[] []                                                          எதிர்வீடு                                                                           என். ஸ்ரீதரன்    நூல் :  எதிர்வீடு ஆசிரியர் :   என். ஸ்ரீதரன்   மின்னஞ்சல்  : maje200@gmail.com  அட்டைப்படம் = ஓவியர் திரு.கனிகராஜ்    மின்னூலாக்கம் : த . தனசேகர் மின்னஞ்சல் : tkdhanasekar@gmail.com வெளியிடு : FreeTamilEbooks.com   உரிமை: Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International  License. உரிமை – கிரியேட்டிவ் காமன்ஸ். எல்லாரும் படிக்கலாம், பகிரலாம். பொருளடக்கம் என்னுரை 5  1. எதிர்வீடு 6  2.மனசுதான் காரணம் ! 13  3. நெருப்பின் குளுமை 18  4.ராங் நம்பர் 24  5. வைர நெக்லஸ் 33  6. அணைக்கும் கரங்கள் 41  7.கண்ணாடிக் கதவுக்கு அப்பால் 45  8. யாவரும் கேளிர் 49  9. அவரவர் பார்வையில்.... 55  10.தேடல் 60  11. ஒரு விடியலுக்காக ! 66  12. வீட்டுக்குப் போலாம் 72  13. வாசு மாமாவும் சீதா மாமியும் 78  14. ஞானம் வந்த பின்பே ... 83  15. உதிர்ந்த மலர் 94  16. ஸ்மார்ட்போன் பிடியிலிருந்து... 100  17. அப்பாவுக்கு ஒரு கடிதம் 107  18. நீ என் மகனல்ல 111  19. உதவிக்கரம் 122  20. உண்மை சுடும் 128  21. அதிதி 131  22. அம்மா வீடு 137    என்னுரை   சிலருக்கு  இயற்கையாகவே வாசிக்கும் பழக்கம் வந்து விடுகிறது. சிலருக்கு வாசிக்கும் விருப்பம் இருந்தாலும் சூழ்நிலைகளின் காரணமாக வாசிக்க முடியாமல் போகிவிடுகிறது. எனக்குச்   சிறு வயதிலிருந்தே புத்தகம் படிக்கும் பழக்கம் உண்டு. சிறுகதைகளை விரும்பிப் படிப்பேன். ஆனால் தனியார் நிறுவனத்தில் பணி செய்துகொண்டிருக்கும்போது வாசிக்க நேரமில்லை.  ஓய்வு பெற்றவுடன் வாசிக்க ஆரம்பித்தேன். எதற்கும் நேரம் காலம் வரவேண்டுமல்லவா? நான் எழுதிய சிறுகதைகளை ”எதிர்வீடு” என்னும் சிறுகதைத் தொகுப்பாக உங்களிடம் சமர்ப்பிக்கிறேன். இத்தொகுப்பில் மொத்தம் இருபது சிறுகதைகள்  உள்ளன.   சில  சிறுகதைகள் பத்திரிகைகளில் பிரசுரம் ஆனவை.. சில கதைகள்  சிறகு, வல்லமை டாட் காம் மற்றும் பிரதிலிப் இணைய தளத்தில் பிரசுரம் ஆனவை. சிறுகதைகளின் இலக்கணம் காலத்துக்கேற்றவாறு மாறுகின்றது . ஆரம்பம், நடு , முடிவு என்பதுதான் முதலில் சிறுகதை எழுதும் முறையாக  இருந்தது.  இப்பொழுது சிறுகதைகள் அந்த மாதிரி வரையறை எதுவுமில்லாமல் வெளிவருகின்றன. சில கதைகளில் கதைக்கரு இருப்பதில்லை. ஏராளமான சிறுகதைகள் இதுவரை வெளிவந்துவிட்டன. வந்துகொண்டே இருக்கின்றன.  இன்னும் நிறையச் சிறுகதைகள் வரப்போகின்றன.    எது எப்படியிருந்தாலும் சிறுகதைகளைப் படிப்பதில் உள்ள இன்பமே அலாதி.  ஒரு நல்ல சிறுகதை மனதை நெருடும். மனசில் ரொம்ப நேரம் நிற்கும். கதைகளைப் படித்துப் பார்த்து உங்கள் கருத்துகளைச் சொல்லவும்   என். ஸ்ரீதரன் 9790791965 maje200@gmail.com 1. எதிர்வீடு   அதிகாலை நேரம் . இருள் நீங்கி வெளிச்சம் கொஞ்சம் கொஞ்சமாகப் படர்ந்து கொண்டிருந்தது. ஞாயிற்றுக்கிழமை, கொஞ்ச நேரம் தூங்கலாம் என்று பார்த்தால் வேதகோஷ்டிகளின் இனிமையான சப்தம் என்னை எழுப்பி விட்டது. என் கணவர் பக்கத்தில் ஆழ்ந்து உறங்கிக்கொண்டிருந்தார். இடியே விழுந்தாலும் கலையாத கும்பகர்ணன் தூக்கம். நான் அவருக்கு நேர் எதிர் . சிறு ஓசை கேட்டாலும் எழுந்து விடுவேன். வாசல் கதவைத் திறந்து பார்த்தேன். எதிர்வீட்டில் நான்கு சாஸ்திரிகள் வேத பாராயணம்  செய்து கொண்டிருந்தார்கள். வாசலில் பெரிய செம்மண் கோலம் போடப்பட்டிருந்தது. வீட்டைப் புதியதாக வாங்கியவர்கள் அதைப் புதுப்பித்து ஹோமம் செய்கிறார்கள். அன்று எதிர்வீடு மிகவும் கோலாகலமாயிருந்தது. நாங்கள் குடியிருக்கும் ”அபிநயா ஃபிளாட்ஸ்” கோடம்பாக்கத்தில் இருக்கிறது. கீழே நான்கு  வீடுகள். முதல் மாடியில் நான்கு  , இரண்டாவது மாடியில் நான்கு ஆக மொத்தம் பன்னிரண்டு  வீடுகள். குடியிருப்புக்குள் நுழைந்ததும் இடது பக்கம் இரண்டு திண்ணைகள்.  காலை பத்து மணிக்கு அந்தத் திண்ணையில் குடியிருப்பிலுள்ள வேலைக்குப் போகாத பெண்கள் அமர்ந்து அரட்டைக் கச்சேரி நடத்துவார்கள். வயதான முதியவர்கள் மாலை நேரத்தில் அந்தத் திண்ணையில் உட்கார்ந்து பேசிக் கொண்டிருப்பார்கள். நான் கீழே குடியிருக்கிறேன். முதல் மாடியில் பட்டாபி சாஸ்திரிகள் அவர் மனைவி பத்மா, குழந்தை காஞ்சனா ஆக மூன்று பேர் கொண்ட குடும்பம் . என் எதிர் வீடு ரொம்ப நாளாய் பூட்டியிருந்தது. போன மாதம்தான் விற்றுப் போனது.   அபிநயா ஃபிளாட்சில் உள்ளவர்கள் எல்லோரும் நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். அன்பும் பண்பும் நிறைந்த மாந்தர்கள். ஒருவருக்கு ஒருவர் வலிய வந்து உதவி செய்வார்கள். நான் கதவை மூடிக்கொண்டு வீட்டுக்குள் வந்தேன். சிறிது நேரத்தில் என் கணவரும் எழுந்து பல் துலக்கிவிட்டு தேநீர் பருக வந்தார். ”இன்று காலை எதிர்வீட்டில் பூஜை நடந்தது. வீட்டை வாங்கியவர்கள் குடி வரப் போகிறார்கள்” “ நல்ல செய்தி. ஆறு மாசத்துக்கு மேல் பூட்டியிருந்த வீட்டில் இனி ஆள் நடமாட்டம் இருக்குமென்று சொல். வருகிறவர்கள் நல்ல குடும்பமாய் இருக்க வேண்டும் “. ”ஆமாம். ஒருவருக்கு ஒருவர் உதவி செய்து கொள்ளலாம். எனக்கும் மகிழ்ச்சியாக இருக்கிறது.” ”இன்று என்ன சமையல் ?” ”ஞாயிற்றுக் கிழமை என்ன சமையல் செய்வேன் என்பது உங்களுக்குத் தெரியாதா? உங்களுக்குப் பிடித்த வெங்காய சாம்பாரும் உருளைக்கிழங்கு வறுவலும்தான்“ என்று சொல்லிக் கொண்டிருக்கும் போது, ’உள்ளே வரலாமா?’என்று புன்னகையுடன் கேட்டுக் கொண்டே ஒரு நடுத்தர வயதுடைய அழகான  பெண்மணி உள்ளே வந்தார். சிவப்பு கலர் பார்டர் வைத்த பச்சைப் புடவையும் அதற்குப் பொருத்தமாக அணிந்திருந்த பச்சை வண்ண ரவிக்கையும் அவர் அழகுக்கு அழகு செய்தன. காதிலும் கழுத்திலும் தங்க நகைகள் மின்னின. ”நாங்கள் உங்க எதிர்வீட்டை வாங்கியிருக்கிறோம். இப்போதுதான் பூஜை முடிந்தது. எங்கள் வீட்டில்தான் நீங்கள்  எல்லாரும் உணவு உட்கொள்ள வேண்டும். இன்னும் அரைமணி நேரத்தில் இலை போட்டுவிடுவார்கள். வீட்டில் சமையல் செய்யாதீர்கள் என்று சொல்லிப் போகவே வந்தேன்.” அன்புக் கட்டளையிட்டார். நான் என் கணவரைப் பார்த்தேன். அவர் கண்களில் சம்மதம் தெரிந்தது. நானும் தலையை அசைத்தேன். அந்தப் பெண்மணியை எனக்கு மிகவும் பிடித்துப்போய் விட்டது. ”சரி வருகிறோம். நீங்கள் அன்பாக அழைக்கும்போது மறுக்க முடியுமா? என் பெயர் ராதா. இவர் என் கணவர். பெயர் ராமன். ஒரு தனியார் நிறுவனத்தில் பணி செய்கிறார். என்னுடைய ஒரே பையன் அமெரிக்காவில் இருக்கிறான். வருடம் ஒரு முறை வருவான். நான் வீட்டிலிருக்கும் இல்லத்தரசி. எப்போதும் ஏதாவது  கதைப் புத்தகம் படித்துக்கொண்டிருப்பேன். உங்களுக்கு ஏதாவது உதவி தேவைப்பட்டால் தயங்காமல் கேளுங்கள். என்னால் முடிந்த உதவியைச் செய்கிறேன்” என்றேன். ”தேங்ஸ்” என்று சிரித்துக்கொண்டே சொன்ன அந்தப் பெண்,  ”என் பெயர் சித்ரா. என் கணவர் பெயர் ராஜன். அவர் தனியார் வங்கியில் பணி செய்கிறார். எங்களுக்கும் ஒரே பையன். அவனுக்கு பத்து வயது. அவன் பெயர் மாதவன். கே கே நகரில் ஒரு பள்ளியில் படிக்கிறான். அவனைப் பற்றி அப்புறம் சொல்லுகிறேன்” என்றாள். என் கணவர் சிரித்துக்கொண்டே, “ எதிர் வீட்டில் யாரும் இல்லையே என்று கவலைப் பட்டேன். ராதா உங்களுக்கு நல்ல  தோழியாக இருப்பாள்” என்றார். “ இலை போட்டாகிவிட்டது. எல்லாரும் சாப்பிட வாங்கோ” என்று எதிர் வீட்டிலிருந்து ஒரு மாமா உரக்கக் கத்தினார். சித்ரா எங்கள் வீட்டை விட்டு அவசரமாய்க் கிளம்பினார். அன்று எதிர் வீட்டில்தான் நானும் என் கணவரும் அறுசுவை  உணவு திருப்தியாக  உட்கொண்டோம். மாலை நேரத்தில் எதிர் வீட்டில் சாமான்கள் வந்திறங்கின. சித்ராவும் அவள் கணவரும் அதை எடுத்து வைக்க வேண்டிய இடத்தில் வைத்து வீட்டை அழகு படுத்தினார்கள். இரண்டு நாட்கள் கழித்து மாடி வீட்டில் உள்ள பத்மா என்னிடம் வலிய வந்து பேசிக் கொண்டிருந்தாள். அவள் சுபாவமே அதுதான். ஏதாவது வேலையிருந்தால் தானே வந்து பேசுவாள். இல்லாவிட்டால் கண்டுகொள்ள மாட்டாள். சில சமயம் மனம் காயம்படும்படி பேசி விடுவாள். மற்றபடி அவள் நல்லவள்தான். அப்போது சித்ராவும் என் வீட்டுக்குள் வந்தாள்.. நான் பத்மாவை  சித்ராவுக்கு அறிமுகம் செய்து வைத்தேன். என் பெயர் பத்மா . என் கணவர் பட்டாபி சாஸ்திரிகள் . நன்கு வேதம் படித்தவர். வைதீகம் தான் அவர் தொழில் என்று பத்மா தன்னைப் பற்றிக் கூறினாள். அந்தச் சமயம் பட்டாபி சாஸ்திரிகள் மோட்டார் பைக்கில் வந்தார். அவர் பைக்கை நிறுத்திவிட்டு எங்கள் அருகில் வந்தார். பத்மா தன் கணவரை சித்ராவுக்கு அறிமுகம் செய்து வைத்தாள். கம்பீரமான குரலில் ”வணக்கம்” சொன்ன பட்டாபி சாஸ்திரிகளைப் பார்த்து சித்ரா இருகரம் கூப்பி வணங்கினாள். அடுத்த நாள் சித்ராவின் வீட்டுக்குப் போயிருந்தேன். சன்னலுக்குத் திரைச்சீலை போட்டு வீடு அழகுடன் காட்சியளித்தது. மாதவன் கையில் ஒரு புத்தகம் வைத்து அமர்ந்திருந்தான். பால் வடியும் முகம் . நான் அவனைப் பார்த்தேன். அவன் கண்கள் என்னை நேராகப் பார்க்கவில்லை. “உன் பெயர் என்ன? என்ன படிக்கிறாய் “? அவன் பேசாமல் சிரித்தான். ”என் கூட பேச மாட்டாயா” ? “ ”மாதவன் பேச மாட்டான். அவனுக்குப் பேச்சு வராது” என்ற சித்ரா, “  அவன் சின்ன வயதிலிருந்தே  ’ஆட்டிசம்’ என்னும் நோயால் பாதிக்கப்பட்டிருக்கிறான். அவனுக்கு நாம் பேசுவது கேட்கும். ஆனால் பேசமாட்டான். இரண்டு வயது வரை எதுவும் பேசாததால் டாக்டரிடம் காண்பித்தோம் . அவர் அவனுக்கு ’ஆட்டிசம்’ என்று சொல்லிவிட்டார். அவன் உலகமே வேறு. அவனைப் போன்ற ஆட்டிசம் பாதித்த குழந்தைகள்  படிக்கும் ஒரு பள்ளியில் படிக்கிறான். ஏதாவது ஒரு புத்தகத்தைக் கையில் வைத்திருப்பான். சிறிது நேரம் கழித்து அதைக் கிழித்து விடுவான். திடீரென்று  வேகமாய் ஓடுவான்.  நாங்கள் அவனைப் புரிந்துகொண்டு அன்பை ஊட்டி வளர்க்கிறோம்.” என்று மென்மையாகச் சொன்னாள். அவன் சிறப்புக் குழந்தை என்று அறிந்ததும் எனக்குப் பேரதிர்ச்சியாக இருந்தது. ”உங்களுக்கு மாதவன் பேச முடியாமல் இருக்கிறானே என்று குறையாக இல்லையா? அவன் எப்போது பேசுவான் “? ”என்ன செய்ய முடியும். ஆரம்பத்தில்  துன்பமாக இருந்தாலும் யோசித்துப் பார்த்ததில் பிரச்சனையைக் கண்டு வருந்துவதைவிட  எங்களைச் சூழ்நிலைக்கு ஏற்றவாறு மாற்றிக் கொண்டோம். அவனுடன் வெகுநேரம் செலவழிக்கிறோம். நன்றாகப் பேசும் குழந்தைகளைப் பார்த்து மனம் சஞ்சலப்படாமல் இருக்கப் பழகி கொண்டோம். அவன் கடவுளுடைய பரிசு . கடவுள் கொடுத்ததை ஏற்றுக் கொண்டோம். மாதவன் மேல் பிரத்யோகமாகக் கவனம் செலுத்துகிறோம். தினந்தோறும் மாலை ஒரு டீச்சர் வந்து ஐந்து மணியிலிருந்து ஏழு மணிவரை அவனுக்குப் பாடம் கற்றுக்கொடுத்துவிட்டுப் போகிறார். டாக்டரிடம் மாதம் ஒருமுறை காண்பித்து அவர் சொல்லியபடி மருந்து கொடுக்கிறோம். பெற்றவர்கள்தானே பெற்ற குழந்தையைச் சுமக்க வேண்டும். அவன் எங்களுக்குச் சுமையாய்த் தெரியவில்லை. என் கணவர் ராஜன் அவருக்குத் தெரிந்த தஞ்சாவூர் ஜோசியரிடம் அவன் ஜாதகத்தைக் காண்பித்திருக்கிறார். அவர் ஒரு வருடத்துக்குள் பேசி விடுவான் என்று எழுதிக் கொடுத்திருக்கிறார். மாதவன் கூடிய விரைவில் பேசுவான் என்னும் நம்பிக்கை எங்களுக்கு இருக்கிறது. நம்பிக்கைதானே வாழ்க்கை ” சிரித்துக் கொண்டே கூறினாள். ” உங்கள் நம்பிக்கை கூடிய விரைவில் உண்மையாகிவிடும். நான் சீர்டி சாய்பாபாவிடம் பிரார்த்தனை செய்கிறேன், பாபாவின் அருள் அவனுக்குக் கண்டிப்பாய் இருக்கும்” என்று சொல்லி மாதவனைப் பார்த்தேன். அவன் எங்கேயோ பார்த்துக் கொண்டிருந்தான். அபிநயா குடியிருப்பில் தினந்தோறும் காலை பத்து மணி அளவில் கணவர்கள் வேலைக்குப் போனதும் சில பெண்கள் ஒன்று கூடி அரட்டைப் பேச்சு. நான் அந்தக் கும்பலில் சேர மாட்டேன். சித்ராவும் அதில் சேரமாட்டாள். அவளுக்கு ராஜேஷ் குமார் நாவல் என்றால் மிகவும் பிடிக்கும். என்பதால் எப்போதும் அவருடைய ஏதாவது ஒரு நாவலைப் படித்துக்கொண்டிருப்பாள். வித்தியாசமாயிருந்த அவளை எனக்கு மிகவும் பிடித்துப் போய்விட்டது. நாளடையில் எங்கள் நட்பு வலுப்பெற்றது. அந்நியர்களாயிருந்த நாங்கள் அன்யோன்யமாய் ஆகிவிட்டோம். உடன்பிறவாச் சகோதரிகளாகப் பழகினோம். சித்ரா என்னை ”அக்கா” என்று அழைக்க ஆரம்பித்தாள். நானும் எனக்குத் தெரிந்தவர்களிடம் அவள் ”என் தங்கை போல” என்று அறிமுகம் செய்தேன். நான் எப்போது வேண்டுமானாலும் அவள் வீட்டுக்குள் நுழைவேன். அவள் எப்போது வேண்டுமானாலும் என் வீட்டுக்குள் உரிமையோடு நுழைவாள். எதிர் வீடு, என் வீடு  என்ற பாகுபாடு எங்களுக்குள் மறைந்துவிட்டது. மாதவனும் என்னிடம் நன்றாகப் பழகினான். ஒரு நாள் நான் சித்ராவின் வீட்டுக்குள் சென்றபோது மாதவன் என்னைப் பார்த்து கர்ஜித்தான். என் கையைப் பிடித்து சமையல் அறைக்கு அழைத்துச் சென்றான். சாப்பிடும் தட்டைக் காண்பித்தான். அவனுக்குப் பசி என்பதைப் புரிந்துகொண்டு தட்டில் கொஞ்சம் உணவை வைத்து அவனுக்கு ஊட்டினேன். மருந்து வாங்கப் போயிருந்த சித்ரா வீட்டுக்குள் நுழையும்போது சாப்பிட்டுக் கொண்டிருந்த மாதவனைப் பார்த்து முகம் மலர்ந்தாள். “ மாதவனுக்கு உணவு கொடுக்க வேண்டுமே என்று அவசரம் அவசரமாக வந்தேன். நல்ல வேளை, நீங்கள் அவனுக்கு ….. மாதவன் புத்திசாலி என்ற அவள் முகத்தில் பெருமிதம் தெரிந்தது. என் கையைப் பிடித்துக் கொண்டு, ரொம்ப நன்றி அக்கா. மாதவன் உங்களிடம் வித்தியாசம் பார்க்காமல் பழகுகிறான். அவன் வேறு யாரிடமும் இதுபோல் இருந்ததில்லை” உணர்ச்சி வசப்பட்டு  கண் கலங்கச் சொன்னாள். ”அசடே !  எதற்கு கண் கலங்குறே. மாதவன் என் பிள்ளை மாதிரி.” மாதவன் எப்போது வேண்டுமானாலும் என் வீட்டுக்குள் நுழைவான். நான் அவனுக்குப் பிஸ்கட் தருவேன். நான் சமையலறையில் வேலையாக இருந்தால் என் கை மணிக்கட்டைப் பிடித்து பிஸ்கட் வேண்டுமென்பதைத் தெரியப்படுத்துவான். அவனுடன் உட்கார்ந்து பாடம் கற்றுத் தருவேன். அவனுக்குக் கற்றுக்கொடுக்கும்போது  வாழ்க்கை என்னும் பள்ளியில்  நிறையக் கற்றுக்கொண்டேன். ஒரு நாள் காலை நான் பூசையிலிருக்கும்போது சித்ரா மாதவனுடன் வந்தாள். புத்துணர்ச்சியுடன் காணப்பட்டாள். நெற்றி வகிட்டில் சிந்துரம் வைத்துப் பவித்திரமாய் தோன்றினாள். ”கோவிலுக்குப் போகிறாயா ?” என்று கேட்டேன் ”ஆஸ்பிட்டல் போகிறேன். பட்டாபி சாஸ்திரிகள் ஒரு கல்யாணம் செய்து வைக்கப் போயிருந்தபோது ஒரு டாக்டரைப் பார்த்தாராம். அவர் லண்டனில் ஆடிசம் நோயைப் பற்றிச் சிறப்புப் பயிற்சி பெற்றவர். அண்ணா நகரில் ஆஸ்பத்திரி வைத்திருக்கிறார். அவரிடம் காண்பிக்க மாதவனை அழைத்துக்கொண்டு போகிறேன்”. ரொம்ப நல்லது, பட்டாபி சாஸ்திரிக்கு நல்ல குணம். அவருடைய உயர்ந்த பண்பை பாராட்ட வேண்டும். மாதவனுக்கு நல்ல நேரம் பிறந்து விட்டது .உடனே போ. உன் வீட்டைப் பார்த்துக்கொள்கிறேன்” என்றேன். அன்று மாலை சித்ரா ஆஸ்பத்திரியிலிருந்து திரும்பி வரவில்லை. டாக்டர் மாதவனுக்கு அறுவை சிகிச்சை செய்திருக்கிறார். அவன் வீட்டுக்கு வர இரண்டு நாள் ஆகுமென்று வாட்ச்மேன் சொன்னார். அடுத்த நாள் காலை நான் கடவுளை வழிப்பட்டுக் கொண்டிருக்கும்போது மாதவனின் அப்பா ராஜனிடமிருந்து போன் வந்தது. ”அறுவை சிகிச்சை முடிந்துவிட்டது .உடனே ஆஸ்பத்திரிக்கு வாங்க “ என்பதைத் தவிர  வேறெதுவும் அவர் சொல்லவில்லை. மாதவனுக்கு ஏதாவது ஆகியிருக்கும் என்று என் மனசில் கலக்கம். உடனே ஆட்டோ பிடித்து அண்ணா நகரை அடைந்தேன். இரண்டாம் மாடியில்  மாதவன் இருக்கும் அறைக்குள் நுழைந்தேன். மாதவன் கட்டிலில் படுத்திருந்தான். அவன் பக்கத்தில் அமர்ந்திருந்த  சித்ராவின் கண்களிலிருந்து கண்ணீர் தாரை தாரையாக வழிந்து கொண்டிருந்தது. ராஜன் என்னைப் பார்த்து ”வாங்க சித்ரா” என்றார். சித்ராவைப் பார்த்து எனக்குத் தூக்கிவாரிப் போட்டது. ”. மாதவனுக்கு ஏதாவது … என்ற கேள்விக்குறியுடன் ராஜனைப் பார்த்தேன். ”அற்புதம் நிகழ்ந்துவிட்டது. ’அம்மா’ என்று குழந்தை பேசிவிட்டான்”. ”மாதவன் பேசிவிட்டானா? கடவுளுக்குத்தான் நன்றி சொல்லவேண்டும். அதுசரி,  சித்ரா ஏன் கலங்கியிருக்கிறாள் ?” என்று மாதவனைப் பார்த்துக்கொண்டே கேட்டேன்.  .  அவன்  விழிகள் என்னை நேருக்கு நேராகப் பார்த்து, ”நான் பேசிவிட்டேன். அம்மா பேசாமல் அழுகிறாள்” என்றான்  மழலைக்குரலில். ”கண்ணா நீ நல்லாயிட்டே” என்று மகிழ்ச்சியுடன் மாதவன் கன்னத்தைத் தடவி முத்தமிட்டேன். ”மிகுந்த சந்தோஷத்தால் கண்ணீர் விடுகிறாயா சித்ரா? உன் மனவேதனைக்கு விடிவுகாலம் பிறந்துவிட்டது” என்றேன். மாதவன்,  சித்ராவின் கழுத்தை இறுக்கக் கட்டிக் கொண்டு,”அம்மா பேசிவிடு . இல்லாவிட்டால் உன்னுடன் பேச மாட்டேன்” என்றான் ”மாதவா, உங்கூட பேசிண்டே இருப்பேனடா, என் செல்லமே !  ” சித்ரா  உச்சி மோந்து அவன் நெற்றியில் இதழ் பதித்தாள். அளவு கடந்த மகிழ்ச்சியால் எனக்கும் பேச வரவில்லை. என் கண்களிலிருந்து ஆனந்தக் கண்ணீர் ஆறாகப் பெருகியது.                                         []         2.மனசுதான் காரணம் !   சம்பத் ஏதோ  எழுதிக் கொண்டிருந்ததை கண்டு  பொறுக்க முடியாமல் ” என்ன எழுதறீங்க?”என்று கேட்டுக்கொண்டே நளினி அவனருகில் வந்தாள். . “ஹி , ஹி... கதை எழுதுகிறேன்” என்று இளித்தான் சம்பத். குரங்கு வாழைப்பழத்தைப் பிடுங்கி ஓடுவது போல் அந்தக் காகித்தை அவனிடமிருந்து பிடுங்கி ஓடினாள். அருகிலுள்ள குப்பை தொட்டியில் சுக்கு நூறாய் கிழித்தெறிந்தாள்.. மனைவி பின்னால் ஓடி வந்த  சம்பத்துக்கு  ஆயிரம் தேள் கொட்டியது போல் வலித்தது கண்ணீர் மல்க நின்றான்.   நளினி எப்போதுமே அப்படிதான். அவளுக்குப் வாசிப்பு   என்றாலே ஒரு வெறுப்பு.  மற்றவர் படித்தாலும் பிடிக்காது. எதற்கு வெட்டியாய்ப் படிக்கிறீங்க?....................என்பாள். அவனுக்குச் சிறு வயதிலிருந்தே புத்தகம் என்றால் உயிர் ;  படிப்பது  என்றால் பாயசம் குடிப்பதுபோல் . ஒரு நாள் அவன்  புத்தகம் படித்துக்கொண்டிருக்கும் போது அவள் பேசியதை அவன் காதில் போட்டுக் கொள்ளவில்லை. . ”நாசமாப் போக என்று கூவி  ” ஆத்திரத்துடன் புத்தகத்தைத் தூக்கி  கோபத்துடன் வெளியே வீசி எறிந்தாள். அப்போது மழை பெய்து கொண்டிருந்ததால் புத்தகம்  மழையில்  நனைந்தது... அவன் கண்ணில் ரத்தக் கண்ணீரே வந்து விட்டது.  இரக்கமில்லாத  ராட்சசியே. கலைமகளைத் தூக்கி  எறியறே. அந்தத் தெய்வம்தான் உனக்குப்  புத்தி புகட்ட வேண்டும் “ என்று சொல்ல நினைத்தான்.  ஆனால் சொல்லவில்லை. ஏனென்றால் நளினிக்கு இரத்த அழுத்தம் உண்டு. அதனால் சின்ன விசயத்துக்குக் கூட ரொம்பக் கத்துவாள். சொன்னதையே விடாமல் பலமுறை சொல்லிக் கொண்டிருப்பாள். அவள் உடல்நலம்  கெடக்கூடாதென்பதற்காகத்தான்  சம்பத். அவளுக்கு இணக்கமாய் அவள் சொல்வதைத் தட்டாமல் செய்துவிடுவான்   ஒருமுறை அவன் ஒரு இலக்கியக் கூட்டத்திற்குச் சென்றான்.  முதன்முதலாக செல்லும் கூட்டமென்பதால் அவனுக்குப் பிரமிப்பாய் இருந்தது. கூட்டம் முடிந்து வீட்டுக்குப் போகும்போது இரவு பத்து மணி ஆகிவிட்டிருந்தது. டைனிங் டேபிளின் மீது மனைவி வைத்திருந்த சோறும் மோரும்தான் அவனுக்கு உணவு.. எதிர்ப்பு அதிகரிக்க அதிகரிக்க தடுப்பதைச் செய்து விட வேண்டும் என்னும் எண்ணம் சிலருக்கு ஏற்படும் . அதுபோல எப்படியும் ஒரு  கதை எழுதி அவளிடம்  நல்ல பெயர் வாங்க வேண்டும் என்று சம்பத் உறுதி கொண்டான். அப்போது ஒரு பிரபல வாரப் பத்திரிகையில் சிறுகதைப் போட்டி அறிவிப்பு வந்திருந்தது. எப்போதும் கதையைப் பற்றியே சிந்தித்துக் கொண்டிருந்ததால்  ” என்ன, எப்பப் பார்த்தாலும் கற்பனை உலகில் மேய்ஞ்சிண்டிருக்கீங்க. அது ஒரு பொய்யான வாழ்க்கை” என்று நையாண்டி செய்வாள். ”ஒண்ணுமில்லை” என்பான் அவன் . கற்பனைச் சக்கரத்தை சுழற்றிவிட்டு கதையைப் பற்றியே எப்போதும் சிந்தனையில் இருந்ததால்’ஆமாம் ’என்பதற்கு இல்லையென்றும் ’இல்லை’ என்பதற்கு ’ஆமாம்’ என்றும் பொருள்படும்படி தலைஆட்டி விட்டு அவளிடம் திட்டு வாங்குவான்.  இரண்டு வாரத்தில். கஷ்டப்பட்டு  .ஒரு கதையை எழுதிவிட்டான். . அந்தக் கதையை போட்டிக்கு அனுப்பி வைத்தான். பரிசு கிடைக்கும் என்று ஆவலுடன் இருந்தான்.. அவன் கதைக்குப் பரிசு கிடைக்கவில்லை.    ஒரு நாள் காலை தேநீர் சாப்பிட்டபின் , நளினி, இன்றைக்கு அலுவலகம் விட்டதும் நூலகத்திற்குப் போய் புத்தகம் எடுத்து வருகிறேன் என்றான். ”அதெல்லாம் ஒண்ணும் வேண்டாம். நீங்கள்  ஆபீஸ் விட்டதும் வீட்டிக்கு  நேராக வாருங்கள். சாயந்தரம் கோவிலுக்குப் போக வேண்டும். ”.நீ என்றைக்காவது ஒரு நாள் மனசு மாறணும் நளினி. ”வாழு வாழ விடு”  என்பதைப் போல் நீயும் நிறைய புத்தகங்களைப் படிக்க வேண்டும். நான் படித்தாலும் ஆட்சேபிக்கக்  கூடாது. ” ” நானாவது படிக்கிறதாவது. அது மட்டும் இந்த ஜென்மத்திலே நடக்காது..... நான் படிக்கவும் மாட்டேன். படிக்கவும் விட மாட்டேன் . நீங்கள், நான் சொல்றபடிதான் கேட்கணும் ” என்று சிரித்தாள். அவளை மாற்றவே முடியாது என்று தோன்றியது சம்பத்துக்கு. ” அடுத்த  ஜென்மத்தில் நீ பிறந்தால் புத்தக  ரசனையோடு பிறக்க வேண்டும் என்று  கடவுளைப் பிரார்த்திக்கிறேன்.. அதுதான் நான்  ஆசைப்படுவது !.” என்று சொல்லிவிட்டு   பெருமூச்சு விட்டான்.   முகத்தைத் தோளில் ஒரு வெட்டு வெட்டியவள் சமையலறைக்குள் புகுந்தாள். அவளுக்கு அவனுடைய புத்தகப் பித்து பெருங்கவலை அளித்தது. அம்மாவிடம அலைபேசியில் புலம்பினாள். ”எங்க வீட்டுக்காரர் எப்ப பார்த்தாலும் புத்தகமும் கையுமாகத்தான் இருக்காரு. அவரை எப்படி மாத்தறதுன்னே தெரியலை. எல்லாம்  என் தலையெழுத்து .” ”அடிப்போடி பைத்தியகாரி. எனக்கு எழுபது வயசாகிறது. நான் ஆன்மீக புத்தகங்கள், நாவல்கள், பத்திரிகைகள்....படிக்கிறேன். என்னைப் பார்த்தாவது  கத்துக்க. உனக்குப் பிடிச்சதை நீ செய். ஆனால் உனக்குப் பிடிச்சதை மத்தவங்க செய்யணும் என்று எதிர்பார்க்காதே. மத்த ஆம்பிளைகள் மாதிரி அவர் என்ன குடி, ரேஸ்,  சீட்டாட்டம் என்று தப்பான காரியங்களிலே ஈடுபடலை. நல்ல காரியத்தைத்தானே செய்கிறார் , இதுக்குபோய் அலுத்துக்கிறயே.  வேறு கெட்ட பழக்கம்  இருக்கா? அவர் பாட்டுக்குப் படிச்சிண்டிருக்கார். குறை அவர் கிட்டே இல்ல; உங்கிட்டேதான் இருக்கு. பார்த்து நடந்துக்க” என்ற தாயிடம்” போம்மா அந்த ஆளைப் பத்தி உனக்கு எதுவும் தெரியாது”என்றாள். உன்னைப் பத்தி எனக்கு நல்லா தெரியுமே. நீ பள்ளியிலே படிக்கும்போது மோஸ்ட் ஒபிடியண்ட் ஸ்டுடண்ட் என்று டீச்சர் கிட்டே பேர் வாங்கின நீ. எப்படிடீ... எப்படிடீ ? இப்படி மாறிட்டே .சொல்லவேண்டியதை சொல்லிட்டேன். இனிமே உன் பாடு .எப்படி நடந்துப்பியோ .நடந்துக்க . ஆனா இன்னொரு நாள் இப்படி ஒரு புகாரோடு வரக்கூடாது”. என்றாள் எதிர் வீட்டு மாலாவிடம் யோசனை கேட்டாள். “ நிழலின் அருமை வெயிலில்தான் தெரியும் , அது போல் நல்ல புத்தகத்தின் அருமை அதைப் படித்தால்தான் அறிய முடியும் . நான் ஒவ்வொரு வருடமும் புத்தகக் கண்காட்சியின் போது குறைந்தது ஆயிரம் ரூபாய்க்காவது புத்தகம் வாங்குவேன்.என்னுடன் வா . உனக்கு ஒரு புத்தகம் தருகிறேன். படித்துவிட்டு கொடு என்று நளினி பின்தொடர அவள் வீட்டுக்குள் சென்றாள். ”இந்த புத்தகத்தைப் படி” என்று  கல்கியின் ‘ பொன்னியின் செல்வன்’ புத்தகத்தை  நளினியிடம் கொடுத்தாள். புத்தகத்தை ரசித்துப்  படித்து முடித்த நளினி, “ போர் அடிக்கும்  என்று நினைத்தேன். விறுவிறுப்புடன்  கல்கண்டாய் இனிக்கிறதே.  அடடா, இவ்வளவு நல்ல புத்தகத்தை இதுவரை படிக்காமல் விட்டு விட்டோமே” என்று வருத்தப்பட்டாள்.. அவளுக்குப் புத்தகங்களின்  மேல் இதுவரை இருந்த வெறுப்பு விருப்பமாய் மாறிவிட்டது. மேலும் மேலும் புத்தகங்களை மாலாவிடம் வாங்கிப் படித்தாள். அவன் தான் எழுதிய கதையை  வாராந்திர பத்திரிகைக்கு அனுப்பி விட்டு கதை வந்திருக்கிறதா : என்று ஒவ்வொரு வாரமும் ஞாயிற்றுக் கிழமை பத்திரிகையை வாங்கிப் பார்ப்பான்,. கதை வரவில்லையே என்று தலையில் கை வைத்து உட்கார்ந்து விட்டான். அவன் சோகமாக  இருந்ததைப் பார்த்து,”ஏங்க, ஒரு மாதிரியாய் இருக்கீங்க?” என்று நளினி வினவினாள் . நானும் எவ்வளவோ முயற்சி செய்கிறேன். என் கதை எதுவும் பத்திரிகையில் பிரசுரம் ஆகவில்லை..   ”கவலைப் படாதீங்க. எதையும் பாசிடிவா அப்ரோச் பண்ணுங்க. இனிமே. நீங்கள் கதையை எழுதி கொடுங்கள். . நா மத்தியானம் கணினியில் டைப் செய்து கொடுக்கிறேன்,. நிறைய எழுதுங்க. பத்து கல்லை விட்டெறிஞ்சா ஒரு கல் பட்டாவது   மாங்காய்  விழுமல்லவா ? ” என்றாள். இப்போதெல்லாம் தன் கணவன் படிப்பது , எழுதுவது பற்றியோ அவள் கவலைப்படுவதும் இல்லை; அதைத் தடுப்பதுமில்லை. டீவி பார்ப்பதைக் குறைத்துக் கொண்டு தன் கணவன் படிக்கும்போது தானும் ஏதாவது ஒரு புத்த்கத்தைப் படிப்பாள். குடும்பப் பொறுப்பு முழுவதையும் அவள் ஏற்றுக் கொண்டாள். அவர்களுடைய வாழ்க்கைப் படகு ஆனந்த  நதியில் அழகாக  போய்க் கொண்டிருக்கிறது. குழந்தைக்கு வைக்கும்  திருஷ்டிப் பொட்டு போல் அவ்வப்போது வாரந்திர பத்திரிகையை யார் முதலில் படிப்பது என்பதற்காக   உண்டாகும்  சர்ச்சையை மட்டும் அவர்களால் தவிர்க்க முடியவில்லை! எழுதி எழுதி அவனுக்கு எழுத்து வசப்பட்டு விட்டது.அவனுடைய கதைக்குப் பரிசு கிடைத்து விட்டது .. ”நீ கொடுத்த ஊக்கத்தினால்தான் என் கதைக்குப் பரிசு கிடைத்தது” என்றவன்    சந்தோஷ மிகுதியில்  மனைவியை இறுக்கிக் கட்டிப் பிடித்து கன்னத்தில் இதழை வைத்தான். ”ஆமாம் புத்தகமென்றாலே விரோதியாக இருந்த நீ எப்படி மனசு மாறினாய் ?” என்று கேட்டான். ”எல்லாவற்றுக்கும் காரணம் மனசு என்னும் மந்திரவாதிதான். விரும்பும் ஒன்றின்மீது ஈடுபாடு குறைவதற்கும் விரும்பாத ஒன்றின்மீது  விருப்பம் வருவதற்கும் மனசுதான் காரணம் ! “  என்று அவள் சிரித்துக்கொண்டே கூறினாள்.                                                    []     3. நெருப்பின் குளுமை   “நான் நல்லவளுக்கு நல்லவள் . கெட்டவனுக்குக் கெட்டவள். நான் ஒரு பெண் புலி . எல்லாப் பெண்ணையும் போல என்னை நினைச்சிருக்கான். நான்  யாருன்னு காட்டறேன். என் முகத்தைச் சின்னா பின்னமா பண்ணிட்டான். அவனைப் பழிக்கு பழி வாங்காம விடமாட்டேன்.” என்று மனசுக்குள் கறுவிக்கொண்டாள். இரண்டு கைகளிலும்  முழங்கையிலிருந்து கை மணிக் கட்டுவரை கையுறையை மாட்டிக் கொண்டாள். ஒரு துணியால்  கூர்மையான இரு விழிகள் மட்டும் வெளியே தெரியும்படியாக முகத்தை மூடிக் கொண்டாள்,. தலையில் ஹெல்மெட்டை அணிந்து  தீவிரவாதி தோற்றத்துடன்  இரண்டு சக்ர வாகனத்தில்   பறந்தாள்  தமயந்தி                               அவளைப் பற்றி சொன்னால்தான் அவள் எங்கு போகிறாள் என்பது உங்களுக்குப் புரியும். தமயந்தி பூங்கொடி போலிருப்பாள்.  அசத்தலான உயரம். தணல் நிறம். தனித்துவம் வாய்ந்த மயக்கும்  குரல். . முகம் வெண் பளிங்கு போல் பளிச்சென்று இருக்கும். முத்து போல் வெண்மையான பற்கள். தங்கச்சிலை மாதிரி மூக்கும் முழியுமா பார்க்க  வசீகரமான தோற்றம்.  மல்லிகைப் பூ மென்மையும் இரும்பு ஆணியின் உறுதியும் உடையவள். நிமிர்ந்த நன்னடையும் நேர்கொண்ட பார்வையும்  கொண்ட புதுமைப்பெண். ஒரு தனியார்  கம்பெனியில் வேலை  செய்கிறாள். பெற்றோர்கள் இளமையிலே இறந்து விட்டார்கள். அண்ணன் அண்ணியுடன் கோடம்பாக்கத்தில் வசித்து வருகிறாள். வாசு என்ற இளைஞனும்  தமயந்தி வேலை செய்யும் அலுவலகத்தில் வேலை செய்கிறான் அவனுக்குத் தமயந்தியை முதல் தடவை பார்த்தவுடனே மிகவும் பிடித்துப்போய் விட்டது. அவள் அவனுடைய மனதில் புகுந்து விட்டாள். ஒருதலைக் காதல் அவனுக்கு. அவள் விரும்புகிறாளா இல்லையா என்று தெரியாமலேயே தன் மனதில் ஆகாசக் கோட்டையை கட்டினான். அவன் வீட்டையும் அவள் இருக்கும் தெருவிலேயே மாற்றிக் கொண்டு வந்து விட்டான். அவனுடைய இதயத்தில் காதல் விருட்சம் நன்றாக வளர்ந்து விட்டது. ஒரு தடவை அவளிடம்  “உன்னை எனக்கு மிகவும் பிடித்து விட்டது . நீ எனக்கு வேண்டும் “எனப் பிதற்றினான். அவள் சீறினாள். அவனைச் செருப்பால்  அடித்தாள்.  .   அன்று  ஒரு நாள் வெள்ளிக்கிழமை அதிகாலை நேரம். எப்போதும் போல் தமயந்தி கோடம்பாக்கம் பூங்காவில் நடைப்பயிற்சி செய்து கொண்டிருந்தாள். இருட்டு இன்னும் வானிலிருந்து பிரியவில்லை. கதிரவன்  வானிலிருந்து வெளியே வர யத்தனித்துக்கொண்டிருந்தான். செழிப்பான  பூச்செடிகளிலிருந்து வீசும்  மணம் மனதிற்கு ரம்யமாக இருந்தது. ஆடவர், பெண்டிர், சிறுவர்கள் என பலதரப்பட்ட வயதினரும் அங்கே இருந்தனர். சிலர் நடந்து கொண்டிருந்தார்கள். சிலர் புல் தரையில் அமர்ந்து யோகா பயிற்சி செய்து கொண்டிருந்தார்கள். அங்கிருந்த நாய்களும் மனிதர்களுடன்  ஏட்டிக்குப் போட்டியாய்  நடைப்பயிற்சி செய்து கொண்டிருந்தன. தமயந்தி தினந்தோறும் பூங்காவை  இருபது சுற்றுகள் வலம் வருவாள். பதினெட்டாவது சுற்று முடிந்து விட்டது. இன்னும் இரண்டு சுற்றுகள்தான் பாக்கி.  தன் கைக் கடிகாரத்தில் நேரத்தைப்  பார்த்தாள். அப்போது நேரம் 6.25 . அப்போது வாசு தன் நண்பன் ஒருவனுடன் அந்தப் பூங்காவில் நுழைவதைப் பார்த்தாள். வெறுப்பும்   கோபமும் அவள் முகத்தில் தெரிந்தன.. இவனுக்கு வேறே  வேலையே இல்லை போலிருக்கு. நாய் மாதிரி என் பின்னால் சுத்திக் கொண்டிருக்கிறானே என்று நினைத்தாள். தேகம் முழுவதும் திகுதிகுவென  எரிகின்ற உணர்வு. பூங்காவில் குறுக்குப் பாதை ஒன்று ஒதுக்குப் புறமாக இருக்கிறது. யாரும் இல்லாத அந்த வழியே புகுந்து வெளி நோக்கி   நடந்தாள். வாழ்வில் கஷ்ட நஷ்டங்கள் எப்படியெல்லாம் வருகின்றன ! வாசு தமயந்தியின் எதிரே  வந்தான். அவன்  நண்பனும் கூட வந்தான். அவள்  அவனைச் சட்டை செய்யவில்லை ; நடப்பதையும் நிறுத்தவில்லை. வாசு அவள் எதிரே நின்றான். இருக் கைகளால் அவளை மறித்தான். இதற்குள் வாசுவின் நண்பன்  தமயந்தியின் பின்னே போய் நின்று கொண்டான். “  கடைசியாய் கேட்கிறேன். நான் கேட்டதிற்கு   என்ன பதில்  ? “  உறுமினான் .“என்னுடைய முடிவை எப்போதோ சொல்லிவிட்டேன். ஒரு தடவை சொன்னால் உனக்குப் புத்தி வாராதா ? வழியை விடு.” அவள் முகத்தில்  கோபக்கனல் தெரிந்தது. . வாசு தன் நண்பனுக்குக்  கண்ணால் சைகை காட்டினான். ஏதோ விபரீதம் நடக்கப் போகிறது என்று அவள் உள்ளுணர்வு சொல்லியது. துரிதமாக அந்த  இடத்தை விட்டு  நகர முயன்றாள் . அதற்குள்  தமயந்தியின் பின் பக்கம் நின்றிருந்த நண்பன் அவளின்  இருக்கைகளையும் மேலே உயர்த்தி  கெட்டியாகப் பிடித்துக் கொண்டான். தமயந்தி திமிறினாள் ” என்னை விட்டு விடு “அசுர பலத்துடன் போராடினாள். அவள் காலால் விட்ட  உதை வாசுவை  நிலை தடுமாறி  கீழே விழச் செய்தது. அவன் ஒருவாறு சுதாரித்துக் கொண்டு எழுந்து தன் பேண்ட் பாக்கெட்டிலிருந்து ஒரு சிறிய பாட்டிலை வெளியே எடுத்தான். கண் இமைக்கும் தருணத்தில் அதிலுள்ள திரவத்தை தமயந்தியின் முகத்தின் மீது தெறித்துவிட்டு சிட்டாகப் பறந்துவிட்டான்.நண்பனும் அவள் கையை விட்டு விட்டு அவன் பின்னால் ஓடினான் . முகமெல்லாம்  எரிந்தது தமயந்திக்கு.வாசு ஆசிடை வீசியிருக்கிறான் !     “ ,  அம்..மா,  அம்....மா,  அ......