[] [cover image] எண்ணங்களின் சிதறல்கள் சிவகுமாரி ஆவுடையப்பன் FreeTamilEbooks.com CC-BY-NC-ND எண்ணங்களின் சிதறல்கள் 1. எண்ணங்களின் சிதறல்கள் 1. நூலின் அறிமுக உரை 2. விநாயகனே வெவ்வினையை வேரறுக்க வல்லான்! 3. மீனாட்சியம்மை பத்து 4. அன்னையே சரணம் அன்னையே! 5. முருகன் பாடல்கள் 6. ஓம் அருள்மிகு மாணிக்கவிநாயகா நம: திருவிளக்கே போற்றி போற்றி 7. ஆண்டவர்களிடம் விண்ணப்பம் 8. இயற்கை 9. எண்ணங்கள் 10. அன்பு ஒன்றே சத்தியம் 11. இவனா மனிதன் ? 12. பிறந்தானே மனிதனாக… 13. காதல் 14. சுமை 15. பல்சுவை 16. வாழ்க்கை 17. யாரிடம் எப்படி ! 18. தைப் பொங்கல் 19. ஒன்றின்றி ஒன்றில்லை 20. தீபாவளி 21. முருகன் புஜங்கப் பாமாலை - ஸ்ரீ ஆதிசங்கரர் அருளியது. 22. திருச்செந்தூர் முருகன் அருள் பெறுவோமாக! எண்ணங்களின் சிதறல்கள் எண்ணங்களின் சிதறல்கள்   சிவகுமாரி ஆவுடையப்பன்   தமிழாக்கம் -       மின்னூல் வெளியீடு : FreeTamilEbooks.com   உரிமை : CC-BY-NC-ND கிரியேட்டிவ் காமன்ஸ். எல்லாரும் படிக்கலாம், பகிரலாம்.   மின்னூலாக்கம் - லெனின் குருசாமி - guruleninn@gmail.com   This book was produced using pandoc   பதிவிறக்கம் செய்ய - http://FreeTamilEbooks.com/ebooks/ennangalin_sitharalgal} நூலின் அறிமுக உரை கால ஓட்டத்தில் என்னைப் பாதித்த.. பண்படுத்திய நிகழ்வுகளின் தொகுப்பு. நூலாசிரியரின் அறிமுகம் - நூலாசிரியர் என்று சொல்லிக் கொள்ளத் தகுதி உள்ளதா என்று தெரியவில்லை. ஏழாவது வகுப்புப் படிக்கும் போதிலிருந்து எழுதுகிறேன். மேடைப் பேச்சு அனுபவமும் உண்டு. அகில இந்திய வானொலி( திருச்சி )யில் எனது கதைகள்.. நாடகங்கள் ஒலிபரப்பு செய்யப்பட்டுள்ளன. எனது தொகுப்பில் இணைத்துள்ள " முருகன் புஜங்கப் பாமாலை " மட்டும் ஆதிசங்கரர் எழுதியது. திரு.கலா பாரதி என்பவர் மொழி மாற்றம் செய்யப்பட்டு கல்கி வார இதழில் பிரசுரிக்கப்பட்டது. இது தங்களின் மேலான கவனத்திற்கு. மிக்க நன்றிகள். Sivakumari Avudaiappan சிவகுமாரி ஆவுடையப்பன். sivakumaritsa29@gmail.com விநாயகனே வெவ்வினையை வேரறுக்க வல்லான்! உலகத்தின் முதல்வன்! உருவத்தில் பெரியோன்! பலப்பல உருவில் அருளிடும் அரியோன்; வலிகளைப் போக்கிடும் வலிமை உடையோன்! கலிகாலக் கடுமை கடிந்திடும் கரியோன்! (1) வீடணனை மடக்கிக் காவிரிக் கரைதனில் விஷ்ணுவை நிலையாய்க் கோவில் கொள்ளச் செய்தான் கோபம் கொண்ட வீடணன் துரத்தி வரவே ஓடோடிச்சென்று உச்சிமலை அமர்ந்தான்!(2) உச்சிமலை மீதில் உவந்தே அமர்ந்தான், இச்சைகளை இயக்கும் இமையோன் மைந்தன்! பச்சரிசி பிட்டு நயக்கும் விநாயகன், எச்சமெல்லாம் களைவான் எங்களின் தலைவன். (3) காலத்தை வென்றோன்! ஞாலத்தில் சிறந்தோன்! காலனும் பணியும் கற்பக விநாயகன்! சீரும், பேரும், சிறப்பும் நல்கும் சீலம் மிகுந்தோன்! செல்வ விநாயகன்! (4) மாங்கனி பெறவே அம்மை அப்பனை மாறாமல் வலம் வந்தான்; முருகனை வென்றான்! மருகிக் கோபம் கொண்ட தம்பியை மார்புடன் அணைத்து மாங்கனி கொடுத்தான்! (5) மூஷிகன் கர்வம் அதனை அடக்கி மூஞ்சுறு வாகனம் ஆக அதைக் கொண்டான்! பாரதம் எழுத தந்தம் முறித்தான்! பாரதைக் காக்க எங்கும் உறைந்தான்! (6) நாவல் கனியை நயக்கும் நாயகன்; நாவாரப் பாடினால் நர்த்தனம் ஆடுவான்! நாகம் அதனையும் இடையணி ஆக்கினான்! நாதத்தின் முதல்வன்! வேதத்தின் தலைவன்!(7) வெள்ளெறுக்கு வேரில் உவந்தே உறைவான்! வெள்ளெறுக்கம் பூவை விரும்பியே அணிவான்! வெள்ளேறு ஏறும் சிவனவன் மைந்தன் வெள்ளம்போல் வேண்டியதை அளித்தே மகிழ்வான்! (8) அருகம்புல் மாலை அணியும் அழகன்! அரச மரத்தடி அமரும் வேந்தன்! பெருகும் தீவினை களையும் பெரியோன்; மருகும் மனத்தை மாற்றும் மறையோன்! (9) மாயையை அகற்றும் மாணிக்க விநாயகன்! தேவையை நல்கும் தீர்த்த விநாயகன்! சேயைப்போல் சிரிக்கும் செல்வ விநாயகன்! தாயைப்போல் காக்கும் தலைவன் விநாயகன்!(10) திருச்சிற்றம்பலம்! மீனாட்சியம்மை பத்து மாமதுரைத் தாயே! மனதில் வாழும் நீயே! மகிழ்ந்தெம்மைக் காக்க வேண்டும் வரம் அருள்வாய் தாயே ! இடம் விட்டு இடம் மாற இயம்பிடுவார் பல பேரே! வடகாசியில் விசாலாட்சி ! நடுநாட்டில் காமாட்சி ! தென்திசையில் மீனாட்சி ! திறம்பாத உன் எழிலாட்சி ! அறம் வழுவா அருளாட்சி அன்னை உந்தன் பேராட்சி  ! - (மா) பசுமை சூழும் வயல் வெளிகள் பவானியே உன் மேனி தானோ ? செழுமை திகழ் செவ்வானம் தேவியே உன் திலகமதோ ? நீல வண்ண மேகம் உந்தன் நீளமான கூந்தல் தானோ ? பல வண்ண வானவில்லே பார்வதி உன் மேகலையோ ? -( மா) மினுமினுக்கும் விண்மீனும் ஒளியை உன்னிடம் பெற்றதோ ? சலசலக்கும் மென் காற்றும் ஒலியை உன்னிடம் கற்றதோ ? இயங்கிடும் இயற்கைக்கு இயக்கம் தந்தவள் நீயன்றோ ? நயந்துருகும் அடியார்க்கும் நலங்கள் தந்ததும் நீயன்றோ ? -(மா) வீழ்ந்து வரும் அருவிகளும், விரைந்து வரும் ஆறுகளும், ஆழ்ந்து நிற்கும் ஏரிகளும், அழகு நிறை வாவிகளும், சூழ்ந்து படும் ஆழிகளும் ஆடும் உந்தன் புகழ் பாடி தாழ்ந்து உனது திருவடியைத் தேடும் (துதிக்கும்) அவை அருள் நாடி ! மஞ்சுக் கூட்டம் பாய் விரிக்கும், மலர்களெல்லாம் பாய் போடும், மரங்கொடியும் காற்று வீசும் பறவையினம் தாலாட்டும் மாக்கள் கூட மகிழ்ந்து நிற்கும் மாதா உந்தன் முன்னே ! மனிதரெல்லாம் தொழுது நிற்பர் புனிதராக மாறுதற்கே ! -( மா) பெருமையுடன் தலைவனிடம் பாகம் இடது பெற்றவளே ! சிறுமை கண்டு சீறுவாயே சீர்மை நலம் உற்றவளே ! கருமை மேகம் எனைச் சூழ விடுவாயோ என் தாயே ? வெறுமை வாழும் மனத்தினிலே நிறைவு தோன்ற அருள்வாயே ! தாயென்றும், சேயென்றும் தலைவியென்றும், துணைவியென்றும், நாயினேனை நின் புகழை நயந்து பாட வைத்தாயே ! வாயில்லா மகவம்மா வந்து நீதான் பாரம்மா ! நீயே என்றும் கதியென்றே நினைந்துருகும் ஏழையம்மா ! என்றோ இங்கே பிறந்தோம் ; எப்படியோ வளர்ந்தோம் ; எதை நோக்கிச் செல்கின்றோம் என்பதுமே அறியோம் ! எந்த நாளிலும் மனதில் அமைதி எமக்கே இல்லையே ! எந்தச் செயலிலும் ஓர் நிறைவும் எமக்கே இல்லையே ! வறுமை என்னும் பிடியதனில் வாடி நின்ற போதிலும் , சிறுமை கொண்ட சிறு மதியோர் சீரழிக்கும் போதிலும், பெருமை என்னும் குணமதனைக் கொண்டிடவே அருள்வாய் நீ ! பொறுமையுடன் சினம் தணிக்க பெருந்தேவி அருள்வாய் நீ ! கருணையுள்ள தெய்வம் எம்மைக் காத்து அருள வேணும் அம்மா ! பொறுமை இழந்தாலுமே புகலிடம் தர வேணும் அம்மா ! துடித்தாலும் துவண்டாலும் துணையுண்டே உன்னிடமே ! மடிந்தாலும் மறைந்தாலும் துணிந்து வருவோம் உன்னிடமே !                     -19-05-1971 அன்னையே சரணம் அன்னையே! அங்கயற் கண்ணியே! அழகிய வடிவமே! ஆனந்த வல்லியே! அன்னை நீயே! பங்கயச் செல்வியே! விரும்பியே அறிவுடன் பணிந்திடும் தொண்டருக்கு அருள்வாயே! மங்கையற்கரசியே! மலைவளர் உமையே! மங்கலக் குங்குமம் மகிழ்வாழ்வே! எங்களின் தவமே! எழிலார் மதுரையில் தங்கியே பொங்கிடும் தவப்பயனே! (1) திங்களின் கலையுடன் திகழ்பனி அழகுடன் கங்கையும் சூடிய உலக நாதன், எங்கணும் நிறைந்திடும் இயல்புடை நின்னையே தங்கமே! துணைவியாய்க் கொண்டனனே! பொங்கிடும் அன்பையே காணிக்கை ஆக்கிடும் புனித நல்லடியவர் பெருவாழ்வே! எங்களின் தவமே! எழிலார் மதுரையில் தங்கியே பொங்கிடும் தவப்பயனே! (2) அருமறை நாலும் ஆவலாய்த் தேடிடும் அடியிணைக் கமலங்கள் கொண்டவளே! திருமகள், கலைமகள் தினந்தினம் தொழுதிடும் திறன்மிகு கலைகளைத் தந்தவளே! பெருமையும், சிறுமையும் கடந்திடுவாரே பொறுமையாய் நின்னடி அடைந்தவரே! அருமைத் தவமே! அழகுடை மதுரையில் அமர்ந்தே அருளிடும் தவப்பயனே! (3) விரிந்திடும் ஞாலத்தில் வியன்மிகு கலைகளை விருப்புடன் இயக்கிடும் சக்தி நீயே! புரிந்திடும் நல்வினை, தீவினை அவைகளைப் பொறுத்தே புகலிடம் தருவாயே! சரிந்திடும் மாயமாம் புவிதனின் ஆசையை தவிர்த்திட தேவி நீ அருள்வாயே! சிரித்திடும் தவமே! சீரார் மதுரையில் சிறந்தே அருளிடும் தவப்பயனே! (4) மஞ்சமாம் மேகப் பஞ்சணை அமர்ந்தே மங்கள ஆட்சி புரிபவளே! மஞ்சளும், மலர்களும் மகிமை பெறவே மங்கள வாழ்வதைத் தருபவளே! தஞ்சமும் நினது தாள்களே அம்மா! தங்கமே, பவள, மாணிக்கமே! நெஞ்சத்தின் தவமே! நிறைவுடை மதுரையில் நிலைத்தே அருளிடும் தவப்பயனே! (5) அலைதனைத் தலையணையாய்க் கொண்ட அழகன் மாலவன் சோதரியே! கலைகளைப் பயின்றிடக் காவியம் ஆக்கிட காத்துன் மகளை நீ ஆதரியே! நிலைபல கடந்த நல்லடியவர் பலரின் நினைவில் நிறைந்திடும் உயிரொளியே! அலையாத் தவமே! அழகுடை மதுரையில் அமர்ந்தே அருளிடும் தவப்பயனே! (6) மின்னலே வடிவமாய் மேதினி மீதினில் மின்னிடும் பொற்கொடி சுடரொளியே! கன்னலே மொழியுமாய், காந்தமே விழியுமாய் கண்டவர் வியந்திடும் தண்ணளியே! செந்நெலும், கன்னலும் செழித்தே விளைந்திடும் செந்தமிழ் நாட்டின் தலைவி நீயே! பொன்னென மின்னிடும் பூக்களைச் சூடிடும் பூவையர் குலத்தின் தவப்பயனே! (7) முந்தை வினைகள் முழுவதும் ஓய்ந்திட எந்தாயே! உன்னைச் சரணடைந்தேன்; சிந்தை கலங்காத தியானம் நல்குவை சிறந்தமா கூடல் பதிபடை வாழ்வே! எந்தை ஈசனை என்றுமே நீங்காமல் விந்தையாய் உடலில் பாதியானாய்! நிந்தையைப் பொறுத்திட, நிமலையைப் பணிந்திட வந்தெமக்கு அருளிடும் தவப்பயனே! (8) ஆழ்ந்த நல்ஞானம், அகன்றிடா அன்பு அம்மையே வேண்டினேன் தந்தருள்வாய்! சூழ்ந்த இப்புவிதனை சுற்றிடும் விதியெனை வீழ்த்திடாவண்ணம் விலக்கிடுவாய்! தாழ்ந்த மதியினால் தடுமாறும் அறிவிலி, தாயே தடுத்துக் காத்தருள்வாய்! வீழ்ந்திடா தவமே! வியன்மிகு மதுரையில் விரும்பியே உறைந்திடும் தவப்பயனே! (9) கதியும் நீயே, கந்தனின் தாயே! கருணையின் பிறப்பிடம் ஆனவளே! மதியும் நீயே, மயக்கமும் நீயே! மதித்திடும் பொருள்களும் ஆனவளே! சதியே புரிந்திடும் ஐம்புலன் அடக்கி சார்ந்துனை வணங்கவே அருள்வாயே! வதியும் தவமே! வடிவுடை மதுரையில் வறியவர்க்கு அருளிடும் தவப்பயனே! (10) பேயாய்த் திரிந்து, பெறு(ரு)ம் பயனழித்து பேதையேன் மயக்கத்தில் இருந்தேனே! நாயாய் அலைந்து, நலம் எல்லாமிழந்து நாதி ஒன்றில்லாது இருந்தேனே! வாயில்லா மகவுக்கு இன்னருள் புரியவே காயிடைக் கனியென வருந்தேனே! ஆய்வில்லாக் கலைகள் அரும்பிடும் மதுரையில் ஆனந்தம் அருளிடும் தவப்பயனே! (11) பயிருக்கும் உயிரூட்டும் தாயென உணர்த்தவே பசுமை நிறமதைக் கொண்டனையோ? வயிறுக்கும், வாய்க்குமாய் வாழ்ந்திடும் ஏழையேன் வாய்மை இன்மையைப் பொறுத்திலையோ? உயிரும் உன் அடைக்கலம், உலகத்தின் நாயகி உயர்ந்த நல் தாய்மையின் இருப்பிடமே! உயிர்க்கும் தவமே! ஓங்குநன் மதுரையில் உறைந்தே உதவிடும் தவப்பயனே! (12) முழமுதற் கணபதி நேயமாய் நினைத்திடும் மழுவேந்தும் பெருமானின் இல்லாளே! தொழுதிடும் அடியவர் துயரத்தைத் துடைத்திட தூய்மையாய் வடிவுறும் சொல்லாளே! அழுதிடும் அடிமைக்கு அன்பினை நல்கவே அருள்மழை மேகமாய் உள்ளாளே! விழுதிடும் தவமே! வியன்மிகு மதுரையில் விரும்பியே உறைந்திடும் தவப்பயனே! (13) தினமும் விரையார் மலர்பல கொண்டுன் திருவடி ஏற்றிட அருளிடுவாய்! மனமும், மதியும் மறையே உந்தன் மகிமை மறவாது உதவிடுவாய்! சினமும், பிணியும், பொய்மையும் என்னைச் சேர்ந்திடாவண்ணம் தடுத்திடுவாய்! நனவின் தவமே! நயன்மிகு மதுரையின் நங்கையே! எங்களின் தவப்பயனே! (14) நாதத்தின் வடிவமே !நான்மறைப் படிவமே! சீதங்கொள் நறுமண நன்மலரே! பாதமே கமலமோ? பார்வையும் கருணையோ? பார்த்தே களிப்பவர் ஒரு சிலரே! பேதமை அறுத்து, பேதையைக் காப்பாய் ஏதமொன்றில்லா ஏந்திழையே! வேதத்தின் தவமே! வியன்மிகு மதுரையில் விரும்பியே உறைந்திடும் தவப்பயனே! (15) பவளமோ செவ்வாய், திலகமோ செங்கதிர் பதியுமே பார்க்கும் இடந்தோறும்! தவளவண்ணனின் தலைவியே! தாயே! தனயனைத் தேற்றிட வருவாயே! துவளும் இடையில் மேகலை குலுங்கும், நூபுரச் சேவடி எமைக் காக்கும்! திவளமாளிகை திகழ்ந்திடும் மதுரையில் திளைத்தே அருளிடும்தவப்பயனே! (16) பாவியேன் பாதகம் செய்தலும் ஒழியேன், பணிந்திட எண்ணாது அலைந்தேனே! - என் ஆவியே! அடிமையின் பிழைகளைப் பொறுத்துன் அணிமையைக் காட்டிட மனமிலையோ? தேவியே! தூவினேன் உணர்வெனும் மலர்களை திருவடி என்சிரம் வைப்பாயே! எம் ஆவியின் தவமே! அழகுடை மதுரையில் அமர்ந்தே அருளிடும் தவப்பயனே! (17) அம்பிகை, ஈஸ்வரி, அகிலாண்ட நாயகி! அகயிருள் நீக்கிடும் பானுமதி! நம்பிக்கை