[] 1. Cover 2. Table of contents எல்லாரும் முட்டாள்கள் என்னைத் தவிர எல்லாரும் முட்டாள்கள் என்னைத் தவிர   நிர்மலா ராகவன்   nirurag@gmail.com   மின்னூல் வெளியீடு : FreeTamilEbooks.com   உரிமை : CC-BY-SA-NC கிரியேட்டிவ் காமன்ஸ். எல்லாரும் படிக்கலாம், பகிரலாம்.   அட்டைப்படம் - லெனின் குருசாமி - guruleninn@gmail.com   மின்னூலாக்கம் - ஐஸ்வர்யா லெனின் - aishushanmugam09@gmail.com   This book was produced using pandoc   பதிவிறக்கம் செய்ய - http://FreeTamilEbooks.com/ebooks/ellarum_muttalgal_ennai_thavira மின்னூல் வெளியீட்டாளர்: http://freetamilebooks.com அட்டைப்படம்: லெனின் குருசாமி - guruleninn@gmail.com மின்னூலாக்கம்: ஐஸ்வர்யா லெனின் - aishushanmugam09@gmail.com மின்னூலாக்க செயற்திட்டம்: கணியம் அறக்கட்டளை - kaniyam.com/foundation Ebook Publisher: http://freetamilebooks.com Cover Image: Lenin Gurusamy - guruleninn@gmail.com Ebook Creation: Iswarya Lenin - aishushanmugam09@gmail.com Ebook Project: Kaniyam Foundation - kaniyam.com/foundation This Book was produced using LaTeX + Pandoc நன்றி இதைத் தொடராக வெளியிட்ட வல்லமை.காம் குழுவினருக்கு நன்றி. எல்லாரும் முட்டாள்கள் – என்னைத் தவிர நமக்குப் பலபேரைத் தெரிந்திருக்கலாம். அவர்களில் எத்தனைபேர் நம்மைப் புரிந்துகொள்கிறார்கள்? நாம்தான் அவர்களை முழுமையாகப் புரிந்துகொள்கிறோமா? அனேகமாக எல்லா மனிதர்களும் தம்மை ஒத்தவர்களை மட்டும்தான் ஏற்பார்கள். மற்றவர்களெல்லாம் முட்டாள், அல்லது அசடு என்று நம்புவார்கள். மற்றவர்கள் நம்மைப்பற்றி என்ன நினைத்துவிடுவார்களோ என்று அஞ்சி, முந்திக்கொள்கிறார்கள். அவ்வளவுதான். சில நிமிடங்களோ, வாரங்களோ மட்டுமே ஒருவருடன் பழகினால் அவரைப் புரிந்துகொள்ள முடியுமா? புரிந்துகொள்ள முடியாததால்தான் ஏளனம். கதை என் சக ஆசிரியை ரொஜிதா (ROZITA) பதின்ம வயது மாணவர்களை, ‘இந்தக் குரங்குகள்’ என்றுதான் குறிப்பிடுவாள். பொறுக்கமுடியாது, ஒருமுறை, “உன் குழந்தைகளை ‘குரங்கு’ என்று சொல்வாயோ?” என்று கேட்டுவிட்டேன். “சேச்சே!” என்றாள், சிரித்தபடி. அவளைப்போல், ‘நான்’, ‘எனது’ என்றே யோசித்தால், ‘நம்’ என்பது புரியாமல் போய்விடும். பிறர் நிலையில் நம்மைப் பொருத்திக்கொள்வது பிறரைக் குறைகூறுவதற்குமுன், நமக்கு வாய்த்த நல்வாழ்க்கை அவர்களுக்கும் அமைந்திருக்குமா என்று சற்று யோசித்தால் அவர்களது நடத்தைக்குக் காரணம் புரியும். பதின்ம வயதிற்கே உரிய குணம் எல்லாவற்றிற்கும் சிரிப்பது. வசதி குறைந்த குடும்பங்களிலிருந்து வந்த மாணவர்கள் வீட்டில் அன்பு கிடைக்காதபோது, தம்மையொத்த பிற மாணவர்களுடன் பழக நேர்ந்தால் அவர்களுக்குக் கூடுதலான மகிழ்ச்சி. ரொஜிதாவுக்கு அது புரியவில்லை. கதை ஒரு மாணவன் எதற்கும் அடங்கவில்லை. அவன் தாயைச் சந்தித்தபோது, “கொஞ்சங்கூட மரியாதை இல்லாமல் பேசுகிறான்,” என்று புகார் செய்தேன். அவள் பெருமூச்சுடன், “வீட்டிலும் அப்படித்தான்!” என்றாள். எங்கு, எப்போது தவறு நேர்ந்திருக்கும்? இத்தகைய பெற்றொர், சிறு குழந்தைகளைத் திட்டக்கூடாது, அவர்கள் மனம் நோக எதையும் செய்யவும் கூடாது, அவமானம் அடைந்துவிடுவார்கள் என்று நம்பி வளர்க்கிறார்கள். நினைவு தெரிந்த நாளிலிருந்து தான்தோன்றித்தனமாக எதையும் செய்து பழகியவன், திடீரென்று பதின்ம வயதில் கண்டிப்பை ஏற்பானா? இன்னொரு கதை வகுப்பில் கீழ்ப்படியாமல், படிப்பிலும் கவனம் செலுத்தாது இருந்த மாணவர்களுள் ஆதாமும் ஒருவன். ஆனால் பரீட்சையில் பௌதிகப் பாடத்திலிருந்த கஷ்டமான கணக்குகளைச் சரியாகப் போட்டிருந்தான். எனக்குச் சந்தேகம் வந்தது. “என்னெதிரில் இப்போது போட்டுக் காண்பி!” என்றேன். சற்றும் யோசியாது, சில வினாடிகளிலேயே முடித்தான். மகா புத்திசாலி. ஏதோ குழப்பத்தில் ஆழ்ந்திருக்கிறான் என்று புரிந்தது. வகுப்பு முடிந்ததும் என்னுடைய அறையில், சில நண்பர்களுடன் வந்து, என்னைச் சந்திக்குமாறு ஆதாமிடம் கூறினேன். எடுத்த எடுப்பிலேயே, “உன் அப்பா உங்களுடன் இருக்கிறாரா?” என்று கேட்டேன். “அப்பப்போ,” என்றான், அடக்கிய குரலில். “உன் நண்பர்கள் எதிரில் இதைப்பற்றிப் பேசலாமா?” என்று கேட்டுக்கொண்டேன். ‘அதனால் என்ன! நாங்கள் பார்க்காததா!’ என்பதுபோல் அவர்கள் கையை மேலும் கீழும் ஆட்டினார்கள், அலட்சியமாக. தந்தை வேறு பெண் துணைகளுடன் இருக்கும்போது ஆண்குழந்தைகள்தாம் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள். தாயின் தனிமையை, வருத்தத்தை நம்மால் போக்க முடியவில்லையே என்ற குற்ற உணர்ச்சி வேறு. இவனைப்போல் எத்தனை மாணவர்களைப் பார்த்திருப்பேன்! அவர்களிடம், “உன் அப்பாவுக்கும், அம்மாவுக்கும் இடையே இருக்கும் பிரச்னை இது. நீ வீணாகக் குழம்பாமல், உன் எதிர்காலத்தைப்பற்றி யோசி,” என்று பலவாறாக எடுத்துக் கூறுவேன். அதற்குப்பின், நான் ‘எள்’ என்றால் எண்ணைதான்! ஆசிரியர்களும் பிறரைப் புரிந்துகொள்ளும் தன்மையும் பயிற்சி காலத்தில், ஆசிரியர்கள் உளவியல், சமூக இயல் ஆகியவற்றையும் கற்கிறார்கள். உதாரணம்: வசதி நிறைந்த குடும்பத்திலிருந்து வந்த மாணவன் சுயமுன்னேற்றத்தில் ஆர்வம் கொண்டு, நல்லவிதமாக நடப்பான். படிப்பறிவற்ற பெற்றோர்களின் குழந்தைகளுக்கு எவ்வாறு கல்வியில் நாட்டம் பிறக்கும்? அதற்காக, அவர்களைத் துச்சமாக நினைத்துவிடலாமா? பரீட்சையில் தேர்ச்சி பெறும் அளவுக்கு இவை புரிந்தால் போதும் என்ற மனப்பான்மை பெரும்பாலான, எதிர்கால ஆசிரியர்களுக்கு. ஆகையால், செயலில் கொண்டுவர முனைவதில்லை. அவர்களுடைய பின்னணி, கல்விக்கூடங்கள் ஆகியவையும் குறுக்கே வர, கற்றது வெறும் ஏட்டுச்சுரைக்காயாகப் போய்விடுகிறது. அப்படியிருக்க, மாணவர்களை எப்படிப் புரிந்துகொள்ள முடியும்? தத்தம் கண்ணோட்டத்திலிருந்து பிறரை எடைபோடுவது அநேகமாக தவறான முடிவாகத்தான் இருக்கும். கதை “அந்தப் பெண்ணை விரும்பி மணந்தானா! அவன் எவ்வளவு புத்திசாலி! அவளோ, மக்காக இருக்கிறாளே!” – வம்பிகள். கல்வித்திறனிலும், உத்தியோகத்திலும் உயர்ந்தவன் அவன். ‘நான் நிறையப் படித்து, பெரிய உத்தியோகத்திலும் அமர்ந்து, சாதித்துக்கொண்டே இருக்கவேண்டும்!’ என்ற கொள்கை கொண்ட பெண்கள் தனக்குச் சரிப்படாது என்று அவனுக்குத் தோன்றியது. அவர்களால் தனது பெரிய குடும்பத்தை நிர்வகிக்க முடியுமா என்ற கேள்வி எழ, குடும்பப்பாங்கான பெண்ணை மணந்தான். மணவாழ்க்கையும் சுமுகமாக இருந்தது. அவனுக்குத் தன் மனம் புரிந்திருந்தது. அதனால் பிறரையும் புரிந்துகொள்ள முடிந்தது. ஏன் சிலரைப் பிடித்துப்போகிறது? ‘அவர் என்னைப் புரிந்துகொள்கிறார்!’ என்ற உணர்வு எழும்போது நிறைவாக இருக்கும். அப்படிப்பட்டவர் குறைகளே இல்லாதவர் என்று அர்த்தமில்லை. ஆனால், குறைநிறைகளுடன் தன்னை ஏற்றுக்கொண்டவர். அதனால், பிறருடைய குறைகளையும் பெரிதாக எடுத்துக்கொள்வதில்லை. பிறருடைய உணர்ச்சிகளுக்கு மதிப்பு அளிக்கும் முதிர்ச்சியை வளர்த்துக்கொண்டிருக்கிறார்கள். அவர்களைப்போல் அல்லாதவர்கள் அவர்கள் மனதை நோகடித்தாலும், ஏன் அப்படிச் செய்கிறார்கள் என்று புரியும். ‘பழிக்குப் பழி’ என்று வீம்பு இருக்காது. எப்படிப் புரிந்துகொள்வது? பொதுவாக, பிறர் பேசும்போது, தான் எங்கு, எப்படி குறுக்கிடலாம் என்று காத்திருப்பதுதான் பலருக்கு வழக்கம். இது இயற்கை. அப்படியின்றி, ஒருவர் பேசுவதை உன்னிப்பாகக் கவனித்துக் கேட்டால், ஓரளவு புரிந்துகொள்ள முடியும். சிலரது புன்னகைக்குப் பின்னால் வருத்தம் இருக்கலாம். அன்பு கோபமாக வெளிப்படலாம். பலபேர் ஒன்றாக அமர்ந்து பேசிக்கொண்டிருக்கையில், ஒருவர் மட்டும் மற்றவரது முகபாவம், பயன்படுத்தும் வார்த்தைகள் போன்றவற்றை மௌனமாகக் கவனித்துக்கொண்டிருப்பார். இவர் பிறரைப் புரிந்துகொள்ளும் அறிவாளி. அது புரியாது, ‘கர்வி,’ அல்லது, ‘பழகத் தெரியாதவன்’ என்று பட்டம் சூட்டிவிடுவார்கள். தம்பதியருக்கு ஒரே மனமா? புதிதாக மணமானவர்கள் முதலில் பேசிக்கொள்வது: ’நமக்குள் ரகசியமே இருக்கக்கூடாது. அப்போதுதான் நாம் ஒருவரையொருவர் நன்றாகப் புரிந்துகொள்ள முடியும்". இரண்டுமே தவறான எதிர்பார்ப்புகள். ‘நான் திருமணத்திற்கு முன்பே பலருடன் நெருங்கிய தொடர்பு வைத்திருந்தேன்!’ என்று அவர்களுள் ஒருவர் கூறினாலும், மற்றவரின் பொறாமையையும், ‘இப்போது மட்டும் ஒழுக்கமாக இருந்துவிடுவாயோ?’ என்ற சந்தேகத்தையும்தான் தூண்டிவிடுகிறார். நம்மைப்பற்றி நாமே எவ்வளவுதான் விளக்கினாலும், பிறர் நம்மைப் புரிந்துகொள்ள முடியாது. பிறர் நம்மிடம் என்ன எதிர்பார்க்கிறார் என்று யோசித்தே நடப்பதால், பலரும் உண்மையாக நடப்பதுமில்லை. கதை நீண்ட காலம் தாம்பத்தியத்தில் ஈடுபட்டிருந்த முதியவர்களைக் கண்டு, அதிசயப்பட்டுக் கேட்டார்கள்: “உங்களுக்குள் சண்டையே வந்தது கிடையாதா? அப்படி ஒரு புரிந்துணர்வா!” அதற்கான பதில்: “என்னிடம் மட்டும் குறையே கிடையாதா, என்ன! கணவருடைய (மனைவியின்) குறைகளைப் பெரிதுபடுத்துவானேன்! ஏதாவது கெட்டுப்போயிருந்தால், அதைச் சரிசெய்து, பயன்படுத்தும் தலைமுறை எங்களுடையது!” உன்னையே மாற்றிக்கொள்! ‘என்னதான் கிரைண்டர் வந்தாலும், அம்மியிலே அரைச்சாதான் ருசி!’ இப்படிக் கூறிய பெண்மணிக்கு நாற்பத்தைந்து வயதுகூட ஆகியிருக்கவில்லை. ஆனால், எல்லாவித புதிய முயற்சிகளும் நல்லதல்ல, அவற்றைத் தவிர்க்கவேண்டும் என்பது அவளுடைய ஆணித்தரமான நம்பிக்கை. இலக்கு: அரைப்பது. அம்மியில் அரைத்தால், அதிக நேரம் செலவாகும். மின்சார இயந்திரத்தால் அரைப்பதற்குச் சில வினாடிகள் போதும். வேலைப்பளுவும் வெகுவாகக் குறையும். இலக்கு மாறுபடாது இருந்தால், புதிய, எளிதான முறையைப் பின்பற்ற என்ன தடை? ‘அதுதான் மெழுகுவர்த்தி இருக்கிறதே, மின்சார விளக்கு எதற்கு?’ என்று தாமஸ் ஆல்வா எடிசன் நினைத்திருந்தால், இன்றும் அரைகுறை வெளிச்சத்தில்தான் முட்டி மோதிக்கொண்டு இருந்திருப்போம். விமானங்களில் பறக்க முடியாது என்ற நிலை இருந்தால், ‘அயல்நாடுகள்’ என்பனவற்றைப் புத்தகங்களில்தான் படித்தாக வேண்டும். முழுமையாகப் புரிந்தும் இருக்காது. காலத்திற்கு ஏற்றவாறு மாறாததால், பல மிருகங்கள் காணாமல் போய்விட்டன. நிலைமை என்று மாறும்? தற்காலத்தில், தொற்றுநோய் வெகுவாகப் பரவிவிட்டதால், வெளியில் அதிகம் அலைய முடியாத நிலை. பொறுத்துப்போவது கடினம்தான். ஆனால், வேறு வழியில்லை. இந்நிலை விரைவிலேயே மாறிவிடும் என்று நம்பிக் காத்திருக்கமுடியாது. எத்தனை மாதங்கள், ஆண்டுகள் பிடிக்குமோ! ‘நாம் எதற்கு மாறுவது? உலகம்தான் மாறவேண்டும்!’ என்ற வரட்டுப் பிடிவாதம் நடைமுறைக்கு உதவாது. யாருக்காகவும் உலகம் மாறப்போவதில்லை. எதிர்பாராத இந்த மாற்றங்களை ஏற்கமுடியாதுபோக, பலரும் ஆத்திரத்திற்கு உள்ளாகிறார்கள். அதனால், வன்முறை அதிகரித்துவிட்டது. முதியவர்களுக்குத் தம் வயதொத்தவர்களுடன் பேசிப் பழக இயலவில்லையே என்ற மன இறுக்கம். இளையவர்களோ வீட்டிலேயே அடைந்து கிடக்கவேண்டும். அங்கேயே அலுவலக வேலை, பள்ளிப்படிப்பு. பெற்றோர் நாள் முழுவதும் குழந்தைகளுடன் வீட்டிலேயே கழிக்க நேர்கிறது. பணத்தட்டுப்பாடு வேறு. சிறு குழந்தைகளுக்கு இதெல்லாம் புரியாது. அவர்களுடைய பிடிவாதம் அதிகரிக்கும். இச்சமயத்தில் குழந்தைகளை அவர்களுக்குப் பிடித்த பொழுதுபோக்குகளில் ஈடுபடுத்தலாம். முடிந்தால், சிறுவர்களுடன் நாமும் விளையாடலாம். சிரிப்பும் களிப்புமாக இருக்கும். ஆறு வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்குப் புத்தங்களைப் படித்துக்காட்டலாம். உணவு உட்கொள்ளும்போது, கதைகள் சொன்னால் அறிவும் மொழி வளமும் பெருகுவதுடன், கதை கேட்கும் சுவாரசியத்தில், என்ன சாப்பிடுகிறோம் என்றே புரியாது சாப்பிட்டுவிடுவார்கள். இன்றும், என் மகள், “அம்மா! நான் சாப்பிடறபோது நீ கதை சொல்ல மாட்டேங்கறே! அசடாப்போயிடுவேன்!” என்று விளையாட்டாக மிரட்டுவாள்! மாறமாட்டோம்! “தண்ணீர் பாத்திரத்திற்கு ஏற்றாற்போல் தன்னை மாற்றிக்கொள்கிறது. அதுபோல், அறிவாளிகளும் சூழ்நிலைக்குத் தக்கவாறு தம்மை மாற்றிக்கொள்கிறார்கள்” (சீனப் பழமொழி). ‘மாற மாட்டோம்!’ என்ற கொள்கை உடையவர்களின் வாழ்க்கை எளிதாக இராது. ‘வேளை சரியாக இல்லை, கலி முத்திவிட்டது,’ என்று, தாம் கஷ்டப்படுவதற்குப் பல காரணங்கள் கற்பிப்பார்களே தவிர, தாம் எப்படி தம் வாழ்க்கையைச் செம்மையாக அமைத்துக்கொள்ள முடியும் என்ற யோசனை அவர்களுக்கு எழுவதில்லை. வாழ்க்கை ஒரேமாதிரி இருக்காது. ‘நான் செய்வதுதான் சரி!’ என்ற பிடிவாதம் இல்லாது, சற்றே பணிவுடன் நடந்தால்தான் குழப்பங்கள் அதிகரிக்காது. நிம்மதிக்காக மாறித்தான் ஆகவேண்டும். புதிய நிலையை ஏற்பது ‘மாற்றம்’ என்றால், வெளிநாடுகளுக்குப் போய் திரும்பியதும், குட்டையான ஆடைகளும், ஆங்கில உச்சரிப்புடன் கூடிய நுனி நாக்குத் தமிழும், அடிக்கடி தோள்களைக் குலுக்கிக்கொள்வதும் இல்லை. மேற்கல்விக்காகவோ, அல்லது உத்தியோக நிமித்தமோ, வேற்றூருக்குச் சென்று, பெற்றோரின் கண்காணிப்பு இல்லாததால் சுதந்திரமாக உணர்ந்து, தம் வயதொத்தவர்களுடன் தீய பழக்கங்களில் ஈடுபடுவதும் வெற்றியளிக்கும் மாற்றமில்லை. கதை திருமணமானபின், இந்தியாவிலிருந்து நான் மலேசியா வந்தபோது, எல்லாமே வித்தியாசமாக இருந்ததுபோல் உணர்ந்தேன். உத்தியோகத்திற்குப் போக ஆரம்பித்ததும், என் சக, சீன ஆசிரியைகள், மாணவிகள் ஆகியோரிலிருந்து தனித்துத் தெரிந்தேன். நான் இருந்தபடியே என்னை ஏற்கமுடியவில்லை அவர்களால். “When you are in Rome, do as the Romans do!” என்றார்கள் சிலர், கேலியாக. அதைத்தான், “ஊருடன் ஒத்து வாழ்!” என்று சொல்லிவைத்திருக்கிறார்கள். “தலைக்கு எண்ணெய் வைத்துக்கொள்ளாதே!” என்று முகத்தைச் சுளித்தாள், ஒருத்தி. “உன் நிறத்துக்கு வெள்ளை நிற முகப் பவுடர் கூடாது. பழுப்பு நிறமாகப் பார்த்து வாங்கு!” என்று நட்புடன் அறிவுரை கூறினாள் இன்னொருத்தி. புதிய சூழ்நிலையில் அதிக மன இறுக்கமோ, குழப்பமோ இல்லாதிருக்க ஒரு வழிதான் இருந்தது. தாய்மொழி, உணவுப் பழக்கவழக்கங்கள், ஆடையணி இவற்றை மாற்றிக்கொள்ள நான் விரும்பவில்லை. அதற்கும் கேலி: “எப்போதும் புடவையே உடுத்துக்கொள்கிறீர்களே! உங்கள் கணவர் புகார் செய்வதில்லையா?” எனக்கு வந்ததே கோபம்! “இதில் complain பண்ண என்ன இருக்கிறது? அவருடைய அம்மா புடவை கட்டியதைப் பார்த்து வளர்ந்தவர்தானே!” நான் எதற்கு ஆத்திரப்பட்டேன் என்று கேட்டவளுடைய புத்திக்கு எட்டவில்லை. பயந்துவிட்டாள். பேச ஆரம்பித்தபோதே, அம்மா சொல்லிக்கொடுத்தது நான் பேசும் தமிழ். அதை எதற்காக மாற்றவேண்டும்? ‘புரியவில்லை,’ என்று பல தமிழர்கள் குறை கூறினார்கள். “நீங்கள் ஏன் எங்களைப்போல் பேசக்கூடாது? எல்லாரையும் உங்களைப்போல் மாற்ற வேண்டும் என்று பார்க்கிறீர்களோ?” என்று வேறொருத்தி சண்டைபிடித்தாள். “நீங்கள்தான் அப்படிச் சொல்கிறீர்கள்!” என்று பதிலடி கொடுத்தேன். என் உச்சரிப்பைக் கேட்டு யாரும் தங்களுடையதை அவ்வளவு எளிதாக மாற்றிக்கொள்ளப் போவதில்லை. முடியவும் முடியாது. (பத்து வயதுக்குள் ஒரு மொழியைக் கற்றால்தான் சரியான உச்சரிப்பு வரும். இந்த விதிக்கு முன்னணி நடிகர்கள் விலக்கு). உச்சரிப்பில் என்ன, உயர்த்தி, மட்டம்? திரைப்படங்களில் பலவித தமிழ் உச்சரிப்புகளைக் கேட்டு, நாம் புரிந்துகொள்ளவில்லையா? மொழியும், அதன் உச்சரிப்பும் இரு தரப்பினருக்குள் தொடர்பை ஏற்படுத்துவதற்குத்தான். பிரிக்க இல்லை. ஏனோ, பலருக்கும் இது புரிவதில்லை. எல்லாரும், எல்லா விதத்திலும், தம்மைப்போலவே இருக்கவேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள். மாறுவதால் வெற்றி ஐம்பது, அறுபது ஆண்டுகளுக்குமுன்பு வெளியான திரைப்படங்களைப் பார்த்தாலோ, அல்லது அப்போது எழுதப்பட்ட கதைகளைப் படித்தாலோ, இன்று பலருக்கும் ரசிக்காது. அவற்றில் இருக்கும் கருத்துகள் இக்காலத்திற்கு ஒவ்வாதிருப்பதுதான் காரணம். கதை கற்பனைத் திறனுக்கு மாற்றம் அவசியம். இது புரிந்து, பெரும் வெற்றி கண்டவர் சிட்னி ஷெல்டன் (SYDNEY SHELDON) என்ற அமெரிக்க எழுத்தாளர். 1948-லேயே, திரைக்கதைக்கான ஆஸ்கர் விருது பெற்றவர். அவரது முதல் புதினத்தில் நல்ல கரு இருந்தது. ஆனாலும், விற்பனை ஆகவில்லை. அதை மூன்றேபேர்தான் வாங்கினர் என்று சொல்லிச் சிரித்ததைக் கண்டிருக்கிறேன். அவரே ஒன்று வாங்க, அவருடைய தாய் இன்னொன்றை வாங்கினாராம். வாசகர்கள் மனதை எப்படிக் கவருவது என்று யோசித்து, தன் எழுத்தில் மாற்றத்தைக் கொண்டுவந்தார். எப்படி? சிறப்பான கருவைக்கொண்ட கதைகளுக்குள், நிறைய படுக்கையறைக் காட்சிகளை – தொடர்ச்சியாகப் பல பக்கங்களில் – புகுத்தினார். நடையும் விறுவிறுவென்று இருந்ததா? அமோகமான விற்பனை. ‘முன்பு அப்படித்தான் எழுதினேன். இன்றும் அப்படித்தான் எழுதுவேன்!’ என்று பிடிவாதமாக மாற மறுத்திருந்தால், அவருடைய எதிர்காலம் அவ்வளவு சிறப்பாக ஆகியிருக்குமா? மாறுங்கள், ஆனால் நல்லவிதமாக. வெற்றிகாண. கவலையை விட்டுத்தள்ளுங்கள்! “நீங்கள் எப்போதும் சிரித்துக்கொண்டே இருக்கிறீர்களே! வாழ்க்கை உங்களை நல்லவிதமாக நடத்தியிருக்கவேண்டும்!” என்று அனுமானித்தாள் என்னுடன் அதிகம் பழகியிருக்காத ஒருத்தி. அதற்கும் மெல்லச் சிரித்தேன். துன்பமோ, துயரமோ அறவே இல்லாத வாழ்க்கை எங்கானும் உண்டா? சிறு வயதில் ஏற்பட்ட பாதிப்புகளை இறுகப் பிடித்துக்கொண்டிருந்தால், நிம்மதி ஏது! சில இல்லங்களில், மூத்த மகள் தந்தைக்கு அருமையாக இருப்பாள். இரண்டாவது பெண் அம்மாவின் செல்லமாக இருந்தாலும், தந்தை தன்னிடமும் அன்பைப் பொழியவில்லேயே என்ற குறை ஏற்படக்கூடும். தந்தை மறைந்தபின்னும், “அப்பா உன்னைத் தலையிலே வைத்துக்கொண்டு ஆடுவார்!” என்று சகோதரியிடம் வன்மம் பாராட்டுகிறவள் தன்னைத்தானே வருத்திக்கொள்கிறோம் என்பதை உணர்வதில்லை. கடந்தகாலக் கசப்பான நிகழ்வுகளை எப்படிச் சமாளிப்பது என்று புரிந்துவிட்டால், வாழ்க்கை எளிதானதுதான் என்று புரிந்துபோகும். நம்மால் பொறுக்கமுடியாத ஒரு நினைவிலிருந்து விடுபட வேண்டுமானால், அதைப் பற்றி ஆழமாக யோசித்துத்தான் ஆகவேண்டும் – அப்படிச் செய்வது எவ்வளவு வருத்தமாக இருந்தாலும். வேறு வழி கிடையாது. இல்லையேல், அதேபோன்ற அனுபவங்கள் தொடரும். கதை ஒரு பெரிய குடும்பத்தில் வேண்டாத பிள்ளையாகப் பிறந்தவன் செல்வம். மூத்த அண்ணனுக்கோ, அவன் கேளாமலேயே அவனுக்குப் பல சலுகைகள் கிடைத்தன. அவன் தீய பழக்கங்களில் ஈடுபட்டு, வாழ்க்கையை நாசமாக்கிக்கொண்டவுடன், செல்வம் உறுதிபூண்டான்: ‘நான் முன்னுக்கு வந்து, என்னை ஒரு பொருட்டாக மதிக்காதவர்களுக்குப் பாடம் கற்றுக்கொடுப்பேன்’. ஆனால், தன் வாழ்க்கையை நல்லவிதமாக அமைத்துக்கொண்டபோதும், அவன் எதிர்பார்த்த மகிழ்ச்சியோ, நிம்மதியோ கிடைக்கவில்லை. தன்னையுமறியாது, தந்தையைப்போலவே தன்னைத் துச்சமாக நடத்தும் ஒருவனைச் சிறந்த நண்பன் என்று நம்பினான் செல்வம். அதன்பின், ‘யாரையும் நம்ப முடியவில்லை. எல்லாரும் என்னைக் காயப்படுத்துகிறார்கள்!’ என்று புலம்ப ஆரம்பித்தான். இவனிடம் பலரும் தம் குறைகளைப் பகிர்ந்துகொள்ள, அவர்களுக்கு ஆறுதலாகப் பேசுவான். அதே அன்பைத் தன்னிடமும் செலுத்த அவனுக்குத் தெரியாமல் போயிற்று. கடந்தகாலத்தை நினைவுகூர்ந்தாலே வருத்தம் மிக, தன்னிரக்கம் பெருகியது. அதை நினைத்தும் பார்க்க விரும்பவில்லை. அறியாவயதில் ஏதேதோ நடந்திருக்கலாம். கடந்த காலத்திலேயே நிலைத்து, நிகழ்காலத்தை மகிழ்ச்சியின்றிக் கடப்பானேன்! நல்ல நண்பர்களைப்போல் புகழ்ச்சி, பரிசுப்பொருட்களுடன் கவர்ந்து, அதன்பின் உணர்வுபூர்வமாக வதைப்பவர்கள் தொடர்பு எதற்கு? அப்படிப்பட்டவர்களிடமிருந்து விலகுவதுதான் நமக்கு நாமே செய்துகொள்ளும் உதவி. மன்னிப்பு பிறரால் வதைக்கப்பட்டவர்களால் வெகு காலமானாலும் அவர்களை மன்னிக்கமுடியாது. தாம் ஏன் வதையை அனுமதித்தோம் என்று, தம்மீது கொண்ட ஆத்திரமும் குற்ற உணர்வும்கூடத் தணியாது. வதைக்கு ஆளாகிய குழந்தைகளுக்கு எதனால் பாதிப்பு ஏற்பட்டது என்று கூறத் தெரியாது. அவர்களை ஏதாவது வரையச்சொன்னால், மனத்திலிருப்பது சித்திரம்வழி வெளிப்படும். (உளவியல் நிபுணர்கள் இவ்வழியைத்தான் கடைப்பிடிக்கிறார்கள்). செடிகளிடம் ஒரு பாடம் எங்கள் வீட்டில் ஒரு மல்லிகைச் செடி புதராக வளர்ந்திருந்தது. இந்தச் செடி பூத்ததே கிடையாது. ஏனெனில் ஒரு மரத்தின் நிழல் அதன்மேல் படர்ந்திருந்தது. அபூர்வமாக, ஒரே ஒரு கிளை மட்டும் மிக நீண்டிருக்க, அதில் மொட்டுகள்! சூரிய வெளிச்சம் இல்லாததால் பூக்க முடியவில்லை என்று புரிந்து, அது வெளிச்சத்தை நோக்கி வளர்ந்துவிட்டது! சூழ்நிலை சரியாக இல்லை என்றால், அதிலிருந்து எப்படி விடுபடுவது என்பது அதற்குத் தெரிந்திருக்கிறது! இயற்கையால் துன்பம் துன்பமோ, துயரமோ பிறர் கொடுப்பது மட்டுமில்லை. இயற்கையும் அதைச் செய்யும். கதை என் மகளுடைய பள்ளிக்கூட ஆசிரியை கனகா என்னைச் சந்திக்க விரும்புவதாக அழைத்தாள். (‘கண்டிப்பாக உன்னைப்பற்றிக் குறை கூறமாட்டேன்!’ என்று என் மகளிடம் வாக்குறுதி கொடுத்தபின்தான் அவளால் என்னுடன் தொடர்புகொள்ள முடிந்ததாம்!). திருமணம் செய்துகொடுத்தபின்னும், தன் மகளுடன் தங்கிவிட்ட அவளுடைய தாய் இறந்து போயிருக்கிறாள். ஆனால் கனகாவால் அத்துயரத்தை ஏற்க முடியவில்லை. ஒரே மகனைப் பறிகொடுத்த துக்கத்தை நான் எப்படி எதிர்கொண்டேன் என்று அறிய விரும்பினாள் அவள். பொதுவாக, எந்தத் துக்கமும் ஒன்றரை வருடத்துக்குமேல் நீடிக்காது என்று கூறுவார்கள். அது சரியல்ல. துயரை மாற்ற நாம் எதையாவது முனைந்து செய்தால்தான் அது காலம் முழுவதும் நம்மை ஆட்டுவித்து, நடைப்பிணமாக ஆக்கிவிடாது காத்துக்கொள்ள முடியும். “என் அம்மாவுக்கு பாயசம் என்றால் ரொம்பப் பிடிக்கும். இப்போது பண்டிகைக்குக்கூட பாயசம் பண்ண மனம் வரவில்லை,” என்றாள் கனகா. “இரண்டு பேரும் மாலை வேளையில், ஒன்றாக டீ குடிப்போம். இப்போது அழுகை அழுகையாக வருகிறது”. “எப்பவும்போல, இரண்டு கப் டீ போட்டு எதிரெதிரே வைத்துவிட்டு, ‘அம்மா! டீ!’ என்று உரக்கக் கூப்பிடுங்கள். சில தினங்களுக்குப்பின் மனம் அடங்கிவிடும்,” என்றேன். “அம்மாவின் ஃபோட்டோவில் வாய்க்கருகே ஒரு சொட்டு பாயசத்தை வைத்தால், முதலில் அழுகை வரும். ஆனால், நாளடைவில், நிம்மதி கிடைக்கும்,” என்று என் சொந்த அனுபவத்தை விளக்கினேன். உற்றவர் மறைந்தபின் துயருறும் சிலர் என்னிடம் இவ்வாறு ஆலோசனை கேட்டிருக்கிறார்கள். விபத்தில் மகனைப் பறிகொடுத்த ஒரு முதியவர், ‘உங்களிடம் பேசியதும், நிம்மதியாக இருந்தது,’ என்று, வெகு தூரத்திலிருந்து என்னைச் சந்திக்க வந்தார், மறுமுறை. சில வருடங்களுக்குப்பின், அவர் குடும்பத்தில் இன்னொரு துக்கம் நிகழ, அயல்நாட்டிலிருந்த என்னைத் தொடர்புகொண்டார். ‘நான் மாறிவிட்டேன். நீங்களும் மாறலாம். ஓயாமல் அழுதுகொண்டிருக்க வேண்டியதில்லை,’ என்று நான் சொல்லாமல் சொன்னது அவ்விருவருக்கும் நம்பிக்கை அளித்துவிட்டது. போதைப்பழக்கத்தில் ஈடுபட்டு, பின்பு அதிலிருந்து விடுபட்டவர்களையும், சிறைச்சாலையில் தண்டனை அனுபவித்துவிட்டுத் திரும்பித் திருந்தி வாழ்பவர்களையும் கல்விக்கூடங்களில் உரையாற்ற அழைக்கிறார்களே, ஏன்? ‘நீங்களும் மாறலாம்’ என்ற நம்பிக்கையைப் பிறருக்கு ஊட்டுவதற்காகத்தான். ‘அப்போது எனக்குத்தான் தெரியவில்லை. பிறரும் என்னைக் காப்பாற்றத் தவறிவிட்டார்கள். ஆனால், நான் அப்படி இருக்கமாட்டேன். அவதிப்படும் பிறருக்கு ஆதரவாக இருப்பேன்!’ என்ற எண்ணத்தை வளர்த்துக்கொண்டவர்கள் இவர்கள். அப்போக்கால், பிறரது கவலையைப் போக்குவதுடன் தம் மனதையும் ஆற்றிக்கொள்கிறார்கள். பெருந்துயரோ, தீய பழக்கங்களோ மட்டும் மாற்றப்பட வேண்டியதில்லை. மகிழ்ச்சி எங்கே? ‘நமக்கு ஏன் மகிழ்ச்சியே கிடைப்பதில்லை?’ பலருக்கும் மன உளைச்சலை உண்டாக்கும் கேள்வி. தமக்கு என்ன வேண்டும் என்று புரியாததால் வரும் விளைவு இது. நமக்கு உகந்ததாக இல்லாவிட்டாலும், பிறரது எதிர்பார்ப்புகளை ஏற்றுச் செய்யும்போது சலிப்பாகவோ, எரிச்சலாகவோ இருக்கும். எல்லோரிடமும் நற்பெயர் வாங்கவேண்டும், பிறர் மனதை நோகடிக்கக்கூடாது என்ற எண்ணத்துடன், அக்காரியங்களைச் செய்வானேன்! எதற்காக நம்மையே கஷ்டப்படுத்திக்கொள்வது? நம் நலனையும் கவனித்துக்கொள்ள வேண்டாமா? எதிலும் சுயநலம் “எவருமே சிறிதும் சுயநலமின்றி, பிறருக்காகத் தம் வாழ்க்கையை அர்ப்பணித்துக் கொள்வதில்லை” – இவ்வாறு கூறினார் ஆப்ரஹாம் லிங்கனின் நண்பர் ஒருவர். மாஜி அமெரிக்க ஜனாதிபதியோ அக்கூற்றை ஏற்க மறுத்தார். “நான் பிறருக்கு நன்மை செய்வதில் என்ன சுயநலம் இருக்க முடியும்?” என்று விவாதித்தார். “அப்படிச் செய்வதால் உனக்கு என்ன கிடைக்கிறது?” “மகிழ்ச்சிதான்!” “அதுவும் சுயநலம்தானே! உனக்காகத்தானே செய்கிறாய்!” என்று அவரை மடக்கினார் நண்பர். கலைஞர்களும் மனக்கவலையும் பண்பட்ட நடிகர்களும், எழுத்தாளர்களும் தம் அனுபவங்களை செயல்மூலம் வெளிப்படுத்துகிறார்கள். ஒருவரை ஆட்டிப்படைக்கும் எண்ணங்களை, அவற்றால் எழும் பாதிப்பை, வெகுவாகக் குறைக்கும் வலிமை எழுத்துக்கு உண்டு. நிம்மதி பெறுவதற்கு, எழுத்தாளராகத்தான் இருக்கவேண்டும் என்பதில்லை. நம்மை அலைக்கழைக்கும் நிகழ்ச்சிகளைப் பற்றி யோசித்து, அன்றாடம் எழுதிவந்தாலே நம் மனம் புரிந்துபோகும். அநாவசியமான கவலைகளை மனதில் சுமந்து அவதிப்படுவானேன்! சுதந்திரம் என்பது... ஒரு குழந்தை, புதிய விளையாட்டில் ஈடுபடும்போது, “எனக்கு முடியும்!” என்று, தன் உதவிக்கு வரும் தாயை விலக்கிவிடும், இரண்டு வயதிலேயே. சுயமாக ஒரு காரியத்தைச் செய்து, அதில் வெற்றிபெற்றுவிட்டோம் என்று மனமகிழ்ந்து சிரிக்கும் குழந்தைக்குப் பிறரது பாராட்டோ, பரிசுப்பொருட்களோ தேவையில்லை. தன் திறமையால் கிடைக்கும் திருப்திதான் பெரிதாகப்படும். சுதந்திரத்தை நாடும் மனிதனின் அடிப்படை குணம் இது. அதே குழந்தை நாய் துரத்தும்போதோ, இன்னொரு குழந்தை மிரட்டும்போதோ, ஓடிவந்து தாயைக் கட்டிக்கொள்ளும். சுதந்திரத்திற்கு எதிர்மாறான பாதுகாப்பை நாடும் இத்தன்மையும் இயற்கைதான். வயது ஏற, ஏற, சுதந்திரத்தைச் சிறிது சிறிதாக இழக்க நேரிடுகிறது. அது இயற்கைக்கு விரோதமானதாக இருப்பதால், மகிழ்ச்சியும் குறைந்துகொண்டே வரும். பாலர் பள்ளியிலோ, அதன்பின்னரோ, முதன்முறையாக கல்வி கற்கப்போகும் குழந்தைகள் எவராவது சிரித்த முகத்துடன் போவதைப் பார்த்திருக்கிறீர்களா? சில குழந்தைகள் தமக்கே தெரிந்த விதத்தில் எதிர்ப்பார்கள். அன்றைய மதராஸில், என்னை முதல் வகுப்பில் சேர்த்ததும், என் ஓயாத, உரத்த அழுகையைக் கண்டு பயந்த பள்ளி நிர்வாகம், “இனி உங்கள் பெண்ணைப் பள்ளிக்கு அனுப்பாதீர்கள்! இவளைப் பார்த்து, மற்ற குழந்தைகளும் அழுகிறார்கள்!” என்றுவிட்டதால் நான் பிழைத்தேன். வீட்டில் சுதந்திரமாக, சுவற்றுடன் பேசிக்கொண்டிருக்க முடிந்தது. ஆரம்பப்பள்ளியில், ஆசிரியைகள் பெற்றோரின் புரிந்துணர்வுடன் நடத்தமாட்டார்கள். ‘கட்டொழுங்கு’ என்ற பெயரில் அநாவசியமாக மிரட்டுவார்கள், தண்டிப்பார்கள். அவர்களுக்குப் பயந்து, ‘ஆசிரியை என்ன சொல்வார்கள்?’ என்று யோசித்தே ஒவ்வொரு காரியத்தையும் செய்ய முயலும்போது, சுயமாகச் சிந்திப்பது குறைந்துவிடுகிறது. பெரியவர்களானபோதும் இதே பழக்கம் தொடர்கிறது. உன்னையே அறிந்துகொள்! நமக்குப் பிடித்தது-பிடிக்காதது, பலம்-பலவீனம், கனவுகள் போன்றவைகளைப் புரிந்து நடந்தால் எப்போதும் எதையோ இழந்ததுபோன்ற உணர்வு எழுவதைத் தடுக்கலாம். சுதந்திரமாகச் சிந்திப்பதற்குத் துணிச்சல் வேண்டும். சொந்த நாட்டில் ‘பொறுக்கமுடியாதவை’ என்று இருப்பவைகளைப் பகிரங்கமாகச் சொன்னாலோ, எழுதினாலோ தண்டிக்கப்பட்டவர் எத்தனை பேர்! நெல்சன் மண்டேலா ஒரு தகுந்த உதாரணம். தம் துறையில் சாதித்தவர்கள், சாதிப்பவர்கள், எவரை எடுத்துக்கொண்டாலும், பிறரது பழிச்சொற்களை ஏற்காது, தம் சுதந்திரமான எண்ணங்களையும், போக்கையும் விட்டுக்கொடுக்காது இருந்ததைக் காணலாம். ‘இந்தக் காரியத்தை எப்படித்தான் செய்து முடிக்கப்போகிறோமோ!’ என்ற சலிப்பு அவர்களுக்குக் கிடையாது. ஒரு காரியத்தை ஆரம்பித்துவிட்டு, அதை முடிக்கும் தைரியமின்றி, பாதியில் பிறர் விட்டுப்போனவற்றை எடுத்துச் செய்வார்கள். அதனால் வரக்கூடிய பாதிப்புகளைப் பொருட்படுத்தாது, இறுதிவரை போராடுவார்கள். தவறு செய்ய சுதந்திரம் புதிதாக எதையாவது செய்ய முயலும்போது பிழைகளைத் தவிர்க்கமுடியாது. கண்டனத்திற்கும் கேலிக்கும் அஞ்சினால், புதிய முயற்சிகளில் இறங்குவது ஏது! பிறர் நம்மைக் கட்டுப்படுத்த விடாது நடப்பதுதான் சுதந்திரம். பிறருக்காகப் பயந்தோ, அல்லது கடமை உணர்ச்சியாலோ தன்னைத்தானே கட்டுப்படுத்திக்கொள்கிறவர்களுக்கு கருத்துச் சுதந்திரம் பறிபோய்விடுகிறது. அதன் விளைவாக, கற்பனைத்திறன் காணாமல் போய்விடும். கதை மலேசிய ஈப்போ மாநிலத்தில், தவசகாயம் (64 வயது) ஒரு காண்டோமினியத்தின் காவலராகப் பணிபுரிந்துவந்தார். கடந்த ஆண்டு டிசம்பர் மாதம், தொற்றுநோய் பரவாதிருக்க நாட்டில் பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தன. அங்கு வந்திருந்த விருந்தினர் ஒருவரது மகன் அதை மீறி, அந்த வளாகத்திலிருந்து நீச்சல் குளத்தில் இறங்கப்போனபோது, தவசகாயம் தடுத்தார். ஆத்திரமடைந்த தந்தை ஒரு மேசையால் அவர் தலையில் கடுமையாகப் பலமுறை தாக்க, கிட்டத்தட்ட கோமா நிலையில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார் தவசகாயம். விருந்தினருக்கு ‘வேண்டுமென்றே கடுமையாகத் தாக்கிய’ குற்றத்திற்காகத் தண்டனை வழங்கப்பட்டது. எட்டு மாதங்கள் நிலைமை மாறாது இருந்த காவலர் அண்மையில் மரணமடைந்தார். மலேசிய மக்கள் கொதித்தெழுந்தனர். அநியாயமாக ஓர் உயிரைப் போக்கியவர் செய்தது கொலைக்குற்றம் என்று கையெழுத்து மனு ஒன்று பரவியது. சட்டம் அதை ஏற்றால், மரண தண்டனை. ‘எங்கள் சுதந்திரத்தை ஒருவன் பறிப்பதா!’ என்று எண்ணியதுபோல் நடந்தவர் மற்றவரது சுதந்திரம், கடமை இவற்றையெல்லாம் மதிக்காதது ஏன்? ‘என்னை ஏழைத் தொழிலாளி ஒருவன் தடுப்பதா!’ என்று, தன்னை மிக உயர்வாக மதித்ததாலோ? குழந்தைகளுக்குச் சுதந்திரம் தம் குழந்தைகளிடம் அன்பு செலுத்தும் முறை அவர்கள் எந்தத் தவறும் செய்யாமல் பாதுகாப்பது என்றுதான் பல பெற்றோர்கள் நினைக்கிறார்கள். அந்த நோக்கத்துடன், அவர்களுடைய ஒவ்வொரு செயலையும் கண்காணிக்கிறார்கள். குழந்தைகள் எத்தகைய நண்பர்களுடன் பழகுகிறார்கள் என்று தெரிந்திருக்கவேண்டியது அவசியம்தான். ஆனால், ‘நம் அதிகாரம் பறிபோய்விடுமே!’ என்ற கவலையுடன், எத்தனை வயதானாலும், தம் சொற்படியே அவர்கள் எப்போதும் நடக்கவேண்டும் என்று எதிர்பார்ப்பது அக்குழந்தைகளின் வளர்ச்சியைப் பாதிக்காதா? தமக்கு மகிழ்ச்சி அளிப்பது எது என்றே சிலருக்குப் புரியாது போய்விடுவது இத்தகைய பெற்றோரால்தான். அண்மையில் சீனாவில் நடந்த கதை ஏழிலிருந்து பதினோரு வயதான ஏழு சிறுவர்கள் இசை நிகழ்ச்சி ஒன்றில் பெரும் வெற்றி பெற்றனர். இசை மட்டுமின்றி, பல்வித வாத்தியங்கள் வாசிப்பதிலும், வண்ணம் பூசுவதிலும் தங்கள் திறமையைக் காட்ட, Panda Boys புகழேணியின் உச்சாணிக்கொம்பிற்கே போய்விட்டனர். அவர்களுடைய புகழ் நான்கு நாட்களே நிலைத்தது. “இந்த வயதில் குழந்தைகள் தம் வயதினருடன் கலந்து பழக வேண்டும், விளையாடவேண்டும், கல்வி பயிலவேண்டும். இதைவிட்டு, முகவரும் (agent), பெற்றோரும் பணம் சம்பாதிக்கும் கருவிகளாக அவர்களை ஆட்டிப்படைக்கலாமா? அவர்கள் செய்வது சிறார்வதை!” என்று, சமூக வலைத்தளத்தில் பலத்த எதிர்ப்பு கிளம்பியது. இவர்களுக்குமுன் பல சிறுவர்கள் பாலியல் கொடுமைக்கு ஆளாகி இருப்பதையும் எடுத்துக்காட்ட, அவர்களைப்பற்றிய எல்லா விவரங்களும் அழிக்கப்பட்டுவிட்டன. நிறைவேறாமல்போன தமது கனவுகளைப் பிள்ளைகள்மூலம் சாதிக்க எண்ணியவர்களுக்குத் தகுந்த பாடம் இது. எது சுதந்திரம்? ‘என் பெற்றோர் சுதந்திரம் என்பது என்னவென்றே அறியாது வாழ்ந்துவிட்டார்கள். நான் அப்படி இருக்கப்போவதில்லை!’ என்று, இளம்வயதினர் பலர் மனம்போனபடி நடப்பார்கள். தம்மைப்போல் இல்லாதவர்களைக் கேலி செய்து, அவர்களையும் மாற்ற முயல்வார்கள். தீய பழக்கங்களில் ஈடுபடுவதும், சட்டத்தில் பிடிபடுவதும் சுதந்திரமில்லை. தனக்கோ, பிறருக்கோ எந்தவிதத் தீங்கும் இழைக்காது, தன் திறமைகளை மேலும் வெளிக்கொணர நடப்பதுதான் ஒருவர் தனக்குத் தானே செய்துகொள்ளும் உதவி. வெளிநாட்டில் சூழ்நிலைக்கு ஏற்றவாறு தமக்குப் பிடித்ததைச் செய்யும் சுதந்திரமோ, அதற்கான துணிச்சலோ, எத்தனைபேருக்கு இருக்கிறது? வாழ்வாதாரத்திற்காக வெளிநாடுகளுக்குப் போகிறவர்கள் பலர், தம்மைச் சிறுமையாக உணர்வார்கள். நிறையப் பணம் சம்பாதித்தாலும், ஏதோ வெறுமை இருக்கும். பொறாமை, வலுச்சண்டை – இதெல்லாம் வலுத்துவிடுகிறது. தம் சுதந்திரத்தைப் பிறருக்காக விட்டுக்கொடுத்துவிடுகிறோம் என்பதை அவர்கள் உணர்வதில்லை. அந்நிய நாடு பொருளாதாரத்தில் உயர்ந்ததாக இருக்கலாம். கலாசாரத்தால் வேறுபடலாம். அதனால் அந்நாட்டவர்கள் உயர்ந்தவர்களாகிவிட மாட்டார்கள். அவர்கள் நம்மை மட்டம்தட்டிப் பேசினால், அவர்களது கருத்தை ஒத்துக்கொள்வதைப்போல் அசட்டுச்சிரிப்புச் சிரிக்காது, எதிர்க்கவேண்டும். அதாவது, ‘என்னைப் பொறுத்தவரை, நானும், என்னைச் சேர்ந்தவர்களும் உயர்ந்தவர்கள்தாம்!’ என்ற மனப்பான்மையை வளர்த்துக்கொண்டால், சிறுமை உணர்ச்சியும், மன இறுக்கமும் தாக்காது நம்மை நாமே காத்துக்கொள்ள முடியும். ஒரேயடியாக மாற வேண்டிய அவசியமுமில்லை. அத்தகைய மனஉறுதியைச் சிலர் மறுக்கிறார்களா? அவர்கள் நண்பர்களே அல்ல. கற்பனையால் நனவாக்கலாம் உலகப்புகழ் பெற்ற விளையாட்டு வீரர்கள் ஒரு பயிற்சியைத் தொடங்குமுன், அதை எவ்வளவு சிறப்பாகச் செய்யப்போகிறோம் என்று மனக்கண்ணால் பார்க்கிறார்கள். குறிப்பிட்ட சூழ்நிலையில், எந்தத் தருணத்தில் எப்படி விளையாடலாம் என்று மெதுவாக – அது அப்போதே நடப்பதுபோல் – மனக்கண்ணால் பார்க்கிறார்கள். ஆனால், வெறும் கனவுடன் நிற்காமல், அதைச் செயலில் காட்டுகிறார்கள். செயல் முக்கியம். அதன்பின் சிறுகச் சிறுக தம் எதிர்பார்ப்பை உயர்த்திக்கொண்டே போய்த்தான் வெற்றி அடைகிறார்கள். “விளையாட்டு என்பது 10% உடலுழைப்பு, மீதி 90% மனத்தளவில்”. அவர்களுக்கு நாம் சளைத்தவர்களா! எதை அடைய ஆசைப்படுகிறோம் என்பதை மனக்கண்ணால் பார்த்தால், அப்படியே நடக்கும். சாதாரணமான கல்லெனப் பிறர் காண்பதில், சிற்பிகள் உருவம் அமைக்கிறார்களே, எப்படி? ஒன்றைக் கற்பனை செய்து பார்க்கையில், அது எதிரில் இருப்பதுபோன்றே வண்ணம், உரு எல்லாம் அவர்களுக்குக் காணப்படுகிறது. சில பொருட்களோ, மனிதர்களோ நம் எதிரே இல்லாது, அவற்றை நாம் உணரமுடியாதபோதும், அவை இருப்பதாகக் கற்பனை செய்வது முதல் படி. அதன்பின்னர், நமக்கு உகந்தவாறு, நன்மை பயக்குமாறு ஆழ்ந்த கற்பனையில் ஈடுபட்டு, மனக்கண்ணால் இப்போது நடப்பதைப்போல் பார்ப்பது அப்படியே பலிக்கும். கதை என் மகன் சிறு குழந்தையாக இருந்தபோது, நான் அரங்கில் திரைப்படம் பார்த்துக்கொண்டிருந்தேன். அப்போது, தன்னிச்சையாக இரு கை முழங்கைகளும் ஒன்றை ஒன்று பிடித்து லேசாக ஆட்ட, முதலில் ஆச்சரியம். பிறகு புரிந்தது: ‘குழந்தை அழுகிறது!’ இடது கரத்தை லேசாகத் தடவிவிட்டுத் தட்டிக்கொண்டேன். ‘தூங்கு. தூங்கு!’ அதன்பின், என் மனம் சமாதானம் அடைய, அழுகை நின்றுவிட்டது என்று தோன்றிப்போயிற்று. வீட்டுக்குள் நுழைந்தபோதே, “அம்மா! குழந்தை ஓயாம அழுதது. என்ன பண்ணினாலும், அழுகை நிக்கவே இல்லே. திடீருன்னு, மேஜிக் போட்டமாதிரி, தூங்கிப்போயிடுத்து!” என்று, மாறி, மாறி விவரித்தார்கள் என் பெண்கள். நோய்வாய்ப்படும்போது நோயைப் பற்றிச் சிந்திக்காது, பிடித்த விஷயங்கள் நடப்பதுபோல் மனக்கண்ணால் பார்த்தால், நோயின் கடுமை நம்மை பாதிக்கவிடாது, நல்ல உணர்வுகளை எழுப்பலாம். ஒரு முறை, நான் மருத்துவ மனையில் நான்கு தினங்களைக் கழிக்க வேண்டியிருந்தபோது, என்னைச் சுற்றிலும் என்ன நடக்கிறது என்பதை ஆர்வத்துடன் கவனித்தேன். நல்ல கதைக்கான கரு ஒன்று கிடைத்தது. பூனைகளுக்குத் தகவல் அப்போது, ‘தினமும் காலையில், நாம் வளர்க்கும் பூனைகளுக்கு ஆகாரம் போடுவோமே!’ என்ற எண்ணம் எழ, அவை இப்போது எப்படி இருக்கின்றனவோ என்ற உணர்வு எழுந்தது. வேறு யாராவது ஆகாரம் போட்டிருப்பார்கள். ஆனால், அவை விசுவாசம் நிறைந்தவை என்பதால் கவலை. நான் நினைத்தபடியே ஆயிற்று. ஒரு பூனை நான் எப்போதும் உட்கார்ந்து புத்தகம் படிக்கும் நாற்காலியைவிட்டு எழுந்திருக்கவே இல்லை; ஊர் சுற்றிவிட்டு, சாப்பிடும் நேரத்துக்கு மட்டும் திரும்பும் இன்னொன்றோ, வீட்டைவிட்டு நகரவே இல்லை என்று பிறர் சொல்லக் கேட்டேன். பிராணிகளுக்குக் கடிதமா போடமுடியும்! “நான் சீக்கிரம் வீட்டுக்கு வந்துவிடுவேன். எப்போதும்போல் இருங்கள்!” என்று அவற்றிற்குத் தகவல் அனுப்பினேன் – மானசீகமாக. அவர்களுக்கு அது கேட்டிருக்கவேண்டும். பழையபடி நடந்துகொண்டதாம். வெளியூர்களுக்குப் போக வழியின்றி, உற்றவர்களையும் பார்க்கமுடியாது பலரும் தவிக்கும் இக்காலத்தில் மன இறுக்கத்தால் தவிக்காது இருக்க ஒரு நல்ல வழி: ஒரு தோட்டத்தில் இருக்கிறோம். மலர்களின் மணம், வண்ணம், வண்டுகளின் ரீங்காரம் போன்றவற்றை கற்பனையில் அனுபவித்தால், வாழ்க்கை இனிமையாகவே இருக்கும். ருசி ஒரு கதைமாந்தர் உண்ணும்போது ஏற்படும் ருசியை ஆசிரியர் வர்ணித்திருந்தால், ஆழ்ந்து படிப்பவர்களுக்கும் தாமே ருசிப்பதுபோல் இருக்கும். நாவில் நீர் சுரக்கும். சமையல் குறிப்புகளைப் படிக்கும்போதோ, கணினித் திரையில் பார்க்கும்போதோ ஆர்வம் எழுந்து, நாமும் அந்தப் பலகாரத்தை செய்ய ஊக்கம் எழுவது இதனால்தான். துணுக்கு ஒட்டகம் வேப்பிலையைத் துண்ணுமாம். ஐயோ! கஸ்க்குமே! அதுக்கு நீ ஏன் மூஞ்சியை அப்படி வெச்சுக்கறே? நீயா துண்ணப்போறே? கதைக் கரு சில வரிகளே கொண்ட செய்தியைப் படிக்கும்போது, அது தம் எதிரில் அப்போதுதான் நடப்பதுபோன்ற உணர்வு எழும். அதைக் கதையாக விரிவாக்குகிறார்கள் எழுத்தாளர்கள். இம்மாதிரியான கற்பனைகளால் நினைவாற்றல் அதிகரிப்பதும், நிம்மதி கிடைப்பதும் உபரிப் பயன். ஒரு விலாசத்தையோ, தொலைபேசி எண்ணையோ நினைவில் பதித்துக்கொள்ள திரும்பத் திரும்பச் சொல்லிப்பார்த்துக்கொள்ள வேண்டியதில்லை. அவற்றை ஒரு கரும்பலகையில் எழுதியிருப்பதுபோல் கற்பனை செய்தால், அது மனதில் பதிந்துவிடும். நான் கல்பனாஸ்வரம் போட ஆரம்பித்த கதை எனது இசை ஆசிரியர் முதன் முறையாக, ஒரு பாட்டிற்கு ஸ்வரம் அமைக்க ஊக்குவித்தார். நான் எவ்வளவோ முயன்றும், முடியவில்லை. அவர் கோபிக்கவோ, கேலி செய்யவோ இல்லையாயினும், எனக்கு ஏமாற்றமாகிவிட்டது. இரவு தூங்குமுன், நம்மைக் குழப்பும் ஏதாவதொரு கேள்வியை மனதில் எழுப்பினால், காலையில் பதில் தெரிந்துவிடும். அன்றிரவு, நான் கேட்ட ஒரு சில பிரபல பாடகர்கள் எப்படிப் பாடினார்கள் என்று நினைவில் கொண்டுவந்து, அதேபோல் நானும் பாடுவதாகக் கற்பனை செய்தேன். மறுநாள் வகுப்பில் ஸ்வரங்கள் பொழிய, “ராத்திரி பூராவும் இதையே நினைச்சுண்டு இருந்தியாம்மா?” என்று அதிசயப்பட்டுக்கேட்டார் ஆசிரியர். பெருமையுடன் தலையாட்டினேன். நம் எண்ணங்களும், வார்த்தைகளும் பலித்துவிடும். ஆதலால், நல்லதையே நினைக்கவேண்டுவது அவசியம். ஒரு காரியத்தை ஆரம்பித்துவிட்டு, அதை எப்படி முடிப்பது என்று தெரியாமல் திணறும்போது, நல்லதொரு முடிவைக் கற்பனையால் கண்டால், அது நனவாகும். கதை சுமார் நாற்பது ஆண்டுகளுக்குமுன், நாடு தழுவிய ஆங்கிலச் சிறுகதைப்போட்டி ஒன்று அறிவிக்கப்பட்டிருந்தது. அதற்கு முந்தைய வருடம், “அடுத்த வருடம் எனக்கு ஒரு பெரிய பரிசு கிடைக்கப்போகிறது!” என்று என் கணவரிடம் சொன்னேன். அப்போது ஆங்கிலத்தில் பெரிதாக எதுவும் எழுதும் துணிச்சலும் இருக்கவில்லை. எப்படிப்பட்ட கதைகள் எழுதுவது என்ற கேள்விகள் எழ, ஒரு வருடம் முழுவதும், வாரத்தில் மூன்று நாட்கள் கோலாலம்பூரில் இருந்த அமெரிக்க வாசகசாலைக்குப் போய் ஆராய்ச்சி செய்தேன். அடுத்த வருடம், போட்டி அறிவிக்கப்பட்டதும், பரிசுப்பொருளான கடிகாரம் என் கவனத்தை ஈர்க்க, அப்படத்தைத் தொட்டேன். எனக்குள் உறுதி: ‘நான் இதை வாங்குவேன்!’ அதன்பின், அரைமணியில் ஒரு கதை எழுதினேன். கரு பரவாயில்லை. நடை சுமார்தான் என்று தோன்ற, ஒரு வாரம் கழித்து, யாருடைய கதையையோ படிப்பதுபோல், திருத்த ஆரம்பித்தேன். பல முறை திருத்தினேன். நான் விரும்பிய அதே பரிசு என் கைக்கு வந்தது. அந்தக் கடிகாரம் இரண்டாவது பரிசுக்கு, முற்றிலும் தங்கத்தால் ஆனது என்பதையெல்லாம் நான் கவனிக்கவில்லை. அணிவதில் ஆர்வமும் இருக்கவில்லை. ‘என்னால் ஆங்கிலத்திலும் எழுத முடியும்!’ என்ற நம்பிக்கைதான் மகிழ்ச்சி அளித்தது. மனம் செய்யும் மாயம் அண்மையில், தொற்றுநோய்க்காக இரண்டாவது முறைக்கான தடுப்பூசி போட்டுக்கொண்டாள் என் பேத்தி. இரண்டு நாட்களுக்குப்பின், கல்லூரியில் ஒரு முழுப்பரீட்சை. முதன்முறை, ஏதேதோ பக்கவிளைவுகள். ஒரு மாதத்திற்குமுன்னரே நான் கூறினேன், “தினமும் தூங்கப்போறதுக்குமுன்னாடி, ’எனக்கு இந்தத் தடவை ஒரு பக்கவிளைவும் இருக்காது. சுலபமாக, நன்றாகப் பரீட்சை எழுதுவேன்!’னு மனசுக்குள்ளே நினைச்சுக்கோ,” என்றேன். அவள் எண்ணியபடியே நடந்தது அவளுக்குப் பெரும் மகிழ்ச்சி. ‘நமக்கு நல்லது நடக்கும்!’ என்ற நம்பிக்கையுடன் கற்பனை செய்தால், கண்டிப்பாக நாம் விரும்பியது நடக்கும். எவரும் தாழ்ந்தவரில்லை தன்னைவிட ஒரு படி மேலாக இருக்கும் பிறரைக் கண்டால், சிறுமை உணர்ச்சிக்கு ஆளாகாதவர்கள் வெகு சிலரே. அதைத் தணித்துக்கொள்ள, தன்னைவிடச் சிறந்த ஒருவருடன் எப்படியோ இணைந்தால், ‘நம் மதிப்பும் கூடாதா!’ என்று அவர்கள் எண்ணம் போகும். கதை கல்வி, பொருளாதாரம், அழகு ஆகிய எல்லாவிதங்களிலும் தன்னைவிட உயர்ந்த ஒருத்தியைத் தேடி மணந்தான் சம்பத் – பிறர் பொறாமை அடையவேண்டும் என்ற நப்பாசையுடன். அவன் விரும்பியதுபோலவே, அவர்களுக்குப் பொறாமை ஏற்பட்டது. ஆனால், அதை மறைக்க, ‘ஏமாற்றிக் கல்யாணம் செய்துகொண்டுவிட்டான்!’ என்று அவனைக் கேலி செய்வார்கள் என்பதைத்தான் சம்பத் சிறிதும் எதிர்பார்க்கவில்லை. அந்த ஏமாற்றம் மனைவிமேல் கோபமாக மாறியது. அவளையும், அவள் குடும்பத்தினரையும் மட்டம்தட்டிப் பேச ஆரம்பித்தான். தம்பதியர் இருவருக்குமே நிம்மதி பறிபோயிற்று. குடும்பத்தில் உயர்வு தாழ்வு ஒரு குடும்பத்தில் எல்லாக் குழந்தைகளும் ஒரே தன்மை உடையவர்களாக இருப்பார்களா? இது புரியாது, பல பெற்றோர் பழிப்பார்கள்: ‘உன் தங்கையை, தம்பியைப் பார்! எவ்வளவு சுறுசுறுப்பாக, எல்லாவற்றிலும் ஆர்வத்துடன் ஈடுபடுகிறார்கள்! நீயும் இருக்கிறாயே!’ மூத்த குழந்தையின் பொறுமையை ‘அசமஞ்சம்!’ என்று எடுத்துக்கொள்வார்கள். எதையும் பிழையின்றி பொறுப்பாகச் செய்யும் குணம், ‘இவன் எல்லாவற்றிலும் அதிநிதானம்!’ என்ற கேலிக்குரியதாக ஆகிவிடுகிறது. சிறு வயதில், பெற்றோரும் பிறரும் தன்னைப்பற்றி என்ன அபிப்ராயம் கொண்டு நடத்துகிறார்களோ, அதை அப்படியே குழந்தைகள் நம்பிவிடுவார்களே! அதனால், ‘நான் என் பிறரைப்போல் புத்திசாலி இல்லை!’ என்று சிந்தனைபோக, தாழ்மை உணர்ச்சி ஏற்பட்டுவிடுகிறது. உடல் ரீதியாகவோ, அறிவாலோ, தம்மைத் தாழ்ந்தவர்களாக உணர்கிறவர்கள் பிறருடன் பழகத் தயங்கி, ஒதுங்குவதும் உண்டு. கதை என் மாணவன் ஒருவன் வெள்ளைக்காரச் சாயலாக இருப்பான். அவனோ மலாய் குடும்பத்தைச் சேர்ந்தவன். ஆங்கிலேயர்களின் வசம் அன்றைய மலாய் நாடு இருந்தபோது, அவன் வம்சத்தில் யாரோ ஒரு பெண் வெள்ளைக்காரருடன் தகாத உறவு பூண்டிருக்கவேண்டும். (அவர்கள் உள்நாட்டவர்களை மணந்ததில்லை). பல தலைமுறைகளுக்குப்பின், இவனிடம் அந்த ஜீன்ஸ் தன் வேலையைக் காட்டிவிட்டதுதான் பரிதாபம். அவன் வயதொத்த மாணவர்கள் அவனை ஏற்கவில்லை. ஏதோ கேலிப்பொருளைப்போல் அவனை நடத்தினார்கள். அவர்களை எதிர்க்கும் தைரியமின்றி, பிறரிடமிருந்து ஒதுங்கியே இருந்தான். மூளையும் மந்தமாகிவிட்டதுபோல் இருந்தது. என் வயதொத்த சுபீராவின் கதையும் கிட்டத்தட்ட அவனுடையதுபோல்தான். ஒரு வித்தியாசம்: அவளுடைய தந்தை ஜப்பான்காரர். (ஆங்கிலேயர்களுக்குப்பின், ஜப்பானியர் சில காலம் மலாயாவை ஆண்டார்கள்). சுபீராவின் தந்தை பெயர் Putih (மலாயில், வெள்ளை) என்று அடையாளக்கார்டில் குறிப்பிட்டிருந்ததால், யாரும் எதையும் சந்தேகிக்கவில்லை. அவளே சொல்லித்தான் எனக்கு மட்டும் தெரியும். நான் சற்று வியப்புடன், ஒரு சரித்திர ஆசிரியையைக் கேட்டேன்: “ஜப்பானியர் மலாய்ப்பெண்களை மணந்தார்களா?” “இல்லை. அப்பெண்களை வைத்திருந்தார்கள்!” எனக்கு ஏதோ புரிந்ததுபோலிருந்தது. எங்கள் பள்ளிக்கு வந்த புதிதில், அவள் எல்லாருக்கும் ஏதாவது தின்பண்டங்கள் வாங்கி வருவாள். (ஏதோ உள்ளர்த்தத்துடன்தான் இதைச் செய்கிறாள் என்று எனக்குத் தோன்ற, நான் வாங்க மறுத்துவிடுவேன்). விரைவிலேயே, எல்லாரும் அவளை ஒரேயடியாகக் கொண்டாட ஆரம்பித்தார்கள். அவளுடைய அதிகாரம் வலுத்தது. அவள் சொல்வதை யாரேனும் ஏற்காவிட்டால், சண்டை பிடித்து, அவர்களிடம் பேசவேமாட்டாள். வட்டார ரீதியில் நடந்த ஒரு நிகழ்ச்சிக்கு நாங்கள் இருவரும் எங்கள் பள்ளியின் சார்பில் அனுப்பப்பட்டிருந்தோம். அங்கு அவள் ஒரு வார்த்தைகூடப் பேசாது இருந்தது எனக்கு ஆச்சரியத்தை அளித்தது. தான் ஏதாவது சொல்லப்போய், பிறர் மாற்றுக்கருத்து கூறினால், சண்டை போடத் தோன்றுமே என்று தன்னையே அடக்கிக்கொண்டிருப்பாள். ஒரு வேளை, தாழ்மை உணர்ச்சியாலோ, என்னவோ! சமூகத்தால் அவர்களை ஏற்க முடிகிறதோ, இல்லையோ, முறையாகப் பிறக்காத குழந்தைகளால் தங்களைத் தாமே ஏற்க முடிவதில்லை. கதை ‘பல குழந்தைகளைப் பெற்ற ஒருவரின் ஆசைநாயகியாகச் சில காலம் இருந்தவள் பெற்ற பிள்ளை நான்!’ என்ற உணர்வு கிட்டுவைத் தகித்தது. அவன் பிறக்குமுன்பே தந்தை இறந்துவிட்டபின், அவருடைய மனைவி அன்புடன் அவனையும் அவன் தாயையும் ஏற்றாள். ஆனால், ‘இவர்தான் என் தந்தை!’ என்று அவன் பெருமையுடன் எங்கும் சொல்லிக்கொள்ள முடியவில்லை. தன்னையும் அவர்கள் குடும்பத்தில் ஓர் அங்கத்தினராக ஏற்றவர்களைப் பழிக்கு ஆளாகச் செய்யவேண்டும் என்ற வன்மமாக மாறியது கிட்டுவின் ஆத்திரம். இவனைத் ‘தம்பி’ என்று அருமையாக ஏற்றவனுடைய மனைவியை மயக்கி, தன்னுடன் இணைந்து வாழும்படி செய்தான். அப்படியும், அவனைப் பெருந்தன்மையுடன் நடத்தினார்கள். ஆனால், சமூகத்தில் அவனுடைய மதிப்பு அறவே போயிற்று. உயர்வும் தாழ்வும் நாம் எல்லாருமே ஏதோ ஒரு விதத்தில் பிறரைவிடச் சற்றுத் தாழ்ந்த நிலையில்தான் இருப்போம். தன் அறிவுகூர்மையை எண்ணிப் பெருமைப்படுகிறவன் ஒரு சிறு பிழை புரிந்துவிட்டாலும், ஏதோ செய்யக்கூடாததைச் செய்துவிட்டாற்போல் குறுகிவிடுவான். ஒரு போட்டியில் வெற்றி பெற்றவர்கள், ‘நான் எல்லாரையும்விட மேலானவன், திறமைசாலி!’ என்ற மிதப்புடன், தலையை நிமிர்த்தி நடப்பதைக் கண்டிருப்பீர்கள். ‘இப்படிப்பட்டவர்களுக்குத் தோல்வி என்பதே கிடையாதா!’ என்று பிறர் அதிசயிக்க வேண்டுமாம்! ஒரு சிறு தோல்வி வந்தாலும், இவர்கள் துடித்துப்போய்விடுவார்கள். வெற்றி, தோல்வி நிரந்தரமல்ல என்பதை உணராதவர்கள் இவர்கள். பிறருடன் எப்போதும் ஒப்பிட்டுக்கொள்ளும் குணம் நிலைத்துவிடுவதால், தன்னைவிட அழகானவர், திறமையானவர், பணக்காரர் என்று தோன்றினால், அவர்களைக் கண்டு வயிற்றெரிச்சல் எழுகிறது பெரும்பாலோருக்கு. தன்னைவிடத் தாழ்ந்த நிலையில் இருப்பவரைப் பார்த்தோ, கருணை எழுவதில்லை. அவர்களைக் கேலி செய்யத் தோன்றுகிறது. அப்போதுதானே, தான் மேலானவன் என்று காட்டிக்கொள்ளலாம்! அவர்களிடம் தன் திறமைகளை, தான் சாதித்ததைப் பெருமையாகக் கூறிக்கொள்வார்கள். கதை பள்ளி இறுதிப் பரீட்சையில் தான் தமிழ்ப்பாடத்தில் எவ்வளவு சிறப்பான தேர்ச்சி பெற்றோம் என்று, ஆங்கிலத்தில், நீண்ட உரை நடத்தினாள் ஒரு மாது – அவளைப் பார்த்து நானும் பிரமிக்க வேண்டும் என்று எண்ணியவள்போல். ஒருவழியாக ஓய்ந்ததும், “உங்களுக்குத் தமிழில் எழுதத் தெரியுமா?” என்று சவால் விடுவதுபோல் என்னிடம் கேட்டாள். வலுவில் வரவழைத்துக்கொண்ட அலட்சியத்துடன், “நான் ஒரு தமிழ் எழுத்தாளர்,” என்று பதிலளித்தேன். அவள் அடைந்த அதிர்ச்சியைப் பார்க்க வேடிக்கையாக இருந்தது. தாம் பின்பற்றும் மதம்தான் உயர்வானது என்று பலர் கருதி, அதைப் பற்றியே பேசி, மறைமுகமாகப் பிறரை மட்டம் தட்டுவார்கள். தம்மைப் பற்றிய சந்தேகம் அவர்களுக்கே எழுந்ததாலோ? பணவசதி குறைந்தவர்கள் பணக்காரர்களைப் பார்த்துப் பொருமுவார்கள் என்றால், பணக்காரர்களாக இருப்பவர்கள் குடும்ப வாழ்விலோ, ஆரோக்கியத்திலோ நிறைவு இன்றி, தம்மைப்போல் இல்லாத பிறரைப் பார்த்து ஏக்கப் பெருமூச்சு விடுவார்கள். முன்காலத்தில், சில அரசர்கள் தங்கத்தால் ஆன சிம்மாசனம் செய்துகொண்டார்கள். (மைசூரில் இன்றும் காணலாம்). கழிப்பறையில் உபயோகப்படுத்தும் சாதனத்தைத் தங்கத்தால் செய்துகொண்டார்கள் வேறு சிலர். அதில் ரத்தினக்கற்கள் பதித்துக்கொண்டவர்களும் உண்டு! வருவாயை எப்படிப் பிறருக்கு உபயோகமான வகைகளில் செலவிடலாம் என்ற அக்கறை இல்லாததாலா? இல்லை, தம் குடிமக்களைவிடத் தாம் உயர்வானவர்கள் என்று காட்டிக்கொள்ளவோ? சில வம்சங்களின் அழிவுக்கு இத்தகையவர்கள்தாம் காரணமாக இருந்திருக்கிறார்கள். ‘நான் மேலானவன் (அல்லது தாழ்ந்தவன்)’ என்ற எண்ணப்போக்கு இல்லாது, இருக்கிறபடியே தம்மை ஏற்பவர்களிடம்தான் நிம்மதி நிலைத்திருக்கும். சாமான்களை எடைபோடலாம், மனிதரை அல்ல “அவன் மகா கஞ்சன்!” “சிடுமூஞ்சி!” இவ்வாறு, பார்ப்பவர்களையெல்லாம் தாறுமாறாக எடைபோடுவது மனிதனுடன் பிறந்த குணமென்றே நினைக்கத் தோன்றுகிறது. பிறர் ஏன் அப்படி இருக்கிறார்கள் என்று சற்றே யோசித்தால், மனம்போனபடி பழிக்கத் தோன்றாது. ஏன் கஞ்சத்தனம்? இப்படி யோசிக்கலாமே! கருமித்தனமாக இருப்பவருக்குக் குழந்தைகள் இல்லை. இறுதிக்காலத்தில் யாரை நாடுவது என்ற பயத்தில், இயன்றவரை சேமித்துவைக்கிறார். நீண்ட காலம் நெருங்கிப் பழகியபின்னரும் ஒருவரை முழுமையாகப் புரிந்துகொள்வது இயலாத காரியம். அப்படியிருக்க, சில நிமிடங்களே பழகிவிட்டு, ஒருவரைக் குறைகூறுவது என்ன நியாயம்? பலவிதமான சூழ்நிலைகளில் அவர் எப்படி நடந்துகொள்கிறார் என்று கவனித்தால்தான் ஒருவரது குணத்தைப் புரிந்துகொள்ளலாம். கதை எங்களுக்குத் தெரிந்த ஒரு கடைக்காரரின் முகம் எப்போதும் கடுகடுவென்று இருக்கும். இசை சம்பந்தமான சாமான்கள் அவர் கடையில்தான் கிடைத்ததால், போகவேண்டிய நிலைமை. பல வருடங்கள் பழகியபின்னர், ‘இவர் முகத்தில் சிரிப்பே கிடையாது. வியாபாரம் நன்றாகத்தானே நடக்கிறது!’ என்று எங்களுக்குள் சொல்லிக்கொள்வோம். ஒரு நாள் தினசரியைப் பார்த்தபோது, அவரது மரணச்செய்தியை அறிய நேரிட்டது. ‘நீண்ட காலம் நோய்வாய்ப்பட்டிருந்தார்,’ என்று குறிப்பிட்டிருந்தார்கள். எங்களுக்கு மிகுந்த குற்ற உணர்வு ஏற்பட்டது. தான் இறக்கப்போகிறோம் என்று புரிந்துதான் சிரிப்பை இழந்தாரா? அல்லது, தீராத உடல்நோவினாலா? தெரிந்தவரோ, தெரியாதவரோ, எவரைப் பார்த்தாலும், அவரவர் பின்னணியைப் பொறுத்து ஏதாவது அபிப்ராயம் எழும். இது இயற்கை. ஆனால், அதை உரக்க வெளியிடாது, கவனிப்பதுடன் நிறுத்திக் கொண்டிருக்கலாமே என்று தோன்றியது. ‘நாம் அவரைவிட மேலானவர்!’ என்ற அற்பதிருப்தி எழ அப்படிச் செய்கிறோமோ? நாம் மட்டும் குற்றமற்றவரா? எதற்காகப் பிறரிடம் குற்றம் கண்டுபிடிப்பது? சிலரைப் பார்த்தவுடன் உடனே நல்ல அபிப்ராயம் எழுகிறது. “அவர் ரொம்ப நல்லமாதிரி. எல்லாரிடமும் அருமையாகப் பழகுவார்!” எப்போதும் சிரித்த முகத்துடன், கலகலப்பாகப் பழகுவதால் ஒருவர் நல்லவராகிவிடுவாரா? நாம் அவரை நல்லவிதமாக நினைக்கவேண்டும் என்ற நோக்கத்துடன் அத்தகைய பிம்பத்தை உண்டாக்குகிறாரோ, என்னவோ! விமானப் பணிப்பெண்கள் எப்போதும் தம் முகத்தில் புன்னகையைத் தவழ விட்டுக்கொண்டு இருப்பார்கள். அதற்கான காரணத்தை ஒரு ஆண் பணியாளர் என்னிடம் கூறியது: “சிலர் விமானத்தில் பயணிப்பதற்குப் பல வருடங்களாகச் சேமிப்பார்கள். தம்மை உயர்வாக எண்ணிக்கொண்டு, எங்களிடம் அதிகாரமாக நடப்பார்கள். அது புரிந்து, நாங்களும் சிரிப்பு மாறாது நடந்துகொள்வோம்!” கதை விருந்தினராக உறவினர் ஒருவர் வீட்டுக்குப் போய், ஒரே ஒரு நாள் தங்கியிருந்தாள் சியாமளா. அந்த இல்லத்தரசி, பார்கவி, கணவரையும் அவருடைய தாயையும் மதிப்பதேயில்லை என்று மற்ற உறவினர்களிடம் கதை கதையாகச் சொன்னாள். ஓயாமல் பிறரைப் பற்றித் தாறுமாறாகப் பேசுகிறவர், தன்னைப் பற்றியும் யாராவது அப்படிப் பேசுவார்களா என்று யோசிப்பதில்லை. நான் அவளுடைய கணிப்பை ஏற்கவில்லை. திருமணத்திற்குப்பின் ஒரேயடியாக அடங்கிப்போய், மகிழ்ச்சியை இழந்தவள் சியாமளா. பிறரது போக்கில் நாம் குற்றம் கண்டுபிடித்துக்கொண்டே இருந்தால், அவர்களிடம் எப்படி அன்பு செலுத்தமுடியும்? நாம் பிறரைப் பழித்துப் பேசாவிட்டால், நம்மைப் பற்றிப் பிறர் என்ன பேசிக்கொள்கிறார்கள் என்ற கவலை எழாது. பார்கவியின் மாமியார் அவளைப் படாதபாடு படுத்தியது உறவினர் அனைவரும் அறிந்ததுதான். அவள் செய்தது எல்லாவற்றிலும் குற்றம் கண்டுபிடிப்பது, தன் அதிகாரத்தை நிலைநிறுத்த பலபேருக்கு முன்னிலையில் மட்டம் தட்டுவது என்று நடந்துகொண்டாள். ‘எப்போது, எந்த அவமானத்தைத் தாங்க நேரிடுமோ!’ என்றெழுந்த பயத்தைத் தாளமுடியாது போக, பார்கவியின் உடல்நிலை சீர்கெட்டது. கணவனும் ஆதரவாக இருக்கவில்லை. “நீதான் அடங்கிப்போயேன். என் அம்மாவைப் பிடிக்கவில்லை என்றால், என்னையும் பிடிக்கவில்லை என்றுதான் அர்த்தம்!” என்று அவளை அடக்கினான். கவுன்செலிங் முறைப்படி, துணிச்சலாக நடப்பது எப்படி என்று கற்றாள் பார்கவி. ‘கெஞ்சினால் மிஞ்சுவார், மிஞ்சினால் கெஞ்சுவார்,’ என்பதுபோல், அவளுடைய கை ஓங்க, மாமியார் அடங்கிப்போனாள். பார்ப்பவர்களுக்கு அத்தகைய போக்கு தவறாகப்படலாம். ஆனால், பயத்திலேயே அமிழ்ந்துவிடாது இருக்க அவளுக்கு வேறு வழி தெரியவிலை. நம்மைவிடத் தாழ்ந்த நிலையில் இருப்பவர்களை ஏளனம் செய்யத் தோன்றுவதுபோல், வெற்றி பெற்றவர்களைப் பார்த்துப் பிரமிக்கத் தோன்றுகிறது. அவர்கள் எத்தனை உழைத்திருப்பார்கள், என்னென்ன தடைகளைக் கடந்து வந்திருப்பார்கள்! ஆனால், அவர்களையும் விட்டுவைப்பதில்லை இன்றைய இணையதளம். புகழ்பெற்றவர்கள் என்னென்ன தவறு செய்கிறார்கள் என்று தேடிக் கண்டுபிடித்து, உலகெங்கும் பரப்புகிறது. அவர்களும் மனிதர்கள்தாமே? குற்றங்கள் புரிந்ததால் திறமையற்றவர்கள் என்றாகிவிடுமா? ஐயையோ! எவ்வளவு சின்னப்பெண்! கதை நானும் என் மகளும் பாங்காக்கைச் சுற்றிப்பார்க்கச் சென்றிருந்தோம். ஒரு சாப்பாட்டுக்கடையில் கிளுகிளுப்பான சிரிப்பு ஒலித்துக்கொண்டே இருக்க, ஆர்வத்தை அடக்கமுடியாது, நான் திரும்பிப் பார்த்தேன். அப்பெண்ணுக்குப் பதினைந்து வயதுக்குமேல் இராது. அவளுடன் மிக நெருக்கமாக முப்பது வயது மதிக்கத் தகுந்த இரு ஆண்கள். அவளுடைய தொழில் இன்னதென்று புரிய, எனக்கு உண்டான அதிர்ச்சி என் கண்களில் வெளிப்பட்டிருக்க வேண்டும். அதன் எதிரொலியாக, அவள் முகத்தில் ஆழ்ந்த வருத்தம் படர்ந்தது. சில கணங்களே நடந்த அந்த நாடகத்தை என் மகளுடன் பகிர்ந்துகொண்டபோது, “இது அவளுடைய தொழில். அப்படி ஒன்றும் எளிதானதுமல்ல. இதில் ஈடுபட்ட ஒவ்வொரு பெண்ணும் இருமுறையாவது பாலியல் பலாத்காரத்திற்கு ஆளாவாள்,” என்று சிறிது ஆத்திரத்துடன் விளக்கினாள். அருகிலுள்ள கிராமங்களில் மிகவும் ஏழ்மையான நிலையில் உள்ள குடும்பத்தினர், தெரிந்தே தம் மகளை பாலியல் தொழிலுக்காக தலைநகருக்கு அனுப்புகிறார்களாம். அப்பெண்ணின் இடத்தில் என்னைப் பொருத்திப் பார்க்காததால் ஏற்பட்ட தவறு புரிந்தது. கணவன், குழந்தை, தனக்கென ஆதரவாக ஒரு குடும்பம் என்ற ஆசைகள் அப்பெண்ணிற்கு மட்டும் இருந்திருக்காதா! எல்லாம் வெறும் கனவாகிப்போக, குடும்பத்திற்கென உழைக்கிறாள், பாவம்! “அப்பெண் செலவாளி!” கணவனது சம்பாத்தியத்தில் தான் எவ்வளவு வேண்டுமானாலும் செலவழிக்கலாமே என்ற சுதந்திர உணர்வுடன் செயல்படும் பெண்கள் பிறரது கண்டனத்திற்கு ஆளாவார்கள். இப்படி யோசிக்கலாமே! தாய்வீட்டில் வளர்கையில் பொருளாதார வசதி குறைவாக இருந்திருக்கலாம். இரு கதைகள் ‘என்ன, இப்படிக் குழந்தை வளர்க்கிறாளே!’ என்று அநேகமாக எல்லா உறவினர் பெண்களையும் கேலி பேசுவாள் சௌந்தரி – அவர்கள் பின்னால்தான்! சௌந்தரி ஒரு முதிர்கன்னி என்பது குறிப்பிடத்தக்கது. தனக்குக் கிடைக்காத புத்திரபாக்கியம் அவர்களுக்குக் கிடைத்திருக்கிறதே என்ற மனப்பொருமல் இவ்வாறு வெளியாகியிருக்கிறது. குழந்தைகளை வளர்த்துப்பார்த்தால்தானே தெரியும் அதிலுள்ள சிரமங்கள்! தான் மட்டும் கற்பின் சிகரம், தன் பெண்கள் ஆண்களைப் பார்த்தாலே பயந்து ஓடுவார்கள் என்று ஓயாமல் பெருமை பேசுவாள் கற்பகம். அவளைப் பொறுத்தவரை, ஆண்களுடன் சிரித்துப் பேசும் பெண்கள் ஒழுக்கம் கெட்டவர்கள். பிறரிடம் குற்றம் கண்டுபிடித்து, அதை விரிவாகக் கூறினால், தாம் சொல்வதைப் பிறர் ஆர்வத்துடன் கவனிப்பார்கள் என்று நடப்பவர்கள் இவ்விருவரும். இப்போக்கால் மன இறுக்கம் கூடி, உடல்நிலையைப் பாதித்துவிடுகிறது. இந்த இரு பெண்மணிகளும் தம் இறுதிக்காலத்தில் நகரவும், பேசவும் முடியாது ஏதேதோ நோய்கள். யாரும் அவர்களுக்காகப் பரிதாபப்படவுமில்லை. கதை அதிகம் படித்து, பெரிய உத்தியோகம் வகிக்கும் பெருமை மைத்துனர்களுக்கு. அவர்கள் வீட்டு மாப்பிள்ளை படித்தவராக இருந்தாலும், கிராமப்புறத்தவர். அதிலும், பெரும்பணக்காரர். மைத்துனர்களுக்கு அவரைக் கண்டால் ஏளனம். அவருடைய கடவுள் பக்தி, நியமங்கள் ஆகியவை கேலிப்பொருட்களாக ஆயின. ஆனால், அவரைத் தூற்றியவர்களைப்போல் இல்லாது, இறுதிவரை ஆரோக்கியத்துடன் வாழ்ந்தார். பெற்றோரின் பேச்சும் நடத்தையும் அவர்கள் பிள்ளைகளையும் பாதித்தது. பக்தியும் ஒழுக்கமும் நிறைந்தவருடைய குழந்தைகள் வாழ்வில் சிறக்க, மைத்துனர்களின் குழந்தைகள் என்னென்னவோ துயரங்களை அனுபவித்தார்கள். நாம் பிறரைப்பற்றி ஏதாவது சொல்லியே ஆகவேண்டுமென்றால், அது அவர்களுக்கு உபயோகமாக இருக்கவேண்டாமா? அச்சம்தான் வெற்றிக்கு முதற்படி பொறுக்கமுடியாத சந்தர்ப்பங்களில் மனிதர்கள் இரு விதமாக நடப்பதுண்டு – எதிர்த்துப் போராடுவது, இல்லையேல் அங்கிருந்து தப்பி ஓடிவிடுவது (FIGHT OR FLIGHT). அச்சம் அளவுக்கு மிஞ்சினால், இவற்றில் ஒன்றைக்கூடச் செய்ய இயலாது, பயந்து நிற்க நேரிடும். ‘பிறர் என்ன சொல்வார்களோ!’ என்ற பயம் சிறுவயதிலிருந்தே நம்முள் விதைக்கப்பட்டுவிடுகிறது. அதற்குப் பதில், ‘பிறர் பாராட்டும்படியாக, துணிந்து ஏதாவது செய்!’ என்று தூண்டியிருக்கலாம். எது தவறு? ‘தவறு செய்துவிடுவோமோ?’ என்று பயந்தே காலங்கழிப்பதுதான் தவறு. வாழ்க்கை எப்போதும் ஒரேமாதிரி இருப்பதில்லை. மாறிக்கொண்டே இருக்கும். இது புரியாது, அல்லது அஞ்சி, ஒத்துக்கொள்ள விரும்பாது, பழைமையிலேயே ஊறிக்கிடந்தால் அப்படி இருப்பவருக்கு மட்டுமல்லாது, அவரது குடும்பத்துக்கும் துன்பம்தான். துணிந்து செய் எல்லா அனுபவங்களும் நல்லவிதமாக முடியும் என்பதல்ல. ஆனாலும், ஏதாவது நன்மை விளையக்கூடும். நாம் எதற்கு அஞ்சுகிறோமோ, அதைச் செய்துபார்ப்பதுதான் அச்சத்தை வெல்லும் வழி. கதை நான் நீச்சல் பழக ஆரம்பித்து இரு மாதங்களுக்குப்பின், எதிர்த்திசையில் கண்களை மூடிக்கொண்டு நீச்சலடித்தவரால் அடிவாங்கி, தண்ணீருக்கு அடியில் போனேன். சில நிமிடங்கள் மேலே வரத்தெரியாது திணறினேன். (நெடுநேரமென்றுதான் அப்போது அடைந்த கலவரத்தில் தோன்றியது). ஒரு கரம் என்னை மேலே இழுத்து, கரை சேர்த்தது. (நீச்சல் காவலர் அதற்கென்றே நியமிக்கப்பட்டிருந்தார்). கவனித்துக்கொண்டிருந்த ஒரு சீனர், “உடனே நீங்கள் பயத்தை வெல்லவேண்டும்,” என்று அழுத்தமாகக் கூறினார். ஒரு பெண்மணி, “என்னையும் இப்படித்தான் ஒருமுறை காப்பாற்றினார்கள்,” என்று அசட்டுச்சிரிப்புடன் ஒத்துக்கொண்டாள். எதையாவது கற்கவேண்டுமென்றால், துணிச்சல் மிக அவசியம். ‘புதிய அனுபவம் எப்படி இருக்கும்?’ என்ற ஆர்வத்தை வளர்த்துக்கொள்பவர்களை அச்சம் தொடராது. “நீங்கள் மூச்சைப் பெரிதாக இழுத்துக்கொண்டு தண்ணீரின் அடியில் போய், பிறகு எம்பி, நீந்துவதுபோல் கைகளையும் கால்களையும் ஆட்டியபடி மேலே வாருங்கள். மேலே வந்ததும் மூச்சை விடலாம்,” என்று சொல்லிக்கொடுத்தார். நான் தயங்கியபோது, “உங்களால் முடியாவிட்டால், நான் தூக்கிவிடுகிறேன்,” என்று பலமளிக்க, துணிந்து அவர் சொற்படி செய்தேன். அவர் உதவி தேவைப்படவில்லை. நான் கரையேறியதும், அவர் பெரிதாகச் சிரித்தார். “நீங்கள் முழுகவே மாட்டீர்கள். எவ்வளவு நேரம் மூச்சைப் பிடித்துக்கொண்டிருந்தீர்கள்!” ‘முடியாது’ என்று நினைத்ததைச் செய்துவிட்ட பெருமை அப்போது எழவில்லை. களைப்புதான் மிகுந்தது. வீடு திரும்பியதும், நடந்ததை என் பெண்களிடம் கூற, தம் அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டார்கள்: “நாங்கள் (ஏழு வயதில்) நீச்சல் கற்கும்போது, மாஸ்டர் எங்களை இருபது அடி உயரத்திலிருந்து தண்ணீரில் பிடித்துத் தள்ளிவிடுவார். தத்தளித்தபடி மேலே வந்துவிடுவோம். அதன்பின் பயம் இருந்தால், பால் கலக்காத சூடான காப்பி குடிக்கவேண்டும்”. (மூன்று மாதங்களே ஆன குழந்தையை ஆழமான தண்ணீர் தொட்டிக்குள் விட்டால், மேலே வந்துவிடும். தாயின் கருப்பையில் நீந்திய நினைவு அதற்கு மறக்கவில்லை). பாதுகாப்பு பள்ளிக்கூடத்தில் சேர்க்கப்பட்டதும், அம்மாவின் புடவையை இறுகப் பற்றிக்கொண்டு, சில குழந்தைகள் அழுது ஆர்ப்பாட்டம் செய்வதுண்டு. பழகிவிட்டால், ‘டீச்சர் திட்டினாலும், வீட்டுப்பாடம் கொடுத்தாலும் போகிறது, பள்ளிக்கூடத்தில் நிறைய நண்பர்கள் இருக்கிறார்களே!’ என்று பிடித்துப்போய்விடும். அதேபோல், திருமணமாகி, முதன்முறையாகப் புக்ககம் செல்லும் பெண்களும் அழுவார்கள். ‘இதுதான் தாம்பத்தியம்,’ என்று புரியும்போது, பயம் விலகிவிடும். பழகிப்போன சூழ்நிலையை மாற்றினால், வேறொரு இடத்தில் எப்படி இருக்குமோ என்ற அச்சம்தான் எல்லாவற்றிற்கும் காரணம். இதே காரணத்தால்தான் பொறுக்கமுடியாத தாம்பத்தியம் அமைந்தாலும், அதைவிட்டு விலகத் துணியமாட்டார்கள் சில பெண்கள். மரண பயம் வயது முதிர்ந்த நிலையில், படுக்கையிலேயே காலம் கழிக்கவேண்டிய நிலை ஒரு பெண்மணிக்கு. இறக்கப்போகிறோம் என்று சந்தேகமறத் தெரியும். ஆனாலும், இவ்வுலகைவிட்டு நீங்கியபின் என்ன ஆகுமோ என்ற பயம். “உயிர் பிரியும் தறுவாயில் உங்களுக்குப் பிடித்தவர்கள் எல்லாரையும் மீண்டும் பார்க்கமுடியும்,” என்று ஆறுதல் கூறினேன். பலமுறை விளக்கம் கேட்டார். இறக்கும் தறுவாயில், என்றோ மாண்டுபோன பெற்றோர், சகோதர சகோதரியர் ஆகியோர் அவர் கண்ணுக்குத் தெரிவார்கள், அவரை வரவேற்பார்கள் என்று நான் எப்போதோ படித்ததை எடுத்துச்சொன்னேன். இறுகியிருந்த முகத்தில் மலர்ச்சி. ஒரு வாரத்திற்குப்பின், தூக்கத்திலேயே மரணத்தைத் தழுவிக்கொண்டார். அச்சம் தன்னம்பிக்கையின் வித்து மேடையில் உரையாற்றவோ, பாடவோ, நடிக்கவோ வருகிறவர்கள் எத்தனைமுறை அப்படிச் செய்திருந்தாலும், ஆரம்பிக்குமுன் சிறிது படபடப்பாக உணர்வார்கள். அந்த அச்சத்தை எதிர்கொள்ளும்போது தன்னம்பிக்கையும் கூடிக்கொண்டேபோகும். எதையாவது கற்கும்போது ஆர்வத்துடன் ஆரம்பித்தாலும், போகப் போக, ‘இதற்கொரு எல்லையே கிடையாதா!’ என்ற மலைப்பும், பயமும் எழும். அரைகுறையாக நிறுத்திக்கொள்ளத் தோன்றிவிடும். இசை, நாட்டியம், அல்லது வேறு எந்தத் துறையிலுமே கரைகாண்பது என்பது நடக்காத காரியம். இது புரிந்து, சிறுகச் சிறுக முயற்சிக்க, பயமும் போய்விடும். பயம்தான் கனவுகளின் எதிரி என்பார்கள். அச்சுறுத்துகிறவர்கள் நம்மைக் கண்டு பயப்படுகிறவர்கள் தம் உணர்ச்சியை நம் பக்கம் தள்ளிவிட முனைகிறார்கள். அது புரிந்து, நாம் பயப்படாவிட்டால், அவர்களுடைய அச்சம் அதிகரித்துவிடும். சுவரில் வீசிய பந்துபோல்தான். பெண்களிடம் முறைதவறி நடக்க முயலும் ஆண்களுக்கு இந்த விளக்கம் பொருந்தும். அழகு, செல்வம், அறிவு – இப்படி ஏதோ ஒரு விதத்தில் தன்னைவிட உயர்ந்த நிலையில் ஒரு பெண் இருக்கிறாள் என்று கருதினால், துரத்தாத குறையாக, அவளை நெருங்க பெருமுயற்சிகள் எடுப்பார்கள். அவள் வயது ஒரு பொருட்டில்லை. அப்போது அவள் அடையும் அச்சம் அவர்களுக்கு வெற்றி. அந்தப் பெண் எதிர்த்துப் பயனில்லை. பொதுவாகவே, பெண்கள் சொல்வதும் செய்வதும் எதிர் எதிராக இருக்கும் என்று தப்புக்கணக்கு போட்டுவிடுவார்கள். முதலில் பெண்ணுக்குச் சிறிது பயம் ஏற்பட்டாலும், துணிச்சலுடன் அதை எதிர்கொண்டால், அவமானம் அந்த ஆண்களுக்கு. பயத்துடன் கோபமும் உடன்வரும். வேகமாக வரும் காரின் குறுக்கே ஒருவர் நடந்தால், காரோட்டிக்குக் கோபம் எழும். ஏன் கோபம்? விபத்து நடந்துவிடுமே என்ற பயம்தான் கோபமாக மாறுகிறது. எதற்காவது பயந்து, அதைப்பற்றியே நினைத்துக்கொண்டிருந்தால், கோபம் அதிகரித்துக்கொண்டே போகிறது. அப்போது ஏற்படும் மன இறுக்கம் உடல்நிலையைப் பாதித்துவிடுமே! என்ன பயம் வேண்டியிருக்கிறது! நம்மை நாமே உணர ஒரு வழி இது. தன்னால் ஒரு குறிப்பிட்ட காரியத்தைச் செய்யமுடியும் என்ற நம்பிக்கை ஒருவருக்கு இருந்தால், ‘பிறர் என்ன சொல்வார்களோ!’ என்ற தயக்கமோ, ‘தோல்வியடைந்தால் அவமானம்!’ என்ற எண்ணமோ எழாது. துணுக்கு எனக்கு என்னென்னவோ சாதிக்கவேண்டும் என்ற ஆசை இருந்தது. ஆனால், பயம் குறுக்கே வந்நது எல்லாவற்றையும் கெடுத்துவிட்டது. என்ன பயம்? தோல்வி அடைந்துவிடுவோமோ என்ற பயம்தான்! போட்டிகளிலோ, விளையாட்டுகளிலோ பங்கெடுத்துக்கொள்பவர்களில் எத்தனைபேர் முதலிடத்தைப் பிடிக்கிறார்கள்? அப்படி இல்லாதவர்கள் தோல்வி அடைந்தவர்கள் அல்லர். பங்கெடுத்துக்கொள்ளவாவது துணிந்தார்களே! தமிழ்ப்படங்களிலிருந்து பாடம் அண்மையில் வெளியான கர்ணன், அசுரன் போன்ற திரைப்படங்களில், சமூகத்தில் தாழ்ந்த நிலையில் இருப்பவர்களைப்பற்றிக் காட்டுகிறார்கள். வயது முதிர்ந்தவர்கள் தமக்கு நியாயம் கிடைக்காது என்ற அச்சத்திலேயே தழைந்துபோய்விடுகிறார்கள். இளவயதினரோ, காலம் காலமாகத் தம்மை இந்த நிலையிலேயே இருக்கச் செய்யும் மேட்டுக்குடியினரைத் துணிச்சலுடன் எதிர்க்கிறார்கள். துன்பம் அனுபவித்தாலும், மனம் தளர்வதில்லை. இறுதியில், கல்வியால்தான் ஒரு சமூகம் உயரமுடியும் என்று உணர்கிறார்கள். அதற்கும் எதிர்ப்பு. ஆனால், பலரும் இணைந்து எதிர்த்தால், வாழ்க்கைத்தரத்தை உயர்த்திக்கொள்ளலாம் என்ற பாடம் புகட்டப்படுகிறது. பயம் இயற்கையான உணர்வுதான். ஆனால், அதை எதிர்கொள்ளும்போதுதான் வாழ ஆரம்பிக்கிறோம். முன்னேற வயதில்லை “என் மகள் ஆரம்பப்பள்ளியில் மிக நன்றாகப் படித்து, ஒவ்வொரு வருஷமும் பரிசு வாங்குவாள். அதன்பின், என்ன ஆயிற்றென்று தெரியவில்லை. படிப்பில் அக்கறை போய்விட்டது,” என்று பிரலாபித்தாள் ஓர் ஆசிரியை. அவள் பள்ளி இறுதிப்பரீட்சைக்குப்பிறகு இரு வருடங்கள் பயின்றிருந்தவள். பெற்றோர் தமக்குத் தெரிந்ததை கற்றுக்கொடுத்து, சிறுகுழந்தைகள் அதைச் சுமாராகச் செய்தாலும் பாராட்டுவார்கள். குழந்தையும் மகிழ்ந்துவிடும். எதில் ஈடுபட்டாலும், புகழ் கிடைக்கும்போது அதையே இன்னும் நன்றாகச் செய்யவேண்டும் என்ற ஆர்வம் பிறக்கும். நாளடைவில், பாராட்டை எதிர்பார்த்து, எந்தக் காரியத்திலும் முழுமை (PERFECTION) தேடுவார்கள். பெருமை அடைந்தால் கர்வம் தலைக்கேறும். பாராட்டு கிடைக்காவிட்டால் தன்னம்பிக்கை குறைந்துவிடும். பாராட்டு கிடைத்தால் ஒரேயடியாக மகிழ்ந்து, பெருமைப்படாது, அவமதிப்பு வந்தாலும் அதை ஒதுக்கித்தள்ளும் மனப்பான்மையை வளர்த்துக்கொண்டால்தான் முன்னேற முடியும். தமிழில் பிரபலமான பெண் எழுத்தாளர்கள் இருவர் மன இறுக்கத்தால் பாதிக்கப்பட்டு, அழுதுகொண்டே இருந்தார்கள் என்று படித்திருக்கிறேன். எனக்குத் தோன்றிய காரணம்: ஆண்கள் எப்படி ஆபாசமாக எழுதினாலும் அதை ஏற்கும் நம் சமுதாயம் பெண்களின் எழுத்து ஒரு வரையறைக்குள்தான் இருக்கவேண்டும் என்று எதிர்பார்க்கிறது. துணிச்சலுடன், சில ஆண்கள் பெண்களுக்கு இழைக்கும் அநீதிகளைப்பற்றி விரிவாக எழுதும் பெண் எழுத்தாளர்கள் பழிக்கப்படுவார்கள். ‘ஆண்களும் தவறு செய்வார்கள்!’ என்று வெளிப்படையாக எழுத இவர்களுக்கு யார் அதிகாரம் கொடுத்தது?’ என்ற ஆத்திரம் பல ஆண்களுக்கு எழும். ‘இவள் எழுதுவதெல்லாம் ஆபாசம்!’ என்று ஏதோ சொல்லி, தம் மனக்குமுறலை வெளிப்படுத்திக்கொள்வார்கள். பெண்களுக்கு உணர்ச்சிகளே இருக்கக்கூடாது, அப்படி இருந்தாலும், அவற்றை வெளியில் காட்டிக்கொள்ளக்கூடாது என்று நினைக்கும் அறிவிலிகளின் கருத்தை அலட்சியம் செய்தால்தான் பெண்கள் முன்னேற முடியும். அறிவு, திறமை எல்லாம் இருந்தும் பல பெண்கள் வெளியில் அறியப்படாது இருப்பதன் காரணம் – கண்டனத்திற்கு அதிக மதிப்பு கொடுப்பதுதான். நாம் ஈடுபடுவது எந்தத் துறையாக இருந்தாலும், அதில் எத்தனை காலம் தொடர்ந்திருந்தாலும், மேலும் முன்னேற இடம் இருக்கும். இன்று முன்னணியில் இருக்கும் நடிகர்களையோ, இசை வல்லுனர்களையோ எடுத்துக்கொள்ளுங்கள். ஆரம்ப காலத்தில் அவ்வளவு சிறப்பாகத் தம் தொழிலைச் செய்திருக்கமாட்டார்கள். அவர்களுக்கே அது புரிந்திருக்கும். அதனால் மனம் தளராது, முன்னேறும் வழிகளை ஆராய்ந்து, அவற்றை என்றென்றும் கடைப்பிடிக்கிறார்கள். அவ்வப்போது தோல்விகளும் வரும். ஆனால், அவற்றால் மனம் உடைந்துவிடாது, தன்னம்பிக்கையுடன் மீண்டு எழும் வகைகளை ஆராய்ந்து, கடைப்பிடிக்கிறார்கள். சிறிது வெற்றி கிடைத்தவுடன், தலைக்கனத்துடன் இருப்பவர்கள் எத்துறையிலும் நிலைத்திருக்க முடியாது. ஒரே சமயத்தில் தாம் கற்ற பல துறைகளிலும் ஈடுபட்டு, எல்லாவற்றிலும் வெற்றி பெற முடியுமா? முடியும். ஆனால், வெகு விரைவிலேயே தோல்வியைச் சந்திக்க நேரிடும் – நம் மூளை வெகுவாகக் குழம்பிப்போவதால். இதைத் தவிர்க்க, ஒரு துறையில் மட்டுமே சில காலம் ஆழ்ந்துவிட்டு, பிறகு முழுக்கவனத்துடன் இன்னொன்றிற்குத் தாவலாம். நான் ஒரு புதினமோ, நீண்ட கதையோ எழுத ஆரம்பித்தால், வேறு எந்தவிதமான எழுத்திலும் மனம் செல்ல விடுவதில்லை. அப்போதுதான் கதாபாத்திரங்களுடன் உறவாட முடியும். பாத்திரப்படைப்பும் நம்பகமாக இருக்கும். ஒரு போட்டிக்காக நூறு பக்கங்கள்கொண்ட புதினத்தை எழுதவேண்டும் என்றால், முதலில் ஒரு நாளைக்குச் சுமார் எத்தனை பக்கங்கள் எழுதலாம் என்று யோசித்து வைக்கவேண்டும். ஒரே வாரத்தில் முடிந்ததா? சில நாட்கள் அப்படியே வைத்துவிட்டு, அதன்பின், கதையைப் படித்துப்பார்த்தால், நிறைய ஓட்டைகள் புலப்படும். முடிவு தேதி வரும்வரை, திருத்தியபடி இருந்தால், கதையில் மெருகேறும். வியாபாரத்தில் முன்னேற்றம் ஒரு மளிகைக்கடை வைத்திருந்தார் சாங். அதிக லாபம் பார்ப்பது தவறு என்ற கொள்கை அவருக்கு இருந்ததால் எல்லாப் பொருட்களும் மலிவாக இருந்தன. நிறைய வாடிக்கையாளர்கள் சேர்ந்தார்கள். அதிலேயே திருப்தி அடைந்தார் சாங். அவருடைய மகன் தந்தையின் கொள்கையை ஆதரிக்கவில்லை. அவன் வியாபார நுணுக்கங்களைக் கல்லூரியில் படித்துத் தேர்ந்தான். அவனுக்கு வழிவிட்டு, பெருந்தன்மையுடன் தந்தை ஒதுங்கிக்கொண்டார். ‘நான் இத்தனை காலமும் இப்படித்தானே செய்துவந்திருக்கிறேன்!’ என்று மகனுடன் விவாதிக்கவில்லை. வியாபாரத்தைப் பெருக்க, பல வழிகளைக் கையாண்டான் ஜூனியர் சாங். ‘எங்கள் கடைக்கு இன்னும் இரு மைல்தான் இருக்கின்றன!’ என்ற அறிவிப்பு தெருக்களில் வைக்கப்பட்டிருந்தன. விமான நிலையத்திலும்கூட ஒரு கடை – வெளிநாட்டிலிருந்து வருகிறவர்கள் உள்நாட்டில் கிடைக்கும் பொருட்களை வாங்கிப்போக வசதியாக. வியாபாரம் பெருகியது. ஆனாலும், பெரும் லாபம் வைத்து விற்கும் பேராசை கொள்ளாததால் நிலைத்திருக்க முடிந்தது. குடும்பத்தில் முன்னேற்றம் ‘கணவர் சொல்வதையோ, செய்வதையோ மறுத்துப் பேசினாலோ, குற்றம் கண்டுபிடித்தாலோதானே சண்டை வரும்!’ என்று நடக்கும் பெண்களின் குடும்ப வாழ்க்கையில் அமைதி நிலைக்கலாம். ஆனால், மகிழ்ச்சி? கோலாலம்பூரில், சில ஆண்டுகளுக்குமுன், வங்கியிலிருக்கும் ATM-ல் பணம் எடுக்குமுன், ‘உங்கள் குழந்தைகளிடம் அன்பு செலுத்துங்கள்!’ என்ற அறிவுரை காணப்பட்டது. குழந்தைகளின் அத்தியாவசியத் தேவைகளைக் கவனித்துக்கொள்வதுடன் தம் கடமை தீர்ந்துவிட்டது என்றெண்ணி, பெரும்பாலான பெற்றோர் நடப்பதை மறைமுகமாகக் குத்திக்காட்டும் முயற்சி இது. அண்மையில், தொற்றுநோய் பரவுவதைத் தடுக்க அதிகம் வெளியே செல்லமுடியாத நிலையில், வீட்டுக்குள்ளேயே அடைந்துகிடக்க வேண்டிய நிலை ஏற்பட்டதே! இதனாலும், சில நன்மைகள் விளையாமல் இல்லை. ‘என் குழந்தைகளுடன் பொழுதைக் கழிப்பது எவ்வளவு மகிழ்ச்சிகரமான விஷயம் என்று இப்போதுதான் புரிந்துகொண்டேன்!’ என்று பலரும் கூறியிருப்பதாகச் செய்திகள் வந்தன. தம் விருப்பு வெறுப்பைப் புரிந்து பெற்றோர் அன்பாக நடந்தால்தானே குழந்தைகள் நன்கு முன்னேறுவார்கள்? உடல்நிலையில் முன்னேற்றம் ‘வயதாகிவிட்டது! இனி என்ன!’ “பள்ளி நாட்களில், உடல் சம்பந்தமான கல்வி எதுவாக இருந்தாலும், அதிலிருந்து எப்படித் தப்புவது என்றே சமயம் பார்த்துக்கொண்டிருப்பேன்!” ‘நிமிர்ந்து நடப்பது விமானப் பணிப்பெண்களுக்குத்தான் அவசியம்!’ இப்படியெல்லாம் விதண்டாவாதம் புரிகிறவர்கள் உடலை மட்டும் அலட்சியம் செய்வதில்லை. உடற்கட்டுடன் ஆரோக்கியத்தையும், சுறுசுறுப்பையும் இழந்துவிடுகிறார்கள். அதனால், சிரிப்பும் பறிபோய்விடுகிறது. இருபது வயதிலிருந்ததுபோல் என்றும் இளமையாகத் தோற்றம் அளிக்க முடியாவிட்டாலும், அறுபது வயதில் எழுபது வயதுக்காரர்போல் முதுமையை அடைய வேண்டுமா? தொண்ணூறு வயதை எட்டிக்கொண்டிருக்கும் மிஸஸ் லீ தன்னைவிடச் சற்றே இளைய பெண்மணிகளுடன் அவர்கள் வீட்டருகே இருக்கும் பூங்காவில் ஒவ்வொரு காலையும் ஒருவித உடற்பயிற்சி செய்வதைப் பார்க்கிறேன். இவர்கள், ‘வயதாகிவிட்டதே! முன்போல் எதுவும் செய்ய முடியவில்லையே!’ என்று அலுத்துக்கொள்வதில்லை. ஏனெனில், தங்களால் முடிந்தவரை உழைக்கிறார்கள். ‘ஒவ்வொரு நாளும் ஒரேமாதிரி இருக்கிறதே!’ என்ற அலுப்பு கிடையாது. அத்துடன், பிறருடன் பேசிப் பழகுவதால், குருட்டு யோசனையில் மனம் போகாது. கடந்த இருபத்தைந்து வருடங்களாக, அரைமணி நேரம் தொடரும் நிகழ்ச்சி இது. ‘பயிற்சிக்கு அரைமணி போதுமா? இரண்டு மணி நேரம் பண்ணினால், இன்னும் பலன் கிடைக்குமே!’ வயதை மறந்து, இப்படி நினைத்துச் செய்தால், உடல்வலியால் பல நாட்கள் ஓய்வெடுக்க வேண்டியிருக்கும். பரீட்சைக்கு முதலிரவு முழுவதும் தூங்காது படித்துவிட்டு, மறுநாள் பரீட்சை எழுதும்போது எதுவுமே நினைவுக்கு வராமல், அல்லது தலைவலியுடன் தவிப்பதுபோல்தான்! ‘பரீட்சைக்கு முதல்நாள் இரவு முழுவதும் நான் கண்விழித்துப் படித்தேன். ஆனாலும், ஏனோ பரீட்சையில் நல்ல மதிப்பெண்கள் பெறமுடியவில்லை!’ என்று சில மாணவிகள் குழம்புவார்கள். இதைத் தடுக்கத்தான் சில பள்ளிகளில் TEST என்று, அடிக்கடி பரிசோதனை செய்வார்கள். அவ்வப்போது, சிறுகச் சிறுகப் படித்தால், மன இறுக்கம் இருக்காது. நான் படித்த பள்ளியில், வாராந்திர பரிசோதனை, மாதாந்திர பரிசோதனை, கால், அரை, முழுப் பரீட்சை என்று வருடம் முழுவதுமே வைத்திருந்ததில், இறுதிப்பரீட்சைக்கு ஒரு மாதம் முன்பே, ‘எல்லாம் எளிதுதான். எத்தனைமுறை படித்திருக்கிறோம்!’ என்ற நம்பிக்கை ஏற்பட்டுவிடும். மாறாக, குறுகிய காலத்தில் மிகுந்த பிரயாசையுடன் ஒரு காரியத்தில் ஈடுபடுவது களைப்பையும் சலிப்பையும்தான் உண்டாக்கும். அப்புறம் முன்னேறுவது எங்கே! என்ன இடர் வரினும் சில தாவரங்கள் வெப்பமாக இருந்தாலும், மழை அடித்துக்கொட்டினாலும் பிழைத்துக்கொள்ளும். வேறு சில வெயிலில் வாடி, பெருமழையில் அழுகிப் போய்விடும். மனிதர்களும் அப்படித்தான். பலர் சிறிதளவு துன்பத்தைக்கூட தாங்கமுடியாது ஒடுங்கிவிடுவார்கள். புதிதாக ஒரு வழியைத் தேடும் உற்சாகத்தை இழந்துவிடுவதுதான் காரணம். ஒரு சிலர் எவ்வளவுதான் இடர்கள் வந்தாலும், அவற்றைச் ‘சவால்’ என ஏற்று, ‘இந்த நிலையும் ஒருநாள் மாறும்!’ என்ற நம்பிக்கையுடன் நடப்பார்கள். அதுவே வாழ்வின் வெற்றிதான். (பலர் புகழ ஏதாவது செய்வதுதான் வெற்றி என்பதல்ல). வீட்டைவிட்டு எங்கும் செல்லக்கூடாது என்ற அண்மைக்காலத் தடையுத்தரவில், பலரும் தம் வேலையை இழந்தனர். கடைகளை மூடவேண்டிய நிலைமை பல வியாபாரிகளுக்கு. விமானப்பயணம் கூடாது என்ற நிலையில், விமானப் பணியாளர்களாக இருந்தவர்களுக்கு வருமானம் இல்லாதுபோயிற்று. ஆங்கிலத்தில் போதிய தேர்ச்சி இல்லாததால், கல்வித்தகுதிக்கு ஏற்ற வேலை கிடைக்கவில்லை இன்னும் சிலருக்கு. இவர்கள் அனைவரும், ‘அவ்வளவுதான்! என் வாழ்க்கை முடிந்துவிட்டது!’ என்று நம்பிக்கை இழந்தால் என்ன ஆகும்? நிலைமை மாறும் என்று பொறுமையைக் கடைப்பிடிக்கமுடியுமா? என்ன கஷ்டம் வந்தாலும், சாப்பாடு மட்டும் எல்லாருக்கும் அவசியமான தேவை என்று, உணவுப்பொருட்களைத் தயார் செய்கிறார்கள் பலர். அவற்றை வீடுகளுக்குக் கொண்டுசெல்லும் பணி சிலருக்கு. ஆண்களோ, பெண்களோ, இவர்களில் எவரும் அந்தஸ்து பார்ப்பதில்லை. ஒருவர் ஆயிரம் மரவள்ளிக்கிழங்கு செடிகளை நட்டு, கிழங்கை வறுவலாக விற்று, ஒரே நாளில் பல ஆயிரம் ரிங்கிட் சம்பாதிப்பதாகச் செய்தி வந்தது. இருபத்தி இரண்டு வயதான சீன இளைஞன் கல்லூரியில் படித்துக்கொண்டிருந்தபோதே பெற்றோருடைய சிறு கடையில் உதவி செய்திருக்கிறான். படிப்பு முடிந்ததும், தன் அறிவைக்கொண்டு, கணினிவழி வியாபாரத்தைப் பெருக்கியிருக்கிறான். ‘இதற்கு கல்லூரிப் படிப்பும், அதற்கான செலவும் வீண்!’ என்று பலர் கேலி செய்தாலும், அதைப் பொருட்படுத்தவில்லை. ஒரே தொழிலில் நிலைத்திருந்து கஷ்டப்படுவதைவிட, அதை விட்டுவிட்டு, புதிய முயற்சி ஒன்றில் ஈடுபடுவது அச்சத்தை விளைவித்தாலும், அதுதான் புத்திசாலித்தனம். அவ்வாறு செய்தால், ‘முன்பே செய்திருக்கவேண்டும்!’ என்ற வருத்தம் காலங்கடந்து உண்டாகாது. கிடைப்பது தோல்வியாக இருந்தாலும், செய்யாது போய்விட்டோமே என்ற வருத்தமாவது எழாதிருக்கும். கதை நேபாளத்தில் சுற்றுப்பயணத்தை முடித்துவிட்டு, விமானத்தில் கோலாலம்பூர் திரும்பிக்கொண்டிருந்தேன். விமானம் தரையிறங்கும்போது, ஒரு பக்கத்திலிருந்து பல குரல்களில், மகிழ்ச்சி கலந்த சிரிப்பு உரக்கக் கேட்டது. திரும்பிப் பார்த்தேன். நாலரை மணிநேரப் பயணமாக இருந்தாலும், வழியில் சாப்பிட எதுவும் வாங்காது, அங்கு உட்கார்ந்திருந்தார்கள் பல நேபாளிகள். முதன்முறையாக வெளிநாடு வந்திருக்கும் தொழிலாளிகள் என்று புரிந்தது. வெளிநாடுகளுக்கு வேலை நிமித்தம் போகிறவர்கள் பலவிதத் துன்பங்களை அனுபவிக்க நேரிடும். தாமே சமைத்துச் சாப்பிட்டால்தான் செலவுகளைக் கட்டுப்படுத்த முடியும் என்ற நிலை, குறுகிய இடத்தில் நிறைய பேருடன் படுக்கை, உற்றவர்களைவிட்டுப் பிரிந்திருத்தல், மாறுபட்ட கலாசாரத்தால் ஏற்படும் குழப்பங்கள் – இப்படியெல்லாம் நடக்கக்கூடும் என்று நினைத்தும் பாராது, வளமான எதிர்காலக் கனவுகளுடன் மகிழ்ந்திருந்தார்கள். எதிர்ப்படும் சங்கடங்களைப் பொறுமையாகச் சகித்துக்கொண்டு, வேலையைப் பொறுப்பாகச் செய்பவர்கள் முதலாளிகளின் ஆதரவைப் பெற்று, உயர வழியுண்டு. வெளிநாட்டிலிருந்து இங்கு வந்த ஒரு தையல்காரர் தான் எதிர்பார்த்தபடி வாழ்க்கை எளிதாக இல்லை என்றோ, அல்லது மதுபானங்கள் எளிதாக, எங்கும் கிடைப்பதைக் கண்டோ, அப்பழக்கத்திற்கு அடிமையானார். அவரது உத்தியோகம் நிலைக்கவில்லை. அவர் செய்த தவறு: ஆரம்பித்த காரியத்தை (புதிய நாட்டில் கிடைத்த வேலையை) சரியாக முடிக்காது, அதில் முழுக்கவனமும் செலுத்தாது, முதலாளி பலமுறை கண்டித்தபோதும் விழித்துக்கொள்ளாமல் இருந்தது. புதிதாக ஒரு வாழ்க்கையை ஆரம்பிக்க வேண்டுமானால், பழைய பழக்கங்களை, தொடர்புகளை, விட்டுவிடத் தயாராக இருக்கவேண்டும். கதை இன்பக் கனவுகளுடன் மலேசியா வந்தடைந்த அயல்நாட்டுத் தொழிலாளி ஒருவருக்கு சம்பளம் அளிக்கப்படவில்லை, கேட்டால் அடி, உதை. சாப்பாட்டுக்கே வழியில்லாது போனபோதும், அவருக்கு எங்கு போய், என்ன செய்வதென்று புரியவில்லை. கடப்பிதழோ, முதலாளி கைவசம். அவரைப் பற்றிய செய்தி தினசரியில் முதல்நாள் வெளியாகியது. பஞ்சத்தில் அடிபட்டவர்போல் காணப்பட்டார். மறுநாள், அவருடைய மரணச்செய்தி! இம்மாதிரியான, கொடுமைக்கார, முதலாளிகள் தண்டிக்கப்பட்டாலும், பிழைப்பை நம்பி வந்த உயிர் போனது போனதுதான். பலர் எப்படியோ தப்பித்துவிடலாம். இருப்பினும், ’நான் என்னென்ன கஷ்டங்களையெல்லாம் அனுபவித்தேன், தெரியுமா?" என்று கடந்தகால நினைவுகளிலேயே ஆழ்ந்துவிடுவதால் பயனில்லை. அவற்றை மாற்றவா முடியும்! ‘நான் இத்தனைத் துன்பங்களை கடந்துவந்திருக்கிறேனா!’ என்ற வியப்புடன், பல வருடங்களுக்குப்பின், பேரக்குழந்தைகளுக்குச் சொல்ல நல்ல கதைகளாக வேண்டுமானால் அவை அமையும்! வாழ்க்கை இன்னும் முடியவில்லை என்ற நிலையில், ‘வேறு என்ன செய்யலாம்?’ என்று சிந்தித்துக்கொண்டே இருப்பவருக்கு உற்சாகம் குன்றுவதே கிடையாது. ‘எல்லாம் நன்மைக்கே!’ என்று எப்போதும் சொல்லிவந்த ஒருவனுக்கு விபத்தினால் ஒரு கால் முடமாகிவிட்டது. ‘இதில் என்ன நன்மை?’ என்று சிலர் கேலி செய்ய, ‘ஒரு செருப்பு வாங்கினால் போதுமே,’ என்றானாம்! எந்த நிலையிலும் அவன் தன் உற்சாகத்தை இழக்கவில்லை என்பது பாராட்டப்பட வேண்டியது. கதை பதின்மூன்று ஆண்டுகளுக்கு முன்னர், நியு யூ (NIU YU) என்ற பெண் தனது பதினோராவது பிறந்தநாள் கொண்டாட்டத்திற்காக பள்ளிக்கூடத்திலிருந்து வீடு திரும்பும் ஆவலில் இருந்தாள். சீனாவின் தென்மேற்குப் பகுதியில் அன்று நடந்த பூகம்பத்தில் 70,000 பேர் உயிரிழந்தனர். அச்சிறுமியின் பள்ளிக்கூடக் கட்டடம் இடிந்து விழ, மூன்று தினங்கள் அதனடியில் மாட்டிக்கொண்டாள். உயிர் பிழைத்தாள். ஆனால், வலது காலை எடுக்கும்படி ஆயிற்று. இப்போது, முழங்காலுக்குமேல் செயற்கைக்கால் வெளியே தெரிய நடக்கும் அப்பெண் ஒரு மாடல்! “என்னைப்போன்றவர்கள் முழுமை அற்றவர்களாக இருக்கலாம். ஆனால், நாங்களும் அழகானவர்கள்தாம்!” என்னும் அவளது தன்னம்பிக்கை பலருக்கும் தைரியம் அளித்துவருகிறது. கசப்பான நிகழ்வுகள் முடியும்போது, புதிய திருப்பங்கள் ஏற்பட வழியுண்டு. அதற்காக, துன்பம் எதிர்ப்படும்போதுதான் புதிய முயற்சிகளில் ஈடுபடவேண்டும் என்பதல்ல. முடிவில் ஆரம்பம் நான் பள்ளியில் படித்தபோது, அநேகமாக எல்லா ஆசிரியைகளும் கணவனை இழந்தவர்கள், அல்லது முதிர்கன்னிகள். பதின்ம வயதில், அவர்களுடைய நிலை புரியவில்லை. கதை இளம்வயதிலேயே கணவனைப் பறிகொடுத்தவள் அவள். துக்கத்தைவிட, ‘இனி யார் நம்மைக் காப்பாற்றுவார்கள்!’ என்ற மலைப்புதான் பெரிதாக எழுந்தது. அவளுடைய தந்தை அவளுடன் வந்து தங்கி, அவள் பாதியில் விட்ட படிப்பைத் தொடரச் செய்தார். புதிய இடத்தில், புதிய மனிதர்களுடன் எப்படித்தான் காலம் கழிக்கப்போகிறோமோ!’ என்று முதலில் பயம் ஏற்பட்டது. ‘வேறு வழியில்லை!’ என்ற நிலையில், படிப்பைத் தொடர்ந்தாள். பிறகு, ஆசிரியப்பணியில் அமர்ந்தபோது, வாழ்க்கை அவ்வளவு பயங்கரமானதாகத் தோன்றவில்லை. ‘பிறர் கையை எதிர்பார்த்து, காலத்தைக் கழிக்கத் தேவையில்லை!’ என்று புரிய, தன்னம்பிக்கை வளர்ந்தது. பாதுகாப்பான நிலையைப் பெரிதாகக் கருதி, அளவுக்கு மீறிய பொறுமையுடன் இருந்தால், வளர்ச்சி ஏது! இளமையும் ஆரோக்கியமும் இருக்கும்போதே சிலர் ஒன்றன்பின் ஒன்றாக, பல பொழுதுபோக்குகளில் முழுக்கவனத்தையும் செலுத்திக் கற்பது தம் திறமைக்கே சவால் விட்டுக்கொள்ள எண்ணித்தான். அவ்வாறு கற்பது எதுவும் வீண்போவதில்லை. வேறு எங்காவது உபயோகப்படும். சில சமயம், நாம் விரும்பினாலும், எதிர்பார்க்காவிட்டாலும், மாற்றங்கள் நம்மைத் தேடி வரும். புதிய இடத்திற்கு வேலை மாற்றம் கிடைத்தால், அங்கு புதிய மொழி ஒன்றைக் கற்கவேண்டிய அவசியம் தவிர்க்கமுடியாதது. ‘புதியதாக எதிலாவது இறங்குவதா!’ என்ற அச்சம் அப்போது தடுக்கக்கூடும். அடுத்தடுத்த நாட்கள் ஒரே சீராக இருந்தால், சலிப்பு ஏற்படுமே! வாழ்வில் வளர்ச்சியோ, முன்னேற்றமோ இருக்குமா? படைத்தலும் ரகசியமும் ‘நான் பல புத்தகங்களைக் கரைத்துக் குடித்திருக்கிறேன். அதனால் மகா புத்திசாலி!’ இப்படி எண்ணிப் பெருமைப்படுகிறவர்கள் முக்கியமான ஒன்றைப் புரிந்துகொள்வதில்லை. நிறைய புத்தகங்களைப் படிப்பதால் மட்டும் அறிவு வளர்ந்துவிடாது. கற்பனைத்திறனையும் வளர்த்துக்கொள்ள வேண்டும். ஓயாமல் தன்னைப்பற்றியோ, பிறரைப்பற்றியோ யோசிப்பதால் நேரம்தான் விரயமாகும். ஒருவர் தனக்குப் பிடித்த ஆக்ககரமான பொழுதுபோக்குகளில் ஈடுபட்டால், அவரால் பிறருக்கும் உபயோகமானதாக எதையாவது செய்ய இயலும். அவசியம் இருந்தால்தான் புதியதாக ஒன்றைக் கண்டுபிடிக்கும் நிலை வரும் என்பதல்ல. ‘இப்படிச் செய்தால் என்ன? ஏன், இம்மாதிரியும் இருக்கலாமே!’ என்று, நடைமுறையில் பின்பற்றப்படுவதை வேறுவகையில் மாற்றுகிறார்கள் படைப்பாளிகள். அது கண்களால் பார்க்கும் தொலைவில் இல்லாவிட்டாலும், கற்பனையால் அவர்கள் எதிரில் இருப்பதைப்போல் காண்கிறார்கள். கற்பனையில் கண்டதைக் கனவாகக்கொண்டு, அதிலேயே நிறைவு கண்டுவிடாது, அவற்றை நனவாக்கவும் முயற்சித்து வெற்றி பெறுகிறார்கள். எந்தக் கண்டுபிடிப்பையும், ‘இது பாதுகாப்பானதுதான்!’ என்று முதலில் உறுதி கூறவும் முடியாது. இருப்பினும், அதன் உபயோகம் நேரத்தையும், சக்தியையும் மிச்சமாக்கலாம் என்ற எதிர்பார்ப்புடன், துணிச்சலுடன் செய்கிறார்கள். ஒருவர் புதியதாக எதையாவது செய்ய முயன்றால், ‘புரட்சி’ என்பார்கள். அதனால் விளையும் நன்மைகள் அதை முயல்கிறவருக்குத்தான் புலப்படும். புதியதாக எந்தக் காரியத்தைத்தான் உடனுக்குடன் செய்ய முடியும்! பொறுமையும் விடாமுயற்சியும் அதிக அளவில் இருக்கவேண்டும். அதற்காக நிறைய உழைக்கவேண்டும். பல பிழைகளும் சறுக்கல்களும் எதிர்ப்படும். இவற்றால் உற்சாகத்தை இழக்காது, எடுத்த காரியத்தை முடிக்கும் உறுதியுடன் ஈடுபட்டால்தான் முயற்சி திருவினையாகிறது. தற்காலத்தில், எல்லோராலும் பரவலாக உபயோகப்படுத்தப்படும் ப்ரெஷர் குக்கர் டெனிஸ் பாபின் என்ற பிரெஞ்சு நாட்டுக்காரரால், 350 வருடங்களுக்கு முன்பே கண்டுபிடிக்கப்பட்டது. ‘நீராவியாலும், அழுத்தத்தாலும் பருப்பு, அரிசிபோன்ற எல்லாவற்றையும் வெகு விரைவாக வேகவைக்க முடியுமோ?’ என்ற யோசனை அவருக்கு முதலில் எழுந்திருக்கவேண்டும். ஆரம்பத்தில், ‘இது நம்மால் முடியுமா?’ என்ற சந்தேகம் இருந்திருந்தால், அதை அவரே வென்றிருக்கக்கூடும். எதையும் சாதிக்க தன்னம்பிக்கை அவசியமாயிற்றே! (இந்தியாவில் அறிமுகமானபோது, அதை உபயோகிக்க பலரும் பயந்தார்கள். அழுத்தம் அதிகமாக இருந்தபோதே, விவரம் புரியாது, மூடியைத் திறக்கமுயன்ற சிலர் முகத்தில் ஆவி அடித்தது காரணமாக இருக்கலாம்). ஆரம்ப சூரத்தனம் எந்தத் துறையாகிலும், நாம் செய்ய ஆரம்பித்த ஒரு காரியத்தை ரகசியமாக வைக்கவேண்டுவது அவசியம். சுறுசுறுப்பாக ஆரம்பித்துவிட்டு, முடிப்பதற்குள் அதைப் பற்றிப் பிறருடன் பெருமையாக பேச நினைப்பது அபாயம். யாரோ ஒருவர், அதைக் கவனமாகக் கேட்டுவிட்டு, ‘நீ சொல்வது நடக்காது!’ என்று சந்தேகம் ஏற்படச் செய்வார் முதலில். அவரது போலி சந்தேகத்தைச் சவால் என்றெடுத்துக்கொண்டு, விரிவாக விளக்குவோம். இதைத்தானே அவரும் எதிர்பார்த்தார்! நம்மை முந்திக்கொண்டு, தானே முயன்று கண்டுபிடித்ததைப்போல், தக்க இடத்தில் விரிவாகக் கூறி, லாபம் சம்பாதிப்பார். இக்காலத்தில் இம்மாதிரியான நம்பிக்கைத் துரோகிகள் மலிந்துவிட்டார்கள். கதை ஓர் இசைக்கலைஞர் தான் இயற்றிய பாடல்களை தன் குருவிடம் காட்டினார், அவர் மகிழ்ந்து பாராட்டுவார் என்று எதிர்பார்த்து. அப்பாடல்களை நோட்டமிட்ட குரு ஒன்றும் சொல்லாதது அவருக்கு ஏமாற்றமாக இருந்தது. அதன் காரணம் பிறகுதான் புரிந்தது. தான் இயற்றியவை அவை என்று குரு அவற்றைப் பிரகடனப்படுத்தினார்! ‘உங்களை எவ்வளவு நம்பினேன்! நீங்கள் என்னை இப்படி ஏமாற்றலாமா?’ என்று சீடரால் குருவைத் தட்டிக்கேட்க முடியவில்லை. குருபக்தியும், அவர்மேல் கொண்டிருந்த மரியாதையும் தடுத்தன. ஆனால், ஆயுள் முழுவதும் குருவின் நேர்மையற்ற செயல் அவரை உறுத்திக்கொண்டே இருந்தது. வருத்தம் மறையவே இல்லை. ஏன் காப்பி அடிக்கிறார்கள்? பிறரைக் காப்பி அடிப்பது எளிதாக இருக்க, ‘நமக்கு இருக்கிற கொஞ்சம் மூளையைக் கசக்கி, எதையாவது கண்டுபிடிப்பது முடிகிற காரியமா!’ என்ற கொள்கை உடையவர்கள் இப்படிப்பட்டவர்கள். இவர்களுடைய சாமர்த்தியம் வேறுவிதமாக வெளிப்படும். ஒரு ராகத்தில் அமைந்த பல பாடல்களைக் கேட்டால், இசை நன்கு பயின்றவர்களுக்குக் கற்பனை ஓடும். அவற்றை எப்படியெல்லாம் மாற்றலாம் என்ற யோசனை எழும். ‘அவ்வளவு கஷ்டப்படுவானேன்!’ என்றுதான் காப்பி அடிக்கிறார்கள்! கதை கர்னாடக இசையில் தேர்ந்த ஒருவர் வேறு ஒருவரது பாடலுக்குத் தானே மெட்டமைத்து, ஒரு கச்சேரியில் பாடியிருந்தார். பக்கவாத்தியம் வாசித்தவர்களிடம் அடக்கமாக, தன் பங்களிப்பைத் தெரிவித்துக்கொண்டார். அவர் மறைந்ததும், திரைப்பட இசை அமைப்பாளர் ஒருவர் அந்த மெட்டைத் தன்னுடையதாக ஆக்கிக்கொண்டார். அதனுடன் வேறு வாத்தியங்களையும் இணைத்தது மட்டும்தான் அவருடைய கைங்கரியம். அவருக்குப் பெரும்புகழ் கிடைத்தது. ‘Genius’ என்றுகூட ஒரு ரசிகர் பாராட்டியிருந்தார்! குழுவில் படைப்பு இருவரோ, மூவரோ இணைந்து ஒரு படைப்பைப் படைத்தால் எளிதாக இருப்பதுடன், சுவையாகவும் இருக்கும். இதில் ஒருவர் நடைமுறையில் இருப்பதைப் புரிந்து வைத்திருப்பார். இன்னொருவர், ‘இப்படிச் செய்தால் என்ன?’ என்று புதிய கற்பனையைக் கொண்டுவருவார். மற்ற இரண்டையும் இணைப்பார் மூன்றாமவர். அறிவிலும், திறமையிலும் ஒத்திருப்பதுடன், அவர்களுக்குள் போட்டி, பொறாமை இருக்கக்கூடாதென்பதும் அவசியம். விவாதம் வரலாம். ஆனால், சண்டையில் முடியக்கூடாது. ‘நான்தான் செய்தேன்!’ என்று கூறி, தானே முழு பாராட்டையும் பெற எண்ணுகிறவர் சுயநலவாதி. அடுத்த முறை, யார் அவருடன் இணைவார்கள்! கதை “நான்குபேர் இணைந்து, ஒரு கதையை எழுதுகிறோம். நான் இரண்டாவது, நீங்கள் மூன்றாவதாக எழுதுங்கள்,” என்று ஒரு பத்திரிகை ஆசிரியர் பணிக்க, நான் ஒப்புக்கொண்டேன். எழுதி அனுப்பிவிட்டு, அதைப்பற்றி மறந்தேபோனேன். வெளியானதும், ‘இரண்டாவது பகுதி சுமாராக இருக்கிறது. கடைசி ஒரு பக்கம்தான் சுவாரசியமாக இருக்கிறது,’ என்று தோன்றியது. அடுத்த மாதம் நான் எழுதியது வெளியாக, அதிர்ச்சி உண்டாயிற்று. அப்போதுதான் புரிந்தது, என் பகுதியின் முதல் பாகத்தை அவர் தனதாக ஆக்கிக்கொண்டார் என்பது. ‘இப்படிச் செய்துவிட்டீர்களே!’ என்று நான் கேட்கவில்லை. நான் அவரைவிடத் திறமைசாலி என்று சமாதானம் செய்துகொண்டேன். அடுத்த பல மாதங்கள் அப்பத்திரிகைக்கு எதுவும் எழுதவில்லை. அப்போது அவருக்குப் புரிந்திருக்கும் என் மனவருத்தம். மனச்சாட்சியே இல்லாது, இன்னொருவரின் ஆக்கபூர்வமான வேலையைத் ‘திருடினால்’ உண்மையான நிறைவு கிடைக்குமா? ஆசை இருக்கு கதையெழுத, ஆனால்… ஒரு படைப்பை ஆரம்பிப்பதற்குமுன், அதற்கான அறிவை வளர்த்துக்கொள்ள வேண்டும். மொழி வளமும் அவசியம். ‘எனக்குக் கதையெழுத, பாடல்கள் புனைய ஆசை. ஆனால், படிக்கப் பிடிக்காது!’ என்றால் எப்படி? முன்னூறு வருடங்களுக்குமுன் இருந்த தியாகராஜர், முத்துஸ்வாமி தீட்சிதர் போன்ற வாக்கேயக்காரர்களைப் பார்ப்போமா? சிறுவயதிலேயே அவர்கள் பல மொழிகளில் தேர்ச்சி பெற குருமார்களிடம் அனுப்பினார்களாம் அவர்களது பெற்றோர். அதைத் தவிர, மதத்தைப்பற்றியும் கற்றார்கள். பக்தி மிகுந்து, தென்னாட்டில் கோயில் கோயிலாகப் போக, அங்கிருந்த தெய்வங்களின்மேல் பாடல்களைப் புனையும் திறன் வந்தது. தெலுங்கு, சம்ஸ்கிருதம் ஆகிய மொழிகளில், கர்னாடக இசைப்பாணியில் இயற்றினார்கள். அவர்களுடைய கற்பனைத்திறன் இன்றளவும் பாராட்டப்படுவது எப்படியென்றால், ஆர்வத்துடன், படைப்புக்கு வேண்டிய ஆதாரமான அறிவு, மொழித்திறன் இரண்டையும் பெற்றிருந்ததுதான். எந்தத் துறையானாலும், கற்பனைவளம் மிக்கவர்களே முன்னுக்கு வருகிறார்கள். தமிழ்த் திரைப்படங்கள் ஆரம்பித்த காலத்தில், செந்தமிழில் உரையாடினார்கள். ஐம்பதுகளில், ‘நாம் அன்றாடம் அப்படிப் பேசுவது கிடையாதே! எல்லாருக்கும் இந்தத் தமிழ் புரியுமா?’ என்ற சந்தேகம் எழ, சற்றே மாற்றினார்கள். இருந்தாலும், உணர்ச்சிமயமான இறுதிக்கட்டத்தில் செந்தமிழ் துள்ளி விளையாடும். காலப்போக்கில், அதுவும் மாற, வெவ்வேறு உச்சரிப்புகளுடன்கொண்ட தமிழ் பயன்படுத்தப்பட்டது. தெய்வங்கள் எப்படிக் காட்சி அளிப்பார்கள்? பரம பக்தர்களுக்குத்தான் இக்கேள்விக்குப் பதில் புலனாகும். நம்மைப்போன்ற பாமரர்களுக்காக, தெய்வீகமான படங்களின் இயக்குனரின் கற்பனையால், உடை, ஆபரணங்கள் போன்றவை அமைக்கப்பட்டன. தெய்வங்கள் செந்தமிழில் உரையாட, நகைச்சுவைப் பாத்திரங்கள் தற்காலத்தமிழில் கொச்சையாகப் பேசுவார்கள்! ரசிகர்களும் இயக்குனர்கள் மற்றும் கதாசிரியர்களின் கற்பனையை ஏற்றுக்கொண்டனர். அவ்வப்போது, விமரிசகர்கள் குறிப்பிட்ட குறைகளையும் நிவர்த்தி செய்தனர். கதை நான் மேற்பயிற்சிக்காகப் போயிருந்தேன். நான்குவிதமான தலைப்புகள் முதலிலேயே கொடுக்கப்பட்டிருந்தன. விரிவுரையாளர்கள் அவற்றை ஒட்டிப் பாடம் நிகழ்த்தினார்கள். அவற்றில் ஒன்றைத் தேர்ந்தெடுத்து, பயிற்சி முடியும் தறுவாயில், நீண்ட கட்டுரை ஒன்று எழுதவேண்டும் – மலாய் மொழியில். எங்கள் குழுவில் சீன ஆசிரியைகள் சிலர் இருந்தார்கள். அவர்கள் கற்றது, கற்பித்தது எல்லாமே சீன மொழியில்தான். ஓரளவு ஆங்கிலம் மட்டும் பேசுவார்கள். மலாய் அறவே தெரியாது என்ற நிலையில், அவர்களுக்கெல்லாம் கட்டுரை எழுதித் தந்து சம்பாதித்தார் ஒருவர்! அவர்களது நிலை புரிந்து, எந்தப் புகாரும் எழுப்பப்படவில்லை. கற்பனை இருந்திருக்கலாம். ஆனாலும், இவர்களால் படைக்க முடியவில்லை. ஏனெனில், மொழி தெரியாமல் போயிற்று. முதுமையில் இளமை நூறு வயதைக் கடந்த ஒருவர் வேடிக்கையாகக் கூறியது: “நம்மை ஒத்தவர் என்ன நினைப்பார் என்ற கவலை இனி இல்லை. ஏனெனில், அவர்களில் யாரும் இப்போது உயிருடன் இல்லை!” பிறர் என்ன நினைப்பார்கள்! நாம் அப்படி நினைத்துக் குழம்பாவிட்டாலும், பதின்ம வயதிலிருந்து, ‘பிறர் என்ன நினைப்பார்கள்!’ என்று கண்டித்துக்கொண்டே இருப்பார்கள் பெற்றவர்கள். அதனால், வயது ஏற ஏற, பிறருக்குப் பயந்தே வாழ்வது பழக்கமாகியிருக்கும். வீண் கட்டுப்பாட்டைப் பொறுக்கமுடியாது, சுதந்திரமாக நடக்கத் தலைப்பட்டவர்களுக்கு வசவும், கெட்ட பெயரும் கிடைக்கும். அறுபது வயதில், யாரும் நம்மைப்பற்றி நினைத்துக்கொண்டிருக்கவில்லை என்பது புலனாக, ‘இவர்களுக்காகவா பயந்து, பயந்து, நம் வாழ்க்கையை வீணடித்தோம்!’ என்ற அயர்ச்சி உண்டாகும். “இளமையை நல்லபடியாகக் கழித்திருந்தால், முதுமை ஓய்வாக இருக்கும்!” (ஸ்பானிஷ் நாட்டுப் பழமொழி) முதுமையில் வாட்டமா? நாம் வளர்க்கும் குழந்தைகளும் ஒரு நாள் பெரியவர்கள் ஆவார்கள்; அப்போது, அவர்களுடைய அன்பும் அருகாமையும் நமக்குத் தேவைப்படும் என்பது புரியாது, அத்தியாவசியத் தேவைகளைக் கொடுப்பதுடன் தம் கடமை தீர்ந்தது என்று நினைத்து நடப்பவர்கள் முதுமையில் வாடத்தான் நேரும். கதை நாற்பது வயதுக்குமேல் மூன்றாவது குழந்தை ஆயிஷாவைப் பெற்றெடுத்தாள் ஹப்ஸா. உத்தியோகத்தில் உயர்வு கிடைக்கும் சமயத்தில், ‘இது என்ன தொந்தரவு!’ என்ற எரிச்சல் ஏற்பட, குழந்தையை வளர்க்க ஒரு பெண்ணை அமர்த்தினாள். குழந்தை எப்படி வளர்கிறாள் என்று கவனிக்கும் ஆர்வம் கிஞ்சித்தும் அவளிடம் இருக்கவில்லை. ஒரு சமயம், "உன்னை எதற்குத்தான் பெற்றேனோ!’ என்று ஹப்ஸா எரிந்து விழ, அவள் மனம் உடைந்துபோயிற்று. ஆயிஷாவுக்குப் பத்து வயதானபோது, தாய் எது கூறினாலும், “நீ என்னை வளர்க்கவில்லையே” என்று எதிர்த்துப்பேசினாளாம். (அண்மையில், தன் கதையை வருத்தத்துடன் அப்பெண்ணே என்னிடம் பகிர்ந்துகொண்டது). அன்பு கிடைக்காது ஏங்குபவர்கள் தீய நட்பை நாடுவார்கள். ஆனால், ஆயிஷா நல்ல பெண். மகா புத்திசாலி வேறு. கல்லூரிப்படிப்புடன், தன் கவனத்தை பல ஆக்ககரமான வழிகளில் செலுத்தினாள். தீபாவளிக்கு எங்கள் இல்லத்திற்கு வந்துவிட்டு, “நான் இவ்வளவு மகிழ்ச்சியுடன் இருந்ததே இல்லை. இன்றிரவு உங்கள் வீட்டில் தங்கலாமா?” என்று கெஞ்சலாகக் கேட்டாள். அவள் உணவருந்தும்போது, மெள்ள பேச்சுக்கொடுத்தேன். “நீங்கள் செய்வதுபோல், எங்கள் வீட்டில் ஒன்றாக அமர்ந்து, பேசிச் சிரித்தபடி சாப்பிடமாட்டோம். பண்டிகைச் சமயங்களில் அப்படிச் சாப்பிட்டாலும், பேசுவது கிடையாது,” என்றாள். குடும்பத்தில் யாராவது தனியாகச் சாப்பிட்டாலும், கூடவே ஒருவர் இருக்கவேண்டும் என்பது நான் என் பாட்டியிடம் கற்ற பாடம். சாப்பிடுபவர் அதிகம் பேசக்கூடாது. ஆனால் உடன் இருப்பவர் சுவாரசியமாக ஏதாவது கதை சொல்வார். அனேகமாக, அது அவர் வாழ்க்கையில் சந்தித்த நபர்களைப்பற்றி இருக்கும். “காரில் போகும்போதும் நான் இப்படித்தான் எதையாவது அலசிக்கொண்டிருப்பேன். பொதுவாக, அதிகம் பேசாதவர்கள்கூட அப்போது பேசுவார்கள்,” என்று நான் கூற, “நாங்கள் காரிலும் பேசிக்கொள்வது கிடையாது. அப்பாவும் அம்மாவும் சண்டை போட்டுக்கொண்டு இருப்பார்கள்,” என்று, விரக்தியுடன் பதில் வந்தது. இன்றும், ‘அம்மாவை எப்படியெல்லாம் ஆத்திரப்படுத்தலாம்?’ என்று யோசிப்பவள்போல் நடந்துகொள்கிறாள். அவளைச் சொல்லிக் குற்றமில்லை. சிறு வயதில் அன்பாக வளர்க்கப்பட்டு இருந்தால்தானே தனக்குக் கிடைத்ததை திருப்பி அளிக்க முடியும்? வீடு திரும்புகையில், “உங்கள் கதைகளுக்கு மிக்க நன்றி,” என்று பலமுறை கூறி விடைபெற்றாள் ஆயிஷா. வயதானவர்களா? போர்! தமிழ்நாட்டில், ‘பெரிசு’, ‘கிழவி’ என்று பேரன் பேத்திகளே அழைப்பதைக் கேட்டிருக்கிறேன். அவர்களுக்கும் ஒரு நாள் முதுமை அண்டாதா? அதுதான் அவர்கள் பழக்கம் என்றாலும், மரியாதை இல்லாதது போலிருக்கிறதே! முதுமை ஒரு நோயல்ல. எத்துணை அனுபவங்களை, இடர்ப்பாடுகளைக் கடந்து வந்திருந்தாலும், முதியோர்களில் பலரும் மகிழ்ச்சியுடன் வாழ்வை நடத்துகிறார்களே! வயதானவர்கள் அனைவருமே மகிழ்ச்சியாக இருப்பார்கள், வாழ்க்கையிலிருந்து பாடம் கற்றிருப்பார்கள் என்று கூறமுடியாது. அதற்கு இளமையில் சற்று கவனமாக நடந்திருக்கவேண்டும். ‘எனக்கு வயதானவர்களுடன் பேசவே பிடிக்காது. போரடிப்பார்கள்!’ என்று கூறும் நடுத்தர வயதினர் முதுமை அடைந்ததும், நிராதரவாக உணர்வார்கள் – ‘நாம் நினைத்ததுபோல்தானே பிறரும் நம்மை மதிப்பிடுவார்கள்!’ என்ற தயக்கத்துடன். அறிவுரையை ஏற்கலாமா? “நான் புகை பிடிப்பதில்லை. என் தந்தைக்கு அந்தப் பழக்கத்தால் உடல்நிலை சீர்கெட்டுவிட்டதென்று, ‘நீயும் இந்தப் போதைப் பழக்கத்திற்கு ஆளாகாதே! அதை விடவே முடியாது,’ என்று அவரே சிறுவயதிலிருந்து எனக்கு அறிவுரை கூறினார்,” என்று நண்பர் ஒருவர் கூறினார். வயதில் மூத்தவர்கள் சொல்வதெல்லாம் சரி என்பதல்ல. ஒரு வேறுபாடு: ‘நான் செய்த தவற்றை நீயும் செய்யாதே!’ என்ற நல்லெண்ணத்துடன் கூறுகிறார்கள் என்று புரிந்துகொண்டால், அவர்கள் சொற்படி நடக்கமுடியும். அதுவே அவர்களுக்கு அளிக்கக்கூடிய மரியாதை. அறிவு வளர வேண்டுமானால், வயதும் கூடிக்கொண்டே போகவேண்டும் என்பதல்ல. பிறரது வாழ்க்கையைக் கூர்ந்து கவனித்தாலே போதும். அவர்கள் செய்த தவற்றை நாமும் செய்யாதிருப்போம். எப்போதும் பாதுகாப்பா! சில குழந்தைகள் பாதுகாப்பை நாடி, எப்போதும் தாயை ஒட்டியபடிதான் இருப்பார்கள். ‘மகளுக்குத்தான் என்மீது எத்தனை அன்பு!’ என்றெண்ணும் தாய்க்கு இப்போக்கு மகிழ்ச்சியைத் தரலாம். ஆனால், குழந்தையின் வளர்ச்சிக்கு இது நல்லதல்ல. தனியாக இயங்கவேண்டிய தருணங்களில் அச்சம்தான் எழும். கதை பத்து வயதான மகளிடம் வீட்டு வேலை செய்யச் சொன்னாள் தாய். “என் வயதில் நீ செய்தாயா?” என்ற சந்தேகம் பிறந்தது மகளுக்கு. “இல்லை,” என்று உண்மையை ஒத்துக்கொண்டாள் பெரியவள். “பின்னே, என்னை மட்டும் செய்யச் சொல்கிறாயே?” சிறுகுழந்தைகளுக்கே உரிய எதிர்ப்பு. “நான் வளர்ந்தபோது, எங்கள் வீட்டு வேலைகளைச் செய்ய ஆட்கள் இருந்தார்கள். அது வேறு காலம், வேறு நாடு. நீ வளர்ந்தபின், எல்லா வேலைகளையும் நீயேதான் செய்ய வேண்டியிருக்கும். அதற்காகத்தான் இப்போதே பழக்குகிறேன். என்னைமாதிரி நீயும் திண்டாடமாட்டாய், பார்!” சில குழந்தைகளுக்கு இத்தகைய விளக்கம் புரியும். வேறு சிலர், அம்மாமேல் ஆத்திரப்படுவார்கள். தாய் உறுதியாக இருந்தால், அவளுடைய கண்டிப்பின் காரணம் பிற்காலத்தில் புரியும். அறுபது, எழுபது வயதுக்குமேல் செய்யும் ஒவ்வொரு காரியமும் மலை ஏறுவதுபோல் பிரயத்தனப்பட்டுதான் செய்ய வேண்டியிருக்கிறது. ஆனால், மலைமேலிருந்து பார்ப்பதுபோல், வாழ்க்கையின் அழகான தன்மையை உணரமுடியும் என்கிறார் திரு. அனுபவசாலி. வயதானால் குறைந்துகொண்டே வரும் புற அழகு. ஏன், மறைந்துவிடவும் கூடும். ஆனால், மனம் அழகாக இருந்தால், எந்த வயதிலும் அழகாகத் தெரிவார்கள். காலம் எப்போதும் ஒரேமாதிரி இருப்பதில்லை. எல்லா உயிர்களின் உடலும் அப்படித்தான். ஆனால், நம் எண்ணங்களை காலத்துக்கு ஏற்ப மாற்றி நடந்துகொண்டால், நன்மதிப்பும் மரியாதையும் நிலைக்கும். கதை பெரிய பணக்காரனாக வேண்டும் என்று இளமையில் கனவு கண்டு, அதற்காகக் கடுமையாக உழைத்தான் ரகுபதி. தன்னைச் சார்ந்தவர்களுக்குத் தேவைக்கும் அதிகமாகவே பணம் கொடுத்தான். பணத்துடன் அதிகாரமும் வந்தடைந்தது. அவற்றிற்கான விலை: நேரமின்மையால் குடும்பத்தைக் கவனியாதது. தங்கள் வாழ்க்கையில் இப்படி ஒரு நபர் இருப்பதையே அவன் குடும்பத்தார் உணரவில்லை. வயதானதும், ரகுவின் உடல்நிலை சீர்கெட்டது. எதிர்பார்த்த அன்பும், அண்மையும் கிட்டவில்லை. ஏமாற்றமும், உலகத்தாரின் ‘நன்றிகெட்ட’ போக்கால் ஆத்திரமும்தான் மிஞ்சின. அன்பு, கனிவான பேச்சு ஆகியவற்றைக் காசு பணத்தால் ஈடுகட்டிவிட முடியுமா? இது புரியாததால்தான் இறுதிக்கட்டத்தில் பலரது வாழ்க்கையும் சோகத்தில் ஆழ்ந்துவிடுகிறது. முதுமையில் முடிந்துவிடுமா வாழ்க்கை? குழந்தைகள் வளர்ந்து, கூட்டைவிட்டுப் பறந்ததும், “அவ்வளவுதான்! என் வாழ்க்கை முடிந்துவிட்டது!” என்று விரக்தியுடன் பெருமூச்சு விடுவது எதற்கு? உத்தியோகத்திலிருந்து ஓய்வு பெற்றுவிட்டாலும், அத்துடன் வாழ்க்கை முடிந்துவிடுவதில்லை. புதிதாகக் கற்க எவ்வளவோ இருக்கின்றன. துணுக்கு “நீ உன் வயதுக்கேற்றபடி நடந்துகொள்ளேன்!” என்று சிடுசிடுத்தாள் மகள். அலட்சியமாக, தாய் அளித்த பதில்: “எல்லாரும் அப்படி நடந்துகொள்வதால்தான் உலகம் இப்படி சீர்கெட்டுக்கிடக்கிறது!” கதை அழகழகாக உடுக்கவேண்டும், புதிய நாடுகளைச் சுற்றிப்பார்க்கவேண்டும், பலவிதமான மனிதர்களைச் சந்திக்கவேண்டும் என்று ஏதேதோ ஆசைகள் மேரிக்கு. ஆனால், வன்முறையை பிரயோகித்த கணவன் அவளுக்கு வாய்த்திருந்தான். தாற்காலிகமான வேலை செய்து குழந்தைகளைக் காப்பாற்ற நேர்ந்தது. அவளுடைய முதுமையில், கணவன் இறந்தான். ஆனால், அவள் நிர்க்கதியாக விடப்படவில்லை. பல ஆண்டுகள், தங்களுக்காக தாய் அனுபவித்த அவதி புரிந்து, மகன் வெளிநாட்டில் வேலை செய்து, நிறைய காசு அனுப்பினான். ஒவ்வொன்றாக அவளும் தன் ஆசைகளை நிறைவேற்றிக்கொண்டாள். மகிழ்ச்சியுடன், “கடவுளால் நான் ஆசிர்வதிக்கப்பட்டிருக்கிறேன்!” என்கிறாள். கடந்தகாலம் கடந்தே போய்விட்டது. வயது ஏறிக்கொண்டே போனாலும், சிறு குழந்தைகளைப்போல், எல்லாவற்றையும் அறியும் ஆர்வமும், மகிழ்ந்து சிரிக்கும் குணமும் இருக்கும்வரை யாரையும் முதுமை அண்டுவதில்லை. இளமையிலிருந்த அவர்களுடைய அழகு முகத்திலிருந்து இருதயத்திற்குப் போய்விடுகிறதோ? புகழ் என்னும் போதை இணையம் புழக்கத்திற்கு வருமுன், ஒரு சினிமா பத்திரிகையில் பிரபல நடிகைகளின் பேட்டி எடுக்கப்பட்டது. கேள்வி: உங்களுக்குப் பிடித்தவை எவை? சொல்லிவைத்தாற்போல், எல்லாரும் ஒரே பதிலைத்தான் கூறினார்கள். அது என்ன தெரியுமா? “பணம், புகழ்!” இரண்டுமே நிலைப்பது மிகக் கடினம். அப்படியே கிடைத்தாலும், ஒருவர் வாழ்வில் வெற்றிபெற்றுவிட்டதாக ஆகிவிடாது. மிகச் சிலர்தான் பிறரது பாராட்டைத் தக்கவைத்துக்கொள்ளும் திறமையைப் பெற்றிருக்கிறார்கள். புகழ் வரும்போதே, வேண்டாத விமரிசனங்கள் – ஒருவரது படைப்பைப் பற்றியோ, குணாதிசயங்களைப் பற்றியோ, சொந்த வாழ்க்கையைப் பற்றியோ – எழுவதைத் தவிர்க்க முடியாது. கதை ஒரு தமிழ் எழுத்தாளரின் புதிய பாணியிலான நடை, கரு இரண்டும் வாசகர்களை ஈர்க்க, குறுகிய காலத்திலேயே மிகுந்த புகழை அடைந்தார். சிலர் புகழ, பலர் அவரைக் கேட்டார்கள் முகத்திற்கு நேராகவே: “ஏன் ஆபாசமாகவே எழுதுகிறீர்கள்?” தடுமாற்றத்தைச் சமாளிக்க தலையைத் தடவியபடி, “எதை ஆபாசம் என்கிறீர்கள்?” என்று கேட்டாராம் அந்த எழுத்தாளர். ‘உன் கையை உடைத்துவிடுவேன்!’ என்ற மிரட்டல்கூட அவருக்கு வந்திருக்கிறது. புகழ் பெற்றவர்களின் ஒவ்வொரு சொல்லும், செயலும் விமரிசனத்துக்கு ஆளாகிவிடுகிறது. அவற்றில் எல்லாமே உண்மை என்பதில்லை. இருந்தாலும், அவர்கள் மிகுந்த கவனத்துடன் இருக்க நேரிடுகிறது. இது புரிந்து, பிறர் சொல்வதை அலட்சியம் செய்தால்தான் ஒருவர் தான் தேர்ந்தெடுத்த துறையில் தொடரமுடியும். நடிகர்களைக் காப்பியடிப்பது பிரபலமடைந்த நடிக, நடிகையரைப்போல் தமக்கும் திறமையோ, அதிர்ஷ்டமோ இருக்கிறதா என்று எவரும் யோசித்துப்பார்ப்பதில்லை. கண்ணை மூடிக்கொண்டு, அவர்கள் செய்வதைப் பின்பற்றுகிறார்கள். வேட்டி தயாரிப்பாளர்கள் முன்னணி கதாநாயகர் ஒருவரிடம், ‘படம் முழுவதிலும் எங்கள் தயாரிப்பான வேஷ்டி அணிந்தபடி காட்சி கொடுங்கள். எங்களுக்கு அமோகமான விற்பனை ஆகும்,’ என்று வேண்ட, அவரும் இணைந்தார். படம் வெளியானதும், ரசிகர்கள் அவர் ‘விரும்பிய’ ஆடையைத் தாமும் அணிந்து மகிழ்ந்தார்களாம். தாம் என்ன செய்தாலும், அதைப் பின்பற்ற பலர் காத்திருக்கிறார்கள் என்ற நடப்பு புகழைப் பெற்றவர்களுக்கு முதலில் பெருமையாக இருக்கும். பக்கவிளைவாக, இன்னும் சிறக்கவேண்டும் என்று அவர்களுடைய பிரயாசை அதிகரித்துக்கொண்டேபோகும். அந்த முயற்சி மன இறுக்கத்தில்தான் கொண்டுவிடும். திறமை என்பது கடவுள் அளிப்பது. புகழ் – மனிதன் கொடுப்பது. கர்வமோ தனக்குத்தானே அளித்துக்கொள்வது என்பதால் கவனமாக இருக்கவேண்டும் என்கிறார் ஓர் அனுபவசாலி. ராமாவதாரமா?! ராமாயணக் கதாநாயகன் ஸ்ரீராமசந்திரமூர்த்தியாக ஒரு படத்தில் நடித்து, பெரும்புகழ் பெற்றவர் அந்த ஆந்திர நடிகர். மக்கள் அவரைக் கடவுளாகவே பாவித்தனர். தினமும், குறிப்பிட்ட வேளையில், அயோத்தி ராமரைப்போன்ற ஆடையணிகள் பூண்டு, தன் வீட்டு மாடி பால்கனியிலிருந்து ‘தரிசனம்’ கொடுப்பாராம். அதைப் பார்க்க, பல ஊர்களிலிருந்து வந்த மக்கள் கூடுவார்களாம்! ஒருவர் தன்னைக் கடவுளாகவே பாவித்துக்கொண்டால், மற்ற அனைவரும் தனக்குக் கீழே இருப்பவர்கள்தாம் என்ற கர்வம் வந்துவிடாதா! நாளடைவில், தான் யார் என்பதே புரியாது போய்விடும். இதுவும் ஒருவித மனநோய்தான். பிறருக்கு என்ன பிடிக்கும், அதனால் தன் புகழ் கூடுமே என்று யோசித்தபடி இருந்தால், தனக்கென்று சிறிது நேரத்தையாவது ஒதுக்க முடியுமா? பின், நிம்மதி எப்படிக் கிட்டும்? புகழையே துரத்திப் போகும்போது, உணர்ச்சிபூர்வமான தொடர்புகள் ஏற்படுத்திக்கொள்ள ஏது நேரம்! உண்மையான நண்பர்களும், உறவினர்களும் இல்லாத வாழ்க்கையில் மகிழ்ச்சி மட்டும் இருக்குமா? புகழுடன் பணமும் சேர்ந்தாலும், ஏன் மகிழ்ச்சி கிட்டாததாக இருக்கிறது என்று புகழ் போதை கொண்டவர்களுக்குப் புரிவதில்லை. திறமை வாய்ந்தவர்கள் குறுகிய காலத்திலேயே காணாமல் போய்விடுவது இதனால்தான். வினா: புகழை ஏன் போதை என்கிறார்கள்? விடை: எவ்வளவு கிடைத்தாலும், நிறைவு கிட்டாது. சமயம் பார்த்து, இவர்களைத் தீய வழிகளில் ஈடுபடுத்த முன்வருவார்கள் பல ‘நண்பர்கள்’. அந்நிலையில், பணத்துடன் புகழும் கரைந்துபோகும். மிஞ்சுவது கசப்பும், ஆரோக்கியக்குறைவும்தான். பணம், புகழ், திறமைக்காக அளிக்கப்படும் பட்டங்கள் ஆகிய எதையுமே பெரிதாகக் கருதாது, எடுத்த காரியத்தில் மிகுந்த ஆர்வத்துடன் ஈடுபட்டு, திருப்தி அடைகிறவர் மட்டுமே இதற்கு விதிவிலக்கு. “வெற்றி நிலைக்க பணிவு முக்கியம். பணம், புகழ் ஆகியவை தலைக்குமேல் ஏறக்கூடாது”. இப்படிக் கூறியிருப்பவர் A.R. ரஹ்மான். ‘இன்னும் என்னதான் வாங்கமுடியும்!’ என்ற அலுப்பை ஏற்படுத்திவிடுகிறதாம் அளவுகடந்த செல்வம். சிலர் இது புரிந்து, பிறருக்கு உதவுவதில் மகிழ்ச்சி காண்கிறார்கள். மிகச் சிலர்தான்! புகழின் உச்சியைத் தொட்ட குழந்தைகள் ஒரு குழந்தை வயதுக்குமீறி பேசினால், அது சுட்டித்தனம் என்று தப்புக்கணக்கு போடுகிறார்கள். தமிழ் திரைப்படங்களிலோ, அல்லது முகநூலிலோ, குழந்தைகளைக் கண்டபடி பேசவைக்கிறார்கள். அப்பாவையும் தாத்தாவையும், ‘டேய்!’ என்றழைக்கும் குழந்தை புத்திசாலியாம்! இயக்குனர் அல்லது பெற்றோர் கூறுவதுபோல் செய்து காட்டுகிறார்கள் குழந்தைகளும், தாம் என்ன செய்கிறோம் என்று புரியாமலேயே. பிறர் புகழ, எப்போதும் அப்படியே நடக்கத் தலைப்படுகிறார்கள். பல மணி நேரம் நடிக்க வேண்டியிருப்பதால், பிற குழந்தைகளுடன் இணைந்து விளையாட முடியாது. வயதுக்குரிய கல்வியையும் பெறுகிறார்களா என்பதும் சந்தேகம்தான். தம் வயதுக்குரிய அப்பாவித்தனத்தை இழந்து, வளர்ச்சிக்கு எது ஏற்றது என்று புரியாது வளர்வதால், மனஇறுக்கத்தைத் தவிர்க்க முடிவதில்லை. அதைப் போக்க, மது, போதைப்பொருட்களை நாடுவது பெரும்பாலரது பழக்கமாகிவிடுகிறது. மைக்கல் ஜாக்சன் இசைத்துறையில் உலகிலேயே அதிகமான விருதுகள் பெற்றவர், ஓராண்டில் மிக அதிகமான வருமானம் பெற்றவர் என்றெல்லாம் பெரும்புகழ்பெற்ற மைக்கல் ஜாக்சனுக்கு போதை மருந்து இல்லாவிட்டால் உறங்கமுடியாது என்ற நிலை ஏற்பட, ஒரு மருத்துவரை கூடவே வைத்துக்கொண்டார். அளவுக்கு அதிகமாகிப்போன அப்பழக்கமே அவருக்கு யமனாக அமைந்தது. எந்தத் துறையானாலும், புகழ் போதை பிற போதை வழிகளில் கொண்டுவிடுகிறது. பிரபல HARRY POTTER ஆங்கில திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்த டானியல் (Daniel Radcliffe) கூறுகிறார்: “நான் நடிக்கப் போகும்போது, ஒவ்வொரு முறையும் கண்மண் தெரியாது குடித்துவிட்டுத்தான் போவேன். எப்போதும், இனிமையாக நடந்துகொள்ளவேண்டுமே! சிறந்த நடிகன் என்றால் இப்படித்தான் இருக்கவேண்டும் என்று தோன்றியது”. குழந்தை நட்சத்திரங்களாகப் புகழ் பெற்றவர்கள் இருபது வயது ஆனபோது புகழின் பாதிப்பை உணர்கிறார்கள். தம் வயதையொத்த பிறரது எதிர்பார்ப்பையும் தாளமுடியாது போய்விடுகிறது. மது அருந்திவிட்டுக் காரோட்டியது, திருட்டு போன்ற சட்டவிரோதமான காரியங்களில் ஈடுபட்டு, சிறைத்தண்டனை அனுபவித்த இளம் நடிகர்களும் உண்டு. இவர்களால் மது, போதைப்பழக்கம் இரண்டையும் விடமுடியாது போக, வாழ்க்கையின் அடிமட்டத்திற்கே போய்விட்டார்கள். கதை டெமி லோவாடோ (Demi Lovato) சிறுவயதிலேயே புகழ்பெற்ற பாடகியாகவும், நடிகையாகவும் விளங்கினாள். ‘ரசிகர்களுக்கு இதுதான் பிடிக்கும்’ என்று அறிவுரை வழங்கப்பட்டதில், அவளுக்குப் பிடித்ததுபோல் பாட முடியவில்லை. மன இறுக்கம் வந்தது. தந்தையைப்போல் தானும் குடித்தால் நிம்மதி அடையலாம் என்று ஆரம்பித்த பழக்கம் மிக மோசமாகி, பல வருடங்கள் மறுவாழ்வு மையம் ஒன்றில் கழிக்க நேர்ந்தது. பத்து வயதிற்குள் கிட்டவேண்டும் என்று தாம் அடைய ஆசைப்பட்ட புகழ் தம் பிள்ளைகளுக்காகவாவது கிடைக்கவேண்டும் என்று பல பெற்றோர் விரும்புகின்றனர். மகனும் ஒரு தனிப்பிறவி, அவனுக்கென்று விருப்பு வெறுப்புகள் இருக்கக்கூடும் என்பதை யோசிப்பதில்லை. கதை Home Alone என்ற தொடர் திரைப்படங்களின் கதாநாயகன் மெக்காலே (Macaulay Culkin) என்ற சிறுவன். அவனுக்குக் கிடைத்த புகழும் அத்துடன் வந்த பணமும் நிலைக்கவென, தந்தை அவனைப் பலவிதமாகக் கொடுமை செய்தாராம். தாளமுடியாது, அவன் பெற்றோரின்மேல் வழக்குப் போட்டு, அவர்களிடமிருந்து ‘ரத்து’ வாங்கினான். அவனுடைய கோடிக்கணக்கான சொத்தை அவர்களால் தீண்டவும் முடியாதுபோயிற்று. தான் அழிவுப்பாதையை நோக்கிப் போய்க்கொண்டிருக்கிறோம் என்று அவனுக்கே புரிந்து, தப்பித்தவறிக்கூட மது அருந்துவதில்லை என்று உறுதி பூண்டிருக்கிறான். தூரத்திலிருந்து பார்ப்பவர்களுக்கு புகழ்வாய்ந்தவர்களின் வாழ்க்கை பிரமிப்பை உண்டுபண்ணும். ‘எவ்வளவு பெரிய வீடு! வண்ணவண்ணமாக எத்தனை ஆடைகள்! எத்தனை கோடி ரசிகர்கள்! நினைத்ததை எல்லாம் வாங்க முடியும்!’ என்று, தமக்கும் அப்படி ஓர் அதிர்ஷ்டம் இல்லையே என்று ஏங்கலாம். அவர்களுக்குப் புரிவதில்லை, மிகக் கவனமாக இல்லாவிட்டால், புகழ் சறுக்கி, மகிழ்ச்சியை அறவே பறித்துவிடும் என்பது. மகிழ்ச்சி என்பது மாயையா? ஒரு நடிகர், “நீங்கள் எத்தனை சிறப்பாக நாட்டியம் ஆடுகிறீர்கள்! நானும்தான் ஆடுகிறேன். ஆனால், உங்களைப்போல் ஆடமாட்டோமா என்றிருக்கிறது!” என்றாராம் ஏக்கத்துடன். அந்த நடன ஆசிரியர் என்னிடம் சொல்லிச் சிரித்தார். நடிகர் மிகப் பிரபலமானவர். பல துறைகளில் முத்திரை பதித்தவர். தன் நிறைகளை எண்ணி மகிழாது, குறைகளையே பெரிதுபண்ணினால் மகிழ்ச்சி எவ்வாறு கிட்டும்? ஒப்பீடும் பொறாமையும் ‘இது என்ன வாழ்க்கை! மகிழ்ச்சியே கிடையாது!’ என்று பலரும் புலம்புகிறார்களே! அவ்வாறு அலுத்துக்கொண்டாற்போல் நிலைமையை மாற்றிவிடமுடியுமா? பெரும்பாலாரான பெற்றோர்கள் தம் குழந்தைகளை ஒருவருடன் ஒருவரை ஒப்பிடுவார்கள். இதுவே குழந்தைகளுக்குத் தாழ்வுமனப்பான்மை ஏற்படக் காரணமாகிறது. அதனால், தம்மைப் பிறருடன் ஒப்பிட்டுக்கொள்வதும் பழக்கமாகிவிடுகிறது: ‘அவள் என்னைவிட அழகி, பணக்காரி, புத்திசாலி!’ என்ற வயிற்றெரிச்சல் ஏன்? இதனால் சிறந்துவிடவா போகிறார்கள்? கதை “முப்பது வயதில் இந்த இசைக் கலைஞர்கள் எவ்வளவு சாதித்திருக்கிறார்கள்! என் வாழ்க்கை வீண்!” என்று ஒருவர் அங்கலாய்த்துக்கொண்டார். அவர்களுடைய சாதனை மட்டும்தான் பிறர் கண்ணுக்குத் தெரியும். அதற்காக அவர்கள் சிறு வயதிலிருந்தே எத்தனை உழைத்திருப்பார்கள் என்று எண்ணிப்பார்ப்பதில்லை. மற்ற சிறுவர்களைப்போல் விளையாடி இருக்கமாட்டார்கள். எனக்குத் தெரிந்து, சிலரது ஓய்வு நேரத்திலும்கூட இசைப்பயிற்சிதான். அதனால் உடல்நிலை பாதிக்கப்பட்டுக்கூட இருக்கலாம். பள்ளி நாட்களில் அனுதினமும், தபேலா கலைஞரான ஜாகிர் ஹூசேனை இரவு இரண்டு மணிக்கு எழுப்பி சாதகம் செய்யச்சொல்வாராம் அவருடைய தந்தை. அதற்குமுன், காலை ஆறு மணியிலிருந்து! எத்தனைபேர் இப்படி உழைப்பார்கள், சிறு வயதிலிருந்தே? எங்கே மகிழ்ச்சி? மகிழ்ச்சி என்பது எங்கேயோ வெளியில் கிடைப்பதில்லை. நமக்குள்ளேயேதான் இருக்கிறது. நம் செய்கைகளால் விளைவது அது. பேராசை அதை அழித்துவிடும். கதை அரசியலில் ஈடுபட்டிருந்த ஒருவருக்குப் பெரிய பதவிகள் கிடைக்கவேண்டுமென்ற ஆசை. அப்போதுதான் பிறர் முன்னிலையில் தன் மதிப்பு கூடும் என்ற எண்ணம் அவருக்கு. ‘பிறர் என்ன நினைப்பார்கள்!’ என்று யோசித்தே வாழ்வைக் கடத்தினால், மகிழ்ச்சி எப்படிக் கிடைக்கும்? குடும்பத்தைக் கவனிக்க அவருக்கு நேரமில்லை. வீட்டில் கண்டிப்பு இல்லாததால், அதன் அங்கத்தினர் ஒவ்வொருவரும் மனம் போனபடி நடக்கத் துவங்கியிருந்தனர். அவர் மனைவி கள்ளத்தொடர்பு வைத்திருந்ததைக் கண்டும் காணாததுபோல் இருக்கவேண்டிய நிலை. மகனோ போதைப்பித்தன். மகளுக்கு நிறைய காதலர்கள். உயர்பதவி கிடைத்ததோ என்னவோ, மகிழ்ச்சி அவரைவிட்டுப் போய்விட்டது. “உங்களைப்போல் என்னால் இருக்க முடியவில்லையே! எவ்வளவு மகிழ்ச்சியுடன் இருக்கிறீர்கள்!” என்று பொருமுவார், தன்னைவிடச் சற்றே தாழ்ந்த நிலையில் இருப்பவர்களைக் கண்டு. இருப்பதை வைத்துக்கொண்டு திருப்தி அடைய அவருக்குத் தெரியாததுதான் வருத்தம் எழக் காரணம். இருப்பினும், ‘நிறைய ஆசைகள் கூடாது!’ என்று புத்தர் வழிகாட்டியபடி இளம்வயதில் இருக்க வேண்டியதில்லை. தன்னால் என்னென்ன முடியும் என்று அறிந்துகொள்ளும் பருவம் அது. அப்போது ஆசைகளை அடக்கிக்கொண்டிருந்துவிட்டு, காலம் கடந்தபின், “நான் என்னென்னவோ செய்ய வேண்டுமென்று திட்டம் போட்டிருந்தேன்!” என்ற ஏக்கப் பெருமூச்சு எதற்கு? எண்ணம், சொல், செயல் மூன்றும் ஒத்திருந்தால்தான் மகிழ்ச்சி கிட்டும். கடந்ததை எண்ணி வருந்தினாலோ, அல்லது எதிர்காலத்தில் என்ன வருமோ என்று அஞ்சினாலோ நேரம்தான் விரயமாகும். இரண்டுமே நம் கையில் இல்லை. 89 வயதான ஒருவர் முனைவர் பட்டம் பெற்றார் என்ற செய்தியைப் படித்திருப்பீர்கள். அந்தப் படிப்பால் பெரிய உத்தியோகம், அதற்கேற்ற ஊதியம் என்று அவர் கணக்குப் போட்டிருக்கமாட்டார். என்றோ செய்ய நினைத்து, முடியாமல் போனதற்காக ஏங்குவதைவிட அதைச் செய்து முடிக்கலாம் என்ற விவேகம் அவருக்கு இருந்தது. தன்னைவிடப் பிறர் உயர்ந்திருக்கிறார்களே என்ற ஆற்றாமைக்கோ, சுயவெறுப்புக்கோ அவர் இடம் கொடுக்கவில்லை. பகிர்ந்துகொள்! வேண்டாத நினைவுகளிலிருந்து நம்மை விடுவித்துகொள்ளும் முயற்சிதான் நாம் நமக்கே அளித்துக்கொள்ளும் கருணை. அப்போதுதான் நம் நிலையிலிருக்கும் பிறருக்கும் உதவி செய்யும் ஆற்றலைப் பெறுகிறோம். ஒரே நிலையில் இருப்பவர்கள் ஒன்றுசேர்ந்து தத்தம் அனுபவங்களைப் பகிர்ந்துகொள்ளும்போது, அனைவருமே தம் பலம் பெருகிவிட்டதுபோல் உணர்வர். நடந்ததை மறைக்காது, ‘நானும் அவதிப்பட்டிருக்கிறேன்!’ என்று ஒத்துக்கொள்ளும்போது, ‘இதுவும் ஒருநாள் கடந்துபோகும்!’ என்று அவர்கள் உணர்ந்து, ஆறுதல் அடைவார்கள். வாழ்க்கை பொறுக்கமுடியாததாக இருக்காது. நடப்பதெல்லாம் ஏதோ ஒரு காரணத்திற்காகத்தானாம். நம்மால் ஏற்க முடியாதது ஏன் நடந்தது என்று நெடுநாட்கள் கழித்துப் புரியும். நாம் துயருற்று, பின் அதிலிருந்து மீண்டால், நம்மைப்போன்ற பிறருக்கு உதவி செய்ய முடியும். அதிலேயே நிறைவு காணலாம். நம் உணர்வுகளைப் புரிந்துகொள்ளும் ஒருவரிடம் பகிர்ந்துகொள்வதும் மனதை ஆற்றிக்கொள்ளும் ஒரு வழி. அவருக்கும் அதேபோன்ற துன்பமோ, துயரோ நேர்ந்திருக்கவேண்டும் என்ற அவசியமில்லை. நம் நிலையில் பொருத்திக்கொள்ளும் ஆற்றல் அவருக்கு இருந்தாலே போதும். கதை எல்லா வயதினருக்கும் துன்பங்கள் உண்டு. பள்ளிக்கூடத்தில் சேர்ந்தவுடனேயே இது தெளிவாகிறது. வீட்டில் அன்பும் பாதுகாப்பும் அளித்த பெற்றோருடன் இருந்துவிட்டு, புதிய சூழ்நிலைக்குப் போகும்போது சில பேருக்குப் பொறுக்கமுடியாததாக ஆகிவிடும். “நீ குண்டு! ரொம்ப பயந்தவள்!” “உன் தலைமயிர் ஏன் நீளமாக இருக்கிறது, தெரியுமா? நிறைய பேன்! அதனால்தான்!” பொறாமை கொண்ட சிறுமிகள் தம்மைப்போன்று இல்லாத வகுப்புத்தோழிகளைப் பார்த்துப் பலவாறாகப் பழிப்பார்கள். “கோபம் வந்தால், இவள் மூக்கு எப்படித் துடிக்கிறது, பாரேன்!” தாய் ஆதரவுடன் நடந்துகொண்டால், தாம் படும்பாட்டை அவளுடன் பகிர்ந்துகொள்ள முடியும். பத்து வயதிலிருந்து என்னை ஓயாமல் கேலி செய்தாள் ஒரு பெண். நான் சண்டைபிடிக்க மாட்டேன். பள்ளிக்கூடத்திலிருந்து திரும்பியதுமே, முதல் வேலையாக அம்மாவிடம் போய், என்னை ஓயாது கேலிசெய்தவளைப் பற்றிக் கூறுவேன். “சூரியனைப் பாத்து நாய் குலைக்கிறதுன்னு விட்டுடு!” என் தாய் தினமுமே எனக்கு ஆதரவாகக் கூறியது. அப்பெண்ணைப் பதினேழு வயதில் பார்த்தபோது, அவள் ஏன் என்னை அப்படி நடத்தினாள் என்று புரிந்தது. அன்போ, செல்வமோ இல்லாத குடும்பத்திலிருந்து வந்தவள் அவள். இதைப்போன்ற பல சம்பவங்களிலிருந்து நான் கற்ற பாடம்: நம்மைக் கஷ்டப்படுத்த நினைப்பவர்கள் பொறாமைபிடித்தவர்கள். அவர்கள் சொல்லையும் செய்கையையும் அலட்சியப்படுத்தவேண்டும். ஏனெனில், அவர்கள் பரிதாபத்திற்கு உரியவர்கள். குடித்தால் பிரச்னைகள் தீருமா? பிரச்னைகளைச் சமாளிக்க ஒரு வழிதான் என்று திரைப்படங்களில் காட்டுகிறார்கள். “ஏதோ ஒரு பிரச்னை இருப்பதால் ஒருவன் குடிக்க ஆரம்பிக்கிறான். குடிப்பதால் மேலும் பல பிரச்னைகள் வருகின்றன”. என் பாட புத்தகத்தில் இருந்த வாக்கியம் இன்னும் மறக்கவில்லை. பிரச்னைகளைத் தாற்காலிகமாக மறப்பதால் அவை குடிப்பவரைவிட்டு விலகப்போவதில்லை. உடல் மற்றும் மன ஆரோக்கியம் ஆகிய இரண்டும் பாதிப்படையுமுன் அவை ஏன் நிகழ்ந்தன என்று யோசிப்பது மேல். குடிபோதையில், ‘ஏனோ, எனக்கு மகிழ்ச்சி கிடைக்க மாட்டேன் என்கிறது!’ என்று புலம்புவானேன்! நாம் பட்ட கஷ்டங்கள் நடந்தபோது, நம்மை வெகுவாகப் பாதித்து இருக்கலாம். அவற்றை மறப்பது கடினம்தான். ஆனால், ஓயாது அவற்றையே நினைத்துக்கொண்டிருந்தால், அவை நம்மைக் கட்டுப்படுத்த விடுகிறோம். இது புரிந்து, நம்மை விடுவித்துக்கொள்ளவேண்டும். நல்ல வழிகளா இல்லை! வாழ்க்கையும் பள்ளிதான் ஒரு சிறுமி தாயிடம் வம்பு வளர்த்தாள்: “எனக்குப் பிடிக்காததை எல்லாம் உடம்புக்கு நல்லதுங்கிறே!” இருபது வயதானபின்பும், சாப்பிடுவதும், விளையாடுவதும்தான் சிலருக்குப் பிடித்த விஷயங்கள். அவர்களுடன் இணைந்து விளையாடியவர்களுக்குத் தனியாகக் குடும்பம் அமைந்துவிட்டால், பிறருக்காக நேரம் ஒதுக்குவார்களா என்பதை யோசிப்பதில்லை. தனித்துப்போவார்கள். சிறு வயதில் நட்பு குழந்தைகளுக்கு நல்லவர், கெட்டவர் என்ற பாகுபாடு தெரியாது. யாராவது அவர்களைப் பாராட்டினால், அவர்களைப் பிடித்துப்போய்விடும். பதினெட்டு வயதுவரை, குழந்தைகளைப் பாதுகாக்கக் கூறவேண்டிய அறிவுரை: 1. யாராவது புகழ்ந்தால், அதைப் பெரிதாக எடுத்துக்கொள்ளாதே! ‘நன்றி’ என்று சொல்லிவிட்டு, போய்க்கொண்டே இரு. தலைக்கனம் வந்தால், வாழ்க்கை சறுக்கிவிடும். 2. உன்னைவிட ஓரிரு வயது மூத்தவர்களுடன் மட்டுமே பழகுவது நல்லது. ஏனெனில், உன்னைவிட வயதில் பெரியவர்கள், “நீ எவ்வளவு புத்திசாலி! அழகு!” என்று புகழ்ந்தால், அது அனேகமாக சுயநலத்திற்காக இருக்கும். உன்னைத் தவறான முறையில் நடக்கத் தூண்ட அவர்களுக்குத் தெரிந்த வழி அது. பாடம் படிக்கப் பிடிக்காது! அநேகமாக, பாலர் பள்ளியிலிருந்து எல்லா மாணவர்களும் சொல்லிவருவதுதான் இது. உரக்கச் சொல்லாவிட்டாலும், கல்லூரி மாணவர்களுக்குக்கூட கல்வி பயில்வதே கசப்பாக இருக்கும். கல்வி பயின்றால்தான் அறிவு வளரும், பிறர் மதிக்க வாழலாம் என்பதைப் பலரும் உணர்வதில்லை. ‘படிக்காத மேதை’ என்று சிலரைக் குறிப்பிடுகிறோம். அவர்களுடைய அறிவை வாழ்க்கையில் அடைந்த அனுபவங்களிலிருந்து பெற்றிருப்பார்கள். வேறு சிலர், காலம் கடந்து, தாம் செய்த தவறுகளால் ஓயாது வருந்துவார்கள். அதனால் அவர்களுடைய சுயமதிப்பு குன்றியிருக்கக்கூடும். அதை மறைக்க, பிறருக்கு ஆலோசனை அளிப்பார்கள். கதை “நான்தான் குடித்துக் குடித்து, சீரழிந்துபோய்விட்டேன். நீங்களாவது அந்த விஷத்தைத் தொடாதீர்கள்!” என்று தன் மூன்று மகன்களிடம் முடிந்தபோதெல்லாம் கூறுவார் அந்த தந்தை. கூடியவரை, அவர்களைக் கட்டுப்படுத்தினார். தந்தையைப் பார்த்துதான் ஆண்குழந்தைகள் கற்றுக்கொள்கிறார்கள் என்பது அவருக்குப் புரியவில்லை. அவருடைய அறிவுரை எந்தப் பலனையும் அளிக்கவில்லை. அத்துடன், கட்டுப்பாடு பொறுக்கமுடியாது போகும்போது, அதை மீறி நடக்கத்தானே தோன்றும்? ஒரு மகனுக்குமட்டும் தான் செய்வது சரியா, தவறா என்ற குழப்பம் எழுந்துகொண்டே இருந்தது. நண்பர்களுடன் பேசிச் சிரித்தபடி ஓய்வு நேரத்தையெல்லாம் கழிப்பது உயர்ந்ததா, அல்லது தன் குடும்பத்தினருடன் சுமுகமாக இருப்பது பயனுள்ளதா என்று யோசித்தான். தான் மூப்படைந்ததும், எந்த நண்பனும் உறுதுணையாக இருக்கமாட்டான் என்று தந்தையின் வாழ்க்கை அளித்த பாடம் புரிந்தது. போதையில், அப்பா அம்மாவை அடிப்பதுபோல் தானும் அருமை மனைவியிடம் நடந்துகொண்டுவிடுவோமோ என்ற பயம்வேறு. மனைவியைக் கொடுமைப்படுத்திவிட்டு, ‘ஏனோ இப்படிச் செய்கிறேன்! ஐ லவ் யூ!’ என்று சொல்வதில் உண்மை இருக்கமுடியுமா? (இந்த பசப்பல் பேச்சை நம்பும் பெண்களும் இருக்கத்தான் செய்கிறார்கள்). எல்லாரையும், எப்போதும் மகிழ்ச்சிப்படுத்த முடியாது என்று தெளிவடைந்தான். பிறருடைய ஆமோதிப்புக்காக நடிக்கவேண்டுமா என்று சிந்தித்தபோது, தன்னைக் கட்டுப்படுத்தும் நண்பர்களை விட்டொழித்தால்தான் நிம்மதி கிடைக்கும் என்று தோன்றியது. யோசனை பலத்தது. எந்தப் பயனும் கிடையாது என்று உறுதியாகத் தெரிந்தபின், ஒரு செயலை விட்டுவிடுவதுதானே புத்திசாலித்தனம்! இல்லாவிட்டால், அதையே பலமுறை செய்வோம். நேரம்தான் வீணாகும். பெருமுயற்சி எடுத்து அப்பழக்கத்தை விட்டொழித்தான். அதற்குப் பிறகும், உடனே நிம்மதி கிட்டவில்லை. ‘நீங்கள் செய்வது சரியில்லை!’ என்று இவன் புத்திகூறுவதுபோல் எண்ணி நண்பர்கள் ஆத்திரப்பட்டார்கள். அவர்களின் கேலி, கோபம் இவற்றைச் சமாளிக்க நேர்ந்தது. பொது இடங்களில் அவனைப் பார்க்கும்போது, “நீ குடியை நிறுத்திவிட்டதால், இன்று வழக்கத்தைவிட பாதிதான் வாங்கியிருக்கிறார்கள்!” என்று, கண்டபடி கேலி செய்ய ஆரம்பித்தார்கள். குடும்பத்தினரின் அன்பால் அவர்களது போக்கை அலட்சியப்படுத்தப்படுத்த முடிந்தது. நாளடைவில், அவர்களிடம் ஆத்திரப்பட்டுப் பயனில்லை, அவர்களை நாடியதில் தன் தவறும் இருக்கிறது என்று ஒத்துக்கொண்டான். ஆனால், அப்போது கற்ற பாடத்தை மறக்கவில்லை. வாழ்க்கையில் மாறுதல்கள் நிகழத்தான் செய்யும், மனிதர்களும் ஒரேமாதிரி இருப்பதில்லை என்று உணர்ந்து அமைதியாக இருப்பவர்களுக்கு எந்த பிரச்னையும் வராது. குற்ற உணர்வு, வஞ்சகம் செய்தவர்களின்மேல் கோபம் போன்ற எதிர்மறைக் குணங்கள் நீடித்தால் யாருக்கு நஷ்டம்? ‘அப்படிப்பட்டவர்களிடமிருந்து பாடம் கற்றுக்கொண்டோமே!’ என்று திருப்திபட்டுக்கொள்ள வேண்டியதுதான்! நமக்குப் பிடிக்காதவர்கள் மட்டுமில்லை, நம்மைவிடத் தாழ்ந்த நிலையில் இருப்பவர்களையும் மட்டமாக நினைக்காதிருக்க, ‘நல்லவேளை, நானும் அவர்களைப்போல இல்லையே!’ என்று எண்ண ஆரம்பித்தால், வித்தியாசமாக இருப்பவர்களையும் ஏற்கமுடியும். நம்மால் இயன்றதை, நமக்குப் பிடித்ததைச் செய்துவந்தால், அமைதி நம்மைவிட்டு விலகாது. நம்மைப்போன்ற பிறர் தாமே நம்மிடம் வருவார்கள். அதைவிட்டு, பிறருடன், துரத்தி அடிக்காத குறையாக, தொடர்புகொள்ளத் துடிப்பது ஏன்? யாருக்கு உதவலாம்? பிறருக்கு நன்மை செய்தால் புண்ணியம் என்று நம்மை நம்பவைத்திருக்கிறார்கள். இதிலும் ஒரு சிக்கல். ஒருவருடைய தாராள மனப்பான்மையைத் தமக்குச் சாதகமாகப் பயன்படுத்திக்கொள்ள நிறைய போலி மனிதர்கள் முளைப்பார்கள். கதை மலேசிய தினசரிகளில் வெளியான அந்தப் புகைப்படத்தைப் பார்த்தாலே எவர் மனமும் உருகிவிடும். ஆரோக்கியம் மிகக் குன்றிய நிலையில் ஒரு நாய். அதை அணைத்தபடி ஒருவர். அவரைப்பற்றி அவரே அளித்த தகவல்: நான் ஒரு மிருக வைத்தியன். யாராலும் கவனிக்கப்படாது, தெருக்களில் நடமாடும் நாய்களை எனக்குச் சொந்தமான ஓரிடத்தில் வைத்துப் பராமரிக்க ஆரம்பித்தேன். இப்போது அதைப்போல் மூன்று இடங்கள். என் மனைவியும் எனக்கு ஆதரவாக உதவிபுரிகிறார். இந்த நாய்களுக்கான உணவு, மருந்து, கருத்தடைச் சிகிச்சை என்று நிறைய செலவழிக்க வேண்டியிருக்கிறது. யாராவது பண உதவி செய்தால் நன்றி உள்ளவனாக இருப்பேன். ‘இவ்வளவு நல்லவர்கள்கூட உலகில் இருப்பார்களா!’ என்று பிரமிக்கவைக்கும் அவருடைய தன்னலமற்ற சேவை. பல பத்திரிகைகளில் இம்மாதிரியான தகவலை அளித்து, லட்சக்கணக்கில் கொள்ளையடித்தபின் பிடிபட்டார். அவர் வைத்தியருமில்லை, அவருக்கு மனைவியும் கிடையாது என்பது கூடுதல் தகவல்.  நாய்கள்? அவருடைய கற்பனையில். சிலர் நம்மிடமிருந்து உதவியை எதிர்பார்ப்பார்கள். ‘எனக்காக அதைச் செய்துவிட்டீர்களா?’ என்று விடாக்கண்டனாக நம்மைத் துளைப்பார்கள். ஆனால், பிரதி உபகாரம் என்பதே இவர்கள் அகராதியில் கிடையாது. இப்படிப்பட்டவர்களுக்கு எதற்காக உதவி புரிவது? உங்களுக்கு BP இருக்கா? இப்போதெல்லாம், ரத்த அழுத்தம் என்பது நாற்பது வயதாகிவிட்டாலே ஒருவர் எதிர்பார்க்கும் ஒன்றாகிவிட்டது. குடும்பத்தில், உத்தியோகம் பார்க்கும் இடத்தில், கடைகண்ணிகளில் – இப்படிப் பல இடங்களிலும் தாம் நினைத்தபடியே எல்லாம் நடக்கவேண்டும் என்று எதிர்பார்த்தால், ஆகிற காரியமா? அப்படி நடக்காவிட்டால், ஆத்திரம் எழுகிறது. ஒருவர் ஆத்திரப்படுவதால், பிறர் மாறிவிடப்போகிறார்களா, என்ன! அவர் உடல்நிலைதான் கெடும். என் தோழி அவளது கணவரைப்பற்றி ஆயாசத்துடன் கூறியது: “அரசியல்வாதிகள் மற்றும் கடைக்காரர்கள் செய்யும் ஊழல்களைத் தினசரியில் படித்துவிட்டுக் குமுறுவார். ரத்தக்கொதிப்பு ஏறிவிடும். இப்போது, பக்கவாதம் வந்து, படுத்த படுக்கையாக இருக்கிறார். அவரைக் கவனிப்பதற்குள் என் பிராணன் போகிறது!” சுய பரிதாபத்துடன் பிறரிடம் நம்மைப்பற்றிக் கூறிக்கொள்வது வீண்முயற்சி. “சிலருக்குத்தான் வாழ்க்கை இப்படி அமைகிறது!” என்று ஏக்கப் பெருமூச்சுடன், தம் குறைகளைப் பிறரிடம் கூறி ஆறுதல்பெற முயற்சிப்பவரின் புலம்பலைப் பலர் மரியாதை நிமித்தம் கேட்டுவைப்பார்கள். ஒரு சிலர் உள்ளூர மகிழ்வார்கள் – தமக்கு இப்படியெல்லாம் நேரவில்லையே என்று! வாழ்க்கை என்பது நாம் அமைத்துக்கொள்வதுதான். பிறருடைய கட்டுப்பாட்டுக்கு அடங்கி நடப்பதுதான் நல்ல குணம் என்றிருந்தால், தன் தேவைகள் என்ன, எது மகிழ்ச்சியைத் தரும் என்பதே ஒருவருக்குப் புரியாமல் போய்விடும் அபாயம் இருக்கிறது.   ------------------------------------------------------------------------ ------------------------------------------------------------------------ சிந்தனையின் விந்தை ஒரு மூன்று வயதுக் குழந்தையிடம் கடுமையான வேலையைக் கொடுத்தால், “என்னால் முடியாதே!” என்று தயங்கலாம். தன் ஆற்றல் எவ்வளவு என்று புரிந்ததால் வந்த பதில் அது. ஆனால், வயதும் திறமையும் கூடி இருந்தபோதும், அவ்வாறே கூறுவது எதிர்மறைச் சிந்தனை செய்யும் விபரீதம். ஒருவருக்குத் தன் திறமையில் நம்பிக்கை இல்லையென்று காட்டுவிடும். அப்படித் தோன்றும்போது, அதை எதிர்க்க ஓர் உத்தி: ‘என்னால் முடியும். கண்டிப்பாகச் செய்து முடிப்பேன்!’’ என்று தனக்குத்தானே தைரியம் அளித்துக்கொள்ளலாம். எச்சரிக்கை: இதையே உரக்கக் கூறினால், கர்வம் என்ற பழிக்கு ஆளாக நேரிடும்! தன்னம்பிக்கையை வேறு எப்படித்தான் வளர்த்துக்கொள்வது! ‘முடியாது!’ என்று நினைத்த காரியத்தைச் செவ்வனே செய்து முடித்துவிட்டால், அதனால் ஏற்படும் மகிழ்ச்சியே தனி. ஒரே நிகழ்வை வெவ்வேறு நபர்கள் பார்க்கும்போது, அவர்களது கணிப்பும் மாறுபட்டிருக்கும். கதை அன்று ஒரு பெண்ணிற்குக் கல்யாணம். அவளுக்கும், அவளைப் பெற்றவர்களுக்கும் பெருமகிழ்ச்சி. ஆனால், உறவினர்கள் அந்த சம்பந்தத்தில் எங்கே குறை என்று தேடினார்கள். “வரதட்சணையே வேண்டாம் என்கிறார்களே! மாப்பிள்ளைப் பையனுக்கு ஏதோ கோளாறு இருக்கவேண்டும்!” “அவசர அவசரமாகக் கல்யாணத்தை நடத்திவிட வேண்டும் என்றார்களே! ஏன் அப்படி?” பெண்ணின் தாய் இதற்குப் பதிலளித்தாள். “மாப்பிள்ளைக்கு லீவு முடிந்து, உடனே வெளிநாடு திரும்பவேண்டுமாம். விசாவும் காலாவதி ஆகிவிடுகிறது”. ‘இன்னும் எங்கு கோளாறு?’ என்று துடித்தார் ஒரு முதியவர். அவர் ஐந்து பெண்களைப் பெற்றுக்கொண்டு, திண்டாடுபவர். “அந்தப் பையன் அம்மாவுக்குப் பயப்படுகிறான். அவனைப் பேசவிடாமல், அந்த அம்மாவே பேசுகிறாள்!” பெண்ணின் தாய்க்குச் சந்தேகம் வந்தது. மணப்பெண்ணிடமே போனாள். “என்னென்னவோ சொல்கிறார்களே!” என்றாள் கவலையுடன். மணப்பெண் சிரித்தாள். “நான் சந்தோஷமா இருந்தா, இவர்களுக்கெல்லாம் மகிழ்ச்சியா இருக்குமான்னு ஒன்னையே கேட்டுக்கோ!” அம்மாவுக்கும் சிரிப்பு வந்தது. பிரச்னைகள் எதுவும் எழாத திருமணத்தைக் கண்டால் பொறாமைப்படுகிறவர்கள்தாம் அதிகம். ‘குற்றம் எங்கே?’ என்று தேடிப்பிடிக்கக் காத்திருப்பார்கள். ஏன் சிலர் இப்படி நடக்கிறார்கள்? எப்போதோ தவறு நிகழ்ந்துவிட்டால், எத்தனை காலமானாலும் அதை மறக்கமுடியாது, அதைப்பற்றியே எண்ணிக் குமைந்துகொண்டிருப்பவர்கள் அவர்கள். செய்ய ஆரம்பித்த எல்லாக் காரியங்களிலும் வெற்றி மட்டுமே கிடைக்கவேண்டும் என்று எதிர்பார்த்து, ஏமாந்தவர்கள். கார்டிஸால் (CORTISOL) என்கின்ற வேதியப்பொருள் மூளையில் இருக்கிறதே, அதுதான் அவர்களை அப்படி ஆட்டிவைக்கிறது. அதற்கு நேர் எதிரிடை டோப்அமீன் (DOPAMINE) என்கிற பொருள். நம்மை யாராவது புகழ்ந்தாலோ, நற்செய்தி கிடைத்தாலோ ஏற்படும் இனிய உணர்வு டோப்அமீன் சுரப்பதால் வருவது. போதைபோல் இருக்கும். ஓர் அறுவைச்சிகிச்சைக்கு முன்னால், மார்ஃபின் என்ற போதைப்பொருளை என் மூக்கில் வைத்தார்கள். அது குறிப்பிட்ட அளவில் மருத்துவர்கள் பயன்படுத்துவது. சில வினாடிகளிலேயே, உடலைவிட்டுப் பறப்பதுபோன்ற சுகமான உணர்வு ஏற்பட்டது. மயக்க நிலைக்குப்போய்விட்டேன். இதனால்தான், “வாழ்க்கை பொறுக்க முடியாததாக இருக்கிறது!” என்று புலம்புகிறவர்கள் ஏதாவதொரு போதையை நாடுகிறார்கள். துணுக்கு “நீ அதிகமாகக் குடித்தால், உன் மனைவி சண்டைபிடிக்க மாட்டாளா?” “எனக்குக் கல்யாணமே ஆகவில்லை!” “பின் ஏன் குடிக்கிறாய்?” தமக்கு ஏன் எதிர்மறைச் சிந்தனைகளே ஓயாமல் எழுந்து வருத்ததில் ஆழ்ந்துகிடக்கச் செய்கின்றன என்று புரியாது, பழியை வேறு இடத்தில் போடுகிறவர்கள் இப்படிப்பட்டவர்கள். எதிர்மறைச் சிந்தனை தரும் வேதனையை எப்படி ஒழிப்பது? 1 அதிகாலையில், முகத்தைக் கண்ணாடியில் பார்த்துக்கொள்ளும்போது, நாக்கை வெளியில் நீட்டி, சிரிப்பதுபோல் செய்யலாம். புன்னகைத்தால், உதிரமும் பிராணவாயுவும் முகத்திற்கு அனுப்பப்படுவதால் உற்சாகம் எழும். 2 எந்தச் சூழ்நிலையிலும் வேடிக்கையான அம்சம் ஏதாவது இருக்குமே! கதை “இந்த விரிவுரையாளர் இன்னிக்குச் சரியான சிடுமூஞ்சி!” பெண்கள் கல்லூரி மாணவிகள் தமக்குள் பேசிக்கொண்டனர். ஒரு பெண் கூறினாள், “இன்று காலை, மனைவியுடன் சண்டை போட்டிருப்பார்!” அவள் தோழி, “அவருக்கு இன்னும் கல்யாணமே ஆகவில்லையே!” என, முதலாமவள் விடாது, “சவரம் பண்ணிக்கொள்ளும்போது கன்னத்தைக் கீறிக்கொண்டிருப்பார். அந்த எரிச்சலை நம்மிடம் காட்டுகிறார்!” எல்லாரும் சிரித்தார்கள். நமக்கு எழும் எதிர்மறை எண்ணங்களையும், அவற்றால் விளையும் ஆத்திரம் அல்லது வருத்தத்தையும் வேடிக்கையான கண்ணோட்டத்துடன் பார்த்தால், சிரிப்பு என்றும் மறையாது. 3 நம் பிரச்னைகள் நம்மோடு இருக்கட்டும். அவை திரும்பத் திரும்ப மேலே எழுகையில், வருத்தமும் நிலைத்துவிடும். “உனக்கு வேலை போய்விட்டதாமே?” “உன் மனைவி உன்னைவிட்டுப் போய்விட்டாளாமே?” நாம் மறக்க நினைப்பதைத் தூண்டித் துருவி விசாரிப்பவர்களுக்கு எதற்காகப் பதில் சொல்லிக்கொண்டிருப்பது? இவ்வாறு வீண் வம்புக்கு அலையாது, நம் மனநிலையைப் புரிந்து நடக்க ஓரிருவராவது கிடைக்கமாட்டார்களா? 4 ஒரே சமயத்தில், இயந்திர கதியில் பல வேலைகளைச் செய்வது தவிர்க்கப்படவேண்டும். ஏனெனில், அது மன உளைச்சலில்தான் கொண்டுவிடும். ஓயாது, ஒரே வேலையைச் செய்துகொண்டிருந்தால் ஏற்படும் சலிப்பு மன இறுக்கத்தில் கொண்டுவிடும். இயன்றவரை மாற்றிக்கொண்டே இருக்கவேண்டும். இதைத்தான் பாரதியார் இப்படிச் சொல்லி வைத்திருக்கிறார்: ’காலை எழுந்தவுடன் படிப்பு, பின்பு கனிவு கொடுக்கும் நல்ல பாட்டு.." என்று. எங்கள் வீட்டருகே காலையும், மாலையும் இளைஞர்களும், முதியவர்களும் மூன்று, மூன்று பேராக சைக்கிளில் போவார்கள், கலகலவென்று பேசிக்கொண்டு. நோய்த்தொற்றால் வெளியே அதிகம் செல்ல அனுமதி கிடையாது என்ற நிலையில், வருந்தி வீட்டிலேயே உட்கார்ந்து விடுவதில்லை இவர்கள். நண்பர்களுடன் – அவ்வப்போது – பொழுதைக் கழிக்கையில், மனமும் உல்லாசமாக ஆகிவிடும். எதையாவது கழற்றி, பழுதுபார்ப்பதும் நல்லதொரு பொழுதுபோக்கு. எது செய்யவும் தெம்பில்லையா? இருக்கவே இருக்கிறது தொலைக்காட்சி! இப்போதெல்லாம் பொழுதைப்போக்க, தொலைக்காட்சியில் திரைப்படங்கள் பார்க்கவென NETFLIX, AMAZON போன்றவற்றிற்குப் பலரும் சந்தா கட்டுவது அதிகரித்துவிட்டதாம் 5 ‘முடியாது!’ ‘கஷ்டம்’ போன்ற வார்த்தைகளை உபயோகித்தால், பிறர் நம்மை மட்டம்தட்ட நாமே வழிவகுத்துக் கொடுத்துவிடுகிறோம். எதிர்மறை எண்ணங்களால்தான் மன இறுக்கம் எழும் என்பது புரியாது, அதற்குரிய தீர்வோ, சிகிச்சையோ பெறாதிருக்கிறார்கள் பலர். இவர்கள் தம் ஆற்றாமையை மனைவியை அடிப்பதன்மூலம் வெளிப்படுத்திக்கொள்வதால், வன்முறையும், விவாகரத்துக்களும் பெருகிவிட்டன. உதவிபுரியும் எதிர்மறை எண்ணங்கள் பலத்த மழையால் மழைத்தண்ணீர் வீட்டுக்குள் புக, புகலிடம் தேடி கூரைமேல் உட்காரப்போவது வேண்டாத விளைவுகளை எதிர்நோக்குவதால்தான். அந்த எண்ணம் எதிர்மறையாக இருந்தாலும், பாதுகாப்பை விளைவிக்கிறது. இன்னொரு உதாரணம். தெருவைக் கடக்க ஆயத்தமாகிறோம். அப்போது, விரைந்து வரும் வாகனத்தைக் கண்டு, ‘அபாயம்!’ என்று மூளை எச்சரிக்க, நம்மையும் அறியாது, கால்கள் நம்மைப் பின்னால் இழுக்கின்றன. மூன்று வயதுக் குழந்தைக்கு இத்திறமை கிடையாது. எது அபாயம் என்று புரிவதில்லை. ஏதாவது ‘மாலில்’ (MALL) பார்த்தால், தன் கையைப் பிடித்திருந்த தாயின் கையை உதறிவிட்டு, லிஃப்டில் ஏற ஓடுவான். அப்படிச் செய்த ஒரு சிறுவனை அவன் தாய் கண்டபடி திட்டினாள். அடிக்கப்போனாள். குறுக்கிட்டு, “என் பேரனும் அந்த வயதில் அப்படித்தான் செய்தான்,” என்றேன் புன்முறுவலுடன். “எப்படிச் சமாளித்தீர்கள்?” என்றாள், தன் அலுப்பை மறைக்காது. “நான் ஒரு பக்கம், அவன் தாய் ஒரு பக்கம் என்று, அவன் கைகளை இறுகப் பிடித்துக்கொள்வோம், அதன் கதவு திறக்குமுன்”. ஒரு முறை எங்களை முந்திக்கொண்டு அவன் ஏற, அந்த இயந்திரம் அவனைமட்டும் ஏற்றிக்கொண்டு மேலே போய்விட்டது. சில நிமிடங்கள் கழித்துத் தனியே திரும்புகையில், அளப்பரிய அச்சம் அவன் முகத்தில். ஆனாலும், அந்த அனுபவத்தால் அவன் பாடம் கற்கவில்லை. வயதுக்கோளாறு! குழந்தைகளின் இம்மாதிரியான விஷமம்கூட சில ஆண்டுகளுக்குப்பின் ரசித்துச் சிரிக்கும்படி இருக்கும். தோல்வியா? அப்படியென்றால்? பதினேழு முறை இந்தியாவின்மீது படையெடுத்தார் முகம்மது என்ற பெயர்கொண்ட அரசர். அவருடைய நாட்டின் பெயர் கஜினி. ஆப்கானிஸ்தானில் ஒரு பகுதி. ‘முயற்சி திருவினையாக்கும்!’ என்று புரியவைக்கவோ, என்னவோ, கஜினி முகம்மதுவைப்பற்றி சரித்திர பாடத்தில் நுழைத்திருந்தார்கள். ஒரே முறை முயன்றுவிட்டு, பின் அந்த முயற்சியைக் கைவிட்டிருந்தால், ஆயிரம் ஆண்டுகளுக்குமேலும் அவர் பெயர் நிலைத்திருக்காது. ஓட்டப் பந்தயத்தில் கலந்துகொள்ளும் அனைவருமே வெற்றி பெறுகிறார்களா? இடையில் நின்றுவிடாது, இறுதிவரை போனாலே வெற்றிதான் – முயலை வென்ற ஆமையைப்போல். எந்தக் காரியத்தில் வெற்றி பெற்றவர்களை எடுத்துக்கொண்டாலும், முதல்முறையே வெற்றி கண்டிருக்கமாட்டார்கள். இருப்பினும், தோல்வி என்பதே அவர்கள் வாழ்வில் கிடையாது என்றுதான் கூறுவார்கள். அவர்களைப் பொறுத்தவரை, வெற்றிக்கு எதிர்ப்பதம் அனுபவம். ஏனெனில், அதுதான் இன்னொரு முறை எப்படிச் செய்யக்கூடாது என்பதை உணர்த்தும். கடினமான காரியத்தில் இறங்கினால், பல முறை தவறுகள் நிகழலாம். நீண்டகாலம் பிடிக்கும். அதில் வெற்றி பெற முக்கியமான தன்மை: பொறுமை. கதை நான் ஒரு குறும்படத்தில் நடித்தேன். மகள் நாட்டியத்தில் முன்னுக்கு வரவேண்டும் என்று ஆசைப்படும் ஏழை விதவைத்தாய், தன் வருத்தத்தை வெளிக்காட்டத் தெரியாது, அவளை ஓயாது திட்டி, நல்வழிப்படுத்துகிறாள். இதுதான் கதை. தாயாக நான் நடித்தேன். நான் பேசவேண்டிய வசனத்தை என்னிடம் விட்டுவிட்டாள் இயக்குனர். மொழி தமிழ். கரு: பரதநாட்டியம். இயக்குனரோ, மிஸ் ஆங் என்ற சீனப்பெண். மொழி, கரு இரண்டுமே அவளுக்குத் தெரியாது. ஆனால், கதை இப்படித்தான் செல்லவேண்டும் என்று கணித்திருந்தாள். சில காட்சிகளில், அவளுடைய எதிர்பார்ப்பைக் கூறுவாள். முகபாவத்திலும், தலையசைவிலும் காட்ட முயற்சித்தேன். ஒவ்வொரு முறையும், “Again!” (திரும்பவும்) என்பாள். இப்படியே, ஒரு காட்சியில் பன்னிரண்டு முறை, அவளுக்குத் திருப்தி ஏற்படும்வரை மாற்றி மாற்றிக் காட்டினேன். அந்தப் பாத்திரம் எப்படியெல்லாம் கஷ்டப்பட்டிருக்கும் என்று புரிந்துகொண்டு வெளியே கொண்டுவர அவ்வளவு முயற்சி எடுக்க வேண்டியிருந்தது. படம் முடிந்ததும், ஒளிப்பதிவாளர், “உங்கள் பர்சனாலிடிக்குக் கொஞ்சமும் பொருத்தமில்லாத, மிக வித்தியாசமான பாத்திரம் அது! நீங்கள் எந்த கல்லூரியில் நடிப்பு பயின்றீர்கள்?” என்று கேட்டார், மிக மரியாதையுடன்! நான் என்ன செய்தேன்! அதில் இயக்குனரின் விடாமுயற்சி, என்னால் முடியும் என்ற அவளது நம்பிக்கை இரண்டும் கலந்திருந்தன. “நான் இப்படி ஒரு படம் எடுக்கப்போகிறேன் என்று சொன்னதும், எல்லாரும் கேலியாகச் சிரித்தார்கள்!” என்று திரும்பத் திரும்பக் கூறி மகிழ்ந்தாள். ஆரம்ப சூரத்தனம்! கேள்விப்பட்டிருக்கிறீர்கள்தானே? சிலர் ஒரு காரியத்தை உற்சாகமாக ஆரம்பித்துவிட்டு, விரைவில் ஆர்வம் குறைய, அதை அரைகுறையாகச் செய்வார்கள். அல்லது, கைவிட்டுவிடுவார்கள். கதை தொடர்கதை எழுதும் எண்ணத்துடன் ஒரு பத்திரிகை ஆசிரியர் ஒரு கதையை ஆரம்பித்தார். ஒவ்வொரு பாகமும் அப்படித்தான் இருக்கவேண்டும் என்று ஓரிரு வரிகளில் குறிப்பும் எழுதி வைத்துக்கொண்டார். ஆரம்பத்தில் விறுவிறுப்பாக இருக்க, பல வாசகர்கள் புகழ்ந்து எழுதினர். சீக்கிரமே கதையில் தொய்வு ஏற்பட்டது. ‘போரடிக்கிறது!’ என்ற ரீதியில் விமரிசனங்கள் வந்தன. என்னை ஒரு தொடர்கதை எழுதும்படி வேறொரு பத்திரிகை ஆசிரியர் கேட்டார். ‘ஆகட்டும், பார்க்கலாம்,’ என்று தப்பித்துக்கொள்ளும் ரகமில்லை நான். நேரமின்மையைக் காரணம் காட்டி மறுத்தேன். (தோல்வி கண்டுவிடுவோமோ என்ற அச்சத்தாலோ, அல்லது சோம்பல் ஏற்பட்டதாலோ, ‘நாளை பண்ணப்போகிறேன்!’ என்கிறார்களே! அதற்கு அர்த்தம் என்ன தெரியுமா? ‘நீங்கள் கூறுவதைப் பண்ணும் உத்தேசம் எனக்கில்லை!’ என்பதுதான்!) அவரோ, விடாக்கண்டன். “ப்ளாட் (PLOT) போட்டு வெச்சுக்குங்க,” என்று வற்புறுத்தினார். எனக்கு அம்முறை சிறந்ததாகப் படவில்லை. கதாபாத்திரங்கள் நம் மனதில் சுழன்றுகொண்டிருக்கும்போதே கதையை எழுதிவிட வேண்டும். இது புரிந்து, ஒரே மூச்சில் எழுதினேன். வேறு எதிலும் மனதைச் செலுத்தவில்லை. ஓயாத உழைப்பால், கண்பார்வைதான் சற்று மங்கலாகப்போயிற்று! தன்னிரக்கம் ஒரு காரியத்தில் இறங்கிவிட்டபோது, நம்மைச்சுற்றி என்ன நடக்கிறதென்று பார்வையை ஓடவிடலாமா? கவனம் சிதறிவிடுமே! கதை அரசாங்க முழுப்பரீட்சை என் மாணவன் ஒருவனுக்கு. திடீரென்று ஒருவர் வெளியிலிருந்து, “ஷூக்ரி!” என்று அவன் பெயரைக் கூவி, “தாத்தா இறந்துவிட்டார்!” என்று கத்தினார். அவ்வளவுதான்! கையிலிருந்தவற்றை நழுவவிட்டு, பையன் பதட்டத்துடன் எழுந்தான். நான் அவசரமாக வெளியே சென்று, தந்தையிடம், “பாதிப்பரீட்சையில் வெளியில் போனால், தேர்ச்சி எப்படிப் பெறமுடியும்?” என்று பலவாறாக விளக்கினேன். அவர் அரைமனதுடன் திரும்பிச் சென்றார். “நீ பரீட்சைத்தாளில் கவனம் செலுத்து!” என்றபோதும், பையனால் முடியவில்லை. அதன்பின், ஷூக்ரி மிகவும் வருந்தினான் – தாத்தாவுக்காக அல்ல. “இந்த வருடம் நான் ஃபெயில்தான்!” என்று. தாத்தாவோ இறந்துவிட்டார். அவரைப் பார்க்க பேரன் போனால், என்ன செய்திருக்கமுடியும்? அதைவிட அவனுடைய எதிர்காலம் முக்கியமில்லையா? அவனுடைய தந்தை இதையெல்லாம் யோசிக்கவில்லை. அப்படிப் போடு பழியை! “என்னை யாருமே ஊக்குவிப்பதில்லை. அதனால்தான் நான் முன்னுக்கு வரமுடியவில்லை,” என்று கூறி, தம் கையாலாகாத்தனத்திற்குப் பிறர்மீது பழிபோடுவார்கள். ஊக்கம் என்பது நமக்குள்ளிருந்து வருவது. பிறரை எதிர்பார்த்தால், ஏமாற்றம்தான் மிஞ்சும். அறிவு, திறமை, கல்வி போன்ற குணங்கள் அமையப் பெற்றிருந்தாலும், பலர் வெற்றி பெற முடிவதில்லையே! அவர்களுக்கு ஆர்வம் இருக்கலாம். அது மட்டும் போதுமா? நமக்குத் திறமை இருக்கிறது, நிறைய சாதிக்கவேண்டும் என்று துடிப்பாக இருப்பவரிடம், “போதுமென்ற மனமே பொன்செய்யும் மருந்து!” என்று அறிவுரை கூறுவார்கள் உற்றவர்கள். “இதெல்லாம் உன்னைப்போன்றவர்களால் முடியாத காரியம்!” என்று தன்னம்பிக்கையைத் தகர்ப்பார்கள். சொல்கிறவர்கள் எப்போதும் பாதுகாப்பை நாடுகிறவர்களாக இருப்பார்கள். அப்படிப்பட்ட மனப்பான்மை இருப்பவர்கள் சாதிக்கமுடியாது. ‘என் குடும்பத்தினருக்கு நான் செய்வது பிடிக்கவில்லை!’ என்று விட்டுக்கொடுக்கும் ஒருவர் பிறகு வருந்த நேரிடும். ஆர்வத்துடன் நாம் ஒரு காரியத்தில் ஈடுபடும்போது, நம் திறமையில் நமக்கே சந்தேகம் எழச்செய்கிறவர்களை அலட்சியம் செய்யவேண்டும். நம் செய்கையால் அவர்கள் ஆத்திரப்படலாம் – தம்மை மதிக்கவில்லையே என்று. பிறருடைய உணர்ச்சிகளுக்கு நாம் பொறுப்பல்ல. செய்வதற்குமுன், எந்தப் புதிய காரியமும் கடினமாகத்தான் தென்படும். உழைக்க அஞ்சினால் எப்படி! அதையே சவாலாக எடுத்துக்கொண்டால், உற்சாகமாக இருக்கும். “என்ன செய்வது? அதை எப்படிச் செய்வது?” என்று, நம்முடன் ஒத்துழைக்கும் ஒத்த மனத்தினரை நாடினால் வெற்றி பெறலாம். மனநிறைவு கிட்டும். முன்னுக்கு வந்திருப்பவர்கள் நம்மைவிட எத்தனையோ கஷ்டங்களை, எதிர்ப்புகளை, கேலியைச் சந்தித்திருப்பார்கள் என்பதை நினைவில் வைத்துக்கொண்டால், தைரியம் எழும். வெளிநாடுகளுக்குச் செல்பவர்கள் மொழி, கலாசாரம், பொருளாதாரப் பிரச்னை போன்ற பல இன்னல்களையும் கடந்து, தாய்நாட்டைவிட்டு வெளிநாடுகளுக்குச் செல்பவர்கள் சில சமயம், உள்நாட்டவர்களைவிட அதிகமாக எப்படி வெற்றி பெறுகிறார்கள்? “என்ன ஆனாலும், மனம் தளராதே. விடாமுயற்சியுடன் போராடு!” என்று அவர்களது தாயோ, தந்தையோ அறிவுறுத்தி அனுப்பி வைப்பார்களாம். விடாமுயற்சி உடையவர்களைத் தோற்கடிப்பது கடினம். குருட்டுத்தனம் வேண்டாமே! கோலாலம்பூரில் உள்ள பத்து மலையில் (BATU CAVES) தைப்பூசத் திருவிழா. “எங்கேடா போறோம்?” “யாருக்குத் தெரியும்?” லட்சக்கணக்கான உள்நாட்டு, வெளிநாட்டு பக்தர்களும், வேடிக்கை பார்க்க வந்தவர்களுமாக கும்பல் திரண்டிருந்தது. பலவிதமான ஒலிகளுக்குமேல் அங்கு கேட்ட ஓர் உரையாடல் அது. தவிர்க்க முடியாத கும்பலில் சரி. ஆனால், எப்போதும் பிறரைப் பின்தொடர்ந்தால் என்ன ஆகும்? ‘தடம் பதித்தவர்கள்’ என்று சிலரைக் குறிப்பிடுகிறோம். நாமும் அவர்களைப் பின்தொடர்ந்து, அதே தடத்தில் நடந்தால், நமக்கும் மதிப்பும் மரியாதையும் கிடைக்குமே என்ற நப்பாசை பலருக்கு. ஆனால், அவர்கள் காலடி எப்படிப் பிறர் கண்களில் படும்? திருப்திதான் கிட்டுமா? அரசாங்க ரீதியில் இப்படிச் செய்யும்போது, ஒரு நாட்டு மக்கள் ஆட்டுமந்தைகளாக அதிகார வர்க்கத்தினரைப் பின்தொடர்கிறார்கள். வாலறுந்த நரி ஒன்று பிற நரிகளைக் கேலி செய்து, அவையும் தம் வாலை வெட்டிக்கொள்ளச் செய்ததாம். தன்னை வித்தியாசமாகக் கருதிவிடப்போகிறார்களே என்ற பயம் அதற்கு. சமீபத்தில் மலேசியாவில் மிகுந்த சர்ச்சைக்கு உள்ளான சமாசாரம் இது. மாஜி பிரதமர் ஒருவர், “சீனர்கள் நாட்டுப்பற்று இல்லாதவர்கள். இன்னமும் தங்கள் வழக்கப்படி, உணவு உட்கொள்ள CHOP STICKS (குச்சிகள்) பயன்படுத்துகிறார்கள்! நம்மைப்போல் கையைப் பயன்படுத்துவதில்லை,” என்று பேசியிருந்தார். எல்லா இனத்தவர்களும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்திருந்தனர். ‘சீனர்கள் தம் உணவை மிகுந்த சூடாக உட்கொள்வார்கள். (குளிர்நாட்டுப் பழக்கம் அது). அத்தனை சூட்டில் கை வைக்கமுடியாது,’ என்று ஒருவர் விளக்க, நாட்டு ஒற்றுமையைக் குலைக்கப்பார்க்கிறார் என்ற பழி கிட்டியது. தமக்குச் சரியென்று படுவது எல்லாருக்கும் ஏற்புடையதாக இருக்குமா என்று பலரும் யோசிக்கத் தவறிவிடுகிறார்கள். நம்மில் ஒவ்வொருவருக்கும் மூளை என்ற ஒன்று ஏன் தனித்தனியாக அமைந்திருக்கிறது? அதிகாரத்தை விரும்பும் சில அற்பர்கள் பயமுறுத்தியும், கேலி பேசியும் பிறரைப் பணியவைக்க முயல்வார்கள். அவர்கள் தைரியசாலிகளாக இருக்கமாட்டார்கள். அதை மறைக்கத்தான் முரட்டுத்தனம். எல்லாரும் தம்மைப்போலவே நடக்கவேண்டும் என்று எதிர்பார்ப்பவர்கள் எதிர்த்திசையில் நடப்பவனுக்கு ‘கர்வி,’ ‘ஒற்றுமையாக இருக்காதவன்’ என்று பெயர் சூட்டிவிடுவார்கள். “நீ ஓயாமல் தமிழ் புத்தகங்களைப் படிக்கிறாயே! நன்றாகவா இருக்கும்?” ஒரு மலாய் ஆசிரியை என்னைக் கேட்டாள், முகத்தைக் கோணியபடி. அவளுக்குப் புரியாத மொழியில் நான் படித்ததால் அவளுக்கு அச்சமோ? “எனக்குப் பிடிக்கும்!” என்றேன் அவள் முகத்தில் அடித்தாற்போல். பழக்கவழக்கங்கள் புரியாது.. பிற மனிதர்களை மட்டுமின்றி, பண்டைக்கால பழக்க வழக்கங்களைப் பின்பற்றுவதும் ஒரு விதத்தில், அறியாமைதான். தீபாவளியன்று எங்கள் வீட்டுக்கு விஜயம் செய்த ஒரு சீனர், “எதற்காக முன்வாசலில் தோரணம் கட்டுகிறீர்கள் என்று நான் பலரைக் கேட்டபோது, எல்லாரும், TRADITION (பாரம்பரிய வழக்கம்) என்றார்கள்,” என்றார், சற்று ஏமாற்றத்துடன். அறிவுப்பசி அவருக்கு. நல்லவேளை, நான் அதைப்பற்றிப் படித்திருந்தேன். “பலரும் நம் வீட்டுக்கு வரும்போது, அவர்கள் மூச்சுக்காற்றிலிருந்து வெளியாகும் கரியமல வாயுவை பச்சை மாவிலைகள் உள்வாங்கிக்கொள்கின்றன. இது சுகாதார அடிப்படையில் உண்டான பழக்கம்,” என்று என் ‘அறிவாற்றலை’ வெளிப்படுத்திக்கொண்டேன். இன்று பலரும் கட்டுவது பச்சை இலைகளால் அல்ல. பிளாஸ்டிக்காலான ‘மாவிலைத்’ தோரணம்! அரிசி மாவானான கோலத்தைப் போடுவது எறும்புபோன்ற சின்னஞ்சிறு பூச்சிகளுக்கு ஆகாரமாக. அழகுக்காக அல்ல. இதைப் பலரும் மறந்துவிட்டதால், பிளாஸ்டிக்கின்மேல் போடப்பட்ட வண்ணக்கோலம் அமோகமாக விற்பனையாகிறது. பெண்களைக் கிண்டல் செய்வது நகைச்சுவையா? பட்டிமன்றங்களில் பெண்களைப்பற்றித் தாறுமாறாகப் பேசுகிறார் ஆண் ஒருவர். ‘நகைச்சுவை’ என்று ஆண்கள் சிரிக்க, ‘நாமும் ஒத்துப்போய்விடலாமே!’ என்று பெண்களும் சேர்ந்து சிரிக்கிறார்கள். அவர் சொல்வதில் உண்மை இருக்கிறதா என்று எவரும் யோசிப்பதில்லை. கதை என் கல்லூரி நாட்களில், பிரபலமான ஒருவர் கோயிலில் கதாகாலட்சேபம் செய்ய வருவார். அவருடைய புகழும் வருமானமும் அதிகரிக்க, தான் எது பேசினாலும் மக்கள் ஏற்றுக்கொள்வார்கள் என்ற தைரியம் பிறந்தது அவருக்கு. இந்துப் புராணக்கதைகளின் நடுவே, தற்காலப் பெண்களைப்பற்றி இழிவாகப் பேச ஆரம்பித்தார். ‘சுவாரசியமாக இருக்கட்டுமே!’ என்று நினைத்திருப்பார். எல்லாரையும் சிரிக்கவைக்கலாம் என்ற அவர் நம்பிக்கை வீண்போகவில்லை. அதன்பின், நான் அவருடைய நிகழ்ச்சிக்குப் போக மறுத்துவிட்டேன். “நல்ல விஷயங்களைத் தெரிந்துகொள்ளும் ஆர்வம் இல்லை!” என்று என்மேல் தாயாருக்குக் கோபம். நான் மசியவில்லை. சில ஆண்டுகளுக்குப்பின், அம்மாவும் போவதை நிறுத்திவிட்டார், “பொண்களைக் கேவலமா பேசறார்!” என்று முகத்தைச் சுளித்தபடி. கூட்டத்தில் ஒருவர் சிரித்தால், சற்றும் யோசியாது, எல்லாரும் அவரைப் பின்பற்றுவதை வழக்கமாகக் கொண்டிருக்கும்வரை பெண்களை இழிவுபடுத்தும் பேச்சாளர்களுக்குக் கொண்டாட்டம்தான். ‘கும்பலோடு கோவிந்தா!’ என்பது இப்படிப்பட்ட நடத்தைக்குத்தானா! பெண்கள் ஆண்களிடம் தாம் காணும் குறைகளைப்பற்றிப் பேசினாலோ, எழுதினாலோ, ஆண்கள் கொதித்தெழுவார்கள். எந்த உண்மையையும் நேருக்கு நேர் சந்திக்க தைரியம் வேண்டும். ஆனால், அதைவிடப் பிறரைக் கண்மூடித்தனமாகப் பின்பற்றுவது எளிதாயிற்றே! திரைப்படங்களைக் காப்பியடிப்பது திரைப்படங்களை எடுத்துக்கொண்டால், ஆண் எந்தப் பெண்ணை வேண்டுமானாலும் அறையலாம், மனம்போனபடி கேலி செய்யலாம் என்று காட்டுகிறார்கள். முட்டாள்களைப் பின்பற்றி நடப்பவனும் முட்டாளாகிறானே! அதையெல்லாம் பார்த்துவிட்டு, அதேபோல் நடக்கிறவர்களும் இருக்கிறார்கள். இயக்குனர் ஒருவர், சிறிதும் மாற்றமின்றி, தான் சொல்லிக்கொடுப்பதுபோலவேதான் நடிகர்களும் பேசி, நடிக்கவேண்டும் என்று எதிர்பார்ப்பாராம். அப்படிச் செய்யாவிட்டால் தண்டனை என்று அவர்கீழ் வேலை பார்த்தவர்கள் பலர் தெரிவித்திருக்கிறார்கள். நடிக்க வந்தவர்களின் மனோதர்மத்துக்கு இடங்கொடுக்காவிட்டால், எல்லாரும் ஒரேமாதிரிதான் நடிப்பார்கள். அதில் இயக்குனரின் கைவரிசை தெரியும். புதுமையோ, சுவாரசியமோ இருக்குமா? மதத்தின் பெயரால் “மத குரு” என்று தம்மைத் தாமே அறிவித்துக்கொண்டு, பெயரும் புகழுமாக இருக்கிறார்களே சிலர், எப்படி? கலை, தர்மம் இரண்டிலும் மிகுந்த ஈடுபாடு உள்ளவர்கள்போல் எதையாவது ஆரம்பித்தால், நல்லவர்கள் பலர் அவருக்கு உதவியாக நடக்க முன்வருவார்கள். இது உலக நியதி. பல காலம் கழிந்தபின்னர்தான் அவர் செய்துவந்தது சமூக சேவை இல்லை, சுயநலம் என்பது வெளியாகும். நான் அப்படி ஒருவரைச் சந்தித்திருக்கிறேன் – கலை நிகழ்ச்சிகளில். அவர் நடக்கும்போதே சில பக்தைகள் அவர் காலில் விழுந்து வணங்குவார்கள். மரியாதை என்பது ஒருபுறமிருக்க, ஒருவர் அப்படிக் கும்பிட்டால், அவர் செய்த பாபம் வணங்கப்பட்டவருக்குப் போய்விடுமாம். சில ஆண்டுகளிலேயே, நடக்கக்கூட முடியாது அவர் தள்ளாடியதைக் கண்டு, “அவருக்கு என்ன, கான்சரா?” என்று அவருடைய மருத்துவரைக் கேட்டேன். “அது மட்டும்தான் இல்லை. மற்ற எல்லா வியாதிகளும் இருக்கின்றன,” என்ற பதில் கிடைத்தது. பிறர் தன்னைப் பின்பற்றுகிறார்களே என்ற பெருமிதம் அப்போதாவது மறைந்திருக்குமா? ஏனென்று கேள்! குழந்தைகள் இயற்கையாகவே எதையும் அறியும் ஆர்வம் கொண்டிருப்பார்கள். அவர்களது அறிவுப்பசிக்குத் தீனி போடாது, ‘சும்மா தொணதொணக்காதே!’ என்று விரட்டிவிட்டால், அடங்கிவிடுவார்கள். பதின்ம வயதில், ‘இப்படி நட!’ என்று அதிகாரம் செய்தால் கேட்பார்களா? ‘ஏன்? ஏன்?’ என்று கேட்கும் பழக்கம் உள்ளவர்கள் பிறர் கூறுவதையோ, செய்வதையோ பின்பற்றமாட்டார்கள். சுயமாகச் சிந்தித்துச் செயல்படுவார்கள். அவர்களைப் பார்த்துப் பிறர் அச்சமடையும் அபாயம் உண்டு! ஒரு மருத்துவர் கூறினார்: “தொண்டையில் வலி இருந்தால், கடையில் வாங்கும் மருந்துகளைவிட உப்பு கரைத்த வெந்நீரால் கொப்புளிப்பது சிறந்தது”. நான் அதை அப்படியே ஏற்கவில்லை. “ஏன், டாக்டர்?” என்று அவரை மடக்கினேன். என் கேள்வியை எதிர்பாராத அவர் சற்று அயர்ந்துவிட்டார். அவரிடம் வேறு யாரும் அப்படி ’எதிர்த்து’ப் பேசியதில்லை போலிருக்கிறது! “கூடுதலாக இன்னும் சில மணி நேரம் உப்பின் குணமாக்கும் தன்மை நீடித்திருக்கும்,” என்றார், ஒருவழியாகச் சமாளித்துக்கொண்டு. ‘டாக்டர் சொன்னால், அதை அப்படியே ஏற்றுக்கொள்ளவேண்டும். அவருக்குத் தெரியாததா!’ என்பவர்களுக்கு: ‘அவருக்குத் தெரிந்திருக்கலாம். ஆனால், எனக்குத் தெரியாதே!’ உணர்வும் முதிர்ச்சியும் “இதை நான் செய்யவில்லை. அவள்தான் இப்படிச் செய்யச்சொன்னாள்”. “அவள் குறுக்கிட்டதால்தான் நான் செய்ய ஆரம்பித்த காரியத்தில் தவறு நேர்ந்துவிட்டது”. இப்படிக் கூறுகிறவர்கள் சிறுவயதினர் மட்டுமில்லை. வயது ஏறியிருந்தாலும், உணர்ச்சிபூர்வமாக முதிர்ச்சி அடையாதவர்கள் பலர் உண்டு. கதை யாராவது பேசிக்கொண்டிருக்கும்போது குறுக்கிடுவதை வழக்கமாகக் கொண்டிருந்தாள் ஆசிரியை கமலம். அவளைப் பிறர் கவனிக்கவேண்டும் என்ற எண்ணமோ? தான் எப்போது குறுக்கிடலாம் என்றே காத்திருப்பாள், தன் பெருமையைப் பறைசாற்றிக்கொள்ள. ‘நீ எப்போது காரோட்டப் பழகினாய்?’ ‘நீ எப்போது தலைமயிரைக் குட்டையாக வெட்டிக்கொண்டாய்?’ கமலத்தை நோக்கிக் கேட்கப்படும் எல்லாக் கேள்விகளுக்கும் பதில் இப்படித்தான் ஆரம்பிக்கும் :“நான் பம்பாயில் M.SC பண்ணிக்கொண்டிருந்தபோது..!” இப்படிப்பட்டவர்கள் ஏதோ ஒரு முறையால் வதைக்கப்பட்டிருக்கலாம். தாழ்வு மனப்பான்மையை மறைத்துக்கொள்ள பிறரைச் சாடுவார்கள். அப்போதுதானே தாம் உயர்ந்துவிட்டதைப்போல் தோன்றிவிடும்! (ஆங்கிலமோ, மலாயோ, கமலத்தின் உச்சரிப்பு வேற்றுமொழியின் வாடையுடன், வித்தியாசமாக இருக்கும். ‘அவள் பேசுவது யாருக்குப் புரிகிறது!’ என்று பிறர் கேலி செய்வது அவளுக்குத் தெரியாமல் போயிருக்குமா!) அவளைப்போல், உடல் வளர்ந்திருந்தாலும், முதிர்ச்சி இல்லாதவர்களுக்குப் புதியனவற்றை அறியும் ஆர்வம் இருக்காது. அது பிறரைப் பற்றிய வம்பாக இருந்தால் மட்டும் சுவாரசியமாகப் பங்கெடுப்பார்கள்! கதை என் பள்ளித் தலைமை ஆசிரியை தன்கீழ் இருப்பவர்களைப் பாடாய்ப்படுத்தினாள். பள்ளி முழுவதும் கேட்கும்படி எந்த ஆசிரியர் பெயரையாவது சொல்லி, அவர் செய்த தவற்றையும் பிரகடனப்படுத்துவாள். இதுபோன்ற செய்யக்கூடாத பலவற்றைச் செய்தாள். பொறுக்கமுடியாது, நான் அவள் செய்த அட்டூழியங்களையெல்லாம் பட்டியலிட்டு, தினசரிக்கு அனுப்பினேன். (அவள் பெயரைப் போடவில்லை. ஆசிரியருக்கு மட்டும் எந்தப் பள்ளி என்று குறிப்பு அனுப்பியிருந்தேன்). அது வெளியானதும், நானடைந்த பிரபலத்தைப் பொறுக்கமுடியாது, “இதனால் உனக்கு என்னென்ன பிரச்னைகள் வரும் என்று தெரியுமா?” என்றாள் கமலம், சவாலாக. “எழுதி அனுப்புமுன்னரே எல்லாவற்றையும் யோசித்துவிட்டேன்,” என்றேன் அலட்சியமாக. என்னை அதிர்ச்சி அடையச் செய்யவேண்டும் என்று அவள் கேட்டிருப்பாள். நான் அடையாத அதிர்ச்சி அவளிடமே திரும்பியது. உணர்ச்சி முதிர்ச்சி கொண்டவர்கள் ஏழை, பணக்காரன் என்ற வித்தியாசம் பாராது, எல்லோரையும் ஒரேமாதிரி நடத்துவதால், மதிக்கப்படுகிறார்கள். ஆனால், அவர்களை துச்சமாக நடத்துகிறவர்களிடமிருந்து ஒதுங்கிவிடுவார்கள். கதை செடிகளை விற்பனை செய்யும் நர்சரி அது. வேறு நாட்டைச் சேர்ந்த இளம் தொழிலாளி செடிகளை விற்றுக்கொண்டிருந்தான், தன் முதலாளியின் சார்பில். “ஏய்! இது என்ன விலை?” என்று அதிகாரமாகக் கேட்டாள் ஒரு பெண்மணி. பெரிய காரில் வந்திருந்தாள். ‘இவனையெல்லாம் மதிப்பதாவது!’ என்ற அகம்பாவம் அவள் கேள்வியில் தொனித்தது. தான் தாழ்த்தப்படுவதை யாரால்தான் பொறுக்கமுடியும்! நான் வாங்கியதைப்போல் இரு மடங்கு விலையைச் சொல்லிவிட்டு, அந்த இளைஞன் என்னைப் பார்த்து, ரகசியமாகச் சிரித்தான். தாம்பத்தியத்தில் உணர்ச்சி வேறுபாடு கதை ராமனுக்கும் சீதாவுக்கும் பெயரில் மட்டும்தான் பொருத்தம். இருவரும் காரில் போகும்போது ஏதாவது தவறு செய்துவிட்டால், “உன்னோடு பேசியதால்தான் இப்படி!” என்று மனைவிமேல் பாய்வான் ராமன். பேசியது அவன். தவறு செய்ததும் அவன். ஆனால், நடந்தது அவள் குற்றம். தன் துணையாகவே இருந்தாலும், மனைவி வெற்றி அடையும்போது சிறுமையாக உணர்வார்கள் சில ஆண்கள். அதை மறைக்க, சமயம் கிட்டியபோதெல்லாம் அவளை மட்டம் தட்டுவார்கள் – பொது இடங்களில்கூட. அவர்களது குழப்பம் புரிந்து, அவ்வப்போது புகழ்ந்து, ‘எனக்கு நீங்களும் முக்கியம்தான்!’ என்பதுபோல் ஆதரவாக நடந்துகொண்டால், நாளடைவில் சற்றே மாறும் சாத்தியக்கூறு உண்டு. கதை திருமணத்திற்குப்பின் முனைவர் பட்டப்படிப்பு படித்துக்கொண்டிருந்தாள் மூர்னி. அவள் படிப்பை ஒட்டி, பெண்ணியத்தைப்பற்றி என்னைப் பேட்டி காண வந்திருந்தாள். மலாய், ஆங்கிலம் இரண்டிலும் சிறந்த தேர்ச்சி இருந்ததால், பிரபலமானவர்கள் சிலரைப் பேட்டி கண்டு, தினசரிகளுக்கு அனுப்பியிருந்தாள். ஆங்கிலத்தில் சிலமுறை வெளியானதும், ‘இவள் தன்னை மிஞ்சிவிடுவாள் போலிருக்கிறதே!’ என்ற பயம் ஏற்பட்டது அவள் கணவனுக்கு. “அதன்பின், மூன்று நாட்கள் என்னுடன் பேசவேயில்லை,” என்று என்னிடம் தெரிவித்தாள். “நீங்கள் கூறிய கருத்துகளை எழுதி அனுப்ப தயக்கமாக இருக்கிறது. என் கணவர் மீண்டும் கோபித்தால் என்ன செய்வது?” என்று குழம்பினாள். பல பெண்கள் திருமணத்திற்குமுன் கதை, கட்டுரை என்றெழுதி, பத்திரிகைகளில் அவை பிரசுரமும் ஆகியிருக்கும். கல்யாணத்திற்குப்பிறகு அவர்களில் பெரும்பாலோர் காணாமல் போய்விடுகிறார்களே, ஏன்? ‘வீட்டு வேலை, குழந்தைகள்,’ என்று ஏதேதோ காரணம் காட்டினாலும், கணவரது பொறாமையைத் தூண்டிவிடுவானேன், இல்லறத்தில் குழப்பம் ஏற்படச் செய்வானேன் என்றுதான் யோசித்திருப்பார்கள். ‘முன்பெல்லாம் நிறைய எழுவாயே! இப்போது ஏன் விட்டுவிட்டாய்?’ என்று அப்படியொரு மனைவியைக் கேட்கும் கணவன் தன் சொல்லும் செயலும் பிறரைப் பாதிக்கக்கூடும் என்பதை உணராதவன். பிறருக்கும் உணர்ச்சிகள் இருக்கக்கூடும் என்பது அப்படிப்பட்டவர்களுக்குப் புரிவதில்லை. தம் உணர்ச்சிகளுக்கே முக்கியத்துவம் அளிப்பதால், தாக்கப்படும்போது குறுகிவிடுவார்கள். தொடர்ந்து எழுதும் பெண்கள்? இரண்டு காரணங்கள் புலப்படுகின்றன. ஒன்று, கணவர் ஊக்குவிக்கிறார், இல்லையேல், மனைவி எழுதுவதைப் பெரிதாக எடுத்துக்கொள்வதில்லை. (பிறரை ஊக்குவிப்பவர்கள் உணர்வு முதிர்ச்சி கொண்டவர்கள். எவ்விதத்திலும் பிறரைக் கட்டுப்படுத்த மாட்டார்கள். அதேபோல், பிறர் தம்மைக் கட்டுப்படுத்துவதையும் விரும்பாதவர்கள்). இரண்டு, எந்த எதிர்ப்பையும் லட்சியம் செய்யாது, எழுத்தே உயிர்மூச்சு என்றிருக்கும் பெண்கள். எத்துறையில் பீடுநடை போடும் பெண்களுக்கும் இவை பொருந்தும். அவர்களது ஆர்வத்தைத் தடைபோடுவதுடன் நில்லாது, கண்டபடி பழிக்கும் கணவன்மார்களைப் பொறுக்க முடியாததால்தான் இரண்டு, மூன்று முறை திருமணம் செய்துகொள்கிறார்கள் நடிகைகள். பழி என்னவோ, பெண்களுக்கு. குடும்பத்தில் பாரபட்சம் ஒரே குடும்பத்தில் குழந்தைகளிடம் பாரபட்சமாக நடந்துகொண்டால், தாழ்த்தப்பட்ட குழந்தையின் ஆத்திரம் பிறரையும் துன்புறுத்தவேண்டும் என்ற ஆத்திரமாக மாறலாம். அல்லது மன இறுக்கத்தில் கொண்டுவிடும். பிறருடன் நம்மை ஒப்பிட்டுக்கொண்டே இருந்தால், ஏமாற்றம்தான் மிஞ்சும். தாழ்ந்த நிலையில் இருப்பவர்களுடன் பழகும்போது, உயர்ந்தவர்களாக உணர்வோம். மேலான நிலையில் இருப்பவர்களுடன் பழக நேரும்போதோ, அவர்களுக்குச் சமமாக நடிக்க வேண்டியிருக்கும். இப்பழக்கத்தால், சந்திப்பவர்கள் எல்லாரையும் மதிப்பும் மரியாதையுமாக நடத்தத் தவறிவிடுவோமே! குறையை நமக்குள் வைத்துக்கொண்டு, “ஏனோ, யாருமே என்னை மரியாதையாக நடத்துவதில்லை!” என்று வருந்துவதால் என்ன பயன்? கதை ஆசிரிய மேற்பயிற்சியின்போது, எங்கள் வகுப்பில் ஒருவர் கூறியது: “நான் என்ன செய்தாலும் என் தந்தையின் அன்பைப் பெற முடியவில்லை. என்னிடம் குறை கண்டுகொண்டே இருக்கிறார்!” அவர் முகத்தில் தாங்கமுடியாத வருத்தம். தங்கையிடம் மட்டும் அன்பைப் பொழிகிறாரே என்ற குழப்பம். அவருக்குச் சித்திரம் வரைவதில்தான் ஆர்வம் என்று பிறகு கேட்டறிந்தேன். தந்தையோ, ‘விஞ்ஞானத்தில் பட்டம் வாங்கு,’ என்ற வற்புறுத்தியிருந்தார். பிடிக்காத துறையில் அரைமனதுடன் ஈடுபட்டவர் அதில் சிறக்கவில்லையென்று, தந்தை ஓயாது தம் வார்த்தைகளாலேயே அவரை வதைத்தார் – பிறர் எதிரிலேயே. தந்தை அதிகம் படிக்காதவர். நிறைவேறாதுபோன கனவை மகன்மூலம் நிறைவேற்றிக்கொள்ளப் பார்த்திருக்கிறார். மகனுக்கு என்ன பிடிக்கும், எது உகந்தது என்று புரிந்துகொள்ள விரும்பாது, தன் அதிகாரத்தை அவன்மேல் செலுத்த ஆரம்பித்தார். நாளடைவில், அதிகாரமே போதையாக ஏறியது. அதற்குப் பலி மகன். நம்மை வருத்துகிறவர்கள் தம்மைத்தாமே ஏற்க முடியாதவர்கள் என்பதைப் புரிந்துகொண்டால், அவர்கள்மீது கோபம் வராது. பரிதாபம்தான் எழும். வாய்ப்பு தானே வராது “எனக்கு அதிர்ஷ்டமே கிடையாது!” பலரும் முனகுவார்கள். நாம்தான் அதைத் தேடிப் போகவேண்டும் என்று அவர்களுக்குப் புரிவதில்லை. அதிர்ஷ்டம் எப்படிக் கிடைக்கும்? முதலில் உழைப்பு. அதன்பின், உழைப்பைப் பாராட்டி புதிய வாய்ப்புகள் கிடைக்கும்போது அவற்றை நழுவ விடாதிருப்பது. கதை இசைத்துறையில் பட்டம் பெற்ற இளைஞர் குருசாமி. திரையுலகில் சேர்ந்தால், புகழுடன் நிறைய பணமும் கிடைக்குமே என்ற பேரவா அவருக்கு. தான் மெட்டமைத்த பாடல்களைப் பதிவு செய்து, ஓர் இயக்குனருக்கு அனுப்பினார். “உடனே வாருங்கள்,” என்ற அழைப்பு வந்தது. இப்போது குருசாமிக்குத் தயக்கம் ஏற்பட்டது. திரையுலகைப்பற்றித் தாறுமாறாகப் பேசுகிறார்களே! அங்கு போய், தான் மாறிவிட்டால்? “நான் அங்கு சென்றால், எப்போதும்போல் நல்லவனாகவே இருக்கமுடியுமோ என்ற பயம் வந்துவிட்டது,” என்று என்னிடம் தெரிவித்தார். இதை முதலிலேயே யோசித்திருக்க வேண்டாமா? போதாக்குறைக்கு, ‘கல்யாணமானா, நிச்சயம் குழந்தை இருக்கணும்,’ என்று எவளோ கூறியிருக்கிறாள். அப்படித் தன் மனதைக் கலைத்தது அவள் தவறு என்பதுபோல், அதையே பலமுறை ஆத்திரத்துடன் கூறினார். ஆரம்பிக்கும் முன்னரே அச்சமும் தயக்கமும் அடைந்தால் வாய்ப்பு நழுவிவிடாதா! எந்த வாய்ப்பையும் பயன்படுத்திக்கொள்ளுமுன், அதனால் நன்மையும், நீடித்த மகிழ்ச்சியும் கிடைக்குமா என்று யோசிக்கவேண்டுவது அவசியம். அதற்கு ஆரோக்கியத்தைப் பாதுகாத்துக்கொள்ள வேண்டும். அதன்பின், குருசாமி போயிருக்க வேண்டிய இடத்திற்கு வேறு ஒருவர் நியமிக்கப்பட்டு, பெரும்புகழை அடைந்தார். கிடைத்த நல்ல சந்தர்ப்பத்தை உரிய காலத்தில் பற்றிக்கொள்ளாத வருத்தம்தான் குருசாமிக்கு நிலைத்தது. இலக்கு சரியாக இருந்து, அதற்கான ஆராய்ச்சியைச் செய்து, திறமைகளையும் வளர்த்துக்கொண்டால் தோல்வி வராது. ஊக்கமளிக்கும் உறவினர்களும், ஓரிரண்டு நண்பர்களும் இருந்தால் கூடுதல் நன்மை. ஏன் தோல்விக்குமேல் தோல்வி? “நான் என்னென்னவோ செய்துபார்த்துவிட்டேன். எல்லாவற்றிலும் தோல்விதான்!” என்று புலம்புகிறவர் தன்னால் என்ன முடியும் என்பதை உணராதவர். தன் மனதின் குரலைவிடப் பிறருடையதற்கு அதிகம் முக்கியத்துவம் கொடுப்பவர். நம் முன்னேற்றத்தில் நம்மைவிட யாருக்கு அதிக அக்கறை? சவால்கள், அவமதிப்பு போன்றவற்றைப் பொறுத்துக்கொண்டு அலட்சியப்படுத்தினால்தான் முன்னேறமுடியும். எந்த வாய்ப்பும் பிரச்னையாகத்தான் ஆரம்பிக்கும். கதை எங்கள் பள்ளியில், கேள்வித்தாள்களை ஆசிரியர்களே கணினியில் தட்டச்சு செய்துவிடவேண்டும் என்று புதிய விதிமுறையைக் கொண்டுவந்தனர். உணர்ச்சிவசப்பட்டு, ‘எப்போதும் நான் என் கைப்படத்தான் எழுதுவேன்!’ என்று பிடிவாதம் பிடித்தால் புதியனவற்றைக் கற்று முன்னேறும் வாய்ப்பு கிடைக்குமா? ஒரு கணினி வாங்கி பழகத் தொடங்கினேன். நாற்பது வயதுக்குமேல் எதையும் கற்பது எளிதல்ல. எரிச்சலாக இருந்தது. அதை மாற்றி, உற்சாகம் அளித்துக்கொள்ளும் வகையில், தினசரியின் முதல் பக்கத்திலிருந்த செய்திகளிலிருந்து முதலிரண்டு வார்த்தைகளை ஒன்றாக இணைத்து ஒரு வாக்கியம் அமைத்தேன். அது இப்படி இருக்கும்: மந்திரி – மரண தண்டனை – கற்பழிப்பு, கொலைக்குற்றத்திற்காக … எனக்கே சிரிப்பு வர, அலுப்பு மறைந்தது. சுமாராக தட்டச்சு செய்ய வந்தபின், உட்கார்ந்திருந்தபோதெல்லாம் விரல்கள் நர்த்தனம் ஆடிக்கொண்டே இருக்கும், மனக்கண்ணால் இசைப்பலகையை இயக்குவதுபோல். “டீச்சர்களுக்கெல்லாம் கம்ப்யூட்டர் பயன்படுத்தத் தெரியுமா?” என்று ஒரு மாணவன் அதிசயப்பட்டுக் கேட்க, பெருமையாகிவிட்டது. முதலில் ஆங்கிலம், அதன்பின், தமிழ். கட்டாயம் என்பதால் கற்றது இப்போது பலவகைகளிலும் பயனுள்ளதாக இருக்கிறது. கிடைக்கும் சந்தர்ப்பங்களால் நமக்கு என்ன நன்மை விளையும் என்று எப்போதும் அலசுவது சரிதானா? கோலாலம்பூரில் பெருவெள்ளம் கடற்கரைப் பகுதியில் இல்லாத தீபகற்ப மலேசியத் தலைநகரில் நூறு வருடங்களாக வெள்ளம் கிடையாது. இப்போதோ, பாதுகாப்பு வேண்டி, மக்கள் கூரைமேல் ஏறினார்கள். ஒருவர் தாம் வைத்திருந்த படகால் அவர்களுக்கு உதவி செய்யலாமே என்று தோன்ற, காரின்மேல் படகுடன் சென்றார் – பலமுறை. நல்லது செய்தாலும், சந்தேகப்படவென்று சிலர் இருப்பார்களே! குருத்வாரா சீக்கியர்கள் ஒன்றுகூடவும், வழிபடவும் அமைக்கப்பட்ட இடங்கள் குருத்வாரா. சேவை மனப்பான்மை கொண்ட பிற இனத்தவரும் இணைந்து, வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உணவு தயாரித்து வழங்கினர். “சீக்கியர்கள் தயாரிக்கும் உணவை நாம் சாப்பிடலாமா? ஹாலாலாக (halal) இருக்குமா?” என்ற கேள்விகள் எழுந்தன, மலாய்க்காரர்களிடமிருந்து. அது என்ன, ஹாலால்? ஆடு, மாடு, கோழி போன்றவற்றை இஸ்லாமியரே பூசை செய்தபின் கொல்வதாம். இதற்கு விலக்கு மீன், முட்டை. “மத, இன வித்தியாசம் பாராது, பிறருடைய கொள்கைகளை மதித்து, தன்னலமின்றி சேவை செய்பவர்களை அவமதிப்பதா?” என்று ஒரு மலாய் பெண்மணி காரசாரமாக இணையத்தில் கேட்டிருந்தார். சுற்றிலும் தண்ணீர் இருந்தாலும், குடிநீர் பற்றாக்குறை. உணவு மட்டுமின்றி, ஆடை, குடிநீர், சிசுக்களுக்கான டயாபர் போன்றவைகளையும் பொதுமக்கள் அளித்தனர். பலர் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட வீடுகளைச் சுத்தம் செய்ய முன்வந்தனர். ‘இதனால் நமக்கு என்ன நன்மை?’ என்று யோசிக்க அவர்கள் அரசியல்வாதிகள் அல்லர். ‘பிறரது துன்பத்தில் பங்குபெற முடிந்ததே!’ என்ற நிறைவு போதும் அவர்களுக்கு. அவர்களே வெள்ளத்தில் மாட்டிக்கொண்டும் இருக்கலாம். அந்த அனுபவத்தையும் சவாலாக எடுத்துக்கொண்டிருப்பார்கள். ‘நம்மால் இவ்வளவு செய்யமுடியுமா!’ என்ற அதிசயம் எழ, அதனால் நிறைவும் ஏற்பட்டிருக்கும். கதை குமரன் பத்து வயதுப் பையன். பொருளாதார வசதி குறைந்த விதவைத் தாய் மறுமணம் செய்துகொண்டதும், எங்கள் உறவினர் வீட்டில் வேலையாளாகச் சேர்ந்தான். படிப்பைத் தொடர்ந்தாலும், தேர்ச்சி பெற முடியவில்லை. வீட்டு வேலை முடிந்ததும், ஓயாது தொலைக்காட்சிதான் துணை. “நேரத்தை இப்படி வீணடிக்கிறாயே!” என்று அவனை செஞ்சிலுவைச் சங்கத்தில் சேர்த்துவிட்டார்கள். அலுவலகம் ஒன்றில் உத்தியோகம் கிடைத்தபோதும், தொடர்ந்து உழைத்தான். பிறருக்கு உதவும் மனப்பான்மை வலுத்தது. ஆனால், அதைப் பெருமையாகக் கருதவில்லை. தீயணைக்கும்போதோ, வெள்ளம் பெருகியபோதோ தான் அடைந்த அனுபவங்களை ரசித்துக் கூறுவான். அந்த வேலைகளெல்லாம் எளிதாக இருந்திருக்குமா? உயிருக்கே ஆபத்து ஏற்பட்டிருக்கலாமே! எதையும் எதிர்பார்த்து குமரன் பிறருக்கு உதவவில்லை. ஆனாலும், சவால்களை ‘வாய்ப்பு’ என்று எடுத்துக்கொண்டதால், உத்தியோகத்தில் பதவி உயர்வு கிட்டியது குமரனுக்கு. “Smooth seas do not make skilful sailors” (கடலில் கொந்தளிப்பு இல்லாவிட்டால், தேர்ந்த மாலுமிகளாக ஆக முடியாது (ஆப்பிரிக்கப் பழமொழி). “எனக்குச் சரியான சந்தர்ப்பம் அமையவில்லை!” என்று மூக்கால் அழுபவர்கள் வாய்ப்புகளை நழுவ விடுகிறார்கள், அவை கஷ்டம் என்று. ‘கஷ்டமாக இருந்தால் என்ன!’ என்று துணிகிறவர்களே அந்த சந்தர்ப்பத்தையே நல்ல வாய்ப்பாக ஆக்கிக்கொள்கிறார்கள். யாருக்குத்தான் கஷ்டங்கள் இல்லை? அவற்றை நாம் எப்படி எதிர்கொள்கிறோம் என்பதில்தான் வெற்றி, தோல்வி அடங்கியிருக்கிறது. மொபைல்போனில் மூழ்கும் குழந்தைகளை மீட்பது எப்படி? சிறுவயதில் கணினி விளையாட்டுகளும், இடைநிலைப்பள்ளியில் படிக்கும்போது தொலைபேசியும் கையுமாக இருந்து, தண்டனையும் பெற்ற இளைஞனைக் கேட்டேன், “கைத்தொலைபேசி இருந்தால்தான் சாப்பிடுவேன் என்று பிடிவாதம் பிடிக்கும் குழந்தைகளை எப்படி மாற்றுவது?” தன் இளமைக்காலம் நினைவுக்கு வர, சிரித்தபடி, “COLD TURKEY!” என்றான். அதாவது, அவர்கள் அழுது அடம் பிடித்தாலும், சாப்பிட மறுத்தாலும் மசியாது, தொலைபேசியை அவர்களிடமிருந்து பிடுங்கி வைத்துவிடவேண்டும். “Handphone குடு. இல்லாட்டா, சாப்பிட மாட்டேன்!” என்று அடம் பிடிக்கிறார்களா? “சாப்பிடாட்டா போ! எனக்குப் பசிக்கிறது. இப்போ சாப்பிடப்போறேன்,” என்று அவன் எதிரிலேயே சாப்பிடுங்கள். பரிதாபம் கூடவே கூடாது. தான் சாப்பிடத் தட்டு வைக்கப்பட்டவில்லை என்று புரிந்து, வருத்தம் அடைவான். அழுகை எட்டிப்பார்க்கும். எத்தனை நேரம்தான் பசியைப் பொறுப்பார்கள்! கவனிக்காததுபோல், சாப்பிடுங்கள். கொஞ்சம் பொறுத்து, “அட! நீ இன்னும் சாப்பிடலியா? ஒன்னை மறந்தேபோயிட்டேன்!” என்று நடித்தால், அடக்கிய அழுகை வெளியே வரும். தம் எல்லை எதுவரை என்று புரிந்துகொள்ளத்தான் பிற விஷயங்களிலும் அடிக்கடி இப்படிச் செய்வார்கள் குழந்தைகள். ‘குழந்தைகள்தானே!’ என்று விட்டுக்கொடுத்துவிடுவோம் என்று எதிர்பார்க்கிறார்கள். இது புரிந்து, நாம்தான் கண்டிப்பாக இருக்க வேண்டும். குடும்பத்தில் உள்ள பெரியவர்கள் அனைவரும் இதில் உறுதியாக இருக்கவேண்டுவது அவசியம். யாராவது ஒருவர் பரிந்து பேசினாலும் போயிற்று. ஆறு வயதுக்குள் இப்படிக் கட்டுப்படுத்திவிட்டால், அதன்பின் அவ்வளவு தொல்லை இருக்காது. எத்தனை நேரம்? ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகள் அரைமணியிலிருந்து ஒருமணி நேரம்தான் பொழுதுபோக்கிற்காக உபயோகிக்கலாம். சாப்பிடும்போதோ, காரிலோ, பஸ்ஸிலோ போகும்போது, நிச்சயம் கூடாது. மீறினால், ஒரு குறிப்பிட்ட காலம் – ஒரு வாரமோ, மாதமோ – கைத்தொலைபேசியைத் தொடவே முடியாது என்ற தண்டனை. எதை விடமுடிவில்லையோ, அதைக் கண்ணில் காட்டக்கூடாது. (போதைப்பித்தர்களுக்கு இந்த சிகிச்சைதான்). விளையாட்டு சிறு வயதிலிருந்தே, பள்ளியில் தற்காப்புக்கலை கற்கவோ, விளையாட்டுகளில் ஈடுபடவோ ஊக்குவித்தால், கட்டொழுக்கம் வரும். அவற்றில் ஈடுபடும்போது, நல்ல நண்பர்களின் துணை கிடைக்கும். உடலைப் பாதுகாப்பதில் பெரும் அக்கறை இருப்பதால், வேண்டாத வழிகளில் மனம் போகாது. ‘பிறருடன் சேர்ந்தால் கெட்டுவிடுவான்!’ என்று ஒரேயடியாக அடக்கி வளர்க்கப்பட்டால், பொறுக்க முடியாத தனிமை குழப்பத்தில், மன இறுக்கத்தில் கொண்டுவிடும். வெளியில் அழைத்துப்போகும்போது பதின்ம வயதினர் நண்பர்களுடன் அதிக நேரம் செலவழிக்கிறார்கள், அவர்களுடன்தான் மனம்விட்டுப் பேசுகிறார்கள் என்று கண்டுபிடித்திருக்கிறார்கள். ஏன் அப்படி? என் பதின்ம வயது மாணவி ஒருத்தி கசப்புடன் கூறினாள், “அப்பாவுடன் போனால், எதுவும் பேசாது, அவரது பிட்டத்தைப் பார்த்தபடி நடக்கவேண்டும்”. ‘நான் உன்னை அழைத்துவந்ததே பெரிய காரியம்!’ என்பதுபோல் கையைப் பிடித்து இழுத்துக்கொண்டு போனால், யாருக்கு மகிழ்ச்சி? இரண்டு வயதுக்குமேல் ஆன குழந்தைகளிடம் காண்பதையெல்லாம் அவர்களுக்குப் புரியும் விதத்தில் விளக்குங்கள். தனிமையாக உணரும்போது, ஒரு தோழமைக்காக கைத்தொலைபேசியை நாடும் பழக்கம் வருகிறது. பெரியவர்கள் சாப்பிடும்போது, தெருவில் நடக்கும்போது அல்லது வாகனத்தை ஓட்டிப் போகும்போது, இரவில் படுத்திருக்கும்போது என்று, எப்போதுமே கண்கள் அதில் பதிந்திருந்தால், குழந்தைகளும் அப்படித்தானே செய்வார்கள்? பெற்றோருடன் நல்லபடியான உறவு இருக்கும் குழந்தைகள் கைத்தொலைபேசியை எப்போதும் உபயோகிக்க விரும்புவதில்லை. விளையாட்டில்தான் ஆர்வம் காட்டுவார்கள். தொந்தரவு அம்மா வேலை செய்யும்போது, இரண்டு வயதுக் குழந்தை குறுக்கே வருகிறது என்று தொலைபேசியைக் கொடுத்துப் பழக்கினால், திண்டாட்டத்தில்தான் கொண்டுவிடும். ஒரு வெங்காயத்தைக் கொடுத்து, “உரிச்சுக் குடு,” என்று சொல்லிப் பாருங்கள். வைத்துக்கொண்டு முழிக்கும். “உரிக்க முடியல,” என்று திருப்பிக் கொடுக்கும். “பரவாயில்ல. நாளைக்கு உரிச்சுக்கலாம்!” மறுநாளும் இதே கதைதான். சப்பாத்தி மாவு பிசையும்போது, குழந்தைகளுக்கும் சிறு உருண்டையைக் கொடுத்து, ‘பாம்பு பண்ணு,’ என்பேன். நான்கு வயதான என் மகன் படுத்தும்போது, “தவளை பிடிச்சுண்டு வா!” என்று வாசலுக்கு அனுப்புவேன். பூச்செடிகளுக்குப் பின்னால் ஒரு தவளை ஒளிந்திருக்கும். செடிகளிலிருந்து பத்தடி தூரத்தில் குதித்துக்கொண்டு இருப்பான். சற்று பொறுத்து, “பிடிக்க முடில்ல,” என்பான், வருத்தத்துடன். “நாளைக்குப் பிடிச்சுக்கலாம்,” என்று ஆதரவுடன் உள்ளே அழைத்துப்போவேன். அதற்குள் அவனுடைய மூட் மாறியிருக்கும். எழுதப் பழக்குங்கள் நாம் செய்யும் காரியங்களில் அவர்களுக்கும் பங்கு அளியுங்கள். நான் எழுதும்போது, காகிதத்துடன் நான்கு வயதுக்குட்பட்ட என் குழந்தைகளும் உட்கார்ந்து, படம் வரைவார்கள். ஆறு வயதில், ஆங்கிலத்தில் வியாசம். தலைப்பைக் கொடுத்து, அவர்களுடன் விவாதிப்பேன். ‘பூ’ என்ற தலைப்பில் எழுதும்போது, CHRYSANTHAMUM (சாமந்தி) போன்ற கடினமான வார்த்தைகளை எழுதிக் காட்டுவேன். எப்படி எழுதியிருந்தாலும், ‘குட்!’ என்ற பாராட்டை எழுதிவிடுவேன். எட்டு மாதக் குழந்தையாக இருந்த பேரனை இடுப்பில் தூக்கி வைத்துக்கொண்டு சமைத்தேன். “எதுக்கும்மா இந்தக் குண்டை தூக்கி வெச்சுக்கறே?” – மகள். “சமைக்கச் சொல்லிக்குடுக்கறேன்!” எப்படித் தெரியுமா? ‘இப்போ எண்ணையிலே கடுகு போடப்போறேன். பட்டாஸ் வெடிக்கும். பின்னால ஓடிடலாமா?’ என்று சஸ்பென்ஸ் மாதிரி கூறுவேன். சிரிப்பான். வளர்ந்தபின்னர், சமைப்பதுதான் அவனுடைய பொழுதுபோக்கு. தகுந்த கவனிப்புடன் வளர்க்கப்பட்ட குழந்தைகள் பெற்றோர் குழந்தைகளுடன் கலந்து விளையாடுவார்கள். ஆனால், கணினியோ, தொலைபேசியோ வைத்தல்ல. சாப்பாட்டுக்கடை வைத்து விளையாடுவது குழந்தைகளுக்குப் பிடித்த விளையாட்டு. ஆறு வயதுச் சிறுவன் என்னிடம் வந்தான். “சாப்பிட என்ன வேணும்?” எனக்குப் புரிந்தது. ‘இப்போ என்ன சாப்பாடு?’ என்று சிடுசிடுக்காமல், ‘என்ன ஸ்வீட் இருக்கு?’ என்று கேட்டுவைத்தேன். அடுக்கடுக்காக பதில் வந்தது. ‘எல்லாத்திலேயும் ரெண்டு ப்ளேட்!’ நிஜ வாழ்வில் அப்படிச் சாப்பிட முடியுமா! அவன் உள்ளங்கையில் இரு விரல்களால் எழுதுவதுபோன்ற பாவனை. பெருமையுடன் உள்ளே போனான். “இந்த தட்டிலே அல்வா, இது ஸ்பூன்!” அவர்கள் மனக்கண்ணுக்கு மட்டுமே அவை தெரியும். கதை சொல்லுங்கள் சிலர் பாடி, அல்லது கதை சொல்லி, குழந்தைகளைத் தூங்க வைப்பார்கள். சாப்பிடும்போதும் கதை சொல்லலாம். புராணக்கதைகளோ, நாம் என்றோ படித்த சிறுவர் கதைகளோ, அல்லது அவர்கள் சிறு வயதில் செய்த விஷமங்களோ, எதுவானாலும் சரி. கதை கதைதானே! சந்தித்த மனிதர்கள், புதிய இடங்களில் நடந்த சம்பவங்கள் இவற்றையும் பகிரலாம். ‘அம்மாவுக்கு (பாட்டிக்கு) என்னைக் கண்டால் பிடிக்கும். அதனால்தான் என்னுடன் நேரம் செலவழிக்கிறார்கள்!’ என்று புரிய, தன்னம்பிக்கை வளரும். தம்மைப்பற்றியும் கூறுவார்கள். “பெற்றோர் நாங்கள் சொல்வதைக் காதுகொடுத்துக் கேட்கிறார்கள். அதனால், எங்களுக்குப் பிரச்னைகள் வரும்போது அவர்களிடம்தான் போவோம்,” என்கிறார்கள். சிறுகுழந்தைகளுடன் என்ன பேசுவது? பேச ஆரம்பிக்காத குழந்தைக்குக்கூட நாம் பேசுவது புரியும். ஆனால் ஒன்று: குழந்தைமாதிரிதான் நாம் பேசுவதும் இருக்கவேண்டும் – சற்று நீட்டிமுழக்கி. ரோடியோகிராமில் கர்னாடக சங்கீதம் ஒலிக்க, பத்து நாட்களே ஆன குழந்தையை அதனருகில் படுக்க வைத்தேன். இசையில் ஆர்வமும் தேர்ச்சியும் வந்தது. நன்றாகப் பேச்சு வர நாம் பேசினால்தான் சிறு குழந்தைகளின் அறிவு வளரும். “நீ ஏம்மா எப்போ பாத்தாலும் படிக்கிறே, இல்லே எழுதறே?” மூன்று வயதில் என் மகள் கேட்டாள். “எனக்குப் பிடிக்கும்,” என்றுவிட்டு, என்ன பண்ணணும்?" என்று அவளையே கேட்டேன். “என்கூடப் பேசேன்!” புத்தகங்களில் ஆர்வம் எட்டுமாதக் குழந்தையை மடியில் வைத்துக்கொண்டு, புத்தகங்களில் இருக்கும் படங்களைக் காட்டி, ஒவ்வொரு வார்த்தையாகச் சொன்னால், அதற்குப் படிக்கும் ஆர்வம் வரும். தினமும் ஒரே படத்தைக் காட்டலாம். சில குழந்தைகள் முகத்தைத் திருப்பிக்கொள்ளும். அவர்கள் குப்புறப் படுத்துக்கொண்டிருக்கும்போது, நாமும் அதேபோல் பக்கத்தில் படுத்து நிறைய படங்கள் போடப்பட்ட புத்தகங்களைக் காட்டினால் ஆர்வத்துடன் கற்பார்கள். அதாவது, அவர்கள் நிலைக்கு நாமும் போகவேண்டும். சில ஆண்குழந்தைகளுக்கு கதைப்புத்தகங்கள் படிக்கப் பிடிக்காது. ஆனால், கதை கேட்கப் பிடிக்கும். பிரபலமானவர்களின் சுயசரிதை, விஞ்ஞான சம்பந்தமானவை போன்றவைகளை வாசகசாலைகளிலிருந்து வாங்கிப் படிக்க வழிசெய்யுங்கள். பொறியியலாளராக ஆவார்கள். தம் வயதை ஒத்த நண்பர்கள் அவரவர் வயதினருடன் கலந்து பேசினால், எல்லா வயதினருக்கும் மனதுக்கு இதமாக, உல்லாசமாக இருக்கும். குழந்தைகள் யாருடன் பழகுகிறார்கள் என்பதைக் கண்காணிக்க வேண்டும். நண்பர்களும் அவர்களுக்கு நல்ல துணையாக, ஊக்குவிப்பவர்களாக இருக்கவேண்டும். வேலை காரணமாக, பெரியவர்கள் ஓயாது கைத்தொலைபேசியை உபயோகிக்க நேரலாம். “அப்பா மட்டும் பேசலாமா?” என்று கேட்பார்கள். “எனக்கு ஐந்து வயதில்லையே! அத்துடன், நான் விளையாடவில்லை. பிறருடன் வேலை சம்பந்தமாகத் தொடர்பு கொள்கிறேன். இல்லாவிட்டால், காசு எப்படிக் கிடைக்கும்?” என்று விளக்கினால் புரிந்துகொள்வார்கள். குழந்தைகளைத் ‘தொந்தரவு’ என்று நினைக்காமல், சற்றுப் பெரியவர்களானதும் அவர்கள் எப்படி இருக்கவேண்டும் என்று யோசித்து நடத்தினால், நமக்கும் நன்மை, அவர்களும் பிறர் மெச்ச வளர்வார்கள். (வல்லமை.காமில் இதனை ஒட்டிய வீடியோ வந்துள்ளது) நிர்மலா ராகவன் [] இந்தியாவில் பிறந்து வளர்ந்த இருமொழி எழுத்தாளர்.  ஓய்வு பெற்ற பௌதிக ஆசிரியை. 1967 தொடக்கம் மலேசியாவில் தமிழ் இலக்கியத்துறையில் ஈடுபட்டுவருகின்றார். சிறுகதை, கட்டுரை, தொடர்கதை, வானொலி நாடகம், கலை விமர்சனங்கள் போன்றவற்றை எழுதி வருகின்றார். இவரின் ஆக்கங்கள் மலேசியாவின் பிரபல ஆங்கில மற்றும் தமிழ் இதழ்களிலும் இடம்பெற்றுள்ளன. இவர் ஆங்கிலத்தில் எழுதிய பெண்ணியக் கட்டுரைகள் ஸ்வீடனிலும் மலேசியாவிலும் முனைவர் பட்ட ஆராய்ச்சிக்குக் கையாளப்பட்டிருக்கின்றன. பல மேடைகளிலும் கருத்தரங்கங்களிலும் பேசியுள்ளார். இந்தியர்களிடையே காணும் சமுதாயப் பிரச்சினைகளை அலசி, தமது எழுத்துக்களில் அவற்றின் தீர்வுக்கான ஆலோசனைகள் வழங்கி வருகிறார். இளைஞர் மனோநிலைகள் பற்றி அதிகம் எழுதியுள்ளார். நேரடிச் சமூகச் சேவையிலும் ஈடுபட்டிருக்கிறார். வெளியிட்ட சிறுகதைத்தொகுப்பு: ஏணி. (தமிழ்நாட்டுக் கல்லூரி ஒன்றில் இளங்கலை பட்டப்படிப்புக்கு தேர்வு செய்யப்பட்டது). நூற்றுக்கும் மேற்பட்ட பாடல்களை கர்னாடக இசைப்பாணியில் எழுதி, பாடிப் பதிவு செய்துள்ளார். நிர்மலா ராகவன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள்: https://www.youtube.com/channel/UCx_QN5oaxMHPCs_I9B20n7A பரிசில்களும், விருதுகளும் - “சிறுகதைச் செம்மல்” விருது (1991) - “சிறந்த பெண் எழுத்தாளர்” விருது (1993) - சிறந்த சிறுகதை எழுத்தாளருக்கான விருது (தங்கப் பதக்கம், மலேசிய தமிழ் எழுத்தாளர் சங்கம், 2006) - ஆஸ்ட்ரோ, மலேசிய தமிழ் எழுத்தாளர் சங்கம் நடத்திய நாவல் போட்டிகளில் மூன்று முறை பரிசு பெற்றிருக்கிறார். - மின்னூல்கள்: தமிழ் – 30, ஆங்கிலம் – 7 (Amazon Kindle, Amazon paperback) FREETAMILEBOOKS.COM மின்புத்தகங்களைப் படிக்க உதவும் கருவிகள்: மின்புத்தகங்களைப் படிப்பதற்கென்றே கையிலேயே வைத்துக் கொள்ளக்கூடிய பல கருவிகள் தற்போது சந்தையில் வந்துவிட்டன. Kindle, Nook, Android Tablets போன்றவை இவற்றில் பெரும்பங்கு வகிக்கின்றன. இத்தகைய கருவிகளின் மதிப்பு தற்போது 4000 முதல் 6000 ரூபாய் வரை குறைந்துள்ளன. எனவே பெரும்பான்மையான மக்கள் தற்போது இதனை வாங்கி வருகின்றனர். ஆங்கிலத்திலுள்ள மின்புத்தகங்கள்: ஆங்கிலத்தில் லட்சக்கணக்கான மின்புத்தகங்கள் தற்போது கிடைக்கப் பெறுகின்றன. அவை PDF, EPUB, MOBI, AZW3. போன்ற வடிவங்களில் இருப்பதால், அவற்றை மேற்கூறிய கருவிகளைக் கொண்டு நாம் படித்துவிடலாம். தமிழிலுள்ள மின்புத்தகங்கள்: தமிழில் சமீபத்திய புத்தகங்களெல்லாம் நமக்கு மின்புத்தகங்களாக கிடைக்கப்பெறுவதில்லை. ProjectMadurai.com எனும் குழு தமிழில் மின்புத்தகங்களை வெளியிடுவதற்கான ஒர் உன்னத சேவையில் ஈடுபட்டுள்ளது. இந்தக் குழு இதுவரை வழங்கியுள்ள தமிழ் மின்புத்தகங்கள் அனைத்தும் PublicDomain-ல் உள்ளன. ஆனால் இவை மிகவும் பழைய புத்தகங்கள். சமீபத்திய புத்தகங்கள் ஏதும் இங்கு கிடைக்கப்பெறுவதில்லை. சமீபத்திய புத்தகங்களை தமிழில் பெறுவது எப்படி? அமேசான் கிண்டில் கருவியில் தமிழ் ஆதரவு தந்த பிறகு, தமிழ் மின்னூல்கள் அங்கே விற்பனைக்குக் கிடைக்கின்றன. ஆனால் அவற்றை நாம் பதிவிறக்க இயலாது. வேறு யாருக்கும் பகிர இயலாது. சமீபகாலமாக பல்வேறு எழுத்தாளர்களும், பதிவர்களும், சமீபத்திய நிகழ்வுகளைப் பற்றிய விவரங்களைத் தமிழில் எழுதத் தொடங்கியுள்ளனர். அவை இலக்கியம், விளையாட்டு, கலாச்சாரம், உணவு, சினிமா, அரசியல், புகைப்படக்கலை, வணிகம் மற்றும் தகவல் தொழில்நுட்பம் போன்ற பல்வேறு தலைப்புகளின் கீழ் அமைகின்றன. நாம் அவற்றையெல்லாம் ஒன்றாகச் சேர்த்து தமிழ் மின்புத்தகங்களை உருவாக்க உள்ளோம். அவ்வாறு உருவாக்கப்பட்ட மின்புத்தகங்கள் Creative Commons எனும் உரிமத்தின் கீழ் வெளியிடப்படும். இவ்வாறு வெளியிடுவதன் மூலம் அந்தப் புத்தகத்தை எழுதிய மூல ஆசிரியருக்கான உரிமைகள் சட்டரீதியாகப் பாதுகாக்கப்படுகின்றன. அதே நேரத்தில் அந்த மின்புத்தகங்களை யார் வேண்டுமானாலும், யாருக்கு வேண்டுமானாலும், இலவசமாக வழங்கலாம். எனவே தமிழ் படிக்கும் வாசகர்கள் ஆயிரக்கணக்கில் சமீபத்திய தமிழ் மின்புத்தகங்களை இலவசமாகவே பெற்றுக் கொள்ள முடியும். தமிழிலிருக்கும் எந்த வலைப்பதிவிலிருந்து வேண்டுமானாலும் பதிவுகளை எடுக்கலாமா? கூடாது. ஒவ்வொரு வலைப்பதிவும் அதற்கென்றே ஒருசில அனுமதிகளைப் பெற்றிருக்கும். ஒரு வலைப்பதிவின் ஆசிரியர் அவரது பதிப்புகளை “யார் வேண்டுமானாலும் பயன்படுத்தலாம்” என்று குறிப்பிட்டிருந்தால் மட்டுமே அதனை நாம் பயன்படுத்த முடியும். அதாவது “Creative Commons” எனும் உரிமத்தின் கீழ் வரும் பதிப்புகளை மட்டுமே நாம் பயன்படுத்த முடியும். அப்படி இல்லாமல் “All Rights Reserved” எனும் உரிமத்தின் கீழ் இருக்கும் பதிப்புகளை நம்மால் பயன்படுத்த முடியாது. வேண்டுமானால் “All Rights Reserved” என்று விளங்கும் வலைப்பதிவுகளைக் கொண்டிருக்கும் ஆசிரியருக்கு அவரது பதிப்புகளை “Creative Commons” உரிமத்தின் கீழ் வெளியிடக்கோரி நாம் நமது வேண்டுகோளைத் தெரிவிக்கலாம். மேலும் அவரது படைப்புகள் அனைத்தும் அவருடைய பெயரின் கீழே தான் வெளியிடப்படும் எனும் உறுதியையும் நாம் அளிக்க வேண்டும். பொதுவாக புதுப்புது பதிவுகளை  உருவாக்குவோருக்கு அவர்களது பதிவுகள்  நிறைய வாசகர்களைச் சென்றடைய வேண்டும் என்ற எண்ணம் இருக்கும். நாம் அவர்களது படைப்புகளை எடுத்து இலவச மின்புத்தகங்களாக வழங்குவதற்கு  நமக்கு அவர்கள் அனுமதியளித்தால், உண்மையாகவே அவர்களது படைப்புகள் பெரும்பான்மையான மக்களைச் சென்றடையும். வாசகர்களுக்கும் நிறைய புத்தகங்கள் படிப்பதற்குக் கிடைக்கும் வாசகர்கள் ஆசிரியர்களின் வலைப்பதிவு முகவரிகளில் கூட அவர்களுடைய படைப்புகளை தேடிக் கண்டுபிடித்து படிக்கலாம். ஆனால் நாங்கள் வாசகர்களின் சிரமத்தைக் குறைக்கும் வண்ணம் ஆசிரியர்களின் சிதறிய வலைப்பதிவுகளை ஒன்றாக இணைத்து ஒரு முழு மின்புத்தகங்களாக உருவாக்கும் வேலையைச் செய்கிறோம். மேலும் அவ்வாறு உருவாக்கப்பட்ட புத்தகங்களை “மின்புத்தகங்களைப் படிக்க உதவும் கருவிகள்”-க்கு ஏற்ற வண்ணம் வடிவமைக்கும் வேலையையும் செய்கிறோம். FREETAMILEBOOKS.COM இந்த வலைத்தளத்தில்தான் பின்வரும் வடிவமைப்பில் மின்புத்தகங்கள் காணப்படும். PDF for desktop, PDF for 6” devices, EPUB, AZW3, ODT இந்த வலைதளத்திலிருந்து யார் வேண்டுமானாலும் மின்புத்தகங்களை இலவசமாகப் பதிவிறக்கம்(download) செய்து கொள்ளலாம். அவ்வாறு பதிவிறக்கம்(download) செய்யப்பட்ட புத்தகங்களை யாருக்கு வேண்டுமானாலும் இலவசமாக வழங்கலாம். இதில் நீங்கள் பங்களிக்க விரும்புகிறீர்களா?  நீங்கள் செய்யவேண்டியதெல்லாம் தமிழில் எழுதப்பட்டிருக்கும் வலைப்பதிவுகளிலிருந்து பதிவுகளை எடுத்து, அவற்றை LibreOffice/MS Office போன்ற wordprocessor-ல் போட்டு ஓர் எளிய மின்புத்தகமாக மாற்றி எங்களுக்கு அனுப்பவும். அவ்வளவுதான்! மேலும் சில பங்களிப்புகள் பின்வருமாறு: 1. ஒருசில பதிவர்கள்/எழுத்தாளர்களுக்கு அவர்களது படைப்புகளை “Creative Commons” உரிமத்தின்கீழ் வெளியிடக்கோரி மின்னஞ்சல் அனுப்புதல் 2. தன்னார்வலர்களால் அனுப்பப்பட்ட மின்புத்தகங்களின் உரிமைகளையும் தரத்தையும் பரிசோதித்தல் 3. சோதனைகள் முடிந்து அனுமதி வழங்கப்பட்ட தரமான மின்புத்தகங்களை நமது வலைதளத்தில் பதிவேற்றம் செய்தல் விருப்பமுள்ளவர்கள் freetamilebooksteam@gmail.com எனும் முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பவும்.  இந்தத் திட்டத்தின் மூலம் பணம் சம்பாதிப்பவர்கள் யார்? யாருமில்லை. இந்த வலைத்தளம் முழுக்க முழுக்க தன்னார்வலர்களால் செயல்படுகின்ற ஒரு வலைத்தளம் ஆகும். இதன் ஒரே நோக்கம் என்னவெனில் தமிழில் நிறைய மின்புத்தகங்களை உருவாக்குவதும், அவற்றை இலவசமாக பயனர்களுக்கு வழங்குவதுமே ஆகும். மேலும் இவ்வாறு உருவாக்கப்பட்ட மின்புத்தகங்கள், ebook reader ஏற்றுக்கொள்ளும் வடிவமைப்பில் அமையும். இத்திட்டத்தால் பதிப்புகளை எழுதிக்கொடுக்கும் ஆசிரியர்/பதிவருக்கு என்ன லாபம்? ஆசிரியர்/பதிவர்கள் இத்திட்டத்தின் மூலம் எந்தவிதமான தொகையும் பெறப்போவதில்லை. ஏனெனில், அவர்கள் புதிதாக இதற்கென்று எந்தஒரு பதிவையும்  எழுதித்தரப்போவதில்லை. ஏற்கனவே அவர்கள் எழுதி வெளியிட்டிருக்கும் பதிவுகளை எடுத்துத்தான் நாம் மின்புத்தகமாக வெளியிடப்போகிறோம். அதாவது அவரவர்களின் வலைதளத்தில் இந்தப் பதிவுகள் அனைத்தும் இலவசமாகவே கிடைக்கப்பெற்றாலும், அவற்றையெல்லாம் ஒன்றாகத் தொகுத்து ebook reader போன்ற கருவிகளில் படிக்கும் விதத்தில் மாற்றித் தரும் வேலையை இந்தத் திட்டம் செய்கிறது. தற்போது மக்கள் பெரிய அளவில் tablets மற்றும் ebook readers போன்ற கருவிகளை நாடிச் செல்வதால் அவர்களை நெருங்குவதற்கு இது ஒரு நல்ல வாய்ப்பாக அமையும். நகல் எடுப்பதை அனுமதிக்கும் வலைதளங்கள் ஏதேனும் தமிழில் உள்ளதா? உள்ளது. பின்வரும் தமிழில் உள்ள வலைதளங்கள் நகல் எடுப்பதினை அனுமதிக்கின்றன. 1. http://www.vinavu.com 2. http://www.badriseshadri.in  3. http://maattru.com  4. http://www.kaniyam.com  5. http://blog.ravidreams.net  எவ்வாறு ஒர் எழுத்தாளரிடம் CREATIVE COMMONS உரிமத்தின் கீழ் அவரது படைப்புகளை வெளியிடுமாறு கூறுவது? இதற்கு பின்வருமாறு ஒரு மின்னஞ்சலை அனுப்ப வேண்டும். துவக்கம் உங்களது வலைத்தளம் அருமை (வலைதளத்தின் பெயர்). தற்போது படிப்பதற்கு உபயோகப்படும் கருவிகளாக Mobiles மற்றும் பல்வேறு கையிருப்புக் கருவிகளின் எண்ணிக்கை அதிகரித்து வந்துள்ளது. இந்நிலையில் நாங்கள் http://www.FreeTamilEbooks.com எனும் வலைதளத்தில், பல்வேறு தமிழ் மின்புத்தகங்களை வெவ்வேறு துறைகளின் கீழ் சேகரிப்பதற்கான ஒரு புதிய திட்டத்தில் ஈடுபட்டுள்ளோம்.  இங்கு சேகரிக்கப்படும் மின்புத்தகங்கள் பல்வேறு கணிணிக் கருவிகளான Desktop,ebook readers like kindl, nook, mobiles, tablets with android, iOS போன்றவற்றில் படிக்கும் வண்ணம் அமையும். அதாவது இத்தகைய கருவிகள் support செய்யும் odt, pdf, ebub, azw போன்ற வடிவமைப்பில் புத்தகங்கள் அமையும். இதற்காக நாங்கள் உங்களது வலைதளத்திலிருந்து பதிவுகளை பெற விரும்புகிறோம். இதன் மூலம் உங்களது பதிவுகள் உலகளவில் இருக்கும் வாசகர்களின் கருவிகளை நேரடியாகச் சென்றடையும். எனவே உங்களது வலைதளத்திலிருந்து பதிவுகளை  பிரதியெடுப்பதற்கும் அவற்றை மின்புத்தகங்களாக மாற்றுவதற்கும் உங்களது அனுமதியை வேண்டுகிறோம். இவ்வாறு உருவாக்கப்பட்ட மின்புத்தகங்களில் கண்டிப்பாக ஆசிரியராக உங்களின் பெயரும் மற்றும் உங்களது வலைதள முகவரியும் இடம்பெறும். மேலும் இவை “Creative Commons” உரிமத்தின் கீழ் மட்டும்தான் வெளியிடப்படும் எனும் உறுதியையும் அளிக்கிறோம். http://creativecommons.org/licenses/  நீங்கள் எங்களை பின்வரும் முகவரிகளில் தொடர்பு கொள்ளலாம். e-mail : FREETAMILEBOOKSTEAM@GMAIL.COM  FB : https://www.facebook.com/FreeTamilEbooks  G plus: https://plus.google.com/communities/108817760492177970948    நன்றி. முடிவு மேற்கூறியவாறு ஒரு மின்னஞ்சலை உங்களுக்குத் தெரிந்த அனைத்து எழுத்தாளர்களுக்கும் அனுப்பி அவர்களிடமிருந்து அனுமதியைப் பெறுங்கள். முடிந்தால் அவர்களையும் “Creative Commons License”-ஐ அவர்களுடைய வலைதளத்தில் பயன்படுத்தச் சொல்லுங்கள். கடைசியாக அவர்கள் உங்களுக்கு அனுமதி அளித்து அனுப்பியிருக்கும் மின்னஞ்சலைFREETAMILEBOOKSTEAM@GMAIL.COM எனும் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.  ஓர் எழுத்தாளர் உங்களது உங்களது வேண்டுகோளை மறுக்கும் பட்சத்தில் என்ன செய்வது? அவர்களையும் அவர்களது படைப்புகளையும் அப்படியே விட்டுவிட வேண்டும். ஒருசிலருக்கு அவர்களுடைய சொந்த முயற்சியில் மின்புத்தகம் தயாரிக்கும் எண்ணம்கூட இருக்கும். ஆகவே அவர்களை நாம் மீண்டும் மீண்டும் தொந்தரவு செய்யக் கூடாது. அவர்களை அப்படியே விட்டுவிட்டு அடுத்தடுத்த எழுத்தாளர்களை நோக்கி நமது முயற்சியைத் தொடர வேண்டும்.   மின்புத்தகங்கள் எவ்வாறு அமைய வேண்டும்? ஒவ்வொருவரது வலைத்தளத்திலும் குறைந்தபட்சம் நூற்றுக்கணக்கில் பதிவுகள் காணப்படும். அவை வகைப்படுத்தப்பட்டோ அல்லது வகைப்படுத்தப் படாமலோ இருக்கும்.  நாம் அவற்றையெல்லாம் ஒன்றாகத் திரட்டி ஒரு பொதுவான தலைப்பின்கீழ் வகைப்படுத்தி மின்புத்தகங்களாகத் தயாரிக்கலாம். அவ்வாறு வகைப்படுத்தப்படும் மின்புத்தகங்களை பகுதி-I பகுதி-II என்றும் கூட தனித்தனியே பிரித்துக் கொடுக்கலாம்.  தவிர்க்க வேண்டியவைகள் யாவை? இனம், பாலியல் மற்றும் வன்முறை போன்றவற்றைத் தூண்டும் வகையான பதிவுகள் தவிர்க்கப்பட வேண்டும்.  எங்களைத் தொடர்பு கொள்வது எப்படி? நீங்கள் பின்வரும் முகவரிகளில் எங்களைத் தொடர்பு கொள்ளலாம்.  - EMAIL : FREETAMILEBOOKSTEAM@GMAIL.COM   - Facebook: https://www.facebook.com/FreeTamilEbooks   - Google Plus: https://plus.google.com/communities/108817760492177970948   இத்திட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் யார்? குழு – http://freetamilebooks.com/meet-the-team/    SUPPORTED BY கணியம் அறக்கட்டளை http://kaniyam.com/foundation     கணியம் அறக்கட்டளை []   தொலை நோக்கு – Vision தமிழ் மொழி மற்றும் இனக்குழுக்கள் சார்ந்த மெய்நிகர்வளங்கள், கருவிகள் மற்றும் அறிவுத்தொகுதிகள், அனைவருக்கும்  கட்டற்ற அணுக்கத்தில் கிடைக்கும் சூழல் பணி இலக்கு  – Mission அறிவியல் மற்றும் சமூகப் பொருளாதார வளர்ச்சிக்கு ஒப்ப, தமிழ் மொழியின் பயன்பாடு வளர்வதை உறுதிப்படுத்துவதும், அனைத்து அறிவுத் தொகுதிகளும், வளங்களும் கட்டற்ற அணுக்கத்தில் அனைவருக்கும் கிடைக்கச்செய்தலும்.   தற்போதைய செயல்கள் - கணியம் மின்னிதழ் – http://kaniyam.com - கிரியேட்டிவ் காமன்சு உரிமையில் இலவச தமிழ் மின்னூல்கள் – http://FreeTamilEbooks.com   கட்டற்ற மென்பொருட்கள் - உரை ஒலி மாற்றி –  Text to Speech - எழுத்துணரி – Optical Character Recognition - விக்கிமூலத்துக்கான எழுத்துணரி - மின்னூல்கள் கிண்டில் கருவிக்கு அனுப்புதல் – Send2Kindle - விக்கிப்பீடியாவிற்கான சிறு கருவிகள் - மின்னூல்கள் உருவாக்கும் கருவி - உரை ஒலி மாற்றி – இணைய செயலி - சங்க இலக்கியம் – ஆன்டிராய்டு செயலி - FreeTamilEbooks – ஆன்டிராய்டு செயலி - FreeTamilEbooks – ஐஒஎஸ் செயலி - WikisourceEbooksReportஇந்திய மொழிகளுக்ககான விக்கிமூலம் மின்னூல்கள் பதிவிறக்கப் பட்டியல் - FreeTamilEbooks.com – Download counter மின்னூல்கள் பதிவிறக்கப் பட்டியல்   அடுத்த திட்டங்கள்/மென்பொருட்கள்   - விக்கி மூலத்தில் உள்ள மின்னூல்களை பகுதிநேர/முழு நேரப் பணியாளர்கள் மூலம் விரைந்து பிழை திருத்துதல் - முழு நேர நிரலரை பணியமர்த்தி பல்வேறு கட்டற்ற மென்பொருட்கள் உருவாக்குதல் - தமிழ் NLP க்கான பயிற்சிப் பட்டறைகள் நடத்துதல் - கணியம் வாசகர் வட்டம் உருவாக்குதல் - கட்டற்ற மென்பொருட்கள், கிரியேட்டிவ் காமன்சு உரிமையில் வளங்களை உருவாக்குபவர்களைக் கண்டறிந்து ஊக்குவித்தல் - கணியம் இதழில் அதிக பங்களிப்பாளர்களை உருவாக்குதல், பயிற்சி அளித்தல் - மின்னூலாக்கத்துக்கு ஒரு இணையதள செயலி - எழுத்துணரிக்கு ஒரு இணையதள செயலி - தமிழ் ஒலியோடைகள் உருவாக்கி வெளியிடுதல் - http://OpenStreetMap.org ல் உள்ள இடம், தெரு, ஊர் பெயர்களை தமிழாக்கம் செய்தல் - தமிழ்நாடு முழுவதையும் http://OpenStreetMap.org ல் வரைதல் - குழந்தைக் கதைகளை ஒலி வடிவில் வழங்குதல் - http://Ta.wiktionary.org ஐ ஒழுங்குபடுத்தி API க்கு தோதாக மாற்றுதல் - http://Ta.wiktionary.org க்காக ஒலிப்பதிவு செய்யும் செயலி உருவாக்குதல் - தமிழ் எழுத்துப் பிழைத்திருத்தி உருவாக்குதல் - தமிழ் வேர்ச்சொல் காணும் கருவி உருவாக்குதல் - எல்லா http://FreeTamilEbooks.com மின்னூல்களையும் Google Play Books, GoodReads.com ல் ஏற்றுதல் - தமிழ் தட்டச்சு கற்க இணைய செயலி உருவாக்குதல் - தமிழ் எழுதவும் படிக்கவும் கற்ற இணைய செயலி உருவாக்குதல் ( aamozish.com/Course_preface போல)   மேற்கண்ட திட்டங்கள், மென்பொருட்களை உருவாக்கி செயல்படுத்த உங்கள் அனைவரின் ஆதரவும் தேவை. உங்களால் எவ்வாறேனும் பங்களிக்க இயலும் எனில் உங்கள் விவரங்களை  kaniyamfoundation@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்.   வெளிப்படைத்தன்மை கணியம் அறக்கட்டளையின் செயல்கள், திட்டங்கள், மென்பொருட்கள் யாவும் அனைவருக்கும் பொதுவானதாகவும், 100% வெளிப்படைத்தன்மையுடனும் இருக்கும்.இந்த இணைப்பில் செயல்களையும், இந்த இணைப்பில் மாத அறிக்கை, வரவு செலவு விவரங்களுடனும் காணலாம். கணியம் அறக்கட்டளையில் உருவாக்கப்படும் மென்பொருட்கள் யாவும் கட்டற்ற மென்பொருட்களாக மூல நிரலுடன், GNU GPL, Apache, BSD, MIT, Mozilla ஆகிய உரிமைகளில் ஒன்றாக வெளியிடப்படும். உருவாக்கப்படும் பிற வளங்கள், புகைப்படங்கள், ஒலிக்கோப்புகள், காணொளிகள், மின்னூல்கள், கட்டுரைகள் யாவும் யாவரும் பகிரும், பயன்படுத்தும் வகையில் கிரியேட்டிவ் காமன்சு உரிமையில் இருக்கும். நன்கொடை உங்கள் நன்கொடைகள் தமிழுக்கான கட்டற்ற வளங்களை உருவாக்கும் செயல்களை சிறந்த வகையில் விரைந்து செய்ய ஊக்குவிக்கும். பின்வரும் வங்கிக் கணக்கில் உங்கள் நன்கொடைகளை அனுப்பி, உடனே விவரங்களை kaniyamfoundation@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்.  Kaniyam Foundation Account Number : 606 1010 100 502 79 Union Bank Of India West Tambaram, Chennai IFSC – UBIN0560618 Account Type : Current Account   UPI செயலிகளுக்கான QR Code []   குறிப்பு: சில UPI செயலிகளில் இந்த QR Code வேலை செய்யாமல் போகலாம். அச்சமயம் மேலே உள்ள வங்கிக் கணக்கு எண், IFSC code ஐ பயன்படுத்தவும். Note: Sometimes UPI does not work properly, in that case kindly use Account number and IFSC code for internet banking.