ம்மா அம்மா” என்று கதறினாள். கண்ணிலிருந்து கண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. அவளின்   கலவரமான கூக்குரல் அங்கிருந்தோரை  மயிர்க் கூச்செரிய வைத்தது. எல்லோரும் அவளருகில் ஒடி வந்தார்கள். தமயந்தியின் முகத்தில் தடையின் கீழே கொப்பளங்கள் ஏராளமாகத்  தோன்றி அந்த இடம் ஒரு ரூபாய் நாணயம்  அளவிற்குக்  கரி பூசியது  போல் ஆகிவிட்டது. அவள் வலியால் அரற்றினாள். பொதுமக்கள் துரிதமாகத் தமயந்தியை அருகிலுள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று முதலுதவி சிகிச்சை அளித்து  அங்கேயே சேர்த்தார்கள்.. காவலர்கள் வாசுவைக் கைது செய்து காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். அடுத்த நாள் நாளிதழில்  “இளம் பெண்ணின் மீது திராவக வீச்சு” என்ற அவளுடைய பேட்டி எல்லோராலும்  பரபரப்பாக பேசப்பட்டது. முக நூலில் அவளுக்காகப் பலர் ஆதரவுக் குரல் கொடுத்தார்கள். தமயந்தி திராவக வீச்சால் மிகவும் பாதிக்கப்பட்டாள். அதனால் ஏற்பட்ட கருப்பு நிற வடு அவள் முகத்தின் அழகைக் குலைந்து விட்டது. பட்டாம் பூச்சி மாதிரி வசீகரமாய் இருந்த அவள்  முகம் கம்பளி பூச்சி மாதிரி அறுவெருக்கதக்கதாய் ஆகி விட்டது. தமயந்திக்கு மருத்துவ மனையில் தொடர் சிகிச்சை கொடுக்கப்பட்டது. பிரபல பிளாஸ்டிக் சர்ஜன்  பலமுறை அறுவை சிகிச்சை செய்துவிட்டார். அவள் முகத்தில் மாற்றம் ஏற்படவில்லை. முகம் மீண்டும் பழைய நிலைக்கு வராது என்று மருத்துவ நிபுணர்கள் வருத்தத்தோடு சொல்லி விட்டார்கள். ரணம் ஆறி விட்டாலும் நெஞ்சில் ஏற்பட்ட  வலி நிரந்தரமானது . அவளது துரதிர்ஷ்டம் அவள் அழகு போனது போனதுதான் ! அவளுக்கு வாசுவின் மீது மிகவும் கோபம். அவனை நினைத்தாலே அவள் மனம் கொதித்தது. அவன் மீது திராவகம் வீச வேண்டும் . தான் துடித்த மாதிரி அவனும் துடிக்க  வேண்டும் என்று மனதிற்குள் வன்மத்தை வளர்த்து அதற்கான சந்தர்ப்பத்திற்காக வருவான் என்று காத்திருந்தாள். ஜாமினில் வெளி வந்த அவன் சித்தப்பா வீட்டில் இருந்தான். இன்று காலைதான் அவன் வீட்டின் அருகே அவனைப் பார்த்தாள், உடனே கடைக்குப் போய் திரவகம் வாங்கி அவன் முகத்தில் வீச வேண்டும்  என்ற எண்ணத்துடன் திரவாகம் வாங்கத்தான் கடை தெருவிற்குப் போய்க் கொண்டிருக்கிறாள். கடையின்  முன் வண்டியை நிறுத்திய தமயந்தி தன் முகத்தில் இருந்த துணியை முற்றிலும் அகற்றாமல்  உதட்டுக்குக் கீழே ஒதுக்கினாள். பிறகு கடைக்குள் நுழைந்து “ ஆசிட் இருக்கிறதா” என்று வினவினாள். ” என்னம்மா கேட்கறீங்க ? ” திகைப்புடன் வினவினான் கடைக்காரன். ” ஆசிட் இருக்குதான்னு கேட்கிறேன் “ “ உங்களுக்கு விசயம் தெரியாதா? ஆறு மாசத்திற்கு முன்பு உங்களை மாதிரி ஒரு இளம்பெண் மீது யாரோ ஒரு போக்கிரி ஆசிடை வீசி விட்டு ஒடி விட்டான். அதனால் பாதிக்கப்பட்ட அந்தப் பெண் கொடுத்த பேட்டியில்  ‘ ஆசிட் சுலபமாக கிடைப்பதால்தானே பெண்களின் மீது ஆண்கள் அதை வீசுகிறார்கள். அரசாங்கம் ஆசிட் விற்பனைக்குத் தடை விதிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுகிறேன் “ என்று கூறியதை ஏற்றுத் தமிழக அரசு சட்ட சபையில் விவாதித்து  கடைகளில் ஆசிட் விற்க தடை கொண்டு வந்து விட்டது.அது மாத்திரம் அல்ல . நாடாளுமன்றத்திலும் அந்தப் பெண்ணின் வேண்டுகோளை ஏற்று இந்தியாவில் கடைகளில் ஆசிட் விற்கத் தடை செய்யும் சட்டம் வந்து விட்டதே தெரியாதா உங்களுக்கு? அந்தப் புண்ணியவதி நல்லா இருக்கட்டும் ”என்றான். இதைக் கேட்ட தமயந்திக்கு மேனி சிலிர்த்தது ;  மலைப்பாக இருந்தது. தான்தான் அந்தச் சட்டம் உண்டாவதற்கு காரணம் என்று புரிந்தது. “ என் ஒருத்தி முகத்திற்குப் பாதிப்பு ஏற்பட்டாலும் பரவாயில்லை. அதனால் ஆயிரக்கணக்கான பெண்களுக்குக் குறிப்பாக பெண் குலத்திற்கு  நன்மை ஏற்பட்டிருக்கிறது. சில சமயம் கெட்டது செய்தாலும் நம்மை அறியாமல் நல்லது நடந்து விடுகிறது. வாசு ஆசிட் வீசியதால்தானே இப்போது ஆசிட் விற்பது தடை செய்யப்பட்டிருக்கிறது. அவனைப் பழி வாங்க வேண்டுமென்று இவ்வளவு நாள் வன்மம் வைத்திருந்தேன். நெருப்பாக கொந்தளித்தேன். அது தவறு என்று உணர்கிறேன். அவனை மன்னித்து விடுகிறேன். அவனால் உண்டாக்கப்பட்ட  கருப்பு வடு என் முக அழகைக் கெடுத்து  விட்டது என்று இவ்வளவு நாட்கள் நினைத்திருந்தேன். சொல்லப்போனால் அந்தக் கரும்பொட்டு என் முகத்திற்குக் கவுரவத்தையும் கம்பீரத்தையும் கொடுக்கிறது. அந்த வடுவை நினைத்து நான் மிகவும் பெருமைப் படுகிறேன் “ என்று எண்ணியவள் தன் முகத்திரையை முழுவதும் அகற்றினாள். கடைக்காரன் பார்த்துத் அவளைப் திகைத்துப் போய் “ நீங்கள்தானே அந்தச் சாதனைப் பெண்.? அமருங்கள். காப்பி சாப்பிடுகிறீர்களா?”என்று மரியாதையோடு வினவியவன் அவள் அமருவதற்கு இருக்கையைக் காண்பித்தான். ” மிகவும் நன்றி. நான் வருகிறேன்.”  என்று குளிர்ந்த மனத்துடன் நகர்ந்தாள் தமயந்தி. இதுவரை வாசுவின் மீது வன்மம் கொண்டிருந்த அவள் நெஞ்சம் தனக்கு இன்னல் செய்தவனை  மன்னித்து விட்டதால் மனதிலிருந்த குப்பை நீங்கி புத்தம் புதிய வெள்ளைக் காகிதம் போலாகிவிட்டது. மனம் தூயவளாகி புடம் போட்ட தங்கமாக நெருப்பில் குளித்த சீதையைப் போல் வீட்டுக்குள் நுழைந்தாள் அவள். அவள் வரவுக்காகக் காத்திருந்த அவள் அண்ணன், உனக்கு அரசாங்கத்திடமிருந்து ஒரு கடிதம் வந்திருக்கிறது என்று ஒரு உறையை அவளிடம் கொடுத்தான். அவள் கடிதத்தைப் படித்தாள். ”ஆசிட் பாதிப்புக்காக  அவள் புரிந்த தீர செயலைப் பாராட்டி தமிழக அரசு அவளுக்கு  விருதும், அழகு இழந்ததிற்கு  இழப்பீடாக  பத்து இலட்சமும் அடுத்த மாதம் கொடுக்கப் போவதை”  அறிந்து ஆனந்தக் கடலில் தத்தளித்தாள்.   []     4.ராங் நம்பர்   ”இதுவரை பல  முறை தவறு செய்து விட்டாய். நீ திருந்துவதாக இல்லை. என்னால் இனி பொறுக்க முடியாது. கிளம்பு, உன் அம்மா வீட்டிக்கு.நானே உன்னை விட்டு விட்டு வருகிறேன்” என்றான் ரகு.   ”வேண்டாங்க. இனிமேல் தப்பு செய்ய மாட்டேன். இந்தத் தடவை என்னை மன்னித்து விடுங்கள். எனக்கு இன்னொரு வாய்ப்புக் கொடுங்கள்.”  கண்களில் கண்ணீர் மல்கக் கதறினாள் தீபிகா .   ”அதெல்லாம் முடியாது . கிளம்பு . வருண், வா   போகலாம்.” அவன் இளம் மனைவியின் கையை ஒரு கையில் பிடித்துத் தர தரவென்று இழுத்துக் கொண்டு வீட்டிற்கு வெளியே கார் அருகில் வந்தான் ரகு.   விளையாடிக்கொண்டிருந்த மூன்று வயசு குழந்தை வருண், அப்பா டாடா என்று கையில் வைத்திருந்த இரண்டு பொம்மைகளுடன் ஓடி வந்தான். காரின் பின் சீட்டில் தீபிகாவையும் வருணையும் ஏற்றி விட்டு முன் சீட்டில் அமர்ந்து காரைக் ஸ்டார்ட் செய்தான் ரகு. அவன் மனத்தில்  நினைவலைகள் ஓடின.   அம்மா மட்டும்தான் தீபிகாவிற்கு. அப்பாவோ, சகோதரனோ,சகோதரியோ யாருமில்லை. சிறிய வயதிலேயே தந்தையை இழந்து விட்டாள்.  அம்மா லலிதா ஆசிரியர் பணி செய்துகொண்டே அவளை கஷ்டப்பட்டு  படிக்க வைத்தாள். அவளும்   கல்லுரியில் படித்து பட்டதாரி ஆகி விட்டாள் . . தீபிகா ரொம்பவும் வெகுளி.   கருப்பு நிறமாக இருந்தாலும்  கேட்போரைக் கவரும் கவர்ச்சிக் குரல் அவளுக்கு. ஆண்களிடம் ஜோவியலாக  பேசுவாள். எப்போதும் சிரித்த முகம்   லலிதா தீபிகாவிற்கு பத்து பவுன்  நகையைப் போட்டு கல்யாணம்  செய்து கொடுத்தாள்.   ரகு மாம்பலத்தில் வாடகைக்கு ஒரு வீடு  எடுத்து குடும்பம் நடத்தத் தொடங்கினான். அடுக்கு குடியிருப்பில் இருக்கும் ஒரு  சின்ன வீடுதான் என்றாலும் எல்லா வசதிகளும் உள்ள வீடு. அவன்  காலையில் எட்டு மணிக்கு வீட்டை விட்டு கிளம்பிச் சென்றால் இரவு  ஒன்பது  மணிக்குத்தான் வீடு திரும்புவான். சில சமயம் பத்து மணி கூட ஆகிவிடும். தீபிகா எப்போதும் பேசிக் கொண்டிருக்கும் குணம் உடையவள் என்றால் ரகு அவளுக்கு நேர் எதிர் குணம்  உடையவன். குறைவாகப்  பேசுவான். அமைதியாக இருப்பான். வாழ்க்கை என்ற நதி ஒட்டத்தில்  அவர்களுடைய சம்சார படகு அமைதியாகச் சென்று கொண்டிருந்தது. அவன் அவளிடம் மிகவும் பாசமாக இருப்பான். தீபு, தீபு என்று மனைவியைக் கொஞ்சுவான்.   கல்யாணம் ஆகி  இரண்டாவது  மாதமே தீபிகா உண்டாகி விட்டாள்.ரகு அவளிடம் ரொம்ப ஆசையுடன் நடந்து கொண்டான். அவளுக்கு ஆசையுடன்  விலையுயர்ந்த   கைபேசியை    வாங்கிக் கொடுத்தான்.     தீபிகா மகிழ்ச்சியால் துள்ளினாள். நாய்க்குட்டியை அன்போடு எடுப்பதுபோல் கைபேசியை எடுப்பாள். எப்போதும் கைபேசியும்  கையுமாக இருப்பாள். இரவில் தூங்கும் போது கூட கைபேசியைத்  தலயனணக்குப் பக்கத்திலேயே வைத்திருப்பாள்.   மாதங்கள் ஓடின. அவளுக்குக் குழந்தை பிறந்து விட்டது. அழகான ஆண் குழந்தை. வருண்  என்று பெயர் வைத்தார்கள். ரகுவிற்கு பதவி உயர்வு கிடைத்து விட்டது.  நேரமே கொஞ்சம் கூட இல்லை. அவன் பிராஜக்ட் டீம் லீடராக இருப்பதால் அவனுக்குப் பொறுப்புகள் அதிகம். காலையில் அலுவலகம் கிளம்பிப் போனால் திரும்பி வருவதற்கு நேரம் ஆகும்.   வாழ்க்கையில் ஒவ்வொருக்கும் ஒரு பிரச்சனை. தீபிகாவிற்கு  இருக்கும் பிரச்சனை. நேரத்தை எப்படி போக்குவது என்பதுதான். அவளுக்கு வேலைக்குப் போக வேண்டும் என்ற ஆசை. ரகு அதற்கு ஒப்புக் கொள்ளவில்லை. “வீட்டில் இருந்து குழந்தையைக் கவனித்துக் கொள். எனக்கு வருகிற சம்பளமே போதும். நீ ஒன்றும் சம்பாதிக்க வேண்டாம் “ என்று கண்டிப்பாகச் சொல்லி  விட்டான்.   ஒரு நாள் அவளுக்குச் கைப்பேசியில் ஒரு ராங் நம்பரிடமிருந்து கால் வந்தது. அப்படி ஆரம்பித்தது தான் அந்தப் பழக்கம். அறிமுகம் இல்லாத ஒரு நபருடன் பேச ஆரம்பித்து,  வளர்ந்து நெருங்கிய நட்பாகியது. ராங் நம்பர் என்று ஆரம்பத்திலேயே போனைத் துண்டிக்காதது அவள் செய்த தவறு.   தீபிகாவுக்கு அவன் பேச்சு மிகவும் பிடித்துப் போயிற்று தினந்தோறும் காலை நேரம்  பத்து  மணிக்குப் பிறகு அந்த ஆண் நண்பரிடமிருந்து அழைப்பு வரும். . கொஞ்ச நாள் ஆனதும் விரசமாகப் பேச ஆரம்பித்தார். தீபிகா மறுக்கவோ தடை செய்யவோ இல்ல. அதனால் வரம்பு மீறி கிளர்ச்சி ஊட்டும் விதத்தில் பேசத்தொடங்கினார்.   கைபேசியில்  ஆபாசமாகப் பேசிக்கொண்டிருப்பதும் ஒரு வித போதைதான். அந்தப் போதைப் பழக்கத்தில் தீபிகா சிக்கிக் கொண்டாள்.   கெட்ட பழக்கத்தை தொட்டுவிட்டால் போதும் . நாம் நினைத்தாலும் அதை விட முடியாது.     ரகு காலை அலுவலகம் போனதும் சரியாக பத்து மணிக்குப் போன் வரும். ஆண் நண்பர் கதைக்க ஆரம்பித்து விடுவார்.   ஒரு நாள் ரகு அலுவலகம் போக முடியவில்லை. உடம்பு சரியில்லை என்பதால் வீட்டில் இருந்தான். எப்போதும் போல் தீபிகாவிற்கு கைப்பேசி வந்தது. கணவன் அருகில் இருக்கும் போது மாற்றானிடம் பேச முடியுமா? அவளுக்குச் சங்கடமாக இருந்தது.”அப்புறம் பேசறேண்டி” போனை வைத்து விட்டாள்.   தீபிகா உடனே குளிக்க போய் விட்டாள். அவள் குளித்துக் கொண்டிருக்கும் போது மறும்படியும் அதே நெம்பரிலிருந்து போன் வந்தது. ரகு போனை எடுத்தான்.  ஆண் குரலை கேட்டதும் அதிர்ச்சியாக இருந்தது. “ யார் நீங்க ? என்றான். போன் பேசியவன், ராங் நெம்பர் என்று போனை கட் செய்துவிட்டான். ரகு செல் போனை யார் யார் போனில் பேசியது என்று பார்த்தான். அப்போது பேசிய அதே  செல் நெம்பர் பல தடவை வந்திருந்தது. இதில் எதோ வில்லங்கம் இருக்கிறது என்று தோன்றியது தினந்தோறும் அவன்  தீபிகாவிடம் பேசிக்கொண்டிருக்கிறான் என்றும் புரிந்தது.   தீபிகாவும் குளித்துவிட்டு மிகவும் புத்துணர்ச்சியுடன் வந்தாள்.  “தீபு, உன்னிடம் ஒன்று கேட்க வேண்டும். உண்மையான பதிலை உன்னிடம் எதிர் பார்க்கிறேன்.நீ குளித்துக் கொண்டிருக்கும்போது ஒரு ஆம்பளை  பேசினான். தினந்தோறும் அவன்  போன் செய்கிறான்.  யார் அவன் ?” தீபிகாவால் உடனே பதில் கூற முடியவில்லை. கையும் களவுமாக பிடிபட்ட திருடி  போல் முழித்தாள். கொஞ்ச நேரம் மெளனமாக இருந்தாள். பிறகு சுதாரித்துக் கொண்டு”எனக்கு அவர் ஒரு நாள் ராங் நம்பர் போன் செய்தார்.  அதிலிருந்து நண்பர். நான் அவரை நேரில்  பார்த்தது கூட இல்லை “ என்றாள். ரகு தன் மாமியாரிடமும் இந்தச் சம்பவத்தை சொல்லி வருத்தப்பட்டான். லலிதா போன் செய்து தீபிகாவை திட்டினாள் ; அறிவுரை கூறினாள். தீபிகா சரி என்று சொன்னாலும் அவளால் அந்தக் கெட்ட  பழக்கத்தை நிறுத்த முடியவில்லை. போன் வரும்போது அவளால் பேசாமல் இருக்க முடியவில்லை . மறுப்பு சொல்ல முடியவில்லை. குடிகாரன் குடியை நிறுத்த முடியாததுபோல் அவள் தத்தளித்தாள். ஒரு  தடவை ரகு ராங் நம்பர்   நண்பன் பேசுவதை ரிகார்ட் பண்ணிக் கேட்டான் . பச்சை பச்சையாக பேசுவதைக் கேட்டு மனம்  நொந்தான்.   அலுவலகத்திலிருந்து சீக்கிரம் கிளம்பி வீட்டுக்கு வந்தான். அவன் வரும்போது தீபு கைப்பேசியில்  பேசிக் கொண்டிருந்ததால்  மாட்டிக்கொண்டாள். ஒருவனால்  எவ்வளவு நாள் தான் பொறுக்க முடியும்? ரகு ஒரு முடிவுக்கு வந்தான்.   கார் மீனம்பாக்கம் விமான நிலையத்தைத் தாண்டி  விரைந்து கொண்டிருந்தது. வருண் மேலே பறந்து கொண்டிருந்த விமானத்தைப் பார்த்து மகிழ்ச்சியுடன் கை ஆட்டினான். கொஞ்ச நேரத்தில் கார் தாம்பரத்தை அடைந்தது. லலிதாவின் வீட்டு முன் நின்றது. தீபிகா காரிலிருந்து இறங்கினாள். லலிதா “ வாங்க, வாங்க “என்று வரவேற்றாள். ரகு சோபாவில் உட்கார்ந்தான். அவன் முகம் இறுக்கமாக இருந்தது. லலிதாவைப் கோபத்துடன் பார்த்தான்.   “என்ன விஷயம் சொல்லுங்க ரகு ”. “தீபுவிற்கு எத்தனையோ முறை சொல்லிவிட்டேன். அவள் கேட்க மாட்டேன் என்கிறாள். யாரோ ஒருவனுடன் அடிக்கடி அலைபேசியில் பேசுகிறாள்.. இதைப் பற்றி முன்பே உங்களிடம் சொல்லி இருக்கிறேன். சே,சே... நினைத்தாலே கஷ்டமாக இருக்கிறது. ஒழுக்கம் கெட்டவள். அவளுடன்  எப்படிச் சேர்ந்து வாழ்வது.. அவளை இங்கு விட்டு விட்டுப் போகலாம் என்று வந்தேன். உங்கள் பெண்ணை நீங்களே  வைத்துக் கொள்ளுங்கள். அவள் இங்கேயே இருக்கட்டும். அதுதான் சரி “ என்று சொல்லிவிட்டு அவ்விடத்தை விட்டு   நகர முயற்சித்தான்.   தீபிகா கற்சிலை போல் அமர்ந்திருந்தாள். கண்களில் சஞ்சலம் படர்ந்திருந்தது. எங்கேயோ வெறித்துப்  பார்த்துக் கொண்டிருந்தாள்.  “அவள் வெகுளி. அவள்  தெரியாமல் தவறு செய்து விட்டாள். கழுதைக்குச் சொன்னாலும் தெரியாது........................... நான்  புத்திமதி சொல்கிறேன் நீங்கள் அவளுடன் சேர்ந்து வாழ வேண்டும்.” என்றாள் லலிதா.   பிறகு தீபிகாவை பார்த்து   “.அடி கூறு கெட்டவளே ! . கண்டவன் கிட்டே எல்லாம் ஏண்டி பேசுகிறாய். எத்தனை தடவைச் சொல்வது ?உனக்கு வெட்கமே இல்லையா?. ஒரு ஆண் அத்துமீறிப் பேசும்போது போனைத் துண்டிப்பதை விட்டு விட்டு அவனுடன்   பேசிக் கொண்டிருப்பது  தவறு இல்லையா? பெண்ணுக்கு மன ஒழுக்கம் வேண்டும்.”கோபத்துடன் கத்தினாள். “நான் நட்புடன்தான் பேசினேன். போன் நட்பில்  என்ன தவறு இருக்கிறது?”. “ச்சீ, நாயே, மனசால் கெட்டாலும் தவறுதான்.....  நான் ரொம்பச் செல்லம் கொடுத்து உன்னை வளர்த்து விட்டேன்.. எவனோ வக்ரபுத்திகாரன் வசீகரமாய் பேசியதற்கு   மயங்கி விட்டாயே. வெளுத்ததெல்லாம் பால் என்று நினனத்தால் முதலுக்கே மோசம் வந்துவிடும். பெண்களாகிய நாம்தான் ஜாக்கிதையாக இருக்க வேண்டும். “ என்று கடிந்து கொண்டாள். “அவனுடன் ஃபிரண்டிலியாத்தான் பேசினேன்............ .. “ “ நாசமாப் போச்சு. நீ பேசியது போதும். நாம் செய்யும் சிறுசிறு செயல்களின் தொகுப்புதான் வாழ்க்கை. நல்லதே செய்தால், பேசினால், கேட்டால் வாழ்க்கை சிறப்பாக அமையும்.e உன்னிடம் பக்தியை வளர்க்கத் தவறிவிட்டேன். பக்திதான் ஒரு குடும்பத்தின் அமைதிக்கு  ஆணி வேர் தினமும் இறைவனை வழிபடு. உள்ளத்தூய்மை அவசியம். இனிமேல் ஒழுங்காய் இரு.” ரகுவின் பக்கம் திரும்பிய லலிதா, “மாப்ளே, தீபு  எவ்வளவு வெகுளியாக இருக்கிறாள் பாருங்கள். அவள் செய்தது தவறுதான். அவள் நல்லவள் : இனிமேல் தப்பு  செய்ய மாட்டாள். இனிமேல் ஒழுங்காய் இருப்பாள். அவளை உங்களுடன் கூப்பிட்டுப் போங்கள்.”   அங்கு விளையாடிக் கொண்டிருந்த வருண், ஒரு பொம்மையை  தள்ளி வைத்து “ நீ தப்பு செய்து விட்டாய். “ என்றது.   “ பார்த்தீங்களா மாப்ளே . பெரியவங்க செய்றது குழந்தை மனதில் ஆழமாகப் பதிந்து விடுகிறது.  குழந்தையின் முகத்தைப் பாருங்கள். குழந்தைக்காவது நீங்கள் அவளுடன் சேர்ந்து வாழ வேண்டும்.” லலிதா அவன் கரங்களைப் பிடித்துக்கொண்டு கெஞ்சினாள். ரகு சிறிது நேரம் யோசித்தான். வருண்  அவனைப் பார்த்துச் சிரித்தான். குழந்தையின் சிரிப்பு அவன்  மனசை என்னமோ செய்தது.   “அவளுடன் எப்படி நான் இனி குடும்பம் நடத்துவது.  வார்த்தைகளால் எழுத முடியாத அளவுக்கு ஒரு கயவன் ஆபாசமாகப் பேசியிருக்கிறான். அதை அவள் ரசிக்கிறாள். அவளுடன் படுக்கையில் படுப்பதை நினைத்தாலே கசப்பாக இருக்கிறது................ நீங்கள் இவ்வளவு தூரம் சொல்லுவதாலும் குழந்தைக்காகவும் நான் சம்மதிக்கிறேன்.  அவள் என் கூட வாழலாம். ஆனால் குழந்தைக்குக் தாயாக, அம்மாவாக  மட்டும்தான். இந்த நிபந்தனைக்குச் சம்மதமானால் என்னுடன் வரட்டும்.” என்றான் நெஞ்சில் ஈரமில்லாமல்.     வலக்கையால் தன் காது தோடுகளை தடவிக்கொண்டிருந்த தீபிகா, தேள் கொட்டியதுபோல் துடித்தாள். “நான் அம்மா மட்டுமாய் இருக்க சம்மதிக்க மாட்டேன்.  மனைவியாய் வாழ்வேன். எல்லாப் பெண்களும் அதைத்தானே விரும்புவார்கள்.  அம்மா நீதான் அவரிடம் சொல்லவேண்டும். ” என்றாள்.   அவளை அறைக்குள் அழைத்துச் சென்ற லலிதா, “அடி அசடே! அவர் இறங்கி வரும் போது பேசாமல் ஒப்புக்கொள். முரண்டு பிடிக்காதே. போகப்போக எல்லாம் சரியாகிவிடும்.” என்று  தழுதழுத்த குரலில் லலிதா சொன்னாள்.     தீபிகாவிற்கு அம்மா சொல்வது சரி என்று பட்டது. தலையை ஆட்டினாள்.   ”எல்லாமே உன் கையில்தான் இருக்கிறது” என்று லலிதா சிரித்துக் கொண்டே சொன்னாள்.   தீபிகா,  ரகுவின் கரத்தைப் பிடித்து  கம்மிய குரலில் கண்களில் நீர் மல்க “என்னை மன்னித்து விடுங்கள். நான் தெரியாமல் தவறு செய்து விட்டேன்.  செல்போனால்தான் இந்தத் தவறு ஏற்பட்டது என்பதை உணர்ந்து கொண்டேன். இனி மேல் அவனிடம் பேச மாட்டேன் ”என்றாள். அப்போது அலைபேசி  ஒலித்தது . அவள் அதை எடுத்தாள். ” ராங் நம்பரிடமிருந்துதான்  போன் ..   அடப்பாவி , குடும்பத்திலே குழப்பம் உண்டாவதற்கு  இப்ப போய் போன்  வருதே. தீபு  ஏதாவது பேசி சொதப்பிடப் போறா” பயத்துடன் அவளைப் பார்த்தாள் லலிதா.   ”இந்தக் கைபேசியால்தான் எல்லாத் தொல்லையும் குழப்பமும். இந்த  கைபேசி எனக்கு வேண்டாம் ” என்று கோபத்துடன்  தீபிகா  வீசிய  செல்போன் பறந்து சென்று வீதியிலே விழுந்து  சிதறியது.   அழகான அந்தக் கைபேசி உடைந்ததிற்காக ரகு  வருந்தவில்லை.   மாறாக மிகவும் குதூகலத்துடன் தீபிகாவைப் பார்த்துப் புன்னகை புரிந்தான்.   வறண்டு கிடந்த அவன் உறவுப்பூவில் ஈரம் படர்ந்து விட்டதை லலிதா கவனித்து மனசுக்குள் மகிழ்ந்தாள்.                                              []             5. வைர நெக்லஸ்   தன் கணவருடன் பணி புரியும் எதிர் வீட்டு தனசேகரன் மனைவியின்  கழுத்தில் வைரமாலையைப் பார்த்த பத்மஜாவுக்குப் பொறாமையாய்  இருந்தது. தான் எப்போது அந்த மாதிரி மாலையை வாங்கப் போகிறோம் என்றெண்ணி ஆதங்கப்பட்டாள். அவளுக்கு அவர் கணவர் ரகுராமன் மேல் கோபமாய் வந்தது. மற்ற அதிகாரிகளும் , ஊழியர்களும் லஞ்சம் வாங்கும்போது இவர் மட்டும் கொள்கை, நேர்மை என்று உத்தமனாய் இருக்கிறாரே, பிழைக்கத்தெரியாத மனிதர் என்று முணுமுணுத்தாள்.  எப்படியாவது நச்சரித்து அவர் மனசை மாற்ற வேண்டும் என்று நினைத்தாள். நகைகளின் மேல் ஆசையிருப்பது சில பெண்களின் இயற்கையான  குணம். பத்மஜா அதற்கு விதிவிலக்கல்ல.  அவளுக்குக்  குறிப்பாக  வைர நெக்லஸ் மேல் கொள்ளைப் பிரியம். கணவன் லஞ்சம் வாங்கியாவது  தனக்கு வைரநெக்லஸ் வாங்கிக் கொடுக்க வேண்டுமென நினைத்தாள். அவள் மேல் தவறில்லை. அவள் கணவருடன் கூடப் பணிபுரியும் ஊழியர்களின் மனைவிமார்கள் கழுத்தில் வைரநெக்லஸ் இருக்கிறது. எப்படி வாங்கியிருப்பார்கள் என்று சொல்லாமலே புரியும். ரகுராமன் உணவு அருந்திவிட்டு அலுவலகம் கிளம்பத் தயாரானார். ”ஏங்க நான்  சொல்றதைக் கேளுங்க . நல்லா வசதியாய் வாழலாம்” என்ற அவளைக் கோபத்துடன் பார்த்த ரகுராமன், உனக்கு ஒன்றும் தெரியாது. என்  விசயத்தில் நீ தலையிடாதே என்று சொல்லிவிட்டுப் புறப்பட்டார். ரகுராமன் அலுவலகத்தில் கோப்பை படிக்கும்போது  அந்தக் கோப்பில் சிக்கல் இருப்பதுபோல் தோன்றியது. திருப்தி ஏற்படவில்லை.ஒருமுறைக்கு இருமுறை படித்தார். . “சார், உங்களை மேனேஜர் கூப்பிடுகிறார்.” ” பியூன் சோமு சொல்லிவிட்டு  சென்றான்.. அவர் கேபினை விட்டு வெளியே வந்து மேனேஜரின் அறைக்குள் சென்றார். முத்துசாமி அப்போது கைப்பேசியில் யாருடனோ பேசிக்கொண்டிருந்தார். ரகுராமனை எதிரே நாற்காலியில் அமரும்படி சைகை காண்பித்தார். ரகுராமன் சென்னையில் உள்ள  அரசாங்க அலுவலகத்தில் உதவி மேனேஜராக  இருக்கிறார். இன்னும் இரண்டு  வருடம் சர்வீஸ் பாக்கியிருக்கிறது. ஒல்லியான உடம்பு.  தெய்வ பக்தியுடையவர். தன் வேலையை நேர்த்தியாய்  செய்வார். நேர்மையானவர் . காந்திஜியைப் போல் உண்மை பேசுபவர். லஞ்சம் வாங்காத அபூர்வ மனிதர்.   மேனேஜர் முத்துசாமி இரண்டு மாதம் முன்புதான் மாற்றலாகி சென்னைக்கு வந்திருக்கிறார். அவர் வந்தது முதல் ரகுராமனுக்கு பிரச்சனை ஆரம்பித்து விட்டது. வேறொன்றுமில்லை. முத்துசாமி குணத்தில் ரகுராமனுக்கு நேர் எதிரானவர்.  தாராளமாக பணம்  வாங்குவார்.. பணத்தாசை அதிகம் கொண்டவர். தலையே தாறுமாறாயிருந்தால் அலுவலகத்தில் உள்ள  மற்ற அலுவலர்கள்  எப்படியிருப்பார்கள் என்பதைச்  சொல்ல  வேண்டியதில்ல. ஓநாய்களுக்கு நடுவில் ஓரே ஒரு வெள்ளாடு போல் ரகுராமன் இருந்தார். போனைப்பேசி முடித்த முத்துசாமி குறுநகை புரிந்தார். அவர் எதிரிலிருந்த நாற்காலியில் ரகுராமன் அமர்ந்தார். முத்துசாமி  கரிய மேனியும் கனத்த சரீரமும் உடையவர். . முன்தலை வழுக்கை. பாகவதர் மாதிரி நீளமான தலை மயிர். “ரகுராமன், ராபர்ட் கம்பெனியின்  கோப்பைப் பார்த்து விட்டீர்களா?” “ இப்போது பார்த்துக்கொண்டிருக்கிறேன் ”,” “சீக்கிரம் பார்த்துவிட்டு எனக்கு அனுப்புங்கள். அந்த கம்பெனி மேனேஜிங் டைரக்டர் எனக்கு நெருங்கிய நண்பர்.”’ “அவர்களுடைய கோரிகைக்கு விதிப்படி அனுமதி கொடுக்க முடியாது. சிக்கல் இருக்கிறது.” ” “சாதகமாகப் பரிந்துரை செய்யுங்கள். தாராளமாய்  கிடைக்கும். உங்களுக்குப் புரியும் என்று நினைக்கிறேன். ” “நான் பாரபட்சமில்லாமல் என்னுடையக் குறிப்பை எழுதி அனுப்புகிறேன். உங்களுக்கு எது சரி என்று தோன்றுகிறதோ அதைச் செய்யுங்கள்.” மனசுக்குள் “சரியான பணப்பேயாக இருக்கிறாரே. இவரிடம் எப்படி அனுசரித்துப் போகமுடியும் “ என்று நினைத்தார்.   “பிழைக்கத் தெரியாத ஆளாக இருக்கிறீர்களே?. காற்றுள்ள போதே தூற்றிக் கொள்ள வேண்டாமா?. யோசித்துச்செய்யுங்கள். “ “ அரசாங்க விதிகளுக்கு எதிராக நான் எதுவும் செய்ய முடியாது “ “நாமெல்லாம் எதற்கு இருக்கோம் ?. உங்கள் சிபாரிசை எழுதி அனுப்புங்கள். பணம் இருந்தால் பத்தும் செய்யலாம்.  ஊரோடு ஒத்து வாழ்’ என்பதை மறந்து விட வேண்டாம். “நான் சொல்வதை சொல்லிவிட்டேன். அப்புறம் உங்கள் விருப்பம். ” புன்னகையுடன் சொன்னாலும் மனதிற்குள் “ நான் இவ்வளவு சொல்கிறேன். இவன்  கொஞ்சம் கூட மசியவில்லையே” “ என்று மனசுக்குள் நினைத்தார். “எனக்கு எது நியாயமாகப் படுகிறதோ அதைத்தான் பரிந்துரைக்க விரும்புகிறேன்.” “மேனேஜர் கையை உதறினார் கோபமாக, “ நீங்க எப்படியாவது போங்க “ உரத்த குரலில் கத்தினார். “கோப்பையை முழுவதும்  பார்த்துவிட்டு விரைவில் உங்களுக்கு அனுப்புகிறேன்.” ரகுராமன் தன் இருக்கைக்கு வந்துவிட்டார். அரசாங்கவிதிப்படி அவர் ராபர்ட் கம்பெனிக்கு சிபாரிசு செய்வதில் சிக்கல் இருக்கிறது. மேலதிகாரி அவரிடமிருந்து சிபாரிசை எதிர்பார்க்கிறாரே ? இருதலைக்கொள்ளி எறும்புபோல் அவர் விழி பிதுங்கியது. “ரகுராமன் மனசு மிகவும்  சங்கடப்பட்டுக்கொண்டிருந்தது. அவருக்கு  மனவுளைச்சல் அதிகமாகியிருந்தது. “என்ன ஆனாலும் தன் கொள்கையிலிருந்து பிறழக் கூடாது, நேர்மையிலிருந்து தவறக் கூடாது”என்று உறுதி செய்தார். மேனேஜர் சொன்னபடி அவர் பரிந்துரைக்கவில்லை. தலைவலி அதிகமாய் இருந்ததால் மேனஜரிடம் கோப்பைக் கொடுத்துவிட்டு நான்கு மணிக்கே  வீட்டிற்குச் சென்றுவிட்டார். வீட்டுக்கு வந்ததிலிருந்து  அவர் முகம் வாடியிருப்பதைக் கண்ட பத்மஜா, அலுவலகத்தில் ஏதோ நடந்திருக்கிறது ; பிரச்சனை இருக்கிறது என்பதை  ஊகித்து விட்டாள். “என்னங்க, ஏன் ஒரு மாதிரியாகியிருக்கிறீர்கள்? உங்கள் மனச்சுமையை என்னிடம் சொல்லி குறைத்துக்கொள்ளலாமே? “ என்று மெல்லிய குரலில் கேட்டாள்.    “.  மேனேஜர் முத்துசாமியால்  பிரச்சனை ” “ நீங்கள் அவரோடு ஒத்துப் போங்களேன். நாம் செளகரியமாய் இருக்கலாம் அல்லவா?” மனைவியை முறைத்தார். எதிர் வீட்டு தனசேகரன் மனைவியைப் பார்த்து பணம் வாங்குவது தவறில்லை என்று அவளும் நினைக்கிறாளே” என்று அவருக்குக் கோபம்.   . ” என்னுடைய கொள்கையிலிருந்து நான் பிறழ மாட்டேன். நேர்மையைக்   கடைப்பிடிப்பதில் தடை வந்தால்  என் வேலையைக் கூட  விட்டுவிடலாம்” என்று யோசித்துக் கொண்டிருக்கிறேன்.” “எதையும்  நன்கு யோசித்து முடிவு  செய்யுங்கள். வேலையை விட்டு விட்டால் நடுத்தெருவில் போய் நிற்க வேண்டும். என்னை மறந்துவிட வேண்டாம். நீங்கள் எது செய்தாலும் எனக்குச் சம்மதம்தான்?” என்று  பூடகமாய்”  சொன்னாள். அன்று இரவு அவர்   வெகுநேரம் யோசனை செய்தார். கடைசியில் ஒரு முடிவுக்கு வந்தார். உடனே ஒரு காகிதத்தையும் பேனாவையும் எடுத்தார். கடிதத்தில் ராஜிநாமாவை  எழுதிக் கையெழுத்திட்டார். இரண்டு மாதங்களுக்குப் பிறகு அன்று இரவுதான் நிம்மதியாக உறங்கினார். பத்மஜா வெகுநேரம் தூங்காமல் கணவரின் ராஜிநாமாவைப் பற்றிச் சிந்தனை செய்துகொண்டிருந்தாள். பொழுது விடிந்தது. ரகுராமன் காபியை பருகினார். வாய் “ பித்தா--பிறைசூடி-- என்று மெதுவாக ராகம் போட்டது. செய்தித்தாளைப் படித்துக்கொண்டிருக்கும்போது  ஒரு செய்தி அவரைத் திடுக்கிட வைத்தது. “ பத்மஜா இங்கே வா. இதைக் கேள்” என்று உணர்ச்சிவசப்பட்டுக் கத்தினார். பத்மஜா உடனே அவருகில் வந்தாள். “ லஞ்ச புகாரில் அதிகாரி கைது” என்று உரக்கப் படித்துவிட்டு மேலும் தொடர்ந்தார். ”சைதாப்பேட்டையைச்  சேர்ந்த வைத்தியநாதன் என்பவர் தனது கட்டிடம் கட்ட ஒப்புதல் பெறுவதற்காக அதிகாரி முத்துசாமியை அணுகினார். அவர் ஒப்புதலுக்காக ரூபாய் 80 ஆயிரம் கேட்டதாக கூறப்படுகிறது. இது குறித்து வைத்தியநாதன் சென்னை இலஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் செய்தார். போலீசார் யோசனைப்படி நேற்று  அரசு அலுவலகம் சென்ற வைத்தியநாதன், முத்துசாமியிடம் ரசாயனம் தடவிய ரூபாய் 80 ஆயிரத்துக்கான நோட்டுகளைக் கொடுத்தார். அப்போது அருகில் மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் கையும் களவுமாக முத்துசாமியை பிடித்தனர். அவரது அலுவலகத்தில் வைத்து ஒரு மணி நேரத்துக்கும் மேல் விசாரணை நடைபெற்றது “ .   வருத்தத்துடன்,  “அடடா ! ! இப்படி ஆகி விட்டதே ” என்றார். மீண்டும் அந்தச் செய்தியை மனசுக்குள் படித்தார்.  தான் எழுதி வைத்திருந்த  ராஜிநாமா கடிதத்தைக் கிழித்துப் போட்டார். ”நான் அலுவலகம் போகப் போகிறேன். உணவை எடுத்து வை” என்றார். பத்மஜாவுக்கு  மிக்க மகிழ்ச்சி. ” நல்ல காலம், அவர் வேலையை விட்டுவிடவில்லை.  வைரநெக்லெஸ் வாங்கிவிடலாம் “ என்று நினைத்தாள். ”நீங்க  அலுவலகம் போங்க. எனக்கு எப்படியாவது வைரநெக்லஸ் வாங்கிக் கொடுத்திடுங்கள் “ என்றாள். “ மனைவி அல்லது மேலதிகாரி... யார் வற்புறுத்தினாலும் லஞ்சம் வாங்கக் கூடாது” என்று உறுதி பூண்டார். ”இருக்கிறதை வைத்து நிம்மதியாய்  இருப்போம்” என்று சொல்லிவிட்டு அலுவலகம் கிளம்பினார். அலுவலகத்தில்  அவருக்கு ஒரு ஆச்சர்யம் காத்திருந்தது. அவரை மேனேஜராகப் பொறுப்பு ஏற்கச்சொல்லி உத்தரவு வந்திருந்தது.   ”நேற்று இரவு வேலையை ராஜிநாமா செய்துவிடலாமென்ற மனநிலையில் இருந்தோம். இன்று பதவி உயர்வு வந்திருக்கிறது. எல்லாம் அவன் திருவிளையாடல்” என்று எண்ணினார்.   ராபர்ட் கம்பெனியிலிருந்து அபிநயா என்னும் பெண்மணி அவரைப் பார்க்க வந்திருந்தார்.   நல்ல உயரம் . சிவந்த நிறம் . பார்ப்பவரை வசீகரிக்கும் கட்டான உடல். நீல சுடிதார் போட்டிருந்தாள். வாராத கூந்தல் மார்பின்மேல் படர்ந்து மாராப்பு வேலையைச் செய்தது. உதட்டில் சிவப்பு வண்ணத்தைப் பூசி கறுப்பு கண்ணாடி அணிந்து நவநாகரீக மங்கையாய் தோற்றமளித்தாள். பேசுகிறபோது அபிநயாவின் குரல்  கொஞ்சும் .     ”சார், என் பேர் அபிநயா. ராபர்ட் கம்பெனியில் பி.ஆர்.ஓ ஆக இருக்கிறேன்.நீங்க மேனேஜர் ஆனதிற்கு என் வாழ்த்துக்கள்.  எங்க கம்பெனி பைலைப் பார்த்து கட்டடம் கட்ட  அனுமதி கொடுத்துடுங்க. நீங்க எதிர்பார்க்கிறதையெல்லாம் நாங்க செய்யறோம்” என்று குழைந்தாள்.   ”நான் பைலைப் பார்த்துவிட்டுத்தான் சொல்ல வேண்டும்.. விவரம் ஏதாவது  தேவையென்றால் தொடர்பு கொள்கிறேன்” என்று பிடி கொடுக்காமல் பேசினார். எல்லா ஆண்களும் அழகுக்கு அடிமையில்லை. அதற்கு விதிவிலக்கு உண்டு. தான் வீசிய தூண்டிலில் மீன் சிக்கவில்லை  என்பது  அபிநயாவுக்குப் புரிந்தது. இது என்னுடைய விசிடிங் கார்ட்” என்று குறுநகையுடன்  சொல்லி அவரிடம் ஒரு பளபளக்கும் அட்டையைக் கொடுத்தாள். ” நீங்க எப்போது  வேண்டுமானாலும் என்னைக் கூப்பிடலாம் சார்  “ என்று கொஞ்சும் குரலில் கூறிவிட்டு  வெளியில் வந்து சோமுவிடம் இருநூறு ரூபாய் கொடுத்ததும் அவன் பல்லிளித்தான். ”சார் வீடு எங்கே இருக்குது” என்று கேட்டாள், அவன் உடனே,” சார்  மாம்பலத்தில் ஜெய்சங்கர் தெருவில் இருக்கிறார். சாய் பாபா கோவிலுக்கு எதிர் ஃபிளாட். முதல் மாடி”. என்று அவர் வீட்டு  முகவரியைச் சொன்னான்.   கொஞ்சம் விட்டால் அவனே அவளை அங்கு அழைத்துக் கொண்டு போய்விடுவான் போலிருந்தது.   ”தேங்ஸ்” என்று சொல்லிவிட்டு வெளியே வந்து காரை எடுத்து மாம்பலத்தை நோக்கிச் சென்றாள். அவளுக்கு ரகுராமனின் வீட்டைச் சிரமமில்லாமல் கண்டு பிடித்துவிட்டாள். வீட்டில் பத்மஜா மட்டும்தான் இருந்தாள். ”நான் ராபர்ட் கம்பெனியிலிருந்து வருகிறேன். உங்களைப் பார்த்துவிட்டுப் போகலாம் என்று வந்தேன். இது என்னுடைய பரிசு” என்று  ஒரு கருக மணி  மாலையைக் கொடுத்தாள். அதன் விலை குறைந்த பட்சம்  ஆயிரம் ரூபாயாவது இருக்கும். எங்குத் தட்டினால் சப்தம் வரும் என்பதை நன்கு அறிந்தவள் அவள்.  பத்மஜா மிகவும் மகிழ்ச்சியடைந்து , ”உட்காருங்க . காபி குடிக்கிறீர்களா? ” என்று அன்போடு கேட்டாள். ”அதெல்லாம் வேண்டாம் . நீங்க எனக்கு ஒரு உதவி செய்ய வேண்டும். எங்க கம்பெனி பைல் உங்க கணவரின் மேஜை மேல் இருக்கிறது . அவர் அனுமதி கொடுக்க வேண்டும் . நீங்கள் உங்கள்  கணவரிடம் பேசி அனுமதி வாங்கிக் கொடுத்துவிட்டால் உங்களுக்கு ஒரு வைர நெக்லஸை பரிசு கொடுக்கிறேன். நானே உங்களைக் கடைக்கு அழைத்துச் செல்கிறேன். உங்களுக்குப் பிடித்த மாடலில் நீங்க நகையை வாங்கிக்கொள்ளுங்கள்.  யாரிடமும் இதைப் பற்றி மூச்சு விட வேண்டாம். இது நமக்குள் இருக்கும் ஒப்பந்தம்.” என்றாள் பழம் நழுவி பாலில் விழுந்தது போல் இருந்தது பத்மஜாவுக்கு. எப்படியாவது வைர நெக்லஸை  பரிசாக வாங்கிவிட வேண்டும் எனத் துடித்தாள். ”நான் என் கணவரிடம் கண்டிப்பாகப் பேசுகிறேன் ” ”நான் கிளம்புகிறேன். அப்புறம் அலைபேசியில் தொடர்பு கொள்கிறேன்” அபிநயா அங்கிருந்து கிளம்பி விட்டாள். அன்று இரவு பத்மஜா , “ ஏங்க ராபர்ட் கம்பெனிக்குத்தானே அனுமதி கொடுக்கப்போறீங்க” என்று கேட்க ரகுராமன் கோபத்துடன், “ என் அலுவல வேலையில் தலையிடாதே” என்று கத்தினார். ”நீங்க ஒரு அப்பாவி, எல்லாரையும் போல் நாலு காசு சேர்க்கத் துப்பில்லை” என்று சண்டையைத் தொடங்கினாள். ஒவ்வொரு லஞ்சம் வாங்கும் ஆணின் பின்னால் ஒரு பெண் இருப்பாள் என்பதை நிரூபிப்பது போல் இருந்தது அவள் செயல்.   பத்மஜா வைர நெக்லஸ் வேண்டுமென முரண்டு பிடித்தாள்.  ஆப்பிரிக்காவில் காந்திஜி கஸ்தூரிபாயிடம் ஹாரத்திற்காகப் புத்திமதி சொல்லியது போல் அவர் அவளுக்கு  அறிவுரை  கூறினார். அவர் எவ்வளவு சொல்லியும் பத்மஜாவின் வைர நெக்லஸ் ஆசை அவளை விட்டு நீங்கவில்லை.   யாரும் எதிர்பார்க்காத பேரதிர்ச்சி சம்பவம் ஒன்று நடந்து விட்டது. முத்துசாமி சிறையில் இருந்தது அவரது மனைவி மற்றும் மகளைப் பெரிதும் பாதித்தது. தெருவில் அவர்களால் நடக்க முடியவில்லை. மானம் போய்விட்டது என்று கருதிய அவரது மனைவி தூக்க மாத்திரையைப் பாலில் போட்டுத் தானும் அருந்தி தன் மகளுக்கும் கொடுத்தாள். இருவரும் இவ்வுலகை விட்டு மறைந்தனர். இதை அறிந்த முத்துசாமி அதிர்ச்சி அடைந்தார். “ நான் யாருக்காகப் பணம் சேர்த்தேனோ அவர்களே மறைந்து விட்டார்கள் . நான்தான் காரணம்” என்று பிதற்றிக் கொண்டே இருந்தார்.  மனைவி மகள் இறுதிச் சடங்கைச் செய்யும்போது துக்கம் தாளாமல் மாரடைப்பால் மரணம் அடைந்தார். ரகுராமன் கூறியச்  சோகச்செய்தியை கேட்டு அதிர்ந்த  பத்மஜா , “ லஞ்சம் வாங்கின முத்துசாமிக்கு கடவுளே தக்க தண்டனைக் கொடுத்து விட்டார். தீதும் நன்றும் பிறர் தர வாரா” என்பதை உணர்ந்தேன். லஞ்சம் வாங்கினால் தவறில்லை என்று எண்ணிய என் அறியாமை முத்துசாமி  இறப்பின் மூலம் நீங்கி விட்டது. எல்லோரும் செய்யும் தவற்றை நீங்கள் செய்யாமல் நேர்மையாய் இருந்ததை எண்ணி பெருமை படுகிறேன். விலை மதிக்க முடியாத கோஹினூர் வைரமான நீங்கள் எனக்கு ஆபரணமாயிருக்கும்போது வைர நெக்லஸ் எனக்கு எதற்கு?கிடைக்கிற வருமானத்தில் இனி மனநிறைவோடு இருப்பேன்” என்றாள். ”தீமை காட்டி விலக்கிடுந் தெய்வம்” என்ற  பாரதியாரின் கவிதை வரி  ரகுராமனுக்கு நினைவு வந்தது. []                                                                   6. அணைக்கும் கரங்கள்   ”பத்மலட்சுமி குழந்தைகள் காப்பகம் “ அன்று கோலாகலமாயிருந்தது. அங்கு ஒரு வயதிலிருந்து நான்கு வயது வரை உள்ள பிஞ்சுக் குழந்தைகள் தன் பிஞ்சுப் பாதங்களுடன் அங்குமிங்கும் குதித்தோடிக் கொண்டிருந்தனர். அவர்களைப் பார்த்துக் கொள்ளும்  ஆயாக்களோ மூச்சு வாங்க அவர்கள் பின்னால் ஒடிக்கொண்டிருந்தனர். மேடை போட்டு பந்தல் கட்டி வண்ண வண்ண பலூன்களால் அலங்கரித்து  விழா ஏற்பாடு நடந்து கொண்டிருந்தது. பார்வையாளர்கள் உட்கார நாற்காலிகள் வரிசையாகப் போடப்பட்டிருந்தன.  