[] [] உணரி ர.திவ்யா ஹரிஹரன் divyahariharanmk@gmail.com  மின்னூல் வெளியீடு : FreeTamileBooks.com உரிமை : Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 கிரியேட்டிவ் காமன்ஸ். எல்லாரும் படிக்கலாம், பகிரலாம்.   பொருளடக்கம் 1 5  2 6  3 8  4 10  5 13  6 15  7 17  8 19  9 22  10 25  11 28  12 29                  வணக்கம். தனியார் நிறுவனத்தில் பணிபுரியும் நான் ஆங்கில வழி கல்வியை பெற்றாலும், எனது தமிழ் ஆசிரியர்களால் உந்தப்பட்டோ, அல்லது என் தாய் மொழி தமிழ் என்பதாலோ தமிழில் எழுதும் என் ஆசைத் தொடர, கதைகள் மற்றும் கவிதைகள் எழுத முயற்சி செய்வதுண்டு. அந்த வகையில் 'உணரி' என்னுடைய ஒரு முயற்சியாகும். 'நைலான் கயிறு' என்ற சுஜாதாவின் நாவலைப் படித்ததினால்   உந்தப்பட்டு  இந்த நாவலினை எழுதியுள்ளேன். அந்த நாவலின் தனித்துவம்     என்னவெனில், அந்த     கதையினை      சுஜாதா, இரண்டு பாகங்களாக   ஒவ்வொரு சாப்டரிலும் சொல்லி வைத்திருப்பார். இரண்டு பாகங்களும் கடைசியில் ஒன்றை ஒன்று சந்தித்து கதைக்கான முடிச்சிகளை அவிழ்த்து, கதையை ஒன்று சேர்த்து முடித்து வைக்கும். அதை தழுவிய இந்த நாவல் 'உணரி'யில், சாய்வெழுத்தில் வருவது ஒரு பகுதி, நேர் எழுத்தில் வருவது மற்றொரு பகுதி. இரண்டும் ஒன்று சேரும் இடத்தில் தான் கதை முற்றுகிறது. உங்களுடைய அரிய நேரத்தில் ஒரு அரை மணி நேரம் செலவிட்டு இதை படிக்கவிருக்கும் அனைவருக்கும் எனது நன்றிகள். எனது முயற்சி திருவினையாக, உங்கள் கருத்துக்களை என்னுடன் பகிர்ந்து கொள்ளவும்.    மின்னஞ்சல் முகவரி: divyahariharanmk@gmail.com    கதையை எழுதிமுடிக்க ஊக்குவித்த அனைத்து நண்பர்களுக்கும்.    உறவினருக்கும் எனது நன்றிகள். இந்த கதையை வெளியிட உதவி புரிந்த நண்பர் ப்ரதீப்பிற்கு எனது மனமார்ந்த நன்றிகள்.       ஆசிரியர் அறிமுகம்:   சேலத்தில் பிறந்து வளர்ந்து, சென்னையில் வேதியலில் பொறியியல் முடித்துவிட்டு, தனியார் நிறுவனத்தில் பணியாற்றிக் கொண்டிருக்கிறேன்.   கணவர், குழந்தை மற்றும் பெரியோர்களுடன் ஓசூரில் வசித்து வருகிறேன். கதைகள் படிப்பதில் ஆர்வமுண்டு. சிறு கதைகள், கவிதைகள் எழுதுவதுண்டு. 'உணரி' என்னுடைய முழு முதற்முயற்சியாகும்.   1   எவ்வளவு அழகான மொழி! என்ன அழகான கற்பனைகள்! எவ்வளவு தெளிவான கதைக் களங்கள்! கல்கி, சாண்டில்யன், சுஜாதா, ஜெயகாந்தன், ஜெயமோகன், இவங்களோட எழுத்துத் திறன்ல பாதி எனக்கு இருந்திட்டா கூட போதுமே!!! பாரதியாரே… உன் காலத்தில் நான் பிறந்திருந்தால், உன் கவிதைக்காகவே தாகம் கொண்டு சுதந்திரத்திற்கு போராடியிருப்பேன். உன் குரலைக் கேட்டிருந்தாலே என் குரலில் கவிதை ஒலித்திருக்குமோ!!?  இதை கணினியில் தட்டிவிட்டு, முகத்தில் சிரிப்புடன் படுத்துறங்கியது ஒரு தமிழ் பித்து.   குளிருல நடுங்கிக்கிட்டு இருக்குற சூரியனுக்கு கதகதப்பூட்ட, புகையை சூடாக கக்கிக் கொண்டே வந்து நின்றது அந்த வண்டி. அதன் கதவுகள் திறந்ததும் உள்ளே காட்சியளிப்பது, காதுகளில் இயர்ஃபோனை (Earphone) மாட்டிக் கொண்டு, 'சாக்ஸ்' அணிந்த கால்களை ஒய்யாரமாக இன்ஜின் மீது நீட்டியவாரே உட்கார்ந்திருக்கும் நம்ம டெக்கி தாத்தா 'பாட்டில்'. அறுபது வயசு ஆனாலும் அப்டேட்டா இருப்பார், எல்லா டெக் சாதனங்களை பத்தியும்.   பெருசா   ஒரு  கூட்டமே அந்த ஸ்டாப்புல ஏறுது. எல்லாரும் பாட்டிலுக்கு வணக்கம் வச்சிகிட்டே ஏறுறாங்க. வண்டி புறப்படுற நேரத்துல ஓடி வந்து கையசைச்சு நிறுத்துது ஒரு உருவம். முகம் மட்டும் கொஞ்சமா தெரிய, குளிர் காத்து எப்படியாவது உள்ளே நுழையனும்னு குட்டிக் கரணம் அடிச்சா கூட புக முடியாத மாதிரி ஸ்வட்டர் துணியால முகத்தை மூடிகிட்டு அழகிய புன்னகையோட வண்டியில வந்து ஏறுற அந்த உருவம், ஒரு குட்டி தேவதை. அந்த தேவதையோட பேரு, நிலா.   அந்த இளம் விடியற்காலையில இந்த நிலவைப் பார்த்த சூரியன், முழுவதுமாக கண் விழித்துக் கொண்டது போலும்! எங்கும் ஒளி பரவத் தொடங்கியது. சூரியனுக்கு கதகதப்பாக இருந்திட்டுருந்த        அந்த      வண்டியின்    புகையினை பழிவாங்க, குளிர் காத்து வேகமா வந்து வண்டியினை தாக்கிக்கொண்டிருக்க, அதோடு சண்டை போட்டுக்கிட்டே வழி நெடுக அனல் புகையினை கக்கிக்கிட்டு வந்திட்டிருந்தது அந்த வண்டி. ஓட்டப்பந்தயத்துல ஓடிச் சோர்ந்து போன அந்த வண்டி, குளிரை ஜெயிச்சிட்ட சந்தோச்தோடயும், பெருமிதத்தோடயும், எல்லைக் கோட்டை அடைஞ்ச மாதிரி பெருமூச்சை விட்டுகிட்டே,  ஒரு கம்பெனியின் முன்னால வந்து நிக்குது.     2 காதலும், கவிதையும், கற்பனையும் என் மனதை சுற்றி சுற்றி வரும். நிலவும், வண்ணத்துப்பூச்சியும், மலையும், மழையும் இல்லாமல் என் எழுத்துகள் இல்லை. நான் தனிமையில் இனிமை காண்பது இவைகளோடு தான்.   தமிழே...நீ இல்லாத ஒரு நாள்... உன் உளறல்கள் கேட்காமல் உறக்கம் ஊர் கோடியில் நீ இன்றி தனிமை தலைக்கேறி தள்ளாடுகிறேன் கண்கள் பார்க்கும் காதுகள் கேட்கும் வயிறு பசிக்கும் மனது அனைத்தையும் ரசிக்கும் ஏனெனில் பார்க்க ரசிக்க புசிக்க நீ என்னுடன் இல்லை.   நா.முத்துகுமார் வழியில் நானும் என் பட்டாம்பூச்சிகளை விற்று விடப் பார்க்கிறேன். என் கனவுகள் 'கருப்புக் கண்ணாடி' அணிந்து இதமாக வெயிலில் நடந்து கொண்டிருந்தன. பதிப்பாளர்களின் படிக்கட்டுகளில் ஏறி ஏறி வழுக்கி விழுந்தேன். என் கருப்புக் கண்ணாடி உடைபட்டு, அவர்களின் வார்த்தைச் சூடு என் கண்களின் வழி சென்று என் இதயத்தில் இருந்த பட்டாம்பூச்சிகளைக் கொன்று விட்டன.   அது சொகுசு வாகனங்களுக்கு உட்காருவதற்கான இருக்கைகளை தயார் பண்ணி தரும் கம்பெனி. அங்கே, வட்டம், நீள் வட்டம், சதுரம், செவ்வகம் என பல்வேறு வடிவங்களினாலான அச்சுகள் தொடர்ந்து இயங்கியபடி இருக்கும். அச்சுகளின் வாய் தானாக திறக்க, இருக்கைகளை தயாரிப்பதற்கான திரவங்களை அதில் ஊற்றிய பின்னர் அவை தன்னால் மூடிக் கொள்ளும். அங்கிருக்கும் இயந்திர சக்கரத்தை பார்ப்பதற்கு, ஆறாத பசியோடு தன் அகன்ற வாயினை திறந்து மூடி, திறந்து மூடி, ஒரு குட்டி வட்டத்தினுள் சுற்றி சுற்றி வந்து கொண்டிருக்கும் இராட்சசக் கூட்டம் போல தோன்றும். முப்பது வருசமா சுத்திக்கிட்டு இருக்குற அந்த இராட்சசனை வருசத்துல ஒரு முறை பராமாரிப்பு செய்யுறது அந்த கம்பனியோட வழக்கம். ஓடிய கால்களை ஒடுக்கி ஓய்வுல இருக்குற ஒரு வாரம் அந்த இராட்சச சக்கரத்துக்கு போதுமானதாக இருக்கும்.     இராட்சசர்களை அடக்கி ஆளுர மாயக்கார கூட்டம் தான் நம்ம கதைக்களத்துல வரப் போற கதாபாத்திரங்கள். இராட்சசனோட கண்கட்டு வாய்கட்டு வித்தைகளை தெரிஞ்சவன் தான் சமந்து. அவன் ஒரு சென்சார் ஸ்பெசலிஸ்ட் புரோகிராமர். எவ்வளவு நேரம் இராட்சசன் வாயைத் திறக்கனும், எவ்வளவு   நேரம்     வாயை      மூடி      இருக்கனும், இது மாதிரி        பல விசயங்களை  இராட்சசனோட மூளையில ஏத்துறது சமந்து தான்.   