[] 1. Cover 2. Table of contents இலங்கைக் காட்சிகள் இலங்கைக் காட்சிகள்   கி. வா. ஜகந்நாதன்     மின்னூல் வெளியீடு : FreeTamilEbooks.com   உரிமை : CC0 கிரியேட்டிவ் காமன்ஸ். எல்லாரும் படிக்கலாம், பகிரலாம்.   அட்டைப்படம் - லெனின் குருசாமி - guruleninn@gmail.com   மின்னூலாக்கம் - ஐஸ்வர்யா லெனின் - aishushanmugam09@gmail.com   This book was produced using pandoc   பதிவிறக்கம் செய்ய - http://FreeTamilEbooks.com/ebooks/srilanka_views மின்னூல் வெளியீட்டாளர்: http://freetamilebooks.com அட்டைப்படம்: லெனின் குருசாமி - guruleninn@gmail.com மின்னூலாக்கம்: ஐஸ்வர்யா லெனின் - aishushanmugam09@gmail.com மின்னூலாக்க செயற்திட்டம்: கணியம் அறக்கட்டளை - kaniyam.com/foundation Ebook Publisher: http://freetamilebooks.com Cover Image: Lenin Gurusamy - guruleninn@gmail.com Ebook Creation: Iswarya Lenin - aishushanmugam09@gmail.com Ebook Project: Kaniyam Foundation - kaniyam.com/foundation பதிவிறக்கம் செய்ய - http://freetamilebooks.com/ebooks/srilanka_views This Book was produced using LaTeX + Pandoc இந்த மின்னூலைப் பற்றி உங்களுக்கு இம்மின்னூல், இணைய நூலகமான, விக்கிமூலத்தில் இருந்து கிடைத்துள்ளது1 இந்த இணைய நூலகம் தன்னார்வலர்களால் வளருகிறது. விக்கிமூலம் பதிய தன்னார்வலர்களை வரவேற்கிறது. தாங்களும் விக்கிமூலத்தில் இணைந்து மேலும் பல மின்னூல்களை அனைவரும் படிக்குமாறு செய்யலாம். மிகுந்த அக்கறையுடன் மெய்ப்பு செய்தாலும், மின்னூலில் பிழை ஏதேனும் இருந்தால் தயக்கம் இல்லாமல், விக்கிமூலத்தில் இம்மின்னூலின் பேச்சு பக்கத்தில் தெரிவிக்கலாம் அல்லது பிழைகளை நீங்களே கூட சரி செய்யலாம். இப்படைப்பாக்கம், கட்டற்ற உரிமங்களோடு (பொதுகள /குனு -Commons /GNU FDL )2 [3] (http://www.gnu.org/copyleft/fdl.html) இலவசமாக அளிக்கப்படுகிறது. எனவே, இந்த உரையை நீங்கள் மற்றவரோடு பகிரலாம்; மாற்றி மேம்படுத்தலாம்; வணிக நோக்கத்தோடும், வணிக நோக்கமின்றியும் பயன்படுத்தலாம் இம்மின்னூல் சாத்தியமாவதற்கு பங்களித்தவர்கள் பின்வருமாறு: - Arularasan. G - KSK TRY - Ssriram mt - J.shobia - Fathima Shaila - Girijaanand - Balu1967 - பிரபாகரன் ம வி - S.PREMAMURUGAN - Victory-King - Yaazheesan - Vmayil - Info-farmer - Balajijagadesh - HoboJones - Be..anyone - Fleshgrinder - Patricknoddy-commonswiki - Mecredis - Rocket000 - Xato உலகளாவிய பொதுக் கள உரிமம் (CC0 1.0) இது சட்ட ஏற்புடைய உரிமத்தின் சுருக்கம் மட்டுமே. முழு உரையை https://creativecommons.org/publicdomain/zero/1.0/legalcode என்ற முகவரியில் காணலாம். பதிப்புரிமை அற்றது இந்த ஆக்கத்துடன் தொடர்புடையவர்கள், உலகளளாவிய பொதுப் பயன்பாட்டுக்கு என பதிப்புரிமைச் சட்டத்துக்கு உட்பட்டு, தங்கள் அனைத்துப் பதிப்புரிமைகளையும் விடுவித்துள்ளனர். நீங்கள் இவ்வாக்கத்தைப் படியெடுக்கலாம்; மேம்படுத்தலாம்; பகிரலாம்; வேறு வடிவமாக மாற்றலாம்; வணிகப் பயன்களும் அடையலாம். இவற்றுக்கு நீங்கள் ஒப்புதல் ஏதும் கோரத் தேவையில்லை. இது, உலகத் தமிழ் விக்கியூடகச் சமூகமும் ( https://ta.wikisource.org ), தமிழ் இணையக் கல்விக் கழகமும் ( http://tamilvu.org ) இணைந்த கூட்டுமுயற்சியில், பதிவேற்றிய நூல்களில் ஒன்று. இக்கூட்டு முயற்சியைப் பற்றி, https://ta.wikisource.org/s/4kx என்ற முகவரியில் விரிவாகக் காணலாம். Universal (CC0 1.0) Public Domain Dedication This is a human readable summary of the legal code found at https://creativecommons.org/publicdomain/zero/1.0/legalcode No Copyright The person who associated a work with this deed has dedicated the work to the public domain by waiving all of his or her rights to the work worldwide under copyright law including all related and neighboring rights, to the extent allowed by law. You can copy, modify, distribute and perform the work even for commercial purposes, all without asking permission. This book is uploaded as part of the collaboration between Global Tamil Wikimedia Community ( https://ta.wikisource.org ) and Tamil Virtual Academy ( http://tamilvu.org ). More details about this collaboration can be found at https://ta.wikisource.org/s/4kx. முகவுரை முதல் முதலாக நான் இலங்கைக்கு 1951-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் சென்று 18 நாட்கள் தங்கினேன். தலாது ஒயாவில் உள்ள திரு கணேஷ் என்னும் அன்பர் கண்டித் தமிழ் விழாவில் கலந்து கொள்ள வேண்டுமென்று அழைத்தார். அதனல் சென்றேன். தமிழ் விழா நடைபெற்ற பிறகு கிட்டத்தட்ட ஆயிரம் மைல் என்னைப் பல இடங்களுக்கு அழைத்துச் சென்றார், அது முதல் அவர் எனக்குத் தம்பி ஆகிவிட்டார். அவருடைய அன்பே இலங்கைக் காட்சிகளைக் காணச் செய்தது. பல இடங்களே நான் கண்டேன். அப்போது நான் கண்டவற்றைப் பற்றிய கட்டுரைகளேத் தொடர்ச்சியாகக் கலைமகளில் எழுதி வந்தேன். கதிர்காமம் சென்ற வரையிலும் எழுதினேன். அப்பால் எழுதவில்லை. கதிர்காமத்திலிருந்து கேரே கொழும்பு வந்து ஒரு நாள் தங்கினேன். கொழும்பிலிருந்து யாழ்ப்பாணத்தில் ஒரு நாள் இருந்தேன். அந்த ஒரு நாளில் பல இடங்களைப் பார்த்தேன். அந்த யாத்திரைக்குப் பின் மூன்று முறை இலங்கைக்குப் போய் வந்திருக்கிறேன். யாழ்ப்பாணப் பகுதிகளையும் அதைச் சார்ந்த தீவுகளையும் பார்த்தேன். யாழ்ப்பாணத்துக் கென்றே விரிந்த வரலாறு உண்டு. இலங்கையின் வடக்கே பல தீவுகள் சூழ அரசி போல இலங்குவது யாழ்ப்பாணம், தமிழ் மக்களே வாழ்ந்துவரும் பகுதி, தமிழ் மொழியையும் கலைகளையும் பாதுகாத்து விளங்கும் இடம். அங்கு வாழும் தமிழர்களுடைய தமிழன்பையும் சிவ பக்தியையும் யார் கண்டாலும் வியக்காமல், இருக்கமாட்டார்கள். தமிழ் காட்டில் உள்ள கோயில்களைப் போன்ற விரிவான அமைப்பையுடைய ஆலயங்கள் அங்கே இராவிட்டாலும் பல தலங்கள் இருக்கின்றன. புறப்பாடு மரகதத் தீவு!—எத்தனை அழகான பெயர்! காவியங்களிலும் நாவல்களிலும் பவளத் தீவுகளையும் ரத்தினத் தீவுகளையும் பற்றிப் படித்திருக்கிறேன். அப்படி உண்மையாகவே தீவுகள் இருக்கின்றனவோ, இல்லையோ தெரியாது. ஆனால் உண்மையிலேயே மரகதத் தீவை நான் கண்டேன். எங்கே பார்த்தாலும் இயற்கை எழில் குலுங்க, மலையும் அருவியும், பொழிலும் காடும், மரமும் கொடியும், மலரும் இலையும் செறிந்து பரந்து எங்கு நோக்கினும் கண்ணைக் கவ்வும் பேரழகோடு காட்சி அளிப்பதைக் கண்டேன். காவியங்களிலே வருணித்திருக்கும் காட்சிகளையும், சங்க நூல்களிலே நல்லிசைப் புலவர்கள் தீந்தமிழ்ச் சொற்களால் கோலம் செய்திருக்கும் குறிஞ்சி நிலத் தோற்றங்களையும் கண்ணாலே கண்டேன். மரகதத் தீவு என்ற அழகான பெயர் இலங்கைக்கு உரியது. “எங்கள் மரகதத் தீவுக்கு வாருங்கள். இங்குள்ள இயற்கை யழகைப் பருக வாருங்கள்” என்று ஆசைகாட்டி அழைத்தார் அன்பர் கணேஷ். “கண்டியில் ஒரு சிறிய தமிழ் விழா நடத்தப் போகிறோம். அதோடு ஒரு தமிழ்ச் சங்கத்தையும் நிறுவப்போகிறோம். பாரதியார் திருநாளும் எழுத்தாளர் சங்க அங்குரார்ப்பணமும் நிகழ்த்த நினைத்திருக்கிறோம். நீங்கள் வந்து தலைமை வகித்துச் சிறப்பிக்கவேண்டும்” என்று அவர் எழுதினார். இலங்கையில் யாழ்ப்பாணத்தில் சென்ற ஆண்டு ஏப்ரல் மாதம் தமிழ் விழா மிகமிகச் சிறப்பாக நடந்தது. இது எல்லோருக்கும் தெரிந்திருக்கும். தமிழ் வளர்ச்சிக் கழகத்தின் ஆதரவில் நடைபெற்ற அந்தப் பெரிய விழாவுக்குப் பல்லாயிரக்கணக்கில் தமிழ் மக்கள் கூடினார்கள். இலங்கையின் பல பகுதிகளிலிருந்து தமிழ் ஆர்வம் மிக்க அன்பர்கள் வந்திருந்தார்கள். தமிழ் நாட்டிலிருந்தும் பலர் போயிருந்தார்கள். இலங்கையில் வாழும் தமிழர்களுக்கு ஒரு புதிய ஊக்கம் அந்தத் தமிழ் விழாவினால் உண்டாகிவிட்டது. இயல்பாகவே அவர்களுக்குத் தமிழன்பு அதிகம். இப்போது அது பன்மடங்கு பெருகி வளர்ந்தது. அதனுடைய பயனாகவே கண்டியில் செப்டம்பர் மாதத்தில் ஒரு சிறிய தமிழ் விழாவை நடத்த வேண்டும் என்ற ஆசை அந்தப் பகுதியில் உள்ள தமிழர்களுக்கு உண்டாயிற்று. யாழ்ப்பாணத்தில் நடந்த தமிழ் விழாவுக்கு நான் போகவில்லை. பல காலமாக அன்பர்கள் இலங்கைக்கு வரவேண்டுமென்று அழைத்திருந்தும் சந்தர்ப்பம் கூடவில்லை. ஆனால் இலங்கைக்கும் தமிழ் நாட்டுக்கும் உள்ள பல வகைத் தொடர்புகளை இலக்கியத்தின் வாயிலாகவும் சரித்திரத்தின் வழியாகவும் தெரிந்து கொண்டிருந்தவன்தானே? இராமாயணத்தில் காணும் இலங்கை, ஆற்றலுக்கும் செல்வத்துக்கும் உறைவிடம். மணிமேகலையில் இலங்கா தீபம் வருகிறது. மணிமேகலை இலங்கைக்குச் சென்று அங்குள்ள பல இடங்களைப் பார்த்தாளென்று தமிழ்க் காவியம் சொல்லுகிறது. சோழ பாண்டிய மன்னர்கள் இலங்கைக்குச் சென்றதும் இலங்கை யரசர்களுக்கு உதவியதும் ஆகிய பல செய்திகளைச் சரித்திரம் சொல்லுகிறது. புலவர்கள் பலர் இலங்கைக்குச் சென்று பரிசு பெற்று வந்த செய்திகளைப் பல தனிப்பாடல்கள் தெரிவிக்கின்றன. இன்னும் பல பல நினைவுகள் இலங்கை என்ற போதே உள்ளத்தே தோன்றின. செப்டம்பர் மாதம் நடக்கப்போகும் கூட்டத்துக்கு ஜூலை மாதமே ஏற்பாடு செய்யத் தொடங்கிவிட்டார், நண்பர். இலங்கை, தமிழ் நாட்டுக்கு மிகவும் சமீபத்தில் இருக்கிறது. தமிழ் நாட்டுக்கும் இலங்கைக்கும் 16 மைல் தூரந்தான். அதைக் கடக்கக் கப்பலும் வான விமானமும் இருக்கின்றன. ஆனாலும் இலங்கைக்கு நினைத்தவுடன் போய்விட முடியாது. ஆயிர மைலுக்கு அப்பாலுள்ள டில்லிக்குப் போக நினைத்தால் அடுத்தபடி புறப்படும் விமானத்தில் ஏறிப் போய்விடலாம். இலங்கை டில்லியைவிட நமக்கு எவ்வளவோ பக்கத்தில்தான் இருக்கிறது. ஆலுைம் அது தூரத்தில் இருக்கிறது. எளிதிலே நினைத்தவுடன் போகும்படியான நிலையில் இல்லை. காரணம், இலங்கை நமக்கு அந்நிய நாடு. இன்று இந்தியா சுதந்தரம் பெற்றிருக்கிறது. அப்படியே இலங்கையும் சுதந்தரம் பெற்று விட்டது. உலகம் முழுவதும் இந்தியாவையும் இலங்கையையும் ஒன்றுகவே ஜனங்கள் எண்ணுகிருர்கள். நாம்கூட, சமயத் தொடர்பாலும் பழக்கவழக்க ஒற்றுமையாலும் இலங்கையும் இந்தியாவும் சொந்தமுள்ளன என்று எண்ணுகிறேம். ஆபிரிக்காவையும் சீனவையும் ஆஸ்திரேலியாவையும் நினைக்கும்போது வேற்று நாடாகவே நினைக்கிருேம். நேற்றுவரைக்கும் நம்மோடு சேர்ந்திருந்த பர்மாவைக்கூட வேற்று நாடென்றே நினைக்கிறோம். ஆனால் இலங்கையை நினைக்கும்போது அத்தகைய நினைவு வருவதில்லை. அக்கா தங்கைகளின் வீடாகவே கருதுகிறோம். இந்தியாவிலிருந்து இலங்கைக்கு முன் காலத்தில் ஆயிரக்கணக்கான கூலிகள் போனார்கள். இங்கே தொழில் செய்ய வகையில்லாமல் அல்லற்பட்ட ஏழைகளெல்லாம் இலங்கைக்குப் போனார்கள். இலங்கையென்று சொல்வதில்லை. கண்டி தேசம் என்றுதான் சொல்வார்கள். கங்காணிமார்கள் மூலம் கண்டிக்குப் போனால் பிழைத்துக்கொள்ளலாம் என்ற எண்ணம் பரவியிருந்தது. கங்காணிமார்களும் எப்படியாவது இந்தியத் தொழிலாளர்களை இலங்கைக்குக் கொண்டு போவதில் கண்ணும் கருத்துமாக இருந்தார்கள். இலங்கையில் உள்ள தேயிலைத் தோட்டங்கள் இந்தியத் தொழிலாளிகள் வடித்த வேர்வையில் வளம் பெற்றன. அந்தக் காலத்தில் வெள்ளைக்கார முதலாளிகள் தோட்டங்களுக்கு உடையவர்களாக இருந்தார்கள். இந்தியத் தொழிலாளர்கள் நன்றாக வேலை செய்வதைக் கண்டவர்கள் அவர்கள். ஆகையால் எத்தனை பேர் வந்தாலும் இலங்கைத் தோட்டங்களில் இடம் இருந்தது. கப்பலிலே நூற்றுக்கணக்காகத் தொழிலாளர் போனார்கள். கண்டிக்கும் காதலுக்குங்கூடச் சம்பந்தம் உண்டு. சங்ககால நூல்களில் வரும் காதற் காட்சிகள் பல. ஒரு காதலன் தன் மனத்துக்கு உவந்த மங்கையைக் காதலித்து அவளை மணம் செய்துகொள்ள முயல்வான். அவளுடைய பெற்றோர்கள் அந்த மணத்துக்கு இசையமாட்டார்கள் என்று தெரிந்தால் காதலன் தன் காதலியை ஒருவரும் அறியாமல் அழைத்துக் கொண்டு போய்விடுவான். அதற்கு உடன் போக்கு என்று பெயர் வைத்திருக்கிறார்கள். காதலனுடன் காதலி பிறர் அறியாமல் போய்விடுவதனால் அந்தப் பெயர் வந்தது. தமிழ் நாட்டில் தொழில் செய்து வாழும் மக்களிடத்தில் காதல் வளரக் கண்டி துணை செய்தது. ஒருவன் தான் காதலித்த பெண்ணை மணம் செய்து கொண்டு வாழ முடியாது என்று தெரிந்தால் அதற்காக அவன் கவலைப்படுவதில்லை. கண்டியிலுள்ள தேயிலைத் தோட்டம் அவனை வா வா என்று அழைக்கும். கங்காணி அவனுக்குத் தூபம் போடுவான். மூன்றாம் பேருக்குத் தெரியாமல் அவன் தன் காதலியை அழைத்துக்கொண்டு கப்பலேறிப் போய்விடுவான். இப்படி ‘ஓடிப்போன’ பறவைகளுக்கு இலங்கை இடம் அளித்திருக்கிறது. இதெல்லாம் பழைய கதை. ஆனால் இன்றும் இலங்கைக்கும் தமிழ் நாட்டுக்கும் உள்ள இணைப்பை இறுக வைத்திருப்பதற்கு இரண்டு காரணங்கள் உண்டு. ஒன்று தமிழ்: மற்றொன்று கதிர்காம வேலவன். கதிர்காமத்துக்கு இந்த நாட்டிலிருந்து அடிக்கடி பக்தர்கள் போய்வருகிறார்கள். மிகப் பழங்கால முதற்கொண்டே கதிர்காம யாத்திரை செய்வதைத் தமிழ்நாட்டு அன்பர்கள் விரும்பினர்கள். கதிர்காமத்தைப்பற்றி அதிசயமும் அற்புதமும் நிறைந்த செய்திகள் தமிழ்நாட்டில் பரவின. இவ்வளவு வகையில் நெருக்கம் இருந்தாலும் இந்தியாவும் இலங்கையும் வெவ்வேறு நாடுகள். ஆதலால் அமெரிக்காவுக்குப் போவதற்கு என்ன என்ன முன் ஏற்பாடுகளை அரசாங்கத்தின் மூலம் செய்ய வேண்டுமோ அந்த ஏற்பாடுகளை இலங்கை போவதற்கும் செய்யவேண்டும். இந்தியாவிலிருந்து இலங்கைக்குப் போவதற்கு முதலில் இந்திய அரசாங்கத்தின் பாஸ்போர்ட்டு வாங்க வேண்டும். இந்தியாவை விட்டு வெளியேறுவதற்கு உரிய அநுமதிச் சீட்டுத் தான் ‘பாஸ்போர்ட்டு’. ’பாரதநாட்டின் ஜனாதிபதியின் உத்தரவுப்படி, அந்த அநுமதி நமக்கு அளிக்கப்படும். போலீஸ் கமிஷனர் காரியாலயத்துக்கு முதலில் விண்ணப்பம் புறப்பாடு போட்டு அவர்களுடைய விசாரணைக்கு உட்படவேண்டும். நம்முடைய சுய சரித்திரம் முழுவதையும் அவர்களுக்குச் சொல்ல வேண்டி வரும். எங்கே பிறந்தோம், தகப்பனர் எந்த ஊரில் இருந்தார், எங்கே வாசித்தோம், என்ன என்ன வேலைகள் செய்தோம், என்ன என்ன இயக்கங்களில் கலந்துகொண்டோம் என்பனபோன்ற பல கேள்விகளுக்குப் பதில் அளிக்க வேண்டி வரும். நாம் படித்த பள்ளிக்கூடங்களையும், வாங்கின அடிகளையும், செய்த விஷமங்களையும் பெற்ற வெற்றி தோல்விகளையும் சாமான்யமாக நாம் எங்கே நினைந்து பார்க்கப்போகிருேம் ! நாம் நம்முடைய சுய சரித்திரத்தை எழுதுவதாக இருந்தால் அவற்றை நினைந்து பார்க்கச் சந்தர்ப்பம் வரும். ஒவ்வொரு நாளும் அடுத்த நாளைப்பற்றிய கவலை முன் வந்து பயமுறுத்திக் கொண்டிருக்கும்போது போன நாளைப்பற்றி நின்று நினைத்துப் பார்க்கச் சமயம் ஏது? ஆகவே சுய சரித்திரம் எழுதினல் அவற்றை நினைத்துப் பார்க்கும் அவசியம் நேரும். எல்லோருமே சுய சரித்திரம் எழுதிவிட முடியுமா? மகாத்மா காந்தி எழுதலாம் ; ஜவாஹர்லால் எழுதலாம்; மகாமகோபாத்தியாய டாக்டர் ஐயரவர்கள் எழுதிலாம். அவை காவியங்களைப்போல ஜனங்களுக்குச் சுவையையும் நன்மையையும் உண்டாக்கும். நாம் எழுதினால் திருப்பித் திருப்பி நாமே வாசித்து மகிழ வேண்டியதுதான். இலங்கைக்குப் போகப் பாஸ்போர்ட்டு வேண்டுமானால் கொஞ்சம் சுயசரித்திரம் எழுதும் மனோபாவம் வரவேண்டும். அப்போதுதான் கமிஷனர் காரியாலயத்தில் கேட்கும் கேள்விகளுக்குச் சுவாரசியமாகப் பதில் அளிக்க முடியும். இந்தக் கட்டுப்பாடுகளெல்லாம் எதற்காக வைத்திருக்கிருர்கள்? இந்தியாவில் மாத்திரம் இப்படி என்பதில்லை. எந்தத் தேசமானுலும் சரி, அதிலிருந்து அயல்நாட்டுக்குப் போக வேண்டுமானால் இந்தமாதிரி கட்டுப்பாடுகள் உண்டு. அபாயமில்லாத மக்கள் அயல் நாட்டுக்குப் போய் வருவதில் தவறு ஒன்றும் இல்லை. ஆனால் எத்தனையோ வகைகளில் அபாயத்தை உண்டாக்கும் பேர்வழிகள் இருக்கிறார்கள். வரியில்லாமல் சாமான்களைக் கடத்துவது, அரசாங்க விரோதமான காரியங்களைச் செய்து விட்டு அயல்நாட்டுக்கு ஓடிவிடுவது, அயல் நாட்டினர் இங்கே வந்து எதையாவது குற்றத்தைச் செய்துவிட்டு நழுவிவிடுவது என்பவை போலப் பல வகைகளில் இரண்டு நாடுகளுக்கும் நஷ்டத்தையும் கஷ்டத்தையும் உண்டாக்கும் காரியங்கள் உண்டு. அவற்றில் ஈடுபடுபவர்களைத் தெரிந்துகொள்ளவும் தடை செய்யவுமே இத்தகைய ஏற்பாடுகளை விதித்திருக்கிருர்கள். போலீஸ் கமிஷனர் காரியாலயத்தில் போய்க் கேள்விகளுக்குப் பதில் அளிக்கிறபோது இந்தச் சமாதானம் பயன்படுகிறதா ? எரிச்சல்தான் உண்டாகிறது. விண்ணப்பத்தைப் போட்டுவிட்டு, நம்மைத் தேடிக்கொண்டு வந்து விசாரித்துவிட்டுப் போகட்டும் என்று இருந்தால், ’சிவப்பு நாடா’வின் சுழலுக்குள் அந்த விண்ணப்பம் சிக்கிக்கொள்ளும். அப்புறம் நாம் போகவேண்டிய வேலையை மாசக் கணக்காக ஒத்திப் போட்டுக்கொண்டே இருக்க வேண்டியதுதான். நேரிலே சென்று ஒரு காரியத்தைச் சாதித்துக் கொள்வதில் சிறிது அலுப்பு இருந்தாலும், அதில் அனுகூலம் உண்டென்பதை நான் அனுபவத்தில் உணர்ந்தேன். கமிஷனருக்கு விண்ணப்பத்தை அனுப்பிவிட்டு, நானே ஒரு நாள், “விசாரியுங்கள்” என்று சொல்லிக்கொண்டு போய் நின்றேன். நல்ல வேளை, அங்கே இந்த விசாரணையை நடத்தும் அன்பர் நல்லவராக இருந்தார். ஆசனம் அளித்து உட்காரச் செய்து பேசினர். அவர் உட்காரச் சொன்னவுடனே நான் இலங்கைப் பிரயாணத்தில் பாதி தூரம் சென்றதுபோலவே சந்தோஷப்பட்டேன். அவர் என்னைக் கேள்வி கேட்க ஆரம்பித்தார். இரண்டு கேள்விகளுக்குப் பதில் சொன்னேன். அதற்குள் அவருக்கு வேறு வேலை வந்து விட்டது. அதைக் கவனித்தார். மறுபடியும் இரண்டு கேள்விகள் கேட்டார். அப்புறம் எங்கோ வெளியிலே போய்விட்டு வந்தார். இந்தமாதிரி விசாரணை நடந்தால் எங்கள் வினா விடைப் படலம், மாதப் பத்திரிகையில் வரும் தொடர்கதைபோல, தொடரும், தொடரும் என்று பல தடவை போடவேண்டியிருக்குமே என்ற பயம் எனக்கு உண்டாயிற்று. “உங்களுக்கு என்ன என்ன செய்திகள் வேண்டுமோ, அவற்றையெல்லாம் நானே எழுதித் தந்துவிடுகிறேன்; அதை நீங்கள் பாருங்கள்; மேலும் ஏதாவது விவரம் வேண்டுமானுல் பிறகு நான் சொல்கிறேன்” என்றேன். அந்த நண்பர் ஒப்புக்கொண்டார். நான் எழுத ஆரம்பித்தேன். மூன்று நீண்ட பக்கங்கள் எழுதினேன், அதற்குள் அந்த அன்பர் வேறு காரியம் பார்க்கப் போயிருந்தார். நான் என் சரித்திரச் சுருக்கத்தை எழுதினேன். ‘இலங்கையில் பணம் சம்பாதிக்கும் நோக்கம் ஒன்றும் இல்லை’ என்பதை ஞாபகப்படுத்திக்கொண்டு எழுதினேன். அப்படி எழுதுவது அவசியம் என்று யாரோ அன்பர் சொல்லியிருந்தார். அந்த ஞாபகம் இப்போது சமயத்தில் உதவியது. அந்த மூன்று பக்கங்களையும் எழுதிவிட்டு ஒரு முறை திருப்பிப் படித்தேன். ‘அடடா! நம்முடைய சுய சரித்திரத்துக்கு இதுவே கருவாக அமையும் போல் இருக்கிறதே!’ என்று எண்ணினேன். நான் என்றைக்காவது சுய சரித்திரம் எழுதுவதாக இருந்தால் இந்த மூன்று பக்கங்களும் அப்போது மிகவும் உபயோகப்படும். ஆனால் அவை கிடைக்க வேண்டுமே போலீஸ் கமிஷனர் காரியாலயத்துச் சுரங்கத்திலோ, குப்பைக் கூடையிலோ அல்லவா அது போய்ச் சேர்ந்திருக்கும்? கிடக்கட்டும், இப்போதைக்கு அந்தக் கவலை இல்லை. என் சுய புராணத்தை எழுதி வைத்துக்கொண்டு காத்திருந்தேன். அங்கே நடைபெறும் அழகான சம்பாஷணைகளையும் வேலைகளையும் கவனிக்கும் சந்தர்ப்பம் எனக்குக் கிடைத்தது. பாஸ்போர்ட்டுக்காக மாசக்கணக்கில் காத்திருக்கும் கனவான்கள் சிலர் உண்டு என்று தெரிந்துகொண்டேன், அரசியல் காரணங்களுக்காகப் பாஸ்போர்ட்டுக் கொடுக்காத வீரர்கள் சிலர் உண்டு என்பதையும் அறிந்தேன். அடி தடிச் சண்டை, அரசியல் பிரசங்கம், கூட்டத்தில் குழப்பம், ஒலிபெருக்கி வைக்க அநுமதி பெருமல் வைத்துப் பேசின விவகாரம், 293 செய்யாத குற்றம், 925 செய்யாத வேலை - இப்படி அந்த இடத்துக்கே உரிய பல ரகமான செய்திகள் காதில் விழுந்தன. எவ்வளவோ விஷயங்கள் எனக்குப் புரியவே இல்லை. போலீஸ் மணம் மணக்கும் அந்தச் சூழலில் உட்கார்ந்திருந்தேன். வேலையாகப் போயிருந்த அன்பர் வந்தார். அவரிடம் என் சுயபுராணத்தை நீட்டினேன். “நீங்கள் எம். ஏ. பட்டம் பெற்றவர்களா?” என்று கேட்டார். “ஆம்” என்றேன். “எந்தக் காலேஜில் படித்தீர்கள்?” “காலேஜில் படிக்காத எம். ஏ.” அவருக்குச் சந்தேகம் உண்டாயிற்றோ, வியப்பு ஏற்பட்டதோ, எனக்குத் திட்டமாகத் தெரியவில்லை. தனியாகப் படித்துப் பட்டம் பெற்ற கதையைக் கொஞ்சம் விளக்கினேன். அந்த மூன்று பக்கங்களையும் படிக்க அவருக்குப் பொறுமை இல்லை; சில கேள்விகள் கேட்டார். அவருக்கு அது பழக்கம். நான், “எல்லாம் அதில் எழுதியிருக்கிறேன்” என்றேன். இது எனக்குப் பழக்கம். ஏதோ பேருக்குச் சில புதிய கேள்விகள் கேட்டார். “சொத்து ஏதாவது உண்டா? நிலம் உண்டா? வீடு உண்டா?” என்றெல்லாம் கேட்டார். ‘ஆகா! எத்தனை அக்கறை இவர்களுக்கு நம்மைப்பற்றி!’ என்று எண்ணினன். கடைசியில், “நீங்கள் போகலாம்” என்றார். “பாஸ்போர்ட்டு வேண்டுமே!” என்றேன். “உங்கள் விலாசத்துக்கு வரும்” என்று சொன்னர்; என் நன்றியறிவைத் தெரிவித்துக்கொண்டு புறப்பட்டேன். பகல் 11-30 மணிக்குப் போனவன் மாலை 4.30 மணிக்கு அங்கிருந்து மீண்டேன். இதைப்பற்றிச் சில நண்பர்களிடம் சொன்னபோது அவர்கள், “நீங்கள் அதிருஷ்டசாலி. இதற்குள்விட்டார்களே!”என்றார்கள். பாஸ்போர்ட்டு வாங்கினால் மட்டும் போதாது. விஸா என்ற ஒன்று வேறு வாங்க வேண்டும். பாஸ்போர்ட்டு இங்கிருந்து செல்ல அநுமதி தருவது. இலங்கைக்குள் போக அநுமதி தருவது விஸா. பாஸ்போர்ட்டை அனுப்புச் சீட்டு என்றும், வீஸாவை நுழைவுச் சீட்டு என்றும் சொல்லலாம். ஓர் ஊரிலிருந்து புறப்படும்போது பிரிவுபசாரம் பெற்றுக்கொள்கிறோம்; போகிற ஊரில் வரவேற்புக் கிடைக்கிறது. அந்தமாதிரி இந்த இரண்டு சீட்டுக்களையும் கொள்ளலாம். ஆனால் அந்த இரண்டும் நமக்குத் தொல்லையில்லாமல் நம் மனத்துக்குச் சந்தோஷத்தைத் தருபவை. இந்த இரண்டும்-? வீஸாவுக்கு விண்ணப்பம் உள்நாட்டு இலாகாவின் காரியதரிசிக்கு அனுப்ப வேண்டும். பாஸ்போர்ட்டுக் கிடைத்துவிட்டால், பிறகு வீஸா பெறுவது சுலபம் என்று, எல்லாம் தெரிந்த அன்பர் ஒருவர் சொன்னர். ஆனால் பாஸ்போர்ட்டு வரவில்லை. ஆகஸ்டு மாதம் முப்பத்தோராந் தேதி சுயபுராண விசாரணை நாள். ஸெப்டம்பர் மாதம் 9-ஆம் தேதி கண்டியில் தமிழ் விழா நடைபெறுவதாக இருந்தது. பிறகு அதை 16-ஆம் தேதிக்கு ஒத்திப் போட்டார்கள். பாஸ்போர்ட்டு வந்துவிடும், வந்துவிடும் என்று எதிர் பார்த்தேன். கடைசியில் கமிஷனர் காரியாலயத்துக்கு அன்பர் ஒருவரை அனுப்பி வாங்கிவரச் செய்தேன். 5-ஆம் தேதியே கையெழுத்தான அது அங்கே சொஸ்தமாகத் தூங்கிக்கொண்டிருந்தது. 11-ஆம் தேதி அதைப் பெற்றுக்கொண்டு வீஸாவுக்கு விண்ணப்பம் எழுதி அன்பர் ஒருவர் மூலம் அனுப்பினேன். தொழில் விவரம் குறிக்கும்போது ‘பத்திரிகைக்காரன்’ என்று குறித்திருந்தேன். அது சங்கடமாக முடிந்தது. பத்திரிகைக்காரன் அரசியல் குழப்பத்துக்குக் காரணமானவன் என்ற நினைவோ, என்னவோ? “அந்தப் பேர்வழியையே நேரே வரச் சொல்லுங்கள்” என்று அதிகாரி சொல்லிவிட்டார். செப்டம்பர் 12-ஆம் தேதி நான் கோட்டைக்குப் போனேன்; உள்நாட்டு இலாகா அதிகாரியிடந்தான். அவரைப் பேட்டி கண்டேன். எதற்காகப் போகிறீர்கள்?" என்று கேட்டார். “ஒரு மகாநாட்டுக்கு” என்றேன். நான் வருவதை அறிந்து, கொழும்பு ரேடியோவிலிருந்து, இரண்டு பேச்சுக்களைப் பதிவு செய்ய வேண்டும் என்ற கடிதம் ஒன்று வந்திருந்தது. ‘அரசியல் விவகாரத்தில் தலையிடாதவன். அரசாங்க ரேடியோவினரே என் வரவினைப் பயன்படுத்த எண்ணியிருக்கிறார்கள்’ என்று காட்ட அந்தக் கடிதத்தையும் கொண்டு போயிருந்தேன். அதைக் காட்டினேன். நான் காட்டினது நான் சந்தேகப் பிராணியல்ல என்பதை அறிவுறுத்த. ஆனால் அதைப் பார்த்த அதிகாரி, “இதற்கெல்லாம் பணம் உண்டல்லவா?” என்று கேட்டார். “கொடுக்கலாம்” என்று சொன்னேன். “பணம் வாங்குவதாக இருந்தால் சங்கடம் உண்டாகும். ஜாக்கிரதையாக இருக்கவேண்டும். நீங்கள் சங்கடத்தில் மாட்டிக்கொள்ளக் கூடாதென்பதற்காகவே இது சொல்கிறேன்” என்று சொல்லி ஒரு மாச காலம் நான் இலங்கையில் தங்குவதற்கு அநுமதிச் சீட்டு அளித்தார். சலாம் போட்டுப் பெற்றுக்கொண்டு வந்தேன். இலங்கைக்குப் போகிறவர்களுக்கு ஊசி முனை அநுபவம் வேண்டும். ஊசி முனையில் நின்று தவம். செய்யவேண்டுமென்று நினைக்கவேண்டாம். அம்மை ஊசியையும், காலரா ஊசியையும் ஏற்றிக்கொள்ள வேண்டும். அவை நம்முடைய உடம்பில் ஊடுருவிச் சென்றதற்குரிய அத்தாட்சிப் பத்திரமும் வாங்கிக் கொள்ளவேண்டும். இவற்றில் ஒன்று குறைந்தாலும், இலங்கையில் இறங்கும்போது, “வந்த வழியைப் பார்த்துக்கொண்டு போய் வாருங்கள்” என்று அனுப்பிவிடுவார்கள். நான் இரண்டு ஊசியையும் போட்டுக்கொண்டேன். காலரா ஊசி என்னை ஒன்றும் செய்யவில்லை. அம்மை ஊசிதான் கொஞ்சம் தொந்தரவு செய்துவிட்டது. நான் புறப்படுவதற்கு முதல் நாள் கடுமையான ஜூரம். புறப்படும்போதும் ஜூரம் இருந்தது. இலங்கையை மிதித்த மறுநாள் ஜூரம் பறந்து போய் விட்டது. பாஸ்போர்ட்டு, வீஸா, அம்மை அத்தாட்சி, காலரா அத்தாட்சி-இத்தியாதி சீட்டுகளுடன் ஸெப்டம்பர் மாதம் 14-ஆம் தேதி ஏர் ஸிலோன் விமானத்தில் ஏறினேன். ------------------------------------------------------------------------ 1. 19?1.