ஒரு ஆயா இன்னொரு ஆயாவைக் கேட்டாள்.” இன்னைக்கு என்ன விசேஷம்? நம்ம டாக்டர் அம்மாவுக்குப் பிறந்த நாளா? நீ வேறே............. இன்னிக்குக் குழந்தைகள் காப்பகத்தின் மூன்றாவது ஆண்டு முடிந்து நான்காவது ஆண்டு ஆரம்பிக்கிறதாம்.  டாக்டர் அம்மாவைப்  போல இந்த உலகத்திலே யாரும் இருக்க மாட்டாங்க. தன்னலம் கருதாமே இந்த  அநாதைக் குழந்தைகள் காப்பகத்தை நடத்திண்டு இருக்காங்க.”. அப்போது டாக்டர் அகிலா ஆண்டு விழா வேலை எல்லாம் ஒழுங்காக நடக்கிறதா என்பதைப் பார்ப்பதற்காக அங்கே வந்தாள். அவளைப் பார்த்ததும் பல குழந்தைகள் அவளிடம் ஓடி வந்தன. ஒரு குழந்தை குறுகுறு நடை நடந்து சிறுகை நீட்டி டாக்டரின் புடவையைப் பிடித்து இழுத்து மழலையில் மிழற்றியது. டாக்டர் பூ போன்ற அந்த மென்மையான குழந்தையைத்  தூக்கித் தாய்ப் பாசத்துடன் கொஞ்சினாள்.ஒரு குழந்தைக்குப் பாட்டிலிலே பால் கொடுத்துக் கொண்டிருக்கிற  ஆயாவிடம், “குழந்தையை  நல்லா கவனிச்சுங்க ஆயா.” என்றாள்.. ஆதரவற்ற அநாதைக் குழந்தைகளை அரவணைத்து அக்கரையோடு கவனித்துக்  கொள்ளும் ’பத்மலட்சுமி குழந்தைகள் காப்பகத்தை டாக்டர் அகிலா பொறுப்பேற்று நடத்தி வருகிறாள். அந்தக் காப்பகத்தில் எல்லா அடிப்படை வசதிகளும் உண்டு .இரண்டு எம்பிபிஎஸ் டாக்டர்கள் நிரந்தரமாக அங்கு பணி செய்கின்றனர். பெண் வார்டன் உண்டு . நாலு ஆயாக்கள் , நான்கு  செவிலியர் உண்டு.   டாக்டர் அகிலாவுக்கு தெரிந்தவர்கள் எல்லாம்  ஆண்டு விழாவிற்கு வந்து விட்டனர். விழாவுக்குத் தலைமை தாங்க இருக்கும் மாவட்ட ஆட்சியாளர்  ஜெயந்தி ஐ.ஏ.எஸ்  வந்ததும்  விழா துவங்கியது. மாவட்ட ஆட்சியாளர்  ஜெயந்தி தன் தலைமையுரையில் பேசியதாவது.  ”இந்தக் காப்பகத்தை கட்டிக் காத்து வரும் காப்பாளரும் டாக்டருமான அகிலா சாதாரணமானவர் அல்ல. அன்புத்தெய்வம். பிறருக்காக அவதரித்தவர்; இவ்வுலகில் தான் ஈட்டிய பெரும்பொருளை எல்லாம் கைம்மாறு கருதாமல் பிறர் வாழத் தம் வாழ்க்கையை அர்ப்பணித்துக் கொண்ட நங்கை. இந்தக் காப்பகத்தின் ஆண்டு விழாவில் கலந்து கொள்ளும் வாய்ப்பை எண்ணி நான் மிகவும் மகிழ்ச்சியும் பெருமையையும் அடைகிறேன். தாயின் இதயமும் தலைவியின்  உள்ளமும் கொண்ட டாக்டர் அகிலா இச்சிறார்களின் மழலை மொழிகளை கேட்டும் ஆனந்தப் படுவதிலேயும். பச்சிளம் தளிர்களை வளர்ப்பதுவும் தன் பிறவிப் பயன் என்று கருதி வாழ்ந்து கொண்டிருக்கிறார். அவரை மனித குலத்தின் தோழி என்று கூறினால் மிகையாகாது. இந்தக் குழந்தைகள் பண்புள்ள குழந்தைகளாக வளர்ந்து ஒழுக்கமும்  நல்ல கல்வியும் பெற்று நாட்டுக்கு நல்ல பயன் தரும் மக்களாக வாழ வாழ்த்துகிறேன். என்று தன் உரையை முடித்தார்  ”டாக்டர் ஏன் தன் பணத்தைச் செலவழித்து குழந்தைகள் காப்பகத்தை நடத்த வேண்டும்? அதில் ஏதோ மர்மம் இருக்கிறது. நன்கொடையாய் வரும் பணத்தில் மேலும் சொத்து வாங்கிச் சேர்ப்பார்”  என்று  வம்பர்கள் தங்களுக்குள் பேசிக் கொண்டிருந்தார்கள். ”தவறான வழியில் குழந்தையைப் பெற்ற பெண்கள்  இங்கே வந்து குழந்தையை வீசி விட்டுப் போகிறார்கள்”என்று ஒரு பெண் பக்கத்திலிருந்தவளிடம்  சொல்லிக் கொண்டிருந்தாள். குற்றம், குறை சொல்லுவார் சிலர் .இது மனித இயல்பு. அதைப்  பொருட்படுத்தினால் பொதுச்சேவை செய்ய முடியாது.    டாக்டர் அகிலா உரையாற்ற மேடையில் வந்து நின்றார். பார்வையாளர்களைப் பார்த்துப் புன்முறுவலித்துவிட்டு மலர்ந்த முகத்துடன் பேச ஆரம்பித்தார். என் தந்தையார் திரு பத்மநாபன் எனக்கு நல்ல கல்வி அளித்து என்னை டாக்டர் படிப்பு படிக்க வைத்தார். . அவர் மரணப் படுக்கையில் இருக்கும் போது என்னிடம் ”என்னை மன்னித்து விடு  அகிலா. ஒரு ரகசியத்தை உன்னிடம் சொல்லாமல் மறைத்துவிட்டேன்.”என்றார்.”என்ன விஷயம் அப்பா” என்றேன். “ நீ பிறந்தவுடன் உன்னைப் பெத்த  அம்மா இரக்கமில்லாமல் அரசாங்க ஆஸ்பிட்டல் முன் உன்னை வீசிவிட்டுப் போய்விட்டாள். உன்னைத் தத்து எடுத்து வளர்த்தோம் என்றார். நான் அதிர்ச்சியுடன்,“ ஏன் இதுவரை என்னிடம் சொல்லவில்லை?” என்று கேட்டதற்கு, ”நீ வருத்தப்படுவாய் என்பதால்தான் சொல்லவில்லை.உன் அம்மாவும் வானுலகம் போய்விட்டாள். நா...னு....ம்-----என்று சொல்லும்போதே அவர் உயிர் உடலை விட்டுப்  பிரிந்தது. நான் அநாதை என்ற எண்ணமே என்னை மிகவும் வாட்டியது. தூக்க மாத்திரை சாப்பிட்டு உயிரை மாய்த்துக் கொள்ளலாம் என்ற முடிவுக்கு வந்தேன். சாவதற்கு முன் தந்தையின் அறைக்குக் கடைசி முறையாய்  அவர் புகைப்படத்தைப் காணச் சென்றேன். அப்போது அவரது மேஜையின் மேலிருந்த ”சகோதரி நிவேதிதை  வாழ்க்கை வரலாறு” என்னும் புத்தகம் என்னைப் படிக்கத் தூண்டியது. . என்னை மறந்து புத்தகத்தில் மூழ்கி விட்டேன். அயர்லாந்தில் பிறந்த  சகோதரி நிவேதிதை  விவேகானந்தர் கொள்கைகளால் ஈர்க்கப்பட்டு 1898ம் வருடம் இந்தியா வந்து இந்தியப் பெண் குழந்தைகளுக்காக ஒரு பள்ளியை ஆரம்பித்து இருக்கிறார். அமெரிக்காவிலிருந்து நிதி திரட்டி பள்ளியை நடத்தினார். பல சமூகப் பணிகளில் தன்னை அர்ப்பணித்தார்.  நாற்பத்து நான்கு வயதாகும் போது கல்கத்தாவில் இறந்தார். தன் சொத்துகளையும் நூல்களையும் இந்தியப் பெண்களுக்கு தேசியக் கல்வி வழங்க உயில் எழுதி வைத்தார். நிவேதிதை ஏழைகளுக்குச் செய்த சேவை என்னை மிகவும் கவர்ந்தது. வெளிநாட்டிலிருந்து இங்கு வந்து இந்தியர்களுக்காக அவர் ஆற்றின தொண்டு என்னைப் பிரமிக்க வைத்தது. அந்தப் புத்தகம் என்னுடைய வாழ்க்கையில் ஒரு பெரிய திருப்பத்தை ஏற்படுத்தியது ; வாழ்க்கைக்கு வழி காட்டியது. நிவேதிதையின் வாழ்க்கை சரிதத்தைப் படித்தவுடன் அவரைப் போல் மனிதத் தொண்டு செய்ய வேண்டும் என உறுதிமொழி எடுத்தேன்.தற்கொலை செய்து கொள்ள வேண்டும் என்று இருந்த என்  மனநிலை மாறிவிட்டது.  அப்போது வீட்டில் செய்தித்தாள் வந்து விழுந்தது,  பிறந்த பச்சிளங் குழந்தை சாலை ஓரத்தில் ஒரு துப்பட்டாவில் வைக்கப்பட்டுக்  கிடந்தது என்னும் திடுக்கிட வைக்கும் செய்தியை  படித்த எனக்கு  நான் ஏன் இந்தப் பூமியில் பிறந்தேன் என்பது  புரிந்தது. ஆம், கடவுளே வழிகாட்டி விட்டார் !  தான் பெற்ற குழந்தைகளைத் தானே அநாதை ஆக்குவது கொடுமையிலும் கொடுமை. அந்த அவல  நிலை யாருக்கும் வரக் கூடாது என்பதால் எனக்கு அப்பாவின் மூலம் வந்த சொத்தையெல்லாம் அறக்கட்டளைக்கு மாற்றி  மறைந்த என் அப்பா அம்மாவின்  பெயரைச் சேர்த்து ”பத்மலட்சுமி குழந்தைகள் காப்பகம்” என்னும் பெயரில் ஆதரவற்ற அநாதை குழந்தைகளுக்காக காப்பகம்   ஆரம்பித்தேன்.   உலகில் பிறந்த ஒவொரு மனிதரும் தான் வாழ்தலைப் போல் பிறரையும் வாழச் செய்தல் வேண்டும். இதுவே பிறவிப் பயனின் நோக்கம்  மனிதன் மனிதருக்காக வாழ வேண்டும். இந்த மனித நேய அடிப்படையில் தோன்றியதுதான் இந்தக் காப்பகம்.   மூன்று வருடங்களுக்கு முன்பு குப்பை தொட்டியில்  வீசி எறியப்பட்ட  பதினைந்து நாள்  பச்சிளம்  குழந்தையுடன் ஆரம்பிக்கப்பட்ட  காப்பகம் இப்போது ஐம்பது குழந்தைகளுடன் வளர்ந்திருக்கிறது. சகோதர,  சகோதரிகளே, குழந்தை என்பது கடவுள் கொடுத்த வரப்பிரசாதம். தயவு செய்து அதைச் சாலையின் ஓரத்தில் வீசி எறிந்துவிட வேண்டாம் என்று கெஞ்சிக் கேட்டுக் கொள்கிறேன். காப்பகத்தின் நுழைவில் ஒரு கண்டா மணி இருக்கிறது. அதனருகில் ஒரு தொட்டில் இருக்கிறது.கிடைத்தற்கரிய குழந்தைச் செல்வத்தை வேண்டாம் என்று மறுப்பவர்கள்  குழந்தையை தொட்டிலில்   வைத்து விட்டு கண்டாமணியை ஒலித்துவிட்டால்  போதும் .நாங்கள் ஓடி  வந்து குழந்தையை எடுத்து அன்புடன்  அணைத்துக் கொள்வோம். எங்கள் மனிதத் தொண்டு எப்போதும் தொடரும் . வாழ்க சகோதரி நிவேதிதா ” என்று அவர் உரையை முடித்ததும் கரவொலி எழும்பியது. எங்கும் வாழ்த்தொலி முழங்கத் தொடங்கின. டாக்டர் அகிலாவைக் கட்டிப் பிடித்துப் பாராட்ட எழுந்த பெண்களால்  அங்கு   தள்ளுமுள்ளு ஏற்பட்டது. அப்போது “ டாங் , டாங்,  என்று கண்டா மணி  ஒலித்தது. ஒரு செவிலித்தாய் கண்டாமணியை நோக்கி ஓடினாள்.    []     7.கண்ணாடிக் கதவுக்கு அப்பால்   நான் கோயம்பேடு மெட்ரோ ரயில்வே ஸ்டேஷன்  பிளாட்பாரத்தில் நுழையும் போது  ரயிலும் வந்து  கொண்டிருந்தது. அப்போது நேரம் காலை எட்டு மணி.  மெட்ரோ சேவை கோயம்பேடிலிருந்து ஆலந்தூர் வரை உண்டு . ரயில் நின்றதும் கதவு திறந்தது. பிளாட்பாரத்தில் ஒரு இளைஞன் என் பக்கத்தில் நின்றிருந்தான். அவன் கையில் ஒரு ரோஜா பூவை வைத்திருந்தான்.   சில வினாடிகள்தான் ரயில் நிற்கும்  என்பதால் நான் ரயிலில் உடனே  ஏறி விட்டேன். அவன்  யாருக்காகவோ காத்திருந்தான்.  அப்போது ஒரு இளமங்கை ஒடி  வந்தாள். அவள் ஒல்லியான உடற்கட்டுடன் அதிக   அழகுடன்  இருந்தாள். அடர்த்தியான கூந்தல் இடுப்புக்குக் கீழே தொங்கிக் கொண்டிருந்தது.  அவன் சிரித்த முகத்துடன் தன்னிடமிருந்த  ரோஜாப் பூவை அவளிடம் கொடுத்தான். அவள் ரோஜாவை  தலையில் சூடிக் கொள்ள இருவரும் அவசரமாக ரயிலுக்குள் ஏறினார்கள்.  உடனே கதவு மூடியது. கதவிலே  பாதி கண்ணாடி . பிளாட்பாரத்தில் நிற்பவர்களை எல்லாம் உள்ளேயிருந்து தெளிவாகப் பார்க்க முடியும். சாதாரண மின்சார வண்டி போல் கூட்டமாக  இல்லை.   தாராளமாக உட்கார்ந்து போக இடம் இருந்தது.   ஏசி கம்பார்ட்மெண்ட் என்பதால் வண்டி முழுவதும் சில்லென்று குளிர்ச்சியாக இருந்தது. ரயில்   ஓட ஆரம்பித்தது.     என்னுடன் ரயிலில் பயணம் செய்யும் நண்பர்  ராகவன் எனக்கு வணக்கம் கூறி வரவேற்றார்.    ”செல்லம் காசு கொடு, ராஜா காசு கொடு”என்று கை தட்டிக் கேட்கும் திருநங்கைகளின் அன்புத்  தொல்லை இங்கே இல்லை கவனிச்சிங்களா?” என்றார் சக பயணி  சர்மா. எல்லோரும் சிரித்தார்கள். நாங்கள் நான்கைந்து நண்பர்கள் தினந்தோறும் அலுவலகத்திற்கு ரயிலில்  பயணம் செய்யும் போது  ஜாலியாக பேசிக்கொண்டு போவோம்.  அந்த இளைஞனும் பெண்ணும் என் பக்கத்தில் அமர்ந்தார்கள். ” டெல்லி மெட்ரோ  ரயிலில் போவது போல் இருக்கிறது” என்றான் அந்த இளைஞன். அவன் பெயர் பிரசாத்.  அவன் அவளை ”ரம்யா “  என்று அழைத்தான் . அவர்களைப் பார்த்தாலே காதலர்கள் என்று புரிந்தது. நான் ரம்யாவைப் பார்த்து ” பிரசாத்,  ரோஜா பூவால் தன் அன்பைக் காண்பிக்கிறார் போல இருக்கு” என்றேன்.  நாணத்தால்  முகம் சிவக்க  வெட்கத்தால் தலை குனிந்தாள்.  இரவு  என் மனைவியிடம் அந்தக் காதலர்களைப்  பற்றிச் சொன்னபோது அவள் மிகவும் குதூகலம் அடைந்தாள். அவர்கள் காதல் சீக்கிரம் கல்யாணத்தில் மலரட்டும் என்று வாழ்த்தினாள்.    பிரசாத் ரம்யா காதல் நாளொரு  ரோஜா பூவுடனும் பொழுதொரு எஸ்.எம்.எஸ்டனும்   வேகமாய் வளர்ந்தது . ஒரு நாள் காலை பிரசாத்  கம்பார்ட்மெண்டில் உள்ள அனைவருக்கும் கல்யாணப் பத்திரிக்கையைக் கொடுத்து  ”அடுத்த வாரம் திருநீர்மலையில் எங்களுக்குக் கல்யாணம், அவசியம் வாருங்கள் “ என்று அழைத்தான்.    அன்று இரவு என் மனைவியிடம் கல்யாணப் பத்திரிகையைக் காண்பித்ததும் அவள் மகிழ்ச்சியில் துள்ளிக் குதித்தாள். கல்யாணம் ஆகி சீக்கிரம் குழந்தை பிறக்க வேண்டும் என்று ஆசிர்வதித்தாள்.   அவர்களுக்குக்  குழந்தைப் பிறந்தால் என்ன பெயர் வைப்பது என்பது பற்றி எங்களுக்குள் கடுமையான வாக்குவாதம் நடந்தது. நான் சொன்ன பெயர் அவளுக்குச் சம்மதமில்லை. அவள் சொன்னப்  பெயர் எனக்கு பிடிக்கல.   கோபமடைந்த என் மனைவி மேசை மேலிருந்த ஒரு ஆப்பிளை எடுத்து என் மேல் வீசுவதற்காகக் கையை ஓங்கினாள். என் மண்டையில் சுரீர் என்று உறைத்தது. நிறுத்து !  என்று கத்தினேன்.”இனிமேல்தான் இரண்டு பேருக்கும்    கல்யாணம் ஆக வேண்டும்.   அவர்கள் பெற்றெடுக்காத குழந்தைக்குப் பெயர் வைக்க  நாம் அடிதடியில் இறங்குவது நன்றாகவா இருக்கிறது? “என்றேன்.   ”அதானே” என்றாள் என் மனைவி சிரித்துக்கொண்டே. எங்கள் முட்டாள் தனத்தை நினைத்து ரொம்ப நேரம் விழுந்து விழுந்து சிரித்துக் கொண்டிருந்தோம்.   அன்று   பிரசாத், ரம்யா  இரண்டு பேரும் பயணம் செய்ய வரவில்லை. எங்கேயாவது தென்படுகிறார்களா? என்று பார்த்தேன் . ”காதல் ஜோடியை  காணோமே என்று பார்க்கிறீங்களா? கல்யாண வேலை  ஏதாவது இருக்கும்.  அதனால் அவர்கள் இன்று வரவில்லை. நாமெல்லாம் ஆளுக்குக் கொஞ்சம் பணம் போட்டு பரிசுப் பொருள் ஏதாவது  வாங்கிக் கல்யாணத்தினத்தன்று கொடுக்கலாம்”என்றார் ராகவன் .  நானும் மற்ற நண்பர்களும்  அதற்கு ஒப்புக் கொண்டோம். ரயிலில் தினந்தோறும் அலுவலகத்திற்குப் பயணம் செய்பவர்களிடம் நட்பும்   பாசமும்  ஏற்பட்டு விடுகிறது .    அடுத்த  நாள் ரயிலுக்குள் ஏறியதும்  “விசயம் தெரியுமா? என்று  பதட்டத்துடன் கேட்டார் ராகவன் . ”என்ன விசயம்?” என்றேன்.   ”நேற்று ஒரு துர்ச்சம்பவம் நடந்து விட்டது”  என்று சொல்லி விட்டு அழ ஆரம்பித்தார்.    ”உங்கள் வீட்டில்  ஏதாவது பிரச்சனையா? என்னிடம் சொல்லுங்கள்” என்றேன்.   ”எனக்கு எந்தப் பிரச்சனையும் இல்லை. நம் கம்பார்மெண்டில் பயணம் செய்யும்  கல்யாணப் பெண் ரம்யா நேற்று நடந்த பேருந்து விபத்தில்   பலியானார்.  புகைப்படத்துடன் தினமலரில் போட்டிருக்கிறதே நீங்கள் படிக்கவில்லையா? ” என்று தினமலர் நாளிதழை என்னிடம் கொடுத்தார். எனக்கு துக்கம் நெஞ்சை அடைத்தது. அவள் போய் விட்டாளா? .......... அதற்கு மேல் என்னால் பேச இயலவில்லை. தினமலரைப் படித்தேன். என் கண்ணிலிருந்து குபு குபுவென்று கண்ணீர் வழிந்தது .   என் பக்கத்தில் அமர்ந்திருந்த  சர்மா ”. வருத்தப்படாதீங்க சார். ரயில் பயணத்துக்கும் வாழ்க்கைப் பயணத்துக்கும் வித்தியாசம் இருக்கிறது. ரயில் பயணத்திலே நாம் எந்த ஸ்டேஷனில் வேண்டுமானுலும் ஏறலாம். எந்த ஸ்டேஷனிலும் இறங்கலாம். ஆனால் வாழ்க்கைப் பயணத்தில் இறப்பு நம் கையில் இல்லை. கடவுளின் விருப்பப்படி  நாம் திடீரென்று ஒரு நாள் வானுலகத்துக்கு அனுப்பப் படுகிறோம். “ என்றார். ”நாம் இறங்க வேண்டிய கடைசி ஸ்டேஷன் ஆலந்தூர் வந்தாச்சு. எல்லாரும் இறங்குங்க ”என்று கத்தினார் ராகவன். நாங்கள் ரயிலிருந்து இறங்கினோம். இரவு இந்த விசயத்தைக் கேட்டதும்  என் மனைவி ”அடக் கடவுளே” என்று அலறினாள். அவளுக்கு அச்சமயத்தில் கடவுளின் பேரில் ஏற்பட்ட கோபம் அவ்வளவு இவ்வளவு என்று சொல்ல முடியாது. நான் அவளைச் சமாதானப் படுத்த வேண்டியதாயிற்று.  மறுநாள் நான் பிளாட்பாரத்தில் நுழையும் போது  பிரசாத் கையில் ரோஜாவுடன் நின்றிருந்தான். அடடா! யாருக்காக அவன் ரோஜாவுடன் நிற்கிறான் ? எனக்குப் புரியாத புதிராக இருந்தது. . பிரசாத்திடம்  ”ரம்யா  பற்றிக் கேள்விப்பட்டேன் ரொம்ப வருத்தமாயிருக்கிறது” என்றேன். அதற்கு அவன்  ”அவள் வருவாள்” என்று அழுத்திச் சொன்னான். நான் அதிர்ச்சி அடைந்தேன்.  அப்போது ரயில் பிளாட்பாரத்தில் நுழைந்தது. “வா உள்ளே போகலாம்” என்று அவன் கையைப் பிடித்து இழுத்தேன். என் கையிலிருந்து திமிறிக் கொண்டு விடுபட்ட அவன்  ”அவள் வருவாள்” ”அவள் வருவாள்” என்று சொன்னதையே  சொல்லிக்கொண்டிருந்தான். ஆனால் வண்டியில்    ஏறவில்லை கண்ணாடிக் கதவுக்கு அப்பால் அவனைப் பார்த்தேன். இறந்த காதலி வருவாள் என்ற நம்பிக்கையோடு ரோஜாப்பூவுடன்  காத்திருந்தான். அவனை ஒரு போலீஸ்காரன் தடியால் அடித்து விரட்டிக் கொண்டிருந்தான் . எனக்குக்  கண்  கலங்கிப் போச்சு.   எதையும் சட்டை செய்யாமல் மெட்ரோ ரயில் தண்டவாளத்தில்  ஓடிக்கொண்டிருந்தது.                                 []         8. யாவரும் கேளிர்   பாலுவும் சித்ராவும்  பீச் மணலில் உட்கார்ந்து மனம் விட்டுப் பேசிக் கொண்டிருந்தார்கள். அப்போது யாரோ இரண்டு பேர் ஒரு குழந்தையை முரட்டுத்தனமாக தூக்கிக் கொண்டு போவது சித்ராவின் கண்களில் பட்டது. சித்ரா அந்தக் குழந்தையை ஒரு வினாடி உற்றுப் பார்த்தாள். எங்கேயோ பார்த்த முகமாகத் தோன்றியது.. குழந்தை  திமிறிக் கொண்டு கீழேயிறங்க முயற்சித்தது . ”  அட, நம்ம மீனு  குட்டி மாதிரியிருக்கிறது.. மீனு, மீனு “ என்று கத்திக் கொண்டே வேகமாக அந்த ஆட்களை நோக்கி ஓடினாள். பாலுவும், அவன்கூட  நான்கைந்து நபர்களும் அவள் பின்னாடி ஓடி வந்தனர். தன்னை நோக்கி சிலர் ஒடி வருவதைப் பார்த்த இரண்டு பேரும் குழந்தையைப் போட்டுவிட்டு ஓட்டம் எடுத்தார்கள் குழந்தை மீனு  அரண்டு போயிருந்தாள் ;  பயத்துடன் சித்ராவின் கையை கெட்டியாகப் பிடித்து கொண்டாள். ” மீனு , அழாதே. இங்கே எப்படி வந்தாய் ? “ ” ஆண்ட்டி, அப்பா என்னை இங்கே விட்டுவிட்டுப் போய்விட்டார்..............  அழுகை நிற்கவில்லை. ” வா, போகலாம்“. மீனுவுடன்  ஒரு ஆட்டோவில் ஏறி  மதுரம் அப்பார்ட்மெண்ட்ஸ் நோக்கிப் புறப்பட்டார்கள். சித்ராவின் மனம் பின்னோக்கிச் சென்றது   “மதுரம் அப்பார்ட்மெண்ட்ஸ்” பெயருக்கேற்ற மாதிரி அழகான  இருபது வீடுகள் கொண்ட கம்பீரமான அடுக்கு மாடி குடியிருப்பு. பாலுவும் சித்ராவும் அங்கு குடியிருக்கிறார்கள், .நேபாளி வாட்ச்மேன் ரத்தன் அவன் மனைவி மாயா மற்றும் குழந்தை  மீனுவுடன் தரை தளத்திலிருக்கும் ஒரு அறையில் தங்கியிருக்கிறான்.   ரத்தன், மாயா இருவரும் பத்து வருடங்களுக்கு மேலாகத் தமிழ் நாட்டில் வசிப்பதால் அவர்களுக்குக் கொஞ்சம் தட்டுத்தடுமாறி தமிழ் பேச வரும் ஆனால் . மீனு தமிழை  தாய் மொழி போல் மிகச் சரளமாய் பேசுகிறாள். அவளை  நேபாளி குழந்தை என்று யாராலும் நம்ப முடியாது. அவ்வளவு  அழகாகத் தமிழ் உச்சரிப்பு இருக்கும். பாலுவுக்கு ஒரு தனியார் கம்பெனியில் வேலை . சித்ரா இல்லத்தரசி. கல்யாணம் ஆகி பத்து வருடங்கள் ஆகிவிட்டது. குழந்தை  பிறக்கவில்லை. போகாத கோவிலில்லை. செய்யாத பரிகாரங்களில்லை பார்க்காத மகப் பேறு மருத்துவர் இல்லை. குறை எதுவுமில்லை என்று ஒன்று அல்ல நான்கு  டாக்டர்கள் சொல்லி விட்டார்கள். கடவுள்தான் கண் திறக்க வேண்டும். ஒருநாள்  கலைந்த  தலையுடன் ஒரு சிறுமி வீட்டுக்குள் வந்தாள். அழுக்கு கவுன் அணிந்திருந்தாள். முகத்திலே ஒரு குறுகுறுப்பும் கண்களிலே ஒரு துருதுருப்பும் இருந்தன. சித்ராவிற்கு அவளைப்  பார்த்தவுடனே மிகவும் பிடித்துப் போய்விட்டது. ” குட்டி உன் பேர் என்ன? “ ”என் பேர் மீனு . நீங்கள் புதுசா குடி வந்திருக்கீங்களா ஆண்ட்டி” ? மழலை குரலில் கேட்டாள். குழந்தையின் மழலை சித்ராவை ஈர்த்தது. ”குட்டி நன்னா தமிழ் பேசறியே? எப்படி கத்துண்டே? “ புன்சிரிப்புடன் கேட்டாள். கணவனைப்  பார்த்து “ பாருங்கோ, ஒரு நேபாளி குழந்தை எவ்வளவு அழகா தமிழ் பேசறது “ என்றாள். ” உன் வயசென்ன? படிக்கிறாயா ? “ ”எனக்கு ஐந்து வயசு. படிக்கிறதுன்னா என்ன ஆண்ட்டி ? ” மீனு பள்ளிக்கூடம் போக ஆரம்பிக்கவில்லையென்பது சித்ராவுக்குப் புரிந்தது. வாட்ச்மேன் மனைவி மாயா  “பணமில்லாததால்தான் மீனுவை பள்ளிக்கூடம் அனுப்பமுடியவில்லை. அவர் என்  இரண்டாவது புருஷன் . முதல் புருஷன் மூலம் பிறந்த குழந்தை மீனு.என்பதால் அவருக்கு அவள் மேல் வெறுப்பு. எப்பவும் எரிந்து விழுவார்.“என்றாள். அவளைப் பள்ளிக்கூடம் சேருங்க, நான் பண உதவி செய்கிறேன்” என்றாள். மீனுவின் அன்பு பிடியுள் சித்ரா சிக்கி விட்டாள். அவள் செய்யும் குறும்புகள், கேட்கும் கேள்விகள் தரும் தொல்லைகள் சித்ராவிற்கு இன்பத்தைக் கொடுத்தன.. அணிந்துகொள்ள அழகான டிரஸ்  வாங்கிக் கொடுத்தாள்.  இப்போதெல்லாம் மீனு குளித்துவிட்டு நன்கு தலைவாரி தூய உடையுடன் வருகிறாள். அதனால்தான் என்னவோ பாலுவுக்கும் மீனுவிடம் பாசப் பிணைப்பு ஏற்பட்டுவிட்டது. ஒரு நாள் மீனு வரவில்லை என்றதும் சித்ராவிற்கு நிரம்பக் கவலையாயிருந்தது. உடம்பு சரியில்லையென்று கேள்விப்பட்டுப் போய் பார்த்துவிட்டு வந்தாள். அடுத்த நாள் மீனு வந்தவுடன்தான்  அவளுக்கு உயிர் திரும்பி வந்த மாதிரியிருந்தது. ”வீடு  வந்தாச்சு” என்றாள் மீனு குதூகலத்துடன். கையில் பீடியுடனும் வாயில் புகையுடனும் அவர்களை எதிர்கொண்ட வாட்ச்மேன், “பிசாசே வந்துட்டயா? உன்னை தொலைக்கணுமுன்னு பார்த்தால் முடியலியே! உன்னை என்ன செய்வதென்று தெரியல. ”ஏம்பா, குழந்தையைத் திட்டறே?” என்றாள் நளினி .  ”செலவு அதிகமாக இருக்கு. வருகிற வருமானத்திலே குடும்பம் நடதத முடியல. அவ  எப்படியோ உங்க கூட வந்து விட்டாள் இந்தக் குட்டி பிசாசை எனக்கு சுத்தமா  பிடிக்காது. அதில்லாமே,  என் வீட்டுக்காரிக்கு இப்போது மூணு மாதம் .  ”.என்றான். மீனுவின்   தலைமயிரைப் பிடித்து இழுத்தான். அதைப் பார்த்த சித்ரா அதிர்ச்சி அடைந்தாள். ” உனக்குக் குழந்தையின் அருமை தெரியவில்லை. குழந்தையைப் போய் யாராவது பீச்சில் வேண்டுமென்றே விட்டுவிட்டு வருவார்களா? அவள் தலை மயிரைப் பிடித்து இழுக்காதே. இனிமேல் இப்படிச் செய்தால் நான் போலீசிடம் புகார் செய்வேன்.. “ என்றாள் கோபத்துடன். “ நாங்க என்ன செய்கிறது? விலைவாசி அதிகமாய் விட்டது. இன்னொரு குழந்தை வேறு மாயாவுக்கு பிறக்கப் போகிறது.? எப்படி எங்களால் சமாளிக்க முடியுமென்று தெரியவில்லை “என்றான் ரத்தன். “ குழந்தையைப் பள்ளிக்கூடம் அனுப்பிப் படிக்க வைங்க. ; அடிக்காதீங்க; இனிமே அவளை வெளியிலே எங்காவது விட்டு விட்டு வந்துடாதீங்க.  அவள் தங்கக் கம்பி.” என்று சொல்லிவிட்டு அங்கிருந்து நகர்ந்தார்கள். சித்ராவின் முகத்தில் வருத்தம் படர்ந்திருந்தது. “ கவலைப் படாதே சித்ரா, நமக்குச் சீக்கிரத்தில் குழந்தை பிறக்கும்.”  “ யாருக்கு ஒரு பொருள் பிரியமாயிருக்கிறதோ அவருக்கு அப்பொருளைக் கடவுள் அளிப்பதில்லை. வேண்டாதவருக்குப் பார்த்துக் கொடுக்கிறார். நாம் குழந்தை வேண்டும் என்று ஆசைப்படுகிறோம். நமக்கு இன்னும் குழந்தை பிறக்கவில்லை. குழந்தை வேண்டாம் என்று நினைக்கும் வாட்ச்மேனுக்கு கேட்காமலேயே கடவுள் குழந்தையைக் கொடுக்கிறார்“  அவளால் அழுகையைக் கட்டுப்படுத்தமுடியவில்லை. விக்கி விக்கி அழுதாள். குழந்தைக்காக அவள் மனதிலிருக்கும் ஏக்கத்தை வார்த்தையால்  சொல்ல முடியாது. அடுத்த நாள் அவர்களுக்கு ஒரு அதிர்ச்சி தரும் செய்தி காத்திருந்தது.  நேபாளில் ஏற்பட்ட பயங்கர நில நடுக்கத்தில் ரத்தனின்  அப்பாவும் அண்ணனும் மரணமடைந்து விட்டார்கள் என்ற விசயம் தெரிந்த ரத்தன் வீட்டைக் காலி பண்ணிக் கொண்டு குடும்பத்தோடு நேபாள் போய் விட்டிருக்கிறான். அவன்  குடியிருப்பு காலியாய் இருந்தது.  வாட்சுமேன் தேவை என்ற அட்டை இரும்பு கேட்டில் தொங்கியது. அவர்கள் ஊரை விட்டுப் போய்விட்டார்கள் என்று கேள்விப்பட்டதும் பாலு திடுக்கிட்டான். சித்ராவுக்கும்  மீனுவும் போய்விட்டாள் என்பதால்  துக்கம் அவள் நெஞ்சை அப்பியது.. அவள்  விம்மி விம்மி அழுதாள்.” மீனுவைப் பள்ளிக்கூடத்தில் சேர்க்கலாம் என்று பார்த்தேனே. அதற்குள் அவள் போய்விட்டாளே!” என்று சித்ரா மிகவும் வருத்தப்பட்டாள். அவளுடைய துருதுருக்கும் கண்கள், சப்பை மூக்கு, மழலை மொழி, என்று சொல்லிச் சொல்லி ஆதங்கப் பட்டாள். இரவு விட்டை விட்டுக் கிளம்பிய ரத்தன் சென்னை ரயில் நிலையத்தில் மீனாவை விட்டு விட்டு ரயிலேறி விட்டான். மாயா கெஞ்சிக் கெஞ்சிப் பார்த்தாள். அவன் மசியவில்லை அவளை அழைத்து வர ரயிலை விட்டு இறங்கினாள் . ரத்தன் அவளைப் பார்த்து, “ நீயும்  போ. உன்னையும் விட்டு விட்டுப் போய்விடுவேன்.. ரயிலுக்குள்ளே ஏறு. “ என்று கர்ஜித்தான். அடித்தாலும், திட்டினாலும் புருஷனை விட்டு விட முடியுமா ? மனசில்லாமல் ரயிலுக்குள் ஏறினாள்.  .உடனே ரயில் கிளம்பிவிட்டது. மீனு அவள் பெற்றோர்களைத் தேடி தேடி அழுது கொண்டிருக்கும்போது அவளை ஒரு முரட்டு கரம் பிடித்தது.. அவன் ஒரு பிச்சைக்காரன் .  ஒற்றைக் கண்ணனான அவனைப் பார்த்து மீனு பயந்துபோய் அழுகையை நிறுத்தினாள். ஒருவாரம் கழித்து ஒரு நாள் பாலு ஆபிஸிலிருந்து வந்ததும், ஏங்க, கோவிலுக்குப் போயிட்டு வரலாம் வாங்க. மீனு போனதும் வீடு வெறிச்சோடிப் போச்சு. குழந்தை இப்போ எங்கே இருக்காளோ? அவள் நினைவாகவே இருக்கு  “ என்றாள். இருவரும் கோவில் போய்விட்டு வரும்போது அங்கு பிச்சை எடுத்துக் கொண்டு வரும் ஒரு குழந்தையைப் பார்த்து, “ அங்கே  பாருங்கோ. நம்ம மீனு பிச்சை எடுக்கிறா. மீனு இங்கே வா, “ என்று குதூகலத்துடன்  கத்தினாள் சித்ரா. பசுவைக் கண்டக் கன்றைப் போல் மீனு சித்ராவை நோக்கி ஓடி வந்தாள். ”மீனு  எப்படிடீ இங்கே வந்தே?  அப்பா, அம்மா எங்கே? ”ரயில்வே ஸ்டேஷனில் என்னை விட்டு விட்டு போய்ட்டாங்க” என்று மீனு சொல்லிக் கொண்டிருக்கும்போது அங்கு உட்கார்ந்து பிச்சை எடுத்துக் கொண்டிருந்த ஒற்றைக் கண்ணன் அவர்களை நோக்கி வந்தான். ”அவ எங்க கும்பலைச் சேர்ந்தவ.  அவகிட்டே உங்களுக்கு என்ன பேச்சு. ? பிச்சை போட இஷ்டம் இருந்தால் போடுங்க. இல்லாவிட்டால் போங்க.” என்று கத்தினான். சிதரா அவனை நோக்கி, என்ன அக்கிரமம் இது ? இந்தப் குழந்தையைப் பிச்சை எடுக்க வைக்கிறாய். இவ எங்களுக்குத் தெரிஞ்சவ என் மாமா போலீசில் வேலை செய்கிறார். போலீசில் புகார் கொடுப்பேன் ஜாக்கிரதை “ என்றாள். குழந்தையை நீங்களே கூப்பிட்டுக்கிட்டுப் போங்க “ வேறு வழியில்லாமல் இறங்கி வந்தான். அவர்கள் மீனுவை அழைத்துக் கொண்டு அந்த இடத்தை விட்டு நக்ர்ந்தனர். மீனு திரும்பி வந்ததில் சித்ராவிற்கு அதிக சந்தோஷம். ” நீ நல்லபடியா இங்கு வந்து சேந்துட்டே. அது போதும். ரத்தன் கொஞ்சம் கூட இரக்கமில்லாத  கல்நெஞ்சுக்காரன். உன்னை அம்போன்னு விட்டு விட்டுப் போயிருக்கான். அதுகூட  ஒரு விதத்தில் நல்லதுதான்.நீதான் இனி  என் பெண். ..ம். அதுக்கு நான் ரொம்ப பாக்கியம் செய்திருக்கணும் ”மகிழ்ச்சிப் பரவசத்திலே சித்ரா  திக்குமுக்காடிவிட்டாள். குழந்தையில்லையே என்று வருத்தப்பட்டாயே சித்ரா. இனிமே மீனுதான் நம்ம குழந்தை என்றான் பாலு. மீனுவைக் கட்டி அவ கன்னத்தில்  முத்தமிட்டான். ” சரியா சொன்னீஙக. ஏங்க , மீனு நம்ம வீட்டுக்கு வருவாள் என்று நான் கொஞ்சம் கூட எதிர்பார்க்கவில்லை. பழம் நழுவி பாலில் விழுந்து விட்டது.மீனுவை கடவுள்  நமக்குக் கொடுத்த  வரப்பிரசாதமாய்  எடுத்துக் கொண்டு அவளுக்கு நல்ல  கல்வி, உணவு, உடையெல்லாம் கொடுத்து நன்றாக  வளர்த்து ஆளாக்குவோம்“   அம்மா,  அம்மா  ”  என்ற மீனு தன் குட்டிக் கையால் சித்ராவின் இடுப்பை கட்டிப் பிடித்தாள். ”அம்மா” என்று மீனு  அழைத்தது அவளுக்குக் காதில் இன்பத் தேன் வந்து பாய்ந்தது போலிருந்து.. குழந்தையை அணைத்துக் கொண்டு  நர்த்தனமாடினாள். . அவளுக்குத் திடீரென்று கண்ணை இழுத்துக் கொண்டு வந்தது. வயிற்றைப் புரட்டியது. வாஸ்பேசின் அருகில் ஓடிச் சென்று கடகடவென்று வாந்தி எடுத்தாள். ”எ...ன்...ன...ம்மா செய்கிறது?” பாலு  பதறினான். அவள் வாயைக் கொப்பளித்து முகத்தை அலம்பும்போது சடாரென்று மூளையில் ஒரு பொறி தட்டியது. மனசில் ஒரு கணக்குப் போட்டு பார்த்தாள் . உள்ளத்தில் மகிழ்ச்சி. பொங்க  முகத்தில் புன்முறுவலுடன் கூறினாள்.  “ நல்ல விஷயம்தான். மீனு வந்த வேளை எனக்கு நாள் தள்ளிப் போச்சு “.                                                   []                                9. அவரவர் பார்வையில்....   சிலருடைய வாழ்க்கை  முரண் நிறைந்தது . நகை முறண் என்று சொன்னால் இன்னும் பொருத்தமாய் இருக்கும்.  என்னுடைய அக்கா  பெண் கிருத்திகாவின்  வாழ்க்கையில் நடந்த நிகழ்ச்சியைச் சொன்னால் உங்களுக்கு நன்கு  விளங்கும். கிருத்திகா ரொம்ப நல்ல பெண். படிப்பில் கெட்டிக்காரி.  நல்ல அழகும், அழகுக்கேற்ற படிப்பும் படிப்புக்கேற்ற குணமும் உடையவள்.   நாவல்களில் வர்ணனை வருமே - . பொற்சிலை போல் இருப்பாள்....... அது மாதிரி ரொம்ப அழகாயிருப்பாள். தாமரையை விட மென்மையானவள் சாப்ட்வேர் கம்பெனியில் வேலை செய்யறா. ஜாதகம் பார்த்து நாள் நட்சத்திரம் பார்த்து திலீப்பைக் கல்யாணம் செஞ்சுண்டு ஒரு வருஷம்தான் ஆச்சு . கணவன் கொடுமை தாங்க முடியாமல் கிருத்திகா குடும்பம் என்னும் வட்டத்தில் அடங்காமல்   பிறந்த வீட்டுக்கு வந்துட்டா. திரும்பிப் போக மாட்டேன் என்று திட்ட வட்டமா சொல்லிண்டு இருக்கா. ஒரு நாள் என்னுடைய அக்கா கிட்டேயிருந்து போன் வந்தது.  ” கிருத்திகா ஆத்துக்காரரின்  சித்தப்பாவும் சித்தியும் பேச வந்திருக்காங்க . நாராயணா,  நீயும் கூட இருந்தா நல்லா இருக்கும். உடனே கிளம்பி வா . .” நான் உடனே அக்கா வீட்டுக்குப் போனேன்.. அவளைப் புகுந்த வீட்டுக்கு அனுப்புவது  சம்பந்தமாகத்தான்  இருக்கும்ன்னு . நான் நினைச்சது ரொம்பச் சரி. அங்கு வந்திருந்த திலீபின்   சித்தி ” கணவன் மனைவிக்குள்ளே சண்டை வர்றது சகஜம். ஒருத்தரை ஒருத்தர் புரிஞ்சுக்கிறத்துக்கு நாள் ஆகும். உங்களுக்குள்ளே ஈகோதான் பிரச்சனை. பேசித் தீர்த்துக்கலாமே. கிருத்திகா நீ எங்க கூட வா.  .” என்று கெஞ்சினாள். ”அவன் பயங்கர  முரடன் . குடிப்பான்.  என் நகையெல்லாம் எடுத்து வித்துட்டான். பொய், களவு , சூதாட்டம் , குடி   ஆகிய எல்லா கெட்ட பழக்கமும் அவங்கிட்டே இருக்கு. போதாததுக்குக் கெட்ட வார்த்தையிலே திட்டுவான். என்னைப் போட்டு அடிப்பான். கிள்ளக் கூடாத இடத்திலே  கிள்ளுவான். நடு ராத்திரி பன்னிரண்டு மணிக்கு வீட்டை விட்டு துரத்திட்டான். அவன் நாசமாப்  போக .  நா அவனுடன் வாழ மாட்டேன், அவனை விவாகரத்து செய்யப் போறேன்” என்று தெளிவாச் சொன்னாள். அக்காவுக்குத்தான் மனக்குறை. “ஏண்டி நல்லா யோசிச்சுதான் முடிவு எடுத்தியா? அப்புறம் வருத்தப் படப்போறே..................   . ”  என்றாள். “அவளுக்கு எது சரின்னு படறதோ அவளே தீர்மானிக்கட்டும்” என்று  விட்டேத்ந்தியா சொன்னார் கிருத்திகாவின் அப்பா. ” மென்மையான கிருத்திகாவுக்கு இப்படி ஒரு புருஷன் அமையணுமா” . என்று எனக்குத் தோன்றியது. விவாகரத்துன்னு  முடிவு எடுத்துட்டாயானா ஜீவனாம்சம் கேள். அதுக்கு உனக்கு உரிமை இருக்கு.” என்றேன். “எனக்கு ஜீவனாம்சம் வேண்டாம் ஒரு மண்ணும் வேண்டாம். நா அவர் கிட்டேயிருந்து விடுபட்டா போதும்.  கணவன் அமைவது எல்லாம் அவரவர் தலைவிதின்னு  இருந்த காலம் எல்லாம்  போயாச்சு. இப்போ எல்லாம் . பிடிக்கலன்னா டைவர்ஸ்தான். “ அன்னைக்கு அவ சொன்னது போல் அட்வகேட் வசுமதியைப் பார்த்து  விவாக ரத்துக்கு நோட்டீஸ் கொடுத்துட்டா. எனக்கு என்னமோ,  ”அவள் இன்னும் ஒரு  வருஷம் பொறுத்திருந்திருக்கலாம். அதற்குள் அவசர முடிவு எடுத்துவிட்டதாய்”   தோன்றியது. நான் வேலை விஷயமாய் டெல்லி போய்விட்டேன்.. ஒரு நாள் ”கிருத்திகாவுக்கு விவாக ரத்து கிடைச்சுட்டது” என்று என் அக்கா அலைபேசியில் சொன்னாள் .. டெல்லியிருந்து திரும்பி வந்ததும் கிருத்திகாவைப் பார்க்க  அவ  வீட்டுக்குப் போய் அழைப்பு மணியை அழுத்தினேன். கதவைத் திறந்தவன் .சிகப்பாய்    களையாய் இருந்தான். . நெற்றியில் திருமண்.     “கிருத்திகா இல்லையா ? “ என்று கேட்டதிற்கு, ”உள்ளே இருக்கிறாள். உட்காருங்க . இப்ப  வந்துடுவா” என்று சொல்லிக்கொண்டிருக்கும்போதே  ” மாமா “  என்று உரக்கக் கத்திக்கொண்டே கிருத்திகா வந்துவிட்டாள் ..  அவள் கழுத்தில் தாலி. மடிசார்  கட்டிலிருந்த அவளைப் பார்த்து வியந்தேன்.  ”கிருத்திகா,உனக்கு கல்யாணம் எப்போ நடந்தது,  நல்லா இருக்கியா? .” என்றேன். “கல்யாணம் நடந்து நாலு மாசம் ஆச்சு மாமா. சந்தோஷமாய் இருக்கோம்.  இவர் என் கணவர். நீல  மாதவன் – அவள் தன் கணவனை அறிமுகம் செய்து வைத்தாள் ”நீ.....ல மாதவன் , நீல...... மாதவன்” மனசுக்குள் சொன்னேன்.   சாரி, நீங்க டெல்லியிலே இருந்ததாலே உங்களிடம் என் கல்யாணத்தைப் பத்திச்  சொல்ல முடியவில்லை.     ” இதோ காபி போட்டு எடுத்துண்டு வரேன் ”  சமையலறைக்குள்  சென்றாள். நீல மாதவன்  என்னைப் பார்த்துச் சிரித்துவிட்டு , எனக்கும் இது இரண்டாம் கல்யாணம்தான்.  என் முதல் மனைவியை விவாகரத்து செயதுவிட்டேன். அவ என்னை ரொமபக் கொடுமைப் படுத்தினா. அடங்காப் பிடாரி.  என்னை ஒருமையிலேதான் பேசுவா. டெல்லியில் பிறந்து வளர்ந்தவ. ரொம்ப அல்ட்ரா மாடர்ன் டைப். சொந்தமா மீடியா கம்பெனி நட்த்தறா.  கம்பெனிக்கு எம்.டி. அவதான். எப்பவும் பார்டி, மீட்டிங்னு ராத்திரி பத்து மணிக்குத்தான் வருவா அதுவும்   குடிச்சுட்டு வருவா. பார்ட்டிக்குப் போகும்போது தாலியைக் கழட்டி வீட்டிலே வைச்சுட்டுப் போவாள்.. எப்போதும்  காத்தாலே எட்டு மணிக்கு முன்னாலே எழுந்திருக்க மாட்டா. சமையல்காரி வைச்சிருந்தா. அவ லீவுன்னா நாந்தான் சமையல் செய்யணும். ஒரு நாள் கூடக் கோவிலுக்கு வரமாட்டா.  என் பூஜை புனஸ்காரம் குணத்துக்கு அவ ஒத்துப் போகலை. இப்படி இருந்தா நா எப்படி அவ கூட வாழ முடியும்?  .குடும்ப நல நீதிமன்றத்தில் பரஸ்பர விவாக  ரத்து சம்பந்தமா  அட்வேகேட் வசுமதியின் ஆபீஸ் போகும்போதுதான் கிருத்திகாவைப் பார்த்தேன். முதல் பார்வையில் அவளும் ராங்கிகாரியாய் இருப்பாள் என்று நினைத்தேன்.  என்று சொல்லிவிட்டு நிறுத்தினான். கிருத்திகா காபியைக் கொண்டு வந்து  கொடுத்தாள்.”மாமா காபியைச் சாப்பிடுங்க.” லேசாகச் சிரித்த நீல மாதவன், ”கிருத்திகா நீ மீதியைச்  சொல்லு. ”என்றான். கிருத்திகா தொடர்ந்தாள்.. . ” நான் என் விவகரத்து விசயமாய் அட்வகேட் வசுமதியை அடிக்கடி பார்க்கப் போவேன். அப்படி ஒரு முறை  போகும்போது அவரை அட்வகேட் வசுமதியின் ஆபிஸில் பார்த்தேன். அன்று நான் அவசரமா ஆபீஸ்க்குப் போக வேண்டும்.  