[] [ஒரு தொழிற்சாலையின் குறிப்புகள்] ஒரு தொழிற்சாலையின் குறிப்புகள் ஜோதிஜி திருப்பூர் மின்னூல் வெளியீடு : http://FreeTamilEbooks.com சென்னை This eBooks is licensed under a Creative Commons Attribution-Non Commercial-No Derives 3.0 Un ported License http://creativecommons.org/licenses/by-nc-nd/3.0/deed.en_US You are free to: Share — copy and redistribute the material in any medium or format The licensor cannot revoke these freedoms as long as you follow the license terms. Under the following terms: Attribution — you must give appropriate credit, provide a link to the license, and indicate if changes were made. You may do so in any reasonable manner, but not in any way that suggests the licensor endorses you or your use. Non Commercial — you may not use the material for commercial purposes. http://deviyar-illam.blogspot.in/ No Derivatives — If you remix, transform, or build upon the material, you may not distribute the modified material. No additional restrictions — You may not apply legal terms or technological measures that legally restrict others from doing anything the license permits. At the end of the book, add the contents from the page. Free Tamil EBooks எங்களைப் பற்றி http://freetamilebooks.com/about-the-project/ This book was produced using PressBooks.com. உள்ளடக்கம் - ஒரு தொழிற்சாலையின் குறிப்புகள் - உரிமை - என் பார்வையில்… .. - ஒரு தொழிற்சாலையின் குறிப்புகள் ....... - என்னுரை - 1. 1. பஞ்சபாண்டவர்கள் - 2. 2 . என் கேள்விக்கு என்ன பதில் ? - 3. 3. பணமே பயம் போக்கும் மருந்து - 4. 4. து . மு - து . பி - 5. 5. யோசிக்காதே ? ஓடிக் கொண்டேயிரு ! - 6. 6. என் பெயர் மாடசாமி - 7. 7. உழைத்து ( மட்டும் ) வாழ்ந்திடாதே ! - 8. 8. பலி கொடுத்து விடு ! - 9. 9. பாறைகளைப் பிளக்கும் விதைகள் - 10. 10. நேர்மையே உன் விலை என்ன ? - 11. 11. காற்றில் பறக்கும் கௌரவம் - 12. 12. கொள்ளையடிப்பது தனிக்கலை - 13. 13. வேலையைக் காதலி - 14. 14 வண்ணங்களே வாழ்க்கை - 15. 15 பணக்காரன் பேசுவதெல்லாம் தத்துவமே - 16. 16 எந்திர மனிதர்கள் - 17. 17. அவள் பெயர் ரம்யா - 18. 18 பொருளாதாரம் உருவாக்கும் அவதாரங்கள் - 19. 19. பெயர் மட்டுமல்ல உழைப்பிலும் ராஜா தான் - 20. 20 துணிவே துணை - ஒரு தொழிற்சாலையின் குறிப்புகள் .. - ஒரு தொழிற்சாலையின் குறிப்புகள் – ஒரு அலசல் - ஒரு தொழிற்சாலையின் குறிப்புகள்… .. - ஒரு தொழிற்சாலையின் குறிப்புகள் ....... - ஒரு தொழிற்சாலையின் குறிப்புகள்… .. - இதுவரையிலும் வெளிவந்துள்ள என் மின் நூல்கள் - FreeTamilEbooks.com - எங்களைப் பற்றி - உங்கள் படைப்புகளை வெளியிடலாமே 1 ஒரு தொழிற்சாலையின் குறிப்புகள் [] ஒரு தொழிற்சாலையின் குறிப்புகள்… .. ( திருப்பூர் பின்னலாடைத் தொழிலை அலசும் தொடர் ) ஜோதிஜி திருப்பூர் மின்னஞ்சல் – powerjothig@yahoo.com வகை – அனுபவம் வெளியீடு : த . ஸ்ரீனிவாசன் http://FreeTamilEbooks.com மின்னஞ்சல் – tshrinivasan@gmail.com மேலட்டை உருவாக்கம் : மனோஜ் குமார் மின்னஞ்சல் :  socrates1857@gmail.com எல்லாக் கருத்துக்களும் நூல் ஆசிரியருடையவையே . உரிமை Creative Commons Attribution-Non Commercial-No Derives 3.0 Un ported License 2 உரிமை This eBooks is licensed under a Creative Commons Attribution-Non Commercial-No Derives 3.0 Un ported License http://creativecommons.org/licenses/by-nc-nd/3.0/deed.en_US You are free to: Share — copy and redistribute the material in any medium or format The licensor cannot revoke these freedoms as long as you follow the license terms. Under the following terms: Attribution — you must give appropriate credit, provide a link to the license, and indicate if changes were made. You may do so in any reasonable manner, but not in any way that suggests the licensor endorses you or your use. Non Commercial — you may not use the material for commercial purposes. http://deviyar-illam.blogspot.in/ No Derivatives — If you remix, transform, or build upon the material, you may not distribute the modified material. No additional restrictions — You may not apply legal terms or technological measures that legally restrict others from doing anything the license permits. At the end of the book, add the contents from the page. Free Tamil EBooks எங்களைப் பற்றி http://freetamilebooks.com/about-the-project/ 3 என் பார்வையில்… .. [] என் பார்வையில்… .. 2014 ஆம் ஆண்டு என் எழுத்துப் பயணத்தில் மிக முக்கியமான ஆண்டாகும் . தேவியர் இல்லம் வலைபதிவில் பல தரப்பட்ட விசயங்களை எழுதி வந்த போதிலும் என்னை உணர்ந்து என் நான் சார்ந்து இருக்கும் தொழில் வாழ்க்கை அனுபவங்களை அசைபோட்டு எழுதப்பட்ட தொடர் தான் “ஒரு தொழிற்சாலையின் குறிப்புகள்” . அமெரிக்காவில் இருந்து செயல்பட்டு வரும் வலைத்தமிழ் இணைய தளத்தில் இருபது வாரங்களாக தொடராக வெளிவந்தது . வாசித்தவர்கள் அக்கறையுடன் விமர்சனம் தந்தார்கள் . ஒவ்வொரு விமர்சனமும் அவர்களின் ஆழ்ந்த வாசிப்புத் தன்மையை உணர்த்தியது . திருப்பூரில் வாழ்ந்து வருகின்ற பலரும் இந்தத் தொடர் எங்களுக்கு பயன் உள்ளதாக இருந்தது என்றார்கள் . புத்தகமாக மாற்றி விடுங்க என்று அக்கறையுடன் சொன்ன பலருக்கும் என் அன்பு . ஆனால் இணைய தளத்தின் வாயிலாக மின் நூலாக வெளியிடும் போது நாம் நினைத்துப் பார்க்க முடியாத இடத்தில் உள்ள அத்தனை பேர்களுக்கும் இந்தத் தொடர் சென்று விடும் என்ற நம்பிக்கையின் காரணமாக இதனை மின் நூலாக வெளியிடுகின்றேன் . வாய்ப்பும் நேரமும் இருந்தால் உங்கள் விமர்சனங்களை , இந்தத் தொடர் குறித்த கருத்துக்களை எனக்கு தெரிவித்தால் மகிழ்ச்சியடைவேன் . நட்புடன் ஜோதிஜி திருப்பூர் 10.01.2015 E-Mail – texlords@gmail.com [] [] உள்ளே 1. பஞ்சபாண்டவர்கள் 2. என் கேள்விக்கு என்ன பதில் ? 3. பணமே பயம் போக்கும் மருந்து 4 து . மு - து . பி 5. யோசிக்காதே ? ஓடிக் கொண்டேயிரு ! 6. என் பெயர் மாடசாமி . 7. உழைத்து ( மட்டும் ) வாழ்ந்திடாதே ! 8. பலி கொடுத்து விடு ! 9. பாறைகளைப் பிளக்கும் விதைகள் 10. நேர்மையே உன் விலை என்ன ? 11. காற்றில் பறக்கும் கௌரவம் 12. கொள்ளையடிப்பது தனிக்கலை 13. வேலையைக் காதலி . 14. வண்ணங்களே வாழ்க்கை 15. பணக்காரன் பேசுவதெல்லாம் தத்துவமே 16. எந்திர மனிதர்கள் . 17. அவள் பெயர் ரம்யா 18. பொருளாதாரம் உருவாக்கும் அவதாரங்கள் 19. பெயர் மட்டுமல்ல உழைப்பிலும் ராஜா தான் . 20. துணிவே துணை 4 ஒரு தொழிற்சாலையின் குறிப்புகள் ....... [] ” ஒரு தொழிற்சாலையின் குறிப்புகள் ” தொடர் வலைத்தமிழ் இணையதளத்திற்கு முதல் தொடர் என்கிற ரீதியில் எங்களுக்கு இது முதல் அனுபவம் . சில வாரங்களுக்கு முன்புதான் ஆரம்பித்ததுபோல் தோன்றினாலும் இருபது வாரங்களைக் கடந்து வாசகர்கள் ஆவலுடன் எதிர்நோக்கும் தொடராக வெற்றிகரமாக வெளிவருவதற்கு முழுமுதல் காரணம் திருப்பூர் ஜோதிஜியின் எழுத்து நடை மற்றும் தொடருக்கு ஏற்ற வண்ண வண்ண படங்கள் ஆகியவையே என்று கருதுகிறேன் . ஒரு தொழிற்சாலை குறித்து எழுதப்பட்ட இந்தத் தொடருக்கும் வாசகர்களிடம் கிடைத்த ஆதரவும் , அவர்கள் வழங்கிய கருத்துரையும் எங்கள் தளத்திற்கு சிறப்பான அங்கீகாரத்தை தந்தது என்றால் அது முற்றிலும் உண்மையாகும் . எந்தத் துறையைப் பற்றி வேண்டுமானாலும் எழுதலாம் . ஆனால் வாசகர்கள் படிக்க விரும்பும் நடையில் , எளிய மொழியில் எழுதினால் அது வெற்றியைப் பெறும் என்பதற்கு இந்தத் தொடர் முக்கிய உதாரணமாகும் . இந்தத் தொடர் ஆரம்பித்தது முதல் இன்று வரை பல்வேறு ஆலோசனைகளை , வாசகர்களின் மன ஓட்டங்களை அறிந்து , தன் அனுபவங்களைப் பகிந்துகொண்டு வலைத்தமிழ் ஆசிரியர் குழுவினருடன் கைகோர்த்துப் பயணித்தது எங்களுக்கு ஒரு மறக்க முடியாத அனுபவம் . ஜோதிஜியின் ஆலோசனையின் பேரில் பல்வேறு தொழில்நுட்ப மாற்றங்களைத் தளத்தில் செய்தோம் , இன்னும் ஒருசில மாற்றங்கள் விரைவில் முடிய இருக்கிறது . இது வலைத்தமிழ் வளர்ச்சிக்கு மிகவும் முக்கியமான ஒன்றாகும் . ” ஒரு தொழிற்சாலையின் குறிப்புகள் ” தொடர் மாடசாமி , ரம்யா , ராஜா போன்ற பாத்திரங்கள் வழியே தங்களின் வலியை , வாழ்க்கையை மிக நேர்த்தியாகப் பதிவு செய்து இன்றைய எதார்த்த நிலையை ஆசிரியர் ஜோதிஜி படம்பிடித்துக் காட்டியுள்ளார் . ஒவ்வொரு தொழிலும் உழைப்பவர்கள் மட்டும் ஒரு பக்கமும் , உழைப்பை உறிஞ்சு வாழ்பவர்கள் மறுபக்கமும் இருப்பது இயல்பு தானே ? இதைத்தான் இந்த பாத்திரங்கள் வழியே ஜோதிஜி படம் போட்டு காட்டியுள்ளார் . இடையிடையே ஆயத்த ஆடைத்துறையில் பணிபுரியும் தொழிலாளர்கள் வாழ்க்கை சார்ந்த பல்வேறு குறிப்புகள் , முதலாளிகளின் மனோபாவம் , தான் சந்தித்த அனுபவங்கள் வழியே உணர்ந்து எழுதிய மேற்கோள்கள் போன்றவற்றை மிக நேர்த்தியாக எழுதியுள்ளார் . ஒவ்வொரு தொழிலும் பணத்தைத்தான் முதன்மை படுத்துகின்றது . பணம் தங்கள் வாழ்க்கையைச் சிறப்படைய வைக்கும் என்று நம்புகின்றார்கள் . ஆனால் எத்தனை பணம் சேர்ந்தாலும் எவரும் நிம்மதியாக இருப்பதில்லை . அதற்குப் பின்னால் உள்ள காரணம் என்ன ? என்பதனை தனக்குரிய பாணியில் தான் பார்த்த தொழில் சமூகத்தை வைத்து பலவித கருத்துக்களைச் செறிவாக வழங்கியுள்ளார் . எல்லா உழைப்புக்குப் பின்னாலும் வெற்றி கிடைத்து விடுவதில்லை . குறிப்பிட்ட உழைப்பைத் தவிர வேறு எதற்கும் இங்கே எளிதில் அங்கீகாரம் கிடைத்து விடுவதில்லை . ஏன் ? அதற்கான காரணங்கள் என்ன ? என்பதனை தன்னை உதாரணமாகக் கொண்டு தான் பெற்ற தோல்வியை வெட்கப்படாமல் எடுத்துரைத்து அதன் வழியே புதிய கருத்துக்களை வழங்கியுள்ளார் . இவர் இந்தத் தொடரில் எழுதியுள்ள பல நிகழ்வுகளில் நேர நிர்வாகம் குறித்து எழுதப்பட்ட பல சம்பவங்கள் அனைவருக்கும் பயன்தரக்கூடியது . மொத்தத்தில் ” ஒரு தொழிற்சாலையின் குறிப்புகள் ” ஆயத்த ஆடைத்துறையை மட்டும் விவரித்துச் செல்லாமல் இதன் மூலம் அனைவருக்கும் பயன்படும் வகையில் ஒரு தொழிற்சாலையைத் தாண்டிய கருத்துக்களாக விளங்குகிறது . ஒவ்வொரு வாரமும் பதியப்படும் வாசகர்களின் கருத்துக்கள் இந்தத் தொடரின் வெற்றியை உறுதிசெய்தது . இந்தத் தொடரைப் தொடர்ந்து படித்துவிட்டு அமெரிக்காவில் பணிபுரியும் பேராசிரியர் ஒருவர் அழைத்து ஜோதிஜியின் ” ஒரு தொழிற்சாலையின் குறிப்புகள் ” போல் , தமிழகக் கண்டுபிடிப்புகள் , குறிப்பாக ஜி . டி . நாயுடு குறித்துத் தான் ஒரு தொடர் எழுத வலைத்தமிழில் வாய்ப்பிருக்குமா ? என்று எங்கள் குழுவினரிடம் கேட்டார் . மேலும் ஜோதிஜியின் ” ஒரு தொழிற்சாலையின் குறிப்புகள் ” என்னை வெகுவாகக் கவர்ந்தது என்று குறிப்பிட்டார் .. இதுபோல் இங்கே இந்தத் தொடர் வெளியானது முதல் எங்களுக்குப் பலதரப்பட்ட இடங்களில் இருந்தும் , பல உயர்பதவிகளில் வகிப்பவர்களிடமிருந்து ஆக்கப்பூர்வமான உற்சாகமான பாராட்டுக்கள் வந்து கொண்டே இருந்தன . ஜோதிஜி கடந்த 2009 முதல் ‘ தேவியர் இல்லம் ‘ என்ற வலைபதிவின் மூலம் பலதரப்பட்ட விசயங்களைக் குறிப்பாகத் தற்காலச் சமூகம் குறித்து , தான் கடந்து வந்த வாழ்க்கை குறித்து எழுதி வருகின்றார் . தன் அனுபவங்களை எவ்வித பாசாங்கு இல்லாத நடையில் பட்டவர்த்தனமாக எழுதுவது இவரின் சிறப்பாகும் . தான் பணிபுரியும் ஆயத்த ஆடைத்துறையில் உள்ள அக்கிரம நிகழ்வாகட்டும் , ஈழம் சார்ந்த நாம் அறியாத தகவலாகட்டும் எதையும் மேம்போக்காக எழுதாமல் தான் உணர்ந்தவற்றை , தன் மொழியில் எழுதிவிட்டு நகர்வது இவரின் சிறப்பு . தான் எது எழுதினாலும் அதில் ஒரு சமூக நேர்மை , அன்றாட வாழ்வியலில் இன்றைய நெருக்கடிகள் குறித்துப் பதிவு செய்துவரும் ஜோதிஜி , இதில் தமிழகத்தின் இன்றைய சூழலில் இயங்கும் ஒரு தொழிற்சாலையின் நிலை , அதன் உட்கட்டமைப்பு மற்றும் சவால்கள் , தொழிற்சாலையை நடத்தும் முதலாளிகளின் நிலை , தொழிலாளர்களின் நிலை , அரசு மற்றும் போட்டியாளர்களின் சவால்கள் என்று பல்வேறு கோணத்தில் இந்தத் தொடரை செதுக்கியுள்ளார் . இவர் இதற்கு முன்னால் ” டாலர் நகரம் ” என்றொரு புத்தகத்தின் வாயிலாகத் திருப்பூர் குறித்துப் பொதுவான பார்வையைப் பதிந்துள்ளார் . அதனைத் தொடர்ந்து வலைத்தமிழ் இணைய இதழில் திருப்பூருக்குள் உள்ள தொழிற்சாலையைக் குறித்து எழுதியிருப்பது மிகவும் பொருத்தமான ஒன்ற . பாகம் ஒன்று பாகம் இரண்டு என்பதாக எடுத்துக் கொள்ளலாம் . இது தொழிற்சாலைகள் குறித்த ஆவணம் , குறிப்பாகத் திருப்பூர் ஆடைத் தொழில் குறித்த முழுமையான ஆவணம் . இது ஒரு நூலாக வெளிவரும்போது இந்தத் துறையில் வேலைவாய்ப்பு தேடும் இளைஞர்கள் , தொழில் ஈடுபட்டு வரும் தொழில்முனைவோர் என்று பலருக்கும் பயனளிக்கும் . இதை ஆங்கிலத்திலும் மொழிபெயர்ப்பது தமிழ் தாண்டி அனுபவங்கள் சென்று சேர வழிவகுக்கும் . இதை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து விரைவில் வெளியிட வாலைத்தமிழ் குழு இசைந்துள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன் .. தொடர் நிறைவடையும் இந்தத் தருணத்தில் இந்த முதல் தொடரை எழுதிய ஜோதிஜிக்கு வலைத்தமிழ் ஆசிரியர் குழு சார்பாக எங்களது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன் . இதன்மூலம் வலைத்தமிழ் ஆசிரியர் குழுவிற்குக் கிடைத்த அனுபவமும் , ஜோதிஜியின் எழுத்துக்களைத் தொடர்ந்து படித்து வரும் இணைய நண்பர்களின் ஒத்துழைப்பும் , இத்தொடர் மூலம் தானும் தன் அனுபவங்களைப் பகிர வாய்ப்பிருக்குமா என்று கேட்டுவரும் எழுத்தாளர்களுக்கும் எங்களது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம் .. நன்றி .. ஆசிரியர் குழு சார்பாக ச . பார்த்தசாரதி வலைத்தமிழ் . காம் (U.S.A) partha@valaitamil.com 5 என்னுரை [] ஒரு தொழிற்சாலையின் குறிப்புகள் ……. உணவு , உடை , உறைவிடம் என இந்த மூன்றையும் மனித வாழ்க்கையில் மிக முக்கியம் என்று சுட்டிக் காட்டுகின்றார்கள் . ஆதி காலத்து மனித சமூகத்தில் இந்த மூன்றுக்கும் தனிப்பட்ட முக்கியத்துவம் கொடுக்க வேண்டிய அவசியமில்லாமல் மூன்றுமே அவரவர் அன்றாட வாழ்வில் இயல்பான அங்கமாகவே இருந்தது . காட்டில் கிடைத்த கிழங்கு வகைகளே உணவாக மாறியது . இலைகளே ஆடையாக இருந்தது . மலைக்குகைகளே வசிக்கப் போதுமானதாக இருந்தது . காலப்போக்கில் ஒவ்வொன்றும் மாறியது . இன்றைய சூழ்நிலையில் உணவு என்பது ருசியின் அடிப்படையிலும் , ஆடைகள் நாகரிகத்தின் வெளிப்பாடாகவும் , உறைவிடம் அந்தஸ்தின் அங்கமாகவும் மாறியுள்ளது . ஆனால் இந்த இடத்தில் நாம் யோசிக்கவேண்டிய ஒன்று உண்டு . இன்னமும் உலகம் முழுக்க வாழ்ந்து கொண்டிருக்கின்ற ஏழைகள் பட்டினியுடன் தூங்கப் போவதும் , சாலையோர குடிசைகளையே தங்கள் உறைவிடமாகக் கருதி வாழ்நாள் முழுக்க வாழ்ந்து கொண்டிருப்பவர்களையும் நாம் பார்த்துக் கொண்டு தானே இருக்கின்றோம் . ஆணோ , பெண்ணோ , ஏழையோ , பரமஏழையோ எவராயினும் உடைகள் இல்லாமல் வாழ முடிகின்றதா ? மானத்தை மறைக்க என்கிற ரீதியில் ஒட்டுத்துணியாவது தங்கள் உடம்போடு ஒட்டிக் கொண்டு வாழ்பவர்களைத்தானே நாம் பார்த்துக் கொண்டிருக்கின்றோம் . மொத்தத்தில் மூன்று வேளை பசியோடு வாழ்ந்தாலும் , வாழ்நாள் முழுக்கத் தங்களுக்கென்று தங்க இடமில்லாமல் வாழ்ந்த போதிலும் அத்தனை பேர்களுக்கும் உடைகள் என்பது அவசியமானதாகத்தானே இருக்கின்றது . அந்த உடைகளைப் பற்றித் தான் இந்தத் தொடரில் பேசப் போகின்றோம் . நீங்கள் உலகின் எந்தப் பகுதியில் வாழ்ந்தாலும் நீங்கள் விரும்புவது பிராண்ட் வகையான ஆடைகள் என்ற போதிலும் ஒவ்வொரு ஆடைகள் உருவாக்கத்திற்குப் பின்னாலும் ஓராயிரம் விசும்பல் மொழி மறைந்துள்ளது என்பதை உணர்ந்து இருப்பீர்களா ? வெள்ளை ஆடைகள் என்றாலும் , நீங்கள் விரும்பம் வண்ணம் என்ற போதிலும் ஒவ்வொரு ஆடை உருவாக்கத்திற்குப் பின்னாலும் வடியும் இரத்தக் கறையை நாம் பார்க்கப் போகின்றோம் . உலகத்தில் உள்ள ஒவ்வொரு ஆடைத் தொழிற் சாலைகளிலும் இன்றைய காலகட்டத்தில் பலதரப்பட்ட நவீன வளர்ச்சி வந்துள்ளது . மனித ஆற்றல் அதிக அளவு தேவைப்படாமல் எந்திரங்களுக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுக்கும் அளவிற்கு விஞ்ஞானம் நமக்குப் பல வசதிகளைத் தந்துள்ளது . ஆனால் பங்களாதேஷ் நாட்டில் உள்ள ஆடைத் தொழிற்சாலைகளில் இன்றும் மூன்று வேளை ரொட்டிக்காக மட்டுமே பணிபுரிபவர் லட்சக்கணக்கான மக்கள் இருக்கின்றனர் . மனித மாண்புகளை உடைத்து எந்திரமாக மாற்றப்பட்ட மனிதக்கூட்டம் தான் இலங்கையில் உள்ள ஆடைத் தொழிற்சாலையில் பணிபுரிகின்றனர் . தாய்லாந்து , இந்தோனேசியா , வியட்நாம் , சீனா போன்ற நாடுகளில் உள்ள ஒவ்வொரு தொழிற்சாலையின் சுவற்றில் காது வைத்துக் கேட்டால் நாம் விக்கித்துப் போய் நிற்கும் அளவிற்கு ஏராளமான சோகக்கதைகள் உண்டு . ஏனிந்த அவலம் ? என்பதனை நான் இருக்கும் சூழ்நிலையில் , நான் பணிபுரிந்த திருப்பூர் நிறுவனங்கள் வாயிலாக உங்களுக்குச் சொல்லப்போகின்றேன் . ஆடைகளை மட்டும் பேசப்போவதில்லை . ஆடைகளோடு பின்னிப்பிணைந்த நூலிழைகள் போல வாழ்ந்து கொண்டிருக்கும் லட்சக்கணக்கான தொழிலாளர்களின் வாழ்க்கையை ஒவ்வொரு நாளும் பார்த்துக் கொண்டிருப்பவன் என்கிற முறையில் ஒரு தொழிற்சாலையின் குறிப்புகளை இங்கே எழுதி வைக்க விரும்புகின்றேன் . நான் கடந்து வந்த பாதையை , பார்த்த , பழகிய , பாதித்த மனிதர்களைப் பற்றி உங்களிடம் பகிர்ந்து கொள்ள ஆசைப்படுகின்றேன் . காதல் , காமம் , ஏக்கம் , இயலாமை , வன்மம் , குரோதம் , பித்தலாட்டம் எனக் கலந்து கட்டி கதம்பம் போல் உள்ள இந்தக் கவுச்சி வாடையைத்தாண்டி கண்ணாடி ஷோரூம் வரைக்கும் பயணித்து வரும் இந்த ஆடைகளைப்பற்றிப் பேசப் போகின்றோம் . [] [pressbooks.com] 1 1. பஞ்சபாண்டவர்கள் [] 1. பஞ்சபாண்டவர்கள் “ சார்… உங்களைப் பஞ்சபாண்டவர்கள் அழைக்கின்றார்கள்” என் அறையின் கண்ணாடிக் கதவை பாதித் திறந்தபடி உள்ளே நுழையாமல் தலையை மட்டும் நீட்டியபடி என் உதவியாளர் பெண் குறும்பாகச் சிரித்துக் கொண்டே ஆங்கிலத்தில் சொன்னபோது அந்த வாரத்தில் முடிக்க வேண்டிய கோப்புகளோடு போராடிக் கொண்டிருந்தேன் . இருபது வயதுக்குரிய இளமையும் , அழகும் உள்ள இளைஞிக்கு இயல்பாகவே குறும்புத்தனம் அதிகம் . அவரின் இயல்பான கலாய்த்தல் என்பதாக எடுத்துக் கொண்டு அடுத்து முடிக்க வேண்டிய கோப்புகளை எடுக்கத் துவங்கினேன் . “ சார்… உண்மையிலேயே உங்களை அழைக்கின்றார்கள் . இப்பொழுது தான் மேலேயிருந்து தகவல் வந்தது” என்றார் . வாரத்தின் துவக்க நாளில் இதென்ன கொடுமை ? என்று மனதில் நினைத்துக் கொண்டே புருவத்தைத் தூக்கி “ஏதும் பிரச்சனையா ?” என்று சைகையால் கேட்டேன் . அவரும் அதே புருவ மொழியில் “தெரியலையே ?“ என்று சொல்லிவிட்டு “இன்றைக்கு மாட்டிக் கொண்டீர்களா ?” என்று ஒரு விதமாகச் சுழித்துச் சிரித்தபடியே வேறுபக்கம் நகர்ந்தார் . “ பஞ்சபாண்டவர்கள்” என்றால் நான் பணிபுரிந்த நிறுவனத்தில் பலருக்கும் பேதி வரவழைக்கும் சமாச்சாரம் . நிறுவனத்தில் மொத்தமாக ஐந்து இயக்குநர்கள் . ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு பணி . மனிதவளம் , நிதி , நிர்வாகம் , உற்பத்தி , சந்தைப்படுத்துதல் ( மார்க்கெட்டிங் ) என்று ஒவ்வொருவரும் அவரவர் துறையில் கில்லாடி ரங்காவாக இருப்பது பிரச்சனையல்ல . பேசியே கொன்று விடுவார்கள் . அவர்கள் பேசுவதை மட்டுமே கேட்டுக் கொண்டு இருக்க வேண்டும் . எனக்கு எப்போது செயலாக்கம் முக்கியம் . பேசும் நேரத்தில் குறிப்பிட்ட வேலையைச் செய்து விடலாமே ? என்று பரபரப்பாய் செயல்படுவேன் . ஆனால் அவர்களோ ஒவ்வொரு செயல்பாட்டுக்கும் விதமான அறிக்கையை ( ரிப்போர்ட் ) எதிர்பார்ப்பார்கள் . அவர்கள் எதிர்பார்க்கின்ற அறிக்கைகள் இல்லாமல் வாயைத் திறந்தால் என்றால் தயவு தாட்சண்டயமில்லாமல் ‘ கெட் அவுட் ‘ என்பார்கள் . அவர்கள் விருப்பங்களை என்னால் புரிந்து கொள்ள முடிந்த போதிலும் நான் பணிபுரியும் சூழ்நிலையை அவர்களால் ஏற்றுக் கொள்ள முடியாமல் என்னை அவர்கள் விரும்பும் நடைமுறைகளுக்கு மாற்றுவதிலேயே குறியாய் இருப்பார்கள் . என்னால் அவர்கள் வட்டத்தில் பொருத்திக் கொள்ள முடியாமல் ஒவ்வொரு முறையும் தடுமாறி வேர்த்து விறுவிறுத்து விக்கிப்போய் நிற்பேன் . அவர்கள் விரும்பும் நிர்வாகம் மேலைநாட்டு முறையைச் சார்ந்தது . ஆனால் உள்ளே நிறுவன செயல்பாடுகளோ கூவம் நதிக்கரையின் ஓரத்தில் கூவிக்கூவி காய்கறி விற்கும் நிலையில் இருக்கும் . இதையெல்லாம் விட மற்றொரு முக்கியமான பிரச்சனை ஒன்று உண்டு . உற்பத்திக்கான இயக்குநர் என்ற பதவியில் இருந்த பெண்மணி நிறுவன முதலாளியின் மனைவி . அவர் உத்திரபிரதேசத்தைச் சேர்ந்தவர் . இயல்பாகவே அவருக்கும் எனக்கும் ஏழாம் பொருத்தம் . அவர் நடைமுறைக்குச் சாத்தியமில்லாத ஒன்றைச் சொல்வார் . ” அதற்கு வாய்ப்பில்லை . இப்படித்தான் நடைமுறையில் சாத்தியமாகும் ” என்பேன் . அவருக்குக் கோபம் பொத்துக் கொண்டு வந்து விடும் . ” நான் ஐஈ (INDUSTRIAL ENGINEER) துறையிடம் கேட்டுவிட்டேன் . அவர்கள் சாத்தியமே என்கிறார்கள் . ஏற்றுமதி தொழிற்சாலையில் பல்வேறு பிரிவுகள் உண்டு . அதில் ஒன்று ஐஈ . அவர்களின் முக்கியமான பணி என்பது ஒரு ஆடையை எத்தனை பேர்கள் வைத்து தைக்க வேண்டும் . எத்தனை மணி நேரத்தில் தைத்து முடிக்க வேண்டும் ? எத்தனை எந்திரங்கள் கொண்டு அதனைச் செயல்படுத்த வேண்டும் என்று பல்வேறு கணக்கீடுகள் அடிப்படையில் அறிக்கை தயார் செய்து என்னைப் போன்ற உற்பத்திப் பிரிவில் உள்ள உயர் பதவியில் உள்ளவர்களிடம் கொடுக்க அவர்கள் சொல்வதை இம்மி அளவு கூடப் பிசகாமல் நிறைவேற்ற வேண்டும் . காரணங்கள் ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது என்பதை விட அது குறித்து எவரும் கவலைப்படவே மாட்டார்கள் . தொழிலாளர்கள் வந்தார்களா ? வராமல் முன்னறிவிப்பு இன்றி விடுமுறை எடுத்தார்களா ? போன்ற நடைமுறை எதார்த்தங்களைக் குறித்துக் கவலைப்படாமல் எல்லாமே ‘புள்ளிவிபரப்புலி’ போலவே கணக்கு அடிப்படையில் செயல்பட வேண்டும் நினைக்கும் புத்திசாலிகள் அடங்கிய கூட்டமது . எனக்கு இந்த இடத்தில் தான் பிரச்சனைகள் உருவாகும் . ஐம்பது பேர்கள் இருந்து செய்ய வேண்டிய வேலைகளை எப்படி முப்பது பேர்களால் முடியும் ? என்று கேட்டால் அது உன்பாடு ? என்று ஒதுங்கி விடுவார்கள் . இயக்குநராக இருக்கும் பெண்மணிக்கு ஐஈ கூட்டம் சொல்வது தான் வேதவாக்காக இருக்கும் . வாக்குவாதம் செய்தால் ” நான் சொல்வதை மட்டும் செய் ” என்பார் . நானும் விடாப்பிடியாக ” அப்படியென்றால் என் பதவியில் நீங்க சொல்வதைக் கேட்கும் நபரை வைத்திருக்கலாமே ?” என்பேன் . அவர் முகம் சிவந்து விடும் . அவர் கணவர் குறுக்கிடுவார் . மனைவியின் பெயரைச் சொல்லி ஆங்கிலத்தில் மென்மையாகச் சொல்வார் . ” அவர் ஏற்கனவே டென்சன் பார்ட்டி . நீ அவருக்கிட்டே பேசப் பேச அவரும் பேசிக் கொண்டே தான் இருப்பார் . உனக்கு என்ன வேண்டுமோ ? அதை மட்டும் கேட்டுப் பழகு ? மற்ற விசயங்களை அவரே முடிவு செய்யட்டுமே ?” என்பார் . மற்ற இயக்குநர்களும் எனக்கு ஆதரவாகக் களத்தில் இறங்குவார்கள் . கணவர் சொல்லி நிறுத்தியதும் அவர் முகம் மாறத் தொடங்கும் . ஏற்கனவே கோதுமை நிறத் தோலில் இருக்கும் அவரின் முகப் பொலிவில் ரத்த ஓட்டம் அதிகமாவதைப் பார்க்க முடியும் . இதன் காரணமாகப் பெரும்பாலான கூட்டத்திற்கு என்னை அழைத்தால் அவர் இருக்க மாட்டார் . என் திமிர்த்தனத்தையும் இந்தப் பாஞ்ச் கூட்டம் பொறுத்துக் கொள்ள முக்கியக் காரணம் ஒன்று உண்டு . அவர்கள் கேட்கும் உற்பத்தியை விட இரண்டு மடங்கு எடுத்துக் கொடுத்து விடுவதுண்டு . உற்பத்தி இயக்குநரின் அடுத்த நிலையில் இருந்த எனக்குக் கொடுத்திருந்த பதவி ‘ உதவி உற்பத்தி இயக்குநர் ‘. ஒரு பின்னலாடை நிறுவனத்தில் உற்பத்திப் பிரிவில் புரொடக்சன் மானேஜர் , பேக்டரி மானேஜர் என்ற இரண்டு பதவிகள் உண்டு . அதற்கு மேலே உற்பத்திக்கான பொது மேலாளர் ( ஜெனரல் மேனேஜர் ) என்ற பதவியும் உண்டு . ஜி . எம் . பதவிக்குப் பதிலாக இங்கே இயக்குநர் என்ற பதவியை உருவாக்கியிருந்தார்கள் . முதலாளியின் பெண்மணிக்கு அந்தப் பொறுப்பு கொடுக்கப்பட்டு இருந்ததே தவிர அவர் அலங்கார பொம்மையாகத்தான் இருந்தார் . அவரை நான் தான் இயக்கிக் கொண்டிருந்தேன் . இந்தச் சமயத்தில் ஒரு கொசுவர்த்திச் சுருளை பற்ற வைத்து விடுகின்றேன் . திருப்பூர் பற்றிச் சில தனிப்பட்ட தகவல்கள் சிலவற்றைத் தெரிந்து வைத்துக் கொள்ளுங்களேன் . திருப்பூர் என்றால் உங்களுக்கு எவையெல்லாம் நினைவுக்கு வரும் ? சிலருக்குப் பள்ளியில் படித்த திருப்பூர் குமரன் குறித்துத் தெரிந்துருக்க வாய்ப்புண்டு . இன்னும் சிலருக்கு பனியன் ஜட்டி சல்லிசான விலையில் கிடைக்கும் என்று தோன்றும் . ஆனால் இந்தியாவின் அந்நியச் செலவாணியைத் தாங்கிப் பிடிக்கும் முக்கியமான ஊர் திருப்பூர் . ஏறக்குறைய வருடந்தோறும் 15000 கோடிகளுக்கு மேல் திருப்பூர் வாரி வழங்கிக் கொண்டிருக்கின்றது . 50 கிலோமீட்டர் சுற்றளவில் உள்ள இந்த ஊர் நம்பியிருப்பதும் , நம்பிக்கையுடன் தொழில் செய்து கொண்டிருப்பவர்கள் நம்பி கை வைத்திருப்பது பஞ்சின் மேல் மட்டுமே . பஞ்சு தான் நூலாக மாறுகின்றது . நூல் தான் விதவிதமான அளவுகளில் ஆடைக்குத் தேவையான துணியாக மாற்றம் பெறுகின்றது . வண்ணங்கள் சேர இறுதியில் வெட்டி தைக்கப்பட்ட ஆடைகள் உலகில் உள்ள முக்கியமான அத்தனை நாடுகளுக்கும் விமானம் / கப்பல் வழியாகப் போய்ச் சேருகின்றது . இந்தியாவில் பஞ்சு விளைச்சல் அதிகமுள்ள மாநிலம் குஜராத் . அதனைத் தொடர்ந்து ஆந்திரா . “ எல்லாமே பஞ்சு பஞ்சாய் பறந்து போச்சு” என்று பேச்சு வாக்கில் பலரும் சொல்லக் கேட்டு இருப்பீங்க ? இந்தப்பஞ்சு பல கோடி வர்த்தகத்தை ஆளக்கூடியது . பல கோடி மக்களையும் இந்தியாவில் இந்தத் துறை வாழ வைத்துக் கொண்டிருக்கின்றது . இந்தியாவில் உள்ள பல்வேறு மாநிலங்களில் விளையக்கூடிய பஞ்சுப் பொதிகள் தான் திருப்பூரை வாழ வைத்து மக்களை வாழ்வில் உயர வைத்துக் கொண்டிருக்கின்றது . விளைச்சலில் வந்த பஞ்சுப் பொதிகளைத் தனியார் மற்றும் அரசு சார்ந்த நிறுவனங்கள் மொத்தமாக வாங்கிப் பொதுச் சந்தைக்குக் கொண்டு வருகின்றார்கள் . பஞ்சு தன் பயணத்தைத் தொடங்குகின்றது . பல தொழில் நகரங்களுக்குச் செல்கின்றது . பல நிலைகளில் சுத்தப்படுத்தப்படுகின்றது . வகை வகையாகத் தரம் பிரிக்கப்படுகின்றது . பஞ்சாலைக்குச் சென்று இறுதியில் தரம் வாரியான நூலாக மாறுகின்றது . இறுதியில் இந்த நூல் தான் திருப்பூர் போன்ற ஊர்களுக்கு வருகின்றது . திருப்பூருக்குள் இரண்டு விதமான உலகம் உண்டு . ஒன்று உள்நாட்டுக்கு (LOCAL MARKET) மட்டும் என்று செயல்படும் பனியன் , ஜட்டி சம்மந்தப்பட்ட தயாரிப்பு வகைகள் . மற்றொன்று ஹொசைரி கார்மெண்ட்ஸ் (HOSIERY GARMENTS) என்றழைக்கப்படும் (EXPORT MARKET) வெளிநாட்டு வர்த்தகம் . இந்த வர்த்தகத்தில் பலதரப்பட்ட பிரிவுகள் உள்ளது . ஒவ்வொன்றைப்பற்றியும் படிப்படியாகப் பார்ப்போம் . இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் பின்னலாடைத் தொழில் இருந்த போதிலும் கடந்த இருபது ஆண்டுகளாகத் திருப்பூர் என்ற ஊரின் வளர்ச்சியை எவராலும் தடுக்க முடியவில்லை . ஆனால் இன்றுவரையிலும் அரசாங்கத்தின் ஒத்துழைப்பு ஒரு சதவிகிதம் கூட இல்லை என்பது கசப்பான உண்மை . தொடக்கத்தில் கோயமுத்தூர் மாவட்டத்திற்குள் ஒரு சிறிய ஊர் என்கிற அளவில் இருந்த திருப்பூர் 2009 முதல் தனி மாவட்டம் என்ற அந்தஸ்துடன் உயர்ந்து இன்று மாநகராட்சி என்ற நிலைக்கு மாறியுள்ளது . ஒவ்வொரு காலகட்டத்திலும் திருப்பூர் மாறிக் கொண்டே தான் வந்துள்ளது . அதேபோலச் சிறிய அளவில் தொழில் செய்து கொண்டிருந்தவர்கள் இன்று மிகப் பெரிய தொழில் அதிபர்களாகவும் மாறியுள்ளனர் . இன்றைய சூழலில் பின்னலாடைத் தொழில் (KNITS) என்பது சர்வதேசத்துடன் போட்டியிட்டே ஆக வேண்டிய தொழிலாக உள்ளது . உலகளாவிய போட்டியில் வெல்ல வேண்டிய பலதரப்பட்ட சவால்கள் இந்தத் தொழிலுக்கு உள்ளது . சர்வதேச பன்னாட்டு நிறுவனங்களுடன் போட்டியிட வேண்டிய திருப்பூர் பின்னலாடைத் தொழில் என்பது திருப்பூரில் எப்படியுள்ளது ? இங்குள்ள நிறுவனங்களின் நிர்வாக முறைகள் , அணுகுமுறைகள் மாறியுள்ளதா ? காலத்திற்கேற்ப இந்தத் தொழில் வளர்ந்துள்ளதா ? இந்தத் தொழிலில் உள்ள தொழிலாளர்களின் நிலை எப்படியுள்ளது ? இந்திய அரசாங்கம் திருப்பூரை எப்படிப் பார்க்கின்றது ? போன்ற பல கேள்விக்குறிக்கான பதிலை நாம் தேட வேண்டும் . யோசித்துக் கொண்டே என் அறையை விட்டு வெளியே வந்து முதல் தளத்திற்குச் செல்லும் மாடிப்படியில் ஏறத் தொடங்கினேன் . முதல் தளத்தில் தான் அலுவலகம் சார்ந்த முக்கியக் கூட்டங்கள் நடக்கும் அறையுள்ளது . அதே அறையில் வெளிநாட்டில் இருந்து வருபவர்களுடன் கூடிய கலந்துரையாடலும் நடக்கும் . வெளிநாட்டில் இருந்து வருபவர்களைப் பையர் ( BUYER ) என்கிறார்கள் . அவர்கள் ஒரு நிறுவனத்திற்குக் கொடுக்கின்ற ஒப்பந்தங்களை ஆடர் (ORDER) என்கிறார்கள் . பையர் என்றால் திருப்பூர் முதலாளிகளுக்குக் கடவுள் என்று பெயர் . பலரின் வளர்ச்சிக்கும் வீழ்ச்சிக்கும் இந்தக் கடவுளே காரணமாக இருப்பார் . பஞ்சபாண்டவர்கள் எதற்காக நம்மை அழைக்கின்றார்கள் ? என்பதை யோசித்துக் கொண்டே மாடிப்படியில் ஏறிக் கொண்டிருந்தேன் . அப்போது தான் இந்த நிறுவனத்திற்குள் வந்த கதை என் மனதிற்குள் நிழலாடியது . 2 2 . என் கேள்விக்கு என்ன பதில் ? [] 2 . என் கேள்விக்கு என்ன பதில் ? ” அத்துவானக்காடு . ஆள் நடமாட்டம் கூட அதிகமாக இருக்காது . அந்த நிறுவனத்தைச் சுற்றிலும் உள்ள இடங்களை நாம் பார்க்கும் போது சுடுகாடு போலவே தெரியும் . அந்தப் பகுதியில் அந்த நிறுவனத்தின் கட்டிடம் மட்டும் தனியாகத் தெரியும் . ஊருக்குள் இருந்த கட்டிடத்தில் இருந்து மாறி இரண்டு வருடத்திற்கு முன் தான் அங்கே மாறியிருக்கின்றார்கள் . ஒரு இறக்குமதியாளர் (BUYER) எதிர்பார்க்கும் அத்தனை வசதிகளும் உள்ளே உள்ளது . அந்த நிறுவனத்தின் பக்கத்தில் வீடுகள் கூட எதுவும் கிடையாது . இப்போது தான் ஒவ்வொன்றாக வந்து கொண்டிருக்கின்றது . தூரத்தில் சாலையில் இருந்து நாம் பார்த்தால் அந்த நிறுவனத்தின் மேலே உள்ள வடிவம் மட்டும் தெரியும் . அந்தக் கூரை வடிவம் பச்சை நிறத்தில் இருக்கும் . காரணம் இயற்கைக்குத் தொந்தரவு இல்லாத அமைப்பில் உருவாக்க வேண்டும் என்ற நிலையில் அந்த நிறுவனத்தை அமைத்துள்ளனர் “ என் நண்பர் எனக்கு முதல்முறையாகப் பஞ்சபாண்டவர்கள் குறித்து அறிமுகம் செய்து வைத்த போது அந்த நிறுவனத்தைப் பற்றி அடையாளம் என்று இப்படித்தான் சொன்னார் . அப்பொழுது திருப்பூருக்குள் இப்படிப்பட்ட நிறுவனமும் உள்ளதா ? என்ற ஆச்சரியம் என் மனதில் உருவானது . நண்பர் சொன்னபடி குறிப்பிட்ட நாளில் அடையாளம் கண்டு அந்தக் கட்டிடத்தின் வாசலில் நின்று கொண்டிருந்தேன் . நுழைவாயிலில் செக்யூரிட்டி மக்கள் அவர்கள் பணியைச் செய்து கொண்டிருந்தனர் . ஆட்களும் , வாகனங்களும் உள்ளே வெளியே வந்து போய்க் கொண்டிருக்க அந்த இடமே சுறுசுறுப்பாக இருந்தது . தூரத்தில் இருந்து அந்தக் கட்டிடத்தையும் பார்வையிட்டதற்கும் அருகே வந்து பார்த்ததற்கும் நிறைய வித்தியாசங்கள் தெரிந்தன . நான் வாகனத்தைச் செக்யூரிட்டி சொன்னபடி ஓரமாக வைத்து விட்டு அவர்கள் வாகனத்திற்கென்று தந்த அடையாள அட்டையை வாங்கி வைத்துக் கொண்டேன் . நான் வந்துள்ள விபரத்தைப் பற்றி அவர்களிடம் சொன்னபோது உள்ளே அழைத்துக் கேட்டனர் . அந்தச் சமயத்தில் இந்த நிறுவனத்தை அறிமுகம் செய்து வைத்த நண்பர் சொன்ன வாசகம் மீண்டும் ஒரு முறை என் மனதில் வந்து போனது . ” உன்னைப் போலக் கரடுமுரடான ஆட்களுக்கு ஏற்ற நிறுவனம் அது தான் . உன் திறமைகளைப் பற்றித் தெரியாமலேயே இங்கே குப்பை கொட்டி கொண்டு இருக்காதே . நீ அடுத்தக் கட்டத்திற்கு நகர வேண்டும் . உன்னுடைய அடுத்தக் கட்ட வளர்ச்சியென்பது திட்டமிடப்பட்ட நிர்வாக அமைப்பின் கீழ் தான் இருக்க வேண்டும் . அது போன்ற அமைப்பில் செயல்படும் போது தான் உன் திறமைகளின் மதிப்பீடு உனக்கே புரிய வரும் ” என்றார் . தொடர்ந்து சொன்ன விசயங்கள் தான் என்னை எந்த அளவுக்குப் புரிந்துள்ளார் என்பதை உணர்ந்து கொள்வதாக இருந்தது . ” கடிவாளம் போட்டது போல இருக்கும் . அதே சமயத்தில் உன்னை மெருகேற்றிக் கொள்ள உதவியாய் இருக்கும் . திருப்பூருக்குள் இன்னமும் சரியான நிர்வாக அமைப்பு எந்த நிறுவனத்திலும் உருவாக்கப்பட வில்லை . உருவாக்கும் ஆசையும் எவருக்கும் இல்லை . ஆனால் சிறு தொழில் போலச் செயல்படும இவர்களால் நீண்ட நாட்கள் தாக்குப் பிடிக்க முடியாது .” என்று நண்பர் பேசிய போது எனக்குச் சற்று குழப்பமாகவே இருந்தது . நிர்வாகத்திற்குச் சிஸ்டம் வேண்டும் என்கிறார் . தன்னை அதற்குள் பொருத்திக் கொள்ள வேண்டும் என்கிறார் . ஆனால் அதுவரையிலும் நான் பார்த்த ஒவ்வொரு நிறுவனத்திலும் தலையில்லா முண்டம் போலத்தான் நிர்வாக அமைப்பு இருந்தது . அதற்குள் தான் முதல் பத்து வருடங்கள் குப்பை கொட்டிக் கொண்டிருந்தேன் . என் மேல் உள்ள அக்கறையின் காரணமாகவும் , என் திறமைகளின் மேல் அவருக்கிருந்த நம்பிக்கையில் பால் என்னை அடுத்தக் கட்டத்திற்கு நகர்த்தி விடக் குறியாக இருந்தார் . அப்போது தான் நான் பணிபுரிந்து கொண்டிருந்த நிறுவனத்திற்கு ஒரு நாள் வந்திருந்த போது வேறு சில உரையாடல்களுடன் பஞ்சபாண்டவர்கள் இருந்த நிறுவனம் பற்றியும் அங்குள்ள தேவையைப் பற்றியும் கூறினார் . எல்லா வசதிகளும் இருந்து உற்பத்திப் பிரிவில் சரியான தலைமைப் பொறுப்பு இல்லாத காரணத்தால் மாதம் குறைந்தபட்சம் ஒரு லட்சம் ஆடைகள் ஏற்றுமதி செய்ய வேண்டிய நிர்வாகம் கடந்த ஆறுமாதம் 25000 ஆடைகளை மட்டுமே ஏற்றுமதி செய்து கொண்டிருக்கிறது ” என்றார் . ” இதன் காரணமாக மொத்த நிர்வாகமும் நிதிச் சுமையில் தள்ளாடிக் கொண்டிருக்கின்றது ” என்பதைக் கூடுதல் தகவலாகச் சொன்னார் . நண்பரிடம் சங்கடப்படாமல் சட்டென்று கேட்டேன் . அப்படியென்றால் மாதச் சம்பளமே சரியாக வராதே என்றேன் . ஆமாம் இரண்டு மாதத்திற்கு ஒரு முறை தான் சம்பளம் போடுகின்றார்கள் என்றார் . ஏன் இப்படிப்பட்ட நிறுவனத்தில் என்னைத் தள்ளிவிட ஆசைப்படுகின்றீர்கள் என்ற போது அவர் யோசிக்காமல் பேசிய வார்த்தை எனக்குச் சிரிப்பை வரவழைத்தது . நீ சென்றால் மாத சம்பளம் சரியாகப் போடும் அளவுக்கு உன்னால் மொத்த நிர்வாகத்தையும் மாற்றிவிட முடியும் என்றார் . தொடர்ந்து பேசிய போது அங்கே இருந்த நிர்வாக அமைப்பைப் பற்றி என்னால் புரிந்து கொள்ள முடிந்தது . அங்குள்ள நிர்வாக அமைப்பில் ஐந்து பேர்கள் இருக்கின்றார்கள் . அங்கே அவர்களைப் பஞ்சபாண்டவர்கள் என்பார்கள் . அவர்களைத் தாண்டி உள்ளே நுழைந்து விட்டால் போதும் . அதன் பிறகு உன்னை அவர்கள் விடவே மாட்டார்கள் . அவர்கள் கேட்கும் கேள்விகளுக்குப் பொறுமையாகப் பதில் அளி . படபடப்பில் உளறிவிடாதே . அமைதியாக அவர்களைச் சமாளித்து உள்ளே சென்று விடு நண்பர் என்னிடம் சொல்லியவற்றை வார்த்தையை யோசித்துக் கொண்டே செக்யூரிட்டி மக்கள் எழுதித் தரச் சொன்ன தகவல்களை அவர்கள் கொடுத்த காகிதத்தில் எழுதியபடி நிறுவனத்தின் உள் பகுதியை நோட்டம் விட்டேன் . ஆச்சரியமாக இருந்தது . வெளிப்புற தோற்றத்திற்குச் சம்மந்தம் இல்லாமல் உள்புறம் இருந்தது . தெளிவாக நேர்த்தியாக ஒவ்வொரு பகுதியும் திட்டமிட்டு வடிவமைக்கப்பட்டு இருந்தது . ஒரு ஆய்த்த ஆடை ஏற்றுமதி நிறுவனத்தைப் பார்வையிடும் பார்வையிட வரும் வெளிநாட்டு நபர் ( பையர் ) என்னவெல்லாம் எதிர்பார்பாரோ அவையெல்லாம் கனகச்சிதமாக இருந்தது . ஒவ்வொரு இடமும் சுத்தமாக இருந்தது . உள்ளே பணியில் இருந்த பணியாளர்கள் சுறுசுறுப்பாகச் செயல்பட்டுக் கொண்டிருந்தனர் . மொத்த நிர்வாகமும் சுகாதாரத்தில் அதிகக் கவனம் செலுத்துவதை உணர்ந்து கொள்ள முடிந்தது . நிச்சயம் இங்கே உள்ளே நுழைந்தாக வேண்டும் என்ற எண்ணம் என் மனதில் உருவானது . செக்யூரிட்டி மக்கள் கேட்ட தகவல்களை எழுதிக் கொடுத்ததும் , நான் வந்த காரணத்தைப் படித்து விட்டு உள்ளே அழைத்துப் பேசினர் . உள்ளே இருந்து அனுமதி கிடைத்ததும் எனக்கு விசிட்டர் பாஸ் என்ற அட்டையை என் கழுத்தில் கட்டிக் கொள்ள அறிவுறுத்தினர் . ஒருவர் நிறுவனத்தின் வரவேற்பறையை நோக்கி அழைத்துக் கொண்டு சென்றார் . நீண்ட சாலை போன்ற பாதையின் செயற்கையாக உருவாக்கப்பட்டிருந்த சிமெண்ட் தளத்தில் நடந்து சென்றேன் . இரண்டு பக்கமும் வெட்டிவிடப்பட்ட அழகுச் செடிகள் . ஒவ்வொன்றையும் கூர்மையாகக் கவனித்துக் கொண்டே வரவேற்றையின் உள்பகுதியில் நுழைந்த போது அடுத்த ஆச்சரியம் காத்திருந்தது . வரவேற்பரை நீண்ட ஹால் போலவே இருந்தது . தாராளமாக ஒரு மினி கூட்டமே நடத்தலாம் . அந்த அளவுக்கு விசாலமாக இருந்தது . பணச்செழிப்பின் தன்மை ஒவ்வொரு இடத்திலும் தெரிந்தது . நான் வந்துள்ள விபரம் குறித்து உள்ளே தகவல் சென்று இருக்கும் போல . வரவேற்றையில் நடுநாயமாக அமர்ந்திருந்த பெண்மணி என்னைக் கண்டதும் என் பெயர் சொல்லி நீங்க மேலே செல்லாம் என்றார் . அவரின் உதவியாளர் என்னை மேலே அழைத்துக் கொண்டு சென்றார் . நான் நுழைந்தது முதல் ஒவ்வொரு செயல்பாடும் விரைவாக நடந்து கொண்டிருந்தது . என்னைப் போலவே பலரும் அங்கே காத்துக் கொண்டிருந்தனர் . எனக்கு அங்கு ஒவ்வொன்றும் ஆச்சரியமாகவே இருந்தது . என்க்கு அங்கே கிடைத்த மரியாதையை விட நண்பருக்கு அந்த நிறுவனத்தில் இருந்த செல்வாக்கைப் பற்றி என்னால் உணர்ந்து கொள்ள முடிந்தது . முதல் தளத்தில் உள்ள ஒவ்வொரு தடுப்புகளையும் தாண்டிச் சென்ற போது அங்கேயிருந்த அலுவலகம் சார்ந்த நிர்வாக அமைப்பை புரிந்து கொள்ள முடிந்தது . ஒவ்வொரு பிரிவின் தொடக்கத்திலும் மேலே எழுதி வைக்கப்பட்டிருந்ததை வைத்து ஒவ்வொரு துறையையும் பற்றி என்னால் புரிந்து கொள்ள முடிந்தது . அலுவலகம் முழுக்கப் பரவியிருந்த குளிர் என் உடம்பை ஜில்லிட வைத்துக் கொண்டிருந்தது . நடந்து சென்று கொண்டிருந்த போது பக்கவாட்டு பகுதியைப் பார்த்தேன் . சுவற்றின் பாதிப்பகுதியை கண்ணாடி மூலம் தடுக்கப்பட்டு உருவாக்கியிருந்தார்கள் . கண்ணாடி தடுப்புத் தொடக்கம் முதல் கடைசி வரைக்கும் இருந்த காரணத்தால் மேலே இருப்பவர்களால் எந்த இடத்தில் இருந்து பார்த்தாலும் கீழ் தளத்தில் செயல்பட்டுக் கொண்டிருந்த தொழிற்சாலையின் மொத்த விஸ்தீரணமும் தெரியும்படி இருந்தது . தொழிற்சாலையில் ஏராளமான தொழிலாளர்கள் பணியில் இருந்தனர் . 500 க்கும் மேற்பட்டவர்கள் இருக்கக்கூடும் என்று யோசித்துக் கொண்டே என்னை அழைத்துக் கொண்டு சென்று கொண்டிருந்த பெண்மணியைத் தொடர்ந்து நடந்து சென்று கொண்டிருந்தேன் . நான் பார்த்த போது மொத்த தொழிற்சாலையும் சுத்தமாகத் தெரிந்தது . மிகக் குறுகிய நேரத்தில் என் மனதில் அங்கே பார்த்த ஒவ்வொன்றையும் வைத்து பல கணக்குகள் போட்டு வைத்துக் கொண்டேன் . என் நண்பர் சொன்ன இந்த நிறுவனத்தின் பலமும் பலவீனமும் புரிந்தது . சுருக்கமாகச் சொன்னால் பில்டிங் ஸ்ட்ராங் . பேஸ்மெண்ட் வீக் என்பதாகக் கற்பனையில் வைத்துக் கொண்டேன் . நான் நுழைய வேண்டிய அறையைக் காட்டிவிட்டு கூட வந்த பெண்மணி நகர்ந்து சென்று விட்டார் . நான் அந்த அறையின் உள்ளே நுழைவதற்கு முன் மரியாதையின் பொருட்டு லேசாகத் தட்டி விட்டு அறையின் உள்ளே செல்ல அங்கே மற்றொரு உலகம் எனக்கு அறிமுகமானது . அது கலந்துரையாடல் நடக்கும் இடமது . நீண்ட மேஜையும் சுற்றிலும் நாற்காலியும் உயர்தரமான வடிவமைப்பில் உருவாக்கியிருந்தார்கள் . மெல்லிய இசை அந்த அறை முழுக்க ஊடுருவி கொண்டிருந்தது . தேவையான அளவு மட்டுமே வெளிச்சம் வந்து கொண்டிருந்தது . ஒரு பக்கத்தில் நான் பார்க்க வந்த ஐந்து பேர்களும் எனக்காகக் காத்திருந்தனர் . அதில் ஒருவர் மட்டும் நாற்பது வயது மதிக்கக்தக்க பெண்மணி . மற்ற அத்தனைபேர்களும் கணவான் கணக்காக இருந்தனர் . மனதிற்குள் இருந்த தயக்கத்தையும் , உள்ளே ஓடிக் கொண்டிருந்த பலவித யோசனைகளையும் ஒதுக்கி வைத்து விட்டு அவர்கள் சுட்டிக் காட்டிய நாற்காலியில் அமர்ந்தேன் . நான் ஏற்கனவே மின் அஞ்சல் வழியே அனுப்பியிருந்த என் சுயவிபர குறிப்புகளை ஒருவர் மாற்றி ஒருவர் படித்துக் கொண்டிருந்ததை வேடிக்கை பார்த்தபடி மனதிற்குள் சிரித்துக் கொண்டே அலர்ட் ஆறுமுகம் போல அவர்களின் கேள்விகளை எதிர்கொள்ளத் தயாராக இருந்தேன் . என் சிந்தனைகள் இருகூறாகப் பிரிந்து நின்றது . ஒன்று அவர்களின் யாரோ ஒருவர் திடீரென்று கேள்வி கேட்பார்கள் . நாம் தயாராக இருக்க வேண்டும் . அதே சமயத்தில் அவர்கள் கேட்கும் கேள்விகள் சார்ந்த விசயங்களுக்கு அப்பாற்பட்ட ஆய்த்த ஆடைத் தொழில் சார்ந்த பலவித எண்ணங்கள் என் மனதில் அலையடித்துக் கொண்டிருந்து . உலகில் உள்ள மற்ற துறைகளை ஒப்பிடும் போது ஆய்த்த ஆடைத் தொழில் என்பது வினோதமானது . திருப்பூருக்குள் முறைப்படுத்த முடியாத நிலையில் தான் இந்தத் தொழில் இன்று வரையிலும் நடந்து கொண்டிருக்கின்றது . மற்ற துறைகள் போல இதன் நிர்வாக அமைப்பை ஒரு கட்டமைப்புக்குள் அடக்க முடியாத நிலையில் தான் உள்ளது . மேலைநாடுகளில் உள்ளது போல இந்தத் தொழிலுக்கென்றோ சிஸ்டம் என்பதோ , தீர்மானிக்கப்பட்ட வரையரை என்பதே இன்று வரையிலும் இல்லை . ஆனாலும் எல்லோரும் தொழிலில் இருக்கின்றார்கள் . அதிகப் பணம் வைத்திருப்பவர்களும் , பணம் எதுவுமே இல்லாதவர்களும் கூட இந்தத் தொழிலில் இருக்கத்தான் செய்கின்றார்கள் . தினசரி ஆயிரம் ரூபாய் முதலீடு போட்டு 300 ரூபாய் லாபம் சம்பாரித்து இதுவே போதும் என்பவர்களும் சரி , மாதம் ஐந்து கோடிக்கு வரவு செலவு செய்து தலையில் முக்காடு போட்டுக் கொண்டிருப்பவர்களையும் பார்த்துக் கொண்டு தான் இருக்கின்றேன் . இது ஏன் ? என்பதை விட இது இப்படித்தான் என்று இந்தத் தொழிலில் உள்ள அத்தனை பேர்களும் கடந்து போய்க் கொண்டு தான் இருக்கின்றார்கள் . ஐந்து வருடத்திற்கு ஒரு முறை நூற்றுக் கணக்கான பேர்கள் காணாமல்போய்விட அடுத்த நபர்கள் உள்ளே வந்து அவர்கள் உழைப்பை கொட்டிக் கொண்டு பணம் என்ற மாயமானை துரத்திக் கொண்டுருக்கின்றார்கள் . சிலருக்குச் சிக்குகின்றது . பலரோ வலைக்குள் மாட்டிக் கொண்டு தவிக்கின்றார்கள் . திருப்பூருக்குள் நுழைந்த முதல் பத்து வருடங்களில் நான் கற்ற பலவித அனுபவங்கள் ஏராளமான பாடங்களையும் , படிப்பினைகளையும் தந்த போதிலும் எந்த இடத்திலும் சுய சிந்தனைகளை உபயோகிக்க வாய்ப்பு கிடைத்ததே இல்லை . நாம் இருக்கும் பதவி , நமக்கு மேலே இருப்பவர்களின் ஆதிக்கம் இரண்டுக்கும் நடுவே தான் நம்மை நிலை நிறுத்திக் கொள்ள வேண்டியதாக இருந்தது . இது தவிரப் பணிபுரியும் நிறுவனத்தின் நிர்வாக அமைப்பின் தெளிவற்ற தன்மை என் கூட்டாஞ்சோறு கலவையாக ருசியற்ற தொழில் வாழ்க்கையைத் தான் வாழ வேண்டியதாக இருந்தது . இந்தத் தொழிலில் உள்ள சவால்களைத் தாண்டியும் பல விசயங்களைச் சாதிக்க முடியும் என்ற நம்பிக்கை எனக்குள் இருந்த போதிலும் அதற்காக வாய்ப்பு எனக்கு உருவாகவே இல்லை . காரணம் எவரும் நமக்கேன் வம்பு ? என்று ஒதுங்கிச் சென்று விடவே தயாராக இருந்தனர் . முதலாளிக்கு பல பயங்கள் . அவருக்கு அடுத்த நிலையில் இருந்தவர்களுக்கே நமக்கென்ன லாபம் ? இந்த இரண்டுக்கும் நடுவே இருந்த ஒவ்வொரு நிர்வாகமும் குறிப்பிட்ட காலத்திற்குள் செல்லரித்த மரம் போல எப்போது வேண்டுமானாலும் முறிந்து விழ தயாராகவே இருந்தது . அப்படித்தான் திடீரென்று ஒரு விழவும் செய்தது . முதல் வருடம் 50 கோடி வரவு செலவு செய்து கொண்டிருந்த நிறுவனத்தின் சொத்துக்கள் அடுத்த வருடத்தில் வங்கியின் ஏலத்திற்கு வந்த கதையெல்லாம் நிறையப் பார்த்த காரணத்தால் என் மனதில் ஒருவித தேக்க நிலை உருவாகியிருந்தது . நாம் ஒரு நிர்வாகத்தின் நிறை குறைகளை அலசி அடுத்தக் கட்டத்தைப் பற்றிப் பேச விரும்பினாலும் எவரும் ஆதரிக்கத் தயாராக இருக்க மாட்டார்கள் . ” உன் அதிகப்பிரசங்கித்தனம் இங்கே தேவையில்லை ” என்பதாகத்தான் ஒரு வட்டத்திற்குள் என்னை அடைத்து வைத்திருந்தார்கள் . ஆனால் இங்கே ஒரு கட்டமைப்புக்குள் இருப்பது போலவே இருந்தது . மென்பொருள் துறை போலத் துறை சார்ந்த செயல்பாடுகள் இருப்பதாகத் தெரிந்தது . இந்த நிறுவனத்தை அறிமுகப்படுத்திய நண்பரும் இதையே தான் என்னிடம் வேறுவிதமாகச் சொல்லியிருந்தார் . ” நமக்குத் திறமை இருக்கிறது என்று நம்புவது தவறில்லை . ஆனால் திறமையை எந்த இடத்தில் எப்படிப் பயன்படுத்துக்கின்றோம் என்பதில் தான் நம் வெற்றி அடங்கியுள்ளது ” என்றார் . அவர் சொன்னதை மனதில் வைத்துக் கொண்டே இங்கே நாம் சற்று அடக்கி வாசிக்க வேண்டும் என்று யோசித்தபடியே அவர்களின் கேள்விகளை எதிர்கொள்ளத் தயாராக இருந்தேன் . முதல் கேள்வி மனிதவளத்துறை இயக்குநரிடமிருந்து வந்தது . ” உங்களுக்குக் கொடுக்கப்பட்ட பொறுப்பில் இருந்து தொழிலாளர் நலன் சார்ந்து என்னவெல்லாம் செய்ய ஆசைப்படுவீர்கள் ?” என்றார் , பதில் சொல்ல வேண்டிய நான் அவர்கள் எதிர்பார்க்காத அளவுக்கு மற்றொரு கேள்வியை அவரிடமே கேட்டேன் .” [] 3 3. பணமே பயம் போக்கும் மருந்து [] 3. பணமே பயம் போக்கும் மருந்து ” நீங்கள் தொழிலாளர்கள் நலன் குறித்துச் சிந்திப்பது இருக்கட்டும் . முதலில் உங்கள் நிறுவனத்தின் தற்போதைய நிதி சார்ந்த செயல்பாடுகள் திருப்திகரமாக இருக்கின்றதா ?” நான் இப்படியொரு கேள்வியைக் கேட்பேன் என்று அந்த அறையில் இருந்த பாஞ்ச் கூட்டம் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள் . வேலை தேடி வந்தவன் வேலை கொடுப்பவர்களிடமே தைரியமாகவே கேட்டு விட்ட போதிலும் எனக்குள் சின்னக் குறுகுறுப்பு இருக்கத்தான் செய்தது . அதையும் மீறியும் கேட்கக் காரணம் ஒரு நிறுவனத்தின் நிர்வாக முறைகள் பாராட்டத்தக்கதாக இருக்கலாம் . ஆனால் ஆதாரம் என்பது பணம் மட்டுமே . காசு தான் கடவுள் . பணம் தான் எல்லாவற்றையும் தீர்மானிக்கும் வல்லமை கொண்டது . வாரச்சம்பளம் , மாதச்சம்பளம் , துணை மற்றும் சார்பு நிறுவனங்களுக்கு அந்தந்த சமயத்தில் கொடுக்க வேண்டியது என் ஒவ்வொன்றும் சரியாக இல்லாவிட்டால் இரத்தம் இல்லாத உடம்பு போலக் களையிழந்து ஜீவனற்று இருக்கும் . கோமா நிலையில் இருப்பவரை வைத்து என்ன செய்ய முடியும் ? பலருக்கும் சுமையாகத்தான் தெரியும் . நண்பர் இந்த நிறுவனத்தைப் பற்றிச் சொன்னதை விட உள்ளே வந்து பார்த்த வரையிலும் அப்படித்தான் இந்த நிறுவன செயல்பாடுகளும் இருந்தது . ஒவ்வொரு நிலையிலும் அதிகப்படியான செலவுகளை வாரி இறைத்துக் கொண்டிருந்தனர் . ஒரு நிறுவனத்தின் வளர்ச்சி என்பதனை செய்து வைத்துள்ள , செய்து கொண்டிருக்கின்ற அலங்காரங்கள் மட்டும் தீர்மானித்து விடாது . திருப்பூருக்குள் குப்பை போல நிறுவனத்தை வைத்திருப்பவர்கள் குறுகிய காலத்திற்குள் கோபுர உயரத்திற்கு வளர்ந்த பலரையும் பார்த்துள்ளேன் . ஆனால் இங்கு எல்லாமே தலைகீழாக இருந்தது . ” மாடல் பேக்டரி ” என்ற பெயரில் மடத்தனமான நிர்வாகத்தை நடத்திக் கொண்டிருந்தனர் . யோசித்துக் கொண்டிருந்த என்னை ஒருவரின் பேச்சு என்னை இயல்பான நிலைக்குக் கொண்டு வந்து நிறுத்தியது . அமைதியாக இருந்த அறையில் ஒருவர் மட்டும் பேசினார் . ” எதை வைத்து இந்தக் கேள்வியைக் கேட்கிறீர்கள் ?” என்றார் . பிறகு தான் தெரிந்தது அவர் தான் இந்த நிறுவனத்தில் முதன்மை நிர்வாகியாக இருப்பவர் . நிறுவனத்தில் பாதிக்கும் மேற்பட்ட பங்குகள் அவர் குடும்பத்திடம் இருந்தது . அவர் மனைவியும் சேர்ந்து நிர்வாகப் பங்களிப்புகளில் இருப்பதை உள்ளே நுழைந்த பிறகே என்னால் தெரிந்து கொள்ள முடிந்தது . இந்தப் பெண்மணி தான் எனக்குக் கண்ணில் விழுந்த தூசியாக மாறப் போகின்றார் என்பதை உணர முடியாமல் அவர் கேட்ட கேள்விக்குப் பதில் அளிக்கத் தொடங்கினேன் . ” நிறுவனத்தின் ஆதார பலமென்பது வாரச் சம்பளம் மற்றும் மாதச்சம்பளம் . இது தான் முக்கியமும் முதன்மையும் கூட . மற்றவைகள் இரண்டாம் பட்சமே . அவற்றுக்குக்கூட நீங்கள் காரணங்கள் சொல்லி சமாளிக்க முடியும் . ஆனால் ஒரு தொழிற்சாலையில் வாரச்சம்பளம் போட முடியாத நிலையில் என்ன மாறுதல்களை உங்களால் உருவாக்க முடியும் ? திறமையான தொழிலாளர்களும் நம்பிக்கை இழந்து விடுவார்கள் . அதே போல அலுவலக ஊழியர்களிடத்திலும் தேவையற்ற பயம் உருவாகி விடும் . உங்கள் மனித வளத் துறை என்ன சட்ட திட்டங்கள் உருவாக்கினாலும் அதனை முறைப்படி செயல்படுத்தப்பட வேண்டுமென்றால் உள்ளே பணிபுரிபவர்களிடத்தில் அடிப்படை நம்பிக்கை இருக்க வேண்டும் . தினந்தோறும் அவர்களின் சொந்தப் பிரச்சனைகளோடு உள்ளே வரும் போது நாம் எப்படி அவர்களிடத்தில் என்ன எதிர்பார்க்க முடியும் ?” அதிகமாகவே பேசி விட்டோமோ ? என்று பேச்சை நிறுத்திவிட்டு அவர்களிடத்திலே எவ்வித பதில் வருகின்றது என்று காத்திருந்தேன் . வரிசைக்கிரமாக ஒவ்வொருவரும் கேள்வி கேட்கத் தயாராக இருந்தவர்களிடத்தில் திடீரெனச் சலசலப்பு உருவானது . அவர்களுக்குள்ளே பேசத் தொடங்கினர் . சிலரின் முகத்தில் பிரகாசம் தெரிந்தது . அவர்கள் நிர்வாகத்தினரிடம் சொல்லத்தயங்கிய வார்த்தைகளை நான் சொல்லிவிட்டேன் என்று நான் மனதிற்குள் நினைத்துக் கொண்டேன் . நேர்முகத் தேர்வின் போக்கே மாறத் தொடங்கியது . கேள்வி பதிலாகப் பேச வேண்டிய அனைத்தும் மாறி கலந்துரையாடலாக மாறியது . அதன் பிறகே எதார்த்த உலகத்திற்கு வந்தனர் . நட்பு ரீதியாக உரையாடத் தொடங்கினார் . மீண்டும் மனிதவளத்துறைத் தொடங்கி அங்கே அமர்ந்திருந்த பிற துறை சார்ந்த ஒவ்வொருவரும் மாறி மாறி பொதுவான விசயங்களைப் பற்றிப் பேசினர் . நான் ஒரு ஆய்த்த ஆடை உற்பத்தியில் உள்ள ஒவ்வொரு துறையையும் பற்றி எந்த அளவுக்குத் தெரிந்து வைத்துள்ளேன் என்பதைக் கேட்டனர் . ஆனால் கூட்டத்தில் இருந்த பெண்மணி மட்டும் கடைசி வரையிலும் எதுவுமே என்னிடம் கேட்கவில்லை . கடைசியாகத் தொழில் நுட்ப இயக்குநர் (TECHNICAL DIRECTOR) என்ற பதவியில் இருந்தவர் மட்டும் என்னுடன் உரையாடத் தொடங்கிய போது ஒவ்வொருவரும் கலைந்து செல்லத் தொடங்கினர் . எனக்குச் சற்று குழப்பமாகவே இருந்தது . நமக்கு நாமே ஆப்பை சொருகிக் கொண்டோமோ ? என்று குழப்பத்துடன் வெளியே செல்பவர்களைக் கவனித்தேன் . அவர்கள் Take Care. Best of Luck என்று தொழில் நுட்ப இயக்குநரிடத்தில் சொல்லி விட்டு சென்றனர் . அவரும் ” நான் பார்த்துக் கொள்கிறேன் ” என்று சொல்லிவிட்டு என்னை மற்றொரு அறைக்கு அழைத்துச் சென்றார் . அந்த அறை முதன்மை நிர்வாகியும் அவர் மனைவி பயன்படுத்தும் அறை என்பதை என்னால் புரிந்து கொள்ள முடிந்தது . நாங்கள் இருவரும் மட்டுமே அந்த அறையில் இருந்தோம் . எனக்கு முதலில் தொழில் நுட்ப இயக்குநர் என்பதன் அர்த்தமே புரியவில்லை . இவரின் பணி இங்கே என்னவாக இருக்கும் ? என்பதைப் பலவிதமாக மனதிற்குள் யோசித்துக் கொண்டிருந்தேன் . நான் இதுவரையிலும் பணிபுரிந்த நிறுவனங்களில் பெற்ற அனுபவங்களின் மூலம் நான் பார்த்த , பழகிய நபர்கள் , அவர்கள் இருந்த பதவிகளுக்கும் இங்கே நான் பார்த்துக் கொண்டிருப்பதற்கும் நூறு சதவிகிதம் வித்தியாசம் இருந்தது . ஆனால் ” எதையும் சமாளிக்க முடியும் ? எந்த நிலையிலும் என்னால் வெல்ல முடியும் ” என்ற நம்பிக்கையே அடுத்தடுத்த நிலைக்கு என்னை நகர்த்திக் கொண்டிருந்தது . அது குருட்டாம் போக்கு என்றாலும் வாழ்வில் பல சமயம் நம் கொண்டிருக்கும் அசாத்தியமான நம்பிக்கைகள் மட்டும் நமக்குப் பல கதவுகளைத் திறக்க காரணமாக இருக்கிறது என்பதை நான் ஒவ்வொரு முறையும் உணர்ந்திருந்த காரணத்தால் எனது வளர்ச்சி என்பது சீராகவே இருந்தது . இந்தத் துறைக்குத் தேவையான முறைப்படியான படிப்போ , அல்லது தெளிவான நிர்வாகத்தின் கீழ் பணியாற்றிச் சூத்திரங்களைக் கற்காத நிலையில் கூடக் கடந்து போன பத்தாண்டுகளில் கற்று வைத்து அனுபவங்களின் மூலம் ” நம்மால் முடியும் ” என்ற தன்னம்பிக்கை மட்டுமே இந்த அறை வரைக்கும் என்னை அழைத்து வந்துள்ளது . அவர் அடுத்து என்ன பேசப் போகின்றார் ? என்பதைக் கவனிக்கும் ஆவலில் இருந்தேன் . அவர் ஒன்றுமே பேசாமல் அருகே இருந்த மடிக்கணினியை உயிர்பித்தார் . சற்று நேரத்தில் அங்கே இருட்டுப் பகுதியில் இருந்த அறையில் இருந்த சிறிய திரையில் வெளிச்சம் பரவி மடிக்கணியில் இருந்த தகவல்கள் தெரியத் தொடங்கியது . மடிக்கணியில் ஏற்கனவே சேமித்து வைத்திருந்த (POWER POINT PRESENTATION) கோப்பை வைத்துப் படிப்படியாக ஒவ்வொன்றையும் விவரித்துக் கொண்டே வந்தார் . நிறுவனம் சார்ந்த படங்கள் , செயல்பாடுகள் , கடந்து வந்த பாதைகள் , பிரச்சனைகள் , எதிர்பார்ப்புகள் , திட்டங்கள் , மதிப்பீடுகள் , இழப்புகள் , எதிர்கால நோக்கம் எல்லாவற்றையும் விலாவாரியாக விவரித்துக் கொண்டே வந்தார் . ஒவ்வொன்றையும் சுவராசியத்துடன் பார்த்துக் கொண்டே வந்தேன் . அரைமணி நேரத்திற்குப் பிறகு என் அமைதியைப் பார்த்து ” கேள்வி எதுவும் கேட்கத் தோன்றவில்லையா ?” என்றார் . அப்போது தான் எனக்குச் சற்றுத் தைரியம் வந்தது . ” இந்த நிறுவனத்தில் உங்கள் பணி என்ன ?” என்றேன் . சிரித்துவிட்டுத் தொடர்ந்தார் . ” இந்த நிறுவனத்தில் கடந்த இரண்டு ஆண்டுகளாகப் பகுதி நேர வேலையாகப் பணியில் இருக்கின்றேன் . இதே போலத் திருப்பூர் மற்றும் கோவையில் ஏழெட்டு நிறுவனங்கள் என் ஆலோசனையில் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றது . உற்பத்தியை பெருக்குவதும் , அது சார்ந்த செயல்பாடுகளை வடிவமைப்புகளைச் செய்து கொடுப்பதுமே என் முக்கியப் பணி . எனக்குக் கீழே பத்து ஐ . ஈ (INDUSTRIAL ENGINEER) துறையைச் சார்ந்தவர்கள் இங்கே பணியில் இருக்கின்றார்கள் . குறுகிய காலத்திற்குள் அதிகச் செலவு இல்லாமல் ஒரு ஆடையை எப்படி உருவாக்க வேண்டும் என்பதனை நாங்கள் பொறுப்பேற்றி நிறைவேற்றிக் கொடுக்கின்றோம் ” என்றார் . அப்போது அவரிடம் கேட்கத் தோன்றிய கேள்வியென்றாலும் கேட்காமல் மனதிற்குள் கேட்டுக் கொண்டேன் . ” அப்புறம் ஏஞ்சாமி இன்றைக்கு இந்த நிறுவனம் நிதிச்சுமையில் தள்ளாடிக்கொண்டிருக்கின்றது “. அவர் தொடர்ந்து பேசிக் கொண்டேயிருந்தார் . உலகில் உள்ள ஆய்த்த ஆடைத்துறைச் சார்ந்த சர்வதேச நிறுவனங்கள் குறித்து விரிவாகப் பேசினார் . ஒரு ஆய்த்த ஆடையை எப்படிச் சந்தைப் படுத்துகின்றார்கள் ? உற்பத்தியாளர்களிடத்தில் எந்த நிலையில் எதிர்பார்க்கின்றார்கள் ? இன்றைய சர்வதேச போட்டிச் சூழலில் அவர்களின் மாறிக் கொண்டேயிருக்கும் சிந்தனைகள் , எதிர்பார்க்கும் விலை , இந்தியாவிற்கு எந்தந்த நாடுகள் போட்டியாளர்களாக உள்ளனர் , மற்ற நாடுகளில் உள்ள ஆய்த்த ஆடைத் தொழிற்சாலைகள் தற்போதைய சூழலுக்கு ஏற்ப எப்படி நவீனப்படுத்தியுள்ளனர் ? தேவையற்ற செலவீனங்களை எப்படிக் கட்டுப்படுத்த முடியும் போன்ற பலவற்றை எனக்குப் புரிய வைத்துக் கொண்டிருந்தார் . அதுவரையிலும் பொறுமையாகக் கேட்டுக் கொண்டேயிருந்தவன் சற்று பொறுமையிழந்து ” இதையெல்லாம் ஏன் சொல்லிக் கொண்டிருக்கீங்க ?” என்றேன் . அவர் குழப்பத்துடன் என்னைப் பார்த்தார் . ” நான் உங்களுக்குத் தேவையா ? தேவையில்லையா ? என்றே தெரியவில்லை . உங்களைத் தவிர அத்தனை பேர்களும் பாதியில் எழுந்து போய்விட்டார்கள் . எவரும் எதுவும் சொல்லவில்லை . பிறகெப்படி நான் இதில் கவனம் செலுத்த முடியும் ?” என்றேன் . ” உங்கள் கோபமும் வேகமும் இயல்பான குணமாக இருக்கும் போல . உங்களைத் தேர்ந்தெடுத்தக் காரணத்தினால் மட்டுமே உள்ளே அழைத்து வந்தேன் . நீங்கள் எழுபது சதவிகிதம் என் கட்டுப்பாட்டின் கீழ் தான் இருப்பீங்க ” என்றார் . என் மனதிற்குள் மகிழ்ச்சி பரவியது . மேலும் பல விசயங்களைப் பேசி முடித்து விட்டு வீட்டுக்கு வந்து சேர்ந்த போது மேலும் குழப்பங்கள் அலையடித்தது . காரணம் ஒரு மாதம் முழுமையாகப் பணியாற்றிய பின்பு நிரந்தரம் சார்ந்த பல வசதிகள் கிடைக்கும் என்றொரு ஆணியடித்துருந்தார்கள் . இந்த ஒரு மாதத்திற்குள் அவர்கள் எதிர்பார்க்கும் தகுதியில்லை என்றால் கல்தா தான் என்பதனை மறைமுகமாக உணர்த்தியிருந்தார் . எனக்கு அந்த ” டீலிங் ” பிடித்தே இருந்தது . அவர் சொன்ன தேதியில் உள்ளே நுழைந்தேன் . அலுவலகக் கண்ணாடி வழியே பார்த்த தொழிற்சாலையின் உள்பகுதிக்கு மனிதவளத் துறையைச் சார்ந்த ஒரு பெண் என்னை அழைத்துக் கொண்டு சென்று ஒவ்வொரு துறை சார்ந்த நபரிடமும் அறிமுகப்படுத்தி விட்டுக் கடைசியாக எனக்கு ஒதுக்கப்பட்ட இருக்கைக்குக் கொண்டு வந்து சேர்ந்தார் . எனக்கு ஒதுக்கப்பட்ட அறையென்பது தொழிற் சாலையின் தொடக்கப்பகுதியில் இருந்தது . நீண்ட ஹால் போலச் செவ்வக வடிவில் அமைத்திருந்தார்கள் . மேல் தளத்தில் உருவாக்கப்பட்டு இருந்த குளிர் சாதன வசதிகள் இந்த அறை வரைக்கும் வந்து சேர்ந்து இருந்தது . குறுகிய அறை என்பதால் என் தோலை ஜில்லிட வைத்துக் கொண்டிருந்தது . எனது இருக்கைக்கு அருகே தொழில் நுட்ப இயக்குநரின் நேரிடை உதவியாளர்கள் (INDUSTRIAL ENGINEER) மூன்று பேரின் இருக்கை இருந்தது . அதனைத் தொடர்ந்து மனித வளத்துறையைச் சார்ந்த உதவியாளர்கள் இருந்தனர் . அந்த ஹாலில் ஒவ்வொரு துறைக்கும் தடுப்பு எதுவும் உருவாக்கப்படாத காரணத்தால் உள்ளே இருந்த அனைவரின் செயல்பாடுகளையும் என்னால் பார்க்க முடிகின்ற வகையில் இருந்தது . என் இருக்கையில் இருந்து தொழிற்சாலையின் எழுபது சதவிகித பரப்பளவை பார்க்க முடியும் . இது தவிர என் அறைக்கு அடுத்த அறையில் மனிதவளத்துறைக்குப் பொறுப்பாக மேலாளர் (HR MANAGER) பதவியில் ஒரு பெண்மணி இருந்தார் . அவரின் பணி என்பது முக்கியமாகத் தொழிலாளர்கள் சார்ந்த நலன்கள் மற்றும் அவர்கள் சார்ந்த பிரச்சனைகளைத் தீர்ப்பது . மற்ற துறை சார்ந்த ஒவ்வொருவரும் பத்தாயிரம் அடி சதுர பரப்பளவில் இருந்த அந்தத் தொழிற்சாலையின் ஒவ்வொரு இடத்திலும் தனித்தனியாக அங்கங்கே இருந்தனர் . என் மேஜைக்கு அருகே மைக் வசதியோடு ஸ்பீக்கர் இருந்தது . அதனை உயிர்ப்பித்து எதுவும் பேசினால் தொழிற்சாலையின் ஒவ்வொரு பகுதியிலும் பொருத்தப்பட்ட கருவிகள் மூலம் ஆங்காங்கே இருப்பவர்களால் கேட்க முடியும் . என் மேஜையில் இருந்த கணினி மொத்தமாக அலுவலகம் மற்றும் தொழிற்சாலையின் உள்ளே இருந்த அனைத்து கணினியுடனும் தொடர்பு கொள்ளும்படி உருவாக்கப்பட்டு இருந்தது . அங்கேயிருந்த அதிகப்படியான வசதிகளைப் பார்த்து மனதிற்குள் மிரட்சி உருவானாலும் அருகே அமர்ந்திருந்த ஐ . ஈ மக்கள் தான் என் வயிற்றில் புளியைக் கரைத்தனர் . சார் ” நீங்க இந்தப் பதவிக்குக் கடந்த ஆறு மாதத்தில் வந்து போனவர்களில் எட்டாவது நபர் . நீங்களாவது எங்களோடு நிரந்தரமாக இருப்பீங்களா ?” என்றனர் . பயமுறுத்தலா ? அக்கறையா ? என்பது புரியாமல் எதையும் காட்டிக்கொள்ளாமல் மையமாக அவர்களைப் பார்த்து புன்னகைத்து விட்டு என் இருக்கையில் அமராமல் தொழிற்சாலையின் மற்ற பகுதிகளைப் பார்வையிட என் அறையை விட்டு வெளியே வந்து பார்த்து அங்குப் பார்த்த காட்சிகள் என் குழப்பத்தை அதிகப்படுத்தியது . அப்போது தான் தொழில் நுட்ப இயக்குநர் சொன்ன வாசகம் என் மனதில் வந்து போனது . ” எவர் எது சொன்னாலும் எதையும் காதில் போட்டுக் கொள்ளாதீர்கள் . எதையும் அவசரப்பட்டு முடிவெடுத்து விடாதீர்கள் . எந்தச் சமயத்தில் வேண்டுமானாலும் என்னை அழையுங்கள் . நான் உங்களுக்கு எப்போதும் உதவியாக இருப்பேன் . நீங்களாவது என் நம்பிக்கையைக் காப்பாற்றுவீர்கள் என்று நம்புகிறேன் “. ஏன் அப்படிச் சொன்னார் ? என்று அப்போது எனக்குப் புரியவில்லை . தொழிற்சாலையின் ஒவ்வொரு பகுதியையும் சுற்றி வந்த போது எனக்குப் புரியத் தொடங்கியது . [] 4 4. து . மு - து . பி [] 4. து . மு - து . பி என் அறையை விட்டு வெளியே வந்தேன் . 