[] இறுதி இரவு (சிறுகதைகள்) ப.மதியழகன்© முதல் பதிப்பு:ஜூலை 2018 பக்கம்:68 ஆசிரியர் மின்னஞ்சல்: mathi2134@gmail.com அலைபேசி:9597332952,9095584535 Whatsapp:9384251845 ஆக்கம் & அட்டைப்படம்:ப.மதியழகன் மின்னூல் வெளியீடு: FreeTamilEbooks.com உரிமை: Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 கிரியேட்டிவ் காமன்ஸ். எல்லோரும் படிக்கலாம். பகிரலாம்       உள்ளடக்கம் என்னுரை மோகத்தீ தெய்வம் தந்த வீடு கருவறை வாசனை அகம் பிரம்மாஸ்மி போதி பிழைப்பு சரதல்பம் மாயை கூடு அரவான் வெண்மேகம்   என்னுரை   விடியாமல் போகும் இரவைப் பற்றி நான் யோசித்துக் கொண்டு இருக்கிறேன். மரணம் என்பது அவனுக்கான உலகம் அழிவதைத் தவிர வேறில்‍லை. பிறந்ததிலிருந்து நாம் உடலுக்குத்தான் அதி முக்கியத்துவம் கொடுக்கிறோம். வாழ்வின் ரகசியங்கள் நமக்கு புரிபடுவதேயில்லை. அநேகம் பேர் பிறவி சுழற்சியிலிருந்து விடுபடுவதேயில்லை. ஆசையால் உந்தப்பட்டு அவர்கள் செய்த செயல்களே அவர்கள் கட்டுத்தளைகளுக்கு காரணமாக அமைந்துவிடுகிறது. உலகியல் ரீதியிலான வெற்றி வேண்டுமென்றே கடவுளை வேண்டுகிறார்கள். ஆன்ம விடுதலையை வேண்டி நிற்போர் இந்த உலகத்தில் ஒரு சதவீதத்தினர் கூட இல்லை. நம் பணிகளைத் தள்ளிப்போடாமல் விருப்பத்துடன் செய்து வருவோம். வார்த்தைகளால் அன்பு விதையை விதைப்போம். ஏனென்றால் அந்த விடியாத இரவு இன்றிரவாகவும் இருக்கலாம். நாம் கண்விழிக்கும் ஒவ்வொரு நாளும் கடவுள் நமக்குத் தரும் வாய்ப்பு. அன்பை வெளிப்படுத்தி வாழ்ந்து பாருங்கள் இந்த உலகம் தான் சுவர்க்கம் என உணர்ந்து கொள்வீர்கள்.   ப்ரியமுடன் ப.மதியழகன் 115,வள்ளலார் சாலை, ஆர்.பி.சிவம் நகர், மன்னார்குடி - 614001. திருவாரூர் மாவட்டம். தமிழ்நாடு, இந்தியா. cell:9597332952, 9095584535 whatsapp:9384251845 mathi2134@gmail.com     மோகத்தீ   பேரழகி இந்த வார்த்தைக்கு ஏற்ற வனப்புடையவள் உலகில் ஒரே ஒருவள் தான், அவள் தான் அகலிகை. அழகு என்பது பெண்களுக்கே உரித்தான ஒன்று. பெண்ணின் ஒளிவீசும் கண்களை எந்த ஆடவனாலும் எதிர்நோக்க முடியாது. பெண் அதீத கனவுகளுடன் தான் வளர்த்தெடுக்கப்படுகிறாள். தான் ஒரு தேவதை என்ற எண்ணம் இறக்கும் வரை அவள் மனதில் இருந்து கொண்டே இருக்கிறது. வெளி விஷயங்களால் உள்சமநிலைகுலைவு எளிதாக ஏற்படுவதில்லை அவளுக்கு.   அவளுடைய கடைக்கண் பார்வைக்காக எத்தனையோ சாம்ராஜ்யங்கள் இவ்வுலகில் வீழ்த்தப்பட்டிருக்கின்றன. இந்த உலகம் ஒரு சுயம்வர மண்டபம், அவளுக்கு யாரைப் பிடித்திருக்கிறதோ அவனுக்கு மாலையிடுவாள். எந்தத் தகுதியை வைத்து அவனுக்கு மாலையிட்டாய் என நம்மால் கேட்க முடியாது. கொலுசு சத்தம் கேட்கும்போதெல்லாம் ஆண்களின் மனது தூரிகையால் தேவதையைத் தானே வரைகிறது.   இந்த பூமியை இரட்சிக்க கடவுளால் அனுப்பப்பட்டவளே பெண். அன்பின் வெளிப்பாடு பெண்களிடம் தான் அதிகாமாகக் காணப்படுகிறது. அவமானப்படுத்தப்பட்ட ஒரு பெண்ணின் கதை தானே மகாபாரதம். இயேசு கன்னிமேரியை தனது தாயாகத் தேர்ந்தெடுக்க அவளின் களங்கமற்றத் தன்மையே காரணம்.   கடவுள் ஆணாக இருந்தாலும் பெண் தன்மை கொண்டவராகவே இருப்பார். இல்லையென்றால் அவரால் படைப்புத் தொழில் ஈடுபட முடியாது. ஆண்களால் ஒருக்காலும் தாயுமானவன் ஆகமுடியாது. குடும்பம் என்ற கட்டமைப்பு உருவாக மூலக்காரணமே பெண் தான். வாழ்க்கைக் கப்பலில் கப்பித்தானாக இருக்கும் அவள் தன்னைப் பலி கொடுத்தாவது மற்றவர்களைக் கரை சேர்த்து விடுகிறாள்.   அவதாரங்கள் பரமாத்மாவாக இருந்தாலும் தாய்க்குப் பிள்ளைகள் தானே. பெண்களின் வழியாகத்தான் இவ்வுலகிற்கு எல்லோரும் நுழைய வேண்டியிருக்கிறது. ஒரு புனிதமான பெண் எத்தகைய கயவனையும் திசைதிருப்பி நல்வழிப்படுத்த முடியும். உன் பார்வையில் தவறில்லையென்றால் எல்லாப் பெண்களிடமும் உன் தாயைப் பார்க்கலாம். வரமாகப் பெற்ற அழகு சிலசமயம் ஆபத்தைத் தான் கொண்டு வருகிறது. சீதையின் பொன் எழிலே அவள் சிறைப்படுவதற்கு காரணம்.   அவதாரங்கள் கடவுளாகவே இருக்கட்டும், சில அவதாரங்களைத் தவிர மற்ற அனைவரும் பெண்களைத் தங்கள் துணைவியராக்கிக் கொள்கிறார்கள். ஏனெனில் அவர்கள் இந்த உலகிற்குள் நுழைய வழிசெய்து கொடுத்தவள் பெண்தான். வாள் முனையில் வென்றெடுக்கப்பட்ட அம்பா பீஷ்மர் தன்னை நிராகரித்ததால் தக்க சமயத்திற்காக காத்திருந்து சிகண்டி வடிவெடுத்து போரில் பீஷமரை பழிதீர்த்துக் கொண்டாள்.   ஜீவனத்துக்குப் பயன்படும் நதிகளுக்கெல்லாம் பாரத மண்ணில் பெண் பெயரை வைத்து அழைப்பது தானே வழக்கம். பெண் எனும் மகாசமுத்திரத்தில் சிறு அலைகள் தான் ஆண்கள். பெண் எனும் சிறு வட்டத்திற்குள்ளாகவே அவர்கள் வாழ்க்கை முடிந்துவிடுகிறது. வானமகளின் கருணையால் தானே பூமி பச்சை வண்ண ஆடை உடுத்தியிருக்கிறது.   மொழியையும், நாட்டையும் தாயாக கருதுபவர்கள் தானே நாம். சிவனுக்கு அன்னமிடும் அன்னபூரணி அவனுக்கே அன்னையாகிறாள். உலக வாழக்கையில் ஜொலித்துக் கொண்டிருக்கும் ஆண்களின் பின்புலத்தில் ஒரு பெண்ணே இருக்கிறாள். பார்வதியிடம் தன் உடலின் பாதியைத் தந்தவன் தானே சிவன். ஆண், பெண் சேர்க்கையால் பிறந்தவர்கள் ஆதலால் நம்முள்ளும் ஆண், பெண் தன்மை சரிபாதியாக இருக்கிறது.   ஆண்கள் தேடுவதனைத்தையும் பெண்களால் கொடுத்துவிட முடியுமா என்ற கேள்வி எழுகிறது. தன் தாயிடம் சத்தியம் செய்து கொடுத்துவிட்டுத்தான் ஆதிசங்கரர் ஊரின் எல்லையைக் கடந்தார். பேரழகி யசோதரையை தவிக்க விட்டுவிட்டு எதைத் தேடி புத்தர் வீட்டை விட்டு இரவோடு இரவாக வெளியேறினார். இயேசுவின் வாழ்க்கையில் மேரி ஒருவளுக்கு மட்டும்தான் இடமிருந்தது.   