[] ஏரிகள் நகரம் - நைனிதால் வெங்கட் நாகராஜ் மின்னூல் வெளியீடு : http://FreeTamilEbooks.com ஏரிகள் நகரம் - நைனிதால் பதிப்புரிமை © 2015 இவரால் / இதனால் வெங்கட் நாகராஜ். This book was produced using Pressbooks.com. உள்ளடக்கம் - ஏரிகள் நகரம் - நைனிதால் - 1. பகுதி 1:  நைனிதால் பார்க்கலாம் வாங்க! - 2. பகுதி-2: நைனிதால் – தங்குவது எங்கே? - 3. பகுதி-3: நைனிதால் – பனிப்போர்வை - 4. பகுதி-4: நைனிதால் – நைனா இது சைனா! - 5. பகுதி-5: நைனிதால் – தற்கொலை[க்கு] முனை[யாதே]! - 6. பகுதி-6: நைனிதால் – [kh]குர்பாதால் - 7. பகுதி-7: நைனிதால் – கேள்விக்கென்ன பதில்? - 8. பகுதி-8: நைனிதால் – நைனா தேவியும் ஜம்மா மசூதியும் - 9. பகுதி-9: நைனிதால் – பீம்தால் - 10. பகுதி-10: நைனிதால் – ஒன்பது முனை ஏரி - 11. பகுதி-11: நைனிதால் – மணி கட்டலாம் வாங்க! - 12. பகுதி-12: நைனிதால் – சிறிது வயிற்றுக்கும்…… - 13. பகுதி-13: நைனிதால் – விட்ட குறை தொட்ட குறை - 14. பகுதி-14: நைனிதால் – சரியா தால் - கரணம் தப்பினால் மரணம் - 15. பகுதி-15: நைனிதால் – புலி வருது புலி வருது.... - 16. பகுதி-16: நைனிதால் – அதிர்ச்சி தந்த முன்பதிவு - 17. பகுதி-17: நைனிதால் – காடு வா வா என்றது! - 18. பகுதி-18: நைனிதால் – காட்டுக்குள் விஷஜந்துக்கள் - 19. பகுதி-19: நைனிதால் – சீதாவனிக்குள் சீதை - 20. பகுதி-20: நைனிதால் – பயணம் - முடிவும் செலவும் - FreeTamilEbooks.com - எங்களைப் பற்றி - உங்கள் படைப்புகளை வெளியிடலாமே - கிரியேட்டிவ் காமன்ஸ் உரிமை – ஒரு அறிமுகம் 1 ஏரிகள் நகரம் - நைனிதால் [Cover Image]   வெங்கட் நாகராஜ்…..  என் பெயரில் பாதியும் அப்பா பெயரில் முக்காலும் சேர்த்து வலைப்பூவுக்காக வைத்துக் கொண்ட பெயர்.  அதுவே இப்போது பழகி விட்டது! நெய்வேலி நகரத்தில் பிறந்து வளர்ந்து கல்லூரி முடித்த வருடத்திலேயே இந்தியத் தலைநகர் தில்லிக்கு வந்துவிட்டவன்! கிட்டத்தட்ட 25 ஆண்டுகளாக தில்லி வாசி. பயணம் செய்வது மிகவும் பிடித்த விஷயம்.  கடந்த 2009-ஆம் ஆண்டிலிருந்து www.venkatnagaraj.blogspot.com எனும் வலைப்பூவில் எழுதி வருகிறேன்.  சென்று வந்த பயணங்கள், அதில் கிடைத்த அனுபவங்களை வலைப்பூவில் எழுதி வருகிறேன். இந்தியாவின் பல மாநிலங்களுக்குச் சென்று வந்திருக்கிறேன்.   இது வரை எழுதிய பயணக் கட்டுரைகளில் சிலவற்றை மின்புத்தகமாக வெளியிட நண்பர்கள் சிலர் சொன்ன யோசனையின் பேரில், இது எனது கன்னி முயற்சி…  ஆமாம் இது முதல் மின்புத்தகம்!     உத்திராகண்ட் மாநிலத்தில் உள்ள நைனிதால்…..  அழகிய பல ஏரிகளைக் கொண்ட நகரம் என்பதால் இந்நகரை ஏரிகள் நகரம் என்றே அழைக்கிறார்கள்.  கடும் குளிர்காலத்தில் நானும் நண்பர்களும் இங்கே பயணம் செய்த போது பார்த்த இடங்கள், எங்களுக்கு கிடைத்த அனுபவங்கள் ஆகியவற்றினை எனது வலைப்பூவில் எழுதினேன். பொதுவாகவே பனிப்பொழிவு இரவு நேரங்களில் தான் அதிகம் இருக்கும். அறிவியல் ரீதியாக உண்மையோ பொய்யோ, மிகவும் ரசனையோடு சிலர் சொல்வது இது தான்.  பனிப்பொழிவினை இரண்டு விதமாக பிரிக்கலாம் –  ”ஒன்று பனிக்கட்டி மழை மற்றொன்று பஞ்சு போன்ற பனி மழை – அதிலும் பஞ்சு போன்ற பனிக்கு வெட்கம் அதிகம் அதனால் யாரும் பார்க்காத இரவு வேளையில் தான் பஞ்சு போன்ற பனி அதிகம் பொழியும்” இப்படி சுவாரஸ்யமான பல விஷயங்களை இப்பயணத்தில் நாங்கள் தெரிந்து கொண்டோம்…  அப்படி பார்த்த, கேட்ட, ரசித்த விஷயங்கள் ஒரு தொகுப்பாக…….       ஆசிரியர் – வெங்கட் நாகராஜ் – venkatnagaraj@gmail.com மின்னூலாக்கம் –வெங்கட் நாகராஜ்   அட்டைப்படம் – மனோஜ் குமார் – socrates1857@gmail.com creative commons attribution Non Commercial 4.0 international license உரிமை – கிரியேட்டிவ் காமன்ஸ். எல்லாரும் படிக்கலாம், பகிரலாம். [pressbooks.com] 1 [] உத்திராகண்ட் மாநிலத்தில் இருக்கின்ற ஒரு மலைவாசஸ்தலம் நைனிதால். புது தில்லியிலிருந்து சாலை வழிச் சென்றால் சுமார் 300 கிலோமீட்டர் தொலைவில் உள்ள ஏரிகளின் நகரத்தினை அடைய நீங்கள் [G]காசியாபாத், ஹாபூர், மொராதாபாத், ஹல்த்வானி வழியாகச் சென்றால் சுமார் ஏழு மணி நேரம் ஆகலாம். மொராதாபாத் வரை சாலை நன்றாக இருக்கும். அதன் பிறகு ராம்பூர் வரை குண்டுகுழியாக இருக்கும் சாலை தான் – பிரசவத்திற்கு இலவசம் என்று ஆட்டோவில் எழுதி இருப்பதை இந்தச் சாலையில் தைரியமாக எழுதி வைக்கலாம். அப்படி சாலையில் செல்வது உங்களுக்குப் பிடிக்காது எனில், ஆகாய மார்க்கமாகவும் செல்லலாம். ஆனால் நைனிதால் நகரில் விமான நிலையம் இல்லை. அருகிலுள்ள விமான நிலையம் பந்த்நகர் எனும் இடத்தில் இருக்கிறது. நைனிதால் நகரிலிருந்து 70 கிலோமீட்டர் தொலைவில் இருக்கிறது. ஆனால் தில்லியிலிருந்து பந்த்நகர் செல்லும் விமானங்கள் அதிகம் இல்லை. அப்படி இல்லையெனில், ரயிலிலும் செல்ல முடியும். நைனிதால் நகரத்தில் ரயில் நிலையம் ஏதுமில்லை. பக்கத்திலிருக்கும் ரயில் நிலையம் காத்கோதாம் [KATHGODAM] – தில்லி நகரிலிருந்து இரண்டு ரயில்கள் காத்கோதாம் வரை செல்லும் – சுமார் ஏழு மணி நேரப் பயணம்.  காத்கோதாம் நகரிலிருந்து நைனிதால் சுமார் 35 கிலோ மீட்டர் தொலைவு. அதை சாலை வழியாகத்தான் கடக்க வேண்டும். [] நாங்கள் தேர்ந்தெடுத்தது சாலைப் பயணம் தான் – எனக்குப் பிடித்ததும் அதுதான். எட்டு மணி நேரத்திற்கும் குறைவான பயணம் எனில் நிச்சயம் சாலை வழிப் பயணம் தான். கேரள நண்பர் ஜனவரி மாதத்தில் வரப் போவதாக தகவல் வந்ததும் எங்காவது செல்ல முடிவு செய்தோம். கூடவே இன்னும் சில தில்லி நண்பர்களும் சேர்ந்து கொள்ள மொத்தம் ஆறு பேர் செல்ல முடிவானது. உடனே ஒரு 6 + 1 இருக்கைகள் கொண்ட Toyato Innova  வாடகைக்கு ஏற்பாடு செய்து விட்டோம். [] ஜனவரி மாதம் 10-ஆம் தேதி [வெள்ளிக் கிழமை] இரவு 07.30 மணிக்கு தில்லியிலிருந்து புறப்படுவதாக முடிவு செய்திருந்தோம்.  கடைசி நேரத்தில் ஆறு பேர் பயணிக்க இருந்தது நான்கு பேராக குறைந்து விட்டது – அலுவலகத்தில் ஆணி அதிகம் என்பதால்! சுபயோக சுபதினம் என்று சொல்லக்கூடிய வேளையில் எனது இல்லத்திலிருந்து புறப்பட்டோம். தில்லியில் வருவாய் வரி அலுவலகம் இருக்கும் பகுதி வழியாகச் செல்லும்போது சாலையில் நிறைய வாகனங்கள்.  தில்லியின் எல்லையைக் கடப்பதற்கே எட்டரை மணி ஆகிவிட்டது. [G]காசியாபாத் பகுதியைக் கடக்கும்போது அந்த பகுதிகளில் வரிசையாக சாலை ஓரங்களில் நிறைய கடைகள் – தரைக் கடைகள். ஜனவரி மாதம் – பொதுவாக குளிர் காலங்களில் வட இந்தியாவில் வேர்க்கடலை வியாபாரம் நிறையவே நடக்கும். ஓடுடன் இருக்கும் கடலையை வாங்கி அதன் ஓடுகளை உறித்து தெருவெங்கும் இறைத்தபடியே போவதில் இங்குள்ளவர்களுக்கு அலாதி ஆனந்தம்.  சாலை ஓரங்களில் தரையில் மண் அடுப்புகள் வைத்து வேர்க்கடலை வறுத்துக் கொண்டிருந்தார்கள். [] மதியம் சாப்பிட்டது, இந்த வேர்க்கடலைக் கடைகளைப் பார்த்ததும் கொஞ்சம் பசிக்கவும் ஆரம்பித்தது!  வேர்க்கடலை மட்டுமே சாப்பிட்டு பசியைப் போக்க முடியாது என்பதால் வண்டி தொடர்ந்து சென்றது. தில்லியிலிருந்து சுமார் 130 கிலோ மீட்டர் தொலைவில் இருக்கும் [G]கஜ்ரோலா எனும் இடத்தில் சில நல்ல உணவகங்கள் இருப்பதாக அலுவலக நண்பர் சொல்லி இருந்ததால் [G]கஜ்ரோலா வரும் வரை வயிற்றையும் மனதையும் கட்டுப்படுத்தியபடி பயணித்தோம். [G]கஜ்ரோலா பகுதியில் உள்ள ”மோ[G]கா உணவகத்தில்” உணவு நன்றாக இருக்கும் என எங்களது வாகன ஓட்டுனர் பப்புவும் சொல்லவே அங்கே 10.45 மணி அளவில் சென்று அடைந்தோம். அங்கே நாங்கள் பஞ்சாபி தட்[d]காவுடன் அருமையான உணவு உண்டோம்.  ஐந்து பேர் [நாங்கள் நான்கு பேர் மற்றும் ஓட்டுனர் பப்பு] சாப்பிட 700 ரூபாய் மட்டுமே ஆனது. உணவகத்தில் உட்கார்ந்த உடனே நாம் கேட்காமல் அவர்களே Bislery சுத்திகரித்த தண்ணீர் வைக்க, பரவாயில்லையே என நினைத்தால் அதற்கும் சேர்த்து நம்மிடம் தான் வசூலிக்கிறார்கள் – எப்படியும் நீங்கள் தண்ணீர் வாங்கத்தானே போகிறீர்கள் என நினைத்திருப்பார்கள் போல! உண்ட களைப்பில் கொஞ்சம் அசறலாம் என நினைத்தால் அந்த குளிரில் அங்கிருப்பதை விட பயணிப்பதே மேல் என ஓட்டுனர் பப்புவும் அபிப்ராயப்பட, எங்கள் பயணம் தொடர்ந்தது. இரவு நேரப் பயணம் எப்போதுமே எனக்குப் பிடித்தது. முன் இருக்கையில் அமர்ந்ததால் தூங்கவும் முடியாது – நாம் தூங்கி ஓட்டுனர் பப்புவும் தூங்கிவிட்டால்! அதனால் அவருடன் பேசியபடியே இரவின் நிசப்தத்தைக் கிழித்துக் கொண்டே நாங்கள் பயணித்தோம். [] சுகமான பயணமாக அமைந்தது அந்த இரவு நேரப் பயணம். என்னுடன் வந்த மற்ற மூன்று நபர்களும் பின் இருக்கைகளில் சுகமாக உறங்க, நான் பப்புவிடம் பேச்சுக் கொடுத்தபடி வந்தேன். பப்பு ஓரிரு வார்த்தைகள் மேலே பேசுவதில்லை.  சரி பயணம் முழுவதும் இப்படியே இருந்தால், அவருக்கும் போரடிக்குமே என நினைத்துக் கொண்டிருந்தேன்.  ஆனால் அவரையும் பேச வைத்துவிட்டனர் எங்கள் நண்பர்கள். என்னென்ன இடங்கள் பார்த்தோம், தங்கும் வசதிகள் எப்படி, பக்கத்தில் இருக்கும் பார்க்கவேண்டிய இடங்கள் என்னென்ன என்பதை வரும் பதிவுகளில் பார்க்கலாம்…. தொடர்ந்து அடுத்த பகுதியில் சந்திக்கலாம்! 2 பகுதி-2: நைனிதால் – தங்குவது எங்கே? பகுதி 2: நைனிதால் – தங்குவது எங்கே ? ஏரிகள் நகரம் பகுதி ஒன்றில் நைனிதால் சுற்றுலா செல்வது பற்றி எழுதி இருந்தேன். தில்லியிலிருந்து நைனிதால் செல்லும் வழியில் [G]கஜ்ரோலா எனும் இடத்தில் இரவு உணவை முடித்துக் கொண்டு பயணத்தினைத் தொடர்ந்தோம். எங்கள் வாகன ஓட்டுனர் பப்பு – சுமார் ஐம்பது வயதிருக்கலாம், மிகச் சிறப்பாக வாகனத்தினை செலுத்திக் கொண்டிருந்தார். இரவு நேரம் அதுவும் நல்ல குளிர்காலம் என்பதால் நெடுஞ்சாலையில் அத்தனை வாகனப் போக்குவரத்து இல்லை. மணிக்கு 90-100 கிலோமீட்டர் வேகத்தில் வண்டியைச் செலுத்தி நைனிதால் நகரின் புகழ்பெற்ற மால் ரோடு எனும் இடத்தினை நாங்கள் சென்றடைந்தபோது அதிகாலை இல்லை பின்னிரவு மூன்றரை மணி. [] நைனிதால் நகரின் புகழ் பெற்ற மால் ரோடு…. நைனிதால் நகரமே தூங்கிக் கொண்டிருந்தது. அன்றைய தினம் நல்ல குளிர். போதாத குறைக்கு ஹல்த்வானி நகர் தாண்டியபிறகு ஆரம்பிக்கும் மலைப் பாதைகளில் நல்ல மழை. நடுவே சில இடங்களில் ”ஓலே” எனச் சொல்லப்படும் பனிக்கட்டி மழை. மிகவும் பரப்பான ஒரு பயணமாக அமைந்தது. அற்புதமான அனுபவத்துடன் நாங்கள் மால் ரோடு அடைந்தபோது அந்த ராத்திரி வேளையிலும் மால்ரோடு ஆரம்பிக்கும் இடத்தில் ஒருவர் வாகனங்கள் நுழைவுக் கட்டணம் வாங்கிக் கொண்டிருந்தார். [] தங்கும் விடுதியிலிருந்து – பார்க்கும்போதே பரவசமூட்டும் – நைனா ஏரியும் மலையும்…. மற்ற சுங்கச் சாவடி போல் அல்லாது, இங்கே ஒவ்வொரு முறை செல்லும்போதும் 100 ரூபாய் கொடுக்க வேண்டும் – ஒரு நாளைக்கு பல முறை இந்த வழியாகத்தான் செல்ல வேண்டியிருக்கும்! அவரிடம் நுழைவுக் கட்டணத்தினைக் கொடுத்து விட்டு உள்ளே நுழைந்தது எங்கள் வாகனம். மால் ரோடு என்பது நைனா ஏரிக்கரையில் உள்ள ஒரு சாலை. ஏரியின் அந்தப் பக்கம் முழுவதும் மலை. இரவின் நிசப்தத்தில் ஏரியில் ஒரு மீன் துள்ளிக் குதித்தால் கூட அந்தச் சத்தம் கேட்கும் படி இருந்தது. மற்ற பக்கத்தில் மலையன்னை மிக அழகாய் துயில் கொண்டிருந்தாள். துயிலாது இருந்தது எங்கள் பயணக் குழுவினரும் இன்னும் மிகச் சில ஹோட்டல் பணியாளர்களும் தான். [] நைனா ஏரி மற்றும் மலை – வேறொரு கோணத்தில்… மால் ரோடில் பலவிதமான தங்கும் இடங்கள் உண்டு. சாலை முழுக்கவே உணவகங்களும், தங்குமிடங்களும் தான். நாங்கள் நான்கு ஆண்கள் மட்டுமே சென்றதால் நைனிதால் சென்றபிறகு ஏதோ ஒரு தங்குமிடத்தில் இடம் நிச்சயம் கிடைக்கும் என்று சென்றோம். சாலையில் இருக்கும் ஒவ்வொரு தங்குமிடமாகச் சென்று விசாரிக்கத் துவங்கினோம். ஒரு இடத்தில் தங்கும் அறை நன்றாக இருந்தால் வாடகை மிக அதிகமாக இருந்தது. வாடகை சற்றே குறைவாக இருந்தால் அறை மிக அசிங்கமாக இருந்தது. [] தங்குமிடம் ஒன்றின் வெளிப்புறச் சுவரில் இருந்த படம்…. ஒரு இடத்தில் வாடகை எவ்வளவு என்று கேட்க, நான்கு பேர் தங்கும் அறைக்கு நாளொன்று 8500 ரூபாய் என்று சொன்னார். இங்கே பொதுவாக சீசன் என்று சொன்னால், கோடைக்காலம் தான். அப்போது தான் இந்த அளவிற்கு வாடகை இருக்கும். நாங்கள் சென்றது போல, நல்ல குளிர்காலத்தில் சென்றால் இந்த கட்டணத்தில் 30% வரை குறைத்துக் கொடுப்பார்கள். ஆனால் இத்தனை விலை கொடுத்தும் அவர்கள் எங்களுக்காக காட்டிய அறை ஏரியை நோக்கி இல்லாது பின்புறத்தில் இருந்தது. [] மலையில் இருக்கும் ஒர் RESORT…. அதனால் எங்கள் படையெடுப்பினைத் தொடர்ந்தோம். அடுத்ததாக பார்த்த தங்குமிடம் நன்றாகவும் இருந்தது. ஏரியை நோக்கிய அறைக்கு குளிர்கால வாடகையாக நாளொன்றுக்கு ரூபாய் 1850 மட்டும் [வரிகள் தனி]. சரி என அந்த அறையினை அமர்த்திக் கொண்டு விட்டோம். எங்கள் உடமைகளை வாகனத்திலிருந்து எடுத்துக் கொள்ள, வாகன ஓட்டி பப்பு மால் ரோடின் முடிவில் உள்ள அவரது நண்பரின் இல்லத்திற்குச் சென்றார். காலையில் மெதுவாக வந்தால் போதும் எனச் சொல்லி விட்டு, நாங்கள் அறைக்குச் சென்றோம். [] பனிபடர்ந்த சிகரம் – தங்குமிடத்திலிருந்து எடுத்த புகைப்படம்… குடும்பத்துடன் நைனிதால் செல்வதாக இருந்தால், அதுவும் இரவு வேளையில் இங்கே சென்றால், நீங்கள் முன்கூட்டியே தங்குமிடத்தினை முடிவு செய்து முன்பதிவு செய்து விடுவது நல்லது. இணையத்தில் பல தங்குமிடங்களின் சுட்டிகள் இருக்கின்றன. அவற்றில் காண்பிக்கும் அறைகளுக்கும், நேரில் பார்க்கும் அறைகளுக்கும் நிறையவே வித்தியாசம்! இருந்தாலும், முன்னேற்பாடு செய்துவிட்டு செல்வது நல்லது. [] இந்த அமைதியைக் குலைக்க ஆசை வருமா? நாங்கள் தங்கிய இடத்தின் பெயர் Hotel Gurdeep. இணையத்தில் இந்த தங்குமிடம் பற்றிய விவரங்களைப் பார்க்க முடியும். படத்தில் ரொம்பவே அழகாய் இருந்தாலும், நேரில் பார்க்கும்போது ஓகே ஓகே ரகம் தான். கேமராவின் கண்கள் வழியே பார்க்கும்போது எல்லாமே அழகுதானே! நாங்கள் முதலில் பார்த்த ஒரு தங்குமிடத்தின் பெயர் “Hotel Classic The Mall” இங்கே தான் நான்கு பேர் தங்கும் அறைக்கு 8500 ரூபாய் வாடகை சொன்னார்கள். இது போல பல தங்குமிடங்கள் நைனிதாலில் உண்டு. மலைகளில் சில Resort-களும் இயங்குகின்றன என்றாலும் அங்கே தங்குவதற்கான வாடகை சற்றே அதிகம் தான்!   நாங்கள் தேர்ந்தெடுத்த அறையில் நண்பர்கள் விட்ட தூக்கத்தினைத் தொடர ஆரம்பித்தார்கள். அறையின் வெளியே நின்று சில நிமிடங்கள் அமைதியான அந்த ஏரிக்கரையினையும், மலைகளையும் பார்த்துக் கொண்டிருந்தேன். என்ன ஒரு அமைதி அங்கே நிலவியது. நாங்கள் சென்ற காரணமோ என்னமோ பனிப்பொழிவும் ஆரம்பித்திருந்தது. வானத்திலிருந்து யாரோ ஒரு பஞ்சுப் பொதியை அவிழ்த்து விட்டாற்போல, பஞ்சு பஞ்சாய் பறந்து நிலத்தினை நோக்கி வீழ்ந்து கொண்டிருந்தது. அப்படியே நின்று ரசிக்கலாம் என்றால் தட்பவெட்பத்தின் காரணமாக உடல் நடுங்க ஆரம்பித்தது.   அறையினுள் வந்து நானும் நித்ரா தேவியின் தாலாட்டில் உறங்க ஆரம்பித்தேன். எட்டு மணிக்காவது எழுந்திருக்க வேண்டும் என நினைத்தபடியே உறங்கினேன். எழுந்தது எத்தனை மணிக்கு……? அடுத்த பகுதியில் சொல்கிறேன்.     3 பகுதி-3: நைனிதால் – பனிப்போர்வை நித்ரா தேவியின் தாலாட்டில் உறங்கிய எங்களை அவள் விடவே இல்லை. தழுவியபடியே இருக்க, நான் அவள் பிடியிலிருந்து விடுபட்டபோது மணி காலை 09.00. அப்போதும் மற்ற நண்பர்களை அவள் பிடித்திருக்க, காலைக்கடன்களை முடித்து, அறையிலிருந்து வெளியே வந்தேன். வந்து பார்த்தபோது எதிரே முழுவதும் பனிபடர்ந்த மலை – மலையினை ஒரு பனிப்போர்வை போட்டு மூடி வைத்த மாதிரி இருந்தது. நாங்கள் இருந்தது தங்குமிடத்தின் இரண்டாம் தளத்தில். கண்களை கீழே சாலை நோக்கி செலுத்தியபோது நின்றுகொண்டிருந்த அத்தனை வாகனங்களிலும் பனி படர்ந்திருந்தது.   பொதுவாகவே பனிப்பொழிவு இரவு நேரங்களில் தான் அதிகம் இருக்கும் என்று சொல்கிறார் நாங்கள் தங்குமிடத்தில் பணிபுரியும் ஒரு நேபாளி. காரணமாக அவர் சொன்னது அறிவியல் ரீதியாக உண்மையோ பொய்யோ, மிகவும் ரசனையோடு சொன்னார். பனிப்பொழிவினை இரண்டு விதமாக பிரித்துவிடுகிறார் இவர் – ”ஒன்று பனிக்கட்டி மழை மற்றொன்று பஞ்சு போன்ற பனி மழை – அதிலும் பஞ்சு போன்ற பனிக்கு வெட்கம் அதிகம் அதனால் யாரும் பார்க்காத இரவு வேளையில் தான் பஞ்சு போன்ற பனி அதிகம் பொழியும்” என்று சிலாகித்தார். []  பனியைத் தாங்கும் இலைகள்! எங்களுக்கும் பலம் உண்டு என்று சொல்கிறதோ? சில பல படங்களை எடுத்து விட்டு, எல்லோருமாக தயாராகி வெளியே வந்தோம். சாலை எங்கும் மனிதர்கள் தங்களை தலை முதல் கால் வரை சூடு தரும் உடைகளால் மூடி இருந்தார்கள் – திறந்திருந்தது முகம் மட்டுமே! முகத்தில் கூட சிலருக்கு குளிரின் காரணமாக நடுக்கம் தெரிந்தது – பற்கள் கிடுகிடுத்ததால்! தலைக்கு குல்லா, கைகளுக்கு கையுறைகள், மேலே ஜாக்கெட், மஃப்ளர் என இருக்கும் அனைவரையும் பார்த்த என்னுடன் வந்த ஒரு நண்பர் கொஞ்சம் கிண்டல் செய்து, “அப்படி ஒன்றும் குளிரவில்லையே! ஏன் இவ்வளவு PACKING?” என்றார். சிறிது நேரம் கழித்து அவர் கேட்டது – ‘வெங்கட் ஜி! குல்லா மற்றும் கையுறைகள் வாங்கணும்…. உள்ளங்கையெல்லாம் உறைந்துவிட்டது!” [] எனக்கு அத்தனை பலமில்லை – என் இலைகள் உதிர்ந்து விட்டன! ஆனாலும் வீடில்லாது தவிக்கும் இரு பறவைகளுக்கு நான் அடைக்கலம் தந்தேன்! அதுவும் ஒருவிதத்தில் பலம் தான்! நேரே நாங்கள் சென்றது உணவகம் நோக்கி. மால் ரோடு முழுவதும் தங்குமிடங்களும் உணவகங்களும் தான். பெரும்பாலான வட இந்திய உணவகங்களில் காலை நேரத்தில் பராட்டா தான் கிடைக்கும் – ஆலு பராட்டா முக்கியம்!   