25000 சதுர அடி கொண்ட பெரிய தொழிற்சாலையின் தொடக்கம் முதல் குறிப்பிட்ட பகுதி வரைக்கும் எந்திரங்கள் நேர்த்தியாக வரிசைக்கிரமமாக இருந்தன . பல எந்திரங்களில் தொழிலாளர்கள் (TAILORS) இல்லை . அங்கே பணிபுரிந்து கொண்டிருந்தவர்களிடத்தில் அதிக அளவு சுறுசுறுப்பு இல்லாமல் தைத்துக் கொண்டிருப்பதைப் பார்க்க முடிந்தது . தொழிற்சாலையின் உள்ளே பரவியிருந்த உஷ்ணக்காற்று என்னைத் தாக்கியது . எந்திரங்களின் சப்தமும் , தொழிலாளர்களின் உழைப்பையும் கவனித்தப்படியே ஒவ்வொரு பகுதியாக நகர்ந்து கொண்டிருந்தேன் . ஒவ்வொரு இடத்திலும் பெயர் பலகை மாட்டப்பட்டு இருந்தது . STITCHING SECTION. CHECKING SECTION, FINAL CHECKING, AQL AREA, IRON SECTION, PACKING SECTION என்று தனியாக இருந்தது . மற்றொரு பகுதியில் LOT SECTION, CUTTING SECTION, STORE ROOM செயல்பட்டுக் கொண்டிருந்தன . SAMPLES SECTION மற்றொருபுறம் இருந்தது . அங்கிருந்த சிலர் என்னைச் சுட்டிக்காட்டி பேசிக் கொண்டிருந்தனர் . அங்கே பணிபுரிந்து கொண்டிருந்த எவரும் என்னைக் கண்டு கொள்ளவில்லை . ஒரு ஆய்த்த ஆடை உருவாக்கத்தில் தொடக்கம் முதல் இறுதி வரைக்கும் பலதரப்பட்ட துறைகள் சம்மந்தப்பட்டுள்ளன . ஒவ்வொரு துறையும் ஒரு உலகம் . ஒவ்வொரு உலகமும் ஒரு நாடு போன்றது . அந்த நாட்டிற்கு ஒரு மன்னர் , ஒரு மந்திரி , ஒரு சேனாதிபதி போன்ற படைபட்டாளங்கள் இருக்கும் . அந்தந்த துறையில் பணிபுரியும் பெண்கள் பல சமயம் மகுடம் சூட்டாத ராணியாகவும் சிலரோ அந்தப்புற இளவரசியாக இருப்பார்கள் . அவற்றை நாம் படிப்படியாகப் பார்க்கலாம் . ஆய்த்த ஆடைத்துறையைப் பற்றி நீங்கள் முழுமையாகப் புரிந்து கொள்ள வேண்டுமென்றால் இந்த இடத்தில் இத்துறையின் மொத்த அடிப்படை விசயங்களைப் பார்த்து விட வேண்டும் . அப்போது தான் ஒரு ஆடை உருவாக்கத்திற்குப் பின்னால் உள்ள ஏராளமான உழைப்பை நம்மால் புரிந்து கொள்ள முடியும் . வரலாற்றை விருப்பமாகப் படிப்பவர்களுக்குக் கி . மு . கி . பி என்ற வார்த்தை தெரிந்து இருக்கக்கூடியதே . இதைப் போல இத்துறையில் இரண்டு வார்த்தை முக்கியமானது . து . மு என்றால் துணிக்கு முன் . து . பி என்றால் துணிக்குப் பின் என்ற இரண்டு பிரிவுகளுக்குள் மொத்தத்தையும் நம்மால் கொண்டு வந்து விட முடியும் . ஆய்த்த ஆடைகளை ஆங்கிலத்தில் கார்மெண்ட்ஸ் (GARMENTS) என்கிறார்கள் . திருப்பூர் என்றாலே பலரும் பனியன் கம்பெனி தானே ? என்று தான் சொல்கிறார்கள் . இங்குள்ள ஏற்றுமதி நிறுவனங்கள் குறித்தோ , அதன் செயல்பாடுகளைப் பற்றியோ , பெரும் பதவியில் இருந்து வெளிநாட்டில் பணிபுரிபவர்கள் போலப் பெருந்தொகையைச் சம்பளமாக வாங்கிக் கொண்டிருப்பவர்களைப் பற்றித் திருவாளர் பொதுஜனத்திற்குத் தெரிய வாய்பில்லை . இந்தத் துறை சார்ந்த பலவற்றைப் பலராலும் புரிந்து கொள்ள முயற்சிப்பதில்லை . பனியன் , ஜட்டி என்பது தனியான உலகமது . இந்தத்துறை இந்தியா முழுக்க உள்ள உள்நாட்டுச் சந்தையை அடிப்படையாகக் கொண்டே செயல்பட்டு வருகின்றது . இந்த வியாபாரம் இந்திய ரூபாயில் நடக்கின்றது . ஆனால் ஏற்றுமதித்துறை வெளிநாட்டு வர்த்தகத்தைச் சார்ந்தே இயங்குகின்றது . உலகில் உள்ள பலதரப்பட்ட கரன்சியில் பரிவர்த்தனைகள் நடந்து கொண்டிருந்த போதிலும் அமெரிக்காவின் டாலர் என்பதே இன்று வரையிலும் முக்கியமானதாக உள்ளது . இரண்டாவது இடத்தில் ஐரோப்பாவின் யூரோ உள்ளது . இப்போது து . மு . து . பியைப் பற்றிச் சுருக்கமாகப் பார்த்து விடலாம் . துணிக்கு முன் என்ற உலகத்தில் மூன்று வார்த்தைகள் முக்கியமானது . பஞ்சு , நூல் , துணி . பஞ்சு குறித்து நாம் தெரிய வேண்டுமென்றால் விவசாயத்தைப் பற்றி நாம் தெரிந்து கொள்ள வேண்டும் . தற்பொழுது இந்தியாவில் விவசாயம் என்பது தேவையற்ற ஒன்று என்று ஆட்சியாளர்கள் கருதுவதால் விளைவிக்கும் பஞ்சு பொதுச் சந்தைக்கு வருகின்றது . அதன் பிறகு அதன் பயணம் தொடங்குகின்றது என்பதோடு அந்தத் துறைக்கு முற்றும் என்பதோடு நிறுத்திக் கொள்வோம் . காரணம் தற்போதைய சூழ்நிலையில் இந்தியாவின் அடிப்படை ஆதாரமான விவசாயத்தினால் எந்தக் காலத்திலும் இந்தியா முன்னேற முடியாது என்று ஆட்சியாளர்கள் கருதுவதோடு இன்றைய சூழ்நிலையில் மக்களும் அதையே நம்பத் தொடங்கி விட்டனர் . பழைய சரித்திர குறிப்புகளைப் படிக்க வாய்ப்பிருந்தால் தேடிப்பிடித்துப் படித்துப் பாருங்கள் . இந்தியாவிற்கு ஒவ்வொரு காலகட்டத்திலும் வந்த யவனர்கள் , ரோமபுரி மக்கள் தொடங்கிக் கடைசியில் உள்ளே வந்து நம்மை அடிமைப்படுத்தி வைத்திருந்த ஆங்கிலேயர்கள் வரைக்கும் இங்கு வந்ததற்குக் காரணம் இங்குக் கொழித்துக் கொண்டிருந்த விவசாயத்தை வைத்துத்தான் . மிளகை வாங்கிக் கொண்டு பண்டமாற்றாகத் தங்கத்தைக் கொடுத்து விட்டுச் சென்றார்கள் என்பதை நீங்கள் நினைவில் வைத்திருக்க வேண்டும் . ஆனால் இன்றோ பஞ்சு முதல் அத்தனை முக்கியமான பொருளையும் ஏற்றுமதி செய்து விட்டு பெட்ரோலை இறக்குமதி செய்ய முனைப்பாகச் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றோம் . நம் வாழ்க்கையும் , விலை வாசிகளும் பஞ்சு போலப் பறந்து கொண்டிருக்கின்றது . பஞ்சு நூலாக மாற நூற்பாலைக்கு (TEXTILE MILL) வருகின்றது . லட்சக்கணக்கான எளிய மக்களின் காமதேனு பசுவாக இந்தத் துறை உள்ளது . இந்தியாவில் கடந்த பத்தாண்டுகளாக ஆட்சியில் இருந்து தற்பொழுது குப்பைக் கூடைக்குப் போய்ச் சேர்ந்து விட்ட காங்கிரஸ் அரசாங்கம் உருவாக்கிய கொள்கையின் காரணமாகத் தங்கம் போல மாதத்திற்கு மாதம் விலை உயர்ந்து எட்டாக் கனியாக மாறிவிட்டது . குறிப்பாக ஆன் லைன் வர்த்தகம் என்ற வார்த்தையின் மூலம் சூதாட்டம் போல இந்தத்துறை மாற்றப்பட்டுப் பஞ்சை விளைவித்த விவசாயிக்கு எதுவும் கிடைக்காத அளவுக்கு இடைத்தரகர்களின் ராஜ்ஜியமாக உள்ளது . இந்தியாவில் தற்பொழுது இந்தத்துறை மிக நவீன தொழில்நுட்பத்தில் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றது . இந்த உலகம் இரண்டு விதமாகச் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றது . ஒன்று , நூறு சதவிகிதம் ஏற்றுமதி மற்றொன்று உள்நாட்டு சந்தை . இந்தியாவில் பல மாநிலங்களில் பலதரப்பட்ட வசதிகள் கொண்ட நூற்பாலைகள் இருந்த போதிலும் தமிழ்நாட்டில் திண்டுக்கல் மாவட்டத்தில் நூற்றுக்கணக்கான நூற்பாலைகள் உள்ளன . அருகே உள்ள மேற்கு தொடர்ச்சி மலையில் இருந்து வரும் இதமான காற்று இந்தத் தொழிலுக்கு முக்கியமானது . இந்தியாவில் கோடிக்கணக்கான மக்கள் பஞ்சு மற்றும் நூல் தொழிலை மட்டுமே நம்பி வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள் . விளைந்த பஞ்சை பதப்படுத்தி , ரகம் வரியாகப் பிரித்து , சுத்தம் செய்து நூலாக மாறும் வரையிலும் தனித்தனி உலகமாகச் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றது . நூல் தான் திருப்பூரில் உள்ள ஏற்றுமதி தொழிலுக்கு ஆதாரம் . நூலில் பல ரகங்கள் உள்ளது . இதனை எளிமையாகப் புரிந்து கொள்ள நீங்கள் இரண்டு காலத்தை யோசித்துப் பார்த்தாலே போதுமானது . கோடை காலம் . குளிர் காலம் . கோடை காலத்தில் நாம் போடும் உடைகள் குளிர் காலத்திற்கு உதவுமா ? இந்த இரண்டு காலத்திற்கும் பயன்படுத்தும் நூலின் தன்மையும் வெவ்வேறாக இருக்கும் என்பதை எப்போதும் மனதில் வைத்திருக்கவும் . அதே இந்த ஆடை உருவாக்கத்தில் ஒவ்வொரு நிலையிலும் செயல்படுத்தும் விதங்கள் எதிரெதிர் துருவமாக இருக்கும் . திருப்பூருக்குள் உள்ளே வரும் நூல் ஆய்த்த ஆடைக்கான துணியாக மாற எத்தனை படிகளைக் கடக்க வேண்டும் ? YARN ( நூல் ), KNITTING ( துணி அறவு ), BLEACHING & DYEING ( சலவை மற்றும் சாயப்பட்டறை ) COMBACTING ( வண்ணமேற்றிய துணியை நாம் விரும்பும் அளவிற்கு வெட்ட மாற்றித்தரும் எந்திரம் . இதற்குப்பிறகே துணியாக உருவம் பெறுகின்றது . நீங்கள் எளிதில் ஞாபகம் வைத்துக் கொள்ள நம்முடைய சட்டையை மடிப்புக் கலையாமல் தேய்த்துத் தருகின்றார்கள் அல்லவா ? அதைப்போல இந்த எந்திரங்கள் அந்தப் பணியைச் செய்து கொடுக்கின்றது ) கோடை கால ஆடைகளுக்கும் குளிர் கால ஆடைகளுக்கும் சம்மந்தம் இருக்காது . இன்னும் எளிமையாக உங்களுக்குப் புரிய வேண்டுமென்றால் குளிர்காலத்திற்கு நாம் பயன்படுத்தும் ஸ்வெட்டர் ஆடையைக் கோடை காலத்தில் பயன்படுத்த முடியுமா ? இனி எங்கிருந்து இந்தத் தொழில் தொடங்குகின்றது என்பதைப் பற்றித் தெரிந்து கொள்ள வேண்டும் அல்லவா ? எனக்கு இந்த வடிவமைப்பில் , இது போன்ற பிரிண்ட் அடித்து இந்தந்த அளவுகளில் இத்தனை ஆயிரம் ஆடைகள் தேவை ? என்று ஒரு வெளிநாட்டுக்காரர் திருப்பூரில் இருக்கும் ஏற்றுமதியாளரிடம் கேட்கின்றார் ? என்று வைத்துக் கொள்வோம் . அவர் உடனே அந்த வெளிநாட்டுக்காரர் மின் அஞ்சல் வாயிலாகக் கொடுத்த விபரங்களை ஒன்றன் பின் ஒன்றாகக் கவனமாகக் குறிப்பு எடுத்துக் கொள்வார் . வெளிநாட்டுக்காரர் ஆடையில் எதிர்பார்க்கும் பிரிண்ட்டிங் மற்றும் எம்பிராய்ட்ரி டிசைன் வேலைகள் சார்ந்து , அதற்கு ஆகும் செலவுகளைக் கணக்கில் எடுத்துக் கொண்டு , அந்த ஆடைக்கு உத்தேசமாக எந்த அளவுக்குத் துணி தேவைப்படும் என்று தனது கணக்கீடுகளைப் போட தொடங்குவார் . தொடர்ந்து தேவைப்படுகின்ற நூல் மற்றும் வண்ணமேற்றிய ஒரு கிலோ துணி உருவாக்க என்ன செலவு என்பதனையும் கணக்கில் எடுத்துக் கொள்வார் . தைத்து முடித்து அவர் கேட்கும் அலங்கார PACKING வசதிகளோடு மொத்த ஆடைகளையும் கப்பல் அல்லது விமானம் வழியே அவர்களுக்கு அனுப்பி வைக்க என்ன செலவாகும் என்பதோடு தன் லாபத்தைச் சேர்த்துக் கொள்வார் . மொத்தமாக இந்தத் துணியாக்கத்தில் மற்றும் உருவாக்கத்தில் (PROCESS LOSS & PCS. REJUCTION) எத்தனை சதவிகிதம் இழப்பு ஒவ்வொரு நிலையிலும் ஏற்பட வாய்ப்பு உள்ளது என்பதையும் இந்தக் கணக்கில் சேர்த்துக் கொள்வார் . இறுதியாக ஒரு ஆடையின் விலை தெரிய வரும் . YARN COST KNITTING COST DYEING/BLEACHING COST COMBACTING/STENDER COST PROCESS LOSS PERCENTAGE CLOTH COST (PER KGS. CLOTH) —————————————- STITCHING TO PACKING COST ACCESSORIES COST FREIGHT COST REJUCTION COST PROFIT PERCENTAGE இதற்குப்பிறகு தான் ஆலமரம் தேவைப்படாத பஞ்சாயத்து மேடை அறிமுகம் ஆகின்றது . அதாவது பேரம் தொடங்கும் . அந்தப்பக்கம் நீ சொல்லும் விலை எனக்குக் கட்டுபிடியாகாது ?. சீனாவில் இந்த விலைக்குக் கிடைக்கும் ? வேறு நாட்டில் இதைவிடக் குறைவாகவே எனக்குக் கிடைக்கும் ? என்று முறுக்குவார் . இல்லையில்லை நீ எதிர்பார்க்கும் விலையில் நான் கொடுத்தால் என் கம்பெனியை ஒரு வருடத்திற்குள் இழுத்து மூட வேண்டும் ? என்று இவர் திமுறுவார் . மாட்டுச் சந்தை போலப் பேரம் நடக்கும் . கூச்சல் இல்லாமல் மின் அஞ்சல் வழியே தொடர்ச்சியாக அடிதடி நடந்து இறுதியாக இரண்டு கைகளிலும் துணியைப் போட்டுக் கொண்டு விரலைத் தொட்டு இறுதி விலை உறுதியாகும் . ஒரு ஆய்த்த ஆடை உருவாக்கத்தின் முதல் உழைப்பு இங்கிருந்தே தொடங்குகின்றது . 5 5. யோசிக்காதே ? ஓடிக் கொண்டேயிரு ! [] 5. யோசிக்காதே ? ஓடிக் கொண்டேயிரு ! சென்ற அத்தியாயத்தில் ஒரு ஆய்த்த ஆடையின் உருவாக்கத்திற்கான முதல் உழைப்பு எங்கிருந்து தொடங்குகின்றது ? என்பதைப் பார்த்தோம் . ஒரு ஆடை முழு உருவமாகி ஏற்றுமதி ஆகின்ற வரையில் இந்தத் துறையில் என்ன நடக்கின்றது ? எவரெல்லாம் சம்பந்தப்பட்டுள்ளனர் என்பதனை இந்தத் துறையில் வாழ்ந்த , வாழ்ந்து கொண்டிருக்கின்ற சில கதாபாத்திரங்கள் மூலம் படிப்படியாக இந்தத் துறையைப் பற்றிப் புரிந்து கொள்ள முயற்சிப்போமா ? இதனுடன் தொழிலாளி மற்றும் முதலாளி என்ற வர்க்கபேதத்தில் உள்ள வினோத முரண்பாடுகளைப் பற்றியும் வரப் போகின்ற அத்தியாயத்தில் பேசுவோம் . இத் துறையில் 22 வருடங்கள் அனுபவங்கள் உள்ள நான் கற்றதும் பெற்றதும் ஏராளம் . நான் இத்துறையில் நிலையான பதவி அமையவே ஏழு வருடங்கள் போராட வேண்டியிருந்தது . அதன் பிறகு தான் என்னைச் சுற்றிலும் என்ன நடக்கின்றது என்பதே என்னால் உணர்ந்து கொள்ள முடிந்தது . காரணம் அதுவரையிலும் கரைபுரண்டு ஓடிக் கொண்டிருந்த காட்டாறு வெள்ளத்தில் சிறு துரும்பாகத் தத்தளித்துக் கொண்டிருந்தேன் . எதையும் கவனிக்க நேரமில்லாமல் எவர் எவரோ இடும் கட்டளைகளை நேரம் மறந்து நிறைவேற்றிக் கொடுப்பவனாக இருந்துள்ளேன் . 20 மணி நேர பணியென்பது கடந்து போன என் வாழ்க்கையில் பல மாதங்கள் இயல்பானதாகவே இருந்தது . உடலும் மனதும் அதற்குத் தகுந்தாற்போலவே உருமாறத் தொடங்கியது . வாழ்க்கையை ரசித்தே வாழ்ந்து பழகியவனுக்கு இது நரக வேதனையாக இருந்தது . உழைத்து விட்டு ஒதுங்கி விட அதன் பலன்கள் எல்லாம் எவர் எவருக்கோ கிடைத்துக் கொண்டிருந்தது . நான் தேடிக் கொண்டிருந்த ‘அங்கீகாரம்’ என்ற வார்த்தை அர்த்தமற்றுச் சிரிக்கத் தொடங்கியது . எனக்கான நேரம் வந்தது . வந்த நேரத்தை முயற்சியுடன் கூடிய தன்னம்பிக்கை வழிநடத்தியது . இந்தத்துறையில் நின்று ஜெயித்துக் காட்ட வேண்டும் என்ற எண்ணம் உருவானது . உள்ளுற வைத்திருந்த வன்மத்தை வரி வரியாகப் பிரித்து வைத்திருந்தேன் . அப்போது தான் நான் பணியாற்றி வந்த பல நிறுவனங்களைப் பற்றி , அங்கு நடந்த சம்பவங்களைப் பற்றி யோசிக்கத் துவங்கினேன் . தன் சுய விருப்பு வெறுப்புக்காக நிறுவனங்களைக் கவிழ்த்தவர்கள் , குறுகிய காலத்திற்குள் நிறுவன பெருக்கிக் கொண்டவர்கள் , உண்மையான உழைப்பாளிகளை உதாசீனப்படுத்தியவர்கள் , தங்களது பலவீனங்களுக்காக வளர்ந்து கொண்டிருந்த நிவளர்ச்சியை விடத் தங்களது பொருளாதார வளர்ச்சியை றுவனத்தை வேரோடு வெட்டி சாய்த்தவர்கள் என்று பலவற்றையும் பார்த்த காரணத்தால் எல்லா நிகழ்வுகளுமே இயல்பான தொழில் வாழ்க்கையின் ஒரு அங்கமாக எனக்குத் தெரிய தொடங்கியது . காரணம் எல்லாநிலையிலும் எல்லோருக்கும் பணம் தான் பிரதானமாக இருந்தது . ஒருவர் பணத்தை முதலீடாகப் போட்டு விட்டு பெரிய லாபத்தை எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கின்றார் . மற்றொருவர் குறுக்கு வழியில் பணத்தைத் துரத்திக் கொண்டிருக்கின்றார் . மொத்ததில் இருவருக்குமே தூக்கம் தேவையில்லாமல் போய்விடுகின்றது . முதலீடு செய்தவர் முதலாளி . ஆனால் அவரின் லாபத்தைத் தவறான வழியில் அடையக் காத்திருப்பவர் பணியாளர் . ஐம்பது ரூபாய் திருட்டு முதல் மாதம் ஐந்து லட்சம் திருட்டுத்தனம் வரைக்கும் அவரவர் பதவிக்குத் தகுந்தாற் போல நடந்து கொண்டேயிருப்பதால் கடைசியாகப் பாதிக்கப்படுவது நிறுவனத்தின் வளர்ச்சியே . கடைசியில் ஒரு நாள் நிறுவனம் வங்கியில் போய்ச் சிக்கிவிடுகின்றது . இப்படிச் சிக்கிய நூற்றுக்கணக்கான நிறுவனங்களின் கதையென்பது அவலத்தின் உச்சமாக இருக்கும் . வெளிநாட்டுக் கார்களில் பவனி வந்த பல முதலாளிகள் இன்று வெளியே தலைகாட்ட முடியாத நிலைக்கு வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள் . ஆனால் நான் தன்னிலை மறந்ததே இல்லை . எனக்கென்று ஒரு நோக்கம் இருந்தது . அதற்கு மேலாக அந்த நோக்கத்திற்குள் ஒரு சிறப்பான வாழ்வியல் தத்துவம் இருந்தது . ஒவ்வொரு காலகட்டத்திலும் மனதிற்குள் உருவாகும் காயங்கள் அதிகமாக இருந்தாலும் சீழ்பிடிக்காத அளவிற்கு நான் வாசித்த புத்தகங்கள் எனக்கு மருந்தாக இருந்து உதவியது . வாழ்ந்து காட்டுதலை விட மிகச் சிறந்த பழிவாங்குதல் வேறேதும் உலகில் உண்டா ? இங்கு எல்லோருமே தொடக்க நிலையில் கஷ்டப்படத்தான் செய்கின்றார்கள் . தனது வளர்ச்சியை நோக்கி சிந்தித்து மேலே வரத் துடிக்கின்றனர் . தன்னை வளர விடாமல் தடுக்கும் காரணிகளை நினைத்து புலம்புவதோடு நிறுத்திக் கொள்கின்றனர் . ஆனால் அதற்கான காரணங்களைப் பற்றி யோசிக்கும் போது மட்டும் தன் நிலை என்ன ? தற்போதைய தன் தகுதி என்ன ? என்ற கேள்வி பிறக்கும் என்பதை உணர மறுக்கின்றனர் . எதை முதன்மையாக வளர்த்துக் கொள்ள வேண்டும் ? எந்தச் சமயத்தில் அதனை வெளிப்படுத்த வேண்டும் என்பதை உணராமல் தான் பெற்றுள்ள வன்மத்தை மட்டுமே மனதிற்குள் வைத்து புழுங்கிக் கொண்டிருப்பவனால் ஒரு குறிப்பிட்ட உயரத்திற்கு மேலே வளர முடிவதில்லை . வாழ்க்கை முழுக்கப் புலம்புவனாகவே வாழ்ந்து பழகியவனுக்கு அவன் பார்க்கும் அத்தனை பேர்களும் எதிரியாகத் தான் தெரிவார்கள் . கேவலமான எண்ணங்கள் தான் மேலோங்கும் . அதன் பிறகே ஒருவனின் சுய புத்தி மழுங்கிப் போய்விடத் தொடங்கின்றது . கண்டதே காட்சி , கொண்டதே கோலம் என்று தவறான பாதையில் சென்று கடைசியில் வாழ்க்கை அலங்கோலத்தில் முடிகின்றது . கிராமத்து வாழ்க்கை , கிராமம் சார்ந்த சிந்தனைகள் எதுவும் தொழில் நகர வாழ்க்கைக்கு ஒத்துவராது என்பதை உணர்ந்து கொள்ளவே எனக்கு ஐந்து வருடங்கள் தேவைப்பட்டது . புதிய மாற்றங்கள் என்னை நோக்கி வரத் தொடங்கியது . நிலையான உயர் பதவியை நோக்கி என் வாழ்க்கை நகரத் தொடங்கியது . அடுத்தடுத்து நிறுவனங்கள் மாறினாலும் மேலே உயர முடிந்தது . வசதிகளும் வாய்ப்புகளும் அதிகமானது . நிர்வாக அறிவு சார்ந்த விசயங்களில் கவனம் செலுத்த தொடங்கிய போது தான் மனிதர்களின் உள் மன விகாரத்தைப் பற்றி ஆராய முடிந்தது . ஒவ்வொருவரின் எண்ணத்திற்கும் சொல்லுக்கும் உள்ள வித்தியாசத்தைப் புரிந்து கொள்ள முடிந்தது . முதலாளிவர்க்கம் என் தனித்தன்மையாக இருக்கின்றார்கள் . ஏன் எப்போதும் தொழிலாளிவர்க்கம் உழைப்பவர்களாகவே மட்டும் இருந்து விடுகின்றார்கள் போன்ற பல கேள்விகளுக்குப் பதில் கிடைக்கத் தொடங்கியது . என்னைச் சுற்றிலும் உள்ள மனிதர்களின் மனவோட்டத்தை அறியத் துவங்கினேன் . ஒவ்வொரு தனிமனிதர்களின் எண்ணங்கள் , செயல்கள் , வித்தியாசங்கள் என ஒவ்வொன்றும் எனக்குப் புரியத் தொடங்கியது . உழைப்பு , திறமை என்பதற்கு அப்பாற்பட்டு இங்கே பல விசயங்கள் உள்ளது . ஆய்த்த ஆடை துறை மட்டுமல்ல . இந்தியாவில் நீங்கள் காண்கின்ற எந்தத்துறையிலும் நூறு சதவிகிதம் திறமைசாலிகள் இல்லை . அதே போல நூறு சதவிகித உழைப்பாளிகளும் இல்லை . ஆனால் இங்கே குறிப்பிட்ட சிலர் மட்டுமே சாதனையாளர்களாக மாறுகின்றார்கள் . ஏன் ? பள்ளி , கல்லூரிகளில் படிப்பில் சுட்டியாய் இருந்தவர்கள் வாழ்க்கையில் முழுமையாக ஜெயித்து விடுகின்றார்களா என்ன ? எந்த நாட்டில் , எந்த இடங்களில் வாழ்பவராக இருந்தாலும் சமயோஜித புத்தியுள்ளவர்களால் மட்டுமே பல துறைகளில் உச்சத்தைத் தொட முடிகின்றது . ஒரு ஆய்த்த ஆடைத் தொழிற்சாலையின் உள்ளே நுழைந்தால் ஆயிரக்கணக்கான பேர்கள் இருப்பார்கள் . உச்சகட்ட பதவி என்பது ஏழெட்டுப் பேர்களுடன் முடிந்து விடும் . அதற்குக் கீழே வருகின்ற அத்தனை பேர்களும் அல்லக்கை , நொள்ளக்கை , நொந்தகை வகையினராக இருப்பர் . அதிலும் குறிப்பாக உழைப்பதற்கென்றே பிறப்பெடுத்தவர்கள் போலத் தினசரி தன் வாழ்க்கையை நொந்தபடியே வாழ்ந்து கொண்டிருப்பவர்கள் ஆயிரக்கணக்கான பேர்கள் உள்ளனர் என்பதை நீங்கள் எப்போதாவது நினைத்துப் பார்த்ததுண்டா ? இந்த வகை உழைப்பாளிகள் திருப்பூரில் ஒவ்வொரு நிறுவனத்திலும் நூற்றுக்கணக்கான பேர்கள் உள்ளனர் . ஆய்த்த ஆடைத்துறையில் உள்ளுற இருக்கும் துறைகள் வெவ்வேறானதாக இருக்கலாம் . ஆனால் இவர்களுக்கு வியர்வை என்ற பெயரில் இரத்தம் வழிந்தோடிக் கொண்டிருக்கும் . இவர்களின் உழைப்பு நம்மைச் சிந்திக்க வைக்கும் . இந்திய ஜனநாயகத்தில் எல்லோருக்கும் சுதந்திரம் உண்டு . எவர் வேண்டுமானாலும் என்ன தொழில் என்றாலும் தொடங்கலாம் . ஆனால் தொழில் தொடங்கிய அத்தனை பேர்களும் ஜெயித்து விடுவதில்லை . ஜெயித்தவர்களும் நிலையாக நீண்ட காலம் நிலைத்திருப்பதும் இல்லை . தொடர்ச்சியாக ஜெயித்து நீண்ட காலம் தாக்குப் பிடித்துக் கொண்டிருந்த அந்த நிறுவனத்தில் அவனைச் சந்தித்தேன் . அவன் பெயர் மாடசாமி . பெயர் பொருத்தமோ ? ராசிப் பொருத்தமோ தெரியவில்லை , அந்த நிறுவனத்தில் அவன் மாடு போலத் தான் நேரம் காலம் தெரியாமல் உழைத்துக் கொண்டிருந்தான் . யோசிப்பதை மறந்து காலை முதல் நள்ளிரவு வரைக்கும் வாரம் முழுக்க உழைத்தவனின் கதையைக் கேட்டால் அவலத்தின் உச்சமாக இருக்கும் . காரணம் அவனின் சொந்த ஊரில் செயல்பட முடியாத நிலையில் படுத்த படுக்கையாக உயிருள்ள பிணமாக இருக்கின்றான் . 6 6. என் பெயர் மாடசாமி [] 6. என் பெயர் மாடசாமி மாடசாமியை முதல்முறையாகச் சந்தித்த தினம் இன்றும் என் நினைவில் உள்ளது . ஒரு நாள் அதிகாலை நான்கு மணி அளவில் அவன் வேலை பார்த்துக் கொண்டிருந்த நிறுவனத்தில் சந்தித்தேன் . அதுவொரு வளர்ந்து கொண்டிருக்கும் நிறுவனம் . சிறிய நிறுவனமாக இருந்தாலும் சரியான நிலையில் தாக்குப்பிடித்து வருடத்திற்கு வருடம் வளர்ந்து கொண்டேயிருந்த நிறுவனமது . இது போன்ற நிறுவனங்களைத் திருப்பூர் மொழியில் JOB WORK UNIT என்பார்கள் . இது போலத் திருப்பூரில் ஆயிரக்கணக்கான நிறுவனங்கள் உள்ளது . இவர்களின் முக்கியப்பணி என்பது நேரிடையாக ஏற்றுமதி செய்து கொண்டிருக்கும் நிறுவனங்களுக்குத் தேவையான அனைத்து வேலைகளையும் செய்து கொடுப்பதே ஆகும் . இது போன்ற நிறுவனங்கள் ஐம்பது சதுர அடி முதல் 5000 சதுர அடி வரைக்கும் உள்ள இடங்களில் இருந்து செயல்பட்டுக் கொண்டிருக்கும் . மனித வாழ்க்கை மட்டுமல்ல . தொழில் துறையும் கூட ஒவ்வொரு காலகட்டத்திலும் அவ்வப்பொழுதுக்குள்ள சூழ்நிலைக்குத் தகுந்தாற்போல மாறிக் கொண்டே வருவதைக் கூர்மையாகக் கவனித்தால் தெரியும் . ஒவ்வொரு தொழிலுக்கும் லாபமே முக்கியமானதாக இருக்கும் . அந்த லாபத்தை அடைய எத்தனை வழிகள் உள்ளதோ அத்தனை வழிகளையும் தொழில் நடத்துபவர்கள் தேர்ந்தெடுப்பார்கள் . திருப்பூரில் இன்றைய சூழ்நிலையில் குறிப்பிட்ட சில வேலைகளைத் தவிர மற்ற அனைத்து வேலைகளும் வெளியே உள்ளே நபர்களிடம் சென்று முடிவடைந்து மீண்டும் நிறுவனத்திற்குள் வருகின்றது . தற்பொழுது அலுவலகமே தேவைப்படாத அளவிற்கு மாற்றம் பெற்று அவரவர் வசிக்கும் வீடுகளில் இருந்து கொண்டே பகுதி நேர பணியாகப் பலரும் பல வேலைகளைச் செய்து கொடுத்துக் கொண்டிருக்கின்றனர் . நாள் முழுக்க ஒரு நிறுவனத்திற்குள் தங்களை அடைத்துக் கொள்ள விரும்பாதவர்களுக்கு இது மிகப் பெரிய வரப்பிரசாதமாக உள்ளது . குடும்பத்தைக் கவனித்துக் கொள்ளவும் முடிகின்றது . மாதமானால் குறிப்பிட்ட வருமானத்தை ஈட்டவும் முடிகின்றது . திருப்பூரில் பத்தாண்டுகளுக்கு முன் ஒரு ஆய்த்த ஆடை முழு உருவம் பெறத் தேவையான துணி நிறுவனத்தின் உள்ளே வந்து விட்டால் ஆடை முழுமையடைந்து கடைசியில் பெட்டியில் போடும் வரைக்கும் உண்டான அனைத்து வேலைகளும் பெரும்பாலான நிறுவனங்களில் உள்ளே மட்டுமே நடக்கும் . முக்கிய வேலைகள் தவிர்த்து வேறெந்த வேலைக்காகவும் அந்த ஆடைகள் நிறுவனத்தை விட்டு வெளியே செல்லாது . ஆனால் இன்று இந்தச் சூழ்நிலை மாறிவிட்டது . கிடைக்கும் லாபங்கள் குறைய நிறுவனத்திற்குண்டான சுமைகளைப் பலரும் கழட்டி வைத்து விடவே விரும்புகின்றனர் . நிரந்தரப் பணியாளர் என்றால் வாரம் தோறும் சம்பளம் . இது தவிர அவருக்கென்று அரசாங்கம் நிர்ணயித்த தொழிலாளர் வைப்பு நிதி , சேம நல நிதி போன்ற பல விசயங்களைச் செய்து கொடுக்க வேண்டும் . அப்படியே செய்து கொடுத்தாலும் அந்தக் குறிப்பிட்ட தொழிலாளர் கடைசி வரைக்கும் தான் சார்ந்துள்ள நிறுவனத்திற்கு விசுவாசமாகத் தொடர்ந்து இருப்பார் என்று அறுதியிட்டு கூற முடியாது . அவருக்குத் தான் இருக்கும் நிறுவனத்தில் கிடைக்கும் சம்பளத்தை விட ஷிப்ட்டுக்கு பத்து ரூபாய் கிடைத்தால் அல்லது வேறு வசதிகள் கிடைக்கும் பட்சத்தில் உடனடியாக அடுத்த நிறுவனத்திற்குச் சென்று விடுவார் . காரணம் தமிழ்நாட்டில் டாஸ்மாக் கலாச்சாரம் உருவான பிறகு ஆண் தொழிலாளர்களின் மனோபாவமும் , உழைப்பில் காட்டக்கூடிய அக்கறையும் முழுமையாக மாறிவிட்டது . அதேபோல நுகர்வு கலாச்சாரத்தின் அங்கத்தினராகப் பெண்கள் மாற அவர்களின் எண்ணமும் முழுமையாக மாறிவிட்டது . ” விருப்பம் என்றால் வைத்துக் கொள் . இல்லையெனில் எனக்கு வெளியே வாய்ப்பு உள்ளது ” என்று ஒவ்வொரு தொழிலாளர்களும் தான் பணிபுரியும் நிர்வாகத்தை மிரட்டும் நிலையில் தான் இன்றைய திருப்பூர் ஆய்த்த ஆடைத்துறை உள்ளது . இதன் காரணமாகக் குறிப்பிட்ட வேலைகள் மட்டும் நிறுவனத்தின் உள்ளே நடக்க மற்ற அத்தனை வேலைகளுக்கும் வெளியே சென்று மீண்டும் உள்ளே வருகின்றது . அல்லது குறிப்பிட்ட வேலைக்காக மட்டுமே வெளியே இருந்து ஆட்களை வரவழைக்கும் (OUT SOURCING) நபர்கள் மூலம் பல வேலைகள் நடக்கின்றது . தைத்து மட்டும் கொடுப்பது , ஆடைகளில் உள்ள பிசிர்களை மட்டும் நீக்கி கொடுப்பது , உருவமான ஆடைகளைத் தரம் பார்த்து அவற்றைப் பிரித்துக் கொடுப்பது , ஆடைகளில் உள்ள அழுக்கு மற்றும் எண்ணெய் கறைகளை நீக்கிக் கொடுப்பது , இது தவிரப் போகாத கறைகளை எடுத்துக் கொடுப்பது , ஆடைகளில் வரும் மிகச் சிறிய ஓட்டைகளை வெளியே தெரியாத அளவிற்குச் சரி செய்து கொடுப்பது , இறுதியில் சரியான தரம் பிரிக்கப்பட்ட ஆடைகளைத் தேய்த்துப் பாலிபேக்கில் போட்டு பெட்டி போட்டுக் கொடுப்பது என்று இத்துறை சார்ந்த ஏராளமான துணைப்பணிகளுக்கென்று திருப்பூர் முழுக்க லட்சக்கணக்கான தொழிலாளர்கள் ஒப்பந்த கூலி அடிப்படையில் பல நூறு நிறுவனங்களை நடத்தி வருகின்றனர் . ஒரு ஆய்த்த ஆடை முழுமையடைய எத்தனை வேலைகளை உள்ளதோ ? அனைத்து வேலைகளுக்கும் பல நிறுவனங்கள் உள்ளது . இதிலும் போட்டியுண்டு . பலதரப்பட்ட சவால்களைத் தாண்டி நிறுவனத்தைக் காப்பாற்ற வேண்டும் . பெரிய நிறுவனங்கள் இது போன்ற சிறிய நிறுவனங்களை வாயில் போட்டு மென்று துப்பக் காத்திருப்பார்கள் . வேலை முடிந்ததும் பணம் கொடுக்காமல் இழுத்தடிப்பார்கள் . கடைசியாகச் சரியாகத் தைத்துக் கொடுத்தாலும் ” சரியான நேரத்தில் நீ கொடுக்கவில்லை . இதனால் எனக்கு இத்தனை லட்சம் நட்டம் . நீ தான் பொறுப்பு ” என்று மனசாட்சியை அடகு வைத்து விட்டு பாதிக்குப் பாதிப் பணத்தைக் கொடுப்பார்கள் . இது போன்று ஆடைகளைத் தைத்து மட்டுமே கொடுக்கும் நிறுவனத்தில் தான் மாடசாமி பணியாற்றிக் கொண்டிருந்தான் . பொதுவாகத் தொழில் நகரங்களில் இரவு பகல் என்றொரு வித்தியாசமே இருக்காது . ஆறாண்டுகளுக்கு முன்பு வரை திருப்பூர் என்பது 24 மணி நேரமும் இயங்கும் உலகமாகவே இருந்து வந்தது . சாயப்பட்டறை பிரச்சனைகள் விஸ்வரூபம் எடுத்து 700 க்கும் மேற்பட்ட சாயப்பட்டறைகள் மூடுவிழா கண்டதும் பகலில் மட்டும் செயல்படும் உலகமாக மாறியுள்ளது . இது தவிரச் சமீப காலமாகத்தான் திருப்பூரில் இரவு மற்றும் ஞாயிற்றுக் கிழமை வேலையென்றால் என்றால் தொழிலாளர்கள் எதிர்க்கத் தொடங்கியுள்ளனர் . காரணம் தங்களுக்குக் கிடைத்த விடுமுறை தினத்தை மது அருந்தும் தினமாக மாற்றிக் கொண்ட உழைக்கும் வர்க்கத்தினரால் அடுத்த நாள் செயல்பட முடியாதவர்களாக மாறி விட்டனர் . இன்றைய சூழ்நிலையில் ஐம்பது சதவிகித நிறுவனங்களில் அறிவிக்கப்படாத விடுமுறை தினமாகத் திங்கள் கிழமை இருந்து வருகின்றது . ஆண் தொழிலாளர்கள் வருவதே இல்லை . கையில் செலவளிக்கக் காசு இல்லாத போது மட்டுமே வேலைக்குச் செல்ல வேண்டும் என்ற எண்ணம் இருப்பதால் மேலை நாட்டு நாகரிக கலாச்சாரத்தில் வாழவே விரும்புகின்றனர் . ஆனால் பத்தாண்டுகளுக்கு முன் இரண்டு நாட்கள் இடைவெளி இல்லாமல் வேலைகள் தொடர்ந்து நடந்து கொண்டேயிருக்கும் . உழைப்புக்கு அஞ்சாத கூட்டமது . இன்று பாதிக்கும் மேற்பட்ட மக்கள் வேறு ஊர்களுக்குப் போய்விட்டனர் . மிச்சமும் சொச்சமும் தான் இந்தத்துறையில் உள்ளனர் . திருப்பூருக்கென்று ஒரு தனியான மொழியுண்டு . வாசிக்கும் பொழுதே உங்களுக்குச் சிரிப்பை வரவழைக்கும் . அந்த மொழி ஆங்கிலமா ? தமிழா ? என்ற குழப்பத்தை உருவாக்கும் . ஒரு சிறிய உதாரணத்தைப் பார்க்கலாம் . ஒரு நிறுவனம் காலை எட்டு மணிக்கு தொடங்கி இரவு எட்டு மணிக்கு முடிந்தால் தொழிலாளர்களுக்கு ஒன்னறை ஷிப்ட் என்ற அர்த்தம் . அதுவே இரவு பணி என்றால் 12 மணி வரை நடக்கும் . மொத்தமாக இரண்டு ஷிப்ட் என்பார்கள் . அதற்கு மேலே அதிகாலை வரை தொடர்ந்து நடந்து கொண்டேயிருந்தால் அதனை ” விடிநைட் ” என்று அழைப்பார்கள் . மறுபடியும் எப்போது போலக் காலையில் எட்டு மணிக்கு பணி தொடங்கும் . இடைப்பட்ட நேரத்திற்குள் தொழிலாளர்கள் தம்மைத் தயார் படுத்திக் கொள்ள வேண்டும் . தூங்க வேண்டும் என்ற எண்ணம் எவருக்கும் இருக்காது . குறிப்பிட்ட பெட்டிகள் லாரியில் ஏற்றும் வரைக்கும் ஒவ்வொருவரும் சுறுசுறுப்பாகச் செயல்பட்டுக் கொண்டேயிருப்பார்கள் . குறிப்பிட்ட வேலைகள் முடித்தே ஆக வேண்டும் என்பதற்காகத் தொடர்ச்சியாகத் தூக்கம் மறந்து ஓடிக் கொண்டேயிருக்க வேண்டும் . தொழிலாளர்கள் மட்டுமல்ல . ஒரு நிறுவனத்தின் அலுவலகம் சார்ந்த ஊழியர்களைத் தவிர்த்து உற்பத்தித்துறை சார்ந்து செயல்படும் எவரும் இப்படித்தான் இங்கே பணியாற்ற முடியும் . இவ்வாறு செயல்பட்டால் மட்டுமே தங்கள் பதவியைக் காப்பாற்றிக் கொள்ள முடியும் . ஆதிக்கம் , கொடுமை என்று நீங்கள் எத்தனை வார்த்தைகளை வேண்டுமென்றாலும் எழுதி வைத்துக் கொண்டு வருத்தப்படலாம் . ஆனால் இது போன்ற வார்த்தைகளைக் கோடிக்கணக்கில் முதலீடுகளைப் போட்டு விட்டு இரவு தூக்கம் வராமல் தவித்துக் கொண்டிருக்கும் முதலாளிகளைப் பார்க்கும் போது நமக்கே பாவமாக இருக்கும் . ஒரு வேளை அப்போது உங்கள் எண்ணம் மாறக்கூடும் . இவர்கள் ஒரு பக்கமும் நாளை இந்த வேலை நமக்கு இருக்குமா ? என்று தடுமாறும் தொழிலாளர்களுக்கும் இடையே தான் இன்றைய திருப்பூர் வாழ்ந்து கொண்டிருக்கின்றது . எட்டு ஆண்டுகளுக்கு முன்னால் நான் ஒரு பெரிய நிறுவனத்தில் உற்பத்தி துறையில் மேலாளராகப் பணியாற்றிக் கொண்டிருந்தேன் . ஒவ்வொரு நிறுவனத்திலும் வாரத்திற்கென்று இலக்கு வைத்திருப்பார்கள் . ஒரு வாரத்தின் வெள்ளிக்கிழமை என்பது இறுதி இலக்காக இருக்கும் . கப்பல் மூலம் செல்வதாக இருந்தால் தூத்துக்குடிக்கும் விமானம் மூலம் செல்வதாக இருந்தால் சென்னைக்கும் சென்றாக வேண்டும் . விமானம் மூலம் சென்றடைய குறிப்பிட்ட நாள் என்ற கணக்கு தேவையில்லை . குறிப்பிட்ட விமான வசதிகளைப் பொறுத்து எப்போது வேண்டுமானலும் நாம் பெட்டிகளை அனுப்பலாம் . நான் இருந்த நிறுவனத்தின் அந்த வாரத்தின் இலக்கின்படி குறிப்பிட்ட ஆடைகளை வெள்ளிக்கிழமைக்குள் அனுப்பியாக வேண்டுமென்ற கட்டாயத்தில் இருந்தேன் . ஆள் பற்றாக்குறையின் காரணமாக மற்றொரு சிறிய நிறுவனத்தில் தைத்துக் கொடுப்பதற்காகக் கொடுத்து இருந்தோம் . அந்தச் சிறிய நிறுவனத்தில் தான் மாடசாமியை சந்தித்தேன் . பகல் பொழுதில் முடித்துத் தருவதாகச் சொல்லியிருந்தார்கள் . ஆனால் வந்தபாடில்லை . மீண்டும் கேட்ட போது நள்ளிரவில் முடிந்து விடும் என்றார்கள் . இரவு ஒரு மணிக்குள் வந்து சேர வேண்டிய ஆடைகள் வராத காரணத்தினால் நானே நேரிடையாக அந்த நிறுவனத்திற்குச் சென்று சேர்ந்த போது அந்த நிறுவனம் இருளில் மூழ்கியிருந்தது . எவரும் வேலை செய்வதற்கான அறிகுறியே இல்லை . என் மனதிற்குள் பயம் எட்டிப்பார்த்து . நிச்சயம் நாளைய பொழுது நமக்கு மண்டகப்படி தான் என்று நினைத்துக் கொண்டு வாகனத்தை ஓரமாக நிறுத்தி விட்டு அந்த நிறுவனத்தின் உள்ளே நுழைந்தேன் . கதவு லேசாகத் திறந்தே இருந்தது . உள்ளே ஒரு ஓரத்தில் ஒரு விளக்கு எறிந்து கொண்டிருக்க அதன் கீழ் ஒருவர் புத்தகத்தைப் படித்துக் கொண்டிருந்தார் . மனதிற்குள் ஆசுவாசமாக இருந்தது . லேசாக இருமிக் கொண்டே அவரை நோக்கி நகர்ந்தேன் . அவர் என் குரலைக் கேட்டதும் அவசரமாக எழுந்து நின்றார் . அவர் படித்துக் கொண்டிருந்த புத்தகம் கீழே விழ அப்போது தான் அந்தப் புத்தகத்தின் அட்டைப்படத்தைப் பார்த்தேன் . பல புத்தகங்கள் அந்த மேஜையில் இருந்தது . எல்லாமே தன்னம்பிக்கை சார்ந்த புத்தகங்கள் . உள்நாட்டு , வெளிநாட்டு எழுத்தாளர்கள் எழுதிய புத்தகங்கள் . மனதிற்குள் ஆச்சரியம் பரவியது . இந்த நேரத்தில் இது போன்ற புத்தகங்களைப் படிக்கும் அவரை ஆச்சரியமாகப் பார்த்தேன் . ஒல்லியான உருவம் . அரும்பு மீசை . கிராமத்து முகம் . ஆடம்பரமில்லாத உடை . இடுங்கிப் போன கண்கள் . தொடர்ச்சியான இரவுப்பணியின் காரணமாக நிரந்தரமாக உருவான கண்ணக்கதுப்புக் கருவளையம் . நான் அவர் பிம்பத்தை உள்வாங்கிக் கொண்டு அந்தப் பகுதியில் எனக்கான பெட்டிகள் எதுவும் வைக்கப்பட்டுள்ளதா ? என்பதைப் பார்த்துக் கொண்டே மென்மையாக அவரிடம் என்னை அறிமுகம் செய்து கொண்டு நான் வந்த வேலை குறித்துக் கேட்டேன் . என்னை விடப் பல மடங்கு வயது குறைவாக இருந்தாலும் நான் மரியாதையாகப் பேசிய வார்த்தைகள் அவருக்கு உற்சாகத்தைத் தந்து இருக்க வேண்டும் . அந்தச் சமயத்திலும் அவர் களைப்பின்றி உற்சாகமாகப் பேசிய வார்த்தைகள் எனக்கு ஆச்சரியத்தைத் தந்தது . ” எல்லாமே ரெடியா இருக்கு சார் . உங்க கம்பெனியிலே இருந்து யாராவது வருவாங்கன்னு சொன்னாங்க . எனக்கு உங்க கம்பெனி எந்த இடத்தில் இருக்குன்னு தெரியாது . அதான் இங்கே உட்கார்ந்துட்டேன் ” என்றார் . அப்போது தான் அவன் ஒரு பலிகிடாவாக இந்த நிறுவனத்தில் இருப்பதைப் புரிந்து கொண்டேன் . [] 7 7. உழைத்து ( மட்டும் ) வாழ்ந்திடாதே ! [] 7. உழைத்து ( மட்டும் ) வாழ்ந்திடாதே ! ” என்னால் தொடர்ந்து ஒரு மணி நேரம் கூட நேராக நிற்க முடியல அண்ணே . முதுகுவலி வாட்டி வதைக்குது . நானும் சாதாரண வலின்னு கொஞ்சம் அசால்ட்டா இருந்துட்டேன் . ஆனா இன்றைக்குப் பெருவியாதி போல என்னைப் படுத்தி எடுக்குது . இந்தக் கம்பெனியிலே கடந்த நாலு வருஷமா டிவிஎஸ் 50 யை ஓட்டி இப்ப அந்த வண்டியை பார்த்தாலே பயமெடுக்குது . வெளியே நிக்கிற வண்டியைப் பாருங்க . தனியா விட்டுட்டு வந்தா எவனும் தூக்கிட்டுப் போகக்கூட ஆசைப்பட மாட்டான் . இங்கே இருக்குற புதுவண்டிகளை அவனவன் எடுத்துக்கிட்டு என் தலையிலே இந்த வண்டியை கட்டிட்டானுங்க . வேற வேலை கேட்டாலும் இங்கே என்னை ஆதரிப்பவர் யாருமில்லை . இங்கே எனக்குக் கொடுத்துருக்ற வேலை , வெளியே சுத்துறது மட்டும் . ஒட்டுமொத்தமாக அத்தனை பேரும் என் தலையில் கட்டி விட்டு ஒதுங்கிடுவாங்க . நான் தான் வெளிவேலைகள் எல்லாவற்றுக்கும் பொறுப்பு . எங்க ஊர்ல இருக்கிற பாதி இடங்கள் கூட எனக்குத் தெரியாது . ஆனா திருப்பூருக்குள்ளே இருக்கிற அத்தனை சந்து பொந்துகளும் இந்த நாலு வருசத்துல பழக்கமாயிடுச்சு . தினசரி காலை எட்டரை மணிக்கு அலையத் தொடங்கினால் ராத்திரி எத்தனை மணிக்கு வந்து படுப்பேன்னு தெரியல . இந்த வண்டியை எந்த வருஷத்துல வாங்குனாங்கன்னே தெரியல . என் உடம்பு பஞ்சராகி நாளுக்கு நாள் செயல்பட முடியாத நிலைமைக்குப் போய்விட்டது . யோசித்துப் பாருங்க . தினமும் 200 கிலோ மீட்டர் இந்த மாதிரி லெக்கடா வண்டியிலே இந்த ரோட்ல சுத்திக்கிட்டே இருந்தா உடம்பு என்னதுக்கு ஆகும் ? எப்படா இந்த வேலையை விட்டுட்டு ஊருக்கு போகலாம்ன்னு இருக்கு . ஆனால் அங்கே போனா என்ன செய்யுறதுன்னு குழப்பமாக இருக்குங்க “. அந்த நள்ளிரவில் மாடசாமியுடன் பேசிய இரண்டு மணி உரையாடலில் கடைசியாகச் சொன்ன இந்த வாசகங்கள் தான் நான் கிளம்பி வரும் போது யோசித்துக் கொண்டே வந்தேன் . நான் சென்ற வேலையில் கவனம் இருந்தாலும் அந்த நேரத்திலும் அவனின் சுறுசுறுப்பும் தொழிலில் காட்டி நேர்மையும் என்னை வியக்க வைத்தது . என்னுடன் வந்தவரிடம் அங்கே தயாராக இருந்த ஆய்த்த ஆடைகளைப் பண்டல் கட்டி அனுப்பி விட்டு மாடசாமியுடன் பேசத் துவங்கினேன் . காரணம் அவன் படித்துக் கொண்டிருந்த புத்தகங்கள் எனக்கு ஆச்சரியத்தைத் தந்தது என்பதை விடத் திருப்பூருக்குள் புத்தக வாசிப்பு உள்ளவரைப் பார்த்ததும் நான் திருப்பூருக்குள் காலடி வைப்பதற்கு முன் வாழ்ந்த புத்தக வாழ்க்கை என் நினைவுக்கு வந்தது . தொழில் நகரங்களில் புத்தகங்களுக்கு மதிப்பில்லை என்பதை விட எல்லாவற்றையும் அந்தஸ்த்தின் அடிப்படையிலே பார்க்கும் பார்க்கும் பழக்கம் இருப்பதால் பணம் சார்ந்த விசயங்கள் மட்டுமே இங்கே முக்கியத்துவம் பெறுகின்றது . பேசினால் பணம் . யோசித்தால் பணம் என்பதைத் தவிர வேறு எதையும் யோசிக்க மனமில்லாத இறுகிப்போன மனதோடு வாழவே பழகி விட்டனர் . அதையே சமூகமும் ” அங்கீகாரம் ” என்கிற நிலையில் வைத்துப் பார்ப்பதால் ஒவ்வொருவரும் அதன்வழியே நடக்கவே விரும்புகின்றனர் . சோர்ந்து போகும் மனதை எப்படி ஆறுதல் படுத்துவது என்பதை அறியாத முதலாளிகளுக்கும் சரி தொழிலாளிகளும் சரி கடைசியில் நாடுவது மதுக்கடைகளையே . இங்கே பணம் தான் ஒவ்வொருவரையும் இயக்குகின்றது . பணம் தான் வாழ வேண்டும் என்ற ஆசையையும் வளர்க்கின்றது . பணம் இருந்தால் எல்லாமே கிடைத்து விடும் என்ற எண்ணத்திற்குச் சமூகம் மாறி வெகு நாளாகிவிட்டது . மற்ற அனைத்தும் தேவையற்ற ஒன்றாக மாறிவிட்டது . தொழில் சமூகம் என்பதன் கொடூரமான உலகத்தில் ரசனைகள் என்பதை நினைத்துப் பார்க்க கூட முடியாது . அப்படி ரசனையுடன் வாழ விரும்புவர்களைத் தயவு தாட்சண்மின்றி எட்டி உதைத்து வெளியே தள்ளி விடும் என்பதால் அவரவர் சுயபாதுகாப்பு கருதி முகமூடிகளைப் போட்டுக் கொண்டு தான் வாழ விரும்புகின்றார்கள் . இவனுடன் ஏன் பேச வேண்டும் ? இவன் எதற்கு நம்மை அழைக்கின்றான் ? என்று அலைபேசியில் எண் வரும் பொழுதே பார்த்து எடுக்காமல் இருக்கும் பலரையும் எனக்குத் தெரியும் . ” உனக்குப் பணம் என்பது தேவையில்லாமல் இருக்கலாம் . எனக்கு அது தான் முக்கியத் தேவையாக இருக்கின்றது . உன் எண்ணம் என்னிடம் வந்தாலும் அந்தப் பணம் வந்து என்னிடம் சேராது ” என்று முகத்திற்கு நேராகச் சொன்னவரைப் பார்த்து ஆச்சரியப்பட்டுள்ளேன் . பணம் என்பதை வாசலில் மாக்கோலம் போட்டு பந்தல் கட்டி வரவேற்க்க காத்திருப்பவர்கள் போலத்தான் இங்கே பலரும் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர் . ஆனால் மாடசாமி போன்றவர்கள் இது போன்ற கொடுமையான சூழலில் பணிபுரிந்தாலும் பணத்திற்கு அப்பாலும் ஒரு உலகம் உள்ளது என்பதை உணர்ந்து கொண்டு கிடைத்த ஓய்வு நேரத்தில் புத்தகம் வாசிக்கப் பழக்கப்படுத்தியிருக்கும் அவனின் குணாதிசியத்தை ஆச்சரியத்துடன் கவனித்தேன் . மாடசாமியுடன் உரையாடத் துவங்கும் முன் பல சிந்தனைகள் என் மனதில் அலையடித்தாலும் அவனின் வெள்ளந்தித்தனம் என்னால் பலவற்றையும் இயல்பாக அவனுடன் பேசக் காரணமாக அமைந்தது . எங்கள் உரையாடல் அதிகாலை வரை வளர்ந்து கொண்டேயிருந்தது . அப்போது தான் அவனைப் போல ஆய்த்த ஆடைத்துறையில் அஸ்திவாரம் போல இருந்து செயல்பட்டுக் கொண்டிருக்கும் பல நபர்களைப் பற்றி யோசித்துப் பார்த்தேன் . சிறிய வயது . பெரிய பொறுப்பு . ஆனால் அது பெரிய சமாச்சாரமாகத் தெரியாமலேயே இரவு பகலாகப் பாடுபட்டுக் கொண்டிருக்கும் ஒவ்வொரு நபரையும் யோசிக்கத் துவங்கினேன் . ஒருவர் பணிபுரிகின்ற நிறுவனம் திருப்பூரின் ஒரு பகுதியில் இருக்கும் . 15 கிலோமீட்டர் தாண்டி சாயப்பட்டறை இருக்கும் . எவரோ செய்த தவறினால் ஐந்து கிலோ துணி அங்கே இருக்க அவசரம் அவசரமாக நள்ளிரவில் அந்தத் துணியை எடுத்து வர வண்டியை எடுத்து முறுக்க வேண்டும் . வாங்கிய துணியை மற்றொரு இடத்துக்குக் கொண்டு போய்க் கொடுத்துச் செய்ய வேண்டியதை செய்து மீண்டும் நிறுவனத்துக்குள் வந்து சேரும் போது அதிகாலை நேரமாக இருக்கும் . எடுத்துச் செல்லும் வண்டியில் பெட்ரோல் இல்லாவிட்டாலும் கையில் காசில்லாவிட்டால் நள்ளிரவில் தள்ளிக் கொண்டே தான் வந்து சேர வேண்டும் . ஏன் தாமதம் ? என்று கேட்க ஆட்கள் இருப்பார்கள் . இத்தனை சிரமத்தை சந்தித்தாயா ? என்று கேட்பவர் எவரும் இருக்கமாட்டார்கள் . ஒவ்வொரு நிறுவனத்திலும் ஒவ்வொருவிதமாகக் கூத்துக்களைப் பார்க்க முடியும் . வெளிநாடுகளுக்குக் கொரியர் வழியே சாம்பிள் பீஸ் அனுப்ப இரவு பத்து மணிக்குள் தயாராக இருக்க வேண்டும் . ஒன்பது மணிக்குத்தான் அந்த ஆடையில் அடிக்க வேண்டிய பட்டன் நிறம் மாறியுள்ளதைப் பார்த்து அங்கே ஒரு களேபரம் உருவாகும் . நாள் முழுக்க ஆமை போலச் செயல்பட்ட அத்தனைபேர்களும் இரவில் முயல் போல முன்னங்கால் பாய்ச்சலில் ஓடிக்கொண்டிருப்பர் . முதலாளியிடம் வாங்கிய திட்டுக்களை உள்ளே பத்திரப்படுத்திக் கொண்டு மறுநாளும் அதேபோலத் தான் செயல்பட்டுக் கொண்டிருப்பர் . சர்வதேச நிறுவனங்களில் தொடங்கி தேசிய அளவில் வரைக்கும் நடந்து கொண்டிருக்கும் பலதரப்பட்ட துறைகள் சார்ந்த நிறுவனங்களில் ஒரு ஒழுங்குமுறை இருக்கும் . குறிப்பிட்ட எட்டு மணி நேரத்திற்குள் எப்படிச் செயலாற்றுவது என்பதை இயல்பான பழக்கமாக மாற்றி வைத்திருப்பர் . ஆனால் திருப்பூர் நிறுவனங்கள் கடந்த இருபது வருடங்களாகக் கொடி கட்டி பறந்து கொண்டிருந்தாலும் கொடிக்கயிறு அவிழ்ந்து கடைசியில் முதலாளி இடுப்பில் கட்டியிருக்கும் கோவணக்கயிறும் அவிழ்ந்த கதையாகத்தான் இங்குள்ள நிர்வாக அமைப்பு உள்ளது . அட , இப்படி ஒரு தவறு நிகழ்ந்து விட்டதே ? ஒரு மனித உழைப்பு வீணாகப் போய்க் கொண்டிருக்கின்றதே என்று எவரும் யோசிக்க விரும்புவதில்லை . அலைவதற்கு என்று ஆள் இருக்கின்றான் தானே ? என்ற அலட்சிய மனப்பான்மை தான் ஒவ்வொருவர் மனதிலும் இருக்கும் . கடைசியில் பலிகிடா போலப் பலரும் பாதிக்கப்பட்டு ஒரு நாள் நிறுவனம் படுத்த படுக்கை நோயாளி போல மாறிவிடும் . மதிக்கத் தெரியாத முதலாளிகளிடம் பணிபுரிபவர் எப்படிப்பட்டவர்களாக இருப்பவர் ? சுயகௌரவத்திற்காகக் கோடிகளை இழக்கத் தயாராக இருப்பவர்கள் சில ஆயிரங்களை எதிர்பார்க்கும் நபர்களைத் துச்சமாக மதிப்பதால் கடைசியில் ஒவ்வொரு முதலாளிகளும் தெருக்கோடிக்குத்தான் வந்து நிற்கின்றார்கள் . மற்றத்துறைகளுக்கும் ஆய்த்த ஆடைத் துறைக்கும் முக்கிய வேறுபாடுண்டு . இந்தத் துறையில் ஒவ்வொரு நிலையிலும் மனித உழைப்பு தேவை பட்டுக் கொண்டேயிருக்கும் . தவறுகள் எங்கு வேண்டுமானாலும் நடக்கலாம் . எல்லா இடத்திலும் கவனிப்பு இருந்து கொண்டே இருக்க வேண்டும் . முதலாளியோ ? தொழிலாளியோ ? இருவருக்கும் நித்ய கண்டம் பூரண ஆயுசு தான் . நிம்மதி என்பது மிக மிகக் குறைவாக இருந்தாலும் இந்தத் துறையில் இருப்பவர்கள் வேறு துறைக்குச் செல்ல விரும்பாமல் பெரும்பாலும் இதற்குள்ளே காலத்தை ஓட்ட தயாராக உள்ளனர் . மாடசாமியும் பலிகிடா தான் . ஆனால் இதையும் தாண்டி அவனால் மேலே வர முடியாததற்குக் காரணம் அவனின் நேர்மையான அணுகுமுறையே முக்கியக் காரணமாக இருந்தது . உழைத்தால் போதும் . முன்னேறிவிடலாம் என்ற புத்தக அறிவு அவனை வழிநடத்தியே தவிர உழைக்காமல் இருப்பவர்களை எப்படி எதிர்கொள்ள வேண்டும் என்பதை அவனால் புரிந்து கொள்ள முடியவில்லை . உழைக்காமல் இருக்கப்பழகியவர்கள் தினசரி வாழ்க்கையில் கடைபிடித்துக் கொண்டிருந்த தந்திரங்களை அவனால் கற்றுக் கொள்ளவும் முடியவில்லை . தோற்றுப்போய்க் கடைசியில் ” உங்களுடன் என்னால் இனி போராட முடியாது ” என்கிற நிலையில் தான் இங்கே வாழ்ந்து கொண்டிருந்தான் . பத்தாம் வகுப்பு முடித்து விட்டு ஊரில் மேற்கொண்டு படிக்க வசதியில்லாத காரணத்தால் திருப்பூர் கிளம்பி வந்தவனுக்கு நண்பன் மூலம் ஒரு நிறுவனம் அறிமுகம் ஆனது . மாடசாமியின் கையெழுத்து அழகாக இருக்க நிறுவனத்தில் இருந்து வெளியே செல்லும் பொருட்களுக்கு டெலிவரி சலான் போட்டு அதைக் கவனிக்கும் பொறுப்பு வழங்கப்படக் கிராமத்து வெள்ளந்தி மனம் அடுத்தடுத்த வேலைகளை இழுத்துப் போட்டுச் செய்ய அவனை அடுத்தடுத்த கட்டத்திற்கு நகர்த்திக் கொண்டே வந்தது . முதல் வருட இறுதியில் நிறுவனத்தில் இருந்த டிவிஎஸ் 50 யை கையில் கொடுத்து ” இனிமேல் இந்த வண்டி உன்னுடைய பொறுப்பு . வெளி வேலைகளையும் சேர்த்து பார்த்துக் கொள் ” என்று வாங்கிக் கொண்டிருந்த எட்டாயிரம் சம்பளத்தோடு ஆயிரம் ரூபாயை சேர்த்துக் கொடுக்க மாடசாமி மகிழ்ச்சி சாமியாக மாறி ராப்பகலாக அலையத் துவங்கியிருக்கிறான் . ஓய்வே இல்லை . தொடர்ச்சியாக அடுத்தடுத்த வேலைகள் காத்துக் கொண்டிருக்க ஏமாற்ற மனமில்லாமல் ஒவ்வொருவர் இடும் கட்டளைகளையும் சிரமம் பார்க்காமல் செய்து கொண்டு வர உடம்பில் ஒவ்வொரு உபாதையும் உருவாகத் தொடங்கியது . நேரத்திற்குச் சாப்பிட முடியாத காரணத்தில் முதலில் வயிற்றில் புண் உருவாக அடுத்தப் பரிசாக இரத்த சோகையும் வந்துவிட இரண்டாவது வருட இறுதியில் வந்து சேர்ந்தது தான் முகுது வலி . கடந்த நாலைந்து ஆண்டுகளாகத் திருப்பூர் சாலை வசதிகள் பரவாயில்லை ரகம் தான் . ஆனால் 15 ஆண்டுகளுக்கு முன் திருப்பூருக்குள் வந்தவர்கள் முக்கியமாக இரண்டு விசயங்களைச் சமாளிக்கத் தெரிந்திருக்க வேண்டும் . தண்ணீர் பிரச்சனை மற்றொன்று குண்டும் குழியுமாக இருந்த சாலைகள் . எல் அண்ட் டி என்ற தனியார் நிறுவனம் மூலம் தற்காலிகத் தீர்வாகத் திருப்பூர் முழுக்கத் தேவையான குடிநீரை வழங்கிக் கொண்டிருக்கின்றது . இதைப் போலவே சாலை வசதிகளும் சற்று மேம்பட்டுள்ளது . வட மாநில முதலாளிகள் அதிகளவில் திருப்பூரில் தொடக்கம் முதல் தங்க விரும்பாமல் கோவை பக்கம் சென்றதற்குக் காரணமே இந்த இரண்டு பிரச்சனைகள் தான் . இந்தச் சாலை வசதிகள் அடிமட்ட நிலையில் பணிபுரியும் மாடசாமி போன்று தினந்தோறும் வெளியே அலைந்தே ஆக வேண்டும் என்று வாழ்ந்தே ஆக வேண்டும் என்ற நிலையில் உள்ள பலருக்கும் மொத்த உடல் உபாதையையும் தந்து கடைசியில் படுத்த படுக்கையாக மாற்றிக் கொண்டிருக்கின்றது . மாடசாமி ஓட்டிக் கொண்டிருந்த வண்டியை கவனித்தேன் . வண்டி என்ற பெயரில் ஒரு உருவத்தில் இருந்தது . எப்போது எந்தப் பகுதி கழன்று விழுமோ ? என்ற அச்சத்தைத் தருவதாக இருந்தது . மற்ற ஊர்களில் இரண்டு சக்கர வாகனங்களைப் பயணிக்கத்தான் பயன்படுத்துவர் . ஆனால் திருப்பூரில் ஐம்பது கிலோ துணியைக்கூட அநாயசமாக வண்டிக்குள் திணித்து ஓட்டிக் கொண்டு செல்வர் . திருப்பூரில் ஒவ்வொருவரும் பயன்படுத்தும் இரண்டு சக்கர வாகனங்களுமே இரண்டு வசதிகளுக்காக மட்டுமே . மனிதச் சுமைகள் பாதி மீதி துணிச்சுமை . பல சமயம் ஐம்பது கிலோ நூல் மூட்டையை வைத்துக் கொண்டு சர்வசாதாரணமாகச் சாலையில் பறப்பர் . இதே போலப் பலசமயம் மாடசாமி நிறுவனத்தின் மொத்த சுமையையும் பொதி கழுதை போலச் சுமக்க தொடக்கத்தில் உடம்பு வலி உருவானது . அதனைத் தொடந்து முதுகுவலியும் வந்துள்ளது . முதுகு வலியின் உண்மையான தன்மையை உணரத் தெரியாமல் உடம்பு வலிதானே ? என்று யோசித்துக் கண்ட மாத்திரைகளை வாங்கிப் போட்டுக் கொள்ள அது பக்க விளைவுகளை உருவாக்கத் தொடங்கியது . தொடர்ச்சியாக ஓய்வே இல்லாமல் பயணித்த காரணத்தினால் சாலையில் உள்ள மேடுபள்ளத்தில் ஏறி இறங்கி பயணித்த அவனின் நெடுஞ்சாலைப் பயண வாழ்க்கை கடைசியில் பாயில் நெடுஞ்சான்கிடையாகப் படுக்க வைக்கும் நிலைக்குத் தள்ளிவிட்டது . கடைசியாகத் தண்டுவட பாதிப்பில் கொண்டு வந்து நிறுத்தி விட்டது . மாடசாமிக்கு உருவான நிரந்தர முதுகு வலியை குறித்து யோசிக்க அந்த நிறுவனத்தில் எவருக்கும் நேரமில்லை . மாடசாமி பார்க்கும் வேலையின் பெயர் PRODUCTION FOLLOW UPS என்கிறார்கள் . பத்தாண்டுகளுக்கு முன் திருப்பூர் நிறுவனங்களில் வேலையில் சேர்வது என்பது வாய் வார்த்தை பரவல் மூலமாக நடந்து கொண்டிருந்தது . மாமன் , மச்சான் , பங்காளி என்று தொடங்கிக் கொளுந்தியாள் , நாத்தினார் , தங்கை , அப்பா , அம்மா என்று தொடர்ந்து கடைசியாகப் பக்கத்துவீட்டுக்காரன் என்பது வரைக்கும் திருப்பூர் வந்து சேர்ந்து விடுவார்கள் . ஓரே குடும்பத்தைச் சேர்ந்த பத்து பதினைந்து பேர்கள் ஒரே நிறுவனத்தில் பணிபுரிவார்கள் . கூட்டுக் குடித்தன வாழ்க்கை போலக் கூட்டு ஒப்பந்தம் போட்டு சம்பாரித்து அவரவர் ஊரில் வசதியாக வீடு கட்டி வாழ்ந்து கொண்டிருப்பவர்களும் உண்டு . கூட்டணி போட்டு கெட்டு அழிந்தவர்களும் உண்டு . அவரவர் வினை வழி . அவரவர் விதி வழி . ஆனால் சமீப காலமாகத் திருப்பூர் என்பது தமிழ்நாட்டின் மற்ற பகுதிகளில் குற்றச் செயல்களில் ஈடுபட்டு அடைக்கலாம் புக உதவும் ஊராக இருப்பதால் ஒரு பக்கம் காவல் துறையும் மற்றொரு பக்கம் நிறுவனத்தின் மனிதவளத்துறையில் உள்ளவர்களும் கண்ணில் விளக்கெண்ணையை ஊற்றிக் கொண்டு ஒவ்வொருவரையும் பார்த்து பார்த்து தேர்ந்தெடுக் கின்றார்கள் . ஒருவர் எந்தப் பதவிக்குச் சேர்ந்தாலும் நிறுவனத்தில் உள்ளே நுழைந்ததும் தேவையான ஆவணங்கள் அனைத்தையும் வாங்கி வைத்துக் கொள்கின்றார்கள் . இது தவிரத் தினசரி நாளிதழ்கள் மூலம் அதிகளவில் விளம்பரம் கொடுத்தும் எடுக்கின்ற கலாச்சாரம் தற்பொழுது உருவாகியுள்ளது . திருப்பூர் மாவட்டத்தில் வெளி வருகின்ற எந்தப் பத்திரிக்கையிலும் நிறுவனத்திற்கு ஆட்கள் தேவை என்று வந்தால் நிச்சயம் மாடசாமி பணிபுரிகின்ற பதவியும் சேர்ந்த வரும் . காரணம் இது போன்ற பதவிக்கு வருகின்றவர்கள் அசராத உழைப்புக்கு சொந்தக்காரர்களாக இருக்க வேண்டும் . முன்பு அந்தந்த நிறுவனங்களே வெளியே சுற்ற இரண்டு சக்கர வாகனங்களைக் கொடுத்துக் கொண்டிருந்தனர் . ஆனால் இந்த நிலை மாறி தற்பொழுது இந்தப் பதவிக்கு வருகின்றவர்கள் கட்டாயம் இரண்டு சக்கர வாகனங்கள் வைத்திருக்க வேண்டும் . நிறுவனம் பெட்ரோல் கொடுத்து விடுவார்கள் . அதற்குத் தனியாக ஒரு நோட்டு வைத்துக் கொண்டு எங்கிருந்து சென்று எங்கே வந்து சேர்ந்தேன் என்று கிலோ மீட்டர் கணக்கு எழுதிக்காட்டி தினந்தோறும் குறிப்பிட்ட நபரிடம் கையெழுத்து வாங்க வேண்டும் . அதன் பிறகே அடுத்தப் பெட்ரோல் டோக்கன் கிடைக்கும் . மிகப் பெரிய நிறுவனங்கள் மற்றும் பெரிய நிறுவனங்களில் ஒவ்வொரு துறைக்கும் தனித்தனியாக ஆட்கள் உண்டு . அவரவருக்குண்டான பொறுப்புகள் என்று வரையறை உண்டு . அந்த வேலைகளை முடித்து விட்டு அடுத்தத் துறை மக்களிடம் கொடுத்து விட்டால் போதுமானது . இதே போல் ஒவ்வொரு துறையாக நகர்ந்து வந்து கடைசியில் தேய்த்துப் பாலிபேக்கில் போட்டு பெட்டிக்கு வந்து விடும் . ஆனால் இன்று வரையிலும் சிறிய நிறுவனங்களில் உள்ளே பணிபுரியும் ஒரு சில நபர்கள் தான் ஒரு நிறுவனம் சார்ந்த அனைத்த பொறுப்புகளையும் கவனிக்க வேண்டும் . ஐம்பது வேலைகள் இருந்தாலும் ஒரு நாள் முழுக்க அனைத்து வேலைகளையும் அவரே முடிக்க வேண்டியதாக இருக்கும் . பல சமயம் தவறு ஏதும் நிகழ்ந்தால் அந்தக் குறிப்பிட்ட நபரே பலிகிடாவாக மாற்றப்படுவார் . வேலை பறிபோய்விடும் வாய்ப்புண்டு . தற்போதைய சூழ்நிலையில் எந்தப் பொருளும் கடனுக்கு எங்கும் வாங்க முடியாத சூழ்நிலை நிலவுவதால் ” கையில் காசு வாயில் தோசை ” என்கிற நிலையில் தான் தற்போது இந்தத் தொழில் உள்ளது . ஏழெட்டு வருடங்களுக்கு முன் சிறிய நிறுவனங்களை எந்தப் பெரிய நிறுவனங்களும் மதிப்பதே இல்லை . சிறிய நிறுவனங்கள் தங்கள் வேலைகளை முடித்துக் கொடுத்தாலும் அவர்களுக்குச் சேர வேண்டிய பணம் அவர்கள் வாங்குவதற்குள் தலையால் தண்ணீர் குடிப்பது போலத் தடுமாறிப் போய்விடுவார்கள் . பெரிய நிறுவனங்கள் என்ன காரணங்கள் சொல்லி நாமத்தை போடலாம் என்று காத்திருப்பார்கள் . இது போன்ற அனைத்து விசயங்களையும் தாண்டி சிறிய நிறுவனங்கள் தங்களை இந்தச் சந்தையில் நிலைபடுத்திக் கொள்ள வேண்டும் . வாழ்க்கை ஒரு வட்டம் தானே ? தற்பொழுது திருப்பூர் சந்தையில் சிறிய நிறுவனங்கள் தான் சக்கைபோடு போட்டுக் கொண்டிருக்கின்றார்கள் . ” காசை கொடுத்து விட்டு எடுத்துட்டு போ . இல்லைன்னா இந்தப்பக்கம் வந்துடாதே ” என்று விரட்டுகின்றார்கள் . பெரிய நிறுவனங்கள் கடைபிடிக்க வேண்டிய கட்டுப்பாடுகள் எதுவும் சிறிய நிறுவனங்கள் பொருட்படுத்துவதே இல்லை . அதைக் கவனிக்கவும் அதிகாரவர்க்கத்திற்கு நேரமும் இருப்பதில்லை . காரணம் தொழிலாளர்களின் பற்றாக்குறை அந்த அளவுக்கு இந்தத் தொழிலை படாய் படுத்திக் கொண்டிருக்கின்றது . பத்து வருடங்கள் ராப்பகலாக உழைத்து , தங்கள் ஆரோக்கியத்தைப் பற்றிக் கவலைப்படாத அத்தனை பேர்களையும் வாழ முடியாத நிலைக்கு இந்தத்துறை துப்பித் தள்ளிக் கொண்டேயிருக்கின்றது . புதிய நபர்கள் தமிழ்நாட்டில் இல்லை என்றால் என்ன ? நேபாளம் தொடங்கி வட மாநிலங்கள் வரைக்கும் புரோக்கர் வைத்துக் கொண்டு வந்து இறக்கிக் கொண்டேயிருக்கின்றார்கள் . இதன் காரணமாகவே தங்கள் நிறுவனங்களில் செய்ய வேண்டிய வேலைகளை மற்ற சிறிய நிறுவனங்களில் கொடுத்து பெரிய நிறுவனங்கள் குறிப்பிட்ட காலத்தில் ஏற்றுமதி செய்து கொண்டிருக்கின்றார்கள் . சிறிய நிறுவனமோ ? பெரிய நிறுவனங்களோ அவர்களின் நிர்வகத் தன்மை எப்படியிருந்தாலும் மாடசாமி போன்றவர்கள் நூற்றுக்கணக்கான பேர்கள் தங்களின் உழைப்பை கொடுத்து விட்டு செயல்படா முடியாத நிலை வரும் பொழுது நடைபிணமாக அவரவர் வாழ்ந்த ஊருக்குக்குத் திருப்பூர் ஆய்த்த ஆடைத்துறை அனுப்பி வைத்துக் கொண்டிருக்கின்றது . காரணம் மாடசாமி கடைசியாகச் சென்ற ஆண்டு என் அலைபேசியில் தொடர்பு கொண்ட போது ” எப்ப எனக்குச் சாவு வரும்ன்னு காத்துக்கிட்டு இருக்கேன் ” என்றான் . 