[] [cover image] என்னுள் உதித்தவை வி.ஆஷாபாரதி FreeTamilEbooks.com Creative Commons Attribution-NonCommercial-ShareAlike என்னுள் உதித்தவை 1. என்னுள் உதித்தவை 1. என்னுரை 2. ஊக்கு 3. எதிர்பார்ப்பு 4. புகார்க் கடிதம் 5. மண்புழு 6. அருவி 7. மார்கழி 8. பரீட்சை 9. பசி 10. விடியல் 11. சமாதானம் 12. புத்தகம் 13. தபால் பெட்டி 14. முதியோர் இல்லம் 15. குளிர்சாதனப் பெட்டி 16. காலணி 17. பணப்பை 18. சாலையோரக் குழந்தைகள் 19. தொலைக்காட்சி 20. பள்ளி புத்தகப்பை 21. வினாத்தாள் 22. ஈகை 23. தபால் பெட்டியின் புகார் 24. தீவிரவாதி 25. காகிதம் 26. தன்னலமற்ற நதிகள் 27. செங்கற்சூளை 28. சட்டையின் வயது 29. வாசனைத் திரவியம் 30. முகமூடி 31. அன்னையின் அன்னை 32. சிறார்கள் 33. கடமை 34. கடலும் முகிலும் 35. மனமும் வானமும் 36. மலர்களின் மரணம் 37. பச்சோந்தி 38. பணிவு 39. பார்வையாளர் 40. மதிப்பெண் 41. மின்வெட்டு 42. குறை 43. தண்ணீரிடம் கேள்வி 44. ஊசி 45. சிவப்பு ரோஜா 46. ஞாயிறு விடுமுறை 47. மனம் 48. தற்கொலை 49. கடல் 50. தனிமை 51. காய்ச்சல் 52. வார்த்தை 53. உமி 54. கோடையில் குருவியுடன் ஓர் சந்திப்பு  55. நகங்கள் 56. புகழ்ச்சியும் இகழ்ச்சியும் 57. வருத்தம் 58. தேர்வறையில் எழுதுகோல் 59. இறுதித் தோல்வி 60. உதயம் 61. கதை 62. சருகுகள் 63. கனாக்கள் 64. சிகரம் தொடு 65. குளம் 66. கைப்பேசி 67. இமைகள் 68. பல்லாங்குழி 69. சுடும் வெயில் 70. வேர்கள்   71. விண்மீனிடம் வேண்டுகோள் 72. வெள்ளை மனம் 73. மின்வெட்டு 74. சாதனை என்பது… 75. சாலையின் சந்தோஷம் 76. பயணங்கள் 77. உனதல்ல 78. காலம் என்னுள் உதித்தவை என்னுள் உதித்தவை   வி.ஆஷாபாரதி   asha199805@gmail.comதமிழாக்கம் -       மின்னூல் வெளியீடு : FreeTamilEbooks.com   உரிமை : Creative Commons Attribution-NonCommercial-ShareAlike கிரியேட்டிவ் காமன்ஸ். எல்லாரும் படிக்கலாம், பகிரலாம்.   மின்னூலாக்கம் - லெனின் குருசாமி - guruleninn@gmail.com   This book was produced using pandoc   பதிவிறக்கம் செய்ய - http://FreeTamilEbooks.com/ebooks/Ennul_Udithavai} என்னுரை அன்பார்ந்த வாசக நெஞ்சங்கள் அனைவருக்கும் வணக்கம். நம்மைச் சுற்றியுள்ள மனிதர்கள், பேசும் பேசாப் பொருட்கள் நம்முள் ஏற்படுத்திவிட்டுச் செல்லும் தாக்கங்கள் ஏராளம். அவை நம்மைச் செதுக்கவும், சிந்திக்கவும், செய்யும் பேராற்றல் கொண்டவை. அதி வேகமாய் இயங்கி வரும் இயந்திர வாழ்விலும், நம் அன்றாட அவசர உலகிலும், அறிந்தோ அறியாமலோ உலகிலுள்ளவை நமக்குள்ஏற்படுத்திச் செல்லும்தாக்கங்கள் ஏராளம். சிந்தனைக்கும் சூழலுக்கும் ஏற்ப தாக்கங்கள் மாறுபடலாம். உயிருள்ளவையும், அதன் உணர்வுகளும்,உயிரற்றவையும் அதன் உருவங்களும் என உலகில் உலவும்ஒவ்வொன்றிற்கும்தாக்கங்கள் ஏற்படுத்துவதில் பெரும் பங்கு உண்டு.