↩︎ 2. இப்போது இலங்கைக்கு வீஸாக் கொடுக்க அவ்வரசாங்கத்தார் ஒரு காரியாலயமே வைத்திருக்கிறார்கள்↩︎ இலங்கையில் இறங்கினேன் இதற்கு முன்னல் நான் விமானத்தில் பிரயாணம் செய்ததில்லை. விமானப் பிரயாணம் புதிதாக இருந்த காலத்தில் அதன் மகிமையைப்பற்றியும் ஆச்சரியமான வேகத்தைப்பற்றியும் அடிக்கடி பத்திரிகைகளில் செய்திகள் வந்துகொண்டிருந்தன. இப்போதோ பத்திரிகைகளில் விமானத்தைப்பற்றி ஏதேனும் செய்தி வருவதாக இருந்தால் அது பெரும்பாலும் விபத்தாகவே இருக்கிறது ! நான் புதிதாக விமானத்தில் பிரயாணம் செய்தமையால் எனக்கு அதில் புதுமை உணர்ச்சிதான் உண்டாயிற்று. விமான நிலையத்தில் சுங்க அதிகாரிகள் என் பெட்டியைச் சோதனை போட்டு, " கட்டிக் கொள்ளும் துணியும் புத்தகங்களுமே இருக்கின்றன." என்று அநுமதித்து விட்டார்கள். அங்குள்ள டாக்டர் அம்மை அத்தாட்சியையும் காலரா அத்தாட்சியையும் பார்த்துச் சரி என்று சொல்லிவிட்டார். கையில் இருந்த இந்திய நாணயத்தை இலங்கை நாணயமாக மாற்றிக்கொண்டேன். ரூபாய்க்கு ரூபாய் கொடுத்து விட்டார்கள். ஆனால் இலங்கையிலிருந்து திரும்பி வரும்போது இலங்கை ரூபாயை இந்திய நாணயமாக மாற்றியபோது வட்டம் பிடித்துக்கொண்டார்கள். விமானம் சரியாகக் காலை 11-45-க்குப் புறப்படுவதாக இருந்தது. அதற்குச் சிறிது நேரத்திற்கு முன் விமானத்துக்குள் நுழைந்து அமர்ந்தேன். விமானம் புறப்படுவதற்கு முன் பப்பர்மிட்டும் பஞ்சும் கொடுத்தார்கள். பப்பர்மிட்டு வாயில் அடைத்துக்கொள்ள; பஞ்சுகாதில் அடைத்துக்கொள்ள. உட்காரும் ஆசனத்தில் இருந்த வாரைப் பூட்டிவிட்டார்கள். இந்த ஆர்ப்பாட்டங்களையெல்லாம் பார்க்கிறபோது ஏதோ சர்க்கஸ் வேடிக்கைக்குத் தயார் செய்வதுபோல் இருந்தது. காதில் உள்ள ஜவ்வுக் கெட்டுப்போகும்படி விமானம் சத்தம் போடும் என்று நினைத்தேன். விமானம் புறப்படும் நேரத்தை ஆவலோடு எதிர்பார்த்துக் கொண்டிருந்தேன். விமானம் தரையில் ஓடத் தொடங்கியது. விமானத்தின் ஓட்டம் சிறிது அதிகமாயிற்று. பிறகு இரைச்சல் மிக மிக அதிகமாயிற்று. ஓட்டமும் படுவேகமாக இருந்தது. வேகமாக ஓடிக்கொண்டிருந்தபோதே அது மெல்ல மேலே எழுந்தது. அப்படி மேலே எழும்பும்போது ஒரு தனியான அநுபவம் உண்டாயிற்று. அந்த மாதிரியான அநுபவத்தை முன்பே நான் அடைந்திருக்கிறேன் என்று தோன்றியது. எங்கே எப்படி அந்த அநுபவம் எனக்கு முன்பு உண்டாயிற்று? யோசித்துப் பார்த்தேன். பல சமயங்களில் நான் பறப்பதாகக் கனவு காண்பதுண்டு. நின்ற இடத்தில் நின்றபடியே இரண்டு கைகளையும் விரிப்பேன் காலை ஓர் உந்து உந்துவேன். கிர்ரென்று மேலே பறந்து விடுவேன். இப்படி எத்தனையோ தடவை நான் கனாக் கண்டிருக்கிறேன். அடுத்தடுத்துப் பறப்பதாகக் கனவு காண்பதில் ஏதோ விசேஷம் இருக்கவேண்டும் என்று நினைத்தேன். சில அன்பர்களைக் கேட்டேன். “உங்களுக்குப் பறக்கவேண்டும் என்ற ஆசை மனத்தின் அடித்தளத்திலே ஆழத்தில் உங்களை அறியாமல் இருக்கிறது. அந்த ஆசை நனவில் நிறைவேறாது. ஆகவே, கனவு உண்டாகிறது” என்றார் ஒரு நண்பர். மற்றொரு நண்பர் வேறு ஒரு காரணம் சொன்னார் : “நீங்கள் போன பிறவியில் பறவையாக இருந்திருக்க வேண்டும். அந்தப் பூர்வ ஜன்ம வாசனைதான் கனவிலே வந்து வந்து நிற்கிறது” என்றார் அவர். வேறு ஓர் அன்பர் தத்துவ நூல்களைப் படித்தவர். அவர் சொன்னதுதான் எனக்குப் பொருத்தமாகத் தோன்றியது. “ஆத்மாவானது பிறவிதோறும் பல வகை வாசனைகளால் உந்தப்படுகிறது. வரவர உயர்ந்த சிந்தனைகளும் உன்னதமான பண்பும் உடையவராகச் சிலர் ஆகிறார்கள். ஆத்மா உன்னத லட்சியத்தை எட்டித் தாவும் இயல்பு இத்தகைய குறிப்புகளால் வெளிப்படும். நீங்கள் மேலே மேலே உயரவேண்டும் என்ற ஆர்வத்தோடு பண்பு பெற்று வருகிறீர்கள் என்பதற்கு அடையாளமே, நீங்கள் கனவில் பறப்பதாகக் காணும் காட்சி” என்று அந்த அன்பர் என் கனவுக்குப் பொருள் உரைத்தார். இதுதான் பொருத்த மென்று எனக்குத் தோன்றுவதில் ஆச்சரியம் என்ன இருக்கிறது ? சொல்லுங்கள். பறக்கிற கனவுகளில் இந்த மாதிரி அநுபவம் ஏற்பட்டதாகவும் தெரியவில்லை. அப்பொழுதெல்லாம் மிகவும் இயற்கையாக ஒரு காரியத்தைச் செய்வதுபோலத்தான் தோன்றும். ஆனால் இப்போது அடைந்த உணர்ச்சி இயற்கையாக இல்லை. முன்னால் ஜாக்கிரதைப் படுத்தினபோது எதிர்பார்த்தபடி பயங்கரமானதாகவோ,சகிக்கத் தகாததாகவோ இல்லை. ‘அப்படியானால், இந்த அநுபவம் நமக்கு எப்படிப் பழையதாகத் தெரிகிறது ?’ கண்டு பிடித்துவிட்டேன். விழாக் காலங்களில் நம் நாட்டில் ராட்டினம் நட்டுக் குழந்தைகளை ஏற்றிச் சுற்றுவார்கள். அந்த ராட்டினம் இரண்டு வகை. ஒன்று குடை ராட்டினம்; பம்பரம்போலச் சுழலுவது. மற்றொன்று தொட்டில் ராட்டினம் ; தொட்டில் மாதிரி இருக்கும்; மேலும் கீழும் போய்வரும் அந்தத் தொட்டில் ராட்டினத்தில் ஏறினால் தொட்டில் மேலே போகும்போது ஒரு விதமான உணர்ச்சி ஏற்படும். விமானம் மேலே எழும்பும்போது எனக்கு ஏற்பட்ட அநுபவமும் தொட்டில் ராட்டின அநுபவமும் ஒரே மாதிரியாகத்தான் இருந்தன. அப்படியே விமானம் இறங்கும்போதுகூட அந்தத் தொட்டில் ராட்டினத்தில் கீழே வரும்போது உண்டான உணர்ச்சியே ஏற்பட்டது. விமானம் மேலே எழும்பி வானவெளியில் பறக்கத் தொடங்கியது. அப்போது அது அசைவதாகவே தோன்றவில்லை. ஒரே இடத்தில் நிற்பதாகவே தோன்றியது. ஆனால் அதன் சத்தம் மாத்திரம் பலமாக இருந்தது. அதற்கு மேலே சத்தம் போட்டுப் பேசினார்கள், அந்த விமானத்தில் பயணம் செய்த பெண்கள். ரெயிலில் பிரயாணம் செய்யும்போது ஆட்டம் எடுக்கிறது. எதையாவது எழுதலாமென்றால் கை ஒரு பக்கம் பேனா ஒரு பக்கம் ஓடுகின்றன. எப்படியோ சிரமப்பட்டு எழுதினாலும் அந்த எழுத்தை நம்மாலே வாசிக்க முடியாது. ஆனால் விமானத்தில் இந்தத் தொல்லையே இல்லை. விமானம் வேகமாகப் பறந்தாலும் நாம் உள்ளே அமைதியாக எழுதிக் கொண்டிருக்கலாம். அங்கே நம்மைக் கவனித்துக் கொள்வதற்காகவே இருக்கும் பணிப்பெண் (Air Hostess) அடிக்கடி வந்து புன்சிரிப்புடன் என்ன வேண்டுமென்று கேட்கிறாள். பத்திரிகைகளை வாசிக்கக் கொடுக்கிறாள். காபி, டீ. ரொட்டி, பிஸ்கத் வேண்டுமானால் தருகிறாள். ஆனால் விமானம் விரைவிலே குறித்த இடத்துக்குப் போகத்தான் உதவும். பிரயான இன்பத்தை அதில் அநுபவிக்க முடியாது. உல்லாசப் பிரயாணம் செய்ய வேண்டுமானால் நம்முடைய தென்னாட்டு ரெயில் வண்டியில்தான் போகவேண்டும். எவ்வளவு நிதானமாக இருமருங்கும் தோன்றும் காட்சிகளைப் பார்க்க வேண்டுமோ அவ்வளவு நிதானமாகக் காணலாம். விமானத்தில் உட்கார்ந்தபடியே வெளியிலே பார்க்கச் சாளரங்கள் இருக்கின்றன. அதன் வழியாகப் புற உலகைப் பார்க்கலாம். ஆனால் வானத்தில் விமானம் பறக்கும்போது கீழே உள்ள பொருள்கள் தெளிவாகத் தெரிவதில்லை. நிலப்பரப்பிலே உள்ள சோலைகளையும் அழகிய கட்டிடங்களையும் மனிதக் கூட்டங்களையும் ஆடுமாடுகளையும் தரையில் செல்லும் பிரயாணத்திலே கண்டு கண்டு மகிழலாம். விமானத்திலிருந்து பார்த்தால் காடுகளில் உள்ள மரங்கள்கூட வெறும் புல் பூண்டாகத் தோன்றுகின்றன. மனித உருவமே புலப்படுவதில்லை. ஆறுகள் மாத்திரம் வளைந்து வளைந்து வருவதைப் பார்க்கலாம். பெரிய ஏரிகள் அங்கங்கே தண்ணீர் தேங்கி நிற்கும் பாத்தி போலத் தோன்றும். கடல் நன்றாகத் தெரியும். கடல் ஆழத்தின் பேதத்தை நீலவண்ணத்தின் பேதங்களால் தேசபடத்தில் காட்டுவார்கள். அந்தப் படத்தில் காண்பதுபோலக் கடலின் தோற்றத்தைக் காணலாம். கரையை அடுத்த பகுதிகளில் வெளிறிய நீலமாகவும் வரவர நீலம் மிகுதியாகி நடு இடத்தில் கரு நீலமாகவும் காட்சி அளிக்கும். சென்னையிலிருந்து புறப்பட்ட விமானம் கடற்கரை ஓரமாகவே பறந்து சென்றது. ஆறுகளும் குன்றுகளும் தெரிந்தனவேயொழிய இன்ன ஊர்ப் பக்கம் இது என்று தெரிந்துகொள்ள முடியவில்லை. தெற்கே பறந்து சென்ற விமானம் ஓரிடத்தில் கிழக்கு நோக்கிப் பறந்தது. அதுதான் இந்தியாவிலிருந்து இலங்கைக்குப் போகக் கடலைத் தாண்டிச் சென்ற நிலை. ஐந்து நிமிஷத்தில் கடலைத் தாண்டிவிட்டது. விமானம். அப்போது எனக்கு மிகவும் வியப்பு உண்டாயிற்று. ஹநுமான் இந்தக் கடலைத் தாண்டிச் செல்ல எத்தனை பாடுபட்டார் என்ன என்ன சங்கடங்கள் அவருக்கு இடைவழியிலே உண்டாயின! இந்த விமானம் அஞ்சு நிமிஷத்திலே தாண்டிவிட்டதே! விமானத்திலிருந்து இலங்கையின் மேற்குக் கடற்கரை புலனாயிற்று. இலங்கையின் தலைச்சொருக்குப்போல் படத்தில் தோன்றும் இடம் யாழ்ப்பாணம். ‘ஏர் இந்தியா’ விமானத்தில் இலங்கை செல்வதாக இருந்தால் திருச்சி சென்று அங்கிருந்து கொழும்பு செல்லவேண்டும். ‘ஏர் சிலோன்’ விமானமானால் சென்னையிலிருந்து யாழ்ப்பாணம் சென்று கொழும்புக்குப் போகவேண்டும். நான் சென்றது ‘ஏர் சிலோன்’ விமானம். ஆதலால் யாழ்ப்பாணத்தில் அது இறங்கியது. 1-45-க்கு யாழ்ப்பாண விமான நிலையத்தில் வந்து இறங்கினேன். அங்கே சுங்கச் சோதனையும் ஆரோக்கிய சோதனையும் நடந்தன. அம்மை அத்தாட்சி, காலரா அத்தாட்சி கொண்டுவராவிட்டால் இங்கிருந்து மீட்டும் அனுப்பி விடுவார்களாம். அரை மணி நேரம் யாழ்ப்பாண விமான நிலையத்தில் இருக்க வேண்டியிருந்தது. சரியாக 2-15க்கு வேறு விமானத்தில் எங்களை ஏற்றிக்கொண்டார்கள். அங்கிருந்து பிற்பகல் 3-10-க்குக் கொழும்பு வந்து சேர்ந்தேன். இலங்கையின் தலைநகரம் கொழும்பு. ஏறக்குறைய ஐந்து லட்சம் ஜனத்தொகை உள்ள நகரம். நகரத்திலிருந்து தெற்கே எட்டு மைல் தூரத்தில் ரத்மலானா என்ற இடத்தில் விமான நிலையம் இருக்கிறது. விமான நிலையத்துக்கு அன்பர்கள் வந்திருந்தார்கள். மாலையிட்டு வரவேற்றார்கள். ஸ்ரீ கணேஷும், வீரகேசரி ஆசிரியர் ஸ்ரீ ஹரன் அவர்களும், இலங்கை ரேடியோவிலுள்ள ஸ்ரீ சிவபாத சுந்தரம். அவர்களும், வேறு சிலரும் வந்து வரவேற்றார்கள். எனக்கு முன்பே தெரிந்தவர்களும் புதிய அன்பர்களும் முகமலர்ந்து தங்கள் அன்பை வெளியிட்டார்கள். என்னைச் சுற்றிலும் தமிழர்கள். என்னை அவர்கள் அன்புடன் தமிழிலே செளக்கியம் விசாரித்தார்கள். தமிழ் நாட்டிலே உள்ள ஓர் ஊருக்குப் போனதாகத் தோன்றியதே ஒழிய அயல் நாட்டுக்கு வந்ததாகவே தெரியவில்லை. அப்போது ஓர் அன்பர் வந்தார். வீரகேசரிப் பத்திரிகையின் நிருபர் அவர். “ஏதாவது ச்சொல் உண்டா?” என்று கேட்டார். சொல் என்பதை நாம் சொல்வதுபோலச் சொல்லாமல் வல்லோசையுடன் உச்சரித்தார். முதலில் அவர் பேசினது விளங்கவில்லை. “என்ன?” என்று கேட்டேன். ஏதாவது செய்தி உண்டா?" என்று விளக்கினர். அவர் யாழ்ப் பாணக்காரர். சில நாட்களுக்கு முன்னே ஏதோ ஒரு குருட்டு யோசனையில் ஆழ்ந்திருந்தேன். நாம் பேசும் தமிழைப் பற்றி என் மனம் எண்ணமிட்டது. வல்லின எழுத்துக்கள் சொற்களின் முதலில் வரும்போது முழு வல்லினமாக, வன்மையாக உச்சரிக்கிறோம். மகன், தங்கம் என்ற இடங்களில் ககரம் முழு வல்லினமாக இல்லை. கல் என்னும்போது வன்மை ஒலியோடு ககரம் ஒலிக்கிறது. பண் என்றாலும், தந்தை என்றாலும் பகரத்தையும் தகரத்தையும் வல்லோசையோடு உச்சரிக்கிறோம். ஆனால் சகரத்தை மாத்திரம் மொழிக்கு முதலில் வரும் போது கௌசிகன் என்ற சொல்லில் வரும் வடமொழி எழுத்தாகிய சி என்பது போல உச்சரிக்கிறோம், சட்டி, சொன்னான், சொக்கன், சோலை, சிறுவன்-எல்லாவற்றிலுமே சகரம் வல்லோசை பெறுவதில்லை. வல்லினமாக உள்ள மற்றவற்றின் இயல்பு இந்தச் சகரத்துக்கு மாத்திரம் இல்லையே! முன்காலத்தில் அதையும் வல்லோசையுடன் உச்சரித்திருப்பார்கள் போலும்!- இவ்வாறு அன்று ஒலியாராய்ச்சியில் என் சிந்தனையை ஓடவிட்டேன். “ஏதாவதுச்சொல் உண்டா ?” என்று வீரகேசரியின் நிருபர் என்னைக் கேட்டபோது எனக்கு அது நினைவுக்கு வந்தது. சகரம் வல்லினமாக ஒலிப்பதை அவர் வாய்மொழியால் தெளிந்தேன். இதைப்பற்றி முன்பு சிந்திக்காமல் இருந்திருந்தால் அவர் பேசியதில் அத்தனை சுவாரசியம் தோன்றியிராது. முன்பு சிந்தித்தமையினால் அவருக்கு நான் செய்தி ஏதேனும் சொல்வதைப்பற்றி யோசிப்பதற்கு முன் அவர் சொன்ன ’ச்சொல்’லில் ஈடுபட்டு நின்றேன். நான் செய்தியை யோசிப்பதாக நண்பர் எண்ணியிருக்கக் கூடும். அவர் விருப்பப்படி நான் என் மகிழ்ச்சியைத் தெரிவித்தேன். இலங்கைக்கு வந்தது தமிழ்நாட்டுக்கு வந்ததைப் போலவே இருக்கிறது. இலங்கைக்கும் தமிழ் நாட்டுக்குமிடையில் எவ்வித வேற்றுமையையும் என்னால் காண முடியவில்லை. இலங்கைக்கு இப்பொழுதுதான் முதல் முறையாக நான் வருகிறேன். இதற்கு முன் இந்த நாட்டுக்கு வரும் சந்தர்ப்பம் எனக்கு ஏற்படவில்லை. என் பழைய நண்பர்களின் முகங்களை விமான நிலையத்தில் இறங்கியவுடன் பார்க்கும்பொழுது பரமானந்தமாயிருக்கிறது" என்றேன். எல்லோரும் விமான நிலையத்திலிருந்து புறப்பட்டோம். அன்று இரவு வீரகேசரி ஆசிரியர் வீட்டில் தங்குவதாக ஏற்பாடு செய்திருந்தார்கள். வண்டியிலே போய்க்கொண்டிருக்கும்போதே ஆசிரியர் ஹரன் தமிழ்நாட்டைப்பற்றி மிக ஆவலாகப் பல செய்திகளை விசாரித்தார். தமிழ் நாட்டில் உள்ள வறுமை நிலையை என்னால் சொல்லாமல் இருக்க முடியவில்லை. நான் நேரிலே கண்ட காட்சி ஒன்றைச் சொல்லி அதன் மூலம் இங்குள்ள வறுமையைப் புலப்படுத்த எண்ணினேன். "ரெயில்வே ஸ்டேஷனில் நாம் எதையாவது சாப்பிட்டுக்கொண்டிருந்தால் பசியைக் கண்ணிலே வைத்துக்கொண்டிருக்கும் ஏழைகள் சுற்றி நின்று கை நீட்டுகிறார்கள். அதைப் பிடுங்கிக்கொண்டு போகவும் தயாராக இருக்கிறார்கள்’ என்றேன். அவர் அதைக் கேட்டு வருந்தினர். அன்று மாலைப் பத்திரிகையிலே அதைப்பற்றி அவர் எழுதி விட்டார்! தெய்வ பக்தி எப்படி இருக்கிறதென்று கேட்டார். தமிழ் எழுத்துச் சீர்திருத்தத்தைப்பற்றி விசாரித்தார். தமிழ் மக்களைப்பற்றியும் தமிழ் மொழியைப்பற்றியும் தெரிந்துகொள்ள இலங்கைத் தமிழர்கள் எத்தனை ஆர்வத்தோடு இருக்கிறார்கள் என்பதை அவர் கேட்ட கேள்விகள் காட்டின. அவர் வீட்டுக்கு வந்து அன்றிரவு ஓய்வு எடுத்துக்கொண்டேன். மறு நாள் கொழும்பு மாநகரத்தைப் பார்க்கப் புறப்பட்டேன். கொழும்பில் உள்ள சட்டசபைக் கட்டிடத்தையும், கடற்கரையையும், பெரிய வீதிகளையும் பார்த்தேன். அழகிய நகரம். போக்கு வரத்து வசதிகள் உள்ள நகரம். பின்பு அங்குள்ள மியூசியத்தைப் பார்க்கப் போனேன். ------------------------------------------------------------------------ 1. இப்போது கொழும்பு லிவர் பிரதர்ஸில் இருக்கிறார்↩︎ கொழும்பு நூதன சாலை நானும் உடன்வந்த நண்பரும் கொழும்பு தேசீயப் பொருட்காட்சிச் சாலைக்குள் புகுந்தபோதே எங்களுக்கு நல்ல சகுனம் உண்டாயிற்று. அந்தக் காட்சிச் சாலையில் உள்ள பொருள்களை வருவோருக்கு விளக்கிக் காட்டுவதற்காகச் சில அறிஞர்களை நியமித்திருக்கிறார்கள். அவர்களுள் ஒருவர் திரு நா. சுப்பிரமணியம் என்பவர். அவர் எங்களைக் கண்டவுடன் தமிழ் நாட்டுக்காரர்கள் என்று தெரிந்துகொண்டார். அவர் இலங்கைத் தமிழர். இளைஞராகிய அவர் புன்முறுவலோடு எங்களை அணுகினார். என்னை இன்னாரென்று அவர் ஊகித்துக் கொண்டார். “இந்த நூதனசாலையில் உள்ள பொருள்களைப்பற்றிய விவரங்களைச் சொல்கிறேன்; அதற்காகவே நான் இங்கே இருக்கிறேன்” என்றார். இது நல்ல சகுனம் அல்லவா? அவர் ஒரு தமிழ் எழுத்தாளர். சிங்கள இலக்கியத்தில் பயிற்சி உள்ளவர். திருக்குறளைச் சிங்களத்தில் மொழிபெயர்க்கும் முயற்சியில் ஈடுபட்டிருக்கிறார். நூதன சாலை என்ற பெயர் எனக்கு நூதனமாக இருந்தது. மியூசியத்தைக் காட்சிச்சாலை, பொருட்காட்சிச் சாலை என்று இங்கே வழங்குகிறோம். அநேகமாக மியூசியங்களில் நூற்றுக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்னர் வழங்கிவந்த பண்டங்களும், கண்டெடுத்த பொருள்களுமே இருக்கின்றன. எல்லாம் பழைய பொருள்கள். அவற்றை வைத்திருக்கும் சாலைக்கு நூதன சாலை என்ற பெயர் வழங்குவது வேடிக்கையாக இருந்தது. இந்தப் பொருள்களைப் பார்க்க வருகிறவர்கள். இவற்றைப் புதிதாகப் பார்க்கிறார்கள். பொருள்கள் பழையனவாக இருந்தாலும் பார்க்கிறவர்கள் புதுமைப் பொருள்களைப் பார்க்கிறது போலவே காண்கிறார்கள். அவர்கள் காணும் காட்சி புதுமையானது. காண்போருக்கு நூதனமாக இருப்பதனால் அந்தப் பெயர் வந்திருக்கலாம். எப்படியோ நூதன சாலையென்றால் மியூசியம் என்று இலங்கையில் உள்ளவர்கள் புரிந்து கொள்வார்கள். அதுதானே வேண்டும்? சொல்கிறவன் எந்தக் கருத்தோடு சொல்லைச் சொல்கிறானே, அந்தக் கருத்தைக் கேட்கிறவன் தெளிந்துகொண்டால் சொல் பயனுடையதாகிறது. இங்கே சென்னையில் உள்ள மியூசியத்துக்கு மிக மிக வேடிக்கையான பெயர் வழங்குகிறதை அன்பர்கள் அறிந்திருப்பார்கள். “செத்த காலேஜ்” என்று பாமர ஜனங்கள் வழங்குவதை எத்தனையோ முறை கேட்டிருக்கிறோம். ’பீபிள்ஸ் பார்க்’கை உயிர்க் காலேஜ் என்றும், பொருட்காட்சிச் சாலையைச் செத்த காலேஜ் என்றும் சொல்கிறார்கள். உயிர்க் காலேஜில் யானையும் ஒட்டகமும் ஒட்டைச் சிவிங்கியும் உயிருடன் நடமாடுகின்றன. செத்த காலேஜில் செத்துப் போன பிராணிகளே வைத்திருக்கிருர்கள். மியூசியத்தில் பாமர மக்களைக் கவர்கிற பகுதி இன்னதென்று இந்தப் பெயரே சொல்கிறது. சென்னை மியூசியத்தில் உள்ள அற்புதமான சிற்பங்களையோ மர வேலைப்பாடுகளையோ பழையதுப்பாக்கி முதலியவைகளையோ அவர்கள் கவனித்துப் பார்க்கவில்லை. பிராணி வர்க்கங்கள் உள்ள பகுதியைத்தான் அவர்கள் அதிகமாகக் கண்டு ரஸித்திருக்க வேண்டும். கொழும்பு நூதனசாலை பார்க்கத்தக்க இடம். ’ராயல் ஏஷியாடிக் சொசைடி’யினர் முதல் முதலாக 1847-இல் ஒரு காட்சிச் சாலையைத் தொடங்கினார்கள். அதுவே நாளடைவில் வளர்ந்து பெருகிப் பெரிய மியூசியம் ஆகிவிட்டது. அவ்வப்போது கிடைத்த பொருள்களைத் தொகுத்து அங்கே பாதுகாக்கலானர்கள். இரண்டடுக்கு மாளிகைகளில் இன்று பல பொருள்கள் போற்றி வைக்கப்பெற்றிருக்கின்றன. இரண்டாவது உலகப் போர் வந்தபோது மியூசியம் உள்ள இடத்தைக் காலி செய்தார்கள். காட்சிப் பொருள்களெல்லாம் பாதுகாவலில் இருந்தன. சண்டை முடிந்த பிறகு வெளிவந்திருக்கின்றன. இதனால் சில பொருள்கள் நிலைகுலைந்து போயினவாம். இப்போது கொழும்பு, கண்டி, யாழ்ப்பாணம், இரத்தினபுரி என்ற நான்கு இடங்களில் காட்சிச்சாலைகள் இருக்கின்றன. தலைநகராகிய கொழும்பில் உள்ளது பெரிதென்று சொல்ல வேண்டியதில்லை. இங்கே பல பகுதிகள் உள்ளன. நான் அதிகமாகக் கவனித்துப் பார்த்தவை உலோக விக்கிரகங்கள், சிலா விக்கிரகங்கள், ஓவியங்கள் ஆகியவை உள்ள பகுதிகளே. இலங்கையைப் பழங்காலத்தில் பல அரசர்கள் வெவ்வேறு இடங்களில் இராசதானியை அமைத்துக் கொண்டு ஆண்டார்கள். அவர்களுக்குள் கண்டியிலிருந்து ஆண்ட கடைசி அரசன் ஸ்ரீ விக்கிரம ராஜசிங்கன் என்பவன். அந்த அரசனுடைய தங்கச் சிங்காதனம் லண்டனில் இருந்தது. இலங்கை சுதந்தரம் பெற்ற பிறகு அந்தச் சிங்காதனம், கண்டி அரசனுடைய கிரீடம், செங்கோல், துப்பாக்கி முதலியவை மீட்டும் இலங்கைக்கே கிடைத்தன. அவற்றைக் கொழும்பு மியூசியத்தில் காணலாம். இந்தப் பொருட்காட்சிச் சாலைக்கு வருகிறவர்கள் யாரானாலும் இந்தச் சிங்காதனத்தைப் பாராமல் போவதே இல்லை. விக்கிரகங்கள் உள்ள பகுதியில் மிகவும் சிறந்த வேலைப்பாடுள்ள நடராஜ விக்கிரகங்கள் சிலவற்றைப் பார்த்தேன். ‘குனித்த புருவமும் கொவ்வைச் செவ்வாயிற் குமிண் சிரிப்பும்’ என்று திருநாவுக்கரசர் பாடினர். ‘குமிண் சிரிப்பு’ என்பது அவருடைய பாவனை என்று நினைப்பவர்கள் இங்கே உள்ள இரண்டொரு நடராஜத் திருவுருவங்களைக் காணவேண்டும். உண்மையாகவே அந்த மூர்த்திகளின் திருமுகங்களில் புன்முறுவல் குமிழ்ப்பதைக் காணலாம். அந்தப் புன்முறுவல் பூத்த திருமுகமண்டலத்தில் நம் விழியைச் செருகிவிட்டால் செம்பும் வெண்கலமும் என்றா தோன்றுகிறது? உலகத்தின் பூசல்களுக்கிடையே, வாழ்ந்தும் தாழ்ந்தும், இன்புற்றும் துன்புற்றும் வந்து வந்து செல்லும் மக்கட் கூட்டத்தின் முன் நடராஜப் பெருமான் என்றும் மாருத புன்னகையுடன், எதனாலும் வேறுபாடு அடையாத பொலிவுடன் நடனமாடிக் கொண்டிருக்கிருன் என்றே நினைக்கத் தோன்றுகிறது. முகத்தை வடித்த சிற்பி வாயை வடித்தான் இதழை வடித்தான்; அது பெரிதல்ல;அதனிடையே புன்னகையை வடித்து வைத்தானே, அந்த அழகை என்னவென்று சொல்வது! அழகிய சுந்தரமூர்த்தி நாயனரின் திருவுருவத்தைக் கண்டு சில கணம் நின்றேன். இன்னும் பல பல திருவுருவங்களைக் கண்டேன். []சிலா விக்கிரகங்கள் உள்ள பகுதியில் எத்தனை புத்த விக்கிரகங்கள் உலோகத் திருவுருவத்திலும் அப்படியே உள்ளன. புத்தர் பிரான் நின்றும் இருந்தும் கிடந்தும் காட்சி தருகிற கோலங்களைக் கண்டேன். கொந்தளிக்கும் உலகில் அமைதியின் திருவுருவாக வீற்றிருக்கிறார் அவர். அலை கடல் துரும்புபோல மக்கள் அலைந்து பகலில் ஓய்வின்றி உழைத்தும், இரவில் உறக்கமின்றி உழன்றும், படுத்தால் கனவும் பல நினைவும் அமைதியைக் குலைக்கக் கிடந்தும் வாழும் காட்சிகளுக்கிடையே தம்மை மறந்த லயந்தன்னில் துயில் கூரும் புத்தரின் கோலம் கண்டேன். வலப்பக்கம் திரும்பி வலக்கையைத் தலையின் கீழ்வைத்துப் படுத்திருக்கிறார் அவர். சயனத் திருக்கோலத்தில் புத்தரை எங்கே கண்டாலும் வலப்பக்கம் திருப்பிப் படுத்த கோலத்தையே கண்டேன். ஆடவர்கள் இடப் பக்கம் படுக்க வேண்டும் என்று நம்முடைய முன்னோர்கள் சொல்வார்கள். “இடது கையிற் படுப்போம்” என்பது தேரையர் வாக்கு, பெண்கள் வலப்பக்கம் திரும்பிப் படுக்க வேண்டுமாம். திருமால் வலப்பக்கம் கைவைத்து அறிதுயில் புரிகிறார். திருவரங்கத்தில் அரவணையின்மேல் பள்ளி கொண்ட பெரிய பெருமாள் வலக்கையில் தலைவைத்துத் திருத்துயில் கொண்டிருக்கிறார். புத்தரும் வலக்கையில் தலை வைத்துத் துயில்கிறார். இரண்டையும் ஒன்றுபடுத்திப் பார்த்தேன். மனசு சும்மா இருக்கிறதா? முழங்காலுக்கும் மொட்டைத் தலைக்குங்கூட முடிச்சுப் போட்டுப் பார்ப்பது அதன் தொழில். அப்படியிருக்கச் சிறிது ஆதாரமும் கிடைத்துவிட்டால் சும்மா இருக்குமா? புத்தரைத் திருமாலின் அவதாரங்களில் ஒன்றாகச் சொல்லுவதுண்டு. ஜயதேவர் தம்முடைய அஷ்டபதியில் தசாவதாரங்களை வருணிக்கும் இடத்தில் “புத்தசரீர” என்று பாராட்டுகிறார். புத்தர் திருமாலின் அம்சமாதலால் திருமாலைப் போலவே வலப்பக்கம் கைவைத்துப் படுத்திருக்கிறார் என்று ஒரு பொருத்தம் எனக்குத் தோன்றியது. இதை ஒரு பெரிய காரணமாகச் சொல்லி, புத்தர் திருமாலின் அவதாரந்தான் என்று சாதிக்க நான் வரவில்லை. அங்கும் இங்கும் படித்த செய்திகளை ஒன்றோடு ஒன்று ஒட்டுப்போட்டுப் பார்ப்பது மனித இயல்பு. அப்படி என் மனத்திலும் சிறிது நேரம் இந்த ஆராய்ச்சி குடிகொண்டது. அதன் பயனாக இன்னும் சற்று நேரம் புத்தர்பிரான் திருமுன்னர் நின்று அவர் திருமேனியை நன்றாகக் கண்டு களிக்கும் வாய்ப்பு உண்டாயிற்று. அவருடைய அடிகளில் அழகிய தாமரை மலர் முத்திரைகளைக் கண்டேன். இலங்கையில் சிகிரியா, பொலன்னறுவை, தம்புல்லா முதலிய பல இடங்களில் குகைகளிலும் சுவர்களிலும் பல வண்ண ஒவியங்கள் இருக்கின்றன. அவற்றின் மாதிரிகளை இங்கே ஓவியப்பகுதியில் கண்டேன். புத்தருடைய ஜாதகக் கதைகளை வண்ண ஓவியமாகக் கண்டேன். சிலையிற் பொறித்த சிற்பத்திலும் பார்த்து மகிழ்ந்தேன். இந்தப் பொருட்காட்சிச் சாலையில் ஒரு புத்தக சாலையையும் வைத்திருக்கிறார்கள். நாம் இங்கே வாசக சாலை என்று சொல்வதை இலங்கையில் வாசிக சாலை என்று சொல்கிறார்கள். கொழும்புப் பொருட்காட்சியில் உள்ள ‘வாசிகசாலை’ 1870-ஆம் வருஷம் திறக்கப்பெற்றது. இங்கே பல துறைகளில் உள்ள புத்தகங்கள் எழுபதியிைரத்துக்கு மேல் இருக்கின்றன. 3500 ஓலைச் சுவடிகள் உள்ளன. வடமொழி, சிங்களம், பாளி, தமிழ் என்ற மொழிகளில் அமைந்த பல பழைய நூல்களை இந்தச் சுவடித் தொகுதிகளில் காணலாம். இலங்கையின் பழஞ்சரிதையைக் கூறும் இதிகாசம் ஒன்று உண்டு. அதற்கு மகாவம்சம் என்று பெயர் சொல்வார்கள். கல்வெட்டினாலும் பிற சான்றுகளாலும் சரித்திர வரலாற்றை அறிய முடிகிறது. அவற்றால் தெரியவரும் காலத்துக்கு முற்பட்ட செய்திகளை மகாவம்சம் தெரிவிக்கிறது. அந்த மகாவம்சத்தின் மிகப் பழைய சுவடிகள் இந்த நூல் நிலையத்தில் இருக்கின்றன. இத்தனையையும் பார்த்ததோடு விக்கிரகப் பகுதியில் நான் கண்ட ஒரு விக்கிரகத்தைப்பற்றி அவசியம் சொல்ல வேண்டும். இலங்கையையும் தமிழ் நாட்டையும் பழங்கால முதல் பிணைத்து வைப்பதற்கு இந்த விக்கிரகம் கருவியாக விளங்குகிறது. சரித்திரக்காரர்களும், பக்தர்களும், சிற்பக் கலைஞர்களும், இலக்கிய வல்லுநர்களும், பெண்மையைப் பேணுகிறவர்களும் கருத்தோடு கண்டு எழிலைப் பாராட்டிக்களிக்கும் திருவுருவம் அது. அதுதான் பத்தினித் தெய்வமாகிய கண்ணகியின் திருவுருவம். அதைப்பற்றி இரண்டொரு வரிகளிலே சொல்லி முடித்துவிட முடியுமா? பத்தினித் தெய்வம் “இதுதான் கண்ணகியின் திருவுருவம்!” என்று நண்பர் சுப்பிரமணியன் சுட்டிக் காட்டினார். முன்னாலே நின்ற திருவுருவத்தைப் பார்த்தேன். துடியிடை யென்று கவியிலே சொல்வதைச் சிற்பி உலோகத்திலே வடித்திருந்தான். ஆலிலை வயிறு என்பதன் பொருள் அந்த அற்புத விக்கிரகத்தைப் பார்த்தபோது நன்றாக விளங்கியது. தலையில் கூந்தல் மேல்நோக்கிய கொண்டையாகக் கட்டியிருந்தது; ஒரு வகைத் திருமுடி வைத்தாற் போல அழகாக இருந்தது. பெண்களின் உருவத்தை ஓவியமாகவும் சிற்ப உருவமாகவும் மிகவும் அழகாகப் பழங் கலைஞர்கள் வடித்திருக்கிருர்கள். அந்தத் திருவுருவங்களில் கூந்தலைக் கொண்டை போட்ட கோலத்தில் அமைத்திருப்பார்கள், குழலை ஐந்து வகையாகக் கொண்டை போடுவார்களாம். குழல், அளகம், கொண்டை, பனிச்சை, துஞ்சை என அந்த ஐந்து வகைகளையும் வழங்குவார்கள். இதனால் கூந்தலுக்கு ஐம்பால் என்று பெயர் உண்டாயிற்று. இந்தக் காலத்தில் ஓவியர்கள் எழுதும் பெண்களின் படங்களில் கூந்தலை விரித்துப் போட்டிருப்பதாகக் காட்டுகிறார்கள்! அவர்களுக்கு அது அழகாகப் படுகிறது. ரவிவர்மாவே அப்படித் தீட்டியிருக்கிறார். கண்ணகியின் காதுகள் தாழ்ந்திருந்தன. திருநெல்வேலியில் இன்றும் சிலர் கனமான அணிகளைக் காதிலே இட்டு வளர்த்திருப்பார்கள். அந்த அணிகள் காதில் ஊசலாடும். பழைய சிற்பங்களில் இந்த வடிகாதைத்தான் காண முடியும். கண்ணகியின் காதுகளும் வடிகாதாக இருந்தன. திருமுகத்தில் சாந்தம் ததும்பியது. கண்ணகி கோபம் ஆறித் தெய்வமாய் நின்ற கோலத்தில் சிற்பி அந்தத் திருவுருவத்தைப் படைத்திருப்பான் என்று தோன்றுகிறது. அந்த உருவத்தில் இரண்டு நகில்களும் இருந்தன. நம் நாட்டில் கண்ணகியை வழிபடும் இடங்கள் சில உண்டென்றும், அங்கே கண்ணகியை ஒற்றை முலைச்சி, மங்கலாதேவி என்ற பெயர்களால் வழங்குவார்கள் என்றும் என்னுடைய ஆசிரியராகிய மகாமகோபாத்தியாய டாக்டர் ஐயரவர்கள் சொல்லியிருக்கிறார்கள். கண்ணகியின் திருவுருவத்தின்முன் நின்ற பொழுது அந்த நினைவு வந்தது. “கண்ணகிக்கு ஒற்றை நகில் என்று சொல்வார்களே! இந்த உருவம் இரண்டு நகில்களோடே இருக்கிறதே; இது கண்ணகியின் உருவந்தான் என்று எப்படித் தெரியும்?” என்று நண்பர் சுப்பிரமணியனைக் கேட்டேன். “ஆனந்த குமாரசாமி இதைக் கண்ணகியின் உருவம் என்றே சொன்னார். வேறு