[] []   என் வாழ்வு    அறிஞர் அண்ணா    அட்டைப்படம் : க சாந்திபிரியா - gkpriya246@gmail.com  மின்னூலாக்கம் : சீ.ராஜேஸ்வரி -  sraji.me@gmail.com  வெளியிடு : FreeTamilEbooks.com    உரிமை : Public Domain – CC0  உரிமை – கிரியேட்டிவ் காமன்ஸ். எல்லாரும் படிக்கலாம், பகிரலாம்.          பொருளடக்கம் பகுதி - 1 9  பகுதி - 2 13  பகுதி - 3 16  பகுதி - 4 19  பகுதி - 5 23  பகுதி - 6 28  பகுதி - 7 31  பகுதி - 8 41  பகுதி - 9 47  பகுதி - 10 52  பகுதி - 11 57  பகுதி - 12 62  பகுதி - 13 67  பகுதி - 14 72  பகுதி - 15 74  பகுதி - 16 78  பகுதி - 17 82  பகுதி - 18 86  பகுதி - 1   வாடிப்போன மல்லிகையைக் காணுபவர்கள், அது முன்னாள் வெண்ணிறத்துடன் விளங்கி நறுமணம் தந்து, மனோஹரியின் கூந்தலுக்கு ஆபரணமாக விளங்கிற்றே என்றெண்ணி அதனைக் கையிலெடுத்து வைத்துக் கொள்கின்றனரா? இல்லை! அந்த மல்லிகை வாடி வதங்கியது! பூக்காரன் வேறு மல்லிகையைத் தொடுத்துத் தருகிறான். அதுதான் புகழப்படுகிறது! ஆனால், விளையாடும் சிறு பிள்ளைகளும் ‘வேறு புஷ்பம் வாங்கி வைத்துக் கொள்ள வகையில்லாதவர்களும்’ அந்த வாடிப்போன மல்லிகையை எடுத்து வைத்துக் கொள்வதுண்டல்லவா! விமலா, வாடிப்போன மல்லிகை! அவளுடைய இளமை மாறி அதிக நாட்களாகவில்லை, ஆனால் மேனியின் மெருகும், வசீகரமும் வனப்பும் மங்கிவிட்டது. தங்கமேனி என்று பிறர் கூறக் கேட்டவள், தன் உடலைத்தானே கண்டு வெட்கமடையலானாள். உடல் இளைத்தது மட்டுமல்ல. அதன் பளபளப்புப் போய்விட்டது. விமலாவின், சுருண்டு திரண்ட கூந்தல், ஒரு காலத்தில், வாசனைத் தைலத்தில் மிதந்ததுண்டு. அவளுடைய முகத்தில் பாரிஸ் பவுடரும், தளுக்குப் பொட்டும் இருந்த காலமுண்டு. லோலாக்கு நாட்டியமாட, முத்துப் பற்கள் புன்னகை பாட அவளுடைய அதரமெனும் திரையை விட்டு வெளியே வருவதும், மறைவமாக இருந்த காலமுண்டு. அந்த அதரந்தான் அடிபட்டு, வீங்கிப் பார்க்கப் பயங்கரமாக இருந்தது. அந்த வீங்கிய உதட்டுடன்தான் விமலா டாக்டர் சுந்தரேசனிடம் சிகிச்சைக்கு வந்தாள். ஜெமீன்தார் வீட்டுக் காரியஸ்தன் ஒருவனுக்குக் காய்ச்சல். அவனுக்கு ‘இன்ஜக்ஷன்’ செய்யும் வேலையிலே டாக்டர் ஈடுபட்டிருந்தார். விமலாவின் வீங்கிய உதட்டுக்கு, சிகிச்சை செய்ய நேரமில்லை. கம்பவுண்டர் கண்ணுசாமியைக் கூப்பிட்டு, “கண்ணா இந்த அம்மாவுக்கு என்னவென விசாரி” என்று உத்தரவிட்டார் டாக்டர். வீக்கத்துக்கும் மற்றும் வெடிப்பு, புண், யாவற்றுக்கும் ‘டின்சர்’ தடவுவது கண்ணுசாமியின் வழக்கம். அந்த முறைப்படியே வீங்கிய உதட்டுக்கும் கண்ணுசாமி ‘டின்சர்’ தடவப் போனான். டாக்டர் தன் வேலையோடு வேலையாக இதையும் கவனித்து விட்டார். “மடையா! உதடு வீக்கமென்றால் கூட டின்சர்தான் போடுவதா!” என்று கேட்டார். கண்ணுசாமி, விமலாவிடம் “உட்காரம்மா ஒரு பக்கமாக டாக்டர் வருவார்” என்று கூறிவிட்டு மருந்து கலக்கச் சென்றான். வீங்கிய உதட்டுடன் விமலா உட்கார்ந்து கொண்டிருக்கையில் அவள் மனத்தில் தூங்கிக் கொண்டிருந்த எண்ணங்கள் எழுந்து விட்டன. எண்ணாதனவெல்லாம் எண்ணலானாள். இந்த உதடு, நாலைந்து ஆண்டுகளுக்கு முன்பு இவ்விதம் வீங்கயிருந்தால், எவ்வளவு “ராஜோபசாரம்” பெற்றிருக்கும். எத்தனைவிதமான மருந்துகள் வலிய வலிய வந்திருக்கும். எவ்வளவு ‘பெரிய பெரிய’ மனிதர்கள் தமக்குத்தான் வீக்கம் வந்தது எனக் கருதித் துடித்திருப்பார்கள். அது ஒரு காலத்தில்! விமலா, விளையாட்டுக் கருவியாக இருந்தபோது! விமலாவின் விழி, தன்மீது ஒரு முறை பாய்ந்தால் போதும் எனப் பலர் எதிர்நோக்கிக் கொண்டிருந்தபோது என்ன பணம் கேட்டாலும் சரி, விமலாவைச் சரிப்படுத்து, அவள் நேசம் கிடைத்தால் போதும் என ஊரிலுள்ள உல்லாசச் சீமான்கள் கூறிய காலத்தில் என்ன உபசாரம் நடந்திருக்கு! இப்போது இளமைக் கெட்டு, அதனை விட விரைவினில் அழகு குன்றி உல்லாச உலகில் ஒதுக்கிடம் பெற்று, உருமாறிப் போன விமலாவுக்கு உதடு வீங்கிற்று என்றால் கம்பவுண்டர் கண்ணுசாமி டின்சர் தடவப் பார்க்கிறான்! அவன் பித்தன்! அந்த அதரம் எத்தனை பேரின் உணர்ச்சியை உலக்கிக் குலுக்கிவிட்டதென்பது அவனுக்கு என்ன தெரியும். சற்று குவிந்தும், சிவந்தும், அந்த உதடு காட்சி தந்து, சங்கீதப் பிரியர்களுக்கு அளித்த விருந்தை அவன் எப்படி அறிவான். வெற்றிலை பாக்கை, ஜாதிக்காய், ஜாபத்ரி, ஏலம் லவுங்கத்துடன் வாயில் விமலா குழைத்துக் கொண்டிருக்க அந்த வெற்றிலைப் பாக்குச்சாறு அந்த உதட்டில் படிந்து பவள நிறத்தைப் பெற்று பார்ப்பவரின் உள்ளத்தில் ‘மோகாந்தகாரத்தைக்’ கிளப்பிவிட்டதை கண்ணுசாமிக்கு என்ன தெரியும்! அந்த வீங்கிய உதடு, விமலா என்ற அபலையுடையது என்பதை அவன் அறிவானேயொழிய, அந்த விமலா வெனும் தாசியின் சோகமிக்க சேதியை அவன் அறியான். விமலா எண்ணம், பறந்து சென்றது. தனது ‘வகை தரும் பருவத்தில்’ தான் இருந்த நிலை, இன்றுள்ள விசார வாழ்வு; அந்த இன்பம், இந்தத் துன்பம், அந்தக் குளிர்ச்சி, இந்த எரிச்சல், அந்த செல்வம், இந்த ஏழ்மை, வீதியில் மாலை 6 மணிக்கு, விளக்கேற்ற வருவாள் வருவாள் என, தரிசனத்துக்கு மைனர்கள் காத்துக் கொண்டிருக்க, அது நன்கு தெரிந்து கையில் விளக்குடன், கருத்தில் களிப்புடன், காலில் சிலம்பு ஒலிக்க, ஜடை சற்றே ஆட, முகத்தில் சோபிதத்துடன், வெளிவந்து, இரண்டொரு விநாடி, எரிந்த விளக்கை ஏறத் தள்ளிக்கொண்டே, தன் கண்களினின்றும் கூர்மையான அம்புகளைக் கிளப்பி, இளைஞர்களின் இருதயத்தில் பாயவைத்த விமலா, இன்று வீங்கிய உதட்டின் எரிச்சலை அடக்கிக் கொண்டு விதியே, விபரீதமே என எண்ணி விம்மிக் கொண்டிருக்கும் விமலா, இரண்டு நிலைக்கும் எத்துணை வித்தியாசம், வாழ்க்கையில் இப்போது விமலாவுக்கு வறட்சி, அன்று வாழ்க்கையில் அவள் கண்டதெல்லாம் இன்பம்.  எண்ணத்தில் ஆழ்ந்திருந்தவளை, டாக்டர் சுந்தரேசன் கண்டார். அவர் மனதில் திடீரென அவள் மீது ஒரு விதமான பச்சாதாபம் உண்டாயிற்று. விரைவில் தன் வேலையை முடித்துக் கொண்டு விமலாவிடம் வந்தார். விமலா, சரேலென எழுந்து நின்று கும்பிட்டாள். அவளது வணக்கத்தைப் புன்சிரிப் புடன் ஏற்றுக் கொண்டார் டாக்டர்.  என்னம்மா உடம்புக்கு? என்று கேட்டார். அவள் பதில் கூறுமுன்பு நிலைமையைத் தானே தெரிந்து கொண்டு பஞ்சில் எதையோ நினைத்து, உதட்டைத் துடைத்தார். தானே துடைத்துக் கொள்வதாக விமலா கூறினாள் கேட்கவில்லை டாக்டர். டாக்டர்களுக்குச் சில பிரத்யேக உரிமைகள் உண்டல்லவா! கையிலே, சிறு நோட்டுப் புத்தகத்தை எடுத்தார் டாக்டர் சுந்தரேசன். “பெயர்?” “விமலா!” “வயது?” “முப்பது” - ஆனால் என்ன, நாற்பது என்று எழுதிக் கொண்டால்கூட நம்புவார்கள். “தகப்பனார் பெயர்?” “சர்வேஸ்வரன்!” “இருப்பிடம்?” “இப்போது டாக்டர் வீடு. இங்கிருந்து நேரரே குப்பய்யர் தெருவு, இந்த மாதம் வாடகை தராவிட்டால், வேறு வீதிக்குப் போவேன்.” “தொழில்?” “தாசி!” “வேடிக்கையாகப் பேசிக் கொண்டே இருந்துவிட் டேனம்மா” என்று டாக்டர் சுந்தரேசன் கூறினார். ஏனெனில் அவர் கேட்ட கேள்விகளுக்கு விடை தந்துவந்த விமலா கடைசி கேள்விக்குப் பதில் கூறும்போது அவளையும் அறியாமல் கண்களில் நீர் தளும்பிற்று. “நான் காட்டுமிராண்டித்தனமாக நடந்து கொண்டேன்” என்று டாக்டர் கூறினார். “இல்லை, டாக்டர் சார், இதிலென்ன தவறு. நான் தாசி என்பதை ஏன் மறைக்க வேண்டும். “இப்போது என்னை தாசி லோலர்கள் உலகுகூட மறந்து விட்டது. நான் தரித்திர உலகில் இப்போது குடி புகுந்துள்ளேன்.” என்று விமலா கூறி டாக்டரின் உள்ளத்தை உருக்கி விட்டாள். “விமலா - நீ நல்ல அறிவாளி” என்றார் டாக்டர். “நல்ல அழகியாகக்கூட இருந்தேன். பலரை அறிவை இழக்கும்படிக் கூடச் செய்தேன்” என்று விமலா பதிலளித்தாள். “உன் வாழ்க்கை வெழு ரசமுள்ளதாக இருக்குமென எண்ணுகிறேன். உனக்குச் சம்மதமானால், என் வீட்டுக்கு வா; நான் ஒண்டிக்கார மனிதன்; என் கிழத்தாயும், வேலைக்காரரும் மட்டுமே இருக்கிறார்கள். உன் கதையைச் சொல்லு, தவறாக எண்ணாதே” என்று டாக்டர் கூறினார். விமலா புன்னகை புரிந்தாள். கண்ணுசாமிக்குக் கோபம். “இவளோ ஒரு வேசி, உதடு வீங்கி வருகிறாள்; அவளிடம் இந்த டாக்டர் எதற்காக இவ்வளவு அக்கறை காட்டவேண்டும்” என்று எண்ணி, இந்த நாடகத்தை நிறுத்த வேண்டுமென விரும்பி. கனைத்தான். தான் இருப்பதை மறந்து விட்டு, இருவரும் பேசுகிறார்களோ என்று - இந்தக் கனைப்புதான், விமலாவுக்குப் புன்னகை வரச் செய்தது. “டாக்டர் என்னை மன்னிக்க வேண்டும். தங்களிடம் கூற வேண்டிய பெரிய கதை ஒன்றும் இல்லை. நான் ஒரு தாசி. அலைந்து கெட்டேன். இவ்வளவுதான்” என்றாள் விமலா. “ஆமாம் விமலா! நான் கேட்டது தவறு. உன் வாழ்க்கை யைக் கூறும்படி கேட்டது பிசகு. நாம் முன்பின் பழக்கமில்லாத வர்கள்” என்று கூறினார். “கோபமான டாக்டர்? நான் என் கதையைக் கூறிவிடு கிறேன். நாளைக்கு இங்கேயே கூறுகிறேன். உங்கள் வீட்டிற்கு, இதற்காக வர வேண்டுமா?” என்றாள் விமலா!  “விமலா நீ வந்தாகக்தான் வேண்டும்” என்று டாக்டர் வற்புறுத்தினார். “நான் வந்தால், உங்கள் தாயார்...?” என்று இழுத்தாள் விமலா. “தவறாக எண்ணமாட்டார்கள்” என்று உறுதி கூறினார் டாக்டர். சற்று கலங்கிய முகத்துடன் விமலா கூறினாள், “டாக்டரே, எனக்கே சொல்ல வெட்கமாக இருக்கிறது. நான் அங்கு வர முடியாது. வந்தால் எனக்கு நாயகனாக இருக்கும் பாவி என்னை நையப் புடைத்து விடுவான். நான் அவனுடைய சொத்து. அவன் என்னை இம்சித்தாலும் அவனை விட்டு விலகு முன்னம், நான் அடங்கித் தீர வேண்டும். அதற்குத்தான் பயப்படுகிறேன்” என்றாள் விமலா. “அவன் யார்?” என்று கேட்டார் டாக்டர்.  “ரௌடி ரங்கன், என்று பிரக்யாதி பெற்றவன். அவனுடைய வைப்பு நான். டாக்டரே என்னைப் பற்றி நீர் சரியாகத் தெரிந்து கொள்ள இந்த விஷயம் போதாது. நான் இப்போது வேறு வழியில்லாததால், வாழ்க்கையில் பல விபரீதங்கள் ஏற்பட்டதால், ரௌடி ரங்கனின் வைப்பாட்டி யானேன். ஒரு காலம் இருந்தது. ரங்கன் போன்றவர்கள் என்னை ஏறெடுத்துப் பார்க்க முடியாத காலம். எனது ஏவலராக இருந்த காலம்” என்று விமலா கூறிக் கொண்டே அழுதாள். டாக்டர் சுந்தரேசனுக்கு மனம் உருகி விட்டது. “நான் எண்ணியபடியே இருக்கிறது. உன் வாழ்க்கையில் பல சோகச் சம்பவங்கள் நிகழ்ந்திருக்க வேண்டுமென எண்ணினேன். அப்படியே இருக்கிறது சேதிகளும். ரௌடி ரங்கனை எனக்கு நன்றாகத் தெரியும். போன மாதங்கூட, குடித்து விட்டு, சண்டை போட்டதில் அவன் மண்டையில் பலத்த காயம் பட்டது. நான்தான் மருந்து போட்டேன். ஆனால் அவனிடம், ‘இந்த அருமையான பொருள்’ இருக்கிறது என நான் துளிகூட எண்ண வில்லை” என்றார் டாக்டர். “நீங்கள் மட்டுமா டாக்டர், என் பழைய உலகில் இருந்த யாரையும் கேட்டுப் பார்க்கலாம், நான் இவ்விதமான முரட்டுக் குடியனிடமா இருக்கத் தக்கவள் என்பதைப் பற்றி. ஆனால் டாக்டர், அவன்தான் எனக்குக் கால்வயிற்றுக் கஞ்சி வார்க்கிறான். குடிவெறியில் உதைப்பான் அடிப்பான். ஆனால் அவனன்றி வேறு திக்குமில்லை எனக்கு. டாக்டர் நான் உம்மிடம் உள்ளதைக் கூறி விடுகிறேன். மறைக்க மனம் வரவில்லை. இந்த உதடு வீங்கியதற்குக் காரணமும் அவனே” என்றாள் விமலா. “நினைத்தேன், நான். ரங்கன் உன்னை அடித்துத் துன்புறுத்தினானா?” என்று டாக்டர் கேட்டார். விமலா சிரித்தாள். சோகத்திலும் அவளுக்கு டாக்டரின் கேள்வி சிரிப்பைத்தான் தந்தது. “அடித்துத் துன்புறுத்தவில்லை” என்றாள் விமலா.  இந்த உரையாடல் முடியுமுன், ஒரு இளமங்கையும் மூதாட்டியும் டாக்டரின் உதவியை நாடி வந்தனர். மூதாட்டி இளமங்கையைக் காட்டி, “டாக்டர்! என் மகளுடைய கன்னத்தை, குழந்தை கடித்து விட்டது. பல் பட்டால் விஷமாமே - ஏதாவது மருந்து தடவுங்கள்” என்று கூறினாள். கூச்சத்துடன் இருந்த இளமங்கையின் கன்னத்திலே, குழந்தை கடித்தால், வடுவும் இரத்தக் கசிவும் இருந்தது. “போய் வருகிறேன், டாக்டர்” விமலா கூறினாள். அவள் குரலிலே ஓர் வகை குறும்பு தொனித்தது.                                                          பகுதி - 2   கம்பவுண்டருக்கு. எங்கே வேறு யாராவது வைத்தியத்துக்கு வந்து விடுகிறார்களோ, வேறு யாரேனும் இந்தச் சீனைக் கண்டால் என்ன எண்ணுவார்களோ என்ற பயம். டாக்டரின் பெயர் கெடக் கூடாது என்பதிலே கம்பவுண்டருக்கு நிரம்ப கவலை. டாக்டர் கலியாணமாகாத இளம் பிள்ளை; கண்மண் தெரியாமல் ஆட ஆரம்பித்து விட்டால், பிறகு பிழைப்பின் வாயில் மண்தான் என்பது கண்ணுசாமிக்கு, “உன் தம்பியைப் போல டாக்டரைப் பார்த்துக் கொள்; அவன் ஒன்றும் தெரியாதவன். வெள்ளை மனுஷன். அவனுடையஅப்பாவும் அப்படித்தான். சின்ன வயதிலேயே அவனுடைய அப்பா கொஞ்சம் கெட்டு அலைஞ்சவர். பிள்ளையாண்டான் நல்ல வேளையாக அப்படி எல்லாம் இல்லை. தானுண்டு தன் வேலையுண்டு என்று இருப்பவன். ஆனால் கலியாணமாகவில்லையே இன்னும். கண்ணும் கருத்தும் அலைகிற பருவம். காலமோ முன்னைப் போலஇல்லை. கண்ட கண்ட சிறுக்கிகளோடு எத்தனையோ பேர் காலந்தள்ளி வருவதைக் கண்ணாலே பார்க்கிறோம். நமது பையன் அப்படிப்பட்டவனல்ல. எந்தப் பெண்ணையும் ஏறெடுத்துப் பார்க்க மாட்டான். இருந்தாலும் நீயும் கொஞ்சம் ஜாக்கிரதையாகப் பார்த்துக் கொள்” என்று கூறுவதுண்டு. ஆகவே கண்ணுசாமி, கம்பவுண்டர் வேலையுடன் கார்டியன் வேலையும் தனக்கு உண்டு என்று எண்ணிக் கொண்டிருந்தான். தாசியுடன் டாக்டர் பேசப் பேச, கம்ப வுண்டருக்குக் கோபம் வந்ததில் ஆச்சரிய மில்லையல்லவா! இவள் யாரடா சனியன்! சிவபூசையில் கரடி புகுந்தது போல வந்து சேர்ந்தாள். ஏதேதோ பேசுகிறாள். வெட்கமே காணோம். ‘நம்ம டாக்டர் மருந்து வகைகளை அறிவாரே தவிர மனித சுபாவம் என்ன தெரியும் அவருக்கு. அதிலும் பெண்கள் விஷயம் என்ன தெரியும். பெண்களிலும் இத்தாசிகள் சங்கதி என்ன தெரியும்’ என்று எண்ணினான். விமலா வெளியே போனபிறகு, தானே டாக்டருக்கு புத்திமதி கூற வேண்டும் எனத் தீர்மானித்தான். அதே சமயத்தில் விமலா, டாக்டரிடம் விடைபெற்றுக் கொள்ள ஆரம்பித்தாள். டாக்டர் “எப்போது வீட்டுக்கு வருகிறாய் சொல்லு. உன் கதையை நான் எப்போது கேட்பது” என்றார். “பழைய பல்லவியை விடமாட்டீர்களா?” என்று விமலா கேட்டாள். “எப்படி விடுவேன்” என்றார் டாக்டர். “டாக்டர் சார், நான் உங்கள் வீட்டுக்கு வருவதை விட...” என்று விமலா இழுத்தாள். “ஏன் நானே உன் வீட்டுக்கு வருகிறேன். விலாசம் என்ன?” என்று சுந்தரேசன் கேட்டார். ‘ஏதேது காரியம் முற்றிவிட்டது. ‘சிறுக்கி சிரித்துக் குலுக்கிப் பேசி, டாக்டரை மயக்கியே விட்டாளே என்ன செய்வது?’ என்று கண்ணுசாமி யோசித்தான். “சொல்லு விமலா. நான் எப்போது வந்தால் நீ ஓய்வாக இருப்பாய்” என்று டாக்டர் கேட்டார். “ஓய்வா! எப்போதுந்தான் ஓய்வு! ஆனால் நீங்கள் வருவது அவ்வளவு நன்றாக இருக்குமா! ஊரார் ஏதாவது தவறாக...” என்று விமலா கூறினாள். “ஊராருக்கு நமது விஷயத்தைப் பற்றி என்ன கவலை? நான் ஊராரைக் கேட்கிறேன். நீ ஏன் இதைச் செய்தாய், அதைச் செய்தாய் என்று. நான் வருவதால் எனக்கு ஏதாவது தடையாயிருக்குமா? அதைக் கூறு. சாக்கு வேண்டாம்” என்று டாக்டர் கண்டிப்பாகப் பேசினார். “சரி, நாளை மாலை 6 மணிக்கு வாருங்கள். மருந்தும் கையோடு எடுத்துக் கொண்டு வந்து விடுங்கள்” என்றாள் விமலா. “சார் மணிபர்சை இங்கே போட்டு விட்டீர்களே, இதோ எடுத்துக் கொள்ளுங்கள்” என்று கூறிக் கொண்டே, டாக்டர் கீழே தவறவிட்ட மணிபர்சை, கண்ணுசாமி டாக்டரிடம் தந்தான். தரும்போதே விமலாவை முறைத்தான். விமலாவுக்குக் கண்ணுசாமியின் குறும்பு தெரிந்து விட்டது. பணத்தைப் பிடுங்கிக் கொள்வாள் என்றும் காசாசைப் பிடித்தவள் தாசியென்றும், கண்ணுசாமி டாக்டரிடம் கூறாமற் கூறவே, மருந்து எடுத்துக் கொண்டு வந்து விடுங்கள் என்ற தான் கூறிய உடனே மணிபர்ஸ் என்ற பேச்சைப் பேசினான் என்பதைத் தெரிந்த கொண்டாள். கண்ணுசாமியின் குறும்பைப் போல எத்தனையோ குறும்புகளைக் கண்டவள் விமலா. அவளிருந்து வந்த உலகம், ஒரு தனிச் சர்வகலாசாலை. கண்ணுசாமி அதன் அரிச்சுவடி மட்டுமே அறிவான். விமலா மெள்ளச் சிரித்துக் கொண்டே, “டாக்டர் சார், எதெதை எங்கெங்கே வைத்து வைக்க வேண்டும் என்பதே உமக்குத் தெரியவில்லையே” என்று கூறினான். கண்ணுசாமிக்கு கோபம் மூண்டு விட்டது. “யாரைச் சாக்கிட்டு இதைச் சொன்னாய்” என்று விமலாவை நோக்கிக் கேட்டு, விமலா சிரிப்பை அடக்கிக் கொண்டு பயந்த பாவனையுடன் “கம்பவுண்டர் என்ன சொல்கிறார்; எனக்குத் தெரியவில்லையே; மணிபர்சை ஜேபியில் வைக்காது டாக்டர் வேறு எங்கேயோ போட்டு விட்டாரே என்று, எதெதை எங்கெங்கு வைக்க வேண்டுமோ அங்கங்கே வைக்க வேண்டுமென்று சொன்னேன். இவருக்கு ஏன் டாக்டர் கோபம் வருகிறது” என்று டாக்டரைக் கேட்டாள். கண்ணுசாமி சரேலென, உள் அறைக்குச் சென்று விட்டான். விமலா சிரித்துக் கொண்டே “நான் போய் விடுகிறேன் டாக்டர். என் விலாசம் உங்கள் கம்பவுண்டருக்குத் தெரியும். நான் அவர் தங்கை வீட்டில்தான் குடியிருக்கிறேன்” என்றாள். உள்ளே சென்ற கண்ணுசாமி ஓடிவந்தான் வெளியே. “சீ! நாயே! போ வெளியே! என் தங்கை வீடாம். அவள் யாரடி என் தங்கை!” என்று கூவினான். “ஏன் உங்க மரகதம் வீட்டில் தானே நான் இருக்கிறேன்; உன் தங்கைதானே மரகதம்! அவள் சொல்லித்தான் நான் இங்கு வந்தேன்” என்றாள் விமலா. “டாக்டர் சார், நான் வேலையை விட்டுப் போய் விடட்டுமா, இந்த விதண்டாவாதக் காரியை வெளியே துரத்துகிறீர்களா? இரண்டிலொன்று சொல்லுங்கள் சீக்கிரம். இவள் வேண்டுமென்றே என்னைக் கேவலப் படுத்துகிறாள்” என்று கண்ணுசாமி கண்கலக்கத்தோடு கூறினான். டாக்டருக்கு ஒன்றுமே புரியவில்லை. மரகதம் யார்? அவள் வீட்டில் தாசி விமலா எப்படிக் குடியிருக்க முடியும்? கண்ணுசாமி நல்ல குலமாயிற்றே? என்று யோசித்தார். விமலாவின் கூரிய பார்வை, டாக்டர் சுந்தரேசனின் மனத்திற்குள் உள்ளதைக் கண்டுபிடித்துவிட்டது. டாக்டரே என் கதையைக் கேட்க வேண்டும்மென்று ஆவல் கொண்டீர்களே, அதைவிட ருசிகரமான கதை, உங்கள் கம்பவுண்டர் தங்கை மரகதத்துடையது. இங்கே கூறினால் கண்ணுசாமிக்குக் கோபம் கொதித்துக் கொண்டு வரும். அது சகஜம். மரகதம் கண்ணுசாமியின் தங்கை. ஆனால் வெளியே வந்து விட்டவள்” என்றாள். “வெளியே வந்துவிட்டவளா!” என்றார் டாக்டர்.  “ஆமாம்! வெளியே வந்துவிட்டவளென்றால், என்னைப் போலத் தாசியாகப் பிறந்தவளல்ல, விதியின் வசத்தால் விபசாரி ஆனவள். நாளைக்கு அவள் கதையைக் கூறுகிறேன். வாருங்கள்” என்று கூறிவிட்டு, வெளியே போய்விட்டாள். தாசி விமலாவின் சாதுர்யம் டாக்டருக்குச் சந்தோஷத்தை மட்டுமே தந்தது. ஆனால் கம்பவுண்டர் கண்ணுசாமியின் தங்கை விஷயமாக, விமலா கூறினதைக் கேட்டு, அவருக்குத் தூக்கி வாரிப் போட்டு விட்டது. கண்ணுசாமி எவ்வளவு நல்ல மனுஷன். அவனுக்கு இப்படி ஒரு தங்கை இருக்க வேண்டுமா? என்று எண்ணினார். கண்ணுசாமியின் கோபமும் கலக்கமும், சுந்தரேசனுக்குக் கவலையை உண்டாக்கி விட்டது. அவனுடைய மனம் சாந்தி அடைய வேண்டும் என்பதற்காக, விமலாவின் வரலாறும் வேண்டாம், மரகதத்தின் கதையும் வேண்டாம். அவர்கள் தொடர்பே வேண்டாம் என்றுகூட எண்ணினார். ஆனாலும் நல்ல புத்திசாதுரியமுள்ள விமலாவுக்கு ஒரு ரௌடி எப்படி நாயகனானான், நற்குடியிற் பிறந்த மரகதம் எப்படிப் பொதுமகள் ஆனாள் என்ற கதையைக் கேட்டே தீர வேண்டு மென்ற ஆவல், சுந்தரேசனை விட்டு அகலவில்லை. மேலும் விமலாவிடம் ஏதோ ஒருவித பாசம் அவனுக்கு ஏற்பட்டது. மறுநாள் மாலை குறிப்பிட்டபடி டாக்டர் சுந்தரேசன் விமலாவைக் காணச் சென்றான். கையில் கவனமாக மருந்தும் கொண்டு போனான். மருந்து பாட்டில், அவன்மீது ஊராரின் தூற்றல் பாணம் பாயவொட்டாது தடுக்கும் கவசமாக இருந்தது. டாக்டர் மருந்து கொடுக்கச் செல்கிறார் என்ற சாக்குக்கு அது பெரிதும் உதவுகிறதல்லவா! சுந்தரேசனுக்குக், கதையைக் கேட்க வேண்டுமென்ற ஆவல் எவ்வளவு இருந்ததோ அந்த அளவுக்கு மேலேயே பயமும் இருந்தது. ரௌடி ரங்கன் அங்கு இருந்து ஏதாவது வெறியிலே உளறினால் என்ன செய்வது என்ற கவலை. ஜுரத்துக்கு மருந்தும், புண்ணுக்குப் பூச்சும் போடத் தெரியுமே யொழியக், குடியனின் கோணல் சேட்டையைத் தவிர்த்துக் கொள்ள டாக்டருக்கு என்ன தெரியும் பாபம்! நல்ல வேளையாக ரங்கன் அங்கு இல்லை. உள்ளே நுழையும் போதே மலர்ந்த முகத்துடன் விமலா டாக்டரை வரவேற்றாள். பல வருஷங்களாகப் பழகியவள் போலப் பேசி உபசரித்தாள். வைத்தியசாலையில் இருந்தபோது அவள் காட்டிய சாமர்த்தியத்தைவிட வீட்டில் அவள் சமர்த்து டாக்டருக்கு அபாரமாகத் தோன்றிற்று. சற்று ஸ்தூலசரீரமுடையவளும், சிவந்த மேனியினளும் நல்ல ஆபரணங்கள் அணிந்தவளுமான மாது தன்னை நமஸ்கரித்து “நாங்கள் செய்த பூஜாபலன்தான், இப்படிப்பட்ட பெரிய மனிதர்களை எல்லாம் இங்கே வரச் செய்தது” என்று உபசாரம் கூறியதைக் கண்ட சுந்தரேசன், விமலா குறிப்பிட்ட மரகதம், இவளாகத்தான் இருக்க வேண்டும் என எண்ணி, தன் எண்ணம் சரியா என்று கேட்பது போல் விமலாவைப் பார்த்தான். “இதுதான் மரகதக்கா. நேற்று சொன்னேனே” என்று சிரித்துக் கொண்டே விமலா கூறினாள். அவள் மனக்கண்முன், கண்ணுசாமி கோபத்துடன் கூச்சலிட்ட காட்சி தோன்றிற்று. “அக்கா, அவருக்கு எவ்வளவு கோபம் வந்தது தெரியுமோ? நாயே, பேயே, போடி வெளியே என்று வாயில் வந்தபடி கூறினார். ஒன்றும் பதிலே பேசவில்லை” என்று விமலா மரகதத் திடம் கூறினாள். மரகதம் “கோபத்துக் கென்ன குறைச்சலம்மா. கோபம் வரத்தான் வரும். ஏனென்றால் என்னை ஏழடுக்கு உப்பரிகைமீது ஏற்றி வைத்தான், நான் கெட்டு விட்டேன்; அதுதான் அவன் நினைப்பு, பேசுவான் இப்போது பெரிய ஆசாமி போல. வாய்க்குப் பூட்டா சாவியா விமலா. அதிலும் நம்மைப் பற்றி யார் கேட்கப் போகிறார்கள் என்ற திமிர்” என்று மரகதம் கூறினாள். டாக்டர், அண்ணனைத் தங்கை தூற்றுவதோடு நிற்காமல் கண்களைப் பிசைந்து கொள்வதைக் கண்டு, “ஏனம்மா போனதை எண்ணிப் புலம்பலாமா. அதெல்லாம் ஆண்டவன் செயல்” என்றார். விமலா, ஆண்டவன் உங்களை டாக்டராகவும், என்னை இப்படியும், அக்காவை இப்படியும் கண்ணுசாமியை அப்படியுமாக எத்தனை கோலத்தில் வைத்திருக்கிறார் பாருங்களேன். அவர் உலகப்படி எப்படி போனால் என்ன என்று எண்ணுகிறாரே தவிர, இவ்வளவு அலங்கோலமாக இருக்கிறதே நமது படைப்பு என்று கவலை பிறக்கிறதா. எப்படி பிறக்கும்? சிவனாக இருந்தால் பக்கத்தில் ஒன்று, தலையில் ஒன்று. விஷ்ணு மார்பின் மீதே சாய்த்துக் கொண்டிருக்கிறாராம். பிரம்மா என்னமோ நாக்கிலே வைத்துக் கொண்டிருக்கிறாராம். இப்படி நமது “சாமிகள்” நாயகிகளுடன் ஜோராகக் காலந்தள்ளிக் கொண்டிருக்கையிலே, நம்மைப் பற்றி ஏன் கவலை வரப்போகிறது. உங்களைப் போன்றவர்களைக், கடவுள் உல்லாசமாக இருக்கிறபோது படைத்திருப்பார். என்னைப் போன்றவர்களை அவர் உடலோ, உள்ளமோ இரண்டுமே எரிச்சலாக இருக்கும்போதோ பிறப்பித்திருப்பார்” என்றாள். டாக்டர் சிரித்துவிட்டு, “ஏதேது விமலா, உனக்கு கடவுள் பக்தி கூடக் கிடையாது போல் தெரிகிறதே” என்றார். “நீங்கள் என்ன சார் கடவுளுக்கு வக்கீலா!” என்று பளிச்செனப் பதிலளித்தாள் விமலா. “சரி, போதும் வாயை மூடு விமலா! ஏதேதோ வேதாந்தமும், விதண்டாவாதமும் பேசிக் கொண்டே வந்தவரைக் காக்க வைக்கிறாய். மேலே அழைத்துக் கொண்டு போய் உட்கார வை. விசிறி கொடு. நீயேதான் கொஞ்சநேரம் விசிறிக் கொண்டு இரேன். நான் காப்பி எடுத்துக் கொண்டு வருகிறேன்!” என்று கூறினாள் மரகதம். டாக்டரை அழைத்துக் கொண்டு விமலா, மாடிக்குச் சென்றாள். டாக்டர், அதுவரை தாசி வீட்டுக்கு மருந்து கொடுக்கக்கூடச் சென்றதில்லை. அதுதான் முதல் தடவை. தாசிகள், வருகிறவர்களை மயக்க, படுக்கை அறையை அலங்கரித்திருப்பார்கள். உள்ளே நுழைந்த உடனே பரிமளம் மூக்கைத் துளைக்கும், பஞ்சணை கண்ணைக் கவரும். ரவிவர்மா படங்களும், பாரீஸ் லேடி போட்டோக்களும் சுவரில் இருக்கும் என்று கதைகளில் படித்ததுண்டு, கண்டதாகத் தோழர்கள் சொல்லக் கேட்ட துண்டு. தாசிகள் இவ்வித சொகுசாக அறையைச் சிங்காரித்து வைத்துக் கொண்டிருப்பதால் தான் இளம் வாலிபர்கள் சொக்கி விடுகிறார்கள் என்று அவனுடைய நண்பர்கள் கூறியதைக் கேட்டு இருக்கிறான். அவ்விதமான அலங்கார அறைக்குள் தான் செல்லப்போவதாக எண்ணிய சுந்தரேசனுக்கு விமலாவின் படுக்கை அறை, பெருத்த ஏமாற்றத்தைக் கொடுத்தது. வேசி வீசும் வலை என்று அவனிடம் வர்ணிக்கப்பட்ட அறை வறுமையின் வாடை வீசும் கொட்டிலாக இருந்தது. பத்து வருஷங்களுகு“கு முன்பு புதிதாக இருந்த கட்டில். அதன் மீது கோரைப்பாய், சுவரிலே பல துளைகள், ஓரிடத்தில் லட்சுமி படம். மற்றோரிடத்தில் சரஸ்வதி மற்றும் ஓர் இடத்தில் காலண்டர். சோப்பு பெட்டியின் மூடி ஒரு புறமும், அடித்தட்டு வேறுமாக அறையின் மத்தியில் சிதறிக் கிடந்தது. கிழிந்த புடவைகள் ஆணியில் தொங்கின. இரவிக்கைகள் கீழே கிடந்தன. சுவரோரமாக இரண்டொரு பீடித் துண்டுகளும் தீக்குச்சித் துண்டுகளும் கிடந்தன. கட்டிலின் மீது கிடந்த பாயை அகற்றினாள் விமலா. மெத்தை ஒன்று தெரிந்தது. இரண்டொரு தலையணையும் கிடந்தன. “உட்காருங்கள்,‘சூட்’ அழுக்காகி விட்டால், வெளுக்க வண்ணான் இருக்கிறான். சோபாவிலும் நாற்காலியிலும் உட்கார வேண்டுமா? இந்த மாதிரி சொகுசான கட்டில் எங்கிருந்து உங்களுக்குக் கிடைக்கப் போகிறது” என்று தன் வறுமையை விமலா தானே கூறிக் கொண்டாள். அது டாக்டருக்கு வருத்தமாக இருந்தது. அவள் வருத்தப்படவில்லை. “இந்த அறை, கீழே சமயலறை இதற்கு வாடகை 10 ரூபாய். மரகதம் வாய் வாழைப் பழந்தான். கை கருணைக்கிழங்கு, இந்த வீட்டில் நானொரு குடி, மற்றும் மூன்று குடித்தனம்; மொத்தத்தில் 50 ரூபாய் வாடகை வருகிறது. வேறொரு வீடும் இருக்கிறது. அதிலே 60 ரூபாய் வருகிறது. இவ்வளவும் ஐந்து வருஷத்திலே சம்பாதித்தாள், “மகா ஜாலக்காரி” என்று விமலா, மரகதத்தின் தகவலைக் கூறத் தொடங்கினாள். அதற்குள் காலடிச் சத்தம் கேட்டது. டாக்டர் திடுக்கிட்டு எழுந்தார். பழக்கமற்றவரல்லவா? அதனால் யார் வருகிறார்களோ என்ற பயம். விமலா, கையால் “உட்காருங்கள்” என்று ஜாடை காட்டினாள். பிறகு உற்றுக் கேட்டுவிட்டு, “யாருமில்லை அக்காவாகத்தான் இருக்கும்.” என்றாள். “அது எப்படி உனக்குத் தெரிந்து விட்டது” என்று டாக்டர் கேட்டார். “உங்களுக்கு எப்படி ஏதோ குழலை மார்பிலே வைத்ததும் இன்ன நோய் என்று தெரிந்து விடுகிறது. அது உங்கள் வித்தை. இது என்னுடையது” என்று விமலா கூறினாள்.    பகுதி - 3   விமலாவின் ஜோதிடம் பலிக்கவில்லை. வந்தவள் மரகதமல்ல, வேலைக்காரி. கையில் பலகாரத் தட்டும் காப்பிச் செம்பும் எடுத்துக் கொண்டு வந்து வைத்தாள். “அகிலாண்டமா, எங்கேடி மரகதக்கா?” என்று கேட்டாள் விமலா. அகிலாண்டம் பதிலைத் தன் கண்ணாலேயே தெரிவித்து விட்டாள். “ஏது! இவ்வளவு பொழுதோடே வந்துவிட்டாரா. சரி இன்று மரகதத்தின் கதையை நீங்கள் கேட்க முடியாது. மரகதத்தின் செட்டியார் வந்து விட்டாராம். அவர் போகும் முன்பு மரகதம் அப்படி இப்படி அசைய மாட்டாள். நாளைக்குப் பார்த்துக் கொள்வோம். நீங்கள் இந்தக் காப்பி பலகாரத்தைச் சாப்பிடுஙகள்” என்று விமலா கூறினாள். டாக்டர் சாப்பிட ஆரம்பித்தார். “மிளகாயை எடுத்துவிடுங்கள். அதோ கருவேப் பிலை, இஞ்சியை எடுக்காமலே தின்னகிறீரே, என்ன அவசரம்?” என்று விமலா உபசரித்தாள். டாக்டருக்குக்கூட ஆச்சரியமாயிருந்தது விமலாவின் உபசரணை, பழகவேயில்லை. நேற்றுச் சந்தித்து, இன்று இவ்வளவு லலிதமாகப் பேசுகிறாளே. ஒருவேளை தாசிகளின் ஜாலம் என்கிறார்களே, அதுதானோ இது என்று கூட எண்ணினார். காப்பி சாப்பிட்டானதும் வெற்றிலைத் தட்டு வந்தது. டாக்டர் “போடும் வழக்கமில்லை” என்று கூறினார். “நான்கூட கண்டவர்களைக் கூப்பிட்டு வெற்றிலை போடச் சொல்லும் வழக்கமில்லை” என்று கிண்டல் செய்தாள் விமலா. கிண்டல் கணையா, காமன் கணையா என்று தெரியாது சுந்தரேசன் திகைத்தான். அவனது திகைப்பே விமலாவுக்கு திவ்யமான விருந்தாக இருந்தது. “சரி, மரகதம் கதைதான் இன்று கூறுவதற்கில்லை. அதோ எங்க அகிலாண்டத்தின் சேதி தெரியுமோ உமக்கு. அது, என் சேதி, மரகதத்தின் சேதி எல்லா வற்றையும்விட வேடிக்கையானது” என்று விமலா கூறினாள். அகிலாண்டம், “எப்போதும் உங்களுக்கு விளையாட்டுத் தானம்மா!” என்றாள். “ஏண்டி அதுகூட வேண்டாமென்கிறாயா!” என்று கூறி அவள் தாடையை இடித்து விட்டு, “டாக்டர் சார். இந்த அகிலாண்டத்தின் புருஷன் இப்போது எங்கேயோ பல்லாரி சிறையிலே இருக்கிறானாம். இவள் கதையை கேளுங்க” என்று ஆரம்பிக்கப் போகும் சமயம், காலடி சப்தம் கேட்டது; ஒரு ஆசாமி நுழைந்தான். அகிலாண்டம் மெல்லக் கீழே போய்விட்டாள். “பார்த்தீர்களா ஆசாமியை, எதிரிலுள்ள வெற்றிலை பாக்குக் கடைக்காரன். அகிலாண்டத்துக்கு ஆசைநாயகன் அவன்தான்” என்றாள் விமலா. “புருஷன் இருப்பதாகக் கூறினாயே” என்று சுந்தரேசன் கேட்டான். “இருக்கிறான் ஜெயிலில்; இங்கே இவன் இருக்கிறான்” என்று விமலா குறும்பாகக் கூறிவிட்டு, இதுதான் டாக்டர் எங்கள் உலகம்.” “எங்கள் உலகமே அலாதியானது. அதைப் பற்றிய கவலை மற்ற உலகத்துக்குக் கிடையாது. கோழி மனிதனுக்குப் பண்டம் பலகாரமாகிறது. ஆனால் அது பிழைத்து வளருவது குப்பை மேட்டைக் கிளறி, புழு பூச்சி தின்றுதான்.” என்றாள் விமலா.  “விமலா, இப்போது கோழிப்பண்ணை வைத்து, கோழி களை வளர்ப்பது ஒரு படிப்பாகக் கற்றுக் கொடுக்கப்படுகிறது, உனக்குத் தெரியாது” என்று டாக்டர் நவயுக உலகச் சேதியைக் கூறினார். “ஆமாம்! கோழி வளர்ப்பார்கள், குரங்கை வளர்ப்பார்கள், இன்னமும் ஏதேதோ செய்வார்கள். ஆனால் உலகத்தில் பிறந்தவர்களை எப்படி வளர்ப்பது என்ற கவலை கிடையாது. மரம் வைத்தவன் தண்ணீர் வார்க்கிறான் என்று கூறிவிடுவார்கள்” என்றாள் விமலா. “விமலா, உனக்கு வறுமையின் காரணமாக வேதாந்தம் நிரம்ப வந்து விட்டது” என்றான் சுந்தரேசன். “ஆமாம்! இரண்டும் நான் கேட்காமலேயே என்னிடம் வந்து விட்டன” என்று கூறிவிட்டு, “நீங்களுந்தான், நான் வேண்டாமென்று கூறியுங்கூட, தானாக வந்தீர்கள்” என்று கூறிச் சிரித்தாள். “அப்போது நான், வறுமை போலத்தான் உனக்கு வாட்டம் கொடுக்கிறேனா?” என்று டாக்டர் கேட்க, “அது எப்படி இப்போது தெரியும். போகப் போகத் தெரியும் புடவையின் சாயம் என்பார்கள். அது கிடக்கட்டும் டாக்டர், எனக்கு...” “நேரமாகிவிட்டது, நான் ஜடை சீவி, முகம் கழுவி, பொட்டிட்டு, அலங்காரம் செய்துகொள்ள வேண்டும். அவர் வரும்போதே சிவந்த கண்களோடு வருவார். சிங்காரித்துக் கொண்டிராவிட்டால், “ஏண்டி, மூதேவி போலே இருக்கிறே” என்று ஆரம்பித்தால், பிறகு, அர்ச்சனை பலமாக நடக்கும். ஆகையால் நாளைக்க இந்த நேரத்துக்கும் சற்று முன்னதாகவே வந்து விடுங்கள். அகிலாண்டத்தின் கதை, மரகதத்தின் சேதி, என் விஷயம் எல்லாம் பேசலாம். நேரே வீடு போய்ச் சேருங்கள், தெரிகிறதா, நான் கூப்பிட்டது போல, வேறு எவளாவது கூப்பிட்டால், போய்ச் சிக்கிக் கொள்ள வேண்டாம், ஜாக்கிரதை” என்று டாக்ருக்கு எச்சரிக்கை செய்தாள் விமலா. “அது என்ன விமலா, நான் கூப்பிட்டவள் பின்னாலெல் லாம் போகிறவன் என்று எண்ணி விட்டாயா!” என்று சுந்தரேசன் கேட்டான். “வண்டுகூட அப்படித்தான் சொல்லும், நான் பார்க்கிற பூ மீது எல்லாம் உட்காருகிறேனா என்று. டாக்டரே நீர் குழந்தை தான். இருந்தாலும் குழந்தைகள் தானே பிறகு பெரிய ஆளாகி விடுகின்றனர். என்னைக்கூட குழந்தையாக இருக்கும்போதும் அம்மா கேட்டார்கள். “நீ கலியாணம் பண்ணிக்க மாட்டாயா” என்று. நான் பயந்து கொண்டு சொல்வேன், ‘ஐயயோ, நான் மாட்டவே மாட்டேம்மா. எனக்குப் பயமா இருக்கும்’ என்று. அது ஒரு காலம் இது ஒரு காலம். “எல்லோரையும் போலத்தான் என்னையும் எண்ணிக் கொண்டாய்” என்ற டாக்டர் கூறிக் கொண்டே எழுந்திருக்கப் போகும் சமயம், “எல்லோரையும் போலவே”  “என்னை எண்ணலாகு மோடி, போடி” என்று விமலா கீதத்தைத் துவக்கினாள். இனிய குரல்! அந்தப் பாட்டின் பொருள் நயத்தை, விமலாவின் குரல் அதிகப்படுத்திற்று. இரண்டொரு அடிகள் பாடிவிட்டு நிறுத்திக் கொண்டாள். பாட்டு முழுவதும் பாடும்படி சுந்தரேசன் கேட்டார். தனக்கு பாட்டுத் தெரியாதென்று, கிராமபோன் பிளேட் கேட்டுக் கேட்டு இரண்டொரு பாட்டுக் கற்றுக் கொண்டதாகவும் கூறித் தப்பித்துக் கொண்டாள். ஆனால் டாக்டருக்கு, விமலா பாட்டை எடுத்த எடுப்பும், குரலின் பண்பும், அவள் நல்ல பாடகிதான் என்பதைக் காட்டிற்று. பிறகொரு சமயம் பாடச் சொல்லிக் கேட்க வேண்டும் எனத் தீர்மானித்துக் கொண்டு, ‘நாளை வருகிறேன்’ என்று கூறி, விடை பெற்றுக் கொண்டு டாக்டர் தன் வீடு போய்ச் சேர்ந்தார். “இந்த மாதிரி பெரிய இடத்துச் சிநேகிதம் கிடைப்பது ரொம்பக் கஷ்டண்டி அம்மா. இந்தக் காலத்தில் தானாக வருகிற சீதேவியைக் காலால் உதைத்துத் தள்ளாதே. ரங்கனுக்கு பக்குவமாகக் கூறி விடு, எப்போதோ, சமயா சந்தர்ப்பத்திலே வந்து போ, பழைய சிநேகிதத்தை நான் மறந்து விடுவேனா என்று சொல்லேன். ரங்கன் எகிறிக் குதித்து விடுவானா? அவன் ஏதாவது மிரட்டினால் நான் செட்டியாரிடம் சொல்லிச் சரிபடுத்தி விடுகிறேன்.” “அக்கா, நீங்கள் என்ன சொன்னாலுஞ் சரி, நான் அந்த டாக்டரை மட்டும் கெடுக்கமாட்டேன்.” “இதிலே கெடுப்பது என்னடி இருக்கிறது. ஊரிலே உலகத்திலே நடக்காத விஷயம் போலே பேசுகிறாயே” “ஊரிலே உலகத்திலே இருக்கிற எல்லோரையும் போன்றவரல்ல டாக்டர்.” “ஆமாம் அதுக்குத்தான் சொல்லுகிறேன், நல்ல இடம், தங்கமான மனுஷன், உன்னிடம் ரொம்ப லயித்துப் போயிருக் கிறார்” என்று “நானும்தான் அவரிடம் லயித்து விட்டேன்.”  “ரொம்ப நல்லதாச்சி, பழம் நழுவிப் பாலிலே விழுந்து விட்டது. இன்னும் ஏன் யோசனை?” “அக்கா, உனக்கு நான் சொல்வது புரியக்கூடப் புரியாது. எனக்கு டாக்டர்மீது அளவு கடந்த ஆசை இருக்கிறதால்தான், நீ சொல்கிறபடி, அவரைக் கெட்ட நடத்தைக்கு இழுக்க எனக்கு இஷ்டமில்லை.” “இது என்னடி அம்மா வேதாந்தம்; எனக்குப் புரியவில்லை, ஏதோ “ராதா, கிருஷ்ணா, கோவிந்தா” என்று காலந்தள்ள, எவனோ ஒருவனைப் பிடித்துக் கொண்டு, நாலு பேர் கண் முன்னாலே நாகரிகமாக வாழ வேண்டியதுதானே. அதை விட்டுவிட்டு எனக்கு அவர் மீது ஆசையோ சொல்ல முடியாதபடி இருக்கிறது. ஆனால் அவரை நான் கெடுக்க மாட்டேன் என்று கூறுகிறாயே, கெடுப்பது என்ன இருக்கிறது இதிலே.” “அக்கா, நான் ஒன்று கேட்கிறேன். யோசித்துப் பதில் சொல்லு. கண்ணுக்கு அழகாக ரோஜா இருக்கிறது. அதன் மீது நமக்கு பிரியம் இருக்கிறது. அதற்காக வேண்டி, அதனை எடுத்து வைத்துக் கொண்டு அழகு பார்க்கலாம், அதன் வாசனையை அனுபவிக்கலாம். ஆனால் ஆசை காரணமாக அதைக் கசச்சிப் பிழிந்து விட்டால், எந்த ரோஜா மீது நமக்கு ஆசை பிறந்ததோ, அது ரோஜாவாக இராதே. கூழாகித்தானே போய் விடும்.” “நல்ல கதை சொன்னாயடி விமலா! ரொம்ப நல்ல கதை. அப்ப ரோஜாவை எடுத்து இனிமேலே யாரும் ஜடைக்கு வைத்துக் கொள்ள மாட்டார்கள் போலே இருக்கிறது. நீ இந்த ஊருக்கு ராணியாக இருந்தால், இப்படி ஒரு ஆர்டர் போட்டு விடுவாய். உம்! ஏதேதோ புத்தகத்தைக் கட்டிக் கொண்டு அழுகிறாயே, அதனுடைய பலன் இது. புஷ்பம் இருப்பது ஜடை அலங்காரத்துக்கு. பொழுது போனதும் வைக்கிறோம்; காலையிலே கசங்கியதை வீசி எறிகிறோம். இது சகஜம்.” “அப்படிச் சொல்லு. இப்போ நீ என் வழிக்கு வந்தாச்சி. ரோஜாவை மாலையிலேயே ஆசையாக ஜடையிலே வைத்துப் படுக்கையிலே புரண்டு அதனைப் பாழாக்கி, பிறகு குப்பை மேட்டுக்குப் போட்டு விடுவது; அதைப் போலத்தானே நடக்கும் டாக்டருக்கும். ஆகையாலே அவரை இங்கே, அழைத்துக் கூத்திக் கள்ளனாக்கி, கண்டவர் கேட்கவும், பார்க் கிறவர்கள் தூற்றவுமாக்கி, அவருக்கு இருக்கிற பேரைக் கெடுக்க வேண்டும். இதுதானே நடக்கும் உன் யோசனைப்படி நடந்தால். என் யோசனை அப்படியில்லை. தோட்டத்திலே பஞ்சவர்ணக் கிளியைப் பார்த்து மகிழ்வதைப் போல், புஷ்பத்தின் மணம் காற்றோடு கலந்து வருவதை அனுபவிதது ஆனந்திப்பதைப் போல, அவர் மாசு மருவில்லாது நல்லவரெனப் பெயரெடுத்து, இருப்பதைக் கண்ணாலே கண்டு, கருத்திலே களிப்புக் கொள்ள வேண்டும். அதுதான் என் ஆசை உனக்கு அது ஆச்சரியமாக இருக்கும். எனக்கு இதற்கு முன்பு எப்போதும் இப்படிப்பட்ட எண்ணம் இருந்ததில்லை. இப்போதுதான் அவர்மீது ஆசை கொள்கிறேன். அது பூரணமான ஆசை. ஆகவேதான் அவரைப் பூஜிக்கிறேன்.” “சுத்தப் பைத்தியண்டி நீ, சுத்த மக்கு” என்று மரகதம் கடைசியாகக் கூறிவிட்டாள். சம்பாஷணை, மரகதத்துக்கும் விமலாவுக்கும் டாக்டர் வந்துபோன மறுதினமே காலையில் நடந்தது. சுந்தரேசனை நாயகனாக அடையும்படி மரகதம் விமலாவுக்கு யோசனை கூறினாள். வலையை வீசு என்றாள். விமலா மறுத்தாள். அதற்காக அவள் வறிய காரணம், மரகதம் அதுவரை எங்கும் கேட்டு அறியாதது. டாக்டரும், விமலாவும் பேசுவதைக் கேட்டு, ‘சரசமாடுகிறார்கள்”, “சரியான கிராக்கியை விமலா பிடித்து விட்டாள்” “அவளைப் பிடித்த பீடை போய்விட்டது” என்று மரகதம் எண்ணினாள். ஆனால் விமலாவின் வியாக்யானம், விபரீதமாக இருந்தது. ஏன் இவள் இப்படிப் பேசுகிறாள் என்று மரகதம் எண்ணினாள். “மகா கைகாரி இவள்; நமக்குக் கூடச் சொல்லாமல், தெரியாமல், டாக்டரைச் சரிப்படுத்தப் பார்க்கிறாள்; எந்த உத்தம பத்தினியும் பேசாத பேச்செல்லாம் பேசுகிறாளே; இவ்வளவும் ஜாலம்; டாக்டர் எப்படியும் தன் வலையில் விழுவான். பிகுவாக இருந்தால், ‘ரேட்’ உயரும் என்று சிறுக்கி, தளுக்குச் செய்கிறாள். தளுக்கை என்னிடமே காட்டுகிறாளே. ஆமாம்! என்ன இருந்தாலும் அவள் தாசியல்லவா! அந்தத் தளுக்கு கூடப்பிறந்த தாயிற்றே. அதை ஆண்களிடமும் காட்டுகிறாள், பெண்களிடமும் காட்டுகிறாள். நானும் பலபேரைப் பார்த்தேன். இவளைப் போலக் கண்டதில்லை” என்று மரகதம் தனக்குள் கூறிக் கொண்டாள். மரகதத்துக்குக் கோபமும் துவேஷமும் வந்து விட்டது. அத்துடன் பொறாமையும் வந்துவிடட்து. “இவ்வளவு பேசுகிற இவளை, ஒரு கை பார்த்தே விடுகிறேன். இவள் பிளான் எனக்குத் தெரிந்து விட்டது. அந்த டாக்டர் தன்னைத் தவிர வேறு பெண்ணைத் தேட மாட்டான் என்று நினைக்கிறாள். நான் காட்டுகிறேன் என் சமர்த்தை. டாக்டரை, நான் என் வலையில் போடுகிறேன்” எனச் சபதம் செய்து கொண்டாள். அன்று மாலை, சொன்னவண்ணம் சுந்தரேசன் வந்து சேர்ந்தான்.    