அடுத்து முக்கியமானவர் ஆர்.கே. இவர் அந்த இடத்தோட பராமரிப்பு வேலைகளை எல்லாம் தெரிஞ்சவர். இராட்சசனைக்    கட்டிப் போடுறது, தீனிப் போடுறது    மாதிரி       பல    விசயங்களை   செய்கிறவர். எல்லா மெக்கானிக்கல் வேலைகளும் இவருக்கு அத்துப்படி.   ஆர்.கே-வோட ரொம்ப நெருங்கிய நண்பரான சாந்தா, ஒரு எலக்ட்ரிகல் ஸ்பெசலிஸ்ட். சாந்தா, கம்பனியில நெருங்கி வேலை பாக்குறது ஆர்.கே-வோட மட்டும் தான். ரெண்டு பேரும் ஒரே வீட்டுல தான் தங்கியிருக்காங்க. சாந்தா ஒரு சீக்ரட் சர்ஃபர். அதாவது, கம்பனியில நடக்குற எந்த இரகசியத்தையும் தெரிஞ்சுக்கலைனா அவருக்கு தூக்கம் வராது.   பராமரிப்புக்கான முதல் நாள், அந்த இராட்சசனை கட்டவிழ்த்து அடக்கி ஆளுறதுக்கான எல்லா முன்னெச்சரிக்கை விசயங்களையும் எடுத்து சொல்லிட்டு இருந்தார் சாகர். அவர் தான் எல்லாருக்கும் மேனேஜர். மிகவும் நியாயமான ஆள். உழைப்புக்கு மரியாதை கொடுப்பவர். அவருக்கு அந்த கம்பனியில எல்லா விசயங்களும் அத்துப்படி. அவர் பாட்டில் தாத்தாவோட நீண்ட நாள் வேலை பார்த்தவர். தாத்தாவோட வயசுக்கு அவர் மரியாதை தந்தாலும், பாட்டில் தாத்தா வேலையில் கவனம் செலுத்தாம இருக்குறது சாகருக்கு சுத்தமா பிடிக்கலை. தக்க சமயத்துல அவருக்கு நல்ல பாடம் புகட்டனும்னு காத்துட்டு இருக்காரு சாகர்.   டெக்கி 'பாட்டில்' தாத்தா ரொம்ப ஜாலியான மனிதர். கம்பனியில எல்லா வேலைகளையும் கற்று படிப்படியாக உயர்ந்து, கம்பனியின் இன்றியமையாத பாகமாய் ஆகிவிட்டார். அவருடைய அனுபவத்தை பொக்கிசமாக நினைக்கும் நிறுவனம், அவரிடமிருந்து  எதிர்பார்ப்பது உழைப்பை அல்ல, தேவையான நேரத்தில் அவருடைய அனுபவம் நிறைந்த கருத்துக்களை மட்டுமே. ஆனால் சாகரின் கருத்து வேறாக இருந்தது.   நிலா அந்த கம்பனியில் தனித்து நிற்பவள். கம்பனியில் வேலை செய்யும் ஒரே பெண் என்பதால் மட்டுமல்ல, அவள் செய்யும் வேலையின் நேர்த்தியினாலும் கூடத்தான். நிலா அந்த கம்பனியில் செய்யப்படும் பொருட்களுக்கான தரத்தினை உறுதிபடுத்தும் பொறுப்பில் உள்ளவள். அதாவது குவாலிட்டி ஹெட். 3 தமிழ்நாட்டில் தமிழ் புத்தகங்கள் படிப்பவர்கள் மிகக் குறைவே. எழுத்தாளர்களே தங்கள் புத்தகங்களில் 400-ஆவது விற்றுக் கொடுக்க வேண்டும் அல்லது பதிப்பிற்கான பாதி செலவை ஏற்றுக் கொள்ள வேண்டும். பதிப்பாளர்கள் புத்தகத்தை பதிப்பிக்க இது ஒரு நிபந்தனை. இதை கேட்டதும் என் மனதிலிருந்த மலைகள் எல்லாம் புத்தகங்களாக மாறி கனத்தன. மனதில் எப்பொழுதம் கொட்டிக்கொண்டிருக்கும் கவிதை மழை, காசு மழையாக மாறி என் நெஞ்சை பிளந்து கொண்டிருந்தது.    'புரோகிராமர் சமந்து' இருபத்து எட்டு வயது ஆன இவன், வாழ்க்கையில் அடைந்த காதல் தோல்விகளே அதிகம். கட்டை குட்டையான தேகம், வளர்ந்த சுவடே இல்லாமல் மழுங்க சிரைத்த தாடி  மீசை, பால் வடியும் முகம். இவற்றையெல்லாம் ஒன்று சேர்த்து கற்பனை செய்து பார்த்தால், அதுதான் சமந்து.   'எலக்டிரிசியன் சாந்தா' ரொம்ப செல்லமா வளர்ந்த பையன். வீட்டுக்கு ஒரே பிள்ளை. நல்ல வசதியான குடும்பம். அவன் வீட்டில் அவனை யாரும் அதட்டிக் கூட பேசியது கிடையாது. வெவ்வேறு ஊர்களுக்குப் பயணம் செய்து, அவற்றை சுற்றிப்பார்த்து ரசிப்பது அவனுக்கு மிகவும் பிடிக்கும். தமிழ்நாடு அல்லாது வேறு இடங்களில் வேலை பார்த்தால் அந்த இடங்களை சுற்றி பார்த்து அனுபவிக்கலாம் என எண்ணி இவ்வளவு தூரத்தில் வந்து வேலை பார்த்துக் கொண்டிருந்தான்.   'நிலா'; மனம் போன போக்கில் வேலை செய்வாள். தனக்கு தோன்றுவதை செய்ய ஏழு கடல், ஏழு மலை தாண்டுவதைக் கூட அவள் பெரிதாகக் கருதுவது இல்லை. அவளுக்கு அவளே ராஜா அவளே மந்திரி.வண்ண வண்ண உடை உடுத்தி அழகாய் வலம் வருவாள். அவளுடைய தைரியம் அவளுக்கு கூடுதல் அழகு.   நிலாவை பார்த்த மாத்திரத்துல சமந்துவுக்கு ரொம்பவே பிடிச்சிப் போனது. கிடைச்ச சந்தர்ப்பங்களைத் தவற விடாம நிலா கிட்ட பேச்சுக் குடுப்பான். நிலாவும் மத்தவங்களை போல இல்லாம அவன் சொல்ற விசயங்களை காது கொடுத்து கவனிப்பா, தக்க இடங்கள்ள ரசிப்பா, பாராட்டவும் செய்வா. அது அவளுக்கு இயல்பாவே இருக்குற ஒரு குணம். அந்த குணம் சமந்துவை வெகுவா கவர்ந்தது.   இரண்டாவது நாள் அனைவரும் தங்கள் காலை தூக்கத்தை தொலைக்க மனமின்றி வண்டியிலிருந்து இறங்குகின்றனர். பாட்டில் டெக்கி தாத்தா, குறுந்தாடியுடன் ஸ்டைலாக வண்டியிலிருந்து இறங்குகிறார். அவரிடம் இருக்கும் உற்சாகம் எப்பொழுதும் இருப்பதை விட இரட்டிப்பாக      காணப்பட்டது. இந்த வயதிலும், தான் சைக்கிளில் 200கி.மீ. சென்றதை பற்றி நிலாவிடம் பெருமையாக சிரித்து சிரித்து பேசிக்கொண்டு வந்தார். நிலாவும் அவர் பேச்சை வெகுவாக ரசித்து கொண்டே வந்தாள். தன் மொபைலில் உள்ள புகைப்படங்களை எல்லாம் காட்டி சுமார் அரை மணி நேரத்திற்கும்   மேலாக பேசிக் கொண்டிருந்தார். இதை கண்ட 'புரோகிராமர் சமந்து'விற்கு வயறு பற்றி எரிந்தது. டீ ப்ரேக்கில் நிலாவிடம் பேச்சுக் கொடுக்க முயன்றான் சமந்து. ஆனால் நிலா சிறிது நேரம் கழித்து அவனிடம் உரையாட வருவதாக சொல்லிவிட்டு, பாட்டிலுடன் தொடர்ந்து பேசுவதற்காகச் சென்றுவிட்டாள். இதை பார்த்த சமந்து, பாட்டிலின் மீது மிகுந்தக் கடுப்பானான். அவன் கோபம் பெரிதாகி அதன் துகள்களில் சில காற்றில் சிதறின. தன் கையிலிருந்த டீ டம்பளரை 'டமாலென' தூக்கி எரிந்து விட்டு தன் இடத்தை நோக்கி நடந்தான்.         4 பொத்தலாகிப் போன இதயத்துக்கு மருந்தளிக்க வந்தது சமூக வலைத்தளம். படைப்புகளை பகிர்ந்தேன். 50 பேர் கொண்ட என் நண்பர் கூட்டத்தில், விருப்பப்பட்டு படிப்பவர்கள் 30 பேர் மட்டுமே. விரும்பி படிக்கும் 30 பேர்களில், விருப்பம் தெரிவிப்பவர்கள் (Likes)  10 பேர் மட்டுமே. 10-ஆனது 100-ஆகி, 100-ஆனது 1000-ஆகிவிடும் நாள் வெகு தொலைவில் இல்லை என்று விரிந்து கொண்டிருந்தது என் கனவு. ஆனால்      நடந்தது     என்னமோ வேறு.     அலை பேசிகளும் புது 'ஆப்ஸ்'களும் பெருகி விட்ட உலகத்தில் என் மலைகளும், பட்டாம் பூச்சிகளும் நிராகரிக்கப்பட்டவை ஆகிவிட்டன. காதல் மட்டும் ஒன்றிரண்டு விருப்பங்கள் பெற்று உயிருடன் அலைந்துக் கொண்டிருந்தது. வலைத்தளத்தின் நூறு கோடி பின்னல்களில் நானும் என் எழுத்துக்களும் பெற்ற இடம் தெருக்கோடி. அவ்வப்பொழுது என்னை நானே ஊக்குவித்துக் கொண்டு பதிப்பாளர்களை தொடர்ந்தேன்.    