[]   உன்னிடத்தில் என்னைக் கொடுத்தேன் உஷாதீபன் மின்னூல் வெளியீடு : www.freetamilebooks.com    ஆசிரியர் :  உஷாதீபன்,  ushaadeepan@gmail.com  அட்டைப்படம், மின்னூலாக்கம் :  பிரசன்னா,   udpmprasanna@gmail.com   உரிமை : Creative Commons Attribution – ShareAlike 4.0 International License.  பொருளடக்கம்   அத்தியாயம் 1  அத்தியாயம் 2  அத்தியாயம் 3  அத்தியாயம் 4  அத்தியாயம் 5  அத்தியாயம் 6  அத்தியாயம் 7  அத்தியாயம் 8   அத்தியாயம் 9   அத்தியாயம் 10   அத்தியாயம் 11   அத்தியாயம் 12   அத்தியாயம் 13   அத்தியாயம் 14  உஷாதீபன் - தன் குறிப்பு  உங்கள் படைப்புகளை வெளியிடலாமே    அத்தியாயம் 1   “அப்போ நீ என்னைத் தப்பா நினைக்கிறே? அப்டித்தானே…?”-மோகன் கேட்ட கேள்வியில் ஒரு நிமிடம் தன்னை நிதானப்படுத்திக் கொண்டாள் நந்தினி. பெரிய சண்டைக்கு அடிபோடுகிறான் அவன்.   இன்று காலையில் எழுந்தது முதலே ஆள் சரியில்லை. ஏதேனும் கேட்கப் போனால ஏறுக்கு மாறாகப் பதில் சொல்கிறான். அம்மாதிரி நேரங்களில் அவனிடம் பேச்சைக் குறைத்துக் கொண்டு விடுவாள் அவள். கூடியான மட்டும் அன்று ஒதுங்கி இருந்து விடுவாள். எது கேட்கப் போனாலும் வேண்டுமென்றே சொல்வது போல் இருக்கும் அவன் பதில். முரட்டுத் தனமாகப் பேசுவான். மூடு சரியில்லை என்று வந்து விடுவாள். பகலில் அவன் செய்யும் வழக்கமான காரியங்களைக் கூடச் சொல்ல மாட்டாள். வேலையோடு வேலையாக அவளே செய்து விடுவாள். அன்று அவள் அலுவலகம் செல்ல சற்றுக் கூடுதல் நேரம் ஆகும். டென்ஷன்தான். அதைப் பொறுத்துக் கொள்வதைத் தவிர வேறு வழியில்லை. ஆனால் ஒன்று. எது எப்படியோ, கரெக்டாக வண்டியில் கொண்டு விட்டு விடுவான். வழியில் பேச மாட்டான். கொண்டு போய் அப்படியே நிறுத்துவான். அவள் இறங்கிக் கொள்வாள். வரேன்…என்று பல முறை சொல்லியிருக்கிறாள். அவன் பதில் சொன்னதில்லை. அதனால் அவளும் இப்பொழுதெல்லாம் எதுவும் சொல்வதில்லை. அவள்பாட்டுக்கு இறங்கிப் போய்க்கொண்டிருப்பாள்.  அது கூட அவனுக்குக் கோபமாகத்தான் இருக்கும்.   “நா அப்டியிருந்தா, நீயும் அப்டியிருப்பியோ? இறங்கிப் போகும்போது போயிட்டு வரேன்னு சொல்ல மாட்டீகளோ? அம்புட்டுத் திமிரா உனக்கு? எல்லாம் நாமளும் சம்பாதிக்கிறோம்கிற திமிறுதாண்டீ….”   சொல்லியிருக்கிறான் முன்பு. இப்பொழுதெல்லாம் அதைச் சொல்வதில்லை. அந்த மட்டுக்கும் கொஞ்சம் முன்னேற்றம் என்றுதான் சொல்ல வேண்டும். ‘கழுத, போனாப் போய்க்கோ…’ அவ்வளவுதான் இப்போது. அப்படி நினைக்கிறானா அல்லது தனது இருப்பே அவனுக்குப் பழகி விட்டதா தெரியவில்லை. கடனே என்று செய்து கொண்டிருக்கிறான் என்பது மட்டும் புரிந்தது. செய்கிறானே அந்த மட்டும் மகிழ்ச்சி. முடியாது என்று உதறவில்லையே? அப்படி உதறுவதும், ஒதுங்குவதும், வீட்டுக்கே வராமல் ஆபீசிலேயே படுத்துக் கொள்வதுமாகப் பல நாட்கள் இருந்திருக்கிறான். இங்கே ஒரு உயிர், அதுவும் பெண், அதிலும் கட்டின பெண்டாட்டி தனியே பயந்து கிடப்பாளே என்கிற எண்ணமெல்லாம் கிஞ்சித்தும் கிடையாது அவனுக்கு. இந்த அளவுக்கு அவன் இருப்பான் என்று அவள் எதிர்பார்க்கவில்லைதான். அவளென்ன, அவளது தந்தையும், அவனது அப்பா அம்மாவும் கூட நினைக்கவில்லைதான். எல்லாம் கால்கட்டுப் போட்டால் சரியாகிவிடும் என்கிற பழைய நம்பிக்கையில் முடிச்சுப் போட்டு ஜோடி சேர்த்து விட்டார்கள். அத்தோடு சரி. பழைய குருடி, கதவைத் திறடி என்பதுபோல் திருமணமாகி கொஞ்ச நாளிலேயே அவன் தன் பழைய இருப்புக்குப் போய் விட்டான். ஆளிடம் கொஞ்சம் கூடப் பழக்க வழக்க மாற்றங்கள் இல்லை.   சிண்டைப் பிடிச்சிக்கிட்டாலும் சரி, கூடிக் குலாவினாலும் சரி, அவுங்களுக்குள்ளேயே முறுக்கிக்கிட்டுச் சரியாகட்டும்…நாம ஒதுங்கிக்குவோம் என்று அவன் இரு தரப்பிலும் ஒதுங்கிக் கொண்டார்கள். பிறகு கேட்பாரில்லாமல் போனது. ஆன மட்டும் தன் அன்பால் அவனைக் கட்டிப் போட முயன்றாள் நந்தினி. அவன் சந்தோஷத்திற்கு நேரம் காலம் இல்லாமல் ஈடுகொடுத்துத்தான் பார்த்தாள். அவன் எப்பொழுது வந்தாலும், என்ன கேட்டாலும் முகம் சிணுங்குவதில்லை, சலித்துக் கொள்வதில்லை, தன் உடல் நோவைத் துளியும் காட்டிக் கொள்வதில்லை என்று தனக்குத்தானே சபதம் எடுத்துக் கொண்டாள். அந்தத் தீவிர முயற்சியில் ஓரளவு மடங்கி வந்தான் மோகன்.   இந்த உலகத்தில் அன்பால் கட்டிப் போட முடியாத மனிதர்களும் உண்டோ? என்று தன் வெற்றிக்குத் தனக்குத்தானே மகுடம் சூட்டிக் கொண்டதுபோல் பெருமைப் பட்டுக் கொண்டாள் நந்தினி. அவர்கள் இருவருக்குள்ளும் சுமுகமும், சகஜமும் பிறகுதான் கொஞ்சம் கொஞ்சமாகத் துளிர்க்க ஆரம்பித்தது. ஆனாலும் பிறவிக் குணத்தை மட்டையை வைத்துக் கட்டினாலும் போகுமோ என்பதுபோல் இதோ பாருங்களேன் அவனை. “அதென்ன ஜன்னல் வழியாப் பார்த்திட்டே இருக்கீங்க… அசிங்கமாயில்லே…?” - இதுதான் காலையில் அவள் கேட்டது.   “இதென்னடி வம்பா இருக்கு…? ஜன்னலுக்கு வெளியே செடில பூத்திருக்கிற பூக்களைப் பார்க்கிறேன்…காலைல அவைகளைப் பார்த்தா எனக்கு மனசுக்குச் சந்தோஷமாயிருக்கு…அதுனால பார்க்கிறேன்…உனக்கு ரசனை உண்டுன்னா நீயும் பாரு…தினம் பார்த்துப் பழகு… மனசு இனிமையாகுதா இல்லையா கேளு…  “பூக்களத்தான் பார்க்கிறீங்களா….அப்ப சரி…”   “ஏய்…என்ன? எதுவானாலும் நேரடியாப் பேசு. பொடிவச்சுப் பேசுறதெல்லாம் எனக்குப் பிடிக்காது… இவன் பெரிதாகக் கத்த….”ஒண்ணுமில்ல….” என்று வந்து விட்டாள் இவள். சட்டென்று மூக்குக்கு மேல்தான் கோபம் வரும். உப்புப் பெறாத விஷயத்திற்குக் கூடப் படு கோபப்படுவான் மோகன்.   என்னோட இத்தனை வயசு தாண்டித்தான் நீ எங்கிட்ட வந்து சேர்ந்திருக்கே…வந்ததும், வராததுமா என்னை அடக்கி ஆளணும்னு பார்க்காதே… - என்ன நினைத்துக் கொண்டு இப்படியெல்லாம் பேசுகிறான் என்றிருக்கும் இவளுக்கு. சுய இரக்கம் உள்ளவனோ என்ற சந்தேகம் வந்தது அவளுக்கு. அவர்கள்தான் எடுத்ததற்கெல்லாம் அர்த்தமில்லாமல் சத்தம் போடுவார்கள். பொருத்தமில்லாமல் கத்துவார்கள். இவனுக்கென்ன வந்தது. பெண் என்றால் அடங்கித்தான் கிடக்க வேண்டும் என்று நினைப்பவனோ? இருவரும் வேலை பார்க்கும் இடத்தில் இப்படியெல்லாம் எதிர்பார்த்தால் நடக்குமா? ஆபீசில் எத்தனைபேரோடு பழகுகிறோம். அப்படியான பெண்கள் நிறைய சுதந்திரத்தை விரும்புவார்கள் என்று இவனுக்குத் தெரிய வேண்டாமா? இருவரும் சமம் என்கிற ரீதியில்தான் இருப்பார்கள் என்கிற யதார்த்தத்தை இவன் உணர வேண்டாமா?   உண்மையில் எதிர் வீட்டு மாடியில் பெருக்கிக் கொண்டிருந்த பெண்மணியைத்தான் பார்த்துக் கொண்டிருந்தான.; இதைப் பல முறை கவனித்து விட்டாள் நந்தினி. இவன் இங்கிருந்து பார்ப்பது அவர்களுக்குத் தெரிய வாய்ப்பில்லை. இந்தப் பகுதி ஜன்னலுக்குள் இருட்டாக இருக்கும். வெளியில் இருந்து பார்ப்பவர்களுக்கு ஒன்றும் தெரியாது. “ஆள் அழகுல்ல….” - சொன்னான் ஒரு நாள்.   “யாரைக் கேட்குறீங்க…?” டி.வி. பார்த்துக் கொண்டே ஜன்னல் வழி மாடியைப் பார்த்துக் கொண்டிருந்தவன் கேட்டதை டி.வி.யில்தான் யாரையோ கேட்கிறான் என்று நினைத்து இவள் கேட்டாள்.   “அந்த மாடி வீட்டு லேடியைத்தாண்டீ சொல்றேன்…”  “ஏங்கிட்டயே இப்டிக் கேட்குறீங்களே…இது நல்லாயிருக்கா?”- மனதுக்குள் பொங்கிய கோபத்தை அடக்கி மெலிதாகக் கேட்டாள் நந்தினி.   “ஏண்டீ, கேட்டா என்ன? வெளிப்படையாக் கேட்குறேனேன்னு நினைச்சுக்கோ…உங்கிட்டதானே கேட்கிறேன்… எதையுமே நிர்ணயித்துக் கொண்டு செய்பவனாகத் தெரியவில்லை இவளுக்கு. ஏதோ அவ்வப்போது என்னென்ன தோன்றுகிறதோ அதன்படி செய்து  போய்க் கொண்டிருக்கிறான் என்றுதான் தோன்றியது. இன்னும் வாழ்க்கையில் ஒரு நிதானம் வரவில்லையே என்று நினைத்தாள் நந்தினி.   அத்தியாயம் 2 இரண்டு தங்கைகளுக்குக் கல்யாணம் பண்ணியிருக்கிறான் மோகன். அவர்களுக்குத் திருமணம் முடித்துவிட்டுத்தான் தனக்கு என்கிற உறுதியோடு இருந்திருக்கிறான். மிகவும் கஷ்டப்பட்ட குடும்பத்தில் இருந்து வந்தவன். எஸ்.எஸ்.எல்.சி. வரை படித்து விட்டு பள்ளி இறுதி வகுப்பு முடிந்த மறுநாளே வேலைக்குப் போய் அதில் வரும் பணத்திலிருந்து மேற்கொண்டு தபால் மூலம் பட்டப்படிப்புகள் படித்து, கணினிப் பயிற்சிகள் கற்றுத் தேர்ந்து தொடர்ந்து அரசுப் பரீட்சைகள் எழுதி, விடா முயற்சியோடு முயன்று வேலையையும் வாங்கி அப்பாடா என்று அமர்ந்திருக்கிறான். உழைப்புக்குச் சளைக்காதவன்தான். விடா முயற்சியில்தான் இந்த நிலையை எய்தியிருக்கிறான். ஆனால் வேலை என்று ஒன்று கிடைத்தவுடனே ஆள் ரிலாக்ஸ் ஆகி விட்டானோ என்று நினைப்பதுபோல் அவனது செயல்கள் எல்லாமும் அறவே மாறிவிட்டிருந்தன. இனிமேல் கை நிறையக் காசு. மாதா மாதம் சம்பளம். அறுபது வயசு வரை வேலை. பிறகு ஓய்வூதியம். எனக்கென்ன கவலை என்று ஆள் ஜாலியாக இருக்க ஆரம்பித்துவிட்டான் என்றுதான் நினைக்க வேண்டியிருந்தது. இளமை இருக்கும்போதே எல்லாவற்றையும் அனுபவித்துச் சலித்து விட வேண்டும் என்று கங்கணம் கட்டிக் கொண்டவன் போல் இறக்கை கட்டிப் பறந்து கொண்டிருந்தான் மோகன்.   அதற்குப் பின்தான் லீலைகள் ஆரம்பித்திருக்கின்றன. அதுவரை அடங்கிக் கிடந்த வெள்ளம் காட்டாறு போல் பாய்ந்து கண்டமேனிக்கு இழுத்துச் சென்றிருக்கிறது. என்னென்ன ஆட்டங்களெல்லாம் ஆட வேண்டுமோ எல்லாமும் ஆடி முடித்து விட்டு பிஞ்சில் பழுத்தவனாய் முழுமையடைந்த நிலையில்தான் இவளிடம் வந்து சேர்ந்தான். சேர்க்கை சரியில்லை. இனிமேலும் இவனை இப்படி விட்டேற்றியாய் விட்டால் பையன் நமக்கில்லை என்று சுதாரித்து விட்டார்கள் வீட்டில். அவர்களுக்குப் பயம் தொற்றிக் கொள்ள எப்பாடு பட்டாவது ஒரு நல்ல இடமாய்ப் பிடித்து இவனை ஒப்படைத்து விட வேண்டும் என்று துடித்தார்கள். பெண்ணை வைத்துக் கொண்டிருப்பவர்கள்தான் இப்படி நினைக்க வாய்ப்பிருக்கிறது என்றால் இங்கே ஒரு ஆண் மகனை அவனின் எதிர்கால வாழ்வு பாழ்பட்டுப் போய்விடக் கூடாது என்று முயன்றனர் மூத்த தலைமுறையினர். முறைப்பையன். அவனைப் பார்க்கும் போதெல்லாம என்னவோ ஒரு ஈர்ப்பு நந்தினிக்கு. அவனின் பர்சனாலிட்டியா? அல்லது பேசும் அழகா? அவனது கோபமா? அவனிடம் இருக்கும் சுறுசுறுப்பா? “சின்னப்புள்ளைலர்ந்து உன்னைத்தாம்மா நா மனசுல நினைச்சிக்கிட்டிருக்கேன். நீ அவனுக்கு மனைவியா வந்திட்டேன்னு வச்சிக்கோ…அவன் கொட்டமெல்லாம் அடங்கிப் போகும்…நா எது சொல்லியும் கேட்கலே அவன்…ஆனா ஒண்ணு அவன் தங்கச்சிகளை எப்படியோ கரை சேர்த்திட்டான். அதுதான் ஆச்சர்யம். அதுவரைக்கும் அவன் இருந்த ஒழுங்கு இருக்கு  பாரு…அதுக்கு ஈடு இணையே இல்ல…அந்தக் கட்டுப்பாட்டை நினைச்சுத்தான் அவனை எதுவுமே சொல்ல முடியலை. இந்தக் குடும்பத்தின் தூணா நின்னு காத்துருக்கான். அத்தனையையும் தாங்கிப் பிடிச்சிருக்கான். என்ன வந்தாலும் நான் பார்த்துக்கிறேம்ப்பான்னுவான். எவ்வளவு கடன் அடைச்சிருக்கான் தெரியுமா? அடகு வச்ச பொருளையெல்லாம் மீட்டிருக்கான். இந்த வயசுக்கு சொந்த நலன்னு அவன் மனசுல ஆசைகளே தோணலையோ, இல்ல அடக்கிக்கிட்டானோ தெரியாது. சுயநலம்ங்கிறது அவன் வாழ்க்கைல இருந்ததேயில்லை. எங்க சந்தோஷம்தான் அவன் சந்தோஷம். வீட்டு நலன்தான் அவனோட நலன். அவ்வளவு பொறுப்பா இருப்பான். வேலை கிடைச்சு வெளியூர் போனாம்பாரு…அங்கதான் சேர்க்கை சரியில்லை…கெட்டுப் போயிட்டான்…அதுலயும் ஒரு லாபம் இல்லாமலில்லே…சர்வீசுல சேர்ந்த புதுசுல அவன் போட்டு வச்ச அப்ளிகேஷனுக்குப் பலன் கிடைச்சு சட்டுன்னு அவனே எதிர்பார்க்காத போது ஒரு டிரான்ஸ்பர் வந்திச்சு பாரு, அதுல கடவுள் அவனை மறுபடியும் இந்த வீட்டுக்குக் கொண்டு வந்து சேர்த்துட்டார். அத்தோட அந்தப் பழைய எடத்தின் பழக்கமெல்லாம் போச்சுன்னு வையி…இப்போ இங்க வந்து சேர்ந்துட்டான்…வயசும் ஆயிப்போச்சு அவனுக்கு…இத்தன நாள் ஒரு ஆம்பளை கல்யாணம் கட்டிக்கிடாம இருக்கிறதே பெரிய அதிசயம்தான். அதுதான் கொஞ்சம் அப்படி இப்படின்னு ஆயிட்டானோன்னு தோணுது எனக்கு. என்ன வயசானாலும் பரவால்ல…ரெண்டு தங்கச்சிகளுக்கும் முடிச்சிட்டுத்தான்னு இருந்தாம்பாரு…அதுதான் ஆண்டவனாப் பார்த்து இப்போ உன்னை அவனுக்குக் கொடுக்கப்போறான்….”  “நானும் வேலை பார்க்கிறது அவருக்குப் பிடிக்குமா மாமா?”   “இதிலென்ன வந்திச்சு…? இதெல்லாம்பத்தி அவன் யோசிச்சதாத் தெரில… ஒண்ணும் சொல்ல மாட்டான்…உன்னவிட அழகான பொண்ணு அவனுக்கு வேறே யாரும்மா கிடைப்பா…,? அவனும் அழகான பையன்தான்…இல்லன்னு சொல்லலை…ஆனாலும் நீ சரியான ஜோடிதானே அவனுக்கு…உங்க அப்பன் ஆத்தாளுக்கு மறுப்பில்லாம இருந்தாச் சரி….”   மாமா இதைச் சொன்ன போதுதான் சுருக்கென்றது நந்தினிக்கு. அத்தியாயம் 3 “நல்லால்லம்மா…நந்தினி…கொஞ்சம் கூட நல்லாயில்லே….” - அப்பாவின் கோபத்தின் முன் தலை குனிந்து நின்றாள் நந்தினி. அவள் கண்களிலிருந்து கண்ணீர் வர யத்தனித்துக் கொண்டிருந்தது.   அவள் என்ன எதிர்பார்த்தாளோ அதையேதான் அப்பாவும் சொல்கிறார். இதைத்தான் அன்று மோகனின் அப்பா லேசாகக் கோடி காட்டினார். அவருக்கு மனதிற்குள் சந்தேகம் இருந்திருக்கும் போலிருக்கிறது. “அவன் ஒரு பொறுக்கிம்மா…பொம்பள பொறுக்கி. அவனப் போய் நீ கட்டிக்கிறேங்கிற? உனக்கு இந்த ஊர்ல இருந்த மோகனத்தாம்மா தெரியும். நா பல ஊர்களுக்குப் போறவன்…எங்க கம்பெனிப் பொருட்கள் இல்லாத ஊர் இல்லையாக்கும்…இந்தத் தமிழ்நாட்டுல முக்கிய ஊர்களெல்லாம் என் கைவசம்தான்…இதே திருச்சிக்கு எத்தனை வாட்டி நா போயிருக்கேன்…உனக்கே தெரியும்ல…அப்போ எப்படியெல்லாம் இவனை நா பார்த்திருக்கேன் தெரியுமா….எந்த லாட்ஜ்ல நா ரூம் எடுத்திருந்தனோ அதே லாட்ஜ்ல ஒரு பெண்ணோட வராம்மா இவன்….நாந்தான் லஜ்ஜைப் பட்டுக்கிட்டு என்னை மறைச்சிக்கிட்டேன்…வெளியூர்ல இருக்கிறவன், தன்  வீட்டுக்கு எத்தனை நம்பிக்கையா இருக்கணும்? அப்படிப்பட்ட ஒருத்தனைப் போய் நீ கட்டிக்கிறேங்கிறியேம்மா….”  “அப்பா, ஆம்பளைங்க தவறு செய்றது சகஜம்ப்பா…கல்யாணம் ஆனா எல்லாம் சரியாப் போயிடும்….அதுக்குப் பிறகு அவரு என்னையே சுத்திட்டிருக்கிறமாதிரி ஆக்குறது என் பொறுப்பு…என்னை விட்டு எங்கயும் போக மாட்டாருப்பா….அதுக்கு நான் காரன்டி….சின்ன வயசுலர்ந்து பார்த்துப் பழகி அப்டியே வளர்ந்துட்டேம்ப்பா…இப்போ மோகன் எனக்கில்லேன்னு சொன்னா என்னால பொறுக்க முடியாது…”  “அவதான் இம்புட்டு ஆசையா இருக்கால்ல…சும்மாக் கட்டி வையுங்க…ஒண்ணும் ஆயிடாது. அவனென்ன வெட்டியாச் சுத்துற பயலா…கை நிறையச் சம்பாதிக்கிறவன்தானே…இவளும் வேலை பார்க்குறா…இத்தனை நாளா இந்தக் குடும்பத்துக்கு சம்பாதிச்சுக் கொL;த்தது பத்தாதா? இவ சம்பாத்தியம் கழிஞ்சா நம்ம ரெண்டு பேருக்கும் உங்க சம்பளக் காசு மட்டும் பத்தாதா என்ன? ரொம்ப யோசிக்காதீங்க…கண்ணுக்கு முன்னாடி இருக்கைல பேசாமக் கட்டிக் கொடுத்தி்ட்டு நிம்மதியா இருக்காம…என்னவோ யோசிச்சிக்கிட்டே நிக்கிறீங்களே…?”  மறுக்க முடியவில்லை நந்தினியின் தந்தை ரங்கநாதனால். பெண்ணின் சந்தோஷம்தான் முக்கியம் என்ற ஒரே குறிக்கோளில் மோகனையே அவளுக்குக் கட்டி வைத்து விட்டார். மோகனின் தந்தை சிவநேசன் ரங்கநாதனின் இந்த முடிவில் திக்குமுக்காடிப் போனார்.  அவர்கள் இருவரும் போட்டுக் கொண்ட சண்டைகள் என்பது தனிக் கதை. அத்தியாயம் 4 “எம்பொண்ணு உன் வீட்டுக்கு வந்தா, நாலு நல்ல வார்த்தை சொல்லி அனுப்பி வைப்பியா, அத விட்டுட்டு உட்கார்த்தி வச்சு சோறு போட்டு அவளத் தயார் பண்றியா நீ…உன் பையன் வண்டவாளம்தான் ஊரே அறிஞ்ச விஷயமாச்சேய்யா…அவன் எப்டி எப்டித் திறியிறான்ங்கிறது எனக்குத்தான்யா தெரியும. சொல்ல ஆரம்பிச்சேன்னா உன் குடும்பமே நாறிடுமாக்கும்…  “இந்த பாரு ரங்கநாதம், அனாவசியப் பேச்சு வேண்டாம்…உனக்கு இஷ்டமானா உன் பொண்ணக் கொடு…இல்லயா விடு…அத விட்டிட்டு என் பையனப் பத்தி அப்டி இப்டின்னு பேசுறத விட்டிடு…அவன் எப்டிப் பையன், இந்த வீட்டுக்கு அவன் எப்டி இருந்திருக்காங்கிறது எனக்குத்தான் தெரியும். அதுபத்தி உனக்கு ஒண்ணும் தெரியாது.  ரெண்டு பெண்டுகளுக்குக் கல்யாணம் கட்டி வைக்கிறவரைக்கும் அவன் பட்ட பாடு நானறிவேன்…எப்படியெல்லாம் அவன் பணம் திரட்டினான், எப்டியெல்லாம் கஷ்டப்பட்டு உழைச்சாங்கிறது எனக்கும் எம் பொண்டாட்டிக்கும்தான் வெளிச்சம்…நீ அநாவசியமாப் பேசாதே…அவன் வெளியூர்ல எப்டியிருக்கான்…என்ன செய்றான்ங்கிறதை நான் அறிவேன்…அவன் தப்பான வழில போனான்னா அதை எப்படிக் கண்டிக்கணும், அவன எப்படி வழிக்குக் கொண்டு வரணும்னு எனக்குத் தெரியும்…எம் பையனப் பத்தி பெத்த எனக்குத் தெரியும்….