[] எனது வல்லமையாளர்கள் தேமொழி freetamilebooks.com Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 எனது வல்லமையாளர்கள் 1. எனது வல்லமையாளர்கள் 1. என்னுரை 2. முகவுரை 3. அணிந்துரை 2. வீ. எஸ். ராஜம் 3. எம். ரிஷான் ஷெரீப் 4. சொ. வினைதீர்த்தான் 5. எம். மணிகண்டன் 6. பிச்சினிக்காடு இளங்கோ 7. ராஜா கார்த்திக் கண்ட்டா 8. கே. எஸ். சுதாகர் 9. மரபூர். ஜெய. சந்திரசேகரன் - ரீச் சந்திரா’ 10. பூவை. பி. தயாபரன் 11. கேசவ் வெங்கட்ராகவன் 12. கீதா மதிவாணன் 13. பெனோ செபீன் 14. வாசு ரெங்கநாதன் 15. எல். கனக சுப்பிரமணி 16. செண்பக ஜெகதீசன் 17. கிரேசி மோகன் 18. சீதா நடராஜன் 19. கவிஞர் குட்டி ரேவதி 20. காமாட்சி மகாலிங்கம் 21. வழிகாட்டும் ஒளி குழுவினர் 22. வி. மோகனரங்கன் 23. ஹீடி எப்ஸ்டீன் 24. வைதேகி ஹெர்பர்ட் 25. ச. பாலமுருகன் 26. எம். ஜெயராமசர்மா 27. செ. இரா. செல்வக்குமார் 28. இஸ்ரோ அறிவியலாளர்கள் 29. இந்திராணி 30. பிரியம்வதா நடராஜன் 31. மருத்துவர் சி. வீரப்பன் 32. வெ. திவாகர் 33. இன்னம்பூரான் 34. ஆர்த்தி பிரபாகர் 35. சீதாலட்சுமி 36. கீதா இளங்கோவன் 37. எஸ். கணேசன் 38. அனுராதா கொய்ராலா 39. கே. ரவி 40. வையவன் 41. ஜாதவ் பயேங் 42. ஏற்காடு இளங்கோ 43. ருத்ரா இ. பரமசிவன் 44. இல. சுந்தரம் 45. மு. பழனியப்பன் 46. கலைமகள் ஹிதாயா 47. சி. சேதுராமன் 48. ரா. பார்த்தசாரதி 49. வைதேகி வி. சி. 50. எல்மார் நிப்ரத் 51. அனிதா சத்யம் 52. ந. சுந்தரம் 53. பாடம் நாராயணன் 54. கு. கல்யாணசுந்தரம் 55. ஜோதிர்லதா கிரிஜா 56. வைகைச்செல்வி 57. றியாஸ் முஹமட் 58. குறள் வெப்பவளிக்கூடு” திட்டப் பொறுப்பாளர்கள் 59. ந. தெய்வசுந்தரம் 60. நீதிபதி ராஜ ராஜேஸ்வரி 61. இளம் அறிவாளி விசாலினி 62. சமூகப் போராளி மாணவி நந்தினி 63. இரா. கலைக்கோவன் 64. ராதிகா கண்ணன் 65. மல்ட்டி ஃபன் குழு மாணவர்கள் 66. சூப்பர் 30 – ஆனந்த் குமார் 67. கல்வெட்டு ஆராய்ச்சியாளர் து. சுந்தரம் 68. வருண் ராம் 69. தாஷி, நான்சி மாலிக் சகோதரிகள் 70. இசைக்கவி இரமணன் 71. எம். ஆர். ஹப்பர்ட் 72. ஃப்ரீடமில்இபுக்ஸ்.காம் குழுவினர் 73. மீனாட்சி பாலகணேஷ் 74. அக்னிபு த்திரி டெஸ்ஸி தாமஸ் 75. இயக்குநர் நந்தினி 76. அன்பு ஜெயா 77. பி. சங்கர் மகாதேவன் 78. மணற்கேணி திரு. ரவிக்குமார் 79. தொல்லியல் ஆய்வாளர் பத்மாவதி 80. கிரண் பிர் சேத்தி 81. அரவிந்த் திருவேங்கடம் பத்மாவதி 82. மீனவர் லட்சுமி 83. சேசாத்திரி சிறீதரன் 84. லெ. சொக்கலிங்கம் 85. டி. நாகராஜன் 86. நா. கண்ணன் 87. நீச்சல்காரன் ராஜாராமன் 88. கே. பிரித்திகா யாசினி, எஸ். ஐ. 89. ஆர். பி. ரமேஷ் 90. நிகிதா ஆசாத் 91. அமுதா ஐ.ஏ.எஸ், கஜலக்ஷ்மி ஐ.ஏ.எஸ் 92. ஆக்சாத் பிரகாஷ் 93. தனய் டாண்டன், தீபிகா போடபட்டி 94. மகிஷன் ஞானசேகரன் 95. ரிஃபாத் ஷாருக் 96. இ. மயூரநாதன் 97. கோட்டலாங்கோ லியோன் 98. ஆண்டனி எடிசன் 99. உதயகீர்த்திகா 100. மு. இளங்கோவன் 101. ரூபாதேவி 1. எங்களைப் பற்றி - Free Tamil Ebooks எனது வல்லமையாளர்கள் எனது வல்லமையாளர்கள்   தேமொழி   மின்னூல் வெளியீடு : freetamilebooks.com   உரிமை : Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 கிரியேட்டிவ் காமன்ஸ். எல்லாரும் படிக்கலாம், பகிரலாம்.   மின்னூலாக்கம் லெனின் குருசாமி - guruleninn@gmail.com   This book was produced using pandoc   அறிவொளி பதிப்பு Enathu Vallamaiyaalargal Author: Themozhi Language: Tamil Genres: Non-fiction ISBN: 978-0-9963993-3-3 Pages: 456 Published in: August 2017 Publisher: Arivoli Pathipu arivolipathipu@gmail.com Cover Art Contributor: Themozhi Copyright Information: Creative Commons license: Attribution-NoDerivs 3.0 Unported (CC BY-ND 3.0). You are free: to Share — to copy, distribute and transmit the work; to make commercial use of the work. Under the following conditions: Attribution — You must attribute the work in the manner specified by the author or licensor (but not in any way that suggests that they endorse you or your use of the work). No Derivative Works — You may not alter, transform, or build upon this work. எனது வல்லமையாளர்கள் ஆசிரியர்: தேமொழி ISBN: 978-0-9963993-3-3 வெளியீடு: ஆகஸ்ட் 2017 பதிப்பகம்: அறிவொளி பதிப்பு arivolipathipu@gmail.com மேலட்டை உருவாக்கம்: தேமொழி காப்புரிமை தகவல்: நூலில் எந்த ஒரு மாறுதலும் செய்ய அனுமதியில்லை என்ற நிபந்தனையின் கீழ் பதிப்புரிமை வழங்கப்படுகிறது. இதை விலையில்லாமல் விநியோகிக்கவோ, அச்சிட்டு வெளியிடும் செலவினை ஈடுகட்டும் விதமாக கட்டணம் வசூலித்து விற்பனை செய்யவோ முழு உரிமையும் வழங்கப்படுகிறது. என்னுரை [] அன்பு நண்பர்களுக்கு வணக்கம். ஒவ்வொரு வாரமும் அந்த வாரம் தனது சாதனையால் மக்களைக் கவர்ந்த ஒருவரை அறிமுகப்படுத்தி, அவரது திறமைகளைப் பாராட்டி வல்லமை இதழ் அவர்களுக்கு வல்லமையாளர் என்ற விருதளிப்பது வழக்கம். வல்லமை மின்னிதழின் ஆசிரியர் குழுமத்தில் நான் பங்கேற்றபொழுது மார்ச் 2014 முதல் மார்ச் 2016 வரையில் உள்ள இடைப்பட்ட காலத்தில் நானும் இப்பொறுப்பினை ஏற்றேன். இப்பொறுப்பின் காரணமாக ஒவ்வொரு வாரமும் ஒரு சாதனையாளரை அடையாளங்கண்டு, அவரது சாதனையைப் பாராட்டி எழுதி, அச்சாதனையாளரை அவ்வார வல்லமை இதழின் “வல்லமையாளர் விருது” பெறுபவராக அறிவிக்கும் அரிய வாய்ப்புக் கிடைத்தது. இதன் பயனாக நூறு திறமைமிக்க சாதனையாளர்களைக் குறித்து அறிந்து கொள்ளும் நல்லதொரு வாய்ப்பும் கிடைத்தது. அவ்வாறு சாதனையாளர்களைப் பாராட்டி எழுதியக் கட்டுரைகளைத் தொகுத்து ஒரு நூலாக வெளியிடும் முயற்சியை முன்னெடுக்க ஊக்கமளித்த அறிவியல் எழுத்தாளரும் கவிஞருமாக அறியப்படும் கனடாவில் வாழும் அணுவியல் பொறியாளர் திரு. ஜெயபாரதன் அவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவிக்கக் கடமைப்பட்டுள்ளேன். வல்லமை இதழ் 2012 ஆம் ஆண்டு துவக்கிய வல்லமையாளர் விருதுக்கான தேர்வுகளை அறிவிப்பதற்கு முதலில் பொறுப்பேற்றவர் எழுத்தாளர் திரு. திவாகர் அவர்கள். முதல் நூறு வல்லமையாளர்களைத் தேர்வு செய்து அறிவித்த திவாகர் அவர்களைத் தொடர்ந்து, அடுத்த நூறு வல்லமையாளர்களைத் தெரிவு செய்து பாராட்டும் வாய்ப்பை எனக்களித்த வல்லமையின் நிர்வாகக் குழுவிற்கு எனது மனமார்ந்த நன்றிகள். நிறுவனர் அண்ணாகண்ணன் மற்றும் நிர்வாக ஆசிரியர் பவளசங்கரி ஆகியோர் என்மீது கொண்டுள்ள நம்பிக்கை தந்த ஊக்கத்தில் ஒவ்வொரு கட்டுரையை எழுதும்பொழுதும் அந்த எழுத்து மனநிறைவைத் தந்தது. சாதனைகள் மூலம் தங்களை வேறுபடுத்திக் கொண்டு உலகிற்கு முன்மாதிரியாக விளங்கியவர்களைப் பாராட்டி ஒவ்வொரு வார இறுதியிலும் கட்டுரை எழுதிய தருணங்கள் மகிழ்ச்சி தரும், நினைவில் உறைந்து போய்விட்ட அருமையான நேரங்கள். ஒவ்வொரு வாரமும் கலந்தாலோசனையில் உதவிய அண்ணாகண்ணன், பவளசங்கரி, மேகலா இராமமூர்த்தி ஆகியோருக்கு நன்றிகள். அவர்களது ஆலோசனையின் காரணமாக வல்லமையாளர் தெரிவுகள் சிறப்பாக அமைந்தன. இந்நேரத்தில் சாதனையாளர்களை அடையாளம் காட்டும் பந்தத்தைக் கையிலெடுத்து, வழிகாட்டியாய் முன்னெடுத்துச் சென்று, தொடர் ஓட்டத்தில் என் கையில் பந்தத்தை கொடுத்துச் சென்ற திரு. திவாகர் அவர்களுக்கு நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். பந்தத்தை என்னிடம் இருந்து பெற்று தொடர்ந்து எடுத்துச் சென்ற பேராசிரியர் முனைவர் செ.இரா. செல்வக்குமார் அவர்களுக்கும் எனது நன்றிகள் உரிதாகின்றன. என் பங்கைச் சிறப்பாக மனநிறைவுடன் செய்ய உற்சாகப் படுத்தி கருத்துக்களைப் பகிர்ந்து உதவிய நண்பர்கள் அனைவருக்கும் என் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். பரிந்துரைகள் கூறி உதவிய நண்பர்கள் (அகரவரிசையில்): - அண்ணாகண்ணன் - காவிரிமைந்தன் - சி. ஜெயபாரதன் - சு. ரவி - சொ. வினைதீர்த்தான் - தமிழ்த்தேனீ - திருவள்ளுவன் இலக்குவனார் - திவாகர் - தேவ்ராஜ் - ந. உ. துரை - நரசையா - நா. கணேசன் - பவளசங்கரி - பழமைபேசி - பி. ஆர். ரமேஷ் - பி.எம். இப்ராஹீம் - மறவன்புலவு க. சச்சிதானந்தன் - முனைவர் வீ. எஸ். ராஜம் - முனைவர் சுபாஷிணி (மின்தமிழ் நிறுவனர்) - மேகலா இராமமூர்த்தி - ரஞ்சனி - ரவி சுப்பிரமணியன் - வேந்தன் அரசு அனைவருக்கும் என் நன்றிகள், பட்டியலில் எவருடைய பெயராவது விடுபட்டிருந்தால் என் கவனக்குறைவென்று கருதிப் பொருத்தருள்க. பரிந்துரைக்கப்பட்டவர்களில் சிலர் விருது பெறும் நிலையை அடையாமல் போயிருந்தாலும், பரிந்துரைத்து எனது முயற்சிக்கு உதவிய நண்பர்களுக்கு நன்றி. குறிப்பாகப் பெண்கள் முன்னேற்றத்தில் அக்கறை கொண்டுள்ள அணுவியல் விஞ்ஞானி திரு. ஜெயபாரதன் அவர்கள் மகளிர் பலரைப் பரிந்துரைத்து ஆதரவாக இருந்தது நெகிழ்வு தரும் செயல். பெண்களின் சார்பில் அவருக்கு எனது சிறப்பான நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். பெண்ணிடம் தொடங்கி (முனைவர் வீ.எஸ். ராஜம்) பெண்ணுடன் (சர்வதேச கால்பந்து நடுவர் ரூபாதேவி) முடிவடைந்துள்ளது எனது வல்லமையாளர்கள் கட்டுரை வரிசை என்பதில் எனக்கும் தனிப்பட்ட மகிழ்ச்சி. வல்லமையாளர்கள் கட்டுரைகள் யாவும் அவை வெளிவந்த காலவரிசைப்படியே இந்த நூலில் தொகுக்கப்பட்டுள்ளன. இக்கட்டுரைகளின் வல்லமையாளர்களைக் கண்டு ஊக்கம் கொண்டு மேலும் பல வல்லமையாளர்கள் உருவானால் அதுவே ‘வல்லமையாளர்’ விருதுக்குப் பெருமை சேர்க்கும், அதற்குப் பங்காற்றிய வகையில் நானும் மகிழ்ச்சி அடைகிறேன். “The gull sees farthest who flies highest” ― Richard Bach, Jonathan Livingston Seagull உயரேப் பறக்கும் குருவியே காணுமாம் ஊரின் தொலைவு தனை அனைவருக்கும் நன்றி. அன்புடன் தேமொழி முகவுரை [] வல்லமை மின்னிதழ் வாரந்தோறும் தமிழின் பல்வேறு ஆளுமைகளைக் கண்டறிந்து வெளிப்படுத்திய விதம் பாராட்டுக்குரியது. முதலில் நூறு பேர் பிறகு இரண்டாம் நிலையில் ஒரு நூறு பேர் எனத் தெரிவு செய்ய எடுத்துக் கொண்ட விதம் அருமை. இணையம் தமிழை கடல் கடந்து கொண்டு செல்வதோடு உலகையே உள்ளங்கைக்குள்ளும் அடக்குகிறது. அந்த வகையில் பல்துறை சாதனைகளை இந்த பட்டியலில் காண முடிந்தது. பேராசிரியர், சமூகவியலார், பொறியாளர், எழுத்தாளர், பெண்ணியவாதி, மென்பொருள் சாதனையாளர் என அவர்களின் பங்களிப்பு நிற்கிறது. “செப்புமொழி பதினெட்டுடையாள் - எனினும் சிந்தனை ஒன்றுடையாள்.” என்பது போல இவர்களின் துறை வேறுபட்டதாயினும் தமிழ் அன்னைக்குப் பெருமை சேர்த்தோர் என்ற வகையில் நான் இவர்களை ஒரேக் குடும்பமாகப் பார்க்கிறேன். அந்த வகையிலும் வல்லமை மின்னிதழ் இவர்களை ஒன்றுபடுத்தியமையால் பாராட்டப்பட வேண்டியது என் கடமை. அன்பிற்கினிய சகோதரி தேமொழி அவர்களின் உழைப்பை நினைக்கும் போது கடலினும் பெரிது வானினும் உயர்ந்ததன்று என சங்கப் பாடல் அடிகள் நினைவில் வருகிறது. இவர்களின் தொகுப்பில் உயர்ந்த சாதனையாளர்களில் பலரும் நான் நன்கு அறிந்தவர்கள், பழகியவர்கள் பேரா. மு. இளங்கோவன் அவர்கள். அவர் உலகத் தொல்காப்பிய மன்றத்தின் வழி இன்று லண்டன், அமெரிக்கா என அறியப்பட்டவர். குடந்தை. ப. சுந்தரேசனார் ஒளிப்பேழை வெளியிட்டவர். அவரைப் போல சகோதரர் ரவிக்குமார் அவர்களின் சிந்தனை தனித்துவமானது. ச. பாலமுருகன் மிகச்சிறந்த ஆளுமை இப்படி இன்னும் பல பேரைப் பெயர் சொல்லி அணி சேர்க்க உள்ளம் ஆசை கொள்கிறது. இவர் முயற்சி மேலும் சிறக்க வாழ்த்துக்கள். வல்லமை இதழ் வளர்ந்து இன்னும் பலரை கௌரவிக்க வேண்டும். தேமொழி அவர்களை எப்படிப் பாராட்டினாலும் தகும். “நிலவரை நீற்புகழ் ஆற்றின் புலவரைப் போற்றாது புத்தோர் உலகு.” என்ற வள்ளுவன் வாக்கைப் போல, ஒன்றிணைந்த உள்ளங்களை வாழ்த்துகிறேன் அன்புடன் ச. அந்தோணியம்மாள் ஆசிய மற்றும் உலக கடற்கரை கபடி போட்டியில் தங்கப்பதக்கம் வென்றவர் விழுப்புரம் அணிந்துரை [] தோழியர் எழுத்தாளர் தேமொழி அவர்களின் “எனது வல்லமையாளர்கள்” நூல், சாதனையாளர்களைப் பற்றிய மிகச் சிறந்த தொகுப்பு நூல். பிறரைப் பாராட்டும் போது, பாராட்டுபவருக்கு மிகுந்த மகிழ்ச்சியும் - பாராட்டப்படுகின்றவருக்கும் மிகச் சிறந்த ஊக்கமும் கிடைக்கப் பெறுகின்றது. அவர்கள் துறையில் மேன்மேலும் சாதனைகள் படைத்திட தூண்டுகோலாகப் பாராட்டு அமைகின்றது. அந்த வகையில், 100 வல்லமையாளர் விருதுக்கான தேர்வுகளைப் பாராட்டி, வல்லமை இதழில் எழுதப்பட்ட தொடர் கட்டுரைகளைத் தொகுத்து இந்நூல் வெளிவந்திருக்கின்றது. அந்தத் தொகுப்பில் என்னை மிகவும் கவர்ந்த சில சாதனையாளர்களின் பட்டியல் கீழே !! முனைவர் வீ. எஸ். ராஜம் பற்றிய பாராட்டுக் கட்டுரை அவர் பல்வேறுத் துறைகளில் வல்லவராக இருந்தாலும் தான் அறிந்த அனைத்துத் தொழில் நுட்பங்களையும் எவ்வாறு தமிழின் வளர்ச்சிக்காகப் பயன்படுத்தியுள்ளார் என்ற கட்டுரையும்; அதே போல் பென்சில்வேனியாவில் இருந்து தோழர் வாசு ரங்கநாதன் அவர்களைப் பற்றிய கட்டுரையும் தமிழ் மொழியின் மேம்பாட்டிற்காக அவர் செய்திடும் பணிகளைப் பற்றி படிக்கும்போது நாமும் நம் தாய் மொழியின் வளர்ச்சிப் பணிகளுக்கு ஏதேனும் செய்திட வேண்டும் எனும் எண்ணத்தை ஏற்படுத்துகின்றது. அதே போல் தமிழ் மொழிக்குக் கவிதைகள் சிறுகதைகள் எனத் தன் படைப்புகள் மூலம் தொண்டாற்றி வரும் கவிஞர் எம். ரிஷான் ஷெரிப் அவர்களைப் பற்றிய கட்டுரை ஊடகவியலாளராகவும் கவிஞராகவும் சிறப்பாகச் செயல்படும் அவரின் பன்முகத் தன்மை பற்றி விளக்குகின்றது. அதே போல் சிங்கப்பூரில் வசிக்கும் தமிழ்நாட்டுக் கவிஞர் திரு. பிச்சினிக்காடு இளங்கோ அவர்களின் இலக்கிய பணிகள் பற்றிய கட்டுரை; புலம் பெயர்ந்து வாழும் மக்களின் துன்பியல் வாழ்வியல் நிகழ்வுகளைத் தன் சிறுகதைகள், கவிதைகள், கட்டுரைகள் மூலம் எழுதும் ஆஸ்திரேலியாவின் கே. எஸ். சுதாகர் அவர்களைப் பற்றிய கட்டுரை; நெடுநெல்வாடையை எளிமைப்படுத்தி இன்றைய இளையோருக்குப் படிக்க தன் வலைப்பதிவில் பதிந்து வரும் கவிஞர் திரு. கீதா மதிவாணன் அவர்களைப் பற்றிய கட்டுரை; கவிஞர் செண்பக ஜெகதீசன் அவர்களைப் பற்றிய கட்டுரை; பெண்ணின் உணர்வுகளை, ஒடுக்கப்பட்ட மக்களின் வலிகளை தன் கவிதைகள் மூலம் கூறும் கவிஞர் திரு . குட்டி ரேவதி அவர்களைப் பற்றிய பாராட்டுக் கட்டுரை; வழக்கறிஞராக இருந்தாலும் கவிஞராக அழைக்கப்படுவதில் மகிழ்ச்சி கொண்டு தமிழுலகில் ஆர்வத்துடன் செயல்படும் கவிஞர் திரு. கே. ரவி; கவிஞர் கலைமகள், கவிஞர் ரா. பார்த்தசாரதி, தமிழில் இலக்கிய கட்டுரைகள் வரையும் திரு . சி. சேதுராமன் எனத் தமிழ் இலக்கிய வானில் மின்னும் நாள் நட்சத்திரங்களாகிய கவிஞர்கள் பற்றிய பாராட்டுக் கட்டுரைத் தொகுப்புகள் அனைத்தும் தகவல் களஞ்சியம். பணி ஓய்வு பெற்ற பின்னும், பள்ளி மாணவர்களுக்கு முன்னேற்றப் பயிலரங்குகள் நடாத்தி அவர்களின் எதிர்கால வாழ்க்கையின் வெற்றிக்குத் துணை நிற்கும் திரு. வினைதீர்த்தான் அவர்களைப் பற்றிய கட்டுரை; பணி ஓய்விற்குப் பின், தன் ஓய்வூதியத்தை ஒரு அறக்கட்டளை நிதியாக்கி அந்த நிதியில் 17 ஆண்டுகளாகத் திருக்குறள் திருவிழா நடாத்தி 1330 குறள்களையும் ஒப்புவிக்கும் மாணவ மாணவர்களுக்குத் தனது திருமூலநாதன் அறக்கட்டளைச் சார்பில் பரிசு வழங்கும் பூவை. பி. தயாபரன் அவர்களைப் பற்றிய கட்டுரை; முதுமை காலத்திலும் கணினி கற்றுக்கொண்டு தன் கருத்துக்களை வலைப்பதிவில் எழுதிக் கொண்டிருக்கும் திரு. காமாட்சி மகாலிங்கம் அவர்களைப் பற்றிய கட்டுரை; தன் வாழ்வின் இலக்கே சங்கத்தமிழை அடுத்த தலைமுறைக்கு எளிய முறையில் கற்பித்து தமிழின் பெருமை, ஜாதி அற்றச் சமூகம் தமிழினம் என்பதை விளக்கி சங்கத் தமிழ் கற்பிக்கும் திரு. வைதேகி ஹெர்பர்ட் அவர்களைப் பற்றிய கட்டுரை; 90 வயதிலும் மக்களின் உரிமைக்காகப் போராடும் அமெரிக்கா மிஸ்ஸோரி மாநிலத்தின் ஹீடி எப்ஸ்டீன் பற்றிய கட்டுரை; 80 வயதைக் கடந்தும் “சங்கத் தமிழ் மூன்றும் தா” எனும் கட்டுரையை சிட்னி தமிழ் மாநாட்டிற்கு வழங்கி தமிழ் பணி ஆற்றி வரும் திரு. இன்னம்பூரான் அவர்களைப் பற்றிய கட்டுரை; 40 ஆண்டுகளாக தனக்குச் சொந்தமான மகிழுந்தில் இறந்தார் உடலை மருத்துவமனையில் இருந்து வீடுகளுக்கு எடுத்துச் செல்ல உதவிக்குக் கொண்டிருக்கும் புதுக்கோட்டை ஆலங்குடியைச் சேர்ந்த மூத்தவர் திரு. எஸ். கணேசன் என வயதும் முதுமையும் சாதனை புரியவும், மக்கள் தொண்டாற்றவும் தடை இல்லை என இக்கட்டுரைகளை வாசிக்கும்போது புரிந்து கொள்ள முடிகின்றது. ஆழ்துளைக் கிணற்றுக்குள் வீழ்ந்து விடும் சிறுவர்களைக் காப்பாற்ற தன் கைப்பணத்தில் ஒரு இயந்திரம் தயாரித்து ஏப்ரல் 14, 2014 அன்று ஹர்ஷன் எனும் சிறுவனைக் காப்பாற்றியுள்ள திரு. எம் . மணிகண்டன் பற்றி படித்திடும்போது மெய் சிலிர்க்கின்றது. ஏழை எளிய மக்களுக்கு நீர் வடிகட்டி தன் செலவிலேயே தயாரித்து வழங்கிய திரு. மரபூர் ஜெய சந்திரசேகரன் அவர்களைப் பற்றிய கட்டுரை; பேருந்தில் தினம் ஒரு திருக்குறள் சொல்லி அசத்தும் நடத்துநர் திரு. எல். கனக சுப்பிரமணி அவர்களைப் பற்றிய கட்டுரை; திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியகத்தின் துணை வட்டாட்சியரான திரு. ச. பாலமுருகன் அவர்களின் நடு கற்கள் பாதுகாப்பும் , அவற்றைப் பேணும் முறைகளைப் பற்றிய திட்டம்; மாதவிடாய் எனும் ஆவணப்படத்தை இயக்கி அனைவரும் மாதவிடாய் குறித்த தப்பிதங்களைக் களைய வேண்டும் என்ற திரு. கீதா இளங்கோவன்; தனி ஒரு மனிதராக பிரம்மபுத்ரா நதியின் நடுவில் 1360 ஏக்கர் நிலப் பரப்பில் காட்டை உருவாக்கிய திரு. ஜாதவ் பயேங் அவர்களைப் பற்றிய கட்டுரை, கல்வெட்டு ஆராய்ச்சியாளர் திரு. து. சுந்தரம்; அமெரிக்கத் தமிழர் கூடைப்பந்து விளையாட்டு வீரர் திரு. வருண் ராம் அவர்களைப் பற்றிய கட்டுரை; மீனவர் மற்றும் கடல்வள பாதுகாப்பில் தொடர்ந்து இயங்கிக் கொண்டிருக்கும் திரு. லட்சுமி; தமிழகத்தின் முதல் திருநங்கை காவல் துறை அதிகாரி திரு. பிரித்திகா யாசினி; புற்று நோயை எதிர்த்துப் போராடி, அதன் அனுபவங்களை வலைப்பூவில் பதிந்து அந்நோய் கொண்டவர்கள் தளராது எப்படி வாழ வேண்டும் என எடுத்துக்காட்டாகத் திகழும் திரு. வைதேகி வி.சி அவர்களைப் பற்றிய பாராட்டுக் கட்டுரை எனப் பலரின் அனுபவங்களை ஒரே இடத்தில் ஒரே நூலாகப் படிப்பது சிறந்த வாசிப்பு அனுபவம் எனின் அது மிகையன்று. நம்மைச் சுற்றி நடக்கும் நிகழ்வுகளை, சாதனைகளை அதை நிகழ்த்தியவர்களைச் சிறப்பித்து கட்டுரை வரைந்து அதை நூலாக வெளியிடும் திரு. தேமொழி அவர்களின் முயற்சி மிகுந்த பாராட்டிற்குரியது. அனைவரும் இந்நூலைப் படித்து சிறந்த வாசிப்பனுபவம் பெற வேண்டும் என்பது என் அவா. நன்றி, வழக்கறிஞர். ம. வீ. கனிமொழி வீ. எஸ். ராஜம் [] முனைவர். வீ. எஸ். ராஜம் பற்றி அறியாத இணையத்தமிழர்கள் இருப்பது அரிது. தமிழ் இலக்கணம் பயிற்றுவிக்க வலைத்தளம் (http://www.letsgrammar.org) ஒன்று உருவாக்கி இன்றும் தமிழ்ப்பணி செய்பவர் இவர். அத்துடன் ஆகஸ்ட் 2013 இல், உலகப்புகழ் பெற்ற ஹார்வர்ட் பல்கலைக் கழகம், முனைவர். வீ.எஸ். ராஜமும், இவருடன் இணைந்து பணியாற்றிய மற்றொரு ஆராய்ச்சியாளரும் உருவாக்கிய ஆய்வு நூலை வெளியிட்டு இவரைப் பெருமைப்படுத்தியது (The Earliest Missionary Grammar of Tamil, Harvard Oriental – Series 76, Fr. Henriques’ Arte da Lingua Malabar: Translation, History, and Analysis, Translated with commentary by Jeanne Hein and V. S. Rajam – http://www.hup.harvard.edu/catalog.php?isbn=9780674727236&content=bios). முனைவர். ராஜம் அவர்களது சிறப்பு, அவர் பல துறைகளில் (கணிதம், கணினி தொழில் நுட்பம், தமிழிலக்கியம்) வல்லவராக இருப்பது. அத்துடன் அத்திறன்கள் அனைத்தையும் ஒருங்கிணைத்து தமிழ் வளர்ச்சிக்காகத் தனது பங்கினை சிறப்புற அளிப்பது. இவர் திறமையை மற்றொரு தமிழறிஞர் குறிப்பிட்டதை (கற்றாரைக் கற்றாரே காமுறுவர் அன்றோ?) சொல்வதில்தான் அவரது பெருமை மேலும் சிறப்புற விளங்கும். 2014 ஆம் ஆண்டின் “கணினித்தமிழ் வளர்ச்சி – இரண்டாம் மாநாடு” நிகழ்ச்சியை முன்னின்று நடத்திய முனைவர். பேராசிரியர். ந. தெய்வசுந்தரம் அவர்கள், முனைவர். ராஜம் பற்றிக் குறிப்பிட்டது இங்கு உங்கள் பார்வைக்கு… “பேராசிரியை இராசம் அவர்களுக்குத் தமிழாய்வு உலகில் ஒரு சிறந்த இடம் உண்டு. குறிப்பாக, தமிழ்க் கணினிமொழியியல் துறையில் மிகச் சிறந்த இடம் உண்டு. இந்த ஆய்வில் ஈடுபட்ட முதல் ஆய்வாளர் என்றுகூட அவர்களைச் சொல்லலாம். பலருடைய பங்களிப்பு வெளியுலகில் தெரியாமல் இருந்துவிடுகிறது. அவர்கள் பெயரெல்லாம் ஆய்வுலகில் நிலைக்க நாம் வழிசெய்யவேண்டும்.” – பேராசிரியர். ந. தெய்வ சுந்தரம் ஆம், இது உண்மை. பேராசிரியர். ந. தெய்வசுந்தரம் அவர்கள் குறிப்பிட்டது போல முனைவர். ராஜம் கணினித்தமிழ் வளர்ச்சியின் ஒரு முன்னோடி. இவர் 1978-லிருந்து தமிழைக் கணினிக்குள் புகுத்த வேண்டிப் பல கணினி மொழிகள் படித்துள்ளார் (APL, C, C+, FORTRAN, Java, Javascript, LISP, Macro-11 [Assembly Language], Pascal, PHP, SQL, XML, …). அவரது பல்கலைக்கழக நாட்களில், அதாவது ஒரு முப்பத்து ஐந்து ஆண்டுகளுக்கும் முன்னரே தொடங்கிவிட்டது இவருடைய கணினித்தமிழ்ப்பணி. தமிழிலக்கிய நூல்களில் நாம் ஒரு சொல்லைத் தேட வேண்டியிருப்பின், நூலின் பின்பகுதியைப் புரட்டி அங்கு கொடுக்கப் பட்டுள்ள சொற்களின் பட்டியலில் அச்சொல் எங்கு வருகிறது என்று தேடுவோம். பிறகு சொல் குறிப்பிடப்பட்ட பக்கத்தைத் திருப்பி அச்சொல் எவ்வாறு, என்ன பொருளில் குறிப்பிடப்பட்டுள்ளது என்று தொடர்ந்து ஆராய்வோம். இவ்வாறு தமிழில் சொல்லடைவு, தொடரடைவு இரண்டும் நமக்குத் தேவை. சொல்லடைவு எனில் ஒரு பாடலில் உள்ள சொற்களையும், அப் பாடலில் ஒவ்வொரு சொல்லும் வருமிடங்களையெல்லாம் அகரவரிசையில் தொகுத்துக்கூறுவது – Word Index எனலாம். தொடரடைவு எனில், ஒவ்வொரு சொல்லுடன், அது வரும் அடிகளையே கொடுப்பது – concordance. காட்டாக, இராமாயணத்தில் ‘அங்கதன்’ என்ற சொல் வருமிடங்கள்… அங்கதன் (41 இடங்களில் வருகின்றன, அவற்றில் ஒரு சில …) அளவு_இலா ஆற்றல் ஆண்மை அங்கதன் அறம் கொள் செல்வத்து – கிட்:9 33/3 அனுமன் என்பவன் அளவு அறிந்தனம் அறிஞ அங்கதன் ஆதியோர் – கிட்:10 66/1 அங்கதன் பெயர்த்தும் வந்து ஆண்டு அடி இணை தொழுதான் ஐய – கிட்:11 100/1 அங்கதன் உடன் செல அரிகள் முன் செல – கிட்:11 118/1 ஒரு கணினிநிரல் (Program) சில விநாடிகளில் ஒரு சொல்லடைவையோ அல்லது தொடரடைவையோ தொகுத்து வழங்கிவிடும். ஆனால் அந்த நிரலை எழுதும் முயற்சிக்கு எத்தனை எத்தனையோ மணிநேரங்கள் தேவைப்படும். ‘ஜாவா’ நிரல் எழுதினாலும் பல கோப்பைகள் ‘ஜாவா’ (காஃபி) அருந்திய பின்னரும், பலநாள் தூக்கம் தொலைத்த பின்னரும் நிரல் எழுதுபவர் விரும்பிய வண்ணம் அது அமைந்ததா என்பதை கணினிநிரல் எழுதியவரே வந்து சொன்னால்தான் உண்டு. ஆனால் அது போன்ற நிரல்களை, தனது பல்கலைக்கழக மாணவப் பருவத்திலேயே எழுதி ஐம்பது மதிப்பெண் வழங்கும் ஒரு தேர்வில் அறுபது மதிப்பெண்கள் (தவறு என்று சந்தேகிக்க வேண்டாம், சரியாகத்தான் குறிப்பிட்டுள்ளேன் 60/50 மதிப்பெண்கள், சிறப்பு மதிப்பெண்கள் + 10) வாங்கியவர் முனைவர். ராஜம். அவரது மாணவப் பருவத்தில் அவர் எழுதிய தொடரடைவு (Concordance) உருவாக்கம் நிரலுக்கு அவர் தேர்ந்தெடுத்த பாடல் ஒளவையார் எழுதிய குறுந்தொகைப் பாடல் ஒன்று. “அகவன் மகளே அகவன் மகளே மனவுக்கோப் பன்ன நன்னெடுங் கூந்தல் அகவன் மகளே பாடுக பாட்டே இன்னும் பாடுக பாட்டே அவர் நன்னெடுங் குன்றம் பாடிய பாட்டே.” — ஒளவையார், குறுந்தொகை: 23 [பாடலின் பொருள்: காதல் நோய் தாக்கி உடலும் மனமும் நலிவடைந்த தலைவியினைக் கண்டு வருந்திய பெற்றோர், அகவல்மகள் என்னும் குறிகாரியிடம் சென்று குறி கேட்கிறார்கள். குறிசொல்லத் தொடங்கும் அவளது பாடலின் கடவுள் வாழ்த்துப்பகுதி மலைநாட்டுத் தெய்வத்தின் புகழ் பாடுகிறது அத்துடன் அது தலைவியின் உள்ளத்திலிருக்கும் தலைவனை வாழ்த்துவது போலவும் அமைந்துவிடுகிறது. அதனைக் கேட்ட தோழி அவன் குன்றத்தைப் பாடிய பாட்டை இன்னும் பாடுக என்கிறாள். அதாவது தோழி அறத்தொடு நிற்பது என்ற நிலையில் அடங்கும் வகையில், தலைவியின் காதலைக் குறிப்பால் உணர்த்தும் வகையில் அமைகிறது இப்பாடல். இவ்வாறு இவள் சொல்வதிலிருந்து தலைவியின் சுற்றத்தார் தலைவியின் தலைவனை பற்றித் தெரிந்துகொள்வார்களாம்.] குழும மடலாடல் ஒன்றில் கணினித்தமிழ் கொண்டு எவ்வாறு கணினித்தமிழ் வளர்ச்சியில் பங்களிப்பது என்பது பற்றிய விவாதத்தில் பங்கேற்ற முனைவர். ராஜம் அவர்கள், மேலே குறிப்பிட்ட பாடலுக்கு, அவர் படித்த UNIX வகுப்பில் இறுதித் தேர்வுக்காக எழுதிய நிரல்களைப் பகிர்ந்து கொண்டார் ( “Unix visits South India” project – http://www.letsgrammar.org/oldProjects/UNIX_Project_Rajam.pdf இது போன்று கணினித்தமிழ் வளர்ச்சிக்கு இக்கால மாணவர்களை ஊக்குவிக்கும் கட்டுரை ஒன்றினைப் பகிர்ந்து விளக்கமளிக்கும் முனைவர் வீ. எஸ். ராஜம் கல்லூரித் தமிழ்ப் பேராசிரியர் பணியை இன்றும் தனது ஓய்வுகாலத்தில் இணையம் வழியாகத் தொடர்வது பாராட்டப்பட வேண்டிய செயல் என்பதில் ஐயமில்லை. March 31, 2014 எம். ரிஷான் ஷெரீப் [] எம். ரிஷான் ஷெரீப் இணையத் தமிழ் வாசகர்களைத் தொடர்ந்து தனது கவிதைகள் மூலம் மகிழ்வித்து வருபவர். இலங்கையின் மாவனல்லையைச் சேர்ந்த எம். ரிஷான் ஷெரீப் அவர்கள் கவிஞர் என்ற வகையில் தன்னை முன்னிறுத்திக் கொண்டாலும், ‘வீழ்தலின் நிழல்’ என்ற கவிதைத் தொகுப்பினை வெளியிட்டிருந்தாலும், அவரைக் கவிஞர் என்ற ஒரு சிறு வட்டத்திற்குள் நம்மால் அடக்கவியலாது. இத்தமிழ் எழுத்தாளர் ஒரு கவிஞர் மட்டுமின்றி ஒரு சிறந்த ஊடகவியலாளரும் ஆவார். எம். ரிஷான் ஷெரீப் தனது படைப்பாற்றலைக் கவிதை, சிறுகதை, கட்டுரை, விமர்சனக் கட்டுரை, மொழிபெயர்ப்பு, புகைப்படம், ஓவியம் எனப் பல துறைகளின் வழியாகவும் வெளிப்படுத்தி வருபவர். இதுவரை இவரது படைப்புகள் இலங்கையிலிருந்து வெளிவரும் இதழ்கள், தமிழகத்தின் பிரபலமான இதழ்கள், மற்றும் மலேசியா, சிங்கப்பூர் நாடுகளின் பத்திரிக்கை, இணைய இதழ்கள் எனப் பலவற்றிலும் வெளிவந்துள்ளன. காலச்சுவடு பதிப்பகத்தால் வெளியிடப்பட்ட இவரது மொழிபெயர்ப்பு நாவலான ‘அம்மாவின் ரகசியம்’ நாவலுக்குச் சிறந்த மொழிபெயர்ப்பு நாவலுக்கான ‘அரச இலக்கிய சாகித்திய விருதும்’ கிடைத்துள்ளது. இவரது நூலறிமுகக் கட்டுரையொன்று, நூல் அன்றைய இரண்டாம் உலகப் போர் காலகட்டத்தில் தாய்லாந்திலிருந்து பர்மா வரைக்குமான ரயில்பாதை அமைப்பதற்காகப் பலியிடப்பட்ட மக்களைப்பற்றிய ‘சயாம் – மரண ரயில் பாதை’யைப் பற்றி இருந்தது என்றால், இவர் எழுதும் செய்தி விமர்சனக் கட்டுரை பள்ளியில் அவமானப்படுத்தப்பட்ட சிறுமி தற்கொலை செய்யும் முடிவை எடுத்ததற்குப் பள்ளி நிர்வாகத்தைக் கண்டிக்கும் வகையில் அமைந்தது. இவரது பலதுறை பங்களிப்புகளின் அடிப்படையாக உள்ள ஓர் இழை சமுதாய அக்கறை என்பதாகவே இருந்து வருகிறது. “பனிபடர்ந்த இரவின் காலம் எனது கைவிரல்களை ஒற்றியொற்றி உன் நேசத்தைச் சொல்லிற்று” என்று மனதிற்கு இதம் தரும் சூழலில் அறிமுகமாகி, உணர்வுகளைப் பகிர்ந்துகொண்ட தோழமை ஒன்று தன்னை விட்டு விலகித் தொலைதூரம் சென்றுவிட்ட சோகத்தை வெளிப்படுத்தும் விதமாக ரிஷான் ஷெரீப் எழுதிய ‘நுழைதல்’, ‘விலகல்’ என்ற இரு கவிதைகள் மூலம் உறவை இழந்த பின்னர் மனதில் தோன்றும் வெறுமை உணர்வை அருமையாக வடித்துக் கொடுத்துள்ளார். ஒரு சில வரிகள் கீழே…. நுழைதல் : எல்லாம் கடந்துவிட்டன நேற்றிருந்த மேகத்தைப் போல இக் கணத்து நதி நீர் போல உனது பயணங்கள் முடிவற்றன எல்லையற்று நீளும் உனது பாதைகள் வலியன ஏமாற்றங்களில் தடுக்கி விழுந்து அனுபவங்கள் பல ஒளிந்திருந்த நெஞ்சுனது பாளங்களாய்க் கனன்றெரிந்து உன் வாழ்வின் கதைகள் பேசிற்று உள்ளிருந்த எனக்கான உன் நேசம் சுகமாயும் வலியாயும் மிதந்தூறிட தெப்பமென நனைந்தேன் விலகல் : பட்ட மரத்தின் அடிப்பாகத்தில் புற்றெழுப்பும் கரையான்களைக் கொத்த வரும் சாம்பல்குருவிகளை பொறி வைத்துப் பிடிக்க ஆவலெழும் வேட்டைக் கதைகளை நீ கொண்டிருந்தாய் நாம் கதைத்தபடியே நடந்து கடந்த எனது கிராமத்தின் ஒற்றையடிப் பாதை வழித்தடங்களிலெல்லாம் அக் கதைகள் சிந்தின விடிகாலையில் அக் கதைகளைப் பொறுக்கித் தின்ற சாம்பல்குருவிகள் தொலைதூர தேசமேகிப் பின்னர் வரவேயில்லை உன்னைப் போலவே இவ்வாறு ஈழத்தமிழர் ஒருவர் பிரிவுத் துயரக் கவிதை வடிக்கும் பொழுது, அந்த உறவு பிரிந்து சென்றுவிட்ட காரணம் புலம் பெயரவேண்டிய கட்டாயச் சூழலோ என்றும் தோன்றுகிறது. இவர் வெளிப்படுத்தும் ஏக்கம் உண்மையில் எத்தனை மக்களின் மனதில் நிரந்தரமாகத் தங்கிவிட்டதோ என்ற கலக்கத்தையும் ஏற்படுத்தும் கவிதை வரிகள் இவை. இது போன்ற உணர்வு மிகுந்த இவரது கவிதை வரிகளைப் படிக்கும்பொழுது, ரிஷான் ஷெரீப் என்றவுடன் நம் நினைவிற்கு வருவது ஒரு சமுதாய அக்கறை கொண்ட துடிப்புமிக்க இளைஞர் ஒருவர், வருங்கால உலகம் பற்றி நினைக்கும்பொழுது நமக்கு ஒரு நம்பிக்கை நட்சத்திரமாகத் தெரிபவர் என்ற எண்ணமே மேலோங்கி நிற்கிறது. இவ்வாறு தனது எழுத்துப் பணியின் மூலம் இக்கால இளைஞர்களுக்கு நல்லதொரு முன்மாதிரியாகத் திகழும் எம்.ரிஷான் ஷெரீப் அவர்களது இலக்கியப்பணி தொடர வாழ்த்துகள். April 7, 2014 சொ. வினைதீர்த்தான் [] முத்துச்சிவிகை; முத்துக்கள் இழைத்து அலங்கரித்த பல்லக்கு. இதனை ஒருவரைப் பெருமை படுத்த வழங்கியதாகத் தமிழ் இலக்கியங்கள் அறிவிக்கின்றன. பெண்ணாடகம் சென்று வழிபட்ட பின்னர் நெல்வாயில் அறத்துறையைத் தரிசிக்கத் திருவுள்ளம் கொண்டார் திருஞானசம்பந்தர். செல்லும் வழியில், மாலைப் பொழுதாகிவிட, களைப்பு மேலிட திருமாறன்பாடியில் இரவு தங்கினார். அவ்வூர்வாசிகளின் கனவில் தோன்றிய சிவன், “எனது பக்தன் சம்பந்தன் களைப்பு மேலிடச் சத்திரத்தில் உறங்குகின்றான். அவனுக்காக எமது கோயிலில் முத்துச்சிவிகை, முத்துச் சின்னம், முத்துக்குடை முதலியவற்றை அளித்துள்ளோம். அவற்றை அவனுக்கு வழங்கி என்னிடம் அழைத்து வருக,” என ஆணையிட்டார். விழித்தெழுந்த அவ்வூர் மக்கள் கனவில் தோன்றிய சிவன் உரைத்தபடியே கோயிலில் முத்துச்சிவிகை, குடை, சின்னம் ஆகியவை இருக்கக் கண்டு வியந்து, அவற்றுடன் சென்று சம்பந்தரை வரவேற்றதாக திருமாறன்பாடி தலவரலாற்றில் கூறப்படுகிறது. இந்த திருமாறன்பாடி நகரில் உள்ள அருணா மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 2 படிக்கும் 170 மாணவ மாணவியருக்குத் தன்முன்னேற்றப் பயிலரங்கம் நடத்தும் வாய்ப்பு அமைந்தது திரு. சொ.வினைதீர்த்தான் அவர்களுக்கு. காரைக்குடியைச் சேர்ந்த திரு. வினைதீர்த்தான் அவர்கள் ஆயுள் காப்பீட்டு நிறுவனத்தில் பணிபுரிந்தவர். பணி ஓய்விற்குப் பிறகு, தனது பொழுதை பயனுள்ள வகையில் பல தன்னார்வப் பணிகளில் செலவிட்டு வருகிறார். அவற்றில் ஒன்றுதான் மேலே குறிப்பிட்டது போலப் பள்ளி மாணவர்களுக்கு தன்முன்னேற்றப் பயிலரங்கங்கள் நடத்துவதும் ஆகும். இம்முறை இப்பள்ளியில் பயிலரங்கம் நடத்தியபொழுது மாணவச் செல்வங்களின் மனதில் பதியும் வண்ணம் அவ்வூர் தல வரலாற்றையும், முத்துச் சிவிகையையும் தொடர்புபடுத்தி உரையாடியுள்ளார். அந்த முன்னேற்றப் பயிலரங்க உரையில், ஞானசம்பந்தர் முத்துச்சிவிகை அடைந்த வரலாற்றுடன் மாணவர் தம் குறிக்கோளை அடைவதுடன் ஒப்பிட்டுள்ளார். இதன் பிறகு அவ்வூரில் பயிலரங்கத்தில் பங்கேற்ற மாணவர்கள் எக்காலமும் இப்பயிலரங்கம் குறிப்பிட்டதை மறக்க வழியுண்டா? இனி இப்பயிற்சிகளைப் பற்றி அவரே விவரித்ததை வழங்குவதே பொருத்தமாக இருக்கும். அவரின் வரிகள் பின்வருமாறு: “பயிலரங்கில் முதற் செய்தியாகத் தல வரலாற்றைப் பகிர்ந்துகொண்டு முயற்சியும் ஆர்வமும் இருந்தால் என்ன நிகழும் என்பதற்கு இத்தலமே ஒரு காட்டு என்று சுட்டினேன். முத்துச்சிவிகை என்பது என்ன? அது குறிக்கோளை எளிதல் அடைய உதவும் ஒரு சாதனம். அந்த ஊர்தி நமக்குத் தருவது குறிக்கோளை நோக்கிய வேகமான நகர்வு. குடையும், பொற்சின்னமும் குறிப்பது ஒரு உயரிய, கௌரவ, சமுதாய அடையாளம். முயற்சியும், பயிற்சியும், கொண்ட குறிக்கோளில் தணியாத ஆர்வமும் மாணவர்களிடமிருந்தால் அவர்களுக்குச் சமுதாயத்தில் ஏற்றமும், கௌரவமும், வாழ்வில் உயர்வும் ஏற்படுமென்பதற்குத் திருஞான சம்பந்தர் வாழ்க்கை நிகழ்வை மனதில் எண்ணி அயராது முயல வேண்டுமென்றேன். அடுத்து அந்தக் குறிக்கோளின் வரையறையை S M A R T வழியில் விளக்கிக் குறிக்கோளை நிர்ணயித்தலை எடுத்துக்கொண்டேன். 4 “M” Goals – Micro, Mini, Middle, Mega goals – 1. ஒவ்வொரு நாளுக்கான செயல்பாடுகள் 2. பிளஸ் 2 தேர்வில் மதிப்பெண் எடுத்தல் 3. அடுத்துப் பட்டப் படிப்பு வாய்ப்புகள், படிப்பினைத் தெரிவு செய்தல், பட்டம் பெறல் 4. அடுத்த நீண்ட காலக் குறிக்கோளான தொழிலும் வாழ்வும் சமுதாயப் பணிகளும் என்ற நோக்கில் பயிற்சி அமைந்தது. S W O T – பலம், பலவீனம், வாய்ப்புகள், தடங்கல்கள் என்ற வகையில் மாணவச் செல்வங்களை எண்ணிப் பார்க்கச் செய்தேன். அவர்களைத் தன் திறமைகளையும், துணையாக அமையக் கூடியவர்கள் உதவக் கூடிய வழிகளையும் பட்டியிலிட வைத்தேன். பலவீனங்களையும் பட்டியலிட்டார்கள். பலத்தைப் பெருக்கும் வழிகளும் பலவீனத்தைத் தவிர்க்கவுமான வழிகளும் அவர்களே கூற ஆராயப்பட்டன. பலம் பெருகும்போது சந்தர்ப்பங்கள் “மடி தற்றித் தான் முந்துறும்” என்பது போல வந்தெய்துகின்றன என்பதை உணர்த்தினேன்.” ஓய்வு பெற்றாகிவிட்டது, இனி சாய்வு நாற்காலியில் சாய்ந்தமர்ந்து, தினசரிகள் சில படித்து, அரட்டைகள் பல அடித்து பொழுதைக் கழிக்கலாம் என்று இயல்பாகத் தோன்றும் எண்ணத்தைத் தவிர்த்து, ஓய்வு காலத்தைப் பயனுள்ளதாக மாற்றி வாழ்ந்து வரும், தனது செயலின் வழியாகப் பிற பேரிள மக்களுக்கு முன்மாதிரியாகவும், இளைஞர்களுக்கு வழிகாட்டியாகவும் செயலாற்றி வரும் சொ.வினைதீர்த்தான் அவர்களின் தன்னலமற்ற சமுதாயப் பணி வாழ்க வளர்க என வாழ்த்துவோம். April 14, 2014 எம். மணிகண்டன் [] மதுரையைச் சேர்ந்த, டி.வி.எஸ்., சமுதாயப் பயிற்சிக் கல்லூரியில் பயிற்றுநராக (a demonstrator at TVS Educational Research and Development Centre’s Community College) பணிபுரிபவர் திரு. எம். மணிகண்டன். இவர் கோவில்பட்டியை அடுத்த, நாலாட்டின்புத்தூரைச் சேர்ந்தவர். ஏப்ரல் 14, 2014 அன்று திருநெல்வேலி, சங்கரன்கோவில் அருகில் குத்தாலப்பேரியில் ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த ஹர்ஷன் என்ற மூன்று வயதுச் சிறுவனை மீட்டதில் இவருக்குப் பெரும்பங்கு இருக்கிறது. இவரே வடிவமைத்த, இவரது கண்டுபிடிப்பான ஆழ்துளைக் கிணற்றுக் கருவியுடன் (‘Borewell Robot’), இவரும் இவரது மீட்புப் பணிக் குழுவினரும் விரைந்து சென்று சிறுவனை மீட்டுள்ளார்கள். இவருடன் காவல்துறை, அரசு மருத்துவமனை மருத்துவர்கள், தீயணைப்புப் படையினர், ஊர் மக்கள், மாவட்ட ஆட்சியாளர் வரை தளத்தில் இருந்து ஒருங்கிணைந்து பணியாற்றியதில் சிறுவன் உயிருடன் மீட்கப் பட்டிருக்கிறான். அனைவரும் பாராட்டப்பட வேண்டியவர்கள். இந்த மீட்புப் பணியை வெற்றி பெறச் செய்ததில் மணிகண்டனுக்கும் அவரது கண்டுபிடிப்புக்கும் பெரும் பங்கு உண்டு. இந்தியாவில் குழந்தைகள் நாளொரு மேனியும், பொழுதொரு வண்ணமுமாக வளர்வதில் இந்த நூற்றாண்டில் பற்பல புதுமையான நிகழ்வுகளும் இடம் பெற்றுள்ளன. அவற்றுள் ஒன்று சில குழந்தைகள் நிகழ்த்தும் சாகச நிகழ்ச்சியான ஆழ்துளைக் கிணற்றில் விழுந்து எழுவதும் ஒன்றாக இடம் பெற ஆரம்பித்துள்ளது. அக்காலம் போல பிள்ளைத்தமிழ் பாடும் வழக்கம் இருந்திருந்தால் பத்து பருவங்களையும் இற்றைப்படுத்தும் பட்டியலில் குழந்தைகளின் இந்த வீர விளையாட்டையும் ஒன்றாகச் சேர்க்கலாம் போலிருக்கிறது. விவசாயத்திற்கு நீர் பற்றாக்குறையும், தொழில்நுட்ப வளர்ச்சியும் பல விவசாயிகளை ஆழ்துளைக் கிணறு தோண்டச் செய்கிறது. அவ்வாறு தோண்டிய ஆழ்துளைக் கிணறுகளில் நீரில்லாவிட்டால் அதனைக் கையோடு மூட வேண்டியதும் தோண்டிய நிறுவனங்களின் கடமையாக இருக்க வேண்டும் என்பது பொது அறிவுக்கு உட்பட்டது. அதைச் செய்யாத நிறுவனங்களின் தொழில் உரிமம் பறிக்கப்படும் என்பதைச் சட்டம் போட்டு நடவடிக்கை எடுத்ததாக இதுவரை தெரியவில்லை. சிறு குழந்தைகளும் வழக்கம் போல் கண் மூடி கண் திறப்பதற்குள் அங்குமிங்கும் ஓடி எளிதில் விபத்துகளைச் சந்திக்கிறார்கள். இவ்வாறு நேரும் விபத்துகளில் ஏறத்தாழ ஒன்றரை அடி விட்டமுள்ள இதுபோன்று திறந்து கிடக்கும் ஆழ்துளைக் கிணறுகளில் விழுந்து விடுவதும் ஒன்றாகிப் போய் விட்டது. உடனே அவசர நடவடிக்கைகள் துவங்கி, சில நேரங்களில் இராணுவத்தையும் உதவிக்கு அழைக்கும் அளவிற்கு நிலைமை மோசமாகிவிடுகிறது. தொலைக்காட்சிகளில் பரபரப்புச் செய்திகளும், நேரடி ஒளிபரப்புகளும் வாடிக்கையாகிறது. இந்த ஆர்ப்பாட்டத்தின் இறுதியில் நல்லதொரு முடிவாக அனைத்துக் குழந்தைகளும் உயிருடன் மீட்கப்படுவதுமில்லை என்பதும் வருத்தத்திற்குரியது. பத்தாண்டுகளுக்கு முன்னர் மணிகண்டனின் மகன் சிறுவனாக இருந்தபொழுது இது போன்ற விபத்து ஒன்று நடக்க இருந்து, தடுத்துக் காப்பாற்றிய மணிகண்டனுக்கு இது போன்ற கருவி ஒன்றினை வடிவமைக்க எண்ணம் எழுந்ததாகவும், தனது சொந்த செலவில் வடிவமைத்த பிறகு அதனை மேலும் செம்மைப்படுத்த இவர் பணியாற்றும் டி.வி.எஸ். கல்வி ஆராய்ச்சி மையம் உதவியதாகவும் கூறுகிறார் திரு. மணிகண்டன். இனி மணிகண்டனது ஆழ்துளைக் கிணற்றுக் கருவி வேலை செய்யம் விதத்தை அவரே விளக்குவது இங்குக் கொடுக்கப்பட்டுள்ளது….. “ஆழ்துளைக் கிணற்றில் ஆயிரம் அடி ஆழத்தில் குழந்தைகள் சிக்கி இருந்தாலும் கூட, இக்கருவியின் உதவியால் மீட்க முடியும். `12 வி’ பேட்டரி, டிசி மோட்டார் மூலம் இந்தக் கருவி இயங்குகிறது. குழந்தைகளைப் பற்றிப்பிடிக்கும் வகையிலான இயந்திர கை தானாகச் சுருங்கி விரியும் வகையில் பொருத்தப்பட்டுள்ளது. மின்சப்ளை இல்லாத இடங்களில் பேட்டரி மூலமும் இதை இயக்க முடியும். குழந்தையை மீட்டு வரும்போது, குழந்தை நழுவி விடாமல் இருக்க மடங்கும் விரல்கள் அமைப்பும் பொருத்தப்பட்டுள்ளது. மொத்தம் 2 அடி உயரம், 5 கிலோ எடை உள்ள இந்த இயந்திரத்தை எங்கும் எளிதாக எடுத்துச் செல்லலாம். குழிக்குள் சிக்கிய குழந்தையை அழுத்தும்போது ஏற்படுத்தும் அழுத்த அளவைத் துல்லியமாக அறிந்து கொள்ள, `பிரஷர் கேஜ்’ அமைப்பும் பொருத்தப்பட்டுள்ளது. குழிக்குள் தவறி விழுந்த குழந்தையின்மீது மண் சரிவதால் மீட்புப் பணியில் ஏற்படும் சிரமங்களை நீக்க மண் அள்ளும் இயந்திரம், வாக்குவம் பம்ப் ஆகியவையும் இதில் பொருத்தப்பட்டுள்ளன. சென்னை ஐ.ஐ.டி. இந்த இயந்திரத்துக்கு 2006-ல் விருதும், அங்கீகாரமும் அளித்திருக்கிறது. 2007-ல் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரால் குடியரசு தினவிழாவில் நற்சான்றிதழ் அளிக்கப்பட்டது. இக்கருவியை மாவட்டம்தோறும் வைக்க அரசு நடவடிக்கை எடுக்கலாம். குறிப்பாகத் தீயணைப்பு நிலையங்கள் தோறும் இக் கருவியை வைத்துக்கொண்டால், மீட்பு பணிகளுக்குப் பயன்படுத்தி குழந்தைகளைக் காப்பாற்ற முடியும். இக்கருவியை யார் வேண்டுமானாலும் இயக்க முடியும். இதைத் தயாரிக்க ரூ. 60,000 வரை தான் செலவாகும்.” இது ‘தி இந்து’ நாளிதழுக்கு அவர் அளித்த பேட்டியின் ஒரு பகுதி அரியதொரு கண்டுபிடிப்பால் உயிர்காக்க உதவிய எம்.மணிகண்டன் அவர்கள் மேலும் பல தொழில் நுட்பக் கருவிகளும் உயிர் காக்கும் புதிய வழிமுறைகளும் கண்டறிந்து சமுதாய முன்னேற்றத்திற்கு உதவ வாழ்த்துகளும் பாராட்டுகளும். April 21, 2014 பிச்சினிக்காடு இளங்கோ [] திரு. பிச்சினிக்காடு இளங்கோ சிங்கப்பூர் வாழ் தமிழ்க் கவிஞர். தனது கவிதைகள் மூலம் வாசகர்களை மகிழ்வித்து வரும் இவர் ஒரு வேளாண்மைப்பட்டதாரி. இவர் தஞ்சை மாவட்டம், பட்டுக்கோட்டை வட்டம், அத்திவெட்டி கிராமத்தில் குக்கிராமமான பிச்சினிக்காட்டில் பிறந்தவர். திருச்சி அனைத்திந்திய வானொலி நிலையம், சிங்கப்பூர் ஒலிபரப்புக்கழகம், சிங்கப்பூர் MDIS (Management development Institute of Singapore) என்கிற கல்வி நிறுவனம் எனப்பல நிறுவனங்களும் இவர் பணியால் சிறப்புற்றிருக்கிறது. சிங்கைச்சுடரின் முன்னாள் ஆசிரியரான இவரது கவிதைகள் தமிழகத்தின் குமுதம், விகடன் போன்ற முன்னணி பத்திரிக்கைகளிலும் வெளிவந்துள்ளன. இவருக்கு ஒரு நூலைப் படிப்பது, பேருந்துப் பயணத்தில் ஒரு நிகழ்வைப் பார்ப்பது என அனைத்துமே கவிதைகளை எழுதத் தூண்டுகோலாக அமைந்து விட்டிருக்கிறது. அக்குறிப்புகளையும் இணைத்து கவிதைகளுடன் வழங்கியுள்ளார். கவிஞனாகிறேன் என்ற கவிதையில் தான் எப்படிப்பட்ட கவிஞன் என்று தன்னைப்பற்றிக் கூறியுள்ளார். இதை இதை எழுதவேண்டுமென்று எண்ணியதில்லை எண்ணுவதுமில்லை அது அது வந்து நச்சரிப்பதால்தான் எனது எழுதுகோல் உச்சரிக்கிறது …. இதுவரை இவரது பத்து கவிதை நூல்கள் வெளி வந்துள்ளன. இவர் நெடுங் கவிதைகளையும் எழுதுவதுண்டு. இவரது முதல் தொகுதியான “வியர்வைத்தாவரங்கள்” படித்து விட்டு மறைந்த டாக்டர் பாலா நெடுங்கவிதைகள் எழுதுங்கள் என்று கேட்டுக் கொண்டதாகக் குறிப்பிட்டுள்ளார். இரண்டாவது பதிப்பை அறிமுகப்படுத்திய கவிப்பேரரசு திரு. வைரமுத்து அவர்கள் “உங்களுடைய நெடுங்கவிதை நாவல்போல் உள்ளது” என்றும் பாராட்டியுள்ளார். இராஜாஜியின் மகாபாரதம் படித்த பிறகு கர்ணன் மேல் கொண்டிருந்த இவரது எண்ணம் மாறிவிட்டிருக்கிறது. நாம் அனைவரும் நட்பிற்கு இலக்கணமாகக் கர்ணனைப் புகழ்வோம். செஞ்சோற்றுக் கடன் தீர்க்கத் தனது தம்பிகளையும் எதிர்த்தவன் எனப் பாராட்டுவோம். ஆனால் இவரோ கர்ணன் பெரிய வள்ளலாகத்தான் இருக்கட்டுமே அதனால் என்ன? அவன் நியாயவான் அல்ல … என்று தனது வாதத்தை முன் வைக்கிறார். துவைத வனத்தில் சித்திரசேனனிடம் துரியோதனன் சிக்கிய பொழுது கர்ணன் உதவாமல் தப்பி ஓடினான். தனக்கு நாடு தந்து அவமானம் துடைத்து அழகு பார்த்த துரியோதனனைத் தவிக்க விட்டவன் கர்ணன். அவன் நியாயத்தின் பக்கம் நின்றதே இல்லை. கெளரவர் சபையில் பாஞ்சாலிக்கு நடந்த கொடுமையில் பாஞ்சாலிக்கு ஆதரவாகக் குரல் கொடுத்தவன் விகர்ணன்தான். கர்ணன் துச்சாதனனுக்கு துகிலுரிக்கச் சொல்லி தூபம் போட்டவன். பாஞ்சாலிக்கு ஆதரவாகப் பேசிய விகர்ணனைக் கண்டித்தவன் கர்ணன். இந்தக் காரணத்தால் இக்கவிஞர் கர்ணனை மன்னிக்கத் தயாராக இல்லை. கெளரவர்களில் நூற்றில் ஒருவனாக இருந்தாலும் பாஞ்சாலிக்கு நடந்த அநியாயத்திற்கு உடன்படாத விகர்ணனே ஆயிரத்தில் ஒருவன் என்று தனது எண்ணத்தைக் கவிதை மூலம் வடித்துள்ளார். இது போன்ற வேறு விதக் கோணம் கொண்ட விவாதம் இவரது கவிதையை சிறப்புறச் செய்கிறது. அக்கவிதையின் சுருக்கமான சாரம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. கர்ணனல்லன் விகர்ணனே ஆயிரத்தில் ஒருவன் எல்லாரும் எல்லா இடத்திலும் கர்ணனையே வியக்கிறார்கள் நான் வேறுபடுகிறேன் உலகத்தோடு நான் ஒத்துப்போக விரும்பவில்லை எல்லாரையும்போல ஓபோட விரும்பவில்லை … கொடை கொடுக்கும் இடத்திலும் குலம்கேட்ட இடத்திலும் நான் கர்ணன்பக்கம்தான் திறன்காட்டவிடாமல் குலம்கேட்டது கொடுமைதான் அதற்குமேல் அவன்மேல் மரியாதையில்லை நான் அவன்பக்கமில்லை செஞ்சோற்றுக்கடன் தீர்த்ததிலும் பெருமையில்லை … பாண்டவர் கெளரவர் மற்றும் வேடிக்கை பார்ப்பவர் நிறைந்த அவையில் பாஞ்சாலிக்காக யார்பேசினார்கள் நேர்மையாய்? பெண்ணெனப் பார்த்தவர் அதிகம் பெண்ணென்று பரிவுகாட்டியவர் யார்? … சுதந்தரம் இழந்தவன் என்னை இழக்க என் சுதந்தரத்தை இழக்க என்ன உரிமையுண்டு? பாஞ்சாலி கேள்விக்கு அவை ஆண்மையற்று அன்று ஆமைபோல் இருந்தது … பாஞ்சாலி பேசுவது சரியென்று குரல்கொடுத்த விகர்ணனைக் கண்டித்த கர்ணனைக் கண்ணைமூடிக்கொண்டு ஏற்பது ஏற்புடையதல்ல எனக்கு விகர்ணன் அவையில் சின்னவன் பெண்ணுக்காய்ப்பேசிய பெரியவன் அவன்தான் துச்சாதனனைத் துகிலுரியத் தூண்டியதே கர்வக்காரன் கர்ணன்தான் … இனி எப்போதும் நான் விகர்ணன் பக்கம் இராமாயணம் என்றால் நான் கும்பகர்ணன் பக்கம் காரணம் விகர்ணன் நியாயத்தின் பக்கம் அவன் கெளரவர்களுக்கு கெளரவம் தந்தவன் அவன் நூற்றில் ஒருவனல்ல ஆயிரத்தில் ஒருவன் சிறப்பு மிக்க கவிதைகள் படைத்திடும் திரு. பிச்சினிக்காடு இளங்கோ அவர்களது இலக்கியப் பணி தொடர வாழ்த்துகள். April 28, 2014 ராஜா கார்த்திக் கண்ட்டா [] இலண்டனைச் சேர்ந்த 33 வயதான திரு. ராஜா கார்த்திக் கண்ட்டா என்பவர் பெரும்பான்மையான இந்திய இளைஞர்களில் தனிப்பட்டவராகப் பிரகாசிக்கிறார். இவர் ஐந்து ஆண்டுகளுக்கு முன்னர் தனது சொந்த ஊரான ஐதராபாத்திலிருந்து இலண்டன் சென்று அங்குள்ள ஒரு தொழில்நுட்ப நிறுவனத்திற்காகப் பணியாற்றுபவர். ஏப்ரல் 30, 2014 அன்று ஆந்திராவில் நடந்த மக்களவைத் தேர்தலில் தனது வாக்கைப் பதிவு செய்யும் பொருட்டு இந்தியாவிற்குத் திரும்பியிருக்கிறார். உள்ளூரில் இருந்து கொண்டே தாய்நாட்டு நலனில் அக்கறையின்றி வாக்குப் பதிவு செய்யாமல் அலட்சியமாக இருக்கும் சிலருடன் ஒப்பிடும்போது இவர் வாக்களிப்பதற்காகவே வெளிநாட்டிலிருந்து சொந்த மண்ணிற்கு சென்று வந்தது பாராட்டிற்குரியது. ராஜா கார்த்திக் கண்ட்டா இதற்கும் ஒருபடி மேலே சென்று, தனக்குச் சிறப்புச் சலுகையை எதிர்பார்த்து, மக்களுடன் வரிசையில் நின்று வாக்களிக்காமல் அனைவரையும் முந்த நினைத்த மத்திய அமைச்சரும், அரசியல் தலைவரும், நடிகருமான திரு. சிரஞ்சீவியின் செயலுக்கு வெளிப்படையாகத் தன் எதிர்ப்பைத் தெரிவித்திருக்கிறார். இவரது எதிர்ப்பினால் வேறு வழியின்றி ஐதராபாத் ஜூபிளி ஹில்ஸ் பகுதியில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்குப் பதிவு செய்ய வந்த சிரஞ்சீவி தனது குடும்பத்தினருடன் வரிசையில் நின்று வாக்குப்பதிவு செய்யும் நிலை ஏற்பட்டிருக்கிறது. அங்குக் கூடியிருந்த மற்றவர்கள் போலன்றி, அவர் மத்திய அமைச்சர் என்ற பெரும் பதவியில் இருப்பவராயினும் அவரும் பொது மக்களைப் போலவே வரிசையில் நின்றுதான் வாக்களிக்கச் செல்ல வேண்டும் என்று துணிச்சலாக அவரைத் தட்டிக் கேட்டு, ஒரு சிறந்த குடிமகனாகத் தன் கடமையைச் சரிவர நிறைவேற்றிய இவருடைய செயல் பாராட்டுதலுக்குரியது. இவரது இந்தச் செயலை ஆதரித்து வரிசையில் காத்திருந்த மற்றவர்களும் கரவொலி எழுப்பித் தங்கள் பாராட்டுகளையும் தெரிவித்துள்ளதும் குறிப்பிடத்தக்கது. இது குறித்து செய்தியாளர்களுக்குக் கருத்துத் தெரிவித்த ராஜா கார்த்திக், “நான் அயல்நாட்டில் வசிக்கும் இந்தியன், எனது வாக்குரிமையை நிறைவேற்றவே இந்தியா வந்தேன். சிரஞ்சீவி முதியவரோ, மாற்றுத்திறனாளியோ அல்ல, அதனால்தான் நான் அவரிடம் உங்களுக்குச் சிறப்புச் சலுகை வேண்டுமா எனக் கேட்டு அவரை வரிசையில் நிற்கச் சொன்னேன், சிரஞ்சீவியை நான் மதித்தாலும் அவர் விதிமுறைகளை மீறுவதை அனுமதிக்க முடியாது,” என்று சொல்லியிருக்கிறார். இது போன்று அதிகாரத்திற்கு அஞ்சாது துணிச்சலுடன் இந்திய அரசியல்வாதிகளைக் கண்டிக்கப் பலர் முன் வர வேண்டும். சிறப்பு மிக்க நடத்தையால், இந்திய இளைய சமுதாயத்திற்கு முன்னுதாரணமாக விளங்கிய திரு. ராஜா கார்த்திக் அவர்கள் இக்கால இளைஞர்களுக்கு ஒரு நல்ல முன்னுதாரணமாகத் திகழ்வதற்குப் பாராட்டுகள். May 5, 2014 கே. எஸ். சுதாகர் [] ஆஸ்திரேலியாவின் மெல்பர்ன் நகரில் வசித்து வரும் தமிழ் எழுத்தாளர் திரு. கே.எஸ்.சுதாகர் அவர்கள் கடந்த 30 ஆண்டுகளாகச் சிறுகதை, கவிதை, கட்டுரை, பத்தி எழுத்து, விமர்சனம் போன்ற துறைகளில் எழுதி வருகின்றார். பொறியியல் பட்டதாரியான இவர் சுருதி, கதிரொளியான் என்னும் புனைபெயர்களிலும் எழுதுவதுண்டு. இலங்கை, இந்தியா, மலேசியா, இங்கிலாந்து, ஜெர்மனி, நியூசிலாந்து, ஆஸ்திரேலியா, அமெரிக்கா எனப் பலநாடுகளில் வெளியிடப்படும் பத்திரிக்கைகளிலும் இவரது படைப்புகள் வெளிவந்துள்ளன. குறிப்பாக மரத்தடி, திண்ணை, திசைகள், பதிவுகள், கீற்று, ஈழநேசன், வல்லினம், அப்பால் தமிழ், அக்கினிக்குஞ்சு, தமிழ்முரசு, எதுவரை? வல்லமை எனப் பல இணையத் தமிழ் மின்னிதழ் தளங்களிலும் கட்டுரைகளையும் கதைகளையும் இவர் எழுதியதால் தமிழ் இணைய வாசகர்களுக்கு நன்கு அறிமுகமானவர். கே.எஸ். சுதாகரின் சிறுகதைகள் பெரும்பாலும் புலம் பெயர்ந்து வாழும் தமிழ் மக்களின் வாழ்க்கை நிகழ்வுகளை அடிப்படையாகக் கொண்டு எழுதப் பெற்றவை. தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கம், ஞானம் சஞ்சிகை, நார்வே தமிழ்ச்சங்கம், ஈழம் தமிழ்ச்சங்கம் (ஆஸ்திரேலியா), பூபாள ராகங்கள் (இங்கிலாந்து), மரத்தடி இணையம், தென்றல் (அமெரிக்கா), தாய்த் தமிழ்ப்பள்ளி (ஆஸ்திரேலியா), வல்லமை உள்ளிட்ட அமைப்புகள் நடத்திய மொத்தம் 20 சிறுகதைப்போட்டிகளில் பரிசு பெற்றுள்ளார். ‘எங்கே போகின்றோம்’ ‘சென்றிடுவீர் எட்டுத்திக்கும்’ என்ற சிறுகதைத் தொகுதிகளையும் வெளியிட்டுள்ளார். ஆஸ்திரேலிய தமிழ் இலக்கிய கலைச்சங்கத்தின் ஸ்தாபக உறுப்பினரான கே.எஸ்.சுதாகர் தற்போது இந்த அமைப்பின் நிதிச் செயலாளராகவும் பொறுப்பேற்றுள்ளார். இவருடைய “அவுஸ்திரேலியப் பழங்குடிமக்களும் தமிழினமும்” என்ற கட்டுரையில் ஒரு சிறு பகுதி இங்கு கொடுக்கப்பட்டுள்ளது. இதில் தமிழையொத்த ஒலிப்பு கொண்ட ஒற்றுமைகள் சில ஆஸ்திரேலிய பழங்குடியினரிடம் இருப்பதை அறியத் தருகிறார். “மத்திய அவுஸ்திரேலியாவில் இருந்த பழங்குடிகளின் இனத்தின் பெயர்களாக (Tribes Names) – வாகை (Waagai), சிங்காலி (Chingali), இளம்பிறை (Ilpirra), வால்பாறை (Walpari), அருந்தா (Aruntha) போன்ற பெயர்கள் இருப்பதைக் காணலாம். Alice Springs போன்ற இடங்களில், சிறுசிறு குழுக்களாக பரந்த அளவில் ‘அருந்தா’ இனக்குழுவினர் உள்ளனர். மேலும் இவர்கள் விலங்குகள், மரங்களின் பெயர்களைக் கொண்டும் வகைப்படுத்தப்படுகின்றனர். ஏமு மனிதன் (Emu man), கங்காரு மனிதர்கள் (Kangaroo men), பிளம் மர மக்கள் (‘Plum tree’ people) போன்றவற்றை இதற்கு உதாரணமாகக் கொள்ளலாம். பழங்குடி மக்களின் பெரும்பாலான உரையாடல்களில் தமிழின் உச்சரிப்பைக் காணலாம். ‘Ten Canoes’ என்ற அவுஸ்திரேலியாவில் எடுக்கப்பட்ட அபரிஜினல் மக்களைப் பற்றிய படத்தைப் பார்க்கும்போது உங்களுக்கும் இந்த அனுபவம் ஏற்படலாம். அவர்கள் பாவிக்கும் சில சொற்களிற்கும் தமிழ்ச் சொற்களுக்கும் ஒற்றுமைகள் இருப்பதைக் காணலாம். சிட்னியில் ‘விண்மலே’, ‘காக்காடு’ என இரு இடங்கள் இருக்கின்றன. ஆகாயமும் (விண்) மலையும் ஒட்டி நிற்பதைப் போல இருக்கும் அந்த அற்புதமான இடத்திற்கு winmalle (விண்மலை) என்று பெயர். ‘கா’ என்றால் சோலை, காடு என்றால் வனம். உண்மையிலே சோலைவனம் போல ஏராளமானவர்களைக் கவர்ந்திழுக்கும் அந்த இடத்திற்கு kakadu என்று பெயர் வழங்குகின்றது. மேற்கு அவுஸ்திரேலியாவில் மதுர (Madura) என்று இன்னொரு இடம் இருக்கின்றது. இன்னொரு ஆதிவாசி இனம் அதிகம் பாவிக்கும் சொற்றொடர் ‘பூனங்கா யிங்கவா’. அதன் அர்த்தம் ‘பெண்ணே இங்கே வா’. ‘பூ நங்கையே இங்கே வா’ என்பதையே அவர்கள் இப்படிச் சொல்கின்றார்கள். தான் வாழும் நாட்டு மக்களின் நடவடிக்கைகளை ஒன்றிக் கவனித்து பண்பாடுகளுக்கு இடையேயான ஒற்றுமைகளை ஆவணப்படுத்தும் இவரது முயற்சி பாராட்டிற்குரியது. May 12, 2014 மரபூர். ஜெய. சந்திரசேகரன் - ‘ரீச்’ சந்திரா’ [] ‘மரபூர்’ ஜெய. சந்திரசேகரன் அவர்கள் ‘ரீச்’ சந்திரா’ என்ற பெயராலும் அறியப்படுபவர். ப்ளாஸ்டிக் மற்றும் தொழில்கள் உற்பத்தி ஆலோசகர் பணியில் இருப்பவர். அத்துடன் புராதனக் கோவில்களில் உழவாரப்பணியைத் தன் உயிர் மூச்சாகக் கொண்டிருப்பவர். புராதனச் சின்னங்களின் புனரமைப்பு இவரின் விருப்பப் பணி. இவரின் தற்போதைய தீவிர முழக்கம்: எல்லோர்க்கும் வீட்டுக்கு வீடு கழிப்பறை மற்றும் தூய குடிநீர். தண்ணீர் …இன்றைய சூழலில் கீழ்த்தட்டு மக்கள் தாகம் தீர்க்க , ஒரு குடம் தண்ணீருக்கே தெருத்தெருவாய் கிணறு, குளமென அலையும் நிலை. அதுவும் அதல பாதாளத்திலிருந்துதான் எடுக்க வேண்டும். அப்படிக் கிடைக்கும் நீரும் சுத்தப் படுத்தப்படாமல் வடிகட்டாமல் குடிக்கும் தரத்தில் இருப்பதில்லை. உடல் நலத்தைக் கெடுக்கும் காரணிகள் பல இதில் கலந்திருப்பதைப் பெரும்பான்மையானோர் அறியாமலே உட்கொள்வதால் கிராமப்பகுதிகளில் பெரும்பாலானவர்கள் பலவகையான உடல் ஊனங்கள், சுகாதாரச் சீர்கேடுகளை எதிர்கொள்ள வேண்டிய நிலைக்கு ஆளாகின்றனர். இதை எப்படிச் சரி செய்ய முடியும் ? மக்களை எவ்வாறு காப்பாற்ற முடியும்? என்றால்; அம்மக்களிடம் சென்று விழிப்புணர்வை எப்படி ஏற்படுத்த வேண்டும் என்பதே அதற்கான பதில். இதனை நடைமுறையில் சாத்தியப்படுத்த அவர்களுக்குப் புரியும் வகையில் எளியத் தொழில் நுட்பமுள்ள, அவர்களது பொருளாதார நிலை ஏற்கக் கூடிய ஒரு நீர்வடிகட்டி (water filter) வழங்கினால் முடியும். அவ்வாறு முடியும் எனச் சாதித்துக்காட்டியது ‘ரீச்’ சந்திரா’ அவர்களின் சிறப்பு. இவர் புதிய, எளியத் தொழில் நுட்பத்தில் நீர் வடிகட்டி ஒன்றினை கண்டுபிடித்திருக்கிறார். ரூபாய் ஆறாயிரம், பத்தாயிரம் என்றிருக்கும் சந்தை நிலவரத்தில், ஏழை எளிய மக்களுக்கு அவர்களது ஒரு நாள் சம்பள விலையில் வாங்கிவிடக்கூடிய ஒரு குடிநீர் வடிகட்டி இவர் தயாரித்துள்ள குடிநீர் வடிகட்டி. இந்தக் குறைந்த விலைக் குடிநீர் வடிகட்டியை இயக்க மின்சாரமும் தேவையில்லை என்பது செயலாக முறையின் சிறப்புமாகும். இவரது பலவருட அயராத உழைப்பும் , தன்னலமில்லாச் செயல்பாடுகளும் இப்பொழுது உலக ஊடகங்களின் பார்வையிலும் விழுந்துள்ளது (Water For All (Sanitation) - http://watsan.in . ஆசியாவின் மிகப்பெரிய பொதுமக்களுக்கு சேவை செய்யும் நிறுவனங்களுக்கான போட்டியில் (http://socialventurechallenge.asia அரை இறுதிச் சுற்றிலும் வெற்றிபெற்றுள்ளார் சுத்தமான குடி நீர் மற்றும் சுகாதாரமான வாழ்வும் அனைவரையும் சென்றடையவும், உலகச் சுகாதாரத்தை மேம்படுத்தும் வகையில் புதிய, எளியத் தொழில் நுட்பத்தில் வடிகட்டி ஒன்றினை வடிவமைத்து அரையிறுதிச் சுற்றில் வெற்றிபெற்ற ஜெய.சந்திரசேகரன் அவர்களுக்குப் பாராட்டுகள். May 18, 2014 பூவை. பி. தயாபரன் [] திருக்குறள், எல்லா மொழிகளுக்கும், எல்லா இனங்களுக்குமான ஒரு பொது மறை, இதை வழங்கியிருப்பது நம் தமிழ் மொழி மட்டுமே என்பதில் நம் அனைவருக்குமே பெருமை உண்டு. இந்தப் பெருமித எண்ணத்தினால் ஓர் அறக்கட்டளையும் அமைத்து, திருக்குறளின் பெருமையை அடுத்த தலைமுறையினரும் போற்ற வேண்டும் என்ற குறிக்கோளுடன் தன்னார்வத் தொண்டு செய்பவர் பூவை. பி. தயாபரன் அவர்கள். திரு. பூவை. பி. தயாபரன் திருச்சி மாவட்டம், புள்ளம்பாடியைச் சேர்ந்த ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர். இவர் தனது தமிழ்ப் பற்று காரணமாக இன்றும் மாலை வேளையில் மாணவர்களுக்குத் திருக்குறள், மூதுரை, ஆத்திச்சூடி, நல்வழி, கொன்றை வேந்தன் ஆகியவற்றை இலவசமாகக் கற்பித்து வருகிறார். அத்துடனின்றி, திருக்குறளுடன் அவரது மகன் திருமூலநாதன் பெயரையும் இணைத்து “திருக்குறள் திருமூலநாதன் அறக்கட்டளை” என்ற அமைப்பை 1997-ம் ஆண்டு தொடங்கி நடத்தி வருகிறார். இவரது மகன் திருமூலநாதனும் அவரது நான்கு வயதிலேயே திருக்குறள் முழுமையையும் ஒப்பித்து 1996 இல் லிம்கா சாதனையாளர் நூலில் இடம் பெற்றவர். தனது ஓய்வூதியத்தை அந்த அறக்கட்டளைக்கு நிதியாக்கி, அந்த நிதியில் கடந்த 17 ஆண்டுகளாகத் திருக்குறள் திருவிழா நடத்தி வருகிறார். அந்த விழாவில் திருக்குறள் ஒப்பித்தல் போட்டியில் 1,330 குறள்களையும் ஒப்பிக்கும் மாணவ மாணவிகளுக்குத் திருக்குறள் திருமூலநாதன் அறக்கட்டளை சார்பில் பரிசு வழங்கி இளைய தலைமுறையினரை திருக்குறள் கற்க ஊக்குவிக்கிறார். 1330 திருக்குறள்களையும் சீர்களைச் சிதைக்காமல், தடுமாற்றமின்றி, சரியான உச்சரிப்புடன் ஒப்பிப்பவர்களுக்கு தலா ரூ.1,500ம் அத்துடன் விருதும் வழங்கப்படுகிறது. வயதில் சிறியோர்களின் சிரமத்தைக் குறைக்க தவணைமுறையிலும், அதாவது முதல் தவணையாக 500 குறள்களை ஒப்பித்துவிட்டு ரூ.500 பரிசும் , பிறகு அடுத்த ஆண்டு மீதமுள்ள 830 குறள்களை ஒப்பித்துவிட்டு ரூ.830 பரிசு வாங்கிக்கொள்ளலாம் என்ற வாய்ப்பும் கொடுக்கப்படுகிறது. கடந்த 17 ஆண்டுகளில் இதுவரை 161 மாணவர்கள் ரொக்கப் பரிசுகளும், விருதுகளும் பெற்றுள்ளனர். பரிசு பெறுவோருக்கு “திருக்குறள் செல்வன்” அல்லது “திருக்குறள் செல்வி” என்ற விருது வழங்கப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் மே மாதம் முதல் வாரம் இப்போட்டி நடத்தப்பெறும். இந்தப் போட்டியில் பள்ளி மாணவ, மாணவியர் மற்றும் 17 வயதுக்குட்பட்ட பள்ளியில் படித்து இடைநின்றோரும் பங்கேற்கலாம். திருக்குறள் ஒப்பித்தல் போட்டியில் கலந்து கொள்ள விரும்பும் மாணவர்கள், தமது பெயர் மற்றும் தன்விவரக் குறிப்பை “பூவை பி.தயாபரன், 25, திருக்குறள் தெரு, புள்ளம்பாடி, 621 711′ என்ற முகவரிக்கு ஒவ்வொரு ஆண்டிலும் ஏப்ரல் 15-ஆம் தேதிக்குள் அஞ்சலில் அனுப்பிப் பதிவு செய்து கொள்ள வேண்டும். மேலும் தகவலுக்காக தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண்: 97865 86992. இணையத்தள முகவரி: https://sites.google.com/site/thirumoolanathand/thirukkural-thirumoolanathan-arakkattalai தான் ஓர் எளிய வாழ்க்கை முறையினைப் பின்பற்றி வாழ்ந்தாலும், பிறரிடம் இருந்து எந்த நிதி உதவியும் பெறாது, திருக்குறளையும் தமிழையும் அடுத்த தலைமுறைக்கு கொண்டு சேர்க்கும் பூவை. பி. தயாபரன் அவர்களுக்கு தமிழுலகம் கடமைப்பட்டுள்ளது. May 26, 2014 கேசவ் வெங்கட்ராகவன் [] இந்தியாவின் முன்னணி பத்திரிகையான ‘தி இந்து’ ஆங்கில நாளிதழின் துணையாசிரியராகவும், கால்நூற்றாண்டிற்கும் மேலாக அந்த நாளிதழில் கருத்துப்படம் வரைபவராகவும் பணியாற்றிவருபவர் திரு. கேசவ். இந்தியாவின் புதிய தலைமை அமைச்சராகப் பதவியேற்ற திரு. நரேந்திர மோதி அவர்களின் பதவியேற்பு விழாவினை ஒட்டி இவர் வரைந்த கருத்துப் படங்கள் பலரைக் கவர்ந்தன. திரு. கேசவ் தன்னைப்பற்றிக் கூறுகையில் “Cartooning is my profession. Painting is my passion” என்று விவரிக்கின்றார். வல்லமை இதழில் ‘தினம் ஒரு திருமால் திருப்புகழ்’ பாடல் எழுதும் கவிஞரும், பலகலைகளிலும் திறமைபெற்ற இவரது நண்பருமான திரு. கிரேசி மோகன் அவர்களின் பாடல்களுக்குச் சுவை சேர்த்து வருபவை கேசவ்வின் வண்ண ஓவியங்கள். “அம்பாள் பஞ்சகம்” என்ற தனது பதிவில், கேசவ் வரைந்த அழகிய “கற்பகாம்பாள்” கோட்டோவியத்தை அறிமுகப்படுத்தி, “கல்லூரி நாட்களில்…இந்த ஓவியம் வந்தவுடன் என் அறைதான் கர்ப்பக்கிருகம்….இந்த ஓவியம்தான் மூலவர் என்றாகிவிட்டது” என்று கூறுகின்றார் கிரேசி மோகன். இதிகாசங்கள், புராணக் கதைகளின் நிகழ்வுகளை நீர் மற்றும் எண்ணை வண்ண ஓவியங்களாக வரைவதிலும் மிக்க ஆர்வமும் திறமையும் கொண்டவர் இவர். கண்ணனை இவர் பற்பல கோணங்களில் வரைந்துள்ளார், ஒரே கோட்டில் துவக்கி முடித்த கண்ணனின் ஓவியங்கள் புதுமையாகவும் கண்ணுக்கு விருந்தாகவும் அமைந்தவை. அத்துடன் ஒருவரின் குணநலன்களை மிகைப்படுத்தி விவரிக்கும் பகடிப் படங்களும் (caricature) இவருக்குக் கை வந்த கலை. பற்பல இசைக்கலைஞர்களின் படங்களையும் இவர் வரைந்துள்ளார். அப்படங்களை Keshavcaricatures: http://keshavcaricatures.blogspot.com என்ற தளத்தில் காணலாம். சமூக வலைத்தளங்களிலும் இவர் தனது ஓவியங்களைப் பகிர்ந்து கொண்டுள்ளார். இவ்வாறு பலவகைப்பட்ட ஓவிய பாணிகளில் இவர் தனது திறமையை வெளிப்படுத்தினாலும், தொழில்முறையில் இவர் இந்து நாளிதழில் கருத்துப்படம் வரைந்து வருபவர். 2014 - மே 26 ஆம் தேதி, இந்தியாவின் 15 ஆவது தலைமை அமைச்சராகப் பதவியேற்ற திரு. நரேந்திர மோதி அவர்களின் பதவியேற்பு பற்றிய கருத்துப் படங்களை இவர் வரைந்துள்ளார். இந்திய மக்களின் மத்தியில் பெரிதும் சர்ச்சையைக் கிளப்பிய ஒரு நிகழ்வான; திரு. மோதி அவர்களின் பதவியேற்பு விழாவில் வரவேற்கப்பட்ட தெற்காசிய கூட்டமைப்பு நாடுகளின் தலைவர்களின் பங்கேற்பைக் குறித்த இவரது கருத்துப் படம் மக்களின் எண்ணத்தைப் பிரதிபலித்தது என்பதில் ஐயமில்லை. June 2, 2014 கீதா மதிவாணன் [] ஆஸ்திரேலியா வாழ் இந்தியத் தமிழரான கீதா மதிவாணன் தமிழிலக்கியங்களைப் படிப்பதிலும் படைப்பதிலும் ஆர்வம் மிக்கவர். மதுரைக் கணக்காயர் மகன் நக்கீரர் பாடிய பழந்தமிழ் இலக்கியப் படைப்பான பத்துப்பாட்டில் ஒன்றான “நெடுநல்வாடை” யின் இலக்கிய நயத்தில் தன்மனதினைப் பறிகொடுத்தவர். அதன் விளக்கத்தை எளிமையான வரிகளால் புதுக்கவிதை போன்ற பாணியில் இக்காலத் தமிழர்கள் எளிதில் புரிந்து கொள்ளும் வகையில் எழுதியுள்ளார் ( அதனை அவர் தளத்தில் படித்து மகிழலாம் - http://geethamanjari.blogspot.com/2013/05/blog-post.html. பல சிறுகதைகளும், கவிதைகளும், விமர்சனங்களும் எழுதியுள்ள கீதா “அன்பிற்கும் உண்டோ அடைக்குந்தாழ்?” என்ற 30 அத்தியாயங்களுக்கும் மேற்பட்ட நெடுங்கதையையும் (http://geethamanjari.blogspot.com/2011/06/1.html) எழுதியுள்ளார். கவிதை, சிறுகதை, தொடர்கதை, கட்டுரை, இலக்கியம், விமர்சனம் என இவரது எழுத்தாற்றல் பல வகைகளிலும் பரந்து விரிந்திருப்பது மட்டுமல்லாமல் அவற்றிற்காகப் பரிசுகளும் விருதுகளும் பெற்றுள்ளார். வல்லமை இதழின் கடித இலக்கியப் போட்டி முதற்கொண்டு, பிற இதழ்கள் நடத்திய தைப்பொங்கல் கட்டுரைப் போட்டிக்கான பரிசு, சிறுகதை விமர்சனப் போட்டிக்கான பரிசு, சிறந்த வலைத்தள எழுத்தாளருக்கான பரிசுகள் என்று பல பரிசுகள் வென்றுள்ளார். இவர் கவிதைகள் பெரும்பாலும் மனித நேயத்தை அடிப்படைக் கருத்தாகக் கொண்டு அமைந்துள்ளன. பெண்களின் நிலை, தன்னம்பிக்கை, மாற்றுத் திறனாளிகளின்பால் காட்டும் நேயம், ஒற்றுமை போன்ற கருத்துகளை உள்ளடக்கியவை இவரது கவிதைகள். இவர் எழுதிய “உன்னைப் போலவே…” என்ற கவிதை தனக்கெனப் போராட வழியற்ற, தனக்காக வாழும் உரிமை கேட்கத் திறனற்ற, கருவிலேயே அழிக்கப்படும் உயிர்களுக்காகக் குரல் கொடுக்கிறது. அந்தக் கவிதை வரிகள் இங்கே: உன்னைப் போலவே . . . ஆகாயம் பிளந்துதித்த அண்டரண்டப் பட்சியுமில்லை ஆவென்று வாய்பிளந்து ஆராதித்துத் தொழுவதற்கு! பூமி கிளர்ந்து வெளிப்பட்ட புழு பூச்சியுமில்லை ’ப்பூ’வென்று புறந்தள்ளிப் புழுதியிற் புரட்டுவதற்கு! உன்னைப் போலவே ஒற்றைத் துளியில் உருவாகி உயிர்க்குடத்தில் கருவானது! உன்னைப் போலவே உண்ணவும் கழிக்கவும் உடுத்தவும் உரிமையுடையது! உன்னைப் போலவே சிரிக்கவும் அழவும் சிந்திக்கவும் கூடியது! உன்னைப் போலவே ஆக்கவும் அழிக்கவும் அணைக்கவும் தலைப்பட்டது! உன்னைப் போலவே உணரவும் புணரவும் மரணிக்கவும் வாய்த்த சக மானுடம் அது! சாமானியமாய் எண்ணிவிடாதே… சாபத்துக்கு ஆளாகிவிடும் சாத்தியத்துக்கு ஆளாகிவிடக்கூடும்! மனிதநேயத்திற்காக கருச்சிதைவினை எதிர்த்து, பிறக்காத குழந்தைகளும் உயிர் வாழவேண்டிய நியாயத்திற்காகக் கவிதை வடித்த கீதா மதிவாணன் அவர்களுக்குப் பாராட்டுகள். June 9, 2014 பெனோ செபீன் [] மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் (யு.பி.எஸ்.சி.) நடத்திய 2013 ஆண்டு சிவில் சர்வீஸ் தேர்வில், அகில இந்திய அளவில் 1,122 பேர் தேர்ச்சி அடைந்தனர். அவர்களில் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் 109 பேர். இவர்களில் சென்னையை சேர்ந்த, பிறவியிலேயே பார்வையற்ற மாற்றுத்திறனாளியான பெனோ செபீனும் ஒருவர். ஐ.ஏ.எஸ். படிக்க வேண்டும் அதன்மூலம் மக்களுக்குச் சேவை செய்ய வேண்டும் என்ற உணர்வுடன் படித்து, தேர்வில் வெற்றி பெற்று (343 வது இடம்) சாதனைப் படைத்துள்ளார் பெனோ செபீன். ரயில்வேயில் ஊழியராகப் பணியாற்றி வரும் இவரது தந்தை சார்லஸ் மற்றும் இல்லத்தரசியான தாய் மேரிபத்மஜா ஆகியோரின் மகளான 24 வயது பெனோ நடுத்தரக் குடும்பத்தைச் சார்ந்தவர். விழியற்றோருக்கான லிட்டில் பிளவர் கான்வென்ட்டில் பள்ளிப்படிப்பையும், ஸ்டெல்லா மாரீஸ் கல்லூரியில் பி.ஏ.(ஆங்கில இலக்கியம்), லயோலா கல்லூரியில் எம்.ஏ படித்தவர். ஸ்மார்ட் லீடர்ஸ் ஐஏஎஸ் அகாடமியில் வார இறுதி ஐஏஎஸ் பயிற்சி வகுப்பில் படித்தவர். தகுதி நிர்ணயநிலையில் இவர் திருவள்ளூரில் ஸ்டேட் வங்கியில் பணிபுரிந்து கொண்டே பாரதியார் பல்கலைக் கழகத்தில் ஆங்கில இலக்கியத்தில் பிஎச்டியும் படித்து வருகிறார். இவரது சிறப்புத் தேவைகளை கருதி இவருக்கான பாடத்திட்டங்களை சிடியாக தயாரித்து பயிற்சி நிறுவனம் வழங்க, அதை பெனோ பிரெய்லி முறையில் மாற்றிப் படித்துள்ளார். இவருக்குக் கல்லூரியில் வகுப்பு இருக்கும் நாட்களில் இவரது தந்தை பயிற்சி வகுப்பில் கலந்துகொண்டு பாடங்களை ஒலிப்பதிவு செய்து எடுத்துச் செல்வாராம். அதைக் கேட்டு பெனோவும் பயிற்சி பெற்றிருக்கிறார். சிறு வயதிலிருந்தே இவரது முன்னேற்றத்தை முதல் கடமையாகக் கொண்ட பெற்றோர்கள் தொடர்ந்து இவருக்காகப் பாடங்களையும், செய்தித்தாள்களையும் படித்துக் காட்டி உதவி செய்திருக்கிறார்கள். விளையும் பயிர் முளையிலேயே தெரியும் என்பதற்கு ஒப்பாகப் பள்ளி நாட்களிலும், கல்லூரி நாட்களிலும் பற்பல போட்டிகளில், குறிப்பாக பேச்சுப் போட்டிகளில் பரிசு பெற்றவர் பெனோ. இவரது துடிப்பான ஆற்றல், இவரது பள்ளி நாட்களில் அவரது பள்ளிக்கு வருகை தந்த அந்நாள் துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களைக் கவர்ந்திருக்கிறது. துணை முதல்வர் ஸ்டாலினிடம் தனது பிறந்தநாள் பற்றிக் கூற அவரும் பெனோவின் இல்லத்திற்குத் தவறாது வந்து பிறந்தநாள் கேக் ஊட்டி வாழ்த்தும் தெரிவித்திருக்கிறார். மாநில அளவில் முதல் மதிப்பெண்கள் பெறும் மாணவர்களுக்கு விருதுகள் வழங்கும் பொழுது, மாற்றுத் திறனாளிகளில், விழியிழந்தோரில் முதலிடம் பெறுபவர்களுக்கு ஏன் மாநில அளவில் பாராட்டுகள் வழங்கப்படுவதில்லை என்ற கேள்வியை எழுப்பி, அந்நாள் முதல்வர் கருணாநிதியிடம் பெனோ கோரிக்கையை வைக்க, முதல்வரும் கோரிக்கையை ஏற்றுப் பரிசீலனை செய்து அரசாணையும் பிறப்பித்துள்ளார். பொதுவாழ்விலும், சேவையிலும், தலைமைப் பண்பிலும் இதுபோன்ற இவரது தொடக்கமே வியப்பூட்டுவதாக அமைந்திருக்கிறது. இவரது கல்லூரி நாட்களில், 2008 ஆம் ஆண்டு, அமெரிக்காவில் நடைபெற்ற உலக இளம் தலைவர்கள் மாநாட்டில் கலந்துகொள்ள பெனோவிற்கு அழைப்பு வந்தபோது, தனது குடும்பத்தினரால் தன்னை அமெரிக்காவுக்கு அனுப்ப முடியாது என்பதை உணர்ந்த பெனோ, மு.க.ஸ்டாலின் அவர்களை அணுகி தனது கோரிக்கையை வைத்துள்ளார். துணை முதலவராக இருந்த மு.க.ஸ்டாலின் அவர்களும் அரசு சார்பில் ரூபாய் ஐந்து லட்சம் வழங்கி அமெரிக்காவுக்கு இவரை அனுப்ப உதவியதுடன், அவரது நண்பர் இல்லத்திலேயே பெனோவைத் தங்க வைத்து, பெனோவிற்குத் தேவையான உதவிகளை வழங்கவும் ஏற்பாடு செய்துள்ளார். பெனோவின் உரை மாநாட்டில் அனைவரையும் கவருமாறு அமைய பெனோ நல்ல பாராட்டுகளையும் பெற்றுள்ளார். சிறுவயதில் இருந்தே, மற்றவர்களுக்கு முன்மாதிரியாக விளங்கவேண்டும் என்ற கொள்கை கொண்ட பெனோ, “எது இல்லையோ அதை நினைத்து வருத்தப்படுவதை விட எது இருக்கிறதோ அதை நினைத்து சந்தோஷப்பட்டால் வாழ்க்கையில் முன்னேறலாம்” என்று நமக்கு அறிவுரையும் கூறுகிறார். பெனோவை கவிதை எழுதிப் பாராட்டுகிறார் கவிஞர் காவிரி மைந்தன்: முழுமை பெற்ற மாந்தரிலே மூடர் பலர் இருக்கையிலே… புலன்குறைவாயிருந்தாலும் புரட்சிதான் புரிகிறாரே… இதை இவரால் செய்துவிட முடியுமா என்னும் கேள்விக்கு கதை முடித்து முதல் நபராய் வெற்றி பெற்று திகழ்கிறாரே!! இவர்தம் வளர்ச்சிக்காய் இதயங்கள் இரண்டிணைந்து இயங்குவதை.. ஈரமுள்ள விழிமலரால் காணத்தான் முடிகிறதே… திறமைக்குக் கண்ணில்லை.. முயற்சிதான் முக்கியம் என்பதை அருமையாய் உணர்த்திட்ட பெனோ செபீன் வாழியவே… தனது பிறவிக்குறையை ஒரு குறை என்று எண்ணித் துவண்டுவிடாமல் சாதனை புரிந்து, அனைவருக்கும் வாழ்க்கையை எப்படி எதிர்கொள்வது என்று வாழ்ந்து காட்டிவரும் இளம்பெண்மணி பெனோ செபீன் அவர்களிடம் இருந்து நாம் கற்றுக் கொள்ள வேண்டிய பாடம்: “எது இல்லையோ அதை நினைத்து வருத்தப்படுவதை விட எது இருக்கிறதோ அதை நினைத்து சந்தோஷப்பட்டால் வாழ்க்கையில் முன்னேறலாம்”என்பது. June 16, 2014 வாசு ரெங்கநாதன் [] அமெரிக்காவின் பென்சில்வேனியா பல்கலைக்கழகத்தின் தமிழ் விரிவுரையாளராகப் பணிபுரிபவர் திரு. வாசு ரெங்கநாதன் (http://plc.sas.upenn.edu/people/faculty/vasurenganathan) அவர்கள். திரு. வாசு ரெங்கநாதன் அவர்கள் அமெரிக்க கல்விக் கழகம் நிதி உதவியில், கடந்த ஏழு ஆண்டுகளாக அவர் நிர்மாணித்துப் பராமரித்து வரும் தமிழ் பயிற்சி வலைத்தளத்தில் (வலைத்தளத்தின் முகவரி: http://www.thetamillanguage.com. ஒரு வலைப்பக்கத்தைக் கொடுத்தால் அதைத் தமிழாகப் படிக்கும் தானியங்கி மென்கலனை உருவாக்கி தமிழ் கூறும் நல்லுலகிற்கு அளித்துள்ளார். இவர் தந்துள்ள சேவையின் மூலம், பழைய சங்கப் பாடல்களைப் பொருள் புரிந்துகொள்ள எளிதாகிறது. ஒரு சொல்லின் மீது சுட்டியை வைத்தால் அச் சொல்லின் பொருளைக் காட்டுகிறது. குறிப்பாக, பண்டைய தமிழ் இலக்கியங்களைப் படிப்பவர்களுக்கு உதவக்கூடிய முறை ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளார். இணையத்தில் உள்ள சங்கத்தமிழ் இலக்கியங்களை எளிதில் பொருள் விளங்கிக் கொள்ளும் வகையில், கணினித் திரையில் தோன்றும் ஒவ்வொரு சொற்களையும் கணினித் திரையில் சுட்டினாலே அகராதியில் இருந்து அந்தச் சொல்லின் பொருள் திரையில் தோன்றும் வகையில் அகராதியுடன் இணைத்துள்ளார். உதாரணமாக நற்றிணைப் பாடல்களை இந்தப் பக்கத்தில் காணலாம்: http://www.projectmadurai.org/pm_etexts/utf8/pmuni0296.html “நின்ற சொல்லர்; நீடுதோறு இனியர்; என்றும் என் தோள் பிரிபு அறியலரே” என்று தலைவி தோழியிடம் சொல்வதில், ‘பிரிபு’ என்றால் எதைக்குறிக்கிறது என்று எண்ணி திரையில் அச்சொல்லைச் சுட்டினால், உடனே அகராதியில் இருந்து பொருள் விளக்கம் காட்டப்படுகிறது. இவ்வாறாக சங்கப்பாடல்களைப் படிக்கும் ஆர்வமுள்ளவர்கள், எளிதில் பொருள் தேடி அறிய இணைய அகராதியுடன் பாடல்களின் சொற்கள் இணைக்கப்பட்டுள்ளன. இது போல மதுரைத்திட்டம் வழங்கும் இணைய இலக்கியங்கள் யாவற்றையும் (http://www.projectmadurai.org/pmworks.html) இவ்வாறு படிக்க இயலும். காட்டாக: http://www.thetamillanguage.com/sangam/url_gloss.php?url= என்ற சுட்டியின் பின்னர் ‘மதுரை திட்டம்’ வழங்கும் கொன்றை வேந்தன் பாடல்களைப் படிக்க விரும்புபவர், அந்த இலக்கியத்திற்கான இணையதள சுட்டியான க்குப்பிறகு இணைத்து http://www.thetamillanguage.com/sangam/url_gloss.php?url=%3Chttp://www.projectmadurai.org/pm_etexts/utf8/pmuni0002.html என்ற இணையதள முகவரியாக மாற்றிய பின்னர் இணையத்தேடல் பொறியில் வெட்டி ஒட்டிச் சொடுக்கினால் போதும். http://www.thetamillanguage.com/sangam/url_gloss.php?url=%3Chttp://www.projectmadurai.org/pm_etexts/utf8/pmuni0002.html பொருள் விளக்கம் அறியும் வகையில் கொன்றைவேந்தன் உங்கள் விரல்நுனிகளில் கிடைக்கும். இனி, பள்ளி வகுப்புகளுடன் தமிழிலக்கியம் படிப்பது தடைப்பட்டு, பின்னாளில் சொந்த முயற்சியில் படிக்க விரும்புபவர்களுக்குத் தமிழிலக்கிய நூல்களும், அவற்றின் பொருளை விளக்கும் உரைநூல்களும் கிடைப்பது அரிதான ஒன்றே அல்ல. இந்த எளிய முறையைத் தமிழுலகிற்கு உருவாக்கித் தந்த திரு. வாசு ரெங்கநாதன் அவர்களைக் குறித்து ஒரு சிறிய அறிமுகம்… பேரா. வாசு ரெங்கநாதன் தமிழ் மொழியியலில் இருமுறை முனைவர் பட்டம் பெற்றவர். மயிலாடுதுறையைச் சேர்ந்தவர். ஆய்வியல் அறிஞர் செ. வை. சண்முகம் அவர்களிடம் அண்ணாமலைப் பல்கலையிலும், பின்னர் பென்சில்வேனியா பல்கலையில் ஹெரால்ட் ஷிப்மனிடமும் பயின்ற வாசு ரெங்கநாதன் இப்பொழுது ‘பென் மொழிகள் மையம்’ (Penn Language Center) என்னும் அமைப்பில் பணிபுரிகிறார். தமிழ்க் கல்லூரி ஆசிரியர்கள் கணினிப் பக்கமே போகாத நிலை இன்னும் தமிழ்நாட்டில் நிலவுகிறது. அந்நிலை மாற வழிவகுப்போரில் முனைவர் வாசு முக்கியமானவர். வாசு ரெங்கநாதன் கணினியின் மூலமாக தமிழைக் கற்பிக்கும் முன்னோடிகளில் ஒருவர். தமிழ் தட்டச்சு விசைப்பலகையை முதலில் கணினிக்கு ஏற்ற வகையில் வடிவமைத்ததால் இலங்கையில் ‘ரெங்கநாதன் விசைப்பலகை’ என்று அறியப்படுகிறது. அமெரிக்காவில் தமிழரல்லா பிற மொழியினருக்குத் தமிழ் கற்பிக்கும் முறைகளில் அனுபவமும் திறமையும் மிக்க இவர் இணையத்தில் தமிழ் போதிக்க வலைத்தளங்கள் அமைத்துள்ளார். அமெரிக்க தமிழ் அகாதமி என்ற புதிய அமைப்பு பொதுமக்கள் பயிலும் பள்ளிகளில் அங்கீகாரம் பெற்ற பாடமாகத் தமிழை அறிமுகப்படுத்த ஏற்பாடுகளைச் செய்துவருகிறது. அமெரிக்கன் தமிழ் அகாதமிக்கு ஆலோசகராக நல்ல ஊக்கமும் அளித்துவருகிறார். உத்தமம் என்ற பலநாட்டுத் தமிழ்க் கணினித் தொழில்நுட்ப நிறுவனத்தின் மாநாடுகளை நடத்தப் பெரும்பங்கு ஆற்றும் வாசு 2014 ஆண்டில் உத்தமம் அமைப்பின் தலைவர் பதவி வகித்துள்ளார். இயற்கை மொழி கணியாய்வில் (Natural Language Processing) தனது கணினித் திறனையும், தமிழார்வத்தையும் இணைத்து, பழந்தமிழ் இலக்கியங்களை அனைவரும் எளிதில் படித்திட வகை செய்த திரு. வாசு ரெங்கநாதன் அவர்களது பணி மேலும் தொடர வாழ்த்துகள். June 23, 2014 எல். கனக சுப்பிரமணி [] மேட்டுப்பாளையத்திலிருந்து ஊட்டி செல்லும் பேருந்தில் நடத்துநராகப் பணிபுரியும் திரு. எல். கனக சுப்பிரமணி அவர்கள் தமிழ்ப் பற்றும், சமுதாய அக்கறையும் கொண்டவர். தினமும் காலையில் எழுந்தவுடன் ஒரு திருக்குறளுக்கு பொருள்விளக்கம் படித்த பின்னரே தனது நாளைத் துவக்குபவர் கனக சுப்பிரமணி. மேட்டுப்பாளையம் உதகை வழித்தடத்தில் பேருந்து நடத்துநராக பணிக்குச் செல்லும்பொழுது தன்னுடன் சில தமிழ் நூல்களையும் கொண்டு செல்கிறார். வழியில் கல்லாரில் காலை 7:15க்கு பேருந்து நிற்கும்பொழுது, பயணிகளின் கவனத்தை ஓர் இரு நிமிடங்களுக்கு தனக்கு அளிக்குமாறு கோரிக்கை விடுத்து போக்குவரத்து பாதுகாப்பைக் கடைப்பிடிக்கவும், சுற்றுப்புறச் சூழிலின் தூய்மை அவசியம் பற்றியும் எடுத்துரைக்கிறார். “ஓடும் பேருந்தில் ஏறாதீர்கள், மரங்களை நட முடியாவிட்டாலும் சரி, அவற்றை அழிக்காதீர்கள், குப்பை போடாதீர்கள், குருதிக் கொடை அளியுங்கள்” போன்ற அறிவுரைகளைக் கூறுகிறார். அத்துடன் தினம் ஒரு திருக்குறளைத் தேர்ந்தெடுத்து அதற்குப் பொருள் விளக்கமும் அளிக்கிறார். பயணிகளில் அன்றைக்கு யாருக்காவது பிறந்தநாளாகவோ, திருமணநாளாகவோ இருந்தால் வாழ்த்துகளுடன் தன்னுடன் எடுத்துச் சென்ற திருக்குறள் நூல்களைப் பரிசாக அளிக்கிறார். யாருக்கும் அன்றைய நாள் அவ்வாறான சிறப்பு நாள்களில் ஒன்றாக அமையாவிட்டால், அந்த நூல்களைப் பயணிகளில் ஆசிரியர்கள், மாணவர்கள், காவல்துறையினர் யாரேனும் இருந்தால் அவர்களுக்கு அளிக்கிறார். பயணிகள் யாரேனும் பணியில் இருந்து ஓய்வு பெறும் நாளாக இருந்தால் அவர்களைப் பாராட்டி வாழ்த்தவும் செய்கிறார். பேருந்தில் எழுதியிருக்கும் குறளை சுட்டிக் காட்டிய பயணி ஒருவர், இக்குறளின் பொருள் என்னவென்று நடத்துநருக்கோ ஓட்டுநருக்கோ தெரியுமா என்று ஒருமுறை கேட்ட பொழுது தினம் ஒரு குறள் என்ற கொள்கையைத் துவக்கி இருக்கிறார் இவர். தினசரி வாழ்க்கையில் பலவித மக்களை எதிர்கொண்டு சேவை செய்யும் முன்னணி பணியாளர்களுக்கு அது மிகவும் மனவழுத்தம் தரும் பணியாகவே இருக்கும். நடத்துநர் பணியிலும் அவ்வாறே பலவித உணர்வுகள் கொண்ட மக்களை எதிர் கொள்ளும்பொழுது இன்முகத்துடன் பணியாற்றுவது என்பது ஒரு சவாலாக அமைந்துவிடும். இந்தச் சூழ்நிலையிலும் சமுதாயப்பணிக்கும், தமிழ்ப் பணிக்கும் ஓர் இரண்டு நிமிட நேரத்தை ஒதுக்கி பயணிகள் வாழ்வில் ஒரு மாற்றத்தை உருவாக்க விரும்புகிறார் கனக சுப்பிரமணி. இதனைத் தினமும் பத்தாண்டுகளுக்கு மேலாகவும் செய்து வருகிறார் என்பது மிகவும் வியப்பளிக்கும் செய்தி. கனக சுப்பிரமணியைப் பொறுத்தவரை பேருந்துப் பயணமாக இருந்தாலும் அதன் வழியே பயணிகள் கல்வி, தகவல் ஆகியவற்றைப் பெற்று அவர்களுக்கு அது வசதியான பயணமாக அமைய வேண்டும். கனக சுப்பிரமணிக்கு அவரது பயணிகள் அவரது குடும்ப உறுப்பினர்கள் போல. கோவை மத்தியச் சிறைச்சாலை கைதிகளுக்காக “செந்தமிழ் அறக்கட்டளை” என்ற அறக்கட்டளை ஒன்றைத் துவக்கி ஓய்வு நேரங்களில் கைதிகளின் மறுவாழ்விற்கு உதவும் வகையில் அவர்களுக்கு ஆக்கப்பூர்வமான வழிகளில் பணியாற்றுகிறார். இசை வகுப்புகள், பேச்சுப் போட்டிகள் போன்றவற்றை நடத்தி பரிசு வழங்குதலைத் தனது அறக்கட்டளை வழியாகச் செய்கிறார். இதுபோன்ற சமுதாயச் சேவைகள் செய்வதற்குத் தனது ஆசிரியர் அற்புதராஜும், மக்கள் திலகமும் முன்னோடிகள் என இவர் கூறுகிறார். இளமைக்காலத்தில், சிரமமான காலங்களில் இவரது ஆசிரியர் அற்புதராஜ் அவர்கள் இவருக்கு உணவும் உடையும் அளித்துப் பராமரித்ததை நன்றியுடன் நினைவு கூர்கிறார். உற்சாகமூட்டும் உரைகள் வழங்குவதையும் ஊக்கமூட்டும் செயல்கள் செய்வதையும் தனது கடமையாகக் கருதி வரும் கனக சுப்பிரமணி எம்.ஜி.ஆர் அவர்களைத் தனது சிறந்த வழிகாட்டியாகக் கருதுகிறார். மக்கள் திலகத்தின் தீவிர ரசிகரான இவருக்குப் பிடித்த பாட்டு “தாயில்லாமல் நானில்லை”. இதனைக் கைதிகளுக்காக இவர் பாடுவதும் உண்டு. எம்.ஜி.