ஓடிக்கொண்டிருக்கும் இயந்திர உலகில் முன்னேறி வர வழி சொல்லும் ஊக்குவிப்பு புத்தகங்கள் தேவை. புதுமை தேவை. விஞ்ஞானத்தை விளங்க முடியாத வகையில் விளக்கும் நாவல்கள் தேவை. கொலைகளையும், கொள்ளைகளையும் புது விதத்தில் செய்ய விளக்கவுரை கதைகள் தேவை. கற்பனையை நிழலாக்கி, அந்த நிழலினூடே நிஜங்களை புகுத்தி, ரசிக்க வைக்கும் நிஜங்கள் தேவை. பதிப்பாளர்கள் விரும்புவது இவற்றை தான். நிஜங்கள் கலந்த கொலைக் கதை, கொலையினை வர்ணிக்கும் திகில் கதை. இவைகளோடு போட்டி போட முடியாத என் இயற்கை அழிந்துக் கொண்டிருந்தது. வார்த்தைகள் வரண்டு விட்டன. எனக்கு இதற்கு மேல் எழுத வரவில்லை. நான் என் வாழ்க்கை பாதையை மாற்றிக் கொண்டேன். எனக்கென்று ஒரு கம்பெனியில் வேலை வாங்கிக் கொண்டேன். இல்லாத ஒரு ஊரை தேடிக்கொண்டு, தமிழிலிருந்து என்னை ஒதுக்கிக்கொண்டேன்.       10 20 50 100 சக்கரங்கள் என் முன்னால் உருந்துக் கொண்டே அதை என் கைகள் சுற்றிக் கொண்டே... 100 200 300 600 நிமிடங்கள் ஓடிக்கொண்டே நான் இயந்திரங்களோடு புரண்டுக் கொண்டே.... 1000 2000 3000 4000 நொடிகள் நகர்ந்துக் கொண்டே என் வாழ்க்கை மட்டும் நொண்டிக்கொண்டே....   கம்பனியிலிருந்த அனைவரும் ராட்சச இயந்திரத்தினைச் சுற்றிக் குழுமி இருந்தனர். இயந்திரத்தில் ஏதோ கோளாறு ஏற்பட்டிருக்க, அதன் புரோகிராமை சரி செய்து கொண்டிருந்தான் சமந்து. வேலை தடைப்பட்டு போன கவலையில் நின்று கொண்டிருந்த சாகரின் அலைபேசி ஒலித்தது. அவர் அதை திறந்துப் பார்த்தார். அது பாட்டிலிடமிருந்து வந்திருந்த ஒரு 'வாட்ஸாப்' செய்தி. ஒரு நகைச்சுவை பகிர்வு. சாகர் மிகவும் கடுப்பாகிப் போனார். மனம் முழுக்க இருக்கும் கொந்தளிப்பை வெளியே காட்டிக் கொள்ளாமல் பாட்டிலை மனதிற்குள்ளே திட்டிக்கொண்டார்.   கணினியில் புரோகிராமை சரி செய்துக் கொண்டிருந்த சமந்துவிடம் பேச வருகிறாள் நிலா. அப்பொழுது சமந்துவிற்கு, நிலா தன்னை தவிர்த்து பாட்டிலுடன் பேசியது நினைவிற்கு வந்து எரிச்சலூட்டுகிறது. அவன் வயறு எரிந்துக் கொண்டிருக்க, வாயில் புகைந்துக் கொண்டிருக்கும் புன்னகையுடன்   பேசிக்கொண்டிருந்தான். அன்றைய தினம், இவ்வாறே கசப்புகளை உள்ளடக்கி தோற்றத்தில் இனிமையாக சென்றுக் கொண்டிருந்தது.   அடுத்த நாள் வானம் மந்தமாக இருந்தது. குளிரின் தாக்கம் எப்பொழுதும் விட அதிகமாக இருந்தது. உடலில் தண்ணீர் பட்ட இடங்களில் எல்லாம், குளிர் தன் கையில் பல ஊசிகளை கொண்டு     குத்துவது போன்ற வலி கொடுக்கும் அளவு இருந்தது. பனியின் தாக்கத்தினால், அனைவரும் கதகதப்பான மேலாடைகளோடு காணப்பட்டனர். இதனால் அவர்களுடைய சீருடை கண்ணுக்கு தெரியாமல் அந்த கதகதப்பான ஆடைகளுக்கடியில் பதுங்கி இருந்தது. இரவு முழுக்க பனிக்குளியல் போட்டு மரங்கள், வெயிலி;ன் வருகைக்காக காத்திருந்தன. கம்பனிக்கு செல்லும் பேருந்து, தன்னிடத்திலிருந்து நகரமாட்டாது அடம் பிடித்து கொண்டிருந்தது. திணறி திணறி ஒருவழியாக புறப்பட்ட அந்த வண்டி, சிறிது தூரம் சென்றதும் நாய் ஒன்று குறுக்கிட்டதால், 'சடா'ரென சத்தமிட்டு நின்றது. ஓட்டுநர் அடித்த அந்த திடீர் 'பிரேக்'இல் அனைவரையும் அதிர்ச்சியடைய செய்தது.   அந்த அதிர்ச்சியில் விழித்தெழுந்த அனைவரும், அதிலிருந்து மீளாமல் கண் விழித்தபடியே கம்பனியினை வந்தடைந்தனர். உணவு விடுதிக்கு அருகில் ஒரு பெரிய காக்கைக் கூட்டம்; கரைந்து கொண்டிருந்தது. முந்தைய நாள் குளிர் தாங்காமல் இறந்து விட்ட ஏதோவொரு காட்டு விலங்கு, இன்று இந்த காக்கைகளுக்கு இரை. அனைவரும் தங்கள் கண்ணுக்கு எட்டிய அந்த காக்கை கூட்டத்தை மட்டும் பார்த்து விட்டு, தங்களுக்கு தோன்றிய காரணங்களையும் கதைகளையும் பற்றிக் கூடி கூடி பேசிகொண்டிருந்தனர்.         'கெட்ட சகுணம்…' 'பூகம்பத்தின் எதிரொலி…' 'கம்பனிக்கு புது விருந்தாளி வரப் போறாங்க…' இவர்களின் பேச்சு காக்கைகளுக்கு எப்படி தோன்றியிருக்குமோ தெரியவில்லை.                     5 காலை பொழுதுல, இந்த புது ஊரோட அழகை ஜன்னல் வழியா ரசிச்சிகிட்டே இருக்கும் போது, எங்கேயோ மறைஞ்சி இருந்த மரம், மலை, செடி, கொடி எல்லாம் என் மனசுல சுத்தி வர ஆரம்பிச்சது. வழி நெடுக இருக்கிற ஃபிளக்ஸ் பேனர்களை பார்க்கும் போது, அது முழுக்க தமிழ் கவிதைகளாக் கிறுக்கி வைக்கத் தோணும். அந்த மரங்களையும் மலைகளையும் பார்த்துத் தமிழே கவிதை பாடுற மாதிரி தோணும். என் முகத்துல அடிக்கிறக் காத்துல நான் மெய் மறந்து போனேன்.   மலைச் சாரல் மரங்கள் மலை ஏறுகின்றன மேகம் குடை பிடிக்கிறது குடையை கடத்தி செல்ல காற்று அலைகிறது குடைக்குள் மழை... அதன் சாரலில் அழகிய காட்சியில் கடத்தி செல்லப்பட்டது என்னவோ நான் தான்...   அடுத்த அரை மணி நேரத்துல காட்சிகள் மாறிப் போனது. என் கண்முன்னே எல்லாம் இயந்திரங்கள்… செயற்கை... அந்த பதிப்பாளர் விரும்பிய செயற்கை இங்கே நிறைந்திருந்தது. ஆனால் உண்மை சம்பவம், கொலை ஆகியவற்றுக்கு எங்கு செல்வது? என் மண்டை கணத்தது.   'காக்கைகள் கூட்டமாக சுற்றி வரும் பொழுது அந்த இடத்தில் கண்டிப்பாக ஏதோ இறந்து கிடக்கும்' என்று ஒருவர் சொல்ல, மற்றவர்களும் அதை ஆமோதித்தனர். இப்படி காக்கைகள் செய்வது நிச்சயம் கெட்ட செய்தியை கொண்டு வரும் என்று சொல்லும் போதே சிலருக்கு மனம் பதை பதைத்தது.   அப்பொழுது சாந்தா குறுக்கிட்டு,அதனால் மக்களுக்கு கெடுதல் இல்லை, நம்மால் பாதிக்கப்பட்டு இறந்து போன தன் காக்கை தோழனை பற்றி, தன் கூட்டத்தினர் அனைவருக்கும் தெரிவிக்கவே இப்படி கூட்டமாக கரைகின்றன' என்று கூறினான்.       உடனே பாட்டில் தாத்தாவும், காக்கைகள் எவ்வளவு புத்திசாலியானவை என்றும், பறவைகளால் இயற்கைச் சீற்றங்களை எவ்வாறு முன்கூட்டியே தெரிந்துக் கொண்டு இடம் பெயர முடியும் என்றும் தான் வலைப்பதிவில் படித்த விசயங்களை பகிர்கின்றார்.   இவ்வாறு பேசிக் கொண்டே உணவு முடிந்ததும், அனைவரும் இயந்திரங்களில் வேலையைத் தொடங்கினர். பாட்டில், தன் இயந்திரத்தை 'ஆன்' செய்து விட்டு, இராட்சசனின் வாய் திறந்திருக்கும் போது தன் தலையை உள்ளே நீட்டினார்.   'டமார்' என்று பெரிய சத்தம். இயந்திரத்தின் இடி முழக்கம். 'கிரீச்.. கிரீச்.. கிரீச்…' மற்ற இயந்திரங்கள் நிற்க எத்தனிக்கின்றன..   ஓடி வரும் ஊழியர்களின் கண்கள் கூடும் இடம், ஒரு இரத்த வெள்ளம். முதலில் வரும் அதிர்ச்சியைத் தொடர்ந்து பல முனுமுனுப்புகள்.. சுற்றி ஒரே கலவரம்.. சமந்து அந்த இடத்திலேயே மயங்கி விழுந்தான். ஆர்.கே செய்வதறியாது பதறி பக்கத்தில் செல்கிறார்.பாட்டிலின் தலை மிஷினில் அகப்பட்டு இரத்தம் பெறுக்கெடுத்து ஓடுகிறது.நிலா நடுங்கியவாறே கண்களை மூடி நின்றாள்.   