பகுதி - 4   முதல் நாள் வரவேற்றதைவிட, மரகதம், டாக்டரைச் சற்று அதிகமான முகமலர்ச்சியுடன் வரவேற்றாள். மரகதத்தின் அலங்கார விதிகளே சற்று அலாதியானது. அழகாக விளங்க வேண்டும், அலங்காரம் செய்து கொள்ள வேண்டும் என்பதிலே தனக்கு அக்கறை கிடையாதென்றும், அந்தத் தளுக்குத்தனம் தனக்குத் தேவையில்லை என்றும் பிறர் கருதும் விதத்தில் அலங்காரம் செய்து கொள்வதே மரகதத்தின் வாடிக்கை. நெற்றியிலே குங்குமப் பொட்டு இருக்கும். ஒரு பக்கமாகச் சிறிதளவு சிதைந்து போயிருக்கும்! பொட்டுச் சரியாக இருக் கிறதா என்று மரகதம் கவலை கொள்ளவில்லை என்பதல்ல பொருள். கண்ணாடி முன் நின்று, வேண்டுமென்றே பொட்டை ஒருபுறம் கலைத்து விட்டால், அது ஒரு தனி ரகமாக இருக்கும் என்பது மரகதத்தின் எண்ணம். சற்றுத் தளர்ந்த ஜடை போட்டுக் கொண்டு, நெகிழும் ஆடை உடுத்திக் கொண்டு, பவுடரைக் கொஞ்சமாகப் பூசிக் கொண்டு, மரகதம் விளங்கினாள். முன்னாள் பார்வைக்கும் இன்றைய பார்வைக்கும் டாக்டர் சுந்தரேசனும் தெரிந்து கொள்ளக்கூடிய வித்தியாசம் இருந்தது. முதல் நாள், ஒரு பெரிய மனிதனை, மதிப்போடு வரவேற்று மனமகிழ உபசரிக்கும் விதமாக நடந்து கொண்டாள் மரகதம். ஆனால் விமலாவுடன் பேசிய பிறகு, மரகதம் மனதிலே சூதான எண்ணங்கொள்ளவே, சோபிதமாக விளங்கப் பிரயத்தனப் பட்டாள். பார்வையைப் பாணமாக்கினாள்! சிரிப்பை சந்தமாக் கினாள்! அவள், டாக்டரை முதல் நாள் வரவேற்றாள், மறுதினம், அவர் மீது படை எடுத்தாள். டாக்டர் உள்ளே நுழைந்ததும், குலுக்கி நின்றாள். களுக்கெனச் சிரித்தாள். இதற்குள் மேலாடைக்கும் மரகதத்துக்கும் இடைவிடாத போர் நடந்து விட்டது. வாயிலிருந்து வார்த்தைகள், வளைந்தும் குழைந்தும் வந்தன. நேரே, தன் படுக்கை அறைக்கு அழைத்துச் சென்றாள். கட்டிலின் மீது டாக்டர் உட்கார்ந்த பிறகு, “இதோ நான் போய் விமலாவை அழைத்துக் கொண்டு வரட்டுமா! உடனே போகட்டுமா, சற்று, பொறுத்துக் கொள்ள முடியுமா” என்று குறும்பாகக் கேட்டாள். பதில் கூற இயலாது, பல்லைக் காட்டினான் சுந்தரேசன், அங்கிருந்த படியே மரகதம், விமலாவைக் கூப்பிட்டாள். விமலாவும் வந்தாள். மரகதத்தின் மினுக்கைக் கண்டாள். விஷயம் விளங்கி விட்டது. விசாரம் கொண்டவளாய்க் கீழே உட்கார்ந்தாள். வாய் திறக்கவில்லை. டாக்டர், தானாகவே சம்பாஷணை துவக்கினார். அவருடைய கேள்விகளுக்கு, தலை அசைத்தும், உதட்டைப் பிரித்தும், ஒன்றிரு பதங்கள் கூறியும் விமலா பதில் அளித்தாள். மரகதம், விமலாவின் போக்கைக் கண்டு, ஏது சிறுக்கி விஷயத்தை ஜாடையாகத் தெரிந்து கொண்டாள் போலிருக்கிறதே என்று எண்ணினாள். தெரிந்து கொள்ளட்டுமே, நமக்கென்ன என்று எண்ணிக் கொண்டு, தன் காரியத்தைக் கவனிக்கத் தொடங்கினாள். “டாக்டரே இன்று நீங்கள் எப்போது வருவீர்கள். எப்போது வருவீர்கள் என நான் எதிர்பார்த்தபடி இருந்தேன்” என்றாள் மரகதம்.  “என்னையா?” என்று சுந்தரேசன் ஆச்சரியத்துடன் கேட்டான். “ஆமாம்! உங்களைத்தான்! ஏன், எதிர்பார்க்கக் கூடாதோ? ஆனால் நான் நம்ம விமலாவைப் போல வேறே எண்ணத்திலே உம்மை எதிர்ப்பார்த்துக் கொண்டிருக்க வில்லை. இங்கே நாம் பேசிக் கொண்டிருப்பது தெரிந்தால் கூட, எங்கள் செட்டியார் இரண்டு நாளைக்குச் சாப்பிட மாட்டார்” என்று மரகதம் கூறிவிட்டுச் சிரித்தாள். டாக்டர் : “விமலா மட்டும் என்ன? விமலாவுக்கும் வேறு எண்ணம் கிடையாது. ஏன் இன்று ஒரு மாதிரியாக இருக்கிறாய் விமலா!” என்று விமலாவைக் கேட்டான். மரகதம் அதற்கு “விசாரந்தான்! இருக்காதா, கைக்கு எட்டியது வாய்க்கு எட்டவில்லையே என்ற கவலைதான்” என்று பதில் கூறிக் கொண்டே, விமலாவின் தவடையைப் பிடித்துக் கிள்ளினாள். விமலா அதற்கும் நகைக்கவில்லை. “ஆமாம் விசாரந்தான்! டாக்டர் என் வலையிலே விழவில்லையே என கவலைதான்! விழுந்தால் தீர்த்துக் கட்டிவிடலாம் என்ற ஆசைதான்! ஏன், ஆசை கொண்டால் தப்பா? அவரும் சாமியார் அல்ல, நானும் பத்தினி அல்ல!” என்றாள் விமலா. “அப்பாடா! இப்போதுõன் அந்தப் பழைய விமலாவைக் கண்டேன். ஆனால் விமலா, உனக்கு உள்ளபடி அந்த மாதிரி ஏதாவது எண்ணமுண்டா சொல்லி விடம்மா” என்று பயந்தவன் போல் பாசாங்கு செய்து கொண்டு சுந்தரேசன் கேட்டான். “ஏன் இருக்கக் கூடாது. நரைத்த நாரிகளுக்கு இருக்கும்போது எனக்கு ஏன் இருக்க கூடாது. பழுத்த பழம் பசப்பிக் கொண்டிருக்கும்போது, எனக்கு மட்டும் என்ன? என்றாள். “விமலா என்னடி அம்மா! ஏதோ வேடிக்கையாகப் பேசுகிறாள் என்று பார்த்தேன். நீ பேசுவதைக் க÷ட்டால், சாக்கிட்டுப் பேசுவது போல் தோன்றுகிறது” என்று கடுகடுத்துக் கேட்டாள் மரகதம். விமலா ஒரு கேலிச் சிரிப்பு சிரித்துவிட்டு, “உனக் கேனம்மா கோபம் வருகிறது. நீ என்ன செய்தால் எனக்கென்ன! டாக்டரை, உன் கட்டிலின்மீது உட்கார வைத்துக் கொண்டால் எனக்கென்ன? கை பிடித்து இழுத்தால்தான் எனக்கென்ன? அவர் என்னிடம் பத்து வருடம் வந்தாரா? ஐந்து வருடம் வந்தாரா! எனக்கேன் விசாரம் வரப்போகிறது” என்று படபடத்துக் கேட்டாள். சுந்தரேசனுக்குத் திகைப்பு உண்டாகிவிட்டது. இருவரும் ஒருவர் மீது ஒருவர் தன் பொருட்டுப் பாய்வார்கள் போல் இருந்தது. காட்சியே அவனுக்குப் புதிது. “அடக்கிப் பேசு, நாக்கை அடக்கு. ரௌடியுடன் வாழ்கிறவள்தானே. வாய் இருக்கும் ஆனால் என்னிடம் காட்டாதே” என்று மரகதம் எச்சரித்தாள். விமலா எழுந்து விட்டாள். “ஆமாண்டி, எனக்கு வாய் துடுக்கு! உனக்கு! நீ பத்தினி! தாலி கட்டியவனைத் தவிக்கவிட்டு வந்தவள் தானே, புத்திவேறு எப்படி இருக்கும்” என்று கூறினாள். “போதும் நிறுத்து. நாளைக் காலையிலே வீட்டைக் காலி செய்துவிட்டு மறுவேலைபார்” என்று மரகதம் நிபந்தனை போட்டாள். “ஆஹா! தடையில்லாமல்! நான் காலி செய்து விடுகிறேன், நீ டாக்டரை காலி செய்துவிடு” என்று கோபமாகக் கூறிக் கொண்டே, விமலா, சரேலென வெளியே போய் விட்டாள். விமலாவின் கண்களினின்றும், நீர் பெருகியதை டாக்டர் சுந்தரேசன் கண்டான்! “தொந்தரவு சகிக்க முடியவில்லை. எத்தனை நேரம் இந்த வேதனைப் படுவது. அலுத்துப் படுக்கத்தான் நேர முண்டா? அலைச்சல், அலைச்சல்!” “என்னடி ரொம்ப ‘டால்’ காட்டுகிறாய். இப்போ உன்னை என்ன தொந்தரவு செய்து விட்டேன். ஏன் முகத்தை மூணு கோணலாக்கிக் கொண்டு முணுமுணுக்கிறே என்று கேட்டேன். என்னமோ தொந்தரவு செய்யாதே துரப்படு என்று அளக்கிறாயே, என்ன கதை” “எரிகிற நெருப்பிலே எண்ணெயை ஊற்ற வேண்டாம். உங்களுக்குக் கோடி நமஸ்காரம், சற்று வாயை மூடிக் கொண்டு படுங்கள்.” “அடடா, என்ன விரக்தி! என்ன வந்து விட்டது உனக்கு? போன மாதம் போரிட்டுப் போரிட்டு, புது மோஸ்தர் வளையலுக்கு வழி செய்து கொண்டாய், இப்ப எதுக்கு இந்த விசார நாடகம். மரகம் என் மனதை நீ ரொம்ப வேதனை செய்து விடுகிறாய். இது நல்லதல்ல; ஆமாம் நான் மனம் விட்டு சொல்கிறேன்.” “நான் எப்படியோ போகிறேன். நீங்கள் சுகமாக இருங்கோ. இனி செப்பாலடிச்ச காசு தரவேண்டாம்.” “நிஜந்தானா!” “ஆமாம். உங்கள் சம்பந்தம் கூடத்தான் வேண்டாம். போதும் உம்மாலே நான் கண்ட சுகம். நாலு பேர் போற்றின குடும்பத்திலே பிறந்து, நல்லவனுக்கு வாழ்க்கைப் பட்டேன். கேட்பார் பேச்சைக் கேட்டுக் கெட்டேன். இப்போது நாய் படாத பாடுபடுகிறேன்.” “ரொம்பப் பாடுதான்படுகிறேடி, ரொம்பப் பாடு. குத்தி, புடைச்சி, எடுக்கிறாய் அல்லவா?” “நான் ஏன் குத்தி புடைக்கணும்? ஆண்டவன் எங்களுக்குக் கால் வயிற்றுக் கஞ்சிக்கு வழி வைத்திருக்கிறான்.” “ரோஷம் வந்துவிட்டதா, சரி! மரகதம், என்னதான் உனக்கு விசாரம்? சொல்லேன்! உள்ளபடி சொல்கிறேன். நீ ஒரு மாதிரியாக இருந்தால் எனக்கு வேதனையாக இருக்கிறது. என்ன கோபம்?” “கோபமுமில்லை, தாபமுமில்லை.” “நீ பேசற தினுசே காட்டுதே கோபத்தை. வெள்ளிக் கூஜா கேட்டாயே, அதற்குத்தானே விசாரம். சொல்லு.” “ஆமாம் என்றுதான் வைத்துக் கொள்ளுங்களேன். ஏன்? இருக்காதா கோபம், மூணு மாசமாத்தானே சொல்லிண்டே வந்திங்க. வந்துதா கூஜா.” “அப்பா! வந்ததா விஷயம் வெளியிலே. சரி, அடுத்த வாரத்திலே, நிச்சயம் கூஜா வாங்கிக் கொடுத்து விடுகிறேன். இதோ பார்! மரகதம்! பார்த்தாயா இப்போ சிரிப்புப் பொங்குது. அடடே! இதுக்குள்ளே சிரிப்பை அடக்கி விட்டாயே. சிங்காரி, ஒய்யாரி, என் சிந்தையை மயக்க வந்த, சிங்காரி, ஒய்யாரி.”  “அடட! பாட்டு ஆரம்பமா?” “மரகதம் இப்போ...” “காலை முதற்கொண்டு வயிற்று வலி. தயவுசெய்து தூங்குங்கள்.” “சரி இதனை முதலிலே சொல்லிவிடுவதுதானே. வயிற்று வலியும் தலைவலியும் கால்வலியும் கண் வலியும் வந்தபடிதான் இருக்கிறது. டாக்டர்கள் ஊரிலே தெருவுக்குப் பத்துபேர் இருக்கிறார்கள். கர்மம், இதெல்லாம் பூர்வ கர்மம். என்ன மரகதம், சோடா சாப்பிட்டாயோ?” “சோடா சாப்பிட்டேன். சூரணம் சாப்பிட்டேன் போனாத் தானே என்னைப் பிடிச்ச பீடை.” “கிடக்குது தூங்கு. ஆமாம்! அப்படியே ஒரு புறமாகத் திரும்பிப் படுத்துக் கொண்டு தூங்கிவிடு. நாளைக்கு யாராவது லேடி டாக்டரிடம் காட்டி, நல்ல மருந்து சாப்பிடு. இந்த வயிற்று வலியை வளரவிடக் கூடாது. ரொம்பக் கஷ்டம்.” “ரொம்ப கஷ்டமா? ரொம்ப நஷ்டமா?” “சீச்சீ, நான் என்னடி காவாலிப் பயலா? எனக்குத் தெரியாதா சுக துக்கம்” “சரி பேச்சை நிறுத்திட்டு, இப்படித் தவடையைக் கிள்ளுவது தர்மமா. இல்லை நான் கேட்கிறேன் இதை என்ன தவடை என்று எண்ணிக் கொண்டீர்களா இல்லை ரப்பர் பந்து என்று எண்ணமா. காலம் கலிகாலமல்லவா!” “கிண்டல் காரியாச்சே நீ. கண்ணாச்சே!” “ஆமாம், கண்ணே, மூக்கே, எல்லாம். இப்ப கொஞ்சிட வேண்டியதுதான், கூஜா கேட்டா யோசனை வந்துவிடும்.” “அடுத்தவாரம் நிச்சயம் வாங்கித் தருகிறேன். உடம்பை அலட்டிக் கொள்ள வேண்டாம் தூங்கு.” இந்தப் படுக்கையறைப் பசப்பு, மரகதத்தின் வீட்டிலே, நடந்தது. மரகதத்தின் விசாரத்துக்குக் காரணம், வெள்ளிக் கூஜா வாங்கிக் கொடாததுதான் என அவள் மையலில் சொக்கிய செட்டி எண்ணிக் கொண்டான். கூஜா வாங்கிக் கொடுப்பதாகச் சத்தியமும் செய்தான். மரகதமும் தன் விசாரத்துக்குக் காரணம் அதுதான் என்று பசப்பினாள், வெள்ளிக் கூஜாவுக்கு வழி தேடிக் கொண்டாள். ஆனால் விசாரத்துக்குக் காரணம், விமலாவுடன் மாலை நடந்த சண்டைதான். விமலாவை வீட்டை விட்டுக் காலி செய்து விடும்படி கூறி விட்டாள். டாக்டரும் கோபமாக வெளியே போய்விட்டார். போட்ட பிளான் நிறைவேறாததே வருத்தம். விமலா, டாக்டர் எதிரிலே தன்னைப் பற்றி இழிவாகப் பேசியதால் கோபம். அந்த விசாரமே வயிற்று வலி ரூபமாகவும் காட்சி அளித்தது. அதற்குக் காணிக்கைதான் வெள்ளிக் கூஜா! “என் எண்ணத்திலே மண் விழுந்து விட்டது. இவன் இப்படி ஆவான் என்று நான் நினைக்கவேயில்லை. அவன் என்ன படிக்காதவனா? விஷயம் தெரியாதவனா? நமது குடும்பப் பெருமையும், குலப் பெருமையும், அவனுக்குத் தெரியாதா? பெயரைக் கெடுத்துக் கொண்டால், பைசாவுக்கு யாரும் தன்னை நம்ப மாட்டார்கள் என்பதுதான் தெரியாதா? எல்லாம் தெரிந்துதான் இப்படி ஆனான். எல்லாம் சொல்லுமாம் பல்லி, காடிப்பானையில் விழுமாம் துள்ளி என்பதுபோல் ஆச்சு. என் பேச்சைத் தட்டாதவன், இப்போது அந்தச் சிறுக்கிப் போட்ட சொக்குப் பொடியிலே மயங்கி விட்டானே! அவள் யாரோ வந்து சேர்ந்தாளே என் குடியைக் கெடுக்க, அவளை ஏன் திட்ட வேண்டும். தாசிதானே அவள். என் பிழைப்புக்காக அப்படித்தான் நடப்பாள். இவனுக்கு, எங்கே போயிற்று புத்தி என்று கேட்கிறேன். டாக்டராக இருந்தால் ஏதெதுவோ, கெட்டதும் அலைஞ்சதுமாக வரத்தான் வரும். எதுவோ, நாமுண்டு நம்வேலையுண்டு என்று இருந்தால்தானே பிழைக்க முடியும். வருகிறவள் முந்தாணியைப் பிடித்துக் கொண்டு போய்விட்டால் என்ன நடக்கும்? கண்டவளை கூடி எவ்வளவு பேர் எத்தனை ரோகத்தை அனுபவிக்கிறார்கள். இவனே அப்படிப்பட்ட உங்களுக்கு மருந்து கொடுக்கிறான் இவனே கடைசியில் இப்படி அலைகிறான். யார் சொல்ல முடியும். அவன் என்ன சின்னக் குழந்தையா அடித்து மிரட்ட, ஆண்டவன் தான் புத்தி புகட்டணும்” என்று டாக்டர் சுந்தரேசனின் தாயார் கம்பவுண்டர் கண்ணுசாமியிடம் கூறி, விசனப்பட்டார்கள். கண்ணுசாமி, டாக்டருக்கும் விமலாவுக்கும் சினேகிதம் ஏற்பட்ட சேதியைக் கூறிவிட்டு, தானும் வேலையை விட்டு விலகி விட்டதாகக் கூறினார். தாயாருக்கு வியாகூலம். சுந்தரேசனுக்கு நல்ல இடமாகப் பார்த்துப் பெண் பேசி முடிக்க வேண்டும் என்று எண்ணிக் கொண்டு ஜாதகங்களை வரவழைத்துப் பார்த்துக் கொண்டிருந்த நேரத்தில், இந்த சேதி, இடிபோல் வீழ்ந்தது. மகனைத் தூற்றவோ மனம் வரவில்லை. ஏனெனில், அவன் சுபாவத்திலேயே கூத்திக்கள்ளனல்லன். அவன் மீது இவ்விதமான கெட்டப் பெயர் வந்ததே கிடையாது. கண்ணுசாமி கூறுவதற்கு முன்பு சுந்தரேசன் இப்படி நடப்பான் என்று எண்ண துளியும் இடம் ஏற்பட்டதேயில்லை. இதனாலேயே சுந்தரேசனின் அன்னைக்கு விசாரம்; அதிகமாகி விட்டது. கண்ணுசாமியிடம், தன் மனக்குறையைக் கொட்டி சற்று ஆறுதல் அடைந்தாள். கண்ணுசாமியும், இடையிடையே தனது கருத்தையும் உலகானுபவத்தையும் எடுத்துக் கூறிக் கூறி, சம்பாஷணையை வளர்த்துக் கொண்டே போனான். ஒரு விஷயம் மட்டும் கண்ணுசாமி சொல்லவில்லை. எப்படிச் சொல்ல முடியும்? மரகதத்தின் சேதியைத்தான் அவன் மறைத்தான். அது இயற்கைதானே. தன் கூடப் பிறந்தவளின் விபசாரத்தை எப்படிச் சொல்ல முடியும்? சுந்தரேசனைப் பற்றிப் பேசிக் கொண்டிருந்த நேரமெல்லாம், கண்ணுசாமிக்கு மரகதத்தின் விஷயமாகவே மனவேதனை மேலும் மேலும் வளர்ந்தது. வெறிக்கக் குடித்து விட்டு உறக்கத்திலே, குறட்டை விட்டுக் கொண்டும், இடையிலே உளறிக் கொண்டும், ரௌடி ரங்கன் படுத்திருக்க, அந்தக் கோர சத்தம் காதைக் குடையவும் மனதிலே சுந்தரேசனைப் பற்றி நடந்த சம்பவத்திலே ஏற்பட்ட வேதனை மனதைத் துளைக்கவும், கண்ணிலிருந்து பெருகிய நீர் தவடையில் புரண்டு உதட்டை நனைக்கவும், தலையணையில் தர்பார் நடத்திக் கொண்டு வந்த ‘மூட்டைப் பூச்சிகள்’ கழுத்தைப் பிடுங்கவும், படுத்துக் கொண்டிருந்த விமலா ‘தொலி ஜென்ம, முன்சேயு அசடு’ என்ற கீர்த்தனையைப் பற்றி எண்ணி மனதுக்குள் பாடிக் கொண்டிருந்த கிரிதிக்கு, காலைக் கடித்துத் தொல்லை கொடுக்க கொசுவைத் தட்டுவதன் மூலம் ‘தாள்’ மிட்டுக் கொண்டிருந்தாள். வீதியில் உலவிய நாய் ஒன்று கச்சேரியில் அமர்ந்து கானத்தின் கருத்து அறியாது கண்ட கண்ட நேரத்தில் சபாஷ்! சபாஷ்! என்று கூறும் போலி ரசிகன் போல் வள் - வள் - என்று குரைத்துக் கொண்டிருந்தது.    பகுதி - 5   “கொலை! கொலை! ஐயோ! யாரும் இல்லையா! போலீஸ்!” என்று கூச்சல் கேட்டுச் சிந்தனையுடன் கடற்கரையில் உலவிக் கொண்டிருந்த சுந்தரேசன் கூச்சல் கிளம்பிய பக்கமாக ஓடினான். கொலை! கொலை!! என்ற சத்தம் வந்த திக்கு நோக்கி ஓடிய சுந்தரேசன், இருவர், ஒருவரை ஒருவர் தாக்கி கொள்வதையும், கீழே ஒரு கத்தி வீழ்ந்து கிடந்ததையும் கண்டான். கத்தியை எடுத்து மடியிற் செருகிக் கொண்டான். இருவரிலே யார், தன்னை அழைத்தது? யாருக்கு உதவி செய்வது என்பது தெரியாது, சண்டையைத் தடுக்க இருவர் இடையே புகுந்தான். உடனே இருவரிலே ஒருவன் ஓடிவிட்டான். மற்றவன் களைத்து மண் மீது சாய்ந்தான். ஓடிவிட்டானே கள்ளன், கொலைக்காரன் என்று எண்ணி, இருவருக்குள் என்ன காரணத்தால் சண்டை வந்தது என்று விசரிக்கத் தொடங்கினான். இதற்குள் போலீஸ்காரன் ஊதுகுழல் சத்தம் கேட்டது. சுந்தரேசன் எழுந்து இப்பக்கமும் அப்பக்கமும் நோக்கினான். மூன்று போலீசார், ஓடிப்போனவனும் அங்கு வந்தனர். “அதோ! அந்த ஆள்தான்! அதே ஆள்! பிடியுங்கள்” என்று அவன் கூவினான். சுந்தரேசனுக்கு ஒன்றுந் தோன்றவில்லை. போலீசார், டாக்டரைப் பிடித்துக் கொண்டனர். அதே நேரத்தில் ஓடிப்போய்ப் போலீசை அழைத்துக் கொண்டு வந்தவன் மண்ணில் படுத்திருந்தவனைத் தூக்கி மார்பில் சாய்த்துக் கொண்டு, “கந்தா! பயப்படாதே! போலீசார் வந்து அந்தப் பாவிப் பயலைப் பிடித்துக் கொண்டனர்” என்று கூற மயங்கிக் கிடந்தவன், கண்ணை விழித்துக் கொண்டு, “புண்யவான்களே! நல்ல சமயத்திலே இங்கு வந்தீர்கள். நாங்கள் இரண்டு பேரும், இங்கே உலாவிக் கொண்டே இருந்தோம். இந்தப் பாவி கத்தியால் குத்த வந்தான். கத்திகூட மடியிலே இருக்கிறது” என்று திணறித் திணறிக் கூறினான். சுந்தரேசன் திடுக்கிட்டுப் போனான். “ஆஹா! என்ன சதி நாடகம். அடே மோசக்காரப் பயல்களா! நீங்கள் சண்டை போடுவது போல் போட்டு, கொலை கொலை என்று கூவி, நான் வந்ததும் வஞ்சனையாக என் மீதா அபாண்டம் சுமத்துகிறீர்கள்” என்று சுந்தரேசன் கதறினான். போலீசார், இதற்குள் டாக்டர் மடியிலே கத்தியைக் கண்டுபிடித்து எடுத்தனர். “ஏனப்பா, பார்த்தால் பெரிய மனிதன் போல காண்கிறது. இந்த ‘ரௌடி’த்தனம் ஏன்? வெறியா? பித்தமா?” என்று டாக்டரைத் திட்டினர். ஒரு பாபமும் அறியாத தன்மீது பழி சுமத்திய பாதகர்கள் பேச்சுத்தானே போலீஸ்காரர் செவிக்கு ஏறியது என்பதை எண்ணித் துடித்தான். கோபமிகுதியால் “முட்டாள்களே! தடியன்களே நான் வெறியனல்ல! இந்தப் பயல்கள் பொறுக்கித் தின்னும் பேர்வழிகள்; இவர்கள் பேச்சைக் கேட்கும் நீங்கள் முட்டாள்களே” எ“னறு பேசினான். போலீசார் “சரி! அதெல்லாம் கோர்ட்டிலே சொல்லு, நட” என்று அதிகார தோரணையிலே பேசி, சுந்தரேசனைப் போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைத்துச் சென்று ‘லாக்கப்பில்’ தள்ளி விட்டனர். இரவில் குடித்து விட்டு, வெறியின் காரணமாக! கடற்கரையிலே கலகம் செய்து, கத்தியால் இருவரைக் குத்த முயற்சித்ததாக, சுந்தரேசன் மீது கேஸ். லாக்கப்பிலே போனபிறகுதான் தெரிந்தது. சுந்தரேசனுக்குத் தன் சொக்காயிலிருந்து சாராய நாற்றமடிப்பது. சண்டை சந்தடியிலே, சாராயத்தையும் எப்படியோ, தன் சொக்காயிலே ஊற்றியும் விட்டார்கள், தான் குடித்து விட்டுக் கலகம் செய்ததை ருஜுப்படுத்த. இவர்கள் யார்? ஏன் தன் மீது இத்தகைய பழி சுமத்த வேண்டும்? எதற்காக இந்தச் சதி? என்பது சுந்தரேசனுக்குத் தெரியவில்லை. திகைத்துப் போனான் யோசிக்கக்கூட அவனால் முடியவில்லை. அவ்வளவு எதிர்பாராத சம்பவம் அல்லவா அவனுக்கு நடந்தது. காலையில் ஜாமீனில் விடப்பட்டான் சுந்தரேசன். வழக்கு நடந்தது. வக்கீல் வாதாடினார். ஆனால் கடைசியில் குடிவெறி காரணமாகக் கலகம் செய்ததாகவே சுந்தரேசன் மீது குற்றஞ்சாட்டப்பட்டு, அபராதம் விதிக்கப்பட்டது. தனக்கு இத்தகைய வீண் பழியையும் அவமானத்தையும் உண்டாக்கியவர்கள் கண்ணுசாமியின் ஆட்கள் என்பது சுந்தரேசனுக்குப் பிறகே தெரிய வந்தது. டாக்டர், தான் ஒரு குற்றமும் செய்யவில்லை என்று எவ்வளவோ எடுத்துக் கூறியும் வக்கீலே நம்பவில்லை. சுந்தரேசனின் தாயோ தன் மகன் வேசி வீடு போனதோடு நிற்கவில்லை. குடித்து விட்டு ஆடியும் அவமானப்பட்டான் என்று எண்ணி ஏங்கினாள். இவ்வளவு சீக்கிரத்தில் இவ்வளவு கெட்டு விடுவானா? ஆண்டவனே! ஏனோ இப்படி அவனுக்குப் புத்தி கெட்டு விட்டது? என்று எண்ணி வாடினாள். உலகத்திலே இப்படியும் மோசம் நடக்கிறதே என்று எண்ணி சுந்தரேசனின் மனம் புண்ணாகி விட்டது. யாரிடம் தன் சேதியைக் சொன்னாலும் நம்பாது, கோர்ட்டின் முடிவையே நம்பி, “இருக்கும்; இருக்கும்” என்றே கூறுவதைக் கேட்ட சுந்தரேசனுக்கு வெந்த புண்ணில் வேல் நுழைவது போன்று இருந்தது. “என்ன உலகம்! எவ்வளவு மோசம்” என்று நினைத்து உலகத்தை வெறுத்தான். இவ்வளவு சூதும் வஞ்சனையும் சூழ்ந் திருக்கும் உலகத்தில்தானே மனிதன் வாழவேண்டி இருக்கிறது. இதிலிருந்து தப்புவது எப்படி எனப் பயம்தான். ஒரு தவறு செய்யாத நான், குடிகாரன், வெறியன், கலகம் செய்த பேர்வழி எனக் கோர்டிலே தீர்ப்பாகி விட்டது. இது என்ன உலகம் என்று மனங் கசிந்தான். நானே, சூழ்ச்சிச் சுழலில் சிக்கித் தப்ப முடியாமற் போய்விட்டதே, என் படிப்பு, உயர் குடும்பம், புத்தி, நிலைமை, எதுவும், வஞ்சகத்தின் முன்பு நிற்கவில்லையே! அபலையாகிய விமலா வாழ்க்கையிலே எவ்வளவு வஞ்சனையைக் கண்டாளோ, எந்த வஞ்சகன் அவளைக் கெடுத்து இந்த நிலைக்குக் கொண்டு வந்தானோ என்று நினைத்தான். விமலாவைக் கண்டுபிடித்து, அவளிடமிருந்து சேதியைக் கேட்டால்தான், தன் மனமே சாந்தமடையும் எனத் தோன்றியது. மரகதத்தின் வீட்டுக்குச் சென்று விசாரித்தான். அவளோ தனக்குத் தெரியாது என்று கூறி விட்டாள். கடைசியில் வேலைக்காரியைப் பிடித்து, விலாசம் தெரிந்து கொண்டான். விமலாவின் வீட்டுக்குச் சென்றான். விமலா பாடிக்கொண்டிருந்தாள். உருக்கமான பாடல். பல பெரிய மனிதர்கள் பாட்டைக் கேட்டுக் கொண்டிருந்தனர். சுந்தரேசனைக் கண்டதும், விமலா, “உட்காருங்கள்” என்று ஜாடை காட்டினாள். விமலா, இவ்வளவு நன்றாகப் பாடுவாள் என்று சுந்தரேசனுக்குத் தெரியாது. பாட்டுக் கேட்பவர்களும் “சபாஷ்” சோகரசமும் இருக்கிறது. பேச்சு சுவாரஸ்யமும் இருக்கிறது, மேக்கப் செய்து விட்டால் உருவமும் நன்றாகத்தான் இருக்கும் என்று ஒருவருக்கொருவர் கூறிக் கொண்டனர். அவர்கள் சினிமாப் படம் எடுப்பவர்களென்றும், விமலாவை ஒரு படத்திலே நடிக்க அழைக்கவே வந்திருப்பதாகவும் சுந்தரேசனுக்கு, விமலா கூறினாள். “இவர் டாக்டர் சுந்தரேசன், என் நண்பர். என் விஷயத்திலே ரொம்ப அக்கறை. நீங்கள் மேற்கொண்டு பேச வேண்டியதை அவரிடமே பேசி முடிவு செய்து கொள்ளலாம்” என்று விமலா கூறிவிட்டாள். 3000 ரூபாய் கொடுப்பதென்றும் விமலா படத்தில் கதாநாயகியாக நடிப்பதென்றும் படம் ஏழு மாதத்திலே முடியுமென்றும் சினிமாக்காரர்கள் கூறினர். சுந்தரேசனுக்கு அளவற்ற ஆனந்தம். வறுமையிலே வாடிக் கிடந்த விமலாவுக்கு இனி நல்ல காலந்தான் என்று எண்ணி மகிழ்ந்தான். ஒப்பந்தப் பத்திரத்திலே தானே ஒரு சாட்சிக் கையெழுத்திட்டான். அட்வான்சாகத் தந்த 500 ரூபாயை சினிமாக்காரரிடமிருந்து வாங்கி, அகமெலாம் மகிழ விமலாவிடம் தந்தான். சினிமாக்காரர்கள் விடை பெற்றுக் கொண்டு போகுமுன்னம் சுந்தரேசனுக்கு, ஒரு யோசனை பிறந்தது. “ஏன் சார்! என்ன கதை!” என்று கேட்டான். “கதையா? என் கதையே பெரிய கதையாக இருக்குமே” என்றாள் விமலா. “ஆமாம்! நான் விமலாவின் உண்மைக் கதையை சினிமாவுக்குத் தகுந்தபடி எழுதித் தருகிறேன்” என்றான் சுந்தரேசன். “சபாஷ்! ரொம்ப சரி சார்! கதையை ஒரு மாதத்துக்குள் கொடுத்து விடவேண்டும்” என்று சினிமாக்காரர் கூறினர். சுந்தரேசன் பரமானந்தமடைந்தான். “இந்தக் கதையிலே உலகத்தின் மோசத்தை விளக்கி விடுகிறேன். விமலாக்களை உற்பத்தி செய்யும் சமூகத்திற்குச் சரியான சவுக்கடி தந்துவிடு  கிறேன்” என்று விமலாவிடம் கூறினான். சந்தோஷ மிகுதியால் விமலாவைப் பிடித்துக் குலுக்கினான். அவள் தவடையைப் பிடித்துக் கிள்ளினான். விமலாவுக்கும் ஆனந்தமே! அவளும் “ஏது டாக்டரே மகா ஷோக் பேர்வழியாகி விட்டீரே” என்று கேட்டாள். “சந்தேகமா உனக்கு! மகா ஷோக் பேர்வழிதான் என்பதற்குக் கோர்ட்டிலேயே தீர்ப்புக் கிடைத்திருக்கிறது” என்று ஆரம்பித்து, சுந்தரேசன், தனக்கு நேரிட்ட விபத்தைக் கூறினான். விமலா, விழுந்து விழுந்து சிரித்து விட்டு, “இதுதான் டாக்டர் உலகம்; உலகம் இதுதான். சூது, வஞ்சனை, சூழ்ச்சி, மோசம், நிரம்பிய உலகம். ஒருவரை ஒருவர் வஞ்சகத்தாலேயே வீழ்த்த வேண்டுமென்ற எண்ணமே பெரிதும் குடிகொண்ட உலகம், ஆண்டு அனுபவிக்க வேண்டும், ஆனால் அதனால் தங்களுக்கு ஒரு தொல்லையோ, கஷ்டமோ, வெறுப்போ இருக்கக் கூடாது என்று எண்ணும் உலகம். ரோஜா புஷ்பம் வேண்டும், ஆனால் அதிலே முள் இருந்தால் பயம்! தேன் குடிக்க வேண்டுமென்று ஆசை, ஆனால் வண்டு கொட்டுமே öஎன்ற பயம். இவ்விதமாகப் போகத்தில் மட்டும் ஆசையும், அதை அடைந்தால், அதற்காக வரும் கஷ்ட நஷ்டத்தை ஏற்றுக் கொள்ள மறுக்கும் சுபாவமும் மனிதர்களிடத்திலே இருப்பதால்தான் டாக்டர், தாசிகள் என்ற வகுப்பே தோன்றிற்று. ஆமாம்! நீங்கள் நம்பத்தான் மாட்டீர்கள். நான் நேசித்த ஒருவன் என்னை மணம் செய்து கொண்டிருந்தால் நான் வீங்கிய உதட்டுடன் உங்களிடம் வந்திருக்கவே மாட்டேன்” என்று விமலா கூறினாள். “காதல் கூடக் கொண்டிருந்தாயா விமலா” என்று சுந்தரேசன் கேட்டான். “நல்ல கேள்வி கேட்டீர் டாக்டரே! ஏன், எனக்குப் பசி தாகம் உண்டா என்று கேட்பதுதானே” என்றாள் விமலா! “தாசிகளுக்குக் காதல் ஏது விமலா! நீ கோபிக்கக் கூடாது” என்று சுந்தரேசன் கேட்டான். “கோபம் என்ன இருக்கிறது. உலகத்திலே எத்தனையோ பேர் இதைத்தான் கேட்பார்கள். சகஜமான கேள்விதான். ஆனால், காதல் என்பதன் கருத்துத் தெரியாமல் பேசும் பேச்சு இது” என்றாள் விமலா! சிறிது நேரத்திற்குப் பிறகு, “டாக்டரே காதல் என்பது இருவர் மனது லயிப்பது அல்லவா! கருதியில் சேர்ந்த சங்கீதம் போன்றது. மலரில் மணம் இருப்பது போன்றது. மதியில் குளிர்ச்சி இருப்பது போன்றது. எனவே இருவர் வேண்டுமே காதலுக்கு, தாசிகளிடம் சேரும் புருஷர்களிலே யார், தங்கள் முழு மனதையும், தங்கள் வாழ்வையும் ஒப்படைப்பார்கள்? தாசி வீடு வருவதே கேவலம், ஆம்! பச்சைச் சிரிப்புச் சிரிக்க வேண்டாம். உமக்கு மட்டும் என்ன, இப்போது நல்ல பெயர் என்றா நினைக்கிறீர். கூத்தி குடி எல்லாம் டாக்டருக்கு உண்டு என்றுதான் ஊரிலே பேச்சு” என்று விமலா கூறி முடிப்பதற்குள், டாக்டர் “இரண்டும் எனக்குக் கிடையாது” என்று கூறினார். “அது சரி! அது உம் மனதுக்குத் தெரியும். ஊராருக்கு என்ன தெரியும்” என்று விமலா கேட்டாள், “முட்டாள்தனமாகப் பலர் பலவிதமாகப் பேசினால் அதுபற்றி எனக்குக் கவலையில்லை” என்றான் சுந்தரேசன். “பேஷ்! நீங்கள் எண்ணுவது போல, முத்து எண்ணியிருந்திருந்தால் நான் இந்த நிலைக்கு வந்தே இருக்க மாட்டேன்” என்றாள். “யார் அந்த முத்து?” என்று சுந்தரேசன் கேட்டான். “இன்று பேசுகிறீர்களே, உலகத்திலே உள்ள கேடுகளைப் போக்கக் கங்கணம் கட்டிக் கொண்டு உழைக்கிறாராமே; அவர்தான்.” “யார், பாரிஸ்டர் முத்துவா? போன வாரம்கூட அருமை யான பிரசங்கம் செய்தார்.” பெண்களிடம் அதைவிட அருமையாகப் பேசுவார். அதிலும் என்னைப் போன்ற பேதைகளிடம் அவருடைய வித்தை பூராவும் காட்டி விடுவார்.” “விமலா! அவர் எப்படி உனக்குத் தெரியும்?” என் வாலிபப் பருவ சேஷ்டையின் மூலம் நான் அவரைத் தெரிந்து கொண்டேன்” என்று கூறிவிட்டு விமலா, தன் வரலாற்றைக் கூற ஆரம்பித்தாள். ஒரு நாள் மாலை, கமலா என் அக்கா கட்டிலின் மீது படுத்துக் கொண்டே, “என்னடி என்னை மருவிச்சுகீத்த குகன் வாராத காரணம்” என்ற பாட்டை இனிமையாகப் பாடிக் கொண்டிருந்தாள். என்னை விடக் கமலா, ஒரு அடி உயரம், நல்ல அழகு, -ராகம் பல்லவிக் கூடப் பாடத் தெரியும். ஆனால் அவள் பாடிக் கொண்டிருந்த பாட்டு, வாத்தியார் சொல்லிக் கொடுத்தது அல்ல. வாத்தியார் அப்போது ‘நகுமோமு’ சொல்லிக் கொடுத்துக் கொண்டிருந்தார். அக்கா பாடிய பாட்டு, வாத்தியாரின் மகன், முருகன் - இப்போது முருக பாகவதர் என்று நாடகமாடுகிறாரே அவர்தான் எழுதிக் கொடுத்தது. தெரிந்ததா விஷயம். வாத்தியாரிடம் கீர்த்தனையும், முருகனிடம் சல்லாபமும் கற்றுக் கொண்டாள் என் அக்கா. இது மிக இரகசியம். எனக்கு ஜாடை மாடையாகக் கொஞ்சம் தெரியும். எங்கள் அம்மா, ரொம்பக் கண்டிப்பான பேர்வழி. குடும்பம் பிரபல்யமானது. எங்களுக்கு ஆட்டுப்பாட்டு சொல்லி வைத்து, பெரிய மனிதர் சகவாசம் கிடைக்கும்படி செய்து மதிப்பாக இருக்கும்படி செய்ய வேண்டு மென்பது அம்மாவின் ஆசை. அதிலே என்ன தப்பு? மாடு வைத்துக் கொண்டிருப்பவனுக்கு, அதற்கு போடும் மூக்கணாங்கயிறு அழகாக இருக்க வேண்டும், சதங்கை கட்ட வேண்டும். கொம்புக்கு வர்ணம் பூசிக் கெஜ்ஜை கட்ட வேண்டும். என்று தோன்றுகிறது போல, யாராருக்கு எது எது வாழ்க்கை என்று தோன்றுகிறதோ, அதிலேதானே ‘மேன்மை’ அடைய வேண்டு மெனத் தோன்றும்! பணமும் இருந்தது. எனவே பாட்டும் ஆட்டமும் நடந்தது. அக்காவுக்கு நலல பருவம். நான் தாவணி போட்டுக் கொண்டு உலவுவேன். அக்காவுக்கு என்மீது பிரியம். எனக்கும் அப்படித்தான். இருந்தாலும் முருகனிடம் அக்கா பேசும்போது கவனித்தேன். ஏதோ விஷயம் நடக்கிறது என்று தெரிந்தது. எனக்குக் கோபந்தான். நாங்கள் கொடுக்கிற 10 ரூபாய் போல, வேறு இரண்டு இடத்திலே பணம் கிடைக்கும். அதை வைத்துக் கொண்டு பாட்டு வாத்தியார் காலட்சேபம் செய்பவர். அவருடைய மகன், அக்கா மீது சொக்கு பொடி போட்டு விடுகிறானே என்று கோபந்தான். அம்மாவிடம், பல சீமான் களிடமிருந்து ஆட்கள் வருவார்கள். கமலாவைப் பற்றி விசாரிக்க எங்கள் கோயில் குருக்களே, குங்குமம் மஞ்சள் பூ எடுத்துக் கொண்டு வாரத்துக்கொரு முறை வருவார். வரும்போதெல்லாம் ஏதாவதொரு சேதி கொண்டு வருவார். “என்னமோ, ஆண்டவன் விட்ட வழியாகிறது, ஸ்வாமி குழந்தைக்கு ‘முத்திரை’ முடியட்டுமே பார்ப்போம். நேற்றுகூட நெடுங்காடியூர் ஜமீன்தாராம், கேட்டு அனுப்பினார்கள்” என்று என் தாயார் சொல்லி அனுப்புவதுண்டு. நான் கேட்டு இருக்கிறேன். எனவே இவ்வளவு பெரிய மனிதர்கள் தேடி அலையும் அக்கா, பாட்டுப் பாடிப் பிழைக்கும் முருகனிடம் ஒரு மாதிரியாக நடப்பது கண்டு எனக்குக் கோபந்தான். நான் சொன்னேனே நான் சின்னப் பெண், அக்காவின் மனம் அந்தக் காலத்திலே என்ன பாடுபடும் என்பது பிறகு நான் முத்து மீது ஆசை கொண்ட பின்னர்தான் எனக்குத் தெரியும்.”                                      பகுதி - 6   எப்படியாவது அம்மாவிடமே அக்காவின் விஷயமாகக் கூறிவிடுவது என்று தீர்மானிதேன். ஐயோ, அக்காவை அம்மா கோபிப்பார்களே என்று எண்ணி, அடக்கிக் கொண்டே வந்தேன். கடைசியில் அன்று அக்காவிடமே விஷயத்தைக் கூறி அடக்கிவிட வேண்டும் என்று எண்ணி, அக்காவின் அறைக்குச் சென்றேன். அப்போதுதான் அக்கா மிக உருக்கமாக “குகன் வாராத காரணம் என்னடி” எனப் பாடிக் கொண்டிருந்தாள். நான் “அக்கா! நீ செய்வது எனக்குக் கொஞ்சங் கூடப் பிடிக்கவில்லை” என்று ஆரம்பித்தேன். திடுக்கிட்டு எழுந்து அக்கா, “என்னடி உளறுகிறாய்” என்று கேட்டாள். “எல்லாம் எனக்குத் தெரியும்” என்றேன். “என்னடி தெரியும்” என்று கேட்டுக்கொண்டே, அக்கா என் ஜடையைப் பிடித்து இழுத்து தலையில் குட்டினாள். எனக்குக் கோபம் அதிகரித்து விட்டது. “வெட்கமில்லையே, மானமில்லையே, பாட்டு வாத்தியார் மகனோடே உனக்கென்ன பேச்சு. ஆகட்டும் அம்மாவிடம் சொல்லிவிட்டு மறுவேலை பார்க்கிறேன்” என்று கூறினேன். “அப்படி, காரி முகத்திலே உமிழடி, விமலா. கழுதைக்கு கற்பூர வாசனை தெரியுமா? அவள் கெட்டுப் போறதுக்குக் காலம் வந்துதான் இந்த வேலையிலே இறங்கி விட்டாள். நாலுபேருக்குத் தெரிந்தால் காரித் துப்புவார்கள். இது என் வயிறு செய்த பாக்கியம்” என்று அதே நேரத்தில் என் தாயர் ஆக்ரோஷத் துடன் கூறிக்கொண்டே உள்ளே வந்தார்கள். அப்போதுதான் எனக்குத் தெரியும், அக்காவின் சமாச்சாரத்தை அம்மா முன்பே தெரிந்து கொண்டார்கள் என்பது. அதுமட்டுமல்ல. பாட்டு வாத்தியாரையே அன்று முதல் வரவேண்டாம் என்றும் சொல்லி விட்டார்களாம். அம்மா திட்டின திட்டுக்கெல்லாம், அக்கா ஒரு வார்த்தை கூட பதில் பேசவில்லை. கட்டிலின் மீது கவிழ்ந்து படுத்துக் கொண்டு, விம்மி விம்மி அழுதாள். அம்மா போய்விட்ட பிறகு, நான்தான் சமாதானம் கூறினேன். அக்காவுக்கு இவ்வளு கஷ்டம் வந்ததே என்று வருத்தம். இருந்தாலும் முருகனிடம் இனி அக்கா சேர முடியாது அல்லவா? மருங்கனூர் ஜமீன்தாரோ, வேறு எந்தச் சீமானோ அக்காவின் நாயகனாக வருவார். அக்காவுக்குப் பங்களா வாங்கித் தருவார். பணமாகக் குவிப்பார் என்ற ஆசை. பாபம்! அவள் ஆசைக்கு மண்போட்டு பிறகு, அவளுக்குச் சொர்ணாபிஷேகம் செய்தாலும் அவளுக்குத் திருப்தி ஏற்படுமா என்று எனக்கு அப்போது தோன்றவில்லை. அம்மா அக்காவைத் திட்டியதோடு நிற்கவில்லை. வாத்தியாரிடமும் முருகனைப் பற்றிக் கூறிவிட்டாள், பாட்டுக்கும் வரவேண்டாமெனக் கூறிவிட்டாள். முருகனைப் பிடித்து அவன் தகப்பனார் வாட்டினார். அவருக்கு பிள்ளை பிறந்து பிழைப்பிலே மண் போட்டதென்றால் வருத்தமாகத்தானே இருக்கும். சண்டை முற்றிக் கடைசியில் முருகன் வீட்டை விட்டே போய்விட்டான். ஊரைவிட்டே போய்விட்டான். ஐந்தாறு வருஷங்களுக்குப் பிறகு எங்களூரில் முருக பாகவதராக வந்து நாடகம் நடத்தினான். இடையிலே எங்கெங்கோ சுற்றினான். பிறகு சொன்னான் தன் கதையை. அக்கா ரொம்பக் கஷ்டப்பட்டாள். அம்மா ஒவ்வொரு நாளும் புத்திமதி கூறுவாள். ஒவ்வொன்றுக்கும் என்னைத்தான் உதாரணம் காட்டுவார்கள். “அதோ பாரடி உன் தங்கை விமலாவை. அதைப் பார்த்துக் கூட உனக்கு புத்தி வரவில்லையே. அவன் என்னடி செய்ய முடியும்? அவன் பிழைக்கிறதே பிரம்மப் பிரயத்தனம். அவன் ஓடிவிட்டான். நீ அகப்பட்டிருந்தால் உன்னையும் இழுத்துக் கொண்டு ஓடி, அலையவைத்து நடுவீதியிலே விட்டிருப்பான். நல்ல வழி நேரே இருக்க கோணல் வழி குறுக்கே போயிற்றே?” என்று இதோபதேசம் செய்வாள். அக்கா அம்மா எதிரிலே ஒன்றும் பேசமாட்டாள். என்னிடம் மட்டும் கூறுவாள், “பணம்! பணம்! இதுதான் அம்மாவுக்குத் தெரியும். அவர் என்ன, ஒரு குடும்பத்தைக் காப்பாற்ற மாட்டாரா? கூழோ தண்ணியோ குடித்தாலும் மானத்தோடு வாழலாமே. என்றைக்குத்தான் இந்தப் புத்தி வருமோ நம்ம ஜாதிக்கு” என்று. “அப்படி என்றால் நீ கலியாணம் செய்து கொள்ளப் போகிறாயா” என்று நான் கேட்டேன் கிண்டலாக. “ஏன் செய்து கொள்ளக் கூடாது” என்று கோபத்துடன் அக்கா கேட்பாள். “யாரைக் கலியாணம் செய்து கொள்வது” என்பேன் நான். “இஷ்டப்பட்டர்களை” என்று அழுத்தந் திருத்தமாகக் கூறுவாள் கமலா. “சுத்த பைத்தியம். நம்மை யாரக்கா கலியாணம் செய்து கொள்வார்கள்” என்று நான் ஆச்சரியத்துடன் கேட்பேன். “யாரக்கா கலியாணம் செய்து கொள்வார்கள்” என்று நையாண்டி செய்வாள் கமலா.. அக்காவின் பிடிவாத குணம், அம்மாவின் உபதேசத்தால் போகவில்லை. கோயில் குருக்கள் எங்கள் வீட்டுக்கு வருவார் என்று சொன்னேனே. அவர்தான், “அவாளவாளின் குல தர்மானுஷ்டப்படி நடக்க வேண்டாமோ” என்று ஆரம்பிப்பார். உள்ளூர் வெளியூர் தாசிகள் எதை எல்லாம் கூறுவார். ஒவ்வொரு சீமானுக்கும் உள்ள குணாதிசயங்களை வர்ணிப்பார். பக்கத்து வீட்டுப் பார்வதி வைரத்தோடு வாங்கிய கதை, வளையல் புதிதாகச் செய்த கதைகளைக் கூறுவார். ஆண்டவன் தாசியாகப் பிறப்பித்தான் அவன் கட்டளையை மீறலாமா என்று சாஸ்திரம் ஓதுவார்! தாசி என்றால் என்ன கேவலம், தேவர் அடியாள் என்று அர்த்தம். பகவானுக்குத் தொண்டு செய்வது! இது மகா சிரேஷ்டமல்லவா என்பார். தெரியாமலா நமது முன்னோர்கள், இப்படி தாசிகளை கோயில்களில் ஏற்பாடு செய்தார்கள் என்று கேட்பார். ஏதோ குலதர்மத்துக்கு ஏற்றபடி கோயிலிலே தொண்டு செய்ய வேண்டும். குடும்ப சடரட்சணார்த்தம், யாரோ ஒருவனோடு வாழ வேண்டும். இதுதானே முறை என்று கூறுவார். தேவலோகத்திலேகூட உண்டே, மேனகை, திலோத்தமை, ரம்பை, ஊர்வசி, இவர்கள் எல்லாம் யார்? என்று கேட்பார். குருக்களின் பேச்சுக் கேட்டுக் கேட்டு, அக்கா திருந்தினாள் - திருந்தினாள் என்று அப்போது எண்ணினேன். கெட்டாள் என்று இப்போது கூற வேண்டும். அக்காவின் உறுதி, முருகன் மீதிருந்த ஆசை எல்லாம் பறந்தது! மாயனூர் ஜமீன்தாரின் நேசம் கிடைத்தது. விதவிதமான நகைகள்! பெட்டி பெட்டியாகப் புடவைகள். வண்டிகுதிரை! ஆட்கள்! ஜமீன்தார் வாரி இறைத்தார் பணத்தை அக்காவுக்கு. பிறகு, புதுமோஸ்தர் புடவை, புதுதினுசு வளையல், மேல்ஆசை போயிற்று. முருகனாவது கந்தனாவது! ஜமீன்தார் அக்கா போட்ட கோட்டை மீறுவதில்லை. அக்காவைக் கண்டு கண்டு அம்மா பூரித்தார்கள். எனக்கும் கொண்டாட்டந்தான். ஜமீன்தாரிடம் நான் பேச கூச்சப்பட்டாலும், அம்மா தாராளமாக இருக்கச் சொல்வார்கள் அவரும், குட்டி, தண்ணீர் கொண்டு வா, விசிறி எடு, வெற்றிலைப் பெட்டி எடு என்று எனக்கு வேலை கொடுத்தபடி இருப்பார். அக்காவுக்கு நகை செய்தால் எனக்கும் செய்வார். இவ்வளவு சந்தோஷமாக இருக்கும் நாட்களிலே ஒரு நாள் நான் புஷ்பவதியானேன். தடபுடல் சொல்ல வேண்டியதில்லை. கச்சேரிகளும் விருந்தும் பலம். ஆனந்தமாக வாழ்ந்து வந்தோம். இப்படியிருக்கும்போது ஒரு நாள் நான் மாடியில் உலாவிக் கொண்டிருந்தேன். எதிர் வீட்டு மாடியிலே புதிதாக ஒரு வாலிபர் உலவினார். யார் இது புதிதாக இருக்கிறாரே என்று எண்ணி, உற்று நோக்கினேன். இளைஞரும் பார்த்தார். அதுதான் முத்து! புன்சிரிப்பாக என்னைப் பார்த்தார். நான் கூச்சமடைந்து தலை குனிந்தேன். அவர் கனைத்தார். நான் மறுபடியும் அவரைப் பார்த்தேன், சிரித்தார். நான் உள்ளே ஓடிவிட்டேன். வியர்வை பொழிந்து விட்டது. எனக்கு மார்பு படபடவென அடித்துக் கொண்டது. முகமே மாறி விட்டது. அன்றுதான் ‘ஆசை’ என்பது எனக்குத் தெரிந்தது. என் ஆசை வளர்ந்தது. அவர்தான் அதனை வளர்த்தார். மாலையிலே அவரது சீட்டைச் சத்தம் கேட்கும், நான் மாடிக்குச் செல்வேன். இருவரும் அலங்காரத்துடன்தான் இருப்போம். அவர் கையிலே ஏதாவது புத்தகம் இருக்கும். என்னிடம் பின்னல் குட்டை இருக்கும். கண்கள் ஒன்றை ஒன்று பார்க்கும். கலகலவெனச் சிரிக்க மாட்டோம். வளர்த்துவானேன். அக்காவுக்கு முருகன்மீது இருந்த ‘பித்து’ எனக்கு, முத்துமீது ஏற்பட்டு விட்டது. அவர் சேதி பூராவும் விசாரித்துத் தெரிந்து கொண்டேன். அவர் சீமைக்குப் போகிறார் படிக்க, இது அவர் அத்தைவீடு, என்பது தெரிந்தது. இடையே கடிதங்கள் பறந்தன எங்களுக்குள். எப்படியோ எனக்கொரு தைரியம். எங்கள் வீட்டு புதிய வேலைக்காரியும் எனக்கு உதவியாக இருந்தாள். காதற்கனிரசமே, கண்மணியே, கட்டிக்கரும்பே, இன்பமே என்ற அடுக்கு வார்த்தைகள் அம்புகள் போல் பாய்ந்தன. நான் சபலித்து விட்டேன். முருகனை மணந்து வாழ்வதையே, மேலானது என்று என் அக்கா முன்பு சொன்னாளல்லவா, அதெல்லாம் என் கவனத்திற்கு வந்தது. முத்து பி.ஏ., பிரபல குடும்பம். இவர் என்னை மணம் புரிந்து கொண்டால், எவ்வளவு சந்தோஷமாக வாழலாம் என்ற ஆசை பிறந்தது. தன் உயிரையே தத்தம் செய்வதாகவும் அவர் எனக்குக் கடிதம் எழுதியிருந்தார். நான் நம்பினேன். ஒரு நாள் துணிந்து ‘என்னைக் கலியாணம் செய்து கொள்ளச் சம்மதமா?’ என்று எழுதிக் கேட்டேன். டாக்டரே! என் வாழ்க்கையே அந்தக் கடிதத்திற்கு வரும் பதிலை பொறுத்திருந்தது. என்ன பதில் வந்தது தெரியுமா முத்துவிடமிருந்து.” “முடியாது என்று வந்திருக்கும்” என்று சுந்தரேசன் கூறினான். “இல்லை! ஆகட்டும் என்ற பதில் கிடைத்தது. என்மனம் துள்ளிற்று, அக்கா தோற்றாள், நாம் ஜெயித்தோம், அக்கா ஒரு பாட்டுக்காரனைக் கலியாணம் செய்து கொள்ள முயன்று முடியாது போய்விட்டது. நமக்கோ ஒரு பி.