வைக்கும் நல்லடியாரின் நலமிகு வாழ்வினுக்கு ஒருஅரசி வெம்பியே வேதனைத் தீயினில் மாளாமல் வென்றிட வினைகளை உதவிடுவாய்! நம்பியோர் தவமே! நயமுடை மதுரையின் நங்கையே! எங்களின் தவப்பயனே! (18) கங்கையை அணிந்தவன், கடலினில் படுத்தவன், காசினி படைத்தவன் அனைவருமே திங்களே முகமெனத் திகழ்ந்திடும் நின்னையே தேவியே! இயங்கிட அணுகினரே! தங்கமும் ஒளிர்வது தலைவியே நின்னிடம் தவம் செய்து அடைந்த பலனாலே! எங்களின் தவமே! எழிலார் மதுரையில் தங்கியே பொங்கிடும் தவப்பயனே! (19) குருவும், குலமும், குணமும்,மனமும், கொள்கையும் வணங்கிடும் தவப்பயனே! திருவும் நீயே! தேவர்க்கும் தலைவியே! திருநிறை இமவான் தவமகளே! மருவும் இறையொடு வந்தெமை ஆண்டருள் மகிழ்வும் தந்தருள் மலைமகளே! பெருகும் தவமே! பேறுடை மதுரையில் பெருவாழ்வைப் பெருக்கிடும் பேரொளியே! (20) தாயே சரணம்! திருச்சிற்றம்பலம். முருகன் பாடல்கள் தேடித் தேடி அலைந்தேன் - நீ திருப்பரங்கிரிதனில் இருப்பாய் என நினைத்தேன் ! தென்பழனி தேடி , திருவருளை நாடி தேவா உனைக் காணேன்  திகைத்தேன் மனம் வாடி ! ஏரகப் பதியில் இருப்பாய் என உரைத்தார் ! ஏறினேன் ஏங்கினேன் ஏந்தல் உனைக் காணேன் ! திருச்செந்தூர் பதியில் திகழ்வாய் எனப் பகர்ந்தார் ! வருத்தம் தான் மீதம் வடிவேலா உனைக் காணேன் ! தணிகை மலையில் தவிர்ப்பாய்  துயரமென்றார்.. தனித்தேன்.. தவித்தேன் தலைவா உனைக் காணேன்..! பழமுதிர்சோலையில்(ன்) பழம்தான் நீ என்றார் ! பரிதவித்தேன் தேவா பரமன் உனைக் காணேன் ! ஊரெங்கும் தேடி உளமெல்லாம் வாடி ஓய்ந்தே அமர்கையில் உதித்தது உள்ளொளி ! என் ஐயன் முருகன் எனக்குள்ளே தோன்றினான் என்னென்று உரைப்பேன் ஏழை என் நிலையை ? கண்ணீரால் கமலக் கழலினை  நீராட்டிப்   பன்னீரால் பரமன் பாதந்தனைப் போற்றி விண்ணீராய்ப் பொழியும் வியத்தகு அன்பூட்டி வெண்ணீராய்த் திகழும் வேந்தன் அடியொற்றி…. தேடித் தேடி அலைந்தேன் -  நான் திருமுருகன் என்னுள் திகழ்வதை அறிந்தேன் !!! பள்ளம் நோக்கி              நீர் பாயும் - அருள்              வெள்ளம் நோக்கி              உயிர் சாயும் ! உள்ளம் எல்லாம் உருகுதையா… கள்ள மனமும் கலங்குதையா… துள்ளித் தாவி நீ வந்தால் வினை துள்ளி ஓடி மறைகுதையா…! பால் மணம் மாறா மழலையிடம், பால் மனம் தீரா கிழவரிடம், பறந்து திரியும் பறவையிடம், பரந்த அறிவுப் புலவரிடம்… ஆறுமுகனே உனைக் கண்டேன்.. ஆறுதல் பெறவே நான் நின்றேன்…! துன்பம் ..மேலும் துயரம் என்று வெம்பி வெந்து கருகையிலே இன்பம் நானும் வேண்டிலனே உன் இன்னருள் ஒன்றே நாடினனே..! கதிர்வேலன் துணையென்றே நம்பிவிட்டால் - மனமே எதிர்வரும் விதி (பகை) கூட நில்லாமல் ஓடிவிடும்.. மால்மருகன் மயக்கமெல்லாம் தீர்த்து விடுவான்.. வேல் முருகன் வேண்டும் வரம் தந்துவிடுவான்.. குறிஞ்சி தோறும் குன்றாடுவான் குமரேசன்.. விரிஞ்சி மலை வாழும் அந்த அழகேசன்… கதிர்காமம் குடியிருப்பான் ..கார்த்திகேயன் விதிர்க்கும் உள்ளம் வணங்க நிற்பான் வள்ளி நேயன் சிக்கலிலே சீராடும் சிங்காரன் - நம் சிக்கலெல்லாம் நீக்கி விடும் ஓங்காரன் ! எட்டுக்குடி நடைபோட்டான் எழில் முருகன் -நமை எட்டாமல் ஒரு குறையும் அருள் குமரன்..! மருதமலை நாயகனாம் மயில் வாகனன்..- நமைப் பொருதவரும் எமபயமும் போக்கும் ஆண்டவன்..! வயலூரில் வளமைதரும் வடிவேலன் ..! புயலிடையும் புகலளிக்கும் புனித பாலன்..! மலை வளரும் நாயகியின் செல்லப்பிள்ளை..! இலைமறைவாய் அருள் மணக்கும் அழகு முல்லை..! யாருமில்லை குலகுருவே என்று தேடி சேருபவர் கண்ணீர் துடைக்கும் சேவற்கொடியோன்..! காலமெல்லாம் கதிரேசன் தாள் போற்றி ..! சீலமிகு தெய்வயானை துணைவன் போற்றி ..! நிலைகுலைந்தபின் நிம்மதி ஏது..? கலை வளர்க்கும் கந்தனே நீ சொல்..! ( நி ) அலை கடலாய் என்னுயிர் அலைந்தும் அலை கடலோரம் நீ சிலையானாய்..! ( நி ) புரியாத பாவமும் புரிந்ததனால் சரியாத காவலும் சரிந்ததனால் விரியா மலராய் விளங்குகிறேன் கரிமுகன் இளவலே கண் பாராய்..( நி ) பணியாதென் சுகம் கண்டனை… மனமே நீ இன்று துணியாதே துயர் வாழ்வு தொடர்ந்தாலே தாளாய் நீ..( ப ) கலையான, இயலான, இசையான கந்தனை நிலையான வாழ்வுக்காய் நிதமும் தேடாமல் ( ப ) பலியாத கனவெல்லாம் பலித்தாக வேண்டும் சலியாத நல் வாழ்வும் சமைத்தாக வேண்டும் மலிவான சுகமெல்லாம் மறந்தாக வேண்டும் கலியாக வரும் விதியும் கலைந்தோட வேண்டும் ( ப ) ஓம் அருள்மிகு மாணிக்கவிநாயகா நம: திருவிளக்கே போற்றி போற்றி அன்பின் வடிவே திருவிளக்கே ஆனந்த ரூபிணி திருவிளக்கே இனிமைநல்கும் திருவிளக்கே ஈகையின்நாயகி திருவிளக்கே உன்னைப் பணிந்தோம் திருவிளக்கே ஊக்கம் தருவாய் திருவிளக்கே எங்களின் தலைவி திருவிளக்கே ஏற்றம் அருள்வாய் திருவிளக்கே ஒப்புயர்வற்றோய் திருவிளக்கே ஓங்கார வடிவே திருவிளக்கே (10) ஐம்பூத வடிவே திருவிளக்கே ஔடதம் நீயே திருவிளக்கே அஃறிணையும் காப்பாய் திருவிளக்கே கனிவின் உருவே திருவிளக்கே காந்த ஸ்வருபிணி திருவிளக்கே கிள்ளை மொழியாய் திருவிளக்கே கீர்த்தியைப் பொழிவாய் திருவிளக்கே குலநலம் காப்பாய் திருவிளக்கே கூடியே தொழுதோம் திருவிளக்கே கெடுதல் களைவாய் திருவிளக்கே (20) கேட்டதை அளிப்பாய் திருவிளக்கே கைவளை குலுங்கிட திருவிளக்கே கௌமாரி வருவாய் திருவிளக்கே சக்தியை நல்குவாய் திருவிளக்கே சாந்த ஸ்வருபிணி திருவிளக்கே சிவத்துடன் கலந்தோய்திருவிளக்கே சீவனும் நீயே திருவிளக்கே சுழலும் உலகுக்கு திருவிளக்கே சூட்சுமம் நீயே திருவிளக்கே செயல்களின் ஆக்கம் திருவிளக்கே உன்னைச்(30) சேவிப்பதன் பயன் திருவிளக்கே சொல்வன்மை உடையோய் திருவிளக்கே சோதனையில் துணை நீயே திருவிளக்கே சௌபாக்யம் அருள்வாய் திருவிளக்கே சகலநலம் அருள் திருவிளக்கே தலைமகள் ஆனாய் திருவிளக்கே தாயும் நீயே திருவிளக்கே திகழும் அழகே திருவிளக்கே திசை எட்டும் காப்பாய் திருவிளக்கே தீர்வுகள் தருவாய் திருவிளக்கே(40) தீமையை அழிப்பாய் திருவிளக்கே துவளும் இடை கொண்டாய் திருவிளக்கே தூய்மையின் வடிவே திருவிளக்கே தெளிவை அருள்வாய் திருவிளக்கே தேவி பராசக்தி திருவிளக்கே தையல்நாயகி