அறிஞர்களும் அப்படித்தான் சொல்கிறார்கள்.” “வேறு இடங்களில் கண்ணகியின் திருவுருவம் உண்டா?” []“இலங்கையில் பல இடங்களில் பத்தினித் தெய்வத்துக்குக் கோயில்கள் இருக்கின்றன. சிங்களவரும் அத்தெய்வத்தை வணங்குகிறார்கள். முக்கியமாக இலங்கையின் கிழக்குப் பகுதியாகிய மட்டக்களப்பில் கண்ணகி வழிபாடு அதிகம்.” “அப்படியானால் அவ்விடங்களில் உள்ள திருவுருவங்கள் எல்லாவற்றிலுமே இரண்டு நகில்கள் இருக்கின்றனவா?” “ஆம்; ஒற்றை நகில் உடைய உருவம் இருப்பதாக எனக்குத் தெரியவில்லை.” இப்படி நான் பேசிக் கொண்டிருந்தபோது என் மனம் தமிழ் நாட்டில் உள்ள திருச்செங்கோட்டுக்குப் போய் நின்றது. ரெயில் ஏறாமல், பஸ் ஏறாமல் போய் அங்குள்ள மலையில் ஏறிக் கோயிலுக்குள் புகுந்தது. அதற்குக் காரணம் கண்ணகிக்கும் அந்த மலைக்கும் தொடர்பு இருப்பதாக நான் கேள்வியுற்ற செய்திகளே. கண்ணகி தன் கணவனை இழந்த பிறகு, தன் நகிலில் ஒன்றைப் பறித்து மதுரையின் மேல்வீசி அதை எரித்தாள். அப்பால் தன் கணவனைக் கொலை செய்த பாண்டி நாட்டில் இருக்கக்கூடாது என்று கருதி அதை விட்டு மேற்கு நோக்கிப் புறப்பட்டாள். பாண்டி நாட்டைக் கடந்து வந்து ‘நெடுவேள் குன்றம்’ என்னும் மலையின்மேல் ஏறினாள். சிலப்பதிகாரம் இந்தச் செய்திகளை விரிவாகச் சொல்கிறது. “நெடுவேள் குன்றம் அடிவைத்து ஏறிப் பூத்த வேங்கைப் பொங்கர்க் கீழோர் தீத்தொழி லாட்டியேன் யானென்று” ஏங்கிக் கண்ணகி நின்றாள். அப்போது தேவர்கள் வந்து அவளை வான விமானத்தில் அழைத்துச் சென்றனர். அந்த மலையில் இருந்த குறவர்கள் அவளைக் கண்டு வியந்து, கடவுளைப் பாடிக் குரவைக் கூத்தாடினார்கள். நெடுவேள் குன்றம் என்று மூலத்தில் உள்ள தொடருக்குத் திருச்செங்கோடு என்று உரையாசிரியர் பொருள் எழுதியிருக்கிறார். பின்னல் குறவர்கள் முருகனைப் பாடும்போது, “சீர்கெழு செந்திலும் செங்கோடும் வெண்குன்றும், ஏரகமும் நீங்கா இறைவன்” என்று பாடுவதாக மூலத்தில் இருக்கிறது. இப்போது திருச்செங்கோட்டில் அர்த்தநாரீசர் எழுந்தருளியிருக்கிறார், ஒரு பால் பெண்ணும் ஒரு பால் ஆணுமாக அமைந்த திருவுருவம் அது. இடை சுருங்கி, கூந்தல் மேல்நோக்கித் தொகுத்த கொண்டையாக இருக்க, இந்தத் திருவுருவம் காட்சியளிக்கிறது. சிலப்பதிகாரத்தில் செங்கோடென்று வருவதையும், அங்குள்ள திருவுருவம் ஒற்றை நகிலும் ஓங்கிய கொண்டையும் உடையதாக இருப்பதையும் சில ஆராய்ச்சிக்காரர்கள் பார்த்தார்கள். “கண்ணகியின் திருவுருவம் இது. யாரோ இதைப் பிற்காலத்தில் மாதொரு பாதியன் என்று கதை கட்டிவிட்டார்கள்” என்று சொல்லத் தொடங்கினார்கள். ஒற்றை நகிலோடு அந்தத் திருவுருவம் நிற்பதே அவர்கள் ஆராய்ச்சிக்கு முக்கியமான ஆதாரம். இந்த நினைவினால்தான் என் மனம் திருச்செங்கோட்டுக்குப் பிரயாணம் செய்தது. மறுபடியும் கொழும்பிலுள்ள நூதன சாலைக்கு வந்தது. பிறகு சிலப்பதிகாரத்தில் புகுந்தது. கண்ணகி பாண்டியனுக்கு முன் சென்று கனற்பொறி பறக்கும் கண்ணுடன் வழக்குரைத்தாள். அவன் சிங்காதனத்தில் இருந்தபடியே உயிர் நீத்தான். பிறகு அவள் வெளியே வந்து தெய்வத்தையும் முனிவரையும் பிறரையும் அழைத்துப் புலம்பினாள். அதன்பின், “இடமுகில கையால் திருகி மதுரை வலமுறை மும்முறை வாரா அமைந்து மட்டார் மறுகில் மணிமுலையை வட்டித்து விட்டெறிந்தாள்.” அப்படிப் பறித்து எறிந்தது இடநகில். ஆகவே,வேங்கை மரத்தின்கீழ் நின்றபோது அவளுக்கு இருந்தது வலப்பக்கத்து நகில். திருச்செங்கோட்டில் கோயில் கொண்டுள்ள அர்த்தநாரீசுவரருடைய வாமபாகம் பெண் உருவம். ஆகவே, அத்திருவுருவத்தில் இடப் பக்கம் நகில் இருக்கிறதேயன்றி வலப்பக்கம் இல்லை. ஆகையால், கண்ணகியின் உருவந்தான் அர்த்தநாரீசுவர உருவம் என்று சொல்வது சரியன்று. அன்றியும் கண்ணகி வையையாற்றங்கரை வழியே சென்று செவ்வேள் குன்றத்தை அடைந்தாள் என்று இருக்கிறது. அது வேறு குன்றமாக இருக்கவேண்டும். இப்படி ஆராய்ச்சி உலகத்தையும் கொஞ்சம் எட்டிப் பார்த்துவிட்டு வந்தது என் மனம், ‘கடவுள் தன்மை எய்தினபோது கண்ணகி முகத்தில் சினக்குறிப்பு மாறியிருக்கும்; உடம்பில் உள்ள உறுப்புக் குறையும் மாறி இருநகிலும் அமைந்திருக்கும்’ என்று சமாதானம் செய்துகொண்டேன். நூதன சாலையில் ‘கொம்பு முறிக்கும்’ கொம்பு ஒன்று இருந்தது. அதைக் காட்டி அது கண்ணகியோடு தொடர்புடையது என்று நண்பர் சொன்னார். அவரிடம் காதை அதிகமாக நீட்டினேன். அவர் விளக்கிய விஷயமும் பிறகு தெரிந்துகொண்ட செய்திகளும் இலங்கை மக்களுக்குப் பத்தினித் தெய்வத்தினிடம் உள்ள பக்தியை நன்றாகத் தெரிவித்தன. இலங்கையில் உள்ள புத்த தேவாலயங்களில் இந்து மதத்துக்குரிய சில தெய்வங்களையும் பௌத்தர்கள் காவல் தெய்வமாகக் கொண்டாடுகிறார்கள். முருகன், விஷ்ணு, பத்தினி என்ற மூவரையும் பல இடங்களில் காணலாம். கத்தரகம தெய்யோ, விஷ்ணு தெய்யோ, பத்தினித் தெய்யோ என்று அவர்கள் சொல்வார்கள். பத்தினித் தெய்வம் என்பதன் திரிபே பத்தினித் தெய்யோ என்பது. கண்ணகியைப் பௌத்தர்கள் பத்தினி என்றே வழங்குகிறார்கள். பழங்காலத்தில் முதல்முதலில் சேரன் செங்குட்டுவன் இமாசலத்திலிருந்து கல்கொண்டு வந்து அதில் கண்ணகியின் திருவுருவத்தை வடிக்கச் செய்து அதற்குத் திருக்கோயில் கட்டி வழிபட்டான். பிறகு தமிழ் நாட்டிலுள்ள பாண்டி நாட்டிலும் கொங்கு நாட்டிலும் சோழ நாட்டிலும் அந்த நாட்டு அரசர்கள் கண்ணகிக்குக் கோயில் அமைத்து வழிபட்டு வந்தார்கள். அப்போது இங்கே வந்திருந்த கஜபாகு என்ற இலங்கை வேந்தன் கண்ணகிக்குத் தன் நாட்டிலும் படிமம் அமைத்து வழிபட்டான். இதைச் சிலப்பதி காரம் சொல்கிறது. “அது கேட்டுக் கடல் சூழ் இலங்கைக் கயவாகு என்பான் நங்கைக்கு நாட்பலி பீடிகைக் கோட்டம் முந் துறுத்து, ஆங்கு அரந்தை கெடுத்து வரந்தரும் இவள் என, ஆடித்திங்கள் அகவையின் ஆங்கோர் பாடி விழாக்கோள் பன்முறை எடுப்ப, மழைவீற்றிருந்து வளம்பல பெருகிப் பிழையா விளையுள் நாடாயிற்று” என்பது உரைபெறு கட்டுரை என்ற பகுதியில் வருகிறது. கயவாகு இலங்கையில் கண்ணகிக்குக் கோயில் கட்டினான். நாள்தோறும் பூசை நடக்கும்படி செய்தான். ஆடி மாதத்தில் சிறப்பு விழா நிகழ்வித்தான். அதனால் மழை நன்றாகப் பெய்து வளம் பெருகியது. மற்ற இடங்களிலும் கண்ணகி வழிபாட்டின் பிறகு எங்கும் மழை நிறையப் பெய்தது என்று சிலப்பதிகாரம் கூறுகிறது. கயவாகு வேந்தன் காலமுதல் கண்ணகி வழிபாடு இலங்கையில் பரவியது. இலங்கையின் மேற்குப் பகுதிக்கு மட்டக்களப்பு என்று பெயர் வழங்குகிறது. அங்கே பல இடங்களில் கண்ணகிக்குக் கோயில் உண்டு. அந்தப் பக்கங்களில் ‘நாடு மழை வளம் குன்றி, பசியும் பிணியும் மிகுந்த மக்கள் அல்லற்படும் காலத்து, அவை நீங்கி மழையும் வளமும் சுரக்குமாறு கண்ணகியம்மனைச் சாந்தி செய்யும்’ ஒரு விழா நடைபெறுவதுண்டாம். ஒவ்வோர் ஆண்டும் கண்ணகிக்குத் திருவிழா நடைபெறுகிறது. ஒரு கவைக் கொம்பின் இரண்டு கவைகளிலும் இரண்டு கயிறு கட்டி ஒவ்வொரு பக்கத்திலும் ஒவ்வொரு கட்சியார் இழுத்து அந்தக் கொம்பை முறிப்பார்கள். இதற்குக் கொம்பு விளையாட்டு என்று பெயர். கயிற்றை இருபுறமும் இழுத்து விளையாடும் கயிற்றுப் போர் (Tug of war) போல இது நடக்கும் என்று தெரிகிறது. இந்த விளையாட்டுக்கு உபயோகமாகும் கொம்பைத்தான் கொழும்பு மியூசியத்தில் நான் பார்த்தேன். விழாக் காலத்தில் தென்சேரி என்றும் வடசேரி என்றும் கட்சி பிரிந்து கொம்பை முறிப்பார்களாம். தென்சேரி என்பது கண்ணகி கட்சி; வடசேரி என்பது கோவலன் கட்சி. அவர்கள் ஒருவரை ஒருவர் ஏசிப் பாட்டுப் பாடுவார்கள். தவிட்டங் காயான் தென்சேரியான் - அவன் தன்மானம் சற்றும் இல்லாண்டி அவிட்டுத் தலைப்பாவைக் கையில் எடுத்தே அஞ்சி அதோ ஒடிப் போறாண்டி என்று வடசேரியார் பாடுவார்கள். உடனே, வாழைக் காயான் வடசேரியான் - அவன் மான ஈனம் கெட்டவண்டி பெண்பிள்ளை பேச்சுக்கு ஆற்றாம லேஅவன் பேரழிந் தேவெட்கிப் போறாண்டி என்று தென்சேரியார் பாடுவார்கள். ‘இந்தக் கோயில்களில் கண்ணகி காவியம், வழக்குரை காதை என்னும் மான்மியத்தைக் கூறும் நூல்கள் ஆண்டுதோறும் வைகாசிப் பூரணை விழாக் காலங்களில் படிக்கப்படும்’ என்று முதலியார் குல. சபாநாதன் ஓரிடத்தில் எழுதியிருக்கிறார். கண்டியில் இராசசிங்கன் என்பவன் அரசாண்டு வந்த காலத்தில் நல்ல மழை பெய்யவில்லையாம். பயிர் பச்சைகள் கருகிப் போயின. பஞ்சம் வந்தது. மழை பெய்ய என்ன செய்யலாம் என்று மன்னன் யோசித்தான். கண்ணகியை வழிபட்டால் மழை வரும் என்ற நம்பிக்கையும் பழக்கமும் பல காலமாக இருந்து வந்தன. ஆகவே, எல்லாக் கண்ணகி ஆலயங்களிலும் சிறப்பாகப் பூசை போடும்படி இராசசிங்கன் ஏவினான். கிழக்கு இலங்கையில் எல்லாக் கோயில்களிலும் பூசை நிகழ்ந்தது. தம்பிலுவில் என்ற ஊரில் உள்ள கண்ணகியம்மனுக்கும் சிறப்பான அபிடேக ஆராதனைகள் நடைபெற்றன. அந்தக் கோயிலில் கண்ணப்பன் என்ற பூசாரி அம்மனுடைய வழிபாட்டைச் செய்து வந்தான். அவன் பச்சைக் களிமண்ணால் பானை செய்து ஆலயத்திற்கு முன்னே நெருப்பை மூட்டி அதன்மேல் பானையை வைத்து அதில் சோறு பொங்கிக் கண்ணகிக்குப் படைத்தானாம். அப்போது அவன் உணர்ச்சி மிகுதியால் கண்ணகியைப் புகழ்ந்து பதினான்கு காவியங்களைப் பாடினானாம். கண்ணகியின் திருவருள் இருந்தால் பலவகை நன்மைகள் உண்டு என்று அந்தப் பூசாரி கூறுகிறான் : கப்பல்திசை கெட்டது கரைக்குள் அடையாதோ? கட்டைதனில் வைத்தபிணம் மற்றுயிர்கொ ளாதோ? உப்பளம திற்பதர் விதைக்கவிளை யாதோ? உத்தரவு ஊமையன் உரைக்க அறி யானே? இப்பிறவி இக்குருடு இப்பதெளி யாதோ? சிப்பிவளர் முத்துக்கள் ததிக்குள் விளை யாவோ செப்பமுடன் உன்கிருபை வைத்திடுவை யானால் சீர்மேவு தம்பிலுவில் சேருமா தாவே. கண்ணகியின் திருவருள் இருந்தால், திசை கெட்ட கப்பல் தரைக்கு வந்து சேருமாம். செத்த பிணம் மயானத்துக்குக் கொண்டு போய்க் கட்டையில் வைத்த பிறகும் உயிர் பெற்றெழுமாம். உப்பு விளையும் உப்பளத்தில் கருக்காயை விதைத்தால் அது நெல்லாக விளையுமாம். கேட்டதற்கு ஊமை விடை கூறுவானாம். குருடன் கண்பார்வை பெறுவானாம். கடலிலே சிப்பியில் உண்டாகும் முத்து ஆற்றிலே உண்டாகுமாம். இவ்வாறே கண்ணகியைப்பற்றிப் பல நாடோடிப் பாடல்கள் வழங்குகின்றன. சின்னப் புலவன் என்னும் கவிஞன் ‘அம்மன் பள்ளு’ என்று ஒரு பிரபந்தம் பாடியிருக்கிறான். அதில் கண்ணகியின் கதையைச் சுருக்கமாகச் சொல்கிறான். கண்ணகி காளியின் அவதாரமென்றும், பாண்டியனுக்குக் கிடைத்த மாங்கனியிலிருந்து பிறந்தவளென்றும் அந்தப் பாட்டுக் கூறுகிறது. நம் நாட்டில் வழங்கும் ‘கோவலன் கதை’ என்ற நாடோடிக் காவியமும் அதே மாதிரிதான் சொல்கிறது. கண்ணகி தெய்வத் தன்மையுடையாள் என்ற நினைவு ஆழமாகப் பதியப் பதிய, அவளுக்கு மூலம் சக்தி, காளி, துர்க்கை என்ற கற்பனை பின்னாலே எழுந்திருக்க வேண்டும். நம்பிக்கை சிதையாமல் இருக்க இப்படியெல்லாம் கற்பனைகள் உண்டாவது வழக்கமே. தமிழ் நாட்டிலே தோன்றிய கண்ணகி வழிபாடு இந்த நாட்டில் மறைந்து போக, இலங்கையில் அது இன்னும் சிறப்பாக இருப்பது ஆச்சரியந்தான். கொழும்பு மியூசியத்தில் உள்ள கண்ணகி திருவுருவத்தில் தெய்விக அமைதி நிலவுகிறது. அதைப் பார்த்தபடியே சிறிது நேரம் நின்றேன். “இது எங்கேயிருந்து கிடைத்தது?” என்று கேட்டேன். “கிழக்கு மாகாணத்தில் கண்டெடுத்த அழகிய திருவுருவம் ஒன்று உண்டு. அது இப்போது பிரிட்டிஷ் மியூசியத்தில் இருக்கிறது. அதன் மாதிரி இது; அதைப் போலவே இயற்றியது.” எனக்கு ஏதோ ஒருவகை உணர்ச்சி உண்டாயிற்று. அது கோபமா, துக்கமா, பொறாமையா இன்னதென்று சொல்ல முடியாது. மயிலாசனம், கண்டியரசன் சிங்காதனம், நடராஜ விக்கிரகம், கண்ணகியின் உருவம் எல்லாவற்றையும் பறிகொடுத்து விட்டு இப்போது சிலவற்றை வாங்கியிருக்கிறோம். சிலவற்றுக்கு அசல் கிடைக்கவில்லை; நகல் தான் கிடைக்கிறது. பிறந்த இடத்தில் நகல்; வேறு எங்கேயோ அசல்! நம்முடைய நூற்றைம்பது ஆண்டு அடிமை வாழ்வில் கண்டது இது. இந்தத் திறத்தில் இலங்கையும் சரி, இந்தியாவும் சரி, சளைக்கவில்லை. மனம் சிறிது வேதனைப்பட்டது. பிறகு, ‘இப்போது நாம் சுதந்தர இந்தியன்; நாம் நிற்பது சுதந்தர இலங்கை’ என்ற நினைவு வந்தது. கொஞ்சம் ஆறுதற் பெருமூச்சு விட்டேன். ------------------------------------------------------------------------ 1. இலங்கைத் தமிழ் விழா மலர் என்ற வெளியீட்டில், ‘மட்டக் களப்புத் தமிழகம்’ என்னும் கட்டுரையில் பண்டிதர் வி. சீ. கந்தையா என்னும் அன்பர் இது சம்பந்தமான செய்திகளை எழுதியிருக்கிறார்.↩︎ 2. ஈழத்தின் பிரசித்த இடங்கள்-நான்காம் தமிழ் விழா மலர். ப. 163.↩︎ 3. கிழக்கு இலங்கையிலே-கண்ணகி வழிபாடு என்ற கட்டுரை -‘திருவருள்’ எழுதியது. (ஸ்ரீலங்கா, ஆகஸ்ட், 1951).↩︎ 4. யாழ்ப்பாணம் கி. சதாசிவ ஐயர் பதிப்பித்த ‘வசந்தன் கவித் திரட்டு’-பக்கம், 59.↩︎ குறிஞ்சி வளம் கொழும்பு நூதன சாலையில் கண்டியரசன் சிங்காதனமும், புத்தர் திருவுருவங்களும், பல ஓவியங்களின் மாதிரிகளும் இருந்தன. இன்னும் பல அரிய பொருள்கள் இருந்தன. அவற்றையெல்லாம் கண்டு களித்தேன். ஆயினும் என் உள்ளத்தில் ஊன்றி நின்றது பத்தினித் தெய்வத்தின் திருவுருவந்தான். மியூசியத்தைப் பார்த்துவிட்டு ஓரன்பர் வீட்டில் விருந்து உண்டேன். மறு நாள் ஞாயிற்றுக்கிழமை தான் கண்டியில் பாரதி விழா முதலிய நிகழ்ச்சிகள் நடக்க இருந்தன. ஆகவே, அன்று மாலையே புறப்பட ஏற்பாடுகள் செய்தார்கள். நண்பர் கணேஷ் தம் காரை வைத்துக்கொண்டு காத்திருந்தார். எங்களுடன் வீரகேசரி ஆசிரியர் திரு ஹரனும், வீரகேசரி வார இதழாசிரியர் திரு லோகநாதனும் புறப்பட்டார்கள். மாலை ஏழு மணிக்குப் புறப்பட்டது கார். இலங்கை ஒன்பது மாகாணங்கள் அடங்கியது. கொழும்பு மேற்கு மாகாணத்தைச் சேர்ந்தது. கண்டி மத்திய மாகாணத்தைச் சார்ந்தது. மத்திய மாகாணம் முழுவதும் மலைப் பிரதேசம். கண்ணைக் கவரும் இயற்கைக் காட்சிகளை அங்கே காணலாம் என்று அன்பர்கள் சொன்னார்கள். ரப்பர்த் தோட்டங்கள். கோகோத் தோட்டங்கள், தேயிலைத் தோட்டங்கள் ஆகிய பல தோட்டங்கள் அங்கே இருக்கின்றன என்றார்கள். காரில் போகும்போது அவற்றையெல்லாம் பார்க்கலாம் என்று எண்ணினேன். இயற்கை வளம் சூழ்ந்த குறிஞ்சி நிலத்தினூடே கார் வேகமாகப் போய்க்கொண்டிருந்தது. கார் போன வேகத்தினால் சாலைகளின் சிறப்பு எனக்கு நன்றாக விளங்கியது. வர வரக் குளிர்ச்சி மிகுதியாகத் தெரிந்தது. ஆனால் இயற்கைக் காட்சிகளைக் கண்டு களிக்க முடியவில்லை. அப்போது இருட்டிவிட்டது. “அதோ ஒரு ரப்பர்த் தோட்டம்” என்று நண்பர் கணேஷ் காட்டினார். அந்த இருட்டில் ரப்பர்த் தோட்டம் எனக்கு எங்கே தெரியப்போகிறது? நெட்டை நெட்டையாக மரங்கள் நின்றது மாத்திரம் தெரிந்தது. அடர்த்தியான காடுகள். அவற்றின் அழகைக் காணக் கதிரவனுடைய கருணை இல்லாமல் முடியுமா? வண்டி பல காடுகளையும் தோட்டங்களையும் மலைப்பகுதிகளையும் ஆற்றையும் கடந்து சென்றது. நான் ரப்பர் மரத்தையும் காண முடியவில்லை; கோகோ மரத்தையும் காணவில்லை. ஆனாலும் அவற்றைத் தாண்டிச் சென்று கொண்டே யிருந்தேன். ‘விடிந்தால் எல்லாம் வெட்ட வெளிச்சமாகி விடுகிறது’ என்ற நம்பிக்கை இருந்ததனால், அந்த இருட்டில் அவற்றைப் பார்க்கக் கூடவில்லையே என்ற வருத்தம் உண்டாகவில்லை. கண்டிக்கு வந்து சேரும்போது இரவு 11-30 மணி. அன்று இரவு கிரிமெட்டியா என்ற இடத்தில் தங்குவதாக ஏற்பாடு செய்திருந்தார்கள். ஆயினும் போகிற வழியில் கண்டியில் பார்லிமெண்டு அங்கத்தினராகிய ஸ்ரீ இராமாநுஜத்தின் வீட்டில் இறங்கிச் சில நிமிஷங்கள் இருந்தோம். கண்டித் தமிழ்ச் சங்கத்தின் தலைவர் அவர். அவர் மனைவி ஒரு டாக்டர். அவ்விருவரும் பல அரிய தொண்டுகளைச் செய்து வருகிறார்கள். சிறிது நேரம் அங்கே இருந்துவிட்டுக் கிரிமெட்டியாவுக்குப் போனோம். கிரிமெட்டியா ஒரு பெரிய தோட்டம். அதன் தலைவர் ஸ்ரீ வைத்தியலிங்கம் நல்ல பண்பாடு பெற்றவர். முன்பு இலங்கை மேல்சபையில் அங்கத்தினராக இருந்தவர். நல்ல செல்வாக்கு உள்ளவர். தமிழில் ஆராத காதல் உடையவர். எங்களை மிக்க அன்போடு வரவேற்று உபசரித்தார். அவருடைய பங்களாவும் தோட்டமும் முன்பு வெள்ளைக்காரருக்குச் சொந்தமாக இருந்தன. லார்டு மௌண்ட்பேட்டன் துரை அங்கே வந்து சில காலம் தங்கியிருந்தாராம். அப்படியானால் அந்தப் பங்களாவில் எத்தனை சிறப்பான வசதிகள் இருக்குமென்று ஊகித்துப் பார்த்துக்கொள்ளுங்கள். தேயிலைத் தோட்டத்தின் மத்தியில் ஒரு மலையின் மேல் அந்தப் பங்களா அமைந்திருந்தது. நான் தேயிலைச் செடியையே பார்த்ததில்லை. மலைமேல் எவ்வளவு உயரத்தில் அந்த மாளிகை இருக்கிறதென்று பார்க்க ஆசைப்பட்டேன். அங்கே தேயிலையைப் பக்குவம் செய்யும் தொழிற்சாலையும் இருக்கிறதென்று சொன்னார்கள். அதையும் பார்க்க வேண்டுமென்ற ஆர்வம் இருந்தது. அப்போது இரவு ஒரு மணி. நெடுந்தூரம் பிரயாணம் செய்து வந்திருக்கிறோம். ஆகவே, உணவு கொண்டு படுத்தோம். ‘நம்முடைய ஆசைகளெல்லாம் இப்போதைக்குத் தூங்கட்டும். காலையில் எழுந்து எல்லா விருப்பங்களையும் நிறைவேற்றிக் கொள்ளலாம்’ என்று என் மனசுக்குச் சொல்லி அதைத் தூங்கவைத்து நானும் சுகமாகத் தூங்கினேன். கண் விழித்தேன். சுற்றிலும் உள்ள கண்ணாடிக் கதவுகளின் வழியே வெளிச்சம் பரவியது. விடிந்து விட்டதென்று தெரிந்தது. செங்கதிரவன் - எழுந்திருந்து நெடு நேரமாகிவிட்டதென்பதை உணர்ந்தேன். மெல்ல எழுந்து காலைக் கடன்களை முடித்துக் கொண்டு வெளியே வந்தேன். அந்தப் பங்களாவின் வாசலில் வந்து நின்றேன். ஆ! அந்த அழகை என்னவென்று சொல்வது! அருகில் நிற்பவர்கள் என்னைச் சந்தேகிக்கும்படி, ‘ஹாஹா!’ என்று வாய் விட்டுக் கூறினேன். எதிரே அடுக்கடுக்காக மலைகள். மலைச்சாரலில் மேகப்படலம் படர்ந்திருந்தது. சூரியன் தன் கிரணங்களை வீசினான். அதனால் அந்தப் படலம் மெல்ல மெல்ல விலகிக் கொண்டிருந்தது. மலையென்னும் கன்னி உறக்கம் நீங்கித் தன்மேல் போர்த்திருந்த போர்வையை மெல்ல மெல்ல விலக்குவதுபோலத் தோற்றியது. கிரிமெட்டியா ஒரு மலைப் பகுதி. அதைச் சுற்றிலும் பள்ளங்கள். அவற்றையடுத்து மலைச்சாரல்கள். அந்த மலைச் சாரல்களில் படிக்கட்டைப்போல நெல் வயல்களை அமைத்துப் பயிர் செய்திருந்தார்கள். தண்ணீர் அருவியிலிருந்து வற்றாமல் வந்துகொண்டிருந்தது. எங்கே பார்த்தாலும் பச்சைப் பசேலென்ற காட்சி. வைத்த கண் வாங்காமல் பார்த்துக்கொண்டே நின்றேன். “என்ன அப்படிப் பார்க்கிறீர்கள்?” என்று ஹரன் கேட்டார். இன்ப மதுவை உண்டவனைப் போல அவருக்கு நான் காட்சியளித்திருக்க வேண்டும். எதிரே சூரியன் தன் எழிற்சோதியினால் உலக முழுவதற்கும் மெருகு ஏற்றிக்கொண்டிருந்தான். கிடு கிடு பாதாளமும், மிகமிக உயர்ந்த மலைக் காடுகளும் கண்ணுக்கு விளக்கமாகத் தெரிந்தன. மலையின்மேலே தோட்டங்கள் அடர்த்தியாகத் தெரிந்தன. மலையைச் சுற்றிச் சுற்றி ஏறவும் இறங்கவும் அமைந்த சாலையைப் பார்த்தேன். “இராத்திரி இந்தச் சாலை வழியாகவா வந்தோம்?” என்று கேட்டேன். “ஆம்; இங்கே சாலைகள் முதல்தரமானவை. நம்முடைய சாரதியும் மிகவும் கெட்டிக்காரன்” என்றார் நண்பர் கணேஷ். எதிரே சூரியனையும் மலைத்தொடரையும் பார்த்தேன். “அதோ பாருங்கள். அழகுத் தெய்வம் கோயில் கொண்டிருக்கிற கோலத்தைப் பாருங்கள். முருகன் திருவுருவம் இதுதான். நக்கீரர் இப்படிப்பட்ட காட்சிகளை யெல்லாம் பார்த்து மனம் நெகிழ்ந்து தான் திருமுருகாற்றுப்படையைப் பாடியிருக்கிறார். சங்க நூல்களிலே குறிஞ்சி நிலத்தைப்பற்றிப் புலவர்கள் எவ்வளவு அழகாக வருணித்திருக்கிறார்கள்! அவற்றின் பொருள் எனக்கு இப்போதுதான் விளங்குகிறது. இப்போது தமிழ் நாட்டில் அந்த அழகைக் காண இயலாது. இதோ இருக்கிறது சங்க நூலில் கண்ட குறிஞ்சி நிலம். இதோ இருக்கிறது குறிஞ்சிக் கிழவனாகிய முருகனுடைய அழகுக் கோலம்!” நான் சொற்பொழிவு ஆற்றவில்லை. உணர்ச்சி மிகுதியால் பேசினேன். பங்களாவைச் சிறிது சுற்றிப் பார்த்தேன். தேயிலைச் செடியைப் பார்த்தேன். சிறிய நந்தியாவட்டைச் செடியைப்போலக் குத்துக் குத்தாகத் தேயிலைச் செடிகள் இருந்தன. அந்தச் செடியை இரண்டு ஆண்டுக்கு ஒரு முறை கவாத்துச் செய்வார்களாம். அப்போதுதான் நல்ல கொழுந்தாக விடுமாம். கடல் மட்டத்துக்கு 3000 அடி உயரத்தில் தேயிலை வளர்கிறது. ஒரு செடி நாற்பது ஆண்டு வரையில் பலன் தரும். முன்பு இலங்கையில் அதிகமாகக் காபித் தோட்டங்களே இருந்தனவாம். இடையிலே ஒரு பூச்சி வந்து எல்லாவற்றையும் அழித்துவிட்டது. அதன் பிறகே தேயிலையை எங்கும் பயிரிட்டார்கள். இப்போது இலங்கைக்குப் பணம் சம்பாதித்துக் கொடுக்கும் பண்டங்களில் முக்கியமானது தேயிலை. முன்பு இலங்கைத் தோட்டங்கள் யாவுமே வெள்ளைக்காரர்களுக்குச் சொந்தமாக இருந்தன. இப்போது சிங்களவர்களும் தமிழர்களும் பல தோட்டங்களை விலைக்கு வாங்கியிருக்கிறார்கள். இயற்கை வளம் மிக்க மலைகளில் தேயிலைத் தோட்டங்கள் கொழுந்திலே பொன்னை வைத்திருக்கின்றன. நான் தங்கியிருந்த கிரிமெட்டியாத் தோட்டம் 450 ஏகராப் பரப்புடையது. “கிரிமெட்டியா” என்றால் என்ன பொருள்?" என்று விசாரித்தேன். ஊருக்கு எப்படிப் பெயர் வந்தது என்பதை விசாரிப்பதில் எனக்குத் தனி விருப்பம் உண்டு. கிரிமெட்டியா என்றால் வெள்ளை மண் என்று அர்த்தம்" என்றார்கள். அதைக் கேட்டுவிட்டுச் சும்மா இருக்கத் தோன்றுகிறதா? “கிரிமெட்டியாவுக்கும் வெள்ளை மண்ணுக்கும் என்ன சம்பந்தம்?” என்று அடுத்த கேள்வி பிறந்தது. “கிரி என்றால் சிங்களத்தில் பால் என்று அர்த்தம்.” “ஓ. இப்போது விளங்கிவிட்டது. வெள்ளைக் காகிதத்தைப் பால் காகிதம் என்று தமிழ் நாட்டில் சொல்வதுண்டு. அதுபோல வெள்ளை மண்ணைக் கிரிமெட்டியா அல்லது பால் மண் என்று சொல்கிறார்கள் போலும்! கீரம் என்பது வடமொழியில் பாலைக் குறிக்கும் சொல். அதுவே கிரி என்று வந்திருக்கலாம். மெட்டியா என்பது மிருத்திகா என்ற வட சொல்லின் திரிபாக இருக்கவேண்டும்” என்று சொல்லாராய்ச்சியில் சிறிது நேரம் இறங்கிவிட்டேன். கண்முன்னே அழகுக் காட்சிகள் பல இருந்தன. அவற்றைக் கண்ட மகிழ்ச்சியில் ஆழ்ந்திருக்கும் போதே இந்தச் சொல்லாராய்ச்சி இடைப் புகுந்தது. எல்லாம் வாசனைப் பழக்கம். தேயிலையைப் பாடம்பண்ணும் தொழிற்சாலையை ஆறுதலாகப் பார்த்துக் கொள்ளலாம் என்று நண்பர்கள் சொன்னார்கள். ஆகவே, காலை உணவு உட்கொண்டு கண்டியை நோக்கிப் புறப்பட்டேன். முதல் நாள் இரவு கிரிமெட்டியாவுக்குப் போகும் போது அந்தச் சாலையையும் அதன் இருமருங்கிலும் உள்ள காட்சிகளையும் பார்க்க இயலவில்லை. இயற்கைத் தேவி திரைக்குப் பின்னே நின்ற தேவமங்கையைப் போல இருந்தாள். உடம்பெல்லாம் போர்த்து மறைந்து நின்ற கோஷா மகள்போல இருந்தாள். இப்போது இருள் போய் ஒளி வந்துவிட்டது. கண்ணை அகல விழித்துப் பார்த்தேன். சாலை வளைந்து வளைந்து சென்றது. மலையைச் சுற்றிச் சுற்றிக் கார் இறங்கியது. சற்றுத் தவறிவிட்டால் கிடுகிடு பாதாளத்தில் விழ வேண்டியதுதான். ஆனால் அந்தச் சாலை மிக நன்றாக அமைந்திருந்தது. காரில் பிரயாணம் செய்கிறவர்களுக்கு இலங்கையிலுள்ள சாலைகள் மிகவும் ஏற்றவை. தேயிலைத் தோட்டங்கள் 3000 அடி உயரத்தில் இருந்தன. கீழே வரவரத் தேயிலை மறைந்தது; ரப்பர்த் தோட்டங்கள் வந்தன. மிக உயரமாக வளர்ந்திருந்தன. ரப்பர் மரங்கள். அவற்றின் பட்டையை மிக மெல்லியதாகச் செதுக்கியிருக்கிறார்கள். அப்படிச் செதுக்கின இடத்தின் வழியே ரப்பர்ப் பால் சுரக்கிறது. பட்டையைச் செதுக்கின வழியின் முடிவில் ஒரு கொட்டங்கச்சியைப் பொருத்தியிருக்கிறார்கள். செதுக்கின சுவட்டின் வழியே சென்று கடைசியில் அந்தக் கொட்டங்கச்சியிலே போய் ரப்பர்ப் பால் வடிகிறது. ஒவ்வொரு நாளும் அந்தப் பாலை எடுத்துச் சேகரிக்கிறார்கள். கோக்கோத் தோட்டங்கள் இரண்டாயிரம் அடி உயரத்தில் இருந்தன. அதன் இலைகள் சற்று அகலமான மாவிலைபோல இருக்கின்றன. அடர்ந்து செறிந்த தழையுடையவை, காய்கள் பல நிறங்களையுடையனவாய்த் தொங்குகின்றன. அவை பார்வைக்குப் பங்களூர்க் கத்தரிக்காய் போலத் தோன்றுகின்றன. காய்கள் பல நிறமாக இருந்தாலும் பழுத்தால் எல்லாம் மஞ்சள் நிறம் ஆகிவிடும். கோக்கோக் காய்க்குள் வாதாங்கொட்டை மாதிரி கோக்கோப் பருப்புகள் இருக்கின்றன. அவற்றைப் பக்குவமாகப் பொடி செய்து கோக்கோ தயாரிக்கிறார்கள். இலங்கையில் சாகொலேட் - தான் செய்கிறார்களாம். ஸ்விட்ஜர்லாந்தில்தான் கோக்கோ செய்கிறார்களாம். அங்கேதான் அதற்கு வேண்டிய சீதோஷ்ண நிலை இருக்கிறதாம். கோக்கோ செப்டம்பர் அக்டோபர் மாதத்தில் ஒரு தரமும் கோடைக்காலத்தில் ஒரு தரமும் காய்க்கும். செப்டம்பர் மாதத்தைக் காலம் என்று சொல்கிறார்கள். அப்போது மிகுதியாகக் காய்க்கும். கோக்கோத் தோட்டங்களிலே அங்கங்கே மிளகுக்கொடி ஓடிக் கடந்தது. தென்னை, பலா, கமுகு மரங்கள் எங்கே பார்த்தாலும் இருந்தன. மலையின் மேல் அடர்த்தியாகத் தென்ன மரங்களைப் பார்த்தபோது நான் ஆச்சரியப்பட்டேன். எல்லா மரங்களும் மிகமிக உயரமாக வளர்ந்திருந்தன. அந்தத் தென்ன மரங்களையும் கமுக மரங்களையும் பலா மரங்களையும் கண்ட போது சீவகசிந்தாமணிப் பாட்டு ஒன்று என் நினைவுக்கு வந்தது. ஏமாங்கதம் என்ற நாட்டைத் திருத்தக்கதேவர் வருணிக்கிறார். அங்கே இயற்கை வளம் மிகச் சிறப்பாக அமைந்திருந்தது. தென்ன மரத்தோப்புகளும் கமுகந் தோட்டமும் பலாமரச் சோலையும் ஒன்றோடு ஒன்று நெருங்கிச் செழித்திருந்தன. தென்ன மரங்கள் மிக உயரமாக வளர்ந்திருந்தன. அவற்றைவிடச் சற்றுத் தாழ்வாகக் கமுக மரங்கள் நின்றன. அவற்றையடுத்துப் பின்னும் தாழப் பலா மரங்கள் இருந்தன. படிப்படியாக அமைத்தாற்போல அவை விளங்கின. தென்ன மரத்திலிருந்து பழுத்து முதிர்ந்த ஒரு தேங்காய் விழுந்தது; அதற்கு அடுத்தபடி உயர்ந்து நின்ற கமுக மரத்தின்மேல் அது விழுந்தது. அந்த மரத்தில் வண்டுகள் பெரிய தேனடையை வைத்திருந்தன. தேங்காய் அந்தத் தேனடையின் மேல் வேகமாக விழுந்து அதைக் கிழித்துக்கொண்டு வந்தது. கமுக மரத்தின் கீழே பலா மரங்கள் இருந்தன. தேனடையைக் கிழித்து வந்த தேங்காய் பலா மரத்தின்மேல் விழுந்தது. அதில் பழங்கள் பழுத்துக் கனிந்திருந்தன. வேகமாக விழுந்த