ஆளுக்கு இரண்டு ஆலு பரோட்டா சாப்பிட்டாலே வயிறு நிரம்பிய உணர்வு வந்துவிடும்! ஆலு பரோட்டா – தொட்டுக்கொள்ள ஊறுகாய், தயிர், பச்சைமிளகாய் என மிகச் சாதரணமான ஒரு உணவு! ஆலு பராட்டா எப்படி செய்வது என எதாவது சந்தேகம் வந்துவிட்டால் அதற்கும் இங்கே விளக்கம் இருக்கிறது! பாருங்க! [ஒரு சின்ன விளம்பரம் தான்! :)] வயிறு நிறைந்ததும், அடுத்ததாய் எதற்கு வந்தோமோ அந்த வேலையை ஆரம்பிக்க வேண்டும்! உணவகத்திலிருந்து வெளியே வரும் சுற்றுலா பயணிகளை அப்படியே இனிப்பினில் படரும் ஈக்கள் போல சிலர் முற்றுகை இடுகிறார்கள். [] ”என்னதான் நீங்கள் கூரை போட்டிருந்தாலும் அதற்கு அழகு சேர்த்திருப்பது நான் தான்” என்று சொல்லாமல் சொல்கிறதோ பனி! அந்த ஊரில் இருக்கும் முக்கியமான சுற்றுலா தளங்களை சுற்றிக் காண்பிக்கும் வாகன ஓட்டிகள் தான் அவர்கள். தில்லியிலிருந்தே வாகனம் எடுத்து வந்தாலும், உள்ளூரில் இருக்கும் வாகன ஓட்டியாக இருந்தால் பல இடங்களை சுலபமாக பார்க்க முடியுமே என ஒரு வாகன ஓட்டியிடம் பேசினோம். அவர் பெயர் மத்லூப் [Mathloob] – சுறுசுறுப்பான இளைஞர். வெளியூர் என்றாலே அவர்களிடமிருந்து விரைவில் பணம் சம்பாதிக்க நினைப்பார்கள். இவரிடம் கொஞ்சம் பேசியதில் அதிக ஆசைப் படாதவராக இருக்க, அவரிடம் பேசி அவர் வாகனத்தில் செல்ல முடிவு செய்தோம்!   நான்கு மணி நேரம் சுற்றிக் காண்பிக்க 500 ரூபாய் என பேசிக்கொண்டு அவரது 4+1 இருக்கைகள் கொண்ட சிற்றுந்தை அமர்த்திக்கொண்டோம். நேராகச் சென்றது ஒரு சமவெளிப் பகுதிக்கு. கொஞ்சம் மலைப்பாங்கான பாதையில் நடந்து சென்றால் நம் கண்ணெதிரே பனிப்போர்வை விரித்து வைத்திருந்தது! அங்கே குழந்தைகளும் பெரியவர்களும் பனிக்கட்டிகளை ஒருவர் மீது ஒருவர் வீசி விளையாடினார்கள்.   சில குழந்தைகள் பனிக்கரடி செய்ய, மற்றவர்கள் ஏற்கனவே யாரோ செய்து வைத்த பனிக்கரடியுடன் விதவிதமாய் படங்கள் எடுத்துக் கொண்டார்கள். சிலர் அப்படியே பனிக்கரடியை கடித்துத் தின்பது போல படங்களை எடுத்துக் கொண்டார்கள்! நானும் நண்பர் பிரமோதும் சுற்றிச் சுற்றி படங்கள் எடுக்க, எங்களை அழைத்து வந்த மத்லூப் எங்களிடம் காமெராவினை வாங்கி, எங்கள் அனைவரையும் சேர்த்து சில புகைப்படங்கள் எடுத்தார்! [] ”இன்றைக்கு யாரை நான் சுமப்பேனோ?” – தெரிந்து கொள்ள காத்திருக்கும் குதிரை. அங்கேயே இருந்துவிடலாம் எனத் தோன்றினாலும் இன்னும் பார்க்க வேண்டிய இடங்கள் இருந்ததால் மீண்டும் மலைப்பாதை வழியே இறங்கி சாலைக்கு வந்தோம். அடுத்த இடத்தினை நோக்கி பயணிக்கும்போது சாலை முழுவதும் பனி இருந்ததால் பல இடங்களில் தடை ஏற்பட்டது. பனியைப் பார்த்ததால் பலர் தங்களது வாகனங்களை அந்த குறுகிய சாலையில் நிறுத்தி விளையாட ஆரம்பித்திருக்க, எதிரும் புதிருமாய் வாகனங்கள் நிற்க ஆரம்பித்தன! – மிகக் குறுகிய சாலை ஆனால் அதுவும் தில்லி நோக்கிச் செல்லும் ஒரு சாலை. அதனால் அங்கே போக்குவரத்து ஸ்தம்பிக்க, நாங்களும் கொஞ்சம் இறங்கி நடந்தோம். []  சாலை முழுவதும் பனி….  தடுமாறும் வாகனம். அரை மணி நேரத்தில் போக்குவரத்து கொஞ்சம் சீராக, நாங்கள் மீண்டும் பயணித்து ஒரு இடத்திற்கு வந்து சேர்ந்தோம். அந்த இடம் Goda Point! ஹிந்தியில் goda என்றால் குதிரை. அந்த இடத்தில் நிறைய குதிரைகள் நின்று கொண்டிருக்கும். அவர்கள் வைத்திருக்கும் குதிரைகள் மீது பயணித்தோ, அல்லது மலைப்பாதையில் நடந்து சென்றோ ஒரு அழகான இடத்தினைப் பார்க்க முடியும். அது எந்த இடம் என்பதை அடுத்த பகுதியில் பார்க்கலாம்! 4 பகுதி-4: நைனிதால் – நைனா இது சைனா! நண்பர்களே, உங்களுக்கு குதிரை சவாரி செய்வதில் ஏதும் பயமுண்டா? இல்லையெனில் கரடுமுரடான மலைப்பாதையில் நடந்து பழக்கமுண்டா? குதிரை சவாரி செய்ய பயமிருந்தால் நடப்பதைத் தவிர வேறு வழியில்லை. இன்று நாம் பார்க்கப் போகும் இடத்திற்கு ஒரு மலைப்பாதையில் ஆறு கிலோமீட்டர் தொலைவு பயணிக்க வேண்டும். நடந்து சென்றால் ஒன்றரை-இரண்டு மணி நேரத்தில் அந்த இடத்தினை அடைந்து விடலாம். குதிரை சவாரி எனில் ஒரு மணி நேரம் போதுமானது. [] இடம் என்ன என்று சொல்லவே இல்லையே என கோபம் கொள்ள வேண்டாம்! அந்த இடத்தின் பெயர் நைனா பீக் [NAINA PEAK]! இந்த இடத்தினை முன்பெல்லாம் சைனா பீக் [அ] சீனா பீக் என்று தான் அழைத்து வந்தார்கள். சில வருடங்களாகத் தான் இந்த இடத்தின் பெயரை நைனா பீக் என்று மாற்றி இருக்கிறார்கள். கடல்மட்டத்திலிருந்து சுமார் 2615 மீட்டர் அதாவது 8580 அடி உயரத்தில் இருக்கிறது இந்த நைனா பீக்.   நைனிதால் நகரிலிருந்து சுமார் ஆறு கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் இந்த இடத்திற்கு நடந்து செல்வது அடிக்கடி மலையேற்றம் செய்யும் நபர்களுக்கே சவாலாக இருக்கும். ஆனாலும் அங்கே சென்றுவிட்டால் நீங்கள் பார்க்கபோவது உங்களை அப்படியே அசத்திவிடும் படி இருக்கும். பட்ட கஷ்டம் என்றும் பலன் தரும் என்பது இந்த மலையேற்றத்தின் முடிவிலும் உங்களால் உணர முடியும்.   வழியில் இருக்கும் மலைகளில் அத்தனை மரங்கள், இயற்கைக் காட்சிகள் என மிக அழகாய் இருக்கும். அவற்றைப் பார்த்துக் கொண்டே வந்தால் நீங்கள் மூச்சு வாங்கி மேலே நடந்து செல்வது உங்களுக்குத் தெரியாமல் போகலாம்! வாங்க உங்களுக்கும் மூச்சு வாங்குவது தெரிகிறது….. அட இதோ வந்துட்டீங்க! பார்க்கவே கண்கொள்ளாக் காட்சி உங்கள் கண்முன்னே! அங்கே பாருங்க இமயமலை பனியை போர்வையாக்கி மூடிக்கொண்டு உங்களுக்கு காட்சி தருது!   ஆங்கிலத்தில் Bird’s Eye View என்று சொல்வது போல இந்த இடத்திலிருந்து நைனிதால் நகரை நீங்கள் பார்க்க முடியும். கூடவே சுற்றிப் பார்த்தால் வெறும் மலை…. மலை… எங்கெங்கு காணினும் மலையடா! என்று நீங்கள் பாட முடியும்…. ஆனால் வாயைத் திறந்தால் கையில் சிகரெட் இல்லாமலே புகைக்க ஆரம்பித்து விடுவீர்கள்!   நாங்கள் சென்ற அன்று இரவில் பனிப்பொழிவு அதிகம் இருந்தமையால் ஒரு உயரத்திற்குப் பிறகு எங்களால் நடக்க முடியவில்லை. அங்கேயே இருந்துவிடலாம் எனத் தோன்றினாலும், நைனிதால் நகரில் நாங்கள் அமர்த்திக்கொண்ட வாகன ஓட்டி மத்லூப் அதிக நேரம் காத்திருக்க முடியாது என்பதாலும் கீழே விரைந்து வந்தோம்.   அதே போல மலை உச்சியில் இருக்கும் இன்னுமொரு இடம் “Tiffin Top”! யாரோ வேலை இல்லாதவர் அந்த மலை உச்சியில் தன்னுடைய டிஃபன் பாக்ஸை திறந்து சாப்பிட்டார் என நினைத்துவிட வாய்ப்புண்டு! இந்த இடத்திற்கு Dorothy’s Seat என்ற பெயரும் உண்டு. நம்மை பல ஆண்டுகள் ஆண்ட ஆங்கிலேயர்களில் ஒருவர் தனது ஆசை மனைவி Dorothy Kellet என்பவருக்கு கட்டிய நினைவிடம் தான் இந்த Tiffin Top எனும் Dorothy’s Seat. இந்த இடத்திற்கும் நடந்தோ அல்லது குதிரை சவாரி செய்தோ செல்ல முடியும். நடந்து செல்வதென்றால் நல்ல காலணிகளை அணிந்து கொண்டு, குளிருக்குத் தகுந்த உடையும் அணிந்து செல்வது நல்லது. [] எங்கே செல்லும் இந்தப் பாதை…… இந்தப் பயணத்தில் நாங்கள் நைனா பீக் மட்டும் தான் சென்றோம். மேலே சொன்ன மற்ற இடமான Tiffin Top செல்ல வேண்டாமென முடிவு செய்து விட்டோம். இங்கே ஒரு விஷயத்தினைச் சொல்ல வேண்டும். குதிரை சவாரி செய்வது என்றால், குதிரைக்காரரிடம் முன்னரே பேசிக் கொள்வது நல்லது. ஆறு கிலோ மீட்டர் தொலைவு செல்லவே 1000 ரூபாய் வரை கேட்கிறார்கள் – அதுவும் உங்களுக்கு ஹிந்தி தெரியவில்லை எனில் 1500 ரூபாய் கூட கேட்பார்கள்.   நைனா பீக் வரை சென்று மீண்டும் திரும்ப [G]கோடா பாயிண்ட் வரை வருவதற்கு எத்தனை என்பதை முன்னரே அவர்களோடு பேசி முடிவு செய்து குதிரையில் பயணிப்பது நல்லது.   மலையேற்றம் [அ] குதிரை சவாரி என நீங்களும் சென்றிருப்பதால் சற்றே ஓய்வு எடுத்துக் கொண்டால் நன்றாக இருக்கும் எனத் தோன்றுகிறது அல்லவா? சற்றே ஓய்வெடுத்துக் கொள்வோம்…. அடுத்த பகுதியில் உங்களை அழைத்துச் செல்லப் போவது ஒரு ஆபத்தான இடத்திற்கு….. அதற்கென்று பயந்து கொண்டு வராமல் இருந்து விடாதீர்கள். உங்களை பாதுகாப்பாக அழைத்துச் செல்ல நான் பொறுப்பு! 5 பகுதி-5: நைனிதால் – தற்கொலை[க்கு] முனை[யாதே]! [] தற்கொலை முனைக்குச் செல்லும் பாதை…. மலைவாசஸ்தலங்களுக்குச் செல்லும்போது பார்த்திருக்கிறீர்களா? அந்த ஊரில் நிச்சயம் ஒரு Suicide Point இருக்கும்! அது ஏனோ மலைக்கு வரும் எல்லோரும் அங்கே செல்வதே இதற்காகத்தானோ என்பது மாதிரி. தமிழகத்தின் கொடைக்கானலிலும் ஒரு தற்கொலை முனை உண்டு. நைனிதாலும் இதற்கு விதிவிலக்கல்ல….. இங்கேயும் ஒரு தற்கொலை முனை உண்டு. இது போன்ற இடங்களுக்குப் பொதுவான கதைகளும் உண்டு. முதலில் நைனிதால் தற்கொலை கதையைப் பார்க்கலாம்! [] ”மலையோரம் மயிலே….  விளையாடும் குயிலே…” என்று பாடத் தோன்றுகிறதா? சில வருடங்களுக்கு முன் ஒரு நாள் அதிகாலைப் பொழுது. நல்ல பனிக்காலம். மலைப் பிரதேசத்தில் அடர்த்தியான பனிமூட்டம். [G]கோ[d]டா நிறுத்தம் வரை நடந்தே வந்தது ஒரு ஜோடி. எந்த வித பேரமும் பேசாது குதிரைக்காரர் சொன்ன பணத்தினைக் கொடுத்து விடுவதாகச் சொல்லி சைனா பீக் பார்த்து வந்தார்களாம். திரும்ப வரும்போது தங்களது பயணத்தினைத் துவக்கிய இடத்தில் விடாது அதன் அருகே இருக்கும் மற்றொரு சுற்றுலாத் தலமான தற்கொலை முனைக்கும் அழைத்துச் செல்லச் சொல்லியிருக்கிறார்கள் அந்த ஜோடி. கொஞ்சம் அதிகப் பணம் வேண்டும் என குதிரைக் காரர் கேட்க அதற்கும் ஒப்புக் கொண்டு தற்கொலை முனைக்கு வந்து விட்டார்கள். அவ்விடம் வந்ததும் இறங்கி நேராக தற்கொலை முனைக்கு சென்ற இளம் ஜோடி சிறிது நேரம் ஒருவரை ஒருவர் அணைத்தபடி நின்று கொண்டிருந்தார்களாம்!   குதிரையை ஒரு ஓரத்தில் கட்டி வைத்து பணம் வாங்க வந்த குதிரைக்காரர் அவர்களை பார்த்தபடி இருக்க, சில நொடிகளில் அங்கே இருந்த கம்பித் தடுப்புகளின் மேலே ஏறி குதித்து விட்டார்களாம்! பணமும் கொடுக்காது குதித்து விட்டார்கள்…. மேலும் இங்கே இருந்தால் காவல்துறை கேட்கும் கேள்விகளுக்கு பதில் சொல்ல வேண்டுமென்று அங்கிருந்து காதல் ஜோடியை திட்டியபடியே திரும்பி வந்தாராம் குதிரைக்காரர்.   என்ன! கதை கேட்டாச்சா? இது உண்மையோ பொய்யோ, இது போன்ற பல கதைகள் ஒவ்வொரு தற்கொலை முனையிலும் உண்டு. இறைவன் கொடுத்த உயிரை தாமாகவே மாய்த்துக் கொள்வதில் என்ன லாபம். எத்தனை பிரச்சனைகள் வந்தாலும் அதை சமாளிப்பதில் தான் திறமை இருக்கிறது. அதை விட்டு தற்கொலை செய்து கொள்வது கோழைத்தனம் அல்லவா? [] ‘மேகம் கருக்குது… மின்னல் வெடிக்குது…’ அப்படின்னு சொல்ல ஆசை…  நாங்களும் தற்கொலை முனைக்கு வந்து சில பல புகைப்படங்களை எடுத்துக் கொண்டு அங்கே இருந்த மற்றவர்களை கவனித்தோம். சில இளைஞர்கள் ஒரு குழுவாக வந்திருந்தார்கள். வந்திருந்தவர்களில் சிலர் நல்ல போதையில் இருந்தார்கள். தற்கொலை முனையில் சில இளம்பெண்களைப் பார்த்தவருக்கு, போதை இன்னும் தலைக்கேறியது! பாறைகளில் நின்றுகொண்டு ஒரு பிரசங்கம் செய்ய ஆரம்பித்தார்: [] அதோ தெரிகிறதே ஒரு மலை முகடு…. அதில் நின்று கவிதை சொல்ல ஆசை……’  (கவிதை தான் எழுத தெரியலையே…. அப்புறம் எதுக்கு இந்த ஆசை! – கேட்டது உள்மனது!] ”ஏ பெண்களே… உங்களைப் போன்ற ஒரு பெண் என்னை ஏமாற்றிவிட்டாள். நான் தற்கொலை செய்து கொள்ளப் போகிறேன்” என்று ஏதேதோ பேச ஆரம்பித்தார். கேட்டுகொண்டிருந்த எங்களுக்கு அதிர்ச்சி. ’குதித்து விடுவானோ’ என அச்சத்தோடு சிலர் பார்க்க, ஒரு பெண், ‘குடிச்சுட்டு உளறுகிறான்…. இதுக்காகவே அந்த பெண் ஏமாற்றி இருக்கலாம்! சும்மா உதார் விடாது குதிடா பார்க்கலாம்!” என்று கொஞ்சம் மெல்லிய குரலில் சொன்னார். [] இது என்ன மரம்? நெய்வேலியில் இருந்து தில்லி வந்த பிறகு மரம் ஏறுவதில்லை…. இதில் முயற்சி செய்ய ஆசை….. என்னது ’அப்புறம் என்ன ஆச்சு?, குதித்தானா இல்லையா?’ என்று தானே கேட்டீங்க! அதெல்லாம் குதிக்கலை. அந்தப் பெண் சொன்ன மாதிரி வெறும் உதார் விட்டதோடு சரி! கற்களின் மீது ஒரு குத்தாட்டம் போட்டுவிட்டு தனது கோமாளித்தனத்தினை மேலும் காட்சிப் படுத்திக் கொண்டிருந்தார். [] இங்கேயும் வீடு கட்ட ஆரம்பித்து விட்டோம்… ஒரு இஞ்ச் இடம் கூட விட மாட்டோம்லே! நாங்கள் தற்கொலை முனைக்கு வந்து சில நிமிடங்கள் ஆகிவிடவே, எங்கள் ஓட்டுனர் மத்லூப் எங்களைத் தேடிக் கொண்டு அங்கே வந்துவிட்டார். ஒரு வேளை பணம் கொடுக்காது நாங்களும் காணாமல் போய்விடுவோம் என்று எண்ணியிருப்பாரோ? ”பயப்படாதே மத்லூப், நாங்கள் இங்கே விழப்போவதில்லை! கொஞ்சம் இயற்கையையும், மக்களின் செயற்கையான செயல்களையும் பார்த்துக் கொண்டிருந்தோம்” எனச் சொல்லி அங்கிருந்து நகர்ந்தோம்.   அடுத்ததாய் நாம் பார்க்கப் போகும் இடத்திற்கும் குதிரைக்கும் சம்பந்தம் உண்டு. அது என்ன சம்பந்தம்? அடுத்த பகுதியில் பார்க்கலாமா? 6 பகுதி-6: நைனிதால் – [kh]குர்பாதால்   தற்கொலை முனையிலிருந்து புறப்பட்ட எங்களது பயணம் அடுத்ததாய் நின்றது ஒரு மலை முகட்டில். இங்கே என்ன இருக்கிறது என்று ஓட்டுனர் மத்லூபிடம் கேட்க, மேலேயிருந்து ஒரு அற்புதமான இடத்தினை நீங்கள் பார்க்கப் போகிறீர்கள் என்று சொன்னார். அது என்ன இடம் என்று பார்க்கலாமா? [] ’என் பெயர் மோகனாங்கி…  அட இல்லைப்பா வேற எதுவோ நினைப்புல சொல்லிட்டேன்! – நான் தான் [KH]குர்பா தால்’ சில அடிகள் நடந்தால் சில மரங்களும், மரங்களின் ஊடே பார்த்தால் ஒரு சிறிய ஊரும் தெரிகிறது. அந்த ஊரின் பெயர் குர்பாதால் [khurpa tal]. இந்த தொடரின் முதல் பகுதியில் சொன்னது போல தால் என்ற ஹிந்தி சொல்லிற்கு ஏரி என்ற பெயர். நைனிதால் மற்றும் சுற்றுப் பகுதிகளில் நிறையவே சின்னச் சின்ன ஏரிகள். அப்படி ஒரு ஏரி தான் குர்பா தால். மேலிருந்து பார்க்கும்போது குதிரைக் குளம்பு போன்ற வடிவத்தில் இருப்பதால் இந்த ஏரிக்கும் அது இருக்கும் சிறு கிராமத்திற்கும் குர்பாதால் என்று பெயர் எனச் சிலர் சொல்கிறார்கள். ஹிந்தி மொழியில் குர்பா என்றால் சிறிய மண்வெட்டி! இந்த குர்பா தால் நைனிதால் நகரிலிருந்து சுமார் 10 கிலோமீட்டர் தொலைவில் இருக்கிறது. முன்பு இங்கே நிறைய இரும்பு சம்பந்தப்பட்ட தொழில்கள் நடந்ததாகவும், அவையெல்லாம் இப்போது குறைந்து காய்கறித் தோட்டங்கள் அதிக அளவில் வந்து விட்டதாகவும் ஓட்டுனர் சொல்லிக் கொண்டிருந்தார். மிக அழகிய கிராமம் என்று சொன்னாலும் நாங்கள் மேலேயிருந்து அதன் அழகினைப் பார்த்ததோடு சரி. தனிமை விரும்பிகள் மற்றும் இயற்கை விரும்பிகள் அங்கே சென்று கிராமிய சூழலில் இருக்கலாம்! [] ”அந்தா தெரியுதே ரோடு…. அது மேலே போனா குர்பா தால் வந்துடும்!” மேலே இருந்து பார்த்தபோது அவ்வளவு அழகான சூழலாக இருந்தது. அங்கே ஒரு மரம். ஆரம்பிக்கும்போதே நான்கு கிளைகளோடு இருப்பது போல தோன்றியது. அந்த கிளைகளைப் பிடித்துக்கொண்டு சில புகைப்படங்கள் எடுத்துக் கொண்டோம். சில மணித்துளிகள் அங்கிருந்தோம். அவ்விடத்தினை விட்டு நகர மனதில்லை. இருந்தாலும் இன்னும் பார்க்க வேண்டிய இடங்கள் நிறையவே என்பதால் வெளியே வந்தோம். [] ”என்ன குற்றம் செய்தோம் கொற்றவனே?  எங்களை இப்படி தூக்கிலிட்டது எதற்காக?” வாசலில் சில சிறிய கடைகள் – ஒரு டேபிள் சில குப்பிகள், பாத்திரங்கள் – அவ்வளவு தான் கடை! சுடச்சுட MAGGIE, மோமோஸ் மற்றும் தேநீர் தயாரித்துக் கொடுக்கும் கடைகள் இருந்தன. குளிர் மிகவும் அதிகமாக இருந்ததால், கொஞ்சம் சூடாக தேநீர் அருந்தினால் நன்றாக இருக்கும் என நண்பர்கள் அனைவரும் ஒரு சேரக் கருதவே ஐந்து பேருக்கும் [அட ஐந்தாவது எங்கள் ஓட்டுனர் மத்லூப் தான்] தேநீர் தயாரிக்கச் சொன்னோம். இஞ்சி, ஏலக்காய் போட்டு அவர் தயாரித்த தேநீர் மிகவும் சுவையாகவே இருந்தது.   ஐந்து தேநீருக்கு விலை 75 ரூபாய். என்னது விலை அதிகம் என்று தோன்றுகிறதா? அங்கே இருந்த குளிருக்கு இதமாக இருந்தது அந்த சூடான தேநீர். எங்களுடன் வந்த நண்பர் ஒருவர் ”எனக்கு குளிராது. அதனால் தொப்பி, கையுறை எல்லாம் போட்டுக் கொள்ள மாட்டேன்’ என்று சொல்லிக் கொண்டிருந்தார். அங்கே நின்றபோது கொஞ்சம் குளிர் அதிகம் என்பதைப் புரிந்து கொண்டு விட்டார். தேநீர் நிச்சயம் தேவை என்று முதலில் உணர்ந்ததும், சொன்னதும் அவர் தான்!   