அத நீ சொல்ல வேண்டாம்….உன் வழியப் பார்த்திட்டுப் போ…கண்ணால் கண்டதும் பொய், காதால் கேட்டதும் பொய்…தீர விசாரிப்பதே மெய்… அவ்வளவுதான் என்னால சொல்ல முடியும்…  ரங்கநாதனுக்கு எதுவோ தெரிந்திருக்கிறது என்பதை அறிந்தபோதுதான் மோகனும் துணுக்குற்றான். அவமானமாக உணர்ந்தான். ஆனால் அவர் சொன்னது போல் தான் ஒன்றும் யாரோடும் திரியவில்லையே? அந்த அளவிற்கான தைரியம் தனக்கில்லையே? வெளியூரே ஆனாலும் அப்படித் துணிய முடியாதே தன்னால்? அங்கிருக்கும் நண்பர்கள் விடுவார்களா என்ன? யமப்பயல்கள் ஆச்சே…! எங்கடா பிடிச்சே என்று ஓடி வந்து விடுவார்களே…!ஒரு வேளை நண்பர் தனுஷ்கோடியின் சகோதரிகள் திருச்சியைச் சுற்றிப் பார்க்க வந்தார்களே அப்பொழுது பார்த்திருப்பாரோ? அவர்களுக்காக ஹோட்டல் பரத்வாஜில் அறை ஒதுக்கியிருந்தேனே…அங்கே கண்டிருப்பாரோ? இவரும் ஊர் ஊராகச் சுற்றுபவராயிற்றே….ஆனால் அங்கு அவர் வந்திருந்தாரானால் தன் கண்ணிலேயே படவில்லையே? ஒரு நாள் முழுக்க போகவும் வரவுமாகத் தான் இருந்தோமே? அப்படியும் தன் கண்ணில் அவர் படாமல் அவர் கண்களில் மட்டும் நான் பட்டிருக்கிறேனா? அதுதான் இந்தச் சந்தேகமா? இப்பொழுது சொன்னால் நம்புவாரா? அவர் நம்பினால் என்ன நம்பாவிட்டால் என்ன? அப்பாவிடம் சொல்லி விடுவோம்….அவர் நம்பினால் போதும்….  “அவன் கிடக்காண்டா…அவன் சொல்லிட்டாங்கிறதுக்காக நானும் உன்னைச் சந்தேகப்பட்டிடுவேன்னு நினைச்சிட்டியா?  பைத்தியம்….அவன் எப்படின்னு எனக்குத்தாண்டா தெரியும்…நானும் அவனும் பால்ய சிநேகிதங்க…அவனைப் பத்தி எனக்குத்தான் தெரியும்…என்னைப் பத்தி அவனுக்குத்தான் தெரியும்…விடு விடு…சொன்னாச் சொல்லிட்டுப் போறான்….”  எல்லாப் பேச்சுக்களும் கலக்கத்தான் செய்தன. ஆனால் நந்தினியின் பிடிவாதம்தான் ஜெயித்தது கடைசியில். ஆனாலும் வேண்டும் சந்தோஷங்களை அனுபவித்த பின்பும, இன்னும் இந்தக் கேடு கெட்ட புத்தி இவனிடமிருந்து விடை பெறவில்லையே? மூணு நாலு என்று பெத்து அவைகளோடு பாடாய்ப் பட்டுக் கொண்டிருந்தால் ஒரு வேளை இந்தப் புத்தியெல்லாம் இருக்காதோ? ஒன்றுக்கே வழியில்லை. மூணு நாலுக்கு எங்கே போக? அவனைப் பற்றி சதா நினைத்துக் கொண்டுதான் இருக்கிறாள் நந்தினி. அவனின் இந்தமாதிரிப் பழக்கத்தினால்  இதுவரை எந்த வம்பு தும்பு என்றும் வந்ததில்லை. அது ஒன்றுதான் ஆறுதல். அப்படி ஏதேனும் வந்து நின்றால் அந்தக் கேவலத்தைத் தன்னால் தாங்கவே முடியாது நிச்சயமாய். அப்படி எதுவும் வந்து விடக் கூடாதே என்று கடவுளை வேண்டிக் கொண்டுதான் இருந்தாள் அவள். அவனின் அந்தப் பழைய பழக்க வழக்கங்களே இதுநாள் வரை தனக்குக் குழந்தை உதிக்காததற்கான காரணமாய் இருக்குமோ? எப்படிக் கேட்பது? கேட்கத்தான் முடியுமா? இருக்கும் நிலைக்கு விவாகரத்து, அது இது என்று ஆரம்பித்து விட்டானானால்? இதற்குத்தானா அவனை விரும்பி மணந்தது?  அன்றொரு நாள் அவன் அப்பாவே லேசாக வார்த்தையை விட, நீதான் அப்பாட்டச் சொல்லிக் கேட்கச் சொன்னியா? என்று என்ன பாடு படுத்தி விட்டான். என் மேல அந்தளவுக்கு உனக்குச் சந்தேகம் வந்திருச்சா? எச்.ஐ.வி. டெஸ்ட் வேணா எடுத்துப் பார்த்திடுவோம். இருக்கான்னு தெரிஞ்சி போயிடும்ல….நான் அப்டிப்பட்ட ஆளா இருந்தா உன்னை நெருங்கவே மாட்டேண்டி…முதல்ல அதைப் புரிஞ்சிக்கோ…..வந்த வியாதி என்னோட போகட்டும்னு இருந்திடுவேன். உன்னைக் கல்யாணமே பண்ணியிருக்கமாட்டேன் தெரியுமில்ல?   அவன் பேச்சுக்கு எந்த பதிலும் சொல்லாமல் வாய் மூடி நின்றாள் நந்தினி. எதுக்காக அவசரப்படுறே? கொஞ்ச நாளைக்கு ஜாலியா இருப்பமே…பிறகு பெத்துக்கிறது? டாக்டர்ட்ட போயி டெஸ்ட் அது இதுன்னு நின்னா முதல்ல செமன் எடுத்திட்டு வாங்கன்னுவாரு…நினைச்சவுடனே செமன் எடுத்துக் கொடுக்க நானென்ன லோஃபரா? ஒய்ஃப்பைக் கூட வச்சிக்குங்கன்னுவாரு…கேட்கவே அசிங்கமாயில்லே? அது இயற்கையா கணவனும் மனைவியும் தங்களை மறந்து அனுபவிச்சு முயங்க வேண்டிய விஷயம். அதை செயற்கையா செய்து கொண்டுவான்னா எவனால முடியும்? அப்டியொரு டெஸ்ட் எடுத்துப் பார்த்துத்தான் ஆகணுமா? பர்சன்ட்டேஜ் குறைவா இருக்கும்னு சொல்லி மாத்திரை எழுதிக் கொடுக்க வேண்டிதானே? சாப்பிடுன்னா முடிஞ்சி போச்சு. அதை விட்டிட்டு…தனி ரூமுக்குள்ள போயி அந்தாள்ட்ட என் டவுசர அவுத்துக் காட்டச் சொல்றியா? என்ன அசிங்கம் இது? இவ்வளவு பேசறாங்களே…நான் கேட்கறேன்…ஏன் உன்கிட்டக் குறை இருக்கக் கூடாதா?கர்ப்பப் பை சரியான வளர்ச்சியிருக்கா…பிள்ளைப் பேறுக்கான உடம்பு நார்மலா அமைஞ்சிருக்கா? போதுமான சக்தி அணுக்கள் இருக்கா? இல்ல அதுக்கு நீயும் மருந்து சாப்பிடணுமா? இதையெல்லாமும் பார்க்கணுமில்ல? ரெண்டு பேர்ல யார்ட்ட வேணாலும் குறை இருக்கலாமில்ல? அதென்ன நான் மட்டும் டெஸ்ட் பண்ணிக்கணும்ங்கிறது? எங்கப்பாதான் சொல்றாருன்னா உங்கப்பாவும் ஒத்தைக்கு நிற்கிறாரு…என்னைப் பத்தி கன்னா பின்னான்னு கேள்விப்பட்டிருக்கிறதுனால, இந்தச் சந்தேகம் வந்திடுச்சு போலிருக்கு….பொம்பளைகளோட ஊர் சுத்தறவனெல்லாம் கெட்டவனில்லை. கெட்டுப் போனவனுமில்லை. சில பழக்க வழக்கங்கள் சில பேருக்கு அந்த மாதிரி அமைஞ்ச போகுது. அதனால அவன் கெட்டுப் போனவன்தான்ங்கிற முடிவுக்கே வந்திடுறதா? இந்தப் பெரிசுக கணக்கே தனிடீ…அவுங்களோட சேர்ந்து நீயும் என்னைச் சந்தேகப் படுறபாரு…அதுதான் எனக்கு வருத்தம்…  அப்டியெல்லாம் இல்லீங்க…ரெண்டு பேருமே டெஸ்ட் பண்ணிக்கிறோம்னுதான் நான் அப்பாட்ட சொன்னேன். எங்கப்பாதான் வேற மாதிரிப் பேசிட்டாரு…  இவ்வளவு சந்தேகம் இருக்கிற மனுஷன் எதுக்காகப் பொண்ணு கொடுத்தாராம்? நானா உங்க வீட்டு முன்னாடி வந்து நின்னேன்? குடுமிப்பிடிச் சண்டையா கிடந்த பெரிசுக ரெண்டும் எந்தப் புள்ளிலயோ ஒண்ணு சேர்ந்திடுச்சு. அது நமக்கு வினையாப் போயிடுச்சு. அதானே? நீ நல்ல பொண்ணு. அதுனாலதான் நான் சம்மதிச்சேன். ஆனா என்னை உனக்கு முழுமையாப் பிடிக்குமாங்கிறது எனக்குத் தெரியாது. எதுக்காக என்னைக் கட்டிக்கிடணும்னு நீ சம்மதிச்சேங்கிறதும் எனக்க இன்னைக்கு வரைக்கும் தெரியாது. உன் பிடிவாதத்துலதான் என்னைக் கட்டி வச்சாங்கங்கிறது பிறகுதான் தெரிஞ்சிக்கிட்டேன். ஆனா ஒண்ணு, நான் எந்த நேரத்திலயும் உனக்க மறுப்புச் சொல்லலை. அது உனக்குத் தெரியும்னு நினைக்கிறேன். என்னவோ என் மனச உன்னை வேண்டாம்னு சொல்லலை. அதுக்காக ஒரேயடியா விரும்பவும் செய்யலை. அப்டி நினைச்சு ஒரேவாக்குல நீ மகிழ்ந்து போயிடாதே…நாம ரெண்டு பேரும் சேரணும்ங்கிறது விதி போலிருக்கு. அதான் கடவுள் நம்மை முடிச்சுப் போட்டு விட்L;ட்டான்…எல்லாம் போகப் போகச் சரியாகுமங்கிற நம்பிக்கைல இருக்கப் பழகு. அவுக மாதிரி எல்லாத்துக்கும் அவசரப்படாதே. அவங்க வாழ்ந்து முடிச்சவங்க. நமக்கு இனிமேதான் வாழ்க்கையே…புரியுதா நான் சொல்றது…. - கொட்டித் தீர்த்தான் மோகன். அத்தனையையும் தலையாட்டிக் கேட்டுக் கொண்டாள் நந்தினி. ஆனாலும் அத்தனையையும் பேசிவிட்டு, பழையபடி குட்டையில் போய் விழுந்தால் எப்படி? அப்படித்தான் நடந்தது மறுநாள் நிகழ்வு.   அத்தியாயம் 5 “வாங்க சரோஜா…வாங்க…பயப்படாம வாங்க…,இது உங்க வீடு மாதிரி…” - முதலில் உள்ளே நுழைந்த மோகன் பின்னால் வந்த அந்தப் பெண்ணை இத்தனை சகஜமாக அழைத்த விதம் நந்தினியைத் துணுக்குறச் செய்தது. அப்பொழுதுதான் அவள் அலுவலகத்திலிருந்து திரும்பி அப்பாடா என்று உட்கார்ந்திருந்தாள். என்றுமே இத்தனை சீக்கிரம் வந்ததில்லை அவன். இன்று என்னவோ இப்பொழுதே வந்து நிற்கிறான். ஏதேனும் பிரச்னையைக் கொண்டு வருவதென்றால் சீக்கிரமே வந்து விடுவான் போலிருக்கிறது. எப்பொழுதும் சீக்கிரம் வந்தான் என்றால் அன்று பிரச்னைதான். அப்படித்தான் நிகழ்ந்திருக்கிறது அதுவரை. வலியச் சண்டை போடுவதற்கென்றே வந்து நிற்பதாகத் தோன்றும் இவளுக்கு. அம்மாதிரி நேரங்களைப் புரிந்து கொண்டு அமைதி காப்பாள் இவள்.   மாலையில் வீடு வந்து கை கால் முகம் கழுவி, சாமி விளக்கு ஏற்றி, சுலோகம் சொல்ல அமர்வாள். அந்த மனநிலையைக் கெடுத்துக் கொள்ளக் கூடாது என்பது அவள் எண்ணம். “பார்த்து…பார்த்து…அந்தக் காலத்து வீடு…பார்த்து வரணும்…இல்லன்னா தலையைப் பதம் பார்த்திடும்…” என்றவாறே அவள் குனிவதற்கு நிலைக்கு இடையில் கையைக் கொடுத்தான் மோகன். ஓடிப் போய் அவன் அவ்வாறு செய்தது நந்தினிக்கு உறுத்தியது. அவளும் கையைத் Jhக்க இரண்டு கைகளும் மேல் பக்கம் மோதின. அவள் கையைப் பிடித்து இறக்கிக் கீழே விட்டான.; என்னவொரு நெருக்கம். அதுவே உறுத்தியது நந்தினிக்கு.  “நல்ல வேளை…” என்றான் ரொம்பவும் பயந்து விட்டவனாக. “எங்கப்பா இப்படித்தான் முழுசா உள்ள வந்துட்டம்னு சட்டுன்னு நிமிந்துட்டாரு…நிலையோட நுனி பாயின்டா அவர் தலைல இறங்கிடுச்சு…நேர் கோடா தலைல அரை இன்ஞ்சுக்குப் பள்ளம் ஆயிடுச்சி…அப்புறம் போயித் தையல் போட்டோம்…அதனாலதான் யார் நுழைஞ்சாலும் இதைச் சொல்லிடுவேன்….”   அவன்  இத்தனை வியாக்கியானம் கொடுத்துப் பேசியது நந்தினிக்குச் சிறிதும் பிடிக்கவில்லை. “நந்தினி, இவுங்க என்னோட திருச்சில ஒர்க் பண்ணினாங்க…இப்பவும் அங்கதான் இருக்காங்க…இங்க ஆபீஸ் ஆடிட்டுக்காக வந்திருக்காங்க…ஆடிட் விங்க்ல இருக்காங்க…  “வாங்க…” என்றாள் நந்தினி புன்னகைத்தவாறே. அவளின் அழகைப் பார்த்து, “மிஸ்டர் மோகன் நீங்க ரொம்ப அதிர்ஷ்டக்காரர்தான்…உங்க ஒய்ஃப் ரொம்ப அழகா இருக்காங்க…” என்றாள் சரோஜா.  அது நந்தினிக்குப் பிடிக்கவில்லை.  இவள் என்ன சொல்வது என் அழகைப்பற்றி? என்று நினைத்துக் கொண்டாள். “பார்த்தியா நந்தினி…பேசிட்டே நின்னுட்டேன்…பால் இருக்கா…இல்ல பாக்கெட் வாங்கிட்டு வரணுமா?” என்றவாறே போய் பிரிட்ஜைத் திறந்து பார்த்தான் மோகன். பால் பாக்கெட் இருந்தது. அதிலிருந்த குளிர் பானத்தை எடுத்து வந்து சரோஜா முன்னால் வைத்தான்.   “வெயில்ல வந்திருக்கீங்க…இதமா இருக்கும்…சாப்டுங்க…” என்றான். அவனின் அக்கறையான உபசரிப்பு இவளுக்கு என்னவோ போலிருந்தது.   ஒரு கண்ணாடி டம்ளரை எடுத்து வந்து ஊற்றிக் கொடுத்தான. மேஜையின் மேலிருந்த இன்னொரு டம்ளரை எடுத்து அதில் பாதியை ஊற்றி “நீங்களும் சாப்பிடுங்க…” என்றவாறே அவன் கையைப் பிடித்துத் திணித்தாள் சரோஜா. அவர்களுக்கிடையே இருந்த நெருக்கம் நந்தினியைச் சங்கடத்துக்குள்ளாக்கியது.   எப்படியெப்படியோதான் இருந்திருப்பானோ? எதுவும் சொல்லாமல் மறைத்திருக்கிறான். பொதுவாக ஆண்கள் கல்யாணத்திற்கு முன்னால் பலபடிதான் இருந்திருப்பார்கள். இருந்திருக்கலாம். ஆனால் திருமணத்திற்குப் பிறகு எப்படியிருக்கிறார்கள் என்பது மிகவும் முக்கியமல்லவா? அந்த வகையில் தான் இன்று வரை அவனிடம் எந்தக் குறையும் கண்டதில்லைதான். இருவரும் அலுவலகம் போக, வர என்றுதான் இருந்து கொண்டிருக்கிறோம். அதற்கு மேல் எதுவும் கண்டு கொண்டதில்லைதான். வேறு எதற்கு நேரமிருக்கிறது? நாளும் பொழுதும் அப்படித்தானே கழிகிறது? அதற்காக பொழுது பொழுதாய் ஒருவன் மேல் சந்தேகப் பட்டுக் கொண்டிருக்க முடியுமா? விரும்பி ஏற்றுக் கொண்ட மணாளன் மீது எப்படிச் சந்தேகம் வரும்? இந்த மாதிரிக் கேள்விகளே விழுந்ததில்லை அவள் மனதில். அலுவலகத்திலிருந்து ஒரு பெண்ணை அழைத்து வந்திருக்கிறான். இதற்குப் போய் ஏன் இப்படி மனம் கலங்க வேண்டும்? இன்னும் கொஞ்ச நேரத்தில் அவள் போய்விடப் போகிறாள். இதெல்லாம் வேலை பார்க்கும் இடத்தில் சகஜம்தானே. இதைப் போய் ஏன் இப்படிப் பிரத்தியேகமாய் நினைத்துக் கொள்ள வேண்டும்? தன்னைச் சரி பண்ணிக் கொள்ளப் பார்த்தாள் நந்தினி. “நீங்க கல்யாணத்திற்கு வரலேல்ல…” என்றவாறே ஆல்பத்தை எடுத்து வந்து அவளிடம் கொடுத்தான் மோகன். ஒவ்வொன்றாகப் பிரித்துப் பார்த்துக் கொண்டிருந்த அவளின் முக பாவங்கள் எப்படி மாறுகின்றன என்பதை உன்னிப்பாகக் கவனிக்க ஆரம்பித்தாள் நந்தினி. விகல்பமில்லாத சிரிப்பு. பளீர் என்று பல்வரிசை மாறாமல் வெளிப்படையாகச் சிரிக்கிறாள் அவள்.   “ஒண்ணு பார்த்தீங்களா…எல்லா போட்டாவுலயும் அவுங்கதான் அழகா இருக்காங்க…நீங்க ஏன் எதையோ பறிகொடுத்த மாதிரி உம்முன்னு இருக்கீங்க…”  “அதெல்லாம் ஒண்ணுமில்லையே...”-ஒற்றை வார்த்தையில் சமாளிக்கப் பார்த்தான் மோகன்.   “உங்களுக்கு திருச்சி ஞாபகம் போகலை…அதான்…” என்று விட்டு அவன் முகத்தையே குறுகுறுவெனப் பார்த்தாள் அவள்.   “நீங்க சும்மா இருக்க மாட்டீங்க…பேசாமப் படத்தைப் பார்ப்பீங்களா….என்னென்னவோ சொல்லிட்டிருக்கீங்களே…”   மோகன் எதையோ மறைக்க முயல்வதைப் போல் உணர்ந்தாள் நந்தினி. அவனது பழைய பழக்கங்களை நினைவு படுத்துகிறாள் அவள். அதைச் சொல்லாதே என்கிறான் அவன். அதுதானே…! அதைத்தான் நானே மறந்து விட்டேனே…பின் இவள் என்ன சொல்வது? அவனின் இன்றைய நிலை என்ன? அதில் ஒழுக்கம் இருக்கிறதா? கட்டுப்பாடு தென்படுகிறதா? தனக்க உண்மையாய் இருக்கிறானா? இதுவே என் கேள்வி. அதை நிர்ணயித்துக் கொள்ள எனக்குத் தெரியாதா?   தான் இருக்கிறோம் என்கிற எண்ணமே இன்றி அந்தப் பெண் சர்வ சகஜமாகப் பேசுவதும், அதற்கு அவன் ஏதோ தயங்கித் தயங்கிப் பதில் சொல்வதும், தன் வீட்டில் இருந்து கொண்டு தான் ஒரு மூன்றாம் மனுஷி போல் இருப்பதா? இதென்ன நாடகம்? இங்கு வந்த அவள் என்னிடமல்லவா பேச வேண்டும். நான் ஏதோ ஒரு வேலைக்காரியைப் போலவும், தன்னிடம் பேசுவதற்கு ஒன்றுமில்லை போலவும், தன்னையே லட்சியம் செய்யாது அவள் பாட்டுக்கு ஏதோ பேசிக் கொண்டு போவதும் அதற்கு அவன் ஆமாம் போடுவது போல் இருப்பதும்…என்ன இது கண்றாவி? அவளுக்குத்தான் வெட்கமில்லையென்றால், அவனுக்கு எங்கே போயிற்று அறிவு? சகஜ பாவம் என்றால் எல்லாவற்றையும் அப்படி எடுத்துக் கொள்ள முடியுமா? எந்த நேரத்தில் என்ன செய்வது என்று ஒன்று இருக்கிறதல்லவா?  நந்தினிக்குச் சங்கடமாகத்தான் இருந்தது. கோபம் துளிர்த்துக் கொண்டிருந்தது அவள் மனதில். மோகனல்லவா தன்னைக் கவனிக்க வேண்டும்? வந்தவர்களிடம் தன்னைப் பொருட்படுத்திப் பேசுவதும், அவர்களை உபசரிக்கத் தன்னை வேண்டிக் கொள்வதும் அவன் வேலையல்லவா? அதை விட்டு விட்டு ஏதோ சிறு பிள்ளைத் தனமாய், குஷாலாய், அவர்கள் இருவரும் பொருத்தம் இல்லாமல்  பேசிக் கொண்டிருப்பது எப்படிச் சரியாகும்? அந்தச் சூழலே பிடிக்கவில்லை அவளுக்கு. உன் சல்லித்தனத்திற்கெல்லாம் நானா ஆள்? என் கௌரவமே வேறு. அதைப் புரிந்து கொள் என்று அவனுக்கு உணர்த்த நினைத்தாள். சட்டென்று வாசலை நோக்கி நடந்தாள். அதை மோகன் எதிர்பார்க்கவில்லை.   “இதோ வந்துடறேன்…” என்பதுபோல் தலை ஒதுங்கியிருக்கிறதா? நெற்றியில் பொட்டு இருக்கிறதா என்பதை மட்டும் கண்ணாடியில் பார்த்துக் கொண்டு அங்கிருந்து விருட்டென்று வெளியேறினாள்.   “நந்தினி…எங்க கிளம்பிட்டே…?” - பின்னாலேயே ஓடி வந்த மோகனைப் பார்த்தும் பார்க்காததும் போல “இதோ வர்றேன்…” என்று மெலிசாகக் கூறியவள் கோயிலை நோக்கி நடையைக் கட்டினாள்.   அந்தப் பதில் கூட அவனுக்குச் சொல்லியிருக்கக்கூடாது.அதுதான் சரி. எங்க போகப்போறா?…கோயிலுக்கா இருக்கும். அது ஒண்ணுதான் அவளுக்குத் தெரிஞ்சது…விடு…விடு… - மோகனின் பதில் நந்தினியின் காதுகளில் விழாமலில்லை. நெஞ்சு விம்ம ஆரம்பித்தது அவளுக்கு.   அத்தியாயம் 6 சந்நிதியில் கை கூப்பி நின்றிருந்தாளேயொழிய மனசு லயிக்கவில்லை நந்தினிக்கு. கண்களை மூட மூடக் கண்ணீர்தான் பெருகியது. கடவுளை நன்றாகக் கண்களைத் திறந்து பார்த்துக் கும்பிட வேண்டும். சந்நிதியில் கண்களை இறுக மூடிக் கும்பிடக் கூடாது என்று யாரோ ஒரு தமிழறிஞர் சொல்லியிருந்தது நினைவுக்கு வந்தது. இப்படிக் கிளம்பி வந்தது சரியா? கணவன் அழைத்துவரும் ஒரு விருந்தினரை அவமதிப்பதாகாதா? பிடிக்கிறதோ, பிடிக்கவில்லையோ ஏதேனும் செய்து கொடுத்து ஆளைச் சட்டென்று டிஸ்போஸ் பண்ணுவதுதானே அழகு. இப்படி,  சரி நடத்துங்க என்பதுபோல் வெளியே வருவது அசட்டுத்தனமல்லவா?  படு முட்டாள்தனமாய் கிளம்பி வந்து விட்டாயே…! பிடிக்கவில்லையென்றால் அதை எப்படியாவது வெளிப்படுத்தி ஆளை வெளியேற்றப் பார்ப்பாயா? இப்படியா இடம் ஒழித்துக்கொடுத்துவிட்டு வருவது? நீ நினைப்பதுபோல் அவளோடு அவனுக்குப் பழக்கம் இருந்தால், இது வசதியாயிற்றே? எப்படியும் அரை மணிக்குக் குறையாது நந்தினி வர என்று சல்லாபம் ஆரம்பித்து வி்ட்டானானென்றால்? உனக்கோ அவன் மேல் இன்றும் சந்தேகம் இருந்துகொண்டுதான் இருக்கிறது. அதற்கு ஏற்றாற்போல் சந்தர்ப்பங்களும் அமைந்து கொண்டுதான் இருக்கின்றன. அந்த சந்தர்ப்பத்தை மேலும் வசதி பண்ணிக் கொடுப்பதா உன் வேலை? என்ன பெண் நீ? முறுக்கிக்கொண்டு வந்து விட்டால் பின்னால் ஓடி வருவான் என்று பார்த்தாயா? அந்த அளவுக்கு நீ அவனை உன்னோடு கட்டிப் போட்டிருக்கிறாயா? முதலில் இதை நினைத்தப் பார்…..