சாதாரண மனிதர்களால் பெண்களைக் கடக்க முடியவில்லை. பெண்களுக்கு அம்மனிதர்கள் ஒரு பொருட்டே இல்லை. அசாதாரண மனிதர்கள் பெண்கள் மூலமாக தங்களிடம் பேசிக் கொண்டிருப்பது கடவுள் தான் என்பதை உணர்ந்து கொள்கிறார்கள். ஆனாலும் அசாதாரண மனிதர்களை கடவுளைக் கண்டுகொள்ள பெண்கள் விடுவதில்லை. தாயின் புத்திர பாசமும், காதலியின் மோகவலையும் சிலந்தி வலையில் ஆண்களைச் சிக்க வைத்து விடுகிறது.   ஆண்களுக்குத் தெரியாத ஏதோ ஒன்று பெண்கள் அறிந்திருக்கக்கூடும். அதனை கடைசி வரை ஆண்களிடம் பகிர்ந்துகொள்ள விருப்பப்படமாட்டாள். பெண்கள் உள்ளுணர்வின் மூலம் செயல்படுகிறார்கள். ஆண்கள் அதை அலட்சியப்படுத்திவிடுகிறார்கள். ஆண்கள் தன்னுணர்வை இழக்கச் செய்யும் விஷயத்திலேயே அதிகம் ஈடுபடுகிறார்கள். அவனுக்கு ஏதேனும் போதை எந்நாளும் தேவைப்படுகிறது. ஆண்கள் மேலாதிக்கம் செய்வது போல் தோன்றினாலும் பெண்களே இவ்வுலகை தன் கட்டுக்குள் வைத்திருக்கிறார்கள்.   பெண்களின் பேரழகு ஆண்களைச் சஞ்சலமடையச் செய்கிறது. பெண்கள் சுவர்க்கத்திலிருந்து இந்த உலகில் நுழைந்தவர்களாக இருக்கலாம். ஆனால் அவர்கள் ஆண்களின் பாவத்தை மன்னித்து சுவர்க்கத்தில் அவர்களுக்கு இடமளிக்க விரும்பவில்லை. பிரபஞ்ச அதிபதி இவ்வுலகை ஆள பெண்களுக்கு மட்டும் ஏன் அதிகாரம் தந்தான் எனப் புரியவில்லை.   உறக்கத்தின்போது பெண்தேவதைகளின் ஆன்மா தினமும் கடவுளைச் சந்திக்கிறது. ஆண்கள் இதை அறியாமல் அவளை அணைத்துக்கொண்டு உறங்குகிறார்கள். கடவுள் பத்ம வியூகத்தை எவ்வாறு உடைத்து வெளியேற வேண்டுமென்ற யுக்தியை பெண்களிடம் மட்டுமே சொல்லியிருக்கிறான்.   ஒரு பெண்ணுடன் வாழ்வது கடவுளுடன் வாழ்வது போல. அவள் நம் தவறுகளை எளிதாக கண்பிடித்துவிடுகிறாள். மனிதனுக்கு நல்ல தாதியாக இருந்து கொண்டே அவன் மரணத்திற்கு வழிவகுக்கிறாள். சக்தி தன் ஆத்ம ஜோடியைத் தேடிக் கண்டுபிடிக்கவே இத்தனை உடல் தரித்திருக்கிறாள். அவளின் தேடல் முடியும் வரை சிவனை தன் காலால் மிதிக்கும் உக்கிரமான காளியாகத்தான் இவ்வுலகில் நடமாடுவாள்.   அகலிகை பிரம்மதேவனின் அற்புத படைப்பு. அகலிகையின் மீது தேவர்கள் தீராக் காதல் கொண்டனர். இந்திரன் அவளை அடைந்துவிட வேண்டுமென்ற வெறியோடு அலைந்து வந்தான். சுயம்வர மண்டபத்தில் எல்லோரும் கூடியிருக்க, பிரம்மதேவர் யார் முதலில் உலகை மும்முறை வலம் வருகிறார்களோ அவரையே அகலிகை மணமுடிப்பாள் என்றார். தேவர்கள் தத்தமது வாகனத்தில் உலகைச் சுற்றி வர புறப்பட்டனர். இந்திரனும் புறப்பட்டுச் சென்றான்.   நாரதர் கெளதம முனிவரை கன்றை ஈனும் பசுவை மும்முறை வலம் வரச் செய்து, கெளதமன் உலகை மும்முறை சுற்றி வந்ததற்கு நானே சாட்சி என்று பிரம்மதேவரிடம் சொல்லி அகலிகையை கெளதமனுக்கு மணமுடிக்கிறார். தாமதமாக வந்த இந்திரன் அகலிகையை கெளதமன் மணமுடித்ததைக் கேள்விப்பட்டு கடும் சினம் கொண்டான். விஷம் தோய்த்த அம்பினை தன் மீது ஏவியிருந்தால் கூட இவ்வளவு கோபப்பட்டிருக்க மாட்டான்.   ஏமாற்றப்பட்டவர்கள் எப்போதும் பழிதீர்க்கக் காத்துக் கொண்டிருப்பார்கள். எந்த ஆடவனும் தான் ஏமாற்றப்பட்டதை சகித்துக் கொண்டிருக்க மாட்டான். ஒரு பெண்ணின் மீது கொண்ட ஆசை அவனை எந்த எல்லைக்கும் கொண்டு செல்லும். தந்திரமாக குறுக்கு வழியில் அவளை எவ்வாறு அடையலாம் என அவன் மனம் திட்டமிடும். அந்தச் செயலால் விளையப்போகும் விளைவுகளைப் பற்றி எண்ணிப் பார்க்காது. நியாயம் தன் பக்கம் இருப்பதாகவே நினைத்துக் கொள்ளும். கற்றுக் கொடுக்கப்பட்ட அத்தனை நியதிகளும் காற்றில் பறக்கவிடப்படும்.   உறங்கும் நேரத்தைத் தவிர மற்ற நேரங்களில் அகலிகையின் நினைவுகளால் அலைகழிக்கப்பட்டான் இந்திரன். அவன் மனது சூழ்ச்சி வலை பின்னியது. அகல்யாவின் மனதைப் புணர்ந்து அவளை தன்வசப்படுத்த நினைக்கிறான். பெண்ணாசையால் ஆட்கொள்ளப்பட்டவனின் சிந்தனைகள் மனிதத்தன்னையை மீறியதாகவே இருக்கும். அவளைக் கறைப்படுத்துவதன் மூலம் தன்னை ஏமாற்றிய கெளதமனைப் பழிதீர்த்துக் கொள்ளலாம் என இந்திரன் நினைக்கிறான். அவள் மீது கொண்ட மோகம் விருட்சமாக அவன் மனதில் வளர்ந்துவிட்டது அதை வேரோடு சாய்ப்பது அவ்வளவு எளிதான காரியமல்ல. அகலிகையை அடையும் வரை உறங்குவதில்லை என முடிவு செய்கிறான். மஞ்சத்தில் அகலிகையுடன் வீழ்ந்து கிடப்பதைப் போல கனவு காண்கிறான். எதிர்ப்படும் பெண்களெல்லாம் அவள் சாயலைக் கொண்டவளாகவே அவனுக்குத் தெரிகிறார்கள். அவனுடைய ஆண்மைக்கு உகந்தவள் அகலிகை மட்டுமே என இந்திரன் நினைக்கிறான்.   அடர்ந்த வனத்தில் சிறு குடிலில் வசிக்கும் கெளதமனும், அகலிகையும் தெய்வ நெறியோடு வாழ்ந்து வருகிறார்கள். கெளதமன் சேவல் விடிகாலைக் கூவும் போது நதியில் நீராடக் கிளம்புவான். அன்று சேவலைப் போன்று இந்திரன் விடிவதற்கு ஒரு சாமம் முன்பே கூவி விடிந்ததைப் போன்ற தோற்றத்தை ஏற்படுத்துகிறான். படுக்கையிலிருந்து எழுந்த கெளதமன் தான் கண்ட கனவுகள் நல்ல அறிகுறியாகத் தெரியவில்லையே என சஞ்சல மனதோடு எழுந்தான். எழுந்த பிறகு இன்னும் தூங்க வேண்டும் என்ற எண்ணம் அவனுக்கு எழுந்ததே இல்லை. ஆனால் இன்று எழுந்தது. ஏதோ ஒரு சக்தி அவனை படுக்கையில் தள்ளுவதுபோல் இருந்ததை அவன் உணர்ந்தான்.