சாகர் ஒரு நிமிடம் அதிர்ச்சியில் உறைந்தாலும், அடுத்த நொடியே தன் மேலதிகாரிகளுக்கு ஃபோன் செய்கிறார். கம்பனியின் கதவை அடைக்கும் படியும் உத்தரவிடுகிறார். சுற்றி இருக்கும் பணியாளர்கள் எல்லாம் அப்படியே கல்லாகிப் போயினர். பணியிடத்திலிருக்கும் ஆபத்தை நினைத்து அவர்கள் இதயத் துடிப்பு ஒரு நிமிடம் நின்று விட்டது.   இருபது நிமிடத்தில் வந்த போலீசார், எல்லாவற்றையும் படம் பிடித்துக் கொண்டனர். தடயவியல் துறையிலிருந்து வந்திருந்த ஆட்கள், தங்களுடைய ஆய்வினை துவங்கினர். அனைவரிடமும் வாக்குமூலம் பெற்றுக் கொண்டு, போலீஸார் சென்றுவிடுகின்றனர்.   அடுத்த நாள் மட்டும் கம்பனி மூடப்பட்டு இருந்தது.         6 காகம் என்று கேட்டக் கணத்திலேயே என் நிலை மறந்தேன்.'காக்கை குருவி எங்கள் ஜாதி.. கடலும் மலையும் எங்கள் கூட்டம்..'என் பாரதியின் தமிழ் காதில் ஒலிக்க தொடங்கியது.'பயமென்னும் பேய்தனை அழித்தோம்.. ஜெய பேரிகை கொட்டடா.. ஜெய பேரிகை கொட்டடா..'  என் மனதில் பயத்தை அழிக்க சொல்லி பேரிகைகள் ஒலித்தன..   பணியிலிருந்து வீடு திரும்பிய பின்னர் உறங்க முடியாமல் தவித்தேன். இயற்கையும் செயற்கையும் என் கண் முன் மாறி மாறி வந்துத் தாண்டவமாடின..   நெஞ்சமே நிறுத்தி விடு !  உனக்கு கண்கள் கொடுத்தது யார்? உன் காதுகள் கேளாமல் கிடந்தால் என்ன? உன் வாயடைக்க வழிகள் உண்டோ? இரவில் பேருலா போகும் உன் கால்கள் களைப்பது எப்போது? கற்பனைகளை கட்டவிழ்க்க உன் கை முழுக்க கத்தரிக்கோல்களா? என் நெஞ்சமே... போதும்...நிறுத்திவிடு... என்னை மேலும் பாடு படுத்த உனக்கு உரிமை இல்ல   அடுத்த நாள் அனைவரும் வழக்கம் போல் வேலைக்கு வந்தனர், புரோகிராமர் சமந்துவைத் தவிர. பாட்டில் தாத்தாவின் இருக்கை மட்டும் காலியாக இருந்தது. கம்பனி முழுவதும் மயான அமைதி நிலவியது. யாரும் மற்றவரிடம் பேசத் தயாராக இல்லை.   அன்றைய நாள் ஓடிப் போனது. வானம் சிகப்பாகக் காணப்பட்டது. இரத்தத்தோடு வானுலகு எய்திவிட்ட பாட்டிலின் பயங்கர சாவினை நினைவூட்டிக் கொண்டிருந்தது அந்தச் சிகப்பு வானம்.   அன்று        புதிதாகப் பாட்டிலின் இடத்திற்கு ஒருவர் வரவிருந்தார். சாகர் மிகுந்த உற்சாகத்துடன் காணப்பட்டார். அந்த புது நபரை பற்றி நிலாவிடம் பேசிக்கொண்டிருந்தார் சாகர்.வரப்போகும் அந்தப் புதியவர், சரிவர வேலையை செய்வதற்காகவே பெயர் போனவர் என்றும், மிகவும் நல்லவர் என்றும் சாகரின் உதடுகள் ஓயாது அவரின் புகழ் பாடிக் கொண்டிருந்தது. வரப்போகும் அந்த புதிய நபரின் பெயர், கபிலன். பாட்டிலின் மரணம் இயந்திரக் கோளாரினால் தான் ஏற்பட்டது என்று அங்குப் பணிபுரிந்தவர்கள் அனைவரையும் நம்ப வைத்தது கம்பெனி. எதிர்காலத்தில் இது போன்ற விபத்தைத் தவிர்க்க செய்யப்பட்டிருக்கும் எச்சரிக்கை நடவடிக்கைகளைப் பற்றிப் படம் காட்டி, அங்கு வேலை செய்பவர்களின் வாயை கட்டிப் போட்டு விட்டது.   ஆனால் அந்த இயந்திரத்தைப் பற்றி முழுமையாக அறிந்தவர்களுக்கு மட்டுமே தெரியும், அது இயந்திரக் கோளாரினால் நடந்திருப்பதற்கான வாயப்புகள் மிக மிகக் குறைவென்று. அந்த இடத்தில் இயந்திரம் மூடாமல் இருப்பதற்காகவே அங்கு ஒரு உணரி (sensor) வழங்கப்பட்டிருந்தது. அந்த உணரி செயலிழந்தால், இயந்திரமே செயலிழந்து விடும்படி அது புரோகிராம் செய்யப்பட்டிருந்தது. அந்த உணரியின் புரோகிராமை யாராவது மூடும்படி மாற்றினாலொழிய அது மாறி செயல்பட வாய்ப்பேயில்லை. புரோகிராமில் மாற்றங்கள் செய்யக்கூடியது சமந்து மட்டுமே. அவன் பாட்டிலின் மரணம் நடந்த அன்று அதிர்ச்சியில் மயங்கி விழுந்து மருத்துவமனையில் அனுதிக்கப்பட்டிருந்தான்.   நாள் ஆக ஆக, பணியாளர்களுக்கிடையே இருந்த இருக்கம் குறைந்து ஒருவரோடு ஒருவர் பேசத் தொடங்கினர். பாட்டிலின் நினைவுகளை அசைபோட்டபடியே சென்றது அன்றைய உணவு நேரம். எல்லார் மனதிலும் இயந்திரம் செயலிழந்தது பற்றிய சந்தேகம் இருந்த போதிலும் யாரும் அதை வெளிபடுத்திக் கொள்ள தயாராக இல்லை. இரத்த வெள்ளத்தில் துண்டாகிக் கிடக்கும் பாட்டிலின் முகம், சம்பவம் நடந்த இடத்தைக் கடக்கும் பொழுதெல்லாம் கண்களில் வந்து போக மறப்பதில்லை. காவல்துறை அந்த இயந்திரத்தை இயக்கத் தடை செய்திருந்தது. பலி வாங்கி விட்ட இராட்சசன் ஓய்வு எடுப்பது போல, சில நாட்களுக்குத் தொடர்ந்து இயக்கப்படாமல் இருந்தது அந்த இராட்சசச் சக்கரம்.             7    கணினியில் ஒரு நாள் உட்கார்ந்து வேலைப் பார்த்துட்டு இருந்தேன். கம்பனியில இருக்குற ராட்சச இயந்திரத்தோட எல்லா வேலைப்பாடுகளைப் பற்றியும், அது பாதுகாப்பா இயங்கறதுக்குத் தேவையான எல்லா உணரிகளைப் (சென்சார்கள்) பற்றியும் அந்தக் கணினியில் தௌpவா விளக்கப்பட்டிருந்தது. அந்த   உணரிகளோட புரோகிராமை எப்படி மாத்துறதுன்னு தெரிஞ்சிகிட்டேன். என் அறிவுக்கு நல்ல தீனிக் கிடைச்ச சந்தோசத்தோட அன்றைக்கு வீடு திரும்பினேன்.    ஆர்.கே கலவரம் தோய்ந்த முகத்துடன் 'பர பர'வென்று ஏதோ எழுதிக் கொண்டிருந்தான்.சாந்தா தன் அலமாரியில் சில கோப்புகளை அலசிக்கொண்டிருந்தான். சாகர் அங்கு நடந்துக் கொண்டிருக்கும் பணிகளை மேற்பார்வையிட்டுக்கொண்டிருந்தார்.நிலா ஒரு கணினியில் அமர்ந்து 'படபட'வென ஏதோ தட்டிக்கொண்டிருந்தாள்.நிலா அங்கு நடந்த விபத்துத் திரும்பவும்           நடக்காமல்   இருக்க என்ன செய்ய வேண்டும் என்பதை பற்றியத் தகவல்களை சேகரித்துக் கொண்டிருந்தாள். அது சாகர் அவளுக்குக் கொடுத்திருந்த வேலை. அவளும் அதை மிகுந்த விருப்பத்துடனும் ஆர்வத்துடனும் செய்து கொண்டிருந்தாள்.   அன்று கபில் புதிதாக வேலையில் சேர்ந்திருந்த நாள். கபில் அங்கு நியமிக்கப்பட்டது பாட்டிலின் இடத்தை நிரப்புவத்றகு மட்டுமல்ல, அவருடைய இறப்பின் மர்மங்களை நிரப்புவதற்கும் கூடத் தான். ஆம்.. அவர் காவல் துறையை சேர்ந்தவர். பாட்டிலின் மரணத்திற்கு பின்னால் இருக்கும் மர்மத்தைக் கண்டறிவதற்காக அங்கு அனுப்பப்பட்டிருக்கிறார். இந்த விசயம் நிறுவனத்தின் உரிமையாளருக்கு மட்டுமே தெரிந்த ஒன்றாகும்.   நல்ல உயரம், கருப்பு நிறம், நிமிர்ந்த நெஞ்சு, நேர் கொண்டப் பார்வை. அந்த பார்வையில் ஒரு ஆழம்.பல விசயங்களை யோசித்துக் கொண்டே இருந்தாலும் சுருங்காத நெற்றி.இவை தான் கபிலின் அடையாளங்கள்.   கபில் வந்தவுடன் அவரைப் பார்த்துத் தன் வாழ்த்துகளைத் தெரிவித்துவிட்டு தன் வேலையைத் தொடர்ந்து செய்தாள் நிலா. கபிலுடன் தன் கைகளைக் குலுக்கி அறிமுகமாகிக் கொண்ட பின், தன் வேலையைத் தொடரச் சென்றான் சாந்தா.   கபிலன் முதல் நாள் வேலையில், கம்பனி பற்றிய அனைத்து விசயங்களையும் சாகரிடம் மிகுந்த ஆர்வத்துடன் கேட்டுத் தெரிந்துக் கொண்டார் கபில். அங்கு வேலைப் பார்ப்பவர்கள் அனைவரின் வேலைகளைப் பற்றியும், அவர்களுக்கு ஏற்படக்கூடிய வேலைச் சம்பந்தமான அழுத்தங்களைப் பற்றியும், சம்பளம், இருப்பிடம், அவர்களுடைய வீட்டு வசதி வாய்ப்பு போன்ற அனைத்து விசயங்களைப் பற்றியும் தெரிந்துக் கொண்டார்.   