[] 1. Cover 2. Table of contents எட்டி மரக்காடு எட்டி மரக்காடு   அன்பழகன்ஜி   anpoog@gmail.com   மின்னூல் வெளியீடு : FreeTamilEbooks.com   உரிமை : CC-BY-SA-NC கிரியேட்டிவ் காமன்ஸ். எல்லாரும் படிக்கலாம், பகிரலாம்.   அட்டைப்படம் - லெனின் குருசாமி - guruleninn@gmail.com   மின்னூலாக்கம் - ஐஸ்வர்யா லெனின் - aishushanmugam09@gmail.com   This book was produced using pandoc   பதிவிறக்கம் செய்ய - http://FreeTamilEbooks.com/ebooks/etti_marakkaadu மின்னூல் வெளியீட்டாளர்: http://freetamilebooks.com அட்டைப்படம்: லெனின் குருசாமி - guruleninn@gmail.com மின்னூலாக்கம்: ஐஸ்வர்யா லெனின் - aishushanmugam09@gmail.com மின்னூலாக்க செயற்திட்டம்: கணியம் அறக்கட்டளை - kaniyam.com/foundation Ebook Publisher: http://freetamilebooks.com Cover Image: Lenin Gurusamy - guruleninn@gmail.com Ebook Creation: Iswarya Lenin - aishushanmugam09@gmail.com Ebook Project: Kaniyam Foundation - kaniyam.com/foundation This Book was produced using LaTeX + Pandoc என்னுரை நம் எல்லோரிடமும் ஏராளமான கதைகள் இருக்கின்றன. அவற்றை வடிவமைப்பதற்கான வார்த்தைகளும் இருக்கின்றன.  ஒழுங்குபடுத்தி வெளிக்கொணர்வதற்கான புனைவும் வெளியிடுவதற்கான சந்தர்ப்பமும் கிடைத்தால் எல்லோரும் கதை சொல்லும் படைப்பாளிகள்தான்.  . சுமார் நாற்பதாண்டு கால வாசிப்பு அனுபவம்  என்னை குறைவாக எழுதச்சொல்லி எச்சரிக்கிறது.  ஏற்கனவே படைப்பு குழுமம் மூலம்  ஒரு சிறுகதைத் தொகுப்பு  அச்சில் வெளியிட்டுள்ளேன். அதற்கு மேல் என்னை விளம்பரப்படுத்திக் கொள்ள விரும்பவில்லை.  சமூகத்தில் நடக்கும் எத்தனையோ நிகழ்வுகளில் சில ஆழ் மனதை விட்டு அகலாதிருப்பதால் நான் அதன் பாத்திர வடிவமாகிப் போகிறேன். சிரிக்கிறேன். அழுகிறேன்.  கை கோர்த்து நடக்கிறேன்.   அவர்களோடு ஒன்றிப்போகிறேன்.   அவர்களாகிப் போகிறேன். அதனை புனைவாக்கி  அதன் மூலம் என்னை அறிமுகப் படுத்திக் கொள்கிறேன். யாரேனும் வருந்துவார்கள் என்றோ யாரையாவது சந்தோஷப்படுத்தவோ  சமரசம் செய்துகொள்ளவோ என்னால் இயலாது. சிறுகதைகள் எழுதத் தொடங்கியபோதே, அதன் இலக்கணத்தை அறிந்துகொள்ள ஜெயகாந்தன், புதுமைப்பித்தன், மௌனி, லா.ச.ராலிருந்து மாப்பசான்,  செகாவ், ஓ ஹென்றி, ஹெமிங்வே, ஜாக்கப்ஸ் போன்ற ஜாம்புவான்களின் சிறுகதைகள்  மீள் வாசிப்பும் செய்திருக்கிறேன்.  அதன் முடிவுதான் எனது விருப்பமும் அமைப்புமே எனது சிறுகதைக்கான இலக்கணம் என்ற முடிவுக்கு வந்தேன். இதில் வெளிவரும் பத்து சிறுகதைகளும் ஏற்கனவே எனது முகநூல் பக்கத்தில் வெளிவந்தவை என்பதோடு சில இலக்கிய வலைதளங்களில் வெளிவந்து பரிசு பெற்றவையாகும். இந்நூலை யாரும் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் விற்பனை நோக்கமின்றி பகிர்ந்தும் கொள்ளலாம். வாசிப்பின் மீதான கருத்துகளை தெரிவித்தால் அவை என்னை மேலும் கூர்மையாக்கிக்கொள்ள உதவும் என்பதால் காய்தல் உவத்தலின்றி கருத்துகளை பரிமாற  வேண்டிக்கொள்கிறேன். இந்நூல் pdf முறையில் வெளிவர உதவிய freetamilebooks.com நிறுவனத்திற்கும் பணியாளர்களுக்கும் நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். பேரன்புடன், அன்பழகன்ஜி. கைபேசி : 6381979122 Mail id.      :  anpoog@gmail.com ஜன்னல்கள் இல்லாத ரயில்பெட்டி ஒவ்வொரு ரயில் பயணமும் எனக்கு ஒரு பிரமிப்பை ஏற்படுத்தும். ஏதேனும் ஒர் அனுபவம் அதை நிறைந்திருக்கும். திருச்சியிலிருந்து ராமேஸ்வரம் செல்லும் பயணிகள் ரயிலில் அன்று ஏறி அமர்ந்தேன்.   அந்த ரயில் எப்போதும் காலை ஆறு ஐம்பதுக்கு கிளம்பி சரியான நேரத்திற்குச் சென்றடைவதும்  திரும்ப வந்தடைவதும் வாடிக்கையாகவும் வேடிக்கையாகவும்  இருக்கும். என்னுடைய அன்றைய பொழுது அந்த வண்டியில் பயணிப்பதும் ராமேஸ்வரம் சென்றதும் அதே வண்டியில் திரும்புவதும் ஆகும். கதை எழுதுவது புத்தகம் படிப்பது செல்போனை தோண்டுவது போன்ற ஏதுமற்ற வெறுமையோடு வெறுமையாக வேண்டும். அது அழித்தலின் ஆரம்பமாக வேண்டும். ஓடோடி வேகத்தைக் குறைத்து மெல்ல பாம்பன் பாலத்தில் வண்டி ஊர்ந்தது .  மனம் அலைக்கழிந்து போனது.  வாசலுக்குப் போய் கடலில் குதித்து விடலாமா என தோன்றியது.  அறிவென்னும் கடிவாளம் மனதை உள்ளே இழுத்துப் போட்டது. மீள ஒன்றுமில்லாத ஒருமையானேன். நினைவு திரும்ப, கடைசி பெட்டியில் இருந்த நான்  ராமேஸ்வரத்தில் முதல் பெட்டியில் இருந்தேன். எப்படி வந்தேன்? பெட்டியில் யாருமில்லை.  நானும் இல்லை. பெட்டியே இல்லை. ரயிலும் இல்லை.  நீங்கள் உண்மையை உணர உங்களையே இப்படி சோதித்து கொள்ள வேண்டுமென்றோ முயற்சிக்க வேண்டுமென்றோ கட்டாயத் தேவை ஏதுமில்லாமல் இருக்கலாம். எனக்கு, நான் தேவைப்பட்டேன்.  என்னையே நான் அழித்துக் கொண்டேன்.  கோரப் பசியில் ஓடாத குதிரையின் கடிவாளத்தை கடித்து உண்ட கழுதை, சிங்கம் போல ராஜநடை போடத் தொடங்கியது.  காற்றையோ கடவுளையோ காணமுடிவதில்லை. உடலின் நாற்றத்தை பிடித்து வைத்திருக்கும் உயிரைக்கூட உணரத்தான் முடிகிறது. கண்கள், கால்கள் பிறவற்றால் உயிரினை உணர்வது வேட்டை நாயின் வாயில் அடங்கிப்போகும் சதையைப் போன்ற மூளையாகும். மண்டபம் கேம்ப் என்ற நிலையத்தில் வண்டி நின்றது.   வாசல் வழியே எட்டிப் பார்த்தேன்.   தன்னந்தனி நபராக சிவப்பு பச்சை கொடிகளை வைத்துக்கொண்டு என்னைப் போலவே  நிலைய அதிகாரி நிற்கிறார். எங்களுக்கு தனிமை பழக்கப்பட்டதுதானே.  யாரும் ஏறவோ இறங்கவோ இல்லை.  ரயில் யாருக்காகவும் நிற்காமல் யாருக்காகவும் காத்திருக்காமல் அது பாட்டுக்கு ஓடியது. கடிகார முற்களைப்போல. ரயில் பயணிப்பின் எதிர் திசை நோக்கி அமர்ந்திருந்தேன். தூரத்து கருவேலங்காடு ஒன்று வலப்புறமாக மெல்ல சுற்றியது.  அருகில் உள்ளதெல்லாம் சரியாக பார்க்க முடியாத வேகத்தில் ஓடுகின்றன. முன்னோக்கியா? பின்னோக்கியா? காலம் முன்னோக்குவதுபோல் தெரியலாம் நாம் அதை எப்போதும் தட்டையாகப் பார்க்கக் கூடாது. வெயிலில் அவசரமாக வெட்டி விழுங்கிய புற்களை நிழலில் படுத்துக்கொண்டு ஆற அமர அசைபோடும் மாடுகளைப் போன்றது அது.   காலத்தின் கொம்புகள் முட்டினாலும் எப்போதோ வீசிய தென்றல் வெப்பத்தின் போது வயிற்றைத் துடைக்கத்தான் செய்கிறது. உச்சிபுளி என்ற நிலையத்தில் நானிருந்த பெட்டியில் ஒரு பார்வையற்ற யாசகனும் ஒரு துறவியும் ஏறினார்கள்.  ஒளிமயமான எதிர்காலம் உள்ளத்தில் தெரிகிறதாம்  யாசகருக்கு.  உண்மையில் குரல் அழகுதான்.   அழகான பெண்ணுக்கு எந்த பெயர் வைத்தாலும் அழகு போல.  அஜந்தா ஓவியத்தைப் போல.  பேச்சுச் சப்தம் ஏதுமில்லை என்றாலும் பெட்டி காற்று வாங்குவதை ஓரளவுதானே அவரால் உணர முடியும். ஒரு பத்து ரூயாய் நோட்டை எடுத்து அவரது அட்சயப் பாத்திரத்தில் போட்டேன்.  என்ன நினைத்தாரோ பயணிக்கும் அந்த துறவி தன் கைப்பைக்குள்  தடவி ஒரு பத்து ரூபாயை அவரும் போட்டார். கூட்டமே இல்லாததால் யாசகர் மீது  துறவிக்கு இறக்கம் வந்து இருக்கலாம். பணக்கார துறவியாக இருக்கலாம்.  வங்கியில் சேமிப்பு கணக்கு கூட வைத்திருப்பாரோ?  இருக்கலாம்.  வெவ்வேறு இருக்கலாம்.   நமக்கென்ன.   யாசகரும் யாசகருக்கு யாகம் செய்தார்.  அவ்வளவே. இடது கையால் தடவி நோட்டுக்களை மட்டும் பத்திரமாக எடுத்து சட்டைப் பையில் திணித்துக்கொண்டு  எஞ்சி கிடந்த சில்லறை நாணயத்தை உலுக்கியதில் பாட்டோடு தாளமும் சேர்ந்து சோர்ந்து  வந்தது. மறு பக்க கதவருகே சென்று நின்று மறு நிறுத்தத்தில் பக்கத்து பெட்டிக்குப் போனார். வறிய குடும்பம் ஒன்று பெட்டிக்குள் வந்தது. தாயுடன் ஏழெட்டு வயது மதிக்கத் தக்க இரண்டு குழந்தைகள். அவர்கள்  அணிந்திருந்தது இலவசமாக பள்ளியில் கொடுத்த சீருடை.    காக்கி அரைக்கால் சட்டை.   அழுக்கேறிய வெள்ளை மேல் சட்டை.  ரெடிமேட் கடையில் ஜவுளி எடுக்கும்போது கொடுக்கும் துணிப் பையிலிருந்து இரண்டு பட்டாணிக் கடலை பொட்டலங்களை எடுத்து ஆளுக்கு ஒன்றாய் கொடுத்தார் அந்த பெண்மணி.   அவளது உடையும் முகபாவமும் பாவப்பட்ட ஜீவன் என்பதை உணர்த்தியது.  பட்டாணியை உண்டு முடித்த சிறுவன். “அம்மா கடல முடிஞ்சி  போச்சி.   இன்னொண்ணு தா” என்றான். “அவ்ளவுதான்டா தீந்துட்டுச்சி” என்றாள். “மூணு வாங்கினியே அம்மா” “அது அக்காவுக்குடா” என்று அவன் மூக்கில் ஒழுகிய சளியை முந்தானையால் துடைத்தவாறு “பச்ச தண்ணில ஆடாதன்னு எத்தன தடவ சொன்னாலும் கேட்டாதானடா” “பள்ளிக்கொடம் விட்டு வரும்போது மழ வந்தத்துக்கு நான் என்ன பண்ணுறது” அவன் பதில் பல அர்த்தங்கள் நிறைந்தவை. மழை வருமென்று தெரிந்தும் பள்ளிக்குச் செல்லும்போது  எடுத்துப்போக குடை இருந்திருக்காது. வீடே ஒழுகும் ஓட்டைகள் கொண்ட குடிசையாக இருக்கும். பல வீடுகள் அப்படித்தானே இருக்கின்றன.    உழைக்கிறார்கள். ஆனால் உயர முடிவதில்லையே. அதை உறுதி படுத்தும் வகையில் மூத்த பையன் அடுத்து ஒரு கேள்வியைக் கேட்டான். “அப்பா எப்பம்மா வருவார்?” “வருவார்டா” “அதான் எப்ப? . ஏம்மா ரொம்ப நாளா வரல?” " டே சும்மா இருடா" ஓர் அதட்டுதலில் மேலும் கேள்வி கேட்காதவாறு அடக்கி வைத்தாள். வெள்ளரிக்காயுடன் அடுத்த நிறுத்தத்தில் ஏறிய வியாபார பெண்மணியிடம் பத்து ரூபாய்க்கு மூன்று வாங்கி இரண்டை அந்த சிறுவர்களிடம் காட்டி வாங்கச் சொன்னேன். அவர்களுக்கு பெற்றுக்கொள்ள இஷ்டமில்லை போல.  வேண்டாம் என்று கைகளால் சைகை செய்தார்கள்.  “வாங்கிக்கச் சொல்லுங்கம்மா” என்றேன். “வேண்டாய்யா” என்றார் பெண்மணி. துறவி அவனை அழைத்தார். போக யோசித்தான்.    பின் என்ன நினைத்தானோ தயங்கித் தயங்கி அருகில் போனதும்  தான் வாங்கி வைத்திருந்த மூன்று வெள்ளரி பிஞ்சுகளை அவனிடம் கொடுத்தார் வாங்க மறுத்தான். தாயை பார்த்தான்.    சைகைகூட  ஏதுமில்லை.  ஏதோ சிந்தனை அவளை மூடியிருக்கக்கூடும்.  அசட்டுச் சிரிப்போடு  வாங்கிக்கொண்டான். “ஒண்ணு ஒனக்கு.  ஒண்ணு தம்பிக்கு.  இன்னொண்ணு அக்காவுக்கு” என்றார். “ம்” “பிச்சைக்காரன் கொடுத்ததுன்னு தூக்கி வீசிடாத.  கழுவிபுட்டு தின்னு” என்றார். அவன் கொண்டுபோய் பையில் ஒன்றை திணித்தான். கழுவாமலேயே தம்பிக்கு ஒன்றைக் கொடுத்து தானும் உண்டான்.  நான் வைத்திருந்த வெள்ளரிக்காயில் இரண்டை துறவியிடம் நீட்டினேன்.  ஏதும் சொல்லாமல் வாங்கி கையிலேயே வைத்திருந்தவர்.  பின்னர் ஒன்றை என்னிடம் திருப்பிக் கொடுத்தார். மற்றொன்றை தன் பைக்குள் வைத்துக்கொண்டார். வறிய குடும்பம் இறங்கட்டும் என்று வண்டி நின்றிருக்குமோ.  அவர்கள் இறங்கியதும் வண்டி பயணத்தைத் தொடர்ந்தது. வெள்ளரிக்காய் விற்ற முதலாளி அம்மா அடுத்த பெட்டிக்கு போனார். நான் வெள்ளரிக்காய் ஒன்றை கழுவிக்கொண்டு வந்து கடித்தவாறு  துறவியிடம் பேச்சுக் கொடுத்தேன். “சாமிக்கு எந்த இடம்?” “தமிழ் நாடுதான்” என்றார். “தமிழ் நாட்டுல எந்த ஊர் சாமி?” “இங்கே வந்து பதினோரு வருஷமாச்சி  சொந்த ஊர்னு எதுவும் இல்லை.  ரயில்வே ஸ்டேஷன்,  பஸ் ஸான்ட், கோவில் வெளி வரண்டா, ஆல மரம்தான் என் ராப்பொழுது” என்றார். “பூர்வீகம் எது சாமி?” “உத்திரப் பிரதேசம்” “உத்திரப் பிரதேசமா!” “ஆமாம்.  உ.பி.யில உள்ள  ஓரு மாவட்டத்தில் ஓர் ஊர்” என்றார். “அங்கிருந்து இங்க எப்படி வந்திங்க?” “தெரிஞ்சிக் கிடனுமா?” “ஆமா சாமி.  சொன்னா தெரிஞ்சிக் கிடுறேன். விருப்பமிருந்தா சொல்லுங்க”  என்றதும் அவர் கதை சொல்லியாகிறார்.  நானும் நடுவே சொல்ல வருவேன். நான் இருபத்தி மூணு வயதில் ராணுவத்தில் சேர்ந்தேன். பயிற்சிக்குப் பின் உங்கள் மாநிலத்தின்  குண்ணுரில் உள்ள வெல்லிங்டன் பயிற்சி பள்ளியில் பதினைந்து வருஷம் பயிற்றுநராக பணியாற்றி ஓய்வு பெற்ற பின்னர்  ஐந்து ஆண்டுகளே  சொந்த ஊரில் இருந்தேன். (உ.பி.யில் உள்ள பாராபங்கி மாவட்டத்தில் உள்ள ஹைதர்கார் என ஏன் சொல்ல வேண்டும்.) அதற்குள் இல்லறத்தில் விரிசல் வந்துவிட்டது.  யாரிடமும் சொல்லி ஆறுதல் அடைய வேண்டும் என்ற மன நிலையெல்லாம் இற்றுப்போய் அதுவும் வாழ்க்கைதான் இதுவும் வாழ்க்கைதான் என பயணித்துக் கொண்டிருக்கிறேன்.  என் இலக்கு மரணத்தை நோக்கியது.   என் ஆசையும் தேவையும் அதுதான்.  மற்றவை ஒரு துறவியின் தேவைகள்.  சொல்ல உங்களுக்கு தேவையில்லைதான்.  நான் தெரிந்துகொள்ள மனம் இருந்தால் சொல்லுங்கள் என்றேன். மனம் இல்லை. என்னிடம் இப்போது பாரமில்லை. உங்களுக்காக சொல்கிறேன்.   இலக்கியத்தின் மீதான அதீத ஈடுபாடு என்னை சிறுகதைகள் எழுத ஆர்வ மூட்டியது.    ஐந்தே கதைகள்தான் எழுதினேன்.  இலக்கியத்திற்கு அத்தோடு முழுக்குப் போட்டேன்.  அதுதான் என் வாழ்வையும் புரட்டிப் போட்டது என்றார். சத்திய பிரகாஷ் ராவ் என்ற அந்த துறவியிடம் இலக்கியம் பற்றி தெரிந்துகொண்டதில் இந்தி இலக்கியத்தை விட  வங்க இலக்கியத்தின் தாக்கமே அவர் பகுதியில் அதிமாக இருந்துள்ளது.   இந்தி இலக்கிய முன்னோடியான பிரேம்சந்த்  என்பவரின் புகழ்பெற்ற நாவலான கோதானம் மட்டுமே வாசித்துள்ளதும் வங்கத்து தாகூர், மராட்டிய காண்டேகர் ஆகியோரின் மொழிபெயர்ப்பு படைப்புகளை நிறைய படித்துள்ளார்.  தாரா சங்கர் பந்தோபாத்யாவின்  நீலகண்ட பறவையைத் தேடி என்ற நாவலையும், குர் அதுல் ஐன் ஹைதரின் அக்னி நதி போன்ற தாவல்களைப் படித்துள்ளதில் இருந்தே தேடி புத்தகங்கள் வாசித்துள்ளது அறிய முடிகிறது.  இதற்கெல்லாம் மாறாக தமிழில் சுஜாதாவின் மர்ம நாவல்களையும் அறிவியல் கட்டுரைகளையும் விரும்பி படித்துள்ளார்.  ராணுவத்தில் ஓய்வற்ற பணிகளுக்கிடையில் தேர்ந்த புத்தகங்களை வாசித்த நல்ல வாசகர் என்பதனால்தான் இவரது அடுத்த நகர்வு சிறுகதை எழுத்துவதற்குச் சென்றுள்ளது.  சூழ்நிலை, விதி, சந்தர்ப்பம், பாவம் எதை வேண்டுமானாலும் வைத்துக்கொள்ளலாம்.  அங்கேதான் கயிறு பாம்பாக மாறியது என்கிறார் சத்தியா. ஒரு நாள் என் மனைவியுடன் பேருந்தில் பயணம் செய்தபோது அதே பேருந்தில் ஐந்து அல்லது ஆறு இருக்கைக்கு முன் அடுத்தத் தெருவில் உள்ள ஒரு பெண்மணியும் பயணம் செய்தார்.  அவர் எங்கள் தெருவில் வீடுகளுக்கு பால் ஊற்ற வருபவள்.  இத்தனைக்கும் நாங்கள் அவளிடம் பால்கூட வாங்குவதில்லை.  வீடு திரும்பிய என் மனைவி அந்த பெண்ணை மையமாகக் கொண்டுதான் என் முதல் சிறுகதையை எழுதியதாகவும் அவளுக்கும் எனக்கும் தொடர்பு உண்டு என்றும் நான் சொல்லித்தான் அவளும் அதே பேருந்துக்கு வந்து பணித்துள்ளாள் என்றும் கதை கட்டினாள். அதுதான்  தொடக்க புள்ளி.  என் மனைவிக்கு இலக்கியத்தின் மீது எந்த ஈடுபாடுமற்றவள். கணவனின் கதை வந்துள்ளதே என படித்த வினை.  பின்னோரு நாள் அவளுக்கு ஓட்டுநர் உரிமம் எடுக்கலாமென ஒரு பயிற்சிக்கூட  அலுவலகம் சென்றோம். அங்கே பணி புரிந்து வந்த பெண்மணி எங்கள் இருவரையும் புன்னகையோடு வரவேற்றார் மனைவிக்கு மூஞ்சு உம்மென்றது.   வீட்டுக்கு வந்ததும் அவள் என்னைப் பார்த்துத்தான் பல்லை இளித்ததாகவும் எங்களுக்குள் ஏதோ  தொடர்பு உள்ளது என்றாள்.  இத்தனைக்கும் அந்த பெண்ணை நான் அதற்கு முன் பார்த்ததோ அந்த பயிலகத்திற்குப் போனதோ இல்லை.  உரிமத்திற்கு பணம் கட்டிவிட்டு வந்தும் படிவங்களில் கையெழுத்துபோட மறுநாள் வரச் சொல்லியும்  அடித்த ரகளையில்  நாங்கள் போகவே இல்லை.  உரிமம் எடுத்தே ஆகவேண்டும் என ஒற்றைக் காலில் நின்றதால் இரு வாரத்திற்கு பிறகு வேறொரு  பயிலகத்திற்கு போனோம். என் போல்லாத காலம் அங்கேயும் ஒரு பெண்தான் எழுத்தராக இருந்தாள்.  அடி மாட்டு விலைக்கு பணிபுரிய பெண்கள் கிடைப்பதோடு சிகரெட் பிடிக்கப் போவது நடுவில் வெளியே போய் சொந்த வேலை பார்ப்பதெல்லாம் பெண்களிடம் இருக்காதென்பதால் இவ்வாறான நிறுவனங்களில் பெரும்பாலும் பெண்களே நியமிக்கப்பபடுவது வழக்கமாகி விட்டது.  நல்லவேளை இவள் எங்களை பார்த்து புன்னகைக்க வில்லை  பட்டும் படாமலும் பேசினாள்.   நான் பதில் அளிக்காமல் மனைவியை சொல்லட்டும் என திட்டமிட்டு இருந்து விட்டேன்.  என்ன இருந்தேன்ன உரிமம் பெற்றுத்தர மூன்று நாள் நாங்கள் அலைய வேண்டி இருந்தால் என்னை பார்க்க வேண்டுமென்றே  அந்த பெண் மூன்று நாள் இழுத்து அடித்துள்ளாள் என மொட்டைத் தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சு போட்டாள்.   இந்த மூன்றாவது பெண்மணிதான் வார இதழில் வெளிவந்த எனது இரண்டாவது கதையின் நாயகி என்றாள்.  என்ன  எடுத்துச் சொல்லியும் அவள் புரிந்துகொள்ளும் மன நிலையை இழந்தவளாகி விட்டாள். செய்தித்தாள் தொலைக் காட்சிகளில் எல்லாம் எதார்த்தத்திற்கு மாறான உறவுகள் குறித்த செய்திகள் வருவதை கேட்டு மனதிற்குள் வித்தியாசமாக நினைக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டு மனநிலை மோசமானது.  இருபதாண்டு காலம் குடுப்பத்தை விட்டு தனியே இருந்தவன் ஒழுக்கத்தோடா இருந்திருப்பேன் என்ற ஐயம் அவளுக்கு.  என்னால் புரியவைக்க முடியவில்லையா அல்ல புரிந்துகொள்ள தவறினாளா என்பதே தெரியவில்லை.  மொத்தத்தில் தான் தோற்றுப்போய் விட்டேன். “ஏம்மா நான் அந்த பொண்ணோட பேச கூட இல்லையே.  நீ தானே பேசினே” “எப்படி பேசுவிங்க.  எல்லாம் நடிப்பு.  பேசுனா தெரிஞ்சிடுன்னு ஒண்ணும் தெரியாதது போல ரெண்டு பேரும் ஆக்ட் விடுறிங்க” “ஐப்பது வயதாகப்போவுது இப்ப போயா என் மேல சந்தேகப்படுறே?” “எழுவது வயதுக்காரனுக கூட கொழுப்படுத்து தப்பு பண்ணுறானுக நீ பண்ண மாட்டியா என்ன?” தமிழ்நாட்டில் நீ வா போ என்று சண்டையில் பேசுவதுபோல ஹிந்தியில் மரியாதை குறைவான வார்த்தைகள் பயன்படுத்தத் தொடங்கிவிட்டாள். “இந்த வயதுல காதலிக்கிறேங்குறியே. உனக்கு மூள கீள ஏதுமில்லையா?” “இது காதல் இல்ல.  நீ பண்ணுறது கள்ளக் காதல்” “வா போன்னு பேச ஆரம்பிச்சிட்டே என்ன மரியாதை தெரியாத ஜென்மமா நீ”  “அப்டித்தான் பேசுவேன் . என்ன பண்ணுவே” “விட்டா வாடா போடான்னு பேசுவியா” “பேசு வேண்டா .  உனக்கெல்லாம் எதுக்குடா மரியாதை” என்றாள்.  ஒரு இடத்தில் நிறுத்திக் கொண்டேன். என்னை அவளுக்குப் பிடிக்க வில்லை.   நான் இல்லாமல் வாழ்வது பெரிய பிரச்சனை இல்லை என்பதை தெரிந்து கொண்டாள்.  பணியில் இருக்கும்போது தனியே தானே வாழ்ந்தால் அந்த அனுபவம். குழந்தைகளும் ஓரளவுக்கு வளர்ந்து விட்டார்கள்.  குழந்தைகளுக்கு புரிந்தும் புரியாமலும் இருந்தது. அப்பா பெரிய பொருட்டல்ல.  அம்மாவிடம் வளர்ந்தவர்கள்.  நித்தம் நித்தம் சண்டை.  சத்தம் வீட்டை அடைத்தது.  மண்ணாங்கட்டி இலக்கியம் என பேனாவை மூடி வைத்தேன்.  ஐந்து சிறுகதை எழுதி மூன்று வெளிவந்ததோடு சரி.  அதன் பிறகு படிப்பது கூட இல்லை. இத்தனைக்கும் அவள் அன்பானவள். நால்லவள்தான். சப்பாத்திக்கு டால்தான் குழந்தைகளுக்கு பிடிக்குமென்றாலும் வடக்கையும் தெற்கையும் இணைக்கும் சென்னா மசாலாவை எனக்காக அடிக்கடி செய்வாள்.  வயிறு முட்ட கொடுத்து மூச்சிரைக்க வைப்பாள். ஓநாய் அழுவதை  போல ஒரு நாள் என் மேல் இரக்கப்பட்டு “நீங்க நல்ல நீங்கதான் உங்களுக்கு தெரியாமலேயே தப்பு செய்றிங்க. வாங்க ஒரு டாக்டரை பார்த்து உங்களுக்கு வைத்தியம் பண்ணுவோம்” என்றாள். “எனக்கென்ன வைத்தியம். நான் என்ன லூஸா? எனக்கு வைத்தியம் பண்ணுறேங்குறே” என்றேன். “வாங்க டாக்டர கேப்போம். அவரு என்ன சொல்ராருன்னு பாப்போம்” என்றாள்.  பட்டென என் மனதில் வேறொன்று தோன்றியது.  அதுவும் நல்லதுதான் அவரைக்கொண்டு ஏதேனும் புத்திமதி சொல்லச் சொல்லலாம் என எண்ணி ஒத்துக் கொண்டேன்.  மறுநாள் ஒரு மனோதத்துவ மருத்துவரை சந்தித்தோம். “ம். சொல்லுங்க என்ன பிரச்னை?” என்றார் மருத்துவர். “இவரு சில லேடீஸோட இல்லீகலா கான்டேக்ட் வச்சிருக்காரு டாக்டர்”. “இவரு யாரு?” “ஹஸ்பென்ட்.    உண்மைய ஒத்துக்க மாட்டேங்குறார்.  வீட்டுல ஒரே சண்ட  டாக்டர்.” என்னைப் பார்த்தார்.  “நான் மிலிட்டரியில இருபது வருஷம் இன்ஸக்டரா ஒர்க் பண்ணின கண்ணியமானவன். என்ன சந்தேகப்படுறாங்க டாக்டர்” என்றேன். “பெரிய மனுஷங்கங்குறத்துக்காக தப்பு பண்ண மாட்டாங்கன்னு சொல்ல முடியாது.  அந்தஸ்துக்கும் தப்புக்கும் சம்பந்தமில்ல. நாட்டுல சில  பாதிரியார்கள், பேராசிரியர்கள், சாமியார்களே தப்பு பண்ணுறாங்களே” மனைவி மகிழ்ச்சி வெள்ளத்தில் ஆழ்ந்தாள் “அதான் டாக்டர். தப்பையும் செஞ்சிட்டு ஒத்துக்க மாட்டேங்குறார்.  எலக்ட்ரானிக் முறையில ட்ரீட்மென்ட் கொடுத்து அவர் வாயாலயே உண்மைய வரவழைக்கணும் டாக்டர்” என்றாள். “அப்படியெல்லாம் எந்த வைத்தியமும் இல்லம்மா.  யாரு சொன்னது உங்களுக்கு இத?” “ஒரு புக்ல படிச்சேன் டாக்டர்.  இருக்கு” என்று அடித்து பேசினாள்.  சம்பந்தா சம்பந்தமில்லாது பெசியதை கண்ட மருத்துவர் அவளை பற்றி புரிந்துகொண்டு,  தனித்தனியே பேச வேண்டுமென்று அவளிடம் பேசிவிட்டு பின்னர் என்னிடம்  தனியே விசாரித்தார். நான் நடந்ததை சொன்னேன். “மீடியாக்கள்ல வர வித்தியாசமான சம்பவங்களை பற்றியே திரும்ப திரும்ப யோசிச்சு மனசுல அது மட்டுமே பதிஞ்சி பாக்குறத எல்லாம் அதை தொடர்பு படுத்தி பாக்குற குணம் இது.  பல பேரு இது போல இருக்காங்க.  நாம என்ன சொன்னாலும் கேக்கவே மாட்டாங்க. ரெண்டு பேருக்கும் மன அழுத்தம் இருக்குன்னு சொல்லி மருந்து தாறேன்.  உங்களுக்கு கொடுக்குறது வெறும் வைட்டமின் மாத்திரை.  பேப்பர் கோட்டிங் இல்லாததா எழுதி தாறேன். ஏன்னா படிச்சாங்கன்னா தொல்ல.  சாப்பிட்டதும் நீங்களும் தூக்கம்  வர மாதிரி நடிச்சிட்டு தூங்க பொய்டுங்க. என்ன புரியுதா?” “சரி டாக்டர். எப்டியோ சரியான சரி” "அது அவங்க டேப்லெட் எடுத்து கிடுறத பொருத்தது.  எப்படியும் சாப்ட வச்சிடணும். “ஓ. கே.  டாக்டர்”. இருவரையும் உட்கார வைத்து " உங்க ரெண்டு பேருக்கும் மன அழுத்தம் இருக்கு.  ரெண்டு பேருக்கும் மருந்து தாறேன்.  ஒரு மாதம் சாப்டுட்டு திரும்ப வாங்க பாப்போம்" “எனக்கு ஏன் டாக்டர் மாத்திரை கொடுக்குறிங்க.  நான் நல்லாத்தானே இருக்கேன்” என்று முகத்தை கடுகடுப்பாக்கினாள். “மன அழுத்தம்.  வேற ஒண்ணுமில்ல. டாக்டர நம்பித்தான வந்திங்க.  நான் சொல்லுறத கேளுங்க. ரெண்டு பேரும்” என்று அனுப்பி விட்டார். வெளியில் வந்ததும் நான் ஏதோ அவரிடம் சொல்லிக் கொடுத்து சரிகட்டி விட்டதாக சத்தமிட்டாள். இரவானதும் நீங்க பஸ்ட் மாத்திர சாப்பிடுங்க தான் அப்புறம் சாப்பிடுறேன் என மழுப்பினாள். பின்னர் நாளை எடுத்துக் கொள்கிறேன் என்றாள்.  நான் சாப்பிட்டதும் நாளையாவது அவள் சாப்பிடணுமே என தூக்கம் வருவதுபோல் சோம்பல் முறித்து படுக்கப் போனேன். மறு நாள் நான் சாப்பிட்டதும்  ‘நான் ஏன் மாத்திர திங்கணும்.  நான் என்ன தப்பு பண்ணினேன்’ என ஆவேசப்பட்டு அவளின் மாத்திரைகளை பிடுங்கி சாக்கடையில் வீசிவிட்டு வந்துவிட்டாள்.  “முழுங்குனா உங்களுக்கு தானே தூக்கம் வருது நீங்கதான் முழுங்கணும்” என அடம் பிடித்து தினமும் என்னை மாத்திரை எடுக்க வைத்தாள்.  அந்த சத்து மாத்திரையை.  தனியார் நிறுவனம் ஒன்றில் செக்யூரெட்டி ஆபீசராக வேலை பார்க்க சென்று வருவதால்தான் வெளியில் போகும்போது சந்தேகப் படுகிறாள் என அந்த வேலையையும் விட்டு வீட்டில் முடங்கினேன். வீட்டில் என்னை கண்டால் என்னுடன் எது பேசினாலும் ஆவேசம் கொள்ள ஆரம்பித்தாள்.   ஐந்து நாள் உறவினர் வீட்டுக்கு நான் சென்றிருந்தபோது அமைதியாக இருந்ததாக மூத்த மகன் மூலம் தெரிந்து கொண்டேன். ஒரு நாள் “நான் செத்து பொய்ட்டா நீ நல்லதுன்னு நெனக்கிறே.  ஆனா சாவு வர மாட்டேங்குது  தற்கொலை பண்ணிகிடுவேன் ஜாக்கிரதை.”  - மிரட்டினேன். " சாவுறதுன்னா சாவு.  எக்கொண்ணுமில்ல.  என் வாழ்க்கைய நான் பாத்துகிடுறேன்" “அந்தளவுக்கு வந்துட்டியா உழச்சு ஓஞ்சி போய்ட்டேன். இனி சக்கைதானேன்னு நெனக்கிறால்ல” “ஒழுக்கங்கெட்ட நீ இருந்தா என்ன செத்தா என்ன?” “உன்னோட சந்தேகப் பேய்  உன்ன விட்டுபோய், தவறுக்கு மன்னிப்பு கேட்க நெனக்கிறபோது நான் இருக்கமாட்டேன் போ.” “நீ தப்பு பண்ணுனே. தப்பு பண்ணுறே அவ்வளவுதான்” “ஆனா நீ தப்பு பண்ணினேன்னு ஆயிரம் பேர் சொன்னாலும் நம்ப மாட்டேன் தெரியுமா” " ஓ . சந்தேகம் வேற படுவியா என் மேல.  