அத்தகைய தாக்கங்களை துயிலெழுந்தபின் காணாமல் போகும் கனாக்களாய் விட்டுவிடாமல், தாள்களில் தக்க வடிவம் தந்துள்ளேன். அவற்றை உங்கள் உள்ளங்களில் சேர்க்கும் என் முயற்சியே “என்னுள் உதித்தவை”.உற்சாகம், உத்வேகம்,உயர்வு, மற்றும் உதாசீனம், தோல்வி,பொறாமை என நேர்மறையும்எதிர்மறையுமாக நம்உள்ளத்தில் ஓராயிரம் உணர்வுகள் . அவற்றுள் சில கவி உருவம் பெற்று உங்கள் உள்ளத்தை அடையக்காத்திருக்கிறது.உங்களின் தமிழ்க் கவிதைத் தாகத்தைத்தணிக்க “என்னுள் உதித்தவை”யில் உள்ள தாக்கங்கள் உதவும் என நம்புகிறேன்.என்னுள் கவிதைகள் பிறக்க முதற் காரணமான என் அன்னையின் அன்னையும், அவரின் நீங்காநினைவுகளுடனும், தொடர்கிறது என் கவிதைப் பயணம். இக்கவிதைத்தொகுப்புவெளியிட உதவிக்கரங்களாகவிளங்கிய அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். மேலும் என் அனைத்து கவிதைகளையும் பிறந்த சில நொடிகளிலேயே படித்துவிடும் என் முதல் வாசகரும்,என்முதல்ஆசானுமான என் அன்பு அன்னை மோ.ஜோதிமணிக்குஎனது இந்த முதல் கவிதைத் தொகுப்பு “என்னுள் உதித்தவை”சமர்ப்பணம். இந்த புத்தகம் குறித்த தங்களின் விமர்சனங்களைasha199805@gmail.comஎன்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புமாறு கேட்டுக்கொள்கிறேன். உள்ளே உதயமாகிக் கொண்டு காத்திருக்கிறது “என்னுள் உதித்தவை” உங்கள்உள்ளங்களில் உதயமாக! -வி.ஆஷாபாரதி ஊக்கு சாலையோரக் குழந்தையின் அன்னையர் தினப் பரிசு. எதிர்பார்ப்பு நிலவிடம் கொடுத்த ஒளியை திரும்பப் பெறும் வழியை எண்ணியதில்லை சூரியன் ஒருபோதும் மனித மனம் ஏனோ எதிர்பார்ப்புகளுடன் எப்பொழுதும். புகார்க் கடிதம் காலையில் கொடுத்த புகார்க் கடிதம் மாலையில் வீடு வந்தது சிற்றுண்டி மடித்த காகிதமாக. மண்புழு என்னை அற்ப உயிர் என அழைத்து அழிப்பவருள் அன்றாடம் எனக்கும் ஆகாரம் அளிக்கும் என் ஆருயிர் நண்பனே விவசாயி. அருவி விழும்போதும் கூட அழுவதில்லை - அருவி ஆரவார ஒலி எழுப்பி ஆனந்தமாய் - பல ஆண்டுகளாய் பூமியில். மார்கழி கடும் குளிரிலும் வெண்பனிப் போர்வை போர்த்தி உறங்கும் பூக்கள் - மார்கழியில். பரீட்சை பரீட்சை மிக பரிட்சயமானது என்றபோதும் பல சமயங்களில் - என்னை முந்திச் செல்கிறது தேர்வறைக்குள் பயம். பசி எழுதுகோலின் மை தீர்ந்தது உணவின்றி கடும் பசியில் காகிதம். விடியல் விழி மூடாமல் விண்ணில் விளக்கேற்றிய