என் முகத்திலிருந்த டென்சனைப் பார்த்து, ”நீங்க வேண்டுமானாலும் முதலில் அட்வகேட்டைப் பாருங்கள்”என்று பெருந்தன்மையாய்   முதலில் என்னை அட்வகேட்டைப் பார்க்கச்   செய்தார்.  அவரின் விட்டுக் கொடுக்கும்  பண்பு எனக்கு மிகவும் பிடித்துப் போய் விட்டது. .   மறுபடியும்  அவரிடம் பேசும் போது. அவர் பெயர் நீல மாதவன் ; பல் மருத்துவர் ; மாம்பலத்தில் கிளினிக் வைத்திருக்கிறார் என்று அறிந்து கொண்டேன். அவரின்  மென்மையான சுபாவத்தால் ஈர்க்கப்பட்டேன்.  அவர் மனைவியைப் பற்றிச் சொன்னார்.  என் நிலைமை  மாதிரியே அவர் நிலைமையும்  இருந்ததால் எங்களுக்குள் ஒரு நட்பு  ஏற்பட்டு விட்டது. இரண்டு பேருக்கும் ஒரே நாளில் கோர்ட் தீர்ப்பு கிடைத்தது.   அன்று இரவு கட்டிலில் படுத்ததும் விழிகளை மூடி என் வருங்காலத்தைப் பற்றி  சிந்தித்தேன். தோழிகள் சொலவது போல் திருமணமே செய்து கொள்ளாமலே   இருக்கலாமா அல்லது  யாரையாவது திருமணம் செய்து கொள்ளலாமா? என்று  யோசித்ததில் ” யாரையாவது என்ன?  நீல மாதவனையே  கல்யாணம் செய்து கொள்ளலாம்  என்று என் உள் மனசு சொல்லியது. அன்றிரவு நீல மாதவன் என் கைத்தலத்தைப் பற்றுகிற மாதிரி  கனவு கண்டேன்.  அட்வகேட் கிட்டேயிருந்து கோர்ட் ஆர்டர் வாங்கப் போன அன்று  அவரும் ஆர்டர் வாங்க வந்திருந்தார். மகிழ்ச்சியோடு இனிப்பை அவரிடம் கொடுத்து,”அடுத்தது என்ன?”என்று கேட்டேன். ”அடுத்தது நிம்மதியான வாழ்க்கைதான்” என்றார். இருவரும் சிரித்தோம். ”நாம் இனி சேர்ந்து  வாழலாம்” என்று நான் தான் அவரிடம் என் காதலைத் தெரிவித்தேன்.. அவர்   உடனே சம்மதிக்கவில்லை. ”என் வழி வேறு” என்று நாசுக்காக ஒதுங்கிக் கொண்டார். என்னால்தான் அவரை மறக்க  முடியவில்லை. பல முறை அலைபேசியில் தொடர்பு கொள்ள முயன்றேன். . அவர்  அலைபேசியை எடுக்கவில்லை... வேறு வழியில்லாமல் அவர் கிளினிக்க்குப் போய் அவரிடம் கெஞ்சினேன். அவர் ஒரு நிபந்தனையோடு என்னை மணம் செய்து கொள்ள ஒப்புக்கொண்டார். அவர் ஆசாரமா இருப்பவர். நானும் பூஜை , புனஸ்காரமென்று அவர் வழியைப்  பின்பற்ற வேண்டும் என்பதுதான் அவர் போட்ட நிபந்தனை. அதற்கு நான் ஒப்புக் கொண்டேன்.  எங்கள் திருமணம் இனிதாக நடந்தது. நாங்க இரண்டு பேரும் சந்தோஷப் பறவைகளாக வாழ்ந்து கொண்டிருக்கிறோம். இந்த வேடிக்கையைக் கேளுங்கோ.   ”போனவாரம் நானும் என் கணவரும்  சரவணபவன் ஒட்டலுக்குச்  சாப்பிடப்போனோம். அங்குச்   சாப்பிட்டுக் கொண்டிருந்த இரண்டு பேர் என்னைக் கவர்ந்தனர். . தலையை விரித்துப் போட்டுக் கொண்டு   மாடர்னா உடை உடுத்தியிருந்த  பெண்மணியின் .கழுத்தில் வட இந்திய பெண்கள் அணிவது போல் கருக மணி  தாலி   தொங்கிக்கொண்டிருந்தது. அவள் கூட இருந்தவனைப்  பார்த்து அதிர்ந்தேன். என ஆத்துக்காரரிடம் கண் ஜாடை காட்டி, ”அங்கே பாருங்க,  அவன்.. அவன்;;; என்று முணுமுணுத்தேன். என் கணவரும் அவங்களைப் பார்த்துவிட்டு திகைத்து, அவள், அவள்  --- என்று கிசுகிசுத்தார். ”அவ கூட இருக்கிற  ராட்சதன்தான்  என் மாஜி புருஷன் தீலீப்..” அந்த   ராட்சசிதான்   என் மாஜி மனைவி பூமிகா “. . அப்படின்னா ! ! அப்படிதான் !!! ”நாங்க காரில் திரும்பி வரும்போது விதியின் விளையாட்டை நினைச்சு விழுந்து விழுந்து சிரிச்சுண்டே  வந்தோம்.” என்று சிரித்த்தாள் கிருத்திகா.   நானும் விழுந்து விழுந்து சிரித்தேன். []                                                                 10.தேடல்   ”இந்தாங்க, உங்களுக்குச் சாப்பாடு ரெடி, பாயசமும்  வைத்திருக்கேன்.” ஒரு பையை என்னிடம் கொடுத்தாள் என்னருமை மனைவி சுதா. அவள் ஒரு உணர்ச்சிப் பிம்பம் . என் மீது உயிரை வைத்திருப்பவள் . இன்று என் பிறந்த நாள் வேறேயா . பாயசம், வடைன்னு  ஜமாய்ச்சிட்டா. ”சாயந்தரம் ஆறு மணிக்கு வந்து விடுகிறேன். வந்த பிறகு கோவிலுக்குப் போகலாம் ”  என்றேன். ”இன்னைக்காவது சீக்கிரம் வாங்க.எப்பவும்தான் ஆபீஸ் இருக்கவே இருக்கு. டிபன் கேரியர் பத்திரம் . டப்பர் வேர் . நேற்றுதான் வாங்கினது . ஐநூற்று முப்பது ரூபாய். ரயிலிலே எங்கேயாவது விட்டுடப் போறீங்க.. ஜாக்கிரதை” என்று மனைவிக்கே உரிய அக்கறையுடன் கூறினாள். அப்படியே செய்கிறேன் என்று சொல்லிவிட்டு கிளம்பினேன். மீண்டும் ஒருமுறை பத்திரம் டிபன்கேரியர் என்று மொழிந்தாள் என் இல்லத்தரசி. பத்திரம், பத்திரம், பத்திரம் என்று கோர்ட்டிலே சொல்வது போல் சொல்கிறாயே என்றேன். சுதா சிரித்தாள். பிளாட்பாரம் முழுவதும்  பரபரப்பாய் மக்கள் சிக்னலில் சிவப்பு மாறி  பச்சை நிறம் வந்துவிட்டது. தூரத்தில் மின்சார ரயில் வந்து கொண்டிருந்தது. ஓட்டப் பந்தயத்தில் ஓடுவதற்குத் தயாராய் காத்திருப்பவனைப் போலக் காத்திருந்தேன். தோளில் ஒரு பை . கையில் ஒரு பை . டிபன் கேரியர் இருக்கும் பை. ரயில் நின்றதும் முட்டி மோதி ஏறி  பயணிகளின் ஊடே நுழைந்து கம்பார்ட்மெண்டின் கடைசியில் உள்ள இருக்கையில் அமர்ந்தேன். டிபன் கேரியர் இருந்த பையை என் காலுக்கு இடையில் வைத்துக் கொண்டேன். தோளில் மாட்டியிருந்த பையை மடியில் வைத்துக் கொண்டேன். வண்டி கிளம்பியது. பையில் படிப்பதற்கு எப்போதும் ஒரு நாவலை வைத்திருப்பேன். நாவலை எடுத்துக் கொண்டு எதிரே உட்கார்ந்திருந்தவர்களை நோட்டம் விட்டேன். என் எதிரில் கண்ணைப் பறிக்கும் ஒரு  பேரழகி அமர்ந்திருந்தாள்.அவளுக்கு வயதொன்றும் அதிகமில்லை. பார்ப்பவர் மனத்தைக் கொள்ளை கொள்ளும் மதமதப்பான உடம்பு. பொன் நிறத்துடன்  தங்கப்பதுமை போல் தளதளவென்றிந்தவளின் அழகைக் கண்டு மலைத்தேன். என் கண்கள் வெட்கப்படாமல் தன் வேலையைச் செய்தது.  ஒய்யாரமாய் அமர்ந்திருந்தவள்  என்னைப் பார்த்துப் புன்னகைத்தாள். நானும் பதிலுக்கு முறுவலித்தேன். ” ஞான் ஏர்ஃபோர்ட் இறங்கணும் . அது  எத்தனாவாவது ஸ்டாப் ” தேனொழுக கேட்டாள்  மலையாளத்து  மங்கை.. ஆஹா ! என்ன இனிமையான குரல். என் மெய் சிலிர்த்தது. “அடுத்த ஸ்டாப்.” ”ஓ”  என்று விளித்துக்கொண்டே தோளைக் குலுக்கினாள். என் நெஞ்சம் குலுங்கியது. ”திரிசூலம் ரயில் ஸ்டேஷனில் ஏர்போர்ட் போகிறவர்கள் இறங்க வேண்டும். ஸ்டேஷன் வந்து விட்டது. இப்பவே எழுந்து முன்னால் போங்க.”  என்றேன். ”தேங்ஸ் ” என்றவள் இருக்கையை விட்டு எழுந்தாள். அவள் பக்கத்தில் அமர்ந்திருந்த குள்ளமா குண்டாயிருந்த ஒரு நபரும் எழுந்தான்.. அவளுடைய கணவனாக இருக்க வேண்டும். அவள் நளினமாய் நடந்து சென்றாள். . அவர்கள் இறங்குவதைப் பார்த்துக் கொண்டிருந்தேன். அந்த ஸ்டேஷனில் சிலர் .ஏறினர். என் எதிரில் இரண்டு பேர் அமர்ந்தனர். வண்டி நகர ஆரம்பித்தது. ஒரு கண்ணில்லாத பிச்சைக்காரன் பாட்டு பாடிக் கொண்டு வந்தான். என் முன்னால் அமர்ந்திருந்தவர்கள், ரூபாய் மதிப்பிழப்பு நடவடிக்கையின் மோசமான பாதிப்பைப் பற்றி சுவாரஸ்யமாய்  பேசிக் கொண்டிருந்தார்கள் . ”என்ன லே விழுப்புரத்திலே நடந்த விஷயத்தைப் படிச்சியா ?” ”என்ன ஆச்சு ?” ஒரு ஆள் வங்கியிலிருந்து கடன் வாங்கியிருக்கான். பணத்தைத் திருப்பி தரவில்லை. வட்டியும் அசலும் அதிகமாயிடுச்சி.  தன்னிடம் உள்ள பழைய ஐநூறு ஆயிரத்தை வங்கியில் டிபாசிட் செஞ்சுட்டான். மொத்தம் ஒரு இலட்சம் . அப்புறம் இரண்டு நாள் கழித்துப் பணம் எடுக்கப் போயிருக்கான். அவன் அக்கவுண்டிலே பணம் எதுவுமில்லை. எல்லாப் பணத்தையும் வங்கி அவன் வாங்கிய கடனுக்கு எடுத்துக் கொண்டுவிட்டது. மன்றாடிப் பார்த்தும் அவனால் பணம் எடுக்க முடியவில்லை. தற்கொலை செய்து கொண்டு விட்டான். “ “இந்த மாதிரி வங்கிகள் செய்யும் அட்டூழியம் கொஞ்ச நஞ்சமல்ல. பணம் எடுப்பவர்கள் படும் அவதி சொல்லி மாளாது” என்றான் மற்றொருவன்.   அப்போது கைதட்டும் ஒலி கேட்டது. வேறுயாருமில்லை . ஒரு  திருநங்கைதான். அவள் பச்சை நைலக்ஸ் புடவை கட்டியிருந்தாள்.  வண்டியிலுள்ளவர்களிடம் யாசகம் கேட்டுக் கொண்டே வந்தாள். இறைவன் படைப்பில் திருமங்கையும் நம்மைப் போல் ஒர் ஜீவன். இயற்கை அவளை அப்படி மாற்றி விட்டது.  பாவம் ! அவள் என்ன செய்வாள் ? எப்பவாது பணம் போடுவேன். இல்லாவிட்டால் பேசாமல் இருந்து விடுவேன். அவள் என்னருகில் வந்தாள். செல்லம் பணம் கொடு. காசு கொடு ராஜா . நீ நல்லா இருப்பே. என் தலையில் கையை வைத்தாள். நான் உட்கார்ந்திருந்த இருக்கையில் சிறிது முன்னுக்கு வந்தேன். அவளை ஏறெடுத்துப் பார்க்கவில்லை. அவள் அங்கிருந்து நகர்ந்துவிட்டாள். அப்போது மாம்பலம் ஸ்டேஷனும் வந்து விடவே நானும் எழுந்து விட்டேன். என் அலுவலகம் மாம்பலத்தில் இருக்கிறது எனபதால் நான் இறங்க வேண்டும். .   படிக்கட்டுகளில் ஏறி வெளியே வந்தவுடன் எனக்கு மூளையில் பொறி தட்டியது. டிபன் கேரியரை ரயிலிலே விட்டு விட்டு வந்துவிட்டேன். தூக்கி வாரிப் போட்டது. என் இல்லாள் அருமையாய் சமைத்துக் கொடுத்த உணவு . அதை விட முக்கியமானது டப்பர்வேர் டிபன் கேரியர். இரண்டு நாள் முன்னால்தான் வாங்கியது. தொலந்துவிட்டது என்று சொன்னால் அவள் உயிரையே விட்டு விடுவாள். உடனே ஸ்டேஷனுக்கு ஓடினேன் . அதற்குள் நான் வந்த ரயில் போய்விட்டிருந்தது. டிடிஆரிடம் விஷயத்தைச் சொன்னேன். அவர்  இப்போது ஒரு பாஸ்ட் லோக்கல் வரும் அதில் போனால் அந்த மின்சார ரயிலைப் பிடித்து விடலாம் என்று கூறினார். அவருக்கு நன்றி கூறி விட்டு இரண்டு நிமிடம் கழித்து வந்த பாஸ்ட் லோக்கலில் ஏறினேன். எதிர் பக்கம் இரண்டு மின்சார வண்டிகள் நான் போய்க்கொண்டிருந்த ரயிலைக் கடந்து சென்றன. நான் பதைபதைத்தேன். நான் டிபன் கேரியரை விட்ட ரயிலைப் பிடித்துவிட வேண்டும். என்னுடைய கேரியர் எனக்குக் கிடைக்க வேண்டும் என்று இறைவனிடம் இறைஞ்சினேன்.  ஒரு அழகான பெண்ணைப் பார்த்துக் கொண்டு  டிபன் கேரியரைக் கோட்டை விட்டு விட்டேனே என்று வருத்தப்பட்டேன்.  ரயில் மிகவும் மெதுவாகப் போய்க் கொண்டிருப்பது போல் எனக்குத் தோன்றியது. எப்படியோ ஒரு வழியாக ரயில் பீச் ஸ்டேஷ்னை அடைந்தது. கிளம்புவதற்குத் தயாராய் ஒரு வண்டி பிளாட்பாரத்தில் நின்று கொண்டிருந்தது. கார்ட் பச்சைக் கொடி காட்டிக் கொண்டிருந்தார். நான் ஓடிப் போய் கடைசிக் கம்பார்ட்மெண்டில் ஏறினேன். அடுத்த ஸ்டேஷனில் வண்டி நின்றதும் ஒடிச் சென்று நடுவில் இருந்த ஒரு கம்பார்ட்மெண்டில் ஏறி என்னுடைய டிபன் கேரியர் இருக்கிறதா என்று பார்த்தேன். கிடைக்க வில்லை. எனக்கு எந்த கம்பார்ட்மெண்டில் ஏறினோம் என்று சரியாய் தெரியவில்லை. எனவே பக்கத்துக் கம்பார்ட்மெண்டில் ஏறித் தேடினேன். இப்படியே பைத்தியக்காரன் போல் மாமபலம் ஸ்டேஷன் வரும் வரை தேடிக்கொண்டிருந்தேன். கடைசி வரிசைக்குப் போய் காலை அகட்டுங்க. என்று குனிந்து பார்ப்பதைக் கண்டு ரயிலிருந்த  ஒருவர்,  ”என்ன சார்  தேடறீங்க ?” என்று கேட்டார். ”டிபன் கேரியரை மறந்து விட்டு இறங்கிவிட்டேன். அதைத் தேடுகிறேன்” என்றேன். அவர் என்னைப் பரிதாபமாகப் பார்த்தார். மாம்பலம் ஸ்டேஷ்ன் வரப் போகிறது. டிபன் கேரியர் எவ்வளவு தேடியும் கிடைக்கவில்லை. என் முயற்சி தோல்வியடைந்து விட்டது என்றே எண்ணினேன். .மாம்பலம் ஸ்டேஷ்னில் இறங்கி ஏக்கத்துடன் ரயிலைப் பார்த்தேன். வருத்தத்துடன் காலடி எடுத்து வைத்தபோது என்ன ஆச்சர்யம் ! நான் காலையில் பார்த்த அதே திருநங்கை கையில்  பையுடன் அடுத்தக் கம்பார்ட்மெண்டில்  ஏறுவதைப் பார்த்தேன். என் பையைக் கண்டு கொண்டேன். ஓடிப் போய்  அவளுடன்   ஏற முயன்றேன். அவசரத்தில் அது லேடீஸ் கம்பார்மெண்ட் என்பதைக் கவனிக்கவில்லை. ”லேடீஸ் கம்பார்ட்மெண்ட்” என்று பெண்கள் கூச்சலிட்டதும்தான் எனக்குப் புரிந்தது. பதைபதைப்பில் என்ன செய்கிறோம் என்று தெரியாமல் திருநங்கையின் கையைப் பிடித்து.  “ கொஞ்சம் கீழே இறங்குங்க. உங்களிடம் கொஞ்சம் பேச வேண்டும்” என்று  சொல்லிக்கொண்டே  கீழே இறங்கினேன்.. அவளும்  புறப்பட்டுக் கொண்டிருக்கிற ரயிலிருந்து கீழே குதித்தாள். ”என்னா கண்ணு ? ஏன் என் கையைப் பிடிச்சே? நீயும் திருநங்கையாகனுமென்னு ஆசையா ?” நல்ல காலம் . வேறொரு பெண்ணின்  கையைப் பிடிச்சிருந்தா இவ்வளவு நேரம் அவ கத்தி ஆர்ப்பாட்டம் பண்ணி ஊரையே கூட்டியிருப்பா. போலீஸ்  ஸ்டேஷன் போக வேண்டியிருந்திருக்கும் என்று நினைத்துக்கொண்டே, ” சேச்சே, எனக்கு அந்த மாதிரி ஆசையெல்லாம் இல்லே. உங்க  கையில் இருக்கும் பை என்னுடையது. நான் மாம்பலம் ஸ்டேஷனில் இறங்கும் போது மறந்து வைச்சுட்டேன். பீச் ஸ்டேஷன் போய் தேடிக் கொண்டு வருகிறேன். என பையை என்கிட்டே கொடுத்து விடுங்க . அதில் சாப்பாடு இருக்கிறது.” ” போடா போக்கத்தவனே . இந்தப் பைக்காகவா என் கையைப் பிடிச்சு கீழே இறக்கினே. இந்தப் பை எனக்குக் கிடைச்து. அதனாலே இது என்னது.  . “டிபன் கேரியர் நீல நிறத்திலிருக்கும். இன்னைக்கு என் பிறந்த நாள். என் மனைவி பாயசத்தோடு வைத்திருக்கும் சாப்பாடு இருக்கும். இதைவிட என்ன ஆதாரம் வேணும்?” ”அதெல்லாம் எனக்குத் தெரியாது . எனக்குக் கிடைச்சது எனக்குத்தான் சொந்தம் . நான் உனக்குத் தரமாட்டேன்.” ”எனக்குப் பகிர் என்றது. பணம் ஏதாவது  கொடுத்து எப்படியாவது பையை வாங்கி விடலாம்” என்று தோன்றியது. என் பாக்கெட்டிலிருந்து பத்து ரூபாயை எடுத்து, ” என் பையை என்னிடம் கொடுத்துவிடு. இந்தப் பணத்தை வைத்துக் கொள் ”என்றேன், அப்போது அலைபேசி ஒலித்தது. என் மனைவியிடமிருந்துதான் அழைப்பு.  ”ஆபீஸ் பத்திரமாய்ப் போய்ச் சேர்ந்திட்டீங்களா. டிபன் பாக்ஸ் பத்திரமாய் இருக்கா? ”  என்று வினவினாள். அவளிடம் நிலமையைச் சொன்னால் டென்சன் ஆகி விடுவாள் என்பதால் ”எல்லாம் பத்திரமாய் இருக்கு ” என்று சொல்லிவிட்டு திருநங்கையைப் பார்த்தேன். திருநங்கை  யோசித்து விட்டு சொன்னாள். ”உனக்கு இன்னைக்குப்  பிறந்த நாள்ன்னு சொல்றே.  அதனாலே நீயே இதை எடுத்துக்க . எனக்குப் பணம் எதுவும் தரவேண்டாம் ”என்று பையை என்னிடம் நீட்டினாள். திடீரென்று என் மனசில் ஒரு எண்ணம் உதித்தது. .  அந்தப் பையை வாங்காமல் “  காலையிலிருந்து ரயிலிலே அலைஞ்சு பிச்சை எடுத்துக்கிட்டு  இருக்கீங்க. இதில் இருக்கிற சாப்பாட்டைச் முதல்லே சாப்பிடுங்க. நான் காத்திருக்கிறேன்.” என்ற போது திருநங்கை திகைத்து ,     “ என்ன சொல்றே ? என்று கரகரத்த குரலில்  கேட்டாள். ”டிபன் கேரியர் பையிலே  இருக்கு.  நீங்க முதல்லே சாப்பிடுங்க ” அதைக்கேட்டு அவள் முகத்தில் மகிழ்ச்சி தாண்டவமாடியது.   அங்கிருந்த  நாற்காலியில் அமர்ந்து,  உணவைத் திருப்தியுடன் சாப்பிட்டாள். டிபன் கேரியரை அலம்பி என்னிடம் கொடுத்து “நாங்களும் மனுசங்கடா ! எங்களிடத்தில் யாரும் கருணை காட்டுவதில்லை. கேவலமாய் பார்க்கிறார்கள். நீ சாப்பாட்டு கொடுத்ததுக்கு  ரொம்ப நன்றி. என் பெயர் ’ரேவதி’. உனக்கு எப்போவாது திருநங்கைகளிடமிருந்து பிரச்சனை ஏற்பட்டால் என் பெயரைச் சொல்லு  .” என்றாள். அப்போது ஒரு மின்சார ரயில் பிளாட்பாரத்தில் நுழைந்தது. ”நான் வரேன்”  அவள் ஓடிப் போய் ஒரு கம்பார்ட்மெண்டில் ஏறினாள். ரயில் நகர்ந்தது.   வாழ்க்கையே சிலருக்குத் தேடல். தேடல் இல்லாமல் வாழ்க்கை இல்லை. இருப்பதை, இழந்ததை, மறந்ததை, மறைத்ததை...எதுவானாலும் தேடலில் கிட்டும். அதனால் மனசு  குதூகலமடையும். தொலைந்தது கிடைத்த மகிழ்ச்சியுடனும், அன்னதானம் செய்த மன நிறைவுடனும்  அலுவலகத்தை நோக்கி என் கால்கள் நடந்தன.                            []                                           11. ஒரு விடியலுக்காக !   ”என்னிடம் பணம் எதுவும்  கிடையாது. நீங்கள் வேலைக்குப் புறப்படுங்க “ என்றாள் வைசாலி. ”ப்ளிஸ் வைசாலி நூறு ரூபாய் மட்டும் கொடு . இன்னைக்கு ஒப்பேத்திவிடுகிறேன். நாளையிலிருந்து வேலைக்குப் போறேன்.” வைசாலி கடிகாரத்தைப் பார்த்தாள். மணி 8.15 . வேலைக்குக் கிளம்ப இன்னும் ஐந்து நிமிடங்கள்தான் இருக்கிறது. அவள் வேலை செய்யும் அலுவலகத்தில்  டாணென்று 8.30 மணிக்கு இருக்க வேண்டும். ”வைசாலி எனக்கு மாத்திரை ஆயிடிச்சு . மாத்திரைக்கு மருந்து கடையிலே சொல்லிட்டு போயிடும்மா. மாமியார் சிவகாமியின் குரல். ”சரிம்மா, நான் கிளம்பறேன். அவர்கிட்டே பணமெதுவும் கொடுக்காதீர்கள்“.. அவள் கேட்டைத் திறந்து தெருவில் இறங்கி நடந்தாள். வைசாலிவும் முரளியும் வெவ்வேறு ஜாதியைச் சேர்ந்தவர்கள். காதல் கல்யாணம் செய்து கொண்டவர்கள் .. வைசாலி அப்போது ஈரோடிலுள்ள  அரசினர்  கல்லூரியில் பி. ஏ முதலாம் ஆண்டு படித்துக்கொண்டிருந்தாள். முரளியின் அழகில் மயங்கி அவனைக் காதலித்தாள். சித்திரப்பாவை மாதிரி அழகாய் இருப்பாள். குறும்பு அதிகம். அவள் கல்லுரியில் முதல் ஆண்டு படித்துக்கொண்டிருக்கும்போது முரளி  மூன்றாம் ஆண்டு படித்துக் கொண்டிருந்தான்.. நூலகத்தில் புத்தகம் எடுக்கப்போகும்போது அவள் அவனைச் சந்தித்து நண்பர்களானார்கள்..   துடிப்பு மிகுந்த அவள்தான் தன் காதலை முதலில் அவனிடம் தெரிவித்தாள். வேறு சாதி என்பதால் இருவர் வீட்டிலும்  காதலுக்கு எதிர்ப்பு இருந்தது. எதிர்ப்பை மீறி வீட்டை விட்டு ஓடிப் போய் கோவிலில் திருமணம் செய்து கொண்டார்கள். அவன் வீட்டில் முதலில் மறுத்தாலும் பின்னர் ஏற்றுக் கொண்டார்கள். வைசாலிவின் மாமியார் மிகவும் நல்லவள்.   அவள் அப்பாவுக்கு ரொம்பக் கோபம் . அவளுடன் பேசவில்லை வீட்டுப்படி ஏறக்கூடாது என்று சொல்லிவிட்டார். என் பெண் இறந்து விட்டாள் என்று தலை முழுகிவிட்டார். . மூன்று வருடம் கழித்து  அவர் இறந்த பிறகுதான்  வைசாலி அம்மா அவளிடம்  பேசினாள். எப்படிமா இருக்கே ? நல்லாதான் இருக்கேன். குழந்தை நிர்மலாவுக்கு  இரண்டு வயசு ஆயிடுத்து. என் மாமியார் தங்கமானவங்க.”   “ உன் கணவர் உன்னை நல்லா வைச்சுண்டுருக்கிறாரா?” ”ம்” என்ன பதில் சுரத்தில்லாமல் வருது. முகத்தில் வாட்டம் தெரியுதே . குடும்ப வண்டி  சீரா ஒடுதா அவளால் பதில் சொல்ல முடியலே. கண்ணிலிருந்து வந்த கண்ணீர் காட்டிக் கொடுத்துவிட்டது.. அம்மா தலையை வருடி. “கண்ணு என்கிட்டே உண்மையைச் சொல்லிடு . இவ்வளவு நாள் தனியா இருந்தே . உனக்கு ஏதாவது ஒண்ணு என்றால் நான் எதுவும் செய்ய முடியாத நிலையிலே இருந்தேன். இப்ப அப்படியில்ல”. ”அவர் இரவு படுக்கையில் இருக்கும்போது திடீரென்று காணாமல் போய் விடுகிறார். பெண் சிநேகத்தால் ஒழுக்கத்தைக் கெடுத்துக் கொண்டிருக்கார். . ”என்னடி  சொல்றே ? என் தலையிலே இடி விழுந்த மாதிரி இருக்கே. காதல் திருமணம் செஞ்சுண்டு உன் தலையிலே நீயே மண்ணை வாரி போட்டுண்ட்டியே மோசம் போயிட்டியே வைசாலி.  உன் வாழ்க்கை இப்படி ஆகிவிட்டதே !  உன்னை நினைச்சா  எனக்குக் கவலையாய் இருக்கு”. அவர் என்னைக் காதலிக்கும்போது அவருடைய உடல் அழகைத்தான் பார்த்தேன். வாழ்க்கைக்குத் தேவையான ஒரு நெருப்பு அவர் நெஞ்சில் இல்லை. சோம்பேறி . பொறுப்பில்லாத ஆள். முன்னுக்கு வரணும் என்ற எண்ணமே இல்லாதவர்.” கவலைப்படாதே உன் அத்தை பையன் சோமு. அரசாங்க வேலையிலே இருக்கானே அவன் உன்னைக் கல்யாணம் பண்ணிக்கிறத்துக்குத் தயாராயிருக்கான்.  உனக்குச் சம்மதமா,  சொல்லு. உன் புருஷனை விவாகரத்து பண்ணிட்டு அவனைக் கல்யாணம் செய்ஞ்சுக்கிறயா?” வைசாலி பதில் பேசவில்லை. இன்னொரு கல்யாணம் செய்துகொண்டால் வாழ்நாள் முழுவதும் தன்னைக் குத்திப் பேசுவார்கள் என்று எண்ணிக்கொண்டே , “ அதெல்லாம் ஒண்ணும் வேண்டாம். எனக்கு எது கிடைத்ததோ  அதை வைச்சுண்டு நான் சமாளிச்சுக்கிறேன் “ என்றாள். சோமுவுக்குக் கல்யாணம் ஆகி அவன் திருநெல்வேலிக்குப் மாற்றல் ஆகிப் போய் விட்டான். நாட்கள் வெகுவேகமாக ஓடி விட்டது. வைசாலியின் குடும்பம் ஈரோடில் வசிக்கிறது. அவள் ஒரு தனியார் கம்பெனியில் வேலை செய்கிறாள்.  வேலை. கடிகாரம் மாதிரி உழைக்கிறாள். காலை 8.30 மணி முதல் இரவு 8,00 மணி வரை வேலை.  காலை ஆறு மணிக்குச் சமையல் அறைக்குள் நுழைந்தால் சமையல் முடிந்து மத்தியானம் சாப்பிட உணவு  எடுத்துக் கொண்டு  அலுவலகம் அடைந்தால் இரவு எட்டு மணிக்குத்தான் அலுவலகத்தை விட்டுக் கிளம்ப முடியும். அவள் அம்மா அடிக்கடி செல் போனில் சாப்பிட்டாயா என்று கேட்பாள். தற்போது வாங்கும் சம்பளம் குறைவாக இருப்பதால்  ஆன்லைனில் புடவை வியாபாரமும் செய்கிறாள்.     மாமியாருக்கு உடம்பு சரியில்லை. முட்டி வலி , சர்க்கரை எல்லாம் உண்டு. வைசாலி ரொம்ப கஷ்டப்பட்டுக்கொண்டிருக்கிறாள். அவள் கணவனிடம் மட்டும் எந்த மாற்றமும் இல்லை. அவன் வேலைக்குப் போகாமல் உதாவக்கரையாகச் சோம்பேறியாக குடித்துக் கொண்டு வியாதிகளுடன் தத்தளித்துக் கொண்டிருக்கிறான். வைசாலி மகள் நிர்மலாவும் கல்லூரிப் படிப்பை முடித்து விட்டு பம்பாயில்   ஒரு கம்பெனியில் வேலைக்குச் சேர்ந்தாள்.. வேலை விஷயமாய் வெளிநாடு போகும் வாய்ப்பு வந்தது. தாய் எட்டடி பாய்ந்தால் குட்டி பதினாறு அடி பாயும் என்பதை நிரூபிப்பதைப்  போல் அவள் ஒரு அமெரிக்காகாரனை காதலித்து பெற்றோர் சம்மதத்தைக் கேட்காமலே கல்யாணம் செய்து கொண்டாள். இப்போது அமெரிக்காவில் இருக்கிறாள். எப்போதாவது பேசுவாள்.  வைசாலி யோசித்துக்கொண்டே அலுவலகம் வந்து விட்டாள்.   முரளி வேலைக்குப் போகாமல் வீட்டிலேயே உட்கார்ந்து சாப்பிட்டுக் கொண்டிருக்கிறான். அவளைப் போட்டு அடிப்பான். அவன் தோழி அவனை நிராகரித்து விட்டு வேறு ஒருவனுடன் போய்விட்டாள். மாமியாருக்குச்  சர்க்கரை அதிகமாகிவிட்டதால் ஒரு காலை முட்டிக்குக் கீழ்  எடுத்தாகிவிட்டது. வைசாலிக்கு இரண்டு குழந்தைகள்.  மாமியாரையும் கவனித்து, வேலைக்குப் போகாத கணவரையும் கவனித்துக் கொள்கிறாள். அலுவலகம் வந்துவிட்டது. ”யோசனை பலமோ ”? அவளுடன் பணி புரியும் மாலா கேட்டாள் ” ஆமாம் கணவரைப் பற்றி நினைத்துக்கொண்டே வந்தேன். முதலில் எப்போவாது குடித்தார். இப்போது எப்போவாது குடிக்காம இருக்கிறார். என்னை அடிக்கிறார். நேத்து அடிச்சது பார் என்று நெத்தியில் பட்டிருந்த காயத்தைக் காட்டினாள்“. ”கவலைப்படாதே வைசாலி. வீட்டுக்கு வீடு வாசல்படிதான். எனக்கும் பிரச்சனை இருக்கிறது. என் கணவருக்குப் புற்று நோய் . நான் அதைப் பற்றி கவலைப் படுவதை விட்டு விட்டேன்” . அப்போது வைசாலியின் மொபைல் சிணுங்கியது. அவள் மொபைலைப் பேச எடுத்தாள். அவள் அம்மாவிடமிருந்துதான்  காலை ஒரு முறையும் , மதியம் ஒரு முறையும் , இரவு ஏழு மணிக்கு ஒரு முறையும் தினமும்  தவறாமல் . சாப்பிட்டாயா ? காபி குடித்தாயா ? என்று தாயன்போடு விசாரிப்பாள். வயது நாற்பதைக் கடந்தாலும் தாய்க்கு மகள் பெண்தானே ? இரவு அவள் கணினியில்  தன் ஆன்லைன் வியாபாரத்தில் கவனத்தைச் செலுத்திக் கொண்டிருந்தாள். அப்போது அவள் அத்தை மகன் சோமு வந்தான். வழுக்கைத்தலையை தடவியவாறே அவளை உற்றுக் கவனித்தான். உயரமான உடல் வாகுவுடன், அழகிய கண்களுடன், கூர்மையான நாசியுடன் அழகிய சிற்பம் போல் இருக்கிறாள் என்று நினைத்தான். ”  நீ இன்னும் அழகாகத்தான் இருக்கிறாய்.என் மனைவி இறந்து விட்டாள். இப்போது தனியாகத்தான் இருக்கிறேன். ஈரோடுக்கே மாற்றல் ஆகிவிட்டது. உன் கணவர் எப்படி இருக்கிறார்?” ” வேலைக்குப் போகாம படுத்தறார்.” ” உன்னைப் போட்டு அடிக்கிறார் . குடிக்கிறார் என்று நான் கேள்விப் பட்டேன். நீ ரொம்பக் கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கிறாய் என்பது எனக்குத் தெரியும். நான் உனக்கு உதவி செய்கிறேன். நீ சரி என்றால் நாம் இருவரும் கல்யாணம் பண்ணிக்கொள்ளலாமா .” என்று சிரித்துக்கொண்டே கூறினான் வைசாலி திடுக்குற்றாள். ”பாவி, ஒரு கல்யாணமான பெண் கிட்டே இப்படியா கேட்கிறது” என்று மனசுக்குள் நினைத்தவள், ”அவர் சீக்கிரத்தில் திருந்துவார் என்னும் நம்பிக்கை எனக்கு இருக்கிறது. ஒரு விடியலுக்காகப் பொறுமையாய் காத்திருக்கேன் ” என்றாள். ”உனக்குக் கல்யாணம் ஆன புதிசிலே சொன்ன போதே நீ என்னுடன் வந்து விட்டிருக்க வேண்டும். இப்போ ஒண்ணும் குடி முழுகிப் போய்விடல. நீ விவாகரத்து செய்துகொண்டால்  போதும்.  என்னிடம் பணம்  இருக்கிறது. நாம் வசதியாக  இருக்கலாம்” என்றான். வைசாலி ஒரு நிமிடம் எதுவும் பேசவில்லை. அவளுக்குக் கோபம் வந்தது. ”நாசமாய் போ” என்று மனசிலே நினைத்தாள். உணர்ச்சி பொங்க உரத்த குரலில், ”இந்தக் காலத்தில் ஒரு துன்பத்தையோ ஒரு குறையையோ எண்ணித் தலையில் கை வைத்து உட்கார்ந்து விட்டால் யாரும் முன்னேற முடியாது. நாளைத் துன்பங்கள் தீர்ந்து நன்மை உண்டாகும் என்னும் நம்பிக்கை எனக்கு இருக்கிறது. நான் எப்படியோ சமாளித்துக் கொள்கிறேன். நீங்கள் உங்கள் வழியைப் பார்த்துக்கிட்டுப் போங்க’ . ”எப்போ அலை ஓஞ்சி கடலிலே குளிக்கிறது. நாய் வாலை நிமிர்த்திடலாம். குடிகாரனைத் திருத்தவே முடியாது. நான் சொல்வதைக் கேள். உனக்கு நல்லது” . ”வெளி..யே போ..டா நா..யே ” குமுறியவாறு  வாசல் கதவை நோக்கி கையைக் காண்பித்தாள். அப்போது உள்ளறையிலிருந்து பாட்டில் விழுந்த சப்தம் கேட்டது. மருந்து கொடுக்கும் நேரம் வந்து விட்டது மாமியார் மருந்து பாட்டிலை நழுவ விட்டிருப்பாள் என்று பரபரப்புடன் எழுந்தாள். ”நல்லது செய்ய  நினைத்தால் கூட முடியாது போலிருக்கே” என்று முணுமுணுத்துக் கொண்டே அவன் அவ்விடத்தை விட்டுச் சென்றான். உள்ளிருந்து  ”வைசாலி” என்று கணவனின் குரல் கேட்கவே அவனிருந்த அறைக்குள் விரைந்தாள். அங்கே முரளி மது பாட்டிலை உடைத்துவிட்டு நின்றிருந்தான். ”சபாஷ் வைசாலி !.  குடிக்கலாம் என்று பாட்டிலை எடுக்கும்போது சோமு வந்தது தெரிந்தது.. நீ பேசுவதை ஆவலுடன் நான் கேட்டேன் செம நெத்தி அடி கொடுத்தாய் அவனுக்கு. என் மனைவியாய் நீ இருப்பது நான் செய்த பாக்கியம். குத்து விளக்குச் சுடர் போல் அழகும் அமைதியும் இருக்கிற உன்னை கவனிக்காம உதாசினப்படுத்திட்டேன். இதுவரை உன் அருமை தெரியாமல் குடிக்கு அடிமையாய் இருந்துட்டேன். இப்போதிலிருந்து நான் பாசத்துக்கு அடிமை ஆகிவிட்டேன்.  இனிமேல் குடிக்க மாட்டேன். பொறுப்பாக நடந்து கொள்கிறேன் “ என்று சொல்லி அவளுக்கு இன்ப அதிர்ச்சியைக் கொடுத்தான். ” ஒரு விடியலுக்காகக் காத்திருந்தது வீண் போகல. தன் கனவு மெய்ப்படப் போகிறது  என்னும் நம்பிக்கை அவள் மனசில் துளிர்த்தது.                       []                  12.  வீட்டுக்குப் போலாம்   அலைபேசியின் சிணுங்கல் கேட்டதும் எடுத்துப் பார்த்தேன். அழைப்பு  அபிநயாவிடமிருந்து .    ”அப்பா மயக்கம் போட்டு விழுந்துட்டா. எனக்கு என்ன செய்றதுன்னு தெரியலை. இந்த ஊரிலே எனக்கு யாரையும் தெரியாது. வித்யா, நீ சீக்கிரம் வாடி. அப்பாவை ஆஸ்பிட்டலுக்கு அழைச்சிண்டு போகணும்” பதட்டத்துடன் பேசினாள்.   ”இதோ வந்துட்டேன். ஆம்புலன்ஸ்க்கு சொல்லிட்டு வரேன்.. தயாராய் இரு அபி” என்று சொல்லிவிட்டு குரோம்பேட்டையிருக்கும் அபிராமி ஆஸ்பிட்டலுக்கு போன் செய்து உடனே ஆம்புலன்சை அனுப்ப ஏற்பாடு செய்து விட்டு  என் பெரியப்பா பெண் அபிநயா வீட்டுக்குக் கிளம்பினேன். என்னைப் பார்த்ததும் ”.வந்துவிட்டாயா வித்யா? .எனக்கு மூச்சு வந்தது போல் இருக்கிறது. அப்பா மயங்கி விழுந்துவிட்டார். அவருக்குச் சிறுநீரக கோளாறுதான் காரணமாய் இருக்கும்.. இன்னைக்கு காலையிலிருந்து மிகவும் சோர்ந்து காணப்பட்டார்” என்றாள் அபி. பெரியப்பாவைப் பார்த்தேன். பேச்சு மூச்சு இல்லாமல் இருந்தார். மூக்கில்  கையை வைத்துப் பார்த்தேன் . மூச்சு வந்தது. உயிர் இருக்கிறது என்று நிம்மதியாய் பெருமூச்சு விட்டேன். ”ராஜி எங்கே?”  என்றேன். ராஜி அபிநயாவின் தங்கை. “ அந்த அறைக்குள்  உட்கார்ந்து சுவத்தைப் பார்த்துண்டு  இருக்கா.” உள்ளே பார்த்தேன். ராஜி தரையில் அமர்ந்து சுவத்தை வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தாள். ”ராஜி, என்ன பண்ணிண்டு இருக்கே?”   ”என்ன பண்ணிண்டு இருக்கே. வெவ்வெவ்வே .......... ராஜி அழகு காண்பித்தாள். எனக்கு அவள் மேல் கோபம் வரவில்லை. நான் சிரித்தேன். ராஜி. .நாங்க ஆஸ்பித்திரிக்கு போய் விட்டு வந்து விடுகிறோம்.  ஜாக்கிரதையாய் இரு. ”அப்பாவை உடம்பு சரி ப்ண்ணிட்டு கூட்டிட்டு வா. இல்லேன்னா உன்னைச் சும்மா விடமாட்டேன் “  என்றாள் ராஜி கண்ணை உருட்டியவாறே. ”அவளுக்கு ஒண்ணும் தெரியாது . அவ சொல்றது எதையும் காதிலே போட்டுக்காதே ”என்றாள் அபி. ஆம்புலன்ஸ் வந்து விட்டது. சித்தப்பாவை ஆம்புலன்சில் ஏற்றி விட்டு நானும் அபியும் அதிலேயே ஏறினோம்.. ராஜி மாடி பால்கனியிலிருந்து எங்களைப் பார்த்து டாடா காண்பித்தாள். என் நினைவு பின்னோக்கிச் சென்றது. பெரியப்பா பாம்பேயில் ஒரு தனியார் கம்பெனியில் பெரிய பதவியிலிருந்து ஓய்வு பெற்றவர். எனக்கு நிறைய செஞ்சுருக்கார். பத்து வயசிலே என் அப்பாவை பறி கொடுத்துட்டு நின்னபோது என் படிப்புச் செலவை அவர்தான் ஏத்துண்டார். என் கல்யாணத்தின்போது மாங்கல்யம் கூறைப் புடவை வாங்கிக் கொடுத்தார். குள்ளமாய் இருப்பார். பருமனான உடல். எண்பத்து ஆறு வயது ஆகிறது. வாக்கிங் ஸ்டிக் கூட இப்போதுதான் உபயோகப் படுத்த ஆரம்பித்திருக்கிறார்.    மூன்று  வருடங்களுக்கு முன் பெரியம்மா ஹார்ட் அட்டாக்கில்  மேலே  போனதிலிருந்து பிறகு அவர்தான் பசங்களைப் பார்த்துக் கொண்டார். முதல் பெண் அபிநயா . கல்யாணம் ஆகி கணவனை இழந்தவள். குழந்தை இல்லை. அறுபது வயது ஆன சீனியர் சிட்டிசன். சர்க்கரை, பி.பி. , முட்டி வலி . தைராய்ட் பிரச்சனை இத்யாதி,இத்யாதி....... இரண்டாவது பெண் ராஜி. மன நிலை சரியில்லாதவள். இரண்டு வருடங்களுக்கு முன்பு பெரியப்பா  பாம்பே வீட்டை ஒரு கோடிக்கு விற்று விட்டு சென்னை வந்து செட்டில் ஆனார். . பம்மலில்   வீடு வாங்குவதற்கு   நான் உதவி செய்தேன். ”உன் பெண் கல்யாணத்துக்கு வைச்சுக்கோனு  இரண்டு லட்சம் கொடுத்தார். அவரை மாதிரி நல்ல மனசு யாருக்கு வரும் ? அவருக்கு நன்றிக்கடன் பட்டிருக்கேன்.” ஆறு மாசத்துக்கு முன் பெரியப்பாவுக்கு சிறுநீரக பிரச்சனை. ஆஸ்பத்திரியில் நான்கு நாட்கள் இருந்தார். இப்போது மறுபடியும் அந்தப் பிரச்சனை வந்திருக்கிறது. . ஆஸ்பத்திரியில் பெரியப்பாவை ஐ.சி. யு வில் அட்மிட் செய்து விட்டு . நான் அன்று முழுவதும் ஆஸ்பிட்டலில்தான் இருந்தேன்.     அடுத்த நாள்  முதல் ஆபிஸ் போவதற்கு முன்னால்  காலையில் போய்ப் பெரியப்பாவைப் பார்த்துவிட்டு போவேன். அன்று நான் சீக்கிரமாய் வந்து விட்டேன். அபி வீட்டுக்குப் போய் விட்டு வரும்வரை காத்திருந்தேன். அபி சோகமாய் வந்தாள். ”ஏதாவது பிரச்சனையா? ஏன் உன் முகம் ஒரு மாதிரியாக இருக்கிறது?” ”எல்லாம் ராஜியின் பிரச்சனை . அவள் ஒண்ணுமே புரிஞ்சிக்க மாட்டேன் என்கிறாள். சாப்பாடு, தூக்கம், ரேடியோ கேட்பது  இதெல்லாம்தான் அவள் வாழ்க்கையாய் இருக்கிறது. நேற்று வீட்டிலே சாதத்தை நிறைய வடிச்சு வைக்கிறாள்.. ஏன் அப்படிச் செய்கிறாய்? என்று கேட்டால் என்னை  முதுகில் போட்டு அடிக்கிறாள். சில சமயம் ரொம்ப வயலண்ட் ஆகி விடுகிறாள். என்ன செய்வது ? என்றே தெரியவில்லை. அவளுக்கு அப்பா சின்ன வயதிலிருந்தே செல்லம் கொடுத்து கெடுத்துட்டார். அவளையும் பார்த்துண்டு ஆஸ்பத்திருக்கும் வந்துண்டு போக முடியல்லே.” ”ராஜியை ஒரு நல்ல சைகாலஜிட் கிட்டே காண்பிக்கலாமே.”    ”எல்லாம் அப்பாதான் ஏற்பாடு செய்யணும். அவர்தான்  மாத்திரையை தினம் காபியில் போட்டுக் கொடுத்து துங்க வைச்சுடறார். பத்து வருஷமாய்தான் ராஜிக்கு இந்த பிரச்சனை இருக்கிறது. அது இருக்கட்டும், அப்பா என் கிட்டே சொல்லியிருக்கார். ஆஸ்பத்திரியில் ரொம்பச்  செலவு செய்யக் கூடாது. வீட்டிலேயே வைச்சுண்டு வைத்தியம் பார். எனக்கு ஏதாவது ஆயிடுத்துன்னா நீயே காரியத்தை செஞ்சுடுன்னு சொல்லிருக்கா.” ”அவர் பேசற நிலையில் இல்ல . அவர் உடம்பு குணம் ஆற வரையில் இந்த ஆஸ்பிடலில் இருக்கட்டும்.” இரண்டு நாள் கழித்தும் பெரியப்பா இரண்டாவது மாடியில்  தனிஅறைக்கு மாற்றப்பட்டார். அவருக்குத் தனியாக மானிடர் வைக்கப்பட்டிருந்தது. எப்போதும் உறங்கிய நிலையிலேயே இருந்தார்.. கண் விழித்தால் பேச முயற்சி செய்வார். ஆனால் பேச வராது. அபி ராஜியை வைத்துச் சமாளிப்பது ரொம்பக் கஷ்டம். வீட்டில் அவள் தனியாய் இருக்கிறாள். சாக்லெட் அதிகம் சாப்பிட்டு உடம்பைக் கெடுத்துக் கொள்கிறாள் என்று புலம்பினாள்.  ஆஸ்பிட்டலையும் பார்த்து வீட்டையும் பார்ப்பது மிகவும் சிரமமாயிருக்கிறது. அப்பாவை வீட்டுக்குக் கூட்டிக் கொண்டு போய்விட வேண்டும் என்று ஆத்திரப்பட்டாள். ”நான் போய் குளிச்சிட்டு சாப்பிட்டு வந்துடறேன். அது வரை நீ இங்கே இரு” அபி ஆஸ்பிட்டலிருந்து கிளம்பினாள். பெரியப்பா கண் திறந்து பார்த்தார். பெரியப்பா, பெரியப்பா என்று கூப்பிட்டேன். அவரால் பேச் முடியவில்லை. அபி வந்து விட்டாள் . அவளுடன் ராஜியும் வந்திருந்தாள். பச்சை கலரில் சுடிதார் போட்டிருந்தாள். பெரியப்பா படுத்திருந்த கட்டிலின் அருகே போய் அவரைக் கண் கொட்டாமல் பார்த்துக் கொண்டிருந்தாள். ‘ அப்பா நான் வந்துட்டேன். புது சுடிதார் போட்டுண்டு வந்திருக்கேன். வீட்டுக்குப் போகலாம் வாங்க. உங்களுக்கு சாக்லெட் வாங்கி  வைச்சிருக்கேன் “ என்று  குழந்தையைப் போல் சொன்னாள். ”அப்பாவை டிஸ்சார்ஜ் பண்ணி வீட்டுக்கு அழைச்சிண்டு போகலாமென்று  ராஜியும் என் கூட  வந்திருக்கிறாள். டாக்டரை ப் பார்த்துப்பேசணும்”என்றாள் அபி.    ” டாக்டர் சொல்லும் போதுதானே டிஸ்சார்ஜ் ஆகணும். நம் இஷ்டம் போல் வீட்டுக்குப் போய்விட முடிய்மா?  உனக்குத் தெரியாது . இன்னும் ஒரு வாரம் ஆனாலும் பரவாயில்லை. டாகடர்  டிஸ்சார்ஜ் செய்யும்போது வீட்டுக்குப் போலாம்” என்றேன். ”அவ்வளவு நாள் என்னால் பொறுக்க முடியாது. நாலு நாளுக்கே ஒரு லட்சம் ஆகி விட்டது . என்னிடம் இருந்த பணம் எல்லாம் செலவு ஆகி விட்டது. அப்பாவுக்குப் பணத்தைச் செலவு செய்தால் பிடிக்காது. அப்பா படிபடியாய் முன்னுக்கு வந்தவர்.  என் கிட்டே,  ”பணத்தைச் செலவு பண்ணாதே. எனக்கு ஏதாவது ஆகி விட்டால் நேரா சுடுகாட்டுக்கு எடுத்துண்டு போய் விடு. சங்கர் சாஸ்திரிகளிடம் போன் பண்ணிச் சொல்லு. அவர் இறுதி சடங்குகளைப் பண்ணுவார்.  அதற்கான  பணம் அவரிடம் கொடுத்து வைத்திருக்கிறேன் “ என்று சொல்லியிருக்கார். ஒருக்கால் அப்பாவுக்கு உடம்பு குணம் ஆகிவிட்டால் நீ ஏன் என்னைக் கேட்காமல் அவ்வளவு பணத்தை செலவு செஞ்சே ? என்று திட்டுவார். “ ”அவர் இருக்கிற நிலையிலே அவர் எதுவும் கேட்க மாட்டார். அவரை நாம் தான் பார்த்துக்கணும் . அவர் பணத்திலிருந்து அவர் மருத்துவத்துக்கு நீ செலவு செய்றே. நீ பணம் செலவு பண்ண வேண்டா.  எவ்வளவு ஆனாலும் நான் செலவு செய்கிறேன்.பெரியப்பா  கடைசிக் காலத்திலே நிம்மதியாக இருக்கட்டும்.” நீ எதுக்கு என் அப்பாவுக்காகச் செலவு செய்யறேன்னு சொல்றே. இதிலே ஏதோ வில்லங்கம் இருக்கிறது. என் அப்பா , நான் ஏதாவது செஞ்சுக்கிறேன். என் விஷயத்திலே நீ தலையிடாதே. வாயை மூடிண்டு சும்மா கிட. நான் இப்பவே டாக்டர் கிட்டே போய்  டிஸ்சார்ஜ் பண்ண ஏற்பாடு செய்றேன்” என்று கோபத்துடன் அறையின் கதவருகே சென்றாள். நானும் அவள் அருகே விரைந்து சென்று அவள் கையைப் பிடித்துக் கொண்டு “அபி, நான் இன்னைக்கு நல்ல நிலைமையிலே இருக்கிறதுக்கு காரணம் பெரியப்பாதான். அவருக்கு உடம்பாலேயும் பணத்தாலேயும் எவ்வளவு செஞ்சாலும் தகும். என் செய்கையில் எந்த உள்நோக்கமும் கிடையாது . என்னை நம்பு “ என்று கெஞ்சினேன். “போடி சரிதான். நீ என்ன சொன்னாலும் நா நம்ப மாட்டேன். எங்க சொத்தை நீ அபகரிக்க பார்க்கறே.. என்னைத் தடுக்காதே.........................என்று சொல்லிக்கொண்டிருக்கும் போது , ஹையா, அப்பாவைக்  கூப்பிட்டுண்டு வீட்டுக்குப் போலாம்” என்று ராஜியிடமிருந்து  உற்சாகக்  குரல் வந்தது. திரும்பிப் பார்த்துத்  திடுக்கிட்டேன். பெரியப்பாவின் மூக்கில் வைத்திருந்த டியூப், கையில் போட்டிந்த டியூப், வாயில் போட்டிருந்த கவசம் எல்லாம் பக்கத்தில் விழுந்து கிடந்தது. அவரைக்  கட்டிலில் சாய்ச்சு உட்கார வைச்சுட்டு சிரிச்சுண்டே நிக்கறா ராஜி.. ” அடிபாவி  பதற்றத்துடன் கட்டிலுக்கு அருகே ஓடினேன். கட்டிலின் மேல் ஏறி உட்கார்ந்து பெரியப்பாவின் தலையை எடுத்து என் மடியின் மீது வைத்துக்கொண்டேன். அபி ராஜியை கன்னத்தில் ஓங்கி ஒரு அறை அறைந்தாள். அடி கூறு கெட்ட் கழுதை  , ஏண்டி அப்படி பண்ணே . . அவருக்கு ஓண்ணு ஆச்சுன்னா  யாரு அதுக்கு பொறுப்பு....................................................... என் மடியில் படுத்திருந்த பெரியப்பாவின் முகத்தில் திடீரென்று  பிரகாசம் வந்தது. விளக்கு அணைவதற்கு முன் பிரகாசமாய் எரிவது போல் மனிதன் மறைவதற்கு முன் முகம் பிரகாசிக்கிறதோ என்று தோன்றியது. கண்களில் நீர்த்துளி தளும்ப  குனிந்து அவர் காதருகில் மெதுவாக ‘ நாராயணா, நாராயணா, நாராயணா, நாராயணா என  நாமத்தை ஓதினேன். அவர் வாயிலிருந்து  ’ம்ம்’  என்ற சப்தம் மெதுவாக கேட்டது. அது   உயிரின் ஒலி என்று உணர்ந்தேன். அவர் வாய் பிளந்தது. அதே சமயம் அவர் முகத்திலிருந்து ஒரு ஒளி மேநோக்கி சென்றது போல் எனக்குப் பிரமை ஏற்பட்டது.  அவர் உடம்பு சில்லிட்டது.; கனமானது.  துக்கத்தால் என் நெஞ்சு வெடித்தது போல் இருந்தது.   அபியை பார்த்தேன் அவள் இன்னும் ராஜியிடம் வசைபாடிக் கொண்டிருந்தாள்.   ” மூளை கெட்ட முண்டமே. வயசு என்ன கொஞ்மா உனக்கு. ஐம்பத்தெட்டு வயசு ஆனாலும் . புத்தி இன்னும் வரவில்லையே. இப்படி செஞ்சா உன்னை ஹோம்லே விட்டு விடுவேன் ...........   ”அபி, அப்பாவுக்கு எல்லாம் முடிஞ்சி போச்சு. குழந்தையைத் திட்டாதே..” ‘அப்பா’ என்று அரற்றியவள். சாஸ்திரிகளுக்குச் சொல்லணும் என்று சொல்லிக் கொண்டே அலைபேசியை எடுத்து எண்களை அழுத்தத் தொடங்கினாள்.   ராஜி கட்டிலுக்கு அருகில் ஓடி வந்து , ”அப்பா, இன்னும் ஏன் படுத்துண்டு இருக்கே. வா, வீட்டுக்குப் போலாம்,வீட்டுக்குப் போலாம்” என்று அவரை  உலுக்கினாள்.                          []       13. வாசு மாமாவும் சீதா மாமியும்   சீதா   மாமியின்  காலை கொஞ்சம் தூக்கி மேலும் கீழும் ஆட்டி, ஒன், டூ த்ரீ, ஃபோர், ஃபைவ் . இப்படி அடிக்கடி எக்ஸ்ர்சைஸ் செய்யுங்க .உங்க  கால் வீக்கம் எல்லாம் சரியாகி விடும்” என்றேன். கட்டிலில் படுத்திருந்த சீதா மாமிக்கு வயசு ஐம்பத்து இரண்டு.  எனக்கும் மாமிக்கும் முப்பது வயது வித்தியாசம் இருந்தாலும் எங்களுக்குள் ஏற்பட்டிருந்த நட்புக்கு  வயசு வித்தியாசம் கிடையாது.   ”அப்படியே முடிந்தபோது செய்கிறேன் நந்தினி. உனக்குக் காபி எதுவும் கொடுக்க முடியவில்லயே என்று எனக்குக் குறையாக இருக்கிறது ” என்றாள் சீதா மாமி என் கையைப் பிடித்தபடி.   “உங்களுக்கு  கால் சரியாகட்டும். அப்போ காபி சாப்பிடுகிறேன்” என்றேன் நெகிழ்ச்சியுடன். சீதா மாமியின் கணவர் வாசு  , “ அவள் சரியாக சாப்பிடுவதில்லை . நல்லா சாப்பிடச் சொல்லுங்க “. என்றார். அவருக்குக் காது  கேட்காது. ஆனால் மாமி அவருடன் பேசும் போது சைகையில் பேசிவிடுவாள். இல்லாவிட்டால் மிகவும் மெதுவாகப் பேசுவாள். ”நல்லா சாப்பிடுங்க மாமி. உடம்பில சிவப்பணுக்கள் அதிகரிக்கவேண்டும் இல்லையா? பீட்ரூட், மாதுளை எல்லாம் சாப்பிடுங்க” என்றேன்.   மாமிக்குக் கருப்பை புற்று நோய். நோய் முற்றிப் போய் கருப்பையை எடுத்தாகிவிட்டது. ஒன்று மாற்றி ஒன்று என ஏராளமான பிரச்சனைகள்.  சிவப்பணுக்கள் குறைந்து போவதால் இரத்தம் அடிக்கடி ஏற்ற வேண்டியிருக்கு. இப்போது மாமிக்குக் கால் தூக்க முடியாமல் வீங்கி விட்டது நான்தான் மாமியை அடிக்கடி டாக்டரிடம் அழைத்துப் போவேன்.   ” உங்களுக்கு என்னாலே தொந்திரவு “ மாமியின் கண் பனித்தது.   ”அழாதீர்கள் மாமி . எல்லாம் சரியாகிவிடும்.” ”எனக்கு எதாவது ஆகலாம். நான் மாமாவை நினைத்துத்தான் அழுகிறேன்.அவருக்கு எதுவும் தெரியாது . அவரை யாராவது ஏமாற்றி விடுவா” என்றாள். ” அவர் எல்லாம் சமாளிச்சிப்பார். அவருக்கு எல்லாம் கற்றுக் கொடுங்கள் .  .  கடவுளை வேண்டிக் கொள்ளுங்கள் . உங்கள் உடம்பு சீக்கிரம் குணம் அடையும்”  மாமியைத் தேற்றினேன். ”நகைகள் , வெள்ளிப் பாத்திரங்கள் எங்கே வைத்திருக்கிறேன் என்று மாமாவிடம் சொல்லியிருக்கிறேன். ஏதாவது அவருக்கு உதவி தேவைப்பட்டால் நீங்க செய்ய வேண்டும். “ ”மாமாவை நாங்க கை விட மாட்டோம். எந்த உதவி வேண்டுமானாலும் நாங்க கண்டிப்பாக செய்வோம்” என்றேன். நான் வேலை இருந்ததால் என் வீட்டுக்கு வந்து விட்டேன். மாலோலா அபார்ட்மெண்டில் நான் இரண்டாவது மாடியில் இருக்கிறேன். மாமி கீழே முதல் மாடியில் இருக்கிறார். மாமா ஒரு தனியார் கம்பெனியில் வேலை செய்து  சமீபத்தில்  ஓய்வு பெற்றவர்.. தனக்குப் புற்று நோய் என்று தெரிந்தவுடன் மாமி அழுதாள். முழங்கால் வரைக்கும் இருந்த தலை மயிர் எல்லாம் போய் தலை மொட்டை ஆன போதும், ”என் அழகு போய்விட்டதே ! ” மாமி அழுதாள். நா தான் சமாதானம் சொன்னேன். மகாலட்சுமி மாதிரி  இருந்த மாமி இப்போ தலையில் ஒரு ஸ்கார்ப் அணிந்து--------------- பார்க்க மனசுக்குக் கஷ்டமாக இருந்தது.   அடிக்கடி உடம்பு வேறு  படுத்தும். நான் மட்டுமல்ல . நாங்கள் குடியிருந்த மாலோலா  அபார்ட்மெண்டில் உள்ள பத்து பிளாட்களில் உள்ள எல்லோரும் மாமி சீக்கிரம் குணம் அடைய வேண்டும் என்று பிரார்த்தனை செய்தனர். முதல் மாடியில் குடியிருந்த இஸ்மாயில் “ அல்லாவின் கருணையால் மாமிக்குச் சீக்கிரம் உடல் நலம்  அடையும் ”   என்றார். நான் மார்கெட் போய் திரும்பி வந்த போது மாமியின் எதிர்  பிளாட்டில் வசிக்கும் கவிதா, ” மாமிக்கு ரொம்ப முடியாததால்  ஆஸ்பிட்டலில் அட்மிட் செய்திருக்கிறார்கள் ”என்றாள்,. அப்போது இரவு  வெகு நேரம் ஆகிவிட்டாதால் ”காலையிலே போய் மாமியைப் பார்க்கிறேன் “ என்றேன். அடுத்த நாள்  காலை சமையலை விரைவாக முடித்துவிட்டு ஆஸ்பிட்டலுக்குப் போகலாம் என்று  கிளம்பினேன் . அப்போது கோவிலிலிருந்து சாமி புறப்பட்டு வீதியில் உலா  வந்து கொண்டிருந்தார்.  சீதா  மாமிக்கு உடம்பு சீக்கிரம் குணம் ஆக வேண்டும் என்று உள்ளம் உருகப் பெருமாளை வேண்டிக்  கொண்டேன். ஆஸ்பிட்டலில்  மாமி இருக்கும் அறைக்குள் சென்றேன். மாமி கட்டிலில் படுத்திருந்தார்.  வேதனை முகத்தில் தெரிந்தது. மாமிக்குப்  பக்கத்தில் நின்ற மாமா, அவளை நோக்கி   தன் இரு கைகூப்பி “ நீ கஷ்டப் படாமல் போய் விடு. நான் என்னைப் பார்த்துக் கொள்கிறேன் “ கண்களில் நீர் மல்கக் கூறினார். அனுதாபத்துடன் மாமாவைப் பார்த்தேன். ”மாமி எப்படி இருக்கீங்க? என்று கேட்டுக் கொண்டே நான்  அருகே சென்றேன். ”ஜெயந்தி வந்துவிட்டாளா?” மாமிக்குக் குழந்தை கிடையாது. ஜெயந்தியை வளர்த்து கல்யாணம் செய்து கொடுத்தார். ”வந்து விட்டாள். டாக்டரிடம் விசாரிக்கப் போய் இருக்காள் ” . ”தலைவலியாய் இருக்கிறது. கேண்டினில் போய் ஒரு காபி சாப்பிட்டு வருகிறேன் ” மாமா அவ்விடத்தை விட்டு நகர்ந்தார். மாமியின் சோகமான கண்கள் என்னை ஊடுருவியது.. ”நா ரொம்ப துக்கத்தை அனுபவித்து விட்டேன். எனக்குச் சீக்கிரம் விடுதலை கிடைச்சிடும் ”. ” மனசைப் போட்டு அலட்டீங்காதீங்க.  ”நீங்க சீக்கிரம் குணம் அடைஞ்சிடுவீங்க . உங்க  வேதனைகளுக்கெல்லாம் ஒரு விடிவு காலம் சீக்கிரம் வரும்.” ” எனக்கா விடிவு காலம் ? ” மாமி  வேதனையுடன் சிரித்தாள். அலை ஓய்ந்து கடலில் நீராடுவதைப் போல்தான். கல்யாணம் ஆகி முப்பது வருடம் ஆகி விட்டது. ஆரம்பத்திலிருந்து துக்கம்தான். கால் சரியில்லாத  மாமனார், படுத்த படுக்கையில் இருந்த மாமியார், செவிட்டு ஊமையான நாத்தனார்.   இவர்கள் எல்லாம் மேலே போய் விட்டார்கள். காது கேட்காத புருஷன், நாப்பது வயசிலேயிருந்து என்னை விட்டு விலகாத சர்க்கரை வியாதி. இதெல்லாம் போதாதென்று கடைசியாக வந்த  பாழாய் போன புற்று  நோய்.  நான் அனுபவிக்கிற வேதனை எனக்குத்தான் தெரியும். துக்க வாழ்க்கை வாழ்வதற்கே என்னைக்  கடவுள் படைச்சிட்டார்.  . எ....ன..க்..கு மூ.. மூச்சு ...................”  பேச முடியாமல் தடுமாறினாள். ssssஎன் மண்டையில் பொறி தட்டியது. ” நர்ஸ் “ என்று கத்தினேன். அப்போது உள்ளே வந்த  ஜெயந்தியிடம் ”நர்ஸை கூப்பிடு “ என்றேன். குனிந்து மெல்ல மாமியின் காதருகில் “ நாராயணா, நாராயணா, நாராயணா, நாராயணா என்று   சொல்லத்தொடங்கினேன். . மாமியின் கையை மாமா மெதுவாகப் பிடித்துக் கொண்டார். திடீரென்று மாமியின் கண்கள் வெறித்து நிலை கொள்ளாமல் தவித்தது. வாய் கொஞ்சம் திறக்க மாமியின் மூச்சு அடங்கியது. அறைக்குள் வந்த டாக்டர் லட்சுமி,  மாமியைச் சோதித்து விட்டு ” உயிர் போய் விட்டது ”   என்றார். மாமா அதிர்ச்சி அடைந்தார் . கண்களில் கண்ணீர் வழிய இரண்டு கையை மேலே தூக்கிக் காண்பித்துத் தன் சோகத்தை வெளிப்படுத்தினார். எனக்கு தலையில் இடி விழுந்த மாதிரி வேதனை ஏற்பட்டது. மாமி இன்னும் ஆறு மாசம் இருப்பாள் என்று நினைத்திருந்தேன். அதற்குள் இப்படி ஆகி விட்டதே என்று  வருத்தமாக இருந்தது. ” மாமி  சுமங்கலியாய் போய்ட்டா” என்றேன் கண்களில் நீர் பொங்க, . ஜெயந்தி கதறி அழுதாள்.   மாமியின் உடல் ஹாலில் வைக்கப் பட்டிருந்தது. மாலாலோ பிளாட்டில் உள்ள எல்லோரும் வந்து விட்டார்கள். சிலர் வெறும் வாய் வார்த்தை மட்டுமில்லாமல் உடலாலும், பணத்தாலும்  தங்களால் முடிந்த உதவியைச் செய்தார்கள். மாமியின் உறவினர்கள் வந்து துக்கம் விசாரித்துக் கொண்டிருந்தனர். ஜெயந்தி  துக்கத்துடன் முழங்காலைக் கட்டிக் கொண்டு அழுதாள். ; எனக்கும் நெஞ்சைப் பிசைந்த மாதிரி வலியாக  இருந்தது. . ”நாம் நினைப்பது போல் நடப்பதில்லை. எல்லாம் ஆண்டவன் செயல். சீதாதான் வாசுவுக்கு எல்லாம். அவ அவனை விட்டு விட்டுப் போய்ட்டாளே.  இனிமே என்ன பண்ணப் போறான்“ என்று வருத்தப்பட்டார் வாசுவின் சித்தப்பா . ” எனக்கு எல்லாமே அவதான்.  போன் மணி அடிச்சாலும் சரி , காலிங் பெல் அடிச்சாலும் சரி அவதான்  போய் பார்ப்பா. அவ போய்ட்டா. அவள் இல்லாமல் நா எப்படி இருப்பேன் “  என்று வேதனையுடன் மாமா சொன்னது என் காதில் விழுந்தது. மாமாவின் முகம் அளவுக்கு அதிகமான துக்கத்துடன் இருந்தது. “மாமியின் உடல் இருந்த திசையை நோக்கி கையை காண்பித்து  உணர்ச்சி பொங்க,  ”சீதா, நீ இல்லாமல் நானில்லை..நானும் உன்னோட வர்றேன்” என்று கத்தினார். அவரது கண்கள் சொருகியது.    உடல் தரையில் பொத்தென்று விழுந்தது. உடலிருந்து பிரிந்த அவருடைய ஆத்மா வானுலகம்  சென்றது. ”வாசுவுக்குச் சீதாவின் மேல் அளவு கடந்த பிரியம். இரண்டு பேரும் சேந்து மேலே போய்விட்டார்கள்”  என்றார் சித்தப்பா அதிர்ச்சியுடன்.                    []         14.   ஞானம் வந்த பின்பே ...   பொழுது நன்றாக விடிந்து விட்டது.   நாய் குரைப்பைத் தொடர்ந்து,“ பால் ” என்ற செல்வியின் குரல் கேட்டது. ‘ டாணென்று ’ ஆறு மணிக்கு அவள்  பாலை போட்டு விடுவாள். . அவள் சைக்கிளின் பின்னால் இரண்டு பக்கமும் பெரிய பையை மாட்டி அதில் பால் பாக்கெட்டுகளை வைத்துக் கொண்டு வருவாள் . அவள் பின்னாலே நாலு நாய்கள் ஒடி வருவது கண் கொள்ளாக் காட்சியாய் இருக்கும்.  பிஸ்கோத்தை அதற்கு வீசுவாள் . நன்றிக் கடனாக நாய்கள் அவள் பால் பாக்கெட்டுகள் போட்டு முடிக்கும்வரை சைக்கிளின் பின்னாலேயே வந்து கொண்டிருக்கும் – காவலாய் !. எனக்கு அவள் வந்தது  நிம்மதியை அளித்தது. காபி சீக்கிரம் கிடைத்து விடும். நித்யா,  செல்வி வந்தவுடன்தான் காபியைக்  கலப்பாள். சிறிது நேரம் ஆயிற்று.  நித்யா ஒரு டம்பளரில் காபியைக் கொண்டு வந்து ” டங்” என்று என் அருகில் வைத்து ” காபியை எடுத்துக்கோங்கோ ” என்று கோபத்துடன்  கூறினாள். அவள் வைத்த வேகத்தில்  காபி சிறிது கீழே சிதறியது. நித்யாவுக்கு வயது நாற்பது ஆகிறது. அவள்  குழந்தையாய் இருக்கும் போது என் தோளில் போட்டு விளையாட்டு காட்டியிருக்கிறேன். இப்பொழுது அவள் ஒரு குழந்தைக்கு ஒரு தாய்.. .   அவளிடம்தான் நான் புகலிடம். அதனால் அவள் கோபத்தைப் பொறுத்துத்தானே ஆகவேண்டும். . ஆம், என் அக்கா பெண் நித்யா வீட்டில்தான் ஒண்டி இருக்கிறேன். அதுவுமில்லாமல் எனக்குக் கால் முட்டி அடிப்பட்டு செயலற்றுப் போய் விட்டதால் உட்கார்ந்துகொண்டு, நகர்ந்து நகர்ந்துதான்   போகவேண்டும் அதுவும் மிகச் சிரமப்பட்டு. ”ஏம்மா காபியைப் பார்த்து வைக்கக் கூடாதா?” என்று மெதுவாகக் கேட்டேன்.. ”உங்களை மாதிரி நான் சும்மா உட்காரவில்லை.  எனக்கு எத்தனையோ வேலை . சமையல் முடிக்கணும் . சுலோக வகுப்புக்குப் போகணும்..” நான் எதுவும் பேசவில்லை . பேசினால் சண்டையும் சச்சரவும்தான் உண்டாகும். . என் நினைவலைகள் பின்னோக்கிச் சென்றன. நான் அப்போது  .  தஞ்சாவூரில் ஒரு அலுவலகத்தில் வேலையாயிருந்தேன். நான் திருமணமே செய்து கொள்ளாமல் ஓண்டிக் கட்டையாய் காலத்தைக் கடத்தி விட்டிருந்தேன். ஓய்வு பெற்றதும் ஏதாவது ஒரு முதியோர் இல்லத்தில் போய் சேர்ந்து  கடைசிக் காலத்தை நிம்மதியாய்க் கழிக்கலாம் என்று நினைத்திருந்தேன். பத்து இலட்சம் வரை  சேர்த்து வைத்திருந்தேன். ஓய்வு பெறும் வேளையும் வந்து விட்டது. அந்தச் சமயத்தில்தான்  நித்யா என்னைப் பார்க்க வந்திருந்தாள் . கண்ணில் மைதீட்டி நெற்றியில் பெரிய குங்குமப் பொட்டு வைத்து பார்ப்பதற்கு வசீகரமாய் இருந்தாள்.. ”மாமா நீங்க ஓய்வு பெற்றதும் என் வீட்டில் வந்து இருங்களேன். என் கணவர் அடிக்கடி வெளியூர் போய் விடுகிறார்.  உங்களை விட்டால் எனக்கு நெருங்கிய  சொந்தம் யாருமில்லை.  தாய்மாமாவான  நீங்க மறுக்காமல் எங்க கூட வந்து இருக்கணும், நீங்கள் இருந்தால் எனக்கு நல்ல துணை.  என்  பையன்  மாதவனுக்கு  எட்டு வயசாகிறது. அவனுக்கு ஆட்டிசம் ” . ”ஆட்டிசம்”   என்றால் என்ன ? அது மூளை சம்பந்தபட்ட .வியாதியா” ?” “ சே, சே !  நீங்க  நினைக்கிற மாதிரி அது வியாதியே இல்லை. அது  வளர்நிலை குறைபாடு. எண்ணங்கள் புரிதல், கற்றுக் கொள்வது இவற்றில் ஏற்படும் குறைபாடு. பெயர் சொல்லிக் கூப்பிட்டால் குழந்தை திரும்பிப்  பார்க்காது. கண்ணோடு கண் பார்க்காது. தேவையில்லாமல் அழும். காரணமில்லாமல் சிரிக்கும். விரும்பும் ஒரு விஷயத்தைத் திரும்ப திரும்பச் செய்ய விரும்பும். மாற்றம் இருந்தால் சிரமப்படும். சுருக்கமாகச் சொன்னால் சிறப்பு குழந்தை. நம்ம மாதவனால்  பேச முடியாது “ என்றாள் மையிட்ட கண்களில் ஈரம் கசிய. ” நீயே சிரமப்பட்டுக் கொண்டிருக்கே. நான் வேறே எதுக்கு?  எனக்கு என்ன பெண்டாட்டியா, சந்ததியா ? என்னாலே யாருக்கும் எந்தப் பிரச்சனையும் வர வேண்டியதில்லை. நான் முதியோர் இல்லத்தில் சேரலாம் என இருக்கிறேன்..” ”நல்லா இருக்கே நீங்க சொல்றது. உங்களாலே எனக்கு என்ன பிரச்சனை ? உங்களை என் அப்பா மாதிரி கவனிச்சுக்கிறேன். என் கணவராலேயும் உங்களுக்கு எந்தத் தொந்தரவும் வராது. மாசத்திலே பாதி நாள் அவர் வெளியூரில் இருப்பார்.  வாசலில் இருக்கிற   அறையை உங்களுக்கு  தந்து விடுகிறேன். அதனோடு  பாத் ரூம் சேர்ந்திருக்கு. அதில் நீங்கள் சவுகரியமாய் இருந்துக்கலாம். எங்கள் கூடவே இருந்துடுங்களேன். கடன் வாங்கி வீட்டைக் கட்டி விட்டேன். என்னால் வட்டி கொடுக்க முடியவில்லை. பத்து லட்சம் எனக்குக் கொடுத்து உதவுங்களேன்  மாமா” என்றாள். .இவள்  நான் பெறாத   பெண் . உடம்பு சரியில்லை என்று படுத்துவிட்டால் முதியோர் இல்லத்தில் யார் கவனிக்கப் போகிறார்கள்.? அக்கா பெண் பாசத்தோடு பார்த்துக் கொள்வது போல் ஆகுமா? இருக்கிற பணத்தைக் கொடுத்து விட்டு வாழ்நாள் பூரா அங்கேயே ஒண்டிக் கிடப்பதுதான் புத்திசாலித்தனம் என்று எனக்குத் தோன்றியது. அதன்படியே என் பணத்தை அவளிடம் கொடுத்துவிட்டு அவள் வீட்டில் நான் வசித்துக் கொண்டிருக்கிறேன்.   ஒரு தருணத்தில் நாம் எடுக்கும் முடிவுகள் சரியானவை என்று நாம் நினைக்கிறோம். அந்தக் கணத்தில் அவை சரியானவை என்று நமக்குத் தோன்றுகின்றன. நாம் எடுத்த முடிவு  சரி அல்லது தவறு  என்பதைக்  காலம்தான் பதில்   சொல்லும் என்பதை அப்போது நான் அறியவில்லை.   ” மாதவா, பாத்ரூம் போகணுமா ? வாடா  போகலாம் “ என்று அவனைக் கழிவறைக்கு அழைத்துச் சென்றாள் நித்யா. அவளால் எனக்குச் சகாயம் இருக்குமென நினைத்தேன்.   சாப்பிடுவேன், பேப்பர் படிப்பேன், நல்லா தூங்குவேன். பொழுது ஆனந்தமாய் கழிந்தது. நித்யா பக்தியில் அதிக நேரம் செலவிட்டாள். அவள் பூஜை செய்யும் போது இடியே விழுந்தாலும் எழுந்திருக்க மாட்டாள். அவள் கணவர் பதினைந்து நாளுக்கு ஒரு நாள் வருவார். அடுத்த நாள் கிளம்பி விடுவார் .   இப்போதெல்லாம் நித்யா வெளியே போகும் போது மாதவனை என் அறையிலிருக்கும்  நாற்காலியில் கட்டிப் போட்டு விட்டுப் போய் விடுவாள். .நான் அவனைப் பார்த்துக் கொள்ள வேண்டுமாம். அவனைப் பார்த்து என் மனம்  பரிதவித்தது.. நானும் அவனிடம் ஏதாவது பேசுவேன். அவன் பதில் பேச மாட்டான். அவன் கண் என்னைப் பார்க்காது.  சில சமயம் அவனிடமிருந்து உறுமல் மட்டும் வரும். ’மாதவா,நான் கால் ஒடிஞ்சி போய் கிடக்கிறேன்.  தஞ்சாவூரில்  நான்  ஒரு வீட்டில் இருக்கும்போது எதிர் போர்ஷ்னில் குடியிருந்த தஞ்சாவூர் பட்சிராஜன்  என்பவருக்கு உதவி  செய்திருக்கிறேன். அவருக்கு இரண்டு காலும் கிடையாது. காலையில் இயற்கை உபாதையை போக்குவதற்கும், அவர் குளிப்பதற்கும் உதவி செய்வேன். அவருடைய மனைவி இறந்து விட்டார். ஒரே பையனும் சேரி பெண்ணை கல்யாணம் செய்துகொண்டு  வீட்டை விட்டு ஓடி விட்டான். அவன் எங்கிருக்கிறான் என்று தெரியவில்லை.  சில சமயம் இரவு கூட அவர் என்னை உதவிக்கு அழைப்பார். நான் போய் உதவி செய்துவிட்டு வருவேன். அந்த மாதிரி இரண்டு வருடம் அவருக்கு உதவி  செய்தேன். மனுசன் மாரடைப்பில் போய் விட்டார்.” மாதவனிடமிருந்து எந்தப் பதிலும் வராது. அவன் வேறெங்கோ பார்த்துக் கொண்டிருப்பான். ”மாதவா நம்ம இரண்டு பேருக்கும் ஒரே நிலைமை . வீட்டுக்குள் அடைபட்டு இருக்கிறோம் பார்த்தாயா ? ” ”என்ன யாருகிட்டே பேசிண்டு  இருக்கீங்க?” என்று கேட்டுக் கொண்டே வாட்ச்மேன் பார்த்தசாரதி வந்தான். பார்த்தசாரதிக்குக்  காலை எட்டு மணியிலிருந்து இரவு எட்டு மணிவரை வேலை. ”மாதவனிடம் பேசிக் கொண்டிருக்கிறேன். நம் மனதிலுள்ள குறையை யாரிடமாவது சொல்லிவிட வேண்டுமல்லவா? யாரும் இல்லையென்றால் சுவற்றிடமாவது சொல்லி அழ வேண்டும். அவனுக்கு எதுவும் புரியாவிட்டாலும் நான் அவனிடம் என்னுடைய குறையைச் சொல்லிப் புலம்பிக்   கொண்டிருந்தேன்”.   ”அம்மா எங்கே ? வெளியே போய் இருக்காங்களா ? ” ”பகவத் கீதை வகுப்புக்குப் போய் இருக்காங்க. அதெல்லாம் உயர்ந்த விசயம். அவங்களுக்கு அதில் ஈடுபாடு அதிகம்.. எனக்கு அதைப் பத்தி தெரியாது.  ” ”உங்களுக்கு அதிலெல்லாம் ஈடுபாடு இல்லையா?” நல்ல கேள்வி கேட்டாய். எனக்கும் பக்திக்கும் ஏணி வைத்தால் கூட எட்டாது. ஆன்மீகத்தில் மனம் செல்லாததிற்குக் காரணம் இளம் பிராயத்தில் “ இப்பவே எதுக்கு” என்றும் யெளவன பருவத்தில் ‘ இப்போ போய் எதுக்கு” என்றும், முதிய பருவத்தில் ’ இனிமேல் எதுக்கு’ என்றும் உற்றாரும் உறவினரும்  திசை மாற்றி விட்டதால்தான்.” என்று கூறிச் சிரித்தேன். பார்த்தசாரதியும் சிரித்தான். சிறிது நேரத்தில் நித்யா வந்து விட்டாள் . வழக்கம் போல் ஸ்கைப்பில் சத் சங்கத்தில் ஈடுபட்டாள். அது முடியும் போது இரண்டு மணி ஆகி விட்டது. எனக்குப் பசிக்குமே என்று அவள் கவலை பட்டதே கிடையாது.   எனக்கோ பசியோ பசி. நித்யா சுட சுட அரிசி சோற்றை என் முன்  வைத்தாள்.  தெனாலி ராமன் பூனைக்குப் பால் வைத்த மாதிரி இருந்தது அவள் செய்தது.  சூடாக வைத்த உணவை என்னால் கையால் பிசைய முடியவில்ல. வலியால் துடித்துக் கொண்டு இருக்கும் போது எரியும் நெருப்பில் எண்ணெயை ஊற்றுவது  போல்  கொதிக்கும் சாம்பாரைச் சோற்றின் மீது கொட்டினாள். ”என்ன நித்யா இது  ? சோறு கொதிக்கிறது ஆறட்டும். அதுக்குள்ளே சாம்பாருக்கு என்ன அவசரம் ? என்றேன் எரிச்சலுடன். .” . ” என்ன,  வர வரக் குற்றம் குறை கண்டுபிடிக்கறீங்க ? . உங்களுக்கு இங்கே இருக்கப் பிடிக்கலேன்னா வெளியே போங்க .” என்று கத்தினாள் . நித்யாவின் இந்த வார்த்தைப் பிரயோகத்தைக் கண்டு நான் அதிர்ந்து போனேன். நான் அங்கு வந்ததது முதல் படிப்படியாய் அவளுடைய உபசரிப்பில் விரிசல்கள் வளர்ந்து வந்தன. அன்று  அமாவாசை. நித்யா அறையைத் தண்ணீர் போட்டு அலம்பியிருந்தாள். டைல்ஸ் போட்ட தரை. அப்போது பார்த்துத்தான் நான் குளித்து விட்டு வந்தேன். டைல்ஸ் தரையிலும் ஈரம். . கால் வழுக்கி படாரென்று    விழுந்து விட்டேன்.  கைத்தடி நழுவி ஒரு பக்கம் விழ “ அம்மா என்று கத்திவிட்டேன். அப்போது நித்யா பகவத் கீதை பற்றிக் குருவின் உபந்நியாசத்தைக் கேட்டுக் கொண்டிருந்தாள். அவள் எந்தச் சப்தம் வந்தாலும் வைரக்கியமாய் சத் சங்கத்தை விட்டு வரவே மாட்டாள். அது அவள் சுபாவம். நான் செய்வதறியாது தவித்தேன்., எழுந்திருக்க முடியவில்லை. துக்கத்தால் கண்கள் கலங்கின. நல்ல காலமாக அப்போது பால்காரி  செல்வி வந்தாள். ”அய்யோ ! அய்யா !  கீழே விழுந்துட்டீங்களே.  கீழே விழுந்திருந்த கைத்தடியை எடுத்து என் கையில் கொடுத்து, “ மெல்ல பிடிச்சுண்டு  எழுந்திருங்க” என்றாள்.. அவளுடைய மனித நேயம் என்னைப் பிரமிக்க வைத்தது. ’பட்ட காலிலே படும்’ என்று சரியாகத்தான் சொல்லியிருக்கிறார்கள். அடிபட்ட இடத்திலேயே எனக்கு மீண்டும் அடிபட்டு விட்டது.. உயிர் போகிற மாதிரி வலித்தது. என்னால் எழுந்திருக்க முடியவில்லை. மெதுவாக  எழுந்து வந்த நித்யா, என்னைப் பார்த்து, “ கர்மயோகத்தைப் பற்றிக் கேட்டுக் கொண்டிருந்தேன். சே ! எதையுமே கேட்க விட மாட்டீங்களே. பார்த்து நடந்திருக்கணும். இப்படி  யாராவது விழுவார்களா ? எழுந்திருங்க”.   என்று அதட்டினாள். என்னாலே எழுந்திருக்க முடியவில்லை. .ஆனால் எனக்கு நடக்க முடியவில்லை. நகர்ந்து நகர்ந்துதான் போகவேண்டியிருக்கு. கஷ்டப்பட்டு எழுந்து நடந்தாலும் இரண்டடி நடப்பதற்கு பத்து  நிமிடங்கள் கடந்து விடும். ”என்ன யோசிச்சிட்டிருக்கீங்க.? இந்த கீரையை ஆய்ந்து  கொடுங்க” என்று ஒரு கீரைக் கட்டை என் முன் நித்யா கொண்டு வந்து வைத்தாள். நான் அவளைப் பார்த்தேன். ”என்ன பார்க்கறீங்க. கால்தான் முடமாயிடுச்சி. கை நல்லாத்தானே இருக்கு.” ” நித்யா ஏன் இப்படி மாறி விட்டாள் ?” காரணம் தெரியவில்லை. சோகம் என்னை வாட்டியது. .ஓ மனமே ! இந்தத் துன்பங்களிலிருந்து விடுபட்டு கவலையில்லாத மனிதனாக ஆவது எப்போது? யோசிக்காமல் உறவோடு வந்து தங்கிவிட்டேனே எனக்கு இதுவும் வேணும். இன்னமும் வேணும் என்று எண்ணிக்கொண்டே கீரையை  ஆய்ந்து வைத்தேன். என்னவோ நினைத்தேன் ; என்னவோ நடக்கிறதே ஆண்டவா ! நித்யா  எதெற்கெடுத்தாலும் சிடுசிடுத்தாள். என்னிடம் கடின வார்த்தைகளை உபயோகித்தாள். என்னால் எதுவும் செய்ய முடியாத நிலை. நான் முதியோர் இல்லம்  போகலாமென்றாலோ என்னிடம் பணம் இல்லை.  நான் நித்யாவிடம் அடைக்கலமானது  தவறான முடிவோ   என்று  மிகவும் வருத்தப் பட்டேன். எனக்கு நித்யா காலையில் டீ கொடுக்கும்போது இரண்டு பிஸ்கட்டைத் தட்டில் வைத்துக் கொடுப்பாள் .  பத்திரமாக வைத்திருப்பேன். மாதவனிடம் சாப்பிடக் கொடுப்பேன். அல்லது காலையில் செல்வி பால் போட வரும்போது கூட ஓடி வருமே நான்கு நாய்கள்....  அவைகளுக்குப் போடுவேன். நாய்க்குப் பிடித்த வஸ்து பிஸ்கட்”. அவள் அன்று ஸ்கைப்பில் சத் சங்கத்தில் ஈடுபட்டிருந்தாள் . எனக்கு ஓண்ணாம் நெம்பர்  அவசரமாய் வந்து விட்டது . நித்யா  என்று பல முறை உரக்க அழைத்தேன்.. அவள் ஏனென்று கேட்கவில்லை.நான் தட்டுத் தடுமாறிப் போய் விட்டு வருவதற்குள் முட்டிக்கொண்டு வந்த இயற்கை உபாதை  வேட்டியை மீறி    தரையைத் தொட்டு   விட்டது. சிறிது நேரம் கழித்து செவிகளில் ஜிமிக்கி அசைந்தாட கைகளில் அழகிய  வளையல்கள் ஊஞ்சலாட வந்தாள் . என் நிலைமையைப் பார்த்ததும் சினத்துடன், ”கிழமே,  ஒழுங்கா இருந்தா இரு . இல்லாட்டா முதியோர் இல்லத்திலே சேர்த்திடுவேன்..” என்று கத்தினாள். என் இயலாமையை அவளுக்கு எப்படிச் சொல்வது என்று தெரியவில்லை. நான் பேசாமல் இருந்தேன். அவள் முணுமுணுத்துக்  கொண்டே அறையைத் துடைத்தாள்.  இதுபோல் பல முறை நடந்து விட்டது.. . இன்னொருவருடைய கையை எதிர்பார்த்தாலே துன்பம்தான். அதுவும் இயற்கை உபாதைக்கு மற்றொருவர் உதவியை எதிர்பார்க்கும் நிலமையில் நான் இருக்கிறேன். தெய்வமே,  என்னை ஏன் உயிரோடு வைத்திருக்கிறாய். என்னை உன்னிடம் சீக்கிரம் அழைத்துக் கொண்டு விடு என்று பல முறை பிரார்த்தனை செய்தேன். ஒரு முறை நித்யாவின் கணவன் ஊரிலிருந்து வந்திருந்தார். அவள் கணவனுடன் தர்க்கம் செய்து கொண்டிருந்தது  காதில் விழுந்தது. இந்த பாழாய்ப் போன இயற்கை உபாதை அந்த சமயத்திலேதானா வரவேண்டும் . கைத்தடி கைக்கு எட்டும் தூரத்தில்லை. .நித்யா என்று கூப்பிடுவதைத்தவிர வேறு வழியில்லை. ”நி..த்..யா” என்று தயங்கித் தயங்கிக் கூப்பிட்டேன் சிவபூசையில் கரடி நுழைந்தது போல் என் குரலைக் கேட்டதும் கோபத்துடன் எழுந்து வந்தவள் ”ஏன் கூப்பிட்டீங்க ? “ என்று எரிந்து விழுந்தாள். சுண்டு விரலைக் காண்பித்தேன். ” கர்மம், கர்மம்,  உங்களுக்கு எதுக்கும் நேரம் காலம் எதுவும் கிடையாதா? வேளை கெட்ட வேளையிலே ஒன் பாத்ரூம்  போகணுமா ?  இழவு, எல்லாம் என் தலையெழுத்து. உன்னாலே  என் பிராணன் போறது.  ”என்று புலம்பிக்கொண்டே கைத்தடியை எடுத்துக் கொடுத்து நான்  எழுந்திருக்க உதவி செய்தாள். ”அந்தக் கிழக் கோட்டானுக்கு வேறே வேலையில்லை. அது செய்யும் லீலைகள் சொல்லி மாளாது . என் உயிரை வாங்றது, சனியன் ” என்று நித்யா அவள் கணவனிடம் சொல்லிக்கொண்டிருந்தது என் காதில் விழுந்தது. ”இன்னொருத்தரை அண்டி இருந்தால் எவ்வளவு பேச்சுக் கேட்க வேண்டியிருக்கிறது. நான் கேட்டது  வெறும் வார்த்தைகளா, இல்லை விஷம் தோய்ந்த அம்புகளா ? நாக்கை பிடுங்கிக் கொண்டு சாகலாம் ”  என்று தோன்றியது. . அன்று காலையில் நித்யா குளித்து பட்டுப்புடவை கட்டி வெளியே போக தயார் ஆகி விட்டாள். மாதவனை என்னுடைய அறையிலிருந்த நாற்காலியில் எப்போதும் போல் கயிற்றால் கட்டி விட்டுப் போய் விட்டாள். அவள் போய் ஒரு மணி நேரம் கழித்து அவன் வாயிலிருந்து வேதனையான  சப்தம் வந்தது. அவன் முகம் வாடியிருந்தது . நேரம் ஆக ஆகச் சப்தம் அதிகரித்தது  அவனுக்குப் ஃபிட்ஸ் வந்து விட்டது.  அப்போது   பார்த்தசாரதி  வந்தான். ”மாதவனைப் பார். அவனுக்கு உடம்பு சரியில்லை” போல் தெரிகிறது. என்றேன்.  ”ஆமாம், நீங்கள் சொல்வது சரி”. உடனே செல்போனை எடுத்து நித்யாவைத் தொடர்பு கொள்ள முயன்றேன். பயனில்லை. அலைபேசியை  அணைத்து விட்டால் எப்படித் தொடர்பு கொள்ள முடியும்? ஐயோ ! பையனை அம்போன்னு விட்டுவிட்டு வெளியே போக எப்படி ஒருத்திக்கு மனசு  வரும். என் நெஞ்சு கொதித்தது. ”பக்கத்தில் டாக்டர் எங்கே இருக்கிறார் ?” என்று கேட்டேன். தெருக் கோடியில் ஒரு நர்சிங் ஹோம் இருக்கிறது என்றான் பார்த்தசாரதி . அவனே போய் ஒரு ஆட்டோவை அழைத்து வந்தான்.  மாதவனை ஆஸ்பத்திரிக்கு அழைத்துப் போனோம். பார்த்தசாரதி ஆஸ்பத்திரியை அடைந்ததும் எனக்கு ஒரு சக்கர நாற்காலியை ஏற்பாடு செய்தான். மாதவனை டாக்டரிடம் காண்பித்தோம். ”தக்க சமயத்தில் ஆஸ்பத்திரிக்கு அழைத்து வந்தீங்க” என்று டாக்டர் சொன்னார் அவனை அங்கு அட்மிட் செய்து விட்டோம். இருபத்தி நான்கு மணி நேரம் போன பிறகுதான் எதுவும்  சொல்ல முடியும் என்று பெரிய டாக்டர் சொல்லிவிட்டார். நித்யாவுக்கு விசயம் தெரிந்து அவள் ஆஸ்பத்திரிக்கு வரும் போது மணி மூன்று . ”நாராயணீயம் யார் வீட்டிலோ வைத்திருந்தார்கள் . அங்கே போய் விட்டேன் “ என்றாள். அவள் முகம் பேயறைந்தது  போல் இருந்தது. அவள் மூன்று நாள் ஆஸ்பத்திரியில் இருக்க வேண்டியதாயிற்று. அந்த மூன்று நாட்களிலும் பார்த்தசாரதி எனக்கு மிகவும் உதவி செய்தான். காபி டிபன் இத்யாதி  ஓட்டலிருந்து வாங்கிக் கொடுத்தான்.  காலைக் கடன் கழிப்பதற்கு  உதவி செய்தான். என் மனசில் ஒரு குமட்டல் , குமைச்சல் ஒரே கோபம். ’அவ நன்னாயிருக்க மாட்டாள்’என்று சபித்தேன். பால்காரி செல்விக்கும் வாச்மேன் பார்த்தசாரதிக்கும் இருக்கும் மனிதாபிமானம் கூட நித்யாவுக்கு இல்லை. தடிச்சிறுக்கி ! நான் பார்த்து வளர்ந்தவ. எப்பவும் என்னைத் திட்டிக் கொண்டே இருக்கிறாள். மனுஷியா அவள்  நடந்து கொள்ளவில்லையே என்று முணுமுணுத்தேன்.    இந்த மூன்று நாட்களில் ஒரு நாள் என் பால்ய சிநேகிதன் வாசுவிடமிருந்து அலைபேசி வந்தது. பெருங்களத்தூரிலுள்ள ஒரு முதியோர் இல்லத்தில் இருக்கும் அவன், என்னைக் கூட வந்து  வசிக்கும்படி கேட்டுக்  கொண்டான். நான் நன்றாகச் சிந்தித்தேன்.  நித்யாவோ பணம் வாங்குவதற்கு முன் ஒரு முகம்,  பணம் வாங்கிய பின் இன்னொரு முகத்தைக் காட்டுகிறாள். பணம் போனால் பரவாயில்லை. நான்  சநதோஷமாக வாழ வேண்டும். அதனால்  முதியோர் இல்லம் போய் விடலாம் என்று தீர்மானித்து விடடேன்.  அவ்ள்  வீட்டுக்கு வந்த்தும் சொல்லி விட்டுப் போக வேண்டும் என்று காத்திருந்தேன். மாதவன் ஆஸ்பத்திரியிலிருந்து டிஸ்சார்ஜ் ஆகி  வீட்டுக்கு வந்து விட்டான். . இதுதான் அவளிடம் சொல்லச் சரியான தருணம் . என்று நினைத்து , ” நித்யா உன்னிடம் ஒன்று.”  என்று ஆரம்பித்தேன். ”அதற்குமுன் நித்யா முந்திக் கொண்டு,   “மாமா, மாதவன் பிழைத்ததே கடவுள் அனுக்கிரகம்.  நீங்க சரியான சமயத்திலே அவனை ஆஸ்பிட்டலிலே சேர்க்காமல் இருந்திருந்தால் அவன் பிழைத்திருக்க மாட்டான். குழந்தை புனர்ஜென்மம் எடுத்து வந்திருக்கான். நான் உங்களைத் திட்டியும் கொடுமைப் படுத்தியும்கூட எனக்கு நல்லது பண்ணியிருக்கீங்க.! நான் உங்களை மிகவும் தொந்தரவு படுத்தி விட்டேன் மாமா. எல்லாவற்றிக்கும் என் கண் மூடித்தனமான  ஆன்மீக நாட்டம்தான் காரணம்.. என்னை மன்னித்து விடுங்க” என்று தழுதழுத்த குரலில் சொல்லி என்னை நமஸ்கரித்தாள்.   