தேங்காய் அந்தப் பலாப் பழத்தைக் கீறியது; அதன் கீழ் நின்ற மாமரத் திலிருந்து கனிகளைச் சிதறியது; பின்ப அதன் கீழ் நின்ற வாழை மரத்தில் பழுத்திருந்த பழங்களை உதிர்த்துவிட்டது. தேங்காய் மேலிருந்து விழுந்து நடத்திய இந்தப் பயணத்தில் அந்த நாட்டின் தேனையும் பழத்தையும் சுவைத்தது. நில வளத்தை நாம் தெரிந்துகொள்ளும் அளவுகோலாக அந்தத் தேங்காய் உதவியது. காய்மாண்ட தெங்கின் பழம்வீழக் கமுகின் நெற்றிப் பூமாண்ட தீத்தேன் தொடைகீறீ வருக்கை போழ்ந்து தேமாங் கனிசி தறிவாழைப் பழங்கள் சிந்தும் ஏமாங் கதம்என்று இசையால் திசை போய துண்டே! [காய்கள் சிறப்பாகக் காய்த்து நிற்கின்ற தென்ன மரத்தின் பழுத்த கெற்று உதிர, பின் அது கமுகமரத்தின் உச்சியிலே இருந்த பூவிலிருந்து உண்டாகிச் சிறந்த இனிய தேனடையைக் கிழித்துக்கொண்டு, பலாப் பழத்தைப் பிளந்து, இனிய மாம்பழத்தைச் சிதறச் செய்து, வாழைப் பழங்களேச் சிந்தும் ஏமாங்கதம் என்று புகழினால் திசை முழுதும் பரவிய காடு இன்று உண்டு.] இந்தப் பாட்டை நான் நினைத்துக்கொண்டே, இதில் உள்ள காட்சிகளில் மாமரத்தைத் தவிர மற்ற எல்லாவற்றையும் அங்கே பார்த்தேன். அவை மட்டுமா? எத்தனை விதமான வண்ண வண்ண மலர்கள்! கார், மலையை வட்டமிட்டு இறங்கி அந்தது. அப்படி வருகையில் ஒவ்வொரு முறையும் கார் போகும் திசை மாறுமல்லவா? புதிய புதிய இயற்கை எழிற் படலத்தை எடுத்து எடுத்துக் காட்டுவதுபோல அவ்வப்போது காட்சிகள் மாறி வந்தன. ‘ஒரு காலத்தில் தமிழ்நாட்டில் இயற்கை வளம் இப்படிதான் இருந்திருக்கவேண்டும் போலிருக்கிறது’ என்று எண்ணினேன். நம்முடைய வாழ் நாளில் பல இடங்கள் வளங்கள் குன்றிப் போவதை காண்கிறோம். பல மலைகளில் அருவிகள் ஓடிப் பின்பு வறண்டு போனதைப் பார்க்கிறோம். திருவண்ணாமலையில் அருவி ஓடியதைக் கண்டவர்கள் உண்டு. இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் திருப்பரங்குன்றத்தில் அடர்ந்த காடுகளும், நீர் நிறைந்த அருவிகளும் இருந்திருக்கவேண்டும். பரிபாடல் என்ற சங்க நூலில் அந்த மலையின் வருணனை விரிவாக இருக்கிறது. அதைப் பார்த்தால் இப்போதுள்ள நிலைக்கும் அதற்கும் தொடர்பே இல்லையென்று தோன்றும். கண்டி விழாக்கள் கிரிமெட்டியாவிலிருந்து கண்டிமா நகரை வந்து அடைந்தோம். கண்டியில் உள்ள நகர மண்டபத்தில் அன்று மூன்று விழாக்கள் நடக்க இருந்தன. முதலில் பாரதி விழா; அடுத்தபடி மத்திய மாகாணத் தமிழ்ச் சங்க ஆரம்ப விழா; பிறகு அகில இலங்கைத் தமிழ் எழுத்தாளர் சங்க ஆரம்ப விழா. பாரதி விழாவுக்குத் தலைமை வகிக்கும் பொறுப்பை எனக்கு அளித்திருந்தார்கள். கண்டிமா நகரத்தின் அழகிய காட்சி என் கண்ணைக் கவர்ந்தது. சுற்றிலும் மலைகள், ஊரின் நடுவே ஒரு பெரிய ஏரி. எங்கே பார்த்தாலும் பசுமைத் தோற்றம். அழகிய கட்டிடங்களும் கோயில்களும் சாலைகளும் அமைந்த, நாகரிக எழில் கெழுமிய நகரம் அது. இயற்கையின் எழில் சூழ இருந்து உள்ளத்தைக் கவர, செயற்கை எழில் இடையே நின்றது. இயற்கையின் ஏற்றத்தை ஒரு கணமும் மறக்க இயலாத நிலையில் கண்டி நகரம் வளர்கிறது. “இங்கே முருகன் திருக்கோயில் இருக்கிறதா?” என்று கேட்டேன். “தமிழர்கள் வாழும் இடங்களில் கதிர்காம வேலனுடைய கோயில் இராத இடம் அரிது” என்றார்கள். “கதிர்காமத்தில் அல்லவா கதிர்காம வேலன் இருப்பான்? இங்கே-” “ஆம்; இலங்கை முழுவதும் கதிரேசன் தான் இருக்கிறான். எந்த ஊரானாலும் முருகன் மாத்திரம் கதிர்வேற் பெருமான்; கதிர்காமப் பெருமான்” என்றார் ஓர் அன்பர். தமிழ் நாட்டில் தண்டாயுதபாணியின் கோயில் எங்கே இருந்தாலும் அவரைப் பழனி யாண்டவரென்றே சொல்கிறோம். பழனி - ஓரிடத்தில் தான் இருக்கிறது. ஆனால் பழனியாண்டவரோ வேறு பல ஊர்களிலும் இருக்கிறார். இது அப்போது என் ஞாபகத்துக்கு வந்தது. “இங்கே ஒரு முருகன் திருக் கோயில் சிறப்பாக இருக்க வேண்டும். அருணகிரி நாதர் அப் பெருமானைப் பாடியிருக்கிறார்” என்றேன் நான். "சந்ததம் பந்தத் தொடராலே சஞ்சலம் துஞ்சித் திரியாதே கந்தன்என் றென் றுற் றுனை நாளும் கண்டுகொண் டன்புற் றிடுவேனோ? தந்தியின் கொம்பைப் புணர்வோனே சங்கரன் பங்கிற் சிவைபாலா செந்தில்அங் கண்டிக் கதிர்வேலா தென்பரங் குன்றிற் பெருமாளே!" என்ற பாட்டையும் சொன்னேன். கண்டி நகர மண்டபத்தில் நகரமக்கள் பலர் கூடியிருந்தனர். கொழும்பிலிருந்தும் யாழ்ப்பாணத்திலிருந்தும் பலர் வந்திருந்தார்கள். அரசாங்க மந்திரிகள் சிலரும் இலங்கைச் சட்ட சபை அங்கத்தினர் சிலரும் விழாவுக்கு வந்திருந்தார்கள். மண்டபத்திற்கு வந்து அமர்ந்ததும் என் கண்ணை ஓட்டினேன். அநேகமாக எல்லோருடைய நெற்றியிலும் பளிச்சென்று திரு நீறு இலங்கியது. கொழும்பிலும் நான் சந்தித்த தமிழன்பர்கள் திருநீற்றைத் தரித்திருந்தார்கள். பலர் ருத்திராட்ச மாலையை அணிந்திருந்தார்கள். சைவத்தின் இருப்பிடமாகிய தமிழ் நாட்டில் அவ்வளவு பக்தியை இப்போது காண முடியவில்லை. உயரமான மேடையில் தலைவருக்கு ஆசனம் அமைத்திருந்தார்கள். அந்த இடத்தைச் சுற்றிலும் பிரமுகர்கள் வீற்றிருந்தார்கள். அருகில் மாவிலை தேங்காயுடன் நிறைகுடம் வைத்துத் திருவிளக்கு ஏற்றினார்கள். நம்முடைய நாட்டுப் பண்பை எவ்வளவு - நன்றாக மேற்கொண்டிருக்கிறார்கள் என்பதை எண்ணி எண்ணி மகிழ்ந்தேன். “இலங்கையில் வெள்ளைக்காரருடைய நாகரிகத்தைப் பின்பற்றி அவர்களைப் போலவே பழக்க வழக்கங்களை உடையவர்கள் பலர் என்று முன்பு நண்பர்கள் சொல்லிக் கேள்வியுற்றிருக்கிறேன். ஆனால் இங்கே வந்து பார்த்தால் தமிழ் நாட்டைவிட அதிகமான பக்தியும் தமிழ்ப் - பண்பும் இருக்கின்றனவே!” என்று ஒரு நண்பரைக் கேட்டேன். “ஒரு காலத்தில் அப்படித்தான் இருந்தது. இப்போதும் சில குடும்பங்கள் அப்படி இருக்கின்றன. சிங்களவர்களிடம் ஆங்கில நாகரிக மோகம் அதிகம். தமிழர்கள் முன்பு அப்படி இருந்தாலும், இந்தியாவில் தேசீய உணர்ச்சி மிகுதியாகிக் காந்தீயம் பரவி இந்தியப் பண்பு மேலோங்கவே, இங்கும் அந்த எளிமையும் பழக்க மாறுதலும் வந்துவிட்டன. இங்குள்ள தமிழர்களில் பழையவர்களாகிய யாழ்ப்பாணத்தவர்கள் எப்பொழுதுமே சிவபக்தியுடையவர்கள்” என்று அவர் எனக்கு விளக்கினார். முதலில் பாரதி விழா ஆரம்பமாயிற்று, கிரிமெட்டியாத் தோட்டத்தின் சொந்தக்காரராகிய திரு வைத்தியலிங்கம் எல்லோரையும் வரவேற்றார். அப்பால் உதவிக் கல்வி மந்திரியாக இருந்த திரு கனகரத்தினம் விழாவைத் தொடங்கி வைத்தார். திரு கனகரத்தினம் யாழ்ப்பாணத் தமிழர். தமிழில் அதிக ஊக்கமும் பற்றும் உள்ளவர். யாழ்ப்பாணத்தில் மிகச் சிறப்பாகத் தமிழ் விழா நடந்ததல்லவா? அந்த விழாவை அங்கே நடத்த வேண்டுமென்று முயன்று தமிழ் வளர்ச்சிக் கழகத்தாரை அழைத்தவர் அவரே. “கண்டியைத் தலைநகராகக் கொண்ட மத்திய மாகாணத்தில் ஐந்து லட்சம் தமிழர்கள் வாழ்கிறார்கள். அவர்களுடைய சார்பில் இந்த விழா நடைபெறுகிறது. இப்படி அங்கங்கே தமிழுக்குப் புத்துயிர் உண்டாவதைக் காணக் காண எனக்கு அளவற்ற மகிழ்ச்சி உண்டாகிறது” என்று அவர் பேசினார். நான் கொழும்பில் இறங்கியவுடன் வீரகேசரி ஆசிரியர் திரு ஹரன் தமிழ்நாட்டின் நிலைமையைக் கேட்டதையும், தமிழ் நாட்டில் உணவுப் பஞ்சம் ஏற்பட்டிருப்பதை நான் சொன்னதையும் முன்பே எழுதியிருக்கிறேன். வீரகேசரி - ஆசிரியர் தலையங்கம் எழுதுவதோடு ‘ஊர்க்குருவி’ என்று தலைப்பிட்டுப் பல விஷயங்களை ஒவ்வொரு நாளும் எழுதி வருகிறார். தலையங்கத்தைப் படிப்பவர்களை விட அந்த ’ஊர்க்குருவி’யைப் படிப்பவர்களே அதிகம். தலையங்கம் பொதுவாக நாட்டு நிலைமையையும் உலக நிலைமையையும் பற்றி ஆராய்வது. ’ஊர்க்குருவி’யோ நெருக்கமாக உள்ள விஷமங்களை உணர்ச்சியோடு கலந்து சொல்வது. என்னைச் சந்தித்ததையும் என் தோற்றத்தையும் நான் கூறிய விஷயங்களையும் அதில் (15-9-51) எழுதியிருந்தார். உணவுப் பஞ்சத்தைப்பற்றி அவர் எழுதியிருந்த பகுதி இது : “……. தமிழ் நாட்டில் நிலைமை எப்படி உள்ளது என்று கேட்டேன். எங்கும் வறுமைதானாம். ரெயில்வே ஸ்டேஷனில் யாராவது சாப்பாட்டுப் பொட்டணம் வாங்கிச் சாப்பிட்டால், பாதி உண்ணும்போதே கையேந்திச் சாதத்தைப் பிடுங்கிக் கொண்டு போய் விடுகிறார்களாம். ‘தமிழரின் விசேஷப் பண்பாடு காரணமாக இவ்வளவு கஷ்டங்களையும் பலாத்காரப் புரட்சியின்றிச் சகித்து வருகிறார்கள்’ என்றார். பஞ்சமும் நோயும் நின் மெய்யடியார்க்கோ! பாரினில் மேன்மைகள் வேறினி யார்க்கோ ! கடவுளே !!” இந்தப் பகுதி பலருடைய கண்ணில் நன்றாகப் பட்டிருக்கவேண்டும். அதுவும் அரசியல்வாதிகள் நிச்சயமாக இதைப் பார்த்திருப்பார்கள். கண்டி பாரதி விழாவில் தமிழ் நாட்டு உணவுப் பஞ்சத்தைப் பற்றிய விவாதமே நடந்ததென்று சொல்லவேண்டும். அந்த விவாதத்தைக் காரசாரமாக ஆரம்பித்து வைத்தவர் திரு கனகலிங்கம் அவர்கள், ஆம்; அவர் பாரதி விழாவை ஆரம்பித்து வைத்துப் பேசிய பேச்சில்தான் இந்த விவாதத்தையும் நுழையவிட்டார். “திரு ஜகந்நாதன் தமிழ் நாட்டில் நிலவும் உணவு நிலைமையைப் பற்றித் தெரிவித்த செய்திகளைப் பத்திரிகையில் பார்த்தேன். இந்தியா அடிமைத்தனத்திலிருந்து வெளியேறியும் பஞ்சத்தினின்று விடுதலை பெறவில்லை என்பது வருந்தத்தக்க விஷயம். இந்திய அரசாங்கம் இந்தப் பஞ்சத்தை வளர விடாமல் தடுக்கத் தக்க முயற்சி செய்யவில்லை. அது கண்டிப்பதற்குரியது. பாரதியார், தனி ஒருவனுக்கு உணவிலை எனில் சகத்தினை அழித்திடுவோம்’ என்று பாடியிருக்கிறார். இவ்வளவு மக்கள் பட்டினியால் வாடும்படி செய்யும் அரசாங்கத்தை அழித்துவிடுவதுதான் நியாயம். பாரதியார் சொல்வதை நாம் உணர்ச்சியுடன் கவனிக்கவேண்டும்” என்று கனகரத்தினம் பேசினார். ’அரசியல்காரர்கள் எந்த இடத்திலும் அரசியலைக் கலக்காமல் விடுவதில்லை என்ற நினைவுதான் எனக்குத் தோன்றியது. அவர் அவ்வளவு உணர்ச்சியோடு சொன்னதற்கு நான் விடையளித்திருக்கலாம். ஆனால் அரசியல் துறையில் நான் கலந்துகொள்வதில்லை. அயல் நாட்டில் பேசும் ஒவ்வொரு சொல்லும் நிதானத்துடன் வரவேண்டுமல்லவா? நல்ல வேளையாகத் தலைமையுரைக்குப் பிறகு பேசிய திரு தொண்டைமான் அவர்கள் கனகரத்தினத்திற்குச் சரியான விடையை அளித்தார். இருவரும் வெவ்வேறு கட்சிக்காரர்கள். ஆகவே அவர்கள் பேச்சுச் சொற் போராகவே இருந்தது. தொண்டைமான் பேசினர்: “தனி யொருவனுக்கு உணவிலையெனில் சகத்தினை அழித்திடுவோம் என்ற பாரதியார் வாக்கை என் நண்பர் எடுத்துக் காட்டி, இந்திய அரசாங்கத்தைக் குறைகூறினார். முதலில் பாரதியார் கருத்தை நன்றாகத் தெரிந்து கொள்ள வேண்டும். எல்லோரும் நிறைய உணவுண்டு வாழும்போது ஒருவனுக்கு மாத்திரம் உணவு கிடைக்காவிட்டால் அந்த நிலையில் சுய நலச் சூழ்ச்சிக்காரர்களை ஒழித்துக் கட்டுவதைப் பற்றித் தான் பாரதியார் பாடுகிறார். இப்போது இந்தியாவில் எல்லோருமே உணவுத் தட்டுப்பாட்டுக்கு ஆளாகியிருக்கின்றார்கள். அந்தத் துன்பத்தை எல்லோரும் பங்கிட்டுக் கொண்டிருக்கிறார்கள். இதற்காக வேறு நாட்டாரிடம் போய்ப் பல்லை இளித்துக் கொண்டு நிற்கவில்லை. செல்வம் படைத்த இலங்கை அரசாங்கம் என்ன செய்கிறது? உணவுக்காக ஊராரிடம் போய்க் கெஞ்சுகிறது” என்று அவர் சொன்னார். அப்போது அமெரிக்காக்காரர்கள் இந்தியாவுக்கு உணவுத் தானியம் அனுப்பலாமா வேண்டாமா என்று மீன மேஷம் பார்த்துக் கொண்டிருந்த காலம்; ஜவாஹர்லால் நேரு, நிபந்தனை போட்டுத் தருவதாக இருந்தால் யாரிடமும் ஓர் இம்மியும் ஏற்க மாட்டோம்" என்று வீர கர்ஜனை செய்த காலம். கனகரத்தினம் இந்திய அரசாங்கத்தைக் குறை கூறினார். தொண்டைமான் இலங்கை அரசாங்கத்தைக் குறை கூறினார். அந்த விழாவில் பேசிய வேறு சில அரசியல்வாதிகளாகிய தமிழர்களும் இந்த விஷயத்தைப் பற்றிப் பேசினார்கள். கனகரத்தினம் விழாவைத் தொடங்கி வைத்த பிறகு நான் என் தலைமைச் சொற்பொழிவை ஆற்றினேன். புதிய இடம், ஆர்வமுள்ள மக்கள், நல்ல கூட்டம். ஆகவே எனக்கு ஊக்கம் உண்டாவதில் ஆச்சரியம் என்ன? இலங்கைக்கு முதல் முறையாக வந்ததையும், பழந்தமிழ் நூல்களிலே கண்ட இயற்கை வளங்களை அங்கே நேரில் கண்டதையும் எடுத்துச் சொன்னேன். “இலக்கிய உலகில் உலா வரும்போது கண்ட காட்சிகளை இங்கே காண்கிறேன். பழந்தமிழர் வாழ்ந்த உலகத்தில் நிற்கிறோம் என்ற உணர்ச்சி உண்டாகிறது” என்று என் கருத்தை வெளியிட்டேன். பல காலமாக இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இலக்கியத் தொடர்பு இருப்பதை விரித்துரைத்தேன். சிலப்பதிகாரம், மணிமேகலை என்னும் காவியங்களில் வரும் வரலாறுகளில் இலங்கை இடம் கொண்டிருப்பதை எடுத்துச் சொன்னேன். “இலங்கைக்கும் தமிழ் நாட்டுக்கும் பாலம் போட வேண்டுமென்று பாரதியார் பாடுகிறார், சிங்களத் தீவினுக்கோர் பாலம் அமைப்போம் என்று அவர் சொல்கிறார். இலக்கியத்தின் உதவியால் முன்பே பாலம் இட்ட பெரியார்கள் பலர் உண்டு. சமீப காலத்தில் பாலமிட்ட பெரியார்களில் மிகச் சிறந்தவர் ஸ்ரீ ஆறுமுக நாவலர்” என்று சொல்லி நாவலரவர்களின் பெருமையை விரித்தேன். அப்பால் கவியின் இயல்பு, உணர்ச்சியை உருவாக்கிக் கவியாக வடிக்கும் திறமை, பாரதியார் கவிப்பண்பு முதலிய பல பொருள்களைப்பற்றிப் பேசினேன். ஒன்றே முக்கால் மணிநேரம் சொற்பொழிவு ஆற்றினேன். சபையில் இருந்தவர்கள் அமைதியாகக் கேட்டுக்கொண்டிருந்தார்கள். ரஸிகர்களுடைய கூட்டத்தில் பேசுவதென்றால் பேச்சாளர்களுக்கு எப்போதுமே ஆர்வம் அதிகம். சமுத்திரம் ஆளைக் கண்டால் கொந்தளிக்கும் என்று சொல்வார்கள். ‘ஆள்கண்ட சமுத்திரம்’ என்று பழமொழிகூட வழங்குகிறது. அது எத்தனை தூரம் உண்மையோ நான் அறியேன். மேடையில் ஏறிப் பேசுகிறவர்கள் திறத்தில் இந்த உண்மை பொருந்தும். அவர்களே ஆட்கண்ட சமுத்திரம். உம்மென்று முகத்தைத் தொங்கப் போட்டுக்கொண்டிருக்கிறவர்களின் கூட்டத்தில் பேசவே தோன்றாது. என்னுடைய ஆசிரியராகிய ஸ்ரீமத் ஐயரவர்கள் சொல்வதுண்டு: “சிலர் இருக்குமிடத்தில் ஒன்றுமே பேசத் தோன்றுவதில்லை. நாம் என்ன பேசினாலும் இதைக் காட்டிலும் நாம் நன்றாகப் பேசலாமே என்று சிலர் பொறாமையுடன் இருப்பார்கள். சிலர் நாம் பேசுவதில் சிறிதும் அக்கறையில்லாமல் எங்காவது சிந்தையை ஓட விட்டிருப்பார்கள். அவர்கள் முகத்திலே கொஞ்சங் கூடப் பொலிவு இராது. அவர்களுக்கு நடுவே நாம் அகப்பட்டுவிட்டால் நம்முடைய முகத்திலும் அசடு தட்டிவிடும். பேசுவதற்கும் விஷயம் வராது. மிகவும் எளிதில் கை வந்த பொருளெல்லாம், இங்கே எதற்காக வெளிப்பட வேண்டும் என்று ஒளிந்துகொள்ளும்” என்று சொல்வார்கள். சொற்பொழிவு விஷயத்தில் இது எவ்வளவு உண்மை என்பதை அநுபவித்தவர்கள் நன்கு உணர்வார்கள். இதற்கு நேர்மாறாக, உண்மை அன்பும் ஆர்வமும் உடையவர்கள் கூடிய அவையில் பேசினால் நமக்கு உண்டாகும் உணர்ச்சியே தனிவகை. புதிய புதிய உவமைகளும் மேற்கோள்களும் காரணங்களும் நம் பேச்சில் சரமாரியாக வரும். நாம் முன்பு நினைத்துக் கொண்டு போகாவிட்டாலும் அந்தச் சமயத்தில் அற்புதமாகப் பல கருத்துக்கள் நமக்குச் சொல்ல வரும். பின்னால் நினைத்துப் பார்த்தால் நமக்கே வியப்பாக இருக்கும். திருவள்ளுவரே இந்த அனுபவத்தைத் திருக்குறளில் சொல்கிறார். ‘இயற்கையாக நன்றாய் ஒரு பாத்தியில் பயிர் வளர்கிறது. அதற்கு நீர் பாய்ச்சினால் அது பின்னும் செழித்து வளரும் அல்லவா? நயம் தெரிந்த ரஸிகர்கள் கூடிய சபையில் ஒரு கருத்தை எடுத்துச் சொல்வதும். அத்தகையதே’ என்று அவர் பாட்டால் சொல்கிறார். “உணர்வது உடையார் முன் சொல்லல் வளர்வதன் பாத்தியுள் நீர்சொரிந் தற்று.” காலையில் பாரதி விழா முடிந்தவுடன் யாவரும் விருந்துண்டோம். அப்பால் பிற்பகலில் முதலில் மத்திய மாகாணத் தமிழ்ச் சங்கத் தொடக்க விழா நடைபெற்றது. இலங்கைப் பல்கலைக் கழகத்துப் பேராசிரியர் திரு அருணந்தியின் தலைமையில் அது மிகச் சிறப்பாக நடைபெற்றது. தொடர்ந்து அகில இலங்கை எழுத்தாளர் சங்க ஆரம்பவிழா நிகழ்ந்தது. அதற்கு வீரகேசரி ஆசிரியர் தலைமை வகித்தார். பல அன்பர்கள் பேசினார்கள். இறுதியில் நானும் பேசினேன்; ஒரு மணி நேரம் பேசினேன். எழுத்தாளனுடைய பெருமை, நிலை, கடமை என்பவற்றைப் பற்றிப் பேசியதோடு, “நம்முடைய பழந்தமிழ்ச் செல்வம் மிகப் பெரியது. அதை நாம் புறக்கணிக்கக்கூடாது. நம்முடைய மரபு அழியக்கூடாது. பழமையிலே வேரூன்றிப் புதுமையிலே மலர்ச்சி பெற வேண்டும்” என்பதை வற்புறுத்தினேன். இலங்கைக்குப் புதியவனாகிய நான் முதல் முதலாகப் பேசிய அந்த இரண்டு பேச்சுக்களையும் அன்பர்கள் நன்றாகச் சுவைத்தார்கள் என்றே நம்புகிறேன். அந்தப் பேச்சுக்களுக்குப் பின் அன்பர்கள் என்னிடம் காட்டிய மதிப்பும், பேசிய வார்த்தைகளும், இன்றளவும் எனக்கு வரும் கடிதங்களும் இந்த நம்பிக்கைக்குச் சாட்சிகளாக இருக்கின்றன. என் பேச்சைப்பற்றி வீரகேசரியில் ‘ஊர்க்குருவி’ வெளியிட்ட மதிப்புரையைப் பாருங்கள்: ’…….. வித்துவான் கி. வா. ஜ.வை முதல் முதலாக ஈழத்துக்கு அழைத்து வந்த பெருமை கண்டித் தமிழர்களையே சாரும். அவர் அன்று இரண்டு பிரசங்கங்கள் செய்தார். காலைப் பிரசங்கம் ஒன்றே முக்கால் மணி நேரம். மாலையில் சரியாக ஒரு மணி. ’பிரசங்கமென்றால், ஆகா! இதுதான் பிரசங்கம். உயிருள்ள பேச்சு இது. என்ன புலமை என்ன எளிமை எவ்வளவு ஆழம் ஒருவரையும் புண்படுத்தாத மிகப் பயனுள்ள பேச்சு!" இது காலைப் பிரசங்கத்தைப் பற்றி ஒரு யாழ்ப்பாணத்துத் தமிழறிஞர் என்னிடம் கூறிய விமர்சனம். ‘மாலையில் எழுத்தாளர் கூட்டத்திலே, அவர் உணர்ச்சி உச்ச ஸ்தானத்தை அடைந்துவிட்டது. “எழுதுபவரெல்லாம் எழுத்தாளரா? அல்ல. தெய்வத்துக்கு அடுத்தபடி எழுத்தாளன். அவன் கையில் இருப்பது செங்கோல்! அவன் நீதி நேர்மை தவற மாட்டான். பிறர்மீது வசைபாட மாட்டான். சுய நல எண்ணங்கள் இரா. மனிதர் துயர் தீர்க்கவே, புதுமை உலகத்தைச் சிருஷ்டிக்கவே, எழுத்தாளன் சதா முயலுவான்” என்று உணர்ச்சி வேகத்துடன் அவர் வெளுத்து வாங்கிவிட்டார். யாருக்கும் புரியும்படி நவரஸங்களும் ததும்பும் எளிய நடைப் பேச்சு அது…’ வீரகேசரி ஆசிரியர் நன்றாகத்தானே எழுதுகிறார்? அவர் எழுதும் மாதிரியைச் சொல்கிறேன். என்னைப் பற்றி அவர் எழுதியதைச் சொல்லவில்லை! அருவி ஓசை கண்டி விழாக்கள் நிறைவேறின. அன்று இரவு கிரிமெட்டியாவுக்குச் சென்று தங்கினேன். மறுநாட் காலை எழுந்து தேயிலையைப் பாடம் பண்ணும் வகைகளை யெல்லாம் பார்த்தேன். இலங்கையிலே பல இடங்களில் தேயிலைத் தோட்டங்கள் இருக்கின்றன. ஒவ்வொரு தோட்டத்திலும் பல தொழிலாளர்கள் இருக்கிறார்கள். அவர்களிற் பெரும்பாலோர் தமிழர்கள். தமிழ்த் தொழிலாளர்கள் திறமையாகவும் அதிகமாகவும் வேலை செய்கிறார்கள் என்று சொல்கிறார்கள். தமிழ் மக்களுக்குள் மணம் நடத்த வேண்டுமானால் ஏதேனும் பொது இடத்தில் கூடி நடத்துவார்கள். கோயிலாக இருந்தால் எல்லோருக்கும் மிக்க திருப்தி உண்டாகும். அதனால் அங்கங்கே சில கோயில்களைக் கட்டிக்கொண்டிருக்கிறார்கள். ஆனால் போதிய அளவுக்குக் கோயில்கள் இல்லை. பல மைல் சுற்றுவட்டாரத்துக்கு இந்துக் கோயில்களே இல்லாமல் இருக்கும் பகுதிகளும் உண்டு. கண்டியிலிருந்து பத்து மைல் தூரத்தில் உடுஸ்பத்தை என்ற ஊர் இருக்கிறது. அடர்ந்த காடுள்ள மலைப் பகுதியில் அந்த ஊர் அமைந்துள்ளது. அங்கே ஒரு கோயிலை ஓர் அன்பர் கட்டியிருக்கிருர். இலங்கையில் முருகன் கோயில்களே அதிகம். எல்லா முருகனும் கதிரேசன்தான். உடுஸ்பத்தையில் கதிரேசப் பிரான் கோயில் இருப்பதைத் தெரிவித்து அங்கே வந்து போகவேண்டுமென்று, அந்தக் கோயிலைக் கட்டிய ஸ்ரீ கன்னையா ராஜு என்பவர் என்னையும் பிற அன்பர்களையும் அழைத்தார். கிரிமெட்டியாவிலிருந்து உடுஸ்பத்தைக் கதிரேசன் கோயிலைத் தரிசிக்கப் புறப்பட்டோம். மலைப் பகுதிகளின் வழியே கார் போய்க்கொண்டிருந்தது. அருகில் பள்ளமும் மேடுமான பகுதிகளில் வானை முட்ட வளர்ந்த காடுகளைக் கண்டேன். மாவலி கங்கை என்ற ஆறு நாங்கள் செல்லுமிடமெல்லாம் வந்தது. மழை பெய்திருந்தமையால் ஆற்றில் புதிய நீர் ஓடியது. செங்கலங்கல் தண்ணீரைப் பார்த்தவுடன் அந்த ஆற்றைப் பற்றி ஒரு பாட்டுப் பாட வேண்டுமென்று எண்ணினேன். காவிநிற நீரைக் கண்டவுடன் அதைக் காவியாடை பூண்ட துறவியாகச் சொல்லலாம் என்று தோன்றியது. ஓரிடத்திலும் தங்காமல் பல இடங்களுக்குச் சென்று தன்பால் வந்தாருக்கு நன்மை செய்யும் இயல்பு துறவிக்கும் உண்டு. இந்த மாவலி கங்கைக்கும் உண்டு. உண்மையான துறவிக்கு நெஞ்சில் ஈரம் உண்டு; இந்த ஆற்றுக்கோ ஈரமே இயல்பல்லவா ? துறவி உள்ளழுக்கை நீக்கி உதவுவான்; இந்த ஆறும் புற அழுக்கை நீக்க உதவுகிறது. இத்தனை ஒப்புமை உடைய மாவலிகங்கையைத் துறவாசாகச் சொல்வதில் என்ன தவறு? கற்பனை ஓடியது. ஒப்புமைகள் ஒன்றன்மேல் ஒன்றாகத் தோன்றின. பாட்டு உருவாகிவிட்டது. அருகில் வீரகேசரி ஆசிரியர் உட்கார்ந்திருந்தார். “இந்த மாவலிகங்கையைப் பற்றி ஒரு பாட்டுக் கேட்கிறீர்களா?” என்றேன். “சொல்லுங்கள்” என்றார் அவர். பாட்டைச் சொன்னேன் : காவி போர்த்து நலம்காட்டிக் கவினும் ஈரம் காட்டிஎங்கும் மேவித் தங்கா தேஓடி, விளையும் அழுக்கை அகற்றிவரும் ஆவி அணையாய், மாவலிகங் கைப்பேர் கொண்ட அணியாறே, பாவும் உன்னத் துறவரசாப் பகர்ந்தால் ஏதும் பழுதுண்டோ? [காவி - காவி நிறம், காவியுடை. நலம் - அழகு, நன்மை. ஈரம் - குளிர்ச்சி, அன்பு.] பாட்டைக் கேட்டு ரஸித்த அன்பர். “இந்த ஆற்றில் முதலை உண்டு” என்றார். உடனே? “அப்படியா! அதையும் பாட்டில் வைத்துப் பாடிவிட்டால் போகிறது” என்றேன். “உள்ளே, மேவும் முதலை இலங்க வைத்து” என்று பாட்டைச் சற்று மாற்றினேன். ‘நீருக்குள்ளே இருக்கும் முதலையை விளங்கும்படி வாழவைத்து’ என்பது ஆற்றுக்கு ஏற்ற பொருள். முதல் என்பது பரம்பொருளாகிய கடவுளுக்கு ஒரு பெயர் அல்லவா? மனத்துக்குள்ளே விரும்பும் பரம்பொருளைப் பிரகாசிக்கும்படி வைத்து என்று துறவிக்கு ஏற்றபடி வேறு ஒரு பொருளும் அந்தத் தொடருக்கு அமைந்தது. முதலையையும் வைத்து மாற்றிய பாட்டைச் சொன்னேன். காவி போர்த்து தலம்காட்டிக் கவினும் ஈரம் காட்டிஉள்ளே மேவும் முதலே இலங்கவைத்து விளையும் அழுக்கை அகற்றிவரும் ஆவி அனையாய், மாவலிகங் கைப்பேர் கொண்ட அணியாறே, பாவும் உன்னத் துறவரசாப் பகர்ந்தால் ஏதும் பழுதுண்டோ? பத்திரிகாசிரியர் கையில் ஏதாவது கிடைத்தால் சும்மா விட்டுவிடுவாரா? இதை வீரகேசரியில் வெளியிட்டுவிட்டார். அவர் அன்பை என்ன என்று சொல்வது “இயற்கை வனப்பைக் கண்டதும் அவர் கவி பாட ஆரம்பித்துவிடுகிறார். மாவலி கங்கையில் புது வெள்ளம் ஓடியது. இதைக் கண்டதும் ஒரு கவி பாடிவிட்டார். அந்த நதியைத் துறவிகளுக்கு அரசாகப் பாடிவிட்டார். அந்த ஆற்றிலே முதலையும் உண்டென்றேன். உடனே அதையும் வைத்து மற்றோர் பாட்டு!” என்று அவர் எழுதினார். மாவலிகங்கையின் சலசல ஓசையினிடையே எங்கள் சம்பாஷணையை நடத்திக்கொண்டே உடுஸ்பத்தையை அடைந்தோம். அது மலையில் சற்று உயர்ந்த இடத்தில் இருக்கிறது. இயற்கை யெழிலரசி தளதளவென்று அந்த இடத்தில் நின்று புன்முறுவல் பூக்கிறாள். உடுஸ்பத்தையில் இறங்கி நின்று நாலு பக்கமும் பார்த்தேன். மேடான பாறைப் பகுதியில் கதிரேசன் கோயில் அமைந்திருக்கிறது. எதிரே பள்ளத்தில் அருவி ஓடிக்கொண்டிருக்கிறது. இடையில் சாலை. சாலையிலிருந்து பார்த்தால் அருவி கண்ணுக்குத் தெரியாது. இருமருங்கும் உள்ள மரச்செறிவு அதை மறைக்கிறது. ஆனாலும் அதன் ஓசை காதுக்கு இனிமையாகக் கேட்டுக் கொண்டே இருக்கிறது. மலைப் பகுதிகளில் மனிதனுடைய பாதுகாப்புக்கு அவசியமே இல்லாமல் தாமாக வளர்ந்த மரங்களுடனும் செடிகளுடனும் பிராணிகளுடனும் அது இடைவிடாமல் பேசிக்கொண்டே போகிறதோ? திருமுருகாற்றுப் படையில் பழமுதிர் சோலையில் உள்ள அருவியைப்பற்றி நக்கீரர் மிக அழகாக வருணித்திருக்கிறார். அது எனக்கு அப்போது நினைவுக்கு வந்தது. “இது என்ன பைத்தியக்காரத்தனம்! பலா மரத்தைக் கண்டால் சீவகசிந்தாமணியும், காடுகளைக் கண்டால் சங்கச் செய்யுளும், அருவியைக் கண்டால் திருமுருகாற்றுப் படையும் நினைவுக்கு வருவதாகச் சொல்கிறீர்களே!” என்று நண்பர்கள் கேட்கலாம். நான் என்ன செய்வேன்! இதைத்தான் வாசனை, வாசனை என்று சொல்வார்கள். நான் அந்தப் புத்தகங்களைப் படித்தது முந்தி; ஆகையால் இப்போது இந்தக் காட்சிகளைப் பார்க்கிறபோது படித்தது நினைவுக்கு வருகிறது. முந்தி இந்தக் காட்சிகளைக் கண்டிருந்தேனாகில், புத்தகங்களைப் படிக்கும்போது, “ஆகா! எல்லாம் இலங்கையின் இயற்கை எழிலைப்பற்றியே சொன்னதுபோல் இருக்கின்றனவே!” என்று ஆச்சரியப்பட்டிருப்பேன். மறுபடியும் திருமுருகாற்றுப் படையைப் பற்றிச் சொல்வதற்காக நண்பர்கள் என்னை மன்னிக்கவேண்டும். பழமுதிர் சோலையில் அந்த அருவி மலையின் உச்சியிலிருந்து ஓடிவருகிறதை நக்கீரர் பாடுகிறார். வழியிலே இருக்கும் மரங்களுடனும் விலங்குகளுடனும் உறவாடியும் விளையாடியும் மோதியும் பொருள்களைப் பறித்தும் அருவி ஒய்யாரமாக வருகிறதாம். அகிலைச் சுமந்து சந்தன மரத்தை உருட்டி மூங்கிலச் சாய்த்துத் தேனடைகளைச் சிதைத்துப் பலாச்சுளைகள் உதிர, சுரபுன்னை மலர் உதிர, குரங்குகள் பயப்பட, யானைகள் குளிர்ச்சி அடைய வீசி, யானைக் கொம்பையும் பொன் தாதுவையும் மணிகளையும் அலசிக்கொண்டு வருகிறதாம். “இழுமென இழிதரும் அருவி” என்று சொல்கிறார் நக்கீரர். அந்த ‘இழும்’ என்பதற்கு அர்த்தம் உடுஸ்பத்தையிலே தெரிந்துகொண்டேன். அருவி சலசலவென்று ஓடியதாகச் சொல்லலாம்; ஆனால் அதில் அழகில்லை, சோ என்று இரைந்ததாகச் சொல்லலாம்; அதில் அச்சம் தொனிக்கிறது. ஓம் என்று ஒலி எழுப்புவதாகச் சொல்லலாம்; ஓமுக்குப் பொருள் என்ன என்ற ஆராய்ச்சி ஏற்படும். புலவர் சொன்னபடி ‘இழும் என்று’ ஒலிக்கிறது என்பதுதான் பொருத்தமாகத் தோன்றுகிறது. அருவியின் ஓசையோடு காதைப் பொருத்திக் கருத்தையும் இணைத்துச் சில கணம் நின்றேன். உலகமே மறந்துவிட்டது. உடன் வந்த அன்பர்கள் பேசிக்கொண்டுதான் இருந்தார்கள். ஆனல் அந்தப் பேச்சு என் காதில் விழவில்லை. கசமுசவென்று பல பேர்கள் பேசிக்கொண்டிருக்கும்போதே கோயிலில் நாகசுரக்காரர் உச்சஸ்தாயியிலே ஒரு ராகத்தை ஆலாபனம் பண்ணுவதைக் கேட்டு அனுபவித்திருக்கிறவர்கள் இந்த அநுபவத்தை ஒருவாறு உணரக்கூடும். அங்கே ஜனங்கள் பேசிக்கொண்டிருப்பார்கள். ஆனாலும் அந்தப் பேச்சையெல்லாம் அடக்கி மேலே மேலே ஏறிவரும் இசை வெள்ளத்தில் நம் கருத்து மிதக்கும் போது வேறு ஒலி காதிலே விழாது. உடுஸ்பத்தையில் அருவியின் ஒல்லொலியிலே நான் ஒன்றியபோது அத்தகைய அநுபவந்தான் உண்டாயிற்று. அந்த அருவி இயற்கைத் தேவிக்குக் கட்டியம் கூறியது; அமைதியான முழு மோனத்தில் ஒலிக்கீற்றாக இசையெழுப்பியது. இரவில் எப்படி இருக்கும்? தாலாட்டுப் பாடுமா? அல்லது இரவிலே முழுச் சுறுசுறுப்புடன் கோலாகலமாக விளையாடும் காட்டு விலங்குகளின் முழக்கமாகிய சங்கீதத்துக்குச் சுருதி போடுமா? “அதோ பாருங்கள் ஒரு மலை” என்று என்னைத் தட்டி விழிக்கச் செய்து ஓரிடத்தைச் சுட்டிக் காட்டினர் கன்னையா ராஜு. “ஒரு மலை என்ன? எங்கும் மலைதான்; எல்லாம் மலைதான்” என்றேன். “அதோ தெரிகிறதே. அந்த மலைக் காட்டிலே யானைகள் வேலை செய்கின்றன.” “என்ன வேலை?” “கதிரேசனுடைய வேலை.” “என்ன அது! கதிரேசன் வேலையா? விளக்கிச் சொல்லுங்கள்.” "இந்தக் கதிரேசப் பெருமானுடைய கோயிலுக்கு வேண்டிய மரங்கள் அந்த மலைக் காட்டிலிருந்து வருகின்றன. வெட்டின மரங்களை இழுத்து வரும் வேலையை யானைகள் செய்கின்றன. “அப்படியா!” நான் ஆச்சரியப்படுவதையன்றி வேறு என்ன செய்வேன் ! கோயிலிலிருக்கும் மேட்டு மேலே ஏறினோம். இந்தக் கோயிலை 1986-ஆம் வருஷம் கட்ட ஆரம்பித்தோம். 