8 8. பலி கொடுத்து விடு ! [] 8. பலி கொடுத்து விடு ! ஒவ்வொரு துறையிலும் மாடசாமிகள் போல உழைப்பதற்கென்றே பிறப்பெடுத்த பிறவிகள் உண்டு . இவர்களைப் போன்றவர்கள் வாழ்க்கை முழுக்கப் பிறருக்காகவே தங்களை அர்ப்பணித்து விட்டு தனக்கென்று எதையும் பார்த்துக் கொள்ள விரும்பாமல் மடிந்தும் போய்விடுகின்றார்கள் . ஆனால் ஒவ்வொரு தொழில் நிறுவனங்களிலும் வரம் தரும் சாமியான முதலாளிகளைக் காலி செய்யக்கூடிய ஆசாமிகளைப் பற்றித்தான் இப்போது நாம் பேசப் போகின்றோம் . இவனைப் பலிகொடுத்தால் தான் நாம் இனி பிழைக்க முடியும் ? என்று யோசிக்க வைக்கக் கூடிய மோசமான நபர்களும் ஒவ்வொரு இடத்திலும் இருக்கத்தானே செய்கின்றார்கள் ? திருப்பூர் போன்ற கோடிக்கணக்கில் பணம் புழங்கும் ஊர்களில் ஒவ்வொரு இடத்திலும் திருட்டுத்தனத்திற்குப் பஞ்சமே இல்லை . எனக்குத் தெரிந்த ஒரு பெரிய ஏற்றுமதி நிறுவனத்தில் ஒரு ஒப்பந்தத்திற்குப் போடப்படுகின்ற விலையில் அந்த நிறுவனத்தின் முதலாளி ஐந்து சதவிகிதம் என்று தனியாகக் கட்டம் கட்டி வைத்து விடுவார் . காரணம் நிறுவனத்திற்குள் நடக்கின்ற திருட்டுத்தனத்தை ஓரளவுக்கும் மேல் கட்டுப்படுத்த முடியவில்லை என்பதாகக் காரணம் சொல்கின்றார் . அந்த ஐந்து சதவிகிதத்திற்குள் திருட்டுத்தனம் நடந்தால் அதைக் கண்டும் காணாமல் போய்விடுவார் . இதைப் போல ஒவ்வொரு ஆய்த்த ஆடை நிறுவனங்களும் ஒவ்வொரு விதமாகச் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றது என்பதை நீங்கள் எப்போதும் நினைவில் வைத்திருக்க வேண்டும் . எந்த நிறுவனமாக இருந்தாலும் பத்துப் பேர்கள் இருந்தால் சில கட்டுப்பாடுகள் மூலம் மொத்த நிர்வாகத்தையும் கட்டுக்குள் வைத்திருக்க முடியும் . அதுவே எண்ணிக்கை நூற்றைத் தாண்டும் போது இன்னும் கொஞ்சம் மெனக்கெட வேண்டியிருக்கும் . ஆனால் ஐநூறு பேர்கள் இருந்தால் திறமையான நிர்வாகமாக இருந்தாலும் திருட்டுத்தனத்தைக் கட்டுக்குள் கொண்டு வருவது கடினமே . எனது ஆயத்த ஆடைத் துறையின் இருபது வருட அனுபவத்தில் பலவற்றையும் பார்த்துள்ளேன் . சில சமயம் மிரட்சியும் பல சமயம் பயத்தில் நடுக்கத்தையும் உருவாக்கும் அளவிற்குப் பல அனுபவங்களை அவஸ்த்தைகளுடன் கடந்து வந்துள்ளேன் . இவரா ? இப்படியா ? என்று ஆச்சரியமாகப் பார்க்க வைக்கும் பல நபர்களை இந்தத் துறையில் சந்தித்துள்ளேன் . ஒவ்வொரு திருட்டுத்தனத்திற்குப் பின்னாலும் ஒரு சிறப்பான சிந்தனை இருப்பதை மறுக்க முடியாது . அது நம்முடைய பார்வையில் கேவலமாகத் தெரிந்தாலும் திருடிப்பிழைப்பவர்களின் மனதில் எந்தக் குற்ற உணர்ச்சியையும் உருவாக்குவதில்லை . திருடுபவர்களின் சித்தாந்தம் எளிதானது . ‘ எனக்குத் திருட முடிகின்றது . நீ திருட வாய்ப்பு கொடுப்பதால் தானே ?’ என்பதாகத்தான் உள்ளது . தர்மம் , நியாயம் , அறம் என்பதெல்லாம் அன்றும் இன்றும் பலரின் வாழ்க்கையில் வெறும் வார்த்தைகள் மட்டுமே . பணம் என்ற காகிதத்திற்காக , தன் சுகம் என்ற குறுகிய வட்டத்திற்காக எந்த எல்லைக்கும் போகலாம் என்பதாகத்தான் இங்கே பலரின் கொள்கைகளும் உள்ளது . அவன் கோடீஸ்வரன் தானே ? அவனுக்கென்ன பிரச்சனை ? என்று நீங்கள் பொறாமை படலாம் ? நெட்டி முறிக்கலாம் ? ஆனால் நீங்கள் சுட்டிக்காட்டும் கோடீஸ்வரன் நடத்துகின்ற நிறுவனத்தில் அவர் எத்தனை கேடிகளை வைத்துச் சமாளித்துக் கொண்டிருக்கின்றார் ? என்பதை உள்ளே நுழைந்து பார்த்தால் தான் அவரின் வலியும் வேதனைகளையும் நம்மால் புரிந்து கொள்ள முடியும் ? காரணம் இங்கே ஒவ்வொரு முதலாளியும் தங்களின் தொழிலை வளர்க்கக்கூடிய சிந்தனைகளை வளர்த்துக் கொள்வதை விடத் தாங்கள் நடத்துகின்ற தொழிலை எப்படி நீண்ட காலத்திற்கு நடத்திச் செல்வது ? என்பதில் தான் பல நடைமுறை சவால்களைச் சந்திக்கின்றார்கள் . அரசாங்க அதிகாரிகளின் தொந்தரவு ஒரு பக்கம் . மற்றொரு புறம் உள்ளே இருப்பவர்களின் அரிப்பு போன்றவற்றைச் சமாளிக்கத் தெரிந்தவராக இருக்க வேண்டும் . ஏழை , பணக்காரன் என்ற பெரிய இடைவெளி என்ற பள்ளத்தாக்கின் ஆழமும் அகலமும் நாளுக்கு நாள் இங்கே அதிகமாகிக் கொண்டே போகின்றது . இந்த இடைவெளியில் எந்த நம்பிக்கையையும் இட்டு நிரப்பமுடியாத அளவுக்கு மனிதர்களின் அவநம்பிக்கைகள் காலந்தோறும் அளவு கடந்து போய்க் கொண்டேயிருக்கின்றது என்பது நாம் அறிந்தது தானே ?. இதுவே இன்றைய சூழ்நிலையில் கெட்ட விசயங்கள் அனைத்தும் நல்ல விசயங்களாக மாறியுள்ளது . நல்ல விசயங்கள் அனைத்தும் ஏளனமாகப் பார்க்கப்படுகின்றது . எவர் சொல்லும் அறிவுரையும் எடுபடுவதில்லை . அப்படியே சொன்னாலும் நீ ரொம்ப யோக்கியமா ? என்று எதிர்மறை கேள்வி வந்து தாக்குகின்றது . தர்மத்திற்குப் புறம்பான அனைத்து விசயங்களும் குறிப்பிட்ட சொல்லால் சிலாகித்துப் பேசப்படுகின்றது . ‘ கட்டிங் ‘ என்ற வார்த்தை இரண்டு இடங்களில் இயல்பான வார்த்தையாக மாறியுள்ளது . ஒன்று மதுக்கடைகளில் மற்றொன்று கமிஷன் என்ற பெயரில் நடக்கும் கொள்ளை சமாச்சாரத்தில் இந்த வார்த்தை பயன்படுத்தப்படுகின்றது . அரசியலில் தொடங்கி அதிகாரவர்க்கத்தினர் மற்றும் தொழில் நிறுவனங்கள் வரைக்கும் ‘ கையூட்டு ‘ என்ற வார்த்தை என்பது குற்ற உணர்ச்சியை உருவாக்காத அளவிற்குப் புரையோடிப் போய்விட்டது . கடைசியாக லஞ்சம் வாங்கத் தெரியாதவன் ‘ பிழைக்கத் தெரியாதவன் ‘ என்று தூற்றப்படுவதால் ‘ நான் நேர்மையுடன் வாழ வேண்டும் ‘ என்ற எண்ணம் கொண்டவனின் சிந்தனையைச் சமூகத்தால் மெதுவாக மழுங்கடிக்கப் படுகின்றது . மொத்த சமூகமும் பன்றிக்கூட்டமாக மாறிய பின்பு நாம் மட்டும் ஏன் பசுவாக வாழ வேண்டும் என்ற எண்ணம் அவரவர் மனதிலும் மேலோங்குகின்றது . இங்கே ஒரு பதவியில் இருக்கும் தனி நபர் நேர்மையான எண்ணத்துடன் வாழ்வது எளிது . ஆனால் ” வாழ்க்கை என்பது வெல்வதற்காக மட்டுமே . வெற்றி பெற்றவர்களுக்கே இங்கே மரியாதை “. அந்த வெற்றி என்பது பணத்தால் மட்டுமே கிடைக்கும் . எனவே நேர்மை என்பது தேவையில்லை என்பதாக நினைப்பில் வாழும் கூட்டத்தோடு வாழந்தாக வேண்டிய சூழ்நிலையில் தான் இங்கே பலதும் மாறிவிடத் தொடங்குகின்றது . இது போன்ற சூழ்நிலையில் உருவாகும் பிரச்சனைகளை எதிர்கொள்வது தான் இன்றைய காலகட்டத்தில் மிகச் சவாலான விசயமாக உள்ளது . இதனால் தான் இன்று பலரும் நமக்கேன் வம்பு ? என்று ஒதுங்கி போய்க் கொண்டேயிருக்கின்றார்கள் . இது போன்ற சமாச்சாரங்கள் தான் திருப்பூரில் உள்ள ஆயத்த ஆடைத்துறையில் அதிகம் நடந்து கொண்டிருக்கின்றது . ஆயத்த ஆடைத்துறையில் MERCHANDISER என்றொரு பதவியுண்டு . இதிலும் சீனியர் , ஜுனியர் போன்ற பிரிவுகள் உண்டு . இதுவொரு முக்கியமான பதவியாகும் . இந்தப் பதவியில் உள்ளவர்கள் தான் வெளிநாட்டில் இருந்து ஒப்பந்தம் கொடுப்பவர்களுக்கும் தாங்கள் பணிபுரிகின்ற நிர்வாகத்திற்கும் இடையே இருந்து செயல்படுபவர்களாக இருக்கின்றார்கள் . இந்தப் பதவியில் உள்ளவர்களின் ஒவ்வொரு செயல்பாடுகளும் மிக முக்கியமானது . ஒரு குழந்தை கருவாகி , உருவாகி , சுகப்பிரசவம் பார்ப்பது போல ஒரு ஆடையின் அளவுகள் , வடிவமைப்புகள் , அந்த ஆடையில் வர வேண்டிய பிரிண்டிங் , எம்பிராய்ட்ரி , வண்ண வேலைப்பாடுகள் தொடங்கி அனைத்தையும் மிக நுணுக்கமாகக் கவனிக்கப்பட வேண்டிய நபராக இருப்பார்கள் . இந்தப் பதவியில் இருப்பவர்களைச் சுற்றிலும் பல துறைகள் உள்ளது . ஒவ்வொரு துறையும் ஒரு கடல் போன்றது . தனியான ராஜாங்கம் , தனித்தனியான சட்டதிட்டங்கள் உண்டு . ஆனால் மெர்சன்டைசர் பதவியில் இருப்பவர்கள் தங்களைச் சுற்றியுள்ள ஒவ்வொரு துறையில் உள்ளவர்களையும் வேலை வாங்க வேண்டிய நிலையில் இருப்பதால் திரைப்படத்துறையில் உள்ள இயக்குநர் போன்று செயல்பட வேண்டியவர்களாக இருப்பார்கள் . குறிப்பாக ஆடைகளில் வர வேண்டிய சமாச்சாரங்களை இவர்கள் சரியாகக் கவனிக்காத பட்சத்தில் முதலாளியின் பணம் குப்பைத்துணிக்கு முதலீடு போட்டது போல மாறிவிடும் ஆபத்துள்ளது . எந்தத் துறை தவறு செய்தது என்பது முதலாளிக்கு தேவையிருக்காது ? நீ ஏன் கவனிக்கவில்லை ? என்ற கேள்வி தான் மெர்சன்டைசரை நோக்கி வரும் . நான் பத்தாண்டுகளுக்கு முன் ஒரு நிறுவனத்தில் இந்தப் பதவியில் இருந்த போது நடந்த கதையிது . அது வளர்ந்து கொண்டிருந்த நிறுவனம் . வருடாந்திர வரவு செலவு பல நூறு கோடிகளுக்கு மேல் எகிறிக் கொண்டிருந்தது . அந்த வருடம் முதல் இடத்தைப் பெற வேண்டும் என்று பல முஸ்தீபுகளை நிறுவன முதலாளி செயல்படுத்திக் கொண்டிருந்தார் . திருப்பூரில் உள்ள ஒரு ஏற்றுமதி நிறுவனம் வளர்ந்து கொண்டிருக்கின்றது என்றால் அந்த நிறுவனத்தில் முதலாளி செய்ய விரும்பும் முதல் காரியம் ” ஒரே கூரையின் கீழ் அனைத்து வசதிகளையும் ” கொண்டு வந்து விட வேண்டும் என்று அதற்கான வேலைகளில் ஈடுபடுவார் . பெரிய முதலீடுகளை முடக்க வேண்டியதாக இருக்கும் . பணத்தை வாரி இறைக்க வேண்டும் . வங்கியில் தவமாய்த் தவமிருக்க வேண்டும் . வங்கி சார்ந்த அத்தனை நபர்களின் கருணைப் பார்வைக்காகத் தன்மானத்தை இழந்து பொறுமை காக்க வேண்டும் . தான் உருவாக்க விரும்பும் ஒவ்வொரு துறைக்கும் தகுதியான நபர்களை உடனடியாகத் தேர்ந்தெடுக்க வேண்டும் . பணியில் நியமிக்கப்பட்டவர்களைக் கண்காணித்தல் வேண்டும் . நிர்வாக வடிவமைப்பை உருவாக்க வேண்டும் . நிர்வாகத்தால் உருவாக்கப்பட்ட சட்ட திட்டங்களை ஒவ்வொருவரும் கடைபிடித்து வருகின்றார்களா ? என்பதையும் இரவு பகல் பாராது கண்காணித்துக் கொண்டே வர வேண்டும் . ஒரு முதலாளி ஒரு ஆயத்த ஆடை உருவாக்கத்தில் பங்கு பெறுகின்ற அனைத்து பிரிவுகளையும் தன் நிறுவனத்திற்குள்ளே உருவாக்க விரும்புவதற்கான காரணத்திற்குப் பின்னால் இரண்டு விசயங்கள் உள்ளது . வெளிநாடுகளில் இருந்து ஒரு ஒப்பந்தம் காகித வடிவில் உள்ளே வருகின்றது . முதலில் நூல் வாங்க வேண்டும் . அதன் பிறகு அந்த நூல் நிட்டிங் என்ற அறவு எந்திரத்தை நோக்கி நகர்கின்றது . துணியாக மாறுகின்றது . அதன் பிறகு அந்தத் துணி சாயப்பட்டறைக்குச் செல்கின்றது . வெள்ளை அல்லது குறிப்பிட்ட நிறத்திற்கு அந்தத் துணி மாற்றம் பெறுகின்றது . அந்தத் துணியில் முழுமையாகப் பிரிண்டிங் தேவைப்படும் பட்சத்தில் பிரிண்ட்டிங் வசதிகள் உள்ள நிறுவனத்திற்குச் செல்கின்றது . மீண்டும் நிறுவனத்தின் உள்ளே வந்து தேவையான அளவிற்கு வெட்டப்பட்டுத் தைக்கப்படுகின்றது . ஒரு வேளை அந்த ஆடைகளில் எம்பிராய்ட்ரி சமாச்சாரங்கள் இருந்தால் மீண்டும் அது போன்ற வசதிகளை உருவாக்கிக் கொடுக்கும் நிறுவனத்திற்குச் செல்கின்றது . அதற்கு மேலும் பாசி மணிகள் கோர்க்கப்பட வேண்டியதாக இருந்தால் அதற்காக அந்த ஆடைகள் குறிப்பிட்ட இடத்திற்குச் சென்று வந்த பிறகே கடைசியில் தரம் பார்க்கப்பட்டுச் சரியான அளவு பார்த்து தேய்க்கப்பட்டு ( அயரன் ) பெட்டிகளுக்குப் போகின்றது . ஒரு ஆடை முழுமை பெற பல துறைகள் சம்மந்தப்படுவதால் ஒவ்வொரு இடத்திலும் குறைந்த பட்சம் பத்துச் சதவிகிதம் லாபம் என்று வைத்துக் கொண்டாலும் பத்து இடத்திற்குச் சென்று வந்தால் நூறு சதவிகித லாபத்தைத் துணை நிறுவனங்களே எடுத்துக் கொள்ளும் சூழ்நிலையிருப்பதால் இந்த லாபத்தைத் தனது நிறுவனம் பெற வேண்டும் என்பதற்காக ‘ ஒரே கூரையின் கீழ் ‘ இத்தனை வசதிகளையும் ஒவ்வொரு முதலாளிகளும் கொண்டு வர விரும்புகின்றார்கள் . இது தவிரத் துணை நிறுவனங்களை எதிர்பார்த்துக் காத்திருக்க வேண்டியிருக்காது . காலத் தாமதத்தைத் தவிர்க்க முடியும் . நான் அந்த நிறுவனத்தில் நுழைந்த சமயத்தில் ஐரோப்பிய நாட்டில் இருந்து செயல்பட்டுக் கொண்டிருந்த ஒரு பன்னாட்டு நிறுவனத்தின் ஒப்பந்தம் வந்து சேர்ந்து இருந்தது . அது மிகப் பெரிய ஒப்பந்தம் . மாதம் ஐந்து லட்சம் ஆடைகள் அனுப்ப வேண்டிய நிலையில் இருந்தார்கள் . இதற்கெனத் தனியாக ஒரு குழுவினர் அமைக்கும் பொருட்டு ஆட்களைத் தேர்ந்தெடுத்த போது தான் நான் அந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொண்டு அந்த நிறுவனத்தின் உள்ளே சீனியர் மெர்சன்டைசர் என்ற பதவியோடு நுழைந்தேன் . ஒரு மெர்சன்டைசரின் முக்கியப் பணி என்பது எல்லாவற்றையும் நுணுக்கமாகக் கவனிக்கத் தெரிந்திருக்க வேண்டும் . கவனித்த ஒவ்வொன்றையும் உள்வாங்கத் தெரிய வேண்டும் . உள்வாங்கியதில் எது முதன்மையானது ? எப்போது முக்கியமானது என்பதையும் உணர்ந்து வைத்திருக்கத் தெரிந்துருக்க வேண்டும் . இடைவிடாத கவனிப்புக் கட்டாயம் இருக்க வேண்டும் . அசராத உழைப்பாளியாக இருந்தே ஆக வேண்டும் . 24 மணி நேரத்தில் எந்த நேரத்திலும் எங்கிருந்து வேண்டுமானாலும் அழைப்பு வரும் என்பதையும் உணர்ந்து இருப்பவராக வேண்டும் . இத்தனை தகுதிகளுடன் இருந்தால் மட்டும் போதாது . உடன் பணிபுரிந்து கொண்டே குழிபறிக்கும் குள்ளநரிகளைத் தந்திரமாகக் கையாளத் தெரிந்து இருக்க வேண்டும் . கட்டாயம் சொல்லிக் கொள்ளும் அளவிற்காகவது ஆங்கில அறிவு வேண்டும் . நான் உள்ளே நுழைந்த சமயம் என்னைப் போலப் பல புதிய முகங்களும் ஒரே சமயத்தில் உள்ளே வந்து இருந்தனர் . இது தவிர அங்கே இருந்த அலுவலகத்தில் மிகப்பெரிய பட்டாளமே இருந்தது . தலையா ? அலையா ? என்பது போல எந்தப் பக்கம் திரும்பினாலும் ஒவ்வொரு துறையிலும் முதன்மைப் பதவிகளில் பத்துக்கும் மேற்பட்டவர்கள் இருந்தார்கள் . ஒவ்வொரு துறையிலும் உள் பிரிவுகள் இருக்கப் பெரிய கடல் போலவே அந்த நிர்வாகம் இருந்தது . மொத்தத்தில் சமுத்திரத்தில் ஊற்றிய சொம்புத்தண்ணீர் போல ஆகிப் போனேன் . திருப்பூரில் உள்ள நிறுவனங்களில் ஒரு நல்ல பழக்கம் உண்டு . நேர்முகத் தேர்வில் எந்தப் பதவிக்கு உங்களைத் தேர்ந்து எடுக்கின்றார்களோ அந்தப் பதவிக்கு உள்ளே நுழைந்ததும் அமர வைத்து விட மாட்டார்கள் . உங்கள் திறமைகளைச் சோதித்து , தாக்குப் பிடிக்கக்கூடிய நிலையில் இருப்பவரா ? என்பதைப் பல விதங்களில் பரிசோதித்து விட்டே குறிப்பிட்ட பதவி கிடைக்கும் . அவர்கள் கொடுக்கும் வேலையில் உங்கள் திறமையைக் காட்ட வேண்டும் . குறிப்பாக உங்கள் உழைப்பை காட்டியே ஆக வேண்டும் . அதன்பிறகே உங்களைப் பற்றி நிர்வாகம் யோசிக்கும் . சிலருக்கு அவர்கள் நினைத்து வந்த பதவி என்பது உள்ளே நுழைந்த அடுத்த மாதமே கிடைக்கும் . பலருக்கு பல மாதங்கள் காத்திருக்க வேண்டும் . சிலரால் தாக்குப் பிடிக்க முடியாமல் உடனடியாக அடுத்த நிறுவனத்திற்குத் தாவி விடுவார்கள் . புதிதாக ஒரு நிறுவனத்தில் நுழைபவர்கள் மேலும் ஒரு பிரச்சனையைச் சந்தித்தே ஆக வேண்டும் . நிறுவனத்தில் பழம் தின்று கொட்டை போட்டு உள்ளே சம்மணம் போட்டு வாழ்ந்து கொண்டிருப்பவர்களைச் சமாளிக்கத் தெரிந்திருக்க வேண்டும் . பெருச்சாளிகள் போலப் பலரும் இருப்பர் . இது தவிர அல்லக்கை நபர்கள் பல வடிவங்களில் உள்ளே இருப்பார்கள் . எடுபிடியாகக் காலம் தள்ளிக் கொண்டிருப்பவர்கள் , பெரிய பதவிகளில் இருப்பவர்களும் ‘ நல்லதும் கெட்டதுமாக ‘ க் கவனித்துத் தங்களைத் தக்க வைத்துக் கொண்டிருக்கும் மாமாக்களைப் போன்ற பலரையும் சமாளிக்க வேண்டியதாக இருக்கும் . இத்தனையையும் மீறிப் புதிதாக வந்தவர்கள் தங்களை உள்ளே நிலைப்படுத்திக் கொண்டாக வேண்டும் . உங்களிடம் உள்ள தனிப்பட்ட திறமைகளை வெளியே காட்ட சில மாதங்கள் காத்திருக்க வேண்டும் . அதற்குள் உங்களை உண்டு இல்லை என்று படுத்தி எடுக்கக் காத்திருக்கும் பிரகஸ்பதிகளைச் சமாளிக்கத் தெரிந்தால் நீங்கள் தகுதியான நபர் என்று உங்களுக்கு நீங்களே பாராட்டிக் கொள்ளலாம் . காரணம் நீங்கள் எத்தனை வருடங்கள் திருப்பூரில் உள்ள ஒரு நிறுவனத்தில் பணியாற்றினாலும் உங்களை ஈ காக்கை கூடப் பாராட்டாது . உங்கள் முதுகில் உள்ள சந்தேகக் கண் எப்போதும் மாறாது . உள்ளே பணிபுரிந்து கொண்டிருப்பவர்களில் எவர் நல்லவர் ? எவர் கெட்டவர் ? என்பதையே உங்களால் அடையாளம் காண முடியாத அளவிற்குத் தந்திரசாலிகளால் நிறைந்திருக்கும் . மனம் விட்டு எவருடனும் பழக முடியாது . அதற்கான வாய்ப்பே அமையாது . உங்கள் வாழ்க்கை யோசிக்கவே முடியாத அளவிற்கு மாறி விடும் . இவற்றையெல்லாம் கடந்து முதலாளியின் பார்வையில் உங்களின் திறமை தெரிந்துவிட்டால் அதன் பிறகு உங்களுக்கென்று ஒரு ராஜபாட்டைக் காத்திருக்கும் . அந்த நிறுவனத்தில் என்னை எடுத்த பதவிக்கும் நியமித்த பதவிக்கும் சம்மந்தம் இல்லாமல் சில வாரங்கள் எடுபிடியாக மாற்றி வேலை வாங்கிக் கொண்டிருந்தனர் . யாருக்கு கீழே நான் பணியாற்ற வேண்டும் என்று நிர்வாகம் கட்டளை பிறப்பித்து இருந்ததோ அவர் தான் இந்த அத்தியாயத்தின் கதாநாயகன் . காரணம் இந்தக் கதாநாயகனின் மச்சினனும் உள்ளே வேறொரு துறையில் பணியாற்றிக் கொண்டிருந்தார் . இவர்கள் இருவரும் மாப்பிளை மச்சினர் என்பது எனக்குக் குறிப்பிட்ட காலம் வரைக்கும் தெரியாமலே இருந்தது . நான் நுழைந்த மூன்றாவது மாதத்தில் நம்மால் இங்கே இனி தொடர்ந்து பணியாற்ற முடியாது என்ற நிலைவந்த போது தான் முக்கிய முடிவை எடுத்தேன் . அப்போது தான் என் மூலம் அந்த நிறுவனத்தில் ஒரு வெடிகுண்டு வெடித்தது . அந்தக் குண்டு முக்கியப் பதவிகளில் இருந்த பலரையும் காவு வாங்கியது . ஒருவரின் உயிரும் போனது . [] 9 9. பாறைகளைப் பிளக்கும் விதைகள் [] 9. பாறைகளைப் பிளக்கும் விதைகள் ” உனக்குத் தேவையில்லாத விசயங்களில் தலையிடாதே ? முதலாளி இந்தப் பொறுப்பை உனக்குக் கொடுத்ததும் நீ என்ன பெரிய ஆள்ன்னு நினைப்போ ? உனக்கு என்ன வேலை கொடுத்து இருக்கின்றார்களோ அதை மட்டும் பார் ? நான் இங்கே பத்து வருசமா இருக்கேன் . உன்னை மாதிரி மாதம் ஐந்து பேர்கள் வந்து போய்க் கொண்டு இருக்கானுங்க . நீ இங்கே எத்தனை நாளைக்குத் தாக்கு பிடித்து நிற்பாய் ? என்று எனக்குத் தெரியும் ? நோண்டற வேலையை விட்டு விடு ? புரியுதா ?” என்றார் . மரியாதைக்காக என்றார் என்று எழுதி இருக்கின்றேனே தவிர மிரட்டினான் என்று தான் எழுத வேண்டும் . காரணம் எங்கள் இருவருக்கும் நடந்த அரைமணி நேர வாக்குவாதத்தின் இறுதியில் இப்படியான மிரட்டலை அவன் என்னிடம் சொன்னான் . முதல் முதலாக அவனுடன் அறிமுகமான நாள் என்பது என் வாழ்வின் மிக முக்கியமான நாளாகும் . காரணம் என் பொறுமையின் எல்லை என்பதை அன்று தான் என்னால் அடையாளம் கண்டு கொள்ள முடிந்தது . நான் அன்று அவனிடம் அமைதியான முறையில் தான் எதிர் கொண்டேன் . ‘ நம் மீது தவறேதும் இல்லாத போது நாம் ஏன் கோபப்பட வேண்டும் ?’ என்ற என் கொள்கையின் காரணமாக அவன் தொடர்ந்து என்னைக் கோபப்படுத்திக் கொண்டே இருந்த போதிலும் சிரித்துக் கொண்டே நிற்க அவனுக்கு மேலும் ஆத்திரம் அதிகமாகி வார்த்தைகளை இறைத்துக் கொண்டிருந்தான் . ” கடமையே கண் ” போல நான் தொடர்ந்து கேள்வியாகக் கேட்க அவன் ஆத்திரத்தின் உச்சிக்கே சென்று கத்தத் தொடங்கினான் . அவனைச் சுற்றிலும் ஏராளமான பேர்கள் அங்கே நின்று கொண்டிருந்தனர் . மேலும் பலரும் வந்து போய்க் கொண்டிருந்தனர் . அத்தனை பேர்களுக்கும் அவன் தேவதூதனாகத் தெரிந்தான் . அங்கே வந்திருந்த சிலர் அவன் எப்போது தங்களிடம் பேசுவான் என்று காத்துக் கொண்டிருந்தார்கள் . சிலர் பவ்யமாக நின்ற கொண்டிருந்தார்கள் . ஆனால் அவன் என் பார்வையில் அக்மார்க் பொறுக்கியாகத் தெரிந்தான் . அவன் இருந்த பதவியின் காரணமாக அவனுக்கு அங்கே ஒரு ராஜாங்கம் அமைந்து இருந்தது . அரசியல்வாதிகளுக்கும் மத்திய தணிக்கை துறைக்கும் எப்போதும் ஏழரை தான் என்பதை நாம் பத்திரிக்கையின் படித்துருப்போம் தானே ? என்னையும் அப்படித்தான் அவன் பார்த்தான் . நேற்று வந்தவன் இவன் ஏன் நம்மைக் கேள்வி கேட்க வேண்டும் ? என்ற எண்ணம் தான் அவன் மனதில் மேலோங்கி நின்றது . நான் கேட்ட ஆவணங்களை அவனால் கொடுக்க வாய்ப்பிருந்த போதும் அதைத் தவிர்க்கவே முயற்சித்தான் . இது குறித்து நான் கேட்ட போதெல்லாம் ஏளனப்படுத்தினான் . அவன் அங்கே அமர்ந்திருந்த விதமே எனக்குச் சிரிப்பை வரவழைத்தது . தன்னுடைய கனத்த உருவத்தைக் கஷ்டப்பட்டு அவன் அமர்ந்திருந்த நாற்காலியில் திணித்து அமர்ந்து இருந்தான் . அவனைச் சுற்றி ஏராளமான ஜால்ரா கோஷ்டிகள் இருந்தது . அவன் பேச்சை நிறுத்தும் போது அவர்களும் கூடவே சேர்ந்து என்னை மிரட்டிக் கொண்டிருந்தனர் . கட்டைக்குரலில் அவன் என்னை நோக்கி பேச அவனின் மொத்த உடம்பும் குலுங்கி நின்றதை வேடிக்கை பார்க்கும்படி இருந்தது . ஒவ்வொரு வார்த்தையும் மிரட்டலாகத்தான் வந்து கொண்டிருந்தது . காரணம் அவன் முழுமையான பயத்தில் இருந்தான் . நான் மிகக் கவனமாக அவன் தவிர்க்கவே முடியாத அளவிற்குக் கட்டம் கட்டி உள்ளே நிறுத்தி இருந்தேன் . ஆயத்த ஆடைத்துறையில் உள்ள ஒரு நிறுவனத்தின் கீழ் பலதுறைகள் உள்ளது என்று ஏற்கனவே சொல்லியிருந்தேன் அல்லவா ? அவன் இருந்த துறையின் பெயர் FABRIC DEPARTMENT. ஓரு ஆயத்த ஆடை ஏற்றுமதி நிறுவனத்தின் ஆணி வேராக இருப்பது இந்தத் துறையே . நான் பணியாற்றிய அந்த நிறுவனத்தின் மொத்த உற்பத்திக்கும் தேவைப்படுகின்ற துணிகளைத் தயார் செய்து கொடுப்பது இவனின் வேலையாக இருந்தது . இவன் வகித்த பதவியின் பெயர் FABRIC MANAGER. இவனின் முக்கிய வேலை என்பது முதலாளி காகிதத்தில் கொடுக்கின்ற ஒவ்வொரு ஒப்பந்தத்திற்கும் தேவைப்படுகின்ற துணியை இவன் தயார் செய்து கொடுக்க வேண்டும் . ஒவ்வொரு ஒப்பந்தத்திற்கும் தேவையான நூல் இவன் பொறுப்புக்கு வந்துவிடும் . ஒரு நூல் பை என்பது அறுபது கிலோ இருக்கும் . இவன் நிட்டிங் என்று சொல்லப்படுகின்ற அறவு எந்திரங்களில் கொடுக்கப்பட்ட அளவுகளில் ஓட்டி அதனை முதலில் சரிபார்க்க வேண்டும் . அதன் பிறகே தயாரான துணியைத் தரம் வாரியாகப் பிரித்துச் சாயப்பட்டறைகளுக்கு அனுப்ப வேண்டும் . வண்ணத் துணியைக் காம்பாக்ட்டிங் என்ற மற்றொரு பகுதிக்கு அனுப்பி வைக்க வேண்டும் . வண்ணமேற்றிய துணி வெட்டுவதற்கு ஏதுவான முறையில் மாற்றப்பட்டு விடும் . மீண்டும் ஒரு முறை அந்தத் துணியைத் தரம் பார்த்து சோதிக்க வேண்டும் . கடைசியாக மடிப்பு கலையாத அழகான துணியாக உற்பத்தித் துறைக்கு வந்து விடும் . இந்தத்துணியை இவனின் பொறுப்பில் உள்ளவர்கள் CUTTING SECTION என்று சொல்லப்படுகின்ற உற்பத்தித் துறையின் தொடக்க நிலைக்குக் கொடுக்கப்பட வேண்டும் . துணி சார்ந்த இந்தத்துறையில் உள்ளவர்கள் மற்றொன்றையும் கட்டாயம் கவனிக்க வேண்டும் . கட்டிங் துறைக்குக் கொடுத்த பின்பு அங்கிருப்பவர்கள் சரியான அளவில் வெட்டுகின்றார்களா ? என்பதைக் கவனிக்க வேண்டும் . நிர்ணயித்த அளவைவிடக் கட்டிங் மாஸ்டர்கள் வெட்டி விடக்கூடும் . கடைசியில் எங்களுக்குத் துணி போதாது . இன்னும் வேண்டும் என்று கட்டிங் இன்சார்ஜ் துணித்துறையில் வந்து நிற்பார்கள் . இந்த இடத்தில் தான் இவர்கள் மிகக் கவனமாக இருக்க வேண்டும் . ஆயத்த ஆடைத்துறையில் பயன் படுத்தப்படும் நூல்களில் பல வகைகள் உள்ளது . ஒவ்வொரு நூலும் ஒவ்வொரு விதமான ஆடைகளுக்கு உதவும் . இது போன்ற விசயங்களை மிக நுணுக்கமாகக் கவனித்துக் கணக்கீடு செய்வதற்கு ஆயத்த ஆடைத்துறையில் PATTERN MASTER என்றொரு கில்லாடி இருப்பார் . வெளிநாடுகளில் இருந்து ஒரு ஒப்பந்தம் வந்ததும் முதலாளி மேலோட்டமாகப் பார்வையிட்டு முடித்ததும் இவர்கள் கையில் அந்தக் காகிதத்தை நிர்வாகம் கொடுக்கும் . இவர்கள் அதில் உள்ள விபரங்களை வைத்துக் கொண்டு தங்கள் வேலைகளைத் தொடங்குவார்கள் . ஒவ்வொரு விசயமாக எடுத்துக் கொண்டு குறிப்பிட்ட ஆடைக்குத் தகுந்தாற் போல் வெளிநாட்டுக்காரர் எதிர்பார்க்கும் அளவை வைத்துக் கொண்டு மாதிரி அட்டை ஒன்றை உருவாக்குவார் . உருவாக்கிய முதல் அட்டையின்படி தான் கையில் வைத்துள்ள ஏதோவொரு துணியில் வந்த ஒப்பந்தத்தில் சுட்டிக்காட்டியுள்ள ஆடையில் உள்ள அனைத்து பாகங்களையும் வெட்டி தைக்கக் சொல்லிப் பார்ப்பார் . வந்த ஒப்பந்தத்தில் கொடுக்கப்பட்ட அளவுகள் அனைத்தும் தைக்கப்பட்ட துணியில் உள்ளதா ? என்பதைப் பார்த்து விட்டு மொத்த ஒப்பந்தத்திற்கும் உண்டான கணக்கீடுகளைப் போட தொடங்குவார் . கடைசியில் ஒரு ஆடைக்குண்டான நூல் அளவு தெரியவரும் . அதன்படி தனது வேலைகளைப் பேட்டன் மாஸ்டர் தொடங்குவார் . ஒரு ஆடை என்றால் S.M.L.XL என்று பல அளவுகள் இருக்கும் . இது போன்ற பல விபரங்களையும் , நூலில் அளவுகளையும் , நூலின் தரத்தையும் காகிதத்தில் எழுதி முதலாளி கையில் கொடுத்து விடுவார் . 15 ஆண்டுகளுக்கு முன் பேட்டன் மாஸ்டர்களைப் பார்த்து முதலாளிகள் பயந்த காலமுண்டு . முன் கோபக்காரர்களாகவும் சுய கௌரவம் பிடித்தவர்களாகவும் இருப்பார்கள் . இவர்கள் தான் ஒரு ஆடை உருவாக்கத்திற்குத் தேவையான அத்தனை அடிப்படையான வேலைகளையும் செய்து கொடுப்பார்கள் . எந்த நிர்வாகமும் இவர்களைச் சங்கடப்படுத்தாமல் சுகவாசியாக வைத்திருப்பார்கள் . ஒரு ஆடைக்கு எத்தனை கிராம் நூல் தேவைப்படுகின்றது என்ற கணக்கின் அடிப்படையில் திட்ட மதிப்பீடு உருவாக்கப்படும் . ஆனால் காலமாற்றத்தில் விஞ்ஞான முன்னேற்றத்தில் இன்று எல்லாமே வெளிப்படையாக மாறி விட்டது . தற்பொழுது ஆயத்த ஆடைத்துறையில் உள்ள ஒவ்வொரு பிரிவுக்கும் தனிப்பட்ட படிப்புகள் வந்து விட்டது . இது போன்ற படிப்புகள் படித்து விட்டு வருபவர்களும் , நவீன வசதிகளைப் பயன்படுத்த தெரிந்தவர்கள் எவராயினும் இந்த நுணுக்கங்களை எளிதில் கற்றுக் கொள்ள முடியும் இன்று பேட்டன் மாஸ்டர் என்ற பதவியில் இருந்த அத்தனை பேர்களும் காணாமல் போய் விட்டார்கள் . தற்போதைய சூழ்நிலையில் பேட்டன் மாஸ்டர்கள் ஒவ்வொரு நிறுவனமாக ஏறி இறங்கிக் கொண்டிருக்கின்றார்கள் . இவர்கள் செய்து கொடுத்த வேலைகள் அனைத்தையும் எந்திரங்கள் செய்து கொடுத்துக் கொண்டிருக்கின்றது . இவர்கள் நூறுக்கும் இருநூறுக்கும் தன்மானத்தை இழந்து பரிதாபமாக ஒவ்வொரு நிறுவனமாக அலைந்து கொண்டிருக்கின்றார்கள் . கால மாற்றம் என்பது கரை தெரியாமல் ஓடும் வெள்ளம் போன்றது . இதிலும் மாறிக் கொண்டே வரும் மாற்றத்திற்கேற்ப தன்னை மாற்றிக் கொள்ளபவர்களால் மட்டுமே பிழைத்து கரை சேர முடியும் என்பது உலக நியதி தானே ? நூலை துணியாக மாறும் துறையில் பல துணைத் துறைகள் உள்ளது . பெரிய ஒப்பந்தமாக இருந்தால் அவசர கதியில் செயல்பட வேண்டும் . பத்துக்கும் மேற்பட்ட அறவு எந்திரங்கள் வைத்திருக்கும் துணை நிறுவனங்களுக்கு நூல் கொடுத்து ஓட்டை இல்லாமல் அளவு மாறாமல் ஓட்டி கொண்டு வர வேண்டும் . தினந்தோறும் அறவு எந்திரங்கள் வைத்திருக்கும் நிறுவனங்களுக்குத் தரம் பார்க்கத் செல்கின்றவர்கள் தொடர்ந்து செல்ல வேண்டும் . அறவு எந்திரங்கள் வைத்திருக்கும் துணை நிறுவனங்கள் இரண்டு ஷிப்ட் என்கிற கணக்கில் 24 மணி நேரமும் செயல்பட்டுக் கொண்டுருக்கும் . கடந்த 24 மணி நேரத்தில் அவர்கள் தயாரித்து வைத்துள்ள துணியை ஒவ்வொரு நாளும் நிறுவனத்தின் சார்பாக அங்கே செல்பவர்கள் அதற்கென்ற தனியாக வடிவமைக்கப்பட்ட எந்திரங்களில் சோதித்து எதிர்பார்த்த தரத்துடன் துணி சரியாக உள்ளதா ? என்பதைப் பார்க்க வேண்டும் . இது போன்ற கண்காணிக்கும் நபர்களை மேலே இருப்பவர்கள் கவனமாகக் கையாள வேண்டும் . இவர்கள் தினந்தோறும் அந்தந்த அறவு எந்திரங்கள் உள்ள நிறுவனத்திற்குத்தான் செல்கின்றார்களா ? என்பதைக் கண்காணித்தே ஆக வேண்டும் . இடைச் செருகலாக என்ன வேண்டுமானாலும் நடக்கலாம் . நிறுவனத்தில் இருந்து குறிப்பிட்ட இடத்திற்கு வழங்கப்பட்ட நூல் பைகளை வேறு இடத்திற்கு மாற்றுதல் , இடையில் எடுத்து விற்று விடுதல் , அளவு குறைத்து கொடுத்தல் , கமிஷனுக்கு ஆசைப்பட்டுப் பல மோசமான விசயங்களைச் செய்பவர்களைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர வேண்டும் . இது போன்ற சூழ்நிலையில் இந்தத் துறைக்குத் தலைமைப் பொறுப்பில் இருப்பவருக்கு இரண்டு முக்கியக் கடமைகள் உண்டு . ஒன்று ஒழுக்கமானவராக இருத்தல் வேண்டும் . மற்றொன்று நேர்மையான கொள்கை கொண்டவராக இருக்க வேண்டும் . என்னிடம் உரையாடியவனிடம் இந்த இரண்டு தகுதியும் பூஜ்யம் மதிப்பெண்ணில் தான் இருந்தான் . மாசு மருவற்ற பொறுக்கி என்று கூடச் சொல்லலாம் . அவன் இங்கே இருக்க முக்கியக் காரணம் அவனின் தங்கை கணவன் மெர்சன்டைசர் துறையில் முதலாளியின் உள்வட்டத்தின் முக்கிய நிலையில் முதன்மை ஆளாக இருந்தான் . நான் இந்த நிறுவனத்தில் நுழைந்தது முதல் என்னுடைய அத்தனை தன்மானத்தையும் இழக்க வேண்டியதாக இருந்தது . கேள்விகள் எதுவும் கேட்கமுடியாமல் , எதனைப் பற்றியும் யோசிக்க முடியாமலும் செக்கில் பூட்டப்பட்ட மாடு போலச் சொல்ல முடியாத மன அழுத்தத்துடன் இருந்தேன் . எனக்கு மேலே இருக்கும் ஒவ்வொருவரின் பேச்சையும் கேட்க வேண்டிய சூழ்நிலையில் தான் இருந்தேன் . நாம் என்ன பதவிக்கு இங்கே உள்ளே வந்தோம் என்பதையே மறக்கும் சூழ்நிலையில் தான் பணியாற்றிக் கொண்டிருந்தேன் . அங்கே ஒவ்வொருவரும் சொல்லக்கூடிய எடுபிடி வேலைகளைச் செய்து விட்டு இரவு எப்போதும் வரும் ? எப்போது வீட்டுக்குப் போகலாம் என்று நாட்களைத் தள்ளிக் கொண்டிருந்தேன் . ஆனால் என் மனதில் தனிப்பட்ட வைராக்கியம் வைத்திருந்தேன் . இங்கே இருந்து கிளம்புவதற்கு முன் நான் யார் ? என்பதை இந்த நிறுவனத்திற்கு உணர்த்தி விட்டுச் செல்ல வேண்டும் என்பதைக் கொள்கையாகவே வைத்திருந்தேன் . நான் எதிர்பார்த்துக் காத்திருந்த நாளும் வந்தது . அன்று தான் எதிர்பாராத திருப்புமுனை நிகழ்ச்சி ஒன்று நடந்தது . முதலாளி குறிப்பிட்ட விபரங்கள் குறித்துக் கேட்பதற்காகக் கூட்டத்தைக் கூட்டியிருந்தார் . கூட்டத்தில் அவர் கேட்ட பல ஒப்பந்தங்கள் தொடர்பான விபரங்கள் குறித்து எவருக்கும் தெரியவில்லை . முக்கியத் தலைகள் அனைவரும் அந்தக் கூட்டத்தில் இருந்தனர் . அவர் குறிப்பிட்ட ஒப்பந்தத்திற்கு எடுத்த நூல் விபரமும் அது துணியான பிறகு உள்ளே வந்த விபரத்தையும் கேட்க கூட்டத்தில் அங்கே இருந்த அத்தனை பேர்களும் திருதிருவென்று விழித்தனர் . சிலர் சொன்ன தகவல்களும் தவறாக இருந்தது . குறிப்பாகத் துணிக்கு பொறுப்பான நபர்கள் அத்தனை பேர்களும் அமைதியாக இருந்தார்கள் . அவர் கேட்ட தகவல்கள் என்னிடம் இருந்தது . நான் அதுவரையிலும் முதலாளியின் பார்வையில் பட்டதே இல்லை . அவரின் எடுபிடிகள் தான் என்னை இயக்கிக் கொண்டிருந்தார்கள் . நாம் சொல்லலாமா ? என்று யோசித்துக் கொண்டே மொத்த கூட்டத்தையும் அங்கே நடந்த உரையாடல்களையும் அமைதியாகக் கவனித்துக் கொண்டிருந்தேன் . நாம் இடைமறித்துப் பேசினால் வேறேதும் விபரீதம் உருவாகுமோ ? இவர் நம்மை ஏற்றுக் கொள்வாரா ? இல்லை எப்போதும் போல ஏச்சு தான் கிடைக்குமா ? என்று மனதில் தடுமாறிய போதும் கூட இந்தச் சமயத்தில் கிடைத்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்ற ஆவல் என்னுள் உருவானது . நான் என் நோட்டில் குறித்து வைத்திருந்த விபரங்கள் அனைத்தையும் ஒரு காகிதத்தில் எழுதி அவரிடம் கொண்டு போய்க் கொடுத்து விட்டு என் இருக்கையில் வந்து அமர்ந்தேன் . முகம் முழுக்க வேர்த்துக் கொட்டியது . படபடப்பு அடங்க நேரமானது . நான் செய்த உருப்படியான காரியம் என்பது காகிதத்தில் எழுதிக் கொடுத்தும் என் எழுத்து முத்து முத்தாக அழகாக இருந்ததையும் பார்த்தவுடன் கீழே எழுதியிருந்த என் பெயரைப் பார்த்து விட்டு என்னை அழைத்தார் . அப்போது தான் என்னைப் பற்றி எந்தத் துறையில் இருக்கின்றேன் போன்ற அனைத்து விபரங்களையும் விசாரித்தார் . தயக்கத்துடன் என்னைப் பற்றி என் கடந்த கால அனுபவத்தையும் , உள்ளே பணியாற்றிக் கொண்டிருந்ததையும் பற்றி அவரிடம் சொல்லிவிட்டு வந்தமர்ந்தேன் . மொத்த கூட்டத்திலும் ஒரு பேரமைதி நிலவியது . பக்கத்தில் இருந்த அவரின் ஜால்ராவிடம் சற்று கடிந்து கொண்டு ” ஏன் இது போன்ற பையன்களை இப்படி வீணாக்கிக் கொண்டிருக்கீங்க ” என்றார் . அவரோ சம்பந்தம் இல்லாமல் உளறிக் கொண்டிருந்தார் . அப்போது தான் மற்றொரு பயம் என் மனதில் உருவானது . நிச்சயம் உள்ளே இருக்கும் ஜால்ரா கோஷ்டியினர் நம்மை உள்ளே இருக்க விடமாட்டார்கள் என்ற எண்ணியபடி இனி இங்கே இருக்கப் போகும் மணித்துளியை எண்ணியபடி கவலையுடன் யோசித்துக் கொண்டிருந்தேன் . கூட்டம் கலைந்து வெளியே வந்து கொண்டிருந்த போது முதலாளியின் உதவியாளராக இருந்த பெண்மணி என் பெயரைச் சொல்லி சப்தமாக அழைத்தார் . அப்போது தான் என் பெயர் இந்த நிறுவனத்தில் உச்சரிக்கப்பட்டது என்பதை யோசித்துக் கொண்டே மகிழ்ச்சியுடன் அழைத்த பெண்மணியுடன் முதலாளி அறைக்குச் சென்றேன் . அங்கே எனக்குச் சீனியர் என்ற நிலையில் இருந்தவர்களுடன் இன்னும் பலரும் இருந்தனர் . ” இன்று முதல் இந்தப் பையன் என் நேரிடையான கட்டுப்பாட்டில் இருப்பான் . ஒவ்வொரு ஒப்பந்தத்திற்கும் உண்டான அனைத்து விபரங்களையும் கணக்கு விபரங்களையும் ஒவ்வொரு துறை சார்ந்தவர்களும் இவனிடம் கொடுக்க வேண்டும் . இவன் சரிபார்த்து நான் கையெழுத்து போட்டால் மட்டுமே நீங்க அந்தப் பில்லை பாஸ் செய்ய வேண்டும் ” என்று மற்றொரு நபரிடம் உத்தரவு கொடுத்த போது மொத்த கூட்டமும் என்னை வெறுப்புடன் பார்த்தது . வாழ்க்கை என்பது இப்படித்தான் இந்தப் பாதை தான் என்பதையும் எவராலும் அறுதியிட்டு கூறிவிடமுடியாது . வாய்ப்புகள் எங்கிருந்து வரும் ? எவரிடமிருந்து வரும் என்று கூட யோசிக்க முடியாது . வருகின்ற சமயத்தில் சரியாக வந்துவிடும் . நாம் தான் எப்போதும் எல்லாவற்றுக்கும் தயாராக இருக்க வேண்டும் . எடுபிடி போல என்னைப் பயன்படுத்திக் கொண்டிருக்கின்றார்களே என்ற ஆதங்கம் மனதிற்குள் இருந்தாலும் கொடுக்கப்பட்ட வேலையை ஒவ்வொரு நாளும் மிகத் தெளிவாகச் செய்து கொண்டே வந்தேன் . ஒவ்வொன்றையும் குறிப்பெடுத்து வைத்துக் கொள்வது எனது வாடிக்கை . அந்தப் பழக்கம் இப்போது எனக்குக் கை கொடுத்தது . இதன் காரணமாகத்தான் முதலாளி கேட்ட தகவல்களை உடனடியாக என்னால் கொடுக்க முடிந்தது . அவர் மனதில் என்ன நினைத்தாரோ தனித்தனி தீவுகளாக இருந்த ஒவ்வொரு துறைக்கும் உண்டான கணக்கு வழக்குகளையும் என்னை எடுத்து தரச் சொன்னார் . வாரத்தில் மூன்று நாட்கள் குறிப்பிட்ட நேரம் ஒதுக்கி அவரைப் பார்க்க அனுமதித்த போது உள்ளே மகிழ்ச்சியாக இருந்தாலும் நிச்சயம் இந்தப் பதவி நம்மைக் காவு வாங்கப் போகின்றது . நாம் எதற்கும் தயாராக இருக்க வேண்டும் என்பதை மனதில் குறித்து வைத்துக் கொண்டேன் . காரணம் அந்த நிறுவனத்தில் பயன்படுத்திக் கொண்டிருந்த கணினிகளில் துணி சார்ந்த கணக்கு என்ற பெயரில் எல்லாவற்றையும் நிரப்பி வைத்திருந்தார்களே தவிர அவை அனைத்தும் தீர்க்க முடியாத வழக்காகவே இருந்தது . எல்லா இடங்களிலும் விடுபட்டுப் போயிருந்த இடங்கள் அதிகமாக இருந்தது . ஆயிரம் கிலோ நூல் உள்ளே வந்திருந்தால் அது வண்ணத் துணியாக மாறி வந்த போது நூறு கிலோ காணாமல் போயிருந்தது . அதற்கான காரணங்களைத் துழாவும் போது அடுத்தடுத்த ஒப்பந்தங்கள் உள்ளே வந்து கொண்டிருக்க நிர்வாகம் அதன் பின் ஓடிக் கொண்டேயிருக்க மூன்று மாதங்களில் மூவாயிரம் கிலோ நூலுக்குக் கணக்கு என்பதே இல்லை என்ற நிலையில் இருந்தது . உள்ளே பணிபுரிந்தவர்களில் முதலாளியின் உறவுக்கூட்டம் ஒரு பக்கம் , நிறுவனம் தொடங்கியது முதல் இருந்தவர்கள் மறு பக்கம் . இவர்கள் அத்தனை பேர்களும் முதலாளியின் ‘ நம்பிக்கைக்குப் பாத்திரமானவர்கள் ‘ என்ற நிலையில் இருந்தார்கள் . முதலாளியால் தடாலாடியாக எந்த முடிவும் எடுக்க முடியாமல் தடுமாறிக் கொண்டிருந்ததை என்னால் உணர்ந்து கொள்ள முடிந்தது . மேலும் புதிதாக ஒருவர் தேர்ந்தெடுக்கப்பட்டு நிறுவனத்தின் உள்ளே வருகின்றார் என்றால் அவர்களால் தாக்குப் பிடிக்க முடியாமல் வெளியேறி விட மாதந்தோறும் புதிய நபர்கள் வந்து கொண்டேயிருந்தார்கள் . உள்ளே பணியில் இருந்த பழைய நபர்கள் வைத்ததே சட்டம் என்கிற நிலையில் நிர்வாகம் நடந்து கொண்டிருந்தது . முதலாளி பழைய நபர்களைச் சார்ந்தே இருக்க வேண்டிய நிலையில் இருந்தார் . நான் மட்டும் விதி விலக்காக மூன்றாவது மாதம் வரைக்கும் தாக்குப்பிடித்து நிற்க அதுவே உள்ளே இருந்த பலருக்கும் பெரிய எரிச்சலை உருவாக்கிக் கொண்டிருந்தது . இப்போது முதலாளி புதிய பொறுப்பை அதுவும் அவருடைய நேரிடையான கட்டுப்பாட்டில் என்கிற ரீதியில் என்னைக் கொண்டு வந்து நிறுத்த திருடனுக்குத் தேள் கொட்டியது போலப் பலருக்கும் உள்ளே நடுக்கத்தை உருவாக்கத் தொடங்கியது . காரணம் முதலாளி என்னிடம் வழங்கிய வேலை என்பது அங்கேயிருந்த பலருக்கும் சம்பளம் தவிர்த்துப் பலவிதங்களில் வருமானத்தை அளித்துக் கொண்டிருந்தது . எனக்கு அரசல்புரசலாக இது குறித்துத் தெரிந்த போதிலும் இது குறித்து நாம் ஏன் அக்கறைப்பட வேண்டும் ? என்ற எண்ணத்தில் காதில் வாங்கிக் கொண்டிருந்த ஒவ்வொரு செய்திகளையும் எவருடனும் பகிர்ந்து கொள்ளாமல் எனக்குள்ளே வைத்திருந்தேன் . ரகசியம் என்பது நம்முடன் இருக்கும் வரையிலும் மட்டுமே . அடுத்து ஒருவரிடம் அது குறித்துப் பேசினால் அதற்குப் பெயர் ரகசியம் அல்ல . மெதுவாகச் செய்தியாக மாறி விடும் . பலசமயம் வதந்தியாக மாறி பல விபரிதங்களை நம்மிடமே கொண்டு வந்து சேர்த்து விடும் . தொடக்கத்திலேயே முதலாளியிடம் எனக்கு உதவியாளர் தேவையில்லை என்று சொல்லிவிட்டேன் . அதற்குக் காரணமும் உண்டு . உள்ளே இருந்த பெரும்பாலான அத்தனை பெண்களும் பதினெட்டு வயதுக்கு அருகே இருந்தார்கள் . எனக்கு வழங்கப்பட்ட பொறுப்பில் ஒரு பெண்ணைக் கொண்டு வந்து உட்கார வைத்தால் அதுவும் உள்ளே இருக்கும் மற்றவர்களுடன் பழகியவராக இருக்கும் பட்சதில் எந்தத் தகவல் எப்போது யாருக்குப் போய்ச் சேருமோ ? என்ற கவலையோடு வேண்டாம் என்று சொல்லி விட்டேன் . அடுத்துப் பெண் என்பதால் உருவாக வாய்ப்புள்ள பிரச்சனைகளின் காரணமாக எனக்கு உதவியாளரே தேவையில்லை என்று தவிர்த்து விட்டேன் . இந்த இடத்தில் ஆயத்த ஆடை உலகத்தில் முக்கியப் பங்கு வகிக்கும் நூல் உலகத்தைப் பற்றி நாம் பேசியாக வேண்டும் . நூலை ஆங்கிலத்தில் YARN என்கிறார்கள் . ஆனால் இந்தத் துறையில் நூல் விசயத்தைச் சரியான முறையில் கையாளத் தெரியாவிட்டால் நீ யார் ? என்று கேட்டு ஒவ்வொரு முதலாளியையும் தெருவில் கொண்டு வந்து நிறுத்தி விடும் . காரணம் நூல் தான் இந்தத் தொழிலுக்கும் ஆதாரம் . இதுவே தான் அஸ்திவாரம் . ஒவ்வொரு நிறுவனத்திலும் நூல் வாங்கும் பொறுப்பு முதலாளி கையில் மட்டுமே இருக்கும் . காரணம் ஒரே சமயத்தில் பல கோடிகளை ஒரே நாளில் கொடுத்து வாங்க வேண்டும் . கடன் கேட்டாலும் முதலாளியின் நம்பகத்தன்மையைப் பொறுத்து நூற்பாலைகளைக் கொடுக்கும் நிலையில் இருப்பார்கள் . மாதம் ஒரு நாள் பல சமயம் வாரம் ஒரு நாள் இரண்டு மூன்று கோடிகளுக்கு நூல் வாங்க வேண்டியதாக இருக்கும் . இதுபோன்ற நிலையில் அறிமுகம் இல்லாதவர்களின் கையில் நூல் வாங்கும் பொறுப்பைக் கொடுத்து விட்டால் மிகப் பெரிய பஞ்சாயத்து உருவாக வாய்ப்பு அதிகம் . தரமற்ற நூல்களைக் கமிஷனுக்காக வாங்கிவிட்டுக் கடைசியில் நிறுவனத்தைத் தெருவில் நிறுத்தி விடுவார்கள் என்பதை மனதில் கொண்டே எந்த முதலாளியும் நூல் வாங்கும் பொறுப்பை வேறு எவர் கையிலும் கொடுப்பதில்லை . இந்த மில் நூல் இத்தனை பைகள் வருகின்றது என்று தனக்குக் கீழே உள்ள பேப்ரிக் டிபார்ட்மெண்ட் கையில் கொடுத்து விடுவார்கள் . இது போன்ற தனித்தனி துறைகள் என்பது 15 வருடங்களுக்கு முன்பு நினைத்தே பார்த்திருக்க முடியாது . கடந்த ஏழெட்டு வருடங்களில் திருப்பூரில் உள்ள ஆய்த்த ஆடை நிறுவனங்களில் உருவாக்கப்பட்ட நிர்வாக அமைப்புகளில் பல மாறுதல்கள் உருவாகியுள்ளது . ஒவ்வொரு துறைக்கும் தனியான ஆட்கள் , இணைய வசதிகளுடன் தனித்தனி கணினிகள் . கூடவே ஆள் , அம்பு , சேனைகள் மற்றும் அவரவர் வைத்திருக்கும் வாகனத்திற்குப் பெட்ரோல் என்று பலவிதமான வசதிகளை முதலாளிகள் உருவாக்கிக் கொடுத்து இருக்கின்றார்கள் . 15 வருடங்களுக்கு முன்னால் ஒரே நபர் தான் அனைத்து வேலைகளையும் பார்க்க வேண்டும் . கணக்குபுள்ள அல்லது சூப்ரவைசர் என்ற வார்த்தைக்குள் அவரின் பதவி அடங்கி விடும் . ஆனால் இன்று எல்லாமே மாறி விட்டது . இந்தத்துறைப் பற்றி எதுவும் தெரியாமல் உள்ளே நுழைபவர் பேசத் தொடங்கும் போதே என் சம்பளம் என்ன ? என்று கேட்கும் அளவிற்கு ஒவ்வொருவரின் மனோபாவமும் மாறியுள்ளது . ஆனால் என்னைப் போலப் படிப்படியான உழைப்புடன் கூடிய வளர்ச்சியை இன்றைய சூழ்நிலையில் எவரிடமும் எதிர்பார்க்க முடியாது . மூன்று மாதங்கள் மட்டுமே பணிபுரிந்து விட்டு நான்காவது மாதம் அடுத்த நிறுவனங்களில் நுழைந்து , தான் கற்று வைத்துள்ள அரைகுறை அறிவுடன் ஆங்கில அறிவையும் வைத்து மாதம் இருபதாயிரம் சம்பளம் வாங்கிக் கொண்டிருக்கும் பலரையும் எனக்குத் தெரியும் . இந்த நிறுவனத்தில் இதைப் போலப் பலரும் இருந்தனர் . துணித்துறையில் இருந்தவன் துணி சார்ந்த அறிவில் முன் அனுபவம் எதுவும் இல்லாதவனாகத்தான் இருந்தான் . அவனுடன் உரையாடிய போதே என்னால் உணர்ந்து கொள்ள முடிந்தது . துணி சார்ந்த விசயங்களில் அனுபவம் இல்லாத போதும் ” மற்ற அத்தனை விசயங்களிலும் ” பழம் தின்று கொட்டை போட்டவன் மட்டுமல்ல . கொட்டையையும் மென்று தின்று துப்பக்கூடியவன் என்பதை அடுத்த இரண்டு நாளில் புரிந்து கொண்டேன் . நான் அந்த நிறுவனத்தில் நுழைந்த போது எதிர்பார்த்துச் சென்ற பதவிக்கும் எனக்கு வழங்கப்பட்ட பதவிக்கும் சம்மந்தம் இல்லை . இவருக்குக் கீழே நீங்கள் மூன்று மாதங்கள் பணியாற்ற வேண்டும் என்று ஒருவரை என்னிடம் சுட்டிக்காட்டினார்கள் . அவரைத்தான் சீனியர் என்றார்கள் . என்னைப் போல ஏழெட்டுப் பேர்கள் ஏற்கனவே அவருக்குக் கீழே பணியாற்றிக் கொண்டு இருந்தார்கள் . பெரும்பாலும் கூட்டத்தோடு கோவிந்தா என்கிற நிலையில் தான் உள்ளே இருந்த பணிச்சூழல் இருந்தது . எவர் என்னை வேலை பார்க்கின்றார்கள் ? என்பதையே கண்டு கொள்வதை எனக்குப் புரிந்து கொள்ளவதே சற்றுக் கடினமாக இருந்தது . கடினமான சூழ்நிலைகள் நம்மை நமக்கே அடையாளம் காட்டும் . நம்மிடம் உள்ள தகுதிகளை அதுவே இனம் பிரித்துக் காட்டிவிடும் . அப்படித்தான் இந்த வாய்ப்பு எனக்குக் கிடைத்தது . ஆனால் இந்த நிறுவனத்தில் அஸ்திவாரம் என்பது செங்கரையான்களால் சூழப்பட்டு இருந்தது . என் வேட்டை தொடங்கியது . பலரின் விளையாட்டும் வெளியே தெரிய வந்தது . வேட்டையாடு விளையாடு என்று என் தினப்பொழுதுகளும் கழியத் தொடங்கியது . பேப்ரிக் மேனேஜர் என்ற பொறுப்பில் இருந்தவனின் மிரட்டலை மீறி பழைய டெலிவரி சலான் ஒவ்வொன்றையும் நோண்டிக் கொண்டே செல்ல பல புதிர்கள் அவிழத் தொடங்கியது . அதற்கான விளைவுகள் நள்ளிரவில் அலைபேசியில் எனக்குக் கொலை மிரட்டல் வரைக்கும் கொண்டு வந்து சேர்த்தது . 