ஆர் பாடல்களில் ஒன்றினை எப்பொழுதும் தனது உரைகளில் ஒரு பகுதியாக்கிக் கொள்கிறார். தனது தமிழார்வத்தையும், சமுதாய அக்கறையையும் இணைத்து தனது தினசரி வாழ்வில் ஒரு சிலர் வாழ்விலாவது மாற்றம் கொண்டுவர விரும்பித் தொடர்ந்து ஆர்வமுடன் செயலாற்றும் கனக சுப்பிரமணியின் பணி போற்றத்தக்கது. June 30, 2014 செண்பக ஜெகதீசன் [] சுசீந்திரத்தில் உள்ள காசித்திருமடம் ஆசிரமத்தின் மேலாளராகப் பணியாற்றி வருகிறார் திரு. செண்பக ஜெகதீசன். தற்பொழுது நிர்வகிக்கும் காசித்திருமடப் பணிக்கும் முன்னர் நெல்லையப்பர் திருக்கோவிலின் நிர்வாக அதிகாரியாகவும் பணியாற்றிய இவர் தன்னைப் பற்றிக் குறிப்பிடும்பொழுது, “இரைதேடுவதுடன் இறையும் தேடும் அரசுப்பணி”யாற்றுவதாகக் குறிப்பிடுகிறார். இவர் ஒரு சிறந்த கவிஞரும் ஆவார். இதுவரை ஆறு கவிதை நூல்களை வெளியிட்டுள்ள இவர் சற்றேறக்குறைய எட்டு ஆண்டுகளாகப் பற்பல மின்னிதழ்களிலும் எழுதி வருகிறார். அவற்றில் சில: வல்லமை, வார்ப்பு, பதிவுகள், முத்துக்கமலம், திண்ணை, நந்தலாலா. இவர் தமது கவிதைகளுக்குக் கருப்பொருளாகக் கொண்டவை; இயற்கை, தத்துவம், எழுச்சியூட்டும் தன்னம்பிக்கை போன்றவையாகும். இவருடைய “தடை தகர்த்து…” என்ற கவிதை, வாழ்வில் ஏற்படும் சோதனைகளைக் கண்டு துவளுதல் கூடாது, அவற்றை எதிர் கொண்டாலே அவை வழங்கும் படிப்பினை மூலம் திறமை மிக்கவராக மாறலாம் என்ற தன்னம்பிக்கையூட்டும் கருத்தினை மையமாகக் கொண்டு அமைந்துள்ளது. தடை தகர்த்து… சீறிப் பாயும் கடலலைதான் – மிகச் சிறந்த மாலுமி உருவாக்கும், மாறிடும் வானிலை காட்டிடுமே – திறமை மிகுந்ததோர் ஓட்டியை வானூர்தியில், கீறிடும் கல்நிறை சாலையேதான் – சுட்டிக் காட்டிடும் சிறந்த ஓட்டுநரை, ஏறிடும் இடர்களை எதிர்கொள்வோர் – வாழ்வில் ஏற்றம் என்றும் பெறுவாரே…! ------------------------------------------------------------------------ இவர் எழுதிய மேலும் சில கவிதைகள் கீழே….. கிடக்கட்டும் குப்பைகள்… குறைசொல்ல ஒரு கூட்டம் உள்ளவரை, நிறைய வருகின்றன நீ வெற்றிபெறச் சந்தர்ப்பங்கள்.. உறங்கவிடமாட்டார்கள் உன்னை, உறங்கிடவும் மாட்டார்கள்- உன்மீது பொறாமை கொண்டவர்கள்.. உரிய சமயமிது, உணர்ந்துகொள் உழைத்திடு உயர்ந்திடு.. உதாசீனப்படுத்திடு குறைசொல்லும் அந்தக் குப்பைகளை…! ------------------------------------------------------------------------ கலங்காதே… கலங்குவதில்லை மலர், காய்ந்து கீழே விழுவதற்கு… காரணம் இதுதான்- அதன் கனி உதிர்க்கும் விதை முளைத்து மீண்டும் மரமாகும் நம்பிக்கை…! கலங்கி நிற்கிறாயே மனிதா, மரணத்தைத் தினம் மனதில் எண்ணி…! ------------------------------------------------------------------------ ரேகை போடும் ஒரு நெல்லுக்காக கிளி எடுத்த பொய்யான சீட்டை வைத்துப் புளுகுவதை நம்பாமல், கைரேகைக் கதைகளையும் நம்பாமல், கைரேகை தேயக் கடும் உழைப்பு உழைத்தால் உன்ரேகை (அடையாளம்) தெரியும் உயர்வாக…! ------------------------------------------------------------------------ இக்கவிதைகளுக்கும் மேலாக செண்பக ஜெகதீசன் கையெடுக்கும் மற்றொரு கவிதை முயற்சியை இதுவரை பிறர் கையாண்டு பார்த்ததில்லை. இவை கவிதைகள் வடிப்பதில் முற்றிலும் ஒரு புதிய முயற்சி. வியக்க வைக்கும் கோணமென்றும் கூறலாம். இன்றுவரை திருக்குறளுக்கு எண்ணிலடங்கா விளக்க உரைகள் தோன்றிய வண்ணம் உள்ளது. செண்பக ஜெகதீசன் தனது “குறளின் கதிர்களாய்…” கவிதைத் தொடர் வரிசைக்காகத் திருக்குறள் ஒன்றைத் தேர்ந்தெடுத்து, அதன் விளக்கத்தை பல்வேறு கவிதை பாணிகளில் வடிப்பது இவர் கவிபுனையும் திறமையைக் காட்டுகிறது. எடுத்துக்காட்டாக, “பீலிபெய் சாகாடும்” என்ற குறளை இவர் புதுக்கவிதை, குறும்பா, மரபுக் கவிதை, புதுப்பா, கிராமிய பாணி என பல்வேறு கவிதை பாணிகளில் வழங்குவதைக் கீழே காணலாம்…. குறளின் கதிர்களாய்… பீலிபெய் சாகாடும் அச்சிறும் அப்பண்டஞ் சால மிகுத்துப் பெயின்…! -திருக்குறள்-475(வலியறிதல்) ___________________ புதுக்கவிதையில்… மலரினும் மெல்லிதென்று மயிலிறகைச் சேர்த்து வண்டியில் மனம்போல ஏற்றிவைத்தால், முறிந்துவிடும் அச்சாணி.. மிஞ்சாது எதுவும் அளவை மீறினால் எதிலும்…! ___________________ குறும்பாவாய்… குடைசாய்க்கும் வண்டியை, பாரம் கூடினால் மயிலிறகும்.. கதையிதுதான் வாழ்க்கை…! ___________________ மரபுக் கவிதையில்… வண்டியில் ஏற்றும் பாரமது வலிமை யில்லா மென்பொருளாம் கொண்டல் கண்டால் ஆடிநிற்கும் கோல மயிலின் இறகெனிலும், உண்டே யதற்கும் அளவதுவும், உயர்ந்தால் வண்டி உடைந்திடுமே, கண்டிடு வாழ்வில் கதையிதுவே கொண்டிடு அளவதைக் கருத்தினிலே…! ___________________ புதுப்பாவில்… மெல்லிய பொருள்தான் மயிலிறகு, மிதமிஞ்சி ஏற்றினால் வண்டியில், அதுவும் உடைந்து மிஞ்சுவதில்லை எதுவுமே.. நல்லதுக்கு எதிர்மறைப் பலன்தான் எதுவும் அளவுக்கு மிஞ்சினாலே…! ___________________ கிராமிய பாணியில்… ஏலேலோ ஐலசா ஏத்து பாரம் ஐலசா.. அளவாப் பாரம் ஐலசா அளந்து ஏத்து ஐலசா.. மயிலுப் பீலி ஆனாலும் மிஞ்சா வண்டி ஒடையுமே.. மனுசங் கதயும் இதுதானே மனசில கொள்ளு இதத்தானே.. ஏலேலோ ஐலசா ஏத்து பாரம் ஐலசா…! சிந்தனையைக் கவரும் கவிதைகளை வழங்கி, கவிதை இலக்கிய மரபில் புதுமை புரிந்து வரும் செண்பக ஜெகதீசன் அவர்களுக்குப் பாராட்டுகள். July 7, 2014 கிரேசி மோகன் [] “கிரேசி தீவ்ஸ் இன் பாலவாக்கம்” காலத்தில் இருந்து ஒரு கால் நூற்றாண்டிற்கும் மேலாகத் தமிழர்களுக்கு நன்கு அறிமுகமானவர் நகைச்சுவை எழுத்தாளரும் திரைப்பட வசனகர்த்தாவுமான கிரேசி மோகன் அவர்கள். சிறுகதை எழுத்தாளராக இவர் எழுதிய “தாம்புக் கட்டு” கதை மிகவும் வித்தியாசமான கோணத்தைக் கொண்டிருக்கிறது. இந்தியாவில் பிறந்து வளர்ந்த யாவருமே மகாபாரதக் கதைகளையும், குறும்புகள் நிறைந்த கண்ணன் பிறந்து வளர்ந்த நிகழ்வுகளையும், பின்னாளில் அவன் பார்த்தனுக்கு தேரோட்டியாகப் பணியாற்றி கீதை உரைத்ததையும் பலமுறை படித்திருக்கிறோம். ஆனாலும் கிரேசி மோகன் வழங்கும் கோணம் முற்றிலும் புதுமையானது. “தேவகிக்குப் பிறக்கும் எட்டாவது குழந்தை கம்சனைக் கொல்லும்” என்ற வானில் தோன்றிய ஒலியினால் எச்சரிக்கை அடைந்த கம்சன் தங்கை தேவகியையும், மைத்துனன் வாசுதேவனையும் சிறையிலடைத்து அவர்களுக்குப் பிறக்கும் ஒவ்வொரு குழந்தையையும் பிறந்தவுடன் கொன்றுகொண்டே வருகிறான். ஏழு குழந்தைகள் இவ்வாறு உயிரிழக்க நேரிடுகிறது. எட்டாவதாகப் பிறந்த கண்ணனை கோகுலத்தை ஆண்ட நந்தகோபனிடமும், யசோதையிடமும் சேர்ப்பித்து அவர்களை வளர்க்கச் செய்ய வாசு மாமாவும் (அப்படித்தான் அந்தக் கதையின் நாயகியான சிறுமி வாசுதேவனை அழைக்கிறாள்) முடிவெடுக்கிறார். அவருக்கு உதவி செய்கிறாள் ஆயர்பாடியில் வசிக்கும் சிறுமி ஒருத்தி. கண்ணன் பிறந்த அந்த மழைநாளில் ஆயர்பாடியில் உள்ள நந்தகோபன் இல்லத்தில் குழந்தைகளை மாற்ற உதவிய அந்தச் சிறுமி யார்? இந்த உதவியைச் செய்ய அவள் என்ன பிரதிபலன் எதிர்பார்த்து வாசு மாமாவிடம் சத்தியம் பெற்ற பின்னர் உதவி செய்தாள்? அவள் விருப்பம் என்ன? யாரவள்? இவள் இல்லாவிட்டால் மகாபாரதமே இல்லாமல் போயிருக்கும் ஆபத்து உண்டு. இவள் யாரென்ற கேள்விக்கு விடையை வெள்ளித்திரையில் … மன்னிக்கவும்… வல்லமையில் இந்தச் சுட்டி http://www.vallamai.com/?p=47937 வழி சென்று காண்க. படிக்கும் வாசகர்கள் கதையைப் பற்றித் தனது தோழர்களுடன் பகிர்ந்து கொள்ளலாம், ஆனால் முடிவினைத் தெரிவிக்க வேண்டாம் என்று கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இதற்கு உங்கள் ஒத்துழைப்பை வேண்டுகிறோம். “பால்கார அம்மா வசதியானவள்….வீடு தோப்பும் துரவுமாகப் பிரும்மாண்டமாக இருந்தது….சுற்றிலும் கோட்டை போல மதில் சுவர்….வந்த திருடன் வேறு வழியில்லாமல் மனம் திருந்தி நல்லவனாகும் அளவுக்கு வாசல் கதவு வீட்டையே மறைத்தது…” “கஷ்க் முஷ்க்” என்று கன்னங்கரேல் உருண்டையாய் (சிறுமி காதில் விழுந்தால் கோபிப்பாள்….நீல உருண்டையாய்) இருந்த அந்தப் பொருள் விளங்கா உருண்டையை…” கதையில் வரும் இந்த வர்ணனைகள் கிரேசி மோகனின் “டச்”. இக்கதை கிரேசி மோகனின் கற்பனைக்கு நல்லதொரு சான்று. இது போன்ற மற்றொரு வியக்கவைக்கும் கற்பனையை மதுரை சித்திரைத் திருவிழாவை ஒட்டி அவர் வழங்கிய “மீனாட்சி திருக்கல்யாணம்” என்ற கவிதைத் தொகுப்பிலும் காணலாம் … அந்தப் பாடலில் இருந்து சில வரிகள் இங்கு… கன்னிகாதானம்: தாரையை வார்க்கையில் தன்சார்பில் தந்தையாய் யாரை நிறுத்துவது என்றீசர் -பாரமுற பாக்கையில் வந்தார் பெரிய புராணத்து சேக்கிழார் சாமி சபைக்கு… பாம்பலையில் தூங்கும் பெருமாள் சுபாவமாம் சோம்பலை விட்டு சுறுசுறுப்பாய் -மாம்பலம் நல்லிகுப்பு சாமியிடம் செல்ல சகோதரிக்காய் அள்ளிவந்தார் சேலை அலைந்து… கண்ணைப் பறிக்கின்ற கூறைப் புடவையில் மின்னலென மேடையில் மீனாள்தன் -அண்ணன் மடியமர நான்முகன் மாங்கல்யம் ஏந்த முடிந்தான் அரன்முடிச்சு மூன்று… கிரேசி மோகனுக்குக் கைவந்த கலை நகைச்சுவை நாடகங்கள் எழுதுவது என்பதைத் தமிழுலகம் அறியும். அறியாத ஒன்று அவர் ஒரு சிறந்த ஓவியரும் என்பது. மற்றொன்று திரைப்பட விமர்சனமும் எழுதுவார் என்பது. ஜூலை 2014 இல் வெளியான, இயக்குநர் ஞானராஜசேகரன் அவர்களின் ராமானுஜன் திரைப்படத்திற்கு கிரேசி மோகன் அவர்கள் எழுதிய விமர்சனம் இது … எனது பொக்கிஷம் ஞானராஜசேகரனின் ‘பாரதியார்’ டிவிடி…. 100 தடவைகளுக்கு மேல் பார்த்துவிட்டேன்….இனி பார்ப்பேனா தெரியாது….! ‘பாரதியாருக்கு’ப் போட்டியாக இவரே ‘ராமானுஜன்’ எடுத்துவிட்டார்…. ராமானுஜன் டிவிடிக்காகக் காத்திருக்கிறேன்…. கணக்கு வழக்கு இல்லாமல் நான் பார்க்கப் போகும் ‘ராமானுஜன்’ திரைப்படம் நேற்று பார்த்தேன்…. ‘ஸ்ரீமதே ராமானுஜாய நமஹ’ என்று தன் மனைவி ஜானகிக்கு அவர் கடிதம் எழுதும் போது, ஏனோ தெரியவில்லை புனித மேதை பெரும்புதூர் ஸ்ரீ ராமானுஜரையும், கணித மேதை கும்பகோணம் ராமானுஜரையும் ஒப்பிட்டு அடியேன் மனக் கணக்கு போட ஆரம்பித்தேன்…. இருவருமே அந்த ‘சேடரின்’ விசேட அம்சமாக எனக்குத் தோன்றியது…. பெரும்புதூர் மாமுனி ஆதிசேடன் அவதாரம்… தொல்(பழைய) COBRA…. கும்பகோணம் ராமானுஜர் அல்ஜீப்ரா…. அவர் த்ரிகுணம் கடந்த மூர்த்தி….இவர் ட்ரிக்னாமெட்ரி…. அவர் எளியவர்களுக்கும் நாராயணன் நாமமிட்டுத் தீட்டும் திருமேனி ஆக்கினார்…. இவர் Cos THETA plus தியரியை தீட்டினார்…. அவர் உடையவர்…. இவர் கணக்கின் விடையவர்…. பெரிய கடவுள் பாரதியாரைக் கவிதையால் தடுத்தாண்டு கொண்டார்…. இவரைக் கணக்கால் தடுத்தாண்டு கொண்டார்…. படம் பார்க்கும் போது எனக்கு ராமானுஜத்தை விட அவரது LAURELS ஸை வெளிக்கொணர்ந்த HARDY பாத்திரம் மிகவும் பிடித்தது…. அமரர் வாலியின் ‘ஓராயிரம் ஈறாயிரம்’ பாடலும் ரமேஷ் விநாயகத்தின் இசையும் சூப்பர்…. ‘எழுத்தையும்’ (பாரதியார்) ‘எண்ணையும்’ (ராமானுஜன்) எடுத்த ஞானராஜசேகரனிடம் ஒரு வேண்டுகோள்…. அடுத்ததாக ‘கண்ணெனத் தகும்’…. ‘பகவான் ஸ்ரீரமணரின்’ சரிதையை எடுங்கள் சார் ப்ளீஸ் …. தயாரித்தவர்களுக்கு ‘பல்லாண்டு பாடலாம்’….எனக்குப் பிடிச்ச கணக்கு….படத்துக்கு அடியேனின் மார்க் 100 / 100…. அத்துடன் முத்தாய்ப்பாக, படத்தின் இசையமைப்பாளர் ரமேஷ் விநாயகம் அவர்களைப் பாராட்டி, அவர் இசை அமைத்த “ராமானுஜன்” பட இசை அவரை இசைபட வாழவைக்க வேண்டும் என்று வாழ்த்துரைத்து ஒரு வெண்பாவும் பாடியுள்ளார் …. “புனிதமே தையும், கணிதமே தையும், மனிதமே தையுன் மியூஸிக், -இனிதாக, கேட்டிடும் காதுக்குள் கூட்ட, இனியுந்தன், காட்ல மழைவினாய கம்” திருமால் திருப்புகழ் என்ற தலைப்பில் தினமும் வெண்பாக்கள் புனைந்து வருகிறார் கிரேசி மோகன். இவ்வாறு வெண்பாக்களையே உயிர்மூச்சாய் கொண்ட அவரை வெண்பா பாடி வாழ்த்துவதுதான் முறையல்லவா? ஆதலால் சிந்தனையைக் கவரும் கவிச்சுவை நிறைந்த வெண்பாக்ளையும், நகைச்சுவை நிறைந்த நாடகம் மற்றும் கதைகளையும் எழுதி மகிழ்விக்கும் கிரேசி மோகன் அவர்களை “வெண்பா வடித்து வெகுமதியாய் நாளுமொரு பண்பாடும் பாவல, நீவிர் திரையுலக எல்லை கடந்திங்கே என்றும் புகழ்காணும் வல்லமை யாளர்தாம் இன்று” என்று வெண்பா சொல்லிப் பாராட்டுவோம். July 14, 2014 சீதா நடராஜன் [] திருமிகு. சீதா நடராஜன் அவர்கள் ஜித்து கிருஷ்ணமூர்த்தி அறக்கட்டளை நிறுவனத்தின், ரிஷி பள்ளத்தாக்கு பள்ளி (J.Krishnamurti Foundation – Rishi Valley School) யில் சமூகவியல் ஆசிரியராகப் பணிபுரிகிறார். தனது சமூகவியல் வகுப்பில் செயல்முறைக் கல்விமுறையில் மாணவர்களுக்குப் பாடத்தை அறிமுகப்படுத்தும் முயற்சிகள் மேற்கொள்பவர். கொல்கத்தா பல்கலைக்கழகத்தில் ஆங்கில இலக்கியத்தில் முதுகலைப் பட்டம் பெற்றுள்ள சீதா நடராஜன் சமூகப் பாடங்களுடன் ஆங்கிலம், சுற்றுச் சூழல் பாடங்களும் கற்பிக்கிறார். கற்றல் திறன் குறைந்த, சிறப்பு பயிற்சி தேவையான மாணவர்களுக்குப் பாடம் நடத்தும் பயிற்சியையும் சீதா நடராஜன் பெற்றுள்ளார். நூல்கள், கவிதைகள், ஓவியங்கள் இவற்றிலும் ஆர்வம் உள்ளவர் இவர். உலக மற்றும் வாழ்வியல் பார்வையை விரிவாக்கும் சமூகவியல் பாடங்கள் கல்விக்கூடங்களில் அதற்குரிய மதிப்பினைப் பெறுவதில்லை. பலநாட்டு மக்களின் கலாச்சாரத்தை அறிவதன் மூலமும், நமது நாட்டின் பண்டைய மக்களின் வரலாற்றையும் நாகரிகத்தையும் அறிவதன் மூலமும், தொடரும் இந்தக் காலவெளியில், தொடர்ச்சியாக வாழ்ந்து வரும் மனிதஇனத்தின் அருமையை நாம் உணர்ந்து பாராட்ட முடியும். மனித இனத்தின் சிறப்பினை அறிவதன் மூலமாக இக்காலகட்டத்தில் வாழும் நாமும் நம் பங்கை செம்மையாகச் செய்யவேண்டிய பொறுப்பும் நமக்கு விளங்கும். ஆனால் இப்பாடம் அதிக சிரத்தையின்றிதான் மாணவர்களுக்கு அறிமுகப்படுத்தப்பட்டு வருகிறது. மாணவர்களும் ஆர்வமின்றிக் கடனே என்றுதான் மதிப்பெண் பெறும் நோக்கத்தை மட்டுமே முன்னிறுத்திப் பயில்கிறார்கள். பிறகு ஏட்டுச் சுரைக்காய் கறிக்கு உதவாதது போல வாழ்க்கைக்கும் உதவாத கல்விப் பயிற்சியாக இது பயனற்று முற்றுப் பெற்றுவிடுகிறது. சிறந்த ஆசிரியர்களாக இருந்தாலும் பலர் மாணவர்களைக் கவரும் கோணத்தில் பாடங்களை வழங்க முயலுவதில்லை. இந்தப் போக்கினை மாற்றி, செயல்முறை அடிப்படையில் பாடத்தை அமைத்து, களப்பணிகள் பகுதியை உள்ளடக்கிய பாடங்களை கற்றுத் தரும் முயற்சியை மேற்கொண்டிருக்கிறார் சீதா நடராஜன். சீனா, எகிப்து, கிரேக்க நாடுகளையும், அவர்களது பண்டைய நாகரிகத்தின் வரலாற்றுடன், தற்கால வாழ்வியலையும் கற்கும் பாடமாக இருந்தால், 1. அந்த நாட்டு நூல்களையும், படங்களையும், பொருட்களையும் சேகரித்து காட்சிக்கு வைத்து விளக்குதல் 2. அந்த நாடுகளின் இசை நாடகம் இலக்கியம் போன்றவற்றை அறிமுகப்படுத்துதல் 3. சிறு நாடகங்களை எழுதி நடித்தல், நாட்டியங்களை ஆடுதல் போன்ற கலைநிகழ்ச்சிகளையும் உள்ளடக்கி பாடமுறையை வடிவமைக்கிறார் சீதா நடராஜன். இவ்வாறு மாணவர்கள் பாடங்களை அறிவதன் மூலம் அவர்கள் ஆர்வம் தூண்டப்படுவதால், அதைத் தொடர்ந்த அடுத்த கட்டமாக பிறநாடுகளின் கலாச்சார நிகழ்வுகளுடன் நம் நாட்டுக் கலாச்சாரத்தை ஒப்பிட மாணவர்களும் ஆர்வம் கொண்டு தானே முன்வருகிறார்கள். எடுத்துக்காட்டாக, சீனாவைப் பற்றிய பாடத்தில் அங்குள்ள மக்கள், இடங்கள், ஓவியங்கள், கட்டிடங்கள் ஆகியவற்றின் புகைப்படங்கள் மாணவர்களால் சேகரிக்கப்பட்டு, பள்ளியில் ஒரு கண்காட்சியை நடத்தியிருக்கிறார் சீதா நடராஜன். மாமன்னர் சின் ஹுயாங்க்டி பற்றிய அறிமுகத்தில், மன்னரின் கல்லறைக்கருகில் அகழ்வாராய்ச்சியில் கிடைத்த உயிருள்ள மனிதர்களின் அளவில் வடிக்கப்பட்டிருந்த சுட்டக்களிமண் பொம்மைகளான வீரர்கள் குதிரைகள் போன்ற பொம்மைகளை குயவர்களின் உதவியுடன் களிமண்ணில் உருவாக்கியிருக்கிறார். சைனாவின் புகழ்பெற்ற டிராகன் நடனம் மாணவர்களால் சீனா மக்களின் உடையலங்காரத்துடன் நடத்திக்காட்டப்பட்டிருக்கிறது. சீன மக்களின் மத நம்பிக்கைகள், இறப்பிற்குப் பின்னர் ஆவி, வாழ்வு சடங்குகள் போன்ற நம்பிக்கைகள் விவாதிக்கப்பட்ட பொழுது, மாணவர்களே விவாதத்தை முன்னெடுத்து இந்திய மக்களின் கலாச்சாரத்துடன் அவற்றை ஒப்பிட்டு அறிய ஆர்வம் காட்டியிருக்கிறார்கள். அத்துடன் இந்த ஒப்புநோக்கும் ஆய்வு பிறமத சடங்குகள், நம்பிக்கைகள் எனவும் விரிவாக்கப்பட்டிருக்கிறது. பிறகு இவையாவும் இக்காலத்திற்குப் பொருத்தமானவையா, இவற்றின் குறை நிறைகள் என்ன? என்ற கோணத்திலும் மாணவர்கள் தங்கள் கற்றலை விரிவுபடுத்தியிருக்கிறார்கள். மன்னராட்சி, அரசபரம்பரை அவர்களது அரசாளும் உரிமையைப் பெறும் நிலை, இக்கால அரசாங்க அமைப்புகள் என்றும் பாடம் தொடர்ந்திருக்கிறது. கன்பூஷியஸ் வழங்கிய வாழ்வியல் தத்துவங்கள் பள்ளியைத் தோற்றுவித்த சிந்தனையாளர் ஜே. கிருஷ்ணமூர்த்தி அவர்களின் உரைகளுடன் ஒப்பிட்டு நோக்கப்பட்டிருக்கிறது. சீனா போன்றே மற்ற பிறநாடுகளும் மாணவர்களுக்கு அறிமுகப்படுத்தப் பட்டுள்ளது. எகிப்தின் புராதனம், கிரேக்க நாட்டின் மக்களாட்சி முறையின் ஆரம்பம், புராணக்கதைகள், தத்துவ மேதைகள், போர் நிகழ்ச்சிகள் எனப் பாடங்கள் செயல்முறை வடிவெடுத்து மாணவர்களின் ஆர்வத்தைத் தூண்டும் வகையில் வடிவமைக்கப் பட்டிருக்கிறது. வெறுமனே நூலில் தொடர்புகள் புரியாது பாடங்கள் படிப்பது, தேர்வுக்குப் பிறகு படித்ததை மறப்பது என்ற வகையிலிருந்து இது மாறுபட்ட வகையில் நினைவில் நிறுத்தப்பட்டது என்பதை மாணவர்களின் நினைவுகூர்தல் மூலம் அறியும் வாய்ப்பும் சீதா நடராஜனுக்குக் கிடைத்திருக்கிறது. July 21, 2014 கவிஞர் குட்டி ரேவதி [] கவிஞர் குட்டி ரேவதி பெண்களுக்காகவும், ஒடுக்கப்பட்ட மக்களுக்காகவும் தொடர்ந்து தனது ஆதரவுக் குரலை எழுப்பி வருபவர். இவர் தனது சமுதாய அக்கறை கொண்ட இடைவிடாத தொடர் முயற்சியாகத் தனது எழுத்தின் மூலம் மக்களின் சிந்தனையைத் தட்டி எழுப்புபவர். கவிஞர் குட்டி ரேவதி அவர்களின் இயற்பெயர் ரேவதி சுயம்புலிங்கம். சென்னையில் வசிக்கும் சித்த மருத்துவரான இவர்தம் முற்போக்கு சிந்தனைகளைத் தொடர்ந்து தனது எழுத்துக்களின் மூலம் வெளிப்படுத்துவதில் முனைப்பு மிகக் கொண்டவர். தற்கால பெண்ணெழுத்தாளர்களில் பெண்ணிய எண்ணம் நிறைந்த குட்டி ரேவதி “பனிக்குடம்” என்னும் பதிப்பகம் ஒன்றையும் நடத்திவருகிறார். இப்பதிப்பகம் வெளியிடும் பனிக்குடம் என்ற தமிழ் இலக்கிய சிற்றிதழின் ஆசிரியர் பொறுப்பிலும் இருக்கிறார். “பெண் எழுத்தின் கடந்த கால, நிகழ்கால, எதிர்கால வடிவங்களைப் பதிப்பிக்கும் முயற்சி”யைப் பனிக்குடம் தொடர்வது என்பது இந்தக் காலாண்டிதழின் நோக்கம். அத்துடன் பனிக்குடம் பதிப்பகம் பெண்ணிலக்கியவாதிகளின் படைப்புகளை மட்டுமே வெளியிடுவது குறிப்பிடத்தக்கது. தலித் பெண்ணியம் என்பதைச் சித்தாந்த வடிவில் கட்டமைப்பதும் களப்பணிக்குச் செயல்படுத்துவதே இந்தியாவில் பெண்களின் உரிமைகளை முழுமையான வடிவில் பெற்றுத் தரும் என்று நம்புபவர் குட்டி ரேவதி. சாதிய மறுப்பும் ஒழிப்பும்தான் பெண்ணுடலை அடிமைத்தளையிலிருந்து விடுவிக்கும் என்ற உணர்வுடன் தலித் பெண்ணியத்தைத் தனக்கேயான மொழியில் சித்தாந்தப்படுத்தி வருகிறார். ஆவணப்படத்துறையிலும் திரைப்படத்துறையிலும் பங்காற்றியுள்ள குட்டி ரேவதி, பூனையைப் போல அலையும் வெளிச்சம் (2000), முலைகள் (2002), தனிமையின் ஆயிரம் இறக்கைகள் (2003), உடலின் கதவு (2006) ஆகிய கவிதை நூல்களையும், காலத்தைச் செரிக்கும் வித்தை (2009) என்ற கட்டுரை நூலையும் எழுதியுள்ளார். 2014 ஆம் ஆண்டு ஜூலை 4 மற்றும் 5 ஆம் நாட்களில், அமெரிக்க செயின்ட் லூயி, மிசௌரி நகரில் நடந்த வடஅமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவையின் 27-ஆம் ஆண்டு விழாவில் பங்கேற்று, நூற்றாண்டினைக் காணும் தலித் இயக்க முன்னோடியும், சமூகச் சீர்திருத்தவாதியுமான அயோத்திதாச பண்டிதரைப் பற்றிய சொற்பொழிவொன்றை வழங்கியுள்ளார். மேலும் விழாவில் “கிளம்பிற்றுக்காண் தமிழர் படை” என்ற தலைப்பில் நடைபெற்ற கவியரங்கத்திற்கு தலைமையேற்று இன்றைய தமிழ் சமுதாயத்தில் தமிழர் உணர்வுகள் செயல் வடிவம் பெற, தமிழ் உணர்வாளர்களைக் கொண்டு ஊடகக் கல்விக்கூடம் அமைக்க வேண்டியதன் அவசியத்தையும் இன்றைய தமிழகத்தில் ஒடுக்கப்பட்ட பெண்களுக்காக எழுத வேண்டியதன் அவசியத்தையும் எடுத்துரைத்தார். “பெண் எழுத்தாளர்கள் மீது ஆண் எழுத்தாளர்கள் கொள்ளும் வெறுப்பு! – இயங்கியல் பார்வை” என்ற தலைப்பில், ஜூலை 2014 இல் வெளியான “கணையாழி” இதழில் இவர் எழுதிய கட்டுரையில், தமிழ் பெண்எழுத்தாளர்களின் மீது தமிழ்ச் சமுதாயம் கொண்டிருக்கும் கீழ்த்தரமான கண்ணோட்டத்தைக் கண்டித்து எழுதியுள்ளார். தமிழ் இந்துவில் எழுத்தாளர் ஜெயமோகன் பெண் இலக்கியவாதிகளை தமது கட்டுரை ஒன்றில் பாலினம் சார்ந்து வெறுப்புக் கண்ணோட்டத்துடன் அவர் விமர்சித்திருப்பதாக எழுந்த சர்ச்சையின் எதிரொலியாக, அவருக்குப் பெண் எழுத்தாளர்களும், பெண்ணியவாதிகள் சிலரும் விடுத்த கண்டன அறிக்கையின் எதிரொலிகளில் ஒன்றாக இக்கட்டுரையைக் கணையாழி இதழில் குட்டி ரேவதி எழுதியிருந்தார். கட்டுரையின் முக்கியக் கருத்துகள் மட்டுமே இங்குத் தொகுத்து வழங்கப்பட்டுள்ளது. பெண் எழுத்தாளர்கள் மீது ஆண் எழுத்தாளர்கள் கொள்ளும் வெறுப்பு! – இயங்கியல் பார்வை இன்று தான் என்று இல்லை. பெண்கள் எழுத வந்த முதல் கணம் முதலே பெண் எழுத்தாளர்கள் மீதான வெறுப்பும், சந்தேகங்களும் சமூகத்திடம் இருந்து கொண்டுதான் இருக்கிறது. அது வரை, ஆணின் ஆளுமைகளையும், குடும்பம், திருமணம், சாதி, மதம் இன்ன பிற, ஆணுக்கு இசைவான அமைப்புகளையும், ஆண் ஏற்ற அதிகார அடையாளங்களையும் கட்டிக்காக்கும் பொறுப்புகளை மட்டுமே நிறைவேற்றி வந்த பெண்கள், தம் கைக்கு மொழி கிடைத்ததும், சிந்திப்பதைப் பதிவு செய்யும் வாய்ப்புகளை ஏற்படுத்திக்கொண்டனர். ஆனால், இதுவும் காலங்காலமான தடைகளுக்குப் பின்பு தான் நிகழ்ந்தது…………. பெண்கள் எழுத வரும்போது, சமூகத்தில் உருவாகும் பதட்டம் என்பது, நிறைய விடயங்களை அம்பலமாக்கும் என்பது தான். அதுவரை மறைத்தலுக்கும் மறந்துபோதலுக்கும் ஆளான வாழ்க்கைச் சம்பவங்கள், அது சார்ந்த முறையீடுகள் எல்லாம் பகிரங்கமாகத் தெரிய வந்து, இது வரை தாம் அனுபவித்து வந்த அதிகாரங்களையும் சமூக மரியாதைகளையும் குலைக்கும் என்பதை ஆண் எழுத்தாளர்கள் உள்ளிட்ட, அதிகாரங்களை அனுபவித்தவர்கள் அறிந்தது தான்…………. இன்று நிலைமை மாறிவிட்டது. குறிப்பாக, மீனவர் பெண்கள், தாழ்த்தப்பட்ட பெண்கள், மதச்சிறுபான்மையினர், உழைக்கும் பெண்டிர், பாலியல் வாழ்வைத் தொழிலாக ஏற்றவர்கள், அதிகாரத்திற்கு எதிரான போராட்ட வாழ்வைத் தம் வாழ்வாக ஏற்றுக்கொண்டவர்கள் என எல்லோரும் எழுத வந்துவிட்டனர். இதனால், ஏற்படும் “பாதுகாப்பின்மை உணர்வு” ஆண் எழுத்தாளர்களைப் பதட்டம் நிறைந்தவர்களாக ஆக்கியுள்ளது…………. அறிவின் உறைவிடமாகவோ, கருத்தின் பிறப்பிடமாகவோ பெண்கள் மாறுவது, ஆண்களின் தன்னிருப்பை அச்சுறுத்தும் ஒன்று தான். அதிலும் எழுத்து என்பது சிந்தனை முறையைக் கேள்விகேட்கும் பணி என்பதால், இயல்பாகவே ஆண் படைப்பாளிகள் சாதாரண, பழைமைகள் தோய்ந்த, ஒரு சராசரி அவரவர் சாதி ஆண்களாகிவிடுகின்றனர். மொழியில் கையாளவேண்டிய குறைந்தபட்ச அறம் கூட, தேய்ந்துபோய்விடுகிறது…………. தமிழ் ஆண் எழுத்தாளர்கள் சொல்வது போல், பெண்கள் ஒன்றும் ஆண்களின் பாலியல் இச்சைகளுக்கு இரையாகி ‘ஊடகப்பிம்பங்களாக’ ஆகிவிட முடிவது இல்லை. ‘உன்னை எவ்வளவு பெரிய ஆளாக ஆக்கிக்காட்டுகிறேன்!’ என்ற பசப்பு வார்த்தைகளுடன் வந்த ஆண் படைப்பாளிகள், அத்தகைய பெண்களைச் சமூக வெளிச்சத்திலிருந்து முற்றிலுமாக விலக்கி, இருட்டடிப்பு தான் செய்திருக்கிறார்கள். இத்தகைய முறை, நடைமுறைக்கு உதவாது என்பது தான் அடிப்படையான தர்க்கம். பெண் நாளும் உழைத்தும், போராடியும் தான் எழுத்தை மட்டுமல்ல, எந்தவகையான கலைவெளிப்பாட்டையும் இந்தச்சமூகத்தில் செய்யமுடியும் என்பது வெகு யதார்த்தம்…………. இவ்விடத்தில், மிகவும் குறிப்பிட்டுச் சொல்லவேண்டிய ஒன்று. உலகெங்கிலும் உள்ள ஆண் படைப்பாளிகள் இப்படி இருப்பதில்லை. அல்லது, உயர்ந்த அல்லது புகழ்பெற்ற ஆண் படைப்பாளிகள் என்று பாராட்டப்பட்டவர்கள், உண்மையில் அப்படியான புகழ்பெறுவதற்கு அடிப்படையான காரணம், பெண்களை எதிரினமாகப் பார்க்காததுதான். மனித இனமாகப் போற்றியதுதான். பெண்ணும் ஆணும் ஹோமோசேப்பியன்ஸ் என்ற ஒரே வகை இனத்தைச் சேர்ந்தவர்கள் என்ற அடிப்படை அறிவியல் அறிவை அவர்கள் பெற்றிருப்பது தான். குதிரையும் கோழியும் என்ற வேறு வேறு இனத்தைச் சேர்ந்தவர்கள் இல்லை என்பதைப் புரிந்துகொண்டவர்களும் கூட. எந்தச்சந்தர்ப்பத்திலும், அவர்கள் பெண்கள் மீது அபாண்டமான சொற்களை உபயோகித்ததில்லை, உபயோகிக்கத் தயங்கியிருக்கிறார்கள். இன்றைய ஆண் படைப்பாளிகளின் ஆண் எழுத்து, அவர்கள் கொண்டிருக்கும் பெண் மீதான அடிப்படை வன்மங்களினாலேயே கடுமையாகப் பரிகசிக்கப்படும், புறக்கணிக்கப்படும் சூழலில் இருக்கிறது என்பதை அறியாதிருக்கிறார்கள்………… ஒடுக்கப்பட்டவர்கள் தங்களுக்காகக் குரல் எழுப்ப வேண்டும் என்று அறிந்திராத அல்லது அவர்களால் இயலாத சூழ்நிலையில் குட்டி ரேவதி போன்ற சமூகப் பொறுப்புள்ளவர் செய்யும் சேவையை சமுதாய வளர்ச்சிக்கு இன்றியமையாத பங்களிப்பாக அங்கீகரித்துப் போற்ற வேண்டியது நமது கடமை. July 28, 2014 காமாட்சி மகாலிங்கம் [] திருமதி காமாட்சி மகாலிங்கம் அவர்களுக்கு அவரது வலைப்பூவைத் தொடங்கிய ஆண்டுக்கு ஓராண்டு முன்பு வரை கணினியைப் பயன் படுத்தத் தெரியாது. ஆனால் அவருடைய 78 வயது என்பது அவரது ஆர்வத்திற்கு ஒரு தடையாக இருக்கவில்லை. விகடனின் தீவிர வாசிப்பாளரான இவர், பதிவுகளைப் படித்து கருத்துரைகளையும் வழங்கி வருபவர். பத்திரிக்கைகளை உடனுக்குடன் இணையம் மூலம் படிப்பதற்கும், எழுதுவதற்கும் தனது மகனின் உதவியால் கணினியைக் கையாளக் கற்றுக் கொண்டதுடன் தானும் எழுதத் தொடங்கி, தனது வலைப்பூ பதிவில் கருத்துரைக்கும் வாசகர்களுடனும் உற்சாகமாகக் கலந்துரையாடுகிறார். முதுமைக் காலத்திலும் தன்னால் இயன்ற அளவு பயனுறப் பொழுதைக் கழித்து, தனது எழுத்து ஆர்வத்தின் மூலம் தனக்குத் தெரிந்தவற்றை பிறருக்குப் பயன்படும் வகையில் “சொல்லுகிறேன் காமாட்சி” என எழுதி வருகிறார். காமாட்சி அம்மையார் சிறு வயதில் ஒரு பெரிய நகரில் பிறந்து வளர்ந்தாலும் அந்நாட்களில் பெண்கல்விக்கு இருந்த வசதியற்ற சூழலில் எட்டாம் வகுப்புடன், அவருடைய 12 ஆவது வயதில் அவருடைய பள்ளிப் படிப்பு நின்று போயிருக்கிறது. அண்டை அயல் வீடுகளில் உள்ளவர்களுக்கு நூல்கள் படித்துக் காட்டியும், கடிதங்கள் எழுத உதவியும் வந்திருக்கிறார். 1945 ஆம் ஆண்டு கட்டாயக் கல்விமுறையை அரசு அறிவித்த பொழுது மாணவர்கள் தொகை அதிகமாகிவிட ஆசிரியர் தட்டுப்பாடு ஏற்பட்டிருக்கிறது. இவர் படித்த பள்ளியிலேயே ஆசிரியராகப் பணி புரிந்திருக்கிறார் (அந்தக் காலத்தில் E.S.L.C படித்தாலே ஆசிரியர் பணி புரியலாம்). சுதேசமித்திரன் போன்ற பத்திரிக்கைகளில், கதைகளும், பலவகை சமையல் குறிப்புக்களும் எழுதி சன்மானங்களும் வாங்கி இருக்கிறார். திருமணத்திற்குப் பிறகு, அவர் வசித்த நேபாளத்திலிருந்து மடல்கள் அனுப்பினாலே ஏற்படும் தாமதம், குடும்பப் பொறுப்பு, ஐந்து குழந்தைகளை வளர்க்கும் பொறுப்பு ஆகியவற்றினால் இவரது எழுத்துப்பணி தடைப் பட்டிருக்கிறது. பிறகு முதுமைக்காலத்தில் தனது மகனுடன் ஜெனிவாவில் வசிக்கத் துவங்கியதும் இணையம் மூலம் தனது எழுத்தார்வத்தை புதுப்பித்துக் கொண்டுள்ளார். காமாட்சி அம்மையார் 1930 களில் பிறந்தவர். அவர் தனது 78 ஆவது வயதில் வர்ட்பிரஸ் (wordpress.com) வலைப்பூ தொடங்கி எழுதத் துவங்கியதே ஒரு சாதனைதான். ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாக, தற்பொழுது தனது 82 ஆவது வயதிலும் தொடர்ந்து “சொல்லுகிறேன்” என்ற தலைப்பில் தனது வலைப்பூவில் எழுதி வருகிறார். சமையல் குறிப்பில் தொடங்கி தனக்குத் தெரிந்தவற்றை எல்லாம் பகிர்ந்து கொள்வேன் என்று வலைப்பூவில் தன்னைப்பற்றிய அறிமுகப் பகுதியில் குறிப்பிட்டுள்ள காமாட்சி அம்மையார், அதைப் போலவே பெரும்பான்மையான சமையல் குறிப்புகளும், அவற்றுடன் பயணக் கட்டுரைகள், விழாக்கள், சில நினைவுகள், கடிதங்கள், கதைகள், துணுக்குகள், நடப்பு என்ற பற்பல தலைப்புகளின் கீழும் தனது எண்ணங்களைப் பதிவு செய்து வருகிறார். அத்துடன் தனது பதிவிற்கான புகைப்படங்களையும் தானே எடுத்துப் பதிகிறார் என்பது இவரது தனிச் சிறப்பு. திரு சைபர் சிம்மன் “80 வ‌யது பாட்டியின் வலைப்பதிவு!” என்றும் இவரது வலைப்பூவை அறிமுகப்படுத்தியுள்ளார். திருமதி காமாட்சியின் வலைப்பூ அவள் விகடனிலும் அறிமுகம் ஆகியுள்ளது. ஓர் அன்னையர் தினப் பதிவாக தனது அன்னையைப் பற்றிய அந்தக் கால நினைவுகளை அசை போடத் தொடங்கியவர், தொடர்ந்து அடுத்த ஆண்டு வரை பதினைந்து பதிவுகளுக்கு அக்கால நினைவலைகளில் நீந்திச் செல்கிறார். அதன் வழியாகச் சென்ற நூற்றாண்டின் ஆரம்பக் காலங்களில் மக்களின் வாழ்க்கையை, குறிப்பாகப் பெண்களின் வாழ்க்கையைப் பற்றிய கால வரலாற்றைப் பதிவு செய்துள்ளார். “பழைய காலத்தில் பெண்களுக்கு வாழ்க்கை எப்படியெல்லாம் அமைந்தது என்பதின் சிலரின் குறிப்புகள்…… அந்த நாளைய சமாசாரங்கள். இந்தக் கதையெல்லாம் யாராலே சொல்லமுடியும் ? பிடிச்சா படியுங்கோ. அவ்வளவுதான்…” என்று முன்குறிப்புகள் கொடுத்துத் தொடர்ந்துள்ளார். அப்பதிவுகளில் இருந்து ஒரு சில பகுதிகள் மட்டும் படித்து மகிழ கீழே கொடுக்கப்பட்டுள்ளது… அன்னையர் தினத் தொடர்வு: என் அம்மாவைப் பற்றி எழுதுகிறேன் என்று சொன்னேன். அவர் இருந்தா நூறைவிட அதிகம் வயது. இருக்க வாய்ப்பில்லை. அவரின் சின்ன வயது அனுபவங்களைக் கேட்டபோது காலம் எப்படியெல்லாம் இருந்தது என்பதைத் தெரிந்து கொள்ள முடிகிறது. அவரின் சிறிய வயது காலத்தில் விவாகம் என்பது பெண் குழந்தைகளுக்கு அவசியம் என்பதுடன், உள்ளூரிலேயே சம்பந்தம் செய்ய வேண்டும், என்பதால், சாப்பாட்டிற்குக் கஷ்டமில்லாது பார்த்துக் கொள்ளக் கூடியவரைப் பார்த்தார்களே தவிர நல்ல இடம் கிடைக்கும் என்று வேறு ஊர்களில் வரன் தேடுவதில்லை. கஷ்டப் பட்டாலும், கண்ணெதிரே இருப்பதை விரும்பினார்கள். ஆதலால் வயது வித்தியாசம், பெரியதாகத் தெரிவதில்லையாம். அந்தந்த சீசனில் விளையும் பயிர் பச்சைகள் போல, கிடைக்கும் மாப்பிள்ளைகளைத் தேர்ந்தெடுப்பார்கள் போலும்……… …… மற்றொரு பதிவில் …… அது ஒருகாலம். குழந்தை வைத்தியம் சரிவர இல்லாத காலமென்றும் சொல்லலாம். மருந்துகள் கண்டு பிடித்த காலம் அது என்றும் சொல்லலாம். எங்கு நோக்கினாலும் ஒரு வயதுக் குழந்தைகள் வயிற்றைப் பெரியதாக முன்நோக்கித் தள்ளிக் கொண்டு, சரிந்த தோள்களும், மெலிந்த கால்களுமாக உட்கார்ந்து கொண்டிருக்குமே தவிரச் சுறு சுறுப்பாக இராது. கண்களில் ஒரு ஏக்கம். அழுகை என ஈரல், குலைக்கட்டிக்கு ஆளாகி இம்மாதிரிக் குழந்தைகள்தான் பார்க்கக் கிடைக்கும். கட்டி விழுந்த குழந்தை. மாதமொரு முறை ஜம்மி வெங்கட ரமணய்யாவின் அருகிலிருக்கும் பெரிய ஊர்களுக்கு அவரின் விஜயம். எல்லா மாதங்களிலும் ஒரே குறிப்பிட்ட தேதியில் அவர் வருகைக்காக அம்மாவுடன் பயணிக்கும். நல்ல வார்த்தை டாக்டர் சொல்ல வேண்டுமே என்று வேண்டும் தாயின் உள்ளங்கள். பத்துரூபாய் மருந்து என்றால் பாப்பையா மருந்து. வியாதி கடினம். ஐந்து ரூபாய் மருந்து என்றால் ஜம்மியோ, ஜிம்மியோ? வியாதி ஆரம்பம். அப்படிப் பெயர்போன மருந்துகள். மிகவும் கஷ்டம், எத்தனைத் தேரும், தேராது என்பது. ஒரு முப்பது வருஷ காலங்கள் இம்மாதிரிதான் ஓடிக்கொண்டிருந்தது. நான் நிறைய இம்மாதிரி குழந்தைகள் பார்த்திருக்கிறேன். ஒரு ஐம்பது வருஷமாக இம்மாதிரி அவல நிலை ஓய்ந்தது என நினைக்கிறேன். அம்மாவின் முதல் ஆண் குழந்தை இம்மாதிரி இழப்பு……… அக்காலத்தில் தனது பாட்டிகளிடம் கதைகேட்டு வளர்ந்தவர்களுக்குத் தெரியும் பாட்டிகள் எவ்வளவு அனுபவச் சுரங்கங்களாக இருந்தார்கள் என்பது. கதைகள், வைத்தியக் குறிப்புகள், சமையல் குறிப்புகள், பாடல்கள், காலக்குறிப்புகள் என அவர்கள் அள்ளி அள்ளி வழங்குவார்கள். அந்த அருமையான வாய்ப்பினை இழந்த இக்காலத்தவருக்கு, அந்த ஏக்கத்தைத் தீர்க்க ‘இணையப்பாட்டி’ போல காமாட்சி அம்மையார் எழுதி வருகிறார். இளைய தலைமுறையினருக்கு இவரது வலைப்பூ தகவல் பலத் தரும் ஓர் அருமையான கருவூலம். August 4, 2014 “வழிகாட்டும் ஒளி” குழுவினர் [] பெண்களுக்கெதிரான கொடுமைகளில் இருந்து அவர்களைக் காக்கும் நோக்குடன் ‘வழிகாட்டும் ஒளி’ நிறுவனத்தைத் துவக்கி வழிநடத்தும் பிரேமா, ரேவதி, சுஜாதா குழுவினர் மற்றும் அவர்களது சேவையை உலகுக்குத் தனது கட்டுரையின் மூலம் அறிவித்த ‘குங்குமம் தோழி’யின் பொறுப்பாசிரியர் ஆர். வைதேகி ஆகியோர் மகளிருக்கு வாழ்வில் வழிகாட்டும் ஒளிதனைப் பரப்பும் பெண்மணிகள் என்றால் அது மிகையல்ல. வாழ்க்கையில் வஞ்சிக்கப்பட்ட பெண்களுக்காக ஒருங்கிணைந்து செயலாற்ற ‘வழிகாட்டும் ஒளி’யை ஆரம்பித்து, வழிநடத்தும் பிரேமா, ரேவதி, சுஜாதா ஆகிய மூவருமே வாழ்க்கையில் வஞ்சிக்கப்பட்டவர்கள். நல்ல வாழ்க்கைத் துணை கிடைத்து அமைதியான குடும்ப வாழ்வை எதிர்நோக்கும் பெண்களில் பலருக்கு அவர்களின் எதிர்பார்ப்பிற்கு மாறாக வாழ்க்கை அமைந்துவிடுகிறது. பலருக்குக் கிடைத்த வாழ்க்கைத் துணைவர்களே துன்பத்திற்குத் துவக்க விழாநடத்தும் வேலையைச் செவ்வனே செய்பவர்களாக அமைகிறார்கள். உதவி இல்லாவிட்டாலும் உபத்திரவத்திற்கு உத்திரவாதம் தருகிறார்கள். போதும் இந்த வாழ்க்கை என்று சலிப்படையும் பெண்களில் பலர் வாய் திறந்து புலம்புவதுகூட கிடையாது. இவர்களில் ஒருவர் வழிகாட்டும் ஒளியின் தலைவி பிரேமா. இவர் காதலித்துக் கைபிடித்து பதினைந்து ஆண்டுகள் குடும்பம் நடத்திய கணவரால் அடைந்த துன்பங்கள் பல. வேறுவழியின்றி கணவரைப் பிரிந்து வாழ்ந்தவருக்குக் கணவராலும் சமூகத்தாலும் தொடர்ந்த தொல்லைகளுக்கும் குறைவில்லை. ஆதரவு தந்த அன்புள்ளங்களால் மீண்ட இவருக்கு மீண்டும் சோதனையாக ஒரு விபத்து. அதிலிருந்து உயிர் பிழைத்த இவர் தனக்கு மறுவாழ்வு கிடைத்ததன் காரணமே பிறருக்கு உதவுவதற்காக என்ற முடிவெடுத்தார். ‘நேசம்’ என்ற அமைப்பைத் தொடங்கி, இயலாத மாணவர்களுக்குக் கல்வி உதவி வழங்குவதிலும், மாற்றுத் திறனாளிகளுக்கு உதவுவதிலும் கவனம் செலுத்தி இருக்கிறார். அப்பொழுது பெண்களுக்கெதிரான கொடுமைகளில் சிக்கிக் கொண்ட தன்னைப் போன்ற பெண்கள் பலரை சந்திக்க நேர்ந்ததால் அவர்களுக்கு ஆதரவுதர விரும்பி ‘வழிகாட்டும் ஒளி’யை ஆரம்பித்து வாழ்க்கையில் வஞ்சிக்கப்பட்டும், உறவுகளின்றியும் தனித்துவிடப்பட்ட பெண்களுக்காகத் தனது பணியைத் தொடங்கி இருக்கிறார். ‘வழிகாட்டும் ஒளி’ அமைப்பின் வழியாக அந்தப் பெண்களின் தகுதிக்கேற்ற பணியில் அவர்களை அமர்த்தி, அவர்கள் தங்களது சொந்தக் காலில் நிற்க உதவியிருக்கிறார். குடும்பத்தாரால் கைவிடப்பட்டு தனிமையில் தவிக்கும் பெண்களுக்கு ஆறுதலையும், வாழ்க்கையில் வெளிச்சத்தையும் காட்டுகிற ஓர் அமைப்பு இவருடைய ‘வழிகாட்டும் ஒளி’. இந்த அமைப்பின் செயலாளர் ரேவதி, எம்.ஏ படித்தவர், பெற்றோர் பார்த்து மணமுடித்து வைக்கப்பட்டவர். இவரது கணவருக்குப் படித்த பெண்களின் மேல் நம்பிக்கை இல்லாத காரணத்தினால் இவரைச் சந்தேகித்து சித்திரவதை செய்திருக்கிறார். மனவுளைச்சல் தாள முடியாது தனது படிப்பை மட்டும் நம்பி மூன்று வயது மகனுடன் வீட்டைவிட்டு வெளியேறியிருக்கிறார். தனியாக உன்னால் வாழ்ந்து விட முடியுமா என்று கணவர் இட்ட சவாலை ஏற்று, ஆசிரியத் தொழில் புரிந்து தனது மகனை வளர்த்து எம்.பி.ஏ. வரை படிக்க வைத்துள்ளார். தனது அண்ணனுடன் பணிபுரியும் பிரேமாவின் தொடர்பு கிடைக்க, தன்னைப் போன்று துன்புறுத்தப்பட்ட பெண்களுக்கு உதவ ‘வழிகாட்டும் ஒளி’ அமைப்புடன் தன்னை இணைத்துக் கொண்டுள்ளார். சிறுவயதில் திருமணமான பொழுது பத்தாம் வகுப்பிற்கு மேல் படித்திராதவர் வழிகாட்டும் ஒளி அமைப்பின் பொருளாளர் சுஜாதா. வேலைவெட்டி இன்றி நாள்முழுவதும் குடிபோதையில் இருந்த அவரது கணவரால் குடும்பத்தில் அமைதி இன்றிப் புழுங்கியபடி வாழ்ந்திருக்கிறார். அதன் உச்சக்கட்டமாக, குடிபோதையில் சச்சரவு ஏற்பட்டு நடுஇரவில் கணவனால் துரத்தப்பட்டு நடுத்தெருவிற்கு இவர் வந்த பொழுது இவருடன் வெளியேற்றப்பட்டவர்கள் இவரது பத்து வயது மகளும், ஒன்றேகால் வயது கைக்குழந்தையான மகனும். நீ தற்கொலை செய்து கொள்ளும் வரை உன்னைத் துன்புறுத்துவேன் என்று அச்சுறுத்திய கணவனுக்கு எதிராகத் தனது குழந்தைகளுக்காக வாழவேண்டி, பள்ளித் தோழி உதவியுடன் வேலை பெற்று பணி செய்து கொண்டே படித்து எம்.ஏ. முடித்திருக்கிறார். தற்பொழுது பொதுமக்கள் தொடர்புப் பணியாளராக பணிபுரிகிறார். ஒரு சந்திப்பு நிகழ்ச்சியில் இவர் பிரேமாவை எதிர்கொள்ள, அவரது பணியால் ஈர்க்கப்பட்டு ‘வழிகாட்டும் ஒளி’யின் பொருளாளராக அந்த அமைப்புடன் தன்னை இணைத்துக் கொண்டுள்ளார். வழக்கறிஞர், உளவியல் நிபுணர்கள் போன்றவர்களை தங்கள் அமைப்பில் இணைத்துக் கொண்டு முடிந்தவரைப் பெண்கள் தங்கள் நிலையைக் கையாள ஆலோசனைகள் வழங்குகிறது ‘வழிகாட்டும் ஒளி’ அமைப்பு. அந்த உதவிகளுக்கும் மேலாக, பெண்களுக்கு மாற்றுவழியாக அவர்களது திறனுக்கேற்ற பணியில் அமர்த்தி தன்னிறைவுடன் வாழ உதவியும் செய்து வருகிறது. அல்லல்களில் இருந்து மீண்ட இந்த மூன்று பெண்மணிகளும் தங்களைப் போன்று வாழ்வில் அல்லலுறும் பெண்களுக்கு வழிகாட்டியாக இருக்க விரும்புகிறார்கள். இவர்களது கதைகளையும், இவர்களது ‘வழிகாட்டும் ஒளி’ அமைப்பு பற்றியும் குங்குமம் தோழி இதழில் கட்டுரை எழுதி மக்களுக்கு இவர்களது சேவையை அறிமுகப்படுத்தி இருக்கிறார் குங்குமம் தோழி பொறுப்பாசிரியர் ஆர். வைதேகி அவர்கள். பெண்களுக்கு எதிரான வன்முறை, பெண்களுக்கு எதிரான கொடுமைகள் மற்றும் சிசுக்கொலைக்கு எதிராகத் தேசிய அளவில் விழிப்புணர்வுப் பிரசாரங்களை மேற்கொண்டு வரும் பாப்புலேஷன் ஃபர்ஸ்ட் என்ற தன்னார்வ அமைப்பு ‘லாட்லி ஊடக விருது’ என்று அழைக்கப்படும் விருதுகளை வழங்கிவருகிறது. இந்த அமைப்பின் நோக்கத்தை அடிப்படையாகக் கொண்டு பெண்களுக்கு எதிரான கொடுஞ்செயல்களை வெளிக்கொணரும் விழிப்புணர்வுச் செய்திக் கட்டுரைகள், தொலைக்காட்சி, வானொலி விளம்பரங்கள், ஆவணப்படங்கள் ஆகியவற்றைத் தேர்வு செய்து, சிறந்த படைப்புகளுக்கு கடந்த 5 ஆண்டுகளாக ‘லாட்லி ஊடக விருது’கள் (Laadli Media and Advertising Awards for gender sensitivity) இந்த அமைப்பால் வழங்கப்பட்டு வருகிறது. குங்குமம் தோழி இதழின் பொறுப்பாசிரியர் ஆர். வைதேகி, தாம் எழுதிய ‘வழிகாட்டும் ஒளி’ என்ற கட்டுரைக்காக தெற்கு மற்றும் கிழக்குப் பகுதிகளுக்கான லாட்லி ஊடக விருதினைப் (ஃபார் பெஸ்ட் கேம்ப்பெயின்) பெற்றார். ஆந்திர உயர்நீதி மன்ற நீதிபதி திரு சந்திரகுமாரும், பாப்புலேஷன் ஃபர்ஸ்ட் அமைப்பின் இயக்குநர் டாக்டர் ஏ.எல். சாரதாவும் டிசம்பர் 2013இல் ஹைதராபாத்தில் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் இவ்விருதை வைதேகிக்கு வழங்கினார்கள். பெண்கொடுமைகளுக்கெதிராக பெண்களைப் பாதுகாக்கும் நோக்கில் அவர்களுக்கு ஆதரவான செயல்களைப் புரிந்துவரும் இப்பெண்மணிகள் யாவருமே, தற்கால இளம்பெண்கள் யாவரும் தன்னம்பிக்கையுடன் வாழ்வை எதிர்கொள்ள நல்ல வழிகாட்டிகள் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. இக்கருத்தை மிக அழகாக முன்வைத்துள்ளார் கவிஞர் காவிரிமைந்தன். “இல்லற வாழ்க்கை என்கிற ஒன்றை மரபு வழியில் தேர்ந்தெடுத்து, அமைகின்ற துணை சரியில்லாமல் போய்விடும்போது இன்னலுறும் லட்சோபலட்சம் மக்கள் தங்கள் வாழ்க்கையைக் கண்ணீரால்தான் எழுதுகிறார்கள். விதி என்கிற ஒற்றை வார்த்தையால் சமூகம் அதை அலட்டிக்கொள்ளாமல் மேற்பார்வையிடுகிறது. கதைகளிலும் திரைப்படங்களிலும் மட்டுமல்ல இதுபோன்ற சம்பவங்கள், கைவிடப்பட்ட அகலிகைகளாக அடுத்த கட்டம் என்ன என்பதைத் தீர்மானிக்க முடியாதவர்களாக, வாழ்க்கையே சூனியமாகிவிட்டதாக கருதும் சராசரி பெண்களின் வரிசையில் நின்றுவிடாமல், வாழ்ந்து காட்டுவோம் என்று தங்கள் வாழ்க்கைப் பயணத்தைத் தொடர்ந்ததோடு இதுபோல் ஜீவிக்க முடியாமல் போராடும் பலருக்கும் “வழிகாட்டும் ஒளி” என்கிற அமைப்பு ரீதியான உங்களின் மேலாண்மை வெறும் வார்த்தைகளால் பாராட்டி வாழ்த்துக்களால் நிறைவுபெறும் ஒன்றல்ல. நேர்மையற்ற நெஞ்சம் கொண்டோர், தேவையற்ற பழக்கங்களால் வாழ்வைக் கெடுத்துக்கொள்வதோடு தன்னைச் சார்ந்திருப்போர் வாழ்க்கையையும் பாழாக்கும் அவலங்கள் நிறைந்துவரும் இன்றைய சூழலில், வழிகாட்டும் ஒளி போன்ற அமைப்புகள் தேவையான ஒன்று என்பதைச் சுட்டிக்காட்டும் அதே நேரம், அரசாங்கம், மத்திய மாநில அரசுகள் இது போன்ற தூய தொண்டாற்றும் நிறுவனங்களுக்குச் சிறப்பு சலுகைகள் வழங்கி அங்கீகாரம் வழங்க வேண்டும்.” கவிஞர் காவிரிமைந்தனின் கருத்துக்களை முழு மனதுடன் ஆதரிப்போம். August 11, 2014 வி. மோகனரங்கன் [] ஆன்மிக சிந்தனையாளர் திரு. மோகனரங்கன் அவர்கள் பரந்துபட்ட பல ஆன்மிக நூல்களைப் படிப்பதில் ஆர்வமுடையவர். அவ்வாறு தான் படித்ததைப் படித்தவாறே ஏற்றுக் கொள்ளாது அவற்றை வெவ்வேறு கோணங்களில் ஆராய்பவரும் கூட. சிந்தனையின் முடிவில் அவர்கொண்ட கருத்துகள் பெரும்பான்மையான மக்களின் கருத்துக்கு மாறுபட்ட கோணத்தில் இருந்தாலும் அவற்றைப் பிரதிபலிப்பதில் சற்றும் தயக்கம் காட்டாதவர். இந்தப் பிரதிபலிப்பின் நீட்சியாக, தொடர்ந்து இவரது எழுத்தைப் படிப்பவர்களும் சிந்திக்கத் தூண்டப் படுகிறார்கள். தனது எழுத்தின் மூலம் வாசகர்களின் ஆன்மிக சிந்தனைக்கு வினையூக்கியாகச் செயலாற்றுகிறார் மோகனரங்கன். சென்னை வங்கி ஒன்றில் பணிபுரியும் திரு. மோகனரங்கன் திருவரங்கத்தில் பிறந்து வளர்ந்தவர். மிக இளம் வயதிலேயே இலக்கியம், தத்துவம், இறையியல் ஆகியவற்றால் ஈர்க்கப்பட்டவர், அத்துடன் வரம்பற்ற வாசிக்கும் பழக்கமும் கொண்டவர். ஆன்மிக சிந்தனையாளர்கள் ராமகிருஷ்ணர், ரமணர், விவேகானந்தர் என்று ஒரு பக்கமும், நாத்திக சிந்தனையாளர் அயன் ரேண்ட் பற்றியும் தத்துவ மேதை அரிஸ்டாட்டில் பற்றி மறுபக்கமும் ஆர்வத்துடன் படிப்பவர். அதேபோலத்தான் இலக்கியத்திலும் இவரது ஆர்வம் பல துறைகளையும் தொட்டுச் செல்லும். தமிழிலக்கியத்தில் திருமங்கை ஆழ்வார், நம்மாழ்வார், ஆண்டாள் என்ற வைணவ இலக்கியங்களையும், பெரிய புராணம் போன்ற சைவ இலக்கியங்களையும் ஒரு சேர படிப்பவர். விக்டர் ஹ்யூகோ பற்றியும் விளக்கம் தருகிறாரே இவர் என்று வியந்தால் அக்கால ஸ்ரீ ராமானுஜர் தத்துவங்களைப் பற்றியும் இக்கால அக்னிஹோத்ரம் ஸ்ரீராமானுஜ தாதாசாரியார் பற்றியும் விரிவுரை வழங்குவார். பொருளாதாரக் கொள்கை , கம்யூனிசக் கொள்கை …இல்லை…இல்லை இவற்றையும் இவர் விட்டு வைத்ததில்லை. பலநூல் படிப்பும் அவற்றை ஒப்பிட்டு ஆராயும் பாங்கும் இவரது சிந்தனையை விரிவுபடுத்தியுள்ளது. ஆனால் குடத்திலிட்ட விளக்காகத் தான் அறிந்து கொண்டதை மறைத்துவிடாமல் குன்றிலிட்ட விளக்கொளி போலப் பலர் பயன்பெறத் தனது பதிவுகள் மூலம் பகிர்ந்து கொள்வது இவரது சிறப்பு. இதற்குக் காரணம் “படிப்புதான் உண்மையான யோகம்”என்று இவர் கொண்டுள்ள கருத்தாகும். அப்பதிவிலிருந்து சில வரிகள் இங்கே … “நீ உண்மையிலேயே உயர வேண்டுமா? இந்த வாழ்க்கையில், புறச் சாதனைகளில், அகச் சாதனைகளில், ஆன்மிகத்தில் – எதில் நீ உயர வேண்டும், உன்னை நீ உயர்த்திக் கொள்ள வேண்டும் என்று உண்மையாக, மனசார நீ விரும்பினால் தெள்ளத் தெளிவாகச் சொல்கிறேன் எழுதி வைத்துக்கொள் – படிப்பது தவிர வேறு மார்க்கம் இல்லை. எதைப் படிப்பது என்று கேட்காதே. உனக்கு முக்கியம் என்று படுகிற துறை யாதாயினும் சரி. அதில் ஊரானை, அவன் பெரும் மகாமுனிவனாகவே இருக்கட்டும், நம்பி அவன் வாயைப் பார்த்துக்கொண்டு நிற்காதே.” குறிப்பாக ஆன்மிக நூல்களைப் படிப்பவர்களுக்கு இவரது சிந்தனை மற்றொரு கோணத்தைக் காட்டும் என்பதைக் கீழ்வரும் கட்டுரையின் பகுதி வெளிப்படுத்துகிறது … “கற்றலும் நம்பிக்கையும்” பழைய மரபுகளைப் பற்றி ஆர்வம் கொண்டு அதைக் கற்பவர்கள் கட்டாயமாக அந்த மரபுகளைத் தம் வாழ்நெறியாகத்தான் கொண்டிருக்க வேண்டும் என்பது இல்லை. பண்டைய நெறிகளைக் கற்று அறியும் ஆர்வம்தான் போதிய காரணம். ஆனால் பழம் மரபுகளில் பெரும் நம்பிக்கை கொண்டு அவற்றைத் தம் வாழ் நெறியாகவே கொள்பவர்கள் அறிவதற்காக மட்டும் அந்த மரபுகளில் தோய்வது இல்லை. அந்த மரபு சார்ந்த நெறிகள் சொல்லும் உலகம் அப்படிப்பட்ட நம்பிக்கையாளர்களுக்கு இன்றும் உண்மையான ஓர் உலகமாக ஒரே உலகமாகப் போய் விடுகிறது. அந்த மரபு சொல்லும் உலகக் கோட்பாடுதான் ‘தி உண்மை’ என்ற கடும் கருதல் விரதத்திற்குத் தங்களை ஈடு கொடுத்துவிடுகின்றனர். அப்படி, சொல் செயல், மனம் எல்லாவற்றையும் ஒரு நெறியில் காவு கொடுத்து, அதில் தன்னையே இழக்கும் வெறியான மனப்பான்மைக்குத்தான் பண்டைய நெறிகள் பெரும்பான்மையும் நம்பிக்கையாளர்களை மறைமுகமாகவோ நேரடியான ஆணைகள் மூலமாகவோ ஊக்குவிக்கின்றன. எனவே ஒரு நம்பிக்கையாளராக மத மரபுக் கருத்துகளைப் பயில்வோர் ஒரு விதத்தில் Probation for religious exclusivism if not fanaticism என்ற நிலையில் தம்மைப் பெய்து விடுகின்றனர். விவேகானந்தரின் கருத்துகள் பற்றிய விமரிசனம், சத்சங்க மகிமை, சமய நெறிகளும் சமரச வாதமும், எது பக்தி? தற்கால ஆன்மிகம், நாத்திகம் பரவ வேண்டும் என்று ஆன்மிக சிந்தனையைப் பல கோணங்களில் ஆராயும் இவர் தொடர்ந்து தனது எழுத்துக்கள் மூலம் வலியுறுத்துவது “சிந்தனை செய்ய…” “அகல்யா கற்பிழந்தாள் என்ற அபத்தக் கதை” என்ற பதிவில்… அகல்யாவின் கற்பிழத்தலைப் பற்றி காலம் நெடுக பேசுகிறார்கள். யாராவது காட்டில் இருந்த வேறொரு முனிவரிடமோ, அல்லது அரசன் ஒருவனிடமோ, அல்லது ரிஷி குமாரன் ஒருவரிடமோ உறவு கொண்டிருந்து அதனால் அவளுக்கு இந்தப் பெயர் என்றாலும் புரிந்து கொள்ளலாம். ஆனால் இங்கு இந்திரனிடம் கற்பு இழந்தாள் என்று கூறப்படுகிறது. அதையே தாருக வனத்தில் நிர்வாணமாகச் சிவபெருமான் சென்று ரிஷி பத்தினிகளை மயங்கச் செய்தது உயர்ந்த தத்துவார்த்தமான ஒன்றின் ஸிம்பாலிஸமாகப் பார்க்கப் படுகிறது. கோபியரின் காதலும் கண்ணனிடத்தில் ஈடுபாடும் உயர்ந்த பக்திநிலையைக் குறிக்கும் அவஸ்தைகளாகப் பார்க்கப் படுகிறது. அனைவரும் தேவர்கள் என்ற பிரிவைச் சேர்ந்தவர்களே. ஆனால் அகல்யாவின் விஷயத்தில் ஏன் அது ‘கற்பிழந்தாள்’ என்று பெரும் மானக்கேடாகச் சித்திரிக்கப்பட வேண்டும்? அரசனிடமோ, முனிவனிடமோ, வேறு மானிடர் யாரிடமோ உறவு என்றால் இந்தக் களங்கக் குற்றம் புரிந்துகொள்ள முடியும். “இங்கு உறவு என்பது அந்தக் காலத்தில் கடவுள் என்று கருதப்பட்ட, மானிட மெய்மை அல்லாத ஒரு தத்துவ வடிவினால் ஆய உருவத்திடம்தானே!” மற்ற உதாரணங்களில் எல்லாம், தத்துவார்த்தமாக ஸிம்பாலிஸம் என்றால் அகல்யா விஷயத்தில் மட்டும் அது அப்படியே காமத்தனமான நடவடிக்கை ஆகிவிடுகிறதா? சிந்தனை செய் மனமே! […] இந்த அபத்தக் கதைகளின் ஆரம்பக்கால நோக்கமே ஒரு பக்தி நெறி தலைதூக்கி முன்னிருந்த பக்தி நெறியொன்றை வழக்கத்திலிருது நீக்கியிருக்கிறது என்பதில்தான் நிறைவேறியிருக்கிறது. எவ்வளவு காலம்! காலம் காலமாக நம் நாட்டுப் பண்டிதர்களும், அறிவு ஜீவிகளும், தற்கால எழுத்தாளர் பிரம்மாக்களும் கொஞ்சம் கூட யோசிக்கவே மாட்டார்களோ! “நாத்திகம் பரவ வேண்டும்” என்ற சிந்தனை நோக்கில் இவர் முன்னிறுத்தும் கருத்துக்கள், மதங்கள் மக்களின் சிந்தனையை முடக்குவதால் மாற்றுவழி தேவை என்ற நோக்கில் வைக்கப்படுகிறது… மிகவும் ஆழ்ந்து நோக்கினால் மனிதர்களின் இயல்பான வளர்ச்சிக்கும், முன்னேற்றத்திற்கும் பெரும் குந்தகமும் தடையும் விளைவிப்பனவாய் இருக்கின்றன மதங்கள். அதுவும் ஹிந்து மத சமுதாயத்தைப் புனரமைப்பது, சீர்திருத்துவது என்பதெல்லாம் ஒருவர் தம்மைத்தாமே தற்காலிகமாக ஏமாற்றிக் கொள்ளும் வேலை என்றுதான் படுகிறது. ஹிந்து மதத்தை விட்டுப் பிரிந்து தனி மதமாக ஸ்ரீராமகிருஷ்ணர் காட்டிய மார்க்கத்தைக் கொண்டு செல்ல வேண்டும் என்று சில காலங்களின் முன்பு ஸ்ரீராமகிருஷ்ண மடத்தைச் சேர்ந்த துறவியர் சிலர் முயற்சி செய்ததைப் பற்றிக் கடும் விமரிசன எண்ணத்தை முன்னரெல்லாம் கொண்டிருந்தேன். ஆனால் அவர்கள் விரும்பியதிலும் ஒரு காரணமும் நியாயமும் இருப்பதை இப்பொழுது உணர்கிறேன். அவர்களைப் பற்றிய விமரிசன எண்ணம் எனக்கு மாறிவிட்டது. எப்படிப்பட்ட தன்மை உள்ள செய்கைகளையும், கருத்துகளையும் பற்றி, தம்மளவில் நல்ல மனிதர்கள் கூட, உள்ளத்தின் அதிர்வுகளுக்கு ஆளாகாமல் தப்பித்துக்கொள்ளத் தகுந்த வழியில் மனசாட்சியை மழுங்க அடித்துவிடும் கலையை மத நம்பிக்கைகள் பயிற்றுவிக்கும். ஆன்மிகம் தவிர்த்து பொருளாதார சித்தாந்தங்கள் பற்றியும் ‘உபரி மதிப்பு’ கட்டுரையில் இவர் சிந்திக்கும் கோணம்… “இந்தியாவில் ஒரு மணி நேரம் ஒருவர் உழைக்கிறார். அதற்கு ஒரு மதிப்பு நிர்ணயமாகிறது. அதே நேரம் அதே உழைப்பு அவர் வேறு ஒரு நாட்டில் செய்தால் பலமடங்கு மதிப்புப் பெற முடிகிறது. அப்பொழுது உழைப்புக்கான உரிய மதிப்பை முடிவு செய்வது எது? சந்தையின் தேவை என்பதுதானே அனைத்து மதிப்புகளையும் நிர்ணயிக்கும் மூலம். சந்தையின் தேவை நிர்ணயித்துத் தரும் மதிப்பு உழைப்புக்கு வந்தடையாமல் போக இடைப்பட்ட தடங்கல்கள் ஏற்படலாம். அப்பொழுது அந்தத் தடங்கல்களை சமாளித்து உரிய மதிப்பைப் பெற்றுத்தரவும், எதிர்காலத்தில் தடங்கல்கள் ஏற்படாதவாறு பார்த்துக்கொள்ளவும் உழைப்பவரின் ஒருங்கிணைந்த அமைப்பு அவசியம் இல்லையா?” மோகனரங்கன் ஒரு சிறந்த கவிஞரும் கூட. உணர்வின் உயிர்ப்பு, காற்றுகளின் குரல் என்ற கவிதை நூல்களை இவர் வெளியிட்டுள்ளார். காற்றுகளின் குரல் கவிதை நூலில் 4000 கி மு விலிருந்து இன்றுவரை, சுமார் 25 நாடுகளிலிருந்து நூறு கவிதைகளை மொழிபெயர்ப்பு செய்துள்ளார். கட்டளைக் கலித்துறையில் பாடல்கள், சங்கத்தமிழ் கவிதைகளை ஒத்த கவிதைகள் ஆகியவற்றையும் இயற்றியுள்ளார். “If you have knowledge, let others light their candles in it” என்றும் “Sharing will enrich everyone with more knowledge” ஆங்கிலப் பொன்மொழிகளுண்டு. அதற்கொப்ப தான் அறிந்து கொண்டதை, தான் சிந்தித்த ஆன்மிகத்தின் மாறுபட்ட கோணத்தை தனது பதிவுகளின் மூலம் வழங்கிவரும் மோகனரங்கன் அவரது சிந்தனையைத் தூண்டும் எழுத்துகளுக்காகப் பாராட்டப்பட வேண்டியவர். August 18, 2014 ஹீடி எப்ஸ்டீன் [] அமெரிக்க மிசௌரி மாநிலத்தில் காவல் துறையின் அடக்குமுறையை எதிர்த்துப் போராடியதால் கைது செய்யப்பட்டவர் போராளி ‘ஹீடி எப்ஸ்டீன்‘ (Hedy Epstein). தனது 90 ஆவது வயதிலும் துடிப்புடன் அயர்வின்றி மனித உரிமைகளுக்காகப் போராடி வரும் மனித உரிமைப் போராளி ஹீடி எப்ஸ்டீன் அவர்கள் வியப்பிற்குரியவர். இவர் ஆகஸ்ட் 15, 1924 ஜெர்மனியில் பிறந்தவர். யூத மதத்தைச் சேர்ந்தவர். இவரது குடும்பத்தினர் பரம்பரைப் பரம்பரையாக அங்கு வணிகத்தில் ஈடுபட்டு வந்திருக்கின்றனர். பெற்றோருக்கு ஒரே குழந்தை. இவரது 8 ஆவது வயதில் ஜெர்மனியில் சர்வாதிகாரி ஹிட்லர் பதவியேற்று இருக்கிறார். ஹிட்லரின் அடக்குமுறையால் பிற யூதர்களின் குடும்பம் அல்லலுற்றது போலவே இவர்களும் துன்பம் அடைந்திருக்கிறார்கள். குடும்பமாக வெளியேற முயன்றும் அகதிகளாக வேறு நாட்டிற்குச் செல்ல அவர்களுக்கு அனுமதி கிடைக்கவில்லை. கிண்டர் ட்ரான்ஸ்போர்ட் என்ற மக்கள் நல நிறுவனம் ஆயிரக்கணக்கான சிறுவர்களை இங்கிலாந்திற்கு அழைத்துச் சென்று அவர்களை அனாதைவிடுதிகள் போன்ற இடங்களில் தங்கவைத்து காப்பாற்றும் முயற்சியில் ஈடுபட்டது. இதை அறிந்த ஹீடி எப்ஸ்டீனின் பெற்றோர்கள் இவரிடம் பேசி நிலைமையை உணர்த்தி, இவரை மட்டும் அந்தத் தொண்டு நிறுவனத்தின் உதவியுடன் இவரது 14 வயதில் தப்ப வைத்தனர். அதன் பிறகு அவருடைய பெற்றோர்களையும் மற்ற குடும்ப நண்பர்களையும் அவர் பார்த்ததில்லை. அவர்கள் யாவரும் ஹோலோகாஸ்ட் முகாமில் உயிரிழந்தனர் என்று நம்பப்படுகிறது. அவ்வாறு ஜெர்மனி அரசால் முகாமில் அடைபட்டு இருந்த பொழுது அவரது அன்னை எழுதிய கடைசிக் கடிதமான அஞ்சல் அட்டையில் அவர் தங்களது துயரங்கள் எதையும் சொல்லி இவரை வருத்த விரும்பாமல், அன்பு மகளுக்கு நாங்கள் கிழக்கு நோக்கிப் பயணமாகிறோம், இறுதியாக விடைபெற்றுக் கொள்கிறேன் என்று எழுதியிருக்கிறார். போர் முடிந்தவுடன் ஜெர்மனி திரும்பியும் அவர்களை இவரால் தேடிக் கண்டுபிடிக்க முடியவில்லை. பிறகு ஹிட்லரின் கொடுஞ்செயலில் இறந்திருப்பார்கள் என்ற முடிவுக்கு வருவதைத் தவிர வேறு வழி இருக்கவில்லை. ஜெர்மனியில் இவர் கொஞ்ச நாட்கள் பல பணிகளில் ஈடுபட்டாலும் அவையாவிலும் இவர் நோக்கம் மனித உரிமைகளுக்காகப் போராடுவதை அடிப்படையாகக் கொண்டிருந்திருக்கிறது. பிறகு அமெரிக்காவிற்குக் குடியேறி தற்பொழுது மிசௌரி மாநிலத்தில் வசிக்கிறார். தொடர்ந்து மனித உரிமைக்கான போராட்டங்களில் ஈடுபட்டு வருகிறார். அவற்றில் சில சிறைக்கைதிகளின் அனுமதியின்றி அவர்கள் மீது மருத்துவ ஆராய்ச்சி நடத்திய வழக்கில் தகவல் சேகரிக்க உதவியது, வீட்டுவசதியில் இனவேறுபாடு என்ற பிரிவற்ற சமத்துவம், கருச்சிதைவு உரிமை, போர்களை எதிர்த்துப் போராடுவது போன்றவை ஆகும். தனது போராட்டங்களின் பகுதியாக, உரை நிகழ்த்த, போரை எதிர்த்து அமைதி காக்கும் முயற்சி போன்றவற்றிற்காக கட்டமேலா, நிக்கராகுவா, கம்போடியா போன்ற நாடுகளுக்கு 1989 ஆம் ஆண்டில் பயணம் செய்தவர். யூத மதத்தைச் சேர்ந்தவராக இருந்தாலும் இஸ்ரேலின் நடவடிக்கையை எதிர்ப்பவர். பாலஸ்தீனத்தில் இஸ்ரேல் நிகழ்த்தும் அநீதிகளுக்காக 2003 ஆம் ஆண்டிலிருந்து தொடர்ந்து ஐந்து ஆண்டுகளாக இஸ்ரேல் கட்டுப்பாட்டில் இருக்கும் வெஸ்ட் பேங்க் பகுதிக்குச் சென்று அங்கு அமைதியான போராட்டம் செய்பவர், உண்ணாவிரதம் இருப்பவர். யூதராக இருந்தும் இஸ்ரேலுக்கு இவர் ஆதரவு தராத காரணத்தினால் யூத மக்கள் இவர் மீது கோபம் கொண்டு அவரது சொற்பொழிவுகளை நடத்த விடாமல் இடையூறு செய்வதுண்டு. இவ்வாறு உலக நாடுகளுக்குப் பயணம் செய்து அமைதிக்காகப் போராடும் இவருக்கு இவர் வசிக்கும் ஊரிலேயே அமைதி குலையும் நிலையும் அதற்காகப் போராடும் தேவையும் ஏற்பட்டது. ஆகஸ்ட் 9, 2014 முதல், தொடர்ந்து அரை மாதமாக அமெரிக்க மக்களின் விவாதத்திற்குரியதாக, ஊடகச் செய்திகளில் அலசப்பட்டு வந்த ஒரு நிகழ்ச்சி மிசௌரி மாநிலத்தைச் சேர்ந்த ‘மைக்கேல் பிரவுன்’ என்ற 18 வயது இளைஞர் காவல்துறை அதிகாரி ‘டேரன் வில்சன்’ என்பவரால் சுட்டுக் கொல்லப்பட்ட நிகழ்ச்சி. சுடப்பட்டவர் ஆயுதம் எதையும் வைத்திராத ஒரு கறுப்பின இளைஞர் என்பதும், அவரைச் சரமாரியாக ஆறுமுறை சுட்டுக் கொன்றவர் வெள்ளையர் என்பதால் அந்த நிகழ்ச்சி நடந்த ஃபெர்குசான் நகர மக்கள் கொந்தளித்துப் போராட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து காவல் துறையினரால் கறுப்பின இளைஞர்கள் சுட்டுக் கொல்லப்படுவது, அதிலும் வெள்ளை இனத்தைச் சேர்ந்த அதிகாரியால் உயிரிழக்க நேரிடுவது ஒடுக்கப்பட்டிருந்த சிறுபான்மையினர் மீது இன்றும் தொடர்ந்து நிகழ்த்தப்படும் அடக்குமுறை என்ற கோணத்திலேயே பார்க்கப்படுகிறது. இது ஒரு பெரும் போராட்டமாக வெடித்து மக்கள் அமைதியான வழியில் போராட்டம் நடத்துவது, அத்துமீறிய நிகழ்வுகள் நடந்தால் காவல்துறை அவர்களைக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரத் தாக்குவதும் தொடர்ந்தது. இரவில் ஊரடங்கு உத்தரவு, போராளிகளைக் கலைக்க கண்ணீர்ப்புகை போன்ற வழியில் கலவரம் முற்றும் நிலைக்கும் போனது. நாட்டின் பல பகுதிகளில் இருந்தும், பல தரப்புகளில் இருந்தும் ஃபெர்குசான் நகரக் காவல்துறை கண்டனத்திற்கு உள்ளானது. நகரக்காவல்துறை நிலைமையைக் கையாள்வதை நிறுத்தச் சொல்லி மாநில ஆளுநர் நெடுஞ்சாலை காவல்துறையிடம் பொறுப்பை ஒப்படைத்தார். அதுவும் பலனளிக்காமல் போன பிறகு இராணுவத்தை வரவழைக்க ஏற்பாடு செய்தார். ஏற்கனவே போராடுபவர்களை தீவிரவாதிகளைப் போல நடத்திப் போர்க்கால ஆயுதங்கள் கொண்டு அடக்கப்பட்டதில் கொதித்திருந்த போராளிகள், இராணுவத்தை ஆளுநர் வரவழைக்கிறார் எனத் தெரிந்ததும் தங்கள் எதிர்ப்பைத் தெரிவிக்க ஒருவருடன் ஒருவர்க் கை கோர்த்து அரசு அலுவலகம் முன் நின்று வாசலை வழிமறித்து முற்றுகை இட்டனர். இவ்வாறு ஆகஸ்ட் 18, 2014 அன்று முற்றுகை இட்டவர்களில் மனித உரிமைப் போராளி ஹீடி எப்ஸ்டீனும் ஒருவர். காவல்துறையினர் அவர்களைக் கலைந்துபோகச் சொன்னதையும் பொருட்படுத்தாது முற்றுகையிட்டோர் தொடர்ந்து போராடவும் அவர்களில் 9 பேரைக் காவல்துறையினர் கைது செய்தனர் (ஒருவரைத் தவிர மற்றவர்களைச் சிலமணி நேரத்திற்குப் பின்னர் விடுதலை செய்துவிட்டனர்). கைதானவர்களில் ஹீடி எப்ஸ்டீனும் ஒருவர். அக்டோபர் 21, 2014 அன்று நீதிமன்றத்திற்கு வரவேண்டும் என்ற நிபந்தனையில் ஹீடி எப்ஸ்டீன் விடுதலை செய்யப்பட்டார். ஹீடி எப்ஸ்டீனைக் கைது செய்த பொழுது அவர் காவல்துறையிடம் சொன்னது மக்களைக் கவர அது “டிவிட்டர்” சமூகவலைத்தளத்தில் பலரால் பரப்பப்பட்டது. வியந்து பாராட்டப்பட்டது. “நான் என் பதின்ம வயதிலிருந்து மனித உரிமைகளுக்காகப் போராடி வருகிறேன், எனது 90 வயதிலும் நான் போராட்டத்தில் இறங்க வேண்டியிருக்கும் என்று நான் எதிர்பார்த்ததில்லை. நாம் இப்பொழுது அநீதிகளை எதிர்த்தால்தான் பிற்காலத்தில் மக்களும் தங்களது 90 வயதுகளில் போராடவேண்டிய நிலை வராமலிருக்கும்” தன்னைவிட வேறுபட்டு இருப்பவர்களின் மீது நிகழ்த்தும் அடக்குமுறையும், அவர்களை தங்களைவிடத் தகுதியில் குறைந்தவர் என்ற எண்ணம் கொண்டு ஏளனப்படுத்துவதும், அவர்களை மதிக்காது நம்பிக்கையற்று நோக்குவதும், கண்காணிப்பதும் இன்றுவரை நிகழும் ஒரு மனிதாபிமானம் அற்ற செயல். ஒருவரது இனத்தின் பின்புலம் காரணமாக இன்றும் அடக்குமுறை அமெரிக்காவில் தொடர்ந்த வண்ணம்தான் இருக்கிறது. இது போன்ற அநீதிகள் என்னை மிகவும் பாதிக்கிறது என்று கூறுகிறார் ஹீடி எப்ஸ்டீன். மனித உரிமைகளுக்காகத் தனது தள்ளாத வயதிலும் போராட்டத்தில் இறங்கும் ஹீடி எப்ஸ்டீன் அவர்களின் போராட்டத்தையும் கைதான செய்தியையும் அறிந்து தொலைபேசி வழியாகவும் மின்னஞ்சல் வழியாகவும் அவருக்குப் பாராட்டுகள் குவிந்த வண்ணம் இருந்தது. August 25, 2014 வைதேகி ஹெர்பர்ட் [] சங்கத்தமிழின் மீது கொண்ட ஆர்வம் காரணமாக அமெரிக்கத் தமிழரான வைதேகி ஹெர்பர்ட் அவர்கள் அனைத்துச் சங்கத்தமிழ் நூல்களையும் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்துள்ளார். 2014 ஆண்டு ஜூலை மாதத்தில், அமெரிக்காவின் மிசௌரி மாநிலத்தின் செயின்ட் லூயிஸ் மாநகரத்தில் நடைபெற்ற வட அமெரிக்காவிலுள்ள தமிழ்ச்சங்கங்களின் கூட்டமைப்பான வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவையின் 27 ஆவது தமிழ் விழாவில் பங்கேற்ற வைதேகி ஹெர்பர்ட் அவர்கள், அனைத்து மக்களும் சங்கத்தமிழ் படித்து இன்புற வேண்டியதன் அவசியத்தைப் பற்றிய உரை ஒன்றையும் நிகழ்த்தினார். பல்கலைக்கழகங்களில் பல பேர் செய்ய வேண்டிய வேலையை, தனி ஒருவராகத் தனது கடுமையான உழைப்பினாலும் விடாமுயற்சியாலும் பெரும் மொழிபெயர்ப்புப் பணி ஒன்றை நிகழ்த்திக்காட்டியுள்ளார் வைதேகி ஹெர்பர்ட். தமிழகத்தின் தூத்துக்குடியைச் சேர்ந்தவரும் தற்போது அமெரிக்காவில் 33 ஆண்டுகளாகவும், குறிப்பாக அமெரிக்காவின் ஹவாய் மாநிலத்தில் 14 ஆண்டுகளாகவும் வாழ்ந்து வருபவர் வைதேகி ஹெர்பர்ட். தமிழை இரண்டாவது மொழியாகக் கொண்ட வைதேகி, சங்க இலக்கியங்களின் அழகால் ஈர்க்கப்பட்டார். ஆர்வம் காரணமாக ராணிமேரிக் கல்லூரியின் பேராசிரியர் முனைவர் ருக்மணி ராமச்சந்திரனிடம் முல்லைப்பாட்டு பயிலத் தொடங்கினார். பிறகு சங்க இலக்கியங்களில் உள்ள ஆயிரக்கணக்கான தமிழ்ப் பாடல்களை ஆங்கிலத்தில் மொழி பெயர்ப்பதில் ஈடுபட்டார். “வைதேகியின் சங்க இலக்கிய ஆர்வத்திற்கு எல்லையே இல்லை, இவரைப்போல இந்த அளவிற்குத் தமிழ்ப் பாடல்களை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தவர் தமிழகத்திலும் இல்லை, உலகில் வேறு எங்கும் இல்லை” என்று இவரது தமிழாசிரியரான ருக்மணி ராமச்சந்திரன் குறிப்பிட்டுள்ளார். சங்க இலக்கியத்தில் 473 புலவர்களால் இயற்றப்பட்ட 2,381 பாடல்கள் உள்ளன. தமிழின் அடிப்படை இலக்கியமான சங்க இலக்கியத்தில் இன்றைக்குப் புழக்கத்தில் இல்லாத பல தமிழ்ச் சொற்கள் நிறைந்துள்ளதால், மற்ற இலக்கிய மொழி பெயர்ப்புகளை விட இது அதிக சவாலை முன் வைக்கும் பணியாகும். உதாரணமாக ‘விறலி’ எனும் சொல்லுக்கு நேரடிப் பொருள் தரும் ஆங்கிலச் சொல் இல்லாததால், தக்க சொல்லைத் தேடுவது சிரமம் தருவது என பிபிசி தமிழோசைக்கு வழங்கிய சிறப்பு பேட்டி ஒன்றில் வைதேகி ஹெர்பர்ட் தெரிவித்துள்ளார். இவருடைய முல்லைப்பாட்டு மற்றும் நெடுநெல்வாடை ஆகிய இரு நூல்களின் மொழிபெயர்ப்பையும் அமெரிக்க வாழ் தமிழறிஞர் பேராசிரியர் ஜார்ஜ் ஹார்ட்டும், பதிற்றுப்பத்தை டோக்கியோ பல்கலைக்கழகப் பேராசிரியர் டாக்கநோபு டாக்காஹாஷியும் மேற்பார்வை செய்து சான்று வழங்கியுள்ளார்கள். சங்க இலக்கியமான பதிற்றுப்பத்து இவரால்தான் முதன் முதலாக மொழி பெயர்க்கப்பட்டுள்ளது என்பதும், இதுவரை சங்க இலக்கியத்தை மொழி பெயர்த்தவர்கள் ஒரு நூலிற்கு மேல் மொழி பெயர்க்க முயலவில்லை என்பதும், அரசு மானியம், ஆதரவு போன்ற எதையும் எதிர்பார்க்காது சொந்த முயற்சியில் வைதேகி ஹெர்பர்ட் மொழி பெயர்த்துள்ளார் என்பதுவும் இவரது பணியின் சிறப்பைக் கூறும். மேலும், சங்க இலக்கிய அகராதி ஒன்றும் உருவாக்கியுள்ளார். தனது காதலியை அடைய “மடல் ஏறுதல்” என்ற வழக்கத்தை மேற்கொள்ளும் சங்ககாலக் காதலனின் செய்கை இடம்பெறுவது எந்த சங்க இலக்கியங்களில் என்ற பட்டியல் கீழே: குறுந்தொகை – (5 முறை) 14, 17, 32, 173, 182 நற்றிணை – (5 முறை) 146, 152, 220, 342, 377 கலித்தொகை – (6 முறை) 58, 61, 138, 139, 140, 141 என்பது போன்ற தகவல்களும் வழங்கியுள்ளார். மொழிபெயர்ப்பில் முதலில் தமிழ்ப்பாடலை வழங்கி, பிறகு ஆங்கில மொழிபெயர்ப்பையும், பிறகு பதம் பிரித்து பொருள் தரும் முறையைக் கையாண்டுள்ளார். இவரது மொழிபெயர்ப்புகளை அவரது வலைத்தளத்தில் (http://sangamtranslationsbyvaidehi.com படிக்கலாம். சான்றாக ஒரு பாடலுக்கு இவர் வழங்கிய மொழிபெயர்ப்பொன்று இங்கு வழங்கப்பட்டுள்ளது… __________________________ குறுந்தொகை 40 செம்புலப் பெயனீரார், குறிஞ்சித் திணை – தலைவன் தலைவியிடம் சொன்னது: யாயும் ஞாயும் யார் ஆகியரோ எந்தையும் நுந்தையும் எம் முறைக் கேளிர் யானும் நீயும் எவ்வழி அறிதும் செம்புலப் பெயல் நீர் போல அன்புடை நெஞ்சம் தாம் கலந்தனவே. Kurunthokai 40 Sempulapēyaneerār, Kurinji Thinai – What the hero said to the heroine, about their love: My mother and your mother, what are they to each other? My father and your father, how are they related? You and I, how did we know each other? Like rainwater that falls and merges with the red earth, our loving hearts have become one. Notes: This is the only poem that this poet wrote. The poet’s name is a pseudonym taken from the key words in the poem. The hero reassures the heroine that everything will be good for them. He explains to her that their love is eternal, despite their families not knowing each other. The red earth and water are muthal. Meanings: யாயும் – (my) mother, ஞாயும் – your mother, யார் ஆகியரோ – who are they to each other, எந்தையும் – my father, நுந்தையும் – your father, எம்முறை – in what way, கேளிர் – relatives, யானும் நீயும் – myself and you, எவ்வழி – in what way, அறிதும் – knew, செம்புலப் பெயல் நீர் போல – like rain falling on the red earth, அன்புடை நெஞ்சம் – loving hearts, தாம் கலந்தனவே – have merged ________________________________ இம்மொழி பெயர்ப்புகளை நூலாக வெளியிட்டால் வர்த்தக ரீதியில் ஆதாயம் தராது என்பது தெளிவாகத் தெரிந்தும் அவற்றை அச்சு நூல்களாகவும் வெளியிட்டுள்ளார். இவருடைய நூல்கள் சிலவற்றை முதலில் முனைவர் ருக்மணி வெளியிட்டார். இப்பொழுது அனைத்து நூல்களும் Digital Maxim என்ற பதிப்பகத்தால், (அமெரிக்காவில் இருக்கும்) திருமூர்த்தி ரங்கநாதன் என்பவரால் வெளியிடப்படுகின்றது. வர்த்தக மனப்பான்மை இவருக்கு இல்லை என்பதும் தமிழ்த்தொண்டு மட்டுமே இவரது முதன்மை நோக்கம் என்பதும் இவர் வலைத்தமிழ்.காம் (http://www.valaitamil.com தளத்திற்கு வழங்கிய பேட்டியின் வழியாகத் தெரிகிறது. நான்கு நிமிடமே உள்ள பேட்டியில் இவையெல்லாம் எனது வலைத்தளத்தில் உள்ளது, என் நூலை வாங்க வேண்டியத் தேவை இல்லை(?!) வலைப்பதிவிலும் படிக்கலாம் என ஒருமுறைக்கும் மேல் வலியுறுத்துவதில் இருந்து இவரது தமிழ்ப்பணியின் நோக்கம் தெளிவாகிறது. தமிழிலக்கிய மொழிபெயர்ப்பு பலரை சென்றடைய வேண்டும் என்ற இவரது சிந்தனையும், தொண்டு நோக்கில் மட்டுமே இவர் கருத்தாக இருப்பதும் புலனாகிறது. சங்க இலக்கிய நூல்களை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துள்ளதற்காக வைதேகி ஹெர்பர்ட் அவர்களுக்கு கனடாவின் டொரண்டோ பல்கலைக்கழகமும், தமிழ் இலக்கியத் தோட்டமும் (2012 ஆம் ஆண்டில்) விருது ஒன்றை வழங்கிக் கௌரவித்துள்ளன. நல்லி திசையெட்டும் நடத்திய ஆகஸ்ட் 2013 மொழி பெயர்ப்பாளர்களை சிறப்பிக்கும் விழாவில் “பாஷா பூஷன்” விருதும் வழங்கப் பட்டு இவர் சிறப்பிக்கப் பட்டார். வட கரொலினா மாநிலத்தின் தமிழ்ச் சங்கத்திற்காக மூன்றுநாட்கள் நடைபெறும் சங்க இலக்கியப் பயிற்சிப் பட்டறை ஒன்றையும் சென்ற ஆகஸ்ட் 2013 இல் நிகழ்த்தினார். சங்க இலக்கியத்தை ஏன், எப்படிப் படிக்க வேண்டும் எனத் தொடங்கி சங்க இலக்கிய நூல்கள் பற்றிய முன்னுரை அறிமுகத்தில் தொடர்ந்து, அகப்பாடல்களில் இருக்கும் முதல், கரு, உரி என்பவை பற்றிய விளக்கம் என விரிவுரையாகத் தனது இலக்கியப் பயிற்சிப் பட்டறையை தொகுத்து வழங்கி அமெரிக்கத் தமிழர்களின் இலக்கிய ஆர்வத்தைத் தூண்டிவிட்டார். தனது தமிழ்ப்பணியின் மற்றொரு பகுதியாக குழந்தைகளுக்குச் சூட்ட சங்கத் தமிழ்ப் பெயர்களையும் திரட்டி அதற்காக ஒரு வலைத்தளமும் உருவாக்கியுள்ளார் (http://puretamilbabynames.wordpress.com). தமிழர்கள் தங்கள் பிள்ளைகளுக்கு தமிழ்ப் பெயர் வைக்காது இருப்பது வருந்தத்தக்கது என்று அத்தளத்தின் அறிமுகப் பகுதியில் குறிப்பிடும் வைதேகி, அவர் வசிக்கும் ஹவாய் மாநில மக்களுடன் ஒப்பிடுகிறார். நூறாண்டுகளுக்கும் மேலாகக் கிறிஸ்துவ மதத்தைத் தழுவினாலும் ஹவாய் மக்கள் அவர்கள் மொழியில், அவர்கள் மரபுப் பெயர்களை மட்டுமே தங்கள் குழந்தைகளுக்குச் சூட்டுவதையும் அதைப் பற்றி பெருமிதம் கொள்வதையும் சுட்டிக் காட்டுகிறார். தனது கணவருடன் இணைந்து ஆண்டுக்கொருமுறை தமிழகச்சுற்றுலா ஒன்றினை (‘Tamil Heritage Tour’) ஏற்பாடு செய்து, மகாபலிபுரம், புதுச்சேரி, பிச்சாவரம், தரங்கம்பாடி, தஞ்சை, மதுரை, காஞ்சீபுரம், சென்னை போன்ற ஊர்களுக்கும், யானைகள், புலிகள் சரணாலயம் புராதன சமணக்கோயில்கள், போன்றவற்றையும் இவரது அறிமுகப்படுத்துகிறது. சிறந்த தமிழ்த் தொண்டாற்றி வரும் வைதேகி ஹெர்பர்ட் அவர்களின் தமிழ்ப்பணி தொடர வாழ்த்துகள். September 1, 2014 ச. பாலமுருகன் [] நம்நாடு தொன்மை நிறைந்த நாடு, தொன்மையான மரபுச் செல்வங்கள் குவிந்து கிடக்கும் நாடு. பெரும்பாலோருக்கு அவற்றின் அருமையும் பெருமையும் தெரிவதில்லை. அவற்றைப் பாதுகாக்கவும் முன் வருவதில்லை. திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியகத்தின் துணை வட்டாட்சியரான திரு. ச. பாலமுருகன் அவர்கள் “நடுகற்கள் – பாதுகாப்பும் பேணுகையும்” பற்றிய முறைகளைப் பற்றிய திட்டம் ஒன்றை வகுத்துக் கொடுக்கும் முயற்சியை மேற்கொண்டதுடன், அதனை அத்துறை ஆய்வறிஞர்கள் கருத்தரங்கிலும் வழங்கியுள்ளார். “தொன்று நிகழ்ந்ததனைத்தும் உணர்ந்திடு சூழ்கலை வாணர்களும் இவள் என்று பிறந்தவள் என்றுணராத இயல்பினளாம் எங்கள் தாய்” என்று பாரதி பெருமிதம் கொண்டு பாடியதை இக்கால மக்கள் அறிவோம். ஆனால் … “தென்குமரி வட பெருங்கல் குணகுட கடலா எல்லைத் தொன்று மொழிந்து தொழில் கேட்ப…” — மதுரைக்காஞ்சி (70-72) என்ற மதுரைக்காஞ்சி பாடலிலேயே நம் நாட்டின் தொன்மை குறிப்பிடப்படுகிறது. இங்கே ‘தொன்று மொழிந்து’ என்பது பாண்டிய மன்னன் தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியனைக் குறித்து, ‘மிகவும் பழங்காலந்தொட்டுத் தொடர்புடையராய் உள்ளமையைப் பாராட்டிச் சொல்கிறது’ இந்தப் பாடலின் வரிகள். இதனால் தமிழகத்தின் தொன்மை நன்கு புலப்படுகிறது. உண்மை நிலை இவ்வாறிருந்தும் நம் மரபுச் செல்வங்களைப் பாதுகாப்பது பற்றி வெகு சிலரே அக்கறை காட்டுகிறார்கள். அவர்களிலும் பலர் வாய்ச்சொல்லோடு நிறுத்தியும் விடுகிறார்கள். பாதுகாக்கும் செயலில் இறங்குபவர்கள் அதனினும் குறைவு. அவ்வாறு ஆர்வமுள்ளவர்கள் தொழில் முறையில் தொல்லியல் துறையில் பணியாற்றுபவர்களாக இல்லாததும் வியப்புக்குரியதாக இருக்கிறது. இத்தகைய செயல், மரபுச் செல்வங்கள் மீது இவர்கள் கொண்ட ஆர்வத்தைக் காட்டுகிறது. இந்த ஒரு சில ஆர்வலர்களில் குறிப்பிடத்தக்க ஒருவர் தற்போது திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில் துணை வட்டாட்சியராகப் பணிபுரியும் திரு. பாலமுருகன் அவர்கள். துணை வட்டாட்சியரான இவரது பணியில் இவரது பொறுப்பு, மின் ஆளுமைத்திட்ட ஒருங்கிணைப்பாளராகச் செயலாற்றுவது. படித்தது எம்.சி.ஏ மற்றும் எம்.எஸ்.சி. புவியியல். எந்த வகையிலும் தொல்லியல் துறைக்கும் இவருக்கும் தொடர்பு இல்லை என்றாலும் தமிழ்நாடு, சமூகம், பண்பாடு, வரலாறு போன்றவற்றில் ஆர்வம் கொண்டவர். ஓய்வு பெற்ற தமிழ் தலைமையாசிரியரின் மகனான பாலமுருகனின் சொந்த ஊர் திருவண்ணாமலை மாவட்டத்தில் ஆரணி வட்டத்தில் உள்ள தேவிகாபுரம் என்ற ஊர். அவரது ஊரில் உள்ள அருள்மிகு பெரியநாயகி அம்மன் ஆலயமும் மலைக்கோயிலும் இவரை வரலாறு, கல்வெட்டு, நடுகற்கள் போன்றவற்றின் மீது கவனம் கொள்ள வைத்தன என்கிறார் இவர். இப்பொழுது அவரது ஊரில் உள்ள கோயில் வரலாற்றைக் கல்வெட்டுகளை ஆதாரமாக வைத்து எழுதி வருகிறார். தொடர்ந்து திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள பிற வரலாற்றுத் தடங்களையும் ஆய்வு செய்து கட்டுரையாக வெளியிடவும் இவர் திட்டமிட்டுள்ளார். தமிழ், தமிழக வரலாறு, தொல்லியல், சூழலியல் தொடர்பான துறைகளில் ஆர்வமுள்ள பாலமுருகன், குறிப்பாக வரலாறு மற்றும் தொல்லியல் முக்கியத்துவம் வாய்ந்த இடங்களைப் பற்றிய விழிப்புணர்வும் அதைப்பாதுகாப்பதற்கும் முயற்சிகளை முன்னெடுக்கவும் ஆர்வமாக உள்ளார். மேலும், தேவிகாபுரம் பற்றிய வரலாறு, புகைப்படங்கள் பற்றி விக்கிப்பீடியாவிலும் பங்களித்து வருகிறார். தமிழ்விக்கிப்பீடியா நடத்திய ஊடகப்போட்டியில் இவரது தேவிகாபுரத்தில் கைத்தறி பட்டுச்சேலை நெசவு குறிக்கும் புகைப்படம் தமிழர் தொழிற்கலைப்பிரிவில் பரிசு பெற்றுள்ளது. 2014 ஆம் ஆண்டின் ஜூன் மாதம் “நடுகற்கள்” என்ற தலைப்பில் தொல்லியல் துறை நடத்திய, தென்னிந்தியாவின் சமூக வரலாற்றை அறிய உதவும் நடுகற்கள் பற்றிய இரண்டு நாள் தேசியக் கருத்தரங்கம் (The Days of Heroes) ஒன்றில் அத்துறையின் ஆய்வறிஞர்கள் பலர் பங்கு பெற்றனர். இக்கருத்தரங்கத்தில் “நடுகற்கள் – பாதுகாப்பும் பேணுகையும்” என்ற தலைப்பில் பாலமுருகன் தனது கருத்துக்களையும் ஒரு கட்டுரையாக முன்வைத்துள்ளார். தமிழ் மரபில் இறந்து போன வீரர்களுக்கு ஈமக்கடன் ஈந்து கல் நட்டு வழிபடுவது தொன்மையான வழக்கம். இவ்வாறு நடப்பட்ட நடுகற்கள் வீரர்களுக்கு மட்டுமின்றி பொதுவாக இறந்தவர் நினைவாகவும் நடப்படுவதுண்டு. நீத்தோர் நினைவாக நடுகற்கள் நாட்டும் மரபு சங்க காலம் முதற்கொண்டு தமிழகத்தில் இருந்து வந்துள்ளதை “காட்சி கால் கோள் நீர்ப்படை நடுகல் சீர்த்தகு மரபில் பெரும்படை வாழ்த்தலென்று இரு மூன்று மரபிற் கல்லொடு புணர” எனத் தொல்காப்பியம் வழி அறிய முடிகிறது. பெரும்பாலும் நடுகற்கள் ஊர்களின் புறத்தே காணப்படுகின்றன. ஒரே போரில் இறந்த பல போர்வீரர்களுக்கும் நடுகற்கள் ஒரே இடத்தில் காணப்படுவதும் உண்டு. தமிழக தொல்லியல் துறையினரால் புலிமான்கோம்பையில் (தேனி மாவட்டம், ஆண்டிப்பட்டி வட்டம்) கி. மு. 3ஆம் நூற்றாண்டிற்கு முற்பட்ட மூன்று நடுகற்கள் கண்டறியப்பட்டன. இந்நடுகற்களே இந்தியாவில் இதுவரை கண்டுபிடிக்கப் பட்டவற்றில் மிகப்பழமையானவை என்ற பெருமை வாய்ந்தவை. தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் விரவிக்கிடக்கும் ஆயிரக்கணக்கான வரலாற்று நினைவுச்சின்னங்களில் ஒரு சில மட்டுமே அரசாலும் ஆர்வலர்களாலும் பாதுகாக்கப்படுகின்றன. வரலாற்று ஆர்வலர்கள் தற்போது நடுகற்கள் பற்றிய தரவுகளைத் திரட்டவும், ஆய்வு செய்யவும் முயன்று வருகின்றனர். இந்நிலையில் ஊர்தோறும் உள்ள நடுகற்களின் அமைவிடம், அவற்றின் தற்போதைய நிலை அவற்றைப் பாதுகாக்கவும் பேணவும் விழிப்புணர்வு ஏற்படுத்தவும் உருவாகியுள்ள தேவையை எவ்வாறு செயல்படுத்தலாம் என்ற வழிமுறைத் திட்டங்களை தனது கட்டுரையின் வாயிலாகப் பாலமுருகன் கருத்தரங்கில் பகிர்ந்து கொண்டார். நடுகற்கள் முதலான மரபுச்சின்னங்களைப் பாதுகாப்பதும் அவற்றை முறையே பேணுவதும் அரசாங்கத்தின் கடமை என்றாலும் அரசாங்கமே அனைத்தையும் பேண முடியாது என்பதே உண்மை. எனவே, வரலாற்று ஆர்வலர்கள், மாணவர்கள், பொதுமக்கள் என அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட்டால் மட்டுமே இதுபோன்ற நினைவுச்சின்னங்களைப் பாதுகாக்க முடியும். அதனால் வரலாற்று ஆர்வலர்கள் செய்யவேண்டியன: 1. மாவட்ட வரலாற்று ஆய்வு மையம் ஏற்படுத்துதல் 2. மாவட்டத்தில் உள்ள அனைத்து நினைவுச்சின்னங்கள் (நடுகற்கள், கோட்டைகள், சிலைகள், பழைய மண்டபங்கள், இராச பாட்டை மற்றும் பல) பற்றிய கணக்கெடுத்தல் 3. நடுகற்கள்/மரபுச்சின்னங்கள் தொடர்பான பயிற்சி அளித்தல் 4. நடுகற்கள் பற்றிய முழுமையான தொகுப்புப்புத்தகம் உருவாக்கி விழிப்புணர்வு ஏற்படுத்துதல் 5. நடுகற்கள் தொடர்பான அனைத்து விவரங்கள் அடங்கிய தனி வலைத்தளம் அமைத்தல் 6. நடுகற்கள்/மரபுச்சின்னங்களை வரலாற்று நினைவுச்சின்னங்களாக அறிவித்தல் தொடர்பாக அரசை வலியுறுத்துதல், அதன் தொடர்பாக அரசு உதவியுடன் மாவட்ட மரபுச்சின்னங்கள் வரைபடம் (District Heritage Map) உருவாக்குதல் என்ற வழிமுறைகளை விளக்கியுள்ளார் பாலமுருகன். மேலும் மரபுச்சின்னங்கள் வரைபடம் தயாரித்தலைப் பற்றிய விரிவான திட்டத்தையும் குறிப்பிட்டுள்ளார் பாலமுருகன். அத்திட்டம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. கணினி மற்றும் தகவல் தொழில் நுட்ப வளர்ச்சியினை பயன்படுத்தி பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த என்னென்ன நடவடிக்கை மேற்கொள்ளலாம் எனத் திட்டமிட வேண்டும். அதன் அடிப்படையில் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து நடுகற்களையும் கணக்கெடுப்பு பணி செய்து முடித்த பின்பு மாவட்ட வாரியாகப் பிரித்து மாவட்ட வரைபடத்தில் அந்நடுகற்கள் எந்த ஊரில் எந்த இடத்தில் அமைந்துள்ளது என்பதை அனைவரும் தெரிந்து கொள்ளச் செய்யவேண்டும். இதற்கு மாவட்ட மரபுச்சின்ன வரைபடம் (District Heritage Map) எனப் பெயரிடலாம். இதற்குத் தற்போது புவியிடங்காட்டு முறைமை [Global positioning system (GPS)] / புவியியல் தகவல் முறைமை [geographic information systems (GISs)] என்ற தொழில் நுட்பம் பெரிய அளவில் உதவும். இத்தொழில் நுட்பத்தின் மூலம் ஒரு நடுகல்லின் அதன் அமைவிடம் நிலநேர்க்கோடு, நிலக் கிடைக்கோடு (Latitude and Longitude) என்ற அளவில் வரைபடத்தில் குறிக்கலாம். இதன் மூலம் இந்நடுகற்கள் பிற்காலத்தில் இடம்பெயர்வு ஏற்பட்டாலும், அவை காணாமல் போனாலும் கண்டுபிடிக்க உதவும். எடுத்துக்காட்டாக அவரது சொந்த ஊரான திருவண்ணாமலை மாவட்டம் தேவிகாபுரத்தில் உள்ள 15 நடுகற்களையும் தொழில்நுட்ப உதவி கொண்டு வரைந்த வரைபடத்தின் மாதிரிகளையும் கருத்தரங்கில் காட்சிப்படுத்தியுள்ளார். அத்துடன் 1. மரபுச் சின்னங்களின் தொகுப்புப் பட்டியல் மற்றும் 2. மரபுச் சின்னங்கள் கணக்கெடுப்புப் படிவம் ஆகியவற்றையும் வடிவமைத்துக் காட்டியுள்ளார். மரபுச் செல்வங்களை பாதுகாப்பது என்று பேசிக் கொண்டே இருக்கும் பெரும்பாலோர் போல அல்லாமல், செயல்முறை நடவடிக்கையில் இந்த இந்த வழிமுறையில் முன்னெடுத்துச் செல்லலாம் என்று வழி வகுத்துக் காட்டிய பாலமுருகன் அவர்களை, தமிழக மரபுச் செல்வங்களைக் காக்க முன்னெடுத்த இவரது முயற்சிக்காகப் பாராட்ட வேண்டியது நமது கடமை. September 8, 2014 எம். ஜெயராமசர்மா [] சமயக் கல்வி பயிற்றுவித்தலுக்கு நல்லதொரு செயல் வடிவம் அமைத்து, புலம் பெயர்ந்த பெற்றோர்களுக்கு வழிகாட்டும் பணியில் ஈடுபட்டிருக்கிறார் திரு. எம். ஜெயராமசர்மா. சமயக் கல்விக்கு செயல்வடிவம் தரும் நோக்கில் இவர் எழுதிய கட்டுரையில்; சமயம் என்றால் என்ன, மதங்களின் நோக்கம் என்ன, அவை சமுதாயத்திற்கு ஆற்ற வேண்டிய கடமைகள் யாவை போன்ற சமயத்தின் தேவையின் அடிப்படையை மக்கள் மறந்து வெகுகாலமாகிவிட்டது. வெறும் சடங்கு சம்பிரதாயங்களில் மூழ்குவதும், மதத்தின் அடிப்படையில் சண்டையிட்டுக் கொள்வதும் இன்று நேற்று என்று இல்லாமல் தொடர் கதைகளாக நடந்து வருகிறது. அது மனித குலமே மதம் பிடித்து ஒன்றை ஒன்று தங்களை அழித்துக் கொள்ளும் நிலையாக உலகத்தில் பரவியிருக்கிறது. உலக மதங்கள் அனைத்திலுமே இன்று காணப்படும் இந்தத் தடம் மாறிய நிலைக்கு இந்து மதமும் விதிவிலக்கல்ல. இந்து மதத்தின் தாய்நாடான இந்தியாவில் பிறந்து வளர்ந்தவர்களுக்கும் தங்கள் இந்து மதத்தின் சமுதாயப் பங்கு பற்றிய தவறானக் கருத்துகள் வேரூன்றிவிட்ட நிலையில் உள்ளனர். வரும் தலைமுறையினரை, அதுவும் தாய்நாட்டிற்கு வெளியே வாழும் அடுத்த தலைமுறையினரை, அறிவில் சிறந்து பலநோக்கும் கொண்டு வளரும் சிறார்களை, இந்து மதம் காட்டும் உண்மை நல்வழியை உணரச் செய்வது எப்படி என்ற கேள்விகள் இன்றைய புலம் பெயர்ந்த பெற்றோர்கள் மனதில் எழுந்த வண்ணம்தான் உள்ளன. இந்து மதத்தின் பண்புகளில், மிகப் பண்டையத் தோற்றத் தொன்மையின் காரணமாகவே காலத்திற்குப் பொருந்தாத சில கருத்துக்களையும் கதைகளையும் உள்ளடக்கியிருப்பதும் அதன் பகுதியாக உள்ளது. கைபேசி வழியே உலகத்தையே அறிந்து தகவல்களை விரல் நுனியில் கொண்டிருக்கும் இக்கால சிறுவர்களிடம், நடப்புலகிற்குப் பொருந்தாத அந்தக் கதைகளை சமயக்கல்வியாகக் கொடுத்து வழிநடத்தும் முயலும் போது, அதுவே பெற்றோர்களுக்கு பெரிய சவாலை முன் வைத்து விடுகிறது. சமயக் கல்வியினை சரியான முறையில் வழங்க இக்காலத் தேவைகள் யாவை? புதிய கோணத்தில் முன்னெடுத்துச் செல்ல வழியென்ன? இதற்கு யாரால் சரியான வழியைக் காட்ட இயலும்? என்ற கேள்விகள் நம்மிடையே தோன்றிய வண்ணம்தான் உள்ளன. இந்தத் தேவையை சரியான முறையில் எதிர் கொண்டு தீர்வு காணும் பின்புலத்தைக் கொண்டிருக்கிறார் திரு. ஜெயராமசர்மா. தமிழ்நாட்டின் தாராபுரத்தை பூர்வீகமாகக் கொண்ட ஜெயராமசர்மா வளர்ந்தது, படித்தது, வேலை பார்த்தது, யாவுமே இலங்கையில். தற்போது ஆஸ்திரேலியாவின் குடியுரிமை பெற்று அங்கு மெல்பேண்னில் வசிக்கிறார். பேராதனை பல்கலைக்கழக தமிழ் சிறப்புப் பட்டதாரியான இவர், கல்வியியல் துறையில் டிப்ளமா, சமூகவியல் துறையில் டிப்ளமா,கற்பித்தல் நுணுக்கத்தில் முதுகலை தத்துவமானி பட்டங்களையும் பெற்றவர். உதவிக் கல்விப் பணியாளராகவும், தமிழ், இந்துகலாச்சார விரிவுரையாளராகவும் பணியாற்றி இருக்கிறார். இவரது சமயப் பணிகளில், 2008ல் மதுரை மாநகரில் நடைபெற்ற அகில உலக சைவ‌ சித்தாந்த மாநாட்டில் புராணப்பகுதிக்குத் தலைவராகவும், ஆய்வுக் கட்டுரையாள‌ராகவும் பங்கேற்றமையும்; அண்மையில் ஐரோப்பிய நாடுகளுக்குச் சுற்றுப்பயணம் சென்று தமிழ், பண்பாடு, இந்து சமயம், சம்பந்தமாக விரிவுரைகள் ஆற்றியுள்ளவையும் அடங்கும். சமயம், தமிழர் பண்பாடு சம்பந்தமாகப் பேட்டி கண்டு நேரடியாக வானொலி ஒலிபரப்புகளையும் வழங்கியுள்ளார். தற்பொழுது தமிழ்ச்சங்கத்தின் ஆலோசகராகவும், விக்டோரியா இந்து கல்வி மையத்தின் ஆலோசகராகவும் செயல்பட்டு வருகிறார். இத்தகைய பின்புலத்தைக் கொண்டிருக்கும் இவருக்கு, சமயக் கல்வி பற்றிய வழிமுறைகளை வகுத்துத் தர இவரது கல்வித்துறை மற்றும் சமயத்துறை அறப்பணிகள் பெரிதும் உதவியாக இருந்திருக்கின்றன எனக் கொள்வது மிகையாகாது. இவர் எழுதிய பற்பல கவிதைகள் பல கருத்துகளையும் உள்ளடக்கியவை. அவற்றுள் சில இறைவணக்கப் பாடல்களையும் வழங்கியுள்ளார். பொதுவாகக் கவிதைகள் பாடப்பெறாத இக்கால பிரபலங்கள் பலரைப் பற்றியும் கவிதைகள் எழுதியுள்ளார். அவரால் பாடப்பெற்றவர்கள் வரிசையில் நெல்சன்மண்டேலோ, பாலு மகேந்திரா, உ வே சா, வாரியார், அன்னை தெரசா, ராமகிருஷ்ணர், சிவாஜி, வாலி, வைர முத்து, பாலமுரளி கிருஷ்ணா, பாரதி, கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை, விவேகானந்தர், கண்ணதாசன் எனப் பலர் அடங்குவர். அம்மா, அப்பா , குழந்தை, பெண்ணினம் போன்ற உறவுகளைப் போற்றும் கவிதைகளுடன், சமுதாய அக்கறையுடன் எழுதப்பட்ட கவிதைகள் அழகு தமிழ் பேசிட, பக்குவத்தை அடைய, தலைவனாய் உயர, தாய்ப்பால் கொடுத்திட, பெண்ணினைக் காத்திட என்ற பல கோணங்களில் விரிகின்றன. சற்றே வித்தியாசமான கவிதைக் கருக்களைக் கொண்ட சர்க்கரை வியாதி, ஆலமரம், குருவிக்கூடு, விஞ்ஞான வளர்ச்சி, புத்தாண்டு, மாடிவீட்டு ஏழைகள், நூலகம் போன்ற கவிதைகளும் இவரது கவிதைக் களத்தில் அடங்கும். எடுத்துக்காட்டாக, யாழ் நூலகம் எரியுண்ட தினமான மே 31, 1981 நினைவாக… “சூறை ஆடி விட்டார்கள்!” என்ற கவிதையில் […] யாழ்ப்பாண நூலகத்தை யாருமே மறக்கார்கள் வேண்டிய புத்தகத்தை விரைவுடனே தந்துநிற்கும் தென்கிழக்கு ஆசியாவின் சிறந்தவொரு நூலகமாய் சிறந்தோங்கி நின்றதனை தேசமே தானறியும் எத்தனையோ வகையான புத்தகங்கள் இருந்ததங்கே அத்தனையும் படிப்பவர்க்கு அருமருந்தாய் அமைந்தப்போ சொத்தாக மதித்துமே புத்தகத்தைக் காத்தார்கள் சுவையறியா அரக்கர்களோ சூறையாடி விட்டார்கள் கற்றுணர்ந்தோர் வாழ்ந்தவிடம் கல்விக்கூடம் நிறைந்த இடம் கண்ணியத்தின் உறைவிடமாய் கருத்திலே நின்றஇடம் பெற்றவர்கள் பிள்ளைகளை பெரிதாக்க நின்றஇடம் பித்தர்களின் வெறியாலே சொத்தையெல்லாம் இழந்தார்கள் […] என அந்த நிகழ்ச்சிக்கு வருந்தி கவிதை வடித்துள்ளார். இவரது படைப்புகள் வல்லமை, திண்ணை, தமிழ் ஆஸ்திரேலியன், தமிழ்முரசு, அக்கினிக்குஞ்சு, நெற்றிக்கண், தேனீ, ஜியோ தமிழ், மாற்றம், ஈழ நாடு, சிந்தாமணி, உதயசூரியன் இந்துசாதனம், மெல்லினம், உதயம் பத்திரிக்கைகளிலும் இணையத்தின் மின்னிதழ்களிலும் வெளி வந்துள்ளன. பிற கலைத் துறைகளிலும் இவர் பங்களிப்பு அதிகம். இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தில் அறிவிப்பாளராகவும், நாடகத் தயாரிப்பாளராகவும் கடமையாற்றிய இவர், 10க்கும் மேற்பட்ட நூல்களையும், 100 ஓரங்க நாடகங்களையும், 10க்கு மேற்பட்ட வில்லுப் பாட்டுக்களையும், 20க்கு மேற்பட்ட நாட்டிய நாடகங்களையும், எழுதியுள்ளதோடு “முதற்படி” என்னும் குறுந்திரைப்படத்துக்கு கதை வசனம் எழுதி நடித்து வெளியிட்டுள்ளார். கல்வியின் இன்றியமையாமையைக் குறிக்கும் இவரது கட்டுரைகள் தலைமுறை இடைவெளிகளினால் ஏற்படும் கருத்து பேதங்கள், சமையக் கல்வியின் முக்கியத்துவம் போன்றவற்றை முன்னிறுத்தும். “புலம்பெயர்ந்த நாடுகளில் சமயம் கற்பித்தலில் கையாளப்படும், கையாளப்படவேண்டிய அணுகு முறைகள்” என்ற கட்டுரையில் முன்னாள் கல்விப்பணியாளரான இவர் தனது சிந்தனைகளையும் அனுபவத்தையும் முன்னிறுத்தி பலருக்கும் பயன்தரும் வகையில் அதை எழுதியுள்ளார். சிறந்த விளக்கங்களுடன், தனது வாழ்வில் பெற்ற அனுபவங்களையும் சான்றாகக் காட்டி இவர் அளித்தக் கட்டுரை முழுமையாக வாசிக்க வேண்டிய ஒன்று. அக்கட்டுரையின் முக்கியக் கருத்து கீழே சுருக்கமாக வழங்கப்பட்டுள்ளது. “சமயம்” என்றால் என்ன? “மதம்” என்றால் என்ன? என்பதை நாம் நன்றாக அறிந்துவைத்துக் கொள்ள வேண்டும். இவை இரண்டும் ஒன்றா அல்லது இரண்டுமே வேறா என்பதே எம்மில் பலருக்கும் தெரியாத பொழுது எமது பிள்ளைகளுக்கு எப்படி இதனைப் பற்றி விளக்கிச்சொல்லமுடியும். இக்காலத்தில் வளருகின்ற பிள்ளைகள் எம்மைப் போன்றவர்கள் அல்லர் என்பதை நம்மில் பலரும் தெரிந்துகொள்ளுவது இல்லை. அவர்களது சிந்தனைகளும், செயற்பாடுகளும் வித்தியாசமானதாக இருக்கும். நாங்கள் வளர்ந்த சூழல் வேறு. நாங்கள் படித்த சூழல் வேறு. எங்களைச் சுற்றியிருந்த சூழலும் வேறு. அப்படியான சூழலில் இருந்து வந்த வளர்ந்தவர்களான நாங்கள் … எங்கள் பிள்ளைகளை எங்களைப்போல அவர்கள் நடக்கவில்லையே என்று மனக் குழப்பம் அடைதல் கூடாது … புலம்பெயர் நாடுகளில் சமயம் போதிக்க வருகின்றவர்கள் தாம் முன்னர் படித்தவற்றையும், தமக்கு ஆசிரியர் எப்படிப்படிப்பித்தாரோ அப்படியே படிப்பிக்க நினைத்துச் செயற்படும் பொழுதுதான் எடுத்துக்கொண்ட நோக்கம் குறைபடுகிறது. எனவே சமயம் போதிப்பதில் பல புதிய அணுகு முறைகளைக் கையாண்டால்தான் எமது நினைப்பு நிறைவேறும் என்பதை மனங்கொள்வது பொருத்தம் என நினைக்கின்றேன். 