[]     என்னை எனக்குப் பிடிக்கும் கட்டுரைகள் நிர்மலா ராகவன் nirurag@gmail.com        அட்டைப்படம் : லெனின் குருசாமி - guruleninn@gmail.com    மின்னூலாக்கம் :சீ.ராஜேஸ்வரி - sraji.me@gmail.com    வெளியீடு : FreeTamilEbooks.com    உரிமை : Creative Commons Attribution -NonCommercial-ShareAlike    உரிமை – கிரியேட்டிவ் காமன்ஸ். எல்லாரும் படிக்கலாம், பகிரலாம். விற்பனை கூடாது    இக்கட்டுரைகளைத் தொடராக வெளியிட்ட வல்லமை.காம் குழுவினருக்கு நன்றி.         பொருளடக்கம் 1. பெண் என்றால் தியாகியா? 4  2. மாமியார் இருக்கிறார்களா, வேண்டாம் இந்த சம்பந்தம்! 7  3. நஞ்சு கலவாத நட்பு 10  4. பாட்டியின் முடிதான் வெள்ளி, மனமோ தங்கம் 14  5. பாராட்டா, வசவா? 17  6. குழந்தைகளைக் கையாள்வது எப்படி? 20  7. இன்று இப்படி. அன்றோ! 23  8. மாணவர்களை வழிநடத்துவது 26  9. ( வேண்டாத ) விருந்தினராகப் போவது 30  10. சிடுசிடுப்பான கடைக்காரர்கள் 33  11. குழந்தைகளுடன் பழகுவது 36  12. குடும்பச் சுற்றுலா 40  13. குடும்பத்தினருடன் நெருக்கமா! 43  14. பெண்ணுக்கு மரியாதை 46  15. சுயமரியாதையுடைய பெண்கள் 49  16. பேரவா இருந்தால் சாதிக்கலாம் 52  17. எனக்கு என்னைப் பிடிக்கும் 55  18. தாயும் மகளும் 58  19. எனக்கு எல்லாம் தெரியுமே! 61  20 . நீடிக்கும் உறவுகள் 64          1. பெண் என்றால் தியாகியா?   ஆண் என்பவன் அடக்கி ஆள்பவன். பெண் அவனுக்கு அடங்குபவள். பல்லாண்டுகளாக கடைப்பிடிக்கப்பட்ட நியதி. இது இக்காலத்திற்கும் பொருந்துமா என்ற யோசனை எழுகிறது. `காலம் மாறினால் என்ன, நாங்கள் மாற மாட்டோம்!’ என்று விடாப்பிடியாகப் பிடித்துக் கொண்டிருக்கின்றனர் ஆண்கள். ஏனெனில் அடக்குவது அவர்களுக்குத்தானே சாதகமாக அமைந்திருக்கிறது! எப்படியெல்லாம் அடக்குகிறார்கள்? தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் ஒரு பெண்மணி கூறினாள்: ”நான் திரைப்படங்கள் பார்ப்பதில்லை. என் கணவருக்குப் பிடிக்காது”.  “விதவிதமான ஜாக்கெட் அணிவீர்களா?” “கிடையாது. அவருக்குப் பிடிக்காது”. “நான் திருமணத்திற்குப்பிறகு படிப்பைத் தொடரலாம், வேலை பார்க்கலாம் என்றார். ஆனால் விடவில்லை”. இப்படியாக, கணவருடைய விருப்பங்களுக்கு மட்டுமே மதிப்புக் கொடுத்து நடக்கும் பெண்ணுக்கு வெளிப்படையாக எதிர்ப்பது அழகாகுமோ என்ற குழப்பம். குடும்பத் தகறாறுகளைப் பிறரிடம் பகிர்ந்துகொள்ளவும் தயக்கம். நாளடைவில், தன் சுயவிருப்பங்களை மறைத்து, மறந்ததுபோல் நடந்துகொள்ள முற்படுகிறாள். கணவருக்காகவும் குழந்தைகளுக்காகவும் நாள் முழுவதும் செலவிடுவதுதான் தான் பெண்ணாகப் பிறந்ததன் பயன் என்பதுபோல் நடக்கிறாள்.   அவளை எவர் பாராட்டுகிறார்களோ, என்னவோ, அவளுக்கு மகிழ்ச்சி கிடைப்பதில்லை. ஒருவித அயர்ச்சிதான். `நான் என் வாழ்க்கையைப் பிறருக்காகத் தியாகம் செய்துவிட்டேன்!’ என்று சொன்னால் கேட்பதற்கு நன்றாக இருக்கலாம். அந்தத் `தியாகி’யின் மனப்போராட்டம் எவருக்குப் புரியும்? சில ஆண்கள் நான்குபேருக்கு முன்னிலையில் மனைவியை அவமரியாதையாகப் பேசித் திட்டினால், தமது கௌரவம் உயர்ந்துவிட்டதென நம்புகிறார்கள். பிறரைத் தாழ்த்தினால், நாம் உயர்ந்துவிடுவோமா? மனைவி எதிர்ப்பு காட்டாமல், `அவர் குணம் அப்படி!’ என்று விட்டுக்கொடுக்கிறாள். இதனால் துணிச்சல் பெருக, பிற பெண்களிடமும் அப்படியே நடந்துகொள்ள முற்படுகிறார்கள் சிலர். பல குடும்பத்துடன் ஒன்றாக வெளியே செல்லும்போது, தன் அனுமதி பெற்றுத்தான் ஒவ்வொரு பெண்ணும் செயல்பட வேண்டும் என்று எண்ணுகிறார்கள் இப்படிப்பட்டவர்கள். அனேகமாக, எல்லாப் பெண்களும் அடங்கிப்போய்விடுவார்கள். அபூர்வமாக ஒரு பெண் எதிர்த்தால், முதலில் கோபமும், பிறகு அச்சமும் எழும். இத்தகைய ஆண்களுக்குத் தாம் செய்யும் தவறு என்னவென்று புரிவதில்லை. மிருக இனங்களிடமிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டியது எவ்வளவோ இருக்கிறது. கதை ஓர் அறுவைச்சிகிச்சை முடிந்து நான் வீடு திரும்பியபோது, எங்கள் வீட்டுப் பூனைக்குட்டி நான் அமர்ந்திருந்த நாற்காலியின்மேல் பத்திரமாக ஏறி, ஊசி குத்தியதால் மிகவும் வலித்த பாகத்திற்குச் சற்று கீழே அருமையாக நக்கிக்கொடுத்தது. (அதற்கு எப்படித் தெரியும், எங்கு ஊசி குத்தப்பட்டதென?) குட்டியாக இருக்கையில் என் மடியிலேயேதான் உட்கார்ந்திருக்கும். இடி இடித்தால், பயந்து ஓடிவந்து, என் மடியில் புகல் தேடும். நான் பாடும்போது, பூனையின் முதுகில் தாளம் போட, அதன் வாலும் தாளத்திற்குச் சரியாக ஆடும்! நன்றாகத் தமிழ் புரியும். `விஷமம் பண்ணினா அடி!’ என்று நான் மிரட்டியதில் புத்தகங்களைக் கிழிப்பதில்லை. நான்தான் தினமும் இரு பூனைகளுக்கும் (இப்போது மூன்று) ஆகாரம் போடுவேன். அது எனக்குப் பெரிய விஷயமில்லை. ஆனால், அவைகளுக்கு முக்கியம். பரஸ்பர அன்பை வளர்க்கும் ஒரு செயல். அதைவிட முக்கியம் அன்பாகப் பேசி நடத்துவது. ஒரு சிறு காகிதத்தைச் சுருட்டி தரையில் போட்டால், மிகுந்த மகிழ்ச்சியுடன் `கால்பந்து’ விளையாடும். இப்போது, `பூனை’ என்ற இடத்தில் மனைவியை வைத்துப் பாருங்கள். அவளிடம் அருமையாக நடந்துகொள்ளாது, `நான் சம்பாதித்து உனக்குச் சாப்பாடு போடுகிறேன். அதனால் நீ எனக்குக் கீழ்ப்படிந்து நடக்க வேண்டும்,’ என்பதுபோல் நடத்தி, பிற ஆண்களிடம், `என் மனைவி நான் சொல்வதைத் தட்டமாட்டாள்!’ என்று பெருமை பேசுவார்கள் சிலர். பெண்ணுக்கென தனி மனமே இருக்காதா? அப்படியே இருந்தாலும், அதை அடக்கினால்தான் நல்லவளா? வாய்ப்பு கிடைக்கும்போது, மனைவி நெருக்கமான ஓரிருவரிடம் தன் ஏக்கங்களைக் கொட்டக்கூடும். அதனால் நிலைமை என்னவோ மாறப்போவதில்லை. குழந்தைகளுக்காகத் தியாகம் `எனக்குத்தான் ஆசைப்பட்டதெல்லாம் கிடைக்கவில்லை. என் குழந்தைகள் கஷ்டமே படக்கூடாது.’ நடக்கிற காரியமா? எவ்வளவுதான் கவனமாக வளர்க்கப்பட்டிருந்தாலும், மனிதனாகப் பிறந்த எவருமே கஷ்டமே இல்லாமல் வாழ்க்கை நடத்திவிட முடியாது. `என் குழந்தைகளின் முன்னேற்றத்துக்காக என் ஆசைகளை ஒடுக்கிக்கொண்டுவிட்டேன்!’ இந்த மனப்பான்மையால் ஒரு தாயின் மகிழ்ச்சி குன்றிவிடும். ஏதோ ஒரு வகையில், குழந்தைகளையும் பாதிக்கும். `நான் உனக்காக எவ்வளவு செய்கிறேன்!’ என்று சுட்டிக்காட்டியபடி இருந்தால், அதுவும் ஒருவகையான வதைதான் – உணர்ச்சிபூர்வமான வதை. பயந்த குழந்தை குற்ற உணர்ச்சியுடன், தாய் சொல்லைத் தட்டாது நடக்க முற்படுகிறான். இதனால் தாய், மகன் இருவருக்குமே சுதந்திரம் கிடைப்பதில்லை. அவள் எண்ணியதுபோல் அவன் சிறப்படையாது போய்விட வாய்ப்புண்டு. இருவருக்குமே ஏமாற்றம்தான். தியாகம் எதற்கு? எழுத்தாளர்களான பல பெண்கள் திருமணத்திற்குப் பிறகு எழுதுவதை நிறுத்திவிடுகிறார்கள். அவர்கள் கூறும் காரணம்: `குடும்பத்தைக் கவனிக்கவே நேரம் சரியாக இருக்கிறது! எழுதினால் என்ன கிடைக்கிறது!’ இது தம்மையே சமாதானப்படுத்திக்கொள்ளும் முயற்சி. நமக்குப் பிடித்த காரியங்களைச் செய்யவும் சிறிது நேரத்தை ஒதுக்கினால், முதலில் `சுயநலம்’ என்று நமக்கே தோன்றலாம். அல்லது, பிறர் அவ்வாறு பழி சுமத்தலாம். ஆனால், ஒருவர் தன் சொந்த விருப்பங்களுக்கு மதிப்பு கொடுக்காது நடப்பதால் சிரிப்பையே இழந்துவிடும் அபாயம் இருக்கிறது. அப்படியே சிரித்தாலும், அது பிறரிடம் குறைகண்டு, அதனால் ஏற்படும் அற்ப மகிழ்ச்சியால் இருக்கும். ஒப்பீடும் நிம்மதியும் நாம் ஒவ்வொருவரும் தனிப்பிறவி. வெவ்வேறு திறமைகளைக்கொண்டு பிறக்கிறோம். பிறருடன் நம்மை ஒப்பிட்டுக்கொள்ளும்போதுதான் வேண்டாத குழப்பங்கள் எழுகின்றன. பெரிய படிப்பு படித்தால்தான் மதிக்கத்தக்கவர் என்பதில்லை. பெரும்பாலும், `தான் அதிகம் படிக்கவில்லையே, பெரிய உத்தியோகத்தில் அமரவில்லையே!’ என்ற ஏக்கத்தை உள்ளடக்கி வைத்திருக்கும் ஆண்கள் வீட்டிலிருக்கும் பெண்களை அடக்கியாள்வார்கள். தங்கள் நிலையை உள்ளபடி ஏற்றால் வருத்தம் எழாது. இக்குணத்தைப் பெண்களிடமும் காணலாம். கணவர் கல்வித்தகுதியிலோ, செல்வச்செழிப்பிலோ தன்னைவிடத் தாழ்ந்த நிலையில் இருந்தால் அவரை ஆட்டிவைப்பார்கள். இருப்பினும், ஆண்கள் வீட்டில் கழிக்கும் நேரத்தைவிட அதிகமாக வெளியில் செலவிடுவதால் அதிக உளைச்சலுக்கு ஆளாகிறார்களோ, என்னவோ! நிலைமையை மாற்றமுடியாது என்று புரிந்தபின், அதை மாற்றும் வழி தெரியாது, `உத்தியோகமே கதி!’ என்று சிலர் காலத்தைக் கழிக்கிறார்கள். இதனால் நஷ்டம் பெண்ணுக்குத்தான். கணவர் தன்னைவிட்டு ஏன் விலகுகிறார் என்று புரியாது, மனஉளைச்சலுக்கு ஆளாவாள். கல்யாணமும் உல்லாசமும் `அவர் எப்போதும் சிரித்த முகத்துடன், ஜாலியாக இருக்கிறார்! காரணம் -- அவர் கல்யாணமே செய்துகொள்ளவில்லை!’ என் சக ஆசிரியர் ஒருவரைப்பற்றி நாங்கள் கணித்தது. முட்டாள்தனமாக மணவாழ்க்கையில் சிக்கி, பலரும் திண்டாடுகிறார்களே என்று பயந்து, எத்தனைபேர் `கல்யாணமே வேண்டாம்’ என்று வைராக்கியமாக இருக்கிறார்கள்! இல்லறத்தில் எப்போதும் ஒருவர் கை மட்டுமே ஓங்கி இருந்தால் இன்னொருவருக்கு கசப்புதான் மிஞ்சும். இல்லையேல், எந்தவித எதிர்பார்ப்புமின்றி வாழ்க்கையைக் கடத்தும் வெறுமை. அன்பு என்பது… `சாப்பிட்டாயா? தூங்கினாயா?’ என்று விசாரிப்பதுடன் அன்பு நின்றுவிடுவதில்லை. கணவனோ, மனைவியோ, மற்றவருடைய தனிப்பட்ட ஆசைக்கும் மதிப்பு கொடுத்து, இயன்றவரை தானும் அதற்கு உறுதுணையாக இருந்தால்தான் அன்பும் மரியாதையும் நிலைக்கும்.     2. மாமியார் இருக்கிறார்களா, வேண்டாம் இந்த சம்பந்தம்!   `மாமியார்’ என்று சொல்லி, ஒரு துரும்பைத் தூக்கிப்போட்டால்கூட அது துள்ளுமாம். இதனாலோ என்னவோ, மகளின் கல்யாணத்துக்குமுன், `மாமியார் இல்லாத இடமாகப் பாருங்கள்!’ என்று பலர் கோரிக்கை விடுக்கிறார்கள். ஏன் மாமியாருக்கும் பெண்களுக்கும் ஒத்துப்போவதில்லை? கதை வேற்றுமொழிப் பெண்ணை மகன் காதலித்து, உறுதியாக அவளையே மணந்துவிட்டது குறித்து வந்தனாவிற்கு வருத்தம். தன்போல் இல்லாமல், மருமகள் புவனா அதிகம் படித்து, லட்சக்கணக்கில் சம்பாதிப்பது வேறு அவளால் பொறுக்க முடியாது போயிற்று. நாள் முழுவதும் அலுவலகத்தில் உத்தியோகம் பார்த்துவிட்டு வீடு திரும்பும் புவனாவிடம், “எனக்கு ஒத்தாசையாக வீட்டு வேலைகளைப் பார்த்துக்கொண்டு இரேன். எதுக்கு அலையறே?” என்று தினமும் குறை கூறுவாள். `இப்படி ஓயாமல் என்னிடம் தப்பு கண்டுபிடிக்கும் மாமியாருடன் நான் வீட்டிலேயே தங்கியிருந்தால், எனக்குப் பைத்தியமே பிடித்துவிடும்!’ என்று புவனா எண்ணியதில் என்ன வியப்பு? மெத்தப் படித்த டவுன் மருமகள் - கிராமப்புறத்தில் அதிகம் படிக்காது வளர்ந்த மாமியார். முகத்தைத் தூக்கிவைத்துக்கொள்ளும் தாய், உற்சாகமின்றி வளையவரும் மனைவி. இவர்களது மோதலில் புவனாவின் கணவனுக்குத்தான் தலைவலி. புவனா பதின்மவயதுப் பெண்ணாக இருந்தபோது, நான் அவளுக்கு அறிவுரை கூறினேன்: “கல்யாணமானதும், உன் சம்பளத்தை அப்படியே கணவன் கையில் கொடுத்துவிடாதே. இப்படித்தான் சீனப்பெண்களுக்குச் சொல்லிக்கொடுப்பார்களாம். சின்ன வீடு, குடி, சூதாட்டம் என்று ஆண்கள் பணத்தை விரயம் செய்துவிடுவார்கள். பெற்றோரோ, மனைவியோ, இன்னொருவர் சம்பாதித்த காசின் அருமை அதைச் சுலபமாகப் பெறுகிறவர்களுக்குத் தெரிவதில்லை”. இப்போது, தன் சம்பாத்தியத்தை தன் பெயரில் வங்கியில் சேமித்து வைக்கிறாள். கணவனும் அதைப் பொருட்படுத்துவதில்லை. (முதலிலேயே கண்டிப்பாகச் சொல்லி இருப்பாள்). பொருளாதாரச் சுதந்திரம் அவளுக்குச் சற்று தெம்பை அளிக்கிறது. அன்பு என்பது வகுத்தல் கணக்கு இல்லை, பெருக்கல் என்பது இவர்களுக்குத் தெரியாமல் போய்விட்டது. ஒருவர்மீது அன்பு செலுத்தினால், இன்னும் பலர்மேல் அன்பு வைக்க முடியாதா, என்ன! மாமியார்களின் புகார் “என்னை `அம்மா’ என்று அழைக்கிறாள். ஆனால், நான் சொல்வது எதையும் கேட்பதில்லை”. சிறுகுழந்தைகளாக இருந்தபோது, நம் பெண்கள் நாம் சொல்வதைக் கேட்பார்கள். ஆனால், அவர்களுக்கு எத்தனை வயதானாலும், விடாப்பிடியாக ஒவ்வொன்றையும் சொல்லிக்கொடுத்துக்கொண்டே இருந்தால் அவர்களுடைய சுயமுயற்சி அற்றுப்போய்விடும் அபாயம் இருக்கிறதே! அவர்களுக்கு நேர்மாறாக வளர்க்கப்பட்டிருக்கும் சுதந்திரமான பெண்கள் பிறர் தம்மைக் கட்டுப்படுத்த முனையும்போது, அவர்களை அலட்சியப்படுத்தி, தம் வழியிலேயேதான் நடப்பார்கள். சுபத்ரா இந்த விதிக்கு விலக்கு. கதை பெரிய படிப்பு படித்திருந்தும், சுபத்ராவை உத்தியோகம் பார்க்க அனுமதிக்கவில்லை கணவன். உடல்வதையாக அவன் என்ன கொடுமை செய்தபோதிலும் அடங்கியே இருந்தாள். அவன் தந்தையும் அப்படித்தான் இருந்ததாகக் கூறி, மாமியார் அன்பைப் பொழிந்து, அவளைச் சமாதானப்படுத்துவாள். ஒருமுறை, ரத்தக்களறியாகக் கிடந்தவள் பொறுக்கமுடியாது, காவல்துறையினரை வரவழைக்க, விவாகரத்தில் முடிந்தது. ஆனால், கதை இத்துடன் முடியவில்லை.   “அம்மாவுக்கு உடம்பு சரியில்லை. நீ வந்து பார்த்துக்கொள்,” என்று கணவன் தகவல் அனுப்ப, இன்னொரு ஊரிலிருந்து வந்தாள் சுபத்ரா. `எப்போது உங்களுடன் இருந்த உறவு முறிந்ததோ, அப்புறம் உங்கள் தாய் மட்டும் எனக்கு என்ன உறவு?’ என்று கேட்கத் தோன்றாத அவளுடைய நல்ல குணம் கணவனுக்குப் புரியாது போனது ஏன்? தன் ஒரே மகனது வாழ்க்கையில் இன்னொருத்தி குறுக்கிட்டுவிட்டாளே என்று ஆத்திரப்படுகிறார்கள் சராசரி மாமியார்கள். ஏதோ ஒரு முறை கீழே விழுந்து அடிபட்டுக்கொண்ட அந்த விதவைத்தாய், `இனி நடக்கலாம்,’ என்று மருத்துவர்கள் பச்சைக்கொடி காட்டியபின்னரும் படுக்கையைவிட்டு எழுந்திருக்க மறுத்தாள். இடுப்பிலோ, காலிலோ வலி கிடையாது. ஆனால், வேண்டாத மருமகளைத் தண்டிக்க வேறு என்ன வழி? அந்த இரு பெண்களிடையே சிக்கிக்கொண்ட ஆணுக்குத்தான் சிரமம். யார் பக்கம் சாய்வது? எப்போதோ படித்த துணுக்கு நினைவுக்கு வருகிறது. முதலாமவர்: என் பெண்ணை மாப்பிள்ளை சினிமா, பீச் என்று அடிக்கடி அழைத்துப்போகிறார்! இரண்டாமவர்: ஆகா! கேட்பதற்கே ஆனந்தமாக இருக்கிறது. உங்கள் மகன் எப்படி இருக்கிறான்? முதலாமவர்: அதை ஏன் கேட்கிறீர்கள்! என் மருமகள் அடிக்கடி சினிமாவுக்கு அழைத்துப் போங்கள், பீச்சுக்கு அழைத்துப் போங்கள் என்று அவனை நச்சரிக்கிறாள். இரண்டாமவர்: அநியாயமாக இருக்கிறதே! `மாமியார் இல்லாத இடமாகப் பாருங்கள்!’ என்று கோரிக்கை விடுக்கிறார்கள் பெண்ணைப் பெற்றவர்கள். உலகின் போக்கு புரிந்து, தாய் தந்தையரைத் தனியே தவிக்க இசையாத மகன்களும் இல்லாமல் இல்லை. கதை பாலன் உயர்கல்வி பெற்றவன். செழிப்பான எதிர்காலம் இருந்தது. அதனால், பெண்ணைப் பெற்றவர்கள் அவனைத் தன் மருமகனாக்கிக்கொள்ள முயன்றார்கள். ஆனால், அவன் ஒரு விஷயத்தில் கராறாக இருந்தான்: “கல்யாணத்திற்குப்பின், என் பெற்றோர் என்னுடன்தான் இருப்பார்கள்!’ சிலர் அஞ்சி விலக, ஒரு பெண் துணிந்து அவனை மணந்தாள். மகள் தன் சொற்படி மட்டும் நடக்கவேண்டும் என்பதுபோல் மிரட்டி அவளை வளர்த்திருந்தார் வினுதாவின் தந்தை. தாயும் அவளைச் சரிவர கவனிக்காது, உத்தியோகத்திற்காகவே நெடுநேரத்தைச் செலவழித்திருந்தாள்.   கல்யாணமான புதிதில், எந்த ஒரு காரியத்திற்கும் தாயின் ஆலோசனையை நாடினாள் வினுதா. “என்னிடம் கேட்கக்கூடாதா!” என்று மாமியாருக்குச் சற்று வருத்தம் ஏற்பட்டது. மகன் தாயைச் சமாதானப்படுத்தினான்: “இத்தனை வருடமும் அம்மாவிடம்தானே கேட்டுச் செய்திருக்கிறாள்! விட்டுப்பிடி!” மாமியார் பொறுமை காத்தாள். புக்ககத்திற்கு வந்த வினுதாவுக்கு ஆச்சரியம் காத்திருந்தது. அவளை அவள் போக்கில் விட்ட கணவன்! `உனக்கு எது மகிழ்ச்சியைத் தருகிறதோ, அதைச் செய்!’ என்று அவளுக்குப் பிடித்த கலையில் மீண்டும் ஈடுபட உற்சாகம் அளித்து, இயன்றவகையில் தானும் பங்கெடுத்துக்கொண்டான் பாலன். தான் பெற்ற குழந்தையை வினுதா மிரட்டி வளர்க்க ஆரம்பித்தபோது, நல்லவிதமாக அறிவுரை கூறிய புக்ககத்தினரிடம், “எங்கப்பா இப்படித்தான் என்னை வளர்த்தார்,” என்றாள். திமிராக இல்லை. `நான் வேறு எப்படி நடக்கமுடியும்!’ என்ற விரக்தியுடன். தான் பெற்ற பெண்ணைவிட அதிகமாக அவளிடம் அன்பு செலுத்தினாள் மாமியார். அவள் போக்கில் தலையிடாது, மாமனாரும் தன் மகிழ்ச்சியை அவளுடன் பகிர்ந்துகொண்டார். நாளடைவில், கணவன் அளித்த சுதந்திரமும், வீட்டுப் பெரியவர்களின் அன்பும் அவளைச் சிறுகச் சிறுக மாற்றியது. குறைநிறைகளுடன் அவள் இருந்தபடியே ஏற்றதால், அவர்களிடம் மரியாதை பெருகியது. சில வருடங்களில், கணவனின் உறவினர்களைத் தனக்கும் வேண்டியவர்களாக ஏற்றாள். உளமார அவர்களை உபசரித்தாள். இந்தக் கதையில், யாரால் அக்குடும்பம் எல்லாருக்கும் நிறைவளிப்பதாக மாறியது? `கேவலம் பெண்! தனக்குக் கீழ்ப்படிந்து நடந்தால்தான் அவள் நல்ல மனைவி!’ என்றெண்ணாது நடந்த பாலனைத்தான் முதலில் குறிப்பிடவேண்டும். மனைவியின் பொழுதுபோக்கில் ஆர்வம் காட்டி, அத்துறையில் அவள் மேலும் வளர வழிவகுத்து இருக்கிறான். `குழந்தைகளை இப்படி அதிகாரம் செய்து, மிரட்டி வளர்க்கிறாளே!’ என்று வருந்திய தாயைச் சமாதானப்படுத்தி இருக்கிறான். `பெண் ஆணுக்கு அடிமை’ என்று, காலத்துக்கு ஒவ்வாத கருத்தைப் பின்பற்றும் ஆண்கள்தாம் மனைவிமாரைச் சாடுகிறார்கள். திருமணம் ஒருவனது நிம்மதியைக் குலைத்துவிடும் என்று முழங்குகிறார்கள். மனைவிக்கும் உணர்வுகள் உண்டு, அவைகளை மதித்து நடந்தால் அவள் நல்ல மனைவியாக நடப்பது மட்டுமின்றி, சிறந்த மருமகளாகவும் பாராட்டப்படுவாள் என்று புரிந்து வைத்திருக்கும் பாலனைக் கேட்டேன்: “உன் மணவாழ்க்கை எப்படி இருக்கிறது?” “Fantastic!” திருமணமாகி சுமார் பதினைந்து ஆண்டுகளுக்குப்பின் எத்தனை ஆண்கள் இப்படிச் சொல்வார்கள்?     3. நஞ்சு கலவாத நட்பு   சீனப்பெண்கள் பிறருடன் நட்புகொள்ளும் வழி எது தெரியுமா?     முதல் பெண்: ஐயோ, இப்போது சிக்கன் என்ன விலை விற்கிறது, பார்த்தீர்களா! இரண்டாமவள்: ஸேலோ ( செத்தோம்!). மூன்றாவது: நாம் என்ன செய்தாலும், மாமியாரை மட்டும் கவரமுடியாது. மாமியார் கர்ப்பமாக இருந்தபோது, எந்தவிதமான உடல் உபாதையும் இருந்ததில்லை. நாம்தான் வியாதி கொண்டாடுகிறோமாம். இரண்டாமவள்: ஹேலோ ஹேலோ  ஹேலோ ! (ஆமாம், ஆமாம், ஆமாம்).   நல்லதோ, கெட்டதோ, எதிரிலுள்ளவர்கள் சொல்வதை அப்படியே ஆதரிக்க வேண்டும். நல்ல விஷயமாகத் தோன்றினால், மூன்று `ஆமாம்’. இவ்வாறு, உரையாடல்வழி நெருங்கிய தொடர்பு இருப்பதாகக் காட்டிக்கொள்வார்கள். எனக்கு அம்மொழி தெரியாது. ஆசிரியைகளின் பொதுவறையில் இவ்விரண்டு வார்த்தைகளும் அடிக்கடி ஒலிக்கும். அவர்களைக் கேட்டு, அர்த்தம் தெரிந்துகொண்டேன். இத்தகைய நட்பு ஆழமானதல்ல. பொழுதைக் கழிக்க ஒரு வழி. அவ்வளவுதான். ஒருவர் அருகில் இல்லாதபோது அவரைப்பற்றிப் பிறரிடம் குறையும் கூறுவார்கள். பார்ப்பவர்களிடமெல்லாம் குற்றம் கண்டுபிடிக்கும் குணமும், பொறாமையும் நட்பை வளர்க்குமா? துஷ்டரைக் கண்டால்.. ஒரு கோப்பையில் நஞ்சு. இன்னொன்றில் நஞ்சு கலந்திருக்கலாமோ என்ற ஐயம். இவற்றில் எதைக் கையில் எடுப்போம்? நட்பும் இப்படித்தான். ஒருவனுக்கு நற்பண்புகள் இல்லை என்று தெரிந்தும், `அவனை நான் மாற்றிவிடுவேன். அவனுடைய தீயகுணங்கள் எனக்குள் தொற்றிவிடாது. நான் மனோதிடம் உள்ளவன்,’ என்று சாதிப்பது அறிவீனம். நம் குறைகளை உணராது, அல்லது ஏற்க விரும்பாது, நமக்கு நாமே அதிக மதிப்பெண்கள் அளித்துக்கொள்வதால் வரும் வினை. சறுக்குவது எளிது. ஒருவரது மகிழ்ச்சியை எப்படியெல்லாம் குலைக்கலாம் என்று கணக்குப் போட்டுக்கொண்டே இருப்பார்கள் நண்பர்கள் என்ற போர்வையில் நடமாடுபவர்கள். கதை உயர் அதிகாரியான கேசவனின் மனைவி, பலர் முன்னிலையில் அவனைப் பழிப்பாள். அதனால் அவனுக்குத் தன்கீழ் உத்தியோகம் பார்த்த முரளியின் இன்பமான இல்லற வாழ்க்கையைக் கண்டு பொறாமை. முரளியை மனைவி வத்சலாவுடன் தன் இல்லத்திற்கு வரும்படி அழைத்தான் கேசவன். அவளுக்கு முரளியினுடைய குடிப்பழக்கம் பிடிக்காது என்று அவனுக்குத் தெரியும்.   