விண்மீன்களின் உறக்கம் - விடியல். சமாதானம் பாரெங்கும் போர் முழக்கம் பயனற்று போனது சமாதானம். பணியின்றி மாடத்தில் பிணியுற்றிருப்பதாய் உணர்கிறேன் நான் - இப்படிக்கு வெண்புறா புத்தகம் புதுமையையும் புத்துணர்ச்சியையும் என் அகத்தினுள் புகுத்துவதில் புலமை பெற்றதால் உன் பெயர் புத்தகமோ. தபால் பெட்டி வழக்கிழந்து விடுவேனோ என்று வருந்தினாலும் வாழ்நாள் முழுவதும் வாழ்த்துக்களையும் வசைகளையும் வண்ண அட்டைகளில் வாங்கிக் கொண்டே இருக்கிறேன் வாய்திறந்த படியே! இப்படிக்கு தபால் பெட்டி முதியோர் இல்லம் காய்ந்த சருகுகள் என எண்ணி பிடுங்கினோம் வேர்களை. இன்று வசிப்பது ஆய்வுக் கூடங்களிலல்ல அன்புக்கு ஏங்கும் கூட்டங்களில் அதற்கு நவீன பெயர் உண்டு முதியோர் இல்லம் எனும் கூண்டு. குளிர்சாதனப் பெட்டி நூதனமாய் ஓர் சாதனம் குளிரவைத்து சாதனை புவியை எரிகல்லாக்கிய சோதனை. காலணி சுற்றினேன் உலகையே அன்பைத் தேடி கண்டுகொண்டேன் இங்கு ஏனோ உள்ளே அனுமதியில்லை ஏக்கத்துடன் வாசலிலேயே நான். இப்படிக்கு காலணி பணப்பை எடை குறைந்தேன் நிராகரிக்கப்பட்டேன் சிகிச்சை மறுத்தது மருத்துவமனை அனுமதி மறுத்தது கல்வி நிலையம் என் முகம் மறந்தன இதயங்கள் யார் நீ? என கேட்டது என்னையே என் மனம். இப்படிக்கு பணப்பை சாலையோரக் குழந்தைகள் முட்களற்ற ரோஜா வேலியற்ற தோட்டம் நிரந்தரமற்ற மேகக்கூட்டம் தெளிவற்ற பனிமூட்டம் மாலுமியற்ற கப்பல் போலவே இந்த முகவரியற்ற அரும்புகள் வாழ்வும். தொலைக்காட்சி தொலைதூரக் காட்சிகளைத் துல்லியமாய் என்னுள் தாங்கி -சிலரால் தொல்லை என பெயரையும் வாங்கி தொடர்கிறேன் தொய்வின்றி தொலைநோக்குடன் நான். “தொலைத்துவிட்டீர்கள் உங்களை என்னால்தான்” - எனில் தொய்வு யாரிடம்? பள்ளி புத்தகப்பை சுவையான அறிவை சுமையாக்கி விட்டேனோ? சூழ்ந்தது கவலை என்னுள். வினாத்தாள் வினாக்குறிகள் மாறின ஏனோ ஆச்சரியக்குறிகளாய் உன்னைக் கண்ட அந்த சில நொடிகளில். ஈகை வெட்டப்பட்ட பின்னும் வீட்டின் அரணாய் கதவுகள். இறந்த பின்னும் இயற்கையின் ஈடில்லா ஈகை. தபால் பெட்டியின் புகார் காணவில்லை கடிதங்களை கடத்திச் சென்றுவிட்டதோ கட்செவி கண்ணீருடன் தபால் பெட்டி புகார். தீவிரவாதி தவறுகளை உணர்ந்து திருந்தியவனை தீண்டத்தகாதவனாக்கினால் திருடனும் தீவிரவாதியாகக் கூடும். காகிதம் காகிதம் நனைந்தது கண்ணீரால் - நான் மரம் வரைந்த அந்த நொடியில் தன் சொந்தங்களைக் கண்டவுடன். தன்னலமற்ற நதிகள் நடுநிசியிலும் கூட நிற்பதில்லை நதிகள்! நிலங்களை வளமாக்குகிறது நாளும் தான் சேருமிடம் உப்புக்கடல் என்பதை அறிந்தும் கூட. செங்கற்சூளை