ஏ. வருகிறார் என்று நான் கொண்ட சந்தோஷம் இவ்வளவு அவ்வளவல்ல! உடனே நான் அக்காவிடம் விஷயத்தைக் கூறினேன். கமலா அன்று விழுந்து விழுந்து சிரித்த சிரிப்பு இருக்கிறதே அது இன்னமும் என் காதிலே கேட்கிறது. “பலேடி விமலா! பலே! சரியான ‘கை’ தான் பிடித்து விட்டாய்” என்றாள். எனக்குக் கோபந்தான். இருந்தாலும் என்ன செய்வது? முன்னே நான் அவளைக் கேலி செய்ய வில்லையா? “அக்கா கேலி செய்ய வேண்டாம், அவரும் சம்மதிக்கிறார்; அம்மாவிடம் சொல்லி...” என்று இழுத்தேன். “ஆஹா! நல்ல முகூர்த்தம் பார்த்து வைக்கிறேன்” என்றாள் கமலா. “உன் தங்கை, உனக்கு வேண்டுமானால் செய். இல்லை யானால் உனக்கொரு தங்கை இல்லை என்று முடிவு செய்து கொள்” என்ற முடுக்காகச் சொன்னேன். “அவ்வளவு ஏறிவிட்டதா தலைக்கு! ஏது, ஆசாமி ரொம்ப கெட்டிக்காரன் போலிருக்கு. சரிதான், பொம்மை போல சிங்காரித்துக் கொண்டு உலாவி சிரித்து, உன்னை மயக்கி விட்டானா, சரி” என்றாள் கமலா. பிறகு சில நாட்கள், நான் முன்பு கமலாவுக்குப் படித்த பாடத்தை அவள் எனக்குத் திருப்பிப் படித்தாள். “அக்கா! அந்தக் காலத்திலே நீ சொன்னதை நான் சிறு பெண்ணாக இருந்தாலும், தவறு என்று எண்ணினேன். என்னை மன்னித்துவிடு. இப்போது அதற்காக என்மீது பழிவாங்காதே” என்று கெஞ்சினேன். கமலாவுக்கு மனம் இளகி, என் தலையைத் தடவிக் கொடுத்து “விமலா! விஷயம் தெரியாமல் வீணாக வேதனைப்படுகிறாய். தாசிகளை அனுபவிக்கத்தான் அவர்களெல்லாம் விரும்புவார்களேயொழய, கலியாணம் செய்து கொள்ள மாட்டார்கள். சும்மா சொல்லுவார்கள். பிறகு கலியாணம் செய்து கொண்டால்தானா, தாலி ஒன்று கட்ட வில்லை, மற்றபடி, உன்னை என் சொந்த மனைவி போலவே நடத்துகிறேன் என்று கொஞ்சுவார்கள். பைத்யமே, அதிலே மயங்காதே. நானுந்தான் இன்று சொல்லுகிறேன் உண்மையை. முருகன்மீது எவ்வளவோ ஆசையாக இருந்தேன். அவன் எனக்காக உயிரைக் கொடுப்பேன் என்றான். பிறகு ஏன் நான் அவனை மறந்து விட்டேன்...” என்று முடிப்பதற்குள் நான், “ஆமாம்! குருக்கள் ஏதேதோ சொல்லி உன் மனதைக் கலைத்து விட்டார்” என்று படபடப்புடன் கூறினேன். “முட்டாளே, நீயும் அப்படித்தான் எண்ணுகிறாய். அம்மாவும் அப்படித்தான் நினைக்கிறார்கள், குருக்களும் தன் சாமர்த்தியத்தினாலேயே என்னை ‘மசிய’ வைத்தாகச் சொல்கிறார். ஆனால் நான் இணங்கியதற்குக் காரணம் வேறு.”    பகுதி - 7   “முருகன் செய்து வந்தது அத்தனையும் வெறும் ஜாலம். எப்படியாவது என்னை மெதுவாகக் கெடுத்து விட வேண்டுமென்று அவன்எண்ணினானேயொழிய, என் மீது அவனுக்கு அந்தரங்கமான ஆசை இல்லை. அது எனக்கு எப்படித் தெரிந்தது தெரியுமா? கேள் சொல்கிறேன். என்னைத் தவிர வேறுயாரையும் கண்ணெடுத்தும் பார்க்கமாட்டேன் என்று கூறினானே முருகன், அவன் நான் இல்லாத நேரத்திலெல்லாம் நமது வேலைக்காரியிடம் சரசமாடிக் கொண்டு இருந்தான். இவர்களுக்குள் நடக்கும் ‘சல்லாபம்’ எனக்குத் தெரியாது. இரண்டு பேரும் இரகசியமாகப் பேசுவார்களாம். என்மீது எப்படிப் பிராணனையே வைத்துக் கொண்டிருப்பதாக கூறி வந்தானோ அது போலவே, அவளிடமும் கூறினான் போலிருக்கிறது. அவள் கணவனோ ஒரு குடிகாரன். அவனுக்கு, முருகனே குடிக்கக் காசு கொடுத்து அனுப்பி விட்டு, இவளிடம் பேசிக் கொண்டிருப் பானாம், ஒரு நாள், புருஷன் இவர்களைக் கையும் களவுமாக பிடித்துவிட்டான் நல்ல உதையாம் முருகனுக்கு. முருகன் ஊரை விட்டுப் போனதற்கே முக்கிய காரணம் இதுதான். மேலுக்குத்தான், என்னால் சண்டை வந்ததாகப் பாட்டு வாத்தியார் கூறினார். உண்மையிலே நடந்தவற்றை வேலைக்காரியின் புருஷன் என்னிடம் ஒருநாள் கூறினான்; கூறிவிட்டுத்தான், அவனைக் கொல்கிறேன், வெட்டுகிறேன் என்று கூவினான். அவளும் இனி இங்கிருந்தால் ஆபத்து என்று எண்ணி தாய் வீடு போய் விட்டாள். இது சேதி. முருகனே இங்ஙனம் இருந்தான். என்னிடம் சிறு பிள்ளையிலிருந்து பழகியவன் முருகன். உன் ‘முத்து’ நேற்று முளைத்தான். அதிலும் படித்தவன் சீமைக்குப் போகிறான் என்கிறாய். அவன் எந்தச் சீமான் வீட்டுப் பெண்ணைக் கலியாணம் செய்து கொண்டு சொகுசாக வாழலாம் என்று இருப்பானா, உன்னைக் கலியாணம் செய்து கொள்வானா? உன்னை மயக்குகிறான், ஜாக்கிரதை! ஏமாறாதே!” என்று கமலா விஸ்தாரமாகக் கூறினாள். “அக்கா, முருகன் படியாதவன்; இவர் படித்தவர். இவர் சொன்ன சொல்லை மாற்றி விடுவாரா” என்று நான் கேட்டேன். எனக்குப் ‘படித்தவர்கள்’ என்றால், அவர்கள் யாவருமே நாணய மாக நடப்பவர்கள் என்று அப்போது எண்ணம். “விமலா, அந்த ஆள் படித்தவன் என்கிறாய். அதனால்தான் அவன் உன்னை மணக்க மாட்டான் என்று சொல்கிறேன். அவன் படிப்பிலே, தாசிகுலம் என்பது இழிந்த வகுப்பு, கேவலமானது. ஏதோ மனிதரின் காமத்துக்குத் தாசிகள் தயவு வேண்டும் என்று இருக்கிறது? பைத்யமே, படித்தவனான தால்தான், தளுக்கு அதிகமாக இருக்கிறது, உறுதி இருக்கிறது என்று எண்ணாதே. படித்தவர்கள் நீ நினைக்கிறபடி, உறுதியான வர்களானால் நமது ஜாதியிலே பாதிப் பெண்கள் இந்நேரம் குடும்ப ஸ்திரீகளாகி விட்டு இருப்பார்களே. படித்துப் பட்டம் பெற்றுப் பெரிய பெரிய அதிகாரிகளாக இருப்பவர்களிலே எவ்வளவோ பேர் தாசி வீடு செல்கின்றனர். தாசியைக் கலியாணம் செய்து கொண்டனரா” என்று கமலா கேட்டாள்.  என் மனதிலே திகிலும் சந்தேகமும் குழப்பமும் உண்டாகி விட்டது. இருந்தாலும் “எல்லோருமா அக்கா சொல்கிறபடி இருப்பார்கள். முத்துவுமா அப்படி இருப்பார்” என்றே நான் வாதாடினேன். கடைசியில் அக்கா ஒரு யுக்தி செய்தாள்; அம்மா இல்லாத நேரமாகப் பார்த்து, நான் ஒரு நாள், உன் முத்துவின் யோக்கியதை எப்படி இருக்கிறது என்பதை, பரீட்சை செய்துபார்த்து உனக்கே காட்டிவிடுகிறேன்” என்றுரைத்தாள். முத்துவின் விஷயமாக என்ன பரீட்சை நடத்தப் போகிறாள் கமலா என்பது எனக்கு விளங்கவேயில்லை. மனிதரின் மனநிலை இதுவென உணர்ந்து கொள்வது என்ன அவ்வளவு சுலபமான காரியமா? அகத்தின் அழகு முகத்தில் தெரியும் என்று பழமொழி கூறுவார்களே தவிர, அது அவ்வளவு தெளிவாகத் தெரியக் கூடியது அல்லவே. குழம்பிலே உப்புச் சரியாக இருக்கிறதா என்று தெரிந்து கொள்ள வேண்டுமானால், வாயிலே ஒரு சொட்டு ஊற்றிப் பார்க்கிறோம். அது போன்றதா இது என்று எண்ணினேன். என்னால் ஒன்றும் புரிந்து கொள்ளவே முடியவில்லை. எனக்கும் அக்காவுக்கும் நடந்த சம்பாஷணை அம்மாவுக்குத் தெரியாது. அக்கா மூச்சுவிடவில்லை. என்னைவிட அவள் எவ்வளவு நல்லவள் பார்த்தீர்களா? கமலா பாட்டு வாத்தியார் மகனுடன் ஏதோ ஒரு மாதிரியாக நடக்கிறாள் என்று எனக்குத் தெரிந்ததும், நான் வீட்டையே ஒரு கலக்குக் கலக்கி விட்டேன். அக்காவோ நானோ பூரா விஷயத்தைக் கூறியுங்கூட, அம்மாவிடம் ஒரு பேச்சுக்கூடக் கூறவில்லை. வரவர, வீட்டுக் காரியங்களை அக்காவே கவனித்துக் கொண்டு வந்தார்கள். அம்மா பாரதம், இராமாயணம் படிப்பதும், கிராம நிலத்தைப் பார்ப்பதும், நகை நட்டுச் செய்வதாக இருந்தால் அதைக் கவனித்துக் கொள்வதுமாக இருந்தார்கள். வீட்டிற்கு ஜமீன்தாரருக்கு வேண்டியவர்கள் பலர் வருவார்கள். அவர்களை வரவேற்பது, உபரிப்பது, பேசி அனுப்பவுவது எல்லாம் அக்காவேதான். அது எப்படித்தான் கமலா கற்றுக் கொண்டாளோ தெரியவில்லை. உபசாரம் செய்வதிலே பலே கெட்டிக்காரியாகி விட்டாள். ஜமீன்தாரின் சுபாவமே ஒரு தினுசானது. காட்டுக்குள்ளே புலி நுழையும் போதே மோப்பம் பிடித்துக் கொண்டும், வாலை சுழற்றிக் கொண்டும் வருமாமே அதுபோல வருவார். உள்ளே நுழைந்தால் கமலாவின் ஒரு சிரிப்பு, ஒரு பேச்சு, புலியை எலியாக்கிவிடும். ஜமீன்தார் உள்ளே நுழைந்தார் என்றால், கமலா அவரை வாருங்கோ ஜமீன்தார்வாள் என்றோ, கண்ணாளனே இங்குவா என்றோ கூப்பிட்டு மகிழ வைப்பாள் என்று எண்ணுகிறீரா? இல்லை. அவர் உள்ளே நுழைந்ததும் புன்சிரிப்புடன் அவரைப் பார்ப்பாள். உடனே, “விமலா உன் அத்தான் வந்துவிட்டார், காப்பி போடு” என்று உத்தரவிட்டுவிட்டு மாடி அறைக்குச் செல்வாள். மோட்டாரை விட்டு இறங்கும்போது இருந்த முடுக்கு, உள்ளே நுழையும்போது இருந்த முறைப்பு இவைகள் மாயமாய்ப் போய்விடும். ஜமீன்தார் குழந்தை போலக் கமலாவின் பின்னால் போவார். அக்காவிடம் ‘வசிய மருந்து’ இருக்கிறது என்று ஊரிலே யாரோ பேசிக் கொண்டார்களாம். வசியத்துக்கு மருந்தாவது மந்திரமாவது. அவளுடைய புன்சிரிப்பே மந்திரம்! கொஞ்ச நேரங்கழித்து ஜமீன்தார், கீழே வருவார்; அக்கா, நான் இருவரும் அவரிடம் பேசுவோம். வேடிக்கையாக. “கமலா! கந்தசாமிச் செட்டியார் வந்தாரா?” என்று கேட்பார் ஜமீன்தார். “வந்தாரே தொந்திக் கணபதி” என்று நான் பதில் கூறுவேன். செட்டியாருக்கு வயிறு சற்றுப் பருத்துச் சரிந்து இருக்கும். அக்காவும், ஜமீன்தாரும் விழுந்து விழுந்து சிரிப்பார்கள். “செட்டியாரைத்தான் உனக்கு ஏற்பாடு செய்யப் போகிறாராம் அத்தான்” என்று அக்கா கூறுவாள். “போ அக்கா, உனக்கு எப்போதும் கேலிதான்” என்று நான் கூறுவேன். “செட்டியார் வந்தார். நான் செடிக்குத் தண்ணீர் ஊற்றிக் கொண்டிருந்தேன். அதிக நேரம் பேசுவதற்கில்லை. போய்விட்டார்” என்று அக்கா சில நாட்களிலே சொல்வாள். ஜமீன்தார் “கமலா, உனக்கு இவ்வளவு கர்வம் கூடாது. செட்டி என்ன எண்ணிக் கொண்டிருப்பான். வந்த மனுஷாளை வா, உட்காரு என்று கூடக் கேட்காது இருப்பதா மரியாதை” என்று கூறிக் கோப்பிப்பார். சில சமங்களிலே “செட்டியார் சாயங்காலம் நாலு மணிக்கு வந்தவர் இரவு ஏழு மணிவரையிலே வாயாடிக் கொண்டிருந்தார்” என்று அக்கா சொல்வாள். ஜமீன்தாருக்கு முகம் சுருங்கிவிடும். “அவனுக்கு என்ன கமலா இவ்வளவு இடம் கொடுக்கிறாய். இவ்வளவு நேரம் அவன் இங்கே பேச வேண்டிய அவசியமென்ன? என்ன அவசியம் என்றுதான் கேட்கிறேன்” என்று கோபித்துக் கொள்வார். ஜமீன்தாரின் மனநிலை அக்காவுக்குத் தெரியும் அவருக்கு அவருடைய நண்பர்கள் கமலா வீட்டுக்கு வர வேண்டும் என்பது விருப்பம். வருகிறவர்களால் என்ன வம்பு வந்துவிடுகிறதோ என்றும் சந்தேகம். பூந்தோட்டம் இருக்கிறது, யாரும் போய்ப் பார்க்கலாம் என்று முனிசிபாலிட்டியார் சொல்லுகிறார்கள். உள்ளே போனால், யாராவது பூவைப் பறித்துக் கொண்டால் என்ன செய்வது என்று காவலாளியை ஏற்படுத்தி இருக்கிறார்களே அதுபோல. இதை எல்லாம் பார்க்கப் பார்க்க, எனக்கு இத்தகைய வாழ்க்கையே வேண்டாம் முத்துவை மணந்து கொண்டு நிம்மதியாக வாழலாம் என்ற எண்ணம் உறுதிப்பட்டது எனவே நான், மீண்டும் அக்காவிடம் இதுபற்றிப் பேசினேன். முத்துவின் மோகனப்பார்வை என்னை அதிகமாகத் தூண்டிவிட்டது. இந்தச் சமயத்திலே ஒரு நாள் எங்கள் வீட்டில் கோகுலாஷ்டமி கொண்டாடினோம். அன்று இரவு, நாங்கள் இருவரும் பாடினோம். அதற்குப் பலர் வந்திருந்தனர். எனக்கு அன்று பெரிய விருந்து. ஏன் தெரியுமா! முத்துவும், எங்கள் சங்கீதத்தைக் கேட்க வந்திருந்தார். ஆஹா நான் குதூகலத்துடன் பாடினேன். அக்காவுக்குத்தான் விஷயம் தெரியுமே, அவள் இடை இடையே என்னைக் கேலி செய்தாள். முத்துவுக்குச் சங்கீதத்திலே ஞானம் இருந்தது என்பது தெரிந்தது. தாளம் போட்டார், தலை அசைத்தார். “எல்லோரும் தானே தாளம் போடுவார்கள், தலை அசைப்பார்கள்” என்று கேட்பீர்கள். தப்புத் தாளம் போட வில்லை. அனாவசியமான இடத்திலே தலை அசைக்கவில்லை நல்ல ‘பிடி’ பிடித்தபோதுதான் தலை அசைந்தது. சும்மா தொடையைத் தட்டிக் கொண்டிருக்கவில்லை. அவர் தாளம் ஞானத்துடன் போட்டாõர். ஒரு இடத்திலே நான் ‘தாளம்’ தவறி விட்டேன். அவர் அதைத் தெரிந்து கொண்டு சிரித்தார். அக்காவும் தளுக்கிலே சொக்கித் தாளத்தை விட்டு விட்டாயா? என்று கேலி செய்தாள். வேணுமென்றே அக்கா, அன்று “பேயாண்டிதனைக் கண்டு நீயேண்டி மையல் கொண்டாய், பெண்களுக்கிது தகுமோ” என்ற பாடலைப் பாட ஆரம்பித்தாள். பாட்டுக்கு அர்த்தம் வேறுதான். இருந்தாலும் என்னைக் கேலி செய்யவே அக்கா அதைப் பாடினாள். குறும்புக்காரி கமலா! கச்சேரி முடிந்தது. சந்தன தாம்பூலம் வழங்கினாள் கமலா; முத்துவிடம் சந்தக் கிண்ணத்தை எடுத்துக் கொண்டுபோனபோது ஒரு ‘ஸ்பெஷல்’ புன்சிரிப்புடன் கமலா, முத்துவைப் பார்த்தாள். முத்து முகமெல்லாம் மலர்ந்தான். எனக்குக் கொஞ்சம் வருத்தமாக இருந்தது. ஏனெனில் அவன் கமலாவைப் பார்த்த பார்வை எனக்குப் பிடிக்கவில்லை. என்மீது முத்து வழக்கமாகச் செலுத்தும் அதே மோகனப் பார்வையையே கமலா மீதும் செலுத்தினான். கோகுலாஷ்டமியன்று முத்து நடந்து கொண்ட விதம் எனக்குப் பிடிக்கவில்லை. என்மீது அவனுக்கு உள்ளன்பு இருப்பின், என்னைக் கண்டுகளிக்கும் சமயம் கிடைத்த போது, அதனை உபயோகித்துக் கொள்ளாது, பலகாரக் கூடையை முறைத்துப் பார்க்கும் பட்டிக்காட்டானைப் போல, அக்காளையும், மற்றும் அங்கு வந்திருந்த மற்றப் பெண்களையும் பார்த்து வந்தது குற்றமல்லவா! அதே இடத்தில் செட்டியார் - ஜமீன்தாரரின் நண்பர் - நான் பார்ப்பேனா என்று ஏங்கிக் கிடந்தார். அதுபோல் மற்றும் எத்தனை பேர் இருந்தனர். எனக்கு, ஓய்வு இல்லை மற்றவர்களைப் பார்க்க, முத்துவைப் பார்த்துப் பார்த்துத் தானே நான் பூரித்தேன். அவனுக்கு மட்டும் ஏன் அது போல் இல்லை. எனக்குக் கோபமும் வெறுப்பும் வந்ததிலே தவறு என்ன? ஆண்பிள்ளைகளின் சுபாவமே அது தானோ என்று எண்ணினேன். உருவான யார் எங்கே தென் பட்டாலும் பார்க்க வேண்டியதுதானா? ஒரு முறை, வரம்பு, அளவு, நாகரிகம் இருக்க வேண்டாமா என்றெல்லாம் எண்ணினேன். இதே வெறுப்பில், இரண்டு நாட்கள் நான் மாடிக்குச் செல்லும் வழக்கத்தைக் கூட விட்டு விட்டேன். ஆனால் முத்து மட்டும் வழக்கப்படி மாடிக்கு வந்ததாக-, அக்கா விரித்துக் கொண்டே கூறினாள். “நான் வரவில்லையே என்று தேடியிருப்பார்” என்று நான் கூறினேன். “இல்லை அவனுக்கு நேரமில்லை. என்னைப் பார்த்துப் பார்த்து எதேதோ சேஷ்டைகள் செய்தபடி இருந்தான்.” என்றாள் அக்காள். என் கோபமும் பயமும், சந்தேகமும் அதிகரித்தது. மூன்று நாட்களுக்குப் பிறகு எங்கள் கோயிலிலே தவன உற்சவம் நடந்தது. மிக அழகான உற்சவம். கோயிலருகே ஒரு சிங்காரத் தோட்டம். அதிலே ஒரு குளம். குளத்துக்கு அருகே ஒரு மண்டபம். அதிலே விதவிதமான சித்திரப் பதுமைகள் கல்லினாலேயே செதுக்கப் பட்டிருக்கும். அந்த மண்டபத்திலே தவனம், ரோஜா, முல்லை, மல்லி, வெட்டிவேர் முதலிய பூக்களால் தயாரிக்கப்பட்ட சிறு பந்தல் போடப்பட்டு இருக்கும். அதிலே மாலை ‘சாமி’ அம்மனுடன் வந்து இறங்கினால் நடுநிசிவரையிலே இருக்கும். அதுவரை தோட்டத்திலே காந்த விளக்கின் ஒளி பகல் போல் இருக்கும். தோட்டத்தின் அழகுக்கும் மண்டபத்தின் சிங்காரத்துக்கும் விளக்கின் ஒளிக்கும் கூடியிருக்கும் மக்களின் குதூகலத்துக்கும் எல்லையிராது. ஆணும் பெண்ணும் தனித்தனியாகவும் ஜோடிகளாகவும் குழந்தை குட்டிகளோடும் நல்ல நல்ல ஆடைகள் அணிந்து கொண்டும் சொந்த நகை, இரவல் நகை இரண்டு விதமும் போட்டுக் கொண்டும், சிரித்துக் கொண்டும், இளித்துக் கொண்டும் ஆயிரக்கணக்கிலே கூடுவார்கள். வாலிபர்களுக்கு அன்று கொண்டாட்டமென்றால் அவ்வளவு இவ்வளவு அல்ல. கண்ணுக்குச் சரியான விருந்துதான். இரண்டு மூன்று நாட்களுக்குப் பாவம் சரியான தூக்கமிராது அவர்களுக்கு. தவனத் திருவிழாக் காட்சியைப் பற்றிய கனவு அவர்களைத் தொல்லைப்படுத்திவிடும். இத்தகைய களிப்போடு நடக்கும் அந்த விழா, நள்ளிரவு வரை நடக்கும். ‘சாமிக்கு’ எதிரிலே கொஞ்ச நேரம், வேதபாரா யணம் நடக்கும், அதற்குள் ‘பிரசாதங்கள்’ வந்து விடும். அந்த வாசனை கமகமவெனக் கிளம்பியதும், வேதபாராயணக்காரர் மளமளவெனப் புறப்பட்டு விடுவார்கள். பிரசாதம் வழங்கப்பட்டு அவர்கள் அதனை உண்டு கொண்டிருக்க, மற்றவர்கள் அதைப் பார்த்துக் கொண்டிருப்பர். அது என்ன வழக்கமோ தெரிய வில்லை ‘ஆண்டவன்’ எதிரில் இருக்கும்போதே, ஒரு கூட்டம் வருகிற பிரசாதத்தைத் தின்பதும், மற்றவர்கள் தூர நின்று பார்ப்பதுமா நியாயம்? அவர் எதிரிலேயே இந்த ‘அக்ரமம்’ நடத்துகிறார்கள். படிப்பது வேதம்! ஆனால் நடக்கிற விதமோ, அநியாயம். சிலர் வெளிப்படையாகவே இதனைப் பற்றிக் கண்டிப்பார்கள். தவளைபோல் கத்தினார்கள். உருண்டையைப் போட்டுக் கொண்டார்கள். தொப்பையில்; இனி மலைப்பாம்பு போல மரத்தடியிலே படுத்துப் புரளுவார்கள். அக்ரமம், கோயில் சொத்து யாருடையது! அதைக் கொடுத்தவர்களின் பரம்பரை பசி ஏப்பக்காரராகி விட்டனர், இவர்கள் பாடு கொண்டாட்டமாகி விட்டது. சாமி, சாமி என்ற சாக்கை வைத்துக் கொண்டு, இந்த ஆசாமிகள்தானே தின்று கொழுக்கிறார்கள் என்று பேசுவார்கள். தனியாக ஒரு பார்ப்பனர் வந்தால் போதும், அவனைக் கேலி செய்து அவன் பயந்து ஓடும்படி செய்துவிடுவார்கள். எங்களுக்கு மட்டும் குருக்கள், பிரசாதத்தைக் கொண்டு வந்து கொடுத்து விடுவார். இரவு முழுவதும் அந்தத் தோட்டம், கேளிக்கை மண்டபமாகத்தான் இருக்கும். சங்கீதம், நாட்டியம், சாமிக்கு முன் நடக்கும். சாமி பார்க்கிறாரா? பக்கத்திலே நிற்கிற பட்டாச்சாரிகளும், மற்றவர்களும் பார்த்துப் பூரிப்பார்கள். விலாசம் விசாரிப்பது, போன வருஷம் சந்தித்தோமே என்று நட்பு கொண்டாடுவது, அந்தக் குட்டி கோடி வீட்டுக் கோமளத்தின் பேத்தியாம் என்று வர்ணிப்பது போன்ற காரியங்கள் நடந்தபடி இருக்கும். ஊடல்காரர்கள், மீண்டும் கூடும் இடமும் தவன மண்டபந்தான். புதிதாக ஜோடிகள் சேருவதும் அங்குதான். அன்றிரவு அங்கு கண்கள் சுழலுவதைப்போல வேறு எப்போதும் சுழலுவது இல்லை என்று கூறலாம். இவ்வளவு சந்தோஷமாக, திருவிழா நடக்கும்போது எனக்கொரு எண்ணம் தோன்றுவதுண்டு. உலகமே அநித்தியம் - பிரபஞ்சமே மாயை - இந்த லோகத்திலே என்ன இருக்கிறது - பணம்பாஷாணம் - இன்றைக்கு இருப்பாரை நாளைக்கு இருப்பரென்று எண்ணவோ திடமில்லை - காயமே இது பொய்யடா - மனித வாழ்வு இந்திரஜாலம் - என்று ஏதேதோ பேசுகிறார்கள் வேதாந்தம். ஆனால், அதே மக்கள், பாட்டும் கூத்தும் தேடுகிறார்கள். பெண்கள் இருக்கக் கண்டால் போதும், தேன் கண்ட ஈ போல் தேங்குகிறார்கள். எத்தனை விதமான கோணல் சேட்டைகளைச் செய்கிறார்கள். சட்டையைச் சரிப்படுத்திக் கொள்வதும் தலையைச் சீவிவிட்டது கலைந்து விட்டதோ என்ற கவலையால் விநாடிக்கொரு முறை தடவித் தடவிப் பார்ப்பதும் முகத்தை நிமிஷத்துக் கொருமுறை கைக்குட்டையால் துடைப்பதும், கண் சிமிட்டுவதும் கைத்தாளமிடுவதும், கனைப்பதும், காதல் பாட்டுகள் பாடுவதும், கலகலவெனச் சிரிப்பதும், பணத்தை எடுத்து வீசுவதும் படாடோபம் செய்வதுமாக இருக்கிறார்கள். இத்தயை ஆண்டவன் பூஜைக்கு என்ற பெயரை வைத்து நடத்தப்படுகிற திருவிழாக்களிலே மக்களின் எண்ண மெல்லாம் ஆண்டவன் அறிவார் என்று சொல்கிறார்கள் பெரியோர்கள். தவன உற்சவத்துக்கு வந்தவர்களின் எண்ணத்தை ஆண்டவன் உள்ளபடி அறிந்திருப்பின், நான் சொல்கிறேன், ஒரு நிமிடம்கூட அங்கே இருக்க மாட்டார். எழுந்து ஓடிப்போய், கோயில் கதவைத் தாளிட்டுக் கொண்டு விடுவார். “உங்கள் முகத்திலேயே நான் விழிக்க மாட்டேன். என்னைச் சாக்காக வைத்துக் கொண்டு நீங்கள் கேளிக்கையாக இருக்கவும், காமச் சேட்டைகள் செய்யவும், ஆடம்பர ஆட்டம் ஆடிவருகிறீர்கள். நான் இதற்குத்தானா பயன்பட்டேன். நான் என்ன பித்துக் கொள்ளியா?” என்று கூறுவார். மாயை, மாயை என்று வேதாந்தம் பேசும் மக்கள் உள்ளபடி மாயை என்று உலகத்தையோ உலக சுகபோகத்தையோ கருதினால், ஊரில் இவ்வளவு திருவிழாக்கள் நடைபெறுகிறது. இத்தகைய காரணங்கள் பிறருக்கு வருவதை விட, எங்கள் குலத்தவருக்கே அதிகம் வரும். ஏனெனில், எங்கள் எதிரில்தான் இந்த ‘திருவிளையாடல்கள்’ அதிகமாக நடைபெறும். எங்கள் வீடு ஏறக்குறைய ஊரார் பூராவுக்கும் தெரியும். எனவே, எங்கள் எதிரில் அதிகமான கோணல் சேட்டைகளும், குறும்புப் பேச்சும் யாரும் பேசமாட்டார்கள். அதிலும் அக்காவிடம் ஜமீன்தார் வர ஆரம்பித்த பிறகு எங்களுக்குக் கௌரவம் அதிகம். இருந்தாலும் ஓரிரு துடிதுடிப்பான இளைஞர்கள் சாக்கிட்டுப் பேசுவார்கள். “ஏண்டா ரங்கா? எப்படி உருப்படி?” என்பான் ஒரு வாலிபன். “இந்த ரகங்களிலே எது வேண்டும் சுவாமிகாள்” என்பான் வேறொருவன். “உருப்படி சரியானதுதாண்டா! ஆனால் அது ஜமீன்தார் சாமான்” என்பான் மூன்றாமவன்.  எல்லோருமாகப் பிறகு சிரிப்பார்கள். நாங்கள் சுளித்த முகத்துடன் நிற்போம். காலாடிகள் ஏதேதோ பேசுகிறார்கள். என்று கூறுவோம். தவன உற்சவக் காட்சியை நாங்கள் அன்று களித்துக் கொண்டிருக்கையில், நான் முத்துவைப் பற்றி எண்ணிக் கொண்டு, அங்கும் இங்கும் பார்த்தபடி இருந்தேன். நான் எங்காவது வெளியே போனால், முத்து வருகிற வாடிக்கை யுண்டு. அன்று வெகுநேரம் மட்டும் வரவில்லை. ஏன் வர வில்லையென்று யோசித்துக் கொண்டே இருக்கையில் முத்து வரக்கண்டேன். அவனது முகம் ஜொலித்தது. ஆனால் அவன் பக்கத்திலே வந்த இளமங்கையின் வைரக்கம்மலின் ஒளி அதைவிட அதிகமாக ஜொலித்தது. அவன் வீட்டார் பலர் கூட இருந்தனர். ஆனால் அந்த இளமங்கையும் அவனுமே தனியாகப் பேசுவதும் சிரிப்பதுமாக வந்தார்கள். முத்துவுக்கு என்னைப் பார்க்கக்கூட நேரமில்லை. என் நினைவே இல்லை. நாங்கள் இருந்த பக்கமாக அவர்கள் நடந்து சென்றபோது அந்த மங்கை தற்செயலாக என்னைப் பார்த்தாள். உடனே திரும்பி முத்துவை நோக்கி ஏதோ கேட்டாள். “அவள் ஒரு தேவடியாள், டி.ஜி.” என்று முத்து பதில் சொல்லிக் கொண்டே வழி நடந்தான். நடன நாட்டியமாடு வதற்காக நிஜாரும் சதங்கையும் மாட்டிக் கொண்டிருந்தேன். அதைக்கண்டே அந்தப் பெண், நான் யார் என்று கேட்டிருக்க வேண்டும். அதற்கு முத்து, என் உயிரினும் இனியவன் என நான் எண்ணிய முத்து, அலட்சியமாக நான் ஓர் தாசி என்று அவளிடம் கூறினான். அவள் சிரித்தாள். “முருகன் செய்து வந்தது அத்தனையும் வெறும் ஜாலம். எப்படியாவது என்னை மெதுவாகக் கெடுத்து விட வேண்டுமென்று அவன்எண்ணினானேயொழிய, என் மீது அவனுக்கு அந்தரங்கமான ஆசை இல்லை. அது எனக்கு எப்படித் தெரிந்தது தெரியுமா? கேள் சொல்கிறேன். என்னைத் தவிர வேறுயாரையும் கண்ணெடுத்தும் பார்க்கமாட்டேன் என்று கூறினானே முருகன், அவன் நான் இல்லாத நேரத்திலெல்லாம் நமது வேலைக்காரியிடம் சரசமாடிக் கொண்டு இருந்தான். இவர்களுக்குள் நடக்கும் ‘சல்லாபம்’ எனக்குத் தெரியாது. இரண்டு பேரும் இரகசியமாகப் பேசுவார்களாம். என்மீது எப்படிப் பிராணனையே வைத்துக் கொண்டிருப்பதாக கூறி வந்தானோ அது போலவே, அவளிடமும் கூறினான் போலிருக்கிறது. அவள் கணவனோ ஒரு குடிகாரன். அவனுக்கு, முருகனே குடிக்கக் காசு கொடுத்து அனுப்பி விட்டு, இவளிடம் பேசிக் கொண்டிருப் பானாம், ஒரு நாள், புருஷன் இவர்களைக் கையும் களவுமாக பிடித்துவிட்டான் நல்ல உதையாம் முருகனுக்கு. முருகன் ஊரை விட்டுப் போனதற்கே முக்கிய காரணம் இதுதான். மேலுக்குத்தான், என்னால் சண்டை வந்ததாகப் பாட்டு வாத்தியார் கூறினார். உண்மையிலே நடந்தவற்றை வேலைக்காரியின் புருஷன் என்னிடம் ஒருநாள் கூறினான்; கூறிவிட்டுத்தான், அவனைக் கொல்கிறேன், வெட்டுகிறேன் என்று கூவினான். அவளும் இனி இங்கிருந்தால் ஆபத்து என்று எண்ணி தாய் வீடு போய் விட்டாள். இது சேதி. முருகனே இங்ஙனம் இருந்தான். என்னிடம் சிறு பிள்ளையிலிருந்து பழகியவன் முருகன். உன் ‘முத்து’ நேற்று முளைத்தான். அதிலும் படித்தவன் சீமைக்குப் போகிறான் என்கிறாய். அவன் எந்தச் சீமான் வீட்டுப் பெண்ணைக் கலியாணம் செய்து கொண்டு சொகுசாக வாழலாம் என்று இருப்பானா, உன்னைக் கலியாணம் செய்து கொள்வானா? உன்னை மயக்குகிறான், ஜாக்கிரதை! ஏமாறாதே!” என்று கமலா விஸ்தாரமாகக் கூறினாள். “அக்கா, முருகன் படியாதவன்; இவர் படித்தவர். இவர் சொன்ன சொல்லை மாற்றி விடுவாரா” என்று நான் கேட்டேன். எனக்குப் ‘படித்தவர்கள்’ என்றால், அவர்கள் யாவருமே நாணய மாக நடப்பவர்கள் என்று அப்போது எண்ணம். “விமலா, அந்த ஆள் படித்தவன் என்கிறாய். அதனால்தான் அவன் உன்னை மணக்க மாட்டான் என்று சொல்கிறேன். அவன் படிப்பிலே, தாசிகுலம் என்பது இழிந்த வகுப்பு, கேவலமானது. ஏதோ மனிதரின் காமத்துக்குத் தாசிகள் தயவு வேண்டும் என்று இருக்கிறது? பைத்யமே, படித்தவனான தால்தான், தளுக்கு அதிகமாக இருக்கிறது, உறுதி இருக்கிறது என்று எண்ணாதே. படித்தவர்கள் நீ நினைக்கிறபடி, உறுதியான வர்களானால் நமது ஜாதியிலே பாதிப் பெண்கள் இந்நேரம் குடும்ப ஸ்திரீகளாகி விட்டு இருப்பார்களே. படித்துப் பட்டம் பெற்றுப் பெரிய பெரிய அதிகாரிகளாக இருப்பவர்களிலே எவ்வளவோ பேர் தாசி வீடு செல்கின்றனர். தாசியைக் கலியாணம் செய்து கொண்டனரா” என்று கமலா கேட்டாள்.  என் மனதிலே திகிலும் சந்தேகமும் குழப்பமும் உண்டாகி விட்டது. இருந்தாலும் “எல்லோருமா அக்கா சொல்கிறபடி இருப்பார்கள். முத்துவுமா அப்படி இருப்பார்” என்றே நான் வாதாடினேன். கடைசியில் அக்கா ஒரு யுக்தி செய்தாள்; அம்மா இல்லாத நேரமாகப் பார்த்து, நான் ஒரு நாள், உன் முத்துவின் யோக்கியதை எப்படி இருக்கிறது என்பதை, பரீட்சை செய்துபார்த்து உனக்கே காட்டிவிடுகிறேன்” என்றுரைத்தாள். முத்துவின் விஷயமாக என்ன பரீட்சை நடத்தப் போகிறாள் கமலா என்பது எனக்கு விளங்கவேயில்லை. மனிதரின் மனநிலை இதுவென உணர்ந்து கொள்வது என்ன அவ்வளவு சுலபமான காரியமா? அகத்தின் அழகு முகத்தில் தெரியும் என்று பழமொழி கூறுவார்களே தவிர, அது அவ்வளவு தெளிவாகத் தெரியக் கூடியது அல்லவே. குழம்பிலே உப்புச் சரியாக இருக்கிறதா என்று தெரிந்து கொள்ள வேண்டுமானால், வாயிலே ஒரு சொட்டு ஊற்றிப் பார்க்கிறோம். அது போன்றதா இது என்று எண்ணினேன். என்னால் ஒன்றும் புரிந்து கொள்ளவே முடியவில்லை. எனக்கும் அக்காவுக்கும் நடந்த சம்பாஷணை அம்மாவுக்குத் தெரியாது. அக்கா மூச்சுவிடவில்லை. என்னைவிட அவள் எவ்வளவு நல்லவள் பார்த்தீர்களா? கமலா பாட்டு வாத்தியார் மகனுடன் ஏதோ ஒரு மாதிரியாக நடக்கிறாள் என்று எனக்குத் தெரிந்ததும், நான் வீட்டையே ஒரு கலக்குக் கலக்கி விட்டேன். அக்காவோ நானோ பூரா விஷயத்தைக் கூறியுங்கூட, அம்மாவிடம் ஒரு பேச்சுக்கூடக் கூறவில்லை. வரவர, வீட்டுக் காரியங்களை அக்காவே கவனித்துக் கொண்டு வந்தார்கள். அம்மா பாரதம், இராமாயணம் படிப்பதும், கிராம நிலத்தைப் பார்ப்பதும், நகை நட்டுச் செய்வதாக இருந்தால் அதைக் கவனித்துக் கொள்வதுமாக இருந்தார்கள். வீட்டிற்கு ஜமீன்தாரருக்கு வேண்டியவர்கள் பலர் வருவார்கள். அவர்களை வரவேற்பது, உபரிப்பது, பேசி அனுப்பவுவது எல்லாம் அக்காவேதான். அது எப்படித்தான் கமலா கற்றுக் கொண்டாளோ தெரியவில்லை. உபசாரம் செய்வதிலே பலே கெட்டிக்காரியாகி விட்டாள். ஜமீன்தாரின் சுபாவமே ஒரு தினுசானது. காட்டுக்குள்ளே புலி நுழையும் போதே மோப்பம் பிடித்துக் கொண்டும், வாலை சுழற்றிக் கொண்டும் வருமாமே அதுபோல வருவார். உள்ளே நுழைந்தால் கமலாவின் ஒரு சிரிப்பு, ஒரு பேச்சு, புலியை எலியாக்கிவிடும். ஜமீன்தார் உள்ளே நுழைந்தார் என்றால், கமலா அவரை வாருங்கோ ஜமீன்தார்வாள் என்றோ, கண்ணாளனே இங்குவா என்றோ கூப்பிட்டு மகிழ வைப்பாள் என்று எண்ணுகிறீரா? இல்லை. அவர் உள்ளே நுழைந்ததும் புன்சிரிப்புடன் அவரைப் பார்ப்பாள். உடனே, “விமலா உன் அத்தான் வந்துவிட்டார், காப்பி போடு” என்று உத்தரவிட்டுவிட்டு மாடி அறைக்குச் செல்வாள். மோட்டாரை விட்டு இறங்கும்போது இருந்த முடுக்கு, உள்ளே நுழையும்போது இருந்த முறைப்பு இவைகள் மாயமாய்ப் போய்விடும். ஜமீன்தார் குழந்தை போலக் கமலாவின் பின்னால் போவார். அக்காவிடம் ‘வசிய மருந்து’ இருக்கிறது என்று ஊரிலே யாரோ பேசிக் கொண்டார்களாம். வசியத்துக்கு மருந்தாவது மந்திரமாவது. அவளுடைய புன்சிரிப்பே மந்திரம்! கொஞ்ச நேரங்கழித்து ஜமீன்தார், கீழே வருவார்; அக்கா, நான் இருவரும் அவரிடம் பேசுவோம். வேடிக்கையாக. “கமலா! கந்தசாமிச் செட்டியார் வந்தாரா?” என்று கேட்பார் ஜமீன்தார். “வந்தாரே தொந்திக் கணபதி” என்று நான் பதில் கூறுவேன். செட்டியாருக்கு வயிறு சற்றுப் பருத்துச் சரிந்து இருக்கும். அக்காவும், ஜமீன்தாரும் விழுந்து விழுந்து சிரிப்பார்கள். “செட்டியாரைத்தான் உனக்கு ஏற்பாடு செய்யப் போகிறாராம் அத்தான்” என்று அக்கா கூறுவாள். “போ அக்கா, உனக்கு எப்போதும் கேலிதான்” என்று நான் கூறுவேன். “செட்டியார் வந்தார். நான் செடிக்குத் தண்ணீர் ஊற்றிக் கொண்டிருந்தேன். அதிக நேரம் பேசுவதற்கில்லை. போய்விட்டார்” என்று அக்கா சில நாட்களிலே சொல்வாள். ஜமீன்தார் “கமலா, உனக்கு இவ்வளவு கர்வம் கூடாது. செட்டி என்ன எண்ணிக் கொண்டிருப்பான். வந்த மனுஷாளை வா, உட்காரு என்று கூடக் கேட்காது இருப்பதா மரியாதை” என்று கூறிக் கோப்பிப்பார். சில சமங்களிலே “செட்டியார் சாயங்காலம் நாலு மணிக்கு வந்தவர் இரவு ஏழு மணிவரையிலே வாயாடிக் கொண்டிருந்தார்” என்று அக்கா சொல்வாள். ஜமீன்தாருக்கு முகம் சுருங்கிவிடும். “அவனுக்கு என்ன கமலா இவ்வளவு இடம் கொடுக்கிறாய். இவ்வளவு நேரம் அவன் இங்கே பேச வேண்டிய அவசியமென்ன? என்ன அவசியம் என்றுதான் கேட்கிறேன்” என்று கோபித்துக் கொள்வார். ஜமீன்தாரின் மனநிலை அக்காவுக்குத் தெரியும் அவருக்கு அவருடைய நண்பர்கள் கமலா வீட்டுக்கு வர வேண்டும் என்பது விருப்பம். வருகிறவர்களால் என்ன வம்பு வந்துவிடுகிறதோ என்றும் சந்தேகம். பூந்தோட்டம் இருக்கிறது, யாரும் போய்ப் பார்க்கலாம் என்று முனிசிபாலிட்டியார் சொல்லுகிறார்கள். உள்ளே போனால், யாராவது பூவைப் பறித்துக் கொண்டால் என்ன செய்வது என்று காவலாளியை ஏற்படுத்தி இருக்கிறார்களே அதுபோல. இதை எல்லாம் பார்க்கப் பார்க்க, எனக்கு இத்தகைய வாழ்க்கையே வேண்டாம் முத்துவை மணந்து கொண்டு நிம்மதியாக வாழலாம் என்ற எண்ணம் உறுதிப்பட்டது எனவே நான், மீண்டும் அக்காவிடம் இதுபற்றிப் பேசினேன். முத்துவின் மோகனப்பார்வை என்னை அதிகமாகத் தூண்டிவிட்டது. இந்தச் சமயத்திலே ஒரு நாள் எங்கள் வீட்டில் கோகுலாஷ்டமி கொண்டாடினோம். அன்று இரவு, நாங்கள் இருவரும் பாடினோம். அதற்குப் பலர் வந்திருந்தனர். எனக்கு அன்று பெரிய விருந்து. ஏன் தெரியுமா! முத்துவும், எங்கள் சங்கீதத்தைக் கேட்க வந்திருந்தார். ஆஹா நான் குதூகலத்துடன் பாடினேன். அக்காவுக்குத்தான் விஷயம் தெரியுமே, அவள் இடை இடையே என்னைக் கேலி செய்தாள். முத்துவுக்குச் சங்கீதத்திலே ஞானம் இருந்தது என்பது தெரிந்தது. தாளம் போட்டார், தலை அசைத்தார். “எல்லோரும் தானே தாளம் போடுவார்கள், தலை அசைப்பார்கள்” என்று கேட்பீர்கள். தப்புத் தாளம் போட வில்லை. அனாவசியமான இடத்திலே தலை அசைக்கவில்லை நல்ல ‘பிடி’ பிடித்தபோதுதான் தலை அசைந்தது. சும்மா தொடையைத் தட்டிக் கொண்டிருக்கவில்லை. அவர் தாளம் ஞானத்துடன் போட்டாõர். ஒரு இடத்திலே நான் ‘தாளம்’ தவறி விட்டேன். அவர் அதைத் தெரிந்து கொண்டு சிரித்தார். அக்காவும் தளுக்கிலே சொக்கித் தாளத்தை விட்டு விட்டாயா? என்று கேலி செய்தாள். வேணுமென்றே அக்கா, அன்று “பேயாண்டிதனைக் கண்டு நீயேண்டி மையல் கொண்டாய், பெண்களுக்கிது தகுமோ” என்ற பாடலைப் பாட ஆரம்பித்தாள். பாட்டுக்கு அர்த்தம் வேறுதான். இருந்தாலும் என்னைக் கேலி செய்யவே அக்கா அதைப் பாடினாள். குறும்புக்காரி கமலா! கச்சேரி முடிந்தது. சந்தன தாம்பூலம் வழங்கினாள் கமலா; முத்துவிடம் சந்தக் கிண்ணத்தை எடுத்துக் கொண்டுபோனபோது ஒரு ‘ஸ்பெஷல்’ புன்சிரிப்புடன் கமலா, முத்துவைப் பார்த்தாள். முத்து முகமெல்லாம் மலர்ந்தான். எனக்குக் கொஞ்சம் வருத்தமாக இருந்தது. ஏனெனில் அவன் கமலாவைப் பார்த்த பார்வை எனக்குப் பிடிக்கவில்லை. என்மீது முத்து வழக்கமாகச் செலுத்தும் அதே மோகனப் பார்வையையே கமலா மீதும் செலுத்தினான். கோகுலாஷ்டமியன்று முத்து நடந்து கொண்ட விதம் எனக்குப் பிடிக்கவில்லை. என்மீது அவனுக்கு உள்ளன்பு இருப்பின், என்னைக் கண்டுகளிக்கும் சமயம் கிடைத்த போது, அதனை உபயோகித்துக் கொள்ளாது, பலகாரக் கூடையை முறைத்துப் பார்க்கும் பட்டிக்காட்டானைப் போல, அக்காளையும், மற்றும் அங்கு வந்திருந்த மற்றப் பெண்களையும் பார்த்து வந்தது குற்றமல்லவா! அதே இடத்தில் செட்டியார் - ஜமீன்தாரரின் நண்பர் - நான் பார்ப்பேனா என்று ஏங்கிக் கிடந்தார். அதுபோல் மற்றும் எத்தனை பேர் இருந்தனர். எனக்கு, ஓய்வு இல்லை மற்றவர்களைப் பார்க்க, முத்துவைப் பார்த்துப் பார்த்துத் தானே நான் பூரித்தேன். அவனுக்கு மட்டும் ஏன் அது போல் இல்லை. எனக்குக் கோபமும் வெறுப்பும் வந்ததிலே தவறு என்ன? ஆண்பிள்ளைகளின் சுபாவமே அது தானோ என்று எண்ணினேன். உருவான யார் எங்கே தென் பட்டாலும் பார்க்க வேண்டியதுதானா? ஒரு முறை, வரம்பு, அளவு, நாகரிகம் இருக்க வேண்டாமா என்றெல்லாம் எண்ணினேன். இதே வெறுப்பில், இரண்டு நாட்கள் நான் மாடிக்குச் செல்லும் வழக்கத்தைக் கூட விட்டு விட்டேன். ஆனால் முத்து மட்டும் வழக்கப்படி மாடிக்கு வந்ததாக-, அக்கா விரித்துக் கொண்டே கூறினாள். “நான் வரவில்லையே என்று தேடியிருப்பார்” என்று நான் கூறினேன். “இல்லை அவனுக்கு நேரமில்லை. என்னைப் பார்த்துப் பார்த்து எதேதோ சேஷ்டைகள் செய்தபடி இருந்தான்.” என்றாள் அக்காள். என் கோபமும் பயமும், சந்தேகமும் அதிகரித்தது. மூன்று நாட்களுக்குப் பிறகு எங்கள் கோயிலிலே தவன உற்சவம் நடந்தது. மிக அழகான உற்சவம். கோயிலருகே ஒரு சிங்காரத் தோட்டம். அதிலே ஒரு குளம். குளத்துக்கு அருகே ஒரு மண்டபம். அதிலே விதவிதமான சித்திரப் பதுமைகள் கல்லினாலேயே செதுக்கப் பட்டிருக்கும். அந்த மண்டபத்திலே தவனம், ரோஜா, முல்லை, மல்லி, வெட்டிவேர் முதலிய பூக்களால் தயாரிக்கப்பட்ட சிறு பந்தல் போடப்பட்டு இருக்கும். அதிலே மாலை ‘சாமி’ அம்மனுடன் வந்து இறங்கினால் நடுநிசிவரையிலே இருக்கும். அதுவரை தோட்டத்திலே காந்த விளக்கின் ஒளி பகல் போல் இருக்கும். தோட்டத்தின் அழகுக்கும் மண்டபத்தின் சிங்காரத்துக்கும் விளக்கின் ஒளிக்கும் கூடியிருக்கும் மக்களின் குதூகலத்துக்கும் எல்லையிராது. ஆணும் பெண்ணும் தனித்தனியாகவும் ஜோடிகளாகவும் குழந்தை குட்டிகளோடும் நல்ல நல்ல ஆடைகள் அணிந்து கொண்டும் சொந்த நகை, இரவல் நகை இரண்டு விதமும் போட்டுக் கொண்டும், சிரித்துக் கொண்டும், இளித்துக் கொண்டும் ஆயிரக்கணக்கிலே கூடுவார்கள். வாலிபர்களுக்கு அன்று கொண்டாட்டமென்றால் அவ்வளவு இவ்வளவு அல்ல. கண்ணுக்குச் சரியான விருந்துதான். இரண்டு மூன்று நாட்களுக்குப் பாவம் சரியான தூக்கமிராது அவர்களுக்கு. தவனத் திருவிழாக் காட்சியைப் பற்றிய கனவு அவர்களைத் தொல்லைப்படுத்திவிடும். இத்தகைய களிப்போடு நடக்கும் அந்த விழா, நள்ளிரவு வரை நடக்கும். ‘சாமிக்கு’ எதிரிலே கொஞ்ச நேரம், வேதபாரா யணம் நடக்கும், அதற்குள் ‘பிரசாதங்கள்’ வந்து விடும். அந்த வாசனை கமகமவெனக் கிளம்பியதும், வேதபாராயணக்காரர் மளமளவெனப் புறப்பட்டு விடுவார்கள். பிரசாதம் வழங்கப்பட்டு அவர்கள் அதனை உண்டு கொண்டிருக்க, மற்றவர்கள் அதைப் பார்த்துக் கொண்டிருப்பர். அது என்ன வழக்கமோ தெரிய வில்லை ‘ஆண்டவன்’ எதிரில் இருக்கும்போதே, ஒரு கூட்டம் வருகிற பிரசாதத்தைத் தின்பதும், மற்றவர்கள் தூர நின்று பார்ப்பதுமா நியாயம்? அவர் எதிரிலேயே இந்த ‘அக்ரமம்’ நடத்துகிறார்கள். படிப்பது வேதம்! ஆனால் நடக்கிற விதமோ, அநியாயம். சிலர் வெளிப்படையாகவே இதனைப் பற்றிக் கண்டிப்பார்கள். தவளைபோல் கத்தினார்கள். உருண்டையைப் போட்டுக் கொண்டார்கள். தொப்பையில்; இனி மலைப்பாம்பு போல மரத்தடியிலே படுத்துப் புரளுவார்கள். அக்ரமம், கோயில் சொத்து யாருடையது! அதைக் கொடுத்தவர்களின் பரம்பரை பசி ஏப்பக்காரராகி விட்டனர், இவர்கள் பாடு கொண்டாட்டமாகி விட்டது. சாமி, சாமி என்ற சாக்கை வைத்துக் கொண்டு, இந்த ஆசாமிகள்தானே தின்று கொழுக்கிறார்கள் என்று பேசுவார்கள். தனியாக ஒரு பார்ப்பனர் வந்தால் போதும், அவனைக் கேலி செய்து அவன் பயந்து ஓடும்படி செய்துவிடுவார்கள். எங்களுக்கு மட்டும் குருக்கள், பிரசாதத்தைக் கொண்டு வந்து கொடுத்து விடுவார். இரவு முழுவதும் அந்தத் தோட்டம், கேளிக்கை மண்டபமாகத்தான் இருக்கும். சங்கீதம், நாட்டியம், சாமிக்கு முன் நடக்கும். சாமி பார்க்கிறாரா? பக்கத்திலே நிற்கிற பட்டாச்சாரிகளும், மற்றவர்களும் பார்த்துப் பூரிப்பார்கள். விலாசம் விசாரிப்பது, போன வருஷம் சந்தித்தோமே என்று நட்பு கொண்டாடுவது, அந்தக் குட்டி கோடி வீட்டுக் கோமளத்தின் பேத்தியாம் என்று வர்ணிப்பது போன்ற காரியங்கள் நடந்தபடி இருக்கும். ஊடல்காரர்கள், மீண்டும் கூடும் இடமும் தவன மண்டபந்தான். புதிதாக ஜோடிகள் சேருவதும் அங்குதான். அன்றிரவு அங்கு கண்கள் சுழலுவதைப்போல வேறு எப்போதும் சுழலுவது இல்லை என்று கூறலாம். இவ்வளவு சந்தோஷமாக, திருவிழா நடக்கும்போது எனக்கொரு எண்ணம் தோன்றுவதுண்டு. உலகமே அநித்தியம் - பிரபஞ்சமே மாயை - இந்த லோகத்திலே என்ன இருக்கிறது - பணம்பாஷாணம் - இன்றைக்கு இருப்பாரை நாளைக்கு இருப்பரென்று எண்ணவோ திடமில்லை - காயமே இது பொய்யடா - மனித வாழ்வு இந்திரஜாலம் - என்று ஏதேதோ பேசுகிறார்கள் வேதாந்தம். ஆனால், அதே மக்கள், பாட்டும் கூத்தும் தேடுகிறார்கள். பெண்கள் இருக்கக் கண்டால் போதும், தேன் கண்ட ஈ போல் தேங்குகிறார்கள். எத்தனை விதமான கோணல் சேட்டைகளைச் செய்கிறார்கள். சட்டையைச் சரிப்படுத்திக் கொள்வதும் தலையைச் சீவிவிட்டது கலைந்து விட்டதோ என்ற கவலையால் விநாடிக்கொரு முறை தடவித் தடவிப் பார்ப்பதும் முகத்தை நிமிஷத்துக் கொருமுறை கைக்குட்டையால் துடைப்பதும், கண் சிமிட்டுவதும் கைத்தாளமிடுவதும், கனைப்பதும், காதல் பாட்டுகள் பாடுவதும், கலகலவெனச் சிரிப்பதும், பணத்தை எடுத்து வீசுவதும் படாடோபம் செய்வதுமாக இருக்கிறார்கள். இத்தயை ஆண்டவன் பூஜைக்கு என்ற பெயரை வைத்து நடத்தப்படுகிற திருவிழாக்களிலே மக்களின் எண்ண மெல்லாம் ஆண்டவன் அறிவார் என்று சொல்கிறார்கள் பெரியோர்கள். தவன உற்சவத்துக்கு வந்தவர்களின் எண்ணத்தை ஆண்டவன் உள்ளபடி அறிந்திருப்பின், நான் சொல்கிறேன், ஒரு நிமிடம்கூட அங்கே இருக்க மாட்டார். எழுந்து ஓடிப்போய், கோயில் கதவைத் தாளிட்டுக் கொண்டு விடுவார். “உங்கள் முகத்திலேயே நான் விழிக்க மாட்டேன். என்னைச் சாக்காக வைத்துக் கொண்டு நீங்கள் கேளிக்கையாக இருக்கவும், காமச் சேட்டைகள் செய்யவும், ஆடம்பர ஆட்டம் ஆடிவருகிறீர்கள். நான் இதற்குத்தானா பயன்பட்டேன். நான் என்ன பித்துக் கொள்ளியா?” என்று கூறுவார். மாயை, மாயை என்று வேதாந்தம் பேசும் மக்கள் உள்ளபடி மாயை என்று உலகத்தையோ உலக சுகபோகத்தையோ கருதினால், ஊரில் இவ்வளவு திருவிழாக்கள் நடைபெறுகிறது. இத்தகைய காரணங்கள் பிறருக்கு வருவதை விட, எங்கள் குலத்தவருக்கே அதிகம் வரும். ஏனெனில், எங்கள் எதிரில்தான் இந்த ‘திருவிளையாடல்கள்’ அதிகமாக நடைபெறும். எங்கள் வீடு ஏறக்குறைய ஊரார் பூராவுக்கும் தெரியும். எனவே, எங்கள் எதிரில் அதிகமான கோணல் சேட்டைகளும், குறும்புப் பேச்சும் யாரும் பேசமாட்டார்கள். அதிலும் அக்காவிடம் ஜமீன்தார் வர ஆரம்பித்த பிறகு எங்களுக்குக் கௌரவம் அதிகம். இருந்தாலும் ஓரிரு துடிதுடிப்பான இளைஞர்கள் சாக்கிட்டுப் பேசுவார்கள். “ஏண்டா ரங்கா? எப்படி உருப்படி?” என்பான் ஒரு வாலிபன். “இந்த ரகங்களிலே எது வேண்டும் சுவாமிகாள்” என்பான் வேறொருவன். “உருப்படி சரியானதுதாண்டா! ஆனால் அது ஜமீன்தார் சாமான்” என்பான் மூன்றாமவன்.  