1. சமயத்தை ஆழமாகப் படிப்பித்தல் நல்லதல்ல. 2. தேவையற்ற கதைகளை சொல்லிப் படிப்பித்து குழப்பமான மனநிலை உருவாக்கல் ஏற்றதல்ல. 3. கூடியவரை இலகுவான மொழிப்பிரயோகமே கையாளுதல் நன்று. 4. மனத்தில் பதியும் வண்ணம் திருமுறைகளை பாடிக்காட்டி விளக்குதல் வேண்டும் . 5. கோவிலுக்குக் கூட்டிப்போய் அங்கு நடக்கும் விஷயங்களை அவதானிக்க வைப்பதுடன் அவற்றுக்கான விளங்கங்களையும் எளிதாகக் கொடுக்கவேண்டும். 6. பண்ணோடு பாடப்பழக்கலாம். சமய ஆசாரங்களை இலகுபடுத்திச் சொல்லலாம். 7. கும்பிடும் பழக்கத்தின் விஞ்ஞான அணுகுமுறையை எடுத்துச் சொல்லலாம். 8. ஒளியின் முக்கியம், ஒலியின் முக்கியம், இவற்றைச் சமயத்துடன் சேர்த்து விளக்கலாம். 9. அதிர்வுகள் பற்றி பிள்ளைகள் அறிந்துள்ளதால் அதற்கும் சமயத்துக்குமான நெருக்கத்தை விளக்கலாம். 10. கொண்டாட்டங்களின் உட்பொருள், திருவிழாக்களின் சமூகத்தொடர்பு, சேவை செய்தலின் உயர்வு, கலைகளுக்கான முக்கியத்துவம், இவற்றோடு … உண்மை நேர்மை, உழைப்பு, பணிவு, இரக்கம், அன்பு, அன்னதானம், வறியவர்க்கு உதவுதல், பொதுச்சேவை, பெரியோரை மதித்தல், விட்டுக்கொடுத்தல், முரண்படாமை, புறங்கூறல், கொல்லாமை, மதுவை மனத்தாலும் நினையாமை, தாயைப்போற்றல், தந்தையை மதித்தல், குருவைப் பணிதல், இவையெல்லாம் எங்கள் சமயத்தின் கரு என்பதைக் கட்டாயம் சமய போதனையின் பொழுது சொல்லிக் கொடுத்தல் வேண்டும், சமய வாழ்வு வாழத்தான் இவை யாவும் தேவைப்படுகின்றன. எவ்வளவு படித்தாலும் அந்தப்படிப்பு இறையுணர்வையும் நல்வழியையும் ஏற்படுத்துவதாக இருக்கவேண்டும். “இளையோரின் முழுமன வளர்ச்சிக்கு சமயக்கல்விதான் முக்கிய மானது” என்று கூறி செயல்முறை நடவடிக்கையாக சமயக்கல்வியை இந்த வழிமுறையில் முன்னெடுத்துச் செல்லலாம் என்று காட்டிய ஜெயராமசர்மா அவர்களின் கருத்துக்களை, இன்றைய உலகில் சமயக் கல்வியை வழங்க விரும்பும் எந்த ஒரு சமயத்தினரும் கருத்தில் கொள்ள வேண்டியத் தேவை இருக்கிறது. September 15, 2014 செ. இரா. செல்வக்குமார் [] தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகத்தின் பாடங்களை தமிழ் விக்கிப்பீடியா வழியாகத் தமிழர்கள் யாவரும் பெற்று பயன்பெறும் வகையில் இடம்பெற முயற்சிகளை மேற்கொண்டவர் கனடாவைச் சேர்ந்த பேராசிரியர் செ. இரா. செல்வக்குமார் (C.R.Selvakumar) அவர்கள். சென்னையில், செப்டெம்பர் 17, 2014 அன்று நடந்த, பல்வேறு கல்வி நிறுவனங்களைச் சார்ந்த அறிஞர்கள் பலர் பங்கு பெற்ற பயிலரங்கில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று, விக்கிப்பீடியா என்பது கலைக்களஞ்சியம் மட்டுமல்ல, தகவல்களைப் பகிர்ந்து கொள்வதற்கான தொழில்நுட்பம். அதனை முழுமையாகப் பயன்படுத்த வேண்டியுள்ளது என்று கூறி இத்திட்டத்தின் இன்றியமையாமையை வலியுறுத்தியுள்ளார். கடந்த எட்டு ஆண்டுகளுக்கும் மேலாகத் தமிழ் விக்கிப்பீடியா நிர்வாகிகளுள் ஒருவராக அயராது செயலாற்றித் தமிழை இணைய உலகத்திற்குக் கொண்டுவரும் நோக்கத்தில் இப்பணியைச் செய்து வருகிறார் பேராசிரியர் செல்வக்குமார். வீட்டின் வரவேற்பறையில் அமர்ந்து கொண்டே அலுவலகப் பணிகளைச் செய்யலாம், இருந்த இடத்தில் இருந்து கொண்டே அயல்நாட்டிலும் வேலை பார்க்கலாம் என்ற வசதி சென்ற நூற்றாண்டின் முற்பகுதிகளில் அறிவியல் கதைகளில் மட்டும்தான் கற்பனையில் எழுத முடிந்திருக்கும். தகவல் தொழில் நுட்ப வளர்ச்சியின் காரணமாக மிகவும் குறுகிவிட்ட இன்றைய உலக அரங்கு, இந்த நூற்றாண்டில் மொழிகளின் வளர்ச்சிக்கு மற்றொரு சவாலை வைத்திருக்கிறது. உலகப் பொதுமொழியாகப் பல்கிப் பரவிவிட்ட ஆங்கிலம் இணையத்தில் செயலாற்றுவதற்கு இன்றியமையாத மொழியாக மாறிய நிலையினால் இக்கால இளைஞர்கள், நடப்புலகின் நிலையை அனுசரித்து ஆங்கிலவழியில் செல்லும் நிர்பந்தத்தில் உள்ளனர். தேவையானால் ஆங்கிலம் பயன்படுத்திவந்த சென்ற தலைமுறையினர் போல அல்லாது, சமூகவலைத்தளம் மூலம் உலக நட்புகளுடன் உறவாடுவதில் குறுக்கிடும் மொழி என்ற தடையைக் களைய வேண்டிய இன்றியமையாத் தேவையினால் இளைய சமுதாயத்தினரின் வாழ்வில் ஆங்கிலம் பின்னிப்பிணைந்துள்ள காலமிது. இத்தகையப் போட்டியில் பல உலக மொழிகளும் வளரும் களம் இந்த நூற்றாண்டின் துவக்கத்தில் மாறிவிட்டிருக்கிறது. இந்தச் சூழ்நிலையில், உலகின் ஒவ்வொரு மொழியினரும் தகவல் தொழில் நுட்ப வளர்ச்சிக்கு ஈடுகொடுத்து தகவல்களை மொழியாக்கம் செய்து வழங்கவும்; இதுவரைப் பயன்பாட்டில் இருந்து வந்த மொழித் தரவுகளை எண்ணிம வடிவில் மாற்றி உடனே தேடி அடையும் வண்ணம் சேமித்து வைத்து வழங்க வேண்டிய நெருக்கடியான நிலையை… அதையும் குறுகிய காலத்தில் தங்கள் மொழி மக்களுக்கு வழங்க வேண்டியக் கட்டாயத்தில் உள்ளனர். முன்னேற்றத்தை நோக்கி மாறிக்கொண்டே வரும் தொழில் நுட்பக்கருவிகளைக் கையாளும் தொழில் வல்லுநர்கள் தமிழுக்குக் கிடைத்திருப்பதும், அவர்கள் இப்பணிகளில் தங்களை ஈடுபடுத்திக் கொண்டு தமிழ் வளர்ச்சிக்குப் பணி செய்வதும் பாராட்டப்பட வேண்டிய செயல்கள். கடந்த 20 ஆண்டுகளில் தமிழ் மொழியைக் கணிம உலகின் எண்ணிம வடிவங்களில் முன்னெடுத்துச் செல்ல முயலும் நிறுவனங்களும், அரசு சாரா அமைப்புகளின் ஆக்கப்பூர்வமான செயல்களும், தனிமனிதர்களின் தன்னார்வ முயற்சிகளும் அளவிலடங்காது. அத்தகையப் பணியில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டுள்ளார் பேராசிரியர் செல்வக்குமார் அவர்கள். தமிழ்நாட்டில் பிறந்து வளர்ந்து படித்து, இப்பொழுது கனடா நாட்டின் வாட்டர்லூ பல்கலைக்கழகத்தின் பொறியியல் பேராசிரியராகப் பணிபுரியும் செல்வக்குமார் மின் மற்றும் கணினி இயல் துறையில் வல்லுநர். குறைகடத்திகள் பற்றிய ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறார். அத்துடன் நிறுத்திவிடாமல் தமிழ் விக்கிப்பீடியாவில் இதுவரை 800க்கும் மேற்பட்ட பதிவுகளை வழங்கியும், இருபதாயிரம் தொகுப்புகளும் செய்திருக்கிறார். தமிழகராதியான தமிழ் விக்சனரியிலும் பல்லாயிரக்கணக்கான சொற்கள் சேர பல வழிகளிலும் உதவி உள்ளார். தமிழ் விக்கிப்பீடியாவில் அதிகம் பங்களித்த முதல் ஐவர் வரிசையிலும் இடம் பிடித்து இருக்கிறார். தமிழில் கலைச்சொற்கள் ஆக்குவதிலும் அறிவியல் பயன்முக அறிவியல் படைப்புகள் செய்வதிலும் ஆர்வம் மிகக் கொண்டவர் இவர். “தமிழ் விக்கிப்பீடியா என்பது உலகளாவிய தமிழர்கள் சேர்ந்து அவரவர்களுக்குக் கிடைக்கும் நேரத்தைப் பொறுத்து தமிழில் எல்லா வகையான செய்திகளையும் கருத்துகளையும் மிகவும் சுருக்கமாகவோ, விரிவாகவோ எழுதி வளர்க்கக்கூடிய ஓர் அருமையான தொழில்நுட்பத்திட்டம், அறிவுத்தொகுப்பாக்கம். விக்கி என்பது முதலில் ஒரு தொழில்நுட்பம் என்பதனையும் கருத்தில் கொள்ள வேண்டும். கூட்டாகப் பலரும் ஒருங்கிணைந்து கூட்டாக்கம் செய்யச் சிறந்த ஒரு நுட்பம். அனைவரும் விக்கிப்பீடியாவைப் பயன்படுத்தினாலும், பலர் தாங்களும் பங்கேற்று தரவுகள் வழங்கலாம் என்பதை உணர்வதில்லை. உணர்ந்தவர்களும் அவ்வாறு பங்களிப்பதால் தங்களுக்கு என்ன பயன் என்று எண்ணுகிறார்கள். குழுவாகப் பணிபுரிவதும், ஒருவருக்கொருவர் தொடர்பு ஏற்படுத்திக்கொண்டு உறவாடுவதும், புதிய தொழில் நுட்பத்தைத் தெரிந்து கொள்வதும், மேலும் பல அறிந்துகொள்வதும் பலனாகக் கிடைக்கிறதே, அது சிறந்த பயனல்லவா?” என்று கேள்வி எழுப்புகிறார் செல்வக்குமார். தமிழ்க் கணிமை வரலாற்றில் திசுக்கி (TSCII) உருவாக்கத்தில் பங்கு கொண்டதுடன், தொடர்ந்து ஒருங்குறி நிறுவனத்தில் உறுப்பினராக இருந்து கணித்தமிழுக்கு அரிய பணிகள் ஆற்றிவருகின்றார். பல புகழ்பெற்ற பேராசிரியர்களும் தமிழ் ஆர்வலர்களும் பங்கு கொள்ளும் “தமிழ்மன்றம்” என்னும் கூகுள் குழுமம் ஒன்றை நடத்தி வருகின்றார். மின்னூலாக்கம் வகையிலும் முன்னோடியாக, மதுரைத்திட்டத்திற்கும் முன்னரே நாலாயிரத் திவ்ய பிரபந்தத்தை முதன்முதலாக மின்வடிவில் வெளியிடும் பணியில் அக்குழுவில் ஒருவராகப் பங்களித்துள்ளார். ஃபேஸ்புக் சமூக வலைத்தளத்தைத் தமிழில் வெளியிடும் வகையிலும் பெரும்பங்கு அளித்துள்ளார். மலேசியா வாழ் தமிழர், திருத்தமிழ் ஊழியன் சுப.நற்குணன் அவர்கள் “தமிழ்க்கணிமைத் துறையில் குறிப்பிட்டுச் சொல்லத்தக்கவர்களில் ஒருவர் மதிப்புமிகு பேராசிரியர் செ. இரா. செல்வக்குமார். தமிழ் விக்கிப்பீடியாவைச் செழிக்கச் செய்த – செழுமை செய்துகொண்டிருக்கும் முன்னோடிகளில் இவருக்கு என்றுமே சிறப்பிடம் உண்டு. தமிழ்க்கூறு நல்லுலகம் காலத்திற்கும் நன்றியோடு நினைத்துப்பார்க்க வேண்டிய அளவுக்கு மிகப்பெரும் பங்களிப்பைத் தமிழுக்கு வழங்கியிருக்கும் கொடையாளர் இவர் எனில் மிகையன்று,” என்று இவரது தமிழ்க்கணிமைத் துறை பங்களிப்பைப் பாராட்டுகிறார். தன்னார்வப் பணியாக தமிழ்க்கணிமைத் துறையில் பங்களிப்பைச் செய்து வரும் இவருடைய முயற்சிக்காகப் பேராசிரியர் செ.இரா.செல்வக்குமார் அவர்களுக்குத் தமிழ் கூறும் நல்லுலகத்தின் சார்பில் பாராட்டுகளும் நன்றிகளும். September 22, 2014 இஸ்ரோ அறிவியலாளர்கள் [] இந்திய வரலாற்றில் மறக்க முடியாத ஓர் நாள் அது. உலக அரங்கையே இந்தியாவைத் திரும்பிப் பார்க்க வைக்கும் சாதனையை நிகழ்த்தினார்கள் இஸ்ரோ அறிவியலாளர்கள். செவ்வாய் சுற்றுக்கலன் திட்டத்தில் பங்கு பெற்று, 2014 ஆம் ஆண்டு செப்டம்பர் 24 ஆம் தேதியன்று, செவ்வாய்க் கோளின் சுற்று வட்டப் பாதையில் மங்கல்யான் கலத்தை முதல் முயற்சியிலேயே நிலைநிறுத்துவதற்குக் காரணமான இஸ்ரோ தலைவர் கே. ராதாகிருஷ்ணன் அவர்களையும், அவர் தலைமையில் அரும்பணியாற்றியிருக்கும் அனைத்து இஸ்ரோ அறிவியலாளர்களையும் பாராட்டுவது ஒவ்வொரு இந்தியருக்கும் மகிழ்ச்சி தரக்கூடிய செயல். செவ்வாய்க் கிரகத்தில் நீர் இருப்பதற்கான சாத்தியக் கூறுகள், அங்குள்ள கனிம வளம் ஆகியவற்றை கூர்ந்தாய்வு செய்வதற்கான கருவிகளுடன் ஆளில்லாத விண்கலமான மங்கல்யான், இந்திய விண்வெளி ஆய்வு மையத்தால் 2013 நவம்பர் 5ம் நாளன்று செலுத்தப்பட்டது. இந்த மங்கல்யான் வெற்றிகரமாக முதல் முயற்சியிலேயே செவ்வாய்க் கோளின் சுற்று வட்டப் பாதையில் 2014 ஆம் ஆண்டு செப்டம்பர் 24 ஆம் தேதியன்று துல்லியமாக நிலைநிறுத்தப்பட்டது. பல அயலகச் செய்தித்தாள்களும் சலிப்பின்றி மீண்டும் மீண்டும் தவறாமல் தங்கள் செய்திகளில் குறிப்பிட்டது இந்தியாவின் இந்தச் செவ்வாய் திட்ட விண்வெளிச் சாதனையை. முதல் முயற்சியிலேயே செவ்வாய்க் கிரகத்தின் சுற்று வட்டப்பாதையில் இந்தியாவின் மங்கல்யான் வெற்றிகரமாக நிலைநிறுத்தப்பட்டது விண்வெளி ஆய்வு வரலாற்றில் ஒரு குறிப்பிடத்தக்க சாதனை. இந்த அரிய சாதனையைப் புரிந்ததன் மூலம் முதல் முயற்சியிலேயே வெற்றி பெற்ற நாடு என்ற பெருமையும் இந்தியாவிற்குக் கிட்டியுள்ளது. “இச்செயல் பங்களூரில் இருந்து ஒரு கோல்ஃப் பந்தை லண்டனில் இருக்கும் ஒரு குழியில், அதுவும் முதல் வீச்சிலேயே விழச்செய்யும் அளவிற்குத் துல்லியமானது,” என்றும் ஒரு அறிவியலாளர் குறிப்பிட்டுள்ளார். விண்வெளி ஆராய்ச்சியில் முன்னிலையில் இருக்கும் அமெரிக்க மற்றும் ரஷ்ய அறிவியலாளர்களாலும் கூட முதல் முயற்சியிலேயே இச்செயலில் வெற்றி பெற இயலவில்லை என்பதும் குறிப்பிடத் தக்கது. இச்சாதனை இந்திய அறிவியலாளர்களின் தொழில்நுட்பத் திறனை உலகநாடுகளின் கவனத்திற்குக் கொண்டு சென்ற ஒரு குறிப்பிடத்தக்க செயலாக அமைந்ததுவிட்டது. அத்துடன், செவ்வாய்க் கிரகத்தின் சுற்று வட்டப் பாதைக்குள் செயற்கைக்கோளை நிலை நிறுத்திய நான்கு விண்வெளி நிறுவனங்களில் ஒன்று இந்தியாவின் இஸ்ரோ. இதற்கு முன்னர் அமெரிக்கா, ரஷ்யா, ஐரோப்பிய நாடுகள் மட்டுமே இந்த முயற்சியில் வெற்றி பெற்றுள்ளன. ஆசிய நாடுகளில் முதன்முதலில் வெற்றிபெற்ற நாடு இந்தியா என்பதும், சீன விண்வெளி ஆராய்ச்சியாளர்களை இம்முறை இந்திய ஆய்வாளர்கள் இந்தப் போட்டியில் விஞ்சிவிட்டார்கள் என்பதும் மற்றொரு சாதனை. வரலாற்றிலேயே, உள்நாட்டுத் தொழில்நுட்பம் மூலம், உள்நாட்டிலேயே இந்திய அறிவியலாளர்களால் உருவாக்கப்பட்டு செவ்வாயின் சுற்றுப் பாதையில் மிகக் குறைந்த செலவில் நிலைநிறுத்தப்பட்ட ஒரே செயற்கைக்கோளும் மங்கல்யான்தான். திட்டசெலவின் அடிப்படையில் உலகில் குறைந்த செலவில் செவ்வாய்க்கு அனுப்பப்பட்ட செயற்கைக்கோள் திட்டம் எனவும் இது புகழ்பெற்றுள்ளது. இந்தச் சாதனையை, ஹாலிவுட் படத்தயாரிப்பின் செலவினும் மிகக் குறைந்தது என்றும், இந்த மாதம் அமெரிக்க நாசா விண்வெளி நிலையம் அனுப்பிய துணைக்கோளான மேவன் (Maven) திட்டத்தின் பத்தில் ஒரு பங்கு செலவு இது என்பதையும் ஒப்பிடாது இச்செய்தியை அளிக்க எந்தச் செய்தி நிறுவனத்தினாலும் இயலவில்லை. இந்த சாதனைகளுடன் உலக செய்தியாளர்களைக் கவர்ந்ததும், யாரும் எதிர்பாராத வகையில் வியந்து போனதுமானது எது என்றால், அது இந்திய விண்வெளித்துறையில், செய்வாய் கோளின் மங்கல்யான் திட்டத்தில் பணிபுரிந்தவர்களில் அதிக எண்ணிக்கையிலான பெண் ஆய்வாளர்களும், பொறியியல் வல்லுநர்களும் பங்கு பெற்று இருப்பதேயாகும். இஸ்ரோ தனது வெற்றிகரமான வேளையைக் கரவொலி எழுப்பிக் கொண்டாடியதைப் படம் பிடித்த செய்தி நிறுவனங்கள் அவற்றை வெளியிட்ட பொழுது, டிவிட்டர் சமூக வலைத்தளம் புதுவகையில் உற்சாகம் கொண்டது. இஸ்ரோவின் கட்டுப்பாட்டு அறையில் மகிழ்ச்சியுடன் தங்களுக்குள் கைகுலுக்கிப் பாராட்டிக்கொண்டும், வாழ்த்துகள் தெரிவித்துக் கொண்டுமிருந்த பெண்களை, மலர் சூடிய கூந்தலுடனும் இந்தியக் கலாச்சார உடையுடனும் கொண்டாடிய அறிவியலாளர்களைக் கண்ட உலக ஊடகங்கள் அனைத்தும் எதிர்பாராத வியப்பில் மூழ்கியது தெளிவாக விளங்கியது. “இது போன்று பெண்களின் பங்களிப்பை நாசா படங்களில் பார்த்ததில்லையே”, “இந்தியாவின் மார்ஸ் திட்டத்தின் முகங்கள் இப்பெண்மணிகள், இவர்கள்தான் உண்மையான முன்மாதிரிகள்” என்ற செய்திகள் பரிமாறிக் கொள்ளப்பட்டன. “கடைசியாக இத்தனை பெண்கள் விண்வெளி ஆய்வில் பங்கு பெற்றதை நாம் எப்பொழுது பார்த்திருக்கிறோம்?” என்று வியந்தார் எகிப்திய ஊடகவியலார் மோனா எல்ட்டாஹவி (@monaeltahawy). கார்டியன் , நியூஸ்வீக் , பி ஆர் ஐ , பி பி சி , நியூ யார்க் டைம்ஸ் என உலகின் முன்னணி செய்தி நிறுவனங்கள் யாவும் மங்கல்யான் வெற்றிச் செய்தியுடன் இந்தியப் பெண் அறிவியலாளர்களின் படங்களைத்தான் வெளியிட்டன. இஸ்ரோவின் சற்றொப்ப 14,000 பணியாளர்களில் 20% பெண்கள் என்பது ஒரு வியப்பான செய்தியாகப் பரவியது. மினால் சம்பத், நந்தினி ஹரிநாத் போன்ற இஸ்ரோ அறிவியலாளர்களைப் பற்றி இந்தியர்கள் முன்னரே அறிந்தவர்கள்தான் என்றாலும், அவர்களும் இந்த அளவிற்குப் பெண் அறிவியலாளர்கள் கட்டுப்பாட்டறையில் பங்கு பெற்றிருந்திருக்கிறார்கள் என்பதை முதன் முதலாக அறிந்து வியந்ததை டிவிட்டர் செய்திகள் காட்டின. கீழே குறிப்பிட்ட செய்தி ஆயிரத்திற்கும் அதிகமுறை பகிர்ந்து கொள்ளப்பட்டது: Love this pic so much:when was last time u saw women scientists celebrate space mission? #India #MarsMission @soutik pic.twitter.com/K9BBzX1vz2 — Mona Eltahawy (@monaeltahawy) September 24, 2014 ஹேஸ்டேக் #Mangalyaan, #IndiaAtMars, #marsorbitormission, #MarsMission, #Isro மற்றும் #Martian ஆகியன முதன்மை செய்திப் பரிமாற்றச் சொற்களாக டிவிட்டரில் உருவெடுத்தன. @MarsOrbiter முகவரியைத் தொடர்பவர்கள் எண்ணிக்கை பல்லாயிரக் கணக்கைத் தொட்டது._ செவ்வாய்க் கிரகத்தின் சுற்று வட்டப் பாதையில் மங்கல்யான் இணைக்கப்படும் விண்வெளி ஆராய்ச்சி திட்டத்தை ஒரு மாபெரும் இந்திய வரலாற்று நிகழ்ச்சியாக மாற்றி இந்திய குடிமக்கள் ஒவ்வொருவரையும் பெருமை கொள்ளச் செய்த அறிவியலாளர்களைப் பாராட்டாத இந்தியர் இல்லை எனலாம். முன்னர் ஒருமுறையும் தொடர்ந்து 10 செயற்கைக்கோள்களை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தி உலக சாதனையை செய்தவர்கள்தாம் நம் இந்திய இஸ்ரோ அறிவியலாளர்கள் என்பது குறிப்பிடத்தக்க மற்றொரு செய்தி. ரஷ்யாவை 8 தொடர் வெற்றிகரமான செயற்கைக் கோள் நிறுவிய நாடு என்ற இரண்டாம் இடத்திற்குத் தள்ளிய இந்திய விண்வெளி ஆய்வாளர்களின் சாதனைகளைக் கண்டு இன்றைய உலகம் வியக்கிறது. இதற்கும் மாறாக வளரும் நாட்டிற்கு விண்வெளி ஆராய்ச்சி தேவையா, அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றுவதற்கு முன்னுரிமை வழங்கலாமே என்று முணுமுணுத்தவர்களைப் பொருட்படுத்தாது “டுவிங்கிள் டுவிங்கிள் லிட்டில் ஸ்டார்” என்ற மழலையர் பாடலையும் கீழ்வருமாறு மாற்றியமைத்துப் பாடி இந்தியர்கள் தங்கள் வெற்றியைக் கொண்டாடினார்கள். “Twinkle, twinkle, little star World’s envious; we’re on mars! Up above the world so high, We’ve made it in a single try!” செவ்வாயை அடைந்த இந்தியாவின் மார்ஸ் ஆர்பிட்டர் “Howdy @MarsCuriosity? Keep in touch. I’ll be around.” (Howdy @MarsCuriosity ? Keep in touch. I’ll be around. — ISRO’s Mars Orbiter (@MarsOrbiter) September 24, 2014) என்று அனுப்பிய டிவிட்டர் செய்தியைத் தொடர்ந்து “Namaste @MarsOrbiter” என்று நாசாவின் ‘மார்ஸ் கியுரியாசிட்டி’ தனது டிவிட்டர் செய்தி ஒன்றை அனுப்பி வரவேற்க, விண்வெளி வரலாற்றில் இந்தியாவின் சாதனையின் அடையாளமான இச்செய்திப் பரிமாறல், அதனைப் பார்த்த அனைவரையும் பெருமிதம் கொள்ள வைத்தது. அறிவியல் மற்றும் தொழில்நுட்ப வளர்ச்சிகள் ஒரு நாட்டின் முன்னேற்றத்தின் திறனுக்குச் சான்றுகள். இது இளைய தலைமுறையை அத்துறையில் ஈடுபட ஊக்குவிக்கும். அறிவியலிலும் தொழில்நுட்பத்திலும் இந்தியர்கள் சாதித்துவிட்டோம், மேன்மேலும் பல சாதனைகள் புரியப்போகிறோம் என்ற உறுதியான நம்பிக்கையையும் அவர்கள் மனதில் விதைத்த இஸ்ரோ அறிவியலாளர்களுக்கு மனம் நிறைந்த நன்றிகளும் பாராட்டுகளும். பங்கேற்ற அறிவியல் அறிஞர்கள்: Behind every successful space mission lies a team of hard working and hardly sleeping scientists. These are the brains behind Mangalyaan - ISRO Scientists/Engineers: K Radhakrishnan: The Chairman of ISRO and Secretary in department of space. M Annadurai: Programme Director of Mars Orbiter Mission. S Ramakrishnan: Director of Vikram Sarabhai Space Centre and Member Launch Authorisation Board. SK Shivakumar: Director of the Isro Satellite Centre. P Kunhikrishnan: Director of the PSLV programme. Chandradathan: Director of the Liquid Propulsion system. AS Kiran Kumar: Director of the Satellite Application Centre. MYS Prasad: Director of the Satish Dhawan Space Centre and Chairman of the Launch Authorisation Board. S Arunan: The Project Director of Mars Orbiter Mission and was responsible for leading a team to build the spacecraft. B Jayakumar: Associate Project Director of PSLV project. MS Pannirselvam: The Chief General Manager of range operation director at Sriharikota Rocket port. V Kesava Raju: Mission Director of Mars Orbiter Mission V Koteswara Rao: ISRO scientific secretary & Their Team of Scientists and Engineers ஜெய்ஹிந்த் September 29, 2014 இந்திராணி [] பொதுவாக, மேம்போக்கான ஒரு கோணத்தில் அணுகுவோமானால் ஆன்மிகம் என்ற அடிப்படையில் நவராத்திரி கொலு கொண்டாடப்படுகிறது என்பதை யாவரும் அறிவோம். இருப்பினும் இக்கொலுவிற்குப் பற்பல பரிமாணங்கள் உண்டு. பொம்மைகள் செய்பவர்களின் வாழ்வாதாரத்தில் தொடங்கி பொருளாதார அடிப்படையில் விழாவினை முன்னிட்டு நாட்டின் செல்வ வளம் பரவுதலை ஊக்குவிக்கும் செயலாக இவ்விழா அமையும் என்பதும், கலைகளின் வளர்ச்சிக்குத் தூண்டுகோலாக அமைவதற்காகவும், இளையதலைமுறைக்கு நாட்டின் காலாச்சார பின்னணியைக் கொண்டுசெல்லும் முயற்சியாகவும் பலவகைகளின் நாம் நவராத்திரி கொலுவினைப் போற்றலாம். அதற்கும் மேலாக மேலும் சில பரிமாணங்களை அறிமுகப்படுத்துகிறார் இந்திராணி. சுற்றுச்சூழலைப் பாதுகாக்கும் மறுசுழற்சிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் வகையில் கொலுவைப்பதுடன் அத்துடன் கல்வி, தொண்டு ஆகியவற்றையும் இணைத்து புதுமை செய்திருக்கிறார் இந்திராணி. சென்னை கோட்டூர்புரத்தில் வசிக்கும் 74 அகவையை நெருங்கிய இந்திராணி அவர்களுக்குச் சிறு வயது முதலே கொலுவைப்பதில் அதிக ஆர்வம் உண்டு. பெரும்பாலோர் புராணக்கதைகள், தசாவதார பொம்மைகள் என்பதுடன் கொலு வைக்கும் நிலையில் இருக்கும் பொழுது, பல ஆண்டுகளுக்கு முன்னரே ஏதேனும் ஒரு கருப்பொருள் அடிப்படையில் கொலு அமைக்கும் வழக்கத்தைக் கொண்டிருந்தவர் இந்திராணி. பொங்கல், விவசாயம், கிராமத் திருவிழா என்பது போன்ற பல பின்னணிகளில் தனது கற்பனையைக் கட்டவிழ்த்துக் கொலு வைத்துள்ளார் இவர். மிகவும் குறிப்பிட்டுச் சொல்லக் கூடிய கொலுக்களில் ஒன்று முன்னாள் பிரதமர் இந்திராகாந்தியின் இருபது அம்சத் திட்டத்தை விவரிக்கும் இவரது கொலுவாகும். இதன் சிறப்பைக் கண்டவர்கள், இது பள்ளிச் சிறார்களுக்கு நல்ல தகவலைக் கொடுக்கும் கொலு எனக் கருதி மேலும் சிலநாட்களுக்கு கொலுவை நடத்தக் கோரிக்கை வைத்தனர் என்பது அக்கொலுவின் சிறப்பைக் காட்டும். கடந்த சில ஆண்டுகளாக இவர் சுற்றுப்புறச் சூழலின் பாதுகாப்பிற்கு உறுதுணையாக இருக்கும் பொருட்டு குப்பைகளாக நாம் எறிந்துவிடும் காகிதக் கோப்பைகள், மருந்து புட்டிகள், தினசரித்தாள்கள், கெட்டியான அட்டைகளைக் கொண்ட வாழ்த்து அட்டைகள், அழைப்பிதழ்கள், பரிசு பொருட்களைச் சுற்றப் பயன்படும் காகிதங்கள், அட்டைப்பெட்டிகள் போன்றவற்றை மறுசுழற்சி செய்யும் வகையில் அவற்றில் பொம்மைகள் செய்கிறார். ஆண்டின் துவக்கத்திலேயே திட்டமிட்டு பொருட்களை சேகரித்து, ஒரு நாளில் ஆறுமணி நேரமாவது செலவழித்து அவற்றைக்கொண்டு தோரணங்கள், துளசிமாடங்கள், நாட்டியப் பெண்கள், பூந்தொட்டிகள் என்று பற்பலவகையில் பொம்மைகள் செய்கிறார். இவரது கைத்திறமையால் குப்பைகள் கருவூலமாக மாறுகின்றன என்று சொல்வோமானால் அது மிகைப்படுத்துதல் அல்ல. சுற்றுச்சுழலுக்கு வலு சேர்க்கும் விதத்தில் வடிவமைக்கப்படும் இந்தப் பொம்மைகளை வியக்கவைக்கும் வகையில் தொண்டு செய்யும் நோக்கிலும் பயன்படுத்துகிறார். இந்த பொம்மைகளை விற்று அதன் மூலம் கிடைக்கும் தொகையை ஏழை மாணவியர் கல்விக்காக வழங்கி உதவியும் செய்து வருகிறார். தொன்றுதொட்டு வரும் விழாவில் சுற்றுச்சுழலுக்கு வலு சேர்க்கும் விதத்தில் குப்பைகளின் மறுசுழற்சி, மாணவியரின் கல்விக்கு பொருளுதவித் தொண்டு எனப் புதிய உயரத்திற்குக் கொலுவை உயர்த்திய வல்லமையாளர் இந்திராணியின் ஆர்வம் போற்றத்தக்கது. October 6, 2014 பிரியம்வதா நடராஜன் [] அமெரிக்காவின் புகழ்பெற்ற “ஐவீ லீக்” பல்கலைக் கழகமான யேல் பல்கலைக் கழகத்தில், வானியல் மற்றும் இயற்பியல் பேராசிரியராகப் பணிபுரியும் பேராசிரியர் பிரியம்வதா நடராஜன் கருத்தைக் கவரும் கல்வி மற்றும் ஆய்வுப் பின்னணியைக் கொண்டவர். இந்தியத் தமிழ்க் குடும்பத்தைச் சேர்ந்தவரான பிரியா கோயம்புத்தூரில் பிறந்தவர். பெற்றோருடனும் உடன்பிறப்புகளுடனும் டெல்லியில் வாழ்ந்து கல்வி பயின்றவர். பள்ளிப்படிப்பை இந்தியாவில் முடித்த பின்னர் மேற்படிப்பிற்காக அறிவியல், பொறியியல், தொழில் நுட்பம் ஆகியவற்றில் உலகளாவிய நிலையில் முதலிடம் வகிக்கும் அமெரிக்காவின் எம்.ஐ.டி (M.I.T – Massachusetts Institute of Technology, Cambridge, Mass, USA) பல்கலைக்கழகத்தில் பயின்று இயற்பியலிலும் கணிதத்திலும் என இரு இளநிலைப் பட்டங்கள் பெற்றுள்ளார். தொடர்ந்து மேல்நிலைக் கல்வியை மற்றொரு உலகப்புகழ் பெற்ற பல்கலைக்கழகமான இங்கிலாந்தின் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் (Institute of Astronomy, University of Cambridge in England) பயின்றார். வானியற்பியல் கோட்பாடுகளில் (Theoretical Astrophysics ) முதுநிலைக் கல்வி மற்றும் முனைவர் ஆய்வை மேற்கொண்டார். அமெரிக்காவின் யேல் பல்கலைக்கழகத்தில் இயற்பியல் மற்றும் வானியல் பேராசிரியராகப் பொறுப்பேற்கும் முன்னர், கனடாவின் டொரோண்டோவிலும் முதுநிலை முனைவராக (Postdoctoral Fellow at the Canadian Institute for Theoretical Astrophysics in Toronto, Canada) பயிற்சி பெற்றுள்ளார் வானியற்பியல் பேராசிரியர் பணியுடன் தொடர்ந்து வானியற்பியல் கோட்பாடுகள், விண்மீன்கள் கூட்டம், பால்வெளி மண்டலம் அதன் கருந்துளைகள் ஆகியவற்றினைப் பற்றிய ஆய்வினைத் தொடர்ந்தார். இத்துறையில் இதுவரை நூற்றுக்கும் அதிகமான ஆய்வறிக்கைகளையும் பிரியா வெளியிட்டுள்ளார். இவருடன் இணைந்து ஆய்வு மேற்கொண்ட ‘எசிக்குயல் ட்ரைஸ்ட்டர்’ (Ezequiel Treister) என்பாருடன் இவர் வெளியிட்ட ஆய்வின் முடிவு இயற்பியல் துறையில் ஓர் இன்றியமையாத் திருப்புமுனையாகும். “தொடர்ந்து வளரும் பெரும் கருந்துளைகளின் நிறைக்கும் அவற்றின் வளர்ச்சியில் ஓர் உச்ச வரையறை உண்டு” என்ற இவரது கண்டுபிடிப்பு கருந்துளைகள் பற்றிய புதிய, இயற்பியல் துறைக் கண்டுபிடிப்பாகும். விண்மீன் கூட்டங்களின் தோற்றம் பற்றிய ஆய்வுக்குப் பெரும்பங்கு அளித்துள்ளது இவரது இந்தக் கண்டுபிடிப்பு. இவரது “கருந்துளை நிறையின் உச்சவரையறைக் கோட்பாடு” சர் சி வி இராமனின் “இராமன் விளைவு”, சந்திரசேகரின் “சந்திரசேகர் வரையறை” ஆகியவற்றிற்கு ஒப்பானது. இவர் ஆய்வின் சுருக்கமான விளக்கம்: விண்மீன் கூட்டங்களின் மையத்தில் இருக்கும் கருந்துளை தனது ஈர்ப்பு விசையின் காரணத்தினால் அதனருகில் அகப்படும் சக்திகுறைந்த விண்மீன்களையும், கோள்களையும் தன்னுள் விழுங்கி வளர்கிறது. தொடர்ந்து வளரும் கருந்துளையின் நிறையின் உச்ச எல்லையானது அந்தக்கோள்களின் கூட்டத்திலிருக்கும் சூரியனின் நிறையைப் போன்று பத்து பில்லியன் மடங்குவரைதான் அதிகரிக்கும், இந்த நிறையின் அளவு கருந்துளை இருக்கும் விண்மீன் கூட்டத்தின் மொத்தநிறையின் ஒரு விழுக்காடு ஆகும் (the ultra-massive black holes, which lurk in the centers of huge galaxy clusters, seem to have an upper mass limit of about 10 billion times that of the Sun or about one percent of the total mass of the giant galaxies in which these black holes are found). இவ்வாறு வளரும் கருந்துளை புதிய விண்மீன்கள் தோன்றும் அண்டமாகவும் விளங்குகிறது. இந்த வானியற்பியல் கோட்பாட்டின் திருப்புமுனையான கண்டுபிடிப்பின் காரணத்தினால் இவருக்கு இயற்பியல் நோபல் பரிசு வழங்கப்படலாம் என்று கணிக்கப்பட்டு, அப்பரிசு பெறத் தகுதியானவர் பட்டியலில் தொடர்ந்து இடம் பெற்றும் வருகிறார். இவரது அறிவியல் சாதனையின் முக்கியத்துவம் அங்கீகரிக்கப்பட்டு இவருக்கு எதிர்காலத்தில் நோபல் பரிசு கிடைக்க வாழ்த்துகளும் பாராட்டுகளும். October 13, 2014 மருத்துவர் சி. வீரப்பன் [] இங்கிலாந்து மான்செஸ்டரில் மருத்துவராகப் பணிபுரியும் சி. வீரப்பன் அவர்கள் “மதிப்புமிகு உறுப்பினர்” (Honorary Member) என்று செப்டம்பர் 2014 இல் பார்சிலோனாவில் நடந்த ஐரோப்பிய தீவிர சிகிச்சை மருத்துவக் கழக (European Society of Intensive Care Medicine) மாநாட்டில் விருது பெற்றவர். இந்நாள்வரை இவ்விருது பெற்றோர் பதின்மூவர் மட்டுமே, இவ்விருது பெற்ற முதல் ஆசியர்/இந்தியர்/தமிழர் என்பது குறிப்பிடத்தக்கது. மருத்துவர் வீரப்பன் மருத்துவத்துறை அறிவியல் கல்விக்கு அவர் ஆற்றிய பங்களிப்பிற்காகப் பாராட்டப்பட வேண்டியவர். தமிழகத்தில் பிறந்து தேவக்கோட்டை, தூத்துக்குடி, பாளையங்கோட்டை நகர்களில் தனது பள்ளிப்படிப்பை முடித்து, 1974 ஆம் ஆண்டு மதுரை மருத்துவக்கல்லூரியில் மருத்துவப் பட்டம் பெற்றவர் மருத்துவர் வீரப்பன். இங்கிலாந்திற்கு 1977 இல் குடிபெயர்ந்த வீரப்பன் முதியோர் நல மருத்துவம், உணர்வகற்றும் மருத்துவம் (geriatric medicine & anaestheticmedicine) ஆகிய துறைகளில் பணியாற்றிய பிறகு, 1985 ஆம் ஆண்டு முதல் தீவிர சிகிச்சை (Intensive Care Medicine) மருத்துவத் துறையில் பணியாற்றத் துவங்கினார். வெகு விரைவில் அத்துறை மருத்துவத்தின் பயிற்சியாளராகவும் உயர்ந்து, ‘ராயல் ஓல்தாம்’; மருத்துவமனையில் ( Royal Oldham Hospital) அரும்பணியாற்றி வருகிறார். தான் பணியாற்றும் இடர்நல மருத்துவத்துறையின் சிறந்த சிகிச்சை முறைகள் யாவையும் அத்துறையில் பணிபுரியும் மருத்துவர்கள் தங்களுக்குள் பகிர்ந்துகொண்டால் மருத்துவத்துறை பயன்பெறும் என்ற நோக்கில் 2004 ஆண்டில் தனது சொந்த முயற்சியில் ஒருநாள் கருத்தரங்கு (Annual Critical Care Symposium) ஒன்றை நடத்தினார். அதற்குக் கிடைத்த வரவேற்பின் காரணமாக தொடர்ந்து கருத்தரங்கு நிகழ்ச்சிகளை இருநாட்களுக்கு விரிவுபடுத்தி இன்று வரை கருத்தரங்கங்களை நடத்தி வருகிறார். முதலில் சிறு முயற்சியாகத் துவக்கப்பட்ட கருத்தரங்கங்கள் நல்ல வரவேற்பு பெற்று, பத்தாவது கருத்தரங்கில் உலகளாவிய மருத்துவர்கள் பங்குபெறும் கருத்தரங்காக, அதில் 425 மருத்துவர்களும், 50 வல்லுநர்களும் கலந்துகொள்ளும் அளவிற்கு வளர்ச்சி பெற்றது. இந்தக் கருத்தரங்கை 2010 ஆம் ஆண்டில் வீரப்பன் சென்னையில் கூட்டினார். இவ்வாறு நடத்தப்படும் கருத்தரங்கங்கள் நடத்தும் செலவிற்குப் போக மிஞ்சிய தொகையை தான் பணிசெய்யும் ஓல்தாம் மருத்துவமனைக்குத் தனது நன்கொடையாகவும் அளித்துள்ளார். இவரது கல்விநோக்கம் கொண்ட இடர்நல மருத்துவக் கருத்தரங்கங்கள் நடத்தும் முயற்சியைப் பாராட்டி, 2013-இல் பிரிட்டனின் தீவிர சிகிச்சை மருத்துவக்கழகம் இவருக்கு “சிறப்புமிகு உறுப்பினர்” (Distinguished Member of the Intensive Care Society of UK) என்ற விருது வழங்கியது. இதுவரை இந்த விருது 2006-ஆம் ஆண்டு வரை 11 உறுப்பினர்களுக்கு மட்டுமே வழங்கப்பட்டது என்பதும், பிறகு 7 ஆண்டுகளுக்குப்பின் வீரப்பன் அவர்களுக்கு வழங்கப்பட்டது என்பது இவரது சிறப்பிற்குச் சான்று. மருத்துவத் துறையில் பயிற்சியாளர் என்ற அனுபவத்தில் இக்கால மருத்துவத் துறை மாணவர்களுக்கு அவர் வழங்கும் அறிவுரைகள்: தொழில் நுட்பத்தையும் மின்னணுக் கருவிகளின் முடிவுகளையும் அடிப்படையாகக் கொண்டு செய்யும் மருத்துவத்தைத் தவிர்த்து, நோயாளியின் உடற்பரிசோதனைக்கு முக்கியத்துவம் கொடுத்து அச்சோதனை முடிவிற்கேற்ப மருத்துவம் செய்ய வேண்டும் நோயாளி உங்கள் உறவினர் என்ற கோணத்தில் அவரை அணுகி மருத்துவம் செய்ய வேண்டும் சட்டம் சார்ந்த மருத்துவ ஆய்வுகளைச் செய்வது சிறந்தது என்ற எண்ணத்தையும், தற்கால தொழில்நுட்பம் வழங்கும் கருவிகளைப் பயன்படுத்தி வழங்கும் மருத்துவமே சிறந்தது என்ற எண்ணத்தைக் கைவிடுதல் நல்லது இடர்நல மருத்துவக்கல்வியை முன்னிட்டு மருத்துவத்துறையில் சீர்மையாளராகப் (Vocational Excellence) பணியாற்றிவரும் வீரப்பன் அவர்கள் மேலும் வெற்றிகரமாகச் சாதனை பல செய்ய வாழ்த்துகள். October 20, 2014 வெ. திவாகர் [] அக்டோபர் 11, 2014 அன்று 195 கி.மீ. வேகத்தில் வீசிய ‘ஹூட் ஹூட்’ புயல், ஆந்திர மாநிலத்தின் துறைமுக நகரமான விசாகப்பட்டினத்தில் கரையைக் கடந்து நகரை சூறையாடியதுடனல்லாமல் அதன் காரணமாக ஆறு பேர் உயிரிழக்கவும் நேரிட்டது. இவ்வாறு அடுத்த வீட்டு ஆந்திராவை அலங்கோலமாக்கிய புயலை, விசாகையில் வசிக்கும் திரு. திவாகர் அவர்கள் அந்தப் பேரிடரிலும் தனது சிரமத்தைப் பொருட்படுத்தாது பாதிக்கப்பட்ட குடிமக்களுள் ஒருவராக பொதுமக்கள் கோணத்தில் தொகுத்து வழங்கியாவர். நாடகக் கலைஞரும், எழுத்தாளருமான திரு. திவாகர், வல்லமை மின்னிதழின் இது போன்று வல்லமையாளரைத் தெரிவு செய்து, வல்லமையாளர் விருதினை அறிவித்து, அந்த வல்லமையாளரைப் பாராட்டும் பணியில் எனது முன்னோடி. இவர் தனது பங்காக ஒரு நூறு வல்லமையாளர்களை எனக்கும் முன் தேர்ந்தெடுத்துப் பாராட்டி மகிழ்ந்தவர். அடுத்தவர்களைப் பாராட்டி ஊக்குவிக்கும் செயலை மேற்கொண்ட சிறந்த வல்லமையாளர்களில் ஒருவரான திவாகர், அப்பணியின் காரணமாகவே காலந்தாழ்த்தி இப்பொழுது வல்லமையாளராகப் பாராட்டப்படும் ஒரு நிலை ஏற்பட்டிருக்கிறது. விசாகப்பட்டினத்தில் பல ஆண்டுகளாக வாழ்ந்துவரும் திவாகர் ஆந்திராவைக் குறிப்பிடும் பொழுது அடுத்தவீடு என்றே குறிப்பிடுவார். “அடுத்த வீடு – நம் தமிழகத்தின் அடுத்த வீடு இந்த ஆந்திரதேசம்தானே… ஆந்திரதேசத்தில் என்னுடைய அனுபவங்களை உங்களோடு பகிர்ந்துகொள்கிறேன்…” என்று ஆந்திர அனுபவங்களை “அடுத்தவீடு” என்ற வலைப்பூவில் பதிவு செய்து வருகிறார். தமிழ்மக்களுக்கு ஒரு நேர்முக வர்ணனையாளர் போன்று ஆந்திர செய்திகளை ஆறு ஆண்டுகளாகப் பகிர்ந்து வந்திருக்கிறார் திவாகர். “ஆந்திரப்பிரதேசம் ஆத்திரப்பிரதேசமாக மாறியது ஏனோ” என்று ஆந்திரம்-தெலுங்கான பிரிவினைக்கு முன்னிருந்தே ஆந்திரா தெலுங்கானா சர்ச்சைகளை “அடுத்த வீட்டு ஆந்திராவை இப்போது ரணகளமாக்கும் தெலுங்கானா பிரச்சினை” எனக் கடந்த ஐந்தாண்டுகளாகப் பதிவு செய்து வந்திருக்கிறார். மார்கழியில் ஆந்திராவில் எங்குப் பார்த்தாலும் திருப்பாவை தமிழில் ஒலிப்பது, ஆந்திர மாநிலக் கோயில்கள், திருப்பதி பிரசாதம் – பங்கு விற்பனை, காளஹத்தி கோயில் தலைவாசல் கோபுரம் சுக்கு நூறாக இடிந்து விழுந்த காட்சி, தெலுங்கு எழுத்தாளர்கள் பற்றி, ஆந்திர உணவு, விசாகப்பட்டின தமிழ்ச்சங்க நடவடிக்கைகள் எனப் பல தகவல்களை இதுவரை பகிர்ந்து வந்திருக்கிறார். அவ்வாறு இதுவரை பதிவு செய்து வந்த அவரது அனைத்து அடுத்த வீட்டுப் பதிவுகளையும் ஒப்பிடும்பொழுது ஹூட் ஹூட் புயலினால் ஏற்பட்ட அழிவை விவரிப்பது அவருக்கு மிகவும் வேதனை தரும் நிகழ்வாக இருந்திருக்கும் என்பதில் எந்த ஐயமும் இல்லை. இருப்பினும் தனது நேரடி அனுபவங்களை அவருடைய “அடுத்த வீட்டில் ஏற்பட்ட அலங்கோலங்களை” “ஹூட் ஹூட் புயலின் தாண்டவம் – ஒரு நேரடி அனுபவம்” என்று தமிழ் வெப்துனியா செய்தித் தளத்திலும், கூகுள் தமிழ்க் குழுமங்களிலும் அவர் பகிர்ந்து கொண்டது தொழில்முறை செய்தியாளர்களையும் பின்னுக்குத் தள்ளிய செயலாகும். மிகச் சிறந்த எழுத்தாளரான திவாகரைப் பலர் வரலாற்றுப் புதினங்கள் எழுதுபவராகவும் நன்கறிவர். கடைக்கோடி வடக்கு ஆந்திரத்தைத் தளமாகக் கொண்டு தமிழர் புகழ் சொல்லும் வரலாற்றுப் புதினம் “வம்சதாரா” இவர் எழுதிய முதல் வரலாற்று நூல். தொடர்ந்து, சென்னை பழனியப்பா பிரதர்ஸ் பதிப்பகத்தினரால் வெளியிடப்பட்ட “திருமலைத் திருடன்” என்ற பதினொன்றாம் நூற்றாண்டு சம்பந்தப்பட்ட வரலாற்றுப் புதினம், மதராசப்பட்டினத்தில் குண்டு வீசிய எம்டன் கப்பல் நிகழ்வை அடிப்படையாகக் கொண்டு “எஸ். எம். எஸ் எம்டன் 22-09-1914” என்ற வரலாற்று நூல், “விசித்திர சித்தன்”, “தேவன் நூறு”, “நம்ம ஆழ்வார் நம்மாழ்வார்”, “ஆனந்த விநாயகர்” என்ற தெலுங்கில் இருந்து மொழி பெயர்க்கப்பட்ட நூல், சோழ மன்னன் குலோத்துங்கனின் காலக் கதையான “அம்ருதா” என்ற சமீபத்திய வரலாற்று நூல் வரை பலநூல்களை வெளியிட்டுள்ளார். திவாகரின் தமிழ்ப்பணி இலக்கியப்படைப்புகள் என்ற வட்டத்தில் அடங்கியதல்ல. அவர் தேவாரத்தை தெலுங்கில் மொழிபெயர்க்கும் பணியிலும் ஈடுபட்டுள்ளார். விசாகப்பட்டினத்தின் தமிழ்ச்சங்கத்தின் செயலாளராகவும் பதினைந்து ஆண்டுகளுக்கும் மேலாகத் தொண்டாற்றி வருகிறார். அங்குத் தமிழ்ச்சங்கத்தில் வள்ளுவர் சிலை நிறுவிய பணியிலும் பெரும் பங்காற்றினார். “வெளியூரில் தமிழ்ச்சங்கம் வைத்து அதைச் சரியாக வளர்ப்பது எப்படி ?… இப்படி யாராவது கேள்வி கேட்டால் பதில் சொல்ல நான் உடனே பள்ளி மாணவன் கையை தூக்குவது போல தூக்கி விடுவேன்” என்று நகைச்சுவையாகத் தனது தமிழ்ச்சங்க பணிகள் பற்றியும் குறிப்பிடுகிறார் திவாகர். உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டுக்கு ஆய்வுக்கட்டுரை வாசிக்க அழைப்பு வந்த பொழுது இவர் வாசித்த “தமிழும் இந்திய தமிழ்ச்சங்கங்களும்“ என்ற ஆய்வுக்கட்டுரை நல்ல பல ஆலோசனைகளை முன் வைத்தது. அக்கட்டுரையின் முக்கியக் கருத்துகள் சுருக்கமாகக் கீழே வழங்கப்பட்டுள்ளது: “ […] இன்று இந்திய மாநிலங்களின் அனைத்து முக்கிய நகரங்களிலும் தமிழ்ச்சங்கங்கள் இயங்கிக் கொண்டுதான் இருக்கின்றன. தமிழ்ச்சங்கங்களின் தலையாயப்பணி நிச்சயமாக தமிழைப் பேணிப்பாதுகாப்பதில்தான் இருக்கவேண்டும். இதனை இங்கே தயங்காது ஏன் கூறுகிறேன் என்றால் பல தமிழ்ச்சங்கங்களின் தற்போதைய நிலையை நன்கு அறிந்தவன் நான். அந்தத் தமிழ்ச்சங்கங்கள் தொடர்ந்து நடத்தப்பட வேண்டுமானால் திரைப்படம் சம்பந்தப்பட்ட நிகழ்ச்சிகளோ, பிரபலங்களின் பாடல் கச்சேரிகளோ அல்லது கூத்தாட்டங்களும், குதியாட்டங்களும் நிறைந்த பொழுது போக்கு நிகழ்ச்சிகளோ நடத்தப்படவேண்டிய காலகட்டத்தில் உள்ளனர் சங்க நிர்வாகிகள். தமிழ் மக்களுக்கு எழுச்சி ஊட்டும் நிகழ்ச்சிகள் கேளிக்கை நிகழ்ச்சிகள் மட்டுமே என்ற சூழ்நிலை உள்ள காலகட்டமிது. அதனால் இந்தக் கேளிக்கை நிகழ்ச்சிகள் அனைத்தும் அதிக அளவில் நடத்தப்படுகிறது. இந்தக் கேளிக்கை நிகழ்ச்சிகளை ஒரேயடியாகக் குறைக்காமல் மெல்ல மெல்ல நம் மக்களுக்குத் தமிழில் ஆர்வம் காட்டும் விஷயங்களாக நிகழ்ச்சிகளை அவர்கள் முன் எடுத்துச் செல்லவேண்டும். […] இந்தத் தமிழ்ச்சங்கங்களுக்குத் தாயக தமிழகத்தில் அரசு தகுந்த அங்கீகாரம் அளிக்கவேண்டும். தாயகத் தமிழகத்தில் தமிழ்ச்சங்க ஆணையம் ஒன்று நிறுவப்படவேண்டும். இந்த ஆணையத்தின் கீழ் ஆங்காங்கே பதிவுசெய்யப்பட்ட தமிழ்ச்சங்கங்கள் அங்கத்தினராகி தமிழக அரசின் உதவியோடு செயல்படும்போது, அதுவும் தமிழுக்காக செயல்படும்போது நம் தமிழன்னை நம்மை எப்போதும் வாழ்த்திக் கொண்டே இருப்பாள்.[ http://www.aduththaveedu.blogspot.com/2010/06/blog-post.html]” கவியரங்கில் பங்கு கொண்டு கவிதை வாசிக்கும் திவாகர் ஒரு கவிஞரும் கூட, பிடுங்கப்பட்ட எனது பல் என்னைப் பார்த்து முறையிட்டுக் கேட்ட கேள்விதான் இது என்று விளக்கமுறைத்து “பிரிவு நிரந்தரமே” என்று இவர் வழங்கிய இவரது கவிதையில் ஒரு பகுதி … ஒன்றா இரண்டா ஐம்பது வருட பந்தம் உன்னோடு என் உறவு இனியும் வேண்டுமோ எப்படியெல்லாம் இருந்தோம் எண்ணிப்பார்க்கிறேன் நான் அழுகை வருகிறது எனக்கு அன்பான அந்தக் காலகட்டம் இந்த நகைச்சுவைக் கவிதையைப் போன்றே, இவரது தொலைபேசி உரையாடல் வழி நிகழ்வுகளை விவரிக்கும் நகைச்சுவைக் கதைகளும் திவாகரின் எழுத்தின் மற்றொரு பரிமாணத்தைக் காட்டும். வரலாற்று நூல், வலைப்பதிவுகள், நகைச்சுவை, கதைகள், கட்டுரைகள், மொழிபெயர்ப்புகள், தமிழ்ச்சங்கப் பணிகள் எனத் தமிழுக்கு இவர் ஆற்றிவரும் பங்களிப்புகள் பாராட்டப்பட வேண்டியவை. October 27, 2014 இன்னம்பூரான் [] சங்ககால தமிழின் பெருமைகளை நாமும் உணர்ந்து நமது இளைய தலைமுறைக்கும் தமிழின் தொன்மையை, அதன் மகிமையை எடுத்துக் கூறும் பொருட்டு, சிட்னி தமிழ் இலக்கிய கலை மன்றம் , நடத்திய சிட்னியின் சங்கத் தமிழ் மாநாட்டில் “சங்கத்தமிழ் மூன்றும் தா !” என்ற கட்டுரையை வழங்கியுள்ளார் திரு. இன்னம்பூரான். தஞ்சை மாவட்டத்தில் கும்பகோணம் அருகில் உள்ள இன்னம்பூர் என்ற கிராமத்தில் பிறந்த சௌந்தரராஜன் ஸ்ரீனிவாசா என்ற இவர், இன்னம்பூரான் என்ற புனைப்பெயரில் இணையத்தில் தொடர்ந்து தனது 80 ஆவது அகவையிலும் எழுதி வரும் எழுத்தாளர். அவற்றில் குறிப்பிடத்தக்க, சிறப்பு வாய்ந்த கட்டுரைத் தொடர்கள் சில: தணிக்கை என்றொரு முட்டுக்கட்டை, கனம் கோர்ட்டார் அவர்களே, நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம், ககன சாரிகை, நீயும் நானும் விஞ்ஞானமும், என்னத்தைச் சொல்ல! போன்றவையாகும். பெரும்பான்மையான இவர் கட்டுரைகளின் பின்னணி அரசின் நடவடிக்கைகளை ஆராய்வதாகவும், குறை கண்ட இடத்து விமர்சிப்பதாகவும் அமைவதற்கு அவராற்றிய அரசுப்பணியின் பின்புலமே காரணம். திரு. இன்னம்பூரான் இந்தியத் தணிக்கைத் துறையின் துணைத் தலைவராக இருந்து ஓய்வு பெற்றவர். அந்த அடிப்படையில் அரசின் தணிக்கைத்துறையின் நடவடிக்கைகள், ஊழல் கண்டவிடத்து அரசு மேற்கொண்ட நடவடிக்கைகளின் பின்னணி, அவற்றையொட்டி நீதிமன்றம் வழங்கிய தீர்ப்புகளின் முக்கியத்துவம் போன்றவற்றை ஆராய்வதாகவும், அரசு மேற்கொள்ளும் மெத்தனமான நடவடிக்கைகளைக் கண்டிப்பது, அரசு நிதியறிக்கைகளை ஆக்கப்பூர்வமாக அலசுவதாகவும் பல கோணங்களில் கட்டுரைகள் எழுதியுள்ளார்.இணையத்தில் மட்டுமின்றி தினமலரின் உரத்த சிந்தனை பகுதியில், “உயிர் பெறுமா நீதியின் குரல்” என்ற கட்டுரையையும், தமிழ் வெப்துனியா செய்தித் தளத்தின் “கருத்துக்களம்” பகுதியிலும் எழுதிவருகிறார். தமிழின் மீது தணியாத ஆர்வம் கொண்டவர் திரு. இன்னம்பூரான். இவரது தமிழார்வத்தின் காரணமாகத் தமிழிற்கான மிக முக்கியப் பணிகளாக இவர் கருதி இன்றும் தொடர்வது, அரிய பழந்தமிழ் நூல்களை மின்னாக்கம் செய்து அவற்றை அடுத்த தலைமுறையினரும் பயனுறச் சேமிப்பதும், இளைய தலைமுறையினரின் கல்விக்காக இணையவழி கல்வித் தொடர்புடைய நடவடிக்கைகளை மேற்கொள்வதுமாகும். தமிழ் மரபு அறக்கட்டளையுடன் இணைந்து நூல் மின்னாக்கங்கள் செய்வதையும், “அன்றொரு நாள்” என்ற வரலாற்று நிகழ்வின் தொகுப்புகளை எழுதுவதையும் தொடர்ந்து வருகிறார். அத்துடன், தனது வலைப்பூவிலும் தனது கருத்துக்களைப் பதிவு செய்து வருகிறார். ஓய்வு பெற்றபின் நிர்வாக மேல்நிலைக் கல்வி மையங்களில் பணி செய்வதும், அரசு தொடர்பான ஆலோசனைகளில் பங்கு பெறுவதும் என மற்ற பிற பொதுத்தொண்டுகள் ஆற்றி வரும் திரு. இன்னம்பூரான் மத்திய அரசின் பணி தேர்வாணையத்தின் ‘இந்தியஅரசின் ஆட்சி நிர்வாகப் பணி’ (ஐ.ஏ.எஸ்.) தேர்வுகளின் இறுதிநிலை நேர்காணல் குழுவின் அங்கத்தினராகப் பணியாற்றி அந்த அனுபவமும் பெற்றவர். இவர் நேர்காணல் பயிற்சி அளித்த மாணவர் சிலர் ஐ.ஏ.எஸ். தேர்விலும் வெற்றி பெற்றுள்ளார்கள். அழகப்பா பல்கலைக் கழகத்தின் அழைப்பினை ஏற்றுக்கொண்டு, இந்திய அரசின் ஆட்சி நிர்வாகப் பணி தேர்வு பற்றி அப்பல்கலைக்கழக மாணவர்களுக்கான கலந்தாலோசனை நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளார். மேலும், இத்தகவல்கள் மாணவர்களுக்குப் பயன் தரும் என்ற நோக்கில், “ஐ. ஏ. எஸ். தேர்வில் வெற்றி பெறுவது எப்படி?” என்ற நூலை பழனியப்பா பிரதர்ஸ் பதிப்பகம் வழி வெளியிட்டுள்ளார். இது ஐ. ஏ.எஸ். தேர்வு எழுதுபவர்களுக்கு உதவும் நோக்கில் தகவல்கள் வழங்கும் ஒரு கையேடு. எண்பது வயதைக் கடந்தாலும் இன்றும் கற்பதிலும், தமிழ் மீது கொண்ட தீராத ஆர்வம் காரணமாக திரு. இன்னம்பூரான் தமிழில் இளங்கலை பட்டப்படிப்பையும் முடித்து, முதுகலைப் பட்ட மேற்படிப்பு, தமிழில் முனைவர் பட்டம் என்ற இலக்குகளை நிர்ணயித்து முன்னேறிக் கொண்டிருக்கிறார். “சங்கத்தமிழ் மூன்றும் தா” என்ற கட்டுரையை சிட்னி தமிழ் மாநாட்டிற்கு வழங்க இவர் எடுத்துக்கொண்ட ஆர்வத்தின் மூலம் மனதிற்கு வயது இல்லை என்று நிரூபித்துள்ளார். உற்சாகத்துடன் செயலாற்றி இளைய தலைமுறையினருக்கு முன் மாதிரியாகத் திகழும் திரு. இன்னம்பூரான் அவர்கள் பாராட்டுதலுக்குரியவர். November 3, 2014 ஆர்த்தி பிரபாகர் [] தொழில் நுட்பத்தில் உலக சாதனையாக மிக விரைவாகச் செயலாற்றும் மின்னணு மைக்ரோச்சிப் ( the fastest microchip ever made) உருவாக்கப்பட்டதற்கான கின்னஸ் விருது அக்டோபர் 28, 2014 அன்று வழங்கப்பட்டது. இத்தகைய தொழில்நுட்ப வளர்ச்சித் திட்டத்திற்குக் காரணமான “முனைவர் ஆர்த்தி பிரபாகர்.” அமெரிக்க பாதுகாப்புத் துறையின் (United States Department of Defense) ஒரு பிரிவான, “பாதுகாப்பு மேம்பாட்டு ஆராய்ச்சி பணித்திட்டங்கள் முகமை” (Defense Advanced Research Projects Agency – DARPA) என்பது அமெரிக்க இராணுவத்தின் தொழில்நுட்ப மேம்பாட்டிற்காகத் துவக்கப்பட்ட ஓர் அமைப்பு. இது பெண்ட்டகானின் மிக முக்கிய ஆய்வுப்பிரிவு. அந்நாள் அமெரிக்க அதிபர் ஐசன்ஹோவரினால் 1958 இல் இராணுவத்தின் தொழில்நுட்ப வளர்ச்சிக்காக நிறுவப்பட்டது. Advanced Research Projects Agency (ARPA) என்று முன்னர் அழைக்கப்பட்ட இந்த நிறுவனமே இன்றைய உலகளாவிய இணையத் தொழில் நுட்ப வளர்ச்சிக்கும், தொலைத்தொடர்பு தகவல் பரிமாற்ற வளர்ச்சிக்கும் மூல காரணமாகும். கடந்த இரண்டாண்டுகளாக இந்த ‘டார்ப்பா’ நிறுவனத்தின் தலைமைப் பொறுப்பை ஏற்று இருப்பவர் ஆர்த்தி பிரபாகர் (Arati Prabhakar). தனது ஐம்பத்தைந்து அகவையில் தொழில்நுட்பத்தில் ‘கின்னஸ்’ சாதனைக்குக் காரணமான ஆர்த்தி, மூன்றாவது வயதில் அவரது பிறப்பிடமான டெல்லியில் இருந்து இவரது அன்னையின் மேற்படிப்பின் பொருட்டு பெற்றோருடன் அமெரிக்காவிற்குக் குடி பெயர்ந்தார். இவரது அன்னை கொடுத்த ஊக்கத்தின் காரணமாக இளம் வயதிலேயே பொறியியல் படிப்பையும், முனைவர் படிப்பையும் முடித்தார். அமெரிக்காவின் புகழ்பெற்ற ‘கால்டெக்’ (California Institute of Technology – Caltech) தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தில் செயல்முறை இயற்பியலில் (applied physics) முனைவர் பட்டம் பெற்ற முதல் பெண்மணி என்ற பெருமை இவருக்குண்டு. இது போன்ற பல “முதன்முதல் சாதனை” என்ற பெருமைகளை ஆர்த்தி நிகழ்த்தியிருக்கிறார். இவர் தனது 34 வயது முதலாகவே பல பெரிய அமெரிக்க தொழில் நுட்ப நிறுவனங்களின் (National Institute of Standards and Technology (NIST), U.S. Venture Partners, Raychem போன்றவற்றில் ) தலைமைப் பொறுப்புகளை ஏற்கத் துவங்கியவர். NIST நிறுவனத்தின் தலைமைப் பொறுப்பு வகித்த முதல் பெண்மணியும் இவரே, அத்துடன் டார்ப்பாவின் முதல் இந்திய வம்சாவளிப் பின்னணியைக் கொண்ட தலைவரும் ஆர்த்திதான். டார்ப்பாவின் தொழில்நுட்ப வளர்ச்சிக்காக ஒதுக்கப்படும் ஓராண்டு நிதியான ஏறத்தாழ 3 பில்லியன் டாலர்கள் ஆர்த்தியின் நிர்வாக முடிவின் கட்டுப்பாட்டில்தான் இருந்துவருகிறது. ஐந்தாண்டுகளாக முயற்சி செய்து உருவாக்கப்பட்டு, புதிய கின்னஸ் சாதனை விருதுக்குக் காரணமான இந்தப் புதிய மின்னணு நுண்சில்லின் ஒருங்கிணைந்த மின்சுற்று அமைப்பானது, மின்சமிக்கைகளைப் பெருக்கி ஒரு வினாடிக்கு ஒரு டிரில்லியன் சுழற்சி (அல்லது ஒரு டெஹ்ராஹரட்ஸ்) என்ற முறையில் விரைவுபடுத்துகிறது (the new microchip, or integrated circuit, is a type of “amplifier” for signals, and operates at 1 trillion cycles per second, or 1 terahertz). இந்த விரைவான செயல்திறன் கொண்ட மின்னணு நுண்சில்லு, இரண்டாண்டுகளுக்கு முன்னர் உருவாக்கப்பட்ட மின்னணு நுண்சில்லின் 150 பில்லியன் சுழற்சிகள் கொண்ட 850 கிகாஹர்ட்ஸ் திறன் என்னும் சாதனையை முறியடித்துள்ளது. இதன் விரைவுத் திறனை சராசரி மக்களும் புரிந்து கொள்ள வேண்டுமென்றால், ஒரு ஊர்தியில் மணிக்கு 32,000 மைல் வேகத்தில் பயணம் செய்வதற்கு ஒப்பான வேகம் எவ்வாறிருக்கும் என ஒப்பிட்டு அறியலாம். ஒரு குண்டூசியின் தலையளவே உள்ள மிக நுண்ணிய, அதிகத் திறன் கொண்ட புதிய மின்னணு நுண்சில்லுகள், மிக விரைவான தகவல் தொலைத் தொடர்பிலும், மிகநுண்ணிய தெளிவான படங்களை உருவாக்குவதிலும், மிகத் துல்லியமான கணினித் திரைகளை தயாரிப்பதிலும், நச்சுப்பொருட்களையும், வெடிமருந்துகளையும் கண்டறியும் கருவிகளின் செயல்திறனிலும், மருத்துவச் சிகிச்சை முறைகளிலும் குறிப்பிடத்தக்க மாற்றங்களை ஏற்படுத்தும். உலகின் புகழ்பெற்ற ஆய்வு நிறுவனத்தை திறம்பட நிருவகிப்பதுடன், தொழில்நுட்பத்தில் கின்னஸ் விருது பெற்று சாதனை நிகழ்த்தியுள்ள திட்டத்தின் முக்கியப் பங்களிப்பாளரான முனைவர் ஆர்த்தி பிரபாகர் ஒரு சிறந்த வல்லமையாளர். November 10, 2014 சீதாலட்சுமி [] சமூகநல சேவகியாகத் தமிழக அரசில் முப்பத்துநான்கு ஆண்டுகள் பணியாற்றி, துணை இயக்குநர் பதவியில் இருக்கும் பொழுது ஓய்வு பெற்றவர் திருமதி சீதாலட்சுமி சுப்பிரமணியன் (Seethaalakshmi Subramanian) அவர்கள். அவரை அறிந்தவர்களால் சீதாம்மா என்று அன்புடன் அழைக்கப்படுபவர். முற்போக்கு சிந்தனைகளும் கொள்கைகளும் கொண்ட சீதாம்மா பெண்களின் உரிமைக்காகவும், குழந்தைகள் நலனுக்காகவும் சமூகப்பணியாற்றியவர். இவரது எழுத்துக்களும், பணிகளும் சமுதாய நலனில் அக்கறை கொண்டவையாக இருப்பதுடன் தன்னை சமூகசேவகி என்று அடையாளம் காணுவதில் பெருமையும் மகிழ்ச்சியும் கொள்பவர். சுவாமி சிவானந்த மகரிஷியின் வழிகாட்டுதலில் சமுதாயத்திற்கு சேவை செய்ய முடிவெடுத்த சீதாம்மா அவர்கள் கலப்புத்திருமணம், காதல் திருமணம் போன்றவற்றின் நெடுநாள் ஆதரவாளர். குழந்தை கருவில் உருவாவது முதல் ஆறு வயது வரை அதன் வளர்ச்சிகள் பற்றிய சிறப்புக்கல்வியும் பயிற்சியும் பெற்றவரான சீதாம்மா, தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் சமூகசேவகியாகப் பணியாற்றி இருக்கிறார். நான்கு ஆண்டுகள் ஓர் பன்னாட்டு அமைப்பில் ஆசிய நாட்டுப் பிரதிநிதியாகவும் இருந்துள்ளார், சமூகப்பணியின் பொருட்டு உலகவங்கித் திட்டங்களில் பணியாற்றி இருக்கிறார். தமிழின் மீது கொண்ட தணியாத ஆர்வம் காரணமாக, வேலையில் ஊதியமில்லாமல் தற்காலிக விடுப்பெடுத்து அவரது நாற்பதாவது வயதிலும் கல்லூரியில் சேர்ந்து தமிழ் முதுகலைப் பட்டம் பெற்றவர். பணியிலும் எழுத்திலும் இவரது கவனம் சமுதாயத்தின் மேல் இருப்பதால் இவருடைய ஆய்வுகள், “பெண்” மற்றும் “சமுதாயம்” இவற்றைப் பற்றியதாகவே இருந்து வருகிறது. இதன் காரணமாக “பாரதிகண்ட புதுமைப் பெண்” என்று மறைந்த பெண்ணிய எழுத்தாளர் ராஜம் கிருஷ்ணனால் அன்புடன் அழைக்கப்பட்டவர். இந்தப் புதுமைப் பெண்ணும் பாரதி பிறந்த எட்டயபுரத்தில் பிறந்து, பாரதி படித்த பள்ளி அதே பள்ளியிலும் படித்து, பாரதி வாழ்ந்த வீட்டிலும் சிறிது காலம் வாழ்ந்தவர் என்பது ஒரு வியப்பைத் தரும் ஒற்றுமை. அக்காலச் சூழலில் பாரதி ஊரில் உயர்நிலைப் பள்ளிப் படிப்பு முடித்த முதல் பெண்ணும், கல்லூரிப்பட்டம் பெற்ற முதல் பெண்ணும் சீதாம்மாவே. எழுதப்படிக்கத் தெரிந்த நாள் முதலாய்ப் பத்திரிகைகள் புத்தகங்கள் படிப்பதுடன் நில்லாமல் அப்பொழுதே கதைகள், கவிதைகள் எழுதியுள்ளார். மரபுக் கவிதை எழுதக் கற்றுக் கொடுத்ததுடன் இவரைப் பத்திரிகை உலகுக்குச் செல்ல வைத்தவர் திரு. ருத்திர துளசிதாஸ். மனிதன் தன் எண்ணங்களைப் பதியச் செய்யும் இடமான பத்திரிக்கையும் பதிப்பகமும் இவருக்கு மிகவும் பிடித்தமான உலகம். சீதாம்மா 1958 ல் எழுத ஆரம்பித்தவர், தொடர்ந்து பல வாரப் பத்திரிக்கைகள், மாதப் பத்திரிக்கைகளில் எழுதியுள்ளார். இவரது 63 சிறுகதைகள் வாரப் பத்திரிக்கைகளிலும், மாதப் பத்திரிக்கைகளும் வெளிவந்துள்ளன. இரு புத்தகங்கள் வெளியிட்டதுடன், ஒரு சிறு கதைத் தொகுப்பினை நா. பார்த்தசாரதி உள்ளிட்ட மதுரை எழுத்தாளர்களுடனும் சேர்ந்து வெளியிட்டுள்ளார். ஆனந்த விகடனில் இவரது முத்திரைக்கதை வெளி வந்திருக்கின்றது. சீதாலட்சுமி என்ற பெயரில் பெரும்பாலான கதைகளும், சிறுகதைத் தொகுப்பும், வைதேகி என்ற பெயரில் சில கதைகளும், மேழிச்செல்வி என்ற பெயரில் இவரது கவிதைப் புத்தகமும் வெளிவந்துள்ளன. ஒரு வீட்டில் பெண் படித்திருந்தால் அந்த வீடே படிக்க ஆரம்பித்துவிடும். பெண்ணின் முன்னேற்றம் குடும்பத்தை, சமுதாயத்தைக் காக்கும்படியாக இருக்க வேண்டும். அவளையும் அழித்துக் கொண்டு குடும்பக் கோட்பாட்டையும் அழிப்பது பெண் விடுதலையல்ல. ஆணுக்குப் பெண் பினாமியாக இருக்கும் நிலையும் மாற வேண்டும். முதலில் பெண்ணுக்கு எதிரியாகப் பெண் வளர்வதும் சரியல்ல என்பது பெண்களின் உரிமையையும் முன்னேற்றத்தையும் பற்றி சீதாம்மா கொண்டிருக்கும் கொள்கை. இக்கருத்தை விளக்கும் வகையில் பெண்ணை முதன்மைப் படுத்தி சீதாம்மாவே கதை, வசனம் எழுதி, அவரே நாயகியாகவும் நடித்த நாடகம் கலைவாணர் அரங்கத்தில் அரங்கேறிய பொழுது, நிகழ்ச்சிக்கு வருகை தந்திருந்த கலைஞர் கருணாநிதி, “இவர் ஏன் அரசாங்கத்தில் வேலை பார்க்கவேண்டும் சினிமாவிற்குச் சென்றிருக்கவேண்டும்” என்று வியந்து பாராட்டி இருக்கிறார். தமிழக திரைப்பட வரலாற்றில் திருப்புமுனையை ஏற்படுத்திய “பராசக்தி” கதையை நாடகமாகவும், திரைப்படமாகவும் கதை வசனம் எழுதிய கலைஞர் இவர் நடிப்பைப் பார்த்து இவ்வாறு சொன்னது வசிஷ்டர் வாயால் பிரம்ம ரிஷி பட்டம் கிடைப்பது போன்ற பெருமை தரும் பாராட்டு. இன்றும் தொடர்ந்து இணையக் குழுமங்களிலும், திண்ணை போன்ற இணையப் பத்திரிக்கைகளிலும் எழுதி வருபவர் சீதாம்மா. எட்டயபுர வரலாறு, வரலாற்றுப் பயணம், சீதாம்மாவின் குறிப்பேடு, நினைவலைகள், எண்ணங்கள் ஊர்வலம், முத்தொள்ளாயிரம் – மலரும் நினைவுகள் என்று பல பதிவுகளை வெளியிட்டுள்ளார். காலங்கள் மாறுகின்றன ரசனைகள் மாறுகின்றன மனிதனின் வாழ்வு முறையும் மாறுகின்றன மாற்றங்களில் நீச்சல் அடிக்கின்றோம் சிலர் ஓட்டத்துடன் நீந்துகின்றனர் சிலர் எதிர் நீச்சல் போடுகின்றனர் மாறுதல்களைப் பார்த்து எழும் நெஞ்சக் கொதிப்பையும் காலம் ஆற்றிவிடும் இதுதான் வாழ்க்கை என்று வாழ்வின் யதார்த்தத்தை அழகாகக் குறிப்பிடுகிறார் சீதாம்மா. என் குணங்களில் “தேடல்” உணர்வு அதிகம், அத்துடன் சமுதாயம் முதன்மையானது என்று கூறி ஓய்வு பெற்ற பிறகும் சமூக அக்கறையுடன் தனது எழுத்து மூலம் சமூகப்பணியைத் தொடர்ந்து அனைவருக்கும் முன்மாதிரியாகச் செயல்படும் சீதாம்மா மகளிருக்கு ஓர் நல்ல முன்மாதிரியாகத் திகழ்கிறார். November 17, 2014 கீதா இளங்கோவன் [] இயக்குநர் கீதா இளங்கோவன், பலராலும் பாராட்டப்பட்ட “மாதவிடாய்’’ என்ற ஆவணப்படத்தை முன்னர் 2012 ஆம் ஆண்டு வழங்கியவர். அந்தப் படம் பெற்ற வரவேற்பைக் கண்டு மேலும் பல சமுதாய நலன் கருத்துக்களைக் கொண்ட ஆவணப் படங்களை தொடர்ந்து வழங்குவதாக ஊக்கத்துடன் உறுதி அளித்தார். மாதவிடாய் படத்தைத் தொடர்ந்து அவர் உருவாக்கிய “நம்பிக்கை மனுஷிகள்’’ என்ற குறும்படத்தை நவம்பர் 22, 2014 அன்று ஃபேஸ்புக்கில் வெளியிட்டார். இந்தப் படமும் ஒரு சமூக அக்கறை கொண்ட படமே. “மஸ்குலார் டிஸ்ட்ரோபி” (தசைச்சிதைவு நோய்) என்றக் கொடிய நோயால் பாதிக்கப்பட்டவர்கள் வானவன் மாதேவி, இயல் இசை வல்லபி என்ற இரண்டு சகோதரிகள். இருப்பினும், தன்னம்பிக்கை நிறைந்த வாழ்வையும், நோயினால் துவண்டுவிடாது தங்களைப் போன்று பாதிக்கப்பட்டப் பிறருக்காக அறக்கட்டளை ஒன்றை அமைத்து அதன் மூலம் மருத்துவ உதவிகளுக்கு ஏற்பாடு செய்பவர்கள். பிறருக்கு உதவும் குறிக்கோள் கொண்ட அச்சகோதரிகளின் ஆக்கப்பூர்வமான வாழ்க்கை முறையைத் தொகுத்து குறும்படமாக்கியுள்ளார் இயக்குநர் கீதா இளங்கோவன். சென்னை சாஸ்திரி பவனில் உள்ள மத்திய பத்திரிக்கைத் தகவல் அலுவலகத்தில் ஊடகத் தகவல் அலுவலராகப் பணியாற்றும் கீதா இளங்கோவன் சமூகநல அக்கறை கொண்ட ஓர் இயக்குநர். இவரது குறும்பட வெளியீடுகள் அவரது சமூக அக்கறையைத் தெளிவு படுத்துகின்றன. கீதா இளங்கோவன் இயக்கிய சமூகச் சிந்தனைக் குறும்படங்கள்: [1] நம்பிக்கை மனுஷிகள் குறும்படம் (2014 வெளியீடு) http://youtu.be/svH7fYOOnE4 வானவன் மாதேவி, இயல் இசை வல்லபி என்னும் இரு சகோதரிகள் தசைச்சிதைவு என்ற கொடிய நோயினால் தாக்கப்பட்டவர்கள். தசை செல்களின் புரதத்தைக் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் மரபணுவில் ஏற்படும் கோளாற்றால் தசை நாளடைவில் தனது செயல்பாட்டை இழந்து விடும் நிலை ஏற்படுகிறது. இந்த நோயால் பாதிக்கப் பட்டவர்களுக்கு புதிய தசை செல்கள் உருவாக்கப்படாது, இருக்கும் தசைகளும் அழியும் நிலை ஏற்பட்டு நோய் உடலை உருக்குலைக்கிறது. மனிதர்களின் தன்னிச்சை செயல்களான நடமாடுதல், தனது செயல்களைத் தானே செய்தல் போன்றவற்றை முதலில் பாதிக்கும் இந்த நோய், காலப்போக்கில் மோசமடைந்து உயிர்வாழ உதவும் அனிச்சை செயல்களான சுவாசிக்கும் நுரையீரல்கள், இரத்த ஓட்டத்திற்குக் காரணமான இதயத் தசைகளின் நிலையையும் பாதித்து உயிரிழப்பில் முடிவடைகிறது. மரபணுக் கோளாற்றால் உருவாகும் இந்நோய்க்கு இன்று வரை மருத்துவம் இல்லை. தொடர்ந்த உடற்பயிற்சியினால் சிறிது காலம் நடமாட்டத்தை நீட்டிக்கலாம் என்பதே இன்றுவரை இந்நோயின் நிலை. மூத்த சகோதரி வானவன் மாதேவி ஐந்தாம் வகுப்பு படிக்கும் பொழுது முதலில் இந்த நோயினால் பாதிக்கப்பட்டார். தொடர்ந்து வந்த இரண்டு ஆண்டுகளில் இளைய சகோதரி இயல் இசை வல்லபியும் பாதிக்கப்பட்டார். நடப்பதற்கே சிரமப்படும் நிலையை அடைந்த சகோதரிகளிடமும், இவர்களது பெற்றோர்களிடமும் மருத்துவர்கள் நோயின் நிலையையும், சிகிச்சையால் நோயைத் தீர்க்க வழியில்லை என்பதையும் தெளிவாக எடுத்துரைத்துள்ளார்கள். இருப்பினும், நோயினால் மனம் தளராது தங்கள் பெற்றோரைத் தேற்றியதுடன், பத்தாம் வகுப்புவரை பள்ளி சென்று கல்வியை முடித்துள்ளார்கள் இந்தச் சகோதரிகள். பிறகு தனிப்பட்ட முறையில் ப்ளஸ் டூ மற்றும் அஞ்சல் வழியில் டிசிஏ படித்திருக்கிறார்கள். கொடிய நோயினால் மனம் துவண்டு விடாமல் தன்னம்பிக்கையுடன் போராடும் இந்தச் சகோதரிகள், தங்களைப் போன்றே தசைச்சிதைவு நோயினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவதற்காக “ஆதவ்” என்ற அறக்கட்டளையைத் துவக்கி அவர்களுக்கு இலவச மருத்துவச் சிகிச்சை அளித்து உதவி வருகிறார்கள். தற்பொழுது அவர்களது நோக்கம் தசைச்சிதைவு நோயாளிகளுக்காக மருத்துவமனை ஒன்றை அமைத்து சிகிச்சைக்கு வழி செய்வது. இந்தத் தளரா உள்ளம் கொண்ட சகோதரிகளின் தன்னம்பிக்கையையும் ஆக்கப்பூர்வமான பணிகளையும் கீதா இளங்கோவன் “நம்பிக்கை மனுஷிகள்” என்ற குறும்படமாக இயக்கி வெளியிட்டுள்ளார். இந்த ஆவணப்படம் சகோதரிகளைப் போன்று பாதிக்கப்பட்டவர்கள் தன்னம்பிக்கையுடன் வாழ்வை எதிர் கொள்ளவும், பொதுமக்களின் கவனத்தைக் கவர்ந்து அதன் மூலம் இச்சகோதரிகளின் அறக்கட்டளைக்கும், மருத்துவமனை அமைக்கும் நோக்கத்திற்கும் உதவும் என்ற நம்பிக்கையை அளிக்கிறது. அதற்கும் மேலாக, குறையற்ற ஆரோக்கியமான உடல் நிலையில் இருந்தாலும் வாழ்க்கையைப் போற்றத் தெரியாதவர்களின் அறிவுக் கண்களையும் இக்குறும்படம் திறக்கும் என்ற நம்பிக்கையை ஏற்படுத்துகிறது. [2] மாதவிடாய் குறும்படம் (2012 வெளியீடு) படத்தின் ஒரு சிறு பகுதி http://youtu.be/9JI_G7NuUR8 பெண்களின் உடலின் வளர்ச்சியில் ஒரு பகுதியாக, பருவமடைந்த பிறகு இயற்கையாக அவர்கள் எதிர்கொள்ளும் “மாதவிடாய்” எனப்படும் மாதாந்திர உதிரப்போக்கு என்பது பற்றிய ஒரு சரியான புரிதலின்றி, அதுவே பெண்களை ஒடுக்கி வைக்கும் செயலாக நம் நாட்டில் அமைந்துள்ளது. இந்த அறியாமையை, 40 மணித்துளிகளில் செய்தி தந்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் ஓர் ஆவணப்படமாக கீதா இளங்கோவன் தயாரித்தார். “இது ஆண்களுக்கான பெண்களின் படம்” என்ற அறிமுகத்துடன் வெளியாகி மக்களின் கவனத்தைக் கவர்ந்தது. பல சமூக நிலைகளில் இருந்து 50 க்கும் மேற்பட்ட பெண்கள் தங்கள் கருத்துக்களை அதில் பதிவு செய்தனர். மாதவிடாய் என்பது ஒரு விவாதத்திற்கு அப்பாற்பட்ட நிகழ்வாக, பெண்களுக்கு மாதவிடாய் காலத்தில் தக்க வசதியைச் செய்துதராமல், அவர்களை கீழ்மைப்படுத்தும் தீண்டாமை செயலாக மட்டுமே மக்கள் எண்ணியிருப்பதை அப்படம் வெளிக்கொணர்ந்தது. மாதவிடாய் தொடர்பான மூடநம்பிக்கைகளையும், அறியாமையையும் ஒழித்து பெண்கள் சுகாதார முறையில் மாதவிடாயை எதிர்கொள்ளப் பள்ளிகளில் பாலியல் கல்வி தேவை என்பது கீதா இளங்கோவன் அவர்களின் கருத்து. “பாலியல் கல்வி பாடத்திட்டத்தில் இணைக்கப்பட வேண்டும், பாலியல் உறவுகளை வகைப்படுத்துகின்ற கல்வியன்று பாலியல் கல்வி. மனித உடல் அமைப்பு, உடல் உறுப்புகள், உடலியல் மாற்றங்கள் குறித்து, ஆரோக்கியமான முறையில் கற்றுத் தரப்படும் அறிவியல் கல்வியே பாலியல் கல்வி. ஆண், பெண் இருபாலருக்கும் மிகவும் இன்றியமையாத கல்வி பாலியல் கல்வி” என்று கீதா இளங்கோவன் வலியுறுத்துகிறார். மேலும், “இந்த ஆவணப்படம், பெண் உலகின் சிரமங்களை, ஆண்கள் புரிந்துகொள்ள நிச்சயம் ஒரு கருவியாக இருக்கும்!” என்ற நம்பிக்கையும் தெரிவித்துள்ளார். [3] லிட்டில் ஸ்பேஸ் (2011 வெளியீடு) http://youtu.be/oiB6oeGb2t8 ‘லிட்டில் ஸ்பேஸ்’ என்ற மிகச்சிறிய படம் ஓர் ஐந்து மணித்துளிகள் கால அளவில் தொடர்வண்டி பயணத்தில் பயணிக்கும் மாற்றுத்திறனாளி மாணவன் ஒருவன் எதிர் கொள்ளும் நிகழ்வுகளைத் தொகுக்கிறது. இதில் கீதா இளங்கோவனும் நடித்துள்ளார். உரையாடல்களற்ற, இசைப் பின்னணியில் மாற்றுத்திறனாளிகளின் தேவையை எடுத்துரைக்கிறார். இப்படம் பல பரிசுகளையும், ஹைதராபாத்தில் நடந்த, உலக சிறுவர்களுக்கான படவிழாவிலும் திரையிடப்பட்ட சிறப்பையும் பெற்றது. ஊடகங்களினால் சமுதாயப் போக்கையே மாற்றியமைக்க முடியும் என்பது உலகறிந்த உண்மை. இதனை உணர்ந்து மக்கள் அறிந்து கொள்ள வேண்டியவற்றை, ஆனாலும் பெரும்பாலும் விவாதத்திற்கு அப்பாற்பட்டதாகக் கருதப்படும் செய்திகளைச் சிறப்பான குறும்படங்களாக உருவாக்கி மக்களின் கவனத்திற்குக் கொண்டு செல்லும் பணியைத் தொடர்ந்துவரும் இயக்குநர் கீதா இளங்கோவன் அவர்களைப் பாராட்டி அவரது அடுத்த வெளியீட்டை ஆவலுடன் எதிர்நோக்குவோம். November 24, 2014 எஸ். கணேசன் [] புதுக்கோட்டை ஆலங்குடியைச் சேர்ந்த மூத்த குடிமகனான சமூகசேவகர் திரு. எஸ்.கணேசன் அவர்கள் பிறர் துயர் கண்டு வருந்தும் உள்ளம் கொண்டவர். ஆனால் பரிதாபப்படுவதுடன் நிறுத்திவிடாமல் தொடர்ந்து சென்று துயர் களையும் நடவடிக்கையையும் எடுப்பதினால் இவர் மற்றவர்களில் இருந்து மாறுபட்டவராகவும் இருக்கிறார். நாற்பது ஆண்டுகளுக்கும் மேலாக அவருக்குச் சொந்தமான காரை இறந்தவர் உடலை மருத்துவமனையில் இருந்து வீடுகளுக்கு எடுத்துச் செல்லும் உதவிக்காகப் பயன்படுத்துகிறார். அதுவும் வாடகை வசூலிக்காமல் அவரே ஓட்டிச் சென்று உதவியும் வருகிறார். இவரால் இவ்வாறு உதவப்பட்ட இறந்தவரின் குடும்பங்கள் ஐயாயிரத்திற்கும் மேல். அத்துடன் ஆயிரக்கணக்கில் மருத்துவ உதவிகள் தேவையானவர்களும் இவரால் உதவப்பட்டு அவசர சிகிச்சை பெற்று உயிர் பிழைத்திருக்கிறார்கள். பிரசவங்களுக்கு இலவச சேவை, விபத்தில் சிக்குண்டோருக்கு அவசர உதவிகள் போன்றவை இந்த உதவிகளில் அடங்கும். பழைய இரும்பு வியாபாரத் தொழிலில் ஈடுபட்டிருந்த திரு. கணேசன் ஒருமுறை இறந்தவர்களின் உறவினர்கள் உடலை இல்லத்திற்குக் கொண்டு செல்ல வசதியின்றி ஒரு கைவண்டியில் வைத்து தள்ளிச் சென்றதைக் கண்டு மிகவும் வருந்தியிருக்கிறார். ஊரில் இருக்கும் வாடகை வண்டிகள் பிணத்தை அப்புறப்படுத்த உதவுவதில்லை. எனவே இவர் தனது இரும்பு வியாபாரத்தின் மூலம் சேமித்த பதினேழாயிரம் ரூபாய்களைக் கொண்டு கார் ஒன்று வாங்கி அவசரத் தேவைக்கு உதவுவதற்கு மட்டுமே அந்த காரைப் பயன்படுத்துவது என்றும், அதுவும் வாடகை வாங்காமல் உதவுவது என்ற லட்சியத்தைக் கொண்டார். இவரது வாடகைக் காரின் பதிவு எண் 515 என்பதால் ‘515’ கணேசன் என்று அழைக்கப்படலானார். இறந்தவர் உடலைக் கொண்டு செல்வதுடன், சிலமுறை அவரே குழிவெட்டி உடலை அடக்கம் செய்வது வரை உதவியும் இருக்கிறார். ஆனால் காசு மட்டும் வாங்குவதில்லை. ஒரு சிலர் டீசல் நிரப்பும் பொழுது அதற்கான தொகையைக் கொடுத்து உதவியதுண்டு என்கிறார் கணேசன். இவரது தொலைபேசி எண் புதுக்கோட்டை காவல் நிலையங்கள் அனைத்திலும் ‘அவசர உதவிக்கு உதவும் எண்’, என்ற குறிப்பில் உள்ளது. அவ்வாறு இவர் அவசர உதவிகள் வழங்கியதால் ஏறத்தாழ 2000 பேர் பிரசவநேர உதவிகள் பெற்றவர்களும், 1000 பேர் அவசர சிகிச்சையால் உயிர் பிழைத்தவர்களும் உள்ளனர். தனக்கென்று இதுவரை எந்த சொத்தும் சேர்க்காது தனது இரும்பு வியாபாரத்தில் ஈட்டும் தொகையைக் கொண்டே காரைப் பராமரிப்பதற்கு செலவழித்தும் வருகிறார். ‘இத்தகைய தொண்டு மனநிறைவை அளிப்பதால் இறக்கும்வரை இல்லாமையில் உள்ளவர்களுக்கு இவ்வாறே உதவுவேன், அதுவே மனதிற்கு மகிழ்ச்சி தருவது’ என்று கூறும் திரு.கணேசனின் தொண்டுள்ளதிற்கு வெறும் நன்றி மட்டும் கூறுவது ஏற்புடையதன்று, அவர் தொண்டுள்ளதிற்குப் பாராட்டுகள். December 1, 2014 அனுராதா கொய்ராலா [] “2014 ஆம் ஆண்டின் சமூகநீதிக்கான அன்னை தெரசா நினைவு உலகவிருது” (The Mother Teresa Memorial International Award for Social Justice 2014) வழங்கப்பட்டோரில் நேபாளத்தைச் சேர்ந்த அனுராதா கொய்ராலா (Anuradha Koirala) வும் ஒருவர். கடந்த இருபதாண்டுகளில் நேபாளத்தில் இருந்து இந்தியாவிற்கு பாலியல் தொழிலுக்காகக் கடத்தி வரப்பட்ட 12,000 த்திற்கும் மேற்பட்ட பெண்களையும் சிறுமிகளையும் மீட்டு அவர்களுக்கு மறுவாழ்வு அளிப்பதில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டவர் அனுராதா கொய்ராலா. அறுபத்தைந்து அகவையைத் தாண்டிய அனுராதா கொய்ராலா தனது இளமையில் வன்முறைகள் நிறைந்த மணவாழ்க்கையில் சிக்குண்டு துன்புற்று இறுதியாக அந்த வாழ்க்கையில் இருந்து தன்னை விடுவித்துக் கொண்டவர். தன்னைப் போன்றே குடும்ப வன்முறைகளால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு ஒரு தொண்டு நிறுவனம் அமைத்து உதவ முடிவு செய்தவர். இரண்டாந்தர குடிமக்களாக மதிப்பற்ற நிலையில் வாழும் நேபாள பெண்களுக்கும் சிறுமிகளுக்கும் வன்முறைகள் நிகழும் குடும்ப சூழ்நிலையில் இருந்து அடைக்கலம் தரும் தற்காலிகப் புகலிடம் ஒன்றினை வழங்குவது இவரது முதல் நோக்கம். அதற்காக நேபாளத்தின் காட்மண்ட் நகரில் அரசு சாரா மறுவாழ்வு மையமாக “மைத்தி நேபாள்” (Maiti Nepal) என்ற அமைப்பை நிறுவினார். மைத்தி என்றால் நேபாள மொழியில் “தாய்வீடு” என்பது பொருள். திக்கற்றப்பெண்களுக்கு உதவம் மையமாக வளர்ந்தது மைத்தி. அடுத்து பாலியல் தொழிலில் ஈடுபடுத்துவதற்காக பதின்மவயது சிறுமிகளும், இளம்பெண்களும் பணிவாய்ப்புகள் தருவதாக ஆசைகாட்டப்பட்டு, பொய்யுரைக்கப்பட்டு, ஏமாற்றப்பட்டு இந்தியாவிற்குக் கடத்தப்படுவதை அறிந்து மனிதர்களைக் கடத்தும் இந்தத் தொழிலை முறியடிக்க முனைந்தார். காவல்துறையின் உதவியுடன் பாலியல் தொழிற்கூடங்களில் இருந்து பெண்கள் அதிரடியுடன் மீட்கப்பட்டு மைத்தி அமைப்பிற்கு அழைத்து வரப்படுகிறார்கள். இந்திய நேபாள எல்லையில் குடிமக்கள் மற்றும் காவல்துறையின் உதவியுடன் எல்லை கண்காணித்தலிலும் மைத்தி தொண்டர்கள் பங்கேற்கிறார்கள். மீட்கப்படும் பெண்களை பெற்றோருடனும் குடும்பத்துடனும் இணைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. பாலியல் தொழிலில் தள்ளப்பட்ட பெண்களை பெரும்பாலும் அவர்கள் குடும்பமே நிராகரிக்கும் பொழுது கதியற்று மனமுடைந்த நிலையினை அடையும் பெண்களுக்கு உளவியல் மருத்துவ ஆலோசனைகள் வழங்கப்படுகின்றன. இவர்களில் சிலர் கைக்குழந்தைகளுடனும், கர்ப்பிணிகளாகவும் இருக்கும்பொழுது அவர்களுக்கு மருத்துவ உதவிகளும் வழங்கப்படுகின்றன. பாலியல் தொழில் காரணமாக எயிட்ஸ் நோயாலும் தாக்கப்பட்ட பெண்களுக்கு மருத்துவ உதவிகள் வழங்கப்படுகிறது. பொருளாதார நிலையில் தன்னிறைவு பெறுவதற்காகக் கைத்தொழிலும் கல்வியும் வழங்கப்படுகிறது. ஏமாற்றப்பட்ட பெண்களுக்காக சட்ட ஆலோசனையும், சட்ட உதவிகளும் வழங்கப்படுகின்றன. இவ்வாறு பல வகையிலும் உதவிகள் புரிந்து, தொழிலும், கல்வியும், மன ஆறுதலும் பெற்று வாழ்வதற்கு உதவும் மைத்தி அதன் பெயருக்கு ஏற்றார்போல, பாதிக்கப்பட்ட பெண்களுக்கு ஒரு தாய்வீடாகவே அமைகிறது . அனுராதா கொய்ராலாவின் தொண்டு மக்களின் கவனத்தைக் கவர்ந்ததால் சி. என். என். செய்தி நிறுவனத்தின் 2010 ஆண்டின் சிறந்த மனிதர்களில் ஒருவராக அனுராதா கொய்ராலா பரிந்துரைக்கப்பட்டார். சி. என். என். செய்தி நிறுவனம் இவரை அந்த ஆண்டின் சிறந்த மனிதராகத் தேர்வு செய்து பாராட்டி 25,000 அமெரிக்கன் டாலர் பரிசு வழங்கிய பொழுது இவரது சேவை நாடுகளில் எல்லைகளைக் கடந்து உலக அளவில் அறியப்பட்டது. அதைத் தொடர்ந்து அவரது சமூகப்பணிக்காக மேலும் நிதி உதவிகள் பல இடங்களில் இருந்தும், அமெரிக்க அரசிடம் இருந்து அரை மில்லியன் டாலர்களும் வழங்கப்பட்டன. தொடர்ந்து இவராற்றும் நற்பணிகள் தொடர்ந்து பாராட்டப்பட்டும் வருகின்றன. சி. என். என். வழங்கிய புகழ் பெற்ற விருது போன்றே இதுநாள் வரை முப்பதிற்கும் மேற்பட்ட அகிலவுலக அளவில் வழங்கப்பட்ட விருதுகளையும் பெற்றவர் அனுராதா கொய்ராலா. ஜெர்மனி 2007 ஆண்டு வழங்கிய “யூனிஃபெம் விருது” (German UNIFEM Prize 2007), “அரசி சோபியாவின் 2007 ஆம் ஆண்டிற்கான வெள்ளி விருது” (Queen Sofia Silver Medal Award 2007) மற்றும் “பீஸ் ஆபி வழங்கும் சமாதானப் பரிசும்”(The Peace Abbey, Courage of Conscience 2006) அவற்றில் குறிப்பிடத்தக்கன. 2014 ஆம் ஆண்டில் “நல்லிணக்க சேவை மையம்” (The Harmony Foundation ) தனது ஏழாமாண்டு சமூக நீதி பரிசு விழாவை நடத்தியது. நல்லிணக்கம் சேவை மையம் உலகளாவிய சமூகநீதி அமைப்புகளுடன் இணைந்து பணியாற்றும் அரசுசாரா சேவை அமைப்பு. சமூகநீதிக்கான அன்னை தெரசா நினைவு விருது வழங்கப்பட்டு அதனை ஒட்டிய விழாவும் கொண்டாடப்பட்டது. அன்னை தெரசா துவக்கிய சேவை மையம் அங்கீகரித்து ஒப்புதல் அளித்த ஒரே விருது என்பது இதன் சிறப்பு. விருதினைப் பெற்றுக் கொண்ட அனுராதா கொய்ராலா தனக்கு சமுதாயத் தொண்டில் பற்றுதல் ஏற்பட அன்னை தெரசாவின் பணிகள் முன்மாதிரியாக அமைந்தது என்றும் எனவே அவர் நினைவாக வழங்கப்படும் விருதைப் பெறுவதில் பெருமை மிகக் கொள்வதாகவும் கூறினார். உடன்வாழும் மனிதர்களின் துயர்களை உணர்ந்து இரங்கி உதவும் வகையில் மக்களின் மனப்பான்மையில் மாற்றம் ஏற்பட வேண்டும் என்றும் அனுராதா கொய்ராலா கூறினார். இவர் அன்னை தெரசாவின் பெயர் தாங்கிய அனாதைக் குழந்தைகளுக்கான பள்ளி ஒன்றையும் பதினைந்து ஆண்டுகளாக நடத்தி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கதாகும். 2014 ஆம் ஆண்டில் “இந்தியா டுடே” நடத்திய பெண்களுக்கான கருத்தரங்கு ஒன்றில் பங்கு கொண்ட அனுராதா கொய்ராலா கூறிய பெண்ணின முன்னேற்றக் கருத்துரைகள் சிந்தித்துச் செயல்படுத்தப்பட வேண்டியவை. “பெண்கள் தங்கள் துயர் துடைக்க அடுத்தவரின் உதவியை எதிர்பார்க்காது தாங்களே தங்கள் வாழ்க்கையை மேம்படுத்தும் நடவடிக்கைகளை முன்னெடுத்துச் செல்ல வேண்டும். பெண்கள் தங்கள் ஆற்றலைப் பயன்படுத்தி முன்னேறுவது அவர்கள் கையில்தான் இருக்கிறது. நாம் கைவிடப்பட்டவர்கள் என்று தன்னிரக்கம் கொள்ளும் எண்ணம் பெண்களால் கைவிடப்படவேண்டிய ஒன்று. பெண் ஆட்சியாளர்களும் பெண்கள் நலனைச் சீர்குலைக்கும் செயல்களைத் தடுத்து, இதுவரை பெண்களுக்கு உதவும் சரியான முயற்சிகளை மேற்கொள்ளவில்லை. பெண்கல்விக்கு எதிரான நடவடிக்கைகள் தடுத்து தண்டிக்கப்பட வேண்டும். வரதட்சிணை கொடுமையே நேபாள பெண்கள் ஏமாற்றப்பட்டு பாலியல் தொழிலில் தள்ளப்படுவதற்குக் காரணம். பெண்களுக்காக ஒதுக்கப்படுவதாகக் கூறப்படும் 33% ஒதுக்கீட்டிலேயே பெண்கள் மனநிறைவு கொள்ளக்கூடாது. பெண்களுக்கான ஒதுக்கீடு ஐம்பது விழுக்காடாகவோ அல்லது அதற்கும் அதிகமாக இருக்க வண்டும். இந்த இட ஒதுக்கீடு என்ற கருத்து ஏன் ஆண்களுக்கு நடைமுறையில் இல்லை? பெண்களுக்கான இட ஒதுக்கீடு என்ற நிலையில் பெண்கள் வாழ்க்கை அமைவது சரியான நிலையல்ல.” பெண்களுக்கான சமூகப்போராளியாகவும் சமூக சேவகியாகவும் கடமையாற்றி வரும் அனுராதா கொய்ராலாவின் இத்தகைய சிறந்த கறுத்துக்கள் செயலாக்கம் பெற வேண்டும். December 8, 2014 கே. ரவி [] வானவில் பண்பாட்டு மையம் சார்பில் பாரதி திருவிழா கடந்த இருபதாண்டுகளுக்கும் மேலாகத் திருவல்லிக்கேணியில் நடந்து வருகிறது. பாரதிவிழாவினை தொடர்ந்து சிறப்புற நடத்திவருபவர் வானவில் பண்பாட்டு மையத்தின் நிறுவனர் கே.ரவி அவர்கள். சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் ரவி அவர்களைக் கவிஞர் ரவி என்றழைப்பதே அவருக்கு மகிழ்ச்சி அளிப்பதாக இருக்கும். சிறந்த எழுத்தாளரான ரவி பற்பல கவிதைகளையும், “காற்று வாங்கப் போனேன்” என்ற தன்வரலாற்றுப் பகுதியையும் எழுதியுள்ளார். அவரது சுயசரிதையை பொதுவான கோணத்தில் வழங்காமல் இந்தப் பிரபஞ்சத்திற்கும் அவருக்கும் உள்ள தொடர்பை வெளிப்படுத்தும் கவிதை வரலாறாக அமைத்துள்ளார். “சம்பவங்களாக இல்லாவிட்டாலும், மற்ற சுயசரிதைகளைப் போல வாழ்க்கையின் அன்றாட நிகழ்ச்சிகளின் தொகுப்பாக இல்லாவிட்டாலும், இந்தப் பிரபஞ்சத்துக்கும் எனக்கும் உள்ள தொடர்பை வெளிப்படுத்தும் கவிதை வரலாறாகக் கொஞ்சமேனும் அமைந்திருக்கக் கூடுமானால் அதுவே இதை ஓரளவு பயனுடைய முயற்சியாக உயர்த்த வல்லது” என்று தனது முயற்சியை விளக்குகிறார். “கவிதை என் கைவாள் இல்லை; என் கேடயம் இல்லை; என் ஆயுதமோ, கருவியோ, சாதனமோ இல்லை. நானே கவிதையின் கருவி, ஆயுதம், சாதனம். கவிதையே என்னை ஆட்டி வைக்கும் பிச்சி, பேய், பெருந்தெய்வம்!” என்றும், “என் கவிதைகளின் தொகுப்பே என் சுயசரிதை, என் சுயமான உயிரின் சரிதை; ஒரு புள்ளி வெடித்துச் சிதறி, பேரண்டங்களாக எல்லையின்றி விரிந்துகொண்டே இருக்கும் வியனுலகாம் ப்ரும்மத்தின் சரிதை. மற்ற அன்றாட வாழ்க்கை நிகழ்ச்சிகள் எலும்பும் சதையுமான உடலின் சரிதை,” என்று தன்னைப் பற்றியும் குறிப்பிடுகிறார். இவ்வாறு கவிதைகள் மீதும், மகாகவி பாரதியிடம் இவர் கொண்ட ஈடுபாட்டை பாரதி பற்றி அவர் எழுதிய கவிதை மூலமாகவே அறியலாம். கானல் நீரில் காணி நிலத்தைக் காண நினைத்தானே காட்டு வெளியில் பாட்டுச் சுடர்கள் ஏற்றி வைத்தானே தேடிச் சென்ற திசையெல் லாம்பெருந் தீ வளர்த்தானே தேகம் எடுத்தத னாலே அவனும் தேய்ந்து விட்டானே அவனுக்காகக் கொஞ்சம் அழக்கூடாதா கனவுக் கொடிகள் காற்றில் ஆடும் காட்சி தெரிகிறது காட்டு வெளியில் எல்லாம் பாடல் காவல் இருக்கிறது தினமும் இங்கே தெய்வ நெருப்பு நெஞ்சில் உதிக்கிறது தேய்ந்து போகும் தேகங் களுக்குத் தெம்பு கொடுக்கிறது நட்சத்திரங்கள் மண்ணில் விழக்கூடாதா தாம் முன்னின்று நடத்தும் பாரதி திருவிழா ஜதிபல்லக்கு அழைப்பையும் ரவி கவிதையாக வடித்தே அழைப்பு விடுத்தார். மான்தாங்கிக் கையில் மழுதாங்கி நிற்கும் மஹேஸ்வரனும் தேன்தாங்கு செந்தா மரைதாங்கு நாபனும் மாகாளியும் வான்தாங்கு தேவரும் வாழ்த்தவே யாவரும் பாரதிசீ மான்தாங்கி யாய்ஜதி பல்லக்கை ஏந்த வருவீர்களே — கே.ரவி இவரது பேரார்வத்தின் காரணமாக வானவில் பண்பாட்டு மையம் 1994-ல் பிறந்தது; ஆண்டுதோறும் பாரதி பிறந்த நாளும் விமரிசையாகத் திருவாரூர் தியாகையர் உத்சவம் போல் இசை விழாவாகக் கொண்டாடி வரப்படுகிறது. முதலாமாண்டு விழாவில், திருமதி எம்.எஸ்.சுப்புலட்சுமியும், திருமதி டி.கே.பட்டம்மாளும் கலந்து கொண்டு பாடியதும், அதில் சிலம்புச் செல்வர் ம.பொ.சி. அவர்களின் சிறப்புரையும் பெருமை சேர்க்கும் நிகழ்ச்சிக்கூறுகள். ஒவ்வோர் ஆண்டும் பாரதி விழாவில் பாரதி கண்ட கனவு மெய்ப்படத் தொண்டாற்றியவர்களுக்கு பாரதி விருது வழங்கப்பட்டு வருகிறது. குடியரசுத்தலைவர் டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் இந்தியாவின் பெருமைமிகு விஞ்ஞானியாக அனைவராலும் பாராட்டப்பட்ட காலத்திலேயே அவருக்கும் பாரதி விருது வழங்கப்பட்டது. பாரதி திருவிழாவில் தவறாமல் கலந்து கொள்ளும் பாரதியாரின் பேத்தி லலிதா பாரதி அம்மையார் 2008 க்கான பாரதி விருதை வாலிபக் கவிஞர் மறைந்த கவிஞர் வாலி அவர்களுக்கு வழங்கியதும் நினைவுகூரத்தக்க நிகழ்ச்சியாகும். பத்மா சேஷாத்திரி பால பவன் பள்ளியின் நிறுவனர் திருமதி ஒய்.ஜி.பார்த்தசாரதி, ஆன்மிக சொற்பொழிவாளர் சுகிசிவம் ஆகியோர் பாரதி விருது பெற்றவர்களில் குறிப்பிடத்தக்கவர்கள். வானவில் பண்பாட்டு மையம் 1994 தொடங்கி ஆண்டுதோறும் நடத்தி வரும் பாரதி திருவிழா பற்றியும் அதில் இடம்பெறும் சிறப்புமிகு ஜதிபல்லக்கு நிகழ்ச்சி பற்றியும் ரவி கீழ்வருமாறு கூறுகிறார்: முதல் ஆறு வருடங்கள் தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபை அரங்கத்திலும், நாரத கான சபாவிலும், ம்யூஸிக் அகாடமியிலும் பாரதி விழா நடத்திக் கொண்டிருந்த வானவில் பண்பாட்டு மையம் 2000-ஆம் ஆண்டிலிருந்து திருவல்லிக்கேணியில், துளசிங்கப் பெருமாள் கோவில் தெருவில் பாரதி தன் இறுதி மூச்சை விட்ட பாரதி நினைவு இல்லத்தில் அதைக் கொண்டாட முன்வந்தது. எட்டையபுர ஜமீன்தாருக்கு பாரதி எழுதிய சீட்டுக் கவியில், “சொற்புதிது பொருள்புதிது சுவைபுதிது ஜோதிமிகு நவகவிதை எந்நாளும் அழியாத மாக்கவிதை” தந்த தன்னை ஜமீன்தார் ஊரெல்லையில் எதிர்கொண்டழைத்துத் தனக்குச் சாலுவை, பொற்பை, வயப்பரிவாரங்கள் தந்து ஜதிபல்லக்கில் அழைத்துச் செல்ல வேண்டும் என்று மிகவும் கம்பீரமாகக் கேட்டிருந்தான். அவன் வாழ்நாளில் அது நடக்கவில்லை. அதனால், அவன் தனக்கென்று கண்ட அந்த ஒரே கனவை அவனுக்குப் பிறகாவது நிறைவேற்றி வைக்க, அவனுடைய பிறந்தநாளான டிசம்பர் 11-ஐக் கவிஞர் திருநாளாகக் கொண்டாடி, அன்று அவனுடைய உருவச் சிலையைப் பல்லக்கில் எழுந்தருளச் செய்து, அதற்குச் சால்வை போர்த்தி, பொன்முடிப்புக் காணிக்கை வைத்துச் சிறுவர், சிறுமிகள் ஜதிசொல்லிக் கொண்டு நடனமாடிவர, கவிஞர் கூட்டம் புடைசூழ, அவனை யானை மிதித்த திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் கோவிலில் இருந்து பாரதி இல்லத்திற்குக் கொண்டுவரும் ஜதிபல்லக்கு நிகழ்ச்சியை ஆண்டுதோறும் நடத்தி வருகிறோம். உவமைக் கவிஞர் சுரதா உயிருடன் இருந்த வரைக்கும் ஆண்டுதோறும் இந்த வைபவத்தில் கலந்து கொண்டு ஜதிபல்லக்கைத் தம் தோளில் சுமந்து வந்திருக்கிறார். ஜதிபல்லக்கு முடிந்ததும் பாரதி இல்லத்தில் முழுநாள் கவிப்பொழிவு நிகழ்ச்சி இடம் பெறும். அதில் சுமார் 200 கவிஞர்கள் காலை முதல் இரவு வரை இடைவிடாமல், உணவு இடைவேளை கூட இல்லாமல், கவிதை சொல்லும் நிகழ்ச்சியும் நடைபெறும். 2014 ஆம் ஆண்டு விழாவில் பாரதியாருக்கு சால்வை, பொற்பை ஆகியவற்றைச் சமர்ப்பித்து ஜதிபல்லக்கை காவல்துறை முன்னாள் தலைவர் ஆர். நடராஜ் தொடங்கி வைக்க, திருவல்லிக்கேணி பாரதி நினைவு இல்லத்தில் “வருவாய் கண்ணா” ஓவியக் கண்காட்சியை நடிகர் சிவகுமார் தொடங்கி வைக்க, மறைந்த தொழிலதிபர் நா.மகாலிங்கத்தின் உருவப் படத்தை காங்கிரஸ் மூத்த தலைவர் குமரி அனந்தன் திறந்து வைத்தார். பாரதியின் கவிதைகளை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்த “சேக்கிழார் அடிப்பொடி” என்றழைக்கப்படும் தமிழறிஞர் முதுமுனைவர் டி.