என்றாவது மனைவி பின்னால் அலையும் இளைஞன் என்று தன்னைக் காட்டிக் கொண்டிருக்கிறானா அவன்? தன் கௌரவத்தை உன் அளவிலேனும் தளர்த்தியிருக்கிறானா? மனைவியிடம் என்ன கண்டிஷனான போக்கு? அவளுக்கு இல்லாத உரிமையா? என்று விட்டிருக்கிறானா?   அம்மா…கற்பூரம் ஒத்திக்குங்க….அர்ச்சகரின் குரல் கேட்டு கண் திறந்தாள் நந்தினி. இடுப்பில் செருகியிருந்த சின்ன பர்சில் பத்து ரூபாயை எடுத்து அப்படியே தட்டில் போட்டாள். அர்ச்சகரின் முகம் மலர்ந்தது. அந்த மலர்ச்சி அவளுக்கு என்றும் பிடித்தது. அந்தக் கோயிலுக்கு வரும்பொழுதெல்லாம் பல சமயங்களில் அவள் அப்படிச் செய்வது வழக்கம். ஏனோ உண்டியலில் போட அவள் மனம் ஒப்பியதில்லை. மிகக் குறைந்த வருவாய் உள்ள அந்த அர்ச்சகரின் மனம் நிறைந்ததென்றால், அதுதான் இவளுக்குச் சந்தோஷம்.   கொஞ்சம் இரும்மா….புஷ்பம் தர்றேன்….என்று அவர் சொன்னது மனதுக்கு ஆறுதலாய் இருந்தது. பூ கைக்கு வந்தபோது கண்களில் ஒற்றிக் கொண்டாள். விழிகள் பனித்தன. கொத்துப் பூவை அர்ச்சகர் கொண்டு வந்து கொடுத்ததும், கை நிறைய அதை வாங்கிக் கொண்டதும், இப்போது தலை நிறைய அதை அவள் செருகிக் கொண்டபோது, வெளிப் பிராகாரத்தில் பக்கவாட்டில் இருந்த கண்ணாடியில் அவளின் முகப் பிரகாசம் அவளை சந்தோஷப்படுத்தியது.   ஆனாலும் உனக்கு முக லட்சணம் அதிகம்டி. இதிலதான் அந்த மோகன் விழுந்திட்டார் போலிருக்கு. அவர் எதிர்ப்படும்போதெல்லாம்தான் நீதானே அவரை சைட் அடிச்சே. அப்டியே சிரிச்சு சிரிச்சு அவரை உன்னாளா ஆக்கிக்கிட்டே. போதாக் குறைக்கு முறை வேறே. கேட்கணுமா? ஈஸியா முடிச்சிக்கிட்டே உன் கல்யாணத்தை…நாங்களெல்லாம் என்ன பாடு படப் போறோமோ? -அலுவலகத் தோழி கார்த்திகா தன்னிடம் சுதந்திரமாய்ப் பேசுவாள். அப்படி ஒரு சிலர்தான் அவளுக்க நெருக்கம். இன்னொருத்தி கோகிலா. அங்கே கோயிலுக்குப் பக்கத்தில்தான் இருக்கிறாள். அவளிடம்தான் அந்தரங்கமாக இருப்பாள். தன் எல்லா சந்தோஷங்களும், சோகங்களும் அறிந்தவள் அவள்தான். ஆறுதலான தோழி. இவள் மனச்சுமையைத் தன் சுமையாகக் கருதி ஆறுதல் சொல்வாள். தைரியமூட்டுவாள். எதற்கும் கலங்காதே என்று செயல்பட யத்தனிப்பாள். அவளின் தேவை இவளுக்கு மிகத் தேவை. உனக்கு என்ன சங்கடம் வந்தாலும் என்கிட்ட சொல்லு. நல்ல தீர்வை உனக்குச் சொல்றேன். போதுமா? என்னை உன் உயிர்த்தோழியா நினைச்சிக்கோ…எப்ப வேணாலும் நீ எங்கிட்ட வரலாம். இருக்கலாம், பேசலாம். போகலாம். நான் எதுவும் நினைச்சிக்க மாட்டேன். மனசுல போட்டு மட்டும் அமுக்காதே. அது உடல் நலனுக்கு நல்லதில்லே. உன்னைச் சேர்ந்தவங்களுக்கும் ஆகாது. சரியா? பொறுத்தமான ஆறுதல் வார்த்தைகள் அவளைப் போல் யாராலும் கூற முடியாது. அவள் நினைப்பு இப்பொழுது மனதில்.   எத்தனை அவசரமாய் வந்திருந்தாலும், சுற்றுப் பிராகாரத்தைச் சுற்றாமல் அவள் ஒருநாள் கூட வீடு திரும்பியதில்லை. சமயங்களில் சுற்றுப் பகுதியில் ஆட்களே கூட இருக்க மாட்டார்கள். பிள்ளையாரைக் கும்பிட்டுச் சுற்றி விட்டு, அடுத்து முருகனை வணங்கிவிட்டு, அடுத்தாற்போல் இருக்கும் வில்வ மரத்தையும் விடாமல் ஒரு சுற்றுப் போட்டு, ஏகநாதர் சந்நிதிக்குச் செல்கையில் சமயங்களில் அங்கு அத்தனை வெளிச்சம் இல்லாதது அவளைப் பயப்படுத்தும். இதற்காகவே சண்டிகேஸ்வரர் சந்நிதியை அடைகையில் கையைப் பலமாகத் தட்டி, தனக்குத்தானே பயத்தைப் போக்கிக் கொள்வாள் நந்தினி. பகலில் எத்தனையோ நாள் அந்தக் கோயிலுக்கு வந்திருக்கிறாள். மாதக் கணக்கில் வந்து செல்லும் கோயில்தான். ஆனாலும் இரவுப் பொழுதுகளில் அந்தச் சுற்றுப் பாதையைக் கடக்கும்போது ஒரு பயம் அவளையறியாமல் மனதுக்குள் வந்து உட்கார்ந்து கொள்ளும். எதற்காக இப்படித் தோன்றுகிறது என்று நினைத்தவளாய் ஸ்வாமி ஸ்லோகங்களை சத்தமாய் முனங்கியவாறே, அல்லது ராகமிட்டுப் பாடியவாறே அவள் நடந்து கொண்டிருந்தாலும், யாரோ பின்னால் தொடருவது போன்ற உணர்வை அவளால் அந்தக் குறிப்பிட்ட இடத்தில் மட்டும் தவிர்க்கவே முடியவில்லை. அவ்வப்பொழுது சில காதல் ஜோடிகளை அவள் அந்த ஒதுக்குப் புறத்தில் கண்டிருக்கிறாள். கோயில் என்ற புனிதமான இடத்திலும் கூடவா இப்படி? இதையெல்லாம் வெளியில் வைத்துக் கொள்ளுங்கள் என்று யாரோ ஒரு பெண்ணிடம் தான் கண்டிப்பாகச் சொன்னது கூட அடிக்கடி அவள் நினைவில் வந்து போகும். நமக்கெதற்கு வம்பு என்று இல்லாமல் ஏன் சொன்னோம்? என பிற்பாடுதான் நினைத்தாள். அந்த இளைஞன் ஒரு நாள் தனிமையில் வந்து அவளை மிரட்டியிருந்தான். அன்று அவனின் அத்து மீறல்கள் முயற்சி இவளை மிகவும் பயப்படுத்தியிருந்தது. தன் தம்பி போல் இருந்த ஒருவனின் நடவடிக்கைகள் அவளை மிகவும் வருந்த வைத்தது. மோகனிடம் கூட அவனைப் பற்றி சொல்வோமா என்றுதான் முதலில் நினைத்தாள். உனக்கெதுக்கு இதெல்லாம்? என்றுதான் நிச்சயம் சொல்வான் அவன். அத்தோடு விட்டுவிடு என்று சொன்னவள் கோகிலாதான். அதன்பின் ஓரிரு முறை அவள்தான் அவளோடு கோயிலுக்கு வந்தாள். காலம்பூராவும் நீ வந்திட்டிருக்க முடியுமா?  நான் போயிக்கிறேன் என்று பிற்பாடு தனியே கிளம்ப ஆரம்பித்து விட்டாள் இவள். ஆனாலும் அன்றைக்கு மனதில் ஏற்பட்ட பயம் இன்னும் தொடர்ந்துகொண்டுதான் இருக்கிறது. நமக்கெதற்கு ஊர் வம்பு? நம் பாடே பெரும்பாடாக இருக்கிறது இங்கே. கணவனை நினைத்தே மனதுக்குள் அழ வேண்டிய நிலை. தனக்குள் நொந்து கொண்டாள் நந்தினி.   விறுவிறுவென்று ஏகநாதர் சந்நிதியில் போய் நின்று விடுகையில் அங்கே ஆடாமல் அசையாமல் கூம்பு வடிவத்தில் உயரமாய் அமைதியே உருவாய் நின்று, நிதானமாய்  அழகுற எரிந்து கொண்டிருக்கும் தீபம் அவள் மனதைச் சாந்தப்படுத்தும். தீப ஒளியில் ஏகநாதரை நோக்கிக் கை கூப்பி நிற்கும்போது மனதில் படிந்திருக்கும் அந்தப் பயம் எப்படியோ விலகி ஓடி விடும். இதை அனுபவபூர்வமாய் பலமுறை ஆத்மார்த்தமாய் உணர்ந்திருக்கிறாள் நந்தினி. அன்றும் அப்படித்தான் உணரத் தலைப்பட்டாள். ஆனால் வீட்டில் அப்படித் தனியே விட்டு வந்திருக்கும் இருவரின் நினைவு வந்து அவளைத் தொந்தரவு செய்தது. உன் விருப்பம்தாம்மா என் விருப்பம். நீ சந்தோஷமா வாழறதை நான் கண்ணாரக் கண்டேன்னா, அதோட என் மூச்சை நிறுத்திக்குவேன். என் வாழ்க்கை அந்தப் புள்ளியில்தாம்மா முடிஞ்சு போகணும்னு நான் விரும்பறேன். அவனை நீ சரி பண்றதுக்குக் கொஞ்சம் கஷ்டப்படத்தாம்மா வேண்டிர்க்கும். வலிய இப்படி ஒரு சவாலை ஏத்துக்கிறியேன்னு எனக்கு வருத்தமாத்தான் இருக்கு. ஆனா உன் நம்பிக்கையை, அவன் பேர்ல இருக்கிற உன் மாசில்லாத அன்பை மதிச்சு இதுக்கு நான் சம்மதிக்கிறேம்மா….நான் நினைக்கிற காலத்துக்குள்ளேயும், நீ உன் வாழ்க்கையை சீர் செய்திடுவேன்னு நம்பறேன்….வாழ்க்கை பூரா அறிஞ்ச ஒருத்தனைத் தேர்ந்தெடுத்திருக்கே…முகம் தெரியாத யாரோ ஒருவனைக் கல்யாணம் பண்ணி, அது எப்படி அமையுமோன்னு சொல்ல முடியாதுன்னாலும், இத்தனை தைரியமா நீ மோகனைத் தேர்ந்தெடுத்தது எனக்கு பயமாத்தாம்மா இருக்கு….கடவுள் உன்னை ஆசீர்வதிக்கட்டும்….உன்னோட நியமங்கள் உன்னைக் காப்பாத்தட்டும்….அவ்வளவுதான் என்னால சொல்ல முடியும்….  அப்பாவின் வார்த்தைகள் இன்று ஏன் இப்படி ஞாபகத்துக்கு வந்து தொந்தரவு செய்கின்றன. தொந்தரவா அல்லது பயமுறுத்தலா? அவர் சொன்ன வார்த்தைகள் இன்னும் அப்படியே இருக்கின்றனவோ? அதிலிருந்து சிறிதளவும் கூடத் தன் வாழ்க்கையில் மாற்றம் ஏற்படவில்லையா? முன்னேற்றமே இல்லையா? எப்பம்மா பேரப்பிள்ளையைக் கையில கொண்டு வந்து கொடுக்கப் போறே? போனவாரம் தன் பிறந்த வீட்டிற்குப் போயிருந்த போது அப்பா வாய்விட்டுக் குழந்தைபோல் கேட்ட முதல் கேள்வி….! அந்த வயதான மனிதனின் இதய தாபத்தை என்று, தான் நிரப்பப் போகிறோம்?    எங்கு வந்திருக்கிறோம் என்று பார்த்தபோது தன்னையறியாமல் அனுமன் சந்நிதியைத் தாண்டி இடப்பக்க வெளிப் பிராகாரத்திற்கு வந்திருப்பதை உணர்ந்து நேர் எதிரே நெடுகத் தெரியும் நீண்ட வீதியை நோக்கினாள் நந்தினி. வரிசையாய் உட்கார்ந்திருந்த வறியவர்களின் தட்டுகளில் சில்லரைகளைப் போட்டுக் கொண்டே வந்தாள். எப்போதும் அது அவள் வழக்கம். சாதாரணமாய் ஆரம்பித்தது இப்போது வழக்கமாகி விட்டது. போடாமல் போனால் அவர்களின் பார்வை இவளைக் கொன்று விடும். அன்று மனதும் சமாதானமாய் இருக்காது. மனிதன் பழக்கத்திற்கு அடிமை. அதிலும் நல்ல காரியம் என்று தோன்றுவதை உடனே செய்து விட வேண்டும் என்று அம்மா அடிக்கடி சொல்வாள். இல்லையென்றால் கொஞ்ச நேரம் கழித்து செய்ய வேண்டுமா என்றும் தோன்றலாம் என்பாள். நாள் தள்ளிப் போட்டால் வேண்டாம் என்றுகூடத் தோன்றும் என்பதால் அன்றே, அப்பொழுதே நிறைவேற்றி விடு என்ற அவளின் அறிவுரை இவளைத் துரிதப்படுத்தி இயங்க வைக்கும். வெளியே வந்தாள் நந்தினி.   அப்போது கூட்டத்தோடு கூட்டமாய் அவர்கள் உள்ளே நுழைந்து கொண்டிருந்தார்கள். அது மோகனும், சரோஜாவும். தன்னைத் தேடித்தான் போகிறானோ? அப்படியானால் வீட்டைப் பூட்டித்தானே வந்திருக்க வேண்டும்? சாவி? என்னங்……கையை நீட்டி அழைக்கப் போனவளின் வாய் ஏனோ நின்று போனது. அப்படி உரிமையோடு சகஜமாய் அழைத்து, அவனிடமிருந்து சாவியை வாங்கிக் கொண்டு போகப் பிடிக்கவில்லை. தன் மறுப்பைக் காட்டத்தானே வெளியேறியது. பிறகென்ன இங்கு வந்து அதைச் சரி செய்வது? அப்படிச் செய்தால் அவன் அவளோடு சுற்றுவதில் ஒப்புதல் என்றல்லவா ஆகிவிடும். அவளும் அவள் பார்வையும், சிரிப்பும்…! சுத்த வெட்கங்கெட்டவள் போலிருக்கிறது. வெளியூருக்கு வந்து இப்படி ஆம்பிளைகளோடு ஏன் அலைய வேண்டும்? அழகாய் ஒரு கல்யாணத்தைப் பண்ணிக் கொண்டு செட்டில் ஆக வேண்டியதுதானே? ஆளைப் பார்த்தால் முதிர் கன்னியாய்த் தெரிகிறாள். இனிமேல் எங்கே இவள் கல்யாணம் காட்சியைப் பார்த்தாள்? இன்னும் எத்தனை ஆம்பிளைகளைக் கெடுக்கப் போகிறாளோ? மூஞ்சியே சரியில்லை. தேவையில்லாமல் ஒரு குடும்பத்தில் குழப்பத்தை உண்டு பண்ணுகிறோமே என்கிற புரிந்துணர்வு வேண்டாம்? எவனாவது கல்யாணம் ஆகாதவனோடு அலைய வேண்டியதுதானே? நாக்கைச் சப்புக் கொட்டிக் கொண்டு அவனும் திரிவானில்லையா? இதென்ன பழக்கம்? கல்யாணம் ஆன ஆம்பிளைகளாய்ப் பிடிப்பது? முன்பே பழக்கம் இருந்திருந்தாலும், குடும்பஸ்தன் என்று ஒதுங்கத் தெரிய வேண்டாமா? இவளெல்லாம் ஒரு பொம்பளையா? வெட்கங்கெட்ட சிறுக்கி…! கோயில் வாசலி்ல் வேண்டாத வார்த்தைகள். தவிர்க்க முடியவில்லை.   இன்னும்  கொஞ்சம் யோசித்தால் என்னெல்லாம் வன்மம் மனதுக்குத் தோன்றுமோ? கோயிலுக்கு வந்த இடத்தில் ஸ்வாமி ஸ்லோகங்களைச் சொன்னாலும் புண்ணியம். இவள் வந்து மூளையைத் தொந்தரவு செய்கிறாளே? ராம்….ராம்….ராம்….நந்தினிக்கு அவளையறியாமல் அவள் வாய் மந்திரங்களை முனகத் தயாரானது. கடவுள் மந்திரத்தைச் சொன்னாலும் மனது லேசாகும். ஒருமைப்பாடு வரும். சலனங்கள் விலகும். அவன் திரும்ப வரும்வரையும் அங்கே வாயிலில் காத்திருக்க அவள் விரும்பவில்லை. பதிலாக என்ன செய்யலாம் என்று யோசித்தபோதுதான் கோகிலாவின் ஞாபகம் வந்தது. சுற்றுப் பிராகாரத்தின் நேர் பின் பக்கம் அவள் வீடு. போனால் இந்நேரம் அவள் தனியாய் இருப்பாளா அல்லது மணாளன் மகேந்திரனோடு கொஞ்சிக் கொண்டிருப்பாளா? சிவ பூஜையில் கரடி புகுந்ததுபோல் ஆகிவிட்டால்? தனக்குத்தான் அந்த யோகம் இல்லை என்றால் மற்றவர் சந்தோஷத்தையும் கெடுக்க வேண்டுமா என்ன?   மோகனுக்கு எப்பொழுதாவதுதான் மோகம் வருகிறது. பெயர்தான் மோகன். ஒருவேளை வெளிப் பழக்கம் அதிகம் என்பதால்தான் இது பெரிதாகத் தெரியவில்லையோ என்னவோ? பழம் தின்று கொட்டை போட்டவனாய் இருப்பான் போலிருக்கிறது. அவனை எப்படித் தன் காலடியில் வீழ்த்துவது என்கிற உபாயம் இன்னும் முற்றுமாகப் பிடிபடவில்லை. ஆபீசில் எத்தனையோ பேரிடம் எவ்வளவோ விஷயங்கள் பரிமாறிக் கொள்கிறோம். ஆண்கள், பெண்கள் கலப்பில்லாமல். ஆனாலும் ஆண்களிடம் ஒரு வரம்பு இருக்கத்தானே செய்கிறது. அதற்கு மேல் போனால் அவர்கள் தங்களை லேசாக எடை போட சந்தர்ப்பம் வழங்கியதாகத்தானே ஆகும். பிறகு அவர்கள் கை நீள எத்தனை நேரமாகும்? திருமணமான பெண்களோ, இல்லையோ, படியுமா என்று பார்ப்பதில்தானே ஆண்கள் கவனமாயிருக்கிறார்கள்? சந்தர்ப்பம் கிடைக்காதவரைதானே எல்லா ஆண்களும் யோக்கியர்கள். கிடைத்துவிட்டால் எல்லாப் பயல்களும் விழுந்துதானே விடுகிறார்கள். ஊர் பேர் தெரியாதவனைக் கல்யாணம் செய்வதற்கு, இளம் பிராயம் முதல் அறிந்தவனைக் கை பிடிப்பது நலம் என்றுதானே மோகனை மோகித்து மணந்தது. இப்பொழுது அவன் என்னடாவென்றால் எதைப்பற்றியும் கவலை கொள்ளாதவனாக, தெளிவாகச் சொல்லப்போனால் பொறுப்பற்றவனாக, இன்னும் கல்யாணம் ஆகாத பேச்லர் போலல்லவா இருக்கிறான். தன் நினைப்பாகவே திரிவான் என்று பார்த்தால், ஆசையாய் ஓடி வருவான் என்று பார்த்தால், அடிக்கடி லீவு போட்டுவிட்டு எங்காவது போவோம் என்று நச்சரிப்பான் என்று பார்த்தால்,  ராத்திரி பகல் வித்தியாசமில்லாமல் வீட்டில் சீண்டுவான் என்று பார்த்தால், அவனிடம் பெரியதாக எந்தவொரு உத்வேகமும் இல்லையே? இவனின் இருப்பு என்னையும் சோர்வடைய வைத்துவிடும் போலிருக்கிறதே…! எனக்கு யோசனை சொல்ல பெரியவர்கள் என்று யாரும் இல்லையே…! இதையெல்லாம் எப்படி அப்பாவிடம் பகிர்ந்து கொள்வது? ஏற்கனவே அவன் வேண்டாம் என்றவர் அவர். இதையெல்லாம் சொல்லப்போனால், ஆள் நர்த்தனமாடி விடுவார். தன்னையே வெறுத்து எங்காவது கண்காணாத தேசத்திற்கு என்று யாத்திரை கிளம்பினாலும் போயிற்று. கடவுளே…எனக்கு வழி காட்டு….கைகள் அவளையறியாமல் நேர் அம்பாள் சந்நிதி நோக்கிக் குவிந்தது.   கோகிலா நினைப்பு வந்தது. அவர்கள் தனிமையைக் கெடுத்ததாய் ஆகி விடுமோ? இப்படித் தோன்றி மீண்டும் அவளைத் தயங்க வைத்தது. சே…! சே…! எதற்காக இப்படியே நினைக்க வேண்டும்? இந்நேரம் யாராவது அப்படி இருப்பார்களா? மணி எட்டுக் கூட ஆகவில்லை. அதற்குள்ளேயுமா படுக்கையில் முடங்குவார்கள்? போவோம்…போய் சற்று நேரம் பேசிவிட்டுத்தான் வருவோமே…என்ன குடி முழுகப் போகிறது? - நினைத்தவாறே நடந்து கோகியின் வீட்டை அடைந்தாள் நந்தினி.   வாங்க நந்தினி…வாங்க….வாங்க….என்றவாறே துள்ளலோடு வரவேற்றான் மகேந்திரன். கோகிலா எங்கே என்று கண்கள் தேட, தயக்கத்தோடேயே வீட்டுக்குள் அடியெடுத்து வைத்தாள் நந்தினி.   அத்தியாயம் 7 “நீங்க இப்டிப் போங்க…நான் இடது பக்கமா சுத்தி வர்றேன்…எங்கயாவது சந்திச்சிடலாம்….” - சரோஜா கூறிய யோசனையைக் கேட்டு சிரித்தான் மோகன்.   கோயில்ல எங்கயாவது இடது புறமாச் சுத்துவாங்களா? அதுவும் பொம்பளை நீ…நான் சுத்துனாலும் பரவால்ல…யாரயாச்சும் தேடுறார் போலிருக்குன்னு நினைப்பாங்க…நீ சுத்துனா கிறுக்குன்னு நினைப்பாங்க. அப்பிரதட்சணம்னு சொல்லுவாங்க அதை…தெரியுமில்ல?   இப்டி ஒவ்வொண்ணுக்கும் சென்டிமென்ட்ஸ் பார்த்துக்கிட்டிருந்தீங்கன்னா வாழ்க்கைல ஒண்ணுமே செய்ய முடியாதாக்கும்…இப்போ உங்க ஒய்ஃப்பை தேடுறது முக்கியமா இல்லையா? அவுங்க கைல சாவியைக் கொடுத்தாத்தான  நாம வெளில போக முடியும்? முதல்ல அதச் செய்யுங்க…..  நானும் திருச்சிலர்ந்து உன்னைப் பார்த்திட்டே வர்றேன். இன்னும் நீ ஒழுங்கா மரியாதையா ஆகல்லே….இப்போ இந்த ஊருக்கு வந்து என்னைப் போட்டுத் திரும்பக் குழப்ப ஆரம்பிச்சிருக்கே….அங்கயே என்னை உன்கிட்ட மாட்டி விடலாம்னு நினைச்சாங்க நம்ப ஆபீஸ்காரங்க…யார் செய்த புண்ணியமோ நான் தப்பிச்சு இந்த மதுரைக்கு வந்தேன். இங்கயும் வந்து பிடிச்சிக்கிட்டே….என் பொண்டாட்டி என்னடான்னா ஏற்கனவே அவ சந்தேகக் காரி….இப்போ உன்னையும் பார்த்திட்டால்ல…கேட்கவே வேண்டாம்….  நான்தான் கல்யாணமே பண்ணிக்கப் போறதில்லங்கிற முடிவுல இருக்கேன்…இதுல சந்தேகப்பட என்ன இருக்கு?   ஏற்கனவே ஒரு கல்யாணம் ஆகி சாமர்த்தியமா அதை மறைச்சிட்டே. யாருக்குத் தெரியும் அதுபத்தி. நம்ம திருச்சிஆபீஸ்லயே புதுசா வந்த சில பேருக்குத் தெரியாது. இனிமே நீ கல்யாணம் பண்ணிக்கப் போறதில்லைன்னு இருக்கலாம்தான்.  அது அவளுக்குத் தெரியாதுல்ல…அப்டி இருந்தா எதுக்கு இன்னொரு வீட்டு ஆம்பளையோடு சுத்தணும்னு கேட்பா அவ…இன்னும் நீ அவகூடப் பேசலேல்ல…பார்த்ததோடு சரி…அவ்வளவுதானே…உட்கார்ந்து பேசிப் பாரு…ரெண்டே வார்த்தைல உன்னைக் கட் பண்ணி விட்ருவா….