ஆகவே ”ஐந்து தேநீருக்கான விலை அதிகமில்லை ஜென்டில்மேன்” என்று சொல்லி, பணம் கொடுத்துவிட்டு தேநீர் தயாரித்துக் கொடுத்த அந்த நல்லுள்ளத்திற்கு நன்றியையும் சொல்லி புறப்பட்டோம்! தேநீர் தயாரித்தவருக்கு தன் சொத்தையே எழுதித் தரத் தயார் என்று சொன்னார் மேலே சொன்ன ஆசாமி! [] ”இந்த இடத்தினைப் பார்த்தபோது ‘உள்ளம் கொள்ளை போகுதே’ எனப் பாடத் தோன்றியது. பக்கத்தில் குதிரை/கழுதை இருந்ததால் பாடவில்லை!” மேலே இருந்து பார்க்கும்போதே மிக அழகாக இருக்கிறதே இந்த இடம், அருகில் சென்று பார்த்திருந்தால் இன்னும் அழகாக இருந்திருக்கும் என மனதுக்குள் ஒரு ஆசை இருந்தபடியே இருந்தது எங்களுக்கு. ஆனாலும் இன்னும் சில ஏரிகளையும், நைனிதால் நகரில் இருக்கும் சில இடங்களையும் பார்க்க வேண்டும் என்பதால் அங்கிருந்து நகர்ந்தோம். [] ”மலையோரம் வீசும் காத்து…..  மனதோடு பாடும் பாட்டு…..   கேட்குதா கேட்குதா?” இந்தப் பதிவில் மேலே ஒரு புகைப்படம் வெளியிட்டு இருக்கிறேன். வரிசையாக குளிர்பான குப்பிகளை கட்டித் தொங்க விட்டிருப்பதைப் பார்த்தீர்களா? இது எதற்காக என்று யாருக்காவது தெரிந்தால், சொல்லுங்களேன்! அது எதற்கு என்பதை அடுத்த பகுதியில் நான் சொல்வதற்குள்! [:)] 7 பகுதி-7: நைனிதால் – கேள்விக்கென்ன பதில்? [] சென்ற பகுதியில் சொன்ன கேள்விக்கு, எனது வலைப்பூவில் இத்தொடரை வெளியிட்ட போது வந்த கேள்விகள்/பதில்கள்: பகவான் ஜி: குளிர் பாட்டில்கள் தாண்டினால் மரணக் குழியில்தான் விழ வேண்டியிருக்கும் இல்லையா ? திருமதி கீதா சாம்பசிவம்: அந்தப் பக்கம் இருக்கிறவங்களுக்குக் குடிநீரை இப்படித் தொங்க விட்டு அனுப்பறாங்களா, இல்லை ஏதானும் வேண்டுதலா? ஸ்ரீராம்: பாட்டில்கள் எங்கேயோ பயணம் செய்கின்றன போலும்! திருமதி இராஜராஜேஸ்வரி: குளிர்பான கம்பெனியின் விளம்பரங்களா? திருமதி சித்ரா சுந்தர்: hanging garden கேள்விப்பட்டிருக்கேன். ஆனால் இது புதுசா இருக்கே. ஒருவேளை Recycle concept ஆக இருக்குமோ. இல்லை ஏதோ மரத்திலிருந்து எண்ணெய் அல்லது திரவம் எடுத்து காயவைக்க வேண்டுமோ! கேள்விக்கு பதில் கேள்வி கேட்ட/பதில் சொல்ல முயற்சித்த அனைவருக்கும் நன்றி. ஒரு கேள்வி எத்தனை பதில் கேள்விகளை, யோசனைகளை உருவாக்கி இருக்கிறது! சரி கேள்விக்கான பதிலுக்கு வருவோம்! நாங்கள் தேநீர் குடித்த [kh]குர்பாதால் அருகிலேயே இன்னுமொரு மேடை. அதில் இன்னுமொரு கடை உண்டு. அந்த கடைக்கு உதவும் பொருட்டே இந்த குப்பிகள் கட்டி வைக்கப் பட்டு இருக்கின்றன. கடற்கரையிலும், பொருட்காட்சிகளிலும் காற்று நிரப்பிய பலூன்களை ஒரு பெரிய திரையிலோ/அட்டையிலோ வைத்து துப்பாக்கி மூலம் சுடுவதைப் பார்த்திருப்பீர்கள் தானே. அது போலவே இந்த நெகிழி குப்பிகளும் துப்பாக்கி மூலம் சுட்டு வீழ்த்தும் ஒரு விளையாட்டு. சுற்றுலா வந்திருக்கும் நபர்கள் துப்பாக்கி மூலம் குப்பிகளைச் சுட்டு விளையாடலாம். மூன்று குண்டுகள் சுட பத்து ரூபாய்! காற்றில் அசைந்து கொண்டிருக்கும் அந்த குப்பிகளை குறிபார்த்து சுடுவது கொஞ்சம் சிரமமான விஷயம் தான்! தேநீர் அருந்திய பின் எங்கள் பயணம் தொடர்ந்தது. மீண்டும் மலைப்பாதையில் பயணித்த நாங்கள் மால் ரோடிற்கு திரும்பினோம். மால் ரோடில் இருக்கும் Aerial Ropeway. மல்லிதால் எனும் இடத்திலிருந்து Snow View Point வரை அமைக்கப்பட்டுள்ள Ropeway மூலம் பயணிக்க வேண்டும். எங்கள் ஓட்டுனர் மத்லூப் அந்த இடத்திற்கு அருகில் எங்களை இறக்கி விட்டு அவருக்கு பேசிய வாடகையை வாங்கிக் கொண்டு தனது தொடர்பு எண்ணைக் கொடுத்து விட்டு எப்போது வந்தாலும் அழைக்கும்படிச் சொல்லி அங்கிருந்து நகர்ந்தார். சாலையிலிருந்து இந்த Ropeway இருக்கும் இடத்திற்கு சாலையிலிருந்து மேல் நோக்கி கொஞ்சம் நடக்க வேண்டும். செல்லும் வழியெங்கும் சில கடைகள் இருக்க, அங்கே வந்து அவர்கள் விற்கும் பொருட்களை வாங்கிக் கொள்ள அவர்களிடமிருந்து அழைப்பு வந்தபடி இருக்க, Ropeway அலுவலகத்திற்குச் சென்றோம். சிலர் மேலே சென்று கொண்டிருக்கும் அந்த சிறிய பெட்டியைப் பார்த்துக் கொண்டிருக்க நானும் இன்னுமொரு நண்பரும் நுழைவுச்சீட்டு வாங்க வரிசையில் நின்று கொண்டிருந்தோம். அதற்குள் அந்த பெட்டியைப் பார்த்து விடுவோம்! மொத்தம் பதினோறு பேர் பயணிக்கும் வசதி உண்டு. அந்த பெட்டி தாங்கக்கூடிய அதிக பட்ச எடை 800 கிலோ மட்டுமே! மேலிருந்து மலைகளின் காட்சி மிகவும் அருமையானதாக இருக்கும் என்பதால் நிறைய குழந்தைகளும் பெரியவர்களும் அதில் செல்ல போட்டி போட்டுக் கொண்டு இருந்தார்கள். எங்கள் முறையும் வந்தது. பெரியவர்களுக்கு 100 ரூபாய் சிறுவர்களுக்கு 60 ரூபாய். நாங்கள் நான்கு நுழைவுச் சீட்டு கேட்க, ”உங்களுக்கு கொடுக்கப்படும் நேரம் மாலை 04.00 மணிக்கு தான். பரவாயில்லையா?” என்று கேட்டார். நாங்கள் அந்த இடத்தில் இருந்தபோது மணி இரண்டே கால்! கிட்டத்தட்ட இரண்டு மணி நேரம் காத்திருக்க வேண்டும். நண்பர்களுடன் பேசி, கூட்டிக் கழித்துப் பார்த்ததில் இங்கே காத்திருப்பதனால் மற்ற இடங்களைப் பார்ப்பது கடினம் ஆகி விடும் என அதில் பயணிப்பதை ஒதுக்கினோம். காலை 10 மணி முதல் மாலை ஐந்து மணி வரை வாரத்தின் ஏழு நாட்களும் செயல்படும் இந்த Ropeway-ல் பயணிப்பதும் ஒரு சுகமான அனுபவம் தான். நீங்கள் செல்வதாக இருந்தால் இதற்கான நேரத்தினை முன்னரே முடிவு செய்து பயணிப்பது நல்லது. ”போன மச்சான் திரும்பி வந்தான் பூ மணத்தோட” என்பது போல அங்கிருந்து புறப்பட்டு மால் ரோடினை அடைந்தோம். நைனா ஆற்றின் பக்கத்திலேயே ஒரு கோவில் எதிரே ஒரு மசூதி, நிறைய கடைகள் என ஆற்றங்கரையில் சில சுவாரசியங்கள் இருக்க அவற்றினைப் பார்த்துவிட்டு மதிய உணவு உட்கொள்ள வேண்டும். அடுத்த பதிவில் இந்த விஷயங்களைப் பார்க்கலாம்! 8 பகுதி-8: நைனிதால் – நைனா தேவியும் ஜம்மா மசூதியும் []  கண்கள் இரண்டால்…   சதியின் கண்கள் இரண்டால்…. உருவான நைனிதால்! நைனி ஆற்றினை மூன்று ரிஷிகள் உருவாக்கியதாகவும் ஒரு கதை உண்டு. அத்ரி, புலஸ்த்யா மற்றும் புலஹா என்று மூன்று ரிஷிகள் இந்த வழியாக வந்து கொண்டிருக்கும் போது தண்ணீர் இங்கே இல்லாத காரணத்தினால் இங்கே பெரிய பள்ளம் தோண்டி அங்கே மானசரோவர் நதியின் தண்ணீரை நிரப்பினார்களாம். அதனால் இந்த நைனிதால் ஆறு தோன்றியது என்றும், இதற்கு மூன்று ரிஷி சரோவர் என்ற பெயரும் உண்டு எனச் சொல்கிறார்கள். கூடவே, மானசரோவர் நதியில் குளித்தால் என்ன புண்ணியம் கிடைக்குமோ அதே புண்ணியம் இந்த நைனி ஆற்றில் குளித்தாலும் கிடைக்கும் என்று சொல்கிறார்கள்! [] ஓடம் நதியினிலே…..  ஒருத்[தி]தன் மட்டும் கரையினிலே! படகுத்துறை போலவே இந்த நைனிதால் ஆற்றினை சக்தி பீடங்களில் ஒன்றாகவும் குறிப்பிடுகிறார்கள். சிவபெருமான் எரிந்து போன சதி[பார்வதி]யின் உடலை தூக்கிக் கொண்டு வரும்போது சதியின் கண்கள் இங்கே விழுந்தது எனவும் அதனால் தான் இந்த ஆறு நைனிதால் எனப் பெயர் பெற்றதாகவும் சொல்வதுண்டு. ஹிந்தியில் நயன் என்றால் கண்கள். தால் என்றால் ஆறு. நயனங்கள் இந்த தாலில் விழுந்ததால் நைனிதால்! இந்த ஆற்றின் வடகரையில் கோவில் கொண்டிருப்பவள் நைனா தேவி. மிகப் பழமையான இந்தக் கோவிலில் சக்தியை கண்கள் ரூபத்தில் வழி படுகிறார்கள். நைனாதேவி கோவிலில் நைனா தேவியினைத் தவிர காளிக்கும் பிள்ளையாருக்கும் தனிச் சன்னதிகள் உண்டு. 1880-ஆம் ஆண்டு ஏற்பட்ட கோரமான மலைச்சரிவில் நைனா தேவி கோவில் முற்றிலும் அழிந்து விட மீண்டும் இக்கோவிலைக் கட்டி இருக்கிறார்கள். நாங்கள் கோவிலுக்குச் செல்லும் போது இருந்த மழைத்தூறல் மற்றும் முந்தைய இரவின் பனிப்பொழிவின் காரணமாக சாலை எங்கும் சேறும் சகதியும். அவற்றை மிதித்தபடியே கோவிலின் வாசலில் வந்து, எல்லோரும் தத்தமது காலணிகளை ஒழுங்கில்லாது ஆங்காங்கே போட்டு விட்டு சென்று இருந்தார்கள். கோவிலில் பலத்த கூட்டம் – சிலர் வெளியே நின்றபடியே இறைவியை தரிசிக்க, சிலர் உள்ளே கூட்டத்தோடு கூட்டமாக இடிபட்டு சென்று வந்தார்கள். கூட்டத்தோடு கூட்டமாக நானும் உள்ளே சென்று வெளியே வந்தேன்! பெரும்பாலான கோவில்களில் இப்போதெல்லாம் நின்று நிதானமாக தரிசனம் செய்ய முடிவதில்லை! [] நைனிதால் ஆற்றின் அருகே இருக்கும்  ஜம்மா மசூதி. எனக்கு வயது நூற்று முப்பத்தி இரண்டு! கோவிலை விட்டு வெளியே வந்தால் ஒரு பெரிய மைதானம் – அதன் அப்புறத்தில் ஒரு மசூதி. இந்த மசூதியின் பெயர் ஜம்மா மஸ்ஜீத். இங்கிலாந்து ராணுவத்தில் இருந்த முஸ்லீம் வீரர்கள் தங்களது தொழுகையை நடத்த 1882-ஆம் வருடம் கட்டப்பட்டதாக வெளியில் வைத்திருக்கும் பதாகை தெரிவிக்கிறது. மசூதியையும் ஒரு புகைப்படம் எடுத்துக் கொண்டு வழியில் இருந்த சிறிய கடைகளை நோட்டம் விட்டோம். [] இயற்கை எழில் கொஞ்சும் மலையும்….   எழிலின் சூழலில் இருக்கும் மசூதியும். பெரும்பாலான கடைகளில் குளிருக்கான உடைகள் நிரம்பி இருந்தது. காலுறைகள், வண்ண வண்ண குல்லாக்கள், கை உறைகள் என அனைத்துமே கம்பளி நூல்களில் செய்து விற்பனைக்கு வைத்திருந்தார்கள். சில திபெத்தியர்களின் கடைகளும் இருந்தது. குளிருக்கு இதமாக ஆங்காங்கே தேநீர் கடைகளும், ஆலு டிக்கி, குல்ச்சா-சோலே, பானிபூரி போன்ற உணவுப் பொருட்களை விற்பனை செய்யும் கடைகளையும் காண முடிந்தது. பெரும்பாலான உணவு விற்பனை கடைகளின் முன்னே மனிதர்களை விட ஈக்களின் கூட்டம் அதிகமிருந்தது! [] கடைவீதி கலகலக்கும்….. ஈக்கள் மொய்க்கும் உணவுப் பொருட்களைப் பார்த்த எங்கள் வயிற்றிலிருந்தும் ஏதோ ரீங்காரம் கேட்க ஆரம்பித்தது. காலையில், அதாவது பத்தரை மணிக்கு காலை உணவு சாப்பிட்டது. இத்தனை இடங்களில் சுற்றிய பிறகு, நடுவில் ஒரு தேநீர் குடித்தது தவிர, மூன்றரை மணி வரை ஒன்றும் சாப்பிடவில்லையே!   சரி என மால் ரோடினை நோக்கி நடந்தோம். கண்ணில் பட்ட ஒரு உணவகத்தினை நோக்கி கால்கள் பயணித்தன. [] என்னை அணிந்து கொள்ளப் போகும்  பிஞ்சுப் பாதங்கள் எதுவோ? – கடை வீதியில் விற்பனைக்கு வைத்திருந்த காலுறைகள் மதிய உணவு என்ன இருக்கிறது என்று கேட்க, தவா ரொட்டியும், சப்ஜியும் எனச் சொன்னார். என்னென்ன சப்ஜி என்று கேட்க, ”தால் ஃப்ரை, தால் மக்கனி, சன்னா மசாலா, சோலே, மட்டர் பன்னீர், ஷாஹி பன்னீர், ராஜ்மா, பிண்டி மசாலா, மிக்ஸ் வெஜ் என வரிசையாக Centre Fruit விளம்பரத்தில் வருவது போல நாக்கினால் நாட்டியம் ஆடினார். வடக்கில் இரண்டு விதமான ரொட்டி உண்டு – ஒன்று தவா ரொட்டி, மற்றது தந்தூரி ரொட்டி. இங்கே தந்தூரி ரொட்டி இல்லை! தவா ரொட்டி மட்டுமே. தவா ரொட்டி கொஞ்சம் மெலிதாக இருக்கும், தந்தூரி ரொட்டி என்பதை சுடச் சுட மட்டுமே சாப்பிட முடியும். கொஞ்சம் நேரம் ஆனாலும், கயிறு இழுத்தல் போட்டி போல ரொட்டி இழுவை போட்டிதான்! தவா ரொட்டியும், தால் மக்கனி, மிக்ஸ் வெஜிடபிள் மற்றும் ஷாஹி பன்னீர் கொண்டு வரச் சொன்னோம். கூடவே சர்க்கரை தூவிய தயிர்! சலாட் – வெட்டிப் போட்ட, வெங்காயம், கீரா, முள்ளங்கி மற்றும் மேலே பிழிந்து கொள்ள எலுமிச்சைத் துண்டு – பெரும்பாலான வட இந்திய உணவகங்களில் இந்த சலாட் இலவசம்! மதிய உணவினை உண்டதும், நண்பர் ஒருவர் கொஞ்சம் ஓய்வு எடுக்கலாமா என்று கேட்க, மற்றவர்கள் நேரம் இருக்காது, வேறு எங்கும் செல்லலாமே எனச் சொல்ல, மூன்றுக்கு ஒன்று என்ற கணக்கில் அவர் தோல்வி கண்டார்! எங்கள் ஓட்டுனர் பப்புவினை அலைபேசியில் அழைத்தோம். முதல் நாள் இரவு முழுவதும் வண்டி ஓட்டிய எங்கள் ஓட்டுனர் நல்ல ஓய்வு எடுத்துக் கொண்டது அவர் குரலிலே தெரிந்தது. அரை மணி நேரத்தில் வந்து சேர்ந்தார். அடுத்து நாங்கள் சென்ற இடம் எது? அடுத்த பகுதியில் பார்க்கலாம்! 9 பகுதி-9: நைனிதால் – பீம்தால் ஓட்டுனர் பப்பு மால் ரோடின் கீழ்ப்பகுதியில் வந்து சேர நாங்கள் மால் ரோடில் நடமாடுபவர்களை பார்ப்பதை நிறுத்தி, அவரது வண்டியில் தஞ்சமடைந்தோம். மதிய உணவிற்குப் பிறகு எங்கள் பயணம் மீண்டும் தொடர்ந்தது. நாங்கள் முதலில் சென்றது நைனிதால் நகரிலிருந்து 22 கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் பீம்தால் எனும் இடத்திற்கு. பெயரில் “பீம்” இருக்கிறதே, இந்த இடத்திற்கும் மஹாபாரத பீமனுக்கு ஏதேனும் தொடர்பு இருக்குமோ என்ற சந்தேகம் உங்களுக்கு வந்திருந்தால், உங்கள் தோள்களை நீங்களே தட்டிக் கொள்ளுங்கள்! கொஞ்சம் மெதுவாக! பீமனைப் போலவே தட்டிக் கொண்டால் வலிக்குமே! [] பீம் தால்…. பீம்தால் – கடல் மட்டத்திலிருந்து 1370 மீட்டர் உயரத்தில் இருக்கும் ஒரு சிறிய ஊர். ஊரின் முக்கியமான இடம் ஊரில் இருக்கும் பீம்தால் எனும் ஏரி. ஏரியின் நடுவே ஒரு சிறிய தீவு. அமைதியான சூழல் உங்களுக்கு மன அமைதியைத் தரவல்லது. பீம்தால் இருக்கும் இடத்தில் ஏரிக்கரையில் ஒரு சிறிய மேடை. அங்கே சில வாத்துகள் இருக்க, அவற்றை புகைப்படம் எடுத்தோம். நாங்கள் புகைப்படங்கள் எடுப்பதைப் பார்த்த சில வாத்துகள், சூரியன் பட கவுண்டமணி ”காந்தக் கண்ணழகி, இங்கே பூசு, தோ பார் இங்கே பூசு!” என்று சொல்வாரே அந்த மாதிரி நிறைய விதமாக போஸ் கொடுத்தன. ஒரு சில வாத்துகள் கால்களை கவ்விப் பிடிக்க வந்தன!   ஏரிக்கரையில் பீமேஸ்வர மஹாதேவ் கோவில் என்று ஒரு சிவன் கோவில் உண்டு. மஹாபாரத பீமன் தனது சகோதரர்களுடன் ஒரு வருட வன வாசத்தில் இருக்கும்போது இங்கே வந்ததாகவும், இங்கே இருந்த சிவன் கோவிலில் வழிபட்டதாகவும் நம்புகிறார்கள். சிறிய கோவில் தான். சிவபெருமானுக்கு ஒரு வணக்கத்தினைப் போட்டு அங்கிருந்து வெளியே வந்தோம்.   இந்த பீம்தாலிலும் சில தங்குமிடங்கள் உண்டு. அங்கேயிருந்து பக்கத்தில் இருக்கும் நளதமயந்தி தால் [நளன் இங்கே மூழ்கியதாக சொல்கிறார்கள்!], சாத்தால் [ஏழு ஏரிகள்], ஹிடிம்பா மலை [இந்த ஹிடிம்பனின் மகளான இடும்பியை பீமன் திருமணம் புரிந்து கொண்டதாகவும் கதை உண்டு], கார்கோடகன் மலை [கார்கோடன் என்பது ஒரு நாகம், நாக பஞ்சமி சமயத்தில் இங்கே மிகச் சிறப்பான விழா நடக்கும் என எங்கள் ஓட்டுனர் தெரிவித்தார்] போன்ற இடங்களைப் பார்க்கலாம். நேரப் பற்றாக்குறை காரணத்தினால் நாங்கள் இந்த இடங்களைப் பார்க்க வில்லை. [] வாங்க…. ஒரு ரவுண்டு போலாம்! எங்கள் ஓட்டுனர் ஹிமாச்சலப் பிரதேசத்தினைச் சேர்ந்தவராக இருந்தாலும், உத்திராகண்ட் பகுதிகளுக்கு பல முறை பயணம் செய்திருக்கிறாராம். என்ன அவரிடம் ஓரிரு தகவல்கள் வாங்குவதற்கு பெரிய பிரயத்தனங்கள் செய்ய வேண்டியிருக்கிறது! ஒவ்வொரு வார்த்தை பேசுவதற்கும் காசு கேட்பார் போல. இன்னும் ஒரு பிரச்சனையும் இருந்தது – எதாவது ஒரு இடத்தினைச் சொல்லி அங்கே போக வேண்டும் என்றால் – “அங்கே பார்ப்பதற்கு ஒன்றுமில்லை” என்று சொல்வார். இருக்கிறதா இல்லையா என்பதை நாம் பார்த்து தானே தெரிந்து கொள்ள வேண்டும். [] உணவு தேடும் வாத்து….. பீம்தால் வரும்போதும் அப்படித்தான் ஒன்றும் இல்லை என்று சொன்னார். ஆனாலும் அந்த ஏரியும் ஏரியின் நடுவே இருக்கும் தீவும் கண்ணுக்கு மிகவும் குளிர்ச்சியான காட்சியாக இருந்தது.   இந்த ஏரியின் கரையில் சில படகுகளும் உண்டு. அரை மணி நேரம் சுற்றி வரலாம் என நினைத்தால் இப்போது ஓய்வு நேரம் என்கிறார் படித்துறை பாண்டி! ஒன்றிரண்டு பேர் படகில் சுற்றுகிறார்களே என்று கேட்டால் அவர்கள் தான் கடைசி. அதன் பிறகு மாலை ஐந்து மணிக்கு தான் படகோட்டம். நாங்கள் அங்கிருந்ததோ 03.45 மணிக்கு! சரி என படித்துறைப் பாண்டியிடம் கொஞ்சம் தர்க்கம் செய்துவிட்டு அடுத்த ஏரியில் படகுச் சவாரி செய்யலாம் என நகர்ந்தோம்.   பீம்தாலினை அடுத்து நாங்கள் பார்த்த இடம் என்ன? அந்த இடமும் ஒரு ஏரி தான். நைனிதால் என்றாலே ஏரிகள் நகரம் தானே… சுற்றிச்சுற்றி ஏரிகளும் மலைப்பகுதிகளும் எல்லா திசைகளிலும். நாங்கள் சென்ற இடம் பற்றி அடுத்த பகுதியில் பார்க்கலாம்! 10 பகுதி-10: நைனிதால் – ஒன்பது முனை ஏரி [] ரம்மியமான சூழல் பார்க்கும்போதே இங்கே செல்ல ஆசை வருகிறது அல்லவா….. நோக்குச்சியா தால் – ஹிந்தியில் நோ [ஆங்கில No அல்ல! :)] என்றால் ஒன்பது எனும் எண் – ஏக், தோ, தீன், சார், பாஞ்ச், சே, சாத், ஆட், நோ…. வரிசையில் வரும் நோ! இந்த பெயரில் நோ என்பது இருப்பதால் இது எதோ ஒன்பதாம் எண்ணைக் குறிப்பதாக நினைத்தால் அது தான் சரியான எண்ணம். குச்சியா… என்பது முனைகளைக் குறிக்கும் ஒரு சொல். அதாவது இந்த ஏரிக்கு ஒன்பது முனைகள் – அதனால் நோகுச்சியா தால்! [] படகுப் பயணம் செல்ல நீங்கள் தயாரா? கேட்காமல் கேட்கிறதோ இப்படகு? நைனிதால் நகரிலும், அருகிலுள்ள இடங்களிலும் இருப்பதிலேயே ஆழமான ஏரி இந்த ஒன்பது முனை ஏரி. சுமார் ஒரு மீட்டர் நீளமும் நாற்பது அடி ஆழமும் உள்ள ஏரியாக இதைச் சொல்கிறார்கள். ரொம்பவும் பழமையான ஏரிகளில் இந்த ஏரியும் ஒன்று. பழமையான இடம் என்றாலே அதைச் சுற்றி நிறைய கதைகளும் இருக்கும் அல்லவா – இந்த ஒன்பது முனை ஏரி பற்றியும் நிறைய கதைகள் உண்டு – அவை கட்டுக்கதைகளோ உண்மையோ என்பதை இங்கே ஆராயப் போவதில்லை!   இந்த ஏரியின் அருகே தரையில் நின்றபடியே ஒருவரால் ஏரியின் ஒன்பது முனைகளையும் பார்க்க முடிந்தால் அப்படியே காற்றில் கரைந்து பரமனின் பாதங்களை அடையலாம் என்று சொல்கிறார்கள். இத்தனை பெரிய ஏரியின் ஒன்பது முனைகளையும் நின்ற இடத்தில் இருந்தே பார்ப்பது கடினம் என்பதை இப்படி முடியாத ஒன்றை சமன்படுத்திச் சொல்லி இருக்கிறார்கள் போல! [] மலையோரம் வீசும் காற்று….. படகிலிருந்து எடுத்த படம்…. மிக அழகான ஏரி. சென்ற பகுதியில் பார்த்த பீம்தால் போலவே, இங்கேயும் நிறைய வாத்துகள் சுற்றிக் கொண்டிருந்தன. மாலை நேரம் என்பதால் எங்கெங்கும் ஒரு வித அமைதி – மனதைக் கொள்ளைக் கொண்டது. படகுகள் காத்திருக்க, ஒரு பயணம் செய்ய நினைத்தோம். மாலையும் இரவும் சந்திக்கும் நேரம் என்பதால் சூரியன் மறைய மறைய குளிர் தனது விகார முகத்தினைக் காட்டத் துவங்கி இருந்தது.   