின்னால் யூனிபார தடியடிகளும், அக்கம் பக்கத்தில், உப்பு, புளி, மிளகாய், வெங்காய வாரியக்காரர்களும் புடை சூழ அந்த தலைமை சமையலாளிப் பெண், அந்த சமையல் வளாகத்தின் வாசல்படியில் வலது கால் வைத்தார்… மறுகாலான இடது காலை வைப்பதற்குதலை கிடைக்காமல் அங்குமிங்குமாய் சினம் பொங்கப் பார்த்தார்… அவ்வளவுதான்… முட்டைகளைப் பச்சையாகக் குடிக்கலாமா, அல்லது வேக வைத்து தின்னலாமா என்று யோசித்துக் கொண்டும், முட்டைகளுக்கும் சீல் போட்டுவிடக் கூடாதே என்று பயந்து கொண்டும் கிடந்த உதவி சமையலாளிப் பெண், அம்மாவைப் பார்த்ததும் ஆடிப் போனார்… இந்தச் சமையல் கூடத்திலிருக்கும், ஒரே ஒரு உதவிச் சமையலாளிப் பெண் இவர்தான்… அம்மா என்று சும்மா சும்மா அழைக்கப்படும் தலைமைச் சமையலாளியைப் பார்த்ததுதான் தாமதம், முன்னால் அடுக்கி வைக்கப்பட்ட முட்டைகளுக்கு மேல் உடம்பைப் போட்டு, அம்மாவின் கால்களில் தலையைப் போட்டார்… அதே சமயம் வயிற்றுக்கு வெளியே சேலை மறைப்பில் ஒளித்து வைத்த பதுக்கல் முட்டைகள் நசுங்காமல் இருப்பதற்காக எச்சரிக்கையாக வயிற்றை மட்டும் தரையில் படாமல் எக்கி வைத்துக் கொண்டார்… எல்லாத் தலைமைச் சமையல்காரர்களிடமும், சரக்கு மாஸ்டராக இருப்பதற்கென்றே பிறப்பெடுத்த, “கல் தோன்றி, மண் தோன்றாக்காலத்தே முன்தோன்றி மூத்த அந்த கம்பீரமான சரக்கு மாஸ்டர், இப்போது எரியும் விறகின் சாம்பல் போல, நேராய் நிற்காமலும், கீழே விழாமலும் வளைந்து நின்றார்… மீன்குமார், மீன் குவியலில் இருந்து விடுபட்டு, அம்மாவை நோக்கி சாமியாடினார்… பல்வேறு சின்னச் சின்ன சமையல் கூடங்களையும், பால் கொடுக்கும் மாடுகளின் மேய்ச்சல் நிலங்கள் முதல் பயிர் வளரும் நஞ்சை நிலங்களையும், மடக்கிப் போட துணை போகும் ஒரு ஒல்லிச் சமையலாளி, இதர சமையல்காரர்கள் முண்டியடித்ததில் கீழே விழாமலிருக்க ஒரு ஜன்னல் கம்பியைப் பிடித்துக் கொண்டு தொங்கினார்… இன்னொரு சமையல்காரர் கழுத்தில் கிடந்த சிலுவையை எடுத்து அம்மாவைப் பார்த்தபடியே கண்களில் ஒற்றிக் கொண்டார்… குல்லாய் போட்ட இன்னொரு சமையல்காரர், அம்மா இருக்கும் திசைதான் மெக்கா இருக்கும் திசை என்று அனுமானித்து அங்கேயே மண்டியிட்டார்… தாயே, தாயே, என்ற குரல்களைக் கேட்டு பிச்சைக்காரன்கூட தன் லெவல் பெரிது என்று பெருமிதப்படலாம்… ஆனாலும், இந்த குரல்கள் வெளியே போய்க் கொண்டிருந்தவர்களை வேடிக்கை பார்ப்பதற்காக நிற்க வைத்தது. இந்த வேடிக்கையாளர்கள் அந்த தலைமைச் சமையல்காரரையும், அவரது உதவியாளர்களையும், அதிசயமாய்ப் பார்த்தபோது- காட்டா மோட்டா உடையோடு, கம்பீரமாக நின்ற, அந்த அம்மா சமையலாளி, காலடியில் தலைபோட்டுக் கிடந்த பெண் உதவிச் சமையல்காரியை ஒரு அங்குலத்தில் பத்தில் ஒரு பங்கு கூட கீழே குனிந்து பார்க்காமல், முகத்தை ஆறு அங்குல உயரத்தில் தூக்கி கொண்டு சுற்று முற்றும், பார்த்தார்… அவரது பார்வையில் – முன்பு ஒரே சமையல்கூடமாக இருந்து, இப்போது இரண்டாக தடுக்கப்பட்ட சமையல் கூடங்கள் பட்டன… முதலாவது சன் மைக்கா போட்ட தளம். இதில் வெள்ளி அடுப்பு… சந்தனக்கட்டை விறகுகள்… தங்கப் பானை… ஆங்காங்கே அமுல் பேபிக் காய்கறிகள்… கண்ணில் ஒற்றிக் கொள்ளும்படியான பளபளப்பு அரிசி ரகங்கள்… முந்திரிக் கொட்டைகள்… ஆறுபோல் பெருக்கெடுத்த பால்… பனி மலையாள நெய்க்குவியல்… முக்கனிகள்… அறுபத்தி நாலு வகையான ஆகார வகையறாக்கள்…. அந்த தலைமைச் சமையலாளியின் கண்கள் பிரகாசித்தன… அதே சமயம் ஒவ்வொரு உதவிச் சமையலாளியின் முதுகுக்குப் பின்னால் முடக்கி வைக்கப்பட்டிருக்கும், இந்த வகையறாக்களை அதே கண்கள் பங்காளித்தனமாகவும் பார்த்தன… பிறகு அந்தக் கண்கள் கள்ளிச் செடிகூட முளைக்காத கட்டாந்தரையில் உள்ள சாமானிய சமையல் கூடத்தில் வைக்கப்பட்ட அழுகிப் போன காய்களையும், பால் கலந்த தண்ணீரையும், மோட்டாரக தானியங்களையும் புகைமுட்டும் அடுப்பையும் பார்த்தன… பிறகு கம்பீரம் குலையாமலே வெள்ளைக்காரன் கட்டிப் போட்ட அந்த சமையல் கூடத்தை மேலும் கீழுமாகப் பார்த்தன… இது உருவாக்கப்பட்ட பல நூற்றாண்டுகளுக்குப் பிறகு கட்டப்பட்ட பல்வேறு கட்டிடங்கள் காண்ட்ராக்ட், கமிஷன் பூகம்பங்களால் சுண்ணாம்புத் தடயம்கூட இல்லாமல் போய்விட்டன… ஆனால் இந்தக் கட்டிடம் மட்டும், இன்னும் மார்க்கண்டேயத்தனமாகவே உள்ளது. காலப்போக்கில் ஏற்பட்ட பெளதிக ரசாயன சேர்க்கையால், இதன் தேக்குக் கம்புகளே, இரும்புப் பட்டைகளானது போன்ற பரிணாம மாற்றம் … புதுவைக்கு அருகே காவக்கரையில், காலச்சிற்பியால் கணக்கெடுக்க முடியாத வயதுள்ள மரங்கள், கற்களாய் உருமாற்றம் செய்யப் பட்டுள்ளனவே. அது மாதிரி. கால் மணி நேரமாக அம்மாவின் கால்களில், முகம் போட்டுக் கிடந்த உதவிச் சமையல்காரிக்கு, முதுகு வலித்தது…ஆகையால் அங்குமிங்குமாக நெளிந்தார்… இதனால் வயிற்றுக்குள் பதுக்கி வைத்த முட்டைகள் உடைந்து, கூழாகி அம்மாவின் கால்களை நனைத்தன… உடனே, அம்மாவும் தனது செருப்புக் காலால் உதவிச் சமையல்காரியின் நெற்றியை பிராண்டிவிட்டு, அருவெறுப் போடு இரண்டடி நகர்ந்தார்… ஆனாலும் அந்தப் பெண் இரண்டே கால் அடி வரை பாம்புபோல் நகர்ந்து பிறகு அம்மாவின் காலடியில் தலையைப் போட்டுவிட்டு, அப்புறம், போட்டதலையை பாம்புத்தலைபோல் நிமிர்த்திக் கொண்டு, அந்த அறையே குலுங்க இப்படி முழங்கினார்… ’அம்மா.. என் அம்மா.. தங்கம்மா… தமிழம்மா… பிரபஞ்சத்தின் பேரண்ட முட்டையே! இதோ பாரம்மா… இந்த முட்டைகள் உன் தரிசனத்தால் எப்படி நெகிழ்ந்து விட்டன என்று… உங்கள் வரவால் ஏற்பட்ட மகிழ்ச்சியை எப்படி பீறிட்டுக் காட்டுகின்றன