செம்மண்ணும் சிவப்புக் கம்பளமானது! செங்கற்களின் கனம் குறைந்தது ஓர் கணம் கற்கள் கல்விச்சாலை கட்டிடம் கட்ட என்பதை அறிந்ததும் என் மனம் பறந்தது செங்கற்சூளையிலிருந்து கல்விச்சாலைக்கு. இப்படிக்கு குழந்தைத் தொழிலாளர் சட்டையின் வயது சத்தமின்றி சரியாய் சொல்லிவிட்டன சட்டையின் வயதை. சலிப்பின்றி தைத்த சட்டைக் கிழிசலின் தையல்கள். வாசனைத் திரவியம் பூக்களின் கண்ணீரிலும் கூட நறுமணமோ? வினா எழுப்ப வைத்தது வாசனைத் திரவியம். முகமூடி முயன்றுதான் பார்த்தேன் முகமூடியின்றி வாழ முடிவில் முட்டாள் என்ற முத்திரையுடன் முப்பொழுதும் வேற்றுகிரகவாசியாய் பூமியில் நான். அன்னையின் அன்னை வேடிக்கைக் கதைகள் பல கூறி வீட்டையே விளையாட்டு மைதானமாக்கிய என் அன்னையின் அன்னை விண்மீன் ஆனாள் இன்று உலகிற்கு விடை கொடுத்துச் சென்று விழும் எரிநட்சத்திரங்களெல்லாம் விட்டுச் சென்றவளின் வருகைதானோ என விண்ணையே நோக்கி என் கண்கள் இன்றுவரை. சிறார்கள் சில தோட்டாக்கள் சிரசினுள் சென்றபோதும் சிதறப்போவதை அறியாமல் சிரித்துக் கொண்டே செத்து மடியும் சிறார்கள். சில சில்லறைக்காக மனிதத்தை விற்றுவிட்ட சிலரால். கடமை கடமையைச் செய்தால் அதிகார மீறல் கண்டும் காணாமல் சென்றால் காணும் இடமெல்லாம் மக்களின் சாடல் கலங்கி நிற்கும் கடமை ஆற்றும் அதிகாரிகள். கடலும் முகிலும் கடலால் முகிலும் முகில் தந்த மழையால் கடலும் வாழ்கிறது என்றும். எட்டும் தூரத்தில் இல்லை என்றபோதும் என்றும் சிறந்த நண்பர்களாய் இவர்கள். மனமும் வானமும் எண்ணிக்கையில் தோற்றன விண்மீன்கள் - மனதின் எண்ண அலைகளிடம். மனம் வானினும் பெரிதோ! மலர்களின் மரணம் ஒரு கோடி மலர்கள் உதிரும் தருணம் அழகிய காட்சி என கண்டு பலர் மகிழ்ச்சி - ஏனோ ரசிக்கவில்லை நான் மட்டும் அந்த ஒரு கோடி மரணத்தை ! பச்சோந்தி வேரூன்றிய நிறபேதம் - ஏனோ விலக்கு எனக்கு மட்டும் படைத்தவனுக்கு நன்றி என்றும். என் நிறத்தை நிர்ணயிக்க இயலாமல் நித்தமும் குழப்பத்தில் நிறவெறி மனிதன்! பணிவு பணிவு பண்புகளுள் சிறந்தது எனில் பல சமயங்களில் பந்தாடப் படுகிறேனே ஏன்? - என் பல நூறு கேள்விகளுள் ஒன்று. பார்வையாளர் இன்று பாவங்கள் நிகழுமிடமெங்கும் பார்வையாளர்களாகவே நாம் பாதுகாப்பின்றி பூமி! மதிப்பெண் மதிப்பெண் ஒன்றே மதிப்பைத் தரும் என் - தம்மை மாய்த்துக் கொள்ளும் அளவிற்கு மழலை மதியில் ஏற்றியதாரோ? மின்வெட்டு விண்மீன்களின் ஜோதியில் வீதி மின்னொளியை விட மிளிரும் மின்மினிப்பூச்சி மிரட்டும் இருளிலும் மிக அழகாய் வழி சொல்லும் நிலவு கண்டேன் இன்று ஓர் அற்புத நிகழ்வு மின்வெட்டுக்கு நன்றி! குறை உடைந்த நிலா எண்ணவில்லை