என். ராமச்சந்திரனுக்கு பாரதி விருதை மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் வழங்கினார். தொடர்ந்து வந்த மூன்று நாட்களிலும் கலந்துரையாடல், சிறப்புரை, நடன நிகழ்ச்சி உள்ளிட்ட பல்வேறு கலை நிகழ்ச்சிகள் பாரதியாரைப் போற்றும் வகையில் அமைந்தன. கவிதை இலக்கியத்திலும், சட்டத்திலும் சிறந்து விளங்கும் ரவி ஒரு பல்துறை வித்தகராகப் பன்முகம் கொண்டவர். இவரது கல்லூரி மாணவப் பருவத்தில் இதழியளாராகாவும் உருவெடுத்து, 1972-ஆம் ஆண்டு ‘மாணவரிஸம்’ என்ற பத்திரிகையை நடத்தி இருக்கிறார். திரைத்துறையிலும் நுழைந்து ‘ஸ்பரிசம்’ என்ற படம் தயாரித்துள்ளார். இசைமைப்பாளராகவும் உருமாறி திரைப்படங்களுக்கும், இசைப்பேழைகளுக்கும் இசையமைத்துள்ளார். இவரது இசையில் எஸ்.பி.பாலசுப்ரமணியம் தனது இனிய குரலில் பாடி ‘தெய்வ கானாம்ருதம்’ என்ற இசைப்பேழை 1994 இல் வெளியானது. ‘அமரத்வனி’ என்ற இசைப்பேழையை 1980-களில் வெளியிட்டுள்ளார். “பார்வைக்கு என்ன பொருள்” என்ற மேடை நாடகத்தை எழுதி அதில் கதாநாயகனாகவும் நடித்துள்ளார். “இயல்பியல்” என்னும் தலைப்பில் பல புதிய தனித்தமிழ்க் கலைச் சொற்களோடு ஓர் முன்னோடி வழிகாட்டிப் பாட நூலையும், “இருபதாம் நூற்றாண்டு இயல்பியல் வரலாறு” என்ற அறிவியல் நூலையும் எழுதி வெளியிட்ட ரவி, ஆங்கிலத்தில் இரு சட்டநூல்களும் எழுதியுள்ளார். இவர் எழுதிய “Law, Logic and Liberty” என்ற சட்டத் திறனாய்வு நூலைப் படித்துவிட்டு, சமீபத்தில் மறைந்த நீதியரசர் திரு.வி.ஆர். கிருஷ்ணய்யர் அது ஒரு சிறந்த குறிப்புதவி நூலாக அவருக்கு உதவும் எனப் பாராட்டி கடிதம் எழுதியுள்ளார். மாணிக்கவாசகர் எழுதியதாக நம்பப்படும் ‘ஞானத் தாழிசை’ என்ற தமிழ் நூலை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து, அதற்கு ஆங்கிலத்தில் ஒரு விரிவுரையும் எழுதி, ‘வெர்ஸஸ் ஆஃப் விஸ்டம்’ (Verses of Wisdom) என்ற நூலாக வெளியிட்டுள்ளார். பிரும்ம சூத்திரத்துக்கான ஆங்கில விரிவுரையை தற்பொழுது “ப்ரும்ம சூத்ரா த காஸ்மிக் கோட்” (Brahma Sutra, the Cosmic Code) என்ற நூலாக எழுதும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார். கவிஞராக தன்னை முன்னிறுத்திக்கொள்ள விழையும் ரவி, “நமக்குத் தொழில் கவிதை” “உன்னோடு நான்” என்ற கவிதைத் தொகுப்புகளையும் வெளியிட்டுள்ளார். இவரது ‘உன்னோடு நான்’ என்ற கவிதைத் தொகுப்பில் இடம் பெற்ற … அந்தத்தை எண்ணிநான் அஞ்ச வில்லை அந்தாதிப் பாட்டொன்றும் புதிய தில்லை வந்தவரைக் கடைசிவரை வாழ வைக்கும் வையகமாய் சத்யயுகம் மலர வேண்டும் என்ற கவிதையை அமரரான அருட்செல்வர், தொழிலதிபர், பொள்ளாச்சி நா.மகாலிங்கம் அவர்கள் பாராட்டி இவரை வாழ்த்தியுள்ளார். திரைப்படத் தயாரிப்பாளர் கல்யாணராமன் அவர்களின் மகன் என்பதும், தொலைக்காட்சி புகழ் ஷோபனாரவியின் வாழ்க்கைத் துணைவர் என்பதும் இவர் குறித்த வியக்கவைக்கும் தகவல்கள். வானவில் பண்பாட்டு மைய நிறுவனர் ரவி அவர்கள் தமிழுக்கு ஆற்றி வரும் பங்களிப்பு தொடர வாழ்த்துகள். December 15, 2014 வையவன் [] எழுத்தாளர் வையவன் என்ற பெயரில் அறியப்படும் திரு. எம்.எஸ்.பி. முருகேசன், தமிழ் நாட்டில் வேலூர் மாவட்டத்தில் வாணியம்பாடி அடுத்த வெள்ளக்குட்டை கிராமத்தில் பிறந்தவர். இவரது முத்தாத்தா முருகையா அவர்களின் பெயரை வைக்குமாறு அவரே ஆசீர்வதித்ததன் காரணமாக ‘முருகேசன்’ என்று அழைக்கப்பட்டார். எழுத்துலகில் இவர் நுழையும்பொழுது இவர் தானே விரும்பிச் சூட்டிக்கொண்ட வையவன் என்ற பெயரில் அடியெடுத்து வைத்துள்ளார். தனது தந்தையிடம் இருந்து படிக்கும் பழக்கத்தையும், தாயிடம் இருந்து கதை சொல்லும் கற்பனைத் திறத்தையும் பெற்றார். பள்ளி நாட்களில் “தமிழொளி” என்ற இதழின் ஆசிரியப்பொறுப்புகளை ஏற்று அந்த இதழில் கட்டுரைகளும், சிறுகதைகளும், தலையங்கங்களும் எழுதினார், தமிழ்ச்சங்கச் செயலாளர் பொறுப்புகளையும் ஏற்றுள்ளார். இவரது முதல் சிறுகதை 1956 ஆம் ஆண்டு ‘அமுதசுரபி’ இதழில் வெளியானது. இவரது முதல் புதினம் ‘இன்று புதிதாய்ப் பிறந்தோம்’ என்பதில் தொடங்கி, ஜமுனா, ஜங்க்ஷனிலே ஒரு மேம்பாலம், மணல்வெளி மான்கள், கன்னியராகி நிலவினிலாடி என்று தொடர்ந்து பத்து புதினங்களையும், பத்து குறும்புதினங்களையும் வெளியிட்டுள்ளார். அநீதியை எதிர்த்துக் குரல் கொடுக்க வேண்டும் என்பதை பெரும்பாலான அவரது படைப்புகளின் மையக் கருத்தாகக் கொண்டு எழுதியும் வந்துள்ளார். இவரது படைப்புகளில் இவர் கையாண்ட சமுதாயக் கண்ணோட்டத்திற்காக இவர் பெரிதும் பாராட்டப்பட்டவருமாவார். இவரது ‘இன்று புதிதாய்ப் பிறந்தோம்’ என்ற முதல் புதினம் தமிழக அரசின் பரிசையும், இரண்டாவது புதினம் ஸ்டேட் வங்கியின் இலக்கிய விருதையும் வென்றன. தனது பதின்ம வயதில் தொடங்கி இன்றுவரை தொடர்ந்து சற்றொப்ப 60 ஆண்டுகளாக எழுதுவதைத் தனது கடமையாகக் கொண்டு வருகிறார். இதுவரை 1000 த்திற்கும் அதிகமாகப் படைப்புகளை சிறுகதைகள், புதினங்கள், கவிதைகள், கட்டுரைகள் எனப் பல வடிவங்களிலும் உருவாக்கியுள்ள வையவன் அவற்றில் நூறு படைப்புகளை நூலாகவும் வெளியிட்டுள்ளார். இவருடைய படைப்புகள் தமிழகத்தின் முன்னணி பத்திரிக்கைகளான குமுதம், கல்கி, ஆனந்தவிகடன் ஆகிய இதழ்களில் வெளிவந்துள்ளன. இவர் படைப்புகளில் மாணவர்களுக்காக இவரெழுதிய நூல்களும், மொழிபெயர்ப்பு நூல்களும், கவிதைகளும் அடங்கும். பற்பல தொழிலில் அறிமுகம் கிடைத்து பற்பல வேலைகளைச் செய்தாலும், மலேரியா ஒழிப்பு திட்டப்பணியில் ஈடுபட்டிருந்த பொழுது, இவரது மேலாளர் இவரது எழுத்துப்பணிக்கு கண்டனம் தெரிவித்த பொழுது, தனது எழுத்தார்வத்திற்கு ஆசிரியத் தொழிலே ஆக்கப்பூர்வமாக உதவும் என்று எண்ணி ஆசிரியப்பணியில் சேர்ந்தார். தமிழிலும் ஆங்கிலத்திலும் என இரு முதுகலைப் பட்டங்கள் பெற்றுள்ள வையவன், ஆசிரியப்பணிக்கான பட்டங்களும் பெற்று சென்னை அரசு மேல்நிலைப்பள்ளியில் ஆங்கில ஆசிரியராகவும் தமிழ்ப் பண்டிதராகவும் 33 ஆண்டுகள் ஆசிரியப்பணியாற்றினார். பணி ஓய்விற்குப் பிறகு தனது முழு நேரத்தையும் இலக்கியப்பணிக்காக அர்ப்பணித்துள்ளார். மலையாளம், இந்தி, தெலுங்கு, கன்னடம் மொழிகளும் நன்கறிந்த வையவன் அவர்கள் மலையாளத்தில் இருந்து தமிழுக்கு வைக்கம் முகம்மது பஷீரின் நாவலை ‘ஒரு காதல் டைரி’ (2001) என்றும், பிற மலையாள எழுத்தாளர் படைப்புகளையும் மொழிபெயர்த்துள்ளார். இவர் எழுதிய “மகாபலியின் மக்கள்”(1982) என்ற கேரளாவையும், கேரளமக்களையும் பற்றிய கட்டுரைத்திரட்டு நூல், பிற மாநிலம் பற்றி எழுதப்பட்ட சிறந்த நூல் என்ற பிரிவில் தமிழக அரசின் பரிசினைப் பெற்றது. சிறந்த இலக்கிய விமர்சகரான வையவன் அவர்கள் ‘ஜெகசிற்பியன் ஒரு பார்வை’ (1987), ‘மகாகவி’ (1993) என்ற இலக்கிய விமர்சக நூல்களையும் எழுதியுள்ளார். இவரது மகாகவி நூல், பாரதியைப் பற்றிய பல புதிய பரிமாணங்களை முன் வைத்ததால் ஒரு சிறந்த நூல் என்று தேர்வு செய்யப்பட்டு அமுதசுரபி-ஸ்ரீராம் அறக்கட்டளையின் விருதையும், பாரதியின் மீது எழுதப்பட்ட சிறந்த நூல் என்று ஸ்ரீராம் அறக்கட்டளை மற்றும் பாரதி பண்பாட்டு மையம் ஆகியவை இணைந்து வழங்கிய விருதையும் பெற்றது. இவரது “Nation builder Nehru” மற்றும் “Loving Animals” ஆகிய ஆங்கிலநூல்கள் ‘இந்திய அரசின் கரும்பலகைத் திட்டம்’ (Blackboard Scheme of Government of India) கீழ் தேர்ந்தெடுக்கப்பட்டன. லவ்விங் அனிமல் நூல் விலங்குகளின் நலத்தினைப் பேணும் முக்கியத்துவத்தை முன்வைத்ததால் அத்துறை அமைச்சரின் பாராட்டையும் பெற்றது. “நிசப்த கோபுரம்”(1995), “வெடி வாழைப்பூ”(1999) என்ற கவிதை நூல்களையும் எழுதியுள்ளார். ‘ஆனந்த பவன்’(1998) , ‘இடிபாடுகள்’(2001) என்ற நாடகங்களையும் இவர் எழுதியுள்ளார். ஆனந்தபவன் நாடகம் ஸ்டேட் வங்கியின் சிறந்த நாடகம் என்றப் பரிசினைப் பெற்றது. ராக்கஃபெல்லர் ஃபவுண்டேஷன் நிதியுதவி பெற்று சோழா கிரியேஷன் தயாரித்த ‘நம்ம ஊரு நல்ல ஊரு’ என்ற குறும்படத்திற்கு கதை வசனத்தையும் எழுதியுள்ளார் வைரவன். இவ்வாறு தமிழ், ஆங்கிலம், பிறமொழிகளின் மொழிபெயர்ப்பு, கவிதை, கதை, கட்டுரைகள், புதினங்கள், பல இணையதளங்களில் வலைப்பூ கட்டுரைகள் என எழுதி வரும் வையவன் அவர்களின் எழுத்துக்களில் சிலவற்றில் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு, இளநிலை, முதுநிலை ஆய்வுக்கட்டுரைகளும், முனைவர் ஆய்வறிக்கைகளும் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன. தனது பணியைப் பற்றிய பெருமைகளையும் விருதுகளையும் பொருட்படுத்தாத வையவன் அவர்களின் கருத்து: ‘Fruits I prefer; not fanfare and fireworks. When compared to the pioneers and literary personalities I am nothing; just another beginning. That’s all.’ அரசின் “அறிவொளி” திட்டத்தின் செயல்பாடான மாற்றுக்கல்வி வளர்ச்சியில் பங்குபெற்று பலமாநிலங்களுக்கும் சென்று மாற்றுவழிக்கல்வி பற்றிய நடவடிக்கைகளை மேற்பார்வையிடும் பணியில் தன்னை உட்படுத்திக் கொண்டமைக்காக “மால்கம் ஆதிசேஷய்யா” விருது பெற்றுள்ளார். கல்விப் பணிக்காக ‘ஐக்கியா டிரஸ்ட்’ (‘Aikya’ – Amalgamaetion of Indigenous Knowledge for Youthful Action) என்ற அறக்கட்டளையை உருவாக்கி பள்ளிப்படிப்பை முடிக்க இயலாதவர்களுக்கு தொழிற்பயிற்சி அளிப்பதில் உதவி வருகிறார். எழுத்தாளர்களை ஊக்குவிக்கும் நோக்கில் பல போட்டிகளை அறிமுகப்படுத்தியும், பணிகளும் செய்து வருகிறார். அவரது மகளின் பெயரில் துவக்கப்பட்ட “தாரிணிப் பதிப்பகம்” என்ற பதிப்பகம் மூலம் நூல்களை வெளியிடும் பணியிலும் ஈடுபட்டுள்ளார். வல்லமை மின்னிதழுடன் இணைந்து சிறுகதைகள் போட்டியொன்றை 2013 ஆண்டு நடத்தி, வெற்றிபெற்ற சிறுகதைகளை “வல்லமைச் சிறுகதைகள்” என்ற தலைப்பில் அவரது தாரிணிப் பதிப்பகம் மூலம் நூலாக வெளியிட்டு, வல்லமையாளர்களுக்குப் புத்தகப் பரிசுகள் அனுப்பி வளரும் பல புதிய எழுத்தாளர்களை ஊக்குவித்தார். பொதுத்தொண்டில் உள்ள ஆர்வம் காரணமாக கவிஞர் ஜி. ஜே. தமிழ்ச்செல்வி அவர்கள் துவக்கிய மாற்றுத் திறனாளிகளுக்கு உதவும் “ஹார்ட் பீட் டிரஸ்ட் அறக்கட்டளை” வளரவும் உதவி வருகிறார். அந்த அறக்கட்டளையின் “இதயத்துடிப்பு” என்ற செய்தி மடலை அறக்கட்டளையின் சார்பாக வெளியிடவும் உதவி வருகிறார். இடையீடின்றித் தொடர்ச்சியாக நிகழ்ந்து வரும் திரு. வையவன் அவர்களின் பணிகள் மேன்மேலும் சிறக்க வாழ்த்துகள். December 22, 2014 ஜாதவ் பயேங் [] ஜான் ஜியானோ (Jean Giono) என்ற ஃபிரென்ச் எழுத்தாளர், 1953 ஆம் ஆண்டு “தி மேன் ஹூ ப்ளாண்ட்டெட் ட்ரீஸ்” (The Man Who Planted Trees) என்ற நூலை எழுதி வெளியிட்டார். எல்சார்ட் பூஃபியர் (Elzeard Bouffier) என்ற ஒருவர் மரங்கள் நடுவதில் ஆர்வம் மிக்கவராக அந்நூலில் சித்தரிக்கப்பட்டிருந்தார். அவர் விவரித்த நிகழ்வுகள் மிகவும் உண்மைத் தன்மை நிரம்பியதாக இருந்ததால் அந்த மனிதரை அறியும் முயற்சிகள் அந்நூலின் வாசகர்களால் மேற்கொள்ளப்பட்டன. பின்னர், நூலின் ஆசிரியர் அக்குறிப்பிட்ட மனிதர் தனது கற்பனையில் உருவாக்கப்பட்ட நாயகன் என்றும், மக்களுக்கு மரங்களின் மீது ஆர்வம் வர வேண்டியே அவர் தனது நூலில் நிகழ்வுகளைப் புனைந்ததாகவும் கூறினார். அவர் கற்பனையில் கண்ட மனிதர் நூல் வெளிவந்த பத்தாண்டுகளுக்குப் பின்னர் நமது இந்தியாவின் அஸ்ஸாம் மாநிலத்தில் பிறந்து வளர்ந்திருக்கிறார். அவரது பெயர் திரு.ஜாதவ் பயேங் (Jadav Payeng). பிரம்மபுத்திரா நதியின் நடுவில் உள்ள 1,360 ஏக்கர் நிலப் பரப்பளவிலான மணல்திட்டில் தனியொரு மனிதராக ஒரு காட்டையே உருவாக்கியிருக்கிறார் இந்த அதிசய மனிதர் ஜாதவ். இப்பொழுது அக்காட்டில் அழிவின் நிலையில் இருந்த பல்வேறு விலங்குகள் வாழ்ந்து வருகின்றன. அவற்றில் குறைந்தது ஐந்து புலிகளும் அடங்கும், அவற்றில் ஒன்று சமீபத்தில் இரு குட்டிகளையும் ஈன்றுள்ளது. ஜோர்ஹாட் மாவட்டத்தில் கோகிலமுக் இடத்துக்கு அருகில் 1,360 ஏக்கர் நிலப் பரப்பளவிலான மணல்திட்டில் உள்ள இந்தக் காடு உள்ளூர் மக்களால் ஜாதவின் செல்லப்பெயர் “முலாய்” என்பதை ஒட்டி “முலாய்யின் காடு” (Molai Kathoni = Molai’s woods) என்று அழைக்கப்படுகிறது. இதனை உருவாக்கத் துவங்கியபொழுது ஜாதவிற்கு வயது பதினாறு. தற்பொழுது ஜாதவிற்கு வயது ஐம்பது ஆகிறது, 35 ஆண்டிகளில் தனியொருவராக இந்தக் காட்டை உருவாக்கியுள்ளார் ஜாதவ். இவரது முயற்சியின் தொடக்கத்திற்குக் காரணம் 1979 ஆண்டு பிரம்மபுத்திரா நதியில் ஏற்பட்ட வெள்ளம். அந்த வெள்ளத்தில் பல விலங்குகள் இறந்தன. வெள்ளம் வடிந்த பிறகு இப்பொழுது காடு இருக்கும் மணல்திட்டில் பல பாம்புகள் இறந்து கிடப்பதைப் பார்த்தார் ஜாதவ். வெள்ளத்தினால் அடித்து வரப்பட்டு, மணல்திட்டில் ஒதுங்கிய பாம்புகள் மரநிழலின்றி வெயிலில் காய்ந்து இறந்திருந்தன. அவற்றைக் கண்டு கலங்கிய ஜாதவ், அந்த மணல்திட்டில் மரங்கள் நடுமாறு கோரிக்கை வைத்து காட்டிலாகா அதிகாரிகளை அணுகினார். அவர்களோ எந்த மரமும் வளரும் தன்மை அந்த மண்ணிற்கில்லை, வேண்டுமானால் மூங்கிலை வளர்ப்பதை முயற்சிக்குமாறு ஆலோசனை வழங்கி தட்டிக் கழித்துவிட்டனர். ஜாதவிற்கு உதவி செய்வோர் யாருமில்லை, அந்த வேலையும் கடினமாக இருந்தது, ஆனாலும் ஜாதவ் தளரவில்லை. தனது பள்ளிப்படிப்பை நிறுத்திவிட்டுத் தானே விரும்பி தனிமை வாழ்க்கையை ஏற்று அந்த மணற்திட்டிற்கே குடியேறினார் ஜாதவ். பல மூங்கில்களை நட்டு காலையும் மாலையும் நீரூற்றிப் பராமரித்தார். சில ஆண்டுகளில் மூங்கில்கள் வளர்ந்து சிறிய மூங்கில் காடு உருவாகியது. அதனையொட்டி பிறவகை மரங்களையும் சேகரித்து அங்கு நட்டு வளர்க்கத் தொடங்கினார். அவரது கிராமத்திற்குச் சென்று சிவப்பு கட்டெறும்புகளைச் சேகரித்து வந்து விலங்குகள் உயிர்வாழாத அந்தத் திட்டில் வளர்த்தார். சிறிது காலத்திற்குப் பிறகு அந்த மணல்திட்டின் மண்ணின் பண்பு அந்த எறும்புகளால் மாற்றப்பட்டது. அச்சமயம் “சமூகக் காடுகள் வளர்ப்பு” திட்டத்தின்படி வனத்துறையினர் மற்றும் சில தொழிலாளர்களும் இணைந்து 200 ஹெக்டேர் மணல் படுகையில் மரக் கன்றுகளை நடும் திட்டம் தொடங்கப்பட்டது. அவர்கள் சென்ற பின்னர் அந்த மரங்களின் பராமரிப்பையும் ஜாதவ் மேற்கொண்டார். மரங்கள் வளர்ந்ததைத் தொடர்ந்து எந்த உயிருமே வாழத் தகுதியற்று இருந்த அந்த மணல்திட்டில் பல உயிரினங்களும் குடியேறத் துவங்கின. அவ்வாறு குடியேறிய விலங்குகளில் இனஅழிவு ஆபத்தை எதிர்நோக்கியிருக்கும் ஒற்றைக் கொம்பு காண்டாமிருகங்களும், வங்காளப் புலியும் அடங்கும். பன்னிரு ஆண்டுகள் கழித்து வல்லூறு போன்ற பறவைகளும், வலசை போகும் பறவைகளும் பிற பறவையினங்களும், பல முயல்களும், நூற்றுக்கணக்கான மான்களும், மற்றும் பல சிறு விலங்குகளும் அக்காட்டை தங்கள் வாழிடமாக ஏற்றுக் கொள்ளத் துவங்கின. மான்கள், மாடுகள் போன்ற சிறு உயிரினங்களால் கவரப்பட்டு பெரிய விலங்குண்ணிகளும் அக்காட்டில் குடியேறத் துவங்கின. மரங்களே வளராது என்று கூறிய பகுதியில் தேக்கு, அகில், சந்தனம், கருங்காலி, ஆச்சா போன்ற மரங்களும் மூங்கில் காடுகளும் அடர்ந்து வளரத் துவங்கின. நூற்றுக்கும் மேற்பட்ட யானைகள் ஆண்டின் ஆறு மாதங்கள் அக்காட்டில் வந்து தங்கி குட்டிகளையும் ஈனுகின்றன. மரங்களின் மீது கொண்ட அன்பால் ஜாதவ் தனது கிராமத்தைத் தவிர்த்துக் காட்டிலேயே சிறு குடில் போன்ற வீடு ஒன்றைக் கட்டிக் கொண்டு தனது மனைவி, இருமகன்கள் மற்றும் மகள் ஒருவருடன் வாழ்ந்து வருகிறார். குடும்பச் செலவிற்கு மாடுகள் வளர்த்து பால் வியாபாரம் செய்து வருமானம் ஈட்டுகிறார். அஸ்ஸாம் மாநில வனத்துறையினர், ஜாதவ் தனது முயற்சியைத் துவங்கி முப்பதாண்டுகள் கழித்தே அந்தக் காட்டைப் பற்றி அறிந்து கொண்டனர். அந்தக்காட்டின் அருகில் உள்ள கிராமங்களின் வயல்வெளிகளை உணவிற்காக நூற்றிற்கும் அதிகமான யானைகள் சேதம் செய்யத் துவங்கின. அவற்றை வனத்துறையினர் விரட்டிவர, அவை ஓடி வந்து முலாய்யின் காட்டில் அடைக்கலம் புகுந்தன. அரசின் பதிவேடுகளில் இடம் பெறாத ஒரு காட்டை அங்கு கண்ட வனத்துறை அதிகாரிகள் வியப்படைந்தனர். அன்றுதான் முலாய்யின் புதிய காடு அவர்களது கவனத்திற்கு வந்தது. யானைகளால் இழப்பு நேர்ந்தவர்கள் அந்தக் காட்டை அழிக்கக் கோரிக்கை வைத்தார்கள். ஜாதவ் அதற்குக் காட்டையும் விலங்குகளையும் அழிப்பதற்குப் பதில் என்னைக் கொன்றுவிடுங்கள் எனத் தீர்மானமாகச் சொல்லவும், வனத்துறையினர் ஜாதவிற்கு உதவ உறுதி பூண்டார்கள். மத்திய அரசின் கவனத்திற்குச் சென்றது ஜாதவின் சாதனை, முலாய்யின் காட்டை இப்பொழுது வனவிலங்குகளில் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கொண்டுவரும் முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகிறது. சுற்றலாப் பயணிகளையும், திரைப்பட வெளிப்புறக் காட்சி படம் பிடிப்போரது கவனத்தையும் கவர்ந்துள்ளது முலாய்யின் காடு. தனியொரு மனிதராக இந்த சாதனையைச் செய்த ஜாதவ் பயேங், இதனை ‘தனது சமூகத்திற்கு செய்ய வேண்டியது தனது கடமை’ என்றும் அரசின் வனத்துறை காட்டின் பராமரிப்பை ஏற்றுக் கொண்டால் வேறு ஓரிடம் சென்று புதிய காடொன்றை உருவாக்கவும் தயார் என்று சொல்கிறார். சுற்றுச்சூழல் கல்வி, மரம் நடுதல் பள்ளி நாட்களிலேயே தொடங்கப்பட வேண்டும், ஒவ்வொரு மாணவரும் பள்ளி முடிக்கும் முன்னர் இரண்டு மரங்களை நட்டுப் பராமரிக்க வேண்டும் என்ற ஆலோசனையும் கூறுகிறார். இயற்கையில் இருக்கும் உணவுச் சங்கிலியைக் காப்பது நம் கடமை, நம் போன்ற மனிதர்களைவிட்டால் வேறு யாரால் உயிரினங்களைக் காக்க முடியும் என்ற கேள்வியையும் எழுப்புகிறார் ஜாதவ். அனைவரையும் சுற்றுச்சூழலின் மீது கவனம் கொள்ளவும், மரங்களை வளர்ப்பதற்கு ஊக்குவிக்கும் முன்மாதிரியாக இருக்கும் ஜாதவ் பயேங் என்னும் காட்டுமனிதர் முலாய் சிறந்ததொரு வல்லமையாளர் என்பதில் ஐயமில்லை. December 29, 2014 ஏற்காடு இளங்கோ [] நடுவணரசின் தாவர மதிப்பீட்டு ஆய்வு அலுவலகத்தில் பணி புரியும் திரு. ஏற்காடு இளங்கோ அவர்கள் கால்நூற்றாண்டிற்கும் மேலாக அறிவியல் இயக்கத்தில் ஈடுபட்டு வருகிறார். இவர் இதுவரை எழுதியுள்ள 70 க்கும் அதிகமான நூல்களில், 65 நூல்கள் அறிவியல் மற்றும் பொதுஅறிவுத் தகவல் தொடர்புடைய நூல்களாகும். இந்நூல்கள் அறிவியல் அறிஞர்களின் வாழ்க்கை வரலாறு, கல்வியாளர்கள், நோபல் பரிசு பெற்ற பெண்கள், சர்வதேச தினங்கள் குறித்த தகவல் போன்றவற்றை வழங்குபவை. விழிப்புணர்வு தரும் அறிவியல் நூல்கள் மக்களைச் சென்றடையவேண்டும் என்ற நோக்கில் தனது அறிவியல் மற்றும் பொதுஅறிவுத் தகவல்கள் நூல்களுக்குக் காப்புரிமையை நீக்கி இணையம் வழி பலரும் தரவிறக்கிப் பயன்படுத்த வேண்டும் என்ற நோக்கில் இலவச மின்னூல்களாக வெளியிட்டு வருகிறார். அறிவியல் செய்திபரப்பும் பங்களிப்பின் மூலம் இவர் மக்களுக்கு ஆற்றும் தொண்டு பாராட்டப் படவேண்டிய ஒன்று. தமிழ்நாடு, நாமக்கல் மாவட்டம் பேளுக்குறிச்சி என்னும் ஊரினை பூர்வீகமாக் கொண்ட இளங்கோ அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் முதுகலைப் படிப்பில் பட்டம் பெற்றவர். “துளிர்” என்ற மாணவர்களுக்கான அறிவியல் மாத இதழின் ஆசிரியர்குழு உறுப்பினரும், தமிழ்நாடு அறிவியல் இயக்க மாநில பொதுக்குழு உறுப்பினருமான ஏற்காடு இளங்கோ அவர்களின் அறிவியல் நூலாக்கப்பணிகளைப் பாராட்டி, சேலம் கே.ஆர்.ஜீ. நாகப்பன் – இராஜம்மாள் அறக்கட்டளையின் சார்பாக நடைபெற்ற இலக்கிய விழா 2010 இல் “அறிவியல் மாமணி” என்னும் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளார். சேலம் அறிவியல் இயக்கத்தின் (Tamil Nadu Science Forum – TNSF, Salem) மாவட்டத் தலைவராகவும் பொறுப்பேற்று அந்த இயக்கத்தை வழிநடத்தி வருகிறார் இளங்கோ. இன்று அறிவியல் தொழில்நுட்ப வளர்ச்சி இருந்தாலும் அறிவியல் விழிப்புணர்வு என்பது தேவையான அளவில் மக்களிடம் இல்லை என்று இளங்கோ கருதுகிறார். குறிப்பாக தொலைக்காட்சியில் ஃபேர் அண்ட் லவ்லி, கோக்ககோலா போன்ற பல விளம்பரங்களைப் பார்த்து விட்டு அவற்றைப் பயன்படுத்தும் தன்மை அதிகமாக உள்ளது. ஆனால் அவற்றின் உண்மை தன்மைகளைப் பற்றியோ, அறிவியல் பின்னணியையோ யாரும் பார்ப்பதில்லை எனவும் இதுவே அறிவியல் விழிப்புணர்வு சார்ந்த புத்தகங்களை அவர் எழுதத் துவங்கியதன் காரணம் எனவும் இளங்கோ குறிப்பிட்டுள்ளார். மேலும், இவர் “ஒரு திரைப்படத்தின் பெயரைச் சொல்லி, அந்தப் படத்தின் கதாநாயகன் யார் எனக் கேட்டால், பதில் சரியாகச் சொல்கிறார்கள். ஆனால் முதன் முதலில் விண்வெளிக்குச் சென்ற இந்திய வீரர் யார் எனக் கேட்டால் பலரும் பதில் தெரியாமல் தடுமாறுகின்றனர். ஒரு நடிகருக்கு இருக்கும் புகழை விட விண்வெளிக்குச் சென்று வந்த வீரரின் புகழ் குறைவாகவே உள்ளது. ஒரு நடிகரை நாட்டு மக்கள் எந்தளவிற்குத் தெரிந்து வைத்திருக்கிறார்களோ அந்த அளவிற்கு விண்வெளி வீரர் ராகேஷ் சர்மா தெரிந்தவராக இல்லை. இவர் தான் முதன் முதலில் இந்தியாவின் சார்பாக விண்வெளிக்குச் சென்று வந்தவர் எனச் சொல்ல வேண்டிய நிலை இன்று உள்ளது. சினிமாக் கதாநாயகர்களின் புகைப்படங்கள் கடைகளில் கிடைக்கின்றன. ஆனால் விண்வெளிக்குச் சென்ற முதல் இந்தியரின் புகைப்படம் எங்கும் கிடைப்பதில்லை,” என்று இன்றைய நிலையில் மக்கள் அறிவியலார்களுக்குத் தேவையான முக்கியத்துவத்தை வழங்குவதில்லை என்பதை வருத்தத்துடன் சுட்டிக் காட்டுகிறார். இக்குறையை நீக்கும் பொருட்டு இவர் எழுதிய நூல்களில் பல அறிவியல் வளர்ச்சியில் அரும்பங்காற்றியவர்களை இளையதலைமுறைக்கு அறிமுகப்படுத்தும் நோக்கிலேயே எழுதப்பட்டும் உள்ளன. ஏற்காட்டில் வாழ்ந்து வரும் இளங்கோ அவரது இறப்பிற்குப் பிறகு அவரது உடலை மருத்துவ ஆய்வுக்குப் பயன்படுத்தவேண்டும் என்று அவரது விருப்பத்தை ஆவணத்தில் பதிவு செய்துள்ளார். மார்க்சியக் கொள்கைவழி அறிவியல் முறையில் நாத்திகராகவும், மூட நம்பிக்கைகளைத் தகர்க்கும் அறிவியல் செய்திகளைப் பரப்புவதை தனது நோக்கமாகவும் கொண்டுள்ளார். அதன் காரணமாக தனது அறிவியல் மற்றும் பொதுஅறிவுத் தகவல் கொண்ட நூல்கள் பலவற்றிற்குத் தான் கொண்டுள்ள காப்புரிமைகளை நீக்கி இலவச மின்னூலாக அவை அனைவரையும் சென்றடையும் பொருட்டு “ஃப்ரீ தமிழ் இ புக்ஸ்” துணையுடன் தனது நோக்கத்தைச் செயல்படுத்தி வருகிறார். ஃப்ரீ தமிழ் இ புக்ஸ் எழுத்தாளர்களில், தனி ஒருவராக மற்ற யாவரையும்விட அதிக எண்ணிக்கையில், 13 நூல்களுக்குக் காப்புரிமைகளை நீக்கி ஃப்ரீ தமிழ் இ புக்ஸ் வழியே வெளியிட்டுள்ளார் ஏற்காடு இளங்கோ. கீழ்க்காணும் சுட்டிகள் வழி அவற்றைத் தரவிறக்கிப் பயனடையலாம்: [1] தமிழகத்தின் அடையாளச் சின்னங்கள் – http://freetamilebooks.com/ebooks/symbols-of-tamilnadu/ [2] இந்திய தேசியச் சின்னங்கள் – http://freetamilebooks.com/ebooks/national-symbols-of-india/ [3] இந்தியாவின் முக்கிய தினங்கள் – http://freetamilebooks.com/ebooks/indiyavin-mukkiya-thinangal/ [4] உலகில் கொண்டாடப்படும் சிறப்பு தினங்கள் – http://freetamilebooks.com/ebooks/celebrationdaysinworld/ [5] விண்வெளிப் பயணம் – http://freetamilebooks.com/ebooks/vinveli-payanam/ [6] விண்வெளியில் ஆய்வு நிலையம் – http://freetamilebooks.com/ebooks/space-research-center/ [7] பூமியின் எல்லையைத் தொட்டவர்கள் – http://freetamilebooks.com/ebooks/boomiyin-ellaiyai-thottavargal/ [8] உலகின் முதல் பெண் விண்வெளி வீரர் – http://freetamilebooks.com/ebooks/first-women-astranaut/ [9] முதல் இந்திய விண்வெளி வீரர் ராகேஷ் சர்மா – http://freetamilebooks.com/ebooks/rakesh-sharma/ [10] விண்வெளியில் சாதனை படைத்த சுனிதா வில்லியம்ஸ் – http://freetamilebooks.com/ebooks/sunitha-williams-in-space/ [11] விமானம் ஓட்டிய கைகள் இல்லாப் பெண் – http://freetamilebooks.com/ebooks/vimanam-ottiya-kaigal-illa-pen/ [12] தானியங்கள் – http://freetamilebooks.com/ebooks/thaniyangal/ [13] குடிசை – குறுநாவல் – http://freetamilebooks.com/ebooks/kudisai-novel/ ஏற்காடு இளங்கோ மேலும் தனது அறிவியல் செய்திபரப்பும் பணியைத் தொடர வேண்டும் என்றும், தமிழுலகம் பயன்பெறும் வகையில் இன்னமும் பல நூல்களை வழங்க வேண்டும் என்றும் வாழ்த்தி மகிழ்வோம். January 5, 2015 ருத்ரா இ. பரமசிவன் [] கவிதைகள் எழுதுவதைத் தனது முதன்மை சிந்தனை வெளிப்பாடாகக் கொண்டாலும் அதிலும் பலவேறு கோணங்களில் திறமையைக் காட்ட முடியும் என்று தொடர்ந்து காண்பித்து வருகிறார் கவிஞர் (உ)ருத்ரா இ. பரமசிவன் அவர்கள். அவரது கவிதையிலக்கிய ஆளுமை வியக்க வைப்பது. கல்லிடைக்குறிச்சியைத் தனது பூர்வீகமாகக் கொண்டு தாமிரபரணி நதிக்கரையில் வளர்ந்த கவிஞர் ருத்ரா அவர்களின் கல்விப் பின்னணி பொருளாதாரத்துறை. தற்பொழுது 70 அகவையைக் கடந்த ருத்ரா, கல்லூரி நாட்களில் பொருளாதார‌ப் பாட‌த்தில் தரவரிசையில் முத‌ல் நிலையில் தேர்வு பெற்றதால் ‘நேரடித் தேர்விற்கு உட்படுத்தத் தேவையில்லை’ என்ற சிறப்பு விதிகளின் அடிப்படையில் இந்திய ஆயுள் காப்பீட்டு கழகத்தில் (LIC of INDIA) பணிக்கு ஏற்றுக்கொள்ளப்பட்டவர். இந்திய ஆயுள் காப்பீட்டு கழகத்தின் பல்வேறு துறைக‌ளிலும் ப‌ணியாற்றியுள்ளார். பணி ஓய்விற்குப் பிறகு தனது மனைவியுடன் அமெரிக்காவிற்குக் குடிபெயர்ந்து கலிஃபோர்னியாவில் வசிக்கும் அவரது மகன் மற்றும் மகள் குடும்பத்துடனும், பேரன் பேத்திகளுடன் வாழ்ந்து வருகிறார். கல்கி, ஜூவி, குங்குமம், செம்மலர் போன்ற பத்திரிக்கைகளிலும் கவிஞர் ருத்ராவின் கவிதைகள் இடம் பெற்றுள்ளன. அகரமுதல, திண்ணை, வார்ப்பு போன்ற இணைய இதழ்களிலும், இணையத்தமிழ்க் குழுமங்களிலும், தனது பல்வேறுபட்ட வலைப்பூக்களிலும் தொடர்ந்து எழுதி வருகிறார். பொருளாதாரத் துறையின் பின்னணி கொண்டாலும் அறிவியலில், அதிலும் குறிப்பாக இயற்பியலில் ஆர்வம் மிகக் கொண்டவர் கவிஞர் ருத்ரா. குவாண்ட‌ம் மெக்கானிக்ஸ், ஆலன் கத்ஸ் இனஃப்லேஷன் தியரி(Alan Guth Inflation Theory), சவ்வுப்படல வெளிகள் (RS MODELS I AND II), அண்டம், பெருவெடிப்பு, ஹிக்ஸ் போசோன் சப்அட்டாமிக் பார்ட்டிகில் (higgs boson subatomic particles) போன்றவற்றைப் பற்றி விளக்கிக் கட்டுரைகள் எழுதும் வல்லவர். இயற்பியல் கட்டுரைகள் மட்டுமன்றி அத்தகவல்களைக் கவிதையின் கருப்பொருளாகவும் கொண்டு கவிதைகளும் எழுதுவார். கவிஞர் ருத்ராவின் கவிதைகளின் பாடுபொருள் பொதுவாக வழங்கிவரும் கருப்பொருட்களில் இருந்து மாறுபட்டவை, கவிதைகளின் நயமும் கவிதைநடையில் வேறுபட்டவை. பொதுவான புழக்கத்தில் இருக்கும் கவிதை பாணியிலும் இவரால் எழுத முடியும், பிற கவிஞர்கள் தொட்டிராத கோணங்களையும் கவிஞர் ருத்ராவால் காட்ட முடியும். இவர் எழுதும் கவிதைகளுக்கு சொல்லலங்காரம் ஆதாரம் அல்ல. சொல்லவரும் கருத்துக்களுக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுத்து எழுதுபவர். இவர் கவிதைகளின் பல்வேறு கோணங்களை அடுத்து பார்ப்போம் (கவிதைகள் முழுமையாகவோ அல்லது சிறப்பு வரிகள் மட்டுமோ இடத்திற்குத் தக்கவாறு பகிர்ந்து கொள்ளப்பட்டுள்ளது). அறிவியல் தாக்கக் கவிதைகள்: களிப்பருளும் “களிப்பே” என்ற கவிதையில் கவிஞர் ருத்ரா இயற்பியல் கருத்துக்களின் வழி ஆன்மிக விளக்கமளிக்கிறார். களிப்பருளும் “களிப்பே”! எது ஞானம்? எது அஞ்ஞானம்? அது மெய்ஞானம்? எது விஞ்ஞானம்? முடிவில்லாததற்கு முடி போட்டு குடுமி போடமுடியாது. முனை தெரியும் வரை கையில் கருத்தில் நிரடும் வரை பாதியாக்கு பாதியாக்கிக்கொண்டே இரு. கிரேக்க மொழியில் மெலிடஸ் (கிமு 610_540) இதை “அபெய்ரான்” என்றார். இன்ஃபினிடி என்று இது நுண்கணிதம் ஆயிற்று. லிமிட்டிங் டு சீரோ என்பது டிஃபரன்ஷியல் கால்குலஸ். லிமிட்டிங் டு இன்ஃபினிடி என்பது இன்டெக்ரல் கால்குலஸ். தொகுத்ததைப் பகுத்த போதும் பகுத்ததைத் தொகுத்த போதும் வெறுமையே அங்கு விஸ்வரூபம். விஞ்ஞானிக்கு அது ஹிக்ஸ் போஸான். மெய்ஞானிக்கு அது ஹிரண்யகர்ப்பன். ஆத்திகத்தையும் நாத்திகத்தையும் குவாண்டம் பிடித்து ஒரு லிங்கம் செய்தால் அதுவே இங்கு ஒரு குவாண்ட லிங்கம். ஃபெர்மியானும் போஸானும் கொண்டு பிசைந்த லிங்கமே அது. […] ஒரு பொருள் ஒரே நேரத்தில் இரு வேறு தன்மை கொண்டு இருப்பதை இன்று அறிவியல் அறிகிறது, ஆனால் இந்தக் கருத்தை ஆன்மிகம் முன்னரே குறிப்பிட்டுள்ளது. இறைவன் ஒரே நேரத்தில் சிவனாகவும் சக்தியாகவும் இருப்பது அணுவின் தன்மையைப் போன்றது என்று மாணிக்கவாசகர் கூறிய “அணுத்தரும் தன்மையில் ஐயோன் காண்க” கருத்தைக் கவிஞர் ருத்ரா இக்கவிதையில் கையாண்டதை முனைவர் க. கணேசலிங்கம் பாராட்டியுள்ளார். சங்கநடைக் கவிதைகள்: பிற கவிஞர்களிலும் இருந்து ருத்ராவை வேறுபடுத்திக் காட்டுவது அவரது சங்கஇலக்கியச் சாயல் கொண்ட கவிதைகள். கீழே ஒரு எடுத்துக்காட்டு… பசலை பூத்தே… கதழ்பரி கலிமா அலரிதூஉய் ஆறுபடுத்தாங்கு வேங்கை புரையும் முன்னிய வெஞ்சுரம் இலஞ்சி வீழ்த்தும் இன்னிய பலவின் முள்பசுங்காய் மூசும் தும்பி அதிர்வினம் யாழ்க்கும். நெடுந்தேர் மணிநா நடுங்கி இமிழும் ஓதையுண்பினும் ஓவா உறுபசி உழல்படு வண்டினம் வெள்வெளி ஆர்க்கும். நீள்மலைப்பாம்பின் அன்ன நெடுவேர் தடுக்கும் மறிக்கும் எவன் கொல் செயினே. பெரும்பணைத் தோளின் கடுப்ப விரையும் துப்புநிலை அறியும் அதிர்கலிப் பொறிமா. துவள்படும் நெஞ்சின் என் பொங்குதிரை ஈண்டு அடு கிளர் அகலத்து அவன் உள் உள் தைக்கும் அகவும் மஞ்ஞை என்னுள் அகவி உருவும் என்னுயிர் மின்னல் மயிரிய‌ நார்ப்பூ தொடுக்கும் பசலை பூத்தே! பொழிப்புரை:- குளம்புகள் பதிய குதித்துச்செல்லும் குதிரையை அதன் அலரிப்பூக்குஞ்சம் அசைய அதனால் அப்பூக்கள் எங்கும் உதிர குதிரை (பூட்டிய தேரில்) செல்லும் காதலன் வழியெல்லாம் வேங்கை மரங்கள் அடர்ந்திருக்கும் அந்த வெங்காட்டு வழியில் செல்கிறான்.நெருக்கமான வழி அது.இடையிடையே உள்ள இலஞ்சி எனும் சுனைகள் செறிந்த ஊரில் இனிய தன்மை கொண்ட பலாமரங்கள் தரை தொடும்படி பலாக்கனிகளை (வேர்ப்பலா)வீழ்த்திக்கிடக்கும்.பலாவின் மேல் புறம் முள் அடர்ந்தது போல் உள்ள தோற்றத்தைக்கண்டு அவையும் சிறு சிறு வண்டுகள் என நினைத்து அந்த பசுங்காய்கள் மீது வண்டுகள் மொய்க்கும். அவை யாழ் போல சிறகுகளை அதிரச்செய்து இசைக்கும்.காதலனின் நெடிய தேரின் மணியின் நாக்கும் நடுங்கலுற்று அதிலிருந்து மெல்லொலி கேட்கும். அந்த இன்னொலியை உண்டபோதும் தன் தீராத பசியால் அலைவுற்று அவை அந்த வெட்டவெளியில் மொய்த்துப்பறக்கும்.வழியில் குறுக்கு நெடுக்காகக் கிடக்கும் மரத்தின் வேர்கள் நீண்ட மலைப்பாம்புகள் போல் காதலன் செல்லும் வேகத்தைத் தடுத்து மறிக்கும்.இதை என்ன செய்வது?என் பிரிவுத்துயரத்தை இது இன்னும் அதிகப்படுத்துகிறதே என்று காதலி துன்பம் கொள்கிறாள்.மனக்கண்ணில் காதலன் விரைந்து வரும் காட்சிகள் விரிகின்றன. அவன் திரண்ட தோளின் வலிமைமிக்க செயலினால் விரையும் குதிரைகள் அவன் வலியத் தன்மையை அறியும்.உடம்பில் அழகிய புள்ளிகள் நிறைந்த அரிய அந்த அழகிய குதிரை அதிர்வோடு துள்ளி துள்ளி ஓடும்.இங்கு துவண்டு போன உள்ளத்தோடு வேதனை அடையும் என் நெஞ்சில் பொங்கும் அலைகள் அவன் அகன்ற நெஞ்சத்தில் சூடேற்றி கிளரச்செய்து அவன் நெஞ்சக்கூட்டிலும் உள்ளே உள்ளே தைத்து வருத்தும்.எங்கோ கூவும் மயில் அதன் அகவல் ஒலியை என்னுள் பாய்ச்சும்.அது என்னுயிர் ஊடுருவி மயிரிழை போன்ற மின்னல் உணர்வை நுழைத்து அதை நார் ஆக்கி பூ தொடுக்கும்.அந்த மலர் மாலை பசலை நோயாய் (பிரிவு துன்பத்தின் வலி)என் மீது மலர்ந்து படரும். இவை காதலியின் மனவெழுச்சி மிக்க காதலின் சொற்கள். “கவிதை என்ற பெயரில் அயற் சொற்களைக் கலந்து உரை நடையைத் தருவோர் இடையே மரபுப் பாடல்கள் புனையும் தங்கள் ஆர்வமும் ஆற்றலும் பாராட்டிற்குரியது,” என்று முனைவர். இலக்குவனார் திருவள்ளுவன் அவர்கள் இவர் முயற்சியைப் பாராட்டி உள்ளார்கள். காப்பியாற்றுப்படை, மாவின் அளிகுரல், நெடுநல் மாயன், இன்னுரை தடவினும் என்னுயிர் மாயும், காய்நெல் அறுத்த வெண்புலம், கல்பெயர்த்து இழிதரும், வேழ விரிபூ! என்று பல தலைப்புகளில் சங்க இலக்கிய நடைக் கவிதைகளை கவிஞர் ருத்ரா வழங்கியுள்ளார். இக்கவிதையை எழுதியவரும் முன்னர் குறிப்பிட்ட அறிவியல் கவிதையை எழுதியவரும் ஒரே கவிஞரா என வியக்காமல் இருக்க இயலாது. குறும்பாக்கள்: குறும்பாக்கள் குறைந்த வரிகளில் முக்கியமானக் கருத்தை சொல்வதாகவும் இருக்க வேண்டும், அதே சமயம் சொல்லப்பட்ட கருத்தும் மனதில் தக்க வேண்டும். கவிஞர் ருத்ராவின் மற்றொரு சிறப்பு, குறும்பாக்களிலும் முத்திரை பதிப்பது. குறும்பாக்கள் பற்றி அவர் சொல்லும் குறும்பா… குறும்பாக்களைப்பற்றி குறும்பா… ஆயிரம் பக்க எழுத்துக்களின் “போன்சாய்” மரம் கீழே அவருடைய இருவேறு குறும்பாத் தொகுப்புகளில் இருந்து சில பாடல்கள். எழுத்தாளர்கள் பற்றிய விமர்சனத்தை மூன்று நான்கு வரிகளில் மிகக் கச்சிதமாக முடித்து விடுக்கிறார். தெரிவு செய்யப்பட்ட எழுத்தாளர்கள் சிலரில் அவர் தன்னைப்பற்றிக் கூறுவதும் இடம் பெறுகிறது. சுஜாதா எழுத்துக‌ளுக்கு எல‌க்ட்ரானிக்ஸை ஊற்றிய‌வ‌ர்….ஆயிர‌ம் “எந்திர‌ன்”க‌ளின் அடிப்ப‌டை “சிப்” கல்கி எத்தனைத் தலையணைகள். அத்தனையிலும் சரித்திரம் விழித்துக்கொண்டிருந்தது. ருத்ரா ருத்ராவா? யார் அது? ப‌த்திரிகை ஆஃபீஸ்க‌ளின் குப்பைத்தொட்டியில் தேடுங்க‌ள். (ம‌ற்ற‌ ருத்ராக்க‌ள் ம‌ன்னிக்க‌) எழுதிச்செல்லும் விதியின் கை எழுதி எழுதி மேற்செல்லும். எங்கே முடியும் விதி? “பத்திரிகை அலுவலகத்தின் குப்பைக்கூடை” பேனாவுக்கு மட்டுமே புரிந்தது. காகித‌ம் ம‌ட்டுமே ர‌சித்த‌து. “க‌விதை” எழுதி முடிக்க‌வில்லை. பேனாவில் எல்லாம் எறும்புக‌ள். “த‌மிழுக்கும் அமுதென்று பேர்” இங்கு சுட்டப்பட்ட எழுத்தாளர்கள் தவிர்த்து, தமிழ் எழுத்தாளர்களில் மேலும் பலரை விமர்சித்து நான்கு தனிப் பாடல் திரட்டாகக் கொடுத்துள்ளார். விமர்சனக் கவிதைகள்: அறிவியல் ஆன்மிகக் கவிதைகளுக்கும், சங்க நடைக் கவிதைகளுக்கும், குறும்பாக்களுக்கும் முற்றிலும் மாறுபட்ட வகையில் முற்றிலும் வேறுபட்ட பாடுபொருளைக் கருத்தாக வைத்தும் கவிஞர் ருத்ராவால் கவிதை எழுத முடியும். யாரும் பொதுவாகக் கையாளும் கவிதைக் கருவுக்கு மாறுபட்டு விளையாட்டு விமர்சனம் என்பதைக் கூடக் கவிதையாக வடிப்பவர் ருத்ரா. சென்ற உலகக் கால்பந்து போட்டியில் நெதர்லாந்தும் மெக்ஸிகோவும் மோதியதையும் விமர்சனக் கவிதையாகவே வழங்கியிருந்தார்…அக்கவிதை கீழே. உலகக் கோப்பை கால்பந்து நெதர்லாந்தும் மெக்ஸிகோவும் நியூயார்க் டைம்ஸ் கொப்பளிக்கிறது பி.பி.ஸி ஸ்போர்ட்ஸ் நரம்பு புடைக்கிறது. டிவி திரை பூராவும் உணர்ச்சிக்கம்பளிப்பூச்சிகளின் அடைசல்கள்.துள்ளு முள்ளுகள். கழுத்துப்பிடியாய் கடையில் ஒரு அமுக்கு. அப்புறம் பெனால்டியில் மெக்ஸிகோ தோல்விக்குப்பெட்டிக்கு கடைசி ஆணி. தொண்ணூத்து நாலாவது நிமிடத்தில் “க்ளாஸ் ஜான் ஹண்டெலார்” அடித்த கோல்.. வானத்தின் உச்சிமண்டை பிளந்து கொண்டது. அந்த உற்சாகக்குரல் உலகத்தின் செவிட்டுக்காதுகளின் பாறாங்கல்லையெல்லாம் கூட‌ உருட்டித்தள்ளியிருக்கும். நாக் அவுட் வந்த பிறகும் இனியும் ஒரு நாக்கை தொங்கப்போட்டுக்கொண்டிருக்க முடியுமா? சிலிக்கு இப்படித்தானே பிரேஸில் ஒரு பச்சை மிளகாயை கடிக்கக் கொடுத்தது. அவர்களுக்கு பச்சை மிளகாய் எல்லாம் இனிப்புக்காய்கள் என்றாலும் இந்த நாக் அவுட்டின் அந்த “ஆலப்பினோ அல்லது ஜாலப்பினோ” செம காரம் தான். மூக்கில் காதில் கண்ணில் எல்லாம் காரம் தான். பிஃபாவின் வண்ண வண்ண ரத்தப்புடைப்புகளை இந்த கால்பந்தில் பார்த்து நரம்புக்குள் நல்லபாம்புகளை கொத்தவிட்டு நுரை தள்ளி பார்த்து ரசிக்கும் விளையாட்டு எந்தச் சொர்க்கத்திலும் கிடைக்காது. கிரிக்கெட் கூட ‌ அகராதிப்படி வெறும் பூச்சி விளையாட்டு தான். மாறுகோணச் சிந்தனையின் மறுவுருவமாக பலகோணங்களில் கவிதைகள் படைத்து வரும் கவிஞர் ருத்ரா கவிதை இலக்கியத்தில் புதுமைகள் புகுத்தும் ஒரு வல்லமையாளரே. January 12, 2015 இல. சுந்தரம் [] “தமிழ்நிதி விருது” பெற்ற கணினித்தமிழ் அறிஞர் இல. சுந்தரம் அவர்கள் எஸ். ஆர். எம். பல்கலைக் கழகத்தில் தமிழ்ப் பேராயத்தின் துணைப்பேராசிரியர். இவர் தமிழ், கணினி என இருதுறைகள் சார்ந்த கல்வியில் பட்டங்கள் பெற்றவர் (எம். ஏ., எம். ஃபில், எம்.சி.ஏ., எம்.பி.ஏ. முதுகலைப்பட்டங்களும் முனைவர் பட்டமும்). இத்திறமையைச் செம்மையாகப் பயன்படுத்தி கணினித்தமிழ் வளர்ச்சியிலும், தமிழ் மென்மம் உருவாக்குவதில் ஆர்வம் காட்டி வருகிறார். தொல்காப்பிய எழுத்ததிகாரத்திற்கு மாணவர் உரை நூல் எழுதும் இவரது தமிழிலக்கிய ஈடுபாட்டிற்குச் சற்றும் குறைந்ததல்ல இவரது கணினித்தமிழ் ஆர்வமும். தமிழ் மரபுக்களஞ்சியக் கணினித்திட்ட அமைப்பாளராகவும், உத்தமம் (உலகத் தமிழ்த் தகவல் தொழில் நுட்ப மன்றம் / The International Forum for Information Technology in Tamil – INFITT) உறுப்பினராகவும் பொறுப்பேற்றுள்ளார். கணினித் தமிழ்வளர்ச்சியில் பங்காற்றிவரும் இல. சுந்தரம் ஒருங்குறி தமிழ் எழுத்துருக்களை உருவாக்கி, அவற்றைப் பொதுப்பயன்பாட்டுக்கு வெளியிட்டுள்ளார். கட்டற்ற கணிநுட்ப வளர்ச்சிக்கு உதவிவரும் ‘கணியம்’ இவர் உருவாக்கிய 10 ஒருங்குறி தமிழ் எழுத்துருக்களை இந்த ஆண்டின் புத்தாண்டு பரிசாக அறிவித்துள்ளது (http://www.kaniyam.com/ila-sundaram-unicode-tamil-fonts. இத்தளத்திற்குச் சென்று இந்த எழுத்துருக்களைத் தரவிறக்கிப் பயன்படுத்தலாம். இவை SIL Open Font License, Version 1.1. என்ற கட்டற்ற உரிமையில் வழங்கப் படுகின்றன. எனவே இந்தப் பொதுப்பயன்பாட்டு விதியின்படி இந்த எழுத்துருக்களை யாவரும் பயன்படுத்தலாம். பகிரலாம். மாற்றங்கள் செய்து புது எழுத்துருக்களாகவும் வெளியிடலாம். “கணினியில் தமிழ்மொழியின் பயன்பாடு பெருகியுள்ளது. தமிழ்மொழியின் வளர்ச்சிக்குக் கணினியின் பங்களிப்பு தவிர்க்கமுடியாத ஒன்றாகிவிட்டது. மொழி ஆய்வுக் கருவியாகக் கணினியைப் பயன்படுத்திவருகிற நிலையில் தமிழ்மொழித் தரவுகளை அதற்கு ஓர் ஒழுங்கமைவுடன் கற்றுத்தரவேண்டியுள்ளது. அதாவது கணித அடிப்படையில் மொழியில் உள்ள மொழியியல் கூறுகளைக் கணினிக்கு ஏற்ற வகையில் மாற்றித்தரவேண்டியுள்ளது. இத்தகைய வழிமுறைகளைக் கொடுப்பதே கணினி மொழியியல் என்பதாகும். மொழி செயல்படுவதில் உள்ள ஒழுங்குமுறையின் தொகுப்புதான் இலக்கணம். இத்தகைய ஒழுங்குமுறை நவீன, தொழில்நுட்ப வளர்ச்சிகளினாலும் மொழி உலகமயமாக்கச் சூழலினாலும் சிதைந்தும் மாறுபட்டும் வருகிறது. மொழியை இத்தகைய சிதைவுகளிலிருந்து மீட்டெடுக்க மொழியியல் கூறுகளை முறையாகக் கற்று, பயன்படுத்தவேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.” … என்று கணினித் தமிழ்வளர்சியின் இன்றியமையாமையைக் குறிப்பிடும் கணினித் தமிழ் அறிஞரான இல. சுந்தரம், அத்துறையின் வளர்ச்சியில் கொண்டுள்ள அக்கறையின் காரணமாக கணினித் தமிழ் எதிர்கொள்ளும் தடங்கல்கள், தமிழ் மென்மம் வளர்ச்சியின் தேவைகள் ஆகியவற்றைக் குறித்து உலகத்தமிழ் கருத்தரங்குகளில் ஆய்வறிக்கைகள் வாசித்துள்ளார். சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் மொழியியல் உயராய்வு மையமும், உலகத் தமிழ்த் தகவல் தொழில் நுட்ப மன்றமும் இணைந்து நடத்திய 11வது உலகத் தமிழ் இணைய மாநாட்டில், ‘பயனர் நோக்கில் மென்தமிழ் தமிழ்ச் சொல்லாளர்’ என்ற ஆய்வறிக்கையை வாசித்துள்ளார். மேலும் இவரது, ‘கணினிவழித் தமிழ்மொழியாய்வில் பொருள் மயக்கம்’, ‘கணினிவழிச் சொல்லடைவு மென்மம் உருவாக்கமும் தமிழ்மொழியமைப்புச் சிக்கல்களும்’ போன்ற கணினித் தமிழ்க் கட்டுரைகளும் கணினித்தமிழ்த் துறைக்கு இவராற்றியப் பங்களிப்புகளாகும். கணினித் தமிழ் வளர்ச்சித் துறையில் தொடர்ந்து பங்காற்றிவரும் இல. சுந்தரம் அவர்களது ஆர்வத்தைப் பாராட்டி, இதுவரை இவராற்றியப் தமிழ்ப் பணியினைக் கருத்தில் கொண்டு, அவர் இத்துறையில் மேலும் பங்களிக்க உற்சாகமூட்டும் வகையில், திரு இராம வீரப்பன் தலைவர் சென்னைக் கம்பன் கழகம் தலைமையில் இளம் தலை முறையினரை ஊக்குவிக்கும் திட்டத்தில், ‘தமிழ்நிதி’ விருது வழங்கப்பட்டு இல. சுந்தரம் சிறப்பிக்கப்பட்டுள்ளார். இளம் வயதில் இவர் செய்துள்ள இந்தச் சாதனை பாராட்டப் படவேண்டிய ஒன்று. January 19, 2015 மு. பழனியப்பன் [] இலக்கிய மற்றும் ஆய்வுக் கட்டுரைகளை எழுதி வரும் முனைவர் மு.பழனியப்பன் அவர்கள் புதுக்கோட்டை மன்னர் கல்லூரி, தமிழ் இணையப் பல்கலைக்கழகம், சிவகங்கை மன்னர் துரைசிங்கம் அரசு கலைக்கல்லூரி போன்றவற்றில் பணியாற்றியவர். முனைவர் மு.பழனியப்பன் அவர்கள், தற்போது திருவாடானை – அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் தமிழ்த்துறைத் தலைவராக தமிழ்த்துறையை முன்னடத்திச் செல்வதுடன் மேலும் பல தமிழ்ப்பணிகளையும் ஆற்றி வருபவர். வள்ளுவனிடமும், கம்பனிடமும் ஆழ்ந்த பற்று கொண்ட மு.பழனியப்பன் ஆண்டுதோறும் நடைபெறும் காரைக்குடி கம்பன் விழாக்கள், உலகத் திருக்குறள் பேரவையின் மாநாடுகள், அழகப்பா பல்கலைக்கழகமும் தமிழ் மரபு அறக்கட்டளையும் இணைந்து வழங்கிய கருத்தரங்கம், சிற்பி பவளவிழா ஆகியவற்றின் ஒருங்கிணைப்பாளராகவும் தன்னார்வத் தொண்டாற்றி வருபவர். தமிழ் இணையப் பயிலரங்கங்களை நடத்துவதிலும், “ஆய்வுச் சுற்றம்” என்ற தமிழாய்வு இணைய சஞ்சிகையிலும் பங்காற்றி வருகிறார். இவர் இலக்கியப் பங்களிப்பிற்குச் சான்றாகப் பத்து நூல்களை வழங்கியதுடன், பற்பல கட்டுரைகளையும் இணைய இதழ்களான வல்லமை, திண்ணை, ஜியோதமிழ் ஆகிய இதழ்களில் எழுதி வந்துள்ளார். இவர் எழுதியிருக்கும் “விடுதலைக்கு முந்தைய பெண்களின் நாவல்கள்” என்ற நூலிற்காகப் பெருமுயற்சி செய்து 43 நாவல்களைத் தேடிப் பிடித்து, இந்தப் புத்தகத்திற்காக ஆய்வுக்கு உட்படுத்தியுள்ளார். இந்நூலில் இவர் நாவலாசிரியர்களின் படைப்புகளைப் பட்டியலிட்டு, அவர்களது பங்களிப்பையும் பதிவு செய்து, நாவல்களின் கதைச் சுருக்கங்களையும் தொகுத்தளித்திருக்கிறார். இந்நூல் சிறந்த ஆய்வு நூலாகப் பாராட்டப் பட்டதுடன், சாமானியர்களும் படித்துத் தெரிந்துகொள்ள உதவும் சுவாரசியமான தகவல் களஞ்சியம் எனவும் பாராட்டு பெற்றுள்ளது. கடந்த ஆறு ஆண்டுகளுக்கும் மேலாக இணைய இதழ்களிலும், இணையத்தமிழ்க் குழுமங்களிலும், பல்கலைக்கழக கருத்தரங்கங்களிலும் தனது இலக்கிய மற்றும் ஆய்வுக் கட்டுரைகளைப் பகிர்ந்து வந்துள்ளார். தமிழிலக்கியக் கட்டுரைகள், நூலாய்வுக் கட்டுரைகள், தமிழ்மொழி வளர்ச்சி, இணைய மற்றும் கணினித் தமிழ் வளர்ச்சி, சமூகவியல் கட்டுரைகள் போன்ற பிரிவுகளில் கட்டுரைகள் பல வழங்கியுள்ளார். இவரது நூலறிமுகம்/நூலாசிரியர் அறிமுகம் கட்டுரையான “ஆழியாற்றின் கரையினில் கவித்தவம் இருக்கும் கலைச் சிற்பி” கட்டுரையில், சொல்லில் கலை வண்ணம் கண்டுக் கவிதைச் சிற்பங்களைச் செதுக்கும் வானம்பாடிக் கவிஞர்… மரபில் தொடங்கிப் புதுக்கவிதையில் பூத்த பழமை மாறாத புதுப்பாவலர் பேராசிரியர், கவிஞர், காவிய ஆசிரியர், திறனாய்வாளர், ஆய்வு நெறியாளர், மொழிபெயர்ப்பாளர், இதழாசிரியர், சாகித்திய அகாடமி விருதாளர், சாகித்திய அகாடமி தமிழ்ப்பகுதிப் பொறுப்பாளர், ஆண்டுதோறும் வாழ்நாள் சாதனைக் கவிஞர்களை, புதுக் கவிஞர்களைப் பாராட்டும் சீரிய நெஞ்சர் என்று பல்வேறு முகங்களைக் கொண்ட சிற்பி பாலசுப்பிரமணியம் அவர்களை அறிமுகப்படுத்தியிருந்தார். அறிவியல், ஆன்மீகம், தத்துவம், சராசரி வாழ்க்கை என்று தற்காலத்தின் கவிதைப் பதிவுகளாக விளங்குபவை சிற்பியின் ஆக்கங்கள். சொல்லுக்குள் சுகம் வைத்து, கவிதைக்குள் உலகைத் தேக்கி, தன் காலப் பதிவைச் சிறப்பாகச் செய்து வருபவர் சிற்பி. அப்துல்கலாமின் ஏவுகணை வெற்றியையும் இவர் பாடுகிறார். இயந்திர மனிதனின் குழந்தை தானியங்கிக் கதவிடுக்கில் சிக்கிக் கொண்ட சோகத்தில் அறிவியலாளன் திணற, அடுத்த கட்டளையைக் கேட்டு நிற்கும் இயந்திர மனிதனின் தோல்வியையும் இவரின் கவிதை பாடுகின்றது என்று சிற்பி பாலசுப்பிரமணியம் அவர்களின் கவிதைகளின் அழகியலையும் இலக்கிய நயம் பாராட்டியிருந்தார். நயமிக்க ஆய்வுக் கட்டுரைகளை வழங்குவதன் மூலம் தமிழிலக்கியப் பணியாற்றி வரும் முனைவர் மு.பழனியப்பன் அவர்களின் இலக்கியப்பணிகள் தொடரப் பாராட்டுகளும் வாழ்த்துகளும். January 26, 2015 கலைமகள் ஹிதாயா [] கவிஞர் கலைமகள் ஹிதாயா அவர்கள் தனது கவித்திறமையால் கவிதை ஆர்வலர்கள் நெஞ்சினில் இடம் பிடித்தவர். கலைமகள் ஹிதாயா அவர்களின் “பாரிலே பிறப்பான்….!“, “யாஅல்லாஹ்!” போன்ற கவிதைகள் அவற்றில் சில. கருத்தோட்டம், சொல்லோட்டம் இரண்டுமே அருமையாக அமைந்திருந்த கவிதை என்றப் பாராட்டினை “பாரிலே பிறப்பான்…” கவிதை பாராட்டப்பட்டது. இலங்கை கல்முனையைச் சார்ந்த கவிஞர் கலைமகள் ஹிதாயா; கலைமகள் ஹிதாயா ரிஸ்வி, ஹிதாயா மஜீத், மருதூர்நிஸா என்ற பெயர்களில் தனது இலக்கியப்படைப்புகளை அளித்து வருகிறார். இளமையிலேயே இலக்கியத்துறையில் ஈடுபாடு கொண்ட கலைமகள் ஹிதாயா அவரது பதினாறாவது வயதிலேயே கவிதைகள் எழுதத் துவங்கியவர். முதல் முயற்சியிலேயே இவரது “மீண்டும்” என்ற புதுக்கவிதையும், “அன்னை” என்ற மரபுக் கவிதையும் வெவ்வேறு பத்திரிக்கையில் ஒரே நாளில் பிரசுரிக்கப்பட்டது என்ற சிறப்பினைப் பெற்றவர் பதின்ம வயதில் தொடங்கிய இவரது இலக்கியப் பங்களிப்பு, தொடர்ந்து மூன்று பத்தாண்டுகளையும் கடந்ததுடன், இவர் எழுத்தின் வீச்சு மரபுக்கவிதை, புதுக்கவிதை, சிறுகதை, கட்டுரை, நெடுங்கதை, மெல்லிசைப்பாடல், விமர்சனம் எனப் பற்பல பரிமாணங்களில் மிளிர்கிறது. இதுவரை ஆயிரத்திற்கும் மேற்பட்ட புதுக்கவிதைகளையும், மரபுக்கவிதைகளையும் எழுதியுள்ளார். நாளையும் வரும், தேன் மலர்கள், இரட்டைத் தாயின் ஒற்றைக் குழந்தை என்ற புதுக்கவிதை மற்றும் மரபுக்கவிதை நூல்களை வெளியிட்டுள்ளார். முப்பது சிறுகதைகளையும், நூற்றுக்கும் மேற்பட்ட கட்டுரைகளையும், பற்பல நூல் மதிப்புரைக் கட்டுரைகளையும் எழுதியுள்ளார். இலங்கையின் பல பத்திரிக்கைகளிலும், இந்தியா, ஆஸ்திரேலியா பத்திரிக்கைகளிலும் இவரது படைப்புகள் வெளிவந்துள்ளன. இலங்கை வானொலியில் பல நிகழ்ச்சிகளில் குரல்கொடுத்துள்ள இவர் ரூபவாகினிக் கவியரங்குகளிலும் பங்குகொண்டுள்ளார். அத்துடன் இலங்கை வானொலி மாதர் மஜ்லிஸ் பிரதித் தயாரிப்பாளராகவும் செயற்பட்டுள்ளார். இவரது இலக்கிய ஆர்வம் காரணமாக “தடாகம் கலை இலக்கிய வட்டம்” என்ற அமைப்பைத் துவக்கி, அதன் அமைப்பாளராகத் தடாகம் கலை இலக்கிய வட்டத்தின் சார்பில் பல எழுத்தாளர்களைக் கௌரவித்துள்ளார், நூல்களின் வெளியீட்டு விழாக்களையும் நடத்தியுள்ளார். தடாகம் கலை இலக்கியச் சிற்றிதழ் ஒன்றினையும் வெளியிட்டு வருகிறார். கவிதை இலக்கிய ஆர்வத்தின் காரணமாக பல கவிதைப்போட்டிகளில் பங்கு பெற்று தனது கவித்திறனை வெளிப்படுத்தியுள்ளார். அகில இலங்கை மற்றும் மாவட்ட அளவில் முதலாம் இடத்தைப் பெற்றமைக்காக ஜனாதிபதி விருது, ரத்ன தீப சிறப்பு விருது பெற்ற முதலாவது பெண் கவிஞர், இளம் படைப்பாளிக்கான விருது, கலை அரசி விருது, கவித்தாரகை விருது, கலைமுத்து விருது, கவிதைச் சிற்பி விருது, சாம ஸ்ரீ, தேசகீர்த்தி, கலாசூரி, சமூக ஜோதி, பாவரசு, காவியத் தங்கம், இலங்கையின் சிறந்த பெண் கவிஞர் பட்டங்களும் என ஹிதாயா அவரது இலக்கியப்பணிக்காகப் பெற்றப் பட்டங்கள் மற்றும் விருதுகளின் பட்டியல் விரிகிறது. இவரது கவிதைத்திறனை படித்து மகிழ கவிஞரின் இவ்வார வல்லமைக் கவிதையான “பாரிலே பிறப்பான்….!” கவிதையுடன் மேலும் இரு கவிதைகளும் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. பாரிலே பிறப்பான்….! ______________________________________________________ மகிமை மிக்கதோர் மானுடப் பிறவி அணுவிலும் நுண்ணிய கருவினில் இருந்து அன்னை வயிற்றினுள் அடக்கமாய் வளர்ந்து பத்துத் திங்களில் பாரிலே பிறப்பான்….! இருண்ட சூழலை மாற்றிய பின்னே ஒளி உலகத்தை உவப்புடன் பார்க்க விழிகள் திறப்பான் விருப்புடன் கை கால் ஆட்டி மகிழ்ந்து அகிலத்தை ரசிப்பான்…..! தத்தித் திரிந்து தளர்நடை பயின்று பள்ளிப் பருவ வாசல் ஏறி இளைஞனாகி என்றும் வனப்புடன் உலக அரங்கில் நடிப்பினைத் தொடர்வான்….! குருடனாய்,செவிடனாய் குடிக்கு அடிமையாய் அறிஞனாய்க் கலைஞனாய் ஆயிரம் வேஷம் ஏதோ ஒன்றை இட்டுக் கொள்வான் எல்லாம் மனம் போல் இகத்தில் செய்வான்….! முதுமை தோன்றுமே நரைகள் தாவுமே, பிள்ளையைப் பெற்றவன் பேரனைக் காண்பான் போகப் போக நடை தளர்ந்திடுவான் பூமியில் ஒரு நாள் உறுதியாய் இறப்பான்…..! ------------------------------------------------------------------------ கல்வி ஒழுக்கம் ______________________________________________________ கல்வி ஒழுக்கம் வெளிப்பாடு கற்று நல் வாழ்வினில் நடைபோடு செல்வம் நிலைத்திடும் அறிவாகும் சேர்ந்திடும் ஒழுக்கும் உயர்வாகும் (கல்வி ஒழுக்கம்) வாருங்கள் உயர்வோம் வாழ்க்கையிலே வலம் புல பெறுவோம் நம்பிக்கையிலே யாருக்கும் ஒழுக்கம் புகழ் கொடுக்கும் நாட்டுக்கும் அமைதி நலம் படைக்கும் (கல்வி ஒழுக்கம் ) பூத்திடும் மலர்கள் சோலையிலே புலர்ந்திடும் விடியில் காலையிலே ஆரத் தொழுவோம் நலம் சேர்த்திடுமே அன்பினை உலகெங்கும் ஊட்டிடவே (கல்வி ஒழுக்கம் ) ஊடக மென்பது உலகாளும் உன்னத மான செயலாகும் நாடக உலகம் நமதாகும் நன்மைகள் உழைப்பில் விளைவாகும் (கல்வி ஒழுக்கம் ) கல்வி ஒழுக்கம் வெளிப்பாடு கற்று நல் வாழ்வினில் நடைபோடு செல்வம் நிலைத்திடும் அறிவாகும் சேர்ந்திடும் ஒழுக்கும் உயர்வாகும் ------------------------------------------------------------------------ கிள்ளி விளையாடாதீர்கள் ….! ______________________________________________________ வாழ்க்கையைக் குழி தோண்டி புதைத்துக் கொண்டுதான் வாழுகின்றீர்கள் மனித ஆத்மாவுக்கு பகையைப் புகையாய் மாற்றுகின்றீர்கள் நம்பிக்கையான உள்ளங்களை துரோகிகளாக மாற்றுகின்றீர்கள் நாய்க்குக் கொடுக்கும் மதிப்பைக்கூட, மனிதர்களுக்குக் காட்டாமல் இருக்கின்றீர்கள் உடைமைகளைக் கூட தீயிட்டு எரிக்கின்றீர்கள் மான மரியாதைகளைக் காற்றில் பறக்க விடுகின்றீர்கள் உங்களை நினைத்து நீங்களே தலைக்கனம் பிடித்து புளகாங்கிதமடைகின்றீர்கள் ஏழை எளியோரைக் கண்டால் கண்டும் காணாமல் போகின்றீர்கள் அடுத்தவனின் முன்னேற்றத்தைத் தடுத்து தான் உயர நினைக்கின்றீர்கள் துரோகத்தை அன்பாய் காட்டி அடுத்தவன் சோற்றில் ஏன் சேற்றைப் பூசுகின்றீர்கள் …? கவிஞர் கலைமகள் ஹிதாயா அவர்கள் தொடர்ந்து இலக்கியப்பணியாற்றி மேலும் பல புகழ் உச்சங்களை அடையப் பாராட்டுகளும் வாழ்த்துகளும். February 2, 2015 சி. சேதுராமன் [] புதுக்​கோட்​டை - மாட்சி​மை தங்கிய மன்னர் கல்லூரியின் தமிழாய்வுத்து​றை தலைவரான மு​னைவர் சி.​சேதுராமன் அவர்கள் இலக்கியக் கட்டுரைகளை எழுதி தமிழ் இலக்கியவாதிகளை மகிழ்விப்பவர். இணையத்தமிழ் இதழ்களின் வாசகர்களுக்கும் மு​னைவர் சி.​சேதுராமன் அவர்கள் நன்கு அறிமுகமானவர். வல்லமை, திண்ணை, தமிழ்முரசு, முத்துக்கமலம் ஆகிய இதழ்களில் தொடர்ந்து பல கதை, கவிதை, நூல்மதிப்புரை போன்றவற்றை எழுதி வருகிறார். குறிப்பாக, தமிழ் இலக்கியக் கட்டுரைகளை அதிகம் எழுதி வருபவர் மு​னைவர் சி.​சேதுராமன். இவரது அவரது இலக்கியக் கட்டுரைகளுள் ஒன்றான “கோவலன் கதைப்பாடலில் சிலம்பின் செல்வாக்கு” என்ற ஒப்பாய்வுக் கட்டுரை சுவைத்து மகிழத்தக்கது. “கோவலன் கதைப்பாடலில் சிலம்பின் செல்வாக்கு” ஒப்பாய்வுக் கட்டுரையில், உரையாசிரியர்களால் அதிகளவில் மேற்கோளாக எடுத்தாளப்பட்ட பெருமை உடையதும்… தமிழறிஞர்களால் மிகுதியாக ஆய்வுக்கு உட்பட்டதும்… பண்டைய தமிழ் மக்களின் வாழ்வியல் கூறுகள் பெருமளவில் இடம் பெற்றதால் குடிமக்கள் காப்பியம் என்ற சிறப்பு கொண்ட சிலப்பதிகாரம், காலங்கள் பல கடந்தாலும் பிற்காலத்தில் எழுந்த இலக்கியங்களிலும் ​பெரும்தாக்கத்​தை ஏற்படுத்துவதில் முதன்​மையான இடத்தை வகிப்பதைக் கட்டுரை ஆசிரியர் பாராட்டிச் செல்கிறார். சிலம்பின் தாக்கத்தின் விளைவாகப் பிற்காலத்தில், சிலம்பை ஒட்டித் தோன்றிய, புகழ்​பெற்ற புலவர் புக​ழேந்தியாரின் ​‘பெயரில்’ “பி.இரத்தின நாயகர் அண்ட் சன்ஸ்” பதிப்பகத்தாரால் வெளியிடப்பட்ட “பெரிய எழுத்து ​கோவலன் க​தை” என்ற நாடக நூலைச் சிலம்புடன் ஒப்பிட்டு ஆராய்கிறார். ஒப்பாய்வுக்கு உட்படுத்தப்பட்ட பெரிய எழுத்து ​கோவலன் க​தை நாட்டுப்புற உடுக்கடிக் கதைப்பாடல் அ​மைப்பி​ல் இயற்றப்பட்ட நூலாகும். ஆய்வுக்கட்டுரையில் இவ்விரு நூலிலும் வேறுபட்டுள்ள கடவுளர்களின் துதி துவக்கம் பற்றி விளக்குகிறார். மங்கல வாழ்த்துப் பாடலில் ​கோவலன் கண்ணகி திருமண நிகழ்விலிருந்து சிலப்பதிகாரத்தின் க​தையானது ​​தொடங்குவதும், ஆனால் அது போலன்றி கோவலன் கதை நூலானது கண்ணகி, ​கோவலன், மாதவி, வசந்தமா​லை உள்ளி​ட்டோரின் முற்பிறப்பு வரலாற்​றைக் கூறுவதிலிருந்து ​தொடங்கும் வேறுபாடுகளை ஒப்பிடுகிறார். அத்துடன் இரு நூல்களிலும் கதை மாந்தர்களை அறிமுகப்படுத்தும் முறையையும் ஒப்பிடுகிறார். சிலம்பி​ல் கண்ணகி தெய்வமான பின்பே கதை நி​றைவுறும் முறையையும், ஆனால் கோவலன் கதையின் ​தொடக்கத்தில் இருந்தே கண்ணகி காளி​தேவியாகவே காட்டப்படும் வேற்றுமையைச் சுட்டுகிறார். பரத்​தைய​ரை நாடினால் எவ்வா​றெல்லாம் துன்புற நேரிடும் என்பதை மாதவி வசந்தமா​லை ஆகி​யோரின் வழி வலியுறுத்துவது புகழேந்தியாரின் முக்கியமான நோக்கமாக அமைந்ததையும், சிலம்பில் இடம்பெறாது கோவலன் கதையில் மட்டுமே அமைந்துள்ள பல காட்சிகளையும் அறியத் தருகிறார். அரசியலில் பிழை செய்தவர்களுக்கு அறமே கூற்றுவன், பெருமை மிக்க பத்தினியைப் பெரியோர் தொழுவார், ஊழ்வினை தொடர்ந்து வந்து பற்றியே தீரும் என்ற மூன்று நீதிகளை வலியுறுத்த இயற்றப்பட்ட சிலம்பின் நீதிகளைக் கோவலன் கதை எவ்வாறு கையாள்கிறது என்று ஆராய்கிறார் கட்டுரை ஆசிரியர். சிலம்பின் நீதிகளுள் ஒன்றான “ஊழ்வினை யுருத்துவந் தூட்டும் என்பதூஉம்” என்பது அதன் பின்வந்த அ​னைத்து இலக்கியங்களிலும் ​பெருந்தாக்கத்​தை ஏற்படுத்தியது என்பதைச் சுட்டிக்காட்டி, “பெரிய எழுத்து ​கோவலன் க​தை”யிலும் ஊழ்வி​னை கோட்பாடு முக்கியத்துவம் வகிப்பதைக் காட்டுகிறார். பின்னால் நடக்கப் ​போவ​தை முன்ன​ரே கூறுதல், அரசியல் பி​ழைத்தவ​ரை அறம் அழிக்கும் என்பது போன்ற நிகழ்வுகளை இரு நூல்களிலும் ஒப்பிட்டு விளக்குவது இலக்கியச் சுவை மிகுந்த வகையில் அமைந்துள்ளது. இலக்கிய நயம் பாராட்டும் பல கட்டுரைகளை வரும் மு​னைவர் சி.​சேதுராமன் அவர்கள் பாராட்டிற்குரியவர். February 9, 2015 ரா. பார்த்தசாரதி [] திரு. ரா. பார்த்தசாரதி அவர்கள் கவிதைகள், சிறுகதைகளை மின்னிதழ்களில் தொடர்ந்து வழங்கி வரும் எழுத்தாளர். இவரது “எண்ணமும், சிந்தனையும்!” என்ற எழுச்சிக் கவிதையையும், காதலர் தின சிறப்புப் பதிவாக “காதல் என்றால். . . ?!” என்ற கவிதை கவிதைகள் கவனத்தைக் கவருவன. அத்துடன் “மாறிய ஜென்மங்கள்” என்ற இன்றைய உலகில் மூத்த குடிமக்களின் யதார்த்த வாழ்க்கையையும், பந்தபாசத்தின் மேன்மையையும் உணர்த்தும் சிறுகதையையும் வழங்கியுள்ளார். தற்பொழுது சென்னையில் வசிக்கும் திரு. ரா. பார்த்தசாரதி அவர்கள், பாலா, இனியவன் என்ற புனைப்பெயர்களிலும் எழுதி வருபவர். தனியார் நிறுவனம் ஒன்றின் மேலதிகாரியாகப் பணிநிறைவு பெற்ற இவர் தமிழ் மற்றும் பொருளியலில் முதுநிலை பட்டங்கள் பெற்றவர். பணிநிறைவிற்குப் பின்னும் கவிதைகள் சிறுகதைகள் எழுதும் தனது பொழுதுபோக்கைத் தொடர்கிறார். கவிதை உறவு, தமிழ்ப்பணி ஆகியவற்றில் இவரது கவிதைகளும், குமுதம், தினமலர் பத்திரிக்கைகளில் இவரது சிறுகதைகளும் வெளிவந்துள்ளன. தனது “கவிதைப்பூக்கள்” என்ற வலைப்பூவிலும் எழுதி வருகிறார். சிந்தனை தரும் மேன்மையை உணர்த்தும் அவரது இரு கவிதைகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. எண்ணமும், சிந்தனையும்! ______________________________________ எண்ணமும் செயலும் ஒன்றுபட வேண்டும் வாழ்வினில் உயர்ந்தநிலை பெறவேண்டும்! நாம் சிந்திப்போம்! கடலின் வீரியத்தை எழும்பியடங்கும் அலைகளே உணர்த்தும்! மரத்தை எண்ணிச் சிந்தித்தால் அதில் துளிர்க்கும் இலைகளே அதன் பசுமையே நமக்கு உணர்த்தும்! நெருப்பினைச் சிந்தித்தால் உமிழப்படும் வெப்பமும் வெளிச்சமும் ஆற்றலை உணர்த்தும்! சித்திரங்கள் என்பது வண்ணங்கள் அன்றி வேறில்லை நாம் என்பது நம் எண்ணங்கள் அன்றி வேறில்லை நமக்குள் தோன்றி மறைந்தாலும் நம்மை நிழலாக்கி விட்டுத் தம்மை நிஜமாக்கிக் கொள்ளும் தந்திரம் மிக்கவை நம் எண்ணங்கள்! நம் எண்ணங்களே உணர்த்துகின்றன நம்மை நமக்கும் பிறர்க்கும் துணிந்தபின் மனமும் எண்ணமும் துயரம் கொள்ளாது என்றும்! துயரமடைந்த எண்ணங்களுக்கு அதற்குமாறாக உயரத்திற்கு அழைத்துச் செல்லத் தெரிந்தவை நம் உத்வேக எண்ணங்கள்! நமக்குள் தோன்றும் எண்ணங்கள் ஆயிரம் இருந்தாலும் நல்லெண்ணம் தீயஎண்ணம் என மறைந்திருந்தாலும் தம்மை நிஜமாக்கிக் கொள்ளும் தந்திரம் மிக்கவை நம் எண்ணங்கள்! நல்லெண்ணமும், நற்செயலும் வாழ்வின் வழிகாட்டி என நினையுங்கள் ! ------------------------------------------------------------------------ மனிதனே சற்றே நினைத்துப்பார் ______________________________________ எல்லாவற்றிற்கும் காரணம் ஆசை என்று அறிந்தே நம் கைவிட்டு போகும் நாணயமில்லாத நாணயங்கள் ! பேராசையால் கைதவறிய வாய்ப்புகள் நம்மைப் பார்த்து தொலைவில் இருந்தபடி நகைக்கின்றது ! மனதைக் கல்லாக்கி கைக்கு எட்டியதை வாய்க்கு எட்டாததைக் கண்டு ஏமாந்த போது வறட்டுக் கவுரத்திற்காக விலக்கி வைத்தால் புரிந்ததும், புரியாததும் சேர்ந்து தொலைந்துபோன காலகட்டத்தில் ! பெருமைக்காக நட்புகொண்டு, கைகுலுக்கி, அவசியங்களுடன், அத்தியாவசியங்களும் இழக்கும் பொழுது ,ஏற்பட்ட இழப்பின் வலிகள் ! மூட நம்பிக்கையுடன் ஜாதி, மத விழுதுகளை நம்பி, பகுத்தறிவு வேர்களைப் புறந்தள்ளியதால் அவனியில் சிக்கித் தவிக்கும் மனிதம்! கிடைத்ததைக் கொண்டு திருப்தி கொள்ளாமல் கடந்ததை எண்ணி வருந்துவதால் எக்காரணமுமின்றி கரைந்துபோகும் மனிதம்.! எண்ணுபவர் – விழிப்பர் விழிப்பவர் – உழைப்பர் உழைப்பவர் – உயர்வர் உயர்வோர்க்கே இவ்வுலகம்! இவையாவும் உய்வோர்க்கு புரிதல் எப்போது; மனிதமும், மனிதநேயமும் உயர்வதெப்போது? திரு. ரா. பார்த்தசாரதி அவரது இலகியப் பயணத்தில் வெற்றிகள் பல பெற வாழ்த்துகள். February 16, 2015 வைதேகி வி. சி. [] “மனதில் உறுதி வேண்டும்” என்ற பாரதியின் வரிகளை வாழ்ந்து காட்டும் வைதேகி அவர்களின் நெஞ்சுரம் போற்றத்தக்கது. வைதேகி தனது வலைப்பூவில் புற்றுநோயை எதிர்த்துத் தான் போராடியதை “My fight against the dreadful disease – CANCER” (http://vaidehivc.blogspot.com/2015/02/my-fight-against-dreadful-disease-cancer.html) என்று எழுதியிருக்கிறார். கொடிய நோய் என்று மனம் தளர்ந்துவிடாமல்,போராடி வெற்றிபெற்றதுடன், நோயைப்பற்றியும், அவர் பெற்ற சிகிச்சை, அதன் பக்க விளைவுகள் பற்றிய அவரது அனுபவங்களைப் படங்களுடன் அவர் மிக விரிவாகப் பகிர்ந்து கொண்டது பாராட்டத் தக்க செயலாகும். அத்துடன் நில்லாமல் நோயைப் பற்றி மேலும் தகவல் பெற விரும்பினால், நம்பிக்கை, ஊக்கமூட்டும் வார்த்தைகளைக் கேட்க விரும்பினால் தான் உதவத் தயாராக இருப்பதாகக் குறிப்பிட்டதன் மூலம் தனது வாழ்க்கை பிறருக்கு ஒரு முன்மாதிரியாக இருக்கவேண்டும் என்ற நோக்கம் கொண்டவர் என்பதையும் உணர்த்துகிறார். சென்னை நங்கநல்லூரில் உள்ள மெட்ரிக்குலேஷன் பள்ளியில் படித்து, மீனாட்சி சுந்தரராஜன் பொறியியல் கல்லூரியில் எலக்ட்ரிகல், எலக்ட்ரானிக்ஸ் பொறியியல் கல்வி பெற்றவர் வைதேகி. அவர் தன்னைப் பற்றிக் குறிப்பிடும் பொழுது மற்ற எல்லா சென்னை பெண்களைப் போலத்தான் நானும் பொறியியல் படித்தேன், கணினி மென்பொருள் துறையில் வேலைக்கும் சேர்ந்தேன், 23 வது வயதில் எனது அன்புக் கணவரை மணந்தேன், மறு ஆண்டு ஆசை மகள் பிறந்தாள் என்று குறிப்பிடுகிறார். தற்பொழுது ‘ஈ ஆர் பி ஆலோசகராக’ ‘சி டி எஸ் குளோபல்’ நிறுவனத்தில் பணிபுரிகிறார் (Eenterprise Resource Planning, Consultant at Cognizant Technology Solutions). அலுவலகத்தில் நண்பர்களுடன் அனுதினமும் வேலையில் கருத்தாலோசனை, தோழியருடன் ஹோலி கொண்டாட்டம், தானும் பாடுவதுடன் மகள் ‘எஸ் கே’ யின் மழலைக் குரல் பாடல்களை இணையத்தில் பதிவேற்றுவது, மகளுக்கு வீட்டுப்பாடத்தில் உதவி செய்வது, சேமியா உப்புமா, வெஜிடபிள் பிரியாணி சமைத்து அவற்றைப் படங்கள் எடுத்து நண்பர்களுடன் ஃபேஸ் புக்கில் பகிர்ந்து கொள்வது, சுற்றுலா சென்ற படங்களைப் பகிர்ந்து கொள்வது என சராசரிப் பெண்ணாக அவர் வாழ்க்கை ஓடியது. நடிகர் கமல்ஹாசனைப் பிடிக்கும், எம் ஜி எம் ரிசார்ட் பிடிக்கும், கைவினைப் பொருட்கள் பிடிக்கும், ஏரோபிக்ஸ் உடற்பயிற்சி செய்யப் பிடிக்கும் என்று சிறுமி போன்ற ஆர்வத்துடன் தன்னைப் பற்றிய செய்திகளையும், படங்களையும் சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து கொண்டிருக்கும் இந்த மென்மையான உள்ளம் கொண்ட, பார்ப்பதற்கு நமது அடுத்த வீட்டுப்பெண் போன்ற தோற்றம் கொண்டவரின் உள்ளம் இவ்வளவு உறுதியானதா என வியக்கவும் வைக்கிறார் நோயுடன் தான் நடத்திய போராட்டத்தை விவரிக்கும் பொழுது. இவருக்குத் திருமணமாகி 5 ஆண்டுகளுக்குள் வாழ்க்கையின் ஓரத்திற்குச் சென்று வந்தவர் இவர். ஆகஸ்ட் 2014இல் இவரது கழுத்தின் வலதுபுறம் சிறு கட்டி ஒன்று தோன்றவும், அதைத் தொடர்ந்து காய்ச்சல், தொண்டையில் வலி, உடல் அசதி என்று தோன்றியிருக்கிறது. பணி முடித்து வந்து வீட்டு வேலைகளைச் செய்ய இயலாமல் சோர்ந்திருக்கிறார். இந்நிலை தொடரவும் மருத்துவர்களை அணுகி ஆலோசனை பெற்றதில், பல்வேறு மருத்துவப் பரிசோதனைகளுக்குப் பிறகு இவருக்கு நிணநீர் மண்டலப் புற்று நோய் இருப்பதும், அது இரண்டாம்நிலையை அடைந்துள்ள “ஹாட்ஜ்கின்ஸ் லிம்போமா” என்ற வகையைச் சார்ந்தது என்றும் கண்டுபிடிக்கப்பட்டு தீவிர சிகிச்சை தொடங்கப்பட்டது. நோயின் தீவிரத்தின் அடிப்படையிலும், 28 வயதே ஆன இவரது இளவயதையும் கணக்கில் கொண்டு இரத்தக்குழாய்களின் வழியே மருந்து செலுத்தும் கீமோதெரப்பி சிகிச்சை அளிக்கப் பட்டது. சிகிச்சையின் பக்க விளைவுகளான வாய் மற்றும் வயிற்றில் புண், ஸ்டீராய்ட் எடுத்துக்கொள்வதால் அதிகம் பசித்தாலும் வாய்க்குச் சுவையின்றி இருப்பதால் உணவை உண்ணமுடியாத நிலை, கழுத்திலும் மார்பிலும் கொழுப்பு படிமங்கள், நீர்கோர்த்து உடல் எடை அதிகரித்தல், முகம் ஊதிப் போதல், முடி கொட்டுதல், அடர்வு நிறைந்த மருந்துகளைச் செலுத்துவதால் ரத்த நாளங்களில் வலி என்று பல துன்பங்களை அடைந்திருக்கிறார். குடும்பத்துடன் சேர்ந்து பொழுதைக் கழிக்க வழியின்றி உடல்வலியும் அசதியும் இவரை ஆட்டிப்படைத்ததில் வீட்டை விட்டு வெளியில் செல்லவும் விருப்பமின்றி மனம் சோர்ந்திருக்கிறார். இவர் தனது வாழ்வில் எதிர்கொண்டதை இவரது ஃபேஸ்புக் காலக்கோடு பதிவுகளும் பிரதிபலிக்கிறது. ஆகஸ்ட்டில் நோய் தோன்றி அதைக் கண்டுபிடித்து அக்டோபரில் சிகிச்சை தொடங்கும் பொழுது, “சென்ற ஆண்டு இதே நேரம் வாழ்க்கை வேறுவிதமாக இருந்தது” என்று குறிப்பிடுகிறார். ஆனால் அதைப் பற்றிய விளக்கம் இல்லை. “வாழவிருப்பமுள்ளவர்கள் போராடுவார்கள், நம்பிக்கையுடன் இருப்பார்கள், வெற்றி அடைவார்கள், புற்றுநோயைப் பற்றி அறிந்து கொள்வோம்” என்று மற்றொரு பதிவு வருகிறது. “நான் மக்களுக்கு முன்னுதாரணமாக இருக்க விரும்புகிறேன், யாரேனும் என்னிடம் உன்னைப் பின்பற்றியதால் நான் போராட்டத்தைக் கைவிடவில்லை என்று சொல்வதை விரும்புகிறேன்” என்கிறார். ஆனால் அவர் குறிப்பிட்டதன் பொருள் நண்பர்களுக்குப் புரிந்ததாகத் தெரியவில்லை. வழக்கம் போல “லைக்” போட்டுவிட்டுச் செல்கிறார்கள். மறுவாரம் வருத்தம் நிறைந்த முகம் கொண்ட தனது படத்தை பதிவிடுகிறார், ஏன் முகம் வாடியிருக்கிறது? என்ன ஆயிற்று? என்ற மறுமொழிகள் நண்பர்களிடம் இருந்து வருகிறது. அதற்கு மறுவாரம் “எனக்கு லிம்போமா புற்றுநோய், அதை ஒழித்துக் கட்டுவேன்” என்ற வாக்கியம் கொண்ட படம் போடுகிறார். நண்பர்கள் ஆறுதல் சொல்லி, நம்பிக்கையைக் கைவிடாதே என்று உற்சாக மூட்டுகிறார்கள். அடுத்தமாதம் நோயின் தாக்கம் கொடுமையாக இருக்கிறது என்றும், அதற்கடுத்த மாதம் டிசம்பரில் சிகிச்சையின் பக்க விளைவால் தலை வழுக்கையானதை வேடிக்கையாக, அழகிய வழுக்கை விழுந்த பெண், புற்றுநோயைத் தாக்குகிறாள் என்றும் குறிப்பிடுகிறார். நகைச்சுவையை உணர்வைக் காட்ட நினைத்தாலும், சிறுவயதிலேயே நோயுடன் போராடும் நிலையும், எதிர்காலம் கேள்விக்குறியானதை எதிர்கொள்வதும் அவருக்குச் சுலபமாக இருந்திருக்கவில்லை. அடுத்தவரை நம்பி தினசரி செயல்களை முடிப்பதும், சிகிச்சையினால் முடி கொட்டுவது என உருவத்தை மாற்றிய பக்க விளைவுகள் ஆகியவற்றால் மனம் மிகத் துவண்டு இருக்கிறார். தனது நம்பிக்கையைக் கைவிடாது இருக்கவும், தனது மனதை வேறுவழிகளில் செலுத்தி தன்னை உற்சாகப்படுத்திக் கொள்ளவும் காகித கைவினைப்பொருட்கள் செய்வது, கார் ஓட்டும் பயிற்சி பெற்று ஓட்டுநர் உரிமம் பெறுவது, உடற்பயிற்சிகள் செய்வது, குழந்தையுடன் விளையாடுவது போன்றவற்றில் மனதைச் செலுத்தி நோயின் கொடுமையை மறக்க முயன்றிருக்கிறார். கணவரும், மகளும், குடும்பத்தினரும், உறவினரும், நண்பர்களும் அவருக்கு உறுதுணையாகவும் இருந்திருக்கிறார்கள். இத்துயர நாட்களில் உண்மையான அன்பு செலுத்துபவர்களையும் அவர் அடையாளாம் காண நேர்ந்திருக்கிறது. டிசம்பர் முதல்வாரத்தில் 6 சுற்று கீமோதெரப்பி மருத்துவ சிகிச்சைக்குப் பிறகு, புற்றுநோய் செல்கள் உடலில் காணப்படவில்லை என்று மருத்துவர்கள் அறிவித்த பின்னர், மேலும் இரண்டு சுற்று கீமோதெரப்பி சிகிச்சை அளித்து முற்றிலும் குணமடையச் செய்துவிடலாம் என்று நம்பிக்கையை அளித்துள்ளார்கள். டிசம்பர் ஆறாம் தேதி சிகிச்சைக்குப் பிறகு புற்றுநோய் முற்றிலும் நீங்கிக் கடந்த இரண்டரை மாதங்களாக உடல்நலம் தேறி வருகிறார். தங்களின் அன்புக்குரியவர்களைப் புற்றுநோய் பாதித்த அனுபவம் கொண்டவர்களை இவர் சந்தித்த பொழுது அவர்களது அனுபவங்களையும் தெரிந்து கொண்டிருக்கிறார். யாருக்குமே வாழ்வு சுலபமானதல்ல, வாழ்வில் அனைவருமே துன்பத்தை சந்தித்தவர்கள்தான் என்பதை உணர்ந்தேன் என்கிறார். பெயர், புகழ், செல்வம் ஆகியவை முக்கியமல்ல. பிறரிடம் நாம் அன்பு செலுத்துவதும், அவர்கள் அன்பைப் பெறுவதும்தான் வாழ்வில் முக்கியமானது என்றும் கூறுகிறார். நோய் தொடங்கிய பொழுதே இதனை எதிர்த்துப் போராடி மற்றவருக்கு முன்மாதிரியாகத் தான் இருக்கவேண்டும் என்று அவர் உறுதிகொண்ட வண்ணம் அதை நிறைவேற்றியும் உள்ள வைதேகியின் வல்லமை பாராட்டிற்குரியது. புற்றுநோயுடன் தளராது போராடி மீண்டு வந்த வைதேகியின் மன உறுதியையும், தனது போராட்டத்தை அனைவருக்கும் நம்பிக்கையூட்டும் வண்ணம் அறிவித்து பிறருக்கும் ஊக்கம் தர முன்வந்த வைதேகியை உடல்நலத்துடன் நீடூழி வாழ மனமார்ந்த வாழ்த்துகள். February 23, 2015 எல்மார் நிப்ரத் [] பண்டைய தமிழ் வட்டெழுத்து எழுத்துருவை உருவாக்கி தமிழுலகிற்கு அளித்துள்ளார் ஹாம்பர்க்கில் வசிக்கும் முனைவர் எல்மார் நிப்ரத் (Elmar Kniprath, Hamburg) அவர்கள். ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் தமிழ் கல்வெட்டுகளில் எழுதப்பட்ட வட்டெழுத்து தமிழையும், கடந்த 35 ஆண்டுகளுக்கு முன்னர் பள்ளியில் பயிற்றுவிக்கப்பட்ட தமிழ் எழுத்தையும் நாம் இப்பொழுது கணினி வழியே எழுதவும், படிக்கவும் முடியும். இதற்கு எல்மார் நிப்ரத் வடிவமைத்த மென்பொருட்களை, ஒருங்குறி எழுத்துருவுக்கு e-Vatteluttu OT என்பதையும், 35 ஆண்டுகளுக்கு முந்தைய எழுத்துருவுக்கு e-Tamil 100 யும் நமது கணினியில் நிறுவினால் போதுமானது. திரு. நிப்ரத் அவர்கள் வடிவமைத்த வட்டெழுத்து எழுத்துருக்களைத் தரவிறக்கம் செய்ய >>> https://www.aai.uni-hamburg.de/indtib/studium/materialien.html இத்தளத்திற்குச் செல்க. திரு. நிப்ரத் அவர்கள் தமிழ் வட்டெழுத்து மட்டுமன்று, இதுவரை; தமிழ், அஸ்ஸாம், வங்கம், குஜராத்தி, இந்தி, கன்னடம், மலையாளம், மராத்தி, நேபாளி, பஞ்சாபி, ராஜஸ்தானி, சமஸ்கிரதம், தெலுங்கு எனப் பற்பல இந்திய மொழிகளிலும், சிங்கள மொழியிலும் எழுத உதவும் பொருட்டு, அந்தந்த மொழிகளுக்குமான “இந்தோலிபி” (Indolipi) எழுத்துருக்களை உருவாக்கி விலையற்று வழங்கி அனைவரும் பயன்பெறும் வகையில் உதவியுள்ளார். இவர் உருவாக்கிய Elmar’s Indic எழுத்துருக்களான e-Tamil , e-Telugu , e-Kannada , e-Malayalam , e-Oriya , e-Panjabi , e-Asamiya, e-Bengali, e-Gujarati, e-Nagari, e-Devanagari, e-Grantha, e-Sanskrit, e-Sinhala ஆகிய எழுத்துருக்கள் கிடைக்கும் இணைய தளத்தின் முகவரி: http://elmar-kniprath.software.informer.com/ திரு. நிப்ரத் உருவாக்கிய வட்டெழுத்துக்களில் எழுதிப் பழகி, படித்துப் பழகி தேர்ச்சி பெறும் தமிழர் யாவரும் அடுத்த முறை தமிழக தொல்பொருள் காட்சியகங்களுக்கோ, கோவில்களுக்கோ செல்லும் பொழுது வட்டெழுத்தில் உருவாக்கப்பட்ட கல்வெட்டுகளையும் ஓலைச்சுவடிகளையும் படிக்க ஆர்வம் கொள்வார்கள் என்பது உறுதி. தமிழின் தொன்மையைப் பாராட்டும் வண்ணம் அவற்றைப் பாதுகாக்கும் முயற்சியில் அக்கறையுடன் ஈடுபடுவார்கள் என்பதையும் நம்பிக்கையுடன் எதிர்பார்ப்போம். March 2, 2015 அனிதா சத்யம் [] பூனே, மகாராஷ்ட்ராவில் வசிக்கும் புகைப்படக் கலைஞரான திருமிகு அனிதா சத்யம் அவர்கள் உலக மகளிர் தினத்தைக் கொண்டாடும் நோக்கில் ஃபேஸ்புக்கில் வெளியிட்ட, பெண்களை…குறிப்பாக வளரும் சிறுமியரை ஊக்கப்படுத்தும் கருத்துமிக்க ஓர் அழகிய படமொன்று உலக மகளிர் தினத்திற்கான முத்திரைப் படம் எனப் பாராட்டத் தக்க வகையில் அமைந்த படமெனக் கூறலாம். அனிதா ஃபோட்டோகிராஃபி (Anita’s Photography) என்ற புகைப்பட நிறுவனத்தின் உரிமையாளரான, தொழில்முறை புகைப்படக் கலைஞரான அனிதா வழங்கிய உலக மகளிர் தின சிறப்புப் படத்தின் கருத்து நூல்களிலும் பத்திரிக்கைகளிலும் அட்டைப்படத்தில் தனது படமும் பெயரும் வெளிவர வேண்டும் என்ற ஆர்வமும் முயற்சியும் கொண்ட பெண்களின் கனவைச் சித்தரிக்கிறது. பள்ளிச் சிறுமி ஒருத்தி விண்வெளி வீராங்கனையான “சுனிதா வில்லியம்ஸ்” பற்றிய நூல் ஒன்றைப் பார்த்து கற்பனையில் திளைப்பதையும், முக மலர்ச்சியுடன் இருப்பதையும் காட்சிப்படுத்தியதுடன் அருமையான வாசகம் ஒன்றையும் படக்குறிப்பாக இணைத்துள்ளார். “அனைவரும் பாராட்டும் வண்ணம் புகழ் பெற்ற நிலையை அடைய வேண்டும் என்பதும், பத்திரிக்கைகளில் அட்டைப்படத்தில் தனது படமும் பெயரும் வரவேண்டும் என்பதும் பெண்கள் எல்லோரின் கனவாகும். ஆகவே, (பெண்ணே) முன்னேறுவதை நிறுத்திவிடாதே. தடைகளைக் களையும் போராட்டத்தைக் கைவிடாதே, வெற்றிக் கனவு காணுவதை நிறுத்திவிடாதே. ஒருநாள் உனது கனவு நினைவாகும் … உலக மகளிர் தினத்தைக் கொண்டாடுவோம் …” என்ற உற்சாகமூட்டும் வாக்கியமும், ஆயிரம் வார்த்தைகளில் விளக்க வேண்டியதை ஒரு படம் விளக்கிவிடும் என்ற சொல்வழக்கை நிரூபிக்கும் வண்ணம், புகைப்படத்தில் பெண்ணின் முகம் காட்டும் உணர்வை சிறப்பாகப் படம் பிடித்துக் காட்டிவிட்டார் அனிதா. “கனவு காணுங்கள்” என்று இளைய சமுதாயத்தை உற்சாகப்படுத்துவதில் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமுடன் இதில் கைகோர்த்துள்ளார். உற்சாகமூட்டும் மனப்பான்மை இவர் வாழ்விலேயே இவருக்கு உதவியது. இவர் ஆர்வம் காட்டிய புகைப்படக்கலையே புற்று நோயுடன் போராடிய வண்ணம் துயரத்தில் இருந்த இவரை மீட்டது. நோய்க்கான காரணமும் கண்டுபிடிக்க இயலாமல், மருத்துவமனையில் மாதக்கணக்காக இருந்த நாட்களில் மகனையும் மகளையும் பார்க்க இயலாது பிரிந்திருந்ததையும், உடலில் நிணநீர் மண்டலத்தில் ஏற்பட்ட கோளாற்றினால் காய்ச்சல், பிறகு சிகிச்சையின் பொழுது எலும்பு வலி, பார்வைக் குறைவு போன்று மருந்து தந்த பக்க விளைவுகள் பலவும் இவரைத் தொடர்ந்து வாட்டியிருக்கிறது. பரிசோதனைகளும் சிகிச்சைகளும் என சற்றொப்ப மூன்றாண்டுகள் பட்ட அல்லலின் போது, இவருக்கு ஆர்வமளித்த புகைப்படம் எடுக்கும் பொழுதுபோக்கை தொடர்ந்து கைவிடாது செய்து தம் மனதை வேறுவழியில் திசை திருப்பி இருக்கிறார். உதவி இன்றி எழுந்து நடமாடவும் முடியாத உடல்நிலை இருந்த பொழுதுகூட, கையில் காமெரா இருந்துவிட்டால் படமெடுக்கும் ஆர்வத்தின் காரணமாக எழுந்து நடமாட முயன்றதைக் குறிப்பிட்டு, தமது ஆர்வமே தம் நோயைத் தாங்கி எதிர்க்கும் சக்தியை அளித்ததாகவும் தனது ஃபேஸ்புக் பதிவில் குறிப்பிட்டுள்ளார். வலிமிகுந்த துன்பமான நேரங்களில் ஒருவர் தனக்கு ஆர்வமான பணிகளில் மனதைச் செலுத்துவது வலியை மறக்கச் செய்யும், வாழ்வதற்கு நம்பிக்கையை அளிக்கும் என்பது இவர் தனது அனுபவத்தின் மூலம் கண்ட பாடம். தனது வாழ்க்கைப் போராட்டத்தை எவ்வாறு எதிர்கொண்டாரோ அது போலவே; சோர்ந்துவிட வேண்டாம், போராடும் குணத்தையும், நம்பிக்கையையும் கைவிட வேண்டாம், வெற்றி நிச்சயம் என்ற அறிவுரை கூறி, உற்சாகமூட்டி நம்பிக்கைத்தரும் வாசகத்தையும் தனது படத்துடன் வழங்கியுள்ளார். ஒரு பெண் தனது குறிக்கோளை கல்வியின் மூலம் அடையும் வழியைச் சிறந்த படத்தின் வழி கவனத்திற்குக் கொண்டு வந்திருக்கிறார். வளரும் பெண்களுக்கு ஊக்கமூட்டும் தமது நோக்கத்தை தமது புகைப்படக்கருவியின் உதவியுடன் மிகச் சிறப்பாகச் செய்துள்ளார் என்பதில் ஐயமில்லை. மனிதர்களின் உணர்வுகளை மிகவும் திறம்பட படமாக்குவது அனிதாவின் தனிச்சிறப்பு. இவரது தொடர்ந்த கலைப்பயணத்தில் இவர் எடுக்கும் புகைப்படங்கள் பலரையும் கவர்கிறது என்பதையும் அறிய முடிகிறது. ஃபேஸ்புக்கில் , ~ 20,000 புகைப்பட ஆர்வலர்களை உறுப்பினர்களாகக் கொண்டு இயங்கி வரும் ‘புகைப்படப்பிரியன்’ குழுமம் தனது மூன்றாம் ஆண்டு கூட்டத்தை “எக்ஸ்போஷர் 15” எனும் புகைப்படக் கண்காட்சியாக மார்ச் 2015 இல் நடத்தியது. நாகர்கோவிலில் நடைபெற்ற இக்கண்காட்சியில் உலகெங்கிருந்தும் ஆயிரத்துக்கும் அதிகமான படங்கள், பற்பல பிரிவுகளில் தேர்வாகிக் காட்சிப்படுத்தப்பட்டன. அவற்றோடு “ஃபோட்டோ ஆஃப் தி டே” தினம் ஒன்றாகத் தேர்வு செய்யப்பட்ட சிறந்த படங்களும் தனியாகக் காட்சிப்படுத்தப்பட்டது. இந்தப் பிரிவில் அனிதாவின் படமும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. அத்துடன் இவரது படங்கள் பலவும் காட்சியிலும் இடம்பெற்றது குறிப்பிடத் தக்கது. தன்னம்பிக்கை மற்றும் விடாமுயற்சியின் மறு உருவமான அனிதா புகைப்படக் கலையில் மேலும் பல சிகரங்களைத் தொடக்கூடிய திறமை கொண்டவர் என்பதை இவர் பெற்று வரும் பாராட்டுகள் காட்டுகின்றன. March 9, 2015 ந. சுந்தரம் [] மேனாள் மாநிலக் கல்லூரி இந்திப் பேராசிரியர் முனைவர் ந. சுந்தரம் அவர்கள் தனது 80ஆவது வயதில் 1ஆம் திருமுறையை இந்திக்கு மொழிபெயர்த்து நூலாக வெளியிட்டவர். கன்னட மொழியைத் தாய்மொழியாகக் கொண்ட ந. சுந்தரம் அவர்கள், பெரியகுளத்தைச் சேர்ந்த புரோகிதர் ஒருவரின் மகனாக ஓர் எளியக் குடும்பத்தில் பிறந்தவர். பள்ளி நாட்களில், 15 வயதிலேயே தனது தந்தையை இழந்தவர். நூற்பாலை ஒன்றில் பணிபுரிய இவரது தாய் கோவைக்குச் சென்றுவிட, பள்ளிப்படிப்பை முடிக்கும் பொருட்டு பெரியகுளத்திலேயே இவர் தங்க நேர்ந்தது. பெரியகுளத்தின் இந்திப் பிரச்சார சபாவில் தங்குவதற்கு இடமும், நூலகப் பணியும், அங்கே இந்தி கற்கும் வாய்ப்பும் இவருக்குக் கிடைத்தது. நடமாடும் நூலக ஊழியராக வாசகர்களின் வீடுகளுக்குத் தமிழ் வார இதழ்களான கல்கி, ஆனந்த விகடன் ஆகியவற்றைக் கொண்டு சேர்க்கும் பணிக்காக மாதம் பத்து ரூபாய் ஊதியம் பெற்றார். அத்தொகை இவரது பள்ளிக் கட்டணத்திற்குப் பெரிதும் உதவியது. கல்கி, தேவன் ஆகியோரின் கதைகளை பிற வாசகர்களுக்கும் முன்னரே தனக்கு படிக்கும் வாய்ப்பு கிடைத்ததை மகிழ்ச்சிகரமான அனுபவமாகக் கூறும் இவர் தேவனின் துப்பறியும் சாம்பு பாத்திரத்தின் ரசிகர். இவரது பள்ளித் தோழர்களில் ஒருவர் மேஜர் சுந்தரராஜன். அவருடன் இந்தி நாடகங்களில் நடித்துள்ளார். இவர் நூர்ஜகானாகவும், மேஜர் ஷாஜகானாகவும் ஒரு இந்தி நாடகத்தில் நடித்துள்ளார். ந. சுந்தரம் அவர்கள் இந்தியில் முதுகலைப் பட்டம் பெற்ற பிறகு, புதுக்கோட்டை மன்னர் கல்லூரியில் விரிவுரையாளராகப் பணியேற்றார். அங்கு இவர்தம் வாழ்வின் திருப்புமுனைக்குக் காரணமான சமஸ்கிருதப் பேராசிரியர் புதுக்கோட்டை ஏ. ஸ்ரீனிவாச ராகவன் அவர்கள் இவரை இந்தியில் முனைவர் ஆய்வு மேற்கொள்ளப் பணித்தார். தமிழ், இந்தி ஆகிய இரு மொழி இலக்கியங்களிலும் ஆண்டாள், மீரா ஆகியோரைப் பற்றி ஒப்பிலக்கிய ஆய்வு செய்ய வழிகாட்டியதுடன், திவ்யபிரபந்தத்தை படிக்கச் சொல்லி பக்தி இலக்கியத்தின் சுவையையும் அறிய வழிவகுத்தார். கோதை ஆண்டாளின் திருப்பாவை, நாச்சியார் திருமொழி ஆகியவற்றை இந்தியில் மொழி பெயர்ப்பது ஒரு சவாலாக அமைந்தது இவருக்கு. தமிழ்ச் சொல்லிற்கு ஈடான சமஸ்கிருத சொற்கள் எளிதில் கிடைப்பது போல இந்தியில் அமையாத பொழுது, பேராசிரியர்கள் சிலரின் உதவியுடன் இந்தி மொழிபெயர்ப்பை மேற்கொண்டு வெற்றிகரமாக ஆய்வை முடித்தார். ஃ போர்ட் நிறுவனம் ஒருங்கிணைத்த மொழியியல் கோடைப்பள்ளிகளில் பத்தாண்டுகள் மொழியியல் பயின்றார். அக்காலங்களில் திருக்குறளையும், பாரதியார் பாடலையும் இந்தியில் மொழி பெயர்த்தார். இவரது வழிகாட்டியான சமஸ்கிருதப் பேராசிரியர் புதுக்கோட்டை ஏ. ஸ்ரீனிவாச ராகவன் அவர்கள் வைணவ இலக்கியமான திவ்யபிரபந்தத்தை இந்தியில் மொழி பெயர்த்திருந்தாலும், தமிழ்ச் சைவ இலக்கியங்கள் இந்தியில் மொழிபெயர்க்கப்படாமல் இருந்தன. சாந்திநிகேதனின் விஸ்வபாரதி பல்கலைக்கழகம் மொழிபெயர்ப்பிற்காக இவரை அணுகியபொழுது, மகிழ்ச்சியுடன் அவ்வாய்ப்பை ஏற்றுத் திருவாசகம், அப்பர், சுந்தரர், சம்பந்தர் பாடல்களை இந்தியில் மொழி பெயர்த்து நூலாக வெளியிட்டுள்ளார். மொழிபெயர்ப்பை ஒரு தார்மீகக் கடமையாகச் செய்யும் இவர், தமிழக முதல்வர் மு. கருணாநிதியின் “ஒரே ரத்தம்” நூலையும், அதிலுள்ள இந்திக்கு எதிரான கருத்துகளையும் சற்றும் பிசகாமல் அப்படியே இந்தியில் மொழிபெயர்த்த விதம் நல்ல வரவேற்பைப் பெற்றதுடன், இவரது மொழிபெயர்ப்பின் நெறிகளை வெளிப்படுத்திப் புகழ் சேர்க்கும் விதத்தில் அமைந்தது. ராதா என்ற பாத்திரம் ஒரு கருத்துருவாக்கம், ஒரு கற்பனைப் பாத்திரம், பண்டைய இலக்கியங்களில் ராதா என்ற குறிப்பு இல்லை, பாகவதத்தில் “அநாயா ராதிதோ”என்ற அன்பைக் குறிக்கும் குறிப்பு மட்டுமே உள்ளது, ராதா என்ற பெயர் காணப்படவில்லை என்று கூறும் ந. சுந்தரம் அவர்கள், ஆழ்வாரின் நப்பின்னையுடன், பிற்கால இந்தி இலக்கியங்களில் காணப்படும் ராதாவை ஒப்பிட்டு ஒப்பிலக்கிய ஆய்வும் செய்துள்ளார். இவர் எழுதியுள்ள 40 நூல்களில் 25 நூல்கள் மொழி பெயர்ப்பு நூல்களாகும். ஒரு மொழியின் இலக்கியத்தை அதன் அழகு குறையாமல் மற்றொரு மொழிக்கு மொழிபெயர்ப்பது ஒரு சவாலான செயலாக இருப்பினும், அதை இவர் மிகவும் விரும்புகிறார். இதுவரை இவர் இந்திக்கு மொழி பெயர்த்துள்ள திருமுறைகள் விவரம்: 1 ஆம் திருமுறையை இவர் இந்திக்கு மொழிபெயர்த்து முடித்து நூலாக்கியுள்ளார். 2 ஆம் 3 ஆம் திருமுறைகளை இவர் இந்திக்கு மொழிபெயர்ப்பது தொடர்கிறது. 