பாட்டிலின் இறப்புப் பற்றியும் வருத்தத்துடன் கேட்டுக் கொண்டார். கபிலின் ஆர்வத்தைக் கண்டு வாயடைத்துப் போனார் சாகர். பொறுமையாக அனைத்து விசயங்களையும் கபிலிடம் எடுத்துரைத்தார். பாட்டிலின் இறப்பு பற்றியப் பேச்சு கொஞ்சம் கவலைக்குரியதானாலும், அதை பற்றி பேச சாகர் தயங்கவில்லை. தௌpவாக எடுத்துச் சொன்னார்.   பாட்டில் மீது சாகருக்கு இருந்த வெறுப்பு, அவர் பேச்சில் தெள்ளத் தெளிவாகத் தெரிந்தது. பாட்டில் தாத்தா மிகவும் அனுபவம் வாய்ந்தவரானாலும், நிறுவனத்திற்கு அவரால் எந்த உபயோகமும் இல்லை. அவருடைய இறப்பு வருத்தத்தை அளித்தாலும், அவர் வேலை இடத்தை நிரப்ப கபில் போன்று சுறுசுறுப்பான இளைஞர் வந்தது தனக்கு மிகவும் இன்பம் அளிப்பதாக கபிலிடமே கூறினார் சாகர்.   எல்லாவற்றையும் கேட்டக் கபில் யோசித்த வண்ணம் நின்றார். அவரின் மூச்சுக் காற்று மேலோங்கியது. சாகருக்கு தன் நன்றிகளை தெரிவித்து விட்டு மேலும் தகவல்கள் ஏதேனும் தேவைப்பட்டால் அவரைக் கூப்பிடுவதாகக் கூறி விட்டு தன் வேலையைத் துவங்கினார் கபில். அவருக்கு முதல் சந்தேகம் வந்ததது புரோகிராமர் சமந்துவின் மீது தான்.   கொலை நடந்த நாளிலிருந்து சமந்து கம்பனிப் பக்கம் வரவில்லை. அவன் தான் சென்சார்களைப் பற்றி நன்கு அறிந்தவன். ஆகவே கபிலன் முதலில் சமந்துவை சந்திப்பதற்காக மருத்துவமனைக்குச் சென்றார். ஆனால், கபிலனை மருத்தவமனையில் சந்திக்க சமந்து மறுத்துவிட்டான் என்ற செய்தி மட்டும் தான் அவருக்கு கிடைத்தது. கபிலனை கண்களால் பார்க்கக்கூடத் தயாராக இல்லை சமந்து. இது கபிலனை மிகவும் யோசிக்க வைத்தது.     8 அன்று பேருந்தில்  வந்துக் கொண்டிருக்கும் போது, என் அருகில் இருந்தவரின் பை கீழே விழுந்தது. ஆனால் அதை அவர் குனிந்து எடுக்கவில்லை. நான் எடுக்க முயற்சித்த போது, அதிலிருந்து ஒரு டைரி கீழே விழுந்தது. அந்த டைரியை எடுத்து அவரிடம் கொடுக்க முயன்றேன். ஆனால் அவர் அதை வாங்கவில்லை. அவருடையக் கண்கள் திறந்த நிலையில் இருந்தாலும் அவர் உடல் அசைவற்று இருந்தது. நான் ஒரு நிமிடம் திகிலுற்று போனேன். அவரை உலுக்கிப் பார்க்க எத்தனித்தேன் அப்பொழுது ஒருக் கை என்னைத் தடுத்தது. நான் அரண்டுப் போன கண்களுடன் திரும்பிப் பார்த்தேன்.'அவர் தூங்கிகிட்டு இருக்காரு… பயப்படாதீங்க… அவருக்கு கண்களைத் திறந்துகிட்டே தூங்குற வியாதி. பேரு, "நாக்டேர்னல் லேப்ஃதாலமஸ்". சரி அத விடுங்க.. அந்த டைரியை கொண்டாங்க..'என் கையில இருந்த அந்த டைரியை புடுங்கிக்கொண்டார் அவர்.ரொம்ப நாளா காத்துகிட்டு இருந்த ஒரு பொருள் கெடச்சுட்ட சந்தோசம் அவர் முகத்துல.     அன்னிக்கு அந்த டைரிக்கு சொந்தக்காரர் மதிய உணவுக்கு தாமதமாக வர்ரத கவனிச்சேன். அடுத்த நாள் தான் பார்க்க நேர்ந்தது அவர் அன்றைய நிகழ்வுகளைத் தன் மனப் புலம்பல்களை அந்த டைரியில பதிவு செய்ஞ்சிட்டு வர்ராருனு.   சாகரை அவர் இறங்க வேண்டிய இடத்தில் இறக்கிவிட்டு திரும்ப கம்பனிக்கே சென்றார் கபிலன். சமந்துவின் கம்ப்யூட்டரை திறந்து பார்த்து ஏதோ ஆராய்ச்சியில் ஈடுபட்டார்.அவருக்கு பெரும் அதிர்ச்சி…   பாட்டிலின் மரணம் நடந்த முந்தைய தினம் 6 மணி அளவில், இயந்திரத்தின் சென்சார் புரோகிராம் மாற்றப்பட்டிருந்தது. இதை அறிந்தே சமந்து மருத்துவமனையில் பதுங்கியிருக்க வேண்டுமென்று எண்ணினார் கபிலன்.   மாலை 6 மணி. கம்பனியில் ஆட்கள் குறைவாகவே இருப்பர். ஊருக்கு ஒதுக்குப்புறம் இருப்பதால் அனைவரும் கம்பனிக்கு வந்து செல்லும் டெம்போ ட்ராவலரிலேயே வந்து செல்வது வழக்கம். ஏதேனும் முக்கயமான வேலை இருந்தால் மட்டுமே சிலர் தங்கி, சொந்த வண்டிகளிலோ அல்லது பேருந்திலோ செல்வர். இது கபிலின் சந்தேகத்தை தூண்டியது. 6 மணி அளவில் யார் புரோகிராமை மாறிறியிருக்கக்கூடும்?   கபில் 'பர பர'வென்று கணினியில் அலசி முந்தைய நாள் வந்தவர்களிலின் வருகைப் பதிவேடுகளை ஆராய்ந்தான். அதில் ஒவ்வொருவருடைய வருகைக்கான நேரமும், வெளியேரும் நேரமும் பதிவாகியிருக்கும். இதை கொண்டே ஒருவருடைய மாதச் சம்பளம் ஒதுக்கப்படும். அதனால் அனைவரும் அதைப் பதிவு செய்யத் தவருவதில்லை. கபில் வருகை பதிவேடுகளை ஆராய்ந்து கொண்டிருந்தான். அதில் மரணம் நடந்த முந்தைய நாள் நான்கு மணிக்கே, சமந்து வீட்டிற்குச் சென்றிருந்தது தெரிய வந்தது. சமந்துவின் கம்ப்யூட்டரை மீண்டும் ஒரு முறை ஆராய்ந்தான் கபில். அதே நாளில் இரு முறை புரோகிராம் மாற்றப்ட்டிருப்பதை உணர்ந்தான். முதல் முறை இயந்திரக்கோளாறு தடுப்பதற்கான அப்டேட்டட் வெர்சன் சேர்க்கப்பட்டுள்ளது. பிறகு 6 மணிக்கு மேல் மீண்டும் புரோகிராம் மாற்றப்பட்டுள்ளது. சமந்து அந்த நேரத்தில் கம்பனியில் இல்லையெனில் யார் இந்த காரியத்தை செய்திருக்கக்கூடும்..? கபில் அன்று 6 மணிக்கு மேல் கம்பனியை விட்டு சென்றவர்களின் பட்டியலை எடுத்தார். அதில் சாகர், சாந்தா மற்றும் ஆர்கேவின் பெயர்கள் இருந்தன. கபில் தன்னுடைய விசாரனையை அடுத்தக் கட்டத்துக்கு நகர்த்தினார்.   தான் முதல் நாள் கம்பனிக்கு வந்த பொழுது பாட்டில் தாத்தாவின் மரணத்தைப் பற்றி சாகர் கூறியது கபிலனின் நினைவுக்கு வந்தது. பாட்டில் தாத்தாவை பற்றி சாகர் மிகவும் குறைபட்டுக்கொண்டது கபிலனின் சந்தேகத்துக்கு இடம் கொடுத்தது. இப்பொழுது அவர் தாமதமாக சென்றிருப்பது அந்த சந்தேகத்தை மேலும் அதிகப்படுத்தியது. ஆகவே, சாகரைப் பின்தொடர்ந்து அவரது நடவடிக்கைகளைக் கவனிக்க தீர்மானிக்கிறார் கபிலன்.   சாகரை பின்தொடர்ந்து கவனித்ததில், தன்னுடைய வேலையையே தியானமாய் செய்யும் சாகரைப் போலொருவரை கபிலன் எங்குமே பார்த்ததில்லை. சாகர் இல்லாத சமயத்தில், அவருடைய கேபினின் அலமாரிகளைத் தேடினார் கபிலன். அதில் கிடைத்தது ஒருக் கடிதம். அது நிறுவனத் தலைவருக்கு சாகரால் எழுதப்பட்டிருந்த ஒன்று. அதில், பாட்டில் தாத்தாவின் இடத்தில் வேறு ஒருவரை நியமிக்க வேண்டியும், அதற்கான காரணங்களையும் எழுதியிருந்தார் சாகர். ஏதோ காரணத்தினால் அந்த கடிதம் அனுப்பப்படாமலிருந்தது. கபிலனின் மனதில் சாகரை பற்றிய மரியாதையும் சந்தேகமும் தராசின் இரு பக்கங்களிலும் ஏறி இறங்கி, ஏறி இறங்கி ஆடிக்கொண்டிருந்தது.   இதற்கிடையில், சாந்தாவிடம் பேச்சு கொடுக்கிறார் கபில்.   'கம்பனியில் அதிக நேரம் வேலைப் பண்றதைப் பத்தி என்ன நினைக்குறீங்க சாந்தா?' உடனே சாந்தா, 'எவனுக்கு சார் அதிக நேரம் வேலைப் பார்க்க புடிக்கும்..? கரெக்ட்டா 8 மணி நேரம் வேலைப் பார்த்துட்டு போகத் தான் பிடிக்கும். அதுவும் எனக்கு ஊர் சுத்துறதுனா ரொம்பவும் பிடிக்கும்.' என்று கூறினான்.   