10 10. நேர்மையே உன் விலை என்ன ? [] 10. நேர்மையே உன் விலை என்ன ? மூன்று நாட்களாகத் தொடர்ச்சியாக நள்ளிரவு வரைக்கும் அலைபேசியில் தொடர்ச்சியாக மிரட்டல் வந்து கொண்டேயிருந்தது . புதிய எண்கள் . புதிய குரல்கள் . ஆனால் சொல்லி வைத்தாற் போல் வசைமாறி பொழிந்து தள்ளிக் கொண்டேயிருந்தார்கள் . நீங்கள் மிரட்டப்பட்டவரா ? அல்லது மிரட்டியவரா ? இரண்டு இடத்திலும் கொஞ்சம் தான் வித்தியாயம் இருக்கும் . ஒவ்வொரு இடத்திலும் மிரட்டுபவரை கவனித்துப் பாருங்கள் . மனதளவில் கோழையாக , தன் உழைப்பை நம்பாமல் , சூழ்நிலையைப் புரிந்து கொண்டு போட்டி போட முடியாமல் , விரும்பாமல் , போட்டிக்கான தன் தகுதியை வளர்த்துக் கொள்ள முடியாத அத்தனை பேர்களும் மிரட்டும் நபர்களாகத்தான் வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள் . அவர்கள் பார்வையில் திறமைசாலிகள் அத்தனை பேர்களும் எதிரிகளாகத் தான் தெரிவார்கள் . இது தான் சமூக நியதியாக உள்ளது . வாழ்க்கையென்பது ” இப்படித்தான் வாழ வேண்டும் ” என்று கட்டுப்பெட்டி தனத்திற்குள் உங்களைப் பொறுத்தியிருந்தால் இது போன்ற சமயங்களில் உங்கள் நிலைமை திண்டாட்டமாகத்தான் இருக்கும் . அல்லது ” என் வாழ்க்கை இப்படித்தான் . ஆனால் ‘ எதையும் தாங்கும் இதயம் ‘ எனக்குண்டு ” என்பவராயின் இன்னும் கொஞ்சம் மேலே வந்து படபடப்பு குறைந்து பக்குவமாக அணுக முடியும் . இதற்கு அடுத்த நிலை ஒன்றுண்டு . எப்பேற்பட்ட மோசமான குணாதிசியங்கள் கொண்டவருடன் பழகினாலும் தன் சுயபுத்தியை இழக்காமல் தன் நிலையை எந்தச் சூழ்நிலையிலும் கடைசி வரைக்கும் மாற்றிக் கொள்ளாமல் அனைத்தையும் வேடிக்கை பார்க்கும் மனோநிலையில் இருத்தல் . நான் பலபடிகளைக் கடந்து இந்த நிலைக்குத் தான் இந்தச் சமயத்தில் வந்து சேர்ந்து இருந்தேன் . காரணம் அனுபவமே ஆசான் என்பார்களே ? அந்தந்த நிலையில் கற்றதையும் பெற்றதையும் மனம் உள்வாங்கியிருந்தது . உள் வாங்கியதை மனம் மறக்க முடியாத அளவுக்கு அடுத்தடுத்த அனுபவங்கள் அதைப் பழக்கமாக மாற்றி இருந்தது . நான் படித்த கல்லூரி படிப்பு வரைக்கும் ஊரில் அடித்துத் துவைத்து என்னை வளர்த்திருந்தார்கள் . ஒழுக்க விதிகளை உள்ளே மருந்து போலப் புகுத்தியிருந்தார்கள் . பல கசப்புகளைப் பொறுத்து தான் அப்பாவுடன் வாழ்ந்திருந்தேன் . ஆனால் மொத்த கசப்பின் மீதி இருந்த வெறுப்பைத் திருப்பூருக்குள் நுழைந்தவுடன் துப்பி விட்டேன் . ” வானமே வாழ்க்கையின் எல்லை ” என்பது போல ஒவ்வொன்றும் ஒன்றைக் கற்றுத் தந்தது . மனம் போன வாழ்க்கை என நான் விரும்பிய வாழ்க்கை என்று எல்லா இடங்களுக்குச் சுற்றத் தொடங்கினேன் . ஆனால் எந்த நிலையிலும் அடுத்தவன் காசுக்கு ஆசைப்படவில்லை . உறுத்தல்கள் ஒவ்வொரு நாளும் என்றுள் உருவாகிக் கொண்டே இருந்தது . மனிதர்களின் உடல் நலம் என்பது மனநலத்தோடு சம்பந்தப்பட்டது . எனக்குள் உருவான உறுத்தல்கள் தினந்தோறும் தூங்க விடாமல் தொந்தரவு செய்ய ஆரம்பித்தது . தூக்கம் மறந்த இரவுகள் நாளுக்கு நாள் அதிகமாகத் தொடங்கியது . மனம் விழித்துக் கொள்ளத் தொடங்கியது . நானும் விழித்துக் கொண்டேன் . ஒழுக்க விதிகள் திசைகாட்டியாய் மாறத் தொடங்கியது . நீங்கள் சிறுவயதில் பெற்றோர்களிடம் இருந்து பழகிய பழக்கங்கள் உங்களிடம் விட்டு அகலாது என்பது நம்புகின்றீர்களா ? என்ன தான் வாழும் சூழ்நிலைக்கேற்ப உங்களை மாற்றிக் கொண்டாலும் உங்கள் குணாதிசியத்தின் அடிப்படைக் கட்டுமானமென்பது உங்கள் குடும்பத்திடம் இருந்த வந்ததாக இருக்கும் என்பது உணர்வீர்களா ? அடிப்படைக் கட்டுமானத்தை ஓரளவுக்கு மேல் உங்களால் மாற்றி விட முடியாது என்பதை நம்புகின்றீர்களா ? என் அனுபவங்கள் இதைத்தான் எனக்குச் சுட்டிக்காட்டியது . நானும் இதையே தான் நம்புகின்றேன் . நீங்கள் வாழ்ந்த குடும்பத்தை விட்டுத் தனியாக வந்து வேறொரு இடத்தில் வாழும் போது செய்யக்கூடிய அத்தனை தவறுகளையும் ஒரு நாள் உணரத்தான் செய்வீர்கள் . மற்றொன்று உங்கள் குடும்பதோடு வாழ்ந்த முதல் இருபது வருட வாழ்க்கையில் நீங்கள் கற்றுக் கொண்ட நல்லதும் கெட்டதும் உங்களைச் சரியான முழு உருவமாக மாற்ற அடுத்தப் பத்து வருடங்கள் ஆகும் . அப்படியும் மாறாவிட்டால் தவறு ஒன்றுமில்லை . சபிக்கப்பட்ட வாழ்க்கையை நீங்கள் விரும்பி தேர்ந்தெடுத்துள்ளீர்கள் என்று அர்த்தம் . மிரட்டியே வளர்க்கப்பட்ட குழந்தைகள் சமூகத்தின் உள்ளே நுழையும் போது தலைகீழாக மாறி விடுகின்றார்கள் . மற்றவர்களை மிரட்டி வதைத்து சுய இன்பம் காண்பவர்களாக இருந்து விடுகின்றார்கள் . குடும்பத்திற்குள் திருடிப் பழக்கமானவர்கள் மனதில் எவ்வித ஒழுக்க விதிகளும் அவர்களைச் சஞ்சலப்படுத்துவதில்லை . பத்து லட்சம் மோசடி செய்பவர்கள் தொடங்கிப் பல்லாயிரம் கோடி திருடுகின்ற அத்தனை ‘ ஒயிட் காலர் ‘ கிரிமினல்களின் வண்டவாளங்களையும் நாம் தினந்தோறும் ஊடகங்களில் படித்துக் கொண்டு பார்த்துக் கொண்டு தானே இருக்கின்றோம் . அத்தனை பேர்களும் பணக்கார வாரிசுகளின் பிள்ளைகளாகத் தான் இருக்கின்றார்கள் . ஏதோவொரு விடுதியில் தங்கிப் படித்து அப்பா , அம்மா , அண்ணன் , தம்பி , அக்கா , தங்கை உறவு பற்றித் தெரியாதவர்களும் , வெளியுலகச் சமூகத்தில் உள்ள ஏற்றத்தாழ்வுகளைக் கண்டும் காணாமல் கடந்து போகக்கூடியவர்களாக இருக்கின்றார்கள் . தனிநபர்களோ , மிக உயர்ந்த பொறுப்பில் உள்ளவர்களோ ? அல்லது அரசியல்வாதியோ , அதிகாரிகளோ ? எவருக்காகவது மோசடி வழக்கில் கைது செய்த பின்பு குற்ற உணர்ச்சி அவரவர் மனதில் குறுகுறுப்பை உருவாக்கும் என்றா நினைக்கின்றீர்கள் ? பத்திரிக்கை ஆசிரியர் என்ற பெயரில் இருந்து கொண்டு தர்மத்தை மீறி பகல் வேசம் போட்டுக் கொண்டிருப்பவர்கள் முதல் பள்ளிக்கூட ஆசிரியர் வரைக்கும் சமூகத்தின் ஊற்றுக்கண்ணாக இருக்கும் அத்தனை பேர்களும் அவர்வர் வளர்த்துக் கொண்ட கொள்கைளும் கோட்பாடுகளும் தான் அவர்களின் தனிப்பட்ட குணாதிசியத்தை உருவாக்க காரணமாக உள்ளது , அவர்களின் ஆழ்மனதில் உள்ள வக்கிரங்கள் எழுத்தாக வார்த்தையாக வந்து விழுகின்றது என்பதைக் கவனித்துப் பார்த்தால் புரியும் . அவர்கள் வாழ்ந்து கொண்டிருக்கும் இரட்டை வாழ்க்கை என்பதனை சரியென்பதை அவர்களின் மனமும் நம்பத் தொடங்க உள்ளே ஒரு வாழ்க்கை . வெளியே ஒரு வாழ்க்கை என்பதை எளிதாகக் கடைபிடித்துக் கொண்டிருக்கின்றார்கள் . இதுவே தான் ஒரு தனிமனிதன் மூலம் மிகப் பெரிய சமூகக் கேடுகள் உருவாகி மொத்த சமூகத்தையும் பாதிப்படையச் செய்கின்றது . இப்படிப்பட்ட நபர்கள் தான் ஒவ்வொரு தொழில் நிறுவனங்களிலும் உயர்ந்த பொறுப்பில் இருக்கும் போது காலப்போக்கில் அந்த நிறுவனமும் அழிந்து போய் விடுகின்றது . இங்குள்ள ஒவ்வொரு ஆயத்த ஆடை நிறுவனமும் அழிந்த கதைக்குப் பின்னால் யாரோ சிலர் மட்டுமே காரணமாக இருக்கின்றார்கள் . இன்று வரையிலும் தொடர்ந்து கொண்டும் இருக்கின்றது . அது போன்ற சமயங்களில் சம்மந்தப்பட்ட தனி நபர்களைப் பற்றியும் அவர்களின் தனிப்பட்ட பொருளாதார வளர்ச்சியையும் நன்றாகக் கவனித்த காரணத்தினால் இங்கே எழுத முடிகின்றது . எனக்கு மிரட்டல் விடக் காரணமாக இருந்தவன் வாங்கிக் கொண்டிருந்த சம்பளம் மாதம் இருபதாயிரம் தான் . ஆனால் இதைப்போலப் பத்து மடங்கு மாதந்தோறும் சம்பாரித்துக் கொண்டிருந்தான் . இந்த நிறுவனத்தில் மட்டும் நான்கு வருடமாகப் பணியாற்றிக் கொண்டிருக்கின்றான் . இந்த அளவுக்குச் சம்பாரித்தவன் எந்த அளவுக்குச் சொத்து சேர்த்து இருப்பான் என்பதை உங்கள் யூகத்திற்கே விட்டு விடுகின்றேன் . இந்த வருமானத்தை யாரோ ஒருவன் கெடுக்க நினைக்கின்றான் என்றால் அவனைச் சும்மா விட்டு விட முடியுமா ? அது தான் என்னை நோக்கி மிரட்டல் அஸ்திரத்தை பலர் மூலம் ஏவத் தொடங்கினான் . மேலும் மிரட்டலை எதிர்கொள்வது என்பது ஒரு தனிக்கலை . அது உங்களுக்கு அனுபவத்தில் மட்டுமே கிடைக்கக்கூடும் . எனக்கும் பட்ட பின்பு தான் இந்த ஞானம் கிடைத்தது . சம்மந்தமே இல்லாமல் நமக்கு மேலே இருப்பவரிடம் திட்டு வாங்கும் போது முதலில் குழப்பமும் தொடர்ந்து வெறுப்புடன் ஆத்திரமும் வரும் . இது தான் ஆபத்தானது . எதிராளி நம் கோபத்தைத் தான் எதிர்பார்த்துக் காத்திருப்பார்கள் . நாம் கோபப்பட அவனுக்கு இலகுவாக ஆகி விடும் . மேலும் நம் மேல் வன்மத்தை வார்த்தைகளாகத் துப்ப நம் நரம்புகள் கட்டுப்பாடு இழந்து என்ன பேசுகின்றோம் ? என்பதை அறியாமல் நாம் நம் சுய கட்டுப்பாட்டை இழந்து விடுவோம் . தடுமாற்றத்துடன் வார்த்தைகள் வந்து விழ காத்திருந்தவர்கள் விரித்த வலைக்குள் நாம் வலைக்குள் சிக்கிக் கொள்வோம் . ஆனால் ஒவ்வொரு நாளும் சொல்லி வைத்தாற் போல அலைபேசி அழைப்புகள் நள்ளிரவில் வந்த போது நான் தூக்கக் கலக்கத்தில் இருந்தாலும் கவனமாகவே கையாண்டேன் . ஒவ்வொருவரும் பலவிதமாகப் பேசி இறுதியில் உயிர் பயத்தைத்தான் காட்டினர்கள் . ” ரோட்டில் அடிபட்டு செத்துக்கிடப்பாய் ” என்றார்கள் . ” பிழைக்க வந்த ஊரில் உன் பிடிவாதத்தை மாற்றிக் கொள் ” என்று அறிவுறுத்தினார்கள் . சிரித்துக் கொண்டே இரவு நேரத்தில் அழைத்துப் பேசுறீங்களே ? காலையில் அலுவலகத்திற்கு வாங்களேன் ” என்றால் தொடர்பு துண்டிக்கப்பட்டு விடும் . மனிதர்கள் நேர்மையாக வாழ்வது என்பது அவர்களின் தனிப்பட்ட பிடிவாதமல்ல . அது இயல்பாகச் சிறு வயது முதல் வாழ்ந்த சூழ்நிலையில் அவரவர் குடும்பம் உருவாக்கும் ஒரு பழக்கம் . இடது கை , வலது கை போல இது நம் உடம்போடு ஒட்டியுள்ள ஒருவிதமான நம்பிக்கை . சில அதிகாரிகள் பணி ஓய்வு வரைக்கும் தங்கள் கொள்கையை மாற்றிக் கொண்டே இல்லை என்பதை உங்கள் நினைவில் இருப்பவர்களை இப்போது யோசித்துப் பாருங்கள் . எதனால் அப்படி வாழ்ந்தார் ? என்று தற்போதை சமூகப் போக்கில் உங்களால் யோசிக்க முடிகின்றதா ? வாழ்க்கை என்பதைப் புரிந்து வாழ்பவர்களுக்குக் கொள்கையில் சமரசம் என்பதே இருக்காது . சமரசம் செய்து கொண்டு வாழ்பவர்கள் அத்தனை பேர்களிடமும் பணம் வந்து விழுந்து கொண்டே தான் இருக்கின்றது . ஆனால் தவறான வழியில் சம்பாரிப்பவர்கள் பொருள் ஈட்டுவதில் ஆர்வத்துடன் இருக்கின்றாகளே தவிர அதை வைத்து சுகமாய் வாழும் கலையைக் கற்றுக் கொள்வதில்லை என்பது தான் ஆச்சரியமாக உள்ளது . நேர்மையற்ற வழியில் சம்பாரிக்க முயற்சிக்கும் போது தொடங்கும் பயமென்பது அடுத்தடுத்து அதிகமாகிக் கொண்டே தான் இருக்கின்றது . அதை மேலும் பெருக்குவதில் தொடங்கிக் கடைசி வரைக்கும் கட்டிக்காப்பது வரைக்கும் ஒவ்வொரு இடத்திலும் பயம் தான் பிரதானமாகவே உள்ளது . அதிகப்படியான அழுத்தங்கள் மூளையைத் தாக்குகின்றது . ஒவ்வொரு நிலையிலும் மனம் உடம்பைத் தாக்க கடைசியில் உச்சி முதல் பாதம் வரைக்கும் நோயே வாழ்க்கை . கேழ்வரகு கஞ்சி ருசி தான் மிஞ்சுகின்றது . கணக்கில் அடங்கா நோய்களும் உடம்புக்குள் வர வைக்கோல் போரை காத்திருந்த நாய் போலச் சொத்துக்களைச் சேர்த்து வைத்து விட்டு இறந்து போய்விடுகின்றார்கள் . கடைசியில் சொத்தை பங்கு போட பங்காளி என்ற பெயரில் வந்து விடுகின்றார்கள் . எனக்கு நேர்மை என்ற வார்த்தைக்கெல்லாம் முழுமையான அர்த்தம் தெரியாது . நேர்மையாகத் தான் வாழ்வேன் என்ற பிடிவாதம் என்ற எண்ணம் கூட இல்லை . ஆனால் இன்றைய தினப் பொழுதின் கடமை என்ன ? என்பதாகத்தான் இந்த வாழ்க்கையைப் பார்க்கின்றேன் . யாரோ ஒருவரிடம் மாதச்சம்பளம் பெறுகின்றோம் . அவர் நல்லவரா ? கெட்டவரா ? போன்ற ஆராய்ச்சிகளை விட அவரிடம் வாங்கும் பணத்திற்கு ” என் கடமையைச் செய்து விட வேண்டும் ” என்பதில் குறியாக இருந்தேன் . மேலும் ஒவ்வொரு நிறுவனமாக மாறும் போது நான் கவனித்து வந்த மற்றொரு விசயம் ஒவ்வொரு இடங்களிலும் திருடிப் பிழைப்பவர்களின் மனோபாவத்தையும் இதன் காரணமாக அந்த நிறுவனம் அழிந்து போவதையும் பற்றி நிறையவே பார்த்துள்ளேன் . ஒரு நிறுவனம் அழிந்து போவதென்பது ஒரு வளர்ந்த காட்டை அழிப்பதற்குச் சமமாகத் தெரிந்தது . ஒரு காடு அழிக்கப்படும் போது முதலில் பாதிக்கப்படுவது அங்கே உள்ள பல்லுயிர் பெருக்கமே . உயிருள்ள மற்றும் உயிரற்ற பலதும் பாதிப்படைவதை நீங்கள் பாடங்களில் படித்து இருக்கக்கூடும் . அழிந்த காட்டின் சமநிலை மாறி அதன் பாதிப்புகள் அடுத்தடுத்து வெவ்வேறு நிலையில் தாக்கும் . நானும் திருப்பூரில் உள்ள நிறுவனங்களை அப்படித்தான் பார்க்கின்றேன் . ஒரு ஆயத்த ஆடை நிறுவனம் லாப நோக்கில் செயல்படுகின்றது . சுற்றுப்புறத்தை நாசம் செய்கின்றது . மனிதர்களை அடிமையாக நடத்துகின்றது என்று எத்தனை குற்றச் சாட்டுகளை வைத்தாலும் ஒவ்வொரு நிறுவனமும் ஆயிரக்கணக்கான நபர்களின் குடும்ப வாழ்க்கையோடு சம்மந்தப்பட்டு உள்ளது என்பதை உங்களால் உணர முடிகின்றதா ? தமிழ்நாட்டில் உள்ள பல மாவட்டங்களுடன் திருப்பூர் என்ற ஊர் பலவிதங்களில் தொடர்பு கொண்டிருந்த போதிலும் குறிப்பாகத் தர்மபுரி , திருவண்ணாமலை , பெரம்பலூர் , திருச்சி , தஞ்சாவூர் , சிவகங்கை , இராமநாதபுரம் , மதுரை போன்ற ஏழு மாவட்டங்களில் உள்ள அடித்தட்டு மற்றும் நடுத்தர மக்களின் காமதேனு பசுவாக விளங்கிக் கொண்டிருப்பது திருப்பூரே . ஓடுக்கப்பட்ட மக்கள் , வாழ வசதியில்லாதவர்கள் , இனி இங்கே வாழவே முடியாது என்ற நிலையில் வாழ்பவர்கள் , கணவனை இழந்து வாழும் பெண்கள் , மனைவியிடன் சண்டை போட்டுக் கொண்டு வெளியே கிளம்பிய புண்ணியவான்கள் , தம்பி தங்கைகளைப் படிக்க வேண்டிய கடமையில் உள்ளவர்கள் , பள்ளிப் படிப்பை முடித்து விட்டு மேற்கொண்டு படிக்க வசதியில்லாமல் தவிப்பவர்கள் , கல்லூரி படிப்புகளை முடித்து விட்டு கலங்கரை விளக்கத்தைத் தேடிக் கொண்டிருக்கும் இளைஞர்கள் என்று மிகப் பெரிய பல்லுயிர் பெருக்கத்திற்குத் திருப்பூர் தான் கடந்த இருபது ஆண்டுகளாக உதவி கொண்டிருக்கின்றது . இந்தச் சமயத்தில் நம் அரசுகள் என்ன செய்து கொண்டிருக்கின்றது என்ற தேவையற்ற கேள்வி உங்கள் மனதில் எழ வேண்டுமே ? இந்திய அரசாங்கம் என்பதும் இந்தியாவின் ஜனநாயகம் என்பதும் ஒரு விதமான பாவனைப் போன்றது . நம்முடைய இந்த அமைப்பு என்பது இந்திய ஜனத் தொகையில் ஒரு கோடி மக்களுக்காக மட்டுமே செயல்பட்டுக் கொண்டிருக்கின்றது . அவர்கள் சுகமாக வாழ்க்கை வாழ அனைத்து வகையிலும் உதவி கொண்டிருக்கின்றது . இது அரசியலின் வேறொரு புறத்தை உணர்ந்தவர்களுக்குத் தெரியும் தானே ? எந்த அதிகாரவர்க்கத்தினர் தனிப்பட்ட நபர்களின் குடும்ப வாழ்க்கையில் ஒளிவிளக்கை ஏற்றியுள்ளனர் . மேலை நாடுகள் போலத் தனிமனிதர்களின் மனித உரிமைகளைப் பற்றிக் கவலைப்படுகின்றனர் ? அரசாங்கம் கொடுத்தே தீரவேண்டிய கல்வி , பொதுசுகாதாரம் , அடிப்படைக் கட்டுமானம் போன்றவை கூட இங்கே இன்னமும் முழுமையாக நிறைவேற்றப்படவில்லை என்பதை மறுக்கக் கூடியவரா நீங்கள் ? திருப்பூர் போன்ற தொழில் நகரங்கள் இந்த வேலையைச் செய்து கொண்டிருக்கின்றது . மேலும் இங்கே காலந்தோறும் ஒவ்வொரு தனிமனிதர்களும் குட்டிக்கரணம் போட்டுத் தங்கள் வாழ்க்கையை நடத்திக் கொண்டிருக்கின்றார்கள் . மேலும் இவர்கள் கட்டும் வரிப்பணத்தைத்தான் பன்னாட்டு நிறுவனங்களுக்கு வரிச்சலுகை என்ற பெயரில் ஆட்சியாளர்கள் வாரி வழங்கிக் கொண்டிருக்கின்றார்கள் . சாதாரண மக்கள் வங்கியில் போடும் சேமிப்பைத் தூக்கி பெரு நிறுவனங்களுக்கு வழங்கி விட்டு வருடந்தோறும் வராக்கடனில் கொண்டு போய் நிறுத்துகின்றார்கள் . மொத்தத்தில் திருப்பூர் , சிவகாசி , நாமக்கல் , ஈரோடு , கரூர் போன்ற தொழில் நகரங்களின் மூலம் தமிழ்நாட்டுக்கு மட்டுமல்ல இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களில் வாழும் பல கோடி மக்களும் தங்கள் அடிப்படை வாழ்க்கையை வாழ உதவுகின்றது என்பது மறுக்க முடியாத உண்மை . மேலே நான் குறிப்பிட்டுள்ள ஏழு மாவட்டங்களில் திருப்பூருக்குள் நுழைந்து சாதாரணக் கூலித் தொழிலாளியாக வாழ்ந்தவர்களின் வாழ்க்கையைப் பற்றி , அவரவர் குடும்பத்திற்குப் பங்காற்றிய மகத்தான அர்ப்பணிப்பை அடுத்தடுத்து வரும் அத்தியாயங்களில் உங்களுக்கு எழுதி புரிய வைக்க விரும்புகின்றேன் . இப்போது ஒவ்வொரு நிறுவனத்திலும் இருக்கும் தனிப்பட்ட சில நபர்கள் செய்யும் தவறான செயல்பாடுகளின் காரணமாக ஒரு நிறுவனம் எப்படி அழிந்து விடுகின்றது என்பதைப் பார்ப்போம் . நீங்கள் காணும் எந்தத் துறை என்றாலும் PURCHASE DEPARTMENT என்று தனியாக ஒரு பிரிவு இருக்கும் . அதில் PURCHASE MANAGER என்ற பதவியும் அவருக்கு எடுபிடியாகப் பலரும் இருப்பார்கள் . ஆயத்த ஆடைத்துறையில் உள்ள பல்வேறு துறைகளில் எப்படியெல்லாம் சம்பாரிக்கின்றார்கள் என்பதை இப்போது பார்க்கலாம் . ஒரு நிறுவனத்தில் புதிதாக ஒரு ஒப்பந்தம் உள்ளே வரும் போது மாதிரி உடைகளைப் பேட்டன் மாஸ்டர் தைத்துப் பார்த்து தனது பணியைத் தொடங்குவார் . நிறுவனத்தில் பயன்படுத்திய பல விதமான பழைய துணிகள் இருக்கும் . சிலர் வெளியே இருந்து தான் துணி வாங்க வேண்டும் என்று சொல்லி ஐந்து கிலோ வாங்கிவிட்டு பத்து கிலோ துணிக்கான பணத்தை லவட்டுவார்கள் . இதைப் போல உள்ளே ஏற்கனவே தைத்த பலதரப்பட்ட ஆடைகளுக்குப் பயன்படுத்திய நூல் கண்டுகள் (STITCHING THREAD) இருக்கும் . பேட்டன் மாஸ்டர் தான் எடுத்த நிற துணிகளுக்கு ஏற்ப தைக்கும் நூலை தனக்குக் கீழே இருக்கும் நபரிடம் சொல்ல அவர் இந்த நிற நூல்கள் நம்மிடம் இல்லை . வெளியே இருந்து தான் வாங்க வேண்டும் என்று சொல்வார் . SAMPLE DEPARTMENT எதைக் கேட்டாலும் நிறுவனத்தின் காசாளர் உடனே பணத்தை எடுத்துக் கொடுக்க வேண்டும் என்பது இங்கே உள்ள நிறுவனங்களில் எழுதப்படாத விதியாகும் . சிறிய நிறுவனங்களில் ஒவ்வொரு பணம் சார்ந்த செயல்பாடுகளும் முதலாளியின் பார்வைக்குச் சென்று அவரின் அனுமதி கிடைத்த பின்பே சம்மந்தப்பட்ட விசயங்களுக்குப் பண அனுமதி கிடைக்கும் . பெரிய நிறுவனங்களில் அதற்கென்று இருக்கும் நபர்களிடம் அனுமதி பெற வேண்டும் . ஆனால் எப்பேற்பட்ட நிறுவனமாக இருந்தாலும் சாம்பிள் பீஸ் தைக்கின்றார்கள் என்றால் அதற்கு எந்த வகையில் பணம் தேவைப்பட்டாலும் உடனே வழங்கப்பட வேண்டும் . காரணம் காலத் தாமதம் தவிர்க்கப்பட வேண்டும் என்பதோடு SAMPLE DEPARTMENT என்பது யூனியன் பிரதேசம் போல மத்திய அரசின் கட்டுப்பாட்டின் கீழ் செயல்படுவது போலச் சிறப்பு அதிகாரங்களுடன் இருக்கும் . இது போன்ற வசதிகள் உள்ள இந்தச் சாம்பிள் பீஸ்கள் தயாரிக்கும் துறை என்பது ஊழலின் தொடக்கத்தைத் தொடங்கி வைக்கும் . பில் என்ற பெயரில் சில சமயம் துண்டுச் சீட்டுக் கொடுக்கப்படும் . குறிப்பிட்ட மாதிரி சாம்பிள் ஆயத்த ஆடை உருவாக்க பட்டன் தொடங்கி ஒவ்வொரு இடத்திற்கும் நகர்ந்து வரும் ஏற்கனவே நாம் பேசியிருந்தோமே PRODUCTION FOLLOW UPS என்றொரு பதவியைப் போல SAMPLE FOLLOW UPS என்பதற்காக இங்கே மற்றொரு நபர் இருப்பார் . ஒவ்வொரு இடத்திற்கும் கொண்டு செல்பவர் பணம் பார்க்க வாய்ப்புள்ள அத்தனை இடங்களிலும் பேசி வைத்திருப்பார் . இந்த ஆடைகள் அடுத்த மாதம் பத்தாயிரம் பீஸ் வரப் போகின்றது என்று அங்கே சொல்லிவிட அவரும் ஆர்வமாக இலவசமாகச் செய்து கொடுத்து விடுவார் . ஆனால் அங்கே சாம்பிள் பீஸ் காஜா பட்டன் அடித்தேன் , எம்பிராய்ட்ரி அடித்தேன் என்று ஒவ்வொரு இடங்களிலும் பணம் கொடுத்து வாங்கினேன் என்று கணக்குக் காட்டப்படும் . இவையெல்லாம் நூறு இருநூறு சமாச்சாரம் . ஆனால் ஒரு நிறுவனத்தின் துணித்துறை என்பது தமிழக அரசின் பொதுப்பணித்துறை போன்றது . தொட்ட இடங்களில் எல்லாம் பணம் கொட்டக் கூடியது . நிட்டிங் என்று சொல்லப்படுகின்ற அறவு எந்திரம் , துணியை வண்ணமாக்க சாயப்பட்டறை என்று தொடங்கி ஒவ்வொரு இடத்திலும் கிலோ ஒன்றுக்கு ஒரு ரூபாய் கமிஷன் வைத்துக் கொண்டாலும் அந்தந்த துறைக்குப் பொறுப்பாக உள்ளவர்கள் மாதந்தோறும் ஐம்பதாயிரத்திற்குக் குறையாமல் சம்பாரிப்பார்கள் . இன்று வரையிலும் முதலாளியை விடச் செழுமையாக இங்கே பலரும் வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள் . ஆனால் கடந்த நாலைந்து வருடமாக மற்றொரு கலாச்சாரத்தை இங்கே பார்க்கின்றேன் . வெளியே இருந்து அழைத்து வரப்படுகின்ற ஒப்பந்தக்கூலியிடம் தனிப்பட்ட ஆதாயம் பார்ப்பவர்கள் அதிகமாகிக் கொண்டே இருக்கின்றார்கள் . கமிஷன் , உள் கமிஷன் அதற்கு மேலும் உள்ளடி கமிஷன் என்று விரிந்து போய்க் கொண்டேயிருகின்றது . கடைசியில் உழைத்தவன் சக்கையை வாங்கிக் கொண்டு செல்ல வேண்டியதாக உள்ளது . சமீபத்தில் ஒரு நிறுவன முதலாளி சொன்ன குற்றச்சாட்டு மொத்தத்திலும் வித்தியாசமானது . அவரது நிறுவனத்தில் தினந்தோறும் கழிப்பறையைச் சுத்தம் செய்ய வருபவர்களின் ஷிப்ட் கணக்கில் ஒருவர் ஒரு வருடமாகப் புகுந்து விளையாடி உள்ளார் . ஒரு நாளில் இரண்டு வேலை வர வேண்டும் என்பது நிறுவன விதி . ஆனால் ஒரு நேரம் மட்டும் அவர்களை வரவழைத்து விட்டு இரண்டு நேரமும் வந்தது போல ஷிப்ட் போட்டு காசு பார்த்துள்ளனர் . இதனை அவர் ஒரு வருடமாகச் செய்துள்ளார் என்பதைச் சமீபகாலத்தில் தான் கண்டுபிடித்தாரம் . எனக்குத் தெரிந்த ஒரு பெரிய நிறுவனத்தின் பணியாற்றும் பர்சேஸ் மேனேஜர் கட்டியுள்ள வீட்டின் மதிப்பு இரண்டு கோடி ரூபாய் . அவர் வாங்கும் சம்பளம் மாதந்தோறும் இருபதாயிரம் ரூபாய் மட்டுமே . இது போன்ற மனிதர்களைப் பற்றி நீங்கள் சொல்ல முடியும் ? சமூகத்தில் இவர்களை ” பிழைக்கத் தெரிந்த மனிதர்கள் ” என்று வகைப்படுத்துகின்றனர் . கூச்சம் ஏதுமில்லாமல் ” காசே தான் கடவுளடா ” என்கிற ரீதியில் இருக்கும் பலரையும் எனக்குத் தெரியும் . பல இடங்களில் முதலாளியின் சொந்தக்காரர்களைத் தான் பணம் புழங்கும் துறைகளில் வைத்திருப்பார்கள் . ஆனால் அவர்கள் முதலாளியின் கூடப்பிறந்த தம்பியாக இருந்தாலும் சரி அல்லது மனைவி வகைச் சொந்தமாக இருந்தாலும் சரி அவர்களும் முடிந்த வரைக்கும் புகுந்து விளையாடுபவர்களாகத்தான் இருக்கின்றார்கள் . சாதி , மற்றும் உறவுப்பாசம் என்பது பலவற்றையும் சகித்துக் கொள்ள உதவுகின்றது என்பதைப் பல அனுபவங்கள் வாயிலாகக் கண்டுள்ளேன் . ஆனால் எனக்கு நெருக்கடி கொடுத்துக் கொண்டிருந்த பேப்ரிக் மேனேஜர் இந்த நிறுவன முதலாளியின் சொந்தக்காரர் அல்ல . ஆனால் அவர் மச்சினர் சொந்தக்காரர் போல முதலாளியின் உள்வட்டத்தில் இருந்த காரணத்தால் இவன் செய்து கொண்டிருந்த எந்தத் தவறுகளையும் எவராலும் சுட்டிக்காட்ட முடியாத அளவுக்குச் சுட்டித்தனங்கள் செய்து கொண்டிருந்ததை உணர்ந்து கொண்டேன் . ஆயிரம் கிலோ நூல் வருகின்றது என்றால் அவன் பேசி வைத்துள்ள அறவு எந்திரங்கள் உள்ள நிறுவனத்திற்குச் சென்று விடும் . ஒவ்வொரு ஒப்பந்தங்களும் அடுத்தடுத்து வந்து கொண்டே இருக்க மாதத்தில் ஒரு அறவு எந்திர நிறுவனத்திற்குக் குறைந்தபட்சம் பத்தாயிரம் கிலோ அளவுக்குச் சென்று விடும் . இதே போல ஐந்து இடங்களுக்குச் செல்லும் போது ஐம்பதாயிரம் கிலோ சேர்ந்து விடும் . அறவு எந்திரத்தில் ஓட்டப்படும் துணிக்குக் கூலியாகக் கிலோவுக்கு ஒன்பது ரூபாய் என்கிற ரீதியில் நிறுவனத்திற்குப் பில் வரும் . ஆனால் அந்த ஒன்பது ரூபாயில் இவனுக்கு உண்டான ஒரு ரூபாய் தனியாகக் கொடுத்து விடுவார்கள் . ஒவ்வொரு பில்லும் பாஸ் ஆகும் போது ஒரு ரூபாய் கமிஷன் ஒவ்வொரு இடத்திலும் இருந்து வந்து விடும் . இதே போலத் துணியான பின்பு சாய்ப்பட்டறைக்குச் செல்லும் . அங்கேயும் ஒரு கிலோவுக்கு ஒரு ரூபாய் முதல் நிறத்திற்குத் தகுந்தாய் போல ஐந்து ரூபாய் வரைக்கும் பேசி வைத்திருப்பான் . அந்தத் தொகை முந்தைய தொகையைக் காட்டிலும் அதிகமாக இருக்கும் . அடுத்தத் துறையான காம்பேக்ட்டிக் துறையிலும் ஐம்பது பைசா முதல் தொடங்கும் . மொத்தத்தில் நூறு கோடி ரூபாய் வர்த்தகம் செய்யும் நிறுவனத்தில் இந்தத் துணித்துறையில் இருப்பவர்கள் மாதம் தோறும் குறைந்தபட்சம் ஒரு லட்சம் ரூபாயை தனியாகச் சம்பாரித்து விடுவார்கள் . ஆயத்த ஆடைத்துறையில் உள்ள துணித்துறைப் போல மற்றொரு பகுதி ACCESSORIES DEPARTMENT. இதுவும் பணம் கொழிக்கும் துறையாகும் . ஒரு ஆய்த்த ஆடை இறுதி வடிவம் பெற STITCHING THREAD. ZIP, BUTTONS, FOAM, CARTON BOX. POLY BAGS, TAPES, என்று பலதரப்பட்ட சமாச்சாரங்கள் தேவைப் படுகின்றது . இது போன்ற பொருட்களை வாங்கிக் கொடுக்க வேண்டிய நிலையில் இந்தத் துறையின் மேனேஜர் இருப்பார் . எல்லா இடங்களிலும் சமய சந்தர்ப்பத்திற்கேற்ப கமிஷன் வைக்க அதுவும் பெரியதொகையாக மாறி கூரையைப் பிய்த்துக் கொண்டு கொட்டிக் கொண்டிருக்கும் . எனக்குத் திருப்பூருக்குள் நுழைந்த முதல் ஐந்து வருடங்களில் இது போன்ற ஒவ்வொரு செயல்பாடுகளையும் பார்த்துக் கொண்டே வந்த போது முதலில் பயம் வந்தது . பிறகு படபடப்பை உருவாக்கியது . ஒவ்வொன்றுக்குப் பின்னால் உள்ள அரசியல் புரிய ஆரம்பித்தது . இது போன்று சம்பாரித்துக் கொண்டிருந்தவர்கள் அத்தனை பேர்களிடமும் ஒரு தனித்திறமை இருப்பதைக் கண்டு கொள்ள முடிந்தது . ” எந்த எல்லைக்கும் செல்லலாம் ” என்கிற ரீதியில் அவர்கள் மூளை எந்தச் சூழ்நிலையிலும் சுறுசுறுப்பாக இருந்ததைப் பார்த்த போது வாழ்வியலின் பல பரிணாமங்களை என்னால் உணர்ந்து கொள்ள முடிந்தது . ” தன் நலத்திற்க்காக சமூகக் கட்டுப்பாடுகள் தேவையில்லை ” என்பதை ஒருவர் எனக்குச் சொல்லி புரிய வைத்தார் . ஆனால் அவர் மனைவியை முதலாளியிடம் தொடர்ச்சியாகத் தாரை வார்த்துக் கொண்டிருந்ததைப் பிறகு தான் புரிந்து கொண்டேன் . உற்பத்தித் பிரிவில் இருப்பவர்கள் தாங்கள் செய்யும் கடமைகளை விட முதலாளி உள்ளே பணியாற்றிக் கொண்டிருக்கும் பெண்களில் யார் மேல் ஆசை வைத்துள்ளார் ? என்பதை அறிவதிலும் அவர் விருப்பத்தை நிறைவேற்றுவதில் கண்ணும் கருத்துமாக இருப்பதைப் பார்த்த போது மனித வாழ்க்கையின் ஒழுக்க விதிகள் ஓரக்கக்ண்ணால் பார்த்து என்னைச் சிரித்தது . இவற்றை எல்லாம் தாண்டி மனம் பக்குவடைந்த நிலையில் இப்போது பணியாற்றிக் கொண்டிருந்த நிறுவனத்தில் இருந்தாலும் மனிதர்களின் ஆசைகள் குறித்து மட்டும் இடைவிடாத ஆராய்ச்சி என்னுள் ஓடிக் கொண்டேயிருந்தது . ஆனால் காலத்தின் கோலம் நானே இங்கே ஆராய்ச்சியானமாக மாறிப் போனேன் . என் ஒவ்வொரு ஆராய்ச்சியின் முடிவிலும் பல லட்ச ரூபாய் பெறுமான திருட்டுத்தனங்கள் வெளியே வரத் தொடங்கியது . இதன் காரணமாகப் பல எதிரிகளை ஒரே நாளில் பெறவும் முடிந்தது . ஒரு தொடக்கம் என்றால் முடிவு என்று இருக்கத்தானே வேண்டும் . முதலாளி குறிப்பிட்ட நாள் சொல்லி என்னைப் பார்க்க வரச் சொல்லியிருந்தார் . பெரிய கோப்பு ஒன்றை உருவாக்கியிருந்தேன் . ஒவ்வொரு ஒப்பந்ததிற்கும் உண்டான கணக்கு வழக்குகள் , விடுபட்ட தகவல்கள் , அது எதனால் விடுபட்டது ? எங்கே தவறு நிகழ்ந்தது , அதற்கு யார் பொறுப்பு ? அதன் மூலம் பலன் அடைந்தவர்களின் பட்டியல் , சம்மந்தப்பட்ட நிறுவனங்கள் என்று ஒவ்வொரு இடத்திலும் தனித்தனியாகச் சுட்டிக் காட்டியிருந்தேன் . இதை விட மற்றொரு முக்கியமான சமாச்சாரத்தை அதில் சுட்டிக் காட்டியிருந்தேன் . நேர்மையாகச் செயல்பட்டு நிறுவனத்தின் வளர்ச்சியின் அக்கறை கொண்டு செயல்பட்டவர்களை எப்படி இவர்கள் காசுக்கு ஆசைப்பட்டுப் புறக்கணித்தார்கள் என்பதை அந்தந்த நிறுவனங்களை அழைத்து அவர் தரப்பு வாதங்களையும் சிறு குறிப்பாக எழுதி வைத்திருந்தேன் . கீழே நான் பேசிய நபர்களின் அலைபேசி எண்களைக் குறிப்பிட்டு இருந்தேன் . அன்று நான் முதலாளியிடம் கொடுத்த கோப்பு என்ன விளைவுகளை உருவாக்கும் ? என்பதில் நான் அக்கறை காட்டவில்லை . காரணம் நான் தங்கையின் திருமணத்திற்காக ஊருக்குச் செல்ல வேண்டிய அவசரத்தில் இருந்தேன் . ஏற்கனவே முதலாளியிடம் சொல்லி வைத்திருந்தேன் . நான் பக்கத்தில் இல்லாவிட்டாலும் அந்தக் கோப்பு அனைத்து விபரங்களையும் எவருக்கும் தெள்ளத் தெளிவாக எடுத்துரைக்கும் வகையில் உருவாக்கியிருந்தேன் . அனைத்தையும் கோர்த்து தெளிவாக ஒவ்வொரு ஒப்பந்தத்திலும் செய்யப்பட்ட கோல்மால்கள் , வெளியே சென்று மீண்டும் உள்ளே வராத நூல்கள் எத்தனை கிலோ என்பதையும் , உள்ளே வந்தது போல எழுதப்பட்டு இருந்த கணக்கு வகைகள் , தரமில்லாத துணி என்று நல்ல துணியை விற்றுத் தனியாக அடித்த கமிஷன்கள் போன்றவற்றையும் சுட்டிக்காட்டியிருந்தேன் . என் வேலை முடிந்தது . முதலாளியிடம் ஒப்படைத்து விட்டு விடுப்பு எடுத்துக் கொண்டு ஊருக்கு கிளம்பினேன் . மூன்றாவது நாள் ஊரில் இருந்த போது எனக்கு அலுவகத்தில் இருந்த பெண்ணிடம் இருந்து அழைப்பு வந்தது . அது அவரின் அலுவக எண் இல்லை . பேசிய பின்பே அவர் தனிப்பட்ட எண் என்பதை உணர்ந்து கொண்டேன் . ” முக்கியப் பதவிகளில் இருந்த ஆறு பேர்களின் பதவி பறிக்கப்பட்டுக் குறிப்பிட்ட தொகையைக் கட்டச் சொல்லி எழுதி வாங்கியிருப்பதாக ” முதல் தகவல் அறிக்கையைச் சொன்னதோடு அடுத்து அவர் சொன்ன தகவல் எனக்குச் சப்தநாடியையும் அடங்கி விடச் செய்தது . பேப்ரிக் மானேஜர் அதிகாலை சாலை விபத்தில் (?) பலியானதாகச் சொன்னார் . திருப்பூருக்குள் நுழைந்தவன் ஏற்கனவே பேசி வைத்திருந்தபடி மற்றொரு நிறுவனத்திற்கு அடுத்தக் கட்ட பதவிக்கு உயர்ந்து சென்று விட்டேன் . அந்த நிறுவனத்தில் அப்பாவுக்குத் தெரியாமல் மகனும் மகனுக்குத் தெரியாமல் அப்பாவும் மாறிமாறி அவர்கள் நிறுவனத்திலேயே திருடிக் கொண்டிருந்தார்கள் . ஆனால் இரண்டு பேர்களின் பணமும் இறுதியில் ஒரே பெண்ணிடம் சென்று கொண்டிருந்தது ? [] 11 11. காற்றில் பறக்கும் கௌரவம் [] 11. காற்றில் பறக்கும் கௌரவம் ” இன்றும் அவர் வீட்டுக்கு வந்திருந்தார் . இந்த முறை கட்டாயம் நீங்கள் நாளைக்கு அங்கே வர வேண்டும் என்று சொல்லிச் சென்றுள்ளார் . போயிட்டு தான் வந்துடுங்களேன் “ மனைவி சொன்ன போது அதனைப் புறக்கணித்து விட்டு அப்போது நான் பணிபுரிந்து கொண்டிருந்த அலுவலகத்திற்குச் சென்று விட்டேன் . எனக்கு மற்றொரு நிறுவனத்திலிருந்து அழைப்பு வந்திருந்தது . என் வீட்டுக்கு வந்தவர் அந்த நிறுவனத்தின் ADMINISTRATIVE OFFICER என்று சொல்லப்படும் நிர்வாக அதிகாரி . கடந்த ஒரு மாதத்தில் இரண்டு முறைக்கு மேல் வீட்டுக்கு வந்து விட்டார் . முதலாளியை பார்க்கச் சொல்லி அவர் அழைப்பு விடுத்தும் நான் செல்லவில்லை . ஆனால் அன்று மதிய வேளையில் சம்மந்தப்பட்ட நிறுவனத்தின் முதலாளியே அலைபேசியில் அழைக்க என்னால் தவிர்க்க முடியாமல் போய் விட்டது . ” நீங்க அவசியம் வர வேண்டும் . என் மகனும் இப்பொழுது தான் அமெரிக்காவில் இருந்து வந்துள்ளார் . மொத்த நிர்வாகத்தை அவரிடம் கொடுக்கப் போகிறேன் . அனுபவம் உள்ள உங்களைப் போன்றவர்கள் அவருடன் இருந்தால் எனக்கு உதவியாக இருக்கும் ” என்றார் . அவர்களின் எதிர்பார்ப்பு ஒரு ஏற்றுமதி நிறுவனம் சார்ந்த அனைத்துப் பொறுப்புகளையும் திறம்பட எடுத்து நடத்திச் செல்ல வேண்டும் . அதுவும் நம்பிக்கை சார்ந்த விசயங்களில் முதன்மையாக இருக்க வேண்டும் . யார் மூலமோ என்னைப் பற்றித் தெரிந்து வீட்டு முகவரியை தெரிந்து கொண்டு வந்து விட்டார்கள் . ஒரு நிர்வாகத்தின் ‘ பொது மேலாளர் ‘ என்றால் ஏற்கனவே செயல்பட்டுக் கொண்டிருக்கும் நிர்வாகத்தை மேம்படுத்த வேண்டியதாக இருக்கும் . ஆனால் இங்கு இனிமேல் தான் ஒவ்வொன்றையும் உருவாக்க வேண்டும் . அதாவது காய்ந்து போய் நிற்கும் மரத்தை நம் திறமையால் துளிர்க்கச் செய்ய வேண்டும் . காலம் செய்யும் கோலத்தை நினைத்துப் பார்க்கும் போது எனக்கு வியப்பாக இருந்தது . ‘ என்னை மிஞ்சியவர்கள் இந்த உலகில் யாருமில்லை ‘ என்று கருதிய மாமன்னர்கள் அத்தனை பேர்களின் வாழ்க்கைத் தடங்களின் அடையாளங்களில் எதுவும் மிஞ்சவில்லை . சம்மந்தப்பட்டவர்களின் வாரிசுகள் இன்னமும் இருக்கின்றார்களா ? எப்படி இறந்தார்கள் ? என்பது கூட அறியாத அளவுக்குக் கொடுமையான காலம் அனைத்தையும் கரைத்து விட்டது . பதவியைப் போதையைப் போல ரசித்து ருசித்தவர்களின் அந்திம வாழ்க்கை சொல்லும் கதை அனைத்தும் அந்தோ பரிதாபம் என்று தான் நினைக்கத் தோன்றுகின்றது . இனி மிச்சம் ஏதும் இருக்கக்கூடாது என்று உச்சமாய் அதிகாரத்தைச் சுவைத்து வாழ்ந்த அதிகாரவரக்கத்தினர் பலரின் வயோதிக வாழ்க்கை என்பது அனாதை விடுதியில் தான் கொண்டு போய்ச் சேர்க்கின்றது . சமூகத்தில் உள்ள பல தரப்பட்ட நிலைகளைப் போலத்தான் ஒவ்வொரு இடத்திலும் உள்ள தொழில் நிறுவனங்களின் கதையும் பல அனுபவங்களை நமக்குப் பாடமாகச் சொல்கின்றது . பெயர்ப் பொருத்தம் பார்த்து வைத்த நிறுவனங்கள் , ஜாதகத்தில் நல்ல நேரம் பார்த்துத் தொடங்கப்பட்ட நிறுவனங்கள் , வாஸ்த்து பார்த்துத் தேர்ந்தெடுக்கப்பட்ட இடம் போன்ற சிறப்பம்சம் கொண்ட ஒவ்வொரு நிறுவனமும் எத்தனை தலைமுறைகள் தொடர்கின்றது ? இந்தியா சுதந்திரத்திற்குப் பிறகு இங்கே உருவான தொழில் நிறுவனங்களில் இன்று எத்தனை தாக்குப் பிடித்து நிற்கின்றது ? ஏனிந்த அவலம் ? அரசியல் காரணங்கள் பல இருந்தாலும் முக்கியமான காரணம் ஒன்று உண்டு . நாம் இந்தத் தலைமுறையில் தான் தொழில் குறித்து யோசிக்கவே தொடங்கியுள்ளோம் . இந்தியர்கள் அனைவரும் அடிப்படையில் விவசாயச் சிந்தனைகள் கொண்டவர்கள் . தொழில் சார்ந்த சிந்தனைகளில் தொடக்க நிலையில் தான் உள்ளோம் . மிகக் குறைவான பணப்புழக்கத்தோடு வாழ்ந்த பழகிய மக்களிடம் அளவு கடந்து பணம் புழங்க அதை எப்படிக் கையாள்வது என்பது தெரியாமலேயே கண்டதே காட்சி . கொண்டதே கோலம் என்ற நிலையில் இருக்கின்றார்கள் . பஞ்சம் , பசி , பட்டினியில் உழன்ற பல கோடி மக்கள் கடந்த 25 ஆண்டுகளாகத் தான் வறுமை என்ற விசயத்தையே மறக்கத் தொடங்கியுள்ளனர் . தங்களுக்குண்டான அடிப்படை விசயங்களையே தற்பொழுது தான் நம்மால் பெற முடிந்துள்ளது . ஆனால் மேற்கத்திய நாடுகளோ கடந்த பல தலைமுறைகள் தொழில் சிந்தனைகளில் ஊறி தற்பொழுது நோகாமல் நோம்பி கொண்டாடும் கலையில் கில்லாடியாக மாறியுள்ளனர் . இதன் காரணமாக எந்த நாட்டைத் தங்கள் வளர்ச்சிக்குப் பயன்படுத்திக் கொள்ளலாம் என்று தினந்தோறும் படையெடுத்து வந்து கொண்டிருக்கின்றார்கள் . நாமும் நம் நாட்டைக் குப்பையாக மாற்றிக் கொள்ளச் சம்மதிக்கின்றோம் . ” நீ குனிய வைத்து குத்த வேண்டாம் . நானே குனிந்து கொள்கிறேன் ” என்று இடம் கொடுக்கின்றோம் . வெளியே உள்ள உதாரணங்களை விடத் திருப்பூர் நிறுவனங்களைக் கொஞ்சம் பார்த்து விடலாமா ? தற்பொழுது திருப்பூரில் இரண்டாம் தலைமுறையினரிடம் ஒப்படைக்கப்பட்ட பாதி நிறுவனங்கள் காணாமல் போய்விட்டது . மீதியுள்ள நிறுவனங்களும் இன்றோ நாளையோ என்று தள்ளாடிக் கொண்டுருக்கின்றது . காரணம் இரவு பகல் பாராமல் ஒவ்வொரு நாளும் தங்கள் உழைப்பின் மூலம் வளர்க்கப்பட்ட நிறுவனங்களை உழைப்பது என்றால் எட்டிக்காய் போலப் பாவிக்கும் இளந்தலைமுறையினரிடம் கொடுத்தால் என்னவாகும் ? பிறந்த சில வருடங்களில் விடுதிகளில் கொண்டு போய்த் தள்ளிவிட்டு வந்தவர்களை வளர்ந்து வாலிபனான பின்பு தான் வீட்டுக்கு அழைத்து வருகின்றார்கள் . வெளியுலகமே தெரியாமல் வசதிகளுடன் மட்டுமே வாழ்ந்தவர்களைத் திடீரெனச் சமூகத்தில் கொண்டு வந்து நிறுத்தினால் அவர்களுக்கு என்ன தெரியும் ? தலையும் புரியாது , வாலும் தெரியாது . அர்த்தமற்ற அதிகாரம் தூள் பறக்கும் . நல்லது அனைத்தும் கெட்டதாகத் தெரியும் . கெட்டவை அனைத்தும் நல்லதாகத் தெரியும் . கடைசியில் நாறிப் போன நடிகைகள் காலடியில் கிடக்கத் தான் முடியும் . அது தான் இங்கே நடந்து கொண்டிருக்கின்றது . ஒவ்வொரு மனிதனும் பார்த்துப் பார்த்து செய்த காரியங்கள் அனைத்தும் ஓரளவுக்கு மேல் உதவுவது இல்லை . ‘ நாம் இந்தத் தொழில் ராஜ்ஜியத்தை ஆண்டு விடுவோம் ‘ என்று தொடங்கியவர்கள் கடைசியில் பூஜ்ஜியத்துக்கு வந்து விடுகின்றார்கள் . இப்படித்தான் நான் கடந்து இருபது ஆண்டுகளாகத் திருப்பூருக்குள் வீழ்ந்த ஒவ்வொரு நிறுவனமும் ஒரு கதையைச் சொல்கின்றது . நான் திருப்பூருக்குள் நுழைந்த முதல் இரண்டு வருடங்களில் மிகப் பெரிய அளவில் வளர்ந்த பல ஏற்றுமதி நிறுவனங்களின் கதையைக் கேட்டு அண்ணாந்து பார்த்துள்ளேன் . வெளியுலகத்தைப் பற்றி ஏதும் தெரியாத எனக்கு ஒவ்வொன்றும் மந்திரக் கதையாகவே தெரிந்தது . மிகப் பெரிய அளவில் வளர்ந்த ஒவ்வொரு நிறுவனத்தின் வருடாந்திர வரவு செலவுகள் , அங்குப் பணிபுரியும் ஏராளமான தொழிலாளர்கள் மற்றும் அலுவலர்களின் எண்ணிக்கையைப் பார்த்து மிரண்டு போயிருக்கிறேன் . அதுவரையிலும் வாழ்க்கையைப் புத்தகங்களின் வழியே பார்த்தவனுக்கு எல்லாமே வியப்பாகவே இருந்தது . நேரிடையாக ஒவ்வொன்றையும் பார்க்க நான் படித்த மாயஜாலகதைகள் போலவே தெரிந்தது . இவை அனைத்தும் யாரோ ஒருவரின் உழைப்பும் இடைவிடாத முயற்சியும் அல்லவா ? என்று பெருமைப்பட்டும் இருக்கின்றேன் . ஆனால் கடிகார முள் போலக் கஷ்டப்பட்டு ஏறியவர்கள் ஏறிய வேகத்தை விட மிக வேகமாக இறங்கியும் போய்விட்டார்கள் . இறங்குமுகம் கண்ட நிறுவனங்களின் வீழ்ச்சி எனக்குப் பெரிதான ஆச்சரியத்தைத் தரவில்லை . அந்த வீழ்ச்சியை அந்த முதலாளி எப்படி எதிர் கொண்டார் ? அதன் பிறகு அவரின் நடவடிக்கைகள் , வாழ்க்கை முறை எப்படி மாறி விடுகின்றது ? என்பதனை கவனித்தவன் என்ற முறையில் அதனைப் பற்றி இங்கே பதிவு செய்ய விரும்புகின்றேன் . பணம் சம்பாரிப்பது கடினம் என்பவரா நீங்கள் ? என்னைப் பொருத்தவரையிலும் பணம் யார் வேண்டுமனாலும் சம்பாரிக்கலாம் . அதற்கான வாய்ப்புகள் வந்தே தீரும் . நாம் தான் எந்த நிலையிலும் தயாராக இருக்க வேண்டும் . வாய்ப்புகள் வரும் போது வாய் பிளந்து கொண்டு வேறு பக்கம் பார்த்து நின்று கொண்டிருந்தால் வந்த சுவடு தெரியாமல் அந்த வாய்ப்புகளும் காணாமல் போய்விடும் . காலம் முழுக்க விதியை நம்பி புலம்பிக் கொண்டிருக்க வேண்டியது தான் . ஆனால் கிடைத்த வாய்ப்பின் மூலம் உருவான வெற்றியை அதன் மூலம் கிடைத்த பணத்தைக் கடைசி வரைக்கும் கட்டிக்காப்பது தான் மிகச் சவாலான விசயமாக நினைக்கிறேன் . இங்கே பணம் குறித்த பழமொழிகளைப் பற்றிப் பேசி ஒன்றும் ஆகப் போவதில்லை . பணம் என்பது அனைத்தையும் மாற்றிவிடக்கூடியது என்பதை மட்டும் எப்போதும் உங்கள் நினைவில் வைத்திருக்கவும் . உங்களின் ஆசைக்கு எல்லையிருக்காது . அதனால் உருவாகும் ஆணவத்திற்கும் அளவேயிருக்காது . சில மாதங்களுக்கு முன் திருப்பூரில் உள்ள ஒரு புத்தகக்கடைக்குச் சென்றிருந்த போது நடந்த சம்பவமிது . புத்தகக்கடை நண்பர் அப்போது அங்கு வந்த ஒருவருடன் பேசிக் கொண்டிருந்தார் . பேச்சின் சாரம்சத்தை வைத்து நானே புரிந்து கொண்டேன் . வந்திருந்தவர் இவரிடம் வட்டி வாங்க வந்துள்ளார் . இவர் அடுத்த வாரம் தருகின்றேன் என்று சொல்ல வசூலிக்க வந்தவர் கேவலமாகத் திட்டிக் கொண்டிருந்தார் . அவர் சென்றவுடன் அவரைப் பற்றி நண்பர் சொன்ன விசயங்கள் தான் பணத்தைப் பற்றி அதிகம் யோசிக்க வைத்தது . திருப்பூருக்கு வரும் போது அடிப்படைச் செலவுக்கே வழியில்லாமல் ஏதோவொரு நிறுவனத்தில் எடுபிடியாக வேலையில் சேர்ந்துள்ளார் . அங்கே பணியாற்றிய போது செய்த தவறுகளால் வெளியேற்றப்பட்டுள்ளார் . காலம் கொடுத்த வாய்ப்பில் டாஸ்மாக் கடைக்கு அருகே உள்ள பார் வசதியுள்ள இடத்தை எப்படியோ எவர் மூலமோ பெற்று விட்டார் . இரண்டு வருடங்களில் ஒரு கடை என்பது ஆறு கடையாக மாறிவிட்டது . இன்று குறைந்தபட்சம் ஒரு நாளைக்கு நிகர லாபமாக ஐம்பதாயிரம் ரூபாயை வீட்டுக்கு எடுத்துச் சென்று கொண்டிருக்கின்றார் . கையில் வைத்துள்ள பணத்தைப் பெருக்க முக்கியமான நபர்களுக்கு வட்டிக்கு விட்டுத் தனியாகச் சம்பாரித்துக் கொண்டிருக்கின்றார் . அன்று அந்த நபரின் மாத வருமானத்தை உத்தேசமாகக் கணக்கிட்டுப் பார்த்தேன் . பல இடங்களில் வீடு கட்டி வாடகைக்கு விட்டுள்ளார் . வீட்டு வாடகை வருமானம் மற்றும் இதர அனைத்து வருமானத்தையும் கணக்கிடும் போது மாதத்திற்கு இருபது லட்சம் ரூபாய் வந்தது . வருமான வரி கட்டத் தேவையில்லை . அடிமை வாழ்க்கை இல்லை . அறம் சார்ந்த கொள்கைகள் இல்லை . ஆனால் அவருக்கு வரக்கூடிய மாத வருமானம் என்பது திருப்பூரில் உள்ள சிறிய ஆய்த்த ஆடை நிறுவனம் பெற தற்போதைய சூழ்நிலையில் முழுமையாக மூன்று மாதங்கள் உயிரைக் கொடுத்துப் பாடுபட வேண்டும் . அந்த நபர் முதலீடு எதுவும் இல்லாமல் சம்பாரிப்பவர் . ஆனால் முதலாளிகளோ வங்கிக் கடனை தங்கள் முதலீடாக வைத்து வாழ்ந்து கொண்டிருப்பவர்கள் . இது தவிர எந்த வெளிநாட்டுக்காரன் எப்போது ஆப்பு அடிப்பான் ? என்று கலங்கி தூக்கம் மறந்து கண் கொத்திப் பாம்பாக இருக்க வேண்டும் . பணம் யாரிடம் தான் இல்லை ?. சென்னையில் ஒரு நபர் மாநகராட்சி சார்பாகப் பொதுமக்களுக்காக இலவசமாகக் கட்டி விடப்பட்டுள்ள கழிப்பறையை அங்கங்கே உள்ள வார்டு கவுன்சிலர்களைத் துணை கொண்டு ஆக்கிரமித்து வைத்துக் கொண்டு கட்டண கழிப்பறையாக மாற்றித் தினந்தோறும் பல ஆயிரம் ( கொடுக்க வேண்டிய கமிஷனுக்குப் பிறகும் ) ரூபாயை சம்பாரித்துக் கொண்டிருப்பதாகச் செய்தித்தாளில் படித்த போது சிரிப்பு தான் வந்தது . சாதாரணமானவர்களுக்கு அது கழிப்பறை . ஆனால் அதுவே ஒரு தனிநபருக்கும் பணம் தரும் கற்பகத்தரு . ஆனால் இங்குள்ள ஏற்றுமதி நிறுவன முதலாளிகள் கௌரவத்திற்காகக் கடனில் வாழ்ந்து தாங்கள் வாழும் வாழ்க்கையையும் கடனே என்று தான் வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள் . இங்கு மற்றொரு விசயத்தைப் பற்றி நாம் பேசியாக வேண்டும் . ஒருவரின் தவறுகள் அடுத்தவருக்குப் பாடத்தைக் கற்றுக் கொடுக்கும் அல்லவா ? அவர் செய்த தவறுகளை நாமும் செய்து விடக்கூடாது என்று தானே படிப்பினையாகத் தானே எடுத்துக் கொள்ள வேண்டும் என்று தானே நினைப்பார் ?. ஆனால் நிஜ வாழ்வில் அப்படி நடப்பதில்லையே ? ஏன் ? அங்குத் தான் விதிக்கும் மதிக்கும் உண்டான போராட்டமே தொடங்குகின்றது . ஆசை பெரிதா ? அடக்கம் பெரிதா ? என்றால் ஆசை தான் முன்னுக்கு வந்து முகம் காட்டி நிற்கின்றது . பத்து லட்சம் ரூபாய் மூதலீடு போட்டு ஒருவர் சிறிய ஆயத்த ஆடைத் தொழிற்சாலையைத் தொடங்குகின்றார் . அவரின் உழைப்பு ஒரு வருடத்திற்குள் உயர்த்தி விடுகின்றது . அவரிடம் இருக்கும் நேர்மை அடுத்தடுத்த வாய்ப்புகள் தேடி வருகின்றது . பல தொடர்புகள் உருவாகின்றது . ஒரு நாளின் மொத்த நேரத்தையும் தொழிற்சாலைக்காக அர்ப்பணித்து வளர்த்தவரின் எண்ணங்கள் மாறத் தொடங்குகின்றது . அது வரையிலும் அவர் கொண்டிருந்த வாழ்க்கை குறித்த பார்வைக்கும் பணம் வந்தவுடன் தனது குடும்பம் , விருப்பங்கள் சார்ந்த பார்வையும் மொத்தமாக மாறத் தொடங்க எல்லாமே தலை கீழாகப் போகத் தொடங்குகின்றது . பணிபுரியும் பெண்கள் அனைவரும் தன்னுடன் படுக்கையைப் பகிர்ந்து கொள்ளக் கடமை பட்டுள்ளவர்கள் என்று ஒரு முதலாளி நினைத்தால் அவரின் தொழில் சிந்தனைகள் எப்படியிருக்கும் ? இரவு என்பது மதுக் கொண்டாட்டத்திற்கு மட்டுமே என்று கருதிய முதலாளியால் மறு நாள் காலை எப்படி ஆரோக்கியத்தோடு பணிபுரிய முடியும் ? பலரைச் சார்ந்து தான் இந்தத் தொழிலில் இருக்கின்றோம் ? எவரையும் நீண்ட காலம் ஏமாற்ற முடியாது . அப்படி ஏமாற்றினால் நாமும் வீழ்ந்து விடுவோம் ? என்று யோசிக்கத் தெரியாதவனை முதலாளி என்பீர்களா ? முழு முட்டாள் என்று அழைப்பீர்களா ? இந்த மூன்று வட்டத்திற்குள் தான் இங்குள்ள நிர்வாக அமைப்புச் செயல்படுகின்றது . இதையும் தாண்டி அறம் சார்ந்து செயல்படுபவர்கள் குறைவான எண்ணிக்கையில் இருந்தாலும் வருடந்தோறும் நிறைவாகவே தங்கள் தொழிலை செய்து கொண்டிருகின்றார்கள் . நானும் நிறைவாகவே வாழ்ந்து கொண்டிருந்தேன் . ஆனால் நேரம் ஒன்று இருக்கின்றதே ? அது தான் இந்த நிறுவனத்தின் பக்கம் என்னை நகர்த்தியது . இந்த நிறுவனத்தை நான் திருப்பூருக்குள் நுழைவதற்கு முன்பே அறிந்தவன் என்றால் நீங்கள் எப்படி யோசிப்பீர்கள் ? கல்லூரியில் நான் படிக்கும் போது திருப்பூர் என்ற ஊர் குறித்து எதுவும் தெரியாது . 1989 ஆம் ஆண்டு என்று நினைக்கின்றேன் . அப்போது தமிழிலில் வந்து கொண்டிருந்த ‘ இந்தியா டுடே ‘ பத்திரிக்கையில் திருப்பூர் குறித்து ஒரு சிறப்புக்கட்டுரை வெளிவந்திருந்தது . அதில் திருப்பூரில் வாழ்ந்து கொண்டிருந்த தொழில் அதிபர்கள் குறித்து அவர்களின் வெற்றிப் புராணத்தை விலாவாரியாக விவரித்து இருந்தார்கள் . அதில் குறிப்பிடப்பட்டிருந்த முதலாளிகளின் பெயர்கள் , அவர்களின் நிறுவனம் குறித்த வளர்ச்சியை என்னால் தெரிந்து கொள்ள முடிந்தது . இப்போது எனக்கு அழைப்பு விடுத்தவர் அதில் வந்திருந்த முதலாளிகளில் ஒருவர் . கட்டுரைப் படத்தில் பார்த்த அவர் முகம் கூட மறந்து விட்டது . அவர் யார் என்றே எனக்குத் தெரியாது . அவரின் பெயரும் நிறுவனப் பெயரும் மட்டும் 25 ஆண்டுகள் கழித்து அவரை நேரிடையாகச் சந்தித்த போது நினைவுக்கு வந்தது . அவருடன் பேசிக் கொண்டிருந்த போது அன்று நான் படித்த அந்தக் கட்டுரை வரிகள் தான் என் மனதில் நிழலாடிக் கொண்டிருந்தது . ஆனால் கட்டுரை வெளி வந்த சமயத்தில் இநத முதலாளி உச்சாணிக் கொம்பின் உயரத்தில் இருந்தார் . இன்று அதளபாதாளத்தில் இருந்தார் . அதுவும் எனக்கு மற்றவர்கள் சொல்லித்தான் இந்த நிறுவனத்தின் வீழ்ச்சியை முழுமையாகப் புரிந்து கொள்ள முடிந்தது . பல தனி மனிதர்களின் தொழில் சார்ந்த வீழ்ச்சி தான் ஒரு தொழில் நகரத்தின் முகத்தை மாற்றுகின்றது . இப்படித்தான் தொழில் நகரம் குறித்த பார்வையும் பலருக்கும் பலவிதமாகப் போய்ச் சேருகின்றது . திருப்பூர் குறித்துப் பல பார்வைகள் உள்ளது . ஒவ்வொருவரும் ஒவ்வொருவிதமாக இந்த ஊரைப் பார்க்கின்றனர் . என்ன காரணம் ? ஏன் இப்படி ? என்பதனை முதலில் பார்த்து விடுவோம் . இதைத் தெரிந்தால் மட்டுமே இங்குள்ள வெற்றிக்கும் தோல்விக்கும் உண்டான காரணக் காரியங்களை நம்மால் புரிந்து கொள்ள முடியும் . திருப்பூர் என்றால் இங்கு வாழ்கின்ற அத்தனை பேர்களும் ஆயத்த ஆடைத் தொழிலோடு சம்மந்தப்பட்டவர்கள் என்று எண்ணம் இருந்தால் அதை உங்கள் எண்ணத்தில் இருந்து துடைத்து விடவும் . ஆயத்த ஆடைத்துறைக்குச் சம்மந்தம் இல்லாத பலரும் இங்கே பலதரப்பட்ட தொழிலில் ஈடுபட்டுள்ளார்கள் . அவர்களைப் பொறுத்தவரையிலும் இங்குள்ள ஒவ்வொரு நிறுவனமும் பனியன் கம்பெனி . அவ்வளவு மட்டுமே . மற்றபடி இதன் நிர்வாக முறைகள் . ஏற்றத்தாழ்வுகள் போன்ற எதுவும் தெரியாது . இதே போலத்தான் திருப்பூருக்கு வெளியே வாழ்ந்து கொண்டிருப்பவர்களும் திருப்பூர் ஏற்றுமதித் தொழிலை அவரவர் பார்வைக்குத் தகுந்தாற் போல உருவகப்படுத்திக் கொள்கின்றனர் . கடந்த இருபது வருடத்தில் இங்குள்ள மண்ணின் மைந்தர்கள் பலருடனும் பேசியுளேன் . இங்கேயே குறைந்த பட்சம் இரண்டு தலைமுறைகள் வாழ்ந்தவராக இருப்பார்கள் . நம்மை விடத் திருப்பூரின் படிப்படியான வளர்ச்சியை மிக அருகில் இருந்து பார்த்தவர்களாக இருப்பார்கள் . ஆனால் அவர்களால் கூட இந்தத் தொழிலை முழுமையாக உள்வாங்க முடியவில்லை . அதே போல ஒருவரின் தொழில் ரீதியான வீழ்ச்சியையும் சரியான முறையில் புரிந்து கொள்ள முடியாமல் தவிக்கின்றார்கள் . வீழ்ச்சி என்பதனை எப்படிச் சொல்வீர்கள் ? பண இழப்பா ? தொழில் சரிவா ? குடும்பம் சீர்குலைதலா ? இந்த மூன்றுக்கும் அடிப்படைக் கட்டுமானம் ஒன்றே ஒன்று தான் . உங்களுக்குண்டான நேர்மை குறித்து உங்களுக்கே அக்கறையில்லை என்றால் அது என்றாவது ஒரு நாள் மானங்கெட்ட மனிதர்களின் பட்டியலில் கொண்டு போய்ச் சேர்த்து விடும் என்பதை நினைவில் வைத்திருக்கவும் . இவற்றையெல்லாம் யோசித்துக் கொண்டு தான் அந்த நிறுவனத்தின் முதலாளியை சந்திக்கச் சென்றேன் . பெரிய குளிர்சாதன அறையில் அவருடன் மகன் மற்றும் அவரின் இரண்டு ஆலோசகர்களும் இருந்தார்கள் . அங்கிருந்த ஆலோசகர்கள் இருவரும் என்னைப் பரிசோதிக்க வந்தவர்கள் . நான் இந்த நிறுவனத்திற்குச் செல்லப் போகின்றேன் என்று சொன்னதுமே நெருங்கிய நண்பர்கள் என்னை எச்சரித்தார்கள் . ‘ ஐந்து மாதங்கள் கூட உன்னால் அங்கே தாக்குப் பிடிக்க முடியாது ‘ என்றார்கள் . இதைப் போல ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாகச் சொல்லி என்னைப் பயமுறுத்தினார்கள் . ‘ காரணத்தைச் சொல்லுங்களேன் ‘ என்றால் வேண்டாம் . ‘ வேறெங்கும் உருப்படியான நிறுவனத்தில் போய்ச் சேர்ந்து விடு ‘ என்றார்கள் . ” கோடு போட்ட இடத்தில் நிரப்புக ” என்று பள்ளிக்கூடப் பரிட்சையில் எழுதுவோமே ? அப்படித்தான் ஒவ்வொருவரும் சொன்னார்கள் . என் மனதிற்குள் இனம் புரியாத ஆவல் உருவானது . பேய் , பூச்சாண்டி போலப் பயம் காட்டுகின்றார்களே ? அப்படியென்ன இந்த மனிதர் மோசமானவரா ? என்பதைத் தெரிந்து கொள்ளும் ஆவல் உருவாகி சந்திக்கச் சென்றேன் . இனிய சந்திப்பு . இனிப்பான வார்த்தைகள் . மகிழ்ச்சியான பிரியாவிடை . நான் குறிப்பிட்டுச் சொன்ன தேதி வரைக்கும் முதலாளியால் காத்திருக்க முடியாமல் இடையில் இரண்டு முறை அழைத்து ” சற்று முன்னதாக வந்து விடுங்களேன் ” என்ற சிரித்துக் கொண்டே அழைத்தார் . விதி வலியது அல்லவா ? என் பயணத்தைத் தொடங்கினேன் . அவர் சொன்ன தேதியில் அவர் விருப்பப்படியே போய்ச் சேர்ந்தேன் . அலுவலகம் முதல் மாடியில் இருந்தது . அப்பாவும் , மகனும் அழைத்துப் போய் என் இருக்கையைக் காட்டி அமர வைத்து என் முன்னே அமர்ந்து சற்று நேரம் பேசி விட்டு அவரவர் அறைக்குச் சென்று விட்டனர் . கீழ் தளத்தில் இருந்த அலுவலக நிர்வாக அதிகாரி இன்டர்காம் வழியாக அழைத்து ” உங்களைப் பார்க்க ஒருவர் சாயப்பட்டறையில் இருந்து வந்துள்ளார் ?” என்றார் . எனக்கு வியப்பாக இருந்தது . வந்தமர்ந்த பத்து நிமிடத்தில் என்னைப் பார்க்க ஒருவரா ? நாம் இங்கே வந்து சேர்வது குறித்து முக்கியமான நபர்களைத் தவிர வேறு எவருக்குமே தெரியாதே ? என்று யோசித்துக் கொண்டே அவரை மேலே வரவழைத்தேன் . மேல் தளத்தில் அலுவலகம் என்ற பெயரில் இருந்ததே தவிர ஒரு காக்கை குருவி கூட இல்லை . 30 பேர்கள் பணிபுரியும் வசதிகள் இருந்த அந்த அலுவலகத்தில் நான் மட்டும் அப்போது தொடக்கப் புள்ளியாக இருந்தேன் . இது குறித்து ஏற்கனவே முதலாளியுடன் பேசிய போது ” நீங்களே உங்கள் விருப்பத்தின்படி ஒவ்வொரு துறைக்கும் ஆள் எடுத்துக் கொள்ளுங்களேன் ” என்று சொல்லியிருந்தார் . ஏற்கனவே பணிபுரிந்தவர்கள் என்ன ஆனார்கள் ? என்ற கேள்வியை மனதிற்குள் வைத்துக் கொண்டே செய்ய வேண்டிய காரியங்களை ஒரு தாளில் பட்டியலிட்டுக் கொண்டிருந்த போது என் இருக்கைக்கு வந்தவர் என் அனுமதி இல்லாமலேயே என் முன் இருக்கையில் அமர்ந்தார் . அவரை நிமிர்ந்து பார்ப்பதற்கு முன்னால் அவரிடம் இருந்து மிரட்டலாய் ஒரு கேள்வி வந்தது . ” எங்கள் அறுபது லட்ச ரூபாயை எப்போது தரப்போகின்றீர்கள் ?” என்றார் . 12 12. கொள்ளையடிப்பது தனிக்கலை [] 12. கொள்ளையடிப்பது தனிக்கலை நமக்கு முன்பின் அறிமுகமே இல்லாதவர் திடீரென நமக்கு முன்னால் உட்கார்ந்து கொண்டு மிரட்டும் தொனியில் ” எனக்குக் கொடுக்க வேண்டிய அறுபது லட்சத்தை எடுத்து வை ?” என்று கேட்டால் என்ன சொல்வீர்கள் ? முதலில் குழப்பம் உருவாகும் . பிறகு பயம் வரும் . ஆனால் எனக்குச் சிரிப்பு தான் வந்தது . காரணம் இது போன்ற பல பிரச்சனைகள் இங்கே உருவாகும் என்று உள்மனம் சொல்லிக் கொண்டேயிருந்தது . நெருங்கிய நண்பர்கள் ஒவ்வொருவரும் பலவித எச்சரிக்கை செய்திருந்தார்கள் என்று ஏற்கனவே சொல்லியிருந்தேன் அல்லவா ? அவர்கள் இந்த நிறுவனம் சார்ந்த நிதி நெருக்கடியைப் பற்றி மேலோட்டமாகச் சொல்லியிருந்தார்கள் . அவர்கள் சொல்லாத பலவற்றை நானே யூகித்துக் கொண்டேன் . எல்லாவற்றுக்கும் தயாராய் இருந்தேன் . இது நானே உருவாக்கிக் கொண்ட பாதை . ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு மாறுவது என்பது எல்லோருக்கும் எளிதல்ல . அதற்கு மனதை தயார் படுத்தியிருக்க வேண்டும் . சவால்களோ ? சங்கடங்களோ எதிர் கொள்ளத் தெரிய வேண்டும் ? நாம் அவசரப்பட்டு விட்டோமோ ? என்று அங்கலாய்ப்பட்டுக் கொள்ளாமல் புதிய சூழ்நிலையை ஏற்றுக் கொள்ளும் மனம் வேண்டும் . இங்கு எல்லோருக்கும் சுய பாதுகாப்பு என்பது மற்ற அனைத்தையும் விட முக்கியமாக உள்ளது . எத்தனை தத்துவங்கள் சொன்னாலும் அவரவர் பொருளாதாரம் சார்ந்த விசயங்களில் நிறைவு இல்லை என்றால் மனதளவில் சோர்ந்து விடுகின்றார்கள் . தேவையான கவலைகள் , தேவையற்ற கவலைகள் என்று இனம் பிரிக்கத் தெரியாமல் மொத்தமாகக் கவலைகளைக் குத்தகை எடுத்துக் கொண்டு வாழ்க்கையை நரகமாக்கிக் கொண்டு விடுகின்றார்கள் . வேறு எதிலும் அவர்களால் கவனம் செலுத்த முடிவதில்லை . நடுத்தரவர்க்கத்தின் மிகப் பெரிய பலவீனமே பற்றாக்குறை பட்ஜெட் தான் . இதன் காரணமாகத்தான் இங்கே உரிமைக்கான எந்தப் பெரிய போராட்டமும் நிகழ்வதில்லை . நமக்கேன் வம்பு ? என்று ஒதுங்கிப் போய்விடுகின்றார்கள் . ஒரு நாள் பொழுது என்பதைத் தங்கள் பொருளாதாரம் சார்ந்து சிந்திப்பதால் வேறு எதிலும் அவர்களால் கவனம் செலுத்த முடிவதில்லை . இதையும் மீறி சிந்தனை ரீதியாக மாற்றம் பெற்றவர்களால் மட்டுமே தனது இலக்கை நோக்கி முன்னேற முடிகின்றது . சாதிக்க விரும்புவர்கள் சங்கடங்களைத் தாண்டித் தானே மேலேறி வர முடியும் . அது பண ரீதியோ அல்லது பதவி ரீதியோ எதுவாக இருந்தாலும் சவால்களைச் சந்திக்கத் தயாராக இல்லாதவர்களில் வாழ்வில் எந்த மாறுதலும் நிகழ்ந்து விடுவதில்லை . நான் சந்தித்த ஒவ்வொரு அனுபவங்களும் ஒவ்வொன்றை எனக்குக் கற்றுத் தந்தது . ஒவ்வொரு காலகட்டதிலும் நான் பணிபுரிந்த ஒவ்வொரு நிறுவனத்திலும் நான் சந்தித்த பலரும் பலவித ஆச்சரியங்களைத் தந்துள்ளனர் . அதீதமான புத்திசாலிகள் , கடுமையான உழைப்பாளிகள் , அடங்கியே பழகிப் போனவர்கள் , சுய சிந்தனை என்பதை என்னவென்றே தெரியாமல் வாழப் பழகியவர்கள் , நம்மை வேலையில் இருந்து தூக்கி விடுவார்களோ ? என்று ஒவ்வொரு நாளும் மறுகிக் கொண்டு வாழ்பவர்கள் என்று பல வகையினராக இருந்துள்ளனரே தவிரத் தன்னை எவரும் மீள் ஆய்வு செய்து கொள்வதில்லை . தன் நிறை குறை குறித்தோ ? தான் செல்லும் பாதை குறித்தோ எவரும் கவலைப்பட்டுக் கொள்வதும் இல்லை . இன்றைய தின கவலைகள் மட்டுமே அவரவர் மனதில் இருந்துள்ளதை கவனித்துள்ளேன் . இந்தத் தொழிலில் நாம் எந்த இடத்திற்குச் செல்ல வேண்டும் என்பதைப் பற்றிக் கவலைப்பட்டுக் கொள்வதில்லை . ஆனால் அத்தனை பேர்களும் ஒரு விசயத்தில் கவனமாக இருந்துள்ளனர் . இன்றைய தினத்தில் எந்த வகையில் தனது வருமானம் சார்ந்த விசயங்களில் கவனம் செலுத்த வேண்டும் என்பதில் மட்டும் குறியாக இருந்துள்ளனர் . இப்படி எண்ணம் கொண்டவர் முதலாளியாக இருக்கும் பட்சத்தில் தனது நிறுவனத்தை வளர்ச்சிப் பாதையில் கொண்டு செலுத்த முடிவதில்லை . மாறும் சூழ்நிலைகளை , உருவான மாற்றங்களை உள்வாங்க முடியாமல் தேக்க நிலையில் நின்று தோற்றுப் போய்விடுகின்றார்கள் . சிந்தனை ரீதியாக மாற்றம் பெறாத பணியாளர்கள் சொன்னதைத் திரும்பச் சொல்லும் கிளிப்பிள்ளைப் போல மாறி விடுகின்றார்கள் . பகுத்தறிவு பின்னுக்குப் போய்விடுகின்றது . அவர்களின் சிந்தனைகளும் எந்திரம் போல மாறிவிடுகின்றது . ஒவ்வொரு காலகட்டத்திலும் நானே உருவாக்கிக் கொண்ட சவால்களும் , என்னைத் தேடி வந்த சவால்களையும் இயல்பாக ஏற்றுக் கொள்ளக்கூடிய பக்குவம் வந்த காரணத்தினால் வாழ்வின் எதார்த்த நிலை புரிபடத் தொடங்கியது . இழப்புகள் ஏராளமாக இருந்தாலும் , கற்றுக் கொண்ட பாடங்களைக் கவனமாக உள்வாங்கிக் கொண்டதால் அது இறுதியில் ஏற்றம் தருவதாகவே இருந்தது . மேலை நாடுகளில் மாற்றத்தை வரவேற்பார்கள் . நம்மவரோ மாற்றத்தைக் கண்டு நடுங்குவார்கள் . மரபு வழி சிந்தனையில் ஊறிப்போன சிந்தனையில் எதைக் கண்டாலும் பயமாகத்தான் தெரியும் ? மாற்றம் என்பதை எல்லோராலும் இயல்பாக ஏற்றுக் கொள்ள முடியாது என்பது பொது விதி . பணி மாற்றம் என்பது மட்டுமல்ல , வீடோ , ஊரோ , நிறுவனமோ , நாடோ எதுவாக இருந்தாலும் மாறுதல் என்கிற ரீதியில் நாம் மனதளவில் நம்மைத் தயார்படுத்திக் கொள்ளச் சில காலம் பிடிக்கும் தான் . ஆனால் திருப்பூருக்குள் பணிபுரியும் தொழிலாளர்களோ அல்லது பணியாளர்களோ எல்லோருக்குமே இது எளிதான காரியம் தான் . ஏறக்குறைய மென்பொருள் துறை போலச் சர்வசாதாரணமாக மூன்று மாதத்திற்கு ஒரு முறை இந்த மாற்றங்கள் ஒவ்வொரு நிறுவனத்திலும் நடந்து கொண்டே தான் இருக்கும் . ஏன் மாறுகின்றார்கள் ? இங்கே என்ன பிரச்சனை ? என்று எந்த முதலாளியும் கவலைப்படுவதும் இல்லை . இதைப் போலப் பணிபுரிபவர்களும் நாம் மாறுகின்றோமே ? போகின்ற இடம் சரியாக இருக்குமா ? என்று கவலைப்படுவதும் இல்லை . ஓடிக் கொண்டிருக்கும் நீரில் மிதக்கும் இலைகள் போலத்தான் இந்த வாழ்க்கை ஒவ்வொன்றையும் நமக்குச் சொல்கின்றது . ‘ உன்னால் எனக்கு லாபம் இல்லை !’ என்று முதலாளி குற்றம் சாட்டுவதைப் போல ‘ உன்னை நம்பி இனி நான் இங்கே இருந்தால் தெருவில் போய்த் தான் நிற்பேன் ?’ என்று பணிபுரிபவர்களும் கிளம்பி விடுகின்றார்கள் . காரணம் இங்கே வாய்ப்புகள் பரஸ்பரம் கொட்டிக் கிடக்கின்றது . தேர்ந்தெடுக்கத் தயாராக இருப்பவர்களும் , தேர்ந்தெடுத்ததைத் தனக்குச் சாதகமாகப் பயன்படுத்த தெரிந்தவர்களுக்கான உலகமிது . நானும் இந்த நிறுவனத்தில் உள்ளே நுழையும் நாளில் இதே போலத்தான் யோசித்துக் கொண்டு சென்றேன் . எந்த நிறுவனத்தில் சேர்ந்தாலும் என்னைப் பொறுத்தவரையிலும் காலைப் பொழுது என்பது எனக்கு மிக முக்கியமான ஒன்று . அதுவும் நாம் இந்தப் பதவியில் இருக்கின்றோம் . இத்தனை மணிக்குச் சென்றால் போதும் என்று நினைப்பதில்லை . மற்றவர்களை விட நாம் முன்னால் சென்று விடுவது என்ற என் கொள்கைக்குக் காரணமுண்டு . ஒவ்வொரு அலுவலகத்தின் காலை அலுவலக நேரம் என்பது வெவ்வேறு விதமாக இருந்தாலும் என்னைப் பொறுத்தவரையிலும் தினந்தோறும் காலை எட்டு மணிக்கே அலுவலகத்திற்கே வந்து விடுவது வாடிக்கை . இங்கும் அதன்படியே காலையில் உள்ளே நுழைந்த போது உள்ளே இருந்த எடுபிடிகள் அத்தனை பேர்களும் என்னை வித்தியாசமாகப் பார்த்தனர் . ஒருவர் அவசரப்பட்டு டக்கென்று கேட்டே விட்டார் . ” என்ன சார் இத்தனை சீக்கிரமா வந்துருக்கீங்க ?” என்றார் . ” ஏனப்பா ?” என்ற போது ” சார் இங்கே எல்லோரும் வந்து சேரும் போது ஒன்பதரை ஆகி விடுமே . வந்தவுடன் டீ குடித்து விட்டு அவர்கள் சீட்டில் உட்கார்ந்து வேலையைத் தொடங்க பத்து மணி ஆயிடும் சார் ” என்றார் . சிரித்துக் கொண்டே பதில் ஏதும் சொல்லாமல் மாடிப்படிகளில் மேலேறி வந்து விட்டேன் . நிறுவனத்தின் வீழ்ச்சிக்கான முதல் காரணம் தெரிந்தது . ஒருவருக்குக் காலைப் பொழுது என்பது மிக முக்கியமானது . ஒரு நாள் முழுக்க உழைத்து உடலும் மனமும் சோர்ந்து போய்கிடக்க , இரவு தூங்கி எழுந்து அடுத்த நாள் காலை நாம் உருவாக்கிக் கொண்ட புத்துணர்ச்சியை நாம் பணிபுரியும் அலுவலகத்தில் காட்ட முடியும் . கிராமத்து வாழ்க்கை வாழ்ந்த எனக்கு அதிகாலை எழுவது என்பது இயல்பானதாக இருந்ததால் திருப்பூர் தொழில் வாழ்க்கையில் அதையே இன்று வரைக்கும் கடைபிடித்து வருகின்றேன் . இது பலவிதங்களில் என் வளர்ச்சிக்கு உதவிகரமாக உள்ளது . இதனால் நமக்குத் தனிப்பட்ட அனுகூலம் உண்டு . நமக்குப் பின்னால் வருகின்றவர்களை , தாமதமாக வருகின்றவர்களைக் கவனிக்க முடியும் . பணிபுரிபவர்களின் மனோபாவங்களை அமைதியாக உள்வாங்க முடியும் . அத்துடன் காலை வேலையில் எந்தத் தொந்தரவுமின்றி முடிவெடுக்க வேண்டிய முக்கிய விசயங்களை ஆழ்ந்த உள்வாங்க முடியும் . உள்ளே நுழையும் போதே கீழ்த்தளத்தில் இருந்த சிலர் என்னைப் பார்த்து வாங்க என்று அழைக்காமல் இந்த முறை நீங்களா ? என்று சொல்லித்தான் என்னை வரவேற்றார்கள் . அந்த நொடி முதல் உள்ளே இருந்த சொற்ப பேர்களின் செயல்பாடுகளை , அவர்களின் பேச்சுகளைக் கவனித்துக் கொண்டு தான் இருந்தேன் . முறைப்படுத்தப்படுத்த நிர்வாக அமைப்பில் முதல் முறையாக உள்ளே நுழையும் போது , நமக்கான இருக்கையில் அமர்ந்து நாம் பொறுப்பை ஏற்றுக் கொள்ள முடியும் . போட்டிகள் இருந்தாலும் அடிப்படை நாகரிகம் இருக்கும் . கொஞ்சம் மரியாதையைக் கூட எதிர்பார்க்கலாம் . பொறுப்புகள் முறைப்படி ஒப்படைக்கபட்டு அதனை விளக்க சம்மந்தப்பட்ட நபர் குறிப்பிட்ட நேரம் வரைக்கும் நம்மோடு இருப்பார் . அறிமுகப் படலம் நடக்கும் . சிலசமயம் கூட்டம் கூட்டப்பட்டு அறிமுகப்படுத்தி வைக்கப்படுவார்கள் . இது போன்ற சம்பிரதாயங்கள் இங்கே நூற்றில் பத்து நிறுவனங்களில் நடந்தால் அதுவே ஆச்சரியம் தான் . காரணம் எந்தத் துறையாக இருந்தாலும் அந்த நிறுவனத்தின் மொத்த செயல்பாட்டின் ஒவ்வொரு அசைவிலும் முதலாளியின் ஒழுக்கம் சார்ந்த செயல்பாடுகள் தான் முன்னிலை வகிக்கும் . அவரின் வெளிப்படைத்தன்மை தான் அந்த நிர்வாகத்தை வழி நடத்தும் . உள்ளே எந்தப் பணியில் இருந்தாலும் ஒவ்வொருவரின் தனிப்பட்ட அசைவிலும் முதலாளியால் உருவாக்கப்பட்ட நிர்வாக ஒழுங்கின் வெளிப்பாடு ஒவ்வொருவரிடத்திலும் வெளிப்பட்டே தீரும் . அது பயத்தின் அடிப்படையில் இருக்கலாம் . அல்லது நடிப்பின் அடிப்படையில் இருக்கலாம் . மொத்ததில் ” அரசன் எவ்வழியே மக்களும் அவ்வழியே ” என்பது போலத்தான் இருக்கும் . திருப்பூர் போன்ற முறையற்ற நிர்வாக அமைப்பில் இது போன்ற விசயங்களை எதிர்பார்ப்பது கானல் நீரே . திருப்பூருக்குள் உள்ள ஏற்றுமதி நிறுவனங்களில் உள்ள நிர்வாகம் முறைப்படுத்தப்பட்டதல்ல . ஒவ்வொரு காலக் கட்டத்திலும் நிர்வாகம் வளர வளர அவவ்போது முதலாளியின் விருப்பத்தின் அடிப்படையில் ஒவ்வொன்றாக மாறிக் கொண்டே வரும் . பத்து வருடம் விசுவாசமாகப் பணிபுரிந்தவனும் அடிமையே . அதே சமயத்தில் ஒரு மாதம் மட்டும் பணிபுரிந்து விட்டு நிர்வாகத்திற்குப் பெரிய ஆப்பை சொருகி விட்டு செல்பவனும் அடிமையே . இங்குள்ள எந்த முதலாளியும் அதைக் குறித்துக் கவலைப்பட்டுக் கொள்வதும் இல்லை . பரஸ்பரம் அவநம்பிக்கைதான் இங்கே ஒவ்வொன்றையும் தொடங்கி வைக்கின்றது . முழுமையற்ற சூழ்நிலையும் தெளிவற்ற நோக்கமும் தான் ஒவ்வொரு இடத்திலும் நிலவுகின்றது . மொத்ததில் பணம் வர என்ன வழி ? என்று பார்ப்பவருக்கும் அந்தப் பணத்தை நம் பக்கம் திருப்ப வேறென்ன வழியைக் கடைபிடிக்க வேண்டும் ? என்பவருக்குண்டான யுத்தமாகவே இருக்கும் . எந்தப் பதவி என்றாலும் நாம் தான் இருக்கும் பாதங்களையும் கண்டு கொள்ளாமல் கிடைத்த வாய்ப்புகளைப் பயன்படுத்திக் கொள்ள முயற்சிக்க வேண்டும் . இது தான் நான் கற்று வைத்துள்ள பாலபாடம் . இதற்கு மேலாக ஒவ்வொரு நிறுவனத்தில் பணிபுரிந்து கொண்டிருக்கின்ற பழைய நபர்களுக்கு வருகின்ற புது நபர்கள் எதிரியாகத் தான் தெரிவார்கள் . வருகின்றவர் எந்தப் பதவிக்கு வந்தாலும் பழைய நபர்களுக்கு அது குறித்துக் கவலையில்லை . வந்தவன் நல்லவனா ? கெட்டவனா ? நாணயமானவனா ? போன்ற ஆராய்ச்சிகளை விட இவனால் நமக்கு ஏதும் தொந்தரவு வந்து விடக்கூடுமோ ? நம் பதவி பறிபோய்விடுமோ ? போன்ற அச்சங்கள் எழுவது இயல்பு தானே ? இதையும் சமாளிக்கத் தெரிய வேண்டும் . பழைய நபர்களுடன் ஒன்றிணைந்து செயல்பட்டே ஆக வேண்டும் . இதற்கெல்லாம் மேலாக அவர்களது நம்பிக்கையைப் பெற்றாக வேண்டும் . நிர்வாக அமைப்பு எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம் ? முதலாளியின் தனிப்பட்ட குணாதிசியங்கள் கூட விமர்சனத்திற்குரியதாக இருக்கலாம் . ஆனால் முதன்மைப் பதவிகளில் இருப்பவர்களின் தனித்திறமையே எப்படிப்பட்ட நிர்வாகமாக இருந்தாலும் மொத்த நிர்வாகத்தையும் மகுடிக்குக் கட்டுப்பட்ட பாம்பு போல மாற்றும் கலையில் தேர்ச்சி பெற்றவராக இருக்க வேண்டும் . முதலாளி என்பவரின் கொள்கை மாறிக் கொண்டே தான் இருக்கும் . கோடிட்ட இடம் போலத் தாவி போய்க் கொண்டேயிருப்பார்கள் . ஆனால் அதனை நிரப்பி நாம் அத்தனை இடங்களிலும் நீக்கமற நிறைந்திருக்க வேண்டும் . எனக்கு இது புதிய இடம் . புதுச் சூழ்நிலை . இந்த நிறுவனத்தில் உள்ளே நுழைந்த பத்து நிமிடத்திற்குள் தொடக்கமே கேள்விக்குறியில் தொடங்கியது . நான் நிதானத்தை இழக்காமல் நான் செய்து கொண்டிருந்த வேலையை நிறுத்தி விட்டு புன்னகையுடன் என் முன்னால் அமர்ந்திருந்தவருடன் உரையாடத் துவங்கினேன் . மென்மையான குரலில் அனுசரனுடன் பேசினேன் . ” எந்தப் பிரச்சனை என்றாலும் நான் தீர்த்து வைக்கின்றேன் . என்னை நீங்கள் நம்பலாம் ?” என்றதும் அவர் அவரின் கோபம் அதிகமானது . ” ஒரு வருடத்திற்குள் உங்களை மாதிரி பத்துப் பேர்கள் இந்தச் சீட்டில் வந்துட்டு போயிட்டாங்க . ஒவ்வொருவரும் இப்படித்தான் என்னிடம் சொல்லியுள்ளார்கள் ?” என்றார் . ” அப்படியா ? நல்லது . ஆனால் நான் இங்கே என்ன பிரசச்னை என்றாலும் நிச்சயம் ஒரு வருடமாவது இங்கே இருப்பேன் . என்னை நீங்கள் நம்பலாம் . உங்கள் பிரசச்னை என்னவென்றே தெரியாமல் எப்படி உங்களுக்கு உதவ முடியும் ? என்னை நீங்க நம்புவதும் நம்பாததும் உங்க விருப்பம் . ஆனால் என்னிடம் இத்தனை கோபமாகப் பேசும் நீங்க ஏன் முழுமையான விபரங்களைச் சொல்ல மறுக்குறீங்க ?” என்றதும் படிப்படியாக அவரது தொனி மாறத் தொடங்கியது . சகஜ நிலைக்கு வந்தவர் கெஞ்சும் நிலைக்கு வந்திருந்தார் . பிரச்சனையின் மொத்த ரூபமும் புரிந்தது . இந்த நிறுவனம் ஏற்கனவே நடத்திக் கொண்டிருந்த சாயப்பட்டறை மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தின் சட்டத்திட்டத்தின் படி நிறுத்தப்பட்டு விட்டது . கடந்த ஒரு வருடமாக இயங்கவில்லை . ஆனால் சாயப்பட்டறைக்குத் தேவைப்பட்ட பொருட்கள் அனைத்தும் வந்திருந்தவர் பணிபுரியும் நிறுவனத்தில் கடனுக்குத் தான் வாங்கியுள்ளனர் . இவர் பணிபுரியும் நிறுவனத்திற்கு மட்டுமல்ல . பழைய பாக்கி உள்ள எந்தத் துணை நிறுவனத்திற்கும் பத்துப் பைசா கூடக் கொடுக்க வில்லை . பத்தாயிரம் முதல் ஒரு கோடி வரைக்கும் பல நிறுவனங்கள் இருந்தன . வந்திருந்தவர் அவர் பிரச்சனையுடன் இந்த நிறுவனம் சார்ந்த அனைத்து தகவல்களையும் இடையிடையே பேச ஒவ்வொன்றாக எனக்குப் புரியத் தொடங்கியது . அதில் பாதிக்கப்பட்ட துணை நிறுவனங்களில் இவர் பணியாற்றும் நிறுவனமும் ஒன்று . இவர் அந்த நிறுவனத்தில் வசூலிக்கும் பொறுப்பில் இருப்பவர் . இவர் பணிபுரியும் நிறுவனம் இவரிடம் வேறெந்த காரணத்தையும் கேட்கத் தயாராக இல்லை . நாள் தோறும் இவருக்கு மன அழுத்தம் அதிகமாக இன்று நான் இவரிடம் சிக்கிக் கொண்டேன் . இவர் நொந்து போயிருந்தார் . இங்கே இருந்த மற்றொரு முக்கியமான பிரச்சனை தான் இவரை இந்த அளவுக்குக் கோபப்படுத்தி இருந்தது . இவர் வசூலிக்கச் செல்லும் எந்த நிறுவனத்திற்குச் சென்றாலும் பதில் சொல்ல ஆள் இருப்பார்கள் . ஆனால் இங்கே நிரந்தரமாக எவரும் இருப்பதில்லை . வரவேற்பரையில் (RECEIPTION ) இருக்கும் பெண்களும் மாத சம்பளம் சரியாகக் கிடைக்காத காரணத்தால் வந்த ஒவ்வொருவரும் பாதி நாட்களிலே சென்று விடுவதும் வாடிக்கையாகவே இருந்தது . இவர் இங்கே வந்தால் எவரையும் சந்திக்க முடிவதில்லை . இங்கே நிரந்தரமாக இருக்கும் நிர்வாக அதிகாரியும் முதலாளி வீட்டில் செய்ய வேண்டிய எடுபிடி வேலைக்கு வெளியே சென்று விடுவதால் எவரையும் சந்திக்க முடியாத எரிச்சல் அனைத்தையும் சேர்த்து வைத்து என்னிடம் காட்டியுள்ளார் . இவர் பணியாற்றும் நிறுவனம் சாயப்பட்டறைக்குத் தேவைப்படும் சாயப்பொருட்களை 30 நாள் தவணையில் கொடுத்துள்ளனர் . ஆனால் அது தற்பொழுது ஒரு வருடமாகி விட்டது . இன்று தான் முக்கியப் பொறுப்பில் ஒருவர் வந்துள்ளார் என்பதை மோப்பம் பிடித்து விடாப்பிடியாகக் கீழே இருந்த தடைகளை உடைத்து என் முன்னால் வந்து உட்கார்ந்து விட்டார் . பத்து வருடங்களுக்கு முன்பு வரை திருப்பூர் என்பது கடனூராகவே இருந்தது . எங்குத் திரும்பினாலும் கடன் . எல்லாத் துறையிலும் கடன் . கடன் தான் இந்தத் தொழிலை வளர்த்தது . வாழவும் வைத்தது . சிறிய அளவில் முதலீடு போட்ட அத்தனை பேர்களும் குறுகிய காலத்திற்குள் நம்ப முடியாத அளவிற்கு வளர்ந்தனர் . அதாவது நூல் முதல் பெட்டி வரைக்கும் கடனுக்குத் தான் வாங்கிக் கொண்டிருந்தார்கள் . அதுவும் முப்பது நாள் தவணை முதல் 120 நாள் தவணை வரைக்கும் என்று புகுந்து விளையாடிக் கொண்டிருந்தார்கள் . இதன் காரணமாக ஒரு குறிப்பிட்ட சாரரிடம் மட்டும் பணம் சேர்ந்து கொண்டேயிருக்கப் பலரும் பாதிக்கப்பட்டுக் கொடுத்த கடனை வசூலிக்க முடியாமல் அவரவர் செய்து கொண்டிருந்த தொழிலை விட்டு ஓடத் தொடங்கினர் . ஒரு நபருக்கு கொடுக்க வேண்டிய பத்து லட்சத்தைப் பத்து மாதங்கள் இழுத்தடித்தால் என்னவாகும் . நொந்து வெந்து நோய் வாய்ப்பட்டுப் பலர் அவமானம் தாங்காமல் தற்கொலை செய்து இறந்து போயிருக்கின்றார்கள் . இன்னும் சிலர் தலைமறைவாய் விடுவர் . நாம் பணம் கொடுக்க வேண்டுமே ? என்ற எண்ணம் வளர்ந்த , வளரும் நிறுவன முதலாளிக்கு இருக்காது . மனசாட்சியை அடகு வைத்து விடுவர் . இப்படி வளர்ந்தவர்கள் தான் இங்கே எழுபது சதவிகித நபர்கள் . இதனை ” டெபிட் ” (DEBIT) கலாச்சாரம் என்கிறனர் . எதற்குத்தான் டெபிட் போட வேண்டும் என்ற வரைமுறையே இல்லாத நபர்கள் தான் இங்குள்ள முதலாளிகள் . நான் சேர்ந்திருந்த இந்த நிறுவன முதலாளியின் மற்றொரு பெயர் ” மலைமுழுங்கி மகாதேவன் “. நீயெல்லாம் ஒரு மனுசனா ? என்று வந்தவர் சப்தம் போட்டுக் கொண்டிருந்தாலும் வேறு யாரையோ சொல்லிக் கொண்டிருக்கின்றார் என்று அவர் கடந்து போய்க் கொண்டேயிருப்பார் . சில நாட்களில் படிப்படியாக ஒவ்வொன்றாகப் புரியத் தொடங்கியது . சகதியில் , தரையில் முளைக்கும் செடிகளை விடப் பாறைக்குள் இருந்து வெளிவரும் செடியின் வேர்களுக்கு வீர்யம் அதிகம் . நான் ஏற்கனவே பல பாறைகளைப் பார்த்தவன் . எனக்கு இது ஆச்சரியமாகத் தெரியவில்லை . பலவற்றை மனதில் குறித்துக் கொண்டு அவரிடம் ” இரண்டு நாட்கள் கழித்து வாருங்கள் . முழுமையாகப் பேசுவோம் ” என்றேன் . சொன்ன மாதிரியே அதே தினத்தில் அவர் வந்த போது ” உங்கள் முழுத் தொகைக்கும் நான் பொறுப்பு . நான் உடனடியாக முடியாது . இந்த ஒரு மாதத்தை மறந்து விடுங்க . அடுத்த மாதத்தில் ஒவ்வொரு பதினைந்தாம் தேதி அன்று வந்துடுங்க . மாதந்தோறும் ஒரு தொகையை வாங்கிக் கொண்டு சென்று விடலாம் ” என்றதும் மனத்திருப்தியோடு நகர்ந்து சென்றார் . நான் முதலாளியிடம் எதையும் கேட்க வில்லை . அனுமதி கூடப் பெறவில்லை . வந்தவரை நகர்த்தியே ஆக வேண்டும் . இதனால் என்ன பிரசச்னை உருவாகும் ? என்று தெரிந்திருந்த போதிலும் கூட என் தன்னம்பிக்கை வழிகாட்டும் என்று அசைக்க முடியாத நம்பிக்கை என்னுள் இருந்தது . சில வாரங்களுக்குள் நிறுவனத்தின் மொத்த சாதகப் பாதக அம்சங்களும் எனக்குப் புரியத் தொடங்கியது . முக்கியமாக நம்பிக்கையின்மை . நிறுவனத்தின் மீது எவருக்கும் நம்பிக்கை இல்லை என்பதை விட நிறுவன முதலாளியைப் பார்த்தாலே ஒவ்வொருவரும் அவசரமாகக் கடந்து போகத் தான் விரும்பினார்கள் . கிராமத்தில் பழமொழியாகத் சொல்வார்களே ? ‘ இவன் முகத்தில் முழித்தால் போன காரியம் விளங்கின மாதிரி தான் என்பார்களே ?’ அப்பேற்பட்ட நபராகத்தான் இந்த நிறுவனத்தின் முதலாளி இருந்தார் . இருபது வருடங்களுக்கு முன் வருடந்தோறும் ஐம்பது கோடி வரவு செலவு செய்து கொண்டிருந்த நிறுவனத்தின வளர்ச்சியென்பது படிப்படியாக வளர்ந்து பல நூறு கோடிகளைத் தொட்டு நின்றது . பணம் சேரச் சேர முதலாளி தன் மனதில் உள்ள ஒவ்வொரு ஆசைகளின் மீது கவனம் வைத்தாரே ஒழிய நிறுவனத்தின் அன்றாடச் செயல்பாட்டில் கவனம் வைக்காமல் மனம் போன போக்கில் போகத் தொடங்கினார் . ஒவ்வொரு இடத்திலும் அடிவாங்கிக் கடைசியில் இன்று வங்கிக்கு கட்ட வேண்டிய தொகை மட்டும் 20 கோடி என்ற நிலையில் வந்து நிற்கின்றது . இந்தக் கோடியை விட மற்றொரு கொடுமை முதலாளிக்கு கேடி என்ற பெயரும் நிலைபெற்று விட்டது . முதலாளியின் மனம் மாறவும் தயாராக இல்லை . நிறுவனம் வளர்ந்த பாடாகவும் இல்லை . வங்கியின் நெருக்கடி ஒரு பக்கம் . வசூல் செய்ய வருகின்றவர்களின் அதிரடி பேச்சுக்கள் மறு பக்கம் . ஆனால் முதலாளி வசிக்கும் வீடோ தாஜ்மகால் அழகை தோற்கடிப்பதாக இருந்தது . சலவைக்கல்லால் இளைத்திருந்தார் . தொழிலில் என்ன பிரச்சனைகள் இருந்தாலும் அடிப்படை வாழ்க்கையில் எந்தக் குறையும் இல்லாமல் வாழ்ந்து கொண்டிருந்தார் . முதல் அடியை கவனமாக எடுத்து வைத்தேன் . அது வெற்றிப் பாதையின் கதவுகளைத் திறந்து விட்டது . ஆனால் மலைமுழுங்கியோ நான் உருவாக்கிய பாதையில் பாறாங்கல்லை தூக்கிப் போட்டார் . என் ஆட்டம் ஆரம்பமானது . 13 13. வேலையைக் காதலி [] 13. வேலையைக் காதலி முதல் மாதம் முழுக்க ஒவ்வொரு நாளும் சவாலாகவே கழிந்தது . கடுமையான வேலைப்பளூ என்பதை விடத் தூக்கம் மறந்து இருபத்தி நான்கு மணி நேரமும் அலுவலகம் மற்றும் தொழிற்சாலையிலே இருக்க வேண்டியதாக இருந்தது . வீட்டுக்கு வந்தாலும் அடுத்த நாள் செய்ய வேண்டிய வேலை குறித்தே நினைப்பில் இருக்க உடம்பு படுத்த ஆரம்பித்தது . ஆனாலும் இந்த வேலையை ரொம்பவும் நேசித்தேன் . நமக்கு விருப்பமானவற்றைச் செய்யும் போது நம் தகுதிகள் புரிபடத் துவங்கும் . நேரம் காலம் மறந்து தொடர்ந்து வேலை செய்து கொண்டேயிருந்தாலும் நமக்குச் சோர்வு வருவதில்லை . அதுவும் மற்றவர்களால் சாதிக்க முடியாதவற்றை நாம் சாதித்து விடுவோம் என்ற நம்பிக்கையில் செயல்படும் போது நம்முடைய வேகம் அசாத்தியமானதாக இருக்கும் . அதுவரையிலும் இனம் கண்டு கொள்ளாமல் நமக்குள் இருக்கும் அத்தனை திறமைகளும் ஒன்றன் பின் ஒன்றாக வெளி வரும் . அப்படித்தான் எனக்கும் இந்த நிறுவனத்தில் நடந்து கொண்டிருந்தது . வேலை என்பதைச் சம்பளம் என்பதோடு ஒப்பிட்டுப் பார்த்தால் சானை தீட்டப்படாத கத்தியை வைத்து நறுக்குவது போலத்தான் இருக்கும் . நான் ஏற்றுக் கொண்ட பணியை அன்றாடம் செய்ய வேண்டிய கடமைகளில் ஒன்றாகவே பார்த்து வந்தேன் . இதன் மூலம் கிடைக்கக்கூடிய அனுபவம் நம்மை அடுத்தக் கட்டத்திற்கு நகர்த்தும் என்பதை உறுதியாக நம்பினேன் . மதம் சார்ந்த விருப்பங்கள் , கடவுள் மயக்கம் , அப்பாற்பட்ட ஏதோவொரு சக்தி போன்றவற்றைக் கடந்து வந்து விட்ட காரணத்தால் இது விதி சார்ந்தது என்று யோசிக்கவில்லை . எவரை நோக்கியும் என் ஆள்காட்டி விரல் நீட்டப்படவே வில்லை . ” தீதும் நன்றம் பிறர் தர வரா ” என்பதைப் போல ” எண்ணம் போல வாழ்வு ” என்பதையும் கொள்கையாக வைத்திருந்தேன் . நிறுவனத்திற்குள் இருந்த ஒவ்வொருவரும் தெரிந்தே செய்த தவறுகளையும் , அறியாமல் செய்த பிழைகளையும் மன்னிக்கத் தயாராக இருந்தேன் . இதனால் ஏற்பட்ட மன உளைச்சலை அமைதியாக உள்வாங்கிக் கொண்டேன் . தெளிவாக இனம் பிரித்துக் கொண்டேன் . அவரவர் தகுதி குறித்தே எண்ணங்களைப் பகுதி பகுதியாகப் பிரித்து வைத்திருந்தேன் . எவரிடம் உண்மையான உழைப்பு இருக்கின்றது என்பதை விட எவர் உழைப்பது போல நடிக்கின்றார்கள் என்பதையும் கண்டு கொள்ள முடிந்ததால் எவர் மீதும் எரிச்சல்படாமல் தகுதியில்லாதவர்களை ஒதுக்கத் தொடங்கினேன் . சிலர் புரிந்து கொண்டு சுதாரித்துக் கொண்டார்கள் . பலர் இது தான் வாய்ப்பு என்று மேலும் நடிக்கத் தொடங்கினார்கள் . இது தான் எனக்கு வாய்ப்பாக இருந்தது . நடிப்பவர்களை எடுபிடியாகப் பயன்படுத்த தொடங்க தாமதமாகப் புரிந்து கொண்டு கதறத் தொடங்கினார்கள் . காலையிலேயே திட்டமிட்டு வந்திருந்தேன் . தேவையான ஆட்களைத் தேர்ந்தெடுப்பதில் கவனம் செலுத்தினேன் . அலுவலகம் என்ற பெயரில் மேஜைகள் நாற்காலிகள் இருந்ததே தவிர அங்கங்கே இருந்து செயல்பட வேண்டிய ஆட்கள் இல்லை . முதலில் அலுவலகம் சார்ந்த நபர்களை உள்ளே கொண்டு வர வேண்டும் என்ற எண்ணத்தில் தீவிரமாகச் செயல்பட்டுக் கொண்டிருந்தேன் . விளம்பரத்தின் மூலம் ஆட்கள் தேர்ந்தெடுக்கப்பட்டால் அது பல பாதக அம்சங்களைத் தரக்கூடும் என்பதால் என் பழைய தொடர்பில் இருந்த தகுதியான நபர்களை நினைவில் வைத்து பேசினேன் . வருகின்றவர்களுக்குத் தொழில் அறிவு எந்த அளவுக்குத் தெரிகின்றது என்பதை விட எதைக்கண்டும் பின்வாங்காத குணம் இருக்க வேண்டும் என்பதை வருகின்றவர்களின் அடையாளமாக வைத்திருந்தேன் . உழைப்பாளியாக இருந்தால் மட்டும் போதும் என்று கூட நினைத்திருந்தேன் . உழைக்கும் எண்ணம் கொண்டவனுக்கு அடுத்தவன் குறைகள் குறித்து யோசிக்க நேரம் இருக்காது . அடுத்தடுத்த வேலைகள் என்னவென்றே மனம் ஓடிக் கொண்டேயிருக்கும் . வேலையில்லாதவர்களுக்கும் , வேலை செய்ய மனமில்லாதவர்களின் மனமும் தான் பிசாசு போலச் செயல்படும் . பழிவாங்குதல் , கடமைகளில் இருந்து தப்பித்தல் , காரணம் சொல்லுதல் , காரணங்களைத் தேடிக் கொண்டே இருந்தல் என்று தொடங்கித் தான் வாழ எவரை வேண்டுமானாலும் பழிகிடா ஆக்கி விடலாம் என்று எண்ணத்தில் கொண்டு வந்து நிறுத்தும் . ஒரு நிர்வாகத்தின் வளர்ச்சி வீழ்ச்சியடையப் பல காரணங்கள் இருக்கலாம் . ஆனால் முக்கியமான முதன்மையான காரணமாக இருப்பது மனித மனங்களைக் கையாளத் தெரியாத பட்சத்தில் வீழ்ச்சி விரைவாகும் . நாகரிகம் வளராத காலகட்டத்தில் மனிதர்களின் தேவைகள் குறைவாக இருந்தது . இன்று ஒவ்வொரு மனிதனையும் தேவைகள் தான் இயக்குகின்றது . அவரவர் தேவைக்கேற்றபடி தான் இன்றைய உலகம் இயங்குகின்றது . ஆனால் இங்கே என் தேவை என்பது என்னை நிரூபித்தே ஆக வேண்டும் என்ற நோக்கத்தில் இருந்தது . அந்த நோக்கத்திற்காக என்னை நானே வளைத்துக் கொண்டேன் . அடுத்தவர் கௌரவம் பார்த்து நுழையத் தயங்கும் ஒவ்வொரு இடத்திலும் புகுந்து வெளியே வந்து கொண்டிருந்தேன் . என் உழைப்பு மட்டும் இங்கே முக்கியமல்ல . என் சிந்தனையைப் போன்று ஒத்த நோக்கம் கொண்டவர்களையும் உள்ளே கொண்டு வந்தால் மட்டுமே என் பாரம் குறையும் என்று பாரம் சுமக்கத் தயாராக இருப்பவர்களைத் தேடத் துவஙகினேன் . ஒரு ஆயத்த ஆடைத் தொழிற்சாலைக்கு முக்கியமான சில நபர்கள் தேவை . முதலில் மார்க்கெட்டிங் என்ற துறையில் கவனம் செலுத்த வேண்டும் . நிர்வாகத்திற்குத் தேவைப்படுகின்ற ஒப்பந்தங்களைக் கொண்டு வரக் கூடியவராக இருக்க வேண்டும் . ஏற்றுமதி ஒப்பந்தங்கள் திருப்பூர் சார்ந்த வெளிநாட்டு நிறுவனங்களின் அலுவலகத்தில் இருந்து வரலாம் . அல்லது நேரிடையாக வெளிநாட்டில் இருந்து கொண்டு வரலாம் . நம் திறமையைப் பொறுத்து ஒப்பந்தங்களை உள்ளே கொண்டு வர முடியும் . இதற்கு மார்க்கெட்டிங் மேனேஜர் என்றொரு பதவியை உருவாக்க வேண்டும் . இது தவிர உள்ளே வந்த ஒப்பந்தங்களைக் கொண்டு செலுத்த மெர்சன்டைசர் சிலர் வேண்டும் . இது தவிரப் பல வேலைகளுக்காக வெளியே அலைய ஆட்கள் வேண்டும் . முக்கியமாகப் பர்சேஸ் மேனேஜர் , பேப்ரிக் மேனேஜர் போன்றவர்கள் வந்தே ஆக வேண்டும் . அலுவலகம் சார்ந்த முக்கியப் பதவிகளைப் போலத் தொழிற்சாலைச் சார்ந்த பல பெரிய , சிறிய பதவிகளுக்கு ஆட்களை உள்ளே கொண்டு வர வேண்டும் . என் கடந்த கால அனுபவத்தில் , தொடர்பில் இருந்த நண்பர்களை உள்ளே கொண்டு வருவது பெரிய வேலையல்ல . ஆனால் இது போன்ற நிறுவனத்தில் உள்ள பாதக அம்சங்களைக் கணக்கில் கொண்டு தயங்கிக் கொண்டே வர மறுப்பது தான் எனக்குப் பெரிய சவாலாக இருந்தது . சமாதானப்படுத்த வேண்டியதாக இருந்தது . ” என் மீது நம்பிக்கை வைங்க ” என்று உறுதியளிக்க வேண்டியதாக இருந்தது . பல சமயங்களில் அளவு கடந்து கீழே இறங்க வேண்டியதாக இருந்தது . மனித மனம் விசித்திரமானது . எப்போது கீழான எண்ணங்களை நோக்கியே செல்லும் வல்லமை கொண்டது . தவறு என்று தெரிந்தும் அதையே விரும்புவதும் , சூழ்நிலைகளைக் காரணம் காட்டுவதும் என அவரவர்க்கெனப் பல கொள்கைகளை வைத்துக் கொண்டு தான் இங்கே ஒவ்வொருவரும் இருக்கின்றனர் . நாம் ஏன் அளவு கடந்து உழைக்க வேண்டும் ? இதனால் நமக்கென்ன லாபம் ? என்பதையும் கருத்தில் கொண்டே செயல்படுகின்றர் . குறுகிய கால அறுவடையைத்தான் ஒவ்வொருவரும் விரும்புகின்றனர் . எனக்குத் தனிப்பட்ட முறையில் பல சவால்கள் தொடர்ந்து உருவாகிக் கொண்டே இருந்தது . அப்பாவும் மகனும் அலுவலகம் வந்தாலும் சுற்றுலா தளத்திற்கு வந்து விட்டு போவதைப் போல வந்து போய்க் கொண்டிருந்தனர் . காலையில் பத்து நிமிடம் பேசுவார்கள் . அப்புறம் சென்று விடுவார்கள் . அலுவலக வேலைகள் முடிந்து வீட்டுக்கு வந்தாலும் நிறுவனத்திற்குத் தேவைப்படும் ஒப்பந்தத்திற்காக என் தொடர்பில் உள்ள பழைய நபர்களைத் தொடர்பு கொண்ட போது எல்லோரும் ஒரே வார்த்தையில் மறுத்து ஓடினார்கள் . ” அவர் நிறுவனத்திற்கா ? வேண்டாம்ப்பா ? நாங்க ஏற்கனவே பட்ட அவமானங்களும் அவஸ்த்தைகளும் போதும் ” என்றார்கள் . பேசிய ஒவ்வொருவரும் ஒவ்வொரு கதையைச் சொன்னார்கள் . ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதத்தில் பாதிக்கப்பட்டு இருந்தார்கள் . ஒவ்வொன்றையும் விமர்சனமாக எடுத்துக் கொண்டேன் . மனம் தளராத விக்ரமாதித்தனாய் பூதத்தைச் சுமந்தபடி அடுத்தப் பயணத்தைத் தொடங்கினேன் . ஆனால் பயணம் விடை தெரியாத விடுகதை போலவே இருந்தது . இங்கே ஒவ்வொரு வெற்றிக்கும் ஒரு விலை கொடுத்தே ஆக வேண்டும் . எந்தவொரு வெற்றிக்குப் பின்னாலும் ஒரு மிகப்பெரிய தியாகம் இருந்தே ஆக வேண்டும் . அது அளவில் சிறியதாகப் பெரியதாக இருக்கலாம் . இளமைப் பருவத்தைத் தியாகம் செய்தவனால் , இளமையில் அனுபவிக்க வேண்டிய சந்தோஷங்களைத் தியாகம் செய்து உழைத்தவனுக்கு மட்டுமே வாழ்நாள் முழுக்க நல்ல வாழ்க்கை அமையக்கூடியதாக இருக்கும் . மாறுபாடுகள் இருக்கலாம் . பல இடங்களில் விதிவிலக்குகள் இருக்கலாம் . ஆனால் தலைவன் முதல் தறுதலைகள் வரைக்கும் அவரவர் அளவில் ஏதோ சில தியாகத்தீயைத் தாண்டித்தான் வெற்றிக் கோட்டை அடைந்திருப்பார்கள் . எனக்குப் பெரிய லட்சியம் எதுவுமில்லை . ஆனால் சவால்கள் மீது மிகப் பெரிய ஈர்ப்புண்டு . ஒவ்வொரு சவால்களும் நம்மை இயக்குகின்றது . சவால்கள் நம்மைப் புதுப்பிக்கின்றது . நமக்குள் இருக்கும் திறமையை அடையாளம் காண உதவுகின்றது . எதிரிக்கும் நமக்கும் உண்டான பாகுபாட்டைப் பக்குவமாக எடுத்துரைக்கின்றது . புரிந்தவர்களுக்குப் பொக்கிஷம் . புரியாதவர்களுக்கோ ” ஏன் வம்பை விலை கொடுத்து வாங்குகின்றாய் ?” என்ற புலம்பல் தான் அறிவுரையாகக் கிடைக்கின்றது . எனக்கு இப்படிப்பட்ட அறிவுரைகள் தான் தொடர்ந்து கிடைத்தபடியே இருந்தது . காரணம் நூலில் சிக்கல் இருந்தால் எளிதில் பிரித்து விடலாம் . ஆனால் சிக்கல் என்பது மலையாக இருந்தால் என்ன செய்ய முடியும் . அப்படித்தான் ஒவ்வொன்றும் இங்கே இருந்தது . இந்த நிறுவனத்தின் மற்றொரு கொடுமையுண்டு . அலுவகத்திலிருந்து தொழிற்சாலை திருப்பூரின் மற்றொரு பகுதியில் இருந்தது . ஒரு முறை சென்று வந்தாலே பாதிப் பொழுது அதிலேயே போய் விடும் . ஒரு ஆயத்த ஆடை ஏற்றுமதி தொழிற்சாலை இயங்க தேவைப்படும் ஒவ்வொரு பகுதியும் வெவ்வேறு இடத்தில் இருக்கும் பட்சத்தில் பல பாதகங்களை அந்த நிறுவனம் சந்தித்தே ஆக வேண்டும் . நிர்வாகத் செலவு கட்டுக்கடங்காமல் போகும் . கட்டுப்பாடு என்பது கட்டவிழ்ந்த காளை போலத் துள்ளிக் குதிக்கும் . அடக்குவது சிரமமாக இருக்கும் . முதன்மைப் பதவியில் இருப்பவர்களுக்கு மேய்க்கும் வேலைக்கே நேரம் சரியாக இருக்கும் . எவர் என்ன தவறுகள் செய்கின்றார்கள் ? என்பதைக் கவனிப்பதில் பாதிப் பொழுது போய்விடும் . செய்ய வேண்டிய வேலைக்குத்தான் வெளியே செல்கின்றார்களா ? இல்லை அவரவர் சொந்த வேலைக்காகச் சுற்றுகின்றார்களா ? என்பதைக் கவனிக்கும் போது உருவாகும் மன உளைச்சலுக்கு அளவே இருக்காது . மனம் சோர்ந்து விடும் . கவனிக்க வேண்டிய முக்கிய வேலைகளைத் தவிர்த்து உளவுத்துறை வேலை பார்க்கவே நேரம் சரியாக இருக்கும் . என் ஒவ்வொரு நாளின் பொழுதும் இப்படித்தான் அவஸ்த்தைகளுடன் கழிந்தது . நான் இந்த நிறுவனத்தின் உள்ளே நுழைந்த மூன்றாவது நாள் அலுவலகத்தில் இருந்த நிர்வாக அதிகாரி பதறியடித்துக் கொண்டு நான் அமர்ந்திருந்த இருக்கைக்கு மூச்சு வாங்க நின்றார் . இரண்டு நாட்களாக அவரைக் கவனித்துக் கொண்டிருந்தேன் . மனதிற்குள் ” நீ உலக மகா நடிகனடா ?” என்று இனம் பிரித்து வைத்திருந்தேன் . என்ன ? என்று எதுவும் பேசாமல் கண்களால் அவரைப் பார்த்து என்ன ? என்பது போலப் பார்த்தேன் . ” சார் நீங்க காலையிலேயே இங்கே நுழையும் போது சொல்ல நினைத்து மறந்து விட்டேன் . இப்பொழுதான் எம் . டி கூப்பிட்டு இருந்தார் . உங்களைப் பேக்ட்ரிக்கு வரச் சொல்லியிருந்தார் ” என்றார் . நான் ஒன்றும் பேசவில்லை . செய்து கொண்டிருந்த வேலையை அப்படியே எடுத்து வைத்து விட்டு எழுந்து அவருடன் கீழே இறங்கி வந்த போது வெளியே எனக்கான வாகனம் நின்று கொண்டிருந்தது . எனக்காக வரவழைக்கப்பட்ட வாகனத்துக்குப் பின்புறம் மற்றொரு வெளிநாட்டுக் கார் நின்று கொண்டிருந்தது . நான் குழப்பத்துடன் நிர்வாக அதிகாரியைப் பார்த்த போது ” எம் . டி யே வந்து விட்டார் . என்னை மாட்டிக் கொடுத்து விடாதீர்கள் . பின்னால் நிற்கும் வண்டியில் இருவரும் இருக்கின்றார்கள் . அதில் போய் ஏறிக் கொள்ளுங்க ” என்றார் . இருவர் என்றால் அப்பாவுடன் மகனும் இருக்கின்றார் என்று அர்த்தம் . இவர்கள் இருவரையும் உள்ளே இருந்த ஜால்ராக்கள் ” சின்னவர் ” ” பெரியவர் ” என்று அழைத்தனர் . நானோ ” சின்னப்புத்தி “, ” பெரிய புத்தி ” என்று மனதிற்குள் குறித்து வைத்துக் கொண்டேன் . நிர்வாக அதிகாரி சொன்னதைப் புரிந்து கொண்டு பின் பக்கமாக நின்று கொண்டிருந்த வாகனத்தை நோக்கிச் சென்றேன் . ஒட்டுநர் இருக்கையில் மகன் அமர்ந்திருந்தார் . பின்பக்க இருக்கையில் கால் மேல் கால் போட்டுக் கொண்டு எம் . டி இருந்தார் . வாயெல்லாம் பல்லாக என்னை வரவேற்று ” உள்ளே வந்து உட்காருங்க ” என்றார் . மரியாதைக்காகச் சற்று தள்ளியே அமர்ந்து கொண்டேன் . வண்டி சென்று கொண்டிருந்த போது தனது சுயபுராணத்தை அளந்து விட்டுக் கொண்டே வந்தார் . அமைதியாகக் கேட்டுக் கொண்டே அவர் கண்களையே கவனித்துக் கொண்டு வந்தேன் . உலகத்திலேயே மிகவும் ஆபத்தான மனிதர்கள் பல வகையினராக இருக்கின்றார்கள் . அதிலும் மிக ஆபத்தானவர்கள் சுயமோகி . தன்னைத் தானே பெருமையாக நினைத்துக் கொள்ளுதல் . தன்னைப் பற்றியே மற்றவர்களிடம் பெருமையடித்தல் . தன் எதிரே நிற்கும் நபர் தன்னைப் பற்றிப் புகழ்வதை ரசித்துக் கேட்டுக் கொள்ளுதல் . எதிரே இருப்பவன் தரம் என்ன ? தராதரம் என்ன ? என்பதைப் பற்றியே யோசிக்காமல் தன்னை மன்னன் போலக் கற்பனை செய்து கொண்டு தான் சொல்வதையெல்லாம் எதிரே இருப்பவர்கள் நம்ப வேண்டும் என்ற கட்டாயப்படுத்துதல் . குடும்ப வாழ்க்கையில் இந்தப் பழக்கம் இருந்தாலே நம் மரியாதைக்கு உத்திரவாதம் இருக்காது . தொழில் வாழ்க்கையில் இருந்தால் என்னவாகும் ? பெரும்பாலும் தன் திறமையைப் பற்றித் தாழ்வான எண்ணம் கொண்டவர்களிடத்திலும் , தன் திறமையை வளர்த்துக் கொள்ள முடியாதவர்களிடத்திலும் , போட்டி போட முடியாதவர்களிடத்தில் மட்டுமே தம்பட்டம் அடித்துக் கொள்ளும் பழக்கம் இருக்கும் . ” மற்றவர்கள் நம்மை விரும்புவதை விட நம்மை நாமே விரும்ப வேண்டும் ” என்பது தான் நம் தனிப்பட்ட வளர்ச்சியின் பாலபாடம் . ஆனால் ஒவ்வொன்றுக்கும் ஒரு அளவுண்டு என்பதை நாம் மனதில் வைத்திருக்க வேண்டும் . ” பேச்சைக் குறை . செயலில் காட்டு ” என்பதற்கான அர்த்தமே நாம் செய்யும் செயலே நம்மைப் பற்றி மற்றவர்கள் பேசுவதாக இருக்க வேண்டும் . அது நல்லதாக இருக்கலாம் . இல்லை விமர்சனமாக இருக்கலாம் . எப்படி இருந்தாலும் நாம் அதை எடுத்துக் கொண்டே ஆக வேண்டும் . நான் இப்படித்தான் என்னை மாற்றிக் கொண்டிருந்தேன் . ஆனால் பேசிக் கொண்டிருந்தவரோ என்னைத் தவிர உலகத்தில் உள்ள அத்தனை பேர்களும் முட்டாள் . நான் தான் வில்லாதி வில்லன் . சூரப்புலி என்று கதையளந்து கொண்டிருந்தார் . நாங்கள் தொழிற்சாலை இருந்த இடத்திற்குச் சென்று சேர்வதற்குத் தேவைப்பட்ட அரை மணி நேரத்திற்குள் என்னால் தாங்க முடியாத அளவிற்குப் பொளந்து கட்டிக் கொண்டிருந்தார் . தொழிற்சாலையின் உள்ளே வண்டி நுழைந்தது . நுழைவாயிலில் செக்யூரிட்டி என்ற பெயரில் ஒரு வயதான பெரியவர் நின்று கொண்டிருந்தார் . நிச்சயம் அவர் உள்ளே தோட்டத்தில் பணிபுரிபவராக இருக்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டேன் . தொழிற்சாலையின் ஒவ்வொரு பகுதியையும் அப்பாவும் , மகனும் எனக்குக் காட்டிக் கொண்டே வந்தார்கள் . படிப்படியாக விளக்கிக் கொண்டே இடையிடையே இருபது வருடத்திற்கு முன் அவர் செய்த சாதனைகள் இந்தத் தொழிற்சாலை இயங்கிய விதத்தை விவரித்துக் கொண்டே வந்தார் . மகன் ஒத்து ஊதிக் கொண்டிருந்தார் . தொழிற்சாலை என்ற பெயரில் இருந்ததே ஒழிய எந்த அடிப்படை வசதிகளும் இல்லை . கடந்த நாலைந்து வருடங்களாகச் செயல்படாமல் முடங்கிப் போய்க் கிடந்தது . அதுவொரு மிகப் பெரிய தோட்டம் . தோட்டத்தின் உள்ளே ஒவ்வொரு பகுதியையும் தனித்தனியாகப் பிரிந்து ஒரு ஆய்த்த ஆடை உருவாக்கத்திற்குத் தேவைப்படும் ஒவ்வொரு வசதியையும் உருவாக்கியிருந்தார்கள் . உள்ளே நுழைந்தவுடன் உற்பத்தி சார்ந்த கட்டிடங்கள் இருந்தன . அடுத்தப் பகுதியில் பிரிண்டிங் இருந்தது . தோட்டத்தின் மற்றொரு பகுதியில் சாயப்பட்டறை சார்ந்த அத்தனை வசதிகளும் இருந்தது . தோட்டத்தின் இறுதியில் பலதரப்பட்ட அறவு எந்திரங்கள் பொருத்தப்பட்ட நிட்டிங் பகுதி இருந்தது . ஒவ்வொரு பகுதிக்கும் இடையே வயல்வெளி இருந்தது . உள்ளே இருந்த வயல் பகுதியில் சோளத்தட்டையும் , தென்னை மரங்களும் இருந்தது . கிராமத்திற்கு நுழைந்தது போல இருந்தது . சுத்தமான காற்று உடம்பைத் தழுவியது . ஆனால் எந்த இடத்திலும் பொறுப்பான ஆட்கள் இல்லை . எல்லா இடங்களிலும் நாமே நுழைந்து இழுத்துப் போட்டுக் கொண்டு செய்ய வேண்டியதாக இருக்கும் என்பதை யூகித்துக் கொண்டேன் . தொழிற்சாலையில் தைக்க வேண்டிய 300 க்கும் மேற்பட்ட எந்திரங்கள் கேட்பாரற்று தூசியடைந்து போய்க் கிடந்தது . உள்ளே ஒவ்வொரு இடத்திலும் மலை போலக் குப்பைகள் குவிந்து கிடந்தது . சாயப்பட்டறை இவர்கள் செய்த தவற்றின் காரணமாக மூடப்பட்டு அனுமதிக்காகக் காத்திருந்தது . நிட்டிங் பகுதி காயலான் கடைக்கு எடுத்துச் செல்லும் அளவிற்கு இருந்தது . ஒவ்வொன்றாகப் பார்த்துக் கொண்டே வந்து கடைசியாகப் பிரிண்டிங் இருந்த பகுதிக்குள் நுழைந்தோம் . ஓடுகள் வேயப்பட்ட நீண்ட தாழ்வாரம் பகுதி போன்ற இடத்திற்குள் சென்ற போது அந்தப்பகுதி முழுக்க இருட்டாக இருந்தது . மின்சார வசதிகளைத் துண்டித்து வைத்திருந்தார்கள் . காரணம் கேட்ட போது மின்சார வாரியத்திற்குப் பணம் கட்டாத காரணம் என்று சொன்னார் . அதுவும் நிர்வாக அதிகாரி மேல் பழியைப் போட்டார் . அப்பாவும் , மகனும் நுழைவாயிலில் இடத்தில் நின்று கொண்டார்கள் . நான் கும்மிருட்டில் தடவித் தடவி உத்தேசமாக நகர்ந்து மேலோட்டமாகப் பார்த்து விட்டு வாசல்படியை நோக்கி நகர்ந்து வந்த போது புஸ் புஸ் என்ற சப்தம் கேட்க நடப்பதை நிறுத்தி விட்டு இருட்டுக்குள் என் கண்களைச் செலுத்தினேன் . சில நொடிகளுக்குப் பிறகு அந்தச் சிறிய வெளிச்சம் தென்பட்டது . மேலும் உற்று நோக்க அது பாம்பின் கண்கள் என்று தெரிந்து . ஒன்றல்ல ? நாலைந்து பாம்புகள் படம் எடுத்துக் கொண்டு என் முன்னால் நின்று கொண்டிருந்தது . என் ராஜ்ஜியத்திற்குள் ஏன் வந்தாய் ? என்று கேட்பது போல வழியில் வரிசையாக நின்றது . சூரப்புலியோ வெளியே நின்று கொண்டு தன் சுயபுராணத்தை விடாமல் பேசிக் கொண்டிருந்தார் . என் உடம்பின் உள்ளே வியர்வை ஆறாக ஓடிக் கொண்டிருந்தது . 14 14 வண்ணங்களே வாழ்க்கை [] 14 வண்ணங்களே வாழ்க்கை ” பாம்பைக் கண்டால் படையும் நடுங்கும் ” என்பார்கள் . பெரிய போர்ப்படையே பாம்பைக் கண்டவுடன் சிதறி ஓடுவார்கள் என்ற அர்த்தத்தில் சொல்லி இருப்பார்களோ ? ஆனால் எனக்குப் பயத்தோடு பல கேள்விகளும் வியர்வையுடன் வந்தது . ஒரு நிறுவனத்தில் குறிப்பிட்ட பகுதியில் பாம்புகள் குடும்பத்துடன் வந்து குடியிருக்கின்றது என்றால் , ‘ இந்தப் பகுதி கவனிப்பார் இன்றி ஆள் ஆரவமின்றி இருக்கின்றது என்று அர்த்தம் ‘ என்பதை மனதில் குறித்துக் கொண்டேன் . பிரிண்டிங் (PRINTING DEPARTMENT) துறை என்பது ஆயத்த ஆடைத்துறையில் முக்கியமான துறையாகும் . வெள்ளை மற்றும் வண்ண ஆயத்த ஆடை என்றால் அதற்குத் தனிப்பட்ட மதிப்பு எதுவும் இருக்காது . அதுவே அந்த ஆடையின் மேல் ஒரு சிறிய பிரிண்ட் அல்லது எம்ட்ராய்டரி இருக்கும் பட்சத்தில் அதன் மதிப்பே தனி . விலையும் அதிகமாக இருக்கும் . இவற்றைத்தான் மேலை நாடுகள் விரும்புகின்றன . திருப்பூரில் உள்ள நிறுவனங்களுக்கென்று சில சிறப்புத் தகுதிகள் உண்டு . கடினமான விசயங்களை இயல்பாக எடுத்துக் கொண்டு சாதிக்கும் வல்லமை கொண்டவர்கள் . அசராத உழைப்பு . இந்த இரண்டும் தான் மத்திய , மாநில அரசாங்கங்கள் ஒத்துழைப்பு கொடுக்காத பட்சத்திலும் கூடப் பல சிரமங்களையும் கடந்தும் திருப்பூர் வளர்ந்து கொண்டே இருக்கின்றது . உலகளாவிய போட்டி உள்ள இந்தத் தொழிலில் திருப்பூருக்குப் போட்டியாகப் பங்களாதேஷ் , பாகிஸ்தான் , இலங்கை , சீனா , இந்தோனேஷியா , பர்மா போன்ற பல நாடுகள் இருந்தாலும் திருப்பூரின் வளர்ச்சியை நிறுத்த முடியவில்லை . அதற்கு முக்கியக் காரணம் இந்தப் பிரிண்ட்டிங் என்றால் மிகையாகாது . காரணம் மற்ற நாடுகள் கடினமான வேலைப்பாடுகள் நிறைந்த ஆயத்த ஆடைகளை விரும்புவதில்லை . வேலை செய்ய எளிமையாக உள்ள வடிவமைப்புகளைத் தான் முதன்மையாகத் தேர்ந்தெடுக்கின்றார்கள் . மேலும் ஒரு ஆயத்த ஆடை தயாரிப்புச் செலவில் தங்கள் லாபத்தைக் குறைத்துக் கொள்கின்றார்கள் . உற்பத்திச் செலவை பல விதங்களில் தாங்கள் விரும்பும் அளவுக்குக் கட்டுப்பாட்டுக்குள் வைத்துக் கொள்கின்றார்கள் . காரணம் அங்குள்ள தொழிலாளர்களை எந்த நிறுவனமும் மனிதர்களாக மதிப்பதில்லை . எவ்வித அடிப்படை வசதிகளையும் உருவாக்கித் தருவதில்லை . திருப்பூரில் உள்ள ஒரு டைலர் பெறும் ( எட்டு மணி நேரத்திற்கு அதிகபட்சமாக ரூபாய் 450) சம்பளத்தில் நான்கில் ஒரு பங்கு மட்டுமே மேலே குறிப்பிட்டுள்ள நாடுகளில் உள்ள டைலர் சம்பளமாகப் பெறுகின்றனர் . பத்து நபர்கள் பணிபுரிய வேண்டிய இடங்களில் மூன்று நபர்களை வைத்தே மொத்த வேலையையும் வாங்குகின்றார்கள் . ‘ மனித வளத்துறை ‘ என்ற பெயரில் பட்டியில் அடைக்கும் மாடுகளைப் போல நெருக்கமான இடங்களில் வைத்து வேலை வாங்குகின்றார்கள் . இது போன்று பல விதங்களில் உற்பத்திச் செலவை கட்டுப்படுத்தி மேற்கத்திய சமூகம் விரும்பும் விலையை அவர்களால் கொடுக்க முடிகின்றது . ஆனால் எப்போதும் போல மேலை நாடுகளில் உள்ள கணவான்கள் மனித உரிமைகளைப் பற்றி வாய் கிழிய பேசுகின்றார்கள் . இது தவிர அந்தந்த அரசாங்கம் அங்குள்ள ஏற்றுமதியாளர்களுக்கு ” ஊக்கத் தொகை ” (DUTY DRAW BACK) என்ற பெயரில் வாரி வழங்குகின்றார்கள் . இதற்கு மேலும் ஏழை நாடுகள் என்ற பெயரில் அவர்களிடம் இருந்து வாங்கும் பொருட்களுக்கு இறக்குமதி வரியை (IMPORT DUTY) வளர்ந்த நாடுகள் தள்ளுபடி செய்கின்றது . இதன் காரணமாக இறக்குமதியாளர்களுக்குத் தனியாக 12 சதவிகித லாபம் கிடைக்கின்றது . கனடா , அமெரிக்கா , ஐரோப்பா போன்ற நாடுகளில் உள்ள இறக்குமதியாளர்கள் திருப்பூரில் இருந்து இறக்குமதி செய்யும் பொருட்களுக்கு அவரவர் வாழும் நாட்டின் அரசாங்கத்திற்கு இறக்குமதி வரி என்ற பெயரில் 12 சதவிகித வரியைக் கட்டிய பின்பே துறைமுகத்தில் இருந்து சரக்கை வெளியே எடுக்க முடியும் . இந்த வசதிகள் எதுவும் இந்தியாவில் இருந்து ஏற்றுமதி செய்பவர்களுக்குக் கிடைக்காது . சென்ற காங்கிரஸ் ஆட்சியில் ஆனந்த் ஷர்மா என்பவர் வர்த்தகத் துறை அமைச்சராக இருந்தார் . ஐரோப்பிய நாடுகளுடன் ஒப்பந்தம் உருவாக்கி திருப்பூர் ஏற்றுமதியாளர்களுக்கு வரிவிலக்கு வாங்கித் தருகின்றேன் என்று ஆசையைக் காட்டி அவர் கோட் பையை நிரப்பிக் கொண்டது தான் மிச்சம் . இங்கே இருந்த அவரின் அடிபொடிகளும் அவருக்கு ஆராதனை செய்து காசைக் கொண்டு போய்க் கொட்டினார்கள் . ஆனால் இவற்றையெல்லாம் மீறி திருப்பூர் இன்று வரையிலும் சந்தையில் நிற்பதற்கு முக்கியக் காரணம் இந்த வண்ண வண்ண பிரிண்ட்டிங் துறையே . பல வித வண்ணங்களோடு தங்கள் வாழ்க்கையைப் பின்னிப் பிணைந்து வாழ்ந்து கொண்டிருப்பவர்களின் வாழ்க்கையை இன்றைய மின்சாரத் தட்டுப்பாடு தடுமாற வைத்துக் கொண்டிருக்கின்றது . இத்தனை பிரச்சனைக்கிடையேயும் இங்கே மற்ற நாடுகள் தர முடியாத தரத்தையும் , விலையையும் கொடுக்கக் கூடியவர்களாக இருக்கின்றார்கள் . இறக்குமதியாளர்கள் விரும்பும் குறுகிய காலகட்டத்திற்குள் கொடுத்து விடுவதால் ” எனக்கு உன் விலை கட்டுபிடியாகாது ” என்று செல்பவர்கள் குறிப்பிட்ட காலகட்டத்திற்குப் பிறகு மீண்டும் வந்து விடுகின்றார்கள் . இந்தச் சமயத்தில் இந்தப் பிரிண்ட்டிங் துறையைப் பற்றிப் பார்த்து விடுவோம் . ஆயத்த ஆடையின் மேல் தீர்மானிக்கப்பட்ட பிரிண்ட எந்த அளவுக்குத் தேவைப்படுகின்றதோ அதன் வடிவத்தைக் காகித வடிவில் DESIGNER பார்வையிடுகின்றார் . குறிப்பிட்ட வடிவ அடிப்படையில் எந்த அளவுக்கு உருவாக்கப்பட வேண்டும் என்பதை மனதில் கொண்டு அதற்கான ஆயத்த ஏற்பாடுகளைத் துவங்கின்றார் . டிசைனர் கணினியில் வரைந்து கொடுத்து விடுவார் . மற்றொருவர் அதனைக் கொண்டு பிலிம் உருவாக்கி விடுவார் . அதன் அடிப்படையில் பிரிண்ட்டிங் பட்டறைக்குத் தேவைப்படும் அளவுக்குச் சதுர மற்றும் செவ்வக வடிவில் நைலான் துணியில் பிரிண்டிங் வடிவத்தை மற்றொருவர் உருவாக்கித் தந்து விடுவார் . அந்தக் குறிப்பிட்ட மாடல் என்பது மெல்லிய நைலான் துணியில் உருவாக்கப்பட்டு இருக்கும் . நான்கு புறமும் கம்பி வடிவிலான உருளைகளால் உருவாக்கப்பட்டுச் சதுர மற்றும் செவ்வக வடிவிலான மாடல் உருவாக்கப்பட்டு விடும் . இந்த வடிவமைப்புப் பிரிண்ட்டிங் பட்டறைக்கு வருகின்றது . ஒவ்வொரு பிரிண்டிங் பட்டறையிலும் தொழிலாளிகள் புஜபலபாரக்கிரமசாலிகளாக இருப்பதால் சலிக்காமல் வேலை செய்பவர்களாக இருப்பார்கள் . பெரும்பாலும் தமிழகத்தின் தென் மாவட்டத்தைச் சேர்ந்த தொழிலாளிகள் தான் சாயப்பட்டறைத் துறையிலும் பிரிண்ட்டிங் துறையிலும் இருப்பார்கள் . மெல்லிய நைலான் வடிவ துணியின் மேல் தேவைப்படுகின்ற வண்ண சாயத்தை அளவு பார்த்து ஊற்றுவார்கள் . மேஜையின் மேல் விரிக்கப்பட்டுள்ள துணி அல்லது நறுக்கப்பட்ட துணியின் மேல் வைத்து மேலும் கீழும் SCRAPPER துணை கொண்டு சாயம் எல்லா இடங்களிலும் பரவும்படி இழுப்பார்கள் . கொட்டப்பட்டுள்ள சாயத்தை நைலான் துணியில் அழுத்தி இழுக்கும் போது நைலான் துணியின் மேலே உள்ள சாயமானது நைலான் துணியில் உள்ள மெல்லிய துளை வழியே ( குறிப்பிட்ட வடிவம் சார்ந்து உருவாக்கப்பட்டு இருக்கும் ) உள்ளே இறங்கி துணியில் நாம் எதிர்பார்த்த புதிய வடிவம் பிறக்கும் . ஒரு வடிவமைப்புக்கு எத்தனை நிறங்கள் தேவைப்படுகின்றதோ ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு SCREEN தயாராக இருக்கும் . இப்படித்தான் ஆயத்த ஆடைத் துணியில் தேவைப்படுகின்ற பிரிண்ட்டிங் வடிவத்தைக் கொண்டு வருகின்றார்கள் . திருப்பூரில் உள்ள ஆயத்த ஆடைத்துறையில் உள்ள ஒவ்வொரு துணைத் துறைகளிலும் பங்கு பெறும் தொழிலாள வர்க்கத்தில் சில சிறப்புத் தகுதிகள் உண்டு என்பதை நாம் எப்போதும் நினைவில் வைத்திருக்க வேண்டும் . டைலர் என்பவர்களுக்கு உடல் உழைப்பு அதிகமாக இருக்காது . ஒரே இடத்தில் அமர்ந்து கொண்டு பணிபுரிபவர்களாக இருப்பார்கள் . கட்டிங் மாஸ்டர்கள் எந்திரங்களின் துணை கொண்டு பணிபுரிபவர்களாக இருப்பார்கள் . செக்கிங் என்ற தரம் பார்த்துப் பிரிக்கக்கூடிய பகுதியில் பெண்கள் நாள் முழுக்க நின்று கொண்டே பணிபுரிய வேண்டியதாக இருக்கும் . இது போன்று இங்குள்ள ஒவ்வொரு துறையிலும் SKILLED AND SEMI-SKILLED என்ற வகையில் கலந்து கட்டியதாக இருக்கும் . ஆனால் சாயப்பட்டறை மற்றும் பிரிண்ட்டிங் துறையில் முழுக்க முழுக்க உடல் உழைப்பை நம்பியே செயல்பட வேண்டியதாக இருக்கும் . இன்றைய சூழ்நிலையில் நவீன தொழில் நுட்ப வசதிகள் வந்திருந்த போதிலும் மனித ஆற்றலின் பங்கு இங்கு அதிகமாகத் தேவைப்படும் . உடல் வலு உள்ளவர்களால் மட்டுமே இது போன்ற துறைகளில் காலம் தள்ள முடியும் . பிரிண்ட்டிங் துறையில் பல பிரிவுகள் உள்ளது . TABLE PRINTING, MECHINE PRINTING, ROTARY PRINTING, STICKER PRINTING, FUSING PRINTING என்று பல பிரிவுகள் உள்ளது . தொடக்கத்தில் இந்தத் துறை எந்த நவீனமும் எட்டிப்பார்க்காத நிலையில் இருந்தது . இதனைப் பிரிண்ட்டிங் பட்டறை என்று அழைத்தார்கள் . ஓடு வேயப்பட்ட நீண்ட செவ்வக வடிவில் தாழ்வாரம் போன்ற அமைப்பில் கிடைத்த இடத்தில் இருந்து கொண்டு செயல்பட்டார்கள் . முழுக்க மனித உழைப்பை மட்டுமே நம்பி செயல்பட்டார்கள் . செவ்வக மேஜை , அந்த மேஜையைத் தாங்க பத்தடிக்கு ஒரு கடப்பா கல் போன்ற அமைப்பில் உருவாக்கியிருப்பார்கள் . அதன் மேல் கெட்டியான காடாத்துணியைப் போட்டு இரண்டு பக்கமும் இறுகக் கட்டியிருப்பார்கள் . ஏறக்குறைய 120 அடி நீளமுள்ளதாக இருக்கும் . ஆனால் இன்று மொத்தமாக மாறி விட்டது . மனித உழைப்புகள் தேவைப்பட்ட இடத்திற்கு எந்திரங்கள் வந்து விட்டது . இரண்டு நிறத்திற்கு யோசித்தவர்கள் இன்று 14 நிறம் வரைக்கும் கலக்கிக் கொண்டிருக்கின்றார்கள் . அதாவது உங்கள் புகைப்படத்தை அல்லது குடும்ப உறுப்பினர்களைக் கொண்ட புகைப்படத்தை ஒரே நாளில் வண்ண வடிவமாக மாற்றித் துணியில் பிரிண்ட் அல்லது எம்ப்ராய்ட்ரி வடிவத்தில் தந்து விடக்கூடிய நவீன தொழில் நுட்ப வசதிகளைக் கொண்டது தான் இன்றைய ஆயத்த ஆடை உலகம் . இது தவிர ரோட்டரி பிரிண்டிங் என்றொரு பூதம் இந்தத் துறையையே மாற்றி விட்டது . ஒரு பெரிய தொழிற்சாலை போலவே 24 மணி நேரமும் இயங்கிக் கொண்டிருக்கின்றது . இது எந்த அளவுக்கு வளர்ந்துள்ளது தெரியுமா ? எத்தனை ஆயிரம் கிலோ ? உங்களுக்கு எத்தனை மணி நேரத்தில் வேண்டும் என்கிற அளவுக்கு இன்றைய நவீன தொழில் நுட்பம் இந்தத் துறையை வளர்ச்சியடைய வைத்துள்ளது . என்ன வேண்டுமானாலும் பெறலாம் . எப்போது வேண்டுமானாலும் பெற்றுக் கொள்ளலாம் என்கிற அளவுக்கு வளர்ந்து விட்டது . மொத்தத்தில் முதலீடு செய்யப் பணம் இருந்தால் போதும் . உலகளாவிய வணிக ஒப்பந்தத்தம் உருவாக்கிய செயல்பாட்டின் காரணமாக எந்த உயர் ரகத் தொழில் நுட்பத்தையும் கண்ணிமைக்கும் நேரத்திற்குள் திருப்பூருக்குள் கொண்டு வந்து விடலாம் . அந்நிய முதலீடு என்பது நம் நாட்டிற்குத் தேவையில்லை என்ற கருத்து முழுமையாகச் செல்லுபடியாகாத ஒரே ஊர் என்றால் அது திருப்பூர் மட்டுமே . காரணம் இங்குள்ள ஒவ்வொரு துறையிலும் உள்ள பல வித நவீன ரக எந்திரங்கள் அனைத்தும் ஒவ்வொரு நாடுகளில் இருந்தும் இறக்குமதி செய்யப்பட்டவையே . ஐந்து லட்சம் முதல் ஐந்து கோடி வரைக்கும் பலதரப்பட்ட எந்திரங்கள் தான் இங்கே ஆட்சி செய்கின்றது . ஆனால் வருடந்தோறும் லட்சணக்கான பொறியாளர்களை இந்தியா உருவாக்கிக் கொண்டிருக்கின்றது என்பதை நாம் நினைவில் வைத்திருக்க வேண்டும் . இங்கே எந்தக் கண்டுபிடிப்பும் உருவாக்கப்பட வில்லை என்பதோடு அதற்கான முயற்சிகளின் தொடக்கம் கூட இங்கே உருவாக்கப் படவில்லை . அது குறித்து இங்கே எந்த ஆட்சியாளர்களும் கவலைப்படவும் இல்லை என்பது தான் ஆச்சரியத்தின் உச்சம் . நாம் 66 ஆண்டுகளுக்கு முன்னால் வரைக்கும் யாருக்கோ அடிமையாகத் தான் இருந்து அடக்கமாக வாழ்ந்து பழகியிருந்தோம் . இன்றும் பெரிய மாறுதல்கள் இல்லை . சந்தைப் பொருளாதாரத்தில் ஒரு அங்கமாக இருக்கின்றோம் . ஆனால் நம்மை ஏதோவொரு சர்வதேச நிறுவனம் ஆட்டிப்படைத்துக் கொண்டிருப்பதைத் தெரியாமலே பணம் துரத்தும் பறவையாக மாறி நாமும் சுதந்திரமாக வாழ்ந்து கொண்டிருக்கின்றோம் என்று நம்பிக் கொண்டிருக்கின்றோம் . இருட்டுக்குள் பாம்புகளுடன் நின்று கொண்டிருந்தாலும் பலவற்றையும் யோசித்துக் கொண்டிருந்த என்னை வெளியே நின்று கொண்டிருந்த முதலாளி ” இருட்டுக்குள் என்ன பார்த்துக் கொண்டிருக்கீறீங்க ?” என்ற அழைத்த குரல் கேட்டதும் சுயநினைவுக்குத் திரும்பினேன் . இப்போது என் எதிரே படம் எடுத்து எதிரே நிற்கும் பாம்பு பங்களாளிகளுடன் ஒரு சமாதான உடம்படிக்கையை அவசரமாக உருவாக்கியே ஆக வேண்டும் என்ற அவசரத்தில் இருந்தேன் . நான் பாம்பு என்று கத்தினால் வெளியே இருக்கும் இரண்டு ஜம்பவான்கள் நிச்சயம் உள்ளே வந்து காப்பாற்றுவார்கள் என்ற எண்ணம் எனக்குத் துளி கூட இல்லை . பெல்ட்டு அவிழ்வது கூடத் தெரியாமல் தலை தெறிக்க ஓடி விடுவார்கள் என்று யோசித்துக் கொண்டே என் இக்கட்டான சூழ்நிலையை எப்படி வென்று வருவது என்று சுற்றும் முற்றும் பார்த்தேன் . ஒரே கும்மிருட்டாக இருந்தது . பக்கத்தில் என்ன இருக்கிறது என்பதைக் கண்டு கொள்ளவே சற்று நேரம் பிடித்தது . இக்கட்டான சூழ்நிலையில் நம் தைரியமே ஆதாரம் . அவசரப்பட்டு ஒன்றும் ஆகப்போவதில்லை என்பதை உணர்ந்து கொண்டு கண்களை இருட்டுக்குள் துழாவினேன் . பக்கத்தில் தெரிந்த மேஜையின் மேல் கால் வைத்து ஏறினேன் . அது படபடவென்று சரிந்தது . சரிந்த வேகத்தில் உருவான சப்தம் கேட்டுப் பாம்புகள் வேகமாக ஊர்ந்து மறைந்தது . எந்த விலங்கும் மனிதர்களை வம்புக்கு இழுப்பதில்லை . அதற்குண்டான வாழ்க்கையில் மனிதர்கள் குறுக்கிடும் போது தான் முதலில் முறைக்கின்றது . பிறகு எதிர்க்கின்றது . கடைசியில் போராடத் துவங்குகின்றது . நானும் ஒரு வழியாக அந்த இருட்டுக்குள் போராடி தட்டுத்தடுமாறி வெளியே வந்தேன் . ஆனால் நான் இப்போது இந்த நிறுவனத்தில் பார்த்த பிரிண்ட்டிங் துறையில் பார்த்த வசதிகள் புதிய தொழில் நுட்ப வசதிகள் உருவாகாத காலகட்டத்திற்குள் இருந்த நிலையில் இருந்தது . அதாவது எந்தத் தொழில் நுட்ப மாறுதல்களையும் இவர்கள் உள்வாங்கவே இல்லை என்பதைத் தெரிந்து கொள்ள முடிந்தது . மொத்தத்தில் நிறுவனத்திற்கு ஒரு பெயர் . அதற்கு நான் தான் முதலாளி என்ற கம்பீரம் . ஆனால் உள்ளே உயிரற்ற உடம்பாய் மொத்த நிர்வாகமும் ஸ்தம்பித்துப் போய்க் கிடக்கின்றது . அது குறித்த அக்கறையின்றி இன்னமும் சுயபெருமையைப் பறைசாற்றிக் கொண்டு வெட்கமின்றித் திரியும் மனிதர் வெளியே நின்று கொண்டு இன்னமும் தனது சுயபுராணத்தை நிறுத்தாமல் சொல்லிக் கொண்டிருந்தார் . இவரை எப்படி அழைப்பீர்கள் ? எல்லாத் தொழிலும் முதலீடு செய்துள்ளவர்கள் முதலாளி தான் . ஆனால் அதற்கான தகுதிகள் எதுவுமின்றி இருந்தால் வந்த சுவடு தெரியாமலேயே போட்டு முதல் அனைத்தும் குறிப்பிட்ட காலகட்டத்திற்குள் காணாமல் போய்விடும் அல்லவா ? அப்படித்தான் இங்கேயும் நடந்துள்ளது . முதலாளி வெளியே நின்று கொண்டு இன்னமும் தன் சுயபுராணக் கதையைப் பேசிக் கொண்டிருந்தார் . விதியே என்று நொந்தபடி மீண்டும் அவர்களுடன் பயணித்து அலுவகத்திற்குத் திரும்பினேன் . என் மனதிற்குள் வைராக்கியம் இன்னும் ஒரு படி அதிகமாக உருவாகியிருந்தது . அவசர சிகிக்சையில் இருப்பவனுக்கு ஆறுதல் தேவையில்லை . உடனடியாகச் செய்தே ஆக வேண்டிய முதலுதவிகள் தான் தேவைப்படும் . இந்த நிறுவனத்தை மேலே கொண்டு வருவதற்கு முக்கியமான இரண்டு விசயங்களை உடனடியாகச் செய்தே ஆக வேண்டும் என்று என் மனதில் தோன்றியது . உடனடி வருமானம் வரக்கூடிய விசயங்களில் கவனம் செலுத்த வேண்டும் . அதுவும் உடனே செய்தாக வேண்டும் . தோட்டத்திற்குள் உற்பத்தித் துறை தவிர்த்துத் தனியாக மூன்று துறைகள் இருந்தது . நிட்டிங் மற்றும் பிரிண்டிங் என்ற இரண்டு துறைகளில் கவனம் செலுத்தினால் வாரந்தோறும் குறிப்பிட்ட வருமானத்தை உள்ளே கொண்டு வர முடியும் என்ற நம்பிக்கை உருவானது . இவை இரண்டும் வாரந்தோறும் ஆயிரக்கணக்கில் வரக்கூடிய வருமானமாகத் தான் இருந்தது . ஆனால் உள்ளே இருந்த மற்றொரு துறையான சாயப்பட்டறையை மட்டும் இயக்க முடிந்தால் லட்சக்கணக்கில் கொண்டு வர முடியும் . ஆனால் அரசாங்க நடைமுறைகள் தொடங்கி ஒவ்வொன்றும் பயமுறுத்துவதாக இருந்தது . சாயப்பட்டறையைப் பழையை நிலைமைக்குக் கொண்டு வருவது சாதாரண விசயமாகத் தெரியவில்லை . அரசாங்கம் சம்மந்தப்பட்ட பல சட்டசிக்கல்கள் இருந்தது . இதற்கு முன்னால் இருந்தவர்கள் புகுந்து விளையாடி இருந்தார்கள் . மின்சார வாரியம் ஒரு பக்கம் சீல் வைத்து விட்டு சென்று விட மற்றொரு புறம் மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் ஆப்பு அடித்திருந்தார்கள் . எந்தப்பக்கம் திரும்பினாலும் சேதாரம் ஏராளமாக இருந்தது . இது தவிர இதை மீண்டும் இயக்க கோடிக்கணக்கான ரூபாயை இதற்குள் இறக்கியிருந்தார்கள் . புதிய உபகரணங்கள் என்று ஆலோசனை சொன்ன ஒவ்வொருவரையும் நம்பி மனம் போன போக்கில் செலவழித்து இருந்தார்கள் . ” பட்ட காலிலே படும் . கெட்ட குடியே கெடும் ” என்ற பழமொழியைக் கேள்விப்பட்டு இருக்கின்றார்களா ? இதற்கான முழு அர்த்தமும் எனக்கு இங்கே தான் தெரிந்தது . ஒவ்வொரு விசயத்திற்குள்ளும் உள்ளே நுழைந்து வெளியே வந்த போது ஒரு நல்ல சிறுகதையின் சுவராசியம் போலவே எனக்குத் தெரிந்தது . நேர்மையுடன் வந்து அணுகியவர்கள் அத்தனை பேர்களுக்கும் இவர் நாமத்தை பரிசாகத் தந்த காரணத்தினால் நேர்மையற்ற அத்தனை பேர்களும் வந்து அல்வா கொடுத்து விட்டு சென்று இருந்தார்கள் . செலவு அதிகமானதே தவிர எந்தச் செயல்பாடுகளும் முடிவடையவில்லை . எல்லாமே அறைகுறையாக இருந்தது . ஒவ்வொன்றையும் மனதிற்குள் குறித்து வைத்துக் கொண்டேன் . என் கருத்து எதையும் சொல்லவில்லை . எனக்கு நன்றாகப் புரிந்து விட்டது . எவர் எதைச் சொன்னாலும் அதைச் சந்தேகத்தின் அடிப்படையிலே பார்த்துப் பழகியவரிடம் நாம் என்ன சொன்னாலும் எடுபடாது என்பதைப் புரிந்து கொண்டேன் . நம் செயல்பாடுகள் மட்டுமே இவர் குணத்தை மாற்றும் என்பதை உறுதியாக நம்பினேன் . அப்பாவும் , மகனும் என்னை மீண்டும் அலுவலகத்தில் கொண்டு வந்து விட்டதும் என் திட்ட அறிக்கையைத் தயார் செய்யத் துவங்கினேன் . முக்கியமாக உடனடியாகச் செய்ய வேண்டிய வேலைகள் . நிரந்தரமாகச் செய்ய வேண்டிய வேலைகள் என்று இரண்டு பகுதியாகப் பிரித்துக் கொண்டேன் . மூன்று வாரங்கள் இடைவிடாது பாடுபட்டதன் பலனாகப் பாதையின் தொடக்கம் தெரிந்தது . முக்கியப் பதவிகளில் தகுதியான நபர்களை நியமிக்க முடிந்தது . அதிர்ஷ்டவசமாக ஒரு பெரிய ஒப்பந்தம் கைக்கு வந்தது . பிரிண்ட்டிங் மற்றும் நிட்டிங் துறைக்கு நியமிக்கப்பட்டவர்களிடம் முதலில் சுத்தம் செய்து விட்டு எது முதலில் தேவை ? என்பதைக் கணக்கு எடுக்கச் சொன்னேன் . சிறிய முதலீடுகள் தேவை என்பதை உணர்த்திய போதும் முதலாளி அது குறித்துக் கவலைப்பட்டதாகவே தெரியவில்லை . தொடர்பில் இருந்த நபர்கள் மூலம் கடனுக்கு ஏற்பாடு செய்து வேலைகள் நிற்காத அளவுக்கு விரட்டி வேலை வாங்கிக் கொண்டிருந்தேன் . மாத இறுதியில் புதிதாகச் சேர்ந்தவர்களுக்குச் சம்பளம் நிர்ணயித்த போது தான் முதலாளியின் முழுச் சொரூபமும் எனக்குப் புரிந்தது . நாம் ஏன் இந்தச் சாக்கடையில் இருக்க வேண்டும் என்ற எண்ணமும் உருவானது . [] 15 15 பணக்காரன் பேசுவதெல்லாம் தத்துவமே [] 15 பணக்காரன் பேசுவதெல்லாம் தத்துவமே மாதச் சம்பளத்திற்கான பட்டியலை முதலாளியின் மேஜையில் வைத்த போது அவர் என்னை மேலும் கீழும் பார்த்தார் . சிரித்துக் கொண்டே ” என்ன இது ?” என்று பார்வையால் கேட்டார் . நானும் சிரித்துக் கொண்டே ஒன்றும் பேசாமல் என்னருகே இருந்த காகிதத்தை அவர் பார்வையில் படும்படி அவர் பக்கம் தள்ளிவைத்துவிட்டு அவரை நிமிர்ந்து பார்த்தேன் . அவர் மீண்டும் என்னைப் பார்த்துச் சிரித்துக் கொண்டே அந்தக் காகிதத்தின் மேல் பார்வையை ஓட விட்டார் . அவரின் சிரிப்பு உண்மையான சிரிப்பல்ல . அதுவொரு கள்ளச் சிரிப்பு . பலரையும் கலங்க வைக்கும் சிரிப்பு . புரிந்தவர்களுக்கு எரிச்சலை வரவழைக்கக்கூடிய சிரிப்பு . மற்றவர்களை எகத்தாளமாகப் பார்க்கக்கூடிய சிரிப்பு . எல்லோருமே தனக்குக் கீழ் தான் என்று எண்ணக்கூடிய கீழ்த்தரமான சிரிப்பு . நான் நன்றாக உணர்ந்து வைத்திருந்த காரணத்தால் என் உணர்ச்சியைக் காட்டிக் கொள்ளாமல் கூர்மையாக நேருக்கு நேர் அவர் கண்களைப் பார்த்தேன் . மனிதர்களின் கண்களை நேருக்கு நேர் பார்த்துப் பேசி பழகும் போது பலவற்றை நம்மால் புரிந்து கொள்ள முடியும் . அவர்களின் கள்ளத்தனத்தை அவர்களின் கண்கள் காட்டிக் கொடுத்துவிடும் . இந்த நிறுவனத்தில் நான் நுழைந்தது முதல் என்னை எந்த இடத்திலும் முதலாளியிடம் வெளிக்காட்டிக் கொண்டதில்லை . எதற்காகவும் அவசரப்பட்டு உணர்ச்சிவசப்படுவதில்லை . வார்த்தைகளைக் கொட்டிவிடுவதில்லை . அவர் முன்னால் அமரும் ஒவ்வொரு நிமிடமும் என்னைப் புதுப்பித்துக் கொண்டே இருப்பதுண்டு . கீழ்த்தரமான எண்ணம் கொண்டவர்களுடன் நாம் பழகும் போது பல மடங்கு கவனமாக இருக்க வேண்டும் . எந்த நொடியிலும் நாம் நம்மை இழந்து விடக்கூடாது . எந்தச் சமயத்திலும் அவர்களின் கட்டுப்பாட்டுக்குள் நாம் சென்று விடக்கூடாது என்பதில் கவனமாக இருக்க வேண்டும் . எதிர்மறை எண்ணங்கள் நம்மைத் தாக்க அது மன வலிமையைக் குறைப்பதோடு அதன் தாக்கம் உடலில் பரவும் போது நாம் சேர்த்து வைத்துள்ள மனோபலத்தைப் பாதியாகக் குறைத்து விடக்கூடிய ஆபத்துள்ளது . நாம் வாழும் சமூகம் என்பது நாடகதாரிகளால் சூழப்பட்டது . கள்ளத்தனம் தான் தங்கள் கொள்கை என்ற எண்ணம் கொண்ட பெரும்பான்மையினர் மத்தியில் தான் நாம் வாழ்ந்தாக வேண்டும் . இது சரி , இது தவறு என்பதற்கு அப்பாற்பட்டு இங்கே ஒவ்வொருவரும் சூழ்நிலைக் கைதியாகத் தான் வாழ்கின்றார்கள் . இவற்றை எந்தப் புத்தக அறிவும் நமக்குத் தந்து விடாது . மனிதர்களுடன் பழகும் போது தான் நம்மால் உணர்ந்து கொள்ள முடியும் . நாம் தான் ஒவ்வொரு சமயத்திலும் புரிந்து கொள்ள வேண்டும் . சிரிப்பு மற்றும் அழுகை இந்த இரண்டும் மனிதனுக்கும் மட்டுமே உரிய சிறப்பம்சம் . விலங்குகளில் அதிகப் பாரம் சுமக்கும் போது அவைகள் அனுபவிக்கும் அவஸ்த்தைகளை அவற்றின் செயல்பாடுகளில் இருந்து கூர்மையாகக் கவனித்துப் பார்க்கும் போது நம்மால் புரிந்து கொள்ள முடியும் . சில சமயம் அவற்றின் கண்ணீர் நமக்கு அடையாளம் காட்டும் . அடக்க முடியாத ஆற்றாமையில் மதம் பிடிக்கும் யானைகளின் செயல்பாடுகளை அதன் பிளிறல் சப்தத்தில் இருந்து நம்மால் உணர்ந்து கொள்ள முடியும் . ஆனால் விலங்குகளின் மகிழ்ச்சியென்பது அதன் சப்த ஒலிகளில் மட்டுமே நம்மால் உணர்ந்து கொள்ள முடியும் . வினோத மொழியில் விதவிதமான சந்தோஷங்களை அவைகள் வெளிக்காட்டிக் கொள்கின்றன . பசி இல்லா மிருகம் தன் எதிரே வரும் எந்த விலங்கினங்களையும் எந்த நிலையிலும் தொந்தரவு செய்வதில்லை . விலங்குகளின் காமப்பசிக்கு குறிப்பிட்ட பருவம் மட்டுமே . ஆனால் மனித இனத்தில் மட்டும் இவை எதுவுமே செல்லுபடியாகாத பல வினோதங்கள் உண்டு . கிராம வாழ்க்கையில் நம் வெளிப்படைத் தன்மை ஒவ்வொரு சமயத்திலும் வெளிப்பட்டு விடும் . பரஸ்பரம் அதற்குரிய அங்கீகாரமும் , மரியாதையும் கிடைக்கும் போது அது இயல்பான பழக்கமாகவே இருக்கும் . அதுவே அங்கு வாழும் மனிதர்களின் இயல்பான குணமாக மாறிவிடும் . ஆனால் நகர்புற வாழ்க்கையில் பல சமயம் நாடக நடிகர் போலவே ஒவ்வொருவரும் வாழ்ந்தாக வேண்டிய கட்டாயம் உருவாகின்றது . நாம் வகிக்கும் பதவியைப் பொறுத்து மகிழ்ச்சியை வெளிக்காட்ட முடியாத நிலையும் தகுதியைப் பொறுத்து அதனைப் பகிர்ந்து கொள்ள முடியாத தன்மையும் உருவாகின்றது . ” நீ அற்புதமான காரியத்தைச் செய்து உள்ளாய் ” என்று பாராட்டினால் உடனே ” என் சம்பளம் ரொம்பக் குறைவா இருக்கு சார் . முதலாளிக்கிட்டே கொஞ்சம் பார்த்து சொல்லுங்க சார் ?” என்று அடுத்த வேண்டுகோள் நம்மைத் தாக்கும் . இன்னும் கொஞ்சம் நெருங்கிப் பழகினால் ” சார் எனக்கு அட்வான்ஸ் தொகை வேண்டும் ” என்பவர்கள் மத்தியில் வாழும் போதும் நாமே நம் இயல்பான குணத்தை மறைத்துக் கொள்ள வேண்டியதாக இருக்கும் . பல முதலாளிகள் ஒவ்வொரு சமயத்திலும் பெற்ற அனுபவங்களின் அடிப்படையில் தனித்தனி தீவுகளாக வாழத் தொடங்கின்றார்கள் . அவர்களின் இயல்பான குணங்கள் மாறி