4, 5, 6 திருமுறைகளை இவர் இந்திக்கு மொழிபெயர்த்து, பாட்னாவில் உள்ள நாளந்தா திறந்தவெளிப் பல்கலைக்கழகம் அவற்றை நூலாக வெளியிட்டுள்ளது 7 ஆம் திருமுறையை இவர் இந்திக்கு மொழிபெயர்த்து, வார்தாவில் உள்ள மகாத்மா காந்தி அறநிலையம் அதனை நூலாக வெளியிட்டுள்ளது 8 ஆம் திருமுறை திருவாசகத்தை இவர் இந்திக்கு மொழிபெயர்த்து, கொல்கத்தா சாந்திநிகேதன், விசுவ பாரதிப் பல்கலைக்கழகம் அதனை நூலாக வெளியிட்டுள்ளது 10ஆம் திருமுறையை இவர் இந்திக்கு மொழிபெயர்த்து, அதனை தில்லிப் பதிப்பாளர் ஒருவர் வெளியிட்டுள்ளார். எண்பது வயதிலும் தளரா ஆர்வத்துடன் தமிழ் நூல்களை இந்திக்கு மொழிபெயர்த்துத் தமிழ்ப்பணியாற்றும் பேராசிரியர் சுந்தரம் அவர்களது பணி, இலக்கியப் பணி புரிவோருக்கு வழிகாட்டும் விதத்தில் அமைந்துள்ளது என்பது மிகையன்று. March 16, 2015 “பாடம்” நாராயணன் [] “தமிழகத்தில் ஆதரவற்ற குழந்தைகளைப் பாதுகாக்கவும், குற்றம் சாட்டப்பட்ட சிறார்கள் மற்றும் குற்றங்களுக்குத் தண்டனை பெற்ற குழந்தைகளைப் பாதுகாக்கவும் இல்லங்கள் செயல்பட்டுவருகின்றன. நிர்வாகச் சீர்கேடு காரணமாக இந்த இல்லங்கள் சிறுவர்களை சீரழிக்கும் அபாயம் உள்ளதாகச் சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகிறார்கள்” என்ற செய்தி நாளிதழில் வெளியானால் திரைப்படம், அரசியல், வன்முறை போன்ற கருத்தைக் கவரும் அல்லது சர்ச்சைக்குரிய செய்தியாக இல்லாத காரணத்தால் படிப்போர் பலரது கவனத்தையே இச்செய்தி கவராது. சிலர் தலைப்பை மட்டும் படித்துவிட்டு மறு வினாடி மறந்துவிடுவார்கள், மேற்கொண்டு அவர்கள் நினைவில் அது தங்காது. மற்றும் சிலர் படிப்பார்கள் செய்திக்காக கொஞ்சம் அக்கறையுடன் கவலைப்படுவார்கள், பிறகு அதைப்பற்றி நினைப்பதில்லை. ஆனால் ஒருவருக்குக் கூட யார் இந்தச் சமூக ஆர்வலர்கள், இப்படி தனது நேரத்தையும் உழைப்பையும் அக்கறையுடன் பயன்படுத்தி சமூகத்தில் யாரும் அக்கறை கொள்ளவே விரும்பாத ஒரு சிலருக்காக இப்படிப் போராடுகிறார்களே என்று சிந்திக்காமல் போவதே இன்றைய நடைமுறை வாழ்க்கையின் நிலை. ஆங்கிலத்தில் “Unsung Hero” என்று நாம் குறிப்பிடும் அது போன்று “புகழப்படாத நாயகர்” ஒருவர்தான் சமூக ஆர்வலர் திரு. “பாடம்” நாராயணன் அவர்கள். சென்னையைச் சேர்ந்த சமூக ஆர்வலர் திரு. “பாடம்” நாராயணன் அவர்கள், மனித நேயம் நிறைந்த உள்ளத்துடன் சமூக அவலங்களில் மாட்டித்தவிக்கும், தன்னைக் காத்துக் கொள்ள குரலெழுப்ப இயலாத உயிர்களுக்காக அக்கறையுடன் பொதுநல வழக்குகளாகத் தொடுத்து பல ஆண்டுகளாகத் தொடர்ந்து போராடிவருபவர். “சிறார் சீர்திருத்த இல்லங்களின் நிலைமையினால் அங்கு வாழும் குழந்தைகளை சீரழிகின்றன” என்று இவர் தொடுத்த பொதுநல வழக்கில் அக்குழந்தைகளின் வாழ்வில் மாற்றத்தை ஏற்படுத்தும் வண்ணம் நீதிமன்றம் நடவடிக்கை எடுத்துள்ளது. அதுமட்டுமின்றி, மேலும் இவரது மற்ற இரு குறிப்பிடத்தக்க பொதுநல வழக்குகளில், யாருமே ஆதரவு தராத நிலையில் சமுதாயத்தில் அல்லலுறும் மேலும் இரு குழுவினருக்கும் நியாயம் கிடைக்கவும் வழி பிறந்துள்ளது. மனிதக் கழிவுகளை மனிதனே அள்ளுவதற்குத் தடை கோரி இவர் தொடுத்த பொதுநல வழக்கின் விளைவாகத் தமிழகத்தில் மார்ச் 15, 2015 முதல் இதற்கான தடை நடைமுறைப்படுத்தப்பட்டது. விசாரணைக் கைதிகளின் பாதுகாப்பிற்காகக் காவல் நிலையங்களில் கண்காணிப்பு கேமரா பொருத்தக் கோரி இவர் தொடுத்த பொதுநல வழக்கை உயர் நீதிமன்றம் ஏற்றுக்கொண்டு, விளக்கம் கூறி பதில் மனு தாக்கல் செய்யவும், நீதிமன்றத்திற்கு வரும்படியும் காவல்துறை நிர்வாகத்திற்குக் கட்டளையிட்டுள்ளது. ‘பாடம்’ நாராயணன் அவர்கள் ‘மாற்றம் இந்தியா’(Change India) என்ற அமைப்பின் இயக்குநரும், ஒரு கல்வியாளரும், முன்னர் வெளிவந்த பாடம் என்ற சமூக அக்கறை கொண்ட மாத இதழின் ஆசிரியரும் ஆவார். “பாடம்” நாராயணனின் முக்கியமான பொதுநல வழக்குகள் சிலவற்றைப் பற்றிய தகவல்கள் நாளிதழ்களில் இருந்து தொகுக்கப்பட்டு அவை இங்குக் கொடுக்கப்பட்டுள்ளன: – சிறார் சீர்திருத்த குழந்தை இல்லங்களில் உள்ள குழந்தைகளின் உளவியல் தேவைகள் பூர்த்தி செய்யப்படவில்லை. மாதம் இரு முறை பெற்றோர்கள் குழந்தைகளைப் பார்க்க அவர்கள் அனுமதிக்கப்படுவதில்லை. மேலும் அவர்கள் உடல் மற்றும் உளவியல் ரீதியான துன்புறுத்தல்களுக்கு ஆளாவதால் தற்கொலை அல்லது வன்முறைக்குத் தள்ளப்படுகின்றனர். இதனால் அவர்கள் கோபம், பயம், நம்பிக்கையின்மை மற்றும் குழப்பமான மனநிலையோடு வெளியே வருகின்றனர். இது அவர்கள் மீண்டும் குற்றங்களைச் செய்ய தூண்டுகின்றன. குழந்தை இல்லங்களில் போதுமான பாதுகாப்பு அலுவலர்களும் உளவியல் ஆலோசகர்களும் இல்லை. பல இடங்களில் மேற்பார்வையாளர்களே மாவட்ட குழந்தை பாது காப்பு அலுவலர்களாக உள்ளனர். இது போன்ற சிறார் சீர்திருத்த இல்லங்களின் நிலைமையினால் அங்கு வாழும் குழந்தைகளை சீரழிகின்றன என்பது சிறார் சீர்திருத்த குழந்தை இல்லங்களைப் பற்றி இவர் தொடுத்த பொதுநல வழக்கு. – கையால் மலம் அள்ளும் தொழிலை உடனடியாகத் தடை செய்யக் கோரி 2005-ஆம் ஆண்டு சென்னை உயர்நீதி மன்றத்தில் “பாடம்” நாராயணன் ஒரு வழக்குத் தொடுத்தார். இவ்வழக்கில் கையால் மலம் அள்ளுவதைத் தமிழகத்தில் தடை விதித்துத் தீர்ப்பளித்த சென்னை உயர்நீதி மன்றம், “1993-ஆம் ஆண்டு சட்டத்தில் உடனடியாகத் திருத்தங்களைச் செய்ய வேண்டும்; தவறினால், பிரதம மந்திரி அலுவலகத்தைச் சேர்ந்த உயர் அதிகாரிகள் நீதிமன்றக் கூண்டில் ஏற வேண்டியிருக்கும்” எனவும் எச்சரித்தது. பாடம் நாராயணன் அவர்கள் தொடுத்த பொதுநல வழக்கின் காரணமாக, மனிதக் கழிவுகளை மனிதனே அள்ளுவதற்குத் தடை போடப்பட்டுள்ளது, இத்தடை தமிழகத்தில் மார்ச் 15, 2015 முதல் நடைமுறைக்கு வந்துள்ளது. இதனால் உள்ளாட்சி அமைப்புகளில் மனிதக் கழிவுகளை அகற்றும் கருவிகள் சில வாங்கப்பட்டுள்ளன. அவற்றை வைத்தே கழிவுகள் அப்புறப்படுத்தப்பட்டு வருகின்றன. தனி நபர்களும் தங்கள் வீடுகளில் உள்ள செப்டிக் டாங்கில் இனி மனிதர்களை இறக்கிவிட்டுச் சுத்தப்படுத்தும் பணியை மேற்கொள்ளக் கூடாது. இதற்காகத் தனியார் நிறுவனங்களிடம் இயந்திரங்கள் உள்ளன. அவற்றை வாங்கிப் பயன்படுத்த வேண்டும். – பாடம் நாராயணன் அவர்கள் சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடுத்த பொதுநல வழக்கில், தமிழகத்தில் உள்ள அனைத்துக் காவல் நிலையங்களிலும் (1,567 காவல் நிலையங்களிலும்), கண்காணிப்பு கேமரா பொருத்துவதற்கு தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும் எனக் கோரியிருந்தார். விசாரணைக் கைதிகளை காவல்துறையின் வன்முறைகளில் இருந்து பாதுகாக்கும் நோக்கில் இந்த வழக்கு தொடரப்பட்டது. இந்தப் பொதுநல வழக்கிற்குப் பதில் அளிக்கத் தாமதமான காரணத்தால் தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் ரூ.10 ஆயிரம் அபராதம் அளித்தது. அத்துடன், பொதுநல வழக்கை உயர் நீதிமன்றம் ஏற்றுக்கொண்டு, விளக்கம் கூறி பதில் மனு தாக்கல் செய்யவும், அடுத்த மாதம் நீதிமன்றத்திற்கு வரும்படியும் காவல்துறை நிர்வாகத்திற்குக் கட்டளையிட்டுள்ளது. - இவரது பொதுநல வழக்கின் காரணமாக, மழைநீர் வடிகால், கழிவுநீர் கால்வாய் கட்டுமானப் பணிகளை மேற்கொள்ள இடையூறு ஏற்படுத்துபவர்களை உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும் எனச் சென்னை மாநகராட்சிக்குச் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. - தமிழகத்தில் நடைபெறும் சட்டமன்றத் தேர்தலையொட்டி தேர்தல் ஆணையம் வாகன சோதனையில் ஈடுபடுத்துவதற்குத் தடை கூறப்பட்ட பொழுது, வாகன சோதனை மேற்கொள்ளக் குறுக்கே நின்ற அத்தடையை அகற்றி சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இந்த இடைக்கால உத்தரவை நீக்கக் கோரி பாடம் நாராயணன் மற்றும் சில தொண்டு அமைப்பினர் மனு தாக்கல் செய்து தடை நீக்கத்தைக் கைவிடக் கேட்டுக் கொண்டனர். - தமிழக அரசு ஏற்படுத்திய குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்துக்குத் தலைவர் மற்றும் உறுப்பினர்கள் நியமனத்தில் கால தாமதம் ஏற்பட்டு இயங்காமல் இருந்தது. ஆணையம் முழு அளவில் இயங்கும் வகையில் தமிழக அரசுக்கு உத்தரவிடக் கோரி “பாடம்’ நாராயணன் உயர்நீதி மன்றத்தில் மனுத் தாக்கல் செய்தார். - அரசின் மதுக் கொள்கைகளுக்கு எதிராகத் தொடர்ந்து போராடி வரும் சமூக ஆர்வலர் ‘பாடம்’ நாராயணன், வருடத்திற்கு 20 சதவீதம் மது விற்பனை குறைப்பும், ஞாயிறு கட்டாய விடுமுறையும் முக்கிய அம்சமாக இருக்க வேண்டும் என்று அரசின் மதுக் கொள்கைகளுக்கு எதிராகப் பல்வேறு வழக்குகளைத் தொடுத்து போராடி வருகிறார். - கல்வி உரிமைச் சட்டத்தின்கீழ், நலிந்த பிரிவினர் மற்றும் வாய்ப்புகள் மறுக்கப்பட்ட சமூகங்களைச் சார்ந்த குழந்தைகளுக்கு, சிறுபான்மையினர் தவிர்த்த தனியார் அறக்கட்டளைப் பள்ளிகளின் தொடக்க வகுப்புகளில் இட ஒதுக்கீடுகோரி மனுதாக்கல் செய்தார். - புத்தகக் கண்காட்சியில் எழுத்தாளர் பெருமாள் முருகனுக்கு ஆதரவான வாசகத்தை தனக்கு முன்னும் பின்னுமாக அணிந்துகொண்டு தன் மகளுடன் கண்காட்சியில் கருத்து சுதந்தரத்தை ஆதரித்தும், எழுத்தாளருக்கு எதிரான நடவடிக்கைகளைக் கண்டிக்கும் விதத்திலும் தனது எதிர்ப்பைப் பதிவு செய்தார் - மாநகராட்சிப் பள்ளிகள் மூடப்படுவது குறித்து அரசின் முடிவுகளைக் கண்டிக்கும் விதமாகக் கல்வியாளர் என்ற முறையில் தனது எதிர்ப்பைத் தொலைக்காட்சி ஊடகம் வழியே வெளிப்படுத்தினார். “பாடம்” நாராயணன் தனது சமூக அக்கறையைப் பொதுநல வழக்கு தொடர்வதில் மட்டுமல்லாமல், மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில் நாளிதழ்களில் கட்டுரைகளாகவும் எழுதி வருகிறார். நலிந்தோருக்காகத் தொடர்ந்து ஆதரவு குரல் கொடுத்து பொதுநல வழக்குகள் தொடரும் “பாடம்” நாராயணனுக்கு நன்றி சொல்வது நமது கடமை. March 23, 2015 கு. கல்யாணசுந்தரம் [] தொல்காப்பியம் – நச்சினார்க்கினியர் உரையின், பொருளதிகாரம்: அகத்திணையியல் (பாகம் 1) யும், பொருளதிகாரம்: புறத்திணையியல் (பாகம் 2) யும் மார்ச் 27, 2015 அன்று 500 வது தமிழிலக்கிய மின்னூலாக வெளியிட்டு மிகவும் பாராட்டத்தக்க எல்லையை எட்டியுள்ளது இணையத்தின் “மதுரைத்திட்டம்” (Project Madurai). இந்த மின்னாக்கப் பணியைத் துவக்கி, வழிநடத்தி, இந்தச் சாதனை எல்லையைத் தொட்டவர் முனைவர் கு. கல்யாணசுந்தரம் அவர்கள். முனைவர் கு.கல்யாணசுந்தரம் அவர்கள், “மதுரைத் திட்டம்” என்னும் பெயரில் இணையத்தில் தமிழ் இலக்கியங்களையும் இலக்கண நூல்களையும் மின்னிமப்படுத்தி , அவற்றை மின்னூல்களாக மாற்றி உலகத்தமிழினம் அனைவரும் பயன்படுத்தும் வண்ணம் விலையின்றி வழங்கும் நோக்கில் மின்னாக்கப்பணியைத் துவக்கி, கடந்த 17 ஆண்டுகளாக தன்னையொத்த பலநூறு தமிழார்வலர்களையும் இப்பணியில் பங்கு பெறச் செய்து வழிநடத்தியும் வருகிறார். மதுரைத் திட்டம் அரசு மற்றும் தனியார் நிறுவனங்களின் உதவியின்றி, வணிக நோக்கமுமின்றி நடைபெறுகின்ற ஒரு தன்னார்வ முயற்சி. 1998-ம் ஆண்டு பொங்கல் அன்று தொடங்கப்பட்ட இத்திட்டத்தின் கீழ் சற்றேறக்குறைய 400 தமிழார்வலர்கள் இந்நாட்களில் பங்கு பெறுகிறார்கள். காப்புரிமை சிக்கலில்லாத நூல்களை தட்டச்சுவது ஒரு சிலர், மெய்ப்புப் பார்ப்பவர் மற்றும் சிலர், இணையத்தில் மின்னூலாக வெளியிட உதவுபவர் வேறு சிலர் எனப் பலர் வெவ்வேறு பணியில் ஈடுபட்டுள்ளனர். இவர்கள் தங்கள் இல்லங்களில் இருந்தபடியே, தங்கள் கணினி மூலம் இணையவழித் தொடர்பு கொண்டு, படப்பிரதிகளாகக் கிடைத்துள்ள தமிழிலக்கியங்களை தட்டச்சி உள்ளிட்டும், பிழைதிருத்தியும் கூட்டு முயற்சியில் 500 மின்னூல்கள் என்ற எல்லையைத் தொட்டது பாராட்டத் தக்க ஒரு பணியாகும். இத்தகையப் பணிக்காக தன்னார்வத் தொண்டு செய்த தமிழார்வலர்கள் அனைவருக்கும், திட்டத்தின் தலைவரான கல்யாணுக்கும் தமிழர்கள் யாவரும் கடமைப்பட்டுள்ளோம். வெள்ளுரை (eText) வகையில் அமைந்துள்ள நூல்களே இணையத் தேடல்களின் வழி கிடைப்பதற்கும், ஆய்விற்கும் உதவும் என்பதால் இப்பணியின் இன்றியமையாமையும் தெளிவாகும். சங்க கால நூல்கள், நீதிநெறி நூல்கள், இலக்கண நூல்கள், பக்தி நூல்கள் (சைவ, வைணவ, இஸ்லாமிய, கிறித்துவ சமய நூல்கள்) காப்பியங்கள், பிரபந்த வகை நூல்கள், 20-ம் நூற்றாண்டின் தமிழ் நாட்டு ஆசிரியர் நூல்கள், ஈழத் தமிழர், மலேசியத் தமிழர் நூல்கள், மற்ற பிற நூல்கள் எனச் சங்க கால நூல்கள் முதல் தற்காலத் தமிழ்நூல்கள் வரை அனைத்தும் மதுரைத்திட்டத்தின் வழி வெளியிடப்படுகிறது. படிமக்கோப்புகளாகவும் (PDF), ஒருங்குறி (Unicode)எழுத்துருக்கோப்புகளாகவும், இணையப்பக்கங்களாகவும் (web pages)தமிழிலக்கியங்கள் மதுரைத்திட்டத்தின் வழியாகக் கிடைக்கின்றன. தமிழக அரசின் பொதுவுடைமையாக்கப்பட்ட இருபதாம் நூற்றாண்டு எழுத்தாளர்களின் நூல்கள் மற்றும் ஜெயகாந்தன், கவிப்பேரரசு வைரமுத்து ஆகியோர் தாங்களே காப்புரிமை நீக்கி வழங்கிய நூல்கள் எனப் பல தற்கால நூல்களும் மதுரைத் திட்டத்தின் சேகரிப்பில் இடம் பிடித்துள்ளன. 1990 களின் மத்தியில் தமிழ்க்கணினி வளர்ச்சியில் ஆர்வம் கொண்ட கல்யாண் முதல் முயற்சியாகத் திருக்குறளை தட்டச்சி இணையத்தில் ஏற்றி அனைவரும் பயன்படுத்தும் வழி இலவசமாக அளித்தார். இவரையொத்த ஆர்வம் கொண்டவர் பலரும் இணைந்ததில் உருவான மதுரைத் திட்டத்திற்காக இவரே தனது செலவில் பலநூல்களை தேடிப்பிடித்து வாங்கியும், நகலெடுத்தும் உள்ளார். தற்பொழுது ஒரே ஒரு பிரதி மட்டுமே உள்ள, “சிவபுரம்” என்ற தலைப்பில் 1902 ஆண்டில் பதிப்பிக்கப்பட்ட நூல் ஜி. யு. போப் அவர்களால் ஆக்ஸ்ஃபோர்ட் பல்கலைக்கழக நூலகத்திற்கு வழங்கப்பட்டதை அறிந்து, அங்கு சென்று நூலைப் படப்பிரதிகளாக எடுத்து அவற்றை மின்னாக்கம் செய்துள்ளார். தன்னைத் தமிழறிஞர் என்றோ தமிழ்க்கல்விப் பணியைச் சார்ந்தவர் என்றோ இனம் காண முடியாது, தான் ஒரு தமிழ் ஆர்வலர் மட்டுமே என்று கூறும் முனைவர் கு.கல்யாணசுந்தரம் அவர்கள் சுவிட்சர்லாந்தின் லாசன்னே நகரில் உள்ள “சுவிஸ் தேசிய தொழில்நுட்ப நிலையத்தில்” (Swiss Federal Institute of Technology, Lausanne, Switzerland) வேதியியல் பேராசிரியராகவும், ஆய்வாளராகவும் 36 ஆண்டுகளாகப் பணி புரிந்து வருகிறார். சூரிய மின்கலங்களைப் பற்றிய ஆய்வில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டுள்ளார். சென்னைப் பல்கலைக்கழகத்தின் லயோலா கல்லூரி மாணவரான கல்யாண், அமெரிக்க பல்கலைக்கழகமொன்றில் வேதியலில் முனைவர் பட்டத்தையும், இங்கிலாந்து பல்கலைக்கழகமொன்றில் வேதியலில் முதுமுனைவர் பட்டத்தையும் பெற்றவர். பல இயங்குதளங்களிலும் பயன்படுத்த உதவும் வகையில் “மயிலை” என்ற எழுத்துருவை 1980 களில் உருவாக்கி அனைவரும் இலவசமாகப் பயன்படுத்த உதவிய முன்னோடி எனவும், இணையத்தின் ஆரம்ப நாட்களில் மிகவும் பரவலாகப் பயன்படுத்தப்பட்ட “தமிழ் மின்னூலகத்தை” (Tamil Electronic Library) உருவாக்கியவர் எனவும், “உத்தமம்” என்றழைக்கப்படும் உலகத் தமிழ் தகவல் தொழில்நுட்ப மன்றத்தின் (International Forum for Information Technology in Tamil – INFITT) தலைவர் மற்றும் நிறுவனர்களில் ஒருவராகவும், ‘தமிழ் மரபு அறக்கட்டளை’(Tamil Heritage Foundation) நிறுவனத்தின் நிறுவனர்களில் ஒருவர் எனவும் பல வகைகளில் தன்னை பல தமிழ்ப்பணிகளில் இணைத்துக் கொண்டவர் கல்யாண். இவரது பணிகளைப் பாராட்டி 2008 ஆம் ஆண்டு கனடா தமிழிலக்கிய கழகத்தின் மதிப்புமிக்க “சுரா” (Canadian Tamil’s initiative TAMIL LITERARY GARDEN’s Sundara Ramasamy Award for Tamil Information Technology – Sura) விருது வழங்கப்பட்டது. கலிஃபோர்னியாவின் பெர்க்லி பல்கலைக்கழகமும் இவரது இணையத் தமிழ்ப்பணியை பாராட்டி விருது வழங்கியுள்ளது. சங்கம் அமைத்து தமிழ் வளர்த்த மதுரையின் பெயரைச் சூட்டி, மதுரைத் திட்டம் என்ற ஒன்றைத் துவக்கி, தன்னார்வத் தொண்டர்களான சில நூறு தமிழார்வலர்களை ஒருங்கிணைத்து வழிநடத்தி இந்தச் சாதனையைச் செய்துள்ள முனைவர் கு.கல்யாணசுந்தரம் அவர்கள், தனது பணியை மேலும் தொடர்ந்து நடத்தி தமிழ் நூல்கள் பலவற்றை இணையத் தேடலில் கிடைக்கும் வகையில் வெள்ளுரைகளாக மாற்றி வழங்கும் வகையில் அவரது தமிழ்ப்பணி தொடர வாழ்த்துகள். March 30, 2015 ஜோதிர்லதா கிரிஜா [] பன்முகஎழுத்தாளர் ஜோதிர்லதா கிரிஜா அவர்கள் தமிழுலக வாசகர்கள் அனைவராலும் நன்கு அறியப்பட்டவர். அவரது கதை, கவிதை, கட்டுரை, செய்தி, போன்ற பலவகை இலக்கியப் பதிவுகளை படித்திராதவர் இருக்க இயலாது. முதன்முதலில் எழுத்துலகில் நுழைந்த பொழுது ஜோதிர்லதா கிரிஜா அவர்களுக்கு வயது பதினைந்து. குழந்தை எழுத்தாளராகக் குழந்தைகளுக்கென இவர் எழுதத் துவங்கியது 1950 ஆம் ஆண்டில். அன்று துவங்கிய எழுத்து பணியை தனது எண்பதாவது வயதிலும் ஊக்கமுடன் தொடர்ந்து சமீபத்தில் “வாய்ஸ் ஆஃப் வள்ளுவர்” என்ற வெளியீட்டை வாசகர்களுக்குத் தந்துள்ளார். சமூக எழுத்தாளரும், சீரிய சிந்தனையாளருமான ஜோதிர்லதா கிரிஜா அவர்களின் தொடர் எழுத்துலகப் பணி பாராட்டப்பட வேண்டிய சாதனை. பள்ளி நாட்களில் ரா.கி.ரங்கராஜன் அவர்களால் குழந்தை எழுத்தாளராக அறிமுகப் படுத்தப்பட்டு, தமிழ்வாணன், அழ.வள்ளியப்பா, ஆர்.வி. ஆகியோரால் ஊக்குவிக்கப் பட்டவர் ஜோதிர்லதா கிரிஜா. ஆனந்தவிகடனில் 1968 இல் வெளியாகிய கலப்புமணம் பற்றிய சர்ச்சைக்குரிய குறு புதினம் வாயிலாகக் குழந்தைகளுக்காக எழுதும் நிலையிலிருந்து பெரியோருக்கான எழுத்தாளராக இவர் தனது முப்பது வயதுகளில் உருமாற்றம் பெற்று எழுத்துலக வானில் பட்டாம்பூச்சியாக சிறகடித்துப் பறக்கத் தொடங்கினார். பதின்ம வயதில் எழுதி இவர் பரிசு பெற்ற ‘நம் நாடு’ எனும் சிறுவர் புதினத்திற்குப் பிறகு தனது எழுத்துலகப் பயணத்தில் இவர் தொட்ட எல்லைகள் பலப்பல, பெற்ற விருதுகளின் எண்ணிக்கையோ மலைக்கவைக்கும் ஒரு நீளமான பட்டியல். தினமணிக்கதிர் நாவல் போட்டி, கல்கி பொன்விழா வரலாற்று நாவல் போட்டி, லிலி தேவசிகாமணி அறக்கட்டளையின் சிறுகதைத் தொகுதிக்கான பரிசு, அமுதசுரபி நாவல் போட்டி, ராஜா சர் அண்ணாமலைச் செட்டியார் விருது, திருப்பூர் கலை இலக்கியப் பேரவையின் சமுதாய நாவல் பரிசு, தமிழக அரசின் மிகச் சிறந்த நாவலுக்கான பரிசு ஆகியன அவற்றில் சில. மன்னார்குடியின் செங்கமலத் தாயார் கல்வி அறக்கட்டளை மகளிர் கல்லூரி, இவரை 2012 ஆண்டுக்கான சிறந்த பன்முக எழுத்தாளராகத் தேர்ந்தெடுத்து கௌரவித்துப் பரிசளித்துப் பாராட்டியது. மறுஆண்டு ஈரோடு புத்தகத் திருவிழாவில் மூத்தபெண் படைப்பாளர்களில் ஒருவர் எனவும் பாராட்டப் பட்டார். இவரது எழுத்தார்வம் நமக்கு வழங்கிய படைப்புகள் … சிறுகதைகள் 500, புதினங்கள் 25, குறும் புதினங்கள் 50, நெடும் நாடகங்கள் 3, சமுதாயப் பிரச்சனைகள் சார்ந்த 60 க்கும் மேற்பட்ட கட்டுரைகள், கிரண் பேடியின் “அஸ் ஐ சீ இட்” என்ற நூலின் சமீபத்திய மொழி பெயர்ப்பு உட்படப் பல மொழிபெயர்ப்புகள் எனத் தொடர்ந்து தமிழிலும் ஆங்கிலத்திலும் எழுதிக் குவித்துள்ளார். இவரது படைப்பும் உக்ரைன் மொழியில் மொழி பெயர்ப்பு செய்யப்பட்டுள்ளது. முப்பதுக்கும் மேற்பட்ட சிறுகதைகளை இந்தியாவின் புகழ் பெற்ற ஆங்கிலப் பத்திரிக்கைகளான இல்லஸ்ட்ரேட்டட் வீக்லி, ஃபெமினா, ஈவ்ஸ் வீக்லி, யுவர் ஃபாமிலி, ஃபிக்க்ஷன் ரிவியூ, சண்டே எக்ஸ்பிரஸ், வுமன்ஸ் எரா, வீக் எண்ட் ஆகியவற்றில் எழுதியுள்ளார். ஹிந்து நாளிதழின் ‘ஒப்பன் பேஜ்’ பகுதியில் சமுதாய அக்கறையுள்ள கட்டுரைகள் பல எழுதியுள்ளார். காந்தி எப்பிசொட்ஸ், பெர்ல்ஸ் ஆஃப் தி ப்ரோஃபெட் (நபிகளின் பொன்மொழிகளின் தொகுப்பு), தி லிவிங் காட் அட் புட்டபர்த்தி, தி ஸ்டோரி ஆஃப் ஜீசஸ் க்ரைஸ்ட், சாங் ஆஃப் தி சன் காட் (ஆதித்த ஹிருதயம்) ஆகியவற்றுடன் இந்தியக் கவிதைகள் பலவற்றையும் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்துள்ளார். அந்த வரிசையில், ஈரடி கவிதைகளாக இவர் யாத்த வால்மீகி ராமாயணமும் அடங்கும். ராமாயணத்தைச் சிறுவர்களுக்காக 1970 களில் வெளியிட்டவர், சிறுவர்களுக்காக எழுதிய சற்றொப்ப ஆயிரம் பாடல்களைக் கொண்ட நூலை 1789 பாடல்களுடன் மேலும் விரிவாக்கினார். இந்த மொழிபெயர்ப்பு “ராமாயணா இன் ரைம்ஸ்” என்று வெளியிடப் பட்டது. முன்னர் பத்திரிக்கை ஒன்றில் இவர் தொடராக எழுதி வந்த “வாய்ஸ் ஆஃப் வள்ளுவர்” என்ற திருக்குறளின் ஆங்கில வடிவமும் Cyberwit.net பதிப்பகத்தார் மூலம் வெளியிடப்பட்டுள்ளது. மேலும் அண்மையில் இவரது … 1. படி தாண்டிய பத்தினிகள் 2. இதயம் பலவிதம் 3. வசந்தம் வருமா? 4. மரபுகள் முறிகின்ற நேரங்கள் 5. வாழத்தான் பிறந்தோம் 6. சாதி இரத்தத்தில் ஓடுகிறது 7. நாங்களும் வாழ்கிறோம் 8. குருக்ஷேத்திரக் குடும்பங்கள் 9. இல்லாதவர்கள் 10. அவசரக்கோலங்கள் பத்து நூல்களைப் பூம்புகார் பதிப்பகம் மறுபதிப்புகளாக வெளியிட்டுள்ளது. எழுத்துப் பணியை தற்பொழுது இணைய உலகிலும் விரிவாக்கி அவரது வலைப்பதிவு, வல்லமை, திண்ணை போன்ற இணைய மின்னிதழ்களிலும் எழுதி வருகிறார். தொடர்ந்து 65 ஆண்டுகளாக எழுத்துலகில் பன்முகஎழுத்தாளராக வலம் வருகிறார் ஜோதிர்லதா கிரிஜா. April 6, 2015 வைகைச்செல்வி [] “சுற்றுச் சூழல் சீர்கெட்டால், அற்றுப் போகும் மனித இனம்!” என்று முழங்குகிறார் கவிஞர் வைகைச்செல்வி. இவர் தொகுத்த “நிற்பதுவே நடப்பதுவே பறப்பதுவே” என்ற சுற்றுச்சூழல் கவிதைத் தொகுப்பில் இடம் பெறும் வரியிது. “ஜி. ஆனி ஜோஸ்பின்” என்ற இயற்பெயர் கொண்ட கவிஞர் வைகைச்செல்வி. சென்னையில் உள்ள தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாடு வாரியத்தில் மேலதிகாரியாகப் பணியாற்றிய வைகைச்செல்வி ஆங்கில இலக்கியம், வணிகவியல், வணிக மேலாண்மை ஆகியவற்றில் முதுகலைப் பட்டங்கள் (M.A.(Eng.Literature), M.Com., M.B.A.) பெற்றதுடன், மேலும் தனது தொழில் சார்ந்த பட்டயப் படிப்புகள் (Post Graduate Diplomas in Environmental Laws, Industrial Pollution Control, Labour Laws & Computer Applications) பலவற்றையும் படித்தவர். சுற்றுச் சூழல் பயிற்சிக்காக டென்மார்க், வங்காளதேசம் நாடுகளுக்குச் சென்று வந்துள்ளார். தற்சமயம் கல்வியாளராக பொறியியல் கல்லூரி ஒன்றில் பணியாற்றி வருகிறார். மதுரையைப் பூர்வீகமாகவும், சென்னையை வாழுமிடமாகவும் கொண்ட வைகைச்செல்வி 1980 முதல் கவிதைகள், கட்டுரைகள், சிறுகதைகள் பல வழங்கி எழுத்துலகில் தடம் பதித்தவர். பெண்ணியம் மற்றும் பெண்மை போற்றுதலும், அவரது பணியின் பின்புலமான இயற்கை சுற்றச்சூழல் பாதுகாப்பு கண்காணிப்புத் துறையின் பணியின் கொள்கைகளுமே இவரது படைப்புகளின் களங்களாக விளங்கி வருகின்றன. கவிஞர் வைகைச்செல்வியின் “இன்னொரு உலகில்… இன்னொரு மாலையில்…”, “அம்மி”, “நிற்பதுவே, நடப்பதுவே, பறப்பதுவே” போன்ற கவிதைத் தொகுதிகள் அவரது கவித் திறனையும், கருத்துச் செறிவினையும் பறை சாற்றுவன. கவிதைகள் தவிர்த்து “கறிவேப்பிலை செடியும் நெட்டிலிங்க மரங்களும்” என்ற சிறுகதைத் தொகுப்பு, “பணிச்சூழலில் பெண்களுக்கான பாதுகாப்பு” போன்ற படைப்புகள் இவரது பெண்ணியம், சுற்றச்சூழல் பாதுகாப்பு கருத்துகளின் வெளிப்பாடுகள். “கருவில் பெண்ணை அழிப்போர்க்குக் காட்டை அழித்தல் பெரிதாமோ?” என்ற முத்திரை பதிக்கும் கவிதை வரி பெண்களுக்காகவும் இயற்கை பாதுகாப்பிற்கும் இவர் ஒருங்கே கொடுக்கும் குரல். இவரது முதல் கவிதைத் தொகுப்பான “அம்மி” பாராட்டுகள் பலவற்றை இவருக்குப் பெற்றுத் தந்தது. தொடர்ந்து சுற்றுச்சூழல் தூய்மையை வலியுறுத்தி, தமிழகத்தின் தலைசிறந்த கவிஞர்களின் 70 கவிதைகளைத் தொகுத்து 2003 டிசம்பரில் இவர் வெளியிட்ட “நிற்பதுவே, நடப்பதுவே, பறப்பதுவே” என்னும் தலைப்பில் வெளியிட்ட கவிதைத் தொகுப்பு தமிழ்நாடு பல்கலைக் கழகத்தில் பாட நூலாகத் தேர்வு செய்யப்பட்டது. “கத்தியின்றி, ரத்தமின்றி யுத்தமொன்று ஆரம்பம்” என்ற இவரது கவிதை, தொழில்மயமான தற்கால உலகம் சுற்றுச்சூழலை சீர்குலைப்பதைச் சுட்டிக்காட்டி இந்நிலையை மாற்ற வலியுறுத்துகிறது. நான்கு திசைகளிலும் புகை போக்கிகள்! நச்சுக் காற்று நெளிந்து ஊடுருவி மனித நாற்றுகளை மௌனமாய்த் தலைசாய்க்க கத்தியின்றி…ரத்தமின்றி யுத்த மொன்று ஆரம்பம்! காடும் மலையும் இல்லை யென்றால் வீடும் நாடும் இனி யேது? சுற்றுச் சூழல் சீர்கெட்டால் அற்றுப் போகும் மனித இனம்! பணியிடங்களில் பெண்களின் திறமைகள் மதிக்கப்படாது அவர்கள் உயர்பதவிகள் வழங்கப்படுவதில் புறக்கணிக்கப்படும் “கண்ணாடிக் கூரை” (glass ceiling) சூழ்நிலை இவரது பெண்ணியக் குரல் வழியே கீழ்க்கண்டவாறு ஒலிக்கிறது. ஆண்டுகள் பலவாய் ஓடி…ஓடி இறுதியில் (பதவி உயர்வென்னும்) அந்த ஏணியை அடைந்தேன்! கூரிய கற்களும்… கொடிய முட்களும் குத்திக் கிழித்தும் (உயர்ச்சி நோக்கி ஆவலாய்) ஓடிய கால்கள் …..! ஏணியின் உயரம் அயர்ச்சியை அளிக்க …. புத்துயிர் பெற்றுக் கண்களைத் திறந்தேன்! காலை எடுத்து முதற்படி வைப்பதற்குள் …. என்னைத் தாண்டிச் (சென்றன) சில காகங்கள் …. கழுத்தில் சலங்கையுடன், காலில் எலியுடன், ஏணியைத் தள்ளி (என்னையும் மிதித்துக் கொண்டு) இடத்தை நிரப்பின! இக்கவிதையினைப் படிக்கும்பொழுது “தனிப்பட்ட மன முறிவுகளைத் தாண்டி பொது இழப்புகளைப் பெண்கள் ஆராயத் தலைப்பட்டிருக்கிறார்கள். அவர்கள் மிகச் சிலரே. எனினும் அவர்கள் ஒரு புதிய பாதையின் முன்னோடிகள். வைகைச் செல்வி அவர்களில் ஒருவர்” என மாலன் கூறியதை நாம் இங்கு நினைவுகூர்தல் பொருத்தமாகவும் இருக்கும். “பெண்ணும் எழுத்தும் கண்ணெனத் தகும்” என்ற வைகைச்செல்வியின் கட்டுரை பலவகையிலும் வாய்ப்புகள் மறுக்கப்பட்ட அன்றைய காலத்து பெண் எழுத்தாளர்களின் எழுத்துக்களில் இருந்த வலிமையும், வீரியமும், உயிர்ப்பும், காலத்தை வென்று நிற்கும் தன்மையும் கொண்டு இன்றைய பெண்படைப்பாளிகளுக்கு ஒரு முன்மாதிரியாக அமைகிறது. “வானகமே, வையகமே”, என்னும் சூழ்மண்டலக் கண்காணிப்பு இதழில் “இது நம்ம பூமி” என்னும் தலையங்கக் கட்டுரையைத் தொடர்ந்து எழுதி அதன் கௌரவ ஆசிரியராக சிறப்பாகச் செயலாற்றி வரும் வைகைச்செல்வி, சுற்றுச் சூழல் பாதுகாப்பு, பெண்ணுரிமை என இருதுறைகளிலும் மேலும் மற்றொரு எல்லைக்கோட்டை முனைவர் பட்டம் மூலம் சமீபத்தில் எட்டினார். சுற்றச்சூழல் கவிஞர், பெண் சாதனையாளர் போன்ற பட்டங்களையும் பெற்றவர் வைகைச்செல்வி. இவரது படைப்புகளில் பல்கலைக்கழக ஆய்வுகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன. நெய்வேலி நிறுவன புத்தகக் கண்காட்சியின் 2002 ஆண்டிற்கான சிறந்த எழுத்தாளர் விருது, திருப்பூர் அரிமா சங்கம் வழங்கிய “சக்தி 2002” பெண் எழுத்தாளர் விருது போன்ற விருதுகளைப் பெற்ற கவிஞர் வைகைச்செல்வி, இப்பொழுது தான் பெற்ற வெற்றிகளின் வரிசையில் முனைவர் பட்டத்தையும் [Ph D. in Occupational Health Hazards of Women in Textile Industries & Environmental Management] பெற்றுள்ளார். “பணிபுரியும் பெண்களின் (ஜவுளியாலைகள் மற்றும் தீப்பெட்டித் தொழில்) பிரச்சனைகளும் அதற்கான ஒருங்கிணைந்த சுற்றுச் சூழல் மேலாண்மையும்” (Thesis: Occupational Health Problems of Women employees in Textile and Match industries and Integrated Management of Environment) என்ற தலைப்பில் ஆய்வினை மேற்கொண்டு பெற்ற முனைவர் பட்டம் இது. இவரது ஆராய்ச்சிக் கோணமும் பெண்களையும் இயற்கையையும் இணைத்த ஒரு கோணத்திலேயே அமைந்தது பாராட்டிற்குரியது. பெண்கள் நலனும், சுற்றுச்சூழலின் நலனும் தொடர்ந்து உலகில் கவலைக்குரிய நிலையிலேயே இருப்பதை உணரும்பொழுது இவரது ஆய்வும் இவரது கருத்துகளுக்கு வலிமை சேர்க்கும் வகையில் அமைந்துள்ளது பாராட்டிற்குரியது. April 13, 2015 றியாஸ் முஹமட் [] இலங்கையின் கல்குடா பகுதியில் பிறந்து வளர்ந்து, இன்று வளைகுடாப் பகுதியில், மத்தியக் கிழக்கு நாடான கத்தாரில், கத்தார் தொலைத்தொடர்பு நிறுவனத்தில் பணியாற்றிவருபவர் “கவியருவி றியாஸ் முஹமட்”. “சீதனம்” என்ற தலைப்பில் சீதனம் தரமுடியாதக் கொடுமையால் திருமணமாகாமல் இருக்கும் முதிர்கன்னிகளின் வருந்தத் தக்க நிலையினை, இந்த நூற்றாண்டிலும் நிகழும் இந்த சமுதாய அவலத்தை விவரிக்கும் கவிதையின் சில வரிகள் கீழே… சீதனம் கன்னிக்கு ஏன் வேதனை…? கருமச் சீதனத்தின் சோதனை! கன்னிக்கோ கலியாணம் கடந்த வயது… கலியாணச் சந்தையில் கனவுகளோடு காலூன்றி நிற்கும் கற்புக் கன்னி! கல்யாணராமர்களோ கன பேர், கருமச் சீதனக் கனவுகளோடு… கல்யாணராமனுக்குக் காணிக்கையில்லை, காணிக்கை கேட்பவன் கடவுளுமில்லை! கரும்பு தின்னக் கூலியோ… ? கணவனாகக் காசோலையோ…? பள்ளிநாட்களில் எழுதுவதில் ஏற்பட்ட ஆர்வம் காரணமாக, “மாவடிச்சேனை முஸம்மில்” “றியாஸ் முஹமட்” என்ற பெயர்களுடன் தொடங்கியது கவிஞர் றியாஸ் முஹமட்டின் இலக்கியப்பயணம். கதை, கட்டுரை, கவிதை எனப் பல்துறைகளில் எழுதி வரும் றியாஸ் முஹமட்டின் படைப்புகள் இந்நாள் வரை மித்திரன் வார மலர், தினமுரசு வாரமலர், சுடர் ஒளி, வீரகேசரி போன்ற பத்திரிகையில் வெளிவந்துள்ளன. மண் வாசனையுடன் எழுதுவதே தனக்கு மிகவும் விருப்பம் என்று கூறும் றியாஸ் முஹமட் தனது பிறந்தமண்ணை நினைவிற்குக் கொண்டு வரும் விதமாகக் “கல்குடாவின் எழுத்து” என்ற பெயருடன் மத்திய கிழக்கின் “தமிழ் டைம்ஸ்” பத்திரிகையில் கவிதைகள், சிறுகதைகள், கட்டுரைகள், இஸ்லாமிய ஆக்கங்களைத் தொடர்ந்து எழுதி வருவதுடன், முன்னணி சமூக வலைத்தளங்களிலும் எழுதி வருகிறார். இதுவரை இவர் எழுதி வெளிவந்துள்ள கவிதைகளைத் தொகுத்து ஒரு கவிதை நூல் வெளியிடவேண்டும் என்பது றியாஸ் முஹமட்டின் அடுத்த குறிக்கோள். பிப்ரவரி 2015 இல், “தடாகம் கலை இலக்கிய வட்டம்” நடத்திய சர்வதேச கவிதைப் போட்டியில் றியாஸ் முஹமட் முதற்பரிசு பெற்றதுடன் “கவியருவி” சான்றிதழும் பெற்றார். வல்லமையிலும் தனது கவிதைகளைத் தொடர்ந்து எழுதிவரும் றியாஸ் முஹமட் “கலைமகள் அழைக்கிறாள்!” என்ற கவிதையில், “கலைமகள் கவி பாட என்னை அழைக்கின்றாள்! நசுங்கிப் போன என் சமூகத்தின் நாளைய விடியலுக்காக, எனது எழுது கோலில் தீ மூட்டித் தீக்குச்சியாய் எரியப் போகிறேன்…” என்று தனது எழுத்துப் பணியின் குறிக்கோளைத் தெளிவாக முழங்குகிறார். இவரது பாரதி கண்ட புதுமைப்பெண், பனமரக் காடு போன்ற கவிதைகள், “சீதனம்” கவிதையினை ஒட்டி பெண்களுக்காக ஆதரவுக் குரல் கொடுக்கும் கவிதைகளாக இருப்பினும், இவரது பெரும்பாலான கவிதைகளின் தொகுப்பு தெளிவாக விளக்குவது செல்வம் திரட்டப் பணி நிமித்தமாக அயல்நாட்டிற்குச் சென்ற இளைஞர்கள், குடும்பத்தையும், உற்றார் உறவினரையும் பிரிந்து தனிமையில் வாடுவதையும், தாய்நாட்டை நினைத்து ஏங்கியவண்ணம், சில சமயம் குடும்பத்தாரின் மறைவிற்கும் செல்ல இயலாது அந்தத் துயரை தனிமையில் கழிப்பதையும், பணம் என்ற ஒரே காரணத்திற்காக உழைத்து உழைத்துப் பொருளீட்டும் காலத்தில், இளமைக்காலம் இவர்கள் கண்முன்னே வெறுமையாகக் கடந்து முதிர்ச்சி அடைவதையும், திருமணம் செய்து கொண்டாலோ தனது துணையுடன் வாழமுடியாது போகும் நிலையை, ஒரு இளைஞனின் மனக்குமுறல்களைப் படம் பிடித்துக் காட்டுவதாக அமைந்துள்ளது. கவியருவி றியாஸ் முஹமட் அவர்களின் கவிதைகளில் சில கீழே கொடுக்கப்பட்டுள்ளன…. முதிர் குமரன்! வயதுக்கு வந்து பல வருடமாச்சு மீசையோடு வெள்ளை முடியும் எட்டிப் பார்த்தாச்சு ! வெட்கமாக இருக்கு வெளியுலகத்துக்கு தெரிந்து போச்சு நானும் ஒரு முதுமைக் குமரன் என்று…! கூடப் படித்தவர்கள் எல்லாம் குடித்தனம் போயாச்சு! குழந்தை, குட்டிகளோடு கூடி வருகையில், மனசு துடிக்கிறது, எரி மலையாக வெடிக்கிறது…! என் பள்ளிப் பருவத்திலேயே தாய்க்கு வந்தது வாதம், கை, கால்களை முடக்கி வாழ்க்கையைச் சிதைத்து விட்டது! மூத்த தங்கை வயதுக்கு வந்து, இருபது வருடங்களாச்சு ! கல்யாணச் சந்தையில் காலூன்ற நிற்கும், இளைய தங்கை வேறு…! தங்கைகளை நினைத்து, உறங்கும் அம்மாவின் அழுகையும் அதிகமாச்சு ! […] என் தங்கைகளைக் கரை சேர்க்கும் வரை…. கனவுகளைக் கண்களில் சுமந்து கொண்டு வாழும் நானும் ஒரு முதிர் குமரன்தான்! சிறந்த கவிதைகளைத் தொடர்ந்து வழங்கி வரும் கவிஞர் றியாஸ் முஹமட்டின் இலக்கியப் பணிக்குப் பாராட்டுகள். April 20, 2015 குறள் வெப்பவளிக்கூடு” திட்டப் பொறுப்பாளர்கள் [] செம்மொழித் தமிழ் இலக்கியமாம் உலகப் பொதுமறை திருக்குறள் பற்றிப் பெருமை கொள்ளாத தமிழர் இருப்பது அரிது. சமீபத்தில் ஜனதா கட்சியின் மேலவை உறுப்பினர் மாண்புமிகு தருண் விஜய் அவர்கள் திருக்குறளின் பெருமைகளை உலகறியச் செய்வதில் தமிழர்களுடன் கைகோர்த்துள்ளார். அவரது ஆர்வத்தை மெச்சும் வகையில் தமிழ் மக்களும் மனமுவந்து அவருக்கு “திருக்குறள் தூதர் விருது” கொடுத்து மரியாதை செய்துள்ளார்கள். இவ்வாறாகத் திருக்குறள் மக்களின் கவனத்தில் தொடர்ந்து சிறப்பிடம் பெற்று வரும் இவ்வேளையில், தமிழ் இளைஞர்கள் திருவாளர்கள் பெனிடிக்ட் சேவியோ மற்றும் செல்வா சரவணா ஆகியோர் “திருக்குறள் வெப்பவளிக்கூடு” (Kural Balloon) என்ற ஓர் உலக சாதனை முயற்சியை முன்னெடுத்துள்ளார்கள். ஊடகப் பின்புலம் கொண்ட தமிழக இளைஞர்கள் பெனிடிக்ட் சேவியோவும், செல்வா சரவணாவும் 2003 ஆண்டு காலவாக்கில் UTV யில் நான்காண்டுகள் இணைந்து பணியாற்றிய பொழுதிலிருந்து நண்பர்கள். பின்னர் பெனிடிக்ட் வெப்பவளிக்கூடு (Hot Air Balloon) தொழிலிலும், செல்வா சிங்கப்பூர் ஊடக நிறுவனத்திலும் பணியாற்ற சென்றுவிட்டாலும் இருவரும் தொலைத்தொடர்பு வழி உரையாடல்களில் பெனிடிக்ட்டின் “க்ளோபல் மீடியா பாக்ஸ்” (Global Media Box) நிறுவனம் ஈடுபட்டுள்ள வெப்பவளிக்கூடு நடவடிக்கைகளைப் பற்றி உரையாடத் தவறுவதில்லை. எட்டு ஆண்டுகளாக உலகின் பலநாடுகளிலும் தொழில் முறையில் வெப்பவளிக்கூடுகள் பறக்கவிட்ட அனுபவம் உள்ளவர் பெனிடிக்ட். ஜனவரி - 2015 லும் பொள்ளாச்சி நகரில் நடந்த முதலாவது உலகளாவிய வெப்பவளிக்கூடு விழாவில் “ஆங்ரிபேர்ட்” வடிவில் அமைக்கப்பட்ட இவரது வெப்பவளிக்கூட்டைப் பறக்கவிட்டார். அடுத்து ஏதேனும் புதுமையான வெப்பவளிக்கூடு ஒன்றினை உருவாக்க வேண்டும் என்றும், அத்துடன் தமிழையும் இணைத்துச் செய்ய வேண்டும் என்ற தனது ஆர்வத்தை பெனிடிக்ட் தனது நண்பர் செல்வாவிடம் தெரிவித்த பொழுது, குறளின் 1330 குறள்களையும் 100 அடி உயரமுள்ள வெப்பவளிக்கூடில் அச்சேற்றி உலகம் முழுவதும் பறக்கவிடும் ஆலோசனையைக் கூறியவர் செல்வா. அடுத்த கட்ட நடவடிக்கையாக இதை உலக சாதனையாக நிகழ்த்தும் எண்ணமும் இவர்களுக்குத் தோன்றியுள்ளது. இந்த எண்ணத்தைச் செயல்படுத்துவதும் சாத்தியம் என்று அறிந்த பின்னர் 2015 ஆண்டின், ஏப்ரல் 15 சித்திரை முதல் நாளன்று இத்திட்டத்தை முறையாக இவர்கள் அறிவித்தார்கள். ஓர் உலகசாதனை முயற்சியாக, உலகப்பொதுமறையான திருக்குறளை வெப்பவளிக்கூடில் தமிழிலும் ஆங்கிலத்திலும் அச்சேற்றி உலகம் முழுவதும் பறக்கச்செய்ய உள்ள இந்த இளைஞர்களின் முயற்சியின் முக்கிய நோக்கங்கள் என இவர்கள் குறிப்பிடுவது … 1. தமிழர்கள் அல்லாதவர்களிடம் திருக்குறள் ஆர்வம் உண்டாக்குவது. 2. எக்காலத்திற்கும் ஏற்புடையது குறள் என்று மீண்டும் ஒருமுறை பிரமாண்டமாக பறைசாற்றுவது. 3. புதுமையான ஒரு வழியில் திருக்குறளை நமது இளைஞர்களிடம் கொண்டு சேர்ப்பது. 4. வெப்பவளிக்கூடில் அச்சேறிய முதல் நூல் ஒரு தமிழ் நூல் என்ற பெருமை நமக்குக் கிட்டும். அந்தப் பெருமைக்கு உகந்த நூல் திருக்குறளை தவிர வேறு இருக்க முடியாது என்பது இவர்களது கருத்து. 2016 ஆம் ஆண்டு, ஜனவரி 12 முதல் 16 வரை தமிழகத்தின் பொள்ளாச்சி நகரில் நடக்கவிருக்கும் “இரண்டாவது உலகளாவிய வெப்பவளிக்கூடு விழா” (Tamil Nadu International Balloon Festival – TNIBF – 12-16 – Jan 2016) விழாக் காலமும் தமிழர் தைத்திருநாள், திருவள்ளுவர் தின நாட்களுடனும் பொருந்தி வருவதாக இருப்பதால் அந்நாட்களில் திருக்குறள் வெப்பவளிக் கூடைப் பறக்கவிடுவது, பொள்ளாச்சி விழாவிற்குப் பின்னர் இதனை உலகெங்கும் தமிழர்கள் வாழும் நாடுகளுக்குக் கொண்டு சென்று பறக்கவிடுவதும் இத்திட்டத்தின் நோக்கம். இதன் மூலம் திருக்குறளைப் பற்றியும் தமிழ் பற்றியும் ஒரு உலகளாவிய விழிப்புணர்வு உண்டாகும் என்பதும் இத்திட்டத்தை முன்னெடுக்கும் இவர்களது நம்பிக்கை. திருக்குறள் அறிஞர் சாலமன் பாப்பையா அவர்களது வாழ்த்துடனும் நல்லாசியுடனும் துவங்கியது இந்த முயற்சி. April 27, 2015 ந. தெய்வசுந்தரம் [] தமிழகத்தின் இக்கால இளையதலைமுறை பல்கலைக்கழக பட்டம் பெற்றிருந்தாலும் சொந்தமாக ஆங்கிலத்தில் எழுதுவதையோ அல்லது சரளமான ஆங்கிலத்தில் தங்கள் கருத்துகளை உரையாடல்வழிப் பகிர்ந்துகொள்ள இயலாமைக்கோ காரணம் ஆங்கிலம் பயன்பாட்டு முறையில் கற்பிக்கப்படாததே என்பது மொழியியல்துறை வல்லுநர்கள் கருத்து. ஆங்கிலம் அறியாததால் தங்கள் பிள்ளைகளின் முன்னேற்றம் தடைப்படக்கூடாது என்ற நோக்கத்தில் பெற்றோர்கள் அவர்களை ஆங்கிலப் பயிற்றுமொழி வகுப்புகளில் சேர்த்தாலும், அங்குப் பயிலும் மாணவர்கள் 90 விழுக்காடு மதிப்பெண்கள் பெற்றாலும், மனனம் செய்து கற்கும் கல்விமுறையில் அவர்கள் கற்பது பெற்றோர்களின் நோக்கத்தை நிறைவேற்றுவதில்லை. மொழியியல்துறை பயிற்சி இக்குறையை நீக்க இயலும். உலக நாடுகளில் மொழியியல் கல்விக்கு முக்கியத்துவம் தரப்படும் பொழுது, இத்துறை தமிழக அரசின் மெத்தனத்தினால் தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டு மிகவிரைவாக இன்று அழிவுநிலையை நோக்கிச் சென்றுகொண்டுள்ளது. இதனைப் பற்றிய எச்சரிக்கைவிடுத்து தினமணி நாளிதழில் “அழிவின் பிடியில் மொழியியல் துறை” கட்டுரைக்கு வழங்கிய தமது செவ்வி மூலம் மக்கள் கவனத்திற்குக் கொண்டுவந்துள்ளார் மொழியியல் வல்லுநர் பேராசிரியர் முனைவர் ந.தெய்வசுந்தரம் அவர்கள். மொழியியல் துறையின் முக்கியத்தை மக்கள் கவனத்திற்குக் கொண்டுவந்து, அதைப் புறக்கணிப்பதால் ஏற்படக்கூடிய இடையூறுகளை எடுத்துரைத்த பேராசிரியர் முனைவர் ந.தெய்வசுந்தரம் அவர்களது கருத்தின் முக்கியத்துவம் அனைவரும் கருத்தில் கொள்ளவேண்டிய ஒன்று. சென்னைப் பல்கலைக்கழக தமிழ்த் துறை முன்னாள் தலைவர் பேராசிரியர் ந.தெய்வசுந்தரம் அவர்கள் திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்தவர். இயற்பியல் இளங்கலைப் பட்டமும், தமிழ், மொழியியல் புலங்களில் முதுகலைப் பட்டம் முனைவர் பட்டம் பெற்றவர். இவர் ஒரு கணினிமொழியியல் (computational linguistic) வல்லுநர். சென்னைப் பல்கலைக்கழகத்தில் இவரால் வளர்த்தெடுக்கப்பட்ட மொழியியல் துறை, ஆராய்ச்சியாளர் பலரை அத்துறையில் உருவாக்கிய அத்துறை, அவரது பணி ஓய்விற்குப் பிறகு பல்கலைக் கழகத்திற்கு அளிக்கப்படும் நிதிஒதுக்கீட்டினை இழந்து, பல்கலைக்கழகத்தின் அக்கறையின்மையால் நலிந்துவிட்டது. சென்னைப் பல்கலைக்கழகத்தில் தமிழ்மொழித்துறையில் கணினிமொழியியலுக்காக ஒரு முதுகலைப் பட்டப்படிப்பைத் தொடங்கியவர், தமிழரல்லாதவர்க்குத் தமிழ்மொழிக்கல்வி என்ற கணினிவழி பாடத்தைச் சென்னைப் பல்கலைக்கழகத் தொலைதூரக்கல்வி நிறுவனத்திற்காகத் தயாரித்து அளித்தவர் என்ற பல பெருமைகளை உடையவர் பேராசிரியர் ந. தெய்வசுந்தரம். மொழியியல் பாடமென்பது எல்லா மொழிகளைப்பற்றியும் பொதுவாக அறிந்துகொள்ளும் துறை, ஆய்வு நோக்கம் அதன் அடிப்படை. எழுத்து வடிவம், வாக்கிய அமைப்பு ஆகியவை குறித்து ஆய்வு செய்து படிக்கும் திறமையை வளர்ப்பது மொழியியல் துறையின் பின்னணி. கல்லூரி மொழியிலக்கியப் பாடங்களில் 40 விழுக்காடு பாடத்திட்டம் மொழியியலை அடிப்படையாகக் கொண்டது. இப்பாடத்தைப் படிப்பது இலக்கிய வகுப்புகளில் படிப்பது அறிவியல் அடிப்படையில் மொழிகளை ஆராய்ந்து அணுகும் தன்மையை உருவாக்குகிறது. இதனால் ஆங்கிலம், தமிழ் மொழிப் பாடங்களை பயன்பாட்டுமுறையில் கற்பிக்கும் திறமையையும் ஆசிரியர்கள் பெறுவார்கள். இக்காரணத்தினால் கல்வி நிறுவனங்களில் இத்துறையில் பயிற்சி பெற்றவர்களைப் பணிக்கு அமர்த்துவது இன்றியமையாததாகிறது. சில ஆண்டுகளுக்கு முன்னர் இத்துறையில் பட்டம் பெற்றவர்களைப் பல்கலைக்கழகங்கள் பணிக்கமர்த்தின. ஆனால், மொழியியல் துறையில் பெறப்பட்ட முனைவர் பட்டம் இலக்கிய முனைவர் பட்டங்களுக்கு ஒப்பானதல்ல என்ற அரசாணையை இரு ஆண்டுகளுக்கு முன்னர் அரசு அறிவித்தது. அதனைத் தொடர்ந்து மொழியியல் துறையில் தேர்ச்சி பெற்றவர்களை ஆசிரியர் தேர்வு வாரியம் ஆசிரியர் பணிக்குத் தகுதியில்லாதவர்களாக அறிவித்து அவர்கள் தகுதிநீக்கமும் செய்யப்பட்டனர். இதனால் மொழியியல் பட்டதாரிகளை பணிக்கமர்த்துவதையும் கல்விநிறுவனங்கள் கைவிடத் தொடங்கின. இதன்விளைவாகப் பணிவாய்ப்புகள் குறைந்து இத்துறையைத் தேர்ந்தெடுப்பவர் எண்ணிக்கையும் அருகிவிட்டது. இவ்வாறாக ஆசிரியர் பணிகளுக்கு மொழியியல் கல்வித் தகுதி புறக்கணிக்கப்படுவதால், ஆங்கிலம் தமிழ் கற்பித்தலும் பாதிக்கப்படும் என்று கல்வியாளர்கள் கவலை தெரிவித்து வருகின்றனர். பேராசிரியர் ந.தெய்வசுந்தரம் அவர்கள் தமது பணி ஓய்விற்குப் பிறகு NDS Lingsoft Solutions Pvt Ltd மொழித்தொழில்நுட்ப நிறுவனத்தை தமிழ்மென்பொருள் உருவாக்கத்திற்காக நிறுவி, கடந்த பத்தாண்டுகளுக்கும் மேலாக இவரும், இவருடன் இணைந்து பணியாற்றிய மொழியியலாளர்களும், கணினித்துறை மென்பொருள் பொறியாளர்களும் உருவாக்குவதில் ஈடுபட்டிருந்த “மென்தமிழ்” – தமிழ்ச்சொல்லாளர் (a Tamil word processor) என்ற மென்பொருள் உருவாக்கும் பணியை முன்னெடுத்து வருகிறார். இவரது “தமிழ்ச்சொல் 2000” என்ற தமிழ்ச்சொல்லாளரை 2002 ஆம் ஆண்டு புதுதில்லியில் குடியரசுத்தலைவர் மாளிகையில் மேனாள் குடியரசுத் தலைவர் மேதகு கே.ஆர். நாராயணன் வெளியிட்டார். கணினியில் தமிழைத் தவறில்லாமல் பயன்படுத்துவதற்குரிய சொற்பிழை திருத்தி, சந்திப்பிழை திருத்தி, தமிழ்ச்சொல் சுட்டி போன்ற தமிழ்மொழியாய்வுக் கருவிகள் கொண்ட தமிழ் மென்பொருளாக ‘மென்தமிழ்’ மென்மம் விளங்குகின்றது. ஆங்கிலம், ஆங்கிலம்-தமிழ் என 41 ஆயிரம் தற்காலத் தமிழ்ச் சொற்களைக் கொண்ட அகராதி, இணைச்சொல் / எதிர்ச்சொல் அகராதி, மயங்கொலிச் சொல் அகராதி, தமிழ்நாடு அரசு ஆட்சிச்சொல் அகராதி என இதில் ஆறு வகையான அகராதிகள் உண்டு. இம்மென்பொருள் இயல்மொழி ஆய்வு மற்றும் மொழிதொழில்நுட்பத்தின் அடிப்படையில் உருவாக்கப்பட்டது. ஒருங்குறி எழுத்துக்கள், குறியீடு மாற்றி, சொற்பிழை திருத்தி, சந்திப்பிழை திருத்தி, மொழிமாற்றி போன்ற பலவகையான வசதிகளும் இதில் இடம் பெற்றுள்ளது. மேலும், அகரவரிசைப்படுத்துதல், சொல்லடைவு, எண் எழுத்து மாற்றி, கோப்பு மாற்றி, மற்றும் மைக்ரோசாஃப்ட் 2007 வோர்ட் ப்ரோசெசசெர் போன்ற வடிவமைப்பு போன்ற முழுமையான செயல்பாடுகளைக் கொண்டுள்ளது இந்த மென்பொருள். மின்னஞ்சல் உட்பட்ட பதிப்புக்கு தேவையான அனைத்து வசதிகளையும் உள்ளடக்கிய முழுமையான ஒரு சொற்செயலிதான்இந்த மென்தமிழ் மென்மம். இதற்கு முன்னதாக இத்தகையதொரு முழுமையான சொற்செயலி மென்பொருள் தமிழில் உருவாக்கப்படவில்லை. அந்த வகையில் கணினித் தமிழ் தேடலில் இதனை ஒரு மைல்கல் என்றே சொல்லலாம். தமிழக தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் கொண்டாடப்பட்டு வரும் தமிழக சித்திரைத் திருநாள் கொண்டாட்டத்தில், 2013-ஆம் ஆண்டின் “முதல்வர் கணினித் தமிழ் விருது”க்கு முனைவர் ந.தெய்வசுந்தரம் அவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு விருது வழங்கிப் பாராட்டப்பட்டார். தமிழறிஞர்கள், தமிழ் ஆர்வலர்களின் தமிழ்மொழி வளர்ச்சிக்கானப் பணிகளைப் பாராட்டி வழங்கப்படுவது இந்த விருது. இது தமிழையும் மொழியியலையும் தொழில்நுட்பத்துக்குத் தக்கவாறு தமிழ்ப் பயன்பாட்டை அடுத்த நிலைக்கு எடுத்துச் செல்லத் தொடர்ந்து பணியாற்றிவரும் பேராசிரியர் ந. தெய்வசுந்தரம் அவர்களின் தமிழ்ப்பணிகளை பாராட்டும் நோக்கில் தமிழக அரசால் வழங்கப்பட்டது. தொடர்ந்து கணினிவழி தமிழ் மொழிபெயர்ப்பு, மாற்றுத் திறனாளிகளும் பயன்பெறும் வகையில் தமிழை ஒலிவடிவாகக் கணினியே படிக்க வழி செய்வது போன்ற முயற்சிகளில் இவர் தன்னை ஈடுபடுத்திக் கொண்டுள்ளார். இத்தகைய தமிழிலக்கியம், மொழியியல், கணினிமொழியியல் பின்புலம் கொண்டவர் ஒருவரது கருத்தை இனி தமிழ அரசு புறந்தள்ளாது என நம்புவோம். உலகில் எல்லாப் பல்கலைக்கழகத்திலும் எல்லாத் துறைகளிலும் மொழியியல் பாடம் உள்ளது. மொழியியல் பின்னணியில் படித்தால்தான் ஆங்கிலத்தில் சரளமாக பேசலாம், எழுதலாம். ஆனால், மொழியியலின் முக்கியத்துவத்தைத் தமிழகம் இன்னும் புரிந்துகொள்ளவில்லை. பேராசிரியர் ந.தெய்வசுந்தரம் அவர்களது அறிவுரையைக் கருத்தில் கொண்டு தமிழக அரசு தக்க நடவடிக்கையை மேற்கொள்ளும் என எதிர்பார்ப்போம். May 4, 2015 நீதிபதி ராஜ ராஜேஸ்வரி [] சென்னை நகரின் ஆழ்வார்பேட்டையில், ஒரு கலைக் குடும்பத்தில் பிறந்து பரதநாட்டியம் குச்சுப்புடி நடனங்களை கண்ணாகக் கருதி பயிற்சி பெற்று வளர்ந்த தமிழ்ப் பெண்மணி ராஜ ராஜேஸ்வரி, தற்பொழுது அமெரிக்காவின் நியூ யார்க் நகரின் குற்றவியல் நீதிமன்றத்தின் நீதிபதியாகப் பொறுப்பேற்று உள்ளார். சென்ற 2015 ஆண்டு மே மாதத்தில் நியூ யார்க் நகரின் நகராட்சித் தலைவர் ‘பில் டி பிளேசியோ’ (New York City – Mayor, Bill de Blasio) அவருக்குப் பதவிப் பிரமாணம் செய்து வைத்தபொழுது, நீதிபதி ராஜ ராஜேஸ்வரி அவர்கள் மக்கள் நலத்தில் மிகுந்த அக்கறை கொண்டவர், தனது பன்மொழித் திறமையையும், கலாச்சாரப் பின்புலம் அளித்த அனுபவத்தையும் செவ்வனே பயன்படுத்தி நீதித்துறைக்குப் பெருமை சேர்த்தவர் எனப் பாராட்டுரையும் வழங்கியுள்ளார். நியூ யார்க் நகரின் முதல் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த, தெற்காசிய பெண் நீதிபதி என்ற புகழை தமிழகத்திற்குத் தேடித்தந்தவர் நீதிபதி ராஜ ராஜேஸ்வரி அவர்கள் என்பது குறிப்பிடத்தக்க சிறப்பு. நீதிபதி ராஜ ராஜேஸ்வரி முன்னர் ரிச்மாண்ட் கவுண்டி (மாவட்டம்) அரசுத் தரப்பு வழக்கறிஞராக 16 ஆண்டுகள் பணி புரிந்தவர். அப்பணியில் குற்றவியல், போதைப்பொருள் தடுப்பு, உச்சநீதிமன்ற வழக்குகள், பாலியல் குற்றங்கள், குடும்ப வன்முறை வழக்குகள் என நீதித்துறையின் பல பிரிவுகளிலும் பணிபுரிந்தவர் என்ற சிறப்பினைக் கொண்டவர். தமிழ், இந்தி, மலையாளம், தெலுங்கு, சிங்களம், ஆங்கிலம் உள்ளிட்ட பல மொழிகளில் சரளமாகப் பேசுகிற ஆற்றல் வாய்ந்தவர் நீதிபதி ராஜ ராஜேஸ்வரி. அயல்நாட்டில் இருந்து அமெரிக்காவிற்குக் குடிபெயரும் குடும்பங்களில், குறிப்பாகத் தெற்காசிய நாடுகளான இந்தியா, இலங்கையில் இருந்து குடிபெயர்ந்தோர் குடும்பங்களில் குடும்ப வன்முறைகளும், சிறுவர்கள் மேல் வன்முறையும் அதிகம் நிகழ்வதையும், அவை அக்குடும்பப் பெண்களால், குடும்பத்தின் நலன் என்ற நோக்கில் வெளிவராது மறைக்கப்படுவதையும் தனது பணிக்காலத்தில் கண்டுணர்ந்தவர். பெண்களும் குழந்தைகளும் அதிகம் பாதிக்கப்படுவது கண்டு மிகவும் வருந்தும் நீதிபதி ராஜ ராஜேஸ்வரி, குடிபெயர்ந்தோர் குடும்பங்களுக்கும், பெண்களுக்கும் குழந்தைகளுக்கும் நீதிகிடைப்பதில் தன்னால் உதவமுடியும் என்று கருதுகிறார். பாதிக்கப்படுபவர்களுக்கு நீதி கிடைக்கவேண்டும் என்பது முக்கியத்துவம் கொண்டது, அதற்காகத் தொடர்ந்து பாடுபடுவேன் என்று பதவியேற்ற பின்னர் பத்திரிக்கைகளுக்குக் கொடுத்த நேர்காணல்களில் குறிப்பிட்டுள்ளார். அநீதியாக, செய்யாத குற்றத்திற்காக ஒருவர் தண்டனை பெற்று, பின்னர் உண்மை தெரிந்து அவர் விடுவிக்கப்படும் செய்திகள் தெரியும் பொழுதெல்லாம் அது குறித்து மிகுந்த வேதனை அடைவேன் என்று கூறும் நீதிபதி ராஜ ராஜேஸ்வரி, அமெரிக்காவின் நீதித்துறை மிகச்சிறப்பானது என்று கூறவியலாது சிற்சில குற்றங்குறைகள் இருப்பினும், விரைவில் வழக்குகள் கையாளப்பட்டு நீதி வழங்கப்படுவது மிகவும் பாராட்டப்படவேண்டிய ஒன்று என்கிறார். ஒருவரது இனம், மதம், மொழி அடிப்படையில் யாரும் புறக்கணிக்கப்படாது நீதிபெறவேண்டும் என்று எடுக்கப்படும் முயற்சிகளால் உலகில் மிகச்சிறந்த நீதித்துறையைக் கொண்டது அமெரிக்கா என்பது இவர் கருத்து. குடிபுகும் அயல்நாட்டினருக்கு அமெரிக்கா ஒரு சிறந்தநாடு, முயன்று உழைத்து, தொடர்ந்து தங்கள் திறமையை வளர்த்துக் கொள்பவர்களுக்கு முன்னேறும் வாய்ப்பு இங்கு மறுக்கப்படுவதில்லை. டெல்லியில் நடந்த வன்புணர்வு போன்ற நிகழ்வுகள் நமது இந்தியச் சமுதாயத்தில் ஊறிப்போய்விட்ட பெண்களுக்கு எதிரான அநீதிகள், இவற்றை நாம் தடுக்காவிட்டால் நமது திறமைகள் முழுவதும் இந்த அநீதியின் காரணமாக வெளிவராது போகும். இது போன்ற கொடூரமான உயிரிழப்பு என்று ஒன்று நடக்காதவரைப் பெண்களுக்கு ஏற்படும் துன்பங்களைப் பற்றி யாரும் அக்கறை கொள்வதுமில்லை. பெண்களோ குழந்தைகளோ தங்களுக்கு இழைக்கப்படும் பாலியல் கொடுமைகளை அடுத்தவர் கவனத்திற்குக் கொண்டுவரவும் தயக்கம் காட்டுவார்கள், அவர்கள் சொல்வதை யாரும் பொருட்படுத்தப்போவதில்லை என்பதுடன் சொன்னால் சமூகத்தில் இகழ்ச்சியுடன் தாம் புறக்கணிக்கப்படுவதையும் எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என்பதுமே அவர்களது நிலை என்கிறார் நீதிபதி ராஜ ராஜேஸ்வரி. தனது அன்னை தமக்கு நாட்டியத்தில் ஆர்வத்தை ஊட்டுவித்தது போலவே, ஒரே ஒருவராவது அக்கறையுடன் முயற்சி எடுத்தால் நாம் வாழும் உலகம் மேலும் சிறந்த இடமாக மாறும் என்ற நம்பிக்கையையும் எனக்குக் கொடுத்துள்ளார் என்கிறார் இவர். நடுத்தரக் குடும்பத்தைச் சார்ந்த பத்மா, கிருஷ்ணன் ஆகியோருக்கு ஒரே மகளாகப் பிறந்தவர் நீதிபதி ராஜ ராஜேஸ்வரி. அவரது இளமைப் பருவம் செல்வச் செழிப்புடன் இல்லாவிட்டாலும் இனிமையான அமைதி நிறைந்த கலைக்குடும்ப வாழ்க்கையாக அமைந்ததில் மனநிறைவு உள்ளவர். நாட்டிய ஆசிரியையான தனது தாயைப் போல நடனத்தில் சிறந்து விளங்கி, பத்து வயதிலேயே பிறருக்கும் கற்பிக்கும் திறனையும் கொண்டிருந்தார் நீதிபதி ராஜ ராஜேஸ்வரி. நிதி திரட்ட உதவியாகப் பல நாட்டிய நிகழ்ச்சிகளிலும் பங்கேற்றவர். கலாஷேத்திராவின் மாணவியான இவர் தனது தாயுடன் உலகின் பலநாடுகளுக்கும் சென்று நாட்டிய நிகழ்ச்சிகளைச் செய்து வந்தவர். அமெரிக்காவில் நாட்டிய நிகழ்ச்சிக்காக 1988ம் ஆண்டு வந்தவரை, அமெரிக்காவில் பெண்களை பேதமுடன் பார்க்கும் மனப்பான்மை குறைவாக இருக்கும் நாகரிகம் மிகவும் கவர்ந்தது. அறிவாற்றல் மிக்க தனது தோழியர் சிலர் இளவயதில் திருமணம் செய்து வைக்கப்பட்டு அவர்கள் திறமை புறக்கணிக்கப்பட்டதை எதிர்கொண்டவர் நீதிபதி ராஜ ராஜேஸ்வரி. தனது 16 வயதில் அமெரிக்காவிற்கு வந்தவர் சட்டம் பயின்று, அரசுத் தரப்பு வழக்கறிஞராகப் பணிபுரிந்து 27 ஆண்டுகளுக்குப் பிறகு நியூ யார்க் நகரின் குற்றவியல் நீதிபதி பொறுப்பேற்கும் வகையில் உயர்ந்துள்ளார். இன்றும், தனது 43 வயதிலும், இந்தியச் சமூக நிகழ்ச்சிகளிலும், கோவில் நிகழ்ச்சிகளிலும் தனது குழுவினருடன் நாட்டிய நிகழ்ச்சிகள் நடத்தும் நீதிபதி ராஜ ராஜேஸ்வரி தனது நடனக் குழுவிற்கு தமது 18 வயதில் விபத்து ஒன்றிற்குப் பறிகொடுத்த தனது அன்னையின் நினைவாக “பத்மாலயா நாட்டியப் பள்ளி” என்ற பெயர் சூட்டியுள்ளார். இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் புற்றுநோய்க்குப் பலியான தனது தந்தைக்குக் கொடுத்த வாக்கின்படி, தந்தையின் கனவை நிறைவேற்றும் வகையில் தற்பொழுது நீதிபதியாகவும் பொறுப்பேற்றுள்ளார். பதவியேற்புரையாக நகராட்சி தலைவரிடம் நன்றி நவின்ற பொழுது, இப்பதவி எனது அமெரிக்கக் கனவு நிறைவு பெற்றதை மட்டும் காட்டவில்லை, தொலைதூர நாடுகளில் வசிக்கும், வாழ்க்கையில் முன்னிலையை அடைய விரும்பும் இளம்பெண்களுக்கு, தானும் முயன்றால் தனது சமூகத்தில் ஒரு சிறப்பிடத்தைப் பெறலாம் என நம்பிக்கையளிக்கும் ஒரு முன்மாதிரியாக நான் விளங்க வாய்ப்பளித்துள்ளது என்று கூறினார். இந்தியாவில் இருந்து வந்தவர் என்ற முறையில் இந்தப் பெருமை கிடைத்ததற்குத் தான் மிகவும் கடமைப்பட்டுள்ளதாகவும், நீதிபதியாக நியமிக்கப்பட்டது அவருக்குப் பெருமையும் பணிவையும் ஒருங்கே வழங்கியது என்றும், தான் கற்பனையும் செய்யத் துணியாத பெருமை தனக்குக் கிடைத்தது ஒரு கனவினைப் போன்றிருப்பதாகவும் கூறினார். தனது விடாமுயற்சியால் மிக உயர்ந்த பதவியைப்பெற்று, பாதிக்கப்பட்டோருக்குத் தனது பணியின் மூலம் நீதிகிடைக்க வழி செய்வதிலும், அயல்நாட்டில் வாழும் மற்ற இந்தியர்களுக்கும், தமிழர்களுக்கும், பெண்களுக்கும் முன்மாதிரியாக வாழ்ந்து காட்ட விரும்பும் நீதிபதி ராஜ ராஜேஸ்வரி அவர்களது சாதனையைச் சிறந்த முன்மாதிரியாகக் கொண்டு பெண்கள் தங்கள் திறமைகளை ஒளிரச் செய்ய வேண்டும். May 11, 2015 இளம் அறிவாளி விசாலினி [] ஐந்து உலக சாதனைகளை நிகழ்த்திய ஒரு இந்திய மாணவி. உலகிலேயே மிகவும் அறிவாளி இந்தப் பதின்ம வயது தமிழ்ப்பெண்; அவரது நுண்ணறிவுத் திறன் புள்ளிகள் (Intelligence Quotient /IQ ) 225. உலக கருத்தரங்கங்களில் சிறப்புரையாற்ற தமது பத்து வயதிலேயே அழைக்கப்பட்டவர்; கூகுள், டெட் எக்ஸ் (TEDx) போன்ற உலகப் புகழ் பெற்ற தொழில் நுட்ப நிறுவனங்களின் இளவயது சிறப்புரையாளர் இவர் என்று நீளும் சாதனைப் பட்டியலுக்கு உரியவர் செல்வி விசாலினி. திருநெல்வேலி மாவட்டம், பாளையங்கோட்டை “ஐ.ஐ.பி.இ. லக்ஷ்மி ராமன் மெட்ரிக்குலேஷன்” உயர்நிலைப்பள்ளி மாணவி விசாலினியின் பெற்றோர்கள் கல்யாண குமாரசாமி, சேது ராகமாலிகா. மின்னியலாளராகத் தொழில் புரியும் தந்தைக்கும், திருநெல்வேலியின், ‘ஆல் இந்தியா ரேடியோ’ வானொலியின் செய்தி வாசிப்பாளராகவும், நிகழ்ச்சி தொகுப்பாளராகவும் பணியாற்றும் தாய்க்கும் பிறந்த ஒரேமகள். இவர் பிறந்த பொழுது பேச்சு வரத் தாமதமானபொழுது, வானொலியில் பேசும் தாய்க்குப் பேச்சு வராத குழந்தையா என இவர் தாயிடமே வியந்து கேட்டவர்கள் உண்டு. மருத்துவர்கள் ஆலோசனையின்படி ராகமாலிகா இவருடன் தொடர்ந்து பேச்சுக் கொடுத்துக் கொண்டே இருந்தார். தனது பதவி உயர்வுகளுக்கான தேர்வுகளுக்குப் படிக்கும் பொழுது, தனது மகளை தன்னுடன் இருக்கச் செய்து பாடங்களை உரக்கப் படிக்கும் வழக்கத்தையும் மேற்கொண்டார். இடைவிடாத தாயின் முயற்சியினால் மகள் திடீரென ஒருநாள் பேசத் தொடங்கினார். அதுமட்டுமின்றி படிப்பில் மிகவும் சூட்டிகையாகவும் விளங்கி ஆண்டுக்கு இரண்டு வகுப்புகள் என இரட்டைத் தேர்ச்சிகள் பெற்று பிறரைவிட வேகமாக முன்னேறத் துவங்கினார். எட்டாம் வகுப்பு தேறிய இளவயது மாணவன் ஒருவன் பொறியியல் கல்லூரியில் படிக்க அனுமதிக்கப்பட்டான் என்ற செய்தியைப் படித்த பெற்றோர்கள் விசாலினியையும் அவ்வாறு சேர்க்க இயலுமா என்று தகவல் சேகரித்த பொழுது, சிஸ்கோ நிறுவனத்தின் “சி சி என் ஏ” (CCNA – Cisco Certified Network Associate)தொழில் நுட்பத் தேர்வு எழுதிய சான்றுகள் கொண்டு வருமாறு அறிவுரை கிடைத்தது. பொறியியல் பட்டதாரிகள் மட்டுமே எழுதும் கடினமான சிஸ்கோ கணினித் தேர்வினை தனது 10 வயதில் எழுதிய விசாலினி, 90 விழுக்காடு மதிப்பெண்கள் பெற்று இளம்வயதிலேயே இத்தேர்வில் தேர்ச்சி பெற்றவர் என்ற உலக சாதனையைப் படைத்தார். இவருக்கும் முன்னர் பாகிஸ்தான் மாணவன் ஒருவர் தனது 12 வயதில் செய்த சாதனையை இவர் முறியடித்தார். இது போன்றே மைக்ரோசாஃப்ட்டின் “எம் சி பி” (Microsoft Certified Professional – MCP) தேர்விலும் மற்றொரு பாகிஸ்தான் மாணவியின் சாதனையை முறியடித்தார். இவரது சாதனை கின்னஸ்ஸின் சாதனையாளர் புத்தகத்தில் இடம்பிடிப்பதற்கு, ‘சாதனையாளருக்குக் குறைந்தது வயது 14 இருக்க வேண்டும்’ என்ற விதிகளின் படி, விசாலினி தனது 14 வயது வரை காத்திருக்க வேண்டியிருந்தது. விசாலினிக்கு எதையும் புரிந்து கொள்ளும் அறிவுத்திறனும், கற்றதை மறக்காத நினைவுத் திறனும் அதிகம் என்பதுதான் இதற்குக் காரணம் என இவரது தாய் கூறியுள்ளார். தொடர்ந்து, பிரிட்டிஷ் கவுன்சில், கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகம், ஐ.டி.பி., ஆஸ்திரேலியா மற்றும் இ.எஸ்.ஓ.பி., தேர்வு மையங்கள் இணைந்து உலக அளவில் நடத்தும், ஐ.இ.எல்.டி.எஸ்., தேர்வையும் பதினொரு வயதில் தேர்ச்சி பெற்று அதிலும் உலக சாதனையைப் படைத்தார். இதிலும் மற்றொரு பாகிஸ்தான் மாணவியின் சாதனையை முறியடித்தார். மேலும் நெதர்லாந்து நாட்டின் இ.எக்ஸ்.ஐ.என் – கிளவுடு கம்ப்யூட்டிங் தேர்விலும் 1,000 க்கு 1,000 மதிப்பெண் பெற்று, விசாலினி உலக சாதனை படைத்துள்ளார். இவரது சாதனைகளுக்குப் பிறகு இவருக்கு நுண்ணறிவுத் திறன் சோதனை இரு வேறு இடங்களில் நடத்தப்பட்டது. மதுரை மனோவியல் மருத்துவர் நம்மாழ்வார், “பென்னட் காமத்’ என்ற அறிவியல் முறையிலான சோதனையைச் செய்தார். அச்சோதனையில் விசாலினி 11 வயதிலேயே 225 புள்ளிகள் பெற்றார். புனேயில் உள்ள மற்றொரு நிறுவனம் செய்த சோதனையின் மூலமும் இவரது நுண்ணறிவுத்திறன் உறுதிப்படுத்தப் பட்டுள்ளது. பெரும்பாலோரின் நுண்ணறிவுத் திறன் 90 முதல் 110 புள்ளிகளுக்குள் இருக்கும். இவரது நுண்ணறிவுத் திறனால், ‘உலகின் இளம் அறிவாளி’ என்ற சாதனையையும் செய்தார். இரட்டைத் தேர்ச்சிகள் பெற்றதால் தன்னைவிட மூத்த மாணவர்களுடன் விசாலினி படிக்க நேரிட்டது. பள்ளிகள் இவரை ஏற்றுக்கொள்ளத் தயங்கின, ஒரு கல்வியாண்டில் மூன்று பள்ளிகள் இவரைப் புறக்கணித்தது. பெற்றோர்கள் இவரைத் தகுந்த பள்ளியில் சேர்க்க அலையவும் நேர்ந்தது. மங்களூரிலுள்ள என் ஐ டி யும், திருவில்லிப்புத்தூர் பொறியியல் கல்லூரி ஒன்றும் விசாலினியை தங்கள் கல்லூரியில் சேருமாறு அழைத்திருந்தும் விசாலினியின் பெற்றோர் தற்பொழுது இவரைக் கல்லூரிக்கு அனுப்பும் எண்ணத்தைக் கைவிட்டு கல்லூரி வயதை எட்டியவுடன் அனுப்பத் திட்டமிட்டுள்ளார்கள். டாக்டர் அப்துல் கலாம் போன்ற பல பெரியோர்களாலும் அறிஞர்களாலும் பாராட்டப் பட்டவர் விசாலினி. சில பொறியியல் கல்லூரிகளில் பாடம் நடத்தும் வாய்ப்பும், பல்கலைக் கழக கருத்தரங்குகளில், தலைமை விருந்தினராக உரையாற்றவும் இவர் தொடர்ந்து அழைக்கப்பட்டு வருகிறார். மே 2015 இல் டெல்லியில் கூகுள் நிறுவனம் நடத்திய இந்தியக் கல்வி பற்றியக் கருத்தரங்கில் சிறப்புரை ஆற்றவும், கர்நாடகா மாநிலத்தில் நடந்த கணினி தொலைத்தொடர்பு உலகக் கருத்தரங்கில் தலைமை விருந்தினராகத் தலைமையுரை ஆற்றவும் இவருக்கு வாய்ப்பு கிடைத்தது. உலக சாதனைகள் … 1. The Highest IQ in the World: 225 2. The Youngest CCNA World Record Holder (Cisco Certified Network Associate): 90% 3. The Youngest IELTS World Record Holder (International English Language Testing System): Band 6 4. The Youngest Exin Cloud Computing World Record Holder: 100% 5. The Youngest CCSA World Record Holder (Checkpoint Certified Security Administrator): 71% இந்த உலக சாதனைகள் வரிசையில் மேலும் பல சாதனைகளை இணைக்கவும், எதிர்காலத்தில் இவர் விரும்புவது போல கணினி நிறுவனம் ஒன்றைத் துவக்கவும், வாழ்க்கையில் மேலும் வெற்றிகள் பல பெறவும் விசாலினிக்கு வாழ்த்துகள். May 18, 2015 சமூகப் போராளி மாணவி நந்தினி [] மக்களைப் பேரழிவிற்கு இட்டுச் செல்லும் மதுவை ஒழிப்பதற்காகத் தொடர்ந்து போராடிவருபவர் சமூகப் போராளி, மதுரை சட்டக் கல்லூரி மாணவி நந்தினி ஆனந்தன் அவர்கள். தனது தொடர் போராட்டத்தின் ஒருபகுதியாக… தமிழக அரசு “டாஸ்மாக்” மதுக்கடைகள் வழியாக மதுவிற்பனையில் ஈடுபடுவதைக் கண்டிக்கும் நோக்கில் இவர் போராட்டங்கள் நடத்தி வருவது தமிழகம் அறிந்த நிகழ்வுகள். மாண்புமிகு முதல்வர் செல்வி ஜெயலலிதா அவர்கள் மீண்டும் பதவி ஏற்கும் நாளான மே 23, 2015 அன்று தனது போராட்டத்தின் தொடர்ச்சியாக சென்னை தலைமைச் செயலகம் முன் கறுப்புக்கொடி காட்டி போராட்டத்தில் ஈடுபட நந்தினி திட்டமிட்டிருந்தார். இவரது இந்த அறிவிப்பைத் தொடர்ந்து முன்னெச்சரிக்கை அடிப்படையில் இவரைத் தடுத்து நிறுத்தும் பொருட்டு நந்தினியையும், அவருடன் போராட்டத்தில் ஈடுபட இருந்த அவரது தந்தை ஆனந்தனையும் மதுரை மாநகரக் காவல் துறையினர் மே 22 ஆம் நாளே கைது செய்தார்கள். முதல்வரின் பதவியேற்பிற்குப் பிறகு காவல்துறையினர் இவர்களை விடுதலை செய்தனர். நாளிதழ்கள் அறிவித்த இச்செய்தியை நந்தினியும் தனது ஃபேஸ்புக் தளத்திலும் பதிவு செய்துள்ளார். இந்தக்கைது நிகழ்வு உட்பட மது ஒழிப்பு போராட்டத்திற்காக இவர் இதுநாள் வரை 27 முறைகள் கைது செய்யப்பட்டுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. சமூகநலனில் அக்கறை கொண்டு தளராது தனது போராட்டத்தைத் தொடர்ந்து நடத்தி வரும் திருமிகு நந்தினி ஆனந்தன் அவர்களின் முயற்சிகள் பாராட்டிற்குரியன. நந்தினியின் போராட்டங்களுக்கு உந்துதலாகவும், அவருக்கு ஆதரவாகவும் இருப்பவர் தமிழக அரசின் வேளாண் பொறியியல் துறையில் இளநிலைப் பொறியாளராகப் பணியாற்றி, தற்பொழுது விருப்ப ஓய்வு பெற்றுள்ள இவரது தந்தை. மதுரை புதூர் காந்திபுரத்தைச் சேர்ந்த இவரது தந்தை திருவாளர் ஆனந்தன் அவர்கள் தனது மகளின் போராட்டத்திற்கு உறுதுணையாக இருந்துவருகிறார். சட்டக்கல்லூரி மாணவியான நந்தினியுடனும், தந்தை ஆனந்தனுடனும், இவரது சகோதரி நிரஞ்சனாவும் போராட்டங்களில் கலந்து கொண்டு வருகிறார். இதுநாள்வரை மதுரை சட்டக்கல்லூரி, சென்னை உயர்நீதிமன்றம், மதுரை உயர்நீதிமன்றம், மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகம், திருப்பத்தூர், சேலம், ஏற்காடு, பெருந்துறை உள்ளிட்ட பல இடங்களில் டாஸ்மாக் விற்பனை நிலையங்களில் மதுவுக்கு எதிராகப் போராட்டங்கள் நடத்தியதற்காகவும் நந்தினி கைது செய்யப்பட்டுள்ளார். சென்னை காவல்துறை தலைமை அலுவலகம், முதல்வரின் இல்லம் , முதல்வரின் கொடநாடு ஓய்வில்லம் எனப் பிற இடங்களில் உண்ணாவிரதப் போராட்டம் இருக்க முயன்ற பொழுது முன்னெச்சரிக்கையாகவும் அரசால் கைது செய்யப்பட்டுள்ளார். குடிப்பழக்கத்திற்கு அடிமையாகி தனது கண்முன்னர் அழியும் குடும்பங்களின் துயரைப் பொறுக்க முடியாத நிலையில் பாதிக்கப்பட்ட குடும்பங்களின் நூறு குழந்தைகளுடன் முதல்வரைச் சந்தித்து நியாயம் கேட்க முயன்றதில் துவங்கியது நந்தினியின் போராட்டம். இந்திய குற்றவியல் சட்டம் 328 பிரிவின் கீழ் அரசே மதுவிற்பது சட்டவிரோதமான செயல் என்பது நந்தினி முன்வைக்கும் வாதம். Central Government Act – Section 328 in The Indian Penal Code: 328. Causing hurt by means of poison, etc., with intent to commit an offense.—Whoever administers to or causes to be taken by any person any poison or any stupefying, intoxicating or unwholesome drug, or other thing with intent to cause hurt to such person, or with intent to commit or to facilitate the commission of an offense or knowing it to be likely that he will thereby cause hurt, shall be punished with imprisonment of either description for a term which may extend to ten years, and shall also be liable to fine. [Source: http://www.indianpenalcode.in/ipc-328/] “போதைப் பொருள்களைத் தவறு எனத் தெரிந்தே விற்பது சட்டப்படி குற்றம். அதற்கு 10 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை கிடைக்கும். மது வீட்டுக்கும் நாட்டுக்கும் கேடு என்று நன்றாகத் தெரிந்து கொண்டே மதுவை அரசு விற்பது சட்டத்தை மீறிய செயல் இல்லையா? கள்ளச் சாராயம் காய்ச்சுவது குற்றமென்றால் உரிமம் பெற்று டாஸ்மாக் நடத்துவது சரியானதுதானா? அரசியல் அமைப்புச் சட்டம் பிரிவு 47 -ன் படி மதுவிலக்கை மாநில அரசு அமல்படுத்த வேண்டும்” என்பது நந்தினி அரசிற்கு வைத்த கோரிக்கை. சட்டப்படி அரசின்மீது நடவடிக்கை எடுத்தால் நீதி கிடைக்க ஆண்டுகள் பல ஆகலாம் என்ற நாட்டின் நடைமுறை நிலமையாலும், பள்ளி மாணவர்களும் தற்காலத்தில் குடிக்கு அடிமையாவதும், குடிப்பழக்கம் உள்ள குடும்பங்களில் தற்கொலைகள் அதிகரிக்கும் நிலையும் இவரைப் போராட்டங்கள், உண்ணாவிரதங்கள் ஆகியவற்றின் வழியாக நீதி கேட்கும் முறையைத் தேர்ந்தெடுக்கச் செய்துள்ளது. இவரது போராட்டங்களுக்கு இவரது கல்லூரி நண்பர்களும், மாணவர் சமுதாயமும், அரசியல்வாதிகள் சிலரும், பொதுமக்களும், பத்திரிக்கைகளும் ஆதரவு தெரிவித்து வந்துள்ளனர். நந்தினியின் கறுப்புக்கொடி போராட்டத்தை முறியடிக்கும் விதமாகக் காவல்துறையினர் இவரைக் கைது செய்து, பின்னர் மறுநாள் விடுதலை செய்த பிறகு நந்தினி தனது ஃபேஸ்புக் சமூகவலைத்தளத்தின் மூலம் கீழ் காணும் செய்தியை தமிழக அரசின் பார்வைக்கு அனுப்பியுள்ளார். “ஐந்தாவது முறையாகத் தமிழக முதல்வராகப் பதவியேற்றுள்ள ஜெயலலிதா அவர்களே, “ஒரு அரசமைப்பு எவ்வளவு உயர்ந்ததாக இருந்தபோதிலும் அதைச் செயல்படுத்துபவர்கள் மோசமானவர்களாக இருந்தால் அந்த அரசமைப்பும் மோசமாகிவிடும்”- என அரசியல்சாசன சிற்பி அண்ணல் அம்பேத்கர் சொன்னது யாருக்குப் பொருந்துகிறதோ இல்லையோ நிச்சயமாக உங்களுக்கும் தமிழ்நாட்டின் முன்னாள் முதல்வர் கருணாநிதி அவர்களுக்கும் 100% பொருந்தும். நீங்கள் இருவரும்தானே தமிழக மக்களைத் திட்டமிட்டு குடிக்கு அடிமைப்படுத்தி, பல லட்சம் குடும்பங்களை நாசப்படுத்திய குற்றவாளிகள். ஆம், நீங்கள் இருவரும் கொடிய குற்றவாளிகள் என்பதில் எனக்கு எந்தச் சந்தேகமும் இல்லை. பாலில் கலப்படம் செய்து விற்பவர்களுக்கு ஆயுள் தண்டனை தரவேண்டும் என சுப்ரீம் கோர்ட் தீர்ப்பளித்துள்ளது. பாலில் கலப்படம் செய்தாலே ஆயுள் தண்டனை என்றால், மது என்னும் கொடிய விஷத்தை விற்று ஏராளமான மக்களைப் படுகொலை செய்யும் உங்களுக்கு என்ன தண்டனை தருவது? தூக்குத்தண்டனை கூடப் போதாது. அதையும் தாண்டி புதிதாக ஏதாவது தண்டனையை சட்டத்தில் சேர்க்க வேண்டும். சட்டத்தில் இருந்து தப்புவது உங்களுக்குக் கைவந்த கலையாக இருக்கலாம். ஆனால் கடவுளின் தீர்ப்பிலிருந்து உங்களால் என்றுமே தப்பிக்க முடியாது. மதுவிற்பனை அதிகரிக்க, அதிகரிக்க உங்களது பாவக்கணக்கும் அதிகரிப்பதை மறந்துவிடாதீர்கள். நிச்சயமாக, ஒருநாள் இதற்கெல்லாம் நீங்கள் பதில் சொல்லித்தான் ஆகவேண்டும். நீதிக்காக மன்னனையே குற்றவாளிக் கூண்டில் நிறுத்திய கற்புக்கரசி கண்ணகி வாழ்ந்த மண் இது. நீதியும் நியாயமும் இங்கு இன்னும் உயிரோடுதான் இருக்கிறது..அநீதிக்கு எதிரான போர்க்குரல் இம்மண்ணிலிருந்து ஒலித்துக்கொண்டுதான் இருக்கும். யாராலும் இதனைத் தடுக்க முடியாது.ஆ.நந்தினி சட்டக்கல்லூரி மாணவி,மதுரை.” [Source: https://www.facebook.com/photo.php?fbid=1711403399087192&set=a.1415621265332075.1073741828.100006526451390&type=1&theater] சமூக நலன் கருதி அயராது போராடும் நந்தினியின் முயற்சியைப் பாராட்டி அவரது மதுஒழிப்புப் போராட்டத்தில் வெற்றிபெற வாழ்த்துக்கள். May 25, 2015 இரா. கலைக்கோவன் [] கள ஆய்வுகளில் அறியப்படும் உண்மைகளின் அடிப்படையில் வரலாற்றை உருவாக்கும் நோக்குடன் “தமிழறிஞரும் வரலாற்றறிஞருமான முனைவர் மா. இராசமாணிக்கனார்” பெயரில் முனைவர் இரா. கலைக்கோவனால் திருச்சிராப்பள்ளியில் 1982 ஆம் ஆண்டு நிறுவப்பட்ட ஆய்வு அமைப்பே டாக்டர் மா. இராசமாணிக்கனார் வரலாற்றாய்வு மையம். நிறுவனரான இவரே வரலாற்றாய்வு மையத்தின் இயக்குநரும் ஆவார். நடப்புலகில் பொது அங்கீகாரமோ புகழோ கிடைக்க வழியில்லாத வரலாற்றாய்வுத் துறையில் 33 ஆண்டுகள் தொடர்ந்து ஈடுபட்டிருக்கும் வரலாற்றாய்வு மையத்தின் இயக்குநரான முனைவர் இரா. கலைக்கோவன் அவர்களுக்கும் இப்பணி வாழ்வாதாரம் அல்ல. தொழில்முறையில் இவர் ஒரு கண் மருத்துவர். இவரது முயற்சி ஆல் போல வளர்ந்து, ஆயிரத்திற்கும் மேற்பட்ட புதிய கல்வெட்டு ஆய்வுகள், ஐம்பதிற்கும் மேற்பட்ட புத்தக வெளியீடுகள், 25 “வரலாறு” ஆய்விதழ்கள், 119 வரலாறு.காம் மின்னிதழ் பதிப்புகள், 1356 வரலாற்றுக் கட்டுரைகள் எனப் பல எல்லைகளைக் கடந்துள்ளனர் வரலாற்றாய்வு மையத்தினர். இச்சாதனைகளை நினைவுகூரும் விதத்தில் டாக்டர். மா. இராசமாணிக்கனார் வரலாற்றாய்வு மையத்தின் பணிகளை முன்னிறுத்திக் கௌரவிக்கும் இதழாக வரலாற்று மையத்தின் ஒரு திங்களிதழும் வெளியிடப்பட்டுள்ளது. தமிழக வரலாற்றின் பால் கொண்ட ஆர்வம் காரணமாக 25 ஆவது “வரலாறு” ஆய்விதழ் வெளியாகும் வரை வரலாற்றாய்வு மையத்தை வளர்ச்சிப் பாதையில் அழைத்துச் சென்றுள்ளார் முனைவர் இரா. கலைக்கோவன் அவர்கள். 1. பதிவு செய்யப்படாத கல்வெட்டுகளைக் கண்டறிந்து பதிப்பித்தல் 2. தமிழ்நாட்டுக் கலை வரலாற்றை முழுமையுற உருவாக்கல் 3. ஆய்வாளர்களுக்குப் பயன்படும் வகையில் புதிய தரவுகளை வழங்கும் ஆண்டு ஆய்விதழ் வெளியிடல் 4. களஆய்வில் நம்பிக்கையுடைய இளம் ஆய்வாளர்களை வழிநடத்தல் 5. உலகளாவிய தமிழர்களுக்கு இலக்கியம், வரலாறு குறித்த ஆர்வத்தையும் ஆய்வு நோக்கையும் விதைத்தல் 6. கோயில்கள் வரலாற்றுக் களங்கள் என்பதால் அது குறித்த விழிப்புணர்வைச் சமுதாயத்தில் பரவச் செய்தல் ஆகியவை வரலாற்றாய்வு மையத்தின் குறிக்கோள்கள். திருச்சி, ஸ்ரீரங்கம் கோவில் கருடாழ்வார் சன்னிதியில், கருவூலங்கள் புதைக்கப்பட்டிருக்கலாம் என்று சந்தேகம் எழுந்த நிலையில், உண்மையை அறிவதற்காக ஒரு குழு அமைக்கப்பட்டது. அக்குழுவில் இடம்பெற்ற முனைவர் இரா.கலைக்கோவன், மூன்று நாள் அங்குத் தங்கியிருந்து ஆராய்ச்சி செய்தார். இவர் பங்கேற்ற பற்பல களஆய்வுப்பணி தொடர்பான செய்திகள் மாதம் ஒருமுறையாவது நாளிதழ்களில் இடம் பெறத் தவறுவதில்லை … சமீபத்தில் வெளியான செய்திகள் சில … - செவந்திலிங்கபுரத்தில் அரியவகை ஐய்யனார் சிற்பம் கண்டெடுப்பு – ஏப்ரல் 23, 2015, தினமணி - கலைக்கோவன் கல்வெட்டு - தினமணி - முசிறி அருகே வெள்ளூரில் சுந்தரபாண்டியர் கால கல்வெட்டுகள் கண்டெடுப்பு – ஜனவரி 21, 2015, தி ஹிந்து தமிழ் பதிப்பு - கலைக்கோவன் கல்வெட்டு - தி ஹிந்து அரசு ஆதரவு, நல்ல பொருளாதாரப் பின்புலமுள்ள பெரிய பல்கலைக்கழகங்களும் நிறுவனங்களும் சாதித்ததைக் காட்டிலும், பெரிய அளவில் பொருளாதாரப் பின்புலம் ஏதும் இல்லாமல் தன்னார்வ ஊழியர்கள் மற்றும் ஆர்வலர்கள் உதவியுடன் கடந்த முப்பத்து மூன்றாண்டுகளில் வரலாற்றாய்வு மையம் சாதித்துள்ள வரலாற்றுப் பணி குறிப்பிடத் தக்கது. மையத்தின் ஒரு முக்கிய ஆய்வாளருமான 67 வயதாகும் முனைவர் இரா.கலைக்கோவன் அவர்களின் இப்பணியைப் பாராட்டி, ஏப்ரல் - 2015 இல் கும்பகோணம் ரோட்டரி கிராண்ட் நிறுவனம் “வாழ்நாள் சாதனையாளர்” விருது அளித்து முனைவர் இரா.கலைக்கோவன் அவர்களைக் கௌரவப்படுத்தியுள்ளது. ஏற்புரையில் முனைவர் இரா.கலைக்கோவன், ‘கோரிக்கைகளுக்காக மட்டும் கோயில்களை அணுக வேண்டாம்!’ என்றும் வேண்டுகோள் வைத்துள்ளார். தமிழர் அனைவரும் இவ்வேண்டுகோளைச் சிரமேற்கொண்டால் தமிழகத் தொல்பொருள் ஆய்வும், தமிழக வரலாற்று ஆய்வும் நல்ல உயர்ந்த நிலையை அடைந்து தமிழகத்திற்கு பெருமைகள் பல சேர்க்கும் என்பது மறுக்கமுடியாத உண்மை. இந்த வேண்டுகோளை இவர் பலகாலமாக தமிழக மக்களிடம் முன்வைத்துவருகிறார். “வரலாறு” ஆய்விதழின் எட்டாம் இதழில் அவர் கீழ் வருமாறு குறிப்பிட்டுள்ளார். “குடமுழுக்கு, திருப்பணி என்ற சொற்களைக் கேட்டாலே அஞ்சுமளவிற்குத் திருக்கோயில்கள் இவற்றால் சீரழிக்கப்படுவது கண்கூடு. எவ்வளவோ எடுத்துரைத்தும் பொறுப்பில் உள்ளவர்கள் கருத்தில் கொள்ளாமலிருப்பது ஏனென்று தெரியவில்லை. இந்தக் கொடுமைகளை எப்படித் தடுப்பதென்றும் விளங்கவில்லை. தமிழ்நாடு முழுவதும் பரவியுள்ள ஆய்வாளர்கள்தான் இதற்கொரு முடிவுகட்டவேண்டும். மக்களுக்குக் கல்வெட்டுகள், சிற்பங்கள் ஆகியவற்றின் முக்கியத் துவத்தை விளங்க உரைப்பதுடன், எக்காரணம் கொண்டும், அவை குடமுழுக்குக் கோலாகலங்களின் பூச்சுகளுக்கும், சிதைவுகளுக்கும் ஆளாகாது காப்பாற்றிடல் வேண்டும். ஆங்காங்கே உள்ள ஆய்வமைப்புகளும் இப்பணியில் முழுமூச்சாய் ஈடுபடுவது அவசியமாகும். இன்றொரு விதி செய்யத் தவறினோமாயின், இனி எந்நாளும் கல்வெட்டுகளைக் கோயில்களில் காண்பது குதிரைக்கொம்புதான். வாருங்கள் தோழர்களே, கையிணைப்போம். இந்த நாட்டின் வரலாற்றை அழிவினின்று காப்போம்.” வரலாற்றாய்வு மையத்தின் போற்றத்தக்க மற்றொரு கோணம், பொறியியல் வல்லுநர்களையும் கணிப்பொறி வல்லுநர்களையும் கட்டுமானத் தொழிலதிபர்களையும் அரசாங்க அதிகாரிகளையும் வரலாற்று மாணவர்களாக மாற்றி தமிழக வரலாறு, கல்வெட்டு, களப்பணி ஆகியவற்றில் ஆர்வம் கொள்ளச் செய்து பலரை வரலாற்று ஆய்வாளர்களாகவும் அறிஞர்களாகவும் மாற்றி வருவதே. தமிழறிஞரும் வரலாற்றறிஞருமான முனைவர் மா. இராசமாணிக்கனார் பெயரில் ஆய்வு மையம் அமைத்து தமிழக வரலாற்றிற்கு இன்றியமையாத வகையில் ஆய்வுத்தொண்டுகள் பல ஆற்றி வரும் மையத்தின் இயக்குநர் மருத்துவர் இரா. கலைக்கோவன் அவர்கள் தமிழறிஞர் மா. இராசமாணிக்கனார் அவர்களின் மைந்தர் என்பது இங்குக் குறிப்பிடத்தக்கது. மகன்தந்தைக்கு ஆற்றும் உதவி இவன்தந்தை என்நோற்றான் கொல்எனும் சொல். என்ற குறள் காட்டும் நெறியினைப் பின்பற்றி, தமது தந்தையாரின் வரலாற்று ஆய்வுப்பணியை முன்னெடுத்துச் செல்லும் மருத்துவர் இரா. கலைக்கோவன் அவர்களின் பணிகள் தமிழர்களின் பாராட்டுதலுக்குரியது என்பதில் ஐயமில்லை. June 1, 2015 ராதிகா கண்ணன் [] அன்பு, அக்கறை, ஆதரவு ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு நாம் வாழும் சமுதாயத்தில் ஒருவருக்கொருவர் உதவி வாழவேண்டும் என்ற கொள்கையை உடையவர் செல்வி ராதிகா கண்ணன். அமெரிக்காவின் பெர்க்லியிலுள்ள கலிஃபோர்னியா பல்கலைக்கழகத்தில் (University of California, Berkeley) பொருளாதாரத்தை முதன்மைப் பாடமாகவும், இயற்கைவளம் சுற்றுச்சூழல் பாதுகாப்பை சிறப்புப் பாடமாகவும் படித்து பொருளாதாரத்தில் இளங்கலை பட்டம் பெற்றவர் பட்டதாரி ராதிகா. இவர் 2015 ஆம் ஆண்டு பட்டம் பெறும் மாணவர்களில் பல்கலைக்கழகத்தின் தலைசிறந்த இளங்கலைப் பட்டதாரி (the most distinguished graduating senior on campus) என்று தேர்ந்தெடுக்கப்பட்டு பரிசும், பதக்கமும், பட்டமளிப்பு விழாவில் சிறப்புரையாற்றும் மிகப்பெரிய கவுரவத்தையும் பெற்றார். இத்தகுதி வெறும் முதன்மை மதிப்பெண் பெறுவதற்காக மட்டுமே வழங்கப்படுவதல்ல. கல்வியில் மிகச் சிறந்து விளங்குவதுடன், திறமைசாலியாகவும், சமூக அக்கறை கொண்ட ஒருவரே இந்தச் சிறப்பைப் பெறுவார். விருதுக்கான தகுதித் தேர்வில் ராதிகா உட்பட மேலும் இரண்டு மாணவரும், இரண்டு மாணவியரும் இந்த சிறப்பிற்காகப் பல்கலைக் கழகத்தின் சிறப்பு விருதுப் போட்டியில் இடம் பிடித்திருந்தார்கள். இவரைப் பரிந்துரைத்த ஆசிரியர்கள் யாவருமே இவர் அறிவாளி மட்டுமல்ல, திறமையும் மனவுறுதியும் கொண்டவர், தான் வாழும் சமுதாயத்தில் ஒரு மாற்றத்தைக் கொண்டுவர விரும்புபவர், பிறர் நலனில் அக்கறை கொண்டு உதவும் குணம் நிறைந்தவர் என்று பாராட்டி எழுதியிருந்தார்கள். எனவே, அவர்களின் பரிந்துரைக்கேற்ப பல்கலைக்கழகத்தின் சிறந்த பட்டதாரி என்று ராதிகாவே தேர்ந்தெடுக்கப்பட்டார். தனது பட்டமளிப்புவிழா சிறப்புரையில் கல்வியில் வெற்றி பெறுவதில் மட்டும் மகிழ்ச்சி கிட்டிவிடாது.படித்து முடித்து பட்டம் பெறும் பொழுது அடையும் மகிழ்ச்சியை விடவும் சமுதாயத்தில் ஒருவருக்கொருவர் உதவி வாழ்வதே மகிழ்ச்சி தருவது என்று உரையைத் துவக்கிய ராதிகா, பட்டம் பெறும் நாம் நமது சமூகத்தின் வளர்ச்சிக்கு, சமுதாயத்திற்கு உதவும் அமைப்புகளை உருவாக்க வேண்டும், நாம் வாழும் சமுதாயத்திற்கு நமது கடமையை எப்படிச் செய்வது என்பதைப் பற்றி சிந்திப்போம் என்று குறிப்பிட்டு சொற்பொழிவை நிறைவு செய்தார். ராதிகா கண்ணன் மும்பையில் பிறந்த தமிழ்மகள். மென்பொருள் துறையில் ஒரு தொழிலதிபரான திரு. கண்ணனுக்கும், ஆசிரியையான தாய் கீதாஞ்சலிக்கும் இவர் ஒரே மகள், இவரது மூன்று வயதிலேயே குடும்பம் சிங்கப்பூருக்குக் குடி பெயர்ந்தது. பிறகு குறைந்தது ஆறுமுறையாவது இந்தியாவுக்கும் சிங்கப்பூருக்கும் மாறி மாறிக் குடி பெயரும் சூழ்நிலை இவர் குடும்பத்திற்கு ஏற்பட்டது. இதன் காரணமாக ஒவ்வொருமுறையும் புதிய பள்ளி, புதிய நண்பர்கள், வாழும் சூழ்நிலை என இவர் எதிர்கொண்ட மாற்றங்கள் இவரைச் சூழ்நிலைக்கேற்ப விரைவில் தன்னை மாற்றிக் கொண்டு வாழும் முறைக்குப் பழக்கப்படுத்தியது. ராதிகா தனது தாயைப் போலவே பாரத நாட்டியமும் கற்றார். தாயும் மகளும் ஒரே நடன ஆசிரியரிடம் பயின்றவர்கள். இவரது கலை ஆர்வம், கல்வியில் சாதனைகள், பலதுறைகளிலும் பங்களிப்பு, சமூக அக்கறை என யாவற்றுக்கும் காரணம் இவரது அன்னையே. இவர் தாயை தனது தோழி போன்று உணரும் உறவின் நெருக்கம் கொண்டவர். ராதிகாவும் அவரது அன்னையும் கலந்தாலோசித்து ராதிகாவின் ஆர்வம் திறமைகளின் அடிப்படையில் இவரது எதிர்காலத் திட்டத்தை வகுத்தனர். பொருளாதாரம், சூழலியலின் பொருளாதாரக் கொள்கைகள், சுற்றுப்புறச் சூழல் பாதுகாப்பு சட்டம் பயிலுதல் என்று திட்டமிடப்பட்ட பாதையைக் காட்டினார் தாய் கீதாஞ்சலி. பள்ளிக்கல்வியைத் தவிர பல்வேறு திறமைகளையும் வளர்த்துக் கொள்ள முக்கியத்துவம் அளிக்கவும் இவரது அன்னையால் ராதிகா ஊக்குவிக்கப்பட்டார். பள்ளியில் பேச்சுப் போட்டியில் முதல் பரிசு, முதன்மை மதிப்பெண்கள், ஐக்கியநாடுகளின் சபையில் மாதிரி பயிற்சியில் ஈடுபாடு, என ராதிகாவும் பலதுறைகளில் தனது திறமையை வளர்த்துக் கொண்டு அமெரிக்காவின் கலிஃபோர்னியா பெர்க்லி பல்கலைக்கழகத்தில் சேர்ந்தார். இரண்டாம் ஆண்டு டிசம்பரில் தேர்வுகள் எழுதும் பொழுது இவரது அன்னை தனக்கு ஃப்ளு போன்ற காய்ச்சலினால் உடல்நலக் குறைவு என தொலைபேசியில் தெரிவித்தார். கவலையுடன் உடனே வரவா எனக் கேட்ட இவரிடம் தேர்வு முடித்துவிட்டு கிறிஸ்துமஸ் விடுமுறைக்கு வரச் சொல்லியிருக்கிறார். ஒரு புதன் கிழமை பேசியவர், என்ன உடல்நலக்குறைவு என்று கண்டறியும் முன்னர் மூன்று நாட்களுக்குள், ராதிகா ஞாயிறன்று சென்னை சென்று சேர்வதற்குள் 45 வயதில் எதிர்பாராதவிதமாகக் கீதாஞ்சலி இறந்துவிட்டார். பயணத்தில் வழியில் இணைப்பு விமானத்திற்காக ஆர்ம்ஸ்டர்டாம் விமானநிலையத்தில் காத்திருந்த பொழுது, நண்பர் ஒருவர் அனுப்பிய இரங்கல் செய்தியின் மூலம் தாய் மறைந்த செய்தி அறிந்து இடிந்து போனார். திரும்பி அமெரிக்கா வர ஆர்வமற்று போனவரை குடும்பத்தினர் வற்புறுத்தி படிப்பைத் தொடர அனுப்பி வைத்தார்கள். ஆசிரியர்களும், உடன் பயிலும் மாணவர்களும் இவர் நிலையில் அக்கறைகொண்டு மிகவும் உதவிசெய்துள்ளார்கள். தனது தாய் மறைந்த துயரத்தில் இருந்து மீண்டுவர ஒரேவழி தனது தாய் வகுத்துக் கொடுத்த பாதையில் பயணிப்பதுதான் என்ற உறுதி கொண்டு கல்வியில் சிறந்த மாணவியாகவே தொடர்ந்து பயின்று வெற்றி பெற்றுள்ளார். தான் பங்கு பெற்ற சங்கங்களின் வளர்ச்சியில் அக்கறைகாட்டி பிற மாணவர்களை அவற்றிற்கு அறிமுகப்படுத்துவதும், தானே ஒரு முன்மாதிரியாகவும் விளங்கி அவர்களை ராதிகா வழிநடத்துவதும் இவரது ஆசிரியர்களைக் கவர்ந்தது. தனது பாடத்தின் ஒரு பகுதியாக இந்தியாவின் தட்பவெப்ப நிலைக்கும் பொருளாதாரத்திற்கும் உள்ள தொடர்பை ஆராய முற்பட்டார். தென்னிந்திய உழவர்கள் பருவமழைக்கேற்ப தக்கப் பயிர்களை பயிரிடத் தவறுகிறார்கள். அதனால் இயற்கைக்கு ஏற்ப பயிரிடாத காலங்களில் இந்தியாவின் பொருளாதாரம் பாதிக்கப்படுகிறது என்று கட்டுரையை சமர்ப்பித்தார். இக்கட்டுரை இவரது ஆசிரியரால் பொருளாதாரத்தில் முனைவர் ஆய்விற்கான சிறந்த ஆய்வுக் கருத்தினைக் கொண்டது என்று பாராட்டப்பட்டது. தனது தாயின் விருப்பத்தை நிறைவேற்றும் வகையில் வெற்றிகரமாக படிப்பைமுடித்த ராதிகா, தனது அன்னையைப் போற்றும் எண்ணத்தில் அவரது அன்னையின் நீலவண்ண சேலையை பட்டமளிப்பு நாளன்று அணிந்து பட்டமும் பெற்றுள்ளார். தனது குறிக்கோளைத் தொடரும் இவர் அடுத்து ஆக்ஸ்ஃபோர்ட் பல்கலைக்கழகத்தில் உலகின் சுற்றுச்சூழல் கொள்கைகள் பற்றிய முதுகலைப் படிப்பும், பின்னர் கொலம்பியா பல்கலைக்கழகத்தில் சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்கான சட்டங்கள் பற்றிய சட்டக்கல்வியும் பயிலத் திட்டமிட்டுள்ளார். நாடுகளின் நிலையான தன்னிறைவு வளர்ச்சிக்குப் பொருளாதாரம், சுற்றுச்சூழல், சமூகநிலை ஆகிய மூன்றையும் ஒன்றாக நோக்கி கொள்கைகள் வகுக்கவேண்டும் என்பதை நாட்டின் நலம் கருதுவோர் அறிவர். ராதிகா ஆக்கப்பூர்வமாகச் சமூகத்திற்கு பங்களிக்கும் தகுதிகளைப் பெற்றிருக்கிறார் என்பதை பெர்க்லி பல்கலைக்கழகமும் கண்டுணர்ந்து அவரைப் பாராட்டியுள்ளது. ராதிகாவும் அதே சமூக அக்கறை கொண்டு சமூகத்திற்குத் தனது பங்கையாற்ற தனது பயிற்சியையும் கல்வியையும் முன்னெடுத்துச் செல்வது பாராட்டிற்குரியது. June 8, 2015 “மல்ட்டி ஃபன்” குழு மாணவர்கள் [] ஏர்பஸ் விமான நிறுவனம் யூனெஸ்கோ நிறுவனத்துடன் இணைந்து மாணவர்களுக்கான உலகளாவிய போட்டியாக “ஃப்ளை யுவர் ஐடியாஸ்” (Unesco-Airbus ‘Fly Your Ideas’ global student competition) என்ற போட்டியை நடத்தி வருகிறது. மாணவர்களிடம் வானூர்தி தயாரிப்பின் தொழில் நுட்ப ஆர்வத்தைத் தூண்டுவதும், புதிய கண்டுபிடிப்புகளை உருவாக்க ஊக்கமூட்டுவதுமே இப்போட்டியின் அடிப்படை நோக்கமாகும். நான்காவது முறையாக இந்த ஆண்டு நடத்தப்பட்ட இப்போட்டியில் வெற்றிபெற்றனர் “மல்ட்டி ஃபன்”(Multifun) என்ற இந்திய மாணவர் குழுவினர். இந்த ஆண்டு (2015) இப்போட்டியில் பங்கு பெற்ற மாணவர்களின் எண்ணிக்கை 3,700; 104 நாடுகளில் இருந்து பலதுறைகளையும் சேர்ந்த 518 குழுவினர் போட்டியிட்டனர். போட்டியில் கலந்து கொண்டவர்களில் ஆசியா பசிஃபிக் நாடுகளின் மாணவர்கள் 45%, ஐரோப்பியர் 35%, அமெரிக்கர் 15%. இவர்களில், 71% குழுக்கள் பலவகைப் படிப்புகளைக் கொண்ட மாணவர்களையும், பலநாடுகளில் வாழும் மாணவர்களையும், ஆண்களும் பெண்களும் எனப் பல பிரிவினரும் இணைந்த குழுக்களாகவே கொண்டு அமைந்திருந்தது குறிப்பிடத்தக்கது. விமானத்தின் செயல்திறன் மேம்பாடு, பயணிகளின் வசதி அதிகரிப்பு, எரிபொருள் சேமிப்பு, எளிய செயல்படுத்தும் தன்மை, பயணப் பாதுகாப்புக்கு உதவி, மக்கள் தொடர்பு மேம்பாடு என விமானப்பயணத்தினை மேம்படுத்தும் வகையில் குறிப்பிட்ட இந்த ஆறு பிரிவுகளில் ஒன்றினைத் தேர்ந்தெடுத்து தங்கள் திட்டத்தை மாணவர்கள் ஏர்பஸ் நிறுவனத்திற்குச் சமர்ப்பிக்க வேண்டும். இவ்வாறு மாணவர்கள் சமர்ப்பித்த திட்டங்களைப் பரிசீலித்த பின்னர், சென்ற 2014 ஆம் ஆண்டு டிசம்பரில் நடைபெற்ற முதல் சுற்றில் 100 குழுவினர் இரண்டாம் சுற்றுக்காகத் தேர்வு செய்யப்பட்டனர். 