[] 1. Cover 2. Table of contents எனக்கு மட்டுமே சொந்தம் எனக்கு மட்டுமே சொந்தம்   நிர்மலா ராகவன்   nirurag@gmail.com   மின்னூல் வெளியீடு : FreeTamilEbooks.com   உரிமை : CC-BY-NC-SA கிரியேட்டிவ் காமன்ஸ். எல்லாரும் படிக்கலாம், பகிரலாம்.   அட்டைப்படம் - லெனின் குருசாமி - guruleninn@gmail.com   மின்னூலாக்கம் - ஐஸ்வர்யா லெனின் - aishushanmugam09@gmail.com   This book was produced using pandoc   பதிவிறக்கம் செய்ய - http://FreeTamilEbooks.com/ebooks/belongs_to_me மின்னூல் வெளியீட்டாளர்: http://freetamilebooks.com அட்டைப்படம்: லெனின் குருசாமி - guruleninn@gmail.com மின்னூலாக்கம்: ஐஸ்வர்யா லெனின் - aishushanmugam09@gmail.com மின்னூலாக்க செயற்திட்டம்: கணியம் அறக்கட்டளை - kaniyam.com/foundation Ebook Publisher: http://freetamilebooks.com Cover Image: Lenin Gurusamy - guruleninn@gmail.com Ebook Creation: Iswarya Lenin - aishushanmugam09@gmail.com Ebook Project: Kaniyam Foundation - kaniyam.com/foundation பதிவிறக்கம் செய்ய - http://freetamilebooks.com/ebooks/belongs_to_me This Book was produced using LaTeX + Pandoc எனக்கு மட்டுமே சொந்தம் (கட்டுரைத் தொகுப்பு) [நிர்மலா ராகவன்] இக்கட்டுரைகளைத் தொடராக வெளியிட்ட வல்லமை.காம் குழுவினருக்கு நன்றி. எனக்கு மட்டுமே சொந்தம் என் உறவினரின் மூன்று வயது மகளைச் சிறிது காலம் என் பொறுப்பில் விட்டிருந்தார்கள், அவளுடைய தாய் பூரணி கர்ப்பமாக இருந்தபோது. விவரம் புரியாது, ‘அம்மா’ என்று என்னை அழைத்துக்கொண்டிருந்தாள் குழந்தை. வெளியூரிலிருந்த வந்த பூரணி குழந்தையைப் பார்த்தவுடனே செய்த முதல் காரியம்: மிகுந்த பிரயாசையுடன் நான் அழகாக அலங்கரித்திருந்த தலைமயிரைக் கலைத்ததுதான்! ஏதோ செய்யக்கூடாததைச் செய்துவிட்டதுபோன்ற உணர்வு ஏற்பட்டது எனக்கு. ‘இது என் குழந்தை. நீ கை வைக்காதே!’ என்று அந்த இளம் தாய் சூசகமாக உணர்த்தி இருக்கிறாள்! இன்னொரு கதை திருமணமாகி பல ஆண்டுகள் கழிந்தபின்னர், உரிய சிகிச்சைக்குப் பிறகு பிறந்த குழந்தை அவன். தன் அருமைக் குழந்தையை அவனுடைய தந்தைகூடத் தூக்க விடமாட்டாள் தாய். “இப்போதான் தூக்க முடியும். இல்லியா?” என்று தந்தை மன்றாடுவார். “எப்பவும் தூக்கி வெச்சுக்கணும்னு அழுவான்,” என்று காரணம் கற்பித்தாள் தாய். தன் பொம்மையை வேறு ஒருவர் தொட்டுவிட்டால் வரும் ஆத்திரத்தை பொம்மையிடம் காட்டும் மூன்று வயதுப் பெண்குழந்தை. பொம்மையை ‘அசடு!’ என்று திட்டுவதோடு நில்லாமல், தூக்கியும் எறிவாள். வளர்ந்தபின்னும் அதே மனப்பான்மையா? எத்தனை வயதாகியும், குழந்தைக்காகத் தான்தானே நிறைய சிரமப்பட்டிருக்கிறோம், அதனால் அவனுக்குத் தன்னை மட்டுமே பிடிக்கவேண்டும் என்று ஒரு தாய் நினைப்பது சிறுபிள்ளைத்தனம். இப்படி வளர்க்கப்படும் குழந்தைகள் பிற்காலத்தில் தாயை வெறுத்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. அப்படி வளர்ந்த ஒரு பதின்ம வயதுப் பையன், “எத்தனை வயதானாலும் குழந்தைகளை இறுகப் பிடித்துக்கொள்வதைச் சிலர் விடவேண்டும்!” என்று என்னிடம் கசப்புடன் சொன்னான். அம்மாவை நேரடியாகத் தாக்க அவனுக்கு மனமில்லை. கூட்டுக் குடும்பத்தில் வளரும் குழந்தைகளைப் பலரும் கண்டிப்பார்கள், கேலி செய்வார்கள். ஓயாது புத்தியும் சொல்வார்கள். தாய் எதையும் கண்டுகொள்ள மாட்டாள். பெரியவர்களானதும், அவர்கள் முதலில் நாடுவது தாயைத்தான். இம்மாதிரி சொந்தம் கொண்டாடுவதை ஆண்-பெண் உறவிலும் காணலாம். கதை பெரிய பணக்காரனான சுந்தர் அறிவும், அழகும், பெரிய படிப்பும் ஒன்றாக அமைந்த சுதாவைக் காதலித்து, அச்சாரமாக மோதிரமும் பரிசாக அளித்தான். சுதாவிற்குப் பிறகுதான் தெரியவந்தது அவனுக்கு ஏற்கெனவே கல்யாணமாகியிருந்த சமாசாரம். அந்த மனைவிக்கு சித்த சுவாதீனம் இல்லை, அவன் அவளை விவாகரத்து செய்ய ஆயத்தமாகிக்கொண்டிருக்கிறான் என்ற நம்பகமான தகவல் கிடைக்க சமாதானமானாள். அவர்கள் உறவு தொடர்ந்தது. ‘வருங்கால மனைவியையாவது நான் என்றும் பிரியாது இருக்கவேண்டும்,’ என்று சுந்தர் நினைத்தான். அதன் விளைவாக, ஒவ்வொரு நாளும் காதலி யாருடன் பேசலாம், என்ன அணியலாம் என்று எல்லா விதத்திலும் கட்டுப்படுத்த ஆரம்பித்தபோது அவளால் பொறுக்க முடியவில்லை. எதிர்த்தாள். “எனக்கு உன்மேல் நம்பிக்கை இருக்கிறது. ஆனால், ஆண்களின் வக்கிரபுத்தி உனக்குத் தெரியாது. நான் உன்னைப் பாதுகாக்க நினைக்கிறேன். என்னைத் தவறாகப் புரிந்துகொள்கிறாயே!” என்று உருக்கமாகப் பேசி, சமாதானம் செய்வான். பரிசுப்பொருட்கள் தொடரும். ஆரம்பத்தில் சுதாவும் அவனை நம்பினாள். நாளடைவில், ‘இது என் வாழ்க்கை. நான் தவறு செய்தால் என்ன? அதிலிருந்து கற்றுவிட்டுப்போகிறேன்!’ என்று நினைக்க ஆரம்பித்தாள். மேலும் பல யோசனைகள் எழுந்தன: ‘வாழ்நாளெல்லாம் சண்டை போட்டுக்கொண்டே இருக்கப்போகிறோமா, இல்லை, விட்டுக்கொடுத்துவிட்டு, எதையோ இழந்ததுபோன்ற நிராசையுடன் வாழ்க்கையைக் கழிக்கப்போகிறோமா?’ ஒருவர் எவ்வளவுதான் கொட்டிக்கொடுத்துத் தன் அன்பை வெளிக்காட்டினாலும், இழந்த சுதந்திரத்திற்கு அதெல்லாம் ஈடாகாது என்று தோன்றிப்போக, சுதா அவர்கள் உறவை முறித்துக்கொண்டாள். சிறு வயதில் பெற்றோரில் ஒருவரையோ, அல்லது இருவரையுமே பிரிந்து வாழ நேரிட்ட சிலரும் சுந்தரைப்போல்தான் தமக்குப் பிடித்தவர்களை இறுகப் பற்றிக்கொள்வார்கள். ‘இந்த உறவும் இல்லாது போய்விடுமோ!’ என்று அவர்கள் அஞ்சலாம். ஆனால், ஓயாத கட்டுப்பாட்டால் தம்மிடம் அன்பு கொண்டவர்களை, தம்மையும் அறியாது, விலக்குகிறோம் என்பது அவர்களுக்குப் புரிவதில்லை. “உறவுகளில் பொறாமை உணவில் உப்பைப் போன்றது. அளவுக்கு மிஞ்சினால் பொறுக்க முடியாது!” என்கிறார் புத்திசாலியான ஒரு பெண்மணி. ­பெண்களையும் இந்தக் குணம் விட்டுவைப்பதில்லை. கதை திருமணத்துக்குமுன் பல ஆண்கள் அவளைப் பெண்பார்க்க வந்துவிட்டு, ஏதேதோ காரணம் கூறி நிராகரித்துவிட்டதில் தங்கம்மா பெரிதும் மன உளைச்சலுக்கு ஆளானாள். அவளுக்குக் கல்யாணம் நடந்து முடிந்து, அன்பான கணவர் வாய்த்தபின்னரும், மௌனகீதங்கள் படத்தில் வரும் கதாநாயகி சரிதாவைப்போல், ‘என்னை விட்டுப் போயிடாதீங்க,’ என்று தினமும் அவரிடம் கதறுவாள். ‘எனக்கு மற்ற பெண்களிடம் நாட்டமே கிடையாது,’ என்று அந்த அப்பாவிக் கணவர் எத்தனை முறை சமாதானப்படுத்தியும் தங்கம்மாவின் மனம் நிம்மதி அடையவில்லை. தன்னை அவள் சந்தேகிக்கிறாள்! அந்த மனிதருக்கு வெறுத்துப்போய், அவளைத் தவிர்க்க ஆரம்பித்தார். கதை “என் மனைவி நான் ஏதாவது ஒரு சினிமா நடிகையின் அழகையோ, நடிப்பையோ புகழ்ந்து பேசினாலே சண்டை பிடிக்கிறாள்!’ என்று ஒருவர் தன் நண்பனிடம் குறைப்பட்டார். ’உன் வீட்டில் எப்படி?” “என் மனைவி, ‘இன்று உங்களுக்குப் பிடித்த நடிகையின் படம் தொலைக்காட்சியில் காட்டுகிறார்கள், சீக்கிரம் வந்துவிடுங்கள்,’ என்று தொலைபேசியில் அழைத்துக் கூறுவாள்,” என்று பெருமையுடன் கூடிய பதில் வந்தது. இரண்டாவது நபரின் மனைவி தன்னம்பிக்கை நிறைந்தவள். அவளுக்குத் தெரிந்திருந்தது, அந்த நடிகையின்முன் கணவர் போய் நின்றாலும், அவளுக்கு அவரை அடையாளம் தெரியப்போவதில்லையென்று! உறவு என்றால், அதனால் இருவரும் பயனடைய வேண்டும். சுதந்திரம் வேண்டுபவர் பிறருடன் ஒத்து வாழமுடியுமா என்ற கேள்விக்கே இங்கு இடமில்லை. கணவர் விளையாட்டு வீரராகவும், மனைவி ஒரே இடத்தில் அமர்ந்து ஏதாவதொரு பொழுதுபோக்கில் ஈடுபட்டுக்கொண்டு இருந்தாலும்தான் என்ன? குடும்பத்தில் பேசுவதற்கு வேறு ஏதாவது சமாசாரங்கள் இருக்காதா? தம்பதியர் இருவருக்கும் ஒரே மாதிரி குறைபாடுகள் அமைவது நல்லதல்ல. ஒருவர் பயந்தவர் என்றால், அவருக்கு வாய்ப்பவர் தைரியசாலியாக இருந்தால் இருவருமே பயனடைவார்கள். ஒருவருக்கு உடலில் பலம், இன்னொருவருக்கு மனோபலம். வேறு ஒருவருக்கு.. போதும்! வித்தியாசமான தன்மைகள் இருந்தால், எதிரெதிர் துருவங்களைப்போல் ஒருவரை மற்றவர் நாடுவார். உறவு பலப்படும். நேயத்தை உணர்த்தும் இயற்கை மனிதருக்கு மனிதர் எத்தனையோ விதங்களில் மாறுபட்டாலும், பிறரை நாடவேண்டியிருக்கும் சூழ்நிலைகள் அமையாமலில்லை. அண்மையில் உலகம் முழுவதும் பரவியிருக்கும் தொற்றுநோய் ஒரு நன்மையையும் விளைவித்திருக்கிறது. எந்த நாடாவது, ‘இது என் சொந்தப்பிரச்னை. பிறர் தலையீடு அவசியமில்லை!’ என்று இப்போது முறுக்கிக்கொள்கிறதா? போர், போட்டி, பொறாமை எல்லாமே சற்று ஒதுங்கி உள்ளன. ‘மனிதா, உன் நேயம் எங்கு தொலைந்தது?’ என்று இயற்கை நமக்கு உணர்த்தும் பாடமோ இது? எல்லா உயிர்களிடமும் அன்பு வைப்பதே நற்குணமுடைய மனிதர்களுக்கு அடையாளம். எங்கள் வீட்டைச் சுற்றிச் சுற்றி வருகிறது ஒரு பூனை. நாளுக்கு நாள் இளைத்துக்கொண்டே வருவதைப் பார்த்தால், அதற்குச் சரியான ஆகாரம் கிடைக்கவில்லை என்று புரிகிறது. ‘முதலில் ஆரோக்கியமாக, குண்டாக இருந்ததே?’ என்று யோசித்தபோது ஒன்று புரிந்தது. குட்டியாக இருந்தபோது, அப்பூனையின் விளையாட்டுத்தனத்தில் சிரித்து மகிழ்ந்து வளர்த்தவர்கள் அதற்கு வயதாகிவிட்டதும், துரத்திவிட்டார்கள்! வயதான பெற்றோரையே பராமரிக்க மறுக்கும் உலகமல்லவா இது? அண்மையில், ஒரு பொது இடத்தில், ‘என் பர்ஸ் தொலைந்துவிட்டது. வீடு திரும்ப காசு வேண்டும்,’ என்று முதியவர் ஒருவர் பணம் கேட்டார். (இதே காரணம் காட்டி, ஓர் இளம்பெண் காசு கேட்டபடி இருந்தாள் ஒரு பேரங்காடியில்). இவர்கள் குண்டர்களிடம் மாட்டிக்கொண்டவர்களாக இருக்கலாம். அப்பாவி மனிதர்களின் பரிதாபத்தைத் தூண்ட அப்படிச் சொல்லிக்கொடுத்து, அனுப்பியிருப்பார்கள். நாம் பணம் கொடுக்காவிட்டால் என்ன ஆகும்? ‘சம்பாதிக்கத் துப்பில்லையே!’ என்று அடிப்பார்களாம், பட்டினி போட்டு. அந்த நிலை ஒரு முதியவருக்கு வரக்கூடாது என்று இரங்கி, சிலர் கைநிறையக் காசு கொடுத்தார்கள். மிருக நேயம் எங்கள் வீட்டுப் பூனை தொலைக்காட்சியில் ஏதாவது உணர்ச்சிகரமான காட்சி (சண்டை அல்லது சோகம்) வந்தால், பின்னணி இசையைப் பொறுக்க முடியாது, என்னை அடிக்கும். அன்பைத்தவிர வேறு எதையும் அறியாத பூனை அது. நான் எழுதிக்கொண்டிருந்த கதையில், ஒரு பணிப்பெண் தன் பொறுப்பிலிருக்கும் குழந்தையைக் கொன்று புதைத்துவிடுகிறாள் என்ற கட்டம் வந்தது. துடித்தபடி என்னிடம் வந்தது அந்தப் பூனை. தான் அறியாத, தனக்குச் சம்பந்தமே இல்லாத ஓர் உயிரின் அவலமான நிலை அதன் நுண்ணிய அறிவுக்கு எட்டியிருக்கிறது! ‘ஒண்ணுமில்லேம்மா!’ என்று அதைத் தடவி சமாதானப்படுத்த வேண்டியிருந்தது. மொழி புரிகிறதோ, இல்லையோ, ‘பரிவு’ ‘பச்சாதாபம்’ போன்றவை மிருகங்களுக்கும் புரியும். இக்குணங்களைக் குருடர்களும் பார்க்க முடியும், செவிடர்களுக்கும் அது கேட்கும். “எனக்கு மனித நேயம் பிடிக்கும். மனிதர்களைத்தான் பிடிக்காது!” என்கிறார் ஐன்ஸ்டீன். அவரைச் சொல்லிக் குற்றமில்லை. எப்படியாவது பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற வெறியுடன், மனிதத்தன்மையே இல்லாது நடப்பவர்கள் மலிந்துவிட்ட காலமல்லவா இது! வேடதாரிகள் தனது சுயரூபத்தை மறைத்து, நாடகம் ஆடுகிறவர்கள் உண்மையில் தைரியசாலிகள் இல்லை. ‘எனக்குக் கடவுள் பக்தி அதிகம்!’ என்று பறைசாற்றுவதுபோல் வெளிப்பகட்டு காட்டுகிறவர் பிறருடைய நன்மைக்காக ஏதாவது செய்கிறாரா என்பது கேள்விக்குறி. (இதனால்தான், ‘உலகம் ஒரு நாடகமேடை’ என்கிறார்களோ?) இத்தகையவரைவிட, ‘நான் கடவுளை நம்புவதில்லை, எனக்கு மதமெல்லாம் கிடையாது!’ என்று சொல்லிக்கொண்டாலும், சகமனிதர்களுக்காக இரக்கப்பட்டு, பிரதி உபகாரத்தை எதிர்பாராது, தம்மாலான உதவி செய்பவரே மேலானவர். ‘அசோக சக்கரவர்த்தி சாலைகளில் மரம் நட்டார்’ என்று சிறு வயதில் உருப்போட்டபோது, அச்செய்கையில் என்ன சிறப்பு என்று புரியவில்லை. அந்த மரங்கள் அவர் வாழ்நாளிலேயே பெரிதாக வளர்ந்து, அவருக்குப் பயன்படும் என்ற எதிர்பார்ப்பிலா செய்தார்? நற்காரியம் செய்யும் துணிச்சல் சில சமயம், நல்ல காரியம் செய்யக்கூட யோசிக்க வேண்டியிருக்கிறது, ‘இதனால் நமக்கு ஏதாவது கெடுதல் விளையுமோ?’ என்று. அங்குதான் துணிச்சல் தேவைப்படுகிறது. ‘நிலைமை இவ்வளவு மோசமாக இருக்கிறதே!’ என்று பேசிப் பேசி என்ன பயன்? சவால்களிலிருந்து விலகிவிடுவது எளிது. அவைகளை எதிர்கொண்டால்தான் பலன் கிடைக்கும். கதை என் மூன்று வயது மகன் சசியை பாலர் பள்ளியில் துன்புறுத்தினாள் ஆசிரியை ஒருத்தி. அதன் விளைவாக, ஏதாவது உரத்த குரல் கேட்டாலே, அச்சத்துடன் இரு காது மடல்களையும் பிடித்துக்கொள்வான். ஓயாது பயந்ததால் உடல் மிகவும் இளைக்க, அவனுடைய தந்தை அந்த ஆசிரியையிடம் கெஞ்சலாகக் கூறினார், ஒன்றுமறியாத அப்பாலகனை அப்படித் தண்டிக்க வேண்டாமென்று. அதன்பின், அவளும் அப்படித் தண்டிக்கவில்லை. ஆத்திரத்துடன், அன்றே அவனைக் கழிப்பறையில் தள்ளி, வெளியே பூட்டிவிட்டாள். (அந்த நிகழ்ச்சியை நான் விவரித்தபோது, ‘நல்லவேளை, என் குழந்தைகளுக்கு இந்தமாதிரி நிகழவில்லை!’ என்ற அற்பதிருப்தி அடைந்தாள் என் சக ஆசிரியை ஒருத்தி. அவளுக்குத் துன்பம் வரும்போது பிறர் உதவ வேண்டும் என்று எதிர்பார்ப்பது மட்டும் என்ன நியாயம்? அவளைப்போன்றவர்கள் எளிதில் மனம் உடைகிறவர்கள். பயந்தாங்கொள்ளிகள்!). வீடு திரும்பியதும், உணர்ச்சிக்கொந்தளிப்புடன் குழந்தை கூறியது எனக்குப் புரிந்தது. விடுமுறை நாட்களிலும், பள்ளிச்சீருடை அணியவேண்டும் என்று அடம் பிடிப்பவன், பள்ளியிலிருந்து திரும்பியதுமே, “யூனிஃபார்ம் ஸ்டுபிட்!” என்று கதறியபோது எனக்கு ஏற்பட்ட அதிர்ச்சியில், “சசி?” என்று மட்டும்தான் கேட்கமுடிந்தது. அப்போதுதான் தெரிவித்தான், “Teacher __ lock Sashi in the toilet,” என்று. ஆசிரியையின் பெயரையும் சேர்த்துக் கூறினான். பிறகு ஒரு சிறுவன், ‘சசியை டீச்சர் டாய்லெட்டுக்குள் வைத்துப் பூட்டினாள். நாங்கள் எல்லாரும் அழுதோம்!’ என்று தெரிவித்தான். சிறுகுழந்தைகளுக்கு இருக்கும் மன ஒற்றுமை, பச்சாதாபம், வளர்ந்தவர்களுக்கு ஏனோ மறைந்துவிடுகிறது. நடந்த அசம்பாவிதத்தைப்பற்றி தினசரிக்கு ஒரு கடிதம் எழுதி அனுப்பினேன். எழுதுமுன், பிறர் எச்சரித்தார்கள், அப்பள்ளியை நடத்தும் சீனப் பெண்மணி குண்டர்களைவிட்டு குடும்பத்திற்கு ஏதாவது கெடுதல் விளைவித்துவிடுவாள் என்று. ஆனால், நான் பின்வாங்கவில்லை. ஆற்றை நீந்தியே கடக்க ஆரம்பித்தபோது, புறப்பட்ட கரையையே திரும்பித் திரும்பிப் பார்க்கலாமா? பிரசுரிக்கிறார்களோ, இல்லையோ, துணிந்து அனுப்பினேன். “எதற்கெல்லாம் அஞ்சக்கூடாது என்ற தெளிவுதான் துணிச்சல்” (கிரேக்க ஞானி பிளேட்டோ). பல நாட்கள் கழித்து அது வெளியாகியது. விசாரித்திருப்பார்கள். உடனே அந்தப் பள்ளித் தலைவியை தினசரியின் நிருபர் பேட்டி கண்டார், ‘அவளுடைய சிரிப்பு மாறவேயில்லை,’ என்ற குறிப்புடன். (நான் எந்தப் பள்ளி என்று குறிப்பிட்டிருக்கவில்லை). விரைவிலேயே, பெற்றோரிடமிருந்து நிறையச் சம்பளம் வசூலித்துவந்த அந்த ‘உயர்ந்த’ பள்ளி மூடப்பட்டது. ஒரு நல்ல காரியம் செய்த திருப்தி எனக்குக் கிடைத்தது. இல்லாவிட்டால், கேட்பாரின்றி இன்னும் எத்தனை குழந்தைகள் வதைக்கப்பட்டிருப்பார்களோ! தம்மைப் பிறர் எவ்வளவு கொடுமைப்படுத்தினாலும் அதைப்பற்றிப் புகார் சொல்லும் குணம் குழந்தைகளுக்குக் கிடையாது. இதுவே வதை செய்பவர்களுக்குச் சாதகமாக அமைந்துவிடுகிறது. அம்மாதிரி சந்தர்ப்பங்களில்தான் நாம் ‘காளி அவதாரம்’ எடுத்து, தமக்கே உதவி செய்துகொள்ள முடியாதவர்களின் பிரச்னைகளில் மூக்கை நுழைக்கவேண்டியிருக்கிறது. சசிக்குத்தான் வருத்தம், அம்மாவிடம் ஏன் உண்மையைச் சொன்னோம், தன் வயதையொத்த நண்பர்களுடன் விளையாட முடியவில்லையே என்று. பெண்களுக்கு அழகு எதற்கு? சீனாவில் சாவோயாங் (Chaoyang) என்ற மிக ஏழ்மையான ஒரு கிராமம். அருகிலுள்ள நகரம் இருபது கிலோமீட்டர் தொலைவில் இருந்தது. அக்கிராமத்து ஆண்கள் வேலை வாய்ப்பைத் தேடி நகர்ப்புறங்களுக்குச் சென்றுவிட, பெண்களும் குழந்தைகளும் மட்டுமே எஞ்சியிருந்தனர். பல ஆண்கள் வருடத்திற்கு ஒருமுறைதான் திரும்பி வருவார்கள். ‘நம் அழகைக் கண்டு ரசிக்க ஆண்கள் இல்லாத நிலையில் எதற்கு நல்ல ஆடைகளை அணிந்து, ஒப்பனையும் செய்துகொள்ள வேண்டும்?’ என்று பெண்கள் நினைக்கவில்லை. ஆனாலும், தம் புற அழகில் அசிரத்தையாக இருந்தார்கள். அவர்களுடைய ஓயாத வேலை அப்படி. இஞ்சி, தர்பூசணி போன்றவைகளைப் பயிரிடுவதோடு, பன்றிகளையும் வளர்த்துவந்தார்கள். கடும் வெயிலைப் பொருட்படுத்தாது வேலை செய்துவிட்டு வந்தபின், குழந்தைகளையும் வீட்டு வேலைகளையும் கவனித்தாக வேண்டும். இந்நிலையில், தங்களுக்காகவும் நேரத்தை ஒதுக்க வேண்டும் என்று அவர்களுக்குத் தோன்றாமல் போனதில் அதிசயமில்லை. அவ்வப்போது, நகர்ப்புறங்களில் வாழும் நாகரிகமான பெண்களுடன் தம்மை ஒப்பிட்டுக்கொண்டு, சிறுமை உணர்ச்சியுடன் காலந்தள்ளிவந்தார்கள். ஒரே ஒரு இளம்பெண்ணுக்கு மட்டும் இந்நிலையை மாற்ற வேண்டும் என்ற எண்ணம் பிறந்தது. அதைச் செயலாக்கினாள், பத்து ஆண்டுகளுக்குமுன். சீனாவின் தலைநகருக்குப் போய் ஒப்பனைக்கலையைக் கற்றுக்கொண்டு, அவளுடைய கிராமத்துக்கு அருகே இருந்த நகரில் ஓர் அழகுநிலையத்தைத் திறந்தாள். கடந்த பிப்ரவரி மாதம் கிராமத்திற்கு வந்தபோது, கோவிட் தொற்றுக் கட்டுப்பாட்டால் அங்கேயே தங்க நேர்ந்தது. அவளுடைய நாகரிகமான ஆடையணிகளுடன் ஒப்பனையால் நேர்த்தியாக இருந்த முகமும் பிற பெண்களின் கவனத்தைத் தூண்டியது. ஒப்பனையைப்பற்றி அவளை விசாரித்தாலும், அவர்களுக்கு ஏதோ தயக்கம். அதைப் போக்க முடிவெடுத்தாள் அந்த அழகுக்கலை நிபுணர். அவளுடைய பாட்டிதான் அவளுடைய முதல் வாடிக்கையாளர். ஓய்வு, ஒழிச்சல் இல்லாத வேலையால் அங்கிருந்த பிறரைப்போலவே பாட்டியின் கைகளும் காய்த்துப்போயிருந்தன. கால்களும் வெடித்துப்போயிருந்தன. அவற்றை மிருதுவாக்க முயற்சி எடுத்தாள் பேத்தி Zhou. (இப்பெயரைத் தமிழில் எப்படி எழுதுவது? ஜௌ என்றா?) பாட்டிக்கு முக ஒப்பனையும் உண்டு. அந்த மாற்றத்தைக் கண்ட பிற பெண்களுக்கு ஆச்சரியத்துடன், ஆசையும் எழுந்தது: ‘நம்மால்கூட அழகாக மாறமுடியும் போலிருக்கிறதே!’ துணிந்து வந்தார்கள். ஒப்பனை செய்துகொண்டதும், பண்டிகைக்காலங்களுக்கென்று வாங்கி வைத்திருந்த ஆடைகளை அணிந்து தம்மை அழகுபடுத்திக்கொண்டனர். Zhou தன் உபகரணங்களுடன் தயாராக வைத்திருந்த கண்ணாடியைக் காட்டி, அவர்களும் அழகுதான் என்ற நம்பிக்கையை ஊட்டினாள். (பல பெண்களிடம் முகம் பார்க்கும் கண்ணாடிகூட கிடையாது). அவர்களது மாற்றத்தைப் புகைப்படத்தில் எடுத்தாள். ஒரு பெண்மணிக்கு மட்டும் வீட்டில் எவ்வளவு தேடியும், நல்ல உடை எதுவும் கிடைக்கவில்லை. ‘என் குடும்பத்திற்காகவே உழைத்து வந்ததில், என்னைப் பற்றிய சிந்தனையே எனக்கு இல்லாமல் போய்விட்டது,’ என்ற வருத்தம் எழ, ‘இனிமேல், எனக்காகவும் ஏதாவது செய்துகொள்ளப்போகிறேன். அழகான ஆடைகளை உடுத்தப்போகிறேன்,’ என்று தீர்மானித்தாள். இருபது பெண்களுக்கு மேற்பட்டவர்கள் அப்படி அழகாக மாறினார்கள். ஒப்பனை செய்துகொள்ள ஒவ்வொரு முறையும் ஒன்றரை மணிநேரம் செலவழிந்தாலும், அதனால் அவர்கள் மனநிலையில் நல்ல மாற்றம் ஏற்பட்டது. ‘இப்போது, ’நாம் ஒன்றும் நகர்ப்புற மக்களைவிட தாழ்ந்தவர்கள் இல்லை என்ற தன்னம்பிக்கை பிறந்துவிட்டது,’ என்ற ஒரு பெண்மணி, எப்போதோ விழுந்திருந்த பல்லுக்கு மாற்றுப் பல்லும் பொருத்திக்கொண்டாளாம்! அலங்காரம் ஆண்களுக்காக அல்ல ‘ஆண் மயில் தோகை விரித்து ஆடுவது பெண் மயிலை மயக்கத்தான்! அதுபோல், பெண்கள் அலங்கரித்துக்கொள்வது ஆண்களுக்காகத்தான்!’ என்று பெரும்பாலான ஆண்கள் கருதுகிறார்கள். ‘யாருக்காக இப்படி அழகாக அலங்கரித்துக்கொண்டிருக்கிறாய்?’ என்று மனைவியைப் பார்த்து ஒரு கணவன் கேட்டால், அவன் முட்டாள். பெண்களைப் புரிந்துகொள்ளத் தெரியாத, அல்லது விரும்பாத, ஆணாதிக்கவாதி. இரண்டே வயதான பெண்குழந்தைகூட ஒரு புதிய ஆடையோ, வளையோ அணிந்துகொண்டவுடன் கண்ணாடியை நோக்கி ஓடும் – தன்னை அழகுபார்த்துக்கொள்ள. யாரையும் கவர வேண்டும் என்பது அக்குழந்தையின் நோக்கமல்ல. தான் அழகாக இருக்கிறோம் என்பதில் ஒரு மகிழ்ச்சி. “நான் அழகா இருக்கேன். இல்லே?” என்று பெருமைப்பட்டுக்கொள்ள, தன்னம்பிக்கை கூடும். பொதுவாகவே, பெண்கள் தம் மகிழ்ச்சிக்காகத்தான் அலங்கரித்துக்கொள்கிறார்கள். ‘கல்யாணம் ஆகிவிட்டது. இனி எதற்கு அழகு?’ ‘முப்பது வயதுக்குமேல் அலங்காரம் செய்துகொண்டால், பிறர் என்ன சொல்வார்களோ!’ ‘நிமிர்ந்து நடப்பதும், உடலழகைப் பராமரிப்பதும் விமானப் பணிப்பெண்களுக்குத்தான்!’ பிறர் என்ன சொல்லிவிடுவார்களோ என்ற பயமே பெண்களை அப்படிப் பேசவைக்கிறது. அத்துடன், அழகைப் பராமரிக்க அளவான உணவு, உடற்பயிற்சி என்று உடலை வருத்திக்கொள்ள வேண்டியிருக்கிறதே! (சிறு வயதில் போதிய ஆகாரம் கிடைக்காது அவதிப்பட்டவர்கள் வசதி கிடைத்ததும், அளவுக்கு அதிகமாக உண்பார்கள்). தன்னம்பிக்கை வளர உணவைக் கட்டுப்படுத்து நான் எந்த மருத்துவரிடம் போனாலும், ‘எடையைச் சற்றுக் குறைக்கலாம்,’ என்பார், நைச்சியமாக. நாற்பத்து ஐந்து வயதுக்குமேல் உடற்பயிற்சி மட்டும் போதவில்லை. ஆகாரத்தையும் பாதியாகக் குறைத்துக்கொள்ள வேண்டியிருந்தது. ஐந்து வருடங்களுக்குப்பின், இன்னும் குறைத்துக்கொண்டேன். இல்லாவிட்டால், எடை ஏறிக்கொண்டே போனதை இடுப்பில் தொங்கிய சதை பறைசாற்றியது. கனமான வேலை செய்யாததாலும், உடல் வளர்ச்சி குன்றியதாலும் ஒரே அளவு ஆகாரமே எடையைக் கூட்டியது. ‘குண்டானால் என்ன!’ என்ற அலட்சியம் ஏற்படவில்லை. கால்வலி, சோம்பல், ஓயாத அசதி என்று எழுந்த வேண்டாத உபாதைகளைப் பொறுத்துப்போவதைவிட உணவுக் கட்டுப்பாடு உகந்ததாகப்பட்டது. பழங்களை நிறையச் சாப்பிட்டு, சர்க்கரையையும் வெகுவாகக் குறைத்துக்கொண்டேன். எனக்கோ, இனிப்பு வகைகள் மிகவும் பிடிக்கும். முதலில், ‘நான் பாவம்!’ என்ற தன்னிரக்கம் ஏற்பட்டது. ஆனால், சுறுசுறுப்பு அதிகரிப்பது போலிருக்க என் ‘தியாகம்’ பெரிதாகப்படவில்லை. சீனக் கிராமத்துப் பெண்கள் தம் நலனைப் பெரிதாகக் கருதாது, கடமை உணர்வையே பெரிதாக மதித்ததால் அவர்களுடைய தன்னம்பிக்கை எப்படிப் பாதிக்கப்பட்டுவிட்டது, பார்த்தீர்களா? தனிப்பட்ட காரணங்களுக்காக நான் என் உடலைப் பராமரித்ததால் பிற பெண்களின் பொறாமைக்கு ஆளாக நேரிடும் என்று நினைத்ததில்லை. கதை மேற்பயிற்சிக்காக என்னைத் தலைநகரிலிருந்து மலேசியாவின் வடபகுதியிலிருந்த ஊருக்கு அனுப்பியிருந்தார்கள். எப்போதும்போல் இல்லாவிட்டால், புது இடத்தில் வெறுமை, சலிப்பு என்று ஏதாவது வரும் என்று தயாராகப் போயிருந்தேன். மற்ற ஊர்களிலிருந்து வந்தவர்கள் என்னைப்பற்றி நிறைய வம்பு பேசினார்கள். உதட்டுச்சாயமும் காலணிகளும்கூட என் புடவை வண்ணத்தில் இருந்தது கண்டு அவர்களுக்கு ஆச்சரியம். கடும் தேநீரில் ஊறவைத்த மருதோன்றி உபயத்தில், தலைமயிர் சிவப்பு நிறத்தில் மின்னியது! நாற்பது வயதுக்கு மேற்பட்ட அப்பெண்கள் இஸ்லாமிய மத போதனைக்கான பாடத்தைக் கற்பிக்கிறவர்கள். கை, கால் இரண்டிற்கும் உறை அணிந்திருப்பார்கள். வெளித்தோற்றத்தில் நான் வேறுபட்டிருந்ததால் ஏதோ அவநம்பிக்கை. அவர்களில் ஒருத்தி வயிற்றுவலியால் துடிக்க, என்னால் அதைப் பார்த்துக்கொண்டு சும்மா இருக்க முடியவில்லை. “என்னால் உதவ முடியும். செய்யட்டுமா?” என்று கேட்டுவிட்டு, அவளுடைய விரல்களைப் பிடித்து அழுத்தி, சிகிச்சை அளித்தேன். சில நிமிடங்களில் குணமாகியது. பிறகு, ஒருத்தி ரகசியமாகத் தெரிவித்தாள்: “நீ அழகாக அலங்கரித்துக்கொள்வது ஆண்களைக் கவரத்தான் என்று நாங்கள் நினைத்துக்கொண்டிருந்தோம்!” நான் தலையில் அடித்துக்கொள்ளாத குறை. அதன்பின், என்னைக் கண்டால் முகமலர்ந்து, கட்டி அணைத்துக்கொள்வார்கள்! உதவி செய்தால் வித்தியாசங்கள் மறைந்துபோய்விடும். குழந்தைகளுக்குச் சுதந்திரம் “அந்தப் பையனைப் பார்! எவ்வளவு சமர்த்தாக தனக்கு வேண்டும் என்கிறதைத் தானே கேட்டு வாங்கிக்கிறான்!” உணவுக்கடையொன்றில் அடுத்த மேசையிலிருந்த சிறுவனைக் காட்டி, தன் பேத்தியின் சாமர்த்தியம் இன்மையை மறைமுகமாகச் சுட்டிக் காட்டிக்கொண்டிருந்தாள் அந்த மூதாட்டி. பெண்ணுக்குச் சுமார் எட்டு வயதிருக்கும். நானும் கவனித்துக்கொண்டுதான் இருந்தேன். தனக்கு என்ன வேண்டும் என்று அவள் சொல்வதற்கே அவளுடன் வந்திருந்த அம்மாவும் பாட்டியும் அனுமதிக்கவில்லை. ‘இதைத்தான் நீ சாப்பிட வேண்டும்!’ என்று அவர்களே தீர்மானித்து, ஒவ்வொரு பிடியின்போதும், ஏதாவது குற்றம் கண்டுபிடித்துக்கொண்டே இருந்தார்கள். விருப்பப்படி சாப்பிடுவதற்குக்கூட விடாது, அவளுடைய சுதந்திரத்தைப் பறித்துக்கொண்டால், புதிய இடத்தில் எதைச் செய்யத்தான் அவளுக்குத் துணிச்சல் எழும்? எப்படி யோசிப்பது என்று கற்றுக்கொடுப்பதைவிட்டு, ‘இப்படித்தான் யோசிக்கவேண்டும்!’ என்றா கட்டாயப்படுத்துவார்கள்? ‘சிறு வயதிலிருந்தே இவனுக்குச் சுயமாக எதுவும் செய்துகொள்ளத் தெரியாது! நாங்களும் எவ்வளவோ சொல்லிப் பார்த்துவிட்டோம்!’ என்று சலித்துக்கொள்ளும் பெற்றோர் தம்மீதுதான் தவறு என்று உணர்வதில்லை. இப்போக்கைத்தான், ‘சொல்லிக்கொடுத்த வார்த்தையும் கட்டிக்கொடுத்த சோறும் எத்தனை நாட்களுக்கு வரும்?’ என்று மறைமுகமாகக் கண்டிக்கிறார்கள். ‘வெளியே போறியா? முகக் கவசம் எடுத்துண்டு போ!’ தற்போது அடிக்கடி கேட்கும் வாசகம். அப்போது எழும் எரிச்சலில், பெரியவர்கள் என்ன சொல்வது, நான் என்ன கேட்பது என்று ஏறுமாறாக நடக்கத்தான் தோன்றும். சொல்வதைவிடச் செய்துகாட்டுவதுதான் பயனளிக்கும். ‘உன்னால் முடியும்!’ என்று நம்பினால், சிறுவர்களும் அதை நம்பிவிடுவார்கள். கதை என் இரண்டு வயதுப் பேரனை குழந்தைகளுக்கான ’ஜிம்’மிற்கு அழைத்துப் போயிருந்தேன். அங்கு நான்கடி உயரத்தில் ஏணியைப்போன்ற ஒரு சாதனம். ஆனால், படிகள் கிடையாது. இரு பக்கமும் கால் விரல்களை மட்டும் சிறு பள்ளத்தில் பதித்துக்கொண்டு ஏறவேண்டும். பயத்தால் குழந்தையின் கண்கள் விரிந்தன. “ஏறு. விழமாட்டே. நான் பிடிச்சுக்கறேன்!” என்று தைரியம் அளித்து, அவன் உடலைச்சுற்றி ஒரு கையைப் போட்டு இறுக்கி, இன்னொரு கையால், "இப்போ இங்கே கால் வைக்கணும்,’ என்று காட்டி, ஒவ்வொரு அடியாகப் பழக்கினேன். ஏறி முடித்ததும், பாராட்டு. அடுத்த முறை நான் அவனைப் பிடித்துக்கொள்ளப்போக, “எனக்குத் தெரியும்,” என்று என் கையை விலக்கினான். ஓரிரு முறை செய்துகாட்டி, மேற்பார்வை மட்டும் பார்த்தால் தைரியம் பெருகுகிறது. புதிய காரியங்களில் ஈடுபடும் துணிச்சல் வரும். இது புரிந்துதான் பரம்பரைத் தொழிலில் ஈடுபட்டிருப்பவர்கள் தம் குழந்தைகளுக்குச் சிறுவயதிலிருந்தே சிறு, சிறு வேலைகளைக் கொடுத்துப் பழக்குகிறார்கள். சமையலறையில், வேகவைத்த உருளைக்கிழங்கு, சின்ன வெங்காயம் ஆகியவைகளின் தோலை உரிப்பது என்று ஆரம்பித்து, பெண் குழந்தைகள் சிறுகச் சிறுக சமையல் கற்றுக்கொள்கிறார்கள். எந்த வேலையையும், ‘இப்படிச் செய்!’ என்று அதிகாரமாகக் கூறுவதைவிட, ‘நான் இப்படிப் பண்ணுவேன். நீ உன் சௌகரிப்படி செய்!’ என்று விட்டுக்கொடுத்தால், நம்மைப்போலவே செய்வார்கள்! நம்மீது மதிப்பும் பெருகும். குழந்தைகள் எப்போதும் பெரியவர்கள்போல் ‘நார்மலாக’ இருப்பார்கள் என்று சொல்ல முடியாது. (நம்மில் எத்தனை பேர் அப்படி இருக்கிறோம்?). தம் விளையாட்டுச் சாமான்களை தரை பூராவும் பரப்புவது அவர்களுக்குப் பிடித்தமான சமாசாரம். ‘குப்பை போடாதே!’ என்று கண்டிப்பதைவிட்டு, ‘இந்த ஓரமா வெச்சுக்கோ,’ என்று ஒரு மூலையை ஒழித்துக்கொடுக்கலாம். சில தாய்மார்கள் உடனுக்குடனே அந்த விளையாட்டுச் சாமான்களைத் திரட்டி வைத்துவிடுவார்கள். சொல்வதைக் கேட்காவிட்டால் தண்டனை. தாயை எதிர்க்கவும் முடியாத நிலையில், அவளிடம் அன்பைவிட அச்சம்தான் அதிகமாக எழும். சிறுவயதில் எல்லாவற்றிற்கும் பயந்து வளர்பவன் முரடனாகிறான் – ‘நான் பெற்ற பயம் இவ்வையகமும் அடைக!’ என்பதுபோல். இல்லையேல், பயந்தாங்கொள்ளியாக ஆகிறான். குழந்தைகளை அஞ்சவோ, அழவோ வைத்தால் ஒருவருடைய பலம் கூடிவிடுவது போன்ற உணர்வு ஏற்படலாம். அதற்காக சுயநலம் கொண்டவர்களாக ஆகலாமா? மகிழ்ச்சியாக வளரும் குழந்தைகளே நல்லவர்களாக வளர்கிறார்கள். சுதந்திரத்திற்கு வயதில்லை ஒரு குழந்தையைத் புத்திசாலியாகவும் தைரியசாலியாகவும் வளர்ப்பது வளர்க்கிறவர்களுக்கும் உற்சாகமானதாக இருக்கும். அவர்களும் கூடவே வளர்வார்கள். “உனக்கு இப்போ ஹார்லிக்ஸ் வேணுமா, மைலோ வேணுமா?” ஒன்றரை வயதானதும், என் குழந்தைகளைக் கேட்பேன். “இப்போ என்ன குடிக்கப்போறே?” நான் சொல்வது புரியாது, குழந்தை விழிக்கும். “இது வெள்ளையா இருக்கு, பாத்தியா? இன்னொண்ணு ப்ரௌன்,” என்று சந்தடி சாக்கில் வண்ண பேதத்தையும் சொல்லிக்கொடுப்பேன். சற்று யோசித்துவிட்டு, “இது. இல்லை, இது!” என்று ஏதாவது ஒன்றைக் காலை வேளையில் குடிக்கத் தேர்ந்தெடுப்பார்கள். ஒரு முறை, வெள்ளையான பானத்தைக் கொண்டுவந்து கொடுத்தாள் என் பன்னிரண்டு வயது மகள். அவளுடைய தம்பி கால்களை உதைத்துக்கொண்டு அழ ஆரம்பித்தான். ஏனெனில், அவனுடைய தேர்வு மதிக்கப்படவில்லை. அவளைத் திட்டுவதுபோல் பாவனை செய்துவிட்டு, “இதிலேயே கொஞ்சம் மைலோ கலந்து கொண்டுவா!” என்றேன், ரகசியக்குரலில். “சகிக்காது,” என்றாள். ஆனாலும் அப்படியே செய்தாள். குழந்தை மகிழ்ச்சியுடன் குடித்தான். அவனைப் பொறுத்தவரை, காலையில் குடிக்க அவன் தேர்ந்தெடுத்தது கோக்கோ கலராக இருக்கும். என் மகளுக்கு ஒரு வயதானபோது, என் வளர்ப்பு முறையைப் பார்த்த என் தாய், “இது என்ன, பெரிய மனுஷி? இதுகிட்ட கேக்கறே?” என்றாள். “சுயமா யோசிக்க கத்துக் குடுக்கறேன்,” என்றேன். அவர்கள் சம்பந்தப்பட்ட சமாசாரங்களுக்கு அவர்கள்தாம் பொறுப்பு என்று மறைமுகமாக உணர்த்துவதாகத்தான் நான் நினைத்தேன். ஆனால் அம்மாவோ, “ஒன் குழந்தைகளுக்குப் பைத்தியம்தான் பிடிக்கப்போறது!” என்றாள். ஒரு துணுக்கு (நீங்களும் படித்திருப்பீர்கள்) ஒரு சிறுவன் கீழே விழுந்துவிடுகிறான். ‘வலிக்கிறதாடா?’ என்று கேட்ட நண்பர்களிடம், ‘ஐயாவுக்கா அடி படும்? வித்தை காட்டினேண்டா!’ என்று பெருமை பேசிவிட்டு, வீட்டுக்குள் ஒவ்வொரு அறையாக அம்மாவைத் தேடிப் போய்விட்டு, ‘கீழே விழுந்துட்டேம்மா. ரொம்ப வலிக்கிறது!’ என்று பெரிதாக அழுகிறான். ‘அன்பு’ என்ற பெயரில் எட்டு வயதானபின்னும் தன் மகளைத் தூக்கி வைத்துக்கொள்ளும் தாய் அறிவதில்லை, அவளுக்குத் தீங்கு இழைக்கிறோம் என்று. பதினோரு மாதங்களே ஆன என் மகளின் கையைப் பிடித்து நான் தெருவில் நடந்தபோது, இந்தியாவில் பெண்கள் சிரித்தார்கள், ஏதோ பெரிய வேடிக்கையைக் கண்டுவிட்டதுபோல். “இது ரொம்ப அநியாயம்!” என்று அவர்கள் சொல்லிக்கொண்டு போனது கேட்டது. நான் ‘கொடுமைப்படுத்துவதை’ பொறுக்கமுடியாத ஒருவர், “தூக்கிக்குங்கம்மா,” என்று சிபாரிசு செய்தார். “அதான் நடக்கிறாளே!” என்றுவிட்டேன். தாய் இரக்கம் காட்டும்போதுதான் சுயபரிதாபம் எழுகிறது. கவனிக்காததுபோல் இருந்தால் கீழே விழுந்தாலும், தாமே எழுந்துவிடுவார்கள். எல்லா வயதிலும் ‘வீழ்ச்சி’ என்று ஒன்று இருக்கிறது. அப்போது அயர்ந்துபோய், கீழேயே கிடக்க வேண்டாம், மீண்டும் எழ வேண்டும் என்ற உத்வேகத்தைச் சிறுவயதிலேயே புகட்டலாமே! நம்மையே வருத்திக்கொள்ளலாமா? எல்லா வயதிலும் மன அழுத்தம் உண்டாகிறது. ‘தவறு செய்தால் தாய் திட்டுவார்களோ!’ என்ற பயம் சிறுவர்களுக்கு. ‘தாய்’ என்ற வார்த்தைக்குப்பதில் அலுவலக மேலதிகாரி, வீட்டில் கணவன் அல்லது மனைவி என்று போட்டுப் பார்த்தால், அனேகருக்கும் பொருந்தும். எல்லாத் தருணங்களிலும், பிறரை மகிழ்விக்க விரும்புவோருக்கு, ‘மாட்டேன்,’ ‘வேண்டாம்,’ என்றெல்லாம் கூறத் தெரியாது. இதனால், தம்மையே வருத்திக்கொள்கிறார்கள். கதை திருமணமான முதல் வருடம் ஒரு பெண் அழுதுகொண்டே இருந்தாள். பொறுக்க முடியாது, அவளைத் தாய்வீட்டுக்கே அனுப்பினார் கணவர். எந்நேரமும் அழுதுகொண்டிருந்தவளுக்கு என்ன குறை என்று புரியாத தந்தை உளவியல் சிகிச்சைக்கு அழைத்துப்போனார். அங்கு, தன்னால் தன் பழைய காதலனை மறக்க முடியவில்லை என்று மேலும் அழுதாள். ‘காதலனைத்தவிர வேறு யாரையும் மணக்கமாட்டேன்,’ என்ற உறுதி அவளுக்கு இருக்கவில்லை. அப்போது நிதானமாக யோசித்து, தனக்குப் பிடித்த ஒன்றைத் தேர்ந்தெடுக்காதது அவளுடைய குற்றம். கணவன்மேல் குற்றம் கண்டுபிடித்து, ‘காதலனை மணந்திருந்தால் இப்படியெல்லாம் ஆகியிருக்காதே!’ என்று சிலர் வருந்துவார்கள். அவனுக்கு மட்டும் குறைகளே இருந்திருக்காதா? காதலனாக இருக்கும்போது வெளிவராத பல குணாதிசயங்கள் கணவனானபிறகுதான் தெரியவரும். சில சமயம், விரும்பி ஏற்ற உறவுகள் முறியலாம். ஆனால், ஆரம்பத்தில் மன ஒற்றுமை இருந்ததால்தானே இணைந்திருப்பார்கள்? கானடா நாட்டில் நான் சந்தித்த ஒரு பெண் தான் காதலித்து மணந்த கணவன் தன் அனுமதி இல்லாமல் தன்னுடன் உடலுறவு கொண்டான், அது வன்முறை என்று வழக்கு தொடுத்து, விவாகரத்து பெற்றிருந்தாள். “ஆனால், எங்களுக்குள் சில இனிமையான தருணங்களும் இருந்தன,” என்று அந்த இளம்பெண் கூறியபோது, அந்த நேர்மை எனக்கு ஆச்சரியத்தை விளைவித்தது. கீதோபதேசம் ஒரு காரியம் நடக்க வேண்டுமென்றால் அது நடந்தே ஆகும். ‘நடந்திருக்கக் கூடாதா!’ என்று காலங்கடந்து ஏங்கி என்ன பயன்? கதை நான் இயற்றிய பாடல்களை உடனுக்குடன் எழுதி வைத்துக்கொள்வேன். அலமாரியில் வைத்திருந்த நாலைந்து நோட்டுப் புத்தகங்களில் சிறு புழுக்கள் இருந்ததைப் பார்த்து அவைகளை வெயிலில் காயவைத்தேன். (புழுக்களை அல்ல). செய்த காரியத்தை மறந்துவிட்டு, வெளியில் போய் திரும்பியபோது, மழையில் புத்தகங்கள் நனைந்து, நுனியிலிருந்த எழுத்துக்கள் உருமாறி இருந்தன. ’நடந்ததை இனி மாற்றவா முடியும்? என்று தோன்ற, நான் புத்தகங்களைக் காயவைத்ததோடு நிம்மதி அடைய வேண்டியதாயிற்று. ‘அதைப்பற்றி நினைக்காதே!’ என்று என்னை நானே கடிந்துகொண்டு, அதன்படி நடந்துகொண்டேன். விடாமுயற்சி இங்கு உதவாது எதையாவது தொலைத்துவிட்டு, வெகு நேரம் தேடினாலும் அது கிடைக்காது. தேடும்போது மன உளைச்சலுக்கு ஆளாவதுதான் மிச்சம். பிறகு, நாம் எதிர்பாராத விதத்தில் எங்கிருந்தாவது கிடைத்துவிடும். இது புரியாது, தொலைந்ததை விடாது தேடி, மன உளைச்சலுக்குத் தம்மை ஆளாக்கிக்கொள்கிறவர்கள் பலர். ஒரு கதையையோ, பாடலையோ எழுத ஆரம்பித்தபின், பாதியில் எப்படித் தொடர்வது என்று எனக்குப் புரியாதுபோகும். அதை அப்படியே விட்டுவிட்டு, வேறு காரியங்களில் கவனம் செலுத்துவேன். ஓரிரு மாதங்கள் கழிந்தபின், அது முற்றுப்பெற்றதும் உண்டு. இதனால், ‘பாதியில் நின்றுவிட்டதே! அப்புறம் என்னவென்று தெரியவில்லையே!’ என்று மனத்தைக் குழப்பிக்கொள்வது கிடையாது. நம் வாழ்வில் தினமுமே நம்மை ஆத்திரப்படவைக்கும், ஏமாறவைக்கும் சம்பவங்கள் நடந்துகொண்டுதான் இருக்கின்றன. அவற்றை அதிகம் பாராட்டாமல் இருந்தால் மனம் அமைதியாக இருக்கும். வம்படித்துப் பொழுது போக்குகிறவர் நம்மை ஆத்திரப்படவைக்கிறாரா ஒருவர்? ‘அவருக்குத் தெரிந்தது அவ்வளவுதான்!’ என்று பெரியமனதுடன் விடவேண்டியதுதான். பெண்கள் தமக்குப் பிடித்ததைப்பற்றியே பேசுவார்கள் என்று கூறுவதுண்டு. பிடிக்கிறதோ, இல்லையோ, கடந்த காலத்திலேயே நிலைத்திருப்பார்கள் சிலர். தம்மை நோகடித்ததைப்பற்றி, பலமுறை, பிற பெண்களிடம் கூறிக்கொள்வார்கள். அப்போது கிடைக்கும் அனுதாபம் அவர்களுக்கு அன்பாகத் தோன்றிவிடும். அதேபோல், பிறர் வாழ்வில் நடந்த அசம்பாவிதங்களைப்பற்றியும் தெரிந்துகொள்ள ஆசைப்படுவார்கள். அப்போதுதானே, ‘நல்லவேளை, நமக்கு இப்படி நிகழவில்லையே!’ என்று திருப்தி அடையமுடியும்? “உன் மகனைப்பற்றிச் சொல்!” என்றாள் என்னுடன் எப்போதோ வேலைபார்த்த ஒருத்தி – அதிகாரமாக. அவன் மறைந்ததைப்பற்றி அவளுக்குத் தெரிந்திருந்தது. அவளைப் பொறுத்தவரை, பொழுதைப் போக்க அது ஒரு வழி. அவ்வளவுதான். அது புரிந்து, “ஸாரி. நான் அதைப்பற்றிப் பேச விரும்பவில்லை,” என்று முகத்தில் அடித்தாற்போல் கூறிவிட்டு, அப்பால் நகர்ந்தேன், தான் அலட்சியமாக நடத்தப்பட்டுவிட்டோமே என்ற அதிர்ச்சியை அவளுக்கு அளித்துவிட்டு. நம்மைப் பாதித்ததைப்பற்றி ஓயாது பேசினாலோ, வருந்தினாலோ அதன் பாதிப்பு குறைந்துவிடப்போவதில்லை. ஒவ்வொரு முறையும் மேலெழுந்து, நம்மை வாட்டும். மாற்ற முடியாததை ஏற்பதைத்தவிர வேறு என்ன செய்யமுடியும்? நம் துயரத்தைப் புரிந்துகொள்கிற ஓரிருவரிடம் மட்டும் கூறுவதுதான் விவேகம். ஆறுதல் கிடைக்கும். ஏமாற்றத்தின் விளைவுகள் பலவிதம் சிறுவயதில் நாம் எதையாவது அடைய விரும்பி, அது கிடைக்காமல் போனால் ஏமாற்றம் விளையும். வளர்ந்தபின்னும் அதே மனநிலை இருந்தால் திண்டாட்டம்தான். மன நிலை பாதிக்கப்பட்டு, சிகிச்சைக்காக மருத்துவமனையில் நீண்டகாலம் தங்கியிருந்த ஓர் இளைஞனைப் பார்த்தேன். தெரிந்த கதைதான். ஒரு பெண் அவனைக் காதலிப்பதாகச் சொல்லி நம்ப வைத்துவிட்டு, பிறகு ஏமாற்றிவிட்டாள். நன்றாகப் படித்துக்கொண்டிருந்தவனுக்கு அதற்குப்பின் எல்லாவற்றிலும் ஆர்வம் போயிற்று. இதேபோன்று, ஒரு பெண் ஏமாற்றப்பட்டபோது, அவளுடைய நெருங்கிய தோழிகள் இருவர், ‘இது உன் தவறல்ல. உன் வாழ்க்கை இத்துடன் முடிந்துவிடவில்லை,’ என்று ஆதரவாக இருந்தனர். பிறகு, வேறு ஒருவரைக் கல்யாணம் செய்துகொண்டாள். எப்போதாவது மனம் உறுத்தும். ஆனால், தனக்குப் பிடித்த பொழுதுபோக்குகளில் ஈடுபட்டு, அதைச் சமாதானப்படுத்திக்கொள்ள அவளுக்குத் தெரிந்திருந்தது. பல வருடங்கள் கழிந்ததும், ‘அந்த கயவன் செய்த காரியத்துக்காகவா அவ்வளவு வருத்தப்பட்டேன்!’ என்று தோன்றிப்போயிற்று. எதிர்மறையான உணர்வுகள் நம்மைத் தாக்கும்போது ஆக்கபூர்வமான, கடினமான எதையாவது செய்தால் மனநிலையில் மாற்றம் உண்டாகும். தோட்டவேலை, விளையாட்டு, நாட்டியம் – இப்படி அவரவர்களுக்குப் பிடித்தது ஏதாவது இருக்காதா? பொறுக்க முடியாததைப் பொறுத்தபின் வெளிநாட்டுக்கு உத்தியோக நிமித்தம் செல்பவர்களுக்கு, ‘வாழ்க்கை இத்தனை கடினமானதா!’ என்ற அயர்ச்சி உண்டாகும். புதிய இடம், வசதியின்மை, கலாசார மாறுபாடு, உறவினரைப் பிரிந்து தனிமையில் வாடவேண்டிய கொடுமை என்று எவ்வளவு இல்லை! எப்படியோ சகித்துக்கொண்டு காலத்தை ஓட்டியபின், ‘நாம் எத்தனை இடர்களைத் தாங்கி, அவைகளைக் கடந்து வந்திருக்கிறோம்!’ என்ற மலைப்புடன், பெருமையும் எழும். பிறருக்கு ஆலோசனை கூறும் அளவுக்கு உயர்ந்திருப்பார்கள். உனக்காகவும் நேரம் ஒதுக்கு நான் உத்தியோகம் பார்த்த காலத்தில், திங்கட்கிழமையிலிருந்து, சில சமயம், சனிக்கிழமைகூட வேலை செய்ய வேண்டியிருக்கும். எனக்கென்று ஞாயிற்றுக்கிழமையை ஒதுக்கி இருப்பேன் – கூடியவரை, அன்று வெளியில் போவதைத் தவிர்த்துவிட்டு. இது சுயநலமா? எனக்கு முக்கியமான, பிடித்த காரியங்களில் நேரத்தைச் செலவிட முடிகிறதே! பிறருக்குப் பயந்தே ஒவ்வொரு காரியத்தையும் செய்துவிட்டு, மகிழ்ச்சியின்றி எதற்கு வாழ்வது? மனைவி கணவனது உடைமையா? ஆப்ரஹாம் லிங்கனிடம், “இந்த உலகில் நாம் செய்யும் எல்லா செயல்களும் சுயநலத்தின் அடிப்படையில் எழுந்தவைதான்,” என்று நண்பர் ஒருவர் கூற, முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி அதை மறுத்தார். “நான் பிறருக்கு உதவி செய்ய ஆசைப்படுகிறேன். அது எப்படி சுயநலமாகும்?” என்று கேட்டார். நண்பர் அயராமல், “அப்படி உதவி செய்தால், உனக்கு என்ன கிடைக்கிறது?” என்று எதிர்க்கேள்வி கேட்டார். “மகிழ்ச்சி,” என்று பதில் வர, “பார்த்தாயா? உன் மகிழ்ச்சிக்காகச் செய்வது சுயநலமில்லையா?” என்று மடக்கினார் நண்பர். நம் நலனைக் கவனித்துக்கொள்வது அவ்வளவு விரும்பத்தகாத குணமா? ‘தன்னலமற்ற சேவை செய்பவர்’ என்று அபூர்வமான சிலரைப் போற்றுகிறோம். ஒருவர் தன் சொந்த நலனைப் பெரிதாகப் பாராட்டாது, அறவே ஒதுக்கினால், அவரால் எப்படிப் பிறருக்குச் சேவை செய்யமுடியும் என்கின்ற கேள்வி எழுகிறதே! பொதுவாகவே, பெண்கள் இப்படி இருந்தால்தான் அவர்களுக்கு நல்ல பெயர் கிட்டுகிறது. கதை லட்சுமி சிறுவயதிலிருந்தே ஆண்கள் சொற்படி கேட்டு நடக்க வேண்டும் என்று போதிக்கப்பட்டு வளர்ந்திருந்தாள். அவள் செய்யப்போகும் ஒவ்வொரு காரியமும் இப்படித்தான் இருக்கவேண்டும், தான் யாருடன் பேசலாம் என்று கூறுகிறோமோ அவருடன் மட்டும்தான் அவள் பேசவேண்டும் என்று பலவகையிலும் கணவர் கட்டுப்படுத்தியபோது அவரது போக்கைத் தவறாக நினைக்கத் தோன்றவில்லை அவளுக்கு. கைத்தொலைபேசியில் அவள் யாருடனெல்லாம் தொடர்பு கொள்கிறாள் என்று அவர் வேவு பார்த்தபோது, அவளுக்கு வாழ்வில் உற்சாகம் குறைந்துகொண்டே போயிற்று. கணவருடைய அன்புக்காக எதையும் விட்டுக்கொடுக்கலாம் என்று நினைத்தபோதும், தான் ஏன் மகிழ்ச்சியே இல்லாமல் இருக்கிறோம் என்று அவளுக்குப் புரியவில்லை. சிலமுறை கணவனின் போக்கை எதிர்த்துப்பார்த்தாள். “எனக்கு உன்மேல் மிகுந்த அன்பு, அதனால்தான் நீ பிறருடன் பழகினால் பொறாமை வருகிறது,” என்று சமாதானப்படுத்தினான் அவன். அவளுக்கும் உணர்ச்சிகள் உண்டு என்பது அவனுக்குப் புரியவில்லை. இம்மாதிரியான ஆணுக்கு மனைவிமேல் நம்பிக்கை கிடையாது என்பதில்லை. சுயநம்பிக்கை குறைவு. அவ்வளவுதான். தன்னைவிட அவள் எந்த விதத்திலாவது உயர்ந்தவள் என்று தோன்ற, அப்படி நடக்கிறான். ஒருவர் தன் மகிழ்ச்சிக்காகவோ, இல்லை, சொந்த நலனுக்காகவோ பிறரைக் கஷ்டப்படுத்துவது அன்பில் சேர்த்தியில்லை. இப்படிப்பட்ட கணவனுக்காக விட்டுக்கொடுத்துக்கொண்டே இருந்தால் குடும்பத்தில் எவருக்குமே மகிழ்ச்சி கிட்டாது. ஒரேமாதிரி அனுபவம் வெவ்வேறு மனிதர்களிடம் வித்தியாசமான பாதிப்புகள் ஏற்படுத்தும். கதை வனமாலா தன்னைக் கட்டுப்படுத்திய கணவனிடம் சிறிது காலம் அடங்கிப்போனாள். காதலனாக இருந்தபோது, அவனுக்கு விட்டுக்கொடுத்து நடந்தவள் அவள். ஆனால், அப்படியே நடந்தபோது, தன் இயல்பான குணாதிசயமே மாறிக்கொண்டு வருகிறது என்பதை உணர்ந்தாள். எதிலும் சவாலை எதிர்நோக்கும் குணத்தால் இப்படி ஒருவரை மணந்துவிட்டோமோ என்று முதலில் குழம்பினாள் அந்த விளையாட்டு வீராங்கனை. பிறகு, ‘கணவனுக்குத் தீயகுணம்கொண்ட நண்பர்கள் இருந்தால் என்ன, இது என் வாழ்க்கை!’ என்று தெளிந்தாள். தனக்குப் பிடித்த, பிறருக்குத் தீங்கு விளைவிக்காதவற்றில் ஈடுபட்டாள். கரடுமுரடான பாதையில் ஏறுவது கடினமாக இருந்தாலும், மனங்கலங்காது தொடர்ந்தால் அழகான காட்சிகள் அமையலாம் என்ற நம்பிக்கை அவளுக்கு இருந்தது. ‘சுயநலம் பிடித்தவள்!’ என்று கணவன் பழித்ததை அலட்சியம் செய்தாள். (அவன் மட்டும் சுயநலக்காரன் இல்லையா?) காதலனாக இருந்தபோது அவனிடம் அவளுக்கு அவனிடம் பிடித்த குணங்களை மீண்டும் கொண்டுவரலாம் என்ற நம்பிக்கை எழ, பொறுமையாக இருந்தாள். தன் போக்கால் அவளுக்குத் தன்னிடம் அன்பு குறைந்து வருவது புரிய, முதலில் கேலி, பிறகு சண்டை என்று இருந்தவன் நாளடைவில் மாறினான். அவளைக் கட்டுப்படுத்துவதைக் குறைத்துக்கொண்டான். கதை பெண்பார்க்கும் படலம் முடிந்ததும், ‘எனக்கு இந்தப் பெண் வேண்டாம். அவளுக்கு நிறைய சாதிக்கவேண்டும் என்ற கனவுகள் இருக்கின்றன,’ என்று ஓர் இளைஞன் மறுத்தான். அவனைப் பொறுத்தவரை, ஓர் இலக்குடன் சாதிக்கும் வெறி நிறைந்த பெண்களிடம் பெண்மைக்குணம் இருக்காது. மனைவி அவனுக்கு மட்டுமே சொந்தமான ஒரு பொருள். அவன் இழுத்த இழுப்பிற்கெல்லாம் வளைந்துகொடுத்தால் அவள் அன்பான மனைவி. அவளுக்குத் தனக்கென்று எந்த ஒரு லட்சியமோ, ஆசையோ இருக்கக்கூடாது என்ற எண்ணம் கொண்டவன். அது மட்டுமா? பெண் என்றால் அதிர்ந்து பேசாது, அல்லது பிறர் எதிரில் வாயே திறக்காது, கணவனுக்குக் கீழ்ப்படிகிறவள். அப்படிப்பட்ட ஒரு பெண் திருமணமானதும், குடும்பப் பெரியவர்களின் அறிவுரையின்படி நடந்துகொண்டோமே, ஏன் வாழ்க்கை மகிழ்ச்சியற்றுப் போய்விட்டது என்று புரியாது தவித்தாள். கதை “எல்லாப் பெண்களுக்கும் பிடித்த ஒன்று எது என்று கண்டுபிடித்து வா,” என்று அரசன் ஒருவனுக்குக் கட்டளையிட்டான். அந்த மனிதன் எங்கெங்கோ தேடி, அறிவாளி என்று பிறர் சிபாரிசு செய்த ஒரு சூனியக் கிழவியிடம் அக்கேள்வியைக் கேட்டான். ’நான் விடையளித்தால் உன் உயிர் தப்பும். எனக்கு என்ன கிடைக்கும்?" என்று அவள் கேட்க, “நீ கேட்பதைத் தருகிறேன்,” என்று வாக்களித்தான். எக்காலத்துக்கும் பொருந்தும் அவள் பதில்: “தான் சம்பந்தப்பட்ட சமாசாரங்களில் எந்தப் பெண்ணும் சுயமாக முடிவெடுக்கவே விரும்புகிறாள்”. அரசனுடைய பாராட்டுடன் அவளை மீண்டும் சந்தித்தவன், “உனக்கு வேண்டியதைக் கேள்,” என்றான். “என்னை மணந்துகொள்,” என்றவள் ஒரு நிபந்தனையும் விதித்தாள். “நீ வெளியில் போகும்போது நான் கிழத்தோற்றத்துடன் வருவேன். வீட்டில் இளம்பெண்ணாக நடப்பேன். இல்லையேல், வீட்டில் கிழவி, வெளியில் இளம்பெண். உனக்கு எப்படி வேண்டும்?” “உன் விருப்பம்!” அவள் மகிழ்ந்து, எப்போதும் இளம்பெண்ணாகவே தோற்றமளிப்பதாக உறுதியளித்தாள். திருமணத்திற்கு முன்னால்-பின்னால் ‘திருமண வாழ்க்கை நான் எதிர்பார்த்தபடி இல்லை,’ என்று இளம்பெண்கள் மனம் வெறுத்துப் பேசுகிறார்கள். எப்போதும் கணவன் (அல்லது மனைவி) தன்னையே நாடவேண்டும், தான் சொற்படி நடக்கவேண்டும், பாராட்ட வேண்டும் என்ற எதிர்பார்ப்புகள் நடைமுறைக்கு ஒவ்வாதது. நல்ல குடும்பம் என்றால், ஒவ்வொருவருடைய திறமையும் வெளிப்பட அவர்கள் நினைத்ததைச் சாதிக்க அனுமதிக்கப்பட வேண்டும் – அது ஆணோ, பெண்ணோ, குழந்தைகளோ! எவரிடமும் எதிர்பார்ப்பு இல்லாது செலுத்துவதே அன்பு. தான் செய்யும் ஒவ்வொரு காரியத்தையும் வாழ்க்கைத்துணையிடம் சொல்லி, அனுமதி கேட்கும் நிலை வந்தால் அது அடிமைத்தனம். “உங்களுக்காக எவ்வளவு செய்தேன்!” என்று சொல்லிக்காட்டினால், பெற்ற குழந்தைகள் கொண்டிருக்கும் அன்புகூட குறைந்துபோகும் அபாயம் இருக்கிறது. “நான் இப்போது செய்கிறேன். நீங்கள் நாளைக்குச் செய்யவேண்டும்!” என்பவர்களும் உண்டு. உறவுகள் என்ன, பண்டமாற்று வியாபாரமா? பெற்ற குழந்தைகளிடம் அன்பு செலுத்துவது அவர்கள் பிற்காலத்தில் நன்றியுடன் இருக்கவேண்டும் என்ற எதிர்பார்ப்புடனா? அல்லது, வயது முதிர்ந்த பிராயத்தில் அவர்கள் நம்மைக் காப்பாற்ற வேண்டும் என்றா? குடும்பத்தினர் நல்லபடியாக வளர்வதைக் கண்டே மகிழ்ச்சி அடையலாமே! உழைப்பும் சவாலும் உத்தியோகத்திற்கான பேட்டியில்: “இந்த வேலையில் சேர்ந்தால், நீங்கள் கடுமையாக உழைக்க வேண்டியிருக்குமே!” என்று சவால்விட்டார் அதிகாரி. “கடுமையான உழைப்பு யாரையும் சாகடித்தது கிடையாது!” இப்படிச் சொன்னவருக்கு வேலை கிடைத்தது. ‘முயற்சி செய்கிறேன்,’ என்று சொல்லியிருந்தால், அது அரைமனதான பதிலாக இருந்திருக்கும் – ‘பார்க்கலாம்,’ என்று தட்டிக்கழிப்பதுபோல். ஒரு குறிப்பிட்ட வேலையைச் செய்ய ஒத்துக்கொள்பவர், ‘சரி,’ அல்லது ‘இப்போது முடியாது,’ என்று கூறினால், அவர் முழுமனதுடன் அதில் ஈடுபடுவார் என்ற நம்பிக்கையாவது எழும். ‘எனக்கு அவனைவிடத் திறமை அதிகம். படிப்பிலும் நான் அவனை மிஞ்சியவன்! அவனுக்கு என்னமோ அதிர்ஷ்டம்!’ என்று தன்னை மிஞ்சிவிட்ட ஒரு நண்பனைப் பார்த்துப் பொருமுகிறவர்களைப் பார்த்திருப்பீர்கள். அறிவும் திறமையும் முக்கியம்தான். ஆனால், அவற்றை முழுமையாக வெளிக்காட்ட கடும் உழைப்பு வேண்டாமா? சிலர் ஒரு காரியத்தை ஆரம்பிப்பார்கள். ஆரம்பித்த வேலை நீண்டுகொண்டே போனால், ‘இதற்கு என்னதான் முடிவு!’ என்ற அலுப்பு ஏற்படும். அப்போது அரைகுறையாக, எப்படியோ செய்து முடிக்கத் தோன்றிவிடும். வேலை செய்யும் தருணங்களை ரசித்தால், செய்பவருக்கு மகிழ்ச்சி கிட்டும். எடுத்த காரியமும் சிறப்பாக அமையும். பிடிக்கிறதோ, இல்லையோ, செய்துதான் ஆகவேண்டும் என்ற நிலை வரும்போது, முழுமனதுடன் ஈடுபட்டால் செவ்வனே செய்து முடிக்க முடியும். படைப்பவர் ரசித்துச் செய்தால்தான் பிறருக்கு மகிழ்ச்சி ஏற்படும். சமையல், இசை, எழுத்து – எதுவாக இருந்தார் என்ன! “சமைப்பது என்றால் எனக்கு வெறுப்பு! மிளகாய் நெடியால் தும்மிக்கொண்டே, எதற்கு அந்த வேலை!” என்று அலுத்துக்கொள்வாள் என் தோழி ஒருத்தி. அவள் சமைத்ததை அன்றாடம் சாப்பிட வேண்டியிருக்கும் குடும்பத்தினரிடம் பரிதாபம்தான் எழுந்தது எனக்கு. “நான் எத்தனை வருடங்களாக எழுதுகிறேன்! எனக்கு ஒரு பட்டம்கூடக் கிடைக்கவில்லை,” என்று என்னிடம் குறைப்பட்டார் ஒரு பத்திரிகை ஆசிரியர். பரிசுகளும், பட்டங்களும் பெறலாம் என்ற நோக்கத்துடன் எழுத ஆரம்பித்தால் அந்த இலக்கே சரியில்லை. நீண்ட அனுபவம் இருந்தாலும், புதிய விஷயங்களைக் கற்று, காலத்திற்கேற்ப எழுதுவது ஒருபுறமிருக்க, எழுதும்போதே மகிழ்ச்சியாக உணர்ந்தால்தான் ஒருவரது படைப்பு சிறப்பாக அமையும். எழுதுபவரது மகிழ்ச்சியும் பிறரை அடையும். எடுத்த காரியத்தை ஒரு சவாலாக ஏற்று, விடாமுயற்சியுடன் ஈடுபட்டால் வெற்றி கிடைக்கும். வாழ்க்கைத்துணையைத் தேர்ந்தெடுப்பதும் ஒரு சவால் என்று நினைத்து, அதன்படி செயல்படுகிறார்கள் சிலர். இது அறிவுடைமையா, முட்டாள்தனமா? கதை சரவணன் ஒரு பெண்ணை மணந்தான். காதல் வயப்பட்டு அல்ல. அவள்மேல் பரிதாபப்பட்டு. அவளுக்கு ஏதோ வியாதி. ‘நம்மை விட்டால் வேறு யார் இவளை மணக்கப்போகிறார்கள், பாவம்!’ என்று எண்ணினான். மணந்தபின், நோஞ்சானான அவளுடைய உருவத்துக்கும் மனதிற்கும் எந்த சம்பந்தமும் இல்லையென்று. கணவனை வார்த்தைகளாலேயே துளைத்தாள் – தான் கிடைத்தற்கரிய பிறவி, அதனால்தான் இந்த முட்டாள் தேடிவந்து மணந்தான் என்றெண்ணியவளாக. ‘எந்த விஷயத்திலும்’ ஒத்துழைக்கவில்லை. மிகவும் குழப்பத்திற்கும் வருத்தத்திற்கும் ஆளான சரவணன் என்னிடம் ஆலோசனை கேட்டபோது, “மனைவியாகத் தன் கடமையைச் செய்ய மறுப்பவளுடன் எதற்குச் சேர்ந்து வாழவேண்டும்? இவளை விவாகரத்து செய்ய வேண்டியதுதான்!” என்றேன். “அது பாவமில்ல?” என்று குழம்பியவனிடம், “உங்கள் சந்தோஷம் மட்டும் முக்கியமில்லையா? உங்களுக்கு இன்னும் இளமை இருக்கிறது. ஒரு நல்ல பெண்ணாகப் பார்த்து, இன்னொரு கல்யாணம் செய்துகொள்ளுங்கள். எத்தனை காலம் இப்படியே நொந்துபோய் இருப்பீர்கள்?” என்றேன் வற்புறுத்தலாக. வேறு வழி தெரியவில்லை. அப்படியே செய்தான். சில மாதங்களுக்குப்பின், “நீங்க சொன்னபடி செய்தேன். இப்போ ரொம்ப மகிழ்ச்சியா இருக்கேன், ஆன்ட்டி,” என்று தெரிவித்தான். பெண்கள் இவ்வளவு சீக்கிரம் திருமண வாழ்வை முறித்துக்கொள்ள மாட்டார்கள். உயிர் போகும் நிலையில் காப்பாற்றப்பட்டு, அந்த மாது மறுவாழ்வு நிலையத்தில் இருந்தபோது சந்தித்தேன். சுமார் முப்பது வருடங்கள் கணவரிடம் வன்முறையைத் தவிர வேறு எதையும் அனுபவித்திராதவள், “அவர் மாறுவாருன்னு பொறுமையா இருந்தேங்க,” என்றாள். அப்போதும் அவளுக்கு அடுத்து என்ன செய்வது என்ற தெளிவு இருக்கவில்லை. தன்னம்பிக்கையை இழந்தவர்களிடம் எந்த ஆற்றலையும் எதிர்பார்க்க முடியாது. அவர்களுக்குச் சவால் என்ற வார்த்தைக்குச் சரியான அர்த்தம் தெரியவில்லை என்றே தோன்றுகிறது. கதை கெண்டகி FRIED சிக்கன் நிறுவனத்தை ஆரம்பித்தபோது, கர்னல் ஸாண்டர்ஸ் என்பவருக்கு 67 வயது. அதற்குமுன், தெரு ஓரத்தில் ஒரு சிறிய உணவுக்கடை வைத்திருந்தார். வேறு ஒருவர் அப்பண்டத்தை விற்றபோது, அதில் குறை கண்டுபிடித்து, அதைவிடச் சிறப்பாகத் தயாரித்து, பெரும் வெற்றி பெற்றார். இளம்வயதில் பண்ணையாளாக, பஸ் கண்டக்டராகப் பணி புரிந்திருந்த இவர் தனது 88-வது வயதில், உலகிலேயே இரண்டாவது இடத்தைப் பிடித்த துரித உணவுச் சங்கிலியின் (fast food chain) நிறுவனராக எப்படி ஆனார்? தன் திறமையில் அவருக்கு நம்பிக்கை இருந்தது. பிறர் பாராட்டாவிட்டாலும், பின்வாங்காது தன் இலக்கைக் குறிவைத்துச் சென்றார். கடுமையாக உழைக்கப் பயந்து, பின் வருத்தப்படுவது எதற்காக? வழியில் எத்தனையோ தவறுகள் வந்திருக்கலாம். அவைகளிலிருந்து சரியான வழி எது என்று கற்றிருப்பார். பிறர் பொறாமைப்படுவதற்காகப் பெருமைப்படவேண்டுமே அல்லாது, பயந்துவிடக்கூடாது என்று புரிந்திருப்பார். ‘கிட்டத்தட்ட தொண்ணூறு வயதிலும் தன் அனுபவங்களையும், திறமையையும் கொண்டு சாதித்திருக்கிறாரே, இவருக்கெல்லாம் உடலில் அப்படி ஒரு பலமா!’ என்ற பெருவியப்பு எழுகிறதா? எதற்குச் சுயபரிதாபம்? மனிதனோ, மிருகமோ, என்றென்றும் ஆரோக்கியமாக இருப்பது என்பது நடக்காத காரியம். இது புரியாது, உடல்நலம் பாதிக்கப்பட்டால், தன்னைப் பார்த்துத் தானே பரிதாபப்பட்டுக்கொண்டு இருந்தால் யாருக்கு நஷ்டம்? ஒருவருக்கு இடுப்புவலி. மருத்துவர் slip disc என்று ஏதோ பெரிய பெயர் சொல்ல. மனிதர் பயந்துவிட்டார். அதன்பின், உடல்நிலை சரியானபோதும், மாடிப்படிகளில் ஏற பயம். மிகக் கனமான சாமான்களைத் தூக்க முடியாது என்றால் நியாயம். நடக்கவே பயந்தால்? இப்போதெல்லாம் வியாதியைப் பற்றிப் பேசுவது நாகரிகமாக ஆகிவிட்டது. முன்பெல்லாம், வயது முதிர்ந்த பெண்கள் சந்தித்துக்கொள்ளும்போது, “சௌக்கியமா?” என்று விசாரிப்பார்கள். இப்போது அந்த முகமன், “என்னென்ன மருந்து சாப்பிடுகிறீர்கள்?” என்று மாறிவிட்டது. தான் தன் உடல் உபாதையைப்பற்றி விவரிக்க, அடுத்தவர் அனுதாபம் காட்டவேண்டும் என்பதுதான் அவரது எதிர்பார்ப்பு. அதனால், உடல்நிலை சீராகிவிடுமா என்றெல்லாம் நீங்கள் கேட்கக்கூடாது. நாம் ஒவ்வொரு முறையும் நமக்கு வந்த, ஆனால் இப்போது சரியாகிவிட்ட, நோயைப்பற்றி ரசனையுடன் விவரித்தால் கேட்பவர்களுக்கு எப்படி இருக்குமோ, நம் உல்லாசம் பறிபோய்விடும். ஒரு சிலர், தாம் ஆரோக்கியமாக இருந்தாலும், தமக்குத் தெரிந்தவர்கள், உறவினர்கள் ஆகியோரின் உடல்நிலைக் குறையை விவரிப்பார்கள். ‘நமக்கு இப்படியெல்லாம் நேரவில்லேயே!’ என்ற நிம்மதியாலா? அல்லது, தம் ஆரோக்கியக் குறைவை சில நொடிகளாவது மறப்பதற்காகவா? எனக்குப் புரியத்தானில்லை. நேர்மறைச் சிந்தனை ‘என்னமோ, என் வாழ்க்கையிலே மகிழ்ச்சியே இல்லே,’ என்று அலுத்துக்கொள்கிறவர்கள் அவர்களுடைய சிந்தனையை மாற்றிக்கொள்ள வேண்டும். ஏனெனில், மகிழ்ச்சி பிறரால் வருவதல்ல. ஒருவரது எண்ணத்தைப் பொறுத்தது. கோயில் ஒன்றில் இலவச நாட்டிய வகுப்பு நடத்தப்படுவதாகக் கேள்விப்பட்டு, அதை நடத்தும் ஆசிரியையிடம் சென்றார் ஒருவர். அவருடைய மகளை அந்த வகுப்பில் சேர்ப்பதற்காக இல்லை. முகத்தில் வருத்தத்தைத் தேக்கிக்கொண்டு, “இருக்கிறவங்க குடுக்கலாம். எங்களைமாதிரி இல்லாதவங்க என்ன செய்யமுடியும்?” என்று பூசை நடக்கும் இடத்திலேயே புலம்ப ஆரம்பித்தவர் ஓயவில்லை – “பேசுவதாக இருந்தால், அப்பால் செல்லுங்கள்,” என்று யாரோ ஒருவர் மிரட்டும்வரை. ‘பிறரைப்போன்று நாம் இல்லையே!’ என்று வருந்த ஆரம்பித்தால், இந்த உலகில் எவருக்குமே நிம்மதி கிடைக்காது. பண வசதி இல்லாவிட்டால், அடுத்த தலைமுறையாவது தங்களைப்போல் கடினமான வாழ்க்கையை அனுபவிக்க வேண்டாம் என்று கல்வியில் ஈடுபடுத்துவதுதான் வசதி குறைந்தவர்கள் செய்யக்கூடிய செயல். தம்முடைய தீய பழக்கங்களைப் பழகிக்கொள்ள வேண்டாம் என்று தம் பிள்ளைகளுக்கு அறிவுரை கூறுபவர்களும் உண்டு. மாறாக, ஓயாத சிந்தனை எதிர்மறையாகவே எழுந்தால் (‘எல்லாம் என் தலைவிதி!’) சக்திதான் விரயம். தம் வருத்தத்தைக் கோபமாக மாற்றிக்கொள்வதால், குடும்பத்தினர் அனுபவிக்கும் மகிழ்ச்சியும் பறிபோய்விடும் என்பது இவர்களுக்குப் புரிவதில்லை. நம்மால் செய்ய முடிந்தது ஏதாவது இருக்காதா! அதை எண்ணி திருப்தி அடையாது, முடியாததைப்பற்றிய கவலை ஏன்? அந்தக் கோயிலின் அருகே இருந்த ஏழை மாது ஒருத்தி தினமும் அதைப் பெருக்கி சுத்தப்படுத்துவாள். இன்னொருவர் கோயில் சுவற்றில் வெள்ளையடிப்பதுபோன்ற வேலையை தானாகச் செய்வார். இருவரும் எந்த லாபத்தையும் எதிர்பாராது, உடலுழைப்பை வழங்குகிறார்கள். ‘வசதி இல்லையே!’ என்று ஏங்குவதில்லை. அதனால் அவர்களுக்கு ‘நம்மால் முடிந்ததைச் செய்கிறோம்!’ என்ற திருப்தி கிடைக்கிறது. (பணத்தை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டவர்கள் திருப்தி அடைந்துவிடுகிறார்களா, என்ன!) நிறைய சம்பளம் கிடைக்கும் என்ற நப்பாசையுடன் ஆர்வமில்லாத துறையில் பட்டம் வாங்கி, உத்தியோகத்திலும் அமர்ந்தபின்னர் மகிழ்ச்சியை இழந்து வாழ்கிறவர்கள் பலர். வாய்த்த உத்தியோகத்தை நல்விதமாக வகித்தால்மட்டும் மகிழ்ச்சியாக இருந்துவிட முடியாது. அதைக் கெடுக்கவும் ஒருசிலர் இருப்பார்கள், கதை நான் ஆங்கிலத்தில் எழுதுவது என் மேலதிகாரியின் பொறாமையைக் கிளப்பிவிட்டது. அவளுக்குப் பிடிக்காத ஒருவரைப்பற்றி அவதூறாக எழுதச் சொன்னாள். ‘நீயே எழுதேன்,’ என்று நான் மறுக்க, முடிந்தவரை எனக்குத் தொந்தரவு கொடுத்தாள். அவள் அப்படி நடந்துகொண்டதில் என்மேல் தவறு இல்லை என்றவரை எனக்குப் புரிந்தது. இருந்தாலும், தினசரி வாழ்க்கையைக் கடப்பதே கடினமாக இருந்தது. பள்ளிக்கூடத்தில் முதன்முதலாகக் காலெடுத்துவைக்கும் குழந்தை முரண்டுபிடிக்குமே, அந்த மனநிலையில்தான் இருந்தேன். நான் பட்ட அவதிகள் மட்டுமின்றி, பிறரது அனுபவங்களும் என் உணர்வுகளைப் பாதித்தால் அவற்றைச் சமாளிக்க நான் ஒரு வழி வைத்திருக்கிறேன். அவற்றை எழுத்துமூலம் வெளியிட்டபின், மனச்சுமை குறைந்தாற்போல் இருக்கும். அது ஒரு வடிகால். பிரசுரத்திற்காக அல்ல. ‘பிறரிடம் கூறி ஆறுதல் அடையலாமே?’ என்றால், யாரை நம்புவது? நம் மீதே தப்பு கண்டுபிடிப்பார்கள். அப்படியே ஏமாற்றப்பட்டால் அனுபவம் என்று வைத்துக்கொள்ள வேண்டியதுதான். இனிமையான நினைவு ஒன்று அதே பள்ளியில் என் சக ஆசிரியை மிஸஸ் சென் ஓய்வுபெறும் நாள் வந்தது. நான் அவளுடன் அதிகம் பேசியதுகூடக் கிடையாது. ஆனால், என்னைத் தனியாக அழைத்து, “உன்னிடம் அபூர்வமான திறமை (rare talent) இருக்கிறது. அதனால் பிறர் பொறாமைப்படுகிறார்கள். Take it easy!” என்றாள், கனிவுடன். சம்பந்தப்பட்டவள் பெயரையோ, அவள் என்னைப் படுத்திய பாட்டையோ குறிப்பிடவில்லை. நான் குழம்பிப் போயிருந்ததை அவள் கவனித்திருக்கிறாள்! எனக்குப் புதிய பலம் வந்தது போலிருந்தது. அதுவரை, ‘எல்லாரும்தான் பேசுகிறார்கள்; எழுதுவதும் அதுபோல்தானே! என்ன பிரமாதம்!’ என்றுதான் எண்ணிக்கொண்டிருந்தேன். மிஸஸ் சென் பல்வித விளையாட்டுகளில் தேர்ந்தவள். அதனாலோ என்னவோ, நம்மை மறைமுகமாக எதிர்ப்பவர்களை எப்படிச் சமாளிப்பது என்று தெரிந்துவைத்திருந்தாள். மிஸஸ் சென்போலன்றி, புலம்புகிறவர்கள்தாம் உலகில் அதிகம். அவர்களுக்கு எத்தனையோ நல்லவை நடந்திருக்கும். ஆனால், நடக்காத, இயலாத, ஒன்றைப்பற்றியே பேசி மருகுவார்கள். ஏன் புலம்பல்? ‘எளிது’ என்றெண்ணி ஒரு காரியத்தைத் தேர்ந்தெடுப்பதில் சில சங்கடங்கள் நேரும். தான் தேர்ந்தெடுத்த காரியம் நினைத்தபடி இல்லையென்று தெரிந்ததும் மிரட்சியாக இருக்கும். ‘முடியும்,’ என்று தனக்குத்தானே தைரியம் அளித்துக்கொண்டு கடக்க வேண்டியதுதான். என்னுடன் படித்த பிருந்தா “எங்கள் வீட்டில் நான் படித்தது போதும் என்றார்கள். நான்தான் பட்டம் வாங்கவேண்டும் என்று பிடிவாதம் பிடித்து, கல்லூரியில் சேர்ந்தேன். இப்போது ஏனடா சேர்ந்தோம் என்றிருக்கிறது,” என்று ஓயாது அலுத்துக்கொள்வாள். பிருந்தாவைப் போன்றவர்களுக்கு மாறும் எண்ணம் கிடையாது. மாறாக, தம்மைப்போல் இல்லாதவர்களுடன் இணைத்துக்கொள்வார்கள். அப்போதுதானே அவர்கள் மனத்தையும் கலைக்கமுடியும்? அம்மாதிரியானவர்களுடன் அதிகம் பழகினால், நமக்கும் அந்தக் குணம் படிந்துவிடும் அபாயம் உண்டு. ‘நல்லவேளை, நாம் இவர்களைப்போல் இல்லையே!’ என்று நமக்கு நாமே தைரியம் அளித்துக்கொள்ளவேண்டியதுதான். பால்யப் பருவத்தில் துயர் அனுபவித்தவர்கள் சந்தர்ப்பம் மாறியபோதும், எப்போதோ பட்ட வேதனையிலிருந்து மீளாது இருந்தால் அவர்களுக்கு என்றுதான் நிம்மதி? கதை சிறுவயதிலேயே தாயை இழந்த ரவி தந்தைக்கும் வேண்டாதவனாகப் போனான். பாட்டி வீட்டுக்கு அனுப்பப்பட்டபோது, கேட்பாரில்லை என்று அவளும் அவனைக் கொடுமைப்படுத்தினாள். மூன்று வயதுப் பிள்ளை விஷமம் செய்கிறான் என்று அவனைக் கட்டில் காலில் கட்டிப்போட்டு விட்டதைப் பெருமையாக எல்லாரிடமும் சொல்லிக்கொள்வாள். எட்டு வயதில் ஒருவரின் தத்துப்பிள்ளையாகப் போனான். அங்கும் அசாத்தியக் கண்டிப்பு. புத்திசாலியாகவும் அழகாகவும் இருந்த ரவி பெரியவனாகி, அமெரிக்காவில் நல்ல வேலையில் அமர்ந்தான். அவனுடைய குழந்தைபோன்ற நிராதரவான மனப்பான்மையால் எந்தப் பெண்ணின் தாய்மை உணர்வையும் எழுப்ப முடிந்தது. ஆனால், அறியாத வயதில், ‘தன்னை ஏன் யாருக்குமே பிடிக்கவில்லை?’ என்று அடைந்த குழப்பம் அவனுக்குள் நிலைத்திருந்தது. தன்னைக் காதலித்த ஒவ்வொரு பெண்ணையும் உடும்பாகப் பற்றிக்கொண்டான், ‘இவளுக்கும் நம்மைப் பிடிக்காது, விட்டுப் போய்விடுவாளோ?’ என்ற அச்சத்தால். அவனுடைய கட்டுப்பாடும், எப்போதும் சார்ந்திருக்கும் மனப்பான்மையும் பொறுக்காது பெண்கள் ஒவ்வொருவராக அவனை விட்டுப்போனார்கள். சிறுவயதில் அனுபவித்ததையே நினைத்துக்கொண்டிருந்ததால், அச்சமயம் அவனிடம் அன்பு செலுத்தாதவர்கள்மேல் கொண்ட ஆத்திரமும் மாறவில்லை. இதற்குத்தான் சொல்லி வைத்திருக்கிறார்கள், “LIVE IN THE PRESENT” (கடந்தகால நினைவுகளிலேயே ஆழ்ந்துபோகாது, நிகழ்காலத்திலேயே இரு) என்று. ‘இப்போது நான் சுதந்திரமானவன். அவர்களால் என்னைக் கஷ்டப்படுத்த முடியாது!’ என்று, நேர்மறைச் சிந்தனையுடன் தனக்குத்தானே தைரியம் அளித்துக்கொண்டிருந்தால் காலமெல்லாம் துயர்ப்பட நேரிட்டிருக்குமா? ‘முடிகிற காரியமா?’ என்கிறீர்களா? அப்படியானால், இத்தகைய சிந்தனையை உறுதிப்படுத்தவென உளவியல் மருத்துவர்களை நாடலாமே! நல்லவரை இனங்காண்பது “என் மகள் கல்யாணத்திற்குமுன் கலகலப்பாக இருப்பாள். இப்போது அதிகம் பேசுவதில்லை. சாந்தமாக, பொறுப்பாக இருக்கிறாள்,” என்று கூறும் பெற்றோர் மகளின் மாற்றம் அவளுக்கு நல்லதுதானா, அல்லது வயது கூடியதால் நேர்ந்ததா என்று யோசிப்பதோ, அதனால் கவலைப்படுவதோ கிடையாது. ஏனெனில், அனேகமாக எல்லாப் பெண்களுமே இப்படித்தான் மாறுகிறார்கள். கதை பல இளைஞர்கள் தங்கள் நண்பனுடைய திருமணத்திற்கு வெவ்வேறு ஊர்களிலிருந்து வந்திருந்தார்கள். மணமகனுடைய உறவுக்காரப்பெண் மல்லிகா அவர்களுடன் கல்லூரியில் மேற்படிப்புப் படித்தவள். பழைய நண்பர்களைப் பார்த்ததும் உற்சாகம் பெருக, அவர்களுடன் உட்கார்ந்து, பழைய நாட்களைப்போல் சிரித்துப் பேசிக்கொண்டிருந்தாள். ஆனால், ஒரு வித்தியாசம். மல்லிகாவுக்கு இப்போது கல்யாணம் ஆகி, பிள்ளைகளும் இருந்தார்கள். மாமியார் முகம் சுண்டிப்போயிற்று. கல்யாணத்திற்கு முன்பு எப்படி வேண்டுமானாலும் இருந்திருக்கலாம். எப்போதும் அப்படியா! ‘இவள் கண்ட ஆண்களுடன் பேசினால், பார்ப்பவர்கள் என்ன நினைப்பார்கள்!’ என்று ஆத்திரப்பட்டாள். தன் மகனுக்குத் தூபம் போட்டாள். காதலித்து மணந்த மனைவியின் போக்கை அவன் தவறாக எடுத்துக்கொள்ளவில்லை. “நாங்க எல்லாரும் ஒண்ணாப் படிச்சவங்கம்மா,” என்றான் அலட்சியமாக. கணவனோ, மாமியாரோ, ஒரு பெண் செய்யும் ஒவ்வொரு காரியத்தையும் கூர்ந்து கவனித்துக்கொண்டு, அதில் குற்றம் கண்டுபிடித்துக்கொண்டே இருந்தால் அப்பெண்ணின் மனநிலை எப்படி இருக்கும்? ‘பெரியவர்களை மதித்து நட,’ என்று தாயும், கணவரும் போதிக்க, குடும்பத்தில் பிரச்னைகளைத் தவிர்க்க பழைய போக்கை மாற்றிக்கொள்வாள் – மகிழ்ச்சியுடன் என்று கூற முடியாது. கதை காமாட்சிக்குத் தான் பெற்ற குழந்தைகளுக்குப் பெயர் வைப்பதோடு திருப்தி கிடைக்கவில்லை. வீட்டுக்குப் பெரியவள் என்ற முறையில், பேரக்குழந்தைகளுக்கும் தானே பெயர் வைக்கவேண்டும் என்பது அவள் நம்பிக்கை. ஆனால், புதுமையாக, நாகரிகமாக, தான் பெற்ற அருமை மகளுக்குப் பெயர் வைக்கவேண்டும் என்று ஒரு மருமகள் எண்ணினாள். அப்படி ஒரு பெயரை யோசித்தும் வைத்திருந்தாள். ‘இந்தத் தெருவில் எல்லார் வீட்டிலும் அந்தப் பெயர்கொண்ட ஒரு சிறுமி இருக்கிறாள். நன்றாக இருப்பதால்தானே வைத்திருக்கிறார்கள்!’ என்பது காமாட்சிப்பாட்டியின் எண்ணம். ‘நாளைக்கு என் குழந்தை தெருவில் போகும்போது அந்தப் பெயரைச் சொல்லி அழைத்தால், பல குழந்தைகள் திரும்பிப் பார்க்கும்!’ என்பது மருமகளுடைய வாதம். ‘நான் சொல்வதை யார் கேட்பார்கள்!’ என்று மாமியார் அரற்றினாள். இறுதியில், அவள் பிடிவாதம்தான் வென்றது. இவ்வாறு, ‘நீ என்னைக் கஷ்டப்படுத்துகிறாய்!’ என்பதுபோல் தன்னிரக்கத்துடன் பேசுவதால் மற்றவர் மனதைத் துன்புறுத்துகிறோம் என்று சிலருக்குப் புரிவதில்லை. நம்மிடம் ஓயாது குற்றம் கண்டுபிடித்துக்கொண்டு, ‘உன் நன்மைக்காகத்தான் சொல்கிறேன்,’ என்று சப்பைக்கட்டுக் கட்டுபவர்கள் உற்றவர்கள் அல்லர். கதை “என் பெண்ணின் முகத்தில் சிரிப்பே மறைந்துவிட்டது. ‘ஏன் எனக்குக் கல்யாணம் செய்துவைத்தாய்?’ என்று கோபிக்கிறாள்,” என்று ஒரு தாய் என்னிடம் குறைப்பட்டாள். மாப்பிள்ளை நல்லமாதிரிதான். பின் என்ன குறை? "வெளியில் எங்காவது போனால், பட்டுப்புடவைதான் கட்டிக்கொண்டு போகவேண்டும் என்று நிர்ப்பந்திக்கிறாளாம் மாமியார். இவளுக்கோ, நைலக்ஸ்தான் பிடிக்கிறது!’ உடுத்துவது ஒவ்வொருவருடைய சொந்த விருப்பம். ஆனால், ஒருமுறை விட்டுக்கொடுத்தால், தம் பிடியை இறுக்கிக்கொள்வார்களே, அதிகாரம் செலுத்துபவர்கள்! புன்சிரிப்பு மறையாது, ‘இதைத்தான் சாப்பிட வேண்டும், இப்படித்தான் நடக்கவேண்டும்,’ என்று பிறரைத் தொணதொணத்துக்கொண்டு இருப்பவர்களுக்கு இறுதியில் ஏமாற்றம்தான் கிட்டும். அவர்கள் எவ்வளவு இனிமையாகச் சொல்வதாக நினைத்தாலும். யாரும் அவர்கள் சொற்படி நடக்கமாட்டார்கள். கேள்வி: இது வதையா? அக்கறையுடன், நம் நன்மைக்குத்தானே சொல்கிறார்கள்? பதில் கேள்வி: “உனக்கு சந்தர்ப்பத்துக்குச் சரியாக நடக்கத் தெரியாது. அறிவோ, அனுபவமோ போதாது!” என்று மறைமுகமாக மட்டம் தட்டுவது போலில்லை? உடனிருப்பவர் பழித்துவிடுவாரே என்று பயந்து, எந்தக் காரியத்தைச் செய்யும்போதும் அதீத கவனத்துடன் செய்தால், அல்லது விட்டுக்கொடுத்துக்கொண்டே இருந்தால், ஒருவரது தன்னம்பிக்கை குறைந்துகொண்டே போய்விடாதா! “இம்மாதிரி ஒருவருடன் சேர்ந்து வாழ்ந்து, உடலும் மனமும் ஒருங்கே பாதிக்கப்பட்டு வாழ்வதைவிட தனியாக இருந்து ஆரோக்கியமாக இருப்பது மேலானது,” என்கிறார் ஓர் அனுபவசாலி. உபயோகமான, மகிழ்ச்சி மட்டுமே அளிக்கும் உறவுகள் நம் கனவுகள் நனவாக கூடியவரை ஒத்துழைப்பார்கள். அப்படி இல்லாவிடினும், ‘இது நடக்கிற காரியமா!’ என்று அவநம்பிக்கை தெரிவிக்காமலாவது இருப்பார்கள். ஒருவர் துக்கத்தில் ஆழ்ந்திருக்கையில் ஆறுதலாக இருக்கும் ஒரே நபர்தான் நல்ல நண்பர். கதை ஒரு நாளிரவு, “உன்னை நாளைக்குப் பார்க்கமாட்டேன்னு தோணுது!” என்று கணவன் சொல்ல, சரோ சிரித்தாள். “ராத்திரி அப்படி எங்கே போயிடப்போறீங்க?” அப்போது இருவருமே எதிர்பார்க்கவில்லை, அவன் இவ்வுலகைவிட்டே போகப்போகிறான் என்று. சரோவால் அந்த அதிர்ச்சியைத் தாங்கவே முடியவில்லை. ‘முப்பது வயதுகூட நிரம்பவில்லை! இவள் என்ன பாவம் செய்தாளோ!’ என்பதுபோல், அவள் காதுபடவே சிலர் கரித்தார்கள். அடுத்த சில ஆண்டுகளில், சரோ மேற்படிப்பைத் தொடர்ந்து, நல்ல உத்தியோகத்திலும் அமர்ந்தாள். முன்பு பழித்தவர்கள் இப்போது சொந்தம் கொண்டாட வந்தபோது அவளுக்கு உலகம் புரிந்தது. வெளியூரில் இருந்த தன் இல்லத்திற்கு தூரத்து உறவினளான சுந்தரியை வற்புறுத்தி அழைத்து, நன்கு உபசரித்தாள். ‘என் கணவர் மறைந்தபின், நாள் தவறாது, இரண்டு மைல் தொலைவிலிருந்த என் வீட்டிற்கு ஒரு மாதம் நடந்தே வந்து, ஆறுதலாகப் பேசினீர்களே! அந்த நன்றியை மறக்கவே மாட்டேன்!’ என்று திரும்பத் திரும்பச் சொன்னாளாம், நன்றிப்பெருக்குடன். இப்படிப்பட்ட நண்பர்கள் வெவ்வேறு துறையில் ஈடுபாடு கொண்டவராக இருக்கலாம். ஒத்த மனத்தினராக இருக்க வேண்டிய அவசியமுமில்லை. வயது வித்தியாசமும் பெரிதில்லை. நல்ல நண்பரை எப்படி இனங்கண்டுகொள்வது? அவருக்காக நாம் மாற வேண்டியிருக்காது. நம் கடந்தகாலப் பிழைகள் அவருக்குத் தெரியவந்தாலும், எதிர்காலம் சிறப்பாகத்தான் அமையும் என்ற நம்பிக்கையுடன் நாம் இருக்கிறபடியே நம்மை ஏற்பார். பிரதிபலனை எதிர்பாராது, நம்மை ஊக்குவிப்பார். நம்மையே நமக்கு உணர்த்துகிறவர். நம் வெற்றிக்காகப் பெருமைப்படுகிறவர். நம் இழப்புகள், குறைகள் பெரிதாகத் தோன்றாதுபோக, நம்மை நம்மால் ஏற்கமுடியும். அவர் அண்மையில் இருக்கையில், நாம் அதிகம் சிரிப்போம். நாம் என்ன சொன்னாலும், மனதில் எதை நினைத்து அப்படிச் சொல்கிறோம் என்பது அவருக்குப் புரியும். இப்படி ஒருவர் கிடைத்தால், அவரை SOULMATE (ஆத்மார்த்தி) என்கிறோம். தற்காலத்திலோ, இன்னா செய்தாருக்கு நன்னயம் செய்தால் அவர் நாணுவதில்லை. நல்லவர்களை ‘ஏமாளி’ என்று எண்ணிவிடும் காலம் இது. இருந்தாலும், நமக்கென்று சில உண்மையான நண்பர்கள் கிடைக்காமலா போவார்கள்! ஊக்கமும் உந்துதலும் உனக்குள்ளே “பலர் எழுதுவதும் அரைத்த மாவையே அரைப்பதுபோல் – ஒரே மாதிரி – இருக்கிறது. நீங்கள் எப்படி வித்தியாசமாக எழுதுகிறீர்கள்?” இலக்கிய நிகழ்ச்சி ஒன்றில் என்மேல் தொடுக்கப்பட்ட கேள்வி இது. என் பதில்: “எதையும், ‘இப்படித்தான் இருக்கவேண்டும்,’ என்று பிறர் சொல்வதை ஏற்காதீர்கள். அது குழந்தைகளுக்குத்தான் சரி. எப்போதாவது, ‘ஏன் இப்படி இருக்கக்கூடாது?’ என்று சிந்தித்துப்பாருங்கள்”. அதன்பின், என்னைத் தனிமையில் சந்தித்த ஒரு பெண்மணி, “நானும் உங்களைமாதிரிதான் – எல்லாவற்றையும் வித்தியாசமாக யோசிப்பேன். எழுதவேண்டும் என்று மிகவும் ஆசை,” என்றுவிட்டு, “ஆனால், பிறர் என்ன நினைப்பார்களோ என்று பயமாக இருக்கிறது!” என்றாள். உலுக்கும் உலகு நம்மைச் சுற்றியிருக்கும் பலரும் நம்மைக் கீழே இழுக்கக் காத்திருப்பார்கள். அப்படிப்பட்டவர்களால் எல்லாம் மனதைத் தளரவிடலாமா? நம் எண்ணத்தில் உறுதியாக இருந்தால், தோல்வி அடைவது அவர்களாகத்தான் இருக்கும். இதை ஒட்டித்தான், “பழி வாங்குவது பலகீனமானவர்கள் செய்வது. மன்னிப்பது திடமானவர்களின் குணம். நம்மை உலுக்குபவர்களை அலட்சியம் செய்வது அறிவுடையோரின் தன்மை,” என்று அலசுகிறார் திரு.அனுபவசாலி. சந்தேகம் கூடவே வருதே! நமக்கு என்னென்னவோ செய்யவேண்டும் என்ற ஆசைகள் இருக்கலாம். ஆனால், அதைப்பற்றியே யோசிக்கும்போது, வேண்டாத சந்தேகங்களும் எழத்தான் செய்யும். அவற்றைத் தவிர்க்கமுடியாது. அதற்காக, ‘இதைச் செய்யலாம், இதைச் செய்யலாம்,’ என்ற கனவுலகிலேயே சஞ்சரித்து, அதிலேயே திருப்தி அடைந்துவிட்டால் எப்படி? எதையும் ஆரம்பித்தால்தானே முடிக்க முடியும்? ‘இப்படிச் செய்யப்போகிறேன்,’ என்று சொல்லிக்கொண்டே இருந்தாலும் அபாயம். கதை ரகுராமன் கனவுகளிலேயே நிறைவு காண்பவர். அறிவில் சிறந்திருந்தாலும், ‘அட! தனக்கு இவ்வளவு கற்பனை வளம் இருக்கிறதே!’ என்று ஆச்சரியம் கொண்டவராக, தான் நினைப்பதையெல்லாம் பிறரிடம் கூறுவார். நெடுஞ்சாலைகளில் வளைந்த இடங்களில் வாகன விபத்துகள் அதிகம் நிகழ்கின்னறன என்று படித்ததும், அவருக்கு ஓர் எண்ணம் உதித்தது. சாலை ஓரமாக, வாகனம் ஓட்டுபவர்களின் கண்ணில் படும் நிலையில் ஒருவித விளக்குகள் பொருத்தினால் என்ன என்று யோசித்தார். தன் எண்ணத்தை ‘நண்பன்’ என்று கருதிய ஒருவனிடம் ரகுராமன் தெரிவித்தபோது, அவன் ‘இதெல்லாம் நடைமுறைக்கு உதவாது,’ என்றான் அலட்சியமாக. தன்மீதுள்ள அக்கறை, தான் தோல்வியுறுக்கூடாது என்ற நல்லெண்ணம் நண்பனுக்கு என்று எண்ணினார் அந்த அப்பாவி. பெருமிதத்துடன், அதை எவ்வாறு தயாரித்து, எப்படிப் பொருத்தவேண்டும் என்று விரிவாக விளக்கினார். அதுதான் அவர் செய்த மாபெரும் தவறு. ரகுராமனுடைய கற்பனையில் உதித்த கண்டுபிடிப்பைத் தானே தயாரித்ததுபோல் அந்த நண்பன் தகுந்த இடத்தில் கூற, அது நடைமுறைக்கு வந்தது. திருடியவனுக்குப் பெருமளவு லாபம்! எந்தத் துறையானால் என்ன! நம் வாயைப்பிடுங்கி, நம் யோசனைகளையெல்லாம் தமது என்று சொல்லிக்கொள்ளும் இரண்டாந்தார மனிதர்கள் இல்லாமலா போவார்கள்! இவர்களுக்குச் சுயமாகச் சிந்திக்கும் திறன் கிடையாது. ஆனால், சிந்தனை வளம் உடையவர்களை ஏளனம் செய்வதுபோல் பாசாங்கு செய்து, உண்மையை வரவழைக்கும் சாமர்த்தியம் உண்டு. உன்னையே ஊக்கிக்கொள் நமக்குச் சரியென்று தோன்றுவதை, பிடித்ததைச் செய்யும்போது பிறரது உந்துதல் தேவையில்லை. பிறர் ஊக்கம் அளிக்கவேண்டும் என்று எதிர்பார்த்தால், ஏமாற்றம்தான் விளையும். ஊக்கம் என்பது தனக்குத்தானே அளித்துக்கொள்வது. “தன்னையே நம்புகிறவன்தான் பிறருடைய நம்பிக்கைக்குப் பாத்திரமாக முடியும்” (யூதர்களின் பழமொழி). ஒரே இடத்தில் உட்கார்ந்து, யோசனை செய்தபடியே இருந்தால் அவநம்பிக்கை பெருகிவிடும். அப்போதுதான் பிறரது ஆலோசனையை, அவர்களது பக்கபலத்தை, நாடத் தோன்றுகிறது. நாம் செய்யப்போகும் காரியத்திற்குப் பிறரது உத்தரவு ஏன்? ‘முடியாத காரியம்’ என்று நாம் கைவிட்டதைப் பிறர் எப்படிச் செய்து முடிக்கிறார்கள்? அவர்களுக்கு அதிகத் திறமை இல்லாமல் இருக்கலாம். பயம் எழும்போதெல்லாம், வேறொரு காரியத்தில் ஈடுபடுகிறார்கள். அதனால் தெளிவும் பெறுகிறார்கள். விரும்பி உழைப்பதால் வெற்றி அடைகிறார்கள். கதை நான் ஆங்கிலத்தில் மறைந்த என் மகனைப் பற்றி எழுத ஆரம்பிக்கும்போது, அதைப் பிரசுரிக்கும் எண்ணமே வரவில்லை. என் நினைவுகளைப் பதிவு செய்வதற்காக ஆரம்பித்தேன். பல நினைவுகள் ஒரே சமயத்தில் எழ, சில நாட்கள் ஒரே மூச்சில் பதினாறு பக்கங்களைக் கைப்பிரதியாக (ஆங்கிலத்தில்) எழுத முடிந்தது. பேசுவது குறைந்தது. “உனக்கு வேண்டுமானால் அது பெரிய துக்கமாக இருக்கலாம். மற்றவர்களுக்கு என்ன வந்தது? நீ எழுதுவதை ஏன் படிப்பார்கள்?” என்று அவநம்பிக்கை தெரிவித்தவள் பொறாமையால் பேசுவது புரிந்து, அவளை அலட்சியம் செய்தேன். நான் எழுதும்போதே அதைப் படித்து, ஊக்கமளித்துவந்த என் கவுன்சிலர்-தோழியோ, ‘நீ கண்டிப்பாக இதைப் பிரசுரிக்கவேண்டும். இதனால் பலருக்கு நன்மை,’ என்று வற்புறுத்தினாள். கதை குழந்தையே வேண்டாம் என்று உறுதியாக இருந்தாள் ஸியூ ஙா (Siew Nga). என்னுடன் பணிபுரிந்த இளம்பெண் அவள். நான் எழுதியதை உடனுக்குடன் படித்தபோது அவள் மனம் மாறியதாம். சிறு வயதில், தந்தை தன் குடும்பத்தைக் கொடுமை செய்திருந்தால் என்ன, தான் இப்போது ஒரு நல்ல அம்மாவாக இருக்கமுடியாதா என்ற உற்சாகம் உண்டாயிற்று. ‘தாய்-குழந்தைக்கு இடையே இவ்வளவு அருமையான நெருக்கம் இருக்க முடியுமா!’ என்று பிரமித்தாளாம். அதன் விளைவாக, தன் முடிவை மாற்றிக்கொண்டாள். சீக்கிரத்திலேயே ஒரு குழந்தையைப் பெற்றெடுத்தாள். தோழி கூறிய இக்கதையைக் கேட்டவுடன், ‘யார் பிரசுரிப்பார்கள்?’ என்ற ஐயம் எழுந்தது. பதிப்பாளர்கள் நம்மைப்பற்றிப் பிறரிடம் விசாரித்துத் தெரிந்து கொள்வார்கள் என்பதால், ‘ஆங்கில தினசரிக்கு அடிக்கடி எழுது. அன்றாட நிகழ்வுகளை ஒட்டி இருக்கவேண்டும்,’ என்றெல்லாம் குடும்பத்தினரால் எனக்கு ஆலோசனைகள் வழங்கப்பட்டன. வெளியாகும் ஏதாவது செய்தியைக் குறித்து என் கருத்துக்களை கணினியில் உடனுக்குடன் எழுதி அனுப்ப முடிந்தது. நான் அனுப்பிய பல கடிதங்கள் Letter of the day என்ற பகுதியில் வந்தன. அனுப்பிய அடுத்த நாளே பிரசுரமாக, நம்பிக்கை எழுந்தது. அத்துடன், இந்திய கலைத்துறையில் விமர்சனம், சமூக இயல் சம்பந்தமான, நகைச்சுவையுடன் கூடிய கட்டுரைகள். (அடிக்கடி என் கணவரின் மண்டை உருளும்!). சில நாட்களில், மூன்று வெவ்வேறு பகுதிகளில் ஒரே சமயத்தில் வெளியாகின. ஆரம்பத்தில் எழுந்த தயக்கம் மறைந்தது. பதினான்கு ஆண்டுகள் இப்படிக் கழிந்தன. ‘உங்கள் எழுத்துலக அனுபவங்கள்?’ என்று அயல்நாட்டு பதிப்பாளர் கேட்டு அனுமதிக்க, தமிழில் எழுதிய பிறவற்றையும் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து, புத்தக வடிவில் கொணர முடிந்தது. சிலரிடம் எதைப்பற்றியாவது விவாதித்தபின், “நீங்கள் எப்படி எழுதப்போகிறீர்கள்?” என்று ஆர்வத்துடன் விசாரிப்பார்கள். “எப்படி எழுதப்போகிறேன் என்று எனக்கே இப்போது தெரியாதே!” என்று உண்மையை ஒப்புக்கொண்டால் கோபிப்பார்கள். கரு கிடைத்தவுடன் எழுத ஆரம்பித்தால் அந்த அவசரம் எழுத்துப்படிவத்தில் வெளிப்பட்டுவிடும். படபடப்பு இல்லாது, நிதானமாக யோசித்து எழுதினால்தான் சுவையாக இருக்கும். இது புரியாது, பிறர் நம்மைத் தவறாகப் புரிந்துகொண்டால்… விடுங்கள்! மனிதர்களை மாற்ற முடியாது. புகழ்ச்சிக்கு மயங்கினால்… கலைவிமர்சராக ஒரு நாட்டிய நிகழ்ச்சிக்குப் போயிருந்தேன். புகழ்பெற்ற அக்கலைஞர் எனக்குத் தெரிந்தவர் என்றதால், மறுநாள் காலை அவரை அழைத்து, எந்தெந்த அம்சங்கள் சிறப்பாக இருந்தன என்று விவரிக்க ஆரம்பித்தேன். அவர் உடனே என்னைத் தடுத்து, “எந்த இடம் சரியாக இல்லை என்று மட்டும் கூறுங்கள்,” என்றார்! அவர் முன்னேற்றம் அடைந்ததன் காரணம் புரிந்ததா? குறையை ஏற்காதவர்கள் ‘நான் தவறே செய்யமாட்டேன். என்னைக் குறை கூறுகிறவர்களுக்கு என்னைவிட அதிகமாகத் தெரியுமோ?’ என்பதுபோல்தான் பலரும் பேசுகிறார்கள். இத்தகையினர் ஓரளவு உயர்ந்தபின், கர்வத்தால் அங்கேயே நிலையாக நின்றுவிடுவார்கள். பெரிதாக எதையும் சாதிக்க முடியாது. இவர்களுக்குத் தம்மைப் புகழ்கிறவர்களைத்தான் பிடிக்கும். அவர்களே உற்ற நண்பர்கள் என்று நினைத்துவிடுவார்கள். ஆணோ, பெண்ணோ, எந்த வயதினராக இருந்தாலும், அவர்களைப் புகழ்ந்தால் காரியத்தைச் சாதித்துக்கொள்ளலாம் என்பது பலரது அனுபவம். சிறு குழந்தைகளைப் புகழ்ந்தால், ‘நல்ல பிள்ளை, புத்திசாலி’ என்று பெரியவர்கள் சொல்வதை அப்படியே ஏற்பார்கள். அதன்மூலம் தன்னம்பிக்கை வளரும். அதற்காக, ஒரேயடியாகப் புகழ்ந்தாலும் விளைவு எதிர்மாறாக அமைந்துவிடும். கதை நான் உத்தியோகம் பார்த்த பள்ளி ஒன்றில், படிப்பில் கீழ்த்தங்கிய மாணவிகள் ஒரே வகுப்பில் சேர்க்கப்பட்டு இருந்தார்கள். அங்கு பலரும் அழகாக இருப்பதைக் கண்டு ஆச்சரியமாகப் போயிற்று எனக்கு. வகுப்பில் கவனம் செலுத்தாமல், பென்சிலைக் கூர்செய்யும் சிறு சாதனத்தின் பின்புறம் இருந்த கண்ணாடியில் அடிக்கடி முகத்தைப் பார்த்து ரசித்துக்கொண்டார்கள் அந்த பதின்ம வயதுப் பெண்கள். ‘ஏன் இப்படி?’ என்று யோசித்தேன். ‘நீ எவ்வளவு அழகாக இருக்கிறாய்!’ என்று சிறு குழந்தையாக இருந்தபோது பாராட்டி இருப்பார்கள் பெற்றவளும் பிறரும். குழந்தையின் முகம் மலர்வதைக் கண்டு அவர்களுக்கும் மகிழ்ச்சி எழுந்திருக்கும். வேறு எந்த குணமோ, திறமையோ முக்கியமில்லை என்பதுபோல் ஓயாமல் இதையே சொல்லிக்கொண்டு இருந்தால், பெரியவர்களானபின்பும், அழகைத் தக்க வைத்துக்கொள்வதைத்தவிர வேறு எதிலும் மனம் போகாது. தம் அழகைப் பாராட்டுகிறவர் நல்லவர்தானா, அல்லது ஏதாவது உள்நோக்கத்துடன் அப்படிச் செய்கிறாரா என்றெல்லாம் யோசனை போகாது. பெண்களை வசப்படுத்த புகழ்ச்சி ஒரு வழி என்று கண்டுகொண்டு, அநேக ஆண்கள் இம்முறையைப் பின்பற்றுவது உண்டு. தகாத முறையில் நடக்க முயற்சித்த ஆண்களைப்பற்றிய பேச்சு வந்தபோது, “உங்களிடம் முதலில் என்ன சொல்வார்கள்?” என்று என் மாணவிகளில் சிலரைக் கேட்டேன். “அழகா இருக்கே!” இதையே பலவிதங்களில் கூறினார்கள், சற்று வியப்புடன். லேசான சிரிப்பும் கலந்து வந்தது. வீண்புகழ்ச்சியை நம்பினால் நமக்குத்தான் கேடு வரும் என்பது இதற்கு இது ஓர் உதாரணம். அது மட்டுமா! புகழ்ச்சியை மட்டுமே சந்தித்தவர்கள் தம்மை யாரேனும் சற்றே திட்டினாலும் இடிந்துபோய்விடுவார்கள். பெரியவர்களாகப் போனதும், தம்மீது குறை காண்பவர்களின்மீது ஆத்திரம் எழும். புகழவே கூடாதா? பாராட்டும்படியாக ஏதாவது இருந்தால், ஓரளவோடு புகழலாம். ஆனால், முகஸ்துதி செய்பவர்களை, அல்லது வெகுவாகப் புகழ்கிறவர்களிடம் கவனமாக இருக்கவேண்டும். மிகப் பணிவாக நடந்துகொள்பவர்களும் இதே ரகம்தான். நம்ப முடியாது. எவ்வளவு புகழலாம்? “புகழ்ச்சி என்பது தேன் போன்றது. சிறிதளவு இனிமையாக இருக்கும். அளவுக்கு அதிகமாகப்போனால், வயிற்றைக் கெடுத்துவிடும்,” என்கிறார் ஓர் அனுபவசாலி. புகழ்ச்சிக்கு அடிமையாகி, அவர் எதையெல்லாம் இழந்தாரோ! கதை பிரபல நடிகர் நடித்த நீண்ட படம் அது. தொலைகாட்சி நிகழ்ச்சி ஒன்றில், சிங்கப்பூர் ரசிகர்களைக் கேட்டார்கள்: “படம் எப்படி இருந்தது?” அனேகமாக எல்லாரும், “சூப்பர்!” என்று பாராட்டினார்கள். ஒருவர் மட்டும், “பல கோடி செலவழித்து, இரண்டு வருடங்கள் தயாரித்து வெளியிட அப்படி இதில் என்ன இருக்கிறது?” சொன்னவர் வைரத்தைத் தரம் பார்க்கிறவர். அது ஏன் மற்றவர்கள் எல்லாரும் பாராட்டினார்கள்? பிரபல நடிகர் என்பதால் பாராட்டித்தான் ஆகவேண்டும் என்று நினைத்திருப்பார்கள். தங்கள் நேரம் வீணாகிவிட்டதென ஒத்துக்கொள்ள விரும்பாது, அதைப் பிறரும் அறிந்துவிடக்கூடாது என்ற நோக்கமாகவும் இருக்கலாம். சாண்ட்விச் திட்டு சமையலில் அதிக அனுபவமில்லாத ஒரு பெண் சமைத்துவைத்ததைச் சாப்பிட்டபின், “இன்று பொரியல் நன்றாக இருந்தது. உப்பு, காரம் எல்லாம் அளவோடு இருந்தது,” என்று ஆரம்பித்தால் மகிழ்ந்துவிடுவாள். அடுத்து, “எண்ணையைக் கொஞ்சம் குறைத்துவிடு. இல்லாவிட்டால், கடைசியில், ஓட்ஸ் சேர்த்து லேசாக வறுக்கலாம்,” என்று மெள்ளக் கூறினால், அக்குறை அவளைப் பெரிதாகப் பாதிக்காது. அடுத்த முறை, அதிக அக்கறையுடன் சமைப்பாள். வளரும் குழந்தைகளிடம் குற்றம் கண்டுபிடிக்கும்போது, இம்முறை பயனளிக்கும். இந்த நியதியைத் தவறாகப் பயன்படுத்தியவர்களும் உண்டு. கதை மலாய் ஆசிரியை ஜலீலாவுக்கு அவள் வீட்டுத் தோட்டக்காரர், மற்ற கடைநிலைத் தொழிலாளிகள் ஆகியோரின் இனத்தைச் சேர்ந்த தமிழ் மாணவி சுனந்தா அழகாகவும், புத்திகூர்மையானவளாகவும் இருந்தது எரிச்சலை ஊட்டியது. “உன் கண் அழகாக இருக்கிறது. மூக்கும் அழகாக இருக்கிறது. கையெழுத்து மட்டும் ஏன் அழகாக இல்லை?” என்று கேட்டுக் கேட்டு அவளை வதைத்தாள். மூக்கிற்கும் கையெழுத்திற்கும் என்ன சம்பந்தம்? ஏழு வயதுக் குழந்தைக்கு இப்படிச் சுற்றிவளைத்துப் பேசினால் என்ன புரியும்? குழப்பம் உண்டாக, கையெழுத்து இன்னும் மோசமாகிற்று. ‘ஏன் தினமும் அதையே சொல்கிறாள்? டீச்சருக்குப் பைத்தியமோ?’ சந்தேகத்தைத் தாயுடன் பகிர்ந்து கொண்டாள். ஆதரவாகப் பதில் வந்தது. “நீ பெரியவளானதும், காசோலையில் மட்டும்தான் உன் கையெழுத்து இருக்கும். நீ மிகவும் புத்திசாலி! அதுதான் பலருக்கும் உன்னைப் பிடிப்பதில்லை”. அவள் வாக்கு பலித்தது. கணினி நடைமுறைக்கு வந்தபின், கையெழுத்து எப்படி இருந்தால் என்ன! அந்த ஆசிரியையைவிட மிக மிக உயர்ந்த நிலைக்குப் போனாள் சுனந்தா. நம்மிடம் ஒருவர் குற்றம் கண்டுபிடிக்கும்போது ஆத்திரம் எழும். குழப்பமும் எழக்கூடும். அது இயற்கை. அந்த உணர்ச்சிகளுக்கு பெருமதிப்பு கொடுக்காது, நாம் மதிக்கும் ஒருவர் நம் குறையைச் சுட்டிக்காட்டும்போது, அது நியாயமாக இருக்கிறது என்று தோன்றி திருத்திக்கொண்டால் உயரலாம். அதைத்தான் நான் ஆரம்பத்தில் குறிப்பிட்ட நடனக் கலைஞர் செய்தார். பலருக்கும் புகழை ஏற்கும் திறன் இல்லாமல் போய்விட்டது என்பது வருந்தத்தக்கது. தெரியாத்தனமாக, ஆரம்பகாலக் கலைஞர் ஒருவரை நான் பாராட்டிவிட்டேன். அடுத்த நாள் அதே நிகழ்ச்சியில், நாட்டியத்தில் முழுமையாகக் கவனம் செலுத்தாது அவர் ஆடியதைப் பார்த்து நான் கற்றேன்: அளவோடு புகழவேண்டும். அதுவும், தகுதி இருந்தால்தான். இல்லாவிட்டால், தலைக்கனம் கூடிவிடும். இதைத்தான் என் தாய் தினமும் சொல்லி வந்திருக்கிறாள்: “‘தான்’ அப்படின்னு ஜம்பமா இருந்தா, சாமி தலையிலே பட்டுனு போட்டுடும்!” இந்த மனித மனம்! “வீண் வேலை! இவ்வளவு சிறிய மல்லிகைக் கிளையை உடைத்துவந்து நடுகிறாயே! எங்காவது செடி முளைக்குமா?” அவநம்பிக்கை தெரிவித்தாள் தாய். ஏன் செய்கிறோம் என்றே புரியாது எதையாவது ஆரம்பித்துவிட்டு, சக்தி, நேரம் இரண்டையும் வீண்டிக்கும் பலரைக் கண்டிருப்பவள் அவள். சீத்தலைச் சாத்தனாரைப்போல், செய்த தவற்றுக்காகத் தன்னையே தண்டித்துக்கொண்டுவிடுவாளோ மகள் என்ற அனுசரணையே அத்தாயை அவநம்பிக்கை தெரிவிக்க வைத்திருக்கும். “முளைக்கும்,” என்றாள் கீதா, உறுதியாக. அவள் நினைத்தபடியே ஆயிற்று. ஒருக்கால் அந்தச் சிறிய கிளை பெரிய செடியாக வளர்ந்திருக்காவிட்டாலும், கீதா மனம் தளர்ந்திருக்கமாட்டாள். அடுத்தமுறை, வேறு விதமாகச் செய்துபார்ப்பாள். நல்லதுதான் நடக்கும், வெற்றி கிட்டும் என்ற குணம் முன்னுக்கு வருபவர்களுக்கே உரித்தானது. நானா! தவறு செய்தேனா! தான் செய்தது தவறுதான் என்று புரிந்தும், ‘அது சரிதான்!’ என்று வாதாடுபவர்களுக்கு, ‘பெரிதாக எதையும் சாதிக்க முடியவில்லையே!’ என்ற ஏக்கம் இருக்கும். செய்வது சிறிய காரியமாக இருந்தாலும் அதைச் செவ்வனே செய்து முடித்தால் போதாதா? ‘அதிகம் படிக்க முடியவில்லை, பணக்காரனாக முடியவில்லை’ என்று தம் விதியை எண்ணி நொந்து, தாம் பின்தங்கிவிட்டதற்குச் சந்தர்ப்ப சூழ்நிலையைக் குற்றம் சாட்டுபவர்கள் அநேகர். ஒருவருக்கு திறமை, ஊக்கம் இரண்டும் இருக்கலாம். இருப்பினும், எடுத்துக்கொண்ட காரியத்தைப்பற்றிய மனப்பான்மையே அது எவ்வளவு சிறப்பாக அமையும் என்பதை நிர்ணயிக்கிறது. ‘எனக்குத் திறமையும், உழைப்பும், எல்லாவற்றிற்கும் மேலாக, ’நான் முன்னுக்கு வருவேன்’ என்கிற திடமான நம்பிக்கையும் இருக்கிறதே!’ என்று சிந்தித்தால், எவரும் முன்னுக்கு வரலாம். இருவருக்கு ஒரேமாதிரியான அனுபவம் ஏற்பட்டிருக்கும். ஆனால், அவர்கள் அதை எதிர்கொள்வது வெவ்வேறாக அமையக்கூடும். அதனால் அவர்கள் வாழ்க்கையின் திசையே மாறுபட்டுவிடும். கதை சகோதரிகள் பாமா, ருக்மணி இருவருமே உறவினர் ஒருவரால் பாலியல் வதைக்கு ஆளானார்கள். வெவ்வேறு தருணங்களில். அந்தச் சம்பவம் தீராத வடுவை ஏற்படுத்திவிட்டது சிறியவள் ருக்மணிக்குள். எந்த ஆணையுமே நம்பக்கூடாது, எல்லாருமே காமுகர்கள் என்று தீர்மானித்தாள். எத்தனை வயதாகியும், அவளது முடிவு மாறவேயில்லை. திருமணமானபின்னரும், கணவர் பிற பெண்களுடன் பேசிப் பழகினால், அச்சம் ஏற்பட்டது. அவரும் ஆண்தானே! மயங்கிவிடுவாரே! ருக்மணியைப்போன்றுதான் பலரும் நடக்கிறார்கள். வாழ்வில் நடப்பது பத்து சதவிகிதமாக இருந்தால், அதை நினைத்து அஞ்சி, வருந்தி, இன்னும் பல எதிர்மறைக் குணங்களுக்கு ஆளாகித் தவிப்பது மீதி. பாமாவோ, ‘அது ஒரு கெட்ட நிகழ்வு’ என்று ஒதுக்கினாள். மறக்க முடியாததாக இருந்தாலும், பிறரிடம் எப்படி ஜாக்கிரதையாகப் பழகவேண்டும் என்று அதிலிருந்து பாடம் கற்றாள். உத்தியோகம் வகிக்கையில், ஆண்களுடன் பழகவேண்டிய சந்தர்ப்பங்கள் அமைந்தபோது, அவர்கள் குணாதிசயங்கள் பிடிபட்டன. எல்லாருமே தீயவர்கள் அல்லர் என்று தெளிந்தாள். ‘ஆண்களுடன் இவ்வளவு சகஜமாகப் பேசுகிறாயே!’ என்று தங்கை முகம் சுளித்தாள். பாமா தன் பங்கு நியாயத்தை எடுத்துச்சொல்ல முயலவில்லை. குழந்தைகள்போல் பிறர் நம்மிடம் குறை கண்டுபிடித்தால், உடனே அவரிடம் என்ன தவறு என்று கூறித் தாக்குவது சிறுபிள்ளைத்தனம். இருப்பினும், குழந்தைகளிடமிருந்து நாம் கற்கவேண்டியது நிறையவே இருக்கிறது. நாம் வளர, வளர, சிறுவயதிலிருந்த இயற்கையாக அமைந்த பல நற்குணங்களை விட்டுவிட்டோம். முக்கியமாக, சிறு குழந்தைகள் தம்மைப் பிறருடன் ஒப்பிட்டுக் கொள்வதில்லை. விலை உயர்ந்ததாக இருக்கிறதோ, இல்லையோ, எந்தப் பொருளையும் வைத்துக்கொண்டு மகிழ்ச்சியுடன் விளையாடுவார்கள். கத்தரிக்காய் காம்பில் நூல் கட்டி, ‘வண்டி!’ என்று இழுத்துக்கொண்டு போவதும், பூசணி விதையை ஒருவர்மேல் ஒருவர் பிதுக்குவதும் குதூகலமான விளையாட்டுகள் அவர்களுக்கு! “எதுவும் இல்லாதபோது பொறுமை, எல்லாம் இருக்கையிலும் நிதானமாக நடப்பது – இவைகளால்தான் ஒருவர் உருவாகிறார்,” என்கிறார் BERNARD SHAW. எந்தப் புதிய விஷயத்திலும் ஆர்வம் காட்டுவது குழந்தைகளின் குணம். அதேபோல், எத்தனை வயதானாலும், நம்மைச்சுற்றி நடப்பதில் ஆர்வம் காட்டுவது உற்சாகத்தை நிலைக்க வைத்திருக்கும் வழி. ‘குழந்தைபோல் இருக்கிறாள்!’ என்று சிலர் பழிக்கப்படுவார்கள். வயதுக்குரிய திறமையும், ஆற்றலும் இருந்தால், எதிலும் காட்டும் ஆர்வத்தையும் குறையாமல் பார்த்துக்கொண்டால் என்ன தவறு? அப்போதுதானே மகிழ்ச்சி குன்றாமல் இருக்கலாம்? நம்மைச் சுற்றி எப்போதும் சிரிப்பும் நிலைத்திருக்கும். இல்லாவிட்டால், ஒவ்வொரு நாளும் செய்த காரியத்தையே செய்ய நேரிடும்போது வாழ்வில் சலிப்புதான் ஏற்படும். விளையாட்டு வீரர்களை எடுத்துக்கொள்ளுங்கள். ‘சவால்!’ என்று, சிறுகச் சிறுகத் தம் திறனை உயர்த்திக்கொண்டே போவார்கள். தற்காப்புக் கலைகளில், வெள்ளை இடுப்புப்பட்டியில் ஆரம்பித்து, மஞ்சள், சிவப்பு என்று படிப்படியாக உயர வழிசெய்திருக்கிறார்கள். கற்றதையே மீண்டும் மீண்டும் கற்றால், யாருக்குத்தான் அலுப்பு ஏற்படாது! சொல்லிக்கொடு, திட்டாதே! இப்போதெல்லாம், பேனாவால் எழுதுமுன் அதில் மை இருக்கிறதா என்று பார்த்துக்கொள்வேன். சிறுவயதில், இப்படித் திட்டமிடத் தோன்றாததால் ஓர் ஆசிரியையிடம் நிறையத் திட்டு வாங்கினேன். இலக்கை நோக்கிப் பயணிக்கையில், அதை எப்படி அணுகுவது என்ற திட்டம் வகுக்க வேண்டும் என்பது அப்போது புரியவில்லை. அவரைச் சொல்லியும் குற்றமில்லை. எனக்குப் பத்து வயதாக இருந்தபோது, பேனா இருந்தால், அதில் மை இருக்காது. இல்லையேல், கீழே போட்டதில் அதன் கூர்முனை உடைந்திருக்கும். ‘ஒழுங்கீனம் பிடிச்ச பிள்ளை!’ என்று வாய்க்கு வாய் திட்டாது, என்ன செய்திருக்க வேண்டும் என்று சொல்லிக் கொடுத்திருக்கலாம். மனம் நொந்து, ‘ஏன் இப்படி?’ என்று யோசித்து, நானே கற்கும்படி ஆயிற்று. இளம்வயதினரை ஓயாது திட்டினால்தான் முன்னேறச் செய்ய முடியும் என்று (தவறாக) நம்பிய காலம் அது. அதற்கடுத்த வருடம், பள்ளி திறந்து ஒரு வாரத்துக்குள், ‘இந்தப் பிள்ளை இப்போ ரொம்ப சமர்த்தாகிட்டா!’ என்று என் ஒருத்தியைமட்டும் பாராட்டினார் அந்த ஆசிரியை! அன்று கற்ற பாடத்தால், இன்றுவரை, கறிகாயை நறுக்குமுன் கத்தியைத் தீட்டிக்கொள்வது பழக்கமாகிவிட்டது. என்னதான் நினைப்பார், நினைக்கட்டுமே! ஒரு கோயில் சன்னிதானத்தில் ஒருவர் பாடிக்கொண்டிருந்தார் – இசைக்கும் அப்பாடகருக்கும் வெகு தூரம் என்ற அயர்ச்சி எழுப்பும் அளவுக்கு. பக்தியுடன் பாடினால் அவருக்கு நிம்மதி, மகிழ்ச்சி. ‘பிறர் என்ன நினைப்பார்கள்!’ என்ற கேள்விக்கே அங்கு இடமில்லை. பிறருக்காகத் தன் உற்சாகத்தை விட்டுக்கொடுக்க அவர் தயாரில்லை. அவருடையது சரியான அணுகுமுறை. மூளை செய்யும் வேலை நம்மையும் அறியாது, சுற்றி இருப்பவர்களைப்போல் நடக்க முனைகிறோம். இது நம் மூளையிலுள்ள நியூரான் செய்யும் வேலை. இது புரிந்து, ஆக்ககரமாகச் சிந்திப்பவர்களை நண்பர்களாக ஏற்கவேண்டும். ஆனால், இப்படிப்பட்டவர்களைப் பார்ப்பதே அரிதாகிவிட்டது. ஏனெனில், பலரும் எப்போதும், எதைப்பற்றியாவது, குற்றமாகப் பேசுவதால், நாமும் அவர்களைப்போல் ஆகிவிடுகிறோம். இது புரிந்து, அவர்களுடன் சேர விரும்பாது, தனியாக இருந்தால், ‘பழகத் தெரியவில்லை,’ என்று பிறர் தூற்றக்கூடும். தம்மைப்போல் இல்லாதவர்களையெல்லாம் பழிப்பது பலகீனமானவர்களின் வழக்கம் என்று விடவேண்டியதுதான். “முட்டாள்கள் நிறைந்த இடத்தில் மௌனமே சிறந்தது”. உன்னையே நீ மதிக்கணும் ‘… இறைவனடி சேர்ந்தார். அன்னாரது இழப்புக்காக ஆழ்ந்த வருத்தத்தில் ஆழ்ந்திருக்கும்..,’ என்று, அன்றாடம் பல பெயர்களை வெளியிட்டிருப்பார்கள் தினசரியில். அதில் என்றோ இறந்துபோனவர்களின் பெயர்களும் இருக்கும். (அவர்கள் எப்படி வருத்தத்தில் ஆழ்ந்திருப்பார்கள்?) இம்மாதிரியான அறிக்கைகளை பார்க்கும்போது எனக்கு ஒரு சந்தேகம் எழும். தம் பெயர் தினசரியில் வெளியாகிவிட்டதே என்ற பெருமைக்காக வெளியிடுபவர்களில் எத்தனைபேர் இறந்தவர் உயிருடன் இருந்தபோது அவருடைய மதிப்பை உணர்ந்து, அன்பாக நடத்தினார்கள்? கதை கணவன் மறைந்ததும் தான் தனிமரமாகிவிட்டோமே என்ற கவலையில், கதறி அழுதுகொண்டிருந்தாள் அந்த மூதாட்டி. அந்த மனிதர் மனைவியை நல்லபடியாக வைத்துக் காப்பாற்றவில்லை என்பது வேறு விஷயம். தாய் அனுபவித்த துன்பங்கள் தெரிந்திருந்தும், அவளது பெண்கள் இருவருக்கும் இரக்கம் கிடையாது. “நீங்க என்னோட வந்து இருங்கோம்மா,” என்றாள் சின்னவள், உபசாரமாக. “சும்மா இருக்க வேண்டாம். ஒங்க பென்ஷன் பணத்தைக் குடுத்துட்டு இருங்கோ!” சில வருடங்கள் கழித்து, அந்த தாய் தனியாகவே வாழ்ந்து இறந்தபின், அப்பெண் கதறினாளே, பார்க்கவேண்டும்! பெரும்பாலோருக்கு எதையும் இழந்தபின்தான் ஒரு நபர் அல்லது பொருளின் அருமை புரிகிறது. கதை “என் சட்டைதானே! நானே ம(டி)ச்சு வெச்சுக்கறேன்,” என்று அடம்பிடிப்பான் என் மூன்று வயதான மகன் சசி. ஒரு கையால் சட்டையின் நுனியைப் பிடித்து, இன்னொன்றால் அதை விரல்களில் சுற்றுவான். இன்னும் கசங்கிவிடும். அவனைப் பொறுத்தவரை, அவன் திறமையுடன் செய்திருக்கிறான். அண்மையில், இதை நான் சொல்லிச் சிரித்தபோது, ஒரு பெண் கேட்டாள், “அப்புறம் நீ அதைச் சரியாக மடித்து வைத்துவிடுவியா?” நான் அதிர்ந்து, “ஐயோ! அப்படிச் செய்வது, ‘நீ செய்தது தவறு!’ என்று அவனைக் குறைத்து மதிப்பிடுவதுபோல் இருக்குமே!” என்றேன். சும்மாடுபோல் சுருண்டு, கசங்கியிருந்த சட்டையைப் பார்க்கும்போது, ‘சசி இருந்தபோதே அவனுடைய அருமை புரிந்திருந்ததே!’ என்ற திருப்தி ஏற்பட்டது. அவன் இறந்தபின் குற்ற உணர்வு ஏற்படவில்லை. சுயமதிப்பு ஏற்பட குழந்தைகளைச் சுதந்திரமாக எதுவும் செய்யவிடாது, தம்மையே நாடிக்கொண்டிருந்தால் அந்த பிணைப்பையே அன்பு என்று நினைக்கிறார்கள் பலர். தன்னையே மதிப்பவன்தான் மற்றவர்களையும் மதிக்கமுடியும். எந்த வயதானாலும் பிறரது உதவியை எதிர்பார்க்க நேர்ந்தால் ஒருவரால் எப்படித் தன்னையே மதிக்கத் தோன்றும்? தன்னம்பிக்கை என்பது, ‘என்னால் முடியும்’ என்று தன் திறமைகளை உணர்ந்து ஒரு காரியத்தைச் செய்வது. யாரை நினைவு வைத்திருக்கிறோம்? தன் வாணாளில் பிறருக்கு உபயோகமாக எதையாவது செய்தவரைத்தான் அவர் மறைந்தபின்னும் கொண்டாடுகிறோம். அண்மையில் மறைந்த பாடகர் எஸ். பி. பாலசுப்ரமணியத்திற்கு பத்ம விபூஷன் விருது அளிக்கப்பட்டு இருக்கிறது. பாட்டின் பொருளை மனதில் கொண்டு, அதற்கேற்ப குரலில் உருக்கத்தையும், மகிழ்ச்சியையும் கொணர்ந்து மகிழ்ந்திருக்கிறார். அவரால் எத்தனைபேர் மகிழ்ச்சியில் ஆழ்ந்திருக்கிறார்கள்! மகிழ்ச்சி வேண்டுமானால் சுயமதிப்பு அவசியம். தன்னம்பிக்கை என்பது, ‘என்னால் முடியும்’ என்று தன் திறமைகளை உணர்ந்து ஒரு காரியத்தைச் செய்வது. பிறர் மட்டும் மகிழ்ந்தால் போதுமா? பிறரை மகிழ்விக்க தம்மையே வருத்திக்கொள்கிறவர்கள், ’எனக்கு எல்லாரையும் பிடிக்கும். என்னையும் எல்லாருக்கும் பிடிக்கும். உனக்கு எத்தனை எதிரிகள், பார்!’ என்று தன்னம்பிக்கையோடு நடப்பவர்களைப் பழிப்பார்கள். ‘நான் இப்படி இருந்தால்தான் பிறர் மதிக்கிறார்கள்!’ என்று ஒருவர் தன் குணத்தையும், போக்கையும் மாற்றிக்கொண்டே இருந்தால், மற்றவர்களை விடுங்கள், அப்படி நினைப்பவருக்கே உண்மையான மகிழ்ச்சி கிடைக்காது. தாம் சொல்வதற்கு மதிப்புக் கொடுக்காது அலட்சியம் செய்பவரை ‘கர்வி,’ ‘நட்புடன் பழகத் தெரியவில்லை’ என்று பலவாறாகப் பழிப்பார்கள். பிறர் மதிக்காததால் ஒருவரின் மதிப்பு குறைந்துவிடுமா? சில சமயம், நம் மதிப்பு, நம்மால் எவ்வளவு சாதிக்க முடியும் என்பது நமக்கே தெரிவதில்லை. அதை உணர்த்த நல்ல உறவினரோ, நண்பரோ வேண்டும். கதை புதிதாக காரோட்டும் உரிமம் பெற்றிருந்தாள் அப்பெண். அதன்பின், எங்கு காரோட்டிப் போனாலும் அவள் பக்கத்தில் யாராவது உட்கார்ந்திருக்க வேண்டும். தனியாகப் போனால் தவறு நேர்ந்துவிடும் என்ற பயம். ஒரு மாதம் இப்படிக் கழிந்தது. அன்று அவசரமாக ஓரிடத்திற்குப் போக வேண்டியிருந்தது. வீட்டில் ஒரு முதியவரைத் தவிர வேறு யாரும் இருக்கவில்லை. “என்னுடன் வாருங்கள், தாத்தா,” என்று கெஞ்சினாள். அவர் மென்மையாக, “நீ நடக்கப் பழகியபோது, விழுந்திருக்கிறாயோ?” என்று கேட்டார். ‘இது என்ன முட்டாள்தனமான கேள்வி!’ என்று தோன்ற, பேத்தி சிரித்தாள். “யார்தான் விழாமல் நடை பழகியிருக்கிறார்கள்?” என்று எதிர்கேள்வி கேட்டாள். அவர் விடவில்லை. “விழுந்துவிடுவோமோ என்று நடக்கப் பயந்து, அப்போதெல்லாம் எழுந்திருக்காமலேயே இருந்துவிட்டாயா?” அவளுக்குப் புரிந்தது. “நன்றாக ஓட்டிக் காட்டியதால்தானே உரிமம் கிடைத்திருக்கிறது! எல்லா சாலை விதிகளையும் கவனமாகக் கடைப்பிடி. வேகமாகப் போகாதே. அவ்வளவுதான்! பயப்பட ஒன்றுமில்லை”. அதன்பின், தெளிந்த மனத்துடன் அவள் போனாள். தனியாகவே. பொருட்களை மதிப்பவர்கள் நாம் நம்மேல், அல்லது பொருட்களின்மேல் அளவுகடந்த மதிப்பு வைக்கும்போது, நம் மதிப்பைக் குறைவாக எடைபோட்டு விடுகிறோம். கதை ஒரு பார்ட்டி. வெளிநாட்டுக்காரர்கள் பலர் வந்திருந்தார்கள். மலேசிய அதிகாரி ஒருவரின் மனைவியான மேரி, “என் காப்பைப் (bracelet) பார்த்தீர்களா? இன்றுதான் வாங்கினேன்!” என்று பார்ப்பவர்களிடம் எல்லாம் திரும்பத் திரும்பச் சொல்லி, அதன் உயர்ந்த விலையையும் சேர்த்துக் கூறினாள். யாரும் கண்டுகொள்ளவில்லை. ‘இவளுடைய மதிப்பு ஒரு ஆபரணத்திலா இருக்கிறது!’ என்று அலட்சியம் செய்தார்கள். அவளுடன் அதிகம் பேசவுமில்லை. அடுத்த முறை, நான் அதேபோன்ற ஒரு விருந்துபசாரத்திற்குச் செல்ல நேரிட்டபோது, தங்க நகைகளைப் புறக்கணித்தேன். இருபத்தைந்து காசு கொடுத்து வாங்கிய ஒரு பிளாஸ்டிக் வளையலைத் தேர்ந்தெடுத்தேன். “என்னம்மா!” என்று மகள் அதிர்ந்தபோது, “நான் மேரியைப்போல் நடிக்கப்போவதில்லை,” என்றேன். தலையை நிமிர்த்தி, பிறருடன் எளிதாகப் பழக சுயமதிப்பு போதுமே! பல விருந்தினர்கள் விருப்பத்துடன் என்னுடன் உரையாடினார்கள். யாரும் என் எளிய வளையலைக் கவனித்ததாகத் தெரியவில்லை. ஒருவர் தன்னையே மதித்து நடந்தால், பிறர் அவரிடம் உண்மையுடன் பழகுவார்கள். நடிக்க மாட்டார்கள். தாழ்ந்த மதிப்பீடு மனோபலம் குன்றியவர்க தம்மைப்பற்றிக் குறைவாக மதிப்பிடுவார்கள். உடல் ஆரோக்கியத்தை பெரிதாகப் பாராட்டாது, எளிதில் தீய பழக்கங்களுக்கு ஆளாகிவிடுவார்கள். காதலில் தோல்வி, நீண்டகாலம் எந்த உறவிலும் நிலைக்க முடியவில்லை என்று, எடுத்த காரியங்களில் எல்லாவற்றிலும் தோல்வியைச் சந்திப்பவர்கள் இதில் சேர்த்தி. பிறரை ஓயாமல் குறைகூறுவது இவர்களுக்குப் பிடித்த பொழுதுபோக்கு. அப்போதாவது தாம் உயர்ந்திருப்பதாக நினைக்கலாமே! கதை பதின்ம வயதுச் சிறுவர்களுக்கு நான் போதித்தபோது, “உங்களில் ஒருவர் ஏதாவது கேள்விக்குப் பதில் தெரியாது என்றாலோ, தவறாகப் பதிலளித்தாலோ கேலி, சிரிப்பெல்லாம் கூடாது” என்று கண்டித்தேன். சில மாதங்களுக்குப்பின், என் சக ஆசிரியை, “உங்கள் வகுப்பில் மட்டும் ஒரு மாணவனைப் புகழ்ந்தால், மற்றவர்கள் எல்லாரும் தாமே பாராட்டப்பட்டதுபோல் பூரித்துப்போகிறார்களே!” என்று அதிசயப்பட்டாள். தவறு செய்வதால் ஒருவரின் மதிப்பு குன்றிவிடுவதில்லை என்று அவர்கள் உணர்ந்தவர்கள். அதனால் அவர்களால் பிறரை ஏற்க முடிந்தது. அவர்களது வெற்றியிலும் பங்குகொள்ள முடிந்தது. குடும்பம் எனும் பல்கலைக்கழகம் தற்போது, குடும்பங்களில் வன்முறை, விவாகரத்து எல்லாம் பெருகிவிட்டதாம். அனுதினமும் பார்ப்பவர்களையே திரும்பத் திரும்பப் பார்த்துக்கொண்டிருக்க நேரிடும்போது நமக்கு அவர்களுடைய மதிப்பு புரிவதில்லை. வாழ்க்கையை ஆரம்பிக்கும்போதும், இப்பூவுலகத்திலிருந்து மறையும்போதும் நம்முடன் இருப்பவர்கள் குடும்பத்தினர்தான். (இடையில் வரும் நண்பர்கள் நிலைத்திருப்பார்கள் என்று சொல்லமுடியாது). இதனாலேயே, குடும்பத்தில் நடக்கும்போது முக்கியமாகப் படாத சில விஷயங்கள் பல ஆண்டுகள் கழிந்தபின்னரும் நல்ல நினைவாக நிலைத்திருக்கும். உற்றார் நம்மைத் திட்டியது நல்வழிப்படுத்துவதற்குத்தான் என்று மனம் தெளிவடையும். கதை “இந்தப் பெண் ஓயாமல் படிக்கிறதே! கண் கெட்டுவிடுமே!” என்று என் பாட்டி தினமும் வீட்டில் நட்டிருந்த மரத்திலிருந்து முருங்கைக்கீரையைப் பறித்து, நெய்யில் வதக்குவார்கள் – என் ஒருத்திக்கு மட்டும். மற்ற சமயங்களில் எல்லாம் ஓயாமல் திட்டுவார்கள்! (என்னை முன்னுக்குக் கொண்டுவருவதாக எண்ணியதன் விளைவு!) அப்போது, திட்டுதான் மனதில் பதிந்தது. (எவ்வளவு திட்டினாலும், நான் வாயே திறக்கமாட்டேன். அதுவே பாட்டிக்கு பலமாகிப் போனதோ?) பல வருடங்கள் கழித்துதான் அந்த அன்பு, கரிசனம், புரிந்தது. அன்பான குடும்பத்தினருக்கு நம் ஆற்றல், பலவீனங்கள் இரண்டும் புரிய, கேலி செய்யாது, இருக்கிறபடியே நம்மை ஏற்பார்கள். அபூர்வமாக, இத்தகைய நண்பர்கள் அமைவதும் உண்டு. தூண்டுகோல் குழந்தைகளுக்காக நேரத்தை ஒதுக்கும் பெற்றோர் அவர்கள் முன்னேறத் தூண்டுகோலாக அமைகிறார்கள். கீழே விழும்போதோ, அல்லது ஏதாவது ஆபத்து வரும்போதோ, ‘அம்மா!’ என்றுதானே கத்துகிறோம்? அம்மா எவ்வளவுதான் திட்டினாலும், பள்ளிக்கூடத்தில் தன்னைத் தோழிகள் வாட்டுகிறார்கள் என்று சொல்லியபடி ஒரு சிறுமி வீடு திரும்பும்போது ஆறுதலாக நான்கு வார்த்தை கூறுவாள். இப்போதெல்லாம், ‘நான் என் குழந்தைகளுக்கு quality time அளிக்கிறேன்,’ என்று பெருமையாகப் பேசுகிறார்கள் பெண்கள். ஆனால், குழந்தைகளுக்குத் தேவையானபோது அருகில் இருக்கமாட்டார்கள். மனம் சகந்து, நண்பர்களை நாடுவார்கள் பிள்ளைகள். கதை நான் நேபாளத்திற்குச் சென்றிருந்தபோது, எக்ரின் (ECRIN) என்ற பெயர்கொண்ட பெண்மணியைச் சந்தித்தேன். தன் தாயுடனும், இரு சிறிய குழந்தைகளுடனும் துருக்கி நாட்டில் வசித்துவருவதாகச் சொன்னாள். மலைப்பாங்கான நேபாள நாட்டில், எளிதில் செல்ல முடியாத இடங்களிலும் போலியோ மருந்து கிடைக்கும்படிச் செய்வதாகக் கூறிவிட்டு, “அடிக்கடி வருகிறேன்,” என்றும் பெருமையுடன் தெரிவித்தாள் எக்ரின். பணக்காரியாக இருந்தால் மட்டும் போதுமா? “உன் குழந்தைகளுடன் நேரத்தைச் செலவழிக்கிறாயோ?” என்று கேட்டேவிட்டேன். என் மாணவ மாணவிகளில் பலர் பெற்றோரின் கண்காணிப்போ, அரவணைப்போ இல்லாததால் பதின்ம வயதில் தீய பழக்கங்களுக்கு ஆளானதைக் கண்டிருந்ததால் அப்படி ஒரு கேள்வி எழுந்தது. அன்பான குடும்பத்தினால்தானே ஒருவர் நற்குணவானாகிறார்! ‘தந்தை இல்லாத வீடு’ என்று அவள் சொல்லாமலே புரிந்திருந்தது. தாயும் அடிக்கடி, ‘சமூக சேவை செய்கிறேன்’ என்று வெளிநாடு போனால் குழந்தைகள் யாரை நாடுவார்கள்? முகம் மாறாது, “ஆம். முடிந்த போதெல்லாம், அவர்களையும் என்னுடன் இங்கு அழைத்து வருவதுண்டு,” என்று பதிலளித்தாள் எக்ரின். சமூக சேவைக்கு முக்கியத்துவம் அளித்து, குடும்பத்தில் அக்கறை காட்டாமல் இருந்துவிடவில்லை அவள். தாயின் அன்பு கிடைத்ததால் குழந்தைகளும் ஒற்றுமையாக, நற்பண்புகளுடன் வளர்வார்கள். ஒற்றுமை இழந்த குடும்பங்கள் பெரிய குடும்பங்களில் பெண்கள் தம் சகோதரர்களுக்கு எதிராகக் கூட்டணி அமைப்பார்கள். பெற்றோர் மகன்களுக்கு அதிகமான சுதந்திரம் அளிக்கிறார்களே என்ற ஆத்திரமாக இருக்கலாம். அல்லது, அவர்களது குணாதிசயங்கள் பிடிபடாமல் இருக்கலாம். வேறு சில குடும்பங்களில், ‘மகள் கல்யாணமாகி, புக்ககத்திற்குப் போய்விட்டால் அங்கு அவளை எப்படி நடத்துவார்களோ!’ என்ற கரிசனத்துடன், பெண்குழந்தைகளை மிக அருமையாக நடத்துவார்கள். அவளுடைய சகோதரர்களுக்கு, ‘நாம் ஏதோ விதத்தில் மட்டம்!’ என்ற தாழ்வு மனப்பான்மை எழ வழி செய்வதுபோல். ‘எங்கள் பெற்றோருடன் ஒரே குடும்பத்தில்தான் வளர்ந்தோம். ஆனால், எங்களிடையே இருக்கும் வேறுபாட்டால் சகோதர சகோதரிகளுடன் ஒற்றுமையாக இருக்க முடியவில்லை!’ என்று நினைப்பவர்கள் புரிந்துகொள்ளாதது – ஒரு மரத்தின் கிளைகள் ஒன்றுபோல் இல்லாவிடினும், வேர் ஒன்றுதான். கதை பொறுப்பில்லாத, சுயநலமியான தந்தையால் அக்குடும்பமே கஷ்டப்பட்டது. தாய் வேலை செய்து பிள்ளைகளைக் காப்பாற்ற வேண்டிய நிலை. அவர்களுக்காக நேரத்தையோ, அன்பையோ அவளால் அளிக்க முடியவில்லை. குழந்தைகளிடம் ஒற்றுமை என்பது அறவே இல்லாமல் போயிற்று. சண்டை, பொறாமை என்று வளர்ந்தார்கள். அச்சூழ்நிலையில் வளர்ந்த ஐயாசாமி தனக்கு ஒரு குடும்பம் அமைந்தால், அது இப்படி இருக்கக்கூடாது என்று தீர்மானித்தான். புரிந்துணர்வு மிக்க மனைவியைத் தேடிப்பிடித்தான். ஆனால், கடந்த காலத்தின் கசப்பை மறக்க முடியாது, தன் நிம்மதியையும், அத்துடன் மனைவி, குழந்தைகளின் நிம்மதியையும் பறித்தான். தான் சிறு வயதில் பெறாத அன்பை எப்படித் திருப்பிக்கொடுப்பது என்று அவனுக்குப் புரியத்தானில்லை. ஓய்வு நேரங்களில்கூட குடும்பத்தைச் சரியாகக் கவனிக்கத் தோன்றவில்லை. வாலிபமும் பணமும் இருந்த காலத்தில் ஐயாசாமிக்கு அமைந்த நண்பர்கள் வயது முதிர்ந்த காலத்தில் காணாமல் போனார்கள். அப்போது குடும்பத்தின் ஆதரவு வேண்டியிருந்தது. பணம்தான் எல்லாமா? ‘பணமே பிரதானம்’ என்று கழித்த காலம் போனதும்தான் அன்பு, நட்புடன் கூடிய பாதுகாப்பான உறவு போன்றவற்றின் அருமை புலனாகிறது. அன்பான குடும்பத்தில் வளர்ந்திருந்தாலும், உத்தியோகத்தில் மிகச் சிறக்கவேண்டும், வெற்றிகள் பல அடையவேண்டும் என்ற வெறியுடன் காலத்தைக் கழித்தவர்களுக்கும் வயது முதிர்ந்த காலத்தில் வருத்தம் எழும் – குடும்பத்தை சரிவரக் கவனியாது போனோமே என்று. பண்டிகைகள் பண்டிகை என்றாலே குழந்தைகளுக்கு உற்சாகம்தான். மலேசியாவில், சீனப் புத்தாண்டின்போது நகர்ப்புறங்களில் உள்ளவர்கள் தம் குழந்தைகளுடன் வெளியூர்களில் வசிக்கும் பெற்றோரைப் பார்க்கப் போவது வழக்கம். வருடத்திற்கு ஒரு முறையாவது கண்டிப்பாக இப்படிப் போவார்கள். மற்ற சமயங்களில் குழந்தைகளுக்குப் பரீட்சை, அல்லது வேறு ஏதாவது அசௌகரியம் நிகழ்ந்துவிடும். தொற்றுநோயைத் தடுக்கவென, இவ்வருடம் பத்து கிலோமீட்டருக்குள்தான் பயணிக்கவேண்டும் என்று பல மாநிலங்களில் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதில் மிக வருந்தியவர்கள் வயது முதிர்ந்த பெற்றோர். என்னதான் ஸ்கைப் மூலம் தொடர்பு கொண்டாலும், நேரில் பார்த்து, தம் தனிமையின் ஏக்கத்தைப் போக்கிக்கொள்ள பேரக்குழந்தைகளை அரவணைப்பதுபோல் ஆகுமா? எல்லாரும் எப்போதும் ஒன்றாக இருந்தால் போட்டி, மனத்தாங்கல் என்று ஏதாவது குழப்பங்கள் இருந்துகொண்டுதான் இருக்கும். ஆனால், அவ்வப்போது மட்டுமே சந்திப்பவர்களுக்கு இடையே ஒற்றுமை விலகாதிருக்கும். தம்பதியரோ, பெரிய குடும்பத்தினரோ, எல்லாருக்கும் இந்த விதி பொருந்தும். எந்தக் குடும்பமும் பிரச்னைகள் இல்லாது இருப்பதில்லை. ஆனால், அதில் ஒற்றுமை இருந்தாலே போதும். வெளியில் ஏற்படும் எந்தப் பிரச்னையையும் சமாளித்துவிடலாமே! திட்டம் போடுங்களேன்! ‘அவசரக் கோலம் அள்ளித் தெளித்தாளாம்!’ எந்தமாதிரியான கோலம் போடுவது என்று யோசியாது, எதையோ செய்துவைப்போம் என்று செய்தால் இப்படித்தான் ஆகும். முன் திட்டமில்லாது, பேச்சாளரோ, பாடகரோ மேடையில் ஏறியபின் என்ன செய்வது என்று புரியாது விழித்துக்கொண்டிருந்தால் என்ன ஆகும்? உரையாற்ற அழைத்து, நிர்வாகிகள் தலைப்பை அளித்துவிட்டால், உடனடியாக என்ன பேசுவது என்று தோன்ற ஆரம்பிக்கும். குறித்துக்கொள்ளாவிட்டால் மறக்கும் அபாயம் உண்டு. நான் உரையாற்ற அவைக்குமுன் நின்று, சில வினாடிகள் சுற்றுமுற்றும் பார்ப்பேன். லேசான சிரிப்பு எழும். ‘என் பேச்சால் உங்களைக் கவரப்போகிறேன். மனம்விட்டுச் சிரிக்கப்போகிறீர்கள்!’ என்று அவர்களுக்கு மானசீகமாக ஒரு செய்தியை இப்படி அனுப்புகிறேன். எங்கோ படித்த இம்முறையை நான் கையாள, பத்து வினாடிகளுக்குள் அவையினர் எனக்குக் கட்டுப்படுவார்கள். சிரிப்பு தானாக எழும். நான் எப்போதோ படித்தது: “தினமும் ஒரே நேரத்தில் காகிதத்தை எதிரில் வைத்துக்கொண்டு, பேனாவைப் பிடியுங்கள். தானே கதை எழுதமுடியும்!” இது எப்படி இருக்கிறது தெரியுமா? எங்கே போகவேண்டும் என்ற முன்யோசனை இல்லாது, கால்போன போக்கில் செல்வதுபோல்தான். எங்காவது கொண்டு விட்டுவிடும். ஒரு கதை எழுத ஆரம்பிக்குமுன் கருவை யோசித்தாலே போதும். அதன்பின், பாத்திரங்கள். இவற்றை வைத்து ஆரம்பித்தாலே போதும். முடிவு எழுத்தாளர் கையில் இல்லை. கதை தானே நகரும் – பாத்திரங்கள் சொல்லிக்கொடுப்பார்கள். தினசரி திட்டமிடு கதை “ஒவ்வொரு நாளும் சமைக்க உனக்கு எத்தனை மணிநேரம் ஆகும்?” என்று என் சக ஆசிரியை கேட்டாள். அத்தனை வேலைப்பளுவிலும் என்னால் எப்படி எழுதவும் முடிகிறது என்று அவளுக்கு ஆச்சரியம். என் பதிலைக் கேட்டு, “என்ன சமைப்பது என்று யோசிக்க வேண்டாமா?” என்று கேட்டாள். “வாங்கும்போதே நிச்சயித்துவிடுவேன், எந்தக் கறிகாயை எப்படி ஆக்குவது என்று”. “அதற்கே எனக்கு ஒரு மணி ஆகும்,” என்று பெருமூச்சு விட்டாள். என் பாட்டி முதல் நாள் இரவே சின்ன வெங்காயத்தின் இரு முனைகளிலும் நறுக்கி, தண்ணீரில் ஊற வைத்து விடுவார்கள். மறுநாள் சற்றே கசக்கினால் தோல் எளிதாக அகன்றுவிடும். ‘நல்ல வெயில் அடிக்கிறது! அப்பளம் இடவேண்டும்!’ என்று குடும்பத் தலைவிகள் திட்டமிடுவார்கள். பலரும் முன்யோசனை இல்லாது ஏதாவது செய்துவிட்டு, ‘இப்படிச் செய்திருக்கலாமே!’ என்று வருந்துவார்கள். மழைகாலத்தில் அப்பளம் இடத் திட்டம் போடுவதுபோல்தான். கதை ஒருவர் நீண்ட காலம் குடிப்பழக்கத்திற்கு ஆளானவர். உடல்நிலை மிகக் கெட்டு, ‘இப்பழக்கத்தை அறவே ஒழிக்காவிட்டால் இறந்து போவீர்கள்!’ என்று மருத்துவர்கள் எச்சரிக்க, அதை விட்டார். உற்றவர்களிடமெல்லாம், “நான் குடிக்காமல் இருந்திருந்தால், ஐயாயிரம் வெள்ளியை மிச்சப்படுத்தி இருப்பேன்! ருசியான எந்த ஆகாரத்தைச் சாப்பிடவும் முடிவில்லை. மருந்தே உணவாகிவிட்டது. இப்படியாவது உயிர் வாழ வேண்டுமா?” என்று புலம்பினார். காலம் கடந்தபின் புத்தி வந்து என்ன பயன்? செய்த தவற்றைத் திரும்பத் திரும்பச் செய்யாமல் இருக்கலாமே! என் மாணவன் ஒருவன் உழைத்துப் படிப்பான். ஏனோ, பிறகு படிப்பில் மனம் போகவில்லை. நான் அவனை விசாரித்தபோது, “எனக்கு நிறைய கெட்ட பழக்கங்கள், டீச்சர்,” என்று ஒப்புக்கொண்டான் – அலட்சியமாக. “தப்பு என்றுதான் உனக்குத் தெரிகிறதே! அவற்றை விடுவதுதானே!” என்றேன். “எப்படி முடியும்? என் நண்பர்கள் எல்லாரும் விஷம்!” என்றான். குறுகிய காலத்தில் எப்படி உல்லாசமாகக் கழிக்கலாம் என்று நண்பர்கள் வழிகாட்டியதை ஏற்றான். அவர்கள் தன்னைக் கெடுக்கிறார்கள் என்று புரிந்தும், அவர்களிடமிருந்து விலக முடியவில்லை. ‘நான் பெரிய ஆளாவேன்!’ என்று கனவு கண்டால் மட்டும் போதுமா? அதற்கான முயற்சிகள் வேண்டாமா? “ஆறு மணி நேரத்தில் ஒரு மரத்தை வெட்ட வேண்டுமானால், நான் முதல் ஒரு மணியைக் கோடரியைத் தீட்டுவதற்காகச் செலவழிப்பேன்!” என்று முன்னுக்கு வரும் வழியைக் காட்டுகிறார் மாஜி அமெரிக்க ஜனாதிபதி ஆப்ரஹாம் லிங்கன். பள்ளிப் பரீட்சைக்கு ஆயத்தம் ‘சிறந்த கல்விக்கூடம்’ என்று பெயரெடுத்தவைகளில் ஒவ்வொரு வாரமும் முதல் வாரத்தில் நடந்த பாடங்களில் ஒரு சிறு பரீட்சை வைப்பார்கள். அதன்பின், மாதாந்திர பரீட்சை. நீண்ட விடுமுறைக்காலத்திற்குமுன் பெரிய பரீட்சைகள். அவைகளை எதிர்கொள்ள ‘படிப்புக்காக’ என்று ஒரு மாத விடுப்பு அளிப்பதும் உண்டு. இல்லாவிட்டால், ‘இவ்வளவு பக்கங்களா! எப்படி படித்து முடிப்பது!’ என்று மலைப்பாக இருக்கும். ஓயாமல் படிக்க நேரிடும்போது, அவ்வப்போது வயிற்றையும் கொஞ்சம் கவனித்து, பழவகைகள் சாப்பிட்டால், உடல்சோர்வைத் தவிர்க்கலாம். அதிகாலையில் அவ்வளவாக கவனம் சிதறாது. ஆகையால், கணக்கு, விஞ்ஞானம் போன்றவற்றை அப்போது படித்தால் தெளிவாக விளங்கும். இவை இரண்டிலும் உள்ள கணக்குகளை எழுதிப் பழக வேண்டும். விஞ்ஞானப்பாடத்தில் வரும் படங்களையும் வரைந்து பழகவேண்டும். கால்மணி நேர ஓய்வுக்குப்பின், சரித்திரம், பூகோளம். இறுதியில் மொழி. முதலிலேயே, ஒவ்வொரு பாடத்திலும் எங்கு ஆரம்பித்து, எதுவரை படிக்கவேண்டும் என்றெல்லாம் குறித்துவைத்துக்கொள்ள வேண்டும். வருட ஆரம்பத்திலேயே மாணவர்களுக்குத் தெரியப்படுத்திவிடுவதால், அவர்கள் தயாராக இருப்பார்கள். மாநிலங்களில் சில பள்ளி மாணவர்களே முதன்மையாக வரும் ரகசியம் இதுதான். இப்படியில்லாது, கடைசி நிமிடத்தில் டீ, காப்பி என்று மணிக்கொரு தடவை குடித்து, கண்விழித்துப் படித்தால் தலை கனத்துப்போகும். வயிற்றைப் புரட்டும். புத்தகம் படிப்பது என்பது வெறுக்கத்தக்க காரியம் என்ற மனப்பான்மை வந்துவிடும். செய்ய முடியாத காரியத்தை வீம்புக்காகச் செய்வதைவிட, திறமையும் ஆர்வமும் உள்ளவற்றில் ஈடுபடுவது மேல். கதை ரூபாவுக்குப் பதினைந்து வயதாக இருந்தபோது, அவளுடைய ஆசிரியை வருந்திக் கூறினாள்: “நீ என் பாடத்தில் எப்படித் தேர்ச்சி பெறுவாய்? என் சதவிகிதம் உன்னால் குறைந்துவிடப்போகிறது!” அந்த மாணவியின் கைகளில் ஐந்து வயதுக்குரிய ஆற்றல்தான் இருந்தன. படங்கள் வரைய முடியாது. ஆனால், அவள் மொழிகளில் கெட்டிக்காரி. இது புரிந்து, ரூபாவின் பெற்றோர் அவள் ஓர் அந்நிய மொழி கற்க ஏற்பாடு செய்தார்கள். அதற்காகக் கூடுதலாகச் செலவு. இருந்தாலும், அவளால் முடிந்த காரியத்தைச் செய்தபோது, மகிழ்வுடன் பெரும் வெற்றியும் கிடைத்தது. பயணத் திட்டம் “எனக்கு வெளியூர் போகவே பிடிக்காது. போகுமுன் நிறைய சாமான்களை எடுத்துக்கொள்ள வேண்டும். திரும்பியபின், அவைகளை சுத்தப்படுத்தி ஒழித்துவைக்க இன்னும் வேலை!” என்று முகம் சுளித்தாள் என் சக ஆசிரியை. என்னைப் பொறுத்தவரை, உல்லாசமாக ஓரிடத்திற்குப் போவதற்குமுன் அதற்கான திட்டங்கள் வகுப்பதுதான் மகிழ்ச்சி தரும் காரியம். குளிர் ஊரானால், அதற்குத் தகுந்த ஆடைகள் எடுத்துப்போக வேண்டும். வெளியூர் எங்கு போவதானாலும் தலைவலி, காய்ச்சல், வயிற்று உபாதைகள் எல்லாவற்றிற்கும் மருந்துகள். அவை தேவைப்படாது, திரும்பக் கொண்டுவந்திருக்கிறேன். அதனால் என்ன! மருந்துக் கடைகளைத் தேடிப் போகும் அசௌகரியத்தை தவிர்க்கலாமே! புதிய இடங்களைச் சுற்றிப்பார்க்க முடியவில்லையே என்ற எரிச்சலும் எழாது. வீடு திரும்பியதும், உடல் சோர்வாக இருந்தாலும், மனம் உற்சாகமாக இருக்கும். வழக்கம்போல் செய்யும் காரியங்களில் எப்போதும் ஏற்படும் அலுப்பு மறைந்திருக்கும். கற்பனையும் தசைநார்களும் ‘ஆனாலும், நீ ஒரே உணர்ச்சிக் குவியல்!’ சிலர் இப்படியொரு கண்டனத்திற்கு ஆளாவார்கள். உணர்ச்சியே இல்லாதிருக்க மனிதர்களென்ன, மரக்கட்டைகளா? நான்கு வயதுச் சிறுவன் தானே பேசிக்கொள்வது ஓயாது எழும் கற்பனைக்கு வடிகால். மற்றும் சில குழந்தைகள் சுவற்றிலோ, காலிலோ கிறுக்கித் தள்ளுவார்கள். இம்மாதிரியான குழந்தைகளைக் கேலியாகப் பார்ப்பவர்களுக்குத்தான் குழந்தைகளின் சுபாவம் புரியவில்லை. எழுதவோ, படிக்கவோ தெரியாத அவ்வயதில் தமக்குத் தோன்றியதைத் தெரிந்தவிதத்தில், பிடித்தவகையில், வெளிப்படுத்திக்கொள்கிறார்கள். அவ்வளவுதான். ஏளனம் செய்யாது வளர்க்கப்பட்டால், பெரியவர்களானதும், ‘இவர்களது கற்பனைக்கு எல்லையே கிடையாதோ!’ என்ற பிரமிப்பு எழும். குழந்தைகளைப்போல் புதிய விஷயங்களைக் கற்கும் ஆர்வம் இவர்களிடம் என்றென்றும் குறையாது நிலைத்திருக்கும். பேச்சைக் குறை நம் ஒவ்வொருவருக்கும் கற்பனைத்திறன் இயற்கையாக அமைந்திருக்கும். ஆனால் அதில் திளைத்திருக்க தனிமையும், சந்தடியற்ற அமைதியும் அவசியம். தனிமை வேண்டாத எண்ணங்களுக்கு இடம்கொடுக்கிறது என்று அஞ்சி, பிறருடன் ஓயாமல் பேசுகிறவர்கள் தம் கற்பனைத்திறனைப் பயன்படுத்துவது குறைவு. எதிரில் எவரும் இல்லாவிட்டால், தொலைபேசி. அதுவும் முடியாவிட்டால், இருக்கவே இருக்கிறது தொலைக்காட்சி. ஒரு முறை, பரீட்சை முடிந்த உற்சாகத்தில் நான் பேசினேன், பேசினேன், பேசிக்கொண்டே இருந்தேன். வீட்டில் மற்றவர்களுக்குதான் தலைவலி. ‘என்ன இப்படிப் பேசறா!’ என்று சலித்துக்கொண்டார்கள். “அவ கையிலே ஒரு புத்தகத்தைக் குடு,” என்று அம்மா ஒரு வழி சொன்னாள். அதன்பின் ஏன் பேசுகிறேன்! கற்பனையில் பல உலகத்திற்குப் போய், பலதரப்பட்ட மனிதர்களுடன் உலா வந்தேன். படிக்கும் பழக்கம் சிலர் பொழுதைக் கழிக்க எப்போதாவது படிப்பார்கள். சிலருக்கு தூக்கத்தை வரவழைக்க இது ஒரு உத்தி. அவ்வளவுதான். இடைநிலைப் பள்ளியில் விஞ்ஞானம் போதித்த ஆசிரியை எங்களுக்கு ஏதாவது எழுத்துவேலை அளித்துவிட்டு, ஆங்கில நாவலில் ஆழ்ந்திருப்பது வழக்கம். அவ்வப்போது நாங்கள் ஆசிரியை பக்கம் பார்த்துவிட்டு, ஒருவருக்கொருவர் சமிக்ஞை செய்துகொள்வோம். எப்போதும் சிடுசிடுவென்றிருக்கும் முகத்தில் படிக்கும்போது மட்டும் இதழ்கள் புன்னகையால் விரிவது ஆச்சரியத்தை அளிக்காதா? இவ்வாறு புத்தகத்திலுள்ள கதாபாத்திரங்களுடன் ஒன்றிவிடுபவர்களுக்குக் கற்பனைத்திறன் மிகுதியாக இருக்கும். கதாநாயகியின் காதல் நிறைவேறவில்லையா? அதற்கு வருத்தம். பிடித்த பாத்திரத்தை எழுத்தாளர் சித்திரவதை செய்து, கொன்றே விட்டாரா? அதற்கு அழுகை. ‘கற்பனைதானே!’ என்று அலட்சியமாக இருந்துவிடமாட்டார்கள். மற்றவரைப்பற்றிச் சொல்வானேன்! நானே அப்படித்தான். ஒரு முறை, நான் தனித்திருந்தபோது உரக்கச் சிரிக்கும் ஒலியைக் கேட்டு, என் தாய், “எதுக்கு இப்படித் தானே சிரிச்சுக்கறா? பைத்தியம் பிடிச்சுடுத்தா?” என்று உள்ளேயிருந்து கேட்டது காதில் விழுந்தது. தொடர்ந்து, “எதையாவது படிச்சிருப்பா!” என்று என் தங்கையின் அலட்சியக்குரல். “பைத்தியம்தான்!” என்றாள் அம்மா முடிவாக. நான் அவர்களைப் பொருட்படுத்தவில்லை. பிறருக்காக என் இயற்கையை மாற்றிக்கொள்வானேன்! எழுத்தாளரின் கற்பனை கதை என்பது எழுத்தாளரின் உணர்ச்சிக் கொந்தளிப்பில் எழவேண்டும். அப்போதுதான் படிப்பவர்களையும் உணர்ச்சிவசப்படுத்த முடியும். கதையும் சிறப்பாக அமையும். உடற்குறை இருந்தாலும், ஒரேயடியாக இடிந்துவிடாது, இயற்கையாக அமைந்த கற்பனைத்திறனை வளர்த்துக்கொண்டவர்களும் உண்டு. கதை ஆக்டேவியா பட்லர் (Octavia Butler) என்ற பெண்மணிக்கு டிஸ்லெக்ஸியா (Dyslexia) என்ற குறைபாடு இருந்ததால், சரியாகப் படிக்க முடியாது. எழுத்துகள் நாட்டியமாடுவதைப்போல் காட்சியளிக்கும். இதனால் உச்சரிப்பும் பிழையாக இருக்கும். பள்ளியில் படிக்கும்போது, சக வயதினரின் கேலி பொறுக்காது கற்பனை உலகில் சஞ்சரிக்க ஆரம்பித்தாள் ஆக்டேவியா. பத்து வயதிலேயே கதைகள் எழுத ஆரம்பித்தவள், 2006-ல் இறப்பதற்குமுன் அறிவியல் புனைக்கதைகளை எழுதிக் குவித்துப் புகழ்பெற்றாள். படித்தால் கற்பனை வளருமா? ‘நான் புத்தகங்களைப் படித்து, பல விஷயங்களைத் தெரிந்து வைத்திருக்கிறேன்!’ என்று பெருமை ஏற்பட்டாலும், கற்பனை வேறு, அறிவு வேறு. உபயோகமான புத்தகங்களைப் படித்தால் அறிவு வளரலாம். ஆனால், இன்னொருவருடைய கற்பனையில் எழுந்ததைத்தானே ஏற்கிறோம்? இடைநிலைப்பள்ளிக்குள் நுழைந்த என் மாணவிகள், “புத்தகத்தில் படமே இல்லையே!” என்றார்கள், குறையுடன்! “ஏன் படிக்கப் படிக்கவில்லை?” என்று நான் கேட்டதற்குப் பதில் அது. தொலைக்காட்சிமுன் உட்கார்ந்து, நேரத்தைக் கழித்தால், பிறரது கற்பனையில் ஊறியவற்றை நாம் ஏற்கிறோம். ஓசை, அமைதியின்மை ஆகியவற்றால் படிக்கும் பருவத்தில் கற்பனை வரட்சி ஏற்பட்டுவிடும். ஒரு நாளைக்கு நான்கு மணி நேரம் பார்க்கும் மாணவ மாணவியருக்கு புத்தகங்களில் படங்கள் போட்டிருந்தால்தான் படிப்பது புரியும். வகுப்பிலோ, கரும்பலகைதான் படம் காட்டும் திரை. ‘எல்லாரும் இப்படித்தான் செய்கிறார்கள்,’ என்று அதிகம் யோசியாது, தம் வயதையொத்த பிறரைத் தொடர்ந்து செல்கிறவர்கள் ஒரே இடத்தில்தான் வளைய வந்துகொண்டு இருப்பார்கள். நாளடைவில், ‘ஏன் இந்த அலுப்பு!’ என்ற குழப்பம் எழத்தானே செய்யும்? நிறைய யோசி ஒன்றைச் செய்தாகவேண்டும் என்ற எண்ணத்துடன், அதைப்பற்றியே தனிமையில் யோசித்தால் அதைச் செயலாக்க முடியும். நல்லது, கெட்டது ஆகிய இரண்டில் எதை அடைய வேண்டுமானாலும் இந்த ஒரே வழிதான். கற்பனை என்றால், புதிய கருவிகளைக் கண்டுபிடிப்பது மட்டுமில்லை. புதியவகைப் பலகாரங்களை எப்படிச் செய்வது என்று கண்டுபிடிப்போர் மட்டுமென்ன! பிறருக்குத் தோன்றாதது அவர்களுக்குப் புலப்பட்டு இருக்கிறதே! வாழ்க்கை ஒரே சீராக இருந்தால் சலிப்பைத் தரும். கற்பனையில் திளைக்கும்போது அலுப்பு தெரியாது. ஆனால், யோசித்துக்கொண்டே இருந்தாற்போல் எதையும் அடைந்துவிட முடியாது. இலக்கை எப்படி அடைவது என்று திட்டம் வகுக்க வேண்டும். மூளை நம்மையும் அறியாமல் சரியான திசையில் நம்மைச் செலுத்தும். புதிது புதிதாக நிறைய சாதனங்களைக் கண்டுபிடிப்பவர்களின் ரகசியம் என்ன? பிறருக்குப் புலப்படாததை இவர்கள் ஊகித்தே அறிகிறார்கள். கேலிக்கோ, பழிப்புக்கோ அஞ்சாது, தாம் ஆரம்பித்ததை முடிப்பார்கள். ஏனெனில், அச்சம் கற்பனையை அழித்துவிடும். பல தோல்விகள் கிடைத்தாலும் மனம் தளரமாட்டார்கள். சில வெற்றிகளே அவர்களுக்கு நம்பிக்கை ஊட்டப் போதுமானது. “கற்பனை தசைநார்களுக்கு ஒப்பானது. பயன்படுத்திக்கொண்டே இருந்தால்தான் விரிவடையும்!” என்கிறார் திரு.அனுபவசாலி. மனிதன் நாகரிகமாக ஆனதற்கு கற்பனைத்திறன் கொண்டவர்கள் முக்கிய காரணம். (இல்லாவிட்டால், இறைச்சியைக் குடிசையில் வைத்து, பின் அந்தக் குடிசையையே எரித்தால்தான் சுவையாக இருக்கும் என்று முன்னோர் செய்ததையே இன்றும் செய்துகொண்டிருப்பான். அடுப்பு என்று ஒன்று புழக்கத்திற்கு வந்திராது). கதை என் அத்தை ஒருவருக்குச் சிறுவயதிலிருந்தே, ‘பெண்குழந்தைகள் குனிந்து, இடுப்பை வளைத்து வேலை செய்யவேண்டும்!’ என்று போதிக்கப்பட்டது. அதற்காக, அம்மியில் அரைக்கும்போது கூடவா! பெரியவர்கள் சொற்படி நடந்ததன் விளைவு, தலை குனிந்தபடி இருக்கும் – அடக்கத்தால் அல்ல. அத்தையின் முதுகு நிரந்தரமாக வளைந்துவிட்டது. வலிக்கும் இடுப்பைப் பிடித்தபடிதான் எப்போதும் நடக்க முடியும். நல்லவேளை, யாரோ ஒரு புண்ணியவான் மின்சாரத்தால் இயங்கும் கிரைண்டரைக் கண்டுபிடித்தார். பெண்களின் முதுகு பிழைத்தது. சமையல் செய்வதால் இடுப்பிலோ, தோளிலோ அதிக வலி கிடையாது. நேரமும் மிச்சம். மாற மறுப்பவர்கள் வேலைப்பளுவைக் குறைக்க சாதனங்கள் வந்துவிட்டாலும், சிலர் பழைமையை விடாது பற்றிக்கொண்டிருக்கிறார்கள். கடந்த ஆண்டு, வீட்டு வேலைசெய்யும் ஒரு மராத்திய மாதுவை புனேயில் பார்த்தேன். அவளுக்கு நாற்பது வயதுக்குமேல் இருக்கும். நின்ற நிலையில், இடுப்பை வளைத்து, தரையை மெழுகுவாள். பல வீடுகளிலும் இப்படித்தான் செய்வதாக அறிந்தேன். அப்போதுதான் அவளுக்கு வேலையைத் திறம்படச் செய்த திருப்தி கிடைக்கிறதாம். வயது முதிர்ந்த காலத்தில் எப்படி அவதிப்படப்போகிறாளோ என்ற பச்சாதாபம் எழுந்தது எனக்குள். ஒருவளை, ‘மாற்றம் என்றாலே கெடுதல்!’ என்ற அச்சமாக இருக்குமோ? பொறாமை ஏன் எழுகிறது? புதிதாக மணமானவன் சீலன். ‘உன்னை யாராவது உற்றுப் பார்த்தால்கூட என்னால் தாங்க முடிவதில்லை,’ என்று அடிக்கடி மனைவியிடம் கூறுவான். ‘நீ ரொம்ப அழகு. நான் உனக்கு ஏற்றவனே அல்ல!’ ‘இவருக்குத்தான் என்மேல் எவ்வளவு அன்பு!’ என்றெண்ணி மனைவி பெருமைப்படுவாள். அவனும் அதைத்தான் எதிர்பார்த்தான். ஆனால், உண்மை அதுவல்ல. ஒருவர்மீது ஆதிக்கம் செலுத்தி, எப்போதும் கட்டுப்படுத்த ஓயாத புகழ்ச்சி ஒரு வழி. பொதுவாகவே, தனக்குக் கிடைத்தற்கரிய உறவாக ஒரு பெண்ணை மணந்தவன் அளப்பரிய அன்பால் அவளைத் திக்குமுக்காடச் செய்கிறான். அவள் தன்னை விட்டுப் போய்விடுவாளோ என்ற பயம். பாராட்டுவதுபோல் கூறுவது பொறாமையின் வெளிப்பாடு. அவனுடைய கணக்குப்படி, அவன் தாழ்ந்திருக்கிறான். மகிழ்ச்சி அற்றுப்போக, தன்னை வருத்திக்கொண்டு, பிறரையும் நோக அடிக்கிறான். ஆண் மட்டுமல்ல, தன் தகுதிக்குமீறிய ஒருவரை மணந்துவிட்டோமோ என்று குழம்பும் பெண்ணும் இத்தகைய உணர்ச்சிகளால் தன்னையே வருத்திக்கொள்ளக்கூடும். பொறாமை ஏன் எழுகிறது? பொறாமை என்கிற குணம் எல்லா மனிதர்களிடமும் இயற்கையாக அமைந்திருப்பது. தன்னைவிட வேறு ஒருவர் பணம், அழகு, அந்தஸ்து இப்படி எதிலாவது சிறந்திருக்கிறாரோ என்ற சிறுமை உணர்ச்சி, அதனால் எழும் அச்சம், பொறாமையாக மாறுகிறது. ஒரு பெண் கணவனைவிட அதிக உயரமாக இருந்தால், ‘அவர்களிடையே ஒற்றுமை இருக்குமா?’ என்று அதிசயப்பட்டுப் பார்க்கிறோம். பொதுவாகவே, மனைவி தன்னை எந்த விதத்திலும் மிஞ்சிவிடக்கூடாது என்ற எதிர்பார்ப்பு ஆண்களுக்கு உண்டு. ஆனால் ஒரு முரண். அவள் பிறரைப் பொறாமையில் ஆழ்த்தும் அளவிற்கு உயர்ந்த தகுதி உடையவளாக இருக்கவேண்டும். எனக்கு நன்கு அறிமுகமான ஒருவரின் மனைவி சராசரியைவிட மிக அதிகமான உயரம். அந்த நபரை விளையாட்டாகக் கேட்டேன், “நீ உன் மனைவியைவிட உயரமா?” “Of course!” சற்றே கோபத்துடன் வந்த அவரது பதிலின் தொனி, ‘இது என்ன முட்டாள்தனமான கேள்வி!’ என்பதுபோல் இருந்தது. இல்லறத்தில் அன்புதானே முக்கியம்? அதற்கும் தகுதிக்கும் என்ன சம்பந்தம்? குழந்தைகளிடையே பொறாமை தாயின் மடியில் இன்னொரு குழந்தை தவழ்வதைக் கண்டால் ஒரு குழந்தையின் சுபாவமே மாறிப்போகும். யாரும் பார்க்காதபோது, சின்னக் குழந்தையின் கண்ணைக் குத்த வரும். தாய் திட்டுவாள். அதனால் தம்பி அல்லது தங்கையைப் பிடிக்காமல் போகும். சற்று வளர்ந்ததும், அக்காள் தன்னிடம் ஏன் அன்பாக இல்லை என்று புரியாது, அவள் சொல்வதையெல்லாம் தாயிடம் போய் கோள் சொல்வாள் தங்கை. ‘இது ஏதோ குழந்தைகள் சண்டை!’ என்று தாய் அதைப் பெரிதுபடுத்தாது விடவேண்டும். அல்லது, “நான் கேட்டேனா? இன்னொருவரைப்பற்றிக் கோள் சொல்லாதே!” என்று இளையவளுக்குப் புத்திகூற வேண்டும். அதைவிட்டு, பெரியவளைக் கண்டித்தால், சகோதரிகளிடையே இருக்கும் உறவில் விரிசல் அதிகமாகும். பிறர்தான் என்னைவிட உயர்த்தி சிலருக்குத் தன்னிடமிருக்கும் சீரிய தன்மைகள் முக்கியமாகத் தோன்றாது. பார்ப்பவர்கள், கேள்விப்படுகிறவர்கள் எல்லாரையும்விடத் தான் தாழ்ந்திருப்பதுபோல் உணர்ந்தால், அவர்களுடைய அமைதி பறிபோகாமல் என்ன செய்யும்? கதை பதின்ம வயதிலேயே திருமணமாகிவிட்ட அபிராமிக்குத் தான் அதிகம் படிக்கவில்லையே என்று குறை. தனக்குக் கிடைக்காதது எல்லாம் மகளுக்குக் கிடைக்கவேண்டும் என்று உறுதிபூண்டாள். மகளும் தாயின் ஆதங்கம் புரிந்து, நல்ல உழைப்பால் எல்லாவற்றிலும் சிறந்து விளங்கினாள். சிறுமியாக இருந்தபோது, மகள் அடைந்த சிறு, சிறு வெற்றிகளால் பூரித்த அபிராமி மாறிப்போனாள். அவள் வளர்ந்தபின்னரோ பொறாமைதான் ஏற்பட்டது. அபிராமியைப்போல் அவள் மகளுக்குக் கோலம் போடவோ, சமைக்கவோ தெரியாது. எந்த பண்டிகைக்கு என்ன செய்யவேண்டும் என்றும் அவள் அறிந்திருக்கவில்லை. தாயைப்போல் எல்லாவற்றிலும் ஆர்வம் செலுத்தாது, படிப்பிலேயே கவனம் செலுத்தினாள். இதெல்லாம் தாய்க்குப் புரியாமல் போனதுதான் பரிதாபம். பிறர் அடையும் வெற்றியால் மற்றொருவர் எதையும் இழந்துவிடுவதில்லை. தான் அடைந்த வெற்றியைவிடப் பிறரது வெற்றியைக் கவனித்துப் பார்த்துப் பெருமூச்சு விடுவது ஒருவர் தன்மேல் கொண்டிருக்கும் மிகையான அன்பின் வெளிப்பாடு. ஒப்பீடு எதற்கு? தமக்கு இருக்கும் திறமைகளைப் பிறருடன் ஒப்பிட்டுக்கொள்கிறவர்கள், ‘நான்தான் சிறந்தவன்! நான் செய்வதையெல்லாம் உன்னால் செய்ய முடியுமா?’ என்று சவால் விடுவார்கள். இதனால் எந்தவிதப் பலனும் கிடைக்கப்போவதில்லை. பொறாமைக்கு ஆளானவர்களுக்கு உள்ளுக்குள் ஏதோ கசப்பு இருக்கும். நம்மைப்பற்றி – நம்மிடமே – அவதூறாகப் பேசுவார்கள். நம்மிடமுள்ள சிறப்புகளைப் பொறுக்க முடியாதவர்களே ‘இவனிடம் என்னென்ன குறைகளைக் கண்டுபிடிக்கலாம்?’ என்ற ஆராய்ச்சியில் இறங்குகிறார்கள். இப்படிப்பட்டவர்கள் உறவுகளையும், நட்பையும் பிரிக்க முயல்வார்கள். கதை எங்கள் குடும்ப நண்பர் ஒருவர் தன்னுடன் வேலைபார்த்த மோகனா என்ற பெண்ணைக் காதலித்து மணந்தார். சில ஆண்டுகளிலேயே மோகம் குறைந்தது. கல்யாணத்துக்குப் பிறகு கணவர் தன்னைக் கவனியாது, நண்பர்களுடனேயே பொழுதைப் போக்குகிறாரே என்ற வருத்தம் மோகனாவிற்கு. அந்த உணர்வு தன்னைப்போல் இல்லாது, மகிழ்ச்சியாகக் குடும்பம் நடத்தும் பிற பெண்கள்பால் திரும்பியது. அவர்கள் மட்டும் மகிழ்ச்சியாக இருப்பதா! ‘உன் கணவரைப் பிற பெண்களுடன் பார்த்தேன்,’ என்று ஆரம்பிப்பாள். அந்த மனிதர் வேலை முடிந்து, அலுவலகத்தில் உடன் வேலை பார்க்கும் ஒரு பெண்ணை தன் காரில் ஏற்றிப் போயிருப்பார். அதிகம் ஆராயாது, கணவர்மேல் சந்தேகம் கொண்டு, சண்டை பிடிப்பாள் மனைவி. இதைத்தானே மோகனாவும் எதிர்பார்த்தாள்! இப்படியாக, பல குடும்பங்களில் தகராறு எழச் செய்தாள் மோகனா. அதில் ஒரு அற்பதிருப்தி. அவளுடைய திட்டம் புரிந்த ஆண்கள் தம் மனைவியை எச்சரிக்கை செய்யும் அளவிற்குப் போயிற்று அவளது கலகம். யாரைத்தான் நம்புவது? வெற்றி பெற்றவர்களும், தம்மால் இயன்றதை மட்டும் செய்து திருப்தி அடைந்தவர்களும் பிறரைப் பார்த்துப் பொறாமைப்படுவதில்லை. இவர்களால் நமது வெற்றியை ஊக்கமாகக்கொண்டு நடக்க முடியும். நம் வீழ்ச்சி இவர்களை வருத்தம் கொள்ள வைக்கும். கீழே இருப்பவர்கள் தம்மைவிட உயர்ந்த நிலையில் இருப்பவர்களைத் தம்மைப்போல் கீழே இறக்கிவிட நினைத்து, அதன்படி நடப்பவர்கள் கீழேயேதான் இருப்பார்கள். இது புரிந்து, அவர்களது செய்கையால் நாம் மாறவும் கூடாது, மனம் வருந்துவதிலும் பயனில்லை. தாழ்ந்திருப்பவரைப் பார்த்து யாராவது பொறாமை கொள்கிறார்களா? பிறரைப் பொறாமைப்படவைக்கும் அளவுக்கு நாம் சிறந்திருக்கிறோமே என்று பெருமைகொள்ள வேண்டியதுதான்! பரோபகாரம் போதுமா? தலைவர்கள் தாம் சாதித்ததாக எண்ணுவதைத் தேர்தல் சமயத்தில் பட்டியலிடுவார்கள். அரசியலில் மட்டுமல்ல, எந்த ஒரு சிறு குழுவின் தலைவர்களாக இருப்பவர்களும்கூட. வெற்றி என்பது ஒருவரது சாதனைகளின் மட்டுமல்ல. மற்றவர்களுக்காக எதுவும் செய்யாது, தமக்குத்தாமே நன்மை செய்துகொண்டிருப்பவர்களால் பிறருக்கு என்ன லாபம்? ஒரு சிலர், ‘குறுகிய காலத்தில் நான் இத்தனை பட்டங்கள் பெற்றேன், சொத்து சேர்த்தேன்,’ என்று பெருமை பேசிக்கொள்வார்கள். அறிவும் பணமும் மட்டும் நிறைவைக் கொடுத்துவிடாது. (ஆனால், அது காலம்கடந்துதான் புரியும்). தகுந்த தருணத்தில், அல்லல்படும் ஒருவருக்கு உதவிக்கரம் நீட்டுவதால் கிடைக்கும் திருப்தி அதைவிடப் பெரிது. பிறர் பிரமித்து, பாராட்டாவிட்டால் என்ன! தம்மைவிட உயர்ந்த நிலையில் இருப்பவர்களை எப்படியாவது தாம் இருக்கும் தாழ்ந்தநிலைக்குக் கொண்டுவந்துவிட வேண்டும் என்றெண்ணி, அதன்படி செயல்படுபவர்கள் கீழேயேதானே இருக்க நேரிடும். இது எத்தனை பேருக்குப் புரிகிறது? மாறாக, பிறரை உயர்த்த நம்மால் ஆன உதவியைச் செய்தால், நமக்கும் ஏதாவது நல்லது நடக்கும். ஆனால், விளைவைக் கருத்தில்கொண்டு செயல்படுவது நலனைத் தருவதில்லை. கதை தான் மற்ற உறவினர்களைவிடச் செல்வச்செழிப்புடன் இருக்கிறோமே, அதைக் கண்டு அவர்கள் பொறாமை கொண்டால், அந்த ஆற்றாமை ஏதாவது தீய விளைவில் கொண்டுவிடப்போகிறதே என்று பயந்தாள் மைதிலி. உறவினர்களைப் பார்க்கும்போதெல்லாம், கைநிறைய பரிசுப்பொருட்கள் வாங்கி வருவாள். அடிக்கடி எல்லாருக்கும் கடிதம் எழுதி, அவர்கள் நலனை விசாரிப்பாள். தான் மிகவும் நல்ல இருதயம் படைத்தவள் என்று நம்பி, அவர்கள் வாழ்த்த வேண்டுமாம்! மைதிலியின் குழந்தைகள் பெரியவர்களானதும், ஒவ்வொருவருக்குமே ஏதோ ஒரு இடர். விபத்தில் ஒரே மகளுக்குக் கால் ஊனமாகியது. ‘நாங்கள் பிறருக்கு அவ்வளவு செய்தோமே! எங்களுக்கு ஏன் இப்படி ஒரு துயரம்?’ என்று கதறினாள் மைதிலி. பிறர் நமக்கு என்ன பிரதியுபகாரம் செய்யப்போகிறார்கள் என்று எதிர்பார்த்துச் செய்வது பலன் தராது. திருமணங்களின்போது, தங்களுக்கு யார் எத்தனை மொய் எழுதியிருக்கிறார்கள் என்று கணக்கு எழுதி வைத்துக்கொண்டு, அதே தொகையை அவர்கள் வீட்டு வைபவங்களுக்குத் திருப்பி அளிப்பதும், குறைவாகக் கிடைத்தால் சண்டைபோடுவதும் எதில் சேர்த்தி? குழுச் சண்டைகள் பிறருடன் ஒரு காரியத்தில் ஈடுபடுகையில், பொறாமை அல்லது கோபத்தால் விளையும் சிறிய சச்சரவுகள் எழும். அப்போதுதான் புரிந்துணர்வு அவசியமாகிவிடுகிறது. பிறரது மனநிலையில் நம்மை வைத்துக்கொண்டு பார்த்தால், பிறர் செய்வது நம்மை அதிகமாகப் பாதிக்காது. இதனால்தான் ஒத்த மனதினருடன் ஒரு குழுவில் இணையவேண்டும் என்பது. ‘நமக்கு ஆதரவு அளிக்க பலர் இருக்கிறார்களே!’ என்று புரிந்துபோக, ஒவ்வொருவரும் தனிப்பலம் அடைகிறார்கள். அந்நிலையில் ஒருவருக்கொருவர் உதவியும், ஊக்கமும் அளித்துக்கொள்வதால் அதில் இருப்பவர்கள் அனைவருமே வெற்றி அடைகிறார்கள். மொத்த முழுவிற்கும் அவர்களால் நன்மை. ஏனெனில், ‘அடுத்து என்ன செய்யலாம்?’ என்று கலந்தாலோசிக்கிறார்கள். "விரைந்து செல்லத் தனியாகப் போகவேண்டும். ஆனால், நீ தொலைதூரம் செல்ல வேண்டுமானால், பிறருடன் சேர்ந்து போ!’ என்று அறிவுரை கூறுகிறார் திரு.அனுபவசாலி. கஷ்டங்கள் விலக நம்மைப்பற்றியே வேண்டாத யோசனை செய்துகொண்டிருந்தாற்போல் நிலைமை மாறிவிடப்போவதில்லை சிலர் தாம் படும் சிறு, சிறு கஷ்டங்களைப்பற்றி உபகாரியானவரிடம் ஓயாது பேசி, அவற்றின் பாதிப்பைக் குறைக்க நினைக்கிறார்கள். இவர்களுக்குப் பிறரைப்பற்றிய சிந்தனையே கிடையாது. ‘உதவி செய்கிறோம்!’ என்ற நல்லெண்ணத்துடன் அந்த அவலங்களைச் செவிகொடுத்து கேட்க நேரிடுபவர்கள் நிலை பரிதாபம். அவர்களே அல்லல்படுவதுபோல் வருத்தம் எழும். இவ்வாறு ஓயாமல் மூக்கால் அழுபவர்களை விலக்குவதே புத்திசாலித்தனம். ஏனெனில், நம் பரிதாப உணர்ச்சியால் ஆக்ககரமாக எதுவும் நடக்கப்போவதில்லை. அப்படி நேரத்தை வீணாக்குவதைவிட தகுதியுள்ள பிறருக்கு உதவி செய்தால் நம் கஷ்டங்கள் விலகுகிறதோ, இல்லையோ, நம் நிம்மதியாவது குலையாமல் இருக்கும். ‘இவள் தேவலை! தன் காரியத்தைத் தானே பாத்துக்கொண்டுவிடறா!’ இப்படி ஏளனமாக எழும் ஒரு குரலைக் கேட்கும்போது குற்ற உணர்ச்சி எழுந்தால் அது தவறு. பிறருக்கு உதவிபுரியுமுன் முக்கியமாகச் செய்ய வேண்டுவது: நம் நலனைக் கவனித்துக்கொள்வது. கதை பிறருக்கு உதவி செய்வதே ஒரு நல்ல பெண்ணுக்கு அடையாளம் என்பதுபோல் வளர்க்கப்பட்டிருந்தாள் சுமித்திரா. தன்னைவிட வயதில் மூத்தவர்களின் கைவேலையைப் பிடுங்கிச் செய்வதில் பெருமகிழ்ச்சி கொண்டாள் அப்பேதை. ஆனால், அதற்குமுன் அவள் தன்னையும் பொறுப்பாகக் கவனித்துக்கொள்ள வேண்டும் என்று அறிவுரை கூற எவருக்கும் தோன்றவில்லை. படிப்பில் சோடைபோனாள். பிறருக்குக் கேலியாக ஆயிற்று. யாரும் தன்னை மதிக்காதது வருத்தத்தை உண்டாக்கியது. சுதந்திரமாக நடக்கவும் அவளுக்குத் தெரியவில்லை. எங்கு, யாரால் தவறு நிகழ்ந்தது என்று காலம் கடந்து புரியும்போது இப்படிப்பட்டவர்களுக்கு அளவிலா வருத்தம் ஏற்படும். அல்லது, பிறர்மீது பழிசுமத்தத் தோன்றும். பொருளாதாரச் சுதந்திரம் முதுமை அடைந்தபின்னரோ, உடல்நிலை கெட்டபின்னரோ பலரும், ‘கடமை’ என்றெண்ணி, தம் சொத்து அனைத்தையும் பெற்ற பிள்ளைகளுக்கு அளித்துவிடுவார்கள். உயிர் இருக்கும்வரை நம்மைக் காத்துக்கொள்ள பொருளாதாரச் சுதந்திரம் வேண்டாமா? முன்யோசனை இல்லாது எல்லாவற்றையும் பிள்ளைகளுக்குக் கொடுத்துவிட்டு, ஒவ்வொன்றுக்கும் அவர்கள் கையை எதிர்பார்ப்பது அடிமைத்தனம். தமக்கே உதவி செய்துகொள்வது கேவலம், அல்லது சுயநலம் என்று எண்ணாது, முன்யோசனையுடன் நடந்தால் தன்னம்பிக்கை என்றும் குன்றாது. குறையேதும் உண்டோ? இந்த நாகரிக யுகத்தில் யூ டியூபைப் பார்ப்பவர்கள் கண்ணில் அடிக்கடி தட்டுப்படுவது எந்த நடிகை எப்படியெல்லாம் கெட்ட வழியில் போனாள், எந்த நடிகர் எத்தனைப் பெண்களுடன் தொடர்பு வைத்துக்கொண்டிருந்தார், மனைவியுடன் சண்டை போட்டார் போன்ற செய்திகள்தாம். இவை அடிக்கடி வெளியிடப்படுவது எதனால்? பிறரிடம் குற்றம் கண்டுபிடித்தால் நாம் அவர்களைவிட உயர்ந்து நிற்கிறோம் என்ற அற்ப திருப்தியைப் பிறருக்கு உண்டாக்குவதற்காக. பிறரை வருத்துவது எதற்காக? தன்னிடம் நிறைய குறைகள் இருக்கின்றன என்று நினைப்பவரே அந்த வருத்தத்தைப் போக்க, அல்லது அதை மறைக்கவென பிறரது மகிழ்ச்சியைக் குலைக்கத் திட்டம் போடுவார். இப்போது நல்ல நிலையில் இருப்பவர் ஒருவர் என்றோ தவறு செய்திருந்தால், இயன்றவரை அதைப் பரப்பி, அவருடைய மதிப்பைக் குறைக்க எண்ணுவார். தம்மைப் போல் இல்லாத பிறரெல்லாம் ‘அசடு,’ ‘முட்டாள்’ என்ற அசைக்கமுடியாத நம்பிக்கை இவர்களுக்கு. தம்மால் இயலாததை, அல்லது புரியாததைச் செய்பவர்களைக் கண்டனத்துக்கு உரியவர்களாக ஆக்கிவிடுகிறார்கள். (இத்தகைய தாக்குதலுக்குப் பயந்தே பலரும் தமது ஆக்கப்பூர்வமான இயல்பை மறைத்து, பிறரைத் தொடர்ந்து நடக்கிறார்கள்). வெற்றி பெற்றவர்கள்தாம் மதிக்கத்தக்கவர்கள் என்பதில்லை. நற்பண்பு முக்கியமில்லையா? நற்குணம் என்பது மதம், இனம், அந்தஸ்து ஆகிய அனைத்தையும் கடந்தது. கதை மலேசியாவிலிருந்த அந்தத் தனியார் பள்ளிக்கூடத்தில் எந்த நிகழ்ச்சி நடந்தாலும், அதில் கலாவின் நாட்டியம் இடம்பெற்றிருக்கும். ஏனெனில், அவள் ஒருத்திதான் பரதநாட்டியத்தை முறையாகப் பயின்றிருந்தாள். அது போதாதா, சக மாணவிகளின் பொறாமையைத் தூண்டிவிடுவதற்கு! அவளுடன் படித்த யோக் மூய் (Yoke Mui) என்ற சீனப்பெண், “உன் தாய்க்கு உன்மேல் அன்பே கிடையாது,” என்று ஆரம்பிக்க, கலா விழித்தாள். “பின் என்ன! உன் படிப்பைக் கெடுக்கிறார்களே! ஆடுவதற்கு விரயமாக்கும் நேரத்தில் நீ படிப்பில் கவனம் செலுத்தினால், பரீட்சைகளில் இன்னும் சிறப்பாக மதிப்பெண்கள் வாங்கலாமே!” என்று தூபம் போட்டாள். யோக் மூய்க்கு அவளுடைய தாய் தன்னிடம் போதிய அன்பு காட்டவில்லை என்ற வருத்தம் இருக்கலாம். அதனால் இன்னொரு தாயைப் பழித்து, ஆறுதல் தேட நினைக்கிறாள். ‘பிறர் என்ன சொல்லிவிடுவார்களோ!’ என்று பயந்தே அவளைப் போன்ற பலரும் தம்மை அடக்கிக்கொள்கிறார்கள். இதனால் நிம்மதியை இழந்துவிடுவோம் என்று அவர்களுக்குப் புரிவதில்லை. கலா அதிரவில்லை. “படிக்க எனக்கு நேரம் கிடைக்கவில்லை என்று உன்னிடம் சொன்னேனா?” என்று அவள் வாயை அடைத்தாள். பிறர் புகழ வாழ்கிறவர்கள்தான் இப்படிப்பட்ட தாக்குதல்களைச் சமாளிக்க நேரிடும். பிறரைக் குறைகூறும் ஒருவர் தன்னையுமறியாது தன்னைப் பற்றித் தெரிவிக்கிறார். இது புரிந்தால், மனம் தளர விடமாட்டார்கள். ஒரு பிரபல நடிகர் ஆரம்பத்தில் ஒல்லியாக இருந்து, ஒருசில படங்களுக்குப்பின்னர் மிகவும் பருமனாக ஆனார். பத்திரிகைக்காரர்கள், விசிறிகள் என்று பலரும், ’ஏன் இப்படி குண்டாகக்கொண்டே இருக்கிறீர்கள்? உடம்பைக் கவனித்துக்கொள்ளுங்களேன்!" என்று வற்புறுத்தினார்கள். அவர்களால் அவருடைய நடிப்பினால் மட்டும் திருப்தி அடையமுடியவில்லை. ஒருவர் தன் வாணாளில் அனுபவித்தது, இக்கட்டான சூழ்நிலைகளைச் சமாளித்த விதம், கடந்தகால நினைவுகள் – இவற்றையெல்லாம் புரிந்துகொண்டால் மட்டுமே அவரைப் பற்றி முழுமையாக அறியமுடியும். அந்த நடிகர் அளித்த மறுமொழி: “என் இளமைக் காலத்தில் நான் ஒரு இட்லிகூட கிடைக்காமல் பசியில் வாடி இருக்கிறேன். இப்போதுதான் போதிய வசதி கிடைத்திருக்கிறது. இனியும் வயிற்றைக் காயப் போடச் சொல்கிறீர்களே!” ‘எதற்காவது குறை கண்டுபிடிக்காது, என் நடிப்பை மட்டும் கவனியுங்களேன்!’ என்று சொல்லாமல் சொல்லியிருக்கிறார்! பிறர் நம்மைக் குறைகூறுகிறார்களே என்று மனம் உடைந்துவிடாமல், ’ யாரிடம்தான் குறையில்லை?’ என்று மனத்தைத் தேற்றிக்கொண்டதால் அவர் நிலைத்து நிற்கிறார். பிறர் ஒருவரைக் குறைகூறுவது, தவறாக எடைபோடுவது—இதெல்லாம் அவர்களுடைய அறியாமையைத்தான் காட்டுகிறது. கதை “இந்த லீலா ஆண்களுடன் எப்படிச் சிரித்துச் சிரித்துப் பேசுகிறாள்!” என்று பல நடுத்தர வயதுப் பெண்கள் தமக்குள் ரகசியமாகப் பேசிக்கொண்டார்கள். ‘சிரித்துச் சிரித்து’ பேசிய லீலாவுக்கும் அவர்கள் வயதுதான். ஆனால், அவள் சிறு வயதிலிருந்தே ஆண்களுடன் சேர்ந்து பள்ளியில் பயின்று, அவர்களுடன் நன்கு பழகியவள். அயல்நாட்டில், நாகரிகமாக வளர்க்கப்பட்டவள். இதில் தவறு யார்மேல்? தம்மையும் இவ்வாறு சுதந்திரமாகப் பழக விடவில்லையே என்ற ஆற்றாமையின் வெளிப்பாடுதான் வம்புப் பேச்சு. ஆண்களுடன் பேசினாலே கற்பு போய்விடும் என்பதுபோல் இளவயதில் சொல்லிக் கொடுக்கப்பட்டு, முதலில் கணவரைக் கண்டு பயந்து, பிறகு அவரையே அதிகாரம் செய்யும் துணிச்சலை வளர்த்துக்கொண்ட அப்பெண்கள் மேலா, இல்லை, பலருடனும் சகஜமாகப் பழகிய லீலா மேலா? விடுமுறையில் பழகுவது பிறரது இல்லத்திற்கு குறுகிய காலம் விருந்தினராகப் போகிறவர்கள் வேடிக்கையாகப் பேசி அங்குள்ளவர்களைக் கவர நினைப்பார்கள். மிகுந்த கலகலப்புடன் இருப்பார்கள். “எவ்வளவு நன்றாகப் பழகுகிறார்!” என்று வீட்டினர் மகிழ்வார்கள். இது சரியான தீர்ப்புதானா என்று யோசிக்கவேண்டும். அவருடைய குடும்பத்தினரிடமோ, அலுவலகத்திலோ அப்படியே இருப்பார் என்று சொல்ல முடியாது. வந்த இடத்தில் பிறர் தன்னை உயர்வாக நினைக்க வேண்டும் என்று பலரும் நாடகம் போடுகிறார்கள். அவ்வளவுதான். ‘நான் இதைச் செய்யலாம் என்றிருக்கிறேன்,’ என்று பிறரிடம் எதற்காகச் சொல்லவேண்டும்? ஒரு மேற்பயிற்சியின்போது, ஆசிரியை ஒருத்தி என்னிடம் கேட்டாள்: “ராமச்சந்திரனின் மனைவி சீனப் பெண்ணா?” குறிப்பிட்டவர், எங்களுடன் படித்தவர். நான் சிரித்தேன். “நீ தவறானவளிடம் வந்து கேட்கிறாய்!” யார் எவளை மணந்திருந்தால் என்ன? அவருக்குப் பிடித்ததைச் செய்திருக்கிறார். மற்றவர்களுக்கு என்ன வந்தது? பிறர் நம்மைப் பற்றி என்ன நினைக்கிறார்கள், அவரிடமிருக்கும் குறைகள் அல்லது வித்தியாசங்கள் என்னென்ன என்ற ஆராய்ச்சிகளால் ஆகப் போவது ஒன்றுமில்லை. அதற்காக விரயம் செய்யும் நேரத்தில் நாம் எப்படி முன்னேறலாம் என்று ஆழமாக யோசித்தாலாவது பிரயோசனம் உண்டு. பார்ப்பவர்களைப்பற்றி கருத்து தெரிவிப்பது சாமானியர்களின் குணம். ஆனால், அவர்களைப் பற்றிப் புரிந்தும், எதுவும் கூறாது இருப்பது நற்குணம். ஒருவரைப் பிடிக்காமல் போவதற்கு அவர்களைப் பற்றிக் குறை கூறுவதும், பிறர் குற்றம் காண்பதை நம்புவதும் காரணமாகிறது. நாம் பிறரைக் குறைகூறுவதால் அவர்கள் எந்தப் பாதிப்பும் அடையப் போவதில்லை. மாறாக, நம் குறைகளை வெளிப்படுத்திக்கொள்கிறோம். கதை கலைஞர் பட்டுசாமி அடிக்கடி பிற கலைஞர்களைக் குறை சொல்வார். கேட்பதற்கு சுவாரசியமாகவும் வேடிக்கையாகவும் இருக்கும். அவரிடம் பயின்ற மாணவர்கள் சிரித்து ரசிப்பது அவருக்கு அருமருந்தாகியது. ஓயாமல் அப்படியே பேசத் தொடங்கினார். ஒரு முறை நான், “எனக்கு இந்த சுருதிப் பெட்டியை இயக்கத் தெரியாது. அவர் சொல்லிக் கொடுத்தார்,” என்று வேறொருவருடைய பெயரைக் குறிப்பிட்டேன். பட்டுசாமி அதிர்ந்து, “அப்போது, என்னைப் பற்றிக்கூட பேசுவீர்களா?” என்று கேட்டார். “ஆமாம். நீங்க மற்றவர்களைப் பத்தி பேசலியா?” என்று நான் எதிர்க்கேள்வி கேட்க, அவர் வாய் அடைத்துப் போயிற்று. (இத்தனைக்கும், நான் தவறாக எதுவும் சொல்லவில்லையே!) அவர் பிற கலைஞர்களைப் பற்றித் தாறுமாறாகப் பேசியது அவர்கள் குற்றமில்லை. தனக்கு எத்தனையோ திறமை இருந்தும், தான் அவர்களைப்போல் புகழ் பெறாமல் முடங்கிக் கிடக்கிறோமே என்ற ஆதங்கம் அவருக்கு. அவர்களைப் பழித்து, தன்னையே சமாதானப்படுத்திக்கொள்கிறார். அவர்களிடம் குறை இருந்தாலும்தான் என்ன! யாரிடம்தான் குறை இல்லை? நாம் பிறரைப் பற்றி அவதூறாகப் பேசாவிட்டால், நம்மைப் பற்றி அவர்கள் என்ன பேசுகிறார்கள் என்று கவலைப்பட வேண்டியதில்லை. நம் கனவுகளை நனவாக்கிக்கொள்ளலாம். கருத்து வேறுபாடு எல்லாரும் இருப்பதுபோல் நாமும் இருந்தால்தான் சரியானது, நம்மை ஏற்பார்கள் என்று எண்ணி நடப்பவர்கள் பெரிதாக எதையும் சாதிக்க முடியாது. மனக்கிலேசமும் எழக்கூடும். குடும்பம் திருமணமானதும், முதல்முறையாக மாமியார் வீட்டில் கூட்டுக்குடித்தனம் செய்ய ஆயத்தமானாள் மலர்விழி. அவளுடைய தாய் வாய் ஓயாது உபதேசம் பண்ணி அனுப்பினாள். “எல்லாரிடமும் மரியாதையாகப் பழகு. பெரியவர்கள் சொல்வதைக்கேட்டு நட. உனக்குப் பிடிக்கிறதோ, இல்லையோ, நீதான் விட்டுக்கொடுக்க வேண்டும்”. இந்த ரீதியில் தொடர்ந்து பல நாட்கள், ‘அறிவுரை’ என்று தனக்குச் சொல்லிக்கொடுக்கப்பட்டதை கூறினாள் அந்த தாய். எல்லாம், ‘மகளை இப்படி வளர்த்திருக்கிறீர்களே!’ என்று ஏசிவிடுவார்களோ என்ற பயம்தான்! மலர்விழி பெரிய படிப்பு படித்தவள். சுயமாகச் சிந்திக்கும் திறனைக் கொண்டவள். முதலில் தாய் சொன்னதைக் கடைப்பிடித்தவள், ‘நான் ஏன் மகிழ்ச்சியாகவே இல்லை?’ என்று யோசிக்க ஆரம்பித்தாள். வெவ்வேறு குடும்பங்கள் ஆனதால், அவர்களது கலாசாரம் ஒத்துப்போகவில்லை. அதனால், மலர்விழி செய்வது, சொல்வது எல்லாம் பிறருக்குக் கேலியாக இருந்தது. ‘தன்மேல்தான் தவறோ?’ என்று இவள் ஓயாது விட்டுக்கொடுத்ததில், பிறரது அதிகாரம் கூடிப்போயிற்று. சில வருடங்கள் கஷ்டப்பட்டபின் அவளுக்குப் புரிந்தது. எந்தக் காரியத்தை எடுத்தாலும் அதில் வெற்றி பெறவேண்டும், பிறர் கேலி செய்தாலும் அதைப் பொருட்படுத்தாது முனையவேண்டும் என்றெல்லாம் நடந்துகொண்டிருந்த தான் பிறரது வார்த்தைகளை அப்படியே ஏற்று நடந்தது தவறு என்று புரிந்துகொண்டாள். ஒரே வழி தனிக்குடித்தனம் போவதுதான் என்று முடிவெடுத்தாள். இழந்த உற்சாகமும் நிம்மதியும் மீண்டன. எந்த உறவிலும், ஒருவரை அவர் இருக்கிறபடியே ஏற்றால் இரு தரப்பிலும் மரியாதை இருக்கும். அதைவிட்டு, ‘நீ சொல்வதெல்லாம் தவறு. என் சொற்படிதான் நடக்கவேண்டும்,’ என்ற வாதம் கசப்பில்தான் முடியும். குடும்பம் இரண்டாகும். திரைப்படங்கள் பொதுப்பான்மையான கருத்துகளை வைத்துப் திரைப்படம் எடுத்தால்தான் பலரும் பார்ப்பார்கள், நிறைய லாபம் கிடைக்கும் என்று நினைத்துச் செயல்படுகிறவர்கள் வெகு சிலரே. ஆனால், இவர்கள்தாம் வெற்றி பெறுகிறார்கள். நிஜவாழ்க்கையில் எப்போதாவது நடக்கும் சம்பவங்களைத்தான் கதையாகப் பின்னுகிறார்கள் இவர்கள். ‘இப்படியெல்லாமா நடக்கிறது!’ என்ற அதிர்ச்சியும் ஆச்சரியமும் எழ, அரங்குகளில் கூட்டம் நிரம்பி வழிகிறது. விமர்சகர்கள் திரைப்படங்களைப் பார்ப்பதற்குமுன் விமர்சகர்கள் அவற்றைப்பற்றி என்ன சொல்லியிருக்கிறார்கள் என்று பார்ப்பது பலருடைய வழக்கம், என்னுடையதும்தான். அது எவ்வளவு தவறு என்று பிறகுதான் புரிந்தது. ஏனெனில், கருத்து என்பது உணர்ச்சிபூர்வமாக ஏற்படுவது. அப்போது அறிவு குறிக்கிடுவதில்லை. பிற மதத்தைச் சார்ந்த ஒருவரை இளம்பெண் ஒருத்தி காதலிக்கிறாள் என்று கதை அமைந்திருந்தால், கதை விறுவிறுப்பாக, உணர்ச்சிபூர்வமாக, நம்பத்தக்கதாக இருக்கிறதா என்றெல்லாம் கவனிக்க ஒரு விமர்சகர் அக்கறை எடுத்துக்கொள்வதில்லை. அக்கருத்தை ஒத்துக்கொள்ளாது, ‘கண்டிக்கத்தக்க’ அந்த திரைப்படத்தைக் கண்டனம் செய்வார். குடும்பத்தில் வேறு ஏதாவதொரு குடும்பத்தில் மதம், இனம் இவைகளில் வித்தியாசம் இருந்து, பெற்றோரைமீறி கல்யாணம் செய்துகொண்டவர்கள் கஷ்டப்பட்டிருப்பார்கள். அதைக் கண்டு பயந்து, தம் குழந்தைகளும் அவ்வாறு துன்பப்படக்கூடாது என்ற ஆதங்கத்துடன் பெற்றோர் மறுப்பார்கள். ‘பிறர் என்ன சொல்வார்கள்!’ என்ற அச்சத்தினாலும் மறுப்பு எழும். இரு தரப்பிலும் இருக்கக்கூடிய உண்மையான அன்பும், நேர்மையும் அவர்கள் கண்களுக்குப் புலப்படுவதில்லை. அவர்களுக்குத் தோன்றியதை ஆத்திரப்படாமல் எடுத்துச் சொன்னால், விவகாரம் சுமுகமாக முடிய வழி இருக்கிறது. முரட்டுத்தனமும் வீரமும் ஒன்றுதான் என்று நினைப்பவர்களே சண்டையில் ஈடுபடுவார்கள். எழுபது, எண்பது வருடங்களுக்குமுன் பன்னிரண்டு வயதுக்குள் பெண்ணுக்குக் கல்யாணம் செய்து முடித்து, புக்ககத்திற்கு அனுப்பினார்கள். அப்போது அவளால் வளைந்துகொடுக்க முடிந்தது. அவளுக்குத் தனித்திறமைகள் இருந்தாலும் அவை வெளிப்படவில்லை. ஏனெனில், அவளுக்கே தன்னால் என்ன முடியும் என்ற தெரிந்திருக்காது. பிறர் சொற்படி கேட்டு நடந்து, நல்ல பெயர் வாங்கினாள். அப்படி ஒரு பெண்ணின் கதையைப் பார்ப்போமா? கதை மீனாட்சி நல்ல புத்திசாலி. எட்டு வயதிலேயே கல்யாணமாகி, கணவர் வீட்டுக்கு வந்தவள். பதின்மூன்று வயதிலிருந்து வருடத்திற்கு ஒரு பிள்ளை. ‘பெண்’ என்றால் இப்படித்தான் இருக்கவேண்டும் என்ற கட்டுப்பாட்டை ஏற்று நடந்தாலும், அவள் மனதில் ஏதோ வெறுமை. அவள் வளர்த்த குழந்தைகள் நன்கு படித்து, பெரிய உத்தியோகங்களில் அமர்ந்தபோது, தான் மட்டும் இப்படி வீடு, குடும்பம் என்று அடங்கிப்போய்விட்டோமே என்ற எண்ணமெழ, அது ஆத்திரமாக மருவியது. சாதுவான கணவரைப் பார்த்துக் கத்தினாள். கறிகாய் விற்பவன், பேரன் பேத்திகள் எல்லாருக்கும் காரணமில்லாமல் ‘அர்ச்சனை’. ‘பெண்களுக்கு என்ன இருக்கிறது, பாவம்!’ என்று புரிந்து, கணவரும் அடங்கிப்போனாராம். இது அந்தக் காலம். இன்றும் இப்படி நடக்கவேண்டும் என்று எதிர்பார்த்தால் சண்டை, சச்சரவு என்று நீண்டுகொண்டே போகாதா! கதை வித்யாவின் கணவனுக்கு அவளுடைய உறவினர்கள் தங்கள் வீட்டுக்கு வந்தாலே பிடிக்காது. ஆனால், தன் பெயர் கெடக்கூடாது என்பதில் கவனமாக இருப்பான். விருந்தினர்களிடம் போலி அன்புடன் பழகுவான். ஓரிரு நாட்கள் கழிந்ததும், ‘அவர்களைத் திரும்பிப் போகச்சொல்,’ என்று தனிமையில் மனைவியிடம் கத்துவான். வித்யாவுக்குத்தான் தர்மசங்கடமாகிவிடும். என்றாவது, அவர்களையே, ‘வெளியே போங்கள்!’ என்று ஏடாகூடமாகச் சொல்லிவிட்டால் என்ன செய்வது! அவளுக்கு ஒரு வழிதான் புலப்பட்டது. கணவனை அடக்க முயற்சித்து, தன் அதிகாரத்தைக் கூட்டிக்கொண்டாள். அதைப் பார்த்து அதிர்ந்த விருந்தினர் பெண்மணி, தன் வீட்டுக்குத் திரும்பியதும், “வித்யா ரொம்ப மோசமான மனைவி! கணவனிடம் மரியாதையே இல்லாமல் நடந்துகொள்கிறாள்!” என்று பிற உறவினர்களிடம் பரப்பினாள். உண்மையான நிலவரம் புரியாததால், “பாவம், அவர் எவ்வளவு நல்லவராக இருக்கிறார்! இவளிடம் மாட்டிக்கொண்டுவிட்டாரே!” என்று கணவருக்குத்தான் அனுதாபம் கிடைத்தது! எந்தத் தவறு நடந்தாலும், பெண்ணின்மேல்தானே குற்றம் சுமத்துவார்கள் நம் சமூகத்தில்! வித்யாவுக்கு என்னவோ மகிழ்ச்சிதான் – கணவர் தன் உறவினர்களை விரட்டி அடிக்காமல் அவர்களைப் பாதுகாத்துவிட்டோமே என்று. உன் இலக்கு நோக்கிச் செல் சிலர் நல்ல வேலையை விட்டுவிட்டு, புதிதாக எதிலாவது ஈடுபடுவார்கள். உற்றார் உறவினர் அனைவரும் ‘மடத்தனம்!’ என்று அதிர்வார்கள். ஆனால், ஒருவரது இலக்கு அவருக்குத்தான் முக்கியம். பிறர் அதைப்பற்றி என்ன நினைக்கிறார்கள் என்பதைக் கவனிக்காது, அதை நோக்கிப் பயணிக்க வேண்டும். வெற்றி கிடைக்கலாம், கிட்டாமலும் போகலாம். ஆனாலும், ‘அப்படிச் செய்திருக்கலாமே!’ என்று என்றாவது ஏங்க நேராது. அனேகமாக எல்லாப் பெண்களுக்குமே எழுத வேண்டும் என்ற ஆசை உண்டு. ஆனால் தயக்கமும் ஏற்படும். ‘பெண்கள் திரும்பத் திரும்ப குடும்பக்கதைகள்தாம் எழுதுகிறார்கள். எல்லாம் ஒரேமாதிரிதான் இருக்கின்றன!’ என்று ஆண்கள் என்னிடம் குறை கூறியிருக்கிறார்கள். ‘படிப்பவர்களுக்கு என்ன பிடிக்கும்? அத்துடன் நம் பெயர் கெடாமல் இருக்குமா?’ என்றெல்லாம் யோசனை செய்து எழுத ஆரம்பித்தால் வேறு எப்படி எழுத முடியும்? “நல்ல இலக்கியம் என்பது அதிக விமரிசனத்துக்கு உள்ளாவது” (ஓர் இலக்கியவாதி). நான் எழுதியவற்றைப் புகழ்ந்தவர்களைவிட அதில் குற்றம் கண்டுபிடித்தவர்கள் அதிகம். ‘பெண்களுக்கு உணர்ச்சிகளே கூடாது. அப்படியே இருந்தாலும், அவற்றை அடக்கியே வைத்திருக்கவேண்டும்,’ என்ற கருத்துகொண்ட ஆண் தன்னைப் பலசாலி என்று கருதுகிறான். அவனுடைய எதிர்பார்ப்பு பொய்க்கும்போது அதிர்ச்சி உண்டாகிறது. எழுத்தைவிட அதை எழுதியவள் கண்டனத்துக்கு ஆளாகிறாள். இது புரிந்து, ஆண்கள் பழிக்கும்போதெல்லாம் பெண்கள் அவர்களை எதிர்த்து பதில் கடிதம் எழுதிவிடுவார்கள், எனக்குப் பக்கபலமாக. “என் பெயர் காதல்” என்ற தலைப்பில் நான் ஒரு கதை எழுதிவிட்டு, “எப்படிக் காதல் வயப்படுவது என்று அணுஅணுவாக விவரித்திருக்கிறேன்,” என்று என் மகளிடம் பெருமையாகக் கூறினேன். “ஐயோ, அம்மா!” என்று அதிர்ந்தாள். “உன் REPUTATION (நல்ல பெயர்) என்ன ஆவது?” “எனக்கா? நல்ல பெயர் இருக்கிறதா, என்ன!” என்று சிரித்தேன். தலைக்குமேல் வெள்ளம் போய்விட்டபின், சாண் போனாலென்ன, முழம் போனாலென்ன! முற்றும் [http://bits.wikimedia.org/static-1.24wmf9/skins/common/images/magnify-clip.png] நிர்மலா ராகவன் இந்தியாவில் பிறந்து வளர்ந்த இருமொழி எழுத்தாளர்.  ஓய்வு பெற்ற பௌதிக ஆசிரியை. 1967 தொடக்கம் மலேசியாவில் தமிழ் இலக்கியத்துறையில் ஈடுபட்டுவருகின்றார். சிறுகதை, கட்டுரை, தொடர்கதை, வானொலி நாடகம், கலை விமர்சனங்கள் போன்றவற்றை எழுதி வருகின்றார். இவரின் ஆக்கங்கள் மலேசியாவின் பிரபல ஆங்கில மற்றும் தமிழ் இதழ்களிலும் இடம்பெற்றுள்ளன. இவர் ஆங்கிலத்தில் எழுதிய பெண்ணியக் கட்டுரைகள் ஸ்வீடனிலும் மலேசியாவிலும் முனைவர் பட்ட ஆராய்ச்சிக்குக் கையாளப்பட்டிருக்கின்றன. பல மேடைகளிலும் கருத்தரங்கங்களிலும் பேசியுள்ளார். இந்தியர்களிடையே காணும் சமுதாயப் பிரச்சினைகளை அலசி, தமது எழுத்துக்களில் அவற்றின் தீர்வுக்கான ஆலோசனைகள் வழங்கி வருகிறார். இளைஞர் மனோநிலைகள் பற்றி அதிகம் எழுதியுள்ளார். நேரடிச் சமூகச் சேவையிலும் ஈடுபட்டிருக்கிறார். வெளியிட்ட சிறுகதைத்தொகுப்பு: ஏணி. (தமிழ்நாட்டுக் கல்லூரி ஒன்றில் இளங்கலை பட்டப்படிப்புக்கு தேர்வு செய்யப்பட்டது). நூற்றுக்கும் மேற்பட்ட பரதநாட்டியத்திற்கான பாடல்களை கர்னாடக இசைப்பாணியில் எழுதி, பாடிப் பதிவு செய்துள்ளார். நிர்மலா ராகவன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள்: https://www.youtube.com/channel/UCx_QN5oaxMHPCs_I9B20n7A பரிசில்களும், விருதுகளும் - “சிறுகதைச் செம்மல்” விருது (1991) - “சிறந்த பெண் எழுத்தாளர்” விருது (1993) - சிறந்த சிறுகதை எழுத்தாளருக்கான விருது (தங்கப் பதக்கம், மலேசிய தமிழ் எழுத்தாளர் சங்கம், 2006) - ஆஸ்ட்ரோ தொலைகாட்சி, மலேசிய தமிழ் எழுத்தாளர் சங்கம் இணைந்து நடத்திய நாவல் போட்டிகளில் மூன்று முறை பரிசு பெற்றிருக்கிறார். - மின்னூல்கள்: தமிழ் – 27, ஆங்கிலம் – 6 (Amazon Kindle, Amazon paperback) FREETAMILEBOOKS.COM மின்புத்தகங்களைப் படிக்க உதவும் கருவிகள்: மின்புத்தகங்களைப் படிப்பதற்கென்றே கையிலேயே வைத்துக் கொள்ளக்கூடிய பல கருவிகள் தற்போது சந்தையில் வந்துவிட்டன. Kindle, Nook, Android Tablets போன்றவை இவற்றில் பெரும்பங்கு வகிக்கின்றன. இத்தகைய கருவிகளின் மதிப்பு தற்போது 4000 முதல் 6000 ரூபாய் வரை குறைந்துள்ளன. எனவே பெரும்பான்மையான மக்கள் தற்போது இதனை வாங்கி வருகின்றனர். ஆங்கிலத்திலுள்ள மின்புத்தகங்கள்: ஆங்கிலத்தில் லட்சக்கணக்கான மின்புத்தகங்கள் தற்போது கிடைக்கப் பெறுகின்றன. அவை PDF, EPUB, MOBI, AZW3. போன்ற வடிவங்களில் இருப்பதால், அவற்றை மேற்கூறிய கருவிகளைக் கொண்டு நாம் படித்துவிடலாம். தமிழிலுள்ள மின்புத்தகங்கள்: தமிழில் சமீபத்திய புத்தகங்களெல்லாம் நமக்கு மின்புத்தகங்களாக கிடைக்கப்பெறுவதில்லை. ProjectMadurai.com எனும் குழு தமிழில் மின்புத்தகங்களை வெளியிடுவதற்கான ஒர் உன்னத சேவையில் ஈடுபட்டுள்ளது. இந்தக் குழு இதுவரை வழங்கியுள்ள தமிழ் மின்புத்தகங்கள் அனைத்தும் PublicDomain-ல் உள்ளன. ஆனால் இவை மிகவும் பழைய புத்தகங்கள். சமீபத்திய புத்தகங்கள் ஏதும் இங்கு கிடைக்கப்பெறுவதில்லை. சமீபத்திய புத்தகங்களை தமிழில் பெறுவது எப்படி? அமேசான் கிண்டில் கருவியில் தமிழ் ஆதரவு தந்த பிறகு, தமிழ் மின்னூல்கள் அங்கே விற்பனைக்குக் கிடைக்கின்றன. ஆனால் அவற்றை நாம் பதிவிறக்க இயலாது. வேறு யாருக்கும் பகிர இயலாது. சமீபகாலமாக பல்வேறு எழுத்தாளர்களும், பதிவர்களும், சமீபத்திய நிகழ்வுகளைப் பற்றிய விவரங்களைத் தமிழில் எழுதத் தொடங்கியுள்ளனர். அவை இலக்கியம், விளையாட்டு, கலாச்சாரம், உணவு, சினிமா, அரசியல், புகைப்படக்கலை, வணிகம் மற்றும் தகவல் தொழில்நுட்பம் போன்ற பல்வேறு தலைப்புகளின் கீழ் அமைகின்றன. நாம் அவற்றையெல்லாம் ஒன்றாகச் சேர்த்து தமிழ் மின்புத்தகங்களை உருவாக்க உள்ளோம். அவ்வாறு உருவாக்கப்பட்ட மின்புத்தகங்கள் Creative Commons எனும் உரிமத்தின் கீழ் வெளியிடப்படும். இவ்வாறு வெளியிடுவதன் மூலம் அந்தப் புத்தகத்தை எழுதிய மூல ஆசிரியருக்கான உரிமைகள் சட்டரீதியாகப் பாதுகாக்கப்படுகின்றன. அதே நேரத்தில் அந்த மின்புத்தகங்களை யார் வேண்டுமானாலும், யாருக்கு வேண்டுமானாலும், இலவசமாக வழங்கலாம். எனவே தமிழ் படிக்கும் வாசகர்கள் ஆயிரக்கணக்கில் சமீபத்திய தமிழ் மின்புத்தகங்களை இலவசமாகவே பெற்றுக் கொள்ள முடியும். தமிழிலிருக்கும் எந்த வலைப்பதிவிலிருந்து வேண்டுமானாலும் பதிவுகளை எடுக்கலாமா? கூடாது. ஒவ்வொரு வலைப்பதிவும் அதற்கென்றே ஒருசில அனுமதிகளைப் பெற்றிருக்கும். ஒரு வலைப்பதிவின் ஆசிரியர் அவரது பதிப்புகளை “யார் வேண்டுமானாலும் பயன்படுத்தலாம்” என்று குறிப்பிட்டிருந்தால் மட்டுமே அதனை நாம் பயன்படுத்த முடியும். அதாவது “Creative Commons” எனும் உரிமத்தின் கீழ் வரும் பதிப்புகளை மட்டுமே நாம் பயன்படுத்த முடியும். அப்படி இல்லாமல் “All Rights Reserved” எனும் உரிமத்தின் கீழ் இருக்கும் பதிப்புகளை நம்மால் பயன்படுத்த முடியாது. வேண்டுமானால் “All Rights Reserved” என்று விளங்கும் வலைப்பதிவுகளைக் கொண்டிருக்கும் ஆசிரியருக்கு அவரது பதிப்புகளை “Creative Commons” உரிமத்தின் கீழ் வெளியிடக்கோரி நாம் நமது வேண்டுகோளைத் தெரிவிக்கலாம். மேலும் அவரது படைப்புகள் அனைத்தும் அவருடைய பெயரின் கீழே தான் வெளியிடப்படும் எனும் உறுதியையும் நாம் அளிக்க வேண்டும். பொதுவாக புதுப்புது பதிவுகளை  உருவாக்குவோருக்கு அவர்களது பதிவுகள்  நிறைய வாசகர்களைச் சென்றடைய வேண்டும் என்ற எண்ணம் இருக்கும். நாம் அவர்களது படைப்புகளை எடுத்து இலவச மின்புத்தகங்களாக வழங்குவதற்கு  நமக்கு அவர்கள் அனுமதியளித்தால், உண்மையாகவே அவர்களது படைப்புகள் பெரும்பான்மையான மக்களைச் சென்றடையும். வாசகர்களுக்கும் நிறைய புத்தகங்கள் படிப்பதற்குக் கிடைக்கும் வாசகர்கள் ஆசிரியர்களின் வலைப்பதிவு முகவரிகளில் கூட அவர்களுடைய படைப்புகளை தேடிக் கண்டுபிடித்து படிக்கலாம். ஆனால் நாங்கள் வாசகர்களின் சிரமத்தைக் குறைக்கும் வண்ணம் ஆசிரியர்களின் சிதறிய வலைப்பதிவுகளை ஒன்றாக இணைத்து ஒரு முழு மின்புத்தகங்களாக உருவாக்கும் வேலையைச் செய்கிறோம். மேலும் அவ்வாறு உருவாக்கப்பட்ட புத்தகங்களை “மின்புத்தகங்களைப் படிக்க உதவும் கருவிகள்”-க்கு ஏற்ற வண்ணம் வடிவமைக்கும் வேலையையும் செய்கிறோம். FREETAMILEBOOKS.COM இந்த வலைத்தளத்தில்தான் பின்வரும் வடிவமைப்பில் மின்புத்தகங்கள் காணப்படும். PDF for desktop, PDF for 6” devices, EPUB, AZW3, ODT இந்த வலைதளத்திலிருந்து யார் வேண்டுமானாலும் மின்புத்தகங்களை இலவசமாகப் பதிவிறக்கம்(download) செய்து கொள்ளலாம். அவ்வாறு பதிவிறக்கம்(download) செய்யப்பட்ட புத்தகங்களை யாருக்கு வேண்டுமானாலும் இலவசமாக வழங்கலாம். இதில் நீங்கள் பங்களிக்க விரும்புகிறீர்களா?  நீங்கள் செய்யவேண்டியதெல்லாம் தமிழில் எழுதப்பட்டிருக்கும் வலைப்பதிவுகளிலிருந்து பதிவுகளை எடுத்து, அவற்றை LibreOffice/MS Office போன்ற wordprocessor-ல் போட்டு ஓர் எளிய மின்புத்தகமாக மாற்றி எங்களுக்கு அனுப்பவும். அவ்வளவுதான்! மேலும் சில பங்களிப்புகள் பின்வருமாறு: 1. ஒருசில பதிவர்கள்/எழுத்தாளர்களுக்கு அவர்களது படைப்புகளை “Creative Commons” உரிமத்தின்கீழ் வெளியிடக்கோரி மின்னஞ்சல் அனுப்புதல் 2. தன்னார்வலர்களால் அனுப்பப்பட்ட மின்புத்தகங்களின் உரிமைகளையும் தரத்தையும் பரிசோதித்தல் 3. சோதனைகள் முடிந்து அனுமதி வழங்கப்பட்ட தரமான மின்புத்தகங்களை நமது வலைதளத்தில் பதிவேற்றம் செய்தல் விருப்பமுள்ளவர்கள் freetamilebooksteam@gmail.com எனும் முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பவும்.  இந்தத் திட்டத்தின் மூலம் பணம் சம்பாதிப்பவர்கள் யார்? யாருமில்லை. இந்த வலைத்தளம் முழுக்க முழுக்க தன்னார்வலர்களால் செயல்படுகின்ற ஒரு வலைத்தளம் ஆகும். இதன் ஒரே நோக்கம் என்னவெனில் தமிழில் நிறைய மின்புத்தகங்களை உருவாக்குவதும், அவற்றை இலவசமாக பயனர்களுக்கு வழங்குவதுமே ஆகும். மேலும் இவ்வாறு உருவாக்கப்பட்ட மின்புத்தகங்கள், ebook reader ஏற்றுக்கொள்ளும் வடிவமைப்பில் அமையும். இத்திட்டத்தால் பதிப்புகளை எழுதிக்கொடுக்கும் ஆசிரியர்/பதிவருக்கு என்ன லாபம்? ஆசிரியர்/பதிவர்கள் இத்திட்டத்தின் மூலம் எந்தவிதமான தொகையும் பெறப்போவதில்லை. ஏனெனில், அவர்கள் புதிதாக இதற்கென்று எந்தஒரு பதிவையும்  எழுதித்தரப்போவதில்லை. ஏற்கனவே அவர்கள் எழுதி வெளியிட்டிருக்கும் பதிவுகளை எடுத்துத்தான் நாம் மின்புத்தகமாக வெளியிடப்போகிறோம். அதாவது அவரவர்களின் வலைதளத்தில் இந்தப் பதிவுகள் அனைத்தும் இலவசமாகவே கிடைக்கப்பெற்றாலும், அவற்றையெல்லாம் ஒன்றாகத் தொகுத்து ebook reader போன்ற கருவிகளில் படிக்கும் விதத்தில் மாற்றித் தரும் வேலையை இந்தத் திட்டம் செய்கிறது. தற்போது மக்கள் பெரிய அளவில் tablets மற்றும் ebook readers போன்ற கருவிகளை நாடிச் செல்வதால் அவர்களை நெருங்குவதற்கு இது ஒரு நல்ல வாய்ப்பாக அமையும். நகல் எடுப்பதை அனுமதிக்கும் வலைதளங்கள் ஏதேனும் தமிழில் உள்ளதா? உள்ளது. பின்வரும் தமிழில் உள்ள வலைதளங்கள் நகல் எடுப்பதினை அனுமதிக்கின்றன. 1. http://www.vinavu.com 2. http://www.badriseshadri.in  3. http://maattru.com  4. http://www.kaniyam.com  5. http://blog.ravidreams.net  எவ்வாறு ஒர் எழுத்தாளரிடம் CREATIVE COMMONS உரிமத்தின் கீழ் அவரது படைப்புகளை வெளியிடுமாறு கூறுவது? இதற்கு பின்வருமாறு ஒரு மின்னஞ்சலை அனுப்ப வேண்டும். துவக்கம் உங்களது வலைத்தளம் அருமை (வலைதளத்தின் பெயர்). தற்போது படிப்பதற்கு உபயோகப்படும் கருவிகளாக Mobiles மற்றும் பல்வேறு கையிருப்புக் கருவிகளின் எண்ணிக்கை அதிகரித்து வந்துள்ளது. இந்நிலையில் நாங்கள் http://www.FreeTamilEbooks.com எனும் வலைதளத்தில், பல்வேறு தமிழ் மின்புத்தகங்களை வெவ்வேறு துறைகளின் கீழ் சேகரிப்பதற்கான ஒரு புதிய திட்டத்தில் ஈடுபட்டுள்ளோம்.  இங்கு சேகரிக்கப்படும் மின்புத்தகங்கள் பல்வேறு கணிணிக் கருவிகளான Desktop,ebook readers like kindl, nook, mobiles, tablets with android, iOS போன்றவற்றில் படிக்கும் வண்ணம் அமையும். அதாவது இத்தகைய கருவிகள் support செய்யும் odt, pdf, ebub, azw போன்ற வடிவமைப்பில் புத்தகங்கள் அமையும். இதற்காக நாங்கள் உங்களது வலைதளத்திலிருந்து பதிவுகளை பெற விரும்புகிறோம். இதன் மூலம் உங்களது பதிவுகள் உலகளவில் இருக்கும் வாசகர்களின் கருவிகளை நேரடியாகச் சென்றடையும். எனவே உங்களது வலைதளத்திலிருந்து பதிவுகளை  பிரதியெடுப்பதற்கும் அவற்றை மின்புத்தகங்களாக மாற்றுவதற்கும் உங்களது அனுமதியை வேண்டுகிறோம். இவ்வாறு உருவாக்கப்பட்ட மின்புத்தகங்களில் கண்டிப்பாக ஆசிரியராக உங்களின் பெயரும் மற்றும் உங்களது வலைதள முகவரியும் இடம்பெறும். மேலும் இவை “Creative Commons” உரிமத்தின் கீழ் மட்டும்தான் வெளியிடப்படும் எனும் உறுதியையும் அளிக்கிறோம். http://creativecommons.org/licenses/  நீங்கள் எங்களை பின்வரும் முகவரிகளில் தொடர்பு கொள்ளலாம். e-mail : FREETAMILEBOOKSTEAM@GMAIL.COM  FB : https://www.facebook.com/FreeTamilEbooks  G plus: https://plus.google.com/communities/108817760492177970948    நன்றி. முடிவு மேற்கூறியவாறு ஒரு மின்னஞ்சலை உங்களுக்குத் தெரிந்த அனைத்து எழுத்தாளர்களுக்கும் அனுப்பி அவர்களிடமிருந்து அனுமதியைப் பெறுங்கள். முடிந்தால் அவர்களையும் “Creative Commons License”-ஐ அவர்களுடைய வலைதளத்தில் பயன்படுத்தச் சொல்லுங்கள். கடைசியாக அவர்கள் உங்களுக்கு அனுமதி அளித்து அனுப்பியிருக்கும் மின்னஞ்சலைFREETAMILEBOOKSTEAM@GMAIL.COM எனும் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.  ஓர் எழுத்தாளர் உங்களது உங்களது வேண்டுகோளை மறுக்கும் பட்சத்தில் என்ன செய்வது? அவர்களையும் அவர்களது படைப்புகளையும் அப்படியே விட்டுவிட வேண்டும். ஒருசிலருக்கு அவர்களுடைய சொந்த முயற்சியில் மின்புத்தகம் தயாரிக்கும் எண்ணம்கூட இருக்கும். ஆகவே அவர்களை நாம் மீண்டும் மீண்டும் தொந்தரவு செய்யக் கூடாது. அவர்களை அப்படியே விட்டுவிட்டு அடுத்தடுத்த எழுத்தாளர்களை நோக்கி நமது முயற்சியைத் தொடர வேண்டும்.   மின்புத்தகங்கள் எவ்வாறு அமைய வேண்டும்? ஒவ்வொருவரது வலைத்தளத்திலும் குறைந்தபட்சம் நூற்றுக்கணக்கில் பதிவுகள் காணப்படும். அவை வகைப்படுத்தப்பட்டோ அல்லது வகைப்படுத்தப் படாமலோ இருக்கும்.  நாம் அவற்றையெல்லாம் ஒன்றாகத் திரட்டி ஒரு பொதுவான தலைப்பின்கீழ் வகைப்படுத்தி மின்புத்தகங்களாகத் தயாரிக்கலாம். அவ்வாறு வகைப்படுத்தப்படும் மின்புத்தகங்களை பகுதி-I பகுதி-II என்றும் கூட தனித்தனியே பிரித்துக் கொடுக்கலாம்.  தவிர்க்க வேண்டியவைகள் யாவை? இனம், பாலியல் மற்றும் வன்முறை போன்றவற்றைத் தூண்டும் வகையான பதிவுகள் தவிர்க்கப்பட வேண்டும்.  எங்களைத் தொடர்பு கொள்வது எப்படி? நீங்கள் பின்வரும் முகவரிகளில் எங்களைத் தொடர்பு கொள்ளலாம்.  - EMAIL : FREETAMILEBOOKSTEAM@GMAIL.COM   - Facebook: https://www.facebook.com/FreeTamilEbooks   - Google Plus: https://plus.google.com/communities/108817760492177970948   இத்திட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் யார்? குழு – http://freetamilebooks.com/meet-the-team/    SUPPORTED BY கணியம் அறக்கட்டளை http://kaniyam.com/foundation     கணியம் அறக்கட்டளை []   தொலை நோக்கு – Vision தமிழ் மொழி மற்றும் இனக்குழுக்கள் சார்ந்த மெய்நிகர்வளங்கள், கருவிகள் மற்றும் அறிவுத்தொகுதிகள், அனைவருக்கும்  கட்டற்ற அணுக்கத்தில் கிடைக்கும் சூழல் பணி இலக்கு  – Mission அறிவியல் மற்றும் சமூகப் பொருளாதார வளர்ச்சிக்கு ஒப்ப, தமிழ் மொழியின் பயன்பாடு வளர்வதை உறுதிப்படுத்துவதும், அனைத்து அறிவுத் தொகுதிகளும், வளங்களும் கட்டற்ற அணுக்கத்தில் அனைவருக்கும் கிடைக்கச்செய்தலும்.   தற்போதைய செயல்கள் - கணியம் மின்னிதழ் – http://kaniyam.com - கிரியேட்டிவ் காமன்சு உரிமையில் இலவச தமிழ் மின்னூல்கள் – http://FreeTamilEbooks.com   கட்டற்ற மென்பொருட்கள் - உரை ஒலி மாற்றி –  Text to Speech - எழுத்துணரி – Optical Character Recognition - விக்கிமூலத்துக்கான எழுத்துணரி - மின்னூல்கள் கிண்டில் கருவிக்கு அனுப்புதல் – Send2Kindle - விக்கிப்பீடியாவிற்கான சிறு கருவிகள் - மின்னூல்கள் உருவாக்கும் கருவி - உரை ஒலி மாற்றி – இணைய செயலி - சங்க இலக்கியம் – ஆன்டிராய்டு செயலி - FreeTamilEbooks – ஆன்டிராய்டு செயலி - FreeTamilEbooks – ஐஒஎஸ் செயலி - WikisourceEbooksReportஇந்திய மொழிகளுக்ககான விக்கிமூலம் மின்னூல்கள் பதிவிறக்கப் பட்டியல் - FreeTamilEbooks.com – Download counter மின்னூல்கள் பதிவிறக்கப் பட்டியல்   அடுத்த திட்டங்கள்/மென்பொருட்கள்   - விக்கி மூலத்தில் உள்ள மின்னூல்களை பகுதிநேர/முழு நேரப் பணியாளர்கள் மூலம் விரைந்து பிழை திருத்துதல் - முழு நேர நிரலரை பணியமர்த்தி பல்வேறு கட்டற்ற மென்பொருட்கள் உருவாக்குதல் - தமிழ் NLP க்கான பயிற்சிப் பட்டறைகள் நடத்துதல் - கணியம் வாசகர் வட்டம் உருவாக்குதல் - கட்டற்ற மென்பொருட்கள், கிரியேட்டிவ் காமன்சு உரிமையில் வளங்களை உருவாக்குபவர்களைக் கண்டறிந்து ஊக்குவித்தல் - கணியம் இதழில் அதிக பங்களிப்பாளர்களை உருவாக்குதல், பயிற்சி அளித்தல் - மின்னூலாக்கத்துக்கு ஒரு இணையதள செயலி - எழுத்துணரிக்கு ஒரு இணையதள செயலி - தமிழ் ஒலியோடைகள் உருவாக்கி வெளியிடுதல் - http://OpenStreetMap.org ல் உள்ள இடம், தெரு, ஊர் பெயர்களை தமிழாக்கம் செய்தல் - தமிழ்நாடு முழுவதையும் http://OpenStreetMap.org ல் வரைதல் - குழந்தைக் கதைகளை ஒலி வடிவில் வழங்குதல் - http://Ta.wiktionary.org ஐ ஒழுங்குபடுத்தி API க்கு தோதாக மாற்றுதல் - http://Ta.wiktionary.org க்காக ஒலிப்பதிவு செய்யும் செயலி உருவாக்குதல் - தமிழ் எழுத்துப் பிழைத்திருத்தி உருவாக்குதல் - தமிழ் வேர்ச்சொல் காணும் கருவி உருவாக்குதல் - எல்லா http://FreeTamilEbooks.com மின்னூல்களையும் Google Play Books, GoodReads.com ல் ஏற்றுதல் - தமிழ் தட்டச்சு கற்க இணைய செயலி உருவாக்குதல் - தமிழ் எழுதவும் படிக்கவும் கற்ற இணைய செயலி உருவாக்குதல் ( aamozish.com/Course_preface போல)   மேற்கண்ட திட்டங்கள், மென்பொருட்களை உருவாக்கி செயல்படுத்த உங்கள் அனைவரின் ஆதரவும் தேவை. உங்களால் எவ்வாறேனும் பங்களிக்க இயலும் எனில் உங்கள் விவரங்களை  kaniyamfoundation@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்.   வெளிப்படைத்தன்மை கணியம் அறக்கட்டளையின் செயல்கள், திட்டங்கள், மென்பொருட்கள் யாவும் அனைவருக்கும் பொதுவானதாகவும், 100% வெளிப்படைத்தன்மையுடனும் இருக்கும்.இந்த இணைப்பில் செயல்களையும், இந்த இணைப்பில் மாத அறிக்கை, வரவு செலவு விவரங்களுடனும் காணலாம். கணியம் அறக்கட்டளையில் உருவாக்கப்படும் மென்பொருட்கள் யாவும் கட்டற்ற மென்பொருட்களாக மூல நிரலுடன், GNU GPL, Apache, BSD, MIT, Mozilla ஆகிய உரிமைகளில் ஒன்றாக வெளியிடப்படும். உருவாக்கப்படும் பிற வளங்கள், புகைப்படங்கள், ஒலிக்கோப்புகள், காணொளிகள், மின்னூல்கள், கட்டுரைகள் யாவும் யாவரும் பகிரும், பயன்படுத்தும் வகையில் கிரியேட்டிவ் காமன்சு உரிமையில் இருக்கும். நன்கொடை உங்கள் நன்கொடைகள் தமிழுக்கான கட்டற்ற வளங்களை உருவாக்கும் செயல்களை சிறந்த வகையில் விரைந்து செய்ய ஊக்குவிக்கும். பின்வரும் வங்கிக் கணக்கில் உங்கள் நன்கொடைகளை அனுப்பி, உடனே விவரங்களை kaniyamfoundation@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்.  Kaniyam Foundation Account Number : 606 1010 100 502 79 Union Bank Of India West Tambaram, Chennai IFSC – UBIN0560618 Account Type : Current Account   UPI செயலிகளுக்கான QR Code []   குறிப்பு: சில UPI செயலிகளில் இந்த QR Code வேலை செய்யாமல் போகலாம். அச்சமயம் மேலே உள்ள வங்கிக் கணக்கு எண், IFSC code ஐ பயன்படுத்தவும். Note: Sometimes UPI does not work properly, in that case kindly use Account number and IFSC code for internet banking.