தன்னுள்ளே யாரோ கேவி அழுவது போல் இருந்ததுஅவனுக்கு. இன்று எனக்கு என்ன நேர்ந்தது என தன்னையே அவன் கேட்டுக் கொண்டான். சூரியஉதயத்துக்கு முன் நீராட வேண்டுமே, விடிந்துவிட்டால் மந்திர ஜபம் செய்ய முடியாமல் போகுமே. இன்று ஒரு நாள் தடைப்பட்டால் இது நாள் வரை செய்துவந்த தபஸுக்கு பலன் இல்லாமல் போய்விடுமே. இவ்வாறு கெளதமன் தன் தபஸைப்பற்றியே எண்ணிக் கொண்டிருந்தான். இது நாள் வரை அகலிகை அவனுக்கு ஒரு தாதியைப் போலத்தான் உதவிக் கொண்டிருந்தாள். கெளதன் சகுனத் தடையை மீறி வெளியே வந்தான். இது விதி வலியது என்பதையே காட்டுகிறது. சிறிது தூரம் சென்றவன் வானில் ஒளிரும் ஒரு நட்சத்திரத்தைக் கண்டான். இந்த நட்சத்திரம் வானில் தென்படுகிறதே அப்படியென்றால் விடிவதற்கு இன்னும் நேரமிருக்கிறது என்றல்லவா அர்த்தம், அப்படியென்றால் சேவல் கூவியது ஏமாற்று வேலையா என எண்ணிக் கொண்டே குடிலை நோக்கி விரைந்தான். அதற்குள் கெளதமனின் ஆத்மா அதலபாதாளத்துக்குள் வீழ்ந்துபடும் சம்பவம் குடிலுக்குள் நடந்தேறிவிட்டது. கெளதமனாக உருமாறி வந்தால் தான் அகலிகையின் மனதைப் புணர்வது சாத்தியமாகும் என இந்திரனுக்குத் தெரியும்.   அகலிகையோடு கூடியிருந்து விட்டு இந்திரன் வெளியே வந்தான். எதிரே கெளதம முனிவர் நின்று கொண்டிருந்தார். என்ன நிகழ்ந்தது என்பதை தனது ஞான திருஷ்டியால் அறிந்து கொள்கிறார். இந்திரன் ஒரு மானிட மகளின் மீது இந்த சக்தியை உபயோகிப்பான் என கெளதமன் நினைத்துப் பார்க்கக்கூட இல்லை. மோகத்தினால் ஆட்கொள்ளப்பட்டு எந்தவிதமான சிந்தனையோடு இவ்வுளவு காலம் வாழ்ந்து வந்தாயோ அது உன் உடல் முழுவதும் வரட்டும் என கெளதமன் இந்திரனை சபிக்கிறான். அகலிகை சமநிலை குலைந்தவளாய் குடிலுக்குள் அழுது கொண்டிருக்கிறாள். உருமாறி வந்தவனின் உள்ளத்தை நீ கண்டிருந்தாயானால் நானல்ல அவன் என தெரிந்திருக்குமல்லவா என்கிறார் கெளதமர்.   தாயானாலும், தாரமானாலும் சிவகாமியின் சிந்தை சிவனைப் பற்றியதே என்கிற மாதிரி இனி அகலிகை இந்திரனின் நினைவாகவே இருப்பாள். இந்திரன் தான் வசப்படுத்திய அகலிகையின் மனதை தனது கைப்பாவையாகப் பயன்படுத்தி அவளை எளிதில் தன் இச்சைக்கு உடன்படவைப்பான் என்பதால் கெளதமன் அகலிகையை கல்லாகிப்போவாய் எனச் சபித்தான்.   உருமாறி வந்தாலும் அவனுடைய உடல் அசைவுகள், மிருகபலம், உடல்வேட்கை மூலம் அவன் வேறொரு ஆடவன் என அகலிகையால் கண்டறிய முடியாமலா போயிருக்கும். ஒருவேளை அகலிகையின் ஆத்மஜோடி இந்திரனாயிருக்கலாம்!                             தெய்வம் தந்த வீடு   பிணத்தின் மீது காசை விட்டெறிந்து போவதைப் போலத்தான் எங்களுக்கு பிச்சையிடுகிறார்கள். வானக் கூரையின் கீழே தான் ஒவ்வொரு நாளையும் கழிக்கிறோம். விசேஷ நாட்களில் கோயில் வாசலே எங்களுக்கு கதி. கையேந்துபவன் மரக்கட்டைதான். சுயக்கொலை செய்து கொள்ளாமல் யாராலேயும் கையேந்த முடியாது. என்னோட நொண்டி, நொடமானவனெல்லாம் பிச்சை எடுக்கிறான். இவனுக்கு கால், கையை ஊனமாக்காம வயித்தை ஊனமாக்கியிருந்தான் அந்தக் கடவுள்னா இந்த நிலைமைக்கு அவன் வந்திருப்பானா?   கவலையைப் போக்கும் அருமருந்தாக நான் சிகரெட்டைத்தான் நினைக்கிறேன். பாம்பு கடிச்சாக் கூட நான் பயப்படமாட்டேன், இந்த மனுசப் பயல்களின் வாயிலேர்ந்து வர்ற வார்த்தை இருக்கே. ஆத்துல ஓடுற தண்ணீர் கூட எங்களைத் தீண்டுவதற்கு யோசிக்கும். எஜமானனுக்கு சேவகம் செய்ற நாய் எங்களைக் கண்டால் துரத்தும். எங்களுக்கு காசு போடுறவன் எப்படி சம்பாதிக்கிறான்னு யாருக்குத் தெரியும்.   கொஞ்ச நாளா சிறுக்கி மவ ஒருத்தி நான் போற இடத்துக்கெல்லாம் வந்துர்றா. அவ மடியில கிடக்கிற புள்ளைய பார்த்துட்டு மவராசனுங்க அவ திருவோட்டை நிரப்பிட்டுப் போறானுங்க. பிச்சைக்காரனுக்கு பொறந்தவன் அம்பானி ஆவணும்னு ஆசைப்பட்டா நடக்குமா? வாழ்ற வரைக்கும் வயித்துல இருக்குற நெருப்பை அணைக்க அல்லாடுறோம் அப்புறம் தீயில எரிஞ்சி சாம்பலாவுறோம்.   இந்த ரோட்டைக் கடக்க எவ்வளவு கஷ்டமாயிருக்கு. கீ கொடுத்த பொம்மை மாதிரி மனுசப்பயலுங்க அங்கேயும் இங்கேயும் போறானுங்க. மனுஷனுக்கு எங்க இப்ப மதிப்பிருக்கு எல்லாம் பணம் தான். எந்த வழியிலயாவது பணத்தை சம்பாதின்னு சொல்லிக் கொடுத்து தான் சின்ன புள்ளையிலேர்ந்து வளக்குறானுங்க. சொந்த பந்தந்தான் சிக்கலே. சிலந்தி வலையில சிக்குற இரை போலத்தான் நாம. அப்படித்தான் அந்தச் சிவன் பண்ணி வச்சிருக்கான்.   கோயில்ல அன்னதானத்துக்கு டோக்கன் தருவானுங்க. வயிறு நிரம்பின உடனே ஒரு திருப்தி வரும் பாருங்க அதுதான் கடவுள்னு நினைக்குறேன். இந்த உலகத்தை சாட்சியாய் இருந்து பார்க்கிறதுல ஒரு சுகம் இருக்கு. நாங்க மனுசப்பயலுங்ககிட்ட கையேந்துறோம், அவனுங்க சாமிகிட்ட பதவி உயர்வு, குழந்தை பாக்கியம்னு கையேந்தி நிக்கிறானுங்க.   பக்தியை வளர்க்கிறேனு சொல்லிகிட்டு காவி கட்டிகிட்டு அதையும் காசு பண்றானுங்க. இந்தக் காலத்துல கோயில்லேயும், ஆஸ்பத்திரிலேயும் தான் கூட்டம் அதிகமா இருக்கு. மனுசனை கூறு போட்டு ஆராய்ஞ்சவங்க சிவன், அவன் கிடுக்கி போடுறான் அம்மா, ஆத்தான்னு கத்துனா கேப்பானா? மனுசனுக்கு ஆசைங்க செவத்த தோலுக்கு, பணங்காசுக்கு. ஆசைய அடக்கினா சிவனாயிடுவோம்னு தெரியாதப் பயலுங்க சாவுகிராக்கிங்க.   தூங்குறப்ப இந்த உலகம் இருக்காங்க. பகல்ல மட்டும் தான் இருக்குதுனா அதுக்கு ஏங்க முக்கியத்துவம் கொடுக்குறோம். கனவு காணும்போது நிசம் போல இருக்குதுங்களா. கண் விழிச்சதுக்கப்புறம்தானேங்க கனவுன்னு தெரியுது. வாழ்க்கையே கனவுதான்னு சித்தர் சொன்னதை கேட்குறீங்களா நீங்க. உங்க சங்காத்தமே வேணாண்ணு தானேங்க ஒதுங்கி மலைல போய்ச் சித்தருங்க வசிக்கிறாங்க. அங்கயும் போய் பணம் பணம்னா வேறெங்கங்க அவங்க போவாங்க.   நான் விருப்பப்பட்டு பிச்சைக்காரனா ஆவுலங்க. என் ஜாதகத்துல சந்நியாச யோகம் இருக்குண்ணான், அதான் என் தலையெழுத்து இப்படி ஆகிப்போச்சு. கண்ணை மூடி கொஞ்ச நேரம் அமைதியா இருந்து பாருங்க முடியுதுங்களா? உள்ளுக்குள்ள புதையல் இருக்குங்க வெளி விஷயத்துல மனசை ஏன் அலையவிடறீங்க? சாவைக் கண்டு எனக்கு பயமில்லீங்க ஏன்னா நான் தனியாகத்தானேங்க அலையறேன். மனுசப்பயலுங்க வாயை வளத்துட்டானுங்க அவனுங்களால பேசாம இருக்க முடியாது. வாயாலதான் வளர்ந்து நிக்கிறானுங்க பேமானிங்க.   