என்பதைப் பாருங்கள் தாயே… பாருங்கள். இந்த முட்டைகளின் வெள்ளைப் பிரவாகம், நீ களங்கமற்றவள் என்பதை கட்டியம் கூறுகிறது… இந்த மஞ்சள் பெருக்கோ… நீஉயிரின் உள்ளொளி என்பதைச் சொல்லாமல் சொல்கிறது… என் சொல்வேன்… என் செய்வேன்… இந்த மாதிரி அதிசயம் எப்போதுமே நடந்ததில்லை… இதனால்தானே ஆன்றோரும், சான்றோரும் உன்னை அதிசயத்தாய் என்கிறார்கள் தாயே!" அந்தம்மா, இப்போது கூழாகிப் போன முட்டைகளை, கை தூக்கி ஆசீர்வாதம் செய்தார்… அதன் பின் தன் மகிழ்ச்சியைக் காட்டும் வகையில் மீண்டும் காலில் தலை போட்ட உதவிச் சமையல்காரியின் நெற்றிக்கு கால் நகத்தால் குங்குமம் போட்டார்… உடனே கீழே கிடந்த அந்தப் பிராட்டியாரும் பக்திச் சுவை சொட்டச் சொட்ட எழுந்தார்… அம்மாவை கைகூப்பி பார்த்தபடியே மீண்டும் விழப் போனார்… இதற்குள் கால்கள் கிடைக்காமல் முண்டியடித்த சமையலாளிக் கூட்டத்தில் சாமியாடிக் கொண்டிருந்த மீன்குமார், அம்மாவின் காலில் குனிந்துதான் விழப் போனார்… பிறகு அது மரியாதைக் குறைவு என்று நினைத்ததுபோல் தடாலென்று விழுந்தார்… ஆனாலும் நினைத்தது ஒன்று… நடந்தது ஒன்று… மீன்களை அரிவாள் மனையில் நறுக்கிக் கொண்டிருந்த அவர், அவசரத்தில் அந்த அரிவாள் மனையைக் கையில் எடுத்தபடியே கீழே விழுந்து விட்டார்… இதனால் அவர் தலையில் பலத்த வேட்டு… அம்மாவின் பாதங்களில் லேசான இரத்தக் கீறல்கள்… அன்னையாரும் ஒரு காலை லேசாய் தூக்கி படபடப்பாய், கோபம், கோபமாய் பார்த்தார்… அம்மாவின் காலில் விழப் போன எஞ்சிய சமையலாளிகள்,துடிதுடித்துப் போனார்கள்… தலையில் நீருற்று போல் ரத்தம் பொங்கும் மீன் குமாரை, ஒரு தள்ளு, தள்ளிவிட்டு, அம்மாவின் பாதக்கீறல்களை படபடப்பாய் பார்த்தார்கள். பெண் உதவிச் சமையலாளி வாயிலும், வயிற்றிலும் அடித்துக் கொண்டு, வயிற்று மறைப்பிற்குள் உடைபடாமலிருக்கும் முட்டைகள் எவ்வளவு தேறும் என்று கணக்குப் பார்த்தார்… என்றாலும் அம்மா கஷ்டப்பட்ட காலத்திலேயே அவருக்கு பக்கத் துணையாக இருந்த ஒரு முக்கிய சமையலாளி, இப்படிச் சூளுரைத்தார். “தமிழைப் பெற்ற தாயே… என் தாயை சின்னவளாக்கிய பெரியவளே!” உன் திருப்பாதங்களில் ரத்தத்தைக் கண்ட பிறகும், நாங்கள் உயிரோடு இருக்க வேண்டுமா தாயே… அய்யகோ இது என்ன கொடுமை… காலில் பட்டகாயத்தையும், வலி பொறுக்காமல் நீ பல்லைக் கடிப்பதையும் பார்த்துக் கொண்டு இன்னும் நாங்கள் உயிரோடு இருக்கிறோமே தாயே… இதுதானம்மா கொடுமை… ஆனாலும் இனி இருப்பதில்லை… உயிர் தரிப்பதில்லை… உன்னை இந்தக் கோலத்தில் பார்க்கவா பிறவி எடுத்தோம்? இப்போதே தீக்குளிப்புச் செய்யப் போகிறோம் தாயே!" அந்த முக்கிய சமையலாளி, உடனடியாய் ஓடிப்போய் சாமன்ய சமையல் கட்டுக்கு கீழே வைக்கப்பட்ட ஒரு மண்ணெண்ணை பாட்டிலை, எடுத்துக் கொண்டு திரும்பி வந்தார். சக சமையலாளிகள் அனைவர் மீதும், பாட்டிலைத் திறந்து குபுக் குபுக் என்று ஊற்றினார். பிறகு, “ஆளுக்கு ஒரு தீப்பெட்டியை எடுத்துக் கொண்டு தீக்குளிப்பு செய்யுங்கள்” என்றார்- தான் மட்டும் அந்த தீக்குளிப்பை பார்த்துவிட்டு அப்புறம் யோசிக்கப் போவதுபோல்; வேறு வழியில்லாமலோ என்னவோ, அத்தனை சமையலாளிகளும் வத்திப் பெட்டிகள் வைக்கப்பட்டிருந்த இடத்தை விட்டு விட்டு, அவை இல்லாத இடத்தைத் தேடினார்கள்… ’எங்கே தீப் பெட்டி… எங்களின் இனிய தியாகத்திற்குத் துணை போகும் தீப்பெட்டி எங்கே… எங்கே…" என்று குரலிட்டார்கள். இதற்குள் வெளியே வேடிக்கை பார்த்த கூட்டத்தில் இருந்த “தலைமறைவு புகழ் சாமி” ஒரு தீப்பெட்டியை எடுத்து உள்ளே போட்டுவிட்டு, மீண்டும் தலைமறைவானார். வேறு வழியில்லாமல் அந்த முக்கிய சமையலாளி தீப்பெட்டியை எடுத்து குச்சியையும் உருவி, இன்னொரு ‘வாய் செத்த சமையலாளி’,மேல் குறி வைத்தார். ஆனாலும் அத்தனை சமையலாளிகளும் இப்படிச் சொன்னார்கள். “அம்மா… அம்மா… தானைத் தாயே… ஞானத் தாயே!… இந்தக் கால் காயத்தோடு நாங்கள் இல்லாமல் நீ எப்படியெல்லாம் அவஸ்தைப் படப் போகிறாயோ… அதை நினைத்தால்தான் அம்மா, இந்த அற்ப உயிர் போக மறுக்கிறது… வேண்டுமானால் உன்னை இந்த நிலைமைக்கு ஆளாக்கிய மீன் குமாரை இப்போதே தீக்குளிக்கச் செய்யலாம் தாயே…” தலையில் பெருக்கோடிய இரத்தப் பொந்தை கைக் குட்டையால் பொத்தியபடியே வலி பொறுக்காமல் துடித்த மீன்குமார், அந்த வலியையும் மீறி உஷாரானார். அம்மாவின் கால்களில் விழுந்தபடியே, ‘குய்யோ, முறையோ’ என்று கூப்பாடு போட்டார். “தாயே, தமிழே… உன் காலில் காயத்தை ஏற்படுத்திய இந்த அற்பன் தீக்குளிக்க சளைக்க மாட்டான். ஆனாலும் என்னை சொந்த மகனைப் போல் நேசித்த தாங்கள், நான் தீக்குளித்தால் அதைப் பொறுக்க மாட்டாது தீக்குளித்துவிடுவீர்கள் என்று தான் தயங்குகிறேன் தமிழ் தாயே…” அம்மாவுக்கு அப்போதுதான் உறைத்தது. சமையலாளிகளைப் பார்த்து எதுவும் செய்ய வேண்டாம் என்பதுபோல் கையசைத்துவிட்டு வாயசைத்தார்… “எவனும், எவளும் தீக்குளிக்க வேண்டாம்… நாம், வாழப் பிறந்தவர்கள்… ஆளப் பிறந்தவர்கள்… எல்லாம் நல்லபடியாய்த் தானே நடக்குது?” அந்த உதவிப் பெண் சமையலாளி அனைத்து சமையல்காரர்கள் சார்பிலும் சமர்ப்பித்தார். ’நீ இருக்கும்போது எங்களுக்கு ஏதம்மா குறை?