'கடைசியா எப்ப ஓவர்டைம் பாத்திங்க..?' என்று பேச்சு வாக்கில் கேட்டுப் பார்த்தார் கபில். 'கடைசியா… 2 நாளைக்கு முன்னாடி அதிக நேரம் வேலை செய்ய வேண்டியிருந்தது. சீக்கிரம் கிளம்பிப் போகறதுக்கான ப்ளானெல்லாம் செஞ்சு வச்சிருந்தேன். ஆனால் எல்லாம் இந்த ஆர்.கே-வால வந்தது. இருடாப் போலாம், இருடாப் போலாம்னு நிறுத்தி வெச்சிட்டான்.துணைக்கு கம்பனியில கொஞ்ச பேரு இருந்ததால மனசத் தேத்திகிட்டு வேலை பார்க்கவேண்டியதாயிடுச்சு'. சொல்லி முடித்தான் சாந்தா.   அன்று சாந்தா வீடு திரும்பும் பொழுது, கபிலன் அவனை பின் தொடர்கிறார். சாந்தா கம்பனியிலிருந்து 10 கி.மீ  தொலைவிலிருக்கும் ஒரு கோவிலுக்குச் செல்கிறான். அந்த மாலையின் மயக்கத்தில், நேரே அங்கிருந்த தெப்பக்குளக்கரையில் அமர்ந்து இயற்கையை ரசித்துக் கொண்டிருந்தான் சாந்தா. அப்போது தன் பையிலிருந்து ஏதோ ஒரு டைரியை வெளியே எடுத்து பிரிக்கும் சாந்தா, சற்றுத் தயங்கியவாறே அதை மூடிவிட்டு, மீண்டும் தன் பையிலேயே வைத்து விடுகிறான்.                     9 கொலை... கொலை பத்தி ஏதாவது எழுத முயற்சிக்கிறேன்...என்னால் அதிகபட்சம் முடிந்தது இது மட்டுமே...   இவள் பிறப்பெடுத்தது மிக மிருதுவான கைகளில் இவள் வளர்க்கப்பட்டது ஒரு ராஜா வீட்டு ரோஜாவை விட எந்த விதத்திலும் குறையில்லாமல் தண்ணீர் விட்டு விட்டு .... பால் குடித்து... பதமான எண்ணெய் குளியலில்... இவள் மெருகேறி சிவந்த மங்கையானாள்... சர்க்கரையின் இனிப்பான வாழ்வில் திளைத்திருந்தாள்... அவள் அழகை பார்த்து பார்த்து ரசித்திருந்தேன்... வெட்டி சாப்பிட மனமின்றி... கரண்டி பட்டு கரைந்து விடாள் என் செல்ல குலாப் ஜாமுன்... ------------குலாப் ஜாமுன் கொலைகள்   ஹா ஹா... ஹா... நானே என் கவிதையை நினைத்து சிரித்துக் கொண்டு தூங்கிவிட்டேன். அடுத்த நாள் சீக்கிரமா மதிய உணவை முடிச்சிட்டு வந்து யாருக்கும் தெரியாம அவரோட டைரிய படிச்சிப் பார்த்தேன். 'சுரேஸ் பாட்டிலுக்கும்' டைரியின் சொந்தக் காரருக்குமான நீண்ட நாள் பனிப்போர் பற்றிய விசயம் எனக்குத் தெரிய வந்தது.'என்னை முதல் முதலா இன்டெர்வ்யு பண்ணது நம்ம பாட்டில் தான். எனக்கு நல்ல அறிவுத்திறன் இருந்தும், ஆங்கிலம் தெரியாத காரணத்தினால நிராகரிக்கப்பட்டேன். அப்புறம் திண்டாடி அரைகுறையா ஆங்கிலம் கத்துக்கிட்டு வேறக் கம்பனியிலச் சேர்ந்து பதவி உயர்வு பெற்று, வேற மாநிலத்துக்குப் போகும் போது தான் அதே இடத்துல பாட்டில் வேலை செய்யுறது தெரிஞ்சது. பாட்டிலை பார்க்கும் போதெல்லாம் எனக்கு கோபம் பொங்கி வரும். ஆனால் பாட்டிலுக்கு என்னை ஞாபகம் இருக்க வாய்ப்பு இல்ல. பழி வாங்க தக்க சமயத்துக்காக காத்திருக்கேன்.' எழுதியிருந்தார் டைரியின் சொந்தக்காரர்.     கபில் சாந்தாவிடம் பேச்சு கொடுக்கும் போது சாந்தாவின் பேச்சில் ஒரு பொய்யும் இருப்பதாக அவருக்கு தோன்றவில்லை. ஆனாலும், கோவிலில் அவன் தனியாக அமர்ந்திருந்தது கபிலுக்கு சிறு நெருடலை ஏற்படுத்தியது.   'எல்லாரும் சேர்ந்து தான் போனீங்களா?' என்று இயல்பாக கேட்பதுப் போல் கேட்டார் கபில்.   'இல்ல சார். நானும் ஆர்.கேவும் தனியா நண்பர் ஒருவரோட வீட்டுக்கு போயிட்டு அவரோட வண்டியை வாங்கிட்டு வீட்டுக்குப் போனோம். நாங்க கிளம்பும் போது கம்பனியில இருந்தது சாகரும், நிலாவும் மட்டும் தான். அவங்க எப்போ போனாங்கன்னு தெரியல' என்று கூறினான் சாந்தா.   'நிலாவா…? அவளுடைய பெயர் பதிவேட்டில் வரவில்லையே!..' என்று கபிலுக்கு ஆச்சர்யம் ஏற்பட்டது.   அதைத் தெளிவுபடுத்தச் சென்ற போது, சாகரிடம் பேசிக்கொண்டிருந்தாள் நிலா. 'சாகர்.. சார்.. நான் அன்னிக்கு 7 மணிக்கு போகும் போது கார்டை பஞ்ச் பண்ண மறந்துட்டேன். அதை அப்டேட் பண்ண ஏதாவது வழி இருக்கா?' நீண்டது பேச்சு.   இதை கேட்டுவிட்டு கபில், 'ஹலோ.. டீ குடிக்கபோலாமா?" என்று சாகருக்கு அழைப்பு விடுத்தார். போகும் வழியில் ஆர்.கே தன் கேபினில் அமர்ந்து ஏதோ எழுதி கொண்டிருந்ததைக் கவனித்தார் கபில். சாகரையும், கபிலையும் பார்த்தவுடன் அதை மூடிவிட்டு இருவருக்கும் அழைப்பு விடுத்தான் ஆர்.கே. நிலாவும் தேநீர் அருந்த வந்திருந்தாள். அவள் எதிரில் அமர்ந்தனர் கபில், சாகர் மற்றும் ஆர்.கே. தேநீரின் கதகதப்பில் கபிலின் மூளையில் ஒரு சந்தேகம் வேகத் தொடங்கியது.   பேச்சின் நடுவிலும், பிறர் கவனிக்காத சில நொடிகளிலும், நிலாவின் கண்கள் கபிலையேக் குத்தி நின்றது. கபிலின் தாடி நிறைந்த முகம், கூர்மையான கண்கள் நிலாவின் மனதில் ஒரு தாக்கத்தை உண்டு பண்ணியது. நிலாவின் பட்டுப்பூச்சிப் போன்ற அழகிலும், அவள் கண்கள் தன் கண்களை அடிக்கடி தொட்டு விட்டு போகும் விதத்தில் கபிலும் கொஞ்சம் ஈர்க்கப்பட்டுத் தான் இருந்தான். ஆனாலும் அவனுடைய மூளையின் சந்தேக வட்டத்தில் சாகர், சாந்தா, ஆர்கே, நிலா அனைவரும் வட்டமிட்டுக்கொண்டிருந்தனர்.   அன்று மாலை அவள் வீடு திரும்பும் போது, சாகர் சில மலர்களைப் பறித்துச் செல்வதை பார்க்கும் கபில், அவரை பின்தொடர ஆரம்பிக்கிறார். சாகர் அந்த மலர்களைத் தன் கேபினில் வைக்கப்பட்டிருந்தப் பாட்டில் தாத்தாவின் படத்திற்கு வைத்து அஞ்சலி செலுத்துவதைக் கண்டு கபில் வியக்கிறான்.; சாகர், கபிலிடம், தான் வேலையில் சேர்ந்த புதிதில் அந்த ஊரில் குடியேறி சுகவாசம் செய்ய பாட்டில் தாத்தா உதவியதாகவும், அதற்காக தான் எப்போதும் அவருக்கு கடமை பட்டிருப்பதாகவும் கூறுகிறார். வேலை நிமித்தமாக அவர் மீது கோப தாபங்களை காட்டியதாகவும் கூறி வருத்தம் கொள்கிறார்..   "தாத்தாவின் மரணத்திற்கு 2 நாட்களுக்கு முன்னர் தான் நிறுவனத்தின் தலைவருக்கு பாட்டிலை மாற்ற வேண்டி கடிதம் எழுதினேன். ஆனால் அதை அனுப்பவில்லை. அவர் செய்த உதவி என்னை தடுத்தது. ஆனால் அவருடைய மரணத்தை நான் சற்றும் எதிர்பார்க்கவில்லை." என்று கூறினார் சாகர். இப்போது கபிலனின் மனத் தராசில் சந்தேகத்தைக் காட்டிலும் மரியாதையே அதிகமாக இருக்கிறது     10 டைரியை படிச்ச எனக்கு தோனினது இது தான். ஒவ்வெருத்தருக்கும் பின்னாடி எவ்வளவு விசயங்கள் ஒளிஞ்சு கிடக்க முடியும்!. இதுக்கு என் வாழ்க்கை மட்டும் உதாரணம் இல்ல போலயிருக்கே... எல்லாருக்குள்ளேயும் பழைய நினைவுகளின் ஓட்டடை இருக்கத் தான் செய்யுது.   நேற்று என் ரகசியத்தை யாருடனோ ரகசியமாய் பகிர்ந்துக் கொண்டேன்...   அது காற்றில் கொஞ்சமாய் கசிந்து விட்டது அது பெருதாகி என் காதுகளின் அருகிலேயே சுற்றிக் கொண்டிருக்கிறது...   