அடிச்சிப் பிடிச்சி தலை தெறிக்க ஓடிடுவே…அப்புறம் எங்க வீட்டுப் பக்கம் தலை வச்சுப் படுக்க மாட்டே…  நீங்க இப்டியெல்லாம் சொல்ல சொல்லத்தான் எனக்கு அவுங்களைச் சந்திக்கணும் போல ஆவல் அதிகமாகுது…நான் வீட்டுக்குள்ள வந்தவுடனே எதிர்பாராத நிமிஷத்துல பட்டுன்னு கோயில் கிளம்பிட்டாங்க…இல்லன்னா உட்கார்த்தி வச்சு பேச்சை ஆரம்பிச்சிருப்பேன்…எப்டித்தான் பேசுறாங்கன்னு தெரிஞ்சிக்கிட்டிருக்கலாமே…ஒரு வேளை நான் வந்தது பிடிக்கலையோ என்னவோ? நானாவது வலியப் பேசியிருக்கணும். அவுங்க கௌரவமானவங்க…எனக்குத்தான் அதெல்லாம் இல்லியே…எல்லாத்தையும்தான் உதுத்தாச்சே…ரெண்டு வார்த்தை பேசிட்டு அப்புறம் கிளம்பியிருந்தாங்கன்னாக்கூடப் பரவாயில்லே…சட்டுன்னு கிளம்பினதுலேர்ந்தே தெரியுது…நம்ம வரவு ஒத்துக்கலைன்னு…  வீட்டு வேலைக்காரி மேல சந்தேகப்பட்டு, பட்டுன்னு நாளைலேர்ந்து வேலைக்கு வர வேண்டாம்னுட்டா…அந்தம்மாவும் ரொம்ப கிராக்கி பிடிச்ச ஆளா இருக்கக் கண்டு சரியாப் போச்சு…இல்லன்னா எதுக்கும்மா இப்படி சட்டுன்னு நிறுத்துறீங்கன்னு யாரும் ஒரு கேள்வி கேட்டிருப்பாங்க…அது ஒரு அந்தஸ்தான வீட்டுல வாழ்க்கைப்பட்டிருக்கிற பொம்பளை…அஞ்சு பிள்ளைப் பெத்தவ….ஏதோ வருமானம் பத்தாம நாலஞ்சு வீட்டுல வேலை செய்திட்டிருந்தாங்க…புருஷன் சரியில்ல….எந்த வீட்டுலயும் இதுதான பிரச்னையா இருக்கு…?  உங்களையும் சேர்த்துச் சொல்லிக்கிறீங்களாக்கும்? - சரோஜாவின் குறும்பு புரிந்தது மோகனுக்கு.   கல்யாணத்துக்கு முன்னால கொஞ்சம் அப்டி இப்டி இருந்தேன்தான். அதை ஒத்துக்கிறேன்…ஆனாலும் இப்பல்லாம் எதுவுமில்ல…இப்போ நீ வந்திருக்கிறதுதான் எனக்குப் பயமா இருக்கு…எங்க உன்னோட வலைல விழுந்திடுவேனோன்னு…  நான் உங்களை ஒண்ணும் வலை போட வரல்லை. பயப்படாதீங்க…. ஒரு ஃபிரெண்டுமாதிரி நினைச்சுத்தான் வந்தேன்.  உங்களை என்ன லாட்ஜூக்கா கூப்பிட்டேன்….  அம்மாடி, நீ கூப்பிட்டாலும் கூப்பிடுவேம்மா…உனக்கு அந்தத் தைரியமும் உண்டுதான்…இல்லன்னு மறுக்க முடியுமா உன்னால…ஃப்ரெண்டு மாதிரி நினைச்சு வந்தேன்னு நீ சொல்றதை நான் நம்பணுமாக்கும்? இப்டிச் சொல்லி எத்தனை தடவை என்னை வெளியே தள்ளிட்டுப் போயிருக்கே? திருச்சில ரூம்ல அக்கடான்னு கிடந்த என்னை சும்மா இருக்க விட்டியா நீ? அந்த லாட்ஜ்ல ஒருத்தர் விடாம உன்னைப்பத்திக் கேட்க வச்சிட்டியே? போர்டிங் அன்ட் லாட்ஜிங் அந்த எடம். ஓனரே, யாரு அது? இதெல்லாம் கூடாதுன்னு சொல்ற அளவுக்கு ஆக்கிட்டியே?   என்ன இப்டிச் சொல்றீங்க? ஜஸ்ட் உங்களைப் பார்க்கத்தானே நான் அங்கே வந்திருக்கேன். படுக்கவா? எனக்கென்ன தெரியாதா? எந்தெந்த எடத்துல எது எது சாத்தியம்னு? அதெல்லாம் கிடக்கட்டும், அந்த லாட்ஜ் ஓனர் ரொம்ப யோக்கியமாக்கும்? அடிப்பாவி, அவரையும் மடக்கிட்டியா? அவரே ஒரு வாட்டி என்னைத் தேடி வந்தவர்தான். போய்யா, இந்த வயசுல உனக்குப் பொண்ணு கேட்குதாக்கும்னு நாந்தான் தடவி அனுப்பிச்சிட்டேன்….அதுலயே அவருக்கு அம்புட்டு சந்தோஷம். கிறங்கிப் போயிட்டாரு…ஆனா ஒண்ணு…தொழில் வேறே…அது வேறேன்னு இருக்கிற மனுஷன். ஆரம்பத்துல ஒரு மொபெட் வச்சிருந்தேன்ல நான், தெரியும்தானே…அது அவர் வாங்கிக் கொடுத்ததுதான்….அதுக்குப் பெறகு பெர்மனென்டா வச்சிக்கலாம்னு வாங்கிக் கொடுத்தாரு….நாந்தான் எச்சரிச்சு அனுப்பிச்சிட்டேன். உன் ஹோட்டலுக்கு வந்து ஊரக் கூட்டிடுவேன்னு….அதுக்கு அடையாளமாத்தான் அன்னைக்கு உன்னைத் தேடுறாப்ல அங்க வந்தது. அந்த வண்டி வாங்கிக் கொடுத்ததை யாருகிட்டயும் சொல்லிப்புடாதேன்னாரு. அதுவே அது என்கிட்டத் தங்கக் காரணமாயிடுச்சி. அந்த வண்டியச் சொல்லியே பயமுறுத்தினேன் கொஞ்ச காலத்துக்கு. ரொம்பச் சீக்கிரமே பொண்டாட்டிய இழந்திட்ட மனுஷன் போலிருக்கு. ரெண்டு பொம்பளப் பிள்ளைகள்னு கேள்விப் பட்டேன். அதுகளுக்கு ஒழுங்காக் கல்யாணம் பண்ணி அனுப்பி வைக்கணும்ங்கிற பயம் இருந்திச்சு அந்தாள் மனசுல. அதை உணர்ந்துதான் நானும் சரி, போவட்டும் பாவம்னு விட்டுட்டேன்.   ரொம்ப அனுபவம்தான் இந்த விஷயத்துல உனக்கு. ஆனாலும் மனசுல கொஞ்சம் ஈரம் இருக்கு.  பொம்பளையாச்சே….அதுக்காக இப்டி வாழ்க்கை பூராவும் யார் கூடவாச்சும் அலைஞ்சிட்டேயிருந்தா என்ன அர்த்தம்? ஒருத்தன்னு நிரந்தரமா இருக்கிற மாதிரிப் பண்ணிக்க வேண்டிதானே? இப்டியா வம்புல மாட்டுற மாதிரி என்னைத் தேடி வர்றது? நானா இருக்கக்கண்டு நியாயமா உன்னை அணுகறேன். வேறொருத்தன்னா உன்னை ஆபீஸ்லயே கட் பண்ணி விட்டிருப்பான்.   உங்க மேலயே உங்க பொண்டாட்டிக்கு இன்னும் சந்தேகம் தீரல…நீங்க என்னைச் சொல்றீங்களாக்கும்…  அந்தக் கதையைப் பாதில விட்டுட்டனே….அன்னைக்கு அந்த வேலைக்காரி கூடச் சிரிச்சிப் பேசினதுக்கே சந்தேகப்பட்டுட்டா…காரணம் அந்தம்மா கொஞ்சம் அழகா இருக்கும்…அது அப்படி சிரிச்சிப் சிரிச்சிப் பேசுறது இவளுக்குப் பிடிக்கலே…இத்தனைக்கும் எம்ப்ளாய்ட் கேர்ள்…ஆபீசுல எத்தனை பேரைப் பார்த்திருப்பா…அவகிட்டயே கூட நிறையப் பேரு அசடு வழிஞ்சிருப்பாங்கல்ல….அதெல்லாம் அவளுக்கு சுத்தமாப் பிடிக்காது….கரெக்டுன்னா கரெக்டுத்தான்….ஆனா ஒண்ணு இங்க சொல்லித்தான் ஆகணும்…அந்த வேலைக்காரம்மா ஒரு நா அவ இல்லாத சமயம் வேலைக்கு வந்திச்சு….அன்னைக்கு அவங்களோட நடவடிக்கை கொஞ்சம் வித்தியாசமாப் பட்டிச்சு எனக்கு…அங்கங்க வீட்டுல மறைவா ஒதுங்கிற மாதிரித் தெரிஞ்சிச்சு….அன்னைக்கு அந்தம்மாவோட அலங்காரம் வேறே பலமா இருந்திச்சி. அஞ்சு பெத்தவ மாதிரியே இருக்க மாட்டா? எங்கருந்துதான் இப்டி ஒடம்பு அமையுமோ? சிக்குன்னு இழுத்து வச்சுத் தைச்சதுமாதிரி பளபளன்னு இருப்பா…! ஏதோ திட்டத்தோடதான் வந்திருக்கும் போலிருக்குன்னு நான் சுதாரிச்சிட்டேன்…தொடைவரைக்கும் வழிச்சி விட்டிட்டு உட்கார்ந்து பாத்திரம் தேய்ச்ச ஷோக்கு சரியாப்படல…குனிஞ்சமேனிக்கு மாராப்பு நழுவுறது தெரியாம வீடு கூட்டின கதை வேறே…எல்லாத்தையும் கவனிச்சும், கவனிக்காம மாதிரி இருந்து அன்னைக்கு ஒரு வழியா ஒப்பேத்திட்டேன்…எங்கயிருந்துதான் அந்தத் தீர்மானம் எங்கிட்ட வந்திச்சோ எனக்கே தெரியாது…அன்னைக்கு சாயந்திரம் நந்தினிகிட்ட சொல்லிட்டேன்…இனிமே நீ இருக்கிறபோது வந்து பாத்திரம் தேய்ச்சிட்டு, வேலைகளை முடிச்சிட்டுப் போயிடணும்னு கண்டிப்பா சொல்லிடுன்னுட்டேன். புரிஞ்சிக்கிட்டா போலிருக்கு. கற்பூர புத்தி…மறுநாளைக்கே வெட்டு ஒண்ணு துண்டு ரெண்டுன்னு கதையை முடிச்சிட்டா….இந்த மாதிரி ஒரு அதிர்ச்சியை அந்தம்மாவே எதிர்பார்த்திருக்காது….நீங்க நினைக்கிறமாதிரி எந்தத் தப்பும் நடந்திடாதும்மா…வீணா ஏன் கற்பனை பண்ணிக்கிறீங்க? .திடீர்னு இப்டி நிறுத்தி்னா நா எங்கம்மா போவேன்?ன்னு எவ்வளவோ சொல்லிப் பார்த்திச்சு….எனக்கே பாவமாத்தான் இருந்திச்சு…கண்கலங்காத குறை…  உங்களுக்குத்தான் மனசு இறங்கிடுமே…வழிசல் கேசாச்சே…!  சரி, இருக்கட்டும்னு மட்டும் சொல்லியிருந்தான்னு வச்சிக்கோ…நிச்சயம் அந்தத் தப்பு நடந்திருக்கும்….வலிய ஒண்ணு வரும்போது ஒரு மனுஷன் எத்தனை நாளைக்குத்தான் அடக்கிக்கிட்டு இருக்க முடியும்? சந்தர்ப்பமும், சூழ்நிலையும்தானே ஒருத்தனைக் கெடுக்குது…மனசை அடக்க முடியாமத்தான் கிடந்தேன் நானும். அவ சிரிப்புக்கு, பதில் சிரிப்பும் சிரிச்சிருந்தேன்னு வச்சிக்கயேன்…அதுதானே சிக்னல்….  க்ரீன் சிக்னல் அப்டியே ரெட்டா மாறிடுச்சாக்கும்…ஆபரேட்டர் உங்க ஒய்ஃப்….இல்லன்னா கதை கந்தலாகியிருக்கும்னு சொல்லுங்க…சரி விஷயத்துக்கு வருவோம்…இப்போ நமக்கு சூழ்நிலை சரியில்லை போலத் தெரியுதே…..என்றவாறே சுற்று முற்றும் பார்த்துத்  தேடலானாள் சரோஜா. கோயிலில் வைத்து சம்பந்தமில்லாத அபத்தங்களையெல்லாம் பேசியாயிற்று மனசார சாமி கும்பிடல் என்பதைத் தவிர. மோகன் இவ்வாறுதான் நினைத்துக் கொண்டான். அதற்குக் காரணமான சரோஜா மீது அந்த நேரத்தில் அவனுக்குக் கோபம் வரத்தான் செய்தது. இருவரும் பிரிந்து பிராகாரத்தை எதிரெதிராகச் சுற்றி வர ஆரம்பித்தார்கள். அங்கே அந்த சனீஸ்வரர் சந்நிதியில் அவர்கள் இருவரும் மீண்டும் எதிரெதிரே சந்தித்துக் கொண்டபோது அந்த மூன்றாவது நபரும் அங்கே தென்பட்டார். தன்னை அந்த இருளில் சடாரென மறைத்துக் கொண்டு அவர்கள் இருவரையும் உற்று நோக்கிக் கொண்டிருந்தது அந்தக் கண்கள்.  அத்தியாயம் 8 கோகிலா இதோ பக்கத்துல கடைக்குத்தான் போயிருக்கா…நீங்க உட்காருங்க… - மகேந்திரன் தயக்கத்தோடே சொன்னான்.  அப்டியா…சரி, அப்புறமா வர்றேன்….என்றுவிட்டுத் திரும்பிக் கிளம்ப யத்தனித்தாள் நந்தினி. அவளையறியாமல் மனதுக்குள் ஒரு வேகம் புகுந்து கொண்டது அப்போது. வெளியே கிளம்பிய சகுனமே சரியில்லையே என்று தோன்றியது. சில சந்தர்ப்பங்கள் அப்படித்தான் அமைந்து போகிறது. தன் வீட்டிற்கு வந்த அவளுக்கு இடம் காலி பண்ணிக் கொடுத்துவிட்டு, தான் வெளியே வந்ததே முதல் தப்பு.   அப்படி எதிரே அவன் வந்து நிற்பான் என்று அவள் சற்றும் எதிர்பார்க்கவில்லை. கட்டாயம் உடனே போய்த்தான் ஆகணுமா?  - பார்வையை நேருக்கு நேர் வைத்துக் கொண்டு கேட்டான். அவனை அப்படி நேர்கொண்டு நிமிர்ந்து காண முடியாமல் தவித்தாள் நந்தினி. சரியாக வந்து மாட்டிக் கொண்டோம் என்று தோன்றியது அவளுக்கு. ஆனாலும் எது தன்னைத் தடுத்து நிறுத்துகிறது என்று அவளுக்குத் தெரியவில்லை. மோகனையும் சரோஜாவையும் தவிர்ப்பதற்காக அத்தனை வேகமாய் வீட்டை விட்டு வெளியேறிய தனக்கு, இங்கு கால்கள் ஏன் தேங்குகின்றன? அங்கே நிற்கும் கணங்கள் ஒரு ஆணுடன் கூடிய தனிமை என்றாலும் கூட எதுவோ தனக்குப் பாதுகாப்பாய் இருப்பதுபோல் தன் மனம் உள்ளார்ந்து உணருவதை அவளால் ஊகிக்க முடிந்தது. மகேந்திரன் பண்பாளன். அவனால் எந்தப் பெண்ணுக்கும் எந்த சமயத்திலும், எந்தச் சூழ்நிலையிலும் கிஞ்சித்தும் ஆபத்து வருவதற்கில்லை. அந்த அத்யந்த நம்பிக்கைதான் தன்னை அங்கே நிறுத்தி வைத்திருக்கிறதோ? - என்னவோ தோன்ற வாசலின் முதல் தடுப்பில் போடப்பட்டிருந்த நாற்காலியில் அமர்ந்தாள் நந்தினி. எதிர்த்தாற்போல் தெருவில் பளீரென ஒளியைப் பரப்பிக் கொண்டிருந்த கம்பத்தின் நிழல் அதற்குப் பின்னால் ஒரு வீட்டின் மாடிப்பகுதியில் எரிந்த விளக்கு வெளிச்சத்தின் மூலம் நேர் செங்குத்தாக இங்கே நிழலாய் நீண்டிருந்தது. அந்த நிழலில் தன் முகத்தைத் தான் மறைத்துக் கொள்ள யத்தனிக்கிறோமோ என்கிற சந்தேகத்துடனேயே அதைத் தவிர்க்க முடியாமல் செய்து கொண்டிருந்தாள் நந்தினி.   ஆளில்லாத வீட்டில் உள்ளே நுழைந்து அமர்ந்து கொள்ள அவள் மனம் இடம் கொடுக்கவில்லை. சட்டென்று கண்ணில் பட்ட அந்த நாற்காலியில் தான் உட்கார்ந்துவிட்டது அதுவரை அங்கே அமர்ந்திருந்த மகேந்திரனை வெளியே நிற்க வைத்திருந்தது. ஒரு மூன்றாம் மனிதனோடு தனிமையில் அப்படி வீட்டிற்குள் சென்று உட்கார இவள் மனம் ஒப்பவில்லைதான். அதிலிருந்து தப்பிப்பதற்காக அவள் புத்தி செய்த உபாயம் இது. இதை உணர்ந்து கொண்டானோ என்னவோ, அவன் மட்டும் தனியே உள்ளே செல்வதற்குத் தயங்கி, கோகிலாவை எதிர்பார்ப்பதுபோலவோ அல்லது யாராவது தெரிந்தவர்கள் வந்தால் அவர்களோடு பேசி கொஞ்ச நேரத்தைக் கழிக்கலாமே என்கிற நோக்கிலோ வாசலில் அங்கும் இங்குமாக நடந்து கொண்டிருந்தான் மகேந்திரன். எந்த சந்தர்ப்பத்திலெல்லாம் அவனைச் சந்திக்க நேர்கிறதோ அங்கெல்லாம் அவனைத் தவிர்த்தே வந்திருக்கிறாள் அவள். அப்படியான எந்த சமயத்திலும் அவன் அத்து மீறி எப்பொழுதும் நடந்து கொண்டதில்லை. மகேந்திரனிடம் இன்றுவரை ஒரு வார்த்தை ஒழுக்கக் குறைவாக வெளிப்பட்டு அவள் கேட்டதுமில்லை, கேள்விப்பட்டதுமில்லை. தன்னை இழிவுபடுத்துகிறாள் என்பதாக அவன் நினைத்ததில்லை. கோபம் கொண்டதில்லை. அந்த நேரத்தில் ஏற்படும் படபடப்பில் வார்த்தைகளைப் பிறழவிட்டதில்லை. எந்த சந்தர்ப்பத்திலும் தன்னை இழந்து விடக் கூடாது என்பதில் அவன் பிடிவாதமாக இருக்கிறான் என்பதை நன்கு புரிந்து கொண்டிருந்தாள்  நந்தினி. அவள் அவனை அலட்சியப்படுத்திய பல சமயங்களில் ஒன்றில் கூட அவன் தன் நிலை தவறியதில்லை. அதுதான் அவனிடம் ஈர்த்த விஷயமாக இருக்கிறது இவளுக்கு இன்றுவரை. என்னைப் பிடிக்கலைன்னு நீங்க சொன்னதுல எனக்குக் கொஞ்சமும் உங்க மேல கோபமில்லை…அதுக்காக அத்தோட நாம பழகறதைக் கூடத் தப்பா நினைக்க நான் தயாரில்லை. ஒரே ஆபீஸ்ல வேலை பார்க்கிறோம்ங்கிற பழக்கத்துல, ஒருத்தரை ஒருத்தர் நல்லா புரிஞ்சிக்கிட்டிருப்போம்ங்கிற தைரியத்துல, நம்பிக்கைலதான் நான் உங்களை அணுகினேன். ஜாடையா உங்ககிட்டே இதை நான் முன் வைத்தபோது, நீங்க பதில் எதுவும் சொல்லாட்டாலும், ஒரு மென்மையான புன்னகையை அந்த நேரத்தில வழங்கினதுனாலதான் அடுத்த அடி எடுத்து வச்சேன் நான். இல்லைன்னா அப்படி எங்கப்பாவைக் கொண்டு பெண் கேட்க வரச்சொல்லியிருக்க மாட்டேன். கொஞ்சம் அவசரப்பட்டுட்ட விஷயம்தான் அது. அது உங்க மேல ஏற்பட்ட ஈர்ப்புன்னு பிற்பாடுதான் நான் உணர்ந்தேன். உங்க முறைப்பையன் மேல நீங்க இவ்வளவு அன்பு வச்சிருக்கிறதுபத்தி எனக்கு ரொம்ப சந்தோஷம். இளம் பிராயத்துலர்ந்து அதை வளர்த்திட்டு வந்திருக்கீங்கங்கிற விஷயத்தை அன்னைக்கே நீங்க வெளிப்படையா என்கிட்ட சொல்லியிருக்கலாம்.அதுல ஒண்ணும் தப்பில்லையே..! இத்தனை காலம் ஆபீஸ்ல பழகியிருந்தும், இதைச் சொல்ல நீங்க தயங்கினதுதான் ஏன்னு எனக்கு இன்னும் புரியல…யார் யாருக்கு எங்க முடிச்சுப் போட்டிருக்கோ அங்கதான் சேரும். அதுல எந்த மாற்றமுமில்ல. இல்லன்னா உங்களோட உயிர்த் தோழி இப்படி எனக்கு மனைவியாக முடியுமா? கோகிலாவுக்குக் கூட நான் சரியான பொருத்தமாங்கிற சந்தேகம் இன்னைக்கும் எனக்குள்ள உண்டு. அவ அழகு முன்னால என்னோட சுமாரான பர்சனாலிட்டி தோத்துத்தான் போகும். ஆனா ஒண்ணு…பெண்கள் அழகுன்னு நினைக்கிறது, வெளிப்படையாத் தெரியற உடலமைப்பை மட்டும் வச்சு இல்லன்னு அவகிட்ட நான் புரிஞ்சிக்கிட்டேன்…அதுக்கும் மேலேயும் அவளுக்கு சில தீர்மானங்கள் இருந்திருக்கு. வாழ்க்கைங்கிற வட்டத்துக்குள்ள ரொம்ப ஜாக்ரதையா அடியெடுத்து வைக்கிறவ அவன்னு நான் வந்ததுமே புரிஞ்சிக்கிட்டேன். அவளோட பக்குவம்தான் எங்களோட அன்றாட வாழ்க்கையை சந்தோஷமா வச்சிருக்குன்னு சொல்லணும்…  தான் தவற விட்ட பந்தை எட்டி மளாரென்று பிடித்துவிட்டாளோ கோகிலா என்று கூட ஆரம்பத்தில் ஒரு எண்ணம் தோன்றியது நந்தினிக்கு. அது அவளுக்குத் திருமணம் நிச்சயித்திருந்த நேரம். அப்பொழுதுதான் ரங்கநாதன் தன் தொழில் நிமித்தம் ஒரு வியாபாரிகள் சங்கக் கூட்டத்திற்கு என்று திருச்சிக்குச் சென்று வந்தார். அங்கேதான் அவர் மோகனைச் சற்று வித்தியாசமான நோக்கில் கல்லணையில் வைத்துப் பார்த்து விட நேர்ந்தது. அவர் பார்த்தது அவனுக்குத் தெரியாதுதான். ஆனால் அவன்தானா என்று அங்கு வைத்து உறுதி செய்ய முடியாத ரங்கநாதன் அன்று இரவு அவர் தங்கியிருந்த லாட்ஜூக்கே அவனும் வந்தபோதுதான் திடுக்கிட்டுப் போனார். வாசலில் விசாரணைப் பிரிவில் ஜாடை மாடையாகக் கேட்டும் பார்த்தார். அவர்கள் சொன்ன விபரம் ஒன்றும் அவர் மண்டைக்குள் சரியாக ஏறவில்லை. ஆனாலும், அவன்தான் என்பதை உறுதி செய்துகொள்ள நேர்ந்த அந்த சந்தர்ப்பம்தான் மலைக்கோட்டைப் பிள்ளையாரே தனக்கு உதவுவதற்கென்றே தன்னை இன்று இங்கு வரவழைத்திருக்கிறார் என்று நினைத்து உருகிப் போனார். ஆனால் விதி யாரை விட்டது? அவள்தான் அவனைத்தான் கட்டுவேன் என்று ஒற்றைக் காலில் தவம் செய்கிறாளே? சின்ன வயதில் முடிச்சுப் போட்ட எத்தனையோ கல்யாணங்கள் அத்தனையும், வயசு காலத்தில், காலப் போக்கில் எல்லாக் குடும்பங்களிலும், சொன்ன சொல் தவறாமல் அப்படியேவா நடந்தேறியிருக்கின்றன? கண்ணுக்குக் கண்ணாக ஒரே பெண்ணை வைத்துக் கொண்டு கண்ணை இமை காப்பது போல் வளர்த்தெடுத்து இப்படி ஒழுக்கமில்லா ஒருவனுக்கா கொண்டு கொடுக்க வேண்டும்? வயிறெரியத்தான் செய்தது ரங்கநாதனுக்கு.   