நண்பன் சிறுநீர் கழிக்க உள்ளே போனதும், “நேற்று வெகு நேரம் கழித்துத்தானே முரளி வீட்டுக்கு வந்தான்? என் வீட்டில்தான் குடித்துக்கொண்டிருந்தான்,” என்று வத்தி வைத்தான். வத்சலா எந்தவித அதிர்ச்சியையும் காட்டாதது அவனுக்கு ஏமாற்றம்தான். வீடு திரும்பியதும், “இந்த மனிதனைப்போய் நண்பன் என்று நம்பினீர்களே, பாவம்!” என்றபடி, நடந்ததை விவரித்தாள் அவள். “விளையாட்டாக அப்படிச் சொல்லி இருப்பார்!” என்று அதிகாரிக்குப் பரிந்தான் முரளி. மறுமுறை சந்தித்தபோது, “உன் மனைவி அன்று ஏதாவது சண்டை பிடித்தாளா?” என்று ஆர்வத்துடன் கேட்டான் கேசவன். “இல்லையே!” என்றபோது, முரளிக்கு மனைவி கூறியதில் இருந்த உண்மை புரிந்தது. என்ன இருந்தாலும், மேலதிகாரி. அவர் இழுத்த இழுப்புக்கெல்லாம் போய்த்தானே ஆகவேண்டும்! பல வருடங்களுக்குப்பின், “உன் மனைவி வத்சலாவுக்கு நீ நிகரே இல்லை. நான்தான் அவளைத் திருமணம் செய்துகொண்டிருக்கவேண்டும்,” என்று கேசவன் தாறுமாறாகப் பேச ஆரம்பித்தபோது, முரளிக்கு வெறுத்துப்போயிற்று. குடிப்பழக்கத்தால் இணைந்த இருவரும் நிம்மதியற்று, மற்றவரைவிட்டு விலக முடியாது தவித்தனர். இன்னும் எப்படியெல்லாம் இவனைக் கவிழ்க்கலாம் என்று யோசித்தான் கேசவன். மேலும் மேலும் தீய பழக்கங்களில் முரளியை ஈடுபடுத்த முயன்றபோது, அவன் விலகினான். ஏதோ ஒரு தீய பழக்கத்தால் ஒன்று சேர்ந்து, அதை நெருங்கிய நட்பு என்று மகிழ்பவர்களுக்கு இறுதியில் கசப்புதான் மிஞ்சும். மாறாக, நல்ல நண்பராக இருந்தால், ஒன்றாக மது அருந்தினாலும், `இல்லவே இல்லை,’ என்று பொய்சத்தியமாவது செய்வார்! கதை நள்ளிரவில் ஒரு நண்பர் சிவநேசனை அழைத்து, “என் கார் நின்றுவிட்டது. உதவி செய்ய உடனே வா,” என்று அழைப்பு விடுத்தார். இருவரும் பதின்ம வயதிலிருந்தே சிறந்த நண்பர்கள். ஆனாலும், தூக்கக்கலக்கத்தில் எழுப்பி உதவி கேட்கிறானே என்று சிவநேசனுக்கு எரிச்சல். “நான் போகப்போவதில்லை,” என்று, போர்வையை இழுத்துப் போர்த்திக்கொண்டார். “உங்களுக்கு ஒரு ஆபத்து என்றுல் அவர் வருவாரா?” என்று கேட்டாள் மனைவி. “வருவான்!” “நீங்கள் உதவி செய்வீர்கள் என்று நம்பித்தானே அழைக்கிறார்! நீங்கள் போகத்தான் வேண்டும்,” என்று மனைவி வற்புறுத்தலாகக் கூற, சிவநேசன் எழுந்தார். `நான் என் நண்பர்களுக்காக உயிரைக்கூடக் கொடுப்பேன்!’ என்பது ஏமாளித்தனம். இத்தகையவர்களை `நல்லவர்’ என்று பாராட்டுகிறவர்கள் அனேகமாக சுயநலவாதிகளாக இருப்பார்கள். கதை எவ்வளவு விஷயங்களை இந்த ஆசிரியை தெரிந்து வைத்திருக்கிறாள் என்று மாணவர்களை பிரமிக்கவைக்கும் நோக்கத்துடன் ரோஸ் என்ற சீன ஆசிரியை இந்தியாவைப்பற்றி என்னிடம் ஏதாவது கேட்டுத் தெரிந்துகொள்வாள். அடிக்கடி இது தொடர்ந்தது. `நெருங்கிய தோழிதானே!’ என்றெண்ணி, ஒரு நாள் நான் அவளிடம் ஒரு புத்தகத்தை இரவல் கேட்டேன். “மலிவுதான். உங்களால் வாங்கிக்கொள்ள முடியாதா!” என்றாளே, பார்க்கவேண்டும்! அடுத்தடுத்து வந்த நாட்களில், என்னிடம் பழையபடி உறவுகொண்டாடி, ஏதேதோ சந்தேகம் கேட்டாள். விறைப்பாக எழுந்த என் ஒரே பதில்: “தெரியாது”. என் கோபம் புரிந்து, அந்த புத்தகத்தை எடுத்துவந்து கொடுத்தாள்.   நான் அதைத் தொடவே மறுத்துவிட்டேன். முகத்தில் அழுகையைக் காட்டினாள். `நாடகமாடுகிறாளோ!’ என்ற சந்தேகம் எனக்கு. இப்படிப்பட்டவர்களுடன் உறவாடுவதைவிட தனிமையே மேல் என்று தோன்றிப்போயிற்று. தம்மை உயர்த்திக்கொள்ளும் முயற்சி சிலர் ஒருமுறை சந்தித்தபின், அடிக்கடி நம்முடன் உறவு கொள்ள முயற்சிப்பார்கள். கதை வேற்றூரிலிருந்து வந்திருந்த மேரியை ஒரு பொதுநிகழ்ச்சியில் சந்தித்தேன். சில நேரம் உரையாடிக்கொண்டிருந்தோம். மறுநாளே அவளிடமிருந்து எனக்குத் தொலைபேசி அழைப்பு வந்தது. பெரிதாக எதுவும் சமாசாரம் கிடையாது. அடுத்து வந்த சில மாதங்களில், நாள் தவறாது அழைக்க ஆரம்பித்தாள். அப்படித் தினமும் பேச என்ன இருக்கிறது? சொன்னதையே திரும்பத் திரும்பச் சொல்லியதுடன், திரைப்படப்பாடல்களின் வரியைக் கேட்பாள். பிறரைப்பற்றி ஓயாது குறைகூற ஆரம்பித்தாள். அவர்கள் எனக்கும் தெரிந்தவர்கள் என்பதால் தர்மசங்கடமாக இருந்தது. என்னைப்பற்றி அவதூறாகச் சிலர் பேசியதையும் என்னிடமே கூறினாள்.   கோலாலம்பூரிலிருந்து தொலைதூரத்தில் நிகழ்ந்த ஓர் இலக்கிய நிகழ்வுக்கு என்னை உரையாற்ற அழைத்திருந்தார்கள். “பார்வையாளராக நானும் வருவேன். நீங்க என்னோட அறையிலதான் தங்கணும்,” என்றாள் மேரி, பிடிவாதமாக. `சில நிமிடங்களிலேயே அவ்வளவு பேரைக் குறை கூறுவாளே! இரண்டு நாட்கள் முழுவதும் இவளுடன் எப்படிக் கழிப்பது!’ என்று அயர்ந்தேன். மாடியும் கீழுமாக விஸ்தாரமாக இருந்த இடத்தில், ஊடகத்துறையிலிருந்த இளம்பெண் ஒருத்தியுடன் நான் தங்க ஏற்பாடு செய்திருந்தார்கள். நான் அவளுடன்தான் தங்க வேண்டும் என்று மேரி நிர்வாகத்தினருடன் சண்டை பிடித்தாளாம். அவர்கள் ஒப்பவில்லை. என்னைச் சந்தித்தபோது, “நீங்க கேக்கலியா, என்கூடத்தான் தங்குவேன்னு?” என்று கேட்டபோது, “அவர்களுக்குத் தலைக்குமேல வேலை, பாவம்! எதுக்கு நான் வேற கஷ்டப்படுத்தணும்?” என்றுவிட்டேன். “ஒங்க கூட இருக்கிற பெண்ணை ஒங்களுக்கு மொதல்லேயே தெரியுமா?” “தெரியாது”. இந்த இரண்டு கேள்விகளையும் பல முறை கேட்டபோது, என் பொறுமை மீறியது. “எதுக்கு ஓயாம பேசறது? ஒங்களுக்குப் பொழுதுபோகாட்டா, லைப்ரரிக்குப் போறது! இல்லே..,” என்று சிடுசிடுத்தேன். அதிலிருந்து அவள் என்னை அழைப்பதில்லை. `படித்த, பணக்காரப் பெண்ணைக் காதலிக்கப்போகிறேன்,’ என்று முடிவெடுப்பதுபோல், `இவளுடன் நடந்தால் என்னையும் கவனிப்பார்களே!’ என்ற எதிர்பார்ப்பா? (காதலோ, நட்போ இப்படி முன்னேற்பாடுடன் வருவதில்லை). நம் நிலை சரிந்தால் மறந்துவிடுவார்கள். உண்மையான நட்பு பத்து ஆண்டுகள் ஒன்றாகப் படித்து, அல்லது ஒரே துறையில் ஈடுபட்ட ஓரிருவர் வாழ்நாள் முழுவதும் ஒருவருக்கொருவர் உறுதுணையாக இருக்கிறார்கள். குறைகளைப் பெரிதுபடுத்தாது, ஒருவர் மற்றவரை அப்படியே ஏற்கும் தன்மை கொண்டவர்கள். புதிய முயற்சிகளில் ஆர்வம் காட்டி, ஒருவரையொருவர் ஊக்குவிக்கிறார்கள். இந்த நண்பர்கள் உடலால் பிரிந்துபோனாலும், மனதால் விலகுவதில்லை.                                                   4. பாட்டியின் முடிதான் வெள்ளி, மனமோ தங்கம்   பொதுவாகவே, பெண்கள் எளிதில் உணர்ச்சிவசப்படுவார்கள். அவர்களுடைய எதிர்ப்பைக் காட்டும் வழி? இதோ ஒரு துணுக்கு; எல்லா நாடுகளிலும் பெண்கள் தலைவர்களாக இருந்தால் என்ன ஆகும்? ஒருவரோடு ஒருவர் பேசிக்கொள்ளாத நாடுகள் உருவாகும். கதை மரியாவின் மகள் தன் குழந்தைகளுடன் வேறு ஊரில் குடியிருக்கிறாள். அடிக்கடி வரும் தாய் தான் செய்யும் காரியங்களிலெல்லாம் குற்றம் கண்டுபிடிப்பதும், தன் வளர்ப்பு முறையில் குறை சொல்வதும் அவளுக்குப் பிடிக்கத்தானில்லை. தாய் பாட்டியிடம் காட்டிய பாராமுகம் குழந்தைகளிடமும் தொற்றிக்கொண்டதில் என்ன ஆச்சரியம்? என்னதான் நாம் வளர்த்த குழந்தையானாலும், வயது வந்தபின் அவர்களைச் சுதந்திரமாக விடவேண்டியதுதான். ஐந்து வயதில் கண்டித்ததுபோலவே என்றென்றும் நடத்த நினைப்பவர்களின் பாடு திண்டாட்டம்தான். மகளே இப்படியென்றால், இப்படிப்பட்ட மாமியாரிடம் எந்த மருமகள் விட்டுக்கொடுக்கத் தயாராக இருப்பாள்? `எனக்கு வரும் ஓய்வூதியம் பூராவையும் மகன் குடும்பத்திற்காக செலவழிக்கிறேன்,’ என்று கணக்குப் பார்த்து, அதிகாரம் செலுத்த நினைத்தால், இரு தரப்பினருக்கும் மனத்தாங்கல்தான் வரும். `அவரவர் பாடு!’ என்று சற்றே ஒதுங்கிவிட்டால், மரியாதை நிலைக்கும். தாய் பாட்டிக்குக் காட்டும் மரியாதையைத் தம்மையுமறியாது குழந்தைகளும் கடைப்பிடிப்பார்கள். பாட்டி-தாத்தாவுடன் ஒரே வீட்டில் வசிக்கும் இளைஞர்கள், “எங்களுக்குப் பெற்றோரைவிட பாட்டி-தாத்தாவைத்தான் பிடிக்கும்,” என்கிறார்களாம். (நான் கேட்காமலேயே என்னிடம் ஒருவர் தெரிவித்தது). முதல் காரணம்: பெற்றோருக்குத் தம் குழந்தைகளுடன் செலவிட அதிக நேரம் கிடைத்ததில்லை; இல்லை, அவர்கள் ஒதுக்கியதில்லை. பணம் தேடுவதில், தம் சொந்த பொழுதுபோக்கிற்காக நேரத்தை ஒதுக்குவதில், `பிறர் பார்த்துக்கொள்வார்கள்’ என்ற அசிரத்தையில், அவர்கள் காலத்தைக் கழித்துவிடுகிறார்கள். வளரும் குழந்தைகளுக்கு இதெல்லாம் புரியுமா? பெற்றோருக்குத் தாங்கள் இரண்டாம் பட்சம்தான் என்ற மனக்குறையுடன் வளர்கிறார்கள். உடனிருக்கும் பாட்டி சிறு வயதிலிருந்தே அவர்களுக்குச் சோறு ஊட்டி, கதை சொல்லி, விளையாட்டுக் காட்டி வளர்த்திருப்பாள். எதையாவது பார்த்துப் பயந்துவிடும் குழந்தைக்கு உடனடியாக ஆறுதலளிப்பாள். பேரக்குழந்தைகளுக்கு எந்தெந்த தின்பண்டங்கள் பிடிக்கும் என்று தெரிந்துவைத்திருக்கும் பாட்டி அவர்களுடைய அன்பைப் பெறுவாள். தன் குழந்தைகளையும் அப்படி வளர்த்திருக்கலாம். ஆனால் அதெல்லாம் அவர்களுக்கு நினைவிருக்காது. சொந்தக் குழந்தைகளுடனேயே போட்டி எழும். `என்னை இவ்வளவு அருமையாக வளர்க்கவில்லையே!’ என்று சாடுவார்கள். இதில் ஓரளவு உண்மை இருக்கக்கூடும். முதல் குழந்தை படும் பாடு `எல்லாவற்றிலும் சிறந்தவனாக, பார்ப்பவர்கள் பாராட்டுகிறவனாக தன் குழந்தை வளரவேண்டும்,’ என்ற தாயின் அளவுகடந்த எதிர்பார்ப்பு பாதிப்பைத்தான் உண்டாக்கும். முதல் குழந்தையின்போதுதான் இந்த வெறி. `பெற்றோருக்கு முதல் குழந்தையாக மட்டும் பிறக்கக்கூடாது!’ என்று அங்கலாய்த்தாள் ஒரு பாட்டி. (அவள் கடைசிக் குழந்தை). தன் மருமகள் பேத்தியை விரட்டுவதைப் பார்த்தும், எதுவும் செய்யமுடியாத நிலையில் அச்சொற்கள் வெளிவந்தன. ஆணோ, பெண்ணோ, குடும்பத்தின் மூத்த குழந்தைகள் இந்த நிலைக்கு ஆளாவது சகஜம். கதை முத்து முதல் குழந்தை. இயற்கையிலேயே பொறுமைசாலி. பொறுப்பானவன். அவனுடைய நல்ல குணங்கள் தாயின் கண்ணுக்குத் தெரியாமல் போயின. `இதை இப்படிச் செய், அதை அப்படிச் செய்,’ என்ற அவளுடைய ஓயாத போதனையால் அவன் தன்னம்பிக்கை ஆட்டம் கண்டது. இதனால், மேலும் கண்டனத்திற்கு ஆளானான். பாட்டி-தாத்தாவுடனும் சேர்ந்து வளர்ந்தால், பெற்றோரின் அளவுமீறிய கண்டிப்பால் உண்டாகும் பாதிப்பு குறையும். ஏனெனில், `குழந்தைகள் என்றால் இப்படித்தான் இருப்பார்கள்,’ என்ற அனுபவம் வயதானவர்களுக்கு உண்டு. பொறுக்க முடியாது, குறுக்கிடுவார்கள். (பலன் என்னவோ இருக்காது). குழந்தை வளர்ப்பு என்பது எல்லாக் குழந்தைகளுக்கும் பொதுவான ஒரு நியதி அல்ல. குழந்தைகளின் தன்மைக்கேற்ப மாறுபடும். முத்துவுக்கு அடுத்துப் பிறந்தவளோ, இரண்டாவது குழந்தைகளின் இயல்பின்படி சுறுசுறுப்பாக, தைரியசாலியாக -- அதனாலேயே தந்தையின் செல்லப்பெண்ணாக -- வளர்ந்தாள். தாய் ஓயாது, `இப்படித்தான் நடக்கவேண்டும்,’ என்று போதித்தபோது, அதை அலட்சியம் செய்யும் துணிவு அவளுக்கு இருந்தது. ஏன் இத்தனை தடைகள்? `ஒழுக்கத்தைப் போதிக்கிறோம்’ என்ற பெயரில் குழந்தைகள் ஆசைப்பட்டுச் செய்ய முற்படும் எதையும், `வேண்டாம்’, `முடியாது’ என்று தடைவிதிப்பார்கள் பல பெற்றோர். ஏன் கூடாது என்று விளக்குவதற்கு அவர்களுக்கு நேரம் இருப்பதில்லை. அதையே பாட்டி-தாத்தா விளக்கும்போது, அவர்களிடம் மரியாதை எழுகிறது. முதியவர்கள் அத்தனை விதிமுறைகளை விதிப்பதும் கிடையாது. குழந்தைகள் எது செய்தாலும் பாராட்டுகிறவர்கள் அனேகமாக அவர்களாகத்தான் இருப்பார்கள். `கண்டிப்பதே இல்லை. செல்லம் கொடுத்துக் கெடுக்கிறார்கள்,’ என்று பெற்றோர் முணுமுணுக்கலாம். ஆனால், தம்மை நோக்கி, கையை விரித்து ஓடிவரும் குழந்தைகளிடம் கொண்ட அன்பால் பாராட்டினாலும், அவர்களுக்குத் தம்மைப்பற்றிய நன்மதிப்பு எழ இந்தப் புகழ்ச்சி உதவுகிறதே! பேசுங்கள்     சிறு குழந்தைகள் நிறைய கேள்விகள் கேட்பார்கள். சரியோ, தவறோ, சலிக்காமல் பதில் கூறினால் பிணைப்பு இறுகும். நம் வாழ்க்கையின் சில பகுதிகளை அவர்களுடன் பகிர்ந்துகொள்ளும்போது, அவர்களும் தங்களைப் பாதித்தவைகளைப்பற்றிச் சொல்வார்கள். மனம் வருந்தி, `இப்போதெல்லாம் என்னுடன் பேசவே உனக்கு நேரமிருப்பதில்லை. அப்படி என்ன கணினி விளையாட்டு?’ என்பதுபோல் கண்டித்தால் மாறுவார்களா? ஒரே விஷயத்தில் ஆர்வம் இருந்தால்தானே கலந்து பேச முடியும்? காலத்திற்கேற்ப மனதை இளமையாகவே வைத்திருக்க கணினி, இணையம் என்று கற்க வேண்டியதுதான். போட்டிகள் `தாய்வழிப் பாட்டி, தந்தைவழிப் பாட்டி இருவருக்குள்ளும் போட்டி மனப்பான்மை இருக்கிறதே!’ என்று ஒருவர் கேட்டார். போட்டி போடாது, இரு தரப்பினரையும் மதித்துப் பேசக் கற்றுக்கொடுப்பது சிறப்பு. “அந்த பாட்டி, தாத்தாவைப் பார்க்கும்போது மரியாதையாக `குட்மார்னிங்’, `குட் ஈவ்னிவ்’ என்று சொல்லுங்கள். உங்கள் பள்ளிக்கூடத்தில் நீங்கள் பெற்ற வெற்றிகளைச் சொல்லுங்கள்,’” என்று அறிவுறுத்தும்போது, ”இது தற்பெருமை இல்லை?” என்ற சந்தேகத்தை எழுப்புவார்கள். “முதியவர்களின் வாழ்க்கையில் மகிழ்ச்சி பெருகும்படி நிறைய நடப்பதில்லை. உங்களுடைய வெற்றிகளைத் தம்முடையதாக எண்ணி மகிழ்வார்கள்,” என்ற ரீதியில் கூடவே இருக்கும் பாட்டி அறிவுரை கூறும்போது, `நம் முன்னேற்றத்தில் அக்கறை காட்ட இத்தனைபேர் இருக்கிறார்களே!’ என்று சிறுவர்கள் மகிழ்வார்கள். மேலும் உயர்வார்கள்.   5. பாராட்டா, வசவா?   என் பாட்டி என்னை வசை பாடிக்கொண்டே இருப்பார். இத்தனைக்கும், நான் பெண்வழிப் பேத்தி. என் தந்தைக்கு என்னை மிகவும் பிடிக்கும் என்பதுதான் காரணம். இன்றுவரை சிலர் என்னைக் கேட்கிறார்கள்: “உங்கள் பாட்டி உங்களைத் திட்டிக்கொண்டே இருப்பார்களாமே?” நானும் இதைப்பற்றி நிறைய யோசித்திருந்ததால், உடனே பதில் கூற முடிந்தது. “திட்டினாலோ, அடித்தாலோ மட்டும்தான் ஒருவரின் திறமைகளை முழுமையாக வெளிக்கொண்டுவர முடியும் என்று அந்தத் தலைமுறையில் பலரும் நம்பினார்கள்”. மாறாக, ஒருவர் என்ன செய்தாலும் அதைப் பொருட்படுத்தாது அலட்சியம் செய்தால், `எக்கேடோ கெடட்டும்,’ என்று அர்த்தம். என் பதின்ம வயதில், விடுமுறை நாட்களுக்கு சென்னையிலிருந்த பாட்டி வீட்டுக்கு அனுப்புவாள் அம்மா. நான் பாட்டிக்கு ஒத்தாசையாக வேலை செய்துகொண்டே இருக்கையில், “இது ஒரு வேலையும் செய்யாதுடி. கண்ணாடி முன்னாடி ஒக்காந்து அழகு பாத்துண்டு இருக்கும்!” என்ற பழிச்சொற்கள் எழும். நான் குளித்துவிட்டு, கண்ணுக்கு மை, நெற்றியில் பொட்டு என்று அலங்காரம் செய்துகொண்டதுடன் சரி. அதுகூட முடியாததால், விதவையான பாட்டிக்குத் தன் இழப்பு பெரிதாகத் தோன்றியிருக்கும் என்று இப்போது நினைக்கத் தோன்றுகிறது. விதவைகளுக்குச் செய்யப்பட்ட அநீதி அந்தக் காலத்தில், விதவைகள் கணவனுடன் பூவையும் பொட்டையும் மட்டும் இழக்கவில்லை. வெள்ளைப்புடவை அணியாதவர்களின் ரவிக்கையாவது வெள்ளையாக இருக்கவேண்டும். தலையில் எண்ணை, உடம்பிற்கு சோப் -- ஊகும். நினைத்துக்கூடப் பார்க்க முடியாது. இதன் விளைவு: வியர்வையால் உடலில் அரிப்பு, முதுகெல்லாம் கொப்புளங்கள். வாசனைத் திரவியங்களைத் தவிர்த்தால், உடலையும் மனத்தையும் கட்டுப்பாடாக வைத்திருக்கலாம் என்று ஆணாதிக்கத்தில் குருட்டு நம்பிக்கைகொண்ட எவனோ ஆரம்பித்துவைத்த நியதி (சதி?) இது. உடலில் எப்போதும் அரிப்பும் வலியுமாக இருந்தால், எரிச்சலாக இருந்திருக்காதா! (அவர்கள் எதிர்த்துப் பேசாவிட்டால், அருகிலிருக்கும் யார்மேலாவது ஆத்திரமாக மாறும். அப்படித்தான் நான் மாட்டிக்கொண்டேன்). பாட்டியின் முதுகைச் சீப்பால் வாரி, சீழ் பிடித்திருக்கும் கொப்புளங்களை உடைப்பது என் வேலை. `கொடுமை’ என்று என் கண்ணில் நீர் பெருகும். `வேண்டாம் பாட்டி,’ என்று கெஞ்சுவேன். பாட்டியோ, `என்னமா முதுகுசொரியறது! ஒரு அரிப்பில்லை,’ என்று பலரிடமும் என் `திறமை’பற்றிச் சொல்லிச் சொல்லி மகிழ்வார்கள். திருமணமாகி, நான் அயல்நாடு செல்ல ஆயத்தமானதும், “எனக்கு அஞ்சு ரூபா குடுத்து ஒனக்கு லெட்டர் எழுத வெச்சுட்டியே! ஒன்னை எனக்குப் பிடிக்கலே, போ!” என்று அழுதார்கள் பாட்டி. பாட்டியிடமிருந்து சமையல் கற்றதால், இன்றுவரை பாரம்பரிய சமையல்தான். மலேசியாவிலிருந்து இந்தியா போன ஒருவர், நான் குடித்தனம் செய்யும் நேர்த்தியைப் பாட்டியிடம் புகழ்ந்து கூற, பாட்டி என் தாய்க்கு ஒரு கடிதம் எழுதினாராம்: `நான் வளர்த்த எந்தக் குழந்தையும் சோடை போனதில்லை!’ என்று! வசவா, செல்லமா? எல்லாருடைய கொஞ்சலிலும் வளர்ந்தவர்கள் பிறருடைய சுடுசொற்களைத் தாங்கமாட்டார்கள். அப்போது, அன்பைக் கொட்டி, தம்மை இவ்வளவு பலகீனமாக்கிவிட்டவர்கள்மீது ஆத்திரம் எழுமாம். (அப்படிப்பட்டவர் ஒருவர் என்னிடம் தெரிவித்தது). இவர்களுக்கு குழந்தைத்தனம் மாறுவதேயில்லை. அதற்காக, காரணமின்றித் திட்டித் தண்டிக்க வேண்டுமா? கைம்பெண்ணாக நடித்தபோது மலேசியாவில் ஒளிபரப்பான ஒரு தொலைக்காட்சி குறும்படத்தில் எனக்கு முக்கியமான தாய் வேடம். `வசனம்’ என்ற தலைப்பில் என் பெயரும் இடம்பெற்றிருந்தபோதும், நான் அதிகம் பேசவில்லை.   நான் அருகிலிருந்த கோயிலுக்குச் சென்றபோது, அர்ச்சகர் என் நெற்றியை நோட்டமிட்டுவிட்டு, எனக்கு குங்குமம் கொடுக்காது அப்பால் நகர்ந்தார். பட்டையாகப் பூசியிருந்த விபூதியைக் கலைக்காமல் போயிருந்தேனே! எனக்கு முதலில் வேடிக்கையாக இருந்தது. யோசித்துப் பார்த்தபோது, இப்படியெல்லாம் ஒடுக்கி, ஒதுக்கி வைக்கப்பட்டால், கைம்பெண்கள் நாளடைவில் எத்தனை வேதனையை அனுபவிப்பார்கள் என்று புரிந்தது. செய்யாத குற்றத்திற்கு ஏதோ குற்ற உணர்ச்சி, சிறுமை. ஆணுடன், சமூகத்தின் மதிப்பையும் இழந்துவிடுவது எத்தனை கொடுமை! என் மனம் கனத்திருந்தது. விதவைத்தாயாக நடிக்கையில், எனக்குள் அதைக் கொண்டுவந்தேன். `நீங்கள் இவ்வளவு சிறப்பாக நடிக்க எங்கு கற்றீர்கள்?’ என்று ஒருவர் பாராட்டியபோது, `வாழ்க்கையில்,’ என்று நினைத்துக்கொண்டேன். எதையும் தாங்கலாம் எப்போதும், எல்லோரையும் வைதுகொண்டே இருந்த ஒரு தலைமை ஆசிரியை, `இவள் என்ன டைப்? புரிந்துகொள்ளவே முடியவில்லையே!’ என்று என்னைக் குறித்துக் கேட்க, `இந்த எழுத்தாளர்களையே புரிந்துகொள்ள முடியாது!’ என்று அந்த ஆசிரியை பதிலளித்தாளாம். நான் சிரித்துக்கொண்டேன், பாட்டி என்னைத் திட்டியதைவிடவா! அடித்து வளர்ப்பது தினசரியில் ஒரு சீனப்பெண் விளக்கம் கேட்டு எழுதியிருந்தாள்: என் தாய் எங்கள் இரண்டு வயது மகளைப் பார்த்துக்கொள்கிறாள். குழந்தையை பிரம்பால் அடித்தாலும் நாங்கள் கேள்வி கேட்பதில்லை. (அப்படித்தானே நாங்களும் வளர்ந்தோம்!) என் மூத்த மகன் சிறுவனாக இருந்தபோது எவ்வளவு அடித்தாலும் அழமாட்டான். ஏனெனில், ஆண்கள் அழக்கூடாது என்று சொல்லிக்கொடுத்திருக்கிறோம். ஆனால், மகளோ, இரவு முழுவதும் விசும்புகிறாள். பெண்கள் ஏன் இப்படித் தொட்டாச்சிணுங்கியாக இருக்கிறார்கள்? அடித்தால், `தண்டித்து விட்டார்களே!’ என்று மனம் நோக அழுவது இயற்கை. இதில் ஆணென்ன, பெண்ணென்ன? மேலும், பிரம்பால் அடித்தால்தான் ஒரு குழந்தை நல்லவிதமாக வளரும் என்ற எண்ணமே தவறு. அழக்கூடாது என்று சொல்லியே ஆண்களை உணர்ச்சிக் குவியலாக ஆக்கிவிடுகிறோம். கோபம், ஆத்திரம், அவுட்டுச் சிரிப்பு -– இவை மட்டும்தானா அவர்கள் வெளிக்காட்டக்கூடிய உணர்ச்சிகள்? “பதின்ம வயதான மகன் காலையில் எழுப்பியவுடன் எழுந்திருக்காவிட்டால் அடி” (என் சக ஆசிரியை பெருமையுடன் கூறியது). தடுக்கி விழுந்தால் கையால் ஓங்கி அடி. இப்படி ஒரு தாத்தா தன் பேத்தியை அடித்தபோது, நான் அதிர்ச்சியுடன் பார்த்தேன். அவருக்கே என்னமோபோல் ஆகி, குழந்தையைத் தூக்கிக்கொண்டார்.   உங்கள் கையில் தகுந்த காரணமின்றி வசைச்சொற்களை வீசுவதும், அடிப்பதும் ஒரு குழந்தைக்கு குழப்பத்தைத்தான் உண்டுபண்ணுகிறது. `ஏனோ பெரியவர்களுக்கு என்னைப் பிடிக்கவில்லை!’ என்று புரியாதுபோக, அழுமூஞ்சித்தனம் வருகிறது. குழந்தை பயங்கொள்ளியாக வளர்வதோ, மகிழ்ச்சியுடன் கற்பனைத்திறனும் சிறக்க வளர்வதோ பெரியவர்கள் கையில்தான் இருக்கிறது. குழந்தையின் முகத்தில் பயமோ வருத்தமோ தெரிந்தால் அந்த வளர்ப்புமுறை தவறானது. அவனுடைய பிடிவாதத்தையும், கோபத்தையும் நகைச்சுவையாக மாற்றினால், அவனும் விஷமத்தை மறந்து, சிரிப்பான். நான்கு வயதுவரை இப்படிக் கண்டித்தால், அவனுக்குத் தன் எல்லை புரிந்துவிடும். கதை என் பேரன் எட்டுமாதக் குழந்தையாக இருந்தபோது தவழ்ந்து, மிகுந்த பிரயாசையுடன் ஒரு பூச்சியைப் பிடித்திருந்தான். அடுத்து, அவன் செய்யப்போவதைத் தடுக்க குரலை உயர்த்தினேன். “ஏம்மா குழந்தையை அழவிடறே?” என்று என் மகள் வருத்தத்துடன் கேட்டாள். “கையில ஒரு பூச்சியைப் பிடிச்சு வெச்சிருக்கு. `தின்னுடா’ன்னு விட்டுடட்டுமா?” அதற்குத் தண்டனை அடிதான். பேசினால் புரியாத நிலையில், அவனுடைய இறுக மூடிய பிஞ்சுக் கையின்மேல் ஆள்காட்டி விரலால் தட்டினேன். அதுதான் அடி பாராட்டுங்கள் ஒரு முறை நான் ரயிலில் நீண்ட பயணம் செய்துகொண்டிருந்தபோது, “எங்கப்பா குழந்தைகள் என்ன செய்தாலும் புகழ்வார்,” என்று பொதுவாகத் தெரிவித்தான் இளைஞன் ஒருவன். உடன் அமர்ந்திருந்த சிலர் அவனை சிகரெட் பிடிக்கும்படி வற்புறுத்திக்கொண்டிருந்தனர். அவன் மறுத்தான். “ஒங்கப்பாகிட்ட சொல்லமாட்டோம்,” என்ற கேலிக்குரலை லட்சியம் செய்யவில்லை. ஒருவரால் சிறு வயதிலிருந்து பாராட்டப்படும் குழந்தை `தவறு’ என்று அவர் சொல்லியிருக்கும் காரியத்தைச் செய்யாது. சொன்னவர் அருகில் இருந்தாலும், மறைந்துவிட்டாலும். இப்படித்தான் நல்லொழுக்கம் பழக்கமாகிறது. பெண்களுக்கு உலகின் போக்கு புரிய ஒருமுறை, விடுமுறை முடிந்து, வீடு திரும்பியவுடன், பொறுக்கமுடியாது, அம்மாவைக் கேட்டேன்: “பாட்டி ஏம்மா என்னை இப்படித் திட்டறா?” “உறவுக்காரா அழ அழச் சொல்லுவா. அப்போதான் ஊர்க்காரா நம்பளைப் பாத்துச் சிரிக்கமாட்டா!” என்ற விளக்கம் வந்தது. `எது செய்தாலும் சரிதான்!’ என்று குடும்பத்தில் விட்டுக்கொடுக்கலாம். ஆனால், உலகமும் அப்படியே விடுமா, என்ன? சமூகத்தில் பெண்கள் எப்படியெல்லாம் வதைபடக்கூடும், அவற்றை எப்படி எதிர்கொள்வது என்று பதின்ம வயதுப் பெண்களுக்குப் போதித்தால், பிற்காலத்தில் அதிர்ச்சி கொள்ளாது, சமயோசிதமாகச் செயல்பட முடியும். `கொஞ்சகாலம்தான் அவர்கள் பெற்றோருடன் இருப்பார்கள்; புக்ககத்தில் என்ன பாடுபட நேரிடுமோ,’ என்ற பரிதவிப்புடன், பெண் குழந்தைகளுக்கு நிறைய `இடம்‘ கொடுத்து வளர்ப்பது நல்லதல்ல. அருமையாக வளர்க்கலாம். அதே சமயம், உலகின் போக்கையும் அவர்களுக்கு சொல்லிக்கொடுக்கவேண்டுவது அவசியம். இல்லாவிட்டால், புத்தர் கதைதான்.   6. குழந்தைகளைக் கையாள்வது எப்படி?   வீட்டோடு வேலைக்கு ஆள் வைத்திருந்தால், நமக்கு வேலை மிச்சம். ஆனாலும், வளரும் குழந்தைகளிடம் பொறுப்புணர்ச்சி வராது.. இரண்டு வயதுக் குழந்தைகள் தாயைப் பின்தொடரும்போது, சிறு வேலைகளை ஏவலாம். “தம்பிப்பாப்பா குளிச்சதும், துண்டு எடுத்துக் குடுக்கறியா? சமத்து!” அருகிலேயே இருக்கும் பொருளை பெருமையாக எடுத்துக் கொடுப்பாள் குழந்தை. இன்னொரு பாராட்டு அவசியம். ஆட்டாமாவில் பாம்பு சப்பாத்தி இடுவது குழந்தைகளுக்குப் பிடித்த வேலை. எவ்வளவு பிடிக்கும் என்றால், உருண்டையான மாவு பெரிதாகிக்கொண்டே போகும் அதிசயம் அவர்களுக்கு உவகை ஊட்ட, நாம் `போதும், போதும்’ என்று அலற, குழவியில் தேய்த்துக்கொண்டே இருப்பார்கள்! ஒட்டிய மாவை பிய்த்து எடுப்பது வேண்டாத வேலை. இதைத் தவிர்க்க, நான் முதலிலேயே மகளிடம் ஒரு சிறு ஆட்டா உருண்டையைக் கொடுத்து, “பாம்பு பண்ணு,” என்பேன். களிமண்ணைப்போல் தரையில் தேய்த்து, ஏதேதோ பண்ணி திருப்தி அடைந்தபின், மாவை வீணடித்துவிட்டோமோ என்ற குற்ற உணர்ச்சியுடன், அழுக்கினால் நிறமே மாறிவிட்ட பொருளை, “இதிலே சப்பாத்தி பண்ணும்மா,” என்று கொடுப்பாள்! “வேண்டாம். நீயே வெச்சுக்கோ,” என்று அலற வேண்டியிருக்கும். ஏதாவது வேலை கொடுத்தால், அதை எப்படிச் செய்வது என்று முதலில் நாம் செய்து காட்டவேண்டும். அதேபோல் அவர்கள் செய்வார்கள் என்பதில்லை. வயது, அனுபவம் இதெல்லாம் பெரியவர்களைப்போல் இருக்குமா? அவர்கள் முனைந்து செய்யும்போதே நச்சரித்தாலோ, கேலி செய்தாலோ அல்லது இரைந்தாலோ, அடுத்தமுறை ஏன் வருவார்கள்! வயதுக்கேற்ற வேலை கொடுத்தால் இப்படி ஆகாது. விளைவு எப்படி இருந்தாலும், முயற்சி செய்ததற்காகப் பாராட்டவேண்டாமா! அப்போதுதான் அடுத்தமுறை மகிழ்ச்சியுடன் உதவ வருவார்கள். சிலர், “வேலையை நன்றாகச் செய்து முடி, சாக்லேட் வாங்கிக் குடுக்கறேன்!” என்று ஆசை காட்டுவார்கள். இது லஞ்சம் வாங்கப் பழக்குவது. எப்போதாவது கொடுக்கலாம். ஆனால் ஒவ்வொரு முறையுமா! மரியாதை ஏனில்லை? `குழந்தை! அவனுக்கு என்ன தெரியும்!’ என்று எதையும் பெரிதுபடுத்தாத பெற்றோர் (அல்லது தாத்தா-பாட்டி) முக்கிய காரணம். இந்த இயந்திர யுகத்தில், பெற்றோருக்குப் போதிய அவகாசம் இல்லாததால், குழந்தைகள் ஒரு நாளில் பெரும்பகுதியை பணிப்பெண்ணுடன் கழிக்க நேரிடுகிறது. சம்பளத்துக்கு வேலை செய்பவளைப் பெற்றோர் கண்டிக்கும்போது, அவள்மீது வைத்த மரியாதை அறவே அற்றுப்போய்விடுகிறது. அதன்பின், தம் அதிகாரத்தால் பெருமை ஓங்க, எல்லாரிடமும் மரியாதையில்லாது நடந்து கொள்கிறார்கள், பெற்றோர் உள்பட. ஆசிரியர்களின் பாடும் திண்டாட்டம்தான். தான் கற்ற தற்காப்புக் கலையை சிறுவர்களுக்குப் போதிக்கும் இளைஞன் ஒருவன், `இப்போதெல்லாம் சிறுவர்களுக்கு டிஸிப்ளினே கிடையாது! எது சொன்னாலும் கேட்பதில்லை. நாங்கள் இப்படி இருக்கவில்லையே!” என்று அயர்ந்தான். உடனிருந்த ஒருவன், “அவர்களுக்கு வீட்டில் யாரும் மரியாதை கற்றுக் கொடுத்திருக்க மாட்டார்கள்!” என்றான். தான் முன்னுக்கு வர பிறர் எடுத்த முயற்சிகள் அவனுக்கு விளங்க, அவர்கள்மீது நன்றி பெருகியது. வீட்டில் நல்லொழுக்கம் போதிக்காமல் போய்விடும்போது, வேறு சூழ்நிலைகளில் எவர் முயன்றாலும், அது அவ்வளவாகப் பயனளிப்பதில்லை. பிறர் செய்வதைப் பார்த்து, `நாமும் இப்படிச் செய்தால் என்ன?’ என்று ஓர் எண்ணம் எழ, `செய்யக்கூடாது’ என்று தெரிந்தும் செய்து பார்க்கிறார்கள் சிறுவர்கள். திரைப்படங்களால் பாதிப்பு குழந்தைகளுக்கு முரட்டுத்தனம் கற்றுக்கொடுக்க நம் தமிழ்த்திரைப்படங்கள் ஆவன செய்கின்றன. ஆறுவயதுச் சிறுவன் அழுகைக்குரலில் உரக்கச் சொன்னான்: “நான் விமலா ஆன்ட்டியை உதைக்கப்போறேன்!” அதிர்ந்து, தம் உடல் மொழியாலேயே அவனைத் தடுத்தார்கள் பெற்றோர். “ஏண்டா?” “பின்னே என்ன! நான் கீழே ஒக்காந்து விளையாடினா, எழுந்திருக்கச் சொல்றா!” வீட்டு பணிப்பெண்ணை உறவுமுறை வைத்து அழைக்கக் கற்றிருந்தான். ஆனால், அவள் வீட்டைக் கூட்டிப்பெருக்கும்போது, தன்னை ஏன் விலகச் சொல்கிறாள் என்று அவனுக்குப் புரியவில்லை. அதை விளக்கி, வயதில் மூத்தவர்களை மரியாதை இல்லாமல் பேசக்கூடாது என்று எடுத்துச்சொன்னார்கள். இப்படிச் செய்யாது, குழந்தைகளை மரியாதையின்றி நடக்கப் பழக்கும் வேறு சிலரை என்னவென்று சொல்வது! கதை தன் காரில் பன்னிரண்டு வயதுக்குட்பட்ட இரு சிறுவர்களுடன் ஒருவர் பயணித்துக்கொண்டிருந்தார். தன் பக்கத்தில் வரும் எல்லா காரோட்டிகளையும்பற்றி, `முட்டாள்! எப்படி ஓட்டுகிறான்! பெண் டிரைவராக இருக்கவேண்டும்! இல்லை, அம்மாவிடமிருந்து கற்றவனாக இருக்கவேண்டும்!’ என்று பலவாறாக விமரிசித்துக்கொண்டே இருப்பது அவர் வழக்கம். அப்படிச் செய்தால், தன் திறன் எவ்வளவு சிறப்பானது என்று குழந்தைகள் புரிந்துகொள்வார்கள் என்று நினைத்திருப்பார். அவர்களைச் சிரிக்கவைக்கும் முயற்சியாகக்கூட இருக்கலாம். தன் போக்கு அவர்களையும் பார்ப்பவர்களை எல்லாம் மட்டமாக எடைபோடச் செய்யும் என்பதை அவர் உணரவில்லை. சற்று வயதானதும், அந்த தந்தையைப்பற்றியே அவதூறாகப் பேசிச் சிரிப்பார்கள் அக்குழந்தைகள். பிறரிடம் என்னென்ன குறைகள் இருக்கின்றன என்று ஆராயக் கற்றுக்கொடுப்பதைவிட, அவர்களிடம் இருக்கும் சில நற்குணங்களைப் பாராட்டலாமே!    போட்டியைத் தவிர்க்க குடும்பத்தில் ஒவ்வொரு குழந்தைக்கும் வயதுக்கேற்ப வேலைகளைப் பகிர்ந்து கொடுத்தால், சகோதர சகோதரிகளுக்குள் போட்டி வராது. மூன்றே வயதான குழந்தைகூட காலணிகளை அடுக்கி வைக்கும். வரவழைத்துக்கொள்ளும் மறதி வேலையிலிருந்து தப்பிக்க குழந்தைகள் என்னென்னவோ யுக்திகளைக் கடைப்பிடிப்பார்கள். தாங்கள் சாப்பிட்ட தட்டைக் கழுவி வைக்கவேண்டும் என்று அவர்களுக்குத் தெரியும். மறந்துவிட்டதுபோல், போட்டுவிட்டுப் போவார்கள். தண்டனையாக, SINK -ல் இருக்கும் எல்லாப் பாத்திரங்களையும் சுத்தப்படுத்துவது அவர்கள் வேலை என்று ஒரு விதி கொண்டுவாருங்கள். பின் ஏன் மறக்கிறார்கள்! மறதி பெரியவர்களுக்கும்தான். மகளுக்கு மறுநாள் பரீட்சை என்பதை மறந்து, வேலை ஏவுகிறீர்களா? உங்கள் தவற்றுக்காக `ஸாரி’ என்றுவிடுங்கள். பள்ளிப்பரீட்சை சமயங்களிலோ, நோய்வாய்ப்பட்டிருந்தாலோ வேலையிலிருந்து விலக்கு. நம் நியாயம் புரிந்து, அவர்களும் ஒத்துழைப்பார்கள். கர்வம் எழாதிருக்க `நான் புத்திசாலி. மிக உயர்வானவன்!’ என்ற எண்ணம் சிறுவயதிலேயே ஏன் படிந்துவிடுகிறது? பெற்றோர் ஓயாது அவனெதிரிலேயே அவனைப் பிறரிடம் புகழ்ந்து பேசுவது. சற்று பெரியவன் ஆனதும், தான் பெற்றோரைவிட மேலானவன் என்ற கர்வம் வந்துவிடும். பின் ஏன் அவர்களை மதிக்கிறான்! ஆறு வயதிலேயே கீழ்க்கண்டவாறு புத்தி புகட்டி வளர்ப்பது நல்ல பலனளிக்கும்; “நீ அழகாக, சுறுசுறுப்பாக, புத்திசாலியாக -- இப்படிப் பல வழிகளில் சிறந்தவனாக இருக்கலாம். அதையெல்லாம் எண்ணி கர்வப்பட்டால் அத்தன்மைகள் உன்னை விட்டுப் போய்விடும். பிறர் உன்னைப் புகழும்போது நன்றி சொல்லிவிட்டு, போய்க்கொண்டே இரு”.    சிறு வயதில் மனதில் படிந்தது என்றும் மறக்காது. எந்த உயரத்தை எட்டினாலும், கர்வமின்றி, பிறர் பழக விரும்புகிறவர்களாக வளர்வார்கள்.   7. இன்று இப்படி. அன்றோ!   இந்தியா சுதந்திரம் வாங்கியபோது என் சுதந்திரம் பறிபோயிற்று. என்னை ஆரம்பப்பள்ளியில் சேர்த்துவிட்டார்கள். மதராஸ், டி.நகரில் இருந்த ராமகிருஷ்ணா மிஷன் பள்ளி அது. தரையில் போட்டிருந்த மரப்பலகைமேல் சப்பணம் கட்டி உட்காருவோம். எதிரில் மேசையெல்லாம் கிடையாது. மடியில் சிலேட்டு இருக்கும். பலப்பம்தான் எழுதுகோல். ஆசிரியர் பார்க்காத சமயங்களில் திருட்டுத்தனமாக எச்சிலைத் தொட்டு அழிப்பதில் ஓர் ஆனந்தம். கணக்கு என்றால் மனக்கணக்குதான். வகுப்பில் எல்லாரையும் நிற்கவைத்து, `பதில் சொல்கிறவர்கள் மட்டும் உட்காரலாம்’ என்றதால், பல கைகள் ஒரே சமயத்தில் உயரும். ஐயோ, பையன்! ஆறே வயதானாலும், பள்ளியில் ஆண்களும் பெண்களும் பேசிக்கொள்ளக்கூடாது என்ற கடுமையான உத்தரவு இருந்தது. அதனால், அதே பள்ளியில் படித்த அண்ணன்-தங்கையர்கூட ஒருவரையொருவர் அறியாததுபோல் நடப்பர். பையன் யாராவது அருகே வந்தால், பெண்கள் என்னமோ, பிசாசைக் கண்டு பயந்து ஓடுவதைப்போல் வேகமாக நடப்போம், `பாய்’ (BOY) என்று கூவியபடி. நான் கற்ற முதல் ஆங்கில வார்த்தை அதுதான் என்று நினைக்கிறேன். (பெண்களைப் பார்த்து ஆண்கள் ஓடவில்லையே, ஏன்?) சிறு வயதிலிருந்தே இப்படிப் பிரித்து வைத்துவிட்டால், திருமணமானபின்னரும்கூட ஒரு பெண் கணவருடன் இயல்பாகப் பழக இயலாதுபோக நேரிடுகிறது.   மழையில் தொப்பலாக நனைந்துவிட்ட சிறுமியின் சட்டையைக் கழற்றி, ஆண்கள் எதிரில் வெற்று மார்புடன் உட்கார வைத்துவிட்டார்கள் என்று அவள் அன்று முழுவதும் கதறி அழுதாள். சாயந்திர வேளைகளில் என் அண்ணனுடன் விளையாட எங்கள் வீட்டுக்கு வரும் பிற பையன்கள் தோட்டத்தில் ஓடிப் பிடித்து விளையாடும்போது, என்னை வருந்தி அழைப்பார்கள். அவர்களைவிட உருவத்தில் மிகச் சிறியவளாக இருந்த என்னை எளிதாகத் தோற்கடிக்கலாம் என்ற அவர்களது திட்டம் புரியாது, நானும் மகிழ்ச்சியுடன் சேர்ந்துகொள்வேன். முதன்முறையாக வருபவனைப் பார்த்து, “உன் பேர் என்ன?” என்று மிரட்டலாகக் கேட்பேன். மரியாதையுடன் கைகளைக் கட்டிக்கொண்டு, ஆங்கிலத்தில் தந்தை பெயரின் முதல் எழுத்துடன் முழுப்பெயரைச் சொல்வான். மறுநாள் பள்ளியில் பார்க்க நேர்ந்தால், முன்பின் அறியாதவர்கள்போல் கடந்துவிடுவோம். மாலையில், மீண்டும் நண்பர்கள், சண்டை, அழுகை (`அழுகுண்ணி ஆட்டம் ஆடறான்!). நான்காவது வகுப்பில் மேசை, நாற்காலி! அது மட்டுமா? எழுதுவதற்குப் பேனா! மிகப் பெருமையாக இருந்தது. இனி, எச்சிலைத் தொட்டு அழித்துவிட்டதைப் பார்த்துவிட்டு, ஆசிரியர் திட்டமாட்டார். பேனா என்றால், மரத்தாலான நீண்ட பிடியில் கூரான முனையுடன்கூடிய ஒரு உலோகம், மைக்கூடு. அவ்வளவுதான். அவ்வப்போது மைக்கூட்டில் பேனாவின் நுனியை விட்டு எழுத வேண்டும். காகிதத்தில் மை புள்ளியாக புள்ளியாக விழுந்து தொலைக்கும். எப்படிச் சரியாக எழுதுவது என்று பிடிபடுவதற்குள் இடைநிலைப்பள்ளியை அடைந்தேன். அடுத்து, பெங்களூர் கமலாபாய் பள்ளியில் ஆறாம் வகுப்பு. அங்கு மையை உள்ளே அடைத்திருக்கும் பேனாவை உபயோகிக்கவேண்டும். அப்போது, மையை உள்ளே அடைத்திருக்கும் பேனா. சற்று நிம்மதி. ஒவ்வொரு நாளும் வீட்டிலிருந்து பள்ளிவரை மைக்கூட்டை பத்திரமாக எடுத்துக்கொண்டு போக வேண்டியதில்லை. ஒன்றன்பின் ஒன்றாக, உயர்ந்த ரகப் பேனாக்களாக அம்மா வாங்கித் தருவார்கள், மகள் ஆசையாக எழுதுகிறாளே என்று. `ஏன் பன்மை என்று கேட்கிறீர்களா? ஆறு வயதிலிருந்தே எனக்குப் படிக்கவும் எழுதவும் மிகவும் பிடிக்கும். எனக்கிருந்த படபடப்பில், அடிக்கடி பேனா கீழே விழுந்து, கூர்முனை வளைந்து போய்விடும். அம்மாவிடம் கூறப் பயந்து, அதையே வைத்துக்கொண்டு எப்படியோ சமாளிப்பேன். `ஒழுங்கீனம் பிடிச்ச பிள்ளை’ என்று ஆசிரியைகள் ஒருமொத்தமாகத் திட்டுவார்கள். (பல வருடங்கள் கழித்து, `நீ முன்னுக்கு வருவேன்னு அப்பவே தெரியும்,’ என்று கட்டி அணைத்தார்கள். திட்டி முன்னுக்குக் கொண்டுவர முயலும் கலாசாரம்!) `கையெழுத்து மோசம்!’ என்ற ஆசிரியரின் குறிப்பைப் பார்த்துவிட்டு, புதிய பேனா வாங்கித் தருவார்கள். (அதனால் கையெழுத்து அப்படியொன்றும் சிறந்துவிடவில்லை). என் எண்ண ஓட்டத்திற்கு சிறு கையால் ஈடுகொடுக்க முடியவில்லை. அடித்து, அடித்து எழுதுவேன். பேனா என்ன பண்ணும், பாவம்! புகுமுக வகுப்பில் புகுந்தேன். பெங்களூர் மவுண்ட் கார்மல் பெண்கள் கல்லூரியில். தமிழாசிரியை, “உங்கள் வகுப்பில் எல்லாருடைய கையெழுத்தும் மகா மோசம். இரட்டைக் கோடுகள் போட்டிருக்கும் காகிதத்தில் தினமும் ஒரு பக்கம் எழுதிக் கொண்டுவாருங்கள்,” என்று கட்டளையிட்டார். `அவமானம்!’ என்று பல பெண்கள் அழுதனர். இரு மாணவிகள் மட்டும் தப்பித்தனர். அதில் நானும் ஒருத்தி. முதலில் தமிழில் எழுதிப் பழகியதால், ஆங்கில எழுத்து அழகாக இல்லை என்று, பிற வகுப்புகளில் நிறைய திட்டு வாங்கினேன். கையெழுத்தைக் குறைகூறினார்களே!  அதை எப்படி நல்லவிதமாக மாற்றிக்கொள்வது என்று சொல்லத் தெரியவேண்டாம்? `ஒரு பக்கமாவது அடித்துத் திருத்தாமல் எழுத வேண்டும்’ என்று உறுதி செய்துகொண்டபின், ஒழுங்காக எழுத முடிந்தது.    மலேசியாவில் சிறுகதைகள் எழுத ஆரம்பித்தபோது, தங்கத்தினால் ஆன பேனா முனையைப் பயன்படுத்தினேன். காகிதத்தில் வழுக்கிக்கொண்டு போகும். ஆனால், அடிக்கடி மொக்கையாகிவிடும். `கையெழுத்து மோசமாக இருந்தால், படைப்பும் அப்படித்தானே இருக்கும்!’ என்று பத்திரிகை ஆசிரியர் நிராகரித்துவிட்டால்? பேனாவின் நுனியை அவ்வப்போது மாற்ற வேண்டியிருந்தது. மாற்றும்போது, `இது வேண்டுமா?’ என்று கடைக்காரர் பழையதைக் காட்டி விசாரிப்பார். `என்ன விலை இருக்கும்?’ என்று கேட்டுவிட்டு, அலட்சியமாக மறுத்துவிடுவேன். என் எதிரிலேயே, பதினெட்டு காரட் தங்கத்தால் செய்யப்பட்ட முனையை குப்பைத்தொட்டியில் வீசிவிடுவார். மலேசியாவில் தங்கம் மிகுதியாகக் கிடைத்ததால், 1960, 1970-களில் அதற்கு மதிப்பு கிடையாது. அதன் விலை இப்படி ஏறும் என்று அன்று தெரியாமல் போய்விட்டதே! பல வருடங்களுக்குப்பின் கணினி. (முதலிலேயே கண்டுபிடித்திருக்கக் கூடாதோ? நான் எத்தனையோ வசவுகளிலிருந்து தப்பித்திருக்கலாம்). ஆரம்பத்தில் கற்பது கடினமாக இருந்தாலும், அடித்துத் திருத்தும் வேலையெல்லாம் இல்லாமல் இருப்பது பெரிய சௌகரியம். எங்கேயோ, மூன்றாம் பக்கத்தில் இருப்பதை முதலில் கொண்டு வந்து, எப்படி எப்படியோ புரட்டிப்போட்டு, கதையையோ, கட்டுரையையோ எனது திருப்திக்கேற்ப மாற்ற முடிகிறது. இப்போதும், அவ்வப்போது பேனா பிடிக்கிறேன், கடைகண்ணியில் வாங்கவேண்டிய சாமான்களுக்கான பட்டியல் போடும்போது. காசோலையில் கையெழுத்திடும்போது, `கிறுக்கலான என் கையெழுத்தை யாரால் காப்பி அடித்துவிட முடியும்!’ என்ற பெருமிதம் எழுகிறது. மலிவான BALL POINT பேனாவைத்தான் உபயோகிக்கிறேன். அதனால் என்ன! `காசு கொடுக்கமாட்டோம், கையெழுத்து நன்றாக இல்லை,’ என்று சொல்லிவிடுவார்களா வங்கியில்?    8. மாணவர்களை வழிநடத்துவது   “நான் பரீட்சைகளில் தேர்ச்சி பெறாவிட்டால் உங்களுக்கென்ன அக்கறை? எப்படியும் உங்களுக்குச் சம்பளம்தான் கிடைத்துவிடுமே!” என் மாணவன் ஒருவன் இப்படி என்னைக் கேட்டபோது, நான் அதிர்ந்தேன். இதே வார்த்தைகள்தாம், ஆங்கிலத்தில். பலவிதமாக மரியாதையின்றி ஆசிரியர்களை நடத்துவார்கள் வேறு சிலர். ஒருமுறை, அப்படிப்பட்ட மாணவன் ஒருவனுடைய தாயிடம் நான், `இப்படிப் பேசுகிறானே!’ என்று ஆதங்கத்துடன் கேட்டேன், அவள் அவனுக்கு அறிவுரை கூறுவாள், இல்லை, கண்டிப்பாள் என்ற நம்பிக்கையில். அவள் கூறியதோ! “வீட்டிலும் இப்படித்தான்!” சிறுவயதில் கண்டிக்காமல் விட்டால், பதின்ம வயதில் அவர்களை மாற்றமுடியாது. சில வருடங்களுக்குப்பின், பதின்ம வயதினர் அப்படிப் பேசுவது நம் தவறல்ல, அவர்கள் ஏதோ மன உளைச்சலுக்கு ஆளாகி இருக்கிறார்கள் என்று புரிந்தது. அதன்பின், குறிப்பிட்ட மாணவனைத் தனியாக அழைத்துப் பேசுவதை வழக்கமாக்கிக்கொண்டேன். ‘”வீட்டில் அப்பா இருக்கிறாரா?” என்று ஆரம்பிப்பேன். (அப்பாவுக்கு வேறொரு பெண்ணுடன் தொடர்பு இருக்கலாம். அதனால் அம்மாவுடன் ஓயாது சண்டை. அந்த நிலையில், தன்னால்தான் இருவருக்கும் மனம் ஒத்துப்போவதில்லை என்ற வருத்தம் பிள்ளைகளுக்கு எழுவது இயற்கை). அனேகமாக, “சில சமயம்,” என்று தயக்கத்துடன் பதில் வரும். “இது பெரியவர்களுக்கிடையே இருக்கும் பிரச்னை. நீ நல்ல பையன். அதில் தலையிடாது, `அவர்கள் பாடு!’ என்று விடு. நீ குழம்பினால், அது உன் எதிர்காலத்தைத்தான் பாதிக்கும்,” என்று அறிவுரை கூறுவேன்.   ஒரு பதின்ம வயதுப் பையன், “என் தாய், `இது நம் குடும்ப விவகாரம். பிறரிடம் சொல்லாதே,’ என்கிறார்கள்,” என்று தன் குழப்பத்தைத் தெரிவித்தான்.   “எல்லாரிடமும் சொல்லிக்கொண்டிருக்க வேண்டாம், அவர்களுக்குக் கேலியாகப் போய்விடும் என்று அப்படிச் சொல்லி இருப்பார்கள். உனக்கு நிம்மதி கிடைக்கும் என்று தோன்றினால், என்னிடம் சொல்லியதுபோல, நெருக்கமான நண்பர்களுடன் பகிர்ந்துகொள்ளலாமே!” `நம் மனநிலையைப் புரிந்து, இந்த ஆசிரியை ஆறுதல் அளிக்கிறார்களே!’ என்று அதன்பின், கடுமையாக உழைப்பார்கள். அம்மாதிரியான ஆசிரியைமீது காதல் வயப்படுவதும் உண்டு! ஆசிரியை என்றால் அதிகாரம் சிறு குழந்தைகளுக்கும் ஆரம்பப்பள்ளி மாணவ மாணவிகளுக்கும் இயற்கையாகவே கற்பனாசக்தி மிகுந்திருக்கும். ஆனால், பலருடைய கற்பனைத்திறன் காணாமல் போய்விடுகிறதே, ஏன்? சில (பல?) குடும்பங்களில் பெண்களுக்கு இரண்டாவது இடம்தான். அண்ணனுக்கோ, அல்லது வயதில் இளையவனாக இருந்தாலும் தம்பிக்கோ, கூடுதலான சலுகை கிடைக்கும். இப்படிப்பட்ட குடும்பத்திலிருந்து வந்த சில ஆசிரியைகள் தாம் சிறுவயதில் இழந்த அதிகாரத்தை மாணவர்கள்மேல் செலுத்துவார்கள். கதை ஆங்கில மொழி போதிக்கும் மிஸஸ் தேவா முதலில் கட்டுரைக்கான தலைப்பைக் கொடுத்துவிட்டு, அதை விவாதிப்பாள். மாணவிகள் குறிப்பெடுத்துக்கொள்ள வேண்டும்.   சுமித்ரா என்ற மாணவி நிறையப் படித்து, தன் அறிவைப் பெருக்கிக்கொண்டிருந்தவள். சுயமாகச் சிந்தித்து, ஆசிரியையின் கருத்துடன், தன்னுடையதையும் இணைத்து எழுதினாள். வந்தது வினை. அவளுடைய கருத்தை, `பிழை’ என்ற குறிப்புடன் அடித்து, குறைவான மதிப்பெண்களை அளித்தாள் ஆசிரியை. திட்டு வேறு. வருட இறுதியில் அரசாங்கப் பரீட்சை வந்தது. வேறு பள்ளிகளில் படித்த பலரும் தத்தம் ஆசிரியைகளின் கருத்துக்களை துளியும் மாற்றாது வெளியிட்டிருந்தனர். அவர்களை யார் யோசிக்கவிட்டார்கள், பாவம்!   சுமித்ரா மட்டும் மிகச் சிறப்பாகத் தேர்ச்சி பெற்றிருந்தாள், வயதுக்கு மீறிய சிந்தனையுடன். பிற்காலத்தில் பெரிய உத்தியோகத்தில் அமர்ந்தபின்னும்,  `இன்றுவரை, பள்ளிக்கூடம் என்றாலே எனக்கு வெறுப்பு,’ என்று அவள் குறிப்பிடுவதில் என்ன ஆச்சரியம்? அறிவும் பண்பும் பள்ளியில் கல்வி கற்பது பரீட்சைகளில் தேர்ச்சிபெற மட்டுமில்லை. `படித்தால் அறிவு வளரும்,’ என்று புரிந்து, மாணவர்கள் என்றுமே படிக்கும் பழக்கத்தை விரும்புவர்களாக ஆக்கவேண்டும். பொதுவாக, ஆசிரியர்கள் புத்தகத்திலிருப்பதுபோலவே தமது பாடங்களை நடத்துவதுடன் கடமை முடிந்துவிட்டதாக எண்ணுகிறார்கள். இளவயதிலேயே பண்பையும் புகட்ட வேண்டாமா? ஒரு முறை, என் வகுப்பில், ஒரு மாணவன் தும்மினான். அப்போது, `அருகிலிருப்பவர்களிடம் `sorry,’ என்று மன்னிப்புக் கேட்கவேண்டும்,’ என்று நான் கூற, `ஐயே! இதையெல்லாமா சொல்லிக்கொடுப்பார்கள்!’ என்ற சலிப்புக்குரல் கேட்டது. பெரிய வேடிக்கை என்றெண்ணி, தும்மியவன் எழுந்து நின்று, நாலாபுறமும் திரும்பி, மன்னிப்பு கேட்டபடி இருந்தான்! பாடம் மட்டும் வேண்டாமே! பாடத்திற்குச் சம்பந்தம் இல்லாத, ஆனால் வாழ்க்கைக்கு உதவும் விஷயங்களையும் அவ்வப்போது சொல்லிக்கொடுப்பது என் வழக்கம். இல்லாவிட்டால், அவர்களுடைய கொட்டாவி நம்மையும் தொற்றிவிடுமே! REFLEXOLOGY-யில் நான் பயின்றது: இரு கை விரல்களையும் கோர்த்துக்கொண்டு, உள்ளங்கைகள் ஒன்றையொன்று தொடும்படி பிடித்துக்கொள்ளுங்கள். நன்றாக இறுக்கிவிட்டு விலக்கினால், கைகளில் ரத்த ஓட்டம் புலனாகும். இதனால் என்ன பலன்? நம் மன இறுக்கத்தைத் தளர்த்திக்கொள்ள. பரீட்சைக்குமுன் செய்யலாம். நல்ல பலன் கிடைக்கும். விளையாட்டாக, “யாருடனாவது சண்டை போடுமுன் இப்பயிற்சியைச் செய்தால், நம்மை யாரும் வெல்ல முடியாது,” என்று சேர்த்துக்கொண்டேன். “டீச்சர், நீங்கள் கணவருடன் சண்டை போடுவதற்குமுன் இப்படித்தான் செய்கிறீர்களா?” ஒரு துடுக்கான கேள்வி எழுந்தது. நான் சீரியஸாக முகத்தை வைத்துக்கொண்டு, “அதுவும்தான்!” என்றேன். ஆனால், புன்னகையைத் தவிர்க்க முடியவில்லை. முதலில் அதிர்ச்சியடைந்த மாணவிகளும் அப்போது எழுந்த சிரிப்பில் கலந்துகொண்டார்கள். இன வேறுபாடால் எழும் பிரச்னை ஸியூ ஙா (SIEW NGA) என்ற மாணவி என் மேசைக்கருகே வந்து, ஒரு புத்தகத்தை என்முன் தூக்கிப்போட்டாள். ”டீச்சர்! நான் நேற்று பள்ளிக்கு வரவில்லை. நீங்கள் நடத்திய பாடத்தைச் சொல்லிக்கொடுங்கள்,” என்றாள் அதிகாரமாக. எனக்கு வந்த ஆத்திரத்தில், “நான் இங்கு தனிப்பட்ட முறையில் டியூஷன் நடத்தவில்லை. உன் தோழிகளிடம் கேள், போ!” என்று பதிலடி கொடுத்தேன். திகைப்புடன், என்னையே பார்த்தபடி நின்றாள். “இன்னும் ஏன் நிற்கிறாய்? உன் இடத்திற்குப் போ!” என்று விரட்டினேன். ஏற்பது நன்று (எல்லோரையும்) நல்ல குடும்பத்திலிருந்து வரும் மாணவர்களுக்குச் சொல்லிக்கொடுப்பது எளிது. குடும்பத்தில் அன்போ, அரவணைப்போ இல்லாத அபாக்கியசாலிகளையும் ஒதுக்காது, அவர்களுடைய திறமைகளைக் கூடியவரை வெளிக்கொணர்வது ஆசிரியர்கள் கையில்தான் இருக்கிறது. கதை ஸிதி நோரா என் முன்னாள் மாணவி. ஒருமுறை, ஆசிரியர்களின் பொது அறைக்குள் நுழைந்து, என்னருகே வந்து முகமலர்ச்சியுடன் முகமன் கூறினாள். “அலுவலகத்திலிருந்து ஏதாவது எடுத்துக் கொண்டுபோக வந்தாயா?” என்று கேட்டேன். `இல்லை,’ என்று தலையசைத்தாள். “பின்னே?” குரல் தழதழக்க, “டீச்சரைத்தான் பார்க்க வந்தேன். உங்களை ரொம்ப மிஸ் பண்ணுகிறேன்,” என்றபடி அழ ஆரம்பித்தாள். எனக்குப் பெருமையாகிவிட்டது. “ஹேய்! இதைக் கேட்டீர்களா? என்னைப் பார்க்கவென்று வந்திருக்கிறாள்!” என்று அறிவிப்பு செய்தேன். “ஆசிரியப் பயிற்சியில் என்ன பாடம் எடுத்திருக்கிறாய்?” “ஃபிஸிக்ஸ் (PHYSICS),” என்று வேகமாகச் சொல்லிவிட்டு, வெட்கத்துடன் முகத்தை மூடிக்கொண்டாள். என்னிடம் ஆரம்பத்திலிருந்து கற்ற பாடம்! அன்று அவள் வேறு எந்த ஆசிரியையும் சந்தித்துப் பேசவில்லை. ஆசிரியப் பயிற்சியில் சேர்ந்தபின், `உனக்கு எந்த ஆசிரியர்போல் ஆக விருப்பம்?’ என்று ஒரு கேள்வி எழுப்பப்படும். ஸிதி நோரா என் பெயரை எழுதிவிட்டு, என்னைப் பார்க்க வந்திருக்கிறாள். அவள் போனபின், பிறர் அவளை அலசினார்கள். “இந்தப் பெண் ஏழை. படிப்பிலும் சுமார்தானே?” “ஆனாலும், நல்ல ஆசிரியையாக விளங்குவாள்!” அதேபோல், நானும் என் இடைநிலைப்பள்ளி ஆசிரியையைக் குறிப்பிட்டிருக்கிறேன். கண்டிப்பு, நகைச்சுவை, கருணை மூன்றும் இணைந்தவர் மிஸ்.ராதாம்பாள். `நான் புத்திசாலி. அதனால் முன்னுக்கு வந்தேன். பெற்றோராவது, ஆசிரியர்களாவது!’ என்ற மனப்பான்மை கர்வத்தை வளர்க்கிறது. இப்படி நம்புகிறவர்கள் பிறரை மதிக்கத் தெரியாதவர்கள்.   9. ( வேண்டாத ) விருந்தினராகப் போவது   `அதிதிகளைக் கவனிப்பது தேவர்களுக்கே தொண்டு செய்வதுபோல்,’ என்று எக்காலத்திலோ சொல்லி வைத்திருக்கிறார்கள். இதை இன்றும் நம்புகிறவர்கள் அரிது. இது புரிந்து, ஒரு தாய் மகனுக்குக் கூறிய அறிவுரை: `மாமியார் வீட்டுக்கு விருந்தாளியாகப் போகிறாயா? சோற்றில் உன் முகம் தெரியும்போது, புறப்பட்டுவிடு’. அவளுக்கு உலகின் போக்கு தெரிந்திருந்தது. முதல்நாள், மருமகனுக்குத் தடபுடலான உபசாரம் நடக்கும். இரண்டாம் நாள் சற்றுக் குறைந்துவிடும். மூன்றாம் நாளோ, மாமியார் பழைய சோற்றில் நீரை விட்டுக்கொடுப்பாளாம். `விருந்தும் மருந்தும் மூன்று நாட்களுக்கு,’ என்று இதற்காகத்தான் சொல்லிவைத்திருக்கிறார்கள். மரியாதையாகக் கவனிப்பது உறவினரோ, நண்பரோ, நம் வீட்டுக்கு வரும் விருந்தினர் அவரைக் கவனிப்பது நாம் அவரை எவ்வளவு மதிக்கிறோம் என்பதைக் குறிக்கிறது. கதை ஒரு கூட்டுக்குடும்பத்தில் மாமியார் சமையலைக் கவனித்துக்கொண்டாள். கறிகாய் நறுக்குவதிலிருந்து, அரைப்பது, கரைப்பது என்று எல்லா வேலையையும் தானே செய்தாள். `மகன் வீட்டில் தங்கி இருக்கிறோமே! தன்னைப் பாரம் என்று மருமகள் கருதிவிட்டால்?’ என்று அவள் எண்ணியிருக்கக்கூடும். தங்களைப்போலவே பிறரும் இருக்கவேண்டும் என்று  எதிர்பார்ப்பதும் கோளாறுதான். அவர்கள் வீட்டில் சில தினங்கள் தங்க, மாமியாரின் உறவுக்காரப் பெண்மணி வந்தாள். மருமகளிடம், “நீயும் கொஞ்சம் ஒத்தாசை செய்யக்கூடாதா? ஒருத்தியே திண்டாடுகிறாளே!’ என்று கூறினாள். எழுபது பிராயத்தை எட்டிவிட்ட மாமியாருக்கு எப்போதும் உடல்வலி என்று தெரிந்துதான் அப்படிக் கூறினாள். இருப்பினும், `நல்லதற்குத்தானே சொல்கிறேன்!’ என்று பிறரது குடும்ப விவகாரங்களில் அநாவசியமாகத் தலையிட்டால், மனத்தாங்கல்தான் வரும். மாமியார்தான் ஏதோ சொல்லிக் கொடுத்திருப்பார்கள் என்று மருமகள் நினைக்க வாய்ப்பிருக்கிறதே! அப்போது அவர்கள் உறவில் விரிசல் ஏற்படாதா? நான் அந்த வீட்டுக்குப் போனபோது, `உன் காலம் முடிந்ததும், யார் இப்படி எல்லாருக்கும் சமைத்துப் போடுவார்கள்?’ என்று முதியவளை கேட்கத்தான் தோன்றியது. சில சமயம், நமக்குத் தோன்றுவதை எல்லாம் வெளிப்படையாகச் சொல்லாதிருப்பதுதான் நன்மை. அதனால் அடக்கிக்கொண்டேன். `அவரவர் பாடு, நமக்கென்ன!’ என்று ஒதுங்க வேண்டியதுதான். `ஒவ்வொரு காயை ஒவ்வொரு விதமாக நறுக்கவேண்டும். அதனால்தான் நான் பிறரிடம் அந்த வேலையை விடுவதில்லை,’ என்று, எல்லா வேலைகளையும் தானே செய்வதாகச் சொல்கிறார்கள் சிலர். அதிகாரம் தன் கையை விட்டுப் போய்விடுமே என்ற பயமோ?   மாதிரிக்கு, ஒரு துண்டை நறுக்கி, `இதைப்போல் செய்,’ என்றால் புரியாதா? பன்னிரண்டு வயதுக்கு மேல், குழந்தைகளையே இப்படிப் பழக்கலாம். பெரியவர்கள் தமக்குப் பிடித்த வேறு வேலையில் ஈடுபடலாம், மகிழ்ச்சியுடன். புத்தி புகட்ட வேண்டாமே! பிறர் எதை, எப்படிச் செய்யவேண்டும் என்று நச்சரித்துக்கொண்டே இருப்பார்கள் விருந்தினராக வரும் சிலர். `நான் உன்னைவிட கல்வியில், செல்வச்செழிப்பில், திறமையில் உயர்ந்திருக்கிறேன்,’ என்ற அகங்காரம் இப்படி ஆட்டுவிக்கலாம். இத்தகைய போக்கு மற்றவர்களை இவர்கள் மதிக்காததைத்தான் காட்டுகிறது. மற்ற எந்த தகுதியைவிடவும் முக்கியமானது பணிவும் மரியாதையும். தாமே தம் மரியாதையைக் கெடுத்துக்கொண்டு, பிறரைப் பழிப்பானேன்! கல்யாண வீடுகளில் விருந்தினர் தங்கள் வீட்டில் இருக்கும் சௌகரியங்களைப் போகும் இடங்களில் எல்லாம் எதிர்பார்க்க முடியுமா? ஒரு கல்யாணத்துக்குப் போகிறீர்கள். வருகை புரிந்த உறவினவர்கள் எல்லாரையும் ஒழே இடத்தில் தங்க வைத்திருக்கிறார்கள். `தரை ஈரம்!’ ` `பாத்ரூமுக்கு பத்துப் படிகள் ஏற வேண்டுமா!’ `அது என்ன, பெரிய ஹாலில் நாலே நாலு கட்டில்? எல்லாவற்றையும் வயதானவர்கள் பிடித்துக்கொண்டுவிட்டார்கள்! நானும், கைக்குழந்தையும் எங்கே தூங்குவது?’ இம்மாதிரியான புகார்களை நிறைய கேட்கமுடியும். வசதி இருந்தால், ஹோட்டலில் தங்கலாம். இல்லாவிட்டால், வாயை மூடிக்கொண்டிருப்பதுதான் சரி. பெண் வீட்டுக்காரர்கள் எவ்வளவோ செலவழித்திருப்பார்கள். விருந்தினர்வேறு கஷ்டம் கொடுக்கவேண்டுமா? குழந்தைகளுக்குச் சொல்லிக்கொடுக்க வேண்டியது பிறர் வீட்டுக்குக் குழந்தைகளை அழைத்துச் செல்லும்போது, எதையும் அறிய ஆர்வமுடைய வயதில், எல்லாவற்றையும் கையில் எடுத்துப் பார்ப்பார்கள். வீட்டுக்காரர்கள், `சாமான்கள் உடைந்துவிடப்போகிறதே!’ என்ற கவலையுடன், வெளிப்படையாகச் சொல்லவும் முடியாமல் திணறுவார்கள். உடைந்துவிட்டாலோ, குழந்தைகளின் பெற்றோர் மன்னிப்பு கேட்கவேண்டிய நிலை. `போகிற இடத்தில் எதையும் தொட்டு விஷமம் பண்ணக்கூடாது,’ என்று முதலிலேயே கண்டித்தால், இரு தரப்பினருக்கும் இந்த தர்மசங்கடமான நிலைமை ஏற்படாதே! விருந்துண்ணும்போது குழந்தைகளுடன் பிறர் வீட்டில் சாப்பிட நேருகிறதா? அப்படியானால், முதலிலேயே அளிக்கவேண்டிய எச்சரிக்கை: `அவர்கள் கொடுப்பதைச் சாப்பிடுங்கள். நன்றாக இருக்கிறது, இல்லை, என்ற நேரடி வர்ணனை எல்லாம் வேண்டாம்!’ விருந்தினரை நன்கு கவனிப்பதாக நினைத்துக்கொண்டு, அவர்கள், `போதும், போதும்’ என்று கதற, உணவுப்பண்டங்களை அவர் தட்டில் பரிமாறிக்கொண்டே இருப்பது நாகரீகம்தானா? அழையா விருந்தாளி கை நிறையப் பணம் கிடைக்குமென்ற ஆசையுடன், செல்வம் வெளிநாட்டில் வேலை தேடிக்கொண்டார். சில ஆண்டுகள் அங்கு தங்க வேண்டியிருந்தது. தனிமை வாட்டுமே! புதிய நாட்டில் ஏற்படும் குழப்பங்களை எப்படிச் எதிர்கொள்வது? இந்த பிரச்னைகளைச் சமாளிக்க, தன் நாட்டிலிருந்து வந்திருந்த ஒருவரைப்பற்றி அவரது உறவினரிடமிருந்து அறிந்து, அவரைத் தொடர்பு கொண்டார். மரியாதை கருதி, அவரைப் பண்புடன் நடத்தினார்கள் அக்குடும்பத்தினர். செல்வத்திற்கு அவர்கள் நல்ல குணம், மரியாதை, புரியவில்லை. `பிறர் வீட்டில் சாப்பிட்டால், நம் செலவு குறையும், நிறைய சேமிக்கலாமே!’ என்று குறுக்கு வழியில் யோசனை போயிற்று. ஒவ்வொரு விடுமுறையின்போதும், `நான் வருகிறேன்,’ என்று அறிவித்துவிட்டு, காலையிலேயே வந்துவிடுவார். காலை, மத்தியான, சாயங்கால உணவு எல்லாம் அவர்கள் வீட்டில்தான். அவர்களுக்குத் தன் சுயநலமான போக்கினால் அசௌகரியம் ஏற்படக்கூடும் என்பதை நினைத்தும் பார்க்கவில்லை. அவர்களுக்குச் சொல்லவும் தயக்கமாக இருந்தது. உரிய காலம் வந்ததும், `நான் திரும்பிப் போக வேண்டும். இங்கேயே வேறு வேலை பார்த்துக் கொடுக்கிறீர்களா?’ என்று கேட்டார் செல்வம். `ஓய்வுநாள் வந்தால் யார் வீட்டுக்குச் சாப்பிடப் போவது என்று அலைகிறீர்கள். உங்கள் குழந்தைகள் நினைவாகவே இருக்கிறீர்கள். பேசாமல், உங்கள் ஊரைப் பார்க்கப் போய்சேருங்கள்!’ என்று கறாராகச் சொன்னார்கள். செல்வம் தப்பாக எடுத்துக்கொள்ளவில்லை. `ஆமாம்,’ என்றார் வருத்தமாக. அவ்வப்போது தாய்நாடு திரும்பி, மனைவி, குழந்தைகளைப் பார்த்துவிட்டு, எங்கோ தனியாக இருப்பது பொறுக்க முடியாததாக இருந்தது. அதற்காக, பிறரைத் தொல்லைப்படுத்தலாமா? இவரது தப்பாத வருகையால், அவர்களுக்கு வெளியில் எங்கும் போக முடியவில்லை. ஓய்வு நாட்களிலும் ஓய்வாக இருக்க முடியவில்லை. அரைமனதுடன் சொந்த நாட்டிற்குப் போனார் செல்வம். `இரண்டு வீடுகள் வாங்கிவிட்டான்!’ என்று பிரமித்தார்கள் நண்பர்கள். அவர்களுக்குத் தெரியவில்லை, எப்படி `பக்கித்தனமாக’ பணம் சேர்த்தார் என்று. பிறரது வாழ்க்கைப் பிரச்னைகளில் உண்மையான அக்கறை காட்டாது, ஒருவர் தன் நலனையே யோசித்துக்கொண்டிருந்தால் மரியாதை குறைந்துவிடும்.   செல்வத்தைப் போன்றவர்கள் எல்லாரிடமும் ஒரே விதமாகப் பழகமாட்டார்கள். `இவருடன் பழகினால் தனக்கு என்ன நன்மை கிடைக்கும்?’ என்று கணக்குப்போட்டு, அதன்படி நடப்பார்கள். இவர்களுக்கு உண்மையான நண்பர்கள் எப்படிக் கிடைப்பார்கள்?       10. சிடுசிடுப்பான கடைக்காரர்கள்     “புன்னகை புரியும் முகமாக இல்லாதவன் கடை திறக்கக் கூடாது” (சீனப் பழமொழி). சீனாவிலிருந்த ஒருவர் தன் எட்டு வயது மகனை மலேசியாவுக்கு கப்பலில் ஏற்றிவிட்டார், தனியாக. `அங்கு போய் பிழைத்துக்கொள்!’ என்ற அறிவுரை மட்டும் கூறி வழியனுப்பினார். என் பக்கத்து வீட்டில் குடியிருந்த பெட்ரீஷியா என்ற கணக்காய்வாளர் தன் தந்தையைப்பற்றிக் கூறிய கதை இது. எனக்கு ஆச்சரியமாக இருந்தது. அவ்வளவு சிறு வயதில் தனியாக ஏதோ ஒரு நாட்டுக்கு அனுப்புவார்களா! `நேர்மையாக இரு. கடுமையாக உழை,’ என்று தான் போதித்த பாடங்களை வைத்துக்கொண்டு மகன் பிழைத்துவிடுவான் என்ற நம்பிக்கை அந்த தந்தைக்கு இருந்திருக்கிறது. சிறுவன் வாங் ஒரு மளிகைக்கடையில் வேலைக்குச் சேர்ந்தான். பள்ளிக்கூடத்தில் அவன் கல்வி பெறவில்லை. ஆனாலும், கடின உழைப்பு, எதையும் கற்றுக்கொள்ளும் ஆர்வம், பிறரை மரியாதையாக நடத்துவது முதலிய குணங்கள் அவனை சொந்தக்கடை நடத்தும் அளவிற்கு படிப்படியாக உயர்த்தின. தன்னைப்போல் தன் குழந்தைகளும் கஷ்டப்படக்கூடாது என்ற உறுதியுடன், அவர்களைப் பள்ளிக்கூடத்திற்கு அனுப்பினான் வாங். அவர்களது மதிப்பெண்கள் சிவப்பு மையால் எழுதப்பட்டிருந்தபோது அவர்களுக்கு அடி விழும். மாறுகின்ற காலத்தை ஒட்டி நடக்க குழந்தைகளை வளர்க்கவேண்டும் என்று கடையின் ஓரத்தில் ஒரு கணினி. சாயங்கால வேளைகளில் விளையாடி முடிந்ததும், எல்லாக் குழந்தைகளையும் ஓர் அறையில் புத்தகங்களை எடுத்துக்கொண்டு போகச் சொல்லி, கதவை வெளியில் சாத்திவிடுவான் வாங். `சிறிது நேரம் சும்மா உட்கார்ந்திருப்போம். அப்புறம், என்ன செய்வதென்று புரியாது, படிக்க ஆரம்பித்துவிடுவோம்,’ என்கிறாள் பெட்ரீஷியா. தந்தை எதிர்பார்த்தபடியே, எல்லாரும் உயர்கல்வி பெற்று, நல்ல வேலைகளில் அமர்ந்தார்கள். தந்தை தன் வாழ்க்கையைப்பற்றி அடிக்கடி கூறி வளர்த்திருந்ததால், அவருடைய நற்குணங்கள் குழந்தைகளிடமும் அமைந்தன. கடையில் வேலை செய்யும் ஒருவருக்கு அவசியம் இருக்கவேண்டிய குணங்களை இதிலிருந்து நாம் புரிந்துகொள்ளலாம். ஒரு கடைக்காரர் எப்படி இருக்கக்கூடாது? 1. பல வருடங்களுக்கு முன்பு, கோலாலம்பூரில் பிரபலமாக இருந்த ஒரு கிளினிக்கிற்குப் போயிருந்தேன். சிறிது தாமதத்திற்குப்பிறகு மருத்துவரின் அறைக்குள் நுழைய அனுமதி. அந்த மனிதரோ, நான் வந்ததைக் கவனியாது, சுவாரசியமாக ஒரு ஜனரஞ்சகமான தமிழ் பத்திரிகையைப் படித்துக்கொண்டிருந்தார். நான் பொறுமையை இழந்துகொண்டிருந்தேன். அது புரிந்தோ என்னவோ, மெல்ல தலைநிமிர்ந்து, “கொஞ்சம் இருங்கள்,” என்றுவிட்டு, மீண்டும் படிப்பதில் ஆழ்ந்தார். அடுத்த முறை போனபோது, நான் அவரைப் பார்க்க விரும்பவில்லை. அங்கிருந்த சீன மருத்துவரின் அறைக்குள் எதற்கோ நுழைந்தவர், என்னை அங்கு பார்த்து திடுக்கிட்டார். `நம் இனத்தவரே நம்மை ஒதுக்குகிறார்களே!’ என்று வருந்தியிருப்பார். இதில் யார்மேல் தவறு? கடைக்கு வரும் வாடிக்கையாளரோ, மருத்துவமனைக்கு வரும் நோயாளியோ, நம்மை நாடி வருகிறவர்களின் தேவை அல்லது பிரச்னை என்னவென்று புரிந்துகொள்ள ஆர்வம் காட்டவேண்டாமா? சுரத்தே இல்லாது, வேறு வேலையில் ஈடுபட்டிருப்பது ஒருவரை அவமதிப்பதுபோல்தான். 2. அதே கிளினிக் இரவு ஒன்பது மணிவரை திறந்திருக்கும் என்று தெரிந்து, நான் போனபோது, எட்டே முக்கால் மணி. “கொஞ்சம் முன்னாலேயே வருவதற்கென்ன?” என்று ஒரேயடியாகக் கோபித்தாள் மருந்துகளை எடுத்துக் கொடுக்கும் பெண். இனி யாரும் வராவிட்டால், வீட்டுக்கு முன்னதாகவே போய்விடலாமே என்ற ஆசை அவளுக்கு. உடல்நலக்குறைவுடன் வருகிறவர்களிடம் இனிமையாகப் பேச அவளுக்குத் தெரியவில்லை. நிர்வாகத்தினர் சொல்லிக்கொடுக்கவும் இல்லை. 3. இரவில் ஒரு மளிகைக்கடைக்குப் போனபோது, கடை மூட அரைமணி இருந்தது. நாற்பது வயது மதிக்கத்தக்க கடைச் சிப்பந்தி, “கடைசி நிமிஷத்திலே வந்து உயிரை வாங்கறீங்களே!” என்று இரைந்தார்.   `நாள் முழவதும், குறைந்த சம்பளத்தில் வேலை செய்து, களைத்துப்போயிருக்கிறார், பாவம்!’ என்று புரிந்தது. இவரை எப்படிக் கோபிப்பது? “சாமான்கள் எங்கே இருக்குன்னு காட்டினா, நாங்களே எடுத்துக்கறோம்,” என்றேன். அவருடைய வேலை பாதியாகக் குறைய, இறுதியில், “இன்னிக்கு ரொம்ப வேலை,” என்றார், மன்னிப்புக் கேட்கும் வகையில்.   