எல்லோருமாகப் பிறகு சிரிப்பார்கள். நாங்கள் சுளித்த முகத்துடன் நிற்போம். காலாடிகள் ஏதேதோ பேசுகிறார்கள். என்று கூறுவோம். தவன உற்சவக் காட்சியை நாங்கள் அன்று களித்துக் கொண்டிருக்கையில், நான் முத்துவைப் பற்றி எண்ணிக் கொண்டு, அங்கும் இங்கும் பார்த்தபடி இருந்தேன். நான் எங்காவது வெளியே போனால், முத்து வருகிற வாடிக்கை யுண்டு. அன்று வெகுநேரம் மட்டும் வரவில்லை. ஏன் வர வில்லையென்று யோசித்துக் கொண்டே இருக்கையில் முத்து வரக்கண்டேன். அவனது முகம் ஜொலித்தது. ஆனால் அவன் பக்கத்திலே வந்த இளமங்கையின் வைரக்கம்மலின் ஒளி அதைவிட அதிகமாக ஜொலித்தது. அவன் வீட்டார் பலர் கூட இருந்தனர். ஆனால் அந்த இளமங்கையும் அவனுமே தனியாகப் பேசுவதும் சிரிப்பதுமாக வந்தார்கள். முத்துவுக்கு என்னைப் பார்க்கக்கூட நேரமில்லை. என் நினைவே இல்லை. நாங்கள் இருந்த பக்கமாக அவர்கள் நடந்து சென்றபோது அந்த மங்கை தற்செயலாக என்னைப் பார்த்தாள். உடனே திரும்பி முத்துவை நோக்கி ஏதோ கேட்டாள். “அவள் ஒரு தேவடியாள், டி.ஜி.” என்று முத்து பதில் சொல்லிக் கொண்டே வழி நடந்தான். நடன நாட்டியமாடு வதற்காக நிஜாரும் சதங்கையும் மாட்டிக் கொண்டிருந்தேன். அதைக்கண்டே அந்தப் பெண், நான் யார் என்று கேட்டிருக்க வேண்டும். அதற்கு முத்து, என் உயிரினும் இனியவன் என நான் எண்ணிய முத்து, அலட்சியமாக நான் ஓர் தாசி என்று அவளிடம் கூறினான். அவள் சிரித்தாள்.                                                      பகுதி - 8   “அக்கா, அந்த வைரக் கம்மல்காரியைப் பார்த்தாயா! என்று நான் கமலாவைக் கேட்டேன். அந்தச் சமயத்திலே எனக்கிருந்த கோபம் ஏதாவது பேசி, கவனத்தை வேறு பக்கம் திருப்பினாலன்றி, மிகப் பொல்லாததாகப் போகும் போலிருந்தது. ஆகவேதான் அக்காவிடம் பேசினேன்.” “பார்த்தேன்; அவளுக்குக் கிளி மூக்கு, மைக்கண்ணு, குறுங்கழுத்து, மகா தளுக்குக்காரியாக இருப்பாள்” என்று அக்கா சமுத்திரிகா லட்சணம் பற்றிப் பேச ஆரம்பித்தாள். நான் அந்தப் பெண்ணைப் பார்த்தேனே தவிர, அக்காவைப் போலப் பார்த்ததும் ‘போட்டோ’ பிடிப்பது போல் அவளுடைய அங்க இலட்சணங்களைக் கவனிக்கவில்லை. எனக்கோ மனம் தடுமாறிக் கிடந்தது. ஏன் இராது? தான் காதலித்த முத்து வேறோர் மங்கையுடன் உல்லாசமாகப் பேசிக் கொண்டு வரக் கண்டால் என் மனம் நிம்மதியாகவா இருக்கும்? என் தங்கச் சங்கிலி எப்படியோ வேறொருவளிடம் சிக்கி, அதனை அவள் அணிந்து கொண்டு என் எதிரிலே வந்தால், அவளுடைய கழுத்தின் அழகைக் கவனித்துக் கொண்டா இருப்பேன். சங்கிலியை வெடுக்கெனத்தானே கழற்றப் போவேன். நான் மட்டுமா? யாரும் அப்படித்தானே செய்வார்கள்? அதுபோல தான் எனக்கு இருந்தது முத்து அவளுடன் வந்தபோது. அந்த ஆத்திரம் எனக்கு வரக்காரணம் என் ஆசை. ஆசைக்குக் காரணம் அவன் காட்டிய ஜாடைகள். ஆசைகாட்டி மோசம் செய்வது அழகா?” “என்னடி விமலா யோசிக்கின்றாய்?” என்று கமலா கேட்டாள். “ஒன்றுமில்லை; அவள் தளுக்குக்காரிதான். நீ சொன்னது உண்மைதான்” என்று நான் கூறினேன். “ஆனால் அவனிடம் அவள் ஜம்பம் சாயாது. அவன் பலே பேர்வழி” என்றாள் கமலா. “வீட்டுக்குப் போகலாமா?” என்று நான் கூறினேன். எனக்கு அங்கு இருக்கப் பிடிக்கவில்லை. என் நிலையைத் தெரிந்து கொண்ட கமலா, “பைத்யக்காரப் பெண்ணே! இதற்காகவா ஆயாசப்படுவது? அவன் யாரோ, நீ யாரோ. உங்களுக்குள் என்ன சம்பந்தம் ஏற்பட்டு விட்டது. எதற்கு இவ்வளவு ஆத்திரம்? துணிக் கடைக்குச் சென்றால் கண்ணுக்குப் பிடித்தமான எல்லாச் சேலைகளையுமா வாங்குகிறோம். அதுபோல்தான் மனித வாழ்விலும் மனம் நாடுவதோ பல. கிடைப்பதோ ஏதோ ஒன்று. ஆனால் ஆடவருக்கு இருக்கும் வசதி பெண்ணினத்துக்குக் கிடைப்பதில்லை, கிடைக்காததால்தான் உலகத்திலே எவ்வளவோ மாறுதல்கள் ஏற்பட்டும் இன்னமும் குடும்பம் என்ற ஒரு முறை நிலைத்திருக்கிறது. பல மலர்களிடை சென்று தேன் மொண்டு உண்டு ரீங்காரம் செய்யும் வண்டுகள் போல் ஆடவர் உள்ளனர். மாதர்மலர்போல் உள்ளனர். காரிகைகள் கசங்கிய ரோஜா” என்று அக்கா கூறினாள். “ஆமாம்! உண்மைதான்! எனக்குத் தூக்கம் வருகிறது. வீடு போவோம் வா” என்று மறுபடியும் கூப்பிட்டேன். “தூக்கமா? துக்கமா?” என்று அக்கா கேட்டாள். நான் பதில் கூறாமலேயே, அக்காவின் கையைப் பிடித்து இழுத்தேன். கமலா சிரித்துக் கொண்டே புறப்பட்டாள். வீடு வந்த சேர்ந்தோம். தவன உற்சவம் யாராருக்கோ எதை எதையோ கொடுத்திருக்கும். நான் கண்டது தலைவலி தான். அன்று இரவு எனக்குத் தூக்கம் வரவில்லை. அந்த மங்கை யாரோ! அவளைத் தான் அவன் உண்மையில் காதலிக்கிறான் போலிருக்கிறது. அவர்கள் ஜாதிப்பெண்கள், கொஞ்சம் அழகாகவும் இருக்கிறாள், பணக்காரி. அவர்கள் மிக மகிழ்ச்சியுடன் பேசிக் கொண்டிருந்தனர். அவளிடம் என்னை ‘தாசி’ என்று அவன் கூறின பிறகு, அவன் எப்படி என்னை மணப்பான்? மணந்து கொள்ள மனமிருந்தால் இப்படியா கூறுவான்? என்றெல்லாம் எண்ணி ஏங்கினேன். காலையிலே காப்பி சாப்பிடும்போது, “கேட்டாயா விமலா. அவள் யாரோ டிப்டி கலெக்டரின் மகளாம். அவர்கள் ஜாதிப்பெண்ணாம். அவன்தான் கலியாணம் செய்து கொள்ளப் போகிறானாம். அவள் பத்தாம் வகுப்பிலே படிக்கிறாளாம். பந்து ஆடுவாளாம். பாட்டுக் கூட தெரியுமாம்” என்று சேதி கூறினாள் கமலா.  “நானும் அப்படித்தான் இருக்குமென்று எண்ணினேன். அக்கா அப்படிப்பட்டவளைக் கலியாணம் செய்து கொள்ள ஏற்பாடு நடக்கும்போது அவன், என்மீது ஏதோ அளவு கடந்த ஆசை இருப்பதாகவும், என்னைக் கலியாணம் செய்து கொள்வ தாகவும் கூறினான்” என்று நான் கேட்டேன். “போடி முட்டாளே! இதுகூட ஒரு ஆச்சரியமா! குழந்தை கள் அழுதால் உனக்கு என்ன வேண்டும், ஆனை வேண்டுமா, பூனை வேண்டுமா என்று கேட்டு எப்படியாவது அழுகையை நிறுத்துகிறது போல, அவன் உன்னைச் சம்மதிக்கச் செய்ய ஏதோ ஆசை வார்த்தை பேசினான். நீ ஏன் நம்புகிறாய்” என்று அக்கா கூறினாள். “ஆண்களுக்குப் இந்தச் சுபாவம் இருக்குமென நான் எண்ணவில்லை. அக்கா பெண்களிடம்தான் இது இருக்கும் என எண்ணினேன் என்று கூறினேன். “விமலா! இதோ இன்னமும் சொல்கிறேன் கேள். இன்று அம்மா கிராமத்துக்குச் செல்கிறார்கள். ஜமீன் தாரோ வெளியூர் போயிருக்கிறார். இன்று மாலை நான் அவனை இங்கே வரவழைக்கிறேன், பார்க்கிறாயா? அந்த வைரக் கம்மல்காரி வீட்டில்தானே இருக்கிறாள். அவளைப் பற்றியும், உன்னைப் பற்றியும் அவன் வாயாலேயே என்னென்ன சொல்லச் சொல்கிறேன் பார்” என்று அக்கா சபதம் கூறிவிட்டு மேலும் சொன்னாள். “ஆண்கள் எந்தப் பெண்ணை எந்த நேரத்தில் கண்டாலும் அந்த நேரத்திற்கு அவளைத்தான் மேனகை, திலோத்தமை, ரம்பை, ஊர்வசி என்று கொஞ்சுவார்கள். உன் மீது இருக்கிற பிரியம் எனக்கு யார்மீதும் இல்லை என்று உறுதி கூறுவார்கள். எப்படியாவது அந்த நேரத்திலே அவள் மனம் குளிர்ந்தால் போதும் என்றுதான் எண்ணுவார்கள். நான் என்ன அவளைவிட சிவப்பா? என்றுகேட்டால், சிவப்பு என்ன ஒரு அழகா, நீ கருப்பாக இருந்தாலும் உன் முகத்திலே இருக்கிற களை அந்தச் சிவப்புக்காரியிடம் கிடையாது என்பார்கள். அவள் எப்போதும் புன்சிரிப்பாக இருக்கிறாள், நான் அப்படியா இருக்கிறேன் என்று கேட்டால், சதா, சிரிப்பது ஒரு அழகா? பெண் சிரித்தால் போச்சு, புகையிலை விரித்தால் போச்சு. நீதான் சரி. இப்படித்தான் பெரிய மனித வீட்டுப்பெண்கள் இருக்க வேண்டும். முகத்திலே தேஜஸ் இல்லையா? பல்லைக் காட்டினால்தானா அழகு என்று பதில் சொல்வார்கள். நாம எந்தெந்த விதத்திலே குறுக்குக் கேள்விகள் போட்டாலும் எல்லாவற்றிற்கும் ஏதாவதொரு சமாதானம் சொல்லி நம்மை ஏய்ப்பார்கள். இது ஆண்களின் வேலைத்திறன்.” அக்கா கூறின உண்மையான மொழிகளை நான் பிறகு அனுபவத்தின் மூலம் பல தடவை கண்டேன். டாக்டரே! எத்தனை பேர், கிளியே, மணியே, கரும்பே என்றெல்லாம் என்னிடம் கொஞ்சினார்கள். கடைசியில் கைவிட்டார்கள். எத்தனையோ பேரை நானாக வீட்டுக்குப் போய் விட்டுத்தான் வாருங்களேன். வீட்டில் என்ன எண்ணுவார்கள் என்று சொல்லி அனுப்பியிருக்கிறேன். ஏறெடுத்துப் பார்க்கப் பிறகு பலர் மறுத்து விட்டார்கள். அன்று மாலை அக்கா சொன்ன பரீட்சை நடந்தது. நான் கமலாவின் படுக்கை அறையின் மறு அறையிலே ஒளிந்து கொண்டிருந்தேன். அக்காவின் ஏற்பாட்டின்படி, அக்கா ஆள் அனுப்பியோ மாடிக்குச் சென்று ஜாடை செய்தோ எப்படியோ முத்துவை, எங்கள் வீட்டிற்கு வரும்படி செய்து விட்டாள். படுக்கையறையிலே, அக்கா கட்டிலின்மீது சாய்ந்து கொண்டு எதிரிலே ஒரு நாற்காலியிலே முத்துவை அமரவைத்துக் கொண்டதாகப் பிறகு தெரியவந்தது. அவர்களின் சம்பா ஷணையை மட்டுமே நான் கேட்டேன் பக்கத்து அறையிலிருந்து. அதை அப்படியே கூறுகிறேன் கேளுங்கள்.  கமலா : ஏன் அப்படியே நின்று கொண்டிருக்கிறீர்களே. உட்காரலாமே. முத்து : என்ன அன்பு கமலா உனக்கு! எவ்வளவு சோபித மாகப் பேசுகிறாய்! என்ன சுந்தரமான முகம்.  கமலா : வெறும் முகஸ்துதி; பெண்களை, அழகி, இந்திராணி, மேனகை என்றெல்லாம் புகழ்ந்து, ஆண்கள் ஏய்ப்பதே வாடிக்கை. அது கிடக்கட்டும்; அன்று தவன உற்சவத்தன்று உம்முடன் வந்தாளே ஒரு பெண், பொம்மை மாதிரி, அவளை விடவா நான் அழகு? முத்து : சந்தேகமா அதற்கு? பூர்ண சந்திரனுக்கும் தேய்பிறைக்கும், வித்தியாசமில்லையா? கமலா : அவள் என்னைவிட இளையவள். முத்து : வயதில் மட்டுமல்ல. வடிவத்திலும். கமலா : என்னைவிட அவள் நல்ல சிவப்பு. முத்து : சாயம் பூசிக் கொண்டவள்போல். கமலா : நான் அழகா? என் தங்கை விமலா அழகா? முத்து : கமலா, வீணாக ஏன் பேச வேண்டும். நீயே அழகி. உன் தங்கையின் முகத்திலே அசடு கொட்டுமே. எனக்கு தெரியாதா என்ன? நான் பலமுறை பார்த்திருக்கிறேன். பித்துக் கொள்ளி போல முறைத்து முறைத்துப் பார்க்கும். கமலா : பார்ப்பது மட்டுந்தானா? முத்து : உன்னிடம் மறைப்பானேன். கண் அடிக்கும். சிரிக்கும், கடிதங்கூட எழுதி இருக்கிறாள். நீ வெளியே சொல்லி விடாதே. எனக்கு அவளிடம் பிரேமை கிடையாது. உன் மீதே எனக்குக் காதல்; இது நிச்சயம். கமலா : இதுதான் ஆண்பிள்ளையின் சுபாவம். எந்தெந்த நேரத்திலே எந்தெந்தப் பெண் எதிரிலே இருக்கிறாளோ, அவளே அழகி, அவளே ரூபவதி, அவளே ஒய்யாரி என்று கூறுவார்கள். ஏதாவது கூறி ஏய்ப்பதே அவர்களின் வேலை. முத்து : இது சாதாரணப் பழக்கந்தான். ஆனால் காதல் கொண்டவன் இப்படி நடக்கமாட்டான். கமலா : காதலும், சாதலும் அதெல்லாம் புத்தகத்தில், நாடகத்தில், சினிமாவில், உலகத்திலே கண்ணுக்கு ஏற்றதைக் கிடைத்தவன் கொள்ளை கொள்வதுதான், காதலாக இருக்கிறது. கமலாவின் முகத்தில் நீரோட்டம் இருக்கும் வரையில், கமலா விடம் காதல், பிறகு விமலா, பிறகு சாமலா. ஆண்கள் கதையே அதுதானே.  முத்து : எல்லா ஆண்களும் அப்படி அல்ல. கமலா : ஆமாம். எல்லாப் பாம்புகளும் ஒரே மாதிரியாக இருக்கிறதில்லையே. அதுபோல. சில தீண்டினதும் தீர்ந்தது. சில தீண்டினால் உடல் முழுதும் வீக்கம். ஆனாலும் எந்த பாம்பு நல்லது? எது விஷமில்லாதது? முத்து : நானும் ஓர் பாம்புதானா? கமலா : ஆமாம்! கண்ணாடி விரியன். தோல் பளபளப்பு. ஆனால் விஷப்பையோ ததும்புகிறது. ஆனால் எனக்குப் பாம்புக்கடி அவ்வளவு ஏறுவதில்லை. முத்து : நானா கண்ணாடி விரியன்? ஆஹா! கமலா! நீ எவ்வளவு வேடிக்கையாகப் பேசுகிறாய். நான் பாம்பானால் இந்நேரம் உன்னைத் தீண்டிவிட்டிருப்பேனே! கமலா : நான் கட்டிப் போட்டு விட்டேனே. முத்து : கட்டிவிட்டாயா? இல்லையே, உன் கைகள் என் உடலைத் தழுவவில்லையே. கமலா : என் ‘சக்தி’ உன்னைக் கட்டிப்போட்டு விட்டது. பிடாரன் ஊதுகுழல் கேட்டதும் புற்றிலிருக்கும் நாகம் படமெடுத்து ஆடுவதுபோல் ஆடுகிறாய்; மோகன ராகம், அதற்கேற்ற நர்த்தனம். இந்த நாக நர்த்தனத்தை விமலா கண்டால் எப்படி இருக்கும். முத்து : கமலா! நீ என்னை வலிய வம்புக்கு இழுக்காதே. நான் ஜமீன்தார்போல் உனக்கு சொர்ணாபிஷேகம் செய்ய முடியாது. ஆனால் என் அன்பை, இளமையை உனக்கு அபிஷேகிக்கிறேன். கமலா : நான் கல்லுச்சாமியல்லவே!  முத்து : என் கண்கண்ட தெய்வம் நீ! கமலா : பக்தன் கோரும் வரம் படுக்கையறைதானே! முத்து : கேலி செய்யாதே கமலா. கமலா : ஜாலம் ஏன் செய்கிறீர்? முத்து : காலம் வீணாகக் கழிகிறது. கமலா : அவசரப்படாதீர். முத்து : கர்ப்பக்கோடி காலமும் பொறுத்துக் கொண்டிருப் பேன். ஆனால் உன் கடைக்கண் மட்டும் சம்மதத்தைத் தெரிவிக் கட்டும். கமலா : முழுக் கண்ணும் கூறும் பொறுத்தால். முதுலிலே இரண்டு விஷயம் எனக்குத் தெரிய வேண்டும். நான் விமலாவைக் கலியாணம் செய்து கொள்ளும்படி உம்மை கேட்கப் போவதில்லை. நீர் யாரை வேண்டுமானாலும் கலியாணம் செய்து கொள்ளும். ஆனால்... முத்து : உன்னைத் தவிர வேறு ஒரு மாதையும் எண்ணக் கூடாது. அவ்வளவுதானே, நீட்டு கையை, சத்தியம் செய்கிறேன்.  கமலா: அது வேறு இடத்தில் செய்யுங்கள். இனி மேல் அந்தத் தாசி கமலா வீட்டுப் பக்கங்கூட போக மாட்டேன், இது சத்தியம், சிவன் ஆணை, என்று உமது மனைவியிடம் கூறும். எனக்கேன். சத்தியம். எத்தனையோ சத்திய சந்தர்களின் சாயம் வெளுக்கத்தானே, நாங்கள் இருக்கிறோம். முத்து : வேறு என்னதான் விஷயம்? கமலா : நான் வேண்டுமா? விமலா வேண்டுமா? இருவருமா? முத்து : விபரீதமான உலகம் அல்லவா? கேள்வி மட்டுந் தானா விபரீதம்? தாசிப் பெண்ணிடம் காதல் பேசுகிறீரே, இது விபரீதமாகத் தோன்றவில்லையா?  முத்து : கமலா, இனி நான் போக வேண்டியதுதான். கமலா : சலித்து விட்டதோ! முத்து : இல்லை. வீணாகப் பொழுது போக்க விருப்ப மில்லை. கமலா : நானும் காரணமின்றி அழைக்கவில்லை. கட்டிலறைக்குள் உம்மைச் சேர்க்கவில்லை. என் தங்கை உமது தளுக்கைக் கண்டு மயங்கினாள். அவளுக்கு விஷயம் தெரியவே இதனைச் செய்தேன். இதோ அவள் வருகிறாள். அவளிடம் உமது முகத்தைக் காட்டும்.” என்று கூறிவிட்டு, என் அக்கா, “விமலா, விமலா வாடியம்மா, வந்து உன் ‘நாதனை’ அழைத்துப் போடி” என்று என்னைக் கூவி அழைத்தாள். நான் சம்பாஷணையைக் கேட்டு மிக மிக மனம் பதறி, உடல் துடித்து, வியர்த்துப் போயிருந்தேன். அந்தச் சாகசக்காரனின் கழுத்தை நெரித்துவிடவும், புலிபோல அவன் மேல் பாய்ந்து உடலைக் கீறி, பிய்த்து உள்ளத்தை எடுத்துப் பரிசோதிக்க வேண்டும் என்றும் எனக்குத் தோன்றிற்று. ஆனால் நானோ பெண், தாசி. ஊரார் என் மீதுதானே வீண் அபவாதத்தைச் சுமத்துவார்கள். எனவே, கோபம் என்னை அழச் செய்தது. ஆங்காரம் இரந்து மட்டும் பயன் என்ன? அவன் ஓர் ஆண் மகன். உயர்குலம், நானோ விலைமகள். இருப்பினும் அவனது மனம் புண்ணாகி இரணமாகி விடும்படி அவனைப் பேசி ஏசி, காரித்துப்ப வேண்டுமென்று தோன்றிற்று. அறையை விட்டுக் கிளம்பினேன் ஆக்ரோஷத்துடன்.  அதே நேரத்தில், என் பின்புறமிருந்து ஒரு பலமான கை என் வாயைப் பொத்திவிட்டு என்னைத் தடை செய்து நிறுத்தி விட்டது. திடுக்கிட்டுத் திரும்பினேன். ஜமீன்தாரர் என்னை அங்ஙனம் தடுக்கக் கண்டு, மனம் பதறினேன். திடீரென நேரிட்ட இந்தப் பயங்கரப் பிரவேசம் என் நாக்கை அடக்கிவிட்டது. “கமலாம்பிகா! வெளியே வரலாம்” - என்று கர்ஜித்தார் ஜமீன்தார். “ஆ!” என்று கமலா அலறிக் கொண்டே அடைநெகிழ அறையை விட்டு வெளியே வந்தாள். அவள் பின்னோடு, மருண்ட பார்வையுடன் முத்துவும் வந்தான். ஜமீதாரருக்கு, முகம் சிவந்தது. கமலாவின் முகம் வெளுத்து விட்டது. முத்து நிற்குமிடத்திலேயே நாட்டிய மாடினான். எனக்கோ மயக்கம் வரும் போலிருந்தது. “துரோகி” என்ற கூச்சல் கேட்டது. ஜமீன்தாரின் கைகள் கமலாவின் ஜடையைப் பிடித்து இழுக்கவும், ஐயோ, அம்மா, அடடா நான் இல்லை என்று மாறி மாறிக் கூக்குரல் கிளம்பவும் கேட்டேன். சோகம், பயம், மயக்கம். என் கண்கள் சுழன்றன. அதைவிட வேகமாக என் மனம் சுழன்றது. நான் ஈனக் குரலில் அக்கா, அத்தான் என்று கூவினேன். மயங்கிக் கீழே வீழ்ந்தேன். மயக்கம் தெளிந்து எழுந்தேன். வீடு நிசப்தமாக இருந்தது. நான் கீழே சாயும்போது இருந்த அமளியின் அறிகுறி தென்படவில்லை. ஜமீன்தாரும் இல்லை. அக்காவையும் காணோம். முத்துவும் இல்லை. எனக்குத் திகில் பிடித்துக் கொண்டது. நான் கனவு கண்டுதான் மிரண்டேனோ என்று தோன்றிற்று. ஆனால் கனவல்ல, நிஜமாக நடந்த சம்பவமே என்பதை நிரூபிக்க, சுவரிலே இரத்தக் கறை;என் அழகிய அக்காவின் கூந்தலில் ஓர் முடி அந்த இரத்தத்துடன் ஒட்டிக் கொண்டிருந்தது. கமலாவின் தலையை ஜமீன்தார் சுவரிலே பிடித்து இடித்தாரோ என்னவோ; அந்தோ பாபமே! என் பொருட்டு என்ன கதி நேரிட்டது அக்காவுக்கு என்று எண்ணினேன். அக்காவின் அறைக்கு ஓடினேன். அக்கா, படுக்கையில் படுத்துக் கொண்டு விம்மிக் கொண்டிருந்தாள். “ஐயோ அக்கா, என்னால் உனக்கு இந்த அவதி வந்ததே” என்று கூறி, தலையைத் தூக்கி என் மடிமீத வைத்துக் கொண்டேன். அக்கா அலங்கோலமாக இருந்தாள். மண்டையிலே பலமான காயம். வாயிலிருந்தும் இரத்தம் ஒழுகி, அதன் கரை, அவளது அதரத்தைக் கப்பிக் கொண்டிருக்கக் கண்டேன். கன்னம் வீங்கியிருந்தது. ஜமீன்தாரரின் கைவிரல்கள் முத்திரை போல், அவளது கன்னத்தில் காணப்பட்டன. கை வளையல்கள் நொறுங்கி, உடலைக் கீறிக் கொண்டிருந்தன. அதனால் ஏற்பட்ட வடுக்கள் பல. சேலையின் ஓரம் கிழிந்து போய்த் தொங்கிக் கொண்டிருந்தது. அவளது இடுப்பருகே என் கைபட்ட போது, ‘ஆ! தொடாதே’ என்று கூவினாள். அங்கு அவர் உதைத்ததினால் உள்காயம். முகம் அழுது அழுது கோரமாகி விட்டிருந்தது. நான் இந்தக் காட்சியைக் கண்டு அழத் தொடங்கினேன். “அக்கா நமது வாழ்க்கை எவ்வளவு கேவலமாக இருக்கிறது” என்று கூறினேன். “விமலா, நான் எவ்வளவோ சமாதானம் சொன்னேன். அந்த முத்து ஜமீன்தாரின் கால் தன் முதுகில் பாய்ந்ததும் ஓடி விட்டான். இருந்து சமாதானம் கூறவில்லை. ஆனால், அந்த நேரத்தில் ஆண்டவன் நேரில் வந்து சாட்சி சொன்னாலும் அவர் நம்பியிருக்க மாட்டார். என்னை இவ்வளவு அலங்கோலமாக்கினார். இது மட்டுந்தானா விமலா? என் மண்டையில் பட்ட அடியோடு, ஜமீன்தாரின் கோபம் தீர்ந்து விடாது. நமது வாழ்க்கைக்கே இது பலமா அடியாகப் போகிறது. நினைத்தால்கூட நெஞ்சு பதறுகிறது. உங்களைத் தொலைத்து விட்டு மறுவேலை பார்க்கிறேன் என்று கூறிவிட்டுப் போனானே பாவி - அவன் இன்னமும் நம்மை என்னென்ன பாடுபடுத்துவானோ! என் உடல் அலங்கோலமானது போல், நமது குடும்பத்தையே அலங்கோலமாக்கி விடுவானே. அதை நினைத்தால் எனக்குப் பயம் அதிகரிக்கிறது. அவன் பேச்சுத் தானே இந்த ஊருக்குச் சட்டம். அவன் கீறும் கோட்டை யாரும் தாண்டமாட்டார்களே! அவனது கோபம் நம்மை அழித்து விடுமே. நமது கதி என்னாகுமோ?” - என்ற கூறி ஏங்கினாள். ஜமீன்தாரரின் அபிமானத்தைப் பெற்றதனாலேயே எங்களுக்குச் செல்வமும் சொல்வாக்கும் இருந்தது. ஊரார் எங்கள் குலத்திலேயே யாருக்கும் தராத மதிப்பு எங்களுக்குத் தந்தனர். பூ போன பிறகு நாரை யார் விரும்புவார்கள்? ஜமீன்தாரின் கோபத்துக்காளான எங்கள் குடும்பம் இனி எவருடைய ஏசலுக்கும் தாக்குதலுக்கும் இலக்காகிவிடும் என்பதுஎ னக்குத் தெரியும் கருமேகமற்ற வானத்திலேதானே சந்திரன் தன் முழுச் சோபிதத்தையும் காட்ட முடியும். பெருத்த விருட்சமானாலும் புயல் அடித்தால் பூமியில் வீழ்ந்து தானே போகும். அதுபோல்தானே எங்கள் கதியும். ஏழைகளின் உரிமை பற்றியும், எல்லோரும் சமம் என்பது பற்றியும் எத்தனையோ கதாப்பிரசங்கிகள் கூறக் கேட்டிருக்கிறேன். ஆனால் ஏழைகள் படும்பாட்டை கண்ணால் கண்டிருக்கிறேன். குசேலரின் குழந்தை குட்டிகளுக்குக் கண்ணன் உதவிய கதைப்படிக் கேட்டு, கதை படித்தவருக்கு, கற்கண்டு போட்டுக் காய்ச்சிய பால் கொடுத்துமிருக்கிறோம். ஆனால் பன்றி குட்டி போடுவது போல் இப்படிப் பிள்ளைகளைப் பெறுவானேன். தெருவில் அலைய விடுவானேன் என்று பலரும் சொல்லக் கேட்டுமிருக்கிறேன். நிலைகுலைந்தால், நிந்தனைக்கு ஆளாக வேண்டியே வரும். இந்த நியதி மாறவில்லை. இந்நிலையில் எங்கள் கதி என்ன? என்று எண்ண எண்ண பயமே மேலிட்டது.                            பகுதி - 9   எங்கள் குடும்பத்துக்குப் புது மெருகு கிடைத்தது. முலாம் பூசியவர் ஜமீன்தார். மேலும் மேலும் முலாம் பூசிக் கொண்டிருந்தால்தானே, பளபளப்பு இருக்கும்; பலரும் கண்டு போற்றுவர். முலாம் வெளுத்து விட்டால் என்னாகும். பித்தனையும் செம்பும், பேரீச்சம் பழத்துக்குத் தானே விற்கிறார்கள். அந்தக் கதியேதான் எங்களுக்கும் வரும். அதிகலும் எங்கள் நிலை, வெறும் ஏழைகள் நிலை மட்டுமா? இழித்துப் பேசும் உலகின் இம்சைக்கு இனி ஆளாகவேண்டுமே என்று எண்ணினேன். ஜமீன்தார் இனி எங்களை மேற்கொண்டு வாட்டாது விடுவதானாலும், உலகம் சும்மா இராதே. “சரியான ஆளப்பா ஜமீன்தார், இந்தக் கமலா, அவரைக் குல்லா’ போட ஏதேதோ செய்து பார்த்தாள் முடியவில்லை” என்று கேலி செய்பவர்கள் எத்தனை பேரோ. “பம்பரம் ஆடிக் கீழே விழுந்துவிட்டது” என்று பழிப்பவர் யாராரோ. “கமலா - ஆரஞ்சு விலை இப்போது மலிவுதாண்டா! ஜமீன்தார் இல்லையே இப்போது கிராக்கி ஏது?” என்று எவ்வளவு பேர் ஏளனம் செய்வார்களோ என்றெல்லாம் எண்ண வேண்டி இருந்தது. உலகிலே இது போல நடக்கிறதல்லவா? டாக்டரே! க்ஷயரோகக்காரரின் உடல் தானாகக் கரைவது போல் எங்கள் குடும்பச் செல்வமும் செல்வாக்கும் கரையலாயிற்று. சம்பவம் நடந்த மறுதினம் எங்கள் வீட்டு மாட்டுத் தொழு வத்தில் கன்றுகள் மட்டுமே இருந்தன. இரண்டு பசுமாடுகளும் இல்லை. கன்றின் குரல் கேட்டுப் பசு, ஜெமீன்தார் வீட்டுத் தொழுவத்திலிருந்து எப்படி வரும்? மாடு மேய்ப்பவனுக்கு ஜாடையாக விஷயம் கூறப்பட்டதும், அவன் மாடுகளைப் பண்ணைக்கு ஓட்டிக் கொண்டு போய்விட்டான். கன்றுகளைப் பிறகு நாங்களே அவிழ்த்து ஆள்வசம் அனுப்பி விட்டோம். பக்தரிடம் கொடுத்த பதக்கம் பூச்சுவேலை முடிந்ததாகச் சேதி வந்தது. ஆனால் பக்தர் பதக்கத்தை ‘ஐயா’விடம் அனுப்பி விட்டதாகக் கூறிவிட்டார். மளிகைக் கடைக்குச் சென்ற ஆளிடம், 600 சொச்ச ரூபாய் பழைய பாக்கி இருக்கிறது, அது பைசலான பிறகுதான் சாமான் தரமுடியும் என்று செட்டியார் சேதி சொல்லி அனுப்பினார். ஜவுளிக் கடையிலிருந்து பழைய பாக்கிக்கு நோட்டீஸ் வந்துவிட்டது. கிராமத்துக்குச் சென்றிருந்த எங்கள் தாயார் அறுத்துக் குவித்த நெல்லை அளந்து மூட்டைகள் கட்டி வண்டியில் ஏற்றி அனுப்பிவிட்டு, வீட்டுக்கு வந்து சேர்ந்தார்கள். நெல் மூட்டைகளை ஜமீன்தாரரின் வீட்டுக்கு வண்டிக்காரர் கொண்டு போய்ச் சேர்த்தார். எங்கள் வீட்டின்மீது வாரிசு இருப்பதாக வக்கீல் ஒரு நோட்டீஸ் பிறப்பித்து விட்டார். ஒரு தினமும் முடிவதற்குள் ஜமீன்தாரின் கோபம் எங்களைச் சூழ்ந்து கொண்டு விட்டது. தேள் கொட்டியது கால்விரலில் என்றாலும், உடல் முழுவதும் வலி எடுப்பது போல,ஜமீன்தார் கமலாமீது கோபித்துக் கொண்டது எங்கள் குடும்பத்தையே வாட்ட ஆரம்பித்தது. அம்மா, பூரா சேதியையும் கேள்விப்பட்டு, வாடினார்கள். வரலட்சுமியை வேண்டினார்கள். நவக்கிரக பூஜை செய்தார்கள். கோயில்களுக்கு விளக்கேற்றினார்கள். அக்காவின் ஜாதகத்தைப் பார்த்தார்கள். ஏழு மாதம் போதாது என்றாராம் ஜோதிடர். அதற்கு 70 ரூபாய்க்கு ஜாபிதா அனுப்பிவிட்டார். ஏழு மாதங் களுக்குப் பிறகு, கமலா ஒரு குழந்தைக்குத் தாயாவாள். அக்கா கர்ப்பம். ஆரம்பமே கலகத்தில் இருந்தது. அம்மா வேண்டிய தெய்வங்களுக்கு அக்காவின் கவலையைப் போக்க வேண்டிய வேலையா முக்கியம்! அம்மா அனுப்பிய தூது பலிக்கவில்லை. ஜமீன்தாரரின் கோபம் தீரவுமில்லை, குறையவுமில்லை, வளர்ந்தது. அதிலும் யாரோ ஒரு வக்கீல் ஐயர் அக்கா கர்ப்பமாக இருப்பதையும், குழந்தை பிறந்தால் கேஸ் போடுவார்கள் என்று கூறிவிட்டாராம். ஜமீன்தாரருக்கு இது அதிக கோபத்தை மூட்டிவிட்டது. கேசாடா போடப் போகிறார்கள்? கோர்ட் வாசலிலேயே கொலை நடக்கும் என்று கூறினாராம். இவ்வளவு அவதிகளைச் சகித்துக் கொண்டு இருந்தோம். இரவு படுக்கும்போது, விடிந்தால், உயிருடன் எழுந்திருப்போமா என்ற சந்தேகத்துடனேயே நாங்கள் படுப்பது வழக்கமாகி விட்டது. இரவில் திடீரென்று கற்கள் விழும். வீட்டு வாயிலிலே, காலிகள் கூடிக் கொண்டு கத்துவார்கள். “ஏ! கமலா, கதவைத் திறடி, நேற்றுத்தானே இருபது ரூபாய் கொடுத்தேன்” என்று வெறியன் எவனாவது கேட்பான். ஜமீன்தாரர் படுத்தியபாடு இவ்வளவு அவ்வளவல்ல. ஒவ்வொரு திருவிளையாடலும் அவருக்கு வேடிக்கையாக இருந்தது. எங்கள் வேதனையே அவருக்கு விருந்து. எங்கள் அழுகுரலே அவருக்குச் சங்கீதம் நாங்கள் பயந்து பதறியதே அவருக்குப் பரதநாட்டியம். சிறுத்தை, மானின் கண்கள் எவ்வளவு மனோஹரமாக இருக்கின்றன என்று எண்ணி, விட்டு விடுகிறதா? பஞ்சவர்ணக்கிளியுடன் பூனை கொஞ்சுகிறதா? அதுபோல, எங்கள் குடும்பம் கெடுவது பற்றி ஜமீன்தாரருக்கு கவலை ஏது? அவர்தான் எங்களுக்கு வைரியாகிவிட்டாரே. உயிர்வாழ உபயோகமாகும் தண்ணீர் உயிரையே குடித்துவிடுகிறது குளத்தில் விழுந்து இறக்கையில். வாழ அவசியமாக இருக்கிற நெருப்பே நமது உடலைப் பிறகு சாம்பலாக்குகிறது. அதுபோல எங்கள் குடும்பத்தை வளர்த்து, மெருகிட்டு வந்த ஜமீன்தாரரே, அதனைக் குலைக்க, கெடுக்க, அழிக்க முனைந்து விட்டார். யார் அவரைத் தடுக்க முடியும்? நளச்சக்கரவர்த்தி பட்ட கஷ்டத்தை விடவா? அரிச்சந்திரனுக்கு வந்த ஆபத்தைவிடவா? என்று புராணக் கதைகள் கூறி, எங்களுக்குச் சிலர் ஆறுதல் கூற வந்தார்கள். ஆறுதலோ மாறுதலோ கிடைக்கவில்லை. வெந்த புண்ணிலே வேல் நுழை வதுபோல் வேதனையாகவே இருந்தது. என்னென்ன புராணங்கள் கூறினார்கள்? எதற்கு எடுத்தாலும் ஒரு கட்டுக்கதை! எதற்கும் ஓர் ‘விதிவசம்’ என்ற பேச்சு. ஆண்டவன்மீது பாரத்தைப் போட்டு விடுவோம், அவனன்றி ஓர் அணுவும் அசையாது என்ற தத்துவம். இவைகளை எங்கள் அம்மா நம்பினார்கள். அக்காவுக்கு நாளாக நாளாக நம்பிக்கை தேய்ந்தது. எனக்கோ ஆரம்பத்திலேயே நம்பிக்கை கிடையாது. ஆண்டவனுக்குத் தெரியுமோ தெரியாதோ அக்காவின் துயரம்; நான் கண்ணால் பார்க்கிறேன். காரணமின்றி அவள் இக்கதிக்கு ஆளானாள். அவள் சார்பாகப் பேச உலகமே மறுத்து விட்டது. ஆண்டவன் என்ன செய்கிறார்? ஏன் விஷயத்தை ஜமீன்தாருக்கு விளக்கவில்லை என்று அவர் என் எதிரில் வந்தால் கேட்பேன். ஆனால் அவர்தான் எதிரில் வரமாட்டாரே. வந்தால் அல்லவா தெரியும்? எத்தனை எத்தனை கேள்விகளுக்கு அவர் பதில் கூற வேண்டும் தெரியுமோ? திக்கு முக்காடி திணறிப் போய் விடுவார். உலகிலே இவ்வளவு சூது சூழ்ச்சி, வஞ்சனை, வதைத்தல் நடக்கிறதே, பார்த்துக் கொண்டுதானே இருக்கிறார். ஏன்? ஊரிலே இரண்டு மூன்று களவு நடந்து கண்டுபிடிக்கா விட்டால், போலீசாரைத் திட்டுகிறார்களே, எவ்வளவு கொடுமைகள் நடக்கின்றன உலகிலே. அணுவை அசைப்பதை யும் தமது அருளின் சக்தியினால்தான் என்று அனைவரும் கூறும் ஆடம்பரப் பெருமையை அணிந்து கொண்டுள்ள ஆண்டவன், ஏன் இக்கொடுமைகள் நடக்கப் பார்த்துக் கொண்டிருக்கிறார். ஜமீன்தாரரின் மனதை ஆண்டவன்தான் இளக வைக்கவேண்டும் என்று அம்மா சதா சொல்லுகிறார்கள். அதற்காக, அகப்பட்டதைச் சுருட்டும் பேர்வழிகளுக்கு, அரையும் காலுமாக பணத்தையும் தருகிறார்கள். அக்காவின் அழகோ, இளமையோ அவளுடைய சல்லாபமோ ஜமீன்தாரரின் மனதை இளக வைக்க முடியவில்லையே. வேறு எது ஜமீன்தாரின் மனதை இளக வைக்கும்? இவ்வளவு தொல்லைகளுக்கும் காரணமான முத்து ஒன்று மறியாத உத்தமனாக, ஊரில் உலவுகிறான். கேட்கக் கூடாதா ஆண்டவன். நான் இப்படி ஏதாவது கூறினால், எங்கள் அம்மாவுக்குக் கோபம் மூண்டுவிடுகிறது. “வேண்டாமடி விமலா, வேளைக்கேற்ற மூளையாக இருக்கிறதே” என்று வேதனையுடன் கூறுகிறார்கள். ஏற்கெனவே நொந்து கிடக்கும் அம்மாவின் மனதை மேலும் நோகவைக்கக் கூடாது என்று எண்ணிக் கொண்டு, நான் என் மனதில் தோன்றியவைகளைக் கூறாமல் அடக்கிக் கொண்டேன். ஒரு தினம், அம்மாவே கூறினார்கள். எங்கள் ஊரிலே இஷ்டசித்தி விநாயகர் கோயில் பிரபலமானது. பலர், தங்கள் தங்களுக்குத் தேவையான வரம்பெற, அங்கு விளக்கேற்றுவார்கள். அர்ச்சனைகள் நடக்கும். பூஜை விசேஷம். இஷ்டசித்தி விநாயகர் யாராருக்குத் தந்த வரங்கள் என்னென்ன என்பது யாருக்குத் தெரியும்? இஷ்டசித்தி விநாயகர் கோயில் குருக்களுக்கு மட்டும் நல்ல வரும்படி! அது அனைவருக்கும் தெரியும். இஷ்டசித்தி விநாயகரின் அருள் மற்றவர்களுக்குக் தெரியும். இஷ்டசித்தி விநாயகரின் அருள் மற்றவர்களுக்குக் கிடைக்க வேண்டும்மென வக்கீலாக இருந்து வாதாடிய அந்த வயோதிகர் எனக்குத் தூது விடுத்தார் - 500 ரூபாய் தருவதாகச் சொன்னார். அவர் பெற்ற வரம் அது! அதே கோயிலுக்கு அம்மா, எங்கள் குடும்பக் கஷ்டம் தீர வேண்டும் என்பதற்காக விளக்கேற்றி வந்தார்கள். ஒவ்வொரு நாள் விளக்கேற்றும் போதும் “இஷ்டசித்தி விநாயகரே எங்கள் ஜமீன்தாரின் மனது இளகி, மறுபடியும் அவர் எனக்கு மருமகப் பிள்ளையாக வர வேண்டும். இந்த விஷயம் கைகூடினால் உமக்கு இருநூறு இளநீர் அபிஷேகம் செய்கிறேன்” என்று அம்மா வேண்டிக் கொள்வார்களாம். மற்றவர்களும் நடத்துவதைவிட அம்மா செய்யச் சொல்லும் அர்ச்சனையை, குருக்கள், சற்று அதிக அக்கறையுடன் செய்தாராம். ஆறு ஏழு இராகங்கள் கூட ஆலாபனம் செய்வாரா அர்ச்சனையின்போது. கடைசியில் விபூதிப் பிரசாதம் கொடுக்கும்போது தனியாகப் பரிமளம் கலந்த விபூதிப் பொட்டலம் எனக்குக் கொடுத்தனுப்புவார். நான் குட்டுக்கூரா பவுடர் பூசுபவள். எனவே பொட்டலங்கள் அம்மா விடமேதான் இருக்கும்! எந்த ஜமீன்தார், மீண்டும் எங்கள் வீட்டுக்கு வந்து சேர வரம் தரவேண்டுமென அம்மா, இஷ்டசித்தி விநாயகரை வேண்டிக் கொண்டு வந்தார்களோ, அதே ஜமீன்தாரர், தாசி வீட்டுக்குப் போகும் கெட்ட வழக்கத்தை விட்டு நல்வழிப்பட்டதற்காக, ஜமீன்தாரரின் மனைவி, வேலைக்காரியை, பிரதி தினமும் அனுப்பி, விநாயகர் கோயிலுக்கு விளக்கேற்றி வந்தார்கள். அம்மா அரையணாவுக்குத்தான் எண்ணெய் வாங்கிக் கொண்டு போவார்கள். ஜமீன்தாரிணி ஒரு அணா எண்ணெயை விளக்கேற்ற அனுப்புவது வழக்கமாம். வேலைக்காரி கோயிலுக்குக் கால்பாகமும் தன் குடும்பத்துக்கு முக்கால் பாகமுமாகப் பங்கிட்டு விநியோகித்து வந்தாள். இதே கோயிலுக்கு மண்டபத்தெரு மீனலோசனியும் விளக்கேற்றிக் கொண்டு வந்தாள். அவள் வேண்டிய வரம், ஜெமீன்தாரர், தன் வீடு வரவேண்டும் என்பதுதான். பூஜை நேரத்திலும் மற்ற நேரத்திலும் விநாயகர் கோயில் குருக்களுக்கோ, வயது முதிர்ந்து விடுகிறதே, விமலாவின் நேசம் இன்னமும் கிட்ட வில்லையே, இஷ்டசத்தி விநாயகரே இன்னமுமா சோதனை என்பதுதான் எண்ணம். இஷ்டசித்தி விநாயகர் எவ்வளவு தவித்திருப்பார்! பக்தர்களின் பூஜைகள் அவரை எவ்வளவு பரிதவிக்கச் செய்திருக்கும். பாவம்! இதையெல்லாம் எடுத்துச் சொன்னால் அம்மாவுக்குக் கோபம். அந்தக் குருக்கள் ஒரு நாள் எங்கள் வீட்டுக்கு வந்தார். அவரிடமே இதனைக் கூறினேன். அம்மாவும் இருந்தார்கள். அவர், வயிறு குலுங்க நகைத்துவிட்டு, “பலே! குட்டி கேட்கிற கேள்வி சரியான கேள்விதான்” என்று கூறிவிட்டு, “அவாளவாள் கர்மானுசாரம் கார்யாதிகள் சம்பவிக்கும். பூஜையும் புனஸ்காரமும், மனச்சாந்திக்குத்தான். முற்றுமுணர்ந்த ஞானிகளுக்கு, மனந்தான் கோயில், மூச்சுத்தான் மணியோசை” என்று கூறினார். “அது நிஜமானால் நீர் குருக்கள் வேலை செய்வது வீண்தானே” என்று நான் மடக்கினேன். “வீண் என்று சொல்ல முடியுமா? இதெல்லாம், பெரியவாள் செய்து வைத்த ஏற்பாடுதானே” என்று மறுபடி பழைய கதை பேசினார். அவரது பேச்சை விடப், பார்வை அவரது பித்தத்தை அதிகமாகக் காட்டிற்று. அவரது பார்வையில் அமோகமான பசி இருந்ததைக் கண்டு, நான் முதலில் பயந்தேன். பிறகு நம்பிக்கை கொண்டேன். என்னை இரையாகக் கொள்ள வந்த இவனைக் கொண்டே இஷ்டசித்தி விநாயகர் செய்ய வேண்டுமென அம்மா எதிர்பார்த்த காரியத்தைச் சாதித்துக் கொள்ள வேண்டுமெனத் தீரமானித்தேன். அந்த குருக்களின் பெயர் கணபதி சாஸ்திரிகள்! அந்த வயோதிகனை நான் ஏற்றுக் கொள்ளச் சம்மதித்தேன். இது எங்கள் குலத்திலே ஆச்சரியமான சம்பவமல்ல, ஏன்? பெண்கள் உலகத்திலேயே இது ஆச்சரியமானதல்ல. சர்வ சாதாரணம். மூன்றாம் தாரம் நான்காம் தாரமாகப் பச்சைக் பசுங்கிளி போன்ற பெண்களை, படுகிழவருக்கு மணம் செய்வித்ததை நான் பார்த்து இருக்கிறேன். நாடு ஏற்றுக் கொண்டுதான் இருக்கிறது. தேளையும் பாம்பையும் உலகம் ஒழித்தா விட்டது? அதுபோல் கொடிய வழக்கங்களையும் ஒழித்து விடத்தான் இல்லை. துஷ்ட ஜந்துக்களைக் கண்டால் கொல்வார்கள். துஷ்ட வழக்கங்களையோ இந்த நாட்டிலே துதிக்கிறார்கள். தத்துவம் கூறவோ தயார், தயார் என்று பலர் இருக்கின்றனர். மணப்பெண்ணின் கூந்தல் சுருண்டு வளைந்து இருக்கும் வசீகரம், அந்த வளைவுகள் வழியாக வெளிவந்து வீசும், மணமகளின் தேகம் சுருங்கிக் கிடக்கும். முகம் வீங்கிக் கிடக்கும். வயோதிகமும் விகாரமும் வாடை போல் வீசும். இருந்தாலும் அக்னி சாட்சியாக, அந்தணர் ஆசிகூற, அகலிகை அருந்ததி சாட்சியாகத் தாலிகட்டத் தயங்குபவர் யார்? நடக்கிறதோ உலகத்தில். நானாவிதமான விஷயங்கள் பற்றி நாள் தவறாது பேசும் நாக்குகள் வளைந்துபோய் விடுகின்றனவே. இதுபற்றி கண்டிக்கச் சொன்னால். பெண்கள் சமூகமே, ஆண் களின் விளையாட்டுச் சாலையாக இருக்கும்போது, காசுகொண்டு ஆசையை அளிக்கக் கடவுளால் உண்டாக்கப்பட்ட தாசிகள் கூட்டம், பெண்கள் பொதுவாக படும் பாட்டைவிட சற்று அதிகமாகப் படுவதிலே ஆச்சரியமில்லை. அதிலும், செல்வத்தை இழந்து ஜமீன்தாரின் சீற்றத்தால் சிதைந்து வரும் குடும்பத்தைச் சேர்ந்த நான், ஒரு வயோதிகனுக்கு விளையாட்டுக் கருவியாகச் சம்மதித்தது ஆச்சரியமாகுமா? கணபதி சாஸ்திரிகள், விநாயகரைக்கூட அவ்வளவு வாத் சல்யத்துடன் அர்ச்சித்திருக்க மாட்டார். என்னை அப்படி அர்ச்சிப்பார்! அவருக்கு என் இளமையும் அழகும் சோகத்தால் ஏற்பட்ட பிரத்தியேகமான சோபிதமும் அவ்வளவு மயக்கத்தை ஊட்டி விட்டது. இரண்டு மூன்று ஆண்களின் நடவடிக்கைகளை நான் கண்டுவிட்டேன் அல்லவா? முத்துவின் மோசடி, ஜமீன்தாரரின் சேட்டைகள், பாட்டு வாத்தியார் மகனின் பகல்வேடம் முதலிய வற்றை கண்ட நான் ஒரு தீர்மானத்துக்கு வந்தேன். இப்போதுள்ள முறைக்கு, அதைத் தவிர வேறு தீர்மானத்துக்கு அநேகமாக எந்தப் பெண்ணும் வரமாட்டாள் என்றே நான் இன்னமும் நினைக்கிறேன். ஆடவன் பெண்ணின் அழகில் சொக்கி விடுகிறான். அழகு என்பதற்கு ஒவ்வோர் ஆடவன் ஒவ்வொரு விதமான பொருள் கொள்கிறான். அதுமட்டுமல்ல, ஒரே ஆடவனுக்கு ஒரு சமயம் ஒன்று அழகாகத் தோன்றும், மறு சமயம் மற்றொன்று தோன்றும். அவனது மனம், பெண்ணின் அழகில் மயங்கிக் கிடக்கும்போது அவன் தங்கக் கம்பிதான். ஆனால் பெண்ணினால் அவன் அடைய வேண்டிய பலன்களை அடைந்து சலித் தாலோ அல்லது அவனது கண்களும் கருத்தும், வேறு மாதை நாடி விட்டாலோ, அவன் அந்த மாதின் இருதயத்துக்கோ ஈட்டி யாகத் தயங்குவதில்லை. நமது தங்கக்கம்பி இன்று ஏன் நமது மனதைத் துளைக்கும் ஈட்டியாகிவிட்டான் என்று அவள் எண்ணிப் பயனில்லை. ரோஜாவில் உள்ள தேனை உண்டு, மல்லிகைக்குச் செல்கிறது வண்டு. அதற்குத் தேவை ரோஜாவா, மல்லியா என்பதல்ல. மது, மது, அது எங்கெங்கு கிடைக்கிறதோ அங்கெல்லாம் வண்டு சென்றேதீரும். மாதர்கள் கூட்டத்தை ஆண் வண்டுகள் மலர்ச்சோலையாகவே மதிக்கின்றன. சில சோலையிலே காவலாளி இருப்பதுபோல் பெண்கள் கூட்டத்திலே ஒரு பகுதிக்குக் கட்டும், காவலும், ஆளும் அம்பும் இருக்கிறது. எங்கள் கூட்டமோ கட்டுக் காவல், வேலியற்ற தோட்டம்! இந்தச் சோலையிலே நானோர் புஷ்பம். கணபதி சாஸ்திரிகளைப் போன்ற வண்டுகள் வரட்டும். வண்டு தேன் மொண்டு உண்டு போவதை நான் அறிவேன். ஆனால் மதுவில் மயங்கிடச் செய்வேன். கணபதி சாஸ்திரியானாலென்ன, சுப்பிரமணியபிள்ளையானாலென்ன? யாரானாலும், எனக்கு உபயோகமாக வேண்டும்? இல்லையேல், விரட்டுவேன். என் இளமை இதழ், கண்டுவரும் வண்டை குற்றேவல் புரியச் செய்வேன். செய்தால் மது கிடைக்கும் என்பேன். செய்தானதும் அதனைச் செயலற்றதாக்குவேன். மற்றும் ஓர் வண்டு வரட்டும்! மாறிமாறி, மேலும் மேலும் விதவிதமான வண்டுகள் வரட்டும். வண்டுகளுக்கு வதையாவதற்குள், வண்டுகளை, மலர் வதைக்கட்டும். எந்த ஆடவனையும், என் காரியத்தை நடத்திக் கொள்ளக் கருவியாக்கியே தீருவேன். என் அழகுக்கு அவன் அடிமை! அவனை அடிமையாகவே நடத்துவேன். ஆம்! ஆண்கள் பெண்களின் பெருமையை மதித்து நடக்கும் காலம் வரும். நான் அக்காலத்தில் இருக்க மாட்டேன். நான் வாழும் இது இடைக்காலம் என்று நான் தீர்மானித்தேன் சஞ்சலம் வளர வளர இந்த என் உறுதியும் வளர்ந்தது. இந்த உறுதி வளர்ந்ததும், நான் ஆடவர்கள் தாமாக மயங்கி என்னை அணுகுவதற்கு முன்னமேயே, அவர்களை மயக்கவைக்க வேண்டிய முறைகளைக் கையாள வேண்டும் என்றும் தீர்மானித்தேன். அக்கா சோகத்தில் ஆழ்ந்தாள். உலகை வெறுத்தாள். என் சோகம் எனக்கோர் புதியசக்தியாக மாறிற்று. நான் சாகசக்காரியானேன். டாக்டரே! அந்தக் காலத்தில் நீர் என்னைக் கண்டதில்லை. கண்டிருந்தால், என் கண் ஒளி உமது இருதயத்தைப் பிளந்து விட்டிருக்கும். என் கழுத்தின் அசைவு உமது வீணையாக வந்திருக்கும். மேனியை மினுக்க நான் விதவிதமான முறைகளைச் செய்து கொண்டேன். வறுமை எங்களைத் தொடலாயிற்று. ஜமீன்தாரரின் கோபம் எங்களை சூழ்ந்து கொண்டு கொக்கரித்தது. அக்காவின் பெருமூச்சு அதிகரித்தது. அம்மாவின் ‘பக்தி’ பண கஷ்டத்தையும் வீண் சிரமத்தையும் வளர்த்தது. ஆனால் நானோ! உலகை நோக்கிச் சிரித்தேன்! உன்னை ஒரு கை பார்க்கிறேன் என்று கூறினேன். ஜமீன்தாரரின் சீற்றத்தைப் பற்றி அலட்சியமாகப் பேசினேன். விறைத்து நோக்கும் வாலிபர்களை நேருக்கு நேர் பார்க்க ஆரம்பித்தேன். தடுமாற்றமடையும் பேர்வழிகளைக் கண்டு கேலி செய்தேன். நான் ஓர் புதுப் பெண்ணானேன். வலைவீசும் வனிதையானேன். வலைவீசும் முன்பே வந்தவர் கணபதி சாஸ்திரிகள். அந்த வயோதிகருக்கு வலை ஏன்? இந்நிலையில் எங்கள் கதி என்ன? என்று எண்ண எண்ண பயமே மேலிட்டது.                                              