2015 இன் மே மாதம் 27 ஆம் தேதி அன்று நடந்த இறுதிச் சுற்றில் கலந்து கொள்ள தேர்வு செய்யப்பட்டவர்கள் பிரேசில், சீனா, ஜப்பான், நெதர்லாந்து மற்றும் இங்கிலாந்து நாடுகளைச் சேர்ந்த 5 குழுவினர். நெதர்லாந்தின் டெல்ஃப்ட் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில் (Delft University of Technology, Netherlands) பயிலும் இந்திய மாணவர் சதீஷ்குமார் அனுசூயா பொன்னுசாமியின் தலைமையில் நான்கு நாடுகளில் படிக்கும் ஐந்து இந்திய மாணவர்கள் ‘மல்ட்டி ஃபன்’ என்ற ஒரு குழுவாக இணைந்தார்கள். தாமோதரன் வீராசாமி (சிட்டி யுனிவர்சிட்டி ஆஃப் லண்டன்), மொஹித் குப்தா (ஜியார்ஜியா டெக் யுனிவர்சிட்டி, அமெரிக்கா) , சஷாங்க் அகர்வால் மற்றும் அஜித் மோசஸ் (இண்டியன் இன்ஸ்டிடியுட் ஆஃப் சயின்ஸ், பெங்களூரு) என உலகின் பல பகுதிகளில் படித்துவரும் இந்திய மாணவர்கள் தொலைத்தொடர்பு வழியாகவே இணைந்து பணியாற்றினர். இவர்கள் பொறியியல் துறையிலும், விண்வெளிப் பொறியியல் துறையிலும், வானியல் துறையிலும் உயர்கல்வி, முனைவர் ஆய்வுக்காகப் பயிலும் மாணவர்கள். மொஹித் குப்தாவைத் தவிர்த்து பிறர் முனைவர் பட்ட ஆய்வில் ஈடுபட்டுள்ளனர். இவர்களை வழி நடத்தியவர் இண்டியன் இன்ஸ்டிடியுட் ஆஃப் சயின்ஸ்ஸின் பேராசிரியர் தினேஷ்குமார் ஹருர்சம்பத் அவர்கள். கடந்த ஆறு மாதங்களாக இணையவழி ஒருங்கிணைந்து பணியாற்றிய பின்னர், ஜெர்மனியில் நடந்த இறுதிப் போட்டியில் நேரடியாக முதன்முதலில் சந்தித்து தங்களது அறிவியல் கருத்தை போட்டியின் நடுவர்களிடம் மல்ட்டி ஃபன் குழுவினர் விளக்கினர். மல்ட்டி ஃபன் குழு ஏர்பஸ் நிறுவனத்தின் போட்டியில் முன்வைத்தத் திட்டம்: விமானப்பயணத்தின் பொழுது ஏற்படும் அதிர்வுகளைப் பயன்படுத்தி அவற்றில் இருந்து மின்சாரம் உற்பத்தி செய்து, மின்கலங்களில் அந்த மின்சாரத்தைச் சேமித்து விமானப்பயணத்தின் பொழுது தேவைப்படும் விளக்குகள், கேளிக்கை பயன்பாட்டிற்கான மின்திரைகள் ஆகியவற்றை இயக்கப் பயன்படுத்துவது இவர்கள் முன்வைத்த திட்டமாகும். விமானப்பயணத்தில் ஏற்படும் அதிர்வுகள் யாவும் இதுநாள்வரை விரயமாகின்றன. ‘பைஸோஎலக்ட்ரிக் இழைகள்‘ (Piezoelectric fibres) சிறு அதிர்வுகளால் மின்சாரத்தை உற்பத்தி செய்யும் திறன் கொண்டவை. இந்த இழைகளால் ஆன உறையை விமானத்தின் இறக்கைகளின் மேல் அமைத்து அதன்மூலம் பெறும் பெறும் மின்சக்தியை மின்கலத் தகடுகளில் சேமித்து பயன்படுத்த இயலும். நீண்ட தூர விமானப்பயணத்தில் விமானம் 12 மணி நேரம் வரை பறக்கும், அப்பொழுது கிடைக்கும் மின்சக்தியே விமானத்தின் விளக்குகளை ஒளிர்விக்கப் போதுமானது. இத்திட்டத்தை நடைமுறைப்படுத்தினால் விமானப்பயணத்தில் எரிபொருள் சேமிப்பிலும் முன்னேற்றம் காணலாம் என்று மல்ட்டி ஃபன் குழுவினர் நடுவர்களுக்கு விளக்கினர். இவர்களது திட்டம் நடைமுறைப்படுத்தவும் எளிதானது, தொலைநோக்குப் பார்வை கொண்டது, முன்னர் இதுவரை எவரும் முன்வைக்காத ஒரு புதிய கோணம் என்ற அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்பட்டு 30,000 யூரோ வெள்ளிகள் பரிசளிக்கப்பட்டனர். வெற்றிபெற்ற குழுவின் தலைவர் சதீஷ்குமார் அனுசூயா பொன்னுசாமி, தனது குழுவினர் யாவரும் இண்டியன் இன்ஸ்டிடியுட் ஆஃப் சயின்ஸ்ஸில் ஒன்றாகப் படித்த மாணவர்கள், இந்தியாவின் பின்புலம் கொண்ட மாணவர்கள் என்றாலும் பல்வேறு மொழிகளையும் பேசும் பின்புலம் கொண்டவர்கள் என்றும், அவர்களது பலவிதப் பின்னணியே மல்ட்டி ஃபன் என்று குழுவிற்குப் பெயரிடக் காரணமானது என்று வெற்றிபெற்ற பின்னர் பத்திரிக்கைகளுக்கு அளித்த நேர்காணலில் கூறினார். இண்டியன் இன்ஸ்டிடியுட் ஆஃப் சயின்ஸ்ஸின் கல்விச் சூழ்நிலையும், வழங்கும் பயிற்சியும் புதுமையான எண்ணங்களை ஊக்குவிக்கும் வகையில் அமைந்தது என்றும் கூறியுள்ளார். வெவ்வேறு நாடுகளில் வாழ்ந்தாலும் ஒற்றுமையாக இணைந்து பணியாற்றி, புதுமையான திட்டமொன்றை முன்வைத்து, உலகளாவிய போட்டியில் வெற்றிபெற்று தாய்நாட்டின் பெருமையை உயர்த்திய இம்மாணவர்கள் மாணவர்களுக்கு நல்லதொரு முன்மாதிரி என்பதும் பாராட்டிற்குரிய ஒரு சிறப்பு. June 15, 2015 சூப்பர் 30 – ஆனந்த் குமார் [] கடந்த பதின்மூன்று ஆண்டுகளாக, ஒவ்வொரு ஆண்டும் பொருளாதார வசதி குன்றிய நிலையில், ஆனால் நல்ல ஆர்வமும் கல்வித் திறனும் கொண்டு பொறியியல் படிக்க விரும்பும் 30 மாணவர்களைத் தேர்ந்தெடுத்து, அவர்களிடம் கட்டணம் ஏதும் வசூலிக்காததுடன் தங்குமிடமும் உணவும் கணிதப் பயிற்சியும் கொடுத்து மாணவர்களின் பொறியியல் கல்விக் கனவுகள் நினைவாக உதவுகிறார் “சூப்பர் 30” நிறுவனர் “ஆனந்த் குமார்”. ஐ.ஐ.டி.-ஜே.இ.இ. பொதுநுழைவுத் தேர்வுகள் (The Indian Institute of Technology Joint Entrance Exam – IIT-JEE) மிகவும் கடினமான நுழைவுத் தேர்வுகள் என்று பெயர்பெற்றவை. நான்கு இலட்சத்திற்கும் மேல் நுழைவுத் தேர்வு எழுதும் மாணவர்களில் 2.5% மாணவர்களே ஐ.ஐ.டி. யில் கல்விபெற தேர்வு செய்யப்படுவார்கள் என்பது அத்தேர்வின் முக்கியத்துவத்தையும் உணர்த்தும். நுழைவுத் தேர்வுப் பயிற்சிக்காகவே இலட்சம் ரூபாய்கள் வரை செலவழித்து பயிற்சி பெரும் செல்வநிலையை உடைய மாணவர்களுக்கு இடையே, தினக்கூலியாக வாழ்வை நடத்தும் பெற்றோர்களின் பிள்ளைகளுக்கு இத்தேர்வுக்கான பயிற்சி என்பது ஓர் எட்டாத கனவு. இருப்பவருக்கும் இல்லாதவருக்கும் உள்ள இடைவெளியால் வாய்ப்புகள் தவறிப் போகும் நிலையில் உள்ள மாணவர்களின் எதிர்காலத்தைப் பற்றி அக்கறை கொள்வோர் வெகு சிலரே. அவர்களில் ஒருவரான ஆனந்த் குமார், இந்த மாணவர்களைத் தகுதி அடிப்படையில் தேர்வு செய்து, இந்திய தொழில்நுட்ப நிலைய நுழைவுத்தேர்வுக்கு ஆயத்தப்படுத்தி, ஒரு ஆண்டிற்கான முழுச்செலவையும் ஏற்று, அதில் பெரும்பாலானவர்களை வெற்றிபெற வழிசெய்து வருகிறார். கடந்த 2002 ஆம் ஆண்டு இவரது சூப்பர் 30 திட்டம் துவக்கப்பட்டு பயிற்சி அளிக்கப்பட்டு, 30 மாணவர்கள் 2003 ஆம் ஆண்டில் முதல் முறையாகத் தேர்வுக்குச் சென்றார்கள். தொடர்ந்து இந்த ஆண்டுவரை, ஆண்டுக்கு 30 மாணவர்கள் என்ற திட்டத்தின் கீழ் இதுவரை 390 மாணவர்களுக்குக் கட்டணமின்றி, உதவிகளும் வழங்கி பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. இவர்களில் 85% விழுக்காட்டினர் ஐ.ஐ.டி. நுழைவுத் தேர்வில் வெற்றிபெற்று பொறியியல் படிக்கும் வாய்ப்பைப் பெற்றுள்ளார்கள். முன்னூறுக்கும் அதிகமான எளிய மாணவர்களின் வாழ்க்கையில் திருப்பம் ஏற்படுத்துவது, அதுவும் யாருடைய நிதியுதவியும் இல்லாத நிலையில் இச்செயலைச் செய்வது ஒரு சாதனை என்பதை மறுப்பதற்கில்லை. வெற்றி பெற்ற மாணவர்கள் தங்கள் பெற்றோரிடம் சென்று தங்கள் மகிழ்ச்சியைப் பகிர்ந்துகொண்டால், அவர்களுடன் சேர்ந்து தாமும் மகிழும் பெற்றோர்கள் பலருக்குத் தங்கள் பிள்ளைகள் என்ன சாதனை செய்துவிட்டோம் என இவ்வாறு மகிழ்கிறார்கள் என்பது கூடத் தெரியவில்லை என்பதும்; ஐ.ஐ.டி. என்பதைக் கூட ஐ.டி.ஐ. என்று மாற்றிக் கூறும் அளவிற்குப் பெற்றோர் சிலர் பொறியியல் கல்வி பற்றியே அறிந்திராதவர்கள் என்பதும் ஒவ்வொரு ஆண்டும் வெற்றி பெரும் மாணவர்கள் தரும் நேர்காணல் செய்திகள் அறியத் தருகிறது. இதுவரை பயிற்சி பெற்ற அனைத்து மாணவர்களின் பெற்றோர்களும் குடும்பங்களும் கட்டுமானத் தொழிலில் உள்ளவர்கள், வயலில் வேலை பார்க்கும் தினக் கூலிகள், நடைபாதைக் கடை வைத்திருப்பவர்கள், பெட்டிக் கடை வைத்திருப்பவர்கள், வாடகை டாக்சி வண்டி, ரிக்க்ஷா வண்டி ஆகியவை ஓட்டுபவர்கள், காவல்காரர்கள், வீட்டு வேலை பார்ப்பவர்கள், தையல்வேலை செய்பவர்கள், சலவைத் தொழிலாளிகள், ட்ரக் மெக்கானிக்கள் என்ற உழைக்கும் வர்க்கத்தைச் சேர்ந்தவர்களே. ஆனந்த் குமார் உதவாது விட்டிருந்தால், திறமையுள்ள இந்த மாணவர்களின் பொறியியல் கல்வி பற்றிய கனவு நிறைவேறாமல் வாழ்க்கையே திசை திரும்பியிருக்கும் என்பதுதான் உண்மையும் கூட. இது போன்ற பொருளாதார வசதியற்ற நிலையில் வாழ்க்கையைத் தொடங்கியவரே ஆனந்த் குமாரும். பீகார் மாநிலத்தில் அஞ்சல் அலுவலகத்தில் ஊழியராகப் பணிபுரிந்தவர் இவரது தந்தை. ஆனந்த் குமார் ஐ.ஐ.டி. யில் படித்தவர் அல்ல. சிறுவயது முதலே கணிதப்பாடத்தில் ஆர்வம் அதிகம் கொண்டவர், கல்லூரியில் கணிதத்தில் பட்டம் பெற்றவர். பல்கலைக்கழகத்தில் பயின்ற பொழுதே கணித ஆய்வு இதழ்களிலும், ஆய்வு பத்திரிக்கைகளிலும் இவர் எழுதிய கட்டுரைகள் வெளிவந்துள்ளன. இவரது திறமையைக் கண்ட இவரது ஆசிரியர் வெளிநாட்டிற்குச் சென்று படித்து இவரது கல்வித் தகுதியை மேம்படுத்திக் கொள்ள ஆலோசனை கூறினார். அதையடுத்து ஆனந்த் குமார் கேம்ப்ரிட்ஜ் பல்கலைக்கழகத்திற்கு விண்ணப்பித்துப் படிக்க இடமும் கிடைத்தது, ஆனால் வெளிநாட்டில் சென்று படிக்கவோ பணவசதி இவருக்கு இருந்திருக்கவில்லை. இவரும் அரசியல்வாதிகள், அமைச்சர்கள் முதற்கொண்டு பலரிடம் உதவி கேட்டுப் படியேறி இறங்கியிருக்கிறார், பலனில்லை. அரசியல்வாதிகள் ஆலோசனை வழங்க மட்டுமே தயாராக இருந்திருக்கிறார்கள். குழப்பத்திலிருந்த நேரத்தில் இவரது தந்தையும் இறந்துவிடவே குடும்பப் பொறுப்பை ஏற்றுத் தாய்க்கு உதவ வேண்டிய நிலையில் இருந்தார். கேம்ப்ரிட்ஜ் கல்விக்கு முற்றிலும் வழியில்லாது முற்றுப்புள்ளி விழுந்தது. தனது ஆர்வத்தின் காரணமாக கிடைத்த நேரங்களில் கணிதம் பயிற்சி செய்தாலும் தாயார் தொடங்கிய ‘பப்படம்’ செய்து விற்கும் தொழிலில் தாயுடன் இணைந்து பணியாற்றி இருக்கிறார். தானும் ஒரு அறையை வாடகைக்கு எடுத்து ‘இராமானுஜன் கணித கல்வி நிலையம்’ (Ramanujan School of Mathematics) என்ற பள்ளியைத் தொடங்கி கணிதப்பாடம் நடத்தி வந்திருக்கிறார். கட்டணம் செலுத்தி பலர் இவரிடம் பயிற்சி பெற்றுவந்த காலத்தில், கூலித்தொழிலாளியின் மகன் ஒருவர் இவரை அணுகி ஐ.ஐ.டி.-ஜே.இ.இ. பொதுநுழைவுத் தேர்வுக்கு இவரிடம் பயிற்சி பெற விரும்புவதாகவும், ஆனால் கட்டணம் செலுத்த வசதி இல்லை என்று சொல்லியிருக்கிறார். அன்று தொடங்கியது “சூப்பர் 30” என்ற இவரது கட்டணமற்ற பயிற்சித் திட்டம். மற்ற மாணவர்களுக்குப் பயிற்சி அளித்துக் கிடைக்கும் தொகையில் ஒரு பகுதியை ஒதுக்கி தன்னைப் போன்று வசதியற்ற நிலையில் இருக்கும் மாணவர்களுக்கு உதவ ஒரு திட்டம் தயாரித்தார். இவரது அன்னை உணவு தயாரித்து உதவ, சகோதரர் நிர்வாகப் பொறுப்பை ஏற்றுக்கொள்ள, இவர் பயிற்சிக் கல்வி வழங்குவதை மேற்கொண்டார். முதன்முறையாக 30 மாணவர்களுக்குப் பயிற்சி அளித்து 2003 இல் நுழைவுத் தேர்வுக்கு அனுப்பினார். இவர்களில் 18 மாணவர்களுக்கு ஐ.ஐ.டி. யில் இடம் கிடைத்தது. பின்னாட்களில், 2008, 2009, 2010 ஆகிய ஆண்டுகளில் பயிற்சிபெற்ற 30 மாணவர்களுமே வெற்றி பெற்றார்கள். இந்த ஆண்டு 25 மாணவர்கள் வெற்றி பெற்றுள்ளார்கள், முப்பதில் ஒருவர் தேர்வு எழுதவில்லை, அதற்குள் ஜப்பான் பல்கலைக்கழகத்தில் அவர் அனுமதிக்கப்பட்டு அங்கு கல்வியைத் தொடரச் சென்றுவிட்டார். பொறியியல் கல்வித்திட்டத்தில் அரசு ஏதேனும் ஒரு மாற்றம் அல்லது திட்டம் அறிவித்தால், உடனே அது பொருளாதாரத்தில் பின்னடைந்தவர் அல்லது கிராமப்புற பள்ளிமாணவர் வாய்ப்பில் என்ன தாக்கம் ஏற்படுத்தும் என்று ஆராய்வது இவரது வழக்கம். விளைவுகள் மாணவர்களுக்கு எதிராக இருந்தால் அதனை அரசுக்குத் தெரிவிப்பதைத் தனது கடமையாகக் கொண்டிருக்கிறார். இந்தியாவின் கணிதம் பொறியியல் கல்விகளில் எவ்வாறு புதிய திட்டங்களை உருவாக்க வேண்டும் என்ற தனது கோணத்தை குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் அவர்களையும், பிரதமர் மன்மோகன் சிங் அவர்களையும் சந்தித்து விளக்கியுள்ளார். கல்வியில் சிறந்த மாணவர்களையும் சராசரி மாணவர்களையும் தனித்தனியே பிரித்து பள்ளிகளில் பாடம் நடத்துவது சிறந்த மாணவர்களை மேலும் விரிவான வகையில் பாடங்களைப் பற்றி சிந்திக்க வாய்ப்புகளை உருவாக்கும்; கிராமப்புற பள்ளி மாணவர்களின் பின்தங்கிய நிலையை உணர்ந்து அவர்களுக்கு ஐ.ஐ.டி., ஜே.இ.இ., தேர்வுகளில் மூன்றுமுறை விண்ணப்பிக்க வாய்ப்பு வழங்க வேண்டும் என்பது போன்ற கருத்துகளை அரசின் கவனத்திற்குக் கொண்டு சென்றுள்ளார். இதுவரை இவரது சூப்பர் 30 வழங்கிய தொண்டைப் பாராட்டியவர்கள் பல நாடுகளும், உள்நாட்டு அயலக ஊடகங்களும், அரசியல்வாதிகளும், அமைச்சர்களும், பெருந்தலைவர்களும் எனப் பற்பலர். டிஸ்கவரி சேனல், ஜப்பான் தொலைக்காட்சி ஆகியவை இவரது கல்வித் தொண்டைப் பற்றிய டாக்குமெண்டரிகள் தயாரித்துள்ளன. நியூ யார்க் டைம்ஸ், டைம் மேகசின், நியூஸ் வீக் மேகசின், பி.பி.சி. போன்ற அயல்நாட்டுச் செய்தி நிறுவனங்கள் இவர்பற்றிய சிறப்புக் கட்டுரைகள் வெளியிட்டுள்ளன. அமெரிக்க அதிபர் ஒபாமா தனது பாராட்டைத் தெரிவித்ததுடன், நிதியுதவியும் அளிக்க இயலும் என்ற செய்தி அனுப்பியிருக்கிறார். ஜப்பான் நாட்டின் பல்கலைக்கழகம் இவரது முயற்சியில் உருவான இந்திய மாணவர்களுக்குத் தங்கள் நாட்டுப் பல்கலைக்கழகங்களில் படிக்க வாய்ப்பளிக்க ஆர்வத்தை வெளியிட்டுள்ளது. இவர் சிறப்புரையாற்ற வேண்டும் என்று கோரி பலநாடுகளில் இருந்தும், அமெரிக்காவின் ஸ்டான்ஃபோர்ட் பல்கலைக்கழகம், ஜப்பானின் டோக்கியோ பல்கலைக்கழகம் போன்ற உலகப்புகழ் பெற்ற பல்கலைக்கழகங்களில் இருந்தும் வரவேற்கப்பட்டுள்ளார். உலகின் சிறந்த ஆசிரியர் விருது, சிறந்த பள்ளிக்கான விருது போன்ற விருதுகளும் வழங்கப்பட்டு பாராட்டப் பட்டுள்ளார். வாழ்நாள் சாதனையாளர் விருது, லிம்கா புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் விருதுகளும் பெற்றுள்ளார். கோவையின் கற்பகம் பல்கலைக்கழகம் இவருக்குக் கவுரவ டாக்டர் பட்டமும் வழங்கிப் பெருமைப்படுத்தியுள்ளது. திட்டத்தை விரிவுபடுத்தி 30 மாணவர்களுக்கு மேல் உதவவேண்டும் என்ற எதிர்காலத் திட்டமும் ஆனந்த் குமாருக்கு உண்டு. இவரது வெற்றியை அறிந்த பின்னர் இவரது திட்டத்திற்கு நிதி உதவி, நன்கொடை வழங்க எனப் பலர் உதவ முன் வந்தாலும், அதனை ஏற்றுக் கொள்ளாமல் இத்திட்டத்தைத் தனது சொந்த முயற்சியாக, இராமானுஜம் கணிதக் கல்விநிலையம் மூலம் கிடைக்கும் நிதிகொண்டே நடத்த விரும்புகிறார். ஆனால், இவரது அடிச்சுவட்டைப் பின்பற்றி இது போன்ற பல பயிற்சிப் பள்ளிகள் உருவாக்க உதவி செய்து வருகிறார். தற்பொழுது நலிவடைந்த இஸ்லாமிய மாணவர்களுக்கு என்பது போன்று மேலும் சில நிறுவனங்களும் பயிற்சிகள் தொடங்கி வெற்றி பெற்று வருகின்றன. அந்த பயிற்சிப்பள்ளிகளின் மாணவர்கள் வெற்றி பற்றிய செய்திகளும் “சூப்பர் 30” செய்திகளுடன் சேர்ந்தே வழங்கும் நிலை ஏற்பட்டுள்ளது. திறமையை சரியாகப் பயன்படுத்தினால் எதையும் சாதிக்கலாம் என்பதை என் அனுபவத்தில் உணர்ந்திருக்கிறேன், அதையே என் மாணவர்களுக்கும் சொல்லித் தருகிறேன் என்று கூறுகிறார் ஆனந்த் குமார். மேலும் , தெளிந்த மனநிலை, உறுதியான லட்சியம். திட்டமிட்ட பாதை இதுதான் “சூப்பர்-30′ பயிற்சி நிறுவனத்தின் வெற்றியின் ரகசியம் என்று கூறும் ஆனந்த் குமார், பொருளாதார வசதியின்மையால் தனது உயர்கல்விக் கனவுகள் தகர்ந்தாலும், தன்னால் இயன்றவரைத் தனது சொந்த முயற்சியில் வசதிவாய்ப்பு அற்ற மாணவர்களுக்குப் பயிற்சியளித்து அவர்களது பொறியியல் கல்லூரிக் கனவுகளை நினைவாக்க உதவி வருகிறார். திரு. ஆனந்த் குமார் அவர்கள் மேலும் பல மாணவர்களுக்கு பயிற்சியளிக்க விரும்பும் திட்டம் வெற்றியடையவும், அவர் முயற்சியால் மேலும் பலரது வாழ்வில் நல்லதொரு திருப்பங்களை ஏற்படுத்தவும் வாழ்த்துக்களும் பாராட்டுகளும். June 22, 2015 கல்வெட்டு ஆராய்ச்சியாளர் து. சுந்தரம் [] தனது பணிநிறைவுக்குப் பின்னரும், ஆர்வத்துடன் தனது பொழுதை மக்களுக்கு உதவும் பொருட்டோ அல்லது தமிழர் பண்பாட்டை உலகறியச் செய்யும் வகையிலோ தன்னார்வப்பணி செய்யும் தொண்டர்கள் பலர் பெருகி வருவது தமிழகம் பெற்ற பேறு. அந்த வரிசையில் ஒருவர் கோவையைச் சேர்ந்த கல்வெட்டு ஆராய்ச்சியாளர் திரு. து. சுந்தரம் அவர்கள். இவர் அவினாசி பள்ளியிலும், கோவை அரசு கலைக்கல்லூரியிலும் படித்து, பி.எஸ்.என்.எல் நிறுவனத்தில் பணியாற்றியவர். நடுவணரசுப் பணிநிறைவுக்குப் பின்னர் தொல்லியல் ஆர்வமும் கல்வெட்டறிவும் அமையப்பெற்றதால் கல்வெட்டுகளைத் தேடிச் சென்று, அவற்றை ஆராய்ந்து, தகவலைப் படித்து, கல்வெட்டுகளைப் படமெடுத்து, அவற்றைப் பற்றி தானறிந்த விவரங்களை “கொங்கு கல்வெட்டு ஆய்வு” என்ற தனது வலைத்தளத்தில் தொகுத்து பதிவு செய்து வருகிறார். அத்துடன் “கல்வெட்டு எழுத்துகள் கற்போம்” என்ற தொடரின் வழியாகக் கல்வெட்டுகளை எப்படிப் படிப்பது என்று கல்வெட்டுகளைப் படிக்கும் பயிற்சியை வழங்கும் பாடங்களையும் தொடர்ந்து எழுதி வருகிறார். தமிழக வரலாற்றில், கல்வெட்டுகளில் ஆர்வம் உள்ள எவரும் அவரது பதிவுகளைத் தொடர்ந்து படிப்பதில் பயனடைவார்கள் என்பதில் ஐயமில்லை. தனது கல்வெட்டு பயணத்தை விவரித்து, கல்வெட்டு பற்றி சேகரித்த செய்திகளை படங்களுடனும் விளக்கங்களுடனும் இவரது கட்டுரையின் முதல்பகுதியில் அறியத் தரும் திரு. து.சுந்தரம் அவர்கள், கட்டுரையின் பிற்பகுதியை கல்வெட்டுப் பாடத்திற்காக ஒதுக்கி, அதில் கல்வெட்டின் வரிகளைக் கொடுத்து அவற்றைப் படிக்கும் முறையைக் குறிப்பிட்டு விளக்கமும் தருகிறார். இனி, அவரது இரு கட்டுரைகள் வழங்கும் தொல்லியல் குறித்த தகவல்கள்: 1. இராசகேசரிப்பெருவழி (The Rajakesari Highway) இராசகேசரிப்பெருவழி, கல்வெட்டு: … தமிழகத்தின் மிகப்பழமையான பெருவழி என்று அறியப்படும் “இராசகேசரிப்பெருவழி” கொங்கு நாட்டில் அமைந்திருந்தது கொங்கு நாட்டின் பழமைக்கும் பெருமைக்கும் சான்றாகும். இராசகேசரிப்பெருவழி இந்திய நாட்டிலேயே மிகப்பழமையான சாலை என்று தொல்லியலார் கருதுகின்றனர்… … இராசகேசரிப்பெருவழிக் கல்வெட்டு கண்டுபிடிக்கப்பட்ட நிகழ்வு எதிர்பாராது நிகழ்ந்த ஒன்று. 1976 –ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 6-ஆம் தேதி இக்கல்வெட்டு கண்டுபிடிக்கப்பட்டது. கண்டுபிடித்துக் கல்வெட்டினைப் படித்து வெளிக்கொணர்ந்தவர் முனைவர் பூங்குன்றன் ஆவார்… … “இக்கல்வெட்டில் மூன்று முறை நிழல் என்ற சொல் பயின்றுவருகிறது. இங்குப் பயன்படுத்தப்பெறும் நிழல் என்ற சொல்லின் பொருளை விளங்கிக்கொள்ளக் கேரள மாநிலச் செப்பேடுகள் மற்றும் கல்வெட்டுகள் ஆகியவற்றில் கிடைக்கும் சான்றுகளை அணுகவேண்டும். அந்த ஆவணங்களில் நிழல் என்ற சொல் நிழற்படை (Shadow Army) என்ற பொருளில் கூறப்பெறுகின்றது. அரசனைப் பாதுகாக்க இப்படை பயன்படுத்தப்பெற்றது. பெருவழிக் கல்வெட்டிலும் “நிழல்” என்ற சொல் (Shadow Army) என்ற பொருளில் வழங்கப்பெற்றிருக்கவேண்டும். நிழற்படை அரசனைமட்டும் பாதுகாக்கவில்லை. பெருவழியைக் கண்காணிக்கவும் செய்தது. மக்களோடு மக்களாக வீரர் என்று தெரியாவண்ணம் மறைந்து நின்று பெருவழியைக் கண்காணித்தனர் என்பதாகப் பூங்குன்றன் அவர்கள் கருத்துத் தெரிவித்தார்… இவ்வாறு தமிழக அரசர்கள் தங்கள் ஆட்சிக்கு உதவும் வகையில் நிழற்படை என்ற ஒரு படையை வைத்திருந்தார்கள் என்பதே பலருக்கு புதிய செய்தியாக இருக்கும். அடுத்து, 2. பெள்ளாதி – நடுகல் சிற்பம் புலிகுத்திக்கல்: … ஒரு தோட்டத்தில் அமைந்துள்ள நடுகல் சிற்பத்தைக்காணச்சென்றோம். இந்த நடுகல் சிற்பம் புலிகுத்திக்கல் என அழைக்கப்படுகிறது. கல்வெட்டுடன் கூடிய இந்நடுகல் பற்றி மேற்சுட்டிய தொல்லியல் துறைக்கல்வெட்டு நூலில் (தொடர் எண்: 936/2003) குறிப்பிடப்பெறுகிறது. மறவர்களுக்கு நடுகல் எடுக்கப்பட்டதைச் சங்க இலக்கியங்கள் கூறுகின்றன. போரில் இறந்துபட்ட வீரர்களுக்கும், முல்லை நிலப்பகுதியில் ஆனிரை கவர்தலிலும், மீட்டலிலும் ஈடுபட்டு இறந்த வீரர்களுக்கும் நடுகல் நட்டு மக்கள் வணங்கினர். (ஆனிரையில் ஆடுகளும் அடங்கும் எனலாம்) கோவைப்பகுதி பழங்காலத்தே பெருமளவில் முல்லை நிலப்பகுதியாக விளங்கியமையால் பட்டிகளில் ஆனிரை காத்த வீரர்கள் ஆடுமாடுகளைத் தின்னவரும் புலிகளுடன் போரிட்டு மடிவதுண்டு. (புலியைக்கொன்ற பின்னரே வீரன் மடிகிறான்) அத்தகைய வீரர்களுக்கு நடுகல் எடுத்து வணங்கினர். கோவைப்பகுதியில் இவ்வகை நடுகற்கள் புலிகுத்திக்கல் என்னும் பெயரால் அழைக்கப்படுகிறன. இக்கற்களில் வீரன் புலியைக் குத்திக்கொல்லும் காட்சி புடைப்புச்சிற்பமாகச் செதுக்கப்பட்டிருக்கும். இந்நடுகற்கள் பெரும்பாலும் எழுத்துகள் பொறிக்கப்படாமல் இருக்கும். அரிதாகச் சில நடுகற்கள் எழுத்துப் பொறிப்பைக்கொண்டிருக்கும். நாங்கள் பார்த்தது எழுத்துடைய நடுகல். … நல்ல வெண்மையான நிறத்துடன் ஏறத்தாழ நான்கு அல்லது நாலரை அடி உயரத்தில் உள்ள இக்கல்லில் வீரன் புலியுடன் போரிட்டுக் கொல்லும் காட்சி பொறிக்கப்பட்டுள்ளது. சிற்பத்தின் கீழே ஆறுவரிகளில் எழுத்துகள் பொறிக்கப்பட்டுள்ளன. வீரனின் தலையில் தலைப்பாகை; காதுகளில் காதணிகள்; கழுத்திலும் அணிகள். கைகளில் தோள்வளை காணப்படுகிறது. வீரனின் இடைப்பகுதியில் இடைக்கச்சு. கால்களில் கழல்கள். வீரன் தன் வலக்கையால் நீண்ட வாளைப் புலியின் நடுமார்பில் பாய்ச்சிய நிலையில் வாள் புலியின் உடலைக் குத்தி உடலின் மறுபுறம் வெளிவந்த தோற்றம். இடக்கை புலியின் முகத்தருகே நெருங்கிய நிலையில் கைவிரல்கள் தோன்றாதவாறு காணப்படுவதால் இடக்கையில் இருந்த குறுவாள் புலியின் வாய்ப்பகுதியில் நுழைந்துவிட்டது புலனாகிறது. இடைக்கச்சில் குறுவாள் காணப்படாதது இதை உறுதிப்படுத்துகிறது. (வீரர்களின் சிற்பங்களில் இடையில் குறுவாள் தப்பாது இடம் பெறுகிறது.) புலி நின்ற நிலையில் ஒரு காலை வீரனின் தொடைப்பகுதியில் தாக்குகிறது. புலியின் நிமிர்ந்து நிற்கும் வால் புலியின் சினவெறியைக்காட்டும் எனக் கல்வெட்டு அறிஞர்கள் குறிப்பிடுகின்றனர். மேலும், இவரது கல்வெட்டு எழுத்துகள் கற்போம், மதுரை அரண்மனை, சுமை தாங்கி போன்ற பதிவுகளும் சுவையான வரலாற்றுச் செய்திகள் பல அடங்கியவை. தொல்லியல்துறை சொற்பொழிவுகளுக்கு சென்று அங்கு அத்துறை அறிஞர்களின் உரையில் கிடைக்கும் தகவல்களையும் திரு. சுந்தரம் தனது வலைத்தளத்தில் பதிவு செய்து வருகிறார். ஆர்வத்துடன் தான் திரட்டும் தொல்லியல் செய்திகளை அனைவருக்கும் உதவும் வகையில் பதிவு செய்து, கல்வெட்டுகளைப் படிக்க பயிற்சியும் அளித்துவரும் திரு. சுந்தரம் தொடர்ந்து இப்பணியைச்செய்து தமிழக வரலாற்றைப் பற்றிய விரிவான பார்வையை பலரும் பெற உதவுவது பாராட்டிற்குரிய செயலே. June 29, 2015 வருண் ராம் [] அமெரிக்கத்தமிழர் திரு. வருண் ராம் அவர்கள் ஒரு கூடைப்பந்தாட்ட விளையாட்டு வீரர். இருபத்திரண்டு வயதாகும் திரு. வருண் ராம் என்னும் வருண் இராமசாமி இந்த ஆண்டு மேரிலாண்ட் பல்கலைக் கழகத்தில் படிப்பில் முதன்மை மாணவராக (3.99/4.00 GPA), நரம்பியல், உடற்செயலியல் என்ற இரு அறிவியல்துறைகளில் பயின்றுப் பட்டம் பெற்றுள்ளார். அத்துடன் அவர் கூடைப்பந்தாட்டத்திலும் சிறந்து விளங்கி தனது மேரிலாண்ட் பல்கலைக் கழக அணிக்கு வெற்றியைப் பெற்றுத் தந்த திறமையான ஆட்டத்தினால் வளரும் இளம் விளையாட்டுவீரர் என்ற பட்டியலிலும் இடம் பிடித்துள்ளார். இந்தியக் குடும்பத்து மாணவர் என்றால் கணிதம், அறிவியல், தொழில் நுட்பம் படிக்க விரும்புபவர்; சிறந்த படிப்பாளிகள் என்று அமெரிக்க மக்கள் மனதில் ஒரு பொதுமைப்படுத்தும் எண்ணம் உருவாகும் வண்ணம் அயல்நாடுவாழ் இந்தியர்கள் இருந்துவருகிறார்கள். இந்த எண்ணத்தை மாற்றும் வகையில் அவர்கள் படிப்பில், பிற தொழில்களில் மட்டுமல்ல, வாய்ப்புகள் அமைந்தால் விளையாட்டுத் துறையிலும் தங்கள் திறமையை வெளிப்படுத்துவார்கள் என்ற செய்தியை அமெரிக்க மக்களுக்கு வருண் ராம் அனுப்பி இருக்கிறார். படிப்புடன் விளையாட்டிலும் சாதிக்கமுடியும் என்ற நம்பிக்கையை அமெரிக்க இந்திய மாணவர்களுக்கும் தனது வெற்றியின் மூலம் உணர்த்தியிருக்கிறார். பொதுவாக அமெரிக்கக் குடும்பங்களில் வளரும் பிள்ளைகள், தங்களுக்கு ஆர்வம் ஏற்படும் துறைகளில் முயன்று, தங்கள் திறமைக்கு ஏற்ற, மனதுக்குப் பிடித்த துறையில் வளரவேண்டும். அது கலையாகவோ, விளையாட்டாகவோ இருந்தாலும்கூட அவர்கள் விருப்பம் தடை செய்யப்படுவதில்லை என்ற நிலை அமெரிக்கர்களிடம் உள்ளது. இதற்கு மாறாக, இந்தியக் குடும்பங்களில் வளரும் குழந்தைகளிடம் மருத்துவம், பொறியியல், கணினி சார் கல்விகள், தொழில்நுட்பம், அறிவியல் துறைகளில் ஈடுபடுவது மட்டுமே எதிர்பார்க்கப்படும். கலை மற்றும் விளையாட்டு என்பவை பொழுதுபோக்கு என்ற வகையில் மட்டுமே கற்றுக்கொள்ள அனுமதிக்கப்படுவார்கள். வாழ்வாதாரத்திற்கு மருத்துவராகவோ, பொறியியலாளராகவோ, பேராசிரியராகவோ, வழக்கறிஞகராகவோ பணிபுரிவது மட்டுமே மதிப்பாக, உயர்வாக எண்ணப்படும். வருண் ராமின் பெற்றோர்களும் இதற்கு விதிவிலக்கல்ல. அவர் தொடர்ந்து நல்ல மதிப்பெண்கள் வாங்கும்வரை அவர் விளையாடலாம், அதுவரை விளையாட்டிற்குத் தடையில்லை என்று முதலில் அனுமதித்தவர்கள், பின்னர் வருண் ராமின் திறமையைக் கண்டு அவர் வளர்ச்சிக்கு முழு ஆதரவும் கொடுத்து அவரது வாழ்வின் குறிக்கோளுக்கு உதவியாகவும் இருப்பவர்களானார்கள். இந்தியர்களின் பொதுவான பாதையில் இருந்து விலகி, தன்னார்வத்தால் மட்டுமே விளையாட்டுத் துறையில் திறமையை வளர்த்துக் கொண்டு, தனது குறிக்கோள் நோக்கி முன்னேறியிருக்கிறார் வருண் ராம். இவர் குடும்பத்திலும் விளையாட்டுத் துறையைத் தேர்ந்தெடுத்த முதல் மனிதரும் இவர் மட்டுமே. வருண் ராமின் பெற்றோர்கள் திரு.கொழந்தவேல் இராமசாமி, முனைவர் சாந்தினி என்போர். பெற்றோர் இருவரும் சேலத்திலிருந்து சற்றொப்ப 30 ஆண்டுகளுக்கு முன்னர் அமெரிக்காவிற்குக் குடி பெயர்ந்தவர்கள். இருவரும் அமெரிக்க அரசின் அரசுப்பணியாளர்களாக இருப்பவர்கள். அத்துடன் மேரிலாண்ட் தமிழ்ச்சங்கத்தின் பணிகளிலும் மிகவும் ஈடுபாட்டுடன் பங்கேற்பவர்கள். அமெரிக்காவின் தேசிய கூடைப்பந்தாட்ட அணியில் (National Basketball Association) விளையாடுவது வருண் ராமின் குறிக்கோள். தேசிய அணியில் இடம்பிடிக்க வேண்டுமென்றால் சிறந்த பல்கலைக்கழக விளையாட்டுக் குழுக்களுக்காக விளையாடித் திறமையை வெளிப்படுத்தி, தேசிய அணியினர் கவனத்தைக் கவரவேண்டும். அமெரிக்க பல்கலைக்கழக விளையாட்டுச் சங்கம் (National Collegiate Athletic Association – NCAA) பல்கலைக் கழகங்களின் விளையாட்டு அணியை மூன்று பிரிவுகளாக பிரித்துள்ளது. அவை பிரிவு I, பிரிவு II, பிரிவு III ( Division I, Division II, and Division III of NCAA) குழுக்களென முறையே மிகப்பெரும் புகழ்வாய்ந்த பெரிய பல்கலைக்கழகங்கள், நடுத்தர நிலை மற்றும் சிறிய பல்கலைக்கழகங்கள் என்பவையே அப்பிரிவுகள். பிரிவு I இல் இருக்கும் பெரிய கல்லூரிகளில் படித்தால் தேசிய அணியில் இடம்பிடிக்கும் வாய்ப்புகளும் அதிகம். ஆனால், உயர்நிலைப் பள்ளி கல்விக்குப் பிறகு வருண் ராமிற்குப் புகழ் பெற்ற பல்கலைக்கழகங்களில் படிக்கும் வாய்ப்பு கிடைக்காது போக, அதற்காகவே மேலும் ஓராண்டு பள்ளிக் கல்வியை நீட்டித்து மறு ஆண்டும் பெரிய கல்வி நிறுவனங்களில் நுழைவுக்கு விண்ணப்பித்தார். மீண்டும் முயற்சி தோல்வியடைந்தாலும், பிரிவு III நிலையில் உள்ள கனக்டிகட் பல்கலையில் சேர்ந்து ஓராண்டு படித்துவிட்டு, அங்கிருந்து மறு கல்வியாண்டில் மாற்றல் வாங்கிக் கொண்டு, பிரிவு I நிலையில் இருக்கும் மேரிலாண்ட் பல்கலைக் கழகத்திற்கு வந்தார். இது போன்று மாற்றம் வாங்கினால் விளையாட்டு அணியில் இடம் கிடைக்காது என்ற மறுப்பு கூறியவர்களின் வார்த்தைகளைப் பொய்யாக்கி, மேரிலாண்ட் பல்கலைக் கழகத்தின் ‘மேரிலாண்ட் டெர்ராபின்ஸ்’ (Maryland Terrapins) கூடைப்பந்து அணியில் தனது திறமையினால் இடம் பிடித்தவருக்கு விரைவில் அவரது திறமையான விளையாட்டால் அமெரிக்கர் அனைவரையும் அவரைத் திரும்பிப்பார்க்க வைக்கும் வாய்ப்பும் கிடைத்தது. 2015 ஆம் ஆண்டு மார்ச் மாதம் ‘வலப்ரேஸோ க்ருசேடர்ஸ்’ (Valparaiso Crusaders) அணியுடன் போட்டியிட்ட மேரிலாண்ட் டெர்ராபின்ஸ் அணியின் வெற்றிக்கு வருண் ராமின் திறமையான விளையாட்டே காரணமாக அமைந்தது. அவரது கனவுகளை நிறைவேற வாய்ப்பளிக்கும் சிறந்த தருணமாகவும் அது அமைந்தது எனலாம். அமெரிக்க இந்திய மாணவர்களுக்கு நல்லதொரு முன்மாதிரியாக விளங்கும் வருண் ராமைப் பாராட்டி, 2015 ஆம் ஆண்டு ஜூலை 4 ஆம் நாள் நடந்த வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவை நடத்திய “தமிழ்விழா – 2015” (FeTNA – 2015) நிகழ்ச்சியில் சிறப்பு விருது அளிக்கப்பட்டுப் பாராட்டப்பட்டுள்ளார். வருண் ராம் தனது கூடைப்பந்தாட்டக் கனவுகளை (Hoop Dreams) நிறைவேற்றுவதற்காக ஆங்கிலத்தில் “jumping through hoops” என்று சொல்வது போலப் பல தடைகளை எதிர்கொண்டு வெற்றிகண்டிருக்கிறார் என்பதில் ஐயமில்லை. அவரது குறிக்கோள்களான மருத்துவத்துறையில் பணியாற்றும் கனவு, மற்றும் தேசியஅணியில் விளையாடும் கனவுகள் நிறைவேற வாழ்த்துகளும் பாராட்டுகளும். July 6, 2015 தாஷி, நான்சி மாலிக் சகோதரிகள் [] முற்றிலும் மாறுபட்ட சாதனை ஒன்றினைப் புரிந்துள்ளார்கள் இரட்டையர்களான, தாஷி, நான்சி மாலிக் சகோதரிகள். உத்தரகண்ட் மாநிலத்தைச் சேர்ந்த 24 வயதாகும் இரட்டையர்கள் பொதுவாக இந்தியர்கள் அதிகம் நுழையாத துறை ஒன்றில் சாதனையைச் செய்திருப்பது வியக்க வைப்பது. “தீரச்செயல் புரிவோரின் பெருவெற்றி” என அழைக்கப்படும் (எக்ஸ்ப்ளோரர்ஸ் கிராண்ட் ஸ்லாம் – Explorers Grand Slam) என்ற சாகசத்தை நிகழ்த்தியுள்ளனர் இந்த இரட்டையர்கள். வட தென் துருவங்களை அடைவது, உலகின் ஏழு கண்டங்களிலும் உள்ள உயரமான மலைச்சிகரங்களை அடைவது என ஒன்பது இடங்களுக்கும் சென்றுவருவது எக்ஸ்ப்ளோரர்ஸ் கிராண்ட் ஸ்லாம் சாதனை என்று அழைக்கப்படுகிறது. இதில் மிகவும் கடினமான முறை ஒன்றும், மற்றொன்று சற்றுச் சுலபமான ‘லாஸ்ட் டிகிரி கிராண்ட் ஸ்லாம்’ (Last Degree Grand Slam) என ஒன்றும் இருக்கிறது. முதல் வகையான எக்ஸ்ப்ளோரர்ஸ் கிராண்ட் ஸ்லாம் என்ற முறையில் குறிப்பிட்ட கடற்கரையில் இருந்து வட தென் துருவங்களுக்குப் பனிச்சறுக்கில் (Skiing) சென்றடைய வேண்டும். ‘லாஸ்ட் டிகிரி கிராண்ட் ஸ்லாம்’ முறையில் இந்தத் தூரம் குறைக்கப்பட்டுள்ளது இங்கிலாந்தைச் சேர்ந்த ‘டேவிட் ஹெம்ப்ளிமேன் ஆடம்ஸ்’ (David Hempleman-Adams) என்பவரே முதன் முதலில் 1998 ஆம் ஆண்டில் இந்த ‘கிராண்ட் ஸ்லாம்’ சாதனையைச் செய்தவர். டேவிட் ஹெம்ப்ளிமேன் ஆடம்ஸ் உட்பட, இதுவரை பதினொரு பேர் இச்சாதனையைச் செய்துள்ளனர். அடுத்து, ‘லாஸ்ட் டிகிரி கிராண்ட் ஸ்லாம்‘ என்ற தொலைவு குறைந்த சுற்றை இதுநாள் வரை 33 பேர் வெற்றிகரமாக முடித்துள்ளார்கள். இவர்களில் இந்தியாவைச் சேர்ந்த தாஷி, நான்சி மாலிக் சகோதரிகளும் அடங்குவர். பிப்ரவரி 2012 ஆம் ஆண்டு 19,340 அடிகள் உயரம் உடைய ஆப்பிரிக்க “கிளிமாஞ்சரோ” சிகரத்தை முதலில் தொடுவதில் அட்வெஞ்ச்சரர்ஸ் கிராண்ட் ஸ்லாம் சுற்றை இவர்கள் தொடங்கினார்கள். அடுத்து 2013 ஆம் ஆண்டு மே மாதம் எவரெஸ்ட் சிகரத்தை அடைந்தார்கள். தொடர்ந்து மற்ற பிற ஐந்து கண்டங்களில் உள்ள மலைகளின் உயர்ந்த சிகரங்களையும், இந்த ஆண்டு வட தென் துருவங்களையும் அடையும் சுற்றினையும் முடித்து விட்டார்கள். முதன்முதலில்… குறைந்த கால அளவில் கிராண்ட் ஸ்லாம் சாதனையைச் செய்த முதல் இந்தியர்கள், முதல் இந்திய, முதல் தெற்காசிய கிராண்ட் ஸ்லாம் சாதனையாளர்கள், கிராண்ட் ஸ்லாம் சாதனை செய்த முதல் இரட்டையர்கள், கிராண்ட் ஸ்லாம் சாதனை செய்த முதல் இளைய பெண்மணிகள், எவரெஸ்ட்டைத் தொட்ட முதல் இரட்டையர்கள், ஏழு கண்டங்களின் மலைச் சிகரங்களையும் அடைந்த முதல் உடன்பிறப்புகள், வட மற்றும் தென் துருவங்களைப் பனிச்சறுக்கு மூலம் அடைந்த முதல் இரட்டையர்கள், இந்தியர்கள், இளவயதுப் பெண்மணிகள் என்று பல “முதன்முதல்” என்ற சாதனைப் பட்டியலை அட்வெஞ்ச்சரர்ஸ் கிராண்ட் ஸ்லாம் சாதனையில் வெற்றி பெற்றதன் மூலம் இவர்கள் நிகழ்த்தியுள்ளார்கள். இந்தச் சாதனையின் சற்று வருத்தம் தரும் பகுதி என்னெவெனில், இந்த சகோதரிகளின் சாதனைகளுக்கு இந்திய அரசிடம் இருந்து உதவிகளோ, தனியார் ஆதரவு என்றோ எதுவும் இதுவரை கிடைக்கவில்லை. மிகவும் செலவு செய்ய வேண்டிய இந்தச் சாதனைக்கும், மலையேற்றப் பயணங்களுக்கும் இவரது பெற்றோர்கள்தான் இதுவரை உதவி வருகிறார்கள். எனவே நிதி நிலையில் அவர்கள் குடும்பத்திற்கு பெரும் கடன்கள் ஏற்பட்டுள்ளது இவர்கள் சாதனையில் விரும்பத் தகாத பக்க விளைவு. இந்திய அரசும், இந்திய மாநிலங்களும் மலையேற்றம் என்பதை விளையாட்டு வகையில் குறிப்பதா இல்லையா என்ற சிக்கலில் ஒவ்வொருவரும் ஒவ்வொருவிதமாக இதை வரையறுக்கும் நிலை இவர்களுக்கு உதவிகரமாக இல்லை என்பதை இச்சகோதரிகள் பத்திரிக்கைகளுக்கு அளித்த செய்தி குறிக்கிறது. “இந்தச் சாதனை மிகவும் கடினமானது, சோர்வு தருவது. ஆனால் முயற்சிக்குக் கிடைத்த பலன் மகிழ்ச்சி அளிப்பது. எந்நேரம் முயற்சியைக் கைவிட்டு விடலாம் என்ற நிலையில் எங்களைத் தள்ள எத்தனையோ காரணங்கள் இருந்தன. இதனை நாங்கள் விடாமுயற்சியுடன் வெற்றிகரமாக முடித்தற்கு எங்களது ஆர்வம் மட்டுமே காரணம்.” என்று இரட்டையர்களில் இளையவரான நான்சி கூறியுள்ளார். தற்பொழுது நியூசிலாந்து அரசு இவர்களுக்கு உதவித்தொகை வழங்கி அவர்கள் நாட்டின் பல்கலைக்கழகத்தில் ஓராண்டு விளையாட்டும், உடற்பயிற்சி-உளவியல் கல்வியும் (Sports and Exercise Psychology) பயில உதவி செய்துள்ளது. இது இளம் சாதனையாளர்களுக்கு என்று நியூசிலாந்து அரசு வழங்கும் சலுகை, இதைப் பெற்றதில் சகோதரிகளும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். நியூசிலாந்தின் உயர்ந்த மலைச் சிகரமான குக் மலைச்சிகரத்தைத் தொடுவது இரட்டையர்களின் அடுத்த இலக்கு. இவர்கள் பெற்ற பயண அனுபவங்களை நூலாகவும் எழுத எண்ணியுள்ளார்கள். இச்சகோதரிகளின் சாதனை இவர்களுக்காகச் செய்தது மட்டுமன்று; அது பாலினபேதத்தின் விளைவுகளைப் பற்றிய விழிப்புணர்வைக் கொண்டு வருவதற்கும், பாலின அடிப்படையில் பெண்களின் செயல்கள் எனப் பொதுமைப்படுத்தும் மனப்பான்மையைக் குறைப்பதற்கும் தங்கள் சாதனை உதவவேண்டும் என்று இச்சகோதரிகள் எதிர்பார்க்கிறார்கள். வாய்ப்பிருந்தால் பெண்களுக்கு சாதனைகள் செய்வதில் தடை இல்லை என்ற உணர்வையும், பெண்களின் வாழ்வும், உலகமும் வீட்டின் நான்கு சுவர்களுக்குள் முடங்கிக் கிடப்பதல்ல என்பதைச் சமூகம் புரிந்துகொள்ள வேண்டும் என்ற செய்தியை அளிப்பதும் இவர்கள் விருப்பம். இந்தியச் சிறுமிகள் இனி பெண்கள் என்பதற்காக தாங்கள் பெருமிதம் கொள்ளும் வகையில் இவர்கள் முயற்சி அமைவதில் மகிழ்ச்சியையும் அடைகிறார்கள் இச்சகோதரிகள். பெண்கள் தங்கள் திறமையில் நம்பிக்கை கொண்டு உயரும்பொழுது சமூகத்தில் பெண்கள் கண்ணியத்துடனும், மதிப்புடனும் நடத்தப்படுவார்கள் என்பது இவர்களது எதிர்பார்ப்பு. இந்த அட்வெஞ்ச்சரர்ஸ் கிராண்ட் ஸ்லாம் சாதனையை இவர்கள் நிகழ்த்த விரும்பியதன் முக்கிய நோக்கம் …”பெண்களாலும் சாதனைகள் புரிய முடியும்” என்பதைச் சமூகத்திற்கு உணர்த்தவும், சிறுமிகளுக்குத் தன்னம்பிக்கை ஊட்டுவதற்காகவும், இவர்களது சாதனை கண்டு பெண்குழந்தைகள் பெருமிதம் கொள்ள வேண்டும் என்பதே இந்த இரட்டையர்களின் குறிக்கோள். பெண்களுக்குச் சிறந்த முன்மாதிரியாக விளங்க விரும்பும் இவர்களது நோக்கமும், செயலும் பாராட்டத் தக்கன. July 13, 2015 இசைக்கவி இரமணன் [] இசைக்கவி இரமணன் அவர்களைப் பற்றிய ஒரு அறிமுகம் முற்றிலும் தேவையற்றது. அவரது இலக்கிய பகிர்வுகளில் மூழ்கித் திளைத்திராத தமிழரும் இருக்க வாய்ப்பில்லை. இருப்பினும் முன்னுரையாக ஓரிரு அறிமுக வரிகள் தரவேண்டும் என்ற மரபில் அடுத்து சில வரிகள் அவரைப் பற்றி இங்குத் தரப்படுகிறது. நெல்லையில் பிறந்த இசைக்கவி இரமணன், கவிஞர், எழுத்தாளர், சொற்பொழிவாளர், தொகுப்பாளர் எனப் பன்முகத் திறமை கொண்ட பல்கலை வித்தகர் என்று அறியப்படுகிறார். ‘தி இந்து’ பத்திரிகையில் 28 ஆண்டுகள் பணியாற்றி உள்ளார். இசைக்கவி இரமணன் பொதிகை தொலைக்காட்சியில் “கொஞ்சம் கவிதை கொஞ்சம் தேநீர்” என்ற நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கியும், அகில இந்திய வானொலியிலும் பல சொற்பொழிவுகளையும் ஆற்றியுள்ளார். சங்கரா தொலைக்காட்சியில், மஹாப் பெரியவா என்று போற்றி வணங்கப்படும் காஞ்சி மகான் அவர்களைப் பற்றி தினமும் காலை 5.40 மணிக்கு ‘காஞ்சி மகான்’ பற்றிய சொற்பொழிவுகளை வழங்கியுள்ளார். இதுவரை ‘காஞ்சி மகான்’ பற்றி 139 சொற்பொழிவுகளை இந்நிகழ்ச்சியின் மூலம் வழங்கியுள்ளார். வல்லமை மின்னிதழின் வளர்ச்சியில் அக்கறை கொண்டவர் இசைக்கவி ரமணன். வல்லமை இதழ் தொடங்கிய 2010 ஆம் ஆண்டு, ஒரு நூல் அறிமுகக் கட்டுரையை வல்லமையில் எழுதியது முதல், வல்லமை இதழின் வளர்ச்சியில் தனது படைப்புகளின் மூலம் தொடர்ந்து பங்களித்து வருகிறார். வல்லமை தனது ஐந்தாண்டு இலக்கியப் பயணத்தைக் கடந்து ஆறாம் ஆண்டில் காலடி வைத்ததைக் கண்டு மகிழ்ந்து, வாழ்த்துக் கவிதையொன்றையும் வழங்கிப் பாராட்டி மகிழ்ந்தார். கவிதையின் சிறு பகுதி கீழே, பல்லாண்டு வாழ்க! பலநூறு காண்க! பைந்தமிழின் களஞ்சியமாய்ப் பலவிதமாய் விரிக! சொல்லாண்டு வாழ்க! சுவைபலவும் காண்க! சோகமே இல்லாத சொர்க்கமாக விரிக! எல்லோர்க்கும் இடந்தந்தே மிகவிரிந்து வளர்க! இந்த ஏழைக்கும் இடந்தந்தீர் என்நன்றி ஏற்க! வல்லோரின் சங்கமத்தில் வளரட்டும் வல்லமை வழிநெடுகத் துணையாக வாழ்த்தட்டும் சிவனுமை! 2014 ஆண்டின் மகளிர் தினத்தை முன்னிட்டு ‘அன்புள்ள மணிமொழிக்கு’ என்ற தலைப்பில் வல்லமை இதழ் நடத்திய கடித இலக்கியப் பரிசுப் போட்டியின் நடுவராகப் பொறுப்பேற்று வெற்றியாளர்களைத் தேர்வு செய்து வழங்கியதுடன், படைப்புகளின் சிறப்புகள் கண்டு மனம் மகிழ்ந்து, வழக்கமான, குறிப்பிட்ட முதல், இரண்டு, மூன்று, ஆறுதல் பரிசுகளையும் தேர்ந்தெடுத்த பின்னர்; தனது சார்பாக மேலும் அறுவரைத் தெரிவு செய்து சிறப்புப் பரிசு என, அவரே தலா ரூ. 200 பரிசுத் தொகையை ஒவ்வொருவருக்கும் வழங்கி மகிழ்ந்தவர். வல்லமை இதழ், எழுத்தாளர்களின் எழுத்துகளின் மேன்மையைக் கருதி சிறப்புப் பிரிவு ஒதுக்கிய எழுத்தாளர்களுள் இசைக்கவி இரமணனும் ஒருவர். இசைக்கவியின் இதயம், கவிப்பேழை ஆகிய பிரிவுகளின் கீழ் இசைக்கவி இரமணனின் பல்வேறு படைப்புகள் தொடர்ந்து வல்லமையில் வந்துள்ளன. சென்னைக் கம்பன் கழகமும், பாரதிய வித்யா பவனும், சென்னை ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் நிறுவனமும் இணைந்து, ‘ஔவையின் ஆத்திசூடி’ என்ற தொடர் சொற்பொழிவு நிகழ்ச்சியை 2011 ஆண்டு சென்னையில் நடத்தின. அந்த நிகழ்ச்சியில் ‘ஆறுவது சினம்’ என்ற தலைப்பில் இசைக்கவி ரமணன் சொற்பொழிவு நடத்தினார். அதுமட்டுமன்று, சென்னை ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் நிறுவனம் பல இலக்கிய சங்கங்களுடன் இணைந்து வழங்கும் இலக்கிய விழாக்களில் சொற்பொழிவாற்றியுள்ளார். தத்வலோகா – ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் இணைந்து வழங்கும் தொடர் நிகழ்ச்சியின் குறள் விளக்கம் என்ற சொற்பொழிவொன்றையும் வழங்கியிருக்கிறார். திறமைமிகு புலவர்கள் அக்காலத்தில் அரசவைப் புலவர்கள் என்ற பெருமையுடன் மன்னர்களின் அரசவையை அலங்கரித்தது போல, ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் நிறுவனத்தின் அரசவை சொற்பொழிவாளர் போன்று தொடர்ந்து அவர்கள் நடத்தும் இலக்கியக் கூட்டங்களில் சொற்பொழிவுகள் நடத்தியுள்ளார். ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் நிறுவனத்தின் நடத்தும் மாதாந்திரத் தொடர் சொற்பொழிவுகளில் ஒன்றான, தேவியும் மனிதனும் (தசமஹா வித்யா) என்ற தொடர் சொற்பொழிவு நிகழ்ச்சியில் ஒவ்வொரு மாதமும் பராசக்தியின் ஒவ்வோர் அம்சம் பற்றிய விளக்கங்கள் வழங்கியுள்ளார். சென்னை பாரதிய வித்யா பவனில், தசமஹா வித்யையில் ஏழாவதாய் வரும் தூமாவதி தேவியைப் பற்றி சொற்பொழிவாற்றினார். அழிவின் ஆயாசத்திற்கும் ஆக்கத்தின் ஊக்கத்திற்கும் இடையே உள்ள நிலை, அந்த நிலையின் உருவகம்தான் தூமாவதி. தூமாவதி பற்றியும், அவள் தோற்றம் செயல் பற்றியும் விளக்கும் இசைக்கவி இரமணனின் கட்டுரை இங்குச் சுருக்கமாக கொடுக்கப்பட்டுள்ளது. ஒளிக்கு விளக்கமுண்டு. இருட்டுக்கு விளக்கமேது, துலக்கமேது, திகழ்ச்சியேது? இன்மையிலிருந்தே இருப்பு. ஆனால், ஒளிக்கு இத்தனை சிறப்பிருப்பதற்குக் காரணம், இருள் என்று ஒன்று இருப்பதால். அதாவது இல்லாத ஒன்று இருப்பதால். அந்த இல்லாத ஒன்றாகிய இருட்டிலிருந்துதான், இருப்பு என்னும் ஒளி தோன்றுகின்றது. அந்த இல்லாதது என்பது மூன்று வகைப்படும்: 1. ப்ராக் அபாவம் – இருப்பது எழுவதற்கு முந்தைய நிலை – விதையிலிருந்து மரம் எழும். அது எழுவதற்கு முன் அங்கே மரம் இல்லை 2. ப்ரம்வம்ச அபாவம் – இருப்பது அழிந்த நிலை – பானை உடைந்ததால் இல்லாமல் போன நிலை 3. அத்யந்த அபாவம் – எப்போதுமே இல்லாதது – முயற்கொம்பு, கானல் நீர் ஆனால், இல்லாதது என்பது அறவே இல்லாத சூனிய நிலை இல்லை: · விதையில் மரத்தின் கருத்து இருப்பதால்தான், அது உந்துவதால்தான் விதை விழிக்கிறது · மண்ணிலிருந்து விளைந்த பானை மண்ணிலேயே சேர்வது, தோற்றத்தின் மாற்றமே · நீரைக் கண்ட நினைப்புதான் கானலில் நீரைக் காண வைக்கிறது. கொம்பின் ஞாபகம்தான் அதை, அது இல்லாத முயலில் பொருத்திப் பார்க்கிறது அறியாமைக்கும் அறிவுக்கும் இருளுக்கும் ஒளிக்கும் அழிவுக்கும் தோற்றத்திற்கும் ப்ரளயத்திற்கும் படைப்புக்கும் இடையில் இருக்கின்ற இருட்டும் வெளிச்சமுமான நிலை, அழிவின் ஆயாசத்திற்கும் ஆக்கத்தின் ஊக்கத்திற்கும் இடையே உள்ள நிலை, அந்த நிலையின் உருவகம்தான் தூமாவதி! ஆதிப் பரம்பொருளின் ஊக்கம், அவளை அன்னையெனப்பணிதல் ஆக்கம் என்பான் பாரதி. சந்திகளின் உருவகம் இரவுக்கும் பகலுக்கும் இடையே ஒரு சந்தி, அது வைகறை பகலுக்கும் இரவுக்கும் நடுவில் ஒரு சந்தி, அது அந்திப் பொழுது முதல் சந்திக்கும், இரண்டாவது சந்திக்கும் மத்தியில் ஒரு சந்தி, அது உச்சிப் பொழுது அது போல, படைப்புக்கும், பிரளயத்துக்கும் இடையே ஒரு சந்தி பிரளயத்துக்கும், படைப்புக்கும் நடுவே ஒரு சந்தி தூமாவதி, இந்த இரண்டு சந்திகளைக் குறிக்கிறாள். ஒன்று, படைப்புக்கு முந்தைய நிலை. இரண்டு, அழிவுக்கு முந்தைய நிலை. அழிவுக்குப் பின் நேரும் ஆயாசம் இளைப்பாறத் தோதான மடியாகவும் இருக்கிறாள். ஆக்கத்திற்கு முன்னிருக்கும் எண்ணமற்ற தன்னந்தனிமையாகவும் இருக்கிறாள். வீட்டைக் கூட்டும் விளக்குமாறாகவும் இருக்கிறாள். விளக்கு ஏற்றப்படும் முன் எண்ணெய்யும் திரியும் நிமிண்டும் நேரமாகவும் இருக்கிறாள். இவளே காலராத்ரி, மோஹராத்ரி, மஹாராத்ரி. ஒவ்வொரு தேவிக்கும் தேவன் உண்டு. ஆனால் தூமாவதிக்குக் கணவன் கிடையாது. ஏன்? பிரளயத்துக்கும், படைப்புக்கும் உள்ள இடைவெளியில், சக்தியைப் பிரிந்த சிவன் சவமாக இருக்கிறான். அந்த இடைவெளியின் உருவகம்தான் தூமாவதி. அது, இருட்டு முழுவதும் அகலாத, ஒளி சரியாய்ப் புலர்ந்துவிடாத புகை நிலை. புகை, நெருப்புக்கு அறிகுறி. தூமாவதி, இனி தோன்றப் போகும் படைப்புக்கு அறிகுறி. […] படைப்புக்கெல்லாம் மூத்தவளாயிற்றே, அதனால் மூத்த தேவி, மூதேவி, ஜ்யேஷ்டா, தவ்வை. எல்லோருக்கும் முந்தியவள் என்பதால் கிழவி. உடைந்த பற்கள், குறைந்த பற்கள் கொண்டவள். உயிர்களைப் புடைத்து அகற்றுபவள் என்பதால் கையில் முறம் வைத்திருப்பவள். அவ்விதம், காலனின் தன்மை இருப்பதால் அவளுடைய வாகனமும், கொடியும் காக்கைதான். வெளுத்த முகம், நீண்ட கைகள், கால்கள், தொங்கும் முலைகள், பெரிய காதுகள், கொடூரமான பார்வை. அழுக்கடைந்த உடைகள் கொண்டவள். மங்களங்களுக்கு விரோதமான குணங்களையும் தோற்றத்தையும் கொண்டிருப்பதால் இவள் துஷ்டா எனப்படுகிறாள். வாழ்ந்தே புரிவது வாழ்க்கை, அதில் வருவதும் செல்வதும் இயற்கை வழுக்கி விழுந்தபின் எழுவதில்தான் வளரும் மானிட மேன்மை சூழ்ந்தே புரிவது உறவு, அதில் சுவாரசியம்தான் பிரிவு சுடரை இருளும் இருளைச் சுடரும் ஒருபோதும் விழுங்காது! என்பது போன்ற அழகிய கவிதைகள் சொல்லும்… வல்லமைமிகு கவிஞர், எழுத்தாளர், சொற்பொழிவாளர், பல்கலை வித்தகர் என அயராது பலதுறைகளிலும் பங்களித்து, தமிழக மக்களை பல்வேறு ஊடகங்கள் வழியாகவும் மகிழ்விக்கும் இசைக்கவி இரமணன் அவர்களுக்குப் பாராட்டுகளும் வாழ்த்துகளும் உரித்தாகின்றன. July 20, 2015 எம். ஆர். ஹப்பர்ட் [] வறட்சிக்குப் பிறகு புத்துயிர் அளிக்கும் மழைக்கு ஷப்னம் என்று பெயர். அதைப் போன்று வறண்டு போன வறிய நிலையில் வாழும் சிறுவர், சிறுமியரும், இளைஞர்களும் வாழ்வில் வளம் பெறும் வகையில் தொண்டூழியம் செய்யும் அரசு சாரா தொண்டு நிறுவனம் “ஷப்னம் ரிசோர்செஸ்” என்ற அறக்கட்டளை அமைப்பு. அரசு பதிவு பெற்ற இந்த ஷப்னம் தன்னார்வத் தொண்டு நிறுவனத்தைத் தோற்றுவித்து, கடந்த 17 ஆண்டுகளாக நடத்தி வருபவர் திரு. எம். ஆர். ஹப்பர்ட் என அழைக்கப்படும் மைக்கேல் ஹப்பர்ட் அவர்கள். இவரது ஷப்னம் தொண்டு நிறுவனத்தின் குறிக்கோள்: புறநகர், கிராமப்பகுதிகளில் வறுமையின் பிடியிலும், வன்முறைகள் நிறைந்த குடும்பச் சூழலில் வாழும் சிறுவர், சிறுமியர்கள் கல்வி, சுகாதாரம், நல்வாழ்வு ஆகியவற்றில் காரணமாகப் பின்தங்கும் சூழ்நிலையில் இருந்தால் அவர்களுக்கு உதவுவது. குழந்தைத் தொழிலாளராக இருந்து மீட்கப்பட்ட சிறுவர்களுக்கான பாதுகாப்பு இல்லம், கல்வி வளர்ச்சிக்கு உதவுவதும் ஷப்னம் அமைப்பின் நோக்கம். சிறுவர்களுக்காகக் காலணிகள் வழங்குவது முதல் மாற்றுத் திறனாளிகளுக்கு சக்கர நாற்காலிகள் வழங்குவது வரை பலவகைகளில் ஷப்னம் அமைப்பால் உதவிகள் செய்யப்பட்டு வருகிறது. கல்வியைக் கைவிட்ட மாணவர்களுக்கு உழைத்துக் கொண்டே கல்வியைத் தொடர உதவுவதும், TUPA (The underpriveleged angels) என்ற வாழ்த்து அட்டைகளை கைவினைப்பொருட்களாக உருவாக்கி விற்பனை செய்து நிதி திரட்டுவதும் ஷப்னம் ஈடுபட்டுள்ள பணிகளின் சில கோணங்கள் என்றால், சமூகத்திற்கு விழிப்புணர்வுச் செய்திகள்தரும் நோக்கில் ஓட்டங்கள் போன்ற கவன ஈர்ப்பு நிகழ்வுகளும், தற்கால இளைஞர்களுக்கு உதவும் காலத்திற்கேற்ற பயிற்சிப் பட்டறைகளும் நடத்தி வருவது ஷப்னம் அமைப்பின் மற்றொரு வகை பரிமாணம். “தனிமை நிறைந்த வாழ்க்கை வறுமையையும் விடக் கொடிதானது” என்பதன் அடிப்படையில் முதியோரும், இளைஞர்களும், சிறுவர்களும் இக்கால வாழ்க்கை முறையினால் எவ்வாறு தனித்து விடப்படுகிறார்கள் என்பதையும், இதனை எவ்வாறு தவிர்க்கலாம் என்பது பற்றியும் ஆலோசனைகளை பயிற்சிப் பட்டறை ஒன்றின் வழியாக ஷப்னம் தொண்டு நிறுவனம் இளைஞர்களுக்குத் தனிமையை எதிர்கொள்ளும் பயிற்சியை அளித்துள்ளது. குறிப்பாக இக்கால சமூகம் இழந்து நிற்பது மூதாதையர் தங்கள் பேரக்குழந்தைகளுக்குக் கதை சொல்வது போன்று இரு சாரரையும் இணைக்க இருந்த ஒரு மறைந்து போன பிணைப்பு. தனிமை வாழ்க்கையில் அகப்படுபவர்களை எப்படி தனிமையில் இருந்து மீட்கலாம் என்பதற்கான வழிகள் சில பயிற்சி பட்டறையில் பங்கேற்ற உளவியல், சமூகவியல் புலம்சார்ந்த கல்லூரி மாணவ மாணவியரால் இத்தகைய பயிற்சிப் பட்டறைகளின் வழியாகப் பகிர்ந்து கொள்ளப்பட்டுள்ளது. சிறுவர்களின் நல்வாழ்விற்காகவும், கல்விக்காகவும் தொடர்ந்து பணியாற்றிவரும் எம். ஆர். ஹப்பர்ட் அவர்களும் அவரது சமூகப் பணிகளுக்காக பாராட்டுகளும், விருதுகளும் பெற்றுள்ளார். வறிய நிலையில் உள்ள சிறுவர் நல்வாழ்விற்காகச் சமூக அமைப்பை நிறுவித் தொண்டாற்றிவரும் திரு. மைக்கேல் ஹப்பர்ட் அவர்களின் தொண்டு மனப்பான்மைக்கும் அவர்களது பணிகளுக்கும் பாராட்டுகள். July 27, 2015 “ஃப்ரீடமில்இபுக்ஸ்.காம்” குழுவினர் [] ஜூலை 26, 2015 அன்று “மூலிகை வளம்” என்ற மின்னூல் வெளியீட்டின் மூலம், இரண்டு ஆண்டுகளில் 200 மின்னூல்களை வெளியிட்டு தனது மூன்றாவது ஆண்டில் வெற்றிகரமாக அடியெடுத்து வைத்துள்ளனர் தன்னார்வப் பணி செய்யும் ஃப்ரீடமில்இபுக்ஸ்.காம் குழுவினர் (freetamilebooks.com). சென்னை, மும்பை, காரைக்குடி, கோவை, விழுப்புரம், புதுக்கோட்டை, பூனே என இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் இருந்தும்; அமெரிக்கா, ஆஸ்திரேலியா, சிங்கப்பூர், அரேபியா ஆகிய நாடுகளிலும் வாழ்ந்து வரும் 15 தன்னார்வப் பணியாளர்கள், சென்னையில் வாழும் கட்டற்ற மென்பொருள் ஆர்வலர் திரு. த. சீனிவாசன் தலைமையில் இணையம் வழியாக ஒருங்கிணைந்து தன்னார்வப் பணியாகத் தமிழ்த்தொண்டு செய்து வருகிறார்கள். படைப்பாக்கப் பொதுமங்கள் (கிரியேட்டிவ் காமன்ஸ் – Creative Commons) உரிமத்தின் கீழ் தங்கள் நூல்களைப் பதிப்பிக்க அனுமதி அளித்த 80 நூலாசிரியர்களின் நூல்களை மின்னூல்களாக மாற்றி இணையம் வழி அனைவரும் பெறச் செய்யும் சிறப்பான பணியை மேற்கொண்ட இக்குழுவினர் தங்களது மூன்றாவது ஆண்டில் அடியெடுத்துள்ளார்கள். தங்கள் நூல்களைப் பகிர்ந்து கொள்ளும் நூலாசிரியர்களும் மின்னூலாக்கம் செய்து வழங்கும் ஃப்ரீடமில்இபுக்ஸ்.காம் குழுவினரின் தன்னார்வத் தொண்டும் காலத்தால் நிலைத்து நிற்கும். மின்னூலாக்கம், தமிழில் கணினி நூல் எழுதுதல், மென்பொருள் உருவாக்கம், அட்டைப்படம் உருவாக்கம், ஒருங்குறியாக்கம் செய்தல், ஆன்டிராய்டு செயலி உருவாக்கம், மக்கள் தொடர்பு, பயிலரங்கம் ஒருங்கிணைப்பு, திட்ட மேலாண்மை, திட்ட ஒருங்கிணைப்பு, மின்னூல் வெளியீடு, பதிப்பகப்பணி என தங்கள் திறமைக்கேற்ற பணியைத் தேர்ந்தெடுத்து தன்னார்வப் பணி செய்துவரும் இக்குழுவிலுள்ள 15 உறுப்பினர்களின் பணியும், அவர்களது பங்களிப்பும், வசிப்பிடம் பற்றிய தகவலும் கீழே அகர வரிசையில் கொடுக்கப்பட்டுள்ளது. ஃப்ரீடமில்இபுக்ஸ்.காம் குழுவினர்: - அ. இரவிசங்கர் – புதுக்கோட்டை (மேலாண்மை, திட்ட ஒருங்கிணைப்பு) - அன்வர் – சென்னை (மக்கள் தொடர்பு, பயிலரங்கம் ஒருங்கிணைப்பு) - இராஜேஸ்வரி – ஆஸ்திரேலியா (மின்னூலாக்கம்) - கலீல் ஜாகீர் – விழுப்புரம் (ஆன்டிராய்டு செயலி உருவாக்கம்) - கிஷோர் – சிங்கப்பூர் (மென்பொருள் உருவாக்கம்) - சிவமுருகன் பெருமாள் – அமெரிக்கா (மின்னூலாக்கம்) - த.சீனிவாசன் – சென்னை (மின்னூல் வெளியீடு, பதிப்பகத்தார்) - நித்யா – சென்னை (மின்னூலாக்கம், தமிழில் கணினி நூல் எழுதுதல்) - பிரியா – மும்பை (மின்னூலாக்கம்) - ப்ரியமுடன் வசந்த் – அரேபியா (அட்டைப்படம் உருவாக்கம்) - மனோஜ் குமார் – கோவை (அட்டைப்படம் உருவாக்கம்) - மு. சிவலிங்கம் – தமிழ்நாடு (ஒருங்குறியாக்கம் செய்தல்) - லெனின் குருசாமி – காரைக்குடி (அட்டைப்படம் உருவாக்கம்) - ஜெகதீஸ்வரன் – சென்னை (அட்டைப்படம் உருவாக்கம்) - ஜெயேந்திரன் சுப்பிரமணியம் – பூனே (மின்னூலாக்கம்) தன்னார்வலர்களாகச் செயல்படுகின்ற இக்குழுவினரின் நோக்கம், தமிழில் நிறைய மின்புத்தகங்களை உருவாக்குவதும், அவற்றை இலவசமாகப் பயனர்களுக்கு வழங்குவதுமே ஆகும். மின்னூல் வெளியீட்டை அச்சு நூல் வெளியீடு அளவுக்குப் பெருமிதத்துக்கும் பொதுமக்கள் ஏற்புக்கும் உரிய ஒன்றாக மாற்றி வரும் இவர்களது பணியின் பயனாக வெளியிட்ட ஒரே நாளில் ஆயிரக்கணக்கில் தரவிறக்கங்கள், ஏராளமான பின்னூட்டங்களைப் பெற்ற நூல்களையும், பல்லாயிரக் கணக்கான வாசகர்களையும் பெற்றிருப்பது இவர்களது உழைப்பின் சிறப்பு. மின்னூல்களைப் படிக்க வசதியான கையடக்கமான கருவிகள் பலவும் சந்தையில் சிறந்த தொழில் நுட்பத்துடனும், குறைந்த விலையிலும் கிடைக்கத் துவங்கிய காரணத்தினால் பலரும் அவற்றைப் பயன்படுத்தத் துவங்கியுள்ளனர். ஆங்கில மொழி வாசகர்களுக்கு எண்ணிறைந்த மின்னூல்கள் இலவசமாகவும் கிடைத்து வருகின்றன. தமிழிலும் மதுரைத்திட்டம், தமிழ் மரபு அறக்கட்டளை போன்ற தன்னார்வக் குழுக்களும், இணைய ஆவணகம், கூகுள் புத்தகங்கள், திறந்த நூலகம், திறந்த வாசிப்பகம் போன்ற நிறுவனங்களும், தமிழ் இணையக் கல்விக்கழகம் போன்ற அரசு நிறுவனங்களும் தமிழ் மின்னூல்களை வாசகர்களிடம் கொண்டு சேர்க்கும் பணியை முன்னெடுத்துள்ளன என்றாலும் இவையாவும் காப்புரிமை காலம் முடிந்த பல பழமையான நூல்களையே சட்ட சிக்கல்கள் இன்றி செய்யும் பணியை மேற்கொண்டுவருகின்றன. ஃப்ரீடமில்இபுக்ஸ்.காம் குழுவினர் இவர்களில் இருந்து வேறுபட்டு தற்கால எழுத்தாளர்களையும், இணையம் வழி வலைப்பூக்களில் எழுதிவரும் எழுத்தாளர்களின் படைப்புகளை காப்புரிமையற்ற இலவச மின்னூல்களாகத் தமிழ் மக்களிடம் கொண்டு சேர்க்கும் பணியில் இரண்டாண்டுகளாக ஈடுபட்டு வருகின்றனர். இவர்களது முயற்சியால் தமிழில் சமீபத்திய புத்தகங்களெல்லாம் நமக்கு மின்னூல்களாகக் கிடைக்கப்பெற்றுள்ளோம். கிரியேட்டிவ் காமன்ஸ் எனும் உரிமத்தின் கீழ் நூல்கள் வெளியிடப்படுவதால் மூல ஆசிரியருக்கான உரிமைகளும் சட்டரீதியாகப் பாதுகாக்கப்படுகின்றன. தற்போது மக்கள் அதிக அளவில் மின்னூல்களைப் படிக்க வசதியான கருவிகள் பயன்படுத்துவதால் எழுத்தாளர்களுக்கும் அவர்களை நெருங்குவதற்கும் இது ஒரு நல்ல வாய்ப்பாக அமைந்துள்ளது. இக்குழுவினருடன் ஒருங்கிணைந்து பணியாற்றிய நூலாசிரியர் சிலரது புகழுரைகள் சில … சிறப்பானசேவை. பாராட்டுகள். என் நான்கு நூல்களில் வேதமும் சைவமும் என்ற நூல் மட்டும் ஒரு லட்சம் தடவைகளுக்கு மேல் தரவிறக்கம் செய்யப்பட்டதாகப் புள்ளிவிவரங்கள் கூறுகின்றன. அதில் பத்து சதவீதத்தினராவது படித்திருப்பார்கள் என நினைக்கிறேன். இதே நூல் அச்சடிக்கப்பட்ட புத்தகமாக சந்தைப்படுத்தப் பட்டபோது ஐந்து ஆண்டுகளில் 1400 பிரதிகளுக்கு மேல் ஓடவில்லை. உங்கள் சேவை மூலம் இது மிக அதிகமான மக்களைச் சென்றடைந்தது பற்றி எழுத்தாளன் என்ற முறையில் மிக மகிழ்கிறேன். – கோதண்டராமன் ஒரே மாதத்தில் என் மின்னூல் வெளியாக, மகிழ்ச்சி பொங்கியது. இப்போது எனது பல சிறுகதைத்தொகுப்புகளையும், நாவல்களையும் நீங்கள் வெளியிட்டுள்ளீர்கள். இந்த இரண்டு ஆண்டுகளில் ஒரே ஒரு வாசகர் மட்டும் கானடா நாட்டிலிருந்து என்னைப் பாராட்டி, மின்னஞ்சலில் தொடர்பு கொண்டிருக்கிறார். உற்சாகமாக இருந்தது — நம் எழுத்து உலகின் பல பாகங்களுக்கும் பரவுகிறதே என்று. – நிர்மலா ராகவன் ஒரு சிலரால் மட்டுமே எவரும் நினைத்துப் பார்க்காத சில புதிய முயற்சிகளை யோசித்து அதனைப் பிடிவாதமான முயற்சிகளின் மூலம் நிலைநிறுத்தி தன்னை மிகச் சிறந்த ஆளுமையாகக் காட்டிக் கொள்கிறார்கள். அதுவும் தன் சுய வளர்ச்சிக்கு, வருமானத்திற்கு எவ்வித பலனும் இல்லாமல் பொதுநலம் சார்ந்து இருப்பது என்பது மிகவும் அரிது. தன் நேரம், பல சமயம் முதலீடு செய்ய வேண்டிய கட்டாயம் போன்ற அழுத்தங்கள் இருந்தாலும் இதே நோக்கத்தில் ஒரு குழுவாக அமைந்து ஒத்த கருத்தோடு செயல்படுவது என்பது தற்போதைய சூழ்நிலையில் ஆச்சரியமான நிகழ்வே. அப்படியொரு ஆச்சரியத்தைத் தந்த தளம் தான் freetamilebooks.com – ஜோதிஜி திருப்பூர் அறிவியல், ஆன்மிகம், ஆளுமைகள், கட்டுரைகள், கவிதைகள், சிறுகதைகள், நகைச்சுவை, நுட்பம், புதினங்கள், வரலாறு நூல் வகைகள் என்ற பல்வகை நூல்களையும் வெளியிடும் இக்குழுவின் ஒருங்கிணைப்பாளர் திரு. த. சீனிவாசன் அவர்கள், “ஆங்கிலத்தில் கிடைக்கும் அறிவுச் செல்வங்கள் யாவும் துறைசார் வல்லுநர்களால் மட்டுமே எழுதப்படுவது அல்ல. தம் அறிவைப் பகிர்ந்து கொள்ள விரும்பும் சாமானியர்களால் மட்டுமே ஆங்கிலத்தில் எல்லா அறிவுகளும் கிடைக்கின்றன. எனவே, தமது புலமை, திறமை பற்றி ஐயம் கொள்ளாமல், நமக்குத் தெரிந்ததை, தெரிந்த வரையில் தமிழில் பகிரலாமே. இலக்கியம், சினிமா, அரசியல் பற்றி எழுதுவோருக்கு இருக்கும் அதே ஆர்வமுடன் பிறதுறைகளிலும் எழுதத் தொடங்கினால் , தமிழ்த்தாயின் ஆயுள் கூடும்” என்ற ஊக்க மொழிகளைத் தமிழ் எழுத்தாளர்கள் முன் வைக்கிறார். தன்னார்வப் பணி மூலம் தமிழ்த் தொண்டாற்றி தமிழுக்கும், தமிழ் வாசகர்களுக்கும், தமிழ் எழுத்தாளர்களுக்கும் அரும்பணி ஆற்றிவரும் ஃப்ரீடமில்இபுக்ஸ்.காம் குழுவினருக்கு பாராட்டுகளும், அவர்கள் மேலும் பல வெற்றி எல்லைகளை மின்பதிப்புத் துறையில் அடைய வாழ்த்துகளும். August 3, 2015 மீனாட்சி பாலகணேஷ் [] தனது இலக்கியப்படைப்புகள் மூலம் வாசகர்களைத் தொடர்ந்து மகிழ்வித்துவருபவர் திருமதி மீனாட்சி பாலகணேஷ். இந்திய இலக்கியங்களையும் அதில் வரும் காதலர்களையும் அறிமுகப்படுத்தி, இலக்கிய நயம் பாராட்டுதலையும், அக்காதலர்களின் காதலின் மேன்மையையும் ஒருங்கே வழங்கிவரும் “காதலின் பொன்வீதியில்” (http://tinyurl.com/kadhalin-ponveethiyil) என்ற கட்டுரைத்தொடர் அவர் படைப்புகளில் சிறப்பான ஒரு கட்டுரைத்தொடர். அறிவியல் ஆய்வாளராகப் பணியாற்றிய மீனாட்சி பாலகணேஷ் அவர்கள், பணி ஓய்விற்குப் பிறகு தனது நெடுநாளையக் கனவான தமிழ் கற்பதில் ஆர்வம் கொண்டு தமிழில் முனைவர் பட்ட ஆய்வினை மேற்கொள்ளத் துவங்கியுள்ளார். தற்பொழுது தமிழ் இலக்கியக் கட்டுரைகளைப் பல இணையதளங்களிலும் எழுதி வருகிறார். இவரது பாடுதும் காண் அம்மானை, குழல்வாய் மொழியாள் கொண்ட ஊடல், திருநடனம் ஆடினது எப்படியோ, கோபுலுவின் ஏகலைவி, காதலின் பொன்வீதியில் ஆகிய கட்டுரைகள் வல்லமை இதழில் வெளிவந்துள்ளன. ‘காதலின் பொன்வீதியில்’ தொடரில் வாசவதத்தையும் உதயணனும் கொண்ட காதலை விவரித்து, “உதயணகுமார காவியம்” நூல் வழங்கும் பாடல்களின் இலக்கியநயத்தோடு இணைத்து வழங்கியுள்ளவிதம் சிறப்பானது. காதலின் பொன்வீதியில் என்ற தொடரை கீழ்வரும் அறிமுகத்துடன் தொடங்கினார் மீனாட்சி பாலகணேஷ் … காதல், காதல், காதல் இன்றேல் சாதல் சாதல் சாதல் – ( குயில் பாட்டு) என்றான் பாரதி, இதனை ஏன் இவ்வாறு கூறினான் என நான் பலமுறை யோசித்ததுண்டு. காதல் எனில் அன்பு, பக்தி, விருப்பம், ஆவல், வேட்கை, காமம் எனவெல்லாம் பொருள் கொள்ளலாம். இங்கு நாம் பார்க்கப் போவது ஒரு ஆணுக்கும் ஒரு பெண்ணுக்கும் இடையிலான அன்பு அல்லது காதல் என்பதனைப் பற்றித் தான். ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையிலான காதல் உணர்வை இயற்கை படைத்ததற்குக் காரணம் ஒரு இனம் அழிந்து விடாமல் தொடர்ந்து வளர ஏதுவாக இருப்பதற்கும், அதற்கான முதல் படியாக இருபாலரிடையும் அன்பு செழித்து வளர்வதற்காகவும்தான் எனலாம். ஆகவேதான் காதல் போயின் எல்லாம் போயிற்று, சாதல் ஒன்றே எஞ்சி நிற்பது என்றானோ பாரதி! இத்தகைய காதல் உணர்வு நூதனமானது. சிறிது சிந்தித்துப் பார்த்தால் இத்தனைப் புலவர்கள், எழுத்தாளர்கள் ஆகியோர் காதலைப் பற்றியே விதம் விதமாக ஏன் எழுதிக் குவித்துள்ளனர் என ஆராயலாம்! காதல் சம்பந்தமான உணர்வுகள் மனித குலத்துக்கு மட்டுமே உரிமையானதா என அறுதியிட்டுக் கூற இயலவில்லை. இக்கட்டுரையின் நோக்கமும் அதுவல்ல. காதல் சம்பந்தப்பட்ட அழகிய மென்மையான உணர்வுகள் பற்றி கற்ப கோடி காலங்களாக இருந்து வரும் இனிய நயங்களைப் பகிர்ந்து கொள்வதுதான் இதன் நோக்கம். இந்தியத் தொன்மமாகிய இராமாயணக்கதையில் வரும் காதலர்களான இராமன் சீதையின் காதலைக் குறித்துக் கூறி, கம்பராமாயணத்தில் கம்பரின் வரிகளிலும் அக்காதலின் தன்மையை விவரிக்கிறார். ‘அண்ணலும் நோக்கி அவளும் நோக்கிய’ பிறகு, இராமனின் வடிவழகை, ஆண்மையின் கம்பீரத்தை, காதலின் கருணை நோக்கினை மீண்டும் கண்டு களிக்கச் சீதையின் உள்ளம் விழைகின்றது. இயலாமையினால் கடலெனக் குமுறிக் கொந்தளிக்கின்றது. விண்ணுளே எழுந்த மேகம் மார்பின் நூலின் மின்னொடு இம் மண்ணுளே இழிந்தது என்ன வந்து போன மைந்தனார் எண்ணுளே இருந்த போதும் யாவரென்று தேர்கிலேன் கண்ணுளே இருந்த போதும் என்கொல் காண்கி லாதவே. “மண்ணுள் இழிந்த விண்மேகம்” என வந்த இராமனின் வடிவழகை காண ஏங்கும் சீதையின் கனிந்துருகும் காதல் உள்ளத்தை மீனாட்சி உணர்த்தும் பாணி இலக்கிய வாசகர்களை மகிழ்விக்கக்கூடியது. இத்தொடரில் தொடர்ந்து … புலவர் புகழேந்தியார் யாத்த ‘நளவெண்பா’ வரிகளின் மூலம் நளன் – தமயந்தி காதலையும், கவியரசர் தாகூர் படைப்பில் ஒரு புதிய கோணத்தில் அவர் அறிமுகப்படுத்திய சித்ராங்கதா – அர்ஜுனன் காதலையும், அரசிளங்குமரி ருக்மிணி கிருஷ்ணனுக்கு காதல்கடிதமாக எழுதிய ஏழு ஸ்லோகங்களின் வழி ருக்மிணி – கிருஷ்ணன் காதலையும், பெரியபுராண ஆசிரியரான சேக்கிழார் பெருமான் பாடல்களின்வழி சுந்தரர் – பரவை நாச்சியார் காதலையும், ரூப்மதி இயற்றிய காதல் ரசம் சொட்டும் ஒரு தோஹாவின் மொழிபெயர்ப்பு மூலம் இளம் காதலர்கள் ரூப்மதி – பாஜ்பஹதூர் காதலையும், காளிதாசரின் குமாரசம்பவம் மற்றும் கச்சியப்ப சிவாச்சாரியார் இயற்றிய கந்தபுராணத்தின் பாடல்களின் துணைகொண்டு பார்வதி – பரமசிவன் காதலையும், கச்சியப்ப சிவாச்சாரியாரின் கந்தபுராணத்தின் வரிகளின் வழி வள்ளி – முருகன் காதலையும், உதயணகுமார காவியம் பாடல்கள் மூலம் வாசவதத்தை – உதயணன் காதலையும், காதலின் பொன்வீதியில் உலாவரும் பொழுது நாமும் படித்துப் பரவசமடைந்தோம். இலக்கியவிருந்து வழங்கும் இந்த அறிவியல் பின்புலம் கொண்ட மீனாட்சி பாலகணேஷ் அவர்கள் ஒரு பன்முகம் கொண்ட கலைஞர். சௌந்தர்யலஹரி ஸ்லோகம் (66) ஒன்றிற்கு ஓவியர் கோபுலு வரைந்த அழகிய படம் ஒன்றை அவர் போலவே வரைந்து கோபுலுவிடம் காட்டி, “எனது அருமை ஏகலைவி மீனாட்சிக்கு ஆசிகள்” என்று கோபுலுவிடம் கையொப்பமும், பாராட்டும், ஆசீர்வாதமும் பெற்றிருக்கிறார். விபஞ்ச்யா காயந்தீ விவிதமபதானம் பசுபதேஸ்- த்வயாரப்தே வக்தும் சலித சிரஸா ஸாது வசனே ததீயைர் மாதுர்யை ரபலபித தந்த்ரீ கலரவாம் நிஜாம் வீணாம் வாணீம் நிசுளயதி சோளேன நிப்ருதம் — சௌந்தர்யலஹரி ஸ்லோகம் (66) அந்த சௌந்தர்யலஹரி ஸ்லோகத்தை தமிழ்ப் பாடலாகவும் மொழிபெயர்த்துள்ளார் மீனாட்சி பாலகணேஷ். பல்லவி நாதன் பெருமைதனை நாத வீணையினில் வேதன் தலைவியவள் கீதம் இசைத்திடவே (நாதன்) அனுபல்லவி யாதும் இனிமையென யாழின் இனிமைகெட ஓதும் திருவாய்மொழி சாது என்றனையே (நாதன்) சரணம் இனிதென்று சிரமசைத்து இசைதன்னை நீ ரசிக்க இனிதன்று வீணையென இசைவாணி பரிதவிக்க இனியொன்றும் தோணாமல் உறையிட்டு மூடிவைக்க கனிவான நகைகாட்டி கருணைவெள்ளம் நீ பெருக்க (நாதன்) அத்துடன் நவராத்திரி கொலு பொம்மைகளைச் செய்வதிலும் திறமைசாலி. பலகலைகளிலும் சிறந்து விளங்கும் மீனாட்சி பாலகணேஷ் அவர்களின் நெடுநாள் கனவான தமிழில் முனைவர்பட்ட ஆராய்ச்சியை அவர் வெற்றியுடன் முடிக்கவும், தொடர்ந்து இலக்கியப்பணியாற்றவும் வாழ்த்துகளும் பாராட்டுகளும். August 10, 2015 அக்னிபு த்திரி டெஸ்ஸி தாமஸ் [] “இந்தியாவின் ஏவுகணைப் பெண்மணி“ (Missile Woman of India) எனவும், “அக்னிபுத்திரி” எனவும் அன்புடன் அழைக்கப்படும் “டாக்டர் டெஸ்ஸி தாமஸ்” அவர்கள், பணியிடத்தில் “இந்தியாவின் ஏவுகணை மனிதர்” (Missile Man of India) என்றழைக்கப்பட்ட மறைந்த மேனாள் இந்தியக் குடியரசுத் தலைவர் மேதகு அப்துல் கலாம் அவர்களைத் தனது வழிகாட்டியாக அடையும் பேறு பெற்றவர். இந்தியாவில் ஏவுகணை திட்டப்பணி ஒன்றிற்குத் தலைமை தாங்கும் முதல் பெண் அறிவியலாளர் என்ற பெருமை கொண்ட டாக்டர் டெஸ்ஸி தாமஸ் அவர்கள் பற்பல விருதுகளும், பாராட்டுகளும், கௌரவங்களும் பெற்றவர். கல்யாணி பல்கலைக் கழகமும், இந்துஸ்தான் பல்கலைக்கழகமும் (Kalyani University & Hindustan University) இவருக்குக் கௌரவ டாக்டர் பட்டங்கள் வழங்கியுள்ளன. சமீபத்தில், ஆகஸ்ட் 11, 2015 அன்று, “ஸ்ரீ பத்மாவதி மகிள விஸ்வ வித்யாலயம்” (Sri Padmavati Mahila Viswa Vidyalayam -SPMVV) இப்பல்கலைக்கழகங்களின் வரிசையில் தன்னை இணைத்துக் கொண்டு, தனது 16 வது பட்டமளிப்பு விழாவில் டாக்டர் டெஸ்ஸி தாமஸ் அவர்களுக்குக் கௌரவ டாக்டர் பட்டம் வழங்கிச் சிறப்பித்துள்ளது. இப்பட்டமளிப்பு விழாவில் சிறப்புரை ஆற்றிய அக்னிபுத்திரி, ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சிப் பணிகள் (Research and Development – R&D) ஒரு நாட்டின் முன்னேற்றத்தை அளக்க உதவும் மிக முக்கியமான அளவீடுகளில் ஒன்று எனக் குறிப்பிட்டார், மேலும்… ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சிப் பணிகளில் பெண்களின் பங்களிப்பு அதிகரிக்கப் பெண்களை ஊக்குவிக்க வேண்டும். இளைஞர்கள் எத்துறையைச் சார்ந்தவர்களாக இருப்பினும், அவர்கள் தரமான செயல்களிலும், ஆக்கபூர்வமான பணிகளிலும் ஈடுபட்டு நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் பங்கேற்க வேண்டும். இந்திய மக்களில் 60 விழுக்காட்டினர் 35 வயதிற்கும் குறைவானவர்கள் என்பதால், சிறந்த பயிற்சி பெற்ற மனிதவள மேம்பாட்டைப் பெற இந்தியாவிற்குத் திறன் இருக்கிறது. பட்டம் பெற்று பணியுலகத்தில் அடியெடுத்து வைக்கும் மாணவர்கள் தாங்கள் ஏட்டில் கற்ற கல்வியைச் செயல்படுத்த முனைவதுடன், சிறந்த நூல்களையும் படித்து ஆய்வுக் கண்ணோட்டத்துடனும் புரிதலுடனும் வாழ்க்கையை எதிர்கொள்ள வேண்டும். நாட்டு மக்களுக்குத் தரமான கல்வி வளர்ச்சியை வழங்குவதில் வினையூக்கியாகச் செயல்படும் கல்விநிறுவனங்கள் பல சவால்களை எதிர்கொள்கின்றன. தற்கால உலக நடப்புகளில் ஆசிரியர்கள் அதிகக் கவனம் செலுத்தி அறிவதுடன், அதை மாணவர்களும் அறியச் செய்து அவர்களது திறமையை உயர்த்தத் தொடர்ந்து பாடுபட்டு மாணவர்களின் முன்னேற்றத்திற்கு வழி வகுத்துக் கொடுக்க வேண்டும். இக்காலத்தில் பெண்கல்வி அதிகரித்திருந்தாலும் தொடர்ந்து அவர்களது பங்களிப்பு அறிவியல் துறைகளிலும், தொழில்நுட்பப் பணிகளிலும் குறைவாகவே இருந்து வருவதால், ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சிப் பணிகளில் பெண்களின் பங்களிப்பு அதிகரிக்கும் வண்ணம் பெண்களை ஊக்குவிக்க வேண்டும். உணர்வுசார் நுண்ணறிவுப் பயிற்சி, தொழில்நுட்ப வாய்ப்புகள், மேலாண்மை, வழிநடத்துதல், நிர்வாகத் திறன், வளாகத்தில் குழந்தை பராமரிப்பு வசதிகளை அவர்களுக்கு வழங்க எடுக்கப்படும் முயற்சிகள் பெண்களின் முன்னேற்றத்திற்குப் பெரிதும் உதவும். எதிர்காலத்தில் மாணவர்கள் எத்துறையைத் தேர்ந்தெடுத்தாலும், அதில் சிறந்து விளங்க முயலவேண்டும் என்றும் குறிப்பிட்டார். டாக்டர் டெஸ்ஸி தாமஸ் மேம்பட்ட அமைப்புகள் ஆய்வக இயக்குநர் (Director of Advanced Systems Laboratory – ASL), பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி அமைப்பில் அக்னி – 5 ஏவுகணைக்கான திட்டப்பணி இயக்குநர் (Agni-V Project Director, Defence Research & Development Organization) ஆவார். ஐம்பது வயதைக் கடந்துள்ள அக்னிபுத்திரி கேரளத்தின் ஆலப்புழையைச் சேர்ந்தவர். தும்பா ராக்கெட் ஏவுகணைகள் சோதிக்கும் தளத்துக்கு அருகில் வளர்ந்தவர். சீறிப்பாய்ந்த ராக்கெட்கள் கொடுத்த ஆர்வத்தின் காரணமாக ஏவுகணைத் தொழில்நுட்பம் பற்றிக் கற்க விரும்பி அத்துறையைத் தேர்ந்தெடுத்தவர். திருச்சூரில் உள்ள அரசுப் பொறியியல் கல்லூரியில் பொறியியல் (B.Tech) பட்டப்படிப்பை முடித்தார். புனேயில் உள்ள “போர்த்தளவாட தொழில்நுட்பக் கல்வி நிறுவனத்தில்” (Institute of Armament Technology, Pune; இந்நிறுவனம் தற்காலத்தில், உயர் தொழில்நுட்ப பாதுகாப்பு நிறுவனம் / the Defence Institute of Advanced Technology என அழைக்கப்படுகிறது) ஏவுகணைக் கல்வியில் தொழில்நுட்ப முதுநிலைப் பட்டம் (M.Tech) பெற்றார். நான் பணி புரியும் அறிவியல் தொழில்நுட்பத்துறை பாலின பேதம் (Gender Discrimination) பற்றி அறியாதது என்று பி.பி.சி. நிறுவனத்திற்கு வழங்கிய செவ்வியில் குறிப்பிட்டவர் அக்னிபுத்திரி. இந்திய விண்வெளி ஆய்வு மையத்தின் அறிவியலாளராக 1988 ஆண்டுமுதல் பணியாற்றி வரும் அக்னிபுத்திரி அக்னி-1 ஏவுகணையின் வடிவமைப்புப் பணிகளில் பங்கேற்றவர். தொடர்ந்து அக்னி-3 மற்றும் அக்னி-4 ஏவுகணைகளின் இணை திட்டப்பணி இயக்குநராகப் பணியாற்றினார். பிறகு 2009ஆம் ஆண்டு 5,000 கிமீ வீச்சுள்ள அக்னி-5 திட்டப்பணிக்குத் திட்ட இயக்குநராகப் பொறுப்பேற்று, ஏப்ரல் 2012 இல் இவரது தலைமையில் அக்னி-5 வெற்றிகரமாகச் சோதிக்கப்பட்டது. உலகில் ஏவுகணை தொழில்நுட்பப் பணியாற்றும் ஒருசிலரில் டெஸ்ஸி தாமஸ்ஸும் ஒருவர். ஆண்களின் ஆதிக்கம் நிறைந்த துறையில் தடைகளைத் தகர்த்தெறிந்து முன்னேறிய பெண்மணிக்கு டெஸ்ஸி தாமஸ் ஒரு சிறந்த எடுத்துக் காட்டு என்று முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கால் பாராட்டப்பட்டவர் அக்னிபுத்திரி. இந்தியாவைப் பாதுகாப்புத்துறையில் தன்னிறைவு பெறச் செய்த அக்னிபுத்திரிக்கு லால்பகதூர் சாஸ்திரி-தேசிய விருது வழங்கப்பட்டது. இந்தியாவின் ஏவுகணைத் திட்டம் போரைத் தவிர்த்து இந்தியாவை அமைதிப்பாதைக்கு வழிவகுக்கும் ஒரு திட்டம் என்பதும், “இந்திய ஏவுகணைகள் அமைதிக்கான ஆயுதங்கள்” (weapons of peace) என்பதும் இவர் கருத்து. வெற்றியை அடைந்த பிறகு ஒருவர் எதிர்கொள்ளும் சவால், கிடைத்த வெற்றியின் களிப்பால் பெருமையில் திளைத்துவிடாமல், வெற்றியைத் தொடர்ந்து தக்க வைத்துக் கொள்வதில்தான் இருக்கிறது என்பது அக்னி புத்திரி வழங்கும் அறிவுரை. அக்னிபுத்திரி பெற்ற விருதுகளில் குறிப்பிடத்தக்க சில: - India Today Woman Summit & Awards 2009 - Shastri Award 2012 - CNN-IBN Indian of the Year 2012 - JFW Women Achievers Award 2013 - Maharana Udai Singh Award 2013 - GR8! Women Awards 2014 - Dr. Y. Nayudamma Memorial Award – 2014 சேவையின் மறுவுருவமான அன்னை தெரசாவின் பெயரைச் சூட்டப்பட்டவர் டெஸ்ஸி தாமஸ். இந்திய பெண் அறிவியலாளர் அமைப்பு (The Indian Woman Scientists Association), “பணிபுரியும் ஏனைய பல பெண்களைப் போல இவரும் பணியின் கடமைகளையும், குடும்பப் பொறுப்பையும் கயிற்றின்மீது நடக்கும் வித்தைக்காரர் போன்று கவனமுடன் கையாண்டவர், அன்னையாகவும் அறிவியல் ஆய்வாளராகவும் பணிக்குத் தன்னை அர்ப்பணித்துக் கொண்டவர். டெஸ்ஸி தாமஸ் பெண் அறிவியலார்களுக்குச் சிறந்த முன்மாதிரியாக விளங்கி அவர்கள் இரு உலகங்களிலும் தடம் பதித்து தங்கள் கனவுகளை வெற்றிகரமாக அடையத் தூண்டுதலாக அமைந்துள்ளவர்” என்று பாராட்டியுள்ளது. பெண்கள் அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல் துறையில் ஆர்வம் கொண்டு முன்னேற முன்மாதிரியாக விளங்கும் டாக்டர் டெஸ்ஸி தாமஸ் அவர்களின் சாதனைகளுக்குப் பாராட்டுகள். August 17, 2015 இயக்குநர் நந்தினி [] ‘சிவப்புக்கல் மூக்குத்தி’ என்ற தமிழின் முதல் எண்ணிம படக்கதை புதினத்தை (Tamil’s First Digital Graphic Novel ) மின்னூலாக வெளியிட்டுள்ளவர் இயக்குநர் நந்தினி. “திருதிரு துறுதுறு” படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகத்தில் இயக்குநராக அறிமுகமாகிய நந்தினி, தமிழக திரைப்பட விளம்பரப்பட கல்வி நிலையத்தின் மாணவியும், 2003 ஆம் ஆண்டு அக்கல்வியில் தங்கப்பதக்கமும் பெற்றவர் (Gold Medalist (2003) from Film and Television Institute of Tamilnadu). இவர் மாணவராக இயக்கிய “ஓட்டம்” என்ற குறும்படத்திற்காக, சிறந்த மாணவ இயக்குநருக்கான தமிழக அரசின் விருதை, 2003 ஆண்டு தமிழக முதல்வர் மாண்புமிகு ஜெயலலிதா அவர்களிடம் இருந்து பெற்றவர். இப்பொழுது ‘மேக் பிலீவ் ப்ரொடக்ஷன்’ (Make Believe Productions – www.makebelieveonline.com) என்ற நிறுவனத்தின் இயக்குநர் மற்றும் நிர்வாக பங்குதாரராக, பல விளம்பரப் படங்கள், வணிக நிறுவனங்களின் மக்கள்தொடர்பு படங்களை இயக்கி வருகிறார். இவரது “திருதிரு துறுதுறு” படமும் இந்தியாவிலேயே முதன்முதலாக டிஜிட்டலாகத் தயாரிக்கப்பட்டு, டிஜிட்டலாகவே வெளியிடப்பட்ட படம். இந்தியா மற்றும் தமிழகத்தின் படக்கதை நூல்கள் யாவும் அயல்நாட்டுக் கதைகளின் மொழிபெயர்ப்பாகவும், சிறுவர்களுக்காகத் தயாரிக்கப்படுவதுமாகவே இருந்து வருவது வழக்கம். அப்போக்கில் இருந்து மாறுபட்டு இயக்குநர் நந்தினி அவர்கள் பெரியவர்களுக்காக கதை எழுதி, இயக்கி அதை எண்ணிம வடிவிலும் படக்கதையாக வெளியிட்டுள்ளார். இக்கதையை வெளியிட ஒன்றரை வருட உழைப்பினை இவரும் இவரது குழுவினரும் கொடுத்துள்ளனர். ‘திரைப்படமாக இல்லாமல் படக்கதையாகவா?’ ‘படக்கதைகள் படிப்பவர் அதிகம் இல்லையே,’ ‘வழக்கமான காகித நூலாகவே வெளியிடலாமே’ என்பது போன்ற ஆர்வத்தை மட்டுப்படுத்தும் பல கருத்துக்களை எதிர்கொண்ட பொழுதும் தளராது இப்படத்தை உருவாக்கியுள்ளார் நந்தினி. முதலில் திரைக்கதையாக எழுதி உருவாக்கிய கதையை படக்கதை நூலாக வெளியிடலாம் என்று வெளியிட முடிவெடுத்தவர், திரைப்படமாக வந்தால் ஆண்டுக்கு 300 படங்கள் வெளியாகும் சூழ்நிலையில் இக்கதை தனித்து தெரிய வழியின்றி, அதிகப் போட்டியை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என்று கூறியுள்ளார். கலைஞர்களின் திறமை ஊடகங்களின் கட்டுப்பாட்டிற்குள் அடங்காது. திரைப்படம், இசை, கலை, எழுத்து, எனப் பலதுறைகளிலும் ஆர்வமுள்ள கலைஞரான இவரால் எந்த ஊடகத்திலும் அவரது கற்பனையை வெளிப்படுத்த முடியும் என்று கூறும் நந்தினி, தனது எண்ணத்தில் கதை எவ்வாறு உருவாகியுள்ளது என்பதைக் கூற படக்கதையாகச் சொல்வது நல்ல வாய்ப்பை வழங்கியுள்ளதாகவும் கூறுகிறார். புதிதாகத் திருமணமான காதலர்கள் வேலையின் காரணமாக வெளியூருக்குப் பயணமாகிறார்கள். அங்கு இளம் மனைவிக்குக் கிடைக்கும் சிவப்புக்கல் மூக்குத்தியும், அதற்குப் பிறகு அவள் எதிர்கொள்ளும் மர்ம நிகழ்ச்சிகளும், கொலைகளும், அவளது மாறான நடவடிக்கைகளின் காரணத்தை பற்றியும் அவளது கணவன் துப்பறிவதுதான் சிவப்புக்கல் மூக்குத்தியின் கதை. நந்தினி வெளியிட்டுள்ள சிவப்புக்கல் மூக்குத்தி படக்கதை புதினத்தைப் படிக்க விரும்புபவர், “எம் பி காமிக் ஸ்டூடியோ” (http://www.mbcomicstudio.com/#buy-skm) இணையதளத்தின் வழியாக, இந்திய விலை ₹ 249/அயல்நாட்டினர் விலை $ 3.99 க்கு அதை வாங்கலாம். இந்தப் படக்கதை புதினம் தமிழிலும் ஆங்கிலத்திலும் (‘Girl with a Red Nose Ring’) கிடைக்கிறது. மேலும் பிற மொழிகளிலும் வெளியிடத் திட்டமும் வைத்துள்ளார் நந்தினி. புதிய கதைகள், காதல், திகில், மர்மப்படங்கள் எனப் பல வகைப் பின்னணிகள் கொண்ட கதைகள், அத்துடன் அவற்றை எண்ணிம படக்கதைகளாக வெளியிடும் முயற்சிகளுக்கு வருங்காலத்தில் நல்ல வாய்ப்பிருக்கிறது என்றும், இம்முயற்சியில் எழுத்தையும், காட்சியையும் அழகியலோடு ஒன்றிணைக்க முடிவதால் தமிழ்ப் படங்களுக்கும் தமிழ்ப்படக் கதைகளுக்குமான இடைவெளி குறையும். இதனால் நல்ல படங்களை படக்கதைகளாகவும், நல்ல படக்கதைகளை திரைப்படங்களாகவும் எடுக்க முடியும் என்று கூறும் நந்தினியின் புதுமையான முயற்சிக்குப் பாராட்டுகள். August 24, 2015 அன்பு ஜெயா [] சிட்னி ஆஸ்திரேலியாவில் வசிக்கும் திருவாளர் அன்பு ஜெயா அவர்கள் மருந்தாக்கியல் துறையில் முப்பத்தைந்து ஆண்டுகளுக்கும் மேலாகப் பணியாற்றியவராயினும் தமிழின்பால் ஆர்வம் மிக்கவர். உயரதிகாரியாகப் பணியாற்றிய இவர் தனது பணி ஓய்விற்குப் பிறகு தான் பங்கேற்ற தமிழ் சார்ந்த தன்னார்வப்பணிகளில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டவர். அந்த வரிசையில், சென்ற வாரம் (ஆகஸ்ட், 24 அன்று)மதுரை உலக தமிழ்ச்சங்கத்தில் நடந்த கலந்துரையாடலில் பங்கேற்று, ஆஸ்திரேலியாவில் தமிழ் வளர்ச்சிப் பணிகள் பற்றிய சிறப்புரையாற்றினார். அயல்நாட்டில் தமிழ் வளர்க்கும் அரும்பணியை ஆற்றிவரும் திரு. அன்பு ஜெயா சென்னையைச் சேர்ந்தவர். முனைவர் அன்பு ஜெயா அவர்கள், மதுரை மருத்துவக் கல்லூரியிலும், ஆஸ்திரேலியாவின் நியூ சவுத் வேல்ஸ் பல்கலைக்கழகத்திலும் உயர்கல்வி பயின்றவர். இரண்டாம் மொழி கற்பித்தலில் பயிற்சி பெற்று இருபது ஆண்டுகளுக்கும் மேலாக சிட்னி பாலர் மலர் தமிழ்ப்பள்ளிகளில் தன்னார்வலராகவும், அதன் மக்கள்தொடர்பு அதிகாரியாகவும், ஹோல்ஸ்வொர்த்தி கிளை தமிழ்ப்பள்ளியின் முதல்வராகவும் எனத் தொடர்ந்து பற்பல பொறுப்புகளை ஏற்றுத் தமிழ்ச்சேவை செய்து வருபவர். தற்பொழுது பாலர் மலர் தமிழ்ப்பள்ளி ஆலோசகராகவும், கடந்த பதினைந்து ஆண்டுகளாக ஆஸ்திரேலியாவின் நியூ சவுத்வேல்ஸ் மாநிலத் தமிழ்ப்பள்ளிகள் கூட்டமைப்பின் புத்தகக் குழுவில் பங்கேற்று, பாடப்புத்தகங்கள் வெளியிடும் பணியிலும் ஈடுபட்டுள்ளார். “தமிழ் ஆஸ்திரேலியன்” மாதஇதழின் (http://www.tamilaustralian.com.au இணையாசிரியரான அன்பு ஜெயா அவர்கள், ஆஸ்திரேலியாவிலும், புலம்பெயர்ந்த தமிழர் வாழும் அயல்நாடுகளிலும் தமிழ்ப்பள்ளி ஆசிரியர்களுக்குப் பயிலரங்குகள் நடத்தி வருகிறார். தமிழை இரண்டாம் பாடமாகக் கற்கும் மாணவர்களுக்கு உதவியாகத் தனது இணையதளத்தில் (http://www.anbujaya.com பல பயிற்சிகளை தொகுத்து அளித்துள்ளார். தமிழ் பயிற்றுவிக்கும் அயலக பெற்றோர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் இத்தளம் பெரிதும் உதவும் வகையில் அமைந்துள்ளது. வாரம் ஓரிரு மணிநேரங்களே தமிழ் கற்கும் சூழ்நிலையில் வளர்பவர் அயலகத்தில் வளரும் தமிழ்க்குடும்பங்களின் பிள்ளைகள். புலம்பெயர்ந்த நாடுகளில் வாழும் சிறுவர்களுக்குத் தமிழை இரண்டாம் மொழியாகக் கற்பிக்கும் பொழுது, தாயகத்தில் கற்பிக்கும் முறையில் இருந்து சற்று வேறுபட்ட உத்திகளைப் பயன்படுத்தவேண்டியத் தேவையுள்ளது. இத்தேவை குறித்தும், அதற்கு உதவும் உத்திகள் குறித்தும் “சிறார்க்குத் தமிழ் கற்பிக்கப் பயன்படும் உத்திகள்” என்று அன்பு ஜெயா விவரிக்கும் கட்டுரையும் இத்தளத்தில் இடம் பெறுகிறது. இக்கட்டுரையை அவர் மலேசியாவில் 2013 ஆம் ஆண்டு நடந்த 10 ஆவது உலகத்தமிழாசிரியர் மாநாட்டில் சமர்ப்பித்துள்ளார். மறு ஆண்டு, கோவையில் நடந்த “தாயகம் கடந்த தமிழ் 2014″ எழுத்தாளர் மாநாட்டில், “ஆஸ்திரேலியாவில் தமிழ்க்கல்வி” என்ற தலைப்பில் ஒரு கட்டுரையையும் சமர்ப்பித்தார். இந்த ஆண்டு, மதுரை உலகத் தமிழ்ச் சங்கத்தில் நடந்த கலந்துரையாடலில் பங்கேற்ற ஆஸ்திரேலியா பாலர் மலர் தமிழ்ப்பள்ளி ஆலோசகரான திரு. அன்பு ஜெயா அவர்கள், “ஆஸ்திரேலியாவில் தமிழர்களின் வளர்ச்சியும் தமிழ்மொழியின் வளர்ச்சியும்” என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார். ஆஸ்திரேலியாவில்தான் முதன்முதலில் தமிழ் வளர்ச்சிக்கான பன்மொழிக்கொள்கை கொண்டுவரப்பட்டது என்றும், தாய் மொழியைத் தவிர வேற்று மொழியொன்றை அறிந்துகொள்ள இத்திட்டம் வழிவகுக்கிறது என்றும் கூறினார். அந்தப் பாடத்திட்டத்திற்கேற்ப ஏழாம் வகுப்பு நூல்கள் உருவாக்கப்பட்டுவிட்டன என்றும், அடுத்த கட்டமாக எட்டாம் வகுப்புக்கான நூல்கள் உருவாகும் பணி தொடர உள்ளது என்றும் கூறினார். மேலும், திருக்குறள் நிகழ்ச்சிகள், இலக்கிய நிகழ்ச்சிகள் ஆகியவை ஆஸ்திரேலியாவில் நடத்தப்பட்டு மாணவர்களுக்குத் தமிழின் சிறப்பு உணர்த்தப்படுகிறது என்றும், மதுரை உலகத் தமிழ்ச்சங்கத்தின் ஆலோசனைகளும் பெறப்பட்டு ஆஸ்திரேலியாவின் தமிழ்வளர்சிப் பணி தொடரும் எனவும் கலந்துரையாடலில் ஆஸ்திரேலியாவில் தற்பொழுது மேற்கொள்ளப்படும் தமிழ் வளர்ச்சிப்பணிகள் பற்றியத் தகவல்களைப் பகிர்ந்து கொண்டார். ஆஸ்திரேலியாவில் சிட்னி, மெல்பேர்ன், அடிலெய்டு போன்ற நகரங்களில் தமிழ் அமைப்புகள், தமிழ்ச் சங்கங்கள் செயல்பட்டு வருகின்றன. அங்கு 24 மணி நேரமும் ஒலிபரப்பாகும் தமிழ் வானொலிகள் உள்ளன. பன்மொழிச் சூழலில் வாழும் தமிழ்க் குழந்தைகள் தமிழ்மொழியில் சொல்வளம் பெற இத்தகைய வானொலிகள் பெரும் பங்காற்றுகின்றன. தமிழ் ஓசை, கலப்பை, தென்றல், மெல்லினம் போன்ற அச்சு இதழ்களும் ஆஸ்திரேலியாவில் வெளி வருகின்றன. தமிழ்க் கல்வியினைப் பொறுத்தவரை தமிழ் அமைப்புகள் சில சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் தமிழைக் கற்பிக்கின்றன போன்ற தகவல்களையும் வழங்கி ஆஸ்திரேலிய தமிழ்வளர்ச்சியின் நிலையை எடுத்துரைத்தார். புலம் பெயர்ந்த தமிழ்க் குடும்பங்களின் தமிழ்க்கல்வி வளர்ச்சிக்காகத் தொடர்ந்து கடந்த கால்நூற்றாண்டாகத் தன்னார்வப் பணியாற்றிவரும் அன்பு ஜெயா அவர்களின் பணிகள் சிறப்புறவும், அதனால் அயலகத் தமிழர்கள் பயன் பெறவும் வாழ்த்துக்கள். August 31, 2015 பி. சங்கர் மகாதேவன் [] சென்னை தியாகராய நகரில் உள்ள “உதவும் உள்ளங்கள்” அமைப்பு கடந்த வாரம் (ஆகஸ்ட் – 30) ஏழை எளிய குடும்பப் பெண்களுக்கு தையல், கணினி மற்றும் அழகுக்கலை ஆகியவற்றில் தொழிற்பயிற்சி அளித்து, அதற்கான சான்றிதழ்களை அவர்களுக்கு வழங்கி, அதிகம் படித்திராத எளிய குடும்பப் பெண்களுக்கு வாழ்வாதாரத்திற்கு உதவியுள்ளது. இத்தகைய சமூகப்பணிகளுக்குத் தூண்டுகோலாய் இருந்து வந்துள்ள “உதவும் உள்ளங்கள்” அமைப்பின் நிறுவனரும் மற்றும் அமைப்பின் அறங்காவலருமான திரு. பி. சங்கர் மகாதேவன் அவர்களின் சமூகப்பணி பாராட்டிற்குரியது. இதுவரை நான்கிற்கும் மேலான தொழிற்பயிற்சி நிலையங்கள், பத்திற்கும் மேலான பள்ளி மாணவர்களுக்கான நலத்திட்டங்கள், பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்களுக்குக் கல்வி உதவி, பதினைந்தாயிரத்திற்கும் மேற்பட்ட புற்றுநோய் நோயாளிகளுக்கு மருத்துவ உதவி என சமூகத் தொண்டு செய்துள்ளது “உதவும் உள்ளங்கள்” நிறுவனம். இந்த அமைப்பின் குழுவினர்கள், தன்னார்வலர்கள் பலரை ஒருங்கிணைத்தும், நன்கொடைகள் சேகரித்தும் தேவையுள்ளோர்களைத் தேடிக் கண்டறிந்து அவர்களுக்கு உதவி செய்து வருகின்றனர். “உதவும் உள்ளங்கள்” சேவை நிறுவனத்தின் நிறுவனரான திரு. பி.