அவன்  உடம்பு சரியில்லாமல் ஆஸ்பிட்டலில் இருந்தபோதுதான் பெரியவங்களையும் குழந்தையையும் முதலில் கவனிக்காம விட்டது தவறு என்பதை உணர்ந்தேன். தனக்கு மிஞ்சியதுதான் தானமும் தருமமும் என்பது போல் குழந்தைகளுக்கும் பெரியவங்களுக்கும் பின்னால்தான் தெய்வ வழிபாடு. கீதை கடமையைச் செய், பலனை எதிர்பார்க்காதே  என்கிறது. ஆன்மிகத்தின் அடிப்படை நோக்கத்தை நான் புரிந்து கொள்ளத் தவறி விட்டேன். நான் என் கடமையைச் செய்ய தவறி விட்டேன்.. குழந்தை வளர்ப்பைப் புறக்கணித்தேன். பகவத்கீதையை விட பெரியது வேறொன்றில்லை என்று நினைத்தேன். அதனால் பெரியவங்களுக்கும் குழந்தைக்கும் முக்கியத்வம் கொடுக்காமல்  பக்திக்கு முதலிடம் கொடுத்து எப்போதும் நேரத்தை அதில் செலவழித்தேன் அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு என்பதை அநுபவத்தில் உணர்ந்து கொண்டேன். . இனிமேல் பக்திக்குச் செலவழிக்கும் நேரத்தைப் பாசத்திற்கும் கடமைக்கும்  செலவழிப்பேன் .பாசத்துக்குப் பின்தான் பக்தி ! !மனித சேவையே மகத்தான சேவை ! நான் நெகிழ்ந்துதான் போனேன். மன்னிப்போம், மறப்போம் என்பது மனிதப் பண்பு அல்லவா? மனசுக்குள் அவளை  மன்னித்து விட்டேன். நான் சொல்ல நினைத்ததைச்  சொல்லவில்லை. பரவாயில்லை நித்யா. நீ குழந்தையைச் சரியாகப் பராமரிக்கவில்லை என்பதை இப்போதாவது உணர்ந்தாயே.அது போதும். . மாதவனை இனி நன்கு கவனி. நான் உயிரோடு இருக்கும்வரை உன்னோடு துணையாய் இருப்பேன். ” . நித்யா இப்போதெல்லாம் மாதவனிடம் அதிக நேரம் செலவிட்டாள். பன்னிரண்டு மணி அடித்தால் சத் சங்கம் என்று இருப்பவள் இப்போதெல்லாம்  அதைப்  பற்றி கண்டுகொள்வதில்லை. ”என்னிடம்  அவள் கனிவுடன் பேசுகிறாள். அன்பே வடிவானவளாக மாறி விட்டது  எனக்கு மிகவும்  ஆச்சரியத்தைக் கொடுத்தது. நித்யா வெளியே கிளம்புவதற்கு தயார் செய்து கொண்டிருந்தாள். சுலோக வகுப்புக்கோ அல்லது நாராயணீயம் வகுப்புக்கோ போகப் போகிறாள் என்று நினைத்தேன். ” நான் டாக்டரிடம் மாதவனை அழைச்சிண்டு போறேன். ” என்றவளை நான் திகைப்புடன் பார்த்தேன. ” மாதவனுக்கு உடம்பு சரியாயிடுத்துன்னு பார்க்கறீங்களா? ”பார்த்தசாரதிதான், ஆட்டிசத்துக்கு அடையாறில் ஸ்பெஷல் டாக்டர் ஆளவந்தார்  இருக்கார். அவரிடம் மாதவனைக் காண்பியுங்கள். பயிற்சிகளின் மூலம் அவனைப் பேச வைச்சிடுவார் ” என்று அட்ரஸ் கொடுத்தான். ஒரு வாச்மேனுக்கு   இருக்கிற மனித நேயம் கூட எனக்கு இல்லையே என்று நினைத்தால்  எனக்கு ரொம்ப வெட்கமாயிருக்கு. “நித்யா, நீ சொல்வது மிகவும் சரி. கடமையென்றால் என்ன? எதைச் செய்யணுமோ அதை செய்வதுதான் கடமை. ஆனால் நாம் எதுக்கு முக்யத்துவம் கொடுக்கிறோமோ அதைச் செய்வதை   கடமையாய் நினைக்கிறோம்.  உன்னிடமிருந்து எனக்கும்  தெளிவு பிறந்தது. நானும்   என் கடமையைச் செய்யத் தவறி விட்டேன். பிறந்தோம் , வளர்ந்தோம்,  வாழ்ந்தோம் என்று  இந்நாள்வரை நேரத்தை வீணடித்து விட்டேன் ; எதையும் கண்டிலேன் ;. புத்தகங்களையாவது படித்திருக்கலாம். அதுவும் செய்திலேன். எதுவும் தெரியாமல் மூடனாக இருந்து விட்டேன்.  நீ மனம் மாறி விட்டாய். நானும் மாறி விடுகிறேன். இறையடியை   மனதில் பற்ற பகவானின் நாமத்தை இனி  சொல்லப் போகிறேன்., மாதவன் இளங்குருத்து. அவனை நன்றாக வளர்ப்பது நம் கடமை. அவனுக்குப் பாடம்  கற்றுக் கொடுப்பதில்  தினந்தோறும் கொஞ்ச நேரத்தைச் செலவழிப்பேன்.  நித்யா, உன் கிட்டே இருக்கிற பகவத் கீதை புத்தகங்களையெல்லாம் எங்கிட்டே கொடு .நேரம் கிடைக்கும் போது  கீதையின் மணத்தை நுகருகிறேன்..” .. . ”ஓ, பேஷா கொடுக்கிறேன். கீதையை வாசியுங்கள்” என்று சிரித்தாள். அவள் கண்களில் அன்பு  பளிச்சிட்டது. உடனே ஒரு புத்தகத்தை  எடுத்து என்னிடம் கொடுத்தாள். . ”வா படடு வா, போகலாம்” என்று மாதவனைக் கொஞ்சி அழைத்தாள்.  அவன் கன்னத்தில் பாச மழையைப் பொழிந்தாள். ஞானம் வந்த பின்பே  அவளிடம் பாசம் பொங்கியது. . அப்போது வாச்மேன் பார்த்தசாரதி,” நான் எதாவது உதவி  செய்யணுமா ஐயா? ”என்று என்னை நோக்கிக்  கேட்டுக் கொண்டே வந்தான். ”நீ யாரப்பா.? பெற்றப் பிள்ளையாட்டம்  இவ்வளவு கரிசனத்துடன் கேட்கிறாய். கேட்காமலேயே உதவி செய்கிறாய்.” என்றேன். ”என் அ..ப்...பா  தஞ்சாவூர் பட்சிராஜன். “ எனக்கு ஆச்சரியம் மேலிட்டது . ஆம் ! நான் அன்று உதவி செய்த அதே பட்சிராஜன் !. நாராயணா ! உன் கணக்கும் சரியாகத்தான் இருக்கிறது என்று  வாய்  முணுமுணுத்தது. கண்களிலிருந்து பெருகிய கண்ணீர் உதட்டின் வழியாக வாயில்  விழுந்து   இனித்தது !                        []     15. உதிர்ந்த மலர்   நான்  கடிகாரத்தைப் பார்த்தேன். மாலை மணி ஆறு ஆகிவிட்டது என்பதைப் பார்த்ததும் அரக்கப் பரக்க எழுந்தேன் . அடடே, நேரம் ஆகிவிட்டதே என்று அலுவலகத்தை விட்டு வெளியே வந்தேன்.. நான் திநகரிலிருந்து  திருவான்மியூர் போக வேண்டும் . பேருந்து நிலையத்தில் ராதிகாவைப் பார்த்தேன். . அவளைத்  தினந்தோறும் அங்குப் பார்க்கிறேன். . அவள் தோழி சந்தியாவுடன் மைலாப்பூர் பஸ்ஸைப் பிடிக்க நின்றிருப்பாள். அவர்கள் இருவரும் ஒரு தனியார் கம்பெனியில் வேலை செய்கிறார்கள் . ”ஹலோ” என்றால் அவளும்  ”ஹலோ” என்பாள்.   ராதிகா  கொடிபோல் வசீகரமாய் இருப்பாள். சந்தியாவை விட ராதிகா அழகானவள். என்னைப் பார்த்தவுடன் புன்னகை பூப்பாள். மிகவும் மென்மையானவள் ;சுவையாகப் பேசுவாள். புத்திசாலியும்கூட  எதையும் சட்டென்று புரிந்து கொள்வாள். குறும்பு அவள் கூட பிறந்த குணம். ஒரு முறை, “வெளுத்து கட்டறே ! என்று வாட்ஸ்அப்பில் மெசெஜ் போட்டிருந்தேன். ”நான் துணியெல்லாம் நல்லா வெளுக்கிறதில்லேன்னு வீட்டிலே சொல்றாங்க “ ! என்று குறுநகை பதில் வந்தது. அன்று ஏனோ தெரியவில்லை . சந்தியாவை மட்டும்தான் பார்க்க முடிந்தது. ராதிகா தென்படவில்லை. அவள் இல்லாமல் ஒரு வாரம் போனது . பொறுக்க முடியாமல் “ எங்கே உங்கள் தோழியைக் காணோம் . விடுமுறையில் வெளியூருக்குப் போயிருக்காங்களா?”  நான் சந்தியாவிடம் கேட்டு விட்டேன்..   “அவள் எங்கள் கம்பெனி வேலையை விட்டுவிட்டு வேறு வேலையில் சேர்ந்து விட்டாள்” ”எங்கே?” ”தெரியாது . அவ மொபைல் நம்பர் தரேன். அவளையே கேட்டுக்கோங்க”. அவள் மொபைல் நம்பரை நான் குறித்துக் கொண்டேன். அடுத்த நாள் ராதிகாக்குப் போன் செய்தேன். ஓரிடத்தில் ரிஷப்னிஷ்டாக   வேலைக்குச் சேர்ந்துவிட்டதாகச் சொன்னாள். எங்கள் நட்பு வாட்ஸ் அப்பில் வளர்ந்தது. காலையில் குட்மார்னிங் அனுப்புவாள். நான் ஏதாவது மெசேஜ் அனுப்புவேன். அவள் பதிலுக்கு ”நைஸ்” என்று பதில் அனுப்புவாள். டங்கலீஷ் அதாவது தமிழை ஆங்கிலத்தில் டைப் செய்வது.  வல்லமையுடன் டங்கலீஷில் பதில் தருவாள். பதில் எப்பவும் சுருக்கமாக இருக்கும். சாதாரணமாய் நான் அனுப்பும் மெசேஜீக்கு அவள் பதிலே அனுப்பமாட்டாள். அவளிடம் கெஞ்சிக் கேட்டுக் கொண்டதில், அன்று முதல் ஓ.கே” என்று பொருள்படும்படியாய்  “கே”என்று   பதில் அனுப்புவாள். ஒரு நாள் ஒரு கவிதையை எழுதி அவளிடம் சமர்ப்பித்தேன். ”கவிதை பிரமாதம் . ஒரு புக் போடலாம்போல” என்றாள். இவ்விதம் எங்கள் நட்பு நாளொரு வாட்ஸ் அப் மெசேஜீம் பொழுதொரு ஃபேஸ் புக் செய்தி பரிமாற்றத்தாலும்  வளர்ந்தது. இப்படி இருக்கும்போது ஒரு நாள் , அவள் பாடும்  காணொளி  அனுப்பியிருந்தாள். ”பாட்டு அருமை . உன் கண்கள் பேசுதடி” என்று மெசேஜ் அனுபிச்சேன். தேங்ஸ் என்னும் பதில் வரவில்லை. ”பதிலுக்காக காத்திருக்கேன்” என்று மெசேஜ் அனுப்பினேன் பதில் இல்லை . நான்  பத்தாவதுமுறையாய் வாட்ஸ் அப்பில் ராதிகாவிடமிருந்து பதில் வந்திருக்கிறதா என்று பார்த்தேன். எனக்கு ஏமாற்றம்தான். நீல டிக் காணப்படவில்லை. ராதிகா ஏன் பதில் போடாமல் இருக்கிறாள் . அவளுக்கு என் மேல் கோபமா என்று புரியாது தவித்தேன்.. வாட்ஸ் அப்பில் அவளைத் தொடர்பு கொள்ள முடியவில்லை . என் நம்பரை பிளாக் செய்து விட்டிருக்கிறாள். நான் என்ன தவறு செய்தேன் என்று மனம் சஞ்சலப்பட்டது. அவள் இப்போது அலுவலகத்தில் இருப்பாள் போன் செய்து கேட்டுவிட வேண்டியதுதான் என்று நினைத்தேன்,.அவள் அலுவலகத்திலிருக்கும்போது   போன் செய்வதைத் தவிர்த்து விடுவேன் அவள் வேலைக்கு இடைஞ்சலாய் இருக்குமென்று. இப்போது வேறுவழியில்லை. அவள் மொபைலுக்குப் பலமுறை  போன் செய்தேன் . அவள் எடுக்கவே இல்லை . குறுஞ்செய்தி அனுப்பினேன். . எதற்கும் பதிலில்லை. இப்படியே ஒரு மாதம் முயற்சி செய்தேன் பலன் எதுவுமில்லாமல். ராதிகாவை  பார்க்க முடியவில்லை. அவளிடம்  தொடர்பு கொள்ள முடியவில்லை. வாழ்க்கையே வெறுத்து விட்டது போல் இருந்தது. நாம் அதிகம் மதிப்பு வைத்திருக்கும் ஒருவர் நம்மை அலட்சியம் செய்தால் அதைத் தாங்க முடிவதில்லை. அவளிடம் நட்புடன்தான் பழகினேன். வரம்பு மீற வில்லை. எனக்கு அவள் மீது காதலும் கிடையாது . எனக்காக என் அத்தை பெண் திருமணம்  செய்ய காத்திருக்கிறாள். அதை ராதிகாவுக்கு நான் தெரியப்படுத்தவில்லை.. ”ராதிகா வெளிப்படையாய் பேசி நட்புக்கு ”பை” என்று சொல்லி விட்டிருந்தால் நான் கவலைப்பட்டிருக்க மாட்டேன். அவள் எதுவும் பேசாமல் திடீரென்று தொடர்பைத்  துண்டித்ததால் என் மனம் மிகவும் காயப்பட்டது. மரண அடி ! அதைவிடக் கத்தியால் குத்தியிருக்கலாம் . வலியைப் பொறுத்துக் கொண்டிருப்பேன். அவள் என் நட்பை தவறாகப் புரிந்து கொண்டிருக்க வேண்டும். கேள்வி தெரிந்தால்தானே விடை தர முடியும்.” ”சீ, போனால் போகட்டும், அவளால் எனக்குக் காரியம் எதுவுமில்லை என்று ஒதுக்கிவிட என்னால் முடியவில்லை . என்னை நிராகரித்ததிற்குக் காரணம் அறியத் துடித்தேன். ஒரு வேளை நான் ஏதாவது தவறு செய்திருந்தால் அல்லது அவள் மனத்தைக் காயப் படுத்தியிருந்தால், ஒரு முறை, ஒரே ஒரு முறை அவளைப் பார்த்து அவளிடம் மன்னிப்பு கேட்க விழைந்தேன். அவள் எப்போதும் என் சிந்தையிலே இருந்ததால் என்னால் அலுவலக வேலைகளைக்கூட சரியாகச் செய்ய முடியவில்ல. என்னுடைய மேனேஜர் எனக்கு இரண்டு முறை மெமோ கொடுத்தார். டூ வீலர் வண்டி ஓட்டும்போதும் அவள் நினைவுதான். ஒரு நாள் பெரிய விபத்து நடந்திருக்கும். தெய்வாதீனமாய் பிழைத்தேன்.” நண்பன் சீனு , ” குமார், ஏன் எதையோ இழந்ததைப் போல்  இருக்கிறாய். உன் முகத்தில் வாட்டம் தெரிகிறதே. ஏதாவது பிரச்சனையா ? என்னிடம் சொல். என்னால் முடிந்ததை செய்கிறேன்” என்றான். நாங்கள் இருவரும் தெருவில் பேசிக் கொண்டே நடந்து சென்றோம். ”ராதிகாவைப் பற்றித்தான் நினைத்துக் கொண்டிருக்கேன். அவள் மெளனத்தை என்னால் தாங்க முடியவில்லை. என்னால்  அலுவலகத்தில் வேலையே செய்ய முடிவதில்லை. என் சிந்தையில் அவள் இருபத்தி நாலு மணி நேரமும் இருக்கிறாள். உடனே காதல், கத்திரிக்காய் என்று நினைத்து விடாதே. வெறும் தோழமைதான். நட்பை அவள் கத்தியால் குத்தி விட்டாள்” என்றேன். ”அவ கிடக்கிறா. விட்டுத் தள்ளு . ஒண்ணுமில்லாத விஷயத்துக்கு நீ ஏன் கவலைப் படவேண்டும்.” ”என்னாலே முடியல . நன்றாகப் பேசிக் கொண்டிருந்துவிட்டு திடீரென்று இப்படி நட்பை கத்தரித்து விட்டாளே பாவி. ஒரு செடியிலிருந்து உதிர்ந்த மலர் போல் அவள் வாட்ஸ் அப் வட்டதிலிருந்து நட்பு சங்கிலியிலிருந்து உதிர்ந்து விட்டேன். ”. ”குமார், நான் ஒண்ணு சொன்னால் கேட்பியா? உன் மேல் உள்ள அன்பினால் நண்பன் என்னும் உரிமையோடு சொல்லுகிறேன். தவறாக நினைக்கக்  கூடாது.” ”சொல். நீ என் நல்லதுக்குத்தானே சொல்வாய்.” ”எனக்குத் தெரிந்த மனநல மருத்துவர் ஒருவர் இருக்கிறார். அவருடைய கிளினிக் கோடம்பாக்கத்தில் இருக்கிறது . நாளை அவரிடம் போகலாம் . உனக்குத் தேவை மனமாற்றம் . அதற்குத் தேவையான மருந்தை அவர் தருவார்” என்றான். ” எனக்கு எதுவுமில்லை. நான் எதுக்கு மனநல மருத்துவரிடம் போகவேண்டும். அதெல்லாம் ஒன்றும் வேண்டாம்.” என்றேன். அப்போது எங்கள் எதிரே ஐம்பது வயது மதிக்கத் தக்க ஒருவர் வாயில் ஒரு விசிலை வைத்து பலமாக ஊதினார். இரண்டு தடவை  ஊதிவிட்டு எங்களுக்கு எதிரே கையை நீட்டினார். நாங்கள் அதைச் சட்டை செய்யவில்லை. ”தப்பா”  என்றார். பேசாமல் அவரைக் கடந்து சென்றோம். சீனு ” இந்த மாதிரி நீ ஆகக்கூடாது. அதனால்தான் மனநல மருத்துவரிடம் போக வேண்டுமென்கிறேன்” என்றான் என்னுடைய ஆருயிர் நண்பன் அவன் செய்தால் எதுவும் சரியாகத்தான் இருக்கும் என்பதால் ”சரி” என்றேன். டாக்டர் புத்ரனின் கிளினிக்கை நாங்கள் சரியாக பிற்பகல் நான்கு மணிக்குள் போய் சேர்ந்து விட்டோம். அப்போது ரிஷப்னிஸ்டு அங்கு இல்லை . டாக்டர் வந்துவிட்டிருந்தார். டாக்டர் என்னிடம் ஒரு மணி நேரம் பேசினார் . நான் சொல்வதையெல்லாம் பொறுமையாய் கேட்டார். அவர் என்னிடம் கேட்டார். ”உங்களுக்கு வாழ்க்கையில் ஏதாவது குறிக்கோள் இருக்கிறதா ?” ”இதுவரை இல்லை”. “ குமார் , அவளை மறந்து விடுங்கள். அவள் எப்படியாவது போகட்டும்.  நல்ல புத்தகங்களைப் படியுங்கள் . தினமும் உடற்பயிற்சி செய்யுங்கள் . இன்று முதல் வாழ்க்கையில் ஏதாவது குறிக்கோளை வைத்துக் கொண்டு அதை அடைய முயற்சி செய்யுங்கள். இதுதான் என் பிரிஸ்கிரிப்ஷன் “என்றார். ” சரி டாக்டர் . உங்க பீஸ்........... ? ரிஷப்னிஸ்ட் கிட்டே கேளுங்கள் என்றார் . நான் வெளியே வந்ததும் சீனுவிடம் ரிஷப்னிஸ்டிடம்  டாக்டர் பீஸ் கொடுக்கச் சொன்னார் என்று சொல்லிவிட்டு  ரிஷப்னிஸ்ட் அமர்ந்திருந்த இடத்தை நோக்கி என் பார்வை சென்றது . அவளைப் பார்த்ததும் அதிர்ச்சி அடைந்தேன். ராதிகாவை அங்கு பார்ப்பேன் என்று கனவிலும் நான் நினைக்கவில்லை. பழம் நழுவி பாலில் விழுந்தது போலிருந்தது எனக்கு. . ”ஹா, நீயா? உன்னை இங்கு எதிர்பார்க்கவே இல்லை. ராதிகா, இப்படி பண்ணிட்டயே... ஏன் அப்படிச் செய்தாய் ? நான் செய்த தவறு என்ன?  ஏன் என்னை கத்திரித்துவிட்டாய் ?” என்று படபடவென்று கேட்டேன். அவள் சில நிமிடங்கள் மெளனமாக இருந்துவிட்டுப் பிறகு சொன்னாள். ”என்னை வர்ணனை செய்வது எனக்குப் பிடிக்காது. ஒரு தோழி கிட்டே நீ அழகாயிருக்கிறாய் என்று சொல்வதோடு நிறுத்திக்கணும். அதுக்கு மேலே போகக்கூடாது. இது என் ஒப்பினியன் “ “நான் தவறாக எதுவும் சொல்லலியே.” ”வார்த்தை முதலில் கண்ணில் ஆரம்பிக்கும். பின் மற்ற அவயங்களைத் தொடும். எனக்குப் பிடிக்கல”. ”என்னை வெறுக்கிறாயா ?” ”நான் சொல்ல மாட்டேன்” என்றாள் ”என்னிடம் சொற்குற்றம் அல்லது  பொருட்குற்றமோ இருக்கலாம். மனக்குற்றமில்லை. சத்தியமாய் சொல்கிறேன், உன்னை மிகவும்  உயர்வாய் நினைத்தேன், நினைக்கிறேன், நினைப்பேன்.  நான் தவறு செய்ததாகவே வைத்துக்கொண்டாலும் நான் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். நீ என்னை ஒதுக்கினாலும், வெறுத்தாலும், அவமானப் படுத்தினாலும் நான் உன்னை வெறுக்கமாட்டேன். என்னைப் பொறுத்தவரை தூய  நட்பு மடிவதில்லை. ஆனால்  அதில்  விரிசல் உண்டாகலாம்.  என்றாவது ஒரு நாள் நான் தவறு செய்யவில்லையென்று நீ உணருவாய். அப்போது  திரும்ப  வருவாய் நம் நட்பு துளிர்க்கும் என்னும் நம்பிக்கை எனக்கு இருக்கிறது.  அதுவரை நான் பொறுமையாய் காத்திருப்பேன் “ என்றேன். ”அது என் விருப்பம். என்னை யாரும் வற்புறுத்தக்கூடாது” ராதிகா வெடுக்கென்று முகத்தைத் திருப்பிக்கொண்டாள். அவளுடன் கூட இருந்த ஒருபெண் , டாக்டர் பீஸ் இரண்டாயிரம் என்றதும் சீனு பணத்தைக் கொடுத்தான். ”நண்பர்களுக்குள்ளே குறைகளை மன்னித்து பிளஸ் , மைனஸ் பார்க்காமல் இருந்தால் நட்பு வலுப்படும். இல்லாவிட்டால் விரிசல்தான் விழும்” என்று சீனு சொன்னதை ஆமோதித்தேன். நாங்கள் வெளியே வந்துகொண்டிருக்கும்போது  ராதிகாவின் அருகில் இருந்த பெண்மணி அவளிடம், ”அவர் அவ்வளவு கெஞ்சுகிறாரே. நீங்கள் ஏன் அவரை மன்னிக்கக் கூடாது ” என்று  கேட்டதுக்கு ” அடிப் போடி, அது  ஒரு  பைத்தியம்” ராதிகா சொன்னது காதில் விழ அப்படியே  ஸ்தம்பித்தேன்.                                  []                   16. ஸ்மார்ட்போன் பிடியிலிருந்து...   “அம்மா எனக்கு இந்தப் பாடம் புரியல. சொல்லிக் கொடும்மா” என்று புத்தகத்தோடு தன் அருகில் வந்த அர்ச்சனாவிடம் லட்சுமி,”போடி அந்தாண்டே, மம்மி வேலையாயிருக்கிறது தெரியலையா?” என்று எரிந்து விழுந்தாள். அர்ச்சனா அம்மாவை அச்சத்துடன் பார்த்துக் கொண்டே நகர்ந்தாள். லட்சுமி படித்தவள். பெயரில் மட்டுமல்ல. அழகிலும் மகாலட்சுமியைக் கொண்டிருந்தாள். ஆறு மாசமாய் அம்மா தன்னிடமிருந்து விலகிப் போவதை அந்தச் சிறுமி உணர்ந்தாள். ஸ்மார்ட் போன் வந்த பிறகு லட்சுமி அர்ச்சனாவிடமிருந்து மட்டும் விலகிப் போகவில்லை. அவள் கணவன் ஹரியிடமிருந்தும்  விலகிப் போய் கொண்டிருந்தாள். எல்லாம் ஆறு மாசத்துக்கு முன்னால் ஹரிக்கு டீம் லீடராக பதவி உயர்வு கிடைத்த மகிழ்ச்சியைக் கொண்டாட லட்சுமிக்கு நவீன அலைபேசி (ஸ்மார்ட் போன்) ஒன்று வாங்கிக் கொடுத்தான். அதுதான் அவன் செய்த தவறு . லட்சுமி வாட்ஸ் அப் பார்க்க ஆரம்பித்தாள். முதல் காதல் மாதிரி அவள் மனம் அதில் முழுவதும்  ஈடுபட்டது. பழைய நண்பர்களுடன் தொடர்பு கொண்டாள் . கல்லூரியில் படித்த ஆண் நண்பர்கள், பெண் நண்பர்கள் எல்லோருடன் நட்பு தொடர்ந்தது. இந்தியாவில் மட்டுமில்லாமல் வெளிநாட்டிலும் அவளுடன் கல்லூரியில் படித்த நண்பர்களுடன் தொடர்பு மலர்ந்தது. வாட்ஸ் அப் ஐகானில் அவள் புகைப்படத்தை அடிக்கடி மாற்றினாள். ஸ்டேடஸ் போட ஆரம்பித்தாள். வாட்ஸ் அப்பில் சேட்டிங் செய்ய ஆரம்பித்தாள்.   ஆண் நண்பர்களிடமிருந்து அவள் அழகைப் புகழ்ந்து அவளுக்கு மெசேஜ் வரும், அதுவும் எப்படி, ”டார்லிங்,அன்பே, ஆருயிரே, தங்கச்சிலை, செல்லச் சிறுக்கி ... இதைவிட மோசமாய் வரும்.  அவள் மறுப்புச் சொல்லாமல்  சேட்டிங் செய்வாள்.  ரொம்ப மோசமாய் ஜொள்ளு விட்டு  வரம்பு மீறி சாட்டிங் செய்யும் ஆண் நண்பர்களும் உண்டு. அதுவும் எப்போ இரவு நேரத்தில். தன் அம்மாவைப்  பார்த்து அர்ச்சனாவுக்குப் பத்திண்டு வரும்.  அம்மாவுக்கு ஏன் இப்படி புத்தி போறது என்று ஆதங்கப்படுவாள். ஆனால் அவளால் எதுவும் செய்ய முடியாது. ஹரியின் பாடு இதைவிட மோசம் . அவன் வேலை முடிந்து வீடு வரும்போது இரவு ஒன்பது மணி ஆகிவிட்டிருக்கும். டைனிங் டேபிள் மேல் சப்பாத்தியும் சப்ஜியும் வைத்திருப்பாள். முன்பெல்லாம் அவன் வந்தவுடன் அன்புடன் அவனுக்குப் பரிமாறுவாள் . வாட்ஸ் அப்பில் சாட்டிங் செய்ய ஆரம்பித்ததிலிருந்து அவள் கவனம் எல்லாம் வாட்ஸ் அப்பில்தான் இருந்தது. அதனால் இரவு டிபனை டைனிங் மேசை மீது வைத்துவிட்டு அவள் வாட்ஸ் அப்பில் முழுகியிருப்பாள். அவன் தான் எடுத்துப் போட்டுக் கொண்டு சாப்பிட வேண்டும். இதுகூட பரவாயில்லை. தாம்பத்திய உறவுக்காகக் மணிக் கணக்கா காத்திருப்பான்.  அவளைக் கெஞ்சுவான். அவள் கொஞ்சம்கூட கருணையில்லாமல், “ போய் படுங்க. நான் கொஞ்ச நேரத்தில் வருகிறேன்” என்பாள். ”நாசமாப் போன வாட்ஸ் அப்பிலிருந்து வெளியே வா” என்று கத்துவான். அவள் சட்டை செய்ய மாட்டாள். நாள் முழுவதும் வேலை செய்த களைப்பு வேறு . அவளுக்காகக் காத்திருந்து அவன் தூங்கிப் போய்விடுவான். அவள் அவனை எழுப்ப  வேண்டியிருக்கும். அவள் அலைபேசியை தன் படுக்கைக்கு அருகிலேயே வைத்திருப்பாள். தூங்கும்போது கூட அடிக்கடி எழுந்து அலைபேசியில் வாட்ஸ் அப் மெசேஜைப் பார்ப்பாள். ஒருநாள் இரவு சுமார் மூன்று மணி இருக்கும். ஹரிக்குத் தூக்கம் கலைந்தது. தன் பக்கத்திலிருந்த லட்சுமியைக் காணவில்லை. அவனுக்குத் துணுக்கென்றது . எழுந்து வந்து பார்த்தால் லட்சுமி  டைனிங் மேஜையின் மீது அமர்ந்து வாட்ச் அப் மெசெஜ் கொடுத்துக் கொண்டிருந்தாள் . அதைப் பார்த்து அவனுக்குக் கோபம் பொத்துக் கொண்டு வந்தது. ”சனியனே வந்து படு . எப்போ பார்த்தாலும் வாட்ஸ் அப் ... ” என்று கத்தினான். ”எனக்குத் தூக்கம் வரவில்லையென்பதால்தான் அலைபேசியைப் பார்த்துக் கொண்டிருந்தேன்.இதுக்குப் போய் கோவிச்சுகிறீங்களே . ”  அவள் படுக்கை அறைக்குள் வந்தாள். அன்று அர்ச்சனாவுக்குக் கணக்குப் பாடத்தில் ஒரு சந்தேகம் வந்தது. அம்மாவிடம்தான் அவள் எப்போது சந்தேகம் வந்தாலும் கேட்பாள். லட்சுமி பிஎஸ்சி கணித பட்டதாரி. மொபைல் கேம் விளையாட்டில் தன்னை  இழந்திருந்த அவள் கோபத்துடன்,  ”மம்மியைத் தொந்தரவு செய்யாதே என்று எத்தனை தடவை உனக்குச் சொல்லியிருக்கேன். உனக்கு அறிவு இருக்கா?  உனக்குக் கணக்குச் சொல்லித் தர எனக்கு நேரம் இல்லை. உன் சிநேகதி ரஞ்சனியிடம் கேட்டுத் தெரிஞ்சுக்கோ. இல்லாட்டா உன் கிளாஸ் டீச்சர் சந்திராவிடம் கேட்டுக் கத்துக்கோ” என்று கத்தினாள். அர்ச்சனாவுக்கு கண்களிலிருந்து கண்ணீர் கொட்டியது. ”அம்மா மாறி விட்டாள்” என்று அவளுக்குப் புரிந்தது. இதை அவள் யாரிடம் சொல்லுவாள் , டாடியிடம்தான் சொல்ல வேண்டும் என்று நினைத்துக் கொண்டாள். அன்று இரவு ஹரி வந்ததும், ”அப்பா எனக்கு இந்த கணக்கைச் சொல்லி தாப்பா. அம்மாவைக் கேட்டா சொல்லித்தரமாட்டேன் என்கிறாள். எப்போவும் அலைபேசியைக் கையில் வைத்துக் கொண்டிருக்கிறாள்” என்று வந்ததும்  வராததுமாய் தந்தையிடம் புகார் செய்தாள். ”அம்மாவை நான் கேட்கிறேன் . உனக்குக் கணக்குதானே வேண்டும் . உன் ஃபிரண்ட் வித்யாவிடம் கற்றுக் கொள். எனக்கு கணக்கு அவ்வளவாக வராது” என்றான் ஹரி. ”சரி. நீங்கள் முதலில் சாப்பிடுங்கள்” என்றாள் அர்ச்சனா. அர்ச்சனா தன் தோழி வித்யாவிடமும் தன் அம்மாவைப் பற்றி சொல்லி வருத்தப்பட்டாள். ஏதாவது செய்து அம்மாவின் வாட்ஸ் அப்பிலிருந்து மீட்க வேண்டுமென அவள் துடித்தாள். அவள் பிஞ்சு மனத்தில் ஒரு திட்டம் தோன்றியது. அவள் அம்மா குளிக்கப் போகும்போது அலைபேசியை எடுத்து தன் புத்தக அலமாரியில் புத்தகங்களுக்குப் பின்னால் ஒளித்து வைத்துவிட்டாள். அம்மா தேடுவாள். கிடைக்கவில்லையென்றால் அந்தப் பழக்கத்தை விட்டு விடுவாள் என்பது அவள் எண்ணம். அவள் நினைத்ததைப் போலவே அம்மா தேடினாள். அர்ச்சனாவையும் தேடச் சொன்னாள். ஆனால் தேடிக் கொண்டிருக்கும்போது அலைபேசி போன் ஒலிக்க அர்ச்சனா  புத்தகப் பையின் பின்புறத்திலிருந்து அதை வெளியே எடுத்தாள். அர்ச்சனாவுக்கு நல்ல அடி விழுந்தது. ”ஏண்டி, கழுதை, என்ன தைரியமிருந்தால் என் அலைபேசியை எடுத்து ஒளித்து வைப்பாய். இனிமே இந்த மாதிரி செய்தே நான் சும்மா இருக்க மாட்டேன்” என்று முதுகில் ஓங்கி ஒரு அறை விட்டாள். அர்ச்சனா அழுது கொண்டே அந்த இடத்தை விட்டு நகர்ந்தாள். அவள் முயற்சி தோல்வியடைந்ததும் அம்மாவை அலைபேசி பிடியிலிருந்து எப்படி காப்பாற்றலாம் என்று யோசித்தாள். அந்தச் சிறுபெண்ணுக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை ? ஒரு நாள் அர்ச்சனா பள்ளியிலிருந்து  வீட்டுக்கு வந்தபோது புதிதாக யாரோ ஒரு அங்கிள் தன் அம்மாவுடன் பேசிக்கொண்டிருந்ததைப் பார்த்தாள். அவர்கள் பேசிக்கொண்டிருந்தது வினோதமாக இருந்தது அவளுக்கு. பேசிக்கொண்டிருக்கும்போது அடிக்கடி இருவரும் தங்கள் கையிலுள்ள அலைபேசியைப் பார்ப்பார்கள். அவர் மொபைலிருந்து ஒரு மெசேஜை அவளுக்கு அவர் அனுப்புவார். அவள் மொபைலிருந்து ஒரு மெசேஜை அவருக்கு அவள் அனுப்புவாள். லட்சுமியின் ஒண்ணுவிட்ட சித்தப்பாவின் பையன் . அண்ணன் உறவு ஆக வேண்டும். சிங்கப்பூரிலிருந்து வந்திருக்கிறார்  அவர் பெயர் மனோஜ்  என்பதை அவர்கள் பேச்சிலிருந்து அர்ச்சனா புரிந்து கொண்டாள். அன்று ஹரி இரவு எட்டு மணிக்கு  அலுவலகத்திலிருந்து வீடு வந்து விட்டான். அப்போது லட்சுமி அலைபேசியில் வாட்ஸ் அப் பார்த்துக் கொண்டிருந்தாள்.. ஹரி அவள் அருகில் போய் அவள் கையிலிருந்த அலைபேசியைப் பார்த்தான். வாட்ஸ் அப்பில், ”நீ அப்பவும் அழகு ! இப்பவும் அழகு !, ஸ்வீட் ஹார்ட் என்று இருந்தது. அவள் ”தேங்ஸ்” என்று பதில் அனுப்பியிருந்தாள். அவனுக்குக் கோபம் வந்தது. மொபைலை அவள் கையிலிருந்து பிடுங்கி வீசி எறிந்தான். கண்கள் சிவக்க, இது குடும்ப பெண்களுக்கு அழகா? எவனோ கண்டபடி வர்ணிக்கிறான். நீ சும்மா இருக்கறீயே’ என்றான். மொபைல் தூக்கி எறிந்தால் கோபமடைந்த லட்சுமி பதிலுக்கு கத்தினாள். ”என் சுதந்தரத்தில் தலையிடாதீர்கள். என் விருப்பம் என் உரிமை . உங்க வேலையைப் பார்த்திட்டுப் போங்க “  பக்கத்திலிருந்த ஒரு கரண்டியை தூக்கி அவன் மேல் எறிந்தான். அது அவன் தலையில் பட்டு கீழே விழுந்தது. இவர்கள் சண்டை போட்டுக் கொள்வதைப் பார்த்த அர்ச்சனா பயந்து விட்டாள். என்ன செய்வதென்று யோசித்து வீட்டை விட்டு வெளியே வந்தாள். தெருக்கோடி வரை நடந்து அங்கிருந்த மகளிர் காவல் நிலையத்திற்குள் நுழைந்தாள். என்னம்மா வேண்டும் என்று அங்கிருந்த இன்ஸ்பெக்டர் சிவப்பிரியா கேட்க , என் அப்பாவும் அம்மாவும் சண்டை போட்டு கொண்டிருக்கிறார்கள் . நீங்க வந்து தடுத்து நிறுத்துங்க. “ என்றாள் அழுதுகொண்டே. ”எதனாலே சண்டை?” ”அம்மா எப்போவும் வாட்ஸ் அப் பாப்பாங்க. அதனாலே சண்டை ”. சிவப்பிரியாவுக்குத் தூக்கி வாரிப் போட்டது. நாற்காலியிலிருந்து எழுந்தவள் ”வா போகலாம் “ என்றாள். இருவரும்  அந்த இடத்தை விட்டு நகர்ந்தார்கள். அதற்குள் வீட்டில் சண்டை மும்முரமாகி ”நான் உங்களை விவாகரத்துச் செய்யப் போறேன்.  இப்பவே எங்க அம்மா வீட்டுக்குப் போறேன்” என்று லட்சுமி கத்திக் கொண்டிருக்கும்போது, ”அப்படி செய்யாதீங்க.” என்று உள்ளே நுழைந்த சிவப்பிரியாவையும் அர்ச்சனாவையும் பார்த்து  இருவரும் திகைத்தனர். “நான் மகளிர் காவல் நிலையத்தில் இன்ஸ்பெக்டராய் இருக்கிறேன். என் பெயர் சிவப்பிரியா ”  என்று  அறிமுகம் செய்துகொண்டவளிடம் வெறுப்புடன் பார்த்த லட்சுமி, ”ஏண்டி இது உன் வேலையா ? உன்னை ... ”லட்சுமி  அர்ச்சனாவை  அடிக்க கையை ஓங்கினாள். ”நிறுத்துங்க? நீங்க பண்ணறது கொஞ்சங்கூட நல்லா இல்லை. குழந்தைக்குப் படிப்பு சொல்லிக் கொடுக்காம நீங்க நாள் முழுவதும் அலைபேசியைப் பாத்துண்டே இருந்தா குடும்பம் எப்படி உருப்படும். வீட்டுக்கு விளக்கேத்த வந்த மகராசி இப்படிச் சீரழியலாமா? . குடும்பம் என்னும் கோவில் சிதைந்துவிடுமே ! ”அவள் சின்ன பெண். அவளுக்கென்ன தெரியும் . அவள் சொல்றதை நம்பி வந்துட்டிங்களே”. ” சில சமயம் குழந்தைகள் பெரியவர்கள் மாதிரி நடந்து கொள்கிறார்கள். பெரியவர்கள் குழந்தைகள் மாதிரி நடந்து கொள்கிறார்கள். அர்ச்சனா மாதிரி குழந்தை கிடைத்தது நீங்கள் செய்த தவம்”. என்னைக் கேட்க நீங்க யார்? எனக்கு எதில் இன்பம் கிடைக்கிறதோ அதை நான் செய்யறேன். நீங்கள் போலீஸ் இன்ஸ்பெக்டராய் இருக்கலாம். ஆனால் என்னுடைய சொந்த விஷயத்தில்  நுழைய  உங்களுக்கு உரிமையில்லை. ” நீங்கள் அறியாமையில் பேசுகிறீர்கள்.  இன்பம் கிடைக்கிறது என்பதாலே குடிக்கலாமா? நமக்கு ஆனந்தம் தருவதெல்லாம் நன்மை தராது. வாட்ஸ் அப் சாட்டிங் என்பது ஒரு போதை. குடிபோதையைவிட கொடூரமானது. அதில் மூழ்கிச் சீரழிந்துவிடக்கூடாது என்பதால் சொல்றேன். நிறையப் பெண்கள் வாட்ஸ் அப் பைத்தியமாய் இருக்காங்க.  ”தீதும் நன்றும் பிறர் தர வாரா”, என்று பெரியவங்க சொல்லி இருக்கிறதைப் போலத் தீமையை நாம்தான் தேர்ந்தெடுக்கிறோம். அதன் பலனையும் அனுபவிக்க நேரிடும்” .   என்னுடைய அக்கா மாலதியும்  உங்களைப் போல்தான் வாட்ஸ் அப் சாட்டிங்க்கு மீளா அடிமை ஆகி  ஒரு நாள் கணவனை விட்டு வேறு ஒரு ஆணுடன் ஓடி விட்டாள். இப்போது விவாகரத்து ஆகி  தான் செய்கையை நினைத்து மிகவும் வருத்தப்படுகிறாள். பால் சிந்திய பிறகு வருத்தப்பட்டு என்ன பிரயோசனம்? அவள்  நிலைமை உங்களுக்கும் வரக்கூடாதென்பதால் சொல்கிறேன். மாயையில் மாட்டிக் கொண்டிருக்கின்றீர்கள். அதிலிருந்து வெளியே வாங்க..  போலீஸ் இன்ஸ்பெக்டராய் அறிவுரை சொல்லவில்லை. என் சகோதரி மாதிரி பாவித்து சொல்கிறேன். நான் சொல்வதைக் கேளுங்க.” என்றாள் கண்களில் கண்ணீர் வழிய. அர்ச்சனாவும் , ”அம்மா ஆண்டி சொல்றதைக் கேளும்மா” என்றாள் ”நல்லா சொல்லுங்க இன்ஸ்பெக்டர் . நான் சொன்னைதை இவள் கேட்கல . நீங்க சொல்றதையாவது இவள் கேட்டுத் திருந்தட்டும் “ என்றான் ஹரி. ”நான் ஒண்ணும் தப்பு பண்ணலையே இன்ஸ்பெக்டர் ” ”அப்படி சொல்லாதீங்க. ஆண்கள் சில கெட்டவர்களும் உண்டு. முதலில் உங்களைப் புகழ்வார்கள்.  பிறகு காதலிக்கிறேன் என்பார்கள் . பிறகு அந்தரங்க வாழ்வில் நுழைவார்கள். ஏன் இந்த வம்பில் நாமாகவே போய் மாட்டிக் கொள்ள வேண்டும் ?இந்தப் பழக்கத்திலிருந்து மன தைரியமிருந்தால் எளிதில் விலகி விடலாம்”. சிவப்பிரியா கூறிய வார்த்தைகள் லட்சுமியின் மனதை மாற்றின.  அவளுக்குத் தான் செய்த தவறு புரிந்தது. ஸ்மார்ட்போன் பிடியிலிருந்து வெளிவரத் துடித்தாள். கலங்கிய கண்களோடு ”சாரி, இன்ஸ்பெக்டர். எல்லாம்  இந்த அலைபேசியால்  வந்த வினை. அதனால்தான் நான் கெட்டேன்.” என்றாள். ”ஸ்மார்ட் போனால் வந்த ஆபத்து என்று சொல்லுங்கள். அதைத் தூக்கி எறிஞ்சுட்டு சாதரண போனை உபயோகப்படுத்துங்கள். ஒரு பிரச்சனையும் வராது “. ”அப்படியே செய்கிறேன். இனி எனக்குச்  சதாரண அலைபேசி போதும் “ என்றாள் லட்சுமி ” நீங்கள் மனம் மாறியது எனக்கு மிகவும் மகிழ்ச்சியைத் தருகிறது. அலைபேசி பிடியிலிருந்து உங்களைக்  காப்பாத்திட்டேன்..  உங்கள் பெண் சின்ன பெண்ணாயிருந்தாலும் பொறுப்பா இருக்கிறாள். உங்களை மாதிரி இல்லை. அவளை நன்கு கவனித்துக் கொள்ளுங்கள் . அவளுடன் அடிக்கடி பேசுங்கள். நான் வருகிறேன்”. சிவப்பிரியா மனநிறைவுடன் தெருவில் இறங்கி நடந்தாள். லட்சுமி  சிவப்பிரியாவுக்குக் கையை அசைத்து  டாடா காண்பிக்க,  அர்ச்சனா போலீஸ் ஆண்டிக்கு ஃப்ளையிங் கிஸ் கொடுத்தாள்.   []     17. அப்பாவுக்கு ஒரு கடிதம்   சங்கரி  அவள் கணவன் கோபாலின் வருகைக்காகக் காத்திருந்தாள். வேலை முடிந்து அவன் வரும் நேரம் கடந்து விட்டது. கடிகாரம் எட்டு மணியைத் தாண்டி விட்டது. முன்பெல்லாம் கோபால்  சரியாக இரவு ஏழு மணிக்கு வந்து விடுவான். எப்பொழுது குடிப்பழக்கம் ஆரம்பித்ததோ, அப்போதிலிருந்து அவன் வீட்டுக்கு வருவதில்   காலதாமதம் ஆனது. தாசில்தார் ஆபிசில் அவன் வேலை பார்க்கிறான். சாதாரண கிளார்க் வேலைதான். பாழாய்ப் போன குடிப்பழக்கம் எப்படியோ அவனைத் தொற்றிக் கொண்டு விட்டது. எப்பொழுதாவது ஒரு நாள் என்று தொடங்கி இப்போது தினந்தோறும் குடிக்கும்  குடிமகனாக  ஆகி விட்டான். சங்கரி நல்லதனமாக சொல்லிப் பார்த்தாள். அவள் கூறிய அறிவுரைகள்  எதுவும் அவனை மாற்ற முடியவில்லை. சங்கரி பயந்த சுபாவம் உடையவள் ; கணவன் அடித்தாலும் உதைத்தாலும் திட்டினாலும் தாங்கிக் கொள்வாள்; எதிர்த்துப் பேச மாட்டாள்.   சங்கரிக்கு ஒரு பையன் ராமு.  கல்லுரியில் பி. காம் இரண்டாம் ஆண்டு படிக்கிறான். கோபால் போதையுடன் வீட்டுக்குள் நுழைந்தான். ”வாங்க சாப்பிடலாம்” என்றாள் சங்கரி.”நான்தான் தாசில்தார் . என்னை யாரும் தொந்தரவு  செய்யக் கூடாது ” என்று உளறி விட்டு  படுத்துவிட்டான். இது தினந்தோறும் நடக்கும் கூத்து. குடித்து விட்டு உளறுவான். ராமு “நான் அப்பாகிட்டே சொல்றேன். நான் சொன்னால் அப்பா கேட்பார்”  என்று சொன்னதோடு இல்லாமல்  “ அப்பா நீ இனிமேல் குடிக்கக் கூடாது . உன் உடம்பு  கெட்டுவிடும். குடிப்பதை விட்டு விடு ”  என்று சொன்னான். கோபாலுக்குக் கோபம் வந்தது. ராமுவின் கன்னத்தில் ஓங்கி  ஒரு அறை விட்டான். ”ஏண்டா முளைச்சு மூணு இலை விடலை. எனக்கு நீ புத்தி சொல்ல வந்துட்டயா. எனக்கு எல்லாம் தெரியும் . இன்னொரு வாட்டி என்கிட்டே இது மாதிரி சொன்னே உன்னைத் தொலச்சுடுவேன், தொலைச்சு ” என்று கத்தினான். ராமு அன்று இரவு ரொம்ப நேரம் தூங்கவேயில்லை. அப்பா குடிப்பதும் அதனால் உளறுவதும் அவனுக்குப் பிடிக்கவில்லை. ”அவர் எப்போது குடிப்பழக்கத்தை நிறுத்துவார்?  நல்லது சொன்னால் ஏன் கோபப் படணும்?” என்று யோசித்துக் கொண்டே தூங்கி விட்டான். இப்படி பலமுறை அப்பாவிடம் குடிக்காதே என்று கெஞ்சிக் கெஞ்சி ராமு அடிபட்டதுதான் மிச்சம். கோபால் திருந்த நினைக்கவில்லை. ஒரு  நாள் கோபால் குடித்து விட்டு வேட்டி அவிழ்ந்தது கூட தெரியாமல் சாக்கடைக்குப் பக்கத்தில் விழுந்திருந்தான். அவன் பக்கத்தில் பன்றி ஒன்று புரண்டு கொண்டிருந்தது.  பிரக்ஞை இல்லாமல் இருந்த அவன் ஒரு கையைப் பன்றியின் மீது போட்டிருந்தான். வேட்டியெல்லாம் சாக்கடை நீர் பட்டு அழுக்காயிருந்தது. ராமுவுக்கு அப்பாவை அந்த நிலையில் பார்க்க கோபம் பொத்துக் கொண்டு வந்த்து. அவரை கை கொடுத்துத் தூக்கினான். ”  ”நீ படுத்திருக்கிறது சாக்கடை. எழுந்திரு. வீட்டுக்குப் போகலாம்”. அங்கிருந்த ஒருவர் உதவியோடு அப்பாவைத் தூக்கி  ஆட்டோவில் ஏற்றி அவரை வீட்டுக்கு அழைத்து வந்தான். சங்கரி மிகவும் பதறிப் போனாள். “ எத்தனை முறை சொன்னாலும் கேட்காமல் குடித்துவிட்டு வந்தால் என்ன செய்வது? கடவுள்தான் அவருக்குப்  புத்தியைக் கொடுக்க வேண்டும். “ என்றாள். அடுத்த நாள் காலை ராமு அப்பா இருந்த அறைக்குள்  போனான்.. ”அப்பா கடைசியா கேக்கிறேன் . நீ குடிப்பதை நிறுத்துவாயா? மாட்டாயா ? நீ குடிப்பதும் உளறுவதும் எனக்கு கஷ்டமாகயிருக்கிறது.” கோபால்  ராமுவை எட்டி உதைத்தான். கிழக்கே உதிக்கும் சூரியன் மேற்கே உதித்தால்தான் அப்பாவின் மனம் மாறும். என்ன செய்யலாம் என்று ராகவன் ரொம்ப நேரம் யோசித்தான். ஒரு காகிதத்தை எடுத்து எதையோ எழுதினான். வீட்டை விட்டு கிளம்பினான். ரயில் நிலையத்திற்கு வந்தான். ரயில் வந்து கொண்டிருந்தது. சட்டென்று பிளாட்பாரத்திலிருந்து குதித்து ரயிலை நோக்கிப் பாய்ந்தான். எல்லோரும் பார்த்துக் கொண்டிருக்கும் போதே கண் மூடீ  திறக்கும் நேரத்தில் அந்தக் கொடூரம் நடந்துவிட்டது. ரயில் அவன் மேல் ஏறிவிட்டது. எல்லோரும் அதிர்ச்சியுடன் கத்தினார்கள்.. ரயில்வே  போலீசார் உடலை மீட்டனர். ராமுவின் மரணத்தைக் கேள்விப் பட்டு கோபாலும்  சங்கரியும்   சம்பவம் நடந்த இடத்திற்கு ஓடினார்கள். பிணத்தின் சட்டைப்பையில் ஒரு கடிதம் இருந்தது. அந்தக் கடிதத்தில் இருந்ததாவது -     அப்பாவுக்கு,   எல்லோருக்கும் சாரி..... எனக்கு உயிரோடு இருக்கப் பிடிக்கலே. உடனே இந்தவயசிலே என்ன கஷ்டம் என்று யோசிக்காதீங்க. எனக்கு எந்தப் பிரச்சனையும் இல்லே.