அப்படி ஒன்றும் பயப்படத்தேவையில்லை என்கிறதே தன் பெண். தனது முடிவு சரியில்லை என்றல்லவா சொல்கிறாள்? நாலு பெண்களோடு சேர்த்துப் பார்த்தாலே இப்படியா சந்தேகப்படுவது என்றல்லவா கேட்கிறாள்? அவள் கேட்பதிலும் ஏதோவொரு உண்மை பொதிந்துதானே இருக்கிறது? மோகனின் எந்த நல்ல பழக்கம் அவளை இப்படிக் கட்டிப் போட்டிருக்கிறது? நமக்கும் தெரியாமல் இதுநாள்வரை இருவருக்கும் நெருக்கம் ரகசியமாய் இருந்திருக்குமோ? நான்தான் வியாபாரம், கூட்டம், கொள்முதல்  என்று சுற்றிக் கொண்டிருக்கிறேன் என்றாலும், அவன் அப்பனுமா இதைக் கண்டிருக்க மாட்டான்? நம்ம பையனுக்கு இதுதான் ஏற்ற பெண் என்று ஏற்கனவே அவன் முடிவு செய்து விட்டானோ? என்ன ஒரு தைரியம்? அப்பன்காரன் நான் கல்லுக் குண்டு மாதிரி நிற்கிறேன். என்னை மீறி நடத்தி விடுவானா? எனக்கே தெரியாமல் ரகசியத்திருமணம் நடத்தும் திட்டம் ஏதும் அவர்களிடம் இருக்குமோ? என்னென்னவோ எல்லாம் நினைத்து நினைத்து மறுகித்தான் போனார் ரங்கநாதம். சிவநேசனின் பொறுப்பான பேச்சில்தான் அவர் சற்றுப் பதத்துக்கு வந்தார். அவருக்கும் இவருக்கும் ஆகாதுதான். ஆனாலும், தன் பையனின் வாழ்வின் மீது அவருக்கு இருந்த அக்கறை அவரைச் சிலிர்க்க வைத்தது. கொஞ்சம் அப்படி இப்படித்தான் இருக்கான் என் பையன், ஆனா எல்லாமும் கல்யாணத்துக்குப் பிறகு சரியாயிடும்…இதுக்காக ரெண்டு சிறிசுகளைப் பிரிச்சுப்புடாதே ரங்கநாதம் என்று சற்றும் எதிர்பாராத நேரத்தில், கிடைத்த அந்தத் தனிமையைப் பயன்படுத்திக் கொண்டு அவர் காலில் விழுந்துவிட்ட போதுதான், ஆடிப் போனார் இவர். தானும் தன் வியாபார அனுபவத்தில் வேற்று மாநிலங்களில் கொஞ்சம் திசை மாறி இருந்ததெல்லாம் நினைவுக்கு வந்து விட்டது ரங்கநாதனுக்கு. ஆனால் அந்த வாசனை வேறொருவனிடம் வீசும் போது, அதுவும் தன் பெண்ணைக் கட்டிக் கொள்ளப் போகும் ஆண்மகனிடம் அடையாளம் காணும்போது மனம் என்னமாய் பொறுமிப் போகிறது. அத்தனை கெட்டுப் போனவனா மோகன்? நாமாகக் கற்பனை செய்து கொள்கிறோமோ? அநாவசியமாய் நம் மாப்பிள்ளையாய் வரப்போகிறவனை நாமே குறைத்து மதிப்பிட்டுக் கொள்ளலாமா? - அல்லாடியது மனம்.  என்னதான் ஆனாலும் மனைவிக்கு இழைத்த துரோகம்தானே அவைகள் என்கிற ரீதியில் அவர் தன் பிறழ்ந்த நடவடிக்கைகளையெல்லாம் அசை போட்ட போது, அந்தப் பாவம் தொலைக்கவாவது இந்த கல்யாணத்தைத் தான் நடத்தித் தான் ஆக வேண்டும் என்கிற முடிவுக்கு வந்து விட்டார். அது எப்படிப் பாவத்தைத் தொலைத்ததாகும்? விருப்பக் கல்யாணத்தைக் கண்ணாரக் கண்டு, பேரனைக் கையிலெடுத்துக் கொஞ்சினால் எல்லாப் பாவங்களும் தொலைந்துதானே போகும்? மைனஸ் இன்ட்டு மைனஸ் ப்ளஸ் என்று கணக்குப் போட்டது அவரது வியாபார மனம். அந்த பாக்கியம் தனக்குக் கிட்டாமலா போய்விடப் போகிறது. மனம் பலவீனப்பட்டுத்தான் போனார் அவர்.  எவ்வகையிலேனும் தன் குடும்பம் சந்தோஷமாக இருந்தாக வேண்டும் என்கிற முனைப்பு அவரிடம் படிந்து விட்டது.; உறவுகளைப் பிரிக்கப் பார்க்கிறீர்கள் என்று அவர் மனைவி போட்ட கூச்சலும், குழப்பமும், அவளைப் படுக்கையில் கிடத்தி விடுமோ என்று எண்ண வைத்து விட்டது இவரை. தனக்குள்ள ஒரே துணையும் காணாமல் போகுமோ என்று அஞ்சினார். அப்படியான ஒரு இறுக்கமான சூழ்நிலையில் மோகனைத் தான் கைபிடித்ததும், அதன் பின்பு அவன் நம்பிக்கை தரும் விதத்தில் ஒழுங்காய் இருந்ததும், அலுவலகம், வீடு, அலுவலகம், வீடு என்று ஒரு குறிப்பிட்ட எல்கைக்குள் தன் வாழ்க்கையைச் சுருக்கிக்  கொண்டதும், அவளுக்குச் சந்தோஷமாகத்தான் இருந்தன. சமீபமாகத்தான் அவனுடைய நடவடிக்கையில் மறுபடியும் சில வித்தியாசங்கள் தெரிகின்றன. அது இந்தப் பதவி உயர்வு வந்த பிறகுதான். அவன் துறையில் சீக்கிரமே பதவி உயர்வுகள் கிடைக்க ஆரம்பித்திருந்தன. பழம் பெரும் பெருச்சாளிகள் எல்லாமும் ஓய்வு பெற்றாயிற்று. ஒரு குறிப்பிட்ட வருடத்தில் தேர்வு செய்யப்பட்ட இளம் தலைமுறையினர்தான் இப்போது இருப்பது. அதில் சீனியராய் இருந்தான் மோகன். ஆனால் யாரைப் பிடித்து என்ன செய்வானோ, எப்படியோ பல முயற்சிகளையும் செய்து கொண்டுதான் இருக்கிறான். காரிய சித்தி என்னவாயிற்று என்றுதான் தெரியவில்லை. தனக்குக் கூட இந்த அளவுக்கு வர வாய்ப்பில்லை. அப்படியே வந்தாலும் வெளியூர் போடுவார்கள். ஏற்கனவே பாடு கதையாய் இருக்கிறது. இதில் தான் வெளியூர் போய்விட்டால் கேட்கவே வேண்டாம்தான். அதனால் கடந்த ஒரு முறை வந்த பதவி உயர்வையும் வேண்டாம் என்று எழுதிக் கொடுத்திருந்தாள் நந்தினி. பேசாமல் உள்ளுரோடு ஒண்டிக் கிடந்தால் போதும் என்றிருந்தது அவளுக்கு. வெளியூர் போயெல்லாம் உறாஸ்டலில் தங்கிக் கொண்டு கேன்டீனில் சாப்பிட்டு, அல்லது தனியே சமைத்துச் சாப்பிட்டுக் கொண்டு, தன்னால் இருக்க முடியாது. எதற்கு இந்தக் கஷ்டம்? முன்னூறு அல்லது நானூறுதான்  கூடக் கிடைக்கப்போகிறது. பெரிதாக அள்ளியா கொடுத்து விடப் போகிறார்கள்? அதற்கு எதுக்கு இந்தப் பாடு? ஆண்களுக்குப் பொருந்தும். பதவி உயர்வினை வேண்டாம் என்று சொல்வது அழகல்ல. அப்படியும் பலரும் மறுத்துத்தான் இருக்கிறார்கள். ஆண்களே மறுக்கும்போது, குடும்பம் என்று கிடக்கும்போது, பெண்ணான தான் எல்லாவற்றையும் உதறிவிட்டு எப்படி வெளியூர் போவது? ஆனால் மோகனும் அப்படிப் போகாததும், உள்ளுருக்கே பணி வாங்கிக் கொண்டு வந்துவிட்டதும், சாமர்த்தியமான ஆள்தான். அவனுக்குப் ஆள் பழக்கம் அதிகம். எங்கேயும் போய், எதையும் உருட்டிப் புரட்டி, காரியத்தைச் சாதித்துக் கொண்டு வந்து விடுவான். அடுத்த பதவி உயர்வு சீக்கிரத்திலேயே வந்து விடும் என்று சொல்கிறான். சூப்பர்வைசர் ராங்க். என்ன செய்யப் போகிறானோ? ஆனால் ஒன்று. அதே சாமர்த்தியத்தை மனைவிக்காகப் பயன்படுத்தக் கூடாதா? கேட்டுத்தான் பார்த்தாள் நந்தினி. உங்க ஆபீஸ்பத்தியெல்லாம் எனக்குத் தெரியாது. ஆட்பழக்கம் இல்லை. அதெல்லாம் ரொம்பக் கஷ்டம் என்று சுருக்கமாய் மறுத்து விட்டான். ஒரு வேளை தான் பதவி உயர்வில் வெளியூர் போகிறேன் என்றால் சரி என்று விட்டிருப்பானோ? நல்லவேளை. அந்த புத்தி மாறிப்போயிற்று தனக்கு. கடவுளாய்ப் பார்த்து தன் வாழ்க்கையை நிலைப்படுத்தி இருக்கிறார். வெளியூர் என்று போய்விட, இவன் மீண்டும் தன் லீலைகளை ஆரம்பித்து விட்டானென்றால் தன் வாழ்க்கை சிதைந்தல்லவா போகும்? இப்பொழுதும்தான் முழுமையான வாழ்க்கையா வாழ்ந்து கொண்டிருக்கிறேன்? துக்கத்தோடுதானே நாட்கள் கழிகின்றன. இன்னொரு வீட்டில் உட்கார்ந்து கொண்டு இப்படி மனசு அலைக்கழிக்கப்படுவது கண்டு அவள் மனம் வெட்கிக் குறுகிப் போனது. தன் நம்பிக்கைகள், அன்பு, தாபம் எல்லாமும் வெறும் கனவுகளாகிப் போகுமோ? என்னென்னவோ தோன்றி் மனதைப் பிசைய ஆரம்பித்தது. அதே சமயம் வாசலில் ஆட்டோ வந்து நிற்க, அதிலிருந்து கோகிலா இறங்கி இவளை நோக்கி ஸாரிடி…ஸாரிடி…ஸாரிடி என்று நூறு முறை வருத்தம் தெரிவித்துக் கொண்டு  பரபரப்பாக உள்ளே நுழைந்தபோது அதுவரை இருந்த கலங்கிய மனநிலையெல்லாம் விலகிப் போக, சந்தோஷமாய் அவளை எட்டிப் பிடித்துக் கைகளை வாங்கி மார்பில் இறுக்கிக் கொண்டாள் நந்தினி.   நீங்க ரெண்டு பேரும் பேசிட்டிருங்க…இதோ வந்திடறேன்…என்று அவர்களின் தனிமையை மதித்து, வெளியேறினான் மகேந்திரன். அது அவன் பண்பாட்டின் உச்சம் என்றுதான் அந்த நேரத்தில் நந்தினிக்குத் தோன்றியது.   அத்தியாயம் 9 ரங்கநாதன் பதட்டமாய் இருந்தார். தன் மாப்பிள்ளையின் பழக்க வழக்கங்கள் இன்னும் மாறவில்லையே என்று அவர் மனம் வருந்தியது. பிடிவாதமாய் அவனைக் கை பிடித்த தன் அருமைப் பெண் நந்தினி தன் வாழ்க்கையைக் கோட்டை விட்டுவிட்டு வாழாவெட்டியாய் நின்று விடுவாளோ என்று பயந்தார். வழக்கமாய் சனிக்கிழமை கோயிலுக்குப் போகும் பழக்கமுள்ள அவர், அங்கு மோகனை இன்னொரு பெண்ணுடன் நெருக்கமாய்ப் பார்த்தது முதல் நிலை கொள்ளாமல் தவித்தார். ஏற்கனவே மன அழுத்தத்துடன் நிம்மதியில்லாமல் திரிந்து கொண்டிருக்கும் தனக்கு, இதுவும் வேண்டும், இன்னமும் வேண்டும் என்றுதான் தோன்றியது. அந்தக் காட்சி அவரது ரத்த அழுத்தத்தை அதிகப் படுத்தியது.   அவரது வியாபாரத்தில் எத்தனையே எதிரிகளைச் சந்தித்திருக்கிறார் அவர். முளையிடும்போதே கிள்ளி எறிவதுதான் அவரது பழக்கமாய் இருந்திருக்கிறது. மண்டியிட்டால் அரவணைத்து ஆதரவளித்து, தனக்கு நிகராக வைத்து அழகு பார்ப்பது அவரது வழக்கம். தனது அத்தனை வருஷ வியாபார அனுபவத்தில் தான் கற்ற வித்தையெல்லாம் முனை மழுங்கி அங்கே செயலற்று நிற்பதுபோல் உணர்ந்தார். எந்த வித்தையையுமோ, வேகத்தையுமோ இதில் காட்டி விட முடியாது. கட்டிக் கொடுத்தாயிற்று. அதற்கு முன்னால் என்றாலும் பரவாயில்லை. இப்போது லகான் அவன் கையில். தன் பெண்ணை வாழ வைப்பதும், உதறி விடுவதும். உணர்ச்சிவசப்பட்டுப் புண்ணியமில்லை. மிக நிதானமாக அணுக வேண்டிய விஷயமிது. எப்படித் தன்னிடம் இத்தனை அமைதி வந்தது என்று அவருக்கே வியப்பாயிருந்தது. கண்ணுக்கு முன்னால் இன்னொரு பெண்ணுடன் சகஜமாக, கை கோர்த்து, தன் மாப்பிள்ளை….அவனை மாப்பிள்ளை என்று சொல்லிக் கொள்வதில் இன்னும் அவருக்கு முற்றாக முரணான எண்ணம் எழவில்லை. நன்றாக யோசித்துப் பார்த்தால் இப்படி அங்கும் இங்கும் அறிமுகமற்ற பெண்களோடு அவன் சுற்றுவதைத்தான் கண்கூடாகப் பார்த்திருக்கிறார் அவர். வேறு அசிங்கமான சூழலில் அவர் அவனைக் கண்டதில்லைதான். இன்னும் அதை வேறு காண வேண்டுமா என்று அவர் மனம் பதறியது. அப்படி முற்றிலுமாக ஒழுக்கமற்றவனாகத் தன் மாப்பிள்ளையை நினைத்துப் பார்க்க அவர் மனம் கூசியது. தன் பெண் அருகே நிற்கும் ஒரு ஆடவன் நெருப்பைப் போல் இருக்க வேண்டும் என்று அவர் விரும்பினார். அவளைக் கட்டிக் காக்கும், அன்பைப் பொழியும், ரட்சகனாக விளங்க வேண்டும் என்று அவர் எதிர்பார்த்தார். ஒரு தந்தையின் ஸ்தானத்தில் இருந்து இந்த எதிர்பார்ப்பு ஒன்றும் அவருக்குத் தவறு என்றோ, அதீத எதிர்பார்ப்பு என்றோ தோன்றவில்லை. ஒவ்வொரு முறையும் அவர் அவனைக் காண நேர்ந்த சந்தர்ப்பங்களில், அவன் கண்ணுக்கு மறைவாகவே தன்னை வைத்துக் கொண்டிருக்கிறார். அது அவனைக் கண்காணிக்கும் போக்குதான். அதே சமயத்தில் அவன் மீது முழுமையாக சந்தேகப்பட்டு, தான் எல்கையைத் தாண்டி விடுவோமோ என்கிற பயமுமிருந்தது அவருக்கு. நேருக்கு நேர் சந்தித்து விடப் போக, படபடப்பில், உணர்ச்சி மேலீட்டில் தான் வார்த்தைகளைக் கொட்டி விட்டால், பின்னர் அள்ள முடியாது என்பதும்,  அதுவே தன் பெண்ணின் வாழ்க்கைக்கு உலை வைத்து விட்டதாகி விடக் கூடும் என்று பயந்தார் அவர். சமூகத்தில் எல்லாத் தந்தைகளின் பயமாகவும் இது இருக்கிறதுதான். அதற்காகத்தான் உறவுகளில் நன்றாக அறிமுகமான, குண விவேஷங்கள் அறிந்த ஒன்றுக்குள் ஒன்று என்றான வரிசைகளில் வாழ்க்கை முடிச்சுகளைப் பின்னி விட வேண்டியதிருக்கிறது. அப்படியான முடிவுக்குத்தான் தன்னைத்தானே கொண்டு வந்து நிறுத்திக் கொண்டு, இந்த உறவுக்கு அவர் சம்மதித்திருந்தார். அதை விட்டுவிட்டு மோகனின் தந்தை சிவநேசனுடன் அனாவசியமாய் முறைத்துக் கொண்டு திரிவதில் அவருக்கொன்றும் விருப்பமில்லைதான். முதல் முறையாக அவர்கள் இருவரும் சந்தித்துக் கொண்டபோது எழுந்த கோபதாபங்களுக்கு அர்த்தமில்லை என்பது படிப்படியாக அவருக்குப் புரிய ஆரம்பித்திருந்தது. இரு தரப்பிலும் பெண்ணும், பையனும் மிகவும் நெருக்கமாக விரும்புகிறார்கள் என்கிறமாதிரியான நினைப்பிருந்தது. தன் அருமை மகள் மோகனை ஆத்மார்த்தமாக நேசிப்பதை ரங்கநாதன் அறிவார்தான். சின்ன வயதிலிருந்தே அவர்களை அப்படிப் பழக்கப்படுத்தியாயிற்று. குழந்தைகள்தானே என்று விட்டும் ஆயிற்று. ஆனால் மனதுக்குள் இப்படியொரு செடி வளர்ந்து வேர் விட்டிருக்கும் என்று அவர் நினைக்கவில்லை. எத்தனையோ குடும்பங்களில் இளம் பிராயத்தில் பெரிவர்களுக்குள் இருக்கும் அன்பிலும், அரவணைப்பிலும், வார்த்தையாடல்களும், எழுதப்படாத ஒப்பந்தங்களும் தோன்றிவிடுவதுதான். அந்த அளவுக்கான பரஸ்பர நம்பிக்கைகள் ஆழமாய் வேரூன்றி இருந்த காலம் அது. பின்னர் படிப்படியாக அந்த விழுமியங்கள் குலைந்து போக ஆரம்பித்து விட்டன. தலைமுறை இடைவெளியில், பெற்றோர் செய்வதறியாது தங்கள் முடிவுகளை மாற்றிக் கொள்ள வேண்டிய கட்டாயங்கள் எழுந்தன. உத்தியோகம், அந்தஸ்து, வாழ்க்கை வசதிகள் என்ற கண்ணோட்டங்கள் அதீதமாக மாறிப்போய் வாழ்க்கையின் ஆதாரம் பணம் மட்டும்தான், அது இருந்தால் என்ன வேண்டுமானாலும் செய்து கொள்ளலாம், எதை வேண்டுமானாலும் விலைக்கு வாங்கி விடலாம் என்கிற முனைப்பு இளம் தலைமுறையினரிடம் படிந்து போய்விட, அவர்களின் எதிர்பார்ப்புக்கு வழிவிட்டு மூத்த தலைமுறையினர் விலகி நின்று வேடிக்கை பார்க்க வேண்டிய கட்டாயம் எழுந்து விட்டது. ஆனாலும் ஆயிரங்காலத்துப் பயிர் என்கிற இந்தத் திருமண பந்தங்களில் அவர்களின் வாழ்க்கையை செம்மையாய் அமைத்துக் கொடுப்பதில் தங்களின் கடமைகள் முற்றிலுமான இன்னும் விலகி கை நழுவிப் போய்விட வில்லை என்பதை மூத்த தலைமுறையினர் உணர்ந்துதான் ஜாக்கிரதையாய்ச் செயல்பட வேண்டியதிருக்கிறது.   என்னதான் கவனமாய் இருந்தாலும், பல விஷயங்கள் திருமணத்திற்குப் பின்னால்தான் தெரிய வருகிறது. இரு தரப்பிலுமே இருக்கும் பிடிவாதங்களில் எங்கே முறிந்து போகுமோ என்று பதறி நின்று வேடிக்கை பார்க்க வேண்டியதிருக்கிறது. அவசரப்பட்டு வார்த்தைகளைக் கொட்டி நம்மால் கெட்டது என்று வந்து விடக் கூடாதே என்று கண்காணாத தெய்வத்தை சதா சர்வ காலமும் வணங்கி மண்டியிட வேண்டியதிருக்கிறது. இப்படியான நடைமுறைகளில்தான் பெரியவர்கள் சோர்ந்து நிற்கிறார்கள். அமைதி காக்கிறார்கள். ஒரு விஷயத்தை வாய்விட்டுச் சொல்லிவிடுவதைவிட, தானாகவே சரியாகட்டும் என்று மனதளவில் ஒத்திப் போடுகிறார்கள். காலத்தின் கட்டாயமாக இவைகளை உணர வேண்டியதிருக்கிறது. இப்போது அப்படியான மனநிலையில்தான் ரங்கநாதனும் தன்னை வெகுவாகப் பதப்படுத்திக் கொண்டிருந்தார். அவர் தன் கோபத்தைக் காண்பிக்கும் இடம், தன் உணர்ச்சிகளுக்கு வடிகாலாய் உணரும் இடம் அவர் மனைவி மட்டும்தான். அவள்தான் என்ன சொன்னாலும், பதிலுக்கு பதில் எதையாவது சொல்லி மனதை ஒரு நிலைக்குக் கொண்டு வந்து விடுகிறாள். அல்லது அதுவாகவே வேகம் குறைந்து மங்கி மடிந்து போகிறது. இப்போது அப்படித்தான் அவர் தன் மனையாளிடம் கத்திக் கொண்டிருந்தார். நல்லதை எடுத்துச் சொல்லி பெண்ணை வழிக்குக் கொண்டுவரத் துப்பில்லை, எங்கிட்ட வந்து கத்துறீங்களே என்று மனைவி பங்கஜம் தன்னைச் சாடியபோது செய்வதறியாது வாயடைத்துப் போனது அவருக்கு. கை மீறிப் போன பெண் என்பது பங்கஜத்தின் கணக்கு. விதிபோல ஆகட்டும் என்று விட்டுவிட்ட அவள், பெண்ணைத் தண்ணீர் தெளித்ததுபோல் இருந்து விட்டாள். அந்த அளவுக்கான விலகல் மனநிலை தனக்கு இல்லைதான். அது அபூர்வமாய் சிலருக்குத்தான் வாய்க்கிறது. நடக்கிறதுதான் நடக்கும். நாம எத்தனைதான் தலை கீழ நின்னாலும், அவ தலவிதி அங்கதான்னு போட்டிருந்திச்சின்னா அதை யாரு என்ன பண்ண முடியும்? விடுங்க பேசாம…அவன் பழக்க வழக்கம் சரியில்லைன்னா தெரிஞ்சே தலையைக் கொடுக்கிறான்னா, அவளுக்கு அவன் மேல நம்பிக்கை இருக்குன்னு அர்த்தம். எப்டியும் சரி பண்ணிக்குவா…இந்த ஊர்லதான இருக்கப் போறாங்க…பார்த்துக்கிடுவோம்…  பார்த்துக்கிடுவோம்னா என்னடி அர்த்தம்? வெறுமே வேடிக்கை பார்க்கிறதுக்கா நாம இருக்கோம். அவுங்க குடும்பம் நடத்துற அழகைக் கண்ணாரக் கண்டு ரசிக்கவும், பேரப்புள்ளைய வாரி எடுத்துக் கொஞ்சவும்தானே உயிரக் கைல பிடிச்சிட்டு வாழ்ந்திட்டிருக்கோம். மனுஷனுக்கு எந்தக் கட்டத்துல வாழ்க்கைல திருப்தி வருதுங்கிறே? ஒண்ணு விட்டா ஒண்ணு, அதை விட்டா இன்னொண்ணுன்னு அவனோட ஆசைகளும், எதிர்பார்ப்புகளும் வளர்ந்துகிட்டேதான போகுது? முழுசா வாழ்ந்து முடிச்சவன் எவன்? என் வாழ்க்கைல எல்லா தேவைகளும் பூர்த்தியாயிடுச்சி…இனிமே எதுவும் எனக்கு வேண்டாம்…நிறைவா இருக்கேன்னு ஒருத்தனச் சொல்லச் சொல்லு பார்ப்போம்…எதிர்பார்ப்பில்லாத வாழ்க்கையே எவனுக்கும் இல்லைடி…அப்படி ஒருத்தன் சொல்றான்னா, பொருளாதார ரீதியாவும், மன ரீதியாவும் ஓரளவுக்கு திருப்தியா இருக்கான்னு அர்த்தம். அந்தத் திருப்திதான் அந்த வார்த்தையைத் தருது…அப்டிச் சொல்லி இன்னும் நிறைவேறாத ஆசைகளை மனசுக்குள்ள பூட்டி வச்சு அதுக்கான முயற்சிகளை மேற்கொள்றான்னு அர்த்தம். நீ என்னடான்னா சர்வ சாதாரணமாச் சொல்லிட்டே…ஒரு தாயாரா இருந்துக்கிட்டு எப்டித்தான் நீ இப்டிப் பேசுறியோ? ஒரு வேளை ரொம்பவும் கஷ்டப்பட்டு, சிதிலமடைஞ்சு மீண்டு வந்த குடும்பத்தைச் சேர்ந்தவங்கிறதுனால, இந்த வார்த்தைகள் உன்கிட்டே வெளிப்படலாம்…அது உன்னைப் பொறுத்தவரை நியாயமாக் கூட இருக்கலாம். ஆனா எல்லாராலும் அத்தனை எளிதா ஜீரணிக்க முடியாது. எல்லாராலும்னு எதுக்குச் சொல்லணும். என்னால முடில, அவ்வளவுதான்…வீட்டுக்குள்ளயே அடைஞ்சு கிடக்கிற உனக்கு வேறே எதுவும் விரிவாத் தெரிய வாய்ப்பில்லே…ஏன்னா புத்தகங்கள் படிக்கிற பழக்கமோ, டி.