திருவிளக்கே தொன்மையும் ஆனாய் திருவிளக்கே தோன்றாப் பொருளே திருவிளக்கே பணிந்தோம் உனையே திருவிளக்கே பாவங்கள் களைவாய் திருவிளக்கே(50) பிறவிப்பயனே திருவிளக்கே பீடைகள் அறுப்பாய் திருவிளக்கே புனிதத்தின் உருவே திருவிளக்கே பூரிப்பாய் பணிந்தால் திருவிளக்கே பெருமை படைத்தோய் திருவிளக்கே பேறுகள் தருவாய் திருவிளக்கே பைங்கிளி அழகே திருவிளக்கே பொறுப்பாய் எம்பிழை திருவிளக்கே போக்கிடம் உன்னிடம் திருவிளக்கே மங்கள நாயகி திருவிளக்கே (60) மகிமையின் வடிவே திருவிளக்கே மலர்கொண்டு பணிந்தோம் திருவிளக்கே மாங்கல்யம் காப்பாய் திருவிளக்கே மிடுக்குடன் உலாவரும் திருவிளக்கே மீளாத்துயர் போக்கும் திருவிளக்கே முதன்மைப் பொருளே திருவிளக்கே மூதுரை நீயே திருவிளக்கே மெய்மைப் பொருளே திருவிளக்கே மேன்மை நல்குவாய் திருவிளக்கே மைவழி உடையோய் திருவிளக்கே(70) மொட்டவிழ் மலரே திருவிளக்கே மோகம் அழிப்பாய் திருவிளக்கே மௌடீகம் களைவாய் திருவிளக்கே வடிவுடை நாயகி திருவிளக்கே வாழ்வினில் வழிகாட்டும் திருவிளக்கே வியன்மிகு பொருளே திருவிளக்கே வெற்றியைத் தருவாய் திருவிளக்கே வேப்பிலை நாயகி திருவிளக்கே வையகம் காப்பாய் திருவிளக்கே சரஸ்வதி நீயே திருவிளக்கே (80) சகலகலை அருள் திருவிளக்கே லக்குமி நீயே திருவிளக்கே லட்சியம் காப்பாய் திருவிளக்கே பார்வதி நீயே திருவிளக்கே கண் பார்த்தருள் புரிவாய் திருவிளக்கே ராஜ ராஜேஸ்வரி திருவிளக்கே ராஜ்ஜியம் ஆள்வாய் திருவிளக்கே முப்பெரும் தேவி திருவிளக்கே மூங்கிலாய் வளைவாய் திருவிளக்கே மீனாட்சித் தாயே திருவிளக்கே(90) காமாட்சித் தாயே திருவிளக்கே காசி விசாலாட்சி திருவிளக்கே காவிய நாயகி திருவிளக்கே உலகம் உவப்புற திருவிளக்கே உன்னருள் நல்கிடு திருவிளக்கே உயிர்களின் பசிப்பிணி திருவிளக்கே உடனே ஒழிப்பாய் திருவிளக்கே செல்வம் கல்வி திருவிளக்கே சுரந்தே அருள்வாய் திருவிளக்கே நல்லன்பு ஒழுக்கம் திருவிளக்கே(100) நல்குவாய் தாயே திருவிளக்கே தூயநின் திருவடி தொழுதோமே தாயே நின்னருள் தருவாயே புலன்களை அடக்க திருவிளக்கே போற்றிகள் சொன்னோம் திருவிளக்கே புகலிடம் நீயே திருவிளக்கே பொற்பாதம் பணிந்தோம் திருவிளக்கே போற்றினோம் நின்னடி திருவிளக்கே நற்கதி அருள்வாய் திருவிளக்கே நலங்களை நல்குவாய் திருவிளக்கே (110) உலகத்தின் ஒளியே திருவிளக்கே போற்றி போற்றி தந்தையும் நீ திருவிளக்கே! போற்றி போற்றி தாயும் நீ திருவிளக்கே! போற்றி போற்றி அனைத்தும் நீ திருவிளக்கே! போற்றி போற்றி திருவிளக்கே போற்றி போற்றி! (115) திருச்சிற்றம்பலம். ஆண்டவர்களிடம் விண்ணப்பம் தொல்லைகள் தொடருதே..   தூயோனே அறியாயோ ? சொல் இன்று ! முடிவு என்று ? கல்லாக நிற்பாயோ ?    கனியாக   மாட்டாயோ ? கடையனைக் கடைத்தேற்றவே ! புல்லுக்கும் உணவீந்து       புதராக மாற்றும் நீ புல்லனைத் தள்ளுவாயோ ? மல்லுக்கு நின்றாலும்      மண்ணுலக வாழ்விதினில் மறந்துனை வாழுவேனோ ? மலைக்கோட்டை கீழ் அமர்      மனம் நிறை மகிழ்வு தரு மாணிக்க விநாயகனே ! அருணைமலை மீதமர்ந்து அண்டங்கள் அரசாளும்     அனல் முகா, அன்பு நாதா ! கருணை பொழி பார்வையுடை கனிவுடை அம்மைக்கு       சரி பாதி உடல் ஈந்தவா.. பெருமையும் சரியுதே, சிறுமையும் பெருகுதே…        பெம்மான் எம் பாவம் பெரிதோ ? கண்களும் மருளுதே.. காரிருள் மீறுதே       காலனின் வரவு தானோ ? கருணை மிகு ஐயனே ! காத்தருள வருவாயோ ? காலடியில் சரண் புகுந்தேன் ! கடலோரம் குடிகொண்ட அடலேறு மயிலோனே      கட்(ஷ்)டங்கள் என்று தீர்ப்பாய் ? மடல் அவிழ் மலர் போன்ற முகம் கொண்ட முருகோனே       முக்தியை என்றருள்வாய் ? மடமைகள் விட்டொழிய மனமெலாம் நீ நிறைய         மகிழ்வுடன் என்றருள்வாய் ? கடமை எனும் புதை மணலில் கலந்து உறைந்து போவதே          கதிரேசா எந்தன் வாழ்வோ ? விடையேறு பெருமானின் வீரம் மிகு மைந்தனே விடையேது சொல்லி அருள்வாய் !                                       14-09-2015. இயற்கை இடி கரு மேகங்களின் ஏவுகணைகள். மேகங்கள் வெடிக்கும் சரவெடி. மின்னல் மோக முகில்களின் ஒளி நெளியல். கார் கால தீபாவளியில் மேகக் குழந்தைகள் கொளுத்தும் சாட்டைகள். மழை பூமி நாயகனுக்கு வான நாயகி கொடுக்கும் வரதட்சணை. வான மாமியார் படுத்தும் கொடுமையில் மேக மருமகள் வடிக்கும் கண்ணீர். நட்சத்திரம் நிலாக் குழந்தையின் பாப்கார்ன் சிதறல். தென்றல் மாலை நேர மன்னவன் அனுப்பிய மன்மத தூதுவன். காற்று உடலில்லாது உலவும் தேவன் ஶ்ரீ ‘அவரை’ ’அது’வாக்கும் மந்திரவாதி.   சூரியன் பன்னிரண்டு மணி நேரம் பகல் வேலை பார்க்கும் பூமியின் ப்ரதான சர்வேயர். தான் வேலை பார்த்து நமக்கு ஊதியமும் மிகை ஊதியமும் ( bonus ) தரும் நல்ல முதலாளி. வான விரிப்பில் வலம் வரும் மன்னவன். இன்றாவது மனிதர் திருந்துவர் என்னும் எதிர்பார்ப்பில் இளஞ் சிவப்பாய் உதிப்பவன். திருத்தவே முடியாத மனிதரிடத்தே சீற்றத்தை உச்சி வேளையில் காண்பித்து நாளையாவது முயலுவோம் என்ற நம்பிக்கையில் கடல் நாயகியிடம் கண்ணீரோடு சங்கமிக்கும் தூயவன். நிலா கடன் வாங்கும் வித்தையை பூமிக்குக் கற்றுக் கொடுத்த இயற்கை ஆசிரியன்…! வான் மகளின் இரவு நேரப் பலகாரம் அவள் கொஞ்சங்கொஞ்சமாய் மெல்லும் வட்ட ரொட்டித் துண்டு ! தான் இல்லாதபோது உலகிற்கு ஒளியூட்ட சூரிய ஆண்ணனால் அனுப்பப்பட்டவன் . தூங்கும் மனிதரைத் தட்டி எழுப்ப முடியாமல் அண்ணனின் கோபத்திற்குப் பயந்து கோழைத்தனத்தில் தேய்ந்து தேய்ந்து ஒருநாள் அந்தர் தியானமே ஆகி விடுபவன் ! உலகின் இருட்டைப் போக்க இயற்கை போட்ட ட்யூப் லைட் ! எண்ணங்கள் எண்ணிக்கை இல்லா எண்ணங்கள் வண்ணத்தில் மாறும் துன்பங்கள் எண்ணிலடங்கா இப்பின்னங்கள் கண்ணில் தெரியா இச்சின்னங்கள்! வானத்தில் உலவும் வண்ண நிலவினிலே வாழ்க்கையின் தத்துவம் தோன்றிடுதே ! வளர்வும் தேய்வும் அதற்கு வேலை வாழ்வும் சாவும் நமது கவலை ! மழையின்றி மண்ணில் உழவும் உண்டோ? - நம் பிழையின்றி செழிக்கும் கவலையுமுண்டோ ? மழையும் குளிரும் மாறாவிட்டால் மனிதரின் இனமும் பிழைப்பதுண்டோ ? பனியின் வேளையில் பதுங்குவார் - நெஞ்சின் பனியில் உண்மையைப் பதுக்குவார் வாழ்வில் இதயம் மறைப்பார் பலரிடம்… தாழ்வில் இனிமை மறக்கும் இவரையும்..! கோபமின்றி வாழ்வும் உண்டோ வருங் கோடையின்றி வசந்தம் உண்டோ ?