கைகளுக்கு கை உறைகள், தலையும் காதும் மூடுவது போன்ற குல்லாய்கள், காலிற்கு காலுறைகள், காலணிகள், குளிருக்கான உடை என்று தயாராக இருந்தாலும் அத்தனையையும் தாண்டி நரம்புகளையும் எலும்புகளையும் தனது வலிமையைக் காட்டித் தாக்கத் துவங்கியது குளிர். ஆனாலும் அது ஒரு அற்புத அனுபவமாகத்தான் இருந்தது. அரை மணி நேரம் அந்த சூழலில் ஏரியில் ஒரு இனிமையான படகுப் பயணம் செய்து வந்தோம். [] நான் தான் பஹாடி நிம்பு…..  ஏரியில் பயணிக்கும் போது சுற்றிச் சுற்றி அடிக்கும் குளிர் காற்றில் காமிராவில் கிளிக் செய்வதே – அதுவும் கையுறைகள் அணிந்து புகைப்படங்கள் க்ளிக் செய்வது கடினமாக இருந்தது! பயணம் முடித்து கரைக்கு வந்தால் சுடச்சுட தேநீர் குடித்தே ஆகவேண்டிய நிலை! ஏரியோரம் அமைந்திருந்த ஒரு சிறிய கடையில் தேநீர் தயாரிக்கும்படிச் சொல்லி சுற்று வட்டாரத்தினை நோக்கினோம்!   ஒரு குழந்தையும் அவரது தந்தையும் அங்கே இருந்த பூனையுடன் விளையாடிக் கொண்டிருந்தார்கள் – அவர்களும் சுற்றுலாப் பயணிகள் தான். ஹரியானா மாநிலத்தினைச் சேர்ந்தவர்கள் – அவரையும், அவரது குழந்தையையும் தனது ”சக்ரீன் டச்” அலைபேசியில் படம் எடுத்துத் தரச் சொன்னார் – கையுறைகள் அணிந்த கைகளுடன் படம் பிடிக்க ரொம்பவே கஷ்டமாக இருக்க, ஆனது ஆகட்டும் என ஒரு கையில் மட்டும் கையுறைகளை கழற்றி அவர்களைப் படமெடுத்தேன்! [] ஓடம் நதியினிலே……. தேநீர் கடையில் சில பழங்களும் அடுக்கி வைத்திருந்தது – என்ன பழம் என்று கேட்டால் “பஹாடி நிம்பு” என்றார் கடைக்காரர். அதாவது மலை எலுமிச்சை…. பார்க்க நமது கிடாரங்காய்/நார்த்தங்காய் மாதிரியே இருக்கிறது. நம் வீட்டில் உள்ள பெண்மணிகளை அழைத்துச் சென்றிருந்தால் வாங்கி ஊறுகாய் போட்டிருப்பார்கள்! நாமும் ருசித்து சாப்பிட்டு இருக்கலாம்! [:)] நானே வாங்கி வந்து ஊறுகாய் போட நினைத்தேன் – பார்க்கும்போதே நன்றாகவும் அழகாகவும் இருந்ததால்! [] ”எலே….. கூட்டமா நின்னு என்னலே பண்ணுறீங்க!” குளிர்காயும் மக்கள்! அங்கே சுடச்சுட தேநீர் குடித்து உடம்பிற்குக் கொஞ்சம் சூடேற்றிக் கொண்டபின் எங்கள் பயணம் தொடர்ந்தது. செல்லும் போதே வழியில் ஒரு பெரிய ஹனுமன் சிலையைப் பார்த்திருந்ததால் அங்கே சென்று ஹனுமனுக்கு ஒரு வணக்கம் சொல்ல அங்கே விரைந்தோம்.   பிரதான சாலையிலேயே 52 உயரத்தில் அசால்டாக நிற்கிறார் அனுமந்தலு. ஜம்முவில் உள்ள வைஷ்ணவ் தேவி கோவில் போலவே இங்கே செயற்கையாக குகை அமைத்து சுற்றுலாப் பயணிகளைக் கவர்கிறார்கள். பொதுவாகவே வட இந்திய கோவில்களுக்குச் செல்லும் போது ஏதோ கண்காட்சி பார்ப்பது போன்ற உணர்வு தான் எனக்குள் தோன்றும். இங்கேயும் அப்படியே! வெளியே நின்றபடியே அனுமனுக்கு ஒரு வணக்கம் செலுத்திவிட்டு பயணத்தினைத் தொடர்ந்தோம்.   அடுத்து நாங்கள் சென்ற இடத்திற்கும் குளிருக்கு இதமாய் நாங்கள் அருந்திய தேநீருக்கும் ஒரு தொடர்பு உண்டு. அது என்ன அடுத்த பதிவில் பார்க்கலாமா! 11 பகுதி-11: நைனிதால் – மணி கட்டலாம் வாங்க! [] அனுமந்தலு சென்ற பகுதியில் பார்த்த ஒன்பது முனை ஏரியிலிருந்து புறப்படும் போது தேநீர் தோட்டத்திற்கும் அருகில் உள்ள ஒரு கோவிலுக்கும் செல்ல முடிவு செய்திருந்தோம். இந்த தேநீர் தோட்டம் இருக்கும் இடத்திற்குப் பெயர் [G]கோரா[kh]கால் என்பதாகும். இந்த [G]கோரா[kh]கால் தேயிலைத் தோட்டம் பற்றி கேள்விப்பட்டதும், என்னுடன் வந்திருந்த வட இந்திய நண்பர்கள் இருவருமே அங்கே செல்ல வேண்டும் என்பதில் ஆர்வத்துடன் இருந்தார்கள். வழியைக் கேட்டுக் கொண்டு அங்கே செல்வதற்குள் எங்கள் ஓட்டுனர் பப்புவுக்கு விழி பிதுங்கிவிட்டது.   குறுகிய, மற்றும் மண்ணால் போடப்பட்ட மலைவழிச் சாலைகளில் பயணிப்பது எங்களுக்கு ஒரு நல்ல அனுபவமாக இருந்தது. உத்திராகண்ட் அரசாங்கத்தினால் நிறுவப்பட்ட இந்த தேயிலைத் தோட்டத்தினை நாங்கள் சென்றடைந்த போது மாலை 05.30 – அதாவது தோட்டம் மூடும் நேரம். உள்ளே செல்ல ஆளுக்கு ஐந்து ரூபாய் கட்டணம் வாங்கிக் கொண்டு, ஐந்து நிமிடங்களில் வெளியே வந்துவிடும்படிச் சொன்னார் அங்கே இருந்த அலுவலர். []  தேநீர்த் தோட்டத்திற்கு செல்லும் வழி… விரைவாக உள்ளே சென்று, தேயிலையின் வாசனையை நாசியில் ஏற்றிக் கொண்டு வெளியே வந்தோம். அங்கே இருக்கும் மற்றொரு நபர், “நீங்க ரொம்பவே தாமதமா வந்ததால் உங்களால் முழுதும் சுற்றிப் பார்க்க இயலவில்லை, தேயிலை தயாரிப்புகளைப் பார்க்கவும் முடியாது. அதற்கு வருந்துகிறேன். காலையில் மீண்டும் வாருங்கள்” என்ரு சொன்னார். மேலும், அப்போது இருந்த குளிருக்கு, அங்கே தரும் சூடான தேநீர் எங்களுக்கு அமிர்தம் போல இருந்திருக்கும் எனச் சொன்னார் – வெந்த புண்ணில் வேல்! சரி நாளை முடிந்தால் வருகிறோம் எனச் சொல்லி அங்கிருந்து வெளியே வந்தோம். [] தேநீர் தோட்டத்திலிருந்து திரும்பும் வழியில் எடுத்த ஒரு படம் நாங்கள் அடுத்ததாய்ச் சென்றது ஒரு கோவிலுக்கு. சரியாக மாலை நடக்கும் ஆரத்தியின் போது தான் அங்கே சென்றோம். மந்திர உச்சாடனம் போன்ற ஆரத்தி பாடல்களை பாடியபடி, பலர் மணிகளை ஒலிக்க அங்கே குடிகொண்டிருக்கும் கடவுளான [G]கோலு தேவதாவிற்கு சிறப்பான ஆரத்தி நடந்து கொண்டிருந்தது.   கும்பலோடு கோவிந்தாவாக நாங்களும் அங்கே நின்று தரிசனம் செய்தோம். ஆரத்தி நடக்கும்போதே இந்த கோவிலின் சிறப்பினைப் பார்த்து விடலாம் வாருங்கள். [G]கோலு தேவதா கோர பைரவ் அதாவது சிவனின் ஒரு அவதாரமாக நம்பப்படும் ஒரு கடவுள். உத்திராகண்ட் மாநிலத்தவர்கள் அனைவருமே இந்த [G]கோலு தேவதா மேல் அபாரமான நம்பிக்கை வைத்திருக்கிறார்கள். தங்களுக்கு ஏற்படும் எல்லா பிரச்சனைகளுக்கும் இவர் நீதி வழங்குவதாக நம்பிக்கை.   நமது நாட்டின் நீதிமன்றங்களில் வழக்குகளில் தீர்ப்பு கிடைக்க பல வருடங்கள் ஆகிறது. ஆனால் இந்த நீதி தேவனான [G]கோலு தேவதாவின் கோவிலில் முறையிட்ட சில தினங்களிலேயே நீதி கிடைப்பதாக இவர்களுக்கு நம்பிக்கை. தங்களது வழக்கினைப் பற்றி முத்திரைத் தாளில் எழுதி [G]கோலு தேவதாவின் கோவிலில் அவர் காலடியில் சமர்ப்பித்து தங்களது வேண்டுகோளை நிறைவேற்றும்படி மனதார வேண்டிக்கொண்டு செல்கிறார்கள். அவர்களது வேண்டுகோள் சரியானதாகவும், நியாயமானதாகவும் இருந்தால் நிச்சயம் அது நிறைவேற்றப்படும் என்பது இவர்களது அசைக்க முடியாத நம்பிக்கை.   வேண்டுகோள்கள் நிறைவேறியதன் அடையாளமாக இந்தக் கோவிலில் மணிகளை கட்டித் தொங்க விடுகிறார்கள். ஆயிரக் கணக்கில் சிறியதும் பெரியதுமாக மணிகள் கட்டித் தொங்கிக் கொண்டிருப்பதைப் பார்க்கும்போது பலரது வேண்டுகோள்கள் ஏற்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. தொடர்ந்து மணி சப்தம் கேட்டுக் கொண்டே இருக்கிறது. அங்கே பல அளவுகளில் இருக்கும் மணிகளைப் பார்க்கும்போது நமக்கே ஒரு மணி கட்டத் தோன்றுகிறது!   நாட்டில் நடக்கும் அநீதிகள் பல இருக்கும்போது இந்த [G]கோலு தேவதா கோவிலில் வெண்கல மணிகள் கட்டுவது தொடர்ந்து கொண்டிருக்கும் எனத் தோன்றுகிறது! நல்ல ரம்மியமான சூழல் – மலைப்பகுதியில் அடிக்கும் குளிர் – காலுறை அணிந்திருந்தபோதும் கால்களின் வழியே உச்சி மண்டை வரை ஏறிய குளிர் – அங்கே அதிக நேரம் எங்களை நிற்க விடவில்லை. அங்கே நம்பிக்கையோடு ஆரத்தியை பாடி[?] கொண்டிருந்தவர்களுக்கு குளிர் ஒரு பொருட்டே இல்லை!   கிட்டத்தட்ட நூறு படிகளை ஓடியே கடந்து எங்கள் வாகனம் நின்றுகொண்டிருந்த இடத்திற்கு வந்து சேர்ந்தோம். மலை மேலேயே குளிரின் காரணமாக இயற்கை உபாதைகள் இருக்க, அதை தீர்ப்பதற்கு எந்த விதமான வசதிகளும் இல்லாதது நமது நாட்டின் எல்லா பகுதிகளிலும் இருக்கும் ஒரு பிரச்சனை என்பது புரிந்தது! விரைந்து பயணித்து தங்குமிடத்தினை அடைய வேண்டியிருந்தது!   அடுத்தது என்ன என்பதை ஏரிகள் நகரம் தொடரின் பன்னிரெண்டாம் பகுதியில் பார்க்கலாமா! 12 பகுதி-12: நைனிதால் – சிறிது வயிற்றுக்கும்…… தங்குமிடத்திற்கு வந்து கொஞ்சமாக ஓய்வெடுத்துக் கொண்டு இரவு உணவிற்காக மீண்டும் வெளியே வந்தோம். இரவு நேரமானதால் குளிர் கொஞ்சம் அதிகமாக இருந்தது. அப்போதைய வெட்ப அளவு 02.00 டிகிரி என ஒரு கடையில் இருந்த மானி காண்பித்துக் கொண்டிருந்தது. அணிந்திருக்கும் குளிர்கால உடைகளையும் தாண்டி நரம்புகளும் எலும்புகளும் நடுங்கிக் கொண்டிருந்தன!   நாங்கள் தங்கும் இடம் மால் ரோடு என அழைக்கப்படும் நைனிதால் நகரின் பிரதான சாலையில் அமைந்திருக்கிறது. மால் ரோடு முழுவதும் சுற்றுலா பயணிகளால் நிறைந்திருந்தது. அடிக்கும் குளிரை எவரும் பொருட்படுத்துவதாகத் தெரியவில்லை. பொதுவாகவே வட இந்தியர்களுக்கும், குளிர் பழகியவர்களுக்கும் குளிரை அனுபவிக்கத் தெரியும். என்னையும் சேர்த்து! ஆனால் என் உடன் வந்திருந்த கேரள நண்பர் தான் கொஞ்சம் தடுமாறிவிட்டார்.   நல்ல குளிரில் கோன் ஐஸ், கப் ஐஸ், குல்ஃபி போன்றவை விற்பனை கன ஜோராக நடந்து கொண்டிருந்தது! கூடவே [G]கோல் [G]கப்பா, ஆலு டிக்கி, போன்ற நொறுக்குத் தீனிகளும். சாலை ஓரங்களை இப்படிப்பட்ட சிறிய உணவகங்கள் ஆக்ரமித்திருக்க, பெரிய உணவகங்கள் சுற்றுலாப் பயணிகளை கவர்ந்து தங்களது உணவகங்களை நோக்கி வரவேற்க விதம் விதமாக முயற்சி செய்கிறார்கள். ஒரு சிலர் இதற்கெனவே சிலரை நியமித்து இருக்க, அவர் போகும் அனைவரையும் அழைக்கிறார். சில இடங்களில் செயற்கை முயற்சிகளும்!   சாலை ஓர உணவகங்களையும், சாலையில் நடந்து கொண்டிருக்கும் சக சுற்றுலாப் பயணிகளையும் பார்த்தவாறே நாங்களும் நடந்து கொண்டிருந்தோம். மால் ரோட் முடிவடையும் இடத்தில் லால்கிலா என அழைக்கப்படும் செங்கோட்டை முகப்பில் தெரிய, ”தில்லியில் இருக்கும் செங்கோட்டை நைனிதாலில் எங்கே வந்தது?” என்ற கேள்வியுடன் மேலே கவனித்தோம் – அது ஒரு உணவகம் – பெயர் Chandni Chowk – பழைய தில்லியில் இருக்கும் ஒரு முக்கியமான இடம்.   தில்லியின் பழைய தில்லி பகுதியில் இருக்கும் Chandni Chowk உணவகங்களுக்கு பெயர் பெற்றது – அதுவும் அசைவ உணவு வகைகளுக்கு. கூடவே சைவ உணவகங்களும் அங்கே நிறைய உண்டு, முக்கியமாக ”பரான்டே வாலி கலி”. அதன் சுவையை நைனிதாலில் கொடுக்க முயற்சிக்கும் உணவகம் இது. வாசலில் நான்கு பெரிய பொம்மைகள் – ஒரு மோட்டார் மூலம் அசைந்த படியே இருக்கின்றன. ஒரு பக்கத்தில் சுடச்சுட பாலும் ஜிலேபியும் இருக்க, கூடவே [G]கோல் [G]கப்பா, ஆலு டிக்கி, கச்சோடி வகைகள்.   அதையெல்லாம் தாண்டி நாங்கள் நேரே உணவகத்தினுள் சென்றோம். நல்ல அலங்காரங்கள் – பழைய தில்லியை நினைவு படுத்தும் அமைப்புகள் – சப்பாத்தி மற்றும் Shahi Paneer, Daal Makkani, Alu Mutter, Dum Alu ஆகியவற்றை எங்களுக்கு தரச் சொல்லிக் கேட்டோம். சுற்றி முற்றி பார்த்தபோது உணவகம் முழுவதிலும் வாய்க்கும் கைக்கும் சண்டை நடந்து கொண்டிருந்தது! அனைவரும் உணவினை ருசித்து உண்பதைப் பார்த்தால் நன்றாக இருக்கும் எனத் தோன்றியது. [] சுடச்சுட பால் சுடச் சுட சப்பாத்தி வந்த படியே இருக்க, அனைத்தையும் கபளீகரம் செய்தோம். நான்கு பேரும் இரவு உணவினை எடுத்துக் கொண்டபிறகு வெளியே வந்தோம். பழைய தில்லியின் பல பகுதிகளில் இருக்கும் பால் கடைகள் வெளியே இருக்க, அனைவரும் ஒரு டம்ளர் பால் அருந்தினோம். இங்கே ஒரு பெரிய கடாய் [வாணலி] – ஹிமாலய சைஸ் கடாய் – அதிகம் குழிவாக இல்லாமல் கிட்டத்தட்ட தாம்பாளம் போலவே இருக்கும் கடாய் – இதன் விட்டம் குறைந்த பட்சம் ஒன்றரை மீட்டர் இருக்கலாம் – பால் அதிலே விட்டு தொடரந்து சூடுபடுத்தியபடியே இருப்பார்கள்.   அதிலிருந்து ஒரு பெரிய டம்ளரில் – அரை லிட்டராவது பிடிக்கும் – பாலை விட்டு அதன் மேல் கடாயின் ஓரத்திலிருந்து படிந்திருக்கும் பாலேடுகளை எடுத்து போட்டு சுடச்சுட கொடுப்பார்கள். ஆஹா! என்னவொரு சுவை! தில்லியில் கூட இப்போதெல்லாம் இந்த பால் கடைகள் குறைந்து விட்டன. பழைய தில்லியில் மட்டும் இன்னும் சில இடங்களில் இருக்கின்றன. நீண்ட இடைவெளிக்குப் பிறகு இந்த மாதிரி இடத்தில் பால் குடிக்கிறேன்.   வெளியே வந்து அங்கிருந்து மீண்டும் மால் ரோடில் இருப்பவர்களை பார்த்தபடியே மெதுவாய் நடந்து எங்களது தங்குமிடத்திற்கு வந்து சேர்ந்தோம். இனி இரவு முழுவதும் ஓய்வு. நாளை எங்கே செல்ல வேண்டும் – இன்னும் நைனிதாலில் பார்ப்பதற்கு என்ன இடங்கள் இருக்கின்றன – நாங்கள் நைனிதாலில் இருந்தோமா இல்லை வேறெங்கும் சென்றோமா என்பதை அடுத்த பகுதியில் பார்க்கலாம்! 13 பகுதி-13: நைனிதால் – விட்ட குறை தொட்ட குறை முதல் நாள் இரவு போலவே இந்த இரவிலும் குளிர் அதிகம் தான் – இரண்டு டிகிரி செல்ஷியஸ் – ஆனால் பனிப்பொழிவு இல்லை. அதனால் ரஜாயினுள் [Woolen Quilt] புகுந்ததுமே உறக்கம் கண்களை அழுத்த அனைவரும் உறங்கினோம். அடுத்த நாள் காலை எழுந்ததும் முதல் நாள் பார்த்த இடங்களையும், இன்றைக்கு எந்த இடங்களைப் பார்க்கலாம் என்பதையும் பற்றி பேசினோம். இங்கேயும் இதுவரை என்னென்ன இடங்களைப் பார்த்தோம் என்பதை ஒரு முறை பார்க்கலாமா?   [GH]கோரா கால் மந்திர் நைனிதால் ஏரி நைனா தேவி கோவில். சைனா/நைனா பீக் நோகுச்சியா தால் பீம்தால் தேநீர் தோட்டம் [KH]குர்பா தால் தற்கொலை முனை   இதைத் தவிர நாங்கள் பார்க்காது விட்ட இடங்கள் பற்றிய சிறிய குறிப்பு இங்கே.   பண்டிட் ஜி.பி. பந்த் மிருகக்காட்சி சாலை: நைனிதால் நகரின் மால் ரோடு பகுதியிலேயே இருக்கும் மிருகக்காட்சி சாலை – வெள்ளை மயில், சிறுத்தை, கரடி, குரைக்கும் மான், சாம்பார் வகை மான்கள், சைபீரியன் புலி, பல விதமான பறவைகள் போன்றவை இந்த மிருகக்காட்சி சாலையில் சிறைபடுத்தப் பட்டுள்ளன. குழந்தைகளுடன் சென்றால் தவற விடக்கூடாத இடம் இந்த மிருகக்காட்சி சாலை. நாங்கள் எல்லோருமே கொஞ்சம் வளர்ந்த சிறுவர்கள்[!] என்பதால் இங்கே செல்லவில்லை. இதற்கு நுழைவுக்கட்டணம் பத்து ரூபாய். இந்தியாவில் மிக உயரமான இடத்தில் இருக்கும் மிருகக்காட்சிசாலையாக இதைச் சொல்கிறார்கள்.   குகைப் பூங்கா: இந்த இடம் சமீபத்தில் உருவாக்கப்பட்ட ஒரு பூங்கா. சிறு குழந்தைகளுக்கு மிகவும் பிடித்தமான இடமாக இது இருக்கும் எனச் சொல்கிறார்கள். பல்வேறு விதமான மிருகங்களின் வசிப்பிடங்கள் [குகைகள்] எப்படி இருக்கும் என்பதை செயற்கையாக செய்து வைத்திருக்கிறார்கள். இந்த குகைகளுக்குள் செல்ல நுழைவுக் கட்டணம் வெறும் பத்து ரூபாய் மட்டுமே. நாங்கள் சென்ற போது மழை மற்றும் பனிப்பொழிவு காரணமாக குகைகளுக்குள் தண்ணீர் இருந்தமையால் எங்களைச் செல்ல அனுமதிக்கவில்லை.   Aerial Ropeway: நைனிதால் நகரில் இருக்கும் மற்றொரு இடம் Aerial Ropeway. இந்த இடமும் குழந்தைகளுக்குப் பிடிக்கும். கூடவே பெரியவர்களுக்கும் Aerial Ropeway-ல் பயணிக்கும்போது கிடைக்கும் அருமையான காட்சிகளுக்காக இதில் பயணிப்பது நல்லது. நாங்கள் ஏன் பயணிக்கவில்லை என்பதை இத்தொடரின் ஏழாம் பகுதியான நைனிதால் – கேள்விக்கென்ன பதில் பகுதியில் பார்த்தோம்.   ஆளுனர் மாளிகை: இங்கிலாந்தில் உள்ள Buckingham Palace போலவே அமைக்கப்பட்டிருக்கும் இந்த மாளிகை ஆளுனர் மாளிகையாக தற்போது பயன்படுத்தப்படுகின்றது. ஆங்கிலேயர்கள் நமது நாட்டினை ஆண்டபோது இதை தங்களது ஓய்விடமாக அமைத்தார்கள். இதற்குள்ளே ஒரு நீச்சல் குளம், கோல்ஃப் மைதானம் என மிகச் சிறப்பாக இருக்கும். இந்த இடத்திற்கும் உள்ளே சென்று பார்க்க நுழைவுக்கட்டணம் உண்டு – மிக அதிகமில்லை 20 ரூபாய் தான்!   இந்த நான்கு இடங்களையும் பார்க்க இரண்டரை மணி நேரம் மட்டுமே ஆகும். அதற்கு பின்னர் பெரியதாக ஒன்றும் வேலை இருக்காது என்பதால், அருகில் உள்ள ஏதாவது இடத்திற்குச் செல்லலாம் என யோசித்து, அங்கே பக்கத்தில் இருக்கும் மற்ற இடங்கள் என்ன என்பதைத் தெரிந்து கொள்ள நினைத்தோம். நாங்கள் தங்கியிருந்த ஹோட்டல் குர்தீப்-ல் Checkout time காலை பத்து மணி என்பதால் முதலில் அறையை காலி செய்வோம் என கீழே அலுவலகத்திற்குச் சென்று அங்கே பணம் கொடுத்துவிட்டு, பார்ப்பதற்கு பக்கத்தில் வேறு என்ன இடம் இருக்கிறது என விசாரித்தோம்.   அவர்கள் இரண்டு இடங்களைச் சொன்னார்கள் – ஒன்று ராணிகேத் எனப்படும் ஒரு மலைவாசஸ்தலம் – நைனிதால் நகரிலிருந்து 60 கிலோமீட்டர் தொலைவில் உள்ள ஒரு இடம். இரண்டாவது ஜிம் கார்பெட் – நைனிதால் நகரிலிருந்து இரண்டரை மணி நேரப் பயணம் – 145 கிலோ மீட்டர் தொலைவில் இருக்கும் இடம். இந்த இரண்டையும் கேட்டுக்கொண்டு, மால் ரோடில் இருக்கும் ஒரு உணவகத்தில் காலை உணவினை முடித்துக் கொண்டோம். பிறகு எங்கள் ஓட்டுனர் பப்புவும் வந்து சேர எங்கள் பயணத்தினைத் தொடர்ந்தோம்.   நாங்கள் இரண்டில் தேர்ந்தெடுத்தது – ராணிகேத் [அ] ஜிம் கார்பெட் – இரண்டில் எது என்று அடுத்த பகுதியில் சொல்கிறேன். 