அதை குறையென்று - மாறாய் சொல்கிறது தன்னை பிறையென்று. தண்ணீரிடம் கேள்வி தன்னைச் சுட்ட போதும் துள்ளிக் குதிக்கிறது தண்ணீர் - கொதிநிலையில். துன்பத்திலா? தூய்மை அடைந்தேன் என்றா? தண்ணீரிடம் என் கேள்வி. ஊசி ஒருங்கிணைக்கும் ஓராயிரம் கிழிசல்களை தன் ஒற்றை கண்ணால். சிவப்பு ரோஜா சிரித்துக் கொண்டுதான் இருந்தது சிவப்பு ரோஜா … என் சிகையில் வைத்தபின்னும் கூட ஏனோ …. அதன் செடியின் வலி சில நிமிடம் என்னுள். ஞாயிறு விடுமுறை ஞாயிறு விடுமுறை - வானிலும் இன்று ஞாயிறு விடுமுறை. உடை மாற்றிய நீல வானம், கருவிழி நிறம் போர்த்திய கார்மேகம். விருந்தினராய் விண்ணைத் தாண்டி வந்தது உயிர்களின் நலன் வேண்டி நெற்கதிர் பணிந்து வணக்கம் சொல்லி - மழை பூமி வந்தது “விவசாயிகளின் விடிவெள்ளி” மீண்டும் உடை மாற்றம் வானில், வானவில் நிறம் தந்த ஏழு, வர்ணிக்க வார்த்தை ஏது? என் கையில் தேநீர் பானம், கேட்டேன் குயில்களின் தேன் கானம். “இயந்திர மனிதா - இன்றாவது கேள் என் பாட்டை” என்றது. சிறிதும் கட்டணமின்றி, சிறிய சுற்றுலா சென்றது போல், சிறிது நேரம் இவர்களுடன் நான் - ஏனென்றால் ஞாயிறு விடுமுறை! மனம் போர்க்களமும் பூங்காவும், “போதும்” என்பதே இல்லாமையும், போற்றுதலும் தூற்றுதலும் - சிலரின் போலி புன்னகைகளும், பழியில்லா புன்சிரிப்பும், புதுமை சிந்தனைகளும், புதைந்த நினைவுகளும், புரியாத புதிராய் ஓரிடத்தே சங்கமிக்கக் கண்டேன் - இது உலகில் எங்குள்ள இடம், வேறேது, உருவமில்லா நம் மனம்தான் அது. தற்கொலை இரவில் இருண்டு விடுகிறேனே - என் இன்றுவரை வருந்தியதில்லை வானம். இன்பமாகிறது நாளும் ஓர் நிலவு கொண்டும் ஒரு கோடி விண்மீன்களின் ஒளியேற்றியும். ஒளிமயமான வாழ்வே ஒழிந்துவிட்டதாய் எண்ணி, மாந்தர் மாய்த்துக் கொள்வதேனோ! மாபெரும் தைரியம் அவர்க்கு ஊட்டியதாரோ? “தற்கொலை - தனி உரிமை” எனும் “மயக்க நிலை முழக்கம்” தானோ! கடல் கண்ணீர் வங்கியோ இந்த கடல் …. ஏனோ கரிக்கிறதே உப்பாய். காலங்கள் பலவாய். தனிமை தொண்ணூறு வயது குழந்தையை தேடி வரும் ஒரே தோழன். காய்ச்சல் அன்றாட பணியிலிருந்து … தற்காலிக அவசர விடுப்பு வழங்கும் அதிதி. வார்த்தை வாழ்த்தாகி, வசையாகி -மனதில் வடுவாகி - சில நேரங்களில் விடமாகி - பின் வெற்றிக்கு வித்தாகி, விதவிதமாய் வேடமிட்டு -நித்தமும் வாழ்கிறது -நம் யாவரின் வாழ்விலும் வார்த்தை. உமி உதறித் தள்ளப்பட்டாலும், உதாசீனப்படுத்தியதாய் உணர்ந்ததில்லை- நெல்மணிகளை உருக்குலையாமல் காத்த உமி ! “உணவாகட்டும் நெல் இனி” ! -என உளமாற வாழ்த்திவிடைகொடுக்கும் உயர்ந்த உள்ளத்துடன்!   