விடுகின்றது . ஆனால் என் முதலாளியின் குணமோ எல்லாவிதங்களிலும் வித்தியாச மனிதராக இருந்தார் . தனித்தீவாக இருந்தார் . தன்னைத் தவிர இந்த உலகத்தில் வேறு எவரும் நன்றாக இருந்து விடக்கூடாது என்ற எண்ணத்தில் இருந்தார் . எவ்வித பாரபட்சமும் எவரிடமும் காட்டுவதும் இல்லை . தன் குடும்பத்தைத் தவிர மற்ற அத்தனை பேர்களும் அவருக்குச் சேவகம் செய்யக் காத்திருக்க வேண்டும் என்ற எண்ணத்தில் இருந்தார் . தனது தோல்விகளை ஏற்றுக் கொள்ளத் தயாராக இல்லை . தோல்விகள் தொடர்ச்சியாகத் தாக்கிய போதும் தனது எண்ணங்களை மாற்றிக் கொள்ள அவர் விரும்பவில்லை . தான் கடந்த காலத்தில் பெற்ற வெற்றிகளை மட்டுமே தனக்குரிய தகுதியாக வைத்திருந்தார் . மாறிய சமூகச் சூழல் எவ்விதத்திலும் அவரைப் பாதிக்கவில்லை . தனது நிறுவனத்தின் வளர்ச்சி வேண்டும் என்று நினைத்தாரே தவிர அதற்காக உழைக்க வேண்டும் என்ற எண்ணமில்லை . காரணம் கூலிக்கு மாரடிக்க ஆட்கள் கிடைப்பார்கள் . நாம் எப்போதும் போலச் சுகவாசியாக இருந்து விட முடியும் என்ற நம்பிக்கை தான் அவரை வழிநடத்தியது . அவரின் தினசரி செயல்பாடுகளும் அப்படித்தான் இருந்தது . ஒவ்வொரு நாளும் காலையில் பத்து மணி அலுவலகத்திற்கு வருவார் . பத்து நிமிடம் என்னை வரவழைத்து பேசி விடுவார் . அதுவொரு வினோதமான நிகழ்வாக இருக்கும் . மகன் தன் பிறந்த நாளுக்கென்று வழங்கிய டேப்லெட் பிசியை விரித்து வைத்துக் கொண்டு அமர்ந்திருப்பார் . அவர் வைத்திருந்த மாடல் அந்தச் சமயத்தில் தான் வெளியாகி இருந்தது . ஒவ்வொரு நாளும் அலுக்காமல் அதனைப் பற்றி அளந்து விடுவார் . பொறுமையாகக் கேட்டுக் கொள்வேன் . இடையே ” உங்களுக்கு இதை இயக்கத் தெரியுமா ?” என்று கேட்பார் . நான் அவர் எதிர்பார்ப்பை பூர்த்திச் செய்யும் வண்ணம் ” எனக்குத் தெரியாது சார் . உங்களிடம் இருந்து இப்படி ஒரு வசதியான டேப்லெட் பிசியைப் பார்க்கின்றேன் ” என்றதும் சப்தமிட்டு சிரிப்பார் . திருப்தியடைந்தவராய் அடுத்த விசயத்திற்குத் தாண்டிச் செல்ல அவகாசம் கொடுத்து மெல்ல விசயத்திற்கு இழுத்துக் கொண்டு வருவேன் . முதலாளிகளிடம் பேசுவது தனிக்கலை . உடையாடல்களின் தொடக்கத்தில் பணம் சார்ந்த விசயங்களை எக்காரணம் கொண்டும் பேசி விடக்கூடாது . நமது சொந்த விருப்பங்களை எக்காரணம் கொண்டு சொல்லிவிடக் கூடாது . முக்கியமாக நிர்வாகத்தின் பலகீனங்களைச் சொல்லி விடக் கூடாது . கடைசியாக உண்மையான நிலவரங்களை எடுத்துரைக்கக் கூடாது . நிறுவனத்தின் கடன்காரர்களின் தொந்தரவுகளைக் காட்டிக் கொள்ளக்கூடாது . எல்லாநிலையிலும் பொறுமையாக வலை விரித்தவன் மீன் சிக்குமா ? என்பது போலக் காத்துக் கொண்டிருக்க வேண்டும் . சமயம் சந்தர்ப்பங்கள் சரியாக இல்லாதபட்சத்தில் அடுத்த நாளுக்காகக் காத்திருக்க வேண்டும் . மொத்தத்தில் நம்மோடு பேச அவர்களுக்கு விருப்பத்தை உருவாக்க வேண்டும் . அதனை ஒவ்வொரு நாளும் உருவாக்கி வைத்திருக்க வேண்டும் . இது தான் முதன்மைப் பதவிகளில் இருப்பவர்களின் முக்கியச் சூத்திரமாக இருக்க வேண்டும் . பலதரப்பட்ட முதலாளிகளிடம் நெருங்கிப் பழகிய வாய்ப்பிருந்த காரணத்தினால் இவரைக் கையாள்வது எளிதாக இருந்தது . முட்டாள்களை நாம் முட்டாள் என்று அழைக்காமல் நீ தான் உலகத்திலே புத்திசாலி என்று சொல்லிப் பாருங்கள் . அது ஒன்றே அவர்களுக்குப் போதுமானதாக இருக்கும் . அவர் விருப்பத்தை உணர்ந்து கொண்டு , அவரின் கொடூரமான குணத்தைச் சகித்துக் கொண்டு என் வாய்ப்புக்காகக் காத்திருந்த போது தான் மாதச் சம்பளப் பட்டியலைப் பார்த்து விட்டு இப்படிக் கேட்டார் . ” இதென்ன புதுப்பழக்கம் ?” என்றார் . நான் குழப்பமாக ” எதைச் சொல்கிறீர்கள் ?” என்றேன் . ” மாதம் தொடங்குவதற்கு முன்பே மாத சம்பளம் பட்டியலை கொண்டு வந்து நீட்டுறீங்க ? இன்னும் ஒரு ஒப்பந்தம் கூட வெளியே போக வில்லையே ?” என்றார் . எந்த ஒப்பந்தமும் ஏற்றுமதியாகவில்லை என்று அக்கறையோடு கேட்பவர் இதற்காக என்ன முதலீடு போட்டுள்ளார் ? என்று கேட்டால் கோபம் வந்து விடும் என்பதாக அமைதியாகப் பார்த்துக் கொண்டு ” அடுத்த மாதம் இறுதியில் தொடர்ச்சியாகப் போய் விடும் ” என்றேன் . ஆச்சரியத்துடன் ” எப்படி ?” என்று கேட்ட போது சகஜநிலைமைக்கு வந்துள்ளார் என்பதைப் புரிந்து கொண்டு அடுத்த மாதம் முதல் ஒவ்வொரு வாரமும் எடுத்துள்ள ஒப்பந்தத்தின் மதிப்பு , அதன் மூலம் கிடைக்கக்கூடிய லாபம் , அலுவலகம் மற்றும் தொழிற்சாலையில் சமீப காலத்தில் உருவாக்கப்பட்ட மாறுதல்கள் , பிரிண்டிங் , நிட்டிங் மூலம் வரப்போகின்ற லாபம் என்று வரிசையாக அவருக்குப் பட்டியலிட்டுச் சொன்ன போது அவர் முகம் மகிழ்ச்சிக்கு மாறினாலும் அடுத்தக் கேள்வியை என்னை நோக்கி வீசினார் . ” நீங்க கணக்குச் சம்மந்தப்பட்ட விசயங்களில் அதிகக் கவனம் செலுத்த வேண்டாம் . நம்ம அக்கவுண்ட்ஸ் துறையிடம் எல்லாவற்றையும் கொடுத்து விடுங்க . அவர்களிடம் நான் கேட்டுக் கொள்கின்றேன் ” என்றார் . எனக்குப் புரிந்து விட்டது . அதாவது லாபம் சார்ந்த விசயங்கள் என் கண்ணில் படாமல் இருந்தால் என் விருப்பம் சார்ந்த விசயங்களில் நான் அதிகப் பிடிவாதம் காட்டாமல் இருப்பேன் என்று அவரின் எண்ணம் . மடத்தனத்தின் உச்சம் என்று மனதில் நினைத்துக் கொண்டு ” அக்கவுண்ட்ஸ் துறை மாதிரி மற்றொரு துறையை நாம் உருவாக்க வேண்டும் சார் ?” என்றார் . ஆச்சரியத்துடன் பார்த்தவரிடம் ” ப்ளானிங் துறை என்று உருவாக்கி விட்டால் அவர்களே எல்லா வேலையையும் உருவாக்கி விடுவார்கள் . திட்டமிடுதல் தொடங்கிக் கடைசி வரைக்கும் அவர்கள் கட்டுப்பாட்டில் இருக்கும் . நான் அவர்கள் சொல்வதைக் கேட்டு நடந்தாலே போதுமானதாக இருக்கும் . தினந்தோறும் அக்கவுண்ட்ஸ் மற்றும் ப்ளானிங் துறையைச் சார்ந்த இருவரும் உங்களை வந்து பார்த்தாலே போதுமானது ” என்றேன் . [] அவருக்குப் புரிந்து விட்டது . நாம் விடாக்கண்டன் என்றால் இவன் கொடாக்கண்டன் போல மடக்குகிறான் என்று புரிந்து கொண்டு ” இல்லையில்லை . அதெல்லாம் சரியாக வராது . இப்ப உள்ள மாதிரியே நீங்களே நிர்வாகத்தை நடத்துங்க . உங்கள் கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ளுங்க . சம்பளம் நிர்ணயிப்பது மட்டும் நான் பார்த்துக் கொள்கின்றேன் ” என்றார் . ” நீங்க சொல்றது சரிதான் சார் . எனக்குத் தேவையானவர்களை நீங்களே தேர்ந்தெடுத்து தந்து விடுங்க . அது தான் சரியாக இருக்கும் ” என்றதும் கோபத்துடன் உச்சிக்கே சென்று கத்தத் தொடங்கினார் . ” நான் ஒன்று சொன்னால் நீங்க ஒன்று சொல்றீங்க . இது சரிப்பட்டு வராது ” என்று தொடர்ந்து பேசிக் கொண்டிருந்தவரை புறக்கணித்து விட்டு என் வண்டி சாவியை எடுத்துக் கொண்டு மாடிப்படியில் கீழே இறங்கத் தொடங்கினேன் . அவர் வெளியே வந்து எட்டிப் பார்த்தவர் அவர் மகன் இருக்கும் அறைக்குச் சென்று விட்டார் . கீழே வந்த போது மகன் என்னை அழைப்பதாகச் சொன்னதையும் மீறி வெளியே வந்து வாகனத்தை இயங்கிய போது மகனே கீழே வந்து விட்டார் . ” கொஞ்சம் பேசனும் மேலே வர்றீங்களா ?” என்று தன்மையாகப் பேச மீண்டும் அவருடன் வந்து அவர் அறையில் அமர்ந்து போது எனக்கு எரிச்சலாக இருந்தது . அப்பாவுக்கும் மகனுக்கும் அடிப்படையில் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தம் உண்டு . அவர் அடித்துச் சாய்ப்பார் . இவர் தண்ணீர் ஊற்றி தெளிய வைப்பார் . ஆனால் ஓன்றும் தெரியாது போது இருவரும் சோர்ந்து நாடகமாடுவார்கள் . பல நிகழ்ச்சிகளில் இதை நான் கவனித்துக் கொண்டிருந்தாலும் நான் கண்டு கொள்வதில்லை . பன்றிகளுக்குச் சாக்கடை தான் சுகம் என்றால் வீட்டுக்குள் கொண்டு வந்து நிறுத்தினாலும் இருக்கும் இடத்தைச் சாக்கடையாகத் தானே மாற்றும் . ஆனால் மகன் எப்படி இதைத் தொடங்கப் போகின்றார் என்று ஒன்றும் தெரியாது போல அப்பாவியாக முகத்தை வைத்துக் கொண்டு ” சொல்லுங்க சார் ” என்றேன் . ” என்ன கிளம்பிட்டீங்க ?” என்றார் . எல்லாமே தெரிந்து அப்பா இட்ட கட்டளையை நிறைவேற்ற என்னை முன்னால் உட்கார வைத்துக் கொண்டு கேட்கும் கேணதனத்தை ரசித்துக் கொண்டே ” இல்லை சார் . தலைவலியாக இருக்கு . அதுதான் வீட்டுக்குக் கிளம்பிட்டேன் ” என்றேன் . ” வேறொன்றும் பிரச்சனையில்லையே ?” என்றார் . நானும் ஒன்றும் தெரியாது போல ” ஒன்றுமில்லையே ” என்றேன் . அவர் சிரித்துக் கொண்டே ” அப்பா என்ன சொன்னார் ” என்றார் . நானும் விடாமல் ” ஒன்றும் சொல்லவில்லையே ” என்றேன் . அவர் பார்வை எனக்குப் புரிந்தது . நீ கிறுக்கனா ? இல்லை நான் கிறுக்கனா ? என்பது போல இருந்தது அவருக்குப் புரிந்து விட்டது . சற்று கீழே இறங்கி வந்து பேசத் தொடங்கினார் . ” அப்பா சம்பளப்பட்டியல் பார்த்து டென்சன் ஆனாராமே ?” என்றார் . ” அப்படியா ?” என்றேன் . அவருக்குப் புரிந்து விட்டது . அப்பட்டமாகவே பேசத் தொடங்கினார் . அப்பா மேல் அவருக்கிருந்த ஆதங்கத்தைப் படிப்படியாகச் சொல்லிக் கொண்டே வந்தார் . நாகரிகமாகப் பேசினாலும் அவர் அழுது விடுவாரோ என்று எண்ணிக் கொண்டு பேச்சை மாற்றினேன் . தன் தகப்பன் ஒரு 420 என்ற எந்த மகனால் அப்பட்டமாகச் சொல்ல முடியுமா ? அவர் சுற்றி வளைத்துப் பேசினாலும் என்னால் எளிதில் புரிந்து கொள்ள முடிந்தது . கடைசியில் அவராகவே வழிக்கு வந்தார் . ” தயவு செய்து அவசரப்பட்டு எந்த முடிவும் எடுத்து விடாதீர்கள் . எங்கப்பா யாரையும் பார்த்து மிரண்டு போனது இல்லை . அவரின் கடந்த இருபது வருட அனுபத்தில் உங்களை மாதிரி எத்தனையோ பேர்களை இங்கே வேலைக்கு வைத்துள்ளார் . ஆனால் உங்களின் அசாத்திய திறமையைப் பார்த்து அவரே என்னிடம் பலசமயம் ஆச்சரியமாகப் பேசியுள்ளார் . ஆனால் பணம் சார்ந்த விசயங்களில் அவர் குணம் இன்னமும் மாறவில்லை . அது எங்களுக்கே தெரியும் . உங்களுக்கு என்ன வேண்டுமானாலும் என்னிடம் சொல்லுங்க . நான் வீட்டில் சண்டை போட்டு அதை வாங்கித் தருகின்றேன் ” என்று தொடர்ச்சியாகப் பேசிக் கொண்டே சென்றார் . மகன் பேசிக் கொண்டிருந்த போது சற்று நேரத்திற்கு முன் நடந்த சம்பவங்களை யோசித்துப் பார்த்தேன் . சம்பளப் பட்டியலில் இறுதியில் சுட்டிக் காட்டப்பட்டுள்ள பெருந்தொகை முதலாளிக்கு எரிச்சலை உருவாக்கி இருக்க வேண்டும் . அவர் வைத்திருந்த சிவப்பு நிற போனாவால் அதன் வட்டமிட்டு ” நீங்க சொல்கின்ற திட்டத்திற்கும் நாம் இத்தனை பேர்களுக்குக் கொடுக்கக் சம்பளமும் அதிகமாகத் தெரிகின்றதே ?” என்றார[] எனக்கு எரிச்சலும் கோபமும் உள்ளே பொங்கிக் கொண்டிருந்தாலும் வெளியே காட்டிக் கொள்ளாமல் மீண்டும் ஒரு முறை விலாவாரியாக அவரவர் தகுதி குறித்த விசயங்களைப் பேசி விட்டு அவர்களின் தனித் திறமைகளைப் பட்டியலிட்டு காட்டினேன் . அடுத்த மூன்று மாதத்திற்குத் திட்டமிட்டுள்ள மூன்று கோடிக்கு உண்டான உழைப்பின் அவசியத்தைச் சுட்டிக் காட்டினேன் . எல்லாமே அவருக்குப் புரிந்தது . நிர்வாக வளர்ச்சி என்பது அவருக்குக் கண்கூடாகத் தெரிந்தது . சுடுகாடு போல இருந்த தொழிற்சாலை ஒரு மாதத்திற்குள் 300 பேர்கள் புழங்கும் இடமாக மாறிக் கொண்டிருப்பதும் ஒவ்வொரு வாரமும் அதிகரித்துக் கொண்டிருப்பதும் அவருக்கு ஆச்சரியத்தைத் தந்த போதும் அதனைப் பாராட்ட மனமில்லாது எந்த இடத்தில் குறை காணலாம் ? அதனை வைத்துக் கொண்டு எந்த இடத்தில் பணத்தை இன்னமும் குறைக்க முடியும் என்று தொடர்ந்து பல கேள்விகளை எழுப்பிக் கொண்டிருந்தார் . தூங்குவது போல நடிப்பவனை எழுப்ப முடியுமா ? இனி நாமும் விளையாடிப் பார்த்து விடலாம் என்று இயல்பாக முகத்தை வைத்துக் கொண்டு ” சார் நீங்க சொல்வது சரிதான் . இதில் குறிப்பிட்டுள்ள தொகை அதிகமாகத்தான் இருக்கின்றது ” என்றபடி அவர் முகத்தைப் பார்தேன் . அப்போது தான் அவர் முகத்தில் ஆயிரம் வாட்ஸ் பல்பு எரிந்தது . ” சரியாகப் புரிஞ்சுகிட்டீங்க . எப்படிக் குறைக்கப் போறீங்க ?” என்றார் . ” பாதி நபர்களை அனுப்பி விடலாம் . எடுத்த ஒப்பந்தங்களில் பாதியை திருப்பிக் கொடுத்து விடுவோம் . பிரிண்ட்டிங் , நிட்டிங் , எம்ப்ராய்ட்ரி போன்றவற்றை இன்னும் ஆறேழு மாதங்கள் கழித்துத் தொடங்கி விடலாம் . உற்பத்தித் துறையில் உள்ள சிலவற்றை மட்டும் இயக்க முடியுமா ? என்று பார்ப்போம் . அப்போது நீங்க சொன்ன தொகையில் இன்னமும் குறைத்து விடலாம் ” என்று சொல்லிவிட்டு அப்பாவியாக முகத்தை வைத்துக் கொண்டு அவரைப் பார்த்தேன் . சுதாரித்துக் கொண்டார் . தன்னைக் கிறுக்கனாக மாற்றுகின்றான் என்பதை உணர்ந்து கொண்டு ” ஆட்களின் சம்பளத்தைக் குறைத்து விடுங்க என்றால் ஆட்களை வெளியே அனுப்பி விடலாம் என்று சொல்றீங்க ? நீங்க என்ன நினைச்சுக்கிட்டு இருக்கீங்க . நாங்க சம்பளப்பட்டியலையே 15 ந் தேதிக்கு மேல் தான் போட தொடங்குவோம் . மூன்றாவது வாரத்தில் தான் கொடுப்போம் . நீங்க எல்லாமே தலைகீழா செய்றீங்க ? இப்படிப் பழக்கப்படுத்தினா வர்றவன் அத்தனை பேர்களும் சுகவாசியாக மாறிவிடுவானுங்க ” என்று அவர் ஆழ்மன வக்கிர எண்ணங்கள் ஒவ்வொன்றையும் புலம்பலாகக் கோபத்துடன் எடுத்து வைத்த போது அமைதியாக அவரையே பார்த்துக் கொண்டிருந்தேன் . தொடர்ந்து பேசிக் கொண்டிருந்தார் . இன்று தொழில் நிறுவனங்களை நடத்திக் கொண்டிருக்கும் முதலாளிகளின் மனோபாவம் முற்றிலும் மாறி விட்டது . மிகப் பெரிய முதலீடு போட்டுள்ளவர்கள் நாம் தப்பிக்க என்ன வழி ? என்பதைத் தான் முக்கியமாகப் பார்க்கின்றார்கள் . அறம் சார்ந்த கொள்கைகள் , தொழில் தர்மம் போன்ற அனைத்தும் மாறிவிட்டது . தப்பிப் பிழைக்க வேண்டும் . தனக்கே எல்லாமும் வேண்டும் என்ற இந்த இரண்டு கொள்கையின் அடிப்படையில் தான் இன்றைய தொழில் அதிபர்களின் மனோபாவம் உள்ளது . நட்டம் வரும் போது எவர் பங்கு போட்டுக் கொள்ள வருகின்றார்கள் ? என்ற அவர்களின் கேள்வியில் எந்த அளவுக்கு நியாயம் உள்ளதோ அதே அளவுக்குத் தங்களிடம் பணிபுரிகின்றவர்களுக்கு அடிப்படை உரிமைகளைக் கூட நான் வழங்க மாட்டேன் என்பவர்களை நீங்கள் எப்படி அழைப்பீர்கள் ? இதுவொரு ஆதிக்க மானோபவம் என்பதை விடத் தன்னை , தங்கள் குடும்பத்தைத் தவிர மற்ற அத்தனை பேர்களும் அடிமையாகவே காலம் முழுக்கத் தங்களுக்குச் சேவகம் செய்ய வேண்டும் என்ற எண்ணம் கொண்டவர்களின் மனோபாவம் இப்படித்தான் இருக்கும் . இதற்குப் பின்னால் நீங்கள் சாதி , மதம் , வளர்ந்த சூழ்நிலை , கற்ற கல்வி , வளர்த்துக் கொண்ட சிந்தனைகள் என்று நீங்கள் எத்தனை காரணம் காட்டினாலும் மொத்தத்திலும் அளவுகடந்த ஆசையே இதற்கு முக்கியக் காரணமாக உள்ளது . தன் தகுதிக்கு மீறி ஆசைப்படுபடுகின்ற ஒவ்வொருவரும் தாங்கள் இருக்கும் நிலைபொறுத்துத் தங்களுக்கு வசதியான கொள்கைகளை வைத்துள்ளார்கள் . அதுவே சரியென்றும் சொல்கின்றார்கள் . முதலாளியுடன் பேசிக் கொண்டிருந்த விசயங்களை நான் யோசித்துக் கொண்டிருந்த என்னை மகன் பேசிய உடையாடல் கலைத்தது . மகன் கடைசியாகச் சொன்ன வார்த்தைகள் தான் என்னை யோசிக்க வைத்தது . ” இரண்டு வருடமாவது இங்கே நீங்க இருந்தால் நான் இந்த நிறுவனத்தை நான் எப்படி நடத்த வேண்டும் என்பதை உங்கள் மூலம் கற்றுக் கொள்வேன் ” என்றார் . வெட்கப்படாமல் அவர் கேட்ட கோரிக்கை எனக்குப் பிடித்திருந்த காரணத்தால் சமாதானமாகி சிரித்துக் கொண்டே என் இருக்கைக்கு வந்தேன் . அடுத்த ஒரு வாரம் முழுக்க என் பொழுதுகள் சற்று கரடுமுரடாகவே நகர்ந்தது . நிறுவனம் உங்களுடையது . ஆனால் நிர்வாகம் என்னுடையது . உனக்குத் தேவையான லாபம் உன்னிடம் வந்து சேரும் . நீ ஒதுங்கி நின்று வேடிக்கை மட்டும் பார் என்று சொல்லாமல் நான் என் போக்கிலேயே போக அப்பாவுக்கு உள்ளூற ஆத்திரம் இருந்தாலும் மகன் எனக்குச் சாதகமாக உருவாக்கிய பஞ்சாயத்தில் ஒவ்வொரு முறையும் வேண்டா வெறுப்பாக நான் நீட்டிய தாள்களில் கையெழுத்து போட்டு விட்டு நகர்ந்தார் . நாட்கள் மாதங்களைத் துரத்தத் தொடங்கியது . முழுமையாக மூன்று மாதங்களில் ஆள் அம்பு சேனை என்று படைபட்டாளங்கள் உருவாக நிர்வாகத்தின் முகமே மாறத் தொடங்கியது . புதிய கிளைப் பிரிவுகள் உருவாக வங்கி தானாகவே வந்து உதவக் காத்திருக்கும் அளவுக்கு நிதி சார்ந்த பரிவர்த்தனைகள் விரைவாக நடந்தேறத் தொடங்கியது . தினந்தோறும் காலை முழுக்க அலுவலகம் சார்ந்த வேலைகளை முடித்து மதியத்திற்கு மேல் தொழிற்சாலைக்குள் நுழைந்து விடுவேன் . பலசமயம் நள்ளிரவு வரைக்கும் அங்கேயே இருக்க உற்பத்தி சார்ந்த பல விசயங்களில் வெளியிடங்களில் நம்பிக்கை வரும் அளவுக்குத் தொழிற்சாலையின் முகமும் மாறத் தொடங்கியது . எப்போதும் போல அன்றொரு நாள் காலைப் பொழுதில் அலுவலகத்தின் உள்ளே நுழைந்த போது தொழிற்சாலையின் பேக்டரி மானேஜர் பதட்டமாக என் மேஜைக்கு அருகே நின்று கொண்டிருந்தார் . எனக்கு ஆச்சரியமாக இருந்தது . அவரிடம் முழு விபரத்தை கேட்ட போது ஆச்சரியம் அதிர்ச்சியாக மாறியது . காரணம் ஒரு பெண்ணால் மொத்த தொழிற்சாலையின் ஒழுக்கமே தலைகீழாகப் போகும் அளவுக்கு இருந்தது என்ற செய்தியைக் கேட்டதும் என் வாகனத்தில் அவரையும் உட்கார வைத்துக் கொண்டு தொழிற்சாலையை நோக்கி விரைந்தேன் . [] 16 16 எந்திர மனிதர்கள் [] 16 எந்திர மனிதர்கள் என் வாகனம் தொழிற்சாலையை நோக்கி சென்று கொண்டிருந்தது . எனக்குள் இனம் புரியாத கவலை இருந்தது . ஒரு நிறுவனத்தின் இதயம் , மூளை என்பது தொழிற்சாலை மட்டுமே . ஒருவர் எத்தகைய திறமைசாலியாக வேண்டுமானாலும் இருக்கலாம் . அசாத்தியமான திட்டங்களைக் கூடத் தீட்டலாம் . ஆனால் அதைச் செயல்படுத்தி வெற்றி காண்பதில் தான் அவரின் நிர்வாகத்திறமை உள்ளது . நிர்வாகத்தில் காரணங்கள் சொல்ல முடியாது . செய்த காரியங்கள் தான் நம்மைப் பற்றிப் பேசும் . உற்பத்தி தடையில்லாமல் நடக்க வேண்டும் . உற்பத்தியான பொருட்கள் வெளியே தொடர்ந்து சென்று கொண்டிருக்க வேண்டும் . சென்ற பொருட்களில் எந்தப் பிரச்சனையும் இருக்கக் கூடாது . இது சுழற்சி போலத் தொடர்ந்து கொண்டே இருக்க வேண்டும் . இப்படி நடக்கும் பட்சத்தில் தான் அலுவலகப் பணியென்பது அமைதியாக இருக்கும் . தடம் தவறினால் தடுமாற்றம் உருவாகும் என்பது இயல்பு தானே ? எனக்கும் நம்பிக்கை பூ பூத்திருந்தது . நாம் கடந்த மாதங்களில் உழைத்த உழைப்பு வீணாகவில்லை என்ற நம்பிக்கை உருவாகியிருந்தது . இனி காய் , கனி கிடைக்கும் என்ற நம்பிக்கையில் இருந்தேன் . பல படிகள் ஏறிவிட்டோம் . இனி பயணம் சுகமாக இருக்கும் என்றே நினைத்திருந்தேன் . இதோ இன்று தொழிற்சாலை நின்று போகும் அளவுக்கு ஏதோவொரு பிரச்சனை . ஆய்த்த ஆடைத் துறை மட்டுமல்ல நீங்கள் காணும் எந்தத் துறை என்றாலும் அலுவலக நடைமுறைகள் என்பதும் தொழிற்சாலை என்பதும் முற்றிலும் வேறாக இருக்கும் . வெவ்வேறு முகங்கள் கொண்ட இரண்டையும் கண்காணிக்கும் பொறுப்பில் இருந்தேன் . அதிகப் படியான மனஉளைச்சல் இருந்தது . ஒவ்வொன்றும் ஒன்றைக் கற்றுத் தந்தது . கற்றதன் வழியே பல பாடங்கள் புரியத் தொடங்கியது . பணம் படைத்தவர்களின் திருவிளையாடல் ஒரு பக்கம் . அன்றாடங் காய்ச்சிகளின் தினசரி வாழ்க்கை ஒரு பக்கம் . இரண்டும் வெவ்வேறு கோணங்கள் . ஒன்றில் மனிதாபிமானம் என்பதே இருக்காது . மற்றதில் மனிதாபிமானம் மட்டும் தான் மிச்சமாக இருக்கும் . ஒன்றில் அந்தஸ்து என்பதற்காக எவ்வித கேவலத்தைப் பொருட்படுத்த தேவையிருக்காது . மற்றொன்றில் மானம் பெரிதென வாழும் கூட்டமாக இருக்கும் . இந்த இரண்டு பிரிவைப் போல அலுவலகப் பணியாளர்களும் தொழிற்சாலையில் பணிபுரியும் தொழிலாளர்களின் உலகமும் வெவ்வேறாக இருக்கும் . அலுவலகத்தில் பணிபுரிபவர்களுக்குப் பேசப் பழக நிறைய வாய்ப்புண்டு . பல சமயம் சிந்திக்க நேரம் இருப்பதுண்டு . ஆனால் தொழிற்சாலையில் பணிபுரிபவர்கள் இயந்திரங்களுடன் தான் தினந்தோறும் உறவாட வேண்டும் . மனிதத் தொடர்பு என்பது குறுகிய நேரம் மட்டுமே . குறிப்பிட்ட வட்டத்திற்குள் தான் இருந்தாக வேண்டும் . தங்களது எண்ணம் , ஏக்கம் , சோகம் அனைத்தையும் உள்ளுக்குள்ளே பூட்டி வைத்திருக்கப் பழகியிருக்க வேண்டும் . எந்தவொரு தனியார் நிர்வாகத்திலும் அலுவலக ஊழியர்கள் ஒன்று சேர்ந்து போராட்டம் செய்தார்கள் என்ற செய்தியை நீங்கள் குறைந்த அளவில் தான் வாசித்திருக்க முடியும் . ஆனால் செய்தித்தாளில் தொழிலாளர்களின் வேலை நிறுத்தம் என்பது அன்றாடச் செய்தியாகவே வந்து கொண்டிருக்கும் . காரணம் தொழிலாளர்களின் மன உளைச்சல் என்பது எழுத்தில் எழுதி புரிய வைக்க முடியாத ஒன்று . திடீரென வெடித்துக் கிளம்பும் போது அது அடங்க நேரம் காலமாகும் . இப்படித்தான் பலவற்றையும் யோசித்துக் கொண்டே போக்குவரத்து நெரிசலை வெறுப்புடன் பார்த்துக் கொண்டு வாகனத்தை நகர்த்திக் கொண்டிருந்தேன் . நாங்கள் சென்று கொண்ருந்த வாகனம் போக்கு வரத்து நெரிசலில் ஊர்ந்து கொண்டிருந்தது . திருப்பூரின் முக்கியச் சாலையின் வழியே செல்லும் போது போக்குவரத்து நெரிசலைக் கடந்து நாம் நினைக்கும் இடத்திற்குச் செல்ல கூடுதல் நேரம் வேண்டும் . ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்குச் செல்வது என்னைப் போன்றவர்களுக்கு அலுப்பைத் தரக்கூடியது . இடைவிடாத அலைபேசி தொடர்புகள் ஒருபுறம் . மற்றொரு புறம் பயணங்கள் பாதிநேரத்தை விழுங்கி விடும் அச்சமும் சேர்ந்து மன உளைச்சலை உருவாக்கும் . நாம் அன்றைய பொழுதில் செய்ய வேண்டிய முக்கியக் காரியங்கள் என்று பட்டியலிட்டு வந்தவற்றைச் செய்ய முடியாமல் போய்விடும் . உடம்பில் ஆரோக்கியம் இருக்கும் வரைக்கும் அலைவது என்பது மனிதர்களுக்குப் பிடித்தமானதாக இருக்கும் . வயதாக உடம்பு ஒத்துழைக்க மறுக்கும் பட்சத்தில் ஒவ்வொரு பழக்கமும் பல காத தூரம் விலகிக் கொள்ளத் தொடங்கும் . என்னுடன் பயணித்த பேக்டரி மேனேஜர் தொடர்ந்து பேசிக் கொண்டிருந்தார் . எதிரே இருப்பவர் தாம் பேசுவதை விரும்புகின்றாரா ? இல்லையா ? என்பதை உணராமல் பேசிக் கொண்டே இருக்கும் நபர்கள் பெரிய இடைஞ்சலாக மாறி விடுவார்கள் . ஆனால் அவர் பதட்டத்துடன் இருந்தார் . தன் பதவிக்கு ஆபத்து வந்துவிடுமோ ? என்ற அச்சத்தில் இருந்தார் . எந்தவொரு தனியார் துறையிலும் முக்கியப் பதவியில் தொடர்ந்து இருப்பது கடினமே . அதிலும் அந்தப் பதவியைத் தொடர்ந்து தக்க வைத்துக் கொள்வது மிகவும் கடினம் . உழைப்பு மட்டுமே போதாது . மனிதர்களைக் கையாளத் தெரிந்திருக்க வேண்டும் . இடம் , பொருள் , ஏவல் பார்த்து ஒவ்வொரு நிமிடமும் தம்மைச் சோர்வில்லாது புதுப்பித்துக் கொள்ளப் பழகியிருக்க வேண்டும் . உணர்ச்சிகளை உள்ளடக்கி வைத்திருக்கத் தெரிந்திருக்க வேண்டும் . எதற்காகச் சீறுவார் ? எப்போது சிரிப்பார் ? என்று எதிரே இருப்பவர் உணர முடியாத நிலையில் இறுக்கமாக வாழப் பழகியிருக்க வேண்டும் . இதற்கெல்லாம் மேலாக எத்தனை துரோகங்களைச் சந்தித்து இருந்த போதிலும் மனிதர்களின் மேல் நம்பிக்கை வைத்திருக்கத் தெரிந்திருக்க வேண்டும் . இவரிடம் மனிதாபிமானம் உண்டு என்ற நம்பிக்கையை மற்றவர்கள் மனதில் உருவாக்கத் தெரிந்துருக்க வேண்டும் . முக்கியப் பதவிகளில் இருப்பவர்களின் உண்மையான திறமையை நெருக்கடியான சூழ்நிலை தான் உணர்த்தும் . அதுபோன்ற சமயங்களில் அவர்கள் அந்தப் பிரச்சனையை எப்படிக் கையாள்கின்றார்கள் என்பதில் இருந்து தான் நம்மால் புரிந்து கொள்ள முடியும் . பேக்ட்ரி மேனேஜர் பயந்து போயிருந்தார் . என் குணத்தை நன்றாகப் புரிந்தவர் . ஒருவருக்குக் குறிப்பிட்ட பதவிக்குத் தகுதி இல்லை என்றால் என் ஆதரவு இருக்காது என்பதை நன்றாக உணர்ந்தவர் . நாகரீகமாக அந்தப் பதவியில் இருந்து நகர்த்தி விடுவேன் என்பதை உணர்ந்த காரணத்தினால் அவர் அவசரமாக எல்லாவற்றையும் பேசிக் கொண்டே வந்தார் . குறிப்பாக அவர் உழைத்துக் கொண்டிருக்கும் உழைப்பு , படும்பாடுகள் , அவரின் விசுவாசத்தின் எல்லை என்பதனை அடுக்கிக் கொண்டே வந்தவர் என் திறமைகளைப் புகழத் தொடங்கினார் . என் சாதனைகளைப் பட்டியலிடத் தொடங்கினார் . என்னைப்பற்றி என்னிடமே பேசத் தொடங்கும் போது சுதாரித்துக் கொண்டேன் . பேச்சை வேறு பக்கம் திருப்பி விட்டுத் தூரத்தில் கவனித்தேன் . தொழிற்சாலை கண்களுக்குத் தெரியும் அளவில் நெருங்கிக் கொண்டிருந்தோம் . தொழிற்சாலையின் வாசலில் ஒரு பெரும் கும்பல் கூடியிருந்ததைக் கவனிக்க முடிந்தது . என் மனதிற்குள் இனம் புரியா கோபம் எட்டிப் பார்த்தது . என் கோபம் பேக்ட்ரி மேனேஜர் மேல் திரும்பியது . ” நீங்க ஒரு மணி நேரம் வெளியே வந்து திரும்பி போவதற்குள் தொழிற்சாலை உங்க கட்டுப்பாட்டுக்குள் இல்லை . நீங்க எப்படி நிர்வாகம் செய்றீங்கன்னு எனக்கு நன்றாகப் புரிகிறது என்றேன் ? “ அவருக்கு என் கோபம் புரிந்து விட்டது . அவரும் தொழிற்சாலையின் வாசலை கவனித்துப் பதட்டமானார் . ஒரு நாட்டுக்குள் நுழைபவருக்கும் அந்த நாட்டின் தகுதி என்பது விமான நிலையத்திலேயே தெரிந்து விடும் . அங்குள்ள நடைமுறைகளை வைத்தே மொத்த நாட்டின் தகுதியை எடை போட்டு விட முடியும் . அங்கே கிடைக்கும் வரவேற்பு வைத்தே அரசாங்கத்தின் நிர்வாகத் தன்மையைப் புரிந்து கொள்ள முடியும் . வந்து இறங்கியவனிடம் முடிந்தவரைக்கும் கறந்து விடலாம் என்ற எண்ணம் கொண்ட அதிகாரிகள் மூலம் மொத்த அரசு சார்ந்த துறையின் அவலட்சணத்தைப் புரிந்து கொள்ள முடியும் . இதைப் போல ஒரு தொழிற்சாலையின் கட்டுப்பாடு என்பது நுழைவாயில் காட்டிக் கொடுத்து விடும் . முகப்பில் இருப்பவர்களின் நேர்மையான எண்ணங்களும் , பிடிவாதமான ஒழுக்கமும் தான் உள்ளே பணிபுரியும் ஆயிரக்கணக்கான தொழிலாளர்களின் குணாதிசியத்தை நமக்குப் புரிய வைக்கும் . ஒவ்வொரு மனிதரும் ஒவ்வொரு விதமான தீவு . ஆனால் ஒரு இடத்தில் அவர்களை ஒழுங்குபடுத்தி ஒரே நிலையில் கொண்டு வருவதென்பது சாதாரணக் காரியமல்ல . தனியாக இருக்கும் வரைக்கும் வரை அவன் ஒரு தனி மனிதன் . அதுவே மொத்த கூட்டத்தில் சேர்ந்து வேண்டாத வேலைகள் செய்யத் தொடங்கும் போது அவன் மனதளவில் மிருகமாக மாறிவிடுகின்றான் . சட்டம் ஒழுங்குக்குச் சவால் விடுக்கத் தொடங்குகின்றான் . இந்தக் கூட்டத்தைச் செக்யூரிட்டிகளுக்குக் கையாளத் தெரிந்திருக்க வேண்டும் . எங்கே தட்டினால் எப்படி மொத்தக் கூட்டமும் கலையும் என்பதை உணர்ந்து செயல்பட்டே ஆக வேண்டும் . ஒவ்வொரு ஆயத்த ஆடைத் தொழிற்சாலையில் பணிபுரியும் செக்யூரிட்டிகள் என்றழைக்கப்படும் காவல் கூட்டம் என்பது தனியுலகம் . தொடக்கத்தில் இங்குள்ள ஒவ்வொரு நிறுவனத்திலும் யாரோ ஒரு வயதான பெரியவரை அதுவும் சொந்தக்காரர் என்ற தகுதி படைத்தவரை பெயருக்கென்று வாசலில் அமர வைத்திருப்பார்கள் . நாள் முழுக்க அவர் வாசலில் உட்கார்ந்திருப்பது மட்டுமே வேலையாக இருக்கும் . ஆனால் இன்று இதற்காகத் தனிப்பட்ட செக்யூரிட்டி ஏஜென்சி வரைக்கும் இந்தத் துறையில் தற்போது வளர்ந்து கொடி கட்டி பறக்கின்றார்கள் . சீருடைகள் அணிந்து , அதிரடி விரைவுப் படையினர் போலப் பல பெரிய நிறுவனங்களில் அசாத்தியமான திறமை சாலிகளுடன் பணிபுரிகின்றார்கள் . ஒரு நிறுவனத்தின் காவல் சார்ந்த அனைத்து பிரிவுகளையும் பார்க்கின்றார்கள் . நானும் இதைப் போல ஒரு குறிப்பிட்ட வட்டத்தை உருவாக்க வேண்டும் என்று நினைத்த போது முதலாளி மறுத்து விட்டார் . காரணம் மாதம் இதற்காக 50000 ரூபாய்ச் செலவாகும் என்ற நிலையில் இருந்தது . காசுக்கேத்த பணியாரம் என்பது போல வேறு சிலரை ஏற்பாடு செய்து இருந்தேன் . நிர்வாகத்தின் ஒவ்வொரு இடத்திலும் காவல் கூட்டத்தைப் பணியில் அமர்த்திருந்தேன் . முதலுக்கு மோசமில்லை என்கிற நிலையில் தான் இருந்தார்கள் . ஆனால் இன்றோ நுழைவாயிலில் நின்று கொண்டிருந்த கூட்டத்தைச் சமாளிக்க முடியாமல் தடுமாறிக் கொண்டிருந்ததைப் பார்க்க வேண்டியதாக உள்ளது . பல படிகள் ஏறிவிட்டோம் என்று நினைத்துக் கொண்டிருந்த எனக்கு ஏமாற்றமாக இருந்தது . ஒரே இடத்தில் இருந்து கொண்டு மொத்த நிர்வாகத்தையும் நடத்தி விடலாம் . அடுத்தக் கட்டத்திற்கு நகர்ந்து விடுவோம் என்ற எண்ணத்தில் பெரிய அடி விழுந்தது போல இருந்தது . என் வாகனத்தின் சப்தத்தை உணர்ந்து கொண்டவர்கள் மத்தியில் சிறிய சலசலப்பு உருவாகி கூடியிருந்தவர்கள் பக்கவாட்டில் ஒதுங்கத் தொடங்கினர் . என் வாகனம் உள்ளே நுழைந்த போது ஏற்றியிருந்த கண்ணாடி வழியே அங்கே நின்று கொண்டிருந்த நபர்களை உற்றுக் கவனித்தபடியே பேக்டரி மேனேஜரை அங்கேயே இறக்கி விட்டு உள்ளே என் அறைக்குச் சென்றேன் . கூடவே தலைமைப் பொறுப்பில் இருந்த செக்யூரிட்டியை என் அறைக்கு வரச் சொல்லியிருந்தேன் . அவரிடம் விசாரித்து முடித்து விட்டு எனக்கு நம்பிக்கைக்கு உகந்த சிலரை வரவழைத்து விசாரித்தேன் . இது தவிரக் குறிப்பிட்ட செய்யூரிட்டியை மட்டும் என் அறைக்கு வரச் சொல்லி மொத்த விபரங்களையும் விசாரித்த போது பேக்டரி மேனேஜர் சொன்ன தகவல்களுக்கு மாறானதாக இருந்தது . கடைசியாகச் சம்மந்தப்பட்ட பெண்ணை என் அறைக்கு வரவழைத்தேன் . அந்தத் தேவதையின் தரிசனம் எனக்குக் கிடைத்தது . [] 17 17. அவள் பெயர் ரம்யா [] 17. அவள் பெயர் ரம்யா அந்தப் பெண் நடந்து வந்து கொண்டிருந்தாள் . அதுவொரு பெரிய ஹால் போன்ற அமைப்பில் இருந்தது . பக்கவாட்டில் துணிகளைக் ‘ கட்டிங் ‘ செய்யப் பயன்படும் மேஜைகளும் அதனை ஓட்டி ‘ செக்கிங் ‘ பெண்கள் தங்கள் பணியைச் செய்ய உதவும் தொடர்ச்சியான மேஜைகளும் இருந்தன . பேக்டரி மேனேஜருக்கென்று அந்த ஹாலின் மூலையில் தனியாக ஒரு அறை உருவாக்கப்பட்டு இருந்தது . அந்த அறையின் உள்ளே நான் இருந்தேன் . அறையைச் சுற்றிலும் இருந்த கண்ணாடி வழியே மொத்த ஹாலில் நடக்கும் வேலைகளைக் கண்காணிக்க முடியும் . பேக்டரி மேனேஜர் பதட்டத்துடன் அறையின் வெளியே நின்று கொண்டிருந்தார் . நடந்து வந்து கொண்டிருந்த பெண்ணைக் கண்ணாடி வழியே பார்த்தேன் . எனக்கு அந்தப் பெண் யாரென்று அடையாளம் தெரிந்தது , கல்லூரி முடித்த அடுத்த வருடத்தில் திருப்பூர் வந்து சேர்ந்திருந்தார் . திருப்பூர் நிறுவனங்கள் குறித்து எவ்வித அனுபவமும் இல்லை . முன் அனுபவம் குறித்து யோசிக்காமல் ஆர்வத்துடன் வேலைக்கு வந்து சேர்ந்திருந்தார் . ஆங்கில இலக்கியத்தில் உச்சத்தைத் தொட வேண்டும் என்ற அவரின் கனவு சிதைக்கப்பட்டு அவசர கதியில் தகுதியில்லாத நபருக்கு மனைவியாகப் பதினெட்டு வயதிலேயே மாற்றப்பட்டுயிருந்தார் . கல்லூரியில் படித்துக் கொண்டிருந்த போது திருமணமும் முடிந்திருந்தது . இளங்கலை பட்டப்படிப்பை முடித்து விட்டு கணவருடன் திருப்பூர் வந்து சேர்ந்திருந்த போதும் தனது கல்வி குறித்த ஆசையை மனதிற்குள் பொத்தி வைத்திருந்தார் . பணியில் சேர்ந்திருந்த போதும் அஞ்சல் வழியே தன் மேற்படிப்பை தொடர்ந்து கொண்டிருந்தார் . வெளியுலகம் தெரியாமல் வளர்க்கப்பட்ட காரணத்தால் தன்னைச் சுற்றிலும் இருந்த திமிங்கிலம் , சுறாக்களை அடையாளம் காணத் தெரியாமல் தவித்துக் கொண்டிருந்த போது தான் அலுவலகத்தில் என் அறிமுகம் அவருக்குக் கிடைத்தது . நான் இந்த நிறுவனத்தில் நுழைந்த போது பழைய நபராக அலுவலகத்தில் இருந்தார் . நான் நுழைந்த முதல் இரண்டு நாளில் இவர் விடுமுறையில் இருக்க வருகைப் பதிவேட்டில் அவர் பெயரைப் பார்த்து யாரிந்த பெண் ? என்று மற்றவர்களிடம் கேட்ட போது அவர் வகித்துக் கொண்டிருந்த பதவியின் பெயரைச் சொன்னார்கள் . அவர் இந்த நிறுவனத்தில் கோ – ஆர்டினேட்டர் பதவியில் இருந்தார் . இதுவொரு வித்தியமான ஆனால் சவாலான பதவி . அரசாங்கத்தில் , அரசியல் கட்சிகளில் மக்கள் தொடர்பாளர் என்றொரு பதவி இருக்குமே ? அதைப் போல ஆயத்த ஆடைத் துறையிலும் இது போன்ற சில பதவிகள் உண்டு . இதில் உள்ள ஒவ்வொரு பெரிய துறையையும் ஒருங்கிணைக்கத் தொடர்பாளர்கள் இருப்பார்கள் . தொழிற்சாலை என்றால் அதற்குத் தலைமைப் பொறுப்பு பேக்டரி மேனேஜர் . அவரிடமிருந்து தான் உற்பத்தி தொடர்பான அனைத்து தகவல்களையும் வாங்க முடியும் . அவரிடம் ஒரே சமயத்தில் பலதுறைகளில் உள்ளவர்கள் அடுத்தடுத்து தொடர்பு கொள்ளும் போது உருவாகும் குழப்பத்தைத் தவிர்க்க ஒவ்வொரு இடத்திலும் இந்தப் பெண்ணைப் போன்ற தொடர்பாளர்கள் இருப்பார்கள் . அதாவது தொழிற்சாலையில் ஒரு நாளில் நடக்கும் மொத்த தகவல்களையும் ஒரே நபர் மூலம் திரட்டப்பட்டு அதனடிப்படையில் அலுவலகத்தில் உள்ள மற்றவர்கள் செயல்படுவது . மொத்த நிர்வாகத்தின் முதுகெலும்பாக இருக்க வேண்டிய தகுதியான பதவியிது . இதற்குப் ” பேக்டரி மெர்சன்டைசர் ” என்றும் அழைப்பர் . தொழிற்சாலையில் ஒரு நாள் முழுக்க உற்பத்தியாகின்ற ஆயத்த ஆடைகளின் எண்ணிக்கை , அதில் முழுமையடைந்த மற்றும் முழுமையடையாத ஆடைகளின் எண்ணிக்கை போன்றவற்றைக் கண்காணிக்க வேண்டும் . இது தவிரத் தொழிற்சாலையில் பணிபுரியும் தொழிலாளர்களின் ஷிப்ட் குறித்த விபரங்கள் , விடுமுறை எடுத்தவர்களின் பட்டியல் போன்ற பலவற்றைப் புள்ளி விபரத்தோடு தினந்தோறும் ஒவ்வொன்றையும் தனித்தனி அறிக்கையாகத் தயாரிக்க வேண்டும் . மிகப் பெரிய நிறுவனங்களில் மனித வளத்துறை என்று இதற்கென்று தனியாக ஒரு படை பட்டாளம் இருப்பார்கள் . தொழிலாளர்கள் நலன் சார்ந்த அனைத்து விசயங்கள் மற்றும் அவர்களுக்கான பயிற்சி போன்ற அனைத்தையும் இந்தத் துறையில் உள்ளவர்களே கவனிப்பார்கள் . ஆனாலும் கோ – ஆர்டினேட்டர் பதவியில் உள்ளவர்களுக்கு எத்தனை தொழிலாளர்கள் அன்றைய தினத்தில் வருகை தந்துள்ளார்கள் என்ற கணக்கு அவசியமாகத் தேவைப்படும் . கோ – ஆர்டினேட்டர் பொறுப்பில் உள்ளவர்கள் அலுவலகத்தில் இருந்து கொண்டே தொழிற்சாலையில் உள்ள குறிப்பிட்ட பதவிகளில் பணிபுரிபவர்களிடம் கேட்டு தெரிந்து கொண்டு , அவர்கள் கூறிய தகவல்கள் சரியானது தானா ? என்பதை உறுதிபடுத்திக் கொண்டு அதனை முதலாளி , மற்றும் முக்கியப் பொறுப்பில் இருப்பவர்களின் பார்வைக்குக் கணினி வழியே காலையில் குறிப்பிட்ட நேரத்திற்குள் அனுப்பி வைக்க வேண்டும் . இதன் மூலம் ஒரு ஒப்பந்தம் திட்டமிட்டபடி அதன் இலக்கை நோக்கி நகர்கின்றதா ? குறிப்பிட்ட நாளில் கப்பலுக்கு அனுப்பி விட முடியுமா ? போன்றவற்றைத் தெரிந்து கொள்ள முடியும் . இவர் தினந்தோறும் சமர்பிக்கும் அறிக்கை முக்கியமானது . எல்லாவற்றையும் விடப் பணம் சம்மந்தப்பட்ட காரணத்தால் மிகக் கவனமாகக் கையாள வேண்டும் . எனவே இந்தப் பொறுப்பில் இருப்பவர்களும் மிக முக்கியமானவர்களாக இருக்க வேண்டும் . அலுவலகம் செயல்படும் நேரம் என்பது தொழிற்சாலை இயங்கும் நேரத்தை விடச் சற்று வித்தியாசமாக இருக்கும் . அலுவலகத்தில் ஒரு கட்டமைப்பு இருக்கும் . ஆனால் தொழிற்சாலையில் அதனை எதிர்பார்க்க முடியாது . அவசரமென்றால் நள்ளிரவு வரைக்கும் செயல்பட வேண்டியதாக இருக்கும் . சனிக்கிழமை என்றால் அடுத்த நாள் காலை வரைக்கும் தொடர்ச்சியாகச் செயல்பட வேண்டியதாக இருக்கும் . இது போன்ற சமயங்களில் மனிதாபிமானம் பற்றி யோசித்துக் கொண்டிருக்க முடியாது . முதலீடு செய்துள்ள கோடிக்கணக்கான பணம் மட்டுமே முதலாளியின் கண்களுக்குத் தெரியும் . முதலாளிக்கு மட்டுமல்ல முக்கியப் பொறுப்பில் உள்ளவர்களுக்கும் அந்த ஒப்பந்தம் கப்பலுக்குச் சென்று வரைக்கும் தூக்கம் வராது . காலை வேலையில் அலுவலகம் ஒன்பது மணிக்கு மேலே தான் தொடங்கும் . அதே போல மாலை ஏழு மணிக்கே முடிந்து விடும் . ஆனால் தொழிற்சாலை காலை எட்டரை மணிக்கே தொடங்கி விடும் . இரவு எட்டரை மணி வரைக்கும் இருக்கும் . அலுவலகத்திற்கும் தொழிற்சாலைக்கும் உண்டான நேர வித்தியாசங்களைக் கணக்கில் கொண்டு மொத்த தகவல்களையும் சேகரித்து விடக் கூடிய கெட்டிக்காரத்தனம் இந்தப் பொறுப்பில் உள்ளவர்களுக்கு இருக்க வேண்டும் . அலுவலகத்தில் மற்றவர்கள் வந்து சேர்வதற்குள் தங்கள் பணியைத் தொடங்கியாக வேண்டும் . மற்றவர்களுடன் அலைபேசியில் தொடர்பு கொண்டாலும் குறுக்குக் கேள்விகள் மூலம் சொல்லப்பட்ட தகவல்கள் சரியானதா ? என்பதை யூகிக்கத் தெரிந்து இருக்க வேண்டும் . சேகரித்த தகவல்களை இனம் பிரித்துக் கொள்ள வேண்டும் . எந்த இடம் பிரச்சனைக்குரியது ? அந்தப் பிரச்சனை எங்கே கொண்டு போய் நிறுத்தும் ? என்பதை அடிக்கோடிட்டு காட்டத் தெரிந்து இருக்க வேண்டும் . தங்கள் நச்சரிப்பைப் பார்த்து ஒவ்வொருவரும் அடையும் எரிச்சலை பொறுத்துக் கொள்ள வேண்டும் . பலருடைய கோபத்தை எதிர் கொண்ட போதிலும் ” என் கடன் பணி செய்து கிடப்பதே ” என்று இடைவிடாது அடுத்து என்ன ? என்ற நோக்கத்திலே ஓடிக் கொண்டிருக்க வேண்டும் . முக்கியப் பதவிகளில் இருப்பவர்களின் மனோநிலையைப் புரிந்திருக்கக் கூடியவராக இருக்க வேண்டும் . எவருக்குக்கெல்லாம் இந்த அறிக்கை தினந்தோறும் அனுப்பப்படுகின்றதோ அவர்கள் கேட்கும் குறுக்குக் கேள்விகளைச் சமாளிக்கத் தெரிய வேண்டும் . முழுமையாகப் படிக்காமல் குறுக்குக் கேள்விகள் கேட்டுத் தங்களைப் புத்திசாலியாகக் காட்டிக் கொள்ளும் பிரகஸ்பதிகளைச் சமாளிக்கத் தெரிந்து இருக்க வேண்டும் . முக்கியப் பதவியில் இருப்பவர்கள் பலரும் பல சமயம் அறிக்கையை முழுமையாகப் படிக்காமல் இருக்கக்கூடும் . ஆனால் அவசரகதியில் எடுக்கப்பட வேண்டிய அன்றைய பொழுதின் நிர்வாகம் சார்ந்த பல விசயங்கள் அந்த அறிக்கை சுட்டிக்காட்டப்பட்டு இருக்கும் . இது போன்ற சமயத்தில் சமயம் பார்த்து இவற்றைச் சம்மந்தப்பட்டவருக்கு இவரைப் போன்றவர்கள் நினைவூட்டத் தெரிந்திருக்க வேண்டும் . இதற்கு மேலாகத் தொழிற்சாலையின் செலவீனங்களை ஒப்பிட்டு உற்பத்தியாகும் ஆயத்த ஆடைகளின் எண்ணிக்கை வைத்து நிர்வாகம் திட்டமிட்ட செலவீனத்திற்குள் அடங்குகின்றதா ? இல்லை எகிறிக் குதிக்கின்றதா ? என்பதைப் புள்ளி விபரத்தோடு சுட்டிக் காட்டத் தெரிந்து இருக்க வேண்டும் . அதற்கான காரணத்தை விசாரித்து வைத்திருக்க வேண்டும் . அந்தக் காரணம் உண்மையானது தானா ? என்பது சோதித்துப் பார்த்திருக்க வேண்டும் . தொழிற்சாலை நிர்வாகத்தில் சில சங்கடங்களும் பல தவிர்க்க முடியாத பிரச்சனைகளும் உண்டு . உள்ளே வந்து பணிபுரிபவர்களுக்குரிய சம்பளம் என்பது வேலை நடந்தால் தான் கொடுக்க வேண்டியதாக இருக்கும் . வேலை இல்லை என்றால் அனுப்பி விடலாம் . ஆனால் ஒரு தொழிற்சாலையின் நிரந்தரச் செலவீனங்கள் என்பது மின்சாரம் , பெட்ரோல் , டீசல் , தண்ணீர் என்று தொடங்கி ஊழியர்களின் மாதச்சம்பளம் , வாடகை சமாச்சாரங்கள் என்பது தனியாகத் தவிர்க்க முடியாததாக இருக்கும் . தொழிற்சாலை இயங்கினாலும் இயங்காமல் நின்று போயிருந்தாலும் இந்தச் செலவீனங்கள் என்பது மாதந்தோறும் அப்படியே தான் இருக்கும் . ஒரு மாதம் தொழிற்சாலை செயல்படாமல் போனாலும் அடுத்த மாத கணக்கில் இந்தச் செலவீனங்கள் ஏறி நிற்கும் . அடுத்த மாதத்தில் இந்தச் செலவீனங்களைச் சமாளிக்கும் அளவிற்கு அந்த மாத உற்பத்தியை அதிகப்படுத்தியாக வேண்டும் . ஒரு ஆய்த்த ஆடைத் தொழிற்சாலையில் மாதம் ஒரு லட்சம் ஆடைகள் உற்பத்தி ஆகின்றது என்றால் அதற்கான அடிப்படை செலவீனங்கள் இரண்டு கட்டங்களாகப் பிரிக்கப் படுகின்றது என்பதை நாம் கவனத்தில் வைத்திருக்க வேண்டும் . உற்பத்திக்கான செலவு . உற்பத்தி செய்வதற்கான மற்ற செலவு . உற்பத்திக்கான செலவில் பணிபுரியும் தொழிலாளர்களின் ஷிப்ட் சம்பளம் வந்து விடும் . உற்பத்திக்கான மற்ற செலவில் மேலே குறிப்பிட்ட பல செலவீனங்கள் வந்து சேர்ந்து விடும் . இது தவிர ஒரு ஆடை உருவாக்கத்திற்குத் தேவைப்படும் துணிக்கான செலவு முதல் கப்பல் வரைக்கும் கொண்டு சேர்க்கக் கூடிய செலவு வரைக்கும் அடக்கும் போது பல லட்சங்கள் தினந்தோறும் கரைந்து கொண்டேயிருக்கும் . ” கரணம் தப்பினால் மரணம் ” என்பார்களே ? அதைப் போலத்தான் தொழிற்சாலை வைத்து நடத்தும் காரியம் . இவை அனைத்தும் ஒரு அறிக்கை சுட்டிக்காட்ட வேண்டும் என்றால் அந்த அறிக்கையைத் தயாரிப்பவர் எப்படிப்பட்டவராக இருக்க வேண்டும் ? நன்றாகப் பேசத் தெரிந்து இருக்க வேண்டும் . சமயோஜிதப் புத்தியுள்ளவராக இருக்க வேண்டும் . மொத்தத்தில் கடுமையான உழைப்புடன் கூடிய அர்பணிப்பு உள்ளவராகவும் இருத்தல் வேண்டும் . இந்த நிறுவனத்தில் நான் நுழைந்த இரண்டாவது நாளில் இவரைச் சந்தித்தேன் . இவரை மற்றொருவர் திட்டிக் கொண்டிருந்தார் . இவர் தலையைக் குனிந்தபடி அழுது கொண்டிருந்தார் . காரணம் ஒரு நாள் விடுமுறை கேட்டுச் சென்றவர் மூன்று நாள் கழித்து வந்த காரணத்தால் பாதி வேலைகள் முடியாத காரணத்தை வைத்துக் கொண்டு ” நீ வீட்டுக்குப் போ ?” என்று பேசிக் கொண்டிருந்தார் . சப்தம் அதிகமாகக் கேட்க நான் இவர் இருந்த இருக்கைக்குச் சென்று ” என்ன பிரச்சனை ?” என்று கேட்டேன் . அவரிடம் விபரங்களை முழுமையாகக் கேட்டதும் ” இப்படித்தான் இங்கே ஒவ்வொருவிதமாக இருப்பார்கள் . எதையும் பெரிதாக எடுத்துக் கொள்ள வேண்டாம் . இனியாவது சரியாக நடந்து கொள் ” என்று சொல்லிவிட்டு என் இருக்கைக்குத் திரும்பினேன் . அன்று நான் எதார்த்தமாகச் சொல்லிய ஆறுதல் வார்த்தைகள் இவர் மனதில் மிகப் பெரிய நம்பிக்கை அளித்திருந்ததை அடுத்தச் சில வாரங்களில் என்னால் புரிந்து கொள்ள முடிந்தது . சில தினங்களில் அவரை நான் என் கட்டுப்பாட்டுக்குள் எடுத்துக் கொண்டேன் . அவர் தகுதிக்குரிய ஒவ்வொரு வேலையாகப் பிரித்துக் கொடுத்து ஒரு வேலையை எப்படித் திட்டமிட்டுச் செய்ய வேண்டும் என்பதைப் படிப்படியாகக் கற்றுக் கொடுக்கச் சொன்னபடியே சில வாரங்களில் அவரிடமிருந்த ஒவ்வொரு திறமையும் ஒன்றன்பின் ஒன்றாக வெளிவரத் துவங்கியது . எந்தத்துறை என்றாலும் பயிற்சி முக்கியம் . இங்கே எல்லோரிடமும் அளவிட முடியாத ஏதோவொரு திறமை இருக்கக்தான் செய்கின்றது . சிலரால் அதனை இயல்பான பழக்க வழக்கத்தில் வெளிக்கொண்டுவர முடிகின்றது . பலருக்கும் தன்னிடம் என்ன திறமை உள்ளது ? என்பதை அறியாமலேயே ” கண்டதே காட்சி வாழ்வதே வாழ்க்கை ” என்று வாழ்ந்து முடித்து இறந்து போய் விடுகின்றார்கள் . வாழ்க்கையின் மிகப் பெரிய சவால் என்பது தனக்கான திறமையை அடையாளம் கண்டு கொள்வதே ஆகும் . இதற்கு ஒவ்வொருவரும் ஒவ்வொரு காரணத்தைச் சொல்லுகின்றார்கள் . சூழ்நிலையைக் காரணம் காட்டுகின்றனர் . எனக்கு வாய்ப்புகள் சரியாக அமையவில்லை . என் குடும்பம் சரியில்லை . என்னை ஆதரிப்பவர்கள் யாருமில்லை . என்னை எவரும் புரிந்து கொள்ளவில்லை என்று எத்தனையோ காரணங்களைத் தங்களின் தோல்விக்காகச் சுட்டிக் காட்டுகின்றார்களோ ஒழிய தன் திறமை தன் உழைப்பு குறித்து எவரும் யோசிப்பதே இல்லை . சிலருக்கு கிடைக்கக்கூடிய அறிமுகம் தான் அவர்களின் வாழ்க்கையின் புதிய பாதையை உருவாக்கக் காரணமாக அமைந்து விடுகின்றது . அதன் பிறகே மறுமலர்ச்சி அத்தியாயங்கள் உருவாகின்றது . இந்தப் பெண்ணை முதல் முறையாகச் சந்தித்த போது இவர் குறித்து எவ்வித தனிப்பட்ட அபிப்ராயங்கள் எதுவும் எனக்கில்லை . ஆனால் ஒருவரிடமிருக்கும் நிறை குறைகளை அலசி அவரை எந்த இடத்தில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்பதில் மிகக் கவனமாக இருந்தேன் . இவரை மட்டுமல்ல இவரைப் போன்ற உள்ளே பணிபுரிந்த ஒவ்வொருவர் மேல் தனிக்கவனம் செலுத்தினேன் . இவரின் தனிப்பட்ட ஆர்வமும் உழைப்பும் இவரை அடுத்தக் கட்டத்திற்கு நகர்த்தியது . என்னருகே கொண்டு வந்து நிறுத்தியது . ஒரு நிர்வாகத்தின் வெற்றி என்பது தனி மனித உழைப்பை மட்டும் சார்ந்தது அல்ல . அது பலருக்கு கொடுக்கப்படுகின்ற பயிற்சியினால் உருவாக்கப்படுகின்ற கூட்டுக்கலவை . அதன் மூலம் கிடைப்பதே மொத்த வெற்றி . சமூகத்தில் நீங்கள் காணும் அரசியல்வாதியாக இருந்தாலும் சரி , பெரிய அதிகாரியாக இருந்தாலும் சரி அவரின் திறமை என்பது அவருடையது மட்டுமல்ல . அவரைச் சார்ந்து செயல் படுபவர்களின் கூட்டுக்கலவையின் தன்மையாக இருக்கும் . பெருமையும் சிறுமையும் கடைசியில் சம்மந்தப்பட்டவர்களுக்கே வந்து சேர்கின்றது . பெரிய நிறுவனங்களில் முதன்மைப் பதவிகளில் இருப்பவர்களின் மூளையாகப் பலரும் செயல்பட்டுக் கொண்டிருப்பதால் மட்டுமே அவர் சரியான நிர்வாகி என்ற பெயர் எடுக்க முடிகின்றது . எனக்கும் அப்பேற்பட்ட பெருமை பல இடங்களில் கிடைத்தது . அப்படிக் கிடைக்கக் காரணம் இது போன்ற பெண்களும் ஆண்களும் பலவிதங்களில் உதவியுள்ளனர் . என் வெறுப்பு விருப்புகளைப் புரிந்து நடந்துள்ளனர் . பல பலவீனங்களை அனுசரித்து நடந்துள்ளனர் . நான் விரும்பிய ஒழுக்க விதிகளை அலுவலகத்திற்குள் கடைபிடித்துள்ளனர் . அவர்கள் கேட்ட வசதிகளை விருப்பங்களை மறுக்காமல் செய்து கொடுத்துள்ளேன் . கொடுக்கும் போது தான் எதையும் பெற முடியும் என்பதைக் கொள்கையாகவே வைத்திருந்தேன் . நான் ஒவ்வொரு முறையும் கொடுத்த போது பலவிதங்களில் வேறு வடிவங்களில் என்னைத் தேடி வந்தது . எனக்காகத் தேடிக் கொடுத்தவர்கள் எப்போதும் போல என்னை விடப் பலபடிகள் கீழே தான் இருந்தார்கள் . ஆனால் எனக்குக் கிடைத்த வாய்ப்புகளையும் , உருவான வளர்ச்சியின் மூலம் கிடைத்த மரியாதையை அவர்களுக்கும் சேர்ந்து சமர்ப்பித்தேன் . அதுவே அவர்களுக்குப் போதுமானதாக இருந்தது . இங்கே ஒவ்வொருவரும் அங்கீகாரத்தைத் தான் முதன்மையாக எதிர்பார்க்கின்றார்கள் . ஆறுதல் வார்த்தைகளைத் தான் அதிகமாக விரும்பு கின்றார்கள் . ஆனால் இங்கே ஒவ்வொரு மனிதனும் குப்பைகளைத் தான் தங்கள் மனதில் நிரப்பி வைத்துள்ளனர் . வக்கிரத்தை தாங்கள் அணியும் ஆடைகள் போல வைத்துள்ளனர் . சக மனிதர்களிடம் இயல்பான வார்த்தைகளைக் கூட உச்சரிக்க மனசில்லாமல் வக்கிரத்தை வெளிக்காட்ட திரும்ப வந்து தாக்குகின்றது . இதன் காரணமாக ஒவ்வொரு நிலையிலும் மனித உறவுகள் பாழ்படுகின்றது . இந்த விசயத்தில் மிகக் கவனமாக இருந்தேன் . இந்தப் பெண்ணிடமும் அப்படித்தான் நடந்து கொண்டேன் . நான் இந்த நிறுவனத்தில் நுழைந்த இரண்டாவது வாரத்தில் ஒரு கோரிக்கையுடன் என்னை வந்து சந்தித்தார் . ” என் வீடு நம் பேக்டரிக்கு அருகே உள்ளது . இங்கே இருந்து மூன்று பேரூந்து மாறி தினந்தோறும் வீட்டுக்கு செல்ல வேண்டியதாக உள்ளது . இதனால் வீட்டில் ஏராளமான பிரச்சனைகள் உருவாகின்றது . ஏற்கனவே உங்கள் பதவியில் இருந்தவரிடம் சொல்லியபோது உதவத் தயாராக இல்லை . நீங்களாவது எனக்கு உதவ வேண்டும் ” என்று பேசிய போது முழுமையாக அவரைக் கவனித்தேன் . ரசிக்கக்கூடிய வகையில் இருந்தார் . ஒவ்வொரு எழுத்தாளர்களும் ஆண்களை விடப் பெண்களை மட்டும் தான் பக்கம் பக்கமாக வர்ணித்து எழுதுகின்றார்கள் . நாம் காணும் திரைப்படங்களில் தொடங்கிச் சாதாரண விளம்பரம் வரைக்கும் பெண்களை அறிமுகப்படுத்தும் போது வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் காமத்தின் குறியீடாகத்தான் காட்சிப்படுத்துகின்றார்கள் . ஒவ்வொரு நிமிடமும் ஆணுக்கு கிளர்ச்சியை உருவாக்குவதற்காகவே பெண்களைப் படைத்தது போல நம் முன்னால் பெண்கள் என்ற உருவத்தை உருவகப் படுத்துகின்றார்கள் . எல்லா உயிரனங்களுக்கும் இனப்பெருக்கம் என்பது அதுவொரு இயல்பான விசயம் . காலம் மாறியதும் , தக்க பருவத்தில் துணையுடன் கூடி அதன் கடமையை முடித்து விட்டுச் சென்று விடுகின்றது . ஆனால் மனித இனத்தில் மட்டும் தான் இனப்பெருக்க உறுப்புகளை வைத்து காசு பெருக்கும் கலையை உருவாக்கியுள்ளனர் . காரியம் சாதிக்க உதவுவதாக மாற்றியுள்ளனர் . குறிப்பாகப் பெண்கள் அறிந்தோ அறியாமலோ தங்களை உணர்ந்து கொள்ள வழியில்லாமல் தங்களை வெளிப்படுத்திக் கொள்ளச் செய்யக் கூடிய காரியங்களில் கவனம் செலுத்துக் கின்றார்கள் . அவர்களின் அதிகப்படியான ஆர்வம் அவர்களுக்கு இறுதியில் அவஸ்த்தைகளைத் தான் கொண்டு வந்து சேர்க்கின்றது . இன்று இது போன்ற அவஸ்த்தையில் தான் இந்தப் பெண்ணும் சிக்கியுள்ளார் . அன்று அலுவகத்தில் என்னிடம் கேட்ட இவர் கோரிக்கையை நிறைவேற்றியது தவறோ ? என்று யோசித்துக் கொண்டிருந்தேன் . என் தனிப்பட்ட பயிற்சியின் காரணமாகத் தொழிற்சாலையில் இவரால் சிறப்பாகச் செயல்பட முடியும் என்று நம்பினேன் . குடும்ப ரீதியான பிரச்சனைகள் இல்லாதபட்சத்தில் இவரின் தனித்திறமை இன்னமும் மேம்படும் என்ற கணக்கில் அவருக்கு உதவினேன் . அது பல விதங்களில் சிக்கலை உருவாக்கும் என்று நினைத்துக் கூடப் பார்க்கவில்லை . இந்தப் பெண்ணின் கதையும் இப்படித் தான் தொடங்கியுள்ளது . வெகுளி என்பதற்கு எப்படி அர்த்தம் சொல்வீர்களோ ? எனக்குத் தெரியாது . ஆனால் இந்தப் பெண் வெகுளித்தனத்தை மொத்தமாகக் குத்தகை எடுத்தது போலவே வாழ்ந்து கொண்டிருந்தார் . வாளிப்பான உடம்பும் , வசீகரிக்கக்கூடிய அமைப்புகளும் ஒன்று சேர வேறென்ன வேண்டும் ? இருபது வயதிற்குள் திருமணம் முடிந்து ஒரு மகன் இருக்கின்றான் என்றால் எவரும் நம்பமாட்டார்கள் . ஒரு முறை பார்த்தால் மீண்டும் ஒரு முறை பார்க்கத் தூண்டும் அளவெடுத்த உடம்பு . தான் விரும்பும் நவநாகரிக உடைகளைத் தினந்தோறும் அணிந்து வருவதால் வாளிப்பான பருவத்தைத் தொழிற்சாலையில் பணிபுரியும் ஒவ்வொருவரும் அவரவருக்குத் தகுந்தபடி ரசிக்கும்படி இருந்துள்ளார் . இதற்கு மேலாகப் பலருடனும் பேசியாகவேண்டிய சூழ்நிலையில் இருந்த காரணத்தால் பேசிய ஒவ்வொருவரும் இவர் பேசி முடித்துச் சென்றதும் தனது வக்கிர எண்ணத்தை வடிகாலாக மாற்றிவிட அது ஒவ்வொரு இடமாகப் பரவி உள்ளது . அதுவே இவரின் தனிப்பட்ட வாழ்க்கையைப் பாதித்துக் கணவன் காதுக்குச் செல்ல அது குடும்ப ரீதியான பிரச்சனையை உருவாக்கி உள்ளது . இவரின் நடத்தையைக் கேள்விக்குறியாகக் கேலிக்குறியதாக மாற்றியுள்ளது . இந்தப் பெண்ணின் குற்றமல்ல . ஆசைப்பட்டவர்களின் எண்ணம் நிறைவேறாத பட்சத்தில் உருவான ஆதங்கத்தின் விளைவு இது . இதுவே தான் தொழிற்சாலையில் பணிபுரிந்த பலருக்கும் குறுகுறுப்பை உருவாக்கி கணவன் வரைக்கும் கொண்டு போய்ச் சேர்த்துள்ளது . ” என் மனைவியை எப்படி நீ தப்பாகப் பேசலாம் ?” என்கிற அளவுக்குப் பிரச்சனை திசைமாறி கணவனைப் பலருடனும் தொழிற் சாலையின் உள்ளே வந்து சண்டை போட வைத்துள்ளது . கடந்த சில வாரங்களாகத் தொழிற்சாலைக்கு வெளியே நடந்து கொண்டிருந்ததைப் பேக்டரி மேனேஜர் உணரத் தவறியதால் ஒருவர் மற்றொருவரை கூட்டணி சேர்ந்து கணவனைத் தாக்க அது தீப்பொறி போலப் பரவியுள்ளது . கணவன் தரப்பில் பல ஆட்கள் சேர ஒன்றோடு ஒன்று சேர்ந்து இன்று தொழிற்சாலையே நிற்கும் அளவிற்குப் போயுள்ளது . இங்கே காலங்காலமாகப் பெண்களை வீட்டுக்குள் மட்டும் அழகு பார்த்த சமூகமிது . பெண்களுக்க வீட்டு வாசல் தான் எல்லைக்கோடாக இருந்தது . ஆனால் இன்று காலமும் சூழலும் மாறி விட்டது . நவீன தொழில் நுட்ப வசதிகள் அனைத்தையும் உள்ளங்கைக்குள் கொண்டு வந்து சேர்த்துக் கொண்டே இருக்கின்றது . ஒவ்வொரு வசதியையும் தானும் அனுபவிக்க வேண்டும் என்ற எண்ணத்தை உருவாக்குகின்றது . அதுவே ஆசைகளை வளர்க்கின்றது . இதற்காகவே வாழ வேண்டும் என்றை அக்கறையை உருவாக்குகின்றது . பணம் குறித்த ஆசையை , எண்ணத்தை மேம்படுத்துகின்றது . எத்தனை எண்ணங்கள் மாறினாலும் பெண்கள் குறித்த எண்ணங்கள் மட்டும் இங்கே எவரிடமும் மாறவில்லை . ஆண்கள் எத்தனை பேர்களிடத்திலும் பேசினாலும் குற்றமில்லை . எந்த இடத்தில் வைத்து பேசிய போதும் அவர் தரப்பு நியாயங்களைத்தான் இந்தச் சமூகம் வசதியாக எடுத்து வைக்கின்றது . ஆனால் ஒரு பெண் கடைகளில் , அலுவலகத்தில் , தொழிற்சாலையில் பணியாற்றினாலும் பெண் ஒருவருடன் இரண்டு நிமிடங்கள் கூடுதலாக நின்று பேசிக் கொண்டிருந்தால் அதன் மீது தப்பான அர்த்தம் தான் கற்பிக்கப்படுகின்றது . இது போன்ற தப்பிதங்கள் இவரைச் சிங்கக்கூட்டத்திற்குள் சிக்கிய புள்ளிமான் போலத் தடுமாற வைத்துள்ளது . முழுமையாக அந்தப் பெண் தரப்பு நியாயங்களைக் கேட்டு முடித்த பின்பு ஒரே ஒரு கேள்வி தான் கேட்டேன் . ” ஏனம்மா இப்படி ஒரு பெரிய பிரச்சனையை உருவாக்கி விட்டாய் ? எனக்குக் கொடுத்த பரிசா இது ?” என்றேன் , அதற்கு அவர் தந்த பதில் என்னைத் திடுக்கிட வைத்தது . [] 18 18 பொருளாதாரம் உருவாக்கும் அவதாரங்கள் [] 18 பொருளாதாரம் உருவாக்கும் அவதாரங்கள் ” தன் மனைவி வேலைக்குப் போக வேண்டும் . ஆனால் யாருடனும் பேசக்கூடாதுன்னு சொல்ற எத்தனை ஆண்கள் இங்கே யோக்கியவான்களாக வாழ்கின்றார்கள் சார் ? எல்லா ஆண்களுமே தாங்கள் பார்க்கின்ற அத்தனை பெண்களுடனும் பேச , பழகத்தானே செய்கின்றார்கள் . அதுவே நாங்கள் பேசினால் மட்டும் ஏன் சார் இவங்களுக்கு இத்தனை எரிச்சலா வருது ? அப்புறம் ஏன் சார் தங்கள் மனைவிகளை வேலைக்கு அனுப்புறாங்க ? ஒரு பெண் காலையில் வீட்டை விட்டு வெளியே கிளம்பி வந்தது முதல் இரவு வீட்டுக்கு திரும்புகின்ற வரைக்கும் தெருவில் பார்க்கின்ற நாய்கள் குறைப்பதையும் , முறைப்பதையும் கவலைப்பட்டுக் கொண்டிருந்தால் எங்களைப் போன்ற பெண்கள் அறைக்குள் பூட்டிக் கொண்டு உள்ளே வாழ வேண்டியது தான் . நான் பத்தினியா இல்லையான்னு இவங்க முடிவு செய்ய யாரு சார் ? இவங்கள பாத்து நான் பயந்துக்கிட்டே இருந்தால் என் வாழ்க்கையை எப்படிச் சார் நான் வாழ முடியும் ?” என்று கேட்டு விட்டு என்னைக் கூர்மையாகப் பார்த்தார் . என்ன பதில் சொல்வது என்று தெரியாமல் நானும் சற்று நேரம் அமைதி காக்க இடைவெளி விட்டுத் தொடர்ந்தார் . ” நீங்க தான் பெண்கள் கம்பீரமாக இருக்கனும் . யாரையும் சார்ந்து வாழாத அளவுக்குச் சுய ஓழுக்கமாய் முன்னேறிச் செல்லனும்ன்னு சொன்னீங்க ? இப்ப நீங்களே வந்து என்னைக் குற்றவாளிக் கூண்டில் நிறுத்தி கேள்வி கேக்குறீங்க ?” என்ற போது என் பதவியின் பொறுப்புணர்வு என்னைச் சுட்டது . ” ஏம்மா நீ எப்படி வேண்டுமானாலும் தனிப்பட்ட முறையில் தைரியசாலியாக இருக்கலாம் . அதற்காக உன் நடவடிக்கைகள் இங்கே மொத்த உற்பத்தியையும் நிறுத்தும் அளவுக்கு உன்னாலே பிரச்சனை உருவான பிறகு உன்னை எப்படி நான் இங்கே வைத்துக் கொள்ள முடியும் ?” என்றேன் . ” என்னை வேலையை விட்டு அனுப்பப் போறீங்களா ?” என்று சிரித்துக் கொண்டே கேட்டார் . அவரின் சிரிப்பு ஆயிரம் அர்த்தம் தருவதாக இருந்தது . பலருடன் பழகிப் பழகி எல்லாவற்றையும் இயல்பாக எடுத்துக் கொள்ளும் பக்குவத்துடன் உருமாறியிருந்தார் . சொல்லப்போனால் நான் இந்தச் சமயத்தில் தடுமாற்றத்தில் இருந்தேன் . இதற்கு என்ன பதில் சொல்வது என்று யோசித்துக் கொண்டிருந்த போது ” என்னை மாதிரி மற்றொரு பெண் இந்தப் பதவிக்கு வந்தாலும் அவங்கள மட்டும் இங்கே இருக்கின்ற ஆண்கள் மரியாதையாக நடத்துவாங்கன்னு நினைக்கிறீங்களா ? எந்தச் சமயத்தில் அவளைப் படுக்கக் கூப்பிடலாம்ன்னு இவங்க காத்துக்கிட்டுருப்பாங்க ? அவங்களால பிரச்சனை