14 பகுதி-14: நைனிதால் – சரியா தால் - கரணம் தப்பினால் மரணம் சென்ற பகுதியில் கேட்டிருந்த கேள்விக்கு, வலைப்பதில் இத்தொடர் வந்தபோது ஒரு சிலர் ஜிம் கார்பெட் என்றும் ஒரு சிலர் ராணிகேத் என்றும் சொல்லி இருந்தார்கள். ஏற்கனவே நைனிதால் ஒரு மலைவாசஸ்தலம் என்பதால், இன்னுமோர் மலைவாசஸ்தலமான ராணிகேத் செல்வதற்கு பதில் ஜிம் கார்பெட் செல்லலாம் என நான்கு நண்பர்களும் ஒருமித்த முடிவு எடுக்க, காலை உணவான பராட்டா, தயிர், ஊறுகாய், முடித்து ஜிம் கார்பெட் நோக்கி எங்கள் பயணம் தொடங்கியது.   நைனிதால் நகரிலிருந்து கிளம்பியதும் மலைப்பாதையில் தொடர்ந்து பயணித்தோம். வழி முழுவதும் மலைப்பாதைக்கு உரிய பல விளம்பரங்கள் எழுதி வைக்கப்பட்டிருந்தன. ஒரு விளம்பரம் எங்கள் கவனத்தினை ரொம்பவே அதிகம் ஈர்த்தது. அது என்ன என்று தானே கேட்கிறீர்கள். “நீங்கள் வேகத்துடன் திருமணம் செய்து கொண்டிருந்தால் உடனே விவாகரத்து செய்து விடுங்கள்” என்பது தான் அந்த விளம்பரம் – தேவையான விளம்பரம் தான்! கரணம் தப்பினால் மரணம் என்பதை நாங்கள் வழியில் பார்த்த ”சரியா தால்” எனும் இடத்தில் புரிந்து கொண்டோம்.   ”சரியா தால்” என்பது நைனிதால் நகரினைச் சுற்றி இருக்கும் பல ஏரிகளைப் போன்ற ஒன்று தான். ஹிந்தியில் ”சரியா” என்றால் இரும்புக் கம்பி – ஏனோ இந்த ஏரிக்கும் சரியா எனப் பெயர் வைத்திருக்கிறார்கள். ஆனாலும் அப்படி ஒன்றும் பெரிய ஏரி அல்ல. மிகச் சிறிய ஏரி தான் – தூரத்திலிருந்து பார்க்கும்போதே மிகச் சிறியதாய் தோன்ற அங்கு முன்னேறாமல் பக்கத்தில் இருக்கும் ஒரு நீர்வீழ்ச்சியினை நோக்கி நடந்தோம். உள்ளே செல்ல அனுமதிக் கட்டணம் நபர் ஒருவருக்கு ஐந்து ரூபாய் மட்டுமே.   Sadiatal Cascade என்று பெயர் எழுதியிருந்த நுழைவு வாயில் உங்களை அங்கே வரவேற்கிறது. ஆங்கிலத்தில் எழுதும்போது Sadiatal என்று எழுதியிருந்தாலும் இதைப் படிக்கும்போது சரியா தால் என்று தான் படிக்கவேண்டும். இப்படி சில தொல்லைகள் ஹிந்தியில் உண்டு – பஞ்சாபிகள் தங்களது பெயரைச் சொல்லும்போது ”விவேக் அரோடா” என்று சொல்வார்கள், ஆனால் ஆங்கிலத்தில் எழுதும்போது Vivek Arora என்று எழுதுவார்கள் – குழப்பம் தான் நமக்கு மிஞ்சும்! [] இந்த சரியா தால் சிற்றருவியில், பெரியதாய் பார்க்க ஒன்றுமில்லை என்றாலும் தொடர்ந்து பயணிக்கும் போது கொஞ்சம் ஓய்வு எடுக்க இங்கே நிறுத்தலாம். குற்றாலத்தின் ஐந்தருவிகளைப் பார்த்தவர்களுக்கு இந்த அருவி அப்படி ஒன்றும் சிறப்பாகவோ, மனதுக்கு மகிழ்ச்சியைத் தருவதாகவோ இருக்காது. ஆனாலும், பல சுற்றுலாப் பயணிகளை இங்கே பார்க்க முடிந்தது. நானும் நண்பர்களும் நீர்வீழ்ச்சியை நோக்கி மலைப்பாதையில் நடக்க, பல இளம் ஜோடிகளைப் பார்க்க முடிந்தது.   அதில் ஒரு பெண் ரொம்பவும் தைரியமாக பாறைகள் மேல் நடந்து நீர்வீழ்ச்சியின் அருகே சென்று, தனது துணையாக வந்தவரை புகைப்படம் எடுக்கச் சொல்ல, அவரோ ரொம்பவே அலறிக்கொண்டு இருந்தார் – “அங்கே போகாதே, வழுக்கி விழுந்துடுவே, நான் வரலை…” என்றெல்லாம் சொல்லிக் கொண்டிருந்தார். சிரித்தபடி நாங்கள் முன்னேற, அப்பெண் அந்த ஆணின் கையைப் பிடித்து இழுத்துக் கொண்டிருந்தார்!   நீர்விழ்ச்சியிலிருந்து வந்த சிலுசிலுப்பும் மரங்களிலிருந்து வந்த காற்றும் ரம்யமாக இருக்க, பாறைகளின் மேல் அமர்ந்து கொண்டு கீழே ஓடும் தண்ணீரை பார்த்துக் கொண்டு, அங்கே ஒரு சில புகைப்படங்களை எடுத்துக் கொண்டு கீழே இறங்க ஆயத்தமானோம். பாறைகளில் அமர்ந்திருந்தபோது மலைகளில் இருந்த மரங்களுக்கிடையே எதோ சிக்கிக் கொண்டிருப்பது போல தோன்றவே சற்று அருகே சென்று பார்க்க முடிவு செய்தோம். [] மலையில் இருக்கும் ஒற்றையடிப் பாதை வழியே சென்றால் சில மரக் கிளைகளில் ஒரு பேருந்து மாட்டிக் கொண்டிருந்தது. மலைப்பாதை வழியே வரும்போது அந்த பேருந்தினை ஓட்டிய ஓட்டுனர் வேகத்தினை விவாகரத்து செய்யாத காரணத்தால், அவர் மட்டுமன்றி அப்பேருந்தில் பயணம் செய்த பலருக்கும் முடிவினைத் தேடித் தந்திருப்பார் போல! பேருந்து விழுந்து பல நாட்கள்/மாதங்கள் ஆனாலும் அந்தப் பேருந்தினை மரக்கிளைகளிலிருந்து மீட்டெடுத்து எந்த பயனும் இல்லை என்பதாலோ என்னமோ அப்படியே தொங்கிக் கொண்டிருக்கட்டும் என விட்டுவிட்டார்கள் போல!   சில மணித்துளிகள் அங்கே இயற்கையை ரசித்து விட்டு, மீண்டும் சாலைக்கு வந்தோம். சாலை ஓரத்தில் இருக்கும் ஒரு சிறிய கடையில், எங்கள் ஓட்டுனர் பப்பு தேநீர் குடித்துக் கொண்டிருக்க, நாங்களும் ஒரு தேநீரை குடித்து, ஜிம் கார்பெட் நோக்கிய எங்கள் பயணத்தினைத் தொடர்ந்தோம். ஜிம் கார்பெட் செல்லும் வழியில் வந்த ஒரு ஊரின் பெயர் கொஞ்சம் வித்தியாசமாக இருந்தது – காலாடுங்கீ! [] மலைப்பாதையில் பார்த்த விளம்பரம், தொங்கிக் கொண்டிருக்கும் பேருந்து ஆகிய இரண்டுமே முழுப் பயணத்திலும் எங்கள் நினைவில் மீண்டும் மீண்டும் வந்து சென்றது என்பது உண்மை. காரணம் எங்கள் ஓட்டுனர் பப்பு வேகத்தினை திருமணம் புரிந்து கொண்டிருந்தார் – அதுவும் காதல் கொண்டு மணம் புரிந்தவர் போல நடந்து கொண்டிருந்தார்! 15 பகுதி-15: நைனிதால் – புலி வருது புலி வருது.... சென்ற பகுதியில் சொன்னது போல, ஓட்டுனர் பப்பு சென்ற வேகத்தில் வழியில் இருக்கும் ஒரு முக்கியமான சுற்றுலா தலத்தினை நாங்கள் பார்க்க முடியாது போனது. வழியில் இருக்கும் அறிவிப்பு பலகை “ஜிம் கார்பெட் நீர்வீழ்ச்சி” செல்லும் வழி என்று போட்டிருக்க, அதை தவற விட்டோம். சில கிலோ மீட்டர்கள் பயணித்த பிறகு மீண்டும் திரும்பிச் செல்ல எங்களுக்கும் மனதில்லை. அதனால் ஜிம் கார்பெட் நீர்வீழ்ச்சி பார்க்க முடியாமல் போனதில் எங்களுக்கு மன வருத்தம் தான். மௌனமாக அனைவரும் அமர்ந்திருக்க, ஓட்டுனர் அதீதமான வேகத்தில் எங்களை ராம் நகர் கொண்டு சேர்த்தார். [] கோசி நதியில் இருக்கும் பறவைக் கூட்டம் ராம் நகர், உத்திராகண்ட் மாநிலத்தில் இருக்கும் ஓர் சிறு நகரம். நைனிதால் மாவட்டத்தில் இருந்தாலும் அத்தனை முன்னேற்றம் இல்லை. இன்னமும் பள்ளமும் மேடும் நிறைந்த சாலைகள், சின்னஞ்சிறு கடைகள், ஜுகாட் என்று சொல்லக்கூடிய வண்டிகள், தள்ளு வண்டிக் கடைகள் என ஒரு மாதிரியான சோம்பலுடன் இருந்தது. மக்கள் பகட்டான நகர வாழ்க்கைக்கு பழகவில்லை. கிராமத்து மனிதர்களுக்கே உரிய எளிமை இன்னமும் அவர்களிடத்தில் தங்கியிருப்பதை உணர முடிந்தது. [] கோசி நதியின் குறுக்கே ஒரு அணை…. நகரினுள் நுழையுமுன் கோசி நதி எங்களை வரவேற்றது. அதன் குறுக்கே கட்டப்பட்டிருக்கும் ஒரு அணையின் வழியே நாங்கள் வரும்போது பலவிதமான பறவைகள் நீர் நிலையின் ஓர் ஓரத்தில் அமர்ந்து நதியில் வரும் மீன்களை தங்களது உணவாக மாற்றிக் கொண்டிருந்தது. உடனேயே நதி ஓரத்தில் நின்று பறவைகளை புகைப்படம் பிடிக்க நினைத்தாலும் முதலில் ராம் நகரில் இருக்கும் வன இலாகா அலுவலகத்திற்குச் சென்று காட்டுக்குள் செல்ல மதிய நேரத்திற்கான அனுமதியைப் பெற வேண்டும் என்ற எண்ணத்தினால் நேராக அந்த அலுவலகத்திற்கே வண்டியை விட்டோம். [] அலுவலகத்திற்குச் செல்வதற்கு முன் சில தகவல்களை இங்கே பார்த்து விடுவோம். ஜிம் கார்பெட் என்பது மிகப் பெரியதோர் வனப்பகுதி. கிட்டத்தட்ட 521 KM2 பரப்பளவு கொண்ட இந்த பூங்காவினை 1936 ஆம் ஆண்டு அமைத்தார்கள் – அப்போது இந்த வனப்பூங்காவிற்கு கொடுக்கப்பட்ட பெயர் ஹெய்லி தேசியப் பூங்கா. இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகு, இந்தப் பூங்காவின் பெயர் ராம்நகர் தேசியப் பூங்கா என மாற்றம் செய்யப்பட்டது.   1956-ஆம் ஆண்டு இந்த பூங்காவினை உருவாக்க முக்கிய காரணமாக இருந்த ஜிம் கார்பெட் பெயர் சூட்டப்பட்டது. ஜிம் கார்பெட் எழுதிய ”Man Eaters of Kumaon” எனும் புத்தகம் இதுவரை படிக்கவில்லையெனில் படித்துப் பாருங்கள். தமிழிலும் இந்தப் புத்தகம் தி.ஜே. ரங்கநாதன் என்பவரால் மொழிபெயர்க்கப்பட்டது – கலைமகள் வெளியீடு – 1958. இந்த்த் தமிழ்ப் புத்தகம் இப்போது கிடைக்கிறதா என்பது தெரியவில்லை. ஆங்கிலத்தில் AMAZON.IN இல் கிடைக்கிறது.   இந்தப் பூங்காவினுள் செல்ல மொத்தம் ஐந்து வாயில்கள் உண்டு – அவற்றில் நான்கு மிக முக்கியமானவை – ஜீர்னா, துர்காதேவி, பிஜ்ராணி மற்றும் டாங்க்ரி என்பவை. ஐந்தாவது நுழைவு வாயில் சீதாப[வ]னி.   ஜீர்னா நுழைவாயில் ராம்நகரிலிருந்து 16 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. ஜிம் கார்பெட் பூங்காவின் இப்பகுதியில் அருமையான இயற்கை சூழலும் அடர்த்தியான காடும் கொண்டது. இங்கே கரடிகள் நடமாட்டம் அதிகமாக இருக்கும் என்று சொல்கிறார்கள். வருடம் முழுவதும் சுற்றுலாப் பயணிகள் இப்பகுதிக்குள் செல்ல முடியும்.   துர்காதேவி நுழைவாயில் பகுதி ராம்நகரிலிருந்து 28 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. மலைப்பாங்கான இப்பிரதேசத்தில் ராம்கங்கா நதி ஓடுகிறது. நடுவில் நதி ஓட அதன் ஓரங்களில் பயணம் செய்து வனவிலங்குகளைப் பார்க்க முடியும். இந்தப் பூங்காவினுள் செல்லும் வழியில் ஒரு அருங்காட்சியகமும் உண்டு. இந்த நுழைவாயில் வருடத்தில் 15 அக்டோபர் முதல் 30 ஜூன் வரை மட்டுமே திறந்திருக்கும். மழை காரணமாக மற்ற நாட்களில் இந்த நுழைவு வாயில் வழியே காட்டுக்குள் செல்ல சுற்றுலாப் பயணிகளுக்கு அனுமதியில்லை.   பிஜ்ராணி நுழைவுவாயில் தான் அதிகமான சுற்றுலாப் பயணிகள் தேர்ந்தெடுக்கும் பகுதி – இந்தப் பகுதியினுள் தான் புலி போன்ற விலங்குகள் அதிகம் நடமாடும் என்று சொல்லப்படுகின்றது. நாள் ஒன்றுக்கு காலை வேளையில் 30 வாகனங்களும் [வனத்துறையின் அனுமதி பெற்ற ஜீப்] அதே அளவு மாலையிலும் இந்த வனப்பகுதிக்குள் செல்ல அனுமதி தருகிறார்கள். இந்த பகுதியும் வருடம் முழுவதும் திறக்க மாட்டார்கள் – 15 அக்டோபர் முதல் 30 ஜூன் வரை மட்டுமே இந்த வாயில் வழியே செல்ல அனுமதி கிடைக்கும்.   டாங்க்ரி நுழைவுவாயில் நான்காவது முக்கியமான நுழைவுவாயில். இந்த நுழைவு வாயிலும் வருடத்தில் 15 நவம்பரிலிருந்து 15 ஜூன் வரைதான் திறந்திருக்கும். இரவு நேரத்தில் தங்கும் அனுமதி பெற்றவர்கள் மட்டுமே இந்த நுழைவு வாயில் வழியே அனுமதிக்கப்படுவார்கள்.   இப்படி நான்கு முக்கிய நுழைவு வாயில்களும் வருடம் முழுவதும் திறந்திருக்கும் சீதாப[வ]னி நுழைவு வாயிலும் இருக்க, பிஜ்ராணி நுழைவுவாயில் வழியே செல்ல வேண்டும் என்ற எண்ணத்தோடு வன இலாகாவின் அலுவலகத்தினை சென்ற்டைந்தோம்.   அங்கே எங்களுக்கு ஓர் அதிர்ச்சி காத்திருந்தது. என்ன அதிர்ச்சி? அடுத்த பகுதியில் பார்க்கலாம் 16 பகுதி-16: நைனிதால் – அதிர்ச்சி தந்த முன்பதிவு எங்கள் வாகனத்தினை வன இலாகா அலுவலகத்தின் முன்னே நிறுத்தி நாங்கள் நால்வரும் அலுவலகத்திற்குள் சென்றோம். அங்கே இருந்த வரவேற்பறையில் இருந்த பெண்மணியிடம் வனத்தினுள் செல்ல அனுமதி வேண்டும், எவ்வளவு பணம் கட்ட வேண்டும் எனக் கேட்க, எங்களை மேலும் கீழும் பார்த்து விட்டு, முன்பதிவு செய்த எண் எங்கே என்று கேட்க, நாங்கள் திருதிருவென முழித்தோம்.   தொடர்ந்து அவர், ஜிம் கார்பெட் வனத்தினுள் செல்ல முக்கியமான நான்கு நுழைவு வாயில்களுக்கும் கணினி மூலம் முன்பதிவு செய்திருக்க வேண்டும் என்பதை எங்களுக்குத் தெரிவித்தார். எங்களுக்குத் தெரிந்த வன இலாகா அதிகாரிகளில் ஒருவருக்கு தொலைபேசியில் அழைத்து ஏதாவது உதவி செய்ய முடியுமா என்று கேட்க, அவரோ, “எப்ப போகணும்?” என்று கேட்டார்! நாங்கள் அங்கே இருக்கும் விவரத்தினைச் சொல்ல, இப்போது இருக்கும் நிலையில் ஒன்றும் செய்ய முடியாது ஒரு நாள் அவகாசம் கொடுத்தால் அடுத்த நாள் பயணத்திற்கான ஏற்பாடு செய்ய முடியும் என்று சொல்லிவிட்டார்.   எங்களுக்கு அன்று இரவு புறப்பட்டு தில்லி வந்து சேர வேண்டிய கட்டாயம் – திங்களன்று அலுவலகம் சென்றாக வேண்டும். கேரளத்திலிருந்து வந்த நண்பருக்கும் திங்களன்று விமானத்தில் முன்பதிவு செய்யப்பட்டிருக்க கொஞ்சம் யோசித்தோம். ஞாயிறு இரவு அங்கே தங்கி, திங்கள் மதியம் வனத்திற்குள் சென்று செவ்வாய்க் கிழமை காலை தான் தில்லி வந்து சேர முடியும் என்பதால் வேறு என்ன செய்ய முடியும், என்று கேட்க, கடைசி நேரத்தில் ஒன்றும் செய்ய முடியாது, வேண்டுமானால் சீதாவனி பகுதிக்குச் சென்று வாருங்கள் என்று சொல்லி விட்டார்.   சீதாவனி என்பதும் ஜிம் கார்பெட் வனத்தில் ஒரு பகுதி தான். ஆனால் அந்தப் பகுதி வனத்தினுள் புலிகளைக் காண்பது மிகவும் அரிதான விஷயம் என்றும், மான்கள், நரி போன்ற சில விலங்குகள் மட்டுமே அங்கே உங்களுக்குக் காணக் கிடைக்கும் என்றும் சொன்னார்கள். மதியம் ஒரு மணியே ஆன நிலையில் என்ன செய்வது என்ற குழப்பத்துடன் வெளியே வந்தோம். வெளியே வந்த எங்களை வனத்திற்குள் அழைத்துச் செல்லும் பல ஜீப் ஓட்டுனர்கள் முற்றுகையிட்டார்கள். அவர்களுக்கு நாங்கள் முன்பதிவு செய்யாதவர்கள் என்று தெரிந்ததும் விலகிவிட்டார்கள்.   ஆனாலும் ஒரு சிலர், நீங்கள் சீதாவனி பகுதிக்குச் செல்லலாம் என்று அழைக்க, ஒரு சிலர் அங்கே ஒன்றும் இல்லை நீங்கள் போக வேண்டாம் என்று சொல்ல குழப்பம் மட்டுமே மிஞ்சியது. இந்தப் பயணத்தில் சென்ற நான்கு பேரில் எனக்கும் கேரள நண்பருக்கும் முன்னரே வனப் பகுதிகளில் சென்ற அனுபவம் உண்டு. மற்ற இருவருக்கும் வனப்பகுதிக்குள் சென்ற அனுபவம் இல்லாததால் சீதாவனி பகுதிக்குள் செல்லலாம் என முடிவு செய்தோம்.   அதனால் ஜீப் உரிமையாளர் ஒருவரிடம் பேசினோம். அவர் சீதாவனி பகுதிக்குள் சென்று திரும்பி வர 2000 ரூபாய் ஆகும் என்று சொன்னார். கொஞ்சம் அவரிடம் பேசி 1500 ரூபாய் மட்டுமே தருவோம் என்று சொல்ல, அவரும் ஒத்துக் கொண்டார். இதில் வன இலாகவிற்குக் கட்ட வேண்டிய 400 ரூபாயும் அதில் அடக்கம். முதலில் மதிய உணவை முடித்துக் கொண்டு வந்து விடுங்கள், அதற்குள் ஓட்டுனரை அழைத்துவிடுகிறேன் என்று அவர் சொல்ல, நாங்கள் மதிய உணவினை சாப்பிட நகரினுள் சென்றோம்.   மதிய உணவினை நாங்கள் சாப்பிடும் நேரத்திற்குள் இந்த ஜிம் கார்பெட் செல்ல முன்பதிவு செய்ய வேண்டிய தளம் எது என்ற விவரங்களை உங்களுக்குச் சொல்லி விடுகிறேன்.   வனத்தினுள் இருக்கும் வன இலாகா பங்களாவிற்கும், ஜீப் [அல்லது ] Canter வாகனம் மூலம் வன உலா வருவதற்கும், யானை மேல் அமர்ந்து வனத்திற்குள் செல்ல வேண்டும் என்றாலும் அனைத்துமே கீழ்க்கண்ட தளத்தின் மூலம் முன்பதிவு செய்து கொள்ளலாம்.   http://www.onlinecorbettbooking.com/   வன இலாகாவினரே ஜிம் கார்பெட்டினுள் செல்ல Tour Packages ஏற்பாடு செய்கிறார்கள் – அந்த விவரங்கள் இந்தச் சுட்டியில் இருக்கின்றன.   நீங்கள் எப்போது ஜிம் கார்பெட் செல்ல முடிவு செய்தாலும் ஒரு மாதம் முன்னரே முன் பதிவு செய்து விடுவது நல்லது. இல்லையெனில் அங்கே சென்ற பிறகு ஏமாற்றமே மிஞ்சும். 17 பகுதி-17: நைனிதால் – காடு வா வா என்றது! உணவு இடைவேளையில் நீங்கள் அனைவரும் சாப்பிட்டு வந்திருப்பீர்கள் தானே? அடடே இல்லையா? சரி தலைவாழை இலை போட்டு சாப்பாடு போட்டால் போச்சு!   யாரங்கே? உடனே அனைவருக்கும் சுவையான விருந்து தயாராகட்டும்….   விருந்து தயார் ஆவதற்குள் நாம் காட்டுக்குள் சென்று கொஞ்சம் புலி வேட்டையாடி வந்து விடுவோம். சரியா!   சென்ற பதிவில் சொன்னது போல நாங்கள் உணவு எடுத்துக் கொள்ளச் சென்றோம். உங்களுக்கு ராம் நகரைப் பற்றி முந்தைய பதிவில் சொன்னதை நினைவுபடுத்த வேண்டியிருக்கிறது. கிராமமும் இல்லாது நகரமும் இல்லாத ஒரு ஊர் தான் அது. அங்கே நல்ல உணவகங்கள் இருக்குமென நினைத்தால் அது உங்கள் தவறு தான். டெல்லி தர்பார் என்று ஒரு ஹோட்டலும் வேறொரு ஹோட்டலும் மட்டும் தான் சிறிது சுமாராக இருக்கும் என்று நாங்கள் அமர்த்திய ஜீப் உரிமையாளர் சொல்ல தில்லி தர்பாரைச் சென்றடைந்தோம்.   நமது ஊரில் ஒரு சொலவடை உண்டு. விருந்தினர்கள் வருகிறேன் என்று சொன்னால், “ஓ தாராளமாக வாங்க, உங்க தலையைப் பார்த்ததும் கல்லைப் போடறேன்” என்று சொல்வார்கள் – அதற்காக பயந்து விடக்கூடாது. நாம் வந்து சேர்ந்ததும் தோசைக்கல்லை அடுப்பில் ஏற்றி சுடச்சுட தோசை செய்துதருவதைத் தான் அப்படிச் சொல்வார்கள். அதே போலத் தான் அந்த ஹோட்டலில் எங்கள் தலையைக் கண்டதும் கோதுமை மாவு பிசைந்து வெங்காயம் நறுக்கி என சமையலைத் தொடங்கினார்கள். சரி சூடாகவும், புதியதாகவும் கிடைக்கிறதே என்ற நினைப்புடன் காத்திருந்தோம் – நாங்கள் கேட்டதும் சப்பாத்தி மற்றும் சிம்பிள் தால் மட்டுமே.   சிறிது நேரத்தில் சுடச்சுட சப்பாத்தியும் தொட்டுக்கொள்ள தாலும், ஊறுகாயும் வர, மதிய உணவினை முடித்தோம். அடித்த குளிரில் உதடுகளில் தோல்கள் உரியத் தொடங்க, LIP GUARD வாங்க ஒவ்வொரு கடையாக ஏறி இறங்கினேன். மருந்து கடைகளிலும் கிடைக்கவில்லை, மற்ற கடைகளிலும் கிடைக்கவில்லை. அப்படியே நடந்து நடந்து ஒரு கிலோமீட்டர் நடந்த பிறகு ஒரு கடையில் கிடைத்தது. இந்த குளிரில் இது ஒரு தொல்லை – ஆண்களும் வாய் மை போட்டுக்கொள்ள வேண்டியிருக்கிறது!   அங்கிருந்து கிளம்பி கோசி நதியின் குறுக்கே கட்டப்பட்ட அணையினையும், அங்கே இருந்த பறவைகளையும் பார்த்து விட்டு வன இலாகா அலுவலகத்திற்கு வந்து சேர்ந்தோம். இதற்குள் எங்களை வனத்திற்குள் அழைத்துச் செல்லப்போகும் ஓட்டுனர் வந்து சேர்ந்தார். நீங்கள் தான் எங்களை காட்டுக்குள் அழைத்துச் செல்லப்போகும் வீரப்பனோ என்று கேட்க நினைத்தேன் – ஏனெனில் அவரும் பெரிய வீரப்பன் மீசை வைத்திருந்தார். காட்டுக்குள் போகும் போது எதுக்கு இந்த வம்பு என நாவை அடக்கினேன்.   