கோடையில் குருவியுடன் ஓர் சந்திப்பு  சன்னலில்  ஓர் குருவி  சற்று இளைப்பாற  வந்தது. சத்தமிட்டு விரட்டினேன்  “செல் !உன் வீட்டிற்கு” என்றேன். “இது என் வீடும் தான்” என்றது ஏக்கத்துடன்.  திகைத்து நின்றேன் ஓர் நொடி.  சன்னல்  கதவுகள்  சட்டென மூடி திறந்தன. சரியாக புரிந்தது எனக்கு.  காடுகள் வீடுகளாகி, மரங்கள் யாவும்  மாளிகைகளின் கதவு சன்னல்களாய் மாறி விட்டன! “காட்டையே அளித்த அக்குருவிக்கு- என் வீட்டின் சிறு சன்னலை கூட தர மறுப்பதா?” எனக்குள் இந்த வினா சில நொடிகள்: அன்று முதல்  அந்த குருவி  அன்றாடம் -என் வீட்டு சன்னலில். நகங்கள் விரல்களுக்கு பதில் -மண்ணில் மரங்களாக பிறந்திருக்கக்கூடாதா நான்! வெட்ட வெட்ட வளர்ந்து கொண்டே  இருப்பேன்  என்பதால். இப்படிக்கு நகங்கள் புகழ்ச்சியும் இகழ்ச்சியும் புகழ்ச்சி பரிசுதான்!  -அது போதை தந்து -நம்மை பாதை மாற்றாத வரை! இகழ்ச்சிகூட இன்பம்தான் எழுச்சிக்கு வித்தானால்! வருத்தம் வாழ்வின் மகிழ்ச்சி வரையறையின்றி நிறுத்தம்! வருகை தந்தது வாடிக்கையாக வருத்தம்! விடுமுறை வழங்க வேண்டுகோள் விடுத்த படி வாழ்வு சிலருக்கு! விண்ணில் தங்குவதில்லை வெகு நேரம் , விண்ணைமறைக்கும்மேகங்கள்! விடை கொடுக்கும் வருத்தமும் விரைவில் ! வாழ்வில் வசந்தம் விட்டுச்சென்று! தேர்வறையில் எழுதுகோல் மனதில் என்ன பாரமோ? மற்றவரேனும் விதித்த தடையோ? மனதில் உள்ளதைக் கூற மறுக்கிறதே காகிதத்திடம், மை இருந்தும் தேர்வறையில் எழுதுகோல்! மணித்துளிகளில் -எனக்கு மரண பயத்தைக் காட்டி. இறுதித் தோல்வி இதயம் இடிந்து கிடக்கையில், இன்னல்கள் இரு மடங்காகையில், இசை மீட்டுகின்றன இனிதாய் இலைகள் யாவும்! “இறுதித் தோல்வி இது”- என்பது-என் மனதில் இறங்கும்வரை, இளைப்பாறாமல் இலைகள் இசைக் கச்சேரி! கணக்கின்றி கடும் விமர்சனங்கள்! கேலிப் பேச்சுக்கள்! கவலை கூண்டிலடைக்கும் வேளையில், கரவொலிகள் கோடி தந்து “கடைசி தோல்வி இது” என்றன கடல் அலைகள்மட்டும்! இன்னல்கள் சென்றது எங்கோ பறந்து இயற்கையே ஆனது இதயத்திற்குஅருமருந்து. உதயம் உடைந்தவையும், உதிர்ந்தவையும், உரமூட்டுகையில் உருவாகும் உன்னதமே உதயம்! உடைந்த கற்களின் உதயம், உறுதியான கட்டிடத்திற்கு மணல் ஆகையில்! உதிர்ந்த இலைகளின் உதயம், உரமாகி மண்ணுக்கு உயிரூட்டுவதில்! உலகின் ஒளி,“கதிரவனின்” உதயம் -சோம்பலை உதிர்த்துவிட்டு , உதிரத்தின் நிறத்தில் உத்வேகம் கொண்டு உதிக்கையில்! உலகில், உடைந்து, உதிர்ந்தவையெல்லாம் உதயமாகையில், உடைந்த -துயரில் உரைந்த உள்ளமும், உதயத்திற்குத்தான் -என உளமாற உன்னை நம்பும் உன்னதத்தருணமே உனக்கான உதயம்!   