இந்த உடம்பே அவன் கடனா கொடுத்தது தானுங்க. நீங்க போடுற ஆட்டத்தையெல்லாம் அவன் பார்த்துக்கிட்டுத் தானுங்க இருக்கான். நெஞ்சை நிமித்தி நிற்கிறவனுங்க எல்லாம் அவன் காலுல விழுந்தாவனுமே அப்ப என்ன பண்ணுவானுங்க. உடம்பு விழுந்திடக் கூடாதுன்னு தாங்க பிச்சையெடுக்கிறேன். மனசுக்கு தீனி போட்டனா எத்தனை தடவை பிறக்குறதுங்க இங்க.   மனுசனுக்கு நாக்குல விஷம் இருக்குங்க. வார்த்தையை விடும்போது யோசிக்கிறதே இல்லங்க அவன். அகந்தை இருக்கிற வரைக்கும் மனுசனால கடவுள் இருக்கிற திசையில கூட திரும்ப முடியாதுங்க. புலன்கள் வழியே மனசை செலுத்திக்கிட்ட இருந்தோம்னா முடிவு பயங்கரமாயிருக்குங்க. மனசோட லகானைப் புடிச்சி இழுக்கலேனா அது ஊர் மேயத்தாங்க போவும். சொல்லித் தெரியறது இல்லீங்க பட்டாத்தான் புரியும் போங்க.   அருணகிரிநாதரை ஏன் புள்ள பாடவைச்சான்? பட்டினத்தாரை ஏன் அப்பன் கரும்போட ஓடவைச்சான்? மனம் தாங்க படம் காட்டுது. நடிங்க வேணாங்கலை, பாத்திரத்தோட ஒன்றிப் போயிட்டா எப்படிங்க? ஆத்மா இருக்கோ இல்லையோ அதப் பத்தி பேச வேணாங்க. மரணத்தை எதிர்கொள்றதுக்கு தயாராயிட்டீங்களான்னு உங்களையே நீங்க கேட்டுப்பாருங்க. எல்லாரும் எண்பது வயசு வரை வாழ்றது இங்க நிச்சயமில்லீங்க.   நட்சத்திரமெல்லாம் கண்ணுதானுங்க அது உங்களையே பார்த்துகிட்டு இருக்கிறதா தோணலை. நாலு பேரு இருக்கிற மட்டும் நல்லவனா நடிச்சா எப்படிங்க. மனசை மனுசன் கோயிலாவா வச்சிருக்கான், குகையாத்தாங்க வச்சிருக்கான். சமயம் பார்த்து வேட்டையாடுற விலங்காத்தாங்க அவன் இன்னும் இருக்கான். வேஷத்தை கலைச்சதுக்கப்புறம் இன்னொரு உடம்புக்கு ஆளாப்பறந்தா எப்படிங்க.   சிவன் யாருக்காவது விதிவிலக்கு அளிச்சான்னு கேள்விப்பட்டிருக்கீங்களாங்க. விதி வாழ்க்கையில எப்படியெல்லாம் விளையாடுது பாருங்க. எனக்கு தவறு செய்ய வாய்ப்பு இல்லீங்க, அப்படினா சந்தர்ப்பம் கிடைக்கிறவன் தவறு செய்யலாம்னு அர்த்தமாங்க.   கடவுளே விரும்பினாலொழிய அவன் தரிசனம் பெற முடியாதுங்க. கத்தி கூப்பாடு போடுங்க அவன் இறங்கிவரானானு பார்ப்போம். நாங்க மட்டும் பாவப் பிறப்பாங்க. எல்லோருக்கும் முடிவு ஒண்ணு தானுங்களே. எரிச்சாலும், புதைச்சாலும் கடைசியிலே மண்ணுக்கு இரையாகத் தானே போறோம்.   கடவுளுக்கு பணத்தால அபிஷேகம் பண்றதுனால பாவக்கணக்கு தீர்ந்துபோயிடுமாங்க. வினைப் பயனை அனுபவிக்கத்தாங்க உடலெடுக்கிறோம். இயேசு, புத்தரெல்லாம் அன்பை தானே போதிச்சாங்க. இப்ப போய் மேடையேறி அகிம்சையை பிரசாரம் பண்ணினா பைத்தியம்னு சொல்ற கூட்டங்க இது. அதிகாரத்துல உள்ளவங்க வன்முறையைப் பயன்படுத்தி தங்களோட காரியத்தை சாதிச்சிக்கலைன்னு சொல்லுங்க பார்ப்போம். நாடு எங்கங்க போய்க்கிட்டு இருக்கு. மனுஷன் ஏங்க மனுசனா இருக்க மாட்டேங்கிறான். ஓங்குற அரிவாள கழுத்தில இறக்க எப்படிங்க மனசு வர்றது.   திருவள்ளுவலேர்ந்து எல்லோரும் சொல்லிட்டுத்தானே போயிருக்காங்க. நேத்தி இருந்தவன் இன்றில்லை. அழியப் போற உடம்பைச் சொந்தம் கொண்டாட சண்டை போட்டுக்காதீங்க. ராமன் ஏகபத்தினிவிரதன் அப்படிங்கிறதுனால தாங்க கோயில் கட்டி கும்பிடுறோம். ராமனை கும்பிட்டுட்டு இராவணனா ஏன் நடந்துக்கறீங்க. எத்தனை மகான்கள் இருந்த பூமிங்க இது. அவங்களை கும்பிடச் சொல்லித்தானுங்களே உங்களை வளர்த்தானுங்க.   பட்டினத்தார்       ‘பிறந்த இடத்தை தேடுதே பேதை மனம்             கறந்த இடத்தை நாடுதே கண்’ என்று ஏன் பாடிவச்சான்னு எண்ணிப் பாருங்கங்க. வாழ்க்கைங்கிறது கண்ணாடிப் பாத்திரம் மாதிரிங்க உடைச்சா ஒட்ட வைக்க முடியுமாங்க. வெறும் தோல் விவகாரத்தால வாழ்க்கையை இழந்துடாதீங்க. நான் பிச்சைக்காரன் தாங்க ஒரு விதத்துல நான் சக்கரவர்த்திங்க. உங்க வேலைவெட்டிக்கு நடுவுல என்னையத் தேடி கோயில் கோயிலா அலையாதீங்க. ‘உனக்கு நீயே ஒளியாய் இரு’ன்னு புத்தர் தானுங்களே சொல்லிட்டு செத்துப் போனது. கோயில்ல உள்ளது சாமியா? கல்லான்னு அவரைக் கேளுங்க சொல்லுவாறு. நீங்க கத்துக்கிற மனநிலைல இருந்தா இந்தப் பிச்சைக்காரன்கிட்டக் கூட பாடம் படிக்கலாம்ங்க. இந்த வாழ்க்கைய நிஜம்னு நினைச்சி உடும்பாப் புடிச்சிக்காதீங்க. உங்க ஊருல சுடுகாடு இருக்குங்களா? சிதை எரியிறதை ஒரு அஞ்சு நிமிஷம் பார்த்துண்டு வாங்க போங்க!         கருவறை வாசனை   நதிப்பிரவாகமாக சிந்தனை ஓட்டம் நகர்ந்து கொண்டிருந்தது. சில வேளைகளில் இப்படி அமைந்துவிடுகிறது. கடந்த காலத்தில் நடந்த சம்பவங்கள் இங்கொன்றும் அங்கொன்றுமாக ஞாபக அடுக்குகளிலிருந்து மேலெழும்பும். பேனா நகர மறுக்கிறது. சிந்தனை ஓட்டம் மட்டும் நின்றபாடில்லை. காதலித்தவளை அடிக்கடி இந்த மனம் சீண்டிப்பார்க்கிறது. பெண்களுக்கு இருமனமாக இருக்க வேண்டும். கண்பார்த்து சிரித்ததையும், அவனை நினைத்தவுடன் நாணத்தால் முகம் சிவந்ததையும் எளிதாக மறந்து விடுகிறாள். மறந்து விடுகிறாள் என்பது சரியாகாது. அந்த மனத்தை புறந்தள்ளி கொண்டவனை இன்னொரு மனத்தின் சிம்மாசனத்தில் அமர்த்திவிடுகிறாள். பெண்ணால் தான் சிவன் பித்தனாகி இருப்பான். கண்ணைப் படைத்து பெண்ணைப் படைத்த இறைவன் கொடியவன் தான். பள்ளியின் நீலநிற தாவணியும் வெள்ளை ரவிக்கையும் அவளுக்கு பொருத்தமாயிருக்கும். கலர் என்றால் அப்படியொரு கலர். இவன் கறுப்பு அரூபி. இப்போது தான் அரூபி என்று நினைத்துக் கொள்கிறானே தவிர, அப்போது அப்படியில்லை. இருவரின் கண்களும் நேருக்கு நேர் சந்தித்துக் கொள்ளும் போது இவன் கால் பூமியில் இருக்காது. இப்போது அவள் என்ன செய்து கொண்டிருப்பாள். குழந்தைக்கு பாலூட்டிக் கொண்டிருப்பாளோ. என் நினைவுகளை குழி தோண்டி புதைத்திருப்பாள். பெண்கள் அன்பை நிராகரித்து பணத்தையே பெரிதென