16 வருஷ காலம் ஆகிவிட்டது. விரைவிலே நிறைவேறும்…" என்று கன்னையா ராஜு கோயிலின் வரலாற்றைச் சொல்ல ஆரம்பித்தார். தமிழ் நாட்டில் புதுக்கோட்டையைச் சார்ந்த கண்டனுரைச் சேர்ந்தவர் அவர் குடும்பம் உண்டு. ஆனாலும் அவர் தன்னந் தனியே அந்த மலைக் காட்டில் கதிரேசன் கோயிலைக் கட்டுவதையே தம் பாக்கியமாகக் கருதித் தொண்டு புரிந்து வருகிறார். அதற்காக அவர் எத்தனையோ பாடுபடுகிறார். “இந்த வட்டாரத்திலேயே பல மைல்களுக்குக் கோயில் இல்லை. ஏறத்தாழ ஐயாயிரம் தோட்டத் தொழிலாளர்கள், தமிழ்நாட்டினர், இந்தப் பிரதேசங்களில் இருக்கிறார்கள். அவர்களுக்கு எல்லாம் இது உபயோகமாக இருக்கும். இன்னும் கோயிலில் பிரதிஷ்டை ஆகவில்லை. விக்கிரகங்களெல்லாம் வந்து விட்டன. இப்போதே இங்கே அடிக்கடி தொழிலாளர்கள் வந்து விவாகங்களை நடத்துகிறார்கள். இந்தக் கோயிலைப் பூர்த்தி பண்ணவேண்டும் என்ற கவலையே எனக்கு எப்போதும் இருக்கிறது. நீங்களெல்லாம் ஆசீர்வாதம் செய்ய வேண்டும்” என்றார். அப்போது அந்த அன்பருடன் இருந்த ஒரு தோழர் ஒரு செய்தியைச் சொன்னார். இந்தக் கோயில் மிகவும் நன்றாக விளங்கப் போகிறதென்பதில் எனக்குச் சந்தேகமே இல்லை. அவசர அவசரமாக ஒரு காரியம் நடந்தால் அது நெடுங்காலம் நிற்காது. தென்னமரம் மூன்று வருஷத்தில் காய்த்தால் முப்பது வருஷம்வரையில் நிற்கும். பத்தாம் வருஷத்தில் காய்த்தால் நூறு வருஷம் நிற்கும். இவ்வளவு காலம் இந்தக் கோயிலுக்கு அஸ்திவாரம் போட்டு எழுப்பியிருக்கிறோம். ஆகையினால் இன்னும் பலகாலம் சிறப்பாக விளங்கும்" என்று அவர் சொன்னார். என்ன நம்பிக்கை, பாருங்கள்! அந்தக் கோயிலிலுள்ள நிலத்தை ரம்புக் வெல்ல என்ற சிங்களச் செல்வர் நன்கொடையாக வழங்கியிருக்கிறார். வேறு சிலர் சிறுசிறு தொகைகளை அளித்திருக்கிறார்கள். அவற்றை நன்றியறிவுடன் ஏற்றுக் கணக்கு வைத்துக்கொண்டிருக்கிறார் கன்னையாராஜா. “இதற்கு என்ன பெயர்?” என்று அவரைக் கேட்டேன். “திருவருள் கிரிபுரி குன்றம்” என்று அவர் சொன்னார். திருப்புகழ்ப் பாட்டின் பகுதியைச் சொல்வதுபோலச் சொன்னார். அவராக வைத்த பெயர் அது. அந்தப் பெயரிலேயே அவருக்கு உள்ள அன்பும் ஆசையும் தெரிகின்றன. அத்தனை நீளமாக வாய் நிரம்பச் சொல்ல வேண்டுமென்று அவருக்கு ஆசை. அங்கே ஒரு மடம் அமைத்திருக்கிறார் அஷ்டலகஷ்மி விலாச மண்டபம் கட்டியிருக்கிறார். மடத்துக்கு, “தசநாத பூரண மடாலயம்” என்று பெயர் வைத்திருக்கிறார். அங்கே யாழ்ப்பாணத்துப் பரதேசி ஒருவர் இருக்கிறார். மடத்திற்கு எதிரே கமுகும் வாழையும் வெற்றிலைக் கொடியும் மிளகுக் கொடியும் வளர்ந்திருக்கின்றன. கண்ணுக்குக் குளிர்ச்சியான காட்சிகளையே அங்கே காண முடியும். கோயிலுக்குள்ளே புகுந்து விக்கிரகங்களை யெல்லாம் பார்த்தோம். இன்னும் சில விக்கிரகங்கள் வருமென்று சொன்னர். மடம், மண்டபம், மடைப்பள்ளி, முடியிறக்கு மண்டபம், வாத்திய மண்டபம் எல்லாம் கட்டவேண்டும். ஆண்டவன் அருளால் எல்லாம் நடக்கவேண்டும்" என்று அந்தக் கோயில் தொண்டர் சொன்னார். “எல்லாம் நடக்கும்” என்று வீரகேசரி ஆசிரியர் ததாஸ்து சொன்னார். நானும் ஆமோதித்தேன். இரண்டு பாட்டுப் பாடினேன். எதிரே ஓடிக்கொண்டிருந்த அருவி எங்களோடு சேர்ந்து தன் இமிழிசையிலே ஆமென்று இசைத்தது இன்னும் என் காதில் அந்த அருவியின் ஒலி அமைதியின் கானமாகவும், அன்பின் இசையாகவும், தனிமையின் பாட்டாகவும், இயற்கையழகின் மழலையாகவும், முருகனுடைய சிலம்பொலியாகவும் கேட்கிறது.  கண்டி மாநகர் கண்டியில் நிகழ்ந்த விழாவிலே கலந்துகொண்ட அன்று அந்த நகரத்தில் உள்ள காட்சிகளைக் காண முடியவில்லை. இலங்கையில் உள்ள முக்கியமான இடங்களையும் காட்சிகளையும் காணவேண்டும் என்ற விருப்பம் எனக்கு இருந்தது. ஞாயிற்றுக்கிழமை (16-9-51) விழா நடைபெற்றது. மறுநாள்தான் உடுஸ்பத்தைக்குச் சென்று கதிரேசன் கோயிலைத் தரிசித்தேன். அடுத்த நாள் செவ்வாய்க் கிழமை முதல் இலங்கைக் காட்சிகளைக் கண்டு இன்புறத் தொடங்கினேன். முதல் முதலில் கண்டிமா நகரத்தைக் கண்டேன். நண்பர் கணேஷ் தம்முடைய காரை என்னுடைய யாத்திரைக்கென்றே ஒதுக்கிவிட்டார். தம்முடைய வேலைகளையும் புறக்கணித்துவிட்டு என்னுடைய உசாத் துணைவராகவும் வழிகாட்டியாகவும் பாதுகாவலராகவும் இருந்து வந்தார். அவருக்கு நன்றாகச் சிங்கள மொழி பேச வரும். நாங்கள் சென்ற காருக்கு ஓர் இளைஞன் சாரதியாக இருந்தான். அவன் சிங்களவன்; தமிழ் பேச வராது. சிரித்துச் சிரித்துப் பேசுகிறவன். “சிங்களவர்களே உயர்தரமான நகைச்சுவை தெரிந்தவர்கள்” என்று கணேஷ் சொன்னர். வழியில் கணேஷும் அந்தச் சாரதியும் பேசிக்கொண்டே போவார்கள். இருவரும் அடிக்கடி சிரிப்பார்கள். எனக்கு ஒன்றும் விளங்காது. “என்னைப் பரிகாசம் செய்யவில்லையே!” என்று கேட்டேன். அப்போது தான் சிங்களவரின் ஹாஸ்யத்தைப்பற்றிக் கணேஷ் சொன்னர். சாரதியின் பெயர் தர்மசேனன். அந்தப் பெயரைக் கேட்டவுடன், “இது நல்ல பெயர்” என்றேன். “ஏன்?” என்று கேட்டார் நண்பர். அப்பர் சுவாமிகள் சில காலம் அருக சமயத்திலே புகுந்து அவர்களுடைய ஆசாரிய புருஷராக இருந்தார். அக்காலத்தில் அவருக்குத் தர்மசேனர் என்ற பெயர் வழங்கியது. இவனுடைய பெயர் அப்பர் சுவாமிகளை நினைப்பூட்டுவதனால் நல்ல பெயர் என்று சொன்னேன்" என்று கூறினேன். கண்டி மாநகரத்தில் பார்க்கவேண்டிய இடங்கள் பல. முதலில் தாலத மாளிகைக்குச் சென்றேன். புத்தர்பிரானுடைய பல்லை இங்கே வைத்துப் பூசிக்கிறார்கள். இது பௌத்தர்களின் கோயில் என்பதை இதன் அமைப்பைப் பார்த்தே தெரிந்துகொள்ளலாம். இந்தக் கோயிலைச் சுற்றிப் பாதியளவுக்கு ஓர் அகழி இருக்கிறது. கோயிலிற்குள் நுழைந்தவுடன் புறச்சுவர்களில் உள்ள ஓவியங்களைக் காணலாம். பாவம் செய்தவர்கள் நரகத்தில் அநுபவிக்கும் தண்டனைகளைக் குறிக்கும் சித்திரங்கள் அவை, மாளிகையின் முகப்பில் இந்தப் படங்களை எழுதியிருப்பது, தீய எண்ணங்களோடு உள்ளே புகக்கூடாது என்பதை நினைவுறுத்தப் போலும். தாலத மாளிகைக்குள் எல்லாச் சமயத்தினரும் சாதியினரும் போய்ப் பார்க்கலாம். உள்ளே இரண்டு பக்கங்களிலும் இரண்டு கண்ணாடிக் கூண்டுக்குள் இரண்டு விளக்குகள் எரிந்துகொண்டே இருக்கின்றன. வெளியிலிருந்து எண்ணெய் விடுவதற்கு ஏற்றபடி அவ் விளக்குகள் அமைந்திருக்கின்றன. தாலத மாளிகையின் மூலக்கிருகத்திற்குமுன் கதவுக்கு அருகில் உள்ள படியில் பக்தர்கள் மலரைச் சொரிந்து மண்டியிட்டு வணங்குகிறார்கள். இந்த மாளிகைக்குள் ஒரு பெரிய ஏட்டுப் புத்தகசாலை இருக்கிறது. அதில் வடமொழியிலும் பாளியிலும் எழுதிய பழைய நூல்கள் பல இருக்கின்றனவாம். தாலத மாளிகைக்கு எதிரே ஒரு தோட்டத்தினிடையே பத்தினி கோயில் இருக்கிறது. கண்ணகியின் கோயிலைப் பத்தினி தேவாலய என்று இலங்கையில் சொல்கிறார்கள். கண்டியிலுள்ள பத்தினி தேவாலயத்தின் விமானம் தமிழ்நாட்டுக் கோயில் விமானத்தைப்போல இருக்கிறது. தாலத மாளிகையைப் பார்த்துவிட்டுச் சிறிது தூரத்தில் உள்ள இலங்கைச் சர்வகலாசாலைக் கட்டிடங்களைப் பார்க்கச் சென்றேன். இவ்விடத்திற்குப் பரதேனியா என்று பெயர். இலங்கையில் அரிவரி முதல் காலேஜ் படிப்பு வரையில் கல்வி இலவசமாகவே கிடைக்கிறது. அரசாங்கத்தினர் கல்விக்காகப் பத்துக் கோடிக்குமேல் செலவு செய்கிறார்கள். இங்கே நாம் ஹைஸ்கூல் என்று சொல்வதையே இலங்கையில் பல இடங்களில் காலேஜ் என்று சொல்கிறார்கள். முன் காலத்தில் இலங்கையில் பல்கலைக் கழகம் இல்லை. லண்டன், கேம்ப்ரிட்ஜ் முதலிய வெளிநாட்டுச் சர்வகலாசாலைப் பரீட்சைகளுக்கு மாணவர் படித்து எழுதித்தேர்ச்சிபெற்றனர். சென்னைப்பல்கலைக் கழகத்தில் சேர்ந்து படித்தனர். 1942-ஆம் வருஷம் ஜூலை முதல் தேதி இலங்கைப் பல்கலைக்கழகம் ஆரம்பமாயிற்று. அதன் சார்பில் ஓர் இலக்கியக் கல்லூரியும், மருத்துவக் கல்லூரி, சட்டக் கல்லூரி முதலியவையும் நடைபெறுகின்றன. இப்போதைக்குப் பல்கலைக் கழகம் கொழும்பிலே இருக்கிறது. கண்டிக்கு அருகில் உள்ள பரதேனியாவில் விசாலமான நிலப்பரப்பில் பல்கலைக் கழகத்தை நிறுவவேண்டும் என்ற நோக்கத்தோடு அங்கே மிகச் சிறந்த முறையில் கட்டிடங்களைக் கட்டியிருக்கிறார்கள். அந்த இடம் சுற்றிலும் இயற்கை யெழில் நிறைந்த இடம். கவிதை உள்ளம் படைத்தவர்களுக்கு உணர்ச்சியை ஊட்டும் இடம். மாணாக்கர்கள் தங்குவதற்கும், பேராசிரியர்கள் தங்குவதற்கும், சொற்பொழிவுகள் நடைபெறுவதற்கும் ஏற்ற வகையில் கட்டிடங்களைக் கட்டியிருக்கிறார்கள். இலங்கையில் அநுராதபுரம் என்ற இடத்தில் சிற்பச்செல்வம் நிறைந்திருக்கிறது. அங்குள்ளமுறையில் இலங்கைச்சர்வகலாசாலைக் கட்டிடங்களில் சிற்பத்தை அமைத்திருக்கிறார்கள். பரதேனியாவில் ஒரு பெரிய தோட்டம் (Botanical gardens) இருக்கிறது. உலகத்து மரம் செடி கொடிகளிலே பலவகைகளை இங்கே மாதிரிக்காக வளர்த்து வருகிறார்கள். கால்நடையாக நடந்து சென்று பார்ப்பதனால் ஒரு நாள் முழுவதும் பார்க்கலாம். நாங்கள் காரில் இருந்தபடியே பார்த்துக்கொண்டு உலா வந்தோம். வானுற ஓங்கி வளர்ந்த மரங்களையும் கண்ணைப் பறிக்கும் மலர்க்கொடிகளையும் கண்டோம். இந்தத் தோட்டத்தைச் சார்ந்து மாவலிகங்கை ஒடுகிறது. அதன்மேல் ஆடும் பாலம் அமைத்திருக்கிறார்கள். அதன் வழியே சென்றால் அக்கரையில் உள்ள விவசாயக் கல்லூரியை அடையலாம். அங்கே இலங்கையிலே விளையும் விளைபொருள்களைப் பண்படுத்தி வாழ்க்கைக்குப் பயனுள்ளனவாகச் செய்யும் முறையைக் கற்பிக்கிறாகள். அந்தப் பகுதிகளையெல்லாம் பார்த்தேன். ஓரிடத்தில் காபிக்கொட்டைகளைச் சுத்தப்படுத்துகிறார்கள்; மற்றோரிடத்தில் கோக்கோ தயார் செய்கிறார்கள்: வேறோரிடத்தில் ரப்பர்ப் பாலை இறுகச் செய்து உருக்கிப் பாளமாக்கி வெவ்வேறு பண்டமாக்க வகை செய்கிறார்கள். இவற்றினூடே புகுந்து பார்த்து இவற்றைப்பற்றிய அறிவைப் பெறுவதானல் சில ஆண்டுகளாவது ஆகும். ஆகவே, மேற்போக்காகப் பார்த்த எனக்கு, அவற்றை முன்பு பாராமல் பார்த்தமையால் உண்டான வியப்புணர்ச்சிதான் மிஞ்சியது. இலங்கையில் முன்காலத்தில் பல அரசர்கள் ஆண்டு வந்தார்கள். அவ்வப்போது வெவ்வேறு நகரங்களை இராசதானியாகக் கொண்டு ஆண்டார்கள். அநுராதபுரம், பொலன்னறுவை, யாபஹாவா, குரு நகலா, தாபதேனியா, கம்போலா, கேட்டே ஆகிய இடங்கள் அரசிருக்கை நகரங்களாக இருந்திருக்கின்றன. கடைசியில் இராசதானியாக இருந்தது கண்டி. பிற்காலத்தில் இலங்கையில் மற்ற இடங்கள் போர்த்துக்கீசிரியர் ஆட்சியிலும் அப்பால் டச்சுக்காரர் ஆட்சியிலும் வந்தபோதும் கண்டியும் அதனைச் சார்ந்த இடங்களும் தனி அரசருடைய ஆட்சியில் இருந்தன. கண்டியரசரது வரிசையில் கடைசியில் ஆண்டவன் ஸ்ரீ விக்கிரம ராஜசிங்கன். இவன் காலத்தில் பிரிட்டிஷார் கண்டிப்பகுதியைக் கைப்பற்றி இவனைச் சிறைப்படுத்தினர். 1815-ஆம் வருஷம் மார்ச்சு மாதம் முதல் இலங்கையின் மற்றப் பகுதிகளைப் போலவே கண்டியும்பிரிட்டிஷ் அரசைச் சார்ந்துவிட்டது. கண்டியரசர் சிங்காதனம் இப்போது கொழும்புக் காட்சிச் சாலையில் இருக்கிறது. கண்டி மத்திய மாகாணத்தின் தலைநகரம். இலங்கை ஒன்பது மாகாணங்களால் ஆனது. அவற்றில் மலைகள் அடர்ந்திருக்கும் மத்திய மாகாணம் கண்டி, மாத்தளை, நுவரா எலியா என்ற மூன்று பகுதிகளை உடையது. இந்த மாகாணம் முழுவதும் இயற்கையெழிலரசியின் நடன மாளிகை. மலைகள் யாவும் இலங்கைக்குப் பொன்னை வாங்கித் தரும் நிதிநிலையங்கள். தேயிலையும் ரப்பரும் இங்கே பயிராகின்றன. கோக்கோவும் மிளகும் விளைகின்றன. உணவுப் பொருளை அதிகப் பணம் கொடுத்து வெளிநாட்டிலிருந்து வாங்கி இலங்கை அரசாங்கத்தார் மக்களுக்கு விலையைக் குறைத்துக் கொடுக்கிறார்கள். அதற்கு இரண்டு காரணங்கள்: முதல் காரணம், நெல் விளைய இடமின்றித் தேயிலை, ரப்பர் என்ற உருவத்தில் பொன்னையே விளைக்கிறார்கள் . இரண்டாவது, நெல்லுக்கு எத்தனை பணம் வேண்டுமானாலும் கொடுத்து வாங்கும் செல்வம் அங்கே இருக்கிறது. அப்படி இருக்கும்போது காசு கொடுத்து நெல்லை வாங்குவதனால் என்ன குறைந்து போயிற்று? இரும்பும் நிலக்கரியுமே விளையும் இங்கிலாந்தில் உள்ளவர்களுக்கு உணவு வகையில் ஏதாவது குறைவு இருக்கிறதோ? இலங்கையும் அப்படித்தான் பணப் பண்டங்களை விளைவித்துப் பிற நாட்டுக்கு அனுப்பிப் பொன்னைச் சேர்க்கிறது; பிற நாட்டிலிருந்து உணவுப் பண்டங்களை வாங்குகிறது. ------------------------------------------------------------------------ 1. இப்போது பல்கலைக்கழகத்தின் பெரும்பகுதி பரதேனியா வில் இருக்கிறது.↩︎ 2. இப்போது நெல் விளைவிக்கும் திட்டங்களை ஏற்பாடு செய்திருக்கின்றனர்.↩︎ சிகிரிக் குன்றம் “இன்று எந்த எந்த இடத்துக்குப் போகலாம்?” என்று அன்பர் கணேஷைக் கேட்டேன். " இன்றைக்குச் சிற்பச் செல்வங்களையும் ஓவியச் செல்வங்களையும் உங்களுக்குக் காட்டலாம் என்று எண்ணுகிறேன்" என்றார் அவர். “எந்த இடங்களில் அவை இருக்கின்றன? இங்கிருந்து எவ்வளவு தூரம் போகவேண்டும்?” என்று கேட்டேன். " நூற்றைம்பது மைல் போகவேண்டும். சிகிரியாவைப் பார்த்துக் கொண்டு பொலன்னறுவாவையும் போய்ப் பார்க்கலாம். நேரம் இருந்தால் அநுராதபுரம் போகலாம்." ஓவிய யாத்திரையைத் தொடங்கினோம். (19.9-51, புதன்கிழமை.) எங்களுடன் மற்றொரு நண்பரும் சேர்ந்து கொண்டார். தமிழ்ப் பத்திரிகைகளை நன்றாகப் படித்து எழுத்தாளர்களைத் தரம் பிரித்துப் பார்க்கும் ரசிகர் அவர். நாகலிங்கம் என்ற அந்த அன்பர் கண்டிக்கு அருகில் குருதெனியா என்ற இடத்தில் வியாபாரம் செய்து கொண்டிருக்கிறார். நாகலிங்கம் தமிழ் நாட்டிலிருந்து சென்றவர். இராமநாதபுரம் ஜில்லாவைச் சேர்ந்த பரத்தை வயல் என்ற ஊரில் முன்பு முத்துக் குட்டிப் புலவர் என்ற கவிஞர் இருந்தார். அவருடைய வழி வந்தவர் அந்த அன்பர். இந்தச் செய்தியை அவர் மூலமாகத் தெரிந்து கொண்ட பிறகு நான் அவரைச் சும்மா விடுவேனா? “அவர் என்ன என்ன நூல்கள் செய்திருக்கிறார் ? சேதுபதியினிடம் சம்மானம் பெற்ற துண்டா? அந்த வம்சத்தில் இன்னும் யாராவது புலவர்கள் இருந்திருக்கிறார்களா? உங்கள் ஊரில் ஏட்டுச்சுவடிகள் இருக்கின்றனவா?” என்று சரமாரியாகக் கேள்விகளை அடுக்கினேன். தம்முடைய முன்னேர்களைப் பற்றிச் சொல்லிக் கொள்வதில் எல்லோருக்கும் ஆசை இருப்பது இயல்பு. நண்பர் நாகலிங்கமும் முத்துக்குட்டிப் புலவரைப் பற்றிச் சில செய்திகள் சொன்னதோடு அவர் பாடிய பாடல்கள் சிலவற்றையும் சொன்னர் . அவர் ஒரு சமயம் சம்ஸ்தானத்துக்குக் கொடுக்க வேண்டிய வரியைக் கொடுக்க முடியாமற் போயிற்றாம். அப்போது சம்ஸ்தானத்தைச் சார்ந்த அதிகாரி அவரைத் துன்புறுத்தினராம். முத்துக்குட்டிப் புலவருக்கு ஒன்றும் தோன்றவில்லை. தம்முடைய குலதெய்வமாகிய மருதூர்ச் சிவபெருமானிடம் முறையிட்டுக் கொள்வதையன்றி அப்போதைக்கு ஏதும் செய்யமுடியவில்லை. கையிலோ அரைக்காசுக் கிடமே இல்லை; கடனென்ருல் இருநூறு பொன்மேல் ஆச்சு; தெய்யிலே கைபோட்டுக் கொடுத்திட்டாலும் நிர்வாகம் அரண்மனையார் அறிய மாட்டார்: பையிலே பணமிருக்க நீயும் சும்மா பார்த்திருக்க நியாயமுண்டோ பரனே ஐயா, மையிலே தோய்ந்தவிழி உமையாள் பாகா, மருதுனரா, என்வரிக்கு வகைசெய் வாயே என்று பாடினர். நாகத்தின் படத்துக்குப் பையென்றும் பணமென்றும் பெயர் உண்டு. நாகம் அணிந்த மருதூர் நாகநாதரைப் பார்த்து, “உம்முடைய பையிலே பணம் இருக்க என் துயரைச் சும்மா பார்த்திருக்கலாமா?” என்று இரண்டு பொருள் அமையும்படி புலவர் பாடினார். நாகநாதர் இதைக் கேட்டாரோ, இல்லையோ, யாரோ அன்பர் இந்தப் பாட்டைக் கேட்டு மனம் நைந்து உடனே புலவருக்கு வேண்டிய பொருளை உதவினார். இவ்வாறு முத்துக்குட்டிப் புலவரின் வாழ்க்கைச் செய்திகளைக் கேட்டுக்கொண்டே சிகிரியாவுக்குப் பிரயாணமானேன். தர்மசேனன் மிக்க விரைவாகக் காரை ஓட்டினான். இப்போது நாங்கள் போன சாலை காடுகள் அடர்ந்த இடம்; மலைப்பகுதி அல்ல. இரு புறமும் பல மைல் தூரத்துக்குச் செறிந்த காடுகள் இருந்தன. அந்தக் காடுகளில் யானைகள் வாழ்கின்றன. இரவு நேரத்தில் இந்தச் சாலையில் யாரும் அநேகமாகப் போவதில்லை. ஒருகால் காரில் யாரேனும் போனால் யானைகளைக் காணலாம். அவை காட்டில் உலவிக் கொண்டிருக்கையில் இரவில் சாலையைக் கடப்பதுண்டாம். அவ்வாறு கடந்து செல்வதைக் காரில் செல்பவர்கள் கண்டால் விளக்கை அவித்துவிட்டு மேலே காரை ஓட்டாமல் நின்று விடுவார்களாம். யானை கூட்டம் கூட்டமாகத்தான் செல்லும், அந்தக் கூட்டம் முழுவதும் சாலையைக் கடந்து போன பிறகே காரை ஓட்டுவார்கள். வெளிச்சம் தெரிந்தாலும் கார் வருவது தெரிந்தாலும் யானைகளிடமிருந்து தப்புவது அருமை. நாங்கள் பகல் நேரத்தில் அந்தக் காட்டினூடே சென்றோம். பல மைல்களுக்கு இடையில் சில [] ஊர்கள் இருந்தன. அந்தக் காடுகளில் மனிதன் புகாத இடங்கள் பல உண்டு. இரண்டோரிடங்களில் இலங்கை அரசாங்கத்தார் காட்டை அழித்து நெல் விளைக்க ஏற்பாடு செய்து வருகிறார்கள். காலையில் எட்டு மணிக்குக் கண்டியிலிருந்து புறப்பட்ட நாங்கள் பதினொரு மணிக்குச் சிகிரியாவை அடைந்தோம். ⁠ ⁠ சிகிரி என்னும் மலையை நடுவிலே கொண்ட பகுதியையே சிகிரியா என்று சொல்லுகிறார்கள். சிங்ககிரி என்ற தொடர் திரிந்து சிகிரி ஆகிவிட்டது. இங்கே ஐந்தாம் நூற்றாண்டில் இருந்த கஸ்ஸபன் என்ற மன்னன் (கி.பி.478-496) அரண்களையும் நகரையும் அமைத்துக் கொண்டு பதினெட்டு ஆண்டுகள் வாழ்ந்தான். அவன் கட்டிய அரண்மனையின் சின்னங்களும் அக்காலத்தில் இந்த மலைக்குகையில் எழுதப் பெற்ற வண்ண ஓவியங்களும் மக்கள் உள்ளத்தைக் கவர்கின்றன. இவற்றைப் பார்ப்பதற்காக அயல் நாட்டார் அடிக்கடி வருகிறார்கள். இலங்கை சிறிய தீவாக இருந்தாலும் அதற்கும் சுவையுள்ள சரித்திரம் இருக்கிறது. நெடுங்காலமாக மக்கள் வாழ்ந்து வரும் தீவு அது. தமிழ்நாட்டுக்கும் அதற்கும் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு மேலாகவே தொடர்பு உண்டு. அங்கும் மன்னர் வம்சங்கள் இருந்தன. மன்னர் பலர் தம்முள்ளே போரிட்டார்கள், வீரச் செயல் புரிந்தார்கள். குடிகளுக்கு நன்மை செய்தார்கள்; புலவர்களையும் கலைஞர்களையும் பாதுகாத்தார்கள். கோயில்களைக் கட்டினார்கள். வெவ்வேறு காலங்களில் வெவ்வேறு இடங்களைத் தலைநகராக்கிக் கொண்டு அரசாண்டார்கள். அப்படி ஆண்டவர்களில் தாதுசேனன் என்பவன் கி. பி. 460 முதல் 478 வரையில் அநுராத புரத்தில் ஆண்டான். அவனுக்கு அரசியினிடமாக மொக்கல்லானன் என்பவன் பிறந்தான்; வேறு ஒரு மனைவி மூலமாகக் கஸ்ஸபன் பிறந்தான். தாதுசேன மன்னனுக்கு ஒரு மகளும் பிறந்தாள். மன்னன் அவளைத் தன் தங்கையின் மகனுக்கு மணம் புரிவித்து அவனைத் தன் படைத் தலைவனாக வைத்துக் கொண்டான். படைத்தலைவனுடைய இல் வாழ்வில் சிறிது கலாம் மூண்டது. அரசனுடைய மகள் அவனை அவமதித்தாள். அவன் அவளை அடித்தான். இந்தக் கொடுமையை அவள் தன் தந்தையிடம் முறையிட்டுக் கொண்டாள். தாதுசேனனுக்குக் கோபம் மூண்டது. இதற்குக் காரணம் மாமியாரின் கொடுமையாக இருக்கலாம் என்று எண்ணினானே என்னவோ, தன் மகளின் மாமியாராகிய தன் தங்கையை உயிரோடு எரித்துவிட்டான். தாதுசேன மன்னன் செய்த இந்தக் கொடும்பாவத்தைத் தாங்க முடியாத படைத்தலைவன் எப்படியாவது இந்தப் பழிக்குப் பழி வாங்க வேண்டுமென்று உறுதி பூண்டான். தானே ஒன்றும் செய்ய இயலாதாகையால், மன்னனுடைய மக்களில் ஒருவனாகிய கஸ்ஸபனைத் தூண்டிவிட்டான். “நீ மன்னனுக்கு மகன் என்று பெயரளவிலே இருக்க வேண்டியவனே. உன் தாய் குலத்திலே பிறந்தவள் அல்ல என்று மன்னனும் பிறரும் இழிவாக எண்ணுகிறார்கள். அரசியின் பிள்ளையாகிய மொக்கல்லானன் தான் அரசனானவன். நீ பிறந்தும் பயனில்லாமல் வாழப் போகிறாய்” என்றான். “நான் என்ன செய்தால் அரசனாகலாம்?” என்று கேட்டான் கஸ்ஸபன். “சரித்திரத்தைக் கேட்டுப் பார்; அதுசொல்லும்.” “என்ன சொல்லும்?” “அரச குலத்தில் பிறந்தவருக்குத் தகப்பனென்றும் மகனென்றும் ஒட்டு உறவு கிடையாது. அரசனுக்கு நூற்றுக்கணக்கான மனைவிமார் இருப்பார்கள். ஒவ்வொருவருக்கும் பிள்ளைகள் இருக்கும். எல்லாப் பிள்ளைகளிடத்திலும் அரசனுக்கு அன்பு இருக்குமா? ஆகவே, பலமுள்ளவன் இந்த உறவு முறையையெல்லாம் பார்க்காமல் தன் காரியத்தைச் சாதித்துக் கொள்வான். சாமானிய மக்களின் தர்மம் வேறு; அரசனுக்குரிய தர்மம் வேறு. தனி மனிதன் செய்யும் கொலை, கொள்ளை என்பவை சமுதாய விரோதச் செயல்கள். அரசன் அவற்றைச் செய்தால் அவை, அவன் பராக்கிரமத்துக்கு அறிகுறியாகும். அரசன் தெய்வத்துக்குச் சமானம். ஆதலால் மக்கள் அவன் செய்யும் செய்கை எதுவானாலும் ஏற்றுக்கொள்வார்கள். சமய சந்தர்ப்பங்களை ஒட்டி அவன் நடந்து கொள்ளவேண்டும்.” “இத்தனையும் எதற்காகச் சொல்லுகிறாய்? நான் என்ன செய்யவேண்டும்?” “நீ செய்வதைச் சரியானபடி செய்தால் நாளைக்கே. அரசனாகிவிடலாம். படை வீரர்கள் யாவரும் நான் சொன்னபடி கேட்பார்கள். அவர்களுடைய மன இயல்பும் போக்கும் எனக்கு நன்றாகத் தெரியும்.” மெல்ல மெல்லக் கஸ்ஸபனுடைய மனம் இந்தச் சூழ்ச்சியின் வசப்பட்டது. படைத் தலைவனும் அவனும் கூடிக் கூடிப் பேசினார்கள். திடீரென்று ஒரு நாள் தாதுசேனனை ஓர் அறையிலே அடைத்துச் சாத்தினார்கள். கஸ்ஸபன் தானே அரசன் என்று சொல்லிச் சிங்காதனம் ஏறினான். கஸ்ஸ்பனுடைய சகோதரனாகிய மொக்கல்லானன் தனக்குத் துணை யாரும் இல்லை என்று அறிந்து கொண்டான். அங்கே இருந்தால் தன் உயிருக்கே ஆபத்து வந்துவிடும் என்று பயந்துகொண்டு தமிழ்நாட்டுக்கு ஓடிப்போனான். அறையிலே அடைபட்ட தாதுசேனன் உணவின்றி இறந்தான். நியாயமான முறையில் அரசு கிடைத்திருந்தால் நாட்டை அமைதியாக ஆளலாம். அதற்கு மாறாக அரசைக் கைப்பற்றிய கஸ்ஸபன் அநுராதபுரத்தில் இருந்து அரசாள விரும்பவில்லை. தக்க பாதுகாப்புள்ள இடத்தில் அரண்களை அமைத்துக்கொண்டு வாழவேண்டும் என்று முடிவு செய்தான். அவனுக்கு இந்தச் சிங்ககிரிப் பகுதி தன் கருத்துக்கு இசைந்த இடம் என்று தோன்றியது. சிங்ககிரியின் உச்சியிலே அரண்மனையைக் கட்டினான். கோட்டை கட்டினான். மலையைச் சுற்றிலும் கொத்தளங்களும் அகழியும் அமைத்தான். அங்கே பதினெட்டு ஆண்டுகள் வாழ்ந்தான். சிங்ககிரியின் தாழ் வரையில் உட்குழிவான சில இடங்கள் இருக்கின்றன. அவ்விடங்களில் மிக அற்புதமான ஓவியங்களை எழுதச் செய்தான், கலைப்பண்பு நிறைந்த கட்டிடங்களைக் கட்டினான். தமிழ்நாட்டுக்குச் சென்ற மொக்கல்லானன். பதினெட்டு ஆண்டுகள் கழித்துத் தமிழ் மன்னர் உதவி பெற்று இலங்கைக்கு வந்தான். சிங்ககிரியை முற்றுகையிட்டான். கஸ்லபன் கோட்டையை விட்டு வெளியே வந்து சண்டையிட்டான். கடைசியில் தனியே போய்த் தற்கொலை செய்துகொண்டான். மொக்கல்லானன் அரசைக் கைப்பற்றி மீட்டும் அநுராதபுரத்தையே இராசதானியாக்கிக் கொண்டு வாழத் தொடங்கினான். சிகிரியிலுள்ள ஓவியங்களையும் பிறவற்றையும் இலங்கை அரசாங்கத்தார் நன்றாகப் பாதுகாத்து வருகிறார்கள். சிகிரி மலையின் தோற்றம் சிங்கத்தின் தலைபோல இருக்கிறது. நேர் ரஸ்தாவிலிருந்து சிறிது தூரம் உள்ளே போய் இந்த மலையை அடையவேண்டும். மலையென்றால் மிகப் பெரிய மலையென்று சொல்ல முடியாது. குன்றம் என்பதுதான் பொருத்தமாக இருக்கும். தரையிலிருந்து 600 அடி உயரம் உள்ளது இந்தக் குன்றம். இந்தக் குன்றின் அடிவாரத்திலிருந்து முப்பது படிகள் ஏறினால் சற்று விரிந்த மேடான வெளி இருக்கிறது. அந்த வெளியின் ஒரு பக்கத்தில் ஒரு துறுகல் - குண்டுப் பாறை - இருக்கிறது. அதைத் தொட்டிப் பாறை (Cistern Roek) என்று சொல்கிறார்கள். அதன்மேல் படிக்கட்டுகளுடன் தொட்டி போன்ற சிறிய குளம் ஒன்று அமைந்திருக்கிறது. அதன் அருகில் மற்ருெரு பாறையை முற்றத்தைப்போலச் சமமாகச் செதுக்கியிருக்கிறார்கள். அதன் ஒரு பக்கத்தில் உயரமான மேடைபோலக் கல்லில் அமைந்த ஆசனங்கள் இருக்கின்றன. அரசன் தன்னைப் பார்க்க வருவோரைக் காண அமைத்த இடம் அது என்று சொல்கிறார்கள். இந்த மேடைவெளியிலிருந்து மலையின் பக்கத்தே ஏறுவதற்குரிய படிக்கட்டு அமைந்திருக்கின்றது. அந்தப் படிகளில் ஏறிப்போனால் 50 அடி உயரத்தில் குன்றின் பக்கவாட்டில் உட்குழிந்த பகுதி ஒன்று இருக்கிறது. அதன் கீழ்ப் பகுதியில் நன்றாகத் தளம் அமைத்திருக்கிறார்கள். மேல் பகுதி குடைபோலக் கவிந்திருக்கிறது. இந்தக் குழிவுக்குகை நீண்டிருக்கிறது. இதன் ஓரத்தில் சுவரெழுப்பி இந்தப் பகுதியைத் தாழ்வாரம்போல அமைத்திருக்கிறார்கள். இந்தத் தாழ்வாரத்தின் நீளம் 500 அடி இருக்கும். இந்தக் குழிவிலேயிருந்து 40 அடி உயரத்தில் மற்ரு குழிந்த இடத்தைக் காணலாம். இதற்குப் போக இரும்புப் படிகளை இப்போது அமைத்திருக்கிறார்கள். இந்த இரண்டாவது குகையில்தான் உலகம் போற்றும் வண்ண ஓவியங்கள் உள்ளன. இருபத்திரண்டு ஓவியங்களை இப்போது காணலாம். படிக்கட்டுகளில் ஏறி நண்பர்களுடன் இந்த ஓவியக் குகையை அடைந்தேன். உட்குழிந்த அவ்விடத்தில் மலையையே சுவராக வைத்து எழுதியிருந்த வண்ண ஓவியங்களைக் கண்டேன். கண் கொள்ளாத அழகு! திடீரென்று நான் காலத்தைப் பின் நோக்கிக் கடந்து