பகுதி - 10   “சுக்லாம்பரதரம்” என்று நான் பழி தீர்க்கும் படலத்தைத் துவக்கினேன். கணபதி சாஸ்திரிகள் என் கருவியானார். அவருக்கு இஷ்டசித்தி விநாயகர் பணம் தந்தார்! கணபதி சாஸ்திரி, என்னிடம் கொண்ட பிரேமைக்கு அளவு கிடையாது. நான் அவரைப்பற்றி அவ்வப்போது காட்டிய அலட்சியங் களுக்கும் அளவு கிடையாது. அவர் வீட்டுக்கு வரும் வேகத்தில் நான் வெளியே புறப் படுவேன். குறுக்கே அவர் பேசக்கூடாது. கூடவும் வரக்கூடாது. நான் திரும்பிவரும் வரையில் கணபதி சாஸ்திரி காத்துக் கொண்டுதான் இருக்க வேண்டும். அப்படித்தான் இருப்பார். வர வில்லையே, வரவில்லையே என்று அந்த வயோதிகர் காத்துக் கொண்டிருக்கக் காணும் நான், “படு! படு! ஆண் உலகமே படு! எத்தனையோ பெண்களை எவ்வளவோ ஆண்கள் மனம்நோகச் செய்கிறார்கள் அல்லவா? எத்தனை குடும்பத்திலே குத்து, வெட்டு, உதை, கோணற்கூத்துக்கள், ஆண்களால் நடக்கின்றன. எவ்வளவு குடும்பங்களிலே ஆடவன், பெண்ணை அடிமையாகக் கொண்டு ஆட்டிப் படைக்கிறான். அடுப்பூதும் பெண்ணுக்குப் படிப்பு ஏன்? என்கிறான். கல்லானாலும் கணவன், புல்லானாலும் புருஷன் என்று போதித்துவிட்டு கல்லைவிடக் கடினமான மனதுடன் பெண்ணை நடத்துகிறான். அவர்களை அப்பாடு படுத்தும் ஆண்கள் கூட்டத்தைச் சேர்ந்த சாஸ்திரிகளே, தெரிகிறதா பழி தீர்க்கும்போது, படு!” என்று நான் மனதிற்குள் கூறிக் கொள்வேன். டாக்டரே, இப்படியும் நான் இருந்திருப்பேனா, இருதயமே கிடையாதா என்று யோசிப்பீர். உம்மைப் போலவே பலரும் யோசிப்பார்கள். ஆம்! நான் பனப்பேயானேன். பேய் பயங்கர ரூபம் என்று கூறுவார்கள். அதுவல்ல நான். பிரேமையை ஊட்டி ஆணை அடக்கி ஆட்டிப் படைக்கும் அழகுள்ள பேயானேன். என் முதல் பலி கணபதி! இரண்டொரு மாதங்களில் கணபதி சாஸ்திரிகள் என் ஏவலாளியானான். துப்பாக்கிக்குத் தோட்டா இல்லையானால் தூரத்தானே எறிவார்கள்? கணபதி சாஸ்திரிகளிடமும் காசு இல்லை. எனவே நான் கடுகடுத்தேன், சாஸ்திரிகள் கெஞ்சினார். “நான் கையில் பணமில்லாது கலவி செய்ய வந்தீரோ, கடனானால் எழுந்து போம் சாமி!” என்றேன். கணபதி சாஸ்திரிகள் அவ்வளவு எளிதிலே போவாரா? வேலை கொடுத்தால் தானே போவார் வெளியே. அந்தச் சமயத்தில்தான் அவருக்குச் சரியான வேலை கொடுத்தேன். ஜமீன்தாரரை சரிப்படுத்தவாவது வேண்டும் அல்லது அவருக்குத் தொல்லையாவது கொடுக்க வேண்டும். அதற்கோர் வழி சொல்லு என்றேன். இஷ்டசித்தி விநாயக பூஜையில் கைதேர்ந்த கணபதி சாஸ்திரிகள் ஓர் யுக்தி சொன்னார். ஜமீன்தாரரின் மகளுக்குக் கலியாணம் நிச்சயமாகி வருவதாகவும், மிகப் பெரிய இடமென்றும், ஒரே பிள்ளை என்றும், அந்த இடத்துச் சம்பந்தத்திற்காக ஜமீன்தார் வெகு பாடுபட்டு வருகிறார் என்றும், இந்த நேரத்தில் கமலாவை விட்டு ஜமீன்தார் மீது கேஸ் தொடுப்பதாக வக்கீல் நோட்டீசு கொடுத்து விட்டால், ஜமீன்தார் பெட்டியிலிட்ட பாம்பு போல் அடங்கிவிடுவார் என்றும் சாஸ்திரிகள் கூறினார். நான் சந்தோஷத்தால் துள்ளினேன். சாஸ்திரிகள் சொன்னபடி கேஸ் போட்டு மிரட்ட வேண்டுமென்றல்ல. ஜமீன்தாரர் தேடிப்பிடிக்கும் ஆசை மருகமனை என் அடிமை யாக்கி, ஜமின்தாரரின் கொட்டத்தை அடக்க வேண்டும் என்று தீர்மானித்தே நான் துள்ளினேன். சாகசம் என்னிடம் இருக்கும் போது, இது சாயாது போகுமா? மேலும் எடுத்த காரியம் விக்கின மாகாதிருக்க, இதோ கணபதி சாஸ்திரி கைவசம் இருக்கிறார். பார்ப்போம் ஒரு கை என்று தீர்மானித்து, எந்த விதத்தில் இதைச் செய்வது என்று யோசித்தேன். இரவு பகல் இதே சிந்தனைதான். நாட்கள் ஆக ஆக மனம் பதற ஆரம்பித்தது. ஜாதகப் பொருத்தம் சரியாக இருப்பதாக கணபதி சாஸ்திரிகள் சேதி கொண்டு வந்தார். இஷ்டசித்தி விநாயகருக்கு இலட்சார்ச்சனை செய்து விட்டார்களாம். இருபதாயிரம் ரூபாய் செலவில் பெண்ணுக்கு நகைகளாம், மாப்பிள்ளையின் குணாதிசயமோ மகாப் பிரமாதமாம் நல்ல படிப்பாம், சத்சகவாசமாம். வீண் ஜோலிக்குப் போகாதவராம், வீட்டுக்கு அடங்கிய பிள்ளையாம். இவ்வளவும் கணபதி சாஸ்திரிகள் கண்டறிந்து கூறிய சேதிகளே. இவைகளைக் கேட்கக் கேட்க, நான் கொண்ட உறுதி தளரவில்லை. இப்படிப்பட்டவனைத்தான் எனக்கு இரையாக்கிக் காட்ட வேண்டும். இத்தகைய மருமகனை அடையப் போகிறோம் என்று எண்ணும் ஜமீன்தாரரின் மனதில் மண் போட வேண்டும். என் அக்காவின் அழகை விரும்பி, பின்னர் வீண் சந்தேகத்தால் வெறுத்து, எங்களுக்குத் தொல்லை கொடுத்த ஜமீன்தாரர், என் அழகு, அவரது குடும்பத்தின் குதூகலத்தைக் கொலை செய்தது என்று அறிய வேண்டும். அப்போதுதான் பழி தீர்க்கும் வேலை முடிந்ததாக ஆகும் என்று எண்ணினேன். ஜமீன்தாரரின் மகள் ஜெயலட்சுமியை எனக்கு நன்றாகத் தெரியும். அவள் மட்டும் ஜெமீன்தாரர் வீட்டில் பிறக்காது, சாதாரணக் குடும்பத்திலே பிறந்திருந்தால், ஆயிரம் ‘சொட்டு’ சொல்வார்கள். நான் பொறாமையினால் கூறவில்லை. அவளுக்கு மூக்கு சப்பை, கண்கள் சிறிது, நெற்றி மூன்று விரற் கடைகூட இராது, கழுத்தோ குறுகல், நிறமோ அவிந்த நெருப்பு, படிப்போ சூனியம், பாட்டோ கேட்கவேண்டியதில்லை. குணமோ பொல்லாதது. பணம் இருக்கிறது பெட்டியிலும் பேழையிலும். அவன் பணத்தையா மணம் செய்து கொள்ளப் போகிறான்! இவளைக் கண்டால் என்ன எண்ணுவான்! நான் மட்டும் அவனை முதலில் சந்தித்துப் பேசி கொஞ்சம் பழகச் சந்தர்ப்பம் கிடைத்து விட்டால், பிறகு ஆசாமி, நான் ஆட்டி வைக்கிறபடி ஆடித்தானே தீர வேண்டும். அழகு அபின் போன்றதுதானே, ஆனால் நான் அவனைச் சந்தித்துப் பழக வேண்டுமே. இதற்குக் கணபதி சாஸ்திரியின் ஒத்தாசை இல்லாது முடியாது. அதிலும் நான் செய்ய எண்ணிய தந்திரத்துக்கு சாஸ்திரி இலேசில் ஒப்புக்கொள்ள மாட்டான். எனவே, என் யோசனை பூர்த்தியானதும், கணபதி சாஸ்திரியை வரங்கேட்டேன். அவன் கொடுத்தேன்! கொடுத்தேன்!! என்று ஆனந்தமாகக் கூறினான்; என்ன வரம் என்றுகூடக் கேட்கவில்லை. என்ன வரம் என்று கேட்டால் நான் கோபித்துக் கொள்வேன் என்பது சாஸ்திரியின் பயம். சாஸ்திரிகளிடம் என் யோசனையைப் கூறினேன். முதலிலே சாஸ்திரிக்கு அருவருப்பாக இருந்தது. பிறகு கோபம் வந்தது. மறுபடி பயம் புறப்பட்டது. பின்னர் சந்தேகம் கிளம்பிற்று. ஒவ்வொன்றையும் நான் ஓட்டினேன். பிறகு சாஸ்திரி ‘ததாஸ்த்து’ கூறினான். மறுதினம் என் ஏற்பாட்டின்படி, சாஸ்திரி, ஜமீன்தாரர் வீடு சென்று, நான் சொன்னபடி காரியத்தைச் சாதித்துக் கொண்டு, என் வீடு வந்தார். உள்ளே நுழையும் போதே, ‘காயா? பழமா?’ என்று நான் கேட்டேன். சாஸ்திரி பூனூலை உருவினார். உடனே ‘பழம்’ என்று தெரிந்து கொண்டு “இஷ்டசித்தி விநாயகர் அங்கே கோயிலில் இருப்பதாகக் கூறுகிறார்களே, விஷயம் தெரியா தவர்கள். இதோ இருக்கிறீரே” என்று கூறிச் சாஸ்திரிகளைக் களிக்கச் செய்தேன். பரிமளப் பாக்குத் தூளும், ‘ரவேச’ வெற்றிலையும் நைவேத்யமாக வைத்து, விசிறி கொண்டு வீசியபடி, வேதியரைச் சேதி விசாரித்தேன். ஆனந்தத்தைச் சற்று நேரம் அனுபவித்து விட்டுப் பிறகே கூற முடியும் என்றார் சாஸ்திரி. ஆகவே வெற்றிலை பாக்குப் போட்டுக் கொள்ளட்டும் என்று விட்டு விட்டேன். பிறகு கேட்டேன். “முதலிலே நானொன்று கேட்கிறேன் விமலா, உனக்காக நான் இவ்வளவு சிரமப்பட்டுக் காரியத்தைச் சாதிக்கிறேனே, நீ கடைசியில் என்னை நடுத்தெருவிலே விட்டுவிட்டு, புது வெள்ளம் வந்து பழைய வெள்ளத்தை அடித்துக் கொண்டு போய் விட்ட கதை போல், அந்தப் பயல் பின்னோடே போயிட்டா, என் கதி என்னாகும். அதை முதலிலே சொல்லு” என்றார் சாஸ்திரிகள். உள்ளபடி நல்ல கேள்விதான். நான் வேறொரு ஆளைப் பிடிக்க, இந்த ஆளையே வேட்டைக்காரனாக்கினேன். புது ஆள் கிடைத்ததும் தன் கதி என்னாகுமோ என்ற கவலை சாஸ்திரிக்கு இருக்குமல்லவா? பில்வமங்களைச் சிந்தாமணிக்கு அறிமுகப் படுத்திவிட்ட நண்பன், சிந்தாமணியும் பில்வமங்களும் சிருங்கார சாஸ்திர ஆராய்ச்சி செய்யும் போவோம் என்றுரைத்து விட்டு, சிங்காரத் தோட்டம் சென்றபோது, சிந்தாமணி! ஆ சிந்தாமணி! காதகி சிந்தாமணி! என்று நண்பன் கதறிய கதைபோல் முடியுமோ என்று சாஸ்திரிகளுக்குச் சஞ்சலம் வந்தது. ஆனால் நான் சிந்தாமணியா? நானோ சீறும் நாகம். இந்த சாஸ்திரிகளைக் கடித்தேன். விஷம் மண்டைக்கு ஏறிவிட்டது. இனிப் புது ஆளைக் கடிப்பேன். இதில் என்ன பொறாமை! சாஸ்திரிகளின் சஞ்சலம், நான் சிரித்துக் கொண்டே தந்த சூடான காப்பியினால் தீர்ந்து விட்டது. சாஸ்திரிகள் சமதர்மத்தைக் கூறித் தொடங்கினார். இஷ்டசித்தி விநாயக பூஜையால் கஷ்டமின்றி வருமானம் பெற்று வாழும் கணபதி சாஸ்திரி, தாம் போய்க் கண்ட வெற்றி பற்றிக் கூறலானார். கேளும் பெண்ணே விமலா! சென்றேன் - கண்டேன் - வென்றேன் - என்று மூன்று வார்த்தைகளில் முடித்து விடட்டுமா அல்லது விரிவாகக் கூறட்டுமா சேதியை; விரிவாகவா? சரி! இலட்சார்ச்சனை நடத்துகிறேன் கேள். முதலிலே நீ சொன்ன யோசனை என்னைத் தூக்கி வாரிப் போட்டது. ஜமீன்தாரர் காரியத்திலே குறுக்கிடுவது என்றாலே மகா ஆபத்து. அதிலும் கலியாணம் காரியத்திலே குறுக்கிடுவது பிரமாதமான ஆபத்து. மேலும் நீயோ, மாப்பிள்ளை வீட்டுக்கே போக வேண்டும், மாப்பிள்ளையையே வசப்படுத்திவிட்டுக் கலியாணத்தைத் தடுத்துவிட வேண்டும் என்று கூறினாய். இது தலைபோகும் காரியமாக முடியுமே என்று தத்தளித்தேன். கடைசியல் தலை போனாலும், தங்கமே! உன் சேவையிலே போகட்டும். இது எப்போதும் போகப்போகிற தலையே தவிர, சாஸ்வதமா? என்று எண்ணி வேதாந்தியானேன். ஜமீன்தாரரிடம் சென்று வில்வம் விபூதி கொடுத்து விட்டு நின்றேன். இந்தக் காலம்தான் தலைகீழாக இருக்கிறதே! இந்த ஜமீன்தாரர் அப்பா காலத்திலே, அக்ரகாரத்துக்குள் நுழைவ தென்றாலே அடக்க ஒடுக்கமாக நுழைவார். பிராமணனைக் கண்டால் பயபக்தியாக நடப்பார். அவாளை உட்காரச் சொல்லிவிட்டு நிற்பார். அவாளே பிறகு, ஜமீன்தார்வாள் உட்காரணும் உட்காரணும் என்று சொல்வார். பிறகு உட்கார்ந்து உபரிப்பா. அந்தக் காலம் மலையேறிப் போயிட்டு தேன்னோ, இந்த ஜமீன்தாரிடம் நான் விபூதி தந்தேன். வாங்கிப் பக்கத்திலே வைச்சுண்டு, வைக்கப்போர் விஷயத்தைப் பற்றிச் பேச ஆரம்பித்தார். வேலன் பேசி, முருகன் பேசி, முத்தன் பேசி ஆனபிறகு, என்னாய்யா குருக்கள் க்ஷேமந்தானா? எப்படி இருக்கு உங்க போக்கு வரத்து என்று ஆரம்பித்தார். நின்றபடி பதில் சொன்னேன். ‘உட்காருமே சூத்ராள் இருக்கிற இடத்திலே உட்காரப் படாதோ’ என்றார். என்ன ஜமீன்தார்வாள் ஏதேதோ சொல்றேள். நமக்குள் இம்மாதிரி பிராமணா - சூத்ரா என்ற பேதம் இந்தக் காலத்துக்கு ஏது? என்றேன். அவர் சிரித்துவிட்டு, நடக்காது! என்றார். ‘ஆமாம்’ என்றேன். “சரி வந்த சேதி சொல் லுங்கோ” என்றார். ஆரம்பமே சுப சூசகமாக இல்லையே. நாம் சொன்னால் நம்புவானோ மாட்டானோ என்று சமசயமாகத்தான் இருந்தது. பார்ப்போம் என்று ஆரம்பித்தேன். பாடத்தை ஒப்பித்தேன் - “கலியாண விஷயமா ஒரு யோசனை. நேற்று இஷ்டசித்தி விநாயகர் சொப்பனத்திலே பிரசன்னமாகி, பிரசாதம் அருளி, “இந்தக் கலியாணத்துக்கு முந்தி சுமங்கலி மூலியமாக மாப்பிள்ளை வசம் சேர்ப்பிக்கணும். மாப்பிள்ளைக்கு மனம் மருளும்படி ஏதோ சேதி போயிருக்கு. அது மாறணும், மங்களகரமாகத் திருமணம் முடியுணும்னா இதைச் செய்யுங்கோ என்று சொல்லி மறைந்தார்” என்றேன். ஜமீன்தாரர் சிரத்து விட்டு, “குருக்கள் சொப்பனத்திலா விநாயகர் வருகிறார்; விமலா வருகிறதாக் கேள்விப்பட்டேன்” என்றார். எப்படியோ விஷயம் அவர் காதுக்கு எட்டிவிட்டது. மறுத்துப் பேசினால் பயனில்லை. ஆகவே மழுப்பலாக, “ஏதோ கர்மசேஷம்! ஆனால் அது நீங்கி ரொம்ப காலமாயிடுத்து. இப்போ போக்குவரத்தே கிடையாது. அவா, சரியான மனுஷாளாக இருந்தா, தாங்கள் அவாளைக் கைவிடுவேளோ” என்றேன். ஆசாமி ஏமாந்தான். “சரி! அது கிடக்கு சனி. மாப்பிள்ளை வீட்டுக்கு நம் வீட்டுப் பெண்டுகள் யாரும் இப்ப போகக் கூடாது. மேலும் நாமாகவே போனலும் ‘பிகுவு’ கெட்டுவிடுமே. இதற்கென்ன செய்வது” என்றார். “நானும் என் ஆத்துக்காரியும் போயிட்டு வாரோம். தங்களுக்காக இதுகூடச் செய்யாது போவேனா” என்றேன். “சரி! செய்யுங்கோ. எனக்கு இந்தச் சொப்பனத்திலே சாமி வந்தது, பிரசாதம் கொடுத்தது என்பதிலே நம்பிக்கை கிடையாது. வீட்டிலே பெண்கள் காதிலே விழுந்தா நம்புவா. அதற்காகவே உம்மைப் போகச் சொல்கிறேன். அப்படியே, அங்கே எவனாவது, இந்தக் கமலா விஷயமாக வம்பளப்பான். அதெல்லாம் அறுந்துவிட்டது. அந்தக் கழுதைகள் முகாலோபனம் கூடச் செய்வதில்லை ஜமீன் தாரர் என்று சொல்லும்” என்றார் ஜமீன்தாரர். பழம் நழுவிப் பாலில் விழுந்ததா! “இதுபோல் நானும் என் ஆத்துக்காரியும் வருவதாக ஒரு கடிதம் தபாலிலும், ஒரு கடிதம் கையிலும் கொடுக்கணும். அப்பதானே அவாளும் நம்புவா” என்றேன். கடிதம் கொடுத்தார். தபாலில் ஒன்று போட்டார். பார் கடிதத்தைப் படித்து” - என்று சாஸ்திரிகள் கூறி, ஜமீன்தாரர் எழுதிய கடிதத்தைக் கொடுத்தார். அது வருமாறு:- ராஜ பரம்பரை ராதாபுரம் ஜமீன்தார் பகதூர் பாரிஜாத பூபதி அவர்கள் திவ்ய சமூகத்திற்கு, அகிலாண்ட கோடி பிரம்மாண்ட நாயகன் அருளின் படி இங்கு நாமும் குடும்பமும் குடிபடைகளும் ஷேமம். தங்கள் ராஜ்யாதி காரியங்கள் சுபமாக நடந்து வருகின்றதென்று நம்புகிறேன். தங்கள் திருக்குமாரருக்கு நமது திருக்குமாரத்தியைத் திருமணம் முடிக்கும் விஷயம் தெய்வ சம்மதம் பெற்றிருப்பதைத் தெரிவித்துக் கொள்ளுகிறேன். இப்பவும் இந்நகர் சித்திவிநாயகர் கோயில் குருக்களாம் ஸ்ரீ கணபதி சாஸ்திரிகள், மகா வேதக்கியானி அருள் பெற்றவர். அவருடைய சொப்பனத்தில் இஷ்டசித்தி விநாயகர் எழுந் தருளிப் பிரசாதம் அருளி, திருக்குமார இளையபூபதி வசம் சேர்ப்பிக்குமாறு கட்டளையிட்டுச் சென்றார். அவரும் அவரது சகதர்மிணியுமாக தங்கள் ராஜ்யத்துக்கு வருகிறார்கள். தனிக்கிரகம் அருளி உபசாரம் செய்வித்து இஷ்டசித்தியார் பிரசாதத்தை இளையபூபதி பெற்றுப் பூஜிதமாதவராக ஏற்பாடு செய்யும்படி கேட்டுக் கொள்கிறேன், சுபம். இங்ஙனம் இளைய பூபதிக்கு மாமனாராம் ஜமீன்தாரரும் தமது சமபந்தியுமான ஜமீன்தார். கடிதத்தைப் படித்துவிட்டு சிரித்தேன், சிரித்தேன், அடக்கவில்லை. எவ்வளவு முட்டாள்தனம்! ஏதோ காலம் வீதாச்சாரம் மாறுவதால் கொஞ்சம் பிராமணரிடம் முன்போல் பதுங்கிக் கிடக்கும் பழக்கம் சற்று மாறிற்றே தவிர, மற்ற மூடத்தனம் அப்படியேதானே இருக்கிறது. சொப்பனத்திலே விநாயகர் வந்தார் என்ற உடனே எவ்வளவு சுலபத்திலே நம்பிவிடுகிறார்கள். இதனை ஒரு சாஸ்திரி சொன்னதும் சரி என்று நம்பி விட்டாரே இந்த ஜமீன்தார் என்று எண்ணிச் சிரித்தேன். “எப்படி என்னுடைய சமர்த்து?” என்று கணபதி சாஸ்திரி கேட்டார். “உங்கள் சமர்த்துப் பெரிது என்றோ பிரமாதம் என்றோ நான் கூற மாட்டேன்” என்றேன். சாஸ்திரிகள் முகத்தைச் சுளித்துக் கொண்டு, “என் சாமர்த்தியம் பெரிதாகத் தோன்ற வில்லையோ?” என்று கேட்டார். “அதைவிடப் பெரிதல்லவா, அந்த ஜமீன்தாரரின் முட்டாள்தனம்” என்றேன் நான். சாஸ்திரிகள் பாடு குஷி! ஆனந்தத் தாண்டமூர்த்திதான். சரி! என் வேலை முடிந்தது. இனிமேல் உன் வேலை என்று கூறி விட்டு,“வா! போகலாம்!! அங்கே, வா, போகலாம்!” என்று பாடலானார். கணபதி சாஸ்திரி மகா காரியவாதி. எடுத்த காரியத்தை எப்படியும் முடித்தே தீருபவர். அந்தச் சமர்த்து இல்லாமலா, ஒரு பிள்ளையார் கோயிலில் இருந்து கொண்டு மாடிவீடும், மனைவியும், கூத்தியும், கொடுக்கல் வாங்கலும் வைரக்கடுக் கனும் சம்பாதித்தார். “அவாளவாள் கொடுத்து வைத்தது” என்று சாஸ்திரி கூறுவார். ஆனால் சாஸ்திரியின் குலத்துக்கு இருக்கும் சௌகரியம் மற்றவர்களுக்கு ஏது? உங்களுக்குச் சொன்னால் வேடிக்கையாகத் தோன்றும். சாஸ்திரிகளோ நான் மட்டுமல்ல சினேகிதம். எத்தனையோ இடத்தில் குட்டுப்பட்ட தலை அது. தாசிகள் வீடு போவது பாபம் என்று அவர் படித்த சாஸ்திரங்கள் கூறுமே, இருந்தும் அவர் மதித்தாரா சாஸ்திரங்களை? இல்லை! இப்படி முக்கியமான காரியத்தில், தனக்கு இன்பம் வேண்டும் என்பதற்காக, கற்ற சாஸ்திரத்தை கட்டிப் போட்டுவிட்டு காரியவாதியானாரேயொழிய, கட்டுக்கட்டாக விபூதிதான், கழுத்திலே ருத்திராட்சமாலைதான், காலை மாலை ஜெபம், கார்த்திகை சோமவாரம் விரதம், இவைகளிலே குறைவு கிடையாது! ஆண்டவன் இப்படி முக்கியமான விஷயத்திலே தவறு செய்து விட்டு, பிறகு விரதமும் வேடமும் போட்டால், என்ன எண்ணுவார் என்று கேட்டேன் ஒரு நாள். “போடி போ, சுந்திரமூர்த்தி என்பவருக்கு சாக்ஷாத் சிவனே தாசியின் நேசம் கிடைக்கத் தூது சென்றார் தெரியுமோ” என்று கணபதி சாஸ்திரி கூறினார். இப்படி இருக்கிறது உலகம்! நான் சொன்னபடி சாஸ்திரி ஜமீன்தாரை ஏய்த்து விட்டார். நான் போட்ட “பிளான்” என்ன தெரியுமோ! ஜமீன்தாரருக்கு மருமகனாக வரப்போகிறவனை வலையில் போட்டுவிட வேண்டும். அவன் என்னிடம்! சிக்கிய பிறகு கலியாணத்தைத் தடைப்படுத்திவிட வேண்டும். ஜமீன் தாரரின் வயிறு எரிய வேண்டும். இதற்காகத்தான் சொப்பனத்திலே விநாயகர் வந்தார் என்று கதை கூட்டினேன். ஜமீன்தாரரின் கடிதத்தை எடுத்துக் கொண்டு நானும் சாஸ்திரியும் மாப்பிள்ளையின் ஊர் சென்று, அந்த ஜமீன்தாரரால் உபசரிக்கப்பட்டு, தனி வீடடில் அமர்ந்தோம். ஒன்பது நாள் பூஜை செய்து, பிறகுதான் விநாயகர் தந்த பிரசாதத்தை மாப்பிள்ளையிடம் தரவேண்டும் என்று கூறினோம். நான்தான் சாஸ்திரியின் சம்சாரம்! பார்ப்பாத்தி போலவே புடவை கட்டிக் கொண்டேன். பேச்சும் அதுபோலவே பேசினேன். சாஸ்திரிக்குப் பரம சந்தோஷம் “அடி ஆனந்தா!” என்று விநாடிக்கு விநாடி கூப்பிடுவார். என் புதிய வேடத்துக்கு ஆனந்தம் என்று பெயர். முதல் நாள் பூஜைக்கு மாலையில் மாப்பிள்ளை எங்கள் வீடு வரவேண்டும். இரண்டாம் நாள் எட்டு மணிக்கு, மூன்றாம் நாள் இரவு பத்து மணிக்கு, நான்காம் நாள் நடுநிசிக்கு, வரவேண்டும். பிறகு 6 நாள் எங்கள் விடுதியிலேயே தங்க வேண்டும் என்று ஏற்பாடு. பூஜை மிக அபூர்வமானது; சர்வ மங்களமும் தரக்கூடியது என்று சாஸ்திரிகள் கூறினார். பூஜை அபூர்வமானதாகத்தான் இருந்தது. அந்த இளைஞன் மிக நல்லவன். முதல் நாள் பூஜைக்கு பட்டு அணிந்து விபூதி பூசி, சந்தனப் பொட்டுடன் வந்தான். சாஷ்டாங்கமாக சாஸ்திரிகள் காலில் வீழ்ந்து தெண்டனிட்டான். பூஜை ஆரம்பமாயிற்று. இரண்டொரு நிமிடங்களில் சாஸ்திரி கண்களை மூடிக் கொண்டார். நிஷ்டை. ஆமாம்! அது என் ஏற்பாடுதான். அவர் நிஷ்டையிலிருக்கும்போது வாலிபன் “நிர்மல சொருபா! நித்தியானந்தா” என்று மனனம் செய்து கொண்டிருக்க வேண்டும். மனதை வேறு எதன்மீதும் நாடவிடக் கூடாது. கணபதி சாஸ்திரியின் கட்டளை!  சாஸ்திரியின் மனைவியாக இருந்த நான் முதல்நாள் பூஜையின்போது வாலிபனை மதிப்புப் போட்டபடி இருந்தேன். மோகனாஸ்திரங்களை வீசவில்லை. ஆள்சுபாவம் எப்படி, சுலபத்தில் வீழ்த்த முடியுமா? கொஞ்சம் கடினமா? என்பதைத் தெரிந்து கொள்ளப் பிரயத்தனப் பட்டேன். முதல்நாள் பூஜையில் நான் அதிகம் கலந்து கொள்ளவில்லை. ஒரே ஒரு தடவை பூஜைக்காக ஜமீன்தார் வீட்டிலிருந்து தருவிக்கப்பட்டிருந்த வெள்ளிக் குத்து விளக்கைத் தூண்டச் சென்றேன். தூண்டிவிட்டு, வெட்கித் தலை குனிந்து வந்து கொண்டிருக்கையில், என் சேலையின் நுனிபாகம் இளைஞனின் தோளிலே பட்டது! இளைஞன் முகத்திலே இன்பக்களை தோன்றிற்று. வீழ்ந்தான் வலையில் என்று எண்ணிக் கொண்டே, அறையில் சென்ற உட்கார்ந்தேன். வாலிபன் நித்யானந்த மனனம் செய்தான், நினைப்பு மட்டும் இந்த ஆனந்தத்தின்மீது தான் இருந்திருக்கும். ஒரு முறை கனைத்தேன். அவனது கண்கள், நான் இருந்த இடத்திற்குப் பாய்ந்தன! புன்சிரிப்பை பரிசளித்தேன். அவன் புளகாங்கிதமடைந்தான். எனது சங்கல்பம் கை கூடுமென்பதற்கு அறிகுறிகள் தாராளமாகக் கிடைத்தன. சாஸ்திரிகள் நிஷ்டை கலைந்து எழுந்து, நிவேதனம் முதலியவற்றை முடித்துவிட்டு, விபூதி மடலை எடுத்தார். “ஆனந்தம்” என்றழைத்தார். நான் நாணி நடந்து சென்றேன். இளையபூபதி உடலை வளைத்துக் கொண்டு நின்றான். அவனருகேதான் நான் போய் நின்றேன். சாஸ்திரி இருவருக்கும் விபூதி தந்தார். மறுநிமிடம் நான் மறுபடியும் அறைக்குள் வந்துவிட்டேன். இளைய பூபதி,“நாளைய பூஜைக்கு இரவு 8 மணிக்குத்தான் வரவேண்டுமா சாமி” என்று கேட்டான். “ஆம் காலையிலே நான் திருக்கோயில் வழிபாட்டுக்குச் சென்று விடுவேன். பிறகு ஸ்மாசன பூஜைக்குச் செல்வேன், வீடுவர இரவு 7 ஆகும். பூஜை 8 மணிக்குத் தொடங்கும்” என்றார். சாஸ்திரிகள் தந்த விபூதிப் பிரசாதத்தை விட நான் தந்த புன் சிரிப்பு பூபதிக்குப் பிரேமையை - பித்தத்தை - ஊட்டி விட்டது. ருசிகண்ட பூனை சும்மா இருக்குமா?        பகுதி - 11   இளையபூபதி, இரவு 8 மணியாகுமா? என்று மீண்டு மொருமுறை கேட்டுத்தான் விடை பெற்றுக் கொண்டு போனான். “இரவு 8 மணியாகுமா?” என்று கேட்டதிலே அவனுடைய ஏக்கம் மிகத் தெளிவாகத் தெரிந்தது. பாபம் புதிய மோகம்! இளைய பருவம்! எங்கும் அடிபடாத ஆசாமி! அன்று இரவு சாஸ்திரியும் நானும் அவன் ஒரே அடியில் வீழ்ந்தது பற்றிப் பேசிச் சிரித்தோம். இளைய பூபதியைவிட அவனுடைய கடியாரம் அவசரப் பட்டது போலும். ஏழரை... மணிக்கே, அது எட்டு என்று காட்டி விட்டது. பூபதியும் பூஜைக்கு வந்தான். அன்று பூபதி வரும்போது சாஸ்திரி பின்கட்டில் குளித்துக் கொண்டிருந்தார். நான் பூபதியை வரவேற்றேன். வாயால் ஒன்றும் சொல்ல வில்லை. கண் இருக்கும்போது வாய் எதற்கு? சாஸ்திரி குளித்துவிட்டு வருவதற்குள், பூபதி என்னைப் பூஜை செய்தான். நான் பூஜை சாமான்களை எடுத்து வந்து வைத்தேன். ஒன்றிரண்டு சாமான் (தவறிக்) கீழே விழுந்தன. பூபதி நான் எடுப்பதற்குள் அவைகளை எடுத்தான், என் கையில் கொடுத்தான். அவனுடைய கடியாரத்தைவிட கைவிரல்கள் மகா அவசரம்! சாமானை மட்டும் என் கையில் கொடுத்தனவா? தீண்டவும் தீண்டின. ஒரே நாள் பூஜையில் இவ்வளவு கிடைத்தது என அவனுக்குச் சந்தோஷம். “தாங்கள் ஒரே குமாரர்தானோ?” “ஆமாம்! ஒரே பிள்ளைதான். பெண்கூடக் கிடையாது.” இந்தச் சுருக்கமான சம்பாஷணைக்குப் பிறகு நான் மௌனம் சாதித்தேன். வலையில் விழுந்த மீன் வறுபடாமலா போகும். “இந்தப் பூஜைக்கு என்ன பெயர்?” “இஷ்டசித்தி விநாயக பூஜை.” மீண்டும் நான் வாயை மூடிவிட்டேன். அவன் தன் கண்களால் என் இருதயமெனும் கதவைத் தட்டினான். நான் புன்சிரிப்பு என்னும் சாளரத்தை மட்டுமே திறந்தேன். சாஸ்திரியும் வந்தார். பூஜையும் ஆரம்பமாயிற்று. பூஜை முடிந்ததும். இரண்டு தேவாரம் பாடினேன். என்ன உருக்கம்! என்ன இனிமை! என்று இளைய பூபதி கூறினார். திருவாசகத்துக்குருகாதார் உண்டா? என்றார் சாஸ்திரியார். “அதுவும் அம்மாவின் பாட்டு...” என்று பூபதி துதிக்கத் தொடங் கினார். “அவளுக்குக் கொஞ்சம் சங்கீத ஞானம் உண்டு” என்று சாஸ்திரி காரணங் கூறினார். “ஜமீன்தார்வாள் கேட்காத பாட்டா? எத்தனையோ தாசிகளின் பாட்டைக் கேட்டிருப்பாரே” என்று நான் துவக்கினேன். “சேச்சே! தாசிகள் பழக்கம் அவருக்கு ஏண்டி இருக்கப்போகிறது. பரமசாது. சகலகுண சம்பன்னன் அவர்” என்று சாஸ்திரி பூஜித்தார். “அம்மா சொன்னது போல் நான் பாட்டுக் கேட்டிருக்கிறது உண்மைதான். ஆனால் தாசிகள் பழக்கம் கிடையாது” என்றான் பூபதி. “யார் நம்புவா இவாளை” என்று நான் கூறினேன். இளையபூபதி இளித்தான். மூன்றாம் நாள் நடுநிசிப் பூஜை! இரண்டு நாள் பழக்கமும் நடுநிசி நேரமும் சும்மா விடுமா பூபதியை! வரும் போதே அம்மாவைதான் கேட்டான்! சாஸ்திரி குளியலுக்குச் சென்றபோது, என் கூடவே கலந்து சாமான்களை எடுத்து வைத்தான். கைவிரல் பட்டதுபோய், உடலோமோத ஆரம்பித்து விட்டது. உள்ளம் மோதிவிட்ட பிறகு இது சகஜந்தானே. “அவர் வந்துடப்போறாரே” என்றேன் நான். இது எச்சரிக்கை. “குளித்துவிட்டு வரநேரமாகும்” என்று பூபதி குழைந்து கூறினான். “கண்டு விட்டால் ஆபத்து” என்று நான் பயமுறுத்தினேன். கொல்லையில் புகுந்த காளையாயிற்றே அவன், பயிரை அழிக்கப் பயப்படுவானா?  “தலை போவதானாலும் தயார்” என்றான். “அவ்வளவு துணிந்து விட்டீர்” என்று நான் தூண்டினேன். பூபதி என்னைத் தழுவிக் கொண்டான் பதில் கூறுவதற்குப் பதிலாக.  “இது என்ன காரியம்? அடுக்குமா?” என்று மெள்ளக் கேட்டேன். “என்ன காரியமா? என் உயிர் நிலைக்க இது செய்தே தீர வேண்டும்” என்று அவன் கொஞ்சினான். “முடியவே முடியாது” என்றேன். காரியம் மிஞ்சி விட்டது. “இதுபோல் எவ்வளவு நாழிகை என்னைக் கட்டிப் பிடித்து நிற்கப் போகிறீர்” என்றேன் நான் கேலியாக. “உலகமே எதிர்த்தாலும் சரி! உன் கணவன் என் தøயை வீசி எறிந்தாலும் சரி! ஒரு முத்தம் நீ கொடுக்கும்வரை இப்படித்தான் நிற்பேன்” என்றான். காமவெறி தலைக்கு ஏறிவிட்டது. “கண்ணாளா, உன்மீதும் எனக்கு பிரியந்தான்; நான் அவருக்கு மூன்றாம்தாரம். இருந்தாலும் இம்மாதிரி காரியம், பாபம் இதுவரை நடந்தது போதும் விட்டு விடு” என்று நான் தர்மோபதேசம் செய்தேன். தண்டனைக்கே பயப்படமாட்டேன் என்று சொன்னவன் தர்ம போதனைக்கா பயப்படப் போகிறான். சாஸ்திரியார் வரும் காலடிச் சத்தம் கேட்டது “விடு! விடு!” என்று நான் படபடத்துக் கேட்டேன். “கொடு! கொடு!” என்று அவன் மூச்சுத் திணற கேட்டான். என்ன செய்வது? “ஒரு முத்தம் ஒரே ஒரு முத்தம்!” என்றான் பூபதி! எங்கள் இதழ்கள் நெருங்கின. அவனது கண்கள் தானாக மூடிக் கொண்டன. சாஸ்திரியாரின் காலடிச் சத்தத்தை மீறிவிட்டது, நான் தந்த முத்தம்! எடுத்த காரியம் ஜெயமாக முடிந்தால் ஏற்படும் ஆனந்தமே தனியானது. கதிர் முற்றியதும் உழுதவன் முகம் ஜொலிக்கிறது. அரும்பு மலர்ந்ததும் மணம் வீசுகிறது. செங்காய் கனியானதும் நாக்கில் ஜலம் ஊறுகிறது. இதுபோல்தான் எனக்கு ஆனந்தம். இளையபூபதி கேட்ட ஒரு முத்தம், எனது வாழ்க்கையிலேயே ஓர் முதல் வெற்றி! அவன் தவித்த தவிப்பும், கெஞ்சியதும், கொஞ்சியதும், என்னைப் போற்றியதும், புகழ்ந்ததும், சந்தியங்களைச் சரமாரியாகக் கொட்டியதும், எவ்வளவு என்று எண்ணுகிறீர்கள். இப்போதாவது நான் இந்தவிதமான உலகிலே உழன்று தெளிவு பெற்றிருக்கிறேன். அந்தக் காலம் எனது ஆரம்பப் பருவம். அப்போது சமாளித்து, சாகசமாகவே நடந்து கொண்டேனே, அதுதான் அதிசயம். என்னதான் தாசியாக இருந்தாலும், அவன் செய்த ‘பூஜை’ உள்ளபடி என் மனதில் சற்றுச் சபலம் தட்டத்தான் செய்தது. எவ்வளு கள்ளங்கபடமற்றவன்! வெள்ளை மனது! சொன்னதை நம்புகிறான். என்னை அசல் சாஸ்திரியின் சம்சாரமென்றே நம்பினான். பூஜை விஷயமும் உண்மை என்றே எண்ணினான். துள்ளிவிளையாடும் மான் மறைந்து இருந்து எறிந்த வேலுக்கு இரையானதுபோல், இளைய பூபதி என் காமமென்னும் சாஸ்திரப் பிரயோகத்தால் சாய்ந்தான். சாய்ந்தவன் சகல உண்மைகளையும் எப்டியும் ஓர் நாள் தெரிந்து கொண்டுதானே தீருவான். அப்போது அவனுக்கெவ்வளவு கோபம் வரும், மனம் எப்படிக் கொதிக்கும், என்னைச் சித்திரவதை செய்யலாம் என்றுகூடத் தோன்றுமல்லவா! இதனை நான் நினைத்தபோது சற்று நடுக்கமாகத்தான் இருந்தது. ஒரு ஜமீன்தாரரின் விரோதத்தைப் போக்க எண்ணிக் கடைசியில் இரண்டு ஜமீன்தாரர்களின் விரோதம் வந்து சேர்ந்தால் என்ன செய்வது என்ற திகிலும் பிறந்தது. இவ்வளவு எண்ணங்களும் மனதிலே தோன்றி முகத்திலே வெற்றி, கவலை இரண்டு தெரியும் விதத்திலே குறிகள் தோன்றின. அவன் பாபம் நான் சாஸ்திரிக்குப் பயந்தே கவலைப்படுகிறேன் என்று கருதி, “எதற்கும் நான் இருக்கிறேன் பயப்படாதே” என்று தைரியங் கூறினான். எனக்குப் பலியானவன் என்னைக் கவலைப்பட வேண்டாமென்று கூறியபோது, பரிதாபமாகத்தான் இருந்தது. விளக்கு நோக்கி வீட்டில் பூச்சி நெருங்கி வந்து விட்டது. புலிக்கு இரத்த ருசி கிடைத்ததும், மேலும் இரத்தம் குடிக்கவே அலையும் என்பார்கள். மிருகத்தின் வெறிக்கும் காமாந்தகாரத்துக்கும் என்ன வித்தியாசம் இருக்கிறது? எது முதல் முத்தம் இளையபூபதி எனும் புலிக்கு முதல் இரத்த ருசி. மேலும் மேலும் அதைப்பருக அவன் பதைத்தான். சாஸ்திரி அடுத்த நிமிடம் அங்குவந்து பூஜையைத் துவக்கியதால் என் அதரம் தப்பிற்று. அன்றைய பூஜையும் முடிந்த மறுதினமும் பூஜை நடந்தது. மறுதினம் முதற் கொண்டு இளைய பூபதி பூஜை விடுதியிலேயே தங்க வேண்டுமென்ற ஏற்பாட்டின்படியே தங்கினான். அந்த ஏற்பாடு இல்லாது போனால் பூபதியின் இருதயமே இரு கூறாகிப் போயிருக்கும். சாஸ்திரிகள் மௌன விரதம் பூண்டார் பூஜை சதாகாலமும், எங்கள் சல்லாபமோ சமயம் நேரிட்டபோதெல்லாம் நடந்தது. ஆண்களை ஆசை பிடித்து ஆட்டத் தொடங்கினால் அவர்கள் எதுவும் செய்யத் தயார்தானே. வீரம், சூரத்தனம், விறுவிறுப்பு எல்லாம் மாயமாகத்தானே போய்விடும். இளையபூபதி என் கண் ஜாடையை கட்டளையாகக் கொண்டு ஆடி நின்றான். அந்தச் சமயத்தில் நான் எதைக் கேட்டாலும் கொடுக்கச் சித்தமாக இருந்தான். நான் எதைச் செய்யச் சொன்னாலும், சம்மதம் என்பான். என்னால் அவனுக்கும் அவன் தகப்பனாருக்கும் சண்டை மூட்டிவிட முடியும்! அவனுடைய வீட்டிலேயே அவன் கள்ளனாகி, பணமும் எடுத்து வரவேண்டுமென என்னால் ஏவ முடியும். கணபதி சாஸ்திரிகள் கழுத்தைத் திருகிப் போடும்படிச் செய்ய முடியும்! கதைகளிலே சொல்வார்களே புலிப்பால் கொண்டுவா என்றால் கூடக் கொண்டு வருவான் என்று, அந்த நிலைமையிலே இருந்தான் ஆசாமி. எல்லாம் எதற்கு? பெரிய யானையை அடக்க சிறிய அங்குசம் உதவுவது போல், ஆண்களின் அட்டகாசத்தை அடக்க பெண்களின் சாகசம் உதவுகிறது! “இஷ்டசித்தி விநாயகர் இனி எனக்கு வேறு என்ன பிரசாதம் தரவேண்டும். உன்னை எனக்குத் தந்த பிறகு இனி வேறு எதைக் கொடுக்க வேண்டும்?” “நான் கணபதி சாஸ்திரிகளின் மனைவி, அவர் இஷ்ட சித்தி விநாயகர் கோயில் குருக்கள். கவனமிருக்கட்டும்!” “ஆமாம்! நீ சாஸ்திரியின் மனைவிதான். ஆனால் என் காதலி, இது இஷ்டசித்தியார் தந்த வரப்பிரசாதம்.”  “இன்னும் இரண்டு தினங்கள்தானே இந்த இன்பம்.” “அப்படியென்று நீயும் எண்ணியிருந்திருப்பாய், சாஸ்திரியாரும் கருதியிருப்பார். ஆனால் நான் இதை என் நிரந்தர இன்பமாக்க நெஞ்சில் உறுதிகொண்டு விட்டேன்.” “அது உமது எண்ணம்! காரியம், கருத்தின்படியே தானா நடக்கும்? நாமொன்று நினைத்தால் நடப்பது வேறொன்றாக முடியும்.” “அப்படியென்று சாஸ்திரியும் என் அப்பாவும் எனக்கு மாமனாராகலாம் என்ற மனோராஜ்யம் செய்து வரும் ஜமீன் தாரரும் இரண்டொரு நாட்களிலே பேசிக் கொள்வார்கள்.” “என்ன? என்ன? எனக்கு விளங்கவில்லையே. பூஜை முடிந்ததும் நாங்கள் ஊருக்குப் போகத்தானே போகிறோம்.” “ஆமாம்! ஆனால் பூஜைதான் முடியப் போவதில்லையே!” “விஷயத்தைச் சொல்லுங்கள். நீர் பேசுவதே அதிசயமாக இருக்கிறது. பயமாகக்கூட இருக்கிறது.” “பயப்படாதே ஆனந்தம். இன்றிரவு நாமிருவரும் இங்கிருந்து கிளம்பி, இந்த ஊரை விட்டே ஓடிவிட நான் ஏற்பாடு செய்துவிட்டேன். நமது ஆசைக்குக் குறுக்கே நிற்கும் சாஸ்திரி, என் அப்பா, முதலிய எதுவும் நம்மைத் தீண்டாத தேசம் சென்றுவிட வேண்டும்” “ஐயையோ நான் மாட்டேன். ஊர் நிந்தனைக்கு ஆளாக மாட்டேன்.” “அது உன் முடிவானால் என் பிணத்துக்கு நீ உன் கண்ணீரால் அபிஷேகம் செய்ய நேரிடும்.” “ஐயையோ இது என்ன தர்ம சங்கடம்?” இந்தச் சம்பாஷணை நான் இளையபூபதியுடன் அன்றிரவே ஓடிவிடுவது என்ற விதத்தில்தான் முடிந்தது. அதுதான் நடந்தது. ஜமீன் குடும்பங்கள் இரண்டும் தத்தளித்தன, தவித்தன. கணபதிசாஸ்திரி தமது குட்டு வெளியாகாதிருக்க, காசி சென்றுவிட்டதாகக் கேள்வி. நாங்கள் ஓடிவிடப் போவதாகச் சாஸ்திரிக்கும் நான் சொல்லவில்லை. சாஸ்திரியிடம் நான் சொல்லி வைத்தது, பூஜை என்ற சாக்கில் இளைய பூபதியை வீட்டிற்கு வரப் போகச் செய்து வசியப்படுத்தி, மணமாக இருந்த பெண்ணின்மீது ஏதாவது தோஷங் கூறிக் கல்யாணத்தை நடக்க வொட்டாது தடுத்துவிடுவது என்ற முறையில் தான் சொன்னேன். இளைய பூபதியைக் காணும்வரை அந்த விதமாகத்தான் செய்ய வேண்டு மென்று நானும் எண்ணியிருந்தேன். ஆனால் பூபதி கூறிய யோசனை ஜமீன்தார் மீது வஞ்சம் தீர்த்துக் கொள்ள இன்னும் அதிகமாக உதவும் எனத் தெரிந்ததும், சாஸ்திரிக்கும் சொல்லாமல் நாங்கள் கிளம்பி விட்டோம். குற்றாலம் போய்ச் சேர்ந்தோம். போகும் வழியில் நான் சாஸ்திரியின் மனைவி அல்ல என்பதையும், தாசி என்பதையும் சாஸ்திரி என்னைத் தன் மனைவி போல் நடித்தால், ஜமீன் வீட்டில் பூஜை செய்து பெரும் பொருள் பெற்றுப் பணம் தருவதாகக் கூறியே அழைத்து வந்ததாகவும் கூறினேன். இளைய பூபதிக்கு இச்சேதி கோபத்தையும், வருத்தத் தையும் கொடுத்தது. ஆனால் என் கண்ணீரும் பெருமூச்சும், சோகப் பார்வையும், அவரது கோபத்தை மாற்றி விட்டன. நாங்கள் குற்றாலத்தில் குஷாலாகவே வாழ்ந்து வந்தோம். நான் தாசி. என்னை இதற்காக யார் என்ன கண்டிக்க முடியும்? அவரோ மேஜர். யார் அவரைத் தடுக்க முடியும்? இருவருக்கும் இதோபதேசம் செய்வார்கள்! ஆனால் இதே குற்றம் செய்திராவிட்டாலும் வேறு ஏதாவது குற்றம் செய்த பேர்வழிகளாகவே உபதேசம் செய்ய வருபவர்களிலே அனேகமாக இருப்பார்கள். அத்தகையோர் உபதேசம் எமக்கு ஏன்? நாங்கள் இளம் பருவத்தினர். என்னிடம் அழகு, ஜமீன்தார் மகனிடம் பணம். என் அழகை அவருடைய பணத்துக்கு அடகு வைத்தேன்! நான் வைக்கா விட்டால், வேறு எவரேனும் அடகு வைக்கத் தயார்தானே! நானும் இவரிடம் அடகு வைக்காவிட்டால், வேறு வியாபாரியிடம் ஈடாக வைத்திருப்பேன். இந்த முறை மாறினால்தானே இளைய பூபதி போன்றவர்கள் சீர்பட முடியும். இல்லையானால் இந்த விமலா இல்லா விட்டால் வேறு ஒருவள் கிடைக்கிறாள். நாற்றம் போக மருந்திட்டுக் கழுவாத நாசிக்கு “நீ அந்தக் கெட்ட வாடையை நுகராதே உடலுக்குக் கேடு” என்று உபதேசம் செய்தால் நடக்குமா? இளையபூபதிக்கு வீட்டிலிருந்து, முதலில் இதோபதேசம் செய்வதும், பிறகு மிரட்டியும், பிறகு சபித்தும் கடிதங்கள் வந்தன. இதோபதேசக் கடிதத்திற்கு, “இது விதிவசம். விலக்க முடியாது” என்று பதிலும், மிரட்டல் கடிதத்துக்கு “இது சகஜம், உலகத்திலே நடப்பதுதான்” என்று விளக்கமான பதிலும், சபித்து எழுதிய கடிதத்துக்குப் பாகப் பிரிவினைக்கு வழக்கிட உத்தேசமென்ற வக்கீல் நோட்டீசும் பதிலாகக் கிடைத்தன. இடையிலே இளையபூபதி நாலைந்து கடன் பத்திரங்களில் கையொப்பமிட்டார். நான் இரண்டு மூன்று முறை வீட்டுக்கு மணியார்டர்கள் அனுப்பினேன். குற்றாலத்தில், எங்களுக்கு, வாழ்க்கை நன்றாகவே இருந்தது. நான்கூட முதலிலே கொஞ்சம் பயந்தேன். ஊரார் என்ன சொல்வார்களோ என்று. ஆனால் ஜமீன்தார் வீட்டு மகன் அட்டைக் கருப்பாக இருந்தாலும் மாநிறம் என்று சொல்வது போல், சீமான் வீட்டுப்பிள்ளை சுத்தப் பைத்யமாக இருந்தாலும், சில வேலைகளில் புத்திசுவாதீனமாக இருப்பதில்லையாம். வேதாந்த சாஸ்திரங்களைப் படித்தால் கொஞ்சம் கலக்கமாம் என்று சொல்வது போல, சில நாட்கள் சென்றதும், ஏதோ பாலியம், கண்ணுக்குப் பிடித்தமானவளோடு தமாஷாகக் காலங் கழிக்கிறார். இது ஒரு பெரிய தவறா? அவர் சந்யாசியா? அந்த அம்மாள்தான் என்ன யோகியா? இது சகஜமாக நடப்பதுதானே” என்று பலரும் கூறத் தொடங்கினார்கள். நாலு வேதத்தையும் கரைத்துக் குடித்தவர் என்று பெயர் வாங்கியவரும், கோயிலுக்குள் ஆதிதிராவிடர் சென்றால் எப்படித் தீட்டு வரும் என்பதற்கு எண்ணாயிரம் சாஸ்திர ஆதாரம் காட்டக்கூடியவருமான பஞ்சாமிருதப் பிரசங்க பாபவிமோசன சாஸ்திரிகள், குற்றாலத்து நீர் வீழ்ச்சிக்கும் காதல் உள்ளத்திற்கும் உவமை வைத்துப் பேசுவார் எங்கள் எதிரில் “எங்ஙனம் கரடு முரடான கற்பாறைகளில் நீர் ஓடிய போதிலும் அது குளிர்ந்தும், தெளிந்தும் இருக்கிறதோ, அதுபோல் விமலா ஒரு தாசியாக இருந்தபோதிலும், நாங்கள் அவளிடம் கொண்டிருக்கும் காதல் பரிசுத்தமானது. இது பாபக் கிருத்தியமாகாது. விசுவாமித்திர மாகமுனிவர்கூட மேனகையைத் தள்ளிவிடவில்லை. மேலும் ஆண்டவனே அன்பு சொரூபம்.” - என்று தமது மதத்தையே எங்கள் பக்கம் சாட்சி சொல்லும்படி செய்தார். அவர் மட்டும்தானா? நாங்கள் அடிக்கடி குற்றாலத்திலே நடத்திய விருந்துகளுக்கும் கேளிக்கைகளுக்கும் விஜயம் செய்த கனதனவான்களும் அவரவர்களுக்குத் தெரிந்த அறிவை எமக்குச் சாதகமாகவே சாட்சி கூறச் செய்தனர். தாசி வீடுகளுக்குப் போய் ரோகங்களைச் சம்பாதித்துக் கொள்ளாதே என்பதைப் பற்றிய ஆராய்ச்சி நூல் எழுதியவராம், ஒரு டாக்டர், அவர்கூறினார் ஒரு நாள் “மனதிலே எழும் இச்சையை அடக்கினால், அதனால் மனம் நொந்து, உடல்வாடி, பிறகு க்ஷயரோகம் வந்துவிடும். ஆகவே ஜமீன்தாரர் தமது மனதுக்குப் பிடித்தமானதை அடைந்தது மகாசரியான காரியம்” என்று. இதுபோல், ஒவ்வொருவரும் ஒவ்வோர் விதமாகப் பேசுவர். அவர்கள் பெற்றபரிசு என் தரிசனம், ஜமீன்தாரரின் தோழமை. அதனால் பண இலாபம், இவைகள்தான். ஒரே ஒரு ஆசாமிதான், இவர்கள் பேசிய மாதிரி எல்லாம் பேசவில்லை. எங்கள் வாழ்க்கையைப் பற்றி ஆச்சரியப்படவுமில்லை. ஒரு யோசனை மட்டும் சொன்னார். “ஜமீன்தாரர், இந்த அம்மாளுடன் கூடி வாழ்ந்தால், வாழ்க்கை இன்பமாக இருக்கு மெனக் கருதினால், உலகமறிய ரிஜிஸ்டர் கலியாணம் செய்து கொள்ளட்டுமே” என்றார். மற்றவர்கள்போல் மலை மலையாக ஆதாரங்களைக் குவிக்கவில்லை. மிகச் சாதாரணமாகக் கூறினார். அது கேட்டு என் மனம் மகிழ்ந்தது. நான் முத்துவை மணம் செய்து கொள்ள எண்ணிய காலமும், அதனால் வந்த வம்புகளும் என் நினைவிற்கு வந்ததும், மனமகிழ்ச்சி மறுகணமே போய் விட்டது. ஜமீன்தாரரின் சிரிப்பும் அந்த யோசனையைக் கேட்டதும் மறைந்து விட்டது. அந்த ஆசாமி போன பிறகு, ஜமீன்தார் சொன்னார், “இந்த ஆள், சாமியில்லை, பூதமில்லை என்று பேசுகிற சுயமரியாதைக்காரர்” என்று. சாமி பூதத்தைப் பற்றி அவர் ஒன்றும் பேசவில்லை. இருக்கிறதா இல்லையா என்று விஷயமே பேசவில்லை. அவர் கூறியதில் அறிவு இருக்கிறது! அது பிடிக்கவில்லை ஜமீன்தாருக்கு. அவருக்கு மட்டுமா? உலகத்திலே பலருக்கு, முக்கால்வாசிப் பேருக்குப் பிடிக்கத்தான் மாட்டேன் என்கிறது.                                  