ஒரு காரணம் இன்றி மண்ணுலகில் காரியம் ஏதும் நடப்பதுண்டோ ? அன்பு ஒன்றே சத்தியம் கனவெல்லாம் பலிப்பதில்லை.. நனவெல்லாம் நடப்பதில்லை.. மனமெல்லாம் அதே எண்ணம்.. மற(றை)ந்திடுமோ அதே துன்பம் ! வானம் எல்லாம் பறவைக் கூட்டம்.. வாழ்வெல்லாம் பறந்த கூட்டம்.. வனமெல்லாம் விலங்கின் நாட்டம்.. வளமெல்லாம் மனிதர் தேட்டம்..! மாலை நேர மஞ்சள் வெயில்.. மாலை போடும் மஞ்சு வெள்ளம்.. மலர்கிறது அரும்புச் செல்வம்.. மலர்ந்திடுமே (மோ) மனதில் இன்பம் ! தாய் நாடிச் செல்லும் தனயன்.. தனம் தேடிச் செல்லும் வணிகன்.. பாயிரம் பாடும் பாவலன்.. பாசம் தேடும் காதலன்..! களம் கண்ட வீரன் ஒரு பக்கம்.. கலங்கள் கண்ட தீரன் ஒரு பக்கம்.. கல்வி கொண்டோர் ஒரு பக்கம்.. செவ்வி கண்டோர் ஒரு பக்கம்.. எல்லோரும் போவதெங்கே ? எதை நாடி இந்த வேகமிங்கே ? சொல்லிடவே நினைக்கின்றேன்.. சொல்லத்தான் வார்த்தை எங்கே ? எத்தனையோ காட்சிகள்- என் இதயத்தின் சுழலினிலே ! அத்தனையும் மயக்கங்கள்.. ஆழத்தில் விழலினிலே ! அவைதான் சதம் என்றால் அன்பு எங்கே ? இவைதான் இதம் என்றால் பாசம் எங்கே ? அவைகளைத் தேடித் துடிக்கும் உயிர் இவைகளிலே பதிவதெங்கே ? எவைதான் இங்கே நித்தியம் ? எதுதான் இங்கே சத்தியம் ? அன்பு ஒன்றே இங்கு நித்தியம் ! அன்பு ஒன்றே இங்கு சத்தியம் ! இவனா மனிதன் ? உள்ளத்தில் அன்பும், உருவத்தில் பண்பும், செல்வத்தில் பணிவும் சிறப்போடே அமையுமோ ? வெள்ளத்தில் போனால் வேண்டுவது எதுவோ ? நில்லாத இவ்வுலகில் நிலைப்பதுவும் எதுவோ ? நெஞ்சினிலே நினைப்பது நிறைவேறா ! என்னதான் கெஞ்சினாலும் உறவுகள் கிஞ்சித்தும் அசையா ! பஞ்சினிலே சிறிதே பறக்கின்ற பொறி படின்.. மிஞ்சுவதும் எதுவோ? மீந்திடுமோ சாம்பலும் ? உண்மையும் உதவா உலகினிலே நல்மனத் திண்மையும் இதுவோ ? திரண்டு வரும் கூட்டம் தண் மனமும் தளரா வன்மையுமா நாடும் ? பண்பாடா ? அல்ல..! பணமொன்றே நோக்கம் ! பசியதற்கு வாடி பரிதவித்து நின்றேன் ! புசிப்பதற்கு ஏலாப் பணப்புலியைக் கண்டேன் ! விசிப்பதற்கு நீரோ விழியோரம் துடிக்குது ! நசிப்பதற்கு எதுவோ நாலு காலில் நடிக்குது ! உள்ளத்தில் நாளும் ஒளித்திடுவார் கயமை ! உதடதனில் நாளும் உதிர்த்திடுவார் பெருமை ! உள்ளமதின் அழகே உருவமதில் தெரியுமோ ! கள்ளமற்ற கற்றோர் கற்பித்ததும் பொய்யாமோ ! ஏழைகளின் வயிறடித்து ஏந்திழையார்க்கு அளித்து.. கோழைகளாய் இரவினிலே குலாவித் திரிந்தழிந்து.. தாழை வாழ் நாகமாய் தயங்காதுதான் கெடுத்து.. தோழமையும் மறப்பாரே.. தூய்மை இவர்க்கேது ? கறுப்பென்று எண்ணார்.. களிப்புடனே சேர்ப்பார்.. பொறுப்பாக இருப்பது போல் புலமையுடன் நடிப்பார்.. வெறுப்பாகப் பேசி வீண் வம்பு செய்வார்.. மறுப்பேதும் கூறினால் மனதுடனே கொல்வார் ! பொன்னுக்கு , மண்ணதின் புகழுக்கு அலைகின்றார்.. பெண்ணுக்கு , அவளதின் பெருஞ்சதைக்கு அலைகின்றார் .. அன்புக்கு, அது பேணும் பண்புக்கு அலையாரோ ? வம்புக்கு வரவில்லை, வாய்மைக்கு அலையாரோ ? பொருளதுவும் வேண்டிப் பொன்னுயிரும் தருவார் ! அருளதுவும் நாடி அறத்துடனே அமையார் ! மருளதுவும் கொண்டு மயங்கியதில் தவிப்பார் ! தெருளதுவும் வேண்டார் ! தெரிவிப்பீர் இறையிடம் ! நட்பென்றும் பாரார்.. நலமொன்றும் தாரார்.. பெட்புடனே ஒதுங்கவும் பேய் மனத்தோர் விடார்.. தப்பிடவோ வழியில்லை.. தளைகளும் நீங்கவில்லை.. செப்பிடுவீர் எமக்குச் செமைத் தடம் ஒன்று ! என்னவென்று சொல்வேன் ! எதைத்தான் நான் வெல்வேன் ? கன்னமிட்டுத் திருடுவார் கவளம் உண்ட வீட்டிலே ! பின்னும் ஒரு நாளிலே பின் தொடரும் அந்தகன் .. கன்னமிடான் இவருயிரைக் கவர்ந்துதான் செல்வானே ! வசியாத வீட்டினுக்கு வாடகை ஏன் கொடுப்போம் ? பசியாத வயிறதற்கு பால் பழமும் ஏன் கொடுப்போம் ? மசியாத மாந்தரை மதியினிலே மயங்கி மசியினிலே எழுதி மதிப்பேனோ மகேசா ? கவண் கொண்டு எய்யும் கானக வேடர்களும் தமக்கென்று வைத்திருப்பார் தகுதியாய்ச் சில விதிகள்.. இவர்க்கென்று இல்லையே(யோ) ஏதும் வரைமுறைகள் ? இவர்தாமா மனிதர்கள்..? இயம்பிடுவீர் நண்பர்களே ! - (25)-(05) (1979).             ஆசை வெள்ளத்திலே    ஆடுகின்ற மானிடரே ! ஓசை ஏதுமின்றி     ஓடுமிடம் அறிவீரோ ? இத்தனை நாள் பட்ட துயர்      அப்பப்பா மெத்த உண்டு ! சித்தமதும் விட்டிடுமோ ?       சிந்தித்ததும் உண்டு ! இத்தரையை ஆண்டுவரும்         ஏழில் முருகன் தண்ணருளால் பித்தமதும் நீங்கியதே..          பேரமைதி கிட்டியதே !                                       -22-09-1998 பிறந்தானே மனிதனாக… பிறந்தானே…பிறந்தானே மனிதன் உலகில் பிறந்தானே ! மறந்தானே…மறந்தானே உலகுக்கு ஏன் வந்தோம் என்பதனை ! பறந்தானே.. பறந்தானே பணத்துக்கும் ஆசைக்கும் பறந்தானே ! துறந்தானே… துறந்தானே பண்பும் பாசமும் துறந்தானே ! பிறக்கையில் ஏதும் கொண்டு வந்தானா ? பின் ஏன் மயங்குகின்றான் ? இறக்கையில் ஏதும் கொண்டு செல்வானா ? பின் ஏன் கலங்குகின்றான் ? வாடகை கொடுத்தே சில பல பொருட்களின் பயன்களைக் கொண்ட பின்னே வாடிக்கைதானே வானகம் செல்வது பின் ஏன் வருந்துகின்றான் ? வானத்தில் ஊறும் நிலவினில் சென்று காலை வைத்துவிட்டான் ! வையத்தில் உள்ள மனிதரின் நெஞ்சைக் காலால் உதைத்து விட்டான் ! வானமோ, வையமோ எதிலும் நிறைந்த இறைவனைக் காண வந்தான் ! வானமும், வையமும் தந்த மயக்கத்தில் தன் நிலை மாறி விட்டான் ! வெய்யிலென்றால் ஒதுங்க நிழல் தரா உடம்பை மெய் போல் காக்கின்றான் ; கையினில் ஏதும் ஓட்டம் இருந்தால் கடவுளாய் மதிக்கின்றான் ! பொய்யினை நாளும் புகன்றே பூமியில் புகழினைச் சேர்க்கின்றான் ! மெய்யான இனிமைதனை உணராமலே வீணிலே மடிகின்றான் ! திருமணம் என்ற பெயரினில் இருவரை ஒன்றாகச் சேர்க்கின்றான் ! இருமனம் ஒன்றாய் திருமணம் முன்பு இணைந்தால் பதைக்கின்றான் ! பிறர் மனம் நோக எதனையும் பேசிப் பிதற்றிடும் மனிதர்களே ! ஒருமனம் கொண்டு இறைவனை அடைய(அறிய) வழிவகை பாருங்களேன் (தேடுங்களேன்) ! காதல் கண்களில் பிறந்து கருத்தினில் வளர்ந்து கவலையில் ஆழ்ந்து கண்ணீரில் நீந்தும் கண்ணில்லாக் குருடன். தலர் தினம் இன்று காதலர் தினம்..! ஒரு காதல் முறிந்த தினமும் ! காதலால் அல்ல….. காதலர்களாலேயே முறிந்தது.. கால நேரம் பாராமல் கைபேசியில் கதைத்ததாலேயே முறிந்து போனது…! பேச்சினால் வளர்ந்தது.. பேச்சினால் முறி(டி)ந்தது.. பேச்சின் பொருள் புரியும் முன்னே… பேசியவர்களின் பிரிதல்… ஏனென்று யோசியுங்கள் அன்பானவர்களே….. எதையும் எதிர்பார்க்காதது.. காதல்.. அன்பைத்தவிர.. எதையெதையோ எதிர்பார்த்த மனிதர்களால் ஏமாந்து போனது.. ஆம்.. நண்பர்களே… காதல் ஏமாந்து போனது…! உன்னத உணர்வுகளால் மின்ன வேண்டிய காதல் உணர்ச்சிகளின் உரசல்களால் மின்னி மறைந்தது…. காதல்…..