வாடிக்கையார்களை உற்ற நண்பர்கள்போல் நடத்தினால் வியாபாரம் செழிக்கும். 4. சில கடைக்காரர்கள் தாம் விற்கும் சாமான்களை ஒரேயடியாகப் புகழ்ந்து, வலுக்கட்டாயமாக நம் தலையில் கட்டப்பார்ப்பார்ப்பார்கள். “நான் இவ்வளவு சொல்கிறேன், உங்களுக்கு வேண்டாமா?” என்று ஒரு சீனர் இரைய, எரிச்சல் தாங்காது, “உங்களுக்குத்தான் இவ்வளவு பிடித்திருக்கிறதே! நீங்களே வைத்துக்கொள்ளுங்கள்,” என்று நடையைக்கட்டினேன். 5. நானும், மகளும் ஒரு கடையில் சாப்பிடும்போது, மடியில் இருந்த ஒருவயதுப் பேரனுக்கும் ஒரு வாய் ஊட்டினேன். “பிள்ளைக்கும் குடுத்தீங்களே!” என்று மூன்று பேருக்கான பணத்தைக் கேட்டான் அங்கு வேலை செய்துகொண்டிருந்தவன். சீக்கிரமே பெரும் பணக்காரனாகிவிடலாம் என்று எண்ணியிருப்பான். அதனால், கடைக்கு வரும் வாடிக்கையாளர்களுக்கு மரியாதை அளிப்பதன் முக்கியத்துவத்தை அவன் அறியவில்லை. (அதற்குப்பிறகு நாங்கள் அங்கு போகவில்லை. கடையையும் காணோம்). 6. எங்கள் வீட்டருகே, தன் வீட்டின் முன்பகுதியையே மளிகைக்கடையாக மாற்றி இருந்தார் அந்த மலாய்க்காரர். பாக்கிச் சில்லறை கொடுப்பதில் ஏமாற்றுவது, யாரும் பார்க்காத சமயத்தில் அழுகலான உருளைக்கிழங்கை அவர்கள் சாமான்களுடன் சேர்த்துப் போட்டுவிடுவது – இதிலெல்லாம் கைதேர்ந்தவர். எல்லாரிடமும் எரிந்துவிழுவார். அந்த இடமே அசுத்தமாக இருக்கும். யாரோ புகார் செய்ய, `இப்பகுதியில் உள்ள வீடுகளில் கடை வைத்துக்கொள்ள அனுமதி இல்லை. வேறு இடத்திற்குப் போகவும்,’ என்று அரசாங்க சார்பில் கடிதம் வந்திருந்தது. சில வார்த்தைகள் புரியாது, என்னை விளக்கும்படிக் கேட்டுக்கொண்டார். “பொறாமை!” என்று புகார் செய்தவர்களைத் திட்டினார். ஆனால், அன்றிலிருந்து என் குடும்பத்தினருக்கு அலாதி மரியாதை. நான் அவருக்குக் கற்றுக்கொடுத்த ஆசிரியை ஆயிற்றே! சிறு லாபம், கடுமையான உழைப்பு பொதுவாக, எந்தத் துறையானாலும், பிரதிபலனை எதிர்பார்க்காது நேர்மையான வழியில் சென்றால் என்றாவது பலன் கிடைக்கும். லாபம் சிறிதாக இருந்தாலும் அதற்காக கடுமையாக உழைப்பது வியாபாரத்தில் முன்னுக்கு வரும் வழி. சில கடைகளில் சிப்பந்திகள் எல்லாரும் சிரித்த முகமாக இருப்பார்கள். நமக்கு வேண்டிய பொருள் இன்னதென்று கோடி காட்டினாலே போதும். புரிந்துகொள்வார்கள். அவர்கள் முதலாளியால் நல்லவிதமாக நடத்தப்படுகிறார்கள் என்று அவர்களுடைய பணிவிலிருந்தும், வேலையில் அவர்கள் காட்டும் ஆர்வத்திலிருந்தும் நாம் புரிந்துகொள்ளலாம். கதை தமிழ்நாட்டிலிருந்து வந்த சாப்பாட்டுக்கடை சிப்பந்தி வேலு. ஐம்பது வயதிருக்கும். ஒரு மாலை வேளையில், நான் அங்கு போயிருந்தபோது, அவர் முகம் சிடுசிடுவென்று இருந்தது. “ரொம்ப வேலையா?” என்று கேட்டேன், மெல்ல. `நம் நலனில்கூட ஒருவர் அக்கறை காட்டுகிறாரே!’ என்ற நிறைவுடன், தன் கஷ்டங்களை என்னிடம் பகிர்ந்துகொண்டார். காலை ஏழு மணியிலிருந்து இரவு ஒன்பதுவரை வேலை. அதன்பின், கணக்குவழக்கைப் பார்க்கவேண்டும். சாப்பாடு இலவசம் என்றாலும், குடும்பத்தைவிட்டு, தனியாக அயல்நாட்டில் உழைப்பது எளிதல்ல. வந்துவிட்டாலோ, புதிய வாழ்க்கைக்குத் தன்னைப் பழக்கிக்கொள்ள வேண்டியதுதான். எரிச்சலுடன் செயல்பட்டால், பணம் கிடைத்தாலும், மகிழ்ச்சியும் நிம்மதியும் கிடைக்குமா?     11. குழந்தைகளுடன் பழகுவது   `எல்லாரும் வீட்டுக்குள்ளேயேதான் இருக்கவேண்டும் வெளியில் தலைகாட்டினால் தண்டனை!’ உலகெங்கும் பரவியிருக்கும் தொற்றுநோயைத் தடுக்க பல நாடுகளிலும் அமலாக்கப்பட்ட சட்டம் இது. இதை ஒட்டி வலைத்தளங்களில் வெளியான துணுக்கு ஒன்றில், குழந்தைகளும், வீட்டு வளர்ப்பு நாயும் ஓடிப் பிடித்துக்கொண்டிருக்க, சத்தம் தாங்கமுடியாததாக இருக்கும். `நான் என் அலுவலகத்துக்குப் போகிறேன்,’ என்று சொல்லிவிட்டு, அப்பா தன் மடிக்கணினியுடன் கழிவறைக்குப்போய் கதவைச் சார்த்திக்கொள்வார்! சாதாரணமாகவே, குழந்தைகளை அவர்கள் போக்கில் விட்டுவிட்டு, அவர்களை எப்படி `கட்டி மேய்ப்பது’ என்று புரியாத பல பெற்றோரின் நிலை இதுதான். “விடுமுறை வந்தாலே எனக்குப் பிடிப்பதில்லை. `அம்மா, அம்மா’ என்று என் குழந்தைகள் ஏதாவது கேள்வி கேட்டு, பிராணனை வாங்கும்”. இப்படிச் சொன்னவள் என் சக ஆசிரியை. `மாணவிகளைக் கேள்வி கேட்பதே நிம்மதி,’ என்ற மனப்பக்குவம் கொண்டவள். பலரும் அவளை ஒத்துப்பாடினார்கள். “இந்த மூன்று, நான்கு வயதுக் குழந்தைகள் எப்போதடா பெரிதாகப் போவார்கள் என்றிருக்கிறது! அவர்கள் கேட்கும் கேள்விகள்!” “எனக்கு அந்தப் பருவம்தான் மிகவும் பிடிக்கும்,” என்றேன் நான். “எங்கள் குழந்தைகளை உன்னிடம் அனுப்புகிறோம். நீ அவர்களுடன் பேசிக்கொண்டிரு,” என்று சிரித்தார்கள். படிக்கத் தெரியாத அந்த வயதில், தமக்குத் தெரியாதவற்றைக் குழந்தைகள் வேறு எப்படித்தான் அறிந்துகொள்வார்கள்? இப்போதெல்லாம் இரண்டு வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளின் கையில் பொம்மையோ, பம்பரமோ இருப்பதைக் காண முடிவதில்லை. அம்மாவுடைய கைத்தொலைபேசி அல்லது ஐ பேட்தான் அவர்கள் கையின் ஓர் இன்றியமையாத அங்கமாக விளங்குகிறது. நாகரீகமான யுகம் என்பதால் மட்டுமல்ல. ஏதாவது திரையை வெறித்துக்கொண்டிருந்தால் குழந்தைகள் நம்மைத் தொந்தரவு செய்யாது, அதிலேயே ஆழ்ந்து போயிருப்பர், நாம் நிம்மதியாக இருக்கலாம் என்றெண்ணி, தம் பொறுப்பைத் தட்டிக்கழிக்க நினைக்கும் பெரியவர்கள்தாம் இந்த வாழ்க்கைமுறையின் முக்கிய காரணம். இப்படி வளர்கிறவர்கள் பெற்றோரைவிட திரையில் தாம் காண்பவர்களிடமிருந்துதான் கற்கிறார்கள். பொழுதுபோக்கிற்காகத் தயாரிக்கப்படும் படங்களில் உண்மையான வாழ்க்கை வெளிப்படுமா? SESAME STREET போன்ற கார்ட்டூன்களால் ஆங்கில மொழி அறிவு வளரும். குழந்தைக்குப் பக்கத்தில் உட்கார்ந்து, திரையில் காண்பதை விளக்கினால், மொழியுடன் உறவும் பலப்படுமே! (நான் அப்படிச் செய்ய, மூன்று வயதிலேயே `காமிக்ஸ்’ படங்களைச் செய்தித்தாட்களில் படித்துப் புரிந்துகொண்ட குழந்தைகளும் உண்டு).   குழந்தைக்கும் உணர்ச்சி உண்டு ஐந்து மாதக் குழந்தைக்குக்கூட அழுகை, சிரிப்பு மட்டுமின்றி, பிற உணர்ச்சிகளையும் வெளிக்காட்டத் தெரியும். கதை `குழந்தை என்ன இவ்வளவு குண்டாகிவிட்டது! இடுப்பெல்லாம் ஒரே சதை,’ என்று குழந்தையின் தந்தை அயர, தாயும் ஒத்துப்பாடினாள். `இதுக்கு எப்பவும் பசி. பசி வந்துட்டா ஒரேயடியா அலறும். உனே பால் கொடுக்கணும். குண்டாகாம எப்படி இருக்கும்?’ இந்த ரீதியில் அவர்களது பேச்சு தொடர, குழந்தையின் முகத்தில் சோகம். தன்னைப்பற்றி குறையாக ஏதோ பேசுகிறார்கள் என்றவரை புரிந்திருக்கும். “குழந்தைக்கு ஒரே வருத்தம். அதை வைத்துக்கொண்டு ஏன் இப்படிப் பேசுகிறீர்கள்?” என்று அங்கிருந்த நான் அதட்டினேன். தாய் திடுக்கிட்டு, அதன் முகத்தைப் பார்த்தாள். “நீ எப்படி இருந்தாலும் எனக்குப் பிடிக்கும்பா!” என்று சமாதானத்துக்கு இறங்கினாள். அழுகை பலவிதம் பசி, தூக்கம், ஈர உடையை மாற்ற என்று ஒவ்வொரு தேவையையும் வெவ்வேறு விதமான அழுகையால் வெளிப்படுத்துவார்கள் குழந்தைகள். உண்மையான அன்பு என்பது அவர்களுடைய தேவையை குறிப்பால் உணர்ந்து, வேண்டுவதை உரிய காலத்தில் செய்வது. கதை என் தோழி தேவி காதலித்து, எதிர்ப்புகளைச் சமாளித்துக் கல்யாணம் செய்துகொண்டவள். விரைவிலேயே, சூதாடும் அவனுடைய போக்கு ஆத்திரத்தை ஊட்டியது. தன் குழந்தைமேல் அதை வெளிப்படுத்தினாள். “பிள்ளையை பேயாட்டம் போட்டு அடிக்கும்!” என்று தேவியின் தாய் என்னிடம் முறையிட்டாள். அவளுடைய ஆதரவில் இருந்த தாய்க்கு மகளைத் தடுக்கும் துணிவு இருக்கவில்லை. “எதுக்கு அடிக்கிறது! பேசிப் புரிய வையேன்,” என்றேன். “பேசினா விளங்காதே!’ என்று சலித்துக்கொண்டாள். சின்னஞ்சிறு குழந்தைக்கும் உணர்ச்சிகள் உண்டு என்று புரிந்து, அவனையும் ஒரு பொருட்டாக மதித்து அவள் பேசியிருந்தால்தானே! `ஒன் வயசு இப்போ நாலு மணி நேரமா! எவ்வளவு பெரியவனாகிவிட்டே!’ என்று அன்றுதான் பிறந்த குழந்தையைக் கொஞ்ச, அதற்கு என் தொனி புரிந்து சிரித்தது. (நான்கு வருடங்கள் கழித்து, `எனக்கு நாலு வயசு!’ என்று ஒவ்வொருவரிடமும் பெருமையாகப் பலமுறைச் சொல்லிக்கொள்வான். அவர்கள் கண்களைக் குத்தாத குறையாக அவனுடைய நான்கு விரல்கள் விரியும்). நாம் பேசுவது புரிந்துதான் சிரிக்கிறதா, இல்லை, நம்மைக் கவனிக்கிறார்களே என்ற பெருமிதத்துடன் சிரித்துவைக்கிறதா? என்னுடைய இந்தக் கேள்விக்கு இதுவரை எந்தக் குழந்தையும் பதில் சொல்லவில்லை. நீட்டி முழக்கி, குழந்தைபோலவே பேசுவதுதான் அதன் மொழி. அருகிலிருக்கும் பெரியவர்கள் பேசிக்கொண்டிருந்தாலும், அப்பேச்சு ஒரு சிசுவின் கவனத்தைக் கவராது. எப்படிப் பேசுவதோ? குழந்தைகளுக்குப் பதில் சொல்லத் தெரியாது என்ற நிலையில், கேள்விகளை அடுக்கக்கூடாது. நம் கேள்வியிலேயே பதிலும் அடங்கியிருக்க வேண்டும். `நீலச் சட்டை போட்டிருக்கியா? ஜோரா இருக்கே!’ நம் பாராட்டில் குழந்தை அகமகிழ்ந்து சிரிக்கும். அதட்டலாகப் பேசினால், உதடு விம்ம அழுகை எட்டிப்பார்க்கும். வார்த்தைகள் புரிகிறதா, அல்லது தொனியா? பேச வந்தாலும் கஷ்டம்தான் குழந்தைகளுக்கு மொழிவளம் வந்தால் புத்தி கூர்மையாகும் என்று நிறையப் பேசுகிறோம். அதுவே சில சமயம் தொந்தரவாகிவிடுகிறது. வாய் ஓயாமல் பேசுவார்கள். ஒரு முறை, என் மகளைக் கண்டித்தேன். “சும்மா தொணதொணன்னு பேசாதே!” சில நாட்களுக்குப்பின், நான் அவளிடம், “குளி, வா!” என்று அழைத்தேன். அவள் கவனிக்காதமாதிரி இருந்தாள். இன்னொரு முறை கூற வேண்டியிருந்தது. “தொணதொண பேசறே!” என்று என்னிடம் குற்றம் கண்டுபிடித்தாள் மூன்று வயது மகள்! நாம் செய்வது, சொல்வது எல்லாம் நமக்கே திரும்பி வரும். அதனால், கவனமாக இருக்கவேண்டும். தொலைக்காட்சியில் குழந்தைகள்   தொலைக்காட்சியில், மூன்று, நான்கு வயதுக் குழந்தைகளை வைத்து நிகழ்ச்சிகள் நடத்துகிறார்கள்.   வேடிக்கை என்று நினைத்து, தொலைக்காட்சி நிகழ்ச்சியை நடத்துபவர்களிடம் மரியாதையின்றி, வயதுக்குமீறி பேசுகிறார்கள் அக்குழந்தைகள். (`நான்தான் அழகு. நீங்க அசிங்கமா இருக்கீங்க’).   பெற்றோர் பெருமையாகச் சிரிக்கிறார்கள். அவையினரும் அதிர்ச்சியை வெளிக்காட்டும் தொகுப்பாளரின் முகத்தைப் பார்த்துச் சிரிக்கிறார்கள். “எங்கப்பா வேஸ்ட். எப்பவும் சித்தியைக் கூட்டிக்கிட்டு வெளியே போயிடுவார்,” என்று ஒரு குழந்தை கூற, அந்த அப்பாவின் முகத்தில் அசடுவழிந்தது. இந்தமாதிரி வார்த்தைகளை உபயோகிக்க குழந்தைகள் யாரிடம் கற்றிருப்பார்கள்? `நான் தொலைக்காட்சியில் தலைகாட்டிவிட்டேனே!’ என்ற பெருமிதத்துடன், பிறரை மதிக்கத்தெரியாது வளர்கிறார்கள் எதிர்கால சந்ததியினர்.   இவர்களை இப்படி வளரவிட்டது யார் தவறு? கதை ஏதோ விசேஷத்திற்காக என் உறவினரது வீட்டில் நிறைய பெண்கள் கூடியிருந்தார்கள். வழக்கம்போல், அருகில் இல்லாத பிற பெண்களைப்பற்றி – உறவினர்களோ, தெரிந்தவர்களோ -- அவதூறாகப் பேசிக்கொண்டிருந்தார்கள். பத்துவயதுப் பையனான சிவா அங்கே உட்கார்ந்திருந்ததை அவர்கள் லட்சியம் செய்யவில்லை. சிரித்தபடி சுவாரசியமாக அவர்களை வம்பைக் கேட்டுக்கொண்டிருந்தான் சிறுவன். “இப்படித்தான் குழந்தைகள் கெட்டுப்போகிறார்கள்!” என்று ஆக்ரோஷமாகக் கத்தியபடி, ஐம்பது வயதான உறவினர் வந்து, செத்த எலியை அருவருப்புடன் தூக்கி எறிவதுபோல, சிவாவின் காதைப் பிடித்து வெளியே இழுத்துக்கொண்டு போனார். அவன் வயதில் நானும் அப்படி எத்தனையோ கதைகளைக் கேட்டிருக்கிறேன். ஆனால், ஒரு விதி: பெரியவர்களின் பேச்சு காதில் விழாதமாதிரி இருந்துவிடவேண்டும். சற்று விவரம் புரிந்ததும், எனக்கு நிறைய பேருடைய அந்தரங்க வாழ்க்கை, அதிலுள்ள அவலம், புரிந்தது. கதைகளுக்கான கருவை வெளியே தேடும் அவசியம் குறைந்தது. இப்படி வளர்ந்த ஒரு சிறுமியை, `உனக்கு எப்படி இத்தனை விஷயங்கள் தெரிகிறது!’ என்று ஆச்சரியப்பட்டுக் கேட்டபோது, `அப்பாவும் அம்மாவும் பேசறதைக் கேட்டுண்டே இருப்பேன். குறுக்கே பேசாட்டா, திட்டு விழாது!’ என்றாள்!   12. குடும்பச் சுற்றுலா   “அடுத்தமுறை, உலகத்தைச் சுற்றிப் பார்க்கப் போகும்போது, என்னையும் அழைத்துப் போகிறாயா?” கேட்டது என் எட்டு வயதாகியிருந்த பேரன். நான் எங்காவது அயல்நாடு போய்விட்டு, கதைகதையாகச் சொல்வதைக் கேட்டு, அவனுக்கும் ஆர்வம் பிறந்திருந்தது. அப்படி என்ன கதை? தற்போது கிழக்கு மலேசியா என்று அழைக்கப்படும் போர்னியோ காட்டுக்கு என் மகளுடன் சென்றிருந்தேன். காட்டில் ஆங்காங்கு சிறு குடில்கள். ஜன்னலோரமாக வைத்திருக்கும் வாழைப்பழத்தை வெளியிலிருந்து உரிமையுடன் எடுத்துச் சாப்பிடும் குரங்குகள். குடிலுக்கு வெளியே இருந்த மரத்தில் பின்னிப் பிணைந்த நாகம். இவையெல்லாம் நகர்ப்புறத்தில் காணக் கிடைக்காத அனுபவங்கள். `இங்கு குழாய்த்தண்ணீர் சிவப்பாக இருக்கும். மரங்களின் வேரால் அப்படி ஆகிறது. ஆனால், சுத்தமான நீர்தான்,’ என்று முதலிலேயே எச்சரிக்கை விடுத்திருந்தார்கள். குளியலறைக்குப் போனவள், அங்கு ஒரு தவளை இருப்பதைக் கண்டு, வெளியே ஓடி வந்தேன். `வேண்டுமென்றுதான் ஒவ்வொரு குளியலறையிலும் ஒன்றை விட்டிருக்கிறோம். அப்போதுதான் கொசுத்தொல்லை இருக்காது!’ என்ற விளக்கம் கிடைத்தது. `தவளையை மிதித்துத் தொலைக்கப் போகிறோமே!’ என்று பயந்தபடி குளிக்க வேண்டியிருந்தது. JUNGLE TREKKING என்று காட்டு வழியில் நடப்பதற்குப் புறப்பட்டேன். அதுதான் முதன்முறை. என்ன எதிர்பார்ப்பது என்று புரியாததால் உற்சாகமாக இருந்தது. என்னைப்போன்ற அனுபவமற்றவர்களுக்கு என்று ஒன்று, இரண்டு என்று பாதைகளின் எண்களைக் குறித்திருந்தார்கள். முதல் பாதையில் ஆரம்பித்தேன். பாதி வழிக்குள் எப்படியோ, நான்காவது பாதைக்கு மாற்றி அழைத்துப் போய்விட்டாள் மகள். மொத்தமே ஐந்துதான். இந்தக் கடினமான பாதையில் ஒரு மரக்கிளையிலிருந்து அடுத்த நிலைக்குக் குதிக்க வேண்டும். இடையே ஒரு மீட்டர்! எனக்கோ, அறுபது வயது. அப்படியே மலைத்துப்போய் உட்கார்ந்திருந்தேன். “’யோசிச்சுப் பாரும்மா. இந்த நிமிடம் போர்னியோ காட்டில் மரங்களின்மீதும், மலைப்பாதைகளின்மேலும் ஏறி, இறங்கும் இந்தியப்பாட்டி நீ ஒருத்தியாகத்தான் இருப்பாய்!” “பயமாக இருந்தாலும், அக்காரியத்தைச் செய்துவிட்டால், பயம் போய்விடும்,” என்றெல்லாம் பலவாறாக மகள் சமாதானப்படுத்த, நீண்ட மூச்சை இழுத்துப் பிடித்துக்கொண்டு குதித்தேன். என்னைத் தனியாகத் திரும்பிப்போகச் சொல்லிவிட்டு, என் மகள் மீண்டும் ஏறினாள். நான் போகும் வழியில் ஒரு PROBOSCIS குரங்கு உட்கார்ந்திருந்தது. பெரிய உருவம். தும்பிக்கைபோல் ஒன்று. நட்டநடுவிலா இப்படி உட்கார்ந்திருக்கும்! இம்மாதிரி தருணங்களில்தான் பக்தி அதிகரித்துவிடுகிறது. நான் அதற்கு மிக அருகில் நடந்துபோனேன். அது கவனிக்கவேயில்லை. சில சமயங்களில் நாம் அடையும் அச்சம் அனாவசியம் என்று புரிந்தது.    அடுத்த சில மணி நேரம், நாற்காலியில் உட்கார்ந்திருந்த நிலையிலும் என் கால்கள் தாமாக ஆடியபடி இருந்தன. `நமக்கு ரொம்பத்தான் வயதாகிவிட்டது போலிருக்கிறதே!’ என்று எழுந்த கவலை அதேபோல் பக்கவாட்டில் கால்கள் ஆட நடந்த இரு இளம்பெண்களைப் பார்த்ததும் சிரிப்பாக மாறியது. முன்பின் பழக்கமில்லாமல் ஒரு காரியத்தில் இறங்கினால் எதை எதையோ சந்திக்க வேண்டியிருக்கும். நேபாளத்தில் காட்மாண்டுவின் தென்மேற்குப் பகுதியில் இருந்த சிட்வான் (CHITWAN) என்ற இடத்திற்குப் போனோம். அக்காட்டில் யானைகளை வளர்க்கிறார்கள். ஒரு யானைமேல் கால்களை இரு பக்கங்களிலும் தொங்கவிட்டு அமர்ந்தபடி காட்டினூடே பயணம் செய்தது மறக்க முடியாத அனுபவம். அவ்வப்போது, `எல்லாரும் முன்னால் நகருங்கள்,’ என்று அதன்மேல் அமர்ந்திருந்த நால்வரிடம் உத்தரவு பிறப்பிப்பார் யானைப்பாகன். அடுத்து, யானை ஒரு மேட்டிலிருந்து குதித்து, ஆற்றுக்குள் நடக்கும். பயமும் மகிழ்ச்சியும் போட்டி போட்டுக்கொண்டு எழுந்தன. அங்கு விதவிதமான பறவைகள், அசையாது, இறந்ததுபோல் கிடந்த முதலைகள். வழியில் ஒரு குட்டி யானை அம்மாவின் அடியிலிருந்த நிழலில் படுத்து சுகமாகத் தூங்கிக்கொண்டிருந்தது. சற்று வளர்ந்தபின்னர், அதையும் பழக்குவார்கள் என்று கேட்டபோது வருத்தமாக இருந்தது. இன்னொரு குட்டி அதன் ஆகாரமான தழைகளை மணலில் புரட்டி, அதைத் தன் தலைமேல் தட்டிக்கொண்டது. தன் தாய் செய்வதைப் பார்த்துக் கற்றுக்கொண்டிருக்கும். அடுத்து, வாயில் போட்டுக்கொள்ள வேண்டும் என்பது புரியாது, மீண்டும் மணலில் புரட்டி எடுத்து, தலையில் தட்டி, என்று திரும்பத் திரும்ப அதே காரியத்தைச் செய்தது எங்களை பரிதாபப்படவும், சிரிக்கவும் வைத்தது. நீண்ட யானைச் சவாரிக்குப்பின் இறங்கவே சிரமப்பட்டேன். காலில் தசைநார் கிழிந்துபோக, ஆறுமாத காலம் நொண்டியபடிதான் நடக்க முடிந்தது. `செலவு, நோய்நொடி எல்லாவற்றையும் தவிர்க்க இருக்கும் இடத்திலேயே சௌக்கியமாக இருக்கலாமே!’ என்று பார்த்தால் முடியுமா? வீட்டில் செய்த காரியத்தையே செய்துகொண்டிருப்பது சலிப்பைத்தான் தரும். முன்னேற்பாடாக, தேவைப்படும் ஆடைகளையோ, மருந்துகளையோ எடுத்துக்கொண்டு போகவேண்டியதுதான். (நீண்ட பயணத்திற்கு உலர்ந்த திராட்சையை அவ்வப்போது மென்றால், சோர்வு ஏற்படுவதில்லை. சிசுக்களை விமானத்தில் அழைத்துச் செல்லும்போது அவர்கள் காதில் பஞ்சை அடைத்தால், ஓயாமல் கதறி அழமாட்டார்கள்). உணவு, உறக்கம் என் `சாதனை’களைக் கேட்ட பின்னர், தானும் இம்மாதிரியான சாகசங்களை எதிர்கொள்ள வேண்டும் என்ற ஆர்வம் ஏற்பட்டது என் பேரனுக்கு. எனக்குத் தயக்கமாக இருந்தது. “நீ சாப்பிடப் படுத்துவாயே! வெளியில் என்ன கிடைக்கிறதோ, அதைத்தான் சாப்பிட வேண்டியிருக்கும்”. மறுநாளிலிருந்து வீட்டில் என்ன சமைக்கிறோமோ, அவைகளையெல்லாம் `பிடிக்காது, பழக்கமில்லை,’ என்றெல்லாம் வழக்கம்போல் ஒதுக்காது, மிளகாய் வற்றல், கறிவேப்பிலையைக்கூடச் சாப்பிட ஆரம்பித்தான்! நீண்ட பயணத்தின்போது தூங்கினால்தான் இறங்கியபின்னர் உற்சாகத்துடன் சுற்றிப்பார்க்க முடியும். ஓயாமல் பேசிக்கொண்டோ, விளையாடிக்கொண்டோ சென்றால், ஊரைச் சுற்றிப் பார்க்கும்போது உடல் களைத்து, எதையும் சரியாகப் புரிந்துகொள்ள இயலாது. குழந்தைகளுக்கு லஞ்சம் பல மணி நேரம் ஒரே இடத்தில் உட்கார்ந்து பயணம் செய்ய நேரிட்டால், சிறுவர்களுக்குப் பொறுமை மீற, நமக்கு அவர்களை சகிக்க முடியாது போய்விடும். “பேசாம இருந்தா, அடுத்த தடவை கார் நிக்கறபோது, ஒனக்கு ரெண்டு ஐஸ்க்ரீம் வாங்கித் தரேன்,” என்று ஆசை காட்டுவேன். சொன்ன சொல்லைக் காப்பாற்ற வேண்டும். உண்மை பேசும் குணமும் தானே வரும். “ஒனக்கு மட்டும்தான் ரெண்டு!” என்று, அவன் என்னவோ மிக நல்ல குழந்தை என்பதுபோல் சொல்லிக்காட்ட, அவனுக்குப் பெருமையாகிவிடும். பயணம் தொடரும்போது, முடிந்தவரை தொந்தரவு கொடுக்காது இருப்பான். குழந்தைகளுடன் சுற்றுலா போவதால் நன்மை அவர்களுக்கு மட்டுமல்ல. `வெளியூருக்குப் போனா, மத்தியானம் தூங்க வேண்டாம்னு அம்மா சொல்லிட்டா!’ என்று நான்கு வயதில் என் மகள் குதூகலித்தது எனக்கு இன்னும் நினைவிருக்கிறது. அறிவு முதிர்ச்சி புதிய இடங்களில் பழக்கமில்லாத மொழி, கலாசாரத்தைப்பற்றி அறிவது அறிவு முதிர்ச்சியை அளிக்கிறது. அதிகாரம் செய்வதைவிட மரியாதையாகப் பிறரை நடத்துவது நல்ல பலனை அளிக்கும் என்று புரிந்துபோகிறது. நம்மிடமிருந்து மாறுபட்ட எவரையும் ஏற்கும் குணம் வருகிறது. வீடு திரும்பியபின், எந்த வயதினரும் எப்போதும் செய்துவந்த காரியங்களைச் செய்ய உற்சாகம் காட்டுவார்கள். காலப்போக்கில், பெற்றோரைவிட்டு வெகுதொலைவு சென்றாலும், சிறுவயதில் குடும்பத்துடன் கழித்த சில தருணங்கள் நினைவில் நிலைத்து, மகிழ்ச்சியைத் தரும். அவை வாழ்க்கையில் ஏற்படும் இடர்களால் ஒரேயடியாக இடிந்து போய்விடாது நம்மைக் காக்கும்.   13. குடும்பத்தினருடன் நெருக்கமா!   நூறு வருடங்களுக்கு ஒருமுறை வரும் பேரிடர்கள் நாம் மறந்துவிட்ட முக்கியமான ஒன்றை உணர்த்துகின்றன. சொத்து, சுகம், தொழில் என்று எவ்வளவுதான் இருந்தாலும், ஆபத்து சமயத்தில் உதவவோ, அனுசரணையாக இருக்கவோ குடும்பத்தினர், நெருக்கமான உறவினர்கள்போல் எவரும் கிடையாது. தற்போது, உலகிலுள்ள பல நாடுகளிலும் தொற்றுநோய் பரவாமலிருக்க மனிதர்கள் வீட்டுக்குள்ளேயே இருக்கவேண்டிய நிலை. `எப்போதும் நம்முடன் இருப்பவர்களேதாமே!’ என்ற அலட்சியத்துடன் பலர் தம் குடும்பத்தினரைக் கவனிப்போதோ, அவர்களுடன் அதிகம் பேசுவதோ குறைந்துவிட்டது. இந்த நிலையில் அவர்களுடன் மட்டுமே நாள் முழுவதும் புழங்கவேண்டும் என்ற கட்டுப்பாடு பலருக்குத் தண்டனைபோல்தான். `என் வீட்டில் நிம்மதியே கிடையாது!’ என்பவர்கள் அன்பு, மகிழ்ச்சி இவைகளால் கிடைக்கக்கூடிய நிம்மதி நாம் பிறருக்கு அளிப்பதைப் பொறுத்திருக்கிறது என்பதை உணர்வதில்லை. குடும்பத்தில் சிறு சிறு சச்சரவுகள் ஏற்படுவது இயற்கை. குடும்பத் தலைவரோ, தலைவியோ தான் சொல்வதையே எல்லாரும் கடைப்பிடிக்கவேண்டும் என்று எதிர்பார்த்தால் யாருக்குத்தான் நிம்மதி கிடைக்கும்? ஹிட்லரைப் போன்றவர்களைப்பற்றிப் படித்திருக்கிறோம். குடும்பத்திலும் இப்படிப்பட்ட சர்வாதிகாரிகள் இருக்கிறார்கள். எல்லா நாடுகளிலும், இனங்களிலும். ஒரு சூழ்நிலையிலிருந்து வித்தியாசமான ஒன்றிற்கு மாறுகையில், `என் பழக்க வழக்கங்கள்தாம் சிறந்தவை!’ என்று வலுக்கட்டாயமாக அவைகளைத் தம் சந்ததியினரிடம் புகுத்துவது பலரது வழக்கம். இதனால் பாதிப்பு என்னவோ இளைய தலைமுறையினருக்குத்தான். கதை எங்கள் குடும்ப நண்பர் சண்முகம் தன் தங்கைக்கு மனநிலை சரியாக இல்லை என்று வருத்தத்துடன் தெரிவித்தார். அதில் அலுப்பும் தென்பட்டது. செலவாகிறதே என்று இல்லை. “உண்மையைச் சொல்கிறேன். எங்கப்பாதான் இதற்குக் காரணம். அவர் தோட்டப்புறத்திலிருந்து நகரத்துக்கு வந்தவர். ஆனால், இன்றும், அவர் சிறுவயதில் கடைப்பிடித்த பழக்கவழக்கங்களை நாங்களும் பின்பற்ற வேண்டும் என்று எதிர்பார்த்தால் எப்படி!” என்று புலம்பினார் என்னிடம். உத்தியோகம் புருஷ லட்சணம் என்று சொல்லி வைத்திருக்கிறார்கள். அன்றாடம் செய்வதற்கு உருப்படியாக எந்த வேலையும் இல்லாவிட்டால் மனம் எந்த நிலைக்கு ஆளாகும்? இதோ ஒரு கதை. தந்தைதான் பெரும்பொருள் சேர்த்து வைத்திருக்கிறாரே, உத்தியோகத்திற்கு வேறு போய் சம்பாதிக்க வேண்டுமா என்று வீட்டிலேயே இருந்து காலத்தைக் கழிக்க எண்ணினார் வெங்கட்ராமன்.   நண்பர்களிடம் இனிமையாகப் பேசுவார். வீட்டுக்கு வெளியில் பலருக்கும் இவரைப் பிடித்திருந்தது. வீட்டிலோ! `தனக்குத்தான் எல்லாம் தெரியும்,’ என்ற மிதப்புடன், மகன் சங்கர் செய்யவேண்டிய ஒவ்வொரு காரியத்தையும் விளக்குவார். தந்தையே செய்து காட்டியிருந்தால், தானே அதைப்போல் செய்திருப்பான். அவன் குடும்பத்துக்கு மூத்த மகன் ஆதலால் இயற்கையிலேயே பொறுப்புணர்ச்சி மிக்கவன். மகனுக்குச் சுயபுத்தியே கிடையாது என்று நிச்சயித்தவர்போல் அவர் நடந்துகொண்டது, சங்கரைத் தன் திறமையையே சந்தேகிக்க வைத்தது. அவன் அடைந்த பலவீனத்தால் அவருடைய அதிகாரம் அதிகரித்தது. எப்படியெல்லாம் கையாண்டால் அவனை அதிகமாகத் துன்புறுத்தலாம், அவனுடைய பயம் அதிகரிக்கும் என்று யோசித்தவர்போல், வார்த்தைகளை வீசுவார். `நீ செய்து கிழித்தாய்!’ என்ற கேலி, `நான்தான் சொன்னேனே, உன்னால் முடியாதென்று!’ என்ற ஏளனம். அவரையே தன் முன்மாதிரி என்று எண்ணியதால், அவர் சொல்வதில் உண்மை இருக்கும் என்று நம்பும் நிலைக்குத் தள்ளப்பட்டான் சங்கர். தந்தையை எதிர்த்து நிற்க முடியாத நிலை. இருபத்தைந்து வயதானபோதும், அவனைச் சிறுபிள்ளைபோலவே நடத்தினார். வேலை முடிந்து, அவன் நேராக வீடு திரும்பவேண்டும். சற்று தாமதமானால், நெடுநேரம் வசவு தொடரும். வெங்கட்ராமனைப்போன்ற சர்வாதிகாரிகள் மாற மாட்டார்கள். தாம் செய்வதுதான் சரியென்று வாதாடுவார்கள். `என்மேல் எந்தத் தவறும் இல்லை,’ என்று புரிந்து, அவர்கள் கையில் சிக்கிக்கொண்ட அபாக்கியவான்கள் தாமே விலகினால்தான் உண்டு. ஆனாலும் அது எளிதல்ல. துணிச்சல் அறவே பறிக்கப்பட்ட நிலையில், வாழ்நாள் முழுவதும் பிறருடன் பழகுவதில் கலக்கம்தான் விளையும். சரித்திர சர்வாதிகாரிகளின் பரம்பரை ஹிட்லருக்குக் குழந்தைகள் கிடையாது. அவருடைய தந்தையின் முதல் மனைவிமூலம் பிறந்த ஐந்து சகோதர சகோதரிகளும் தமது பரம்பரை தொடரக்கூடாது, ஹிட்லரின் மரபு அவர்களிடம் இருந்துவிடக்கூடும் என்ற பயத்தில் அதை ஒழிக்க எண்ணி, குழந்தைகளே வேண்டாம் என்ற முடிவுக்கு வந்துவிட்டார்களாம். கம்போடியாவின் KILLING FIELDS பற்றிக் கேள்விப்படிருப்பீர்கள். 20,000 பேர் சித்ரவதை செய்யப்பட்டு, தூக்கிலிடப்பட்டனர். சுற்றுப்பயணிகளின் பார்வைக்காக அவர்களுடைய மண்டையோடுகளை குவித்து வைத்திருப்பதை நேரில் பார்த்தபோது, எனக்கு அளவில்லா கலக்கம் ஏற்பட்டது. நாற்பத்து ஐந்து ஆண்டுகளுக்குமுன் நடந்த படுகொலையாக இருந்தால் என்ன! ஒரு மனிதனின் ஈவிரக்கமற்ற செயலால் விளைந்த பாதிப்பு இன்றும் அதிர வைக்கிறது. இந்த வதைக்குக் காரணமாக இருந்தவர் POL POT. இப்போது, இவருடைய மகள் நெல் பயிரிடும் விவசாயி. ருஷ்யாவின் ஸ்டாலின், இத்தாலியின் முஸ்ஸோலினி ஆகிய கொடுமைக்கார சர்வாதிகாரிகளின் வழித்தோன்றல்கள் கலைத்துறையில் ஈடுபட்டிருக்கிறார்கள். நாடுகளை விடுங்கள்! குடும்பத்தில் ஏன் ஒருவர் சர்வாதிகாரியாகச் செயல்படுகிறார்? கதை1 ஒருவரோடு இணைந்து தொழிலில் இறங்கியவர் முருகேசன். அந்த `நண்பர்’ பணத்தைச் சுருட்டிக்கொண்டு போனதால், முருகேசனுக்கு பெரும் நஷ்டம். பணப்பிரச்னை மட்டுமின்றி, குடும்பத்தினர்முன் ஏமாளியாக நிற்க வேண்டியிருக்கிறதே என்ற அவமானம். அதை மறைக்க, அவர்களை முந்திக்கொண்டார். உத்தியோகத்தில் வெற்றிநடை போட்ட மனைவியை `முட்டாள்’ என்று பழித்தார். அப்படியும் மனம் ஆறாது, தன் மகளையும் ஓயாது அதிகாரம் செய்தார். அவரது மனநிலை புரிந்து மனைவி அடங்கிப்போனாள். மகளுக்கோ தந்தைமேல் வெறுப்புதான் ஏற்பட்டது. பலர் முன்னிலையில் மரியாதை இல்லாது அவரிடம் பேச முற்பட்டாள். பேச்சு சுதந்திரம், கருத்துச் சுதந்திரம் எதுவுமின்றி அடிமைபோல் வாழ நேரிட்டால், தம்மை அவ்வாறு நடத்தும் குடும்பத் தலைவர்மீது ஆத்திரம் வராமல் என்ன செய்யும்? தன் பொறுப்பில் இருப்பவர்களைப் பாதுகாப்பதும், அவர்களுக்காக உழைப்பதும் ஒரு குடும்பத் தலைவரின் கடமை. அது புரியாது, `என்னை யாரால் எதிர்க்க முடியும்!’ என்ற திமிருடன் நடந்தால், பாதிக்கப்பட்டவர் மட்டுமின்றி, அக்குடும்பத்திலுள்ள அனைவருமே பாதிக்கப்படுவார்கள். கதை 2 ஒரு தெருவிபத்தில் மாட்டிக்கொண்ட கந்தசாமிக்கு கைவசம் இருந்த தொழில் போயிற்று. சுயவருமானமின்றி, மனைவியின் உழைப்பில் காலம் தள்ளவேண்டிய நிலை. மனம் நொந்து, தன் குடும்பத்தினரிடம் அதிகாரம் செலுத்த ஆரம்பித்தார். தன் மனம் நொந்ததுபோல், பிறரும் அவதிப்படவேண்டும் என்ற சிறுபிள்ளைத்தனமான வீம்பின் விளைவு அது. தான் ஒப்பாத காரியத்தை யாரும் செய்துவிடக்கூடாது என்று உறுதியாக இருந்தார் கந்தசாமி. எல்லாருக்கும் நிம்மதி பறிபோயிற்று. முருகேசன், கந்தசாமி இருவருமே தம்மை பலவீனர்களாக உணர்ந்தவர்கள். அதை மறைக்க, அதிகாரத்தை நாடினார்கள். வாழ்க்கையில் சறுக்குவது எவருக்கும் நடக்கக்கூடியதுதான். எப்படி மீண்டும் தலை நிமிரலாம் என்று யோசித்தால் நிலைமையை ஓரளவு சமாளிக்கத் தெம்பு வரும். கதை மைமூனாவுக்கு ஐம்பது வயது இருக்கும். பிரசவமான பெண்களுக்கும், பிறருக்கும் உடம்பு பிடித்துவிட்டு, அதில் கிடைக்கும் சொற்ப சம்பாத்தியத்தில் உடலை வளர்ப்பவள். “என் மகனுக்கு ஆண்குறி வளைந்திருக்கும். மருத்துவர் அறுவைச் சிகிச்சையால் அதை நேராக்கிவிட முடியும் என்றார். நான், `வேண்டாம்’ என்றுவிட்டேன். இவனும் எங்காவது போய்விட்டால், கடைசிக் காலத்தில் என்னை யார் வைத்துக் காப்பாற்றுவார்கள்?” என்று அவள் சொல்லிக்கொண்டே போனபோது, எனக்கு அதிர்ச்சிதான் ஏற்பட்டது. கணவன் தன்னை நிராதரவாக விட்டுப்போனதற்கு, தன்னையும் அறியாது மகனைத் தண்டிக்கிறாள்! தான் எவ்வளவு கஷ்டப்பட்டாலும், பிள்ளைகளுக்காவது நல்ல வாழ்க்கை அமையவேண்டும் என்று பொறுமை காத்து, அன்புடன் அவர்களை வளர்த்தால், அந்த அன்பைத் திருப்பிக் கொடுக்கமாட்டார்களா! `பலர் அப்படி நடப்பதில்லையே!’ என்கிறீர்களா? எது முக்கியம் என்பதை உணர்த்தவே சக குடும்பத்தினருடன் வீட்டைவிட்டு நகராது இருக்க மகுடத் தொற்றி வந்திருக்கிறதோ? அதிகாரப்போக்கு, அல்லது எதற்கெடுத்தாலும் சண்டை பிடிப்பது என்று இருந்தால், வாழ்க்கை நரகம்தான். எல்லாரும் ஒரேமாதிரி சிந்திக்க வேண்டியதோ, நடக்க வேண்டியதோ இல்லை என்று உணர்ந்து நடந்தால் எவரது சுதந்திரமும் பறிக்கப்படுவதில்லை. ஒருவருடைய ஆற்றலும் முழுமையாக வெளிப்படும். சில குடும்பங்களில் ஒவ்வொருவருமே சிறந்து விளங்குவதன் ரகசியம் இதுதான்.         14. பெண்ணுக்கு மரியாதை   “`பல ஆண்கள் பெண்களை மட்டமாக நடத்துகிறார்கள்’ என்று நீங்கள் எழுதுவதைப் பார்த்து எனக்கு ஆத்திரமாக இருக்கும். நீங்க எழுதறது உண்மைதான்னு இப்போ புரியுது. என் மகளை அவளுடைய கணவர் அப்படித்தான் நடத்துகிறார். வருத்தமா இருக்கு!” என்னைத் தொலைபேசியில் தொடர்புகொண்டு தெரிவித்தார் ஒரு பத்திரிகை ஆசிரியர். `ஆண்தான் மேலானவன்’ என்பதுபோல், அவரே தன் மனைவியை அப்படி நடத்தியிருக்கக்கூடும். ஆனால், `மகள்’ என்று வரும்போது, ஆண்களின் பக்கம் சாயத் தோன்றவில்லை. மருமகன்மீதுதான் கோபம் எழுந்தது. தன்னை அவமரியாதையாக நடத்தும் கணவனை மகள் ஏன் எதிர்ப்பதில்லை என்ற குழப்பம் அவருக்கு. தாயைப் பார்த்தே வளர்ந்திருந்தால் மகள் வேறு எப்படி இருப்பாள்? மகனும் தந்தையைப்போலவே தன் மனைவியிடம் அலட்சியம் காட்டுவான். அந்த நடத்தை அவருக்குத் தப்பாகத் தோன்றாது. ஒரு முதியவர் கடிதம்வழி, மகிழ்ச்சியுடன் என்னிடம் தெரிவித்தார், `என் மனைவி என் மனம் கோணாது நடப்பவள். மிகவும் பொறுமைசாலி,’ என்று. பதிலுக்கு, `உங்கள் மனைவியின் மனதில் உண்மையான மகிழ்ச்சி இருக்கிறதா?’ என்று கேட்டிருந்தேன். கணவனின் மகிழ்ச்சிக்காக பலவற்றை விட்டுக்கொடுக்கவேண்டும் என்று பழமையிலேயே ஊறிப்போன பெண்கள் எண்ணுகிறார்கள். கதை அடிக்கடி, `நான் அம்மன் பக்தன்’ என்று பெருமையுடன் சொல்லிக்கொள்வார் சீலன். எல்லா பக்திப்பாடல்களும் அவருக்கு மனப்பாடம். ஆனால், அவர் மனைவி விமலாவை நடத்துவதைப் பார்த்தால், அவளுக்கு எதுவுமே தெரியாது, அடிமுட்டாள் என்பதுபோல் இருக்கும். சீலனுடைய மனதில் ஒரு வக்கிரம். மனைவியைப்போல் இல்லாத பெண்களைக் கண்டால் அலாதி மோகம். அவர்கள் நட்பைப் பெற பல முயற்சிகள் எடுப்பார். “அறிவாளிகளான பெண்களுடன் நட்பு வைத்துக்கொள்ள எனக்குப் பிடிக்கிறது. சும்மா பேச மட்டும்தான்னு சொல்வார்,” என்று அப்பாவித்தனமாக விமலா கூறும்போது, கேட்பவர்களுக்கு அவள்மேல் பரிதாபம்தான் எழும். சீலனுக்குப் புரியாதது: அவர் எதிர்பார்த்தபடி, நடத்தியபடிதான் மனைவி ஆகியிருக்கிறாள். அவளை அவர் தோழமையுடன் நடத்தி, அவளுக்குத் தெரியாததைப் பொறுமையாகச் சொல்லிக்கொடுத்திருந்தால் அவளுக்கு அவர்மேல் அன்பு ஏற்பட்டிருக்கும். அவர் எப்படி நடத்தினாலும், `தலைவிதி’ என்று விரக்தியுடன் அதைப் பொறுத்துப்போயிருக்கமாட்டாள். புதிய விஷயங்களைக் கற்பதில் அவள் ஆர்வம் காட்டாவிட்டாலும், வேறு எதிலாவது சிறந்திருக்கமாட்டாளா! அதைப் பாராட்டியிருக்கலாமே! ஏன் இந்த அதிகாரம்? மனைவி ஒரு போகப்பொருள் மட்டும்தான் என்று நம்புகிறவன் அவளிடம் அதிகாரம் செலுத்துகிறான். அதனாலேயே அவளுடைய நட்பை இழக்கிறான். அதை வெளியே, நண்பர்களிடமோ, பிற பெண்களிடமோ தேடுகிறான். பெண்ணுக்கான கட்டுப்பாடுகள்   அவள் உணர்ச்சிப்பெருக்கில்லாது, ஆணைப்போல் யோசிக்கவேண்டும். ஓயாது உழைக்கவேண்டும். ஆனால், இளமையும் மாறாது இருக்கவேண்டும். மொத்தத்தில், கணவன் பிற ஆண்களிடம் பெருமையாகப் பேசிக்கொள்ள ஏற்ற வகையில் இருக்கவேண்டும். நடக்கிற காரியமா? ஒரு பெண்ணை அவளது கணவன் ஏதோ செல்லப்பிராணி என்பதுபோல் நடத்தி, அதற்கு அவள் பணிந்தும் போனால், அது அவனுக்குக் காட்டும் மரியாதையாலோ, அன்பினாலோ இல்லை. அவள் வளர்க்கப்பட்ட விதத்தில் எங்கோ கோளாறு நேர்ந்திருக்கிறது என்றே தோன்றுகிறது. கதை சீதாபதி மெத்தப் படித்தவன். பத்து வயதுக்குட்பட்ட மூன்று குழந்தைகளின் தந்தை. பெண்பித்தன். திருமணமாகாத இளம்பெண்களைப் பார்த்தால், உரிமையுடன் அவர்கள் தோளில் கைபோட்டு, “என் மனைவி இங்கிதம் தெரிந்தவள்,” என்று ஆரம்பிப்பான். அவனில்லாதபோது, அவளும், ‘ஆம்படையானுடைய சந்தோஷத்தைவிட நமக்கு வேற என்னடி வேணும்?” என்பாள். `எனக்கு நிறையப் பெண்கள் கிடைப்பார்கள்!’ என்று பெருமை பேசுகிறவன் தனக்கு ஆண்மை அதிகம் என்று எண்ணுகிறான். உண்மையில், அவனிடம் ஏதோ குறை இருப்பதால்தான் பெண்களை மயக்க முயற்சிக்கிறான். கலாசாரமும் துணை புரிகிறது. அண்மையில் படித்தது மெடகாஸ்கர் (MADAGASCAR) ஆப்பிரிகாவின் கிழக்குப் பகுதியில் இருக்கும் ஒரு தீவு. மிக ஏழ்மையான நாடு. ஆண்கள் பெண்களை வதை செய்வது சர்வசாதாரணம். தமக்கு இழைக்கப்படும் அநீதிகளை ஏற்றே பழக்கப்பட்டதால், கணவன் அடித்து, உதைக்காவிட்டால் அவனுக்குத் தன்மீதுள்ள அன்பு குறைந்துவிட்டது என்று அத்தீவிலுள்ள பெண்கள் நினைக்கிறார்கள்! பெண்களை எவ்விதமாவது வதை செய்வது சட்ட விரோதம் என்று இப்போது விதிக்கப்பட்டிருந்தாலும், அந்நாட்டில் எந்தப் பெண்ணும் வலிய வந்து புகார் கொடுப்பதில்லை. ஒரு பெண்ணுக்கு லஞ்சம் கொடுத்துத்தான் அவளைப் புகார் அளிக்கச் செய்ய முடியுமாம்! ஏழ்மை, அதனால் எழும் வருத்தம் அல்லது அசௌகரியம், கலாசாரம் எல்லாம் ஆண்கள் தான்தோன்றித்தனமாக நடக்க வைக்கிறது. பெண்களையும் இவ்வாறு அடிமை வாழ்க்கையை ஏற்கச் செய்திருக்கிறது. கதை நாற்பது வயதுவரை, `எனக்கும் கல்யாணம் என்று ஒன்று ஆகுமா!’ என்று ஏங்கிய மலேசியப் பெண் கலாவதி. ஒருவழியாக, திருமணம் ஆனதும், ஒவ்வொரு இரவிலும் கணவன் தன்னை நாடுவது அவளுக்குப் பெருமையைக் கொடுத்தது. அதற்குப்பின், அவளைக் கட்டிலிலிருந்து கீழே தள்ளி, அடித்து உதைப்பான். அதனால் என்ன மோசம்! வதை அதிகரித்து, சமூகநல அதிகாரிகளின் கவனத்திற்கு கலாவதி கொண்டுவரப்பட்டாள். பரிதாபத்துக்குரிய இப்பெண்ணுக்குப் புத்தி சொல்வதாக எண்ணி, `ஐயோ! இந்தமாதிரி மனிதனுடன் ஏன் சேர்ந்து இருக்கிறாய்?’ என்று நான் அலறினேன். `அவருக்கு இல்லாத உரிமையா!’ என்று கேட்டவளின் குரலில் கோபம். ஏன் இந்த அவல நிலை? பல இந்தியக் குடும்பங்களில், `என்ன இருந்தாலும், நீ ஒரு பெண்!’ என்று சொல்லியே பெண்குழந்தைகளை வளர்க்கிறார்கள். அவர்களுக்குள் ஏதோ ஏமாற்றம், வெறுமை. அந்தக் குழப்பம் எதனால் என்று புரிவதுமில்லை. ஆண்’ என்றால் உயர்ந்த மனிதன் என்ற எண்ணம் பதிந்துவிடுவதால் அவனை அண்டி வாழ்ந்தால்தான் தனக்கு மதிப்பு என்று தோன்றிவிடுகிறது. தம்மைப்போல் இல்லாத பிற பெண்களைக் கண்டால் அவர்களுக்கு கோபம். பொறாமையும் எழலாம். ஆனால் மாறவும் பயம். அப்போது யார் பக்கபலமாக இருப்பார்கள்?   15. சுயமரியாதையுடைய பெண்கள்   கணவனாலோ, பிறராலோ சிறுமைப்படுத்தப்பட்டால், `மரியாதை’ என்று அடங்கிப்போய், அதை ஏற்கமாட்டார்கள் சில பெண்கள். இவர்களுக்கு சுயமரியாதை முக்கியம். இவர்களுக்கு புத்திசாலித்தனத்துடன் துணிச்சலும் உண்டு. கதை `பெண்களை அதிகம் படிக்க வைத்துவிட்டால், ஆண்களை மதிக்கமாட்டாள். அடங்கவேமாட்டாள்!’ என்று அச்சுறுத்தியவர்களை அலட்சியம் செய்யும் விவேகம் காயத்ரியின் பெற்றோருக்கு இருந்தது. சிறுவயதிலிருந்தே, `நீ தைரியசாலி. புத்திசாலி!’ என்று ஊக்கமளித்து அவளை வளர்த்தார்கள். `எந்தக் காரியமாக இருந்தாலும், அதில் முழுக்கவனத்தையும் செலுத்து. அப்போதுதான் சிறப்பாகச் செய்து வெற்றி பெறமுடியும்,’ என்று தினமும் போதித்தார் தந்தை. பெற்றோர் தனக்கு நல்லதுதான் சொல்வார்கள் என்று நம்பி, அவர்கள் சொற்படி நடந்தாள். சிறு வெற்றிகள் கிடைக்க, தன்னம்பிக்கை வளர்ந்தது. வாழ்க்கையில் எத்தனை மாறுதல்கள் நிகழ்ந்தபோதும், யாருக்காகவும் காயத்ரி தன் ஆற்றலை விட்டுக்கொடுக்கவில்லை. அவளைப் பார்த்துப் பயந்த ஆண்கள் புகழ்ச்சியால் அவளைக் கவர முயற்சித்தார்கள் -- அப்படியாவது அவளைத் தம் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரலாம் என்ற எண்ணத்துடன். இப்படி வளர்க்கப்பட்ட ஒரு பெண்ணை எந்த ஆணும் வசப்படுத்தவோ, பலகீனப்படுத்தவோ முடியாது என்று அவர்களுக்குப் புரியாது நடந்ததால் அவமானத்திற்கு ஆளானார்கள். பல ஆண்களுக்கு இன்றும் இது புரியாததால்தான் விவாகரத்து அதிகரிக்கிறது. அழகும் மகிழ்ச்சியும் ஒருசில பெண்கள் கவனமாக அலங்காரம் செய்துகொள்வார்கள். `மூக்கும் முழியுமாக இருக்கிறாள்!’ என்று பெண்களே பாராட்டும்வகையில் இருப்பார்கள். ஆனால், `அழகு’ என்று பிரமிக்கவைக்கும்படி இருக்கமாட்டார்கள். இன்னொரு வகையினர் எளிமையான தோற்றத்துடன் இருந்தாலும், அவர்களை நாடத் தோன்றும். ஏனெனில், பிரச்னைகள் நிறைந்ததுதான் வாழ்க்கை என்று புரிந்து, தம் மகிழ்ச்சியை அறவே இழக்காமல் இருப்பவர்கள் அவர்கள்.   இந்த உண்மையை உறுதி செய்கிறார் நடிகை AUDREY HEPBURN: “மகிழ்ச்சியாக இருக்கும் பெண்கள்தாம் அழகானவர்கள்”. பெற்றோரும், ஆசிரியரும், `இதுதான் நீ போகவேண்டிய பாதை’ என்று வற்புறுத்தினால், அதில் ஆர்வமே இல்லாதபோது எப்படி மகிழ்ச்சி ஏற்படும்? `காதல் திருமணம்கூட இரு வருடங்களுக்குப்பின் அலுப்பைத்தான் தருகிறது,’ என்று சலிப்புடன் ஒத்துக்கொண்டாள் ஆங்கிலேயப்பெண்ணான அலெக்ஸாண்டரா. கதை நன்கு படித்து, உத்தியோகத்திலும் அமர்ந்த ஜெயமலரை மணக்க அவள் அலுவலகத்திலிருந்த பலர் போட்டியிட்டனர். அவள் தேர்ந்தெடுத்தது வேணுவை. ஏனெனில், அவன்தானே அவளை நிறையப் புகழ்ந்து, பரிசுப்பொருட்கள் வாங்கிக் கொடுத்து, அவளைத்தவிர தனக்கு வேறு எந்த சிந்தனையும் இல்லை என்பதுபோல் நடந்துகொண்டான்! அவள் கிடைத்ததும், `இனியும் அவளை மயக்க முயற்சிகள் செய்வானேன்!’ என்று எண்ணியதுபோல், நண்பர்களுடனேயே காலத்தைக் கழிக்க ஆரம்பித்தான் வேணு. புதிதாகக் கல்யாணமான பெண் கணவன் தன்னை தினந்தோறும் வெளியில் எங்காவது அழைத்துப் போகவேண்டும் என்று எதிர்பார்க்கிறாள். காதலித்தபோது அப்படித்தானே நடந்துகொண்டான்? ஆணுடைய எண்ணப்போக்கே வேறு. காதலியுடன் கொண்ட நெருக்கம் முன்பு அவனுக்குக் கிளர்ச்சியைக் கொடுத்திருக்கலாம். சற்று பழகியபின், அதிலுள்ள கவர்ச்சி, எதிர்பார்ப்பு, அலுத்துவிடுகிறது. இந்தக் குணம் பெண்களுக்குப் புரிவதில்லை. மனைவியின் `தொணதொணப்பு’ தாங்காது, முன்போல் நண்பர்களை நாடுகிறான். அவர்கள்தாம் தன்னைப் புரிந்துகொள்வார்கள் என்ற நம்பிக்கை பிறக்கிறது. பொதுவாக, வீட்டு வேலை, குழந்தைகள் இதெல்லாம் பெண்கள் வேலை என்று ஆண்கள் ஒதுங்கிவிடுகிறார்கள். மாற்றமில்லாமல் காலம் கழிக்க நேரிட்டால் எவருக்கும் அலுப்பு ஏற்பட, ஆத்திரம் எழாமல் என்ன செய்யும்! `எதற்கு வீண் சண்டை!’ என்று யோசித்து, வேறு வழிகளைக் கடைப்பிடிக்கலாமே! கதை ஒரு பெண் வேறொரு உபாயத்தைக் கைப்பிடித்தாள். “இரண்டு நாட்கள் நான் செய்யும் வேலைகளையெல்லாம் நீங்கள் செய்யுங்கள். என் நிலை புரியும்,” என கணவரும் ஒப்புக்கொண்டார். அந்த காலக்கெடு முடிந்ததும், “ஓயாத வீட்டு வேலை இவ்வளவு சலிப்பானதா! எனக்குத் தெரியாமல் போயிற்று!” என்று அயர்ந்தார். அதன்பின், அவளுடைய வேலைகளில் பங்குகொண்டார். நிறையப் பேசும் தருணங்கள் வாய்த்தன. ஓயாத சண்டையா? “நான் அடிக்கடி எங்க வீட்டுத் தோட்டத்திலே புதிய பூஞ்செடிகள் வாங்கிவைப்பேன். எங்கம்மா, `தண்ணீர் விடாம எல்லாத்தையும் வாடவெச்சு, திரும்பவும் வேற வாங்குவே!’ன்னு கேலி செய்வாங்க,” என்று சிரித்தபடி ஒத்துக்கொண்டாள் என் தோழி ஒருத்தி. தகுந்த பராமரிப்பு இல்லாவிட்டால் இல்லற வாழ்க்கையும் இப்படித்தான் துவண்டுபோகிறது. தொற்றுநோய் பரவாதிருக்க வீட்டுக்குள்ளேயேதான் `அடைந்து கிடக்க’வேண்டும் என்ற தற்கால நிலையில், குடும்பச் சண்டைகள் அதிகரித்துவிட்டனவாம். அதையொட்டி ஒரு துணுக்கு: எப்படி ஒரே வீட்டில் பேசாமல் இருப்பது என்று கற்றுக்கொடுக்க பதினேழு ஆண்டுகளுக்குமேல் ஒன்றாக இருக்கும் தம்பதிகள் தேவை! திருமணம் செய்துகொண்ட பின்னர் வாழ்க்கை முடிந்துவிடுவதில்லை. ஒரு செடிக்குத் தினமும் நீர் பாய்ச்சி கவனித்துக்கொள்வதுபோல், ஒவ்வொரு நாளும் இல்லற வாழ்க்கை தழைக்க ஏதாவது செய்யவேண்டும். ஏன் கோபம் எப்போதும்? `எனக்குப் பொறுமையே கிடையாது!’ என்பாள் ஒரு தாய், தான் பெற்ற குழந்தைகளை திட்டுவதையும் அடிப்பதையும் நியாயப்படுத்துவதுபோல். அவளுக்கு என்னென்னமோ ஆசைகள். ஆனால், அவைகளை நிறைவேற்றிக்கொள்ளும் வாய்ப்பு கிடைக்கவில்லை. பொய்த்துப்போன கனவுகள் எரிச்சலில் கொண்டுவிட்டன. ஒன்றை இழந்தால் வேறொன்று கிடைக்கலாம். கடந்ததையே எண்ணி வருந்தி, அந்த வருத்தத்தை ஆத்திரமாக மாற்றிக்கொள்வதால் யாருக்கு நிம்மதி? திருமணத்திற்குப்பின் பல பெண்கள் தாம் ரசித்து ஈடுபட்ட பொழுதுபோக்குகளை விட்டுவிடுகிறார்கள். ஆர்வக்குறைவால் அல்ல. `பாடுவதாக இருந்தால் தினமும் சாதகம் செய்ய வேண்டுமே!’ `குழந்தைகள், வீட்டுவேலை! மற்றதற்கெல்லாம் எங்கே நேரம் கிடைக்கிறது!’ `முன்பெல்லாம் நிறைய எழுதினேன். இப்போது கற்பனையே வரண்டுவிட்டது!’ இப்படி ஏதேதோ காரணங்களைக் காட்டி சமாளித்தாலும், கணவரைவிட கூடுதலான வெற்றி பெற்றால் குடும்ப ஒற்றுமை குலைந்துவிடுமோ என்ற பயம் ஒரு முக்கிய காரணம். `எடுத்த காரியத்தை எப்படி நல்லபடியாக செய்து முடிப்பது?’ என்ற தயக்கமும் எழக்கூடும். தன் தவறு எங்கே என்று புரிந்தாலும் அதை மாற்றிக்கொள்ளத் துணிவு அவசியம். பயத்தையும், தயக்கத்தையும் மீறிச் செய்தால் வெற்றி கிடைக்கும். பெரிதாக எதையும் சாதிக்க வேண்டும் என்பதில்லை. செய்வதைக் கருத்துடன் செய்தாலே மகிழ்ச்சி கிடைக்குமே! ஏதோ கொஞ்சம் சாதித்துவிட்டு, அதையே எண்ணிப் பெருமைப்பட்டுக் கொண்டிருப்பது எப்போதும் மகிழ்ச்சியைத் தருமா? துணிவிற்கும் தசைநார்களுக்கும் ஓர் ஒற்றுமை உண்டு என்கிறார்கள். நம்பிக்கையை இழக்காது, துணிச்சலைப் பயன்படுத்திக்கொண்டே இருந்தால்தான் அது விருத்தியடையும். அலட்சியமாக விட்டுவிட்டால், தசைநார்கள்போல் துணிச்சலும் வலுவிழந்துவிடும்.     16. பேரவா இருந்தால் சாதிக்கலாம்   தொலைகாட்சியில் இரவு முழுவதும் திரைப்படங்கள் காட்டுகிறார்கள். காப்பி குடித்தாவது கண்விழித்து விடிய விடிய அவைகளைப் பார்க்கிறார்களே பலரும், எப்படி? வெளிநாட்டில் நடக்கும் விளையாட்டு நிகழ்ச்சிகளை இரவு நேரங்களில் பார்ப்பவர்களும் இதே ரகம்தான். ஒருவருக்கு ஆர்வம் இருக்கும் காரியத்தைப் பார்க்கும்போதோ, செய்யும்போதோ சலிப்பு ஏற்படுவதில்லை. உற்சாகமாக இருக்கிறது. பொறுமையும் அதிகரிக்கும். `புத்தகத்தைக் கையில் எடுத்தாலே கொட்டாவி வருகிறது’ என்னும் மாணவமணிகளுக்கு ஏன் படித்துத் தொலைக்க வேண்டும் என்ற எரிச்சல். ஒருவர் தனக்குள்ளிருக்கும் திறமைகளைப் பூரணமாகப் பயன்படுத்தாது போனால் எதையோ இழந்துவிட்டதுபோன்ற வெறுமை, எதிலும் சலிப்பு. எந்தக் காரியமாக இருந்தாலும், அதில் ஆர்வம் இல்லாதபோது அதைச் சரியாக செய்து முடிக்க முடியாது. சாதனையாளர்கள் வெற்றிமேல் வெற்றி அடைகிறார்கள். பணமோ, புகழோ மட்டும் அவர்களின் உந்துசக்தியாக இருப்பதில்லை. முதலில், `இந்தக் காரியத்தைச் செய்யவேண்டும்,’ என்று தீர்மானிக்கிறார்கள். பிறகு, அதை எப்படிச் செய்வது என்று யோசித்து, கவனம் கலையாது, அதை நோக்கிச் செல்கிறார்கள். உற்றாரின் பக்கபலமும் இருந்தால் சிறப்பு. அப்படி இல்லாவிட்டாலும், இவர்கள் மனம் தளர்ந்துவிடுவதில்லை. IRVING WALLACE என்பவர் பிரபலமான அமெரிக்க எழுத்தாளர். அவரைப் பார்க்கும்போதெல்லாம், அவருடைய உறவினர்கள், `இப்போதாவது உருப்படியாக ஏதாவது வேலை செய்கிறாயா?’ என்று கேட்பதாகச் சொல்லிச் சிரித்தார். பிரச்னைகளை எப்படி எதிர்கொள்வது என்று அவருக்குப் புரிந்திருந்தது. பிறருக்காக தான் விரும்பிச் செய்ததை நிறுத்தவில்லை. தம் புத்தகங்களின்வழி நிறையப் புகழும் பணமும் சேர்த்தாலும், தொடர்ந்து எழுதினார்.   கமல், ரஜனி போன்ற நடிகர்கள் வெற்றிப்பாதையில் நீடித்திருப்பதின் ரகசியம் என்ன? `எங்களுக்குப் பட்டம், பதவி இதிலெல்லாம் அக்கறை கிடையாது. நடிப்பது நடிப்பின்மேல் இருக்கும் வேட்கையால்’. இப்படி ஒரு நிகழ்ச்சியில் கமலஹாசன் கூற, மற்றவர் தலையசைத்து, ஒப்புக்கொண்டார். `எனக்கும் ஆசைதான்..,’ என்று தயங்கியே காலம் தள்ளுவானேன்? துணிந்து இறங்க வேண்டியதுதான். நாம் ஈடுபடப்போகும் காரியத்தால் வேண்டாத விளைவுகள் ஏற்படக்கூடும். அப்போது ஏற்படும் அச்சத்தால் எடுத்த முயற்சியைக் கைவிடலாமா? கதை 1987-ல், Rick E.Hunts என்ற தச்சர் தன் தலைமயிரைத் தானே வெட்டிக்கொள்ளும் கருவி ஒன்றைக் கண்டுபிடிக்க முடிவெடுத்தார். அவருக்கு எப்படி இந்த எண்ணம் பிறந்தது? ஒரு தொலைகாட்சி நிகழ்ச்சியில், தலைமயிர் வெட்டிக்கொள்ள வருகிறவர்களைத் தலைகீழாகத் தொங்கவிட்டதைப் பார்த்ததும், அதற்குப் பதிலாக, புதிய முறை VACUUM CLEANER பயன்படுத்தி, மயிர் மேலே பறக்கச் செய்யலாமே என்று பொறி தட்டியதாம். தொடர்ந்து ஏழு வருடங்கள் நான்கு விதங்களைத் தயாரித்துச் சோதனை செய்திருக்கிறார். ஐம்பது மாற்றங்கள்! மொத்த செலவு: இன்றைய ஐந்து லட்ச அமெரிக்க டாலருக்குமேல். (அதற்காகத் தன் கடையையும் விற்றிருக்கிறார்). தச்சராக இருந்தவர் விஞ்ஞானியாக மாறியதில் பலமுறை தோல்வியுற்றாலும், மனம் தளரவில்லை. செய்யும் காரியத்தில் பேரவா இருந்ததால், சலிப்பு ஏற்படவில்லை. எங்கே தவறு என்று ஆராய்ந்து, அதிலிருந்து புதியவற்றைக் கற்றிருக்கிறார்.   இன்று பலருக்கும் அக்கருவி தேவைப்படுகிறது. ஒரு பெரிய கம்பெனி செய்து வைத்திருந்த அனைத்துக் கருவிகளும் விற்றுப்போய்விட்டனவாம்! `இப்போது வாழ்க்கை குழப்பமில்லாமல் ஓடிக்கொண்டிருக்கிறது. புதிதாக எதையாவது ஆரம்பித்து மாட்டிக்கொள்வானேன்!’ என்று எண்ணமிட்டு, ஏதோ ஒரு நியதியை எப்போதும் பின்பற்றிக்கொண்டிருந்தால் அமைதி கிடைக்கலாம். ஆனால், பெருமகிழ்ச்சி? விளம்பரங்களைப் பாருங்கள். வித்தியாசமாக எதையாவது செய்பவர்களே நம் கவனத்தைக் கவர்கிறார்கள். கதை பல வருடங்களுக்குமுன், குமுதம் பத்திரிகையைக் கையில் எடுத்தாலே மரிக்கொழுந்து வாசனை ஆளைத் தூக்கும். ஒரு செண்ட் தயாரிப்பாளர்களின் விளம்பர உத்தி அது. விழாவென்றில், கையில் கிடைத்த புதிய பத்திரிகையை நான் ஆவலுடன் மூக்கருகே கொண்டுபோனேன். அருகிலிருந்த சிறு பெண்கள், “யார்?” என்று ஆவலுடன் விசாரித்தார்கள், நான் அட்டைப்படத்திலிருந்த ஏதோ நடிகரைக் கொஞ்சுவதாக எண்ணி! மனிதர்களும் வித்தியாசமாகச் செயல்பட்டால்தான் கவனிக்கப்படுகிறார்கள். தன்னைப் பிறர் கவனிக்க வேண்டும் என்று அசட்டுத்தனமாக ஏதாவது செய்வதைவிட பிறருக்குத் தம் சக்தியைமீறி சேவை செய்பவர்களே பாராட்டுக்கு உரியவர்களாக ஆகிறார்கள். கதை (மலேசியாவில் நடந்தது) அண்மையில், தொற்றுநோய் பரவாதிருக்க யாரும் வீட்டுக்கு வெளியே வரக்கூடாது என்ற நிலையில், பள்ளிகள் மூடப்பட்டன. கணினிமூலம் ஆசிரியர்கள் போதித்தனர். மலேசிய கிராமம் ஒன்றில் கணினி வசதி கிடையாது. ஏன், அங்கு செல்ல சரியான பாதைகூட கிடையாது. ஏற்கெனவே வசதி குறைந்த குடும்பங்களிலிருந்து வந்திருக்கும் குழந்தைகள் மேலும் பின்தங்கிவிடுவார்களே என்று ஓர் ஆசிரியர் யோசித்தார். அதன் விளைவு: பிற ஆசிரியர்களை அவர்களது பாடத்திட்டத்தைத் தமக்கு அனுப்பும்படி கேட்டுக்கொண்டார். அவைகளைப் பிரதி எடுத்து, மிகுந்த சிரமத்துடன் அக்கிராமத்திற்குச் சென்று, மாணவர்களிடம் விநியோகித்தார். `வீட்டுப்பாடத்தை உடனே முடித்துவிட்டேன்! அடுத்து எப்போது வருவீர்கள்?’ என்று ஒரு மாணவன் உற்சாகமாகத் தெரிவித்தது அவருக்குப் பெருமகிழ்ச்சி அளித்தது. அதிகமான யோசனை ஆர்வத்துக்கு முட்டுக்கட்டை. ஒரு காரியத்தை ஆரம்பிக்குமுன் திட்டமிடுதல் அவசியம்தான். ஆனால், `வெற்றி பெறுவோமோ? யார் என்ன சொல்வார்களோ!’ என்றெல்லாம் ஐயம் எழுந்தால் ஓரடிகூட எடுத்து வைக்க முடியாது. என்னுடன் வேலை பார்த்த ஆங்கில ஆசிரியை சொன்னாள்: “எனக்குக் கதை எழுத ஆசை. ஆனால், ஒரு வரி எழுதியதும், `இப்படி இருக்கலாமோ?’ என்ற சந்தேகம் வந்துவிடும். அதை மாற்றினால், இன்னொரு விதமாக எழுதத் தோன்றும். இப்படியே, செய்ததில், ஒரு வரிக்குமேல் செல்லவே முடியவில்லை!” நல்லவேளை, எனக்கு அந்தக் குழப்பமெல்லாம் கிடையாது. மனதில் தோன்றுவதை ஆங்கில எழுத்துக்களில் வடித்தாலே பெரிய காரியம் என்று நினைத்து எழுதுவேன். “அது எப்படி, கணக்கு ஆசிரியை, பௌதிக ஆசிரியை என்று நீங்களெல்லாம் போட்டிகளில் பரிசு பெறுகிறீர்கள்!” என்று இன்னொரு ஆங்கில ஆசிரியை அதிசயப்பட்டாள். போட்டிகளில் பரிசுபெற்ற கதைகளைப் படித்தால் நீதிபதிகள் என்ன எதிர்பார்க்கிறார்கள் என்பது புரிந்துவிடும். கணக்கிலும் விஞ்ஞானத்திலும் இருப்பதுபோல் இதுவும் ஒருவித ஃபார்முலாதான். செய்யும் தொழிலே தெய்வம் என்கிறோம். ஆனால், பிடித்துச் செய்யும் காரியத்திற்குத்தான் அது பொருந்தும். அந்நிலையில், `இதனால் எவ்வளவு பணம் கிடைக்கும்?’ என்ற யோசனை எழாது. பிடிக்காவிட்டாலும், செய்ய நேர்கிறதா? WHAT IS WORTH DOING IS WORTH DOING WELL. எதைச் செய்ய நேரிட்டாலும், முழுமையான கவனத்துடன், ஈடுபாட்டுடன் செய்யவேண்டும். பிறர் மெச்சுகிறார்களோ, இல்லையோ, திருப்தியாவது கிடைக்குமே!         17. எனக்கு என்னைப் பிடிக்கும்   `என்னை யாருக்குமே பிடிக்கவில்லை,’ என்று அழுதான் அச்சிறுவன். பாட்டி அளித்த அபரிமிதமான செல்லத்தில் வளர்ந்து, மனதிற்குத் தோன்றியபடி நடந்து, ஒருவரையும் மதிக்காது நடந்துகொண்டதன் விளைவு அது. ஆனால் அதெல்லாம் புரியும் வயதாகவில்லை அப்போது. சிறு வயதில், `புத்திசாலி, சமர்த்து’ என்றெல்லாம் பிறர் பாராட்டுவதைக் கேட்டு, `நாம் அப்படித்தான்’ என்று நம்பிவிடுகிறோம். யாரும் புகழாது, பழிப்பிற்கு ஆளானால் அச்சிறுவனைப்போல்தான் வருந்த நேரிடுகிறது. இருப்பினும், அறியாப்பருவத்தில் தவறு செய்துவிட்டு, அதையே எண்ணி வருந்துவது வீண். பெரியவர்களானதும், கடந்தகாலக் கசப்புகளிலிருந்து மீண்டால்தான் நிம்மதி கிடைக்கும். பிறருக்குப் பிடிக்காவிட்டால் என்ன? `எனக்கு என்னைப் பிடிக்கும்!’ என்ற மனப்பான்மையை ஒருவர் வளர்த்துக்கொள்வது நல்லது. சுயநலமா? தன் நலனை ஒருவர் கவனித்துக்கொள்வது சுயநலம் அல்ல. பிறரை ஒதுக்கிவிட்டு, தன்னையே எப்போதும் கவனித்துக் கொண்டிருந்தால்தான் சுயநலம். மூன்று வயதான வினு கடைக்குட்டியானதால் குடும்பத்தில் எல்லாருக்கும் செல்லம். “எனக்கு வினுவைப் பிடிக்கும்,” என்று தன்னைக் கண்டிப்பும் அன்புமாக வளர்த்த தாயிடம் அடிக்கடி சொல்வான். அக்குணத்தினால் அவனுக்குப் பார்த்தவர்கள் எல்லாரையும் பிடித்துப்போயிற்று. அவர்களும் அவனது அன்பைத் திரும்ப அளித்தார்கள். அனுசரித்துப் போய்விடு! பிறருக்கு ஏற்றபடியெல்லாம் தன்னை மாற்றிக்கொள்ளவேண்டும் என்ற எதிர்பார்ப்பு பெண்களுக்குப் போதிக்கப்படுகிறது. அப்போதுதான் அவள் எவ்வித கண்டனத்துக்கும் ஆளாகமாட்டாள். `ஒரு பெண்ணானவள் தந்தைக்கு அன்பான மகள், கணவனுக்கு..,’ என்றெல்லாம் எழுதி வைத்திருக்கிறார்கள். அவளுக்கு அவள் யார் என்பது முக்கியமென்று எவருக்கும் தோன்றவில்லை. கதை `பிறருடைய சந்தோஷம்தான் உன் சந்தோஷம்,’ என்று கூறியே வளர்த்திருந்தார்கள் விசாலியை. பத்து வயதிலிருந்தே பிறருக்காக ஓயாது உழைத்தாள். அவர்கள் செய்ய ஆரம்பித்த வேலையைப் பிடுங்கிச் செய்வாள். தன் நலனையும் கவனிக்காது விட்டுவிட்டால் எவருக்கும் வாழ்க்கையில் மகிழ்ச்சி கிடைக்காது. `என்ன குணம்!’ என்ற பிறரின் பாராட்டு கிடைத்தது. அவளுடைய பதின்ம வயதில், தன்னலம் பாராத அக்குணத்தை தமக்குச் சாதகமாகப் பயன்படுத்திக்கொண்டார்கள் கயமையான சில உறவினர்கள். விவரம் புரியாத அந்த வயதில், `எல்லாருக்கும் என்னைப் பிடிக்கிறது!’ என்ற பூரிப்பு ஏற்பட்டது. இருபது வயதில்தான் தன் இழப்பு என்னவென்று அவளுக்குப் புரிந்தது. திருமணமானபின், கணவன் இன்னொரு பெண்ணுடன் தொடர்பு வைத்திருக்கிறான் என்று புரிந்தபோதும், அவனை எதிர்க்கத் தோன்றவில்லை. வழக்கம்போல், `என்னுடைய மகிழ்ச்சியா பெரிது!’ என்று விட்டுக்கொடுத்தாள். ஆனால், வருத்தம் ஏற்படாமல் இருக்குமா? உடற்பயிற்சி, ஆகாரம், ஓய்வு எல்லாம் நமக்கு நாமே செய்துகொள்ளும் நன்மை. அத்தேவைகளைக் கவனிக்காது விட்டால் உடலும் மனமும் ஒருங்கே கெடும் அபாயம் இருக்கிறது. `நல்ல பெண்’ என்று பெயரெடுக்க எந்தப் பெண்ணும் விசாலியைப்போல் தன்னையே கரைத்துக்கொள்ள வேண்டியதில்லை. தனக்குப் பிடித்த காரியத்திற்காக நேரத்தைச் செலவிடுவது சுயநலம் என்று பெண்களை நம்பவைத்திருக்கிறார்கள். நம் நலனில் நம்மைவிட வேறு யாருக்கு அதிக அக்கறை இருக்கமுடியும்? தொலைகாட்சியில் ஒரு பாடம் அண்மையில், தொலைகாட்சியில் “கோடீஸ்வரி” நிகழ்ச்சியைப் பார்த்திருப்பீர்கள். பெண்கள் மட்டுமே கலந்துகொண்ட நிகழ்ச்சி அது.   சொல்லிவைத்தாற்போல், அனேகமாக எல்லாப் பெண்களும், `வெல்லும் பணம் கணவருக்கு, குழந்தைகளுக்கு,’ என்றுதான் கூறினார்கள். அவர்களுக்கென்று தனிப்பட்ட ஆசை எதுவுமே கிடையாதா? இருக்கலாம். ஆனால், பிறருக்காக வாழ்ந்தால்தான் நல்ல பெண் என்று சமூகம் எதிர்பார்த்து, அதன்படி நடந்து பழகியவர்கள் ஆயிற்றே! நிகழ்ச்சியைச் செம்மையாக வழிநடத்திய நடிகை ராதிகா சரத்குமார் இப்பெண்களைப் பலமுறை தூண்டி, அவர்களுக்கும் மனம் என்று ஒன்று இருக்கிறது, அதில் இருக்கும் ஆசைகளை நிறைவேற்றிக்கொள்வதில் தப்பில்லை என்று உணரவைத்தார். ஒரு கிராமப்புறத்திலிருந்த -- படித்த -- பெண்ணுக்கு ஜீன்ஸ் அணிய ஆசை. ஆனால், தாய் மறுத்துவிட்டாள் – பிறர் பழிப்பார்கள் என்று அஞ்சி. அவளுடைய ஆசை அந்நிகழ்ச்சிமூலம் நிறைவேற, பல பெண்கள் அவளைப் பின்பற்றினார்கள்.    `நான் இப்படி இருந்தால்தான் பிறருக்குப் பிடிக்கும்!’ என்று வளைந்துகொடுப்பவர்களுக்கு நிறைய நண்பர்கள் கிடைக்கலாம். பிறரது புகழ்ச்சியும் கிடைக்கும். ஆனால், நிறைவேறாத ஆசையை அடக்குவதால் ஏற்படும் ஏக்கத்தைத் தவிர்க்கமுடியாது. பெண்கள் தம் ஆசைகளை, அனுபவிக்கும் துயரங்களை, வெளிக்காட்டாது இருப்பதால் பிறருக்கு அவர்களது மனம் புரிவதில்லை. `பெண்களின் மனம் கடலைவிட ஆழமானது!’ என்று சொல்லிவிடுகிறார்கள். `உனக்கென்று ஏதாவது ஆசை இருக்கிறதா?’ என்று கேட்டுப்பாருங்கள். அவர்களுக்கே தெரியாது, ஏதாவது ஆசை ஒட்டிக்கொண்டிருக்கும். கதை ஆறு வயதான மாது சுறுசுறுப்பும் தன்னம்பிக்கையும் நிறைந்தவன். “உனக்கு என்ன வேண்டும்?” என்று கேட்டபோது, “எனக்கு ஒரு குதிரை வேணும்,” என்றான். “பொம்மைக்குதிரையா?” “இல்லை, நிஜக்குதிரை! என் கல்யாணத்திலே நான் அதுமேலே ஒக்காந்து வருவேன்!” இவனுக்குத் தனக்கு என்ன வேண்டும் என்று தெரிந்திருக்கிறது. குழந்தைத்தனமாக ஏதோ பிதற்றுகிறான் என்று அலட்சியம் செய்யாமல், அவனையும் மதித்து, பேச்சுக்கொடுத்ததால் தன்னைப்பற்றி யோசிப்பது தவறில்லை என்று அவனுக்குப் புரிகிறது. ஒப்பீடு வேண்டாமே! பிறருடன் நம்மை ஒப்பிட்டுக்கொண்டாலோ, `வித்தியாசமாக இருக்கிறோமே!’ என்று மனம் நொந்தாலோ நிம்மதி பறிபோய்விடும். `நான் ஆதர்ச மனைவியாக இருப்பேன்!’ `பிறருடைய மகிழ்ச்சிக்காக உயிரையே கொடுப்பேன்!’ இம்மாதிரியான உறுதிமொழிகள் ஏன்? பிறர் நம்மைவிட உயர்ந்தவர்கள் என்று ஒத்துக்கொள்வதுபோல் ஆகிவிடுகிறதே! கதை சிறுவயதிலிருந்தே, தனது ஒவ்வொரு சொல்லாலும் செயலாலும் பிறரது ஆமோதிப்பை எதிர்பார்த்தாள் பூமா. பாராட்டு பெறாதவர் கண்டனத்துக்குரியவர் என்று நம்பினாள். இப்போக்கால், தன்னம்பிக்கை குறைந்துவிடும் என்பதை அவள் உணரவில்லை. சற்றுப் பெரியவளானதும், அதிகாரத்தால் தன் பலவீனத்தை மறைத்துக்கொண்டாள். நம்மைப்பற்றி நாமே நல்லவிதமாக எண்ணும்போது, நம்மையே மதிக்கிறோம். தன்னம்பிக்கை வளர, நாம் செய்யும் சிறு பிழைகளுக்காக மனம் உடைந்துபோய்விடுவதில்லை. நாமேதான் நம் வாழ்க்கையை நிர்ணயிக்கவோ மாற்றிக்கொள்ளவோ முடியும். மிக அழகாக இருந்த ஒரு நடனமணியைக் கேட்டார்கள், “நீங்கள் எப்படி உலகளாவிய எல்லா போட்டிகளிலும் வெற்றி பெறுகிறீர்கள்? இவ்வளவு அழகாக இருக்கிறீர்கள்?” அவள் அளித்த பதில்: “தினமும் காலை கண்ணாடிமுன் நின்று, `YOU HANDSOME DEVIL!’ என்று என்னை நானே மெச்சிக்கொள்வேன்!”     18. தாயும் மகளும்   வீட்டுடன் இருக்கும் பெண், `நான் எந்த வேலைக்கும் போவதில்லை,’ என்று சற்றுக் கூசியபடி கூறுகிறாள். வீட்டுக்கு வெளியில் செய்வதுதான் வேலையுடன் சேர்த்தியா? நாள் முழுவதும் ஓடியாடி உழைத்தாலும், வீட்டுக்குள் இலவசமாக வேலை செய்வதால் அதன் மதிப்பு வெளியில் தெரிவதில்லை. தாயான எந்தப் பெண்ணாவது எப்போதும் ஓய்வாக இருந்துவிட முடியுமா என்ற கேள்வி எழுகிறது. தடுக்கி விழுந்து அடிபட்டுக்கொள்ளும்போதும், தந்தை காரணமில்லாமல் கோபிக்கும்போதும், பள்ளியில் உடன்படிப்பவர்கள் நட்புடன் பழகாதிருக்கும்போதும் குழந்தைகள் நாடுவது யாரை? குழந்தையுடன் பேசுங்கள் முதன்முறையாக அம்மா ஆனவர்களுக்கு குழந்தைகளை எப்படி வளர்ப்பது என்பது புரிவதில்லை. மடியில் வைத்துக்கொண்டு கொஞ்சினால் போதும் என்று நினைக்கிறார்கள். என் மூத்த மகளுக்கு ஒரு வயதானபோது, அவள் தன்பாட்டில் பொம்மையை வைத்துக்கொண்டு விளையாடிக்கொண்டிருப்பாள். நான் ஏதாவது செய்துகொண்டிருப்பேன். நாம் பார்ப்பது, கேட்பது எல்லாவற்றையும் விளக்கிக்கொண்டிருந்தால்தான் குழந்தையின் அறிவு விசாலமடைகிறது என்று அனுபவத்தில் கண்டிருந்த என் அன்னை, “குழந்தையிடம் பேசினால்தானே அதற்கு மூளை வளரும்?” என்று புத்தி புகட்டினாள். அன்று பேச ஆரம்பித்தவள்தான் நான். பேசாமல் நம் வேலையைப் பார்த்துக் கொண்டிருந்தோமானால் குழந்தையும் பேசாது உட்கார்ந்திருக்கும். அதற்குப் பேசத் தெரியவில்லையே என்று காத்திருக்கலாமா? மிருகங்களுக்குக்கூட நாம் பேசுவது புரிகிறதே!   