மதிக்கிறார்கள். இந்த அனுபவம் அவர்களுக்கு எங்கிருந்து ஏற்பட்டிருக்கும். அரசனின் அந்தப்புர நாயகிகளெல்லாம் அரசனின் அழகுக்காகவா அவனுடன் படுக்கையை பகிர்ந்து கொண்டார்கள். இராமாயண காலத்திலேயே சாம்ராஜ்யத்துக்கு அதிபதியாக இருந்தால் தான் சுயம்வரத்திலேயே பங்கேற்க முடியும். காதல் புனிதமானது தான். ஆனாலும் மன அழுக்கு காதலையும் விட்டு வைக்கவில்லை. தங்க நகைகள் மீது பெண்கள் ஏன் பேயாய் அலைகிறார்கள் என எனக்குப் புரியவில்லை. இவனுக்கு வக்கிருந்தால் வாங்கித் தந்திருப்பான். இப்படி எழுதிக் கொண்டிருக்க மாட்டான். இப்போது காதலை நேரில் சொல்ல தைரியம் இல்லாதவர்கள். செல்போனில் மெசேஜ் அனுப்பிவிடுகிறார்கள். அன்று அப்படியா? சினிமாவின் பாதிப்பு இளசுகளிடம் இன்று கொஞ்சம் அதிகமாய்த்தான் இருக்கிறது. அன்று அப்படி அல்ல. என் காலத்தில் காதலை கடிதம் சுமந்தது மாதிரி, இன்று காற்று சுமக்கிறது. எத்தனை பேர்களின் காதல் காற்றலைகளில் அலைந்து கொண்டிருக்கிறதோ? எழுத உட்கார்ந்த நேரமே சரியில்லை. இந்த காதல் வேதாளம் இப்படி தோளில் அமர்ந்து கொண்டு கேள்வி மேல் கேட்டு இம்சைப்படுத்துகிறது. எல்லாரையும் போல என் முதல் கவிதையும் காதலியை வர்ணித்து எழுதப்பட்டது தான். காதலைவிட பைத்தியக்காரத்தனம் இந்த உலகில் வேறெதுவும் கிடையாது. எழுதி பிச்சை கேட்டது போதும் நாலுகாசு சம்பாதிக்க வழியைப் பாரு இது என் வீட்டுக்காரி. கல்யாணச் சந்தையில் பெண் தன் எடைக்கு நிகராக அவனிடம் பணம் இருக்கிறதா எனப் பார்க்கிறாள். அதுசரி இதை ஏன் நான் இந்த நாற்காலியில் உட்கார்ந்து யோசித்துக் கொண்டிருக்கிறேன். பணத்தை எங்கே தேடுவேனென்று ஏற்கனவே கேட்டாகிவிட்டதல்லவா? எழுத்தை நம்பி வாழ்வதென்பது தற்கொலைக்குச் சமமானது. எழுதிப் பிழைக்கிறவர்களுக்கு சினிமாவின் தயவு அவசியமாய் தேவைப்படுது. ஆனா அங்க எழுதறவனை நிஜார கழட்டிட்டுத்தான் ஆடவிடறாங்க. இந்த நினைவுக்கு கப்பம் கட்ட வேண்டியதில்லை. அதனால் தான் அவளையே நினைத்துக் கொண்டுள்ளது. சித்தர்கள் சொல்லித் வைத்ததற்கெல்லாம் அர்த்தம் இருக்கத்தான் செய்கிறது. என்னைப் பொறுத்தவரை கொடுத்துக் கெடுக்கிறான் சிவன் என்று தான் சொல்வேன். உடலைப் பேணுவதிலேயே வாழ்நாளை செலவழிக்கிறோம். இறுதி ஊர்வலத்துக்குக் கூட குளிப்பாட்டித் தான் கூட்டிச் செல்கிறார்கள். இந்தக் காற்றையும் விலைகொடுத்து வாங்க வேண்டிய காலம் வரலாம். அலைந்து கொண்டிருக்கிற மனம் ஆன்மாவில் லயிப்பதைத்தான் உறக்கம் என்கிறோமோ? மூளை நரம்புகள் விண்ணென்று தெரிக்கிறது. காபி அருந்த வேண்டிய நேரம் வந்துவிட்டது. என் எழுத்து யாருக்கு பிரயோஜனமாகும். எழுதுவதற்கு பேப்பர், பேனா வாங்க வேண்டியிருக்கிறதே அவனுக்கு பிரயோஜனமாகாதா என்ன. இரவின் ரகசியம் சிவனுக்கு மட்டும் தான் தெரியும். அழகானவர்களின் மண்டையோட்டினை பார்த்து தான் அவன் தன் கழுத்தில் மாலையாக அணிந்திருக்கிறான். காலவெள்ளம் எவ்வளவு வேகமாக போய்க் கொண்டிருக்கிறது. இந்த உலகம் மனிதனுக்கானது மட்டுமா என யோசிக்க வேண்டியிருக்கிறது. கைநோகிறது பேனா நகரமாட்டேன் என்கிறது. நினைவுக் கிணற்றில் தூர் வாரினால் இன்னும் என்னென்ன அகப்படுமோ? கண்களை மெல்ல மூடினேன். நினைவு அலைகள் மட்டும் எழும்பியபடியே இருந்தது. சமீபகாலமாக மனதில் ஏதோ அசம்பாவிதம் நடந்துவிடப் போகிறதென்று பயம் கவ்விக் கொள்கிறது. ஒரு நூறு வருடத்துக்கு முன் பிறந்திருக்கக் கூடாதா என ஏக்கமாக உள்ளது. தடுக்கி விழுந்தவனை வியாதி வந்து படுக்க வைத்தது. உடல் பெரும் சுமையாக இருக்கிறது. உறக்கத்துக்கு மனம் ஏங்கித் தவிக்கிறது. காரணமில்லாமல் காரியமில்லை செய்த பாவத்துக்கு உடனுக்குடன் தண்டனை கிடைத்துவிடுகிறது. காலில் குத்தியிருந்தால் பிடுங்கிவிடலாம் மனதில் குத்திய முள்ளை என்ன செய்வது. காலம் தாழ்ந்துதான் நான் விழித்துக் கொண்டேன். அப்போது நிம்மதி என்னைவிட்டு தொலைந்து போயிருந்தது. இங்கு எல்லாவற்றுக்கும் ஒரு விலை கொடுக்க வேண்டியிருக்கிறது. அன்பு செலுத்த யாருமில்லாதபோது மனிதன் அனாதையைப் போல் உணருகிறான். ஏற்கனவே பேதலித்துப் போன மனதை காலமும் பயமுறுத்துகிறது. நேரம் நகர்ந்து கொண்டிருக்கிறது. மரணத்திற்குப்பின் வாழ்வு இருந்தால் எனக்கு அது கொடியதாகத்தான் இருக்கும். மாம்சம் சாம்பலாக வேண்டும். நினைவு சூன்யமாக வேண்டும். ஒவ்வொன்றாக என் கையைவிட்டு போய்க் கொண்டிருக்கிறது. நம்பிக்கையின் ஆணிவேரையே வாழ்க்கை அசைத்துப் பார்க்கிறது. உறவுகள் எத்தனை காலத்துக்கு நம் கூடவே இருக்கும். மனிதனின் கையாலாகாத தனத்தை கடவுள் உணர்த்திக் கொண்டே இருக்கிறான். அவனிடமிருந்து ஒவ்வொன்றாக பறித்துக் கொள்கிறான். அம்மாவின் கருவறை கொடுத்த நிம்மதியை வேறெங்கே தேடுவேன். தாயின் அன்புக்கு நிகரானது இவ்வுலகில் வேறொன்றுமில்லை. இப்போது ஏன் என் நினைவு அம்மாவை வட்டமிடுகிறது எனத் தெரியவில்லை. இன்னும் அவள் என்னை சுமந்து கொண்டுதான் இருக்கிறாள். அவள் இல்லாத வாழ்க்கையை என்னால் நினைத்துப் பார்க்கக் கூட முடியவில்லை. இந்த உலகத்தில் என்னைத் தன்னந்தனியாக விட்டுவிட அவளுக்கு இஷ்டமிருக்காது. பெண் என்ற வட்டத்துக்குள் தான் இன்று வரை என் வாழ்க்கை வட்டம் சுழன்று கொண்டுள்ளது. விடை தெரியாத புதிராகத்தான் விடிகிறது பொழுதுகள். இயேசு சிலுவை சுமந்து போது மேரிக்கு எப்படி இருந்திருக்கும் என யோசித்துப் பார்க்கிறேன். தனது மகனுக்கு தன் கையால் காரியம் செய்வது இறப்பை விடக் கொடுமையானதல்லவா? சுழன்றடிக்கும் வாழ்க்கைப் புயல் யாரை எங்கு கொண்டு சேர்க்கும் என யாருக்குத் தெரியும்?       