சென்றேன். இரண்டாயிரம் ஆண்டுகளை ஒரு கணத்திலே கடந்தேன். திருப்பரங்குன்றத்தில் நான் நின்றேன். அங்கே முருகன் கோயில் இருந்தது. அடர்ந்த, மரங்களும் செடிகளும் கொடிகளும் நிரம்பி, எங்கே பார்த்தாலும் ஒரே பச்சைப் பசுங்காட்சி, சலசல வென்று அருவியின் ஓசை காதில் கேட்கிறது. மெல்ல மெல்லக் கோயிலைப் பார்த்தேன். மலையைக் குடைந்து சிற்பங்களைச் செதுக்கியிருந்தார்கள். மண்டபம் போலக் கவிந்து குழிந்த ஓரிடத்தில் வந்து நின்றேன். அந்த இடம் முழுவதும் ஓவியமயம். எழுத்து நிலை மண்டபம் என்றும், எழுதெழில் அம்பலம் என்றும் அதைச் சொன்னார்கள். ஒரு பக்கம் ரதியின் உருவமும் அவளருகில் நிற்கும் காமனின் உருவமும் கண்ணைப் பறித்தன. அகலிகையின் கதையைச் சித்திரமாகத் தீட்டியிருந்தார்கள். மலைக் குகையையே சித்திரசாலையாகக் கொண்டு அந்தப் பாறைகளையே சுவர்களாக வைத்துச் சுண்ணத்தால் நிலைக்களத்தைச் செம்மைப் படுத்தி, வண்ணத்தால் ஓவியங்களை எழுதிய வித்தகர்களைப் பாராட்டினேன். இந்தப் பகற்கனவு எனக்கு உண்டாகியதற்குக் காரணம் பரிபாடல் என்ற சங்க நூல். திருப்பரங்குன்றத்தில் அந்தப் பழங் காலத்தில் வண்ண ஒவியங்கள் அமைந்த சித்திரசாலை ஒன்று இருந்தது என்பதை அந்த நூல் தெரிவிக்கிறது. சிகிரியாவில் ஓவியக் குகையிலே நான் நின்று ஒவியங்களைப் பார்த்தபோது பரிபாடலுக்குப் பொருள் பின்னும் நன்றாக விளங்கியது. சிகிரிமலைக் குகை ஓவியங்கள் ஆயிரத்தைந்நூறு ஆண்டுகள் கடந்தும் இன்னும் வண்ணம் மங்காமல் திகழ்கின்றன. எல்லா ஓவியங்களும் மின்னிடை மெல்லியலாரின் எழிலுருவங்கள். மலரொடு மங்கையர் வண்ணத்திலே பளபளக்கிறார்கள். மஞ்சளும் பச்சையும் சிவப்பும் மிகுதியாக ஒளி விடுகின்றன. தளிரிடையும் விம்மிய மார்பும் நீண்ட மூக்கும் அகன்ற விழிகளும் [] []  காவியத்தை ஓவியத்திலே காட்டுகின்றன. இடுப்புக்குக் கீழே தெரியாமல் ஓவியங்களைத் தீட்டியிருக்கிறார்கள். கால் நிலம் படாக் ககனத்து அரம்பையர் என்ற குறிப்பாக இருக்கலாம் என்று சிலர் நினைக்கிறார்கள். வண்ணமலர்த் தட்டேந்திப் பணிப்பெண் செல்ல, கோலத் திருமேனியும் அதன் நிறையெழிலும் இவள் தான் தலைவி என்று பறைசாற்ற, பின்செல்லும் எழிலரசியின் உருவத்திலே ஓவியன் கருத்தையும் கவர்ச்சியையும் குழைத்து அமைத்திருக்கிறான் அமைந்த கோலமும் பணிந்த நடையும் மென்மையின் இலக்கணத்தையும் பெண்மையின் மடப்பத்தையும் காட்டுகின்றன. நிமிர்ந்த நோக்கு அங்கே இல்லை; ஆனால் அந்தப் பணிவிலே மாட்சிமை கெடவில்லை; தலைமை பறிபோகவில்லை. கையிலே அப்பொழுது அலரும் போதை ஒருத்தி வலிய அலர்த்துகிறாள். அதை எப்படி வருணிப்பது! அவள் விரல்களே இதழ்களாகத் தோன்றுகின்றன. அந்த விரிந்த இதழ்கள் விரியாத இதழ்களை விரிக்கின்றன. மென்மலரை மென்மையாக மலரவைக்கும் மெல் விரல்களின் அழகிலே சொக்கிப் போகாதவர்கள் யார்? முடியணியின் அமைப்பும், கழுத்தணிகளின் சிறப்பும், கைவளைகளின் எழிலும் மெல்லியலாரின் அழகை மறைக்கவில்லை; அதிகமாக்குகின்றன. வலிய பாறையில் வெயிலோடு நட்பாடிக் காற்றோடு கலகலத்துப் பணியும் மழையும் குலாவிவரும் இடத்தில் மெல்லியலாரின் திருவுருவத்தையும் மென்மலர்களின் ஓவியத்தையும் அமைத்தான் ஓவியன். அவன் படைத்த ஓவியம் மென்மையை உருவாக்கிக் காட்டுகிறது; ஆனால் காலத்தை வன்மையாக எதிர்த்து வலிய பாறையிலே வாழ்கிறது. ஒரு நாள் முழுவதும் பார்த்துக்கொண்டே இருக்கலாம். ஆனால் அதற்கு நேரம் ஏது? ஒருவாறு எங்கள் மனத்தைத் தரைக்கு இழுத்து வந்தோம். நாங்களும் கீழே இறங்கினோம். முதலிலே சொன்ன தாழ்வாரக் குகை வழியே சென்றோம். அது மலையைச் சுற்றி வளைவாகச் செல்கிறது. அதன் முடிவிலே சில படிகள் இருக்கின்றன. அவற்றின் மேல் ஏறிச் சென்றால் மலையினிடையே முன்வாசல் போல உள்ள சிறிய வெளியை அடையலாம். அங்கிருந்து மலைமேலே செங்குத்தாக ஏறவேண்டும். அந்த முன் வாசலிலே வலைகளால் ஒரு சிறிய அறை கட்டியிருக்கிறார்கள். அதில் ஒரு பலகையில் ஏதோ எழுதித் தொங்கவிட்டிருக்கிறார்கள். ஆங்கிலத்தில் உள்ள அதைப் படித்துப் பார்த்தேன். “பேசாமல் போங்கள். இல்லையானால் வண்டு வந்து கொட்டும்” என்ற எச்சரிக்கையை அதிலே கண்டேன். அந்த இடத்திலிருந்து பார்த்தால் மலையின் மறுபுறம், ஓவியக் குகையின் மறுபுறம், நன்றாகத் தெரிந்தது. அங்கே பாறைகளில் மேலிருந்து பெரிய பெரிய தேன் கூடுகள் தொங்கின. அவற்றிலுள்ள கதண்டுகள் கொட்டினல் அப்புறம் மனிதன் தப்ப முடியுமா? எதிர்பாராத வகையில் கதண்டுகள் கலைந்து வந்தால் ஜனங்கள் தம்மைப் பாதுகாத்துக்கொள்ள வேண்டுமென்றே அந்த இரும்பு வலை அறையை அங்கே கட்டியிருக்கிறார்கள். மலையின் ஒரு பக்கம் ஓவியக் குகை, கண்ணுக்கும் கருத்துக்கும் இனிமையைத் தரும் அற்புதமான சித்திரங்கள். மற்றொரு பக்கத்தில் தேன் கூடுகள்; நமக்குப் பயன்படாத தேன் கூடுகள். தப்பித் தவறி வண்டுகளின் கோபத்துக்கு ஆளானால் அவை கொட்டி விஷத்தை உடம்பிலே பாய்ச்சிவிடும்! இந்த முன் வாசலிலிருந்து செல்லும் படிகள் சில இருக்கின்றன. இந்தப் படிக்கட்டின் இருபுறமும் சிங்கத்தின் பாதத்தைப் போலச் சுண்ணத்தாலே அமைத்திருக்கிறார்கள். நன்றாகக் கால் நகங்கள் தெரிகின்றன. நாலு அடி உயரமுள்ள நகங்கள். அந்த மலையே சிங்கமாக இருந்தால் அதற்கு நகம் நாலு அடி இருப்பது ஆச்சரியம் அல்லவே! படிக்கட்டில் ஏறினால் இரும்புப் படிக்கட்டுகள் இருக்கின்றன. அவற்றில் ஏறினல் சாய்வான மேற் பகுதிக்கு வரலாம். அங்கே சிறிய சிறிய படிகளை வெட்டியிருக்கிறார்கள். ஓரத்தில் இரும்புக் கிராதிகள் உள்ளன. அவற்றைப் பிடித்துக்கொண்டே வெட்டிய படிகளில் மிகவும் நிதானமாக ஏறினோம். எப்படியோ மலையின் மேற்பரப்புக்குப் போய்ச் சேர்ந்தோம். இரும்புக் கிராதிகளைப் பற்றிக்கொண்டு ஏறுவதற்குக் கொஞ்சம் தைரியம் வேண்டும். மேலே கஸ்ஸபனது அரண்மனையின் சிதிலங்களைக் கண்டேன். முன்பு அங்கே எத்தனையோ மண்டபங்கள் இருந்திருக்கவேண்டும். நடுவிலே ஒரு வாவி உண்டு. அதில் இப்போதும் நீர் இருக்கிறது. குறிப்பிட்ட அளவுக்கு மேலே நீர் வந்தால் தானே வடிந்து விடும்படி மதகு அமைத்திருக்கிருர்கள். பழைய காலத்துக் கட்டிடம் எவ்வளவு உறுதியாக இருக்கிறதென்பதை அங்கே கண்டேன். ஒவ்வொரு செங்கலும் ஓரடி நீளம், அரையடி அகலம். கஸ்ஸபன் தன்னைக் குபேரனாக எண்ணிக் கொண்டு அந்த இடத்தை அளகாபுரியைப் போல ஆக்கினான் என்று சிலர் சொல்லுகிறார்கள். மலையின் உச்சியிலே அரண்மனையை அமைத்துக் கலைத்திறமை நிரம்பிய பகுதிகளை நிறுவிய அரசன் தன் தந்தையைக் கொன்றவனாக இருந்தாலும் கலைச்சுவை படைத்தவனாக இருந்தான். அந்த ஓவியங்களை அங்கே வரைந்த ஓவியன் யாரோ! அவனை நாம் அறியோம். கஸ்ஸபன் செய்த போரையும் ஆற்றிய கொடுஞ் செயல்களையும் மகாவம்சம் சொல்கிறது. ஆனால் இன்று சிகிரிக் குன்றம் கலைச்சுவை தேர்ந்து வாழும் வாழ்க்கையையும், இக்காலத்தில் செயற்கரிய வகையில் ஒன்றை எண்ணி, எண்ணியபடி வெறுமையாகக்கிடந்த மலையை அளகையாக்கிய பெருந்திறலையுமே காட்டுகிறது. இந்த இரண்டையும் நினைக்கையில் முன்னே சொன்ன கொடுமை மறந்து போகிறது. அது போன காலச் சரித்திரம். இது இப்போதும் நம் கண்ணை மகிழ்விக்கும் விருந்து. ------------------------------------------------------------------------ 1. நாட்டரசன் கோட்டைக் கண்ணுடையம்மன் பள்ளுப் பாடினவர் இவர்.↩︎ பொலன்னறுவை பொலன்னறுவை !-இலங்கைச் சரித்திரத்தில் மிகவும் சிறப்பான காலத்தின் அடையாளச் சொல் இது. பெருவீரனும், தன் குலத்தை மீட்டும் நிலை நிறுத்திக் கோயிலும் குளமும் ஏரியும் அமைத்து, இலங்கை முழுதும் ஆண்டுவந்தவனுமாகிய மகா பராக்கிரம பாகுவின் புகழைப் புலப்படுத்தும் சின்னம் இது. சிற்பக்கலையும் ஓவியக் கலையும், வேளாண் திறமும் ஆட்சித்திறமும், சமயமும் அரசியலும், சைவமும் பெளத்தமும் இணைந்து நின்ற அழகு நகரம் பொலன்னறுவை சரித்திரத்தையும் இன்றுள்ள சின்னங்களையும் வைத்து ஆராய்ந்தால் இந்த மகாநகரம் நாகரிகச் சிறப்பு வாய்ந்ததாய், சிறந்த அரண்மனையும், ஆஸ்தான மண்டபமும், கோயில்களும், குளங்களும் உடையதாகி விளங்கியது என்பதை அறிந்துகொள்ளலாம். இன்று நாற்புறத்திலும் காடுகள் சூழ இடையே இடிந்த மண்டபமும் கோயிலும் நிரம்பிய பாழுராகக் கிடக்கிறது. சிகிரியாவிலுள்ள ஓவியங்களைப் பார்த்துவிட்டு அங்கிருந்து நேரே பொலன்னறுவைக்கு வந்து சேர்ந்தோம். காட்சியின்பத்தின் பொருட்டு வருகிறவர்களுக்குப் பயன்படும்படி அரசாங்கத்தார் இங்கே ஒரு விடுதியை நடத்துகிறார்கள். அங்கே தங்கவும் உணவு கொள்ளவும் வசதிகள் செய்திருக்கிறார்கள். பராக்கிரம சமுத்திரம் என்ற பெரிய ஏரியின் கரையில் அந்த விடுதி அமைந்திருக்கிறது. நல்ல காற்று வரும் இடம். சுற்றிலும் பழமையை நினைவுறுத்தும் சின்னங்களுக்கிடையே இந்த விடுதி ஒன்றுதான் புதுமையின் விளைவாக நிற்கிறது. உணவு உண்டு சிறிது நேரம் இளைப்பாறியவுடன் இடிந்த நகரத்தைக் காணப் புறப்பட்டோம். பொலன்னறுவை கொழும்பு நகரத்திலிருந்து 158-மைல் தூரத்தில் இருக்கிறது. இருபத்தைந்து மைல்கள் காட்டினூடே செல்லவேண்டும். காடாக இருந்தாலும் நல்ல சாலை அமைந்திருக்கிறது. பல ஆண்டுகளாகப் பொலன்னறுவை காட்டிற்குள் மறைந்து கிடந்தது. நாகரிக மக்களும் மன்னரும் வாழ்ந்த இடத்தில் புலியும் யானையும் நரியும் பாம்பும் வாழ்ந்தன. இலங்கைச் சரித்திரத்தின் சிறந்த பகுதிக்குரிய நிகழ்ச்சிகள் நிகழ்ந்த இந்த இடம் 1901-ஆம் ஆண்டிலிருந்து இலங்கை அரசாங்கத்தின் கவனத்துக்கு வந்தது. அதுமுதல் இடத்தைக் சுத்தப்படுத்திக் காடு திருத்திச் சாலை போட்டுச் சின்னங்களைப் பாதுகாப்பதற்கு வேண்டிய முயற்சிகள் நடைபெறத் தொடங்கின. 11-ஆவது நூற்றாண்டின் ஆரம்பத்தில் இலங்கை முழுவதும் சோழ சாம்ராஜ்யத்துக்கு உரியதாக இருந்தது. முதலாவது இராஜராஜ சோழன் தஞ்சையில் இருந்து அரசாட்சி புரிந்த காலம் அது. அப்பால் அவனுடைய மகனாகிய இராஜேந்திர சோழன் காலத்தில் அவ்வரசன் இலங்கையரசனைச் சிறைப்படுத்தினான். அக்காலத்தில் இலங்கையில் இந்தப் பொலனறுவையே தலைநகரமாயிற்று. இந்த நகரத்துக்குச் சனநாதபுரம் என்ற புதிய பெயரை வழங்கிச் சோழ ஆட்சி பீடமாக்கினான் இராஜேந்திர சோழன். அந்தக் காலத்தில் பொலன்னறுவையில் இரண்டு சிவாலயங்களைக் கட்டியிருக்கிறார்கள்; ஒன்று முழுவதும் கல்லால் அமைந்தது; இன்றும் மேல் விமானமும் உள்ளே சிவலிங்கமும் வெளியே நந்தியும் இருப்பதைக் காணலாம். இங்கே கிடைத்த செப்பு விக்கிரகங்களைக் கொழும்புக் காட்சிச் சாலையில் வைத்திருக்கிறார்கள். நாங்கள் முதலில் விருந்தினர் விடுதிக்கு அருகில் உள்ள ஒரு பாழடைந்த மண்டபத்தைப் பார்த்தோம். அது இங்கே அரசாண்ட நிச்சங்க மல்லளென்னும் அரசனுடைய ஆஸ்தான மண்டபம் இருந்த இடமாம். இப்போது இங்கே வெறும் அஸ்திவாரம் மட்டுந்தான் இருக்கிறது. இது பராக்கிரம சமுத்திரத்தின் கரையைச் சார்ந்தே அமைந்துள்ளது. மற்றச் சின்னங்கள் விடுதிக்குக் கிழக்கே பரந்து கிடக்கின்றன. அவற்றுக்கும் விடுதிக்கும் இடையே மோட்டார் போகும் சாலை இருக்கிறது. அந்தச் சாலையைத் தாண்டி நாங்கள் சென்றோம். லங்கா திலகம் என்ற பெயருடைய புத்தர் ஆலயத்துக்குச் சென்றோம். அதை இப்போது ஜேதவன ஆராமம் என்று சொல்கிறார்கள். அங்கே 170 அடி உயரமுள்ள செங்கற் சுவர்கள் நிற்கின்றன. மேற் பகுதிகளெல்லாம் இடிந்து போயின; வெறும் சுவர்களே இருக்கின்றன. இங்கே ஒரு பிரம்மாண்டமான புத்தர் திருவுருவம் நின்ற கோலத்திலே உள்ளது. சுதையினால் ஆன திருவுருவம் அது. கட்டிடத்தின் தலையாகிய விதானம் மறைந்தது போல இந்தத் திருவுருவத்தின் திருமுடியும் இப்போது காணப்படவில்லை. இத் திருக்கோயிற் சுவர்களில் பல ஓவியங்கள் மங்கியும் மாசு படிந்தும் இருக்கின்றன. புத்த ஜாதகக் கதைகளை விளக்கும் அழகான ஓவியங்கள் அவை. இந்தக் கோயில் பராக்கிரம பாகுவால் கட்டப்பெற்றது. சோழர்களுடைய ஆட்சியைத் தன் வீரத்தால் மாற்றி விறல் கொண்டவன் முதலாம் விஜயபாகு என்ற மன்னன். அவன் 1070-ஆம் ஆண்டு முதல் 1114-ஆம் ஆண்டு வரையில் ஆண்டானாம். அவன் காலத்தில் இங்கே சில டகோபாக்களும் ஆலயங்களும் மண்டபங்களும் தோன்றின. அவனுக்குப் பிறகு சில மன்னர்கள் ஆண்டார்கள். அப்பால் கி. பி. 1137-ஆம் வருஷம் முதல் 1186-ஆம் ஆண்டு வரையில் பராக்கிரமபாகு ஆட்சி புரிந்தான். அவன் காலத்திலேதான் இந்த நகரம் பல அரிய மண்டபங்களையும் திருக்கோயில்களையும் உடையதாக விளங்கியது. அவன் கட்டியதே இந்த ஜேதவன ஆராமம். அவன் காலத்தில் இங்கே அமைந்த கட்டிடங்களும் எழுதிய ஓவியங்களும் பெரும்பாலும் சோழர் சிற்பங்களையும் ஓவியங்களையும் தழுவியனவாகவே இருக்கின்றன. ஜேதவன ஆராமத்தைப் பார்த்துக் கொண்டு கல் விகாரம் என்ற இடத்துக்குப் போனோம். அங்கே இயற்கையாக அமைந்துள்ள துறுகல்லில் மிகவும் அழகாகத் திருவுருவங்களை அமைத்திருக்கிறார்கள். அங்கே புத்தர் அமர்ந்திருக்கும் திருக்கோலத்தில் இரண்டு உருவங்களும், நின்ற திருக்கோலத்தில் ஒன்றும், கிடக்கும் கோலத்தில் ஒன்றுமாக நான்கு திருவுருவங்களைக் கண்டோம். அமர்ந்த [] தில் பெரியதாக உள்ள திருவுருவம் வெயிலும் மழையும் கண்ட திருமேனியாக இருக்கிறது. ஆனல் திருமுகத்தில் சாந்தம் தவழ்கிறது. அதனையடுத்து ஒரு சிறிய குடைவரைக் கோயிலுக்குள் ஒரு திருவுருவம் அமர்ந்த கோலத்தில் இருக்கிறது. அந்தக் குகையின் சுவர்களில் வண்ண ஓவியங்களை எழுதியிருந்தார்கள். கதிரவன் ஒளியும் காற்றின் வீச்சும் அவற்றின் அழகைக் கெடுத்து மறைத்துவிட்டன. ஆனாலும் மங்கின இளம்பருவக் கனவு போல அவை அங்கங்கே காட்சியளிக்கின்றன. அடுத்து, நிற்கும் கோலத் திருவுருவமும் அதனைச் சார்ந்து கிடந்த கோலத் திருவுருவமும் உள்ளன. தம்முடைய குருநாதராகிய புத்தர்பிரான் பரிநிர்வாணம் அடைந்த துயரத்தோடு நிற்கும் ஆனந்தருடைய திருவுருவமே நிற்கும் உருவம் என்று சிலர் சொல்கிறார்கள். சயனக் கோலத்தில் உள்ள புத்தர் உருவத்தைத் தொட்டுத் தொட்டுப் பார்த்தோம். 44 அடி நீளமுள்ள நெடிய திருவுருவம். வலப் பக்கமாகத் திரும்பித் தலையணையின்மேல் வலக்கையை மடித்து வைத்துத் துயிலும் கோலம், கல்லிலே உள்ள தலையனையா அது? அது மெத்தென்ற பஞ்சுத் தலையணையல்லவா? தலை வைத்த இடத்தில் அமுங்கியிருக்கும் படி சிற்பி அதை வடித்து அமைத்திருக்கிறான். புத்தர் பிரானுடைய பாதங்களில் கமல முத்திரை இருக்கிறது. இந்த நான்கு திருவுருவங்களையும் பார்த்து விட்டுப் பொத்கல் விகாரம் என்ற இடத்துக்குப் போனோம். அங்கே இயற்கையாக உள்ள பாறையில் சிற்பி தன்  [] கைநலம் தோன்றச் செதுக்கிய ஓர் உருவத்தைக் கண்டோம். “இதுதான் இந்த நகரத்திலிருந்து ஆண்ட பராக்கிரம பாகுவின் திருவுருவம்” என்றார் உடன் வந்த அதிகாரி. இந்த உருவம் ஒன்றரை ஆள் உயரத்தில் நின்ற திருக்கோலமாக இருக்கிறது. இரண்டு கைகளாலும் ஏதோ ஒன்றை ஏந்திக்கொண்டிருக்கும் நிலை அதில் தோற்றுகிறது. எதிரே உள்ள புத்தர் கோயிலில் இருக்கும் புத்த பகவான் முன் பராக்கிரமபாகு நின்று, “இனி நான் வாளைக் கையால் தொடமாட்டேன். போர் செய்தது போதும்” என்று சொல்லி வாளை அதை வைக்கும் பெட்டியுடன் சமர்ப்பிப்பதைக் காட்டுவது இது என்று சிலர் சொன்னார்கள். அந்தத் திருவுருவத்தின் முன்னே நின்று கூர்ந்து கவனித்தேன். சடைமுடியும் தாடியும் தாழ் காதும் உடைய இவ்வுருவம் எவரேனும் முனிவருடைய திருவுருவமாக இருக்க வேண்டும்" என்று எனக்குத் தோன்றியது. “கையிலே வைத்திருப்பது ஏட்டுச் சுவடி என்று சிலர் சொல்கிறார்கள்” என்று சிற்பப் பாதுகாப்பு அதிகாரி சொன்னர். “பொலன்னறுவா என்பது புலஸ்திய நகரம் என்பதன் சிதைவு. அந்த உருவம் புலஸ்தியருடையது என்றுதான் எனக்குத் தோன்றுகிறது” என்று ஓர் அறிஞர் சொன்னார். ‘இவ் வடிவத்தில் யாவாவிற் காணப்பட்ட அகத்திய முனிவரது வடிவத்தில் உள்ள சிற்ப இயல்புகள் அமைந்திருக்கின்றன’ என்று கலைஞர் திரு க. நவரத்தினம் எழுதியிருக்கிறார். பராக்கிரம பாகுவின் அரண்மனையைப் பார்த்தோம். இடிந்த அரண்மனைதான். இங்கே ஏழு  [] . நிலைகள் இருந்தன என்று சொல்வதுண்டு. இப்போதுள்ள சிதிலங்களிலிருந்து இது மிகவும் பெரியதாகவே இருந்திருக்க வேண்டும் ஏன்று தோன்றுகிறது. பராக்கிரமபாகுவின் அரசிருக்கை மண்டபம் மேற்கூரையின்றிச் சில கல் தூண்களோடு இடிந்து கிடக்கிறது. நடுவிலே மன்னன் அமரும் இடம் உயர்ந்து இருக்கிறது. இருபாலும் அமைச்சரும் சேனாதிபதிகளும் அமர்வதற்குரிய ஆசனங்கள் உயரமாக அமைந்திருக்கின்றன. இதற்குள் நுழையும் வாயிலில் உள்ள படிக்கட்டில் அழகான சிற்ப வேலைப்பாடுகளைப் பார்க்கலாம். அரண்மனையைச் சார்ந்து நீராட்டு மண்டபமும் அதற்கருகில் நீராடும் வாவியும் இருக்கின்றன. அவற்றின் அமைப்பே தனிச் சிறப்புடையதாக உள்ளது. மற்றோரிடத்தில் வட்ட டாகெ என்ற புத்தர் திருக்கோயில் இருக்கிறது. இங்கேயும் மேல் விதானம் இல்லை. கோயில் வட்டமாக இருப்பதில்லை வட்ட டாகெ என்று வழங்குகிறார்கள். நான்கு திசைகளிலும் நான்கு வாயில்களும், உள்ளே ஒவ்வொரு வாயிலையும் நோக்கி அமர்ந்த திருக்கோலத்தில் புத்தர் திருவுருவங்களும் இருக்கின்றன. இதனை அடுத்து வேறு பல மண்டபங்களும் கோயில்களும் காணலாம். ஒரு நீண்ட கல்லில் பெரிய சாஸனம் ஒன்று இருக்கிறது. அதைக் கல்புத்தகம் என்று சொல்கிறார்கள். மற்றோரிடத்தில் முழுவதும் கல்லால் அமைந்த சிவாலயம் இருக்கிறது. அந்தக் கோயிலுக்கு வானவன் மாதேவி ஈசுவரம் என்னும் பெயர் வழங்கியது; இது அங்கே உள்ள கல்வெட்டால் தெரியவருகிறது. சிவாலயத்தை நாங்கள் பார்த்தபோது ஓர் ஆங்கிலேயர் பார்ஸிப் பெண்மணி ஒருத்தியுடன் அங்கே வந்து எல்லாவற்றையும் பார்த்துக்கொண்டிருந்தார். கையிலே காமிராவை வைத்துப் படம் பிடித்தார். “எங்கிருந்தெல்லாமோ அறிஞர்கள் வந்து இந்தச் சிற்பங்களைக் கண்டுகளித்துச் செல்கிறார்கள்” என்று நாங்கள் பேசிக்கொண்டோம். அந்த ஆங்கிலேயரை அங்கே பார்த்தது பெரிய காரியம் அல்ல. அவரை நாங்கள் எளிதிலே மறந்திருப்போம். ஆனால் அவரை மறக்காமல் நினைக்கும்படியாக ஒரு நிகழ்ச்சி ஏற்பட்டது. இரண்டு நாட்கள் கழித்துப் பத்திரிகையில் ஒரு செய்தி வந்தது. “காட்டுக்குள் சென்று காட்டு விலங்குகளின் படங்களை எடுப்பதில் பெரிய நிபுணராகிய-(பெயர் நினைவு இல்லை) பொலன்னறுவைக்குச் சென்றார். அங்குள்ள காட்சிகளைப் படம் பிடித்தார். பிறகு அருகிலுள்ள காட்டுக்குள் போனார். ஒரு யானையைப் படம் பிடித்தார். பின்னும் நெருங்கிப் படம் பிடிக்கும்போது அந்த யானை அவரைக் கொன்று விட்டது. இதுவரையில் அவர் பலமுறை யாரும் எடுக்க முடியாத நிலையில் கொடிய விலங்குகளைப் படம் பிடித்திருக்கிறார்” என்ற செய்திதான் வந்தது. பொலன்னறுவையில் நாங்கள் கண்டவரே அவர் என்று தெரிய வந்தது. அவரை நாங்கள் பாராமல் இருந்திருந்தால் இந்தச் செய்தியை மேல் எழுந்த வாரியாகப் பார்த்து அப்பால் பத்திரிகையைப் புரட்டியிருப்போம். ஆனால் நாங்கள் அவரைக் கண்டதனால், அந்தச் செய்தியைக் கூர்ந்து கவனித்தோம். மனசில் ஏதோ ஒரு வகை வேதனை உண்டாயிற்று. நாங்கள் அவரை முன்னே கண்டதில்லை. கண்டபோதும் பேசவில்லை. ஆனாலும் அந்த அமானுஷ்யமான காட்டில் நாங்கள் ஆவலோடு பார்க்கும் காட்சிகளை அவரும் ஆவலோடு பார்த்தார். அதனால் அவருக்கும் எங்களுக்கும். ஏதோ ஒட்டுறவு இருப்பது போன்ற உணர்ச்சி ஏற்பட்டது. அவர் எதிர்பாராத வகையில் கொல்லப்பட்டார் என்பதை அறிந்தபோது அந்த உறவுணர்ச்சி வெளிப்பட்டது. நான் அதை எத்தனையோ பேரிடம் சொல்லிவிட்டேன். கொழும்புமா நகரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் நான் சொற்பொழிவாற்றும் போதும் அந்த நிகழ்ச்சியைச் சொன்னேன். பொலன்னறுவையில் பழைய அரசுகள் மங்கி மடிந்த சின்னங்கள் நிலவுகின்றன. அவற்றை நினைக்கும்போது அந்த நினைவோடே யானையின் கையிலே முடிவைக் கண்ட போட்டோ நிபுணரின் நினைவும் என் உள்ளத்திலே தோன்றுகிறது. அப்பால் பல இடங்களைப் பார்த்தோம். தாமரைக் குளம் ஒன்றைக் கண்டோம். அதில் தண்ணீரும் இல்லை; தாமரையும் இல்லை. ஆனால் இன்றும் தாமரைக்குளந்தான் அது; தாமரை வடிவில் கல்லால் அமைந்த அழகிய சிறிய குளம். தாமரை இதழ்களைப் போல அதன் படிகள் அடுக்கடுக்காக இருக்கின்றன. செல்வமும் பதவியும் ஆற்றலும் இருக்கலாம். அவற்றை அநுபவிக்கவும் அநுபவிக்கலாம். ஆனால் எல்லோரும் அதைக் கலைச்சுவையோடு அநுபவிப்பதில்லை. பராக்கிரமபாகு கலைச்சுவை தேரும் மன்னன் என்பதைப் பொலன்னறுவையில் இன்று இடிபாடுகளாகத் தோன்றும் சின்னங்கள் சொல்லாமல் [] சொல்லுகின்றன. இரண்டு மூன்று ஏரிகளை ஒன்றாக்கிப் பராக்கிரம சமுத்திரம் என்ற பெரிய நீர்நிலையை அமைத்து வேளாண்மையை வளரச் செய்தான். இந்தப் பெரிய ஏரி பதினான்கு மைல் சுற்றளவுள்ளது என்று சொல்லுகிறார்கள். கலைஞர்களுக்கு வேலை கொடுத்துச் செங்கல்லாலும் கருங்கல்லாலும் அரண்மனையும் கோயிலும் அமைக்கச் செய்தான். வண்ணத்தால் ஓவியம் வரையச் செய்தான். இலக்கிய வளமும் இவன் காலத்தில் சிறப்பாக இருந்ததாம். இலங்கைச் சரித்திரத்தின் பொன்னேடு பராக்கிரம பாகுவின் ஆட்சிக் காலம். அதைக் காட்டுக்கிடையே உள்ள இன்றைப் பொலன்னறுவை தன் அழிந்த அங்கங்களால் புலப்படுத்திக் கொண்டிருக்கிறது.  அசோக வனம் இராமாயணத்தில் அயோத்தியைவிட இலங்கையைப் பற்றித்தான் அதிகமான செய்திகள் இருக்கின்றன. இராமாயண வரலாற்றின் முக்கியமான நிகழ்ச்சிகள் இலங்கையில் நிகழ்கின்றன. பாலகாண்டம், அயோத்தியா காண்டம் என்ற இரண்டு காண்டங்களில் அயோத்தியைக் காண்கிறோம். சுந்தர காண்டம், யுத்த காண்டம் என்ற இரண்டு காண்டங்களில் இலங்கையையே இடமாகக் கொண்டு கதை படர்கிறது. சுந்தர காண்டத்தில் அநுமான் இலங்கை முழுவதும் உலாவுகிறான்; ஊர் முழுவதும் அலைந்து சீதையைத் தேடுகிறான். வால்மீகியும் கம்பரும் இலங்காபுரி வருணனையை அவ்விடத்தில் மிக விரிவாகச் சொல்லியிருக்கிறார்கள். சுந்தர காண்டத்தில் அசோகவனத்தில் ‘சோகத்தாளாய நங்கை’ சிறையிருந்த நிலையைக் காண்கிறோம். இராமாயணம் சிறையிருந்தவள் ஏற்றம் சொல்வது என்று கூறுவார்கள். சீதைக்கு ஏற்றம் தந்தது அவள் சிறையிருந்தது என்றால், அவள் சிறையிருந்த இடமாகிய அசோக வனமும் ஏற்றமுடையதுதானே? இலங்கைப் பிரயாணத்தில் இராமாயணத்தை நினைவுறுத்தும் இடங்களைக் காணவேண்டும் என்ற ஆசை எனக்கு இருந்தது. புதிய ஊர்களுக்குப் போனால், “இந்த ஊரின் பெயர் என்ன? இங்கே என்ன விசேஷம்?” என்று கேட்கிற பழக்கம் உள்ள நான், இலங்கையில் காரில் பிரயாணம் செய்தபோது அடிக்கடி இத்தகைய கேள்விகளைக் கேட்டுக்கொண்டே இருந்தேன். நண்பர் கணேஷ் கூடியவரைக்கும் என் கேள்விகளுக்கு விடை அளித்துக்கொண்டே வந்தார். சில இடங்களில் ஊரில் உள்ள மக்களைக் கேட்டுத் தெரிந்து எனக்குச் சொன்னார். அவருக்குச் சிங்கள மொழியில் நன்றாகப் பேசவும் படிக்கவும் வரும். அதனால் சிங்களவர்களோடு பேசிச் செய்தியை அறிவது அவருக்கு எளிதாக இருந்தது. கதிர்காமத்துக்குப் போகவேண்டும் என்ற என் ஆவலை நண்பர் தெரிந்துகொண்டிருந்தார். அவர் தாம் தம்மையும் தம் காரையும் சாரதியையும் என் போக்கிலே விட்டுவிட்டாரே! நாளைக்கு வெள்ளிக்கிழமை; கதிர்காம வேலனைத் தரிசித்துக்கொள்ள நல்ல நாள். அதற்கு முன்னே பார்க்கவேண்டிய இடங்கள் சில உண்டு. முக்கியமாக அசோகவனத்தைப் பார்க்கவேண்டாமா?’ என்று கேட்டார். “அசோகவனமா? நாம் போகிற வழியிலா இருக்கிறது? சீதை சிறையிருந்த அசோக வனத்தையா சொல்கிறீர்கள்?” “ஆம், சாட்சாத் அதே அசோகவனந்தான்.” “நான் அசோக மரத்தைக்கூடப் பார்த்ததில்லை. தமிழ் நாட்டில் எது எதையோ அசோக மரம் என்று சொல்கிறார்கள். நெளி நெளியாக வளைந்த இலையும் நெட்டையான உருவமும் உடைய நெட்டிலிங்க மரத்தை அசோக மரம் என்கிறார்கள். காவியங்களில், அசோகமரம் நெருப்பைப் போலச் செக்கச் செவேலென்ற மலரையுடையது என்று புலவர்கள் சொல்லியிருக்கிறார்கள். நெட்டிலிங்க மரத்தில் பூ இருக்கிறதோ, இல்லையோ, அதை நான் பார்த்ததே இல்லை” என்றேன். “அசோக மரத்தையும் அதன் பூவையும் நேரே காட்டுகிறேன்” என்றார் கணேஷ். “சீதா பிராட்டியைக் காட்ட முடியுமா?” “என்னை அநுமான் என்று நினைத்தீர்களா?” என்று அவர் கேட்டபோது நாங்கள் யாவரும் சிரித்து விட்டோம். “சீதா பிராட்டியைக் காட்ட முடியாது. ஆனால் சீதை இருந்த இடத்தைக் காட்டுகிறேன்” என்று அவர் சொன்னார். நாங்கள் அசோகவன யாத்திரையைத் தொடங்கினோம். அன்று (20.9-51) வியாழக்கிழமை. கார் மலைப்பகுதிகளில் போய்க்கொண்டே இருந்தது. முன்பே நான் கண்டு மகிழ்ந்த குறிஞ்சி வளம் இந்த இடங்களில் மிக மிக அற்புதமாக இருந்தது. மலைகளில் அழகான ரோடு. வளைந்து வளைந்து கார் சென்றது. தவறி விழுந்தால் கிடுகிடு பாதாளத்துக்குப் போகவேண்டியதுதான். அங்கங்கே சில அருவிகளைப் பார்த்தேன். ஓரிடத்தில் 1500 அடி உயரத்திலிருந்து அருவி விழுந்துகொண்டிருந்தது. அதன் அருகில் வந்தபோது அங்கே சற்று நில்லாமல் போக மனம் வரவில்லை. காரை நிறுத்திக் கீழே இறங்கி அருவியின் கண்கொள்ளாத அழகைப் பார்த்தேன். மேலே மலையிலிருந்து அருவி கீழே விழும் முகட்டில் ஒரே வெண் புகை; இல்லை இல்லை, நீராவி, அது கூடத் தப்பு; மிகமிக மெல்லிதாகப் பஞ்சைப் பன்னிப் பறக்க விட்டால் எப்படி இருக்கும்? பாலிலிருந்து பணியாக்கி அதை எங்கும் தூவினால் எப்படி இருக்கும்? பனிக்கட்டியைப் பொடியாக்கி அதில் வெண்மை நிறத்தை இன்னும் ஊட்டி லேசாகத் தூவினால் எப்படித் தோன்றும்?