யார யாரோட ஒப்பிடுறே. நான் சீதடா." சண்டையை வலுத்தது.  குழந்தைகள் ஆங்கிலத்தில் திட்டி சப்தமிட்டார்கள். அவள் தனக்குத் தெரிந்த இன்னொரு மொழியான உருதுவில் திட்டினாள் நான் தமிழில் திட்டினேன்.  யாருக்கும் ஏதும் புரியவில்லை.  அன்று யாரும் சாப்பிட வில்லை.  இது தொடர் கதையானது.  குடும்பம் என்ற வரையறைகள் சிதறிப்போயின. அவள் மனதில் சந்தேகப் பேய்  உலுக்கத் தொடங்கியது.  உண்பது உயிர் வாழ்வதற்காக என்றும் உயிர் வாழ்வது மரணத்திற்கு பயந்து என்றுமான நிலைக்குத் தள்ளப்பட்டேன். ஆன்மா அடிமேல் அடிபட்டு நொறுங்கி கீழே விழாத மைக்கா போல் ஆனது  தற்கொலை முயற்சியெல்லாம்  வாழ்வெனும் தேடலுக்குள் பதுங்கியது. எச்சத்தில் ஏதேனும் நம்பிக்கை விதை கிடைக்கலாம் என்ற அவாவிலும் சில ஓலங்களின் பிரதிபலிப்பாய் என்னவாக இருக்கும் என்ற கற்பனை உருவின் முன் தோற்றுப்போயின.  இருக்கவும் முடியாது இறக்கவும் முடியாது இருப்பதிலிருந்து விடுபடுதலே வழி என்ற முடிவுக்கு வந்தேன்.  உள்ளூரில் இருந்தால் யாருக்கேனும் தெரிந்து விடுமென காசிக்கு வந்து கடைசியாய் விஸ்வநாதனை தரிசித்துவிட்டு  அங்கிருந்து தெரிந்த இடங்கள் தெரிந்த பாஷை உள்ள இடமென கங்கா காவேரி எக்ஸ்பிரஸ் ராயிலில் சென்னை வந்து வேஷங்களை கலைத்து விட்டு துறவியானேன். இடையில் ஒருமுறை என்னிடம் பயிற்சி எடுத்த சிப்பாய் ஒருவரை பார்த்துவிட்டேன்.  தெரியக் கூடாதென முகத்தை வேறு பக்கமாக திருப்பிக்கொண்டு  நடந்தும் அவர் ஓடி வந்து “என்ன சார்?” என்றார். “ஒன்றுமில்லை சொல்வதற்கு” என்றேன். பேசமுடியாது மலைத்துப்போய் மௌனமானார். “சரி போகிறேன்” என்றார். “கையைக் கொடுங்கள்” என்றேன். கொடுத்தவர். “யாரிடமும் சொல்ல மாட்டேன்.  சத்தியம்” என்றார். “அதற்கில்லை.  தமிழர்களைப் பற்றி எனக்கு நன்றாய் தெரியும். சொல்ல மாட்டீர்கள்” “பின் எதற்கு?” “      ”   மௌனத்தோடு முடிந்தது.  கண்ணீர் துளிகளை ஆட்காட்டி விரலால் தட்டிவிட்டு நகர்ந்தார். ஐந்து ஏக்கர் கோதுமை விளை நிலம் இருக்கிறது.  பென்ஷன்தாரர் காணாமல் போனதாய் காவல் நிலையத்தில் புகார் அளித்தால் ஓய்வூதியத்தை தற்காலிக சூடும்ப ஓய்வூதியமாக மாற்றி வழங்குவார்கள்.  ஏழு வருடமானதும்  காணாமல் போனவர் இனி கிடைக்க வாய்ப்பில்லை என வழக்கை முடித்து இறந்ததாக அறிவித்திருப்பார்கள். அதனடிப்படையில் நிரந்தர குடும்ப ஓய்வூதியம் வாங்கிக் கொண்டிருப்பாள். குடும்பத்திற்கு பொருளாதார பிரச்சனை ஏதுமிருக்காது. அதற்கு மேல் ஏதேனுமென்றால் அடுத்த தெருவில் வசிக்கும் அவளது விபரம் தெரிந்த தம்பி வழிகாட்டி சரி செய்துவிடுவார் என்ற நம்பிக்கையோடும் வெளியே வந்தேன். அப்போது வேண்டியது நான் காணாமல் போவது ஒன்றே. என்னை அடைத்து பூட்டிவிட்டு சாவியை தொலைத்துவிட்டேன்.  அவள் நெஞ்சம் கல்லானது  என்றாலும் உள்ளே கொஞ்சம் ஈரம் இருந்திருக்கலாம். காலப்போக்கில் உணர்ந்து என்றாவது ஒரு நாளைக்கு கண்ணீராய் கசிந்திருக்கலாம். மகன்கள் இருவரும் கொஞ்சம் வருந்தியிருப்பார்கள். இளைய மகன் என்றேனும் வருவேன் என எதிர்பார்த்து ஏமாந்திருக்கக் கூடும். காலப்போக்கில் நினைவுகள் எல்லாம் உளுத்து உதிர்ந்துபோய் என்னை மறந்திருப்பார்கள்.    நானும் தான். நிமிர்ந்த பார்வை நேர்கொண்ட நடையில் ராணுவப் பள்ளியில் கவாத்துப் பயிற்சி அளித்து நேர்மையாய் கம்பீரமாய் வாழ்ந்த எனக்கு ஆரம்பத்தில் பிச்சை எடுப்பது மனதிற்கு பெரிய சவாலாகத்தான் இருந்தது.  எல்லாவற்றையும் வெட்கமின்றி எடுத்து எறிந்துவிட்டு கூனிக் குறுகி கையேந்த வேண்டும்.   இதை விடுத்து உழைத்து பிழைத்து வாழ்ந்திருக்கலாம் தான். இல்லற வாழ்வை விட்டவனுக்கு துறவுதான் சரியென்றும் நசுங்கிய ஆன்மாவுக்கு இதுவே விடுதலையென்ற தீர்வில்தான் வந்தேன்.   என் தேவைக்கு கூடுதலாகக் கூட பிச்சை கிடைக்கும் “யாசகம் என்று சொல்லுங்களேன்.” இதில் என்ன வெட்கம்.  நான் எடுப்பது எனக்கு பிச்சைதான்.  கூடுதலாக பிச்சை கிடைத்தால் இயலாதவர்களுக்கு தர்மம் செய்து விடுவேன். எனக்கென ஒரு ஆயிரம் ரூபாவை  என் பையில் எப்போதும் வைத்திருக்கிறேன். அனாதை பிணமென தூக்கி புதைப்போருக்கு அன்பளிப்பாக அது  இருக்கட்டுமே என்று. இடையில் ஒரு வளம் மிக்க குடும்பம் இரு ஆண் குழந்தைகளோடு ஏறியிருக்கிறது. கொண்டுவந்த விலையுயர்ந்த பிஸ்கட்கள் ஜாக்லெட்களை உண்டு கும்மாளமாக பயணிக்கின்றனர்.  யாசகர் ஒருவரின் பாத்திரம் எழுப்பும் ஒலி அவர்களின் காதுகளுக்கு விழவில்லையா?   இல்லை.   போட மனமில்லை. சத்திய பிரகாஷ் துறவி ஒரு பத்து ரூபாய் நேட்டை எடுத்துப் போட்டார்.  என்னிடம் இருந்த ஒரே இருபது ரூபாய் நோட்டையும் போட்டேன். அந்த பணக்கார குடும்பத்திற்கு துறவியின் அன்பளிப்பு ஒற்றும் அசைவை ஏற்படுத்த வில்லை.  அடுத்த நிறுத்தத்தில் இறங்கினர்.  காரில் வராமல் ரயிலில் வர ஏதோ காரணம் இருக்கலாம் .  நமேக்கென்ன. ஓடி ஓய்ந்து போனது ரயில். இருவரும் இறங்கினோம். “பொய்ட்டு வர்றேன்  சாமி” என்றேன். “வர்றேன்னு சொல்லாதிங்க. போறேன்னு சொல்லுங்க” என்றார். நான் எதுவும் சொல்லவில்லை. “போகிறேன்” என்றார்.  ஏதோ ஓரு திசையில் பயணித்துகொண்டு இருந்தார். இப்படிக்கு, கங்கம்மா தேவி பண்டைய ரோமாபுரி பேரரசில் மகாராணியின் பொழுது போக்கிற்காகவும் அவருக்கு மிகுந்த மனச்சோர்வு ஏற்பட்டாலும் அரண்மனைக்கு அருகில் உள்ள கொலைக்‘கலை’ மைதானத்தில் பல்வேறு குற்றத்திற்காக வெவ்வேறு வகையான தண்டனைகளை சிறையில் அனுபவித்து வரும் கைதிகளில் இன வெறியுள்ள ஒரு கறுப்பின கைதியையும் ஒரு வெள்ளையின கைதியையும் அழைத்து வந்து கையில் ஆளுக்கு ஒரு வாளைக் கொடுத்து சண்டையிட கட்டளை பிறப்பிக்கப்படும். அவர்களின் வாள் சண்டையில் யார் யாரை வெட்டிச் சாய்ப்பார்கள் என்றோ இருவரும் மாண்டுபோவார்கள் என்றோ குத்துயிரும் கொலை உயிருமாய் உறுப்புகள் தனித்தனியே துடிக்கும் என்றோ எப்போது உயிர் பிரியுமென்றோ யாருக்குத் தெரியும்! ஒவ்வொரு நிகழ்விலும் வெவ்வேறு வகையான நிலைபாட்டில் ஆன்மா ஓலமிடும் அதை மகாராணி பார்வையிடுவதற்காகவே கட்டி வைக்கப்பட்டுள்ள  மாடத்தில் அமர்ந்திருந்து ரசிப்பார். மனச்சோர்வு நீங்கி நிறைவு பெறும்போது எழுந்து அரண்மனைக்கு திரும்புவார்.  அதன் பின் வாள் வீசிய கைதிகளின் நிலைமைக்கு ஏற்ப நிறைவேற்றுக்  குழு மற்றும் மருத்துவக் குழு தக்க நடவடிக்கை எடுக்கும். இதைத் தழுவி ஆந்திர பிரதேசத்தில் நடத்தப்பட்ட நாடகம்தான் கங்கம்மா தேவி.  இந்த நாடகம் ஆந்திரத்தில் ஐம்பதுக்கும் மேற்பட்ட நகர மற்றும் கிராமங்களில் நூற்றுக்கும் மேற்பட்ட தடவை நடத்தப்பட்டுள்ளது. அந்த நாடகத்தை இயக்கியவர் சோமானந்த ராவ்.  அதில் கங்கம்மா தேவியாக  நடிப்பவர் அவரது மனைவி  விஜயலெட்சுமி. முதல் பாராவில் சொன்னது ரோமில் நடந்து உண்மையென்றாலும் சோமானந்தின் கற்பனை முன்னர் கொஞ்சமும் பின்னர் முழுவதுமாக நாடகம் அமையும்.  தழுவல் நாடகம் தானே. அரசி மனச்சோர்வு ஏற்பட காரணம், கைதிகளை அழைத்து வரும் காப்பாளர்களின் செயல்பாடுகள் போன்றவை  நாடகத்திற்கு நாடகம் சற்று வேறுபடும். மேலும் கைதிகள் இருவரும் இறந்து விடுவதாக நாடகத்தில் காட்டப்படும்   மகாராணி இன்னும் மன அமைதி படாததால் வேறு கைதிகளை அழைத்துவர உத்தரவிடுவாள்.   பிணங்கள் அகற்றப்பட்டு வேறு இரு கைதிகள் அழைத்து வருவது இரண்டாவது எப்பிஸோட் ஆகும்.  அழைத்து வரப்பட்ட கைதிகளில் கறுப்பின கைதி வாளை வாங்கி ஏளனமாக ஊற்று நோக்குவான். இருவரும் மோத மாட்டார்கள். சற்று மன சஞ்சலம் எற்படும்.  திடீரென ஆவேசப்பட்ட கறுப்பன் “வெள்ளை நாயே!  கீழே உற்றுப்பாரடா.   இங்கே சிந்திக் கிடக்கும் ரத்தம் யாருடையது? உன் இனத்து ரத்தமா என் இனத்து ரத்தமா? இயற்கை இரண்டு ரத்தத்தையும் உள்வாங்கிக் கொண்டுள்ளது. எஞ்சிய பிசு பிசுப்பின் மேல் ஈக்கள் மொய்க்கின்றன. யாருடைய ரத்தமென்று அவற்றிற்குத் தெரியாது  அதுக்குத் தேவை ரத்த வாடை. அவ்வளவே. அதற்கு கைதி ரத்தம் மகாராணி ரத்தம் என்றெல்லாம்  தரம் பிரிக்கத் தெரியாது” “ஆமாம். வெள்ளையன் என்றால் என்னை விட்டுவிடவா போகிறார்கள்? ஆள்வோருக்கு நாம் அடிமைகள். அவர்களுக்கு கறுப்பு வெள்ளை என்றெல்லாம் இல்லை.  நாம் ஒரே இனம்.  அடிமை இனம்” “நாம் ஏன் வெட்டிச் சாய்க்க வேண்டும்? ஏன் சாக வேண்டும்?” “கொசுக்களுக்கு ரத்தம் தேவைப்படலாம்” “மகாராணி ரத்தம் கூட சுவையாக இருக்கலாம்” வீறுகொண்டு எழுவார்கள். வாட்கள் இரண்டையும் அன்பால் முத்தமிட வைப்பார்கள். அரசியை நோக்கி ஓடுவார்கள்.  காப்பாளர்கள் தடுக்க முடியாமல் திண்டாட அரசி எழுந்தோடி அரண்மனைக்குள் பதுங்கிக் கொள்வாள். இரு கைதிகளின் ஆவேசங்கள், விவாதங்கள், அறிவுரைகள் மெய்காப்பாளர்களின் சிந்தையை தொடும்.  அவர்களை தப்பிக்க விட்டுவிடுவார்கள்.  தங்களை தாக்கி விட்டு தப்பியதாக ஜோடனை செய்வார்கள். தாங்களே உடலில் வெட்டுக் காயங்களை ஏற்படுத்திக் கொள்வார்கள்.  வாளை தாங்களே கைதிகளிடம் கொடுத்து அனுப்பிவிட்டு பறித்துக்கொண்டு ஓடி விட்டதாக கதை கட்ட முயற்சிப்பார்கள். ஆனால் அரண்மனைக்குள் வேறு விதமான காட்சி அரங்கேறிக் கொண்டிருக்கும்.  அரண்மனை விருந்துக்கு அடுத்த நாட்டு குருநில மன்னன் வந்திருப்பான்.   கைதிகளின் மோதலை ரசித்துக் கொண்டிருக்கும் கங்கம்மாள் வர நேரமாகும் என்ற நம்பிக்கையில் அடுத்த நாட்டு அரசியுடன் வந்த தோழியுடன் மன்னன் மஞ்சத்தில் கிடந்ததை பார்த்துவிட்டு  வேகம் கொண்டு கங்கம்மாள் வெடித்துச் சிதறுவாள். சீறுவாள்.  மன்னன் என்ன இளைத்தவனா. சொற்போர் தொடுப்பான்.  அரசனின்  ஏளன பேச்சும், பார்வையும், அதெல்லாம் மன்னர்களுக்கு பழக்கம் என்றும், மரபு என்றும் கற்பித்த நியாயங்களை உதறுவாள் கங்கம்மாள். தன் திருமணத்தின்போது தந்தை கொடுத்த சீதனங்கள் நிலப்பரப்பு ஆகியவற்றை மீள பெற்றுக்கொண்டு அரண்மனையை விட்டு வெளியேறுவாள்.  கைதிகளுக்கு தான் செய்த கொடுமைகளை நினைத்து வருந்தி அதற்கு பிரயாசித்தமாய் பெரிய ஆசிரமம் ஒன்றை  ஏற்படுத்தி ஏழை எளியோருக்கு தினந்தோறும் அன்னதானம் வழங்கி வருகிறாள்.   தப்பியோடிய இரு கைதிகளும் ராணியின் திருந்திய நிலையை கேள்வியுற்று ஆசிரமத்திற்கு  வந்து மன்னிப்பு கேட்கிறார்கள். அவர்கள்தான் தன் கண்ணைத் திறந்தவர்கள் என தெரிவித்து ஆசிரமத்திலேயே அவர்களுக்கு வேலை கொடுக்கிறாள். கங்கம்மாள் என்ற தன் பெயரை கங்கம்மா தேவி என மாற்றிக் கொள்கிறாள்.  ஏனென்றால் அது அவளுக்குத்தான் தெரியும்.  எல்லா நாடகத்திலும் விஜயலெட்சுமி தான் கங்கம்மாள் பின் கங்கம்மா தேவி.  முன்பகுதி சொர்ணாக்கா போல பின்பகுதி சமூகச் சேவகியாக யாரோ ஒரு அம்மையார் போல. காலப்போக்கில் நிஜமாவே அவளை கங்கம்மா தேவி என அழைக்கத் தொடங்கினார்கள்.  நாடகம் இடத்திற்கு இடம் மாறும். போராட்ட கைதிகளாக நடிக்கும் இருவரும் எல்லா நாடகங்களிலும் மேடையில் என்ன தோன்றுகிறதோ அதை வசனமாக பேசுவார்கள்.  இயக்குனர் அவர்களுக்கு முழு சுதந்திரம் கொடுத்திருந்தார்.  அவர்களின் நடிப்பும் எடுத்த பாத்திரத்தை கச்சிதமாக முடிப்பதும் பார்ப்போரை பாராட்ட வைக்கும். கறுப்பின கைதியாக ராஜண்ணா ராஜ், வெள்ளையின கைதியாக தனபால் என்பவரும் நடிப்பார்கள்.  வருவாய் எல்லாம் பெரிதாக வராது. பயணச் செலவுகள், நடிகர் நடிகைகளுக்கு சம்பளம் போக ஏதோ கொஞ்சம் மிஞ்சும். அவர்களுக்குத்  திருமணமாகி இருபதாண்டுகளாகி விட்டன. வாரிசு  ஏதும் கிடையாது. இந்த நாடத்தை விட சில சமூக நாடகங்களையும் இயக்குவார் சோமானந்த். அவற்றில் கங்கம்மா தேவி நடிக்க மாட்டாள். சோமானந்த ராவ் அடிக்கடி வீட்டை விட்டு வெளியே போவதும் ஓரிரு நாட்களில் வீடு திரும்புவதுமாக இருப்பார். மனைவி காரணம் கேட்டால் சொல்ல மாட்டார்.  என்னை நம்பு நான் தவறான வழியில் போகமாட்டேன் என்பார். அந்த மர்ம முடிச்சு எப்போதுதான் அவிழுமோ என கோபத்திலும் எதிர்பார்ப்பிலும் காலத்தை தள்ளி வந்தாள் கங்கம்மா தேவி.  என்று அவிழும் என்ற மர்ம முடிச்சு ஒரு நாள் அறுந்து போனது.  மாசி மாத விடிகாலை. பக்கத்தில் வருபவர்களைக் கூட பார்க்க இயலாதவாறு பனி பொழிந்து கொண்டிருந்தது.  திடுதிடுவென ஒரு போலீஸ் வேனிலிருந்து ஏழெட்டு காவலர்கள் பூட்ஸ் சத்தம் காதுகளை குத்த வீட்டினுள் நுழைந்து சோமானந்தை தரதரவென இழுத்துச் சென்றனர். நிலை குலைத்தது போனாள் கங்கம்மா தேவி.  பேச்சு வரவில்லை. மூர்ச்சையாகி கீழே விழுந்தாள்.  சீறிக்கொண்டு வேன் கிளம்பிப் போனதை கண்ட அக்கம் பக்கத்தினர் வந்து பார்த்து முகத்தில் தண்ணீர் தெளித்ததும் மெல்ல மெல்ல நினைவு திரும்பினாள்.  அதே தெருவில் வசித்து வந்த தனபால் விபரமறிந்து ஓடிவந்தான்.  என்ன ஏதுவென தெரியாததால் கங்கம்மாவும் தனபாலும் காவல் நிலையம் சென்று விசாரித்தபோது.  அவர்கள் தங்களுக்கு எதுவும் தெரியாது என கூறிவிட்டனர்.  கங்கம்மாவை வீட்டில் கொண்டுவந்து விட்டுவிட்டு நகரத்துக்கு போய் விசாரித்து வருவதாக கிளம்பினான் தனபால். தன் கணவர் என்ன தவறு செய்தார்.  போலீசும் பிடிக்கவில்லை என்கிறார்கள். யார்தான் இழுத்துச் சென்றது.  கடத்துவதற்கு எந்த அர்த்தமும் இல்லையே என பலவாறு குழம்பிப்போய் கண்ணீர்விட்டு அச்சத்திலும் சோகத்திலும் அமிழ்ந்து கிடந்தாள்.  நேரம் நகர மறுக்கிறது. தனபாலையும் காணவில்லை.  வாசலிலே காத்திருந்தாள். அண்டை வீட்டார்கள் அவ்வப்போது உரிமையோடும், சிலர் ஒப்புக்கும், சிலர் ஆவலிலும் வந்து வந்து விசாரித்தவாறு இருந்தனர்.  மதியம் ஒரு மணியளவில் ஒரு மாலை நாளிதழோடு வந்தடைந்தான் தனபால்.  அதில் சோமனாத்தின் புகைப்படம் மற்றும் ராஜண்ணாவின் புகைப்படத்துடன் இன்னொருவரின் புகைப்படத்தையும் போட்டு மூன்று தீவிரவாதிகள் கைது.  தீவிரவாத ஒழிப்பு படையினர் அதிரடி நடவடிக்கை என செய்தி வெளி வந்திருந்தது. பார்த்ததும் படித்ததும் ஆடிப்போய் விட்டாள் கங்கம்மா தேவி. “சொல்லாமல் கொள்ளாமல் அடிக்கடி வீட்டை விட்டு போனது இதற்குத்தானா? பாவி மனுஷா இது உனக்கு தேவையா?” வாய்விட்டு திட்ட ஆரம்பித்து விட்டாள். “இது பத்தி இதுவரைக்கும் ஏங்கிட்ட கூட ஒரு வார்த்த பேசினதில்லையே”  என்றான் தனபால்.  “இந்த ராஜண்ணாவுக்கு   என்னாச்சி அவருக்கு புள்ள குட்டியெல்லாம் இருக்கே. அவரு வேற போவணுமா?” “அவன் கூட மூச்சு விட்டதில்லையே.  எப்படித்தான் கல்லுளி மங்கன் மாதிரி இருந்தாங்களோ?” “போலீஸ் காரங்கங்க என்ன சித்திரவதை பண்ணுவாங்களோ? ஆண்டவா. நான் என்ன பண்ணுறது. ஏன்டா இப்படி சோதிக்கிறே” என கண்ணீர் விட்டாள்.  சமாதானம் செய்ய முடியாது தடுமாறினான் தனபால்.  காலையில் அடர் பனி நடுவே மனதை உடைத்த போலீசாரின் பூட்ஸ் சத்தத்தின் ஊடே ஏற்பட்ட சம்பவம் இன்னும் மனதை விட்டு அகலாத நிலையில் மாலையில் பெரிய மலையை இரண்டாக பிளந்து சாய்த்தது போல ஒரு பேரிடி வந்து விழுந்தது. ஹைதராபாத் வானொலியின் மாநிலச் செய்தி மூலம் மீதமிருந்த எல்லாவற்றையும் உடைத்துப் போட்டது. “தீவிரவாதிகளுக்கும் போலீசாருக்கும் இடையே நடந்த மோதலில் இரண்டு போலீசார் உட்பட ஐந்து பேர் மரணம். பிடிபட்ட தீவிர வாதிகளைக் கொண்டு மற்ற தீவிரவாதிகளை அடையாளம் காட்ட அழைத்துச் சென்றபோது காவலர் ஒருவரின் துப்பாக்கியை சோமானந்த ராவ் என்ற தீவிரவாதி பிடுங்கி இரண்டு போலீசாரை சுட்டதில் அந்த இடத்திலேயே இருவரும் மரணம் அடைந்தனர்.  சோமானந்த ராவ் உட்பட தப்பியோட முயன்ற மூன்று தீவிரவாதிகளையும் சுட்டதில் மூவரும் அந்த இடத்திலேயே மரணமடைந்தனர்” என செய்தியாக வாசிக்கப்பட்டது.  செய்தி ஒலிபரப்பான பத்து நிமிடத்தில் இரண்டு வேன் ஒரு ஜீப் நிறைய காவலர்கள் கங்கம்மா தேவியின் வீட்டிற்குள் புகுந்து எல்லா இடங்களிலும் சல்லாடைபோட்டு சலித்து அலசி ஆராய்ந்து துருவித் துருவி விசாரணை நடத்தினர். ஆவணங்கள் எதுவும் அகப்படாததால் விசாரணைக்காக கங்கம்மா தேவியை காவல் நிலையம் அழைத்துச் சென்றனர். அங்கு ஏற்கனவே ராஜண்ணாவின் குடும்பம் விசாரணைக்காக காவல் நிலையத்தில் குந்த வைக்கப்பட்டிருந்தது. தீவிரவாத ஒழிப்பு பிரிவு காவல்துறை புண்ணியவான்கள். உண்மையில் நியாயமானவர்கள் என்று சொல்லும்படியாக, விசாரணையில் தீவிரவாதிகள் தங்களின் குடும்ப நபர்களுக்குத் தெரியாமல் ரகசியமாக செயல் பட்டிருக்கிறார்கள் என தெரிய வந்ததும் விடியும்போது அவர்களை வீட்டிற்கு அனுப்பினர்கள்.  பெண்களையோ குழந்தைகளையோ துன்புறுத்தாதது மகிழ்ச்சிதானே.  ஐந்து ஆண்டுகளுக்கு முன் சோமானந்த ராவ், ராஜண்ணா ராவ் மற்றும் ஒரு முனைவர் பட்டம் பெற்ற இளைஞர் ஆகிய மூவரும் ஒரு சித்தாந்த அடிப்படையில் அமைப்பை தொடங்க முடிவு செய்து பல கூட்டங்கள் நடத்தி அறுபது பேர் கொண்ட அமைப்பாக உருவெடுத்தது.  வறியவர்கள் மேலும் வறியவர்களாகவும், பணக்காரர்களும் அரசியல் வாதிகளும் கொழுத்து பெருத்துக் கொண்டிருப்பதாகவும் அவர்களை எதிர்த்து போராடுவதே அமைப்பின் நோக்கமாக அறிவிக்கப்பட்டது. இந்த அமைப்பின் உறுப்பினர்களின் நடவடிக்கைகள் ரகசியமாக கண்காணிக்கப்பட்டு வந்தும் எத்தனையோ நாடகங்களில் மற்றவர்களுக்கு நடிப்பைச் சொல்லிக்கொடுத்த சோமனந்தால் அமைப்பில் ஒர் அரசின் விசுவாசி இவரோடு நிஜ உறுப்பினர் போல நடித்து வந்ததை கண்டுபிடிக்காமல் போனதுதான் ஆச்சர்யம்.  வயிற்றுப் பசிக்கும் வாடகை கொடுக்கவும் தள்ளு வண்டியில் பழம் மற்றும் பூ வியாபாரம் செய்கிறாள் கங்கம்மா தேவி.  தஞ்சாவூர் சிவகங்கை பூங்காவுக்கும் பெரிய கோவிலுக்கும்  இடையில்தான் அவளது பொருட்கள் சந்தைப் படுத்தப்படுகின்றன. காலை பத்து மணிவரை மாலை நான்கு மணியிலிருந்து இரவு ஒன்பது மணி வரை வியாபாரம் செய்வாள்.  ஐந்தாண்டுகளில் தமிழை ஓரளவு கற்றுக்கொண்டு விட்டாள். ஆரம்பத்தில் புரியாத மொழி போகப்போக புரிய ஆரம்பித்து விட்டது.  நாற்பத்து ஐந்து வயதிலே கிழடு தட்டிப் போனதாக உணர்ந்தாள். ஒரு நாளைக்கு நான்கு அல்லது ஐந்து மணி நேரமே உறக்கம்.  கணவனோடு வாழ்ந்த இன்பமான நாட்கள் கசப்பான அனுபவங்கள் பயமுறுத்தல்கள் போன்ற  எல்லாம் நிகழ் கால  வாழ்க்கையை நிரப்பி  சுமப்பதில் எதிர்காலம் இருப்பது மறந்து போகிறது  தூக்கி விடலாம், கண்ணீரைத் துடைத்து விடலாம். இன்னும் என்னனென்னமோ செய்யத் தெரிந்த காலம் ஒரு குருவிக் கூட்டையல்லவா பிரித்து எறிந்துவிட்டது. இனி ஹைதராபாத்தில் இருந்து என்ன செய்வது என ராஜண்ணா ராஜின் குடும்பம் சொந்த ஊரான கடப்பாவுக்கு சென்று விட்டது.  நாடகங்களுக்கு மேக்கப் பொருட்கள் செட்டிங்குகள் செய்து வந்த கிருஷ்ணா என்பவர் வேறு நாடக கம்பெனிகளுக்கு அவற்றை கேட்ட விலைக்கும் இலவசமாகவும் கொடுத்து விட்டு ஒரு சினிமாக் கொட்டகையில் சீட்டுக் கிழித்து வாழ்க்கையை நகர்த்துகிறார்.  எஞ்சிய வரலாற்று நாடக பாத்திர பொருட்களை யாரும் இந்த காலத்தில் தங்கள் கம்பெனியைத் தவிர வரலாற்று  நாடகம் போடாததால் வீட்டை அடைத்துக் கொண்டிருக்கும் மேக்கப் பொருட்களை வேலைக்கு போகும்போது ஒவ்வொன்றாய் எடுத்துக் கொண்டு இடையில் வரும் காட்டுப் பகுதியில் வீசி விட்டுச் செல்வார். அவை கேட்பாரற்று கிடக்கின்றன. யாரேனும் சிலர் எதற்கோ எடுத்துச் சென்றும் உள்ளனர்.    தனபால் தன் சொந்த ஊரான தஞ்சாவூர் வந்து தன் வீட்டில் குடியிருந்த தமக்கையுடன் குடியேறிட்டார்.   கங்கம்மாவையும் தஞ்சாவூருக்கு அழைத்து வந்து  தான் வசிக்கும் தெருவில் பத்து வீடு தள்ளி ஓர் எளிய வாடகை வீட்டில் குடிவைத்தார்.  நல்ல வேளையாக தனது மகன் மெட்ரிக் முடித்திருந்ததால் இங்கே கொண்டு வந்து மேல்நிலை பள்ளி ஒன்றில் சேர்த்து விட்டு தனது மைத்துனருடன் ஒரு கம்பெனியில் பணிபுரிந்து வருகிறார். தனபாலின் மகன் மேல்நிலைப் பள்ளியில் படிக்கும் போதே விடுமுறை நாட்களில் வார மாத இதழ்கள் பேருந்தில் கூவி விற்று பகுதி நேர பணிபுரிந்து வந்தவன், பின்னர் தீவிரவாத அமைப்புகளின் அரசியல் மற்றும் இலக்கிய பத்திரிக்கைகளை மட்டும் விற்பதோடு அதில் உள்ள சாராம்சத்தை சுருக்கமாக விளக்கி விற்கத் தொடங்கியவன் ஒரு நாள் காணாமல் போய்விட்டான்.  ஆந்திரா முழுவதும் சுற்றித் திரிந்த கங்கம்மா தேவியின் கால்கள் குண்டுச்சட்டிக்குள் குதிரை ஓட்டுவது போல ஓய்ந்து கிடக்கின்றன. பாதச் சுவடுகளற்ற பாலை நிலமாய், நிலவொளி காயாத காடுகளாய், மேகங்கள் முட்டாத மலையாய், குளவைப் பாட்டு கேட்காத  மருத நிலங்களாய்.  வடக்கு அலங்கத்தில் உள்ள தன் இருப்பிடத்திற்கும் சிவகங்கை பூங்காவுக்குமான தூரமே தனது பயணமாக. வாழ்ந்து கெட்டவனையும், ஊர்ந்தவன்  உச்சிக்குப் போனதையும், ஏழைகள் எழைகளாகவும், பணக்காரன் தொடர்ந்து பணக்காரனாகவே இருப்பதையும் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறோம்.   இந்த மனிதர்களையும் சமுதாயத்தையும் எந்த காரணி இயக்குகிறது?  அகமா, புறமா என்ற கேள்விக்கான பதில்கள் வரலாறு முழுக்க தத்துவங்களால் நிரம்பிக் கிடக்கின்றன.  அவை கற்றும் மறந்தும் போகின்றன.  மறதி மட்டும் இல்லையென்றால் மனிதன் மேலும் அல்லலுறுவான்.  ஐம்பது வயதை கடந்த பிறகே வாழ்க்கை முடியப்போவதையும் எதையும் சாதிக்கவில்லையென்ற ஏக்கமும் பெரும்பாலனோரை வந்து துளைத்து எடுக்கிறது. கடந்த காலமெல்லாம் தொலைந்து போனதாக கருத வைக்கிறது.   எத்தனை சம்பவங்களை பார்த்துவிட்டோம்.  எல்லாம் மனதில் நிற்பதில்லை.  ஏனென்றால், புதிது புதிதாகப் பிறக்கின்றன. நிறைய பேர் காணாமல் போய்விட்டனர். வாழ்ந்தார்களா மூச்சை மட்டுமே இழுத்துவிட்டு இருப்பை நிருபித்து வந்தார்களா பிறந்ததாலும் இறப்பு வரவில்லை என்பதாலும் காலத்தைக் கடத்தினார்களா என ஆராய வேண்டுமானால் தனித்தனித் தத்துவங்களை தோற்றுவிக்க வேண்டி வரும்.  ஆனால், கால நதியில் எல்லாம் கடந்து போகின்றன.   அது தொடக்கமும் முடிவுமற்று ஓடிக்கொண்டே இருக்கிறது.  நீந்துவதற்கில்லை  அது. முடிந்தால் நீந்தியும் ஓடத்தைக் கொண்டும் கடந்தும் போகலாம். வெறும் மனத்தை மட்டுமே கொண்டு அக்கரை போகமுடியாது.   சந்தர்ப்பங்கள்தான் மனிதனை ஆட்டிப் படைக்கிறது.  போராடிக்கொண்டே இருந்தாலும் எல்லோரும் வெற்றி பெறுவதில்லை.  பங்கெடுத்துக்கொள்வது மட்டுமே வாழ்க்கையென்ற நிலை ஏற்படுகிறது  ஓய்ந்து சாய்ந்தும் எல்லாவற்றையும் கூட்டி குப்பையாக்கி குப்பையை குப்பையோடு கொட்டி விடுகிறது மரணம்.  தனபாலின் மனைவிக்கு கல்லீரல் வீக்கம் ஏற்பட்டு தஞ்சை அரசு மருத்துவமனையில் இருவார தீவிர சிகிச்சை பெற்று வந்தாள். மருத்துவமனையில் அவருடன் உடனிருந்து கங்கம்மா தேவி கவனித்து வந்தாள். அது ஆறுதலாகவும் வெளிச் சுவாசம் அவள் மீது வீசுவதாகவும் இருந்தது.   சிகிச்சை பலனற்று தனபாலும் தனி மரம் ஆனான். அடிக்கடி காலை நேரம் கங்கம்மா தேவி வீட்டிற்குப் போய் விசாரித்து வந்தான்.  அந்த விசாரிப்பும் கடந்தகால நினையூட்டல்களும் உலகின் ஓர்  ஓரத்திற்கு அவர்களை அழைத்துச் செல்வதுபோல் இருக்கும்.  “பாலண்ணா” “என்னம்மா” “நானிருக்கிறேன் என்றுதான் உங்கள் மனைவியை கவனிக்காமல் விட்டு விட்டீர்களாம்” “சிகிச்சையின் போது நீதானே அவளோடு கூட இருந்தாய்” “இப்படித்தான் இருப்பார்களா?” “அவர்களுக்கொன்று பேசிக்கொள்ள ஏதாவது பொருள் வேண்டாமா?” “ஊர் வாயை மூட முடியாதே” “உன் காதுகளை மூடிக்கொள்ளேன். மனதை நிலைப்படுத்திக் கொள்ளேன்.  நீ எனக்கு எப்போதும் கங்காதான்.  நம் உறவுகளுக்கு இடையே தங்கையென்றோ நட்பு என்றோ ஏன் பயந்துகொண்டு ஏதோ ஒரு உறவின் பெயரை சூட்டிக்கொள்ள வேண்டும்” “நான் சீசரின் மனைவிதானே?” “இன்னோரு சீசர் வரமுடியாது” “நான் உங்களோடு இருக்கும்போது அனாந்திர வெளியில் தனிமையில் நடப்பதுபோல இருக்கும்.  