அதை விரட்ட நினைத்து காற்றில் கைகளை ஆட்டினேன் அது காற்றில் பெரிதாக கலக்கிறது அது என் சுவாசப்பையில் நுழைந்து என்னை திணறச் செய்கிறது…   அது 'நான் ரகசியம் நான் ரகசியம்' என்று போடும் கூப்பாடு என் மூளையை துளைத்துக் கொண்டிருக்கிறது...     'பாட்டிலை எப்படியாவதுக் கொல்லனும். அந்த இயந்திரங்களுக்கு நடுவுல அந்த பாட்டில் நிக்கிறதைப் பார்த்தா என் உடம்பெல்லாம் பற்றி எரியுது. அந்த இயந்திரத்தோட வாய் திறந்து அப்படியே அவனை முழுங்கிட்டா எப்படி இருக்கும்.. ஹா… ஹா.. ஹா..' டைரியின் உரிமையாளர் இவ்வளவு கொடூரமாக எழுதியிருந்தார்.   என் கைகள் நடுங்கின.. நான் ஒரு நிமிடம் நடுங்கிப் போனேன். விழித்துக் கொண்டான் என்னுள் இருந்த பாரதி. 'அக்னி குஞ்சொன்றுக் கண்டேன்; அதை ஆங்கிடை மீதிலோர் பொந்திடை வைத்தேன்- வெந்துத் தனிந்தது காடு;: அதன் வீரத்தில் மூப்பென்றும் குஞ்சென்றும் உண்டோ"?   அன்று ஆர்கே, ஒரு டைரியுடன் ஏதோ யோசித்த வண்ணம் இருந்தார். அதை கண்ட கபில், 'என்ன ஆர்கே.. ஏதோ பெருசா ப்ளான்லாம் போடுற மாதிரி இருக்கே..' என்று அப்படியே போட்டு வாங்க முயல்கிறார். 'இல்லை கபில்.. கொஞ்சம் வேலை அதிகமாகிடுச்சு.. அதான்.. டைம் டேபிள் போட்டு வொர்க் பண்ண வேண்டி இருக்கு.' என்று இயல்பாக ஆர்கே கூறினான்.   'சரி வாங்க, ஒரு டீ சாப்பிடலாம்.. வந்து உங்க வேலைகளை இன்னும் சுறுசுறுப்பாக செய்வீங்களாம்..' என்று கபில் கூற.. ஆர்கே, 'சரி.. வரேன்..' என்று சொல்லிவிட்டு தன் அலமாரியை பூட்டிவிட்டு அவர்களுடன் வந்தான்.   அலமாரியை ஆர்கே பூட்டியதை கபிலின் சந்தேகத்தை சற்று தூண்டியது. கபில் அன்று மாலை வேளையில் ஆர்கேவின் அலமாரியை 'கொண்டை ஊசி' வைத்துத் திறந்தார். அங்கிருந்த டைரியைத் தன் கேபினுக்கு எடுத்துச் சென்று, யாரும் வருகிறார்களா என்று சுற்றி முற்றிப் பார்த்து விட்டு, அதை மெதுவாகப் பிரிக்கிறார். அப்போது திடீரென அங்கிருக்கும் அலைபேசி சத்தம் எழுப்ப, அதைக் கேட்ட கபில் பயத்தில் திடுக்கிட்டுப் போகிறார்.   அலைபேசியை எடுத்து கபில் தன் காதில் வைக்க, அதில் பேசும் சாகர், கபிலை மீட்டிங்குக்கு வருமாறு அழைப்பு விடுக்கிறார். கபில் அந்த டைரியைக் கீழே வைக்க மனமில்லாமல், வேறுவழியின்றி தன் புத்தகங்களின் நடுவில் அதை வைத்து விட்டு மீட்டிங்கிற்குச் செல்கிறார்.   மீட்டிங் அறையில் குழுமியிருந்த அனைவரும், கபிலிற்காக காத்திருந்தனர்.   கபில் அங்குச் சென்று அமர்ந்ததும், மீட்டிங் துவங்குகிறது. சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக அந்த மீட்டிங் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்க, கபிலிற்கு மனம் முழுக்க அந்த டைரியிலேயே இருந்தது.   மீட்டிங் முடிந்ததும் முதல் வேலையாக டைரியைப் படிக்க ஆவலுடன் தன் இடத்திற்கு விரைந்து செல்கிறார் கபில். அந்த டைரியயை திறந்து படிக்க துவங்கிய கபிலிற்கு ஏமாற்றமே காத்திருந்தது.; தான் எண்ணியது போல் ஆர்கே அதில் எதுவும் எழுதி இருக்கவில்லை. உண்மையிலேயே, வேலை நமித்தமாகச் செய்ய வேண்டிய பட்டியலை தான் அதில் எழுதி வைத்திருந்தான் ஆர்.கே.   அந்த டைரியை எடுத்த இடத்திலேயே வைப்பதற்காக, ஆர்கேவின் கேபின் வழியே நடப்பது போல நோட்டம் விட்டுக் கொண்டேச் செல்கிறார் கபில். அறையின் உள்ளே ஆர்கேவும், சாந்தாவும் பேசிக் கொண்டிருக்கின்றனர். ஆர்கேவின் முகம் வாட்டத்துடன் காணப்பட, சாந்தா ஒரு டைரியை ஆர்கேவிடம் கொடுத்தப் பின், ஆர்கேவின் முகம் மலர்ந்து விடுகிறது, ஆனால் சாந்தாவின் முகத்திற்கு இடம் மாறியிருந்தது அந்த வாட்டம். ஆம்.. ஆர்கேவிடம் சாந்தா கொடுத்தது, அன்று கோவிலில் தன்னுடன் வைத்திருந்த அதே டைரி. அதை படித்து விட்டிருந்தான் சாந்தா. சாந்தாவின் முக வாட்டத்திற்கு இதுதான் காரணம்.   கபிலன் அந்த அறையின் உள்ளேச் சென்று அவர்களைப் பார்த்து பேசத் துவங்கும் போது, கபிலனைப் பார்க்கும் ஆர்கே, தன் கையில் வைத்திருக்கும் அந்த டைரியை டேபிளின் உள்ளே மறைத்து வைக்கிறான்.     11 'எனக்குள் இருந்த அக்னி குஞ்சு ஒளி விட்டு எரியத் தொடங்கியது. தமிழை அவமானப்படுத்தியப் பாட்டில் என் கண் முன் வந்து வந்து போனான். டைரியில் எழுதியிருப்பவைகளை நிஜமாக்கி, அதன் நடப்புகளை கதையாக்க என் மனம் துடிக்கிறது. ஆம்.. தமிழை இழிவுப் படுத்திய உன்னை கொன்று சரித்திரம் படைப்பேன்.   ஹா… ஹா… ஹா… பயமென்னும் பேய்தனை அடித்தோம், காளன் நடு நடுங்க விழித்தோம்.. ஜெயப் பேரிகை கொட்டடா.. கொட்டடா.. மனம் களியாட்டம் ஆடத் துவங்கிவிட்டது.' . எப்பொழுதும் தனது இருச் சக்கர வாகனத்தில் கம்பனிக்கு வரும் கபில், அடுத்த நாள் வண்டியில் அனைவருடனும் சேர்ந்து பயணம் செய்ய முடிவுச் செய்தான். இதனால் கொலைக்கான துப்புக் கிடைக்கும் என்று எண்ணினான். வண்டியில் அனைவரும் உறங்கிக் கொண்டே வந்தனர். ஆனால் சாந்தாவும் நிலாவும் மட்டும் உறங்கவில்லை. ஆர்கே கண்கள் வெறிக்க எதையோ உற்றுப் பார்த்துக் கொண்டு வந்தான். யாரிடமும் பேசவில்லை. கபில் ஆர்கேவிடம் பேச்சுக் கொடுக்க நினைத்த போது நிலா வந்துத் தடுத்தாள்.   'அவர் தூங்கிக்கொண்டிருக்கிறார். அவரை எழுப்பாதீங்க.. அவருக்கு கண்களை திறந்து கொண்டே தூங்கும் பழக்கம்.' புன்னகை தவழ கூறி முடித்தாள் நிலா.   கபிலுக்கு இந்த விசயம் மிகவும் புதியதாக இருந்தது. அப்படியே நிலாவிடம் பேச்சு கொடுக்கத் தொடங்கினார். நிலாவைப் பற்றி, அவளுடைய குடும்பத்தைப் பற்றி அவளுக்கு அழகியப் பெயரை வைத்த பெற்றோர்களைப் பற்றி பேசிக்கொண்டு வந்தார். நிலாவின் சிரிப்பு கபிலை அப்படியே மெய்மறக்கச் செய்தது. ஒரு தேவதையிடம் தான் பேசிக் கொண்டிருப்பதாக உணரந்;தார் கபில்.       12 'தமிழைக் காப்பாற்றுவதற்கான என்னுடைய முதல் முயற்சியில் நான் வெற்றிப் பெற்றேன்.. ஆஹா.. என்னே ஒரு மன நிறைவு. நூறு கவிதைகள் வாசித்ததுப் போன்ற பெருமை என் மனதுக்குள்.. ஆமாம். நான் ஒரு தமிழ் பித்து. தமிழை அவமதித்தவனை.. தமிழ் மட்டும் தான் தெரியுமா என்று தமிழனை அவமதித்தவனைக் கொல்லவும் துணிந்த தமிழ் பித்து.'   இரண்டு நாள் கழித்து சமந்து கம்பனிக்கு வேலைக்கு வந்திருந்தான். அவன் நேரே கபிலனுடைய அறையை நோக்கிச் சென்றான். இப்பொழுது சமந்துவின் முகத்தில் ஒரு  தெளிவு இருந்தது, துணிவு இருந்தது. சற்று நேரம் கழித்து, சாகர் கபிலனின் அறைக்குச் செல்கிறார். அடுத்து சிறிது நேரத்தில், ஆர்கே, சாந்தா மற்றும் நிலாவைவை கபிலனின் அறைக்கு அழைக்கிறார் சாகர்.   சாகர் அனைவருக்கும் 3 அதிர்ச்சியான விசயங்களைச் சொல்கிறார். 'பாட்டில் தாத்தாவின் மரணம் ஒரு விபத்தல்ல, அது ஒரு கொலை.' 'அதை கண்டு பிடிக்க வந்த காவல்துறை நண்பரே கபிலன்.' 'தான் வந்த வேலையை அவர் முடித்துவிட்டார்.'   