என் சாவுக்கு யாரும் காரணம் இல்லே. செத்ததுக்கு அப்புறம் என்ன நடக்கப் போவது என்று தெரியலே. பார்த்துக்கலாம். எனக்குக் காதல் பிரச்சனை எதுவுமில்லை. எத்தனையோ முறை என் அப்பாவிடம குடிப்பழக்கத்தை விட்டுவிடும்படி மன்றாடிக் கேட்டுக்கொண்டேன் . அவர் குடியை நிறுத்தவில்லை. என் சாவு ஒன்றுதான்  அவர் மனத்தை மாற்றும் என்னும் நம்பிக்கையில் என் உயிரை விடுகிறேன். என் அப்பாவை முடிஞ்சா குடிக்கிறதை விட்டு ஒழுங்கா இருக்க  சொல்லுங்க. அம்மாவை விட்டுப்போவது எனக்குக் கஷ்டமாகத்தான் இருக்கிறது . ஆனால் எனக்கு வேறு வழி தெரியவில்லை . அம்மா என்னை மன்னிச்சுடு. யாரும் பீல் பண்ணாதீங்க.   இப்படிக்கு உங்களை விட்டு   நிரந்தரமாக பிரியும்,   ராமு   அதைக்கேட்ட சங்கரி பதறினாள் ; கதறினாள். ”ராமு போயிட்டயே. என் பிள்ளயை உயிரோட பறி கொடுத்துட்டு நிக்கறேனே. ஆண்டவா ! உனக்கு இரக்கம் என்பது கொஞ்சம் கூட இல்லையா ?” என்று அரற்றினாள். அந்தச் சம்பவம்  கோபாலின் மனதில் ஒரு மாற்றத்தை  ஏற்படுத்திவிட்டது. கோபால் விம்மி விம்மி அழுதான். இனிமேல் குடிக்க மாட்டேன் என்று பிணத்தின் மீது சத்தியம் செய்தான். அடுத்த நாள் தின இதழில் அந்தக் கடிதத்தைப் பற்றிய செய்தி  வந்திருந்தது . அதைப் படித்தவர்கள் கண் கலங்கினார்கள். காரியம் எல்லாம் முடிந்தது . வீடே சோகமாய் இருந்தது. அன்று  மாலை ஆறு மணி இருக்கும். கோபால் வீட்டில் இல்லை. எங்கேயோ வெளியே போயிருந்தான். பக்கத்து வீட்டிலிருக்கும் பொன்னி, ”அக்கா, கடை வீதி வழியாக வரும்போது  உன் வீட்டுக்காரரை டாஸ்மாக் கடைக்கிட்டே பார்த்தேன்” என்றாள். சங்கரிக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை . “ அடப்பாவி மனுஷா ! நீ என்னிக்குமே திருந்த மாட்டாயா ? “ என்று நொந்து கொண்டே டாஸ் மாக் கடையை நோக்கி   ஓடினாள். அங்கு தன் கணவனைத் தேடினாள். அப்போது ”குடிக்காதீங்க. குடிக்காதீங்க ” அடிக்கடி கேட்கும்  பரிச்சியமான குரல் அவள் காதில் விழுந்தது. குரல் வந்த திக்கை நோக்கினாள் ; ஸ்தம்பித்து நின்றாள்.   அங்கே கோபால் ஒரு அட்டையில் ”குடியால் என் மகனைப் பறி கொடுத்துவிட்டேன்” என்று எழுதிக் கழுத்தில்  மாட்டிக் கொண்டு டாஸ்மாக் கடைக்குள்  போகும் குடிமகன்களை இரு கைகூப்பி ”குடிக்காதீங்க, குடிக்காதீங்க” என்று   கெஞ்சிக் கொண்டிருந்தான்.   []                                                                 18. நீ என் மகனல்ல   ஒரு அடர்ந்த காடு . காட்டில் இந்திய ராணுவ வீரர்கள் வரிசையாய் போய்க் கொண்டிருக்கின்றனர். .பசுமையான மரங்கள் நிறைந்த மலைப் பிரதேசம். திடீரென்று சில இடங்களில் வெடிகுண்டு வெடிக்கின்றது. கூடவே துப்பாக்கி வெடிக்கும் சப்தம் கேட்கிறது. பதிலுக்கு நம் இராணுவ வீரர்கள் துப்பாக்கியால் சுடுகிறார்கள். ஆங்காங்கே மரம் தீப்பற்றி எரிகின்றது . தீ ஜ்வாலை கொழுந்து விட்டு எரிகிறது. ”அம்மா”  என்று அலறிக் கொண்டே தூக்கத்திலிருந்து கோதை விழித்தெழுந்தாள்.மிகுந்த பதற்றத்தோடு காணப்பட்டாள். ”என்னம்மா ஆச்சு?” தேன்மொழி மருமகள் கோதையை  வினவினாள். ”கனவில் நெருப்பைக் கண்டேன். அவருக்கு ஏதாவது ஆபத்து வந்து விடுமோ என்று கவலையாய் இருக்கிறது.” “ இந்தத் தண்ணீரைக் குடி.  . கடவுளை வணங்கிவிட்டுப் படு. . அகிலனுக்கு எந்த இடரும் வராது.” தண்ணீர் தம்ளரை நீட்டினாள். அவள் தண்ணீர் குடித்துவிட்டு படுத்துக் கொண்டாள். ”திரிசடையின் கனவு போல,  கனவுகள் நல்லது கெட்டதை வருமுன் தெரிவிக்கும். மகன் அகிலனுக்கு ஆபத்து எதுவும் வந்துவிடக் கூடாது” என்று வேண்டிக் கொண்டு படுத்தாள் தேன்மொழி. உறக்கம் உடனே வரவில்லை. இருள் அவள் வேதனையை அதிகரித்தது. தேன்மொழிக்கு இரட்டைப் பிள்ளைகள். மூத்தவன் அகிலன் இராணுவத்தில் இருக்கிறான் திருமணம் ஆகிவிட்டது மனைவி கோதையும் இரண்டு   வயதுக்  குழந்தை ஜோதியும் தேன்மொழியுடன் இருக்கிறார்கள். இன்னொரு பிள்ளை முகிலன். அவன் ஹைதாராபாத்தில் இருக்கிறான். ஊர் சுற்றும் வேலை. என்ன வேலை என்று யாருக்கும் தெரியாது. வருடத்துக்கு ஒருமுறை அம்மாவைப் பார்க்க திருச்சி வருவான். தேன்மொழியின் கணவர் ராமன்  மறைந்து மூன்று வருடம் ஆகிறது. அவர் தபால் இலாகாவில் வேலை செய்ததால் .  தேன்மொழிக்கு மாதம் மாதம்  பென்ஷன் வருகிறது. அவளுக்குப் பணத்தால்  குறை எதுவுமில்லை.. ராமனின் தங்கை பெண் சுடர்விழி குழந்தையிலிருந்து தேன்மொழியிடம் வளர்ந்து வருகிறாள். தேன்மொழியின் குறையெல்லாம்  முகிலனுக்கும் கல்யாணம் ஆகவில்லை என்பதுதான். பெண்ணும் வீட்டிலே தயாராக இருக்கிறாள்.  அவள் கணவர் உயிரோடு இருக்கும்போதே முகிலனுக்குச் சுடர்விழிதான் வாழ்க்கைத்துணை என்று முடிவு செய்தாகிவிட்டது. ஆனால் முகிலன்தான், ”எனக்கு நிலையான வேலையில்லை. எதுக்கு கல்யாணத்துக்கு அவசரப் படணும்” என்று பிடி கொடுக்காமல் இருந்தான். இந்த வருடம் முகிலன் வரும்போது அவனுடன் பேசி கல்யாணத்திற்குச் சம்மதிக்க வைக்க வேண்டும் என்னும்  தீர்மானத்திலிருந்தாள் தேன்மொழி. சுடர்விழி வழக்கம்போல் அன்றும் விடியற்காலையில் எழுந்து கோலம் போட்டுக்கொண்டிருந்தாள் . அப்போது காகம் கரைந்தது . அது அவளுக்கு மகிழ்ச்சியைக் கொடுத்தது. ”அத்தை, காகம் கரைந்ததால் விருந்தினர் வருவார்கள் என்று சொல்லுவார்கள். இன்னைக்கு முகிலன் அத்தான் வருவார்” என்று எனக்குத் தோன்றுகிறது. என்றாள். ”நீ சொல்வது சரி. முகிலன்  வந்து ஒரு வருடம் ஆகிறது . அவன் வரக்கூடிய சமயம்தான்..எனக்கும் அவனைப் பார்க்கவேண்டும் போல் இருக்கிறது. உன் விஷயத்தைப் பற்றி அவனிடம் பேசி விடுகிறேன். அவன் எவ்வளவு நாள்தான் தள்ளிப் போடுவான்? பாரடி நீ, இந்த முறை அவன் சம்மதித்து விடுவான் ” சுடர்விழியின் முகம் வெட்கத்தில் அழகுடன்  ஒளிர்ந்தது . காகம் கரைந்த்தால் அவன் வந்தானோ அல்லது ஏதேச்சையாக வந்தானோ தெரியவில்லை. தேன்மொழி சொன்னபடி முகிலன் அன்று காலை வந்தது எல்லோருக்கும் ஒரு ஆச்சர்யத்தைக் கொடுத்தது. தூங்கி எழுந்து வந்த ஜோதி முகிலனைப் பார்த்துவிட்டு, “அப்பா எப்போ வந்தே? என்னை விட்டுப் போகக் கூடாது . இங்கேயே இருக்கணும்” என்று மழலையில் பேசி அவன் காலைக் கட்டிக் கொண்டது.  அப்பாவும் சித்தபாவும் ஒரே மாதிரி இருப்பதால் குழந்தைக்கு வித்தியாசம் கண்டு பிடிக்க முடியவில்லை.. “ஜோதி அது அப்பா இல்லே, சித்தப்பா . அப்பா டில்லியிலே இருக்கார்” . என்றாள் கோதை. ”உனக்கு பிஸ்கட் வாங்கி வந்திருக்கேன்”  என்று  ஒரு பிஸ்கட் பாக்கெட்டை குழந்தையிடம் நீட்டினான் அதை வாங்கிக் கொண்ட  குழந்தை  விளையாட ஓடியது. அலைபேசியைப்  பார்த்துக் கொண்டிருந்த முகிலனைப் பார்த்து , “உன் முகம் ரொம்ப கறுத்துப் போயிடுச்சே. உனக்கென்ன வெளியிலே அலையற  வேலையா? ஹைதராபாத்தில் ஏன் ஒண்டியா கஷ்டப் படணும் , நீயும் அகிலனும் எனக்கு இரட்டை குழந்தைங்க. அவன்  இராணுவத்திலே சேர்ந்துட்டான். . வருடத்துக்கு ஒரு முறைதான் திருச்சி வரான். எனக்கோ அறுபது வயசாகி விட்டது. உடல் தள்ளாடுது. இங்கே ஏதாவது வேலை தேடிண்டு வந்துடேன். உன் அண்ணன் அகிலன் எங்ககூட இல்ல. . நீயாவது  என் கூட இருந்தால் எனக்கு ஒத்தாசையாய் இருக்கும் “ என்றாள் தேன்மொழி தன் இளைய மகனிடம். ”நான் நாடோடியாய் ஒவ்வொரு  ஊராய் சுற்றிக் கொண்டிருக்கேன். உனக்குத்தான் தெரியுமே நான் முதல்லே வேலை செய்த அலுவலகத்தில் என் மீது அநியாயமாய்  திருட்டு பழி சுமத்தினதாலே  ஜெயிலுக்குப் போனேன். செய்யாத குற்றத்திற்குச் சிறைத் தண்டனை அனுபவிச்சேன். எனக்கு ஹைதாராபாத்தில் கிடைத்த வேலை ஊர் சுற்றும் வேலையானலும் எனக்குப் பிடித்திருக்கிறது. நான் இப்போதைக்குத் திருச்சி  வர முடியாது.  என்னுடைய தலைவர் என் எல்லாத் தேவைகளையும் பார்த்துக் கொள்வார்.  அடுத்து எந்த ஊருக்குப் போக வேணும் என்பது அலைபேசியில் வரும் . நான் இங்கிருந்து நேராக அங்கு போய்விடணும்.” ”சுடர்விழி உனக்காகக் காத்திருக்கிறாள். நீ சரின்னு சொன்னால் உங்க இரண்டு பேருக்கும் கல்யாணத்தை முடிச்சுட்டு நான் பாட்டுக்கு  அக்கடான்னு  இருப்பேன்.” அப்போது சுடர்விழி ஒரு தம்பளரில் மோர் கொண்டு வந்தாள். ”இந்தாங்க அத்தான் மோர் ” முக வசீகரத்துடன்  உடல் அழகு சேர்ந்து  பருவச்செழிப்புடன்  பொற்குடம் போல் பிரகாசித்தாள். முகிலன் மோரை வாங்கிப் பருகினான். இன்னொரு தம்பளர் மோரை அத்தையிடம் கொடுத்தாள். ”வர்ற பங்குனிக்கு சுடர்விழிக்கு இருபத்தி ஆறு வயசு முடியப் போகிறது., கல்யாணத்துக்கு உன்  சம்மதம்தான் தேவை” என்றாள் தேன்மொழி.. ”இப்போ எதுக்கம்மா எனக்கு கல்யாணம். நான் பஞ்சாப் போக வேண்டும் . அதுக்கு முன்னால் உன்னைப் பார்த்துட்டு போகலாம் என்று வந்தேன். நான் இப்போ ஒரு முக்கியமான காரியத்தில் ஈடுபட்டிருக்கிறேன். அதில் வெற்றியடையாமல் நான் எந்த முடிவையும் எடுக்க மாட்டேன்.” ராமாயணத்தில் சீதை மேல்மாடத்திலிருந்து ராமனை  நோக்கியதைப் போல் சுடர்விழி முகுந்தனை நோக்கினாள். முகுந்தனும் சுடர்விழியை நோக்கினான். விழியோடு விழி நோக்கினாலும அவள் பார்வை வேறு . அவன்  பார்வை வேறு . அவன் விழியில் அன்பு  எள்ளவுமில்லை. அந்த மான்விழிகளும் செதுக்கி வைத்தச் சிலை போன்ற மேனியழகும் அவன் மனதில் எந்தச் சலனத்தையும்  ஏற்படுத்தவில்லை.   ”இவர் ஏன் இப்படி இருக்கிறார்? என் அழகு அவரை ஆட்கொள்ளவில்லையா? எப்போது கேட்டாலும் திருமணம் வேண்டாம் என்று மறுத்து விடுகிறாரே ? என்று இவர் மனசு மாறும்” என்று நினைத்தாள் சுடர்விழி. அவன் இவளை லட்சியம் செய்யாமல் வீட்டுக்கு வெளியே போய் அலைபேசியில் யாருடனோ பேசினான். பேசி விட்டு உள்ளே வந்தமர்ந்த முகிலன் தன் அலைபேசியைப் பக்கத்திலுள்ள நாற்காலியில் வைத்து பேச்சைத் தொடங்கினான். அப்போது அவ்வறைக்குள் வந்த ஜோதி அந்த அலைபேசியை எடுத்தது. முகிலனுக்குக் கோபம் பொத்துக் கொண்டு வந்தது. அதை என்கிட்டே கொடு என்று ஜோதியிடமிருந்து முரட்டுத்தனமாக அலைபேசியைப பிடுங்கினான். குழந்தை அழ ஆரம்பித்தது. சுடர்விழி குழந்தையைச் சமாதானப் படுத்தினாள். முகிலனிடம்  ”குழந்தை கிட்டே  மென்மையாய் நடந்துகொள்ளக் கூடாதா ?” என்றாள். ”என் அலைபேசியில் முக்கியமான செய்திகள் இருக்கின்றன.அது அழிந்துவிட்டால் என்ன செய்வது? என் அலைபேசியை யாரிடமும் கொடுக்க மாட்டேன்” அவன் முகம் பதற்றத்தோடு இருந்தது. அதற்கேற்றாற்போல் அடிக்கடி அவனுக்கு அலைபேசியில் அழைப்பு வந்துகொண்டேயிருந்தது.   ”நீங்க என்ன வேலை செய்கிறீர்கள்?எங்கிட்டேயாவது  சொல்லக் கூடாதா ?” என்று குழைந்தாள் சுடர்விழி. ”நான் ஒரு முக்கியமான வேலையில் இருக்கேன். நித்திய கண்டம் பூர்ணாயுசு என்பார்களே . அதுமாதிரிதான் என் வேலையும் . அதனால்தான் பஞ்சாப் போவதற்கு முன்பு அம்மாவைப் பார்த்துட்டுப் போகலாமென்று வந்தேன்.” ” அப்படியென்றால் என்னைப் பார்க்க வரவில்லையா” மென்மையாகக் கேட்டாள் சுடர்விழி. ”என்னை மன்னித்துவிடு சுடர்விழி . நமக்குக் கல்யாணம் நடக்குமென்று எனக்குத் தோன்றவில்லை. நான் செய்யும் வேலை அந்த மாதிரி. என்னுடைய குறிக்கோள் நிறைவேற வேண்டும். மத்ததெல்லம் அதற்கப்புறம்தான்.” என்றான் திட்டவட்டமாய்.   சுடர்விழிக்கு அவன் கூறியது ஏமாற்றமாய்தான் இருந்தது. தேன்மொழி முகிலனுக்குப்  பிடித்த சமையலைச் செய்திருந்தாள். அவன் சாப்பிடுவதைப் பார்த்துக்  கொண்டிருந்த தேன்மொழி, அகிலன் நன்றாகப் படிப்பான்.  சிறுவயது முதல் நாட்டுப் பற்று அதிகம்.. முகிலனுக்கு படிப்பு வராது, தறுதலையா சுற்றிக் கொண்டிருப்பான். இரண்டு பேருக்கும் மலைக்கும் மடுவுக்குமுள்ள வித்தியாசம்.  இனிமேல் இவன்  ஒழுங்காக இருந்தால்  சரி.” என்று எண்ணினாள். முகிலன் அம்மாவிடம் சொல்லிக் கொண்டு கிளம்பினான். ”நீ எங்கே வேலை செய்கிறாய் என்று சொல்ல்லிவிட்டுப் போ. யாராவது கேட்டால் சொல்லவேணுமல்லவா?” ”அது ரொம்ப  ரகசியம் நான் சொல்ல கூடாது.” . நீ இருப்பது போலீஸிலா ? அல்லது இராணுவத்திலா? ஏதோ இராணுவ ரகசியம் போல் சொல்லுகிறாயே? ”வேளை வரும்போது சொல்கிறேன்.”. சுடர்விழியைப் பார்த்துக்கொண்டே  நகர்ந்தான். ஏக்கத்துடன் அவன் செல்வதையே பார்த்துக் கொண்டிருந்தாள் சுடர்விழி. ”நான் எவ்வளவோ முயன்று பார்த்தேன். அவன் ஏன் ஒத்துக் கொள்ளவில்லை என்பது எனக்குப் புரியாத புதிராக இருக்கிறது. கொஞ்சம் பொறுத்திருந்து பார்ப்போம். காலம்தான் அவன் மனதை மாற்ற வேண்டும்” என்றாள் தேன்மொழி. . ”நான் அவருக்காக எவ்வளவு நாள் வேணுமானாலும் காத்திருக்கேன் அத்தை. எனக்கென்னவோ அவர் கூடியச் சீக்கிரம் மனம் மாறிவிடுவார் என்று தோன்றுகிறது.” ” சுடர்விழி சோகக் கடலில் மூழ்கியிருந்ததைப் பார்த்த கோதை, ஏன் வருத்தமாயிருக்கிறாய். முகுந்தன்  கல்யாணத்திற்குச் சம்மதிப்பான். கவலைப்படாதே” என்றாள் ”என் உண்மையான அன்பு அவருக்குப் புரியவில்லை. நான் நெருங்கிப் போனாலும் விலகிப் போகிறாரே.. அவர்  வேறெந்தப் பெண்ணையாவது காதலிக்கிறாரோ என்று எனக்குச் சந்தேகமாக இருக்கிறது.”  ”அப்படியெல்லாம் ஒன்றும் இருக்காது.  மென்மையான உன்னைச் சீக்கிரம் அவர் புரிஞ்சிப்பார் என்னும் நம்பிக்கை எனக்கு இருக்கிறது.” ”.எவ்வளவு காலமானாலும் அவருக்காகக் காத்திருக்க நான் தயார். அவருடைய முரட்டுத்தனம்தான் எனக்கு அச்சமாயிருக்கிறது. அரசாங்கத்தை எப்பவும் குறை சொல்லுவார்.” ” நாளடைவில் எல்லாம் சரியாகிவிடும்.” முகிலன் போய் ஒரு வாரம் கழித்து மூத்தவன்  அகிலனிடமிருந்து கோதைக்கு ஒரு கடிதம் வந்தது. அவன் தற்போது  சதீஸ்கர் மாநிலத்தில் பாதுகாப்பு படை இராணுவவீரனாகப் பணியாற்றிக் கொண்டிருக்கிறான் என்று எழுதியிருந்தான். கோதை, ” . நாம் இங்குச் சந்தோஷமாக இருக்கிறோம். அங்கு அகிலன்  பனியிலும் வெயிலிலும் மிகவும் கஷடப் பட்டுக்கொண்டிருப்பாரே” என்று வருந்தினாள். . . ஜோதியும் அடிக்கடி, ‘அம்மா, அப்பா எப்போ வருவார்” என்று கேட்டுக்கொண்டிருந்தாள். ’சீக்கிரம் வருவார் நீ வந்து படு’ என்று அவளைத் தூங்க வைத்தாள் கோதை. அப்போது அவளுக்கு அலைபேசியில் அழைப்பு வந்தது. அலைபேசியில்  செய்தியைக் கேட்டதும் .’  அப்படியா....? ‘  என்று கோதை  அலறினாள். அவள் கையிலிருந்து அலைபேசி கீழே விழுந்தது. கண்ணிலிருந்து பொல பொலவென்று கண்ணீர் வந்தது.”அவர் போய்விட்டார். என் தலையில் இடி விழுந்து விட்டது ! கப்பல் கவிழ்ந்து விட்டது! அத்தை” பேசிக்கொண்டிருக்கும்போதே தரையில் சரிந்து  விழுந்தாள் . அவள் அருகில் ஓடி வந்த  தேன்மொழி, ” என்னம்மா நடந்தது? ஏன் அழுகிறாய் ?” கோதை அழாதே. விவரத்தைச் சொல்லு.  . கோதை அழுதுகொண்டே  சொன்னாள். ”அவர் இறந்து விட்டார் என்று செய்தி வந்திருக்கு அத்தை. இன்று காலை தீவிரவாதி கும்பல் பாதுகாப்பு படைவீரர்களைத் தாக்கிச் சுட்டார்களாம். அதில் இருபத்தி ஐந்து படைவீரர்கள் பலியாயினர். அவரும் அதிலே ஒருத்தர் அத்தை “ .அவள் கதறி கதறி அழுதாள். அவளுக்கு ஆறுதல் சொல்ல வேண்டிய தேன்மொழியும் துன்பத்தைப் பொறுக்க முடியாமல், எனக்கு ஏன் கடவுள் இந்தத் தண்டனையைக் கொடுத்தான்” என்று அரற்றினாள். அகிலன்  90வது பட்டாலியனில் பணியாற்றி வந்தான். எங்கிருந்தோ வந்த  மாவோயிஸ்ட் தீவிரவாதி கும்பல் கொடுர கொலைவெறி தாக்குதல் நடத்தி நாட்டு வெடிகுண்டுகள், துப்பாக்கியை உபயோகப்படுத்தி இந்திய படைவீர்ர்கள் சிலரைக்  கொன்றனர்.  அந்தத் தாக்குதலில்  தீவிரவாதிகளிலும் சிலர் இறந்தனர். இந்த விஷயத்தை அறிந்த அகிலனின் குடும்பமே சோகக்கடலில் மூழ்கியது. அவர்கள் வசித்த தெருவே துக்கம் கொண்டாடியது. செய்தித்தாளில் எல்லாம் அகிலனைப் பற்றி புகைப்படத்துடன் செய்தி வந்தது. இராணுவ மரியாதையுடன் அவன் உடல் அடக்கம் செய்யப்பட்டது. முகிலனை அலைபேசியில் கூட தொடர்பு கொள்ள முடியவில்லை. அவன் அடிக்கடி அலைபேசி எண்ணை  மாற்றி விடுவான் என்று சுடர்விழி தெரிவித்தாள். தேன்மொழி அழுதாலும் நாட்டிற்காக தன் மகன் உயிரைக் கொடுத்தான் என்று தன் மனதை தேற்றிக் கொண்டாள். கோதைதான் மிகவும் ஆடிப் போனாள். பித்துப் பிடித்தவள் போலானாள். சரியாகச் சாப்பிடாமல் தூங்காமல் அடிக்கடி அழுதுகொண்டே இருப்பாள்.  காலம்தான் அவள் துக்கத்தை ஆற்றவேண்டும். ஒருவாரம் கழித்து ஒருநாள் காலை தேன்மொழி செய்தித்தாள் படித்துக் கொண்டிருந்தாள். கோதை ஜோதிக்குத் தலைவாரிப் பின்னிக்கொண்டிருந்தாள்.  அப்போது  முகிலன் வீட்டுக்குள் நுழைந்தான். தலை மொட்டையடித்து, மீசையை எடுத்து ஆளே அடையாளம் தெரியாமல் மாறியிருந்தான். சுடர்விழி,  ” வாங்க, வாங்க, அத்தை, அத்தான் வந்திருக்கார் ” என்று கத்தினாள். அவன் தன்னுடைய பையை நாற்காலியின் மீது வைத்துவிட்டு கோதையிடம் துக்கம் விசாரித்தான்.   ”என்னடா அடையாளம் தெரியாமல் மாறிட்டே. விஷயம் தெரிஞ்சுதான் வந்தியா? அகிலன் நம்மை விட்டுப் போய்விட்டான். தீவிரவாதிகள் வெடிகுண்டு போட்டதிலே இருபத்தி ஐந்து  ராணுவ வீர்ர்கள் மரணமடைந்தனர் அவர்களில் அகிலனும் ஒருத்தன். போய் ஒரு வாரம் ஆகிவிட்டது, நீ இப்போ வந்திருக்கே. உன்னை தொடர்பு கொள்ளப் பார்த்தோம். முடியவில்லை. நீ எங்கிருந்தாய் ?” என்றாள் தேன்மொழி . ”நான் வெளியூரில்   இருந்ததால் உடனே வரமுடியவில்லை. செய்தித்தாள் படித்து விவரம் அறிந்தேன். உன்னைப் பார்த்து ஆறுதல் சொல்லிவிட்டு போகலாம் என்றுதான் வந்தேன். நான் உடனே போக வேணும். எனக்கு நேரமில்லை.” ”முகிலா,  நீ இப்படிச் சொன்னால் எப்படிடா? இரட்டையரில்  ஒருத்தனைப் பறி கொடுத்துட்டு நான் துடிச்சுண்டு இருக்கேன். நீ என் பக்கத்திலே இருக்கணும்.. என்னை விட்டுவிட்டு  எங்கேயும் போயிடாதே. உன்னைப் பார்த்தாவது  நான் ஆறுதல் அடையறேன். தயவு செய்து என்னை விட்டுவிட்டு ஓடிடாதே ”என்று அவன் கைகளைப் பிடித்துக் கொண்டு கெஞ்சினாள். எனக்குச் சில கடமைகள் உண்டு . அதை முடிச்சிட்டு வருகிறேன். அப்போது அவன் அலைபேசி சிணுங்கியது . அவன் அதை எடுத்துக் கொண்டு பக்கத்து அறைக்குள்  போனான்.   அவன் பேசிய அறைக்குப் பக்கத்து அறை சமையல் அறை. இரண்டு அறைகளுக்கும் நடுவில் ஒரு சன்னல் உண்டு. சமையல் அறையில் சுடர்விழி இருந்தாள்..தான் பேசுவது பக்கத்து அறையிலிருப்பவருக்குக் கேட்குமென்பது முகிலனுக்குத் தெரியாது. அவன் பேசியது அவளுக்கு நன்றாகக் கேட்டது ” சதீஸ்கர் ஆப்ரேஷன் வெற்றி.திருச்சிக்கு வந்துவிட்டேன்.அடுத்த ஆப்ரேஷன்  லக்னோவா ? நான் இங்கேயிருந்து லக்னோ போய் விடுகிறேன். “ அவன் பேசுவதைக் கேட்ட சுடர்விழியின் மூளையில் பொறி தட்டியது. அதனால்தான் மொட்டை அடித்துக் கொண்டு விட்டாரா? உண்மை அவளுக்குப் புலப்பட்டுவிட்டது. தேன்மொழி அமர்ந்திருந்த இடத்திற்கு  விரைந்து சென்றாள் : காதில் மென்மையாகச் சொன்னாள். அவள் சொன்னதைக்  கேட்டு தேன்மொழி அதிர்ந்தாள். ”அப்படியா?” . ”நான் கேட்டது அதுதான்.” ” சுடர்விழியின் காதில் தேன்மொழி மெல்லிய குரலில்  மொழிந்தாள், ”அப்படியே செய்றேன் அத்தை” என்ற சுடர்மொழி வெளியே கிளம்பினாள். முகிலனும் வந்துவிட்டான். நான் உடனே கிளம்ப வேண்டும். எனக்கு அழைப்பு வந்துவிட்டது . அவன் கன்னத்தில் ஓங்கி ஒரு அறை அறைந்து விட்டுச் சொன்னாள். ”உன்னை என் பிள்ளைன்னு சொல்லிக்கிறதுக்கு வெட்கமாயிருக்கு. செய்யக் கூடாத காரியத்தை  நீ செய்து விட்டாய்.  நீ தீவிரவாதி என்பதைச் . சுடர்விழி என்னிடம் சொல்லிவிட்டாள்.  நான் பெத்ததில் ஒண்ணு நாட்டுக்காக உயிரை விட்டது. இன்னொன்னு நாட்டுக்கு எதிரா தீவிரவாதியா மாறிவிட்டது. குழந்தையிலே இரண்டு பேருக்கும் சமமாகத்தான் பால் கொடுத்தேன். நீ ம்ட்டும் ஏன் தீவிரவாதி ஆகிட்டேன்னு  தெரியல்லே?. பாழாய்போன தீவிரவாதத்தின் வன்செயலை நினைத்தால் .நெஞ்சு பொறுக்குதில்லையே “ விடாமல் பேசியதால் அவளுக்கு மூச்சு வாங்கியது. ”ஆமாம். நான் மாவோயிஸ்ட்தான். நாட்டின் மேல் எனக்கிருந்த வெறுப்பால் மாவோயிஸ்ட் ஆகிவிட்டேன். போன வாரம் கலபதாரில் தீவிரவாதிகள் படைவீர்ர்களைச் சுட்டார்களே. அந்தத் தீவிரவாதி கும்பலில் நானுமிருந்தேன். அகிலன் அங்கேயிருந்தான் என்பது எனக்குத் தெரியாது. நடந்தது நடந்துவிட்டது . போனதை நினைத்து  வருத்தப்படாதே.” ”எப்படிடா? நீ இப்படி பேசறே. வருத்தப் படாமே எப்படியிருக்க முடியும்? அகிலன் என் பிள்ளை,  உன் அண்ணாடா. அவனை கொன்னுட்டு வேறே யாரோ மாதிரி  வருத்தப்படவேண்டாம்ங்கிறே. உன் மனசென்ன கல்லா இல்ல இரும்பா ? இரத்த பாசம்  உனக்குக் கிடையாதா ? காதலுக்குக் கண் இல்லே என்பார்கள். தீவிரவாதத்துக்குக் கண், காது, மனசு எதுவுமே இல்லை என்பது உன் மூலம் நிரூபணம் ஆகிறது. .” ” நான் மாவோயிஸ்ட் ஆனவுடனே பாசமெல்லாம் போய்விட்டது  சமுதாயம் சீரழிந்து கிடக்கிறது. ? எங்கும் ஊழல்தான் மண்டிக் கிடக்கிறது நாங்கள் தப்பைத் தட்டி கேட்கும் கும்பல். எங்கிட்டே ஏகே 47 துப்பாக்கி இருக்கிறது. மனித குண்டுகளாகவும் செயல் படுவோம். தவறு செய்யும் அரசாங்கத்துக்குப் வன்முறையில் பாடம் புகட்டுவதுதான் எங்கள் இயக்கத்தின் கொள்கை.  .இந்தியா எனக்கு என்ன செய்தது ? என்னை மாதிரி சமுதாயத்தில் பழி வாங்கப் பட்டவர்கள் ஒன்று சேர்ந்து போராளிகளாகப் போராடுகிறோம்.” ”நல்லாயிருக்கடா நீ சொல்றது . நாடு உனக்கு என்ன செய்தது  என்று கேட்கிறாயே. நீ நாட்டுக்கு என்ன செய்தாய் என்று யோசித்துப் பார் ? உண்மை உனக்குப் புரியும். தீவிரவாத இயக்கத்திலிருந்து  நீ மீண்டு வரவேண்டும் . உன்னை நான் போகவிடமாட்டேன்” என்று அவன் கைகளைப் பிடித்தாள். என்னுடைய குறிக்கோளிலிருந்து நான் பிறழ மாட்டேன். எனக்கு நேரமாகிவிட்டது. நான் கிளம்பறேன். என்னைத் தடுக்காதே “  அவளைத்  தள்ளிவிட்டு கதவை நோக்கி நடந்தான். கதவைத் திறந்தவன் அதிர்ந்து நின்றான். அங்கே சுடர்விழியும் நான்கைந்து போலீஸ்கார்ர்களும் நின்றிருந்தார்கள். ”சுடர்விழி நீ கூடவா...”  தன்  பாக்கெட்டிலிருந்து துப்பாக்கியை எடுத்தான். ”அத்தான்” சுடர்விழி அவனருகில் சென்றாள். ”எங்கிட்டே வராதே, உன்னைச் சுட்டுவிடுவேன். ” ”உங்க கையாலே தாலிதான் கட்டிக்க முடியல்லே. சாகிற பாக்கியாமாவது எனக்குக் கொடுங்க “ சொல்லிக்கொண்டே அவனை நோக்கித் தாவினாள். அவன் துப்பாக்கியிலிருந்து கிளம்பிய குண்டு அவள் மார்பில் பாய்ந்தது. ’அத்தான்’ என்று அலறிக்கொண்டே அவள் கீழே சரிந்தாள். அதற்குள் கீழே விழுந்த தேன்மொழி முகிலனின் அருகில் சென்று,” என்னைச் சுடு”என்று அவன் கையைப் பிடித்து இழுக்கவும் அவன்  கையிலிருந்து துப்பாக்கி பறக்க, ஒரு போலீஸ் அதிகாரி ஒடிப் போய் கிரிகெட பந்தைக் கேட்ச் பிடிப்பது  போல் அதைப் பிடிக்க மற்ற போலீஸ்காரர்கள் ஓடி வந்து அவன்  கையைக் கெட்டியாகப் பிடித்தனர்.   போலீஸ் இன்ஸ்பெக்டர் அவன் கையில் விலங்கை மாட்டினார். அவன்  திமிறினான்.  ”இந்த வீட்டைச் சுற்றிப் போலீஸ்காரர்கள் இருக்கிறார்கள்.. நீ தப்பிப் போக முடியாது” என்றார். . ”உன் மேலே இருக்கிற பாசத்தைவிட நாட்டின் மேல் எனக்கு   நேசம் அதிகம்...நீ என் மகனல்ல. நீ ஒரு தேசத் துரோகி ஒரு தீவிரவாதியைப் பிடித்துக் கொடுத்ததில் எனக்கு மட்டற்ற மகிழ்ச்சி.” என்றாள் தேன்மொழி.                                                       []           19. உதவிக்கரம்   முதல் மணி அடித்து விட்டது. எல்லோரும் அவரவர் வகுப்புகளுக்கு விரைந்தனர் .சீக்கிரமா வாடி” என்று கூவிய படி ரஞ்சனி தன் வகுப்பறையை நோக்கி  ஓடினாள். மீனாவும் அவளுடன் சேர்ந்து ஓடினாள். இரண்டாவது மணி அடித்தது.  இறைவணக்கம் முடிந்தது. அதைத் தொடர்ந்து மைக்கில் ஒரு அறிவிப்பு. பன்னிரண்டாவது வகுப்பு ’ஏ’ செக்‌ஷனில் படிக்கும் மாணவி மீனா நேற்று நடந்த ஓட்டப் பந்தயத்தில் முதலாவதாக வந்து வெற்றி பெற்றார். மாணவர்களின் கைதட்டல் கேட்டது. வகுப்பில் எல்லா மாணவர்களும் மாணவியர்களும் பேசிக் கொண்டிருந்ததால்  சப்தம்  அதிகமாக இருந்தது. ரஞ்சனியும் மீனாவும்  பிளஸ் டூ படிக்கும் மாணவிகள். இணை பிரியாத்  தோழிகள். ரஞ்சனி வசதியான குடும்பத்தைச் சேர்ந்தவள். அவள் அப்பா மத்திய அரசாங்க நிறுவனத்தில் அதிகாரியாக இருக்கிறார். அம்மா இல்லத்தரசி. மீனா மிகவும் ஏழை குடும்பத்தைச் சேர்ந்தவள். அவளுக்கு அப்பா, அம்மா  கிடையாது. பூக்காரிப்  பாட்டியுடன் வசிக்கிறாள்.   அப்போது தமிழ் டீச்சர் சரஸ்வதி வகுப்பில் நுழைந்தார். சரஸ்வதி  டீச்சர் ரொம்பக் கண்டிப்பானவர். வகுப்பில் கேட்ட கேள்விக்குச் சரியான பதிலைச் சொல்லிவிட்டால் கைதட்டத் சொல்லுவார். அவர் வகுப்பில் அடிக்கடி கரகோஷம் கேட்கும். தேன் போல் இனிக்கும்  சிலப்பதிகாரத்தைப்  பற்றிப் பாடம் எடுத்தார்.. ரஞ்சனி படிப்பில் மிகுந்த கவனம் செலுத்திப் படித்தாள். நேரத்தை வீணாக்க மாட்டாள். எறும்பைப் போல் உழைத்தாள். ஆனால் தினந்தோறும் வீட்டுக்கு எதிரில்  அவள் வைத்த மரக்கன்றுகளுக்குத் தவறாமல் தண்ணீர் விடுவாள். நீ எதுக்கு இந்த பொறுப்பை எடுத்துக்கிறே? படிக்கிறதை விட்டு நேரத்தை வீணாக்குகிறாயே ? என்று அடிக்கடி  அங்கலாய்ப்பார் அவள் அப்பா சுந்தரம். அவர் எப்பவும் அப்படிதான். வீட்டு நிழலில் நாய் படுத்திருந்தால் கூட அவருக்குப் பொறுக்காது. விரட்டி விடுவார் தேர்வு முடிவுகள் வந்து விட்டன. ரஞ்சனி  1194 மதிப்பெண் எடுத்து மாநிலத்திலேயே இரண்டாவது இடம் பிடித்திருந்தாள்.பள்ளிக்கூடத்தில் முதல் மாணவியாய் வந்திருந்தாள். பேப்பரில் அவள் புகைப்படமும் பேட்டியும் வந்திருந்தது. ஆசிரியரும் பெற்றோரும்தான் தான் அதிக மார்க வாங்கியிருப்பதற்கு முக்கிய காரணம் என்று பேட்டி கொடுத்தாள். பார்வதி  தன் மகளை நினைத்து மிகவும் பெருமைப் பட்டாள். சுந்தரத்துக்கு இரட்டை மகிழ்ச்சி . ரஞ்சனியின் படிப்புக்காக இரண்டு லட்சம் சேர்த்து வைத்திருந்தார். பொறியியல் கல்லூரியில் சேர்வதற்கு மேனேஜ்மெண்ட் கோட்டாவிற்கு பணம் தேவையாய் இருக்கும் என்று முன் ஜாக்கிரதையாய் பேங்கிலிருந்து பணத்தை எடுத்து வீட்டில் வைத்திருந்தார். பணம் மிச்சமாச்சு. இரண்டாவது ரஞ்சனி விரும்பிய பாடப் பிரிவு கிடைத்துவிடும். ”சாதிச்சுட்டே ரஞ்சனி,  உனக்கு இனிமே நல்ல காலம் “ என்று குதூகலத்துடன் சொன்னார். மீனாவும் தேர்வில் தேர்ச்சி பெற்று விட்டாள். ஆனால் மதிப்பெண் அதிகமில்லை. எண்பது விழுக்காடுதான். ரஞ்சனியின் வீட்டுக்கு மீனா வந்தாள். தோழியை ஆரத்தழுவிக் கொண்டாள். .”   ”நீ எந்தக் கல்லூரியில் சேரப்போகிறாய் மீனா? ” ”எனக்கு பிஎஸ்சி கம்பூட்டர் சயின்ஸ்  படிக்க ஆசை. ஆனால் நான் படிக்கவே போறதில்லை.” ”ஏன் ?” வேறென்ன, பணமில்லமைதான். பூ வியாபாரத்திலே வர்ற பணம் சாப்பாட்டுக்குத்தான்  சரியா இருக்கு. பாட்டிக்குப்  பூ விற்க  உதவப் போகிறேன்.” மீனா நகர்ந்தவுடன் பார்வதி கேட்டாள். “ஏண்டி, மீனா எந்த காலேஜில் சேரப் போறா? “ ”அவள் எந்த காலேஜிலும் சேரப் போறதில்லையாம்.  சாதாரண டிகிரி படிக்கிறத்துக்குக் கூட பணமில்லை. அப்பா, அம்மா அவளுக்கு கிடையாது.  அவளுக்கு ஏதாவது செய்யணும் என்று பார்க்கிறேன். “ ”நீ என்னடி செய்ய முடியும் ? ”   எனக்கு அப்பா படிப்புக்காகச் சேர்த்து வைத்த பணம் மிச்சமாச்சு இல்லயா? நாம் ஏன் மீனாவின் படிப்புக்கு  உதவி செய்யக் கூடாது. அவளுக்கு மூன்று வருடப் படிப்புத்தான்..........................“ ”ஏண்டி, நீ சொல்றது நடக்கிற  காரியமா? பணம் மிச்சமானால் என்ன? உன்னை கட்டிக் கொடுக்கும்போது தேவையாய் இருக்கும் . அப்பாவைப்  பத்தி தான் உனக்கு தெரியுமே? எச்சக் கையிலே காக்கா ஓட்ட மாட்டார். சரியான கஞ்ச பிசுநாறி. அப்படின்னு நான் சொல்லல. மத்தவங்க எல்லாம் சொல்றா.  அவர் இதுக்கெல்லாம் ஒத்துக்கவே மாட்டார்.” என்று கூறிச் சிரித்தாள். ”அம்மா , எனக்காக அப்பாவிடம் பேசிப் பாரேன். ப்ளீஸ், ப்ளீஸ்”  என்று கெஞ்சினாள். எனக்குப் படிப்பை பற்றி எதுவும் தெரியாது. சரஸ்வதி டீச்சரிடம் கேக்கறேன். அவங்க என்ன சொல்றாங்கன்னு கேக்கலாம். பார்வதி வீட்டுக்கு வெளியே வந்த போது சரஸ்வதி டீச்சர் எதேச்சையா அந்தத் தெரு வழியாக வந்து கொண்டிருந்தார். பார்வதி   டீச்சரைப்  பார்த்து, ”அவள் தோழி மீனா பிஎஸ்சி கம்ப்யூட்டர்  படிக்க வசதியில்லையாம்.. மீனாவின் படிப்பு செலவை நாம்  ஏற்றுக் கொள்ளலாம்  என்று ரஞ்சனி கூறுகிறாள். இப்ப இருக்கும் விலைவாசியில் ஒரு குழந்தையைப் படிக்க வைப்பதே கடினம். இன்னொன்று என்றால் சொல்லவே வேண்டாம். முழி பிதுங்கி விடும்.  அவள் சொல்வது சரியா? தவறா ? என்று எனக்குத் தெரியவில்லை. நீங்களே சொல்லுங்கள் டீச்சர்.” ரஞ்சனியின் எண்ணம் மிகவும் உயர்ந்தது. மற்றவர்களுக்கு உதவி செய்வது மிக நல்ல பண்பு ; ரொம்பப்  பெரிய விசயமாச்சே.வசதி இல்லாதோருக்கு உதவுதை ஒவ்வொருவரும் தங்களின் பொறுப்பாக ஏற்றுக் கொள்ள வேண்டும். அதுதான் உண்மையான சேவை. ”அன்னசத்திரமும் ஆலயம் கட்டுவதைவிடச் சிறந்தது, ”ஆங்கோர் ஏழைக்கு எழுத்தறிவித்தல்” என்றான் கவி பாரதி . அடிமட்டத்திலிருக்கும் ஏழைகளுக்குச் செய்யும் உதவி நாம் கடவுளுக்கு செய்யும் உதவியாகத்தான் கருதப்படும்.” என்று பார்வதி. ரஞ்சனி செய்ய நினைப்பது மிகவும் நல்ல செயல் என்ற   தெளிவு பெற்ற பார்வதி மனநிறைவுடன் வீட்டுக்கும் நுழைந்தாள். சுந்தரம் ஹாலில் சோபாவில் அமர்ந்திருந்தார். அவர் நெற்றியில் பட்டை பட்டையாய் வீபூதி. “ பித்தா ...பிறை சூடி ......  வாய் முணுமுணுத்துக்கொண்டிருந்தது. ” ஏங்க , ஓண்ணு உங்க கிட்டே கேட்கணும்.” “ என்ன வேணும் சொல்லு.. பணத்தைத் தவிர எது வேண்டுமானாலும் கேள்.” ”அதானே பார்த்தேன் ! நீங்களாவது பணத்தைக் கொடுக்கிறதாவது. பண விசயம்தான். ஆனால் நல்ல விசயத்துக்கு. மீனா  பிஎஸ்சி கம்பூட்டர் கோர்ஸ் சேர்க்கறதுக்கு ரஞ்சனி ,  பணம் கொடுக்க ஆசை பட்றா. நான் சரஸ்வதி  டீச்சரைக் கேட்டேன். கல்விக்கு உதவி செய்றது ரொம்ப உத்தமமான விசயம்னு  சொன்னா .அப்படி செய்கிறது நல்லதுன்னு எனக்கும் தோன்றது. ரஞ்சனிக்குத்தான் பணம் கொடுக்காமே சீட் கிடைக்கப் போகிறதே. சேர்த்து வைத்த பணத்தில் மீனாவுக்குப் படிக்க உதவி செய்யுங்களேன். ” ”அவளுக்கு அப்பா, அம்மா கிடையாது. மூணு வருஷம் சீக்கிரமாய் பறந்துவிடும்.அவளை என் சகோதரி மாதிரி நினைத்து உதவுங்களேன் “ என்றாள் ரஞ்சனி. சுந்தரின் முகம் இருண்டது.  பார்வதியைப்  பார்த்து சினத்துடன் சொன்னார். மீனா என் அக்கா பெண்ணா? இல்லை உன் அண்ணன் பெண்ணா ? அவள் படிப்புக்கு நாம் ஏன் உதவி செய்ய வேண்டும்?..நான் மீனாவுக்குப் பண உதவி செய்ய மாட்டேன்” என்று இதயம் படபடக்க பேசி , அலமாரியிலிருந்த பண கவரை ஒரு பையில் எடுத்து வைத்துக் கொண்டு நான் இப்போதே பேங்கில் பணத்தைப் போட்டுவிட்டு வருகிறேன் என்று அவசரமாக வீட்டை விட்டு விரைந்தார். தெருவில் நடந்தார். அந்த வீதியின்  கடைசியில்தான் மீனாவின் பாட்டி பூ விற்றுக் கொண்டிருப்பாள். அன்று மீனா பூ வியாபாரம் செய்து கொண்டிருந்தாள். பூக் கடைக்குப் பக்கத்தில் ஒரு குருட்டுப் பிச்சைக்காரன் உட்கார்ந்து பிச்சை எடுத்துக் கொண்டிருந்தான். அவன் முன்னால் ஒரு தட்டு இருந்தது. அவர் நடந்து போய்க் கொண்டிருக்கும் போது அவர் பக்கத்தில் வேகமாகச் சென்ற ஒரு இரண்டு சக்கர வாகனத்தின் பின் பக்கம் அமர்ந்திருந்தவர் கையில் வைத்திருந்த இரும்பு தடி அவர் மண்டையில் பட்டு நிலைகுலைந்து கீழே விழுந்தார்.. அவர் கையிலிருந்த பையிலிருந்து பண கவர் விர்ரென்று பறந்து சென்று குருட்டுப் பிச்சைக்காரன் முன் வைத்திருந்த தட்டில் பொத்தென்று விழுந்தது. சுந்தரம் இதைக் கவனிக்கவில்லை. அதற்குள் நான்கு பேர் அவரைச் சூழ்ந்து கொண்டு அவர் எழுந்திருக்க உதவி செய்தனர். ஒருவர் அவர் கையைப் பிடித்து வீட்டில் கொண்டு போய் விட்டார். பார்வதி திடுக்கிட்டுப் போனாள்.  பணம் பத்திரமாய் இருக்கிறதா ? உங்களுக்கு அடி படவில்லையே ?  என்று கேட்டாள்.. காலியாய் இருந்த பையைப் பார்த்து சுந்தரம் தலையில் இடி விழுந்த மாதிரி அதிர்ச்சி அடைந்தார்.“ ப ...ண..ம்”. என்று சொல்லிக்கொண்டே பொத்தென்று சோபாவில் விழுந்தார். “ இரண்டு லட்சங்க ........ எங்கே விட்டீங்க? எங்கேயோ விழுந்து விட்டிருக்கு வாங்க  போய்த் தேடலாம்” என்று பார்வதி சொல்லிக் கொண்டிருக்கும் போது மீனா பண கவருடன்  வந்தாள் மீனா.  ”உங்க பையிலிருந்த பண கவர் குருட்டுப் பிச்சைக்கரன் தட்டில் விழுந்து விட்டது. நான் அவனிடம் சண்டை போட்டு எடுத்து  வந்தேன். இந்தாங்க  பணம்” என்றாள். ’பணம்’ என்னும் வார்த்தையைக் கேட்டவுடன் சுந்தரத்திற்குப் போன உயிர் திரும்பியது.  அதற்கு அறிகுறியாக உடம்பு அசைந்தது. கண்ணைத் திறந்து எழுந்தவர், கையை நீட்டி கவரிலிருந்து கொஞ்சம்  பணத்தை எடுத்து மீனாவிடம் கொடுத்து “ரொம்ப நன்றி மீனா. உன் படிப்புக்கு நான் உதவி செய்கிறேன் உனக்கு உதவ கூடாதுன்னு சொன்னேன். ஆனால் எனக்கு நீ உதவி செஞ்சுட்டே. நான்  கெட்டதை நினைச்சேன். அதனால் விபத்தைச் சந்தித்தேன்.   என் தவறை உணர்ந்துவிட்டேன். நீயும்  என் பெண் மாதிரிதான்” என்றார். தன் கணவனின் மனமாற்றத்தை நினைத்து அதிக மகிழ்வு கொண்ட பார்வதி திருப்தியுடன்  சமையலறைக்குள் சென்றாள். ரஞ்சனியின் உள்ளம் மகிழ்ச்சியினால் திக்கு முக்காடியது.   அடுத்த நாள் காலை பள்ளியில் முதல் மணி அடித்துவிட்டது. எல்லோரும் அவரவர் வகுப்புகளுக்கு விரைந்தனர் . இரண்டாவது மணி அடித்தது.  இறைவணக்கம் முடிந்தது. அன்று சரஸ்வதி டீச்சர் அறிவிப்பு செய்தார் ”வாழ்க்கை வாழ்வதற்காகவும் இருக்கலாம் ; வாழ வைப்பதற்காகவும் இருக்கலாம். சமீபத்தில் ப்ளஸ் 2 தேர்வில் மாநிலத்தில்  இரண்டாவது இடத்தில் வந்த  நம் பள்ளி மாணவி ரஞ்சனி, நம் பள்ளியில் படித்த இன்னொரு ப்ளஸ் 2  மாணவியான மீனாவுக்குக் கல்லூரியில் படிக்க உதவிக்கரம் நீட்டி அவள் வாழ்க்கையில் ஒளியேற்றி இருக்கிறார். ரஞ்சினியால் நம் பள்ளிக்குப் பெருமை சேருகிறது.” மாணவர்களின் கரகோஷம் எழுந்தது. அது மட்டுமல்ல அந்த அறிவிப்பு   சில மாணவர்களின் பிஞ்சு இதயத்திலும் ஒரு  நல்ல எண்ணத்தை  வித்தாக ஆழ வேருன்றியது.                                         []                     20. உண்மை சுடும்   ஆடி மாதத்தில் துணிக்கடையில் காணப்படும் மக்கள் வெள்ளம் போல் அதிக நபர்கள் இருதய நோய் நிபுணர் மருத்துவர் ராஜசேகரைப் பார்க்கக் காத்திருந்தனர். வாரத்தில் மூன்று நாட்கள் மாலை ஆறு மணியிலிருந்து ஒன்பது மணிவரை மட்டும் அவரை அந்த மருத்துவ மனையில் பார்க்க முடியும். ராகவன் மருத்துவரைப் பார்க்க கவலையோடு காத்திருந்தார். அவர் மனைவி கலாவிற்கு ஏற்கனவே இருதய சிகிச்சை ஆகியிருக்கிறது. சமீபத்தில் மூச்சு விடுவது கடினமாயிருப்பதால் முழுஉடல் பரிசோதனை செய்து பரிசோதனை அறிக்கையுடன் மருத்துவரை எதிர் பார்த்திருந்தார்.அறிக்கையைப் பார்த்து மருத்துவர் இருதய குழாயில் அடைப்புகள் அதிகமாகி இருக்கின்றன. வயதாகிவிட்டதால் எப்போது வேண்டுமானாலும் மாரடைப்பு ஏற்பட வாய்ப்பு உண்டு என்று கூறி மருந்து எழுதித் தந்தார். ராகவனுக்கு மனக்கவலை ஏற்பட்டது.”இந்தத் தகவலை எப்படி கலாவிடம் சொல்வது” என்று குழம்பினார். ”ஒருகால் அதிர்ச்சியால் அவள் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டு விடலாம்” என்று எண்ணினார். அவளிடம் ஒன்றும் சொல்ல வேண்டாம் என்று நினைத்தார். யோசித்துக் கொண்டே வீட்டுக்குள் நுழைந்தார். அங்கே அமர்ந்திருந்த நண்பர் ராமநாதனைப் பார்த்து வியப்படைந்தார். இருவரும் ஒரே தேதியில் பிறந்தவர்கள். இந்தியன் வங்கியில் ஒரே நாளில் சேர்ந்தார்கள். இருவரும் ஒரே நாளில் பணி ஓய்வு பெற்றார்கள். ஓய்வு பெற்று பத்து ஆண்டுகள் ஆகின்றன. ராமநாதன் அடிக்கடி ராமநாதனை வந்து பார்ப்பார். எட்டு மாதங்கள் கழித்து இப்போதுதான் வருகிறார். ராமநாதா எப்படி இருக்கிறாய் ? உன்னைப் பார்த்து நிறைய நாட்கள் ஆகிவிட்டன. உன் மனைவிக்கு உடல் நலம் சரியில்லையென்று சொல்லிக்கொண்டிருந்தாயே ? அவள் இப்போது நலமா?” அன்புடன் கேட்டார். ராமநாதன் உடனே பதில் சொல்லவில்லை. இரண்டு நிமிடங்கள் அமைதியாக இருந்தது விட்டுக் கலங்கிய கண்களுடன் “ அவள் என்னைத் தனியே விட்டுவிட்டுப் போய்விட்டாள்” என்றார். அவர் கண்களில் கண்ணீர் பெருகியது. ”திடீரென்று உன் மனைவிக்கு என்ன ஆகிவிட்டது ?” அவளுக்கு இரத்த சோகை. பார்க்காத மருத்துவர் இல்லை. அவ ஜாதகத்தைக் நல்ல ஜோசியரிடமும் காண்பித்துக் கேட்டாச்சு. ஒரு சமயம் நிலைமை அதிக மோசமாகிவிட்டது . டாக்டர், ”அவள் அதிக நாட்கள் உயிர் வாழமாட்டாள்” என்று சொன்னார்.நானும் என் மகனும் அதை அவளிடம் சொல்லாமல் மறைத்து விட்டோம். ஒரு நாள் ”உடம்பு வலிக்கிறது” என்றாள். டாக்டரிடம் அழைத்துச் போவதற்குள் அவள் உயிர் பிரிந்துவிட்டது. உயிர் போகப்போகிறது என்று தெரிந்திருந்தால் அவள் ஆசைகளைச் சொல்லியிருப்பாள். ராகவா, நான் பெரிய தப்பு செய்துவிட்டான். உண்மையை அவளிடம் சொல்லாமல் மறைத்துவிட்டேன். என் மனசு உறுத்துகிறது.“ என்று தேம்பித்தேம்பி அழுதார் ராமநாதனைப் பார்த்தால் பரிதாபமாக இருந்தது. அவர் முகத்தைத் தடவி, வருத்தப்படாதே. நீ செய்தது சரியானதே. உன் நிலையில் யார் இருந்தாலும் அதைத்தான் செய்திருப்பார்கள். இறைவன் ஒருவருக்கு நாளைக் குறித்துவிட்டால் அதை யாராலும் மாற்ற முடியாது. போன உயிர் திரும்பி வருமா ? இறப்பு நம் கையில் இல்லை. நீ நல்ல நோக்கத்துடன்தான் செய்திருக்கிறாய். வாய்மை என்பது என்ன? தெய்வப்புலவர் திருவள்ளுவர், பொய்மையும் வாய்மையிடத்து; என்ற குறளில் குற்றமற்ற நன்மையை விளைவிக்கக் கூடுமானால் பொய்யான சொல்லும்கூட வாய்மை என்று கூறத்தக்க இடத்தைப் பெற்றுவிடும். நீ கவலைப்படாதே. இனிமேல் நடக்கப் போவதைப் பார்” என்றார் ராகவன். இந்த ஆறுதலான வார்த்தைகளால் மனம் தேறிய ராமநாதன் வீட்டிற்குத் திரும்பிச் சென்றார். .அதன் பிறகு ராகவன் சிந்தித்தார். ராமநாதனைச் சமாதானப்படுத்தி அனுப்பிவிட்டோம். மனைவியே ஆனாலும் சத்தியத்தையும் நேர்மையும் கடைப்பிடிக்காவிட்டால் உண்மை சுடும். உள்ளத்தில் வலி ஏற்பட்டாலும் உண்மையைச் சொல்லிவிட வேண்டும் என்று தீர்மானித்து கலா இருந்த அறைக்கருகில் போனார்.   அப்போது கலா மருமகளிடம் , எனக்கு நெஞ்சு வலி அடிக்கடி வருகிறது. நான் எவ்வளவு நாள் உயிரோடு இருப்பேன் என்று எனக்குத் தெரியாது. பூவும் பொட்டுமாகக் கண்ணை மூடவேண்டுமென்பது என் ஆசை. உன்னுடைய ,மாமனாரை நீதான் பார்த்துக் கொள்ளவேண்டும்” கூறியதைக் கேட்ட ராகவனின் கண்களிலிருந்து கண்ணீர் அருவியாய் கொட்டியது.                                                         []         21. அதிதி   பாலு விட்டத்தைப் பார்த்து எதையோ யோசித்துக் கொண்டிருந்தான். அடிக்கடி கற்பனையில் மூழ்கி விடுவது அவன் பழக்கம். அப்போது தேங்காய் உடைக்கும் சப்தம் கேட்டது. அவன் வெளியே ஓடினான். வீட்டுக்கு எதிரே இருக்கும் கோவிலின் அர்ச்சகர் தேங்காயை   சூரைத்தேங்காய் உடைத்தார். பூ விற்பவள், மற்றும் இரண்டு சிறுவர்களும் தேங்காயை எடுக்க ஓடினர். பாலுவும் ஒரு பெரிய தேங்காய் சிதறலை எடுத்துக் கொண்டான். அது அவனுடைய வழக்கம். சூரைத்தேங்காய் சிதறலை எடுக்க வெட்கப்பட மாட்டான். அவனுக்கு ஐம்பது வயது ஆகிறது. பொறுப்பு என்பதே கொஞ்சம் கூட கிடையாது. எப்போதும் கனவு உலத்தில் சஞ்சரிப்பான். கடவுள் பக்தி உண்டு. எதிரேயிருக்கும் கோவிலுக்கு அடிக்கடி செல்வான். அப்படிப் போகும்போதெல்லாம் சிதறு தேங்காய் கிடைத்தால் பொறுக்கி வருவான். அவனை அறியாமலேயே அவனுக்கு அது பழக்கமாகி விட்டது. அவனுக்கு வாழ்க்கைச் சக்கரம் ஓடுகிறதென்றால் அவனுடைய புத்திசாலி மனைவி சாரதாதான் காரணம். சிக்கனமாய் செலவு செய்து சேமிப்பாள். சோதிடத்திலும் நம்பிக்கை உண்டு. அவன் முன்னேறாமல் வாழ்க்கையில் பின்தங்கியிருப்பதுக்குக் காரணம் கிரகங்கள்தான் காரணம் என்று சோதிடர் சொல்வதை முழுவதும் நம்பி அதற்கான பரிகாரங்களைச் சிரத்தையுடன் செய்வாள்.மிதமிஞ்சிய இரக்கக் குணம் உடையவள். யாராவது கோவிலில் உற்சவம் நன்கொடை என்று கேட்டு வந்தால் முடிந்ததை அளிப்பாள். அதிதிக்கு உணவு அளித்தால் புண்ணியம் என்பாள். பாலு அவளின் குணத்திற்கு நேர் எதிர். தனக்கு மிஞ்சியதுதான் தானமும் தருமமும் என்பது அவன் கொள்கை. “நாமே இரக்கப்படக்கூடிய நிலையில் இருக்கிறோம். நாம் எதுக்கு இன்னொருத்தர் மேலே இரக்கப் படணும்” என்பான். காலிங் பெல் அடிக்கும் சப்தம் கேட்டது. யாரது? பாலு கதவருகே போனான். திருவல்லிக்கேணியிருந்து ஒரு பெண் மாதத்தில் ஒரு ஞாயிற்றுக்கிழமை அப்பளம் வடாம் கொண்டு வந்து விற்பாள். ஏழைப் பெண் என்று சாரதா அவளிடம் ஒவ்வொரு முறையும் வாங்குவாள். ”யாரது?” பூசை அறையில் சுலோகம் சொல்லிக் கொண்டிருந்த சாராதா அதை நிறுத்திவிட்டுக் கேட்டாள். எப்போதும் அப்படித்தான் என்னதான் வாய் சுலோகம் சொல்லிக் கொண்டிருந்தாலும் மனம் அலைபாயும். காது உன்னிப்பாக தன் வேலையைச் செய்யும். ”அப்பளம் விக்கும் பெண் வந்திருக்கு.” உடனே எழுந்து வந்த சாரதா அவளிடம் இரண்டு கட்டு அப்பளம் வாங்கினாள். அதற்குண்டான பணத்தைக் கொடுத்தாள். ”நான் கோவிலுக்குப் போறேன்” பாலு நகர்ந்து விட்டான். கோவிலுக்குள் சென்ற பாலு அங்கு பாலாஜி சாஸ்திரிகளைப் பார்த்தான். அவர் நன்கு வேத பாராயணம் செய்தவர். குரல் கணீரென்று இருக்கும். ஓஹோன்னு இருந்தவர். எல்லாம் போச்சு. அவர் குரல் போச்சு. வைதீகம் போச்சு. குரல் வளையில் கேன்சர் என்பதால் அவரால் பேச முடியாது.கோவிலிலே வந்து அடிக்கடி உட்கார்ந்துப்பார். ராமஜெயம் எழுதிக் கொண்டிருப்பார். தேவைப்பட்டால் சைகை மொழியில் பேசுவார். பாலாஜி சாஸ்திரிகள் பாலுவைப் பார்த்துப் புன்னகைத்தார். பாலு பதிலுக்கு குறுநகை புரிந்தான். கோவிலைச் சுற்றத் தொடங்கினான். சாரதா சுலோகத்தைத் தொடர்ந்து சொல்லிக்கொண்டிருந்தாள். மீண்டும் இடையூறு. காலிங்பெல் அடிக்கும் ஒலி கேட்டது. கணவர் கோவிலுக்குப் போயிருப்பதால் அவள்தான் எழுந்து வர வேண்டும் கதவைத் திறந்து பார்த்தால் வேட்டிக் கட்டி ருத்திராட்ச மாலை அணிந்து வயதான முதியவர், அறுபதைக் கடந்தவர் நின்று கொண்டிருந்தார். நெற்றியில் விபூதி பட்டை. பெரிய குங்குமப் பொட்டு. அவளைப் பார்த்ததும் கையில் ஒரு நோட்டிசைக் கொடுத்தார். “கோவிலுக்கு நன்கொடை. உங்களால முடிஞ்சதைக் கொடுங்க”. சாரதாவால் மறுக்க முடியவில்லை. ”இருங்க வரேன்” உள்ளே போய் தேடி நூறு ரூபாயைக் கொண்டு வந்து கொடுத்தாள். அவர் முகத்தில் இவ்வளவுதானா என்கிற மாதிரி இருந்தது. ஒரு ரசீதை எழுதிக் கொடுத்தார். ஒரு சுலோகத்தைத் தங்கு தடையில்லாமல் கூறினார். கேட்ட சாரதாவுக்குப் பிரமிப்பாய் இருந்தது. அவரை ஆச்சர்யத்தோடு பார்த்தாள். ”நான் அதிதி வந்திருக்கேன். எனக்குச் சாப்பிட டிபன் கொடுங்கோ” என்று உரிமையோடு தயக்கமில்லாமல் கூறினார், சாரதாவுக்குத் திக்கென்றது. என்ன இது? அதிதி என்கிறாரே? இவருக்குச் சாப்பாடு போட்டால் புண்ணியம் அல்லவா என்று நினைத்துக் கொண்டு “உள்ளே வாங்க”. என்று அழைத்தாள். அந்தக் கிழவர் உள்ளே வந்து உட்கார்ந்தார். சாரதா சமையலறைக்குள் இட்லியைச் செய்ய குக்கரை வைத்தாள். சுடச்சுட ஆறு இட்லி, மிளகாய்ப் பொடியுடன்  சாப்பிட்டார். ”இன்னும் சாப்பிடறேளா?” என்று சாரதா கேட்டதிற்கு. இரண்டு இட்லி மட்டும் போடுங்கோ” என்று சொல்லி அதைச் சாப்பிட்டார். ”காபி சாப்பிடறீங்களா ?” “நான் காபி சாப்பிடமாட்டேன். பூஸ்ட் இல்லேன்னா ஹார்லிக்ஸ் கொடு.” என்று அதட்டலான குரலில் சொன்னார். ”யாசிப்பவர் தன்மையாய் கேட்கவேண்டும். ஆனால் இங்கிதம் தெரியாமல் இவ்வளவு அதிகாரமாய் கேட்கிறாரே ”என்று அவளுக்கு ஆச்சர்யமாய் இருந்தது. அவருடைய முகமலர்ச்சியைக் கெடுக்க கூடாதென்று எதுவும் சொல்லாமல் சமையலறைக்குள் சென்றாள். அவள் கொண்டு வந்த ஹார்லிக்ஸை சாப்பிட்டுவிட்டு அந்தக் கிழவர் வீட்டை மேலும் கீழும் பார்த்தார். மனசுக்குள் ஒரு கணக்கு போட்டு விட்டு இந்த வீட்டுக்குத் தோசம் இருக்கு. பரிகாரத்துக்கு ஒரு ஹோமம் செய்ய வேண்டும். ஐந்தாயிரம் ஆகும். நாளை உங்காத்துக்குச் சாப்பிட வருவேன், பத்து மணிக்கு வருவேன். அதிதிக்குச் சாப்பாடு போட்டால் உங்களுக்குக் கோடி புண்ணியம். அதுக்குள்ளே பணத்தைத் தாயார் பண்ணி வைங்க“ என்று சொல்லிவிட்டு அங்கிருந்து கிளம்பினார். அவர் போய் பத்து நிமிடம் கழித்து தேங்காய் மூடியோடு வந்த சம்பத் “சாரதா இந்தா, தேங்காய் மூடி.. சூரைத்தேங்காய் விடுவதற்காகக் காத்திருந்தேன். அதனாலே நேரம் ஆகிவிட்டது. சட்னியைத் தயார் பண்ணி இட்லியைக் கொடு”என்றான். ”கோவிலுக்கு நன்கொடை கேட்க ஒருவர் வந்திருந்தார். அவருக்கு நூறு ரூபாய் கொடுத்தேன். இட்லியைச் சாப்பிடக் கொடுத்தேன். வயிராற திருப்தியாய் சாப்பிட்டார். நாளைச் சாப்பிட வரேன் என்று சொல்லிவிட்டுப் போயிருக்கிறார். வீட்டிலே தோசம் இருக்காம். பரிகாரமாய் ஹோமம் செய்யணும். ஐயாயிரத்துக்கு ஏற்பாடு பண்ணுங்க.” ”தனக்கு மிஞ்சியதுதான் தானமும் தருமமும்,. நம்ம பணம் நல்ல காரியத்திற்குப் போகிறது என்பதை உறுதி செய்துகொண்டுதான் பணத்தைப் பிறருக்குக் கொடுக்க வேண்டும். இந்த ஹோமம் எல்லாம் பணம் பறிக்கத்தான். உனக்குப் புரிய மாட்டேங்கிறதே”. ”எனக்கு எல்லாம் தெரியும். நீங்க அதைப் பத்தி எதுவும் சொல்லாதீங்க. முதல்லே பணத்துக்கு ஏற்பாடு செய்யுங்க,.” “என்கிட்டே பணம் இல்லையே”. ”நகை வாங்கறதுக்காக நான் சேமித்து வைச்சிருக்கேன். அதிலிருந்து கொடுத்துடலாம்” இது தேவைதானா என்று கேட்பது போல் அவளைப் பார்த்தான். ”அதிதிக்குச் சாப்பாடு போடுவது ரொம்பப் புண்ணியம். அவர் சொல்ற ஹோமம் செய்தால் வீட்டில் உள்ள தோசம் போகும். உங்களுக்கு நல்ல வேலைக் கிடைக்கும். அதனாலே மறுக்காதீங்க” என்றாள். அவன் காய்கறி எல்லாம் வாங்கி வந்தான். அடுத்த நாள் காலை சாரதா எழுந்து விருந்து சமையல் செய்ய ஆரம்பித்தாள். மணி பத்து ஆச்சு. சமையல் தயார் ஆகிவிட்டது. ஆனால் அதிதி வரவேயில்லை. சாரதா தன் கணவரைப் பார்த்து, ”நேற்று வரேன் என்று சொல்லிவிட்டுப் போனார். எதனால் இன்னும் வரவில்லையென்று தெரியவில்லை. அவர் வருவார் என்னும் நம்பிக்கையில் சமைத்து வைத்து விட்டேன். அவர் வராவிட்டால் சமைத்ததை என்ன செய்வது? எனக்கு ஒரே டென்ஷனாக இருக்கிறது. நீங்கள் இந்த தெருகோடிவரைப் போய் யாராவது ஒல்லியாக ருத்திராட்ச மாலை அணிந்து விபூதி பட்டையுடன்  வந்து கொண்டிருக்கிறாரான்னு பார்த்துட்டு வாங்க.” என்றாள். பாலு நகர்ந்தான். தெருக்கோடியில் ஒரு வீட்டில் கூட்டமாக இருந்தது. இரண்டு போலீஸ்காரர் இருந்தனர். “என்ன விசயம் என்று அங்கிருந்த ஒருவரிடம் கேட்டான். இவர் ஹோமம், பரிகாரம் என்று பணம் பறித்து விடுகிறார். கோவிலுக்கு நன்கொடை என்று நோட்டீஸ் கொடுத்து எல்லோரிடமும் பணம் வாங்கியிருக்கிறார். இந்த வீட்டுக்காரரின் பெரியப்பா பிள்ளை போன மாதம் பணத்தை இழந்திருக்கிறார். எதேச்சையாக இங்கு வந்திருக்கும் அவர்தான் காவல்துறைக்குத் தெரிவித்தார்” என்று சொன்னார். கெட்டிக்காரன் புளுகு எட்டு நாளில் தெரியும் என்பார்கள். தலைகுனிந்து கொண்டு சாரதா சொன்ன அடையாளங்களுடன் இருந்தவர் போலீஸ் ஜீப்பில் ஏறினார். ”சாரதா சொன்ன ஆள் சரியான ஏமாற்று பேர்வழி. பாவம் அதிதி என்று நினைத்து அவள் விருந்து தயார் செய்து காத்திருக்கிறாள். ஏமாற்றப்பட்டது தெரிந்தால் மிகவும் கவலையுறுவாள்” என்று எண்ணிய பாலு கோவிலுக்குப் போய் பாலாஜி சாஸ்திரிகளையாவது வீட்டுக்குச் சாப்பிட அழைத்துப் போகலாம் என்று கோவிலுக்குச் சென்றான். அன்று பாலாஜி சாஸ்திரிகள் வரவில்லை. அட்டா, இப்போ என்ன செய்வது? சாரதாவிடம் என்ன பதிலைச் சொல்லுவது என்று யோசித்துக்கொண்டு கோவிலுக்கு வெளியே வரும்போது அர்ச்சகர் சூரைத்தேங்காயை உடைத்தார். பாலுவின் காலருகில் தேங்காயின் பெரிய சிதறல் விழுந்தது. அதை அவன் எடுக்கும்போது தாடி வைத்த ஒருவன் ஏக்கத்துடன் கையை நீட்டினான். ”நான் சாப்பிட்டு இரண்டு நாள் ஆச்சு. என்கிட்டே கொடுங்க“ என்றான். பஞ்சத்தில் அடிபட்டவன் போல் இருந்தான். ”சாப்பிட்டு இரண்டு நாள் ஆச்சு” என்னும் வார்த்தைகளைக் கேட்டதும் பாலுவின் மனதில் சடாரென்று ஒரு யோசனை உதித்தது. சாரதா அன்னமிடக் காத்திருக்கிறாள். இவனோ பசியோடு இருக்கிறான். இரண்டு பேருடைய பிரச்சனையும் தீர்ந்துவிடும்..” என்று எண்ணியவன் , ”எங்கூட வாங்க. சாப்பிடப் போகலாம்”. ”என்னது ? சாப்பிடவா?” என்று மகிழ்ச்சியுடன் கேட்டான் தாடிகாரன் ”அதோ அந்த வீடுதான். வாங்க போகலாம் ” இருவரும் வீட்டுக்குள் நுழைந்தனர். இலை போட்டு தயாராக இருந்தது. பாலு தன்னுடன் வந்தவரைப் பார்த்து அங்கே போய் கால் கை கழுவி வாங்க, சாப்பிடலாம் என்றான். சாரதா பாலுவைப் பார்த்து, “யார் இவர்? நம் அதிதி எங்கே?” என்றாள். அவர் மாமியார் வீட்டுக்குப் போயிருக்கார். அவரை நம்பி விருந்து சமைத்து வைத்திருக்கேன். அவர் என்னை ஏமாற்றிவிட்டாரே எப்போது வருவாராம் ? ”ஜெயிலிருந்து விடுதலையாகும்போதுதான் வருவார். நம்ம பணம் மிச்சமாச்சேன்னு சந்தோசப்படு. நடந்ததை நினைத்து வருந்தாதே. ஏமாறுபவர்கள் இருக்கும்வரை ஏமாற்றுபவர்கள் இருப்பார்கள். இனிமேல் ஏமாறாமல் ஜாக்கிரதையாய் இருப்போம். “ ”சிறந்த பக்திமான் மாதிரி இருந்தாரே? அவரா.. நீங்கள் சொல்வதை என்னால் நம்பவே முடியவில்லை. ஒரு வேடன் கண்ணுக்குத் தெரியும் முயலை விட்டு விட்டு வானத்தில் பறக்கும் காக்கைக்குக் குறி வைப்பது போல நானும் அறிவில்லாமல் பகவான் மேல் நம்பிக்கை வைத்து பலன் பெறுவதை விட்டு பரிகார ஹோமம் செய்து பணத்தை இழக்க இருந்தேன். இனிமேல் அப்படி நம்பி மோசம் போகமாட்டேன். நல்ல காலம். நம் பணம் மிச்சமாச்சு. அதுசரி, நான் சமைச்சது வீணாகக் கூடாது என்பதற்காக புது அதிதியை அழைச்சிண்டு வந்தீங்களா?” ”இவரைக் கோவிலிலே பார்த்தேன். பசித்தவருக்கு உணவு அளிப்பதுதான் புண்ணியம் என்பதால் அழைத்து வந்தேன். இவர்தான் நம் அதிதி” சாரதா மனநிறைவோடு சிரித்தாள். “நீங்கள் சொல்வதுதான் எனக்கும்  சரியாகப் படுகிறது “ என்றவள் இலையில் சந்தோசமாய் வந்தமர்ந்த விருந்தினருக்குப் பரிமாற ஆரம்பித்தாள்.                                                           []         22. அம்மா  வீடு   மணி 11.00 .அந்த வேளையில் கோயம்பத்தூர் சிறைச்சாலை அமைதியாய் இருந்தது.   வேணு  சிறை வளாகத்தில் விளையாடிக்கொண்டிருக்கும் குழந்தைகளையே பார்த்துக் கொண்டிருந்தான். தன்னைப் போலவே குழந்தைகளும் சிறையில் இருக்க வேண்டியாதாயிற்றே என்று நினைத்து வருந்தினான். குழந்தைகளின் தலைஎழுத்து … என்று மனம் நொந்தான்.     “என்ன பார்த்துக் கொண்டிருக்கிறாய் ?” என்று அவன் சக ஜெயில் கைதியான சரவணனின் குரல் கேட்டு நனவுலகத்துக்கு வந்தான். “ஒன்றுமில்லை அந்தக் குழந்தைகளின் விதியை நினைத்தேன்”. ”என் குழந்தைகள்தான் அவை. இரட்டைக் குழந்தைகள். ஓட்டு மொத்த குடும்பமே சிறையில் அடைக்கப்பட்டால் குழந்தைகள் ஐந்து வயதுவரை பெற்றோருடன் சிறையில் இருக்கலாம். இன்று அவர்களுக்கு ஐந்து வயது முடியப் போகிறது .” அவர்கள் எங்கே போவார்கள்? “யாரோ ஒரு பெண்மணி. பெயர் வந்தனா. புண்ணியவதி . அவர் சிறையிலுள்ள கைதிகளின்  குழந்தைகளுக்காக ஒரு  காப்பகம் நடத்திக் கொண்டிருக்கிறாராம். அவர் நடத்தும் காப்பகத்தின் பெயர்  அம்மா வீடு. ஆதரவற்ற குழந்தைகளுக்காக அவர் அம்மாவாக இருக்கிறார். அவர் குழந்தைகளை அழைத்துக் கொண்டு போவதாகச் சொல்லிவிட்டுப் போயிருக்கிறார். நாங்கதான் கொலை செய்துவிட்டு அடைபட்டுக் கிடக்கிறோம்.  குழந்தைகளாவது நல்லபடியாக வளரட்டும் “ என்றான். “நானும்தான் கொலைகாரன்” என்றான் வேணு . அவன் மனத்திரையில்  நினைவலைகள் பின்னோக்கிச் சென்றது. கல்யாணம் ஆகி இருபது வருடங்கள் கழித்து பிறந்த குழந்தை என்பதால் அவன் பெற்றோர் அவனுக்கு  அதிக செல்லம் கொடுத்து வளர்த்தனர். பணக்காரக் குடும்பம். அரண்மனை போன்ற வீடு, நிலம், தோட்டம் .... எல்லாம் ஏராளம் என்பதால் அவன் கேட்டதெல்லாம் கிடைத்தது. அவன் குழந்தையாய் இருக்கும்போதே செல்லமாய் வளர்க்கப்பட்டதாலோ என்னமோ அடிக்கடி கோபப்படுவான். கோபப்படுவது அவன் சுபாவம்.  . . குழந்தையிலிருந்தே அவன் ஆத்திரக்காரன் : முன்கோபியும் கூட. அவன் பத்தாவது படிக்கும் போது அவன் தந்தை மாரடைப்பால் இறந்துவிட்டார்..அம்மாதான் அவனை வளர்த்தாள். அவன் வளர்ந்தான், மிகவும் கோபக்காரனாக வளர்ந்தான். கோபம் வந்தால் அவனுக்குக் கண்கள் கோவைப்பழம் போல் சிவந்துவிடும்.  உதட்டைக் கடிப்பது, கையை உதறுவது போன்ற உடல் மொழிகளில் அவன் கோபத்தை வெளிப்படுத்துவான். கோபப்படுவதைத் தவிர அவனிடம் வேறு எந்த கெட்ட பழக்கமும் கிடையாது. கோபம்தான் அவனுடைய பலவீனம். அவனுக்குத் திருமணம் நடந்தது. ஏழையானாலும்  நளினமும் அழகும் நிறைந்த பெண். அவனும் அவளிடத்தில் ஆசையாகத்தான் இருந்தான்.  திருமணம் ஆகி ஐந்து  வருடம் ஆகியும் குழந்தை பிறக்கவில்லை . காபியில் சூடு குறைவு போன்ற  சின்ன விசயத்திற்குக் கூட மனைவியிடம் சீறுவான். ரொம்பக் கோபம் வந்தால் கையில் கிடைத்ததைத் தூக்கி முகத்தில் எறியாத குறையாக விட்டெறிவான். கோபம் வருவது இயற்கை. ஆனால் அளவுக்கு மிஞ்சின கோபம் ஆபத்து என்பதை அவன் உணரவில்லை. அவன் தந்தை விட்டுப் போன சொத்து ஏராளம். ஏழு தலைமுறைக்கு உட்கார்ந்தே சாப்பிடலாம். அதனால்தான் என்னமோ அவன் வேலைக்குப் போய் சம்பாதிக்கவில்லை. ஒரு நாள் அந்த விபரீதம் நடந்து விட்டது. மனைவியிடம் உணவு  கொண்டு வரச் சொன்னான். அவள் உடனே வரவில்லை”. சாப்பிட்டுவிட்டு வேலைக்கா போகப் போகிறீர்கள் ? “  என்று சமையலறையிலிருந்து சிரித்தாள். அவன் வேலைக்குப் போகாததைக் கேலி செய்வது போல தோன்றியதால் கோபத்தில் என்ன செய்கிறோம் என்று தெரியாமல் அவளருகிலிருந்த  கத்தியை எடுத்து மனைவியின் வயிற்றில் பலமுறை குத்தினான். மனைவி ரத்தவெள்ளத்தில் மிதந்தாள். ” என்ன காரியம் செஞ்சுட்டீங்க. உங்கள் கோபத்தால்”  என்று சொல்லிக்கொண்டிருக்கும்போதே அவள் உயிர் பிரிந்தது. அவன் அதிர்ச்சி அடைந்தான். அவள் உடலை மடியில் போட்டுக் கொண்டு கதறி  அழுதான். ”ஆத்திரக்காரனுக்குப் புத்தி மட்டு” என்னும் பழமொழிக்கு உதாரணமானான். தாகம் போன்று தன்னுள் எழும் உணர்ச்சிக்கு ஒரு மனிதன் அடிபணிந்துவிட்டால் அந்தக் கோபம் அவனை அழிவுக்கு இழுத்துச் செல்கிறது. கையில் கத்தியுடன் காவல் நிலையத்தில் சரணடைந்தான். சிறைச்சாலை என்னும் கூட்டுக்குள் அடைக்கப்பட்டான். அவன் தாயார் பெரிய வழக்கறிஞரை வைத்து அவனை விடுவிக்க முயற்சி செய்தாள். விசாரணைக்குப் பிறகு நீதிமன்றம் அவனுக்கு ஆயுள் தண்டனை தீர்ப்பு வழங்கியது. ஒரு நொடிப்பொழுது சிந்திக்காமல் ஒருவன் செய்யும் தவற்றுக்கு பரிகாரம்தான் சிறைத்தண்டனை. வெளி உலகில் வாழ்வதுபோல் சிறையிலும் வாழலாம். ஆனால் அங்குக் கட்டுப்பாடுகள் உண்டு. அந்தக் கட்டுப்பாடுகள்தான் சிறையில் மனித வாழ்வில் மாற்றங்களை உண்டாக்குகிறது. சிறையில் இருப்பது முதலில் அவனுக்குக் கடினமாகத்தான் இருந்தது. தனி அறையில் தத்தளித்தான். போகப்போகப் பழகி விட்டது . செய்த தவறை நினைத்து நினைத்து வருந்துவான். ஆறு மாதத்திற்குள் அவன் தாயார் மறைந்து விட்டார். அவன் தனிமைப்பட்டுப் போனான். துன்பம் சேர்ந்தாற்போல் வரும் என்பது அவன் விஷயத்தில் உண்மை.   சிறையிலும் நேரத்தை உபயோகமாகச் செலவழிக்கலாம். அங்குள்ள நூலகத்தில் புத்தகங்களை  எடுத்துப் படிப்பான். தொலைதுர கல்வியில் தமிழ் இலக்கியத்தில் “ எம்.ஏ “ பட்டப்படிப்பும் படித்து தேர்ச்சிப் பெற்றான். கவிதையும் எழுதுவான்.   மனத்தைக் கட்டுப்படுத்த தியானம், மூச்சுப் பயிற்சி  தினந்தோறும் செய்வான். அவன் மனம் மெல்ல மெல்லத் தூய்மை அடைந்தது.   புத்தகங்களைப்  படித்ததால் அவன் அறிவும்  பண்பும்  வளர்ந்தது. பிறைச் சந்திரன் வளர்ந்து நிறைவாகி குளிர்ச்சி தரும் முழு நிலா ஆவது போல் கொஞ்சம் கொஞ்சமாக கோபத்தை  விட்டு விட்டு சாந்தமூர்த்தி ஆகிவிட்டான்.கடன்பட்டவன்  ஒரு நாள் சொல்லாமல் கொள்ளாமல் ஊரை விட்டு மாயமாகி  விடுவதைப் போல் அவனுள் இருந்த  கோபம் என்னும் கெட்ட மிருகம் திடீரென்று ஒரு நாள்  அவனை விட்டு ஓடிப் போய்விட்டது.   சிறையிலிருந்து விடுதலையானவுடன் வாழ்க்கையில் மற்றவருக்குப் பயனுள்ளதாக ஒத்தாசையாக வாழ வேண்டும் என்று அவன் மனம் அடிக்கடி நினைத்தது. தான் படித்ததோடு இல்லாமல்  அங்கிருந்த  சிறையிலிருக்கும் கைதிகளுக்குப் பாடம் சொல்லிக்கொடுக்கிறான்.                 ”400 (நானுறு), உன்னைச் சிறைக்காவலர் அழைக்கிறார் “ என்று சொன்னவுடன் அவன் உடனே சிறைக்காவலர் அறைக்குள் சென்றான்.   ”வேணு , உனக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தி. உன்  நன்னடத்தை காரணமாக உன் தண்டனைக் காலம் பதினைந்து வருடங்களிலிருந்து  பத்து வருடங்களாகக் குறைத்து விடுதலை செய்ய அரசாங்க உத்தரவு வந்திருக்கிறது.  இன்றோடு  நீ சிறைக்கு வந்து பத்து வருடங்கள் முடிகிறது எனவே இன்று உனக்கு விடுதலை “ என்று  சிரித்துக்கொண்டே சொன்னார் சிறைக்காவலர்.   ” நான் இவ்வளவு சீக்கிரம் விடுதலை ஆவேன் என்று கொஞ்சம் கூட எதிர் பார்க்கவில்லை” என்று  முணுமுணுத்துக் கொண்டே வேணு  தன் அறைக்குத் திரும்பினான்.  சரவணிடம் சொல்லிவிட்டு விடைபெறச் சென்றபோது ஒரு வெள்ளை பெண்மணியை அவ்விடத்தில் கண்டான். உடல் முழுவதும் வெண்மையாய் செய்த  லீகோடெர்மா என்னும் நோய் அவளுக்கு வந்திருக்கிறது என்பது பார்த்தாலே தெரியும். வெள்ளை வெளேரென்றிருந்த அவளைப் பார்த்ததும் அவன் அதிர்ந்து போய் விட்டான். வயது நிச்சயமாக நாற்பதுக்கு மேல் இருக்கும். தனித்துப் பார்ப்பவரை உற்று நோக்க வைக்கும் வெள்ளைத் தோல். கண் இரப்பைகள் கூட வெண்மையாய் இருந்தது. நெஞ்சில் ஈரமும் உணர்ச்சி மிகுந்தவளாகவும் காணப்பட்டாள். சரவணன், ”இவர்தான் வந்தானா. ”அம்மா வீடு” குழந்தைகள் காப்பகத்தைக்  காந்தி நகரில் வைத்திருக்கிறார். பணம் இல்லாவிட்டாலும் கஷ்டப்பட்டுக் காப்பகத்தை நடத்திக்கொண்டிருக்கிறார். என் குழந்தைகளை அழைத்துப் போக வந்திருக்கிறார்” என்று அறிமுகம் செய்து வைத்தான். ”என்னிடம் பணம் இருந்தும் என்னால் நல்ல செயல்களைச் செய்ய முடியவில்லை. பணமில்லாமலே மனிதத் தொண்டு செய்கிறாளே” என்று மரியாதையோடு அவளை நோக்கி கைகுவித்து வணங்கினான்.  . அவளும் இவனைப் பார்த்துப் புன்முறுவல் பூத்தாள். அவன் சிறைச்சாலை சீருடைகளைக் களைந்து விட்டு தன்  உடைகளை அணிந்து கொண்டு கூண்டிலிருந்து வெளிப்பட்ட பறவையைப் போல்   மகிழ்ச்சியுடன் வெளியே வந்தான்.  பேருந்தில் ஏறி தன்  வீட்டை அடைந்தான்.   வேணுவிடம் சிலர் பணம் கேட்டு வந்தனர். அவனைப் பலர் மதிக்கவில்லை. எல்லாரும் பயத்துடனுடம் வெறுப்புடன் பார்த்தார்கள். துஷ்டனைக் கண்டது போல் தூர விலகினார்கள். அவன் பிறரிடம் பேச முயற்சி செய்து தோல்வியே அடைந்தான்.  கோடி கோடியாய் பணம் இருந்தால் போதுமா? யாரும் மதித்துப் பேச வேண்டாமா ? அவனும் யாரையும் பொருட்படுத்தவில்லை.”சமூகம் ஏன் தன்னை உதாசீனம் படுத்துகிறது? தவறு செய்தவன் திருந்தவே மாட்டானா?” என்று எண்ணினான்.   காலை எழுந்து ஒரு மணி நேரம் நடைப் பயிற்சி செய்வான். அன்றும்  வழக்கம் போல் நடைப் பயிற்சி செய்யக் கிளம்பி விட்டான். அவன் அப்படிப் போகும்போது ஒரு வீட்டிலுள்ள ஒரு பெண்மணி முறத்திலுள்ள குப்பையைப் பக்கத்து வீட்டில் கொட்டியதைப் பார்த்து அதிர்ந்து விட்டான். இதுதான் மனித நியதி போலும். எல்லோரும் சுயநலத்துடன் இருக்கிறார்கள். யாராவது ஓரிருவர் மட்டும் பொதுச்சேவை செய்யும் எண்ணத்துடன் இருக்கிறார்கள் சிறையில் பார்த்த வெள்ளைப் பெண் வந்தனாவைப் போல் என்று நினைத்தான். சிறைக்கைதிகளின்  குழந்தைகளைக் காப்பகத்தில் வளர்த்து உன்னத சேவை செய்யும் வந்தனா மீது அவன் மதிப்பு அதிகமாகியது. அவள் காப்பகத்துக்குப் போய் சரவணனின் குழந்தைகளைப் பார்க்க வேண்டுமென நினைத்தான். அவனுக்கு வாழ்க்கை  இனிக்கவில்லை. வீடு பற்றி எரியும்போது தண்ணீருக்காகக் கிணறு வெட்டுவதுபோலில்லாமல் இப்போதே ஏதாவது நல்ல காரியம் செய்ய வேண்டும் என்று மனம் அடிக்கடி நினைத்தது .சமூகத்திற்குப் பயனுள்ள செயலைச் செய்ய வேண்டுமென உறுதி பூண்டான்,   காந்திபுரம் மூன்றாவது மெயின் ரோடு 33 எண் . அங்கிருந்த ”அம்மா வீடு” குழந்தைகள் காப்பகம் அன்று  பரபரப்பாக காணப்பட்டது. வந்தனா நடத்தும் அக்காப்பகத்தில் ஐம்பது சிறுவர்கள் இருந்தனர். காலைச் சிற்றுண்டிக்கு வரிசையில் நின்று கொண்டிருந்தார்கள் . அந்தக் காப்பகத்தில் ஒரு டாக்டரும் உண்டு. ”பசங்களா கூச்சல் போடாமல் சாப்பிடுங்க” என்று சொல்லிவிட்டு வந்தனா வெளியே கிளம்ப தயாரானாள். காப்பகத்துக்குப் பணம் பத்தாயிரம் தேவையாய் இருந்தது. அதற்காக ஒரு புரவலரைப் பத்தாவது முறையாகப் பார்க்கப் போகிறாள்.   வேணு காலை வழக்கம்போல் நடந்து போகும்போது நெஞ்சு வலி  வந்ததால் தள்ளாடி ஒரு வீட்டின் முன் விழப் போனவன் அந்த வீட்டின் பெரிய இரும்பு கதவைப் பிடித்துக் கொண்டு நின்றான். அப்போது கதவைத் திறந்து வெளியே வந்த வந்தனா  அவனைப் பார்த்து  ”  என்ன ஆச்சு ஐயா உங்களுக்கு ” பதறினாள்.   அவன் மார்பில் கையை வைத்துக்கொண்டு, ” நெஞ்சு வலிக்கிறது” என்று முனகினான். ” இவரை உள்ளே கூட்டிட்டு வாங்க “ என்று அங்கு நின்றிருந்த செக்குரிட்டியிடம் சொல்லி விட்டு ,” டாக்டர்” என்று கத்திக் கொண்டே  ஓடினாள் வந்தனா. அவனுக்கு அவளைப் பார்த்தவுடன் சிறைச்சாலையில்  முன்னொரு நாள் அவளைப் பார்த்தது ஞாபகம் வந்து விட்டது. காவலாளி அவன் கையைப் பிடித்துக் கொண்டு உள்ளே அழைத்துச் சென்றான். டாக்டர் சந்திரன் அவனைப் பரிசோதனை செய்து விட்டு உடனடியாக மருந்து கொடுத்தார். ”நிலைமை சீரியஸ்” என்று சொல்லி உடனே பெரிய ஆஸ்பத்திரியில் சேர்க்க  அம்புலன்ஸக்கு ஏற்பாடு செய்தார். அங்கிருந்த சிறுவர்களைப் பார்த்த அவன் “ எப்படி வந்தனா பணமில்லாமல் இவ்வளவு குழந்தைகளைக் காப்பாற்றுகிறாள்” என்று எண்ணி ஆச்சர்யப்பட்டான்.சரவணின் குழந்தைகள் அவனருகில் வந்தனர்.  அவர்களிடம்  பேசிக்கொண்டிருக்கும்போது, ”நான் பணத்துக்கு ஏற்பாடு செய்ய வேண்டும். நான் கிளம்புகிறேன் “ என்று சொல்லிவிட்டு வந்தனா   வெளியே போய்  விட்டாள்.   டாக்டர் அனுப்பிய  ஆளுடன் வேணு அங்கிருந்து கிளம்பி ஆஸ்பத்திரிக்குப் போகும்போது மொபைல் போனைக் காப்பகத்திலே விட்டு விட்டதை யாரும் கவனிக்கவில்லை .   ஆஸ்பத்திரியில் அவனுக்கு ஆஞ்சியோ கிராம் பரிசோதனை செய்த பிறகு அவனுக்கு நா வறட்சி ஏற்பட்டது. கட்டிலிருந்தபடியே சைகை காட்டி ”குடிக்கத் தண்ணீர்” என்றவன் கேட்டதும் அங்கிருந்த நர்ஸ் தண்ணீர் கொண்டு வந்து கொடுத்தாள். அவளிடம் என் அலைபேசியை  “அம்மா வீடு” காப்பகத்திலே விட்டு விட்டு வந்து விட்டேன்.  தயவு செய்து யாரையாவது அனுப்பி அதை எடுத்து வரச் சொல்லுங்கள்” கெஞ்சினான். ” டாக்டர் இப்போ வந்து விடுவார் அவர் வந்ததும் நான் ஏற்பாடு செய்கிறேன். கவலைப் படாதீர்கள்” என்றாள் நர்ஸ்.   பணம் கிடைக்காத ஏமாற்றத்துடன்  காப்பகத்துள் நுழைந்த   வந்தனா, வேணுவின் அலைபேசியைப் பார்த்துவிட்டு, ”அடடா, இதை விட்டுவிட்டுப் போய்விட்டாரே , நான்  உடனே போய் கொடுத்துவிட்டு அவர் எப்படி இருக்கிறார் என்று பார்த்து விட்டு வருகிறேன்” என்று சொல்லிக்கொண்டே புறப்பட்டாள்.   வேணுவுக்கு இருதய வலி லேசாக இருப்பது போல் தோன்றியது. அறைக்குள் வந்த நர்ஸிடம், ”நெஞ்சு வலிக்கிறது,  டாக்டரை வரச்சொல்லுங்கள் “ என்றான். நர்ஸ் நகர்ந்ததும் , ஒரு  தாளில் ஏதோ எழுதத் தொடங்கினான். அவன் எழுதிக் கொண்டே இருந்தான். வந்தனா அவன் இருந்த அறைக்குள் நுழையும்போது அவன் கையிலிருந்த பேனா திடீரென்று கீழே விழுந்தது. அவன் நெஞ்சைப் பிடித்துக் கொண்டான்.  டாக்டரும் அந்தச் சமயம் வந்து விடவே   உடனே சிகிட்சை செய்தார்.   வந்தனா மொபைலை கட்டிலில் அவன் பக்கத்தில் வைத்துவிட்டுக் கிளம்ப யத்தனித்தாள். அவன் கீழே விழுந்த தாளைக் காண்பித்து முனகினான். வந்தனா அதை எடுத்தாள்.   அப்போது வேணுவிடமிருந்து ஒரு சப்தம் வந்தது . அவன் கண் குத்திட்டு நின்றது. டாக்டர் அவனைப் பரிசோதித்துவிட்டு உதட்டைப் பிதுக்கினார். ”உயிர் போய்விட்டது ” என்றார். வந்தனாக்கு கண்கள் பனித்தது .  அறிமுகம் அதிகமாகவில்லையென்றாலும் மனிதாபிமானத்தால் அவள் கலங்கினாள். கையிலிருந்த தாளை டாக்டரிடம் கொடுத்தாள்.அவர் அதை வாங்கி ஒரு கண்ணோட்டம் விட்டு ” அட! உயில் ”என்று திகைப்போடு சொல்லிவிட்டு உரக்கப் படித்தார்.   “வேணுவாகிய நான் சுய நினைவோடு எழுதிய உயில். எனக்கு வாரிசுகள் யாருமில்லை. என்னிடம் பல கோடி மதிப்புள்ள பணமிருந்தும் நான் இதுவரை ஒரு  நல்ல செயலையும் செய்ததில்லை. எனக்கு நெஞ்சு வலி அடிக்கடி வருகிறது. எவ்வளவு நாள் உயிரோடு இருப்பேன் என்று எனக்குத் தெரியாது. சாவதற்குள் நல்ல செயல் செய்ய வேண்டும் என்பதால் நான் தீர யோசித்து  இந்த உயிலை எழுதுகிறேன்.  என்னுடைய எல்லாச் சொத்துகளையும் வந்தனா நடத்தும் “ அம்மா வீடு” காப்பகத்துக்குக் கொடுத்து விடுகிறேன். அங்குள்ள ஆதரவற்ற குழந்தைகளுக்கு என் பணம் பயன்படட்டும். இப்படிக்கு வேணு வந்தனாவின் கண்களிலிருந்து கண்ணீர் பெருகியது.   []