வி. பார்க்கிற பழக்கமோ உனக்கு இல்லை. சதா வீட்டு வேலை, அத விட்டா பூஜை, புனஸ்காரம், இது ரெண்டுதான் உன்னோட உலகம். அது சரிதான்னாக் கூட நீ சதா வேண்டுற அந்தக் கடவுள்தான் உன் விகல்பமில்லாத மனசுக்கு உன் பெண்ணுக்கு நல்ல வாழ்க்கையை நீட்டிச்சுக் கொடுக்கணும். உன் பார்வைல அவ சந்தோஷமா, சௌக்கியமா வாழறத பார்த்து நீ திருப்தியடையணும். இதத்தான் நானும் கடவுள்கிட்ட வேண்டிக்கிட்டே இருக்கேன். உனக்கும், உன் மனசுக்கும் சேர்த்தே வேண்டிக்கிறேன்னு வச்சிக்கயேன். அப்படி வழக்கமாப் போகிற பழக்கத்தில்தான் இன்னைக்கும் கோயிலுக்குள்ளாற நுழைஞ்சேன். அங்க இந்தக் கண்றாவி கண்ணுல பட்டிடுச்சு. கண்ணுல படாம இருந்தா மட்டும் பரவால்லியான்னு கேட்காதே….மனசுக்குள்ள ஓடிட்டிருந்த சந்தேகம் கண்முன்னால ருஜூவாகிறபோது, பதட்டமாகுதுல்ல…கோயிலுக்குள்ளயே வச்சு அசிங்கப்படுத்த முடியுமா? யோசிக்காம எதையும் பேசிட முடியுமா? நம்ம வயசு என்ன, அனுபவம் என்ன? அந்தப் பொண்ணு எதுக்கு வந்திருக்கோ…? இந்த ஆபீஸ்கள்ல இன்ஸ்பெக்ஷன், ஆடிட்டுன்னு வெளியூர்கள்லேர்ந்து வருவாங்க….அவுங்கள உள்ளுர் கோயில் குளம்,  சினிமான்னு அழைச்சிட்டுப் போய் காண்பிக்கிறது காலம் காலமான வழக்கம். நானும் என் தொழில்ல எத்தனையோ பார்த்திருக்கேன்தான்….அது மாதிரி ஏதும் இருந்திச்சின்னா? நம்ம மாப்பிள்ளையப் பத்தி ஏற்கனவே நமக்கு  நல்ல எண்ண இல்லை. அந்தக் கண்ணோட்டத்துலயே நோக்கிறதுனால எல்லாமும் தப்பாத்தானே தெரியும். அதான் நான் என்னையே காண்பிச்சிக்காமே மறைச்சிட்டு வெளியேறிட்டேன்…நேரே அங்க போகத்தான் நினைச்சேன். நம்ம பொண்ணு என்ன பண்றான்னு பார்க்கத்தான் மனசு தாவிச்சு. என்னவோ இங்க வந்து நின்னுட்டேன். உங்கிட்ட வந்து ஆதங்கத்தைக் கொட்டினாத்தான் எனக்கு சரியாகுது. நான் வேறே எங்கே போவேன். எனக்கு நீ உனக்கு நான்…நாம் என்ன ஆம்புளப்புள்ளையா பெத்து வச்சிருக்கோம். வச்சுக் காப்பாத்த…அப்டியே பையன் இருந்திட்டாலும், கூட வச்சுக் காப்பாத்துவான்ங்கிறது என்ன நிச்சயம்? பொறுப்பெல்லாம் அவன் தலைல சுமத்திட்டு, காசி, ராமேஸ்வரம்னு கம்பிய நீட்டிடலாம்னா அந்த பகவான்தான் நமக்கு அதுக்குக் கொடுத்து வைக்கலியே? காலம் சொல்றமாதிரியா இருக்கு? தனியா இருக்கப்பவே எங்கே அம்மா அப்பாவக் கொண்டு வச்சிக்கிட்டா நம்ம சுதந்திரம் கெட்டுப் போயிடுமோன்னு பசங்க நினைக்கிற காலமாயிடுத்து இது. எந்தக் கட்டுப்பாடும் இல்லாம, சுதந்திரமா, ஜாலியாத் திரியறதைத்தான் இந்தக் காலத்துப் பசங்க பெரும்பாலும் விரும்புறாங்க….நாமதான் அந்த வரிசைலயே இல்லயே…அதப்பத்திப் பேசி என்ன பண்ண…  ஐயோ கடவுளே…போதும்…போதும் உங்க புலம்பல நிறுத்துங்க…ஆனாலும் உங்களுக்குக் கற்பனை ஜாஸ்தி….வேணுங்கிறது, வேண்டாங்கிறது, இருக்கிறது, இல்லாதது, இப்படி எல்லாத்தையும் நினைச்சுப் பார்த்து உங்களமாதிரி யாரும் குழம்ப முடியாது….உங்க பேச்சைக் கேட்டா, நீங்க கெடுறதும் இல்லாம, அடுத்தவங்க மனசையும் குழப்பிக் குட்டையாக்கிடுவீங்க…எனக்கு வேணாம்மா…ஏற்கனவே உடம்பு முடியாம இருக்கேன் நான்…இப்டி எல்லாத்தையும் இழுத்துப் போட்டுக்கிட்டு விசனப்பட என்னால ஆகாது. இந்தாங்க வாங்க…இந்த டிபனைச் சாப்பிட்டுட்டுப் படுங்க…நல்லாத் தூங்குங்க…எல்லாம் சரியாப் போயிடும்…மாத்திரை வச்சிருக்கீங்கல்ல…மறக்காமப் போட்டுக்குங்க…மறந்திட்டு, தூக்கம் வராம ராத்திரிப் பூராவும் புரண்டுக்கிட்டே என் உயிரை எடுக்காதீங்க…  அவள் சொல்வதையெல்லாம் கேட்டுச் சிரிப்புத்தான் வந்தது ரங்கநாதனுக்கு. இத்தனை ஆண்டு காலத் தாம்பத்தியத்தில் இது கூடச் சொல்ல அவளுக்கு உரிமையில்லையா என்ன? தன்னை அவள் அப்படியெல்லாம் சொல்லவில்லையானால்தான் அவருக்கு எதையோ இழந்தது போலிருக்கும். கையில் தோசையை விண்டுகொண்டே சட்னியில் அதை ஒத்தி வாயில் போட்டுக் கொண்டபோது பங்கஜத்தின் கை பாகம் அந்தச் சட்னியில் கூட மிளிருவதை அப்பட்டமாய் உணர்ந்தார் அவர். அவளது கவனமும், கருத்தும் இன்றும் அதில் தெரியத்தான் செய்கிறது. தன் நாக்கு ருசி அறிந்தவள். அந்தச் சுறுசுறுக் காரமும், மென்மையான உப்பு ருசியும், மேலே தவழும் புளிப்பும் அவளைப் போல் பக்குவமாய் யாரும் ஒன்று சேர்க்க முடியாது. இதே கைபாகத்தை அவள் தன் மகளுக்கு முழுமையாகச் சொல்லிக் கொடுத்திருக்கிறாளா என்று ஏனோ அவருக்கு அந்த நேரத்தில் தோன்ற ஆரம்பித்தது. ஒரு ஆம்பிளையை வீட்டோடு கட்டிப் போடும் மாயத்தில் இந்த உணவு தயாரிப்பும் முக்கிய இடத்தை வகிக்கத்தானே செய்கிறது. பாவம், அவர் மனசு அந்த நேரத்தில் தன்னிரக்கத்தோடு கசிந்து நின்று,  அவர் கண்களில் நிறுத்த முடியாத நீரை வரவழைத்தது. வழிந்த கண்ணீரோடு படுக்கையில் ஒரு ஆதரவற்ற அநாதையைப்போல் ஏனோ தன்னை உணர்ந்து கொள்வதில் அவர் மனதுக்கு ஒரு ஆறுதலிருந்தது. அப்படியே தன்னை மீறிய உறக்கத்தில் ஆழ்ந்து போனார் ரங்கநாதம். காலம் அவரை அப்படி ஒதுக்கி விடுமா என்ன? அத்தியாயம் 10 நந்தினி கோகிலா வார்த்துப் போட்ட சப்பாத்தியை ருசி பார்த்துக் கொண்டிருந்தாள்.   இத்தனை நேரம் உன்னைக் காக்க வச்சதுக்கு, நீ இன்னைக்கு இங்கதான் டிபன் சாப்டுட்டுப் போகணும் - பிடிவாதமாய் அவளை இருத்தி அமிழ்த்தி விட்டாள். மனசு ஒரு நிலையில் இல்லாமல் தான் வந்திருப்பதை அவள் உணர்ந்து கொண்டமாதிரித் தெரியவில்லை என்பதைப் புரிந்து கொண்டாள் நந்தினி. அப்படியே காண்பித்துக் கொள்ளாமல் இருந்துவிடுவதுதான் நல்லது என்று தோன்றியது. ஆனால் கோகி ஆரம்பித்த பேச்சு தனக்கானது என்பதை அவள் புரிந்து கொண்டபோது ஆறுதலுக்கு அவள் ஒருத்தியாவது இருக்கிறாளே என்று தோன்றியது. என்ன நந்தினி, அவரைக் கோயிலுக்கு வெளியே பார்த்தேன்….கூடவே யாரோ ஒரு பெண் நின்னாளே…யார் அது?- கோகிலா ஆரம்பித்த அந்த நிமிடம், அப்படிக் கேட்பதற்காகவே காத்துக் கொண்டிருந்தது போல், அத்தனையையும் கொட்டித் தீர்த்து விட்டாள் நந்தினி.   நான் உன் மேலதாண்டி தப்பு சொல்வேன்…பிடிக்குதோ பிடிக்கலையோ நீ அப்டி அவுங்களை விட்டுட்டு வெளியேறினது தப்பு. சட்னு ஒரு காபியையோ, டீயையோ கலந்து கொடுத்திட்டு, அதுல உன்னோட அதிருப்தியைக் காண்பிச்சிருக்கணும். அதைப் புரிஞ்சிக்கிட்டு, அவ வெளியேறியிருக்கணும். நீ விட்டிட்டு வந்தது அவுங்களுக்கு வசதியாப்போச்சு…இப்படி இன்னொரு ஆம்பளையோட சுத்த உனக்கு வெட்கமாயில்லயான்னு சொல்லாமக் கேட்டிருக்கணும்…ஆபீஸ் முடிஞ்சா அவுங்கவுங்க வீட்டுக்குப் போவாங்கன்னு கண்டிருக்கு…இப்டியா ஒரு ஆம்பிளை கூட ஊர் சுத்துவாங்க…அதுவும் கல்யாணம் ஆன ஒரு ஆள் கூட? அவதான் வெட்கமில்லாம வர்றான்னா, உன் புருஷன் ஏன் அனுமதிக்கிறாரு? அங்கயே கட் பண்ணிட்டு வந்திட வேண்டிதானே? பழைய விட்ட குறை தொட்ட குறை இன்னும் அவர்ட்ட ஒட்டிக்கிட்டுக் கிடக்கும் போலிருக்கு… - இப்படிச் சொல்லிவிட்டு நந்தினியின் முகத்தைப் பார்த்தாள் கோகிலா. கையில் எடுத்த சப்பாத்தி விள்ளலை வாயில் போடாமல் அவள் கை அப்படியே நின்றுவிட்டதை உணர்ந்தாள்.   கோவிச்சிக்காதடி….உன் நன்மைக்காகத்தான் சொல்றேன்…அவர் கொஞ்சம் அப்டி இப்டின்னு உனக்குத்தான் கல்யாணத்துக்கு முன்னமே தெரியும்தானே…அப்போ இதையெல்லாம் இப்பவும் ஏன் அலவ் பண்றேங்கிறதைத்தான் நான் கேட்கிறேன்…அந்தப் பொண்ணு பேரு என்ன சொன்னே…?  சரோஜாதானே….அவ பேரைக் கூட எங்கயோ கேள்விப்பட்ட மாதிரி இருக்கு எனக்கு…திருச்சின்னுதானே சொன்னே….உறாங்ங்ங்ங்…இப்போ ஞாபகம் வருது…. - சொல்லிவிட்டு நிறுத்தினாள் கோகிலா.   நந்தினி அப்பாவியாய் அவள் முகத்தைப் பார்த்துக் கொண்டிருந்தாள். என்னைப் பார்க்கிறதுக்கு முன்னாடி, என் வீட்டுக்காரர் நிறையப் பெண்களைத் தேடியிருக்கார். எதுவுமே அவருக்குப் பிடிக்காம இழுத்திட்டிருந்திருக்கு. சலிச்சுப் போயி இருந்த ஒருநாளைக்கு இவ ஜாதகம் கண்ணுல பட்டிருக்கு. யாரோ ஒருத்தர் அனுமார் கோயில்ல பார்த்துக் கொடுத்திருக்கார். அதுல இருந்த விபரங்களை வச்சு தொடர்பு கொண்டிருக்கார் இவர். அவதான் இந்த சரோஜா. ஏற்கனவே கல்யாணம் ஆகி டைவர்ஸ் வாங்கினவளாம். டிபார்ட்மென்ட்ல சர்வ சகஜமாத் திரிவாளாம். அவளோட ப்ரொஃபைல்ல இந்த விஷயத்தை மறைச்சு, விபரங்களைப் போட்டு வச்சிருக்காளாம். எதுலயும் ஃபோட்டோ மட்டும் கொடுக்கவே மாட்டாளாம். அவுங்க வீட்டுலயும் யாரும் கேட்டாங்கன்னு அனுப்ப மாட்டாங்களாம். எதுவானாலும் நேர்ல வர்றோம்னுதான் சொல்லுவாங்களாம். கேட்டா, பல பேருக்கு ஃபோட்டோவுக்குன்னு ஒரு முகம் அமையாது…ஆனா நேர்ல நல்லாயிருப்பாங்க…பெண்களை அவுங்க அலங்காரம் பண்ணாம வீட்டு வேலைகள்ல சகஜமா இருக்கும்போது, கேஷ்வலாப் பார்க்கணும்….அப்டிப் பார்த்துத்தான் முடிவு செய்யணும்…நாங்களும் பையனை அப்படித்தான் பார்க்க விருப்பப்படுவோம்னு சொல்லுவாங்களாம். அணுகறவங்களுக்கு இது வித்தியாசமாத் தோணுமில்லியா? சரி, என்னதான் பார்ப்பமேன்னு இவரும் தன்னோட விபரங்களை அனுப்ப, மறு நிமிஷமே கிளம்பி வந்துட்டாங்களாம். அந்த நேரத்துல உறவினர் யாரோ சென்னைல இறந்துட்டாங்கன்னு பொருத்தமா ஒரு பொய்யைச்  சொல்லி, பிறகு நானே தகவல் அனுப்பறேன்னு இவர் தட்டிக் கழிச்சிருக்கார். தினம் ரெண்டு வாட்டி, மூணு வாட்டி ஃபோன் பண்ணிட்டேயிருப்பாங்களாம். இப்டி அடிக்கடி தொந்தரவு கொடுத்தீங்கன்னா அப்புறம் நான் போலீசுக்குப் போக வேண்டிருக்கும்னு இவர் ஒரு போடு போட்டப்போதான் அடங்கியிருக்காங்க….காரணம் அவளோட முதல் புருஷன் அவளையே ஏமாத்தியிருக்கான். அவன் கேராளாவுல ஒரு பொண்ணை லவ் பண்ணி கல்யாணம் பண்ணி ஏமாத்தி அங்கயே விட்டுட்டு வந்திட்டவனாம். இங்க தமிழ்நாட்டுக்கு வந்து தர்மபுரிப் பக்கம் எங்கயோ பாலக்கோடோ ஏதோவோர் ஊர்ல கான்ட்ராக்ட் வேலை எடுத்துப் பார்த்துக்கிட்டிருந்திருக்கான். அப்போதான், இவ ப்ரொஃபைலைப் பிடிச்சு அவனுக்கு வேண்டிய ஒரு நண்பர் மூலமா  விசாரிச்சிருக்கான். இந்த சரோஜா வசமா மாட்டியிருக்கா…கார்ல கிளம்பி வந்து குடும்பத்தோட இவளையும், ஃபாதர் மதரையும் நிறைய இடங்களுக்குக் கூட்டிட்டுப் போயிருக்கான். நெருக்கம் அதிகமாகி,  படுக்கை வரைக்கும் போயிருக்கு விஷயம். ரொம்ப நம்பிட்டாங்க போலிருக்கு…உறவுன்னு சொல்லிக்க யாருமில்லேன்னு புளுகி, நண்பர் மட்டும்தான்னு அவரோட துணையோட, இன்னும் சில அவனுக்கு வேணுங்கிறபேரோட ஏதோவோர் மலைக்கோயில்ல வச்சு தாலியக் கட்டியிருக்கான். ரிசப்ஷன் மட்டும்தான் இவ திருச்சில நடத்தியிருக்கா…ஆபீஸ்லயே யாருக்கும் அதிகமாக இன்விடேஷன் கொடுக்கலியாம்…கொஞ்ச நாள்ல அவன் போன எடம் தெரில. கான்ட்ராக்ட் முடிச்ச கையோட ஆள் பறந்திட்டான் போலிருக்கு. இப்போ எங்கயோ ஆந்திராப் பக்கம் இருக்கிறதாவும், போலீஸ் சீக்கிரத்துல ஆளைக் கொண்டு நிறுத்திடறோம்னும் சொல்லி, இவகிட்ட அப்பப்ப காசைக் கறந்திட்டிருக்காம்….இதுக்கிடைலதான் இவ இப்படி ஊர் ஊரா ஒரு ஆம்பளையைச் சேர்த்துக்கிட்டு, லங்கிணி மாதிரிச் சுத்திட்டிருக்கா….போதுமா?   அசந்து போனாள் நந்தினி. இத்தனை விபரங்களையும் இவள் எப்படிச் சேகரி்த்தாள் என்றிருந்தது. திருச்சியில் வேண்டும் ஒரு நண்பர் மூலம் இந்த மொத்தக் கதையையும் கறந்திருக்கிறான் மகேந்திரன் என்பதை கோகிலா சொன்ன போது, எத்தனை ஜாக்கிரதையாய் இருந்திருக்கிறான் அவன் என்பது புரிந்தது நந்தினிக்கு. அப்படிப் புரிந்த அதே வேளையில் தன் கணவன் மோகன் அவளோடு சுதந்திரமாய்ச் சுற்றுவதை எண்ணுகையில் அவள் உடம்பு நடுங்கியது. மகேந்திரன் அளவுக்கு விவரமான, புத்திசாலியான ஆண் இல்லையே மோகன் என்று தோன்ற ஆரம்பித்தது. எங்கிருந்தோ வந்து திடீரென்று முளைத்த காளான் போல் நிற்கும் சரோஜாவை நினைக்க நினைக்க அவள் பூஞ்சை மனம் துக்கம் கொள்ள ஆரம்பித்தது. தன் கணவனை எங்கெங்கோ இழுத்துக் கொண்டு சென்று, வகை தொகையில்லாமல் மாட்டிவிட்டு, மீள முடியாமல் அவனை சிறைப் பிடித்துவிட்டதுபோல் அவள் கற்பனை விரிய  ஆரம்பித்தது. அப்படி அவள் மனம் நடுங்க ஆரம்பித்த அந்தக் கணம், மனதில் இனம் புரியாத பயம் தோன்றி அவளைப் பதற வைக்க சட்டென்று அங்கிருந்து கிளம்ப யத்தனித்தாள் நந்தினி. வாசல்வரை வந்து அவளை வழியனுப்ப நின்ற கோகிலா, ஏன் இவ்வளவு பதட்டமாய் இருக்கே…? எதுக்கும் பயப்படாதே நாங்க இருக்கோம் என்று ஆறுதல் சொன்ன அதே நிமிடம், வெளியே சென்றிருந்த மகேந்திரன், தன் ஹோண்டாவைத் திருப்பி போர்ட்டிகோவில் வளைத்து நிறுத்தி மென்மையாய் இறங்கினான்.   இவளை நோக்கி வந்தவன், ஏதாச்சும் சாப்டீங்களா? என்று வினவினான். ஆச்சு என்று தலையாட்டிய நந்தினி அவனை ஏறிட்டுப் பார்க்கும் மனநிலையில்கூட அப்போது இல்லை. வாங்க, சர்வீஸ் முடிஞ்சிருச்சா….நாளைக்குத்தான் வண்டி கிடைக்கும்னு சொன்னீங்க….நல்லதாப் போச்சு…..என்றவாறே கோகிலா வாசலுக்கு வந்தாள்.  வண்டிய டெலிவரி எடுத்திட்டு, இவுங்க வீட்டுக்காரரை, அவர் வீட்டுல விட்டிட்டு, அப்டியே வர்றேன் நான்…..என்றான்.   மோகன் வீட்டுக்கு வந்து விட்டான் என்ற அந்தச் செய்தி நந்தினிக்கு ஆறுதலையளித்தது. அதே சமயத்தில் மகேந்திரன் அவனைத் தனியாகப் பார்த்தானா அல்லது அவளோடு சேர்ந்திருக்கும்போது பார்த்தானா? என்ற கேள்வி விழுந்தது அவள் மனதில். குழப்பத்தோடேயே வீட்டை நோக்கி நடக்க ஆரம்பித்தாள் நந்தினி. தெரு விளக்குகள் ஒளியைப் பாய்ச்சி, சீக்கிரம் வீடு போய்சேர் என்பதுபோல் அவளுக்குப் பளீரென வழியைக் காட்ட ஆரம்பித்தன. இன்று கோகிலா வீட்டுக்கு வந்ததில், அந்த சரோஜாவைப்பற்றிய முழு விபரங்களும் தெரிந்து கொள்ள ஏதுவாக அமைந்தது என்பதை நினைத்தபோது, இனி தான் மோகன் விஷயத்தில் கண்ணும் கருத்துமாக இருக்க வேண்டும் என்று அந்த நிமிடத்தில் அவள் மனம் தீர்க்கமாய் முடிவு  செய்து கொண்டது. அவர்கள் இருவரையும் விட்டு விட்டு அப்படிச் சட்டென வெளியே கிளம்பியதும் ஒருவகையில் நன்மையாய்த்தான் போயிற்று என்று சற்றே அவள் மனம் ஆறுதலும் பட்டுக் கொண்டது.   அத்தியாயம் 11 வீட்டுக்குள் நந்தினி நுழைந்தபோது அங்கே மோகனின் அப்பா சிவநேசனும் இருப்பதைக் கண்டாள். வாங்க மாமா…என்று வரவேற்றவாறே அவள் உள்ளே அடியெடுத்து வைத்தபோது, என்னம்மா இது, நீ எங்க தனியாப் போயிட்டு வர்றே…இவன் எங்கயோ சுத்திப்பிட்டு, இப்பத்தான் வர்றான்….நான் என்னடான்னா உங்களைப் பார்க்கலாம்னு வந்து கால் கடுக்கக் காத்திட்டிருக்கேன்…என்னம்மா இது இப்டி இருக்கீங்க ஆளுக்கொரு பக்கமா? என்று கேள்விகளை வீசியபோது, பதில் எதுவும் சொல்ல வார்த்தைகளின்றி அடுப்படிக்குள் நுழைந்து லைட்டைப் போட்டாள் நந்தினி. உள்ளே நின்று அவள் கண்களைக் கசக்குவதைக் கண்டார் சிவநேசன். நடுங்கியது அவர் உள்ளம். விரும்பி வந்த ஒரு பெண்ணை இப்படிக் கண்கலங்க வைக்கவா இந்த தடிப்பயலுக்குக் கல்யாணம் பண்ணி வைத்தது? என்ன அநியாயம் இது?  இந்த மாதிரி நீங்க இருக்கிறதுக்கா உங்களைச் சேர்த்து வச்சது? சாயங்காலம் ஆச்சுன்னா ரெண்டு பேரும் சேர்ந்துல்ல வெளியே போகணும். உனக்கு உன் வழி, எனக்கு என் வழின்னு இருந்தா அது நல்லாவா இருக்கும்? கல்யாணம் ஆகி வருஷங்கள் ஓடிப் போச்சு. இன்னும் பேரன், பேத்தியக் காணலயேன்னு அக்கம் பக்கத்துல கேட்குறவங்களுக்கு நாங்க தலை குனிய வேண்டியிருக்கு. நீங்க இப்டியிருந்தா பார்க்கிறவங்க என்ன நினைப்பாங்க? இரு தரப்பிலும் மௌனம். அதுவே சிவநேசனை இன்னும் கோபப்படுத்தியது. ஒரேயடியாய் சண்டையே போட்டு விட்டார்களா? பேச்சு வார்த்தையே கிடையாதா? இப்படி இரு துருவங்களாய் இருந்தால் என்னாவது கதை? இந்த விரிசல் நீண்டால் பிறகு பிரிவில் கொண்டல்லவா விட்டு விடும்? பிரிவு நிரந்தரமானதாக மாறிப்போனால்? கற்பனை அவர் மனதை நடுங்க வைத்தது. டேய் மோகன், இப்டி வா…? - சிவநேசன் போட்ட அதட்டலில் நடுங்கிப் போனவனாக வந்து நின்றான் மோகன். உண்மையிலேயே உண்டான நடுக்கம்தானா என்று அவனுக்கே சற்றுச் சந்தேகமாகத்தான் இருந்தது. இளம் பிராயத்தில் அப்பாவின் கண்டிப்புக் குரல் அது. அப்போது மனதில் பதிவானது. அன்று கூடவே பதிவான நடுக்கம் இது. இன்றுவரை அழியாமல்.   இந்த பார் மோகன், உன் கூட வளவளன்னு பேசிட்டிருக்கிறதுக்கு நான் வரல்லை. உங்க ரெண்டு பேருக்கும் கல்யாணம் ஆகி நாளும் பொழுதும் வெறுமே ஓடிட்டிருக்கு. எந்த நல்ல செய்தியும் இல்லே. நீங்க எப்டியிருக்கீங்கங்கிறதை பெரியவங்களான எங்களால ஊகிக்க முடியல… ரெண்டு பேருமே சந்தோஷமாத்தான் இருக்கீங்களாங்கிறதுல எனக்கு சந்தேகம் வந்திருக்கு. வெளிப்படையாச் சொல்றேன். கல்யாணத்துக்கு முன்னாடி நீ ஒரு மாதிரி இருந்திருக்கலாம். அது இப்பயும் தொடராதுன்னு நான் நினைக்கிறேன். ஏன்னா உன்னை நம்பி ஒருத்தி இருக்கா…உன்னை மாதிரி அலைஞ்சவனுக்கு இப்டி ஒருத்தி நிச்சயம் கிடைக்க மாட்டா….