… சாப்பிடுகிறவர்களுக்காகத்தான் சமையல் என்பதை மாற்றி, சமையலாளிகளுக்கே சாப்பாடு என்று புதுமை செய்த புரட்சியே… இந்தப் புரட்சி நீடிக்கும் வரைக்கும் எங்களுக்கு ஏதம்மா குறை…?" அம்மா மெல்லச் சிரித்தார். பிறகு தயாராகப் போடப் பட்டிருந்த, ஒரு ராஜாராணி நாற்காலியில் உட்கார்ந்தார்… அனைவரையும் வினயமாகவும், வினாவோடும் பார்த்தார். உடனே அத்தனை சமையலாளிகளும் தத்தம் முதுகுக்குப் பின்னால் பதுக்கி வைத்தவற்றில் முக்கால் வாசியை அம்மாவின் காலடியில் போட்ட போது, அது அம்மாவின் கழுத்தளவிற்கு உயர்ந்துவிட்டது. இதனால் அம்மா வேறுபக்கமாக உட்கார்ந்தபடியே நாற்காலியை இழுத்துப் போட்டார். உடனே அத்தனை சமையலாளிகளும் தத்தம் வேலைகளில் ஈடுபடத் துவங்கினார்கள். மீன் குமார், மீன் செதில்களை நறுக்கினார். ஒருத்தர் முந்திரிப் பருப்பை உடைத்தார். இன்னொருத்தர் வெங்காயத்தை உரித்தார். ஒருத்தர் மாவு பிசைந்தார். இந்த மாதிரியான வேலைகளை தனது தகுதிக்கு கீழாகக் கருதும் உயரமான ஒல்லி சமையல்காரர் தங்கமுலாமிட்ட சரிகை காகிதத்தால் மூடப்பட்ட தங்கத் தட்டை அம்மாவின் முன்னால் நீட்டினார். அம்மாவும், அந்த சரிகை காகிதத்தை கை நகத்தால் கிழித்தபடியே உள்ளே இருந்த ஒரு துண்டை எடுத்து வாயில் போட்டார். நன்றாக இருக்கிறது என்பதுபோல் கண்களைச் சிமிட்டினார். இந்தச் சமயத்தை எதிர்பார்த்திருந்த ஒரு அடாவடிச் சமையலாளி அம்மாவின் காலடியில் முகம் போட்டுவிட்டு, மரியாதைத்தனமாக எழுந்து கை கூப்பியபடியே எல்லோருக்கும் தெரிந்த தகவலை ஒரு ரகசியம் போலச் சொன்னார். “குடிசை வாழ் மக்களின் மங்காத்தாவே… சேரிவாழ் மக்களின் இசக்கியம்மனே!!… பிராமணர்களின் காமாட் சியே…!!! சூத்திரர்களின் இருளாயியே!… பிறக்கும்போதே தங்கத்தால் அரிசி செய்து, வைரத் துவையலும், வைடூரியப் பொரியலுமாய் உண்டு திளைத்த நீயே… இந்த உணவை உண்டு விட்டு புளகாங்கிதப் படுகிறாய்… ஆனால் நாம் சமைக்கும் சாப்பாட்டை உண்கிறவர்களுக்கு வாந்திபேதி வருவதாக எதிரிகள் பிரச்சாரம் செய்கிறார்கள் தாயே… இப்படிப் பகை பார்வையாய் பார்க்க வேண்டிய அவசியம் இல்லை தாயே… உன் குறிப்பறிந்து அந்த வாந்திபேதிக் காரர்களை குணப்படுத்த, அவர்களை ஆஸ்பத்திரிக்கு அனுப்பி விட்டேன் தாயே…. அவர்கள் குணமாக குறைந்தது மூன்று மாதமாகும் குணக் குன்றே…” குணக் குன்றான தலைமைச் சமையலாளி, அப்படியும் உதடுகளையும் கண்களையும் ஒரு சேர துடிக்கவிட்டபோது, விவரம் புரியாத ‘சரக்குமாஸ்டர்’ புல்லரித்துப் போனார்… சக சமையலாளிகளைப் பார்த்து ஒரு சொற்பொழிவே நிகழ்த்தினார்… ’உள்ளபடியே நான் சொல்வதைக் கேளுங்கள்… ரத்தங்களில் ரத்தங்களே… குறை கூறுவோரையும் குணமாக் கும் கருணை உள்ளம்… நம் கண்கண்ட தெய்வத்திற்குத் தவிர வேறு எவருக்கு வரும்?… சாப்பாடு ஒத்துவராமல் வயிற்று வலியால் துடிப்பவர்களை ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கும் பண்பாடு வேறு எவருக்கு வரும்… இதுவன்றோ தமிழ் பண்பாடு!" அம்மாவுக்கு தர்ம சங்கடமாக இருந்தது. அந்த சரக்கு மாஸ்டரை ஒரு வாத்தைப் பார்ப்பதுபோல் பார்த்தார். பிறகு ‘எல்லோரும் அவரவர் வேலையைப் பாருங்கள்’ என்று ஆணையிட்டார். உடனே அத்தனை சமையலாளிகளும் தம் பணி இருக்கைகளில் உட்கார்ந்து தத்தம் வேலைகளைச் செய்ய தொடங்கினார்கள்… அம்மாவும் அந்த வேலைகளை பட்டும் படாமலும் பார்வையிட்டார். சிறிது தொலைவில் அம்மாவின்கால்காயம் குணமாக, தொழுகை செய்து முடித்த ஒரு சமையலாளி, அம்மா அதைக் கண்டுக்காததால், மீண்டும் வெங்காயத்தை நறுக்குகிறார். பிறகு அம்மாவின் காலில்பட்டதை, தன் கண்ணில் பட்டதாகக் காட்டிக் கொள்ள, தன் கண்களை கைகளால் துடைத்தார். இதை தற்செயலாக பார்த்துவிட்ட தெய்வத்தாய் அவருக்கு உபதேசித்தார். “ஏய் உன்னத்தாண்டா… வெங்காயம் வெட்டின கையாலே கண்ணைத் துடைக்காதே… கண் எரியும்…” உடனே அத்தனை சமையலாளிகளும் ஒருசேர முழங்கினார்கள். “வெங்காயக் கை… கண்ணில்பட்டால்… கண்எரியும் என்பதைக் கண்டுபிடித்துச் சொன்ன எங்களின் விஞ்ஞான யுகமே… உன் யுகத்தில் நாங்களும் வாழ்கிறோம் என்பதில் பெருமைப்படுகிறோம். அன்னையே… பெருமைப் படுகிறோம்…” அன்னை, முகத்தில் எந்தச் சலனமும் இல்லை. ஆனாலும் அவரது கண்கள் பாகற்காய்களை நறுக்கிக் கொண்டிருந்த ஒரு ’ஜென்டில்மேன்" சமையல்காரர் மீது பட்டு விட்டது. அன்னை, உடனே அருள் உபதேசம் செய்தார். “டேய். பாகற்காய் பொரிக்கும்போது கொஞ்சம் தேங்காய் சீவலையும் போடு… அப்போதுதான் கசப்பு தெரியாது…” உடனே முழக்கங்கள்… ’பாகற்காய் கசப்பை போக்க வழிகாட்டிய பைங் கிளியே… கண்கண்ட தெய்வமே!!… உன்கண்டுபிடிப்பு ஐசக் நியூட்டனின் புவிஈர்ப்பு தத்துவத்தைவிட, ரைட் சகோதரர்களின் விமான கண்டுபிடிப்பை விட மேலான கண்டுபிடிப்பம்மா… இதற்காகவே வரலாறு உன்னை இனம் காட்டும் தாயே… இனம் காட்டும்…" ஆசாமிகள், கிண்டல் செய்கிறார்களோ என்பது போல் அம்மா பார்த்தார்… இல்லவே இல்லை… அத்தனைக் கண்களிலும் பக்தி பரவசம்… அத்தனை மேனிகளிலும் நெளிவு சுழிவு… இதனால் உற்சாகப்பட்ட அன்னை சப்பாத்திக்கு மாவு பிசையும் சமையலாளியைப் பார்த்தார். அவரோ அம்மாவைப் பார்த்த பரவசத்தில் சப்பாத்தி மாவில் உப்பைப் போடுவதற்குப் பதிலாக இரண்டு கிலோ உப்புக் குவியலில் ஒரு பிடி சப்பாத்தி மாவைப் போட்டு பிசைந்தார். உடனே அன்னைக்கு ஆத்திரம் வந்தது. அடே… என்ன காரியம் செய்கிறாய்… உப்பில்லா பண்டம் மட்டும் அல்ல… உப்பான பண்டமும் குப்பை யிலே… இது தெரியாதா…" “தெரியும் தாயே தெரியும்… ஆனாலும் உன் திருப்பார்வையில் உப்பே மாவாகும்… மாவே உப்பாகும்… என்பதும் தெரியும்… ஏனென்றால் நீ சர்வ சித்துக்கும் ஈஸ்வரி… இந்த உப்பை மாவாக்க சர்வேஸ்வரியான உனக்கு எளிது தானே… உப்பின் மகத்துவத்தை உணர்த்திய உத்தமியே… உப்புள்ள காலம் வரை நீ வாழ வேண்டும் தாயே… நீ வாழ்வதைக் கண்டு நெஞ்சாற மகிழ நாங்களும் வாழ வேண்டுமென்று அருள் பாலிப்பாய் தாயே…” அன்னை அருள் பாலித்த போது, செக்கச் சிவந்த உடம்போடும், கன்னங் கரேல் உடையோடும் ஒருத்தர் அந்த சமையல் கட்டிற்குள் நுழைந்தார்… இவர் முறைப்படியான சமையலாளி அல்ல. ஆனாலும் இந்த சமையல் கூடத்தில் ஒட்டிக் கொள்ளும் நிரந்தரர். இப்போது ஒட்டுதல் அதிகம்… அம்மாவின் பாதங்களை நோக்கி, கைகளை குவித்து ஒரு கும்பிடு போட்டார்… அம்மா அதைக்கண்டு கொள்ளாததால், கீரை ஆய்ந்து கொண்டிருந்த ஒரு சமையலாளியிடம் போனார்… அந்தக் கீரைகளில் காம்புகள் எத்தனை சதவீதம்… இலைகள் எத்தனை சதவீதம் என்று ’குத்து ’மதிப்பாக பார்த்துக் கொண்டு நின்றார். உடனே அன்னையானவர், தொழிலாகுபெயரால் அவரைமரியாதையுடன் அழைத்தார்… “மிஸ்டர். கீரைமணி!