என்றால் அடுத்தப் பெண்ணைக் கொண்டு வருவீங்களா ?” என்று விடாமல் கேட்க அந்தப் பெண்ணின் தைரியமும் கேட்ட கேள்விகளும் எனக்கு ஆச்சரியத்தைத் தந்தது . நான் இந்த நிறுவனத்தில் நுழைந்த போது மற்றொருவர் , தன்னை அனுமதி இல்லாமல் விடுமுறை எடுத்ததற்காகத் திட்டிய போது அழுது கொண்டே அமைதியாக இருந்த பெண் இப்போது வெளுத்து வாங்குவதை மனதில் ரசித்துக் கொண்டாலும் நான் வெளியே காட்டிக் கொள்ளவில்லை . என் மனசுக்குள் பல கேள்விகள் விஸ்வரூபம் எடுத்து நின்றது . இந்த நிறுவனத்தின் முதலாளி கேவலமான எண்ணம் கொண்டவர் . இது வரையிலும் என் மேல் ஏராளமான கோபம் இருந்தாலும் என் தனிப்பட்ட குணாதிசியத்தில் ஒழுக்க ரீதியான செயல்பாட்டில் எந்தக் குறையையும் காணமுடியாமல் இருப்பவர் . ஒரு முதலாளி தனக்குக் கீழே பணிபுரிபவர் எத்தனை தெனாவெட்டான ஆளாக இருந்தாலும் நிர்வாக விசயத்தில் , நிறுவனத்தின் லாபம் சார்ந்த விசயத்தில் பாராட்டக்கூடிய வகையில் இருந்து விட்டால் அனுசரித்து வைத்துக் கொள்ளத் தான் விரும்புவர்கள் . நான் தான் அவரை மிரட்டும் நிலைமையில் இருந்தேன் . முதலாளி என்ற ஈகோ எப்போதும் அவரை உறுத்தலில் வைத்துக் கொண்டே தான் இருந்தது . நான் உணர்ந்து இருந்த போதிலும் என் பாணியைத் தான் அவருக்கு ஒவ்வொரு சமயத்திலும் வெளிப்படுத்திக் கொண்டிருந்தேன் . ஆனால் என்னைப் பழிவாங்க எப்போது வாய்ப்பு வரும் என்று காத்துக் கொண்டிருப்பவருக்கு இது போன்ற நிகழ்வுகள் தொழிற்சாலையில் நடந்துள்ளது என்று அவர் பார்வைக்குச் செல்லும் பட்சத்தில் இதை வைத்து கதை , திரைக்கதை எழுதி அவருக்கு விருப்பப்படி வசனத்தை எழுதி என்னைக் குற்றவாளியாக மாற்றி விடுவார் . மனதில் ஓடிய எண்ணங்களை அந்தப் பெண்ணிடம் காட்டிக் கொள்ள முடியுவில்லை . அந்தப் பெண் மேல் எந்தத் தவறும் இல்லை . ஆனால் சூழ்நிலை உருவாக்கிய குற்றவாளியாக மாறியிருந்தார் . இவரை இந்தச் சமயத்தில் பலி கொடுத்தே ஆக வேண்டும் . அரசியலில் அவ்வப்போது பலியாடுகள் தேவைப்படுவதைப் போல நிர்வாகத்திலும் பலி கொடுத்தால் தான் நிர்வாகம் அடுத்த நிலைக்கு நகரும் என்றால் கொடுத்தே ஆக வேண்டும் . இது வெளியே சொல்லமுடியாத நிர்வாக விதிமுறை . இவரை மேலும் இங்கே வைத்திருந்தால் இவரை வைத்து பலரும் பரமபதம் விளையட பலரும் காத்திருப்பார்கள் . ஒரு தொழிற்சாலையில் பணிபுரியும் மொத்த தொழிலாளர்களும் நமக்கு விசுவாசமாக இருப்பார்கள் என்பதை எதிர்பார்க்க முடியாது . நாம் எந்தப் பதவியில் இருந்தாலும் முதலாளி வர்க்கம் நம் செயல்பாடுகளை உளவு பார்க்க அவர்களுக்கென்று படை பட்டாளங்களை ஒவ்வொரு இடத்திலும் வைத்திருப்பார்கள் . ஆடு , புலி ஆட்டம் போலத்தான் விளையாடிக் கொண்டிருக்க வேண்டும் . எவர் நம்மை வெட்டுவார்கள் ? எந்த இடத்தில் நாம் வெட்டப்படுவோம் ? என்று காத்திருப்பதை விட வெட்டக் காத்திருப்பவர்களை நாம் வெட்டி விட்டு நகர்ந்து முன்னேற வேண்டும் . இறைச்சிக் கடையில் நின்று கொண்டு கருணை , காருண்யத்தைப் பேசி ஒன்றும் ஆகப் போவதில்லை . இது தொழில் வாழ்க்கை . அதுவும் கோடிக்கணக்கான ரூபாய் புழங்கும் தொழில் . கோடிகள் புழங்கும் எந்தத் தொழிலும் மேம்பட்ட பதவியில் இருப்பவர்களும் , முதலாளிகளும் அடிப்படையில் கேடிகளாகத் தான் இருப்பார்கள் . சிலர் அதனை வெளியே தெரியாதாவாறு மறைத்து வாழ கற்று இருப்பார்கள் . வெளியே முலாம் பூசம்பபட்ட தங்க நகை போலத்தான் இந்த வாழ்க்கையை வாழ்ந்தாக வேண்டும் . ஆனால் அவரவருக்குண்டான தர்மநியாயங்கள் தான் அடுத்தக் கட்டத்திற்கு அவர்களை நகர்த்தும் . எண்ணங்கள் முழுக்க வக்கிரத்தை சுமந்தவர்களுக்குத் தான் பார்க்கும் எல்லாப் பெண்களும் அனுபவிக்கக் கூடியவர்களாகத்தான் தெரிவார்கள் . வயது வித்தியாசமோ , உறவு சார்ந்த உறுத்தல்களோ தோன்றாது . பணம் மட்டுமே வாழ்க்கை என்ற எண்ணம் கொண்டவர்களுக்கப் பிணத்தைக் கூட விலை பேசத்தான் தோன்றும் . ஒரு முதலாளி யோக்கியவானாக இருக்க வேண்டிய அவசியமில்லை . கோடிக்கணக்கான முதலீடு போட்டவனின் வலியென்பது அவனுக்கு மட்டும் தான் தெரியும் . அவனின் இழப்புகளை எவரும் பங்கு போட்டுக் கொள்ள வர மாட்டார்கள் . ஆனால் குறைந்த பட்சம் நாணயமானவனாகத்தான் வாழ்ந்தாக வேண்டிய அவசியமுண்டு . நா நயம் என்பது ஒரு கட்டம் வரைக்கும் நகர்த்தும் . வாழ்க்கை முழுக்க வாயால் கப்பல் ஓட்டுபவர்களுக்குக் கலங்கரை விளக்கம் என்பது கடைசி வரைக்கும் கண்களுக்குத் தெரியாமலேயே போய்விடும் . ஒருவனுக்குப் பணம் சேரச் சேர எதிரிகளும் அதிகமாகிக் கொண்டே இருப்பார்கள் . போட்டி போட முடியாதவர்கள் , போட்டிக்குத் தயாராக இல்லாமல் பொறாமையுடன் மட்டும் வாழ்ந்து கொண்டிருப்பவர்கள் , கூடப் பழகிக் கொண்டே குழி பறிக்கக் காத்திருப்பவர்கள் என்று பலதரப்பட்ட மனிதர்களைச் சமாளித்தே ஆக வேண்டும் . ஒரு நிறுவனத்தில் பணிபுரியும் போது முதலாளிக்கு உண்டான எதிரிகளைப் போல முக்கியப் பதவிகளில் இருப்பவர்களுக்கும் ஏராளமான எதிரிகள் உண்டு . சிலர் காரணம் இல்லாமல் தோன்றுவார்கள் . பலரோ காரணக் காரியத்தோடு கவிழ்க்க காத்திருப்பார்கள் . இருக்கும் எதிரிகளைச் சமாளிப்பது எளிது . ஆனால் மேலும் எதிரிகள் உருவாகாமல் இருப்பது தான் ஒரு நிர்வாகியின் முக்கியப் பணியாக இருக்க வேண்டும் . என்னளவில் அந்த விசயத்தில் மட்டும் கவனமாக இருந்தேன் . ஒரு நிறுவனத்திற்குத் தகுந்த பதவியில் சரியான நபர்கள் அமைவது என்பது தற்போதைய சூழ்நிலையில் கடினமாக இருப்பதால் இந்தப் பெண்ணை வெளியே அனுப்பவும் தோன்றவில்லை . சட்டென்று முடிவெடுத்து மீண்டும் அலுவலகப் பணிக்கு அனுப்பி வைத்தேன் . ” இப்போதைக்கு நீ வேலையை விட்டு சென்று விட்டாய் என்று இங்கிருப்பவர்கள் நம்பும் அளவிற்குச் சில வாரங்கள் விடுமுறையில் இருந்து விடு ” என்று அறிவுரை சொல்லி அனுப்பி வைத்தேன் . என் மேல் உள்ள மரியாதையின் பொருட்டு அந்தப் பெண்ணும் ஏற்றுக் கொண்டு அப்பொழுதே கிளம்பினார் . அவரை அனுப்பியதும் மனதில் உள்ள பாரம் குறைந்தது போல் இருந்தது . இனி இந்தப் பொறுப்பில் சரியான நபர்களை அமர வைக்க வேண்டும் என்ற கவலையிருந்தாலும் நாளை அது குறித்து யோசிக்கலாம் என்ற எண்ணத்தில் தொழிற்சாலையைச் சுற்றி வர கிளம்பினேன் . மூன்று மாதங்களுக்கு முன் இந்தத் தோட்டத்திற்குள் நான் நுழைந்த போது ஒரு ஈ காக்கை பறக்க யோசித்துக் கொண்டிருந்ததைப் போல மயான அமைதி நிலவி கொண்டிருந்தது . ஆனால் இன்றோ எங்குப் பார்த்தாலும் எந்திரங்களின் இரைச்சலும் , ஆட்களின் நடமாட்டமும் தொழிற்சாலையின் முகமே மாறியிருந்தது . ஒரு ஆயத்த ஆடைத் தொழிற்சாலையின் உற்பத்திப் பிரிவை நான்கு விரல்களுக்குள் அடக்கி விடலாம் . ” கட்டிங் ” ” பவர் டேபிள் ” ” செக்கிங் ” ” அயரன் மற்றும் பேக்கிங் “. கட்டிங் என்ற துறை துணிகளைக் குறிப்பிட்ட அளவில் வெட்டிக் கொடுப்பவர்கள் . பவர் டேபிள் என்பது வெட்டிய துணிகளைச் சரியான வடிவமைப்பில் தைத்துக் கொடுப்பவர்கள் , செக்கிங் என்பது தைத்த ஆடைகளைத் தரம் பிரித்துக் கொடுப்பவர்கள் . கடைசியாக அயரன் மற்றும் பேக்கிங் துறையில் தான் சரியான அளவில் அந்த ஆடையைத் தேய்த்து அதனைப் பாலிபேக்கிங் செய்து அட்டைப் பெட்டியில் போட்டு முடிப்பவர்கள் . நான் முதலில் நுழைந்த பகுதி அயரன் துறை . ஆயத்த ஆடைத்துறையில் இதுவொரு வித்தியாசமான துறையாகும் . இதனைப் பற்றி விரிவாகப் பார்த்து விடலாமே ? திருப்பூர் என்ற ஊர் குறித்து உங்களுக்கு என்னவெல்லாம் தெரியும் என்று பட்டியலிடச் சொன்னால் உங்களால் பணம் சார்ந்து , பனியன் சார்ந்த சிலவற்றைச் சொல்லிவிடுவீர்கள் . ஆனால் திருப்பூர் போன்ற தமிழ்நாட்டில் உள்ள அனைத்துத் தொழில் நகரங்களும் சாதாரண மனிதர்களின் வாழ்க்கையில் பொருளாதார மாற்றங்களை உருவாக்குவதோடு மொத்தமாகச் சமூக மாற்றத்தின் முக்கிய அங்கமாக விளங்குகின்றது என்றால் உங்களால் நம்ப முடியுமா ? நம் சமூகத்தில் காலங்காலமாக ஊறிப்போன சாதிப் பிரச்சனையை அடித்துத் துவைத்த ஊர் திருப்பூர் . எப்படி என்கிறீர்களா ? இங்குள்ள ஒரு பெரிய நிறுவனத்தில் ஏறக்குறைய ஆயிரம் பேர்கள் பணிபுரிகின்றார்கள் என்று கணக்கில் எடுத்துக் கொண்டால் அவர்கள் எல்லாத் துறைகளிலும் இருக்கின்றார்கள் . அனைத்து இடங்களிலும் நீக்கமற நிறைந்துள்ளனர் . அவர்கள் இந்தச் சாதியில் பிறந்தவர்கள் , இந்த வேலைக்கு மட்டும் தான் தகுதியானவர்கள் என்று இனம் பிரிக்க முடியாத அளவுக்கு அவர்களின் திறமை மட்டும் தான் இங்கே பேசு பொருளாக மாறி விடுகின்றது . ஒருவரின் உழைப்பு அவர்களுக்குண்டான இடத்தைத் தக்க வைத்துக் கொள்ள உதவுகின்றது . அவர்களின் ஆர்வம் அதை உறுதிப்படுத்துகின்றது . அதில் காட்டக்கூடிய தனிப்பட்ட ஈடுபாடு என்பது அவர்களை மற்றவர்களிடம் இருந்து பிரித்து அவர்களின் தனித்தன்மையாகக் காட்டுகின்றது , இதனைச் சரியான முறையில் பயன்படுத்திக் கொண்டவர்கள் படிப்படியாக வளர்கின்றார்கள் . தாழ்த்தப்பட்ட சாதியில் பிறந்தவர் நன்றாகத் தைக்கக் கூடிய டைலர் என்றாலும் அவரின் சாதி முக்கியமல்ல . அவர் திறமை தான் அங்கே முக்கியம் . அவர் வீடு வரைக்கும் சென்று வண்டியில் வைத்து அழைத்து வரும் அவசர உலகில் இன்றைய திருப்பூர் ஓடிக் கொண்டு இருக்கின்றது . கடந்த இருபது வருடத்திற்குள் இங்கே சமூகம் சார்ந்த பழைய விதிகளும் உடைக்கப்பட்டு விட்டது . ஏற்கனவே இங்கே இருந்த எல்லைக் கோடுகள் அனைத்தும் அழிக்கப்பட்டு விட்டது . நீங்கள் வாழ்ந்த ஊரில் துணி துவைப்பவர்களை , உங்கள் துணிகளைத் தேய்த்து மடிப்புக் கலையாமல் தருபவர்களை எப்படி அழைப்பீர்கள் ? எந்தச் சாதிக்குள் வைத்து அவரை மரியாதை செலுத்துவீர்கள் ? ஆனால் திருப்பூரில் இந்தத் துறையில் பிராமணர்கள் உள்ளார்கள் என்றால் நீங்கள் நம்புவீர்களா ? ஆயத்த ஆடைத்துறையில் உள்ள ஒவ்வொரு துறை சார்ந்த வேலைகளிலும் அனைத்து வித சாதி சார்ந்தவர்களும் இருக்கின்றார்கள் . கடந்த ஐந்தாண்டுகளில் தொழிலாளர்களுக்குரிய மரியாதை பல மடங்கு அதிகரித்துள்ளது . அவர்களுக்குண்டான வசதிகளை நிர்வாகம் பார்த்து பார்த்துச் செய்ய வேண்டிய அவசியத்தில் உள்ளது . சட்டங்கள் கண் துடைப்பாக இருந்தாலும் பன்னாட்டு நிறுவனங்கள் எதிர்பார்க்கும் வட்டத்திற்குள் நின்று ஆகவேண்டிய அவசர அவசியத்தில் ஒவ்வொரு நிறுவனத்திற்குப் பலதரப்பட்ட நிர்ப்பந்தங்கள் உள்ளது என்பதை அறிவீர்களா ? இங்குள்ள ஒவ்வொரு தொழிலாளர்களும் அவரவர் நிறுவனத்திற்கு முக்கியமானவர்கள் . திறமையுள்ள எவரையும் எந்த நிறுவனமும் இழக்கத் தயாராக இல்லை . வருடந்தோறும அடிமாடு கணக்காகப் பல மாநிலங்களில் இருந்து பலரையும் கொண்டு வரப்பட்டாலும் இருக்கும் நபர்களைக் காப்பாற்றிக் கொள்வதில் ஒவ்வொரு நிறுவனமும் பாடு படுகின்றது . தொழில் சமூகம் என்பது மாற்றங்களை உள்வாங்கினால் மட்டுமே அந்தத் தொழிலில் தங்களை நிலைநிறுத்திக் கொள்ள முடியும் . முன்பு வருடந்தோறும் மாற்றங்கள் நடந்து கொண்டு இருந்தது . ஆனால் இன்றோ மாதந்தோறும் மாறிக் கொண்டே வருகின்றது . புதுப்புது எந்திரங்கள் ஒரு பக்கம் . நம்பமுடியாத விலை வீழ்ச்சி மறுபக்கம் . போட்டிகள் அதிகமாகும் அதிகமான திட்டமிடுதல் தேவைப்படுகின்றது . குறிப்பிட்ட லாபத்தை அடைய எல்லாவழிகளைப் பற்றியும் யோசிக்க வேண்டியதாக உள்ளது . தற்போது முதலாளி என்பவர் முதலைப் போட்டு விட்டுத் தொழிலாளர்களை அனுசரித்து வாழப் பழக வேண்டிய சூழ்நிலையில் இருப்பவர் . தொழிலாளர் என்பவர் உன் லாபத்தை விட என் லாபம் எனக்குப் பெரிது என்று மிரட்டுபவர் . இப்படித்தான் இன்றைய திருப்பூர் தொழில் உலகம் உள்ளது . இருபது ஆண்டுகளுக்கு முன் இங்கே அடிமை கலாச்சாரம் எங்கும் இருந்தது . சாதீயக் கொடுமைகளை வைத்துச் சாதித்துக் கொண்டிருந்தார்கள் . இன்று அதற்கான வாய்ப்பும் இல்லை . நினைத்துக் கூடப் பார்க்க முடியாது . சட்டங்கள் ஒரு பக்கம் . சமானியனின் கேள்விக் கணைகள் மறு பக்கம் . எல்லாப் பக்கங்களிலும் உள்ள கதவுகள் அகல திறந்து விட்டக் காரணத்தால் எல்லாத் தொழிலும் உள்ள சந்தை என்பது பொதுவானதாக மாறியுள்ளது . ஒவ்வொரு வாயப்புகளையும் திறமையுள்ளவர்கள் மட்டுமே பயன்படுத்த முடியும் என்ற நிலையில் தான் மாறிப் போயுள்ளது . ஒரு ஆயத்த ஆடைத் தொழிற்சாலை கவிழப் போகின்றது என்றால் இரண்டு துறைகளைச் சரியாகக் கவனிக்கவில்லை என்று அர்த்தம் . ஒன்று கட்டிங் துறை . மற்றொன்று அயரன் துறை . ஒரு ஆடைக்குத் தேவைப்படும் துணி உள்ளே வந்ததும் அதனைச் சரியான வடிவமைப்பில் வெட்டுபவர்கள் கையில் தான் ஒரு நிறுவனத்தின் லாபம் உள்ளது . சரியான அளவை விடக் கூட ஒரு இன்ச் வெட்டும் போது பத்தாயிரம் ஆடைகள் வெட்டி முடிக்கும் போது லாபத்தின் ஐந்து சதவிகிதம் அப்பொழுதே காணாமல் போய் விடும் . தேவையில்லாமல் வெட்டிய துணி குப்பைக்குப் போய்விடும் . “ ஏன் இப்படி வெட்டினாய் ?” என்று கட்டிங் மாஸ்டர்களை மிரட்ட முடியாது . “ எனக்குக் கொடுத்த அட்டையை வைத்து வெட்டினேன்” என்று தெனாவெட்டாகப் பதில் வரும் . அதே போலத் தைத்து முடித்துத் தரம் பார்த்து வரும் ஆடைகளை அயரன் துறையில் இருப்பவர்கள் பார்த்து எப்படித் தேய்த்து முடிக்கின்றார்களோ அதனைப் பொறுத்து தான் அந்த ஆடையின் உண்மையான தரம் வெளியே வரும் . வெளிநாட்டுக்காரர்கள் ஒரு நிறுவனத்தின் தரம் சார்ந்த விசயங்களில் அதிகக் கவனத்தில் எடுத்துக் கொள்கின்றார்கள் . இதன் அடிப்படையில் அந்த நிறுவனத்திற்கு அடுத்த ஒப்பந்தத்தைத் தருகின்றார்கள் . தரம் இல்லையேல் தங்கம் கூடத் தகரமாகத்தான் மதிக்கப்படும் . மொத்தத்தில் அயரன் துறை என்பது ஒரு ஆயத்த ஆடை நிறுவனத்தின் ஜீவநாடி . ஒரு நிறுவனத்தின் வளர்ச்சி என்பது இந்தத் துறையில் பணிபுரியும் அயர்ன் மாஸ்டர்களின் கைகளில் தான் உள்ளது . நான் எப்போதும் கவனம் செலுத்துவதும் அதிகப்படியான ஊக்கத் தொகை கொடுப்பதும் அயரன் மாஸ்டர்களுக்கே . இவர்களை அனுசரித்து வைத்துக் கொண்டால் தவறான ஆடைகள் நிச்சயம் பேக்கிங் வரைக்கும் செல்லாமல் தவிர்க்கப்பட்டு விடும் . நீங்கள் ஊரில் பார்த்து வளர்ந்த , நீங்கள் பழகிய படிப்பறிபில்லாதவர்கள் மற்றும் வாழ்க்கையில் கீழ் நிலையில் உள்ளவர்கள் , பொருளாதாரத்தில் பின் தங்கியவர்கள் போல இந்தத் துறையில் இங்கே எவரையும் பார்க்க முடியாது . பத்தாண்டுகளுக்கு முன்னால் இருந்த அயரன் துறை என்பது வேறு . இப்போது திருப்பூரில் உள்ள அயரன் துறை என்பது வேறு . அன்று உலர்த்தப்பட்ட மரக்கட்டை கரிகளை வேக வைத்து பயன்படுத்தினார்கள் . அன்று ஒவ்வொருவரும் பயன்படுத்திய அயரன் பாக்ஸ் என்பது குறைந்தபட்சம் இரண்டு கிலோ அளவுக்கு இருந்தது . ஒரு நாள் முழுக்க ஒவ்வொரு ஆடைகளையும் தேய்த்து முடிக்கும் போது தோள்பட்டை கழன்று விடும் . குதிகால் வலியில் தடுமாறி விடும் . ஆனால் இன்றோ டீசல் பாய்லர் , மின்சாரப் பாய்லர் என்று தொடங்கி இதன் முகமே மாறிவிட்டது . லைட் வெயிட் உள்ள பலதரப்பட்ட இறக்குமதி செய்யப்பட்ட அயரன் பாக்ஸ் தான் இந்தத் துறையில் உள்ளது . பணிபுரிபவர்களுக்குக் கஷ்டம் தெரியாமல் இஷ்டம் போலத் தங்கள் பணிகளைச் செய்கின்றார்கள் . இதைப் போல இந்தத்துறையில் பணிபுரிபவர்களின் பணியின் தன்மையும் முற்றிலும் மாறிவிட்டது . பத்தாண்டுகளுக்கு முன்பு கட்டிங் மாஸ்டர்களின் விரல்களைப் பார்த்தால் நிரந்தரப் புண் மற்றும் அந்த இடமே காய்ந்து போய் மொட்டு போல அசிங்கமான அடையாளமாக இருக்கும் . கத்திரியை பிடித்து அழுந்த வெட்டியதால் , தொடர்ச்சியாக இதே வேலையைத் தினந்தோறும் 12 மணி நேரம் செய்து கொண்டிருந்த காரணத்தால் இப்படிப்பட்ட அடையாளம் உருவாகியிருக்கும் . டைலர்களுக்கு நவீன ரக எந்திரங்கள் அறிமுகமாகப் போது அவர்களின் பணி சொல்ல முடியாத அளவுக்குத் துயரமாய் இருக்கும் . கால் வலியும் , கால் வீக்கமும் நிரந்தரமாக இருக்கும் . செங்கிங் பெண்களுக்கு எந்த வரையறையும் இல்லை . எவரிடம் எந்தச் சமயத்தில் திட்டு வாங்க வேண்டும் என்பதே அறியாமல் வந்தவர் போனவர் அத்தனை பேர்களும் கொச்சை வார்த்தையில் பேசி தங்கள் இச்சையைத் தீர்த்துக் கொள்வார்கள் . இன்று அனைத்தும் மாறிவிட்டது . பட்டதாரிகள் , மேற்படிப்புப் படித்தவர்கள் , படிப்பறிவில்லாதவர்கள் என்று அத்தனை பேர்களும் கலந்து கட்டி வேலை செய்கின்றார்கள் . உழைக்கத் தகுதியிருக்கும் அத்தனை பேர்களுக்கும் இங்குள்ள ஒவ்வொரு துறையும் காமதேனு பசுப் போல வருமானத்தைத் தந்து கொண்டே இருக்கின்றது . நான் இந்தத் தொழிற்சாலையைச் சீரமைக்கும் நேரத்தில் இந்தத் துறையைக் கூடுதல் கவனம் செலுத்தி உருவாக்கியிருந்தேன் . ” சார் நல்லாயிருக்கீங்களா ?” என்ற ஒரு குரல் கேட்டது . பின்னால் திரும்பிப் பார்த்த போது இந்தத் துறையின் ஒப்பந்தக்காரர் நின்று கொண்டிருந்தார் . பத்தாண்டுகளுக்கு முன் திருப்பூரில் ” பீஸ் ரேட் ” (PCS. RATE) என்பது மிக மிகக் குறைவாக இருந்தது . எல்லா இடங்களிலும் ” ஷிப்ட் ரேட் ” (SHIFT RATE) என்ற நிலையில் தான் இருந்தது . ஷிப்ட் ரேட்டில் தொழிலாளர்கள் பணிபுரியும் போது , அதனைச் சரியான முறையில் கண்காணித்தால் முதலாளிகளுக்கு லாபத்தின் சதவிகிதம் பல நூறு மடங்கு அதிகமாகக் கிடைக்கும் . ஆனால் இன்று ஆயத்த ஆடை உலகமென்பது ” பீஸ் ரேட் ” உலகமாக மாறி விட்டது . ” நான் ஒரு ஆடை தைத்துக் கொடுத்தால் எனக்கு இந்த ஊதியம் தர வேண்டும் ” என்று எழுதப்படாத ஒப்பந்தம் போலப் பேசி தங்கள் வேலையை ஒவ்வொருவரும் தொடங்குகின்றார்கள் . இன்று இங்குள்ள ஒவ்வொரு துறையையும் ஒரு ஒப்பந்தக்காரர் குத்தகை எடுத்துக் கொள்கின்றார் . அவரை CONTRACTOR என்கிறார்கள் . அவர் தனக்குக் கீழே பலரையும் வைத்து வேலை வாங்குகின்றார் . சிலரோ நூறு பேர்களைக்கூட வைத்து வேலை வாங்கிக் குட்டி சாம்ராஜ்யத்தின் சக்ரவர்த்திப் போலத் திகழ்கின்றார் . முதலாளிக்குக் கப்பலில் சரக்கை ஏற்றி அனுப்பி வைத்து சில மாதங்கள் காத்திருந்தது தான் அவர் லாபத்தைக் கண்களில் பார்க்க முடியும் . ஆனால் இவர்களுக்கோ அந்த வாரமே அவர்களின் லாபம் கைக்குக் கிடைத்து விடும் . ஒரு ஆடையின் தொடக்கம் முதல் குறிப்பிட்ட வேலை என்று ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு விதமான விலை . இது தவிர மொத்த வேலையை முடித்துத் தர , என்று பலதரப்பட்ட குட்டி உலகம் இதற்குள் உள்ளது . நானும் இந்த நிறுவனத்தில் இப்படிப்பட்ட ஒப்பந்தக் காரர்களைத்தான் ஒவ்வொரு துறையிலும் நியமித்து இருந்தேன் . பல தொல்லைகளில் இருந்து நமக்கு விடுதலை கிடைக்கும் . கண்காணிக்க வேண்டிய அவசியம் இருக்காது . தைத்தால் காசு . இல்லையேல் இல்லை . நான் இப்போது உள்ளே நுழைந்த அயரன் துறையில் உள்ள ஒப்பந்தக்காரர் தான் என்னை அழைத்தார் . ஒப்பந்தக்காரர் என்று அவரை மரியாதையுடன் சொல்கின்றேன் என்பதை வைத்து வயதில் பெரியவராக இருப்பாரோ ? என்று எண்ணி விடாதீர்கள் . இருபத்தி மூன்று வயது இளைஞன் . அவன் பெயரை அடுத்த அத்தியாயத்தில் குறிப்பிடுகின்றேன் . ஆனால் ஒரே ஒரு தகவலை மட்டும் நீங்க அவசியம் தெரிந்து கொள்ள வேண்டும் . அவன் கடந்த ஐந்து வருடத்தில் இந்தத் துறையில் உழைத்ததன் மூலம் சம்பாரித்த வருமானம் பதினைந்து லட்சம் . அதாவது சராசரியாக வருடத்திற்கு மூன்று லட்சம் . [] 19 19. பெயர் மட்டுமல்ல உழைப்பிலும் ராஜா தான் [] 19. பெயர் மட்டுமல்ல உழைப்பிலும் ராஜா தான் ” சார் உங்க மாதிரி ஆட்களிடம் எங்கள மாதிரி ஆட்கள் வேலை செய்வதே பாவம் சார் . இதற்கு மேலே நான் ஏதாவது பேசினால் ரொம்பச் சங்கடமாகப் போயிடும் . எனக்குக் கணக்கு முடிச்சு குடுங்க . நான் போயிடுறேன் “ ராஜாவுக்கும் எனக்கும் ஒரு வெள்ளிக்கிழமை மதிய நேர உரையாடல் இப்படித்தான் முடிவுக்கு வந்தது . ராஜா என்பவன் பல விதங்களில் ராஜா தான் . அகத்தியர் உயரத்தில் தான் இருப்பான் . ஆனால் செயலாக்கத்தில் கம்பீரமானவன் . மற்றவர்களை விட எதையும் தனித்தன்மையுடன் செய்யக் கூடியவன் . அவனின் வயது இருபத்தி மூன்றே தவிர அகாயச் சூரன் . காசு விசயத்தில் கெட்டி . அதே சமயத்தில் உழைப்பில் வீரன் . தனக்குச் சேர வேண்டிய ஒரு ரூபாயைக்கூட அடுத்தவன் எடுக்க அனுமதிக்க மாட்டான் . அதே சமயத்தில் அடுத்தவரின் ஒரு பைசாவை அபகரிக்க வேண்டும் என்று எண்ணத்தில் கூட நினைக்க மாட்டான் . அவனிடம் ஒரு பொறுப்பைக் கொடுத்து விட்டு நாம் நிம்மதியாகத் தூங்கப் போய்விடலாம் . ஆனால் அவன் எதிர்பார்த்த பணம் சரியான நேரத்தில் வரவில்லை என்றால் பெரிய பதவியில் இருந்தாலும் நேருக்கு நேராக நின்று கிழித்துத் தோரணம் கட்டி விட்டு தான் நகர்வான் . நான் இருந்த நிறுவனத்தில் FINISHING DEPARTMENT ல் ஒப்பந்தக்காரராக இருந்தான் . இந்தத் துறையில் வந்த பிறகு தான் தைத்த ஆடைகள் தரம் வாரியக பிரிக்கப்பட்டு முழு வடிவம் பெறுகின்றது . வெளிநாட்டுக்காரர்கள் எதிர்பார்க்கும் ஆயத்த ஆடைகள் அழகு வடிவம் பெறுகின்றது . ராஜாவுக்குக் கீழே ஒரு படை பட்டாளம் உண்டு . இவனுக்குக் கீழே பணிபுரிபவர்கள் அதனைத் தேய்த்து , பாலிபேக்கிங் செய்து ஒரு வடிவத்திற்குக் கொண்டு வருகின்றார்கள் . கடைசியாகப் பெட்டியில் ஒட்ட வேண்டிய ஸ்டிக்கர் சமாச்சாரங்களை ஒட்டி லாரியில் ஏற்றி விடுவார்கள் . இந்தத் துறையில் ஒவ்வொரு இடத்திலும் பல பிரச்சனைகள் உருவாகும் . மிகக் கவனமாகச் செயல்பட வேண்டியவர்களாக இருப்பார்கள் . வேடிக்கை பார்த்துக் கொண்டு செயல்பட்டால் ஒரு ஆடைக்குப் பின்னால் உழைத்த அத்தனை பேர்களின் உழைப்பும் வீணாகப் போய் விடும் வாய்ப்புள்ளது . அயரன் செய்ய , பேக்கிங் செய்ய , பெட்டியில் போட்டு மூடி முடிக்க என்று மொத்தமாக இந்த விலை என்று பேசி விட்டு வேலையைத் தொடங்குவான் . அவனுக்குக் கீழே இருபது பேர்கள் பணியில் இருந்தனர் . நான் , தொடக்கத்திலேயே ” இது தான் உனக்கான விலை ” என்று சொல்லி விடுவேன் . பல சமயம் வேலை முடித்ததும் விலை நிர்ணயிக்கப்படும் . இது போன்ற இடங்களில் அவனுக்கும் எனக்கும் தள்ளு முள்ளு நடக்கும் . நான் உறுதி செய்யும் விலையை வைத்து அதிலும் தனது திறமையால் நல்ல லாபம் ஈட்டிவிடுவான் . ஆட்களை வேலை வாங்குவதில் கில்லாடி . இவனிடம் பணிபுரிபவர்களில் ஒருவர் கூட வேலை நேரத்தில் வெறுமனே நிற்க முடியாது . அவன் வாயில் இருந்து வரும் வார்த்தைகள் அனைத்தும் பெண்களால் கேட்க முடியாததாக இருக்கும் . தொடர்ந்து இருபத்தி நான்கு மணி நேரம் வேலை என்றாலும் கண் அசராமல் தான் எடுத்த வேலையை முடித்து விட்டுக் கடைசியாக நமக்குக் குறுஞ்செய்தி அனுப்பி விட்டு தூங்கச் சென்று விடுவான் . இப்போது அவனுக்கும் எனக்கும் தான் பிரச்சனை . வாக்குவாதமாக மாறி விட்டது . ஒரு ஆடையின் அவனுக்குண்டான கூலியை நிர்ணயிப்பதில் பிரச்சனை உருவாகி அது முற்றிப் போய் அவனைக் கோபப்படுத்தி மேலே சொன்ன வார்த்தையைச் சொல்லும் அளவிற்குக் கொண்டு வந்து நிறுத்தி விட்டது . நான் கோபப்படவில்லை . ஒரு ஆடை உருவாக்கத்தில் ஒவ்வொரு இடத்திலும் எந்த அளவுக்குச் செலவு செய்யப்பட வேண்டும் என்று ஏற்கனவே தீர்மானித்து வைத்து விட்ட பிறகு அதனை மீறி பத்துப் பைசா கூடக் கூடுதலாகச் செலவளித்து விட முடியாது . அதற்குத் தனியாக அனுமதி பெற வேண்டும் . தீர்மானிக்கப்பட்ட விலையை விட ஒருவருக்கு நாம் கூடுதலாகச் சேர்த்து கொடுக்கும் பட்சத்தில் நிர்வாகத்திற்குத் தேவையற்ற சந்தேகங்கள் நம் மீது உருவாகும் வாய்ப்புள்ளதால் இந்தச் சமயத்தில் கவனமாகச் செயல்பட வேண்டும் . இதன் காரணமாக இவனைப் போன்ற ஆட்களைச் சமாளித்தே ஆக வேண்டும் . இங்கு ஒவ்வொரு ஆளுக்கும் ஒரு விலை உண்டு . அதனை விலை என்றும் சொல்லாம் அல்லது மனித பலகீனம் என்றும் அழைக்கலாம் . இவனின் பலகீனம் இவனது குடும்பம் . இவன் குடும்பத்தைப் பற்றிப் பேசத் தொடங்கினால் சுற்றிலும் உள்ள உலகத்தை மறந்து விடுவான் . ” உன்னைப் போல வேறொரு நபரை , துடிப்பான இளைஞனை பார்த்தது இல்லை . உங்கம்மா கொடுத்து வைத்தவர் என்று சொல்லி விட்டு ஒரு முறை உங்கள் அம்மாவை இங்கே அழைத்து வா ? நான் அவர்களைப் பார்க்க வேண்டும் ” என்று இவனிடம் சொல்லிவிட்டால் போதும் . நெகிழ்ந்து விடுவான் . எல்லாச் சமயத்திலும் இது போன்ற வார்த்தைகள் எடுபடாது . ஒவ்வொரு சாமிக்கும் ஒவ்வொருவிதமான பூஜைகள் உண்டு தானே ? நாம் தான் புரிந்து கொள்ள வேண்டும் . அப்படித்தான் இவனை ஒவ்வொரு முறையும் நான் கையாள்வதுண்டு . இவனைப் பற்றிப் பேசுவதற்கு முன் இவர்களின் உலகத்தைப் பற்றி நாம் கொஞ்சம் பேச வேண்டும் . திருப்பூரில் உள்ள என்பது சதவிகித ஏற்றுமதி நிறுவனத்தில் இன்று வரையிலும் வாரச் சம்பளம் தான் தொழிலாளர்களுக்கு வழங்கப்படுகின்றது . பெரிய நிறுவன செயல்பாடுகள் முற்றிலும் வித்தியாசமாக இருக்கும் . மாதச்சம்பளமாகத் தொழிலாளர்களுக்கு வழங்குகின்றார்கள் . மற்றபடி அலுவலகம் சார்ந்த பணியாளர்களுக்கு மாதச்சம்பளம் தான் . ஒவ்வொரு நிறுவனத்திலும் வெள்ளிக்கிழமை என்பது வாரக் கணக்கு முடிக்கப்படும் நாளாகும் . அந்த வாரத்தில் மொத்தமாக எத்தனை லட்சம் தேவைப்படுகின்றது என்பதைக் கணக்கில் வைத்து வங்கியில் சென்று பணம் எடுத்து வைத்து விடுவார்கள் . சனிக்கிழமை தோறும் இரவு பணி முடியும் நேரத்தில் வழங்கப்படுகின்றது . ஒரு தொழிலாளர் ‘ பீஸ் ரேட் ‘ கணக்கில் வேலை செய்வார் . மற்றொருவர் ‘ ஷிப்ட் கணக்கில் ‘ வேலை செய்வார் . இரண்டுக்கும் வெவ்வேறு விதமாகக் கணக்கு உருவாக்கப்பட்டு மேலே உள்ளவர்களின் பார்வைக்குச் செல்லும் . சிறிய நிறுவனங்களில் மொத்தமாக ஐம்பது பேர்கள் பணிபுரிவார்கள் . நடுத்தரவர்க்க நிறுவனத்தில் முன்னூறு முதல் ஐநூறு பேர்கள் வரைக்கும் பணிபுரிவார்கள் . பெரிய மற்றும் மிகப் பெரிய நிறுவனங்களில் ஆயிரம் பேர்களுக்குக் குறையாமல் இருப்பார்கள் . இங்கு ஆயிரம் பேர்களைத் தாண்டி பணிபுரியும் நிறுவனங்களும் உண்டு . சம்பளக்கணக்கு என்பது வெறுமனே சம்பளத்தோடு நின்று விடுவதில்லை . அவர்களுக்குச் சேர வேண்டிய ESI, PF, LEAVE SALARY போன்றவற்றைப் பட்டியலில் கொண்டு வர வேண்டும் . ஒருவரின் சம்பளக்கணக்கு இறுதி செய்யப்படும் போது இவைகள் அனைத்தையும் கணக்கில் எடுத்து ஒவ்வொரு வாரம் மற்றும் மாதத்திலும் அவர்களுக்குச் சம்பளம் வழங்கப்பட வேண்டும் . அவ்வாறு செய்யப்படாத போது அவர்கள் பணியில் இருந்து விலகும் போது வழங்கப்பட வேண்டும் . [] ஒருவர் தொடர்ந்து வேலை செய்யும்பட்சத்தில் வருடத்திற்கு ஒரு முறை கணக்கு முடித்துக் கொடுக்கப்பட வேண்டும் . ஆனால் திருப்பூரில் உள்ள நிறுவனங்களில் தீபாவளி அன்று வழங்கப்படும் போனஸ் உடன் கணக்கு முடித்துக் கொடுக்கின்றார்கள் . வருடம் முழுக்கப் பணி புரிந்த தொழிலாளர்களுக்கு இந்தத் தொகை பெரிய தொகையாகக் கிடைக்கும் . பாதிக்கும் மேற்பட்ட நிறுவனங்கள் இந்தக் கணக்கில் பல கோல்மால்கள் செய்து பட்டை நாமத்தை பூசி விடுவார்கள் . சிலர் அப்புறம் கொடுக்கின்றேன் என்று நழுவுவார்கள் . சிலர் கட்டைப்பஞ்சாயத்து அளவுக்குச் சென்ற பிறகு கொடுப்பார்கள் . மாத சம்பளம் என்றால் ஒருவர் பணி செய்த அந்த மாதத்தின் மொத்த நாட்களும் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும் . வாரச்சம்பளம் என்றால் வியாழக் கிழமை வரைக்கும் கணக்குக்கு எடுத்துக் கொள்வார்கள் . அடுத்த இரண்டு நாளான வெள்ளிக்கிழமை மற்றும் சனிக்கிழமை பணிபுரிந்த பணம் அடுத்த வாரத்தில் சேர்க்கப்படும் . வாரம் முழுக்கப் பணிபுரிந்தவர் அடுத்த வாரத்தில் பணிக்கு வரவில்லை என்றால் அவர் சென்ற வாரத்தில் பணிபுரிந்த இரண்டு நாள் சம்பளம் என்பது அடுத்த வாரத்தில் வருகின்ற சனிக்கிழமை அன்று வழங்கப்படும் . ஒரு தொழிலாளர் 90 நாட்கள் தொடர்ந்து பணியில் இருந்தால் அவர் அனைத்து விதமான உரிமைகளையும் பெறக் கூடியவராக மாறி விடுகின்றார் . இது போன்ற ஏகப்பட்ட விசயங்களை நிர்வாகம் கவனத்தில் எடுத்துக் கொள்ளப்பட வேண்டும் . ஒவ்வொரு நிறுவனத்திலும் உற்பத்திப் பிரிவில் பணிபுரியும் பணியாளர்களைக் கீழ்மட்ட நிலை மற்றும் மேல் மட்ட நிலை என்று இரண்டு வகையினராகப் பிரிக்க முடியும் . கீழ்மட்ட நிலையில் உள்ள பணியாளர்களுக்குத் தொழிலாளர்களுக்குக் கிடைக்கும் மரியாதை கூடக் கிடைக்காது . ‘ கசக்கி பிழிதல் ‘ என்ற வார்த்தைக்கு அர்த்தம் காண வேண்டுமென்றால் இவர்களின் உழைப்பைத்தான் உதாரணமாக நாம் எடுத்துக் கொள்ள வேண்டும் . இவர்களின் உரிமையைப் பற்றிக் கேட்க பேச ஆட்கள் இருக்காது . ” தப்பித்துக் கொள்வதே வாழ்க்கை ” என்கிற ரீதியாகத் தன்னை நிலைநிறுத்திக் கொண்டு முன்னேறிச் செல்ல வேண்டும் . உற்பத்திப் பிரிவில் பணியாற்றுகின்ற பெரிய பதவிகளில் உள்ளவர்களின் தலைக்கு மேலே எப்போதும் கத்தி தொங்கிக் கொண்டே இருக்கும் . எப்போது எந்தப் பிரச்சனை உருவாகும் ? எப்போது தலை வெட்டப்படும் என்கிற ரீதியில் தான் வாழ்ந்தாக வேண்டும் . ஒரு பக்கம் நிர்வாகம் எதிர்பார்க்கும் லாபத்தைக் கொடுத்தாக வேண்டும் . அந்த அளவுக்கு உற்பத்தித்திறனை அதிகப்படுத்த வேண்டும் . மறுபக்கம் தொழிலாளர்களை மனம் கோணாமல் நடத்தியாக வேண்டும் . பேக்டரி மானேஜர் பொறுப்பில் உள்ளவர்கள் ஒவ்வொரு வாரத்தின் வியாழன் முதல் சனிக்கிழமை வரைக்கும் இரட்டைத் தலைவலியில் தடுமாறுவார்கள் . ஒரு நிறுவனத்தில் மனிதவளத்துறை தனியாக இருந்தால் தொழிலாளர்களின் சம்பளக் கணக்கை அவர்கள் கையாள்வார்கள் . பல நிறுவனங்களில் பெயருக்கென்று மனிதவளத்துறை இருக்கும் . முதலாளிகளின் அல்லக்கை போலச் செயல்பட்டுக் கொண்டிருப்பார்கள் . இது போன்ற சமயத்தில் பேக்டரி மானேஜர் தலையில் கணக்குச் சமாச்சாரங்கள் வந்து விழும் . நான் இருந்த நிறுவனத்தில் உள்ள ஒவ்வொரு பிரிவின் சம்பளக் கணக்கும் அந்தந்த துறையின் தலைமைப் பொறுப்பில் உள்ளவர்களால் இறுதி செய்யப்பட்டு மனித வளத்துறை பார்வைக்குச் சென்று விடும் . கடைசியாக என் பார்வைக்கு வந்து விடும் . நான் தான் உறுதி செய்யப்பட வேண்டும் . பீஸ் ரேட்டில் தைப்பவர்களின் எண்ணிக்கை மட்டும் நேரிடையாக என் பார்வைக்கு வரும் . அவர்களுக்கு உண்டான பணம் சார்ந்த விசயங்களை நான் தான் முடிவு செய்ய வேண்டும் . காரணம் பீஸ் ரேட்டில் தைப்பவர்களின் விசயத்தில் மிக மிகக் கவனமாகக் கையாளத் தெரிந்துருக்க வேண்டும் . ஆயிரம் ஆடைகள் தைத்து விட்டு ஐயாயிரம் ஆடைகள் என்று கணக்கு காட்டக்கூடிய ஆபத்து உண்டு . எவர் தவறு செய்தாலும் கடைசியில் கடைசியில் அதற்கான முழுப் பொறுப்பும் நாம்தானே ஏற்றுக் கொள்ள வேண்டியதாக இருக்கும் ? இப்போது நாம் மேலே பார்த்த ராஜாவின் வாழ்க்கையைப் பற்றி நீங்கள் அவசியம் தெரிந்து கொள்ளத்தான் வேண்டும் . அவனின் சொந்த ஊர் அறந்தாங்கிக்கு அருகே உள்ள நாட்டுமங்கலம் என்ற சிறிய கிராமம் . எட்டாவது வரைக்கும் படித்தவன் . இவன் தான் வீட்டில் தலைமகன் . குடும்பச் சூழல் காரணமாக ஒன்பதாம் வகுப்புச் செல்லாமல் அறந்தாங்கியில் உள்ள சிறிய உணவகத்தில் பறிமாறுபவராக வேலைக்குச் சேர்ந்துள்ளான் . பத்தாண்டுகளுக்கு முன் அவன் வாங்கிக் கொண்டிருந்த சம்பளம் மாதம் முன்னூறு ரூபாய் . இவனிடம் ஆச்சரியமான குணங்கள் பல உண்டு . படிப்பறிவு இல்லையே தவிரப் பட்டறிவு அதிகம் . எந்த இடத்தில் எப்படிப் பேசி காரியம் சாதிக்க வேண்டும் என்பதை அறிந்தவன் . அதேசமயத்தில் முன் கோபத்தின் மொத்த உருவமும் இவனே . தன்னை எவரும் எந்தக் குறையும் சொல்லிவிடக் கூடாது என்பதற்காக இரண்டு மடங்கு உழைப்பை கொட்டக்கூடியவன் . எவருக்கும் இவனை எளிதாகப் பிடித்து விடும் . உழைக்கத் தயாராக இருப்பவனைச் சூழ்நிலை வெறுமனே வாழ அனுமதிக்குமா ? அவன் பணியாற்றிய உணவகத்தில் பறிமாறும் போது உருவான பிரச்சனையில் முதலாளி இவனின் குடும்பத்தைப் பற்றித் தவறுதலான வார்த்தைகளைப் பயன்படுத்தித் திட்டி விட இவனோ பக்கத்தில் கிடந்த காய்கறிகள் வெட்டப் பயன்படுத்தும் கத்தியை எடுத்து அவரைக் குத்த பாய்ந்து விட்டான் . முதலாளி எழுப்பிய குரலில் கூட்டம் சேர்ந்து விட்டது . கிராமத்து பஞ்சாயத்து கூட்டப்பட வெறுத்துப் போய்ப் அறந்தாங்கி பேரூந்து நிலையத்திற்கு வந்தவனுக்கு என்ன தோன்றியதோ திருப்பூர் பேரூந்தைப் பார்த்து ஏறி அமர்ந்து விட்டான் . திருப்பூர் வந்த முதல் மாதத்தில் தங்க இடமில்லை . கையில் காசில்லை . உணவுக்கு வழியில்லை . வழிகாட்ட ஆளில்லை . இங்குள்ள வேலைகளைப் பற்றித் தெரிந்து கொள்ளவும் முடியவில்லை . சிலர் சூழ்நிலையைக் காரணம் காட்டுகின்றனர் . சிலரோ சூழ்நிலையைத் தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்கின்றனர் . இவனோ சூழ்நிலையைத் தனக்கு உரியதாக மாற்றிக் கொண்டான் . தட்டுத்தடுமாறி எவரவர் பின்னாலோ அலைந்து கடைசியில் ஒரு ஒப்பந்தக்காரர் பின்னால் சென்று பேக்கிங் வேலை செய்யப் போன போது தான் இவனின் கிரகங்கள் வேலை செய்யத் தொடங்கியுள்ளது . ஒருவர் வாழ்வில் தென்படும் சிறிய வெளிச்சம் தான் மிகப் பெரிய பாதையைக் காட்டுகின்றது . தன்னம்பிக்கையோடு உழைக்கத் தயாராக இருப்பவனுக்கு இங்கு ஏதோவொரு சமயத்தில் வழி கிடைக்கத்தான் செய்கின்றது . இவன் வாழ்வில் நடந்த ஒவ்வொரு சம்பவங்களும் இவன் உழைப்பில் கிடைத்த விசயங்களே . மூன்று மாதங்கள் . குடும்பத்துடன் கூடத் தொடர்பு கொள்ளவில்லை . ஒரு சிறிய நிறுவனத்தில் பேக்கிங் பகுதியில் வேலைக்குச் சேர்ந்தவன் படிப்படியாக அயரன் மாஸ்டர் என்கிற ரீதியில் அடுத்த மூன்று மாதத்திற்குள் தன்னை வளர்த்துக் கொண்டு விட்டான் . அயரன் மாஸ்டர் ஆகி விட்டான் என்பதை நாம் திரைப்படங்களில் பார்ப்பதைப் போல ஒரு வரியில் வாசித்து விட்டு நகர்ந்து விட முடியும் . ஆனால் இதற்குப் பின்னால் அடைந்த வேதனைகளும் வலிகளைப் பற்றியும் பத்து அத்தியாயங்கள் எழுதினாலும் தீராத சமாச்சாரங்கள் . காரணம் இங்கே ஒருவர் வளர்வதை எவரும் விரும்புவதில்லை . காரணம் இல்லாமல் ஒருவர் மற்றொருவரை வெறுக்கத் தான் கற்றுள்ளனர் . இவன் ஏன் வளர வேண்டும் ? என்ற எண்ணம் தான் ஒவ்வொருவர் மனதிலும் மேலோங்குகின்றது . திருப்பூர் போன்ற போட்டி நிறைந்த ஊரில் முடிந்தவரைக்கும் ஒருவரை கீழே வைத்திருப்பதைத் தான் ஒவ்வொரு துறையிலும் உள்ளவர் விரும்புவர் . இது போன்ற சமயங்களில் ஒருவரின் சமயோஜித புத்தி வேலை செய்ய வேண்டும் . இவன் தான் இயல்பிலேயே கெட்டிக்காரன் ஆச்சே ? ஒவ்வொரு நாளிலும் விடுமுறை எடுக்கும் அயரன் மாஸ்டர் டேபிள் அருகே தான் செய்ய வேண்டிய பேக்கிங் சமாச்சாரங்களை எடுத்து வைத்துக் கொண்டு அந்தத் துறையின் சூப்ரவைசர் பார்க்காத சமயத்தில் தேய்த்த ஆடைகளை மீண்டும் அளவு மாறாமல் தேய்த்துப் பயிற்சி எடுத்து விடுவான் . இரவு வேலை என்றால் முதல் ஆளாகப் போய் நின்று விடுவான் . பாதி அயரன் மாஸ்டர்கள் குடிவெறியில் மட்டையாகி அங்கே படுத்துக்கிடக்க அவர்கள் செய்ய வேண்டிய வேலையை இவன் செய்து முடித்து விடுவான் . காலையில் ” அண்ணே உங்கள் கணக்கில் இத்தனை பீஸ் சேர்த்துக் கொள்ளுங்க நான் தேய்த்து கொடுத்து விட்டேன் ” என்றதும் அவர்களும் இவனை நம்பத் தொடங்கி விடுவார்கள் . படிப்படியாக அவர்கள் இடத்தை இவன் ஆக்ரமித்துக் கொள்வான் . அடுத்தடுத்த நிறுவனத்திற்கு நகர்ந்து ஒரு வருடத்திற்குள் தனக்குக் கீழே பத்துப் பேர்களை வைத்து வேலை வாங்கும் அளவிற்கு வளர்ந்து விட்டான் . இதிலும் சாமர்த்தியசாலியாக இருப்பான் . தனக்குக் கீழே திறமையான நபர்களை விடப் புதுப்புது ஆட்களைத்தான் வேலைக்கு வைத்துக் கொள்வான் . அவர்கள் தான் இவன் சொல்லும் விலைக்குக் கட்டுப்பட்டு வேலை செய்வார்கள் . நன்றாகப் பயிற்சி பெற்றுத் தொழில் அனுபவம் மிக்கவர்கள் இவனிடம் பீஸ் ரேட் பேச இவன் அவர்களைப் புறக்கணித்து விடுவான் . புதிதாக வருபவர்கள் ஷிப்ட் கணக்கில் தேய்த்துக் கொடுக்கச் சம்மதிப்பார்கள் . ஒருவரை ஷிப்ட் கணக்கில் வேலை வாங்கும் போது இவனுக்குக் கூடுதல் லாபம் . அவர்களை விரட்டி வேலைவாங்கினால் அதிகப் படியான லாபம் இவனுக்குக் கிடைத்து விடும் . பள்ளி , கல்லூரி விடுமுறை சமயங்களில் ஊரில் இருந்து ஒரு படை பட்டாளத்தை இரண்டு மாதத்திற்கு அழைத்து வந்து தங்க வைத்து விடுவான் . இவன் அவர்களுக்குக் கொடுப்பது தான் சம்பளம் . நாலைந்து இடங்களில் ஒரே சமயத்தில் வேலை எடுத்து புயல் போலப் பணியாற்றுவான் . அந்த இரண்டு மாதத்தில் இவன் காட்டில் அடை மழை தான் . முதல் வருடத்தில் இரவு பகலாக உழைத்த உழைப்பின் பலன் இவன் மூத்த அக்காவை குடும்பத்தினர் விரும்பிய வகையில் சிறப்பாகத் திருமணம் செய்து கொடுத்து விட்டான் . அடுத்தடுத்த இரண்டு வருடங்கள் குடும்பத்தில் மீதம் இருந்த இரண்டு அக்காக்காளின் திருமணம் . கடைசியாகத் தம்பியை அவன் விரும்பியபடி எம் . ஈ முடிக்க வைத்து இன்று வளைகுடா நாட்டில் மாதம் ஒரு லட்சம் சம்பளம் அளவிற்கு வாங்கும் அளவிற்கு உருவாக்கிக் காட்டியுள்ளான் . இவனின் தற்போதைய லட்சியம் ஊரில் பெரிய வீடு ஒன்று கட்ட வேண்டும் . தம்பி சம்பளத்தைக் கூட வங்கியில் தான் போட சொல்லியுள்ளான் . சுயமரியாதை மற்றும் தன்மானம் அதிகம் கொண்டவனுக்கு வாழ்க்கை முழுக்க அதிகப் பிரச்சனைகள் உருவானாலும் ஒவ்வொரு பிரச்சனையும் ஒரு வாய்ப்புகளை உருவாக்கிக் கொடுத்துக் கொண்டே தான் இருக்கும் என்பதை நானே என் அனுபவத்தில் கண்டுள்ளேன் . ராஜாவின் வாழ்க்கையும் அப்படித்தான் அவனை வளர்த்துள்ளது . நான் பணியாற்றிய ஒவ்வொரு நிறுவன தொழிற்சாலைக்குள் நுழையும் போதெல்லாம் வேலை சார்ந்த விசயங்களுக்கு அப்பால் பலதரப்பட்ட நபர்களுடன் அவர்கள் குடும்பம் சார்ந்து , அவர்களின் பிரச்சனைகளைப் பேச்சுவாக்கில் கேட்டுத் தெரிந்து கொள்வதுண்டு . காரணம் கொலைக் குற்றத்தில் ஈடுபட்டுத் தலைமறைவு வாழ்க்கைக்காகத் திருப்பூரில் வந்து பணிபுரிபவர்கள் , பகலில் நிறுவனத்தில் பணி புரிந்து கொண்டே இரவு நேரத்தில் வழிபறிக் கொள்ளையில் ஈடுபடுபவர்கள் , செக்கிங் வேலைக்குச் செல்கிறேன் என்று சொல்லிவிட்டு விபசாரத்தில் ஈடுபட்டுக் கொண்டிருப்பவர்கள் என்று பலதரப்பட்ட மனிதர்கள் ஒவ்வொரு தொழிற்சாலைக்குள்ளும் தொழிலாளர்கள் என்ற பெயரில் இருப்பார்கள் . பொறாமை குணம் என்பது ஒரு தனி மனிதனின் வளர்ச்சியை மட்டுப் படுத்தும் என்பது பொது விதி . ஆனால் ஒரு தொழிலாளரின் பொறாமை என்பது பெரிய பதவிகளில் இருப்பவருக்கு நிர்வாகத்தை எப்படி வழிநடத்த வேண்டும் என்பதற்கு உதவியாக இருக்கும் என்பதை நீங்க நம்ப முடியுமா ? ஒரு தொழிலாளருடன் சற்று நெருங்கி உரிமையாகப் பேசும் போதே அங்கே உள்ள பத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்களின் தனிப்பட்ட விசயங்கள் நம் பார்வைக்கு வந்து விடும் . இதுவே பத்து இடங்களில் பத்துக்கும் மேற்பட்ட நபர்களிடம் பேசும் போது மொத்த நிர்வாகத்தின் புரையோடிப்போன பல விசயங்கள் , பலரும் நம்மிடம் சுட்டிக்காட்டப்படாத சமாச்சாரங்கள் அனைத்தும் நம் கண்களுக்குத் தெரிந்து விடும் . ஒரு சிறந்த நிர்வாகி என்பவருக்கு முதல் தகுதியே நெருக்கடியான சூழ்நிலையில் உருவாகும் பிரச்சனைகளை எப்படிக் கையாள்கின்றார் என்பதை வைத்தே முதலாளி அவரைப்பற்றி முடிவுக்கு வருகின்றார் . ஆனால் நெருக்கடியான சூழ்நிலை உருவாகாமல் தனது நிர்வாகத்தைச் செம்மையாக வைத்திருப்பவரை எந்த முதலாளிக்குத்தான் பிடிக்காமல் போகும் ? நாம் பலவிதங்களில் பரிசோதித்துத் தேர்ந்தெடுத்து நமக்குக் கீழே பல பதவிகளில் வைத்திருப்பவர்களின் விசுவாசத்தைக் காட்டிலும் அடிமட்ட நிலையில் உள்ள தொழிலாளர்களின் விசுவாசம் என்பது அளவு கடந்தது என்பதை என் அனுபவத்தில் பல இடங்களில் பார்த்துள்ளேன் . ஒரு நிறுவனத்தில் அலுவலகம் மற்றும் தொழிற்சாலையில் ஏராளமான பதவிகள் உண்டு . ஒவ்வொரு பதவிக்கும் ஒவ்வொரு நபர் இருப்பார் . ஒரு பதவியில் உள்ளவர் அவர் அளவுக்குத் தான் திறமையாக இருக்க முடியும் . அவருக்கென்று ஒரு குறிப்பிட்ட வரையறை உண்டு . அதற்கு மேல் அவரிடம் அதிகம் எதிர்பார்க்க முடியாது . அவர் செய்ய முடியாத காரியத்தை நாமே செய்து விடும் போது அடுத்து வரக்கூடிய பல பிரச்சனைகளில் இருந்து நம்மைக் காத்துக் கொள்ள முடியும் . இப்படித்தான் எனக்கான நிர்வாக ஒழுங்கமைப்பை ஒவ்வொரு இடத்திலும் உருவாக்கி இருக்கின்றேன் . கௌரவம் சார்ந்து , ஈகோ சார்ந்து இது போன்ற விசயங்களைக் கையாளும் போது நம் மானம் மரியாதை அனைத்தும் கப்பலேறிவிடும் ஆபத்துள்ளது . நாம் இதைப் போய்ச் செய்வதா ? என்று யோசிக்கத் தொடங்கினால் ஏதோவொரு இடத்திலிருந்து பெரிய ஆபத்து நம்மைத் தாக்கப் போகின்றது என்று அர்த்தம் . நாம் எந்தப் பதவியில் இருந்தாலும் எந்த இடத்திலும் எந்தச் சூழ்நிலையிலும் நாம் இயல்பான மனிதராகக் கற்பனை செய்து கொண்டு வாழ்ந்தால் மட்டுமே நம் வாழ்க்கையை , பதவியை நம்மால் காப்பாற்றிக் கொள்ள முடியும் . சிறப்பான அங்கீகாரம் கிடைத்து விட்டது என்று இறுமாப்பில் நாம் நம்மை மாற்றிக் கொண்டால் அடுத்து ஒரு ஆப்புக் காத்திருக்கின்றது என்று அர்த்தம் . இது தவிர ஒவ்வொரு சூழ்நிலையிலும் நாம் ஒவ்வொரு இடத்திலும் உள்ள மனிதர்களுடன் பேசினால் மட்டுமே அவர்களைப் பற்றிப் புரிந்து கொள்ள முடியும் . நம் பதவி சார்ந்து ஒரு இறுக்கத்தை நாமே உருவாக்கிக் கொண்டே இருந்தால் அது பலவிதங்களில் நம்மைப் பல மனிதர்களிடத்தில் இருந்து அந்நியமாக வைத்து விடும் ஆபத்துள்ளது . மற்ற துறைகளை விட ஆயத்த ஆடைத் துறை என்பது முழுக்க முழுக்க மனித உழைப்பை நம்பி செயல்படும் துறை . ஒவ்வொருவரையும் ஒவ்வொரு நிலையிலும் அரவணைத்து சென்றால் தான் நாம் நம் காரியத்தை வெற்றியாக மாற்ற முடியும் . நாம் பலருடனும் பேசும் போது அவர்களுக்கு ஒரு விதமான ஆத்ம திருப்தி கிடைக்கின்றது . நம்மையும் இவர் மதித்துப் பேசுகின்றாரே ? என்ற எண்ணத்தில் வேலை விசயங்களில் கூடுதல் கவனம் செலுத்துவார்கள் . சுயநலத்தின் அடிப்படையில் தான் இந்த உலகம் இயங்குகின்றது . மறுபக்கம் பார்த்தால் சக மனிதனை மதிக்காமல் உலகில் எந்த நிகழ்வும் வெற்றியை நோக்கி நகர்வதில்லை . எந்தந்த இடங்களில் எப்படிப்பட்ட அளவீடுகளை வைத்துக் கொள்ள வேண்டும் என்பதை நாம் தான் உணர்ந்து கொள்ள வேண்டும் . ராஜா போன்ற சமூக அங்கீகாரத்தில் , பொருளாதார ரீதியாக வெற்றி பெற்ற இளைஞர்கள் திருப்பூரில் ஏராளமான நபர்கள் உண்டு . உலக நாடுகள் அனைத்தும் இந்தியாவை நோக்கி படையெடுத்து வரக்காரணம் இங்குள்ள இயல்பாக உள்ள இயற்கை வளமும் அதிக எண்ணிக்கையில் உள்ள இளையர் கூட்டமும் தான் முக்கியக் காரணமாக உள்ளது . மேலும் இந்த இளையர்களின் எண்ணிக்கை இங்கே அளவு கடந்து இருப்பதால் இந்தியாவின் தொழில் உலகம் நாள் தோறும் விரிவடைந்து கொண்டேயிருக்கின்றது . திருப்பூர் போன்ற தொழில் நகரங்களில் எல்லைகளும் விரிவாக்கிக் கொண்டே செல்கின்றது . 20 20 துணிவே துணை [] 20 துணிவே துணை ” வெளிச்சத்திற்குப் பின்னால் இருள் நிச்சயம் உண்டு ” என்பதனை நீங்கள் நம்புகின்றீர்களோ ? இல்லையோ திருப்பூர் வாழ்க்கையில் நான் உணர்ந்ததும் அதிகமாய் யோசிப்பதும் , ஆச்சரியப்படுவதும் இதே தான் . கடந்த இருபது வருடத்தில் சிறிய மற்றும் பெரிய முதலாளிகளுடனும் அதே சமயத்தில் மிகப் பெரிய செல்வாக்கு உள்ள முதலாளிகள் என்று பலதரப்பட்ட பேர்களுடன் பழகி வந்துள்ளேன் . பழக்கம் என்பது ஒரு நிறுவனத்தில் அவர்களுடன் நிறுவனம் சார்ந்து செயல்பட்ட விதம் என்று மட்டும் நினைத்து விட வேண்டாம் . ஒரு நிறுவன முதலாளியின் தனிப்பட்ட குணாதிசியங்கள் , அவர் குடும்பம் சார்ந்த செயல்பாடுகள் , அவரின் வெவ்வேறு முகங்கள் என்று தொடங்கி அவருக்கு எங்கிருந்தெல்லாம் நிதி ஆதாரங்கள் வருகின்றது என்பது வரைக்கும் பல விசயங்களைக் கவனித்துள்ளேன் . சில நிறுவன முதலாளிக்குப் பின்னால் அரசியல் பின்புலங்கள் போன்ற பலவற்றையும் பார்த்துள்ளேன் . அனைத்துச் சாதகப் பாதக அம்சங்கள் எனப் பலவற்றையும் கூர்ந்து கவனித்து வந்துள்ளேன் . ஒவ்வொரு நாளும் ஆச்சரியம் படத்தக்க வகையில் பல நிகழ்வுகளைக் கடந்து வந்து உள்ளேன் . இன்று அனைத்தையும் திரும்பிப் பார்க்கும் போது மனதில் ஒரு விதமான வெறுமையே எனக்குள் உருவாகின்றது . பல நிறுவனங்களில் பணிபுரிந்துள்ளேன் . நானே சொந்தமாகத் தொழில் தொடங்கியும் இருக்கின்றேன் . என் தோல்விகளையும் நான் அடைந்த வெற்றிகளையும் வைத்து யோசித்துப் பார்த்தாலும் கூட இந்தத் தொழில் எவ்வித திருப்தியையும் எனக்குத் தந்ததில்லை . எனக்கு மட்டுமல்ல . இந்தத்துறையில் பணிபுரியும் எவரிடம் கேட்டாலும் இதே தான் பதில் வரும் . ஒரு துறையில் குறிப்பிட்ட காலம் ஒருவர் பணியில் இருந்தால் பணிபுரிந்தவர்கள் குறிப்பிட்டத்துறையில் அடுத்தக் கட்டத்திற்கு நகர்வது வாடிக்கை தானே ? ஆனால் ஆயத்த ஆடைத்துறையில் பணிபுரிந்தவர்களில் பெரும்பாலோனோர் அடுத்தக் கட்டத்திற்கு நகர்ந்ததே இல்லை . நகர்ந்து வந்தாலும் அவர்களால் நீடித்து இருந்ததும் இல்லை . ஏன் ? இங்கே பணிபுரிந்தவர்களுக்கு மட்டுமல்ல இந்தப் பிரச்சனை . முதலாளிகளும் இதே தான் பிரச்சனையாக உள்ளது . மற்ற துறைகள் என்றால் முதலாளிகள் அடுத்தடுத்து விரிவாக்கத்தில் தான் கவனம் செலுத்துவார்கள் . ஆனால் இங்கிருப்பவர்களோ இருக்கும் தொழிலை காப்பாற்றிக் கொள்ளத் தினந்தோறும் போராடிக் கொண்டிருக்கின்றார்கள் . ஒரே காரணம் இத்துறை பெரும்பாலும் மனித உழைப்பை நம்பித்தான் உள்ளது . அவர்களை அனுசரித்துப் போனால் மட்டுமே வேலைகள் நடக்கும் என்ற சூழ்நிலையில் உள்ளது . தினந்தோறும் எத்தனை நவீன தொழில் நுட்பங்கள் வந்த போதிலும் ஒவ்வொரு இடத்திலும் மனிதர்களின் திறமை மூலம் நவீன எந்திரங்களுக்காக முதலாளியால் போடப்பட்ட முதலீடு காப்பாற்றப்படுகின்றது . வாழ்வில் கால் பகுதி இந்தத் துறையில் நான் செலவழித்த போதிலும் என்ன சாதித்தோம் ? என்று இன்று யோசித்துப் பார்க்கும் போது நான் பெற்ற அனுபவங்களை எழுத்தாக மாற்ற முடிந்ததுள்ளது என்பது மட்டும் தான் மிஞ்சுகின்றது . தமிழ்நாட்டில் சமீப காலமாகத்தான் தொழில்துறை சார்ந்த எழுத்துக்கள் கவனம் பெறத் தொடங்கியுள்ளது . இன்னும் பலவருடங்கள் கழித்து இந்தத் துறையில் ஈடுபட நினைப்பவர்களுக்கு என் எழுத்துக்கள் பயன்படக்கூடும் . திருப்பூர் என்பது தமிழ்நாட்டில் உள்ள பல மாவட்டங்களில் உள்ள மக்களுக்கு வேலை வாய்ப்பை வழங்கி உள்ளது . இன்னமும் வழங்கிக் கொண்டே இருக்கப் போகின்றது . இது நாணயத்தின் ஒருபக்கம் . ஆனால் இதற்கு மற்றொரு புறம் உண்டு . திருப்பூர் என்ற ஐம்பது கிலோமீட்டர் சுற்றளவு கொண்ட இந்த ஊரின் ஏற்றுமதி தொழில் என்பது சுற்றிலும் உள்ள பல்லாயிரக்கணக்கான ஏக்கர்களை அடுத்தத் தலைமுறை வரைக்கும் பயன்படுத்த முடியாத அளவுக்குச் சாயத்தண்ணீரால் பாழ்படுத்தியும் உள்ளது . தமிழ்நாட்டில் உள்ள மற்ற துறைகளை விட இங்குள்ள முதலாளிகள் நம்பமுடியாத அளவுக்கு வளர்ச்சி அடைந்துள்ளனர் . இங்கே பணிபுரியும் தொழிலாளர்கள் குறுகிய காலத்திற்குள் தேவையான பணத்தைச் சேர்த்துள்ளனர் . தனி நபர் வருமானத்திற்கும் உதவும் இத்துறையை முறைப்படுத்த இன்று வரையிலும் எந்த அரசாங்கமும் முயற்சி எடுக்கவில்லை . எல்லா இடங்களிலும் பணம் தான் பேசுகின்றது . எல்லா மனிதர்களையும் பணம் தான் செயல்பட , செயல்படாமல் இருக்கத் தூண்டுகோலாய் உள்ளது . இனி எழ வாய்ப்பில்லை என்று கருதப்பட்ட சில நிறுவனங்களை நம்ப முடியாத அளவிற்கு வளர்த்துக் காட்டியுள்ளேன் . வளர்ந்த பிறகு முதலாளிகளின் எண்ணத்தில் உருவாகும் மாறுதல்களைக் கண்டு மிரண்டு போய் ஒதுங்கி வந்துள்ளேன் . முதலீடு போட்டவன் வாழ்க்கை முழுக்க இரண்டு வாழ்க்கை வாழ கடமைப்பட்டவன் என்ற நிலையை ஏற்றுக் கொள்ள முடியாமல் அமைதியாக ஒதுங்கியும் வந்துள்ளேன் . ஆனால் வருடத்திற்கு நூறு கோடி வரவு செலவு செய்தவர்கள் கூட ஒழிந்து வாழும் சூழ்நிலையில் தான் இன்று இருக்கின்றனர் . படிப்படியாக வளர்ந்து கொண்டு இருப்பவர்கள் கூட அழிந்து போனவர்களைப் பாடமாக எடுத்துக் கொள்ளாமல் அதே அழிவுப் பாதையில் தான் சென்று கொண்டிருக்கின்றனர் . காலப்போக்கில் நம்பிக்கை நாணயம் தேவையில்லை என்பதனை உறுதியாகக் கடைபிடிக்கத் தொடங்கி விடுகின்றனர் . மொத்தத்தில் ஒவ்வொருவரும் சொல்லமுடியாத அளவிற்கு மன அழுத்தத்தில் சிக்கித் தவிக்கின்றனர் . கடந்த இருபது ஆண்டுகளில் என்னுடன் பணிபுரிந்தவர்களில் முக்கால்வாசி பேர்கள் இந்த ஊரில் இல்லை . எவரும் மேம்பட்ட பதவிகளை அடையவே இல்லை . தன்னளவில் சம்பாரித்தவர்கள் ஊரில் வாங்கிய கடன்களைக் கட்டியுள்ளனர் . கௌரவத்திற்காகத் தங்களது சொந்த ஊரில் வீடு கட்டியுள்ளனர் . அக்கா , தங்கைகளைத் திருமணம் செய்து கொடுத்துள்ளனர் . இது அத்தனைக்கும் சேர்த்துத் தங்கள் ஆரோக்கியத்தை விலையாகக் கொடுத்து உள்ளனர் . குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகு செயல்படமுடியாத நிலைக்கு மாறிப் போயுள்ளனர் . தொழிலாளர்களின் வாழ்க்கை இப்படியென்றால் முதலாளிகளின் வாழ்க்கை இதைவிடக் கொடுமையாக முடிந்துள்ளது . திடீர் சாவு . மனம் வெறுத்துப் போய்த் தூக்கில் தொங்குதல் . மதுவில் கலந்த விஷம் மூலம் பரலோகத்தைப் பார்த்தவர்கள் என்று பட்டியலிட்டால் இதன் நீளம் அதிகமாகும் . ஒரு குடும்பத்தில் பணப்பிரச்சனை என்றால் அதன் பாதிப்பு சிலருக்கு மட்டுமே . ஆனால் சிறிய அல்லது பெரிய நிறுவனங்களில் ஏற்படும் பொருளாதார இழப்புகள் என்பது பல ஆயிரம் பேர்களைப் பாதிக்க வைக்கக்கூடியது . ஒரு நிறுவனத்தை நம்பி பல துறைகள் செயல்படுகின்றது . அரசு சார்ந்த துறைகள் முதல் அரசு சாராத தனியார் துறைகள் என்று ஒவ்வொரு துறையையும் நம்பி நேரிடையாக மறைமுகமாகப் பல துறைகள் உள்ளது . ஒரு நிறுவனத்தின் வீழ்ச்சி என்பது ஒரு தனிநபரின் கொள்கை முடிவால் உருவானது என்பதை உணர்ந்து கொள்ள வேண்டும் . அவருக்குக் கீழே எத்தனை பேர்கள் இருந்தாலும் தோல்வி என்றால் நம்மால் ஒருவரைத்தான் சுட்டிக்காட்ட முடியும் . ஒருவரின் தவறான முடிவென்பது மேலே சொன்ன அத்தனை துறைகளையும் பாதிப்படையச் செய்கின்றது . தலைமைப்பண்பு என்பதனை எவராலும் கற்றுத் தர முடியாதது . எத்தனை நவீன பள்ளி , கல்லூரிகள் இதனைப் பாடமாகக் கற்றுத் தந்தாலும் நம் நாட்டைப் பொறுத்தவரையிலும் இங்கு எதுவுமே கடைசி வரைக்கும் நிச்சயம் இல்லை . காரணம் சட்டம் என்பது இங்குச் சாதாரண மனிதர்களுக்கு ஒரு விதமாகவும் , பணம் படைத்தவர்களுக்கு வேறு விதமாகவும் இருப்பதால் அவரவர் வாழ்க்கையை அவரவர் தான் பார்த்துக் கொள்ள வேண்டியதாக உள்ளது . இதன் காரணமாக ” தப்பிப்பிழைப்பதே வாழ்க்கை ” என்பதே ஒவ்வொருவரின் தாரக மந்திரமாக உள்ளது . ஒரு நிறுவனத்தின் முதலாளி என்பவர் மிகச் சிறந்த தலைமைப்பண்பு உள்ளவராக இருக்க வேண்டும் . ‘ குணம் நாடி குற்றமும் நாடி ‘ என்பதைப் புரிந்தவராக இருத்தல் வேண்டும் . ‘ இதனை இதனால் இவன் முடிக்கும் ‘ என்று ஆராய்ந்து பார்த்துத் தனக்குக் கீழே உள்ளவர்களைக் கணிக்கத் தெரிந்தவராக இருக்க வேண்டும் . இத்தகைய குணம் இல்லாதவர்கள் கையில் நிர்வாகம் இருந்தால் என்னவாகும் ? என்பதைத்தான் இங்கே உள்ள நிறுவனங்கள் வெளிச்சம் போட்டுக் காட்டுகின்றது . ஒருவரின் தனிப்பட்ட பழக்கவழக்கம் மாறும் போது அவரால் எடுக்கப்படும் முடிவுகளும் மாறுகின்றது . ‘ ஒழுக்கம் உயிரை விட மேலானது ‘ என்று வள்ளுவர் சொன்னதன் காரணத்தை எவரும் யோசிப்பதே இல்லை . ஆனால் ஒரு மனிதனின் அனைத்து தோல்விகளும் அவனின் ஒழுக்கம் சார்ந்த நடவடிக்கை தொடங்கி வைக்கின்றது . அவனுடைய ஆசைகள் அதனை விரைவு படுத்துகின்றது . இது தான் சரியென்று அவனது பேராசை உறுதிப்படுத்துகின்றது . இதன் வழியே சென்று அழிந்தவர்கள் தான் இங்கே முக்கால்வாசி பேர்கள் உள்ளனர் . நிர்வாக ரீதியான முடிவுகள் என்பது நாம் நினைப்பது போன்று எளிதன்று . நிகழ்காலம் , எதிர்காலம் இரண்டையும் ஒப்பிட்டுப்பார்த்து இறந்த கால நிகழ்வுகளை மனதில் கொண்டு ஒவ்வொரு முடிவையும் எடுக்கப்பட வேண்டும் என்று இங்குள்ள எத்தனை முதலாளிக்குத் தெரியும் என்று நம்புகின்றீர்கள் ? முதலாளிகளைக் குறை சொல்வது எளிது . உன்னால் ஏன் ஜெயிக்க முடியவில்லை ? என்ற கேள்வி பலமுறை என்னைத் தாக்கியுள்ளது . இங்குள்ள மண்ணின் மைந்தர்களுக்குப் புத்திசாலித்தனத்தை விட அவர்களின் தந்திரங்கள் உதவியுள்ளது . அவர்கள் வைத்திருந்த இடத்தின் மதிப்பு பல விதங்களில் உதவி புரிந்துள்ளது . உறவுகள் உறுதுணையாய் இருந்துள்ளனர் . இவர்களின் பின்புலம் வங்கியை வளைக்கக் காரணமாக இருந்துள்ளது . வளர்த்துக் கொள்ள வேண்டிய நிர்வாக அறிவை விட எவரையும் விலை பேசிவிடத் துணிச்சல் இருந்த காரணத்தால் எளிதாக முன்னேறி வர முடிந்துள்ளது . 