ஒரு உன்னதம்                 ஒரு உயர்வு                 ஒரு மனித நேயம்                 ஒரு மாபெரும்                 உந்துசக்தி…..! ஆனால்…… இன்றைய                      கைபேசி யுகத்தில் காதல்…… ஒரு பொழுது போக்கு                   ஒரு மலினம்                   ஒரு சலனம்                    ஓரு சபலம்                   ஒரு எதிர்பார்ப்பு..! அதனாலேயே….. எளிதில் காணாமல் போகிறது.. இளைஞர்களே புரிந்து கொள்ளுங்கள்.. உண்மைக் காதலுக்கு உருவம் தேவையில்லை.. உங்களுக்கு…உங்களிடம் ஒரு வேண்டுகோள்… உங்களின் தோன்றியவுடன் மறையும் உணர்ச்சிகளுக்கு…. தயவுசெய்து…தயவுசெய்து.. “காதல்” என்று பெயர் சூட்டாதீர்…! - 2008. , February (14)ல் எழுதியது. சுமை இதயம் பேசுகிறது’ வார இதழில் முதுகில் ஒரு குழந்தையைச் சுமந்தபடி கவலையோடு நிற்கும் ஒரு சிறுவனின் புகைப்படத்தைப் பிரசுரித்து அதற்கு ஒரு கவிதை எழுதச் சொன்னபோது எழுதியது. பள்ளியிலே கல்விச் சுமை ! படித்த பின்போ வேலைச் சுமை ! பருவத்திலே காதல் சுமை ! பழகிய பின் குடும்பச் சுமை ! பின்னியபின் பாசச் சுமை ! பின்பொரு நாள் தனிமைச் சுமை ! இவையெல்லாம் எண்ணித்தானோ இச்சிறுவன் கலங்குகின்றான் ? முதுகினிலே சிசுவின் சுமை ! முகத்தினிலே பசியின் சுமை ! விளையும் பயிர் விரக்தியிலே ! மழை காணா நிலம், மகிழ்ச்சி காணா முகம் ! மலருமோ ஒரு நாள் ? அவன் எண்ண ஓட்டம் இப்படி இருக்குமோ ??? " உன்னைப்போல் நானிருந்தேன்… உலகத்தைப் பார்ந்திருந்தேன்… ‘உலகம்…..பெ…..ரீ…..சு….’ நினைத்திருந்தேன் ! ’இத்தனை பெரிசில் சின்னஞ்சிறுசு… நமக்கா இடம் இருக்காது….? இறுமாந்திருந்தேன்..! இல்லை தம்பி, இல்லை ! எல்லாமும் பொய் ! இல்லாத நமக்கு “இந்தா” என்று உணவூட்ட யாருமில்லே ! உவ்லாசம் நமக்கில்லே ! நல்ல துணிக்கோர் நாதியில்லே ! நவின்றிடவோ நாவில்லே ! ‘பின் நமக்கென்று என்னதான் உண்டு’ என்று கேட்கின்றாயா ? உருளும் உலகில் உலவும் பசியும் உருகும் மனமும் மட்டுமே உனக்கும் எனக்கும் என்றும் சொந்தம் ! பல்சுவை திரை உலகம் பளபளக்கும் மேல் தோலால் பார்ப்பவரை இழுக்கும் பார்வை இழந்த சூன்யக்காரி. விழிகள் வெள்ளைக்   குளத்தில் துள்ளித் திரியும்    கருவட்டக் கயல்கள். பல்லி விட்டத்தில்    ஒட்டிக் கொண்டு துட்டேதும்     கேட்காமல் ’பட்’டென்று      குறி சொல்லும் ஜோசியன். ரயில் இரண்டு கம்பியில் ஓடும் நான் தடம் மாறினால் பலர் இடம் மாறுவார்…! பசி புசிக்க உள்ளவனிடம் போகாமல் இல்லாதவன் வயிற்றில் எப்போதும் எரியும் தீ..! இருப்பவனிடம் இல்லாமல் இல்லாதவனிடம் வட்டி கேட்கும் ஈட்டிக்காரன் ..! தாகம் நாக்கு நதியின் கோடைகாலம். தண்ணீர் உலகத்தில்(ன்) முக்கால் பாகம் நீ ! ஆனாலும் உரலளவு கூட எம் ஊரில் நீ இல்லாததால் ஒவ்வொரு நாளும் போராட்டம். நினைவுகள் அடி மனத்தின் ஆழங்களில் முத்துக்குளிக்கும் மீனவன். கனவுகள் கலையும் போது கருகிப்போகும் கதிரவன். இழந்தவைகளுக்கு இதயம் எடுக்கும் ப்ளூ பிரிண்ட்…! முத்தம் என்றோ ஏவாளும், ஆதாமும் எழுதத் தொடங்கி இன்னும் ( இன்றும் ) முற்றுப் பெறாத காவியத்திற்கு, உலகத்தின் ஒவ்வொரு ஜோடியும் எழுதும் வசந்த கால காற்றினிலே வசந்த கால காற்றினிலே      வருவதெல்லாம் இனிமை நயம் ! இனிமை நயம் வந்துவிட்டால் இவ்வுலகம் இன்பமயம் ! இன்பமயம் வாய்ப்பதற்கோ இருக்க வேண்டும் நல்லிதயம் ! நல்லிதயம் எந்நாளும் நினைப்பதெல்லாம் அன்புமயம் ! அன்புமயம் ஆகிவிட்டால் (தோன்றிவிட்டால்) அனைத்தும் இங்கே நம் உறவாம் ! உறவான பின்னாலே உதிப்பதில்லை ஓர் பகையாம் ! பகையுணர்வும் படுத்துவிட்டால் பாழடையும் வெறுப்புணர்வும் ! வெறுப்புணர்வும் வீழ்ந்துவிட்டால் வெல்வதெல்லாம் நன்மையதாம் ! நன்மையுமே மலர்ந்துவிட்டால் நல்லவர்க்கே வறுமை போம் ! வறுமையுமே வலுவிழந்தால் வருவதெல்லாம் வசந்தமயம் ! - 15.02.1977ல் எழுதியது.                   கல்லுக்குள் ஈரமும், சொல்லுக்குள் வீரமும், நெல்லுக்குள் மணியோ ? நினைப்புக்கு அணியோ ? வில்லுக்கு விஜயனே ! மல்லுக்குப் பீமனே ! இல்லுக்குப் பெண்களே ! இவையெல்லாம் உண்மையே ! வாழ்க்கை நெருப்பு ஆற்றை நீர்ப்பாலம் போட்டுக் கடப்பது ! காலம் முழதும் பொருள் தேடப்படும் கவிதை இலக்கியம் ! பாலைவனக் கானல் நீர் ! பசும்புல்லில்(ன்) பனித்துளி ! எல்லாம் இருந்தும் எதுவும் அற்றுப் போகும் இக்காலச் சூழலில் மக்களால் ஆடப்படும் “மசமச” கிரிக்கெட் ! விறுவிறுப்பாகத் தொடங்கி சுறுசுறுப்பாகத் தொடரும் என எதிர்பார்க்கும் ரசிகர்களை வெலவெலக்க வைத்து கைகலப்பில் முடியும் கால்பந்தாட்டம் ! யாராலுமே மதிக்கப்படாத ஐ.நா. ! பணக்காரனுக்குப் பசிக்காத வயிறு ! பணமற்றவனுக்குக் கிடைக்காத உணவு ! யாரிடம் எப்படி ! அன்பை எதிர்பார்ப்போரிடம்  அன்பை அள்ளி அள்ளிக் கொடு ! அறிவைத் தேடுவோரிடம் - நீ  அறிந்ததைப் பகிர்ந்து கொடு ! உண்மையே உரைப்போரிடம்   உரை கல்லாய் இருந்து விடு ! நேர்மையாய் இருப்போரிடம்   நடந்து கொள் நேர்த்தியோடு ! பண்பையே பார்ப்போரிடம்   பணிந்து விடு பணிவோடு ! பணத்தை மட்டுமே    பார்ப்போரிடம் இருந்து ஓடியே வந்துவிடு ! தைப் பொங்கல் நடந்தது கனவு , நடப்பது நினைவு , கடந்தது கவலை , கடப்பது களிப்பு , படர்ந்தது இனிமை , படராது துன்பம் , அடர்ந்தது அமைதி ,தொடராது துயரம் ! கதிரின் ஒளியில் கவலைகள் மறக்க , கரும்பின் சுவையில் கசப்பும் இனிக்க , விரும்பும் நலமெல்லாம் விரைவில் கிடைக்க விரியும் இறையை வணங்குவேன் இன்றே ! மங்கல மஞ்சள் ,மலரின் மகிமை , தங்கும் செல்வம் ,விலகும் தனிமை ! எங்கும் நிறையும் கனியின் இனிமை பொங்கும் மகிழ்வும் ,விளையும் வலிமை ! இத்“தை”நாளில் இத்தனையும் பெற சித்தம் வைப்பாய் இத்தரைத் தலைவா ! நித்தம் வயலால் இத்தரை வளர்க்கும் அத்தா !