பகுதி - 12   இன்னும் கொஞ்சம் பெரியதாகட்டும். இது போதாது இன்னும் கொஞ்சம் வேண்டும் என்று ஊதி ஊதிப் பெலூனைப் பெரிதாக்குகிறார்களே சிறு பிள்ளைகள், கடைசியில் அது டபீர் என வெடித்துப் போகிறதல்லவா? அது போலாயிற்று என் மகிழ்ச்சி. நான் குற்றாலத்திலே வேடிக்கையாக வாழ்ந்து கொண்டு, ஜமீன்தாரின் கொட்டத்தை அடக்கியதாக எண்ணிக் கொண்டு இறுமாந்து இருந்தேன். என் வேலைத்திறன் முதலிலே அந்த ஜமீன்தாருக்கு வேதனையாகத்தான் இருந்தது. சில நாள் படுத்த படுக்கையாகவே இருந்தார் என்று அக்காவிடமிருந்து கடிதம் வந்தது. ஆனால் பிறகு அவர் பழையபடி தமது ‘கொடுக்கை’ காட்ட ஆரம்பித்தாராம். அம்மாவும், அக்காவும் முதலிலே இதுபற்றி எனக்குக் கடிதம் எழுதவில்லை. கொஞ்சநாள் கழித்து ஜாடைமாடையாக எழுதினார்கள். பிறகு விஷயம் பூராவும் தெரிவித்தார்கள். நாங்கள் வாங்கிய நிலத்தைப் பற்றி ஜமீன்தார் கட்டிவிட்ட வழக்கில் எங்களுக்குப் பிரதிகூலமாகத் தீர்ப்புக் கிடைத்ததாம். அக்காவுடைய விலையுயர்ந்த நகைகளை ஜமீன்தாரர் வீட்டுப் பந்துக்கள் இரவல் வாங்கிக் கொண்டு போனார்களாம், திருப்பித் தரவில்லையாம். கோர்ட்டிலே கற்பூரத்தை ஏற்றி அணைத்துச் சத்தியம் செய்தார்களாம், நகை இரவல் வாங்கவே இல்லை என்று. காலிகளின் தொல்லை அதிகரித்து விட்டதாம். குற்றாலமே வந்து விடலாமா? என்று கேட்டிருந்தார்கள். நான் இளைய பூபதியைச் சரிப்படுத்தி, அவரை அழைத்துக் கொண்டு ஊர் போய்ச் சேர்ந்தேன். இது ஜமீன்தாரரின் கோபத்தை மேலும் அதிகரிக்கச் செய்தது. தன் மகளுக்கு மணாளனாக வரவேண்டியவன் தன் கண்ணெதிரிலேயே எங்கள் வீட்டில் வாழ்வதைப் பார்த்தால் அவருக்கு ஆத்திரமாகத் தானே இருக்கும். அவருடைய ஆத்திரத்தைக் கிளப்புவது ஒரு விதத்தில் எங்களுக்கு ஆபத்து என்ற போதிலும், ஒரு விதத்திலே எனக்கு ஆனந்தமாகத்தான் இருந்தது. மறைமுகமாக எதிர்ப்பதை விட நேருக்கு நேர் நின்று போர் புரிவது ஆண்மையல்லவா! அதுபோல் இருந்தது என் நிலை. ஒரு ஜமீன்தாரரின் கோபத்தை நாங்கள் சமாளிக்க முடியாது. ஆனால் எங்களுக்கும் அந்த ஜமீன்தாரின் கோபத்துக்கும் இடையே இளையபூபதி இருந்தார். கோபம் என்ன செய்யும் கேடயம் இருக்கும்போது கத்திக்குப் பயப்படுவானேன். அதிலும் இளைய பூபதிக்கு நான் ஊட்டி வந்த ரோஷ உணர்ச்சி கொஞ்சநஞ்சமல்ல. இருதரப்பிலும் செலவுதான். இருதரப்புக்கும் அம்புகள் ஏராளமாகச் சேர்ந்தன. எங்கள் ஊரே இரண்டு கட்சியாக மாறிவிட்டது. இந்தச் சமயத்தில்தான் ரௌடி ரங்கன் எங்களுக்குப் பழக்கமானது. இளையபூபதிக்கு அவன்தான் கைத்தடி. அவனிடம் எங்கள் ஊர் போக்கிரிகளுக்குச் சற்றுப் பயந்தான். அவன் அவர்களுக்கு “அண்ணாச்சி. “ஏண்டா பயல்களே! உங்கள் குரு நமது சிஷ்யன் தெரியுமல்லோ உஷாரா பிழையுங்கோ” என்பான். அவர்கள் தலையைச் சொறிந்து கொண்டே, “என்ன அண்ணாச்சி, அந்த ஜமீன்தாரன் கொடுக்கிற காசுக்காக ஏதோ கொஞ்சம் ஜால்சாப்புக் காட்டுகிறோம். வேறென்ன இருக்கு’ என்று சமாதானம் சொல்வார்கள். ரங்கனுக்கு அந்தப் போக்கிரி உலகத்திலே இருந்த மதிப்புக்குக் காரணம் அவன் இரண்டு மூன்று தடவை அடிதடி கொலை குத்துக் கேசில் சிக்கி ஜெயில் போய்த்திரும் பியதுதான். ஒவ்வொரு நாளைக்கு ரங்கனே சொல்வான். “படவாப் பயல்கள் எவனாவது வாலை நீட்டினா, ஆறு அங்குல பிச்சுவா இருக்குது, ஆறு மாசம் ஜயிலு இருக்குது ராணியம்மா சத்திரத் திலே மயிர் வளர்ந்தா மொட்டை, மணி அடிச்சா சோறு” என்று. இளைய பூபதிக்குப் பாகம் பிரித்துக் கொடுக்கப்பட்டதும் அவர் எங்கள் ஊரிலேயே வீடுகளும் நிலங்களும் வாங்கிக் கொண்டார். எங்கள் ஊர்வாசியாகி விட்டார். எங்கள் குடும்பம் மறுபடியும் பிரகாசிக்க ஆரம்பித்தது. ஆனால் ஜமீந்தாரர்களின் சண்டை ஓயவில்லை. இதனால் பூபதியின் செல்வம் கரைந்து கொண்டே வந்தது. இரண்டு பேருக்கும் எதிலும் போட்டி ஏற்பட்டு விட்டது. கோயிலில் அவர் ஒரு நாள் ஆயிரம் ரூபாய் செலவில் செய்வார். மறுதினம் இளைய பூபதியின் கைங்கரியம் ஆயிரத்து ஐந்நூற்றில் நடக்கும். அவர் சங்கீத கச்சேரி வைத்தால் இவர் கச்சேரி வைப்பார். அவர் ஒரு வீட்டை விலைக்கு வாங்கப் பேரம் பேசினால் இவர் அதற்கு அதிக விலை கொடுப்பதாகப் போட்டி போடுவார். அவருடைய மோட்டார் 6000த்தில் என்றால் இவருக்கும் 8000. இப்படிப் போட்டி நடந்ததில் பூபதியின் பணம் மிக விரைவிலே குறைய ஆரம்பித்தது. பூபதிக்கு இந்த ரோஷத்தை நான் தான் ஊட்டினேன். ஆனால் எனக்கே அதன் வேகமும் விளைவும் பிடிக்கவில்லை. தீபம் அதிகமாக எரிகிறதே, எண்ணெயே தீர்ந்துவிட்டால் பிறகு இருள்தானே சூழும் என்ற பயம் ஏற்பட்டது. நான் அவரது ரோஷ உணர்ச்சியை மட்டுப்படுத்திச் சொன்னேன். அது அவரது ரோஷத்தை அதிகரிக்கவே செய்தது. துள்ளுகிற காளையைப் பிடிக்கப் போனால் கைக்குக் சிக்குகிறதா? அது போலாகிவிட்டார், இளைய பூபதி. “அவன் கிடக்கிறான் பஞ்சைப்பயல்!” என்பார். நான் இருக்கும்வரை அவன் தலைநீட்ட முடியுமா என்பார். சதா சர்வகாலமும் இந்தப் பேச்சுத்தான் இருக்கும். அவரிடம் பணம் பிடுங்கவரும் ஒவ்வொருவரும் இந்த உணர்ச்சியைக் கிளப்பியே பணம் பறிப்பார்கள். இளைய பூபதிக்கு இவ்விதமான செலவுகள் பெருகிவிடவே, எங்கள் வீட்டுக்குச் செய்த செலவு தானாகச் சுருங்க ஆரம்பித்து விட்டது. அதிகமாக ஓடுகிறதே குடை கவிழ்ந்தால் என்ன செய்வது என்ற பயந்தான் எனக்கு. இளையபூபதி செய்துவந்த காரியங்கள் எவ்வளவு துவேஷத்தைக் கிளப்பிற்று என்பதற்கு ஒரு உதாரணம் கேளுங்கள். இவருக்கு எனப் பேசிய பெண்ணுக்கும் வேறோரு கடன்கார ஜமீன்தாரருக்கும் கலியாணம். கலியாணம் பெண் வீட்டில். இளைய பூபதியின் எதிரில் மிகுந்த ஆர்ப்பாட்டத்துடன் நடத்தினால்தான் பெருமை என்று பெண்ணின் கலியாணத்துக்கு ஏராளமாகச் செலவு செய்தார் அந்த ஜமீன்தார். கும்பகோணம் பாடகராம் ஒருவர், 500 ரூபாய் செலவில் அவரது கச்சேரி ஏற்பாடாகி இருந்தது. அன்று கல்யாணப் பந்தலிலே எள் போட்டால் எள் எடுக்க முடியாது; அவ்வளவு கூட்டம், மோட்டார் மேல் மோட்டார் பறந்து கொண்டிருந்தன. ஊரெங்கும் கச்சேரியின் பெருமை பற்றித்தான் பேச்சு. இளைய பூபதி மட்டும் “கச்சேரியின் இலட்சணம் தெரியத்தானே போகிறது, பார்க்கத்தானே போகிறார்கள். காறி உமிழத்தானே போகிறார்கள்” என்று கூறிக் கொண்டிருந்தார். மாலை 6 மணிக்கு கச்சேரி ஆரம்பமாக வேண்டியது 7 மணி ஆயிற்று, 8 ஆயிற்று பாடகர் வரவில்லை என்ற சேதியைத் தான் சொன்னான். ஜமீன்தார் அண்டம் வரை எகிறினாராம் ஆத்திரத்துடன். கைகளைப் பிசைந்து கொண்டா ராம். “மோசம் போனேன். முகத்தில் அந்தப் பார்ப்பான் கரியைப் பூசிவிட்டானே. எல்லாம் இந்தப் போக்கிரி பூபதியின் வேலை” என்று கர்ஜித்தாராம். வந்த ஜனங்களுக்குச் சமாதானங் கூறிவிட்டு, உள்ளூர் வித்வானைப் பாடச் சொன்னாராம். தான் இருக்கும்போது வெளியூர் பாடகர்களை வரவழைக்கலாமா என்ற துக்கத்தைக் காட்ட, அவர் அழுது தீர்த்தாராம் கொஞ்ச நேரம், சங்கீதச் கச்சேரியின் அழகு அப்படி இருந்ததாம். ஜனங்கள் கேலி செய்து விட்டார்கள். ஜமீன்தாரர் அவமானம் தாங்க மாட்டாது தலையைத் தொங்க விட்டுக் கொண்டாராம். எங்கள் வீட்டிலே இளைய பூபதி இடிஇடி எனச் சிரித்துக் கொண்டே, “எப்படி பூபதியின் வேடிக்கை! இவன் பாடுவதற்கு அந்தப் பார்ப்பானுக்கு 500 ரூபாய் தருவதாகப் பேசி அட்வான்ஸ் கொடுத்தான். நான் அந்தப் பாடகன் இங்கே வந்து பாடாதிருக்க 1000 ரூபாய் முழுவதுமே நேற்றுக் கொடுத்து ரங்கனை அனுப்பினேன். இங்கே கச்சேரி கிச்சேரி ஆகிவிட்டது என்று கூறிச் சிரித்தார். இப்படியே ஒவ்வொரு காரியத்திலும் ஒருவர் மீது ஒருவர் பாய்ந்து வந்தனர். இரண்டு சிங்கங்கள் சண்டை இடுவதைப் பார்க்கலாம். ஆனால் இடையிலே நாங்கள் சிக்கிக் கொண்டோமே. எங்கள் சிங்கம் சாய்ந்துவிட்டால் மறுகணம் பழைய சிங்கம் எங்களைப் பட்சணம் செய்து விடுமே என்ற பயந்தான். பணம் தீர்ந்து விட்டால் இந்தப் பாண வேடிக்கை ஏது? எப்போதும் கிளாஸ்கோ மல்லும் சில்க்கு ஜிப்பாவும் போட்டுக் கொள்ளும் இளைய பூபதி, ஒரு நாள் திடீரென்று, கதர் சட்டையும் துணியும் அணிந்து கொண்டு, கையிலே காந்திக் குல்லாய் எடுத்துக் கொண்டு வந்து சேர்ந்தார். அவர் பின்னால் ரங்கன் ஒரு கைராட்டினமும் தூக்கிக் கொண்டு வந்தான். இது என்ன அதிசயம்? ஏன் இந்த வேடம்? என்றேன் நான். “அதிசயமுமில்லை, வேடமுமில்லை. இது புதிய போர்” என்றார் இளைய பூபதி. “கேள் கண்ணே விமலா, நமது தேசம் வெள்ளைக்காரனிடம் அடிமைப்பட்டுக் கிடக்கிறது. அதனால் நாம் உண்ண உணவின்றி, உடுக்க உடையின்றிப் படுக்கப் பாயின்றிப் பரிதவிக்கிறோம். பாரத மாதா தலைவிரி கோலமாக நின்று அழுகிறாள். கையிலேயும் காலிலேயும் விலங்குகள் உள்ளன. அதை உடைத்து எறிந்து வெள்ளைக்காரனை மூட்டை முடிச்சுடன் ஓட்டி விட்டு சுயராஜ்யம் பெற வேண்டும் என்று மகாத்மா காந்தி சொல்கிறார். ஆகையினால் காங்கிரசில் சேருங்கள் என்று கதர்க்கடை கைலாச அய்யர் சொன்னார். நான் காங்கிரசில் சேர்ந்து விட்டேன்.” என்று இளையபூபதி சொன்னார். “இது என்ன கோலம் துரையே. இது உங்களுக்கு ஏற்றதா? ராஜா போல் நீர் இருப்பதை விட்டுவிட்டு இந்தத் தொழில் எதற்கு? காங்கிரஸ் காங்கிரஸ் என்று சும்மா. கத்தினார்கள், என்ன பலன் கிடைத்தது? ஏழை எளியவர்கள் முதுகில் போலீஸ் தடியடி விழுந்ததும், ஜெயிலுக்குப் பலர் போனதும்தானே மிச்சம். நீங்களாவது காங்கிரசில் சேருவதாவது. தடியடியும் ஜெயிலும் உங்களுக்கு ஏன்?” என்று நான் சொல்லித் தடுத்தேன். “அதற்குள்ளே, எங்கே என்னை அடித்து விடுகிறார்களோ, ஜெயிலுக்குப் பிடித்துக் கொண்டு போய் விடுகிறார்களோ என்ற பயமா? சுத்த பைத்தியம் நீ, தடியடி படவேண்டியவர்கள் பட்டாகி விட்டது. ஜெயிலுக்குப் போக வேண்டியவர்களும் போயாகி விட்டது. இனிமேல் அது கிடையா. இருந்தாலும் எங்களைப் போன்றவர்கள் இனி அதிலே சேர்ந்துவிட்டு, அது மாதிரி காரியம் வேண்டாம் என்று தடுத்து விடுவோம். இப்போ நடக்க வேண்டியது எலக்ஷன். அதிலே காங்கிரசுக்கும் ஜஸ்டிஸ் கட்சிக்கும் சண்டை. ஜஸ்டிஸ் கட்சியை ஒழித்து ஆயிரம் அடி ஆழத்திலே புதைக்க வேண்டும். அதற்காகத்தான் காந்தி குல்லாய்க்காரனாகி விட்டேன்” என்றார் பூபதி. “ஜஸ்டிஸ் கட்சியைத் தொலைக்கிறதும் குழியிலே போடறதும் எதுக்கு? அதை நீங்கள் செய்வானேன்? இதுதானா உங்கள் வேலை?” என்று நான் கேட்டேன். “உனக்கு என்னடி தெரியும்? அந்த ஜமீன்தார் ஜஸ்டிஸ் கட்சியாம். “ஆகவே அவனிருக்கிற கட்சிக்கு விரோதமான கட்சியிலே நான் சேர்ந்து விட்டேன். அவன் இருக்கிற கட்சியை ஒழிக்க வேண்டும். அப்பத்தானே அவனும் ஒழிவான். அதற்காகத்தான் நான் காங்கிரஸ். நாளைக் காலையிலேயே நமது வீட்டின் முன்புறம் கொடி ஏற்றப் போகிறேன். நீ ஒரு காந்திப் பாட்டு பாடவேண்டும். தெரிகிறதா” என்றார் பூபதி. பைத்யம் இதிலே திரும்பிற்றா? என்று நான் எண்ணினேன். இளையபூபதியின் அரசியல் பிரவேசம். வேகமான பல மாறுதல்களை உண்டாக்கி விட்டது. ரவிவர்மா படங்கள் இருந்த இடத்திலே, தேசியத் தலைவர்களின் படங்கள்! தம்பூரா ஸ்ருதிச் சத்தம் நின்றுவிட்டு, ராட்டைச் சத்தம் கேட்கலாயிற்று! ரங்கன் கைராட்டை சுற்றுவான், இளையபூபதி, ஆடுராட்டே! ஆடுராட்டே! என்று வேடிக்கையாகப் பாடுவார். நான் எங்கே அவரைக் கேலி செய்கிறேனோ என்று, அவராகவே, “ஏன்! என் போக்கு உனக்கு ஆச்சரியமாக இருக்கிறதா? பைத்யமே! ஆடு ராட்டே! ஆடுராட்டே! என்றால், ராட்டினம் ஆடுவது என்றல்ல! அர்த்தம், போடு ஓட்டே! போடு ஓட்டே! என்று அர்த்தம். பெரிய பெரிய தலைவர்கள், பேசி, கஷ்டப்பட்டு, சிறைப்பட்டு, ஜனங்களிடம் காங்கிரஸ் பக்தியை ஊட்டி வைத்திருக்கிறார்கள். நமக்கு அது இப்போது பயன் படுகிறது. ஓட்டு நமக்குத்தானே” என்று கூறினார். “ஓட்டு வாங்கும் வேலையிலே, ஈடுபட்டால்கூடத் தான் என்ன, நீங்கள் வேறோர் பக்கம் எலக்ஷனுக்கு நிற்கக் கூடாதோ? எதற்காக, அந்தச் சனியனுடன் மோதிக் கொள்ளவேண்டும்?” என்று நான் கவலையுடன் கேட்டேன். இளையபூபதி சிரித்து விட்டு, “அசட்டுப் பெண்ணே!அவன் தைரியம் சொன்னானாம், என்னை எதிர்க்கும் தைரியம் எந்தப் பயலுக்கு உண்டு? தலையிலே கொம்பு முளைத்தவன் எவன் வருகிறான் பார்ப்போம் என்று முடுக்காகப் பேசினானாம். கதர்க்கடை ஐயர் சொன்னார். இவ்வளவு கர்வம் பிடித்தவனைத் தொலைத்துக் கட்டாமல் விடுவதில்லை. இதனாலே எதுபோனாலும் சரி எது வந்தாலும் சரிஎன்று தீர்மானித்துவிட்டேன். மேலும் நானோ காங்கிரஸ் கட்சி. என்னடி என்னைச் செய்ய முடியும்? பார், வேடிக்கையை,” என்று மிகவும் உற்சாகத்தோடு கூறினார். அன்றிரவு, போதைப்பானம் உட்கொள்ளும்போது, ரங்கனிடம் சொன்னார். “ரங்கா! இந்தக் காங்கிரஸ் சொல்கிற சகலவிஷயமும் எனக்குப் பிடித்தமாகத்தான் இருக்கிறது. ஆனா, இந்தத் தேவாமிருதத்தைச் சாப்பிடக் கூடாது என்று பேசுகிறார்களே, அது, எனக்குத் துளியும் பிடிக்கவில்லை!” என்றார். ரங்கன், “அதுகளுக்கு, இதன் சுவை தெரியாது” என்று கூறிக் கேலி செய்தான். அதுகள், இதுகள் என்று எந்தக் காங்கிரஸ்காரர்களை ரங்கன் கேலி செய்தானோ, அவர்களிலே சிலர், மறுநாள் மாலை, என் வீட்டுக்கு வந்தனர், கொடி ஏற்று விழா நடத்த. நான், “தாயின் மணிக்கொடி” பாடினேன். பலரும் புகழ்ந்தார்கள். கதர்க்கடை ஐயர் எழுதிக் கொடுத்திருந்தார் கொடியின் பெருமையைப் பற்றி. அதை இளையபூபதி கெம்பீரமாகப் படித்தார் - கொடியும் அழகாகப் பறந்தது. பலர் வீராவேசமாகப் பேசினார்கள். என்னையுமறியாமல் எனக்கே ஓர் வகை மகிழ்ச்சி பிறந்தது. நானே ரங்கனை அனுப்பி, கதர்ப்புடவை வாங்கி வரச் சொன்னேன் - கொஞ்சம் முரட்டு நூல்தான் - என்றாலும் அதையே நான் அணிந்து கொண்டேன் இளையபூபதிக்கு கதர்ச் சில்க்கில் ஜிப்பாவும் உயர்தரமான கதர்வேட்டியும் இருந்தன. சில நாட்களிலே, எங்கள் வீடுதான் காங்கிரஸ் ஆபீஸ். எலக்ஷன் நாள் நெருங்க, நெருங்க, எங்கள் வீடு, திருவிழாக் கோலமாகி விட்டது. ஒவ்வொருநாளும் பிரசங்கம், ஏதாவதோர் இடத்தில் - நான்தான் தேசியப் பாட்டுப் பாடுவது. சில ஊர்களிலே, இளைய பூபதியைக் கேலி செய்ய வேண்டு மென்பதற்காக உம்முடன் வருகிறபாட்டுப் பாடும் பேர்வழி யார்? என்றுகூடக் கேள்வி கேட்டார்கள். இளைய பூபதியோ, தைரியமாகச் சொன்னார். “தாசி விமலா - எனக்குச் சினேகிதை” என்று.அவர் அவ்வளவுதான் சொன்னார். மற்றப் பிரசங்கிகளோ, கேள்வி கேட்டவரின் சின்னபுத்தி, எனக்குள்ள சிறப்புகளை அவர்கள் அறியாது போனது என்பனவற்றைப் பற்றிச் சரமாரியாகப் பேசுவர். மாலை வேலைகளிலே பிரசங்கம் என்றால் காலையிலே ‘ஓட்’ போய் கேட்டுவிட்டு வந்த விஷயமாக விவாதம் நடைபெறும். எதிர்க்கட்சியின் போக்குகள் பற்றிய சர்ச்சைகள் அதிகமாக நடைபெறும். இளையபூபதியிடம் பணம் பெறுவதற்காகப் பலர் பலவிதமாகப் பேசுவார்கள். “கேட்டிங்களா, கந்தப்பன் சொல்றதை” என்று ஆரம்பிப்பார் கதர்க்கடை ஐயர்; இளையபூபதி, கந்தப்பனை நோக்கி, “என்னடா கந்தா?” என்று இரண்டு மூன்று தடவைகள் கேட்டு, அவன் “ஒன்றுமில்லிங்க - சும்மாவுங்க - பிரமாதமாக ஒன்றுமில்லிங்க - என்று இழுத்திழுத்தும் பேசியான பிறகு சொல்லுவான், “இறுப்பூர் பக்கத்து மணியக்காரு, மீனாட்சி சுந்தரம் இருக்கிறாரே, அவரைச் சரிப்படுத்தி விட்டேனுங்க. இனி அவர் நம்ம கட்சி” என்பான். அவன் கூறுவது போதாதது என்று கதர்க்கடை ஐயர், அதே விஷயத்தை, வர்ண வேலைப் பாடுகளுடன் விவரிப்பார். “அந்த மணியக்காரனைத்தான், உம்ம எதிரி, மலை போல நம்பிக் கொண்டிருந்தான். உள்ளபடியே, மணியக்காரனுக்கு அந்தப் பக்கத்திலே, நல்ல செல்வாக்கு. பய, இரண்டு மூன்று கொலை செய்து கூட இருக்கான் - ஒரு சாட்சிகூடக் கிடைக்கலே, அவன் செல்வாக்காலே ஒரு ஆறாயிரத்துச் சொச்சம் ஓட்டுகளாவது, அந்தப் பக்கம் போயிருக்கும். நம்ம கந்தப்பன், பார்த்தா இப்படி பித்துக்குளி மாதிரி இருக்கான். ஆனா, எப்படியோ மணியக்காரனை, மடக்கிச் சரிப்படுத்தி விட்டிருக்கான். அவன் இப்போ, கிராமம் கிராமமாகப் போய், மஞ்சப்பெட்டி, மஞ்சப்பெட்டின்னு பேசுகிறானாம்” என்று ஐயர் சொல்லிவிட்டு, “கந்தா! என்னதான் செய்தே? சொல்லு!” என்று கேட்பார். அப்போதுதான் சூட்சமம் வெளிவரும், “ஒண்ணுமில்லைங்க. மணியக்காரரு, ஜமீன்தாரரிடம் ஒரு ஆயிரத்து ஐந்நூறு கடன் வாங்கியிருக்கான். எனக்கு இது தெரியும். அதனாலே ஒரு நாள், மணியக்காரரிடம் போயி, ஆழம் பார்த்தேன். மணியக்காரன் ரொம்ப ரோஷக்காரனுங்க, பார்த்தேன். ஒரு போடு போட்டேன். “மணியக்காரரே! நீங்க என்னமோ, ஜமீன்தாரரு, பழைய சினேகிதமாச்சே, பரம்பரைப் பணக்காரராச்சே, நாலு நல்லது செய்தவராச்சேன்னு அவருக்காகப் பாடு படுறிங்க, ஆனா அந்த ஆள், உங்களைக் குறித்து என்ன பேசறான்னு தெரியுமா? மணியக்காரன், என் பக்கம் வேலை செய்யாமலிருக்க முடியுமா? கடன்பட்ட கழுதை, காலைக் கையைப் பிடித்துக் கொண்டு கிடடான்னா கூடச் செய்ய வேண்டியதுதானே என்று சொல்கிறாரு” - என்று தூபம் போட்டேன். மணியக்காரனுக்குப் பிரமாதமான கோபம் வந்து விட்டது. “அடபாதகா! இப்படியா சொன்னான். ஆகட்டும் அவனை ஒழிச்சுவிட்டு மறு வேலை பார்க்கிறேன். இந்தப் பக்கம் வரட்டும், ஓட்டுக் கேட்க!” என்று கொக்கரித்தான். பிறகு, நான் சமாதானம் சொல்லி, “ஆத்திரப்பட்டு வெளியே ஏன் மணியக்காரரே கூவிடணும்! பொட்டியிலே, காட்டுங்களேன் உங்க வேலையை” என்று சொல்லி நம்ம கட்சிக்குத் திருப்பினேன். ஒப்புக் கொண்டாரு - குழந்தை மேலே கூடச் சாட்சி வைத்தாரு - நானும், அந்த ஆயிரத்து ஐந்நூறை வாங்கித் தந்துவிடுகிறேன், ஒரு பத்து நாள் போகட்டும்னு சொல்லிவிட்டு வந்தேன்” என்று விரிவாகக் கூறுவான். பிறகு, இளையபூபதி யிடமிருந்து ஆயிரத்து ஐந்நூறு வெளியேறும். அவனைச் சரிப்படுத்தி விட்டேன். இவனுக்கு இன்னது தருவதாகச் சொன்னேன் என்ற செய்திகள் வந்த வண்ணமிருக்கும். இடையிடையே, ரங்கன் இன்ன ஆசாமியுடைய மண்டையைப் பிளந்து விட்டான் என்று சேதி வந்தபடி இருக்கும். இளைய பூபதிக்கு இந்தச் செலவு வேறு! இந்நிலையில் எலக்ஷனுக்கு ஒரு வாரம் இருக்கும் போது, கதர்க்கடை ஐயர், ஒரு குண்டு வீசினார் - எங்கள் குடும்பம் மீண்டும் கலகலத்துப் போனதற்குக் காரணம் அதுதான். ‘ஜமீன் தார்வாள் ஒழித்துவிட்டேன் உம்ம எதிரியை! தொலைஞ்சான்! இனி வெளியே தலை நீட்ட முடியாது” என்று உற்சாகமாகக் கூறிக்கொண்டே, ஒரு காகிதத்தை இளையபூபதியிடம் கொடுத் தார். நான் பக்கத்திலே இருந்தேன். இருவரும் ஆவலுடன், அந்தக் காகிதத்தில் எழுதப்பட்டிருந்ததைப் படித்தோம். மோசக்காரன் நம்பாதீர். ஜமீன்தார், ஊருக்குப் பெரியவர், உத்தமர், தருமப் பிரபு என்றெல்லாம் பசப்பித் திரியும் பேர்வழி எலக்ஷனுக்கு நிற்கிறார். இவருடைய சுயரூபம், மகா ஜனங்களுக்குத் தெரியாது. ஆகவே நான் தெரியப்படுத்துகிறேன். இந்த ஆசாமி, என்னுடன் பத்து வருஷ காலமாக சினேகமாக இருந்து வந்தார்.  பிறகு அனாவசியமாக என்னைக் கண்டபடி ஏசி, வெளியே சென்றதுடன், என்னை மிரட்டியும், என் குடும்பத்தை மிரட்டியும், பொய்க் கேஸ்கள் ஜோடித்தும், எங்களைப் பல வழிகளில் நாசமாக்கியதுடன் என் நகைகளை இரவல் கேட்டு வாங்கிக் கொண்டு போய், திருப்பித் தராமல் ‘வாயில் போட்டுக் கொண்டான்.” இப்படிப்பட்ட மோசக்காரனுக்கு, ஓட்டுப் போடுவது, மஹா பாபம். கோஹத்தி, சிசுஹத்தி போன்ற பாதகமாகும். மகா ஜனங்களே! என்மீது இவ்வளவு ஆத்திரப்பட்டு, இவ்வளவு கொடுமையும் ஜமீன்தார் செய்ததற்குக் காரணம் என்ன தெரியுமா? சொல்கிறேன் கேளுங்கள். எனக்கு எப்போதுமே காந்தி மகாத்மாவிடம் பக்தி உண்டு. ஒரு நாள், நான் ஒரு பெரிய, அழகான மகாத்மா காந்தி படம் வாங்கிவந்து, மாலையிட்டு, நடுக் கூடத்தில் தொங்கவிட்டிருந்தேன். ஜமீன் தாரர், அந்தப் படத்தைக் கண்டதும், கடும்கோபம் கொண்டு, மகாத்மாவை ஏதேதோ இழிவாக, சொல்லத் தகாத வார்த்தை களைச் சொல்லி ஏசி, படத்தை எடுத்துவிடு என்று கட்டளை யிட்டார். நான் எவ்வளவோ தடுத்துப் பார்த்தேன். கெஞ்சிப் பார்த்தேன். முரட்டுப் பிடிவாதம் செய்தார். எனக்குக் கோபம் வந்து விட்டது. நான், என் உயிர் போனாலும், மகாத்மாவின் படத்தை மட்டும் எடுக்க விடமாட்டேன் என்று சொன்னேன். மகா ஜனங்களே! பாவி, உடனே என்னைப் பிடித்துக் கீழே தள்ளிவிட்டு, மகாத்மாவின் படத்தை எடுத்துக் கீழேபோட்டு, தூள்தூளாக உடைத்தான். இதுதான் எங்களுக்குள் விரோதம் உண்டான காரணம். மகாத்மாவின் படத்தை உடைத்த மகா பாவிக்கு மகாஜனங்கள் மறந்தும் ஒரு ‘ஓட்டு’கூடத் தரக்கூடாது. இப்படிக்கு தாசி கமலா கதர்க்கடை ஐயரின் இந்தக் காகிதத்குண்டு கண்டு, இளையபூபதி சந்தோஷத்தால் ஒரு துள்ளுத் துள்ளினார். இளைய பூபதி இதை உரத்தகுரலில் படித்துக் கொண்டிருந்ததைக் கேட்டுக் கொண்டிருந்த, என் அக்கா சரேலென வெளியே வந்து, இளையபூபதியைக் கும்பிட்டு விட்டு, “இந்த நோட்டீஸ் போடப் போகிறீர்களா?” - என்று கேட்டாள். ஐயர், “ஆமாம்! கமலா! உன் கையெழுத்தையும் போட்டோ எடுத்து இந்த நோட்டீஸ் ஒரு இருபதினாயிரம் போட்டு ஊரெங்கும் வீசப் போகிறோம் - ஒழிந்தான் இதோடு” என்று கூறினார். என் அக்கா சாந்தமாக, ஆனால் உறுதியுடன், “இதை நான் அனுமதிக்க முடியாது. இதற்குச் சம்மதிக்க முடியாது” என்று கூறினாள். அப்போ இளையபூபதி எங்களைப் பார்த்த பார்வை, அப்பப்பா, இப்போது எண்ணிக் கொண்டாலும் நடுக்கம் பிறக்கிறது; அவ்விதம் இருந்தது அந்தப்பார்வை. எங்கள் குடும்பத்தைக் கெடுக்கும் நெருப்பைக் கக்கிற்று.            பகுதி - 13   அக்காவின் பேச்சைக் கேட்டு இளையபூபதி கடுங்கோபம் கொண்டதிலே ஆச்சரியப்படுவதற் கில்லை. ஏராளமான பணச்செலவு அவருக்கு; அந்தப் பக்கத்திலேயே, செல்வாக்கு யாருக்கு; அவருக்கா? அல்லது பழைய ஜமீன்தாரருக்கா? என்பதுதான், பேச்சாக இருந்தது; போட்டி பலம்; இந்த நிலையில், பழைய ஜமீன்தாரரின் செல்வாக்கைச் சிதைக்கக் கூடிய ஒரு ஏற்பாட்டுக்கு, என் அக்கா முட்டுக்கட்டைப் போட்டால் இளையபூபதிக்குக் கோபம் வராமலிருக்குமா! அக்காவின் போக்கு எனக்கும் ஆச்சரியமாகவே இருந்தது. எங்கள் குடும்பத்தைக் கெடுத்து, அக்காவின் வாழ்வையே பாழக்கின பழைய ஜமீன்தாரர்மீது எந்தவிதமான பழி சுமத்தினாலும் தகும்; அவருடைய மன நிம்மதியைக் கெடுக்க என்ன செய்தாலும் நல்லதுதானே. ஊரார் கேவலமாகப் பேசும் படி அக்காவின் நிலைமையைக் கெடுத்தவருக்கு இந்தச் சமயத்திலே, இழிவும், பழியும் ஏளனமும் எதிர்ப்பும் கிளம்பட்டுமே; அவர் எவ்வளவு பெரிய சீமானாக இருந்த போதிலும், அவருடைய மனதுக்கு வேதனைதர, எங்களாலும் முடியும் என்பதை அவர் உணரட்டுமே! அக்கா ஏன், இதைத் தடுக்க வேண்டும்! - என்று எண்ணினேன். உண்மையில் எனக்கும் கோபம் வந்தது. இளையபூபதி அதிகமாக ஒன்றும் பேசவில்லை. அவருடைய கோபம், பேசக் கூட முடியாதபடி அவரைச் செய்து விட்டது. கண்கள் சிவந்து விட்டன. இதேதடா புதிய ஆபத்து என்று நான் பயப்படத் தொடங்கினேன். விஷய மறியாமல் அக்கா, வீண் பிடிவாதம் செய்கிறாள். அவளுக்கு விளக்கமாகக் காரணங்களைக் கூறினால், சம்மதிப்பாள் என்று எண்ணி நான், நிலைமையைத் தெளிவுபடுத்தி,“அக்கா! பச்சாதாபப்படுகிறாயா அந்தப் பாவிக்கு! நமது குடும்பத்தை நாலாவழியிலும் கெடுத்தவருக்கு, உன் மனதிலே எள்ளளவும் கருணையும் கொள்ளாதே வம்புகள் எவ்வளவு! வழக்கு எவ்வளவு! ஊர்க்காலிகளை ஏவிவிட்டு நமக்கு எவ்வளவு தொல்லைகள் கொடுத்தார். நமக்கென்று கொடுத்த நிலபுலத்தைக்கூட, கேஸ் ஜோடித்து அபகரித்துக் கொண்ட அந்த ஆசாமிக்குப் பாடம் கற்பிக்க இது சரியான தருணம். பைத்யக் காரத்தனமாக, பழைய பாசத்தை எண்ணிக் கொண்டு, பிடிவாதம் செய்யாதே” என்று கூறினேன். நான் விளக்கமாகக் கூறக்கூற, அக்காவின் கண்களிலே நீர் தாரைதாரையாக வந்ததே தவிர, எங்கள் ஏற்பாட்டுக்குக் சம்மதிப்பதாக ஒரு வார்த்தை வரவில்லை. “பன்னிப்பன்னிக் கேட்கவேண்டாம் விமலா! முடியுமா முடியாதா? என்று ஒரே பேச்சாகக் கேட்டுவிடு, கடைசி முறையாக,” என்று இளையபூபதி கர்ஜித்தார். ஐயர் பேசினார். “ஜமீன்தார்வாள்! ஆயிரம தடவை கேட்டாலும் விமலா பத்தாயிரம் தடவை கெஞ்சினாலும், கமலா நமது ஏற்பாட்டுக்கு சம்மதிக்கவே மாட்டாள். என்ன இருந்தாலும் நாமெலல்õம் சாதாரண ‘மனுஷர்’ தானே! திரிபுரசுந்தரி சாட்சியாக, உமக்கு ஒரு கெடுதியும், துரோகமும் நான் செய்யமாட்டேன் என்று கோயிலிலே, சத்யம் செய்து கொடுத்திருக்காளே கமலா, எப்படி அதை மீறுவாள்” என்றார். நாங்கள் திகைத்துப் போனோம். இளையபூபதி, என்னய்யா இது, ஏதேதோ பேசுகிறாய்! - என்று சற்று எரிச்சலுடன் கேட்டார். அவளையே கேளுங்களேன் - என்று ஐயர் குறும்பாகக் கூறிவிட்டு ஜமீன்தார்வாளுக்கு, துரோகம் செய்கிறாள் இவள், என்பதை விளக்குவதற்குத்தான் இந்த நோட்டீஸ் போட வேண்டும் என்ற பேச்சை எடுத்தேனே தவிர, நாம் ஜெயமடைவதற்கு, இது தேவையுமில்லை என்று கூறிக் கொண்டே, நோடீசைக் கிழித்தெறிந்து விட்டு, “எனக்குச் சில தினங்களாகச் சந்தேகம்; நமது எலக்ஷன் இரகசியங்கள், எதிரிக்கு எப்படியோ தெரிந்து, அவன் ஒவ்வொன்றுக்கும் ஒரு மாற்றுப் போட்டுக் கொண்டே வருவதைக் கண்டேன், எப்படி யடா இங்கிருந்து விஷயம் வெளியே போகிறது என்று யோசித்தேன், யோசித்தேன் கொஞ்சத்திலே உண்மை துலங்க வில்லை. கடைசியில் கண்டுபிடித்தேன். கமலாவையே பழைய ஜெமீன்தார் இங்கு உளவாளியாக்கிக் கொண்டிருக்கிறார் என்ற உண்மை தெரிந்தது. பழைய சினேகமல்லவா! மேலும், தங்கை இவ்வளவு நல்ல நிலைமையில் இருப்பதும், அவளுடைய தயவில் தான் வாழ்வதும் எப்படிப் பிடிக்கும்! இந்தக் காரியம் செய்து, பழையபடி ஜமீன்தாரரின் சினேகிதத்தைப் பெற்று, ஜொலிக்கலாம், என்று சபலம் தட்டி விட்டது. இலேசாக, விஷயம் எனக்கு எட்டிற்று. சரி, என்று ஒரு ஆளை இந்த விஷய மாகக் கவனிக்கும்படி, ஏற்பாடு செய்தேன் - பிறகுதான் முழு விவரமும், கமலா செய்கிற துரோகமும் தெரியவந்தது. நேற்று மாலை, திரிபுர சுந்தரி கோயிலில் ஜமீன்தாரரை இவள் சந்தித் திருக்கிறாள். பிரகாரத்தில் நின்று கொண்டு இருவரும் இதெல்லாம் நமது காலவித்யாசம் என்று கூறிக் கொண்டார்களாம். கடைசியில் திரிபுரசுந்தரி சாட்சியாக, நான் உங்களுக்கு கேடோ, துரோகமோ செய்வதில்லை என்று இந்தப் பத்தினி, அந்த உத்தமனுக்குச் சத்தியம் செய்து தந்தாளாம். இதைத் தெரிந்த பிறகே, இப்படி ஒரு நோட்டீஸ் போட வேண்டுமென்று கேட்போம், அப்போது இவளுடைய குட்டு தானாக வெளிப் பட்டுவிடுகிறது,பார்ப்போம் என்று ஒரு யுக்தி செய்தேன். நான் நினைத்தபடியே இருக்கிறது” என்று விஸ்தாரமாகக் கூறி முடித்தார். இளையபூபதிக்குக் கோபம் ஜுர வேகத்தில் ஏறிற்று. சகஜந்தானே. எனக்கும் கடுமையான கோபம். என் ஆத்திரத்தில் நான் கண்டபடி அக்காவைத் திட்டிவிட்டு, “யாருடைய தயவிலே இப்போது நீ ஒரு ‘மனுஷியாக’ வாழ்கிறாயோ, அவருக்கே துரோகம் செய்து கொண்டிருக்கிறாய், உன் முகத்தில் விழிப்பதே பாபம். ரோஷ மானமிருந்தால், அரை க்ஷணம், இங்கு இருக்கலாமா நீ. நீதான் மானங்கெட்டு இங்கு இருந்தாலும், நான் எப்படி இருப்பேன்” என்று ஆவேசமாடினேன். அக்காவின் கண்களிலிருந்து நீர் வழிந்தது. இப்போது எண்ணிக் கொண்டால் என் மனம் பதறுகிறது; ஆனால் அப்போது கண்ணீருக்குப் பதில் இரத்தமே வழிந்தாலும் சரி என்று எண்ணினேன். அக்கா அதிகமாகப் பேசவில்லை. “விமலா! என் வாழ்க்கையிலே, இப்படிப்பட்ட இடி விழுவது சகஜமாகி விட்டது. ஒவ்வொரு சமயமும், ஏதாவதொரு சந்தேகம் என் மீது எழுகிறது. நான் கள்ளி என்றும் துரோகி என்றும் தூற்றப்படுகிறேன். வீணான பழிகளைச் சுமந்து திரிகிறேன். பூமிக்குப் பாரமாய், ஊரே என்னைக் கேவலமாகப் பேசினபோதும், ஜமீன்தார் என்னைக் கொடுமை செய்தபோதும், என் மனம் இன்று அடைகிற அளவு வேதனை அடையவில்லை. உன் பேச்சுத்தான், என்னைச் சாகடிக்கும் கடைசி விஷச்சொட்டு, விமலா என் மீது பலமான பழியை ஐயர் சுமத்திவிட்டார். பாபம்! அவர்மீது தவறு இல்லை. அவருக்குக் கோபம் வந்ததும் சகஜம். என் மீது பழி தீர்த்துக் கொள்ளச் சமயம் பார்த்துக் கொண்டிருந்தார் - கிடைத்தது - ஜெயமடைந்தார். என் நேசத்தைப் பெறுவதற்கு அவர் செய்த முயற்சியில் ஜெயம் அடைந் திருந்தால், இப்போது அவர் என்னைக் கெடுக்க, இவ்வளவு பாடுபட வேண்டிய அவசியமே இராது” - என்று பேசிக் கொண்டே இருக்கையில், ஐயர் “சர்வேஸ்வரா! பெண்களுக்கு, இது சர்வசாதாரணமான ஆயுதமாகி விடுகிறதே, தங்கள் குற்றத்தை மறைக்க மகா சாமர்த்தியமாக, அவன் என்னைக் கெடுக்கப் பார்த்தான், நான் இணங்கவில்லை. ஆகவே என் மீது பழி சுமத்துகிறான் - என்று பேசிவிடுகிறார்கள். பெரும்பாலும் அறிவுத் தெளிவு இல்லாதவர் நம்பவும் செய்கிறார்! ஜமீன்தார்வாள்! எனக்குக் கிஞ்சித்தேனும், அந்த மாதிரி சபலம் உண்டானது கிடையாது. வீண் பழி, அவ்வளவு தான் நான் சொல்ல முடியும்” என்று சற்றுச் சோகமாகக் கூறினார். இளையபூபதி “இருக்கட்டுமே ஐயர், நீ, என்ன இவளை இச்சித்தால் தவறா! இவள் என்ன மகாராணியோ!” என்று வெறுப்பும் அலட்சியமும் கலந்த குரலில் பேசினார். இந்தப் பேச்சுக்கு ஒரு பதிலும் தராமலேயே அக்கா, தன் பேச்சைத் தொடங்கினாள். “விமலா! என் பழைய வாழ்வு பாழாகிவிட்ட பிறகு, உனக்கே தெரியும். நான் கூட்டம் அதிகம் சேருகிற கோயிலுக்குப் போவதில்லை என்பது. திரிபுரசுந்தரி கோயிலில் கூட்டம் வருவது கிடையாதல்லவா; அதனாலே தான் அங்கு சென்றேன் - நேற்று தற்செயலாகத்தான் ஜமீன்தாரரை அங்கு பார்த்தேன் - அவரும் அங்கு எலக்ஷன் சம்பந்தமாகக் கோயிலில் அர்ச்சகரைக் காணவே வந்திருந்தார். நாங்கள் பேசினது உண்மை. நான் அவருக்குக் கெடுதல் செய்வதில்லை, துரோகம் செய்வதில்லை என்று சத்தியம் செய்து தந்ததும் உண்மை. கோயில் அர்ச்சகர் எங்கள் பேச்சைக் கேட்டுக் கொண்டுதான் இருந்தார். அவர் சொல்லித்தான் இவருக்கும் இந்த விஷயம் தெரிந்திருக்கும். ஆனால், நான் இளையபூபதிக்குத் துரோகம் செய்ய எண்ணினது மில்லை, இந்த எலக்ஷன் விஷயமாக, இங்கு நடைபெறும் எந்த ஏற்பாட்டையும் நான் கவனித்ததுமில்லை, நான் கஷ்டகாலத்தை எண்ணிக் கவலைப்பட்டுக் கொண்டிருக்கும் நிலையில், எனக்கு இதுதானாம்மா வேலை, எலக்ஷன் இரகசியத்தை உளவறிந்து வெளியே கூற, எப்படியோ ஐயருக்குச் சமயம் கிடைத்தது. உன் மனதிலே, என்னைப் பற்றி எவ்வளவு கேவலமாக எண்ணிக் கொண்டிருக்கிறாய் என்பது தெரிய ஒரு சந்தர்ப்பம் கிடைத்தது. துரோகி என்று, எப்போது என் மீது உங்களுக்குச் சந்தேகம் ஏற்பட்டதோ, இனி, இங்கு நான் இருக்கக் கூடாது. நீங்கள் நிம்மதியாக வாழ்வது, என்னால் கெடுவானேன். நான் போகிறேன் - உலகம் ரொம்பப் பெரியது அம்மா - அனாதைகள் கூடப் பிழைக்கிறார்கள் - அதுவும் முடியாவிட்டால், ஆழமான ஆறு கிணறு குளம் ஏராளம்” என்று கூறிவிட்டு, வீட்டை விட்டுச் சென்றாள். அம்மா, இப்படியும் பேச முடியாமல், அப்படியும் பேச முடியாமல் திணறினார்கள். சில நாட்களுக்குப் பிறகு, அக்கா, தானாக வந்துவிடுவாள் என்றுதான் நான் எண்ணிக் கொண்டிருந் தேன். எங்களுக்குத் தூரபந்து ஒருவள் - அவள் வீட்டிலே - பக்கத்து ஊர் - அக்கா தங்கியிருப்பதாக் கேள்விப் பட்டேன். எலக்ஷன் முடிந்தபிறகு, நாமே நேரில் போய், ஏதோ இரண்டு சமாதானம் கூறி அழைத்துக் கொண்டு வரலாம் என்று தைரியாம கத்தான் இருந்தேன். எலக்ஷன் வேலையோ மும்முரமாகி விட்டது. நாள் நெருங்க நெருங்க, செலவு அதிகரித்தது. “குன்றூராருடைய, தேசபக்தியைப் பாருங்கள் - ஒரு பைசாக்கூட உங்களுக்குச் செலவு வைக்க மாட்டேன். என் பணமேதான் செலவிடுவேன். இது தேச சேவைக்கான காரியமல்லவா? இதற்குச் செலவாகாத பணம், வேறு எதற்கு? என்று பேசுகிறார்” - என்று எலக்ஷனுக்குப் பத்து நாட்களுக்கு முன்பு புகழ்ந்து பேசினவரைப் பற்றி, எலக்ஷன் நாலு நாட்கள் இருக்கும்போது, “குன்றூரார் விஷயம் கொஞ்சம் சந்தேகமா யிட்டுது. அவருடைய மருமகன், எதிர்க்கட்சிக்கு வேண்டிய வனாம், மருமகனுக்கு விரோதமாகப் போக முடியாதென்று பேசுகிறார். மேலும், கொஞ்சம் பணத்தையும தெளித்து விட்டிருப்பார்கள் போலிருக்கிறது. வேறு யோசனை செய்து பயனில்லை என்று, ஒரு இருபது பச்சை நோட்டு குன்றூராரிடமும், ஒரு பத்து, மருமகனிடமும் தள்ளி, பாண்டுரங்க ஸ்வாமி கோயிலிலே, கொண்டு போய் சத்யம் வாங்கி விட்டேன்” என்று பேசினார். “ஆறும் நாலும் பத்து - சாந்தூர் வட்டத்திலே பத்தாயிரம் ஓட்டு நமக்குத்தான், சந்தேகமே வேண்டாம்,” என்ற தைரியமான பேச்சு எலக்ஷனுக்கு நாலு நாட்களுக்கு முன்பு வரையில் இருந்தது. பிறகோ, “ஆறிலே ஒரு இரண்டு உதைத்துக் கொள்ளும் போலிருக்கு - நாலுன்னு போட்ட கணக்குச் சரிப்பட்டு வராது, அங்கே ‘ஒண்ணு’ தேறுவதே கஷ்டம்” என்று பேச்சுமாறி, ஒரு நாலு ஆயிரத்தைச் செலவிட்டால்தான் முதலில் போட்ட ‘புள்ளி’ சயின்படி நடக்கும் என்று பேசினர். பல வழிகளிலும் செலவுதான் - தொல்லைதான் - இவ்வளவும் போதாதென்று, எலக்ஷனுக்கு இரண்டு நாட்களுக்கு முன்பு நடைபெற்ற கூட்டத்திலே ஒருபிரசங்கி, இளையபூபதிக்கு ‘எக்கச்சக்கமான’ நிலைமையை ஏற்படுத்தி விட்டான், அவன் காங்கிரசிலேயே, என்னமோ தீவிரவாதியாம்! ஜனங்களுடைய மனதிலே உற்சாகமூட்டக் கூடிய பெரிய பிரசங்கி என்று சொல்லி, தந்தி மேல் தந்தி அடித்து, வரவழைத்தார்கள் அவன் வந்தபோதே, ஒரு மாதிரியான ஆசாமி என்று எனக்குப்பட்டது. எத்தனையோ பிரசங்கிகள் அதுவரையில் வந்திருக்கிறார்கள் - எல்லோரும் நேரே என் வீட்டிற்குத்தான் வருவார்கள்; ஸ்டேஷனுக்கு ஐயர் போவார். அழைத்து வருவார். இதுதான் வாடிக்கையாக நடந்து வந்தது. இந்தப் பிரசங்கியை அழைத்து வர ஸ்டேஷன் சென்றிருந்த ஐயர், தனியாக வீடு வந்தார். “ஏனய்யா! ஆசாமி, வரவில்லையோ?” என்று இளையபூபதி கேட்டார். ஐயர், புன்சிரிப்புடன், ஆனால் குறும்புத்தனமாக, “வந்துவிட்டார், காங்கிரஸ் ஆபீசிலேயே தங்குவதாகச் சொல்லி விட்டார்” என்றார். எனக்குக் கோபம் இளையபூபதி, “கிராக்கா அந்த ஆசாமி” என்று கேலியாகக் கேட்டார். “நமக்கு எப்படியிருந்தால் என்ன! காரியம் ஆகவேண்டும்.” என்று கூறி விட்டு, “பாரதப் பிரசங்கி பார்த்தசாரதி ஐயங்காரும் வந்திருக் கிறார் - அவரையும் இன்று, நம்ம கூட்டத்திலே பேசச் சொல்லி யிருக்கிறேன்” என்றார். அன்று மாலைக் கூட்டம், அமளியில் முடியாதது, எங்களிடம் ஆள் அம்பு ஏராளமாக இருந்ததால்தான். எலக்ஷன் பிரசாரக் கூட்டம் கடைசியில் தர்க்கமாக முடிந்தது - தலை உருளுமோ என்று நாங்களெல்லாம் பயப்படும்படியாகி விட்டது. தேசியப் பாட்டுகள் பாடி, தலைமை வகித்த கதர்க்கடை மானேஜர், பேசியான பிறகு, முதலிலே, பாரதப் பிரசங்கி பார்த்தசாரதி ஐயங்காரைப் பேசச் சொன்னார்கள்! அவரும், ஆனந்தமாக ஒப்புக் கொண்டார். அவர் பேச எழுந்ததுமே, புதிய பிரசங்கிக்கு, அவர் பெயரைச் சொல்லவே இல்லையே, முத்துராமலிங்கமாம். முகம் கடுகடுத்தது. தக்ளியை எடுத்துச் சுற்றிக் கொண்டிருந்தார். பாரதப் பிரசங்கி, இதைக் கண்டு, எப்படி ரசிக்க முடியும். ஆணும் பெண்ணுமாக, அர்த்த ராத்திரியில் ஆயிரக்கணக்கானவர்கள் கூடி, அவருடைய பாரதப் பிரங்கத்தைக் கேட்பது வழக்கமாம். அப்படிப்பட்டவருடைய பிரங்கத்தை அலட்சியமாகக் கருதி, முத்துராமலிங்கர், தக்ளியை எடுத்ததும், ஐயங்காருக்குக் கோபம் பிறந்தது. கிண்டலாகப் பேச ஆரம்பித்தார்! பகவான் கிருஷ்ண பரமாத்மாவின் கையிலே பாஞ்ச சன்யம் என்னும் சங்கு இருந்ததல்லவா, அதுபோல, நமது இளம் பிரசங்கியார் கரத்திலே, ‘தக்ளி’ இருக்கிறது! என்றார். ஜனங்கள், கைகொட்டிச் சிரித்தனர். அந்தப் பிரசங்கியோ, கோபிக்கவுமில்லை, வெட்கப்படவுமில்லை, தக்ளியை எடுத்து மறைத்து விடவுமில்லை, சாவதானமாக நூற்றுக் கொண்டிருந்தார். பாரதப் பிரசங்கி, பாரதத்தையே சொல்லிவிடுவார் போலிருந்தது - எலக்ஷனை மறந்து, துரோபதை துயிலுரிந்தது, அரக்கு மாளிகை கட்டியது, சகுனியின் சாகசம், முதலியவற்றைப் பற்றி விஸ்வாராமாகப் பேசினார். இடையிடையே, இனி நமது இளையபூபதி அவர்கள் எலக்ஷனுக்கு நின்றிருக்கும் விஷயமாகச் சில வார்த்தைகள் பேசுகிறேன் - என்று கூறுவார் - ஆனால் பழையபடி, பாரதமேதான் பேசுவார். எலக்ஷன் சமய மல்லவா! எதிர்க்கட்சிக் கூட்டத்திலே பேசினதற்கு, என்ன பதில் கூறுகிறார்கள், பார்ப்போம் என்று ஆவலோடு வந்திருந்தனர். ஏராளமானவர்கள், அவர்களிடம், அர்ஜுனன் தவம், சகாதேவன் பதிகம் என்று இப்படியே பேசினால், எப்படிப் பொறுமையாகக் கேட்டுக் கொண்டிருக்க முடியும். ஜனங்கள் கனைத்தும், இருமியும், கை தட்டியும், பிரசங்கத்தை முடித்துக் கொள்ளும்படி ஜாடை காட்டியனார்கள். பாரதப் பிரசங்கி இந்தச் சூட்சமத்தைப் புரிந்து கொள்ளவே கொஞ்சம் நேரம் பிடித்தது. கடைசியில் இனி முடியாது என்று கண்டு கொண்டு, பிரசங்கத்தை முடிக்கத் தொடங்கி, “மகா ஜனங்களே! புண்ய பூமியாம் நமது பாரத பூமியில், பண்டைய நாட்களிலே இருந்து வந்த தானம், தர்மம், யோகம், யாகம், தவம், ஜெபம், ஆலயம், அபிஷேகம், சனாதனம், சாத்வீகம் முதலான சிறந்த முறைகள், கேவலம், நீசராகிய, வெள்ளைக்காரன் இங்கே வந்ததால் நாசமாகி ஜன சமூகத்திலே, நவநாகரீகம் எனும் மோகம் புகுந்து, பக்தி மார்க்கம் பாழாகி, ஆச்சாரம் அழிந்து, மதாச்சாரம் சதாச்சாரம் யாவும் கெட்டு, வர்ணாஸ்ரமத்தையே கைவிட்டு, மக்கள் நீ என்ன உயர்வு? நான் என்ன மட்டம்? என்று பேசும் அளவுக்கு, நாஸ்தீகர்களாகவுமாகி விட்டனர். நாட்டுக்குச் சுயராஜ்யம் வந்தால், இந்தச் சர்வநாசத்திலிருந்து நாம் தப்ப முடியும். நமது பூர்வீகப் பெருமையை, மறுபடியும் நிலை நாட்டிய, மதம் கெடாமலும், ஜாதி ஆச்சாரம் பாழாகாமலும் பார்த்துக் கொள்ளலாம். பசுவும் புலியும் ஒரே துறையில் தண்ணீர் குடித்தது, இந்தப் பாரத பூமியிலேதான்! பத்தினியிடம் யமதர் மனே தோற்றது, இந்தப் பாரத பூமியில்தான்! நாலுவேதம், ஆறு சாஸ்திரம், அறுபத்தெட்டுக் கலைஞானம் இருப்பது, இந்தப் பாரத பூமியில்தான்! - என்று, பஜனையே பாடத் தொடங்கினார். பலமான, கை தட்டுதலுக்குப் பிறகு, பிரசங்கியைத் தலைவர் வற்புறுத்தி உட்காரவைத்து விட்டு, முத்துராமலிங்கனாரைப் பேசச் சொன்னார். ஆரம்பமே வேகமாக இருந்தது. “மகாஜனங்களே! நான் பாரதப் பிரசங்கியல்ல - பாரத மாதாவின் சேவகன்!” என்று கூறினார் - உடனே மக்கள் சந்தோஷ ஆரவாரம் செய்தனர். பாரதப் பிரசங்கியின் முகத்திலே அசடு தட்ட ஆரம்பித்தது. “பாரதக் கதையைக் கூறி, அதிலே இருந்து, பல உதாரணங்களைக் காட்டி, ஐயங்கார் பேசினார் - நான் அப்படிச் செய்யப்போவதில்லை - பாரதம் தெரியாததால் அல்ல - இந்தக் காலத்துக்குப் பாரதம் தேவையில்லை ஆதலால்.” மீண்டும் சந்தோஷ ஆரவாரம் கிளம்பிற்று. “பாரதத்தை மறந்துவிடுங்கள். பாரதம், குடும்பச் சண்டை. அது கூடவே கூடாது. பாண்டவரும் கௌரவரும் சண்டையிட்டுப் பாரதநாட்டைப் படுகளமாக்கினர். குருக்ஷேத்திர மனப்பான்மை கூடாது. நமக்குள் தாயாதிச் சண்டை ஏற்படக் கூடாது, ஏற்படாதிருக்க வேண்டுமானால், நாம் பாரதத்தை மறக்க வேண்டும். மேலும், பாரதத்திலே கூறி இருக்கிற, எதையும் நாம் இந்தக் காலத்தில் காணவும் முடியாது. நடைமுறைக்குக் கொண்டு வரவும் முடியாது - ஐவருக்குப் பத்தினி - பத்தினியை வைத்துச் சூதாடுவது - ஒவ்வொரு தேசத்துக்குப் போகும் போதும் அர்ஜுனன் ஒவ்வொரு கன்னியை மணம் செய்து கொள்வது - சூரியனை மறையச் செய்வது - இவைகளெல்லாம் நம்மால் முடியுமா, நமக்குத் தேவையா? நாம் ஏன் நமக்குத் தேவையற்ற அந்தப் பாட்டி கதைகளைக் கேட்டுக் கொண்டு காலத்தை வீணாக்க வேண்டும். இதற்கு, மிகப்பெரிய சந்தோஷ ஆரவாரம் கிளம்பிற்று. அதேபோது பாரதப் பிரசங்கிக்குக் கோபம் பிரமாதமாகி , எழுந்து நின்று. “பாரதத்தைக் கேவலமாகப் பேசுகிற இந்த வாலிபரின் வாயை அடக்க, ஒரு பத்து நிமிஷம் அவகாசம் தரவேண்டும்” என்று, தலைவரைக் கேட்டார். “உட்கார்! உட்கார்” என்று ஜனங்கள் கூச்சலிடலாயினர். சிலர், “பெரியவர், பாபம். ஏதோ பேசட்டுமே” என்றனர். குழப்பத்தை அடக்க, முத்துராமன், ஒரு நகைச் சுவையை வீசினார். “மகா ஜனங்களே! அவர், பசுவும் புலியும் ஒரே துறையில் தண்ணீர் குடித்ததாமே, அந்தக் காலத்து ஆசாமி” என்றார். பத்து நிமிஷங்களாயின சந்தோஷச் சந்தடி அடங்க. “இது, பாரததேசத்தை பரங்கி ஆள்கிற காலம்! இந்தப் பரங்கி ஆட்சியை, பாரதப் பிரசங்கி, விஸ்தாரமாக எடுத்துக் கூறிய, பாஞ்சசன்யம், சக்ராயுதம், காண்டீபம், பாசுபதாஸ்திரம், எதனாலும் தடுக்க முடியவில்லை. ஆகையினாலே, இப்போது நமக்கு, அந்த ஆயுதங்களைப் பற்றிய பிரசங்கம் தேவை இல்லை இப்போது நமக்கு வேண்டியது, ஒற்றுமை, கட்டுப்பாடு, வீரம், தியாகம், எல்லோரும் ஓர் குலம் என்ற எண்ணம். இதற்கு முற்றிலும் கேடு செய்யும் முறையிலே, பாரதப் பிரசங்கி, பழைய கால வர்ணாஸ்ரமத்தை ஆதரித்துப் பேசினார். இங்கு நமக்குள் நாலு ஜாதி இருப்பது சரி என்று கூறினால். அந்த நாலு ஜாதியிலே, பிராமண ஜாதி உயர்ந்தது என்று கூறினால், பிறகு நாம் எந்த நியாயத்தைக்கூறி வெள்ளைக்காரனை விரட்ட முடியும் - அவன் கூறுவானே, உலகத்திலே ஒரு வர்ணாஸ்ரமம் இருக்கிறது, அந்த முறைப்படி வெள்ளைக்காரர், உயர்ந்த ஜாதி, கருப்பர் தாழ்ந்த ஜாதி! மஞ்சள் நிறம் படைத்த சீனர்கள் இடையிலே உள்ள ஜாதி - என்று பேசுவார்களல்லவா! இந்த வாதம், ஜனங்களுடைய மனதை மிகவும் கவர்ந்தது பாரதப் பிரசங்கியின் கோபத்தையும் அதிகமாகக் கிளறிவிட்டது ஆவேசம் வந்தவர் போலவே ஆடினார். ஏதேதோ கூறினார். மேஜையைத் தட்டித் தட்டிப் பேசினார். கூட்டத்திலே, கலகம் ஆரம்பித்து விட்டது. உட்கார்! பேசு! உட்கார்! - என்ற சத்தம் மாறி மாறிக் கிளம்பிற்று. இந்தச் சந்தடியில், விஷமிகள் யாரோ, கற்களை வீசினர். எங்கிருந்தோ ஒரு பன்றி கூட்டத்திலே புகுந்தது. பாரதப் பிரங்கியைப் பின்புறமிருந்து யாரோ பிடித்திழுத்தனர். எங்கள் ஆட்கள், மிகச்சிரமப்பட்டு, அமைதியை கொண்டு போயினர். முத்துராமலிங்கம், கூட்டத்தைத் தொடர்ந்து நடத்தி, பல அரசியல் கருத்துக்களைப் பேசினார். ஆனால், அவருடைய பேச்சிலே பெரும்பகுதி, ஜாதியால் வந்த கேடு, மதத்தின் பெயரால் செய்யப்படும் அநீதி, ஆகியவை பற்றியே இருந்தது. கூட்டம், முடிந்த பிறகு, பிரசங்கியை வீட்டுக்கு வரும்படி, இளையபூபதி அழைத்தார். அவர், அன்றிரவே வேறு ஊருக்குப் போவதாகக் கூறிவிட்டுப் போய்விட்டார். அவர் போனபிறகு, கதர்க்கடை ஐயர், அலட்சியமாகக் கூறினார். “பெரிய வாயாடி அவன்! காங்கிரஸ் போர்வையிலே உலாவும் சூனாமானா” என்றார்.                