20 ஆண்டுகளுக்கு முன்னால் போட்டி போட ஆள் இல்லாத காரணத்தால் நினைத்தபடியே பலவற்றையும் சாதிக்க முடிந்தது . ஆனால் இன்று உலகளாவிய பொருளாதாரச் சூழலில் போட்டிகள் பல முனைகளில் இருந்து தொடர்ந்து தாக்குதல்களாக நெருக்க இன்று செயல்பட முடியாத நிலைக்கு மாறிக் கொண்டு இருக்கின்றனர் . திருப்பூரைச் சுற்றியுள்ள எந்த ஊரிலும் இந்த ஊரின் காசோலையை மதிப்பதே இல்லை என்பதை வைத்தே இங்குள்ளவர்களின் ” நிர்வாகத்திறமையை ” உங்களால் புரிந்து கொள்ள முடியும் . நம்பமுடியாத அளவிலான பணம் நம் கைக்குத் திடீரென வந்தால் நம்மில் எந்த விதமான மாற்றங்கள் உருவாக்கும் என்பதற்குத் திருப்பூரில் வாழ்கின்றவர்களே மிகச் சிறந்த உதாரணமாக எனக்குத் தெரிகின்றார்கள் . நான் வாழ்ந்த காரைக்குடி பகுதியில் பல தலைமுறைகளாக எவ்வித லாபம் நட்டம் வந்தாலும் பாதிக்கப்படாத நிலையில் வாழ்ந்த கொண்டிருந்த பல பணக்காரர்களைப் பார்த்து வந்துள்ளேன் . அவர்களின் அமைதியே பலவற்றை உணர்த்தியுள்ளது . அவர்களின் வாழ்க்கையில் ஆடம்பரம் பார்க்க முடியாது . கஞ்சன் , கருமி , சிக்கனம் , பணத்தின் மேல் உள்ள மரியாதை , தகுதிக்கேற்ற வாழ்க்கை என்ற வார்த்தையைக் கொண்டு அவர்கள் வாழ்க்கையை நம்மால் அளவிட முடியும் . அவர்கள் சேர்த்த எந்தச் சொத்துக்களும் வங்கிக்குச் சென்றதும் இல்லை . வாழும் வரைக்கும் கொடுத்த வாக்குறுதியை உயிர் போலக் கருதினார்கள் . பல தலைமுறைகள் சொத்துக்கள் அழியாமல் காப்பாற்பட்டு தொடர்ந்து அடுத்தத் தலைமுறைக்கு வந்து கொண்டே இருக்கின்றது . ஆனால் திருப்பூரில் கடந்த 25 வருடங்களில் திடீரென உருவான ஆயத்த ஆடைத்தொழில் கொடுத்த சுதந்திரமும் , அளவுக்கு மீறி கிடைத்த பணமும் தனி மனிதனை எந்த அளவுக்கு மாற்றியுள்ளது என்பதனை பார்த்துத் திகைப்படைந்துள்ளேன் . தினந்தோறும் நான் சந்திக்கும் பலதரப்பட்ட நிகழ்வுகள் பலவித அதிர்ச்சியை எனக்குள் உருவாக்கிக்கொண்டே இருக்கின்றது . பணம் என்ற காகிதம் அதிகளவில் சேரச் சேர கொள்கை , குணம் , பேச்சு என்று அனைத்தும் ஒவ்வொருவருக்கும் படிப்படியாக மாறத் தொடங்கி விடுகின்றது . முதல் தலைமுறை உருவாக்கிய 500 கோடி சொத்துக்கள் 25 வருடங்கள் கழித்து அடுத்தத் தலைமுறைக்குக் கைமாறிய போது காணாமல் போய்விடுகின்றது என்பதை நீங்கள் வாசிக்கும் போது உங்களுக்கு அதிர்ச்சியாக இருக்கக்கூடும் . ஆனால் இங்கே இருப்பவர்கள் எதிர்பார்த்தது தானே ? என்று கடந்து போய்க் கொண்டேயிருக்கின்றார் . காரணம் இங்குள்ள ஒவ்வொரு வெற்றிக்குப் பின்னாலும் பல நூறு மனிதர்களின் மேல் ஏறி மிதித்து வந்த கதைகள் தான் உள்ளது . கடந்த 19 அத்தியாயங்களின் வாயிலாக நான் கடந்த காலங்களில் பணிபுரிந்த இரண்டு நிறுவனங்களின் மூலமாக அங்குப் பணியில் இருந்த சமயத்தில் சந்தித்த செயல்பாடுகள் மூலம் இந்தத் துறையைப் பற்றி உங்களுக்குப் புரிய வைக்க முயற்சித்துள்ளேன் . இது முழுமையானது அல்ல . ஏற்கனவே எனது முதல் புத்தகமாக வெளிவந்துள்ள டாலர் நகரம் என்ற நூலின் மூலமாகத் திருப்பூர் என்பதைப் பொதுப்பார்வையில் எழுதி வைத்தேன் . அதன் தொடர்ச்சியாகத் திருப்பூரில் உள்ள தொழில் நிறுவனங்கள் சார்ந்த செயல்பாடுகளை எழுதி வைத்தால் மட்டுமே என் பார்வை முழுமையடையும் என்பதால் ஒரு தொழிற்சாலையின் குறிப்புகளாக இதை உங்களுக்குத் தந்துள்ளேன் . நான் இந்தத் தொடரில் எழுதியுள்ள முதல் நிறுவனத்தோடு தற்பொழுது எனக்கு எவ்வித தொடர்பு இல்லை . ஆனால் இந்தத் தொடரை அந்த நிறுவனத்தில் தற்பொழுது பணிபுரிந்து கொண்டிருக்கும் இருவர் இந்தத் தொடரை தொடர்ந்து படித்து வந்துள்ளனர் . நிச்சயம் அவர்கள் மூலம் பலருக்கும் போய்ச் சேர்ந்து இருக்கக்கூடும் . ஒருவர் என்னை அழைத்துப் பேசினார் . நான் ஆர்வம் மேலிட ” இப்போது நிர்வாகம் எப்படி உள்ளது ?” என்று கேட்டேன் . நான் எழுதியுள்ள முதல் நிறுவனத்தில் தினந்தோறும் தொழிலாளர்களை ஏற்றி வரும் வாகனத்திற்குப் பெட்ரோல் போட வழியில்லாமல் தடுமாறிக் கொண்டிருக்கின்றார்கள் என்று சொன்னார் . மாதந்தோறும் தொழிலாளர்களுக்கு வழங்கிக் கொண்டிருந்த சம்பளத்தை இரண்டு மாதத்திற்கு ஒரு முறை மாற்றியுள்ளனர் . தொழிலாளர்கள் கலைந்து செல்ல தற்பொழுது மிகுந்த நெருக்கடியில் வாரச்சம்பளமாக மாற்றித் தொழிலாளர்களைத் தக்க வைத்துக் கொள்ளப் பாடுபட்டுக் கொண்டிருக்கின்றனர் . பணிபுரியும் ஊழியர்களுக்கு மூன்று மாதங்களுக்கு ஒரு முறை அல்லது நினைத்த போது சம்பளத்தை வழங்குகின்றனர் . இந்த வார்த்தைகளை எழுத எனக்குப் பயமில்லை . காரணம் இது தான் உண்மை . இந்தத் தோல்விக்குக் காரணம் ஒரு தனி மனுஷியின் ஈகோ . தான் என்ற அகம்பாவம் . அடுத்தவர்களைக் கிள்ளுக்கீரையாக மதிக்கும் தான்தோன்றித்தனம் . அந்தத் தொழிற்சாலையில் தினந்தோறும் 12 மணி நேரம் வேலை நடந்தால் மாதம் இரண்டு லட்சம் ஆடைகள் தயாரித்து ஏற்றுமதி செய்ய முடியும் . நான் அங்கே நுழைவதற்கு முன்பு மாதம் தோறும் 25000 ஆடைகள் தான் தயாரித்துக் கொண்டிருந்தார்கள் . நம்ப முடியாத அளவிற்குத் தொழிற்சாலையின் உள்ளே அனைத்து விதமான வசதிகளும் இருந்தது . தொழிலாளர்களுக்குத் தேவைப்படுகின்ற அனைத்து வசதிகளையும் உருவாக்கிக் கொடுத்திருந்தார்கள் . ஆனால் முறையற்ற நிர்வாக அமைப்பால் உள்ளே பணிபுரிந்த அத்தனை பேர்களும் தெளிவற்ற முறையில் பணியாற்றிக் கொண்டிருந்தனர் . காரணம் அவர்களை வழிநடத்த சரியான ஆட்கள் இல்லை . சரியான நிர்வாக முறைகள் தெரிந்த எவரையும் அந்தப் பெண்மணி செயல்பட அனுமதிக்கவும் இல்லை . எந்தத் தொழிற்சாலையிலும் தொழிலாளர்களைக் குறை சொல்ல முடியாது . அவர்கள் எப்போதும் போல அவர்களுடைய தனிப்பட்ட சிந்தனையில் தான் செயலாற்றிக் கொண்டிருப்பார்கள் . தலைமைப் பொறுப்பில் இருப்பவர்களுக்குத் தான் அவர்களை எப்படி வேலை வாங்க வேண்டும் ? நிறுவனத்தின் லட்சியம் என்ன என்பதற்கேற்ப படிப்படியான நிர்வாக ஒழுங்கமைப்பை உருவாக்க வேண்டும் . அங்கே மற்றொரு ஆச்சரியம் என்னவென்றால் உள்ளுர் தொழிலாளர்களை விட வட மாநில தொழிலாளர்கள் தான் அதிகம் . மனிதவளத்துறையில் இருந்தவர்களுக்கும் , உற்பத்தித் துறையில் இருந்தவர்களுக்கும் அவர்கள் சவாலாக இருந்தனர் . மொழி முதல் அவர்களுடைய தனிப்பட்ட பழக்கவழக்கங்கள் வரைக்கும் வட்டத்திற்குள் சிக்காதவர்களாக இருந்தனர் . எனக்கும் , தொடக்கத்தில் அங்கிருந்த ஒவ்வொருவரும் இதனைத் தான் குறிப்பிட்டு இந்த நிறுவனத்தின் தோல்விக்குக் காரணம் என்றனர் . நான் அதை ஏற்றுக் கொள்ளவில்லை . எந்த இடத்தில் பிறந்தாலும் அத்தனை பேர்களின் சிந்தனையிலும் பணம் என்பது தான் அடித்தளமாக இருக்கும் என்பதனை உறுதியாக நம்பி என் பணியைத் தொடங்கினேன் . புதிதாகத் தொழில் தெரியாமல் ஒரு இடத்திற்கு வருபவர்களை உங்கள் சிந்தனைகளுக்கேற்ப அவர்களை மாற்றி விட முடியும் . ஆனால் நன்றாகத் தொழில் தெரிந்து அடம்பிடித்துக் கொண்டு சோம்பேறியாகத்தான் இருப்பேன் என்பவர்களை வளைப்பது தான் கடினம் . அந்தக் கடினப் பணியைத்தான் தைரியமாக மேற்கொண்டேன் . உலகில் இதமான வார்த்தைகளும் , ஆறுதல் மொழிகளால் எந்த மனிதனையும் வசப்படுத்திவிட முடியும் என்பதனை உறுதியாக நம்பினேன் . படிப்படியாக ஆள் குறைப்புச் செய்யப் பல இடங்களில் ஆட்டம் காண ஆரம்பித்தது . பிரித்தாளும் சூழ்ச்சியை உருவாக்கி சிலரை மேலே கொண்டு வர வேறு சிலருக்குப் பொறாமை மேலோங்கத் தொடங்கியது . அவர்களுக்குள் பிரச்சனை உருவாக அடுத்தடுத்து இடைவெளி உள்ள இடங்களில் உள்ளூர் மக்களை வேலையில் அமர்த்த ஒவ்வொருவராக வழிக்கு வரத் தொடங்கினர் . பெட்டிப்பாம்பு போல மாறத் தொடங்கினர் . மிரட்டல் , அச்சுறுத்தல் , அவமரியாதை போன்றவற்றைக் கணக்கில் எடுத்துக் கொண்டால் அது நமக்கு மன உளைச்சலைத்தான் தரும் . இப்படிப்பட்ட அவமரியாதையை நான் ஏற்கனவே பலமுறை பார்த்து வந்தவன் என்று அவர்கள் எதிர்பார்க்கும் நிலைக்குக் கீழே பல படிகள் இறங்கிப் பாருங்கள் . அட இவன் நம்மளை விட மோசமானவன் போல ? என்று ஒதுங்கி விடுவார்கள் . இப்படிக் கையாண்டு தான் இரண்டாவது மாதத்தில் ஒரு லட்சம் ஆடைகள் என்ற இலக்கை அடைந்தேன் . இதற்காகக் கோவையில் ஒரு நட்சத்திர விடுதியில் சாதனை விழா கூட நடத்தினார்கள் . ஆனால் அந்தச் சமயத்திலும் உழைத்த தொழிலாளர்களுக்குச் சேர வேண்டியதை கவனமாகச் சேர்த்தேன் . தொழிலாளர்களுக்கு என் மேல் அதிக ஈர்ப்பு உருவாகக் காரணமாக இருந்தது . ஆனால் என் நிர்வாகத்தில் ” நான் சொல்வதைத் நீ கேட்க வேண்டும் ” என்று முதலாளியின் மனைவி வந்து என் பாதையில் பெரிய பாறாங்கல்லை தூக்கிப் போட்ட போது அதைத் தூளாக்கி விட்டு முன்னேறிச் சென்றேன் . முதலாளி முதல் அங்கிருந்த பல துறைகளில் தலைமைப் பொறுப்பில் உள்ளவர்கள் வரைக்கும் எனக்கு ஆதரவு குரல் எழுப்பிய போதும் கூட அந்தப் பெண்மணியின் இறுதி ஆயுதம் அவரின் அழுகையாக இருந்தது . தன் மனைவியைத் திருத்த முடியாத நிலையில் உள்ள கணவரால் என்ன செய்ய முடியும் ? எனக்கும் அவருக்கும் முட்டல் மோதல் உருவானதற்கு அவரின் ஈகோ தான் காரணம் . ” என் நிறுவனத்தில் நான் வைத்தது தான் சட்டம் ” என்று என்னிடம் மல்லுக்கு நின்ற போது ” சரி நீங்க சொல்றபடியே நான் நடக்கின்றேன் ? ஆனால் மாதம் இத்தனை ஆடைகள் ஏற்றுமதியாக வேண்டும் என்ற கோட்பாடுகளை உடைத்து விடலாம் . அப்படிப் போக வேண்டும் என்றால் உள்ளே உள்ள நிர்வாகம் என் விருப்பப்படி தான் இருக்க வேண்டும் ” என்றேன் . ” அது முடியாது ? மாதம் இத்தனை லட்சம் ஆடைகள் போக வேண்டும் . ஆனால் நான் சொல்கின்றபடி நான் நீ நடக்க வேண்டும் ” என்று பேசுபவரை எப்படி எதிர் கொள்வீர்கள் ? நான் வெளியே வந்த பிறகு நான் இருந்த பதவிக்கு வருடந்தோறும் பத்துப் பேர்கள் வந்து போய்க் கொண்டே தான் இருந்தார்கள் . சில வருடங்கள் கவனித்து விட்டு அந்த நிறுவனத்தை மறந்தே போய்விட்டேன் . இரண்டாவதாகக் குறிப்பிட்டுள்ள நிறுவனம் தற்பொழுது எப்படி உள்ளது ? வங்கிக்கடன் கழுத்தை நெறிக்கப் பாதிக்கும் மேற்பட்டதை விற்று விட்டார்கள் . மீதி உள்ளதை ஒப்பந்த ரீதியாகப் பார்த்துக் கொள்ள ஆட்களைத் தேடிக் கொண்டிருக்கின்றார்கள் . அடுத்தவனின் காசுக்கு ஆசைப்பட்டே தன்னை வளர்த்துக் கொண்டவர் இன்று விரக்தியில் தடுமாறிக் கொண்டிருக்கின்றார் . முதல் நிறுவனம் அடுத்தவர் காசுக்கு ஆசைப்பட வில்லை . ஆனால் ஒரு நிறுவனத்தின் நிர்வாகம் என்பது வேறு தங்களின் விருப்பங்கள் என்பது வேறு என்பதை உணர மறுத்தார்கள் . பொறுப்பில் உள்ளவர்களைச் சுதந்திரமாகச் செயல்பட அனுமதித்து அவர்கள் மூலம் தங்கள் விருப்பங்களைச் செயல்படுத்திக் கொள்ள வேண்டும் என்பதை உணர மறுத்தார்கள் . அடுத்தடுத்த தோல்விகள் வந்த போதிலும் தனக்குக் கீழே இருப்பவன் அத்தனை பெருமைகளையும் பெறுகின்றானே ? என்ற குழந்தைத்தனமான பிடிவாதம் நிறுவன வளர்ச்சியைக் கீழே இறக்க காரணமாக இருந்தது . ஆனால் நான் இரண்டாவதாக அறிமுகப்படுத்திய நிறுவனம் தொடக்கம் முதல் அடுத்தவரின் சொத்தை அபகரித்து , அடுத்தவரை செயல்பட முடியாத அளவிற்கு முடங்கச் செய்து தன் வளர்ச்சியைப் படிப்படியாக வளர்த்துக் கொண்டு வந்தது . போட்டிச்சூழல் மாறத் தொடங்க தனக்குக் கீழே பணிபுரிந்தவர்கள் கேள்வி கேட்க அவர்களின் ஈனத்தனமான புத்தி அடிவாங்கத் தொடங்கியது . இன்று வங்கிக்கடன்களைக் கட்டிமுடித்தால் சில சொத்துக்கள் மட்டுமே மிஞ்சும் . ஆனால் செய்து வந்த பாவத்திற்கு என்ன தண்டனை கிடைக்குமோ ? திடீர் பணத்தைப் பார்த்தவர்களால் தங்கள் ஈகோ தனத்தை மூட்டை கட்டி வைத்துக் கொள்ள முடியவில்லை . தொழிலில் வரும் பணம் அனைத்தும் தங்கள் வாழ்க்கைக்கு மட்டுமே என்று உறுதியாக நம்புகின்றார்கள் . பிழைக்க வந்தவர்களை எச்சில் இலை போலக் கருதுகின்றார்கள் . தங்கள் நிறுவன வளர்ச்சியில் இவர்களுக்குப் பங்குண்டு என்பதை நம்ப மறுக்கின்றார்கள் . தூங்குபவனை எழுப்ப முடியும் ? தூங்குவது போல நடிப்பவனை எழுப்ப முடியுமா ? இதன் காரணமாகத்தான் இங்கே உள்ள ஒவ்வொரு நிறுவனமும் செயல்பட முடியாத நிலைக்குத் தள்ளப்படுகின்றது . ஒரு தொழிற்சாலை குறிப்புகளில் சில இடங்களில் தொடர்பு இல்லையே ? என்ற உங்களின் வருத்தம் எனக்குப் புரிந்தாலும் எல்லாவற்றையும் எல்லா இடங்களிலும் அப்படியே போட்டு உடைத்து விட முடியாது . நிஜவாழ்க்கை எதார்த்தம் ஒரு பக்கம் இருக்கின்றது என்பதை நீங்கள் கவனத்தில் கொள்ள வேண்டும் . நீ என்ன சாதித்தாய் ? என்ற கேள்வி உங்களிடமிருந்து வருமானால் நிம்மதியாக வாழ்கின்றேன் . தினந்தோறும் பலதரப்பட்ட மனஉளைச்சல் என்னைத் தாக்கிக் கொண்டே இருந்தாலும் படுத்தவுடன் தூக்கம் வந்து விடுகின்றது . மனைவி திட்டும் அளவுக்குச் சாப்பாடு விசயத்தில் இன்னமும் வெளுத்து வாங்கிக் கொண்டிருக்கின்றேன் . குழந்தைகள் எங்களைக் கொண்டாடுகின்றார்கள் . அடிப்படை வசதிகளுக்கு எவ்வித பஞ்சமில்லை . ஆடம்பர தேவைகளை நாடியதும் இல்லை . துணிவே துணை என்று வாழ்வதால் என் பணி ஏதோவொரு நிறுவனத்திற்குத் தேவைப்படுகின்றது . தேவைப்பட்டவர்கள் என்னைப் பயன்படுத்திக் கொள்கின்றார்கள் . என்னை விடத் திறமைசாலிகள் இங்கு ஏராளமான பேர்கள் இங்குண்டு . ஆனால் ஒரு பெரிய நிர்வாகத்தை எப்படி வழிநடத்த வேண்டும் என்பதில் தான் அவர்களுக்கும் எனக்கும் பெரிய அளவில் வித்தியாசம் உள்ளது . இது போன்ற இடங்களில் என் தனித்திறமை ஜெயிக்கக் காரணமாக உள்ளது . என் முழுமையான ஈடுபாடு ஒரு நிறுவனத்தின் வளர்ச்சியை விரைவு படுத்துகின்றது . ஒரு நிறுவனத்தை விட்டு வெளியே வந்தவுடன் அவர்கள் பலமுறை மீண்டும் அழைத்தும் அந்தப்பக்கம் திரும்பிப் பார்ப்பதும் இல்லை என்ற கொள்கையைத் தொடக்கம் முதல் கடைபிடித்து வருகின்றேன் . என் கொள்கை கோட்பாடுகள் நிர்வாக அமைப்போடு ஒத்துப் போகும் வரைக்கும் ” என் கடன் பணி செய்து கிடப்பதே ” என்று ஒவ்வொரு நாளும் இனிதாக நகர்ந்து கொண்டேயிருக்கின்றது . [] ஒரு நிறுவனத்தை விட்டு நகர்ந்து வந்த பிறகு ஏதோவொரு இடத்தில் அடையாளம் தெரியாத தொழிலாளர் உண்மையான அக்கறையோடு என்னைப் பற்றி எங்கள் குடும்பத்தைப் பற்றி அக்கறையோடு விசாரிக்கின்றார்கள் . ” நீங்க இருந்த வரைக்கும் நாங்க நன்றாக இருந்தோம் ” என்று சொல்கின்ற அவர்களின் அந்த வார்த்தைகள் தான் இன்னமும் என்னை இந்தத் துறையில் இயங்க வைத்துக் கொண்டேயிருக்கின்றது . கோடி கோடியாய் சேர்த்தவனும் இறுதியில் திருப்பூரில் மின் மயானத்திற்குத்தான் செல்லப் போகின்றான் . நானும் அங்கே தான் செல்லப் போகின்றேன் . கோடிகளைச் சேர்த்து வைத்தவனின் வாரிசு அவனை எளிதில் மறந்து விடக்கூடும் . ஆனால் என் கொள்கைகள் என் வாரிசுகளை வழி நடத்தும் . அவர்களும் பலரின்வாழ்க்கைக்கு உதவக் கூடியவர்களாக இந்தச் சமூகத்தில் எதிர்காலத்தில் செயலாற்றுவார்கள் என்ற ஆழ்ந்த நம்பிக்கை எனக்குள் உண்டு . நம்பிக்கை தானே வாழ்க்கை . [] 1 ஒரு தொழிற்சாலையின் குறிப்புகள் .. ஒரு தொழிற்சாலையின் குறிப்புகள் .. ” திருப்பூர் டைரி குறிப்புகளாக ..” ஆகஸ்ட் 1 ல் துவங்கிய ஜோதிஜியின் உள்மன பயணம் டிசம்பர் 12 ல் வெகு அற்புதமாக நிறைவடைந்து விட்டது . இங்குத் தோற்றவர்கள் , தவறாக ஜெயித்து விட்டு அதைத் தக்க வைத்துகொள்ளத் தெரியாமல் , பேராசையால் அகலகால் வைத்து காலத்தின் நீண்ட எல்லைக்குள் அடையாளம் தெரியாமல் கரைந்து போனவர்கள் கடின உழைப்புக்கு மதிப்புப் பெறாமல் விரக்த்தியில் நஷ்டபடுத்துபவர்கள் போன்ற பலரையும் பற்றித் தன் பார்வையில் எடை போடும் களமாக இந்தத் தொடரை செதுக்கி இருக்கிறார் ஜோதிஜி முதல் போட்ட முதலாளிகள் மனோபாவத்தில் தொடங்கி ஒவ்வொறு துறையின் பணி , அதன் பணிச்சுமை , அதில் பணிபுரியும் தொழிலாளிகளின் மனோ நிலை அவர்களை அணுகும் முறை மேலும் திருப்பூர் பற்றிச் சிறிதும் அறியாதவகள் அல்லது திருப்பூரில் பணிபுரிய வேண்டும் என்ற கனவுகளைச் சுமந்து கொண்டு இருபவர்களாக்கான ஒரு ஆயத்த ஆடை நிறுவனத்திர்க்கான ”கையேடு” போல வெகு அற்புதமான தனது எழுத்து நடை அளுமைதிறத்தால் சொல்லி இருக்கிறார் . தொடருக்குச் சுவாரசியம் சேர்க்க ஓர் கதைக்கு , திரைகதை முக்கியம் என்பதைப் போலச் சில உண்மை பாத்திரங்களை எடுத்து அழகாகத் தொடரை நகர்த்தி இருக்கிறார் . தனது கடந்த 22 வருட அனுபவ பாதையில் கற்றதும் பெற்றதுமாக இந்தத் துறையில் தனது கடின உழைப்பை உரமாக்கி இதுதான் திருப்பூர் என்ற இங்குள்ள தொழில் அமைப்பை கூர்ந்து கவனித்து அதோடு சளைக்காமல் ஓயாமல் ஓடி , அதன் ஆழத்தை தொட்டு அதில் கண்டெடுத்த த்னது அனுபவ முத்துக்களைச் சரமாக்கி வருங்காலதை திருப்பூரில் வளமாக்கிக் கொள்ள விரும்புபவ்ர்களுக்கு நம்பிக்கை இருந்தால் ஜெயிக்கலாம் என்று தனது வாழ்வையே பணயமாக்கி சொல்லியிருக்கிறார் ’உன்னால் முடியும் தம்பி’ என்பது எம் எஸ் உதயமூர்த்தி வாக்கு . ஆனால் ஜோதிஜியின் வாக்கியம் ”உன்னாலும் முடியும் தம்பி “ என்பதுதான் அது என்பதாகத் தந்து இருக்கிறார் . பொதுவாக ஆன்மீகத்தில் மட்டுமல்ல பல இடத்திலும் சொல்லு ஒரு வழக்கு உண்டு அது ”கண்டவர் விண்டிலர் விண்டவர் கண்டிலர்”ஆனால் இவர் தான் கண்ட நியாய அநியாயங்களை முடிச்சுகளை த்னது நம்பிக்கை அறிவால் அவிழ்த்து , அதன் பலனையும் விளைவையும் விவரித்துச் சொல்லி இருகிறார் . இங்குப் பல கம்பெனிகளில் பணிபுரிபவர்களுக்குச் சில வெளிநாட்டிலிருந்து ஆர்டர் கொடுக்கும் கம்பெனிகளில் வார மற்றும் மாதாந்திர தொழிலாளர் சட்ட உரிமைகளாவது இருக்கிறது ஆனால் அந்தக் கம்பெனியில் பணிபுரியும் அழுவலக (Staffs) பணியாளர்கள் நிலைமை முற்றிலும் அடிமையானது . மனித உரிமைகள் இங்குக் காசுக்காகப் பிழியப் படுவது பற்றி அவர் ஏனோ மிகக் குறைவாகவே சொல்லி இருக்கிறார் என்பது ஆதங்கம் . பதினைந்து வருடமாக இந்த ஊரின் அலை வேகத்தோடு பயணித்துக் கொண்டு இருக்கும் நான் இந்தப் பதிவுகளைப் பற்றிச் சொல்வது மிகப் பெரிய விசயமாக இருக்காது ஆனால் திருப்பூருக்குச் சம்பந்தமில்லாமல் இந்தப் பதிவுகள் மூலம் மட்டுமே 20 வாரங்கள் வலைத்தமிழ் மூலம் படித்துப் பயணித்தவர்கள் சொல்லும் கருத்தே இங்கு ஆசிரியர் , இந்தப் பதிவுக்களுக்காக எடுத்துக் கொண்ட முயற்சியின் வெற்றியின் எல்லைக் கோடாக இருக்கும் . கிருஷ்ணமூர்த்தி . திருப்பூர் வலைபதிவர் .( முதல்கோணல் ) http://myowndebate.blogspot.in/2014/11/blog-post.html [factory_html_6399a4a0] 2 ஒரு தொழிற்சாலையின் குறிப்புகள் – ஒரு அலசல் ஜோதிஜியின் திருப்பூர் பற்றிய மற்றுமொரு தொடர் . இரண்டு தொழிற்சாலைகளில் தனக்கு ஏற்பட்ட அனுபவங்களை இங்குத் தனது பாணியில் வழங்கியிருக்கிறார் . எழுத்து என்பதை மிகத் தீவிரமாக எடுத்துக் கொண்டிருப்பவர் திரு ஜோதிஜி என்பது அவரது எழுத்தை தொடர்ந்து வாசிக்கும் அனைவருக்கும் தெரிந்த விஷயம் . அதனால் அவரது எழுத்துக்களை வாசிக்க வரும்போது அவரது எழுத்துக்களை உள்வாங்கிக் கொள்ளத் தயாராக வர வேண்டும் . மேலோட்டமாக வாசிப்பது என்பது இங்கு நடக்காத விஷயம் . கவனச் சிதறல் இங்கு மன்னிக்க முடியாத ஒன்று . இவரது முதல் அச்சுப் புத்தகம் டாலர் நகரம் என்னை மிகவும் கவர்ந்தது . அந்தப் புத்தகத்தைப் படித்த போது நாம் உடுத்தும் ஒவ்வொரு ஆடையின் பின்னாலும் எத்தனை சோகக்கதைகள் ! அங்கு நாம் ஊகித்த கதைகளின் உண்மை மாந்தர்களை இந்தத் தொடரில் தோலுரித்துக் காட்டுகிறார் , ஜோதிஜி . ‘ ஒரு தொழிற்சாலையின் குறிப்புகளு’க்குள் நுழைவோம் , வாருங்கள் . ‘ நீங்கள் உலகின் எந்தப் பகுதியில் வாழ்ந்தாலும் நீங்கள் விரும்புவது பிராண்ட் வகையான ஆடைகள் என்ற போதிலும் ஒவ்வொரு ஆடைகள் உருவாக்கத்திற்குப் பின்னாலும் ஓராயிரம் விசும்பல் மொழி மறைந்துள்ளது என்பதை உணர்ந்து இருப்பீர்களா ? வெள்ளை ஆடைகள் என்றாலும் , நீங்கள் விரும்பம் வண்ணம் என்ற போதிலும் ஒவ்வொரு ஆடை உருவாக்கத்திற்குப் பின்னாலும் வடியும் இரத்தக் கறையை நாம் பார்க்கப் போகின்றோம்’ முதல் அத்தியாயத்திலேயே இவ்விதம் எழுதி திருப்பூரின் ஆடைத்தொழிற்சாலையின் உள்ளே வாழும் மனிதர்களிடையே நடக்கும் ஒரு நிழல் யுத்தத்திற்கு நம்மைத் தயார் செய்வதுடன் , இந்தக் குறிப்புகளில் நாம் என்ன எதிர்பார்க்கலாம் என்று ஒரு ‘டீசர்’ கொடுத்து விடுகிறார் ஜோதிஜி . அதனால் நாம் கொஞ்சம் நிமிர்ந்து உட்கார்ந்து கொண்டு அடுத்தடுத்த அத்தியாயங்களை வாசிக்கத் தயாராகிறோம் . ஜோதிஜியின் எழுத்துக்களைப் படிக்க நீங்கள் மனதளவில் தயாராவது மிகவும் முக்கியம் . இந்தக் குறிப்புகளில் அவரே நம்மை முதலிலேயே இப்படித் தயார் செய்துவிடுகிறார் . ஒவ்வொரு துறையிலும் நடக்கும் கண்ணுக்குத் தெரியாத இந்த நிழல் யுத்தத்தில் பங்குபெறும் மாந்தர்களின் நடவடிக்கைகளில் ஒன்றிப் போய்விடுகிறோம் . வெள்ளைத் துணிகளில் மட்டுமா சாயம் ஏற்றப்படுகிறது , இங்கே ? மனிதர்களும் சமயத்திற்குத் தகுந்தாற்போல நிறம் மாறுவதை இந்தக் குறிப்புகளில் பார்க்க முடிகிறது . முதலில் தனது முதலாளிகளாகிய ‘பஞ்ச பாண்டவர்களையும் , அவர்களைத் தான் கையாண்ட விதத்தையும் சொல்லும் வேளையில் , இந்த நிறுவனத்துக்குள் தாம் அடியெடுத்து வைத்த நிகழ்வையும் சொல்லுகிறார் . அந்த நிறுவனத்தின் நிலைமையையும் சொல்லி , தான் அவற்றை மாற்ற எடுத்த முயற்சிகளையும் சொல்ல ஆரம்பிக்கிறார் . அதற்கு அவர் பட்டபாடு எதிர்கொண்ட எதிர்ப்புகள் எல்லாமே விறுவிறுப்பான ஒரு நாவல் படிக்கும் அனுபவத்தை நமக்குக் கொடுக்கின்றன . இங்கு நமக்கு ஒரு புதிய ஜோதிஜி அறிமுகமாகிறார் . டாலர் நகரத்தில் நாம் சந்தித்த அந்த ‘ஒன்றும் தெரியாத அப்பாவி’ ஜோதிஜி இங்கு இல்லை என்பது இந்தக் குறிப்புகளைப் படிக்கும்போது புரிந்து கொள்ள முடிகிறது . இந்தத் தொழிலில் நீண்ட நாட்கள் பட்ட அனுபவத்தில் புடம் போடப்பட்ட ஜோதிஜியை சந்திக்கிறோம் . தனது அனுபவம் பற்றி ஜோதிஜியின் வார்த்தைகளில் : தன் சுய விருப்பு வெறுப்புக்காக நிறுவனங்களைக் கவிழ்த்தவர்கள் , குறுகிய காலத்திற்குள் நிறுவன வளர்ச்சியை விடத் தங்களது பொருளாதார வளர்ச்சியைப் பெருக்கிக் கொண்டவர்கள் , உண்மையான உழைப்பாளிகளை உதாசீனப்படுத்தியவர்கள் , தங்களது பலவீனங்களுக்காக வளர்ந்து கொண்டிருந்த நிறுவனத்தை வேரோடு வெட்டி சாய்த்தவர்கள் என்று பலவற்றையும் பார்த்த காரணத்தால் எல்லா நிகழ்வுகளுமே இயல்பான தொழில் வாழ்க்கையின் ஒரு அங்கமாக எனக்குத் தெரிய தொடங்கியது . அவர் கற்றது மட்டுமல்ல நமக்கும் பலவற்றையும் சொல்லிக் கொண்டு போகிறார் . அந்தத் தொழிற்சாலையில் வேலைபார்க்கும் பல்வேறு விதமான மனிதர்களை நமக்கு அறிமுகப்படுத்துகிறார் மாடசாமியிலிருந்து தொடங்கி ராஜா வரை . ‘ அவள் பெயர் ரம்யா’ என்ற தலைப்பில் ஜோதிஜி எழுதிய ஒவ்வொன்றும் மணிமணியானவை . ஒருவரிடம் இருக்கும் திறமையை எப்படி அவரைப் பயிற்று வைப்பதன் மூலம் வெளிக்கொணரலாம் என்று இங்குச் சொல்லுகிறார் . ஆனால் அதுவே அவரை இக்கட்டில் மாட்டி வைத்ததையும் சொல்லிப் போகிறார் . சுவாரஸ்யமான அத்தியாயம் . ஒவ்வொரு அத்தியாயத்திலும் தான் கண்டது , கேட்டது அனுபவித்தது என்று தனது ‘வெட்டு ஒன்று துண்டு இரண்டு’ என்கிற எழுத்துப்பாணியில் விவரிக்கிறார் . நீங்கள் திருப்பூரிலோ அல்லது வேறு ஏதாவது ஆடைகள் உற்பத்தி செய்யும் நிறுவனத்தில் வேலை செய்பவராக இருந்தால் தான் இந்த ‘ஒரு தொழிற்சாலையின் குறிப்பு’களை ரசிக்க முடியும் என்றில்லை . யாராக இருந்தாலும் , என்னைபோன்ற இல்லத்தரசி ஆனாலும் ரசிக்கலாம் . அதேபோல ஜோதிஜி இங்குச் சொல்லியிருக்கும் மனிதர்களைப் போல நாம் வெளியிலும் பலரைப் பார்க்கிறோமே . அதனால் மனிதர்களை எடை போடவும் இந்தக் குறிப்புகள் நிச்சயம் உதவும் . ஒரு சின்னக் குறை : ஒவ்வொரு அத்தியாயமும் மிகவும் நீண்டுகொண்டே போகிறது . சிலசமயம் வேண்டுமென்றே வளர்க்கிறாரோ என்று கூடத் தோன்றுகிறது . அத்தியாயங்களின் நீளத்தைக் குறைத்திருக்கலாம் . அல்லது இன்னும் இரண்டு மூன்று அத்தியாங்களாகக் கூட்டியிருக்கலாம் என்று தோன்றுகிறது . ‘ ஒரு தொழிற்சாலையின் குறிப்புகள்’ என்பதை ‘வாழ்க்கையில் நாம் சந்திக்கும் மனிதர்களைப் பற்றிய குறிப்புகள்’ என்று கூடக் கொள்ளலாம் . திருமதி ரஞ்சனி நாராயணன் . பெங்களூர் வலைபதிவர் , எழுத்தாளர் , http://ranjaninarayanan.wordpress.com/ 3 ஒரு தொழிற்சாலையின் குறிப்புகள்… .. எப்பேர்ப்பட்ட மோசமான குணாதிசயங்கள் கொண்டவருடன் பழகினாலும் தன் சுயபுத்தியை இழக்காமல் தன் நிலையை எந்தசூழ்நிலையிலும் கடைசி வரை மாற்றிக் கொள்ளாமல் அனைத்தையும் வேடிக்கை பார்க்கும் மனோநிலையில் இருக்கும் 22 வருட கடின உழைப்புடன் கூடியஅனுபவம் கொண்ட ஜோதிஜி எழுதியிருக்கும் “ஒரு தொழிற்சாலையின் குறிப்புகள்” என்ற தொடரை ஒரு அத்தியாயம் கூட விடாமல் கவனமாக வாசித்தேன் . நான் வாழ்ந்து கொண்டிருக்கும் வாழ்க்கை , நான் சந்திக்கும் மனிதர்கள் , நான் சார்ந்திருக்கும் தொழில் என்பதனை இந்தத் தொடர் மூலம் என்னால் மீள் ஆய்வு செய்து கொள்ள முடிந்தது . இந்தத் தொடர் மூலம் தனிப்பட்ட முறையில் நான் கற்றதும் பெற்றதும் ஏராளம் . என் பார்வையில் சில விமர்சனக் கருத்துக்களை மட்டும் இங்கே எழுதி வைக்க விரும்புகின்றேன் . 1. ஒரு தொழிற்சாலை நிர்வாகியின் அனுபவத்தொடர் என்பதா ? 2. ஒரு தொழிற்சாலை நிர்வாகியின் மனிதவளம் தொடர்பான அனுபவங்கள் மற்றும் ஆலோசனைகள் ; தொடர் என்பதா ? 3. மனிதர்களையும் அவர்களின் குணாதிசயங்களையும் அலசி ஆராயும் ஒரு சக மனிதரின் அனுபவக்குறிப்புகள் என்பதா ? 4. 22 வருடங்களுக்கும் மேலாக இருந்துவரும் தொழிலில் தான் கண்ட மனிதர்களின் ஏற்றஇறக்கங்களைப் பதிவு செய்யும் தொடர் என்பதா ? 5. ஆயத்த ஆடைத்தொழிலின் தலைநகரம் திருப்பூரைப் பிடித்துப் பார்த்த நாடித் தொடர் என்பதா ? 6. தான் கடந்து வந்த 22 வருட திருப்பூர் வாழ்க்கையின் வாழ்வியல் தொடர் என்பதா ? அல்லது 7. திருப்பூர் தொழிலதிபர்களின் வாழ்ந்த வீழ்ந்த கதையைச் சொல்லும் தொடர் என்பதா ? 8. வாழ்க்கையின் ஏற்ற இறக்கங்களைச் சொல்லி வாழ்க்கையைப் புரிந்துகொள்ளச் சொல்லும் வாழ்வியல் நன்னெறித் தொடர் என்பதா ? 9. எல்லாம் கலந்து கட்டிய சரம் என்பதா ? என்று சத்தியமாக நம்மால் ஒரு முடிவுக்கு வர இயலவில்லை . அந்த அளவிற்கு வார்த்தைகளை வைத்து ஜோதிஜி விளையாடி இருக்கிறார் . எழுதச்செல்லும் முன்பு எழுத வேண்டிய விசயத்தை மனதில் ஆழ்ந்து உள்வாங்கி அத்துடன் தனது கருத்துக்களையும் சரியான முறையில் எழுதியதால் இத்தொடர் ஒரு நாட்குறிப்பு போலவோ அல்லது ஒரு கட்டுரை போலவோ இல்லாமல் ஒவ்வொரு வார்த்தையையும் கவனத்துடன் படித்துச்செல்லும் அளவிற்கு அவரது எழுத்து நடை அமைந்திருப்பது மிகச்சிறப்பு . “ வாழ்க்கை என்பதைப் புரிந்து வாழ்பவர்களுக்குக் கொள்கையில் சமரசம் என்பதே இருக்காது . வாழ்க்கையின் மிகப்பெரிய சவால் என்பது தங்களுக்கான திறமையை அடையாளம் கண்டு கொள்வதே ஆகும் . உங்களுக்கு உண்டான நேர்மை குறித்து உங்களுக்கே அக்கறை இல்லை என்றால் அது என்றாவது ஒரு நாள் மானங்கெட்ட மனிதர்களின் பட்டியலில் சேர்த்துவிடும் என்பதை நினைவில் வைத்திருக்கவும்” என்று வாழ்வியலை பதிவு செய்திருக்கும் விதம் அருமை . “ தர்மம் நியாயம் அறம் என்பதெல்லாம் அன்றும் இன்றும் பலரின் வாழ்க்கையில் வெறும் வார்த்தைகள் மட்டுமே . பணம் என்ற காகிதத்திற்காகஇதன் சுகம் என்ற குறுகிய வட்டத்திற்காக எந்த எல்லைக்கும் போகலாம் என்பதாகத்தான் இங்கே பலரின் கொள்கைகளும் உள்ளது” என்று மனித மனங்களை வெளிப்படுத்தியிருக்கும் விதம் அருமை . “ ஓரு நிர்வாகத்தின் வெற்றி என்பது தனிமனித உழைப்பை மட்டும் சார்ந்தது அல்ல . அது பலருக்கு கொடுக்கப்படுகின்ற பயிற்சியினால் உருவாக்கப்படுகின்ற கூட்டுக்கலவை . அதன் மூலம் கிடைப்பதே மொத்த வெற்றி . ஒரு நிர்வாகத்தின் வளர்ச்சி வீழ்ச்சியடையப் பல காரணங்கள் இருக்கலாம் . ஆனால் முக்கியமான முதன்மையான காரணமாக இருப்பது மனித மனங்களைக் கையாளத் தெரியாத பட்சத்தில் வீழ்ச்சி விரைவாகும்” . “ அரசியலில் அவ்வப்போது பலியாடுகள் தேவைப் படுவதைப் போல நிர்வாகத்திலும் பலி கொடுத்தால் தான் நிர்வாகம் அடுத்த நிலைக்கு நகரும் என்றால் கொடுத்தே ஆக வேண்டும் . இது வெளியே சொல்லமுடியாத நிர்வாக விதிமுறை . ஒரு சிறந்த நிர்வாகி என்பவருக்கு முதல் தகுதியே நெருக்கடியான சூழ்நிலையில் உருவாகும் பிரச்சனைகளை எப்படிக் கையாள்கின்றார் என்பதை வைத்தே முதலாளி அவரைப்பற்றி முடிவுக்கு வருகின்றார்“ என்று நிர்வாகவியலை விளக்கியிருக்கும் விதம் அருமையிலும் அருமை .. “ ஒருவர் வாழ்வில் தென்படும் சிறிய வெளிச்சம் தான் மிகப் பெரிய பாதையைக் காட்டுகின்றது . தன்னம்பிக்கையோடு உழைக்கத் தயாராக இருப்பவனுக்கு இங்கு ஏதோவொரு சமயத்தில் வழி கிடைக்கத்தான் செய்கின்றது” என்று நம்பிக்கையூட்டுகிறார் . “ நாம் எந்தப் பதவியில் இருந்தாலும் எந்த இடத்திலும் எந்தச் சூழ்நிலையிலும் நாம் இயல்பான மனிதராகக் கற்பனை செய்து கொண்டு வாழ்ந்தால் மட்டுமே நம் வாழ்க்கையைப் பதவியை நம்மால் காப்பாற்றிக் கொள்ள முடியும் . சிறப்பான அங்கீகாரம் கிடைத்து விட்டது என்று இறுமாப்பில் நாம் நம்மை மாற்றிக் கொண்டால் அடுத்து ஒரு ஆப்புக் காத்திருக்கின்றது என்று அர்த்தம் . இது தவிர ஒவ்வொரு சூழ்நிலையிலும் நாம் ஒவ்வொரு இடத்திலும் உள்ள மனிதர்களுடன் பேசினால் மட்டுமே அவர்களைப் பற்றிப் புரிந்து கொள்ள முடியும் . நம் பதவி சார்ந்து ஒரு இறுக்கத்தை நாமே உருவாக்கிக் கொண்டே இருந்தால் அது பலவிதங்களில் நம்மைப் பல மனிதர்களிடத்தில் இருந்து அந்நியமாக வைத்து விடும் ஆபத்துள்ளது” என்று எச்சரிக்கவும் செய்கிறார் . “ ஒருவரின் தனிப்பட்ட பழக்கவழக்கம் மாறும் போது அவரால் எடுக்கப்படும் முடிவுகளும் மாறுகின்றது .’ ஒழுக்கம் உயிரை விட மேலானது ‘ என்று வள்ளுவர் சொன்னதன் காரணத்தை எவரும் யோசிப்பதே இல்லை . ஆனால் ஒரு மனிதனின் அனைத்து தோல்விகளும் அவனின் ஒழுக்கம் சார்ந்த நடவடிக்கை தொடங்கி வைக்கின்றது . அவனுடைய ஆசைகள் அதனை விரைவு படுத்துகின்றது . இது தான் சரியென்று அவனது பேராசை உறுதிப்படுத்துகின்றது . இதன் வழியே சென்று அழிந்தவர்கள் தான் இங்கே முக்கால்வாசி பேர்கள் உள்ளனர்” . இவ்வளவு தான் திருப்பூர் என்று எளிமையாகப் புரிய வைத்துவிட்டீர்கள் ஜோதிஜி . தொழிலையும் விளக்கி அதிலிருக்கும் மனித மனங்களையும் விளக்கி திருப்பூரில் உள்ள தொழில் நிறுவனங்கள் சார்ந்த செயல்பாடுகளை எழுதியுள்ள ஜோதிஜியின் “ஒரு தொழிற்சாலையின் குறிப்புகள்” என்பது வளர நினைக்கும் ஒவ்வொரு இளைஞரின் கைகளிலும் வைத்திருக்க வேண்டிய கையேடு ஆகும் . தான் சாப்பிட்ட இட்லி சட்னி சாம்பாரையும் தான் பார்த்த சினிமாவையும் ரசித்து எழுதும் வலையுலகத்தில் வித்தியாசமாக ஒரு கனமான விசயத்தை இவ்வளவு அருமையாக எழுத முடியும் என்று எழுதிக்காட்டிய அன்புச்சகோதரர் ஜோதிஜி உங்களுக்கு என் அன்பான வாழ்த்துக்களும் வணக்கங்களும் . “ ஒரு நிறுவனத்தை விட்டு வெளியே வந்தவுடன் அவர்கள் பலமுறை மீண்டும் அழைத்தும் அந்தப்பக்கம் திரும்பிப் பார்ப்பதும் இல்லை என்ற கொள்கையைத் தொடக்கம் முதல் கடைபிடித்து வருகின்றேன் . ஒரு நிறுவனத்தை விட்டு நகர்ந்து வந்த பிறகு ஏதோவொரு இடத்தில் அடையாளம் தெரியாத தொழிலாளர் உண்மையான அக்கறையோடு என்னைப் பற்றி எங்கள் குடும்பத்தைப் பற்றி அக்கறையோடு விசாரிக்கின்றார்கள் . ” நீங்க இருந்த வரைக்கும் நாங்க நன்றாக இருந்தோம் ” என்று சொல்கின்ற அவர்களின் அந்த வார்த்தைகள் தான் இன்னமும் என்னை இந்தத் துறையில் இயங்க வைத்துக் கொண்டேயிருக்கின்றது” . “ கோடி கோடியாய் சேர்த்தவனும் இறுதியில் திருப்பூரில் மின் மயானத்திற்குத்தான் செல்லப் போகின்றான் . நானும் அங்கே தான் செல்லப் போகின்றேன் . கோடிகளைச் சேர்த்து வைத்தவனின் வாரிசு அவனை எளிதில் மறந்து விடக்கூடும் . ஆனால் என் கொள்கைகள் என் வாரிசுகளை வழி நடத்தும் . அவர்களும் பலரின் வாழ்க்கைக்கு உதவக் கூடியவர்களாக இந்தச் சமூகத்தில் எதிர்காலத்தில் செயலாற்றுவார்கள் என்ற ஆழ்ந்த நம்பிக்கை எனக்குள் உண்டு” அன்புச் சகோதரர் ஜோதிஜி இதுதான் உங்களது 22 ஆண்டுக் கால உழைப்பிற்கான சம்பளம் . ஆம் . நம்பிக்கை தானே வாழ்க்கை . உங்கள் நல்ல எண்ணங்கள் எந்த அளவுக்கு நீங்கள் சார்ந்திருந்த தொழிலாளர்களுக்கு உதவியாய் இருந்துருக்கும் என்பதனை உங்கள் சத்தியமான வார்த்தைகள் மூலம் உணர்ந்து கொண்டேன் . வாசிக்கும் எங்களைப் போன்றவர்களுக்கு நீங்கள் கடத்திய உணர்வுகள் என்பது இன்னும் சில மாதங்கள் அதன் தாக்கம் எனக்குள் இருப்பதைப் போல உங்களால் பலன் அடைந்தவர்களின் ஆசிர்வாதம் நிச்சயம் உங்கள் தலைமுறைகளை வாழ வைக்கும் என்று உறுதியாய் நானும் நம்புகின்றேன் . நன்றி ஜோதிஜி மாரியப்பன் ரவீந்திரன் . மதுரை . அலைபேசி எண் 944 27 38 002 [factory_html_f3680ddb] 4 ஒரு தொழிற்சாலையின் குறிப்புகள் ....... நானொரு வலைப்புழு . வலையில் எது கிடைத்தாலும் படித்து விடுவேன் . கொஞ்சம் ஆர்வமுடன் படிக்கத்தக்க நடையில் இருக்க வேண்டும் . அவ்வளவு தான் . அவ்வகையில் ஜோதிஜியின் வலைப்பதிவுகளைத் தொடர்ச்சியாகப் படிப்பதுண்டு . தேவியர் இல்லம் வலைபதிவில் எழுதப்பட்ட ஈழம் மற்றும் திருப்பூர் மிகப்பெரும் தகவல் சுரங்கங்கள் . அவ்வப்போது இவர் எழுதும் காரைக்குடி உணவு சிந்திக்கக் கூடியன . இவர் காரைக்குடி உணவகத்தில் எழுதியுள்ள சத்து மாவை எங்கள் குடும்பத்தில் தயாரித்துத் தினமும் சாப்பிட்டு வருகின்றோம் . நன்றிகள் பல . அவ்வகையில் மற்றுமோர் திருப்பூர் படைப்பாகத் தொழிற்சாலை குறிப்புகள் என்ற இத்தொடர் வலைத் தமிழில் வெளி வந்த போது துவக்கத்தில் இது மற்றொரு ” டாலர் நகரமோ ” என்ற முன் முடிவுடன் படிக்கத் துவங்கினேன் . இவரே கதை சொல்லியாகவும் வருவதால் தன்னைப் பற்றிய குறிப்புகளாக இருக்குமோ என்று எண்ணி விட்டேன் . கொஞ்சம் கொஞ்சமாகக் குறிப்புகளில் ஆழ்ந்தேன் . இத் தொடரில் ஆசிரியர் ஒரு ஏறத்தாழ கைவிடப்பட்ட நிலையில் இருந்த தொழிற்சாலையை எவ்வாறு தன் நிர்வாகத் திறனால் மேம்படுத்துகிறார் என்பதைச் சம்பவங்கள் , குறிப்புகள் , தொழிலாளர்கள் மூலமாகக் கூறுகிறார் . சம்பவங்கள் என்று பார்த்தால் மிகச் சிலவே . ஆனால் அதன் ஊடாகத் தரும் தகவல்கள் மிகப்பெரும் களஞ்சியம் . நமக்குத் தெரிந்த ஒரு நகரத்தின் மற்றொரு பக்கத்தினை மிகவும் நேர்த்தியாகக் கவனமாகக் காண்பித்துள்ளார் . ஒரு நகரத்தின் வாழ்க்கைத் தரத்தினை அம் மக்களின் வாழ்வியலை ( நல்லதோ – கெட்டதோ ) எழுத அத்துறையை மிகவும் நேசிப்பவரால் மட்டுமே முடியும் . இவருக்கு இது சாத்தியப்பட்டிருக்கிறது . போர் அடிக்கக் கூடிய டெஸ்ட் மாட்ச்சில் தொடர்ச்சியாக 6 – 4 அடிப்பது போல் ஒவ்வொரு பகுதியிலும் விளாசியுள்ளார் . துறை சார்ந்த விஷயங்களை இவ்வளவு எளிமையாகத் தன்னால் விவரிக்க முடியும் என்பதைக் காட்டியுள்ளார் . இத்தொடரின் ஒவ்வொரு பகுதியும் இத்துறையில் இருப்பவர்களுக்கும் புதிதாக வருபவர்களுக்கும் ஒரு சிறப்புக் கையேடு . 2009 ல் இருந்து இவரின் தேவியர் இல்லம் பதிவுகளைப் படித்து வருகிறேன் . அவ்வப்போது பின்னூட்டமும் இடுவதுண்டு . மிகச்சிறப்பாகச் சுவாரஸ்ய நடையில் எழுதுகிறார் . அவன் அருள் . இவ்வளவு எழுதுவதற்கு எவ்வாறு நேரம் கிடைக்கிறது . இத்தொடரை படிக்குமுன் தாங்கள் ஒரு உயர் பதவியில் நேரம் கிடைக்கக் கூடிய இடத்தில் பணி புரிவீர்கள் என்று எண்ணியிருந்தேன் . இத்தொடர் அந்த அனுமானங்கள் உடைத்தெரிந்து விட்டது . துறை சார்ந்த தங்கள் விளக்கங்கள் தொழிலாளர்கள் சார்ந்த நடவடிக்கைகள் ( தட்டிக் கொடுத்து வேலை வாங்குதல் ) மற்றும் முதலாளியின் முட்டாள் தனங்களைத் தவிர்த்தல் . உண்மையிலேயே இவருக்கு நேர நிர்வாகம் மிகச் சிறப்பாகக் கைவரப் பட்டிருக்கிறது . முக்கியமாக … தொடரில் வரும் பெண் ( அவள் பெயர் ரம்யா ) மனதில் நிற்கிறாள் . சிவகுமார்நீலமேகம் . https://plus.google.com/110527960579111333990/posts 5 ஒரு தொழிற்சாலையின் குறிப்புகள்… .. ஆயத்த ஆடை சமூகத்தின் சிக்கல்களுக்கு விடை காண விழையும் தேடல் தாகத்துடன் இருக்கும் தனிமனிதர்களின் பிரதிநிதியாக உங்கள் பதிவுகள் இருக்கின்றன . இந்தச் சமூகத்தில் பொருளாதார அடிப்படையிலாலான காரணக் காரிய உறவுகள் நிரந்தர வெற்றிக்கு வழிகோலுவதில்லை . தேவைப்பட்ட மனிதர்களுக்குப் பயனற்றவர்களாகி வேரோடு பிடுங்கி எறியப்பட்ட மரண வலியினை உணர முடிகிறது . இங்கு அனைத்து சிக்கல்களுக்கும் தற்காலிகமாக நிவர்த்திக்கப்பட்டுப் புதிய பிரட்சினைகளுக்கு அடியெடுத்துக் கொடுத்துக் கொண்டிருக்கின்றன . இந்தத் தற்காலிக நிவாரணம் எச்சரிக்கை மணியை அனைத்து வைப்பது போலத்தான் . இங்குப் பெரும்பாலான முதலாளிகளும் உழைப்பாளிகளும் முடிவுகள் எடுப்பதில் கடந்த கால அனுபவ அறிவை மட்டும் நம்பிக்கொண்டு புதியனவற்றை ஏற்றுக்கொள்ளாத சமூகமாகத்தான் இன்னும் இருந்துகொண்டிருக்கின்றது . பழக்கத்தில் இருக்கக் கூடாதவற்றைப் பின்பற்றுவதால் தொழில் ரீதியான விபத்துகள் இழப்புகளை அதிகம் ஏற்படுத்துகின்றன . உற்பத்தி முறைகள் மரபு மாரதவைகளாக இன்னமும் இருக்கின்றன . இதனால் தொழில் மட்டும் வளர்ச்சி அடைந்திருக்கிறது தொழிற்சாலைகள் நீண்ட காலம் வாழ்வது இல்லை . சிறிய வேர்களை வைத்துகொண்டு பெரிய மரங்கள் வளர முடியாது . வலுவில்லாத வேர்கள் பெரிய மரங்களைச் சுமக்க முடிவதில்லை . நபர்களைச் சார்ந்து நிற்பதை தவிர்க்கமுடிவதில்லை . நபர்களைச் சார்ந்த தொழிற்சாலைகளின் வளர்ச்சி பாகுபாடின்றிப் பரஸ்பர துரோகத்தில் வீழ்ந்து விடுகின்றன . தொன்று தொட்டு ஒரு குறிப்பிட்ட விஞ்ஞானத்தில் வரப்போகிற தலைமுறை முந்தைய தலைமுறையின் ( கற்பித்தல் மூலமாக இல்லாமல் ) அனுபவத்தினைப் புலப்படாத தொடர்பில் பெற்றுக்கொண்டிருக்கிறது . அந்த விஞ்ஞானம் முதிர்ச்சியடையாத ஒன்று . எதுவும் ஒரு குறிப்பிட்ட ஊருக்குச் சொந்தமானதல்ல . வானம் பார்த்த பூமியாகக் கார்காலத்தில் பருத்தி , எள் , சோளம் கம்பு ராகிப் போன்ற பயிர்களை விதைத்து விவசாயத்தைத் தொழிலாகக் கொண்டு சிரமப்பட்டு வாழ்ந்தது வந்த மூதாதையர்களின் மண்தான் திருப்பூரும் . காவிரியும் தாமிரபரணியும் முல்லைபெரியாரும் பாயும் ஊரில் வயலில் நடவு செய்துவிட்டு காலாற இருந்தவர்கள் அல்ல திருப்பூர் மக்கள் . பஞ்சாலைகளில் இராப்பகலாக உழைத்தவர்களின் வாரிசுகள்தான் பெரும்பாலான பழைய முதலாளிகள் . ஒவ்வொரு முதலாளியின் பின்னாலும் சிறந்த உழைப்பாளியின் அனுபவக் கதை இருக்கும் . ஒவ்வொருவரும் உழைப்பாளியாகச் சுரண்டப் பட்டுத்தான் முதலாளியானார்கள் . அவர்களுடைய உழைப்புதான் இங்கு வந்தாரை வாழ வைத்துக் கொண்டிருக்கிறது . நபர்களைச் சாராத தொழில் நுட்பம் சார்ந்த புதிய அணுகுமுறை பின்பற்றப் பட வேண்டும் . இந்தச் சமூகத்தில் தற்காலிக வெற்றியாளர்களின் , புத்திசாலிகளின் அவநம்பிக்கை விஞ்யான ரீதியான அணுகுமுறைகளைத் தடை செய்கிறது . பாரம்பரியமாக வந்த பல வற்றை நாம் மறு பசிசீலனை செய்ய வேண்டும் . அனுபவத்திற்கும் புதுமைக்கும் எல்லை பிரிக்கப்பட வேண்டும் . அனுபவத்தை ஆதரிக்கும் அதே வேளையில் பாரம்பரியத்தைத் துடைத்துப் போட்டுச் சுத்தப்படுத்திக் காலத்திற்கு ஏற்ப புதுமையைப் புகுத்திக்கொண்டே இருக்கவேண்டும் . இந்தச் சுழற்சி நடைபெறாத நிறுவனங்கள் சிறிய வேர்களைகொண்டு வளரும் மரங்கள் போன்றதுதான் . தான் யாரென்று தெரியாமல் யாரைப் போலவோ எதுவாகவோ ஆகவேண்டும் என்று இலக்கு மட்டும் வைத்தவர்கள் ஒரு கட்டத்திற்கு மேல் தோல்வியில் தான் முடிந்திருக்கிறார்கள் . நமது இருப்பைத் தெரிவதுதான் இந்த மாற்றத்தின் துவக்கம் . பல்வேறு நிறுவனங்களின் வெற்றி தோல்வி குறித்த பல்வேறு ஆதாரங்களை , தகவல்களைத் திரட்டி அது குறித்து ஆய்வுகள் செய்ய வேண்டும் . உலகம் முழுவதும் பயன்படுத்தப்படும் ஆயத்த ஆடை உற்பத்தி முறையை ஒருங்கிணைத்து முற்றிலும் புதிய அணுகுமுறையைக் கொண்டுவரவேண்டும் . அதை நோக்கிய பதிவுகள் எதிர்காலத்தில் உங்களிடம் இருந்து வரவேண்டும் என்பது எனது எதிர்பார்ப்பு . கடந்த கால அனுபவங்களைச் சுவாரசியமாகச் சொல்வது போல் இதனையும் முயற்சி செய்தால் உங்களால் திருப்பூரின் வருங்க்கலச் சந்ததி மேலும் பயன்பெறும் . நன்றி , சமகாலத் திருப்பூர் பயணி - விஸ்வநாதன் . [factory_html_3c09cc1a] [factory_html_9ba03409] [factory_html_e04189f9] 6 இதுவரையிலும் வெளிவந்துள்ள என் மின் நூல்கள் 1. ஈழம் – வந்தார்கள் வென்றார்கள் ஈழம் என்ற நாடு என்று உருவானது என்பதில் தொடங்கி தமிழர்கள் எப்படி அரசியல் அதிகாரத்தை விட்டு துரத்தப்பட்டார்கள் என்பது வரைக்கும் உண்டான சரித்திர நிகழ்வுகளை அலசும் தொடர் . http://freetamilebooks.com/ebooks/ezham-vandhargal-vendrargal/ தரவிறக்கம் செய்தவர்களின் எண்ணிக்கை 26,924 வெளியிட்ட தினம் 19.12.2013 2. வெள்ளை அடிமைகள் இந்தியாவில் மன்மோகன் சிங் பிரதமராக இருந்த பத்தாண்டுகளில் படிப்படியாக மேலைநாடுகளுக்கு இந்தியா எப்படி அடகு வைக்கப்பட்டது என்பதைப் பற்றியும் இரண்டாயிரத்திற்கு மேற்பட்ட பராம்பரியம் உள்ள தமிழர்களின் வரலாற்றை அலசும் தொடர் http://freetamilebooks.com/ebooks/white-slaves/ தரவிறக்கம் செய்தவர்களின் எண்ணிக்கை 6,458 வெளியிட்ட தினம் 29.01.2014 3. தமிழர் தேசம் தமிழ் மன்னர்களான சேர சோழ பாண்டியர்களின் வரலாற்றுக்கதையை சுருக்கமாக பேசி , நான் பிறந்த இராமநாதபுரம் மாவட்டம் படிப்படியாக எப்படி மாறியது என்பதை சரித்திர பின்புலத்தில் அலசும் தொடர் . http://freetamilebooks.com/ebooks/tamilar-desam/ தரவிறக்கம் செய்தவர்களின் எண்ணிக்கை 7,631 வெளியிட்ட தினம் 28.02.2014 4. கொஞ்சம் சோறு கொஞ்சம் வரலாறு தமிழ்நாடு மற்றும் இந்தியா இது தவிர நான் வாழ்ந்து கொண்டிருக்கும் திருப்பூரில் நான் பார்த்து வந்து கொண்டிருக்கும் சுற்றுப்புற சீர்கேடுகளைப் பற்றி அனுபவத் தொடர் வாயிலாக அலசும் தொடர் . மேலும் எதிர்காலத்தில் உணவு தட்டுப்பாட்டை உருவாக்கப் போகும் மரபணு மாற்றம் குறித்து பேசியிருக்கின்றேன் . முழு விபரங்களைப் படிக்க தரவிறக்கம் செய்து படித்துப் பாருங்களேன் . http://freetamilebooks.com/ebooks/konjam-soru-konjam-varalaru/ தரவிறக்கம் செய்தவர்களின் எண்ணிக்கை 10,928 வெளியிட்ட தினம் 27.03.2014 5. பயத்தோடு வாழப் பழகிக் கொள் என் அனுபவங்களின் வழியே சமூகத்தை அலசும் கட்டுரைகள் அடங்கிய தொகுப்பு http://freetamilebooks.com/ebooks/live-with-fear/ வெளியிட்ட தினம் 09.12.2014 தரவிறக்கம் செய்தவர்களின் எண்ணிக்கை 1592 7 FreeTamilEbooks.com - எங்களைப் பற்றி மின்புத்தகங்களைப் படிக்க உதவும் கருவிகள்: மின்புத்தகங்களைப் படிப்பதற்கென்றே கையிலேயே வைத்துக் கொள்ளக்கூடிய பல கருவிகள் தற்போது சந்தையில் வந்துவிட்டன. Kindle, Nook, Android Tablets போன்றவை இவற்றில் பெரும்பங்கு வகிக்கின்றன. இத்தகைய கருவிகளின் மதிப்பு தற்போது 4000 முதல் 6000 ரூபாய் வரை குறைந்துள்ளன. எனவே பெரும்பான்மையான மக்கள் தற்போது இதனை வாங்கி வருகின்றனர். ஆங்கிலத்திலுள்ள மின்புத்தகங்கள்: ஆங்கிலத்தில் லட்சக்கணக்கான மின்புத்தகங்கள் தற்போது கிடைக்கப் பெறுகின்றன. அவை PDF, EPUB, MOBI, AZW3. போன்ற வடிவங்களில் இருப்பதால், அவற்றை மேற்கூறிய கருவிகளைக் கொண்டு நாம் படித்துவிடலாம். தமிழிலுள்ள மின்புத்தகங்கள்: தமிழில் சமீபத்திய புத்தகங்களெல்லாம் நமக்கு மின்புத்தகங்களாக கிடைக்கப்பெறுவதில்லை. ProjectMadurai.com எனும் குழு தமிழில் மின்புத்தகங்களை வெளியிடுவதற்கான ஒர் உன்னத சேவையில் ஈடுபட்டுள்ளது. இந்தக் குழு இதுவரை வழங்கியுள்ள தமிழ் மின்புத்தகங்கள் அனைத்தும் PublicDomain-ல் உள்ளன. ஆனால் இவை மிகவும் பழைய புத்தகங்கள். சமீபத்திய புத்தகங்கள் ஏதும் இங்கு கிடைக்கப்பெறுவதில்லை. எனவே ஒரு தமிழ் வாசகர் மேற்கூறிய “மின்புத்தகங்களைப் படிக்க உதவும் கருவிகளை” வாங்கும்போது, அவரால் எந்த ஒரு தமிழ் புத்தகத்தையும் இலவசமாகப் பெற முடியாது. சமீபத்திய புத்தகங்களை தமிழில் பெறுவது எப்படி? சமீபகாலமாக பல்வேறு எழுத்தாளர்களும், பதிவர்களும், சமீபத்திய நிகழ்வுகளைப் பற்றிய விவரங்களைத் தமிழில் எழுதத் தொடங்கியுள்ளனர். அவை இலக்கியம், விளையாட்டு, கலாச்சாரம், உணவு, சினிமா, அரசியல், புகைப்படக்கலை, வணிகம் மற்றும் தகவல் தொழில்நுட்பம் போன்ற பல்வேறு தலைப்புகளின் கீழ் அமைகின்றன. நாம் அவற்றையெல்லாம் ஒன்றாகச் சேர்த்து தமிழ் மின்புத்தகங்களை உருவாக்க உள்ளோம். அவ்வாறு உருவாக்கப்பட்ட மின்புத்தகங்கள் Creative Commons எனும் உரிமத்தின் கீழ் வெளியிடப்படும். இவ்வாறு வெளியிடுவதன் மூலம் அந்தப் புத்தகத்தை எழுதிய மூல ஆசிரியருக்கான உரிமைகள் சட்டரீதியாகப் பாதுகாக்கப்படுகின்றன. அதே நேரத்தில் அந்த மின்புத்தகங்களை யார் வேண்டுமானாலும், யாருக்கு வேண்டுமானாலும், இலவசமாக வழங்கலாம். எனவே தமிழ் படிக்கும் வாசகர்கள் ஆயிரக்கணக்கில் சமீபத்திய தமிழ் மின்புத்தகங்களை இலவசமாகவே பெற்றுக் கொள்ள முடியும். தமிழிலிருக்கும் எந்த வலைப்பதிவிலிருந்து வேண்டுமானாலும் பதிவுகளை எடுக்கலாமா? கூடாது. ஒவ்வொரு வலைப்பதிவும் அதற்கென்றே ஒருசில அனுமதிகளைப் பெற்றிருக்கும். ஒரு வலைப்பதிவின் ஆசிரியர் அவரது பதிப்புகளை “யார் வேண்டுமானாலும் பயன்படுத்தலாம்” என்று குறிப்பிட்டிருந்தால் மட்டுமே அதனை நாம் பயன்படுத்த முடியும். அதாவது “Creative Commons” எனும் உரிமத்தின் கீழ் வரும் பதிப்புகளை மட்டுமே நாம் பயன்படுத்த முடியும். அப்படி இல்லாமல் “All Rights Reserved” எனும் உரிமத்தின் கீழ் இருக்கும் பதிப்புகளை நம்மால் பயன்படுத்த முடியாது. வேண்டுமானால் “All Rights Reserved” என்று விளங்கும் வலைப்பதிவுகளைக் கொண்டிருக்கும் ஆசிரியருக்கு அவரது பதிப்புகளை “Creative Commons” உரிமத்தின் கீழ் வெளியிடக்கோரி நாம் நமது வேண்டுகோளைத் தெரிவிக்கலாம். மேலும் அவரது படைப்புகள் அனைத்தும் அவருடைய பெயரின் கீழே தான் வெளியிடப்படும் எனும் உறுதியையும் நாம் அளிக்க வேண்டும். பொதுவாக புதுப்புது பதிவுகளை  உருவாக்குவோருக்கு அவர்களது பதிவுகள்  நிறைய வாசகர்களைச் சென்றடைய வேண்டும் என்ற எண்ணம் இருக்கும். நாம் அவர்களது படைப்புகளை எடுத்து இலவச மின்புத்தகங்களாக வழங்குவதற்கு  நமக்கு அவர்கள் அனுமதியளித்தால், உண்மையாகவே அவர்களது படைப்புகள் பெரும்பான்மையான மக்களைச் சென்றடையும். வாசகர்களுக்கும் நிறைய புத்தகங்கள் படிப்பதற்குக் கிடைக்கும் வாசகர்கள் ஆசிரியர்களின் வலைப்பதிவு முகவரிகளில் கூட அவர்களுடைய படைப்புகளை தேடிக் கண்டுபிடித்து படிக்கலாம். ஆனால் நாங்கள் வாசகர்களின் சிரமத்தைக் குறைக்கும் வண்ணம் ஆசிரியர்களின் சிதறிய வலைப்பதிவுகளை ஒன்றாக இணைத்து ஒரு முழு மின்புத்தகங்களாக உருவாக்கும் வேலையைச் செய்கிறோம். மேலும் அவ்வாறு உருவாக்கப்பட்ட புத்தகங்களை “மின்புத்தகங்களைப் படிக்க உதவும் கருவிகள்”-க்கு ஏற்ற வண்ணம் வடிவமைக்கும் வேலையையும் செய்கிறோம். FreeTamilEbooks.com இந்த வலைத்தளத்தில்தான் பின்வரும் வடிவமைப்பில் மின்புத்தகங்கள் காணப்படும். PDF for desktop, PDF for 6” devices, EPUB, AZW3, ODT இந்த வலைதளத்திலிருந்து யார் வேண்டுமானாலும் மின்புத்தகங்களை இலவசமாகப் பதிவிறக்கம்(download) செய்து கொள்ளலாம். அவ்வாறு பதிவிறக்கம்(download) செய்யப்பட்ட புத்தகங்களை யாருக்கு வேண்டுமானாலும் இலவசமாக வழங்கலாம். இதில் நீங்கள் பங்களிக்க விரும்புகிறீர்களா? நீங்கள் செய்யவேண்டியதெல்லாம் தமிழில் எழுதப்பட்டிருக்கும் வலைப்பதிவுகளிலிருந்து பதிவுகளை எடுத்து, அவற்றை LibreOffice/MS Office போன்ற wordprocessor-ல் போட்டு ஓர் எளிய மின்புத்தகமாக மாற்றி எங்களுக்கு அனுப்பவும். அவ்வளவுதான்! மேலும் சில பங்களிப்புகள் பின்வருமாறு: 1. ஒருசில பதிவர்கள்/எழுத்தாளர்களுக்கு அவர்களது படைப்புகளை “Creative Commons” உரிமத்தின்கீழ் வெளியிடக்கோரி மின்னஞ்சல் அனுப்புதல் 2. தன்னார்வலர்களால் அனுப்பப்பட்ட மின்புத்தகங்களின் உரிமைகளையும் தரத்தையும் பரிசோதித்தல் 3. சோதனைகள் முடிந்து அனுமதி வழங்கப்பட்ட தரமான மின்புத்தகங்களை நமது வலைதளத்தில் பதிவேற்றம் செய்தல் விருப்பமுள்ளவர்கள் freetamilebooksteam@gmail.com எனும் முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பவும். இந்தத் திட்டத்தின் மூலம் பணம் சம்பாதிப்பவர்கள் யார்? யாருமில்லை. இந்த வலைத்தளம் முழுக்க முழுக்க தன்னார்வலர்களால் செயல்படுகின்ற ஒரு வலைத்தளம் ஆகும். இதன் ஒரே நோக்கம் என்னவெனில் தமிழில் நிறைய மின்புத்தகங்களை உருவாக்குவதும், அவற்றை இலவசமாக பயனர்களுக்கு வழங்குவதுமே ஆகும். மேலும் இவ்வாறு உருவாக்கப்பட்ட மின்புத்தகங்கள், ebook reader ஏற்றுக்கொள்ளும் வடிவமைப்பில் அமையும். இத்திட்டத்தால் பதிப்புகளை எழுதிக்கொடுக்கும் ஆசிரியர்/பதிவருக்கு என்ன லாபம்? ஆசிரியர்/பதிவர்கள் இத்திட்டத்தின் மூலம் எந்தவிதமான தொகையும் பெறப்போவதில்லை. ஏனெனில், அவர்கள் புதிதாக இதற்கென்று எந்தஒரு பதிவையும்  எழுதித்தரப்போவதில்லை. ஏற்கனவே அவர்கள் எழுதி வெளியிட்டிருக்கும் பதிவுகளை எடுத்துத்தான் நாம் மின்புத்தகமாக வெளியிடப்போகிறோம். அதாவது அவரவர்களின் வலைதளத்தில் இந்தப் பதிவுகள் அனைத்தும் இலவசமாகவே கிடைக்கப்பெற்றாலும், அவற்றையெல்லாம் ஒன்றாகத் தொகுத்து ebook reader போன்ற கருவிகளில் படிக்கும் விதத்தில் மாற்றித் தரும் வேலையை இந்தத் திட்டம் செய்கிறது. தற்போது மக்கள் பெரிய அளவில் tablets மற்றும் ebook readers போன்ற கருவிகளை நாடிச் செல்வதால் அவர்களை நெருங்குவதற்கு இது ஒரு நல்ல வாய்ப்பாக அமையும். நகல் எடுப்பதை அனுமதிக்கும் வலைதளங்கள் ஏதேனும் தமிழில் உள்ளதா? உள்ளது. பின்வரும் தமிழில் உள்ள வலைதளங்கள் நகல் எடுப்பதினை அனுமதிக்கின்றன. 1. www.vinavu.com 2. www.badriseshadri.in 3. http://maattru.com 4. kaniyam.com 5. blog.ravidreams.net எவ்வாறு ஒர் எழுத்தாளரிடம் Creative Commons உரிமத்தின் கீழ் அவரது படைப்புகளை வெளியிடுமாறு கூறுவது? இதற்கு பின்வருமாறு ஒரு மின்னஞ்சலை அனுப்ப வேண்டும். <துவக்கம்> உங்களது வலைத்தளம் அருமை [வலைதளத்தின் பெயர்]. தற்போது படிப்பதற்கு உபயோகப்படும் கருவிகளாக Mobiles மற்றும் பல்வேறு கையிருப்புக் கருவிகளின் எண்ணிக்கை அதிகரித்து வந்துள்ளது. இந்நிலையில் நாங்கள் http://www.FreeTamilEbooks.com எனும் வலைதளத்தில், பல்வேறு தமிழ் மின்புத்தகங்களை வெவ்வேறு துறைகளின் கீழ் சேகரிப்பதற்கான ஒரு புதிய திட்டத்தில் ஈடுபட்டுள்ளோம். இங்கு சேகரிக்கப்படும் மின்புத்தகங்கள் பல்வேறு கணிணிக் கருவிகளான Desktop,ebook readers like kindl, nook, mobiles, tablets with android, iOS போன்றவற்றில் படிக்கும் வண்ணம் அமையும். அதாவது இத்தகைய கருவிகள் support செய்யும் odt, pdf, ebub, azw போன்ற வடிவமைப்பில் புத்தகங்கள் அமையும். இதற்காக நாங்கள் உங்களது வலைதளத்திலிருந்து பதிவுகளை பெற விரும்புகிறோம். இதன் மூலம் உங்களது பதிவுகள் உலகளவில் இருக்கும் வாசகர்களின் கருவிகளை நேரடியாகச் சென்றடையும். எனவே உங்களது வலைதளத்திலிருந்து பதிவுகளை  பிரதியெடுப்பதற்கும் அவற்றை மின்புத்தகங்களாக மாற்றுவதற்கும் உங்களது அனுமதியை வேண்டுகிறோம். இவ்வாறு உருவாக்கப்பட்ட மின்புத்தகங்களில் கண்டிப்பாக ஆசிரியராக உங்களின் பெயரும் மற்றும் உங்களது வலைதள முகவரியும் இடம்பெறும். மேலும் இவை “Creative Commons” உரிமத்தின் கீழ் மட்டும்தான் வெளியிடப்படும் எனும் உறுதியையும் அளிக்கிறோம். http://creativecommons.org/licenses/ நீங்கள் எங்களை பின்வரும் முகவரிகளில் தொடர்பு கொள்ளலாம். e-mail : freetamilebooksteam@gmail.com  FB : https://www.facebook.com/FreeTamilEbooks G +: https://plus.google.com/communities/108817760492177970948   நன்றி. மேற்கூறியவாறு ஒரு மின்னஞ்சலை உங்களுக்குத் தெரிந்த அனைத்து எழுத்தாளர்களுக்கும் அனுப்பி அவர்களிடமிருந்து அனுமதியைப் பெறுங்கள். முடிந்தால் அவர்களையும் “Creative Commons License”-ஐ அவர்களுடைய வலைதளத்தில் பயன்படுத்தச் சொல்லுங்கள். கடைசியாக அவர்கள் உங்களுக்கு அனுமதி அளித்து அனுப்பியிருக்கும் மின்னஞ்சலைfreetamilebooksteam@gmail.com எனும் முகவரிக்கு அனுப்பி வையுங்கள். ஓர் எழுத்தாளர் உங்களது உங்களது வேண்டுகோளை மறுக்கும் பட்சத்தில் என்ன செய்வது ? அவர்களையும் அவர்களது படைப்புகளையும் அப்படியே விட்டுவிட வேண்டும். ஒருசிலருக்கு அவர்களுடைய சொந்த முயற்சியில் மின்புத்தகம் தயாரிக்கும் எண்ணம்கூட இருக்கும். ஆகவே அவர்களை நாம் மீண்டும் மீண்டும் தொந்தரவு செய்யக் கூடாது. அவர்களை அப்படியே விட்டுவிட்டு அடுத்தடுத்த எழுத்தாளர்களை நோக்கி நமது முயற்சியைத் தொடர வேண்டும். மின்புத்தகங்கள் எவ்வாறு அமைய வேண்டும்? ஒவ்வொருவரது வலைத்தளத்திலும் குறைந்தபட்சம் நூற்றுக்கணக்கில் பதிவுகள் காணப்படும். அவை வகைப்படுத்தப்பட்டோ அல்லது வகைப்படுத்தப் படாமலோ இருக்கும். நாம் அவற்றையெல்லாம் ஒன்றாகத் திரட்டி ஒரு பொதுவான தலைப்பின்கீழ் வகைப்படுத்தி மின்புத்தகங்களாகத் தயாரிக்கலாம். அவ்வாறு வகைப்படுத்தப்படும் மின்புத்தகங்களை பகுதி-I பகுதி-II என்றும் கூட தனித்தனியே பிரித்துக் கொடுக்கலாம். தவிர்க்க வேண்டியவைகள் யாவை? இனம், பாலியல் மற்றும் வன்முறை போன்றவற்றைத் தூண்டும் வகையான பதிவுகள் தவிர்க்கப்பட வேண்டும். எங்களைத் தொடர்பு கொள்வது எப்படி? நீங்கள் பின்வரும் முகவரிகளில் எங்களைத் தொடர்பு கொள்ளலாம். - email : freetamilebooksteam@gmail.com - Facebook: https://www.facebook.com/FreeTamilEbooks - Google Plus: https://plus.google.com/communities/108817760492177970948 இத்திட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் யார்? - Shrinivasan tshrinivasan@gmail.com - Alagunambi Welkin alagunambiwelkin@fsftn.org - Arun arun@fsftn.org -  இரவி Supported by - Free Software Foundation TamilNadu, www.fsftn.org - Yavarukkum Software Foundation http://www.yavarkkum.org/   8 உங்கள் படைப்புகளை வெளியிடலாமே உங்கள் படைப்புகளை மின்னூலாக இங்கு வெளியிடலாம். 1. எங்கள் திட்டம் பற்றி – http://freetamilebooks.com/about-the-project/ தமிழில் காணொளி  – http://www.youtube.com/watch?v=Mu_OVA4qY8I 2.  படைப்புகளை யாவரும் பகிரும் உரிமை தரும் கிரியேட்டிவ் காமன்ஸ் உரிமம் பற்றி – கிரியேட்டிவ் காமன்ஸ் உரிமை – ஒரு அறிமுகம் http://www.kaniyam.com/introduction-to-creative-commons-licenses/ http://www.wired.co.uk/news/archive/2011-12/13/creative-commons-101 https://learn.canvas.net/courses/4/wiki/creative-commons-licenses உங்கள் விருப்பான கிரியேட்டிவ் காமன்ஸ் உரிமத்தை இங்கே தேர்ந்தெடுக்கலாம். http://creativecommons.org/choose/ 3. மேற்கண்டவற்றை பார்த்த / படித்த பின், உங்கள் படைப்புகளை மின்னூலாக மாற்ற பின்வரும் தகவல்களை எங்களுக்கு அனுப்பவும். 1. நூலின் பெயர் 2. நூல் அறிமுக உரை 3. நூல் ஆசிரியர் அறிமுக உரை 4. உங்கள் விருப்பான கிரியேட்டிவ் காமன்ஸ் உரிமம் 5. நூல் – text / html / LibreOffice odt/ MS office doc வடிவங்களில்.  அல்லது வலைப்பதிவு / இணைய தளங்களில் உள்ள கட்டுரைகளில் தொடுப்புகள் (url) இவற்றை freetamilebooksteam@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்பவும். விரைவில் மின்னூல் உருவாக்கி வெளியிடுவோம். ——————————————————————————————————– நீங்களும் மின்னூல் உருவாக்கிட உதவலாம். மின்னூல் எப்படி உருவாக்குகிறோம்?  – தமிழில் காணொளி – https://www.youtube.com/watch?v=bXNBwGUDhRs இதன் உரை வடிவம் ஆங்கிலத்தில் – http://bit.ly/create-ebook எங்கள் மின்னஞ்சல் குழுவில் இணைந்து உதவலாம். https://groups.google.com/forum/#!forum/freetamilebooks நன்றி !