உன்னைப் பத்திக் கேள்விப்பட்டிருந்தும் நீதான் வேணும்னு பிடிவாதமா நின்னு உன்னைக் கட்டிக்கிட்டவ நந்தினி. அந்தப் பொண்ணு மனசு கோணாம வச்சுக் காப்பாத்துறது உன் கடமை. அவ கண் கலங்கினா நீ வௌங்காமப் போயிடுவே…அவளக் கண்கலங்கிற அளவுக்கு விடுறது அத்தனை நல்லதில்ல. படிச்ச பையன் நீ. பிறகு ஒரு கட்டத்துல அவ மனசு வெறுத்துட்டான்னு வச்சிக்கோ அப்புறம் நீ என்ன நினைச்சாலும் அவ கிடைக்க மாட்டா. நம்மளோட இருப்பை மீறி ஒரு நல்ல வாழ்க்கை நமக்கு அமைஞ்சிருக்குன்னா அதை அதிர்ஷ்டம்னு நாம நினைக்கப்படாது. கடவுளோட கருணைன்னு நினைக்கணும். அதை மதிச்சு இருந்துக்கத் தெரியணும். அல்லாம விட்டேற்றியா இருக்க ஆரம்பிச்சம்னா அது நம்மைக் கடைசில படு குழில தள்ளிடும்…பெரியவங்க துணையோட உன் குறைகளையெல்லாம் மறந்து, உனக்கு ஒரு வாழ்க்கை அமைச்சுக் கொடுத்திருக்கோம். அதுதான் உண்மை. இல்லன்னா நீ எப்படியெப்படியோ போயிருப்பே…ஏன்னா உங்கம்மா இல்லாமப் போனதுலேர்ந்தே உன்னை என்னால சரியாக் கவனிக்க முடியாமப் போச்சு….கை மீறிப் போனவனாயிட்டே…தடுத்த போதெல்லாம் என்னையே எதிர்த்துப் பேசுற நிலைக்கு நீ வந்திட்டே…மனசுல பெரிய பாரமாப் பதிஞ்சிட்டே…உன்னை ஒரு சரியான பெண்கிட்ட ஒப்படைச்சிட்டுக் கண்ணை மூடணும்னு நினைச்சிட்டிருந்தேன். தெய்வமாக் கிடைச்சிச்சு நம்ம நந்தினி. உனக்காக அவங்கப்பன்ட்ட நான் கேட்காத வார்த்தைகளில்லை. அத்தனையையும் பொறுத்துக்கிட்டேன். எதுக்காக? அந்தப் பொண்ணுக்காக. அவ்வளவு நம்பிக்கை வச்சிருக்கா உன்மேல. உனக்காகவே மூச்சு விடுற பொண்ணு…உன்னையே சிறு பிராயம் முதல் நினைச்சு வாழ்ந்திட்டிருந்த தங்கக் கலசம்…அந்தக் கலசத்தை மாசு படிய விட்டுடாதே. நீ வௌங்க மாட்டே…..ஒரு அப்பன் வாயால சொல்லக் கூடாத வார்த்தை இது. நான் உன்னைச் சாபமிடலை…உன் செயல்கள் முரணாச்சுன்னா அதுவே சாபமா மாறி உன்னைப் பலி வாங்கிடும். யாரும் உனக்குக் கெடுதல் செய்யணும்ங்கிற அவசியமில்லே. மனுஷனோட தவறுகளே அவங்களைப் பழி வாங்கிடும். வாழ்க்கைல மனுஷன் தப்பு செய்றது சகஜம். ஆனா தன்னை மாத்திக்கிறான் பாரு, அவனுக்கு மன்னிப்பு உண்டு. தான் செய்த தவறுகளுக்கு மேல அதீதமா நல்ல காரியங்கள் செய்து தங்களோட பாவங்களைத் துடைச்சிக்கிட்டவங்க ஏராளம். அந்த அளவுக்கு நீ தப்பு செய்தவன் இல்லைன்னாலும், உன்னுடைய சில தவறுகளுக்கு நீ கழுவாய் தேடிக்கிறது அவசியம். அதுக்குக் கடவுளாப் பார்த்து உனக்குக் கொடுத்திருக்கிற நல்ல வாய்ப்புதான் இந்தப் பொண்ணு உன்னை வந்து அடைஞ்சிருக்கிறது. அவ மனசைப் புண் படுத்தாதே. நல்ல இளமைக் காலங்களை நழுவ விடாதே. பிறகு கிடைக்காது. பின்னால நினைச்சு நினைச்சு வருத்தப்பட்டுப் புழுங்கிறமாதிரி ஆக்கிக்கிடாதே…இதை உடனே வந்து சொல்லிப்புடணும்னு என் மனசு துடிச்சிது. அதுக்கான அவசியம் வந்ததுனாலதான் இப்பப் புறப்பட்டு வந்தேன். இல்லன்னா இந்த ராத்திரி வேளைல உன்னைத் தேடி நான் ஏன் வரணும்? நான் உண்டு, என் வீடு உண்டுன்னு ஒத்த மரத்துக் குரங்காட்டம் நான்பாட்டுக்கு யாருக்கும் இடைஞ்சல் இல்லாம இருந்திட்டிருக்கேன். உனக்கே எந்த இடைஞ்சலும் இருக்கக் கூடாதுன்னுதான் வயசான காலத்துலயும் என் தனிமையைப் பொருட்படுத்தாம உன் நல் வாழ்க்கையை மனசுல நினைச்சிட்டு காலத்தைப் போக்கிக்கிட்டிருக்கேன். அத மனசுல வச்சிக்கோ…அவளைச் சந்தோஷமா வச்சிக்கோ…..எந்தப் பழி பாவத்துக்கும் ஆளாகாதே…. நான் வர்றேன்.   சொல்லி முடித்தார். எழுந்துவிட்டார் சிவநேசன். எந்த பதிலும் அவர் மனம் எதிர்பார்க்கவில்லை. இதற்குமேல் சொல்ல எதுவுமில்லை என்றும் நினைத்தார். வாசலுக்கு வந்தார். நான் புறப்படறேன்மா…என்றார் நந்தினியைப் பார்த்து. அவள் காதில் விழுந்ததா என்று கூடக் கண்டுகொள்ளவில்லை. நடந்து கொண்டிருந்தார் சிவநேசன்.   அடித்து வைத்த சிலையாய் நின்று கொண்டிருந்தான் மோகன். அத்தியாயம் 12 அன்று அலுவலகம் விட்டு வந்த மோகன் நந்தினியை அழைத்தான். எப்பொழுதும் வீடு வந்து சேர்ந்ததும், பேசவே மாட்டான். அவனாகப் பேச்சை ஆரம்பிக்க வெகு நேரம் ஆகும். அந்தப் பேச்சு சாதாரணமாயும் வரலாம், கோபமாயும் வெளிப்படலாம். ஆனால் இன்று உடனே அழைக்கிறான். என்னவோ விஷயம் இருக்கத்தான் வேண்டும். என்ன? என்றவாறே போய் நின்றாள்.  என் அடுத்த ப்ரமோஷன் சம்பந்தமா சென்னை போறேன். எனக்கு தருமபுரி மாவட்டம் ஒதுக்கியிருக்காங்க…அதை உடனே மாத்தியாகணும். ஃபோன்ல சொல்லியாச்சு. நேர்ல வந்தாத்தான் ஏதாச்சும் செய்ய முடியும்னு சொல்றாங்க.  ரிக்வெஸ்ட் தயார் பண்ணிட்டேன். ரெகமன்ட் பண்ணியும் வாங்கிட்டேன். போஸ்டிங் இந்த வாரத்துல வந்துடும். அதுக்குள்ளே அதைப் போய் கான்சல் பண்ணியாகணும். போய் ஜாய்ன் பண்ணிட்டு பிறகு அப்ளிகேஷன் கொடுங்கன்னு சொல்றாங்க…ஜாய்ன் பண்ணிட்டோம்னா பிறகு ஒரு வருஷம் கழிச்சுத்தான் அப்ளிகேஷனே கொடுக்க முடியும். அப்புறமும் இழுத்திட வாய்ப்பிருக்கு. ஆகையினால இதை ஆரம்ப நிலையிலேயே கான்சல் பண்றதுதான் புத்திசாலித்தனம். இங்கேயே ஒரு இடம் இருக்கு. அதுக்கு யாரைப் போட்டிருக்காங்கன்னு தெரியல. இன்னைவரைக்கும் யாரையும் போஸ்டிங் போடலைன்னுதான் நினைக்கிறேன். அப்டியே போட்டிருந்தாலும் அதைக் கான்சல் பண்ணிட்டு நான் வாங்கணும். என் போஸ்டிங்கையும் கான்சல் பண்ணனும். பெரிய வேலைதான். கொஞ்சம் பணம் செலவாகும் போலத் தெரியுது. பார்த்துக்கலாம்…நான் இப்பவே புறப்படணும்…” -கடகடவென்று ஒப்பிப்பதுபோல் சொல்லி முடித்தான் மோகன்.   டிபன் தயார் பண்றேங்க…சாப்பிட்டுட்டுப் போங்க…என்றாள் நந்தினி. மிகுந்த சோர்வாகத்தான் இருந்தது அவளுக்கும். இருந்தாலும் இந்த நேரத்தில் காண்பித்துக் கொள்ள முடியாது. அவன் காரியம்தான் முக்கியம்.   போற வழிக்கு எங்கயாச்சும் சாப்பிட்டுக்கிறேன். அதெல்லாம் வேண்டாம். சொன்னவன், தனது சூட்கேசை எடுத்து அதில் துணிகளை அடுக்க ஆரம்பித்தான். பீரோவிலிருந்து பணம் எடுத்து வைத்துக் கொண்டான். ஏ.டி.எம். கார்டுகள் இருக்கிறதா என்று கவனமாக செக் செய்து கொண்டான். ஒரு இருபது ரூபா வரைக்கும் செலவாகும். வெளியூர் போனம்னா ஒரு வருஷத்துக்குக் கணக்குப் பண்ணிப் பாரு…தனியா ரூம் எடுக்கணும்…வெளில சாப்பிடணும். போக்குவரத்து…அது இதுன்னு ஏகப்பட்ட செலவுகள் இருக்கு…ஆகையினால இந்தச் செலவை யோசிக்காம செய்துதான் ஆகணும். உனக்கொண்ணும் தயக்கமில்லையே….?   எதற்காக இப்படிக் கேட்கிறான்? உண்மையிலேயே ஆத்மார்த்தமாய் கேட்கிறானா? அல்லது போலிக்கா? நந்தினிக்குப் புரியவில்லை. இருந்தாலும் உள்ளுரிலேயே இருக்க வேண்டும் என்கிற முயற்சிதானே என்பதில் திருப்தி இருந்தது அவளுக்கு. கூடவே ஒரு யோசனையும் அவள் மனதில் தோன்றியது. சொன்னால் கேட்பானோ மாட்டானோ? இப்போது அவன் இருக்கும் வேகத்திற்கு நிச்சயம் தன் யோசனை எடுபடாதுதான். இவனைப் பேசாமல் இருக்க வைத்துவிட்டு, அப்பாவிடம் ஒரு வார்த்தை சொன்னால் போதும்…மேலிடத்தில் அவருக்கு நிறையப் பேரைத் தெரியும். ஆட்பழக்கம் அதிகம். ஆனால் அனாவசியமாய் யாருக்காகவும், எதற்காகவும், எடுத்ததற்கெல்லாம் என்று போகவே மாட்டார். அம்மாதிரியெல்லாம் ஆட்களை இழுத்துக் கொண்டு சென்னைக்கு அலையும் பழக்கம் கிடையாது அவரி்டம். ரொம்பவும் அவசியமாய், தவிர்க்க முடியாத ஒன்று என்றால் மட்டுமே முயற்சிகளை மேற்கொள்வார். இருந்த இடத்திலேயே ஃபோனில் சொல்லி, ஆட்களை அனுப்பி வைத்து, காரியத்தை முடித்துவிடும் சாமர்த்தியம் அவருக்கு உண்டுதான். அப்படிப்பார்த்தால் கல்யாணம் ஆன புதிதில் திருச்சியிலிருந்து மாறுதல் வாங்கிக் கொடுத்தவரே அவர்தான். அது வெளியிலே தெரியாது. இன்றுவரை தன் முயற்சியில்தான் அது நடந்தேறியது என்றே மோகன் நினைத்துக் கொண்டிருக்கிறான். அப்பா ஒரு நாள் கூட அதை வெளியே சொன்னதில்லை. இவளும் அதைச் சொல்லி பெருமையடித்துக் கொண்டதில்லை. அவனின் கௌரவத்திற்கு எந்தக் குறைச்சலும் வந்து விடக் கூடாது என்பதே அவளின் நோக்கமாகவும் இருந்தது என்பதுதான் காரணம். இப்போது அதைச் சொல்லலாம்தான். கேட்பானா? இத்தனை வேகமாகக் கிளம்புபவன், நிற்கவா போகிறான்? முன்னமேயே ஏன் சொல்லவில்லை என்று பிறகு கேட்க நேர்ந்தால்? அப்படிக் கேட்பவனல்ல மோகன் என்ற உறுதியிருந்தது இவளுக்கு. சரி, அவர் முயற்சியிலேயே செய்யட்டும் என்றுதான் தோன்றியது. ஆனால் ஒன்று. அப்பாவின் முயற்சி இத்தனை பணச் செலவை வைக்காது. வெறும் போக்குவரத்து என்பதோடு முடிந்து போக வாய்ப்பு உண்டு. சொன்னால் இவன் நம்புவானா?   பல்வேறுவிதமான யோசனைகளுக்கிடையில் எதையும் சொல்லத் தோன்றாமல் அவனை வழியனுப்பி வைத்தாள் நந்தினி. போகும் போது, மோகன் அவள் அருகில் வந்தான். அவள் கைகளைப் பிடித்துக் கொண்டான். தைரியமா இரு. பாதுகாப்பா இரு. வேணும்னா உங்க அப்பாவைக் கூப்பிட்டு வச்சிக்கோ. உங்க அம்மாவைப் போய் பார்த்திட்டு வா. நாலு நாளைல திரும்பிடுவேன்….உனக்காகத்தான் வெளியூர் போகாம இங்கயே இருக்கணும்னு முயற்சி பண்றேன்…ஓ.கே…? - சொல்லிவிட்டு வெளியேறினான் மோகன்.   அவனின் வார்த்தைகள் ஆத்மார்த்தமாய் வெளி வந்ததாக நம்பினாள் நந்தினி. அவள் கண்கள் உடனடியாகக் கலங்கிப் போனதை அவன் பார்த்தான். நெருக்கமாக அவளை அவன் அணைத்துக் கொண்ட அந்தப் பொழுது அவளின் வாழ்க்கையின் அழியாப் பொழுதுகளாய் நிலை பெற்றன. என்னவோ ஒரு இனம் புரியாத சந்தோஷம் அந்த நேரத்தில் அவள் மனதில் தோன்றியது. எதற்காக மனம் இத்தனை குதூகலப்படுகிறது என்று நினைத்துப் பார்த்தாள் நந்தினி. புலப்படவேயில்லை. மோகனின் அரவணைப்பின்போது கிடைத்த ஸ்பரிசம், அந்த உணர்வை ஏற்படுத்தியிருந்தது அவளுக்கு. கொஞ்ச நாட்களுக்குப் பிறகு அவளுக்குக் கிடைத்த ஆத்ம சுகம் அது. இடையில் ஏகப்பட்ட மனக் கிலேசங்கள். கலக்கங்கள். சிந்தனைகள். குழப்பங்கள். எல்லாமும் தீர்ந்து போகும் நேரம் வந்து விட்டதாய் அந்தக் கணத்தில் உணர ஆரம்பித்தாள் நந்தினி. மகிழ்ச்சியோடு விடை கொடுத்தாள் அவனுக்கு.   ஒரு வேளை அவன் முயற்சி தோற்றுவிட்டால், அப்பாவிடம் சொல்லிக் காரியத்தைச் சாதித்துவிடுவது என்று முடிவு செய்து கொண்டாள். முதல்லயே ஏன் சொல்லலை என்று அப்பா கேட்கக் கூடும். அதைச் சரி செய்து கொள்ளலாம். அப்பாவும் புரிந்து கொள்வார்தான். சந்தோஷத்தோடேயே அன்று படுக்கைக்குப் போனாள் நந்தினி. பக்கத்து வீட்டுப் பாட்டி ரங்கம்மாளைக் கூட வந்து துணைக்குப் படுத்துக் கொள்ளச் சொன்னாள். ரங்கம்மா பாட்டிக்கு நெஞ்சுக்கு இதமாய் அவ்வப்போது காபி கொடுத்தால் போதும். ஆத்மார்த்தமாய் வாழ்த்துவாள். அவர்கள் அங்கே குடி வந்தது முதல் அவள்தான் தாயாய்த் துணையிருக்கிறாள். தன் தாயாரைக் கூட அழைத்து வந்து வைத்துக் கொள்ள முடியவில்லை. அம்மாவுக்கு முடியாதுதான். கொஞ்சம் தன் மீது அதிருப்தி வேறு.  மோகன் வெளியூர் சென்ற காலங்களிலெல்லாம் இந்தப் பாட்டிதான் துணை. சொன்னால் போதும். உடனே சுருட்டி மடக்கிக்கொண்டு வந்து நின்று விடுவாள். இன்று இரவும், பிறகு அவன் சொன்ன நான்கு நாட்களுக்கும் அவள்தான் நந்தினிக்குத் துணை. அப்பாவையோ, அம்மாவையோ போய் அழைப்பது என்பதில் அவளுக்கு ஏனோ உடன்பாடில்லை. கூடுமானவரை எதற்கும் அவர்களிடம் போகாமல் காலம் கழிக்க வேண்டும் என்பதே என்றும் அவளின் நோக்கமாய் இருந்திருக்கிறது. பகலில் அவள் அலுவலகம் போயிருக்கும் வேளையில் கூட, பாட்டி வீட்டைப் பார்த்துக் கொள்வாள். ஆனால் பூட்டி சாவியைக் கொண்டு போய்விடு என்று கூறி விடுவாள். அருகில் தன் பேரன் வீட்டின் திண்ணையில்தான் படுத்துக் கிடப்பாள் ரங்கம்மா பாட்டி. அங்கிருந்தமேனிக்கே அவளால் கண்காணித்துக் கொள்ள முடியும். அன்று பாட்டியோடுதான் அவள் இரவு ஆரம்பித்தது.    அதே சமயம் பஸ்ஸில் அருகே சரோஜா அமர்ந்திருக்க அவளோடு குதூகலமாய்ப் பயணிக்கத் தயார் நிலையில் காதில் செருகிய ஏர்ஃபோனோடு பாடலை ரசித்துக் கொண்டிருந்தான் மோகன். அவன் அப்பொழுது சென்னைக்குச் செல்வது சரோஜாவின் மாறுதலை ரத்து செய்து, திரும்பவும் அவளுக்குத் திருச்சிக்கே போஸ்டிங் பெற்றுத் தரத்தான் என்பதை யாரும் அறிந்திருக்க வாய்ப்பில்லை. சென்னை சம்பந்தமான அவன் அலுவலக அவசரப் பணி ஒன்றைத் தானே சென்று முடித்து வருவதாகவும், கோர்ட்டில் வாய்தா உள்ள நான்கு  கேஸ்கள் சம்பந்தமான கோப்புகளோடும் மிகவும் பொறுப்பாகத்தான் அவன் அந்தப் பயணத்தை மேற்கொண்டிருந்தான். சென்று திரும்பும் செலவுகளுக்கான பயணப்படியை அலுவலகம் கொடுத்து விடும். சரோஜாவோடு நான்கு நாட்கள் ஜாலியான  பயணம் வேறு. கூடவே தன்னுடைய பதவி உயர்வுக்கான உள்ளுர் போஸ்டிங்கைக் கையோடு வாங்கி வந்து விடலாம் என்கிற திட்டம். பிறகு செலவில்லாமலேயே காரியத்தை முடித்து விட்டேன் என்று பெருமையாக நந்தினியிடம் சொல்லிக் கொள்ளலாம் என்கிற தெம்பு. நெருக்கமாக  அமர்ந்திருந்த சரோஜா அப்போது கேட்டாள். உங்க ஒய்ஃப்கிட்டே உண்மையைச் சொல்லிட்டுத்தானே புறப்பட்டு வந்தீங்க? பாவம்….  உண்மையைச் சொன்னா இப்டி வர முடியுமா? என் டிரான்ஸ்பருக்காக டிரை பண்றதா உதார் விட்டிருக்கேன். அப்பத்தான் அவ நம்புவா….எல்லாம் போய் சரி பண்ணிக்கலாம்….அவளுக்காக நீங்க ஏன் அலையணும்னு பிரச்னையை ஆரம்பிச்சிடுவா? அவளுக்குப் பிடிக்காது. அதனால சொல்லலை…  ஆனாலும் கட்டின பெண்டாட்டிகிட்ட பொய்யா இருக்கிறதுல உங்களுக்குக் கொஞ்சம் கூடக் கூச்சம் இல்லே? உங்களையே நம்பி இருக்கிறவங்க அவங்க…அவங்களுக்கு நேர்மையா இருக்க வேண்டாமா நீங்க?  இந்தக் கேள்விகளை மோகன் சற்றும் அவளிடமிருந்து எதிர்பார்க்கவில்லைதான். பதில் சொல்லவில்லை. காரணம் அந்தக் கேள்விகளைக் கேட்க அவளுக்குத் தகுதியிருக்கிறதா என்பதுதான்.  அவன் முகம் விகாரமாக மாறியது அப்போது. கேட்க நினைத்ததைச் சட்டென்று கேட்டு விட்டது மகாதப்பு என்பதை அந்தக் கணத்தில் உணர்ந்து மனசுக்குள் நடுங்கித்தான் போனாள் சரோஜா. வாய் மூடிப் போனது அத்தோடு. வேலை மெனக்கெட்டுக் கிளம்பி வந்தேம்பாரு…அதுனால கேட்குறியாக்கும்…நீயே போய் முயற்சி பண்ணி வாங்கிக்கோன்னு எனக்குச் சொல்லத் தெரியாது? இல்லன்னா ஒரு லெட்டர் எழுதிக் கொடுத்து இன்னாரப் பாருன்னு சொல்லத் தெரியாது? ஆளே நேர்ல வந்திருக்காருன்னு செய்து முடிக்க முனைவாங்க…அதுக்காகத்தான் புறப்பட்டு வந்தேன். உன்னோட நாக்கைத் தொங்கப்போட்டுக்கிட்டு ஊர் சுத்த இல்ல…இன்னும் அப்டியெல்லாம் வேறே நினைச்சிட்டிருக்கியா? பாவம், பொண்ணாச்சே, கல்யாணம், குடும்பம்னு ஒண்ணு இல்லாம அலையுதே…செய்து கொடுப்போம்னு பார்த்தா எனக்கே புத்தி சொல்றியா? - மோகன் போட்ட போடில் கப்சிப் என்று ஆகிப் போனாள் சரோஜா. அதற்குப் பின் சுத்தமாகப் பேச்சு நின்று போனது.. லேசாக அவள் கண்கள் கலங்கிப் போனதைக் கண்டுவிட்டான் மோகன். மேற்கொண்டு ஒன்றும் பேசவில்லை.  அந்த மௌனத்தோடேயே அவர்களின் பயணம் தொடர்ந்தது.   அத்தியாயம் 13 சென்னைக்குச் சென்று ஒரு ஃபோன் கூடப் பண்ணவில்லையே என்றும், அவனைத் தொடர்பு கொள்ளும் போதெல்லாம் செல் என்கேஜ்டாகவே இருப்பதும், நந்தினியைக் கலங்கடிக்கத்தான் செய்தது. எப்பொழுதுமே போனால் போன இடம். வந்தால் வந்த இடம் என்றுதான் இருப்பான் மோகன். வெளியூர் சென்ற பொழுதுகளில், பத்திரமாய் வந்து சேர்ந்தேன், நீ பத்திரமாய் இரு என்று ஆதரவாய் அவனிடமிருந்து என்றும் வார்த்தைகள் வந்ததேயில்லை. அவள் மனம் அப்படி நிறைய எதிர்பார்க்கும். அன்பான வார்த்தைகளுக்காகத்தானே வாழ்க்கை. அதுதானே அரவணைப்பு என்று நினைப்பாள் அவள். அதல்லாம் அவனுக்குத் தெரியுமா? அல்லது தெரிந்தும் தெரியாததுபோல் இருக்கிறானா? என்ற ஐயம் வரும்.  அதுவே அவளுக்குப் பழக்கமாகிப் போய், நாளாவட்டத்தில் அவளும் அப்படியெல்லாம் அவனைப் பொருட்படுத்துவதற்கில்லை என்று விட்டு விட்டாள். எடுத்ததற்கெல்லாம் சண்டை என்று இல்லாமல் இருந்தாலே நல்ல, நிம்மதியான வாழ்க்கை என்று நினைத்து ஆறுதல் பட்டுக் கொண்டாள்.   