அழகின் வயலூர் முருகா ஒன்றின்றி ஒன்றில்லை நுரையின்றி திரையில்லை..      திரையின்றி கடலில்லை.. திரையின்றிப் படமில்லை..        பிறையின்றி நிலவில்லை.. நாவின்றி சுவையில்லை..         நோவின்றி வீடில்லை.. பாவின்றி இசையில்லை..          பாவின்றி ஊடில்லை…. கதிரின்றி ஒளியில்லை..          கதிரின்றி மணியில்லை.. பதரின்றி நெல்லில்லை..          புதரின்றி முள்ளில்லை.. வரப்பின்றி வயலில்லை..          கரப்பின்றிக் களவில்லை.. சுரப்பின்றி நீரில்லை..            பிறப்பின்றி இறப்பில்லை.. காரின்றி நீரில்லை..          ஏரின்றி சோறில்லை.. வேரின்றி மரமில்லை..         சேரின்றி குளமில்லை.. சிந்தையின்றி செயலில்லை..          நிந்தையின்றி பகையில்லை.. விந்தையின்றி வியப்பில்லை..           எந்தையின்றி யானுமில்லை..! மணத்தினை மலரே மறந்தாலே          மண்ணில் அதற்குப் பெருமையில்லை ! குணத்தினை மனிதர் இழந்தாலே          குவலயத்தில் அவர்க்கு உரிமையில்லை ! வீச மறந்தது தென்றல் இல்லை !      பேச மறந்தது கிள்ளை இல்லை ! நாசம் இழைப்பது நதியும் இல்லை !       மோசமானது சுதியும் இல்லை ! இயற்கையான இனிமை எல்லாம்      செயற்கை மூலம் கிடைப்பதில்லை ! தவிர்க்க முடியாத் துயரமெல்லாம்      தவிப்பதினாலே தீர்வதில்லை ! தீபாவளி நன்மைகள் பெருகிட நானிலம்      செழுத்திட தீபாவளி வந்தது ! தீமைகள் விலகிட தீத்தொழில் மாய்ந்திட தீபாவளி வந்தது ! வாய்மை வளர்ந்திட பொய்மை நலிந்திட தீபாவளி வந்தது ! தூய்மை தொடர்ந்திட துயரம் மெலிந்திட தீபாவளி வந்தது ! வேதனைத் தீயினில் வெந்தவர் எழுந்திட தீபாவளி வந்தது ! சோதனை நாளினில் வாதனை ஒழிந்திட தீபாவளி வந்தது ! பாதனைப் பாடிட பாரெலாம் கூ(ட்)டிட தீபாவளி வந்தது ! சாதனை ஈதெனத் தாயிடம் காட்டிட தீபாவளி வந்தது !                புத்தாடை மத்தாப்பு பொங்கிடும் புன்சிரிப்பு சித்தாடை கட்டி வரும் சிற்றிடையாள் மென்சிரிப்பு கொத்தோடு நறுமலர்கள் கொஞ்சி வரும் தளிர் சிரிப்பு முத்தாட முந்தி வரும் முகிழ் நிலவின் எழில் சிரிப்பு !                              18-10-1976         முருகன் புஜங்கப் பாமாலை - ஸ்ரீ ஆதிசங்கரர் அருளியது. தமிழில்:திரு.கலாபாரதி ஸ்ரீ சுப்ரமண்ய புஜங்கத்தைப்பற்றிச் சிறுவிளக்கம். ஸ்ரீ ஆதிசங்கர பகவத்பாதரின் அறிவாற்றலையும், யோகம், தவ மகிமைகளையும் கண்டு பொறாமை கொண்ட அபிநவ குப்தர் என்ற புலவர், ஆசாரிய சுவாமிகள் மீது ஏவல் செய்ததன் விளைவாக சுவாமிகள் காச நோயால் பீடிக்கப்பட்டார். வியாதியின் தொல்லை தாங்க முடியாமல் தவிக்கும்போது ஒருநாள் சிவபெருமான் கனவில்தோன்றி, திருச்செந்தூர் சென்று தன் இளைய திருமகனாம் செந்திற் குமாரனைத் தரிசித்து வணங்கி வழிபட்டால், வந்த வினைகளும், பிணிகளும் நீங்கும் என்றுறைத்து திருநீறு அருளி மறைந்தார். திருநீறைப் பூசிக்கொண்டு விழித்தெழுந்தார் சுவாமிகள். பிறகு தமது யோக மகிமையால் காலையில் திருச்செந்தூர் அடைந்தார். அங்கு முருகனைத் தரிசிக்கும்போது ஆதிசேடன் பூஜை செய்து வருவதைக் கண்ணுற்ற ஆசாரியர், உடனே "பாம்பு" என்று பொருள்படும்படி தலைப்பு அமைத்து "சுப்ரமண்ய புஜங்கம்" என்ற (33) செய்யுள்கள் கொண்ட வடமொழிக் காவியத்தைப் படைத்து, முருகனுக்குப் பாமாலையாகச் சூட்டினார். திருச்செந்தூர் முருகனின் முன்னிலையில் ஆதிசங்கரர் வடமொழியில் இயற்றிய பாமாலைதான் சுப்ரமண்ய புஜங்கம். "புஜங்கம்" என்பது வடமொழியில் ஒருவித யாப்பைக் குறிப்பது. "புஜங்கம்" என்றால் "தோளால் நகர்ந்து செல்லக்கூடிய பாம்பு" என்றும் பொருளாகும். அதன் கவிச் சொற்களும் சந்தமும் பாம்பு வளைந்து செல்வதுபோல் அமைந்திருக்கும். தமிழிலும் புஜங்கத்தைப் படித்துப் புரிந்துகொண்டு பாராயணம் செய்து, நற்பயன்களடைந்து மேன்மையுற வேண்டித் தமிழாக்கம் செய்யப்பட்டு தமிழ் கவிதைகளாகத் தரப்பட்டிருக்கின்றன. “முருகன் புஜங்கப் பாமாலை” பாடல்கள் , பெரு மதிப்பிற்கும் வணக்கத்திற்கும் உரிய திருமுருக கிருபானந்த வாரியார் ஸ்வாமிகள் அவர்கள் கல்கி வார இதழில் (1964) -(1967) ஆண்டுகளுக்கு இடையே “கந்தன் கருணை”என்ற தலைப்பில் முருகப் பெருமான் வரலாற்றை எழுதி முடித்தபின் , ஆதி சங்கரர் சமஸ்கிருதத்தில் எழுதிய .சுப்பிரமணிய புஜங்கப் பாமாலையைத்  தமிழாக்கம் செய்தது . திருச்செந்தூர் முருகன் அருள் பெறுவோமாக! காலமெல்லாம் பாலனவன் கணேசன் திருவுடையோன் சூலமொடு நான்முகனும் சுரனொடு ஐம்முகத்தோன் சீலமிகு திருமாலும் தேடிவரும் கரிமுகத்தோன் மூலவினை மலை நீக்கி முழுச்செல்வம் அருள்புரிவான். (1) கவியறியேன் வசனமோ கண்டறியேன் என் செவியறியாத ஒலியெதையும் செப்பியும் அறியேன் பொருள் புவிபுகழும் ஆறுமுகா! உன் புனிதமுகம் நோக்குங்கால் தெவிட்டாத தேன்தமிழ்ச்சொல் தெளிந்து வரும் நெஞ்சிருந்து. (2) உலகமெல்லாம் காக்கும் கந்தா! உளம்மகிழும் ஒளி உருவே! நலமுடை சான்றோர் நெஞ்சில் நாளெல்லாம்வாழும்தேவே! பலர்போற்றும் சிவன்மைந்தா! பக்திமிகு அந்தணர்தம் குலதேவா! வேதத்தின்தத்துவமே!கோலமயில் வாகனனே!பணிகின்றேன். செந்திற் கடலுடையோன் சேவடி துணையென்றே வந்தவர்தம் பிறவியெனும் வரையிலாக் கடலினையே கந்தன் திருவருளால் கடந்திடுவர் பராசக்தி மைந்தன் பதம் பணிவோம் மால்மருகன் சொன்னபடி.