சில மணி நேரம் கழிந்ததும், தான் குற்றவாளியை கண்டுபிடித்து விட்டதாக சொல்லி அனைவரையும் தன் அறைக்கு வரச் சொல்கிறார் கபில்.   நிலாவின் கையில் விலங்கு மாட்டப்பட்டது. எந்தக் கையைப் பிடித்து மண மேடையில் வலம் வர நினைத்தானோ அந்த கைகளுக்கு அவனே விலங்கு மாட்டினான்.   நிலா உறைந்துப் போனவளாய்.. 'கபில் என்னப் பண்றீங்க..? என்னை விடுங்க..' என்று கூப்பாடுப் போடுகிறாள்.அனைவரும் நடப்பதறியாது வியந்து நின்றனர். கபில் ஒரே வார்த்தையை மட்டும் கூறுகிறார். 'தமிழ் பித்து'..   அதை கேட்ட நிலா, கலங்கிப் போகிறாள். மறு வார்த்தைப் பேசாமல் காவல் துறையின் வண்டியில் ஏறுகிறாள். கபில், தான் கண்டுப் பிடித்த ஆதாரங்களை அனைவர் முன்பும் விளக்கத் துவங்குகிறார்.'மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்த சமந்துகிட்ட நான் மெல்லப் பேச்சுக் கொடுத்தேன். அவன் மேல எனக்கு எந்த சந்தேகமும் இல்லை அப்படிங்குறதை அவனுக்கு புரிய வைச்சு, அவன்கிட்டயிருந்து கொஞ்சம் கொஞ்சமா விசயத்தைக் கறந்தேன். அவனோட கம்ப்யுட்டர் லாக்-இன் (login), பாஸ்வேர்டை (password) வாங்கி அதை செக் பண்னேன். அதுக்கு பிறகு கொலை நடந்த அன்னைக்கு சென்சார் புரோகிராம் இரண்டு முறை மாற்றப்பட்டிருப்பது எனக்குத் தெரியவந்தது. ஆனால் சமந்து, தான் ஒரே ஒரு முறை மட்டும்  தான் அந்த புரோகிராமை மாத்துனேன்னு அடிச்சுச் சொன்னான். அவனோட பாஸ்வேர்ட் வேற யாருக்காவதுத் தெரிய வாய்ப்பு இருக்குதான்னு கண்டு பிடிக்க ட்ரை பண்ணிட்டிருந்தேன். அந்த நேரத்துல, நேத்து முன்தினம் சமந்துவோட கம்ப்யூட்டர்ல எனக்கு ஒரு துப்புக் கிடைச்சுது. ஒரு ப்ளாக் போஸ்ட் (blog post). அழகான தமிழ்ல தெளிவா எழுதப்பட்டிருந்த அந்த போஸ்ட்டை பார்த்ததும், அதை படிக்காமப் போக எனக்கு மனசு வரலை.'   அந்த வலைப்பதிவினைப் படித்து காண்பிக்கிறார் கபில்.   "பாட்டிலை எப்படியாவது கொல்லனும். அந்த இயந்திரங்களுக்கு நடுவுல அந்த பாட்டில் நிக்குறதை பார்த்தா, என் உடம்பெல்லாம் பற்றி எரியுது. அந்த இயந்திரத்தோட வாய் திறந்து அப்படியே அவனை முழுங்கிட்டா எப்படி இருக்கும்! ஹா… ஹா… ஹா… தலை இல்லாத முண்டமா அவன் வலம் வரனும். அதை நான் பார்த்து ரசிக்கனும். நான் துணிந்து விட்டேன். உணரிகளைக் கொண்டு அந்தப் பாட்டிலுக்குப் பாடம் கற்பிக்க என் மனம் துடிக்கிறது.. உணரிகளை செயலிழக்க செய்தேன்.. என்னுடைய செய்கைக்கான பலன் அடுத்த நாளே கிடச்சது.. ஆம்.. தலையில்லாத முண்டமாய் பாட்டில்.. தமிழை காப்பாற்றுவதற்கான என்னுடைய முதல் முயற்சியில் நான் வெற்றி பெற்றேன்.. ஆஹா.. என்னே ஒரு மன நிறைவு.. நூறு கவிதைகள் வாசித்தது போன்ற பெருமை என் மனதுக்குள்.. ஆமாம்.. நான் ஒரு தமிழ் பித்து.. தமிழை அவமதித்தவனை, தமிழ் மட்டும் தான் தெரியுமா என்று தமிழனை அவமதித்தவனைக் கொல்லவும் துணிந்தத் தமிழ் பித்து நிலா.."   'படிக்கும் போது தான் தெரிய வந்தது அது நிலா எழுதிட்டு வரும் வலைப்பதிவுன்னு. நான் உறைஞ்சுப் போய் உட்கார்ந்தேன். நிலாவோடப் பேருல வேறு யாராவது செய்திருக்குற சதியோ அப்படின்னு கூடத் தோனுச்சு. அதனால எல்லாரோட நடவடிக்கைகளையும் ஆராய்ந்தேன்.   ஒவ்வொருவரோட குடும்பம், சொந்த ஊர், முன்பு வேலை செய்த இடம் போன்றவற்றை நிறுவனத்தோட ஃபைல்ஸ்-லயிருந்து எடுத்து தேட ஆரம்பிச்சேன். அந்த வலைப்பதிவுல இருந்தது எல்லாம் நிலாவோட விவரங்களோடு ஒத்து இருந்துச்சு. அதுமட்டுமில்லாம, பஸ்-ல அவகிட்ட பேச்சுக் கொடுக்கும் போது, தமிழைப் பத்தி பேசும் போதுலாம் அவளோட முகத்தில கட்டுக்கடங்காமல் ஏற்படுற மாறுதல்களைக் கவனிச்சேன். கொஞ்சம் திகைச்சுப் போனேன். அப்புறம் சமந்து, தன்னோட கணினியை அடிக்கடி பயன்படுத்துறது நிலா-தான் அப்படின்னு சொன்னான்.  அவன் சொன்ன மாதிரியே, நிலா அன்னைக்கும் சமந்துவோட கணினியில அமர்ந்து வேலை பார்த்துட்டிருந்தாள். அவளோட இயல்பா பேசுறது போல பேசிகிட்டேப் பார்த்தப்போ, அவள் தன்னோட வலைப்பதிவில் பதிவேற்றம் செய்து கொண்டிருப்பதைப் பார்த்தேன். அது நான் அன்னைக்கு பார்த்த அதே வலைப்பதிவே தான். மனம் நொந்து போனேன், இவளா கொலை செய்திருக்கா அப்படின்னு. சைபர் க்ரைமின் உதவியோட அந்த வலைப்பதிவோட உரிமையாளர் நிலா தான் அப்படிங்குறதுக்கான ஆதாரங்களை சேகரிச்சு, பிடிவாரன்டோட இங்கு வந்துச் சேர்ந்தேன்.' இவ்வாறு கூறிமுடித்தான் கபில்.     எல்லோர் முகத்திலும் அதிர்ச்சி இருந்தாலும், தெளிவுக் கிடைத்தது. கொலையைச் செய்துவிட்டது ஆர்கேவா என்று தன் நண்பனை நினைத்துக் கவலையுற்றிருந்தான் சாந்தா. இப்பொழுது ஆர்.கேவிடம் மன்னிப்புக் கேட்டுக் கட்டி அணைக்க வேண்டும் போலிருந்தது அவனுக்கு. சமந்துவிற்கு தன் தலை தப்பிய சந்தோசம். ஆர்கே அன்றே முடிவெடுத்தான் டைரி எழுதுவதைக் கைவிட வேண்டும் என்று.     நிலா கைது செய்யப்பட்டுச் சிறையில் அடைக்கப்பட்டாள். சிறையில் அடைக்கப்பட்ட நிலா, விசாரணைக்குப் பின்னர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைக்கு உள்ளானாள். பின்னர் அவளுடைய தண்டனைக் காலத்தில், அவள் புத்தகம் எழுதினாள்.. ஆம்.. கொலை பற்றிய புத்தகம் . கொலை பற்றிய புத்தகம்   தமிழே.. சில நாட்கள் உன் பிரிவால் தேய்கிறேன் சில நாட்கள் உன் நினைவில் செழிக்கிறேன் உன்னால் ... என் வாழ்வில் ஏற்பட்டது நீங்காத கறையானால்... நானும் இப்பூமியில் நிலா.... 'எனக்கு நிலாவென்று ஏன் பெயர் வைத்தார்களோத் தெரியவில்லை, என் மனதின் ஒரு இருண்ட பக்கம் இரவு தோறும் விழித்துக் கொள்கிறது. நேற்று இரவு ஒருக் கனவு. அதில் இரு கைகள் கணினியில் தட்டெழுத்துகளைப் படபடவென்றுத் தட்டுகின்றன.. ஒரு கடவுச்சொல் என் கண் முன்னால் ஆட்டம் போடுகிறது. அதைத் தொடர்ந்து ஒரு பெரிய சிரிப்பு.. இரத்த வெள்ளம்.. ஓட்டம், முகத்தில் வாட்டம்.. நான் திடுக்கென்று எழுந்தேன்.. அடுத்த நாள் காலையில் நான் அந்தக் கடவுச்சொல்லை சமந்துவின் கணினியில் தட்டிப் பார்க்கிறேன். ஆம் நேற்று சமந்துவின் கைகள் தட்டெழுத்தில் நகர்வதை என் கண்கள் வாங்கி மூளையில் பதிந்துவிட்டது போலும். என் அறிவை மெச்சிக் கொண்டேன். ஆனால் மனதில் ஏதோ ஒருக் குறுகுறுப்பு.. உடனே வெளியேறிவிட்டேன்.. ஆர்கேவின் டைரி என் கைகளில் அகப்பட்டது. அதை படிக்காமல் இருந்திருக்கலாமே. எதனால் அவருக்கும் பாட்டிலுக்கும் இருந்த பனிபோர், தமிழ்போர் பற்றி நான் ஏன் அறிய வேண்டும்? படித்திருந்தாலும், அதை அலட்சியப்படுத்தியிருக்கலாமே.. ஏன் செய்யவில்லை..? அந்த உணரிகளை போலத்தான் நானும். என் மனம் பிறருடைய சொற்களால் மாறி மாறி இயங்குகிறது. அது ஏற்படுத்தும் உணர்வுகளால் நான் இந்த உணர்ச்சியற்ற கொலையைச் செய்தேன்.   இப்படிக்கு-உணரி நிலா.