அகம் பிரம்மாஸ்மி   மனித வாழ்க்கை இன்பத்தின் தேடலாகவே உள்ளது. அவன் துக்கத்தைத் தாங்கிக் கொள்வதெல்லாம் இன்பம் அடுத்து வரும் என்ற நம்பிக்கையில் தான். வாழ்க்கைக் கடலில் ராட்சச அலைகளுக்கெதிராய் மனிதன் நீந்த வேண்டியுள்ளது. மனிதன் தன்பிறப்பை ஒரு விபத்து என்று தான் கருதுகிறான். மனிதனின் மனதில் எழும் ஆசைகளே அவன் பாவ காரியம் செய்ய ஏதுவாய் அமைகிறது. மனம் ஐம்புலன்களின் வழியே இன்ப நுகர்வின் மீது வெறி கொண்டு அலைகிறது. மனிதன் பாவப்பிறவி அவன் மனதின் கைப்பாவையாக இருந்து தான் இறுதியில் இறக்கிறான்.   இந்த மனதிற்கு பெண்ணை அணைக்க இரண்டு கைகள் போதவில்லை என்பதால் தான் இவ்வளவு உருவங்களை எடுத்துள்ளது. மனிதனை மோகத்தீயில் எரிய வைத்து போதைக்கு அடிமையாக்கி வைத்துள்ளது. அறுபது வயதில் மரணம் வருமென்றால் அதுவரை மனம் பேயாட்டம் ஆடுகிறது. பொம்மலாட்ட பொம்மையைப் போன்று தான் மனிதன் மனதினால் ஆட்டுவிக்கப்படுகிறான். கிளர்ச்சியூட்டும் கனவுகளைத் தோன்றச் செய்து மனிதனின் ஆசைத் தீயை கொளுந்துவிட்டு எரியச் செய்கிறது.   மனம் இந்த மாய லோகத்தை சிருஷ்டித்து தனது அடிமைகளான மனிதர்கள் மூலம் காரியத்தை சாதித்துக் கொள்கிறது. பிரபஞ்ச ரகசியத்தை அறிந்த மனதிற்கு பூமியை ஆளுமை செய்வது ஒன்றும் கடினமானதல்ல. மனம் தனது ஆய்வுக்கூடமான இந்த உலகத்தில் மனிதர்களை மோதவிட்டு ரசித்துக் கொண்டிருக்கிறது. மரணம் விடுதலையளிக்கும் வரை மனிதன் மனதிற்கு ஏவல் புரிந்துதான் ஆகவேண்டும்.   ஆதிகாலம் தொட்டே மனம் தனது கட்டுப்பாட்டை உடைத்தெறிந்த மனிதனுக்கு மரணத்தையே பரிசாகத் தந்திருக்கிறது. சூட்சும மனதுக்கு ஸ்தூல உடல் கட்டாயத் தேவையாய் இருக்கிறது. பாவ காரியத்தில் மனிதனை விழவைப்பதே மனதின் வேலையாய் இருக்கிறது. மனிதனை சக்கையாக பிழியும் வரை மனதின் வேட்கை தீருவதில்லை. குழந்தைகளுக்கு பொம்மையைக் காட்டி வழிக்குக் கொண்டு வருவதைப் போல் மனம் மனிதனுக்கு கடவுளைக் காட்டி தனக்கு சேவகம் செய்வது தான் உடலெடுத்ததின் பயன் என்று மனிதனை உணர வைக்கிறது. மனிதனுக்கு ஓய்வளிக்கும் இரவில் மனம் வேறொரு உடலை எடுத்துக் கொள்கிறது.   அபூர்வமான சில பிறவிகள் மனத்துடனான தனது தொடர்பை துண்டித்துக் கொள்கின்றனர். அத்தகையவர்களை அவர்கள் வாழ்ந்த காலகட்டத்தில் மனிதர்கள் ஏசுகின்றனர். பல நூற்றாண்டுகள் கடந்த பின்னர் இறைத் தூதர்கள் எனப் போற்றுகின்றனர். தான் விழுந்து கிடப்பது பாவச் சேற்றில் என்று உணர்ந்திருந்தாலும் மனிதன் அதிலிருந்து மீள விருப்பப்படவில்லை. விட்டில் பூச்சியைப் போல மனதில் எரியும் ஆசைத்தீ மனிதனைச் சாம்பலாக்குகின்றது. பாவ காரியம் செய்ததற்காக பதறாதே பரிகாரம் செய்து தப்பித்துக் கொள்ளலாம் என்கிறது மனம். ஆண், பெண் விளையாட்டில் மனம் சலிப்படைவதே இல்லை.   இதோ இந்த பரசுராம் உட்கார்ந்திருப்பது இந்த ஊரிலுள்ள பழமையான சிவன் கோயிலில். சிவனுக்குத் தெரிந்த மனதின் ஆடுபுலி ஆட்டமெல்லாம் பரசுராமுக்குத் தெரியாது. ஒரு இக்கட்டான சூழ்நிலையே அவனை இங்கே வரவைத்தது. தற்கொலை முடிவுடன் உட்கார்ந்திருக்கும் அவன் மனதில் ஆயிரம் கேள்விகள் எழுந்தது. வாழ்வதற்கான சாத்தியக்கூறுகளை மனம் தேட ஆரம்பித்தது. ஆனாலும் அவன் தன் தற்கொலை முடிவில் உறுதியாக இருந்தான். அவனுக்கு அம்மாவின் ஞாபகம் வந்தது. கண்ணில் நீர் அரும்பியது. அவனுக்கு தனக்குத் தண்டனை கொடுத்துக் கொள்வதைவிட வேறு வழி தெரியவில்லை.   இந்த விபரீதமான முடிவு எடுப்பதற்கு தானே காரணம் என தன்னைத் தானே நொந்துகொண்டான். சாதாரணமாக எறும்பு கடித்தாலே சுளீர் என்கிறதே மரணம் வலி மிகுந்ததாக இருக்குமா என அவன் யோசித்தான். ஏதோவொரு புத்தகத்தில் அவன் ஆன்மாவைப் பற்றி படித்திருந்தான். அப்படி இறப்புக்குப் பின் வாழ்க்கை இருக்குமாயின் அது தனக்கு மிகுந்த சங்கடத்தைத் தரும் என எண்ணினான். தான் வாழ்ந்த வாழ்க்கையை முற்றிலும் மறக்கவே அவன் எண்ணினான்.   உயிர் உடலுக்குள் எங்கிருந்து இயங்குகிறது. மரணத்தின் போது எது பிரிகிறது. அப்படி உயிர் பிரிந்தால் இடுகாட்டில் என் உடல் எரிக்கப்படுவதை என்னால் பார்க்க முடியும் அல்லவா? இறந்த பிறகு வாழ்க்கையில் நடந்த சில சம்பவங்கள் அவ்வப்போது ஞாபகத்தில் வந்தால் நான் என்ன செய்வது. தற்கொலை செய்து கொண்ட பிறகு வாழும் ஆசை வந்தாலும் உடலில் மீண்டும் புக முடியாது அல்லவா? என்றோ வரப்போகும் மரண அனுபவத்தை வலிந்து வரவழைத்துக் கொண்டால் அது தவறா?   ஒருவனது இருப்பை அழிக்கும் மரணத்தைப் போன்றதொரு கொடியது உலகில் இல்லையல்லவா. ஆனாலும் வாழ்நாள் நீண்டு கொண்டே சென்றால் சலிப்பு ஏற்படாதா? மரணம் இளைப்பாறுதலா, தண்டனையா? அசையாமல் கிடக்கும் உடலைப் பார்த்தால் மனம் பீதியடைகிறதே ஏன்? உயிர் வெளியேறினால் இரத்த ஓட்டம் நின்றுவிடும் என்கிறார்களே, தூக்கத்தில் இரத்த நடைபெறும் போது உயிர் எப்படி வெளியில் சென்று திரும்புகிறது. விழித்த பின்புதானே கனவு என்று தெரிகிறது. அதுவரை நிஜம் போலத்தானே தோன்றுகிறது. இந்த இரவில் மரணித்துவிடவேண்டும் என்று கண்மூடிய பிறகு காலையில் மீண்டும் விழித்தெழுவது கொடுமையானதல்லவா?   தற்கொலை செய்து கொண்டால் சுவர்க்கத்தில் நுழைய முடியாதா? பூமியிலேயே வாழ்நாள் முடியும் வரை பேயாக அலைய வேண்டுமா? மரணத்திப் பிறகான வாழ்வைப் பெறுவதற்கும் நிராகரிப்பதற்கும் மனிதனுக்கு உரிமையில்லையா? புத்தர் போதித்த சூன்யவாதம் மெய்யா இல்லையா என்பது மரணிக்கும் போதுதான் தெரிய வருமா? வாலிப வயதில் இருக்கும் என்னால் வைராக்யமாகத் தேகத்தை உதற முடியாதா? என் உடலை மாய்த்துக் கொள்ள நான் யாரிடம் அனுமதி கேட்க வேண்டும்? தற்கொலை செய்து கொள்பவர்களை கோழை என்கிறார்களே, அதற்கு எவ்வளவு வைராக்கியம் வேண்டும். சிலுவையில் அறையப்பட்ட இயேசுவுக்கு கடவுளின் அசரீரி கேட்டதாமே அது உண்மையாகவா?   