பகுதி - 14   அன்றைய கூட்டத்திலே நடந்த அமளியால், இளைய பூபதிக்கு எலக்ஷன் விஷயமாகவும், கட்சிப் பிரதி கட்சியாகப் பிரிந்து இருப்பது பற்றியும் வெறுப்பே உண்டாயிற்று. கதர்க்கடை ஐயர், மிகக் கஷ்டப்பட்டு, அந்த வெறுப்பை மாற்றினார். அவருடைய சாமர்த்தியத்தினால், அந்த வெறுப்பே, ரோஷ உணர்ச்சியாக மாறிற்று. இந்தச் சில்லறைக் தகராறுகளைக் கவனிக்கவே கூடாது. ஆயிரம் இரண்டாயிரம் ரூபாய் கொடுத்துக் குதிரை வாங்குகிறோம். வண்டியில் பூட்டும்போது, குதிரை கொஞ்சம் முரட்டுத்தனம் செய்தால், அதனால் வெறுப்படைந்து குதிரையே வேண்டாம் என்று கூறி விடுவதா! அரசியலில் இதுபோன்ற சங்கடம் சாதாரணம் - சமாளித்துத்தான் ஆகவேண்டும். நமக்காவது, எவ்வளவு தொல்லைகளும் சஞ்சலங்களும் ஏற்பட்டாலும் கடைசியிலே, ஜெயம் நிச்சயம் - ஏனென்றால், ஜமீன்தாரர் எவ்வளு பாடுபட்டாலும், நம்மைப் பற்றித் தப்புப் பிரசாரம் செய்து வைத்தாலும் நாம் சார்ந்திருக்கிற காங்கிரஸ் கட்சி மீது ஒரு குறையும் கூறத் துணிய மாட்டார்!” என்றார் கதர்க்கடை ஐயர். “காங்கிரஸ் கட்சி மீது குறை கூறவே முடியாதோ! போமய்யா போம்! நாம் அந்தக் கட்சியில் இருக்கிறோம் என்பதற்காக, அந்தக் கட்சி அப்பழுக்கற்றது என்று கூறி விடுவதா!” என்ற இளையபூபதி, கேட்டார். “நான் சொன்ன வார்த்தைகளைத் தாங்கள் சரியாகக் கவனிக்கவில்லை. காங்கிரஸ் கட்சியிலே குறையே கிடையாது என்று நான் கூறவில்லை. குறைகூறத் துணியமாட்டார் என்றுதான் சொன்னேன்.! சூட்சமமாகக் கவனிக்க வேண்டும் என் பேச்சை! குறைகள் உண்டு. ஆனால் கூறத் துணிவு கிடையாது! ஏனெனில் அந்தக் கட்சியின் கீர்த்தியை அவ்வளவு தூரம் பரப்பிவிட்டார்கள். குறை கூறினால் ஜனங்கள் நம்பமாட்டார்கள் என்ற அச்சம் எவருக்கும் ஏற்படும். ஆகவேதான் காங்கிரசை குறை கூற அவருக்குத் துணிவு கிடையாது என்று சொன்னேன். தங்களுக்கு மட்டுமல்ல, எனக்கும் நன்றாகத் தெரியும். காங்கிரசிலே, பல குறைகள் உள்ளன. நேற்றுப் பேசினானே ஒரு சூனாமானா அவனைப் போன்றவாளுக்குக் காங்கிரஸ் இடம் தரலாமோ! தந்துதானே இருக்கிறது! அப்படிப் பட்டவர்கள், மனதிலே எண்ணிக் கொண்டிருக்கிற ராஜ்யம் இருக்கே அது நம் போன்றவாளுக்குக் கொஞ்சமும் பிடிக்கவே பிடிக்காது. ஜாதிகளே இருக்கப்படாது என்பது அவர்கள் திட்டம். இது நடைபெறக்கூடிய காரியமா, தேவையா? சாரதா சட்டம் என்று அனாவசியமாக, அக்ரமமாக ஒரு சட்டம் கொண்டு வந்து அதைப் பிரமாதப்படுத்துகிறது காங்கிரஸ் கட்சி. நமது தேசத்தின் கௌரவம் என்ன, எப்படிப்பட்ட சத்புருஷர்கள், ஆழ்வாராகி நாயன்மார்கள், அவதரித்த தேசம், அப்படிப்பட்டவர்கள் காலத்திலிருந்து நடை பெறுகிற, கலியாண காரியமாக, இவர்கள் ஒரு கட்டுத்திட்டம் செய்ய லாமோ - செய்கிறார்கள்! இப்படி ஆயிரம் இருக்கு, அவர்கள் செய்கிற தவறுகள். இந்தத் தவறுகள் எல்லாம் எனக்கா தெரியாது? இந்தத் தவறுகள் எல்லாம் ஜனங்களின் காதிலே இப்போது ஏறாது. அவ்வளவு அதிகமாக, அதன் கீர்த்தி பரவி இருக்கிறது” - என்று ஐயர் விளக்கமாகச் சொன்னார். இளைய பூபதிக்குத் திருப்தி ஏற்பட்டது. “அப்படிச் சொல்லுங்கள். “பதினாலாம் தேதி கூட்டத்தில், ஒரு பயல் பேசினானே, கவனித்தீரா?” என்று, வேறொர் விஷயத்தைக் கிளறினார் இளையபூபதி. “பதினாலாம் தேதியா! ஓ! ஆமாம் - ஆமாம் - ஜமீன்தாரர் எனும் தசகண்ட ராவணனுடைய குடலைப் பிடுங்கி மாலையாகப் போட்டுக் கொண்டால்தான் பாரதமாதாவுக்குப் பரிபூரணத் திருப்தி ஏற்படும் என்று பேசினானே - அதைத் தானே...” என்று ஆர்வத்துடன் பேசிய ஐயரை, இளையபூபதி தடுத்து, “அது அல்லய்யா! சுயராஜ்யம் என்றால் எப்படி இருக்கும் என்று வர்ணித்தானே ஒரு பய!” என்று நினைவைக் கிளறினார். ஐயர் புரிந்து கொள்ள வில்லை. “பாட்டுக்கூடப் பாடினானே, ஒருவனுக்குச் சோறு இல்லைன்னா உலகத்தையே அழிச்சி விடுவோம்னு” என்றார் இளையபூபதி. அப்போதும் புரியவில்லை. “பார்ப்பானை ஐயன்னுகூடச் சொல்ல மாட்டோம் என்று பாடினானே” என்று இளையபூபதி சொன்னார் - ஐயருக்குப் புரிந்தது - “ஓ! அவனைச் சொல்கிறீர்களா? ஆமாம் - பய மண்டைக் கர்வி!” என்றார். “அவன், சுயராஜ்யத்திலே பணக்காரர்களின் கொட்டமே அடக்கப்பட்டு விடும். எல்லோரும் ராஜா ஆகிவிடுவார்கள் என்று ஏதேதோ உளறினான்! அப்படிப் பட்ட ராஜ்யம் ஏற்படுவது நல்லதா?” என்று கேட்டார். “ஏற்படவா போகிறது! சில பித்துக்குளிகளின் பேச்சு அது. ஆனால் ஒன்று; காங்கிரஸ் மகாசபை இப்படிப்பட்டவர்களுக்கு இடம் தரக்கூடாது. தவறுதான், குறைதான்” என்றார் ஐயர். எனக்கு அவர்கள் பேச்சு வேடிக்கையாக இருந்தது. ஆனால் அந்தக் கட்சியினால் நாட்டுக்குச் சிலர் சில நன்மையான காரியங்களைச் செய்ய வேண்டுமென்று எண்ணினால் கோபிக் கிறார், வெறுப்படைகிறார், கேவலமாகப் பேசுகிறார். பணக்காரரின் ஆட்சியாக இராது சுயராஜ்யம் என்றால் இளையபூபதி பதைக்கிறார். பழைய ஜாதிமத பேதங்கள் ஒழிந்து எல்லோரும் ஒன்று என்ற எண்ணம் வளர்ந்து புதிய முறை ஏற்படும் என்று சொன்னால் கதர்க்கடை ஐயர் கோபிக்கிறார் - ஆனால் எங்கள் ஊரிலே காங்கிரசுக்கு முக்கிய புருஷர்களே அந்த இருவர்தான்! காங்கிரசிடம் அன்பு கொண்ட மக்கள் எங்கே இந்தச் சூட்ச மத்தைத் தெரிந்து கொள்கிறார்களோ என்று கூட நான் பயப்பட்டேன். ஆனால் ஜனங்களால் இளையபூபதியை அறிந்து கொள்ள முடியவில்லை. எலக்ஷனில் அவர் பிரமாதமான வெற்றி பெற்றார்! ஊரெங்கும் திருவிழா போலக் கொண்டாடினார்கள். தெருக்களிலே தோரணங்கள்! கோயில்களிலே அபிஷேகம் ஒரு பெரிய பொதுக் கூட்டம். அதிலே பல பேர் இளையபூபதியைப் பாராட்டிப் பேசினார்கள். வீட்டிலே சிறந்த முறையில் விருந்து! கதர்க்கடை ஐயருக்குச் சன்மானம். ரங்கன் எலக்ஷனில் ஜெயித்தால் தனக்குத் தங்கத் தோடா செய்து போட வேண்டும் என்று சொல்லியிருந்தான். தங்கத்தோடா செய்தார்கள். ஆனால் அதைப் போட்டுக் கொள்ள முடியவில்லை. எலக்ஷனன்று நடந்த அடிதடியில் அவன் கையில் பலத்த காயம், கட்டு கட்டிக் கொண்டிருந்தான். தோடா பிறகு, இப்போது இரண்டு நாட்களுக்குத் தென்னந்தோப்பிலேயே வாசம் செய்ய வேண்டும் என்று ரங்கன் சொன்னான். இளையபூபதி அதற்கான ஏற்பாடு செய்தார். தோற்ற ஜமீன்தாரர் ஊரில் இருந்தால் கேவலம் என்று எண்ணிப் பழனிக்குப் போய்விட்டார்! எங்கள் குடும்பத்தைக் கெடுத்தார் பணத்தின் பலத்தால்! அவருடைய பணபலத்தை எதிர்த்து அடிக்கக் கூடிய பணபலம் என்னிடம் இருந்தது. அவர் பழனி சென்றார். ரங்கா! அவர் பழனிக்குப் போய் பஞ்சாமிர்தம் சாப்பிடுவார், அதுவும் அவருக்குக் கசப்பாகத்தான் இருக்கும். நமக்கோ, பழனிக்குப் போகாமலேயே பஞ்சாமிர்தம் கிடைத்து விட்டது! என்று கூறி மகிழ்ந்தேன். எங்கள் மகிழ்ச்சி வேகத்தில் நான் அக்காவைப் பற்றியோ அவளைத் தேடிக் கொண்டு வெளியேறிய அம்மாவைப் பற்றியோ எண்ணிப் பார்க்கவுமில்லை. ஒரு சந்தோஷ ஆரவாரம். பல தலைவர்களிடமிருந்து வாழ்த்துத் தந்திகள் வந்த வண்ணம் இருந்தன! பத்திரிகைகளிலே இளையபூபதியின் போட்டோ வெளிவந்தது. இளையபூபதியின் இணையில்லா வெற்றி என்று ஒரு காலணாப் பாட்டுப் புத்தகம் வெளிவந்தது. சில தினங்களுக்குப் பிறகு, ஐயர், கெம்பீரமான குரலிலே, “இந்த எலக்ஷனில் ஜெயித்தது ஒரு பிரமாதமானதல்ல. உங்களுடைய கௌரவத்துக்கும் செல்வாக்குக்கும் குணத்துக்கும், இது ஒரு அல்பகாரியம். நீங்கள், மந்திரியாக வேண்டும் - அது உண்மையான மகிழ்ச்சியாக இருக்கும்” என்று கூறினார். “உனக்கு இருக்கும் ஆசையிலே நீ என்னை, மந்திரியாகமட்டுமா, ராஜாவாகக் கூடச் செய்துவிடுவாய்! ஆனால் உன்னிடமா இருக்கிறது அதற்கான மந்திரசக்தி!” என்று இளையபூபதி கேலி செய்தார். ஐயர் சிரிக்கவில்லை. “உம்முடைய ஜாதகப் பலனை பாரதப் பிரசங்கி பார்த்தசாரதி ஐயங்காரிடம் கேட்டுத் தெரிந்து கொண்டேன். அவர் வாக்கு எப்போதும் பழுதாவதில்லை. அவர்தான் எனக்குச் சொன்னார். உமக்கு நிச்சயமாக ஒரு மந்திரி வேலை கிடைக்கும் என்று; அதனாலேதான் நான் அதற்கான காரியத்தைத் தொடங்கிவிட்டேன்” என்று கூறினார். “காரியமா? என்ன காரியம்?” என்று கேட்டார், இளையபூபதி. ஐயர், “இந்த எலக்ஷனிலே உமக்குக் கிடைத்த ஜெயத்தாலே ஜில்லா முழுவதும் உமது பெயர் பிரபல்யமாகிவிட்டது. மாகாணக் காங்கிரசிலே உமக்குச் செல்வாக்கு இனி ஏற்பட வேண்டும்; அப்போதுதான் மந்திரி வேலை நிச்சயம்; அதற்காக நாம் வடக்கே போய் வரவேண்டும்” என்றார். இளையபூபதி சிரித்துக்கொண்டே “என்ன ஐயர்! எலக்ஷனிலே பட்ட சிரமத்தாலே மூளை குழம்பி விட்டதோ! மாகாணத்திலே செல்வாக்குப் பெற மாகாணத்தை விட்டுவிட்டு வடக்கே போக வேண்டும் என்று கூறுகிறீரே, இது என்னய்யா விந்தை” என்று கேட்டார். விந்தையுமல்ல வேடிக்கையுமல்ல; உமக்குத் தெரியாது சூட்சமம். காங்கிரசின் ஜீவநாடி சூத்திரக் கயிறு எங்கே இருக்கிறது தெரியுமோ?” என்று கேட்டார். அன்று ஒருநாள் ஒரு பிரசங்கி காங்கிரசின் ஜீவநாடி கைராட்டையிலே இருக்கிறது என்று சொன்னானே என்று கூறினார், இளையபூபதி. “அது ஜனங்களுக்காகச் செய்யப்பட்ட பிரசங்கமல்லவா? அதைத் தள்ளுங்கள். காங்கிரசின் சூத்திரக் கயிறு வடக்கேதான் இருக்கிறது – பம்பாய் – வார்தா – சபர்மதி – கல்கத்தா – டில்லி – இப்படிப்பட்ட இடங்களிலேயே நாம் அங்குச் சென்று செல்வாக்கைத் தேடிக் கொண்டால் போதும். இங்குள்ள மாகாண காங்கிரஸ் நமது மடிமீது தவழும் குழந்தையாகிவிடும்” என்றார்.      பகுதி - 15   “இது எனக்குத் துளியும் பிடிக்கவில்லை. நமது பக்கத்திலே இருக்கும் காங்கிரசை வடக்கே இருக்கிறவர்கள் ஆட்டிவைப்பது என்றால், அது என்ன நியாயம்” என்று கேட்டார் இளையபூபதி. ஐயர் புன்சிரிப்புடன் “நான் சொன்னேனா நியாயம் என்று. நிலைமை அவ்விதம் இருக்கிறது. அது சரியா, தவறா என்பதைப் பற்றிச் சர்ச்சை செய்து கொண்டிருப்பதா நம் வேலை. காரியமல்லவா முக்கியம்! காங்கிரசிலே சேர்ந்தோம் காசும் கொஞ்சம் செலவிட்டு, கேவலம் ஒரு ஜில்லா போர்டுக்குப் போய் உட்காருவதுதானா நமது நோக்கமாக முடிந்து விடுவது! வண்டிப் பட்டறை வரதராஜுலுவும் வாணக்கடை கோவிந்தனும் கூட ஜெயித்திருக்கிறார்கள், இந்த ஜில்லா போர்டு தேர்தலில் - காங்கிரசின் தயவினாலே! அப்படி ஜெயித்தவர்களுடன் ஒருவராக - பத்தோடு பதினொன்றாக - இருந்து விடுவதா! செச்சே! உமது அந்தஸ்துக்கு இது போதாது. வடக்கே சென்று பெரிய காங்கிரஸ் தலைவர்களைக் கண்டு பேசி அவர்களுடைய சினேகிதத்தைப் பெற்றுக் கொண்டு வந்து விட்டால் மாகாணக் காங்கிரசிலே உமது மதிப்பு உயர்ந்துவிடும். மந்திரி வேலையும் நிச்சயமாகக் கிடைத்துவிடும். பாஷை தெரியாத ஊரிலே போய் நாம் யாரைப் பிடித்து இந்தக் காரியத்தைச் சாதித்துக் கொள்வது என்று யோசிக்கிறீரு. தெரிகிறது உமது முகத்திலிருந்து! அதற்குக் தக்க ஏற்பாடு செய்து விட்டேன். என் உறவினன் ஒருவன் டில்லி யிலே வேலையில் இருக்கிறான் - சர்க்கார் உத்யோகம் - அவனுக்குப் பெரிய பெரிய தலைவர்களெல்லாம் பழக்கம். அவன் நமக்குச் சகல உதவியும் செய்வான்.” என்றார் “பலே ஆசாமி ஐயா நீர்!” என்று இளையபூபதி பாராட்டினார். காங்கிரஸ் தலைவர்களைக் கண்டு பேசி நமது காரியத்துக்குச் சாதகமான நிலைமையையும் உண்டாக்கிக் கொள்ளலாம்; அதோடு காசி கயா பிரயாகை அயோத்தி பண்டரிபுரம் முதலிய திவ்ய ஷேத்திரங்களையும் தரிசித்துக் கொண்டு, போகிற கதிக்கு நல்லதும் தேடிக் கொள்ளலாம் - பல வகையிலும் பலன் உண்டாகும்” என்று ஐயர் கூறினார். “யாத்ரை போகிற மாதிரியாகக் கிளம்ப வேண்டியதா?” என்று கேட்டார் இளையபூபதி “அடடா! முக்கியமான விஷயத்தைக் கூறாமல் மற்றவற்றைச் சொல்லிக் கொண்டிருந்து விட்டேனே. அடுத்த மாதக் கடைசியில் அகில இந்தியக் காங்கிரஸ் அரிபுராவிலே நடைபெறுகிறது - நாம் அதற்குப் போகிறோம் - அப்படியே இந்தக் காரியமெல்லாம் முடித்துக் கொள்கிறோம்” என்றார். ஐயர் சொன்ன பிறகு மளமள வென்று ஏற்பாடுகளைச் செய்தார் இளையபூபதி. பணமுடை, பரவாயில்லை; முந்திரித் தோப்பை விற்றுவிடு என்றார் கணக்கப் பிள்ளையிடம். வேறு சில இடங்களிலே பணம் கடன் வாங்கினார். சில நகைகளையும் விற்றார். ஆக மொத்தம் பத்தாயிரம் ரூபாய் கிடைத்தது. நானும் ஐயரும் இளையபூபதியுடன் முதல் வகுப்பு வண்டியிலே கிளம்பினோம். ரங்கன் மூன்றாவது வகுப்பிலே வந்தான். பல வருஷங்களாகக் காங்கிரசிலோ அல்லது வேறு ஏதாவது கட்சியிலோ தொடர்பு இருந்தாலல்லவா, இளைய பூபதிக்கு, அரிபுராவில் என்னென்ன நடைபெறும்’ யாரார் வருவார்கள், என்னென்ன பேசுவார்கள் என்பது தெரியும். புதுத் தொடர்பு; அதிலும், பழைய ஜமீன்தாரிடம் கொண்டிருந்த பகைமையைக் காட்டிக் கொள்ள ஒரு சந்தர்ப்பம் என்பதற்காகத்தானே, இளையபூபதி எலக்ஷனிலேயே ஈடுபட்டார்! எனவே அவருக்கு, அவ்வளவு அக்கறை இல்லை, கட்சியிடமோ, அந்தக் கட்சியின் வேலைகள் என்று எதை எதையோ பற்றி ஐயர் பேசிக் கொண்டிருந்ததைப் பற்றியோ, கோயிலிலே அர்ச்சகர் செய்கிற சஹஸ்ர நாமத்தின் பொருள் விளங்கிவிடுகிறதா, அங்கு செல்லும் பக்தர்களுக்கு! தெரிவதில்லை - என்றாலும், அர்ச்சகரின் சத்தத்தைக் கேட்கும் போது சித்தத்தை அலையவிடுவது மகாபாபம் என்று எண்ணிக் கொண்டு, பயபக்தியுடன் கேட்டுக் கொண்டுதானே இருக்கிறார்கள்! அதுபோலவே இளையபூபதி, காங்கிரசின் ஆரம்பம் - வளர்ச்சி - திட்டம் - காங்கிரசார் சர்க்காரிடம் போட்ட சண்டைகள் ஆகியவை பற்றி ஐயர் விஸ்தாரமாகப் பேசிக் கொண்டு வந்ததைக் கேட்டுக் கொண்டிருந்தார். எனக்குச் சிரிப்புத்தான் - ஆனால் என்ன செய்வது! ஐயர் விஷயத்திலே இளையபூபதிக்கு, மதிப்பு அதிகமாகி விட்ட நேரம் அது. பயணத்தின் போத நடைபெற்ற பல விஷயங்கள், இளையபூபதிக்கு ஐயரிடம் இருந்த மதிப்பை மேலும் மேலும் அதிகரிக்கச் செய்ததது. ஏதாவதோர் இடத்திலே ரயில் நிற்க வேண்டியதுதான் தாமதம், ஐயர், கீழே இறங்குவார் - இப்பக்கம் அப்பக்கம் பார்ப்பார் - பார்த்து விட்டு, “அடடா! அனந்தகிருஷ்ணய்யரா? என்று ஆச்சரியத்துடன், கூறுவார் - கைதட்டி அழைப்பார் - காதிலே வைரக் கடுக்கனும், விரல் களிலே வைர மோதிரங்களும் மின்ன, கட்டப்பட்ட பற்களிலே வெண்மை மின்ன, யாரேனும் ஓர் வயோதிகர் வருவார் இருவரும் அளவளாவுவர் - ரயில் புறப்படும்வரை. பிறகு, ஆரம்பிப்பார் ஐயர், “என் பால்ய சினேகிதன் அனந்தன்! மைசூரில் பிரபல வக்கீல் - மாதம் பத்திலிருந்து பதினையா யிரம் வரையில் வருமானம் அனந்தகிருஷ்ணனுக்கு - அருமையான ஜாதகம். அவனுடைய பார்யாளை, முதலிலே எனக்குத் தருவதென்றுதான் ஏற்பாடாயிற்று. பிறகு ஜாதகப் பொருத்த மில்லை என்று கூறி, அந்தச் சம்பந்தம் வேண்டாமென்று கூறி விட்டோம். நம்ம அனந்தன், கல்கத்தாவுக்குப் போகிறானாம். கபூர்தலா மகாராஜாவுக்கும் இவனுக்கும் பல வருஷ சினேகிதம் அவர் என்னமோ, சீமைக்குப் போகிறாராம், போவதற்கு முன்பு அனந்தனைப் பார்த்தாக வேண்டுமென்று தந்திமேல் தந்தி கொடுத்தாராம் - அதற்காகத்தான் அனந்தகிருஷ்ணன் புறப்பட்டி ருக்கிறான். எப்போதுமே அவனுக்கு, சினேகிதன் என்றால் உயிர்” என்று ஒரு மூச்சு, அனந்தகிருஷ்ண புராணம் படிப்பார். டாக்டர், என்ஜினியர், பாரிஸ்டர், ஜட்ஜு, சூபரின்ட்டு, இப்படித்தான் அகப்படுவார்கள் வழி நெடுக. “பிராணனை வாங்கினான் காப்பி சாப்பிட்டத்தான் என்று, கொடுடாப்பா உனக்கேன் மனக்குறை என்று கூறி, ஒரு முழங்கு கொட்டிக் கொண்டேன்” என்று கூறி குருசாமியின் குணாதிசயம், அவனிடம் உள்ள குச்சுநாயைப் பெங்களூரில் ஆறுநூறு ரூபாய் கொடுத்து வாங்கின பெருமை, இப்படிப் பேசுவார். உண்மையிலேயே, பலர், ஐயரிடம் மரியாதையுடனும் அன்புடனும் நடந்து கொண்டனர். ஐயர், பலருக்குத் தெரிந்த பேர்வழி என்பதிலே சந்தேகமில்லை. ஏற்கனவே இளையபூபதிக்கு இருந்த மதிப்பு, இதனால் வளராமல் இருக்க முடியுமா! இளைய பூபதி ஐயரிடம் விசேஷ மதிப்புக் காட்டும்போது, நான் மட்டும் சும்மா இருக்க முடியுமா? கால் பங்கு பயணமாவதற்குள், ஐயர், பெரிய மனது வைத்து, எங்கள் இருவரையும் அழைத்துச் செல்கிறார் என்று பலர் எண்ணும்படியான நிலை உண்டாயிற்று - உண்மையோ, ஐயருடைய காப்பி வெற்றிலைப் பாக்குச் செலவு உள்பட, இளையபூபதியுடையது! என்ன செய்வத! இப்படிச் சிலருக்கு யோகம்! தந்திரம் ஒன்று தவிர வேறு முதல் போடுவதில்லை, அவர்கள் - ஆனால் வாழ்க்கை வியாபாரத்திலேயோ அவர்களுக்குக் கிடைக்குமளவு இலாபம், வேறு பலருக்குக் கிடைப்பதில்லை. ஐயர், அந்த ரகத்தைச் சேர்ந்தவர். காங்கிரசிலே, முக்யஸ்தர்கள் என்று, சிலரை, இளைய பூபதியிடம் ஐயர் அறிமுகப்படுத்தி வைத்தார். “நம்ம ஜமீன்தாரர் காங்கிரசிலே சேர்ந்த பிறகு, ஜில்லா கலெக்டருக்குத் தூக்கமே கிடையாது - என்ன ஆகுமோ ஏது ஆகுமோ என்று திகில். அவர் அப்படிப் பயப்படுவதிலேயும் அர்த்தமில்லாமலில்லை - ஏனெனில் ஜமீன்தாரர் ஒரு வார்த்தை சொன்னால் போதும், ஜனங்கள், எதை வேண்டுமானாலும் செய்து விடுவார்கள் - போலீசாலும் முடியாது - பட்டாளத்தாலும் முடியாது, ஜெனங்களை அடக்க” என்று ஒருவரிடம் கூறுவார். இளையபூபதியின் கரங்களைப் பிடித்துக் குலுக்குவார், அந்தப் பிரமுகர் - இஷ்ட தெய்வத்தைத் தரிசித்தவர் போலாவார். “உண்மையிலே, உம்போன்றவாதான், இந்த சுயராஜ்யப் போரை முன்னாலிருந்து நடத்த வேண்டியவா. ஏனென்கிறீரோ! இந்த வெள்ளைக்காரன் நம்ம ராஜ்யத்தை உம்போன்ற பிரபுக்கள், ராஜாக்கள், மகாராஜாக்களிடமிருந்துதானே அபகரிச்சிண்டா; ஆனதாலே இப்ப அவாளை எதிர்த்துப் போராட வேண்டியவர், நீங்கள் தான்! உம் போன்றவாளுடைய வீரதீரம், நம்ம பாரதமாதாவுக்கு ஜெயத்தை நிச்சயமாகத் தரும். வந்தே மாதரம்! அடுத்த ஜங்ஷனில் சந்திக்கிறேன்” என்று கூறிவிட்டுப் போவார். ஐயருக்கு, தன்னிடம், மிகுந்த அக்கறை, அதனாலே, பல பெரிய மனிதர்களிடம், தன்னைப் பற்றிப் பிரமாதமாகப் புகழ்ந்து பேசுகிறார், என்று எண்ணிக் களிப்பார், இளையபூபதி. இவ்விதம் எங்கள் பிரயாணம் ரம்மியமான தாகத்தான் இருந்தது - முத்துராமலிங்கம் வந்து சேருகிற வரையில். எப்படியோ, ஏனோ, தெரியாது, அவன் ஏதோ ஒரு இன்ஷுரன்ஸ் கம்பெனி வைத்து நடத்தி, ஐம்பதாயிரமோ அறுபதாயிரமோ, “மோசம் செய்து விட்டதாக, எவனோ பொறாமையினாலே பொய்க் கேஸ் ஜோடித்து விட்டான்.” என்றார். “கேஸ் ஜோடித்ததோ, நிஜமோ, தண்டனை நிச்சயமாகி விட்டது” என்றார் முத்துராமலிங்கம், கொஞ்சம் கேலியாக. கோபம் வெடித்துக் கொண்டு வந்தது ஐயருக்கு. “உனக்குத் திருப்திதானே! பிராமணத் துவேஷீ!” என்று கூவினார். முத்துராமலிங்கம் சிரித்துவிட்டு, “வார்த்தைகளை, ஜாக்ரதையாக, ஒழுங்காக, அளந்து, பேச வேண்டும் ஐயர்” என்றார். “அது உன் பிரசங்கத்திலே வைத்துக் கொள். அந்தக் கேலி - கிண்டல் - குத்தல் - இதெல்லாம். என்னிடம் வேண்டாம். என் தம்பி அயோக்கியன், மோசக்காரன் என்பது உன் தீர்ப்பு...” என்று பேசிக் கொண்டிருக்கையில், முத்துராமன், அவரை மடக்கி “என் தீர்ப்பா! கோர்ட் தீர்ப்பய்யா! நீர் இங்கு கொக்கரிக்கிறீர் - என்ன செய்வது - அங்கே, உன் தம்பியே குற்றத்தை ஒப்புக் கொண்டாராமே” என்றார். “ஆமாம் ஒப்புக் கொள்ளாமல் என்ன செய்வான். நியாயம் வழங்கும் அதிகாரி, ஒரு பிராமணத் துவேஷி - மேலும் சர்க்கார் குலாம் - என் தம்பி என்ற உடனே காங்கிரஸ்காரன், தம்பியைத் தண்டிக்க வேண்டு மென்று தீர்மானித்து விட்டான். காலம் அப்படி இருக்கிறது. இது தெரிந்தது, என் தம்பிக்கு. “என்னமோண்ணா! எனக்குக் கிரஹம் சரியாக இல்லை - வீணாகத் கேஷûக்குப் பணத்தைப் போட்டு பாழாக்க எனக்கு இஷ்டமில்லை. நான் குற்றம் செய்தேன் என்று கூறியே விடுகிறேன்” என்று என்னிடம் சொன்னான் - யுசித்தம் போல் செய்யடாப்பா என்று சொன்னேன். அவனைத் தண்டித்து விட்டார்கள். தண்டித்து விட்டதாலேயே அவன் குற்றவாளி என்று கூறிவிடலாமா? உன் நாக்கு அழுகாமலிருக்குமா? உன்வாழ்வு, எப்போதுமா இப்படியே இருக்கும்? பிராமணர்களும், என்னென்ன இம்சை வரும், ஆபத்து ஏற்படும், நாசம் சம்பவிக்கும் என்று சதா மனதிலே எண்ணிக் கொண்டே இருக்கிற, மகாபாபியாச்சே நீ, உன் கதி, கடைசி காலத்திலே, எப்படி ஆகிறதுபார் - புழுத்துச் சாகப் போகிறாய்” என்று, ஐயர் ஆத்திரமும் அழுகுரலும் கலந்த குரலில் கூவினார். இளையபூபதி, “என்ன இருந்தாலும் பெரியவர்களை இப்படி இம்சிக்கக் கூடாது” என்று ஐயர் சார்பில் பேசினார். என் பார்வையும், முத்துராமலிங்கத்துக்குச் சாதகமாக இல்லை - ஆனால் அவன் இதற்கெல்லாம் அஞ்சவுமில்லை - தன் போக்கை மாற்றிக் கொள்ளவுமில்லை. “ஆத்திரப்பட்டுக் கூவாதீர், ஐயரே! மண்டை வெடிக்கக் கடவது, மாடு ஆகக்கடவது - என்று சாபம் கொடுக்கிற காலமல்ல இது - அது, அந்தக் காலம்” என்று மீண்டும் கேலியாகப் பேசினான். “உன்னை யாரும் இங்கே அழைக்கவில்லை - அந்தக் காலம் இந்தக் காலம் என்று பிரசங்கம் செய்யச் சொல்லி” என்று சற்றுக் கோபமாகவே இளையபூபதி கூறினார். “ஆமாம், இதற்கு அழைப்பீர்களா? ஓட்டு வேட்டைக்குப் பிரசங்கள் செய்வதற்கு மட்டும்தான் அழைப்பீர்கள் - தெரியுமே எனக்கு” என்று இளையபூபதிக்கும் சாட்டைக் கொடுக்க ஆரம்பித்தான் முத்து ராமலிங்கம். “வாயாடிகளுக்கு இது காலம் போலிருக்கிறது” என்று வேதாந்தம் பேசினார் ஐயர். இளையபூபதியின் முகம் சிவந்தது - முத்துராமலிங்கத்தைப் பார்த்து, “உன் போக்கிரித் தனமான பேச்சுக்கு, இந்த இட பேதம் அனுமதி தந்து விட்டது. ஊரிலே நீ இதுபோலப் பேசியிருந்தால், உன் வாலை ஒட்ட நறுக்கச் சொல்லி இருப்பேன்” என்று கூறினார். இதேது வழியிலே சண்டை முற்றிவிடும் போலிருக்கிறதே, என்றெண்ணி நான் பயப்பட்டேன். இளையபூபதி போர்க்கோலம் பூண்ட உடனே, ஐயரின் முகத்திலே புதிய களை உண்டாயிற்று. “தோலை உரித்து விடச் சொல்லியிருப்பேன்” - என்று கோபத்தை வார்த்தைகளாகக் கொட்டினார் இளையபூபதி. முத்துராமன் மீண்டும் சிரித்துக் கொண்டே, “வாலை நறுக்க, தோலை உரிக்க, உன்னாலே முடியாது - ஆள் வைத்துத்தானே செய்ய வேண்டும் - அசகாயசூரன் நீ, என்பது இதிலிருந்தே தெரிகிறதே” என்று மேலும் கேலிசெய்தான். இளையபூபதி, அவனை அடிக்கக் கையை ஓங்கினார். போக்கிரி மடையன்! குடிகாரன்! சண்டாளன்! துராத்மா! என்று, ஆத்திரமாகக் கூவினார் ஐயர், உட்கார்ந்தபடியே. நான் அலறினேன் - இளையபூபதியைப் பிடித்திழுத்து, “இதென்ன வம்பு! ஓடும் ரயிலில் சண்டையா?” என்று இளையபூபதியிடம் கூறிவிட்டு, முத்துராமனைப் பார்த்து, “யாரய்யா நீ, கொஞ்சம் கூட நியாயமாக இல்லை நீ செய்கிறகாரியம் - வலுவில் சண்டைக்கு வருகிறாய். தாறுமாறாகப் பேசிக்கொண்டே இருக்கிறாய். பெரிய லீடர் என்றார்கள் உன்னை - பொதுஜனசேவை என்பது இது தானா!” என்று கோபமாகக் கேட்டேன். அவன், என்னைக் கவனிப் பவனாகவே தெரியவில்லை. இளையபூபதியைப் பார்த்த படியே, “இது நல்ல உபாயந்தான். சூரரே!சரியான உபாயம். கூட ஒரு பெண்ணை அழைத்துக் கொண்டு வருவது - கோழைத் தனத்தை மறைக்க பெருமையாகக் கூறிக் கொள்ளலாமல்லவா, எனக்குப் பிரமாதமான கோபம் வந்தது, அடித்துக் கொன்று விட்டிருப்பேன் - ஆனால் கூட, பெண் இருந்தாள் - புலம்பினாள் - அதனாலே பயலைப் பிறகு பார்த்துக் கொள்ளலாம் என்று விட்டு விட்டேன் என்று பேசிக்கொள்ளலாமல்லவா! அற்காகவே, பிரயாணத்தின்போது உன் போன்ற கோழைகள், பெண்களை அழைத்துக்கொண்டு வருவது” என்று கூறினான் இளையபூபதியால் அதற்கு மேல் தாங்கமுடியவில்லை. “மடையா! என்று அவர் கூறிய சொல் மட்டுந்தான் என் காதிலே விழுந்தது - பெரும்போர் மூண்டு விட்டது - சரியான சண்டை! ரயில் ஓடுகிறது - ஐயர் கூவுகிறார் - நான் அலறித் துடித்து அழுகிறேன் - அந்த இரண்டு காளைகளும், ஒன்றை ஒன்று தாக்கிக் கொள் கின்றன. கீழே வீழ்கிறார் பூபதி - மேலே சாய்கிறான் அந்த அதிகப் பிரசங்கி - அவனைக் காலால் உதைத்துத் தள்ளுகிறார் இளையபூபதி - அவன் கீழே சாய்கிறான் - பூபதியின் கால் செல்கிறது, அவன் மார்புக்கு நேராக - அவனோ, உதை தன்மீது விழாதபடி தடுத்துக்கொண்டு, இளையபூபதியின் காலைப் பிடித்து இழுத்துக் கீழே தள்ளுகிறான். இப்படியே சண்டை நடக்கிறது. நான் மிகவும் பயந்து போனேன் - ஐயர் கோவெனக் கதறவே ஆரம்பித்தார் - எனக்குத் திடீரென்று ஓர் யோசனை உதித்தது. “ரயிலை நிறுத்து ஐயரே! சங்கிலியைப் பிடித்து இழு” என்று கூவினேன் - ஐயர் தயங்கினார் - நானே சங்கிலியை பிடித்து இழுத்துக்கொண்டே, “வண்டி நிற்கட்டுமடா போக்கிரி, ரங்கனைக் கூப்பிட்டு, உன் மண்டையைப் பிளக்கச் செய்கிறேன்” என்று கூறினேன். சபாஷ்! - என்று கூவினார் ஐயர். வண்டிமெது வாக நின்றது. இளைய பூபதியும் முத்துராமலிங்கமும், சண்டையை நிறுத்தவில்லை. பலர் ஓடி வந்தார்கள் ஐயர், “அனந்தராம்! ஆத்மானந்தம், குமாரசாமி! -” என்று வண்டியி லிருந்த தன் நண்பர்களைக் கூவி அழைத்தார். நான் ரங்கா! ரங்கா! என்று கூவினேன். புலிபோலப் பாய்ந்தோடி வந்தான் ரங்கன் - நிலைமையைக் கண்டான் - ஒரே குத்து - முத்துராமலிங்கம் கீழே வீழ்ந்தான். இரண்டாவது குத்துக்கு, முத்துராமனின் மூக்கிலிருந்து இரத்தம் கொட்டிற்று. இளையபூபதி களைத்துச் சாய்ந்து கொண்டார் - ஐயர் விசிறியபடி, என்ன விஷயம், என்ன விஷயம் என்று கேட்டவர்களிடம் பேசிக் கொண்டிருந்தார். போலீசும் வந்துவிட்டது. முத்துராமனைப் பிடித்துக் கொண்டார்கள்.  “திருட்டுப்பயல்! ஜமீன்தாரர் இளையபூபதியின் பணப் பெட்டியைக் களவாட நுழைந்தான் - அவர் விடவில்லை - அடித்து நொறுக்கினார்” - என்பது ஐயர் கட்டிவிட்ட கதை. அங்கு கூடினோர் யாவரும் அதை அப்படியே ஏற்றுக் கொண்டனர் சந்தேகம் துளியும் கொள்ளாமல். நான் சற்று திகைத்தேன் ஐயரின் முகத்திலே வெற்றிக்களை! முத்துராமனைப் போலீசார் இழுத்துச் சென்றனர். அவன் போகும்போது என்னைப்பார்த்து “இதுதானம்மா இவர்கள் கையாளும் முறை என்று -” கூறிக்கொண்டே ஐயரைக் காட்டினான்.                                        பகுதி - 16   போலீசாரிடம் பிடிபட்டபோது, முத்துராமலிங்கம், சொன்ன வாசகம், என் மனதிலே ஏனோ ஒருவிதமான வேதனையைக் கிளப்பிவிட்டது. அவனுடைய போக்குக் கண்டு, நான் கோபப்பட்டேன். முதலில் வலிய வலியச் சண்டைக்கிழுத்தான். வம்பு தும்பு பேசினான்; முரட்டுத்தனமாகவே நடந்து கொண்டான்; இதனால் அவன்மீது எனக்குக் கோபந்தான் பிறந்தது. இளைய பூபதியின், உயர்ந்த அந்தஸ்தைப் பற்றி ஒரு துளியும் கவலைகொள்ளாமல், மட்டு மரியாதையின்றி அவரிடம் பேசினான் என்பதுபற்றி எனக்குக் கோபந்தான். ஆனால் அவன் மீது ஐயர் அபாண்டமான பழி சுமத்தி, போலீசாரிடம் பிடித்துக் கொடுத்தபோது, அவன் ஒரு புது மனிதனாகி விட்டான். பதறவில்லை - பயப்படவில்லை - ஐயர்மீது பாயவில்லை - பூபதியை ஏசவில்லை - மிகமிகத் தைரியமாக நடந்து கொண்டான் - அலட்சியமாகப் பார்த்தான், ஐயரை! அந்தப் போக்கு எனக்கு ஆச்சரிய மூட்டிற்று - அவனுடைய பேச்சோ, என் மனதிலே சொல்லொணாத வேதனையை மூட்டி விட்டது. இதுதான் இவர்கள் வேலை! என்று அவன் கூறின வார்த்தைகள் ஒவ்வொன்றும், பழுக்கக் காய்ச்சிய இரும்புத் துண்டுகள் போல என் காதில் பாய்ந்து, மனதிலே தங்கி வேதனையை விளை வித்தன. நிறுத்தி, நிதானமாக, பதறாமல், பயப்படாமல், சொன்னான், இதுதான் இவர்கள் வேலை என்று. சொன்னதும் எனக்கேற்பட்ட வேதனை, சிலவிநாடிகளுக்கெல்லாம், வெட்கமாக மாறிவிட்டது. உண்மை தானே! அவன் அச்சமின்றி, வெட்டு ஒன்று துண்டு இரண்டெனப் பேசுகிறான் - மனதிற் பட்டதை கூறுகிறான் - வீரமாகப் போராடுகிறான் - பணம் படைத்தவர் என்பதற்காக, ஒருவரிடம் வளைவதோ, குழைவதோ கூடாது. அது ஆண்மையோ அறிவுடைமையோ ஆகாது என்ற கொள்கையை கொண்டவனாக இருக்கிறான் - கோப மூட்டக் கூடியபடி பேசுகிறான் என்ற போதிலும், வஞ்சகனல்ல - பசப்பிப் பேசி அதனால் இலாபம் பெற வேண்டுமென்று எண்ணும் கீழ்த்தரக் குணம் கொண்டவனல்ல! - சூது, சதி செய்பவனல்ல - ஆயினும், அப்படிப் பட்டவனை, அவன் பேசுவது தவறு என்று எடுத்துரைக்க வகையற்று, அவனுடன் வீரமாகப் போரிட்டு வீழ்த்தவும் வகையற்று, அவனை, வஞ்சகமாகத்தானே வீழ்த்தினோம். காரசாரமாகப் பேசினான் - கண்களில் பொறி பறக்கப் பேசினான் - கட்டுக்கு அடங்காது பேசினான் - காளை போலத் துள்ளினான் - தாக்கினான் - எல்லாம் சரி, ஆனால் அவன் கள்ளனல்லவே! அவன், கள்ளன், ரயிலில், ஜெமீன் பூபதியின் பணப்பெட்டியைக் களவாட முயற்சித்தான் என்று சூதாகத்தானே கூறி, அவனைப் போலீசில் சிக்கவைத்து விட்டோம் - இவன் வீணாக வாதாடினான், போராடினான், இவனை அடக்க எங்களால் முடியவில்லை, இவனை அப்புறப் படுத்துங்கள், இவன், எங்களோடு சேர்ந்து பிரயாணம் செய்தால், மேலும் ஏதேனும் தொல்லை தருவான் என்று நேர்மையாகக் கூறி இருக்கலாம், போலீசாரிடம். ஆனால் ஐயர் சொன்னது அதுவல்லவே! நானும் இளையபூபதியும், அவருடைய அபாண்டத்தைக் கேட்டுக் கொண்டிருந்தோம் - மறுக்கவில்லை - இலேசாக மகிழ்ச்சிக்கூடக் கொண்டார் இளையபூபதி. ஐயர் மதிமிக்கவர் என எண்ணி - ஆர அமர யோசிக்கும்போதல்லவா, நாங்கள், எவ்வளவு வஞ்சகமாக நடந்து கொண்டோம் என்பது தெரிந்தது. நான் வருத்தமடைந்தேன். இளையபூபதிக்கும் வருத்தம் - ஆனால் காரணம் வேறு. “பயலைச் சரியானபடி உதைத்துப் பாடம் கற்பித்திருக்க வேண்டும் - பல்லை உதிர்த்திருக்க வேண்டும்” என்று கோபத்தோடு பேசினார் - “யாரை அந்த மண்டைக் கர்வியையா! யார், தாங்களா? ஏன்! பயலுக்கு, இப்போது, என்ன சமாராதனையா நடத்தப் போகிறார்கள்! போடு போடுன்னு போட்டு, பின்னி எடுத்துவிட மாட்டாளா போலீசிலே. இலேசிலே விடமாட்டா - இப்படிப்பட்ட தறுதலைப் பயல்களைத் தண்டிக்க அவா இருக்கும்போது, தாங்கள், ஏன் சிரமப்படவேணும்” என்றார் ஐயர் - “அடிப்பார்களா?” - என்று நான் கேட்டேன் - “அடி கொடுப்பதோடு விடுவாளோ - கேசும் போடுவா - தண்டனையும் கிடைக்கும் - இரண்டு வருஷத்துக்குக் குறையாமல், பயல், இப்போது பெரிய லீடர் என்றல்லவா எண்ணிக்கொண்டு கிடக்கிறான் - பொது ஜன சேவை இனி என்ன ஆகும் தெரியுமோ - ரயில் திருடன்னு பட்டம் கிடைக்கும் - பயல் பெட்டிப் பாம்புதான் - இப்படிப்பட்ட பயல்களை மட்டந் தட்டாவிட்டா, நாடு காடான்னா போகும். மட்டு மரியாதை துளி உண்டா - மாட்டிண்டான் சரியா” - என்று ஐயர், விளக்கலானார் - தமது வீரத்தை என்று அவர் எண்ணிக் கொண்டார். எனக்கு அவர் பேச்சு, வீரமாகத் தெரியவில்லை. அவர் பேசப் பேச, எனக்கு, முத்துராமன் சொல்லிவிட்டுப் போன வாசகந்தான், மனதைக் குடைந்தபடி இருந்தது. போலீசாரிடம் சிக்கி அடி உதைபட்டு, வழக்கு ஏற்பட்டு அதனால் தண்டனையும் பெற்று, வதைபடுவதோடு, அவனுடைய பொது வாழ்க்கையுமல்லவா, பாழாகிவிடும் என்பதை எண்ணியபோது உண்மையாகவே, வருத்தமாக இருந்தது. பல ஆண்டுகளுக்குப் பிறகுதான், நான் மீண்டும் முத்துராமனைச் சந்தித்தேன், ரயில் சம்பவத்துக்குப் பிறகு - அப்போதுதான் அவன் சொன்னான், தனக்கு ஒரு விபத்தும் நேரிடவில்லை என்பதையும், போலீசார் தன்னை மிரட்டியதோடு, சம்பவம் முடிந்துவிட்டதாகவும், நான் மிக மகிழ்ச்சியடைந்தேன். முத்துராமனிடம் சண்டைக்கு நிற்கவேண்டி நேரிட்ட சம்பவத்திற்குப்பிறகு, எங்கள் பிரயாணத்தில், வேறு குறிப்பிடத் தக்க சம்பவங்கள் எதுவும் நடைபெறவில்லை. நேரே டில்லி சென்று அங்கு ஐயரின் ஏற்பாட்டின்படி ஒரு ஓட்டலில் தங்கினோம் - காங்கிரஸ் மாநாடு, நடை பெறுவதற்குச் சில நாட்கள் இருந்தன. டில்லியில் தங்கி, பிரபலஸ்தர்களைக் கண்டு பேசியல்லவா, பூபதிக்கு, ஆதரவு திட்ட வேண்டுமென்றார் ஐயர் - அதற்கான பல காரியங்களை அவர் கவனித்துக் கொண்டிருந்தார் - நானும் இளையபூபதியும் டில்லி நகரிலே உல்லாசமாக உலவியும், கடைவீதி சென்று, விதவிதமான சாமான்களை வாங்கி மகிழ்ந்தும், சினிமாக்கள் பார்த்துக் களித்தும், பொழுது போக்கினோம். ஒரு நாள் ஐயர், “பூபதி! ஒரு விசேஷம்” என்ற பீடிகையுடன், பேச்சைத் துவக்கினார். “இமாசலத்திலே இருபதாண்டுகள் தவம் செய்து வரப் பிரசாதம் செய்த ஒரு மகான், இங்கு மானச கோகுலம் அமைத்து நடத்திக் கொண்டு வருகிறார். மானச கோகுலத்திலே யார் வேண்டுமானாலும் போக முடியாது - ஒரு முறையாவது போகிற பாக்யம் பெற்றவாளோ பெறுகிற புண்யத்துக்கு அளவு கிடையாது” என்றார். ஐயர் இளையபூபதியை அழைத்து வந்ததோ அரசியலில் பெரிய இடம் கிடைக்கச் செய்வதற்கு - இப்போதோ யாரோ மகானுடைய அருளை வாங்கித் தருவதாகக் கூறுகிறார் - இதற்கு டில்லி வரவேண்டுமா - மகான்களுக்கு என்ன பஞ்சமா, நமது பக்கத்திலே - என்று நான் எண்ணிக்கொண்டேன் - கேட்க வில்லை - ஏனென்றால் ஐயர், மிக ஆர்வத்தோடு, அந்த மகானைப் பற்றிப் பேசலானார். “மானசகோகுலம், அமாவாசைக்கு அமாவாசைதான் நடைபெறுகிற வாடிக்கை. ஊரெல்லாம், உலகெல்லாம் அமாவாசையன்று இருள் - ஆனால் இந்த மகானுடைய, மானச கோகுலத்தில் அன்று பௌர்ணமி. அதாவது, அன்று ஆஸ்ரமம் ஜோதி மயமாக இருக்குமாம். இரவு எட்டு மணிக்கு, கோகுலம் சென்றால், பத்துமணி வரையிலே, பூஜாக்கிரகவாசம் - அந்த இரண்டு மணி நேரபூஜை முடிந்ததும் மானசீக கோகுலம், ஏற்பட்டு விடுகிறதாம் - அதாவது, பூஜாக்கிரகவாச விசேஷத்தால் அதிலே ஈடுபட்ட புருஷர்களெல்லாம், கிருஷ்ணபரமாத்மாவின் பிரதி பிம்பங்களாகி விடுகிறாளாம் - ஸ்திரீகளெல்லாம், கோகுல கோபிகைகளாகி விடுகிறாளாம் - ஜோதி மயமான மண்டபத்தில் தங்களை மறந்து ஆடிப்பாடிக் கொண்டிருப்பாளாம். சூர்யோதயம் வரையில். பிறகு, பூஜாக்கிரகம் சென்று பழையபடி சுயஉணர்வு பெற்று, வீடு திரும்புவது முறையாம். இந்த மானசீக கோகுலத்திலே ஒரு முறையாவது போக, மகாராஜாக்களெல்லாம், அந்த மகானிடம் மண்டியிட்டுக் காத்துக் கொண்டிருப்பாளாம். மாங்காட்டு மணீன்னு எனக்கொரு சிநேகிதன் உண்டு - பால்ய சினேகம் - அவனுடைய மருமான், இந்த ஆஸ்ரமத்திலே வேலையில் இருக்கிறான் - அவன் சொன்னான் சகல விவரமும் - சொன்னதோடில்லை - நாம், இந்த ஆமாவாசையன்று, மானசீககோகுலம் போக, ஏற்பாடும் செய்து விட்டான்” என்றார். ஐயர், சொன்னது கேட்டு எனக்கு ஒன்றும் அளவுகடந்த பிரியம் ஏற்படவில்லை; இளையபூபதிக்கு மட்டும், ஆர்வம் அளவுக்கு மீறிப்போய்விட்டது - ஐயர் இதை அறிந்து, மானசீக கோகுலத்தைப் பற்றிய விவரங்களை மேலும் மேலும் வர்ணனைகளுடன் சொல்லலானார். மிகவும் இரகசியமாக இந்த ஏற்பாடு நடைபெறுவதால், பலருக்குத் தெரியாது என்றார். “அது சரி - மகான் - பூஜை - விசேஷ பலன், என்றெல்லாம் பேசுவது கிடக்கட்டும் - புருஷர்களெல்லாம் கிருஷ்ண பரமாத்மா, பெண்களெல்லாம் கோபிகா ஸ்திரீகள் என்றாகிவிடு வார்கள் என்றால் அர்த்தம் என்ன யோசித்துப் பார்த்தால், ரசாபாசமாக அல்லவோ இருக்கிறது” என்று நான் கேட்டுப் பார்த்தேன். “அது, அவாளவாளுடைய மனப்பக்குவத்தைப் பொறுத்தது” என்று பொதுவாகப் பதிலளித்தார். எனக்கு அதற்குமேல், அந்த விஷயமாகக் கிளற விருப்பமில்லை - என் யோசனை எல்லாம், எப்படியாவது, இந்த இடத்துக்குப் போகக் கூடாது - தடுத்துவிடவேண்டும் என்பது - எனக்கும் ஐயருக்கும், இது சம்பந்தமாகப் போட்டி - பலப்பரீட்சை நடந்தது - ‘எவனெவனோ வருவாள், எவளெவளோ வருவாள் - இது என்ன ரசாபாசம்” இது என் வாதம்; “யாரார் வருகிறா தெரியுமோ - எப்படிப்பட்டவாளெல்லாம் வருகிறா தெரியுமோ!” இது ஐயரின் தூபம். என்னை, ஐயர் தோற்கடித்தார் - மூவரும், மானசீக கோகுலம் சென்றோம். பெரிய அரண்மனை, அந்த இடம் - யாரோ ஒரு ராஜா வுடையதாம். வெளியே போர்டு எதுவும் கிடையாது - கட்டடத்தின் முன்பகுதியிலேயும். மானசீக கோகுலம் என்பதற்கான அடையாளம் எதுவும் கிடையாது. பழைய இரும்புச் சாமான்கள், விற்குமிடமாக இருந்தது - ஆனால் இங்குள்ள காவற்காரனிடம், ஏதோ ஓர் அடையாளப் பில்லையைக் காட்டியதும், ரகசிய வழியாக, அவன் அழைத்துச் செல்கிறான் மானசீககோகுலத்துக்கு. உள்ளே நுழையும்போதே, எனக்கு அருவருப்புத்தான் - சுமார் நாற்பது ஐம்பதுபேர் இருந்தனர் - சாமான்யர்களல்ல - சீமான்கள், சீமாட்டிகள். பூஜை அறைக்கு, நாங்கள் அழைத்துச் செல்லப்பட்டோம் - அங்கு மிக உயர்தரமான முறையிலே விருந்து - இனிப்புப் பண்டங்கள் ஏராளம் - பானம், ஏதோ ஒரு வகையானது, பருகப் பருக இனித்தது, அதேபோது, போதையும் தந்தது - அந்தப் பூஜை அறையிலிருக்கும் போதே, நிலை, கொஞ்சம் கொஞ்சம் தவற ஆரம்பித்துவிட்டது - ஒருவரை ஒருவர், கிருஷ்ணா - கிருஷ்ணா - என்றுதான் அழைத்துக் கொள்வது - பாடத் தெரியாதவர்கள் பாடினார்கள் - இந்த நிலையிழக்கும் காரியம் நடைபெறும் போது ‘மகான்’ - வந்தார். அவர் வருவதற்கு முன்பு, புல்லாங்குழல் ஊதப்பட்டது - வந்த மகானின் முகம், கிருஷ்ண வேஷம் போடப்பட்டிருந்தது - அவர் வந்ததும் அனைவரும், காலில் வீழ்ந்து வணங்க, அவர் அந்தப் பூஜாக்கிருஹத்திலே உள்ள ஒரு இரகசிய வழியாக வேறோர் மண்டபத்துக்கு அழைத்துச் செல்கிறார் - அங்கு, அருமையான வாத்யவகைகள் - தீபாலங்காரம் - திவ்யமானமணம் ஆடவரெல்லாம் கிருஷ்ண பரமாத்மா - பெண்களெல்லாம் கோபிகைகள் - அவ்வளவுதான் - நடனம் - நடனம் - ரசாபாசம்! கூடுமானவரையில், நான், இளையபூபதியை விட்டுப் பிரியாமல், இருந்து வந்தேன், பல கோபிகைகளின் மீது என் கிருஷ்ண பரமாத்மாவின் பார்வை போயிற்று. நான் என் கிருஷ்ணனை ஜாக்ரதையாகக் கவனித்துக் கொண்டேன் - ஆனால் கடைசி வரையில் சாத்யமா! ஒரு குறும்புக்காரக் கோபிகை, என் கூந்தலைப் பிடித்திபத்துக் கீழே சாய்த்துவிட்டு, என் கிருஷ்ணனை “கண்ணாவாடா, கண்ணின் மணியே! வாடா என் மன்னாவாடா, மாதென்னைத் தேடியே” - என்று பாடிக் கொண்டே, அழைத்துக் கொண்டு போய்விட்டாள் - ஆபாசம் ஏனோ பெண்ணே! ஆனந்தம் கொள்வாய் நீயே” என்று ஒரு கிருஷ்ணன் பாடிக் கொண்டே, என் கரத்தைப் பிடித்திழுத்தான் - ஆனால், “மகான்” அங்கு வந்தார் - அவர் அப்படி வருவது இல்லையாம். வந்தவர், என்னைத் தொட்டிழுத்த கிருஷ்ணனிடமிருந்து என்னை விடுவித்தார் - விடுவித்தார் என்றால் எதற்கு! - அவர் என்னைத் தான் கோபிகையாக்கிக் கொண்டார் - அந்த மண்டபத்தை விட்டு, என்னை வேறோர் இரகசிய வழியாக ஒரு தனி அறைக்கு, வேகவேகமாக இழுத்துச் சென்றார் - கிருஷ்ணா! விடு - கிருஷ்ணா, என்னை விடு என்று நான் பதறினேன்; பதிலே பேசவில்லை - அறையின் கதவை, ஓங்கி அடித்துத் தாளிட்டு விட்டு, அங்கு, மங்கலாக எரிந்து கொண்டிருந்த தீபத்தைப் பெரிதாக்கி, என்னைக் குரூரமாகப் பார்க்கலானார் மகான். நான் சற்றுப் பயந்து போனேன். தெரிகிறதாடி, கள்ளி! - என்று கர்ஜித்தார் மகான். என் பயம் அதிகமாகி விட்டது - நான் அலறினேன். அலறு - அலறு - அழு - அழு - எவ்வளவு அழுது என்ன பயன் - சத்தம் வெளியே போகாது - என்றான் அந்த மாபாவி. நான், அந்த இடத்தை விட்டுத் தப்பித்துக் கொண்டோட முயன்றேன் - முடியவில்லை. ஒரு முறைதான் என்னை ஏமாற்றிவிட்டாய் - காதகி - இம்முறை முடியாது - அப்போது நான் முட்டாள் - உன் அடிமை - பஞ்சைப் பார்ப்பானாக இருந்தேன் - இப்போது நான், குரு - கோகுல குரு - எனக் கொக்கரித்தான் மற்றவர்களுக்குக் கிருஷ்ண பரமாத்மா என்று எண்ணம். பூஜையின் பலனாக ஏற்படுவதுபோல, இந்தப் பாவிக்குக் கம்சன் என்ற எண்ணம் ஏற்படுகிறதோ என்று நினைத்தேன் - ஆனால் கம்சன் என்ற எண்ணம் ஏற்பட்டால், கிருஷ்ணனை அல்லவா இம்சிப்பான். இவனோ, என்னை இம்சிக்கிறானே, என்ன காரணம் - யார் இவன் - என்று எண்ணினேன் - உடல் படபடவென உதறிற்று. எப்படி, நமது கோகுலம்! பேச்சு நடை, நொடி, பாவனை, குரல், சகலமும் மாறிப்போய் விட்டதே, அடையாளமே தெரிய வில்லையே என்று யோசிக்கிறாயா! யோசி! யோசித்துக் கொண்டே இரு! - என்று கூறிவிட்டுச் சிரித்தான், அந்தக் காதகன் “நீ... யார்” ... என்று தடுமாறினேன், பேசவே முடியாமல். “நானா... ஏன், தெரிய வில்லையா...” என்று கூறிக்கொண்டே, கிருஷ்ண வேஷத்தைக் கலைக்கலானான்... நான் பயத்தை அடக்கிக் கொண்டு, யார் அந்த வேஷதாரி என்று கூர்ந்து பார்த்தேன் - கிரீடம் - முகமூடி இவைகளை வீசி எறிந்து விட்டு, என் எதிரே நின்றான், கணபதி சாஸ்திரி!                                                              