தனித்தனியே நடப்பது போல உணர்வேன்.” “நட்சத்திரங்கள் பெருமை படட்டும்” “அவை எவ்வளவு நாளுக்கு இருக்கும்” “எவை?” “நட்சத்திரங்கள்” “ஒரு நாள் உதிர்ந்து போகும்” “அதுவரை பெருமைப்படுத்துமா?” “டெம் பிளேட்டில் வைத்துக்கொள்ளும்”  “அதன் வாழ்நாள் முழுக்க எழுத்துகளை தேயாமல் வைத்திருக்க சாத்தியமா?” “இல்லை.  ரோமாபுரி ராணி கங்கம்மா என்னானாள். பின் கங்கம்மா தேவியானாள்.  தற்போது காணாமல் போனாலே அதேபோல என்றேனும் ஒருநாள்” “கங்கம்மா தேவி இப்போது நிஜமாகவே இல்லையா? உங்களுக்குமா?” “எனக்கு நீ எப்போதும் கங்காதானே” “நான் மாலை கட்ட கற்றுக்கொள்ளப் போகிறேன்” “வாழ்வின் மீது பிடிப்பு வந்தால்  வாழ்வை கொண்டாட வேண்டும்” “கொண்டாடிக் கொண்டிருக்கிறேன். அர்த்தங்கள் நிறைந்து போனதாகத் தெரிகிறது” “வாழ்வில் கூட அர்த்தங்கள் இருக்கிறதா?” “ஏதாவது ஒன்றை சாதிக்க வேண்டுமென்று வைராக்கிய மனதோடு செயல்படும்போது சந்தர்ப்பம் சாதகமானால் அர்த்தம் மிகுந்ததாகத்தான் அர்த்தம்” "ஆனால் அது எல்லோருக்கும் வாய்ப்பதில்லையே. எனக்கு இனி வைராக்கியம் ஏதுமில்லை. சந்தர்ப்பங்கள் தேவையில்லை. அர்த்தமென்று ஏதுமில்லை. “இருக்கலாம்” “அர்த்தங்கள் அர்த்தமிழக்கும்போது வெறுமையாகிவிடுகிறது” “அப்படியானால் வாழ்வே இல்லையா?” “இருக்கலாம்” “இருக்கலாமா இல்லையா?” “இல்லாமல் இருக்கலாம்” “நாளை காலை வருகிறீர்களா?” “ஏன்? . . .  வாறேனே” மறுநாள் காலை வீட்டின் வெளியே காய்கறி தள்ளு வண்டியில் மாலை ஒன்று கிடந்தது. அது ஒழுங்கற்று பூக்கள் பாதி உதிர்ந்த நிலையில் உள்ளது போல வடிவெடுத்து இருந்தது. தொடுத்திருப்பதாலையே மாலையெனச் சொல்லலாமென்ற வடிவில்.  அது கங்காவின் வேலையாகத்தான் இருக்கும்.  பழகப்போவதாகச் சொன்னாளே. கங்கா என்ற அழைப்புக் குரலோடு  வீட்டினுள் நுழைந்தான் தனபால்.  கங்கம்மா தேவி சிரித்த முகத்துடன் அமைதியாக அடங்கிப் போயிருந்தாள்.  மரணங்களை சந்தித்து மரத்துப்போன தனபாலுக்கு பெரிதாய் அழுகை வரவில்லை.   அக்கம் பக்கத்தாரின் உதவியுடன் அதே தள்ளு வண்டியில் கிடத்தி அவள் தொடுத்த மாலையை போட்டு தள்ளிக் கொண்டுபோய் அவளை பூமிக்குள் புதைத்து வைத்தான்.  புதைத்த இடத்தில் பெரிய சமாதி ஒன்று எழும்பி அதில் ரோமாபுரி பேரரசின் மகாராணி கங்கம்மா தேவி என கல்வெட்டில் பொறிக்கப்பட்டிருப்பதை கண்டு கண்களை கசக்கிக் கொண்டான்.  திரை விழுந்தது. அருகே பூத்துக் கிடந்த தும்பைப் பூக்களை கொய்து வந்து புதை மேடையின் ஈர மணலில் தூவிவிட்டு கங்காவின் விட்டிற்குப்போய் தேடிப்பிடித்து ஓர் அகல் விளக்கை ஏற்றி வைத்தவன். அசதியில் குளிக்காமல் அதே இடத்தில் படுத்து உறங்கி விழித்தபோது மறுநாள் மதியமாக இருந்தது.  அங்கு யாரும் வாழ்ந்ததற்கான அடையாளம் ஏதுமில்லை.  எல்லாம் உலர்ந்து போயிருந்தது. அகல் விளக்கு கூட அணைந்து கரிப்பிடித்திருந்தது.  அவள் குடியிருந்த வீட்டை காலி செய்து தரும்படி உரிமையாளர் கோரியதற்கினங்க தட்டுமுட்டுச் சாமான்கள் துணிமணிகளை என்ன செய்வதென்று புரியாமல் அப்புறப் படுத்தியபோது அவளது தகரப் பேட்டியின் அடியில் ஒட்டப்பட்டிருந்த கவர் ஒரு சரித்திரத்தின் மீதமாய் கிடந்தது.  எப்போதோ கணவனுக்கு கங்கா எழுதிய கடிதம் அது. சோமா,  உன்னை இப்படி அழைப்பது தானே எனக்குப் பிடித்தது.  அதனால் உனக்கும் பிடித்தது.  நீ என் மீது கோபம் கொண்டதே  இல்லையே. அது ஏன்?   எனக்கு சில நேரம் சலிப்பு தட்டும் தெரியுமா!  எனக்கு குழந்தை பிறக்க வாய்ப்பில்லை என தெரிந்ததும் என்னை ஏன் அடித்து துரத்தவில்லை.  வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்து கொண்டிருக்கலாமே. மருத்துவ அறிக்கையை கொண்டே விவகாரத்து செய்திருக்கலாமே.  சோமா! எப்படி அதன் பிறகுதான் உன்னால் அதிக அன்பு செலுத்த முடிந்தது.  நமக்கு குழந்தை இல்லையென்று என்றுமே நீ வருந்தியது இல்லை.  ஆனால் எப்பொழுதேனும் உன் மனது சஞ்சலப்பட்டிருக்கும் என நான் சந்தேகப்படாமலா இருந்திருப்பேன்.  சந்தேகப்பட்டேன்.  அதுதான் உன்மீது எனக்கிருந்த ஒரே சந்தேகம்.  ஏனெனில் பலமுறை நான் சஞ்லப்பட்டிருக்கிறேன்.   இப்போது எனக்கென்று ஒரே ஒரு ஆசைதான்.  ஆனால் அதை நீ நிறைவேற்ற இயலாது.  எனக்கு முன்பே நீ இறந்து விட வேண்டும்.  பார்க்க யாருமில்லாமல் என் சோமா அனாதையாகிவிடக் கூடாது.  நீயின்றி நான் வருந்த வேண்டும். அப்போதுதான் நான் வாழ்ந்த வாழ்க்கை பூரணத்துவம் பெற்றதாகும்.  இக்கடிதத்தை படிக்க முடியாதவாறு மடித்து கவரை ஒட்டி என் பெட்டியின் அடியில் வைத்து விடுவேன்.  என் விருப்பம் நிறைவேறி விட்டால் இதை நீ வாசிக்கவே முடியாமல் போகும்.  அதுதான் எனக்கு வேண்டும். நீ போன பிறகு என்றேனும் ஒரு நாள் உன் நினைவுகள் மங்கத் தொடங்கினால் கவரை கிழித்து கடிதத்தை படித்துப் பார்த்து உன்னை புதுப்பித்துக் கொள்கிறேன்.  சோமா ! அழைத்து பார்த்தேன்.  அருகில்தான் இருக்கிறாய். இப்படிக்கு, கங்கம்மா தேவி.  தேய்ந்துபோன பாதைகள் அன்று வசந்த கால ஒரு ஞாயிற்றுக் கிழமை.  மாலைச் சூரியனை மேகங்கள் மறைத்த மந்தார வேளை.  கடற்கரைக்கு போய் வரலாமென திட்டமிட்டிருந்தோம். திருமணமாகி ஓராண்டு காலம் அவர் வேலை பார்த்து வந்த சென்னையில் வசித்து வந்தோம்  புறநகரில்  குடியிருந்ததால்  வாடகை கொஞ்சம் கம்மியாகவும் ஓரளவுக்கு போதுமான வசதியும் இருந்தது. அலுவலகத்திற்கு அவர் மின்சார ரயிலில் சென்று வந்ததால் நேரமும் மிச்சம். அலுப்பும் தெரியாது. சென்னையில் அலுவலகமும் இருப்பிடமும் மின் ரயில் நிலையங்களுக்கு அருகில் இருந்தால் அவர் கொடுத்து வைத்தவர் என்று சொல்லலாம்.  எனக்கு நாகப்பட்டினத்தில் ஆசிரியை வேலை கிடைத்தது.  கணவரின் சொந்த ஊர் நாகையிலிருந்து இருபது கிலோ மீட்டர் தூரம் உள்ள திருப்பூண்டிதான் என்றாலும் அங்கிருந்து தினம் பள்ளிக்கு சென்று வருவது கடினம் என்பதால்  எனது மாமியாரோடு நாகையில் ஒரு வாடகை வீட்டில் தங்கி பணிபுரிந்து வந்தேன். என் வேலையை காரணம் காட்டி தம்பதிகள் ஒரே இடத்தில் வேலை பார்க்க அனுமதிக்க வேண்டும் எனற விதியின் கீழ் மாற்றல் கேட்டு ஓராண்டு கழித்துதான் அவருக்கு மாற்றல் கிடைத்தது. அதுவும் பார்க்க வேண்டியவரை பார்த்து கொடுக்க வேண்டியதை கொடுத்து.  ச்சே என்ன கேவலமான அதிகாரிகள்.  ஒரே துறையில் வேலை செய்பவர்களிடமே கை நீட்டுகிறார்கள் என்றால் அறிமுகமில்லாத பொது மக்களிடம் கையுட்டு வாங்க கூச்சமே இருக்காதே.     இத்தனைக்கும் என் கணவர் துறையில் நேர்மையான அனைவருக்கும் நன்கு தெரிந்தவர். மாற்றல் ஆணை கிடைத்தும் உடனடியாக அவரை அலுவலகத்திலிருந்து விடுவிக்க அலுவலகத் தலைவர் ரோம்ப சங்கடப்பட்டாராம்.  அவரது மனைவி  மேல் மாடியில் உள்ள தனது அறைக்கென்று தனியே பெரிய தொலைக்காட்சி பெட்டி வேண்டுமேன்று அடம் பிடித்தாராம். அதை என் கணவரிடம் அவர் சொல்ல சனியன் தொலைந்தது என்று கருதி இருபதாயிரம்  ரூபாயை கொடுத்து ‘டிவி வாங்கிக்கிடுங்க. இது எனது கிப்டா இருக்கட்டும்’ என்றதும் பணியிலிருந்து விடுவிக்கப்பட்டார்.  நல்ல உலகம் இது.    மாமியாரும் தற்போது எங்களுடன் இருக்கிறார்.   மூவருக்கும் இந்த வீடு போதுமானதோடு சகல வசதியும் உள்ள பகுதி. எனக்கு சென்னையில் விடுமுறை நாட்களில் கூட வெளியே செல்ல பிடிக்காது. அவருக்கும்.   எனவே வற்புறுத்த மாட்டார் என்பதுடன் செலவாகும் என்ற சந்தோஷத்தில் வெளியே போகலாமா என ஒப்புக்கு கேட்பார்.   பின் நல்ல படம் டிவியில போடுறானா பாரு பாப்போம் என்பார். ஒரே ஒரு முறை மெரினாவுக்குப் போனோம்.  சமாதிகளில் ஏகப்பட்ட கூட்டம். எல்லாம் வெளியூர் ஜனங்கள் சிலர் சமாதிகளை தொட்டு கும்பிட்டனர். சிலர் ஏளனமாகப் பார்த்தனர்  ஊருக்கு போய் அண்ணா சமாதியை பார்த்தேன் எம்.ஜி.ஆர். சமாதியை பார்த்தேன் என பெருமையாகச் சொல்ல வேண்டும் என்பதற்காகவே  பார்ப்பதும், பார்ப்பது போல படம் பிடிப்பதுமாக இருந்தனர். உண்மையில் சென்னை வாசிகளைவிட அலுவல் காரணமாகவும் உறவினர் வீட்டிற்கு வருபவர்களுமே சென்னையை அதிகமாக சுற்றிப் பார்க்கிறார்கள். குறிப்பாக மெரினா கடற்கரையை.  காதலர்கள் அதில் விதிவிலக்கு.  அவர்களை வெயிலைக் கூட வீணாக்காமல் பயன்படுத்துவதே அங்கேதான். நாங்களும் பார்த்தோம்.  அங்கிருந்து கடற்கரையை பார்த்தேன். கரும் புள்ளிகளாக தலைகளால் நிரம்பியிருந்தது.  இவ்வளவு கூட்டமென்றால் வந்திருக்கவே மாட்டோம். நான் வருகிறேன் என்பதற்காக அவர்கள் வராமலா இருப்பார்கள்! மணல் வெளியில் காலடிகளை மிதித்து கூட்டமில்லாத இடத்தில் அமர்ந்தோம்.  கொரோனா கால சமூக இடைவெளி போல ஒழுக்க இடைவெளியோடு.  அதெப்படி?  நாங்கள் எப்பவும் வெளியில் இப்படித்தான். ஒருவர் மற்றொருவரை செம்பருத்தி பூ கிடைத்தால் தொடலாம்  என்பது போன்ற இடைவெளியில் தொட வேண்டும்.  அவரவர்கள்  தங்களின் விருப்பப்படியும் கட்டாயத்தின் பேரிலும் பொழுதை கழித்தனர். பெரும்பாலும் இளைஞர்களும் இளைஞிகளும் கட்டிப்பிடித்துக் கொண்டிருந்தனர். எனக்கு முகச்சுழிப்பு ஏற்பட்டது.   “ஏங்க.  என்னங்க இப்படி நாகரிகமில்லாம நடந்துகிடுறாங்க” “பீச்சுன்னா அப்படித்தான் இருக்கும். அவங்க இங்க வாரதே அதுக்கவதான” “வீட்ல ராத்திரியில பண்ணுறதெல்லாம் இங்க பண்ணினா. அசிங்கமில்லையா?” “லவ்வர்ஸ் எப்படி வீட்டுல பண்ண முடியும். இன்னும் கல்யாணமே ஆகலையே” ஆகாது. “அதுக்காக இப்படியா ஆடு மாடு மாதிரி?”  “ம்” என்றார். “அவங்கள பாருங்க. மேரேஜ் ஆனமாதிரி தெரியுது. தன்ன மறந்து நடந்துகிறாங்க.” “அதயேன் பாக்குறே நீ.” "அப்பறம் எதத்தான் பாக்குறது?  வீட்ல என்ன பண்ணுறாங்களோ?   “அப்படி கடல பாத்து ரசிடா கண்ணு” எனக்கு வழி சொல்லிக் கொடுத்தார். “வாங்க யாருமே இல்லாத எடத்துல போய் உட்காருவோம்” என மக்களே இல்லாத தூரத்து மணல் வெளியை காட்டினேன். “தனியே அது மாதிரி யாருமில்லாத எடத்துக்குப் போக்கூடாது.  ரவுடிங்க வந்தாலும் வருவாங்க. வா கூட்டம் குறைவான இடத்துக்குப் போவோம்” என்றதும் எழுந்துபோய் புதிய இடத்தில் அமர்ந்தோம். அந்த இடம் சற்று ஏற்புடையதாக இருக்குமென நினைத்தேன்.  ஒரு சுண்டல் பையன் வந்தான்.  “அக்கா சுண்டல்” என்றான் “வேண்டாம்” என்றேன். “இந்தாடா தம்பி ரெண்டு பாக்கெட் கொடு” என்றார். “வேண்டாம். வாங்காதிங்க” “பரவாயில்ல கொடு” என அவர் இரண்டு பாக்கெட்டை வாங்கிக் கொண்டதும் நகர்ந்தான் அவன். “இதெல்லாம் எப்படி செஞ்சாங்களோ. என்ன சுத்தமோ. இதபோய் வாங்குறிங்க” என்றேன். “இது திங்கிறத்துக்கு இல்லப்பா.  கையில வச்சிகிட்டு இருந்தமுன்னா வேற சுண்டல் பையன் இங்க வர மாட்டான். இந்தா ஒண்ண நீ வச்சிக்கோ. இதெல்லாம் ஒரு டெக்னிக்.” வாங்கிக்கொண்டு “பெரிய டெக்னிக் பாருங்க.  ராக்கெட் விடப்போங்க” என்றேன். கொஞ்ச நேரம் தான்  பேசியிருப்போம் அதற்குள் ஒரு புதுமண தம்பதி எங்களை தேடி வந்ததைப் போலவே வந்து சற்று அருகில் அமர்ந்து ஆராய்ச்சியில் ஈடு பட்டார்கள்.   என் முகச்சுழிப்பை பார்த்து “என்னம்மா, என்ன?” என்றார். ஒண்ணும் புரியாதது போலவும் தெரியாதது போலவும். பின் சிரித்தவாறு அவங்களும் கூட்டமில்லா எடத்துக்கு வந்திருக்காங்க." என்றார். அவர்களை பார்க்க முடியாதவாறு திரும்பிக்கொண்டேன். சற்று நேரத்தில் அந்த பக்கத்திற்கு ஒரு குடும்பம் வந்தது.  கணவன், மனைவி ஒன்றுக்கு மேல் இப்போது வேண்டாமென்ற ஐந்து வயது மதிக்கத் தக்க குழந்தை.   வீட்டிலிருந்து கொண்டு வந்த நொறுக்கு தீனியை அவனிடம் கொடுத்து சாப்பிட்டுக்கொண்டு தூரத்தில் விளையாடும்படி எப்படியோ மல்லுக்கட்டி ஏற்பாடு செய்துவிட்டு அவர்கள் தங்கள் வேலையைத்  தொடங்கினர்கள்.  “ஏங்க இவங்களுக்கு கல்யாணம் ஆகி எத்தன வருஷம் இருக்கும்?” ஏன் கேட்கிறேன் என தெரிந்தும் தெரியாதது பொல அப்பாவியாக “ஒரு ஆறு ஏழு வருஷம் இருக்கும்” என்றார். “இத்ன வருஷமா வீட்ல என்னதான் செஞ்சாங்க?” “உனக்கு உலகம் தெரியலன்னு சொல்லணும். பீச்சின்னா இப்படித்தான் இருக்கும்.  அவங்க அவங்களொட சுதந்திரம் அது” “சுதந்திரமுன்னு மற்றவங்க அசிங்கமா நெனக்கிற மாதிரி நடந்து கிடலாமா? சுதந்திரங்குறது ஒருத்த கைத்தடி அடுத்தங்க மூக்கத் தொடக்கூடாது” “சரி வா மூக்க எட்டி வச்சிக்கிடலாம்” என கையை பிடித்து  இழுத்தார். நான் உதரிவிட்டேன்.   இருவரும் வீடு வந்தோம். நான் உண்மையில் மெரினா கடற்கரையை பார்க்கவே இல்லை. நாகைக் கடற்கரையில் கூட்டமே இருக்காது ஓரிருவர்தான் வருவார்கள் என்று பக்கத்து வீட்டு மேடம்தான் சொன்னார்கள். நாகை கடற்கரையென்று கேள்விப்பட்டதே இல்லையே. மெரினா, கோவா, கோவளம் போல கூட்டமாக இருந்தால்தான் கடற்கரையா என்ன. கடலென்றால் கரையிருக்கும். இங்கும்  கடலைத்தானே பார்க்கப் போகிறோம். கூட்டம் இல்லையென்றால் நல்லதுதானே என்ற மகிழ்ச்சியில்தான் பார்க்க போகலாமென திட்டம் போட்டோம். எனக்கு கக முச என கூட்டம் என்றாலே பிடிக்காது. விசேஷ நாட்களில் கோவிலுக்கு போகும்போது அம்மா பிடிவாதமாய் அழைப்பார்கள். நான் போகமாட்டேன்.  மற்ற சாதாரண நாட்கள் என்றால் அடித்துப் பிடித்து கிளம்புவேன்.  கூட்டமில்லாமல் அமைதியாக கடவுளை தரிசிக்க வேண்டும். கூட்டத்தோடு கோவிந்தா போடுவது என்ன பாலிசி. கடவுளிடம் எந்த கோரிக்கையையும் வைக்க மாட்டேன்.  அவனுக்குத் தெரியாதா என்ன?    பள்ளியில் படிக்கும் போதே பத்தாம் வகுப்புக்கு பிறகுதான் அண்ணாவோடு ஓரிரு சினிமாவுக்கு போயிருக்கிறேன்.  நல்ல தரமான படமாயென தெரிந்து கொண்டு ஓடி கூட்டம் குறைந்துபோய் கடைசி நாட்களில் போவேன். நான் மட்டுமில்லை அண்ணன் கூட செலக்டியுவான படத்தைத்தான் பார்ப்பான்.  கல்லூரியில் கூட சில படங்களே சினேகிதிகளோடு பார்த்திருக்கிறேன். விடுமுறை நாட்களில் விடுதியிலிருந்து பகல் காட்சிக்கு அனுமதி வாங்கிக்கொண்டு போய் கூட்டமாக இருக்க வரிசையில் நின்றெல்லாம் டிக்கெட் வாங்க முடியாதயென்று திரும்பி வந்த நாட்களே அதிகம்.  என்னமோ தெரியவில்லை. என் குணம் மற்றவர்களை விட வித்தியாசமாகத் தெரியலாம். அது என் தந்தையின் தனித்த குணத்தின் ஜீனாகக்கூட இருக்கலாம்.  ஒரு கோடு போட்டுக்கொண்டு வாழ்பவள். இது சுமதி கிழித்துக்கொண்ட கோடு. நீங்களே சொல்லுங்கள் எனது நடவடிக்கை வித்தியாசமாக இருக்கலாம்.  ஆனால் தவறானது இல்லையே. “ஏங்க ஸ்கூட்டிய நான் ஓட்டுறங்க” கடற்கரை இரண்டு கிலோ மீட்டர் தூரத்தில் இருக்கிறதாம்.  “கூட்டமா இருக்கும்  நானே ஓட்டுறேன்.” “மெட்ராஸ்லயே உங்க வச்சி  ஓட்டிருக்கிறேன். இங்க ஓட்ட முடியாதா என்ன?” “அது என்ன மெட்ராஸ் ?” “ஒரு காலத்துல மெட்ராஸ் தானே அதுக்கு பேரு. இவங்களே மாத்திட்டாங்க.  மெட்ராஸ்ன்னா நல்லாதானே இருக்கு. இப்பயும் ஹை கோர்ட் ஆப் மெட்ராஸ்ன்னுதான் சொல்றாங்க. இன்டர்நேஷனல் ஏர் போர்ட்ஸ் எல்லாத்திலும் மெட்ராஸ்ன்னுதான் அனோன்ஸ் பண்ணுறாங்கலாம் பிளைட் டிக்கெட்டே அப்படிதான் எடுக்கணுமாம். முட்டைக்குன்னு ஒரு மினிஸ்டர போட்டா….” “போதும் போதும்மா தாயை நீயே ஓட்டு” “சுமதியே ஓட்டட்டுமேப்பா” என்று மாமியார் எனக்கு சப்போட் செய்ததோடு  “பொழுது இருக்கும் போதே திரும்பிடுங்க” என்றார். “சரிங்க மாமி”  எனக்கு ஏனோ நல்ல மாமியார் கிடைத்து விட்டார். நல்ல தன்மையானவர். ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்து நடந்து கொள்வோம். வேலை நாட்களில் இன்னக்கி என்ன சமைச்சி வைக்க என்று கேட்டால் சாம்பாரே வைங்க என்பேன். அவருக்கு அதுதான் பிடிக்குமென்பதால் உற்சாகப் படுத்துவேன். எனக்கும் அதுதானே பிடிக்கும்.  இதெல்லாம் கூட்டுக் குடும்ப டெக்னிக்.   ‘என்ன பெரிய டெக்னிக்?’ என்கிறீர்களா. ராக்கெட் விடுற டெக்னிக்கை விட மேலே. குடும்பம் இல்லன்னா நாடு ஏது? ரமேஷும் அப்படிதான்.  நான் விரும்பும் குணம் ஓரளவுக்குதான் அவருக்கு இருந்தும் மெல்ல மெல்ல முழுமையாக மாறியதும் இயல்பானதுதான். வேறு முகம் ஏதேனும் இருக்கலாம்தான்.   இருந்தால் வெளிப்படும் போது பார்த்துக் கொள்ளலாம்.  அதற்கு இப்போது என்ன? ஸ்கூட்டியை சாலை ஓரமாக நிறுத்தினேன். பக்கத்து வீட்டு மேடம் சொன்னது போலவே கடற்கரை படு அமைதி.  கூப்பிடு தூரமே கடற்கரை போன்ற மணற்பரப்பு.  இரண்டு பெண்கள் உட்கார்ந்து கதைத்துக் கொண்டிருந்தார்கள். நாற்பது வயது மதிக்கத் தக்க ஒருவர் தன் மகனுக்கு  பட்டம் விட கற்றுக்கொடுத்துக் கொண்டிருந்தார்.  மகன் நூலை தன் கையில் கொடுக்குமாறு அடம் பிடிதான். வேறு வழியின்றி அவனிடம் கொடுத்ததும் பட்டம் அவனை இழுத்துக் கொண்டு ஓடியது.  இவரும் பின்னே ஓடி நூலை இவரும் பிடித்து அவனே விடுவதுபோல பாவனை செய்தார். இன்னொரு ஜோடி எங்களைப் போலவே.  ஆனால் வயதானவர்கள். மற்றபடி சுண்டல் வியாபாரமோ கடல் மட்டிகளை சேகரித்து மாலையாக்கி விற்றுக் கொண்டிருக்கும் கடைகளோ மீன் வருவலின் நாற்றம் மூக்கை பிடித்துச் செல்லவைக்கும் வேலையோ இல்லை. கடலில் கால்களை நனைத்தோம். ஒரு புத்துணர்ச்சி வந்தது. அலை அடித்து அடித்து திரும்பி போக பத்து நிமிடம் ரசித்ததும் கரையேறி மணல் வெளியில் அமர்ந்தோம்.   தூரத்தில் ஒரு கப்பல் நங்கூரமிட்டு நின்றது.  இங்கே கரையோரம் கப்பல் வர இயலாது. சரக்குகளை படகுகளின் மூலமே  ஏற்றி இறக்கும் குட்டித் துறைமுகம்.  இரண்டு விசைப் படகுகள் கப்பலை நோக்கி காலியாக பயணித்தன. ஒரு படகு சுமையுடன் திணறியபடி கரையை நோக்கி நகர்ந்து வந்தது.  அக்கரை பற்றிய யோசனை என்னை பற்றிக் கொண்டது. நேராக போனால் மறுகரை என்னவாக இருக்கும் மியான்மரா, மலேசியாவா?   ஏதாவது வரும். ‘வரலாம்’ ‘இடையில் அந்தமான் தீவுகள் கிடக்கலாம். எண்ணற்ற தீவுகள்’ ‘அதில் ஏதேனும் ஒரு தீவில் மனித நடமாட்டமே இல்லாமல் இருக்கலாம்’ “என்ன யோசனை” கணவர் குறுக்கிட்டார். “ஒண்ணுமில்லை” “சரி யோசி” என என்னை சுதந்தரமாக்கினார்.  ‘நான் மட்டுமா?’ ‘இல்லை கணவருடன்தான்’ ‘எப்படி  காலம் தள்ள முடியும்’ ‘அதானே’ ‘வேலைக்கும் போகமுடியாது அத்தியாவசிய பொருட்களுக்கு என்ன செய்வது’ ‘காஸ்ட் அவே ஆங்கிலப் படத்தில் வரும் கதாநாயகன் போல கொஞ்ச நாட்களாவது வாழ்ந்து பார்த்தால் என்ன ?’ ‘முடியாதோ’ ‘இந்த மனிதர்களோடுதான் கூடி வாழ வேண்டுமா?’  ‘ஆம்.’ ‘அந்தமானைப் போல தனித்தனி தீவுகளாய்.   ஒரே பெயரில்’  “ஏங்க இப்படியே ஓரமா போனா மெட்ராஸ் வந்துடுமா?” என்றேன் “போவலாம்.  ஆனா நடுவுல ஆறுகள் இருக்கே” “ஓ கடற்கரைய ஆறுகள் துண்டாக்குதோ” “க்கும்.  ஆமா ஆமாம்” கிண்டலாக சிரித்து ஆமோதித்தார்.  பட்டம் விட்ட சிறுவனையும் அவனது தந்தையையும் காணவில்லை. வயதான தம்பதிகளும் வீடு திரும்பி விட்டார்கள் போல. ஆம் நாங்கள் கடலையும் கரையையும் ரசித்துக் கொண்டிருந்தோம். பற்பல கற்பனைகள். நிறைவேற்ற முடியாத விருப்பங்களும் தேவைகளும்.  அப்பப்பா நாட்களை நகர்த்தித்தானே ஆக வேண்டும். எல்லாமும் கலந்துதானே வருகிறது.  ருசிக்கலாம்.  வாழ்வென்றால் வாழத்தானே வேண்டும்.  வடப்புறமாக தூரத்தில் ஒருவர் ஓடினார்.  ஏன் ஓடுகிறாரென யோசிப்பதற்குள் அவரை இரண்டு பேர் துரத்துவது தெரிந்தது  கையில் நீண்ட கத்தியுடன்.   “ஏங்க அங்க பாருங்க” என்றேன் படபடத்துப்போய்.  பார்த்தவர் திடீரென எழுந்து என் கையை பிடித்து  மேலே இழுத்துக் கொண்டு “அங்க பாக்காதே” என என்னை அணைத்தவாறு  சாலையை நோக்கி விரைந்தார். இரண்டு பெண்களும் செருப்பைக்கூட மாட்டாமல் தலைதெறிக்க சாலை பக்கம் ஓடினார்கள். திரும்பி பார்க்கலாமென்றால்  வா வா என இவர் இழுக்க வண்டியின் அருகில் வந்ததும் துணிந்து திரும்பி பார்த்தேன். அவர்கள் கண்ணில் படவில்லை.  எங்களுக்கு படபடப்பும் நிற்கவில்லை.   வண்டியை இயக்கினார்.   நான் ஓட்டுகிறேன் என கேட்கவில்லை. பின் இருக்கையில் சுருட்டி முடங்கியவாறு அமர்ந்தேன். பயத்தில் கொஞ்ச தூரம் அவரை கட்டிப் பிடித்து அணைத்துக் கொண்டேன்.  ஒன்றும் கோர்வையாக யோசிக்கத் முடியாத அச்சத்தில் இறுகிப் போயிருந்தேன். நாளை காலை செய்தித்தாள் படிக்கும் போது ஏதாவது அசம்பாவிதம் நடந்ததா என தெரிந்துகொள்ளலாம் என்பது மட்டும் புரிந்தது. முடிவிலிருந்து தொடக்கம் வரை இன்னும் மூன்று நாட்கள்தான் இருப்பேன்.  இது என் அமானுஷ்யத்தின் வெளிப்பாடு. சில நேரங்களில் நான் சொல்வது பலித்துவிடுகிறது.  அது எதார்த்தமாக இயல்பாக வந்த ’குறி’யாக இருக்க வேண்டும்.  நியாயமானதும் உண்மையானதாகவும் இருக்க வேண்டும்.   இருக்கிறது.  எனவேதான் அறிவிக்கிறேன்.  மகன்களிடத்திலோ மருமகள் மற்றும் பேரன் பேத்திகளிடம் இதை நான் சொல்லவில்லை. வாசகர்கள் ரகசியமாக வைத்திருக்க வேண்டும்.  மனைவி யாருடைய கனவிலாவது வந்து சொல்லிவிடுவாளோ?  அதுதான் பயம்.  அவள் எங்களை  விட்டுப்போய் சித்திரை மாத பௌர்ணமி திதி வர இன்னும் மூன்று நாட்களே உள்ளன.   வெளிச்சத்தோடு வெளிச்சமாய் நானும் ஐக்கியமாகி விடப்போகிறேன். அவள் போனபிறகு ஒவ்வொரு சித்ரா பௌர்ணமிக்கும் ஐப்பது ஆண்டுகளுக்கு முன் நாங்கள் முதன் முதலில் சந்தித்த காவெரி ஆற்றின் படிக்கட்டில் போய் அமர்ந்திருப்பேன்.  ஓரமாய் சிற்றோடையாய் காவேரி சுருங்கி ஓடிக் கொண்டிருப்பாள்.   மேகங்கள் இல்லாத வானமாய் நானில்லாத நிலவொளியாய் அவள்.  நிரம்பி வழிந்து போவேன்.  நீரை எதிர்த்து நிலவு நகர்ந்து மறையும் காலைப் பொழுதில் வீடு திரும்புவேன். நான் எப்படி இல்லாமல் போவேன்.   இது அமானுஷ்யம் இல்லை.  இறப்பு என்னை ஐக்கியப்படுத்திக் கொள்ள ஒரே வழிதான் இருக்கிறது.  எல்லோரும் போகத்தானே வேண்டும்.  செலவுகள் இல்லாத வரவு ஏது? அழுது புலம்பினாலும் மனிதர்கள் புதிது புதிதாக பிறந்துகொண்டுதானே இருக்கிறார்கள்.  அழுவதும் பிறப்பதும் போகிற போக்கு.  நிலவு உச்சிக்கு வரும்.  இலைகள் அசையாது. பறவைகள் உறங்கிக் கொண்டிருக்கும்.  ஓசையின்றி ஓடை நகரும். ஒரு வலியெடுக்கும்.  தாங்கமுடியாது தவிக்கும் இதயத்தில் வலி ஓய்வதற்குள் தட்டு தடுமாறி படியில் உருண்டு ஆற்று நீரில் சங்கமிக்கையில் அஸ்ட நாடியும் ஓயும்.  அமானுஷ்யமும் ஆசையும்.   சென்ற வருடம் கார்த்திகை தீபத்தன்று  மாலை நான்கு மணியிருக்கும்  பெரிய மகன் அலுவலத்திலிருந்து தொலைபேசியில் அழைத்தான்.  தூக்கத்தை கலைத்துக்கொண்டு போய் போனை எடுத்து ஹலோ சொன்னேன். “என்னப்பா உனக்கு ப்ரமோஷன் வந்துருக்கா?” “ஐய்ய.  எப்படிப்பா.  அதை சொல்லத்தான்  போன் பண்ணினேன்.  உங்களுக்கு எப்படி முன்னாடியே தெரிஞ்சிது?” “இப்பதான கனவு கண்டு முழிச்சேன்” அது அவனுக்கும் பெரிய ஆச்சர்யமாக தெரியவில்லை.  பலமுறை நான் சொன்னது அப்படியே நடந்ததில் அவனுக்கும் பரிட்சயம். ஆரம்பத்தில் அரசு வேலைக்கு போகும் முன்பு தனியார் நிறுவனத்தில் பணியில் இருந்த போது சக ஊழியர்கள் எனக்கு கரு நாக்கு என்பார்கள். எங்கள் அலுவலகப் பிரிவு   வெளிப்புறமாக சாலை தெரியும் படியான குளிரூட்டப்பட்ட கண்ணாடி அறை.  ஒருநாள் முற்பகல் வழக்கம்போல கம்ப்யூட்டர் சென்டரருக்கு கம்பெனி டைரக்ட்டரின் மகள் சாலையில் நடக்கிறாள்.  ஆனால் அதிசயமாக பின்னால் அவள் தம்பியும்  போகிறான்.  டைப்பீஸ்ட் அவர்களை பார்த்ததும் “என்ன இன்னக்கி தம்பிக்காரனும் கூடப் போறான்?” என்றாள்.  “யாரையாவது லவ் பண்ணி ஓடிப்புடப் போவுதுன்னு காவலுக்கு தம்பிய அனுப்பி இருப்பார்.  பாருங்களேன் தூக்குல தொங்கிடப்போவுது” என்றேன். இப்படி அவர்கள் செல்ல ஆயிரம் காரணம் இருக்கலாம்.  ஏன் இப்படி சொன்னேன்? அவள் யாரையும் காதலிக்கிறாளோ ஓடிப்போக திட்டமிட்டுள்ளாளோ எனக்குத் தெரியாது.   டைரக்ட்டரின் வீடு கம்பெனியிலிருந்து அரை கிலோ மீட்டர்தான் இருக்கும்.   மாலையில் அலுவகத்திலிருந்து வெளியே போய் ஒரு வில்ஸ் சிகரெட்டை சாம்லாக்கி புகையை குடித்து ஸ்டைலாக ஊதிக் கொண்டிருந்தபோது டைரக்ட்டர் வீட்டு வாசலில் கூட்டமாக மக்கள் நிற்பதை கண்டதும் அவ்வழியே வந்த சைக்கிலோட்டியிடம் விபரம் கேட்டபோது  ‘அவரோட மகள் தூக்குப்போட்டு செத்துப் பொய்ட்டாம்’ என்றார். தகவலை சொல்ல பாதி சிகரெட்டை புகைக்காமல் வீசி விட்டு அலுவகத்திற்குள் நுழைந்ததும் காதல் தோல்வியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்ட விபரத்தை எனக்குச் சொன்னார்கள். ஒரு நாள் நண்பர் பின்னே அமர்ந்திருக்க இரு சக்கர வாகனத்தில் சென்றபோது  ஒர் இளைஞர் என்னை உரசிவிட்டு வேகமாக முன்னே சென்றார்.  