ஜிம் கார்பெட் உள்ளே செல்ல மற்ற வழிகளைப் போல சீதாவனி பகுதிக்கு வன இலாகா அலுவலகத்தில் எந்த வித முன் அனுமதியும் வாங்கத் தேவையில்லை. சீதாவனி பகுதிக்குச் செல்லுமுன் இருக்கும் நுழைவாயிலில் வாகனத்திற்கான கடவுச் சீட்டு மட்டும் வாங்கிக் கொண்டால் போதுமானது. எங்கள் ஓட்டுனர் வீரப்பன் அதை வாங்கி வர வண்டியை நிறுத்த நாங்கள் ஜீப்பில் நின்றபடி சில பல படங்களை எடுத்துக் கொண்டோம்.   பொதுவாக நான் இதுவரை சென்ற வனப் பகுதிகளில் யார் உள்ளே சென்றாலும் அவர்களது வாகனத்திலேயே ஒரு வன இலாகா வழிகாட்டியும் வருவார். இந்த சீதாவனி பகுதிக்குள் செல்ல ஒருவரும் கூட வரவில்லை. போலவே எந்தவிதமான சோதனைகளும் கிடையாது – பொதுவாக வனப் பகுதிக்குள் செல்லும் போது பிளாஸ்டிக் பொருட்கள் இருக்கிறதா, பீடி, சிகரெட், புகையிலை லாகிரி வஸ்துகள் இருக்கிறதா, உள்ளே போதை ஏற்ற சரக்கு எடுத்துப் போகிறார்களா – போன்ற சோதனைகள் இருக்கும். இங்கே ஒரு சோதனையும் இல்லை! [] வா… வா… என அழைக்கும் காடு! காட்டுக்குள் செல்லும் பாதை. வசதியாக ஒரு துப்பாக்கி கூட எடுத்துக் கொண்டு போய், பார்க்கும் மான்களைச் சுடலாம் போல இருக்கிறதே என நினைத்தேன். மான்களைச் சுடுவது இருக்கட்டும், உள்ளே இன்னும் நிறைய பார்க்கக் கிடைக்கும் என்று வீரப்பன் சொல்ல, காட்டை நோக்கி பயணத்தைத் தொடங்கினோம். எங்களை ”காடு வா வா என அழைத்தது!   சீதாவனி காட்டுக்குள் நாங்கள் கண்டது என்ன என்பதை அடுத்த பகுதியில் பார்க்கலாம்! 18 பகுதி-18: நைனிதால் – காட்டுக்குள் விஷஜந்துக்கள் [] எங்கள் ஓட்டுனர் வீரப்பன் கடவுச்சீட்டை வாங்கிக் கொண்டு ஜீப்பினை காட்டுக்குள் செலுத்தினார். காட்டுக்குள் செல்ல பாதி தூரம் வரை நல்ல பாதை உண்டு. அதில் வேகமாகச் சென்றது ஜீப் – வேகம் என்றால் மணிக்கு 40 கிலோமீட்டர் வேகம் தான் – அதற்கே சரீரம் முழுவதும் குலுங்குவது போன்ற உணர்வு – சாலை அப்படி! [] பொதுவாகவே வனப்பகுதிகுள் செல்லும்போது மனிதர்கள் மிகவும் அமைதியாக இருக்க வேண்டும் – அப்போது தான் விலங்குகள் பயப்படாமல் வெளியே வரும். போலவே காற்றில் அசையும் இலைகளின் சலசலப்பு, எங்கேயோ ஓடிக்கொண்டிருக்கும் தண்ணீரின் ஓசை, ஆங்காங்கே குரல் கொடுக்கும் பறவைகளின் இன்னிசை கீதங்கள், எங்கிருந்தோ வரும் விலங்குகளின் சம்பாஷணைகள் ஆகியன கேட்க முடியும். அதை ஊர்ந்து கவனித்து ரசிக்கவும் முடியும். [] இந்த வனப்பகுதிக்குள் எந்தவித கட்டுப்பாடுகளும் இல்லாது மனிதர்கள் நுழைந்து விடுவதால், காட்டுக்குள் வந்த உடன் மனிதர்களுக்கு ஏதோ ஆகிவிடுகிறது. ஏதோ ஒரு டிஸ்கோத்தே போய் இரவு முழுவதும் அதீத சத்தமாக வெளிவரும் குத்துப் பாடல்களுக்கு கையில் சாராய புட்டிகளோடு ஆட்டம் போடுவது போல இந்த வனப்பகுதிக்குள் ஆட்டம் போடுவதைக் காண முடிந்தது. காட்டின் நடுவே ஓடும ஒரு சிற்றோடையின் அருகே அப்படி ஒரு கும்பலைக் காண முடிந்தது. [] வனத்தின் அமைதியைக் குலைத்தபடி ஓசை வர கவனித்தோம் – ஒரு கார் – நான்கு கதவுகளும் திறந்திருக்க, அந்த வாகனத்தில் பொருத்தியிருக்கும் சி.டி. ப்ளேயரில் இருந்து பஞ்சாபி/ஹிந்தி பட குத்துப் பாடல்கள் அதன் உச்ச வரம்பு சத்தத்தில் அலறிக் கொண்டிருந்தது. காரில் இருந்து இறங்கி நின்ற இளைஞர்கள் அனைவரது கையிலும் சோம பான வகைகள். [] போதையேறிய ஒரு இளைஞர் போதையில், தலையில் பாட்டிலை வைத்துப் பிடித்துக் கொண்டு நடனமாடிக் கொண்டிருந்தார். எங்கள் கையிலிருந்து கேமராக்களைப் பார்த்து இன்னும் கொஞ்சம் அதிகம் ஆடியதோடு விதம்விதமாக போஸ் கொடுத்து புகைப்படம் எடுக்கச் சொன்னார். அவர்களின் நிலை கண்டு சிரித்தபடியே நாங்கள் நகர ஆரம்பித்தோம். பாட்டில்களை ஆங்காங்கே விசிறி உடைத்துப் போட்டார்கள்! அதை உடைப்பதில் அப்படி ஒரு ஆனந்தம் அவர்களுக்கு. [] காட்டுப் பகுதிக்குள் வந்து இப்படி கண்ணாடிகளை உடைத்துப் போடுவது அந்த இடத்தில் உலா வரும் விலங்குகளுக்கு தொந்தரவு தரும் என்பதோ, வீசும் நெகிழி பைகளை உண்டு விலங்குகள் தங்களது முடிவினை கண்டுவிடக்கூடும் என்பதோ இந்த மனிதர்களுக்கு உறைக்கவே இல்லை. காட்டிலே இருக்கும் விஷம் கொண்ட பூச்சிகளை விட இந்த மனித ஜந்துக்கள் பரப்பும் விஷம் அதிகம் என்ற நினைவுடனே பயணித்தோம். [] கொஞ்சம் அடர்ந்த வனப்பகுதிக்குள் வந்து விட்டோம். ஆங்காங்கே சில காலி இடங்கள். அவற்றின் அருகே வரும்போது வாகனம் ரொம்பவும் குறைவான வேகத்தில் சத்தமே வராத மாதிரி பயணிக்கிறது. ஓட்டுனர் வீரப்பனின் பழக்கப்பட்ட கண்கள் அங்கும் இங்கும் அலைபாய்கிறது. காட்டு வழியில் ஒரு நரியைப் பார்த்து விட எங்களிடம் அதைக் காண்பித்த்தோடு அங்கே வாகனத்தினை நிறுத்தினார். நரி எங்களை சில நொடிகள் பார்த்தபின் “சீச்சீ இந்தப் பழம் புளிக்கும்” என்ற எண்ணத்தோடு காட்டுக்குள் ஓடி ஒளிந்தது. [] எத்தனை விதமான மரங்கள். அவற்றிலிருந்து தானாக ஒடிந்து விழும் கிளைகளைக் கூட ஒருவரும் எடுப்பதில்லை. அந்தக் கிளைகளை சுற்றி கரையான் போன்ற புழுக்கள் கட்டிய மண் வீடுகள், அவைக் கட்டி முடித்தபின் அதாவது உள்ளே இருக்கும் மரம் முழுவதும் அரித்துத் தின்று முடித்தபின் வீட்டைக் காலி செய்துவிட, அங்கே பாம்புகள் குடியேறிவிடுமாம். உள்ளே சென்று வெளியே வர ஏதுவாய் ஓரிரு வழிகளும் இருக்க, ஒரு துவாரம் வழியே பாம்பு தலையை வெளியே நீட்டிப் பார்த்துக் கொண்டிருந்தது. நாக்கை நீட்டி நீட்டி உள்ளே இழுத்துக் கொள்ள, ஏதோ எங்களைப் பார்த்து சொல்வது போல தெரிந்தது – ஒருவேளை, எங்களைப் பார்க்க வந்ததில் மகிழ்ச்சி எனச் சொல்லி இருக்குமோ? [] மேலும் சில நிமிடங்கள் கழித்து வாகனத்தினை மீண்டும் நிறுத்தினார் வீரப்பன். எதற்கு என கண்களை நாலா பக்கமும் சுழற்ற சற்றே அருகில் ஒரு மான் கூட்டம். நாங்கள் சத்தம் எழுப்பாமல், நின்று வனாந்தரத்தில் சுதந்திரமாய்த் திரியும் மான் கூட்டத்தினைப் பார்த்து ரசித்துக் கொண்டிருந்தோம்.     நண்பர் தன்னுடைய NIKON CAMERA-வில் படங்கள் எடுக்க, நான் எனது CANON-ஐ பயன்படுத்திக் கொண்டிருந்தேன். சில நிமிடங்கள் அந்த மான்களுக்கு தாங்கள் படம்பிடிக்கப் படுகிறோம் எனத் தெரியவில்லை.   தொடர்ந்த க்ளிக் சப்தங்கள் புற்களை மேய்ந்து கொண்டிருக்கும் அந்த மான்களின் கவனத்தினை ஈர்க்க, எங்களை கவனித்து விட்டன. உடனே அடடே இந்த மனிதர்கள் நம்மைப் பார்த்து விட்டார்களே என்ற எண்ணத்துடன் காட்டுக்குள் இருந்த புதர்களுக்குள் ஓடி ஒளிந்தன. அங்கிருந்தபடியே எங்களை நிச்சயம் கவனித்துக் கொண்டிருக்கும் என்ற நினைவுடன் அங்கிருந்து நகர்ந்தோம்.   காட்டுப்பாதையில் பயணித்துக் கொண்டே இருந்தோம் – அருகே தண்ணீர் ஓடிக்கொண்டிருகும் ஓசை கேட்க, ஆவலுடன் அந்த சப்தம் கேட்கும் இடம் வந்துவிடாதா என பார்த்துக் கொண்டிருந்தோம். அந்த இடமும் வந்தது – கோசி ஒரு சிற்றோடை போல ஓடிக்கொண்டிருந்தாள். ஒரு இடத்தில் குறுகிய நதியின் குறுக்கே கருங்கற்கள் கொண்டு பாதை அமைந்திருக்க, அந்த வழியின் மூலம் கோசியைக் கடக்கப் போகிறோம். அதற்கு முன்னர் அங்கே சற்றே இளைப்பாறுவோமா? 19 பகுதி-19: நைனிதால் – சீதாவனிக்குள் சீதை [] ஏரிக்கரை பூங்காற்றே….  நீ போற வழி தென்கிழக்கோ…. கூழாங்கற்கள் நிரம்பிய சிற்றோடை போல ஓடிக்கொண்டிருக்கும் கோசி ஆற்றின் கரையில் சில நிமிடங்கள் அமர்ந்து இளைப்பாறினோம். போகும்போது வாங்கிச் சென்ற சில நொறுக்குத் தீனிகளை நாங்கள் உண்டு மகிழ்ந்தோம். கூடவே ஓட்டுனர் வீரப்பனுக்கும் கொடுத்தோம். காலியான அந்த பைகளை காட்டில் போடக்கூடாது என்ற சுய கட்டுப்பாட்டுடன் எடுத்து வைத்துக் கொண்டோம் – வெளியே சென்ற பிறகு குப்பைக்கூடையில் போடலாம் என! [] நீலவானத்திலிருந்து வேண்டிய அளவு நீல வண்ணத்தினை எடுத்துக் கொண்டாள் போலும் இந்த ஓடைப்பெண்! நாங்கள் அங்கே அமர்ந்திருந்தபோது ஒரு சில தனியார் வாகனங்களும் அந்த இடத்தினைக் கடந்தன. புதிதாய் மணமான ஒரு ஜோடி, இன்னும் சில இளைஞர்கள் இருந்த ஒரு வாகனம் வந்தது. வாகனத்தில் இருந்த அனைவரும் பலத்த சப்தங்களை எழுப்பியபடி வந்தனர். வந்தவர்களுக்கு வால்கள் இருந்ததாகத் தெரியவில்லை – ஆனாலும் வானரங்களைப் போல நடந்து கொண்டார்கள். இருக்கைகளில் அமர்ந்து கொள்ளாது கதவுகளில் இருக்கும் கண்ணாடிகளை கீழிறக்கி அதன் மேல் பக்கத்திற்கு ஒன்றாய் ஆண்கள் அமர்ந்து கொள்ள ஓட்டுனர் இருக்கைக்கு எதிர் கதவின் மேல் இரண்டு பெண்கள் – வாகனத்தின் மேல் ஒரு இளைஞர் – அவர் கீழே விழுந்துவிடாதபடி பின் பக்கம் இருந்த இளைஞர்கள் பிடித்துக் கொண்டிருந்தார்கள். காட்டிற்குள் இருந்த குரங்குகள் கூட இவர்களின் சேஷ்டைகளைப் பார்த்து வெட்கம் கொண்டு ஓடின! [] ”புல்வெளியோ என்ற சந்தேகம் வேண்டாம்….” என்று சொல்லாமல் சொல்லும் பாசி படிந்த கிண்று…. சில நிமிடங்கள் கடந்தபிறகு அந்த சிற்றோடையின் குறுக்கே இருந்த கற்களாலான பாதையை ஜீப்பில் அமர்ந்து கடந்தோம். ஜீப் என்பதால் சுலபமாக கடக்க முடிந்தது. கார் போன்றவற்றில் வந்தவர்கள் அந்த இடத்தினைக் கடக்க ரொம்பவே கஷ்டப்பட்டார்கள். வெள்ளம் இருந்தால் நிச்சயம் அப்படிக் கடக்கும்போது வண்டி அடித்துக் கொண்டு போய்விடும் அபாயம் இருந்தது. [] சீதாவனி காட்டிற்குள் இருக்கும் தங்கும் விடுதி…. தனிமை விரும்பிகள் இங்கே தங்கலாம்…   பகலில் சில சுற்றுலாப் பயணிகள் தொந்தரவு செய்தாலும் இரவில் தனிமை…. அவ்வப்போது சில காட்டு நரிகளின் ஊளையிடும் சத்தம் உங்கள் தனிமையைக் கெடுக்கலாம்! தொடர்ந்து காட்டின் ஊடே பயணித்து ஆங்காங்கே ஒலிக்கும் பறவைகளின் ஒலிகளையும், மரங்கள் அசைந்து ஒன்றுக்கு ஒன்று உரசிக்கொள்ளும் ஓசைகளும் ரம்மியமாக இருந்தன. சில நிமிடங்கள் கடந்த பிறகு நாங்கள் சென்றடைந்த இடம் ஒரு கோவில்….. என்னது காட்டிற்குள்ளும் கோவிலா? என்று ஆச்சரியம் உங்களுக்கு வரலாம். எங்களுக்கும் தான். ஜிம் கார்பெட் வனத்தின் இந்தப் பகுதியின் பெயரிலே இதற்கான காரணம் ஒளிந்திருக்கிறது. இந்த பகுதியின் பெயர் – சீதாவனி. அதாவது சீதை இருக்கும் வனம். [] காளி…..   நரியின் சத்தம் உங்களைப் பயமுறுத்தினால் இவளை நினைத்துக் கொள்ளலாம்…. இராவண வதம் முடிந்து சீதையும் இராமரும் அயோத்யா திரும்புகிறார்கள். அயோத்யா வந்த பிறகு அயோத்யா மக்கள் சீதையின் மீது சந்தேகம் கொள்ள சீதையை காட்டுக்கு அனுப்பினார் என்று படித்திருக்கிறோம். இது உண்மையா, இப்படி காட்டுக்குள் தனது மனைவியை அனுப்பியது சரியா என்ற விவாதத்திற்குள் சென்றால் இந்த பதிவின் நீளம் உங்களை இங்கிருந்து ஓடச் செய்யலாம்! அதனால் அதைப் பற்றி பார்க்காது, இந்த இடம் பற்றி பார்க்கலாம். அப்படி காட்டுக்குள் அனுப்பப்பட்ட சீதை இந்த காட்டிற்குள் இருந்ததாக இந்தப் பகுதி மக்கள் நம்புகிறார்கள். [] சீதாவனி….   பெயர் கொடுத்த சீதை….   கூடவே லவனும் குசனும்… இந்த காட்டுக்குள் சீதா மாதாவிற்கு ஒரு கோவிலும் கட்டியிருக்கிறார்கள். சீதையின் கூடவே லவகுசர்களும் அமர்ந்திருக்கிறார்கள். கோவிலுக்குச் செல்லும் பாதையில் இருந்த தொல்பொருள் ஆராய்ச்சிக் கழகத்தின் தகவல் பலகையும் “Temple Sacred to Sita” என்று தகவல் சொல்கிறது. வாருங்கள் சீதை மற்றும் லவகுசர்களை தரிசிப்போம். கூடவே ஒரு பிள்ளையார் சிலையும் காளி சிலையும் உண்டு. மேலிருந்து பார்க்கும்போது ஒரு கிணறு பச்சைப் பசேலென பாசியுடன் காட்சியளித்தது! அதனைத் தாண்டி பார்வையை ஓட்டினால் தண்ணீர் சலசலவென ஓடிக்கொண்டிருந்தது. [] சீதாமாதாவிற்கான கோவில்…… கொஞ்சம் பழமை தெரிகிறதோ? இந்த இடத்தில் ஒரு தங்கும் விடுதியும் உண்டு. தங்குபவர்கள் தங்களுக்குத் தேவையான உணவினை எடுத்துக் கொண்டு வருவது நல்லது. இங்கே சமைக்கும் வசதிகள் இருந்தாலும் தேவையான பொருட்களை ராம்நகரிலிருந்து தான் வாங்கிக் கொண்டு வரவேண்டும். இந்த இடத்தின் சுற்றுவட்டாரத்தில் சில கிராமங்கள் இருக்கின்றன. அவற்றிலிருந்து வரும் ஒன்றிரண்டு பேர் இங்கே தேநீர் கடை வைத்திருக்கிறார்கள். சுற்றுலாப் பயணிகள் இங்கே தேநீர் அருந்தி சீதா தேவியை தரிசித்து திரும்புகிறார்கள். நாங்களும் சில நிமிடங்கள் அந்த இயற்கை எழிலை ரசித்து, சுத்தமான காற்றை சுவாசித்து மீண்டும் ராம் நகரை நோக்கி பயணிக்க ஆயத்தமானோம்.   அடுத்தது என்ன? அடுத்த பகுதியில் பார்க்கலாம்! 20 பகுதி-20: நைனிதால் – பயணம் - முடிவும் செலவும் [] சிறிது நேரம் அந்தக் காட்டிற்குள் இருந்தது ரம்மியமானதாக இருந்தது. இப்படி வனப் பகுதிக்குள் செல்வது இது மூன்றாவது முறை. மத்தியப் பிரதேசத்தில் இருக்கும் ஷிவ்புரி மாவட்டத்தின் மாதவ் தேசியப் பூங்காவிற்கும், மத்தியப் பிரதேசத்தின் இன்னுமொரு வனமான பாந்தவ்கர் வனப் பிரதேசத்திற்கும் சென்று வந்தது குறித்து எனது வலைப்பூவில் [www.venkatnagaraj.blogspot.com] எழுதி இருக்கிறேன்.   காட்டிற்குள் கிடைத்த சுகாபனுவத்தினை மீண்டும் அசைபோட்டபடியே வாகனத்தில் அமர்ந்தோம். போகும்போது தொடர்ந்து பேசிக் கொண்டிருந்த ஓட்டுனர் வீரப்பனும் காட்டின் அமைதியை முழுதாக நாங்கள் உணர வேண்டும் என்ற நோக்கத்தினுடனோ என்னமோ பேசாமல் வண்டியை ஓட்டிக் கொண்டிருந்தார். மீண்டும் காட்டுப் பாதைகளில் மாலைச்சூரியன் தனது கதிர்களை மரங்களுக்கு ஊடே பாய்ச்சி விளையாட நாங்களும் அமைதியாக அந்த இயற்கையின் எழிலை ரசித்தபடி ராம் நகரில் இருக்கும் வன இலாகா அலுவலகத்திற்கு வந்து சேர்ந்தோம்.   அங்கே தில்லியில் இருந்து எங்களை தனது வாகனத்தில் அழைத்து வந்த ஓட்டுனர் பப்பு காத்திருக்க, ராம்நகரிலிருந்து புறப்பட்டோம். புறப்படும் முன் ஜிம் கார்பெட் வந்த அடையாளமாக ஏதாவது பொருள் வாங்கலாம் என்று Souvenir Shop தேடினோம். சில கடைகளில் தொப்பி, சாவிவளையம், டீ-ஷர்ட் என்று விற்றார்கள் – நன்றாக இல்லை, விலையும் மிக அதிகம். ஒரு டீ-ஷர்ட் மட்டும் வாங்கிக் கொண்டு அங்கிருந்து புறப்பட்டோம். வழியில் தேநீர் அருந்தி, தில்லியை நோக்கிய பயணம் தொடர்ந்தது.   பயணத்தில் சின்னச் சின்னதாய் அனுபவங்கள்…. பொதுவாகவே வடக்கில் வாகனங்கள் ஓட்டுவதில் நிறைய இடர்கள் – எல்லோரும் தான் மட்டுமே முன்னால் செல்ல வேண்டும் என்று நினைப்பவர்கள். Traffic Jam அவ்வப்போது ஏற்படும் ஒரு விஷயம் – நெடுஞ்சாலைகளில் மூன்று, நான்கு மணி நேரத்திற்கும் மேலாக இப்படி மாட்டிக் கொண்டதுண்டு. இருக்கும் குறுகிய சாலையில் இரண்டு ட்ரையிலர் மாட்டிய ஒரு ட்ராக்டர் – முழுவதும் கரும்பு இருக்க, சாலையில் நிறுத்தி விட்டு எங்கேயோ சென்றிருந்தார். ஒரு மணி நேரத்திற்கும் மேல் ஒரே இடத்தில் நிற்க வேண்டியிருந்தது!   நல்ல வேகத்தில் வாகனத்தினை ஓட்டிக் கொண்டு வந்த பப்பு இரவு உணவிற்காக போகும் போது நிறுத்திய அதே கஜ்ரோலாவில் நிறுத்தினார். உணவு முடித்து தில்லி நோக்கி பயணித்தோம். இரவு பன்னிரெண்டு மணிக்கு வீடு வந்து சேர்ந்தோம். இரண்டு நாட்கள் பயணமாகச் சென்று அந்த இரண்டு நாட்களில் பார்த்த இடங்கள், எங்களுக்குக் கிடைத்த அனுபவங்கள் ஆகியவற்றை உங்களுடன் பகிர்ந்து கொண்டதில் எனக்கு மகிழ்ச்சி. உங்களுக்கும் மகிழ்ச்சி கிடைத்திருக்கும் என நம்புகிறேன்.   இந்தப் பயணத்திற்கான மொத்த செலவு – நான்கு பேருக்கு – ரூபாய் 19500/-. இதில் வாகனத்திற்கான செலவு, உணவு, தங்குமிடம் ஆகிய அனைத்தும் அடக்கம். தில்லியிலிருந்தே வாகனம் அம்ர்த்திக்கொண்டதால் கொஞ்சம் செலவு அதிகம் – ரயிலில் சென்றிருந்தால் சற்றே குறைந்திருக்கலாம் – ஆனாலும் வசதிகளும் குறைந்திருக்கும். இரண்டு நாட்கள் கிடைத்த மகிழ்ச்சிக்கும் அனுபவங்களுக்கும் இந்த செலவு ஒன்றும் அதிகமில்லை என்று தான் தோன்றியது. [] இந்தப் பயணம் பற்றிய தொடரினை வாசித்து என்னுடன் பயணித்த உங்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றி. பயணங்களில் கிடைக்கும் அனுபவங்கள், காணக்கிடைக்கும் காட்சிகள், சந்திக்கும் புதிய மனிதர்கள் என பல காரணங்கள் இருப்பதால் தொடர்ந்து பயணிப்போம்…. ஆதலினால் பயணம் செய்வீர்! 