அக்கம்பக்கத்தில் தமிழர்கள் யாருமில்லை என்ற நிலையில், சாயந்திர வேளைகளில் உலவப் போகும்போது, `இது புல். இது மரம்,’ என்று பார்ப்பதையெல்லாம் குழந்தைகளுக்குச் சொல்லிக்கொடுப்பேன். கூடவே அதன் ஆங்கில மொழிபெயர்ப்பு. இரண்டு வயதிலிருந்து, புத்தகங்கள் கைகொடுத்தன. அவளது இருமொழி `பாண்டித்தியம்’ இப்படி வெளிவந்தது: `ஒக்காச்சி, சித்தம்’ (Sit down)! ஏதாவது காரியமாக நான் வெளியே போனால், வீடுதிரும்பியதும் அதைப்பற்றி குழந்தைகளிடம் விவரமாகச் சொல்வது வழக்கம். அவர்கள் பெரியவர்களானதும், தம்மையும் அறியாது அதே வழக்கத்தைப் பின்பற்றினார்கள். அதனால், `நமக்குத் தெரியாமல் என்ன செய்கிறார்களோ!’ என்ற கவலை எழுந்ததில்லை. தாயின் திட்டு ஒரு பெண் தானே தாய்மை அடைந்தபின்னர், `நம்மை வளர்க்க அம்மா எவ்வளவு கஷ்டப்பட்டிருப்பாள்!’ என்ற ஞானோதயம் ஏற்படுகிறது. அதன் விளைவாக, அம்மாவிடம் வாங்கிய வசவு, அதன் பாதிப்பு, கணிசமாகக் குறையும். `பெண்’ என்றால் இப்படித்தான் இருக்கவேண்டும் என்று மகளைச் சிறுவயதிலேயே நம்ப வைத்துவிடுவாள் பெற்றவள். தாயானபின்னர், அவளும் அதையே தம் மகளுக்குப் போதிப்பாள். என் தலைமுறையிலிருந்த பிற பெண்களைப்போல் நான் இல்லை என்ற கவலை என் அம்மாவுக்கு. ஓயாமல் கண்டிப்பாள். அதனால் தந்தையிடம் நெருங்கிப்போனேன். தாய்க்கும் மகளுக்கும் ஏற்பட்ட போட்டியில் இன்னும் நிறைய வசவு கிடைக்க, `திட்டு வாங்கறதுக்குன்னே பிறந்த ஜன்மம்!’ என்ற கேலிக்கு ஆளானேன். இப்போது பெண்கள் என்னைக் கேட்கிறார்கள், “ஒங்களைமாதிரி எப்படி ஆகிறது?” என்று. அதற்கு நான் நேரிடையாகப் பதிலளிக்காது, “உங்களை, `என்ன இருந்தாலும் நீ ஒரு பொண்ணு!’ என்று சொல்லி வளர்த்திருப்பார்கள்,” என்றேன். அதிர்ச்சியுடன், “ஆமாம். இல்லே?” என்று ஒருவரையொருவர் கேட்டுக்கொள்கிறார்கள். இணக்கமான உறவு கதை 1 எட்டு வயதிலேயே, “யார் உன்னுடன் இவ்வளவு பேசுவது?” என்று ஆசிரியை கேட்க, என் இளைய மகள் சித்ரா பூரிப்புடன், “எங்கம்மா!” என்றிருக்கிறாள். அவளுக்குப் பன்னிரண்டு வயதானபோது, வகுப்பில் எல்லோர் முன்னிலும் ஆங்கிலத்தில் ஒரு வாக்கியம் கூறவேண்டும் என்ற வீட்டுப்பாடம் அளிக்கப்பட்டிருந்தது. மகள் என் உதவியை நாடினாள். “பிறர் ஏதாவது சொல்லும்போது, எல்லாரும், `ஆமாம், ஆமாம்,’ என்றுவிடுகிறார்கள். நீ மட்டும் அப்படிச் செய்வதில்லை. ஏம்மா?” நான் மெல்லச் சிரித்து, “என்னைப்போல் இருப்பவர்களை NON-CONFORMIST என்பார்கள். தவறு என்று எனக்குத் தோன்றினால், பிறர் கூறுவதையோ, செய்வதையோ நான் ஏற்பதில்லை”. மறுநாள், “I want to be a non-conformist like my mother,” என்றவள் கூற, ஆசிரியை அயர்ந்துபோனாள். கதை 2 சித்ரா பன்னிரண்டாவது படிக்கும்போது, ஆண்களும் பெண்களும் ஒன்றாகப் படித்தார்கள். ஒருமுறை, வகுப்பில் நுழைந்த இளம் ஆசிரியையிடம், “பாடம் நடத்தவேண்டாம். இன்று உங்களுக்கு களைப்பாக இருக்குமே!” என்று ஒரு பையன் கிண்டல் செய்ய, “உங்களுக்கென்ன அதைப்பற்றி?” என்று அவள் கோபிக்க, எல்லாரும் சிரித்தார்கள். என் மகளுக்கு ஒன்றும் புரியவில்லை. “நீ சின்னப்பெண். இதெல்லாம் உனக்குப் புரியாது,” என்று நமட்டுச்சிரிப்புடன் அவர்கள் விளக்க மறுத்துவிட்டார்கள். “சொல்லாவிட்டால் போங்கள். என் அம்மாவைக் கேட்டுக்கொள்கிறேன். நான் எது கேட்டாலும் பதில் சொல்வாள்,” என்று வீறாப்பாகச் சொல்லிவிட்டு, என்னிடம் கேட்டாள். இம்மாதிரி பரஸ்பர நம்பிக்கை தாய்க்கும் மகளுக்கும் இருந்தால், எத்தனை வயதானாலும் நெருங்கிய தோழிகளாகவே இருப்பார்கள். எப்படிப்பட்ட கேள்வியானாலும், அதைக் கேட்கும் சிறுவர்கள் அதன் பதிலுக்குத் தயாராகிவிடுகிறார்கள். `இது என்ன வயதுக்குமீறிய கேள்வி!’ என்று கோபிக்காவிட்டால், அவர்களுடைய அறிவு விசாலமடையும். `வியாழக்கிழமை மனைவியுடன் உடலுறவு கொண்டால் ஏதோ நன்மை விளையும் என்ற நம்பிக்கை சில இனத்தவர்களுக்கு,’ என்று என் சக ஆசிரியர் கூறியிருக்கிறார். அந்த வழக்கம் தெரிந்துதான் மறுநாள் மாணவர்கள் கேலி செய்திருக்கிறார்கள். கதை 3 இருபது வயதானபோது, அவளைவிட மூத்த பெண்கள் கூறிய அறிவுரை: “உன் அம்மா, `சீக்கிரமே கல்யாணம் பண்ணிக்கொள்,’ என்று வற்புறுத்தி இருப்பார்கள். ஆனால், முப்பது வயதுக்குமேல் பண்ணிக்கொள்”. அவள் உடனே, “எங்கம்மா அப்படிச் சொன்னதே கிடையாது,” என்று எதிர்த்தாளாம். தன்னைத்தானே புரிந்துகொள்ளாத ஒரு பெண் இளம் வயதில் கல்யாணமானால், கணவனுக்குப் பயந்து நடக்கிறாள். கணவன் அருகில் இருக்கும்போது, பிறரிடம் பேசக்கூடத் தயங்குகிறாள் –- அவளுக்கென ஒரு தனிப்பட்ட கருத்து இருப்பதை அவன் விரும்பமாட்டான் என்ற அச்சத்தில். கதை தாய்க்கும் மகளுக்கும் இடையே போட்டி, பொறாமை விளைவதும் உண்டு. பள்ளிப்படிப்பு முடிந்ததுமே தெரிந்தவர்கள்மூலம் மாதுரி நல்ல வேலையில் அமர்ந்தாள். கணிசமான சம்பளம். அதிகப் படிப்போ, சுயசம்பாத்தியமோ இல்லாத அவளுடைய தாய், `நாளை மகள் தன்னை மதிப்பாளா?’ என்று கலக்கமடைந்தாள். “வேலைக்குப் போய்விட்டு வந்தால் ஓய்ந்துவிடுகிறாய். வேலையை விட்டுவிடு.  நீ மேலே படி,” என்று ஆசைகாட்டினாள், போலிப்பரிவுடன். மேற்படிப்புக்குப் பணமில்லை என்பதை இருவருமே அப்போது யோசிக்கவில்லை. உடன் வேலை செய்தவர்கள் எவ்வளவோ எடுத்துச்சொல்லியும் கேளாது, மாதுரி வேலையை விட்டாள். தன் தவறு புரிந்தபின், திரும்பவும் போய் வேலை கேட்க வெட்கம். தாயின்மேல் ஏற்பட்ட வருத்தத்தை வெளியில் காட்டிக்கொள்ளவும் முடியவில்லை. தான் பெற்ற மகள் அல்லது தன்னிடம் பயின்ற மாணவி தன்னைவிட சிறந்தால் பெருமைப்படாத தாயோ, ஆசிரியையோ எதில் சேர்த்தி?     19. எனக்கு எல்லாம் தெரியுமே!   எல்லாம் அறிந்தவன் இறைவன் மட்டும்தான் எனில், நமக்குத் தெரியாததை எண்ணி விசனம் கொள்வானேன்! இந்த விவேகம் நம்மில் எத்தனை பேருக்கு இருக்கிறது? கதை `எனக்கு எல்லாம் தெரியும்!’ என்று இறுமாப்புடன் கூறுவான் விட்டல். நிறைய விஷயங்கள் அவனுக்குப் புரியாமல் இருக்கும். ஆனால், அதை ஒத்துக்கொள்ளும் தைரியம் அவனுக்குக் கிடையாது. எப்படியோ சுமாரான பதவி ஒன்றில் அமர்ந்தபின், தன்னைவிட வித்தியாசமானவர்கள் எல்லாரையும் குறை கூறி, அதில் பெருமிதம் அடைவான். பிறர் சொல்வதைக் கேட்பது விட்டலைப் போன்றவர்களுக்கு பிடிக்காத சமாசாரம். தன் அறிவை வெளிக்காட்டும்வண்ணம் தானே அதிகம் பேசுவார்கள். ஒருவர் கேட்கும் கேள்வியிலிருந்து அவரது ஆற்றலைப் புரிந்துகொள்ளலாம். கதை என்னுடன் பணிபுரிந்த பத்மா இருபது ஆண்டுகளுக்குப்பின் என்னைச் சந்தித்தாள். “இப்போதெல்லாம், நீ உன் தலைமயிரைக் கடையில் perm செய்து, சுருட்டையாக்கிக்கொள்கிறாயா?!” என்று கேட்டாள். “இல்லையே!” “இல்லை. நீ அப்படித்தான் செய்துகொள்கிறாய்!”  என்று பிடிவாதம் பிடித்தாள். இயற்கைதான்,” என்று நான் மறுத்தேன். மீண்டும் சொன்னதையே சொன்னாள். அவர்கள் சொல்வதுதான் சரியென்று வீண்விவாதம் புரியும் குணத்தை SPLITTING THE HAIR என்கிறார்கள். `நான் சொல்வதுதான் சரி. எல்லாரும் அப்படித்தானே சொல்கிறார்கள்!’ என்பவர்கள், `நாம் சுயமாகச் சிந்தித்து, இருக்கிற சொற்ப மூளைக்கும் வேலை கொடுப்பானேன்!’ என்பதுபோல் நடப்பவர்கள். பொறுமையிழந்து, “சரி. அப்படியே வைத்துக்கொள்!” என்று முடித்தேன். விவேகமானவர்கள் யார்? 1 பிறர் கூறுவதைக் கூர்ந்து கவனிப்பவர்கள். பிறரது கருத்து சரியென்றுபட்டால் ஏற்பார்கள். இல்லாவிட்டால், எங்கே தவறு, அதை எப்படி நிவர்த்தி செய்யலாம் என்று அவர்கள் யோசனை போகும். “நான் பெரிய அறிவாளி அல்ல. எனக்குள் எழும் கேள்விகளுக்கு விடை காணும்வரை விலகுவதில்லை” (ஆல்பர்ட் ஐன்ஸ்டீன்). 2 பிறரை மதிப்பவன் தன்னைவிட உயர்ந்த நிலையில் இருப்பவரிடம் ஒரேயடியாகப் பணிந்து, கீழான நிலைகளில் உள்ளவர்களை அலட்சியமாக நடத்துவதும் கிடையாது. இதற்கு தன்னைத்தானே மதிக்கும் குணம் அவசியம். இப்படிப்பட்டவர்களை அபூர்வமாகத்தான் காணமுடிகிறது. எவ்வாறு கற்கலாம்? பிறருடைய தவறுகளிலிருந்து கற்பதைவிட சொந்த வாழ்க்கையிலிருந்தே நிறைய கற்க முடிகிறது. வாழ்க்கைப்பாதையில் சிலர் தகாத முறையில் நம்மை நடத்தியிருப்பர். எவ்வளவோ இழிசொற்களையும் அவமரியாதையையும் தாங்க நேர்ந்திருக்கும். கடந்ததைப்பற்றியே நினைத்து, நினைத்து, வருத்தமும் ஆத்திரமும் கொண்டிருந்தாற்போல் அவை மாறிவிடுமா? அவைகளிலிருந்து கற்கலாம். கதை ஆரம்பகால ஆசிரியப் பயிற்சியின்போது எனக்கு அறிமுகமானவள் ராதா. ஒருமுறை, அவள் கூறிய ஏதோ கருத்தை நான் ஏற்கவில்லை. அவளுக்கு வந்ததே கோபம்! கண்டபடி கத்தினாள். நான் பயந்து, விலகினேன். பல வருடங்களுக்குப்பின், இன்னொரு பயிற்சியின்போது அவளும் நானும் ஒரே வகுப்பில் இருக்க நேர்ந்தது. அவளுடைய சுபாவம் புரிந்து, நான் ஒதுங்கிப் போனேன். வகுப்பு நடக்கும்போது, நான் விரிவுரையாளரை ஏதாவது கேட்டால், அதைத் தடுக்க நினைப்பவளாக, `நிர்மலா!’ என்று அவளிடமிருந்து கண்டனக்குரல் எழும். பல முறை பொறுத்துப்போனேன். இறுதியில், அவள் பக்கம் திரும்பி, “Shut up!” என்றேன், மெதுவாக. அது போதாதா அவளுக்கு! வகுப்பு முடிந்ததும், என்னுடன் சண்டைக்கு வந்தாள். “என்னை Shut up என்றாய்,” என்றாள் குற்றம் சாட்டுவதுபோல். “ஆமாம். சொன்னேன்,” என்றேன் அமைதியாக. “நான் உன்னை அப்படிச் சொன்னால்?” என்றாள். “சொல்லிவிட்டுப்போ!” என்றேன் அலட்சியமாக. “நான் அப்படியெல்லாம் கீழ்த்தரமாகப் பேசமாட்டேன்”. “சரி. பேசாதே!”. மீண்டும் ஆரம்பத்திலிருந்து, அதே வார்த்தைகள். “நீ என்னை ஷட் அப் என்று சொன்னாய்!” என்றுவிட்டு, “நீ என்னை விலக்குகிறாய்!” என்று கத்தினாள். நம்மை இழிவுபடுத்தியவர்களை மீண்டும் சந்திக்க நேரும்போது, எச்சரிக்கையாக இருக்கவேண்டும் என்று தோன்றிவிடும். “இப்படியெல்லாம் வரும் என்று எனக்குத் தெரியும்,” என்றேன். அவள் தன் குரலை எவ்வளவு உயர்த்தியபோதும், நான் நிதானத்தை இழக்காமல் பேசினேன். இன்னும் என்ன பேசுவது என்று புரியாது, என்னைத் தாக்கிவிடுபவள்போல் மிக அருகில் வந்தாள். எங்களிருவருக்கும் இடையே இருந்த இடைவெளியைத் தன் கரத்தால் வெட்டி, அவளைத் தடுத்து நிறுத்தினார் ஒரு சீனர். பிறகு, “இவள் ஏன் இப்படி தரக்குறைவாக நடந்துகொள்கிறாள்!?” என்று திரும்பத் திரும்பக் கேட்டார். நான் எதுவும் சொல்லவில்லை. அவள் தன்னைப்பற்றி ஒரேயடியாக அளக்க, அடிமைகளாக இருவர் அவள் பின்னால் நடந்தனர். சம்பவம் நடந்த முதல் நாள் அவர்கள் என்னுடன் ஊரைச் சுற்றிப்பார்க்க (நான் அழைக்காமலேயே) வந்துவிட்டதில் அவளுக்கு ஆத்திரம் – தன் தலைமைக்குப் பங்கம் வந்துவிடுமோ என்று. அதன்பின், நான் என்ன செய்தாலும் அதையே பின்பற்றினாள்! தூண்டப்பட்ட அறிவு கல்லூரிப் பயிற்சியின்போது, எப்படியெல்லாம் ஒரு நல்ல, திறமையான ஆசிரியர் இருக்கவேண்டும் என்று தினமும் சொல்லிக்கொடுத்தார்கள். ஓர் இளைஞன் பொறுமையை இழந்தான். “புத்தகத்தில் படிக்கும்போது நன்றாகத்தான் இருக்கும். ஆனால், நீங்கள் சொல்லிக்கொடுக்கிறபடி எல்லாம் நடக்கமுடியுமா? நேரம் கிடைக்குமா?” என்று விவாதம் செய்தான். விரிவுரையாளர் பொறுமையாக, “ஒருவருக்கு நல்லவராக இருப்பது எப்படி என்று கற்பித்தால், அவர் எளிதில் கெட்டுப்போகமாட்டார் என்ற நம்பிக்கை எங்களுக்கு உண்டு,” என்று பதிலளித்தார். என்னிடம் அவர் கேட்டார்: “உங்களிடம் ஒரு மாணவன் ஏதோ ஒரு கேள்வி கேட்கிறான். அதற்குப் பதில் தெரியாவிட்டால், என்ன செய்வீர்கள்?” “தெரியாது என்று சொல்வேன்”. “முட்டாள் என்று உங்களை நினைத்துக்கொள்ளமாட்டானா?” “எப்போதுமே அப்படிச் சொல்லமாட்டேனே! பதிலைத் தேடிக் கண்டுபிடித்து, பிறகு சொல்வேன்”. பிரமிப்புடன், “நீங்கள் மிக நல்ல பள்ளிக்கூடத்தில் படித்திருக்க வேண்டும்!” என்றார்.   பெருமையாக உணர்ந்தேன். என்னைத் திட்டித் திட்டி வழிநடத்திய ஆசிரியைகளை நன்றியுடன் நினைத்துக்கொண்டேன். புதிய இடங்களில், நமக்குத் தெரியாத விஷயங்களைப்பற்றிச் சிலர் பேசிக்கொண்டிருந்தால், மௌனமாக இருந்துவிட்டால் தப்பித்தோம். இல்லாவிட்டால், நம் முட்டாள்தனத்தை வெளிக்காட்டும்வகையில் ஏதாவது உளற நேரிடும். சிறக்க வேண்டுமானால், சில சமயம் சறுக்கவும் செய்வோம். அப்போது குன்றிப்போய்விடலாமா?     20 . நீடிக்கும் உறவுகள்   ஐம்பது வருடங்களுக்குமேல் தாம்பத்தியத்தில் இணைந்திருப்பவர்களைப் பார்த்தால், அவர்களுக்குள் சண்டையே வந்திருக்காதா, எப்படி மனம் ஒத்துப்போயிற்று என்றெல்லாம் அதிசயமாக இருக்கும். நெருக்கமான உறவில் மட்டும் அடுத்தவருக்குப் பிடிக்காத குணங்கள் இருக்காதா, என்ன! வருத்தமும் ஆத்திரமும் ஏற்படுத்திய சம்பவங்களும் நடந்திருக்கலாம். இருப்பினும், அவைகளைக் கடந்தால்தான் உறவு நீடிக்கும் என்று புரிந்தவர்கள் அவர்கள். துணுக்கு ஓர் இளைஞன் தன் தாயிடம் பெருமையாகச் சொன்னான்: என் காதலி நான் வேடிக்கையாகப் பேசுபவன், ஆணழகன், புத்திசாலி என்று சொல்கிறாள். தாய் கேட்டாள்: உனக்கு அவளிடம் என்ன பிடிக்கும்? பதில்: அவள் என்னை வேடிக்கையாகப் பேசுபவன், ஆணழகன், புத்திசாலி என்று புகழ்வது. தம்மிடமிருந்து, தாம் நம்புவதிலிருந்து, மாறுபட்டவர்களைக் கண்டால் பலருக்கும் ஏதோ பயம். அது கோபமாக மாறுகிறது. கதை என்னுடன் ஒரே மாதம் வேலைபார்த்த கணபதி, “நீங்கள் வெஜிடேரியனா?” என்று கேட்டபோது, “ஆமாம்,” என்றேன். உடனே கோபமாக, “எத்தனை பிராமணர்கள் `எல்லாவற்றையும்’ சாப்பிடுகிறார்கள், தெரியுமா?” என்று கத்தினார். நான் அமைதியாக, “நீங்கள் என்னைப்பற்றிக் கேட்டீர்கள். அதற்கு நான் பதில் சொன்னேன். `எல்லா பிராமணர்களும்’ என்று கேட்டிருந்தால், வேறு விதமாக பதில் அளித்திருப்பேன்,” என்றேன். அவருடைய முகம் சுருங்கிப்போயிற்று. மனைவி என்றால் தனது அதிகாரத்தை ஏற்கவிருப்பவள் என்று எண்ணுவதுபோல் நடப்பவர் கணபதி. பேசும் சுதந்திரத்தைக்கூட தன் மனைவிக்கு அளித்திருக்கமாட்டார். பிறர் பேசும்போது அவள் எதுவும் பேசாது, சிரித்துக்கொண்டே இருப்பாள். ஏன் தன் மனைவி கலகலப்பாக இல்லை என்ற குழப்பம் எழ, “என் மனைவி படித்தவள். (இதை இருமுறை அழுத்தமாகக் கூறினார்). ஆனால், உங்களைப்போல் இல்லையே!” என்று என்னிடம் குறைப்பட்டார். என் பதில்: “நீங்கள் நினைப்பதை, சொல்வதை, பிறர் அப்படியே ஏற்கவேண்டும் என்று எதிர்பார்க்கிறீர்கள். அப்படி இல்லாவிட்டால் கோபம் வருகிறது. உங்களுக்கு என்னைப்போன்ற மனைவி சரிப்படமாட்டாள்”. அன்பு என்பது ஒருவரை அவர் உள்ளபடியே ஏற்பது. மற்றவரிடம் எதை எதையோ எதிர்பார்த்தால் ஏமாற்றம்தான் உண்டாகும். கதை புதுமணத் தம்பதிகளான பிரபாவும் பார்த்திபனும் ஈராண்டுகள் மகிழ்ச்சியாகக் கழித்தனர். அப்போது மனைவியின் முகம் சிறிது கோணினாலும், உடனே மன்னிப்பு கேட்டுவிடுவான் பார்த்திபன். தான் தவறு செய்திருக்கலாமோ என்ற சந்தேகத்தால் அல்ல. (புரியவில்லையா? உடல் நெருக்கம் மட்டுமே முக்கியமாக இருந்த காலம் அது). பிரபாவின் கை ஓங்கியது. அதன்பின், அறிவு முதிர்ச்சி இன்றி, எந்த வாய்ச்சண்டையிலும் தான்தான் வெல்லவேண்டும் என்று நினைப்பவளாக ஆனாள். `என்ன பேச ஆரம்பித்தாலும், ஏனோ வாக்குவாதத்தில் முடிகிறதே!’ என்று பார்த்திபன் அவளிடமிருந்து லேசாக விலகலானான். பொதுவாக, எல்லாத் தம்பதிகளையும்போல் பிரபாவின் பெற்றோரும் அவ்வப்போது வாக்குவாதம் செய்வதுண்டு. மௌனமாக இருப்பதற்கு அது மேல் என்று புரிந்தவர்கள். பிரபா தாயிடம் கலந்து ஆலோசித்தாள். “அது எப்படி, நீயும் அப்பாவும் இத்தனை வருடங்களாக ஒருவரையொருவர் பொறுத்துப்போனீர்கள்?” “யாரிடம்தான் குறையில்லை? அடி, உதையில் இறங்காதவரை, பொறுத்துப்போக வேண்டியதுதான்,” என்று வாழ்க்கைத் தத்துவத்தை விளக்கினாள் தாய். “அப்பா சிறு தவற்றைச் செய்யும்போது, அதை கவனிக்காததுபோல் இருந்துவிடுவேன். அவரைப்பற்றிப் பிறரிடம் புகார் செய்வதும் கிடையாது”. ஒருவர் கூறுவதை ஏற்க முடியாததால் சண்டைபிடிக்கத் தோன்றுகிறதா? அமைதியாகப் பேசினால் பயன் கிடைக்கும். மௌனம் சாதித்தால், ஒருவர் மனதில் இருப்பதை மற்றவர் எப்படிப் புரிந்துகொள்ள இயலும்? மற்றவர் செய்த பிழைகளைப் பெரிதுபடுத்தாது இருப்பது உறவைப் பலப்படுத்தும் என்றெல்லாம் மணவாழ்க்கை அவளுக்குக் கற்றுக்கொடுத்திருந்தது. “குறையே இல்லாதவராக இருக்கவேண்டும் என்று எதிர்பார்த்தால் நடக்கிற காரியமா? நான் மட்டும் என்ன, தப்பே செய்யமாட்டேனா? விட்டுப்பிடி”. ஒரு துணுக்கு எல்லா நாடுகளிலும் பெண்கள் தலைவர்களாக இருந்தால் என்ன ஆகும்? ஒருவரோடு ஒருவர் பேசாத நாடுகள் உருவாகும்! பெண்ணின் எதிர்பார்ப்பு நாம் விரும்பிய ஒருவர் இப்படித்தான் இருக்கவேண்டும் என்று நினைக்கிறோம். ஆனால், அவர் அப்படி இல்லாவிட்டால் ஏமாற்றம்தான் உண்டாகும். மனைவி தன்னை எப்போதும் சாடுகிறாளே என்று வருந்திய ஒருவனின் குமுறல்: “நான் அவளுக்குப் பூரண சுதந்திரம் கொடுத்திருக்கிறேன். அவள் பணக்கார குடும்பத்திலிருந்து வந்தவள், வீட்டு வேலை செய்யப் பிடிக்காது என்று வீட்டில் சமையலுக்குக்கூட ஆள் போட்டிருக்கிறேன். அவளுடைய சொந்த உபயோகத்திற்கு கார். இன்னும் என்ன வேண்டும்?” கணவனுக்குப் பெரிய வேலை, அதனால் பொறுப்புகள் நிறைய இருக்கும் என்பதெல்லாம் அவளுக்கும் புரியாமலில்லை. வேலை நிமித்தம் வெளிநாட்டுக்குப் போய்வரும்போதெல்லாம் பரிசுப்பொருட்கள் வாங்கி வருகிறான். இருந்தாலும், தனக்காக அவ்வளவு நேரத்தைச் செலவழிப்பதில்லை என்ற வருத்தம் கோபமாக மாறிவிட்டது. காதலனாக இருந்தபோது இப்படியா இருந்தான்! எவ்வளவு எதிர்பார்ப்புடன், குடும்பத்தை எதிர்த்து அவனை மணந்தாள்! இப்போது அவளுக்கு வேண்டியது அவனுடைய அன்பான கவனிப்பு. வேறு எதுவும் அதற்கு ஈடாகாது. வெளிப்படையாகக் குறைகூறாது அனுசரித்து நடந்தால், இருவரில் ஒருவர் தானாக மாறலாம். இல்லை, மாற்ற முடியாததை ஏற்க வேண்டும். கதை அமெரிக்கப் பெண்மணி லூயிஸ் கலகலப்பானவள். அவளுடைய கணவரோ நேர்எதிர். அழுமூஞ்சி என்று சொல்லத்தக்கவர். சற்று பழகியதும், நான் அவளிடம் கேட்டேன்: “உனக்கும் உன் கணவருக்கும் பொருத்தமே இல்லையே! எப்படி அவருடன் இருக்கிறாய்?” (அவர்களுடைய பிரச்னையில் நான் மூக்கை நுழைப்பதை அவள் தப்பாக எடுத்துக்கொள்ளமாட்டாள் என்று தெரியும்). உடனே, “அப்படிப் பார்த்துக்கொண்டே இருந்தால், முடிவே கிடையாது,” என்று பதிலளித்தாள். சற்றுப் பொறுத்து, “என் கணவர் விவாகரத்து ஆனவர். அவருடைய முதல் மனைவியை ஒருமுறை சந்தித்தேன். என்னைப்போலவே இருந்தாள்,’ என்று தெரிவித்தாள். வெளிப்படையாகக் கட்டுப்படுத்தாது, அவருடைய குறைகளைப் புரிந்து, அவைகளுடன் அவரை ஏற்கும் விவேகம் நிறைந்தவள் லூயிஸ். அதனால் அவர்களுடைய தாம்பத்தியம் குறுகிய காலத்தில் முடிந்துவிடவில்லை. தன் குறைகளை உணர்ந்த கணவரும் அவளிடம் நன்றி செலுத்தும் விதமாக மிக்க அன்புடன் நடந்துகொண்டார். காதல் எதுவரை? காதலர்களாக இருக்கும்போது, உல்லாசமாக ஊர்சுற்றி, செலவைப் பார்க்காமல் ஒருவர் மற்றவருக்கு ஏதாவது வாங்கிக்கொடுத்து, சிரிப்பும் களிப்புமாக இருப்பதோடு காதல் முடிந்து விடுவதில்லை. வாழ்க்கை நம்மைப் புரட்டிப் போடும்போது ஒருவருக்கொருவர் ஆதரவாக நடக்க வேண்டியதும் அவசியம்.