தவறி உரசி இருக்கலாம்.  நான் சற்று தடுமாறி கீழே விழாமல் சமாளித்து வண்டியை இயக்கி விட்டேன்.  என் வாய் சும்மா இல்லாமல் ‘எங்க வேகமாப் போறான்.  அப்படி என்ன அவசரம். ரயில்வே கேட் கிட்ட சாஞ்சி கிடப்பான்’ என்றேன். உண்மையில் முந்திச் சென்ற அவர் ரயில்வே கேட்டை கடந்ததும் சாய்ந்து கிடந்தார். பலத்த அடி இல்லை.  பொதுமக்கள்  தூக்கிவிட்டு  வண்டியை நிமிர்த்துக் கொண்டிருந்தனர்.  அது என் இதயத்திலிருந்து வந்த வார்த்தைகள் இல்லை. அமானுஷ்ய சொற்கள்.   எனக்கும் அதற்கும் எந்த தொடர்பும் இல்லை.  அதற்கு நான் பொறுப்பும் இல்லை.  இப்படி ஏராள சம்பவங்கள்.  கேட்டால் உங்களுக்கு அலுப்பு தட்டலாம். இன்னும் இரண்டு நாட்கள் சரியாக ஆறு ஆண்டுகளுக்கு முன்பு சித்ரா பௌர்ணமியன்றுதான் அந்த சம்பவம் நடந்தது.  வேலைக்காரி அவளுக்கு ஒதுக்கப்பட்ட வழக்கமான வேலைகளை முடித்துவிட்டு ஏழு மணிக்கு வீட்டுக்குத் திரும்பிவிட்டாள்.  இரு மகன்கள் மருமகள் என நான்கு பேரும் வேலைக்குச் செல்பவர்கள்.  நானும் மனைவியும்  ஓய்வூதியதாரர்கள். மூன்று  பேரன்கள் இரண்டு பேத்திகள். பேரன் முவரில் ஒருவன் மகள் வயிற்று பேரன்.  இங்கேதான் தங்கி படித்து வருகிறான்.    வீட்டு வேலைகள்,  மனைவியுடன் ஒத்தாசையாய் நின்று சமைப்பது எல்லாம் வேலைக்காரிதான்.  அவள் கூட எங்கள் வீட்டின் ஒரு மனுஷி போல்தான். நெஞ்சம் நிறைந்த பஞ்சமில்லாத வாழ்க்கை. கூட்டுக் குடும்பம்.  இதுதான் எங்களைப் பற்றிய பயோடேட்டா.  எங்களைப் பற்றி யார் யார் பொறாமைப் படுகிறார்கள்  என்பது தெரியாது.   அது பயோடேட்டாவில் அடங்காது.   பெரிய மகனும் மருமகளும்  திருவண்ணாமலைக்கு கிரிவலம் போக கிளம்பிக் கொண்டிருந்தார்கள். கூட்டம் அதிகமாக இருக்கும் என்பதாலும் நடந்த கால் வலியில் காரை ஓட்டுதில் சிரமம் இருக்கும் என்பதாலும் ஒரு ஆக்டிங்க் டிரைவரை போன்செய்து வரச் சொன்னோம்.   அவர் வந்து ஹாலில் அமர்ந்திருந்தார்.   என் மனைவிதான்  ஹாலுக்குப்போய் “டீ குடிப்பிங்கலா காப்பியா?” என்றாள். “இப்பதான் குடிச்சிட்டு வாறேன்.  ஒண்ணும் வேண்டாம்மா” என்றார் டிரைவர். “பரவாயில்ல எதாவது சாப்புடுங்க அப்பதான் ஆக்டிவா வண்டி ஓட்டலாம்” “வேண்டாம்னா கேக்க மாட்டேங்குறிங்க. சரி  டீயே கொடுங்க” மனைவி தேநீர் தயாரிப்பில் இருந்தபோது சர்க்கரை வைத்திருந்த கண்ணாடி பாட்டில் கை தவறி கீழே விழுந்து டமாரென்ற  சத்தத்துடன் உடைந்தது.  என்ன என்ன என்று எல்லோரும் சமையல் கட்டுக்கு ஓடினார்கள். “ஒண்ணுமில்ங்கப்பா  சீனி பாட்டிலை தவறி போட்டுட்டேன். அதான்” என்றாள் மனைவி. பாட்டில் மட்டும் உடையவில்லை.  உடைந்த கண்ணாடி சில்லில் தவறி காலை வைத்ததில் உள்ளங்கால் கிழிபட்டு ரத்தம் வந்து கொண்டிருந்தது.  பதறிப்போனோம்.   சின்ன மருமகள்தான் மாமியாரின் காலில் வழியும் ரத்தத்தை துடைத்து பஞ்சை வைத்து கட்டிவிட்டு “வாங்க டாக்டர் கிட்ட பொய்ட்டு வருவோம்” என்றாள். “லேசாதான் கிழிச்சிருக்கு.  ஒண்ணும் அவசரமில்ல. அங்க கிளம்பி கோவிலுக்குப் போனதும் பாத்துக்கிடலாம்” “காப்பி போடுறதா இருந்தா என்கிட்ட சொல்லக்கூடாதா.  வயதான காலத்துல பேசாம மூலையில இருக்க வேண்டியதுதானே? உங்களுக்கு ஏன் இந்த வேலை”  என்றாள். மனைவியின் முகம் மாறிப்போனது.  என்ன என்றுமில்லாமல் இப்படிப்பட்ட வார்த்தைகளை பயன்படுத்திவிட்டாளே என எல்லோரும் கருதியிருப்பார்கள் என்றே தோன்றியது. ஆனால் யாரும் வெளிக்காட்டிக் கொள்ளவில்லை.   “கோயிலுக்கு இப்ப போகல. வாங்க மாமி டாக்டர்கிட்ட பொய்ட்டு வந்ததும் போய்கிடுறோம்” என்றாள் பெரிய மருமகள். “வேண்டாப்பா நீங்க கெளம்புங்க.  நாங்க பாத்துக்கிடுறோம்” என்று அவர்களை கிளப்பி விட்டு வெளியில் வந்து வழியனுப்பினோம்.  வீட்டினுள் வந்து “கெளம்புங்க. வாங்க மாமி டாக்டர் கிட்டெ பொய் ஒரு டீட்டி இஞ்ஜக்ஷன் போட்டுகிட்டு வருவோம்” என சொல்லிக்கொண்டு கிச்சனிலிருந்து ஹாலுக்கு வந்த சின்ன மருமகள் மாமியாரைக் காணாமல் வீடு முழுவதும் தேடிப்பார்த்தாள்.  சிறிய மகன் பேரக் குழந்தைகள் எல்லோருமாய் வெளியில் சென்று தேடியும் காணவில்லை.   முந்திரிக்கொட்டையாட்டம் பேரன் போன் செய்து விபரத்தை கேட்டதும் கோவிலுக்கு சென்ற மகன் பாதியில் திரும்பி வந்தான்.  எல்லோரும் என்ன செய்வதென்று தெரியாமல் விழிப்போடு இரவை கழித்தோம். அவள் வார்த்தைகள் அப்படியொன்றும் தடித்ததில்லையே.  வயதான காலத்தில் என்றதும் தன்னை இயலாதவளாக சித்தரித்து விட்டாள் என கருதியிருக்கலாம். அதற்கும் மேல் மூலையில் இருக்க வேண்டியதுதானே என்ற சொற்கள் மனதின் ஆழம் வரை தைத்திருக்கும்.  இவ்வாறான வார்த்தை பிரவேசம் எங்கள் இல்லத்திற்கு புதியது.  எண்ணங்களின் வெளிப்பாடுதானே அசாதாரண நேரங்களில் சொற்களாக வெளிப்படும்.  திட்டமிட்ட புண்படாமல் பேசவேண்டும் என்ற சம்பாஷணைகள் போலியை அடைத்ததாக இருக்கலாம்.  வயதானது உண்மைதான். நடமாட முடியாத அளவுக்கான வயோதிகம் இன்னும் நெருங்கவில்லையே. காவெரியில் லேசாக ஒரு ஓரத்தில் ஓடிய நீருக்குள் மறைந்து உறங்கும்  ஒரு சுழலுக்குள் புகுந்து சற்று தூரம் தள்ளி வெளியே தோன்றி சடலமாகக் கிடந்தது  மறுநாள் காலையில் தெரியவந்தது. மரணத்தைக் சந்திக்க எல்லோரும் பயப்படுகிறோம் என்பதே உண்மை. ஆறிலும் சாவு நூறிலும் சாவு என்றும் நான் மரணத்திற்கு பயந்தவன் இல்லை என்று மார் தட்டுபவர்களே உண்மையில் பெருத்த பயந்தாங்கொள்ளிகள்.  உள்ளுக்குள் உள்ள நடுக்கம் வெளியே நடிக்க வைக்கிறது.  இளமையில் உள்ள விரக்தியில் அப்படி பேச வைக்கிறது. அந்திமக் காலத்தில்  யாராவது நலம் விசாரித்தால்,   நல்லதான் இருக்கேன் சாவுதான் வரமாட்டெங்குது என வாழ்வின் மீதுள்ள தாகத்தில் சொல்வார்கள். ஆனால் மரணம் மீதான பயன் உள்ளுக்குள் உட்கார்ந்திருக்கும்.  மரணத்தை எதிர்க்கத் தெரியாத கோழைத்தனம் அது.  தற்கொலைக்கு ஒரு வீரம் வேண்டும்.  முடிவுக்கும் சாவுக்கும் நடுவில் மனம் அல்லாடும்.  உறுதியோடுதான் ஆற்றில் இறங்கி இருப்பாள். ஏல்லாவற்றையும் வெறுத்து.  என்னை ஏன் வெறுக்க வேண்டும்? யோசிக்க முடியாத தூரத்திற்குப் போயிருக்கலாம்.  பூனை அந்த பக்கமாக குதித்துவிட்டது.   ஒருமாதம் கழித்து தனியே ஒரு வாடகை வீடு பிடித்து அதற்கு நான் மட்டும் போய்விடலாமென்று கிளம்பினேன்.  சின்ன மறுமகள் காலை கட்டிக்கொண்டு கதறினாள். “கால்ல ரத்தம் வந்ததும் பதறிப்போய் மாமி மேல உள்ள பாசத்தில்தானே அந்த வார்த்தைய சொன்னேன்.  என்ன மன்னிச்சிடுங்க மாமா” என்றாள். எல்லோரும் அழுதார்கள்.  தடுத்தார்கள். இன்னொரு தற்கொலை வேண்டாமென்று இருந்துவிட்டேன். முதல் நாள் சென்ற வாரம் போட்ட மாலையின் பூக்கள் உதிர்ந்துபோய் எஞ்சிய காய்ந்த சருகுகள் உதிர வழியின்றி  நாரில் தொத்தி நின்றன நேற்று.   இன்று சித்ரா பௌர்ணமி இல்லையா! அதெல்லாம் சரியாக ஞாபகம் வைத்திருப்பார்கள். பெரிய மருமகள் நேற்றே ஒரு மாலை வாங்கி வந்து இரவே புகைப்படத்திற்கு சூட்டி விட்டாள்.   பூச்சாரத்தின் நடுவே புன்னகைக்கும் முகம்.  நேற்றும் அப்படித்தான். எப்போதும் புன்னகைதான். இயற்கையின் வரம். சாமி கொடுத்ததாகக்கூட இருக்கலாம். எல்லோருக்குமாய் என்றாலும் என்னால் அதை பொதுமைப்படுத்த இயலாது. எனக்கே எனக்கானது. ஆமாம் அதில் ஒளிந்திருக்கும் காதலை யார் பங்குபோட முடியும். அதிகாலையில் தாயாருக்கு மகன்கள் திதி கொடுத்த பின் அலுவலகங்களுக்கும் பள்ளிகளுக்கும் எல்லோரும் சென்று விட்டனர். சோபாவில் ஓய்ந்து சாய்ந்து கிடந்தேன். “அய்யா காப்பி போடட்டா டீ போடட்டா” என வேலைக்காரி அடுக்களையில் இருந்து கேட்டவாறு ஹாலுக்கு வந்தாள். “இது என்ன கேள்வி.  எப்பையும் காப்பிதானே போட்டாந்து கொடுப்பே!” என்றேன். “அய்யா ஒண்ணு சொல்லணும் ஒங்க கிட்டே” “என்னம்மா” “ராத்திரி கனவுல பெரியம்மா வந்தாங்க” என்றாள். சட்டென என்னால் உணர முடியவில்லை. வயது ஏறி வாழ்க்கையின் சின்டை பிடித்து ஆட்டுகிறதோ. தெரியவில்லை. இருக்கலாம். வயசான காலம். பாரமாகக் கூட போகலாம். போகலாம் என்ன பாரம்தான்.  வள்ளுவர் சொன்ன சால மிகுத்துப்போன பீலி இல்லை.  மரத்தை விட்டு பிரிந்து போகும் இலவம் பஞ்சுப் பொதி.  கிளி காத்திருக்கிறதோ இல்லையே.  வெடித்து சிதறி பிரிவது இயற்கையன்றோ. “என்ன” கலங்கிய ஞாபகத்துடன் மீளக் கேட்டேன். “கனவுல அம்மா வந்தாங்கன்னேன்” “என்ன சொன்னுச்சி. எங்க பாத்தே?” “இதே ஹால்லதான் உக்காந்து இருந்தாங்க.  நீங்களும் இருந்திங்க.  டீ போட்டுகிட்டு வான்னாங்க.  அய்யா காப்பிதானே குடிப்பாங்கன்னேன்.   எனக்கு டீ குடிக்கணும்போல இருக்குன்னாங்க.” “நான் இருந்தேங்குறே.  நான் பாக்கலையே” “அய்யா அது கனவு.  பச்ச கலர் சேலையில மகாலெட்சுமி மாரி இருந்தாங்க.” “ஓ செத்தன்னக்கி கட்டின சேலைய இன்னும் மாத்தாமலே இருக்கா போல” “நான் கனவுன்னு சொல்லுறேன். நீங்க என்னன்னமோ பேசுறிங்க அய்யா” “ஒளறுறேன்னு சொல்லு.  அப்புறம் என்ன  சொன்னாங்க” “அய்யய்யோ அப்படி சொல்லங்கய்யா.   முழிச்சிட்டேன். ஒரு நிமிடம்தான் இருக்கும்” “என் கனவுல மட்டும் வரதே இல்லையே. அப்ப, டீயே போட்டுக் கொண்டாறியா” “சரிங்கையா” “அப்பறம் அம்மாவோட சாரி எல்லாத்தையும் எடுத்துத்தாறேன் நீ வாங்கிக்கிடுவியா?” “வேண்டாய்யா.  ஞாபகார்த்தமா இருக்கட்டும் பீரோவுலயே” “அவளோட அடையாளம் வெறும் சாரியிலதான் இருக்கா என்ன.” “புரியலய்யா.  இல்ல. இந்த வீடு முழுக்க எல்லார்கிட்டையும் இருக்கு அய்யா.” “அது உடலும் இல்லை  உணர்வு இல்ல. ஒரு ஜடம். கனவு காணமுடியாத ஏதோ ஒரு வஸ்து.  அதெல்லாம் மருமகப் பொண்ணுங்க கட்டிக்க மாட்டாங்க.  அந்த வஸ்துகள் இங்க இருக்க வேண்டாம் அதான் நீ எடுத்துகிட்டு பொய்டுன்னேன்.” “அப்டின்னா மருமகள்கள் வரட்டும் அவங்க கிட்டே வாங்கி கிடுறேன்” “ஓகே  நான் சொன்னதா கேட்டு வாங்கிக்கிடணும்” “சரிங்கையா” என் கனவில் அவள் வந்ததே இல்லையே. மறந்துவிட்டாளா. உறக்கத்தை?  நான் கனவுகான அவள் உறங்க வேண்டியதில்லையே.  ஏதாவது கனவுகள் உறக்கத்தில் எப்போதேனும்  வந்து போகிறது. அதில் ஒன்றில் கூட அவளை காணவில்லையே. ஒருவேளை புன்னகையை தொலைத்திருப்பாளோ. முகம்காட்ட  போட்டோவில் இருப்பது அவளில்லையோ.  அவள் இல்லை என்றால் அந்த போட்டோதான் எதற்கு?  கழட்டி ஹாலில் போட்டு உடைத்தெரிய வேண்டும் போல் இருந்தது. என்ன மூர்க்கத்தனம் இது? இருந்துவிட்டு போகட்டுமே. யாருக்காவது புன்னகைக்கலாமில்லையா. அது போட்டோ என்று அவர்களுக்குத் தெரியவா போகிறது. அவளது புன்னகையின் மர்மம் என்னைத் தவிர யாருக்குத் தெரியப் போகிறது.  மாலை மாட்டும்போது கை தவறி யாராவது போடும்போது உடைந்து நொருங்கட்டும்  அது சாதாரணமானதுதானே.  சர்க்கரை வைத்திருந்த பாட்டிலை கை தவறி அவள் உடைக்கவில்லையா? உடைத்தாளா? உடைந்ததா? ஆரம்பம்.  ஒன்றும் புரியவில்லை.  எப்படி ஏன் எங்கிருந்து வந்தேன்?  எப்படி ஏன் எங்கே போனாள்? அவள். அவளின் அனுபவங்கள் செலவிடாத சிந்தனைகள், பிறகொருநாள் சொல்லிக்கொள்ளலாம் என பூட்டிவைத்திருந்த எத்தனையோ ரகசியங்கள் எல்லாம் எங்கே போனது.  ஆற்று நீரில் கரைந்து போயிருக்குமா?   சுழலுக்குள் சிக்கிக்கொண்டதா.  ஆன்மா எல்லாவற்றையும் வடிகட்டி வெற்றாய் வெளியே வருமா?  அப்படியெனில் அது வாழ்வின் தொடர்ச்சி இல்லையோ. யாரும் எந்த சிந்தனையோடும்  புரிதலோடும் பிறப்பதில்லையே.  சேர்த்து வைத்ததையெல்லாம் கூட்டி தள்ளிவிடுகிறதே மரணம்.  எல்லாம் குப்பைதானா. அவளும் நானும் எங்கே? இருந்த இடம் எங்கே? இன்மையாக வெறுமையாகிப்போதோ.   மாயை நாங்கள் மட்டுமா? எல்லாமும்தான். எனக்கு அனுபவங்கள் எந்த பாடத்தையும் கற்றுத்தரவில்லை. வாழ்க்கையின் அர்த்தம் புரியவுமில்லை. மாயமாய் வந்து மாயமாய் போவதாகத் தெரிகிறது. ஹிந்தி கட்டுரைப் போட்டியில் முதலாவதாய் வந்தமைக்காக பெற்ற கேடயத்துடன்  மாலையில் மூத்த பேரன் வீடு வந்தான்.  அதை காண்பித்து வாழ்த்தும் பாராட்டும் பெற்றதும் கவிதைக்காக எப்போதோ வாங்கிய எனது இரண்டாம் இடத்திற்கான கேடயத்திற்கு பக்கத்தில் கொண்டு வைத்தான். மகன் வயிற்று பேரன் பள்ளியில் பாரதியாரின் மொழி பற்று குறித்த பேச்சுப்போட்டி அடுத்த வாரம் நடக்கிறதாம்  “எழுதித்தாங்க தாத்தா” என்றான் “போட்டிக்கொல்லாம் அவங்க அவங்களேதான்டா எழுதணும்.  அப்பதானே உனக்கு திறமை வளரும்”       “எப்படி எழுதுறதுண்ணு சொல்லுங்க தாத்தா”       “புக் ஷெல்ப்ல இருக்குற பாரதியார் புத்தத்த எடுத்து நீயே ரெப்பர் பண்ணி எழுது பாப்போம்”       “நான் எழுதுறேன் நீங்க கரேட் பண்ணித்தாரிங்களா?”       “இது ஓகே”        “நாளைக்கு எழுதட்டா தாத்தா”         “எப்ப வேணும்னாலும்  எழுது” என்றேன்.       இரவு உணவு வேண்டாம் என கூறிவிட்டேன்.  யாரும் கட்டாயப்படுத்த வில்லை. வழக்கமாக ஆற்றங்கரைக்கு போவேன் என்பது அவர்களுக்குத் தெரியும். தேட மாட்டார்கள். கடல் நோக்கும் நதி நோக்கினேன். பூக்கள் உதிர்வது போன்றது மரணம் அவை தாங்களே உதிர்த்துக் கொள்வதில்லை. வலிந்த புன்னகை ரயில் பயணங்களில் அதிகமான ஆலமரங்களை காணமுடியும்.  ஒரு காலத்தில் என் பால்யத்தை ஞாபகப்படுத்தின அந்த மரங்கள். ஊஞ்சலாக ஆடிய அதன் விழுதுகள் பின்னர் ஜடா முடியாகிவிட்டன.  ஜெயகாந்தனின் விழுதுகள் என்ற குருநாவல் ஆலமரங்களை  எனக்கு ஓங்கூர் சாமிகளாக மாற்றிவிட்டன.       இன்றைய பயணத்தில் ஜெயகாந்தனின் சிறுகதைகள் குறித்து விவாதிக்கலாம் என முடிவெடுத்தேன். பெரும்பாலான ஞாயிற்றுக் கிழமைகளில் எங்களின் பொழுதுபோக்கு ரயிலில் பயணம் செய்வதுதான். திருச்சியில் இருந்து கும்பகோணம், மயிலாடுதுறை, நாகூர் போகும் ஏதாவது ஒரு பாசஞ்சர் ரயிலில் கூட்டமில்லா பெட்டியாய் பார்த்து  ஏறி நினைக்கும் ரயில் நிலையத்தில் இறங்கி அங்கு  நிழலில் யாருமற்று ஓய்வெடுத்துக் கொண்டிருக்கும் சிமெண்ட் பெஞ்சுகளில், ஆலமரங்களின் அடியில் அமர்ந்து அரசியல், சினிமா, சமூகம், கலை இலக்கியம் சார்ந்த விஷயங்களை பரிமாறிவிட்டு திரும்பி வரும் ஒரு ரயிலில் மாலை அல்லது முன்னிரவு மீள திருச்சி வந்தடைவோம். மதிய உணவு என்பது எங்களுக்கு ஒரு பொருட்டே இல்லை.  பழங்கள், பிஸ்கெட்,  வெரைட்டி ரைஸ், பரோட்டா இப்படி ஏதாவது கிடைத்ததை உண்பது வழக்கமாகிப்போனது.  மெதுவாக நகரும் பயணிகள் ரயில் எங்களின் காலத்தை வேகமாக கடத்தியது. அது எங்களுக்கு இஷ்டமாகிப் போனது.       அன்று நாகூர் வரை டிக்கெட் எடுத்துக் கொண்டு ஏறி  அமர்ந்தோம். ஜெயகாந்தனின் ‘அந்தரங்கம் புனிதமானது’ என்ற சிறுகதையை பற்றி நண்பர் சாமி என்கிற சாமித்துரை பேசிக்கொண்டு வந்தார்.  கடந்த நான்கு ஐந்து ஆண்டுகளில்  ஏழெட்டு தடவை படித்து விட்டதாகவும் பாத்திரங்கள் எல்லை மீறிப்போகும் கதையென்றும்  புதிய புதிய விழுதுகள் தரையில் இறங்கி கிளைகள் நீண்டு பூமியை மறைக்கும் அளவுக்கு அந்த ஆல மரம் வளர்வதாகவும் சொன்னார்.  நாகை ரயில் நிலையம் வந்தது.       “இங்கே இறங்கிடுவோமா சார்?” என்றேன்.      “சரி” என்றார் சாமி.       ஆசுவாசமாக அமர்ந்து பேசிக் கொண்டிருக்க ஏற்ற இடம் அங்கு இல்லையென இறங்கியதும்தான் தெரியவந்தது. மேய்ந்த கண்களுக்குள்  தண்டவாளங்களைத் தாண்டி மறுபுறம் ஒர் ஆல மரமும் அடியில் ஓடுகள் வேயப்பட்ட கட்டடத்துடன் ஒரு கோவில் தட்டுப்பட்டது.  பக்கத்தில் இருந்த கடைக்குப்போய் மதிய உணவுக்கான பிஸ்கெட்கள் மற்றும் இரண்டு பாட்டில் தண்ணீர் வாங்கிக்கொண்டோம்.  தண்ணீர் என்றால் குடிநீரை இங்கே குறிக்கும்.  ரயில் பாதையை கடந்து அந்த ஆல மரத்தடிக்குப் போனோம்.  கடப்பா கற்களுடனான சற்று நீளமான ஆறு இருக்கைகளும் காலியாக இருந்தன.  கோவில் பூட்டிக் கிடந்தது.  முனியப்பசாமிக் கொவில்  என்பதை தெரிந்து கொண்டோம்.        இருவரும் கடப்பா கல் பெஞ்சில் அமர்ந்தோம்.         “எதைப்பற்றி பேசலாம்” என்றேன்.       “உங்களைப் பற்றி பேசலாமென இருக்கிறேன்” என்றார்.       “என்னைப் பற்றிதான் உங்களுக்கு எல்லாம் தெரியுமே.  என்ன பேசுறதுக்கு இருக்கு?”       “உங்களோட எதிர்காலம் பற்றி”       “டூமாரோ வில் நாட் கம் சார்” என்றேன்.       “அந்த தத்துவம் எல்லாம் இப்ப வேண்டாம்.   நான் உங்களுக்கு ஒரு பெண்ணு பாத்திருக்கேன்.  டிஸ்ட்ரப் பண்ணாம கேளுங்க.  அப்பறம் உங்க கருத்தை சொல்லலாம்”       “சரி சொல்லுங்க.  டயம் வேஸ்ட் ஆவுது அதான் சொன்னேன்”       “எங்க ஸ்கூல வேலை பாத்த ஒருத்தர் டூ இயர்ஸ் பேக் இறந்துட்டார்.  அவரோட மனைவிய நீங்க வாழ்க்கை துணையா ஏத்துகிட்டா என்ன?   அவங்க இப்ப அவங்க அம்மா வீட்டுல இருக்காங்க.  வேற யாரும் அவங்களுக்கு இல்ல.  ஒரு விதவைக்கு வாழ்க்கை கொடுத்ததா எடுத்துக்கிட்டாலும் சரி.    இப்ப சொல்ல வேண்டாம். யோசிச்சி மெதுவா சொல்லுங்க”  என்றார்.       “நான்தான் மேரேஜ் பண்ணிக்கவே போறதில்லங்குற முடிவுல இருக்கேனே. அப்புறம் எதுக்கு இதெல்லாம்?”       “எல்லாம் மறு பரிசீலனை உட்பட்டதுதான். கல்யாணமே வேண்டாங்குறத்துக்கு பல காரணங்கள் இருக்கலாம்.  பண்ணி கிடலாங்குறதுக்கு ஒரு காரணமே போதும்”       என்ன பேசுவதென்றே தெரியாமல் விக்கித்து இருந்தேன். அவரே தொடர்ந்தார். “ஏன் நீங்க அந்த பொண்ணுக்கு வாழ்வு கொடுக்கக்கூடாதான்னு என்னை கேக்கத் தோணும்.   என் மனைவியோட நினைவுலயே வாழ்ந்து முடிச்சிடலாம்ன்னு இருக்கேன். மறுபரிசீலனை செய்யக்கூடாதான்னு கேட்டாலும்  இந்த பெண்ணுக்கும் எனக்கும் நெறைய வயது வித்தியாசம் கூட” என்று நான் பரிசீலனை செய்வதற்கு உகந்தது என நியாயம் கற்பித்தார்.       விவாதம் நீண்டுகொண்டே போனது.   வீடு திரும்பியபோது வழக்கமான கலகலப்பு இல்லை. ஏற்கனவே திட்டமிட்ட படியான இலக்கியம் குறித்த விவாதம் இல்லை.  ஏதோ ஒரு புதிய தீவுக்கு கட்டுமரம் கொண்டு பயணிப்பது போல பட்டது எனக்கு.       நான் திருமணமே வேண்டாம் என்ற முடிவுக்கு வத்ததன் காரணத்தை சுருக்கமாக வேணும் சொல்லியே ஆகவேண்டும். யாரும் பெண்கொடுக்க முன்வரவில்லை. அல்லது எனக்கு ஏற்ற பெண்ணாக நான் பார்க்கவில்லை. எப்படியேனும் வைத்துக்கொள்ளலாம்.       ஆரம்பத்தில் முதன் முதலாக ஒரு பெண் பற்றிய பேச்சு வார்த்தைகள் ராணுவ ரகசியம் போலத்தான் நடைபெற்றது.  முதலில் நாங்கள் பெண் வீட்டிற்குச் சொன்று இரு தரப்புக்கும் பிடித்துப்போக எங்கள் வீட்டிற்கு நடைமுறை ரீதியில் அடுத்த புதன் கிழமை வருவதாக பேசி முடித்தார்கள்.       அதற்கிடையில் என்னைப் பற்றி உள்ளூர் வார்டு முன்னாள் கவுன்சிலரிடம் பெண் வீட்டார் விசாரித்திருக்கிறார்கள்.       ‘அவனுக்கா ஒங்க பொண்ண கொடுக்குறிங்க.   அதுக்கு ஒங்க பொண்ண ஓடுற ஆத்துல வெட்டி விடலாமே’ என்றனாம் அவன்.  நான் ரௌடியாம்.        ரவுடி குருப் ஒன்று ஊரில் இருந்தது உண்மைதான்.  அதில் நான் உறுப்பினர் இல்லை.  நான் அதில் இருந்த உறுப்பினர்களின் நண்பன். ஆனால் நான்தான் அந்த குழுவுக்கு மாஸ்டர் மையின்ட் என சிலர் சொல்லி வந்ததை காற்று வாக்கில் நானே கேட்டிருக்கிறேன்.  அந்த குழுவின் எதிர்வினையால்தான் அந்த முறை தேர்தலில் அவன் தோற்றுப் போனான் என்பது உண்மை.  அதற்கு என்னை பழிவாங்கிவிட்டான்.       அடுத்த ஒரு பெண்ணை எனது நண்பர் முயற்சியில் பெண் வீட்டாருடன் பேசி நானும் அவரும் பெண் வீட்டிற்குப் போனோம். மெதுவடையும் காப்பியும் கொடுத்தார்கள். பெண்ணை காட்டினார்கள்.  என் அழகிற்கும் அவள் அழகிற்கும் நல்ல பொருத்தம். ஆனால் இருவருக்கும் ஏழு வயது வித்தியாசம் உள்ளது, எனது தம்பிக்கு வேண்டுமானால் தர சம்மதம் என மறுநாள் நண்பனிடம் சொல்லி ஊத்தி மூடிவிட்டார்கள். வயதை முன்னரே கேட்டு இருந்திருக்கலாம்.  அவருக்கு மெது வடையும் காப்பியும்தான் நஷ்டம்.   வாடகை கார் எடுத்துப் போனதில் எனக்கு செலவு இரண்டாயிரம் ரூபாய்.       மேலும்,  இரண்டு பெண்களில் ஒன்று குண்டாக இருந்ததால்  எனக்கு ஒத்து வராது என்றார்கள். மற்றோன்று நிரந்தர அரசு வேலை.  நான் அப்போது தற்காலிக வேலை செய்தேன் என்று தர இயலாது என்றார்கள்.  நான்கு இன்னிங்ஸிலும் டக் அவுட்.       அத்தோடு பெண் பார்க்கும் வெட்டி வேலையை  நிறுத்திக்கொண்டேன். எனக்காக யாரும் பெண்பார்க்க வேண்டாம் என வீட்டாருக்கு முசுட்டுத்தனமாக கட்டளையிட்டேன். தற்காலிக வேலையும் காலியாக  மெட்ராஸ் நோக்கிப் போனேன்.  அப்போது சென்னை  என்பது மெட்ராஸ்.  வேலை தேடி மட்டும் போகவில்லை.  கல்யாணமே வேண்டாம் என்ற வெறுத்த மனதோடு மதுரையின் அருகில் உள்ள எனது குக்கிராமத்தில் இருந்து வேறோடும் தூரோடும் பிடுங்கிக் கொண்டு கிளம்பினேன்.  என் அவமானம் வருத்தம் எனக்குத்தான் தெரியுதும்.  அது என்னோடு இருக்கட்டும்.   எனக்கேற்ற பெண்ணை பார்க்கவில்லை என்பதாலும் என் மீதான வெறுப்பாலும் வீட்டில் உள்ளவர்கள் மீது வெறுப்பை வளர்த்துக்கொண்டு மெல்ல மெல்ல என்னைத் தனிமைப்படுத்திக் கொண்டேன்.       மெட்ராஸ் சென்னையாக மாறிய போதுதான் அரசு வேலை கிடைத்தது. திருச்சியில் பணியமர்த்தப்பட்டு   பணிபுரிந்து வருகிறேன்.  இங்குதான் ஆசிரியராக பணிபுரியும் சாமித்துரை எனக்கு அறிமுகமானார்.       அவரது கதை வேறு மாதிரியானது. தலைப் பிரசவத்திற்காக மனைவியை மருத்துவ மனையில் சேர்த்திருந்தார்களாம் சுய பிரசவத்திற்கான சாத்தியப்பாடுகள்  இல்லாதுபோக சிசேரியன் செய்ய மருத்துவர்கள் ஆயத்தமான நிலையில் ‘இப்போது வேண்டாம் நான்கு மணிநேரம் கழித்து ஆப்ரேஷன் செய்யலாம்’  என மனைவி தெரிவித்துள்ளார்.        அதற்கு அவள் சொன்ன காரணம் வேடிக்கையானது. அவளுக்கு அது பிரதானமானதாக பட்டிருக்கிறது.  அப்போது ஆயில்ய நட்சத்திரம் நடப்பில் இருந்துள்ளது.  குழந்தை ஆயில்ய நட்சத்திரத்தில் பிறந்தால் மாமனுக்கு ஆகாது என யாரோ சொல்ல தன் சகோதரன் மீது கொண்ட பாசத்தில்  அந்த நட்சத்திரம் முடியும் வரை பிரசவத்தை தள்ளிப்போட கட்டாயப்படுத்தி இருக்கிறாள்.  அதற்கு  அவளது அண்ணனே ஒத்துக் கொள்ளாமல் உடன்  அறுவை சிகிச்சைக்கு ஏற்பாடு செய்துள்ளார்கள்.  படுக்கையில் கிடத்தி அறுவை சிகிச்சை அரங்கிற்கு எடுத்து செல்கையில்  பிடிவாதம் செய்து கூச்சலிட்டு  ஆரவாரம்  செய்து  வலியைத் தாங்கிக் கொண்டு படுக்கையிலிருந்து இறங்கி வார்டுக்கு நடந்தே போய்யுள்ளாள்.       இதற்கிடையில்  சற்று நேரத்தில் குழந்தை வயிற்றினுள் இறந்துவிட்டதை அறிந்த மருத்துவர்கள் அறுவை சிகிச்சை மூலம் அதை அப்புறப்படுத்த அரங்கத்திற்கு அழைத்து சென்றவர்கள்  உள்ளே நுழைந்த சில நிமிடத்தில் பரபரப்புடன் வெளியே வர எல்லோருக்கும் பதட்டம் தொற்றிக் கொள்ளும் வகையில் தாயும் இறந்துவிட்டது தெரிய வந்தது. சாமி மயக்கமுற்று கீழே விழ பரிசோதித்த மருத்துவர்கள் அவசர சிகிச்சை பிரிவில் சேர்த்து ஹார்ட் அட்டாக் வந்துள்ளதாக தீவிர சிகிச்சை அளித்து  மனைவியின் இறுதிச் சடங்கில் கூட பங்குபெற முடியாத துர்ப்பாக்கிய நிலைக்குத் தள்ளப் பட்டுள்ளார். மனைவி தவறியமைக்கு தானும் மறைமுகமான குற்றவாளியாக இருந்திருப்பாரோ என்று எப்போதுமே சாமிக்கு தன்மீதே வருத்தம். எட்டு ஆண்டுகள் உருண்டு ஓடிப்போனாலும் ஒரு குற்ற உணர்வு அவருக்கு இன்னும் விட்டுப்போகவில்லை.  கட்டாயப்படுத்தி  சிசேரியன் செய்ய வைத்திருக்கலாம்.  அவளது அண்ணனின் குடும்ப நலனில் தனக்கு அக்கறை இல்லையென மனைவி சொல்லக்கூடும் என்று மழுப்பலாக இருந்துவிட்டார்.  இப்படி நடக்கும் என்று யார் அறிவார். நம் ரேகைகள் விதியின் கைகளில் அல்லவா ஓடிக்கொண்டு இருக்கின்றன.   தன்மீது அதீத காதல் கொண்டவளின்  நினைவில் வாழ்தலே போதுமென எல்லாவற்றையும் கடந்து கொண்டிருக்கிறார்.       