கதை காணவில்லை கதை சொல்ல எவரையும், கணினிகளின்உலகில் ! கட்டளை யார் இட்டதோ ? கதைகள் சொல்லும் பணியில் கோடி விண்மீன்கள்! கதைகள்பல கூறிய களைப்பிலும் -அதை யாவும் கேட்ட களிப்பிலும், கண்ணுறங்கினோம் காலையில் தான் விண்மீன்களும் நானும் .   சருகுகள் கடும் குளிர் என்னை கடத்திச் சென்று கொன்று விடாமல் காக்க-எரிகின்றன கடந்த வாரம் கோடரியால் வெட்டப்பட்ட மரத்தின் காய்ந்த சருகுகள். கனாக்கள் துயிலெழுந்தபின்தான் தூங்கச் செல்கின்றன -கண் துஞ்சாது தவறாமல் தொலைதூரம் -என்னுடன் தூக்கத்தில்பயணித்த கனாக்கள். சிகரம் தொடு உடைந்த நிலா, எண்ணவில்லை அதை குறையென்று ! மாறாய் பிறையென்று அதன் நம்பிக்கை. நம்பிக்கை ஊற்றானால் வெற்றிப் படிகளில் -உன் கால்கள் ஏறும் தன்னால். உளியின் அடிகள், சிலையின் வடிவுகள். அதன் வேதனை ஒரு வலி, முடிவில் பெற்றிடும் கரவொலி. சிற்றின்பங்கள் ,சிறுசோம்பல்கள் சுகமான சிறை-அதை நித்தமும் முறித்தால் உலகம் உன்னை ஏற்கும் வெற்றியின் மேடையில் ஏற்றும். சிட்டுக்குருவியும் கடல் தாண்டிடும் தன் சின்னஞ்சிறு சிறகுகளால். வியர்வை சிந்தி, உழைப்பை உயர்த்து சிகரம் தொடுவாய் நீ!-அந்த வேற்றுகிரகமும் -உன் வீடு வரும் -உனக்கு வெற்றி வாழ்த்துக்கூற. குளம் நிரம்பியது குளம்! நீந்த இயலாமல்  நித்தமும் துடித்த  மீன்களின் கண்ணீரால். கைப்பேசி கைப்பேசியுடன் விளையாடி, கட்செவியில் உரையாடி -இதிலிருந்து கொஞ்சம் விலகியிருப்பவனை காரணமின்றிஎள்ளி நகையாடி, காண்பதையெல்லாம் புகைப் படமாக்கி, கண்டங்கள் தாண்டியும் கணக்கின்றி உரையாடி, காண மறந்தோம் கண்ணெதிரே -நம்முடன் கலந்துரையாட ஏங்கும் மனங்களை ஓர் கணமாவது! கட்டுக்குள் இருக்கட்டுமே-நம்மைக் கட்டுப்படுத்தாமல் - நாம் கட்டியமைத்த விஞ்ஞானம்.       இமைகள் அயர்ச்சியின்றி அடித்துக்கொண்டிருக்கும் அன்றாடம் அந்த அழகிய இமைகள், அயர்ந்து, அசையாமல் இமைக்க மறந்து நிற்கும், அதிர்ச்சியிலும், அதீத மகிழ்ச்சியிலும் மட்டும்! பல்லாங்குழி எப்படித் தெரிந்ததோ! எங்கள் வீதியின் சாலைக்கு, எனக்கு விளையாட்டு பிடிக்குமென்று! எங்கும் பல்லாங்குழிகளாயின எனக்காக! சுடும் வெயில்   சுடும் வெயிலில்தான் சட்டென  மலர்கிறது சூர்யகாந்தி மலர் எனில் சுடும் வார்த்தைகள்கூட   சில நேரம் -நம் சாதனைக்கு   சாலை வகுக்கத்தானோ! வேர்கள்      விட்டு விலக்கியதில்லை  வளர்த்த  வேர்களை வானுயர்ந்த  மரங்கள்கூட! வயது சில கடந்த பின் வெட்டி விடுகிறார்-தன் வேர்களை -உருவில்  மட்டுமே  வளர்ந்த மாந்தர் சிலர்! விண்மீனிடம் வேண்டுகோள் விருப்பத்தை வேண்டிக்கொள் என்றது விண்மீன்  வீழ்கையில், “விழ வேண்டாம் இனி விண்மீன்கள்  யாவும்!  ” -என் விருப்பம் இதுவே என்றதும் வியந்த விண்மீனிடம் விழைந்தேன் இப்படி: விட்டுச் சென்றவர் யாவரும் விண்மீன்களாக !-நித்தமும் விசாரிப்பேன் நலனை விண்ணை நோக்கி மண்ணிலிருந்தே! வானிலிருந்தும் விலகிவிட்டால் -அவர்களை வேறெங்கு காண்பேன் நான்! விருப்பத்தைக் கேட்டு வருத்தத்துடன் விழுந்தது அந்த விண்மீன்! விடையின்றி விண்ணை நோக்கியபடியே நான்!           # வெற்றுக் காகிதம் மனம் அதை  கனமாக்கி, மகிழ்ச்சியை தூரமாக்கி, மிகுதியானால் மமதையைத் தரும் பணக்காகிதத்திற்குப் பதில், நாணயம் மறந்து நல்லவை துறந்து செல்லும் சில்லறை நாணயங்களுக்குப் பதில், விரும்புகிறேன் வெற்றுக் காகிதமாக வஞ்சகங்களில்லா அதன் வெள்ளை மனதை பெற!  . வெள்ளை மனம் வழி மாறவோ, விலை போகவோ, விரும்பியதில்லை! வாழ்த்துக்களுக்கும், வசைகளுக்கும், வளைந்ததுமில்லை! வரையறையற்ற-பல வதைகளாலும், வடுக்களாலும், வடிவமைக்கப்பட்ட வெள்ளை மனம்! மின்வெட்டு மின்தடை! மன்னிப்புக் கோரி மண்ணில் வீழ்ந்து மணிக்கணக்கில் மின்கம்பிகள்! மனமில்லை மன்னிக்க எவருக்கும்! மன்னிக்க முயன்ற மைனாக்களின் கூட்டம் , மடிந்தன மஞ்சள் அலகுள்ள தலை துண்டித்து மண்ணில்துடிதுடித்து! மின்வெட்டிலும் பாய்ந்தது மின்சாரம் என் மனதில்! சாதனை என்பது… சுடும் வெயிலில்  சில நாட்கள் தவம் கிடந்து-பின் சமையலறையில்  சுவையூட்டுகிறது உப்பு. சமையலறைக்கு  உப்பு கூட வந்ததில்லை  சாதாரணமாய்! சிரமங்களை கடந்த பின் தான் சுவையூட்ட முடிகிறது என்றால்  நம் வாழ்வில் சாதனை என்பது? சாலையின் சந்தோஷம்    யாவரும் துக்கத்திலிருக்க    சந்தோஷமோ அந்த  சாலைக்கு மட்டும்? காலணியின்றி நடந்தபோதெல்லாம் காலை சிதைக்கும்  முட்களைப் போட்ட   சாலை காலம் முடிந்து செல்கையில் பூக்களைத் தூவுகிறதே! பயணங்கள் பயணம் தந்த பலம்! படுதோல்விகளுக்குப் பலியாகாமல் பத்திரமாய் மனம்!   உனதல்ல உன்னிடம் உள்ளவை யாவும் உனதல்ல! உயிர் உட்பட!-அவற்றின் உருவாக்கம் உன்னால் மட்டுமல்ல-இதை உணர மறுப்பதென்ன! உன்னுள் உள்ளதை உருவாக்கியவர் உதவும் கரங்களும் உயர்ந்த உள்ளங்களும்தான்- இவை உண்மை என்பதற்கு உரைப்பேன் ஓர் சான்று உனக்கு உயிர் தந்தவள்(அன்னை) உண்டிங்கு  என்று! உயிர் கூட உனதல்ல -பின் உன்  உதவிக்கரங்களை உலகிற்காக உயர்த்துவதில் தயக்கமென்ன!   காலம் காலை மறைந்த கனாக்கள், கடைசி வரை -விடை காணாத வினாக்கள், கணக்கற்ற நினைவுகள்-உயிரில் கலந்த சில உறவுகள், களிப்பை தந்த இளமை, கண்டுகொள்ளப்படாத திறமை, காத்திருப்பதன் இனிமை- என காண்பதையெல்லாம் கடத்திக் கொண்டு சென்றது கடந்து செல்கையில் காலம்!