பகுதி - 17   கணபதி சாஸ்திரி! என் முதல் பலி! இளைய பூபதியைச்சிக்கச் செய்வதற்கு எனக்கு உடந்தையாக இருந்து, அதன் மூலமாகவே என்னை இழந்துவிட்ட ஆசாமி. அந்த இளித்த வாயன், எங்கோ காசியாத்திரை போய் விட்டான். ஜமீன்தாரரின் கோபத்துக்கு ஆளாகக் கூடாது என்று பயந்து கொண்டு, என்ன ஆனானோ என்று நான் எண்ணிக் கொண்டிருந்தேன் சிலகாலம் வரை. பிறகு இளையபூபதி என்னை இன்பச் சோலைக்கு அழைத்துக் கொண்டு சென்று விட்டதால், கணபதி சாஸ்திரியைப் பற்றிய எண்ணமேகூட மறைந்த விட்டது. எதிர்பாராதவிதமான சந்திப்பு நேரிட்டது! மானசீக கோகுலத்தில் கணபதி சாஸ்திரி! நான் திடுக்கிட்டுப் போனேன் - தெளிவும் அதையொட்டித் தைரியமும் வரச் சில நிமிஷங்களாயின. அதுவரையில் கணபதி சாஸ்திரி குரூரமாகப் பார்த்தபடி இருந்தான். புன்னகையையும் பெருமூச்சையும் சமஎடை கலந்து வீசினேன், கணபதி சாஸ்திரியின் கோபத்தைக் குறைக்க, பலித்து பேச ஆரம்பித்தான். படபடவென்றும் - சரி, சரி, பேசட்டும், பேசிவிட்டால் கொதிப்புத் தானாகக் குறைந்துவிடும். நல்லது தான் அது என்று எண்ணிக் கொண்டேன். டாக்டரே! உங்களுடைய வைத்யமுறைக்கும் இதற்கும் சற்று வித்தியாசம். நீங்கள், காய்ச்சல் கொண்டவர்களைப் பேசாமிலிருக்க வேண்டும், பேசினால் ஜுரம் அதிகமாகும் என்று கூறுவீர்கள். உடலில் கொதிப்பு இருக்கும்போது, அது ஒரு சமயம் தேவைப் படக் கூடும். உள்ளத்திலே கொதிப்பு ஏற்பட்டால் அவ்விதமாகப் பேசாமலிருந்து விடக் கூடாது. பேசிப் பேசி ஆத்திரம் வெளியே வார்த்தைகளாகக் கொட்டி விட்டால்தான் கொதிப்பு அடங்கும். பேசாமல் இருந்தால் அந்தக் கொதிப்பு, வளரும், ஆசாமி கருகி விடக் கூடும் - விளைவு என்ன என்பது பற்றிய கவலையுமின்றி, விபரீதமான காரியங்கள் செய்யக்கூடும். கணபதி சாஸ்திரிக்கு, என்மீது எவ்வளவு ஆத்திரம் இருக்கும்! பாவம்! சகஜம்தானே! அவன் கோயிலிலே கூட அவ்வளவு உருக்கமாக அர்ச்சித்தான். இளையபூபதி கிடைத்ததும், இனி உனக்கு விருந்து கிடையாது என்று கூறிவிட்டேன். கோபமாகத்தானே இருக்கும். பலகாலமாக வளர்ந்திட்ட கோபம், பேசி ஆத்திரத்தைத் தீர்த்துக் கொண்டால்தான் நல்லது. ஆகவே, நான், அடிக்கடி அவன் பேச்சிலே குறுக்கிடவுமில்லை - அவன் துடுக்குத்தனமாக இரண்டோர் சமயம் தூற்றிய போது கோபித்துக் கொள்ளவில்லை - புன்னகையைக் குறைத்துவிடவு மில்லை - அங்கு இருந்த ஒரு ஆசனத்தில் உட்கார்ந்து கொண்டு, கன்னத்தில் கையை வைத்துக் கொண்டு, புருவத்தைச் சற்று மேலுக்குத் தூக்கியபடி, புன்னகையுடன், கணபதி சாஸ்திரியைப் பார்த்துக் கொண்டே இருந்தேன். டாக்டரே! அந்தப் பார்வையும், தினுசும், இப்போது நன்றாக இராது. அப்போது என் இளமையிலே, அந்தப் பார்வை, உம்மைப் போன்று ஊருக்கு உழைப்பவர்களின் உள்ளத்தைக் கூடக் குலுக்கிவிடும் - அவ்வளவு மாயசக்தி இருந்தது அந்தப் பார்வைக்கு. கணபதி சாஸ்திரியின், கோபம், பஞ்சு பஞ்சாயிற்று அந்தப் பார்வையால்! “அடிகாதகி! கள்ளி! என்னைத் துரோகம் செய்து விட்டாயே, கடைசிவரையில் தப்பித்துக் கொள்ளலாம் என்று தானே எண்ணிக் கொண்டாய். இவனால் என்ன ஆகும், பஞ்சைப் பார்ப்பான்தானே என்று எண்ணிக் கொண்டாய். இப்போது? என்னிடம் சிறைப்பட்டிருக்கிறாய். இளையபூபதி கிடைத்துவிட்டான், இனி நம்மை யார் என்ன செய்ய முடியும் என்று எண்ணி இறுமாப்புடன் இருந்து வந்தாயே, பார் இப்போது, படு அவதி, பாபி! நான் உனக்கு ஒரு குறையும் செய்யவில்லை. குரங்கு, கோல் கொண்டவனிடம் கூத்தாடிக் கிடப்பது போல, உன்னிடம் நான் இருந்து வந்தேன். என்னை வஞ்சித்தாய். கோயிலிலே பூஜை செய்யும் ஏழைக் குருக்கள், என்ன சாதித்து விட முடியும் என்று எண்ணிக் கொண்டாய். பார்த்தாயா என்னுடைய அந்தஸ்த்தை, செல்வத்தை, அதிகாரத்தை!! மானசீக கோகுலம்! மன்னர்கள்கூட மயங்கும் இடம்! இந்த இடத்திலே, நான் இட்டதுதான் சட்டம். வெட்டு தலையை என்றால் போதும், தீர்ந்தது. விரட்டு இளையபூபதியை என்று உத்தரவிட்டால் போதும், அவனிடம் இலட்சக்கணக்கிலே பணம் இருந்தாலும், கவலையில்லை, விரட்டி விடுவார்கள் என் சீடகோடிகள். வல்லவனுக்கு, எதுவும் சாத்யமாகும் - எங்கும் அவனுக்கு வசதி கிடைக்கும். தெரிந்து கொள்ளடி தெளிவற்றவளே - இங்கு நான் தங்கத் தட்டில்தான் சாப்பிடுகிறேன் - வெள்ளி வட்டிகளில் பழரசம் - வெட்டிவேர் விசிறி, அதற்கு வெள்ளிப் பிடி - வெல்வெட்டு மெத்தை - வேளைக்கோர் விதமான பட்டுப் பீதாம்பரம் - ஆடிப்பாடி எனக்கு மகிழ்வூட்டப் பலர் - எல்லாம் என் அப்பன் கண்ணன் திருவருளால்! இவ்வளவும், நமது ஊருக்கு நெடுந்தொலைவிலுள்ள இந்த டில்லிப் பட்டணத் திலே கிடைத்திருக்கிறது. என்னை வஞ்சித்த, உன்னைப் பற்றி நானும் கொஞ்சநாள் எண்ணி ஏங்கினேன் - பிறகு மறந்து போனேன். தற்செயலாக உன்னைக் கண்டேன், கடைவீதியில் அந்தக் காளையுடன். பிறகு, என் வேவுகாரர்கள் வேலை செய்தனர் - இதோ என் எதிரே நீ இருக்கிறாய் - உன்னை நான் என்ன வேண்டுமானாலும் செய்யலாம் இங்கே - என்ன வேண்டு மானாலும்.”  இந்த முறையிலே கணபதி சாஸ்திரி கொக்கரித்தான். பேச்சு அதிகமாக அதிகமாக ஆத்திரம் குறைந்து கொண்டிருந்தது. நான் பேசாமலிருக்கக் கண்ட கணபதி சாஸ்திரி, “என்னடி கள்ளி, யோசனை? நம்மோடு வந்துள்ள இளையபூபதி எப்படியும் நம்மை அழைத்துக் கொண்டு தானே போவான் என்ற தைரியமோ! அதுதான் நடைபெறாது. என் ஏவலர், அவனை வெளியே அனுப்பி விடுவர் - எங்கே அந்தப் பெண் என்ற கேட்டால், பதில் கிடைக்காது - போலீசில் முறையிடவோ முடியாது. யாரும் இவன் பேச்சை இங்கு மதிக்க மாட்டார்கள் - அதுமட்டுமல்ல - என் சீடர்களிலே சிலர், பெரிய பெரிய அதிகாரிகள். அதனால் திடீரென்று இளையபூபதி மீது, கொள்ளைக் குற்றம், கொலைக் குற்றம், எது வேண்டுமாயினும் விழக்கூடும் - நான் ஆறு வருஷம், பத்து வருஷம் என்று இங்கு என்ன தண்டனை கிடைக்க வேண்டும் இளையபூபதிக்கு என்று எண்ணுகிறேனோ, அதன்படி அவனுக்குக் கிடைத்துவிடும். இங்கு அவன் எதுவும் செய்துவிட முடியாது” என்று கூறிவிட்டு, என்னை அந்த அறையிலேயே விட்டு விட்டு, வெளியே சென்றான் - கதவை இழுத்துப் பூட்டிக் கொண்டான் - சத்தம்கேட்டது. இளையபூபதியுடன் வாழ்ந்து வந்த வாழ்வு தீர்ந்து விட்டது என்று நான் தீர்மானித்து விட்டேன் - கணபதி சாஸ்திரியின் பேச்சு, எனக்கு வெறும் மிரட்டலாகப்பட வில்லை. பாவம்! என் பொருட்டுத் தகப்பனை விரோதித்துக் கொண்டு, சொத்தைக் கரைத்துப் பழைய ஜமீன்தாருடன் பகைமை கொண்டு, படாத பாடுபட்ட இளையபூபதியிடமிருந்து நான் பிரிக்கப்பட்டு விடுவேன் என்பது தெரிந்து நான் கொஞ்சம் வருத்தமுற்றேன். ஆனால் ஏதும் செய்ய முடியாத நிலையில் சிக்கிக் கொண்டேன். சில நாட்களுக்குப் பிறகு வேண்டுமானால், கணபதி சாஸ்திரியை, ஏதாவது தந்திரத்தால் ஏமாற்றலாம்; ஆனால் இந்த நேரத்திலே, அவனை ஒன்றும் செய்ய முடியாது என்பது நன்றாகப் புரிந்து விட்டது. சரி - வெற்றி கணபதி சாஸ்திரிக்குத் தான். ஆரம்ப வெற்றி, என்ன சொன்னானோ, எப்படி மிரட்டினானோ, தெரியாது. கொஞ்ச நேரத்துக்கெல்லாம், இளைய பூபதியை அந்த இடத்தைவிட்டு துரத்தியே விட்டான் கணபதி சாஸ்திரி. வெற்றிக் களிப்புடன், என்னிடம் சேதியைக் கூறினான். அவனுடைய வெற்றி பரிபூணமாகி விட்டது - ஆகவே ஆனந்தமடைந்தான்! நான் கோகுலதாசியானேன்! கணபதி சாஸ்திரியின் காமக் கூடாரத்திலே, முக்கியமான வளானேன் - டாக்டரே! என் வாழ்விலே இப்படித்தான், அடிக்கடி, எதிர்பாராத மாறுதல்கள், எல்லாம் என்னாலே ஏற்பட்டவை என்றும் கூறிவிட முடியாது. டில்லிப் பட்டணத்துக்கு நாங்கள் புறப்பட்டபோது, என் வாழ்வில் இப்படி ஒரு பெரிய மாறுதல் நடைபெறும் என்று எண்ணியிருக்க முடியுமா! செல்வமும் சுகமும் சாமரம் வீச இளையபூபதி பராக்குக் கூற கதர்க்கடை ஐயர் களிப்பூட்டும் பேச்சுப்பேச, பூரண திருப்தியுடன்தானே சென்றேன். ரயிலில் இரண்டாம் வகுப்பில், என் வாழ்விலே நேரிட வேண்டிய தொல்லைகள் தீர்ந்து விட்டன. இனி நிம்மதியாகக் காலங்கழிக்க முடியும் என்றுதான் நம்பினேன். அப்படிப்பட்ட சமயத்திலே இந்த இடி நேரிட்டது. “ஏன் இவள் இப்படி ஆகிவிட்டாள்? முன்பு, மிகுந்த அந்தஸ்துடன் வாழ்ந்து வந்தாளே! ஒய்யாரமாக இருப்பாளே! ஜமீன்தாரரின் நேசத்தைப் பெற்றிருந்தாளே! இப்போது, வாடகை வீட்டில் குடியிருந்து கொண்டு வாடிக்கிடக்கிறாளே! ஏனு?” என்று என்னைப்பற்றி விசாரித்து விட்டு, உண்மைக் காரணத்தைத் தெரிந்து கொள்ளாமல், அவர்களே பதிலும் கூறி விடுகிறார்கள். “கெட்டு அலைந்தாள். கர்வம் பிடித்தவள். பணத்தாசையினால் பாழானாள்” என்றெல்லாம் கூறுகிறார்கள். டில்லியில் எனக்கு ஏற்பட்ட பேரிடிக்குக் காரணம் நானா! நானாகவே, சில சமயங்களில் எண்ணிக் கொள்வதுண்டு, பூவும் காயும் பூத்தும் காய்த்தும் இருக்க, அழகாக விளங்கும் செடி கொடிகள் மரங்கள், ஒரு குற்றமும் செய்யாதிருக்கும்போதே, பெருங்காற்று அடித்து, மலரையும் காய்களையும் பிய்த்து எறிந்துவிட்டு, அலங்கோலமாக்கி விடவில்லையா? அதுபோல என் வாழ்விலே, அவ்வப்போது எனக்குக் கிடைத்த சுகத்தை, வேறு யாராரோ செய்யும் செயல்கள் சூறாவாளியாக மாறி, அழித்து விடுகிறது போலும் என்று எண்ணிக் கொள்வேன். இளையபூபதியுடன் இன்பமாகக் காலங்கழிக்க முடியும் என்ற நம்பிக்கையை, இந்தக் கணபதி சாஸ்திரி நொறுக்கினான். சில நாட்களுக்குப் பிறகு, அவன் என்னை என் இஷ்டப்படி ஊர் போக அனுமதிப்பானோ என்று எண்ணினேன். அவனோ, இளையபூபதியை யாரைக் கொண்டோ மிரட்டித் துரத்தி விட்டதுடன், நான் இனி என்றென்றும் அவனுடன் அந்த மானசீக கோகுலத்தில் ராதாமாதாவாக வாழ வேண்டியதுதான் என்று தீர்மானமாகக் கூறிவிட்டான். அதற்கான ஏற்பாடு செய்து விட்டான். என்ன ‘ஜாலவித்தை’ செய்து, அவன் அவ்வளவு பேரையும் மயக்கி வைத்திருந்தானோ தெரியவில்லை - அங்கு வந்தவர்கள், மதியற்றவர்களல்ல - உயர்தரமான அதிகாரிகள் மதிநுட்பமிகுந்த வியாபாரிகள் - வெளிதேசங்கள் சென்று திரும்பியவர்கள். இப்படிப் பட்டவர்களே தவிர, கடைகண்ணி வைத்துப் பிழைப்பவர்கள், கையெழுத்தும் போடத் தெரியாத வர்கள், அன்றாடம் ஜீவனத்துக்கு வேலை செய்பவர்கள் என்பன போன்றவர்கள் அல்ல. மானசீக கோகுலத்தின் மாட்சி பற்றிக் கவிபாடிக் கொண்டு வந்து கொடுத்துக் கோபாலரிடம் (கணபதி சாஸ்திரி) கடாட்சம் பெற்றுக் கொண்டு போனவர்களும் உண்டு.“ நான் ராதாமாதாவான பிறகு, என்னிடமும், அந்தப் பக்த கோடிகள், பரிவும் பக்தியும் காட்டினர்.  என்னால் தவிர்க்க முடியாத நிலையிலே நான் சிக்கிக் கொண்டேன் - சில நாட்கள் சஞ்சலப்பட்டேன் - பிறகு ஒருவாறு மனதைத் தேற்றிக் கொண்டு, புதிய இடத்துக்கும் புதிய நிலைமைக்கும் ஏற்றபடி என்னை நானே மாற்றி அமைத்துக் கொள்ளவும், கணபதி சாஸ்திரியின் மனதைக் குளிரச் செய்யவும் பழகிக் கொண்டேன். அதாவது, நான் ராதாமாதா வேலையை ஏற்றுக் கொண்டேன். சுலபமான வேலை. என்ன காரணத்தினாலோ பக்திப் போதைக் கொண்ட சீடர்களுக்கு காட்சி தருவது பூஜையின் போது, மற்ற நேரத்தில் கணபதி சாஸ்திரியின் பூஜையை ஏற்றுக் கொள்வது! இவ்வளவுதானே! பல நாட்களுக்குப் பிறகு, நான் பக்குவமாகப் பேசியும், பலவிதமாகக் கொஞ்சியும், கெஞ்சியும், கணபதி சாஸ்திரியிடம், மானசீக கோகுலம், அமைத்ததைத் தெரிந்து கொண்டேன். முதலிலே கணபதி சாஸ்திரி இடந்தரவே இல்லை - ஏதாவது சாக்குக் கூறியே என் வாயை அடைத்து விடுவான். “எப்படி, இவ்வளவு ஆசாமிகளைச் சொக்க வைத்திருக்கிறாய்?” என்று நான் கேட்டேன். அவனோ, “எல்லாம், தபோபலமடி, தபோபலம்” என்பான் - தாம்பூலத் தட்டிலிருந்து வெற்றிலையை எடுத்து, நான் கட்டிக் கொண்டிருந்த பட்டுப் புடவையில் துடைத்து, அளவறிந்து சுண்ணாம்பு தடவி, அன்பு கனியும் பார்வையுடன், மடித்த வெற்றிலையை, கணபதி சாஸ்திரியின் அதரத்தருகே கொண்டு போய் நிறுத்திக் கொண்டு, “சொல்லுங்களேன், என்னிடம் கூடச் சொல்லப்படாதா?” என்று மறுபடியும் கேட்பேன் - கணபதி, ஒரு விநாடி மயங்குவான். மறு கணம் சமாளித்துக் கொண்டு, “சொல்லுங்களேன், என்னிடம் கூடச் சொல்லப்படாதா?” என்று மறுபடியும் கேட்பேன் - கணபதி, ஒரு விநாடி மயங்குவான். மறு கணம் சமாளித்துக் கொண்டு,“தபோபலம்தானடி - ஏன், உனக்குச் சந்தேகமா! தபோபலம், இவனுக்கு ஏது என்கிற எண்ணமோ, தாசிலோலனான இவனுக்கு, கேவலம் அர்ச்சகத் தொழில் செய்து கொண்டிருந்த இவனுக்கு, தபோபலம் எங்கிருந்து கிட்டும் என்று யோசிக்கிறாயோ? முட்டாளே! தாசிவேசிகளுடன் கூடிக் குலாவிக் கொண்டிருந்தாலும், மனசை ஈஸ்வரத் தியானத்திலே நிலை நிறுத்தி விட்டால் போதுமடி, தபோபலம் தானாக வரும்” - என்று கூறுவார். நான், கோபித்துக் கொள்வேன் - அவன் கொஞ்சுவான், என் கோபத்தைக் குறைக்க - ஆனால் உண்மையை மட்டும் கூற மாட்டான். “நீ, என்னை ஏய்த்துவிட்டதும், என் மனம் மகாவேதனை அடைந்தது. புலம்பினேன். ஈஸ்வரா! இந்த மாமிசப் பிண்டத்தின் மீது கொண்ட மோகாந்தக்காரத்தில் ஆயிரத்திலோர் பாகம், பதினாயிரத்திலோர் பாகம், உன் மீது பக்தியாக்கி இருந்தால், அவள், ஒரு ஜமீன்தாரனுக்காக என்னைக் கை விட்டதுபோல, நீ, செய்வாயோ! ஒருக்காலும் கைவிட்டிருக்க மாட்டாய்! நான் நீசன் - பாபி -உன்னை மறந்தேன் - உத்தம தருமத்தை இழந்தேன் - உலக போகத்தில் இச்சை வைத்து அலைந்தேன் - அவதியுற்றேன் - கேவலம் ஒரு தாசி கூட என்னைக் கைவிட்டு விட்டாள் - நான் காதகன் - காமுகன் - கபோதி - கசடன் - என்றெல்லாம், என்னை நானே நிந்தித்துக் கொண்டேன் - ஈஸ்வரா! நான் கெட்டதும் பட்டதும் போதும், இனி, உன் பாத மலரே கதி என்று கதறினேன். அன்றிரவு கனவில் கருட வாகனத்தின் மீதேறி வந்தார், பகவான், “எழுந் திரடா” என்றார் - “இனி, நீ தன்யனானாய், நேரே, டில்லிக்குப் போ. அங்கு, நமது ஆணையைக் கூறு. இன்னின்னாரிடம் - அவர்களிடம் நான் கனவில் கட்டளை பிறப்பித்திருக்கிறேன், ஆகவே உன்னை அவர்கள் வரவேற்பார்கள் - அவர்களிடம் கூறி, மானசீக கோகுலம் ஏற்படுத்து என்று உத்தரவிட்டு விட்டு மறைந்தார். அதனாலேதான், நான் இந்தத் தலத்தை அமைக்க முடிந்தது” என்று கணபதி சாஸ்திரி கூறினான் ஒரு முறை. பொய்தான். ஆனால், இப்படிப் பலமுறை பொய்களைச் சொல்லி, அலுத்த பிறகு, நிஜம் பேசுவான் என்ற நம்பிக்கை எனக்கு; எனவே சகித்துக் கொண்டேன், அவன் பொய்களை. “உண்மையைச் சொல்ல மாட்டீர்கள்!” என்று மறுபடியும் கேட்பேன் - மறுபடியும் ஏதாவது புளுகுவான். “உண்மை இதுதான். உன் நயவஞ்சகத்தால், என் மனம் வெந்து விட்டது. சே! இனி இவள் முகத்திலும் விழிக்கக் கூடாது என்று தீர்மானித்து, தீர்த்த யாத்திரைக்குக் கிளம்பினேன் - திவ்ய ஷேத்திரங்களை எல்லாம் தரிசித்துக் கொண்டு, கடைசியில் இமாசலம் வந்து சேர்ந்தேன். அங்கு, ஒரு தவசியிடம் சீடனாகி, தவம் செய்து வரப்பிரசாதம் பெற்றேன்” என்று ஒரு வேளை கூறினான். நான் நம்பமாட்டேன் என்பது தெரியும் - இருந்தாலும், அவனுக்கு அவ்விதம் பேசுவதிலே, ஒருவகைச் சந்தோஷம் கடைசியாக உண்மையைச் சொன்னான். “லட்சுமிசந் என்றோர் கோடீஸ்வரன், இந்த டில்லிப் பட்டணத்துக்கு இருபது மைல் தொலைவிலே உள்ள கிராமத்தில் வசித்து வந்தான். அவனுக்கு ஏராளமான பூஸ்திகி. பெரிய வியாபாரம். நான், உன்னை விட்டுப் பிரிந்ததும், பல இடங்களில் சுற்றி விட்டு, கடைசியாக, அவனைத் தற்செயலாகக் கண்டேன். அவன் தன் கிராமத்தில் ஒரு சிறிய கோயிலைப் புதிதாகக் கட்டி, அதற்கு, விசேஷமான பூஜைகள் செய்தான் - அதற்கு மகத்துவம் ஏற்படுத்த விரும்பி, தெற்கே உள்ள திவ்ய க்ஷேத்திரத்திலிருந்து அர்ச்சகரைத் தன் கோயிலுக்கு வரவழைத்து, வேலைக்கு அமர்த்த எண்ணினான் - நான் அவனைச் சந்தித்ததும், பழம் நழுவிப் பாலில் வீழ்ந்தது போலாயிற்று. நானே அந்தக் கோயில் பூஜைக் காரியங்களைக் கவனித்துக் கொண்டு வரலானேன் - அத்துடன் - அவனுடைய வீட்டிலேயும், நான்தான் பூஜைசெய்வது, இந்த இரண்டு உத்தியோகமும், எனக்குக் கூடுமான வரையில் நல்ல வருமானம் கொடுத்தது. நிம்மதியாக இருந்தேன். தூரதேசத்தில் வசிக்கிறோம் - நமது சிநேகிதர்களை விட்டுப் பிரிந்து தனிக் குடியாக இருக்கிறோம், என்ற ஒரு மனக்குறை தவிர வேறு கிடையாது. கோயிலிலே நான் பல உத்சவாதிகளை ஏற்பாடு செய்தேன் - அப்போதெல்லாம், சன்மானம் கிடைக்கும். எனக்குக் குடியிருக்க லட்சுமிசந், ஒரு தனி ஜாகையும் தானமாகக் கொடுத்திருந்தான். வேளைக்குப் படி கறக்கும் நல்ல பசு - அதைக் கவனித்துக் கொள்ள ஒரு ஆள் - சமையலுக்கு ஒரு பையன் - வீடு பெருக்க மொழுக ஒரு பெண், இவ்வளவும் கிடைத்து, நான் சுகமாகக் காலந் தள்ளிக் கொண்டு வந்தேன். லட்சுமிசந்துக்கு, வியாபாரம் டில்லியில். இரவு எட்டு மணிக்கு மேல், மோட்டாரில் கிராமம் வருவான், ஒவ்வோர் நாளும்.  லட்சுமிசந்துக்கு, இரண்டாந்தாரமாக ஒரு இலாவண்யவதி வாய்த்திருந்தாள் - அவள் பெயர் அகல்யா. அழகும் இளமையும் மிகுந்த, அந்த அகல்யா, லட்சுமி சந்துக்குப் பேத்தியாக இருக்கக் கூடிய பருவம். ஏழைக் குடும்பமாம் - எனவே, இலட்சாதிகாரி யான அந்தக் கிழவனுக்கு அவள் வாழ்க்கைப்பட்டிருந்தாள். கிராமத்திலே, சேட் இல்லாதபோது சிலர், இது பற்றிக் கேலியாகப் பேசுவதுண்டு - ஆனால் எதிரே யாரும் ஒரு வார்த்தையும் பேச முடியாது - லட்சுமிசந்துக்குச் செல்வாக்கு அமோகம். வழக்கப்படி, மாலை பூஜைக்காக நான், சேட் வீடு சென்றேன் - பூஜை அறையிலே உட்கார்ந்து, பூஜையைத் துவக்கினேன், பக்கத்து அறையிலிருந்தோ, அதை அடுத்த அறையிலிருந்தோ, லட்சுமிசந்தின் மனைவியின் பேச்சுக் குரல் கேட்டது. உற்றுக் கேட்டேன். அவள் ஆனந்தமாகச் சிரித்துக் கொண்டு பேசுகிறாள் - வேறு யாரோ, ‘குசுகுசு’வெனப் பேசுகிறார்கள். முத்தம் கொடுக்கும் சத்தம் கேட்டது. திடுக்கிட்டேன்.                பகுதி - 18   பூஜை செய்யச் சென்ற இடத்திலே, காதற் பேச்சு கள்ளக் காதல் சேட்டை நடைபெறுவது தெரிந்ததும், நான் கொஞ்சம் திடுக்கிட்டுப்போனேன். சேட், ஏழைக் குடும்பத்தில் சம்பந்தம் செய்து கொண்டவர். பெண் அழகி என்பது எனக்குத் தெரியும், என்றாலும், நமது நாட்டில் இதுபோல ஆயிரக்கணக்கான பொருந்தாக் கலியாணங்கள் நடைபெற்று இருப்பதால், இந்தக் கலியாணமும், ஏதும் விபரீதமான விளைவுகளின்றிச் சகஜமான தாகிவிடும் என்று எண்ணிக்கொண்டேன். ஆகவே, எனக்குத் தூக்கிவாரிப்போட்டது, கள்ளக்காதல் பேச்சு, பாவம்! சேட், எவ்வளவு பதைப்பார், இது தெரிந்தால். ஊரார் எவ்வளவு இழித்தும் பழித்தும் பேசுவார்கள் இது தெரிந்தால் என்று எண்ணினேன் - உண்மையிலே எனக்குச் சேட்டின் நிலைமையைக் கண்டு, அவனிடம் பரிதாபம் பிறந்தது. ஊரிலே, புகழ், செல்வாக்கு, வியாபாரத்திலேயோ வெற்றி அமோகம் - லட்சுமி கடாட்சம் பரிபூணரமாக இருக்கிறது - இருந்து என்ன பலன்! அவனுடைய குடும்ப வாழ்க்கை இப்படிக் கேவலமான தாக இருக்கிறது. இரும்புப் பெட்டியைத் திறந்து பார்த்ததும், அதிலே உள்ள ஆபரணக் குவியல் அவனுக்கு ஆனந்தத்தைத் தரும், ஆனால் சூரியன் மறைந்ததும், தெருக் கோடியிலும் புறக்கடை களிலும், வம்பளப்பவர்களின் வாய் திறந்துவிடுமே; அவர்கள் பேசுவது சேட்டின் காதிலே விழுந்தால், பாவம் அவன் மனம் என்ன பாடுபடும். இலட்சாதிகாரியாக இருந்து என்ன பிரயோஜனம். அவமானத்தைத் தாங்கிக் கொள்ள முடியுமா! இப்படி எல்லாம் நான் எண்ணினேன். இந்தக் காதகன் யார்? சேட்டின் குடும்பத்தைக் குலைக்கும் கொடியவன் யாராக இருப்பான்? இளம் பெண்ணின் மனதைக் கெடுத்து, மாதர்களுக்கு மகிமை தரும்கற்பு எனும் பூஷணத்தைச் சூறையாடும் இந்தக் காமாந்தகாரம் பித்தவன் யார்? - என்று கண்டறிய ஆவல் கொண்டேன். யாருக்கும் ஏற்படக்கூடிய ஆவல்தானே இது - எனக்கும் முதலில் யாருக்கும் ஏற்படுவது போன்ற ஆவல்தானே உண்டாயிற்று. ஆனால், சில விநாடிகளிலே, இந்த ஆவல், என் மனதிலே வேறு விதமான,யோசனையாக மாறலாயிற்று. சேட்டின் மனைவி நடத்தும், இந்தக் காமச் சேட்டையை நான் கண்டு பிடித்து, அந்த இரகசியத்தை என் உள்ளங்கையில் வைத்துக்கொண்டு, அவளை மிரட்டினால், அவளிடமிருந்து, ஏராளமான பணம் பெறலாம்; இந்த இரகசியத்தைத் தங்கச் சுரங்கமாக்கலாம் என்ற எண்ணம் ஏற்பட்டது. அவளுடைய இரகசியத்தின் முழு விவரத்தையும், அறிந்து கொள்ள வேண்டும், பிறகு அதைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று தீர்மானித்தேன். அவசரம், ஆத்திரம் கூடாதல்லவா! நான், என்மனதிலே முளைத்த ஆவலைக்கூட அடக்கிக் கொண்டு, அனாதரட்சகா! ஆதி பரந்தாமா! லட்சுமி மணாளா! என்று உரத்த குரலில் அர்ச்சித்துக் கொண்டிருந்தேன். இந்த வார்த்தைகள் உதட்டிலே உலவின. உள்ளத்திலேயோ, அந்த இரகசியத்தை எப்படிக் கண்டறிவது என்பது பற்றிய சிந்தனையே நிரம்பிக் கிடந்தது. கொஞ்ச நேரம் சென்றதும், அவளே, பூஜை அறைப்பக்கம் வந்தாள் - முகம், அலாதியான அழகுடன் விளங்கிற்று. ஒரு கணம் அவளைப் பார்த்ததும், எனக்கு அவள் நிலைமை புரிந்து விட்டது. என் பார்வையின் பொருள் அவள் புரிந்து கொண்டதாகத் தெரியவில்லை. வழக்கத்துக்கு மாறாக அவள் மகிழ்ச்சியுடன் இருந்தாள். “ஸ்வாமீ! என்ன இன்று பூஜை நெடு நேரமாக நடக்கிறது!” என்றுகூட என்னைக் கேட்டாள். எவ்வளவு தைரியம் இவளுக்கு - பாபக்கிருத்யத்தைப் புரிந்துவிட்டு, பசப்பு மொழி பேசுகிறாள். பஞ்சாங்கக் காரனுக்கு, நமது இரகசியம் எப்படித் தெரியப் போகிறது என்ற தைரியம்! இருக்கட்டும், இருக்கட்டும் என்று மனதிற் கூறிக்கொண்டு, அவளுடைய கேள்விக்குத் தக்க பதிலளிக்க வேண்டு மென்று தீர்மானித்து, “பூஜைக்குக்கூட ஒரு அளவு உண்டா! எவ்வளவு செய்ய வேண்டும் என்று ஒரு கணக்கா இருக்கிறது. பாபங்கள், சதா சர்வகாலம் மனிதர்களைச் சூழ்ந்து கொண்டு நடமாடிக் கொண்டுள்ள காலமாயிற்றே இது. எந்த நேரத்திலும், நாம், அறிந்தோ அறியாமலோ, பாபகாரியம் செய்துவிடக் கூடும் - பாபம் நம்மைத் தீண்டிவிடக்கூடும். ஆகவே, எவ்வளவுக் கெவ்வளவு அதிகமாகப பகவான் நாம் ஸ்மரணை செய்கிறோமோ அவ்வளவுக்கவ்வளவு நல்லது” என்று நான் கூறினேன். என் பேச்சு, அவளுடைய சிந்தனையைக் கிளறிவிட்டிருக்கும், அவ்வளவு உருக்கமாகப் பேசினேன் - “பாபம், என்ன ரூபத்திலே இருக்கும்?” என்று அவள் கேட்டாள். போக்கிரித்தனமான கேள்வியல்லவா. அது. நான், அவளுக்குப் “பெண்ணே! உன் கள்ளக்காதலை, காமச் சேஷ்டையை நான் அறிவேன்” என்று கூறிவிட வேண்டும் என்று முதலில் நினைத்தேன் - பிறகு, அந்த ஆசையை அடக்கிக் கொண்டு, மறைமுகமாகப் பேசியே அவள் மனதைக் தாக்க வேண்டும் என்று தீர்மானித்துப் “பாபம், என்ன ரூபத்தில் இருக்கு என்றா அம்மா, கேட்கிறாய். பலபேர், பாபம், கோரமான ரூபத்திலிருக்கும், கரிய உருவமும், செம்பட்டை மயிரும், நெருப்பைக் கக்கும் கண்களும் கொண்டதாக இருக்கும்; பற்களை றநறவெனக் கடிக்கும் - துர்கந்தம் வீசும் - அகோரம் கூச்சலிடும்- என்றெல்லாம் சொல்லுவார்கள். அது தவறு. பாபம், சௌந்தர்யமான வாலிபனாக, சிரித்துப் பேசம் சொகுசுக் காரனாக, மனதை மயக்க வைக்கும் சொக்குப் பொடி வீசுபவனாக ரூபமெடுத்தும் வரும்” என்றேன் கூறிவிட்டு, அவள் முகம் என்ன நிலையாகிறது பார்ப்போம் என்று கவனித்தேன். வாலிபன்! வசீகரச் சிரிப்பு! சரசப் பேச்சு! இவ்விதம் நான்தான் ஜாடையாகப் பேசினேனே. அவள் சேஷ்டையை நான் அறிந்து கொண்டேன் என்பதை விளக்க - அவள் பயப்படாமலிருக்க முடியுமா! - என்று நான் எண்ணிக் கொண்டேன். அவளுடைய முகமோ ஒருவிதமான மாறுதலையும் அடையவில்லை. இந்த ஏமாற்றம் எனக்கு வாட்டத்தைத் தந்தது. அவளுடையபேச்சோ என் வாட்டத்தை அதிகப் படுத்திற்று. “உண்மைதான்! பாபம், பயங்கரமான உருவம் கொண்டதாக இருக்குமென்று கூறுவது தவறுதான். பாபம் சுந்தர புருஷனாகக் கூடத்தான் உருவெடுக்கிறது. பார்த்தவர்களெல்லாம், என் நவரத்ன கண்டியைப் புகழ்ந்தார்கள். அதிலே உள்ள பச்சைக் கற்களையும் நீலமணிகளையும் கண்டு பரவசமடைந்தார்கள் - ஒருவரும் அந்த நவரத்னகண்டி, பாபத்தின் சொரூபங்களிலே ஒன்று என்று தெரிந்து கொள்ளவில்லை. அந்த நவரத்ன கண்டியின், மணிகள், வஞ்சகம், மோசடி,பொய், புரட்டு, தப்புக்கணக்கு ஆகியவை கள் - பச்சை - நீலம் - வைரம் - கோமேதகம் என்று பல வசீகரமான ரூபத்தில் பாபங்கள் இருந்தன! பாபம், அவ்வளவு அழகான ரூபத்தில் இருந்திடக்கூடும் என்பதை ஜனங்கள் தெரிந்து கொள்ளவில்லை” - என்று அவள், வேதாந்தம் பேசினாள். பயப்படுவாள், திடுக்கிடுவாள் என்று நான் எண்ணி ஜாடையாக, பாபம் ஒரு சௌந்தர்யமான வாலிபப் புருஷனாக உருவெடுத்துவிடும் என்று கூறினால், அவள், எனக்கே, உபதேசம் செய்யும் விதமாக, வேதாந்தம் பேசுகிறாள் - இதென்ன விந்தை என்று நான் யோசித்தேன். “பாபத்தைப் பற்றி, சாங்கோ பாங்கமாகப் பேசும் அளவுக்குத் தங்களுக்குப் பாண்டித்யம் இருக்குமென்று நான் எண்ணினதேயில்லை” என்று நான் கூற, அவள், “என் அண்ணன் ஒரு பெரிய வேதாந்தியாக இருந்தவன் - பல வருஷகாலம் பண்டிதர்களோடு வாசம் செய்தவன் - அவனுடைய சிஷ்யையாக இருந்திருக்கிறேன் ஒரு ஆறு மாதக்காலம்” என்றாள். ஓஹோ! - என்று கொஞ்சம் குறும்பாகச் சொன்னேன். “ஸ்வாமி! ஆச்சரியப்படுவீர், என் அண்ணனைப் பற்றிய முழு விவரம் தெரிந்தால். அவர், மகா பண்டிதர்களோடு வாசம் செய்தார் பல வருஷம் என்றேனே - ஏன் - எப்படி - என்பது தெரிந்தால், பயந்து போவீர் ஒரு கொலை செய்துவிட்டார் என் அண்ணன் - போலீசின் பிடியிலிருந்து தப்பிக் கொண்டு தலைமறைவாக இருந்தார் பல வருஷம் - கொலையை இவர்தான் செய்தார் என்பதற்கான சாட்சிகள் ஒவ்வொன்றாக, மறையும் வரையில், என் அண்ணன் மகா பண்டிதர்களுடன் இருந்து வந்தார். இனி வெளியே உலவினாலும் வம்பு நேரிடாது என்பது தெரிந்த பிறகு வீடு வந்தார். ஆறு மாதகாலம் தங்கியிருந்தார் - திடீரென்று மாரடைப்பு அவரைக் கொன்றுவிட்டது - அவருடைய உபதேசங்கள் நான் ஆறு மாதம் கேட்டு, பல அரிய உண்மைகளைத் தெரிந்து கொண்டேன்” என்றாள். “ஏதேது! இவள் கள்ளி - காமச் சேட்டைக்காரி - என்று எண்ணினோம். இவள், ஒரு கொலைக்காரனின் தங்கையுமாகவன்றோ இருக்கிறாள். இவள், தன் இரகசியம் வெளியானால்கூட அஞ்ச மாட்டாள் போலிருக்கிறதே என்று நினைத்தேன் - சற்று வருத்தமுமடைந்தேன். வேறோர் திக்கில், பேச்சைத் திருப்பி விடலானேன். “பூஜை ஏன் அதிக நேரம் செய்யவேண்டும் தெரியுமோ! பக்தியோடு, பகவானை ஒரு விநாடி துதித்தாலும் போதும் - ஆனால் காமக்குரோத மதமாச்சாரியாதிகள் சூழ்ந்துள்ள இந்த லோகத்திலே, வேறு எந்தச் சிந்தனையும் கொள்ளாமல், பகவானை உள்ளத்தில் ஒரு விநாடி நிலை நிறுத்துவதும், மகா கடினமான காரியம். அந்த ஒரு விநாடி கிடைக்க, மணிக்கணக்கிலல்ல, வருஷக் கணக்கிலே கூடப் பூஜை செய்யவேண்டும். உதாரணமாக, இன்று, நடைபெற்றதைக் கேளுங்கள். சுத்தமான மனதுடன்தான், நான் பூஜையைத் துவக்கினேன். கண்களை மூடிக்கொண்டு, கண்ணா, மணிவண்ணா! - என்று, ஸ்தோத் எங்கிருந்தோ ஒரு சத்தம் கிளம்பி என் சித்தத்தைக் குலைத்துவிட்டது” என்றேன்.“என்ன சத்தம்? முரளி கானமோ?” என்று அவள் கேட்டாள். குறும்பாகவோ, சகஜமாகவோ, என்பது புரியவில்லை. “முரளியல்ல! காமாந்தகாரகதானம்! எவளோ ஒரு தூர்த்தை! தன் கள்ளக் காதலனுடன், கொஞ்சி விளையாடுவது போன்ற சத்தம் கேட்டது” என்று நான் கூறினேன். வீசி விட்டோம் வெடி குண்டை, இனி அவள் வெலவெலத்துப் போவாள். வீழ்வாள் என் காலடியில், வேண்டிக் கொள்வாள் தன்னைக் காப்பாற்றாச் சொல்லி என்று நான் கருதினேன். அவளோ, நான் சொன்னது கேட்டு ஆச்சரியமுற்றதாகவோ அஞ்சியதாகவோ காட்டிக் கெள்ளவில்லை.  “உங்கள் காதிலே சத்தம் கேட்டதா!” என்று தனக்குள் கூறிக் கொள்வது போலப் பேசினாள். அவள் பயப்படுவாள் என்று நான் எண்ணினேன். அவளுடைய நடத்தையோ, எனக்குப் பயமூட்டிற்று. இரண்டோர் நிமிஷம். அவள் மௌனமாக இருந்தாள். அந்த இரண்டோர் நிமிஷங்கள், எனக்கு யுகம் போலத் தோன்றிற்று. நான்தான் மௌனத்தைக் கலைத்தேன் “ஏன்! அந்தச் சத்தம் தங்கள் காதிலேயும் விழுந்தததோ?” என்று கேட்டேன். தூக்கத்திலிருந்து விழித்துக் கொண்டவள்போல அயர்ந்து, தூங்கிவிட்டேன். ஒன்றரை ஆண்டுகளுக்குப் பிறகு, அன்றுதான் நான் நிம்மதியாகத் தூங்கினேன். அவ்வளவு அயர்வு எனக்கு; இருக்காதா, உடல், உள்ளம், இரண்டும் பட்டபாடு கொஞ்ச நஞ்சமல்லவே.” “ஆமாம் விமலா, பிறகு, நீ, இளையபூபதியைச் சந்திக்க முயற்சிக்கவே இல்லையா.” “அதை ஏன் கேட்கிறீர்கள் டாக்டர். காலை கண்விழித்ததும், ரௌடி ரங்கன் டிபன், காப்பி கொண்டு வந்து கொடுத்தான். வேறு உடைகளும் தந்தான். நான் பட்ட கஷ்டத்தை எல்லாம் அவனிடம் சொன்னேன். எவ்வளவு கஷ்டப்பட்டு, அங்கிருந்து தப்பினேன், என்பதையும் சொன்னேன். என்னைத் தேடி அழைத்து வராமல், ஏன் என்னை விட்டுவிட்டு, வந்து விட்டீர்கள் என்றும் கேட்டேன்.” “அதற்கு அவன், அன்று இரவு வெகுநேரம் மூவரும், அதாவது ஐயர், இளையபூபதி, ரௌடி ரங்கன், மூவரும் என்னைத் தேடினார்களாம். ஐயர், இளையபூபதியிடம் நேரமாகிவிட்டது. நாளை தேடிக் கொள்ளலாம் என்று வெளியே அழைத்துச் சென்று விட்டாராம். அதற்கு பிறகு இளையபூபதி என்னைத் தேடவேண்டும் என்று நினைத்த போதெல்லாம், ஐயர் குறுக்கிட்டு அந்தப் பெண்ணைத் தேடுவதற்கு நான் ஏற்பாடு செய்கிறேன். நீங்கள் கவலைப்படவேண்டாம். நாம் வந்த காரியத்தை கவனிப்போம் என்று பெரிய பெரிய தலைவர் வீட்டிற்கெல்லாம் அவரை அழைத்துச் சென்று, மாலைமரியாதைகள் நடத்தினார்களாம். ஆனால்பலன் என்னமோ பூஜ்யம் தானாம். இப்படியே பத்து நாட்கள் கழிந்ததாம். கையில் இருந்த பணம் தீர்ந்துவிட்டதாம்,அந்த நேரத்தில் ஐயர், இளையபூபதியிடம் அந்த பெண் அங்கே இல்லை. அவள் யாருடனோ மறுநாளே ஓடிவிட்டாளாம், என்று சொல்லி அவரை நம்பவைத்துப் பீடை ஒழிஞ்சதுன்னு, தலையை முழுகுங்கோ, இனிமே, நோக்கு நல்ல காலந்தான் என்று சொல்லி இவர்களை சென்னைக்கு அனுப்பி விட்டு, அவர் புண்ய ஷேத்ரங்களை தரிசிக்க கிளம்பி விட்டாராம்.” இவர்கள் ஊருக்கு வந்து சேர்ந்ததும், பதவி வரும், வரும் என்று நினைத்து, இன்னும் ஏராளமாக பணம் செலவு செய்திருக் கிறார் இளையபூபதி. மேலிடத்திலிருந்து ஒரு உத்தரவும் வரவில்லையாம். ஜமீன்தாருடன் பகையும், இவருக்குத் தீர வில்லை. இருவரும் கேஸ், கேஸ் என்று எல்லாப் பணத்தையும் ஒழித்தார்களாம். ஜமீன்தார் படுத்தப்படுக்கையாகி, கை, கால் விழுந்து, பேச்சும் போய்விட்டது என்றும் கேள்விப்பட்டேன்.” “சரி இளையபூபதி என்ன ஆனார்?” அதையேன் கேட்கிறீர்கள் டாக்டர், இளையபூபதி கையில் இருந்த பணத்தை எல்லாம் அழித்துவிட்டு, வாங்கிய கடன் களை, பாதிவரை கொடுத்து விட்டு, யாரிடமும் சொல்லிக் கொள்ளாமல், எங்கோ போய்விட்டாராம். என்லோரும், அவர், ‘சாமியாராகி’ வடக்கே, சென்று விட்டதாகப் பேசிக் கொள்கிறார்கள். இதையெல்லாம் கேட்டு, என் மனமும் என் உடலும் களைத்துப் போய், மேலும் களைந்து போய் இந்நிலையானேன். “ஆமாம் உன் அக்காள் என்ன ஆனாள், விமலா?” “அந்தக் கொடுமையைக் கேளுங்கள். ஒரு வார காய்ச்சலில், என் அக்கா இறந்திருக்கிறாள் - நான் டெல்லியில் இருந்த சமயத்தில். அவளும் சரி, என் அம்மாவும் சரி, இறந்த போது கூட நான் இல்லை. அவர்கள் முகத்தைப் பார்கக்க கூட முடியாத பாவியாகி விட்டேன் டாக்டர்.” “இப்படி உலகமே வெறிச்சோடிப்போன நேரத்தில், எனக்கு ஆறுதலாய் இருந்தது இந்த ரௌடி ரங்கன்தான் டாக்டர். நான் முன்னமே சொன்னதுபோல் என்னைப் பார்த்தால் சற்று, தள்ளி நின்று மரியாதை செலுத்தும் ரௌடி ரங்கனுக்கே, நான் பெண்டாளாகிவிட்டேன். என் நிலைமை அப்படி அப்போது. இப்போதும் அவன்தான் என் வயிற்றுக்குக் கஞ்சி ஊற்றுகிறான்.” “என் இளமையை இழந்துவிட்டேன். இனிமேல் எவரையும் மடக்கி வளமாக வாழவேண்டும் என்ற எண்ணமும் போய்விட்டது. அதனால்தான் ரௌடி ரங்கனுடன், இந்த வாழ்க்கையே போதும் என்ற நிம்மதியோடு, நான் வாழ்ந்து கொண்டிருக்கிறேன் டாக்டர். டாக்டர் இப்போது சொல்லுங்கள், என்னுடைய இந்தச் சீரழிந்த வாழ்வுக்கு யார் காரணம்? “நிச்சயமாக நீ இல்லை, விமலா! உன்னைக் காதலித்தவன் கைவிடாமல் இருந்திருந்தால், நீ இந்த நிலைமைக்கு வந்திருக்க மாட்டாய்.” “ஆமாம் டாக்டர், இந்த என் நிலைக்கு - ஏன் என்னைப் போன்று நாட்டிலிருக்கும் எத்தனையோ விமலாக்களுக்கும் சேர்த்துச் சொல்லுகிறேன். நாங்கள் மட்டுமா இதற்குக் காரணம். இந்த பாவத்திலே சரி பங்கு ஆணுக்கும் இருக்கிறது. இந்தக் கூட்டு வியாபாரத்தில் ஒருவருக்குத்தான் தண்டனை.” சமூகத்தின் விசித்திரப் போக்கைப் பாருங்கள். உடற் கூறு அமைப்பால் பெண் பழிகாரி ஆகிறாள். ஆண் இதிலிருந்து தப்பித்துக் கொள்ளுகிறான்; பணம் படைத்தவனாக இருந்தாலோ சொல்லத் தேவையில்லை. அதுவே அவனுக்குச் சமூக அந்தஸ்த்தையே உயர்த்துகிறது. ஏகபத்தினி விரதன் கதைகள் இருக்கும் அதே புராணத்திலே, ஐவருக்கும், பத்தினி என்கின்ற கதையும், இருக்கிறது, ஸ்திரீலோலனைப் பற்றியும் கதை இருக்கிறது. அந்த ஸ்திரீலோலனும், இங்கே வணங்கப்படு கிறான். ஒரு வேடிக்கையைப் பாருங்கள், இராமனைவிட கிருஷ்ணனைத் தான், இங்கே அதிகம் வணங்குகிறார்கள். ஆணுக்கும் பெண்ணுக்கும், கற்பு பொது என்று ஆகாதவரை, என்னைப் போன்ற விமலாக்கள், தோன்றிக் கொண்டே தான் இருப்பார்கள்.” “சபாஷ் விமலா, சரியாகச் சொன்னாய். என்னைக் கேட்டால், நீ சமூகபணி செய்யும் தலைவியாகலாம். உன் கதையைக் கேட்டதில், நீ பட்ட கஷ்டங்களை எல்லாம் புரிந்து கொண்டேன். இனிமேல் உன்னை நிம்மதியாக வாழவைப்பது என்றும் நான் முடிவு செய்துவிட்டேன்.” “டாக்டர், விளையாடாதீர்கள். உங்களுக்கு ஊரிலுள்ள பெயரென்ன, உங்கள் அந்தஸ்து என்ன, இதையெல்லாம் பாழாக்கிக் கொள்ளாதீர்கள். இப்போது நீங்கள் இங்கு வந்து போவதையே வெளியே உள்ளவர்கள், தவறாகப் பேசிக் கொள்ளுகிறார்கள். உங்கள் தாயாருக்குக் கூட மனவருத்தம் என்று கேள்விப்பட்டேன். என்னைப் பார்க்க வந்த ஓரிரு நாட்களுக்குள், மரகதக்காவின் கோபத்துக்கும் ஆளாகி, கோர்ட்டு, கேஸ், என்று அலைந்து உங்கள் பெயர் கெட்டதை மறந்து விட்டீர்கள்.” “நீ என்ன சொன்னாலும் சரி விமலா, நான் எடுத்திருக்கின்ற முடிவை யாராலும் மாற்ற முடியாது.” “டாக்டர், நான் சொல்லுவதை தயவுசெய்து கேளுங்கள். நான் எந்தத் தவறான எண்ணத்தோடும் உங்களோடு பழகவில்லை. அந்த விமலா அல்ல. இப்போது இருக்கும் விமலா. உங்களைப் போன்ற நல்லவரைக் கெடுத்தேன் என்ற கெட்டப் பெயர், எனக்கு வேண்டாம். என் கதையை உங்களிடம் சொன்னதால் எனக்கு ஒரு பெரிய மனபாரம் இறங்கியது போல் இருக்கிறது.” “நீ என்னைத் தவறாகப் புரிந்து கொண்டாய் விமலா. முன்னாலே சொன்னபடி, நீ சொன்ன இந்தக் கதையை அப்படியே எழுதி சினிமா படம் எடுக்கக் கொடுக்கிறேன். நீயே அதில் நடி. அதில் வரும் பணத்தை ‘பேங்கில்’ உன் பெயரில் போடுகிறேன். அதை வைத்துக் கொண்டு இனி மீதி காலத்தை நீ நிம்மதியாக கழிக்க வேண்டும் அதுதான் என் விருப்பம்.” “என் ஆசை என்ன தெரியுமா, டாக்டர், நீங்கள் உங்கள் அம்மா விரும்பும பெண்ணை கல்யாணம் செய்து கொண்டு, சந்தோஷமாக வாழ வேண்டும்.” “சரி விமலா, முதலில் உன் கதை படமாக வர வேண்டும். சிலருக்காவது அது பாடமாக அமைய வேண்டும். அதில் நான் வெற்றி பெறவேண்டும். அதற்குப் பிறகு, என் கல்யாணம் நிச்சயம். நீயும் என்னுடன் வந்து தங்கிவிடவேண்டும் எனக்கு உதவியாக, ஆஸ்பத்திரியில் என்றார் டாக்டர்.” “விமலா சிரித்தாள் - மனம் விட்டு, முதல் முறையாக அவள் வாழ்க்கையில்...”