- இவைகளெல்லாம் உபமானம் ஆகுமா? மலைமுகட்டில், அருவி வீழும் இடத்தில் இருந்த காட்சிக்கு எதை உவமை சொல்வது? அதற்கு அதுவே உவமை. “கண்டவர் விண்டிலர்” என்பது அந்த அருவியின் திறத்திலும் பொருந்தும். அருவி வீழும் வேகத்தில் நீரின் பிசிர் புகை போல எழுகிறது. நீர் கீழே விழுகிறது. அதன் பிசிர் புகை பருந்து போல மேலே எழுகிறது. அது நீர்த்துளியும் அல்ல; நீராவியும் அல்ல; நீரின் அணுக்கள் சேர்ந்த படலம், அழகாக விரித்த பனிப்படலம் போல, உதறிவிட்ட வெள்ளைப் போர்வை போல, அது அந்த முகட்டிலே மிதந்தது. அருவியின் நீர்த்தாரை தண்ணீர் அல்ல; பால் தான். வெள்ளை வெளேரென்று விழும்போது அதன் காட்சியும் ஓசையும் காணக் காண இனிக்கும் பேரழகு. அதை இன்று நினைத்தாலும் உள்ளத்தில் இன்ப அருவி துள்ளுகிறது. “நீங்கள் நீலகிரிக்குப் போனது உண்டா ?” என்று கணேஷ் கேட்டார். “இல்லையே!” என்றேன். " இலங்கையில் நீலகிரியைப் போல ஓர் இடம் இருக்கிறது. அங்கே உதகமண்டலத்தைப் போன்ற நகரம் நுவரெலியா, அதற்குத்தான் போய்க்கொண்டிருக்கிறோம். இன்று மத்தியான்னச் சாப்பாடு அங்கே." நுவரெலியாவுக்கு நண்பகல் 1-30 மணிக்குப் போய்ச் சேர்ந்தோம். அப்போதே அங்குக் குளிராக இருந்தது. ஆறாயிர அடிக்கு மேலே உள்ள நகரம் நுவரெலியா. அங்கே பெரிய ஏரி, குதிரைப் பந்தய மைதானம், பெரிய கடைகள், வேறு கட்டிடங்கள் எல்லாம் இருக்கின்றன. உல்லாசமாகப் பொழுதைப் போக்கும் மனிதர்களுக்கு நல்ல இடம் அது. எங்களை வரவேற்ற நண்பர் ‘புடைவைக் கடை’ வைத்திருந்தார். பெண்கள் கட்டும் ஆடைகளை மாத்திரம் விற்கும் இடம் அன்று; ஜவுளிக்கடை அது. எல்லா வகையான ஆடைகளையும் யாழ்ப்பாணத்தில் உள்ளவர்கள் புடைவை என்று சொல்வார்கள். அந்தக் கடைக்காரரும் யாழ்ப்பாணத்தார். தமிழில் புடைவை என்பதற்குப் பொதுவாக ஆடை என்றுதான் பொருள். திருநாவுக்கரசர் தம் தமக்கையை ஒருவரும் அறியாமல் பார்க்கும் பொருட்டு ஆடையினால் தம்மை மறைத்துக் கொண்டு சென்றார் என்று பெரிய புராணத்தில் ஒரு செய்தி வருகிறது. அங்கே, "மெய்தருவான் நெறியடைவார் வெண்புடைவை மெய்சூழ்ந்து கைதருவார் தமைஊன்றிக் காணாமே இரவின்கண் செய்தவமா தவர்வாழும் திருவதிகை சென்றடைவார்" என்று சேக்கிழார் பாடுகிறார். வெள்ளாடையைப் போர்த்துச் சென்றார் என்பதை, “வெண் புடைவை மெய்சூழ்ந்து” என்று சொல்கிறார். இங்கே புடைவை என்றது பெண்கள் உடுக்கும் உடையாகுமா? பொதுவாக, ஆடை என்றே கொள்ள வேண்டும். புடைவைக் கடையைப் பார்த்துவிட்டு நண்பர் வீட்டுக்குச் சென்று விருந்துணவு அருந்திச் சற்று இளைப்பாறினோம். “அசோகவனத்துக்குப் போக வேண்டாமா ?” என்று ஆவலுடன் கேட்டேன். “நாம் அசோக வனப் பகுதியிலேதான் இருக்கிறோம்” என்று நண்பர் சொன்னர். “அசோக மரம்?” “பார்க்கலாம்.” சிறிது நேரம் கழித்துப் புறப்பட்டோம். வழியில் பல இடங்களில் அசோக மரங்களைப் பார்த்தேன். கவிகள் சொன்ன வருணனை அப்போதுதான் எனக்கு விளங்கியது. அதன் செம்மலர்களைக் கண்டேன். போகும் வழியில் ஹக்கலாப் பூந்தோட்டத்தை அடைந்தேன். கடல் மட்டத்திற்கு 5000 அடி உயரத்துக்குமேல் அமைந்திருக்கிறது அது. மலைப் பகுதிகளில் வளரும் மரம் செடி கொடி வகைகளை அங்கே வளர்த்துப் பாதுகாக்கிறார்கள். இமய மலைப் பகுதிகளில் வளரும் பலவகை மரங்களை அங்கே கண்டேன். அங்குள்ள குளத்தில் எத்தனை வித மலர்கள்! நான் அதுகாறும் காணாத மலர் ஒன்றைக் கண்டேன்; வியந்தேன். சில நேரம் அதையே பார்த்துக்கொண்டு நின்றேன். ஆம், அந்தக் குளத்தில் பொற்றாமரையைக் கண்டேன். செந்தாமரை, வெண்டாமரை என்ற இரண்டு வகைகளையும் கவியிலும் உலகிலும் கண்டு களித்தவர் பலர். ஆனால் மதுரைக்குப் போனவர்களுக்கும் திருவிளையாடற் புராணம் படித்தவர்களுக்கும் பொற்றாமரை என்ற பெயர் தெரியும். மதுரைக் கோயிலில் உள்ள தீர்த்தத்துக்குப் பொற்றாமரைக்குளம் என்று பெயர். ஒரு காலத்தில் அதில் பொன் நிறம் பெற்ற தாமரை பூத்ததாம். நான் பொன் நிறத் தாமரையையே ஹக்கலாப் பூந்தோட்டத்தில் பார்த்தேன். அழகான மஞ்சள் நிறம் கதிரவன் ஒளியிலே பளபளக்கும்போது பொன்னாகவே தோன்றும் அல்லவா? அதை மஞ்சள் நிறத் தாமரை என்று சொல்லலாம்; மஞ்சள் நிறத்தையே பொன்னிறமென்றும் சொல்வார்கள். அந்தக் குளத்தில் பல மஞ்சள் தாமரைகள் இருந்தன. எங்கும் காணாத அருமையான மஞ்சள் தாமரையை அன்று மதுரையிலே அன்பர்கள் கண்டு வியப்படைந்து, பொற்றாமரை!" என்று போற்றியிருக்கலாம் அல்லவா ? ஹக்கலாவில் உள்ள மஞ்சள் தாமரை பொற்றாமரையாகவே எனக்குத் தோன்றியது. அதற்குப் பூந்தோட்ட அதிகாரிகளும், மர நூல் வல்லாரும், அங்குள்ள மக்களும் என்ன பெயர் வைத்து வழங்குறார்களோ, எனக்குத் தெரியாது. அது நிச்சயமாகத் தாமரைதான். நீரில் படர்ந்திருக்கிறது. அதன் இலையும் தண்டும் தாமரையின் இலையும் தண்டுமே என்பதில் ஐயமில்லை. மலரின் தோற்றமும் தாமரையின் தோற்றத்தையே கொண்டிருக்கிறது. ஆனால் நிறம் மட்டும் வேறு; இது பொன் நிறம் உடையது. ஆகவே, இதைப் பொற்றாமரை என்று சொல்வது பிழையா? ஹக்கலாப் பூந்தோட்டத்தை விட்டுப் புறப்பட்டோம். சீதா எலியா என்ற இடத்துக்கு வந்தோம். அங்கே சிறிய கோயில் ஒன்று இருக்கிறது. ராம லஷ்மணர் சீதை என்ற மூவருடைய விக்கிரகங்களை வைத்துப் பூசை செய்கிறார்கள். அநுமானும் இருக்கிறார். இதைச் சீதையம்மன் கோயில் என்றும் சொல்வதுண்டாம். சீதை சிறையிருந்த இடத்தின் ஒரு பகுதி இது என்று சொல்கிறார்கள். அந்தக் கோயிலின் பின் புறத்தில் சிறிய மலையாறு ஓடுகிறது. அது ஓரிடத்தில் பூமிக்குள்ளே சென்று சில அடிகளுக்கு அப்பால் கொப்புளித்து வெளி வருகிறது. பூமிக்குள்ளே புகும் இடத்தில் இலையையோ பூவையோ பறித்துப் போட்டால் சில நிமிஷங்களில் கொப்புளித்து வரும் இடத்தில் அது வெளியே வருகிறது. அநுமான் இலங்கைக்கு நெருப்புவைத்தது உங்களுக்கு ஞாபகம் இருக்குமே. அப்பொழுது சீதை சிறையிருந்த இந்த அசோக வனமும் கரிந்து போய்விட்டதாம். தீயில் அகப்பட்டுக் கரிந்து போகாமல் தப்பிய அசோக மரங்கள் அங்கொன்றும் இங்கொன்றுமாக நிற்பதை நீங்களே பார்த்துக்கொள்ளுங்கள். சீதையை வருத்திய இராவணன் மீது வனத்திலிருந்த மரங்கள்கூடக் கோபம் கொண்டவைபோல, இவ்வசோக மரங்கள் செந்நிறப் பூக்களுடன் காட்சி அளிக்கின்றன அல்லவா? அதுமான் மூட்டிய தீயினால் ஏற்பட்ட வெப்பத்தைத் தணிக்கச் சீதை அங்கும் இங்கும் பார்த்தாளாம். உடனே அவள் ஒரு குன்றிலே காலினால் ஊன்றினாளாம். அவ்வளவுதான். கற்பாறையிலிருந்து குளிர்ந்த ஜலம் பீரிட்டு வெளி வந்தது. இது வற்றாத நீரூற்றாக இன்னும் ஓடிக் கொண்டிருக்கிறது’ என்று இதைப் பற்றிய கர்ண பரம்பரைச் செய்திகளை ஸ்ரீ குல சபாநாதன் தொகுத்து எழுதியிருக்கிறார் . சீதையோடு சம்பந்தப்பட்ட இந்த இடம் ஒன்றைத்தான் நான் பார்த்தேன். ஆனால் சீதா வாக்கை, சீதா தலவா, சீதாக்குன்றம், சீதா கங்கை என்ற பெயர்களோடு வேறு சில இடங்கள் இலங்கையில் இருப்பதாகக் கேள்வியுற்றேன். அவற்றைப் பார்க்க முடியவில்லை. திரு சு. நடேசபிள்ளை அவர்கள் சீதா பிராட்டியின் இலங்கை வாசத்தோடு சம்பந்தமுள்ள இடங்களைப் பற்றிப் பல செய்திகளை ஒரு கட்டுரையில் எழுதியிருக்கிறார். ’பாலுகமா என்ற இடம் அநுமானல் எரியுண்டதென்று சொல்லப்படுகின்றது. பாலுகமா என்பதன் பொருள் பாழடைந்த கிராமம் என்பதாம். இந்த இடத்தில் புற் பூண்டும் முளைப்பதில்லை. ஹக்கலாவிலிருந்து ஹப்புத்தளை என்ற இடத்திற்குப் போகிற வழியில் வெளிமடா என்னும் அழகிய கிராமத்தின் பக்கத்தில் இராமலங்கா என்ற ஓரிடம் இருக்கின்றது. இங்கேதான் இராவணன் இறுதியாகப் போர்செய்து வீழ்ந்தான் என்றும், அது முதல் அவர்களுக்கு இராமலங்கா எனப் பெயர் பெற்றது என்றும் இங்குள்ள புத்த பிக்ஷுக்கள் ஒரு கர்ண பரம்பரையான ஐதிகத்தைக் கூறுகிறார்கள். இதற்கருகில், தூரும் வெலாபன்சலா என்ற இடத்தில் சீதாபிராட்டி தன் கற்பு நிலையினின்று தவறவில்லையென்று இராம பிரான் முன்னிலையிற் சத்தியம் செய்ததாக ஓர் ஐதிகம் வழங்கி வந்ததென்று மேஜர் போர்ப்ஸ் (Major Forbes) 1840-ஆம் ஆண்டில் வெளியிட்ட “இலங்கையிற் பதினோராண்டுகள்” என்ற தமது புத்தகத்திற் கூறியுள்ளார். சீதா எலியாவில் உள்ள ஊற்றைப் பார்த்துவிட்டு அங்குள்ள கோயிலில் கோதண்டராமனையும் சீதாதேவியையும் வணங்கிக் கொண்டு கதிர் காம வேலனுடைய நினைவு எங்களை உந்த அங்கிருந்து புறப்பட்டோம். ------------------------------------------------------------------------ 1. நான்காம் தமிழ் விழா மலர், ஈழத்தின் பிரசித்த இடங்கள், ப. 168.↩︎ 2. நான்காம் தமிழ் விழா மலர், இலங்கை ஆற்றுப்படை, ப.3,4.↩︎ கதிர்காமம் மாணிக்கவாசகர், “கண்டும் கண்டிலேன் என்ன கண் மாயமே!” என்று பாடினார். இலங்கைக்குப் போகிறவர்கள் அப்படிச் சொல்வதற்கு ஓர் இடம் இருக்கிறது. இலங்கையின் இயற்கை அழகைக் கண்டு களிக்கப் போகிறவர்கள் அங்குள்ள நானில வகைகளையும் கண்டு இன்புறலாம். மலையும் மலைச் சாரலும் அருவிகளும் காடுகளும் கடற்கரையும் பிற காட்சிகளும் அவர்களுடைய கண்ணுக்கும் கருத்துக்கும் இன்பத்தைத் தரும். இலங்கை வாழும் மக்களையும் தொழிலாளர்களையும் அவர்களுடைய உழைப்பினால் உயர்ந்து நிற்கும் ரப்பர்த் தோட்டங்களையும் பரந்து, கிடக்கும் தேயிலைத் தோட்டங்களையும் தொழிற்சாலைகளையும் கண்டு களிக்கலாம். அழகான ரோடுகள், அற்புதமான விகாரைகள் ஆகியவற்றைக் காணலாம் பழைய சிற்பங்களையும் ஓவியங்களையும் கண்டு கண்டு அவற்றின் அழகைக் கண்ணால் மொண்டு மொண்டு உண்ணலாம். சிவபக்தர்கள் கண்டு களிக்கவேண்டிய சிவாலயங்கள் இலங்கையில் உண்டு. திருக்கேதீசுவரம், திருக்கோணமலை, நகுலேசுவரம் முதலிய தலங்களுக்குச் செல்லலாம். கண்ணகிக்குக் கோயில் கட்டி வழிபடும் வழக்கத்தைக் கண்டு பெருமிதம் அடையலாம். ஆனால், இலங்கையின் அதிசயங்களில் ஒன்றாகிய கதிர்காமத்துக்குச் செல்கிறவர்கள் அங்குள்ள கோயிலைக் காணலாம்; தீர்த்தத்தைக் காணலாம்; மூர்த்தியைக் காணமுடியாது. “கதிர்காமத்தைக் கண்டேன்; ஆனால் காணவில்லை” என்றே சொல்லவேண்டி வரும், மர்மரகசியம், மூடுமந்திரம், விளங்காத புதிர், விடை காண முடியாத பிரச்னை என்று உள்ள வார்த்தைகளையெல்லாம் தொகுத்து அடுக்கிச் சொல்லுங்கள். அத்தனைக்கும் உறைவிடம் கதிர்காமம் ! நானும் கதிர்மாம் போனேன். பல சமயங்களில், தலயாத்திரை செய்கிறவர்களுக்குக் கோயில் முழுவதையும் பார்க்க முடிகிறதில்லை. சுவாமியையே தரிசிக்க முடியாமற் போகிறது. திருவிழாக் காலங்களில் ஆயிரக்கணக்கான மக்கள் கூடி முட்டி மோதிக் கொண்டு தங்கள் பக்தியைக் காட்டிக் கொள்ளும் இடங்களில் மனிதர்களையே நன்றாகப் பார்க்கலாம்; கடவுளைப் பார்ப்பது அருமை. எப்படியாவது கோயிலுக்குள் நுழைந்து விட்டாலோ சாம்பிராணிப் புகையின் இடையிலும் கற்பூரப் புகையின் இடையிலும் இறைவனுடைய திருவுருவத்தை எளிதிலே கண்டு விட முடியாது. எந்தத் தலத்தையாவது நன்றாகத் தரிசிக்கவேண்டுமானால் உற்சவகாலங்களில் போகவே கூடாது. அப்போது நின்று நிதானமாக எல்லாவற்றையும் பார்ப்பதற்கு இயலாது. உற்சவம் இல்லாத காலங்களில் போனால் ஊரையும் பார்க்கலாம்; ஆலயத்தையும் பார்க்கலாம்; மூர்த்திகளின் தரிசனமும் நன்றாகக் கிடைக்கும். குருக்களையாவும் நம்மோடு ஆறுதலாகப் பேசி விஷயத்தை விளக்குவார். இதை அன்பர்கள் அநுபவத்தில் உணர்வார்கள். நான் கதிர்காமம் போன சமயத்தில் எந்த விதமான உற்சவமும் இல்லை. உண்மையைச் சொல்லப் போனால் நாங்கள் போன அப்போது கோயிலில் நாலைந்து பேர்களே இருந்தார்கள். மணிக் கணக்காக இருந்து பார்த்துக் கொண்டு வருவதற்கு ஏற்ற அமைதியும் தனிமையும் இருந்தன. நிதானமாகவே எல்லாவற்றையும் பார்த்தேன். ஆனால் “கண்டும் கண்டிலேன் என்னகண் மாயமே” என்றுதான் இப்போது சொல்கிறேன். அசோக வனப் பகுதிகளைப் பார்த்துக் கொண்டு இரவு முனராகந்த என்ற இடத்தில் நானும் கணேஷும் நண்பர் நாகலிங்கமும் தங்கினோம். முனராகந்த என்ற தொடருக்கு மயிற் குன்றம் என்பது பொருள். இதை நான் விசாரித்து அறிந்தபோது ஒருவகையான மகிழ்ச்சி உண்டாயிற்று. பெயர்ப் பொருத்தத்தை ஆராய்ந்தபோதுதான் அந்த மகிழ்ச்சி எழுந்தது. மறுநாள் வெள்ளிக்கிழமை காலையிலே புறப்பட்டுக் கதிர்காமம் செல்வதாக இருந்தோம். மயில் வானகப் பெருமாளைத் தரிசிக்கப் போகுமுன் மயிற் குன்றத்தில் தங்கியதிலே ஒரு பொருத்தம் இருக்கிறதா, இல்லையா, சொல்லுங்கள். மயிலுக்கும் முருகனுக்கும் உள்ள பொருத்தத்தை மாத்திரம் நினைந்து நான் களிக்கவில்லை. அதற்கு மேலும் ஒரு செய்தி என் நினைவிலே எழுந்தது. கதிர்காமத்துக்கு ஒருமுறை புகழேந்திப் புலவர் போயிருந்தார். அப்போது ஆலயத்தின் ஒரு பகுதியிலே ஒரு மயில் நின்றிருந்தது. அது பாம்பொன்றைத் தன் அலகிலே கவ்விக்கொண் டிருந்தது. அந்தப் பாம்பை அது குத்திக் கிழித்துக் குலைத்து விடும் என்பது உறுதி. புகழேந்திப் புலவர் இதைக் கண்டார். “ஐயோ பாவம்! இந்தப் பாம்புக்கு இன்றுடன் ஆயுள் முடிந்தது போலும்!” என்று எண்ணி இரங்கினர். இதை விடுவிக்க ஏதாவது வழி உண்டா என்று யோசித்தார். மந்திரம் செய்து மயிலை மயக்கிப் பாம்பை விட்டுவிடும்படி செய்யலாம். அப்படி மந்திரம் செய்யும் வகை புலவருக்குத் தெரியாது. ஆயினும் அவரிடம் மாயமந்திர சக்தியுடைய வேறு ஒரு வித்தை இருந்தது. ஆம்; கவிதை பாடும் ஆற்றல் அவரிடம் இருந்தது. ‘மயிலைக் கெஞ்சிக் கேட்டுக் கொள்வதாக ஒரு பாட்டைப் பாடலாம். மயிலும் முருகனும் விட்ட வழி எதுவானுலும் சரி’ என்ற எண்ணத்தோடு ஒரு வெண்பாவைச் சொல்லத் தொடங்கினர். பாட்டு, முருகனிடம் காதல் பூண்ட பெண் ஒருத்தி பாடுவதாக அமைந்தது. ‘தீயர்களுடைய கூட்டத்தைச் சீறும் வடிவேற் பெருமாளும் தென் கதிர்காமப் பெருமாளுமாகிய முருகன் எழுந்தருளும் வாகனமாகிய மயிற் பெருமாளே!’ என்று மயிலை விளிக்கிறாள் காதலி. ‘நான் முருகனைப் பிரிந்து வாடுகிறேன். என்னைப் பெற்று வளர்த்துப் பேணும் தாய்மார்கள் என்னைப் படுத்தும் பாடு சொல்லி முடியாது. அவர்கள் என்னைக் கண்டு ஐயப்படும்படியாக அவர்கள் கண் முன்னே என் உடலம் நிலைகுலையும் வண்ணம் சந்திரன் செய்கிறது; என் விரகத்தை மிகுதிப்படுத்துகிறது. அதை யாராவது விழுங்கிவிட்டால் எனக்குப் பெரிய அல்லல் நீங்கிவிடும். மயிற் பெருமாளே! தயை செய்து உன் வாயிலே இருக்கும் பாம்பை விட்டு விடேன். அதுபோய் உதயமாகும் அந்தச் சந்திரனை அப்படியே விழுங்கி விடட்டும். இந்த உபகாரத்தைச் செய்யமாட்டாயா?’ என்று மனம் கரைந்து வேண்டுகிறாள். “தாயர்அவை முன்வருத்தும் சந்த்ரோ தயந்தனக்குஉன் வாய்அரவை விட்டுவிட மாட்டாயோ?-தீயர்அவை சீறும்அயிற்பெருமாள் தென்கதிர்கா மப்பெருமாள் ஏறும் மயிற்பெருமா ளே.” [தாயர் அவை - தாய்மார் கூட்டம், தீயர் அவை-தீயவர்களாகிய அசுரர்களின் கூட்டம். அயில் - வேல், மயிலையே மயிற் பெருமாளே என்று மரியாதையாக விளித்தாள்.] புகழேந்தி பெண்ணாகிவிட்டார். பாட்டு எழுந்தது என்ன காரணமோ, மயிலும் சாந்தம் அடைந்தது. அரவை விட்டுவிட்டது. இந்த வரலாறும் பாட்டும் முனராகந்தாவில் நினைவுக்கு வந்தன. முருகனுக்கும் மயிலுக்கும் உள்ள பொருத்தம் யாரும் அறிந்தது. கதிர்காமத்துக்கும் மயிலுக்கும் உள்ள தொடர்பு தமிழ்ப் பாட்டிலே பதிவாகியிருப்பதை இந்தக் கவியைப் படித்தவர்களே உணர்ந்திருப்பார்கள்.  வெள்ளிக்கிழமை விடியற்காலையில் முனராகந்தாவை விட்டுப் புறப்பட்டோம். மலைவழியே கார் கீழே இறங்கியது. பிறகு சமவெளியில் அடர்ந்த காட்டினூடே செல்லத் தொடங்கியது. எங்கள் கார் 50, 60, 70, 80 என்று வேகமாகப் பறந்தது. ஆனாலும் கதிர்காம வேலனைத் தரிசிக்கவேண்டும் என்று எங்களுக்கு இருந்த மனோவேகத்தோடு அதனால் போட்டி போட முடியவில்லை. கதிர்காமத்துக்குப் போகும் வழியில் திஸமாரா என்ற இடம் இருக்கிறது. அது பெரிய ஊர். கதிர்காமத்துக்கும் அதற்கும் பதினொரு மைல் தூரம். கதிர்காமத்துக்குப் பல திக்குகளிலிருந்தும் வரலாம். பெரும்பாலும் கொழும்பிலிருந்து புறப்பட்டு மாத்தளை என்ற ஊரின் வழியே வருபவர்களே மிகுதி. எப்படி வந்தாலும் திஸ்மாராவுக்கு வந்துதான் போக வேண்டும். கதிர்காமம் உள்ள அருள்மய நாட்டுக்குத் தோரண வாயில் திஸ்மாரா என்றே சொல்ல வேண்டும். திஸ்மாரா வரையில் நல்ல தார் ரோடு இருக்கிறது. அதன் பிறகு சாதாரணமான சாலைதான். முன் காலத்தில் காட்டுப் பாதைதான் இருந்ததாம். யாத்திரிகர்கள் இந்தப் பதினொரு மைலையும் நடந்தே கடந்தார்களாம். இப்போதுள்ள பாதையில் கார் நன்றாகச் செல்லும். உற்சவ காலங்களில் ஆயிரக்கணக்கான மக்கள் இந்தச் சாலையில் செல்வார்களாம். அதனால் எல்லாக் கார்களையும் திஸமாராவிலே நிறுத்தி விடுவார்களாம். திஸமாரா என்பது திஸ்ஸ மகாராமம் என்பதன் சிதைவு. திஸ்ஸன் என்ற அரசன் கட்டிய மகா ஆராமம் (பெரிய கோயில்) அந்த ஊரில் இருக்கிறது. ஊருக்கு நெடுந்தூத்திலேயே அந்தப் பௌத்தக் கோயிலின் ஸ்தூபி கண்ணுக்குத் தெரியும். அவ்வளவு உயரமானது அது. திஸ்மாரா வரையில் பலவகையா வரும் வழிகள், அங்கிருந்து ஒன்றுபடுகின்றன. வெவ்வேறு துறையில் புகுந்து வெவ்வேறு இன்ப துன்ப அநுபவங்களை உடையவர்கள் இறைவனுடைய பக்தியிலே ஈடுபட்டு அவனை அணுகும்போது எல்லோரும் ஒரே நெறியில் ஒரே அநுபவச்சாலையில் செல்கிறார்கள் அல்லவா ? அதனை இந்தச் சாலை நினைப்பூட்டியது. திஸமாராவிலிருந்து புறப்படும் கதிர்காமச் சாலையே பக்தி மணக்கும். யார் போனாலும் இரு மருங்கும் உள்ள மக்கள் ‘அரோகரா!’ என்று கூவுகிறார்கள். எத்தனையோ நூற்றாண்டுகளாகப் பக்தர்கள் கதிர்காம வேலனைத் தரிசித்து வருகிறார்கள். இலங்கையில் வாழ்பவர்கள் மாத்திரம் அல்ல; இந்தியாவிலிருந்து தோணிகளிலும் மரக்கலங்களிலும் பக்தர்கள் ஆர்வத்தோடு வந்து பழங்காலத்தில் தரிசித்தார்கள். பிறகு கப்பலில் வந்தார்கள். எப்படி வந்தாலும் கடைசியில் பல மைல் தூரம் கால் நடையாகவே வந்தார்கள். ஒருவர் இருவராக வராமல் கூட்டம் கூட்டமாக வந்தார்கள். காட்டுப் பிரதேச மாகையால் வன விலங்குகளுக்கு அஞ்சியே கூட்டமாக வந்தார்கள். தமிழ் நாட்டில் கதிர்காமத்துக்குப் போய் வந்தவர்கள் சொல்லும் கதைகளைக் காட்டிலும் போகாதவர்கள் சொல்லும் கதைகள் அதிகம். ‘இருநூறு மைல்களுக்கு மேல் ஒரே காட்டு வழி. பக்தியில்லாதவர்களுக்கு நடக்கவே முடியாது. வழியில் காட்டு மிருகங்கள் வரும். யானை கூட்டம் கூட்டமாக வரும். அரோகரா என்று பக்தியோடு சொன்னால் வழி விட்டுவிடும்’ என்று சொல்லிப் பயமுறுத்துவார்கள். இதைக் கேட்ட புலவர் ஒருவர், "காணிற் குமாரவே லாஎன்னும் அன்பரைக் கரடிபுலி யானைசிங்கம் காலிற் பணிந்தஞ்சி ஒடவும்" என்று பாடியிருக்கிறார், இவ்வாறு அச்சமூட்டினாலும் அன்பர்கள் கதிர்காம வேலனைத் தரிசிக்க வருவதை நிறுத்தவில்லை. பல இடையூறுகளுக்கு நடுவில் ஒரு காரியத்தைச் சாதிப்பதில் அதிக மதிப்பும் பயனும் அநுபவமும் இருக்கின்றன. ஆயிரக்கணக்காக மக்கள் இங்கே வந்து கொண்டுதான் இருந்தார்கள். “அரோகரா! அரோகரா!” என்று முழக்கம் செய்துகொண்டே இந்தக் காட்டு வழியில் நடந்து சென்றார்கள். அந்த ஒலியைக் கேட்டுக் கேட்டு அங்கே வாழும் மக்களும் ‘அரோகரா!" என்று எதிரொலித்தார்கள். கதிர்காமத்துக்கு யார் போனாலும் ’அரோகரா’ என்ற முழக்கத்தை எழுப்பினார்கள். இந்தப் பழக்கத்தால், போகிறவன் சொன்னாலும் சொல்லாவிட்டாலும் அங்கே இருக்கிறவர்கள் சொல்வதை நிறுத்துவதில்லை. அங்குள்ள மரமும் மண்ணும் கல்லும் கரடுங்கூடத்தான் ’அரோகரா’ச் சத்தத்தை எதிரொலிக்கும். அதைக் கேட்க நமக்குக் காதில்லை; அதுதான் வேறுபாடு. திஸமாராவிலுள்ள டகோபா கதிர்காம வேலன் திருக்கோயிலுக்கு வழிகாட்டும் அடையாளத் தம்பமாக நிற்கிறது; பல திசைகளிலிருந்தும் வரும் மக்களுக்குக் கதிர்காமம் அருகில் இருக்கிறது என்ற நம்பிக்கையை ஊட்டும் கலங்கரை விளக்கமாக நிலவுகிறது. திஸமாராவில் ஒரு பெரிய ஏரியும், அதன் கரையில் வருவார் தங்குவதற்கும் உணவு கொலள்வதற்கும் உரிய விடுதி ஒன்றும் உள்ளன. அங்கே கிடைக்கும் உணவு எப்படியிருந்தாலும், சட்டி நிறையத் தரும் தயிர் மிக மிகச் சுவையுள்ளது.  திஸமாராவை விட்டுப் புறப்பட்டோம். கதிர்காமக் கோயிலைப் பற்றி நான் சில புத்தகங்களை வாசித்திருக்கிறேன். அன்பர்கள் கற்பனையைக் கலந்து கூறும் செய்திகளையும் கேட்டிருக்கிறேன். எல்லாம் சேர்ந்து விளங்காத ஒரு மயக்கத்தை உண்டாக்கி இருந்தன. “பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை தான் கோயிற் கூரையை வேய்வார்கள். அப்போது அதைப் பிரிப்பவன் இறந்துவிடுவான்” என்பது ஒரு கதை. " உள்ளே இன்னது இருக்கிறது என்பது யாருக்கும் தெரியாது. உள்ளேயிருந்து ஒரு தட்டு வரும். அதில் தேங்காய் பழம் வைத்தால் மறுபடியும் உள்ளே போகும். சிறிது நேரம் கழித்து உடைத்த தேங்காய் மூடிகளும் பழமும் வரும். அவை அப்படி வருவதற்குக் காரணம் யாருக்கும் தெரியாது.“-இது ஒரு கற்பனை.”சிங்களவர்களே இங்கே பூசை செய்கிறார்கள். பன்னிரண்டு ஆண்டுகளே ஒருவன் பூசை செய்வான். அப்புறம் அவன் இறந்துவிடுவான். அவனுக்குப் பதிலாக மற்றொருவன் வருவான்."- இது ஒரு கட்டுக் கதை. இத்தனையிலும் நான் பொதுவான உண்மை ஒன்றை உணர்ந்தேன். ‘கதிர்காமக் கோயிலில் ஏதோ மூடுமந்திரம் ஒன்று இருக்கிறது. அது யாருக்கும் விளங்கவில்லை. விளங்காத இரகசியத்தைப் பற்றிப் பல பல வதந்திகளைப் பரப்புவது மனித இயல்பு. இந்த வதந்திகளுக்குக் காரணம் கதிர்காமக் கோயில் சம்பந்தமான இரகசியம் ஏதோ ஒன்று இருப்பதுதான்’ என்று எண்ணினேன். அந்த இரகசியத்தை நான் நேரிலே போய் ஆராய்ந்தும், விசாரித்தும், ஊகித்தும், துப்பறிந்தும் சிறிதளவு கண்டுபிடிக்க வேண்டும் என்ற ஆசை இருந்தது. கதிர்காமத் தல தரிசனத்தில் இயற்கையாக இருந்த வேகம், இரகசியத்தைக் கண்டுபிடிக்க வேண்டும் என்ற ஆர்வம் ஆகிய இரண்டும் சேர்ந்துகொண்டன.  கதிர்காமத்துக்கு வந்துவிட்டோம். கோயில் தெரியவில்லை. ஊரும் தெரியவில்லை. மாணிக்க கங்கை என்ற ஆற்றின் கரையை வந்து அடைந்தோம். அங்கே பக்தர்களுக்குத் தேங்காய் பழம் விற்கும் கடை ஒன்று இருந்தது. மாணிக்க கங்கையின் அக்கரை தான் கதிர்காமம் என்றார்கள். இரு மருங்கும் மிக உயர்ந்த மருத மரங்கள் அடர்ந்து ஓங்கி நிற்கச் சலசலவென்று மாணிக்க கங்கை என்ற சிற்றாறு ஒடிக்கொண்டிருக்கிறது. இலங்கையின் எல்லா ஆறுகளையும் கங்கையென்றே சொல்கிறார்கள். ஆறு குறுகியதுதான்; ஐம்பது அடி அகலம் இருக்கும். ஆற்றங்கரையில் உள்ள கடைக்கு அருகில் காரை நிறுத்திவிட்டு மாணிக்க கங்கையில் நீராடப் புகுந்தோம். நாங்கள் அங்கே சென்றபோது பகல் பதினொரு மணி இருக்கலாம். வெயில் வேளையாகையால் ஆற்று நீரில் ஆடியது சுகமாக இருந்தது. நன்றாக நீராடிய பிறகு தேங்காய் பழம் முதலியவற்றை வாங்கிக் கொண்டோம். காரை ஆற்றிலே இறக்கி ஓட்டி அக்கரை ஏறிக் கோயில் வாசலிலேயே கொண்டு போய் நிறுத்தலாம் என்று அங்குள்ளவர்கள் சொன்னார்கள். நாங்கள் அவ்வாறு செய்யவில்லை. காரைக் கரைக்கருகிலே நிறுத்திவிட்டுப் புறப்பட்டோம். நூற்றுக்கணக்கான மைல் காலால் நடந்து பல துன்பங்களையும் பொறுத்துக்கொண்டு கதிர்காம தரிசனத்துக்கு வரும் அன்பர்கள் இருக்கும்போது, நாங்கள் சிறிது தூரமாவது நடக்கவேண்டாமா ? மாணிக்க கங்கையில் சில சமயம் வெள்ளம் வருமாம் . அப்போது ஆற்றில் இறங்கிச் செல்ல முடியாது. அதனால் ஆற்றைக் கடக்க ஆடும் பாலம் ஒன்றை அமைத்திருக்கிறார்கள். அதன் வழியே சென்று அக்கரையை அடைந்தோம். இக்கரை கடந்து அக்கரைக்கு வந்தவுடன் நாங்கள் நிற்கும் இடம் சந்நிதி வீதி என்று அறிந்து கொண்டேன். வானை முட்டும் கோபுரமும் பெரிய பெரிய குளமும் உள்ள தமிழ் நாட்டுத் தலங்களைப் போன்ற இடங்கள் வேறு எங்கும் இல்லை. மாணிக்க கங்கையில் நீராடும்போது கதிர்காம ஆலயம் இன்னும் நெடுந்துாரத்தில் இருக்கும் என்று நினைத்தேன். ஆலயமென்று இருந்தால் அதன் கொடிமரமோ கோபுரமோ பூசையின் ஒலியோ நெடுந்துரத்துக்கு அப்பால் வருபவர்களுக்கு ஆலயம் இருப்பதைப் புலப்படுத்தும் அல்லவா? அத்தகைய அறிகுறி ஏதும் இங்கே இல்லை. சந்நிதி வீதி தென் வடலாக இருக்கிறது. வடக்குக் கோடியில் கதிர்காம வேலன் திருக்கோயில்; தெற்குக் கோடியில் வள்ளியம்மையின் ஆலயம். கதிர்காமம் மக்கள் வாழும் ஊர் அன்று. முருகன் திருக்கோயிலுக்காகவே அமைந்த சிறிய ஊர். அங்கே நிரந்தரமாக வாழ்பவர்கள் யாரும் இல்லை. யாத்திரிகர்களுக்கு வேண்டிய பண்டங்களை விற்று வியாபாரம் செய்யும் சில கடைகள் இருக்கின்றன. உற்சவ காலங்களில் பக்தர்கள் தங்குவதற்குப் பல மடங்களும் சத்திரங்களும் இருக்கின்றன. சந்நிதி வீதிதான் பெரிய வீதி. வேறு ஒன்றிரண்டு சிறிய தெருக்கள் இருக்கின்றன. உற்சவ காலத்தில் தான் இங்கே மனித நடமாட்டம் இருக்கும். காட்டாற்றில் வெள்ளம் வருவது போல அக்காலத்தில் மனித வெள்ளம் கரை கடந்து வருமாம். ஆளுக்கொரு கற்பூரச் சட்டியைத் தலையில் வைத்துக் கொண்டு வருவார்களாம். கோயிலுக்கு உள்ளும் புறமும் இந்தக் கற்பூரத் தீபமே இரவில் இருளை ஓட்டிவிடுமாம். ஆலயத்தை நோக்கிச் சென்றோம். ஆலயத்தின் முகப்பில் ஒரு வளைவு இருக்கிறது. சில காலத்துக்கு முன் அமைத்ததாக இருக்கவேண்டும். உள்ளே புகுந்தோம். சிறிது தூரம் திறந்த வெளி இருக்கிறது. அப்பால் திருக்கோயில் இருக்கிறது. கோயிலா அது? மனசிலே பக்தியில்லாதவர்களுக்கு, அதுவும் தமிழ்நாட்டுக் கோயில்களைத் தரிசித்தவர்களுக்கு, அது கோயிலாகவே தோன்றாது. ஓட்டுவில்லைக் கூரைவேய்ந்த சாவடி போலத் தோன்றுகிறது. ஆனால் அந்தக் கூரையின் மேல் மூன்று இடங்களில் மூன்று பொற்கலசங்கள் இருக்கின்றன. அவற்றைக் காணும்போதுதான் கோயில் என்ற நினைவு வருகிறது. உருவமில்லாத சிவலிங்கத்தை இறைவனாக எண்ணித் தரிசித்துப் பக்தி பண்ண வழி இருக்கும்போது கோபுரமும் மண்டபமும் இல்லாத இந்தச் சாவடியைக் கோயிலாகக் காண வழி இல்லையா ? புராணமும் துதிகளும் நம்பிக்கையும் இந்தச் சாவடியையே கந்தலோகத்துக்குச் சமானமாக்கியிருக்கின்றன. கதிரேசன், கதிரை வேலன் என்று இலங்கையிலும் தமிழ் நாட்டிலும் வழங்கும் பெயர்களுக்கு மூலம் அந்தச் சிறிய ஓட்டு வில்லைக் கூரை வேய்ந்த சாவடி என்பதை நினைத்துப் பார்த்தால்தான் அதன் மகிமை புலனாகும். அதற்குக் காரணம் என்ன ? மனிதனுடைய உணர்ச்சி தான். அன்பர்களின் உணர்ச்சிக் குவியலுக்கு அடையாளமாக, கடவுளைக் காணவேண்டும் என்று ஏங்கிய தாபத்தைத் தணிக்கும் அருவியாக, எத்தனை இடையூறுகள் வந்தாலும் பொருட்படுத்தாமல் தீவிர வைராக்கியத்தோடு நாடு கடந்து கடல் கடந்து காடு கடந்து வரும் பக்தி வேகத்துக்கு இலக்காக அந்தச் சிறு கட்டடம் நிலவுகிறது. அப்படி எல்லோருடைய மனத்தையும் இழுக்க அதில் என்ன இருக்கிறது ? அதுதான் தெளிவாக யாருக்கும் புரியவில்லை ! திருக்கோயிலின் முன் நின்றேன். கோயில் வாசலில் ஒரு பெரிய பழைய மரக்கதவு இருக்கிறது. நாங்கள் சென்றபோது கோயிலில் பூசை முடிந்து பூசகர் கதவை மூடிக்கொண்டு போய்விட்டார். நாங்கள் சொல்லி அனுப்ப, அவர் வந்து கதவைத் திறந்தார். கதவைத் திறந்தவுடன் உள்ளே பக்தர்கள் நின்று