… வாருங்கள். இதோ இங்கேயுள்ள முட்டைத் திரவத்தை ஒரு சட்டியில் வாரிப் போடுங்கள்… அதோ அங்கேயுள்ள ஜனரஞ்சக அடுப்பில் கிண்டப்படும் ரவையில் ஊற்றுங்கள்… பாவம் மக்கள். அவர்களையும் முட்டையாக்க வேண்டாமா…?” கீரை மணிக்கு, உச்சி முதல் பாதம் வரை பக்தி பரவசம் ஏற்பட்டது… முட்டைக் கூழை சட்டியில் ஊற்றிக் கொண்டே, குரல் தழுதழுக்க அன்னைக்கு புகழாரம் சூட்டினார். ‘’நீ சாதாரண மனுஷி அல்ல… சமூக நீதி காத்த மகா மனுஷி… ஏழைகள் முட்டைகளை உடைக்க கஷ்டப்படுவார்கள் என்று, அவற்றை உடைத்துக் கொடுக்கும் உன்னதமே!… உனது இந்த தீரச் செயலுக்காக, இனமானம் காக்கும் தளபதியான நான் உனக்கு கேடயமாக இருப்பேன்… உனக்கு வாழ்நாள்வரை விசுவாசமாக இருப்பேன்… உன் எதிரிகளைச் சிதைத்து சின்னாபின்னமாக்குவான் இந்த பகுத்தறிவு செம்மல்…!" அந்தம்மாவுக்கு, இந்த மாதிரி புகழ் பாடுவதில் தன்னிகரற்ற ஒரு சமையலாளி, மிஸ்டர் கீரை மணியைப் பொறாமையோடு பார்த்துவிட்டு, அன்னையின் அருகில் சென்று வாய் பொத்தி வர்ணித்தார்… “எங்கள் இனத்தின் இனமே… குலத்தின் குலமே… மலைகளின் அரசர் இமயம்… நதிகளின் அரசி காவேரி… மொழிகளின் அரசி தமிழ்… அரிசி ரகங்களின் அரசி ஜெ.ஜெ.92… இவை அத்தனைக்கும் சக்ரவர்த்தினி நீ…இந்த அணையாபெரு அடுப்பை ஏற்றிவைக்க வேண்டும் அம்மா… ஒன் கைபட்டு புனிதம் பெறுவதற்கு விறகு சுள்ளிகளுக்கு ஏது தகுதி… இதனால்தான், சந்தன மரங்களையே விறகாக வெட்டி வந்திருக்கேன் தாயே… அதோ வெள்ளி அடுப்பு… அதன் மேல் பொன் பானை… உன் தங்க கைகளால், பானையில் அரிசி போட்டு, அடுப்பில் நெருப்பூட்ட வேண்டும் ஆனந்த வல்லியே… அற்புத நாயகியே…” அன்னை, அந்த அடைமொழிகளுக்கு ஏற்ப எழுந்தார். சமையல் திட்டைப் பார்த்து முகம் சுழித்தார். ..அதட்டலாக கேட்டார். “ஆஸிட் இருக்குதா…” “தாயே… தரணியே… தப்பேதும் செய்திருந்தால் காலால் இடறம்மா… கையால் உதையம்மா… ஆனால் …ஆனால்…’ அன்னை திருவாய் மலர்ந்தருளினார்… “சமையல் கட்டு ஒரே அழுக்கு… ஒரே முடை நாத்தம்…முதலில் இதைக் கழுவ வேண்டும்…” அத்தனை பேருக்கும், போன உயிர் திரும்ப வந்தது. இப்போது அந்த உயரமான ஒல்லி சமையலாளி திக்கித் திக்கியும் திடப்பட்டும் ஆனந்தமாய் அரற்றினார். ’ஆஸிடின் அருமையை கண்டு பிடித்த, அற்புதமே… ஆஸிட்டுக்கு அந்தஸ்து கொடுத்த அமிலமே… உன் பெயர் உச்சரிக்கப்படும் போதெல்லாம் இந்த ஆஸிடின் பெயரும் உச்சரிக்கப்படும் தாயே..! உச்சரிக்கப்படும்" அந்த தலைமைச் சமையலாளி, மக்களின் வேலைக்காரி என்பதை மறந்து, எஜமானியப் பார்வையோடு அடுப்பேற்ற எழுந்தார். உடனடியாய் முகம் சுழித்தார்… சரக்கு மாஸ்டரையும், ஒல்லிச் சமையலாளியையும் அருவெறுப்பாய் பார்த்தார். அவர்களும் புரிந்து கொண்டு கழுத்தைக் குறுக்கி, தலைகளை கீழே தொங்க வைத்தார்கள். சிதம்பரம் கோவிலுக்கு மேல் ஒரு கட்டிடமா…அம்மாவின் தலைக்கு மேல் ஒரு தலையா… அம்மாவும், இந்த இரு முதுபெரும் சமையாளிகளின் தலைக்குனிவை ரசித்த படியே, சமையல் திட்டின் மேலுள்ள வெள்ளி அடுப்பில் சொருகப்பட்ட சந்தன கட்டைகளை கேஸ் லைட்டரால் பற்ற வைக்கப் போனார்… அப்போது பார்த்து ஆஜானுபாகு உடம்பை குறுக்க முடியாமல் கஷ்டப்பட்ட சரக்கு மாஸ்டர், தற்செயலாக எரிவாயு சிலிண்டர் திருகில் கை ஊன்றி, தன் வெயிட் முழுவதையும் அதில் போட்டு ஒருச் சாய்த்துக் கிடந்தார். அன்னை, இதை கவனிக்காமல் விறகிற்கு தீயிட்டார். அவ்வளவுதான் . அந்த அறை முழுதும் தீப்பிடித்தது. அன்னையின் காட்டா மோட்டா உடையிலும் நெருப்பு பற்றியது. அவரிடமிருந்து, மரியாதையான தூரத்தில் நின்ற அத்தனை சமையலாளிகளும், அன்னையை விட்டு விட்டு அவசர அவசரமாய் வெளியே ஓடினார்கள். தீயின் கொடூரத்தில் அங்குமிங்குமாய் அல்லாடிய அன்னை, அவர்களின் முன்னால் ஓடிப்போய் நின்று, தன்னை காப்பாற்றும்படி ஆணையிட்டார். அப்புறம் கையெடுத்து கும்பிட்டார். ஆனால், எந்தக் கரங்கள் அவரை ஒரேயடியாய் வணங்கினவோ, அதற்குரியவர்கள் ஓடினார்கள். அன்னை யின் ஆடையைப்பற்றிய தீ, இப்பொழுது அவரது உடம்பை பற்றப் போனது. அவர், வலி பொறுக்க முடியாமல் தவியாய் தவித்தார். துடியாய்த் துடித்தார். அங்கும்மிங்கும் சுற்றினார். அப்பொழுது அந்த உதவிப் பெண் சமையலாளி, ஜாக்கெட்டில் பற்றிய தீயை ஜாக்கெட்டோடு கிழித்து போட்டுவிட்டு, ஓலமிட்டபடியே ஒடிக்கொண்டிருந்தாள். அன்னையோ, பெண்ணுக்கு பெண் என்ற முறையில், அந்த சமையலாளியின் முன்னால் தீமயமான தனது வலது கரத்தை நீட்டி, “என்னைக் காப்பாற்று காப்பாற்று” என்று அழுதழுது கெஞ்சினார். ஆனால், அந்தப் பெண்ணோ " அடிப் போடி உனக்காக நான் எதற்கு சாகணும்" என்று அடாவடியாய் சொன்னதோடு, அன்னையையும் கீழே தள்ளிப்போட்டு விட்டு, தாவித்தாவி ஓடினார்… அன்னை நெருப்பில் விறகாக போகின்ற நேரம். அங்கும் இங்குமாய் தரையில் புரண்டார் கீரைமணியும், அன்னையைக் கண்டுக்காமலே தப்பித் தோம் பிழைத்தோம் என்று