(4) “ஓங்கி உயர்ந்தடிக்கும் ஒய்யாரக் கடலலையும் ஆங்கென் அடிபணிந்து அமர்ந்திடுமாம் விந்தைபோல ஏங்கும் கவலையோடு என்முன்னே வந்திட்டால் நீங்கும் தீங்”கென்பான் நெஞ்சிலுரை செந்தூரான். (5) “எந்தன்மலை வந்தவர்கள் எந்தைமலை போனவர்கள் கந்தமலை வந்தவர்கள் கைலைக்கு வந்தோ”ரென்பான் சிந்துமொளி மதிமுகத்தோன் செந்திலுறை ஆறுமுகம் செந்தாமரை மலரொக்கும் சேவடிகள்தாம் வாழ்க! (6) எத்தனையோ பாவமெல்லாம் எளிதினிலே போக்கவல்ல சித்தர்வாழ் கந்தமலை சீரலைவாய் ஓரத்திலே புத்தொளியாய் குகையினிலே புனிதகுகன் வீற்றுள்ளான் புத்துயிராய் விளங்குமவன் பொன்னடிகள் போற்றிடுவோம்.(7) மாணிக்கக் கட்டிலென்ன மாசறுபொற் கோயிலென்ன நாணக் கண்டிடலாம் நாற்கோடி ரவி ஒளியும் வானத்து தேவதேவன் வரம் வேண்டத்தான் தருவான் காணக்கண்குளிரும் கார்த்திகேயன் தாள்பணிவோம். (8) செந்நிறப் பாதமலர் சிந்தும் தேனமுதமலர் இன்னொலி பாதசரம் இன்பமயமாக்கும் மனம் உன் நினைவில் நினைவாக உலவிவரும் வண்டெனவே என்னிதயம் இருந்தங்கே எப்போதும் களித்திடுமே. (9) தங்கமய ஒளிவீசும் தகதகக்கும் பட்டாடை அங்க அசைவினிலே அரைஞாணும் ஒட்டியாணம் கிண்கிணிக்கும் சலங்கையொலி கிறங்கவைக்கும் இடுப்பழகும் எங்கும் ஒளிவடிவாம் எழில்முருகன் நாம் பணிவோம். (10) மங்கை குறவள்ளிதனை மால்மருகன் அணைத்ததுமே கொங்கை அழகிட்ட குங்குமமும் மார்புறைந்தே அங்கும் செவ்வொளி வீச அன்பர்தமை ஆட்கொள்வான் தங்கநிற மார்புடையோன் தாரகனைக் கொன்றவனாம். (11) சூரபதுமனைக் கொன்றே சுரன்பகைதான் வென்றே தூர யமனை ஓட்டி துண்டித்த யானைதந்தம் பாருலகம் படைத்தவனை பணிய வைத்த வேலவனை சேரும் உயிர்காக்கச் செந்தூரான் கரம்துணையே.(12) பனிக்காலச் சந்திரனும் பருவமெல்லாம் நிறைந்தாலோ தனித்தாறு முழுமதியின் தண்ணொளிபோல் ஆறுமுகம் தனக்குள்ளே மாசுற்றும் தரணியிலே தோணும் மதி கனிக்காக வலம்வந்த கந்தனுக்கு நிகராமோ?(13) அன்னப் பறவைகளோ? ஆறுமுகா புன்சிரிப்பு இன்னமுத இதழழகால் இன்சொற்கள் தாம்வருமே வண்ணமலர்த் தாமரையில் வண்டுலவும் விழியழகை என்ன சொல்ல? சிவபாலா! எழில் தாமரை முகனே! (14) கண்விழிகள் பன்னிரண்டும் காதுவரை நீண்டிருக்கும் நின்கருணைப் பெருவெள்ள நீர்த்துளிதான் கிட்டாதோ? அன்பரெனத் தொழுவோர்க்கு அருள்புரிந்தால் குறைந்திடுமோ? உன் பார்வைபடுமாயின் உய்வேனே உமைபாலா!(15) முன்னின்ற பாலகனை முகர்ந்திட்டு மகிழ்ந்த சிவன் “என்னின்றுதித்த மைந்தா! என்றென்றும் வாழ்க”வென சொன்னதுமே ஆறுமுறை சுகவாழ்வை நிலையாக்கும் மன்னலுகின் சுமைதாங்கும் மணிக்கிரீட சிரம்பணிவோம்.(16) மாலைமணி அணிகள் மார்பில் அசைந்தாட, கோலமிகு காதணியும், குண்டலமும், தோள்வளையும் மேலிடை பட்டாடை மேன்மையொளி வீசிடுமே! வேலன், புரமெரித்தோன் வேதமைந்தா! நீ வருக!(17) “இங்கு வா” என்றெதுமே இளைய திருக்குமரன் சங்கரிதம் மடியிருந்து சங்கரன் கரம்தழுவும் தங்கநிற இளமேனி தவழும் குழந்தையவன் திங்கள் முகமாறும் தினமும் பணந்திடுவோம்.(18) குமரா! ஈசன்திருமகனே! குகனே! திருமயில் வாகனனே! அமரர்பதியே! ஆறுமுகா! அடியார் துயர்கள் நீக்குபவா! சமரில் தாரகன் கொன்றவனே! சரவணபவனே! வள்ளிமணாளா! உமையாள்உருவாம்வேல்முருகா!உமைப்பணிந்திடுவோம் காத்திடுவாய்! புலனடங்கி நினைவிழந்து பொறிகலங்கி கபமடைக்க பலம்நலிந்து செயல்மறந்து பயம்மிகுந்து உடல்நடுங்க நலம்நசிந்து உயிர்மறைந்து நமனைநாடும் போதினில் உலகறிந்த துணைகள் வேறு உதவிடுமோ உன்னையல்லால்! (20) ’’வெட்டு,பிள,பொசுக்“கென்று வெஞ்சினமாய் யமதூதர் திட்டவரும் காலமதில் திருமயில் வேலுடனே கெட்டலை விட்டிடாமல் கிட்டவந்து”அஞ்சேல்“எனத் தொட்டுக் காத்தருள தோன்றிடுவாய் வேலவனே!(21) உனைப்பணிந்து கேட்கின்றேன் “ஓம் முருகா” என்றுனையே கணப்பொழுதும் சொல்லாமல் கைகளையும் குவிக்காமல் நினைவிழந்து தவிப்பேனே நெஞ்சிலுயிர் நீங்குகையில் துணைபுரிவாய் அப்போது துதிக்கின்றேன் இப்போதே! (22) தாரகன், சிங்கமுகன், தம்பிகளின் தமையனவன் சூரபத்மன் என்பவனும் சூழுமண்டம் ஆயிரத்தை வீரமொடு ஆளுகையில் வீழ்த்தியதும் வேலதனால் பாரமன நோய்நீக்கி பார்த்தருள்வாய் வேலவனே!(23) உமையாள் திருமகனே உன்னடியேன் துக்கமெனும் சுமையால் தளர்ந்தவன் நான் சுந்தர வடிவேல் கொண்டு இமையா அமரர் தேவா! ஏழைக்கிரங்கும் வேலா! உமையன்றி வேறறியேன் உளநோய் நீக்கிடுவாய்! (24) காசம்கயம் குட்டமொடு காக்கைவலி காய்ச்சலெனும் நாசம்செயும் பெருநோயும் நலியவைக்கும் பைசாசம் வாசம்செய்ய என்னுடலில் வந்திட்டால் வேலாவுன் பூசுமிலைத் திருநீற்றால் போக்கிடுவாய் தீவினையாம்! (25) கந்தனைக் காணவேகண்கள்! கரங்களும் அவன்பணிக்கே! செந்தில் முருகன்புகழ் செவிபடைத்த பயனாகும்! சந்தமும் அவன்சரிதம் சந்தமொடு வாய்பாடும்! சிந்தனையும், உடல்வாழ்வும் சீரலைவாய்க் கந்தனுக்கே!(26) பக்திநெறி மனிதர்க்கும் பரதத்துவ முனிவர்க்கும் முக்தியளித்திடுவர் மும்மூர்த்தி தெய்வங்களாம் எத்தையும் அறிந்திடாத எளியநிலைப் பஞ்சமரின் சித்தமருள் முருகனன்றி சிறியேன் எதையும் அறியேனே!(27) மனைவியோடு மக்களும், மனையில்வாழும் பசுக்களும், மனிதனோடு பெண்களும் மற்றுமுள்ள சுற்றமும் நினைந்துமையே வணங்கவும் நித்தமும் துதிக்கவும் வினைகள்நீங்க வேள்வியை விதிப்படியே நடத்தருள்வீர். (28) நெடியமலைக் கிரௌஞ்சமதை நினத்ததுமே வேல்கொண்டே பொடிசெய்த வேலவனே! புண்படுத்தும் நோய்களையும் கொடியவிடப் பிராணியொடு கொத்தவரும் பறவையினம் கடுகியோடச் செய்திடுவீர் கைகள்தாங்கும் வேலதனால்! (29) தன்மகன் செய்தபிழை தந்தைதாய் மன்னியாரோ? உன்மகன் நானன்றோ? உலகத்தின் தந்தையேநீ தென்பரங்கிரிதேவா! தேவசேனா பதியே! என்பிழை மலையெனினும் எளியேனைப் பொறுத்தருள்வாய்!(30) கந்தா! உன்மயில்போற்றி! கடம்பா வேல்போற்றி! சிவன் மைந்தா சேவல்போற்றி! மறியாடும்தான் போற்றி! சிந்தாகுலந்தீர் செந்தூரா! சிந்தும்சேவடியும் போற்றி! வந்தே வரமருள்வாய் வணக்கம் வணக்கமய்யா!(31) வெற்றிதரும் இன்பவடிவேலவனே! சிவன்மகனே! வெற்றியின் திருவுருவே! விளங்கும் புகழுடையோய்! வெற்றி கொண்டதிருக்கடலே! வெள்ளப் பெருக்கினைப்போல் வெற்றி புகழ் இன்பமெல்லாம் வேண்டுவோர்க்கு அருளிடுவீர்!(32) கந்தனின் புஜங்கமதைக் கவிபாடி பக்தியொடு வந்தித்து வழிபட்டால் வாழ்ந்திடலாம் நெடுங்காலம் சிந்தைக்குகந்த இல்லாள், செல்வம், நன்மக்களுடன் தந்திடும் பேரின்பநிலை தரணிபுகழ் குகனருளே!(33) திருச்செந்திலாதிபன் துணை! திருச்சிற்றம்பலம்!