தரிசிக்கும் இடம் இருக்கிறது. பத்தடி அகலமும் இருபதடி நீளமும் இருக்கலாம். அங்கே பெரிய குத்துவிளக்குகளும் தீபச் சட்டிகளும் இருக்கின்றன. அதற்கப்பால் உயர்ந்த மேடைமேல் கர்ப்பக்கிருகம் இருக்கிறது. அதன் வாசலில் திரையிட்டு மறைத்திருக்கிறார்கள். அந்த வாசலுக்குப் படிகள் இருக்கின்றன. கர்ப்பக்கிருகத்தின் கதவுகூட நமக்குத் தெரியாது. திரையைத்தான் காணலாம். அந்தத் திரையில் முருகன் உபய நாச்சியாரோடும் மயிலின் மேல் வீற்றிருக்கும் ஓவியம் இருக்கிறது. அந்தத் திரையை இக்காலத்தில் யாரோ உதவியிருக்கிறார்கள். உபயஞ் செய்தார் இன்னர் என்ற குறிப்பும் திரையின் ஓரத்தில் ஆங்கிலத்தில் இருக்கிறது. அதற்குப் பின்னே சில திரைகள் இருக்கின்றன. அவை அவ்வக் காலத்தில் அன்பர்கள் உதவியவை போலும்! பூசை செய்கிறவர்கள் அந்தத் திரையின் முன் நின்று தூபதீபம் காட்டுகிறார்கள்; அர்ச்சனை செய்கிறார்கள், வழிபடும் பக்தர்களும் அந்தத் திரையைக் கண்டு களிப்பதோடுதான் நிற்கிறார்கள். எந்தக் காலத்திலும் திரையை அகற்றுவதே இல்லை. திரையைக் கண்டவர்களையன்றி, திரைக்குப் பின் என்ன இருக்கிறது என்று அறிந்தவர் யாரும் இல்லை. கர்ப்பக் கிருகத்துள் என்ன இருக்கிறது என்ற புதிரை விடுவிப்பவரும் இல்லை. மூன்று கலசங்கள் கூரையின் மேல் இருப்பதனால் மூன்று பகுதிகள் இருப்பது தெரிகிறது. மூன்று மூர்த்திகளோ, மூன்று சக்கரங்களோ அங்கே இருக்கின்றன என்று ஊகிக்கலாம். மூன்று உலகம் என்று சொல்கிறோம்; அவற்றைக் கண்டவர்கள் யார்? மூன்று மூர்த்திகள் என்று புராணம் பேசுகிறது; அவர்களைத் தரிசித்தவர்கள் யார்? கதிர்காமத்திலும் மூன்று தங்கக் கலசங்களைக் காணலாமேயன்றி, அவற்றால் குறிப்பிக்கப் பெறும் மூன்று தெய்விகப் பொருள்கள் இன்ன என்று யாரும் அறிந்திலர். இங்கே பூசை செய்கிறவர்கள், சிங்களவர்கள். அவர்கள் பௌத்த மதத்தைச் சார்ந்தவர்கள். கப்புராளைமார் என்று அவர்களைச் சொல்கிறார்கள். பூசை செய்கையில் வாயைக் கட்டிக்கொண்டே செய்கிறார்கள். விபூதிப் பிரசாதம் கொடுக்கிறார்கள். பௌத்தர்களுக்குக் கதிர் காம முருகன் ஒரு காவல் தெய்வம். இங்கே கதிர்காம நாதன் சந்நிதியை அடுத்து ஒரு சிறிய ஓட்டு வில்லைக் குடில் இருக்கிறது. அதைப் பிள்ளையார் கோயில் என்கிறார்கள். கதிர்காமக் கடவுளைக் கத்தரகம தெய்யோ என்று சிங்களவர் வழங்குகின்றனர். தெய்வம் என்பதே தெய்யோ ஆயிற்று. கிராமம் என்பதே கம என்று மாறியது. கத்தர என்பது ஒரு மரத்தின் பெயராம்; கருங்காலி மரம் என்றும் சொல்வர். அந்த மரம் அடர்ந்த இடம் ஆதலின் கத்தரகம என்ற பெயர் வந்ததாம். நம்முடைய நாட்டிலும் சிறந்த தலங்களுக்கு மரங்களால் பெயர்கள் அமைந்திருப்பதை நாம் அறிவோம். சிதம்பரத்துக்குத் தில்லை என்ற பெயர் மரத்தினால் வந்ததுதான். மதுரைக்குக் கடம்பவனம் என்ற பெயர் உண்டு. திருவாலங்காடு, திருநெல்லிக்கா என்று மரங்களால் அமைந்த தலப்பெயர்கள் பல. இப்படியே கதிர்காமமும் மரத்தால் பெற்ற பெயரை உடையது என்று தோன்றுகிறது. நம் நாட்டுக் கோயில்களில் தலவிருட்சம் இருக்கும். இக் கோயிலில் அரசமரங்கள் இருக்கின்றன. ஆடி மாதத்தில் கதிர்காமத்தில் திருவிழா நடைபெறுகிறது. அப்போது பல்லாயிரக்கணக்கான மக்கள் கூடுவார்கள். திருநாளன்று கப்புராளைமார் எதையோ பரிவட்டத்துக்குள் வைத்து மூடிக் கொண்டு வருவார்கள். பழைய பெட்டி என்று சொல்கிறார்கள். அதைக் கொண்டுவந்து மூடிய பரிவட்டத்தோடே யானையின் மேல் ஏற்றுவார்கள். இப்படி ஏற்றும் போது யானை நிற்பதற்குரிய இடம் ஒன்று கோயிலில் இருக்கிறது. ஏற்றிய பிறகு யானை ஊர்வலமாக வரும். அதன்மேல் உள்ள பெட்டியையே யாரும் பார்க்க முடியாது. அப்படி இருக்கையில் அதற்குள் என்ன இருக்கிறதென்று தெரிந்து கொள்வது எப்படி? பெட்டிக்குள்ளே மாணிக்கத்தால் ஆன விலை மதிக்க முடியாத முருகன் விக்கிரகம் இருக்கிறது என்று சிலர் சொல்லுகிறார்கள். "கனகமா ணிக்க வடிவ னேமிக்க கதிரகா மத்தில் உறைவோனே" என்று அருணகிரிநாதர் திருப்புகழில் பாடுகிறார். அவர் காலத்தில் முருகனுடைய திருவுருவம் எல்லாரும் கண்டு தரிசிக்கும்படி இருந்ததென்றும், பிற்காலத்தில் மாணிக்கங்களைக் கண்டு யாரேனும் கைப்பற்றி விட்டால் என்ன செய்வது என்ற அச்சத்தால் அவ்விக்கிரகத்தை வெளிக் காட்டுவதில்லை யென்றும் சொல்கிறவர்கள் இருக்கிறார்கள். வேறு சிலர், மிகவும் சக்தியுள்ள யந்திரத்தகடு அந்தப் பெட்டிக்குள் இருக்கிறதென்றும், அதனால்தான் இத்தனை மக்கள் இங்கே வந்து வழிபடுகிறார்களென்றும் கருதுகின்றனர். கூட்டம் மிகுதியாக வரும் ஆலயங்களில் யந்திரங்கள் இருப்பது இந்த நாட்டில் பெருவழக்கு. இதற்கு ஆதாரமாக ஒரு கர்ணபரம்பரைச் செய்தி அங்கே வழங்குகிறது: காஷ்மீரத்திலிருந்து ஓரன்பர் கதிர் காமத்துக்கு வந்து தவம் புரிந்தார். அவரை முத்துலிங்க சுவாமி என்று வழங்கினர். அவர் இத்தலத்தில் முருகன் பேரருள் உடையவகை இருத்தலை அறிந்து தம்முடைய ஊருக்கு எடுத்துச் செல்ல வேண்டுமென்று நினைத்தார். அவர் மந்திர சக்தி உடையவர். முருகனுடைய சக்தியை ஆகர்ஷணம் செய்து ஒரு யந்திரத்தில் அடைத்து எடுத்துச் செல்லச் சித்தமாக இருந்தார். புறப்படுவதற்கு முதல் நாள் இரவு, இங்கிருந்த சிங்களத் தலைவருடைய கனவில் வள்ளியம்மை எழுந்தருளி, “என் கணவனை முத்துலிங்க சுவாமி எடுத்துப் போகப் போகிறான். அதைத் தடுத்து எனக்கு மாங்கலியப் பிச்சை தரவேண்டும்” என்று வேண்டிக் கொண்டாள். அவள் சிங்கள வேடர் குலத்திலே உதித்த பெண் ஆதலின் அப்படி வந்து முறையிட்டாள். உடனே சிங்களத் தலைவர் விழித்துக் கொண்டு முத்துலிங்க சுவாமியைக் கையும் களவுமாகப் பிடித்துக் கொண்டார். அவர் ஆகர்ஷணம் செய்து வைத்த யந்திரத்தைப் பெட்டிக்குள் இருந்தபடியே கோயிலிலே வைத்து வழிபடலானார்கள். இப்படி ஒரு கதை வழங்குகிறது. இதைக் கொண்டுதான் பெட்டிக்குள் யந்திரம் இருக்கிறதென்று சிலர் சொல்கிறார்கள். சந்நிதி வீதியின் தென் கோடியில் உள்ள வள்ளியம்மை கோயிலுக்கு அருகில் மாணிக்க கங்கைக் கரையில் முத்துலிங்க சுவாமியின் சமாதி இருக்கிறது. கதிர்காம வேலன் திருக்கோயிலுக்குப் பின்புறம் பெரிய அரசமரம் ஒன்று இருக்கிறது. பௌத்தர்களுக்கு அரசமரம் கடவுளுக்குச் சமமானது. இந்தத் தலத்துக்குப் பௌத்தர்களும் முஸ்லிம்களும் கூட வந்து வழிபடுகிறார்கள். நான் போயிருந்தபோது எங்களுடனே ஒரு சிங்களவர் வந்திருந்தார்.கோயிலில் சில முஸ்லிம்கள் வந்து தொழுவதையும் கண்டேன். இந்தக் கோயிலைச் சுற்றிச் சிறிய சிறிய வளைவுள்ள புரைகளில் நாகத்தின் உருவங்கள் இருக்கின்றன. அருகில் தீபம் வைத்திருக்கிறார்கள். இந்தக் கோயிலின் எல்லைக்கு அப்பால் கீழ்த்திசையில் இதனோடு ஒட்டிய படியே தேவயானையின் கோயில் இருக்கிறது. அது கிழக்குப் பார்த்த சந்நிதியை உடையது. அதன் விமானம் தமிழ் நாட்டுக் கோயில் விமானத்தைப் போல இருக்கிறது. ஆனாலும் அங்கும் திரைக்குத்தான் பூசை நடக்கிறது. வள்ளியம்மை கோயிலிலும் திரைதான். ஊரிலுள்ள மடங்களில் சில சந்நிதிகள் உண்டு. அங்கும் திரை போட்டிருக்கிறார்கள். கதிர்காமமே திரை மயம் ! தெய்வயானை கோயிலில் கல்யாண மண்டபம் என்ற இடம் இருக்கிறது. அங்கே ஒரு துறவி இருக்கிறார். பரம்பரையாகத் தெய்வயானை கோயிலின் நிர்வாகம் இவரைப் போன்ற துறவிகளின் கையில் இருந்து வருகிறது. எல்லாவற்றையும் தரிசித்துக்கொண்டு வள்ளியம்மை கோயிலுக்கு வந்தோம். அதன் அருகில் ஒரு முஸ்லிம் பக்தருடைய சமாதி இருக்கிறது. முத்துலிங்க சுவாமியின் தொண்டர் அவர் என்று சொல்கிறார்கள். சில மடங்களுக்குள்ளே போய்ப் பார்த்தோம். தமிழ் நாட்டிலிருந்து வரும் பக்தர்கள் தங்குவதற்கு ஏற்றபடி அவை அமைந்திருக்கின்றன. அவற்றில் உள்ளவர்கள் பக்தர்களிடமிருந்து வாடகை பெற்று ஜீவனம் செய்கிறவர்கள். ஒருவாறு கதிர்காமத் தலத்தைத் தரிசித்தேன்; அமைதியாகத் தரிசித்தேன் ; கண்ணாலே கண்ட காட்சிகள் அதிகம் இல்லை; ஆனால் கருத்தால் உணர்ந்த காட்சிகள் பல ; உடம்பு புளகிப்ப நின்றதும் உண்டு. எங்கோ காட்டுக்கு நடுவில் வேடர்கள் வாழும் இடத்தில் அவர்கள் செய்யும் பூசையை ஏற்றுக் கொண்டு முருகன் அருட்பெருங் கடலாக எழுந்தருளியிருக்கிறான். “வனமுறை வேட்ன் அருளிய பூசை மகிழ்கதிர் காமம் உடையோனே” என்று அருணகிரி நாதர் பாடுகிறார். கண்காணா மூலையிலே கதிர்காமம் இருக்கிறது. கருத்தும் காணா வகையிலே பரம ரகசியமர்கக் கதிர் காமப் பொருள் மறைந்திருக்கிறது. ஆனாலும் அந்தத் தலத்தின் பெருமை எவ்வளவு காலமாக, எவ்வளவு விரிவாகப் பரவியிருக்கிறது! எத்தனை உள்ளங்கள் அதனைக் காண வேண்டுமென்று துடிக்கின்றன! ஒரு முறை கண்ட பிறகும் மீட்டும் மீட்டும் செல்ல வேண்டும் என்று ஆர்வம் பூண்டவர்கள் எத்தனை பேர்! இவ்வளவும் பக்தியினால் விளையும் விளைவுகள்: இறைவனுடைய திருவருட் கூத்தின் பிரபாவம். இவ்வளவு பேர் போய்க் கண்டார்கள் ; காண்கிறார்கள்: இனியும் காண்பார்கள். அவர்கள் அடையும் ஆனந்தத்துக்கும் குறைவில்லை. ஆனால், “கதிர் காமத்தின் இரகசியத்தைக் கண்டீர்களா?” என்று கேளுங்கள். “கண்டும் கண்டிலேன் என்ன கண்மாயமே !” என்றுதான் சொல்வார்கள். FREETAMILEBOOKS.COM மின்புத்தகங்களைப் படிக்க உதவும் கருவிகள்: மின்புத்தகங்களைப் படிப்பதற்கென்றே கையிலேயே வைத்துக் கொள்ளக்கூடிய பல கருவிகள் தற்போது சந்தையில் வந்துவிட்டன. Kindle, Nook, Android Tablets போன்றவை இவற்றில் பெரும்பங்கு வகிக்கின்றன. இத்தகைய கருவிகளின் மதிப்பு தற்போது 4000 முதல் 6000 ரூபாய் வரை குறைந்துள்ளன. எனவே பெரும்பான்மையான மக்கள் தற்போது இதனை வாங்கி வருகின்றனர். ஆங்கிலத்திலுள்ள மின்புத்தகங்கள்: ஆங்கிலத்தில் லட்சக்கணக்கான மின்புத்தகங்கள் தற்போது கிடைக்கப் பெறுகின்றன. அவை PDF, EPUB, MOBI, AZW3. போன்ற வடிவங்களில் இருப்பதால், அவற்றை மேற்கூறிய கருவிகளைக் கொண்டு நாம் படித்துவிடலாம். தமிழிலுள்ள மின்புத்தகங்கள்: தமிழில் சமீபத்திய புத்தகங்களெல்லாம் நமக்கு மின்புத்தகங்களாக கிடைக்கப்பெறுவதில்லை. ProjectMadurai.com எனும் குழு தமிழில் மின்புத்தகங்களை வெளியிடுவதற்கான ஒர் உன்னத சேவையில் ஈடுபட்டுள்ளது. இந்தக் குழு இதுவரை வழங்கியுள்ள தமிழ் மின்புத்தகங்கள் அனைத்தும் PublicDomain-ல் உள்ளன. ஆனால் இவை மிகவும் பழைய புத்தகங்கள். சமீபத்திய புத்தகங்கள் ஏதும் இங்கு கிடைக்கப்பெறுவதில்லை. சமீபத்திய புத்தகங்களை தமிழில் பெறுவது எப்படி? அமேசான் கிண்டில் கருவியில் தமிழ் ஆதரவு தந்த பிறகு, தமிழ் மின்னூல்கள் அங்கே விற்பனைக்குக் கிடைக்கின்றன. ஆனால் அவற்றை நாம் பதிவிறக்க இயலாது. வேறு யாருக்கும் பகிர இயலாது. சமீபகாலமாக பல்வேறு எழுத்தாளர்களும், பதிவர்களும், சமீபத்திய நிகழ்வுகளைப் பற்றிய விவரங்களைத் தமிழில் எழுதத் தொடங்கியுள்ளனர். அவை இலக்கியம், விளையாட்டு, கலாச்சாரம், உணவு, சினிமா, அரசியல், புகைப்படக்கலை, வணிகம் மற்றும் தகவல் தொழில்நுட்பம் போன்ற பல்வேறு தலைப்புகளின் கீழ் அமைகின்றன. நாம் அவற்றையெல்லாம் ஒன்றாகச் சேர்த்து தமிழ் மின்புத்தகங்களை உருவாக்க உள்ளோம். அவ்வாறு உருவாக்கப்பட்ட மின்புத்தகங்கள் Creative Commons எனும் உரிமத்தின் கீழ் வெளியிடப்படும். இவ்வாறு வெளியிடுவதன் மூலம் அந்தப் புத்தகத்தை எழுதிய மூல ஆசிரியருக்கான உரிமைகள் சட்டரீதியாகப் பாதுகாக்கப்படுகின்றன. அதே நேரத்தில் அந்த மின்புத்தகங்களை யார் வேண்டுமானாலும், யாருக்கு வேண்டுமானாலும், இலவசமாக வழங்கலாம். எனவே தமிழ் படிக்கும் வாசகர்கள் ஆயிரக்கணக்கில் சமீபத்திய தமிழ் மின்புத்தகங்களை இலவசமாகவே பெற்றுக் கொள்ள முடியும். தமிழிலிருக்கும் எந்த வலைப்பதிவிலிருந்து வேண்டுமானாலும் பதிவுகளை எடுக்கலாமா? கூடாது. ஒவ்வொரு வலைப்பதிவும் அதற்கென்றே ஒருசில அனுமதிகளைப் பெற்றிருக்கும். ஒரு வலைப்பதிவின் ஆசிரியர் அவரது பதிப்புகளை “யார் வேண்டுமானாலும் பயன்படுத்தலாம்” என்று குறிப்பிட்டிருந்தால் மட்டுமே அதனை நாம் பயன்படுத்த முடியும். அதாவது “Creative Commons” எனும் உரிமத்தின் கீழ் வரும் பதிப்புகளை மட்டுமே நாம் பயன்படுத்த முடியும். அப்படி இல்லாமல் “All Rights Reserved” எனும் உரிமத்தின் கீழ் இருக்கும் பதிப்புகளை நம்மால் பயன்படுத்த முடியாது. வேண்டுமானால் “All Rights Reserved” என்று விளங்கும் வலைப்பதிவுகளைக் கொண்டிருக்கும் ஆசிரியருக்கு அவரது பதிப்புகளை “Creative Commons” உரிமத்தின் கீழ் வெளியிடக்கோரி நாம் நமது வேண்டுகோளைத் தெரிவிக்கலாம். மேலும் அவரது படைப்புகள் அனைத்தும் அவருடைய பெயரின் கீழே தான் வெளியிடப்படும் எனும் உறுதியையும் நாம் அளிக்க வேண்டும். பொதுவாக புதுப்புது பதிவுகளை  உருவாக்குவோருக்கு அவர்களது பதிவுகள்  நிறைய வாசகர்களைச் சென்றடைய வேண்டும் என்ற எண்ணம் இருக்கும். நாம் அவர்களது படைப்புகளை எடுத்து இலவச மின்புத்தகங்களாக வழங்குவதற்கு  நமக்கு அவர்கள் அனுமதியளித்தால், உண்மையாகவே அவர்களது படைப்புகள் பெரும்பான்மையான மக்களைச் சென்றடையும். வாசகர்களுக்கும் நிறைய புத்தகங்கள் படிப்பதற்குக் கிடைக்கும் வாசகர்கள் ஆசிரியர்களின் வலைப்பதிவு முகவரிகளில் கூட அவர்களுடைய படைப்புகளை தேடிக் கண்டுபிடித்து படிக்கலாம். ஆனால் நாங்கள் வாசகர்களின் சிரமத்தைக் குறைக்கும் வண்ணம் ஆசிரியர்களின் சிதறிய வலைப்பதிவுகளை ஒன்றாக இணைத்து ஒரு முழு மின்புத்தகங்களாக உருவாக்கும் வேலையைச் செய்கிறோம். மேலும் அவ்வாறு உருவாக்கப்பட்ட புத்தகங்களை “மின்புத்தகங்களைப் படிக்க உதவும் கருவிகள்”-க்கு ஏற்ற வண்ணம் வடிவமைக்கும் வேலையையும் செய்கிறோம். FREETAMILEBOOKS.COM இந்த வலைத்தளத்தில்தான் பின்வரும் வடிவமைப்பில் மின்புத்தகங்கள் காணப்படும். PDF for desktop, PDF for 6” devices, EPUB, AZW3, ODT இந்த வலைதளத்திலிருந்து யார் வேண்டுமானாலும் மின்புத்தகங்களை இலவசமாகப் பதிவிறக்கம்(download) செய்து கொள்ளலாம். அவ்வாறு பதிவிறக்கம்(download) செய்யப்பட்ட புத்தகங்களை யாருக்கு வேண்டுமானாலும் இலவசமாக வழங்கலாம். இதில் நீங்கள் பங்களிக்க விரும்புகிறீர்களா?  நீங்கள் செய்யவேண்டியதெல்லாம் தமிழில் எழுதப்பட்டிருக்கும் வலைப்பதிவுகளிலிருந்து பதிவுகளை எடுத்து, அவற்றை LibreOffice/MS Office போன்ற wordprocessor-ல் போட்டு ஓர் எளிய மின்புத்தகமாக மாற்றி எங்களுக்கு அனுப்பவும். அவ்வளவுதான்! மேலும் சில பங்களிப்புகள் பின்வருமாறு: 1. ஒருசில பதிவர்கள்/எழுத்தாளர்களுக்கு அவர்களது படைப்புகளை “Creative Commons” உரிமத்தின்கீழ் வெளியிடக்கோரி மின்னஞ்சல் அனுப்புதல் 2. தன்னார்வலர்களால் அனுப்பப்பட்ட மின்புத்தகங்களின் உரிமைகளையும் தரத்தையும் பரிசோதித்தல் 3. சோதனைகள் முடிந்து அனுமதி வழங்கப்பட்ட தரமான மின்புத்தகங்களை நமது வலைதளத்தில் பதிவேற்றம் செய்தல் விருப்பமுள்ளவர்கள் freetamilebooksteam@gmail.com எனும் முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பவும்.  இந்தத் திட்டத்தின் மூலம் பணம் சம்பாதிப்பவர்கள் யார்? யாருமில்லை. இந்த வலைத்தளம் முழுக்க முழுக்க தன்னார்வலர்களால் செயல்படுகின்ற ஒரு வலைத்தளம் ஆகும். இதன் ஒரே நோக்கம் என்னவெனில் தமிழில் நிறைய மின்புத்தகங்களை உருவாக்குவதும், அவற்றை இலவசமாக பயனர்களுக்கு வழங்குவதுமே ஆகும். மேலும் இவ்வாறு உருவாக்கப்பட்ட மின்புத்தகங்கள், ebook reader ஏற்றுக்கொள்ளும் வடிவமைப்பில் அமையும். இத்திட்டத்தால் பதிப்புகளை எழுதிக்கொடுக்கும் ஆசிரியர்/பதிவருக்கு என்ன லாபம்? ஆசிரியர்/பதிவர்கள் இத்திட்டத்தின் மூலம் எந்தவிதமான தொகையும் பெறப்போவதில்லை. ஏனெனில், அவர்கள் புதிதாக இதற்கென்று எந்தஒரு பதிவையும்  எழுதித்தரப்போவதில்லை. ஏற்கனவே அவர்கள் எழுதி வெளியிட்டிருக்கும் பதிவுகளை எடுத்துத்தான் நாம் மின்புத்தகமாக வெளியிடப்போகிறோம். அதாவது அவரவர்களின் வலைதளத்தில் இந்தப் பதிவுகள் அனைத்தும் இலவசமாகவே கிடைக்கப்பெற்றாலும், அவற்றையெல்லாம் ஒன்றாகத் தொகுத்து ebook reader போன்ற கருவிகளில் படிக்கும் விதத்தில் மாற்றித் தரும் வேலையை இந்தத் திட்டம் செய்கிறது. தற்போது மக்கள் பெரிய அளவில் tablets மற்றும் ebook readers போன்ற கருவிகளை நாடிச் செல்வதால் அவர்களை நெருங்குவதற்கு இது ஒரு நல்ல வாய்ப்பாக அமையும். நகல் எடுப்பதை அனுமதிக்கும் வலைதளங்கள் ஏதேனும் தமிழில் உள்ளதா? உள்ளது. பின்வரும் தமிழில் உள்ள வலைதளங்கள் நகல் எடுப்பதினை அனுமதிக்கின்றன. 1. http://www.vinavu.com 2. http://www.badriseshadri.in  3. http://maattru.com  4. http://www.kaniyam.com  5. http://blog.ravidreams.net  எவ்வாறு ஒர் எழுத்தாளரிடம் CREATIVE COMMONS உரிமத்தின் கீழ் அவரது படைப்புகளை வெளியிடுமாறு கூறுவது? இதற்கு பின்வருமாறு ஒரு மின்னஞ்சலை அனுப்ப வேண்டும். துவக்கம் உங்களது வலைத்தளம் அருமை (வலைதளத்தின் பெயர்). தற்போது படிப்பதற்கு உபயோகப்படும் கருவிகளாக Mobiles மற்றும் பல்வேறு கையிருப்புக் கருவிகளின் எண்ணிக்கை அதிகரித்து வந்துள்ளது. இந்நிலையில் நாங்கள் http://www.FreeTamilEbooks.com எனும் வலைதளத்தில், பல்வேறு தமிழ் மின்புத்தகங்களை வெவ்வேறு துறைகளின் கீழ் சேகரிப்பதற்கான ஒரு புதிய திட்டத்தில் ஈடுபட்டுள்ளோம்.  இங்கு சேகரிக்கப்படும் மின்புத்தகங்கள் பல்வேறு கணிணிக் கருவிகளான Desktop,ebook readers like kindl, nook, mobiles, tablets with android, iOS போன்றவற்றில் படிக்கும் வண்ணம் அமையும். அதாவது இத்தகைய கருவிகள் support செய்யும் odt, pdf, ebub, azw போன்ற வடிவமைப்பில் புத்தகங்கள் அமையும். இதற்காக நாங்கள் உங்களது வலைதளத்திலிருந்து பதிவுகளை பெற விரும்புகிறோம். இதன் மூலம் உங்களது பதிவுகள் உலகளவில் இருக்கும் வாசகர்களின் கருவிகளை நேரடியாகச் சென்றடையும். எனவே உங்களது வலைதளத்திலிருந்து பதிவுகளை  பிரதியெடுப்பதற்கும் அவற்றை மின்புத்தகங்களாக மாற்றுவதற்கும் உங்களது அனுமதியை வேண்டுகிறோம். இவ்வாறு உருவாக்கப்பட்ட மின்புத்தகங்களில் கண்டிப்பாக ஆசிரியராக உங்களின் பெயரும் மற்றும் உங்களது வலைதள முகவரியும் இடம்பெறும். மேலும் இவை “Creative Commons” உரிமத்தின் கீழ் மட்டும்தான் வெளியிடப்படும் எனும் உறுதியையும் அளிக்கிறோம். http://creativecommons.org/licenses/  நீங்கள் எங்களை பின்வரும் முகவரிகளில் தொடர்பு கொள்ளலாம். e-mail : FREETAMILEBOOKSTEAM@GMAIL.COM  FB : https://www.facebook.com/FreeTamilEbooks  G plus: https://plus.google.com/communities/108817760492177970948    நன்றி. முடிவு மேற்கூறியவாறு ஒரு மின்னஞ்சலை உங்களுக்குத் தெரிந்த அனைத்து எழுத்தாளர்களுக்கும் அனுப்பி அவர்களிடமிருந்து அனுமதியைப் பெறுங்கள். முடிந்தால் அவர்களையும் “Creative Commons License”-ஐ அவர்களுடைய வலைதளத்தில் பயன்படுத்தச் சொல்லுங்கள். கடைசியாக அவர்கள் உங்களுக்கு அனுமதி அளித்து அனுப்பியிருக்கும் மின்னஞ்சலைFREETAMILEBOOKSTEAM@GMAIL.COM எனும் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.  ஓர் எழுத்தாளர் உங்களது உங்களது வேண்டுகோளை மறுக்கும் பட்சத்தில் என்ன செய்வது? அவர்களையும் அவர்களது படைப்புகளையும் அப்படியே விட்டுவிட வேண்டும். ஒருசிலருக்கு அவர்களுடைய சொந்த முயற்சியில் மின்புத்தகம் தயாரிக்கும் எண்ணம்கூட இருக்கும். ஆகவே அவர்களை நாம் மீண்டும் மீண்டும் தொந்தரவு செய்யக் கூடாது. அவர்களை அப்படியே விட்டுவிட்டு அடுத்தடுத்த எழுத்தாளர்களை நோக்கி நமது முயற்சியைத் தொடர வேண்டும்.   மின்புத்தகங்கள் எவ்வாறு அமைய வேண்டும்? ஒவ்வொருவரது வலைத்தளத்திலும் குறைந்தபட்சம் நூற்றுக்கணக்கில் பதிவுகள் காணப்படும். அவை வகைப்படுத்தப்பட்டோ அல்லது வகைப்படுத்தப் படாமலோ இருக்கும்.  நாம் அவற்றையெல்லாம் ஒன்றாகத் திரட்டி ஒரு பொதுவான தலைப்பின்கீழ் வகைப்படுத்தி மின்புத்தகங்களாகத் தயாரிக்கலாம். அவ்வாறு வகைப்படுத்தப்படும் மின்புத்தகங்களை பகுதி-I பகுதி-II என்றும் கூட தனித்தனியே பிரித்துக் கொடுக்கலாம்.  தவிர்க்க வேண்டியவைகள் யாவை? இனம், பாலியல் மற்றும் வன்முறை போன்றவற்றைத் தூண்டும் வகையான பதிவுகள் தவிர்க்கப்பட வேண்டும்.  எங்களைத் தொடர்பு கொள்வது எப்படி? நீங்கள் பின்வரும் முகவரிகளில் எங்களைத் தொடர்பு கொள்ளலாம்.  - EMAIL : FREETAMILEBOOKSTEAM@GMAIL.COM   - Facebook: https://www.facebook.com/FreeTamilEbooks   - Google Plus: https://plus.google.com/communities/108817760492177970948   இத்திட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் யார்? குழு – http://freetamilebooks.com/meet-the-team/    SUPPORTED BY கணியம் அறக்கட்டளை http://kaniyam.com/foundation     கணியம் அறக்கட்டளை []   தொலை நோக்கு – Vision தமிழ் மொழி மற்றும் இனக்குழுக்கள் சார்ந்த மெய்நிகர்வளங்கள், கருவிகள் மற்றும் அறிவுத்தொகுதிகள், அனைவருக்கும்  கட்டற்ற அணுக்கத்தில் கிடைக்கும் சூழல் பணி இலக்கு  – Mission அறிவியல் மற்றும் சமூகப் பொருளாதார வளர்ச்சிக்கு ஒப்ப, தமிழ் மொழியின் பயன்பாடு வளர்வதை உறுதிப்படுத்துவதும், அனைத்து அறிவுத் தொகுதிகளும், வளங்களும் கட்டற்ற அணுக்கத்தில் அனைவருக்கும் கிடைக்கச்செய்தலும்.   தற்போதைய செயல்கள் - கணியம் மின்னிதழ் – http://kaniyam.com - கிரியேட்டிவ் காமன்சு உரிமையில் இலவச தமிழ் மின்னூல்கள் – http://FreeTamilEbooks.com   கட்டற்ற மென்பொருட்கள் - உரை ஒலி மாற்றி –  Text to Speech - எழுத்துணரி – Optical Character Recognition - விக்கிமூலத்துக்கான எழுத்துணரி - மின்னூல்கள் கிண்டில் கருவிக்கு அனுப்புதல் – Send2Kindle - விக்கிப்பீடியாவிற்கான சிறு கருவிகள் - மின்னூல்கள் உருவாக்கும் கருவி - உரை ஒலி மாற்றி – இணைய செயலி - சங்க இலக்கியம் – ஆன்டிராய்டு செயலி - FreeTamilEbooks – ஆன்டிராய்டு செயலி - FreeTamilEbooks – ஐஒஎஸ் செயலி - WikisourceEbooksReportஇந்திய மொழிகளுக்ககான விக்கிமூலம் மின்னூல்கள் பதிவிறக்கப் பட்டியல் - FreeTamilEbooks.com – Download counter மின்னூல்கள் பதிவிறக்கப் பட்டியல்   அடுத்த திட்டங்கள்/மென்பொருட்கள்   - விக்கி மூலத்தில் உள்ள மின்னூல்களை பகுதிநேர/முழு நேரப் பணியாளர்கள் மூலம் விரைந்து பிழை திருத்துதல் - முழு நேர நிரலரை பணியமர்த்தி பல்வேறு கட்டற்ற மென்பொருட்கள் உருவாக்குதல் - தமிழ் NLP க்கான பயிற்சிப் பட்டறைகள் நடத்துதல் - கணியம் வாசகர் வட்டம் உருவாக்குதல் - கட்டற்ற மென்பொருட்கள், கிரியேட்டிவ் காமன்சு உரிமையில் வளங்களை உருவாக்குபவர்களைக் கண்டறிந்து ஊக்குவித்தல் - கணியம் இதழில் அதிக பங்களிப்பாளர்களை உருவாக்குதல், பயிற்சி அளித்தல் - மின்னூலாக்கத்துக்கு ஒரு இணையதள செயலி - எழுத்துணரிக்கு ஒரு இணையதள செயலி - தமிழ் ஒலியோடைகள் உருவாக்கி வெளியிடுதல் - http://OpenStreetMap.org ல் உள்ள இடம், தெரு, ஊர் பெயர்களை தமிழாக்கம் செய்தல் - தமிழ்நாடு முழுவதையும் http://OpenStreetMap.org ல் வரைதல் - குழந்தைக் கதைகளை ஒலி வடிவில் வழங்குதல் - http://Ta.wiktionary.org ஐ ஒழுங்குபடுத்தி API க்கு தோதாக மாற்றுதல் - http://Ta.wiktionary.org க்காக ஒலிப்பதிவு செய்யும் செயலி உருவாக்குதல் - தமிழ் எழுத்துப் பிழைத்திருத்தி உருவாக்குதல் - தமிழ் வேர்ச்சொல் காணும் கருவி உருவாக்குதல் - எல்லா http://FreeTamilEbooks.com மின்னூல்களையும் Google Play Books, GoodReads.com ல் ஏற்றுதல் - தமிழ் தட்டச்சு கற்க இணைய செயலி உருவாக்குதல் - தமிழ் எழுதவும் படிக்கவும் கற்ற இணைய செயலி உருவாக்குதல் ( aamozish.com/Course_preface போல)   மேற்கண்ட திட்டங்கள், மென்பொருட்களை உருவாக்கி செயல்படுத்த உங்கள் அனைவரின் ஆதரவும் தேவை. உங்களால் எவ்வாறேனும் பங்களிக்க இயலும் எனில் உங்கள் விவரங்களை  kaniyamfoundation@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்.   வெளிப்படைத்தன்மை கணியம் அறக்கட்டளையின் செயல்கள், திட்டங்கள், மென்பொருட்கள் யாவும் அனைவருக்கும் பொதுவானதாகவும், 100% வெளிப்படைத்தன்மையுடனும் இருக்கும்.இந்த இணைப்பில் செயல்களையும், இந்த இணைப்பில் மாத அறிக்கை, வரவு செலவு விவரங்களுடனும் காணலாம். கணியம் அறக்கட்டளையில் உருவாக்கப்படும் மென்பொருட்கள் யாவும் கட்டற்ற மென்பொருட்களாக மூல நிரலுடன், GNU GPL, Apache, BSD, MIT, Mozilla ஆகிய உரிமைகளில் ஒன்றாக வெளியிடப்படும். உருவாக்கப்படும் பிற வளங்கள், புகைப்படங்கள், ஒலிக்கோப்புகள், காணொளிகள், மின்னூல்கள், கட்டுரைகள் யாவும் யாவரும் பகிரும், பயன்படுத்தும் வகையில் கிரியேட்டிவ் காமன்சு உரிமையில் இருக்கும். நன்கொடை உங்கள் நன்கொடைகள் தமிழுக்கான கட்டற்ற வளங்களை உருவாக்கும் செயல்களை சிறந்த வகையில் விரைந்து செய்ய ஊக்குவிக்கும். பின்வரும் வங்கிக் கணக்கில் உங்கள் நன்கொடைகளை அனுப்பி, உடனே விவரங்களை kaniyamfoundation@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்.  Kaniyam Foundation Account Number : 606 1010 100 502 79 Union Bank Of India West Tambaram, Chennai IFSC – UBIN0560618 Account Type : Current Account   UPI செயலிகளுக்கான QR Code []   குறிப்பு: சில UPI செயலிகளில் இந்த QR Code வேலை செய்யாமல் போகலாம். அச்சமயம் மேலே உள்ள வங்கிக் கணக்கு எண், IFSC code ஐ பயன்படுத்தவும். Note: Sometimes UPI does not work properly, in that case kindly use Account number and IFSC code for internet banking.   ------------------------------------------------------------------------ 1. இரண்டாவது முறை கதிர்காமம் போனபோது வெள்ளத்தைக் கண்டேன்.↩︎ 2. இப்போது ஸ்ரீ ராமகிருஷ்ண மடத்தைச் சார்ந்த கிளை ஒன்றை மிக வசதியாக இங்கே கட்டியிருக்கிறர்கள்.↩︎ 3. இப்போது இந்தக் கூரையின்மேல் தகடுகளே அடித்திருக்கிறார்கள்.↩︎