வெளியே ஓடினார். பாவம்… அவர் கவலை அவருக்கு. அடுத்த தலைமை சமையலாளியிடம் எப்படி ஒட்டிக் கொள்வது என்ற சிந்தனை அவருக்கு, தாமரை ஆகஸ்ட் - 1995 ஒரு மாமரமும் மரங்கொத்திப் பறவைகளும் அந்த மாமரம், இலைகளால் கண்ணிர் விட்டது. காய்களால் மாரடித்தது. பூக்களால் புலம்பியது. பின்னர் வலியின் உச்சத்தால், உணர்வுகள் மரத்துப் போக, உடலெங்கும் துளை போடும் மரங்கொத்திப் பறவைகளை, பாதி மயக்கத்தில், பட்டும் படாமலும் பார்த்தது. ஆனால், அந்த மரங்கொத்திகளோ, ஆப்பு போன்ற தம் அலகால், அந்த மரத்தை அங்கு, இங்கு எனாதபடி. எங்கும் குத்திக் குத்திக் குடைந்து கொண்டிருந்தன. துளை போட்ட இடங்களை அலகுகளால் அங்குமிங்குமாய் தட்டி, அந்த மரத்தின் மரணத்திற்கு இழவு மேளச் சத்தத்தையும் எழுப்பிக் கொண்டிருந்தன. ஒரு காலத்தில், இந்த மாமரத்திற்கே, இந்த மரங்கொத்திகளின் கவர்ச்சியான தோற்றத்தில், ஒரு கிறக்கம் ஏற்பட்டதுண்டு. இவற்றின் தங்க நிற முதுகும், இடை யிடையே கருப்புக் கோடுகளும், இந்த மாமரத்தை வியக்க வைத்திருக்கின்றன. இதன் முதுகு வண்ணத்திற்கு இணை சேர்ப்பது போன்ற கூர்மையான அலகும், வெளுத்த மஞ்சள் உடம்பும், செஞ்சிவப்பு பிரடிக் கொண்டையும், கவுண் கம்பு போன்ற வாலும், வாலடியில் இரத்தச் சிவப்பு புள்ளிகளும், இந்த மரத்தை, இந்த மரங்கொத்திகளை அண்ணாந்து பார்க்க வைத்தது. ஆனால் இப்போதோ – அந்த அழகான வண்ணத் தோப்பில், தென் கிழக்கு கோடியில் உள்ள இந்த மாமரம், வதைபட்டுக் கொண் டிருக்கிறது. எந்த மரங் கொத்திகள், தன்னை, பூச்சி, புழுக்களில் இருந்து காப்பாற்றும் என்று நினைத்ததோ, அதே மரங் கொத்திகள், அந்த மரத்தின் அனைத்து பகுதிகளையும் சல்லடையாக்கி விட்டன. அடிவாரத்திலும், கிளைகளிலும் முதலில் துளைகள் போட்டன. பின்னர் அந்த துளைகளைப் பொந்துகளாக்கின. பொந்துகளை, சுரங்கங்களாய் குடைந்தன. இந்த சுரங்கங்களிலும் சில, அந்த மரத்தின் மறு முனையை கிழித்துவிட்டன. அப்படியும் திருப்தி அடையாத மரங்கொத்திகள், ஒவ்வொரு சுரங்கத்தின் மேல் பகுதி யையும், கீழ் பகுதியையும், அலகுகளால் கொத்திக் கொத்தி, நீக்குப் போக்கான முன் நாக்கால் கழிவுகளை வெளியே எடுத்துப் போட்டன. அதிலுள்ள பூச்சி புழுக்களை தின்று காட்டின… அந்த மாமரத்திற்கு, கால்களான வேர்கள் அற்றுப்போவது போன்ற பிராண வலி. அடிவாரமும், கிளைகளும் வலிப்பு வந்ததுபோல் வெட்டிக்கொண்டன. இதனால், அதற்கு மரண பயம் ஏற்பட்டது. அந்த அச்சத்தில், தனது அடிவாரத்தில், வாலை மூன்றாவது கால்போல் ஊன்றிக் கொண்டு, தத்தித் தத்தி மேலே வந்த தலைமை மரங்கொத்தியிடம், கிளைக் கரங்களை வளைத்துகும்பிட்டபடியே மாமரம் மன்றாடியது. “..என்னை விட்டுவிடு மரங்கொத்தியே விட்டு விடு… நீ போடுவதோ மூன்று முட்டை. அதற்கு சிறு பொந்தே போதும், இப்படியா என்னை உடம்பெங்கும் பொந்துகளாக்கி சித்திரவதை செய்ய வேண்டும்? அடியற்றுப் போனேன். செயலற்றுதவிக்கிறேன். உன்னை விரும்பி ஏற்ற என்னை இப்படி வதைக்கலாமா? நான் இருந்தால் தானே நீ வாழ முடியும்? பதில் சொல் மரங்கொத்தி பதில் சொல்…” “தொண்டு” மரங்கொத்திகளின் ‘தூய’ பணியை பாராட்டுவதற்காக மேலே எம்பிய அந்த தலைமை மரங் கொத்தி, அந்த மாமரத்தின் அடிவாரத்தில் உள்ள ஒரு பொந்தின் விளிம்பை கால்களால் பற்றியபடியே, அந்த மரத்திற்கு எகத்தாளமாக பதில் அளித்தது. “ஏய் மாமரமே! உன்னுடைய பாரம்பரியம் என்ன… பண்பாடு என்ன… நீ, கல் தோன்றி மண் தோன்றாக்காலத்தே, முன் தோன்றி மூத்த மரம்… முக்கனிகளில் முக்கிய கனியின் தாயகம்… கோவில் கும்பத்திலும், மங்கல நிகழ்ச்சிகளிலும் முதல் மரியாதை பெறும் இலைகளை ஈன்றெடுத்த மரம் நீ… என் முதுகைப் போலவே மின்னும் மாந்தளிரின் பிறப்பிடம் நீ… வடபுலத்து முரட்டு மரங்களை வென்ற மரம்… தென் மேற்கு தென்னையையும், நேர் மேற்கு பாக்கு மரத்தையும், ஆண்ட மரம் நீ… நீயா இப்படிப் புலம்புவது? உன்னை வதைப்படுத்திய மண் புழுக்களையும், பூச்சிகளையும் என் கூட்டத்தில் ஒவ்வொன்றும் மணிக்கு ஆயிரத்து இரு நூறுவீதம் கொத்திக் கொத்திக் கொன்று தீர்த்துள்ளன… என்னிடம் இருப்பவை நூற்று அறுபத்தைந்து மரங்கொத்திகள்..இவை ஒவ்வொன்றிற்கும் சின்ன வீடு, வளர்ப்புப் பிள்ளை, சொந்தப் பிள்ளை என்று ஐந்து தேறும். அவை யனைத்தும், ஒவ்வொன்றாய் நான் குறிப்பிட்ட மணி வேகத்தில் பூச்சிகளைத் தின்கின்றன… அப்படியானால் எத்தனை பூச்சிகளிடமிருந்து உன்னை காப்பாற்றியிருக் கிறோம்… நீயே கணக்குப் போட்டுப் பார்…” அந்த மாமரம், தன்னை அசத்திய அந்த மரங்கொத்தியைப் பார்த்து, லேசாய் அசந்து போனது உண்மைதான். ஆனாலும் சுதாரித்துக் கொண்டு, இப்படிப் பதில் அளித்தது. “நீ சொன்னது பறவையியல் நிபுணர் கருத்து. நான் சொல்லப் போவதோ, தாவர விஞ்ஞானி கருத்து. உங்களில் ஒவ்வொரு மரங் கொத்தியும், மணிக்கு ஆறாயிரம் பட்டைத் துண்டுகளை என்னிடமிருந்து பிய்க்கிறது… இந்த ஐந்தாண்டு காலத்தில் நீங்கள் எவ்வளவு பட்டைகளை உரித்திருப்பீர்கள்? நீயே கணக்குப் போட்டுப்பார்… தலைமை மரங்கொத்தியே” துளை போட்டுக் கொண்டிருந்த, தொண்டு மரங் கொத்திகள், அந்தச் சுரண்டலை விட்டு விட்டு, “எங்கள் தலைவியையா எதிர்த்துப் பேசுகிறாய்” என்று கடிந்து பேசி, அந்த மரத்தின் மாம்பழங்களை பிய்த்துப் போட்டன… காய்களைக் குத்தின… இலைகளை பிடுங்கி எறிந்தன. பூக்களை கசக்கின. தலைமை மரங்கொத்தியோ, அவற்றைக் கண்டுக்காமல், அந்த மாமரத்திற்கு, தான் செய்த அரும்பெரும் பணிகளை சொல்லிக் காட்டியது. “உனக்குச் சிறிதேனும் நன்றி இருக்கிறதா மாமரமே…? உன் உச்சிக் கிளைக்கு”ஆகாயம் துழாவி’ என்று பெயர் வைத்தது நான்… உன் வலது கிளைக்கு ‘பூமி துழாவி’ என்று பெயர் வைத்ததும் நான்… உன் அடிவாரத்திற்கு“மாண்புமிகு மரங்கொத்தி தாங்கி” என்று பெயர் வைத்து, உன்னை இந்தத் தோப்பறியச் செய்திருக்கிறேன். இனிமேல் உன்னுடைய ஒவ்வொரு கொப்புக்கும் எவர் வாயிலும் நுழைய முடியாத புதுமையான பெயர்களைச் சூட்டப் போகிறேன்… மாமரம் பதறிப் பதறி மன்றாடியது. “வைத்தது போதும் மரங் கொத்தியே… என் கிளைகள் ஒன்றோடொன்று அடித்துக் கொள்ளும் மர்மம், இப்பொழு தான் எனக்குப் புரிகிறது. யார் உயரம் என்று என் முட்டாள் கிளைகள் போடும் அடிதடி என்கொப்புகளுக்கும் வந்துவிடக் கூடாது. ..” இது வருவதற்கு முன்பே, நீ வெளியேற வேண்டும்…" அந்த தலைமை மரங்கொத்தியின் கண்கள் சிவந்தன… அலகுகள் துடித்தன… கத்திக்கத்தி பதிலடி கொடுத்தது. “நான் வெளியேறி விடுவேன் என்று பகல் கனவு காணாதே… உலகப் பறவைகளிலே சிறந்த பறவை என்று பட்டம் வாங்கியிருக்கிறேன். நான் சாதாரணப் பறவை அல்ல… தெய்வப் பறவை என்பதைப் புரிந்து கொள்… இதோ இந்த தோப்பின் வடக்குப் பக்கம் மலைப் பாங்கான உச்சியில், பறவைகளைப் பரிபாலனம் செய்யும் பறவைகளின் அரசான ராசாளி, என்னைப் பகைப் பார்வையாய் பார்ப்பதுபோல் காட்டிக் கொண்டாலும், அது என் குடும்பத் தோழன். இதை விரட்டி விட்டு பரிபாலனத்திற்கு வர நினைக்கும், ‘பக்திப் பரவசமான’ கருடனும் எனக்கு நெருக்கமான நண்பன்… இந்த இரண்டையும் துரத்திவிட்டு கூட்டணி பரிபாலனம் செய்வதற்காக ஆயத்தம் செய்யும், - ‘ஏழு சகோதரிகள்’ என்று செல்லமாக அழைக்கப்படும் காட்டு பூணிக் குருவிகளும் என்னைக் காப்பதாய் வாக்களித்திருக்கும்போது, உன்னை நீ எப்படிக் காப்பாற்ற முடியும்? காற்று என்பக்கம்… கடலும் என்பக்கம்… நிலமும் என் பக்கம்… நீ அடங்கிப் போகவில்லையானால், நான் புயலாவேன்… பூகம்பம் ஆவேன்… எச்சரிக்கை… எச்சரிக்கை… இறுதி எச்சரிக்கை’… தலைமை மரங் கொத்தி, இறக்கைகளை அடித்து, உயரே எம்பி, மேலும், கீழுமாய் வளைவும் சாய்வுமாய் பறந்து, அடித்த இறக்கைகளை நிறுத்தி, அப்புறம் மீண்டும் அடித்து அந்த மரத்திற்கு மேல் ஆல வட்டம் போட்டது… தொண்டு பறவைகளும், தாங்களும் ஆத்திரப்பட்டதாகக் காட்டிக் கொள்ள, அந்த மாமரத்தின் பொந்துகளை பலமாய்க் குத்தின… சில அந்த மாமரத்திற்காக அழுது கொண்டே கொத்தின. வேதனைதாங்காது, விம்மிப்புடைத்த அந்த மாமரத்திற்கு விரக்தி ஏற்பட்டது. இனி செய்வதற்கு ஏதுமில்லை என்பதுபோல் அந்த தோப்பைச் சுற்றுமுற்றும் பார்த்தது… அப்படி பார்க்கப் பார்க்க, வயிறு பற்றி எரிந்தது… கண்கள் ஏக்கமாயின… வேர்க்கால்கள் தடுமாறின. இந்தத் தோப்பு விசித்திரமான, வித்தியாசமான தோப்பு… எல்லாம் அடங்கிய தாவர சங்கமத்தின் ஏகப் பிரதிநிதி… இருபது வகைக்கும் அதிகமான தாவர ரகங்களைக் கொண்டது…. இடையிடையே புல்வெளிகள்… பாலை நிலங்கள்… நீர் நிலைகள்… மலைப் பகுதிகள்… சதுப்பு நிலங்கள்… சூரியனை உள்ளே விடாத காடுகள்… சொல்லின் செல்வர் சத்தியமூர்த்தி சொன்னதுபோல், ஒரே மாதிரியான கழுதைத்தனமாய் இல்லாமல், பல்வேறு வித குதிரைத் தனமானவை… ஒரு கட்டை விரல் பருமனுள்ள ரீங்காரப் பறவை முதல், நிமிர்ந்தால் குதிரை மட்டத்தை எட்டும் தீக்கோழி உள்ளிட்ட இருபத்தேழு இனங்களைச் சேர்ந்த ஆயிரத்தி இருநூறு வகை பறவைகளைக் கொண்ட குட்டி பூமி… இந்த மாமரத்திற்கு தென் மேற்கே மைனாக் கால்களைப் போல் மட்டை கொண்ட பச்சை ஒலைகளைச் சுமக்கும் ஒயிலான தென்னை மரம்… தென் மேற்கு, வட கிழக்கு ஆகிய இரண்டு பருவக் காற்றுகள் தவிர, எந்தக் கொம்பன் காற்றுக்கும் ஆடாத தென்னை… இதன் அடிவாரத்தில் மொட்டைத் தலையும், மார்பில் தொங்கு சதையும் கொண்ட பெரு நாரைகள்… ஆகாய விமானம் அடித்தளத்தில் ஓடுவதுபோல் ஓடி இறக்கைகளை அடித்தபடியே மேலே எம்பும் இந்த பெரு நாரைகள், ஒருவனுக்கு ஒருத்தி என்று கடைசி காலம் வரை வாழ்பவை… இந்த தென்னைக்கு வடக்குப் பக்கம் உள்ள பாக்கு மரம் கிளைகள், விழுதுகள் என்ற ’பாரம்பரிய பெருமைட இல்லாததுதான்… ஆனாலும் எந்த கூத்தாடிப் பறவையும் கூடு கட்ட முடியாமல் நேராய் நிமிர்ந்து நிற்கும் மரம்… இந்த மாமரத்திற்கு வடகிழக்கே உள்ள அத்திமரத்தில் வாழும் பச்சைப் புறாக்களில் ஆண்கள், பெண் புறாக்களைக் கவர்வதற்காக ஒற்றைக் காலில் நின்று கரகம் ஆடுகின்றன… ஒரு பூனை, மரம் ஏறுவதைப் பார்த்ததும், அந்த அத்தி இலைகளோடு இலையாக, தலைகளாய்த் தொங்கி அசைவற் றுக் கிடக்கின்றது… இந்தப் பச்சைப் புறாக்களுக்கும், அத்திக்குமுள்ள உறவைப் பார்த்த மாமரம், சுய இரக்கம் கொண்டது. அதை மறப்பது போல் துக்கித்து, உச்சியைத் தாழ்த்தியது… பின்னர் மீண்டும் சுற்று முற்றும் பார்த்தது… வடகிழக்கு மூலையிலுள்ள கரு வேலமரத்தில், தூக்கணாங் குருவிக் கூடுகள் தொங்குகின்றன. குருவிப் பெண்களை வசியப்படுத்த ஆண் குருவிகள், அந்தக் கூடுகளை அழகியலோடு உருவாக்குகின்றன. வடமேற்கு மூலையில், செம்மண் நிறங் கொண்ட வானம்பாடிகள், புல் மூடிய கூழாங்கல் கூட்டிலிருந்து எழுந்து, கானம் இசைக்கின்றன… மத்திய பகுதியிலுள்ள முரட்டுத்தனமான சோற்றுக் கற்றாழையின் கழுத்துப் பக்கம் ஒரு உள்ளான் குருவி கூடுதட்டி வசிக்கிறது… மாட்டின் குமிழ் போன்ற தோப்புப் பகுதிக்கு அடுத்துள்ள பாலைப் பகுதியில் ஒரு ஒட்டகப் பறவை புதர்ச் செடிகளுக்குள் பயபக்தியோடு போகிறது… அவ்வளவு ஏன்… இதோ இந்த மாமரத்திற்கு அருகேயுள்ள நீர் நிலையில் குவளைச் செடிகளை வளைத்துக் கட்டிய கூட்டில் உள்ள ஒரு ஊதா நிற மயில் கோழி, ஒரு செடியை எடுத்து வாயில் வைத்துக் கொண்டு, தன் பெட்டையைப் பார்த்து