தோற்றவனின் டைரிக் குறிப்பை இந்த உலகத்தில் யார் தான் படிக்க முன்வருவார்கள். என் முடிவுக்கு கர்மவினை மட்டும் தான் காரணமா? அப்படியென்றால் பாவக்கணக்கு தீரும்வரை பிறவியெடுக்க வேண்டியது தானா? எனக்கு இது தான் விதிக்கப்பட்டது என எண்ணிக் கொள்ளவா? அடுத்து எங்கு யாருடைய கருவில் புக வேண்டும் என நிர்ணயிப்பது யார்? அப்படியென்றால் இந்த பூலோகம் ஒரு பத்ம வியூகமா எந்த மனிதனாலும் வியூகத்தை உடைத்து வெளியேற முடியாதா? கடவுளுக்கு அறம் தான் முக்கியமா உயிர்களில்லையா? முகமூடிகளை நம்பி ஏமாந்ததால் தானே இந்த நிலை எனக்கு ஏற்பட்டது.   பந்தயத்தில் ஓடி ஜெயிக்க முடியவில்லை, என்னால் பந்தயத்தை வேடிக்கை பார்க்கத்தான் முடிந்தது. வெற்றி மாலை சூடியவர்களுக்குத் தானே பெண்ணும், பொன்னும். என்னால் பணத்தை வேட்டையாட முடியவில்லை. எந்த வழியில் வந்தால் என்ன பணம் பணம் தானே. மாதம் ஐம்பதாயிரம் என்றால் பெண்ணைப் பெற்றவர்கள் வாய் பிளக்கிறார்கள். என்னால் ஐயாயிரம் கூட சம்பாதிக்க வக்கில்லாதவனாக இருக்கிறேன். பணத்தைப் பெரிதாக மதிக்கும் மனிதனை கடவுள் தன்னுடைய படைப்பு என்று சொல்லிக் கொள்வானா? ஏங்கி ஏங்கிச் சாக வேண்டியது தான் என் தலையெழுத்தா?   தேவையான அளவு பணமிருந்தால் நான் இங்கு வந்து உட்கார்ந்து யோசித்துக் கொண்டிருப்பேனா? யாரோ முகம் தெரியாதவர்கள் என்னைப் பழி தீர்த்துக் கொள்கிறார்கள். என் சிறகை முறித்து அவர்களின் அடிமையாக்க முயலுகிறார்கள். நான் வேதனைப்படுவதைப் பார்த்து குதூகலிக்கிறார்கள். என்னை மரணக் குழியில் தள்ளிவிட்டு கைகொட்டிச் சிரிக்கிறார்கள்.   அப்போது கோயிலின் மணியோசை அவன் சிந்தனையைக் கலைத்தது. திரும்பிப் பார்த்தான் வயதான மூதாட்டி மூளை வளர்ச்சி குன்றிய இளைஞனை தனது இடுப்பில் சுமந்து கொண்டு மணியடித்துக் கொண்டிருந்தாள். பரசுராமுக்கு தனது அம்மாவைக் காணவேண்டுமென்ற அவா எழுந்தது. விறுவிறுவென எழுந்து நடந்தான். ஏதோ அவனை உந்தித் தள்ளியது.   காலணியை அணிந்து கொண்டான். வாசலில் அமர்ந்திருந்த பிச்சைக்காரனின் திருவோட்டுக்கு அருகில் சில்லறைகாசுகள் சிதறிக் கிடந்தது. அதைப் பார்த்த பரசுராம் சற்றும் யோசிக்காமல் அதைப் பொறுக்கி திருவோட்டில் போட்டான். அண்ணாந்து பரசுராமைப் பார்த்த பிச்சைக்காரன். “ ஓ சிவனா உன் ஊர் திருவாலங்காடுதானே, நீ இங்க சுத்திறியா?” “ மரணப்புதிருக்கு விடை தேடுறியா?” “ மரணத்தோடு விளையாடுறது தானே உன் பொழுதுபோக்கு!” “ உன் சைவக் கொடிதான் இன்னும் பறக்குதான்னு பார்க்க வந்தியா?” “ சைவ நெறியை மீறுனதுனால சித்தருங்க உன்னைய அலைய உட்டாங்களா?” “ அடியவர்க்கு சிவனாக மட்டும் இருந்திருந்தீனா இந்த நிலை வந்திருக்குமா?” “ வாழ்க்கை வானம் மாதிரி துன்பமேகம் போகும் வரும், பித்தா, பிறைசூடி போய்வா போய்வா!” என்றான் இரண்டு கைகளையும் உயர்த்தி பரசுராமைப் பார்த்து அந்த பிச்சைக்காரன்.     போதி   ஆசை, வெறி இரண்டிற்கும் வேறுபாடு இருக்கிறதா என்ன. மனதை அடக்கத் தெரிந்திருந்தால் மனிதன் அத்துமீறி குற்றம் இழைப்பானா? ஆதாம் அறிவுக் கனியை உண்ட போது உணர்ச்சி வெள்ளம் கரையை உடைத்து பாய்ந்தது. எண்ண அலைகள் மனதில் எழுவதும் அடங்குவதுமாகத் தான் இருக்கும். எண்ணத்தின் மூலவேர்களை ஆராயச் சொன்ன சாதுக்கள், எண்ணத்தின் பின்னாலிலிருந்து உன்னை இறைவன் பார்க்கிறான் என்றார்கள்.   ஸ்ரீராமர் தெய்வமாக போற்றப்படுவதற்கு பதிவிரதன் என்ற ஒரு காரணம் போதாதா. அடிமை சேவகம் செய்து பிழைக்கும் நமக்கு சந்தர்ப்பம் அமையவில்லை அவ்வளவுதான். பத்தாயிரம் மனைவியரைக் கொண்ட தசரதனுக்கு பிறந்தவர் ஒழுக்கசீலராக வாழ்ந்தார் என்றால் எவ்வளவு வைராக்கியம் அந்த மனிதருக்கு இருந்திருக்க வேண்டும்.   கிறித்தவத்தில் சொல்வார்கள் ‘உன் பிதா பரமண்டலத்தில் உத்தமராக இருக்கிறார் என்கின்ற ஒரே காரணத்திற்காக நீ உத்தமனாக இருக்க வேண்டும்’ என்று. இந்தக் கணினி யுகத்தில் மனிதன் தவறு செய்ய யோசிப்பதில்லை. அதன் விளைவுகளைப் பற்றியும் எண்ணிப் பார்ப்பதில்லை. உடலெடுத்ததே சுகத்தை அனுபவிப்பதற்காகத்தான் என அவன் நினைக்கிறான்.   செய்த தவறுக்கு தண்டனை கிடைக்காமல் தப்பிவிடலாம். ஆனால் மனதில் குற்றவுணர்ச்சி இல்லையென்றால் அவனே அரக்கன். இ.பி.கோ சட்டம் மாதிரி கடவுளின் விதி இந்த உலகத்தில் செயல்படுகிறது. வாழ்வின் ஒவ்வொரு தருணத்திலும் நாம் அவ்விதியிடமிருந்து தீர்ப்பினைப் பெறுகிறோம். ஒரு மனிதனின் இருப்பை அழிக்க முயல்பவன் மனஅளவில் இன்னும் மிருகமாகத்தான் இருக்கிறான்.   கொலை பாதகன் தன் அந்திம காலத்தில் மரணத்தை எதிர்நோக்கும் போது மிகுந்த துன்பத்தை அனுபவிப்பான். முக்கியப் பிரஞை என்பதற்காக இறந்தபின் அவனை கடவுளுக்கு அருகில் அரியாசணத்திலா அமர வைப்பார்கள். மோசஸின் கடவுள் தான் ‘கண்ணுக்கு கண், பல்லுக்கு பல்’ என்றாரா இல்லை. உண்மையான கடவுளும் அதே கொள்கை உடையவர் தான்.   ஒரு கன்னத்தில் அறைந்தால் மறு கன்னத்தைக் காட்டலாம் தான். அது உள்ளுக்குள் கடவுளை பிரவேசிக்கச் செய்யும். ஆனால் இறப்பிற்கு பிறகான வாழ்க்கைக்காக அவயங்களை அடக்கிக் கொண்டா இருக்கிறோம். ஒருவர் எத்தகையவர் என்பதை அவரின் மரணமே தீர்மானிக்கிறது. உயிர்த்தெழுந்த போதுதானே உலகம் அறிந்துகொண்டது இயேசு கடவுளின் குமாரன் என்று.   இறைவனின் ஆட்சி அதிகாரம் அதாவது கடவுளின் மேலாதிக்கம் இன்றைய உலகத்தில் குறைவாகவே உள்ளது. அறம் நிலைநிறுத்தப்பட வேண்டுமென்ற விருப்பமுள்ள மனிதர்கள் இந்த உலகத்தில் பிறப்பது இல்லை. கண்டுபிடிப்புகள் மிகுந்த இந்தக் காலகட்டத்தில் மனிதன் கைவிடப்பட்டுவிட்டான். இந்த உலகம் கைவிடப்பட்ட உலகமாகிவிட்டது. இறைவனை சொந்தம் கொண்டாடுபவர்கள் களங்கமற்றவர்களாக இல்லை. தங்களின் வழியே சிறந்தது எனச் சொல்லிக் கொள்ள இங்கே யாருக்கும் அருகதை இல்லை.   