சங்கர் மகாதேவன் அவர்கள் முன்னாள் வங்கி ஊழியர். இவர் 2000 ஆம் ஆண்டு உதவும் உள்ளங்கள் அமைப்பைத் தோற்றுவித்து தமது குழுவினர் துணையுடன் சமூகப்பணி செய்து வருகிறார். சமீபத்தில் வங்கிப்பணியில் இருந்து தன்னை விடுவித்துக் கொண்டு, சமூகப்பணிக்கு முழுநேரத்தையும் செலவிட்டு வருகிறார். தற்பொழுது நானூற்றுக்கும் அதிகமான தன்னார்வத் தொண்டர்களை ஒருங்கிணைத்து, உதவும் உள்ளங்கள் அமைப்பு சமூகப்பணியாற்றி வருகிறது. உதவும் உள்ளங்களின் சேவைகள் பொதுவாகக் கல்வி உதவி, மருத்துவ உதவி, வாழ்வாதார தொழிற்பயிற்சி அளித்தல் ஆகியவற்றில் அடங்குகிறது. சென்னை அடையாறு புற்றுநோய் மருத்துவ மையத்துடனும், பாளையங்கோட்டையில் உள்ள கிருஷ்ணா மருத்துவமனையுடன் இணைந்து திருநெல்வேலியில் புற்றுநோய்க்கான மருத்துவப்பணிகளிலும் உதவும் உள்ளங்கள் அமைப்பு பங்காற்றி வருகிறது. இதனால் புற்றுநோயினால் பாதிக்கப்பட்ட பதினாறாராயிரம் பேர் ஆரம்பக்கட்ட நிலையிலேயே நோய் கண்டறியப்பட்டு மருத்துவம் பெற்று வருகிறார்கள். தொழுநோயாளிகளுக்கு உதவித்தொகை என்று மருத்துவ உதவிகளும் உதவும் உள்ளங்கள் அமைப்பால் வழங்கப்பட்டு வருகிறது. சுனாமியில் பாழடைந்த பள்ளிகளுக்குக் கட்டிட சீரமைப்பு உதவி, கழிப்பறையற்ற பள்ளிகள் ஒருசிலவற்றிற்குக் கழிப்பறை கட்டும் உதவி, மாணவர்களுக்கு மேற்கல்வி பயில உதவித்தொகையளித்தல், தேவையான குழந்தைகளுக்கு காலையுணவு, அரசுப்பள்ளி மாணவர்களுக்கு ஆங்கிலம், பள்ளிப்பாடங்களில் பயிற்சி, நேர்முகத் தேர்வு பயிற்சி வகுப்புகள், அவர்கள் வேலைவாய்ப்புக்கு உதவி, பெண்களுக்குக் கணினி, தையல், அழகுக்கலை ஆகியவற்றில் தொழிற்பயிற்சி எனக் கல்வி மற்றும் தொழிற்பயிற்சி உதவிகளும், உதவும் உள்ளங்கள் அமைப்பால் வழங்கப்பட்டு வருகிறது. இத்தகைய சமூகப்பணிகளுடன், 1998 ஆம் ஆண்டுமுதல், ஆண்டுதோறும் ஆயிரக்கணக்கான ஆதரவற்ற குழந்தைகளுக்கு “ஆனந்த தீபாவளி’ நிகழ்ச்சி ஒன்றை நடத்தி, சென்னையில் உள்ள 18 இல்லங்களைச் சேர்ந்த ஆதரவற்ற குழந்தைகளுக்கு புத்தாடை, பட்டாசு ஆகியவையும் பரிசாக வழங்குவதை உதவும் உள்ளங்கள் அமைப்பு செய்து வருகிறது. இந்திய செஞ்சிலுவை அமைப்பு, இரத்த வங்கி, மாற்றுத்திறனாளிகள் நல அமைப்பு ஆகியவற்றிலும் உறுப்பினராகத் தொடர்ந்து பங்களித்து வரும் திரு. பி.சங்கர் மகாதேவன் அவர்கள், துன்பத்தில் உழலும், உதவும் தேவைப்படுவோருக்கு உதவ வேண்டும் என்ற எளியக் கொள்கையின் அடிப்படையில் உதவும் உள்ளங்கள் அமைப்பைத் துவக்கி, அதன் மூலம் இன்று பல்லாயிரம் மாணவர்களும், பெண்களும், நோயாளிகளும் பலன்பெறும் வண்ணம் சேவை அமைப்பினை வழி நடத்திச் செல்கிறார். அவரது சமூகப்பணி போற்றப்பட வேண்டிய நற்செயல். September 7, 2015 மணற்கேணி திரு. ரவிக்குமார் [] செப்டெம்பர், 2015 இன் ஆசிரியர் தின விழாவையொட்டி, தமிழ்நாட்டில் வெளிவரும் சிறந்த தமிழாய்விதழ்களில் ஒன்றான “மணற்கேணி ஆய்விதழ்” சார்பாக “நிகரி விருது” அளித்து, வகுப்பறையில் சமத்துவத்தை ஊக்குவிக்கும் பணியில் தம்மை ஈடுபடுத்திக் கொண்ட சிறந்த ஆசிரியர்களாக, பாரதிதாசன் பல்கலைக்கழக மகளிரியல் துறைத் தலைவர் பேராசிரியர் மணிமேகலை அவர்களையும், சமயபுரம் எஸ்.ஆர்.வி மேனிலைப்பள்ளியின் தலைமைஆசிரியர் துளசிதாசன் அவர்களையும் இனங்கண்டு பாராட்டியுள்ளார் திரு. ரவிக்குமார் அவர்கள். சமத்துவ ஆசிரியர் விருதுகளை வழங்கிய தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் க. பாஸ்கரன், “சமுதாய அக்கறையை மாணவர்களிடம் விதைப்பவரே உண்மையான ஆசிரியர்” என்று பாராட்டினார். சமுதாயத்தில் முன்னேற்றத்திற்கான மாறுதல்களைக் கொண்டுவர விரும்பினால் அதை இளைஞர்களிடம் இருந்தே துவக்க வேண்டும் எனச் சொன்ன அறிஞர்கள் பலர். “இளைய பாரதத்தினாய் வா வா வா” என்று எழுச்சியூட்டிப் பாடினார் பாரதி, அக்கொள்கையைக் கொண்ட மனிதருள் மாணிக்கம் ஜவஹர்லால் நேருவும் இக்கருத்தைக் குறிப்பிட்டே குழந்தைகளிடம் அன்பு செலுத்தினார், சிறுவர்களுக்கு கல்விக் கண் திறந்து இதனை முயற்சித்தார் கர்மவீரர் காமராசர், இளைஞர்களை கனவுகாணச் சொல்லி ஊக்குவித்தார் அப்துல் கலாம். அறிஞர் அனைவரும் முதிர்ந்த மூங்கில்களைக் காட்டிலும், விளையும் பச்சை மூங்கில்களை வளைப்பது சுலபம் என்பதை அறிந்து தங்கள் அறிவுரைகளை இளைஞர் குழுவிடம் எடுத்துச் சென்றனர். அரசியல் களத்தில் அரசாங்கத்தை எதிர்த்துப் போராடும் ஒரு அரசியல்வாதியைக் காட்டிலும், சமூகக் கொடுமைகளை எதிர்த்துப் போராடும் ஒரு சமூக சீர்திருத்தவாதியே துணிச்சல் மிக்கவர் என்றார் அம்பேத்கர். இந்நோக்கில் பள்ளி ஆசிரியர் பணி எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தது என்று உணர்ந்து, வகுப்பறையில் சமத்துவத்தை ஊக்குவிக்கும் பணியில் தம்மை ஈடுபடுத்திக் கொண்ட சிறந்த ஆசிரியர்களைப் பாராட்டி ஊக்குவித்து ஆசிரியர் தின நாளில் அவர்களைக் கௌரவித்து மணற்கேணி ஆய்விதழ் சார்பாக “நிகரி விருது” அளித்து வரும், மணற்கேணி இதழ் மற்றும் அதன் நிறுவனருமான திரு. ரவிக்குமார் அவர்களின் பணி பாராட்டிற்குரியது. விருதின் நோக்கம் குறித்து எழுத்தாளர் ரவிக்குமார் விழாவில் ஆற்றிய உரையில், “மதிப்பெண் மட்டுமே நோக்கமாகக் கொண்டு சென்று கொண்டிருக்கும் இன்றைய கல்வி முறையில், பெண்கள், சிறுபான்மையினர், தலித்துகள் என்ற எந்தப் பாகுபாடுமின்றி வகுப்பறையைச் சமத்துவமாக நடத்துகிற ஆசிரியர்களின் தேவை அதிகமாக இருக்கிறது. இதற்கான பிரக்ஞையுடன் கூடிய ஆசிரியர்களை உருவாக்க வேண்டும்,” என்றார். இனி தொடர்வது, தமிழகம் நன்கறிந்த “மணற்கேணி திரு. ரவிக்குமார்” பற்றியும் அவரது “மணற்கேணி ஆய்விதழ்” பற்றியும், அதன் “நிகரி விருது” பற்றியும் ஒரு சிறு அறிமுகம். எழுத்தாளர் திரு. ரவிக்குமார் ஒரு வழக்கறிஞர், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் பொதுச் செயலாளர். மேலும், சமூகப் பணியாளரும், மணற்கேணி பதிப்பகத்தின் நிறுவனரும், மணற்கேணி தமிழ் ஆய்விதழின் ஆசிரியருமான இவர் 1961 இல் சீர்காழி வட்டம், மாங்கணாம்பட்டு என்ற சிற்றூரில் துரைசாமி – கனகம்மாள் இணையரின் மகனாகப் பிறந்து, பள்ளி நாட்களிலேயே ஆசிரியர் மூலம் பகுத்தறிவு சிந்தனைப் பாதையில் நடக்கத் துவங்கியவர். அண்ணாமலை பல்கலைக்கழக நாட்களில் நக்சல்பாரி அரசியலிலும், முற்போக்கு மாணவர் சங்கத்திலும் தன்னை இணைத்துக் கொண்டவர். பேராசிரியர் அ. மார்க்கஸ், பொ. வேலுசாமி அவர்களுடன் 1990 களில் இணைந்து நடத்திய “நிறப்பிரிகை இதழில்” இவர் வடித்த எழுத்துக்கள் மூலம் சமூகத்தில் தாக்கம் ஏற்படுத்தி மக்களின் கவனத்தைக் கவர்ந்தார். தமிழகத்தின் தலித் அரசியலில், தலித் பண்பாட்டு எழுச்சியில், மனித உரிமை நடவடிக்கைகளில் இவர் காட்டிய ஈடுபாடு, பல ‘உண்மை அறியும் குழு’க்களை நிறுவவும், காவல்துறையினரின் அத்துமீறல்களை வெளிக்கொணரவும் உதவியது. ‘தடா’ ஒழிப்பு, மரணதண்டனை ஒழிப்பு மாநாடு போன்றவற்றில் 1990 ஆண்டுகளில் முன்னணியில் செயல்பட்ட இவர்; ‘புரட்சிப் பண்பாட்டு இயக்கம்’, ‘மக்கள் கல்வி இயக்கம்’, ‘மனித உரிமை இயக்கம்’, ‘பழங்குடி இருளர் பாதுகாப்பு சங்கம்’ எனப் பல சமுதாய இயக்கங்கள் உருவாக ஆலோசகராகப் பின்னணியில் இருந்தும் பங்களித்துள்ளார். ‘விடுதலைச் சிறுத்தைகள் கட்சி’ காவல்துறையின் அடக்குமுறைகளைச் சந்தித்த பொழுதும், இந்துத்துவ சக்திகளால் இஸ்லாமியர், கிறிஸ்துவர் பாதிக்க நேர்ந்த பொழுதும் மக்கள் சக்தியை ஒருங்கிணைத்துப் போராடியவர் திரு. ரவிக்குமார். காட்டு மன்னார் கோவில் சட்டமன்ற தொகுதியில் 2006 ஆம் ஆண்டு வெற்றிபெற்று, சட்டமன்ற உறுப்பினராகத் தேர்வு பெற்ற வாய்ப்பைத் தக்கவாறு பயன்படுத்தி, சமூகப்பணிகளில் மிகத்தீவிரமாக ஈடுபட்டார். ஒடுக்கப்பட்ட மக்களின் உயர்வுக்குப் பாடுபட்டதன் விளைவாக நரிக்குறவர்கள், புதிரை வண்ணார், பதிவுபெற்ற பாரம்பரிய மருத்துவர்கள், அரவாணிகள், நாட்டுப்புற கலைஞர்கள், வீட்டுப் பணியாளர்கள், நலவாரியங்களும் உருவாகின. அந்நாளைய முதல்வராக ஆட்சியில் இருந்த கலைஞரின் கான்கிரீட் வீடுகட்டும் திட்டத்திலும் பெரும் பங்கு வகித்தார். அவரது சமூகப்பணிகளுக்காக, ‘அண்ணா விருதை’ 2010 ஆம் ஆண்டில் பெற்றவர் திரு. ரவிக்குமார். மணற்கேணி: தனித்துவம் பெற்ற மணற்கேணி இருமாத ஆய்விதழ் துவக்கப்பட்டு ஐந்து ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில் அதன் எண்ணிக்கை முப்பதையும் தாண்டியுள்ளது. மணற்கேணி ஆய்விதழ் வழங்கும் நிகரி – சமத்துவ ஆசிரியர் விருது: நிகரி விருது – நினைவுக் கேடயம், பாராட்டுப் பத்திரம், பத்தாயிரம் ரூபாய் பண முடிப்பு ஆகியவற்றை உள்ளடக்கியதாகும். கல்வி நிறுவனங்களில் சாதிய பாகுபாடுகளைக் களையும் விதமாகப் பணியாற்றிவரும் தலித் அல்லாத பள்ளி ஆசிரியர் ஒருவரையும், கல்லூரி ஆசிரியர் ஒருவரையும் தேர்ந்தெடுத்து ஆண்டுதோறும் அவர்களுக்கு விருதளித்துப் பாராட்டுவது விருதின் நோக்கம். 2013 ஆம் ஆண்டு பேராசிரியர் அ.ராமசாமி அவர்களும் , கடலூர் ஆசிரியர் த.பாலு அவர்களும் நிகரி விருதுகளைப் பெற்றனர். 2014 ஆம் ஆண்டு பேராசிரியர் கி. நாச்சிமுத்து அவர்களும் ‘ஆயிஷா’ இரா. நடராசன் அவர்களும் விருதளித்துப் பாராட்டப்பட்டனர். 2015 ஆம் ஆண்டுக்கான நிகரி விருதுகளுக்காக பாரதிதாசன் பல்கலைக்கழக மகளிரியல் துறைத் தலைவர் பேராசிரியர் மணிமேகலை அவர்களும், சமயபுரம் எஸ்.ஆர்.வி மேனிலைப்பள்ளியின் முதல்வர் துளசிதாசன் அவர்களும் விருதளித்துப் பாராட்டப் பட்டுள்ளனர். “பள்ளிப் பருவம்” என்ற மணற்கேணி பதிப்பக நூலின் பதிப்புரையில், திரு. ரவிக்குமார் அவர்கள் ‘நிகரி’ விருது தோற்றுவித்த நோக்கத்தை வெளிப்படுத்துகிறார், வெளிப்படுத்துகிறார், “பொருளாதார நிலையில் பின்தங்கியிருக்கும் பெற்றோர்கூடத் தம் பிள்ளைகள் தரமான கல்வியைப் பெறவேண்டும் என விரும்புகிற காலம் இது. அதனால்தான் ஆட்சியாளர்கள் ‘சமச்சீர்க் கல்வி’யைப் பற்றி அக்கறை செலுத்தவேண்டிய நிலை ஏற்பட்டது. சமூக, பொருளாதார பாகுபாடுகளைப் பள்ளிகளுக்குள் அனுமதித்துக்கொண்டு, அதைப்பற்றிக் கவலைப்படாமல், பாடத் திட்டங்களை மட்டும் ஒரேமாதிரியாக அமைத்துவிட்டால் கல்வியில் சமத்துவம் வந்துவிடும் எனக் கூறுவது கல்வியில் இருக்கும் ஏற்றத் தாழ்வுகளை மறைப்பதற்கானதொரு தந்திரம் என்றுதான் சொல்லவேண்டும். தமிழ்நாட்டில், ‘சமச்சீர்க் கல்வி’ குறித்த கல்வியாளர்களின் பேச்சுகள்கூட பாடத் திட்டங்களைத் தாண்டிச் செல்லாதது நமது துரதிர்ஷ்டம். சமத்துவக் கல்வியை வலியுறுத்தும் நோக்கில் ‘நிகரி – சமத்துவ ஆசிரியர்’ விருதுகளை ஆண்டுதோறும் வழங்கவிருக்கும் மணற்கேணி, கல்வி குறித்த நூல்கள் பலவற்றைத் தொடர்ந்து வெளியிட இருக்கிறது. அதன் துவக்கமாக “பள்ளிப் பருவம்” என்ற நூல் அமைந்தது,” என்று குறிப்பிடுகிறார். தமிழக கல்வி நிறுவனங்களில் நடைபெற்று , கடந்த ஆண்டுகளில் தமிழ்நாட்டின் நாளேடுகளில் வெளியான சாதிவெறி நடவடிக்கைகள் பற்றிய ஒருசில சான்றுகளைக் குறிப்பிட்டு (http://manarkeni.blogspot.com/2014/09/blog-post.html), ஆதிதிராவிட / பழங்குடியின சமூகத்தைச் சேர்ந்த மாணவர்களின் கல்விக்காக எத்தனையோ முயற்சிகளை மத்திய, மாநில அரசுகள் மேற்கொண்டு வந்தபோதிலும் பொதுவான கல்வியறிவு பெற்றோரின் சதவீதத்துக்கும் இந்தச் சமூகத்தினரில் கல்வி அறிவு பெற்றோரின் சதவீதத்துக்கும் இடையே மிகப்பெரிய இடைவெளி இருப்பதைக் காணமுடிகிறது. இதற்கு அரசாங்கமும் சமூகமும் சேர்ந்து பொறுப்பேற்கவேண்டும். ஏனெனில் அரசாங்கம் போடும் சட்டங்கள் சாதிய சமூகத்தின் முன்னால் செயலற்றுப் போய்விடுகின்றன. அவற்றைச் செயல்படவைக்கும் அரசியல் உறுதி இருந்தாலொழிய இந்த நிலையை மாற்ற முடியாது என்கிறார் திரு. ரவிக்குமார். எனவே இந்த மாறுதல் நோக்கிய முயற்சிக்கு செயல்வடிவம் கொடுத்து, சமத்துவத்தை ஊக்குவிக்க எடுத்த நடவைக்கையின் விளைவே ஆசிரியர்களுக்கான நிகரி விருது. இவர் இவ்வாறு சமூகத்தை மாற்றக்கூடிய நம்பிக்கையைத் தனது கவிதை ஒன்றிலும் வெளிப்படுத்துகிறார். வானத்தை நோக்கி விட்டெறியும் கனவு சிலநேரம் இன்மையிலிருந்து இன்மையைநோக்கிப் பாயும் எரிகல்லாய் தடயமற்றுப் போகிறது சிலநேரம் மின்மினிப் பூச்சியாய் தலையைச் சுற்றி வருகிறது சிலநேரம் பனியாக மாறி இலைகளில் படிகிறது வானை நோக்கி விட்டெறியும் கனவு நட்சத்திரமாக மாறுவது எப்போதோதான் நடக்கும். என்றபோதிலும் மனந்தளராதே உன் முன்னோர் எறிந்த கனவுதான் நிலவு சூரியனும்கூட அப்படியென்றுதான் சொல்கிறார்கள் தனது சமத்துவக் கனவிற்கு “நிகரி விருது” மூலம் செயல்வடிவம் கொடுத்து, தளரா நம்பிக்கையுடன் சமூகப்பணி செய்து வரும் திரு. ரவிக்குமார் அவர்களுக்கு மனமார்ந்த பாட்டுகள், தொடர்வது படைப்புகளின் தொகுப்பு. ரவிக்குமார் அவர்களின் படைப்புகள்: கட்டுரைத் தொகுப்புகள்: - 1. கண்காணிப்பின் அரசியல், விடியல் பதிப்பகம், 1995 2. கொதிப்பு உயர்ந்துவரும் , காலச்சுவடு, 2001 3. கடக்க முடியாத நிழல்,காலச்சுவடு,2003 4. மால்கம் எக்ஸ்,காலச்சுவடு,2003 5. வன்முறை ஜனநாயகம், தலித் வெளியீடு, 2004 6. சொன்னால் முடியும், விகடன்,2007 7. இன்றும் நமதே, விகடன்,2008 8. சூலகம், உயிர்மை, 2009 9. கற்றனைத்தூறும், உயிர்மை, 2009 10. பிறவழிப் பயணம், உயிர்மை,2010 11. பாப் மார்லி, உயிர்மை, 2010 12. அண்டை அயல் உலகம், உயிர்மை,2010 13. ஆள்வதன் அரசியல், உயிர்மை, 2010 14. தமிழராய் உணரும் தருணம், ஆழி பதிப்பகம், 2010 15. துயரத்தின்மேல் படியும் துயரம், ஆழி பதிப்பகம்,2010 16. காற்றின் பதியம், மணற்கேணி,2010 17. கடல்கொள்ளும் தமிழ்நாடு,மணற்கேணி,2010 18. மீளும் வரலாறு, உலகத்தமிழாராய்ச்சி நிறுவனம்,2010 19. காணமுடியாக் கனவு, ஆழி பதிப்பகம், 2011 20. சொல்லும் செயல், மணற்கேணி, 2011 21. அ-சுரர்களின் அரசியல்,மணற்கேணி,2014 கவிதை: - 1. அவிழும் சொற்கள், உயிர்மை, 2009 2. மழை மரம், க்ரியா,2010 சிறுகதை: - 1. கடல் கிணறு, மணற்கேணி,2014 மொழிபெயர்ப்பு: - 1. உரையாடல் தொடர்கிறது, விடியல்,1995 2. கட்டிலில் கிடக்கும் மரணம்,மருதம்,2002 3. வெளிச்சமும் தண்ணீர்மாதிரிதான்,தலித் ,2003 4. பணிய மறுக்கும் பண்பாடு,காலச்சுவடு,2003 5. வரலாறு என்னும் கதை, மணற்கேணி,2011 6. வலசைப் பறவை, மணற்கேணி,2011 7. அதிகாரத்திடம் உண்மையைப் பேசுதல்,மணற்கேணி,2011 8. மாமிசம்,மணற்கேணி,2014 9. அதிகாரத்தின் மூலக்கூறுகள், மணற்கேணி,2014 10. வெள்ளை நிழல் படியாத வீடு, மணற்கேணி,2014 11. குரல் என்பது மொழியின் விடியல்,மணற்கேணி,2014 ஆங்கிலம்: - Venomous Touch,Samya,2010 தொகுப்புகள்: - 1. தலித் கலை இலக்கியம் அரசியல், தலித் கலைவிழாக்குழு,1996 2. தலித் என்னும் தனித்துவம், தலித் வெளியீடு ,1998 3. அயோத்திதாச பண்டிதர் சிந்தனைகள், 4 தொகுதிகள், தலித் சாகித்ய அகாடமி,1999 4. ரெட்டைமலை ஸ்ரீனிவாசன், தலித் சாகித்ய அகாடமி , 1999 5. தலித் காலம், தலித் வெளியீடு,1998 6. மிகைநாடும் கலை,காலச்சுவடு,2003 7. தொல்.திருமாவளவன் எழுத்துகள், 17 தொகுதிகள்,கரிசல்,2008 8. ஒடுக்கப்பட்ட இந்துக்கள், கரிசல்,2008 9. எங்கள் காலத்தில்தான் ஊழிநிகழ்ந்தது, மணற்கேணி,2010 10. நூர்ந்தும் அவியா ஒளி,மணற்கேணி,2010 11. சுவாமி சகஜானந்தா, மணற்கேணி,2010 12. எல்.இளையபெருமாள், மணற்கேணி,2010 13. பள்ளிப்பருவம், மணற்கேணி,2014 14. நூல் ஏணி,மணற்கேணி,2014 ஆங்கில தொகுப்புகள்: - 1. We the Condemned, PUCL,1998 2. Waking is another dream, Navayana,2011 3. Tamil Dalit writing,Oxford,2012 September 14, 2015 தொல்லியல் ஆய்வாளர் பத்மாவதி [] தொல்லியல் ஆய்வாளர் முனைவர் பத்மாவதி ஆனையப்பன் அவர்களைக் குறிப்பிடும் செய்திகள் யாவும் “முனைவர் பத்மாவதி, தொல்லியல் ஆய்வாளர் (பணி ஓய்வு), சென்னை” என்றே குறிப்பிடுகின்றன. ஆனால் “தொல்லியல் பணிகளில்” இருந்தோ அல்லது “தொல்லியல் ஆய்வுகளில்” இருந்தோ ஓய்வு பெற்றதாக முனைவர் பத்மாவதியின் செயல்பாடுகள் இதுவரையில் குறிப்பதாக இல்லை. மாறாக இவர், வழக்கமான பணிஓய்வு பெற்றவர் வாழ்க்கைமுறையில் இருந்து வேறுபட்டு தொல்லியல் துறை வளர்ச்சியிலும், வரலாற்று ஆய்வுகளிலும், வரலாற்றுக் கல்வியிலும், தொல்லியல் துறையில் இளையதலைமுறையினரை உருவாக்குவதிலும் ஆர்வம் கொண்டு தொடர்ந்து பணியாற்றி வருகிறார். ஆதலினால், இவரை பணிஓய்வு பெற்றவர் என்று குறிப்பிடுவதும் பொருத்தமற்றதே. செப்டெம்பர் 6, 2015 அன்று ஓசூரில் நடைபெற்ற, “அறம் இலக்கிய அமைப்பு ஓசூர் மற்றும் கங்கைகொண்ட சோழபுரம் மேம்பாட்டுக் குழுமம்” இணைந்து நடத்திய “மாமன்னர் இராசேந்திர சோழன் அரியணை ஏறிய 1001 ஆவது ஆண்டுவிழாவில்”, தொல்லியல் துறையில் ஆர்வமுடன் செயலாற்றும் இளையதலைமுறை ஆர்வலர்களுக்கு “தொல்லியல் முனைவோர்” விருது வழங்கி அவர்களை ஊக்கப்படுத்தும் வண்ணம் பாராட்டிப் பேசியுள்ளார். தொல்லியல்துறையில் பத்மாவதியின் தொடர் பங்களிப்பு பாராட்டிற்குரியது. முனைவர் பத்மாவதி தொல்லியல் கல்வி சார்ந்த பயிலரங்குகளையும், கல்வெட்டுகளைப் படிக்க உதவும் கிரந்தம் பயிலரங்கங்களையும் தொடர்ந்து நடத்தி வருபவர். சமீபத்தில் இவர் பங்கேற்ற பயிலரங்கங்கள் குறித்த தகவல்கள் சிலவற்றை கீழே காண்க … ▪ தஞ்சை சரஸ்வதி மஹால் நூல் நிலையம் நடத்திய கிரந்தம் பயிலரங்கில் பங்கேற்று, தமிழகக் கல்வெட்டுகளில் கிரந்த எழுத்து பயன்பாடு என்ற தலைப்பில் பல்லவர் கல்வெட்டுகளில் கிரந்தம் பற்றிய வகுப்பு, மாணவர்களுக்கு களப்பயிற்சி அளிக்கும் பொருட்டு தஞ்சை பெரிய கோயிலில் நேரடி கல்வெட்டு வாசிப்புப் பயிற்சி ▪ நாமக்கல் அறிஞர் அண்ணா அரசு கல்லூரி தமிழ்த்துறை நடத்திய பயிலரங்கில் கலந்துகொண்டு மாணவ மாணவியர்க்கு கிரந்தஎழுத்துக்கள் கற்பித்தல் ▪ காந்தி கிராம கிராமிய பல்கலைக்கழகத்தில் தொல்லியல் இலக்கியச் சான்றுகளுடன் “தொண்டைமண்டல வரலாறு” பற்றிய சொற்பொழிவு ▪ சென்னை சமூக ஆய்வுவட்டம் கூட்டத்தில் “களப்பிரர் வீழ்ச்சியும் பல்லவர் எழுச்சியும்” பற்றிய சொற்பொழிவு ▪ தமிழக மூதறிஞர்கள் குழு நடத்தும் மாதாந்திர கலந்துரையாடலில் சென்ற ஜூலை மாதக் கூட்டத்தில், “தமிழக வரலாற்றில் கல்வெட்டுகள் கூறும் முக்கியச் செய்திகள்” என்ற தலைப்பில் தமிழக வரலாற்றில் கி.மு மூன்றாம் நூற்றாண்டு முதல் கி.பி மூன்றாம் நூற்றாண்டு வரையிலான கல்வெட்டு ஆதாரங்கள், தமிழர்களின் சங்ககாலம் கி.மு. மூன்றாம் நூற்றாண்டிற்கு முன்னரே இருப்பதற்கான தகவல் தரும் மீனாட்சிபுரம் கல்வெட்டு ஆகியன குறித்த சொற்பொழிவு ▪ தமிழ் மரபு அறக்கட்டளையின் களஆய்வுகளில் பங்கேற்பு, தமிழ் மரபு அறக்கட்டளையின் வரலாற்றுப் பதிவுகளுக்கு தகவல் அளித்து வரலாற்றுத் தகவல்கள் இணையத்தில் தமிழ் மரபு அறக்கட்டளையின் வழி பதிவாக்கம் பெற உதவுதல், தமிழ் மரபு அறக்கட்டளையின் செயற்குழு உறுப்பினராக வழிநடத்துதல் ஆகிய தொடர் பணிகளுடன்… “பனுவல் புத்தக நிலையம்” நடத்திவரும் ஒருநாள் வரலாற்றுத் தொல்லியல் கல்விப் பயணத்தில் (Archaeological Tour) பங்கேற்று வரலாறு மற்றும் தொல்லியல் கல்வி பயிற்சி அளிப்பது, கல்வெட்டுகளை தொல்லியல் ஆய்வாளர்கள் படி எடுக்கும் முறை பற்றிய பயிற்சி ஆகியவற்றை மேற்கொண்டு இதுவரை, பனுவல் ஒருநாள் வரலாற்றுத் தொல்லியல் கல்விப் பயணம் திட்டம் வழியாக (1) மகாபலிபுரம், (2) காஞ்சிபுரம் அதனைச் சுற்றியுள்ள பகுதிகள், (3) செஞ்சி ஆகிய இடங்களில் தொல்லியல்துறை கல்வி வளர்ச்சிக்காகப் பயிற்சிகள் அளித்துள்ளார். அடுத்து வரும் அக்டோபர் 4, 2015 அன்று பனுவல் ஒருநாள் வரலாற்றுத் தொல்லியல் கல்விப் பயணத்தில் திருக்கோவிலூரிலும், திருக்கோவிலூரைச் சுற்றியுள்ள பகுதிகளான திருவெண்ணைநல்லூர், கிராமம், ஜம்பையில் 1981 ல் தொல்பொருள் ஆய்வுக் குழுவினரால் கண்டுபிடிக்கப்பட்ட, கி. பி. 1 ஆம் நூற்றாண்டு சங்க காலத்தமிழ் எழுத்துக் கல்வெட்டு ஆகியவற்றைப் பற்றி மங்கை ராகவன் அவர்களுடன் இணைந்து பயிலரங்கம் வழங்க உள்ளார். இவரது நூல்வெளியீடுகள்: நூல்கள்: - சோழர் ஆட்சியில் அரசும் மதமும் - சைவத்தின் தோற்றம் - சோழர்கால சமயம் - அம்பாசமுத்திரம் ஆசிரியர்: - நன்னிலம் கல்வெட்டுகள் தொகுதி – I - நன்னிலம் கல்வெட்டுகள் தொகுதி – II - நன்னிலம் கல்வெட்டுகள் தொகுதி – III - திருவிழிமிழலை கல்வெட்டுகள் - திருவலஞ்சுழி கல்வெட்டுகள் - தாமரைப் பாக்கம் கல்வெட்டுகள் துணை ஆசிரியர்: - தொல்லியல் கருத்தரங்கம் தொகுதி – I - தமிழ்நாட்டுக் கல்வெட்டுகள் 2004 - காஞ்சிபுரம் மாவட்டக் கல்வெட்டுகள் - தஞ்சாவூர் வட்டக் கல்வெட்டுகள் - திருவாரூர் மாவட்டக் கல்வெட்டுகள் பணி ஓய்விற்குப் பிறகும் வரலாற்றுக் கல்வி, கல்வெட்டு வாசிப்புப் பயிற்சி, தொல்லியல் கல்வி ஆகியவற்றை இளைய தலைமுறையினருக்கு வழங்கி அவர்களை ஊக்குவித்துவரும் முனைவர் பத்மாவதி அவர்களுக்குப் பாராட்டுகளும் வாழ்த்துகளும். September 21, 2015 கிரண் பிர் சேத்தி [] திருமிகு “கிரண் பிர் சேத்தி” (Kiran Bir Sethi) அவர்கள், தான் வாழும் சமூகத்தில் மாற்றம் விளைவிக்கும் தன்னார்வத் தொண்டர்களாகவும், அத்துடன் மாற்றம் கொண்டு வருபவர்களைக் கண்டறியும் வினையூக்கி (catalysts)களாகவும் விளங்குபவர்களில் ஒருவர். ‘கிரண் சேத்தி’ அவர்கள் அகமதாபாத்தில் உள்ள ‘ரிவர்சைடு பள்ளி’(The Riverside School, Ahmedabad) யின் நிறுவனர் மற்றும் இயக்குநராக கல்விப்பணியில் மறுமலர்ச்சி செய்து வருகிறார். உலகளாவிய அளவில் நடத்தப்பெறும் ‘டிசைன் ஃபார் சேஞ்ச்’ (Design for Change) என்ற திட்டத்தை, இந்தியாவில் இவர் அமைப்பு முன்னெடுத்து நடத்திவருகிறது. இந்த அமைப்பு நடத்தும் ‘புராஜக்ட் எக்ஸ்போ’ (Design for Change – DFC I CAN School Challeng) என்ற போட்டியை ஆண்டு தோறும் தேசிய அளவில் பள்ளி மாணவர்களுக்காக நடத்தி, சிறந்த கண்டுபிடிப்புகளுக்கு பரிசுகள் வழங்கி வருகிறது. பள்ளி மாணவர்களை ஆய்வில் ஊக்குவிக்கும் இந்தச் செயல் ஓர் அருமையான முயற்சி. தேசிய அளவில், 8 வயதிலிருந்து 13 வயது வரை உள்ள பள்ளி (நடுநிலைப்பள்ளி வரை பயிலும்) மாணவர்களுக்காக நடக்கும் இந்தப்போட்டியில் ஆண்டுதோறும் பல பள்ளி மாணவர்கள் தங்கள் திறமையைக் காட்ட பங்கேற்கிறார்கள். இந்த ஆண்டு கோவை ஆறுமுகக்கவுண்டனுார் அரசு நடுநிலைப்பள்ளி மாணவர்கள் இப்போட்டியில் பங்கேற்கும் ஆர்வத்தில் “இயற்கை கிருமிநாசினி” தயாரித்து அதனைப் போட்டிக்கு சமர்ப்பிக்கிறார்கள். இவர்களின் இந்த முயற்சிக்காக ஏழாம் வகுப்பு மாணவர்களான நந்தகுமார், தனலட்சுமி, தர்ஷினி, ஸ்ரீமதி, அருண் ஆகியோரும், அவர்களுக்கு ஊக்கமூட்டி உதவி வரும் பள்ளியின் கணித ஆசிரியர், சத்யபிரபா தேவி ஆகியோரும் பாராட்டிற்குரியவர்கள். அன்றாடம் சுகாதாரத்திற்காக நாம் பயன்படுத்தும், ‘சோப்பு’, ‘ஷாம்பூ’ உள்ளிட்ட கிருமிநாசினி அனைத்தும் வேதிப் பொருட்களால் ஆனவை. இவற்றால், சுற்றுச்சூழல் பாதிக்கப்படுவதோடு, பல்வேறு தோல் நோய்களும் வருகின்றன. இவற்றைக் கணக்கில்கொண்டு இயற்கை முறையில், கிருமி நாசினி தயாரித்துள்ளதாக இம்மாணவர்கள் தமிழ் நாளிதழ் ஒன்றுக்குப் பேட்டி அளித்துள்ளனர். செம்பருத்தி, சோற்றுக்கற்றாழை, வேப்பிலை, திருநீற்றுப்பத்து, கற்பூரவல்லி ஆகியவற்றைக் கலவையாக்கி, இயற்கை கிருமி நாசினி தயாரித்து; அத்துடன், இவை அதிக நாள் மக்கள் பயன்படுத்த வசதியாக, எலுமிச்சையையும் இயற்கை கிருமிநாசினியில் சேர்த்துள்ளார்கள். சுத்தமாக்குவதுடன் பாதிப்பும் தராத இவர்களது இயற்கை கிருமிநாசினியை சுற்றுவட்டாரப் பள்ளிகளிலும் பயன்படுத்த இவர்களே தயாரித்தும் வழங்கியுள்ளார்கள். இந்தத் தமிழக மாணவர்களைப் போன்று ஆர்வமுள்ள மாணவர்களின் ஆக்கப்பூர்வமான செயல்பாடுகளை ஆராய்ச்சிக் கோணத்தில் வளர்த்துவரும் ‘டிசைன் ஃபார் சேஞ்ச்’ அமைப்பும், அதனை முன்னெடுத்து நடத்தி வரும் கிரண் சேத்தியின் பணியும் பாராட்டிற்குரியவையே. கிரண் சேத்தியின் கல்வி மறுமலர்ச்சி முயற்சிகள் உலக அளவிலும் அடையாளம் காணப்பட்டுள்ளது. உலக அளவில் ‘வர்கி அறக்கட்டளை’ (Varkey Foundation) சிறந்த ஆசிரியருக்கான விருதினை வழங்கி வருகிறது. இந்த ஆண்டு சர்வதேச சிறந்த ஆசிரியர் விருதுக்கான (Global Teacher Prize in the Global Education & Skills Forum 2015) இறுதிப்பட்டியலில் ஆசிரியர் தொழிலுக்கு பெருமை தேடித்தந்தவர்களில் முதல் பத்து இடங்களில் இடம்பிடித்துள்ளார் கிரண் சேத்தி. இந்தப் பரிசு, தங்களது தொழிலில் ஆழ்ந்த ஈடுபாடு கொண்டு, மிகச் சிறப்பாக சேவையாற்றிய ஆசிரியருக்கே வழங்கப்படும். ஆசிரியர் தொழிலில் ஈடுபடுவோர்க்காக வழங்கப்படும் இந்தப் பரிசு ஒப்பீட்டில் நோபல் பரிசுக்கு இணையாகக் கருதப்படக்கூடிய ஒன்று என்பதும், இதற்காக சுமார் 5,000 ஆசிரியர்கள் வரை அனைத்துலக அளவில் பரிந்துரைக்கப்படுவர் என்பதும் இதன் சிறப்பு. பிள்ளைகளுக்குப் பாடம் கற்பிக்கும் கலையில் ஒவ்வொரு நாளும் வெவ்வேறு விதமான அணுகுமுறைகளைக் கையாள வேண்டும் என்றும், தான் முதல் நாள் ஒரு ஆராய்ச்சியாளரின் பார்வையில் பாடம் சொல்லித் தரும் முயற்சியை மேற்கொண்டால், மறுநாள் ஒரு கலைஞராகவும், அதற்கும் அடுத்த நாள் ஒரு கதை சொல்லியாகவும் மாறி பாடம் நடத்தும் முறையைக் கடைப்பிடிப்பதாகவும் கூறுகிறார் கிரண் சேத்தி. மாணவர்களை இவ்வாறு செய்ய வேண்டும் என்று வலியுறுத்தாமல், தாங்களே முயன்று வழிமுறைகளைத் தேர்ந்தெடுக்கும் வகையில் அவர்கள் ஊக்குவிக்கப்பட வேண்டும் என்ற எண்ணம் கொண்டவர் இவர். தனது மகன் கல்வியில் எதிர்கொண்ட கட்டுப்பாடுகளையும் சவால்களையும் கண்ட பின்னர், அகமதாபாத்தில் ரிவர்சைட் பள்ளி என்ற பள்ளியைத் துவக்கி, 2001 ஆம் ஆண்டு முதல், மாணவர்களுக்குக் கல்வி வழங்கும் முறையை மாற்றி அமைப்பதில் அக்கறை காட்டி வருகிறார். TED இந்தியாவின் சொற்பொழிவாளர், பல அயல்நாட்டுக் கருத்தரங்குகளில் சிறப்பு சொற்பொழிவாளர் என்ற வகையில் சமூக அளவில் மாற்றம் தர வேண்டிய கல்வியின் அவசியம் பற்றிய கருத்துகளை முன்னிறுத்தி வருகிறார். இவரது பள்ளியில் இவர் கடைபிடிக்கும் மாற்றம் நோக்கிய புதுமையான கல்விமுறை பாடத்திட்டங்களுக்காக 2009 ஆம் ஆண்டு ஸ்டான்ஃபோர்ட் பல்கலைக்கழகம் ‘கால் டு கான்சயின்ஸ்’ (Call to Conscience) விருது வழங்கிச் சிறப்பித்தது. ‘டிசைன் பார் சேஞ்ச்’ என்ற மாணவர்களின் கண்டுபிடிப்புகளை ஊக்குவிக்கும் முயற்சியை முன்னெடுத்தது மட்டுமல்லாது, ‘அப்ரோச்’ (aProCh) என்ற அமைப்பைத் துவக்கி, நகரத்தைச் சிறுவர்களுக்கான பாதுகாப்பான இடமாக மாற்றும் முயற்சியை மேற்கொண்டதற்காக 2008ம் ஆண்டின் அசோகா (Ashoka Fellow in 2008) விருதைப் பெற்றார். சமூகத்தில் கல்வியின் வழி இவர் மாற்றம் கொண்டு வரச் செய்யும் முயற்சிகளுக்காக இந்த ஆண்டு, ஏசியா சொசைட்டியின் ‘கேம் சேஞ்சர்’ விருதுக்காகவும் (Asia Society’s, 2015 Asia Game Changer of the Year) பரிந்துரைக்கப்பட்டார். இந்திய மாணவர்களின் கல்வியில் மாற்றத்தை ஏற்படுத்தும் ஆக்கப்பூர்வமான செயல்களில் ஈடுபட்டுள்ள கிரண் சேத்திக்கு பாராட்டுகளும் வாழ்த்துகளும். September 28, 2015 அரவிந்த் திருவேங்கடம் பத்மாவதி [] மேற்கு விர்ஜீனியா பல்கலைக்கழகத்தின் பொறியியல் துறையில் ஆய்வுப் பேராசிரியராகப் பணிபுரியும் முனைவர் அரவிந்த் திருவேங்கடம் பத்மாவதி (http://www.mae.cemr.wvu.edu/faculty/faculty-detail.php?id=1069&type=faculty) அவர்கள், வோல்க்ஸ்வேகன் நிறுவனம் செய்த மோசடியை வெளியுலகிற்குக் காட்டிக் கொடுத்த ஆய்வறிக்கையை வெளியிட்டு உலகின் பார்வையைத் தன்பக்கம் திருப்பியுள்ளார். சென்னைப் பல்கலைக்கழகத்தில் இளம்நிலைப் பொறிமுறைப் பொறியியல்(B.E. Mechanical Engineering) பட்டம் பெற்ற அரவிந்த், அமெரிக்காவின் மேற்கு விர்ஜீனியா பல்கலைக்கழகத்தில் பொறியியலில் முதுநிலை பட்டமும், முனைவர் பட்டமும் பெற்றவர். ஊர்திகளின் மாசுக்கட்டுப்பாட்டுச் சோதனைகள் பற்றிய ஆய்வில் ஈடுபட்டிருக்கும் இவரின் ஆய்வறிக்கை ஒன்றின் முடிவுகள், ஜெர்மனியின் வோல்க்ஸ்வேகன் நிறுவனம் செய்த குற்றத்தை வெளியுலகிற்குக் காட்டிக் கொடுத்தது. இதன் காரணமாக வோல்க்ஸ்வேகன் நிறுவனம் ஊர்திகளில் மாசுக்கட்டுப்பாட்டுச் சோதனைகளின் பொழுது ஆய்வாளர்களை ஏமாற்றுவதற்காக ஊர்திகளில் பொருத்தியிருக்கும் மென்பொருள் பற்றி அமெரிக்க அரசு கண்டறிந்தது. அமெரிக்காவின் சுற்றுச்சூழல் பாதுகாப்பு நிறுவனம் (U.S. Environmental Protection Agency) வோல்க்ஸ்வேகன் நிறுவனம் மீது தொடுத்த குற்றச்சாட்டை ஏற்றுக் கொண்ட வோல்க்ஸ்வேகன் நிறுவனம், 11 மில்லியன் வண்டிகளில் மென்பொருள் நிறுவி, அரசை ஏமாற்றியதையும் ஒப்புக்கொண்டுள்ளது. இதன் விளைவாக வோல்க்ஸ்வேகன் நிறுவனத்தின் தலைமை அதிகாரி பதவி விலகியுள்ளார், பதினெட்டு பில்லியன் டாலர்கள் அபராதம் செலுத்தவிருக்கும் வோல்க்ஸ்வேகன் நிறுவனம் பற்றிய உண்மை தெரிந்தவுடன், பங்குச் சந்தையில் நிறுவனத்தின் பங்கு வெகுவாக வீழ்ச்சியடைந்துள்ளது. இப்பொழுது பிற வாகன நிறுவனங்களும் எச்சரிக்கையடைந்துள்ளன. முனைவர் அரவிந்த் அவர்களின் ஆய்வும் அதன் காரணமாக வோல்க்ஸ்வேகன் நிறுவனம் குற்றம் வெளிப்பட நேர்ந்த நிகழ்வுகள் பற்றிய மிகச் சுருக்கமாக அறிமுகம்: மேற்கு விர்ஜீனியா பல்கலைக்கழகத்தின் மாற்று எரிபொருள் ஆய்வு மையம் (Center for Alternative Fuels, Engines and Emissions – CAFEE) ஊர்திகளின் மாசு கட்டுப்பாட்டு சோதனைகள் பற்றி பல ஆண்டுகளாக ஆய்வில் ஈடுபட்டு அத்துறையில் முன்னணி வகிக்கிறது. இந்த மையத்தில் ஒரு ஆய்வாளராகப் பணியாற்றும் முனைவர் அரவிந்துடன், மார்க் பேஷ்க், கிரிகரி தாம்ப்சன், டேனியல் கார்டர், ஹேமந்த் கப்பண்ணா (Marc Besch, Gregory Thompson, Daniel Carder, and Hemanth Kappanna) ஆகியோர் அடங்கிய ஐவர் குழு , கலிஃபோர்னியா மாநில அரசு அளித்த ஆய்வுநிதி பெற்று அந்த மாநிலத்தின், மிகவும் கண்டிப்பான சூழ்நிலை மாசுக்கட்டுப்பாட்டு விதிகளை ஊர்திகள் கடைப்பிடிக்கின்றனவா என்ற ஆய்வில் ஈடுபட்டார்கள். ஒவ்வொரு ஆண்டும் இம்மாநிலத்தின் ஊர்திகள் மாநில அரசு விதிக்கும் மாசுக்கட்டுப்பாட்டு விதிமுறைகளுக்குள் இருந்தால் மட்டுமே அவற்றை இயக்க அனுமதி அளிக்கப்படும். அந்தச் சோதனைகளில், ஆய்வக சூழலில் கிடைக்கும் சோதனை முடிவுகள், வண்டிகள் சாலைகளில் இயக்கப்படும் பொழுதும் அதே அளவில் அமைந்துள்ளனவா என்ற சோதனையை மேற்கொண்டனர் இந்த ஆய்வுக் குழுவினர். முனைவர் அரவிந்தும் துணை ஆய்வாளர் மார்க் பேஷ்க்கும், வோல்க்ஸ்வேகன் ஊர்தி ஒன்றை வாடகைக்கு எடுத்து, தங்கள் சோதனைக் கருவியை அதில் பொருத்தி, கலிஃபோர்னியாவில் இருந்து வாஷிங்டன் மாநிலம் வரை சுமார் 2,500 மைல்கள் ஓட்டி சோதனை செய்தனர். அப்பொழுது வெளிப்படும் நைட்ரஜன் ஆக்சைட்களின் (Nitrogen oxides – NOx) அளவு, அமெரிக்க அரசு அனுமதித்த குறைந்த அளவு விதிக்கும் மேலாகா 35 மடங்கு வரை அதிகம் இருப்பது தெரிய வந்தது. சோதனைக் கருவிகளின் குற்றமோ எனச் சந்தேகித்து ஆராய்ந்ததில், அதிலும் குறை இல்லை என்று தீர்மானிக்கப்பட்டது. ஆய்வக சோதனையில் தேறிய ஊர்திகள் எவ்வாறு சாலைப்பயணத்தில் இதுபோன்ற மாறுபட்ட முடிவைக் கொடுக்க முடிகிறது என்பதைத் தொடர்ந்து ஆய்வுகள் செய்து கண்டறியாவிட்டாலும், தங்கள் முடிவை முனைவர் அரவிந்த் குழு ஆய்வறிக்கையாக வெளியிட்டது. இந்த ஆய்வுகள் நடத்தப்பட்டது 2013 ஆம் ஆண்டின் மார்ச் மாதத்தில். இவர்களுக்கு நிதிவழங்கி ஆய்வை முன்னெடுத்த ‘இண்டர்நேஷனல் கவுன்சில் ஆன் கிளீன் டிரான்ஸ்போர்ட்டேஷன்’ (International Council on Clean Transportation) என்ற அமைப்பு இந்த ஆய்வின் முடிவுகளை அமெரிக்க அரசின் கவனத்திற்குக் கொண்டு சென்றது. இது போன்று தனிப்பட்ட பல்கலைக்கழக ஆய்வறிக்கைகளில் வோல்க்ஸ்வேகன் ஊர்திகள் அரசு நிர்ணயித்த மாசுக்கடுப்பாட்டு விதிகளை மீறுவதைக் கவனித்து வந்த சுற்றுச்சூழல் பாதுகாப்பு நிறுவனம் எச்சரிக்கை அடைந்தது. இதற்கு முன்னரே 1973, 1998 ஆண்டுகளிலும் ஏமாற்று வேலைகள் செய்து வோல்க்ஸ்வேகன் பிடிபட்டிருந்ததால், அரசு மேலும் ஆராயத் தொடங்கியது. முடிவில் ஆய்வக சோதனையில் ஊர்தியின் ஸ்டியரிங் வீல் அசையாமல் இருக்கும்பொழுது வண்டியின் இயந்திரம் மட்டும் தொடர்ந்து இயங்கினால், அது ஊர்தி சோதனைக்குள்ளாகும் நேரம் என மென்பொருள் கண்டறிந்து, அதற்கு ஏற்றவாறு மாசுக்கட்டுப்படுத்தும் பாகங்களை இயங்கச் செய்து நைட்ரஜன் ஆக்சைட்களின் அளவைக் கட்டுப்படுத்தும் வகையில் நிறுவனம் வண்டிகளை வடிவமைத்து வைத்திருக்கும் உண்மை வெளியாகியது. இது அரசை ஏமாற்றும் மிகப்பெரிய குற்றச் செயல் மட்டுமல்ல, சுற்றுப்புறச் சூழல் மீதும், மனித நலத்திலும் அக்கறையற்ற செயலும் ஆகும். மாசுநிறைந்த காற்றைச் சுவாசிக்கும் பொழுது ஆஸ்துமா போன்ற சுவாச நோய்கள் அதிகரிக்க வழிவகுக்கும். ஏன் ஊர்தி சோதனைக்குள்ளாகும் பொழுது மட்டும் மாசுக்கட்டுப்பாட்டு திட்டம் இயங்க வேண்டும் என்ற கேள்விக்கு … வோல்க்ஸ்வேகன் நிறுவனத்தின் பேராசை என்பதே பதில். பெட்ரோலுக்குப் பதில் மாற்று எரிபொருளாக டீசல் பயன்படுத்தும் ஊர்திகளை அதிகரிக்கும் எண்ணம் சந்தையில் பரவலாகத் தோன்றியது. அமெரிக்கர்கள் விரும்பும் வண்ணம் பெரிய வண்டிகளையும், அதே சமயம், அமெரிக்க அரசு விதிகள்படி குறைந்த எரிபொருளில் அதிக மைல்கள் கொடுக்கும், டீசலில் ஓடும் வண்டிகளைத் தயாரித்து விற்றால் அமெரிக்க சந்தையைப் பிடித்துவிடலாம் என்பது வோல்க்ஸ்வேகன் நிறுவனத்தின் திட்டம். ஆனால் அமெரிக்க அரசு நிர்ணயித்த மாசுக் கட்டுப்பாட்டு விதிகளுக்குள் வண்டி இயங்க நேர்ந்தால், குறைந்த எரிபொருளில் அதிக மைல்கள் ஓடாது. வண்டியை இயக்க அதிகம் செலவானால் ஊர்திகளும் விற்பனையாகாது. இதற்கு வழி, சரியான தொழில்நுட்பத்தை கண்டுபிடிப்பதாக இருக்கும். ஆனால் வோல்க்ஸ்வேகன் நிறுவனம், அதிக செலவைக் கூட்டி, ஊர்தியின் விலையை அதிகரிக்கச் செய்யும் முறையைத் தவிர்க்கும் நோக்கில் குறுக்கு வழியைக் கண்டுபிடித்தது. அரசு செய்யும் சோதனைகளில் ஆய்வாளர்களின் கண்களில் மண்ணைத்தூவும் வண்ணம் சோதனை நேரங்களில் மட்டும் வண்டிகள் மாசுக்கட்டுப்பாட்டு திட்டத்திற்கு ஏற்ப இயங்கும். பிற வேளைகளில், சாலைகளில் ஓட்டும்பொழுது வெளியாகும் நைட்ரஜன் ஆக்சைட்களின் அளவைக் கட்டுப்படுத்தும் முறை செயலிழந்து போகுமாறு வண்டிகளை இயக்க மென்பொருள் பொருத்தியது. அதனால் ஊர்தியும் குறைந்த எரிபொருளுக்கு அதிக தூரம் ஓடும். வோல்க்ஸ்வேகன் நிறுவனம் செய்த இந்த மோசடி வெளியாகக் காரணமாக இருந்தது முனைவர் அரவிந்தின் ஆய்வறிக்கையே. மாசுக்கட்டுப்பாட்டைக் குறைப்தற்கும், ஏமாற்றும் நிறுவனத்தின் குற்றம் வெளிப்படவும் உதவியாக இருந்த ஆய்வினை செய்த 32 வயதாகும் முனைவர் அரவிந்த் அவர்களின் ஆய்வுப்பணிக்கு வாழ்த்துகளும் பாராட்டுகளும். October 5, 2015 மீனவர் லட்சுமி [] அக்டோபர் 8, 2015 அன்று, அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாநிலத்தின், பெர்க்லி நகரில் நடைபெற்ற விழாவில், சீக்காலஜி என்ற கடல்சார் சுற்றுச்சூழல் பாதுகாப்பு அமைப்பின் 2015 ஆம் ஆண்டிற்கான சர்வதேச அளவிலான சீக்காலஜி பரிசைப் பெற்ற மீனவர் திருமிகு லட்சுமி அவர்கள். இராமநாதபுரம் மாவட்டத்தின் கடற்கரைக் கிராமம் சின்னப்பாலத்தைச் சேர்ந்த 46 அகவை நிரம்பிய மீனவர் லட்சுமி அவர்கள், கடந்த நாற்பதாண்டுகளாகக் கடற்பாசி சேகரிக்கும் பணியில் ஈடுபட்டு வருபவர். மீனவச் சிறுமிகள் சிறுவயதிலிருந்தே கடற்பாசி சேகரிப்பில் பெற்றோர்களால் பயிற்சி அளிக்கப்படுகிறார்கள். இராமேஸ்வரம், பாம்பன், சின்னப்பாலம் பகுதியைச் சேர்ந்த 25 கிராமங்களின், சுமார் 2,000 த்திற்கும் மேற்பட்ட மீனவமகளிரின் வாழ்வாதாரம் மன்னார் வளைகுடாப்பகுதியில் மருக்கொழுந்து, கட்டக் கோரை, கஞ்சிப் பாசி, பக்கடா பாசி வகைகளை, நீரில் மூழ்கி, இரண்டு நிமிடங்களுக்கு மேல் மூச்சை அடக்கிச் சேகரித்து விற்று வருவது. மன்னார் வளைகுடா உயிர் கோளக் காப்பகத் தீவுகளான சிங்கில் தீவு, குருசடை தீவு, மணலி தீவு, மணலிபுட்டி தீவு ஆகியப் பகுதிகளில் பவளப்பாறைகளுடன், கடற்பாசிகளும் வளர்ந்து வருகின்றன. இவ்வாறு இவர்களால் சேகரிக்கப்படும் இவ்வகை கடற்பாசிகள் விண்வெளி வீரர்களுக்குத் தயாரிக்கப்படும் உணவு தயாரிப்பதில் அடிப்படைத் தேவையான உணவுப் பொருள் என்பது குறிப்பிடத்தக்கது. பல மீனவமகளிருக்கு வாழ்வாதாரமாக இருக்கும் கடற்பாசி சேகரிப்பு, 2002 ஆண்டிலிருந்து இந்திய அரசால், கடல்வளம் பாதுகாக்கும் நோக்கத்தைக் காரணம் காட்டி தடை செய்யப்பட்டது. ஆழ்ந்த ஆய்வின்றி, மீனவ மகளிரின் வாழ்வாதாரத்திற்கும் ஒரு மாற்றுவழி காட்டாது எடுத்த அவசர முடிவினால் மீனவ மகளிர் பாதிக்கப்பட்டனர். கடற்பாசி சேகரிக்க செல்லும் மீனவ மகளிரின் படகுகள், கையூட்டு பெற நினைக்கும் ஊழல் அரசு அதிகாரிகளால் கைப்பிடிக்கப்பட்டும், ஆயிரக்கணக்கில் அபராதங்களும் விதிக்கப்பட்டதுடன், மீனவமகளிரும் சில அரசு அதிகாரிகளால் மரியாதைக் குறைவாகவும் நடத்தப்பட்டனர். லட்சுமி இவ்வாறு பாதிக்கப்பட்டோரை ஒருங்கிணைத்து, அவர்களது கோரிக்கையை அரசிடம் எடுத்துச் சென்று பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். அவர்களது பாரம்பரிய கடற்பாசி சேகரிக்கும் முறை எவ்வாறு கடல்வளத்தைப் பாதிப்பதில்லை என்று கடல் ஆய்வாளர்களுக்கும், அரசுக்கும் எடுத்துக் கூறி, பாரம்பரிய முறையில் பாசி சேகரிக்கும் முறை குறித்து அவர்களுக்குக் கொடுத்த விளக்கங்களுக்குப் பிறகு, குறிப்பிட்ட காலங்களில் கடற்பாசி சேகரிக்கலாம் என்ற அனுமதியும், பணியை முறைப்படுத்தி பயோமெட்ரிக் அடையாள அட்டைகளும் நடைமுறைக்குக் கொண்டுவரப்பட்டது. மீனவமகளிரின் வாழ்வாதாரத்தை மீட்க உதவியதுடன் இவர் ஏற்படுத்திய விழிப்புணர்வு முயற்சிகளால் மன்னார்வளைகுடா கடல்வளப் பாதுகாப்பும் மேம்பட்டுள்ளது. லட்சுமியின் தன்னார்வப்பணி பரிந்துரைமூலம் சீக்காலஜி அமைப்பின் கவனத்திற்குக் கொண்டு செல்லப்பட்டது. அரசு சாராத அறக்கட்டளை அமைப்பான சீக்காலஜி அமைப்பினால், 1992 ஆம் ஆண்டு முதல் கடல்சார்சுற்றுச்சூழல் மற்றும் கடல்வள பாதுகாப்பிற்காகவும், கலாச்சார பாதுகாப்பிற்காகவும் தனி நபருக்காக வழங்கப்படும் சீக்காலஜி விருதினைப் பெறும் முதல் இந்தியப்பெண்மணி லட்சுமி ஆவார். இவரது கடல்வள பாதுகாப்பு முயற்சிக்காகவும், மீனவ மகளிர் கூட்டமைப்பின் தலைவர் பொறுப்பேற்று, மீனவ மகளிருக்கு வாழ்வாதாரப் பணியை மீட்டுத் தர இவர் மேற்கொண்ட நடவடிக்கைக்காகவும் இவர் சீக்காலஜி விருதிற்காகத் தேர்வு செய்யப்பட்டார். இந்த விருதையும், சான்றிதழையும், ஆறரை லட்சம் ரூபாய் (பத்தாயிரம் டாலர்) மதிப்புள்ள பரிசுத் தொகையையும் சீக்காலஜி அமைப்பின் நிறுவனர் டாக்டர் பால் ஆலன் காக்ஸ் அவர்கள் லட்சுமிக்கு வழங்கி அவரைச் சிறப்பித்தார். விருது மூலம் கிடைக்கும் தொகையில் ஒரு பகுதியை மீனவ குழந்தைகளின் கல்விக்கும், மீனவ மகளிர் கூட்டமைப்பு செயல்பாட்டிற்கும் வழங்கவிருக்கிறார் லட்சுமி. மீனவ மகளிரின் உழைப்பிற்கு உலக அளவில் அங்கீகாரம் கிடைத்ததில் மகிழும் லட்சுமி, மீனவ மகளிர் சேகரிக்கும் பாசிகளுக்கு அரசே விலை நிர்ணயம் செய்தால் மீனவமகளிரின் வாழ்க்கை நிலை உயரும் எனக் கருதுகிறார். திருமிகு லட்சுமியின் கடல்வள பாதுகாப்பு முயற்சிக்காகவும், மீனவ மகளிர் கூட்டமைப்பின் தலைவர் பொறுப்பேற்று, மீனவ மகளிருக்கு வாழ்வாதாரப் பணியை மீட்டுத் தர இவர் மேற்கொண்ட நடவடிக்கைக்காகவும் பாராட்டுகள். October 12, 2015 சேசாத்திரி சிறீதரன் [] கல்வெட்டு ஆர்வலர் திரு. சேசாத்திரி சிறீதரன் அவர்கள், கன்னடம் மற்றும் தெலுங்கு மொழிகள் செம்மொழி தகுதிச்சான்றினை இந்திய அரசிடம் இருந்து பெறும் பொருட்டு சமர்ப்பித்த கல்வெட்டுகளை மறுஆய்வு செய்துள்ளார். அதன் அடிப்படையில், மாற்றுக்கோணத்தைக் காட்டும் கட்டுரைகளை வல்லமை கூகுள் குழுமத்தில் எழுதியுள்ளார். கலிஃபோர்னியா பெர்க்லி பல்கலைக்கழக தமிழ்ப் பேராசிரியர் ஜார்ஜ் ஹார்ட் அவர்கள், 2000 ஆண்டு வாக்கில், அந்நாளில் தமிழ் செம்மொழியாக அறிவிக்கப்படாமல் இருக்க நேர்ந்ததன் காரணத்தை விளக்க முற்பட்டபொழுது (Statement on the Status of Tamil as a Classical Language, Professor of Tamil at the University of California, Berkeley, April 11, 2000), இந்திய அரசியல் சூழ்நிலையும், தமிழுக்குச் செம்மொழி தகுதி வழங்கினால் பிற இந்திய மொழிகளும் தங்கள் மொழிக்காக வற்புறுத்தும் நிலை ஏற்படக்கூடும் என்ற அச்சமும் காரணமாக இருக்கலாம் என்று கீழ்வருமாறு தனது மடல் ஒன்றில் (http://southasia.berkeley.edu/tamil-classes) குறிப்பிட்டிருந்தார்… “In trying to discern why Tamil has not been recognized as a classical language, I can see only a political reason: there is a fear that if Tamil is selected as a classical language, other Indian languages may claim similar status. “ இந்திய மொழிகளில் செம்மொழித்தகுதிகள் கொண்டவை தமிழும் சமஸ்கிருதமும் மட்டுமே என்பது பேராசிரியர் ஜார்ஜ் ஹார்ட் அவர்களின் கருத்து. அவர் சந்தேகித்த “அரசியல்” என்ற காரணம் பின்னாளில் பொய்க்கவில்லை. தமிழுக்குச் செம்மொழி தகுதி அறிவிக்கப்பட்டதும், தமிழில் இருந்து கிளைத்த பிற திராவிட மொழிகளும் தங்கள் மொழிக்குப் பெருமை சேர்க்கும் நோக்கில் செம்மொழி தகுதி கேட்டு இந்திய அரசிடம் வேண்டுகோள் விடுக்கத் துவங்கின. இதைத் தொடர்ந்து, ஒரு மொழிக்கு செம்மொழிச் சான்று வழங்க இந்திய அரசு சில நெறிமுறைகளைப் பின்பற்றியது. அந்த நெறிமுறைகளின்படி, ஒரு மொழியின் பழைய இலக்கியங்கள் அல்லது பதியப்பட்ட வரலாறு 1,500 முதல் 2,000 ஆண்டுகள் பழமை மிக்கதாய் இருக்க வேண்டும் என்று வரையறுக்கப்பட்டது. இந்த வரைமுறைகளின் அடிப்படையில் இதுவரை தமிழ், சமஸ்கிருதம், கன்னடம், தெலுங்கு, மலையாளம், ஒடியா என ஆறு மொழிகள் இந்திய அரசால் செம்மொழிகளாக ஏற்று அறிவிக்கப்பட்டுள்ளன. தங்கள் மொழியின் பழமைக்குச் சான்றாக கன்னட மொழியினர் “ஹல்மிடி” கல்வெட்டினையும், தெலுங்கு மொழியினர் “கலமல்லா” கல்வெட்டினையும் சமர்ப்பித்து தங்களது மொழிகளுக்குச் செம்மொழி தகுதியினைப் பெற்றனர். இதற்கான சான்றுகளையும், அதன் மேல் கல்வெட்டு ஆர்வலர் திரு. சேசாத்திரி அவர்கள் எழுப்பும் கேள்விகளையும் இனி சுருக்கமாக கீழே காணலாம் (கருத்துக்களை விளக்க இயன்றவரை அவர் எழுத்துகள் கையாளப்பட்டுள்ளன). கன்னட மொழியின் பழமைக்குச் சான்றாக கருநாடகத்து அசன் மாவட்டத்தில் உள்ள பேளூர் வட்டத்தில் அமைந்த ஹல்மிடி என்ற ஊரின்கண் அமைந்துள்ள வீரபத்திரன் கோவில் முன் மைசூர் அரசின் தொல்லியல் துறை இயக்குநராக இருந்த திரு எம். எச். கிருஷ்ணாவால் 1936 இல் கண்டறியப்பட்ட காலம் குறிப்பிடாத கல்வெட்டு ஒன்றை ஆவணமாகக் காட்டி கன்னட மொழிக்கு செம்மொழித் தகுதி பெற்றுள்ளனர். இதன் காலம் கி.பி. 450 என அறிஞர்களால் தீர்மானிக்கப்பட்டுள்ளது. எனினும் இதன் காலம் குறித்து பல்வேறு அறிஞரிடையே முரண்பட்ட கருத்துகள் நிலவுகின்றன. இதில் பயிலும் மொழி முது பழங்கன்னடம் எனப்படுகிறது. கல்வெட்டில் காலக் குறிப்பு ஏதும் இடம்பெறவில்லை. கதம்பன் ககுஸ்தன் என்ற பெயர் இடம்பெறுவதை மட்டுமே கருத்தில் கொண்டு இக்கல்வெட்டு கி.பி.450 இல் வடிக்கப்பட்டது என்று அறிஞர் முடிவு கொண்டு விட்டனர். இது ஒரு தவறான அணுகுமுறை, என்று கூறும் சேசாத்திரி, - இக்கல்வெட்டில் குறிப்பிடும் அரசன் அதே பெயரிலுள்ள பிற்காலத்தவர் என்ற கருத்து வேறுபாடுகள் உள்ளன - கல்வெட்டில் சமஸ்கிரதம் அதிகம் கலந்துள்ளது, ஆனால் தென்னகத்தில் சமற்கிருத மொழி 6 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் தான் அறிமுகமானது என்பதால் கல்வெட்டின் காலம் கி.பி. 450 என்ற கருத்து அடிபட்டுப் போகிறது - கல்வெட்டில் கி.பி. 7 ஆம் நூற்றாண்டில் வாதராயண வியாசரால் இயற்றப்பட்ட ஸ்ரீமத் பாகவத புராணக் கருத்துகள் எடுத்தாளப்படுகிறது - அத்துடன் கல்வெட்டு குறிப்பிடும் பாவம், புண்ணியம், அறம் ஆகிய கருத்துகள் கி.பி. 7 ஆம் நூற்றாண்டிற்குப் பிறகே மக்களிடம் பரவியது - இக்கல்வெட்டில் காணப்படும் மாபாதகன், மாபாதகம் ஆகிய சொற்கள் இந்தக் கல்வெட்டின் காலத்தை கி.பி. 9 – 10 ஆம் நூற்றாண்டுகளுக்கு நடுவே அல்லது 11 ஆம் நூற்றாண்டில் வைக்கின்றது - கற்கோவில்கள் தென்னகத்தில் பரவிய காலம் கி.பி. 8 ஆம் நூற்றாண்டளவில் என்பதால் அக்காலத்தியக் கல்வெட்டாகவே இக்கல்வெட்டு இருக்கும் வாய்ப்புள்ளது எனவே, மேற்கூறிய காரணங்களால் ஹல்மிடி கல்வெட்டு கன்னடத்திற்குச் செம்மொழி ஆவணமாகக் காட்டுவதற்கு பொருத்தமற்றதாக உள்ளது என்ற முடிவிற்கு இட்டுச்செல்கிறது எனக் கூறுகிறார். அடுத்து, தெலுங்கு மொழியின் பழமைக்குச் சான்றாக, கடப்பை மாவட்டம் கமலாபுரம் வட்டம் ஏற்ரகுடிபாலேம் கலமல்லா ஸ்ரீ சென்னகேசவ பெருமாள் கோவிலில் கண்டு அறியப்பட்ட ரேனாட்டு சோழன் எரிகல் முத்துராசு தனஞ்செயன் பற்றிய கல்வெட்டு எழுத்தமைதியால் பழமையானது, கி.பி. 575 ஆம் நூற்றாண்டினது என்று முடிவு செய்யப்பட்டு அதை நடுவண் பண்பாடு அமைச்சகத்திற்குச் சான்று ஆவணமாகக் காட்டியுள்ளனர் தெலுங்கு மொழியினர். அக் கல்வெட்டுத் தொடர்பான சேசாத்திரியின் கருத்துகள், - தென்னிந்திய கல்வெட்டுகள் தொகுதி 10 ல் இக்கல்வெட்டின் காலம் குறித்தோ அல்லது எழுத்தமைதி மிகப் பழமையானது என்றோ எந்தக் குறிப்பும் இல்லை - கல்வெட்டிலும் காலக் குறிப்பு ஏதும் இல்லை - ரேனாட்டு சோழன் தனஞ்சயனின் மெய்க்கீர்த்திகளோ அல்லது ரைவணனின் அரச பின்னணிக் குறிப்புகளோ இக்கல்வெட்டில் இடம்பெறவில்லை ஆதலால் இது அரசர் வெட்டிய கல்வெட்டு அல்ல - எரிகல் முத்துராஜு புண்ணியகுமார என்ற பெயரில் இன்னொரு அரசனும் இருந்துள்ளான். ஆதலால் பிற்கால அரசர் சிலர் எரிகல் முத்துராஜு என்ற மூதாதையின் பெயரை தம் பெயரோடு இணைத்துக் கொண்டார்கள் என்று கருதுவதே சரி - கல்வெட்டு குறிக்கும் தனஞ்சயன், ரேவண் ஆகிய பெயர்கள் புராணப் பெயர்கள். தனஞ்சயன் என்ற பெயர் முதன் முதலாக கி.பி. 7 ஆம் நூற்றாண்டில் வாதராயண வியாசர் இயற்றப்பட்ட பாகவத புராணத்தில் தான் இடம் பெறுகிறது. அதற்கு முன்னம் இப்பெயர் பரவியிருக்க வாய்ப்பில்லை - பாறைகளைச் செதுக்கி கற்றளிகள் கட்டுவது தென்னிந்தியாவில் முதன்முதலாக 8 ஆம் நூற்றாண்டில் தான் ராசசிம்மப் பல்லவனால் தொடங்கி வைக்கப்பட்டது. இக்கல்வெட்டு திறந்த வெளியில் நிறுத்தப்பட்ட கல்வெட்டு அல்ல மாறாகக் கற்கோவிலின் ஒரு தூணில் இருபக்கங்களில் வெட்டப்பட்ட கல்வெட்டு எனும்போது இது 6 ஆம் நூற்றாண்டு கல்வெட்டாக இருக்க முடியாது 8 ஆம் நூற்றாண்டிற்குப் பிற்பட்ட கல்வெட்டாகத்தான் இருக்க முடியும் - மேலும், கல்வெட்டில் இழிந்த குலத்தோர் என்ற குறிப்பு இக்கல்வெட்டின் காலத்தை மேலும் பின்னுக்குத் தள்ளுகிறது. புராண இந்து மதம் பரவிய பின்பு 9 – 10 ஆம் நூற்றாண்டுகளில் தான் பிறப்பு வழி ஏற்றத் தாழ்வுகள் மக்கள் கருத்தில் வேரூன்றின. ஆகவே இக்கல்வெட்டு 10 ஆம் நூற்றாண்டளவில் வெட்டப்பட்டிருக்க வேண்டும் என்று கருதவே இடம் தருகிறது எனவே, தெலுங்கைச் செம்மொழி என காட்டற்கு இக்கல்வெட்டிற்குச் சற்றும் தகுதி இல்லை. ஏனெனில் இதனினும் பழமையான தெலுங்கு நடுகல் கல்வெட்டுகள் உள்ளன என்பது கல்வெட்டு பற்றிய சேசாத்திரியின் கருத்து எனவே, இரு கல்வெட்டுகளும் அவை கூறப்படும் காலத்திற்கு பிற்காலத்தவை, இவை பிற்காலத்தில் கற்கோவில்கள் தோன்றிய பிறகு அவற்றின் பகுதிகள், இவை பிற்காலப் புராணக் கதைகளை கொண்டுள்ளன, பிற்காலத்திய அரசன் பெயர்கள் என்பது கருத்தில் கொள்ளப்படவில்லை, பிற்காலத்தில் மக்களிடம் புழக்கத்திற்கு வந்த கருத்தாக்கங்களை கொண்டுள்ளன என்ற காரணங்களைக் காட்டி, கல்வெட்டுகளின் கால நிர்ணயத்தின் மீது கேள்விகள் எழுப்பி அவற்றின் பழமையை நிராகரிக்கிறார் திரு. சேசாத்திரி. இவ்வாறு புதிய கோணங்களைக் காட்டி, கல்வெட்டு ஆவணச் சான்றுகளின் காலத்தைப் பற்றிய சிறப்பான கட்டுரைகளை வழங்கிய திரு. சேசாத்திரி அவர்களுக்குப் பாராட்டுகள். October 19, 2015 லெ. சொக்கலிங்கம் [] சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை “சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியின் தலைமை ஆசிரியர்” திரு. லெ. சொக்கலிங்கம் அவர்கள் லட்சிய ஆசிரியர் விருது பெற்றுள்ளார். லட்சிய ஆசிரியர் என்பவர் உலகளாவிய பிரச்சினைகளுக்குத் தீர்வு காணும் கல்வியை மாணவர்களுக்குக் கற்பிக்க வேண்டும் என்ற நோக்கில் தினமலர் நாளிதழ் வழங்கிய இந்த ஆண்டுக்கான லட்சிய ஆசிரியர் விருதையும், அத்துடன் மற்றுமொரு விருதாக, “அக்னி சிறகுகள் அறக்கட்டளை” வழங்கிய நல்லாசிரியர் விருதினையும் பெற்ற திரு. லெ. சொக்கலிங்கம் அவர்கள், கல்வியில் ஒரு சமூக மாற்றத்தை நிகழ்த்தும் வகையில் அவர் ஆற்றிவரும் தொடர் முயற்சிகளுக்காகவும் பாராட்டப்படவேண்டியவர். - அக்னி சிறகுகள் அறக்கட்டளை வழங்கிய நல்லாசிரியர் விருது - 2015 ஆண்டுக்கான புதிய தலைமுறை ஆசிரியர் விருது - 2015 ஆண்டுக்கான தினமலர் லட்சிய ஆசிரியர் விருது - கற்பித்தலில் புதுமை புகுத்தும் ஆசிரியராக மாநில கல்வியியல் ஆராய்ச்சி, பயிற்சி நிறுவனத்தின் தேர்வு - ஆனந்த விகடனில், கலாமின் காலடிச்சுவட்டில் களத்தில் 100 இளைஞரெனத் தேர்வு - சுட்டி விகடன் வழங்கிய கனவு ஆசிரியர் என்ற பாராட்டு - நடிகர் ராகவா லாரன்ஸ் அவர்களுடன் ஆனந்த விகடன் குழுமம் இணைந்து செயல் பட உள்ள அறம் செய விரும்பு திட்டத்தில் சேவை செய்ய நடிகர் ராகவா லாரன்ஸ் அவர்களால் தேர்வு, எனக் கடந்த ஆண்டில் மட்டும் இவர் பெற்ற பாராட்டு மற்றும் விருதுகளின் பட்டியல் வளர்கிறது. திரு. லெ. சொக்கலிங்கமும், இவரது ஆசிரியர் குழுவினரும் மாணவர்களின் கல்வியில் காட்டும் அக்கறை மற்றும் சிறப்புப் பயிற்சிகளினாலும், இவரது தலைமையிலும், வழிகாட்டுதலிலும், முயற்சிகளினாலும் இப்பள்ளி மாணவர்கள் தனியார் பள்ளி மாணவர்களையும் விஞ்சும் வண்ணம் பலபோட்டிகளில் வெற்றிபெற்று வருகிறார்கள். இப்பள்ளி மாணவர்களின் கல்வித்திறம் பற்றிய செய்திகள் பத்திரிக்கைகள், தொலைக்காட்சி என ஊடகங்களில் தொடர்ந்து வெளிவந்த வண்ணமிருக்கும் சாதனைகள் யாவும் ஒப்பீட்டில் சிறப்புக் கவனிப்பிற்காக நடத்தப்படும் தனியார் பள்ளிகளில் எந்த வகையிலும் சளைத்ததாக இல்லை. - கல்வியை அதற்குரிய அனுபவத்தோடு கற்கும்போது, வாழ்க்கையின் எந்தச் சூழலிலும் அது மறக்காது - கல்வி கற்பது வகுப்பறைக்குள் மட்டுமல்ல, மாணவர்களின் கல்வியை வகுப்பறைக்குள்ளேயே முடக்கிவிடாமல், வகுப்பறைக்கு வெளியேயும் அவர்களுக்கு நிறைய கற்றுக் கொடுக்கத் தேவை இருக்கிறது என்ற தனது கொள்கைகளை நடைமுறைப்படுத்தும் நோக்கில் சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியை வழி நடத்திச் செல்கிறார் திரு. லெ. சொக்கலிங்கம் அவர்கள். அரசு உதவி பெறும் பள்ளியான தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி, 1934 ம் ஆண்டு (இந்தியா சுதந்திரம் பெறுவதற்கும் முன்னரே) தேவகோட்டை மக்களின் கல்வி வளர்ச்சியினைக் கருத்தில் கொண்டு துவங்கப்பட்டது. பின்தங்கிய சமுதாய மாணவர்களின் கல்வி, மற்றும் வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள மாணவர்களின் கல்வி நலனுக்குக்காவும் துவக்கப்பட்ட பள்ளி இது என்பது குறிப்பிடத்தக்கது. நேரடியாக சமுதாயத்தில் மிகவும் பின்தங்கிய நிலையில் உள்ள நரிக்குறவ சமுதாய இன மக்கள், ஊர் ஊராய் சென்று குறி சொல்லும், ஜோசியம் பார்க்கும் தொட்டிய நாயக்கர் சமுதாய மாணவர்கள், இலங்கை அகதிகள் முகாம் மாணவர்கள் என அனைவரையும் அவர்களின் அவர்களது இருப்பிடத்தில் நேரடியாகச் சந்தித்து இப்பள்ளியின் ஆசிரியர்கள் அவர்களைப் பள்ளிகளில் சேர்க்கிறார்கள். கல்வி சார்ந்த நிறைய நிகழ்வுகளைப் பள்ளியிலும், களப்பயணமாக புத்தக திருவிழா, அஞ்சலகம், வங்கி, நூலகம், அறிவியல் கல்லூரி ஆய்வகங்கள் என முக்கிய இடங்களுக்கு அழைத்துச் சென்று வெளியிலும் கற்றலின் அனுபவத்தைப் புதுமையாக்கி வருகின்றார்கள். திருக்குறள், அபிராமி அந்தாதி போன்ற இலக்கியங்கள் வகுப்பறைப் பாடங்களாக முடிந்துவிடாமல், இசையோடு கூடிய நடனம் போன்ற கலைநிகழ்ச்சிகள் மூலமும் பயிற்றுவிக்கப்படுகிறது. தமிழக புள்ளியியல் துறையின் முதன்மை செயலர் இறையன்பு இ. ஆ.ப., தேவகோட்டை உதவி ஆட்சித்தலைவர் சிதம்பரம், கணேசன், தமிழ்நாடு மின்சாரத் துறை பொறியாளர் சந்திரசேகர், பொம்மலாட்ட ஆசிரியர் தாமஸ் ஆண்டனி, திருக்குறள் நடனம் சொல்லும் சுந்தர மகாலிங்கம், தமிழ்நாடு அறிவியல் மையத்தின் திருச்சி அண்ணா கோளரங்க இயக்குநர் லெனின் தமிழ் கோவன் போன்ற பல்வேறு துறைகளின் வல்லுநர்களைப் பள்ளிக்கு அழைத்து மாணவர்களுடன் கலந்துரையாடலுக்கு ஏற்பாடு செய்வதுடன், மாணவர்கள் அவர்களிடம் கேள்வி கேட்டு பதில் பெற்று தங்களது அறிவை விரிவாக்கிக் கொள்ளவும் ஊக்கப்படுத்தப்படுகிறார்கள். இதனால் மாணவர்களும் தயக்கமின்றி கலந்துரையாடல்களில் பங்கு பெறுகிறார்கள். மாதம் ஒரு தலைப்பின் கீழ், ஒவ்வொருவாரமும் மாணவர்களுக்குப் பேச்சு, கவிதை, ஓவியம், மனக்கணக்கு, புதிர்கணக்கு, வாசிப்பு போன்று பல்வேறு தலைப்புகளில் போட்டிகளை நடத்தி பரிசு வழங்குவதுடன், ஒவ்வொரு மாதமும் பாடத்தில் வினாடி வினா போட்டிகள் நடத்தி பரிசுகளும் வழங்கப்படுகின்றன. வெற்றி பெற்றோருக்கு வாய்ப்பு ஒருமுறை மட்டுமே என்ற திட்டத்தினால் அனைவரும் வெற்றி பெற வேண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்பதும் மாணவர்களுக்கும் உணர்த்தப்படுகிறது. இது போன்ற தொடர் போட்டிகளும் பயிற்சிகளும் மாணவர்களை மேலும் பல போட்டிகளில் கலந்து கொள்ள ஊக்குவிக்கிறது. இதனால், ஊடகங்கள் நடத்தும் போட்டிகளில் இப்பள்ளி மாணவர்கள் பலர் தன்னம்பிக்கையுடனும் ஊக்கத்துடனும் பங்கேற்று சான்றிதழ்களையும் பரிசுகளையும் பெற்று வருகிறார்கள். அன்றாடங்காய்ச்சியான நிலையில் வாழும் குடும்பங்களின் மாணவர்களுக்காக விடுமுறை நாட்களிலும் ஆசிரியர்களே தங்கள் மாணவர்களை மற்ற ஊர்களில் நடக்கும் போட்டிகளுக்கும் அழைத்துச் சென்று பங்கேற்க உதவி வருகிறார்கள். மத்திய அரசின் அஞ்சல் துறையின் ஓவியப் போட்டி, நியூஸ் 7 தமிழ் தொலைக்காட்சியின் பேச்சுப் போட்டி, அறிவியல், பாடல் ஒப்புவித்தல், கலைநிகழ்ச்சி போட்டிகள், ஊடகங்கள் நடத்தும் கதை, கட்டுரை, ஓவியப் போட்டிகள் என இப்பள்ளி மாணவர்கள் தங்கள் திறமையைக் காட்டுவது பல ஊடகச் செய்திகளாகவும் வெளிவருகின்றன. தங்கள் பள்ளியின் கற்பித்தல் முறையை விளக்கும் திரு. லெ. சொக்கலிங்கம் அவர்கள், “மாணவர்கள் வெறும் மனப்பாடம் செய்யும் இயந்திரங்களாக மாறிக் கொண்டிருக்கும் காலம் இது. ஆனால் கல்வி, வாழ்க்கையோடு தொடர்புடையது. வாழ்க்கைக்குப் பயன்படக் கூடியது. மாணவர்கள் ஏட்டுப் படிப்பிலேயே கூட்டுப் புழுக்களாய் சுருங்கிவிடாமல், முழுமையான அறிவு பெற்றவர்களாக வளர வேண்டும் என்ற எண்ணத்தில் எங்கள் பள்ளியில் பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்தி மாணவர்களை அதில் பங்கேற்கச் செய்கிறோம். இதனால் மாணவர்களின் அறிவு, திறமை வளர்கிறது. அதுமட்டுமல்ல, பிறரிடம் பழகுவதற்கு அவர்கள் கூச்சப்படுவதில்லை” என்று தனது செய்தி ஒன்றில் குறிப்பிடுகிறார். மாணவர்களின் கல்வியில் சிறந்த அக்கறை கொண்டு செயலாற்றும் திரு. லெ. சொக்கலிங்கம் அவர்களுக்குப் பாராட்டுகள். October 26, 2015 டி. நாகராஜன் [] தமிழில் எழுத்துரை – பேச்சுரை மாற்றிக்கான மென்பொருளை (Tamil text to speech software) உருவாக்கியுள்ளவர், எஸ். எஸ். என். பொறியியல் கல்லூரியின் (SSN College of Engineering) தொலைத்தொடர்பு தொழில்நுட்பத் துறையின்(Department of Information Technology) தலைவரும், பேராசிரியருமான முனைவர் டி. நாகராஜன் அவர்கள். முனைவர் டி. நாகராஜனும், அவருடைய தலைமையில் அவரது குழுவினரும் உருவாக்கியுள்ள “தமிழ் எழுத்துரை – பேச்சுரை மாற்றி மென்பொருளை” அவர் தமிழ் இணையக் கழகத்தில் இயக்கிக் காட்டினார். இந்த மென்பொருளின் செயல்பாட்டை பார்வையிட்ட, தமிழக அரசின் 2013 ஆண்டிற்கான கணித்தமிழ் விருதாளரும், மொழியியல் பேராசிரியருமான முனைவர் ந. தெய்வ சுந்தரம் அவர்கள், ‘உண்மையில் மிக நன்றாக உள்ளது. மிகவும் மகிழ்ச்சியாகவிருந்தது. ஏறக்குறைய 100% சரியாக இயங்குகிறது … மேலும் சிறிது உழைத்தால், மொழியியல் ஆய்வாளர்களுடன் இணைந்து செயல்பட்டால், உச்சரிப்பில் இயல்புத் தன்மையை மேலும் மேம்படுத்தலாம்,’ என்று கருத்து தெரிவித்துள்ளார். முனைவர் டி. நாகராஜன் அவர்களின் தமிழ் எழுத்துரை – பேச்சுரை மாற்றி மென்பொருளை இயக்கி அதன் செயல்பாட்டை அறிய விரும்புபவர்கள் – http://www.ssn.edu.in/Speech_Lab/tts_demo.html – என்ற தளத்திற்குச் சென்று பயன்பெறலாம். அத்தளத்தில் 1. தங்களுக்குத் தேவையான தமிழ் மொழி தகவலைப் பதிவிட்டு, 2. மென்பொருளை இயக்கி (விருப்பமான குரலை – ஆண் குரலையோ, பெண் குரலையோ தேர்வு செய்யலாம்) 3. மென்பொருள் தமிழைப் படிப்பதைக் கேட்கலாம், 4. தேவையானால் அதனை ஒலிக்கோப்பாக தங்கள் கணினியில் சேமித்தும் பயன்பெறலாம். முனைவர் டி. நாகராஜன் அவர்கள் சென்னை ஐ.ஐ.டி. பல்கலைக்கழகத்தில் 2004 ஆம் ஆண்டு கணினி அறிவியலில் முனைவர் பட்டம் பெற்றவர். முனைவர் பட்ட ஆய்வில் பேச்சொலி மொழியை அடையாளம் காணும் ஆய்வில் ஈடுபட்டிருந்தார். பிறகு தனியார் நிறுவனம் ஒன்றின் ஆய்வுத் திட்டத்தில் பங்கேற்றுப் பணியாற்றிய பிறகு, கனடாவின் தேசிய அறிவியல் ஆய்வு நிறுவனத்தில் முதுமுனைவராக (postdoctoral fellow at The National Institute of Scientific Research – INRS, Montreal, Canada) இரண்டு ஆண்டுகள் தனது ஆய்வுகளைத் தொடர்ந்தார். அந்த ஆய்வில் தொடர் பேச்சொலியை அடையாளம் காணுவதையும், ஒலியை வகைப்படுத்தும் தொழில்நுட்பங்களைக் கண்டறியும் ஆய்வுகளிலும் ஈடுபட்டார். இரண்டாண்டு முதுமுனைவர் ஆய்விற்குப் பிறகு, சென்னை எஸ். எஸ். என். பொறியியல் கல்லூரியின் பேராசிரியராகப் பணியில் இணைந்து இன்றுவரை ஆய்விலும், கற்பித்தலிலும், ஆய்வு மாணவர்களை நெறிப்படுத்துவதிலும் பங்கு பெற்று வருகிறார். கருத்தரங்கங்களிலும், ஆய்விதழ்களிலும் தனது ஆய்வுகளைப்பற்றி இதுவரை சுமார் 80 ஆய்வறிக்கைகளை வெளியிட்டுள்ளார். மேலும், இவர் தற்பொழுது ஈடுபட்டிருக்கும் ஆய்வுகளையும், இவரது ஆய்வுப்பணிகளைப் பற்றி விரிவாக இத்தளத்தில் – http://www.ssn.edu.in/?page_id=1483 – அறிந்து கொள்ளலாம். கணினித் தமிழ் வளர்ச்சியில் முக்கியப் பங்கு பெரும் தமிழ் எழுத்துரை – பேச்சுரை மாற்றி மென்பொருளை உருவாக்கியுள்ளமைக்காக முனைவர் டி. நாகராஜன் அவர்களுக்குப் பாராட்டுகள். November 2, 2015 நா. கண்ணன் [] இந்தியாவின் கொரிய துணைத் தூதரகமும், உலகத்தமிழாராய்ச்சி நிறுவனமும் இணைந்து “இந்திய – கொரிய கலாச்சார பரிமாற்றம்” என்ற தலைப்பிலான உலகளாவிய ஆய்வுக் கருத்தரங்கை சென்னையில் நவம்பர் 6, 2015 அன்று நடத்தின. இக்கருத்தரங்கு நடைபெறத் துவக்கம் முதல் ஒரு வினையூக்கியாக இருந்தவர் பேராசிரியர் முனைவர் நா. கண்ணன் அவர்கள். அக்கருத்தரங்கில் “In search of an ancient relationship between Tamilnadu, India and Kaya Kingdom, Korea: Discovery, research, hopes and questions” என்ற தலைப்பில், “தமிழ் கொரியா ஆகிய இருமொழிகளுக்குமான உறவிற்கு, இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் கொரியாவின் அரசியாக இருந்தவர், இந்தியாவில் இருந்து சென்று கொரிய அரசரை மணந்து கொண்ட, பாண்டியநாட்டு இளவரசியான ஒரு தமிழ்மகளாக இருக்க வாய்ப்புகள் உள்ளது” என்ற கருதுகோளில் ஆய்வுரை வழங்கியுள்ளார். இருமொழிகளுக்கும் உள்ள உறவை ஆராயும் அவரது இத்தகைய ஆய்வு முயற்சி பாராட்டப் படவேண்டிய ஒன்று. தமிழ் மரபு அறக்கட்டளை அமைப்பின் தலைவரும், நிறுவனர்களில் ஒருவருமான முனைவர் நா. கண்ணன் (நாராயணன் கண்ணன்) அவர்கள், அந்த அறக்கட்டளையின் சார்பில் இந்த ஆய்வை முன்னெடுத்துள்ளார். முனைவர் நா. கண்ணன் ஒரு அறிவியல் ஆய்வாளர். மதுரைப் பல்கலைக் கழகத்திலும் (Madurai Kamaraj University, India), ஜப்பானிலுள்ள எஹிமே பல்கலைக் கழகத்திலும் ( Ehime University, Japan) வேதியியல் ஆய்வில் ஈடுபட்டு இருமுறை முனைவர் பட்டங்கள் பெற்றவர். உயிர் வேதிமவியல், சூழலியல் ஆகியவற்றில் கொண்ட ஆர்வம் காரணமாக சுற்றுப்புறச்சூழலை மாசுபடுத்துவதால் உயிரினங்களின் வாழ்வில் ஏற்படுத்தும் தாக்கத்தைப் பற்றிய ஆய்வுகளை நடத்தி வருகிறார். ஜெர்மனியின் ‘கீல்’ பல்கலைக்கழகத்தில் (கடலாய்வு மையம்) இணைப்பேராசிரியராகவும், கொரியக் கடலாய்வு மையத்தில் ஆசிய-பசிபிக் நாடுகளுக்கான உயர் பயிற்சி மையத்தின் இயக்குநராகவும் பணியாற்றிய முனைவர் நா. கண்ணன், தற்பொழுது மலேசியாவின் புத்ரா பல்கலைக்கழகத்தில் கடந்த இரண்டாண்டுகளாகப் பேராசிரியராகப் பணியாற்றி வருகிறார். தமிழ் ஆர்வலரான முனைவர் நா. கண்ணன், தான் நிறுவிய தமிழ் மரபு அறக்கட்டளை (Tamil Heritage Foundation) அமைப்பின் மூலம் தமிழ் மரபு சார் இலக்கிய, வரலாற்று, கலை வடிவங்களை எண்ணிம வடிவில் பாதுகாக்கும் முயற்சிகள் மேற்கொண்ட முன்னோடிகளில் ஒருவர். மதுரைத்திட்டத்தில் ஐரோப்பிய ஒருங்கமைப்பாளராகவும், உத்தமம் அமைப்பின் (உலகத் தமிழ் தகவல் தொழில்நுட்ப மன்றம் – உத்தமம்/ International Forum for Information Technology in Tamil – INFITT) தொன்மை உறுப்பினராக, அதன் ஐரோப்பிய கிளையின் தலைவராகவும் செயல்பட்டு இருக்கிறார். கவிதை, கட்டுரை, சிறுகதை, குறுநாவல் எனப் படைப்புகள் பல உருவாக்கி தமிழிலக்கியப் பங்காற்றிய முனைவர் நா. கண்ணன் அவர்களது படைப்புகள் கணையாழி, சுபமங்களா, இந்தியா டுடே, குங்குமம் மற்றும் புகலிடப் பத்திரிக்கைகளில் வெளிவந்திருக்கின்றன. திசைகள் மின்னிதழ், இ-சங்கமம், சிஃபி டாட் காம் ஆகிய இதழ்களில் சில காலம் ஆசிரியர் குழுவில் பங்கேற்று தனது பங்களிப்பை அளித்துள்ளார். ‘உதிர் இலை காலம்’, ‘நிழல்வெளி மாந்தர்’ ஆகிய சிறுகதை நூல்களையும், ‘விலை போகும் நினைவுகள்’ என்ற குறும்புதினத்தையும், ‘பாசுர மடல்கள்’ என்ற படைப்புக்களை குறுந்தகடு வெளியீடாகவும் வெளியிட்டுள்ளார். கொரியாவில் பணிபுரிந்த காலத்தில் கொரிய மொழிக்கும் தமிழுக்கும் உள்ள ஒற்றுமைகளைக் கண்டுணர்ந்து மேலும் ஆராயத் தலைப்பட்டார். இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர், பொது ஆண்டு 48 ஆம் ஆண்டில், கொரியா நாட்டின் பண்டைக்கால ‘கயா’ அரசின் அரசர் ‘சுரோ’ (King Suro of Geumgwan Gaya) என்பவர், ‘ஹூவாங் ஹூ’ (Heo Hwang-ok) என்ற இளவரசியை மணந்தார். இந்த இளவரசி அரசரை மணம் புரிவதற்காக கப்பலில் வந்தவர். இவரது பெற்றோரின் கனவில் இளவரசியை அரசர் சுரோவுக்கு மணமுடிக்குமாறு அறிவித்த கடவுளின் கட்டளையை ஏற்று, அரசகுடும்பம் தனது இளவரசியைக் கப்பலில் ஏற்றி அனுப்பியது. இது போன்றே தனது மனைவி கப்பலில் வருவாள் என்ற தெய்வவாக்கு கிடைத்த அரசர் சுரோவும் கப்பலில் வந்த இளவரசி கூறியதை ஏற்று அவளை மணமுடித்தார் என்பதை பதின்மூன்றாம் நூற்றாண்டில் எழுதப்பட்ட ‘சம்குக்யுசா’ (Samguk Yusa) என்ற கொரிய நூல் கூறுகிறது. மேலும், அரசர் சுரோவை மணந்த இளவரசியே கயா அரசின் முதல் அரசி, இவர் தொலைதூரத்தில் இருந்து வந்தவர் என்றும், தனது கப்பலில் யாழ், தேயிலைச் செடி, புயலில் கப்பலை நிலைப் படுத்தும் கல்லடுக்குகள் ஆகியவற்றுடன், இரட்டை மீன் சின்னத்தைக் கொண்டுவந்தார் என்பதும், ஆயுக்த நாட்டின் அரசர் இளவரசியின் தந்தை என்று இளவரசி கூறினார் என்பதும் அந்த நூல் தரும் தகவல். இவரது பெயரின் பொருளான ‘மஞ்சள் நிற ரத்தினம்’ (yellow jade) என்பதைத் தனது கொரிய மொழியில் ஹூவாங் ஹூ என மொழிபெயர்த்து அரசர் அழைத்தார் என்பதும் அந்த நூல் தரும் தகவல். நூல் குறிப்பிடும் இளவரசியின் தாயகத்தைத் தேட முற்பட்ட கொரிய மக்கள், ‘ஆயுக்தா’ என்பதனை இந்தியாவின் அயோத்தியுடனும் தொடர்புப்படுத்தி, அங்குக் காணப்படும் இரட்டை மீன் இதை உறுதிப்படுத்துவதாகவும் எண்ணி இந்தியா கொரியா என இருநாடுகளின் நல்லுறவைப் பேண நடவடிக்கைகள் எடுத்தனர். ஆனால், நூற்றுக்கணக்கான தமிழ் சொற்கள் அதே பொருளில் கொரிய மொழியில் உள்ளதாலும்; உழவு, நெசவு, மற்ற பிற அன்றாட நிகழ்வுகளில் காணும் ஒருசில கலாச்சார ஒற்றுமைகள் தமிழ்ப் பண்பாட்டை ஒத்திருப்பதாலும்; இரட்டை மீன் சின்னம் கடல் வணிகத்தில் சிறந்து விளங்கிய பாண்டிய மன்னர்களின் முத்திரையைக் காட்டுவதாலும் இந்த இளவரசி பாண்டிய இளவரசியாகவும், அவரது பெயர் ‘செம்பவளம்’ என்பதாக இருக்கக்கூடும் என்பது முனைவர் நா. கண்ணன் அவர்களது கருதுகோள். தமிழ்மரபு அறக்கட்டளையின் மின்தமிழ் குழுமத்தில் இவரது கருதுகோள் விவாதங்களுக்கு உட்பட்டு, அதன் அடுத்த கட்ட வளர்ச்சியாக உலகத்தமிழாராய்ச்சி நிறுவனம் உதவியுடன், இந்தியாவின் கொரிய துணைத் தூதரகமும் இணைந்து “இந்திய – கொரிய கலாச்சார பரிமாற்றம்” என்ற கருத்தரங்கை ஏற்பாடு செய்யும் நிலையை எட்டியது. சென்னைக்கான கொரிய துணைத் தூதர் திரு. கிம் கியாங்சூ அவர்கள் கொரிய மொழிக்கும் தமிழுக்கும் தொன்று தொட்டு உள்ள உறவை ஆய்வு செய்யவும், மேலும் வலுப்படுத்தும் நோக்கத்தில் இந்தக் கருத்தரங்கம் உதவும், இரு நாடுகளுக்கும் இடையேயான கலாச்சார உறவு இது போன்ற ஆய்வுக்கருத்தரங்குகள் மூலம் மேலும் வலுவுறும் என்ற கருத்தினை கருத்தரங்கில் தெரிவித்துள்ளார். இத்தகைய ஆய்வு முயற்சியை முன்னெடுத்த முனைவர் நா. கண்ணன் அவர்களது கருதுகோள் ஆய்வாளர்களால் உறுதி செய்யப்பட்டு இருநாடுகளின் நல்லுறவை வளர்க்க உதவ வாழ்த்துகளும் பாராட்டுகளும். November 9, 2015 நீச்சல்காரன் ராஜாராமன் [] தமிழ் இணையக் கல்விக்கழகமும், தமிழ் விக்கிப்பீடியாவும் கூட்டு முயற்சியாகத் தமிழ் விக்கிபீடியாவில் ‘தமிழக ஊராட்சிகள்’ பற்றிய கட்டுரைகளைச் சேர்த்து வரும்பணி நடந்து வருகிறது. இதுவரை பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட கட்டுரைகள் தானியக்கமாக விக்கிபீடியாவில் பதிவிடப்பட்டுள்ளதுடன் (பார்க்க: https://ta.wikipedia.org/s/4u75) இன்னும் ஓரிரு வாரங்களில் இப்பணி நிறைவுறும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இப்பணியில் முக்கியப் பங்கேற்று செயலாற்றி வருபவர் “நீச்சல்காரன்” என்னும் திருவாளர் சே. ராஜாராமன் அவர்கள். கணித்தமிழுக்காகத் தொடர்ந்து தன்னார்வப்பணிகளை ஆற்றிவருபவர் இந்த வல்லமையாளர். இவரது, “கட்டற்ற மென்பொருள் கணித்தமிழ் வளர்ச்சிக்கு இடரா?“, “விளம்பரங்களுக்கு விலை போகிறோம்” என்ற கட்டுரைகளும், ‘மறுஜென்மம்‘ என்ற சிறுகதையும் வல்லமை மின்னிதழில் வெளிவந்துள்ளன. திண்ணை, சொல்வனம், சிறகு, அதீதம், தமிழோவியம், வார்ப்பு, கீற்று, தமிழ் இந்து, முத்துக் கமலம் போன்ற மற்ற பிற இணைய இதழ்களிலும்; விஜயபாரதம் வார இதழ், வெற்றிநடை மாத இதழ், தமிழ் கம்ப்யூட்டர், அருவி காலாண்டிதழ் போன்ற அச்சுப் பதிப்பில் வெளியாகும் இதழ்களிலும் எழுதியுள்ளார். நீச்சல்காரன் பல்துறையில் திறமைபெற்றவர் என்பதுடன் அவரது சமூக அக்கறை என்ற பண்பும் சேர்ந்ததால், தனது திறமைகளை ஆக்கபூர்வமாகத் தன்னார்வப் பணிகளில் செலுத்திவருகிறார். குறிப்பாகக் கணித்தமிழ் சார்ந்த பங்களிப்பினால் தமிழைப் பிழையின்றி எழுதுவதற்கு உதவும் வகையில் ‘நாவி’ என்ற சந்திப்பிழை திருத்தியையும் (http://dev.neechalkaran.com/p/naavi.html), ‘வாணி’ என்ற தமிழ் எழுத்துப்பிழை திருத்தியையும் (http://vaani.neechalkaran.com உருவாக்கி தனது நீச்சல்காரன் இணையத்தளத்தில் அனைவரும் விலையின்றிப் பயன்பெறும் வண்ணம் வெளியிட்டுள்ளார். ஆங்கில எழுத்தின் உதவியுடன் ஒலிபெயர்ப்பில் தமிழை எழுதிப் பழகிய இக்கால எழுத்தாளர்களுக்கு நீச்சல்காரன் உருவாக்கிய பிழைதிருத்திகள் உதவிகரமானது என்பதைக் கூறத் தேவையில்லை. ஒற்றுப்பிழைகளுடன் எழுதும் பொழுது வலி மிகும், வலி மிகா இடங்களைப் பற்றிய பரிந்துரைகளையும், பிழைகளைச் சுட்டிக்காட்டியும் உதவுகிறது நாவி-சந்திப்பிழை திருத்தி. அவசரகதியில் தட்டச்சும் பொழுது அதிகத் தட்டச்சுப் பிழைகளுடன் எழுதுபவர்களுக்கும், பிழைதிருத்துகையில் மேலோட்டமாகப் படித்துச் செல்லும் கூரிய பார்வை கொண்டிராதவருக்கும் வாணி – தமிழ் எழுத்துப்பிழை திருத்தி இன்றியமையாத மென்பொருள். சந்திப்பிழை திருத்தியைப் பயன்படுத்திப் பார்த்தவரும், விக்கிபீடியாவில் அதிகக் கட்டுரைகளைப் பதிவிட்டவருமான முனைவர் செங்கை பொதுவன் அவர்கள் இதனை எழுத்தாளர்களுக்குப் பரிந்துரைத்துள்ளார். கணினி சார்ந்த ஐயங்களைத் தீர்க்க உதவும் தகவல்களும் விளக்கங்களும் கொண்ட “மானிட்டர் உலகம்” என்ற நூலையும் வெளியிட்டுள்ளார் நீச்சல்காரன். ‘எதிர்நீச்சல்‘, ‘தமிழ்ப்புள்ளி‘ என்ற இணையதளங்களில், இணையம் மற்றும் தகவல் தொழில்நுட்பம் சார்ந்த தகவல்கள் பல பதிவு செய்து வருகிறார். விக்கிபீடியாவில் தமிழ், ஆங்கிலம், இந்தி மொழிகளில் கட்டுரைகள் எழுதிவரும் நீச்சல்காரன், விக்கிபீடியாவின் தமிழ் அகராதியான விக்சனரியின் சொற்தொகுப்பிலும் உள்ளிடலிலும் பங்கேற்றுள்ளார். விக்கியில் கட்டுரைகளை விரிவாகப் படிப்பதற்கு வழிசெய்யும் பல்வேறு இணைப்புகளையும் சேர்க்கும் ஒரு தானியங்கியையும் இவர் வடிவமைத்துள்ளார், தமிழ் விக்கிபீடியாவில் இயங்கிவரும் முக்கியத் தானியங்கி இது. - நீச்சல்பாட் - விக்கிப்பீடியா தொகுக்கும் தானியங்கி - தமிழ் அகராதித் தொகுப்பு - இணையப்படிப்பகம் - வலைப்பூ திரட்டி - தமிழ் டிவிட்/கீச்சு திரட்டி - கோலசுரபி - ஆடுபுலி ஆட்டம் - தமிழ்ச் சொற்புதிர் - தமிழ் மாயயெழுத்து வழங்கி போன்ற மென்பொருள் செயலிகளையும் உருவாக்கி தமிழ் இணையப் பயனர்கள் பயன்பெற அளித்துள்ளார். இருபத்தெட்டு வயதாகும் நீச்சல்காரன் மதுரை யாதவர் கல்லூரியில் இயற்பியலில் இளநிலை பட்டம் பெற்றவர். புனேவில் சிறிதுகாலம் பணியாற்றிய நீச்சல்காரன் தற்பொழுது சென்னையின் புகழ்பெற்ற பன்னாட்டுத் தகவல் தொழில்நுட்பச் சேவை நிறுவனமொன்றில் பிணையக் கட்டுமானத் துறையில் (network-infrastructure) பணிபுரிகிறார். தனது ஓய்வு நேரத்தில் இணையத் தமிழ் தொடர்பான தன்னார்வப்பணிகளைச் செய்து வருகிறார். ஆங்கிலம் தவிர்த்த எந்தப் பிற மொழியின் கருவிகளுக்கும் வணிக அளவில் சந்தை இருக்கப்போவதில்லை, அதனால் கணித்தமிழ் வளர்ச்சிக்கான மென்பொருள்களின் வளர்ச்சியைத் தன்னார்வலர்கள், மொழி சார்ந்த நிறுவனங்கள் மற்றும் அரசு மட்டுமே முன்னெடுக்க முடியும் என்று கருதும் நீச்சல்காரன், மொழி சார்ந்த நிறுவனம் மற்றும் அரசு ஆகியவற்றில் அவர் அங்கம் வகிப்பதில்லை என்பதால் தன்னார்வலராகத் தனது முயற்சிகளைத் தொடர விரும்புகிறார். தமிழ் இலக்கணப் பிழை திருத்தியை உருவாக்கும் திட்டம், பிற இந்தியமொழிகளின் வரிவடிங்களையும் தமிழுக்கு மாற்றும் ஒரு மென்செயலியை உருவாக்கும் திட்டம், மொழிமாற்றி, அருஞ்சொல் பொருள்மாற்றி, எதிர்ச்சொல் மாற்றி என வேறு சில திட்டங்களையும் செயலாக்க விரும்பும் நீச்சல்காரன் ராஜாராமனின் திட்டங்கள் வெற்றி பெறவும், அவரது கணித்தமிழ் தன்னார்வப் பணிகளுக்கும் வாழ்த்துகளும் பாராட்டுகளும். November 16, 2015 கே. பிரித்திகா யாசினி, எஸ். ஐ. [] தொலைக்காட்சிகளின் பண்டிகைக்காலச் சிறப்புத் திரைப்பட வெளியீடு அறிவிப்பு போல அறிவிக்க வேண்டிய சாதனை திருமிகு பிரித்திகா யாசினி அவர்களுடையது. இந்திய வரலாற்றிலேயே முதன் முறையாக, தமிழகத்தின் திருநங்கை பிரித்திகா யாசினி காவல் துறை அதிகாரியாகப் பொறுப்பேற்கிறார். தளரா முயற்சியும் தன்னம்பிக்கையும் கொண்டு, சட்டத்தின் துணையுடன் விடாது போராடி இந்தியவரலாற்றில் தனக்கென ஒரு தனியிடம் பிடித்துள்ளார் இவர். இந்த மாதம் (நவம்பர் 6) சென்னை உயர் நீதி மன்றம் வழங்கிய தீர்ப்பில், பிரித்திகா யாசினி காவல்துறைப் பணிக்குத் தகுதியானவர் எனத் தீர்ப்பு வழங்கி, தமிழகக் காவல் துறையில் காவல் உதவி ஆய்வாளர் பணிக்கு அவரை அமர்த்துமாறு உத்தரவிட்டிருந்தது. சென்றவாரம் (நவம்பர் 16, 2015) தமிழ்நாடு சீருடைப்பணியாளர் தேர்வு வாரியம் வெளியிட்ட பட்டியலில் (Tamil Nadu Uniformed Services Recruitment Board – TNUSRB) நீதிமன்றத்தின் ஆணையை ஏற்று, பிரித்திகா யாசினி அவர்களைக் காவல்துறை உதவி ஆய்வாளர் (Sub Inspector of Police) பணிக்குத் தேர்வுசெய்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தடைகள் பல கடந்து வெற்றிவாகை சூடிய திருமிகு கே. பிரித்திகா யாசினி பாராட்டப்பட வேண்டிய ஒரு வல்லமையாளர். காவல்துறை அதிகாரியாகப் பணியாற்ற விரும்பி சிறுவயது முதல் கனவு கண்ட பிரித்திகா கடந்து வந்த பாதை மிகக் கடினமானது. சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த 25 வயதாகும் பிரித்திகா, வாடகை ஊர்தி ஓட்டும் தந்தைக்கும், தையல் தொழில் செய்யும் தாய்க்கும் மகனாகப் பிறந்த பிரதீப் குமார் ஆவார். பள்ளி நாட்களில் இருந்தே பெண்மை உணர்வு கொண்ட அவரது நடவடிக்கைகள் பள்ளியிலும், பிறகு கணினி சார்ந்த பட்டப்படிப்பு படித்த கல்லூரி நாட்களிலும் பலரது கேலிக்குள்ளானது. இருபதாவது வயதில் தனது பெண்மை நிரம்பிய மனவுணர்வுகளின் வழிநடந்து அறுவை சிகிச்சை மூலம் பெண்ணாக மாற விரும்பிய அவரது எண்ணத்தை அவரது பெற்றோர் ஆதரிக்கவில்லை. மாறாக, மந்திரிப்பது முதல் மனநல மருத்துவம் செய்வது வரை பல வழிகளிலும் அவரது எண்ணத்தைக் கைவிடச் செய்ய முயன்றனர். தனது பெற்றோர்களின் தடைகளினால் வீட்டை விட்டு வெளியேறி சென்னை வந்தார். மகளிர் விடுதியில் காவல் பணியாளர், ஹார்மோன் சிகிச்சை ஆலோசகர், தொண்டு நிறுவன ஊழியர் எனப் பற்பல பணிகளில் ஈடுபட்டதுடன், தமிழினப்படுகொலைக்கு எதிரான போராட்டம், திருநங்கை திருமணம், வேலை வாய்ப்புப் போராட்டங்கள் போன்றவற்றில் பங்கு பெற்று தன்னார்வப் பணிகளும் செய்தார். அறுவை சிகிச்சையும் செய்து கொண்டு பெண்ணாக மாறினார். தமிழ்நாடு சீருடைப்பணியாளர் தேர்வு வாரியம் அறிவித்த காவல்துறை உதவி ஆய்வாளர் பணிக்கு இவர் விண்ணப்பித்தார். தேர்வுக்காக விண்ணப்பித்த முதல் திருநங்கை இவர். விண்ணப்பத்தில் மூன்றாம் பாலினப் பிரிவு குறிப்பிடாத காரணத்தால் பெண் எனக் குறிப்பிட்டார். சான்றிதழ்கள் ஆண் பெயரில் இருக்க, பெண்பெயரில் இருந்த இவரது விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டது. நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து எழுத்துத் தேர்வுக்கு அனுமதி பெற்று தனது ஆவணங்களையும் சட்டப்படி பிரித்திகா என்ற பெயரில் மாற்றிக் கொண்டார். தேர்வறை நுழைவுச்சீட்டைக் கடைசி நேரத்தில் பெற்று, தேர்வு எழுத அனுமதிக்கப்பட்டு ஜேப்பியார் பொறியியல் கல்லூரியில் தேர்வு எழுதினார். கடந்த மே மாதம் நடந்த காவல் உதவி ஆய்வாளர் பணியிடங்களுக்கான இந்த எழுத்துத் தேர்வில் 1078 காவல் உதவி ஆய்வாளர் காலிப்பணியிடங்களுக்கு 1 லட்சத்து 65 ஆயிரம் பேர் பங்கேற்றனர். அத்துறையில் ஏற்கனவே பணியாற்றியவர்களுக்கான 20% ஒதுக்கீட்டைக் கணக்கில் கொண்டால், பொது ஒதுக்கீட்டுதாரர்களுக்கான சுமார் 850 பணியிடங்களுக்குத் தேர்வெழுதியவரின் எண்ணிக்கை இத்தேர்வுக்கான போட்டியின் தீவிரத்தைக் காட்டும். இத்தேர்வில் வெற்றி பெற்றும் ஆகஸ்ட் மாதம் நடந்த உடல்தகுதித்திறன் போட்டிக்கு இவர் அழைக்கப்படாததால் மீண்டும் நீதிமன்றத்தில் முறையிட்டார். நீதிமன்றத்தின் ஆணையில் தேர்வு நடக்கும் நாளுக்கு முதல் நாளன்று தேர்வில் பங்கு பெற வருமாறு அழைப்பைப் பெற்றார். ஆனால் மூன்றாம் பாலினத்திற்கென்ற தகுதி வரையறைகள் நிர்ணயிக்கப்படவில்லை. பல போட்டிகளில் சிறப்பாக வெற்றி பெற்றாலும் உடல் தகுதித் தேர்வில் ஓட்டப்பந்தயத்தில் ஒரு நொடி காலதாமதமாக வந்ததாகக் கூறி பிரித்திகாவை தகுதி நீக்கம் செய்தது தேர்வாணையம். இதனால் போட்டியின் காணொளி ஆதாரங்களைக் கொண்டு மறுபரிசீலனை செய்யுமாறு நீதிமன்றத்தில் விண்ணப்பித்தார். மனிதநேய அடிப்படையில் மீண்டும் ஒருமுறை அவருக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டு அதில் வெற்றி பெற்றார். வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி சஞ்சய்கிஷன் கவுல், நீதிபதி புஷ்பா சத்தியநாராயணா ஆகியோர் இவர் பணிக்குத் தகுதி பெற்றவர் எனத் தீர்ப்பு வழங்கினர். பணிக்குத் தேர்வு செய்யக் காவல்துறைக்கு வழங்கிய ஆணையில், தேசிய சட்டப்பணி ஆணைக்குழு தொடர்ந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், அரசுப் பணிகளில் திருநங்கைகளை 3-வது இனம் என்று குறிப்பிட்டு, அவர்களுக்கு வாய்ப்பு அளிக்கவேண்டும் என்று சென்ற ஆண்டே தீர்ப்பளித்துள்ளது. எனவே, எதிர்காலத்தில் மூன்றாம் பாலினத்தவரும் கலந்து கொள்ளும் வகையில் தேர்வு முறையை மேற்கொள்ள வேண்டும் என்றும் தேர்வாணையத்திற்கு அறிவுறுத்தியுள்ளனர். பாலினப்பிறழ்வுடன் பிறந்த காரணத்தால் வளர்ந்த குடும்பம் முதற்கொண்டு, வாழும் சமூகம் வரை அனைவராலும் புறக்கணிக்கப்பட்டு, தகுதிக்கேற்ற வேலையோ தங்குமிடமோ கிடைப்பதில் சிரமங்கள் எதிர்கொண்டு மூன்றாம் பாலினர் பலர் பிச்சை எடுப்பது, பாலியல் தொழிலுக்குத் தள்ளப்படும் நிலை ஏற்படுகிறது. சமூகம் இவர்களை ஏற்றுக்கொள்ளும் வகையில் மாற பிரித்திகா ஒரு நல்ல முன்மாதிரியாக இருப்பார், அவர்களது நலத்திற்காகப் பாடுபடுவார் என்பது தீர்ப்பெழுதிய நீதிபதிகளின் கருத்தும் கூட. மத்திய அரசின் கணக்கெடுப்புப்படி சுமார் ஐந்து லட்சம் திருநங்கைகள் இந்தியாவில் உள்ளனர், அவர்கள் யாவருக்கும் பிரித்திகாவின் போராட்டமும் வெற்றியும் நல்ல வழிகாட்டுதலாக அமையும் என்பதில் ஐயமில்லை. திருநங்கைகளின் நல்வாழ்விற்காக உதவும் ‘சினேகிதி’ என்ற அரசுசாராத் தொண்டு நிறுவனம், பிரித்திகாவை நம்பிக்கை நட்சத்திரம் எனப் பாராட்டியுள்ளது. தனது கனவுகளைக் கைவிடாது, எஸ். ஐ வேலைக் கிடைக்காவிட்டால் ஐ.பி.