வணங்குகிறது… இதே இனத்தைச் சேர்ந்த மஞ்சள் நிற மணற் கோழி, நீர் நிலைகளில் வயிற்று இறக்கைகளை ஈரமாக்கி, கட்டாந்தரையிலுள்ள கூட்டருகே வருகிறது… அங்குள்ள குஞ்சுகள், தாயின் இறக்கைகளை நக்கித் தாகம் தணிக்கின்றன… தாவரங்களை விட்டுவிட்டு, தரையில் கூடு கட்டும் இந்த பறவையைப் பார்த்து தவித்த இந்த மாமரத்திற்கும் ஒரு சின்ன ஆறுதல்… நேராய் வடக்கேயுள்ள, ஒரு முள் முருங்கை… கனத்த அலகுகளையும், அதன் அடிவாரத்தில் குத்து மீசையும் கொண்ட கண்ணான் பறவைகள் “குடும்ப சகிதமாய்,.. அந்த மரத்தையும் துளை போடுகின்றன.” இவற்றை துரத்திவிட்டு அங்கே போவதற்காக இன்னொரு வகையான பெரிய பச்சைக் கண்ணான் பறவை ஒரு விதவை போல் துடிதுடித்து பரபரக்கிறது… இந்தச் சமயத்தில் ‘பறவைகளின் காவல்காரன்’ என்று கருதப்படும் கரிச்சான் குருவி, விளையாட்டாக நாய் போலவும், நரி போலவும், பூனை போலவும் குரலை மாற்றி மாற்றிக் கத்துகிறது… இதனால் முள் முருங்கையைக் குடையும் கண்ணான் பறவைகள் பதுங்குகின்றன… இந்த மாமரம், தனக்கு இப்படி ஒரு கரிச்சான் இல்லையே என்று ஏங்கியது, இந்த கரிச்சானைப் போல் இல்லாது. எங்கிருந்தோ வந்த இன்னொரு வகைக் கரிச்சானின் அடாவடியால்தான், இந்த மரங்கொத்திகள் தன் உடம்பில் ஏறின என்பதை நினைத்து, நினைத்து நெஞ்சம் குமுறியது… எதையும் பார்க்க முடியாமல் கண்களை மூடியது.. சிறிது நேரம் கழித்து கண் திறந்தால், கண்ணெதிரே பல்வேறு வகையான பறவைகள்… ‘சீசன்’ வந்துவிட்டதால் பழைய இறகுகளை உதிர்த்து விட்டு, உடம்பிலுள்ள திரவச் சுரப்பிக் கசிவால் அந்த இறக்கைகளை கழுவி விட்டு, புத்தம் புது பொலிவோடு தோன்றின. “இப்போதுதான் உங்களுக்கு, கண் தெரிந்ததா…” என்று விம்மலுக்கிடையே கேட்ட மாமரம், அப்படிக் கேட்டுவிட்டு அழுதது… பிறகு எதிரேயுள்ள பறவைகளைப் பார்க்கப் பார்க்க, அதற்கு ஆறுதல் ஏற்பட்டது. ஒரு பக்கம் குயில் கூட்டம்… காக்கா ஒல்லியானது போன்ற தோற்றம்… இந்த மாமரத்தில் வாழ்ந்த குயில்கள்தான் இவை… தொலைவில் இந்த தோப்புக்குச் சொந்த மில்லாத ‘குண்டு’ கரிச்சான்களை ஆதரித்த குற்றத்திற்காக மரங்கொத்திகளாலும், மயில்களாலும் விரட்டப்பட்டவை. இந்தக் குயில் கூட்டத்தின் பக்கம் ஒரு சர்வதேசப் பறவை… இன்னொரு பக்கம் இதே குயிலினத்தில் ஒன்றானதும், சொந்தமாய் கூடுகட்டத் தெரிந்ததுமான செம்போத்துப் பறவைக் கூட்டம்… இதற்கும் பக்கபலமாக இன்னொரு சர்வதேசப் பறவை… இந்த இரண்டு கூட்டத்திற்கும் மத்தியில் தேசியப் பறவையான மயில் கூட்டம். இந்த மாமரம் அந்த பறவைக் கூட்டங்களை ஒரே இனமாகக் கருதி முறையிட்டது. “இந்த மரங்கொத்திகள் என்னைப் படுத்துகிறபாடு உங்கள் கண்களில் படவில்லையா” என்புலம்பலோ உங்கள் காதுகளில் ஏறவில்லையா… உங்கள் பொது எதிரியான இந்த மரங்கொத்திகளை துரத்துங்கள்… உங்களை நான் சுமக்கத் தயாராக இருக்கிறேன்… அதற்கு முன் ஒன்றாகச் சேருங்கள்“… செம்பாக்கு நிற இறக்கைகளைக் கொண்ட செம்போத்துப் பறவை மாமரத்திற்கு இப்படி பதில் அளித்தது… “யார் கூடச் சேர்ந்தாலும் இந்த கபடமான குயில் கூட சேரமாட்டேன்… இதோ இந்த கிழட்டுக் குயில் தனக்கு, சொந்தமில்லாத காக்கைக் கூட்டில் முட்டையிட்டு, காக்கையாலேயே தன் குயில் குஞ்சை பிறக்க வைத்தது… அந்தக் குயில் குஞ்சும் காகத்தின் சொந்தக் குஞ்சுகளை கூட்டிலிருந்து கீழே தள்ளிப் போட்டுவிட்டது… காகக் குஞ்சுகள் செத்ததும், இந்தக் குயில் குஞ்சு அரங்கத்திற்கு வந்ததும்தான் மிச்சம்… இந்த கிழட்டுக் குயிலுக்கு, உன்னிடம், தான் உட்கார வேண்டுமென்பதைவிட, தன் குஞ்சை உட்கார வைக்க வேண்டுமென்பதே நோக்கம்… இதைவிட அந்த மரங்கொத்தியே பரவாயில்லை’… மாமரம் ஏதோ பேசப் போனபோது அதை இடைமறித்து, தலைமைக் குயில் பேசிற்று… “இந்த துரோகி செம்போத்தை நம்பாதே மாமரமே. இது செய்த பாவங்களுக்கெல்லாம், நான் பழி சுமந்தேன்… சுமக்கிறேன்… இதற்கு உன்னையும் பிடிக்காது… என்னையும் பிடிக்காது… இதற்குப்பிடித்ததெல்லாம் தொலைவாய் உள்ள ஏரித் தீவில் வாழும் ‘குண்டு கரிச்சான்’தான். பல குரலில் இசைக்கும் திறமை மிக்க இந்த செம்போத்து, குண்டு கரிச்சான் குரலை மட்டுமே ஒலிக்கிறது… இதைவிட அந்த மரங்கொத்தியே இருந்துவிட்டுப் போகலாம்”… அந்த மாமரம் இப்போது தன் கொப்புகளையும், இலைகளையும் குறுக்கி நின்றது. இதைப் பார்க்க சகிக்காத தேசியப் பறவையான மயில் மரத்திற்கு ஆறுதல் சொன்னது. “கவலைப்படாதே மாமரமே! உன்னுடைய இந்த நிலைமைக்கு நாங்களும் காரணம்… இதற்கு பிராயச் சித்தமாக எங்கள் தலைமை மயிலை பறவைகளின் அரசான ராசாளியிடம் அனுப்பி இருக்கிறோம்… அந்த ராசாளி,இதோ வரப் போகிறது… சர்க்கஸில் விளையாட்டாகத் துப்பாக்கி சுடுமே பச்சைக் கிளி, அதன் உதவியோடு, இந்தப் பறவைகளையும், அந்த மரங்கொத்திகளையும் ஒழித்துக் கட்டும்”… அந்த மாமரம், மயில்களை நன்றியோடு பார்த்தபோது, அதன் மேனியில் மரங்கொத்திகள் ஒதுக்கீடு செய்த ஒரு நல்ல சுரங்கத்தில் ஜம்மென்று உட்கார்ந்துள்ள பகல் குருடன் ஆன ஆந்தை, அந்த சுரங்கப் பொந்துக்கு வெளியே முகத்தை மட்டும் நீட்டி கண்களை உருட்டி எச்சரித்தது… “இந்த மரத்தை பொந்துகளாக்கி சமூக நீதி காக்கும் மரங்கொத்தியை துரத்தி விடலாமென்று மனப்பால் குடிக்காதீர்கள்… பறவைகளின் இனமானம் காக்கும் நான் இந்த ஆளும் பறவையின் விசுவாசி… அதன் கேடயம்… எச்சரிக்கிறேன்” அந்த மாமரத்தின் எதிரே அணியணியாய், தனித்தனியாய் நின்ற பறவைகள், அந்த ஆந்தையைப் பார்த்து எள்ளி நகைத்தபோது, அந்த மரமோ, வடதிசை நோக்கி கண் போட்டது… அங்கே தூக்கலான இடத்திலுள்ள ராமசாளிக்காக