ஆனால் இந்த முறை என்னவோ அவள் மனசைப் பிசைந்து கொண்டேயிருந்தது. எப்பொழுதும் ஓரிரண்டு நாட்களில் திரும்பி விடும் அவன், சொல்லிவிட்டுப் போன நான்கு நாட்கள் தாண்டியும், இன்னும் வராததும், எத்தனை நாட்கள் இன்னும் கூடுதலாக அங்கே இருக்க வேண்டியிருக்கும் என்பதுமான எதுவுமே ஊகிக்க முடியாத பொழுதுகளாய்த் தன் நேரங்கள் அநாதையாய்க் கழிந்து கொண்டிருப்பதாய் உணர்ந்தாள் நந்தினி. அவன் அலுவலகத்திற்குப் போன் செய்து கேட்டாள். இன்னிக்கு, நாளைக்கு வந்திருவாங்கம்மா என்றுதான் பதில் கிடைத்தது. குழப்பத்தோடேயேதான் அலுவலகம் சென்று மீண்டு கொண்டிருந்hள.; அவளுக்கும் வேலை தீவிரமாய் ஓடவில்லை. ஏதோ பார்த்தோம் என்கிற கணக்காய் நேரத்தைக் கழித்து விட்டு வந்தாள். அப்பா வேறு வந்து பார்த்துவிட்டுப் போய்விட்டார். ஏம்மா முதல்லயே சொல்லலை என்றார். எதை அவரிடம் சொல்ல வேண்டாம் என்று இவள் நினைத்திருந்தாரோ, அது வாய்தவறி வந்து விட்டது அவளிடம். மனதில் உள்ள ஆதங்கத்தை அப்பாவிடம் கொட்ட யத்தனித்தபோது, அதுவும் சேர்ந்து விழுந்து விட்டது. எதுக்கு இதையெல்லாம் உங்க அப்பாகிட்டச் சொல்ற? எனக்கா பார்த்துக்கத் தெரியாதா? ஒண்ணொன்ணுக்கும் அப்படி உங்கப்பாட்டப் போயி, எனக்கு முடிச்சுக் கொடுங்க மாமான்னு கைகட்டி நிற்கச் சொல்றியா? எங்க டிபார்ட்மென்ட், அசோசியேஷன் லெவல்லயே என்னால முடிச்சிக்க முடியும்…உங்கப்பான்னா எம்.எல்.ஏ., மினிஸ்டர்னு போயிடுவாரு…அது நடந்தாலும் நடக்கலாம்…இல்லன்னா விபரீதமாகவும் போகலாம். ஏன்னா ப்ரமோஷன் ஆர்டரை ஃபஸ்ட்டு ஒபே பண்ணனும்ங்கிறதுதான் ரூல். எடுத்ததுக்கெல்லாம் மேல் லெவல்னு முயற்சி பண்ணினா நாளைக்கு இந்த கவர்ன்மென்ட் மாறிடுச்சின்னா? நம்மளப் போட்டுப் பார்க்க எத்தனை நேரம் ஆகும்? ஆகையினால பேசாம கம்முனு கிட….. - அவன் வார்த்தைகள் அப்படியே எதிரொலித்தன இவள் காதில்.   ரொம்பவும் கௌரவமான பேர்வழிதான். ஆனால் வேற்றுப் பெண்களோடு சம்பந்தமில்லாமல் சுற்றும் பழக்கம் இருக்கிறதே? அதில் ஒன்றும் இந்த கௌரவம் காணவில்லையே? அது அகௌரவம் என்று ஏன் அவனுக்குத் தெரியவில்லை? அந்த மகேந்திரனும்தான் இருக்கிறார். இப்படியா? இது என்ன விடமுடியாத பழக்கம்? திருமணத்திற்குப் பின்னேனும் மாற வேண்டாமா? வாய் திறந்து சொல்லவே முடியவில்லையே? ஏய், மூடு வாயை. என்ன கன்ட்ரோல் பண்ணிக்க எனக்குத் தெரியும். கூடவே சுத்துனா அது உடனே தப்பாயிடுமா? நீ ஆபீஸ்ல பல ஆம்பளைகளோட வேலை பார்க்கிறே…சிரிச்சிச் சிரிச்சுப் பேசிட்டிருக்கே…உடனே நான் சந்தேகப்படுறதா? பல நாள் லேட்டாத்தான் வர்றே…கேட்டா வேலை ஜாஸ்திங்கிறே…எவன் கூடச் சுத்திட்டு வர்றேன்னு நான் உன்னைக் கேட்க எத்தனை நேரம் ஆகும்? என்னைக்காச்சும் ஒரு வார்த்தை அப்டி வாய் தவறிக்  கேட்டிருக்கேனா? உங்கிட்ட எவ்வளவு கோவப்பட்டிருக்கேன்….என்னைக்காச்சும் டங் ஸ்லிப் ஆகியிருக்கா எனக்கு? ஒரு சம்பவம் சொல்லு….நம்பிக்கைதான் வாழ்க்கை….நான் உன்னைப் பூரணமா நம்பறேன்…அதுபோல நீயும் என்னை நம்பணும்….கெட்டுச் சீரழிஞ்சு போறதுன்னா அதெல்லாம் என்னைக்கோ என்னைப் பொறுத்தவரைக்கும் நடந்திருக்கும். எத்தனையோ மோசமான சூழ்நிலைல கூட நான் திடமா இருந்திருக்கேன். எல்லாம் யாருக்காக? உனக்காக….அத ஞாபகம் வச்சிக்கோ…. - மனசைப் பல தடவை நிறைத்திருக்கிறான் இப்படிப் பேசி. பிறகு எப்படி அவனைத் தவறாகப் பார்ப்பது, கேட்பது….? கிடக்குது கழுதை என்று விட்டு விட்டாள். அவளுக்கே இந்த விஷயத்தில் அலுப்பு வந்து விட்டது. எந்தவொன்றையும் பெரிதாக எடுத்துக் கொள்ளாத மனச் சமநிலை வந்து விட்டது.   மாப்பிள்ளைக்குத் தெரியாம விசாரிக்கட்டுமாம்மா….ஏதாச்சும் இடைஞ்சல் இருந்திச்சின்னா சரி பண்ணிடலாம். அவருக்குச் செலவில்லாம முடியும்…என்று விடாப்பிடியாகக் கேட்ட  அப்பாவைத் தடுத்து விட்டாள் நந்தினி. அதில் ரங்கநாதனுக்கு வருத்தம்தான். தான் விபரம் சொன்னது மோகனுக்குத் தெரிய வேண்டாம் என்று வேறு அவள் கேட்டுக் கொண்டதுதான் அவருக்கு இன்னும் அதிசயமாய் இருந்தது. அது அவருக்குள் என்னென்னவோ கற்பனைகளை வளர்த்தது. இன்னுமா இவர்களுக்குள் சுமுகநிலை பரவவில்லை என்ற கேள்வியை எழுப்பியது. மனதில் தோன்றுவதையெல்லாம் கேட்டுவிடும் வழக்கமில்லை அவருக்கு. அப்படித்தானே இத்தனை காலமும் கழிந்திருக்கிறது என்று அடக்கிக் கொண்டார். எல்லோருக்கும் எல்லாக் காலமும் இப்படிக் குழப்பத்தோடேயே கழியுமா, இறக்கம் என்று ஒன்று இருந்தால் ஏற்றம் என்ற ஒன்று இருந்துதானே ஆக வேண்டும்? துன்பம் என்ற ஒன்று இருந்தால் இன்பம் என்ற ஒன்று ஏதேனும் ஒரு கால கட்டத்தில் வந்துதானே ஆக வேண்டும்?   அத்தியாயம் 14    மலை போலே வரும் சோதனை யாவும், பனிபோல் நீங்கி விடும், நம்மை வாழ விடாதவர் வந்து நம் வாசலில் வணங்கிட வைத்து விடும்…..   எங்கோ ஒலிக்கும் பாடல் வரிகள் அந்தக் குளிர் காலைப் பொழுதில் நந்தினியின் சிந்தனைகளை வந்து மென்மையாக நெருடத்தான் செய்தன. அப்போது அவள் அந்த மகப்பேறு மருத்துவமனையின் குளிர்சாதனப் படுக்கையறைக்குள் இருந்தாள். அருகே அந்த ரங்கம்மாப் பாட்டி. எல்லாம் நல்லதுக்குத்தான். பேசாம டெலிவரி முடியற வரைக்கும்   பெட் ரெஸ்ட் எடு. ஆபீசுக்கு முழுசா லீவைப் போடு. சம்பளம் வராட்டாப் பரவால்லே. உன் புருஷன் சம்பாதிக்கிறான்லியோ…அது போதும். நான் கூட இருந்து பார்த்துக்கிறேன் உன்னை. லட்டு மாதிரி ஒரு பிள்ளையை நீ பெத்து எடுக்கப் போறியா இல்லையா பாரு…என் வாக்குப் பலிக்கும். கடவுள் அதுக்காகத்தான் சமயத்துல என்னை உன் பக்கத்துல வச்சிருக்கார். அன்னைக்கு நீ மயங்கி விழுந்ததை மட்டும் நான் பார்க்கலேன்னு வச்சிக்கோ…பிறகு எப்போ முழிப்பு வருதோ அப்பத்தான் உன்னை நீ உணர்ந்திருக்க முடியும். என்ன ஆகியிருக்குமோ தெரியாது. எல்லாம் அந்த அம்பாளோட   கருணை. கடவுள் நல்லவாளை எப்பவுமே கை விட மாட்டார்…இல்லன்னா என்னைக் கொண்டு வந்து உனக்குத் துணையா நிறுத்துவாரா? இத்தனை நாளா என்னடா இந்தப் பொண்ணு நம்மளைக் கூப்பிடவேயில்லையேன்னு எனக்கு ஒரே வருத்தம். என்ன மனக் கஷ்டமோ, ஏதோன்னு கிடந்தேன். எப்போ மனசுக்கு வருத்தமாயிருந்தாலும், பாரமா உணர்ந்தாலும், நாலு பேரோட பேசிட்டோம்னு வச்சிக்கோ மனபாரம் குறைஞ்சு போகும். போட்டு அமுக்கக் கூடாது. என்கிட்டே புலம்பறதுக்கு உனக்கு என்ன கஷ்டம்? எம்புட்டு அனுபவம் கண்டவ நான்? என் குடும்பத்துல என்னவெல்லாம் கஷ்டம் அனுபவிச்சிருக்கேன் தெரியுமா உனக்கு? அதெல்லாம் சொன்னா யாரும் நம்ப மாட்டா? இந்தப் பாட்டி பொய் சொல்றான்னுவா…எல்லாத்தையும் கடந்துதான் வந்திருக்கேன். இன்னைக்கு என் பேரன் கூட என்னை பாட்டி, பாட்டின்னு கூடவே வச்சிருக்கான்னா அவனுக்கு என் அருமை தெரிஞ்சதுதான் காரணம். குடும்ப நடப்புகள் எல்லாத்தையும் கூடவே இருந்து கண்டவன் அவன். நல்லவேளை. உனக்கு நான் இருக்கேன்…உங்க அம்மா, அப்பா மெதுவா வரட்டும்….நான் பார்த்துக்கிறேன். ஒண்ணுத்துக்கும் நீ பயப்படாதே….. - பாட்டி சொல்லச் சொல்ல நந்தினியின் பயம் அத்தனையும் பனிபோல் விலகிவிட்டது என்பது என்னவோ உண்மைதான். வயிற்றை அங்கும் இங்கும் பிடித்துப் பார்த்து, எல்லாம் சரியாத்தான் இருக்கு என்றாள் ரங்கம்மா பாட்டி. எட்டுப் பிள்ளையைப் பெற்று எத்தனையோ பேருக்குப் பிரசவமும் பார்த்தவள். அவள் கைக்குத் தெரியாத அனுபவமா?    டாக்டர்கள் சொன்னபடி பெட் ரெஸ்ட் எடுப்பது என்ற முடிவுக்கு வந்து விட்டாள் நந்தினி. கோகிலாவைக் கூப்பிட்டு விட்டாள். அடுத்த நொடியே வந்து விட்டாள் அவள்.; விடுப்புக் கடிதத்தை எழுதி் கையொப்பமிட்டுக் கொடுத்தாள். கூடவே ஒரு மெடிக்கல் சர்டிபிகேட்டையும் இணைத்து அனுப்பினாள். “கங்கிராஜூலேஷன்ஸ்” - என்ற ஒரு வார்த்தையோடு நிறுத்திக் கொண்டான் மகேந்திரன். ரங்கநாதனும், பங்கஜமும் ஓடோடி வந்து விட்டார்கள்.    இனிமே நாங்க பார்த்துகிறோம்…நீங்க சிரமப்பட வேண்டாம் பாட்டி என்றார்கள் ரங்கம்மாவைப் பார்த்து. நந்தினிதான் பாட்டி இருக்கட்டும் என்றாள். அம்மாவும், பாட்டியும் மாறி மாறி இருந்து கொள்ளலாம் என்றாள். ரங்கநாதனுக்கு நிலைகொள்ளவில்லை. சிவநேசனுக்கு உடனே சொல்லி அவர் வந்ததும் ஆவியைச் சேர்த்து அவரைக் கட்டிக் கொண்டு தன் மகிழ்ச்சியை அபாரமாய் வெளிப்படுத்தினார்.    பலவீனப்பட்டிருக்கும் கருவை பலப்படுத்தி, நல்லபடியாய்க் குழந்தையைப் பெற்றெடுத்து, மோகனின் கையில் கொடுக்க வேண்டும் என்கிற ஆசை வந்திருந்தது நந்தினிக்கு. திருமணமாகி இத்தனை ஆண்டு இடைவெளியில் ஜனித்திருக்கும் உயிர். இது நாள் வரை அந்தக் குறைதான் தன்னை இப்படி ஒட்ட விடாமல் பிரித்து வைத்திருக்கிறதோ என்று கலங்கடித்த விஷயம். எதிர்பாராத ஒரு நன்னாளில் தன்னை வெளிக்காட்டிக் கொண்டிருக்கிறது. அதுவும் அவன் ஊரில் இல்லாத சமயம். ஒரு வேளை இந்தக் கால தாமதமே தன்னை அவனிடமிருந்து விலகியிருக்கச் செய்திருக்குமோ என்ற ஒரு சந்தேகமும் அவளுக்கு உண்டுதான். தான் தாய்மையுற்றிருக்கிறோம் என்பதை உணராத சிற்சில மாற்றங்களை சமீப நாட்களில் அவள் தன் உடல் ரீதியாக உணரத்தான் செய்தாள். எதை நினைத்து எப்படி அவனிடம் சொல்வது? மனக் கலக்கத்தினாலும், அழுத்தத்தினாலும் ஏற்படும் மாற்றங்களோ என்று ஒரு சந்தேகமும் அவளிடம் இருந்தது. எல்லாமும் இப்போது வெளிச்சத்திற்கு வந்து வந்துவிட்டது. இதைக் கேட்டால் மகிழ்ச்சி கொள்ளாமல் போவானா மோகன்? இதுநாள்வரையிலான ஒட்டியும், ஒட்டாமலுமான நிலை அவனிடமிருந்து விலகிப் போகுமா? அவள் மனம் ரொம்பவும் எதிர்பார்க்க ஆரம்பித்தது.    மாப்பிள்ளையைப் பிடிக்க முடியலை என்கிற மன வருத்தத்தோடு வந்து நின்றார் ரங்கநாதன். இப்டியா ஒரு மனுஷன் ஃபோனை ஆஃப் பண்ணி வச்சிருப்பான்? எப்பப் போட்டாலும் லைன் கிடைக்க மாட்டேங்குது? ரெண்டு ஃபோன் வச்சிருப்பார்னு சொன்னியே? அந்த இன்னொரு நம்பரை வாங்கி வைக்க வேண்டாமா? என்னம்மா பொண்ணு நீ? ஊர்ல பெண்டாட்டின்னு ஒருத்தி இருக்காளே, அவளைத் தனியா விட்டிட்டு வந்திருக்கமேங்கிற எண்ணம் வேண்டாம் ஒருத்தனுக்கு? இந்த விஷயத்தை முதல்ல அவர்கிட்ட சொல்வாங்களா அல்லது மூணாவது மனுஷங்கிட்டச் சொல்லிச் சொல்லச் சொல்வாங்களா? ரொம்பக் கேவலமா இருக்கும்மா நினைச்சா…? அழாத குறையாய்ப் புலம்பினார் ரங்கநாதம். என்ன ஆறுதல் சொல்வதென்று தெரியாமல் பிடித்து வைத்த பிள்ளையாராய் நின்றார் சிவநேசன். சந்தோஷத்தில் என்ன பேசுவதென்றே அவருக்குத் தெரியவில்லை.    அடுத்த ரெண்டாவது நாள் காலை யாரும் எதிர்பார்க்காத நேரத்தில் நேரே மருத்துவமனைக்கே வந்து நின்றான் மோகன். வந்ததும் வராததுமாக அவளை ஆவல் பொங்கப் பார்த்துச் சொன்னான்.    ஒரு வழியா எல்லாத்தையும் தலை முழுகிட்டு வந்திட்டேன். இனிமே எந்தச் சனியனும் நம்ம கிட்டே ஒட்டாது. நம்ம பையன்தான் உன் வயித்துல ஜனிச்சு எல்லாத் தீமைகளையம் விரட்டிட்டான் போலிருக்கு.   இனிமே உன்னைக் கூடவே இருந்து முழுக்க முழுக்க கவனிக்க வேண்டிதான் என் வேலை. ஓ.கே.யா? அவனின் வார்த்தைகள் நந்தினியைத் தாள முடியாத சந்தோஷத்தில்   ஆழ்த்தின. அவள் உள்ளம் குதூகலித்தது. உடம்பு சிலிர்த்தது. எல்லாத்தையும் தலை முழுகிட்டேன் என்று அவன் சொன்னதில் ஆயிரம் அர்த்தங்கள் இருப்பதாய் அந்த நேரத்தில் அவள் உணர்ந்தாள். மோகன் தனது எல்லாப் பின்னடைவுகளையும் சேர்த்துத்தான் சொன்னான் என்பது நெருக்கமாய் வந்து அமர்ந்து அவள் கைகளை ஆதுரமாயப் பிடித்துக் கொண்டு அவள் மணி வயிற்றில் இன்னொரு கையையும் மென்மையாய்ப் படர விட்ட அந்தப் பொன்னான கணத்தில் பரிபூரணமாய் உணர்ந்தாள் நந்தினி. நானே எதிர்பார்க்காத அதிசயமாய் எங்க ஆபீசிலேயே எனக்கு ப்ரமோஷன்ல போஸ்டிங் கிடைச்சிருச்சு. வர்ற வெள்ளிக் கிழமை ஜாய்ன் பண்ணிடறேன். இதோ போஸ்டிங் ஆர்டர். சொல்லியவாறே எடுத்து நீட்டினான் நந்தினியிடம். அறைக்கு வெளியே இருந்து இந்த நிகழ்வைத் தவிர்த்து விடக் கூடாது என்பதுபோல் ஆர்வத்தோடும், ஆதங்கத்தோடும் பார்த்துக் கொண்டிருந்தன நான்கு ஜோடிக் கண்கள். உணர்ச்சி மேலீட்டில் அவர்கள் அத்தனை பேர் கண்களிலும் ஆனந்தக் கண்ணீர்க் கோடுகள் சரம் சரமாய் இறங்கியிருந்தன என்பதைச் சொல்லியா தெரிய வேண்டும். ------------------------------   உஷாதீபன் - தன் குறிப்பு [] உள்ளே வெளியே, பார்வைகள், நேசம், சில நெருடல்கள், தனித்திருப்பவனின் அறை, திரை விலகல், நினைவுத் தடங்கள், வாழ்க்கை ஒரு ஜீவநதி, நான் அதுவல்ல, தவிக்கும் இடைவெளிகள், வெள்ளை நிறத்தொரு பூனை ஆகிய பதினோரு சிறுகதைத் தொகுப்புகள், புயலுக்குப் பின்னே அமைதி, மழைக்கால மேகங்கள்  என இரண்டு குறுநாவல் தொகுப்புகள் வெளிவந்துள்ளன. 1987 ல் எழுத ஆரம்பித்த இவர்,தனது எழுத்துப்பணியை விடாது இன்றுவரை தொடர்ந்து கொண்டிருக்கிறார். அனைத்து வார, மாத இதழ்களிலும், இலக்கியச் சிறுபத்திரிகைகளிலும், இவரது கதைகள் வெளி வந்துள்ளன. இணைய இதழ்களிலும் தொடர்ந்து எழுதி வருகிறார். சென்னை, இலக்கியச் சிந்தனை அமைப்பின் சிறந்த மாதச் சிறுகதையாக (1987) இவரது வெள்ளை நிறத்தொரு பூனை சிறுகதை பரிசு பெற்றது.  கல்கி நினைவுச் சிறுகதைப் போட்டிப் பரிசு, அமுத சுரபி பொன் விழா சிறுகதைப் போட்டிப் பரிசு, குங்குமம் நட்சத்திரச் சிறுகதை, இளையதலைமுறைச் சிறுகதைப் பரிசு, தினமணி கதிர் நெய்வேலி புத்தகத் திருவிழாக் குழு நடத்திய சிறுகதைப் போட்டிப் பரிசு ஆகியன இவர் பெற்ற பரிசுகள்  ஆகும்.  2007-ம் ஆண்டுக்கான அமரர் ஜீவா, பி.இராமமூர்த்தி நூற்றாண்டு விழா திருப்பூர் தமிழ்ச் சங்கம் மற்றும் கலை இலக்கியப் பெருமன்றம் ஆகியன இணைந்து நடத்திய விழாவில் 'வாழ்க்கை ஒரு ஜீவநதி  சிறுகதைத் தொகுப்பு பரிசு பெற்றது. வாழ்க்கை ஒரு ஜீவநதி சிறுகதைத் தொகுதி மதுரை டோக் பெருமாட்டி கல்லூரியில் நவீன இலக்கியப் பயில் நூலாக அமைந்தது. இவரது சிறுகதைத் தொகுதிகள் பல மாணவர்களால் M.Phil., P.Hd., ஆய்வுகளுக்கு எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளன.   தமிழ்நாடு கலை இலக்கியப்பெருமன்றத்தின் இலக்கியப்போட்டி 2011 ல் நினைவுத் தடங்கள் சிறுகதைத் தொகுதி அந்த ஆண்டின் சிறந்த சிறுகதைத் தொகுப்புக்காகப்  பரிசு பெற்றது. நெய்வேலி புத்தகக் கண்காட்சி மற்றும் காரைக்குடிப் புத்தகக் கண்காட்சிக் குழு நடத்திய சிறுகதைப் போட்டிகளில் சிறுகதைகள் பரிசு பெற்றுள்ளன.     இவரது ‘தவிக்கும் இடைவெளிகள’; சிறுகதைத் தொகுப்பு 2014 ம் ஆண்டின் கு.சின்னப்ப பாரதி அறக்கட்டளை விருது பெற்றது. குடும்பப் பிரச்னைகளை மையமாக வைத்து சமூக நாவல்களை சுவைபட  வழங்குவது   இவரது இடைவிடாத எழுத்துப் பணிக்குச் சான்றாகும். அந்த வகையில் பதினைந்துக்கும் மேற்பட்ட நாவல்களை வாசகர்களின் உற்சாகமான வாசிப்புக்கு அடையாளமாகப் படைத்துத் தந்திருக்கிறார்.     உஷாதீபன்,  8-10-6 ஸ்ருதி இல்லம், சிந்து நதித் தெரு, மகாத்மாகாந்தி நகர், மதுரை - 625 014. (செல் - 94426 84188)  ushaadeepan@gmail.com ----------------------    உங்கள் படைப்புகளை வெளியிடலாமே   உங்கள் படைப்புகளை மின்னூலாக இங்கு வெளியிடலாம்.   1. எங்கள் திட்டம் பற்றி – http://freetamilebooks.com/about-the-project/  தமிழில் காணொளி .   2.  படைப்புகளை யாவரும் பகிரும் உரிமை தரும் கிரியேட்டிவ் காமன்ஸ் உரிமம் பற்றி –   கிரியேட்டிவ் காமன்ஸ் உரிமை – ஒரு அறிமுகம்   http://www.wired.co.uk/news/archive/2011-12/13/creative-commons-101   https://learn.canvas.net/courses/4/wiki/creative-commons-licenses     உங்கள் விருப்பான கிரியேட்டிவ் காமன்ஸ் உரிமத்தை இங்கே தேர்ந்தெடுக்கலாம். http://creativecommons.org/choose/     3. மேற்கண்டவற்றை பார்த்த / படித்த பின், உங்கள் படைப்புகளை மின்னூலாக மாற்ற பின்வரும் தகவல்களை எங்களுக்கு அனுப்பவும்.      நூலின் பெயர்     நூல் அறிமுக உரை     நூல் ஆசிரியர் அறிமுக உரை     உங்கள் விருப்பான கிரியேட்டிவ் காமன்ஸ் உரிமம்     நூல் – text / html / LibreOffice odt/ MS office doc வடிவங்களில்.  அல்லது வலைப்பதிவு / இணைய தளங்களில் உள்ள கட்டுரைகளில் தொடுப்புகள் (url) இவற்றை freetamilebooksteam@gmail.com  க்கு மின்னஞ்சல் அனுப்பவும். விரைவில் மின்னூல் உருவாக்கி வெளியிடுவோம்.  நீங்களும் மின்னூல் உருவாக்கிட உதவலாம்   மின்னூல் எப்படி உருவாக்குகிறோம்?  – தமிழில் காணொளி   offline method  – https://youtu.be/0CGGtgoiH-0                                     automated method  -  https://youtu.be/WHHF8eP_UyY   A4 PDF, 6 inch PDF கோப்புகளை  Microsoft word இலேயே உருவாக்க – http://freetamilebooks.com/create-pdf-files-using-microsoft-word/   எங்கள் மின்னஞ்சல் குழுவில் இணைந்து உதவலாம். https://groups.google.com/forum/#!forum/freetamilebooksforum     நன்றி !