எஸ். ஆகும் திட்டத்தில் இருந்தவர் பிரித்திகா. November 23, 2015 ஆர். பி. ரமேஷ் [] வழக்கத்திற்கு மாறாக, அளவுக்கதிகமாகப் பெய்த வடகிழக்குப் பருவமழையின் காரணமாக வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டு தத்தளித்து வருகிறது சென்னையும், சென்னையின் புறநகர்ப்பகுதிகளும், அதன் சுற்றுவட்டாரங்களும். இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு பலர் வீட்டையும் உடைமைகளை இழந்து துன்பப்படுவது செய்திகளாக வந்த வண்ணம் இருக்கிறது. இந்தச் சூழ்நிலையில் பாதிக்கப்பட்டவர்களுக்காகப் போர்க்கால அடிப்படையில் உதவிப்பணிகளும் அரசால் முடுக்கிவிடப்பட்டுள்ளது. தமிழக அரசு மட்டுமின்றி பல அரசு சாரா பொதுப்பணி நிறுவனங்களும் தங்களால் இயன்றவகையில் பாதிக்கப்பட்டோருக்கு உதவி செய்து வருகின்றன. அவ்வாறு காஞ்சிபுரம் மாவட்டம் சிங்கப்பெருமாள் கோவில் பகுதியில் வெள்ளத்தால் சூழ்ந்து பாதிக்கப்பட்ட கிராமங்களின் மக்களுக்கு உணவளித்து உதவி செய்தவர் சமூக நல ஆர்வலரும், தி நியூ லைஃப் அறக்கட்டளை அமைப்பின் நிர்வாகியுமான திரு. ஆர். பி. ரமேஷ் (R. B. Ramesh) அவர்கள். செங்கல்பட்டைச் சேர்ந்த ஆர். பி. ரமேஷ் அவர்கள் சமூக அக்கறை கொண்டவரும், ஆன்மீக ஆர்வலரும் ஆவார். சமூகநலப்பணிகளில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டுள்ள ரமேஷ் அவர்கள் சென்னையில் பள்ளிப்படிப்பையும், திருச்சி நேஷனல் இன்ஸ்டிடுயுட் ஆஃப் டெக்னாலஜி பல்கலைக்கழகத்தில் பொறியியல் படிப்பையும் முடித்து பொறியியலில் பட்டம் பெற்றவர். ரமேஷ் அவர்கள், இந்திய முன்னாள் குடியரசுத் தலைவர் மறைந்த மேதகு ஆர். வெங்கட்ராமன் அவர்களின் மகளும், புகழ் பெற்ற சமூக சேவகியுமான திருமதி பத்மா வெங்கட்ராமன் அவர்களிடம் பணிபுரிந்தவர். நலிவுற்ற மக்களுக்கு உதவும் நோக்கில் ‘தி நியூ லைஃப் அறக்கட்டளை அமைப்பு’ என்ற அறக்கட்டளையைத் துவக்கி, அதன் இயக்குநராகத் திட்டங்கள் வகுத்து வாடும் மக்களுக்குப் பலவகைகளிலும் உதவி செய்து வருகிறார். இதைத் தவிர மேலும் பல சமூகநலப்பணி நிறுவனங்களின் உறுப்பினராகவும், ஆலோசகராகவும் பங்காற்றி வருகிறார். தி நியூ லைஃப் அறக்கட்டளை அமைப்பு சிங்கப்பெருமாள் கோவிலில் உள்ள தொழுநோயாளர்களின் பிள்ளைகளுக்காக நடத்தப்படும் ஞானோதயா உயர்நிலைப்பள்ளி மாணவர்களின் கல்வியிலும், உணவுத் தேவைக்கும் உதவி வருகிறது. செங்கல்பட்டு, காஞ்சீபுரம் மாவட்டங்களில் உள்ள பல அரசு தொழுநோய் மையங்களில் இருப்பவர்களுக்கு அடிப்படை வசதிக்குத் தேவையான பொருட்களை வழங்கியும், மருத்துவ உதவிகளிலும் பங்கேற்று வருகிறது. செங்கல்பட்டு, காஞ்சீபுரம் மாவட்டங்களில் உள்ள அரசுப் பள்ளி மாணவர்களுக்குப் பள்ளி செல்ல மிதிவண்டிகள், காலணிகள், நோட்டுப்புத்தகங்கள், சீருடைகள், உணவு விடுதிக்குத் தட்டுகள் போன்ற உதவிகளும், நோயாளிகளுக்கு இரத்தப் பரிசோதனை போன்ற மருத்துவ உதவிகள், மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கு உதவிகள், மரம் நடுவோருக்கு மரக்கன்றுகள் வழங்கும் உதவிகள், தேவையுள்ளோருக்கு தொழிற்பயிற்சி உதவிகள் என விரியும் உதவிகளினால் சற்றொப்ப ஆயிரம் பள்ளி மாணவர்கள் கல்வி சார்ந்த உதவிகளையும், சுமார் ஐந்நூறு தொழு நோயாளிகள் மருத்துவ உதவிகளையும் பெற்று பயனடைந்துள்ளனர். தி நியூ லைஃப் அறக்கட்டளை அமைப்பு தனது எதிர்காலத் திட்டங்களாக; கல்வி, வேலைவாய்ப்புக்கான தொழிற்பயிற்சி, குக்கிராமங்களின் பொருளாதார முன்னேற்றத்திற்கான உதவி, கிராமப்புற குழந்தைகளுக்கும் முதியோர்களுக்கும் மருத்துவ உதவி, முதியோர் விடுதி, அனாதை குழந்தைகளுக்கான விடுதி எனத் தனது சேவையை விரிவுபடுத்தத் திட்டமிட்டுள்ளது. தி நியூ லைஃப் அறக்கட்டளை அமைப்பு திரு. ஆர். பி. ரமேஷ் அவர்களின் வழிகாட்டுதலில் மேலும் பல சமூகப் பணிகளில் பங்கேற்று தேவையுள்ளோர் வாழ்வில் மறுமலர்ச்சி ஏற்பட உதவ வேண்டும் என்று வாழ்த்தி அதன் நிர்வாகி திரு. ஆர். பி. ரமேஷ் அவர்களையும் பாராட்டுகிறோம். November 30, 2015 நிகிதா ஆசாத் [] சமூக விழிப்புணர்வு பிரச்சாரம் ஒன்றை ஃபேஸ்புக்கில் துவக்கியவர் திருமிகு நிகிதா ஆசாத் (Nikita Azad) அவர்கள். “மாதவிடாய் மகிழ்ச்சிக்குரியதே” (#Happy to Bleed) என்ற கவன ஈர்ப்பு வாசகத்தின் மூலம் பெண்களுக்கு சமூகத்தில் நடத்தப்படும் அவமதிப்பை எதிர்க்கும் இவரது நோக்கம் பாராட்டப்படவேண்டிய முயற்சி. மாதவிலக்கு அல்லது மாதவிடாய் என்பது இனப்பெருக்கப் பருவமடைந்த பெண்ணின் உடலில் மாதந்தோறும் சுழற்சி முறையில் நிகழும் ஓர் இயற்கை நிகழ்வு. கருத்தரித்த பெண்ணின் கரு வளர்ச்சியடைய உதவுவது கர்ப்பப்பையும் அதன் சுவர்களும். அவள் அந்த மாதம் கருத்தரிக்கத் தவறினால் பயனற்றத் திசுக்கள் கழிவாக உதிரப்போக்குடன் உடலில் இருந்து வெளியேற்றப்படும் இயற்கை நிகழ்வே மாதவிலக்கு. இதனைப் பற்றிய சரியான புரிதல் பெரும்பாலான ஆண்களுக்கு மட்டுமல்ல பெண்களுக்குமே கிடையாது. மேலும் சரியான கழிவறை வசதியற்ற நாடான இந்தியாவில் வெளியிடங்களுக்குச் செல்லும் பெண்கள் எதிர்கொள்ளும் துன்பம் அதிகம். இதனை வெளிப்படையாகப் பொதுவில் பேசவும் பெண்களுக்குத் தயக்கமும் கூச்சமும் அதிகமிருக்கும். அதனையும் இடக்கரடக்கல்லாக வீட்டுக்குத் தூரம், வீட்டு விலக்கு, வீட்டில் இல்லை, வீட்டிற்கு வெளியே, தீட்டு என்று குறிப்பிடுவது வழக்கமாக இருந்து வருகிறது. மாதவிடாய் காலங்களில் பெண்கள் எதிர்கொள்ளும் அசௌகரியங்கள், சோர்வு, வலி போன்றவற்றால் அவர்களே தினசரி நடவடிக்கைகளைக் கைவிடும் காலமும் முன்னர் இருந்தது. ஆனால் சுகாதார வளர்ச்சி, அறிவியல் கல்வியால் புரிந்துணர்வு, ஆயத்தப் பஞ்சுறைகள் (சானிட்டரி நாப்கின்) ஆகியவற்றின் பயன்பாடுகளால் தினசரி வாழ்க்கையை எந்தவித மாற்றமுமின்றிப் பெண்கள் எதிர்கொள்ளும் அளவிற்குக் காலம் மாறிவிட்டது. நம்நாட்டில் டாஸ்மாக்கில் சரக்கு வாங்கிச் செல்பவர்கள் கூடத் தங்களை குடிகாரர் எனப் பிறர் எண்ணிவிடுவார்களே என்று கூச்சநாச்சமில்லாமல் வெளிப்படையாக வாங்கிச் செல்லலாம். ஆனால், ஆயத்தப் பஞ்சுறைகள் வாங்கக் கடைக்குச் சென்றால் அது என்ன என்று அடையாளமே தெரியாதவாறு (?) ஒரு செய்தித்தாளில் பொட்டலம் கட்டித்தரப்படும் நிலைமையும் உண்டு என்பது இன்றைய நாட்டு நடப்பைத் தெளிவாக்கும். மாதவிலக்கின் போது பெண்களை அங்கே உட்காரக் கூடாது, இங்கே நிற்கக்கூடாது, அதைச் செய்யக்கூடாது, இதைப் பார்க்கக்கூடாது போன்ற கட்டளைகள் இட்டு, நடவடிக்கைகள் முடக்கப்பட்டு அவர்கள் தங்கள் வீட்டிலிருந்தே ஒதுங்கி வாழ வேண்டிய நிலைமை எல்லாம் இருந்தது அக்காலம். இன்னமும் குக்கிராமங்களில் உள்ள பெண்கள் இதுபோன்ற அடக்குமுறைக்கு ஆளாகிறார்கள். மாதவிலக்கு நாட்களில் பெண்களின் இயல்பு வாழ்க்கை முடக்கப்படுவது போலவே, இறைவழிபாட்டிலும் பெண்கள் கோவிலுக்குப் போகக் கூடாது, பூசை அறைக்குள் நுழையக்கூடாது, வழிபாட்டிற்குரிய பொருட்களையோ புனித நூல்களையோ தொடக்கூடாது என்பது போன்ற பெண்கள் மீதானக் கட்டுப்பாடுகள் தொன்றுதொட்டு இருந்து வருகிறது. ’கலம் தொடா மகளிர்’ என்ற பெயரில் சங்க காலம் தொட்டுப் பெண்களுக்கு இக்கொடுமை நிகழ்ந்து வருவதற்கு இலக்கியச்சான்றுகளும் காட்டப்படுகிறது. இவ்வாறு மதத்தின் பெயரால் பெண்களுக்கு இழைக்கப்படும் அநீதிகள் சமீப காலத்தில் மிகவும் சர்ச்சைக்குரிய விவாதங்களாக மாறிவருகின்றன. மகாராஷ்ட்ராவில் உள்ள சனி பகவான் கோவில் ஒன்றில், பெண் ஒருவர் சிலை அருகே சென்று வணங்கியதால் சனி பகவான் சிலையைக் கழுவிப் பரிகாரம் செய்துள்ளனர். மாதவிலக்கு, அதனால் தூய்மையில்லை என்பது போன்ற காரணம் கூறப்படவில்லை இந்த சனிபகவான் கோவில் நிகழ்வில். அது பெண்கள் எந்த நாளிலும் அந்தக் கோவிலில் சிலையருகில் சென்று வழிபட உரிமை மறுக்கப்பட்டுள்ள நிகழ்வு. பெண்கள் இரண்டாந்தரக் குடிமக்கள் என்ற பழமையான எண்ணத்தின் பிரதிபலிப்பாக அமைந்துள்ள மற்றுமொரு நிகழ்வு. பெண்களைமட்டுமல்ல சமூகத்தில் ஒருசில பிரிவினரே இவ்வாறு கோவிலுக்குள் நுழையவிடாமல் ஒதுக்கப்பட்ட காலத்தைக் கடந்து நாம் வெகு தூரம் வந்துவிடவில்லை. ஃபேஸ்புக்கில் நிகிதா கவனஈர்ப்பு கொண்டு வந்துள்ளது கேரளாவில் நடந்த மற்றொரு நிகழ்வு. கேரளாவின் சபரி மலை ஐயப்பன் கோவிலுக்குள் பருவ வயதுப்பெண்கள் அனுமதிக்கப்படுவதில்லை. இதனைக் குறித்து கொல்லத்தில் நடந்த செய்தியாளர் சந்திப்பு ஒன்றில் செய்தியாளர் ஒருவர், திருவாங்கூர் தேவஸ்தான தலைவர் பிறையார் கோபாலகிருஷ்ணன் அவர்களிடம் எப்பொழுது பெண்களைச் சபரிமலையில் வழிபட அனுமதிப்பீர்கள் என்றக் கேள்வியை எழுப்பினார். அதற்குத் தேவஸ்தான தலைவர், ஆயுதங்களை மறைத்து வைத்திருப்பவர்களை அடையாளம் காணும் கருவி கண்டுபிடிக்கப்பட்டது போல, பெண்கள் மாதவிலக்கு நாட்கள் பற்றிக் கண்டறியவும், தூய்மையாகத்தான் இருக்கிறார்களா என உறுதி செய்ய உதவும் கருவி ஒன்றினைக் கண்டுபிடிக்கும் வரை பெண்களைக் கோவிலுக்குள் அனுமதிக்க இயலாது. அந்தக் காலம் வந்த பின்னர் அதைப்பற்றிப் பேசலாம் என்று பதிலளித்தார். இக்கூற்றின் அடிப்படைக் கருத்து “மாதவிலக்கான அந்நாட்களில் பெண்கள் தூய்மையற்றவர்கள்” என்ற பண்டைய வழக்குதான். தேவஸ்தான தலைவரின் கருத்து பரபரப்பை ஏற்படுத்தும் சர்ச்சைக்குரிய செய்தியானது. பிறகு எனது விளக்கம் தவறான முறையில் புரிந்து கொள்ளப்படுகிறது என்று பிறையார் கோபாலகிருஷ்ணன் மறுப்பும் தெரிவித்தார். மேலும் இதுபோன்ற கருத்துகள் பிறமதங்களிலும் இருப்பது குறிப்பிடத்தக்கது. இருப்பினும், இயற்கையாகப் பெண்களுக்கு நிகழும், தவிர்க்க இயலாத மாதவிலக்குக்காக அவர்களைக் கோயிலுக்குள் அனுமதிக்க மறுப்பது சரியல்ல என்பது நிகிதாவின் வாதம். இதற்காக நவம்பர் 21ஆம் தேதியில் இருந்து “ஹாப்பி டு ப்ளீட்” என்ற ஃபேஸ்புக் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளார். நிகிதாவுடன் அவரது நண்ப திரு. சுக்ஜீத் சிங் என்பவரும், சுருதி உபாத்தியாய், சாம்பவி விக்ரம் என்ற தோழியரும் (Sukhjeet Singh, Suridhi Upadhyay, Shambhawi Vikram) இந்தக் கவன ஈர்ப்புப் போராட்டத்தில் அவருக்குத் துணையாகக் களமிறங்கியுள்ளனர். நூற்றுக்கணக்கான பெண்கள் பலரும் நிகிதாவை ஆதரித்து, ஃபேஸ்புக் பக்கத்தில் கருத்துகளும் படங்களும் பதிவு செய்துள்ளனர். இந்தக் கவனஈர்ப்பிற்கு நல்ல வரவேற்பு இருந்த காரணத்தால் தினசரி நாளிதழ்களிலும் செய்தியாகப் பரவி வருகிறது. ஃபேஸ்புக் பிரச்சாரப் பக்கம் தரும் தகவலின்படி ஆண்களில் பலரும் நிகிதாவிற்கு ஆதரவாகப் போராட்டக் களத்தில் இறங்கியிருப்பது பாராட்டப்பட வேண்டிய செயல். இந்தப் பிரச்சாரம் பெண்களைக் கோயிலுக்குள் அனுமதிக்கப்படுவதில்லை என்பதற்காக மட்டும் அல்ல; பெண்களைப் பாலியல் ரீதியில் வேறுபடுத்தி, சிறுமைப்படுத்தும் நோக்கில் இன்றும் நிலவும் இதுபோன்ற சமூக வழக்குகளுக்கு எதிராக எழுப்பிய கண்டனம் என்று நிகிதா ஃபேஸ்புக் பக்கத்தில் தனது கருத்தைப் பதிவு செய்துள்ளார். ஃபேஸ்புக்கைத் தொடர்ந்து, www.change.org லும் இந்தப் போராட்டத்தை எடுத்துச் சென்றுள்ளார். கோயிலுக்குள் நுழைய அனுமதி எதிர்பார்த்து இப்பிரசாரத்தைத் துவக்கவில்லை என்றும், பழமையான நம்பிக்கைகளை எதிர்க்கும் விழிப்புணர்வு பிரச்சாரம் என்று கூறும் பஞ்சாபி பல்கலைக்கழக மாணவியான, இருபது வயதாகும் நிகிதா ஆசாத் பாட்டியாலாவில் வசிக்கிறார் (https://www.facebook.com/archangelniks). இந்தியா ரெசிஸ்ட்ஸ், யூத் கி ஆவாஸ், ஃபெமினிஸம் இன் இந்தியா (India Resists, Youth Ki Awaaz, Feminism in India) போன்ற பத்திரிக்கைகளிலும் எழுதி வருகிறார். காலங்காலமாகப் பெண்கள் எதிர்க்கத் தயங்கிய, மறுகிய, கூசிய, அஞ்சிய மாதவிலக்கைப் பற்றிய கருத்துக்களை; அதனால் பல சமூகக் கட்டுப்பாடுகளுக்குள் பெண்களை முடங்க வைத்த வழக்கத்தை எதிர்த்துக் குரல் கொடுக்கும் நிகிதாவின் துணிச்சலுக்குப் பாராட்டுகள். December 7, 2015 அமுதா ஐ.ஏ.எஸ், கஜலக்ஷ்மி ஐ.ஏ.எஸ் [] இவர்களைப் போன்ற இந்திய ஆட்சிப் பணியாளர்களே நமக்குத் தேவை என்று வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களின் மக்கள் ஒருமனதாகப் பாராட்டும் வண்ணம் சிறப்பாகப் பணியாற்றியவர்கள் அமுதா ஐ.ஏ.எஸ் மற்றும் கஜலக்ஷ்மி ஐ.ஏ.எஸ். ஆகியோர். அரசு அதிகாரிகள் பேரிடர் காலத்தில் தங்கள் பணியை… கடமையை செய்ததற்குப் பாராட்டுகள் தேவையா என்பது இந்திய அரசியலைப் பற்றிய விவரம் தெரியாதவர்களின் கேள்வியாக இருக்கும். ஆனால் இந்திய அரசியல்வாதிகள் தங்கள் கடமைகளைச் செய்யும் அரசுப்பணியாளர்களுக்கு இடையூறு அளிக்காமல் இருந்ததாகக் கேள்விப்பட்டவரும் இல்லை என்பதும் மறுக்க முடியாத உண்மை. சீரிய முறையில் பணி செய்யும் அரசு அதிகாரிகள் தங்களது “வளர்ச்சிக்கு” இடையூறு தருபவர்கள் என்று முடிவு செய்து, சிறிய, பெரிய என்ற எந்த நிலையில் உள்ள “தலைவர்களும்” அதிகாரிகளை மிரட்டுவதும், அதிகாரிகள் “ஒத்துழைக்க” மறுத்தால், மேலிடம்வரை கவனத்திற்குக் கொண்டு சென்று ஒத்துவராத அதிகாரிகளுக்கு “பணிமாற்றம்” என்ற “பரிசு” வழங்க ஏற்பாடு செய்வதும்தான் நமக்குத் தெரிந்த நடைமுறை. இதுபோன்ற முறையற்ற செயல்களினால், சென்னை நகரத்தின் வளர்ச்சி ஒரு திட்டமிடப்படாத வளர்ச்சியாகக் கடந்த அரைநூற்றாண்டாக ஆக்கிரமிப்பாளர்களின் பிடியில் அகப்பட்டுக் கொண்டது. விளைவு: சென்னை வெள்ளம் அரசு இயந்திரம் உருவாக்கிய செயற்கைப் பேரிடர் என்று முத்திரை குத்தப்பட்டுள்ளது. செல்வாக்கு உள்ளவர்கள் அரசு இயந்திரத்தை தங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்து நீர்நிலைகளையும், நீரோட்டத்தின் வழித்தடங்களையும் ஆக்கிரமித்து கட்டிடங்கள் கட்டி பெரும் செல்வந்தர்களாகப் பொருளீட்டி விட்டார்கள். மனசாட்சியை விற்று சுயநலநோக்கில், அரசியல் ஆதாயம் தேடும் ஆட்சியாளர்களும் பாராமுகமாக நடந்து கொண்டார்கள், இதனால் துயருற்றது பொதுமக்கள். இப்பொழுதோ வெட்கமில்லாமல் அரசியல்வாதிகள் ஒருவரை ஒருவர் குற்றம் சாட்டிக் கொண்டுள்ளார்கள். அதற்குக் காரணமும் அடுத்து ஆட்சியைப் பிடிக்கும், அல்லது தக்க வைக்கும் எண்ணம் மட்டுமே. இவர்களது திருவிளையாடல்களினால் எழுப்பப்பட்டுவிட்ட ஆக்கிரமிப்புகளினால் ஒரு வார பெருமழையைத் தாங்கமுடியாமல் சென்னை வெள்ளக்காடானது, சேர்ந்த வெள்ளமும் வடிய வழியின்றித் தேங்கிப் போன நிலை. தூர்வாருதல் போன்ற பராமரிப்பு இன்றி குப்பைகூளங்கள் அடைத்து, அத்துடன் ஆக்கிரமிப்புகளால் பல இடங்களில் ஆறு, கால்வாய்களின் அகலம் சுருங்கிப் போயின. ஆக்கிரமிப்பு பகுதிகள் பெரும்பாலும் வியாபார நிறுவனங்களாகவும், கடைகளாகவும் இருந்தாலும், மணிமங்கலம் பகுதி கால்வாயை ஆக்கிரமித்து ஒரு கோவிலே கூட கட்டப்பட்டிருப்பது தெரிகிறது. அதை இடிக்க வேண்டாம் என்ற கோரிக்கையும் கூட வைத்துள்ளார்கள் அப்பகுதி மக்கள். அடையாறு, கூவம், பக்கிங்ஹாம் கால்வாய் போன்ற பொதுப்பணி துறை நீர்வழித்தடங்களிலும்; ஓட்டேரி நல்லா, கேப்டன் காட்டன் கால்வாய் உள்ளிட்ட மாநகராட்சி நீர்வழித்தடங்களிலும் அதிக ஆக்கிரமிப்புகள் உள்ளதாகச் செய்திகள் கூறுகின்றன. வெள்ள பாதிப்பு கண்காணிப்பு அலுவலர் தலைமையில் ஒன்பது மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை ஒருங்கிணைத்த தமிழக அரசு, இக்குழுவை மீட்புப் பணி, நிவாரணப் பணி, எதிர்காலத்தில் பாதிப்பு ஏற்படாமல் தடுக்கும் பணிகளை மேற்கொள்ள உத்தரவிட்டது. இராணுவத்தின் துணையோடு இப்பணிகளை அரசு அதிகாரிகள் செயல் படுத்தினர். இவர்களில் வெள்ள பாதிப்புக்கான சிறப்பு அதிகாரியாகப் பணியாற்றிய ஐ.ஏ.எஸ் அதிகாரி அமுதா அவர்கள் தாம்பரம், முடிச்சூர் பகுதிகளில் மக்களை மீட்டதுடன், மீண்டும் வெள்ளம் வந்தால் பாதிப்பு ஏற்படாத வகையில் கால்வாய்களில் இருந்து ஆற்றுக்குச் செல்லும் வழிகளைச் சீரமைக்கும் பணியில் அதிரடி நடவடிக்கைகளை எடுத்துப் பல ஆக்கிரமிப்புகளை இடித்துத் தள்ள உதவியுள்ளார். இதனால் ஒருவாரம் வரை வடியாமல் தேங்கிய வெள்ளம் சிலமணி நேரங்களில் வடிந்துவிட்டிருக்கிறது. இவரது பணியை தடை செய்வதற்கு முயன்றவர்களை இவர் பொருட்படுத்தவில்லை. தாம்பரம் பகுதியில் நூற்றுக்கும் மேற்பட்ட ஆக்கிரமிப்புகள் இவரது ஆணையினால் அகற்றப்பட்டதால் அப்பகுதியில் அடையாறு ஆற்றுக் கால்வாய் முதலில் இருந்ததை விட மூன்று மடங்கு அகலமாகியுள்ளது. கஜலக்ஷ்மி ஐ.ஏ.எஸ் அவர்கள் சென்ற அக்டோபரில்தான் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியாளராகப் பொறுப்பேற்றார். அவர் பொறுப்பேற்ற ஒருமாதத்தில் அவர் மாவட்டம் வெள்ளப் பாதிப்பை எதிர்கொண்டது. முடிச்சூர், வரதராஜபுரம் பகுதிகளில் வெள்ளநீரில் களமிறங்கி இரவு பகல் பாராது மீட்புப் பணியையும் நிவாரணப் பணியையும் முன்னின்று நடத்தியுள்ளார் கஜலக்ஷ்மி ஐ.ஏ.எஸ். வெள்ள பாதிப்பிற்குக் காரணமான மாவட்டத்தின் பல்வேறு நீர்வழித்தடங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளும் இவரது உத்தரவின் பேரில் இடித்துத் தள்ளப்பட்டுள்ளன. ஆக்கிரமிப்புகள் யாவும் அரசின் மெத்தனத்தினால் நிகழ்ந்தவை என்றாலும், பேரிடருக்குப் பின்னர் செய்யும் இது போன்ற பராமரிப்பு நடவடிக்கைகள் இழப்புகளை ஈடுகட்டப் போவதில்லை என்றாலும், இனியாவது வருங்காலத்தில் இழப்புகளை இந்த நடவடிக்கைகள் குறைக்கும் என எதிர்பார்க்கலாம். ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் அமுதா, கஜலக்ஷ்மி போன்றோரின் அதிரடி நடவடிக்கைகள் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் என்பதிலும் ஐயமில்லை. தனது பதவிக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தை சரிவரப் பயன்படுத்தத் தெரியாத பிற அரசு அதிகாரிகளுக்கு இவர்களது நடவடிக்கைகள் நல்லதொரு பாடமாக அமையுமாறு செயலாற்றிய ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் அமுதா, கஜலக்ஷ்மி ஆகியோருக்குப் பாராட்டுகள். December 14, 2015 ஆக்சாத் பிரகாஷ் [] விபத்தில் உயிர் காக்கும் கருவி ஒன்றை வடிவமைத்தவர் மேல்நிலைப்பள்ளி மாணவரான திரு. ஆக்சாத் பிரகாஷ் அவர்கள். மருத்துவ அறிவியலில் மிகுந்த ஆர்வமிக்க ஆக்சாத் பிரகாஷ் உத்தரப் பிரதேசம் காஜியாபாதை சேர்ந்தவர். டெல்லி இந்திராபுரத்தில் உள்ள பள்ளியில் 12-ம் வகுப்பு படித்து வரும், 17 வயதாகும் இந்த இளைஞர், கைக்கடிகாரம் போல கையில் அணிந்து கொள்ளும் முதலுதவி சிகிச்சை தரும் ‘தொழில்நுட்ப அணிகலன்’ (wearable technology device) ஒன்றினை வடிவமைத்து, தைவானில் நடைபெற்ற சர்வதேச அறிவியல் கண்காட்சி – 2015 (Taiwan International Science Fair, 2015) இல் அறிமுகப்படுத்தினார். இக்கருவி செயல்படும்விதத்தைப் பற்றி அறிவியல் கண்காட்சியில் செயல்முறை விளக்கமும் அளித்துள்ளார். ஆக்சாத் பிரகாஷ், ‘ஹெலிக்ஸ்சேஃப்’ (HelixSafe – #HelixSafe on twitter.com) என்று பெயரிட்டுள்ள தனது மருத்துவ கருவிக்கு காப்புரிமையையும் பெற்றுள்ளார். காப்புரிமை பெற 2013 இல் இவர் விண்ணப்பித்து, அது ஏற்றுக்கொள்ளப்பட்டு, இந்த ஆண்டின் அதிகாரப்பூர்வமான காப்புரிமை தகவல் இதழில் (Official Patent Journal, 2015) இச்செய்தி வெளியாகியுள்ளது. விபத்துகள் நிகழும் பொழுது, உயிருக்கு ஊசலாடுபவர்களை மருத்துவமனையின் அவசர சிகிச்சைப் பிரிவுக்கு எடுத்துச் சென்று சிகிச்சை அளிக்கத் துரித கதியில் இயங்கத் தேவை. வீணாக்கும் ஒவ்வொரு பொன்னான வினாடியும் வாழ்வா, சாவா என்ற முறையில் ஒருவரது வாழ்க்கையையே நிர்ணயிக்கும். நகரப்பகுதியில் விபத்து நிகழ்ந்தாலே அடிபட்டவரை மருத்துவமனைக்கு எடுத்துச் செல்வதில் பெருமளவு காலம் விரயமாவதைத் தடுக்க வழி இருப்பதில்லை. ஆளரவமற்ற அத்துவானக்காட்டின் சாலையொன்றில் வாகன விபத்து நிகழ்ந்தால், அதனைக் கண்டு நடவடிக்கை எடுப்பதற்குள் விபத்திற்குள்ளானவர் உடனடி மருத்துவ உதவியின்றி அவரது வாழ்வே முடிந்துவிடலாம். இது போன்ற வாகன விபத்து நிகழ்வுகளில் கைகொடுத்து உதவக் கூடியது, விபத்தினால் பாதிக்கப்பட்டவர் கையில் அணிந்திருக்கும் கடிகாரம் போன்ற ஹெலிக்ஸ்சேஃப்-தொழில்நுட்ப அணிகலன். இக்கருவியின் சென்சார் என்ற உணரும் பகுதி விபத்து நிகழ்ந்த நேரத்தில், இக்கருவி அணிந்திருப்பவரின் இதயத்துடிப்பைக் கணக்கிட்டு அவரது உடல்நிலையைக் கண்காணிக்கும். அது இயல்புக்கு மாறாக இருந்தால், தானே தேவையான முதலுதவிக்கான மருந்தினை கருவியில் இருக்கும் சிறிய ஊசி உடலுக்குள் செலுத்துவதுடன், அருகாமையில் உள்ள மருத்துவ அவசர சிகிச்சை மையத்திற்கு உடனடித் தகவலும் அனுப்பும். இந்த மருத்துவக் கருவியின் மாதிரி வடிவம் ‘அர்டுயினோ டெவெலப்மென்ட் என்விரான்மெண்ட்’, மற்றும் ‘எம்பெடெட் சி’, ‘விஷுவல் பேசிக்’ கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது (The prototype has been created with Arduino Development Environment, Heart Rate Sensor and accessories and programmed in Embedded C and Visual Basic). இந்த ‘ஹெலிக்ஸ்சேஃப்’ மருத்துவக் கருவி கண்டுபிடிப்பிற்காக, “சிறந்த கண்டுபிடிப்பை வழங்கிய இந்தியாவின் முதன்மை திறமைசாலிக் குழந்தை” (‘India’s First Whiz Kid’ award for Best Innovation, 2013), என்ற விருதினையும் ஆக்சாத் பிரகாஷ் பெற்றுள்ளார். இந்த விருதினை 2013 ஆண்டு ‘நர்ச்சர் டேலண்ட் அண்ட் கம்ப்யூட்டர் சொசைட்டி ஆஃப் இந்தியா’ (Nurture Talent & Computer Society of India) இவருக்கு வழங்கிப் பாராட்டியது. இந்த மருத்துவக் கருவி செயல்படும் முறையைப் பற்றி , ஐ.ஐ.டி. டெல்லி, ஐ.ஐ.டி. மும்பை ஆகிய இந்திய தொழில்நுட்பக் கல்வி பல்கலைக் கழகங்களிலும் ஆக்சாத் பிரகாஷ் விளக்கமளித்துள்ளார். ‘தொழில்நுட்ப அணிகலன்கள்’ துறை மிக வேகமாக வளர்ந்துவரும் ஒரு துறை. தற்பொழுது பெரும்பாலும் ஆரோக்கிய வாழ்வினை முன்னிறுத்தும் நோக்கில் உடற்பயிற்சி, தூக்கம் ஆகியவற்றின் அளவுகளைக் கண்காணிக்க மட்டுமே பயன்பாட்டில் உள்ளது. சென்ற ஆண்டு கலிஃபோர்னியா நிலநடுக்கத்தின் பொழுது, தொழில்நுட்ப அணிகலன் அணிந்திருந்தவர்கள் உறக்கம் தடைப்பட்டு விழிக்க நேர்ந்ததையும், மீண்டும் உறங்கச் செல்ல எவ்வளவு நேரம் ஆனது என்பது போன்ற தகவல்களை, தானே சேகரித்து தரவுகளை அனுப்பியது. இந்தத் தொழில் நுட்பத்தை மருத்துவ சிகிச்சைக்குப் பயன்படுத்துவதில் உள்ள ஆதாயம் பற்றி இத்துறை வல்லுநர்கள் மிகத் தீவிரமாக ஆய்வு செய்து வருகிறார்கள். குறிப்பாக மாரடைப்பு, வலிப்பு போன்ற நேரங்களில் உடலில் ஏற்படும் அதிர்வுகளுக்கு ஏற்ப விரைந்து செயலாற்றி சிகிச்சையைத் துவக்க விரும்பி மருத்துவத் துறையும் இதில் அதிக ஆர்வம் கொண்டுள்ளது. வரும் ஐந்தாண்டுகளில் 2 பில்லியனில் இருந்து 40 பில்லியன் டாலர் மதிப்பிற்கு இத்துறை வளரும் என்றும், சிறு கணினிசார் நிறுவனங்கள் இதன் வளர்ச்சியில் அதிகம் பங்கு பெற்றுப் பலனடையும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. நீரிழிவு, உடற்பருமன், இதயநோய் எனப் பல்வேறு வகையிலும் உடல்நலம் கண்காணிக்க ‘தொழில்நுட்ப அணிகலன்கள்’ உதவக்கூடும் எனவும் தெரிகிறது. முன்னேறும் இத்துறையில் ஒரு பதின்ம வயது பள்ளி மாணவன் இந்தியாவில் முன்மாதிரியாக இருப்பது இந்தியத் தொழில் நுட்ப வளர்ச்சி பற்றிய நம்பிக்கையை அதிகரிக்கிறது. கணினி அறிவியலில் தனக்கு மிகவும் ஆர்வம் இருப்பதாகவும், தனது வாழ்நாள் முழுவதும் அத்துறையில் ஓர் ஆய்வாளராகப் பணிபுரிய திட்டமிட்டுள்ளதாகவும் கூறும் செல்வன் ஆக்சாத் பிரகாஷ்; தொழில்நுட்பத்தின் உதவி கொண்டு, சுத்தம், சுகாதாரம், பாதுகாப்பு நிறைந்த சமுதாயம் உருவாக, மக்களின் வாழ்வை மேம்படுத்தும் நல்ல பல கருவிகளைத் தயாரிக்க விரும்புவதாகவும் ‘பிரஸ் டிரஸ்ட் ஆஃப் இந்தியா’ (PTI-Press Trust of India)விற்கு அளித்த பேட்டி ஒன்றில் கூறியுள்ளார். செல்வன் ஆக்சாத் பிரகாஷின் விருப்பங்கள் நிறைவேறி, மக்களுக்குப் பயன்தரும் கருவிகள் பல வடிவமைக்க வாழ்த்துகள். December 21, 2015 தனய் டாண்டன், தீபிகா போடபட்டி [] இளம் தொழில் முனைவோர்களான, ‘அதிலாஸ்’ (Athelas – http://getathelas.com நிறுவனத்தின் நிறுவனர்கள் திருமிகு ‘தனய் டாண்டன்’ (Tanay Tandon ) மற்றும் ‘தீபிகா போடபட்டி’ (Deepika Bodapati) ஆகியோர்; கலிஃபோர்னியா மாநிலத்தின் கல்லூரி மாணவர்கள், இருபது வயதைத் தாண்டாதவர்கள், இந்த ஆண்டு பலகலைக்கழகத்தில் முதலாண்டில் அடியெடுத்து வைத்துள்ளவர்கள். மாணவர்கள் இருவரும் அறிவியல் துறையில் ஆர்வம் மிக்கவர்கள். உயர்நிலைப் பள்ளி நாட்களிலேயே இருவரும் பல அறிவியல் போட்டிகளில் பங்கேற்று பரிசுகளும் பெற்றுள்ளனர். தனய் டாண்டன் சிலிக்கான் பள்ளத்தாக்குப் புகழ் ஸ்டான்ஃபோர்ட் பல்கலைக்கழகத்தில் (Stanford University’) கணிதத்தில் பட்டப்படிப்பையும், தீபிகா போடபட்டி தென்கலிஃபோர்னியா பல்கலைக்கழகத்தில் (University of Southern California) பயோமெடிக்கல் என்ஜினியரிங்கில் பட்டப்படிப்பையும் மேற்கொண்டுள்ளார்கள். இவர்கள் துவக்கியுள்ள அதிலாஸ் நிறுவனம் தயாரிக்க உள்ள எளியமுறை இரத்தப் பரிசோதனைக் கருவியை வணிக அளவில் சந்தைப்படுத்தும் திட்டத்தை, இருவரும் தங்களது பல்கலைக்கழகங்கள் நடத்தும் தொழில் முனைவோர்களை ஊக்கப்படுத்தும் போட்டியில் சமர்ப்பித்து பரிசுத் தொகையை வென்று, தொழில் நிறுவனத்தின் வளர்ச்சிக்கான நிதியையும் பெற்றுள்ளார்கள். கணினி நிரல்கள் (Computer Programming) உருவாக்குவதில் ஆர்வமிக்க தனய் தொடங்கும் இரண்டாவது தொழில் நிறுவனம் இது. இவருடைய மற்றொரு நிறுவனம் “கிளிப்ட்” (http://clipped.me. ஆப்பிள் ஐஃபோன் அலைபேசியின் செயலியான ‘கிளிப்ட்’, செய்திகளைச் சுருக்கி முக்கியமான கருத்துகளைப் பட்டியலிட்டுப் படிக்க உதவும் ஒரு மென்பொருள். இந்த இலவச செயலியை ஆப்பிள் (https://itunes.apple.com/us/app/clipped/id583616193) தளத்தில் இருந்து தரவிறக்கிப் பயன்பெறலாம். பள்ளி நாட்களில் இருந்து தனய் மருத்துவப் பரிசோதனையில் உதவக்கூடிய இரத்தப் பரிசோதனைக் கருவியை வடிவமைத்து வருகிறார். இதற்காகப் புகழ் பெற்ற அறிவியல் போட்டிகளான கூகுள் நடத்தும் அறிவியல் போட்டியிலும் (Google Science Fair), இன்டெல் அறிவியல் போட்டியிலும் (Intel Science Talent Search) பரிசுகள் பெற்றுள்ளார். கூகுள் போட்டியில் வெற்றி பெற்றதனால் அமெரிக்க அதிபர் ஒபாமாவையும் சந்திக்கும் வாய்ப்பினைப் பெற்றார். இக்காலத்தில் அனைவருக்கும் இன்றியமையாததாகிவிட்ட திறன்பேசியில் (ஸ்மார்ட்ஃபோன்), மலிவான விலையில் தயாரிக்கக் கூடிய நுண்ணோக்கி வில்லையை (லென்ஸ்) இணைத்துப் பயன்படுத்தி, அதனை ஒரு சக்திவாய்ந்த நுண்பெருக்கியாக (மைக்ராஸ்கோப்) மாற்றுவது கையடக்க இரத்தப்பரிசோதனைக் கருவியின் (பிளட் டெஸ்டிங் கிட்) அடிப்படை. இந்தியாவில் மருத்துவராகப் பணிபுரிந்த தனது தாத்தா பற்றியும், இரத்தப்பரிசோதனைக்காக ஆய்வகத்தின் வாசலில் வரிசையாக நிற்கும் நோயாளிகளையும், அதற்கு எடுக்கும் நேரம் பற்றிய தகவல்களைத் தனது தாய் மூலம் அறிந்த தனய் இக்கருவியை உருவாக்குவதில் ஆர்வம் கொண்டார். இக்கருவி இயங்கும் விதம்; மலேரியா போன்ற ஒட்டுண்ணி நோய்க்கிருமியால் பாதிப்பா என்பது போன்ற இரத்தப் பரிசோதனை செய்ய, இரத்தத் துளிகளை ஆய்வகத்தின் கண்ணாடிப் பட்டையில் சேகரித்து, சோதனைக்குத் தயார் செய்து கைபேசியை நுண்பெருக்கியாகப் பயன்படுத்தி அதன் வழியாக ஆராய வேண்டும். பரிசோதனைக் கருவியாக மாறிய கைபேசி அதனை 350 முதல் 400 மடங்குவரை உருப்பெருக்கி ஒட்டுண்ணிகளின் எண்ணிக்கை, இரத்த அணுக்களின் எண்ணிக்கை ஆகியவற்றைக் கணக்கிடும். இந்தத் தகவலை கைபேசியில் உள்ள செயலியின் மென்பொருள் பிற இரத்தப்பரிசோதனை தரவுகளுடன் ஒப்பிட்டு நோயினால் பாதிப்பா என்பது போன்ற தகவலை அளிக்கும். இந்த சோதனைமுடிவை மிகத் துல்லியமாக்கும் முறையில் இப்பொழுது தனய் மேற்கொண்டு கவனம் செலுத்தி வருகிறார். டிசம்பர் 2015தில், தனய் பயிலும் ஸ்டான்ஃபோர்ட் பல்கலைக்கழகத்தின் ஒரு கிளையான, ‘கார்டினல் வென்ச்சர்’ (Cardinal Ventures) என்ற புதுமுறை தொழில்களின் முனைவோர்களை ஊக்குவிக்கும் நிதி முதலீடு செய்யும் (venture capitalist) நிறுவனம் நடத்திய போட்டியில் 60 தொழில் முனைவோர் குழுவினர் பங்கேற்றார்கள். அதில் தனய் டாண்டனின் கண்டுபிடிப்பான எளிய இரத்தப் பரிசோதனைக்கருவி உபயோகத்திலும், சந்தைப்படுத்துவதிலும் நம்பிக்கை தரும் ஒரு முயற்சி என்று பாராட்டப்பட்டு தேர்வு பெற்று பரிசும், நிதி உதவியும் பெற்றது. கூகுளும் இதுபோன்ற ஸ்டான்ஃபோர்ட் பல்கலைக்கழக தொழில் முனைவோர் உருவாக்கியது என்பது இங்குக் குறிப்பிடத்தக்கது. இத்திட்டத்தைத் தேர்வு செய்த மூன்று நடுவர்களில் ஒருவரான ‘ஆனி காடவி’ (Annie Kadavy), இது வணிக முதலீட்டாளர்களைக் கவரும் நல்லதொரு தொழில் முயற்சி எனப் பாராட்டியுள்ளார். சென்ற அக்டோபர் மாதம் ‘தீபிகா போடபட்டி – தனய் குழு, அதிலாஸ் நிறுவனத்தின் மற்றொரு இணை நிறுவனரான தீபிகா போடபட்டி படிக்கும் தென்கலிஃபோர்னியா பல்கலைக்கழகத்தின் தொழில் முனைவோருக்கான ‘ஸ்டீவன் மாணவ கண்டுபிடிப்பாளர் போட்டியில்’ (Stevens Student Innovator Showcase) 24 மாணவர்கள் கொண்ட குழுக்களுடன் போட்டியிட்டனர். தேர்வு செய்யப்பட்ட 6 குழுக்களில், சிறந்த புத்தாக்கத்திற்கான சிறப்புப் பரிசையும், $7,000 பரிசுத் தொகையையும் வென்றனர். மேலும் அதே மாதம், அதே பல்கலைக் கழகத்தின் ‘சிலிக்கான் பீச் தொழில் முனைவோருக்கான நான்காவது ஆண்டு போட்டியின் பரிசாக’ (4th Annual Silicon Beach Awards Venture Competition) $25,000 பரிசையும் பெற்றனர். இந்த பரிசுத் தொகைகளின் உதவி கொண்டு தங்கள் இரத்தப் பரிசோதனைக் கருவியை மேம்படுத்தி, மருத்துவத்துறையினர் பயன்படுத்தும் வகையில் உருவாக்கி, ‘அமெரிக்க அரசின் உணவு மற்றும் மருந்தக நிறுவனத்தின்’ (U.S. Food and Drug Administration) அங்கீகாரம் பெறும் வகையில் வடிவமைக்கப் போவதாக தீபிகா பத்திரிக்கைக்கு அளித்த பேட்டி ஒன்றில் கூறியுள்ளார். தனய், தீபிகா இருவரும் தங்களது அதிலாஸ் நிறுவனத்திற்காக இதுபோல போட்டிகளில் வெற்றி பெற்ற பரிசுத் தொகைகளாகவே $50,000 வரை நிதி சேகரித்துள்ளனர். இந்த இளம் தொழில் முனைவோர்களின் முயற்சி வெற்றிபெற்று, மருத்துவத்துறையினருக்கு பெரிதும் உதவி புரிந்து, அதன் மூலம் பல்லாயிரம் உயிர்களைக் காக்க வேண்டும் என்று வாழ்த்துவோம். December 28, 2015 மகிஷன் ஞானசேகரன் [] நியூ ஜெர்சியில் வசித்துவரும் யாழ்ப்பாணம் அளவெட்டியைச் சேர்ந்த ஈழத் தமிழர்கள் நிர்மலா மற்றும் செல்லையா ஞானசேகரன் இணையரின் மகன் திரு. மகிஷன் ஞானசேகரன் (Mahishan Gnanaseharan) சமுகநல அக்கறை கொண்ட செயல்களில் ஆர்வம் கொண்டவர். இலங்கையில் பிறந்து அமெரிக்காவில் வளர்ந்த திரு. மகிஷன் ஞானசேகரன் அவர்கள் அமெரிக்க மாநிலமான நியூ ஜெர்சியின் உயர்நிலைப்பள்ளி மாணவர்களில் சிறந்த இரு மாணவர்களில் ஒருவராகத் தேர்வு செய்யப்பட்டு, அம்மாநிலத்தின் பிரதிநிதியாக “வாஷிங்டன் வாரம்” என மார்ச் 5 – 12, 2016 வரை வாஷிங்டன் டி சி யில் நடக்கவிருக்கும் பயிற்சியில் பங்கு பெற இருக்கிறார். ஒவ்வொரு ஆண்டும் அமெரிக்காவின் ஒவ்வொரு மாநிலத்தில் இருந்தும், மாநிலத்திற்கு இருவரென 1)கல்வி, 2) தலைமைப்பண்பு, 3) சமூகப்பணி ஆகிய மூன்றிலுமே மிகச் சிறந்து விளங்கும் உயர்நிலைப்பள்ளி மாணவர் இருவர் தேர்வு செய்யப்படுவார்கள். இவ்வாறாக அமெரிக்க அளவில் தேர்வு செய்யப்படும் 104 மாணவர்களுக்கும் மார்ச் மாதம் – வாஷிங்டன் வாரத்தில் அமெரிக்க பாராளுமன்றம் எவ்வாறு இயங்குகிறது என்பதை நேரடியாகப் பார்க்கவும், சமூகப்பணியில் பங்கேற்க செயல்முறைப் பயிற்சி பெறவும் வாய்ப்பு அளிக்கப்படும். பொதுவாழ்வில் ஈடுபட்டு சமூகப்பணியாற்ற விரும்பும் இளைஞர்கள் இந்த வாய்ப்பினைப் பெறுவது மிகவும் பெருமைக்குரிய சாதனையாகும். அமெரிக்க நாட்டின் எதிர்காலத் தலைவர்கள் என்ற அளவில் இந்த இளைஞர்கள் தயார்படுத்தப்படுவார்கள். பயிற்சி காலத்தில், தேர்வு செய்யப்பட்ட இளையதலைமுறையினர் அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா மற்றும் அமெரிக்க செனட் சபையின் உறுப்பினர்கள் அனைவரையும் சந்தித்து உரையாடும் வாய்ப்பினையும், அரசு இயங்கும் விதத்தை நேரடியாகக் காணும் வாய்ப்பினையும் பெறுவார்கள். இவர்களுக்குக் கல்லூரி படிப்பிற்காக $5,000 ஊக்கத் தொகையும் வழங்கப்படும். இந்த ஆண்டு மார்ச் 5 – 12, 2016 வாஷிங்டன் டி சி யில் நடக்கவிருக்கும் 54 ஆவது “அமெரிக்க சட்டமன்றத்தின் இளைஞரணி பயிற்சிப் பாசறை” (United States Senate Youth Program – ussenateyouth.org) பயிற்சியாளர்களில் ஒருவராகத் திரு. மகிஷன் ஞானசேகரன் பங்கேற்க உள்ளார். ஜனவரி முதல் வாரம் இப்பயிற்சிக்காகத் தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவர்கள் முறையாகப் பதிவு செய்து கொள்வார்கள். இவ்வாறு தேர்வு செய்யப்படும் ‘முதல் தமிழ் மாணவர்’ இவர் என்று ‘கனடா மிர்ரர்’ (www.canadamirror.com) குறிப்பிடுகிறது. இந்தத் தகுதியை மகிஷன் அடைவதற்குக் காரணம்; நடுநிலைப்பள்ளி நாட்களில் இருந்தே இவர் தொடர்ந்து காட்டிய சமூக அக்கறை கொண்ட பல செயல்களும் பணிகளுமாகும். இவையாவும் ஒவ்வொருபடியாக இவரை உயர்த்தி வந்துள்ளது. பத்து வயதில் வானியல் வல்லுநராகப் பணியாற்றுவதில் ஆர்வம் கொண்ட மகிஷனின் நோக்கம் பிற்காலத்தில் ஒரு கோளையோ, விண்கற்களையோ கண்டுபிடிக்க வேண்டும் என்று துவங்கியது. நூலகம் நடத்திய போட்டியில் பங்கு பெற்று நூலகத்தின் 1,000 புத்தகங்களைப் படித்தமைக்காக நெவார்க் (Newark)நகர ஆட்சியாளரிடம் இருந்து பரிசு, பிறகு சிறந்த கவிதை ஒப்பித்தற்காகத் தங்கப்பதக்கம், மூன்று “உச்சரிப்புத் தேனீ” (ஸ்பெல்லிங் பீ) போட்டிகளில் பரிசுகள் என்று கல்விக்கான தகுதிகளை வளர்த்துக் கொண்டு பல போட்டிகளில் வெற்றிகளைக் குவித்தார். பொருளாதாரப் பற்றாக்குறையால் நிதியின்றி தனக்கு உதவிய நகர நூலகம் மூடப்பட்ட பொழுது அது ‘மனிதக்குலத்திற்கு எதிரான குற்றம்’ என மிகவும் இளவயதிலேயே தனது கருத்தைத் தயக்கமின்றிப் பதிவு செய்தவர் மகிஷன். மக்களாட்சியைச் சிறப்பாக செயல்படுத்துவதைப் பற்றிய கட்டுரைப்போட்டியில் வன்முறையைக் கட்டுக்குள் வைப்பது பற்றி இவர் எழுதிய கட்டுரை தேசிய அளவில் சிறந்த கட்டுரைக்கானப் பரிசைப் பெறக் காரணமாக அமைந்தது. தனது ஆரம்பப் பள்ளி நாட்களில் (நான்காம் வகுப்பு) தனது நண்பனான நல்ல மாணவன் ஒருவர் அநீதியாகத் தாக்கப்பட நேர்ந்ததைப் பார்த்த இவரது அனுபவம் வன்முறைக்கு எதிரான சமூகப்பணியில் இவரை ஆர்வம் கொள்ளச் செய்துள்ளது. நெவார்க் நகரத்தில் நடந்த அமைதி கருத்தரங்கை (Newark Peace Education Summit – 2011) தலாய்லாமா அவர்கள் தலைமையேற்று அதில் அவர் உரையாற்றிய பொழுது, அதே மேடையில் வன்முறைக்கு எதிராக ஏழாம் வகுப்பு படித்த 13 வயது மகிஷனும், நெவார்க் நகரத்தின் பிரதிநிதியாக, இளைஞர்களிடம் உள்ள வன்முறைப்போக்கை கண்டித்து அமைதிக்காக உரையாற்றினார். உயர்நிலைப்பள்ளியின் இரண்டாமாண்டில் படிக்கும் பொழுது ‘நியூ ஜெர்சி மாநிலத்தின் வொய்.எம்.சி.ஏ இளைஞர் – அரசாட்சி அமைப்பில்’ (New Jersey YMCA – Youth and Government program) துணை ஆளுநராகத் தேர்வு செய்யப்பட்டு சமூகப்பணிகளில் பங்குபெற்று வந்தார். அதில் சிறப்பாகப் பணியாற்றியமைக்காக மாநில அளவின் சிறந்த தலைவர்களுள் ஒருவராகத் தேர்வு செய்யப்பட்டுப் பாராட்டப்பட்டார். மீண்டும் பதினோராம் வகுப்பு மாணவராக இருக்கும் பொழுது, சென்ற ஏப்ரலில் (ஏப்ரல் – 2015) அதே வொய்.எம்.சி.ஏ அமைப்பின் தேர்தலில் ஆறு மாணவர்களுடன் போட்டியிட்டு அந்த இளைஞர் அமைப்பின் ஆளுநராகத் ( Youth Governor) தேர்வு செய்யப்பட்டு, தலைமைப் பதவியில் வழிநடத்தி வருகிறார். சமூகப்பணிகளில் ஆர்வம் கொண்டு, தலைமைப் பொறுப்பேற்கும் தகுதியையும் வளர்த்துக் கொண்டுள்ள மகிஷன் உலகப்புகழ்பெற்ற பிரின்ஸ்டன் பல்கலைக் கழகத்தில் அடுத்த ஆண்டு தனது பட்டப்படிப்பைத் தொடரவிருக்கிறார். திரு. மகிஷன் ஞானசேகரன் அவர்களின் குறிக்கோள்கள் வெற்றியடையப் பாராட்டுகளும் வாழ்த்துகளும். January 4, 2016 ரிஃபாத் ஷாருக் [] இந்தியாவின் இளம் அறிவியலாளராகப் பாராட்டப் பட்டவர் தமிழ்நாட்டின் மேல்நிலைப் பள்ளி மாணவரான திருவளர் செல்வன் ரிஃபாத் ஷாருக் (Mohamed ‘Rifath Shaarook’ Raaj M.D) அவர்கள். ஜனவரி 3 – 7, 2016, மைசூர் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற 103வது இந்திய அறிவியல் மாநாட்டில் கரூரை அடுத்த பள்ளப்பட்டியைச் சேர்ந்த ரிஃபாத் ஷாருக் தனது கண்டுபிடிப்பைச் சமர்ப்பித்து இச்சாதனையை நிகழ்த்தியுள்ளார். ரிஃபாத் ஷாருக் கரூர் ‘கிரசென்ட் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியின் பன்னிரண்டாம் வகுப்பு மாணவர். இந்திய அறிவியல் மாநாட்டின் சிறுவர்களுக்கான 23ஆம் “ராஷ்ட்ரீய கிஷோர் வைகையானிக் சம்மேளனம்” அமைப்பு முன்னெடுத்த மாணவர்களுக்கான போட்டியில், “இயற்கை அடிப்படையில் பருவநிலையைக் கண்டறிதல்“ என்ற கருத்தில் ஆய்வுகள் பள்ளி மாணவர்களிடம் இருந்து வரவேற்கப்பட்டன. “சாட்டிலாஸ்கோப்“(Sateloscope) என்ற கருவியை தனது ஆசிரியர் பச்சமுத்து அவர்களின் மேற்பார்வையில் வடிவமைத்தார் ரிஃபாத் ஷாருக். சாட்டிலாஸ்கோப் என்பது உருவில் சிறிய ஒரு செயற்கைக்கோள் மற்றும் தொலைநோக்கி ஆகியவற்றினை இணைத்து உருவாக்கப்பட்ட கருவி (a nano satellite which is a combination of satellite and telescope). பொதுவாக நாம் அறிந்துள்ள செயற்கைக் கோளைவிட உருவில் சிறியதாகவும் எடையில் குறைவாகவும் உள்ளது இந்தக் கருவி. அதனால் குறைந்த எரிபொருளுடன், சிறிய விண்கலம் மூலம் விண்வெளிச் சுற்றுப்பாதையில் இதனை நிறுவிவிட முடியும். இதில் பொருத்தப்பட்டுள்ள வரிச்சுருள் பாகமானது கருவியைச் சுற்றி ஒரு செயற்கைக் காந்தப்புலத்தை உருவாக்கி, கருவி சுற்றுப்பாதையில் இருந்து விலகிவிடுவதைத் தவிர்க்கும் வகையிலும், சூரியக்கதிர் தாக்குதலில் இருந்து பாதுகாக்கும் வண்ணமும் வடிவமைக்கப்பட்டுள்ளது. தகவல் தொலைத் தொடர்பு தொழில் நுட்பத்தில் இக்கருவியின் பங்கு சிறந்த முறையில் பயன்படும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. இது செயல்படும் நிலையில் உள்ள ஒரு கருவி. இத்துடன் செவ்வாய் கிரகத்தின் கனிம வளங்களை ஆராய உதவும் மேலும் இரு கருவிகளையும் செயல்படும் நிலையிலேயே ரிஃபாத் ஷாருக் போட்டிக்காகச் சமர்ப்பித்திருந்தார். சமர்ப்பிக்கப்பட்ட 89 கண்டுபிடிப்புகளில் இறுதிச் சுற்றில் மூன்று மாணவர்களின் கண்டுபிடிப்புகள் தேர்வு செய்யப்பட்டன. பிறகு அவற்றிலும் ரிஃபாத் ஷாருக் வடிவமைத்த கருவியே சிறந்ததாகத் தேர்வு செய்யப்பட்டு இந்திய அறிவியல் மாநாட்டு வழங்கிய மாணவர்களுக்கான இளம் அறிவியலாளர் பரிசைத் தட்டிச் சென்று தமிழகத்திற்குப் பெருமை சேர்த்துள்ளார் இவர். இப்பரிசு வியாழனன்று வழங்கப்பட்டு ரிஃபாத் ஷாருக் பாராட்டப் பட்டார். சுட்டி விகடனின் ‘சீனியர் சுட்டி ஸ்டார்’ பாராட்டைப் பெற்றவரான மாணவர் ரிஃபாத் ஷாருக் இதற்கும் முன்னரே அறிவியல் சாதனைகளுக்காக அறியப்பட்டவர். ஆண்டு தோறும் பள்ளி மாணவர்களுக்காக நடத்தப்படும் ‘ஸ்பேஸ் கிட்ஸ் இந்தியா அமைப்பு’ நடத்தும் “இந்திய இளம் அறிவியலாளர்” போட்டியில் பங்கேற்று நாட்டிலேயே முதல்முறையாக விண்வெளிக்கு அருகில் வானிலை ஆய்வுக் கருவியைச் செலுத்தி சாதனை நிகழ்த்தினார். ஏ.பி.ஜெ.அப்துல்கலாம் அவர்கள் மறைவுக்குப் பின் சில நாட்களிலேயே நிகழ்த்தப்பட்ட இவரது இச்சாதனை அப்துல் கலாமின் மறைவுக்குச் சிறந்த அஞ்சலியாகக் கருதப்பட்டது. ‘இங்கிலாந்தின் அதிஉயர குழுவின்’ (U.K. high altitude society) உறுப்பினரான ரிஃபாத் ஷாருக் அமெரிக்க விண்வெளி ஆய்வு மையத்தின் (The National Aeronautics and Space Administration – NASA) இணைய தளத்தின் மூலம் தனது விண்வெளி தகவல் அறியும் விருப்பத்தை நிறைவேற்றிக் கொள்பவர். ஒருமுறை அறிவிக்கப்பட்ட செயற்கைக் கோள் போட்டியில் வெளிநாட்டு மாணவர்கள் பங்கு பெற அனுமதியில்லை என்ற குறிப்பிற்குப் பிறகு, பின்னொருநாள் அதனை முயல வேண்டும் என்று திட்டமிட்டார். ஹீலியம் வாயு பலூனுடன் வானிலை தரவுகள் சேகரிக்கும் கருவிகளைப் பொருத்தி, விண்ணில் உள்ள வாயுக்கள் பற்றி பருவநிலை ஆய்வுக்கு உதவும் வகையில் அதனை அதிக உயரத்தில் விண்வெளிக்கு அருகில் கருவியை செலுத்தி சாதனை நிகழ்த்தினார். அதில் இணைக்கப்பட்டிருந்த 10 வகை ஆய்வுக் கருவிகளுடன் 70,000 அடி உயரம் திட்டமிட்டபடி பலூன் உயர்ந்து, 242 கிமீ கடந்து, பலூன் வெடித்து பாராசூட்டின் உதவியுடன் கூத்தானூரில் தரையிறங்கியது. புவியிடத்தைக் குறிக்கும் ஜி பி எஸ் கருவி மூலம் அதனைத் தொடர்ந்து சென்று பருவநிலையைப் பற்றி கருவிகள் பதிவு செய்த தகவல்களை ரிஃபாத் ஷாருக் சேகரித்து வெளியிட்டார். இது போன்ற உயரங்களில் பலூன் பறக்கவிட்டு ஆய்வுகள் செய்யப்படுவதை அன்று வரை வானிலை உயர் ஆய்வு மையங்கள் மட்டுமே மேற்கொண்டுவந்தன. பள்ளிமாணவர் ஒருவர் அத்தகைய செயலை நிகழ்த்திக் காட்டியதே அதன் சிறப்பு. இதற்காக ஆகஸ்ட் 2015 இல் பாராட்டப்பட்டவர் ரிஃபாத் ஷாருக். சிறுவயதில் காகித ராக்கெட் செய்து பறக்கவிட்டு விளையாடிய தன்னை உண்மையான ராக்கெட் விடவேண்டும் உற்சாகப்படுத்தியவர் அந்நாட்களில் இஸ்ரோவில் பணிபுரிந்த தனது தந்தை என்று செய்தித்தாளுக்கு வழங்கிய செவ்வி ஒன்றில் குறிப்பிட்டுள்ளார் ரிஃபாத் ஷாருக். இவரை ஊக்கப்படுத்தி அறிவியல் ஆர்வத்தை வளர்க்க உறுதுணையாக இருந்த ரிஃபாத் ஷாருக்கின் பெற்றோர்களும், ஆசிரியர்களும், இவரது திட்டத்திற்கு உதவி செய்த பிற ஆர்வலர்களும் கூட இத்தருணத்தில் பாராட்டப்பட வேண்டியவர்கள் என்பதில் ஐயமில்லை. மறைந்த டாக்டர் அப்துல் கலாம் அவர்களின், இந்தியா ஒரு வல்லரசாக உருவாகவேண்டும் என்ற கனவினை நனவாக்க, வலிமையான இந்தியாவை உருவாக்க விரும்பும் இளையபாரதத்தினருக்கு ரிஃபாத் ஷாருக் ஒரு சிறந்த முன்மாதிரியாக விளங்குவதற்காகப் பாராட்டுகள். விண்வெளி ஆராய்வுத் துறை பயன்பெற அவர் பற்பல கண்டுபிடிப்புகளை உருவாக்கி, மேலும் மேலும் உயர்ந்து நாளைய தலைமுறையினரின் நம்பிக்கை நட்சத்திரமாக அவர்களை வழிநடத்த வாழ்த்துகள். January 11, 2016 இ. மயூரநாதன் [] கனடாவின் “தமிழ் இலக்கியத் தோட்டம்” அறக்கட்டளை அமைப்பு வழங்கும் 17 ஆவது இயல் விருதிற்காகத் தேர்வு செய்யப்பட்டவர் திரு. இ. மயூரநாதன் (R.Mayooranathan) அவர்கள். வாழ்நாள் சாதனையாளர் விருதாக ஒவ்வொரு ஆண்டும் வழங்கப்படும் இந்த இயல் விருதின் 2015 ஆண்டிற்கான விருதினைப் பெறும் திரு. மயூரநாதன் அவர்கள் தமிழ் விக்கிப்பீடியா என்னும் இணையத்தளக் கலைக்களஞ்சிய கூட்டாக்கத் திட்டத்தில் முதல் பங்களிப்பாளராக இணைந்து தொடர்ந்து இன்றுவரை சிறப்பாகப் பங்களித்துவருபவர். விருது வழங்கும் விழா கனடா நாட்டின் டொராண்டோ நகரில் 2016 ஜூன் மாதம் நடைபெறவிருக்கிறது. இலங்கை, யாழ்ப்பாணத்தில் வண்ணார்பண்ணை என்னுமிடத்தில் இரத்தினவேலு தங்கலட்சுமி இணையருக்குப் பிறந்த திரு. மயூரநாதன் அவர்கள் மொரட்டுவைப் பல்கலைக் கழகத்தில் கட்டடக்கலையில் முதுநிலை பட்டம் பெற்ற கட்டிடவியல் கலைஞர் (architect). கடந்த 35 ஆண்டுகளாகக் கட்டடக் கலைஞராகப் பணியாற்றி வரும் திரு. மயூரநாதன் கொழும்பில் 16 ஆண்டுகள் பணியாற்றிய பிறகு, 1993-ல் இருந்து ஐக்கிய அரபு அமீரகத்தின் ஷார்ஜாவில் பணியாற்றிவருகிறார். ஜனவரி 15, 2016 அன்று தனது 15 ஆவது பிறந்தநாளைக் கொண்டாடுகிறது கட்டற்ற பன்மொழிக் கலைக் களஞ்சியத் திட்டமான விக்கிப்பீடியா. விக்கிப்பீடியா துவங்கி இரண்டரை ஆண்டுகள் கழிந்த பின்னரே, அதில் ஆங்கிலக் கட்டுரைகளின் எண்ணிக்கை 200,000யும் கடந்த பின்னரே, தனி ஒரு மனிதராகத் திரு. மயூரநாதன் அவர்கள் செப்டெம்பர் 2003 ஆம் ஆண்டு தமிழ்மொழி விக்கிப்பீடியாவின் முதல் பக்கத்தைத் துவக்கியுள்ளார். அக்காலத்தில் இருந்த ஆங்கில விக்கியின் முதல் பக்கத்தைத் தழுவி ஒரு தமிழ் முதல் பக்கத்தையும் உருவாக்கியதுடன், அதற்கான மென்பொருளை மொழிபெயர்க்கத் தொடங்கி அம்மாத இறுதியில் முடித்திருக்கிறார். அதன் அடிப்படை வசதிகளை மேம்படுத்தி வலுவான தளமாக அமைப்பதற்கு உழைத்தார். அதுவே முதல் முறையாகத் தமிழ் விக்கிப்பீடியா உருவான வரலாறு. அன்றிலிருந்து தனது ஓய்வு நேரத்தைத் தமிழ் விக்கிப்பீடியாவின் வளர்ச்சிக்காகவே ஆக்கப்பூர்வமாகச் செலவிட்டு வருகிறார். இவர் 12 ஆண்டுகள் 4 மாதங்களுக்குத் தொடர்ந்து பங்களித்து வருவது சற்றொப்ப 4,500 நாட்களாகும், இவர் பங்களிப்பில் உள்ள தமிழ் விக்கி கட்டுரைகளும் ஏறத்தாழ அதே எண்ணிக்கையில் அடங்கும். நாளொன்றுக்கு ஒரு கட்டுரை என்ற அளவில் தமிழ் விக்கிப்பீடியாவின் வளர்ச்சியில் தொடர்ந்து பங்கு பெற்று வருகிறார் திரு. மயூரநாதன். பன்னிரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் இவர் துவங்கிய நாளில் இருந்து, சென்னையைச் சேர்ந்த தொழில் நுட்பவியலாளர் திரு. சுந்தர் இவருடன் இந்தத் தன்னார்வப் பணியில் கைகோர்க்கும் வரையில் ஒரு தனி மனிதராகவே ஓராண்டுக்கு தமிழ் விக்கிப்பீடியாவில் எழுதி வந்திருக்கிறார் திரு. மயூரநாதன். புதிய பங்களிப்பாளர்கள் பயமின்றி விரும்பியபடி பயிற்சி செய்வதற்கான இடமான ஆங்கிலத்தில் “sand box” என்று அழைக்கப்படும் விக்கிப்பீடியா பயிற்சி தளத்திற்கு “மணல் தொட்டி” என மொழி பெயர்த்து பெயர் கொடுத்தவரும் இவரே. மணலில் எழுதி பயிற்சி பெறும் வழக்கத்தை ஒத்திருப்பதை சுட்டிக் காட்டுகிறார் திரு. மயூரநாதன். தமிழ் அறிவியல் துறையில் கட்டுரைகள் எழுதுவதில் துவங்கியது திரு. மயூரநாதன் அவர்களின் எழுத்தார்வம். பத்தாம் வகுப்பில் படிக்கும் பொழுதே ஐந்து மாணவர்களுடன் இணைந்து “விஞ்ஞானி” என்னும் கையெழுத்து மாத இதழ் ஒன்றினை வெளியிட்டுள்ளார். இவரது இந்த எழுத்து ஆர்வமே பிற்காலத்தில் தமிழ் விக்கிப்பீடியா வளர்ச்சிக்கு உறுதுணையாக இருந்தது எனலாம். ஆங்கிலத்தில் விக்கிப்பீடியா ஆரம்பிக்கப்பட்டபோது, அதன் பின்னணியில் உள்ள தொழில்நுட்பம் கொடுக்கும் ஆற்றலையும், அறிவு உருவாக்கத்தில் அதன் மகத்தான பங்களிப்பையும் உணர்ந்ததால் இவர் துவக்கிய தமிழ் விக்கிப்பீடியா பணி, இன்று தரமான கட்டுரைகள் கொண்ட தகுதியில் ‘ஷிஜு அலெக்ஸ்’ (Shiju Alex) 2010 ஆண்டில் செய்த தர ஒப்பீட்டின் அடிப்படையில் இந்திய மொழிகளில் முதலாம் இடத்தைப் பிடிக்கும் அளவிற்கு வளர்ந்துள்ளது. எண்ணிக்கை அடிப்படையில் இந்திய மொழிகளில் இரண்டாம் இடத்தையும், விக்கியில் இடம்பெறும் 291 உலக மொழிகளில் தமிழ் மொழி 61 இடத்திலும் தமிழ் விக்கிப்பீடியா இடம் பெறும் நிலையில் உள்ளது. தற்பொழுது தமிழ் விக்கிப்பீடியாவில் இடம்பெற்றுள்ள தமிழ்க் கட்டுரைகளின் எண்ணிக்கை ஏறத்தாழ 83,000. இன்று 88,000 பேருக்கும் அதிகமானவர்கள் தன்னார்வப் பயனர்களாக தங்களைப் பதிவுசெய்து கொண்டுள்ள தமிழ் விக்கிப்பீடியா குழுவில், சுமார் 100 தொடர் பங்களிப்பாளர்களும் அடங்குவர். தமிழ் விக்கிப்பீடியா விரிவாக்கத்திலும், பிற பங்களிப்பாளர்களுடன் இணைந்து சிறப்பாக இயங்கும் கூட்டுக்குழுமமாக அது உருவாகவும் வழிவகுத்தமைக்காக திரு. மயூரநாதன் அவர்களைப் பாராட்டுவது சாலப் பொருந்தும். தமிழ் விக்கிப்பீடியாவின் வளர்ச்சி தமிழின் எதிர்கால வளர்ச்சியின் இன்றியமையாப் பங்கு அளிக்கிறது என்று இந்நாட்களில் உணரப்பட்டு, மரபுவழி தமிழ் வளர்ச்சியில் காட்டப்படும் அதே அக்கறை தமிழ் விக்கிப்பீடியாவிற்கும் அளிக்கப்படுகிறது. தமிழக அரசும் சில திட்டங்களில் தமிழ் விக்கிப்பீடியாவுடன் இணைந்து செயலாற்ற முடிவு செய்துள்ளது. தமிழக அரசால் நிறுவப்பெற்ற தன்னாட்சி நிறுவனமான தமிழ் இணையக் கல்விக்கழகம், த. இ. க. – தமிழ் விக்கிப்பீடியா கூட்டு முயற்சியாக தனக்கு பதிப்புரிமை உள்ள ஊடக வளங்கள், கணிமை வளங்களைக் கட்டற்ற ஆக்க உரிமங்களின் கீழ் வெளியிடுவதாக அறிவித்துள்ளது. ஆக்கப்பூர்வமாகப் பணியாற்றுவதிலும், உலக அங்கீகாரம் பெற்ற திட்டமொன்றில் இணைந்து பணியாற்றுவது மகிழ்ச்சி தருவதாகக் கூறும் திரு. மயூரநாதன் தான் ஒரு வீக்கிப்பீடியனாக இருப்பதில் பெருமை அடைவதாகவும் கூறியுள்ளார். முதல் பங்களிப்பாளராக தமிழ் விக்கிப்பீடியாவின் உருவாக்கத்துக்கு வழிவகுத்த திரு. மயூரநாதன் அவர்களுக்குப் பாராட்டுகள். January 18, 2016 கோட்டலாங்கோ லியோன் [] ஹாலிவுட் திரைத்துறை சாதனையாளர்களுக்காக வழங்கப்படும் ஆஸ்கார் விருதுகளில், 2015 ஆம் ஆண்டின் சிறந்த தொழில்நுட்பப் பங்களிப்பிற்காக வழங்கப்படும் ஆஸ்கார் விருதைப் பெறுபவர்களில் ஒருவர் கோவைத் தமிழர் திரு. கோட்டலாங்கோ லியோன் (Cottalango Leon) அவர்கள். இவரும், இவர்தம் வழிநடத்தலில் இவரது குழுவினரும் சோனி பிக்சர்ஸ் இமேஜ்வொர்க்ஸ் (Sony Pictures Imageworks) நிறுவனத்திற்காக உருவாக்கிய “ஐடிவியூ” (itview) என்ற மென்பொருள், உருவாகி வரும் திரைப்படத்தின் பகுதிகளை திரைக் கலைஞர்கள் மீண்டும் பார்த்து ஆய்வுசெய்து செப்பனிடும் முறையை எளிமையாக்குவதற்காக உருவாக்கப் பட்டது. உருவாகி வரும் படத்தின் பல நிலைகளிலும் இது பயன்படுத்தப்படுவதால் திரைப்படம் தயாரிப்பதில் பெரிதும் உதவுகிறது. தொழில்நுட்பத்திற்காக “வடிவமைப்பு, பொறியியல் பங்களிப்பு, தொடர் மேம்பாடு” ( ‘Scientific and Technical Achievements’ category for the design, engineering and continuous development) என்ற பிரிவில் விருதினைப் பெரும் திரு. கோட்டலாங்கோ லியோன் விருது கிடைத்ததைப் பற்றிய தனது செய்தியை அவரது ஃபேஸ்புக் தளத்தில் பகிர்ந்துள்ளார். அதில் அவர், “சாதாரணமான நாளொன்றைத் துவக்கிய எனக்கு ஆஸ்கார் விருது பற்றிய செய்தி இன்ப அதிர்ச்சியைத் தந்தது.திரைப்படங்களை உருவாக்குவதில், இன்றியமையாத வகையில் பின்புலத்தில், திரைப்பட தொழில்நுட்பத்தில் உதவிகள் செய்யும் 30 தொழில்நுட்ப வல்லுநர்கள் இந்த ஆண்டின் ஆஸ்கார் விருது வழங்குபவர்களால் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.இதற்கும் போட்டிகள் அதிகம், இதற்காகப் பலநேர்காணல்களில் கலந்து கொள்ளவும், தொழில்நுட்பம் பற்றிய விளக்கங்களும் தரவேண்டியிருக்கும். இருபதாண்டுகளுக்கு முன்னர் சோனி பிக்சர்ஸ் இமேஜ்வொர்க்ஸ் பணியில் என்முதல் நிரலி வரியை எழுதிய பொழுது நான் பின்னாட்களில் அதன் விளைவுகளை எதிர்பார்க்கவில்லை. எங்கள் தொழில் நுட்பப் பணியில் உடன் பணியாற்றிய ராபர்ட் ரே, சாம் ரிச்சர்ட்ஸ், மற்றும் ராப் ப்ரேடோ (Robert Ray, Sam Richards and Rob Bredow) ஆகிய குழுவினருக்கும், எனது முன்னேற்றத்திற்கு உதவிய என் நண்பர்களுக்கும், நான் பணிபுரியும் ‘சோனி பிக்சர்ஸ் இமேஜ்வொர்க்ஸ்‘ நிறுவனம் என்னிடம் இதுநாள் வரை காட்டிய அன்பிற்கும், கடின உழைப்பின் மதிப்பை அறிவுறுத்தி எனக்கு விருப்பமான துறையில் பணியாற்ற உறுதுணையாக இருந்த எனது பெற்றோர்களுக்கும், பொறுமையுடன் எனக்கு ஆதரவளித்த எனது மனைவி ரூபா மற்றும் மகள் ஸ்ருதி ஆகியோருக்கும் நன்றி,” எனத் தனது ஃபேஸ்புக் செய்தியில் (https://www.facebook.com/cottalango) குறிப்பிட்டுள்ளார். திரு. கோட்டலாங்கோ லியோன் தூத்துக்குடி மாவட்டத்தில் பிறந்து கோவையில் வளர்ந்தவர். பணி ஓய்வு பெற்ற இவரது தாய் திருமதி எல். இராஜம் அம்மையாரும், மறைந்துவிட்ட இவரது தந்தையும் ஆசிரியப்பணி புரிந்தவர்கள். கலிஃபோர்னியா மாநிலத்தின் லாஸ் ஏஞ்சலஸ் பகுதியில் உள்ள கல்வர் சிட்டி என்ற இடத்தில் வசிக்கும், 44 வயதாகும் திரு. கோட்டலாங்கோ லியோன், கோவை பி எஸ் ஜி தொழில் நுட்பக் கல்லூரி (PSG College of Technology) பொறியியல் பட்டப்படிப்பிற்குப் பிறகு அரிசோனா மாநிலப் பல்கலைக்கழகத்தில் (Arizona State University) மேற்படிப்பைத் தொடர்ந்தவர். தற்பொழுது 20 ஆண்டுகளாகப் பணிபுரிந்து வரும் சோனி பிக்சர்ஸ் இமேஜ்வொர்க்ஸ் நிறுவனத்தில் மேல்நிலை கணினி மென்பொருள் பொறியாளராகப் பொறுப்பேற்பதற்கு முன்னர், ‘ட்ரீம் வொர்க்ஸ் இன்டெர்ஆக்டிவ்‘ (Dreamworks Interactive) நிறுவனத்திலும் பணிபுரிந்தவர். 2015 ஆம் ஆண்டின் ஆஸ்கார் தொழில்நுட்ப விருதினைப்பெறும் மற்றொரு இந்தியர் திரு. ராகுல் தாக்கர் என்பதும் குறிப்பிடத்தக்கது. தொழில்நுட்ப ஆஸ்கார் விருதுகளுக்காக வழங்கப்பெறும் ஆஸ்கார் பரிசளிப்பு விழா பிப்ரவரி 13, 2016 அன்றும், பிற விருதுகளை வழங்கும் விழா பிப்ரவரி 28, 2016 அன்றும் நடைபெறவிருக்கிறது. திரைப்படத்துறையில் தொழில்நுட்ப வளர்ச்சிக்குச் சிறந்த பங்காற்றியுள்ள திரு. கோட்டலாங்கோ லியோன் அவர்களுக்குப் பாராட்டுகள். January 25, 2016 ஆண்டனி எடிசன் [] “குறைந்த விலையில்” ரோபோட்டிக் செயற்கை கை (prosthetic robotic hand) ஒன்றை வடிவமைத்துச் சாதனை புரிந்துள்ளார் பொறியியல் கல்லூரி மாணவர் திரு. ஆண்டனி எடிசன் (Antony Edison) அவர்கள். தஞ்சையைச் சேர்ந்த மாணவர் ஆண்டனி எடிசன் அவர்கள் கோவையின் இந்துஸ்தான் பொறியியல் கல்லூரியில் (Hindusthan College of Engineering and Technology) மெக்கட்ரானிக்ஸ் பொறியியல் கல்வி பெறும் மாணவர். இளம் வயதிலேயே ரோபோட்டிக்ஸ் பொறியியல் துறையில் ஆர்வம் கொண்டதால் மெக்கட்ரானிக்ஸ் (B.E. Mechatronics),படிப்பைத் தேர்ந்தெடுத்தவர் ஆண்டனி எடிசன். கோவாவில் நடைபெற்ற அறிவியல் கண்காட்சி ஒன்றில் ஜெர்மனி அறிவியலாளர் ஒருவர் காட்சிப்படுத்தியிருந்த செயற்கை கை ஒன்றில் இவரது ஆர்வம் திரும்பியது. அதனைப் பற்றி விசாரித்து அறிந்த பொழுது, அது இந்திய விலைவாசிக்குக் கட்டுப்படியாகாத ரூபாய் 50,000 வரை அதிக விலையில் அமைந்திருக்கக் கண்டார். எனவே நம் நாட்டினருக்குக் குறைந்த விலையில் எளிதில் கிடைக்கக் கூடிய ரோபோட்டிக் செயற்கை கையை வடிவமைக்கத் திட்டமிட்டார். மேலைநாடுகளில் ரோபோட்டிக் செயற்கை கைகள் உருவாக்கப்பட்டு வந்தாலும் அவற்றினை இந்தியாவில் உள்ளவர் பயன்படுத்த விரும்பினால் லட்சக் கணக்கில் செலவிட நேரும். அத்துடன் அதற்கான உதிரிப் பாகங்களைத் தருவித்து இந்தியாவில் தயாரிப்பதும் ரோபோட்டிக் செயற்கை கையின் அடக்கவிலையைக் குறைக்கும்வகையில் அமைந்திருக்கவில்லை என்பதைத் தெரிந்து கொண்ட ஆண்டனி எடிசன், இந்தியாவிலேயே கிடைக்கக்கூடிய ஃபோம் ஷீட், மோட்டார், சென்சார்கள் போன்றவற்றைக் கொண்டு தயாரிக்க முடிவு செய்துள்ளார். ஒரு பொருளைப் பிடித்து, அதனை எடுத்து மற்றொரு இடத்தில் வைப்பதுதான் பெரும்பான்மையாக உதவக்கூடிய அடிப்படை செயல் என்பதால் அதன் அடிப்படையில் செயற்கை கை இயக்கத்தை வடிவமைக்க விரும்பினார் ஆண்டனி எடிசன். செயல்முறையை நிகழ்த்தும் கட்டளைகளை குரல்வழியாக செயல்படுத்தும் முறை உள்ளது. செயற்கை கை இயக்கத்திற்காகப் பெரும்பான்மையாக இம்முறையே கையாளப்பட்டாலும், கண்ணசைவு வழியே கட்டளைகளை அளிக்கும் முறையைத் தேர்வு செய்து அதற்கான கண்ணாடி ஒன்றையும் வடிவமைத்தார். மொத்த எடை 700 கிராம்களே கொண்ட செயற்கை கை, இடது கண்ணின் அசைவுகள் மூலம் கட்டுப்படுத்தப்படும். கண்ணாடியில் உள்ள சென்சார் கண்ணசைவுகளை செயற்கைக் கைக்குத் தெரிவிக்கும். ஒரு பொருளைப் பற்றுவதற்கு மூன்று நொடிகள் கண்ணை மூடினால் கை அதனைப் பற்றிக் கொள்ளும், அதனை வேறு இடத்தில் வைத்து மீண்டும் மூன்று நொடிகள் கண்ணை மூடினால் கை பொருளைப் பற்றுவதை நிறுத்தி விலகிவிடும். எலக்ட்ரானிக் சர்க்கியூட்கள், பாகங்கள் ஆகியவற்றைக் கைகளாலேயே இணைத்து அமைக்கப்பட்ட இந்த ரோபோட்டிக் செயற்கை கையைத் தயாரிக்க பன்னிரண்டாயிரம் ரூபாய் செலவானது என்றும், இதனைப் பெரிய அளவில் தயாரிக்கும் பொழுது மேலும் திறனை மேம்படுத்தியும், அழகாகவும், எளிமையாகவும் ஏழாயிரம் ரூபாய் அடக்க விலையில் அமையுமாறும் உருவாக்கலாம் என்பது இவரது கணிப்பு. இவரது விலைகுறைந்த ரோபோட்டிக் செயற்கை கையை மும்பையில் நடந்த கல்லூரி கண்காட்சியில் காட்சிப்படுத்திய பொழுது நல்ல வரவேற்பைப் பெற்றதுடன், சில தொழில் நுட்ப நிறுவனங்களும் ஆர்வம் காட்டியுள்ளன. கண்காட்சியில் ஆண்டனி எடிசனுக்கு இரண்டாம் பரிசு கிடைத்தது. இவர் மேலும் சில அறிவியல் போட்டிகளில் பங்கு பெற்றுத் தனது திறமையைக் காண்பித்துள்ளார். பெங்களூரில் நடைபெற்ற NIYANTRA 2015 இயந்திரங்கள் வடிவமைப்பு போட்டியில் (NIY-37) இறுதிச் சுற்றிற்கு தகுதி பெற்றவர் இவர். சூரியமின்சக்தியில் இயங்கும் ஊர்தியை (electric solar vehicle) இவரும் இவரது குழுவினரும் வெற்றிகரமாக வடிவமைத்துள்ளனர். தற்போது ரோபோட்டிக் செயற்கை கையின் காப்புரிமையினைப் பெற விண்ணப்பிப்பதற்குத் தேவையான பணத்தினை சேர்த்துக் கொண்டுள்ளார் ஆண்டனி எடிசன். ரோபோட்டிக் செயற்கை கையை மேம்படுத்தி பலரும் பயன்பெறும் வகையில் குறைந்த விலையில் வழங்க வேண்டும் என்பது இவரது நோக்கம். அறிவியலிலும் மருத்துவத்துறையிலும் முன்னேற்றங்கள் பல நிகழ்ந்தாலும், புதிய பல கண்டுபிடிப்புகள் உருவாக்கப்பட்டாலும் அவற்றை சாதாரண மக்கள் அடைந்து பலன் பெரும் வகையில் அவை அமையாது போனால் அதனால் கிடைக்கும் பயன் குறைவே. செயற்கை உறுப்புகளை நம்பியிருக்கும் விபத்தில் கை, கால்களை இழந்தவர்களுக்கு, அழகிற்காகப் பொருத்தப்படும் செயலற்ற உடல் உறுப்புகளைவிட, இயங்கும் கை கால்கள் கிடைத்தால் நடைமுறை வாழ்க்கையில் பிறர் தயவை அவர்கள் நாடி இருப்பதைக் குறைக்கலாம் என்பது மறுக்க முடியாத உண்மை. இந்த வகையில் குறைந்தவிலையில் இந்தியப் பொருளாதாரத்திற்கு ஏற்ப ஆண்டனி எடிசனால் வடிவமைக்கப்பட்ட ரோபோட்டிக் செயற்கை கை புதிய பாதையை வகுத்து மாற்றத்தைக் கொண்டு வரும் என்பது நம்பிக்கைத்யைத் தருகிறது. மெக்கட்ரானிக்ஸில் மேற்படிப்பிற்காக வெளிநாட்டுப் பல்கலைக்கழங்களில் கல்வியைத் தொடர விரும்பும் ஆண்டனி எடிசனின் கனவுகள் மெய்ப்பட வாழ்த்துகள். அவரது ரோபோட்டிக் செயற்கை கை சாதனைக்குப் பாராட்டுகள். February 1, 2016 உதயகீர்த்திகா [] உக்ரைன் நாட்டிலுள்ள, உலகின் சிறந்த விண்வெளிக் கல்வி நிறுவனங்களில் ஒன்றான ‘கார்க்கிவ் யுனிவர்சிட்டி ஆஃப் ஏர்ஃபோர்ஸ்’ (Kharkov Air Force University, Ukraine) இல் ‘ஏரோ ஸ்பேஸ் இன்ஜினீயரிங்’ (Aerospace engineering) படிக்கத் தேர்வாகியுள்ளார் மாணவி திருமிகு. உதயகீர்த்திகா அவர்கள். தேனியின் அல்லிநகரம் என்ற ஊரினைச் சேர்ந்த, ஓர் எளிமையான சராசரி இந்தியக் குடும்பத்தில், தனியார் நிறுவனமொன்றில் குறைந்த ஊதிய வேலையிலிருப்பவரும், சிறுகதை எழுத்தாளரும் ஓவியருமான திரு. தாமோதரனுக்கும், தட்டச்சுப் பணிபுரியும் திருமதி. அமுதாவிற்கும் ஒரே செல்ல மகளாகப் பிறந்தவர் உதயகீர்த்திகா. குழந்தைப் பருவத்தில் இருந்தே வானவியல் பற்றிய ஆர்வம் கொண்டவர். பள்ளி நாட்களில் நிலா, வானம், அண்டம், விண்வெளி, விண்வெளி வீரர் என விண்வெளி தொடர்பான நூல்களைத் தேடித் தேடிப் படித்துத் தகவல்களை குறிப்பெடுத்துக் கொள்வதிலும், விண்வெளி தொடர்பான போட்டிகளில் பங்கெடுத்து பரிசுகளைக் குவிப்பதிலும் ஆர்வம் கொண்டிருந்தார். அவரது தந்தையும் ஆய்வுக்குத் தேவையென மகள் கேட்கும் விலை அதிகமான நூல்களையும் வாங்கிக் கொடுப்பதற்காக ஒரு வேளை உணவைத் தியாகம் செய்யத் தயங்காதவர். 2011-ம் ஆண்டு தேசிய அறிவியல் தொழில்நுட்பத் துறை சார்பில் நடைபெற்ற புதிய அறிவியல் கண்டுபிடிப்புகளுக்கான போட்டியில் தனது ஆய்வைச் சமர்ப்பித்து,‘Inspire Award’ விருதும், 2012-ம் ஆண்டு மகேந்திரகிரியில் உள்ள விண்வெளி ஆய்வு மையம் சார்பாக மாநில அளவில் பள்ளிகளுக்கு இடையில் நடத்தப்பட்ட ‘சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதில் விண்வெளி ஆய்வின் பங்கு’ என்ற தலைப்பிலான கட்டுரைப் போட்டியில் பரிசும், 2014-ம் ஆண்டு அதே விண்வெளி ஆய்வு மையம் நடத்திய ‘வழி நடத்தும் விண்வெளி’ என்ற தலைப்பிலான கட்டுரைப் போட்டியிலும் மாநில அளவில் முதல் பரிசும் பெற்றுள்ளார். பத்தாம் வகுப்புப் பொதுத்தேர்வில் பள்ளியின் முதல் மாணவி, அறிவியல் பாடத்தில் நூற்றுக்குநூறு, ப்ளஸ் டூ தேர்விலும் நல்ல மதிப்பெண்களைப் (1030 ) பெற்றவரான உதயகீர்த்திகா தமிழ்வழிக் கல்வி பெற்றவர். விண்வெளி ஆய்வு பற்றி படிக்க விரும்பி தனது ஆய்வுகள், கட்டுரைகள், பெற்ற பரிசுகள், மதிப்பெண்கள் ஆகியவற்றைச் சமர்ப்பித்து கார்க்கிவ் யுனிவர்சிட்டி ஆஃப் ஏர்ஃபோர்ஸ் பல்கலைக்கழகத்திற்கு விண்ணப்பித்த பொழுது அங்குப் படிக்க உதவித் தொகையும் வழங்கப்பட்டுத் தேர்வு செய்யப்பட்டார். மேற்கொண்டு, நான்காண்டு படிப்பிற்குத் தேவையான சுமார் 12 லட்சம் ரூபாய் செலவிற்காக, வங்கியில் கொஞ்சம் கல்விக் கடன், பிற இடங்களில் கடன் என ஒரு 7 லட்சம், உதவும் உள்ளங்கள் நீட்டிய உதவிக்கரங்கள் வழங்கிய தொகை எனச் சேகரித்தது போக, நடிகர் ராகவா லாரன்ஸும் ஆனந்த விகடனும் இணைந்து செயல்படுத்தும் ‘அறம் செய விரும்பு’ திட்டத்திலும் விண்ணப்பித்தார். மீதம் உள்ள தொகைக்கு 1.80 லட்சம் ரூபாய்க்கான காசோலையை வழங்கி நடிகர் ராகவா லாரன்ஸும் உதவி செய்துள்ளார். தனக்கு ஊக்கமளித்து உறுதுணையாக இருக்கும் தனது அப்பாவிற்காக விண்வெளி ஆய்வில் வெற்றிபெறுவதுதான் தான் செய்யும் கைமாறு எனக் கூறும் உதயகீர்த்திகா, “அறிவியல் என்றால் மருத்துவத்துறையை மட்டுமே நோக்கியதாக இருக்கிறது பெற்றோர்களின் இலக்கு. மகன்களைத் துணிச்சலுடன் ஆராய்ச்சிப் படிப்புகளை நோக்கி நகர்த்தும் பெற்றோர், தங்கள் மகள் அதை நோக்கி நகர்வதை அவ்வளவாக விரும்புவதில்லை. இந்தத் தயக்கம்தான் பெண்களை, குறுகிய வட்டத்துக்குள்ளேயே நிறுத்திவிடுகிறது. எல்லைதாண்டி சிந்திக்கவிடாமல் முடக்கிவிடுகிறது. உண்மையில் அறிவியல் அறிவில் ஆண்களைக் காட்டிலும் சிறந்து விளங்கும் திறமை பெண்களுக்கு இருக்கிறது. அதைத்தான் வரலாறும் சொல்கிறது … விண்வெளி ஆய்வு தொடர்பான பொறியியல் படிப்பை முடித்து விண்வெளி வீராங்கனையாகவும், அப்துல்கலாம் போல மிகச்சிறந்த விஞ்ஞானியாகவும் ஆவேன். உக்ரைன் பல்கலைக்கழகத்தில் படித்து முடித்துவிட்டு, இந்திய விண்வெளி ஆய்வுத்துறைக்கு எனது பங்களிப்பைச் செலுத்துவேன். ஏழை, எளிய மாணவர்கள் உயர்கல்வி பெறுவதற்கு உதவியாக இருப்பது, அறக்கட்டளை ஒன்றைத் தொடங்கி, ஏழை மாணவர்களும், விண்வெளி ஆய்வு தொடர்பான கல்வி கற்பதற்கு வழிவகை செய்வேன்,” என்று பத்திரிக்கைகளுக்கு வழங்கிய நேர்காணல்களிலும் குறிப்பிட்டுள்ளார். உயர்ந்த குறிக்கோள்களையும், நோக்கங்களையும் கொண்டுள்ள உதயகீர்த்திகாவின் முயற்சிகள் வெற்றியடைந்து விண்வெளி ஆய்வுகள் பலசெய்து நாட்டிற்குப் பெருமை தேடித்தரவும், இளைய தலைமுறையினருக்கு சிறந்த முன்மாதிரியாக இருந்து வழி நடத்தவும் வாழ்த்துகளும் பாராட்டுகளும். February 8, 2016 மு. இளங்கோவன் [] பாரீசைத் தலைமையகமாகக் கொண்டு, கனடாவிலும், துபாயிலும், புதுச்சேரியிலும் உலகத் தொல்காப்பிய மன்றத்தின் கிளைகள் துவக்கப்பட்டுள்ளன. புதுச்சேரி “உலகத் தொல்காப்பிய மன்றம்” கிளையின் இந்திய பொறுப்பாளராக, புதுச்சேரி அரசு காஞ்சி மாமுனிவர் பட்ட மேற்படிப்பு ஆய்வு மையத்தின் தமிழ்த்துறை பேராசிரியர் மு.இளங்கோவன் பணியினை முன்னெடுத்துச் செல்கிறார். துவக்கப்பட்டிருக்கும் “உலகத் தொல்காப்பிய மன்றம்” புதுச்சேரி கிளையின் சார்பாக, மாதம் ஒரு தமிழறிஞர் உரை என்ற திட்டத்தில், தொல்காப்பியம் கற்றோர் அல்லாது பொதுமக்களையும் சென்றடையும் நிலை வரவேண்டும் என்ற நோக்கத்தில் நடைபெறப்போகும் சொற்பொழிவுகளின் வரிசையில் முதல் பொழிவு சென்ற வாரம் 08.02.2016 அன்று “தொல்காப்பியம் ஓர் அறிமுகம்” என்ற தலைப்பில் பேராசிரியர் தெ. முருகசாமி அவர்களால் நிகழ்த்தப்பட்டுள்ளது. தமிழ் வளர்ச்சியில் தொடர்ந்து ஊக்கமுடன் பணியாற்றிவருகிறார் புதுவைப் பேராசிரியர் மு.இளங்கோவன் அவர்கள். முனைவர் மு.இளங்கோவன் இணையத்தமிழ் வளர்ச்சி பற்றியும், கணினித்தமிழ் வளர்ச்சி பற்றியும் தமிழ் இணையப் பயிலரங்கங்கள் பலவற்றையும், ஊடகக் கட்டுரைகளையும் தொடர்ந்து வழங்கி வருபவர். உலக அளவில் பன்னாட்டுக் கருத்தரங்கங்கள் பலவற்றில் பங்கேற்று ஆய்வுக் கட்டுரைகளையும், உரைகளையும் வழங்கி வருபவர். இருபது நூல்களை வெளியிட்டுள்ள முனைவர் மு.இளங்கோவன் அவர்கள், இந்திய அரசின் செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் ‘செம்மொழி இளம் அறிஞர்’ விருது பெற்றவராவார். கடந்த பத்தாண்டுகளாக தமிழ் சார்ந்த பன்னாட்டு நிகழ்வுகளைப் பற்றியத் தகவல்களையும், உள்ளூர்த் தமிழறிஞர்கள் முதல் உலகத் தமிழறிஞர்கள் வரை பலரை நேர்காணல்கள் செய்தும், சென்ற காலங்களில் தமிழ்த்தொண்டாற்றிய மறைந்தவர்கள் பலரைப் பற்றியும் தனது வலைப்பதிவில் செய்திகளைத் தொகுத்து வழங்கி வருபவர் இவர். தமிழ் முன்னணி தினசரி நாளிதழ்களும் இவரது வலைப்பதிவுக் கட்டுரைகளில் காணும் தகவல்களையும் படங்களையும் பயன்படுத்திக் கொள்ளும் அளவிற்கு ஒரு இன்றியமையாத் தகவல் கருவூலம், ஒரு வரலாற்றுப் பெட்டகம் முனைவர் மு.இளங்கோவன் அவர்களின் வலைப்பதிவுகள் (http://muelangovan.blogspot.com என்பது குறிப்பிடத்தக்கது. இசையார்வலர்கள் மகிழும் வண்ணம், கால்நூற்றாண்டு ஆய்வுகளைத் தேடித்தொகுத்த இசையாய்வுப்புதையலாக , பண்ணாராய்ச்சி வித்தகர் குடந்தை ப.சுந்தரேசனார் ஆவணப்படம் உருவாவதில் முயன்று தொகுத்து ஓராண்டிற்கு முன் வழங்கினார் முனைவர் மு.இளங்கோவன். “உலகத் தொல்காப்பிய மன்றம்” பேராசிரியர் மு.இளங்கோவன் அவர்கள் மேற்பார்வையில் சிறப்புற வளர்ந்து, அதன் நோக்கமான தொல்காப்பியம் கற்றோர் அல்லாது பொதுமக்களையும் சென்றடையும் நிலை வரவேண்டும் என்ற குறிக்கோளை அடைய வாழ்த்துகளும் பாராட்டுகளும். February 15, 2016 ரூபாதேவி [] பிப்ரவரி 5, 2016 முதல் பிப்ரவரி 16, 2016 வரை, மேகாலயா மாநிலத்தில் கௌஹாத்தி/ஷில்லாங்கில் நடைபெற்ற “தெற்காசிய போட்டி”களில் சர்வதேச கால்பந்து சம்மேளனத்தின் (FIFA – Federation Internationale de Football Association) கால்பந்தாட்ட நடுவராகச் செயல்பட்டார் தமிழகத்தின் “முதல் சர்வதேச கால்பந்து பெண் நடுவரான” திருமிகு ரூபாதேவி அவர்கள். திண்டுக்கல்லைச் சேர்ந்த 25 வயதான ரூபாதேவி பள்ளி நாட்களிலேயே கால்பந்தாட்ட விளையாட்டினால் ஈர்க்கப்பட்டவர். இவரது ஆர்வத்தைக் கண்ட பயிற்சியாளர் ஜஸ்டின் ஆரோக்கியராஜ் இவருக்கு அளித்த ஊக்கத்தினாலும் பயிற்சியாலும் பள்ளிநாட்களில் திண்டுக்கல் அணியின் சார்பாக மாவட்டப் போட்டிகளில் விளையாட ஆரம்பித்தார். பல்கலைக்கழக நாட்களில் மதுரை காமராஜர் பல்கலைக்கழக அணி மற்றும் திண்டுக்கல் கால்பந்துக்கழக அணிக்காகவும், பின்னர் மாநில மற்றும் தேசிய அணிகளில் பங்கேற்றும் விளையாடி வந்துள்ளார். இளைஞர்களுக்கு நடுவர் பயிற்சி அளிக்கும் நோக்கில், 25 வயதுக்குட்பட்டோருக்காக ஆசிய கால்பந்து சம்மேளனம் உருவாக்கிய ‘புராஜெக்ட் ஃப்யூச்சர்’ திட்டத்தில் பயிற்சி பெற்றுத் தேறிய இரு பெண்களில் ரூபாதேவியும் ஒருவர். இலங்கை, கத்தார், பஹ்ரைன், மலேசியா, நேபாளம், மாலத்தீவு போன்ற நாடுகளில் நடுவராகப் பணியாற்றி இருப்பதுடன், கடந்த மூன்று ஆண்டுகளாகத் தேசிய அளவிலான கால்பந்துப் போட்டிகளுக்கும், ஆசிய அளவிலான போட்டிகளுக்கும் நடுவராகப் பணியாற்றியுள்ளார். ரூபாதேவியின் ஈடுபாட்டைக் கவனித்த சர்வதேச கால்பந்து சம்மேளனம் சர்வதேச அளவில் நடுவராகப் பணியாற்ற இவரைப் பரிந்துரைத்தது. அதற்கான எழுத்து, உடல் திறன் தேர்வுகளில் வெற்றிபெற்ற இரு பெண்களில் ஒருவரான ரூபாதேவிக்கு சர்வதேச நடுவராகப் பணியாற்ற சர்வதேச கால்பந்து சம்மேளனம் வாய்ப்பளித்துள்ளது. இவரது முயற்சிகளுக்குக் கிடைத்த இந்த உயரிய அங்கீகாரத்தினால், இந்தியாவின் முதல் சர்வதேச பெண் நடுவராகத் தேர்வு செய்யப்பட்டவர் என்ற பெருமை ரூபாதேவிக்குக் கிடைத்துள்ளது. இந்திய “தேசிய அளவில்” இதுவரை ஆறு பெண்கள் மட்டுமே கால்பந்தாட்ட நடுவராகத் தேர்வாகியுள்ளனர். தமிழகத்தில் ரூபாதேவியும், இவருக்குப் பிறகு எஸ். வசந்தியும் தேசிய அளவு நடுவராகத் தகுதி பெற்றார்கள். சர்வதேச அளவில் பெண்கள் கால்பந்தாட்ட நடுவராகப் பங்கேற்கும் நிலை இதுவரை மகளிருக்கு இருந்ததில்லை. ஆண்களின் களமாக இருந்துவரும் கால்பந்தாட்ட நடுவர் பணியில் அதிரடியாக இறங்கி அனைவரையும் தனது முயற்சியால் திரும்பிப் பார்க்க வைத்துள்ள ரூபாதேவியின் எதிர்காலக் குறிக்கோள், ஒலிம்பிக் போட்டிகள் மற்றும் உலகக் கால்பந்து போட்டிகளில் நடுவராகப் பங்கேற்க வேண்டும் என்பதே. ரூபாதேவி அந்த உயரங்களை அடைய வாழ்த்துகளும் பாராட்டுகளும். February 22, 2016 எங்களைப் பற்றி - Free Tamil Ebooks மின்புத்தகங்களைப் படிக்க உதவும் கருவிகள்: மின்புத்தகங்களைப் படிப்பதற்கென்றே கையிலேயே வைத்துக் கொள்ளக்கூடிய பல கருவிகள் தற்போது சந்தையில் வந்துவிட்டன. Kindle, Nook, Android Tablets போன்றவை இவற்றில் பெரும்பங்கு வகிக்கின்றன. இத்தகைய கருவிகளின் மதிப்பு தற்போது 4000 முதல் 6000 ரூபாய் வரை குறைந்துள்ளன. எனவே பெரும்பான்மையான மக்கள் தற்போது இதனை வாங்கி வருகின்றனர். ஆங்கிலத்திலுள்ள மின்புத்தகங்கள்: ஆங்கிலத்தில் லட்சக்கணக்கான மின்புத்தகங்கள் தற்போது கிடைக்கப் பெறுகின்றன. அவை PDF, EPUB, MOBI, AZW3. போன்ற வடிவங்களில் இருப்பதால், அவற்றை மேற்கூறிய கருவிகளைக் கொண்டு நாம் படித்துவிடலாம். தமிழிலுள்ள மின்புத்தகங்கள்: தமிழில் சமீபத்திய புத்தகங்களெல்லாம் நமக்கு மின்புத்தகங்களாக கிடைக்கப்பெறுவதில்லை. ProjectMadurai.com எனும் குழு தமிழில் மின்புத்தகங்களை வெளியிடுவதற்கான ஒர் உன்னத சேவையில் ஈடுபட்டுள்ளது. இந்தக் குழு இதுவரை வழங்கியுள்ள தமிழ் மின்புத்தகங்கள் அனைத்தும் PublicDomain-ல் உள்ளன. ஆனால் இவை மிகவும் பழைய புத்தகங்கள். சமீபத்திய புத்தகங்கள் ஏதும் இங்கு கிடைக்கப்பெறுவதில்லை. எனவே ஒரு தமிழ் வாசகர் மேற்கூறிய “மின்புத்தகங்களைப் படிக்க உதவும் கருவிகளை” வாங்கும்போது, அவரால் எந்த ஒரு தமிழ் புத்தகத்தையும் இலவசமாகப் பெற முடியாது. சமீபத்திய புத்தகங்களை தமிழில் பெறுவது எப்படி? சமீபகாலமாக பல்வேறு எழுத்தாளர்களும், பதிவர்களும், சமீபத்திய நிகழ்வுகளைப் பற்றிய விவரங்களைத் தமிழில் எழுதத் தொடங்கியுள்ளனர். அவை இலக்கியம், விளையாட்டு, கலாச்சாரம், உணவு, சினிமா, அரசியல், புகைப்படக்கலை, வணிகம் மற்றும் தகவல் தொழில்நுட்பம் போன்ற பல்வேறு தலைப்புகளின் கீழ் அமைகின்றன. நாம் அவற்றையெல்லாம் ஒன்றாகச் சேர்த்து தமிழ் மின்புத்தகங்களை உருவாக்க உள்ளோம். அவ்வாறு உருவாக்கப்பட்ட மின்புத்தகங்கள் Creative Commons எனும் உரிமத்தின் கீழ் வெளியிடப்படும். இவ்வாறு வெளியிடுவதன் மூலம் அந்தப் புத்தகத்தை எழுதிய மூல ஆசிரியருக்கான உரிமைகள் சட்டரீதியாகப் பாதுகாக்கப்படுகின்றன. அதே நேரத்தில் அந்த மின்புத்தகங்களை யார் வேண்டுமானாலும், யாருக்கு வேண்டுமானாலும், இலவசமாக வழங்கலாம். எனவே தமிழ் படிக்கும் வாசகர்கள் ஆயிரக்கணக்கில் சமீபத்திய தமிழ் மின்புத்தகங்களை இலவசமாகவே பெற்றுக் கொள்ள முடியும். தமிழிலிருக்கும் எந்த வலைப்பதிவிலிருந்து வேண்டுமானாலும் பதிவுகளை எடுக்கலாமா? கூடாது. ஒவ்வொரு வலைப்பதிவும் அதற்கென்றே ஒருசில அனுமதிகளைப் பெற்றிருக்கும். ஒரு வலைப்பதிவின் ஆசிரியர் அவரது பதிப்புகளை “யார் வேண்டுமானாலும் பயன்படுத்தலாம்” என்று குறிப்பிட்டிருந்தால் மட்டுமே அதனை நாம் பயன்படுத்த முடியும். அதாவது “Creative Commons” எனும் உரிமத்தின் கீழ் வரும் பதிப்புகளை மட்டுமே நாம் பயன்படுத்த முடியும். அப்படி இல்லாமல் “All Rights Reserved” எனும் உரிமத்தின் கீழ் இருக்கும் பதிப்புகளை நம்மால் பயன்படுத்த முடியாது. வேண்டுமானால் “All Rights Reserved” என்று விளங்கும் வலைப்பதிவுகளைக் கொண்டிருக்கும் ஆசிரியருக்கு அவரது பதிப்புகளை “Creative Commons” உரிமத்தின் கீழ் வெளியிடக்கோரி நாம் நமது வேண்டுகோளைத் தெரிவிக்கலாம். மேலும் அவரது படைப்புகள் அனைத்தும் அவருடைய பெயரின் கீழே தான் வெளியிடப்படும் எனும் உறுதியையும் நாம் அளிக்க வேண்டும். பொதுவாக புதுப்புது பதிவுகளை உருவாக்குவோருக்கு அவர்களது பதிவுகள் நிறைய வாசகர்களைச் சென்றடைய வேண்டும் என்ற எண்ணம் இருக்கும். நாம் அவர்களது படைப்புகளை எடுத்து இலவச மின்புத்தகங்களாக வழங்குவதற்கு நமக்கு அவர்கள் அனுமதியளித்தால், உண்மையாகவே அவர்களது படைப்புகள் பெரும்பான்மையான மக்களைச் சென்றடையும். வாசகர்களுக்கும் நிறைய புத்தகங்கள் படிப்பதற்குக் கிடைக்கும் வாசகர்கள் ஆசிரியர்களின் வலைப்பதிவு முகவரிகளில் கூட அவர்களுடைய படைப்புகளை தேடிக் கண்டுபிடித்து படிக்கலாம். ஆனால் நாங்கள் வாசகர்களின் சிரமத்தைக் குறைக்கும் வண்ணம் ஆசிரியர்களின் சிதறிய வலைப்பதிவுகளை ஒன்றாக இணைத்து ஒரு முழு மின்புத்தகங்களாக உருவாக்கும் வேலையைச் செய்கிறோம். மேலும் அவ்வாறு உருவாக்கப்பட்ட புத்தகங்களை “மின்புத்தகங்களைப் படிக்க உதவும் கருவிகள்”-க்கு ஏற்ற வண்ணம் வடிவமைக்கும் வேலையையும் செய்கிறோம். FreeTamilEbooks.com இந்த வலைத்தளத்தில்தான் பின்வரும் வடிவமைப்பில் மின்புத்தகங்கள் காணப்படும். PDF for desktop, PDF for 6” devices, EPUB, AZW3, ODT இந்த வலைதளத்திலிருந்து யார் வேண்டுமானாலும் மின்புத்தகங்களை இலவசமாகப் பதிவிறக்கம்(download) செய்து கொள்ளலாம். அவ்வாறு பதிவிறக்கம்(download) செய்யப்பட்ட புத்தகங்களை யாருக்கு வேண்டுமானாலும் இலவசமாக வழங்கலாம். இதில் நீங்கள் பங்களிக்க விரும்புகிறீர்களா? நீங்கள் செய்யவேண்டியதெல்லாம் தமிழில் எழுதப்பட்டிருக்கும் வலைப்பதிவுகளிலிருந்து பதிவுகளை எடுத்து, அவற்றை LibreOffice/MS Office போன்ற wordprocessor-ல் போட்டு ஓர் எளிய மின்புத்தகமாக மாற்றி எங்களுக்கு அனுப்பவும். அவ்வளவுதான்! மேலும் சில பங்களிப்புகள் பின்வருமாறு: ஒருசில பதிவர்கள்/எழுத்தாளர்களுக்கு அவர்களது படைப்புகளை “Creative Commons” உரிமத்தின்கீழ் வெளியிடக்கோரி மின்னஞ்சல் அனுப்புதல் தன்னார்வலர்களால் அனுப்பப்பட்ட மின்புத்தகங்களின் உரிமைகளையும் தரத்தையும் பரிசோதித்தல் சோதனைகள் முடிந்து அனுமதி வழங்கப்பட்ட தரமான மின்புத்தகங்களை நமது வலைதளத்தில் பதிவேற்றம் செய்தல் விருப்பமுள்ளவர்கள் freetamilebooksteam@gmail.com எனும் முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பவும். இந்தத் திட்டத்தின் மூலம் பணம் சம்பாதிப்பவர்கள் யார்? யாருமில்லை. இந்த வலைத்தளம் முழுக்க முழுக்க தன்னார்வலர்களால் செயல்படுகின்ற ஒரு வலைத்தளம் ஆகும். இதன் ஒரே நோக்கம் என்னவெனில் தமிழில் நிறைய மின்புத்தகங்களை உருவாக்குவதும், அவற்றை இலவசமாக பயனர்களுக்கு வழங்குவதுமே ஆகும். மேலும் இவ்வாறு உருவாக்கப்பட்ட மின்புத்தகங்கள், ebook reader ஏற்றுக்கொள்ளும் வடிவமைப்பில் அமையும். இத்திட்டத்தால் பதிப்புகளை எழுதிக்கொடுக்கும் ஆசிரியர்/பதிவருக்கு என்ன லாபம்? ஆசிரியர்/பதிவர்கள் இத்திட்டத்தின் மூலம் எந்தவிதமான தொகையும் பெறப்போவதில்லை. ஏனெனில், அவர்கள் புதிதாக இதற்கென்று எந்தஒரு பதிவையும் எழுதித்தரப்போவதில்லை. ஏற்கனவே அவர்கள் எழுதி வெளியிட்டிருக்கும் பதிவுகளை எடுத்துத்தான் நாம் மின்புத்தகமாக வெளியிடப்போகிறோம். அதாவது அவரவர்களின் வலைதளத்தில் இந்தப் பதிவுகள் அனைத்தும் இலவசமாகவே கிடைக்கப்பெற்றாலும், அவற்றையெல்லாம் ஒன்றாகத் தொகுத்து ebook reader போன்ற கருவிகளில் படிக்கும் விதத்தில் மாற்றித் தரும் வேலையை இந்தத் திட்டம் செய்கிறது. தற்போது மக்கள் பெரிய அளவில் tablets மற்றும் ebook readers போன்ற கருவிகளை நாடிச் செல்வதால் அவர்களை நெருங்குவதற்கு இது ஒரு நல்ல வாய்ப்பாக அமையும். நகல் எடுப்பதை அனுமதிக்கும் வலைதளங்கள் ஏதேனும் தமிழில் உள்ளதா? உள்ளது. பின்வரும் தமிழில் உள்ள வலைதளங்கள் நகல் எடுப்பதினை அனுமதிக்கின்றன. 1. vinavu 2. badriseshadri.in 3. maattru 4. kaniyam 5. blog.ravidreams.net எவ்வாறு ஒர் எழுத்தாளரிடம் Creative Commons உரிமத்தின் கீழ் அவரது படைப்புகளை வெளியிடுமாறு கூறுவது? இதற்கு பின்வருமாறு ஒரு மின்னஞ்சலை அனுப்ப வேண்டும். துவக்கம் உங்களது வலைத்தளம் அருமை [வலைதளத்தின் பெயர்]. தற்போது படிப்பதற்கு உபயோகப்படும் கருவிகளாக Mobiles மற்றும் பல்வேறு கையிருப்புக் கருவிகளின் எண்ணிக்கை அதிகரித்து வந்துள்ளது. இந்நிலையில் நாங்கள் http://www.FreeTamilEbooks.com எனும் வலைதளத்தில், பல்வேறு தமிழ் மின்புத்தகங்களை வெவ்வேறு துறைகளின் கீழ் சேகரிப்பதற்கான ஒரு புதிய திட்டத்தில் ஈடுபட்டுள்ளோம். இங்கு சேகரிக்கப்படும் மின்புத்தகங்கள் பல்வேறு கணிணிக் கருவிகளான Desktop,ebook readers like kindl, nook, mobiles, tablets with android, iOS போன்றவற்றில் படிக்கும் வண்ணம் அமையும். அதாவது இத்தகைய கருவிகள் support செய்யும் odt, pdf, ebub, azw போன்ற வடிவமைப்பில் புத்தகங்கள் அமையும். இதற்காக நாங்கள் உங்களது வலைதளத்திலிருந்து பதிவுகளை பெற விரும்புகிறோம். இதன் மூலம் உங்களது பதிவுகள் உலகளவில் இருக்கும் வாசகர்களின் கருவிகளை நேரடியாகச் சென்றடையும். எனவே உங்களது வலைதளத்திலிருந்து பதிவுகளை பிரதியெடுப்பதற்கும் அவற்றை மின்புத்தகங்களாக மாற்றுவதற்கும் உங்களது அனுமதியை வேண்டுகிறோம். இவ்வாறு உருவாக்கப்பட்ட மின்புத்தகங்களில் கண்டிப்பாக ஆசிரியராக உங்களின் பெயரும் மற்றும் உங்களது வலைதள முகவரியும் இடம்பெறும். மேலும் இவை “Creative Commons” உரிமத்தின் கீழ் மட்டும்தான் வெளியிடப்படும் எனும் உறுதியையும் அளிக்கிறோம். http://creativecommons.org/licenses/ நீங்கள் எங்களை பின்வரும் முகவரிகளில் தொடர்பு கொள்ளலாம். e-mail : freetamilebooksteam@gmail.com FB : https://www.facebook.com/FreeTamilEbooks G +: https://plus.google.com/communities/108817760492177970948 நன்றி. முடிவு மேற்கூறியவாறு ஒரு மின்னஞ்சலை உங்களுக்குத் தெரிந்த அனைத்து எழுத்தாளர்களுக்கும் அனுப்பி அவர்களிடமிருந்து அனுமதியைப் பெறுங்கள். முடிந்தால் அவர்களையும் “Creative Commons License”-ஐ அவர்களுடைய வலைதளத்தில் பயன்படுத்தச் சொல்லுங்கள். கடைசியாக அவர்கள் உங்களுக்கு அனுமதி அளித்து அனுப்பியிருக்கும் மின்னஞ்சலைfreetamilebooksteam@gmail.com எனும் முகவரிக்கு அனுப்பி வையுங்கள். ஓர் எழுத்தாளர் உங்களது உங்களது வேண்டுகோளை மறுக்கும் பட்சத்தில் என்ன செய்வது ? அவர்களையும் அவர்களது படைப்புகளையும் அப்படியே விட்டுவிட வேண்டும். ஒருசிலருக்கு அவர்களுடைய சொந்த முயற்சியில் மின்புத்தகம் தயாரிக்கும் எண்ணம்கூட இருக்கும். ஆகவே அவர்களை நாம் மீண்டும் மீண்டும் தொந்தரவு செய்யக் கூடாது. அவர்களை அப்படியே விட்டுவிட்டு அடுத்தடுத்த எழுத்தாளர்களை நோக்கி நமது முயற்சியைத் தொடர வேண்டும். மின்புத்தகங்கள் எவ்வாறு அமைய வேண்டும்? ஒவ்வொருவரது வலைத்தளத்திலும் குறைந்தபட்சம் நூற்றுக்கணக்கில் பதிவுகள் காணப்படும். அவை வகைப்படுத்தப்பட்டோ அல்லது வகைப்படுத்தப் படாமலோ இருக்கும். நாம் அவற்றையெல்லாம் ஒன்றாகத் திரட்டி ஒரு பொதுவான தலைப்பின்கீழ் வகைப்படுத்தி மின்புத்தகங்களாகத் தயாரிக்கலாம். அவ்வாறு வகைப்படுத்தப்படும் மின்புத்தகங்களை பகுதி-I பகுதி-II என்றும் கூட தனித்தனியே பிரித்துக் கொடுக்கலாம். தவிர்க்க வேண்டியவைகள் யாவை? இனம், பாலியல் மற்றும் வன்முறை போன்றவற்றைத் தூண்டும் வகையான பதிவுகள் தவிர்க்கப்பட வேண்டும். எங்களைத் தொடர்பு கொள்வது எப்படி? நீங்கள் பின்வரும் முகவரிகளில் எங்களைத் தொடர்பு கொள்ளலாம். email : freetamilebooksteam@gmail.com Facebook: https://www.facebook.com/FreeTamilEbooks Google Plus: https://plus.google.com/communities/108817760492177970948 இத்திட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் யார்? Shrinivasan tshrinivasan@gmail.com Alagunambi Welkin alagunambiwelkin@fsftn.org Arun arun@fsftn.org இரவி Supported by Free Software Foundation TamilNadu, Yavarukkum Software Foundation http://www.yavarkkum.org/ உங்கள் படைப்புகளை வெளியிடலாமே உங்கள் படைப்புகளை மின்னூலாக இங்கு வெளியிடலாம். 1. எங்கள் திட்டம் பற்றி - http://freetamilebooks.com/about-the-project/ தமிழில் காணொளி - http://www.youtube.com/watch?v=Mu_OVA4qY8I 2. படைப்புகளை யாவரும் பகிரும் உரிமை தரும் கிரியேட்டிவ் காமன்ஸ் உரிமம் பற்றி - கிரியேட்டிவ் காமன்ஸ் உரிமை - ஒரு அறிமுகம் http://www.kaniyam.com/introduction-to-creative-commons-licenses/ http://www.wired.co.uk/news/archive/2011-12/13/creative-commons-101 https://learn.canvas.net/courses/4/wiki/creative-commons-licenses உங்கள் விருப்பான கிரியேட்டிவ் காமன்ஸ் உரிமத்தை இங்கே தேர்ந்தெடுக்கலாம். http://creativecommons.org/choose/ 3. மேற்கண்டவற்றை பார்த்த / படித்த பின், உங்கள் படைப்புகளை மின்னூலாக மாற்ற பின்வரும் தகவல்களை எங்களுக்கு அனுப்பவும். நூலின் பெயர் நூல் அறிமுக உரை நூல் ஆசிரியர் அறிமுக உரை உங்கள் விருப்பான கிரியேட்டிவ் காமன்ஸ் உரிமம் நூல் - text / html / LibreOffice odt/ MS office doc வடிவங்களில். அல்லது வலைப்பதிவு / இணைய தளங்களில் உள்ள கட்டுரைகளில் தொடுப்புகள் (url) இவற்றை freetamilebooksteam@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்பவும். விரைவில் மின்னூல் உருவாக்கி வெளியிடுவோம். நீங்களும் மின்னூல் உருவாக்கிட உதவலாம். மின்னூல் எப்படி உருவாக்குகிறோம்? - தமிழில் காணொளி - https://www.youtube.com/watch?v=bXNBwGUDhRs இதன் உரை வடிவம் ஆங்கிலத்தில் - http://bit.ly/create-ebook எங்கள் மின்னஞ்சல் குழுவில் இணைந்து உதவலாம். https://groups.google.com/forum/#!forum/freetamilebooks நன்றி !