ஒரு வாரமாக மன குடைச்சல்.  திடீரென தீயை பற்ற வைத்துவிட்டு சாமி அமைதியாகிவிட்டார். வேண்டுமென்றால்  ஞாயிற்றுக்கிழமை அந்த பெண்மணியின் வீட்டிற்கு போகலாம் என்றார். வேண்டுமா வேண்டாமா என்பதே என் மனப் போராட்டம்.  எனக்கென்று யாரும் இல்லையென்றே சொல்லலாம்.  நான் எப்படி வாழ்ந்தாலும் பெற்றோரோ சகோதரனோ  எந்த அதிர்ச்சியோ ஆனந்தமோ படப்பொவதில்லை.  கடித போக்குவரத்து நின்று போய் கிட்டத்தட்ட நான்காண்டுகள் ஓடியே போய்விட்டன.       வாழ்க்கைத் துணை என்ற ஒன்று தேவையில்லாமலும்  வாழலாமென்ற முடிவுக்கு எப்போதோ வந்துவிட்டேன்.  இப்போதென்ன புதிய சபலம். இது அவள் மீதுள்ள இரக்கம் சார்ந்ததா?  இரக்கம் மட்டுமே என்றால் என்னைத் தவிர ஒரு கைம்பெண்ணை ஏற்றுக்கொள்ள இந்த லோகத்தில் யாருமே இல்லையா? ஏராளமாக இருக்கிறார்கள். காலம் மாறிவிட்டது.  பின் என்ன? இல்லற விருப்பமா? வாழ்க்கைத் துணை தேடலா? உடல் ரீதியான ஆசைகளின் நிறைவேற்ற ஏற்பாடா?   எதுவும் இருக்கலாம். என்னால் எனது மன நிலையை ஆராயவோ முடிவு சொல்லவோ தெரியாத வாழ்க்கை மீதான புதிய அனுகுமுறையாகப் பட்டது.       மனக்கட்டுப்பாட்டுடன் கூடிய பிரமச்சாரிய வாழ்க்கையில் ஆற்றல் பன்மடங்காகிறது என்று ஞானம் கொண்டவர்களின் சொற்கள் வழியே கேட்டிருக்கிறேன். நான் இன்னும் அந்த மன காட்டுக்குள் முழுமையாக ஐக்கியமாகவில்லை.   பயிற்சியும் தேவையான வைராக்கியமும் என்னை இன்னும் ஆட்கொள்ளவில்லை.       ஆணி அறைந்ததுபோல்  பிரமச்சாரியத்தை தேர்ந்தெடுத்து விட்டேன் என தைரியமாகச் முடிவெடுக்காமல் திருமணம் செய்துகொள்ளப் போவதில்லை என்று மட்டும்தானே தவறாக கொக்கரித்துள்ளேன். அது தவறு என்பதைவிட இது சரியா என யோசிக்கத் தொடங்கினேன்        அவளது தாயாரிடம் பெசிவிட்டதாக தெரிவித்தார்.  வேண்டாம் என்று என்னை வெறுக்க வில்லை.  என்னையும் ஏற்றுக்கொள்ள ஒரு ஜீவன் இந்த லோகத்தில் இருப்பதாக மனம் உணர்த்தியது. நிரந்தர உத்தியோகம் இருக்கிறது.  அனுபவ முதிர்ச்சி இருக்கிறது.  இது ஒருவகையான வாழ்க்கை முறை.  உடல் பந்தமும் உள்ளடக்கியதுதான்.  மறுநாள் அவளது வீட்டிற்கு போகலாமென முடிவு செய்து சாமிக்கு தகவல் கொடுத்துவிட்டேன்.       அவள் தாயார்தான் எங்களை வந்து வரவேற்றார்.   பழங்காலத்து ஓட்டு வீடு.  திண்ணையில் அமர்ந்திருந்தோம்.  காப்பி கொடுத்து உபசரித்தார்.  பின்னர் மகளை அழைத்தாள்.  ஒரு கைக்குழந்தையோடு உள்ளே இருந்து வந்து வரவேற்றாள்.  அறிமுகப்படுத்திக் கொண்டோம்.       குழந்தை இருப்பதை சாமி சொல்லவே இல்லை.  அவருக்கே முதல் நாள்தான் தெரியுமாம்.   இனி சொல்லி என்ன, பார்க்கும்போது தெரிந்து கொள்ளட்டும் என இருந்துவிட்டதாக பின்னர் தெரிவித்தார்.       “மறுமணத்தில் எனக்கு விருப்பம் இல்லாமல்தான் இருந்துச்சி. ஆனால் அம்மாவோட பிடிவாதம்.    வயதும் பெருசாயிடல பண்ணிகிடலாமென முடிவுக்கு வந்துட்டேன்” என்று ஆரம்பித்தாள். “உன்மையிலேயே உங்களுக்கு இப்ப விருப்பம் இருக்குல்ல. அல்ல அம்மாவுக்காக ஒத்துகிட்டிங்களா? சும்மா ஃப்ராங்கா பேசுங்க. எதையும் ஏத்துகிடுற வயசு அனுபவம் எனக்கு இருக்கு” என்றேன். தாயார் எழுந்து வெளியே சென்றுவிட்டார்.  மகள் சங்கோசம் இல்லாமல் பேசட்டுமே என்ற எண்ணமாக இருக்கலாம். “அவரோட நினைவிலேயே வாழ்ந்திடலாமுன்னுதான் பாத்தேன். முடியாதுபோல.  மறுமணம்  பண்ணிக்கிடலாமென யோசனை வந்துச்சி” “ம்” “உங்களுக்கு ஒரு கைக்குழந்தை இருக்குன்னே எனக்கு நேத்தைக்குதான் தெரியும். அதைகூட சார்கிட்ட சொல்லல” என்றார் சாமி. “அம்மாகிட்ட எல்லாத்தையும் தெளிவா சொல்லச் சொல்லிட்டேன்.  அவங்க யார்கிட்டயோ சொல்லி யாரோ உங்கிட்ட சொன்ன கம்யூனிகேஷன் கேப்ல விடுபட்டு போச்சு போல.  வெரி சாரி” “நே நே. நே ப்ராப்லம்” என்றேன். “நீங்க வந்துட்டு போனதாலயோ வேண்டாம்னு சொன்னாலோ நான் கொஞ்சம் கூட வருத்தப்பட மாட்டேன். என் குழந்தை நாளைக்கு ஏதேனும் இடையூறாக பொய்டக்கூடா தில்லையா?” “நம்ம கொழந்தைன்னு சொல்லுங்க” என சிறு புன்னகை கலந்த வார்த்தைகள் என் மனதிலிருந்து வாய் வழியாக வந்தன. “அப்ப என்ன; சார் பச்ச கொடி காட்டிட்டார்.  மனசு எல்லாம் நெரஞ்ச மாதிரி இருக்கு” என்றார் சாமி. பதிவு திருமண ஏற்பாடுகளை சாமிதான் மேற்கொண்டார். இடையில் நாங்கள் தொலைபேசியில் பேசிக்கொள்வோம். “வணக்கம்” நான் “வணக்கம் சார்” அவள். “ஆமா நான் உங்கள எப்படி கூப்பிடுறது?” “பாக்கியலெட்சுமிய பாக்கியான்னு . அல்ல, பக்கின்னாலும் சரி” “சாரி. அது என்ன பக்கி. அப்படியெல்லாம் இனி வேண்டாம்.” “எப்படின்னாலும்.  உங்களுக்கு புடிச்சது போல” “பாக்யா.  என் பாக்கியம்.” “நீங்கள்.” “சந்தோஷ் சிவம்” மேபி எப்படின்னாலும் ஓகே. “சந்தோஷ்” “சந்தோஷம்” “சந்தோஷமுன்னா?” “நே. சந்தோஷமா இருக்குன்னேன்.” என்னைப் பற்றி கேட்டாள். தன்னைப் பற்றிச் சொன்னாள். திருமணமாகி ஆறாண்டுகளாக குழந்தையில்லை.   கணவர் இறந்தபோது மூன்று மாத கர்ப்பமாக இருந்துள்ளாள்.   எவ்வளவு லாவகமாக நகர்த்தி வெட்டிய காய்களை பெட்டிக்குள் அடைத்து விடுகிறது காலம். “இன்னோருத்தரோட வாழ்ந்தவதானே என்ற எண்ணம், உணர்வு உங்ககிட்ட இல்லையா ?” “இல்ல” “ஏன் அப்படி?” “மனைவியை இழந்த எத்தனையோ பேர் இரண்டாவதா கல்யாணம் பண்ணும்போது இந்த கேள்விய யாரும் கேக்குறதில்ல..” “அப்போ பெண்களுக்கு சுதந்திரம் கொடுக்குறதில உங்களுக்கு ஒண்ணும் ஆட்சேபனை இல்லைபோல” “சுதந்திரம்ங்குறது கொடுக்குறதில்லை. அது உரிமை. மறுத்தால் எடுத்துக்குறது” “போகப்போக வர வாய்ப்புள்ளதுங்குறேன்” “எது?” “இன்னொருத்தரோட வாழ்ந்தவதானே என்ற உணர்வு” “அது அவங்க அவங்க சுபாவத்தைப் பொருத்தது.  பெரும்பாலும் வர வாய்ப்பு இருக்கு.  ஆனா எனக்கு வராதுங்குறது, எனக்கு என் மீதுள்ள நம்பிக்கை” “அப்படின்னா பிரச்சனையே ஏற்படாதா?” “அதுக்கு ஆயிரம் காரணம் இருக்கு.  வராம பாத்துகிட காம்பர்மைஸ் இருக்கு. தோல்விய நேசிக்கணும். அந்த தோல்விதான் வெற்றியே” “சாமி! எனக்கு அவ்வளவு பேச வராது” “சாமி சார் இருக்காறே அவர் கிட்ட நெறைய தெரிஞ்சிகிடலாம். எனக்கு குருவே அவருதான்.” “கேஷ்வலா பேசமாட்டாரொ?” “ப்ராக்டிகலா பேசுவார். நிறைய பேசுவார். தேவையிருந்தா மட்டும் பேசுவார்” பரபரப்பான பாக்யாவின் நிமிடங்கள் அவை. மூன்று மணிக்கு கிளம்புவதாக கூறியிருந்தாள். நான்கரை மணிக்குள் வந்துவிடும்படி பதிவாளர் அலுவலகத்தில் தெரிவித்திருந்தார்கள்.   மூன்றரை மணிக்குதான் கிளம்பியிருக்கிறாள்.  மணப்பாறையிலிருந்து காரில் வர அதிக பட்சமாக அரை மணி நேரம்தான் ஆகும்.  நான்கு மணிவாக்கில் தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டது.    தொடர்பு எல்லைக்கு வெளியில் இருக்கிறாள் என்றது என் கைபேசி.  கடந்தகால நிகழ்வுகளை விட அது எனக்கு சற்று படபடப்புடனே இருந்தது. ஒரு செடியை முளையில் கிள்ளி எறிவதற்கும் வளர்ந்து பூக்கும் தருவாயில்  சிரமப்பட்டு வெட்டி சாய்ப்பதற்கும் உள்ள வித்தியாசத்தைப் போன்றது அது.  சாமி சார்  அலுவலரை சந்தித்து காலதாமதமாவதை தெரிவிக்க உள்ளே போனவர். பரவாயில்லை. ஐந்து மணிக்குள் வந்தால் போதும் தாங்கள் கூடுதல் நேரம் காத்திருப்பதாக தெரிவித்ததாக தகவல் தத்தார்.   இருபது இருபத்தி ஐந்து முறை தொடர்புகொள்ள முயற்சித்து கைபேசியை கோபத்துடன் பைக்குள் செருகிவிட்டு ஓரமாக கிடந்த உடைத்து போட்ட ஒரு சிமெண்ட் கட்டையில் அமர்ந்தேன். நான்கரை  மணிக்கு என் கைபேசியில் அழைப்பு வந்தது. “என்னம்மா எங்க இருக்கிறிங்க? வந்துட்டிங்களா?” “திருச்சியிலதான்” “அதான் எங்கே?” “ஆபீஸுக்கும் அடுத்த தெருவில இருக்கும் பார்க்ல” “என்னாச்சி, எனி  ப்ராப்லம்?” “ஒண்ணுமில்ல.  பார்க்குக்கு வரமுடியுமா?” “ஓய்?.  வாரனே” விபரத்தை சாமியிடம் சொல்லிவிட்டு  பூங்காவிற்குப் போனேன்.   கார் டிரைவரிடம்  வாடகையை கொடுத்துக் கொண்டிருந்தாள்.  அவள் மட்டும் வந்திருந்தாள். குழந்தையை அம்மாவிடம் விட்டு வந்திருப்பாள் போல. என்ன பேசுவதென்று தோன்றவில்லை. இருவருக்குமே என்று சொல்லலாம். சற்றே மௌனம் நீண்டது. மற்றவர்களுடன் பூங்காவில் பிரவேசம் செய்ய, சாமிதான் இறுக்கத்தை உடைத்தார். “வாட் ஹேப்பன்ட்?  அம்மா வரலயா?” “ஐ’ம் சாரி” என்றாள். தொடர்ந்து  அவளால் அவளது கணவரின் நினைவிலிருந்து விடுபட முடியவில்லை என்பதை தமிழில் சொல்வதற்கு அச்சப்பட்டு “ஐ ஹேவ் நாட் லெப்ட் இட் மைசெல்ப் ஃப்ரம் சம் மெமரிஸ்” என்றாள். “என்ன முடிவுல வந்திங்க?” “சாரி சொல்லலாம்ன்னு வந்தேன். என்னால முடியலன்னு நேரில மன்னிப்பு கேக்கலாமுன்னு வந்தேன்” அரிதாய் சாமியிடமிருந்து வெளிப்படும் கோபம் அன்றும் வெளிப்பட்டது. “வாட் எ சில்லி ஒன். கேஸ் இட் கம் நௌ இட்செல்ப் ஆர்  ஆன் பிஃபோர்?” என்று வார்த்தைகளை வீசி எறிந்தார். எரிந்த வார்த்தைகள்  அவரவர்களின் மனதுக்குத் தக்கவாறு சுட்டது. கோபத்தின் ஆழம் அவர் வண்டியின் கிக்கரை உதைக்கும் ஆவேசத்தில் வெளிப்பட்டது.  வேகமாக வெளியேறிப்போனார்.   சாட்சிக்காக வந்த என் சக ஊழியர் “சாரி சார். நாளை பார்ப்போம்” என விடைபெற்று, ஒருநாள் விடுப்பு வீணாகிப்போனதோடு காத்திருந்த வெறுப்பை காட்டிக்கொள்ளது நடிக்க முடியாமல் நகர்ந்தார். நாங்கள் தனிமைப்பட்டுப் போனோம். தவறுகை சுஜி இரண்டு நாட்களாக  வீல் வீலென்று கத்துகிறாள்.  மம்மி வேணும் மம்மி வேணுமென்ற வார்த்தைகள் ஓய்வின்றி  வந்த வண்ணம் உள்ளன.  ஓர் உண்மை  சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டதென்பதால் பெயர் மாற்றப் பட்டுள்ளது.  மற்றவர்களைக்கூட சுஜி அப்பா, சுஜி அம்மா,  சுஜி பாட்டி என்றுதான் குறிப்பிட வேண்டியுள்ளது. மறு நாள் காலையில் வீடு திரும்பிவிடலாமென்று சுஜியை பாட்டியிடம் விட்டுவிட்டு பெற்றோர் வீட்டிற்குப் போன சுஜி அம்மாவால் வர இயலவில்லை.  ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்படும்  விபரம் ஏற்கனவே அறிந்திருந்தும் ஒரு போக்குவரத்து கூட இல்லாமலாபோகும் என்ற அலட்சிய மதிப்பீடு அம்மா வீட்டிலேயே தங்க வைத்துவிட்டது.   வெளியில் வந்தால் காவல்துறையினர் கண் மண் தெரியாமல் மனிதர்களை  அடிக்கிறார்கள். பணிசுமை குறைவான நேரங்கள் சில மனிதாபிமான காவலர்களைத்   தவிர காவல்துறையை நண்பன் என்று சொல்வது சுத்தமான அக்மார்க் பொய்.  நண்பனும் இல்லை, கிண்பனும் இல்லை. முதல் இரண்டு நாட்கள் சுஜி அமைதியாகத்தான் இருந்தாள்.  மூன்றாம் நாள் தாயின் நினைப்பு வந்துவிட்டது. சுஜி, பாட்டியின் செல்லம்.  பாட்டி சொல்லை தட்டுவாள்.  இந்த வயதிலேயே எதிர்த்து பேசுவாள்.  கொஞ்சுவாள்.  கெஞ்சுவாள். ஆனால், இப்போது பாட்டியின் பாசமெல்லாம் எடுபடவில்லை.   தந்தை அதட்டிப் பார்த்தார்.  சாம பேத தான தண்ட முயற்சிகள் எல்லாம் தோற்றுப்போயின. நேற்று இரவு மூன்று மணிக்குத்தான் கண்ணயர்ந்தாள்.   தூங்கி பத்து மணிக்கு விழித்ததும் மீண்டும் அழுகை தொடர்ந்தது.  “ஏம்பா இவள எப்படியாவது அம்மா கிட்ட விட்டுட்டு வந்துடேன்” என்றாள் சுஜி பாட்டி. “வெளிய போனா போலீஸ் அடிக்கிறத பேஸ் புக், யூட்யூப்ல எல்லாம் பாக்குறிங்கல்ல” என்றார் சுஜி அப்பா. “கத்தி கத்தி தொண்ட காயுதுப்பா. குழந்தையோடுபோன விட்டுடுவாங்க.  அவ அழுவுறத செல்போன்ல வீடியோ எடுத்துக்க.  கேட்டா காமி.  என்ன கிள்ளியா முழுங்கிடுவாங்க” யோசித்தார்.   “சரி போம்போது விட்டாலும் வரும்போது  மறச்சிபுடுவாங்க” “என்னோட மருந்து சீட்ட எடுத்துக்க.  மாமனார் வீட்டுக்குப் பக்கத்துல உள்ள மருந்து கடையில மருந்து வாங்கிக்கிட்டு வா.   இந்த மருந்து வேற எங்கேயும் கெடைக்காதுன்னு  சீட்ட காமிச்சிட்டு வந்துடேன்.”   அம்மா ஐடியாக்காரி. வேறு வழி தெரியவில்லை.  பிற்பகல் இரண்டு மணி வாக்கில் சுஜியை பைக்கில் அழைத்துக்கொண்டு கிளம்பினார்.  தெருக்கள் வெறிச்சோடிக் கிடந்தன.  முக்கால்வாசி தூரம் கடந்தாகிவிட்டது. இன்னும் மூன்றே கிலோமீட்டர்தான் பாக்கி.  பெரிய தெருவிலிருந்து திரும்பி நாணயக்காரத் தெருவுக்குள் நுழையும்போது  இரண்டு காவலர்கள்  வழியில் நின்றார்கள்.  ஒருவர் உதவி ஆய்வாளர். மற்றொருவர் காவலர். “ஏய் நிறுத்து . . நிறுத்து . .” என காவலர் கத்திக் கொண்டு  வாகனத்தின் முன் சக்கரத்தில் லத்தியால் அடித்தார். வாண்டி சாயும் நிலைக்கு வர நிறுத்தி இறங்கி ஸ்டாண்ட்  போட்டுவிட்டு எஸ்ஐயிடம் விபரத்தைச் சொல்லலாமென அருகில் சென்று “பாப்பா அழுவுறா அதான் அம்மாகிட்ட விடப்போறேன் சார்” என்றார்.  அவர் அதை காதில் வாங்குவதாக இல்லை.  டமார் டமார்  என காலில் அடிக்க ஆரம்பித்தார்.   “சார். பொறுங்க சார்.  போட்டோ கூட. . .” என சொல்வதற்குள் என்ன ஏது என கேட்காமல் காவலரும் சேர்ந்து பிட்டத்தில் அடிக்க ஆரம்பித்தார். பார்த்துக் கொண்டிருந்த சுஜி பயத்தில் கத்திக்கொண்டு வண்டியிலிருந்து கீழே விழுந்தாள்.  அடியை தாங்கிக்கொண்டு ஓடிப்போய் மகளை தூக்கி வண்டியில் வைத்து தாங்க முடியாத வலியோடு வண்டியை உதைத்து  ஓட்டினார்.  அப்போது  கூட அந்த காவலர் பின் சக்கரத்தில் காட்டுமிராண்டி போல அடிக்கிறார்.  நல்லவேளை விழுந்ததில் சுஜிக்கு காயம் ஏதுமில்லை.  பயத்தில் உறைந்து போய் அழுகையை நிறுத்திவிட்டாள் சுஜி. வலியோடும் வருத்தத்தோடும் மகளை மாமனார் வீட்டில் சேர்த்துவிட்டு அருகில் உள்ள மெடிக்கல் ஸ்டோரில் மருந்து மாத்திரைகளை வாங்கி பார்வையில் படும்படி வண்டியின் முன்னால் தொங்கவிட்டுக் கொண்டு பயத்துடன் வீடு திரும்பினார்.  அதிர்ஸ்டவசமாக வழியில் எந்த சனியனும் இல்லை. ஊரடங்கில் எல்லோரும் வீட்டில் அடைந்து கிடக்கிறார்கள்.  வெளியில் சென்று நோய்த் தொற்றை  வலிய வாங்கிக் கொள்ள யார் விரும்புவார்கள்.   அவசரம் என்பது யாருக்கேனும் இருக்காதா என்ன!.   ஆர அமர விசாரித்து அவர்களுக்கு விதிவிலக்கு அளித்தால் என்ன. வேண்டுமென்றே வெளியில் சுற்றினால் நடவடிக்கை எடுக்கட்டும்.  திருடனைகூட அடிக்க சட்டத்தில் இடமில்லை. உண்மையை வெளிக் கொண்டுவர அவனை அடித்தால் அதில் தார்மீக நியாயம் இருக்கலாம்.  அப்பாவிகளை சகட்டுமேனிக்கு கண்மூடித்தனமாக அடிப்பது எந்த வகையில் நியாயம். சட்டத்தை நடைமுறைப்படுத்தும் அமலாக்கப் பிரிவின் செயல்பாடுகள்  சரியில்லை.  பெரும் புள்ளிகள் ஊழல் செய்தால் அரசியல் தலையீட்டில் உண்மைகள் மறைக்கப்படுகின்றன.   ஏழை எளியோரின் நியாயங்கள் பணம் படைத்தவர்கள் எடுத்து எறியும் சில்லரையால் நீர்த்துப்போகின்றன. சுஜி கம்னு இருக்கிறாள்.   கலகலப்பு இல்லையென சுஜி அம்மாவிடமிருந்து மறுநாள் தகவல் வந்தது. ஒரு வாரம் கழிந்தும் அத்தியாவசிய வேலையாக வெளியில் செல்ல பாஸ் நடைமுறைக்கு வர, அவுட் பாஸை வாங்கிக்கொண்டு மகளையும் மனைவியையும் வீட்டுக்கு அழைத்து வந்தார் சுஜி அப்பா. சுஜி மன நிலை பாதிக்கப்பட்டிருப்பதை உணர முடிந்தது. பாட்டியிடம்கூட முகம் கொடுத்து பேசுவதில்லை.  காரணமில்லாமல் அழுதாள்.  டாம் அண்ட் ஜெர்ரி, ரேஞ்சர் பவர் போன்ற வழக்கமாக பார்க்கும்  நிகழ்ச்சிகளை தொலைக்காட்சியில்  பார்ப்பதில்லை.   அவளுக்கு மிகவும் பிடித்த டோராவின் பயணங்களை  வைத்து பார்க்கச் சொன்னதும் ரிமோட்டை பறித்து உடைத்து விட்டாள். வேறு வழியின்றி ஒரு வாரத்திற்குப் பின் குழந்தைகள் மன நல மருத்துவர் சிவராமனை அணுகினார்கள்.  போலீஸார்  தன்னை தாக்கிய விபரத்தையும், அதனை பார்த்த பயத்தால் பாதிப்பு ஏற்பட்டிருக்கலாம் என்றும் சுஜி அப்பா காரணம் சொன்னார். வைத்தியரிடம் உண்மைதான் பேச வேண்டுமில்லையா.  கேட்டதும் ஆடிப் போய்விட்டாள் சுஜி அம்மா.  “அட பாவி மனுஷா.  என்கிட்ட கூட இத சொல்லலயே” என பொங்கி எழுந்தாள்.  பாவி மனுஷா என்ற வார்த்தைகள் கணவர் மீது அவளுக்குள்ள ஈடுபாடின் உச்சமான சொற்கள். தந்தையையும் மகளையும் வெளியே அனுப்பிவிட்டு “அவர் நடவடிக்கையில ஏதாவது மாற்றங்கள் தெரியுதாம்மா?” என்று கேட்டார் சிவராமன்.  “அப்படி ஒண்ணும் இல்ல டாக்டர்.  பட் கொஞ்சம் அப் செட்டாத்தான் இருக்கார் டாக்டர்.  பாப்பா  இப்படி இருக்கத்தால இருக்குமோன்னு நெனச்சேன்.” “இருக்கலாம்.” “என்கிட்டகூட நடந்ததை சொல்லலையே.  அப்படி என்ன கணவன் மனைவி உறவோ” என்று வருத்தத்தோடு அலுத்துக் கொண்டாள். “இதப் போய் பெருசா எடுத்துக்காதிங்க.  பல ஆண்கள் அப்படிதான்.  வலியான விஷயங்களை வீட்டுல சொல்லாம பாரத்தை தானே சுமந்துகிட்டு இருப்பாங்க. பெண்களைப் போல அழுது ஆர்ப்பாட்டம் பண்ணமாட்டாங்க.  எதற்கு குடும்பத்தார கஸ்டப் படுத்தணுங்குற குணம்.  ஜென்ஸோட பிஹேவியர் அது. டேக் இட் ஈஸி.” ஒரு விளக்கவுரைக்கு பின் சுஜி அப்பாவை உள்ளே அழைத்தார். சுஜி அப்பாவுக்கு தான் தாக்குண்டது பெரிய பாதிப்பில்லைதான். வேறு வழியும் இல்லை.  பழக்கப்பட்டவர். இளமையிலேயை வறுமையை சுமந்தவர்.  வேலை பார்க்கும் கம்பெனியில் எதிர்கொண்ட இன்னல்கள் ஏராளம். போகப்போக சரியாகிவிடும்.    சுஜி மீதுதான்  இப்போது கவலை. “பாப்பா கொஞ்சம்; ரோம்பவே பாதிக்கப்பட்டுருக்குறா.  மருந்து மாத்திரையெல்லாம் அவ்வளவு எஃபக்டியுவா இருக்காது.  எழுதித்தாறேன்.   அந்த சம்பவத்திருந்து விடுபட மனச டைவர்ட் பண்ணணும். குழந்தைளோட மிங்கிள் பண்ணி விளையாட விட கொரோனா டயத்தில பாஸிபுல்  இல்ல.  ‘க்ளவுட் நைன்’  என்ற சில்ரன்ஸ் ப்ளையிங்க் சென்டர்  இருக்குல்ல அங்க டெய்லி அழைச்சிகிட்டுபோய்  டூ திரீ ஹவர் விளையாட விடுங்க.  கடவுள வேண்டிக்கிடுங்க.  ஹீ ஈஸ் கிரேட்.  டேண்ட் வொரி”  அறிவுரையும் ஆறுதலும் சொல்லி அனுப்பி வைத்தார்  டாக்டர் சிவராமன். உடலளவில் பாதிக்கப்பட்டால் நாளடைவில் சரியாகி விடும்.  ஒரேயடியாக போய்விட்டால் கூட அழுது புரண்டு கண்ணீர் விட்டு, காலம் மெல்ல வேதனைகளை குறைத்து ஆறுதல் தந்துவிடும்.   மனநிலை பாதிக்கப்பட்டால் அதனை அனுவிப்பவருக்கே வலியின் ஆழம் தெரியும்.  நிரந்தர பாதிப்பு என்றால் வாழ்நாள் முழுக்க அவர்களை பராமரிப்பது யார், தங்களுக்கு பின் அவர்களின் நிலை என்னவாகும் என பெற்றோர்கள் யோசித்து யோசித்து மனம் நோந்து நடைபிணமாக வாழும் பெற்றோர்களும் உண்டு.   சுஜி நலமாக வேண்டும்.   யார் கையில் இருக்கிறது? அவளுக்காக பிரார்த்திப்போம். ஆமியின் அரட்டை உலகம் ஆமி ஓர் இங்கிலீஷ்காரி.  அமெரிக்க டெக்சாஸ் நகரைச் சார்ந்தவள்.   நான் அரைகுறையாக ஆங்கிலம் தெரிந்தவன்.   எங்களுக்குள் இணையம் மூலம் 2015 முதல் மூன்றாண்டுகள் நட்பு இருந்தது. ஆமி, ஆண்ட்டி, ஆமி ஆண்ட்டி என்று எப்படி அழைத்தாலும் அவளுக்கு அதில் பிரியம். ஆமி என்ற வார்த்தையின் அர்த்தம்கூட அதுதான்.   Amy என்பதை em- mee என உச்சரிக்க வேண்டும்.  தமிழில் அதற்கு சரியான வெர்னகுலர் இல்லை.  எனவே ஆமி என்று குறிப்பிடுகிறேன்.  எங்களின் சம்பாஷணைகள் டேக்ஸ்ட் வடிவம் கொண்டது.  ஆரம்பத்தில் எங்கள் உரையாடல் காமம் கலந்ததாகத்தான் இருந்தது. ஆனால் அதில் விரசம் இருக்காது.  அவர்களின் கலாச்சார பின்னணியில், அந்த வெளிப்படையான உரையாடலை அவள் எதிர் பாலின ஈர்ப்பு  என குறிப்பிட்டதே இல்லை. அந்த அரட்டையை அவள்  ஒரு  ஃபன் டெக்ஸ்ட் என்பாள்.   அது உடல் சார்ந்திராத மன ஓட்டத்தின் வெளிப்பாடுதானே. முகம் பாராத எழுத்தின் வடிவ பரிமாற்றம்தானே என்பாள். “என்ன உடையில் இருக்கிறீர்கள்?” “டென்ட் ட்ரெஸ்.    இளஞ்சிப்பு வண்ணம்” “டென்ட் ட்ரெஸ்.   அது எப்படி இருக்கும்?” “டென்ட் போல கழுத்திலிருந்து கால்வரை லூஸாக”. "ஓ . . எனக்கு பிடித்த வண்ணம்.   முடி வெள்ளை.  சரியா.? “பழுப்பு நிறம்” “தேவதை!” “உங்களுக்குத் தெரிவது, எனக்குத் தெரியாது”. அவள் விவாகரத்து பெற்று பதினைந்து ஆண்டுகள் ஆகிவிட்டனவாம்.  ஆதாம் என்று ஒரே மகன்.   சிறிய குடும்பம்.  எளிய வாழ்க்கை.  ஆரம்பத்தில் வீடுகளை சுத்தம் செய்து கொடுப்பது அவள் பணி. நாமெனில் அதை கூட்டுபவள் அல்லது ஸ்வீப்பர் என்று கேவலமாகச் சொல்லுவோம்.  அங்கே க்ளீனர்.   தன் வீட்டிற்கு பக்கத்தில்  ஆறு வீடுகள் பத்து கிலோமீட்டர் தள்ளி மூன்று வீடுகளில் பணிபுரிந்து வந்தாள்.   தூரத்தில் உள்ள மூன்று வீட்டிற்கு தன் சொந்த காரில் சென்று வேலை செய்து வருவாள்.  சுத்தம் செய்தல் என்பது இயந்திர மயமானதாக இருக்கும்.  தினந்தோறும் சென்று பணிபுரிய வேண்டியதில்லை.  இரண்டு மூன்று நாட்களுக்கு ஒரு முறை சென்று வேக்கும் கிளீனர் மூலம் வீட்டை சுத்தம் செய்துவிட்டு வர வேண்டியதுதான்.  தற்போது அந்த பணியை வேறு ஒருவருக்கு கொடுத்துவிட்டு அதே வீடுகள் மற்றும் கூடுதலாக சில வீடுகளுக்கு தேவையான பொருட்களை வாங்கி வந்து குறித்த நேரத்தில் கொடுப்பதே வேலை.  பொருட்களை பஜாரில் தருவிப்பது  சப்ளை செய்வது எல்லாம் காரில்தான். நட்பு மட்டுமல்ல,  அவள் மூலம் நான் ஆங்கில மொழியிலும் என்னை மேம்படுத்திக்கொண்டேன்.  ஆரம்பத்தில் சில நாட்கள் எனக்குத் தெரியாத கடினமான பெரிய வார்த்தைகளை தவிர்த்து எளிமையாக எனக்காக பயன்படுத்தத் தொடங்கினாள்.  தெரியாத வார்த்தைகளென்றால் அனுமானத்தில்  மழுப்பலான சம்பந்தமில்லாத பதிலை அளித்துவிட்டு சாவகசமாக அர்த்தத்தை தேடி கண்டு பிடித்து அதே வார்த்தைகளை பின்னர் நானும் பயன் படுத்துவேன்.  போகப்போக அவளின்  பொது மொழியையும்   அந்த பகுதியின் வட்டார வழக்கின் பல வார்த்தைகளைக்கூட தெரிந்து கொண்டேன்.  அவளின் அன்றாட வேலைகளை கவனித்துவிட்டு பிற்பகல் இரண்டு மணிக்குதான் இணைய பக்கம் வருவாள்.  அப்போது  இங்கே பின்னிரவு என்பதால்  பெரும்பாலான நாட்களில் இரவு மூன்று மணிக்குமேல் நான் தூங்கியதே இல்லை. அவள் விவகாரத்து பெற்றதற்கான காரணத்தைக்கூட நான் கேட்டது இல்லை.  நாளடைவில் எங்கள் உரையாடல் நட்பு மிகுந்ததாக பரஸ்பரமான அக்கறை கொண்டதாக முக்கியத்துவம் பெறத் தொடங்கியது.  யார் வீட்டிற்குப் போனாள்,  குறிப்பிடும் படியான என்ன நிகழ்வுகள் நடந்தன, மகன் தாமதமாக வீட்டிற்கு வந்தது,  கிரிக்கெட் விளையாட்டில் பந்து காலில் மோதி வலி தாங்காமல் துடித்தது, கார் வழியில் சிறு பழுது ஏற்பட்டது போன்ற தகவல் பரிமாற்றங்களை நானும் ஆவலோடும் ஈடுபாட்டோடும் கேட்பேன்.  என்னை பற்றியும் கேட்பாள்.   சொல்வேன். சில விஷயங்களை துருவித் துருவி வெளிக்கொணர முயற்சிப்பாள். அது என் வாழ்க்கை மீது அவளுக்கு இருந்த அக்கறையின் வெளிப்பாடாகவே உணர்ந்து நிகழ்ந்து போவேன்.  பொய் சொன்னால் அவளுக்கு தெரியவா போகிறது. ஆனால் சொல்ல வராது. “நீங்கள்  ஏன் திருமணம் செய்துகொள்ள வில்லை சந்தோஷ்” என்றாள் ஒருநாள். “பிடிக்கவில்லை” “அதான் ஏன்?” “திருமணம் என்பது கட்டாயமில்லையே”. “அது சம்பிரதாயமாகிவிட்டதே” “உங்கள் மதத்தில் பாதர் இல்லை. நன்ஸ் இல்லை.  எங்கள் நாட்டில் பிரமச்சாரிகள், துறவிகள் லட்சக்கணக்கில் இருக்கிறார்கள்”. “நான் கேட்டது பொதுவானது. இதே கேள்வியை உங்கள் உறவினர்கள் யாரும் கேட்கவே இல்லையா?” “கேட்டார்கள்” “பதில் என்ன?” “வேண்டாம்.  பிடிக்கவில்லை” “அதான் . . .   ஏன்?” “விதிவிலக்குகளில் நானும் இருக்கக்கூடாதா என்ன?” “இருக்கலாம்.  சமூக வழக்கத்தை விட்டு தனியாக நின்றால் அதற்கான காரணம் ஏதேனும் இருக்கும்” “இருக்கும்.  இல்லாமல்கூட மொட்டையாய் தட்டையாய் இருக்கும்”. “இருந்தால், அதை என்னிடம் சொல்லத் தயங்கினால் வேண்டாம்” “ஆமியிடம் சொல்லாமலா!” “தென், டெல் மீ” “ஒரு பெண்ணிடம் கொஞ்சகாலம் பழக்கம் வைத்திருந்தேன்” “யாரவள்?” “என்னுடம் பணிபுரியும் விதவைப் பெண்” “ய்யா யா” “நான் அவளுடன் பழகத் தொடங்கியதே ஒரு உதவி செய்யும் இரக்கம் கலந்த காதல் மனநிலையில்தான். இளம் விதவை வாழ்நாள் முழுக்க ஏன் தனியே இருக்க வேண்டும் ?” “இது என்ன வாதம் சந்தோஷ்.   நான்சென்ஸ். நீங்கள் இல்லை என்றால் அவளுக்கு வேறு யாரும் கிடைக்கமாட்டார்களா என்ன?” “கிடைத்தது.  அதுதான் பிரச்சனை” “எப்படி?” “என்னைவிட வசதியானவன் கிடைத்ததும் அவனை வாழ்க்கைத் துணையாக்கிக் கொண்டாள்”. “அதுதான் காரணமா?  