1 FreeTamilEbooks.com - எங்களைப் பற்றி மின்புத்தகங்களைப் படிக்க உதவும் கருவிகள்: மின்புத்தகங்களைப் படிப்பதற்கென்றே கையிலேயே வைத்துக் கொள்ளக்கூடிய பல கருவிகள் தற்போது சந்தையில் வந்துவிட்டன. Kindle, Nook, Android Tablets போன்றவை இவற்றில் பெரும்பங்கு வகிக்கின்றன. இத்தகைய கருவிகளின் மதிப்பு தற்போது 4000 முதல் 6000 ரூபாய் வரை குறைந்துள்ளன. எனவே பெரும்பான்மையான மக்கள் தற்போது இதனை வாங்கி வருகின்றனர். ஆங்கிலத்திலுள்ள மின்புத்தகங்கள்: ஆங்கிலத்தில் லட்சக்கணக்கான மின்புத்தகங்கள் தற்போது கிடைக்கப் பெறுகின்றன. அவை PDF, EPUB, MOBI, AZW3. போன்ற வடிவங்களில் இருப்பதால், அவற்றை மேற்கூறிய கருவிகளைக் கொண்டு நாம் படித்துவிடலாம். தமிழிலுள்ள மின்புத்தகங்கள்: தமிழில் சமீபத்திய புத்தகங்களெல்லாம் நமக்கு மின்புத்தகங்களாக கிடைக்கப்பெறுவதில்லை. ProjectMadurai.com எனும் குழு தமிழில் மின்புத்தகங்களை வெளியிடுவதற்கான ஒர் உன்னத சேவையில் ஈடுபட்டுள்ளது. இந்தக் குழு இதுவரை வழங்கியுள்ள தமிழ் மின்புத்தகங்கள் அனைத்தும் PublicDomain-ல் உள்ளன. ஆனால் இவை மிகவும் பழைய புத்தகங்கள். சமீபத்திய புத்தகங்கள் ஏதும் இங்கு கிடைக்கப்பெறுவதில்லை. எனவே ஒரு தமிழ் வாசகர் மேற்கூறிய “மின்புத்தகங்களைப் படிக்க உதவும் கருவிகளை” வாங்கும்போது, அவரால் எந்த ஒரு தமிழ் புத்தகத்தையும் இலவசமாகப் பெற முடியாது. சமீபத்திய புத்தகங்களை தமிழில் பெறுவது எப்படி? சமீபகாலமாக பல்வேறு எழுத்தாளர்களும், பதிவர்களும், சமீபத்திய நிகழ்வுகளைப் பற்றிய விவரங்களைத் தமிழில் எழுதத் தொடங்கியுள்ளனர். அவை இலக்கியம், விளையாட்டு, கலாச்சாரம், உணவு, சினிமா, அரசியல், புகைப்படக்கலை, வணிகம் மற்றும் தகவல் தொழில்நுட்பம் போன்ற பல்வேறு தலைப்புகளின் கீழ் அமைகின்றன. நாம் அவற்றையெல்லாம் ஒன்றாகச் சேர்த்து தமிழ் மின்புத்தகங்களை உருவாக்க உள்ளோம். அவ்வாறு உருவாக்கப்பட்ட மின்புத்தகங்கள் Creative Commons எனும் உரிமத்தின் கீழ் வெளியிடப்படும். இவ்வாறு வெளியிடுவதன் மூலம் அந்தப் புத்தகத்தை எழுதிய மூல ஆசிரியருக்கான உரிமைகள் சட்டரீதியாகப் பாதுகாக்கப்படுகின்றன. அதே நேரத்தில் அந்த மின்புத்தகங்களை யார் வேண்டுமானாலும், யாருக்கு வேண்டுமானாலும், இலவசமாக வழங்கலாம். எனவே தமிழ் படிக்கும் வாசகர்கள் ஆயிரக்கணக்கில் சமீபத்திய தமிழ் மின்புத்தகங்களை இலவசமாகவே பெற்றுக் கொள்ள முடியும். தமிழிலிருக்கும் எந்த வலைப்பதிவிலிருந்து வேண்டுமானாலும் பதிவுகளை எடுக்கலாமா? கூடாது. ஒவ்வொரு வலைப்பதிவும் அதற்கென்றே ஒருசில அனுமதிகளைப் பெற்றிருக்கும். ஒரு வலைப்பதிவின் ஆசிரியர் அவரது பதிப்புகளை “யார் வேண்டுமானாலும் பயன்படுத்தலாம்” என்று குறிப்பிட்டிருந்தால் மட்டுமே அதனை நாம் பயன்படுத்த முடியும். அதாவது “Creative Commons” எனும் உரிமத்தின் கீழ் வரும் பதிப்புகளை மட்டுமே நாம் பயன்படுத்த முடியும். அப்படி இல்லாமல் “All Rights Reserved” எனும் உரிமத்தின் கீழ் இருக்கும் பதிப்புகளை நம்மால் பயன்படுத்த முடியாது. வேண்டுமானால் “All Rights Reserved” என்று விளங்கும் வலைப்பதிவுகளைக் கொண்டிருக்கும் ஆசிரியருக்கு அவரது பதிப்புகளை “Creative Commons” உரிமத்தின் கீழ் வெளியிடக்கோரி நாம் நமது வேண்டுகோளைத் தெரிவிக்கலாம். மேலும் அவரது படைப்புகள் அனைத்தும் அவருடைய பெயரின் கீழே தான் வெளியிடப்படும் எனும் உறுதியையும் நாம் அளிக்க வேண்டும். பொதுவாக புதுப்புது பதிவுகளை  உருவாக்குவோருக்கு அவர்களது பதிவுகள்  நிறைய வாசகர்களைச் சென்றடைய வேண்டும் என்ற எண்ணம் இருக்கும். நாம் அவர்களது படைப்புகளை எடுத்து இலவச மின்புத்தகங்களாக வழங்குவதற்கு  நமக்கு அவர்கள் அனுமதியளித்தால், உண்மையாகவே அவர்களது படைப்புகள் பெரும்பான்மையான மக்களைச் சென்றடையும். வாசகர்களுக்கும் நிறைய புத்தகங்கள் படிப்பதற்குக் கிடைக்கும் வாசகர்கள் ஆசிரியர்களின் வலைப்பதிவு முகவரிகளில் கூட அவர்களுடைய படைப்புகளை தேடிக் கண்டுபிடித்து படிக்கலாம். ஆனால் நாங்கள் வாசகர்களின் சிரமத்தைக் குறைக்கும் வண்ணம் ஆசிரியர்களின் சிதறிய வலைப்பதிவுகளை ஒன்றாக இணைத்து ஒரு முழு மின்புத்தகங்களாக உருவாக்கும் வேலையைச் செய்கிறோம். மேலும் அவ்வாறு உருவாக்கப்பட்ட புத்தகங்களை “மின்புத்தகங்களைப் படிக்க உதவும் கருவிகள்”-க்கு ஏற்ற வண்ணம் வடிவமைக்கும் வேலையையும் செய்கிறோம். FreeTamilEbooks.com இந்த வலைத்தளத்தில்தான் பின்வரும் வடிவமைப்பில் மின்புத்தகங்கள் காணப்படும். PDF for desktop, PDF for 6” devices, EPUB, AZW3, ODT இந்த வலைதளத்திலிருந்து யார் வேண்டுமானாலும் மின்புத்தகங்களை இலவசமாகப் பதிவிறக்கம்(download) செய்து கொள்ளலாம். அவ்வாறு பதிவிறக்கம்(download) செய்யப்பட்ட புத்தகங்களை யாருக்கு வேண்டுமானாலும் இலவசமாக வழங்கலாம். இதில் நீங்கள் பங்களிக்க விரும்புகிறீர்களா? நீங்கள் செய்யவேண்டியதெல்லாம் தமிழில் எழுதப்பட்டிருக்கும் வலைப்பதிவுகளிலிருந்து பதிவுகளை எடுத்து, அவற்றை LibreOffice/MS Office போன்ற wordprocessor-ல் போட்டு ஓர் எளிய மின்புத்தகமாக மாற்றி எங்களுக்கு அனுப்பவும். அவ்வளவுதான்! மேலும் சில பங்களிப்புகள் பின்வருமாறு: 1. ஒருசில பதிவர்கள்/எழுத்தாளர்களுக்கு அவர்களது படைப்புகளை “Creative Commons” உரிமத்தின்கீழ் வெளியிடக்கோரி மின்னஞ்சல் அனுப்புதல் 2. தன்னார்வலர்களால் அனுப்பப்பட்ட மின்புத்தகங்களின் உரிமைகளையும் தரத்தையும் பரிசோதித்தல் 3. சோதனைகள் முடிந்து அனுமதி வழங்கப்பட்ட தரமான மின்புத்தகங்களை நமது வலைதளத்தில் பதிவேற்றம் செய்தல் விருப்பமுள்ளவர்கள் freetamilebooksteam@gmail.com எனும் முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பவும். இந்தத் திட்டத்தின் மூலம் பணம் சம்பாதிப்பவர்கள் யார்? யாருமில்லை. இந்த வலைத்தளம் முழுக்க முழுக்க தன்னார்வலர்களால் செயல்படுகின்ற ஒரு வலைத்தளம் ஆகும். இதன் ஒரே நோக்கம் என்னவெனில் தமிழில் நிறைய மின்புத்தகங்களை உருவாக்குவதும், அவற்றை இலவசமாக பயனர்களுக்கு வழங்குவதுமே ஆகும். மேலும் இவ்வாறு உருவாக்கப்பட்ட மின்புத்தகங்கள், ebook reader ஏற்றுக்கொள்ளும் வடிவமைப்பில் அமையும். இத்திட்டத்தால் பதிப்புகளை எழுதிக்கொடுக்கும் ஆசிரியர்/பதிவருக்கு என்ன லாபம்? ஆசிரியர்/பதிவர்கள் இத்திட்டத்தின் மூலம் எந்தவிதமான தொகையும் பெறப்போவதில்லை. ஏனெனில், அவர்கள் புதிதாக இதற்கென்று எந்தஒரு பதிவையும்  எழுதித்தரப்போவதில்லை. ஏற்கனவே அவர்கள் எழுதி வெளியிட்டிருக்கும் பதிவுகளை எடுத்துத்தான் நாம் மின்புத்தகமாக வெளியிடப்போகிறோம். அதாவது அவரவர்களின் வலைதளத்தில் இந்தப் பதிவுகள் அனைத்தும் இலவசமாகவே கிடைக்கப்பெற்றாலும், அவற்றையெல்லாம் ஒன்றாகத் தொகுத்து ebook reader போன்ற கருவிகளில் படிக்கும் விதத்தில் மாற்றித் தரும் வேலையை இந்தத் திட்டம் செய்கிறது. தற்போது மக்கள் பெரிய அளவில் tablets மற்றும் ebook readers போன்ற கருவிகளை நாடிச் செல்வதால் அவர்களை நெருங்குவதற்கு இது ஒரு நல்ல வாய்ப்பாக அமையும். நகல் எடுப்பதை அனுமதிக்கும் வலைதளங்கள் ஏதேனும் தமிழில் உள்ளதா? உள்ளது. பின்வரும் தமிழில் உள்ள வலைதளங்கள் நகல் எடுப்பதினை அனுமதிக்கின்றன. 1. www.vinavu.com 2. www.badriseshadri.in 3. http://maattru.com 4. kaniyam.com 5. blog.ravidreams.net எவ்வாறு ஒர் எழுத்தாளரிடம் Creative Commons உரிமத்தின் கீழ் அவரது படைப்புகளை வெளியிடுமாறு கூறுவது? இதற்கு பின்வருமாறு ஒரு மின்னஞ்சலை அனுப்ப வேண்டும். <துவக்கம்> உங்களது வலைத்தளம் அருமை [வலைதளத்தின் பெயர்]. தற்போது படிப்பதற்கு உபயோகப்படும் கருவிகளாக Mobiles மற்றும் பல்வேறு கையிருப்புக் கருவிகளின் எண்ணிக்கை அதிகரித்து வந்துள்ளது. இந்நிலையில் நாங்கள் http://www.FreeTamilEbooks.com எனும் வலைதளத்தில், பல்வேறு தமிழ் மின்புத்தகங்களை வெவ்வேறு துறைகளின் கீழ் சேகரிப்பதற்கான ஒரு புதிய திட்டத்தில் ஈடுபட்டுள்ளோம். இங்கு சேகரிக்கப்படும் மின்புத்தகங்கள் பல்வேறு கணிணிக் கருவிகளான Desktop,ebook readers like kindl, nook, mobiles, tablets with android, iOS போன்றவற்றில் படிக்கும் வண்ணம் அமையும். அதாவது இத்தகைய கருவிகள் support செய்யும் odt, pdf, ebub, azw போன்ற வடிவமைப்பில் புத்தகங்கள் அமையும். இதற்காக நாங்கள் உங்களது வலைதளத்திலிருந்து பதிவுகளை பெற விரும்புகிறோம். இதன் மூலம் உங்களது பதிவுகள் உலகளவில் இருக்கும் வாசகர்களின் கருவிகளை நேரடியாகச் சென்றடையும். எனவே உங்களது வலைதளத்திலிருந்து பதிவுகளை  பிரதியெடுப்பதற்கும் அவற்றை மின்புத்தகங்களாக மாற்றுவதற்கும் உங்களது அனுமதியை வேண்டுகிறோம். இவ்வாறு உருவாக்கப்பட்ட மின்புத்தகங்களில் கண்டிப்பாக ஆசிரியராக உங்களின் பெயரும் மற்றும் உங்களது வலைதள முகவரியும் இடம்பெறும். மேலும் இவை “Creative Commons” உரிமத்தின் கீழ் மட்டும்தான் வெளியிடப்படும் எனும் உறுதியையும் அளிக்கிறோம். http://creativecommons.org/licenses/ நீங்கள் எங்களை பின்வரும் முகவரிகளில் தொடர்பு கொள்ளலாம். e-mail : freetamilebooksteam@gmail.com  FB : https://www.facebook.com/FreeTamilEbooks G +: https://plus.google.com/communities/108817760492177970948   நன்றி. மேற்கூறியவாறு ஒரு மின்னஞ்சலை உங்களுக்குத் தெரிந்த அனைத்து எழுத்தாளர்களுக்கும் அனுப்பி அவர்களிடமிருந்து அனுமதியைப் பெறுங்கள். முடிந்தால் அவர்களையும் “Creative Commons License”-ஐ அவர்களுடைய வலைதளத்தில் பயன்படுத்தச் சொல்லுங்கள். கடைசியாக அவர்கள் உங்களுக்கு அனுமதி அளித்து அனுப்பியிருக்கும் மின்னஞ்சலைfreetamilebooksteam@gmail.com எனும் முகவரிக்கு அனுப்பி வையுங்கள். ஓர் எழுத்தாளர் உங்களது உங்களது வேண்டுகோளை மறுக்கும் பட்சத்தில் என்ன செய்வது ? அவர்களையும் அவர்களது படைப்புகளையும் அப்படியே விட்டுவிட வேண்டும். ஒருசிலருக்கு அவர்களுடைய சொந்த முயற்சியில் மின்புத்தகம் தயாரிக்கும் எண்ணம்கூட இருக்கும். ஆகவே அவர்களை நாம் மீண்டும் மீண்டும் தொந்தரவு செய்யக் கூடாது. அவர்களை அப்படியே விட்டுவிட்டு அடுத்தடுத்த எழுத்தாளர்களை நோக்கி நமது முயற்சியைத் தொடர வேண்டும். மின்புத்தகங்கள் எவ்வாறு அமைய வேண்டும்? ஒவ்வொருவரது வலைத்தளத்திலும் குறைந்தபட்சம் நூற்றுக்கணக்கில் பதிவுகள் காணப்படும். அவை வகைப்படுத்தப்பட்டோ அல்லது வகைப்படுத்தப் படாமலோ இருக்கும். நாம் அவற்றையெல்லாம் ஒன்றாகத் திரட்டி ஒரு பொதுவான தலைப்பின்கீழ் வகைப்படுத்தி மின்புத்தகங்களாகத் தயாரிக்கலாம். அவ்வாறு வகைப்படுத்தப்படும் மின்புத்தகங்களை பகுதி-I பகுதி-II என்றும் கூட தனித்தனியே பிரித்துக் கொடுக்கலாம். தவிர்க்க வேண்டியவைகள் யாவை? இனம், பாலியல் மற்றும் வன்முறை போன்றவற்றைத் தூண்டும் வகையான பதிவுகள் தவிர்க்கப்பட வேண்டும். எங்களைத் தொடர்பு கொள்வது எப்படி? நீங்கள் பின்வரும் முகவரிகளில் எங்களைத் தொடர்பு கொள்ளலாம். - email : freetamilebooksteam@gmail.com - Facebook: https://www.facebook.com/FreeTamilEbooks - Google Plus: https://plus.google.com/communities/108817760492177970948 இத்திட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் யார்? குழு – http://freetamilebooks.com/meet-the-team/ Supported by - Free Software Foundation TamilNadu, www.fsftn.org - Yavarukkum Software Foundation http://www.yavarkkum.org/   2 உங்கள் படைப்புகளை வெளியிடலாமே உங்கள் படைப்புகளை மின்னூலாக இங்கு வெளியிடலாம். 1. எங்கள் திட்டம் பற்றி – http://freetamilebooks.com/about-the-project/ தமிழில் காணொளி  – http://www.youtube.com/watch?v=Mu_OVA4qY8I 2.  படைப்புகளை யாவரும் பகிரும் உரிமை தரும் கிரியேட்டிவ் காமன்ஸ் உரிமம் பற்றி – கிரியேட்டிவ் காமன்ஸ் உரிமை – ஒரு அறிமுகம் http://www.kaniyam.com/introduction-to-creative-commons-licenses/ http://www.wired.co.uk/news/archive/2011-12/13/creative-commons-101 https://learn.canvas.net/courses/4/wiki/creative-commons-licenses உங்கள் விருப்பான கிரியேட்டிவ் காமன்ஸ் உரிமத்தை இங்கே தேர்ந்தெடுக்கலாம். http://creativecommons.org/choose/ 3. மேற்கண்டவற்றை பார்த்த / படித்த பின், உங்கள் படைப்புகளை மின்னூலாக மாற்ற பின்வரும் தகவல்களை எங்களுக்கு அனுப்பவும். 1. நூலின் பெயர் 2. நூல் அறிமுக உரை 3. நூல் ஆசிரியர் அறிமுக உரை 4. உங்கள் விருப்பான கிரியேட்டிவ் காமன்ஸ் உரிமம் 5. நூல் – text / html / LibreOffice odt/ MS office doc வடிவங்களில்.  அல்லது வலைப்பதிவு / இணைய தளங்களில் உள்ள கட்டுரைகளில் தொடுப்புகள் (url) இவற்றை freetamilebooksteam@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்பவும். விரைவில் மின்னூல் உருவாக்கி வெளியிடுவோம். ——————————————————————————————————– நீங்களும் மின்னூல் உருவாக்கிட உதவலாம். மின்னூல் எப்படி உருவாக்குகிறோம்?  – தமிழில் காணொளி – https://www.youtube.com/watch?v=bXNBwGUDhRs இதன் உரை வடிவம் ஆங்கிலத்தில் – http://bit.ly/create-ebook எங்கள் மின்னஞ்சல் குழுவில் இணைந்து உதவலாம். https://groups.google.com/forum/#!forum/freetamilebooks நன்றி ! 3 கிரியேட்டிவ் காமன்ஸ் உரிமை – ஒரு அறிமுகம் 1. பதிப்புரிமை பதிப்புரிமை (Copyright) என்பது ஓர் எழுத்தாளருக்கோ, கலைஞருக்கோ தமது அசலான படைப்புகளைப் பாதுகாக்க சட்டத்தினால் அவருக்கு அளிக்கப்பட்ட தனிப்பட்ட உரிமையாகும். இவ்வுரிமையானது அப்படைப்புகளை நகலெடுத்தல், பரப்புதல், பயன்படுத்துதல் ஆகிய செயல்களைக் கட்டுப்படுத்துதலையும் உள்ளடக்கியதாகும். இவ்வுரிமை உரிமையாளருக்குப் படைப்பின் மீதான கட்டுப்பாட்டினையும் இலாபமீட்டும் உரிமையையும் தருகிறது. சில சந்தர்ப்பங்கள் தவிர இப்படைப்புகளைப் பயன்படுத்த உரிமையாளரின் அனுமதி பெறுவது அவசியம். இந்த அனுமதி தற்காலிகமானதாகவோ, நிரந்தரமானதாகவோ இருக்கலாம். பதிப்புரிமை பாதுகாப்பது ஒருவரின் எண்ணத்தின் வெளிப்பாடுகளை; எண்ணங்களை அல்ல. எடுத்துக்காட்டாக, ஒருவர் காப்புரிமை பெற அவர் மனதில் அழகிய கதைக்கரு உருவாவது மட்டும் போதாது. அக்கரு ஒரு கதையாகவோ, ஓவியமாகவோ அல்லது எதாவது ஒரு வடிவமாக வெளிப்பட வேண்டும். காப்புரிமை பெற வெளிப்பாடே போதுமானது. பல நாடுகளில் பதிவு செய்ய வேண்டிய அவசியமில்லை. முந்திய காலங்களில் பதிப்புரிமைச் சட்டம் புத்தகங்கள் நகலெடுப்பதற்கு எதிராக மட்டுமே பயன்பட்டது. காலம் செல்லச்செல்ல மொழிப்பெயர்ப்பு மற்றும் பிற சார்ந்த ஆக்கங்களிலும் இச்சட்டம் பயன்படுத்தப்படுகிறது. தற்போது நிலப்படம், இசை, நாடகம், புகைப்படம், ஒலிப்பதிவு, திரைப்படம், கணினி நிரல் ஆகியவையும் இதில் அடக்கம். பதிப்புரிமையின் சாதக பாதகங்கள் பதிப்புரிமையின் முக்கியமான சாதக அம்சம் பொருளாதார ரீதியில் எழுத்தாளர்களுக்கு பயன் கிடைப்பதனை உறுதி செய்வதே ஆகும். அதாவது ஒரு நூல் எத்தனை பிரதிகள், எந்தப் பதிப்பகத்தால், எப்போது வெளியிடப்படலாம் என்ற முடிவுகளை எழுத்தாளர் எடுக்க முடிகிறது. விற்பனையாகும் நூல்களின் இலாபத்தில் சிறு பகுதியினை எழுத்தாளர் பெற்றுக் கொள்ளவும் முடியும். பதிப்புரிமையின் மூலம் இலாபம் பெறுவதற்காக வழிவகை செய்யப்பட்டுள்ள போதிலும் அறிவு பரவுதலும் அறிவு விருத்தியும் பெருமளவில் தடுக்கப்படுகின்றன. இதற்கான காரணம் பதிப்புரிமையின் இறுக்கமான கட்டுப்பாடுகளே ஆகும். ஓர் எழுத்தாளர் இறந்து 60 ஆண்டுகளின் பின்னரேயே அவரது படைப்புக்கள் பொதுவெளிக்கு வருகின்றன. அதுவரை அப்படைப்புகள் மறுபதிப்புச் செய்யப்படாவிடினும் அல்லது படைப்புக்கு உரிமை கோர எவரும் இல்லாவிடினும் கூட வேறெவரும் பயன்படுத்த முடியாத நிலையே காணப்படுகிறது. சமூக நலன் கருதிய படைப்புக்கள் கூட – அவை சென்று சேர வேண்டிய மக்களைச் சென்றடையாமல் – பதிப்புரிமையின் பெயரால் தடுக்கப்படுகின்றன. எழுத்தாளர்களை மையமாகக் கொண்டு அச்சமூகங்களில் உருவாகவேண்டிய சிந்தனைப் பள்ளிகள் தோன்றாமலேயே போய்விடுகின்றன. தமது சிந்தனைகள் மூலமாக – அவை அவர்களுக்கு பின்பான தலைமுறைகளால் கடத்தப்படுவதனூடாக வரலாற்றில் தொடர்ச்சியாக வாழ வேண்டிய சிந்தனையாளர்கள் பதிப்புரிமையினால் கட்டுப்படுத்தப்படுவது கவலைக்குரியது. அறிவின் பல்கிப்பெருகும் தன்மையே சமூகத்தை உயிர்ப்புடன் வைத்திருக்கக்கூடியது. சமூகம் உயிர்ப்புடன் இருப்பதற்கு சமூக அறிவு சகலராலும் பயன்படுத்தக்கூடியதாக இருக்க வேண்டும். ஆனால் பதிப்புரிமையின் கட்டுப்பாடுகள் அதற்கு இடம் தருவதில்லை. தற்போதைய பதிப்புரிமை வடிவத்தின் பாதகமான அம்சங்களை எவ்வாறு சாதகமான அம்சமாக மாற்றுவது? படைப்பாளியின் நலன் பாதுகாக்கப்படவும் வேண்டும் அதேவேளை அப்படைப்பாளியின் கருத்துக்களாலும் சிந்தனைகளாலும் அச்சமூகமும் பயன்பெற வேண்டும். சமூகத்தின் மீது அக்கறையுள்ள ஒவ்வொருவரும் இப்புள்ளியில் நின்று சிந்தித்து அதற்கான தீர்வைப் பெற வேண்டும். இதற்காக உருவாக்கப்பட்டதே கிரியேட்டிவ் காமன்ஸ் – Creative Commons – படைப்பாக்கப் பொதும உரிமங்கள் ஆகும். இந்த உரிமங்கள் கொண்டதாக வெளியிடப்படும் நூல்களின் இலாபமீட்டும் உரிமை படைப்பாளியிடமே இருக்கும். அதேநேரம் படைப்புகளை யாவரும் பகிர்தல், அறிவைப் பரவலாக்குதல், விருத்தி செய்வதற்கான வழிகள் திறக்கப்படுகின்றன. படைப்பாளியின் உரிமையில் எதுவிதமான பாதிப்பையும் ஏற்படுத்தாது, அறிவு விருத்தியில் மக்கள் சார்ந்து நிற்பதற்கு இவ்வுரிமங்கள் வழிவகை செய்துள்ளன. இவ்வுரிமங்களில் ஒன்றினைப் பயன்படுத்துவதன் மூலம் ஆவணப்படுத்தல், அறிவுவிருத்தி, கல்வி மேம்பாடு ஆகிய சமூகநல நோக்குகளுடன் இயங்கிவரும் நூலக நிறுவனம், விக்கிபீடியா போன்ற அமைப்புக்களும் தொடர்ச்சியாக இயங்கக் கூடியதாக இருக்கிறது. 