காத்திருந்தது. ராசாளி வரவில்லை… ஆனாலும் அந்த ராசாளி அங்கிருந்த படியே எல்லா பறவைகளுக்கும் கேட்கும்படி தனது முடிவை கத்திக் கத்தி சொன்னது… “ஏய்… அற்ப மாமரமே… அந்த மரங்கொத்திகள் என் மரியாதைக்குரிய குடும்ப நண்பர்கள்… அவைகளை மரியாதையாய் கொத்தவிடு… அதுவும் சூட்கேஸ் வடிவத்தில் சுரங்கம் போடவிடு”… ராசாளியின் இந்த கொந்தளிப்பில், நடுவில் நின்ற மயில்களில் சில அந்த மரத்திலேறி, மரங்கொத்திகள் கொத்துவதற்கு துணை புரிந்தன… பல மயில்கள் குயிலின் அணியில் சேர்ந்து கொண்டன… ஒரு சில பறவைகள் அங்கும் இங்குமாய் அலைமோதின. ஒரே குழப்பம் ஒரே சண்டை… ஆனால், ஆடி அடங்கிப் போனது அந்த மாமரம்தான்… எதிரேயுள்ள தன்னைக் காக்கவேண்டிய பறவைகளோ, ஒன்றை யொன்று கொத்திக் கொள்கின்றன… மரங் கொத்திகளோடு சண்டை போடுவதைவிட, இந்தச் சண்டை அவைகளுக்கு சுவையாக இருந்தது… இதற்குள், ராசாளி ‘கை’ கொடுத்து விட்டதாலும், சில மயில்கள் சேர்ந்து விட்டதாலும், இடையில் ஓய்வெடுத்த மரங்கொத்திகள், முன்னிலும் வேகமாக அந்த மரத்தை கொத்தித் துளைத்தன. சீசன் முடியும் முன்னால் கொத்த வேண்டிய மிச்ச மீதியை, கொத்திவிட வேண்டுமென்ற வேகம்… ஒரு தொழு நோயாளியைப் போல், அடிவாரம், கிளைகள், கொப்புகள் என்று அத்தனையிலும் கொப்பளங்களாகவும், பட்டை போன சதைகளாகவும், சதை போன எலும்பு களாகவும் தோன்றும் அந்த மாமரம், கண் முன்னாலேயே போரிடும் அந்த இருபெரும் பறவை அணிகளை பார்க்க மனமில்லாது, தென் மேற்கேயுள்ள தென்னை மரத்தை அழுது அழுது பார்த்தது… ஆறுதல் தேடி கேட்டது… “ஒரு காலத்தில் எல்லா மரங்களையும் ஆண்ட, பரம்பரையில் வந்த எனக்கு, ஏற்பட்ட கதியைப் பார்த்தாயா தென்னை நண்பனே”… ‘தோழமைக்கு’ பெயர் போன அந்த தென்னையும் ஆற்றுப் படுத்தியது. “மாமரத் தோழா! மாமரத் தோழா!!”. நான் சொல்லப் போகிற சில கசப்பான உண்மைகளை கவனமாகக் கேள்… பழம்பெருமை பேசிப் பேசியே பத்தாம் பசலியாய் ஆகிப் போன மரம் நீ… தாவரங்களிலே இளிச்சவாய் மரம் ஒன்று உண்டு என்றால், அது நீதான் என்பது விஞ்ஞானபூர்வமான உண்மை… எந்த வகை மரத்திடமும் இல்லாத அளவுக்கு, இருபத்தோரு உயிரினங்கள் உன்னை இம்சிக்கின்றன… உன் பூவுக்குள் பூச்சிகள் முட்டையிட்டு, அவை மாம்பழத்திற்குள்ளும், அதன் கொட்டைக்குள்ளும், பூச்சிகளாய் உருமாறி, பழத்தை அழுக வைப்பதும் கொட்டையை பேடியாக்குவதும், உனக்குப் புரியுமா… மாவிலைத் தோரணம் என்று, நீ தம்பட்டமடிக்கும், உன் இலைகளின் பின்பக்கம் கொப்பளம் கொப்பளமாக இருப்பவை பற்றி அறிவாயா… அவற்றிற்குள், பூச்சிப் புழுக்கள் கூடு கட்டி, உன் இலைச்சத்தை உறிஞ்சுவதை கண்டாயா… பூஞ்செயான காளான்கள் புற்றுநோய் போல், உன் உடம்புக்குள் ஊடுருவி, உட் பகுதியை உச்சி முதல் பாதம் வரை செல்லரிக்கச் செய்ததை உணர்ந்தாயா… இல்லாதவன் பெண்டாட்டி எல்லோருக்கும் அண்ணி என்ற மனிதப் பழமொழிக்கு தாவர உதாரணம் நீ… உன்னை, கொத்தும் இந்த மரங்கொத்திகளால் என்னையோ, அதோ அந்த பாக்கு மரத்தையோ கொத்திப் பார்க்க வரச் சொல் பார்க்கலாம்… அலகை உடைத்து விட மாட்டோமா.. ஏற்கெனவே பலவீனப்பட்ட உன்னை அந்த மரங்கொத்திகளால் கொல்ல முடிகிறது… ஏற்கெனவே கொல்லப்பட்ட கர்ணனை அர்ச்சுனன் கொன்ற கதைதான்“…. “இன்னொன்றையும் கேட்டுக் கொள் தோழா! எஞ்சிய பறவைகளின் சண்டையால், அந்த மரங்கொத்திகளே மீண்டும் உன்னிடம் வரலாம்… உன்னை ஆக்கிரமிக்கலாம்… ஒரு வேளை தனிப் பெரும் எண்ணிக்கையில் வந்தால், மற்ற பறவைகளை விலைக்கு வாங்கலாம்… இந்தக் குயில்கள் தள்ளி வைக்கப்பட்ட மயில்களோடு, உன்னை ஏற்றுக் கொண்டால் ,அடித்துப் பிடித்து பறவை பரிபாலனத்திற்கு ஒரு வேளை வரக் கூடிய அந்த ராசாளி, குயில் அணியை துரத்திவிட்டு, மீண்டும் மரங்கொத்திகளை மரமேற விடாது என்பது என்ன நிச்சயம்?”. இது போய், கருடன் வந்தாலும், அல்லது ஏழு சகோதரிகள் வந்தாலும், அவையும், ராசாளி போலவே நடந்து கொள்ளலாம்“… அந்த மாமரம் நடுங்கிப் போனது. புதிய உண்மைகள் தெரியத் தெரிய, அது விம்மி, விம்மிக் கேட்டது “அப்போ. என் கதி. நான் என்ன ஆவது..?” “பயப்படாதே தோழனே… முதலில் உன் நோயாளித் தனத்தை ஒப்புக் கொள்… மருந்து தானாக கிடைக்கும்… உன் இளிச்சவாய் தனத்தை புரிந்து கொள்… பகுத்தறிவு உடனே வரும்… பழமையை திரும்பிப் பார்…ஆனால் அதில் திரும்பி நடக்காதே… புதுமை வந்து பொருந்தும்… இந்த தோப்பை விட உன்னைப் பெரிதாக நினைக்கும் மனோ வியாதியை போக்க, பிற மரங்களோடு ஒப்புறவை நாடு… அசுர பலம், தேவ பலம் அத்தனையும் கிடைக்கும்… எல்லாவற்றிற்கும் மேலாக, இப்போது நடப்பது பறவைகளின் ஜனநாயகமே அன்றி, நமது ஜனநாயகம் அல்ல என்பதைப் புரிந்து கொள்… பறவைகளிலும் நம் நண்பர்கள் இருக்கிறார்களா… பறவைகள் இல்லாமல் நம் தாவர இனம் பெருகாதுதான். ..ஆனால் அந்தப் பறவைகளுக்கு, ஏறிக் கொள்ளும், சுதந்திரம் இருப்பது போல், அவற்றை ஏற்றுக் கொள்ளலாமா வேண்டாமா என்கிற சுதந்திரம் நமக்கில்லை… நம் மீது திணிக்கப்படும் பறவைகளை மட்டும் ஏற்றுக் கொள்ள வேண்டிய இயலாமைச் சுதந்திரம்… ஆகையால் தாவரங்களின் ஜனநாயகத்திற்காகப் போராடு… போராடப் போராட உன்பலம் உனக்கே தெரியும்… பறவைகளின் கால்களுக்குப் பதிலாக, உன் வேர்களை நம்பு… அப்படி நம்ப, நம்ப, எந்த அக்கிரமப் பறவையும், அனுகூலச் சத்துரு பறவையும் உன்னை அண்ட முடியாது. தோழனே… என்னைப் பார்த்தாவது கற்றுக் கொள்… என் சகோதரா…” கோணையாக இருந்தாலும், கேணையாகப்போகாத அந்தத் தென்னையின் அறிவுரையை இந்த பாவப்பட்ட மாமரம் ஏற்குமா? காலம்தான் பதில் சொல்லும். – தமிழன் எக்ஸ்பிரஸ் - ஏப்ரல் 24- 1996