எல்லா பெண்களையும் வெறுக்குறிங்க.  . !” “இல்லையே.    அவளைக்கூட வெறுக்கவில்லை.  அப்படியென்றால் நான் எப்படி ஆமியுடன் பேசுகிறேன்” “முகம் தெரியாமல் இருக்கிறோமே” “இருக்கட்டுமே” “என்னுடைய முகத்தைப் பார்க்க ஆவல் இல்லையா சந்தோஷ்?” “இல்லை”. “ஏன்?” “உணர்வுகள் முகத்திலிருந்து வருவதில்லையே” “என் வயது ஐம்பது சந்தோஷ்” “எனக்கும்  முப்பத்தி ஆறு  ஆகிவிட்டது ஆண்ட்டி”. “விருப்பத்திற்கும் வயதிற்கும் தொடர்பில்லையோ”. “ஆம். தேசங்களுக்கும் மொழிகளுக்கும் விருப்பத்துடன் தொடர்பு இல்லை.  அது ஆன்மாவிலிருந்து தோன்றும் கலப்படமற்றது”. “ஐ லைக் யூ சந்தோஷ்” “ஐ லவ் யூ ஆமி” “ஆமியின் முத்தங்கள்” “சந்தோஷமான தருணங்கள்” ஒருநாள் கணினியில் எங்களின் அரட்டையை தனது மகன் பார்த்து ரசித்துக்கொண்டிருப்பதாகச் சொன்னாள். “என்ன? . . .  தாயின் உரையாடலை மகன் ரசிக்கிறாரா?” “ஆம்.  அவனுடன் சாட் செய்கிறீர்களா?” என்றாள். “ஆம்” என்றதும் ; " ஹாய் அங்கிள்!" என்றான். “ஹாய்.  யுவர் ஸ்வீட் நேம் ?” “ஆதாம்” “என்ன படிக்கிறீர்கள்” “சீனியர் செக்கேன்டரி. ஏனிங் வொயில் லேனிங்க்” என்றான். “கங்க்ராஜுலேஷன்ஸ்.   உங்கள் மம்மி எனக்கு நல்ல சிநேகிதி” “அடிக்கடி உங்கள் சாட்டை பார்த்திருக்கிறேன்” “அது உங்களுக்கு அசௌகரியமாக இல்லையா ஆதாம்?” “இல்லை. உங்களுக்கு பொழுதுபோக்கு உனக்கு விளையாட்டு” “ஓகே. பெஸ்ட் ஆப் லக்.  ஸ்டெடி வெல்”என்றேன். “என்ன அங்கிள்?” “என்ன ஆதாம்?” “ஏதாவது ஸெக்ஸி  ஃபன் ஸ்டோரி சொல்லுவிங்கன்னு நம்பிக்கொண்டு இருந்தேன்”. “அது மம்மி கிட்ட சொல்லுறது” “நோ.   மம்மிகிட்ட பரிமாறிக்கிடுறது.  என்கிட்ட சொல்றது” “ஹஹ்ஹா. . ஹ்ஹா” “உங்களிடம்  ரகசியமாக உள்ளதை நாங்கள் வெளிப்படையாகச் சொல்கிறோம்” “நாங்கள் அதை நாகரிகம் என்கிறோம்” “ஆனால், கபடம் நாகரிகமாகாது அங்கிள்” “கபடமற்ற ஆன்ம புனிதமானதுதானே” “ஆம்.  அது இங்கேயும் இருக்கு.  எங்கேயும் அங்கிள்” “சிறு வயதிலே நிறைய தெரிந்து வைத்திருக்கிறீர்கள் ஆதாம்” “உங்கள் நாட்டு புத்தரை பற்றி நான் படித்திருக்கிறேன்” “ஓ. ஃபைன்.” “அங்கே எழுதிய வாட்ச்யானாவின் காமசூத்திரம் நூல் இங்கே ஆங்கில மொழிபெயர்ப்பு வடிவில் கிடைக்கிறது. கற்க வேண்டிய அற்புதமான நூல்” “உலகம் சுருங்கிவிட்டது இல்லையா.  . !” “ஆம். நாம் எளிதில் சந்திக்கிறோமே!” ஆமியின் கொஞ்சல்கள்  கோடை காலத்து நெடுஞ்சாலை வழியே காலைத் தென்றலில் கைகோர்த்து நடப்பதைப்போன்றவை. அவளின் ஆலோசனைகள் இறுகி வெடித்துப்போன களிமண் தரையில் விழும் மழைத்துளிகள் போன்று உள்வாங்கிக் கொள்ளத் தக்கவை. அவளின் அதிகாரம், கண்டிப்பு, மிரட்டல்கள்,  அதட்டல்கள், அறிவுரைகள் மடியில் படுத்து கிடக்கையில் பெறுகின்ற தாயின் வருடல்களுக்கு ஈடானது. அவள் உதவும் குணம் நிறைந்தவள். யாருக்காவது ஏதாவது கஷ்டம் என்றால் ஓடிப்போய் உதவி செய்பவள். தனது பொருளாதார சக்திக்கு மீறி வறியவர்களுக்கு உதவுவாள். கொங்கோ, சூடான், எத்தியோப்பியா போன்ற நாட்டு ஏழை  மக்களுக்கு உதவிடும் வகையில்  அப்பகுதியில் இயங்கிவரும்  சர்வதேச ஏழ்மை மீட்புக் குழுவில் அவளும் ஓர் உறுப்பினர் என்றும் அறிந்து கொண்டேன். ஏனோ, நீண்ட நாட்களாக ஆமியை இணைத்தில் காண முடியவில்லை.  அவளது மகன் ஆதாம் வருகிறானா என தேடித்தேடி ஏமாந்து போனேன்.  அவன் பேயரில்  வந்தால் கூட வேறுவேறு  ஆதாம்களாக இருந்தார்கள். அதிஷ்ட வசமாக ஒருநாள் நான் தேடிய ஆதாம் கிடைத்துவிட்டான்.  ஹாய் சொன்னதும் என்னை அடையாளம் தெரிந்து கொண்டுவிட்டான்.  “நீண்ட நாட்களாக ஆமியை காணாமே ஏன்? நன்றாக இருக்கிறாளா?”  என்றேன் “ஸாரி அங்கிள்.   ஷீ இஸ் நோ மோர்” என்றான். “ஓ மை காட்” என் பொழுது இருண்டு போனதுபோல் உணர்ந்தேன்.  “வாட் ஹேப்பண்ட் ஆதாம்.  ஒய்? ஒய்?” என  என்னை அறியாமல் வாய்விட்டும்   சத்தமிட்டுவிட்டேன். சற்று நேரம் அமைதியாக இருந்தான்.  “அம்மாவுக்கு என்னாச்சி ஆதாம்?” “ஆகஸ்ட் மாதம் வீசிய ஹார்வே புயலில் சிக்குண்டு என்னை விட்டுட்டு பொய்ட்டாங்க”என்றான். "ஸாரி. எப்படி? “வீட்டை விட்டு எவரும் வெளியே வரக்கூடாதுன்னு முதல் நாளே அறிவிச்சிட்டாங்க.  விடிகாலை நாலு மணிக்கு அவங்க ப்ரண்ட் ட்ரீடி வீட்டிலிருந்து ஒரு போன் வந்தது.  அவருக்கு  சடன் கார்டியாக் அரெஸ்ட்ன்னு.    மீட்புக் குழுவுக்கு சொல்லியாச்சி உடனே வந்துடுவாங்க நீங்க வர வேண்டாம்ன்னு சொல்லியும் கேக்காம காரை எடுத்துகிட்டு போனபோது பலத்த காற்றில் கார் உருண்டு ஒரு ஆழமான தண்ணீரில் மூழ்கிப் பொய்ட்டாங்க”. “கேட்க கனமா இருக்கு ஆதாம்.  எனக்கே தாங்கவில்லை” “இறப்பதற்கு முதல் நாள்கூட உங்களை பற்றி பேசினாங்க” “ஓ. . . என்ன சொன்னாங்க?” "நாம வசதியா இருந்தா சந்தோஷ இங்கே அழச்சி மேரேஜ் பண்ணிடுவேன் அப்படின்னாங்க. வயது வித்யாசம் இல்லையா மம்மின்னேன். “வயதான ஆண்கள் சின்ன பெண்ணுகள திருமணம் செய்யும்போது, நான் சந்தோஷ திருமணம்  செஞ்சிகிட்டா என்ன தப்பு.  எங்களுக்குள்ள பதினைந்து வயதுதான் வித்தியாசம்”  என்றார். “அவர் திருமணமே வேண்டாம்ங்குறார்” என்றேன். “எப்படியும் ஒத்துக்கொள்ள வச்சிடுவேன்” என்றார். “நீங்க விக்டரோட பழக்கம் வச்சிருந்தது தெரிஞ்சா ஒத்துக்கமாட்டார் மம்மி” என்றேன். “அது அவருக்குத் தெரியும்.  பெருசா எடுத்துகிடல.  தெரிஞ்ச பிறகும் லவ் யூ சொல்லுவாரு எனக்கு என்னவோ  சந்தோஷ்  இந்த கலாச்சாரத்துல பொறந்திருக்கணும்ன்னு தோனுது”. “என்ன மம்மி சொல்லுறிங்க” என்றேன். “முடிஞ்சா . . .  வந்தா. . .  நல்லாதான் இருக்கும்” என ஆதங்கப்பட்டார். இருவரும் சிரித்தோம் என முடித்தான் ஆதாம். “அங்கிள் உண்மையே  அப்படின்னா நீங்க ஓகே சொல்லிருப்பிங்களா?” “யோசித்திருப்பேன் ஆதாம்” “அப்போ என்னோட மம்மிக்காக உங்க கொள்கையை மாத்தி இருப்பிங்களா?” “மேரேஜ் பண்ணிகிடாதது பெரிய கொள்கையில்ல. ஒரு விருப்பம் அவ்வளவுதான் ஆதாம்.” “கல்யாணம் பண்ணிகிடுறதும் ஒரு விருப்பம்ங்குறிங்க” “ஆமி சொன்ன மாதிரி சந்தர்ப்பம் கெடச்சிருந்தா  யோசிக்க தோனிருக்கும் . அது ஆமிக்கான எனது விருப்பமா இருந்திருக்கும்” “மம்மி மரணம் எனக்கு மறக்க முடியாத துன்பம் அங்கிள்.  அது விலகிப் போகவே போகாது அங்கிள் ரொம்ப சப்பராகுறேன்” “மே காட் சேவ் யூ ஆதாம்” “தேங்ஸ் அங்கிள்”. “ஒரு ஹெல்ப் பண்ண முடியுமா ஆதாம்” "ஷ்யூர் அங்கிள். “ஆமியோட போட்டோ இருந்தா ஒண்ணு அனுப்புறிங்களா?” “அப்படின்னா மம்மிய நீங்க  போட்டோவுலகூட பாத்துல்லயா?” “இல்லையே.  பலமுறை அனுப்புறேன்னாங்க.   அன்புக்கு உருவம் எதுக்கு.  மனசு போதுன்னுட்டேன்” “வாட் எ லவ் தெட் இஸ்!” என்றவன் அடுத்த வினாடியே ஆமியை வெப்பில் அனுப்பி வைத்தான். தேவதைகள் என்றும் அழகுதான்.  ஆமி வயதான அழகான தேவதை. இனியும் அதற்கு மேல் அவளால் அழகாக முடியாது. நெய்தலின் நினைவுகள் எப்படியாவது கடலில் பயணித்து பார்க்க வேண்டும் என்ற என் கனவு நினைவாகும் வகையில் எனக்கு அந்த வேலை கிடைத்தது. இளம் வணிகவியல் படிப்பை முடித்து  வீட்டில் வேலையின்றி இருந்த என்னை பொழுதுபோக்காகவும் வருவாய் ஈட்டும் வகையிலும் இருக்கட்டுமே என்று எனது பெரியப்பா ஒரு அக்கவுண்டென்ட் வேலை வாங்கிக் கொடுத்தார்.   அது ஐந்தாறு மாதங்களே நீடிக்கும் முற்றிலும் தற்காலிகமான வேலை.  அக்கவுண்டன்ட் என்றால் பெரிய நிதி நிறுவனம் வணிக நிறுவத்தில் வேலை என்று திகைப்படைய வேண்டாம்.  வருவாட்டு கணக்கு எழுதுவது. எங்கள் ஊரிலிருந்து பத்து கிலோ மீட்டர் தள்ளியுள்ள கோடியக்கரை என்ற ஊரில்தான் அந்த வேலை பார்த்தேன்.  கடற்கரையில் பொழுதை போக்குவது கடலோடு சொந்தம் கொண்டாடுவது அதன் அழகை அள்ளி அள்ளி பருகுவது கடலில் கொஞ்ச தூரமாவது பயணித்து பார்ப்பது போன்ற காரணங்களுக்காகவும் ஒரு மாறுபட்ட சூழலில் வாழ்ந்து பார்ப்போமே என்ற ஆவலிலும்தான்  அங்கே பணிபுரிய நான் ஒத்துக்கொண்டேன். கோடியக்கரை மற்று கொடியக்காடு ஆகிய இரு ஊர்களும் கடலும் கடலைச் சார்ந்த பகுதியாகும்.  கிழக்கு மற்றும் தெற்கு புறங்கள் கடலாலும் வடக்கு மற்றும் மேற்குப் புறங்கள் உப்பங்கழி சதுப்பு நிலங்களாலும் எல்லைகளாகக் கொண்ட ஒரு தீவு போன்ற சுற்றுலாத் தளமாகும்.  அது ஒரு பெரிய வன விளங்குகள் மற்றும் பறவைகள் சரணாலயம்.   மான்கள், குதிரைகள், காட்டுப்பன்றிகள், குரங்குகள் மற்றும் பல விலங்குகளை காணலாம்.  ஆண்டுதோறும் டிசம்பர் மாதம் வெளி மாநிலங்கள் மற்றும் ஐரோப்பா கண்ட நாடுகளிலிருந்தும் அண்டார்டிக்காவிலிருந்தும் லட்சக்கணக்கான  பறவைகள்  வலசை வந்து முட்டையிட்டு குஞ்சு பறித்து ஏப்ரல் மே மாதங்களில் தங்கள் இடத்திற்கு திருப்புகின்றன. அதில் மிகவும் பிரசித்திபெற்றது பூநாரை எனப்படும் பறவையாகும்.  அதன் பேரில்தான் அங்குள்ள அரசு சுற்றுலா மாளிகைக்கு பூநாரை இல்லம் என பேயரிடப்பட்டிருந்தது. மக்களின் தொழில் மீன்பிடித்தலாகும்.  வருடம் முழுவதும் அத்தொழிலை மேற்கொண்டாலும், ஏப்ரல் முதல் ஆகஸ்ட் வரை அங்கே மீன் பிடி காலம் என அழைப்பர். அக்காலத்தில் அதிக அளவு மீன்கள் கிடைக்கும்.  வெளி ஊர்களில் இருந்து அங்கு வந்து தங்கி மீன் பிடிப்பார்கள்.  எனக்கு வேலை கொடுத்தவர்  ரெங்கையாப்பிள்ளை என்ற கைநாட்டுப் பேர்வழி ஆவார்.  பையன் ருஷ்யாவில் மருத்துவம் பயின்று வந்தான். இராமேஸ்வரத்திலிருந்து ஆறு மீன்பிடி விசைப் படகுகளை வரவழைத்து மீன்பிடித் தொழில் நடத்தினார்.   இவரிடம் படகு ஏதுமில்லை.  மீனவர்கள்  விடிகாலை நான்கு மணிக்கே கடலுக்கு  சென்று மாலை நான்கு மணிவாக்கில் மீன்களோடு கரை திரும்புவார்கள்.  அவர்கள் கொண்டுவரும் மீன்களை எடையிட்டு பெற்றுக்கொள்ள வேண்டும்.  அதற்கு தக்கவாறு வாரம் ஒரு முறை படகு காரர்களுக்கு பணம் பட்டுவாடா வேண்டும்.  பிடித்து வந்த மீன்களில் இரால் போன்ற மீன்களை உடனே மொத்த வியாபாரிகளிடம் கை மாற்ற வேண்டும்.  மொத்த வியாபாரிகள் மூன்று மணிக்கே கருவாட்டில் ஈக்கள் மோய்ப்பதுபோல மேயத் தொடங்கி விடுவார்கள்.  மீதம் உள்ள மீன்களை உப்புத் தொட்டியிலே ஊர வைத்து மறுநாள் முதல் சில நாட்கள் வெய்யிலில் காயவைத்து கருவாடாக்கி மூட்டை கட்ட வேண்டும்.  அதனை பத்து நாட்களுக்கு ஒருமுறை மொத்த வியாபாரியை வரவழைத்து எடையிட்டு அனுப்ப வேண்டும்.  எல்லா வேலைகளுக்கும்  ஒரு ஆண் ஒரு பெண் நியமித்திருந்தார்.   என் வேலை என்பது மீன்களை நிறுக்கும்போது எடையை நோட்டில் குறித்துக்கொண்டு படகு காரர்களுக்கு பணம் பட்டுவாடா செய்வதும் மொத்த வியாபாரியிடம் பணம் பெருவதும்தான். மணல் தரை தென்னங்கீற்றால் வேயப்பட்ட கருவாட்டு குடோன் தான் என் அலுவலகம்.  ஒரு மேஜை ஒரு நாற்காலி ஒருமரப் பெஞ்சு தான் அலுவலக தளவாடம்.   இரண்டு ஒரு குயர் நோட்டு ஒரு பேனா, ஒரு கால்குலேட்டர் தான் அலுவலக ஆவணங்கள்.  மூக்கை சுழிக்க வைத்த கருவாட்டு மணத்தை நுகர்ந்து நுகர்ந்து நாளடைவில் மணம் மனத்தோடு இரண்டரக் கலந்துவிட்டது  தங்குவதற்கு அவர் வீட்டு மாடியின் இரண்டாவது தளத்தை எனக்கு ஓதுக்கி இருந்தார்.  அங்கே உணவகங்கள் இல்லாததால் அவர் வீட்டில்தான் சாப்பிட்டேன்.  அவர் வீட்டில் எப்போதும் மீன் உணவுதான்.    நான் சைவம்.  எனக்காக தனியே சைவ உனவு தயாரித்து கொடுத்தார்கள்.   ஒருநாள் இரால் கிரேவியைகொண்டு வந்து இதில் முள் இருக்காது சாப்பிட்டுப் பாருங்களேன் என அன்பால் கட்டாயப்படுத்தினார்.  அப்போதுதான் இரால் மட்டும் உண்ண தொடங்கினேன்.  இன்று வரை இராலைத் தவிர வேறு மீன்களை நான் உண்டதே கிடையாது. ஒருவார காலமே அவர் வீட்டில் இரவை கழித்தேன் பின்னர் என் இரவுகள் கடற்கரை மணலில் கழிந்தன. காலையில் குளிக்க மட்டும் அவர் வீட்டுக்குப் போய் காலை உணவு உண்டு வருவேன்.  மதியமும் இரவும் அவரே கடற்கரைக்கு எனது உணவை கொண்டு வந்து கொடுப்பார். அலைகள் கரையைத் தொடும் இடத்திலிருந்து சுமார் ஐம்பது மீட்டர் தள்ளி மணற் பரப்பில் பாயை விரித்து தூங்குவேன்.  ஒரு படகின் உரிமையாளர் ராஜபாண்டி மற்றும் அவரது அண்ணன் மகன் கடற்கரையில் என்னோடு தூங்குவார்கள். கோவப்பாடாத நேரங்களில்  அதிக சப்தமின்றியும் ஆத்திரம் வந்தால் ஆர்ப்பரித்தும் அலைகள் மூலம் தன் இருப்பை கடல் நிருபிக்கும்.  சப்தமெல்லாம் மெல்ல மெல்ல ஓசையாகி இசையானது.   வெப்பமும் அற்ற குளிருமற்ற மெல்லிய காற்று மேனியை தழுவிக்கொண்டே இருக்கும்.  சுவர்களற்ற கூரையற்ற படுக்கையறைக்கு சொந்தம் கொண்டாடும் என் பரந்து  விரிந்த உணர்வின் தாபம்.   ஒவ்வொரு வின்மீனிலும் யாரேனும் எனது மூதாதையர் ஒருவர் இருப்பதாக உணர்வேன்.  ஆரம்பத்தில் கடலை பற்றி கொஞ்சம் யோசிக்கத் தொடங்கினேன்.  யோசிக்க யோசிக்க அதன் மர்மங்கள் கூடிக்கொண்டே போனதால் அதை பற்றி சிந்தனை செய்வதை ஒரு கட்டத்தில் நிறுத்தி விட்டேன்.  சிந்தனைக்கு கட்டுப்பட்டதில்லையே அது.  ஆனால் அலையின் சப்தம் அடங்கிப் போனது. அது பற்றிய சிந்தை இற்றுப்போனது. அதன் மீதான பயன் அற்றுப்போனது.  மொத்தத்தில் என்னைப் போலவே அது மௌனமானது.  நல்ல வேளை அந்த நாட்களில் சுனாமி வரவில்லை.  வந்திருந்தால் மௌனம்கூட இருந்திருக்காது. அந்த மர்ம தேசத்தில் ஒருநாள் பயணித்துவிட வேண்டும் என்ற ஆசை மேலோங்கத் தொடங்க ராஜபாண்டியை கேட்டேன். அவர் அழைத்துப்போக மறுத்துவிட்டார்.   காரணம் புதிதாக கடல் பயணம் செய்தால் வயிறு குமட்டல் வரும் வாந்தி வரும் மயக்கம் வரும் என்றெல்லாம் வர்ணித்தார்.  எது வந்தாலும் பரவாயில்லை. தாங்கிக் கொள்கிறேன். ‘ஒரு நாள் என்னை அழைத்து போங்க’ என கெஞ்சி கூத்தாடினேன். “சரி.  உங்க ஓனரை கேட்டு கிட்டு ஒரு நாளைக்கு அழைச்சிகிட்டு போறேன்” என்றார். மனம் துள்ளியது ஒரு சிந்துபாத் ஒரு மெகல்லன் ஒரு வாஸ்கோடகாமா என மாறி மாறி வந்து வந்து போயினர். இதை ஓனரிடம் சொன்னதும் ஒத்துக்கொள்ளவில்லை. “எதாவது ஒண்ணு ஆச்சின்னா ஒங்க அம்மா அப்பாவுக்கு யாரு பதில் சொல்லுறது?  முடியவே முடியாது” என்றார். “ஒண்ணும் ஆகாது. பயப்படாதிங்க.  எத்தன பேரு டெய்லி கடலுக்கு பொய்ட்டு வாராங்க. எனக்கு மட்டும் என்ன ஆவப்போகுது?” “நீங்க நைட்ல கடற்கரையில படுக்குறதே எனக்கு தித்கு திக்குன்னு இருக்கு.  உங்க பெரியப்பாவுக்கு தெரிஞ்சிது உன்ன நம்பிதானே அனுப்புனேன்.  கடல் மண்ணுல படுக்கவச்சிருக்கேன்னு திட்டுவார்” “சார். நான் ஒண்ணும் சின்ன குழந்தையில்லை.  அம்மா அப்பா பெரியப்பா எல்லாம் என்ன ஒண்ணும் செய்ய முடியாது.  நான் யாருக்கும் அடங்காதவன்னு அவங்களுக்கே தெரியும்” “அப்பன்னா ஒங்க பெரியப்பா கிட்ட ஒரு வார்த்த கேட்டுக்கிடுறேன்” என்றார். “உப்பு பொறாக மேட்டர் சார் இது. ஒருத்தர் கிட்டேயும் கேட்ட வேண்டாம்.  நீங்க போக வேண்டாம்ன்னாலும் ஒரு நாளைக்கு வம்படியா போட்ல ஏறி உக்காந்துடுவேன்” என்றேன். அப்படி இப்படின்னு பேசியதும் ஒத்துக்கொண்டார்.  “பௌர்ணமி அலை அதிகமா இருக்கும். ஒரு வாரம் கழிச்சி போகலாம்” என்றார். “அலை அடிக்குப் போது போறதுதான் சார் ஜாலியா இருக்கும்.  ஒரு த்ரில் இருக்கும்.  நாளைக்கு பௌர்ணமி தானே நாளைக்கே போறேன்” “எதெயெடுத்தாலும் வம்புதானா?” ராஜபாண்டியும் அருகில் இருந்தார் அவருடைய படகில் அழைத்துபோகும்படி அறிவுறுத்தினார். “விடியக்காலை நாலு மணிக்கு ரெடி ஆயீடுங்க. எல்லாத்துக்கும்  நாலஞ்சி லெமன் வச்சிகிடுங்க” என்றார் “காலையில நான் கொண்டாறேன்” என தெரிவித்து வீட்டிற்கு திருப்பினார் ஓனர். அன்றிரவு கடல் மௌனனத்தை களைந்திருந்தது.  அன்று பௌர்ணமி என்பதால் மட்டும்  இல்லை.  ஒரு புதிய பயணியை சந்திக்கப் போகிறோம் என்ற சந்தோஷத்தாலாக இருக்கலாம். சரியாக நான்கு மணிக்கு படகுத்துறைக்குப் போனேன். ஓனர் காலை மற்றும் மதியத்திற்கான உணவு வீட்டில் சுட்டிருந்த பத்து பதினைந்து முறுக்கு, காராச்சேவு, ஒரு பாட்டிலில் எலும்பிச்சை சாறு, பத்து எலும்பிச்சம்  பழம் எல்லாவற்றையும் ஒரு மஞ்சள் துணிப்பையில் போட்டுக்கொண்டு வந்து கொடுத்தார்.  ‘நல்லபடியா திருப்பனும் ஈஸ்வரா’ என கடவுளை வாய்விட்டு வேண்டிக்கொண்டார். எனக்கு சிலிர்த்துப் போனது. இந்த சித்துபாத் மீது ஓனருக்கு எவ்வளவு அக்கறை, பிரியம், அன்பு, பொறுப்பு. இன்னும் எத்தனை வார்த்தைகளை வேண்டுமானாலும் சேர்த்துக் கொள்ளலாம். ராஜபாண்டியும் எனக்காக மூன்று பிஸ்கெட் பாக்கெட் கொண்டு வந்திருந்தார். நிலவு மேற்கே சாய்ந்து கொண்டிருந்தது.  அதன்  ஒளி பிம்பங்கள் அலைகளின் முகட்டில் பளிரென மின்னின.  மீனவர்கள் நால்வரோடு குகன் போல நானும் ஐவரானேன். விடிவதற்குள் குறிப்பிட்ட அளவு மீனை பிடித்துவிட்டார்கள். நான் கடலையும் நிலவையும் மாட்டிய மீன்களையும் வேடிக்கை பார்த்தேன். நிலவு கடலுக்குள் மூழ்க ஒரு செம்பந்து  கிழக்குப் பக்கம் கடலை கிழித்து மேலே வந்து வெளிச்சம் அடித்தது. திடீரென ஒரு பெரிய திருக்கை மீன் வலையில் மாட்ட மேல இழுக்க முடியாமல் நால்வரும் தினறினார்கள். நானும் சேர்ந்து இழுத்தேன்.  “ஏங்க பாட்டால்லாம் பாடிகிட்டு இழுக்க மாட்டிங்களா?” என்றேன். “ஓ பாடுவோமே.  சேர்ந்து நீங்களும் பாடுங்க பாப்போம்” என்று ராஜபாண்டி ஐலசா பாட்டை ஆரம்பித்தார். ஏலேலோ வரை அவர் பாட,  வரியின் ஐலசா வரை மீதத்தை கோரசாக முவரும் பாடினர்.  எனக்கு பாடல் தெரியாததால் கூட்டத்தோடு கோவிந்தா போட்டேன். ஏலேலோ ஐலசா வானமுட்ட ஏலேலோ நிற்கிறானே ஐலசா ஓடி ஓடி ஏலேலோ இழுக்கவேணும் ஐலசா மண்ணநம்பி ஏலேலோ மரமிருக்க ஐலசா மரத்த நம்பி ஏலேலோ கிளையிருக்க ஐலசா கிளைய நம்பி ஏலேலோ இலையிருக்க ஐலசா இலைய நம்பி ஏலேலோ பூவிருக்க ஐலசா பூவநம்பி ஏலேலோ பிஞ்சிருக்க ஐலசா பிஞ்சை நம்பி ஏலேலோ காயிருக்க ஐலசா காய நம்பி ஏலேலோ பழமிருக்க ஐலசா பழத்த நம்பி ஏலேலோ நானிருக்கேன் ஐலசா உன்ன நம்பி ஏலேலோ நானிருக்கேன் ஐலசா உச்சி வெயிலில் ஏலேலோ உருகிறேனே ஐலசா உள்ளம் மட்டும் ஏலேலோ உன்னிடமே ஐலசா போட்டுக்குள்ளே ஏலேலோ திருக்கை வந்துச்சி ஐலசா. போதுவாக அவர்கள் பாடுவதில்லை. எனக்காக படியதாக தெரிவித்தார் துரைபாண்டி. அவர் பெருமைக்குறியவர் என்பதை  மேலும் உணர்ந்தேன். அலைகளில் ஏறி இறங்கி படகு போகும்போது ஏற்படும் ஆட்டம் எனக்கு குமட்டலோ மயக்கமோ வாந்தியோ வரவில்லை. மாறாக தாலாட்டுவது போலே இருந்தது. தின்பண்டங்கள் பிஸ்கட்டுகளை பகிர்ந்து உண்டோம் . அவை எனக்கானது என வாங்கிக்கொள்ள மறுத்தார்கள். சண்டை போட்டு வாங்க வைத்தேன். மீன்களை கம்பியில்  குத்தி படகின் புகைப்போக்கி வழியாக கீழே இறக்கி சில நிமிடங்களில் வெளியே எடுத்து வெந்துபோன மீன்களை உரிந்து உணவுக்கு சைட்டிஷ்ஷாக பயன் படுத்தினார்கள்.  அந்த நாற்றம்தான் என் குடலை பிடுங்கியது.   எலும்பிச்சை சாரை பருகி சரிசெய்து கொண்டேன். அதனை அறிந்ததும் மேலும் மீன் சுடுவதை எனக்காக நிறுத்திக் கொண்டார்கள். மதிய வாக்கில் நடுக் கடலை அடைந்தோம் தென்திசையில் இலங்கையின் வெல்வெட்டித்துரை காட்டு மரங்களின் பசுமை தென்பட்டது.  வடக்கே கோடியக்கரையின் மரங்கள் தென்பட்டன.  இலங்கைக்கும் இந்தியாவுக்குமான மைய கடல் பகுதி அது.  இரு புறமும் பதினொறு கிலோமீட்டர் தூரம் உள்ளதாக கூறினார்கள்.  அதுவரைதான் அவர்களின் மீன்பிடிப் பகுதியாம்.  எல்லை மீறிப்போனால் இலங்கை கடற்படை கைது செய்துவிடுமாம்.  ‘இதுவரை இன்று வந்ததே வெல்வெட்டித்துரை காட்டை காமிக்கத்தான்’ என்றார் ராஜபாண்டி.  எனக்கு பெருமையாக இருந்தது. கோலம்பஸ் மேற்கிந்திய தீவை இந்தியா என பார்த்தது போல எதையோ ஒரு தீவை கண்டுபிடித்ததைப்போல உணர்ந்தேன். நான் வந்த அதிர்ஷ்டம் அன்று நிறைய மீன்கள் பிடிபட்டதாக ராஜபாண்டியின் அண்ணன் மகன் திருவாய் மலர்ந்தார்.  ஏனெனில் அவர் ரிசர்வ் டைப். அதிகம் பேச மாட்டார்.  அதிகமென்ன சுத்தமாக என்றே சொல்லலாம்.  சித்தப்பா இருக்கிறார் என்ற மரியாதையோ என்னவோ.  ஒரு நாள் தனியே பேசி பார்க்க வேண்டும். மாலை மூன்றரை மணிக்கு கரையை அடைந்தோம்.   ஓனர் மூன்று மணிக்கே வந்து கடலை பார்த்தவாறு நிற்பதாக கூறினார்.  எனக்கு படகோட்டி படத்தில் வரும்  பாடல் ஞாபகத்திற்கு வர முணுமுணுத்தேன். அந்த கடல் பயணம், மணல் படுக்கை, அவ்வாறான மனிதர்களின் அன்பு அதற்கு முன்னும் பின்னும்  வாழ்நாளில் எப்போதுமே எனக்கு கிடைக்கவில்லை என்றே சொல்லலாம்.  ஐயம்மாள் “டேய் ஆச இங்க வாடா” என்று கூப்பிடுவாள் ஐயம்மாள். ஆசைத்தம்பி ஆகிய என்னை ஆசையாக ஆச என கூப்பிடுவாள். ‘என்னம்மா’ என்ற குழைந்த, உணர்வு கொண்ட வார்த்தையோடு அவள் வீட்டுக்குப் போவேன். ஒரு தனியார் கம்பெனியில் வேலை செய்த நான்  அவளது வீட்டின் எதிரே வாடகைக்காக அவள் சாரியாக கட்டி வைத்திருந்த மூன்று அறைகளில் நடு அறையில்  தங்கி இருந்தேன். அவளை யாரும் அம்மா என்று அழைக்கமாட்டார்கள். இரண்டு மகன்கள்கூட  தாயாரை ஐயம்மா என்பார்கள்.  அந்த பகுதியில் அப்படி அழைப்பது வழக்கமாக இருந்தது.  அவர்களுக்கு அவளை பிடிக்காது.  யாருக்குமே பிடிக்காது எனச் சொல்லலாம்.  டெரர் உமன். ஜைஜான்டிக் உருவம்.  தமிழ் படங்களில் வரும் வில்லிகளைப்போல எல்லோரையும் ஆட்டி வைப்பவள். அப்பகுதிக்கு புதிதாக வருபவர்கள்  ஐயம்மா  வீடு எது என கேட்டாள் எல்லோரும் சட்டென சொல்லும் அளவுக்கு பிரபலமானவள். தோட்டத்தில்தான் அவளது கணவர் கிடப்பார். மேடான புஞ்செய் நிலத்தை  தோட்டம் என்பார்கள்.  அங்கே ஒரு சின்ன குடில் இருக்கிறதென மகன்கள் சொல்ல கேள்வி.  நாள்தோறும் இருமுறை சாப்பிட வீட்டிற்கு வருவார்.  அடிக்கடி கணவன் மனைவிக்குள் சண்டை நடக்கும்.  வளர்ந்த பிள்ளைகள்.  முப்பது ஐந்து வயதான மூத்த பையன் ஒரு தனியார் கம்பெனியில் பிட்டராக வேலை பார்க்கிறான்.  இளையவன்  கடைகளுக்கு  டீத்தூள், காப்பித்தூள், கடலை மிட்டாய் சப்ளை செய்யும் ஏஜென்சிஸ் வாத்திருக்கிறான்.  அவனே டீவிஎஸ் 50ல் எடுத்துக்கொண்டு போய் சப்ளை செய்வான்.  முப்பது வயது.  ஐயனுக்கு அறுபது அறுபத்தி ஐந்து வயதிருக்கும்.  மகன்கள் தந்தையை ஐயன் என்றுதான் சொல்வார்கள். வீட்டில் நால்வரும் நான்கு திசைகள்.  சின்ன பையன் எனக்கு நெருக்கம். அடிக்கடி என் அறைக்கு வந்து ஏதாவது பேசிக்கொண்டிருப்பான்.  உலகப்பொது அறிவு ஏதுமில்லாதவன். வியாபாரம் பற்றி பேசுவான்.  சப்ளை செய்யும்போது வழியில் ஏதாவது குறிப்பிடும் சம்பவம் நடந்ததை சொல்வான்.  அதுவும் சொல்லுவதில் கூட சுவாரசியம் இருக்காது. எனக்கு சலிப்பு தட்டும். நான் அதை காது கொடுத்து  கேட்டவில்லை என்பதுகூட தெரியாது கதை போய்க்கொண்டிருக்கும். பெரிய பையன் எப்போவாவது என் அறைக்கு வருவான்.  விபரம் தெரிந்தவன்.  தாயாரை திட்டித் தீர்ப்பான்.  ஒருநாள் ‘சாப்டாச்சா’ என கேட்டேன்.  தாயாரை கெட்ட வார்த்தையை பயன்படுத்தி திட்டி ‘சாப்பாடு சமைக்க மாட்டேங்குறா.  வெளியே ஹோட்டல்ல பேய் சாப்புடப்போறேன்’ என்றான். வீடு எப்போதும் Íத்தகளம் தான்.  சண்டையென்றால் ஐயம்மாள் சமைக்கமாட்டாள்.  பசங்க வெளியே போய் ஹோட்டலில் உண்பார்கள்.  அவரவரின் சம்பார்த்தியத்தை தங்களே வைத்துக்கொள்வார்கள்.  ஐயன் தானே அரிசியை போட்டு பொங்கி கடையிலிருந்து இரண்டு ஊறுகாய் பொட்டலத்தை எடுத்துக்கொண்டு சாப்பாட்டை முடித்து விட்டு வீட்டை விட்டு கிளப்பி தோட்டத்துக்குப் போகும் வழியெல்லாம் மனைவியை திட்டிக்கொண்டு  போவார்.  அவர் மனைவியை கெட்ட வார்த்தைகள் கொண்டு திட்டுவது பக்கத்தில் போவோருக்கு நன்கு கேட்கும். கெட்ட வார்த்தையென்றால் கம்மனாட்டி, முன்டை என்ற வார்த்தைகளைத்தான் பயன்படுத்துவார். அவற்றை மனைவிக்கு  நேராகவே சொல்லி திட்டி கேட்டிருக்கிறேன். ‘நீ செத்தாதானே நான் முன்டையாவுறதுக்கு’ என எதிர்த்து பேசுவாள் ஐயம்மாள். சில நேரங்களில் வட்டார வழக்கு வார்த்தைகளில் அவர்கள் வேகமாக திட்டிக்கொள்வது சுத்தமாக எனக்குப் புரியாது. நீளமான வீட்டைத் தடுத்து ஒரு பகுதியில் மளிகைக்கடை வைத்திருந்தாள்.  வியாபாரத்தை ஐயம்மாளைத் தவிர யாரும் கவனிக்க மாட்டார்கள்.  