2. கிரியேட்டிவ் காமன்ஸ் – படைப்பாக்கப் பொதுமங்கள் கிரியேட்டிவ் காமன்ஸ் – Creative Commons – படைப்பாக்கப் பொதுமங்கள் என்பது ஆக்கங்களை சட்டப்படி மற்றவரோடு பகிர்ந்துகொள்ளலை ஊக்குவிப்பதையும் விரிவுபடுத்துவதையும் நோக்கமாகக்கொண்டு இயங்கும் இலாபநோக்கற்ற அறக்கட்டளை ஆகும். இது 2001 இல் லோறன்ஸ் லெசிக் என்பவரால் தொடங்கப்பட்டது. http://creativecommons.org இது படைப்பாளர்களுக்கும் பயனர்களுக்கு இடையேயான ஒரு பாலமாக அமைகிறது. கிரியேட்டிவ் காமன்ஸ் உரிமங்கள் அனைத்து உரிமைகளையும் கட்டுப்படுத்தாமல், அளிப்புரிமையை ஊக்குவிக்கின்றன. எந்த உரிமையை அளிப்பது என்பது (அதாவது முழுவதையும் காப்புரிமைக்கு கட்டுப்படுத்தலில் இருந்து முழுமையாகப் பொதுவில் விடுதல் வரையான பல்வேறு தெரிவுகள்) படைப்பாளர்களுக்குச் சாத்தியமாகின்றது. இது முழுமையான கட்டற்ற படைப்பு உரிமங்களுக்கும் முழுமையான காப்புரிமை உரிமங்களுக்கும் இடைப்பட்ட ஒரு மிதவாதத் தீர்வாகப் பார்க்கப்படுகிறது. தற்போது எல்லாப் படைப்புகளுக்கும் அனைத்து உரிமைகளும் காப்புடைமையானவை என்ற சட்டம் தீவிரவாத நிலைப்பாட்டை உடையதாகும். பெரும்பாலான நேரங்களில் பயனர்களின் சமூகத்தின் நியாயமான பயன்பாட்டிற்கு இது தடையாக அமைந்து விடுகிறது. பல சந்தர்ப்பங்களில் ஆக்கர்களே அவ்வாறு தமது படைப்புக்களை கட்டுப்படுத்த விரும்புவதில்லை. ஆகவே இந்த தடையை நடைமுறையில் தளர்த்துதவற்காக உருவாக்கப்பட்டதுதான் படைப்புப் பொதும உரிமங்கள் என்று லோறன்சு லெசிக் கூறுகிறார். இந்த நிறுவனமானது இதற்கென பல்வேறு வகையான காப்புரிமை உரிம ஒப்பந்தங்களை உருவாக்கி வெளியிட்டுள்ளது. இவ்வுரிம ஒப்பந்தங்கள் கிரியேட்டிவ் காமன்ஸ் (படைப்பாக்கப் பொதுமங்களின்) உரிமங்கள் என அறியப்படுகின்றன. இந்த உரிமைகள் படைப்பாளர்கள் அவர்கள் தெரிந்தெடுக்கும், அவர்களுக்கு ஏற்ற உரிமங்களோடு தமது படைப்புக்களை வெளியிடுவதைச் சாத்தியமாக்குகின்றன. பல்வேறு தேவைகளுக்கும் பயன்படக்கூடிய வகையில் வெவ்வேறு வகையான கட்டுப்பாடுகளுடன் ஆறு உரிம ஒப்பந்தங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. கிரியேட்டிவ் காமன்ஸ் – படைப்பாக்கப் பொதும உரிமங்கள் ஒருவருடைய படைப்புகளை இணையத்திலும் வேறு வடிவங்களிலும் பகிர்வதற்காக கிரியேட்டிவ் காமன்ஸ் அமைப்பினால் உருவாக்கப்பட்ட உரிம ஒப்பந்தங்கள், கிரியேட்டிவ் காமன்ஸ் (படைப்பாக்கப் பொதும) உரிமங்கள் எனப்படுகிறன. கிரியேட்டிவ் காமன்ஸ் அமைப்பானது பல்வேறு தேவைகளுக்கும் பயன்படக்கூடிய வகையில் வெவ்வேறு வகையான ஆறு உரிம ஒப்பந்தங்களை தயாரித்து வழங்கியிருக்கிறது. மூல உரிமங்கள்     Attribution குறிப்பிடுதல் / Attribution (by) ஆக்கங்களை படியெடுக்க, விநியோகிக்க, பகிர, காட்சிப்படுத்த, இயக்க, வழிபொருட்களை உருவாக்க ஆகிய உரிமைகள் வழங்கப்படுகின்றன. ஆனால் தகுந்த முறையில் அல்லது வேண்டப்பட்ட முறையில் படைப்பாளிகள் குறிப்பிடப்படுதல் வேண்டும். மூல படைப்பாளி மற்றும் மூல படைப்பு கிடைக்கும் இடம் போன்ற தகவல்களை அளித்தே பகிர வேண்டும்.     Non-commercial இலாபநோக்கமற்ற / NonCommercial (nc) ஆக்கங்களை படியெடுக்க, விநியோகிக்க, காட்சிப்படுத்த, இயக்க, வழிபொருட்களை உருவாக்க ஆகிய உரிமைகள் வழங்கப்படுகின்றன. ஆனால் இலாப நோக்கமற்ற நோக்கங்களுக்கு மட்டுமே. விற்பனை செய்யக்கூடாது.     Non-derivative வழிப்பொருளற்ற / NoDerivatives (nd) ஆக்கங்களை படியெடுக்க, விநியோகிக்க, காட்சிப்படுத்த, இயக்க ஆகிய உரிமைகள் வழங்கப்படுகின்றன. ஆனால் வழிபொருட்களை உருவாக்குவதற்கான உரிமை தரப்படவில்லை.     Share-alike அதே மாதிரிப் பகிர்தல் / ShareAlike (sa) வழிபொருட்களை முதன்மை ஆக்கத்துக்குரிய அதே உரிமங்களோடே விநியோகிக்க முடியும். ஆறு முதன்மை உரிமங்கள் ஆக்கப்பணி ஒன்றினை படைப்பாக்கப் பொதுமங்கள் உரிமைப்படி வழங்கும்போது தெரிவு செய்யப்படக்கூடிய முதன்மையான ஆறு உரிம ஒப்பந்த வகைகளும் கீழே பட்டியலிடப்படுகின்றன. குறைந்த கட்டுப்பாடுகள் கொண்ட உரிமத்தில் இருந்து கூடிய கட்டுப்பாடுகள் கொண்டது வரை இவை வரிசைப்படுத்தப்பட்டுள்ளன. 1. Creative Commons Attribution BY – குறிப்பிடுதல் (CC-BY) [] படைப்பாக்கப் பொதுமங்கள் வழங்கும் ஒப்பந்தங்களில் இதுவே கட்டுப்பாடுகள் குறைந்த ஒப்பந்தமாகும். இவ்வொப்பந்தத்தின் படி நீங்கள் உங்கள் ஆக்கத்தினை வழங்கும்போது, உங்கள் ஆக்கத்தில் மாற்றங்கள் செய்ய, பயன்படுத்த, அதனை அடிப்படையாகக்கொண்டு புதிய ஆக்கங்களை உருவாக்க அனைவருக்கும் உரிமை உண்டு. அத்தோடு உங்கள் ஆக்கத்தினை அல்லது மாற்றங்கள் செய்யப்பட்ட புதிய ஆக்கத்தினை வர்த்தக நோக்கங்களுக்காக பயன்படுத்தவும் அனுமதி உண்டு. உங்கள் ஆக்கத்தினை எது வேண்டுமானாலும் செய்யமுடியும். ஆனால் என்ன செய்தாலும் உங்கள் பெயரை குறிப்பிட்டாகவேண்டும். அதுவே இந்த ஒப்பந்தத்தின் ஒரேயொரு கட்டுப்பாடு. சுருக்கமாக ஆக்குநர் பெயர் கட்டாயம் குறிப்பிடப்படவேண்டும். மாற்றம் செய்தல், புத்தாக்கங்களுக்கு அடிப்படையாக பயன்படுத்துதல் அனுமதிக்கப்பட்டுள்ளது. வர்த்தக நோக்கம் கருதிய பயன்பாடு அனுமதிக்கப்பட்டுள்ளது. இதே உரிமத்தினடிப்படையிலேயே பகிர்தல் நிகழவேண்டும் என்றில்லை. மாற்றங்கள் செய்த பின் பயனர் வேறு உரிமத்திலும் பகிரலாம்.   2.Creative Commons Attribution-ShareAlike குறிப்பிடுதல் – அதே மாதிரிப் பகிர்தல் (CC-BY-SA) [] இந்த ஒப்பந்தமானது உங்கள் ஆக்கப்பணியினை மாற்ற, திருத்த, அதனை அடிப்படையாகக்கொண்டு புதிய ஆக்கங்களை உருவாக்க என்று சகலதிற்கும் மற்றவரை அனுமதிக்கிறது. புதிய ஆக்கத்தினை வர்த்தக நோக்கங்களுக்காகவும் பயன்படுத்த முடியும். ஆனால், அவ்வாறு பகிரப்படும் வேளையில் உங்கள் ஆக்கமோ அல்லது அதனை அடிப்படையாககொண்டு உருவாகும் புதிய ஆக்கமோ உங்கள் பெயரை கட்டாயம் குறிப்பிடவேண்டும். அத்தோடு நீங்கள் பயன்படுத்திய உரிம ஒப்பந்தத்தை அப்படியே பயன்படுத்தவேண்டும். சுருக்கமாக ஆக்குநர் பெயர் கட்டாயம் குறிப்பிடப்படவேண்டும். மாற்றம் செய்தல், புத்தாக்கங்களுக்கு அடிப்படையாக பயன்படுத்துதல் அனுமதிக்கப்பட்டுள்ளது. வர்த்தக நோக்கம் கருதிய பயன்பாடு அனுமதிக்கப்பட்டுள்ளது. இதே உரிமத்தினடிப்படையிலேயே பகிர்தல் நிகழவேண்டும்.   3. Creative Commons Attribution-NoDerivs குறிப்பிடுதல் – வழிப்பொருளற்ற (CC-BY-ND) [] உங்கள் ஆக்கப்பணியில் எந்த மாற்றமும் செய்யாமல், உங்கள் பெயரை காட்டாயம் குறிப்பிடும் வரைக்கும் வர்த்தக ரீதியான அல்லது வர்த்தக நோக்கம் அல்லாத எந்த தேவைக்காகவும் உங்கள் ஆக்கத்தினை மீள விநியோகிக்க, பகிர்ந்துகொள்ள இவ்வொப்பந்தம் அனுமதியளிக்கிறது. சுருக்கமாக ஆக்குநர் பெயர் கட்டாயம் குறிப்பிடப்படவேண்டும். மாற்றம் செய்தல், புத்தாக்கங்களுக்கு அடிப்படையாக பயன்படுத்துதல் அனுமதிக்கப்படவில்லை. வர்த்தக நோக்கம் கருதிய பயன்பாடு அனுமதிக்கப்பட்டுள்ளது. இதே உரிமத்தினடிப்படையிலேயே பகிர்தல் நிகழவேண்டுமென்றில்லை.   4. Creative Commons Attribution-NonCommercial குறிப்பிடுதல் – இலாப நோக்கமற்ற (CC-BY-NC) [] இந்த உரிமம் வர்த்தக நோக்கம் தவிர்ந்த தேவைகளுக்காக உங்கள் ஆக்கத்தினை திருத்த, வடிவம் மாற்ற, மீள்சுழற்சிக்குட்படுத்த அனுமதிக்கிறது. இந்த ஒப்பந்தத்திலும் உங்கள் ஆக்கத்தினை அடிப்படையாகக்கொண்டு புதிதாக உருவாக்கப்படும் ஆக்கத்தில் உங்கள் பெயர் குறிப்பிடப்பட வேண்டும், வர்த்தக நோக்கங்களுக்கு பயன்படுத்த முடியாது. ஆனால் ஒரேயொரு வித்தியாசம், உங்கள் ஆக்கம் தாங்கியுள்ள உரிம விதிகளுக்கு அமைவாகத்தான் புதிதாக உருவாக்கப்படும் ஆக்கத்தையும் விநியோகிக்கவேண்டும் என்ற கட்டாயம் இல்லை. சுருக்கமாக ஆக்குநர் பெயர் கட்டாயம் குறிப்பிடப்படவேண்டும். மாற்றம் செய்தல், புத்தாக்கங்களுக்கு அடிப்படையாக பயன்படுத்துதல் அனுமதிக்கப்பட்டுள்ளது வர்த்தக நோக்கம் கருதிய பயன்பாடு அனுமதிக்கப்படவில்லை. இதே உரிமத்தினடிப்படையிலேயே பகிர்தல் நிகழவேண்டுமென்றில்லை. 5. Creative Commons Attribution-NonCommercial-ShareAlike குறிப்பிடுதல் – இலாப நோக்கமற்ற – அதே மாதிரிப் பகிர்தல்(CC-BY-NC-SA) [] இந்த ஒப்பந்தம், மற்றவர்கள் உங்கள் ஆக்கத்தை மீள்சுழற்சிக்குட்படுத்த, மாற்றங்கள் செய்ய, தொகுக்க, உங்கள் ஆக்கத்தினை அடிப்படையாக வைத்து புதிய ஆக்கங்களை செய்ய அனுமதிக்கிறது. ஆனால் மாற்றம் செய்யப்பட்டு வெளியிடப்படும் புதிய ஆக்கம், உங்கள் பெயரை குறிப்பிட வேண்டும் அத்தோடு இதே அனுமதிகளை அப்புதிய ஆக்கமும் வழங்க வேண்டும். மற்றவர்கள் உங்கள் ஆக்கத்தினை தரவிறக்கவும் பகிர்ந்தளிக்கவும் முன்னைய ஒப்பந்தம் போன்றே இதுவும் அனுமதிக்கிறதென்றாலும், உங்கள் ஆக்கத்தில் மாற்றங்கள் செய்ய அனுமதிப்பதே இவ்வொப்பந்தத்தின் சிறப்பு. உங்கள் ஆக்கத்தினை அடிப்படையாகக்கொண்டு புதிதாக உருவாக்கப்படும் ஆக்கங்களும் நீங்கள் வழங்கிய உரிமத்தினடிப்படையிலேயே அமைய வேண்டும் என்பதால் புதிய உருவாக்கங்களையும் வர்த்தகத் தேவைகளுக்காக பயன்படுத்த முடியாது. சுருக்கமாக ஆக்குநர் பெயர் கட்டாயம் குறிப்பிடப்படவேண்டும். மாற்றம் செய்தல், புத்தாக்கங்களுக்கு அடிப்படையாக பயன்படுத்துதல் அனுமதிக்கப்பட்டுள்ளது. வர்த்தக நோக்கம் கருதிய பயன்பாடு அனுமதிக்கப்படவில்லை. இதே உரிமத்தினடிப்படையிலேயே பகிர்தல் நிகழும்.   6. Creative Commons Attribution-NonCommercial-NoDerivs குறிப்பிடுதல் – இலாபநோக்கமற்ற, வழிப்பொருளற்ற (CC-BY-NC-ND) [] இதுவே முதன்மையான ஆறு உரிம ஒப்பந்தங்களிலும் கட்டுப்பாடுகள் கூடியதாகும். இது மீள் விநியோகத்தை அனுமதிக்கிறது. இவ்வுரிம ஒப்பந்தம் “இலவச விளம்பர” ஒப்பந்தம் என்றும் அழைக்கப்படுகிறது. ஏனெனில், உங்கள் ஆக்கவேலையை தரவிறக்கவும், மற்றவரோடு பகிர்ந்துகொள்ளவும் இது எல்லோரையும் அனுமதிக்கிறது. ஆனால் பகிரப்படும்போது உங்களது பெயர், உங்களுக்கான தொடுப்பு போன்றவற்றையும் வழங்க வேண்டும். பகிர்பவர்கள் உங்கள் ஆக்கப்பணியில் எந்த மாற்றமும் செய்ய முடியாது. வர்த்தக நோக்கங்களுக்காக பயன்படுத்தவும் முடியாது. மாற்றங்கள் அனுமதிக்கப்படவில்லை என்பதால் இயல்பாகவே உங்கள் ஆக்கத்தினை பகிரும்போது இதே உரிம ஒப்பந்தத்தின் அடிப்படையிலேயே விநியோகம் நிகழும். சுருக்கமாக ஆக்குநர் பெயர் கட்டாயம் குறிப்பிடப்படவேண்டும். மாற்றம் செய்தல், புத்தாக்கங்களுக்கு அடிப்படையாக பயன்படுத்துதல் அனுமதிக்கப்படவில்லை. வர்த்தக நோக்கம் கருதிய பயன்பாடு அனுமதிக்கப்படவில்லை இதே உரிமத்தினடிப்படையிலேயே பகிர்தல் நிகழும். இந்த ஆறு உரிமங்களில் ஒன்றை உங்கள் படைப்புகளுக்கு அளிப்பதன் மூலம், அவை பலரால் பகிரப்பட்டு சாகாவரம் பெறுகின்றன. உங்கள் வலைப்பதிவுகள், கட்டுரைகள், புகைப்படங்கள், காணொளிகள் என எந்த படைப்பையும் இந்த கிரியேட்டிவ் காமன்ஸ் உரிமைகளில் வெளியிடலாம். இந்த இணைப்பின் மூலம், உங்களுக்கு தேவையான கிரியேட்டிவ் காமன்ஸ் உரிமையை தெரிவு செய்யலாம். http://creativecommons.org/choose/ உங்கள் படைப்புகளை பலரும் பகிரும் போது, உங்கள் அறிவு பலரையும் சென்றடைகிறது. எழுத்தாளருடைய பதிப்புரிமை எப்போதும் அவரிடமே இருக்கும். படைப்பாளியின் பதிப்புரிமையில் எவ்வித பாதிப்பும் ஏற்படாமல், குறித்த படைப்பாளியின் கருத்துக்களையும் சிந்தனைகளையும் சகல மக்களுக்கும் கொண்டு சென்று சேர்த்து புதிய சிந்தனைப்போக்குக்கள் உருவாக்கத்திற்கான அறிவுப் பரவலாக்கத்தை மாத்திரமே கிரியேட்டிவ் காமன்ஸ் உரிமை செய்கின்றது. இந்த அனுமதியின் நன்மைகள் படைப்பாளர்களுக்கு படைப்பாளரது படைப்பு, வாசகர் அனைவருக்கும் பகிரும் உரிமை உள்ளதால், உலகெங்கும் உள்ள வாசகர்களைச் சென்றடைகின்றது. இதன் மூலம் படைப்பாளருடைய அறிவும் கருத்துக்களும் சிந்தனைகளும் வளர்ந்து வரும் படைப்பாளர்கள் மத்தியிலும் தமிழ்ச்சமூகத்தின் மத்தியிலும் சென்றடைகின்றன. ஒரு படைப்பாளரைப் பொறுத்தவரை அவருடைய கருத்துக்கள் சிந்தனைகள் பரந்துபட்ட மக்களைச் சென்றடைவதே அவருடைய முதன்மை நோக்கம் என்ற வகையில் அவருடைய எண்ணம் நிறைவேறுகின்றது. பல்வேறுபட்ட நாடுகளில் உள்ளவர்களையும் படைப்புக்கள் சென்றடைவதன் மூலம் அவர்களது கருத்துக்களிலும் சிந்தனைகளிலும் தாக்கத்தைச் செலுத்தும் நிலமை தோற்றுவிக்கப்படுகின்றது. ஒரு படைப்பாளருடைய படைப்பு/கருத்து/சிந்தனை வாசகர்கள் மத்தியில் தாக்கத்தைச் செலுத்தும் போதும் வாசகருடைய வாழ்வியலிலும் சமூகம் சார்ந்த நிலைப்பாடுகளிலும் தாக்கத்தைச் செலுத்தும் போதும் அப்படைப்பாளி சாகாவரம் பெற்று தொடர்ச்சியாக உயிர்வாழ்கின்றார். வாசகருக்கு வாசகர் தாம் படிக்கும் நூல்களை நண்பருடன் பகிர்ந்து கொள்ளலாம். தமது வலைப்பதிவில் பகிரலாம். தாம் விரும்பிய புகைப்படத்தை தமது அலுவலக பயன்பாட்டிற்கு பயன்படுத்தலாம். சமுக வலைத்தளங்களில் பகிரலாம். மின்னூலாக்கி பல கருவிகளில் படிக்கலாம். மாற்றங்கள் செய்யும் உரிமை இருந்தால், விரும்பியவாறு மாற்றயும் பகிரலாம். வணிக உரிமை இருந்தால், விற்பனையும் செய்யலாம். பகிர்தல் என்பது மனித குலத்தின் அடிப்படைப் பண்பு. நாம் விரும்பும் எதையும் பகிர்வது நம் உரிமை. புகைப்படங்கள் Flickr.com, commons.wikimedia.org போன்ற தளங்களில், நீங்கள் கிரியேட்டிவ் காமன்ஸ் உரிமையில் பகிரலாம். கிரியேட்டிவ் காமன்ஸ் உரிமையில் பகிரப்பட்ட படைப்பகளை தேடி, அவற்றை உங்கள் நூல்களில், வலைப் பதிவுகளில் பயன்படுத்தலாம். கிரியேட்டிவ் காமன்ஸ் உரிமையில் உள்ள படங்களுக்கான தேடுபொறி இதோ. http://search.creativecommons.org/ அடுத்த முறை உங்களுக்கு ஒரு படம் தேவைப்படும் போது, சும்மா கூகுள் தேடுபொறியில் தேடி, உங்களுக்கு உரிமை இல்லாத படத்தை பயட்படுத்துவதை விட, இங்கே தேடி, பகிரும் உரிமை உள்ள படங்களை பயன்படுத்துங்கள். கல்யாண் வர்மா என்ற புகழ்பெற்ற வன விலங்கு புகைப்பட நிபுணர், தமது அரிய புகைப்படங்கள் யாவையும் கிரியேட்டிவ் காமன்ஸ் உரிமையில் வெளியிட்டதால், தாம் பெற்ற சிறப்புகளையும், பயன்களையும் பற்றி இந்த காணொளியில் பேசுகிறார். http://www.inktalks.com/discover/117/kalyan-varma-free-art-is-profitable   மின்னூல்கள் – FreeTamilEbooks.com திட்டம் பல தளங்களிலும், வலைப்பதிவுகளிலும் ‘காப்புரிமை உள்ளது’, ‘எங்கும் நகலெடுத்து பகிரக் கூடாது’ என்று பார்த்திருப்பீர்கள். இதனால் வாசகருக்கு எந்த உரிமையும் இல்லை. இணைய செலவை சேமிக்க, நீங்கள் அந்த வலைப்பதிவுகளை சேமித்து வைத்து, பிறகு படிக்கலாம் என்று நினைப்பது முடியாது. ODT, PDF, DOC கோப்புகளாக மாற்றக் கூடாது. சில ஆண்டுகளில் அந்த வலைத்தளம் மூடப்பட்டால்,அவ்வளவுதான். அதில் இருந்த தகவல்களை யாரும் வைத்திருக்க முடியாது. கூடாது. இதுபோல் அழிந்த வலைத்தளங்கள் ஏராளம். தமிழில் புகழ்பெற்று விளங்கிய ‘அம்பலம்’ மின்னிதழ் போல, காப்புரிமை கொண்டு, அழிந்த பின் Backup கூட இல்லாத தளங்கள் பல. இவ்வாறு காப்புரிமை கொண்டுள்ளதால், எழுதியவருக்கு நட்டம் அதிகம். பல வாசகரை அடைய எழுதிய படைப்புகள், வலைத்தளம் தவிர வேறு வடிவங்களில் வாசகரை அடைய முடிவதில்லை. இப்போது, படிப்பதற்கென கிண்டில், டேப்லட் என பலவகை கருவிகள் உள்ளன. இவற்றில் யாரும் வலைத்தளங்களை படிப்பது கடினம். ஆனால் இவற்றில் படிப்பதற்கேற்ப epub, mobi, PDF என பல வகை கோப்புகள் உள்ளன. வலைத்தளங்களை இது போன்று மின்னூலாக்கினால், வாசகர்களை எளிதில் படிக்க வைக்கலாம். ஆனால் இது போன்று மின்னூலாக்கி பகிர்வதை ‘காப்புரிமை’ தடுக்கிறது. ஆனால், சிலர் கிரியேட்டிவ் காமன்ஸ் உரிமையில் தமது வலைப்பதிவுகளையும், நூல்களுயும் வெளியிட்டுள்ளதால், FreeTamilEbooks.com திட்டக் குழுவினர், அவற்றை மின்னலாக்கி வெளியிடுகின்றனர். இந்த நூல்களை யாவரும், படிக்கலாம். பகிரலாம். இதுவரை சுமார் 100 மின்னூல்கள் வெளிவந்துள்ளன. ஒவ்வொரு மின்னூலும் குறைந்தநு 100 பதிவிறக்கங்கள், சில மின்னூல்கள் 15,000 பதிவிறக்கங்கள் என உலகெங்கும் உள்ள தமிழ் வாசகர்களை இந்த மின்னூல்கள் அடைகின்றன. கிரியேட்டிவ் காமன்ஸ் உரிமையால் மட்டுமே இது போன்ற புது முயற்சிகள் சாத்தியமாகின்றன. இது போல, மேலும் புது வகை முயற்சிகளுக்கும் வாய்ப்பளிக்கின்றது. ஏட்டில் இருந்து அச்சு நூலுக்கு வந்ததே, அதிகம் பேரே சென்றடைய. அச்சிலிருந்து இணைய வடிவிற்கு மாறியது உலகெங்கும் சென்றடைய. ‘காப்புரிமை’ கொண்டு இந்த பரவலை தடுக்காதீல்கள். கிரியேட்டிவ் காமன்ஸ் உரிமையில் உங்கள் படைப்புகளை வெளியிட்டு, உங்கள் வாசகருக்கும் பகிரும், மாற்றங்கள் செய்யும் உரிமை கொடுங்கள். வாசகர்கள் உங்களை வாழ்த்திக் கொண்டே படிப்பர். பகிர்வர். உங்கள் படைப்புகளும் சாகாவரம் பெறும்.   மேலும் படிக்க. https://creativecommons.org/licenses/ http://www.wired.co.uk/news/archive/2011-12/13/creative-commons-101   http://creativecommons.org/videos/get-creative http://www.slideshare.net/DonnaGaudet/creative-commons-32865734 http://www.assortedstuff.com/stuff/?p=413 http://thepowerofopen.org/     நன்றி – நூலக நிறுவனம் வெளியிட்ட கையேடு ‘படைப்பாக்கப் பொதுமங்கள் – எழுத்தாளர்களுக்கான அறிமுகம்’ உரிமை – Creative Commons Attribution/Share-Alike License http://creativecommons.org/licenses/by-sa/3.0/