தரமான பொருட்கள். நியாயமான விலை.  கொள்ளை லாபம் எல்லாம் கிடையாது.  கடன் கிடையாது.  கடைக்கு பொருட்கள் வாங்க வருபவர்கள் தேவையில்லாமல் பேசிக்கொண்டிருந்தால்  செம டோஸ் விழும். அவரவர்கள் தான் உண்டு தன் வேலை உண்டு என வாழவேண்டும் என்ற குணம். இளைய மகன் மிட்டாய் பிஸ்கெட் என்று எதையாவது எப்போதாவது  கடையிலிருந்து திருடிக்கொண்டு வந்து என் அறையில் வைத்து தின்பான்.  எனக்கு கொடுப்பான்.  திருட்டுப்பொருள் எனக்கு எதற்கு என மறுத்துவிடுவேன். “ஏண்டா ஆச நேத்தக்கி சின்ன பய கடையில பிஸ்கெட்டை திருடிக்கிட்டு வந்து உன் ரூம்ல வச்சி தின்னானாடா?” என்றாள் ஒருநாள்.    நான் இருதலைக் கொள்ளி எறும்பாகி விட்டேன். “என் ரூமுக்கே வரலயே” “வந்ததத்தான் பாத்தேனே.  திருட்டுப் பயல காப்பாத்த நீ தொணபோறே.  திருட்டுப் பயலே” “நான் ஒண்ணும் திருடவும் இல்ல.  திருட்டுப் பொருள வாங்கி தின்னவும் இல்ல” “அப்ப அவன் திருடியாந்து துன்னுருக்கன்னு தெரிஞ்சி போச்சில்ல” “அது  தாய் புள்ள ரெண்டு பேருக்கும் உள்ள பிரச்சனை.  நான் ஏம்மா  தலையிடணும்?” “அவன் என் புள்ளயே இல்லடா.   என்ன நாயேன்னனு திட்டுறான்.  நீதான்டா எனக்கு புள்ள மாதிரி.” “நான் இரவல் மனுஷன்.  மலையேறி மேஞ்சாலும் குட்டி கோணாருக்குதாம்மா சொந்தம்.  அவர திட்டாதிங்க.  என்ன திட்டுறதுன்னாலும்  திட்டுங்க  சொல்ல வேண்டியத சொல்லுறேன்.  அவர உங்க பிள்ளையா பாருங்க. அவரும் உங்கள அம்மாவா மதிப்பாரு.” “அந்த நாய் திருந்தாதுடா” “நான் அவர் கிட்ட சொல்லுறேன் அம்மா” என்று சமாதானப் படுத்தினேன். அவனிடமும் இது குறித்து மறுநாள் இரவு நீண்ட நேரம் புத்திமதி சொன்னேன்.  புத்திமதி சொல்லும் அளவுக்கு நானும் தகுதியானவன்தான் என்பதை அறிக.  அவனும் மண்டையை மண்டையை ஆட்டினான்.  பின் நாட்களில் அவன் நடவடிக்கை கொஞ்சம் மாறிப்போயிருந்ததை காண முடிந்தது. அந்த காலத்தில் தொலைக்காட்சி என்றால் தூர்தர்ஷன்தான்.  ஞாயிற்றுக் கிழமை மாலை நாலரை மணிக்கு அரத பழசான தமிழ் படம் ஒளிபரப்பாகும்.  அடுத்த படம் பார்ப்பதற்கு ஒருவாரம் காத்திருக்க வேண்டும்.  அன்றுதான் எனக்கும் விடுமுறை.  ஐயம்மாள் வீட்டிற்கு டிவி பார்க்க போவேன் போகவில்லை என்றாலும் கூப்பிட்டு பார்க்க சொல்வாள்.  சின்னப்பா, கிட்டப்பா, ஜெமினி, எம்ஜியார், சிவாஜி நடித்த படங்களாக ஒளிபரப்பாகும்.  வேறு வழியின்றி பார்ப்பேன்.  அந்நேரத்தில்தான் ஐயனும் உணவுக்கு வருவார்.  அது மதிய உணவுக்கும் இரவு உணவுக்கும் இடைப்பட்ட நேரம். இரண்டுமே ஒரே உணவுதான்.  கடையிலிருந்து இரண்டு மூன்று சாக்லேட்டை எடுத்து வந்து எனக்கு கொடுப்பார்.   “வேண்டாம் ஐயன்” என்பேன். “ஏன்? ஐயம்மா திட்டுவான்னு பயப்படுறியா? கடையில எனக்கும் பங்கு இருக்கு தெரியுமுல்ல”என்பார். “கடையே உங்களோடதான ஐயன்.  உங்கள யாரு கேக்குறது.  சாக்லேட் தின்ன நான் என்ன சின்ன குழந்தையா?” “நீ பொடியன் மாரிதான் இருக்கே. இந்தா புடி” என நீட்டுவார்.  நான் ஒற்றை மட்டும் எடுத்துக்கொள்வேன். மற்றதை சட்டைப் பையில் திணித்து விடுவார். இந்த சம்பவம் தொடர்பாக ஐயம்மாள் நடவடிக்கையில் எந்த மாறுதலும் தெரியாது. எனக்குதானே கொடுத்தார் என்று எண்ணி பேசாமல் இருந்து விடுவாள் என்றே தோன்றும்.  என் மீது உள்ள பிரியத்தைப்போல மற்ற இரண்டு அறைகளில் உள்ளவர்களிடம் காட்டமாட்டாள்.  அவர்களை டிவி பார்க்கக்கூட அழைக்க மாட்டாள்.  அவர்களாக வந்து பார்த்தால்தான் உண்டு. அன்று ஞாயிற்றுக்கிழமை கூடுதலாக சிகரெட் தேவைப்படும்.  ஒரு பாக்கெட் வாங்கி வர கேட்டை திறந்துகொண்டு சாலையில் வெளிப்புறமாக கடைக்குப் போனேன்.  அந்த முல்லை கடையில் நின்றாள்.  ஒரு புன்சிரிப்பு பூத்ததும் பதிலுக்கு நானும் சிரித்தேன்.  முல்லையை ஏற்கனவே தெரியும். முதல் பார்வைகளே பேசிக்கொண்டன. அவளும் ஏதோ ஓரு கம்பெனியில் வேலை செய்கிறாள்.  வரும்போதும் போகும் போதும் பூத்துக்கொண்டிருந்த புன்னகை ஒருநாள் வார்த்தைகளாக வடிவம் பெற்றது.  அவள் பெயரை ஐயம்மாளின் மூத்த மகன் மூலம்தான் தெரிந்து கொண்டேன்.  அன்று மாலை பேருந்து விட்டு இறங்கி வரும்போது நான்கைந்து பேர் அதே சாலையில் நடந்தோம்.  நான் அவர்களை விட்டு தனிமைப் படுத்திக்கொள்ள மெதுவாக நடந்தேன்.  அவளும் நடையின் வேகத்தை குறைக்க இருவரும் மற்றவர்களின் பார்வையில் மறைந்து போனோம்.   தயங்கினேன்.  தடுமாறினேன்.  வெட்கம் உடைந்தது.   “உங்க பேரு முல்லைதானே?” என்றேன். “அதுகூட இன்னும் தெரியாதா?” என்றாள். “இப்பதானே முதலா பேசிக்கிடுறோம்” “இப்ப மட்டும் எப்படி தெரிஞ்சிது?” தெரிவிப்பதற்குள் ஒரு சனியன் குறுக்கிட்டது.  அது ஆபத்தான சனியன். பிடித்தால் விடாது.  வேகமாக நடந்து அவளையும் கடந்து போய்விட்டேன்.  அது காதலேல்லாம் இல்லை. ஒரு எதிர் பாலினத்தின் ஈர்ப்பு.  அவ்வளவே. அந்த முல்லைதான் கடையில் பூத்திருந்தாள்.  தோசைக்கு சட்னி அரைப்பதற்கு பொட்டுக்கடலை வாங்க வந்திருப்பாள் போல.  செய்தித்தாளை சுருளாக்கி தராசிலிருந்து கடலையை கொட்டி மடித்துக் கொண்டிருக்கும்போது மோனப் பறிமாற்றத்தைக் கண்டுவிட்ட ஐயம்மாள் பொட்டலத்தை முல்லை மூஞ்சில் வீசினாள்.  அவள் திடுக்கிட்டுப் போனாள்.  பொட்டுக்கடலை சிதறி கடை வாசல் சாலையெல்லாம் சிதறியது. “என்னடி இவன மாப்ள புடிக்கிறியா? அவன பாத்து பல்ல இளிச்கிறே.  நாயே.  இனி கட பக்கம் வந்தே தொலச்சிடுவேன்” என சப்தமிட முல்லை எதுவும் பேசாது உடைகளின் மடிப்பில் தொத்தி நின்ற பொட்டு கடலைகளை உதரிவிட்டு  கடையை விட்டு போனாள். “உனக்கு என்னடா வேணும்?” என்றாள் என்னைப் பார்த்து. “சிகரெட் ஒரு பாக்கெட்” “சிகரட்டு வாங்க வந்தியா அவள பாத்து பல்ல இளிக்க வந்தியா?” “நான் எங்கம்மா இளிச்சேன்.” “இப்ப சிரிச்சியேடா.  இப்ப சிரிப்பே அப்பறம்.  . .” “என்ன பத்தி உங்களுக்குத் தெரியாதா?” “நீ யாரு.  அவ யாரு. உன் ஜாதி என்ன அவ ஜாதி என்ன? என்னடா ஒங்களுக்குள்ள உறவு?” கடுகடுவென பேச ஆரம்பித்தாள்.  என்னோட சாதி என்னேன்னு ஐயம்மாளிடம்  சொன்னதே இல்லையே.  பக்கத்து ரூம் பசங்க மூலமோ மகன்கள் மூலமோ தெரிந்து வைத்துள்ளாள் போல.  நான் சாதி பார்ப்பன் இல்லையே.  மேலும்,  சாதியே இருந்தாலும் சிரிப்பதற்கு என்ன தடை.  அவளுக்கு எதுவும்  புரியாது.  புரிய வைக்க முயற்சித்தால் பத்ரகாளியாகி விடுவாள்.   பேசாமல் நின்றேன்.   “இனி அவள பாத்து சிரிச்சேன்னு தெரிஞ்சிது கொன்னுடுவேன்.  எங்கையாது பாத்து பேசிகிட்டு இருந்தேன்னு கேள்வி பட்டேன் தொலைச்சிடுவேன்.  நீங்க பேசினாலும் என்ன பண்ணினாலும்  எனக்கு எப்படியும் தெரிஞ்சி போய்டும்.  புரியுதா?” என்றாள். “புரியுது.  நன்னாபுரியுது”  என சொல்லி சிரித்துக்கொண்டு அறைக்கு வந்தேன். என் மீது அவளுக்கு என்ன அக்கறை?  வெரி சிப்புள்.  குடும்பத்தில் அவளை யாருக்கும் பிடிக்காது.  உறவுமுறை என்ற உள்ளுணர்வு இருந்தாலும்  வெளியே பேச்சுத் துணைக்காக அல்லது நாடகத்தை நடத்தியே தீரவேண்டும் என்ற நிர்ப்பந்தத்திற்காக வேஷத்தை மாற்றுவதும் அதில் ஒன்றிப்போவதும் மன இயல்பு.    அவளுக்கு மகன் என்கின்ற ஒரு வேஷக்காரன் தேவைப் படுகிறான். அவன் தற்காலிகம் என்றாலும்.  சரி அது அவளுக்கு.   எனக்கு என்ன அவள் மீது பிடிப்பு?  திட்டினாலும் கொஞ்சினாலும் ஐயம்மாவை தாயைப்போல பாவிக்கும் மனநிலை எப்படி வந்தது?  என்னை யாரும் இதுவரை  வாடா, போடா, நாயே என்றெல்லாம் சொன்னதில்லையே! ஐயம்மாளின் வார்த்தைகள் அர்த்தம் நிறைந்த கண்டிப்பாக எப்படி என்னால் உணர முடிந்தது? நான் வீட்டை விட்டு போனால் போதுமென்று  எதிர்பார்த்து சொந்த அம்மா,  அப்பா, அண்ணன் இருந்த நிலையில், யாருக்கும்  சொல்லாமல் துணிமணிகளை எடுத்து பேக்கில் அடைத்துக்கொண்டு கிளப்பும்போது  அம்மா மட்டுமே இருந்ததால் “நான் வெளியூர் போறேன்” என்றேன். அதிர்ந்து குலைந்தாள்.   “எங்கப்பா போறே? ஒண்ணும் சொல்லாயே திடுதிப்புன்னு  சொல்றே” “எங்கப் போனா உங்களுக்கு என்ன?  போனா சந்தோஷப்படுங்க” “நான் பெத்தவடா.  கோவத்துல எதாவது சொன்னா அதுக்காவ வீட்ட விட்டு கெளம்பிடுவியா. நல்ல வேல கெடச்சி எல்லார் கிட்டயும் சொல்லிட்டு கெளம்பிப்போனா யார் கேக்கப்போறா. ஊர்ல எல்லாரும் வெளியூர் போய்தான் வேல பாக்குறாங்க இல்லன்னு சொல்லல” “இப்ப என்ன செய்யணுங்குறிங்க?” “இப்படி தீடீர்ன்னு கெளப்புனா என்ன அர்த்தங்குறேன்?” “இப்ப நான் உங்ககிட்ட பர்மிஷன் கேக்கல. போகும்போது சொல்லாம போக்குடாதுன்னு சொல்றேன். அவ்வளவுதான்” என் பிடிவாதம் தெரியும். பேச்சை நிறுத்தினாள்.   பேக்கை கையில் எடுக்கும்போது “சித்த நில்லுப்பா” என உள்ளே போய்  மடித்த நிலையில் சில ரூபாய் நோட்டுகளை கொண்டுவந்து கொடுத்து ‘வச்சிக்க’ என்றாள். “வேண்டாம்” “புடிப்பா” கண்ணீர் வந்தது.  எனக்கும்தான்.  இரு கைகளாலும் வாங்கிக் கொண்டேன்.  இரு இரு என மீண்டும் வீட்டினுள் போய்  விபூதியை எடுத்து வந்து பூசிவிட்டாள். அதெல்லாம் நான் பூசிக்கொள்ள மாட்டேன். ஆனால் தடுக்கவில்லை.  “போனதும் கடுதாசி போடுப்பா”  எங்கே போகிறாய் என கேட்டால் அபசகுணம் என கருதி கேட்கவில்லை.  நான் பார்வையை விட்டு மறையும்வரை வெளியில் நின்று கொண்டிருந்தாள்.  என்ன இருந்தாலும் அம்மா இல்லையா! ஒரு வேளை எல்லோருக்கும் பாசம் இருந்திருக்குமோ  . . !  நான்தான் புரிந்துகொள்ள வில்லையா?  அம்மாவுக்கு அப்பாவை பிடிக்காது. அவரை குனியக் குனிய குட்டிய  அந்த அரக்கத்தனம்தான் நான் மாறிப்போவதற்கும் குடும்பத்தில் உள்ள மற்றவர்கள் மீது தள்ளிப்போகும் வண்ணம் என்னை வளர்த்துக்கொள்ள ஏதுவாக  இருந்தமைக்கான பிள்ளையார் சுழியாகும். அன்னியோன்யம் என்பது வளர்த்துக்கொள்வது இல்லை.  அது தானே வளர்வது.  அப்பா ஒரு ஊமை.   இவ்வளவு பேச்சையும் திட்டையும் வாங்கிக்கொண்டு  ஏன் உயிரோடு இருக்கிறார் என எண்ணத்தோன்றும்.  அண்ணனுக்கு இருக்கும் சகிப்பு தன்மை எனக்கு இல்லை. அண்ணன் மீது மட்டும் அம்மாவுக்கு அளவு கடந்த பாசம். பெரும்பாலும் குடும்பங்களில் முதல் குழந்தை மீது கொண்டுள்ள பாசம் பின்னர் பிறக்கும் குழந்தைகள் மீது கோலோச்சுவது இல்லை என்பது தெரிந்ததே.  குலக் கொழுந்து, குடும்ப விளக்கு, கொள்ளி வைக்கும் பிள்ளை, வம்ச விருத்திக்கான அச்சாணி இல்லையா தலைச்சன் பிள்ளை.   திருமணமாகி ஓரிரு ஆண்டுகளில் குழந்தை பிறக்கவில்லை யென்றால் ஊர் ஒரு மாதிரியாகப் பேசும் .  முதல் குழந்தைதான் வாயை அடைக்கும்.  அதன் பிறகு பிறந்தால் என்ன பிறக்காவிட்டால் என்ன!  ஊரார் பேசிக்கொள்ள வேறு என்னதான் இருக்கிறது. என்ன படிக்கிறே? ஏன் கல்யாணம் பண்ணிக்கிடல? இன்னும் குழந்தை பிறக்கலையா?  பையனுக்கு எப்ப கல்யாணம்?  பேரன் பேத்தி ஏதும் இருக்கா? பையன் உன்ன நல்லா பாத்துகிடுறானா?  இப்படி வாழ்க்கை முழுவதும்  கேள்விகளால் சமூகம் துளைத்தொடுக்கிறது. இதை பெரும் அக்கறை என்று சொல்ல முடியாது.  சப்பாஷனைகளை இணைக்கும் சங்கிலிகள்.  அவர்களுக்கு தெரிந்ததை தானே கேட்கமுடியும். கொஞ்சம் அரசியல் தெரிந்தால்  ஆயுத வியாபாரி அமெரிக்காவைப் பற்றி, இரான் ஈராக் போரைப் பற்றி, கியூபாவின் யுத்தம் பற்றி பேசுவார்கள். தெரியாதவர்கள் என்ன செய்வார்கள்.  பாவம் குக்ட் கோஸ்ட்டிகள்.   சில  முற்களைப்போல குத்தி விடுகின்றன.   சில தைத்து இணைத்து விடுகின்றன.   முதல் வாரிசுக்கு முன்னும் பின்னும் ஒரு பிரமாண்டம்  ஒளிந்திருக்கிறது. அம்மாவின் அடக்குமுறை கண்மூடித்தனமான அதிகாரத்தை அண்ணன் சகித்த அளவுக்கு என்னால் முடியவில்லை. வெகுண்டெழுந்தேன்.  நாளடைவில் வீட்டில் நான் சண்டைக்காரனாகி விட்டேன்.   நான் வீட்டில் இருக்கும் போது கப்சிப்பென இருப்பார்கள்.  எப்போது நான் வெளியில் போவேன் என்றுகூட அவர்களுக்குத் தோன்றும்.  அறிவுரை கூற பயப்படுவார்கள்.  கேட்கமாட்டேன் என்ற அச்ச உணர்வு. முப்பது வயது வரை அருகில் உள்ள நகரத்தில் தனியார் நிறுவனங்களில்  வேலை பார்த்து சலித்துப்போய் சண்டைபோட்டு வேலையை விட்டு இரண்டு வருஷம் வீட்டில் வேலையின்றி இருந்த போது ரொப்பவும் பகையானேன்.   சாப்பிட மட்டும் வீட்டிற்கு போவேன்.   வெளியே என்னைபோல இருந்த வெட்டி கூட்டத்துடன்  அரட்டை ஊர் வம்பு  இடையிடையே இலக்கிய செயல்பாடுகள்.   வீட்டில் நுழைவது சிறைக்கூடம் போல் இருந்தது. ஆரம்பத்தில் காதலித்த பேண் ஒரு பொறியாளரை திருமணம் செய்துகொண்டு  ஒரு குழந்தையோடு இருந்தாள்.  புண்ணியவதி என்னிடம் மாட்டாதது நலமே. எல்லாம் சேர்ந்த எதிர்வினைதான் ஐயம்மாளின் மீதுள்ள பிடிப்பு. மனித மனம் ஏதேனும்  ஒரு கொம்பை பிடித்து பற்றி படர ஆசைப்படுவது இயல்புதானே.  அதை நான் இன்னும் கடக்கவில்லை.   திருமணம் செய்துகொள்ளப் போவதில்லை என்ற உறுதியான தீர்மானத்துடன் இருந்தேன்.  அது கடந்த கால கசப்பில் முளைத்த வைராக்கியம்.    அதைத் தாண்டிய பெரிய லட்சியம் ஒன்றுமில்லை. “என் அக்கா பொண்ணுக்கு கூட நாப்பது வயசாகுது. கல்யாணம் வேண்டாம்னுட்டு காலேஜ்ல வாத்தியாரா இருக்கா.  என்ன புள்ளங்களோ.  சொன்னா கேக்க மாட்டங்குறாங்க.  இந்த வயதுல சொன்னா எடுபடுமா!” என்பாள் ஐயம்மாள். “எனக்கும் அப்படித்தான்.  அறிவுரை சொன்னா ஏத்துக்க மாட்டேன். இந்த விஷயத்துல.  மேரேஜ் வேண்டாம்னா வேண்டாம்தான்”  முற்றுப்புள்ளி வைத்தேன். அந்த பெண்தான் ஐயம்மாளின் சிபாரிசில் அவள் வேலை பார்க்கும் கல்லூரியில் எனக்கு எழுத்தர்  வேலை வாங்கிக் கொடுத்தாள்.    பழைய கம்பெனியை விட இரண்டு மடங்கு ஊதியம்.   சற்று வசதியாக இருந்தது. ஐயம்மாளின் பெரிய பையனுக்கு முப்பத்தி  ஐந்து வயதை தாண்டிவிட்டது.  டீக்கடைகாரன் மனைவியோடு கொஞ்சுவான்.  தன்னோடு வேலை பார்க்கும் ஒரு பெண்ணோடு சினிமாவுக்குப் போவான்.  இளையவன் ஜோக்கர் மாதிரி.  பெண்கள் வாடை பிடிக்காது.  இவர்களுக்கு எப்போது திருமணம் செய்து வைக்கப்போகிறாள்.  அல்லது தாங்களே செய்துகொள்ளப் போகிறார்கள்.  கேள்விகள் பல. அவை திருமணத்திற்குப் பின்னும் தொடரும் கற்பனா சக்தி பெற்றது.   உலகம் விசித்திரமானதுதான்.  நிறங்கள் வேறு. மணங்கள் வேறு. ஆனால் எல்லாம் பூக்கள்தான். ஒரு புதன்கிழமை  அலுவலகத்திற்கு பரபரப்புடன் நுழைந்த ஐயம்மாளின் அக்காள் மகளான பேராசிரியை  “சார் சின்னம்மா தவறிட்டாங்கலாம்” என்றாள். தூக்கிப்போட்டது.  வாரி இறைத்தது.  தலையில் சுழலும் மின்விசிறியின் தகடுகள் மாறிமாறி வெட்டுவதுபோன்ற உணர்வு. கோபத்தில் ஐயன் என்றும் உபயோகிக்காத புதிய வார்த்தையாய் ‘தேவுடியா நாயே ஏண்டி இப்புடி கொலைக்கிறே’ என்றாராம். நின்றவள் மூர்ச்சையாகி நெஞ்சை பிடித்துக் கொண்டு கீழே விழ தலை அடிபட்டு ரத்தம் வழிய அடங்கிப் போனாளாம். விரைந்து வீடு வர, ‘நில்லுங்க சார் இங்க எங்க வாறிங்க.  நீங்க வரக்கூடாது’ என என்னை தடுத்து நிறுத்திவிட்டான் பெரிய பையன்.    நான் ஐயம்மாளை பார்க்கக் கூடாதா?  நான் வாடகைக்கு இங்கு வருவதற்கு முன்னரே அவர்கள் தாயை வெறுக்கவும் தாய் அவர்களை விட்டு விலகவும் கற்றுக் கொண்டனர். என் பங்கு அதில் ஏதுமில்லை. யார் மீதும் பாசத்தை பரிமாற முடியாதபோது என் மீது படர விட்டாள்.  ஏக்கத்தில் இருந்த நான் வாங்கிக்கொண்டேன் . அது தற்காலிகமானது.  இடையில் விட்டுப்போவதுதானே வாழ்க்கையில் நிரந்தரமானது.   நேராக அறைக்கு போய் கதவு  ஜன்னல்களை சாத்திவிட்டு படுத்துக் கொண்டு அழுதேன். ஐந்து மணியளவில் ஐயம்மாளை அவர்களது தோட்டத்து மூலைக்குள் அடக்கி வைத்தனர்.  இரவு  ஏழு மணி வாக்கில் கிளம்பி ஒரு மாலையை வாங்கிக் கொண்டு போய் புதையிடத்து மேட்டில் வைத்தேன். குடிலின் பக்கத்தில் நின்றுகொண்டிருந்த ஐயன்  என்னைப் பார்த்ததும் ஓடிவந்து கட்டிப் பிடித்து அழுதார். ஆறுதல் சொல்லத் தெரியவில்லை.  ஐயன் போன பிறகு   அறைக்கு திரும்ப மனமின்றி சமாதியின் அருகில் புல்லும் பூண்டும் கொஞ்ச ஈரமும் கொண்ட மணல் தரையில் அமர்ந்து விட்டேன். கந்தல் கந்தலாக மேகங்கள் மிதந்து முழு நிலவை அறைகுறையாக மறைத்து நகர்ந்து கொண்டிருந்தன. உணர்வுகள் ஏதுமற்று பாரம் மிக்க இரவு நகர்ந்தது.  நேரம் ஆக ஆக வெண்மேகங்கள் உருமாறி கருப்பாயின.    நிலவெளி மங்கி இருள் சூழ்ந்தது.   பெரியவனாக வளர்ந்த பின்னும் சுடுகாடு, சமாதிப் பக்கம் சென்றால் ஒரு பயம் என்னை இருத்தும்.   ஆனால் மையிருட்டில் ஐயம்மாவின் பக்கம் நான் இருந்தபோது அச்சமற்றுப் போனேன்.   மெல்ல தூரல்கள் விழுந்து மண்ணை விட்டு வாசம் கிளம்பி எங்களை சூழ்ந்து கொண்டது.  நனைந்துகொண்டே எழுந்து வரப்பில் அமர்ந்து கொண்டேன்.  மழை வலுத்து என்னையும் சமாதியையும்  கரைத்தது.  அந்த ஈர இரவின் விழிப்பு தாய்மையில் நிறைந்திருந்தது. சற்று குளிர்ந்த இதயத்தோடு விடிகாலை அறையை அடைந்தேன் மறுநாள் அறையை காலி செய்துவிட்டு தூரத்தில் நண்பன் தங்கி இருக்கும் மேன்ஷனுக்கு போய்விட்டேன். எட்டி மரக்காடு ஒரு வெப்பமான முற்பகலில் குளு குளு அறைக்குள் ; “கருணா சார்!” “என்ன மேடம்.” “தர்ஷா நாளைக்கு உங்கள  வீட்டுக்கு வரச் சொன்னான்” என்றாள் நயனா. அப்போது அதை நான் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. உண்மையில் தர்ஷன் என்னை வரச்சொல்லி இருப்பாரா என்று பிறகுதான் யோசித்தேன்.   ஏனெனில் அவர் அலுவல் நிமித்தமாக அடிக்கடி வெளி ஊர்களுக்குச் செல்பவர். அதை உறுதி படுத்திக்கொள்ள மதிய உணவு இடைவேளையில் அலுவலகத்தை விட்டு வெளியில் வந்து ஒரு பொது தொலைபேசி வழியாக தர்ஷனின் அலுவலகத்திற்கு போன் செய்தேன்.  தர்ஷன் விசாகப்பட்டினம் சைட்டுக்கு சென்றுள்ளதால்  வர பத்து  நாள் ஆகும் என்ற தகவலைப் பெற்றேன். தர்ஷன் வரச் சொன்னதாக வீட்டிற்கு அழைத்து என்னை தனியே சந்திக்க நயனா இந்த பொய்யை சொல்லி இருக்கிறாள் என்பதை புரிந்து கொண்டேன்.    என் வாழ்க்கை மகிழ்வுடன் நகர்கிறதா இல்லையா என்பது வேறு விஷயம்.  ஆனால் நான் தற்போது வேலை பார்த்து வரும்  கம்பெனியில்  மகிழ்வோடு இருக்கிறேன். என்  திறமையை முழுதாக வெளிப்படுத்த நல்ல சந்தர்ப்பம் கிடைக்கிறது.  அதற்கேற்ற ஊதியமும் பெறுகிறேன்.  இந்த கம்பெனிக்கு நான் வர காரணம் நயனாதான் என்பதை தெரிவிப்பதில் ஒரு திருப்தி எனக்கு. நானும் அவளும் இதற்கு முன்பு தி.நகரில் ஒரு எக்ஸ்போர்ட் அண்ட் இம்போட் கப்பெனியில் வேலை பார்த்தபோது என்னை அங்கு உள்ளவர்கள் ஏளனமாக பார்ப்பார்கள். எனக்கு வேலையே தெரியாது என அவர்களே எடை போட்டுக் கொள்வார்கள். எனது திறமையை வெளிப்படுத்த முடியாதவாறு என்னை நடத்துவார்கள்.  முயன்று முயன்று முயற்சிகளில் தோல்வியுற்று கேவலப்பட்டு ஒரு கட்டத்தில் மன சோர்வடைந்து நானே என்னை சொங்கியாக மாறிக்கொண்டேன். அந்த கம்பெனி  ஒரு குஜராத்திக்கு சொந்தமானது. அங்கு பணிபுரியும் எல்லோருக்கும் ஹிந்தி தெரியும்.  மண்டல இயக்குனர் மற்றும் மேலாளரோடு   எல்லோரும் ஹிந்தியில்தான் பேசுவார்கள். நான் ஆங்கிலத்தில் பேசுவதை கேட்டு அவர்கள் முகம் சுழிப்பார்கள். அதனால் என்னோடு அவர்கள் அதிகம் பேச விரும்ப மாட்டார்கள்.  ஏதாவது தேவையென்றால் என் சீனியர் வெங்கடேசன் மூலம் கருத்து பரிமாற்றங்கள் நிகழும்.  நிர்வாகிகள் குஜராத்தியிலும்  மற்றவர்கள் ஹிந்தியிலும் பேசிக்கொள்வதால் எனக்கு நடுக்கடலில் தத்தளிப்பது போல  இருக்கும்.  ஏன்டா இங்கு வந்தோம் எழுந்து ஓடிவிடலாமா என தோன்றும்.  வழியின்றி வக்கற்று  நகராத அந்த நாட்களை கடத்தினேன். ஆறு மாதம் கடந்த நிலையில் ஒருநாள் நயனா  “நீங்க வேறு கம்பேனிக்கு போறிங்களா?  தம்பி தர்ஷா சேத்து விடுறேன்னான்”  என்றாள். உடனே ஓகே சொல்லிவிட்டேன். என் மீதுள்ள இரக்கம்.  என் திறமையை முடக்கி என்னை  எல்லோரும்  அங்கு கார்னர் பண்ணுவதை புரிந்துகொண்ட நல்ல உள்ளம் கொண்டவள் நயனா எனச் சொல்லலாம். அவளுக்கு நாற்பத்து ஐந்து வயதாகிறது.   மலையாளம், ஆங்கிலம், ஹிந்தி, தமிழ் என நான்கு மொழி சரளமாக பெசத் தெரிந்தவள்.   இந்த கம்பெனிக்கு வந்த பிறகு அறைகுறையாக  குராத்தி கூட பேச கற்றுக் கொண்டுவிட்டாள்.  எனக்கு தமிழும் கொஞ்சம் ஆங்கிலமும் தவிர ஒரு மண்ணாங்கட்டியும் தெரியாது.   தர்ஷனை இதுவரை நான் பார்த்ததே இல்லை.  நயனா சொன்ன தொலைபேசி எண் மூலம் தொடர்பு கொண்டபோது  “உங்களுக்கு வேலை ஓகே ஆயிட்டுது. நீங்க அக்டோபர் பஸ்ட் ‘குட்வில் பில்டர்ஸ்’  போய் எம்டியை பாருங்க.  சாலரி பதினைந்தாயிரம் ரூபாய்.  ஓகேவா?”  என்றார்.   தற்போது வாங்குவதை விட ஒண்ணரை மடங்கு சம்பளம்.  சனியன்களில் இருந்து விடுதலை.  ஓகேதானே. நான்கைந்து மாதம் கழித்து நயனாவும் நான் வேலை பார்த்த குட்வில் பில்டர்ஸ் கம்பெனிக்கு வந்து விட்டாள்.  அவள் தனது சித்தியின் மகனான தர்ஷனுடன் ஒரு வாடகை வீட்டில் தங்கி இருந்தாள். குடும்பம் கேரளாவில் இருக்கிறது. அவரது கணவரும் மகளும் ஒருமுறை சென்னையை சுற்றி பார்க்க வந்திருந்தபோது ஒரு நாள் அலுவலகம் வந்தார்கள்.  மகளுக்கே  பதினெட்டு வயதாவதாக தெரிவித்தாள்.  குடும்பத்தை விட்டு பிரிந்து பெரும்பாலும் ஆண்கள்தான் வெளியூரில் தங்கி வேலை பார்ப்பார்கள் என்றால் நயனா நேர் எதிர்.  என்ன சூழலோ.  வாழ்க்கை வெவ்வேறு வகையானது.  முறைமைக்கு முரணானதாக இருக்கலாம். எப்போதும் கூடுதல் குளுமையில் இருக்கும் எங்கள் அலுவலக அறையில் அன்று மாலை கொஞ்சம் வெப்பம் வியாபித்திருந்ததாக எனக்குப் பட்டது.  குளிர் சாதனத்தை பாயின்டை குறைத்து கடைசி அடி நிலைக்கு கொண்டு போய் வைக்கலாம் போலப்பட்டது.  ஆனால் நான் மட்டுமா அங்கே இருந்தேன். இல்லை. மற்றவர்களுக்கு சயனாவின் வனப்பு கூடவில்லை.  இளமை திருப்பவில்லை.  காலையில் இருந்து போலவே இருந்தாள். மன பேதளிப்பு வேறு என்ன! பைத்தியக்காரன். பைத்தியக்காரத் தனம். அவ்வளவே. “நாளைக்கு வீட்டுக்கு வாரிங்கல்ல கருணா சார்” மாலை அலுவலகம் விட்டு விடு திரும்பும்போது கேட்டாள். “ம். வாறேனே” “மார்னிங் பிரேக் பாஸ்ட்டுக்கு வந்துடுங்க” “ட்ரை டு கம்” “ஒய். . .  ட்ரை. . .  ஷுட் கம்” “ஓகே. மேடம்” அன்று இரவு முழுக்க நான் தூங்கினேனா அல்லது விழித்துக் கொண்டிருந்தேனா என்று எனக்கு தெரியவில்லை.  ஆனால் மைதானம் முழுக்க வெள்ளைக் குதிரைகள் இறக்கை கட்டி பறந்தன.  துள்ளி ஓடும் புள்ளி மான்களுக்கு புலிகள் முத்தம் கொடுத்தன.  பிணந்தின்னி கழுகுகள்  புறாக்களாக மாறிப்போயின.  எல்லாம் வெள்ளை வெள்ளையாய். . . .  வினோதங்களாய். . .  ஏஞ்சல்களாய். . . போகும் வழியில் அடையார் ஆனந்த பவனில் அரைக் கிலோ அல்வா வாங்கிக்கொண்டேன்.  இரண்டு முழ மல்லிப் பூவும், அவளுக்கு;  ஏன் எனக்கும்கூட பிடித்த வறுத்த வேர்கடலை பருப்பு அரை கிலோவும் வாங்கிக் கொண்டு போனேன். ஹாலிங் பெல் இருந்தும் அடிக்க வேண்டிய தேவை எழவில்லை கேட்டை திறந்து வைத்துக்கொண்டு  காத்துக் கிடந்திருப்பாள் போல. “வாங்க சார் வாங்க. வெல்கம்” என்றாள் ஒன்பது மணி முக மலர்ச்சியோடு. “தேங்க்ஸ்.  குட் மார்னிங்” என்றேன் பதிலுக்கு.  பரவச மனதோடு.  . . உள்ளே இருந்து  கேட்டின் க்ரில் கம்பிகள் வழியை வெளியே கைகளை விட்டு வெளிப்புறமாக பூட்டுப்போட்டாள். அதுவரை காத்திருந்தேன். கணம் யுகமாய் பட்டது.  பின்னே வாசல் நோக்கி நகர நானும் பின்தொடர்ந்தேன். மரமல்லி மரம் உதிர்த்துக் கொண்டிருந்த மலர்களில் ஒன்றிரண்டு எங்கள் மேல் விழுந்தது. ரம்யமான மணம். எனக்கு வழிவிட்டு உள்ளே போங்க சார் என்றாள். நான் உள்ளே நுழைந்ததும்  வெளியே நின்றுகொண்டு வெளிப்புறமாக  கதவை இழுத்து அடைத்து பூட்டி விட்டு  வீட்டின் வெளிப்புற பக்கவாட்டு வழி சென்று கொள்ளைப்புறம் வழியாக திருடியைப் போல  உள்ளே நுழைந்து உட்புறமாக தாழிட்டாள்.  நான் அதுவரை ஹாலில் நின்று கொண்டிருந்தேன். “உக்காருங்க சார் உக்காருங்க.  என்ன வேடிக்கையா இருக்கா?” என்றாள். “இல்ல.  வியப்பா இருக்கு” என்று தெரிவித்தவாறு வாங்கி வந்த பொருட்கள் அடங்கிய பையை நீட்டினேன்.  “என்ன இது?” என்றவாறு வாங்கிக் கொண்டாள். ஒரு நமட்டுச் சிரிப்பை வெளிப்படுத்தினாள். “ஒண்ணுமில்ல.  வெருங்கையோட வரக்கூடாதில்ல. அதான்.  ஜஸ்ட் பார்மாலிட்டி” என்றவாறு என்னை சோபாவில் அமுத்திக்கொண்டேன்.  புஸ் என அது உள்ளே போனது.  மென்மையானது.  அவளும் எதிரே கிடந்த இன்னொரு சோபாவில் தன்னை அமர்த்திக் கொண்டாள். அவளும் ஒரு ‘ஒண்ணுமில்லயை’ உச்சரித்து  “வெளியே பூட்டிட்டா வீட்டில் யாரும் இல்லன்னுட்டு வர மாட்டாங்க.  நமக்கு டிஸ்டப் இருக்காது. அதான் இப்படி பூட்டினேன்” என்றாள். “ஓகே. தட்ஸ் குட் ஐடியா” “பெருசா யாரும் வரமாட்டாங்க.  ரெண்டு வீடு தள்ளி இருக்குற மாமி எப்பயாவது வருவாங்க.  எதுத்த வீட்டு வாண்டு அடிக்கடி வருவான்.  வேற யாரு வரப்போறா!” “தர்ஷா எங்க?” என்றேன். “கம்பெனியில அவசரமா வைசாக் போகணுன்னு காலையில கூப்டாங்க. பொய்ட்டான்” என ஒரு பொய்யைச் சொன்னாள். நானும் தெரியாது போல “அடடா வந்தும் மீட் பண்ண முடியாமே போச்சே. தெரிஞ்சிருந்தா வந்திருக்க மாட்டேன்” என்றேன். “ஏன் அவன் இல்லன்னா வரக்கூடாதா? அவன் போனதும் நல்லதுதான் என எனக்கு பட்டுச்சி” என்றவள் என் முகத்தை உற்று நோக்கினாள்.  நான் பேசாதிருந்தது எதேனும் ஆச்சர்யத்தை கொடுத்திருக்குமோ என ஐயுற்றேன்.  உண்மையில் என்ன பேசுவதென்று எனக்கு புலப்படவில்லை. கொஞ்சம் மௌனம் நகர்ந்தது.  ஓணத்திற்கு உடுத்தும் கேரளாவிற்கேயான பண்பாட்டு உடையான கசவு எனப்படும் தூய வெண்ணிற சேலை அணிந்திருந்தாள்.  சேலைக்கு ஏற்றார்போல் சிவப்பு நிற பிளவுஸில் ஒரு ஜெலிப்பு தென்பட்டது. சாப்பிட அழைத்தாள்.  அதற்கு முன் வீட்டை பார்த்துவிடலாம் என அழைத்து ஒவ்வொறு அறையாக காண்பித்தாள்.  இருவருக்கு தேவைக்கு அதிகமான வீடாக கருதினேன்.  மூன்று படுக்கையறைகள்.  ஒன்று எப்போதும் பூட்டியே கிடக்குமாம். வீட்டின் உட்புறத்தில் ஐவேரி நிற வண்ணம் பூசப்பட்டிருந்து.  அவளுடைய  படுக்கையறை பதினைந்துக்கு பதினைந்து அளவில் இருக்கலாம் பெரிய அறை.  அது மட்டும் முழுக்க மஞ்சள் நிறத்தால் மெழுகப்பட்டிருந்து.  பெரிய அறைக்கு மஞ்சள் நிறம் உகந்தது அல்ல.  அது எரிச்சலை, கோபத்தை தூண்டும் என எப்போதோ படித்த ஞாபகம் வந்து போனது.   சமையல் அறையில் பாத்திரங்கள் அடுக்கி வைத்திருந்த நேர்த்தி அவளது கலை ஆர்வத்தை பிரதி பலித்தது.  நான் வருகிறேன் எற்று ஒழுங்குபடுத்தி இருக்கலாம்.  உணவளித்தாள். ஹாட் கேஸ்ஸில் ஏற்கனவே தயாரித்து வைத்திருந்த இளநீர் தேசையும் சோயா பர்கரையும் சுடச் சுட பரிமாரினாள்.  சேர்ந்து உண்டோம்.  “சோயா பர்க்கர் நல்ல சுவை. பாராட்டுகள்”  என்றேன். “அப்போ தேசை நல்லா இல்லையா?” என்று சிணுங்கினாள். “அதுவும் நல்லாதான் இருக்கு.  எதாவது சொல்லணுமேன்னு சொன்னேன்.  ஆனா உண்மையத்தான் சொன்னேன்.” ஹாலுக்கு வந்ததும் எதிரெதிர் சோபாவில் இறுத்திக்கொண்டோம். ஒரு சின்ன மௌனம்.  அதன் நீட்சியை, குறுக்கை கால அளவில் கணக்கிட இயலாது என்றுதான் சொல்ல வேண்டும்.  அதில் ஆதி அந்தம் இல்லை.  நடுவில் அவள்தான்  முற்றுபுள்ளி வைத்து தொடங்கி வைத்தாள். பேச ஆரம்பித்தோம்.  பேசினோம். பேசினோம்.  நெடுநேரம் பேசிக்கொண்டே இருந்தோம். எல்லாம் ஞாபகம் இல்லை.  அவ்வளவு.  தொடர்ச்சியாக. துண்டு துண்டாக. நடுவில் கொஞ்ச ஞாபகம் உள்ளது.  “கண்ணீர் வராமல் உங்களால் அழத் தெரியுமா?  கருணா சார்!” “அழுது அழுது வற்றிப்போனால் கண்ணீர் எப்படி வரும்” “அதுதான் இல்லை. கண்ணீர் வற்றுவதே இல்லை. அது ஆழமான பசிபிக் பெருங்கடல்.   அழ அழ ஆறுதல் அடைந்து கண்ணீர் நின்று போகிறது. தெட்ஸ் ஆல்” “அப்போ கண்ணீர்தான் ஆறுதலா?” “அதிலென்ன வியப்பு” “நீங்கள் அழுது இருக்கிறீர்களா?” “இல்லை.  அழுதுகொண்டே இருக்கிறேன்” “அப்ப கண்ணீர் வந்துகொண்டே இருக்கா?” “அதுவும் இல்லை.  ஊமை அழுகை.  மௌனம் தாண்டிய மோனம் போல” “அதுதான் இறுதியென்றால், எதுவும் இல்லையே. பின்னே ஏன்?” “நீங்கள் வாழும் பூமியில்தானே நான் இருக்கிறேன்” “இல்லை.  நீங்க இன்னும் நீங்க சொல்லும் நிலையை அடைய வில்லை.  அடைந்திருந்தால் நீங்க வேறு உலகத்தில்தானே வாழ்ந்து கொண்டு இருப்பிங்க” “புத்தனுக்கு தங்கதால் சிலை வைத்துள்ளது நீங்க தானே!” “இன்னும் நீங்க முழுமையாக வில்லைதானே?” “சன்யாசிகள் கூட கஞ்சா குடிக்கிறார்கள்.” “அவர்கள் முழுமையற்றவர்கள்” “நானும்  நீங்களும் யாரை வேண்டுமானாலும் சொல்லுங்கள்” “ஆனா நீங்க பின்னோக்கிச் செல்றிங்க. அழ வேண்டும். கண்ணீர் சிந்த வேண்டும். அது மெல்ல வற்றிப்போக வேண்டும். மீண்டும் அழவேண்டும் என்பது போல” “இருக்கலாம். புரியாமல் போனது வாழ்க்கை. அது அழுகையா? மாயையா?. இப்போது ஆறுதலே வாழ்க்கை என்று கருதத் தொடங்கிவிட்டேன்” “ம்” “ஒரு பெஸ்டி தேவைப்படுகிறது.  எனக்கென்று இங்கு யாரும் இல்லை. தம்பி ஒரு எதார்த்தவாதிதான் என்றாலும் மனம் விட்டு பேச முடியாதுதானே.  நீண்ட காலமாக நெஞ்சு கனத்து போயிருக்கு. சேமித்தவற்றை செலவழிக்க வேண்டும்.” “சரி” “அதை வாங்கிக்கொள்ள யாரேனும் இருக்கிறார்களா என ஏங்கியபோது நீங்க என் கண் முன்னாடி வந்திங்க.  உங்க கன்னியம் எனக்கு எப்போதும் பிடிக்கும்.  அதான்.    நீங்க நல்ல பெஸ்டியா இருப்பிங்க.” “அழுங்க.    கண்ணீரை துடைத்து விடுகிறேன்.  குமுறல்கள் கூச்சமற்ற பேச்சுகள் எதுவானாலும் எனக்கு சாதாரணமே. என்ன இப்படி பேசுகிறேன் என நினைக்க வேண்டாம். என் சுபாவம் அது” “மனிதர்கள் மாய உலகத்தில் வாழும் நிஜங்கள் இல்லையா?” “ஆனாலும் எதிர்பார்ப்பு நீர்த்துப் போவதில்லை” “மௌனமாக அடங்கிப்போன கதறல் எப்போதாவது சீறி எழுகிறது” “ஒரு கடலாகி அதை சமாதியாக்கி  விடுகிறேன்” “கருணா சார்?” “மேடம்?” “நான் ஏன் இங்கு தனியே வந்து உழைத்துக் கொண்டிருக்கிறேன் என கேட்கவே இல்லையே!” “அதுதான் எரிமலை குழம்பாய் வெளிவரும் என்கிறீர்கள்.  வரும்போது உணர்கிறேன்” “உணர்வீர்களா? சுடுபடுவீர்களா?” “நானும் வெந்து தணிந்தவன்தான்.” “ம்” “தொழிலில் நஷ்டம் ஏற்பட்டு வறுமையில் தள்ளப்பட்டு இங்கே வேலைக்கு வந்ததாக அறிந்தேன்.” “பொதுவாக, இவ்வாறான நிலையில் ஆண்கள்தான் மனைவி மக்களை விட்டுவிட்டு தேசம் விட்டு தேசம் போய் வேலை செய்வாங்க ஆனால் நான் எப்படி வந்தேன் என்பது புதிராகத் தெரிகிறதா?” “ஆம்…” "புரியும் புதிராக இருக்கலாம். புரியாத புதிராக இருக்கலாம். “புரியும்போது புரியட்டும். இல்லை புரியாமலே போகட்டும்” “சரி. அப்படின்னா நீங்க அடிக்கடி இங்க வரணும்.  தம்பி இருக்கும் போதும். அவன் எதார்த்தமானவன்.” “இருக்கும்போது நீங்க மனத்தை விடமுடியாது இல்லையா?” “ஆம்.  ஆனா இறுக்கம் குறையும்.” “நல்லது.  இருவருக்கும் மனித வாசம் தேவைதானே!” “மூவருக்கும்.  நாம் வளராத செடிகள். திடீரென தழைத்து, பூத்து காய்த்து, கனிவதுபோல தெரிகிறது” “தோப்பாகி காடாகலாம்” “என்ன மரங்கள்” “எல்லாவற்றிற்கும் ஏதெனும் ஒரு பேரு இருக்கும்” “ஆனா எல்லா பேரும் எல்லாருக்கும் தெரியாது” “நீங்க எட்டி மரத்த பாத்துருக்கிங்களா?” “இல்லை” “நானும் பாத்ததில்லை.  இத எட்டி மரம்ன்னு சொல்லுவோமே” “ம். சொல்லுவோமே. எட்டிமரக்காடு” “நான் அழைச்சபோது நீங்க என்ன நெனச்சிங்க?” " வேற மாதிரி.  ஆனா நான் நல்லவன்.  “ஒரு ஆரோக்கியமான பெஸ்டி.” “ஆரோக்யமே பெஸ்டி” “ம்” நீண்டு கொண்டே போனது. FREETAMILEBOOKS.COM மின்புத்தகங்களைப் படிக்க உதவும் கருவிகள்: மின்புத்தகங்களைப் படிப்பதற்கென்றே கையிலேயே வைத்துக் கொள்ளக்கூடிய பல கருவிகள் தற்போது சந்தையில் வந்துவிட்டன. Kindle, Nook, Android Tablets போன்றவை இவற்றில் பெரும்பங்கு வகிக்கின்றன. இத்தகைய கருவிகளின் மதிப்பு தற்போது 4000 முதல் 6000 ரூபாய் வரை குறைந்துள்ளன. எனவே பெரும்பான்மையான மக்கள் தற்போது இதனை வாங்கி வருகின்றனர். ஆங்கிலத்திலுள்ள மின்புத்தகங்கள்: ஆங்கிலத்தில் லட்சக்கணக்கான மின்புத்தகங்கள் தற்போது கிடைக்கப் பெறுகின்றன. அவை PDF, EPUB, MOBI, AZW3. போன்ற வடிவங்களில் இருப்பதால், அவற்றை மேற்கூறிய கருவிகளைக் கொண்டு நாம் படித்துவிடலாம். தமிழிலுள்ள மின்புத்தகங்கள்: தமிழில் சமீபத்திய புத்தகங்களெல்லாம் நமக்கு மின்புத்தகங்களாக கிடைக்கப்பெறுவதில்லை. ProjectMadurai.com எனும் குழு தமிழில் மின்புத்தகங்களை வெளியிடுவதற்கான ஒர் உன்னத சேவையில் ஈடுபட்டுள்ளது. இந்தக் குழு இதுவரை வழங்கியுள்ள தமிழ் மின்புத்தகங்கள் அனைத்தும் PublicDomain-ல் உள்ளன. ஆனால் இவை மிகவும் பழைய புத்தகங்கள். சமீபத்திய புத்தகங்கள் ஏதும் இங்கு கிடைக்கப்பெறுவதில்லை. சமீபத்திய புத்தகங்களை தமிழில் பெறுவது எப்படி? அமேசான் கிண்டில் கருவியில் தமிழ் ஆதரவு தந்த பிறகு, தமிழ் மின்னூல்கள் அங்கே விற்பனைக்குக் கிடைக்கின்றன. ஆனால் அவற்றை நாம் பதிவிறக்க இயலாது. வேறு யாருக்கும் பகிர இயலாது. சமீபகாலமாக பல்வேறு எழுத்தாளர்களும், பதிவர்களும், சமீபத்திய நிகழ்வுகளைப் பற்றிய விவரங்களைத் தமிழில் எழுதத் தொடங்கியுள்ளனர். அவை இலக்கியம், விளையாட்டு, கலாச்சாரம், உணவு, சினிமா, அரசியல், புகைப்படக்கலை, வணிகம் மற்றும் தகவல் தொழில்நுட்பம் போன்ற பல்வேறு தலைப்புகளின் கீழ் அமைகின்றன. நாம் அவற்றையெல்லாம் ஒன்றாகச் சேர்த்து தமிழ் மின்புத்தகங்களை உருவாக்க உள்ளோம். அவ்வாறு உருவாக்கப்பட்ட மின்புத்தகங்கள் Creative Commons எனும் உரிமத்தின் கீழ் வெளியிடப்படும். இவ்வாறு வெளியிடுவதன் மூலம் அந்தப் புத்தகத்தை எழுதிய மூல ஆசிரியருக்கான உரிமைகள் சட்டரீதியாகப் பாதுகாக்கப்படுகின்றன. அதே நேரத்தில் அந்த மின்புத்தகங்களை யார் வேண்டுமானாலும், யாருக்கு வேண்டுமானாலும், இலவசமாக வழங்கலாம். எனவே தமிழ் படிக்கும் வாசகர்கள் ஆயிரக்கணக்கில் சமீபத்திய தமிழ் மின்புத்தகங்களை இலவசமாகவே பெற்றுக் கொள்ள முடியும். தமிழிலிருக்கும் எந்த வலைப்பதிவிலிருந்து வேண்டுமானாலும் பதிவுகளை எடுக்கலாமா? கூடாது. ஒவ்வொரு வலைப்பதிவும் அதற்கென்றே ஒருசில அனுமதிகளைப் பெற்றிருக்கும். ஒரு வலைப்பதிவின் ஆசிரியர் அவரது பதிப்புகளை “யார் வேண்டுமானாலும் பயன்படுத்தலாம்” என்று குறிப்பிட்டிருந்தால் மட்டுமே அதனை நாம் பயன்படுத்த முடியும். அதாவது “Creative Commons” எனும் உரிமத்தின் கீழ் வரும் பதிப்புகளை மட்டுமே நாம் பயன்படுத்த முடியும். அப்படி இல்லாமல் “All Rights Reserved” எனும் உரிமத்தின் கீழ் இருக்கும் பதிப்புகளை நம்மால் பயன்படுத்த முடியாது. வேண்டுமானால் “All Rights Reserved” என்று விளங்கும் வலைப்பதிவுகளைக் கொண்டிருக்கும் ஆசிரியருக்கு அவரது பதிப்புகளை “Creative Commons” உரிமத்தின் கீழ் வெளியிடக்கோரி நாம் நமது வேண்டுகோளைத் தெரிவிக்கலாம். மேலும் அவரது படைப்புகள் அனைத்தும் அவருடைய பெயரின் கீழே தான் வெளியிடப்படும் எனும் உறுதியையும் நாம் அளிக்க வேண்டும். பொதுவாக புதுப்புது பதிவுகளை  உருவாக்குவோருக்கு அவர்களது பதிவுகள்  நிறைய வாசகர்களைச் சென்றடைய வேண்டும் என்ற எண்ணம் இருக்கும். நாம் அவர்களது படைப்புகளை எடுத்து இலவச மின்புத்தகங்களாக வழங்குவதற்கு  நமக்கு அவர்கள் அனுமதியளித்தால், உண்மையாகவே அவர்களது படைப்புகள் பெரும்பான்மையான மக்களைச் சென்றடையும். வாசகர்களுக்கும் நிறைய புத்தகங்கள் படிப்பதற்குக் கிடைக்கும் வாசகர்கள் ஆசிரியர்களின் வலைப்பதிவு முகவரிகளில் கூட அவர்களுடைய படைப்புகளை தேடிக் கண்டுபிடித்து படிக்கலாம். ஆனால் நாங்கள் வாசகர்களின் சிரமத்தைக் குறைக்கும் வண்ணம் ஆசிரியர்களின் சிதறிய வலைப்பதிவுகளை ஒன்றாக இணைத்து ஒரு முழு மின்புத்தகங்களாக உருவாக்கும் வேலையைச் செய்கிறோம். மேலும் அவ்வாறு உருவாக்கப்பட்ட புத்தகங்களை “மின்புத்தகங்களைப் படிக்க உதவும் கருவிகள்”-க்கு ஏற்ற வண்ணம் வடிவமைக்கும் வேலையையும் செய்கிறோம். FREETAMILEBOOKS.COM இந்த வலைத்தளத்தில்தான் பின்வரும் வடிவமைப்பில் மின்புத்தகங்கள் காணப்படும். PDF for desktop, PDF for 6” devices, EPUB, AZW3, ODT இந்த வலைதளத்திலிருந்து யார் வேண்டுமானாலும் மின்புத்தகங்களை இலவசமாகப் பதிவிறக்கம்(download) செய்து கொள்ளலாம். அவ்வாறு பதிவிறக்கம்(download) செய்யப்பட்ட புத்தகங்களை யாருக்கு வேண்டுமானாலும் இலவசமாக வழங்கலாம். இதில் நீங்கள் பங்களிக்க விரும்புகிறீர்களா?  நீங்கள் செய்யவேண்டியதெல்லாம் தமிழில் எழுதப்பட்டிருக்கும் வலைப்பதிவுகளிலிருந்து பதிவுகளை எடுத்து, அவற்றை LibreOffice/MS Office போன்ற wordprocessor-ல் போட்டு ஓர் எளிய மின்புத்தகமாக மாற்றி எங்களுக்கு அனுப்பவும். அவ்வளவுதான்! மேலும் சில பங்களிப்புகள் பின்வருமாறு: 1. ஒருசில பதிவர்கள்/எழுத்தாளர்களுக்கு அவர்களது படைப்புகளை “Creative Commons” உரிமத்தின்கீழ் வெளியிடக்கோரி மின்னஞ்சல் அனுப்புதல் 2. தன்னார்வலர்களால் அனுப்பப்பட்ட மின்புத்தகங்களின் உரிமைகளையும் தரத்தையும் பரிசோதித்தல் 3. சோதனைகள் முடிந்து அனுமதி வழங்கப்பட்ட தரமான மின்புத்தகங்களை நமது வலைதளத்தில் பதிவேற்றம் செய்தல் விருப்பமுள்ளவர்கள் freetamilebooksteam@gmail.com எனும் முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பவும்.  இந்தத் திட்டத்தின் மூலம் பணம் சம்பாதிப்பவர்கள் யார்? யாருமில்லை. இந்த வலைத்தளம் முழுக்க முழுக்க தன்னார்வலர்களால் செயல்படுகின்ற ஒரு வலைத்தளம் ஆகும். இதன் ஒரே நோக்கம் என்னவெனில் தமிழில் நிறைய மின்புத்தகங்களை உருவாக்குவதும், அவற்றை இலவசமாக பயனர்களுக்கு வழங்குவதுமே ஆகும். மேலும் இவ்வாறு உருவாக்கப்பட்ட மின்புத்தகங்கள், ebook reader ஏற்றுக்கொள்ளும் வடிவமைப்பில் அமையும். இத்திட்டத்தால் பதிப்புகளை எழுதிக்கொடுக்கும் ஆசிரியர்/பதிவருக்கு என்ன லாபம்? ஆசிரியர்/பதிவர்கள் இத்திட்டத்தின் மூலம் எந்தவிதமான தொகையும் பெறப்போவதில்லை. ஏனெனில், அவர்கள் புதிதாக இதற்கென்று எந்தஒரு பதிவையும்  எழுதித்தரப்போவதில்லை. ஏற்கனவே அவர்கள் எழுதி வெளியிட்டிருக்கும் பதிவுகளை எடுத்துத்தான் நாம் மின்புத்தகமாக வெளியிடப்போகிறோம். அதாவது அவரவர்களின் வலைதளத்தில் இந்தப் பதிவுகள் அனைத்தும் இலவசமாகவே கிடைக்கப்பெற்றாலும், அவற்றையெல்லாம் ஒன்றாகத் தொகுத்து ebook reader போன்ற கருவிகளில் படிக்கும் விதத்தில் மாற்றித் தரும் வேலையை இந்தத் திட்டம் செய்கிறது. தற்போது மக்கள் பெரிய அளவில் tablets மற்றும் ebook readers போன்ற கருவிகளை நாடிச் செல்வதால் அவர்களை நெருங்குவதற்கு இது ஒரு நல்ல வாய்ப்பாக அமையும். நகல் எடுப்பதை அனுமதிக்கும் வலைதளங்கள் ஏதேனும் தமிழில் உள்ளதா? உள்ளது. பின்வரும் தமிழில் உள்ள வலைதளங்கள் நகல் எடுப்பதினை அனுமதிக்கின்றன. 1. http://www.vinavu.com 2. http://www.badriseshadri.in  3. http://maattru.com  4. http://www.kaniyam.com  5. http://blog.ravidreams.net  எவ்வாறு ஒர் எழுத்தாளரிடம் CREATIVE COMMONS உரிமத்தின் கீழ் அவரது படைப்புகளை வெளியிடுமாறு கூறுவது? இதற்கு பின்வருமாறு ஒரு மின்னஞ்சலை அனுப்ப வேண்டும். துவக்கம் உங்களது வலைத்தளம் அருமை (வலைதளத்தின் பெயர்). தற்போது படிப்பதற்கு உபயோகப்படும் கருவிகளாக Mobiles மற்றும் பல்வேறு கையிருப்புக் கருவிகளின் எண்ணிக்கை அதிகரித்து வந்துள்ளது. இந்நிலையில் நாங்கள் http://www.FreeTamilEbooks.com எனும் வலைதளத்தில், பல்வேறு தமிழ் மின்புத்தகங்களை வெவ்வேறு துறைகளின் கீழ் சேகரிப்பதற்கான ஒரு புதிய திட்டத்தில் ஈடுபட்டுள்ளோம்.  இங்கு சேகரிக்கப்படும் மின்புத்தகங்கள் பல்வேறு கணிணிக் கருவிகளான Desktop,ebook readers like kindl, nook, mobiles, tablets with android, iOS போன்றவற்றில் படிக்கும் வண்ணம் அமையும். அதாவது இத்தகைய கருவிகள் support செய்யும் odt, pdf, ebub, azw போன்ற வடிவமைப்பில் புத்தகங்கள் அமையும். இதற்காக நாங்கள் உங்களது வலைதளத்திலிருந்து பதிவுகளை பெற விரும்புகிறோம். இதன் மூலம் உங்களது பதிவுகள் உலகளவில் இருக்கும் வாசகர்களின் கருவிகளை நேரடியாகச் சென்றடையும். எனவே உங்களது வலைதளத்திலிருந்து பதிவுகளை  பிரதியெடுப்பதற்கும் அவற்றை மின்புத்தகங்களாக மாற்றுவதற்கும் உங்களது அனுமதியை வேண்டுகிறோம். இவ்வாறு உருவாக்கப்பட்ட மின்புத்தகங்களில் கண்டிப்பாக ஆசிரியராக உங்களின் பெயரும் மற்றும் உங்களது வலைதள முகவரியும் இடம்பெறும். மேலும் இவை “Creative Commons” உரிமத்தின் கீழ் மட்டும்தான் வெளியிடப்படும் எனும் உறுதியையும் அளிக்கிறோம். http://creativecommons.org/licenses/  நீங்கள் எங்களை பின்வரும் முகவரிகளில் தொடர்பு கொள்ளலாம். e-mail : FREETAMILEBOOKSTEAM@GMAIL.COM  FB : https://www.facebook.com/FreeTamilEbooks  G plus: https://plus.google.com/communities/108817760492177970948    நன்றி. முடிவு மேற்கூறியவாறு ஒரு மின்னஞ்சலை உங்களுக்குத் தெரிந்த அனைத்து எழுத்தாளர்களுக்கும் அனுப்பி அவர்களிடமிருந்து அனுமதியைப் பெறுங்கள். முடிந்தால் அவர்களையும் “Creative Commons License”-ஐ அவர்களுடைய வலைதளத்தில் பயன்படுத்தச் சொல்லுங்கள். கடைசியாக அவர்கள் உங்களுக்கு அனுமதி அளித்து அனுப்பியிருக்கும் மின்னஞ்சலைFREETAMILEBOOKSTEAM@GMAIL.COM எனும் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.  ஓர் எழுத்தாளர் உங்களது உங்களது வேண்டுகோளை மறுக்கும் பட்சத்தில் என்ன செய்வது? அவர்களையும் அவர்களது படைப்புகளையும் அப்படியே விட்டுவிட வேண்டும். ஒருசிலருக்கு அவர்களுடைய சொந்த முயற்சியில் மின்புத்தகம் தயாரிக்கும் எண்ணம்கூட இருக்கும். ஆகவே அவர்களை நாம் மீண்டும் மீண்டும் தொந்தரவு செய்யக் கூடாது. அவர்களை அப்படியே விட்டுவிட்டு அடுத்தடுத்த எழுத்தாளர்களை நோக்கி நமது முயற்சியைத் தொடர வேண்டும்.   மின்புத்தகங்கள் எவ்வாறு அமைய வேண்டும்? ஒவ்வொருவரது வலைத்தளத்திலும் குறைந்தபட்சம் நூற்றுக்கணக்கில் பதிவுகள் காணப்படும். அவை வகைப்படுத்தப்பட்டோ அல்லது வகைப்படுத்தப் படாமலோ இருக்கும்.  நாம் அவற்றையெல்லாம் ஒன்றாகத் திரட்டி ஒரு பொதுவான தலைப்பின்கீழ் வகைப்படுத்தி மின்புத்தகங்களாகத் தயாரிக்கலாம். அவ்வாறு வகைப்படுத்தப்படும் மின்புத்தகங்களை பகுதி-I பகுதி-II என்றும் கூட தனித்தனியே பிரித்துக் கொடுக்கலாம்.  தவிர்க்க வேண்டியவைகள் யாவை? இனம், பாலியல் மற்றும் வன்முறை போன்றவற்றைத் தூண்டும் வகையான பதிவுகள் தவிர்க்கப்பட வேண்டும்.  எங்களைத் தொடர்பு கொள்வது எப்படி? நீங்கள் பின்வரும் முகவரிகளில் எங்களைத் தொடர்பு கொள்ளலாம்.  - EMAIL : FREETAMILEBOOKSTEAM@GMAIL.COM   - Facebook: https://www.facebook.com/FreeTamilEbooks   - Google Plus: https://plus.google.com/communities/108817760492177970948   இத்திட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் யார்? குழு – http://freetamilebooks.com/meet-the-team/    SUPPORTED BY கணியம் அறக்கட்டளை http://kaniyam.com/foundation     கணியம் அறக்கட்டளை []   தொலை நோக்கு – Vision தமிழ் மொழி மற்றும் இனக்குழுக்கள் சார்ந்த மெய்நிகர்வளங்கள், கருவிகள் மற்றும் அறிவுத்தொகுதிகள், அனைவருக்கும்  கட்டற்ற அணுக்கத்தில் கிடைக்கும் சூழல் பணி இலக்கு  – Mission அறிவியல் மற்றும் சமூகப் பொருளாதார வளர்ச்சிக்கு ஒப்ப, தமிழ் மொழியின் பயன்பாடு வளர்வதை உறுதிப்படுத்துவதும், அனைத்து அறிவுத் தொகுதிகளும், வளங்களும் கட்டற்ற அணுக்கத்தில் அனைவருக்கும் கிடைக்கச்செய்தலும்.   தற்போதைய செயல்கள் - கணியம் மின்னிதழ் – http://kaniyam.com - கிரியேட்டிவ் காமன்சு உரிமையில் இலவச தமிழ் மின்னூல்கள் – http://FreeTamilEbooks.com   கட்டற்ற மென்பொருட்கள் - உரை ஒலி மாற்றி –  Text to Speech - எழுத்துணரி – Optical Character Recognition - விக்கிமூலத்துக்கான எழுத்துணரி - மின்னூல்கள் கிண்டில் கருவிக்கு அனுப்புதல் – Send2Kindle - விக்கிப்பீடியாவிற்கான சிறு கருவிகள் - மின்னூல்கள் உருவாக்கும் கருவி - உரை ஒலி மாற்றி – இணைய செயலி - சங்க இலக்கியம் – ஆன்டிராய்டு செயலி - FreeTamilEbooks – ஆன்டிராய்டு செயலி - FreeTamilEbooks – ஐஒஎஸ் செயலி - WikisourceEbooksReportஇந்திய மொழிகளுக்ககான விக்கிமூலம் மின்னூல்கள் பதிவிறக்கப் பட்டியல் - FreeTamilEbooks.com – Download counter மின்னூல்கள் பதிவிறக்கப் பட்டியல்   அடுத்த திட்டங்கள்/மென்பொருட்கள்   - விக்கி மூலத்தில் உள்ள மின்னூல்களை பகுதிநேர/முழு நேரப் பணியாளர்கள் மூலம் விரைந்து பிழை திருத்துதல் - முழு நேர நிரலரை பணியமர்த்தி பல்வேறு கட்டற்ற மென்பொருட்கள் உருவாக்குதல் - தமிழ் NLP க்கான பயிற்சிப் பட்டறைகள் நடத்துதல் - கணியம் வாசகர் வட்டம் உருவாக்குதல் - கட்டற்ற மென்பொருட்கள், கிரியேட்டிவ் காமன்சு உரிமையில் வளங்களை உருவாக்குபவர்களைக் கண்டறிந்து ஊக்குவித்தல் - கணியம் இதழில் அதிக பங்களிப்பாளர்களை உருவாக்குதல், பயிற்சி அளித்தல் - மின்னூலாக்கத்துக்கு ஒரு இணையதள செயலி - எழுத்துணரிக்கு ஒரு இணையதள செயலி - தமிழ் ஒலியோடைகள் உருவாக்கி வெளியிடுதல் - http://OpenStreetMap.org ல் உள்ள இடம், தெரு, ஊர் பெயர்களை தமிழாக்கம் செய்தல் - தமிழ்நாடு முழுவதையும் http://OpenStreetMap.org ல் வரைதல் - குழந்தைக் கதைகளை ஒலி வடிவில் வழங்குதல் - http://Ta.wiktionary.org ஐ ஒழுங்குபடுத்தி API க்கு தோதாக மாற்றுதல் - http://Ta.wiktionary.org க்காக ஒலிப்பதிவு செய்யும் செயலி உருவாக்குதல் - தமிழ் எழுத்துப் பிழைத்திருத்தி உருவாக்குதல் - தமிழ் வேர்ச்சொல் காணும் கருவி உருவாக்குதல் - எல்லா http://FreeTamilEbooks.com மின்னூல்களையும் Google Play Books, GoodReads.com ல் ஏற்றுதல் - தமிழ் தட்டச்சு கற்க இணைய செயலி உருவாக்குதல் - தமிழ் எழுதவும் படிக்கவும் கற்ற இணைய செயலி உருவாக்குதல் ( aamozish.com/Course_preface போல)   மேற்கண்ட திட்டங்கள், மென்பொருட்களை உருவாக்கி செயல்படுத்த உங்கள் அனைவரின் ஆதரவும் தேவை. உங்களால் எவ்வாறேனும் பங்களிக்க இயலும் எனில் உங்கள் விவரங்களை  kaniyamfoundation@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்.   வெளிப்படைத்தன்மை கணியம் அறக்கட்டளையின் செயல்கள், திட்டங்கள், மென்பொருட்கள் யாவும் அனைவருக்கும் பொதுவானதாகவும், 100% வெளிப்படைத்தன்மையுடனும் இருக்கும்.இந்த இணைப்பில் செயல்களையும், இந்த இணைப்பில் மாத அறிக்கை, வரவு செலவு விவரங்களுடனும் காணலாம். கணியம் அறக்கட்டளையில் உருவாக்கப்படும் மென்பொருட்கள் யாவும் கட்டற்ற மென்பொருட்களாக மூல நிரலுடன், GNU GPL, Apache, BSD, MIT, Mozilla ஆகிய உரிமைகளில் ஒன்றாக வெளியிடப்படும். உருவாக்கப்படும் பிற வளங்கள், புகைப்படங்கள், ஒலிக்கோப்புகள், காணொளிகள், மின்னூல்கள், கட்டுரைகள் யாவும் யாவரும் பகிரும், பயன்படுத்தும் வகையில் கிரியேட்டிவ் காமன்சு உரிமையில் இருக்கும். நன்கொடை உங்கள் நன்கொடைகள் தமிழுக்கான கட்டற்ற வளங்களை உருவாக்கும் செயல்களை சிறந்த வகையில் விரைந்து செய்ய ஊக்குவிக்கும். பின்வரும் வங்கிக் கணக்கில் உங்கள் நன்கொடைகளை அனுப்பி, உடனே விவரங்களை kaniyamfoundation@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்.  Kaniyam Foundation Account Number : 606 1010 100 502 79 Union Bank Of India West Tambaram, Chennai IFSC – UBIN0560618 Account Type : Current Account   UPI செயலிகளுக்கான QR Code []   குறிப்பு: சில UPI செயலிகளில் இந்த QR Code வேலை செய்யாமல் போகலாம். அச்சமயம் மேலே உள்ள வங்கிக் கணக்கு எண், IFSC code ஐ பயன்படுத்தவும். Note: Sometimes UPI does not work properly, in that case kindly use Account number and IFSC code for internet banking.