கடவுளின் வெறி இருந்த காலம் மலையேறிவிட்டது. இந்த உலகம் கடவுளின் வீடு என்று எண்ணியவர்கள் இங்கே குறைந்துவிட்டனர். சடங்குகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பவர்கள் தெய்வத்தை மறந்துவிட்டார்கள். புத்தர் தான் பிறந்த தேசத்தால் புறக்கணிக்கப்பட்டவர். அமைதிப் புரட்சி செய்ய தன் குமாரனை கடவுள் இனி இந்தப் பூமிக்கு அனுப்பி வைக்க மாட்டார்.   வாழ்க்கைச் சிக்கலைத் தீர்க்க புனிதநூல்களில் தீர்வைத் தேடியது இன்று அடியோடு நின்றுவிட்டது. மனித குலம் தன்னலத்தையே குறிக்கோளாகக் கொண்டுள்ளது. மனித மனம் எதனால் கடவுளிடமிருந்து விலகிச் சென்றது என்ற காரணத்தை கண்டறிய முடியவில்லை. உலகம் பணத்தின் பின்னே ஓடிக்கொண்டிருக்கிறது. நீ பணத்தால் எதையும் இங்கு சாதித்துக் கொள்ளலாம என்பதே இன்றைய நிலை.   யார் பிறந்து வந்தாலும் இனி உலகத்தில் தர்மத்தை நிலைநாட்ட முடியாது. மனிதன் அன்பு செலுத்துவதற்குக்கூட பிரதிபலனை எதிர்பார்க்கிறான் தனது மகன் நல்லவனாக இருக்க வேண்டுமென்று பெற்றோர்கள் ஆசைப்படுவதில்லை, அவன் செல்வந்தனாக இருக்க வேண்டுமென்றே அவர்கள் விரும்புகிறார்கள். அந்தஸ்து மனிதனிடம் அனைத்தையும் கொண்டு வந்து கொட்டுகிறது.   கடவுளர்பூமி என்று இந்த உலகை இனி சொல்லிக் கொள்ள முடியாது. சத்தியவெறி கொண்டவர்கள் கடவுளின் பேரரசை அமைக்க விரும்பினார்கள், மக்கள் அவர்களுக்கு மரணத்தையே பரிசாகத் தந்தார்கள். இக்காலத்தில் வாலிபர்களுக்கு முறையற்ற முறையில் உடலின் தேவைகளை பூர்த்திசெய்து கொள்வது தவறெனப்படவில்லை. தீய நோக்கங்களுக்கு தன் மனதை எளிதாக ஒப்புக்கொடுத்து விடுகிறார்கள். தீய பார்வையே குற்றம் புரிந்ததற்குச் சமம் என்பதை அவர்கள் ஏற்றுக் கொள்வதில்லை.   கடவுள் மனித குலத்தை கைவிட்டுவிட்டான். அவன் வகுத்த விதியை மட்டும் அவன் திரும்பப் பெற்றுக் கொள்ளவில்லை. அதனால் தான் பூமியில் பிறப்பு நடைபெறுகிறது. மனிதர்கள் தங்களுக்கு தாங்களே முடிவைத் தேடிக் கொள்வார்கள் என்று கடவுள் முடிவெடுத்துவிட்டார். புத்தரின் சூன்யக் கொள்கை வெற்றி பெற கடவுளே காரணமாகிவிட்டார். கடவுள் மனிதனின் ஆத்மாவைக் கொன்று அவனை பழிதீர்த்துக் கொண்டார்.   புத்தர் சரியாக பனிரெண்டு ஆண்டுகள் கழித்து தனது ஊருக்குத் திரும்பி இருந்தார். தந்தை சுத்தோதனர் தனது ஒரே மகனை அரண்மனைக்கு அழைத்துச் சென்றார். “எல்லா வசதிகளும் இந்த நாட்டில் இருக்க எதைத் தேடி நீ வெளியேறினாய்” என்றார். “உடல் தேவைகளை மட்டும் பூர்த்தி செய்வது வாழ்க்கை இல்லை தந்தையே” என்றார் புத்தர். “இன்னொரு முறை என்னை தந்தையே என்று அழை, இதற்காகத்தான் பனிரெண்டு ஆண்டுகளாக காத்திருந்தேன்” என்றார் கண்ணீர் மல்க சுத்தோதனர்.   “சத்தியத்தின் ஒளி என் மூலமாகச் செயல்பட இடம் கொடுத்துவிட்டேன் தந்தையே, இனி நான் உங்கள் மகனல்ல” என்றார் புத்தர். “எனக்குப் பிறகு இந்த ராஜ்யத்தை யார் ஆள்வது என்று நினைத்துப் பார்த்தாயா?” என்றார் சுத்தோதனர். “இந்த நதி கடலோடு கலந்துவிட்டது, இனி என் நாடு, என் மக்கள் என்ற பேதம் எனக்கில்லை தந்தையே” என்றார் புத்தர்.   “இதோ பார் உன் மனைவி யசோதரை வந்திருக்கிறாள் அவள் முகத்தைப் பார்”. கண்ணீர் மல்க நிற்கும் யசோதரை புத்தரைப் பார்த்து, “நீங்கள் என்னைவிட்டுப் பிரிந்து எவ்வளவு ஆண்டுகள் ஆகிவிட்டது ஒருமுறையாவது என்னை நினைத்துப் பார்த்தீர்களா?” என்றாள் யசோதரை. “சித்தார்த்தனுடன் நீ கொண்டுள்ள உறவைப் பற்றி என்னிடம் பேசாதே யசோதா சித்தார்த்தன் மரித்துவிட்டான் நான் புத்தர்” என்றார். அவருடைய பதிலால் சினமடைந்த சுத்தோதனர் புத்தருக்கு எதிராய் கடுமையான வார்த்தைகளை உபயோகித்து திட்டினார்.   அவரை சாந்தப்படுத்திய யசோதரை, “அரண்மனையைவிட்டு நீங்கள் வெளியேறும் போது என்னிடம் சொல்லிவிட்டு சென்றிருக்கலாமே?” என்றாள்.   “வாழ்க்கையின் துயரத்திற்கு விடை காண வேண்டும் என்பதைத் தவிர அப்போது ஒன்றும் நினைக்கத் தோன்றவில்லை யசோதா” என்றார் புத்தர்.   “நான் தடுத்தவுடன் உங்கள் முடிவைக் கைவிட நீங்கள் என்ன அவ்வளவு பலகீனமானவரா?” என்றாள் யசோதரை.   “உறவுச் சங்கிலியை ஒரு நொடியில் அறுத்தெறிவது அவ்வளவு சுலபமில்லை யசோதா. நாம் செலுத்தும் அன்பே நமக்கு பலவீனமாகுமா யசோதா. அப்போது என் மனம் கல்லாகிவிடவில்லை ஏதோ ஒரு உந்துதலால் தான் நான் அரண்மனையைவிட்டு இரவே வெளியேறினேன்” என்றார் புத்தர்.   “இதே வேலையை நான் செய்திருந்தால் நீங்களும், சமூகமும் என்னைக் கொண்டாடி இருப்பீர்களா?” என்றாள் யசோதரை.   “நற்செயலுக்கான பலன்களும், தீச்செயல்களுக்கான பலன்களும் நிழல் போல மனிதனைத் தொடர்ந்து வருகிறது யசோதா, யார் யாரை எங்கு வைக்க வேண்டுமென அதுவே முடிவு செய்கிறது”.   “நீங்கள் ஏன் வெளியேறினீர்கள்? வீட்டிலேயே நீங்கள் தேடியதை அடைந்திருக்க முடியாதா?” என்றாள் யசோதரை.   “அடைந்திருக்கலாம் தான் யசோதா, மரணத்தை துரத்திக் கொண்டு தான் நாட்டைவிட்டு ஓடினேன் யசோதா. நானும் பயந்து கொண்டு அரண்மனையிலேயே இருந்திருந்தால் சுகபோகங்களால் சத்தியத்தை மறந்து இருப்பேன் அல்லவா?” என்றார் புத்தர்.   “தந்தைமார்கள் தங்கள் மகனுக்கு சொத்தை விட்டுச் செல்வார்கள், நீங்கள் உங்கள் மகன் ராகுலனுக்கு என்ன செய்யப் போகின்றீர்கள்?” என்றாள் யசோதரை.   புத்தர் தான் அரண்மனையைவிட்டுக் கிளம்பும்போது அவரது மகன் உறங்கிக் கொண்டிருந்தான். போர்வையை விலக்கி அவன் முகத்தைப் பார்த்தால் தனது வைராக்கியம் பனியாக உருகிவிடுமோ என அஞ்சி மகனின் முகத்தை காணாமலேயே அரண்மனையைவிட்டு வெளியேறினார். இந்த பனிரெண்டு வருடங்களில் எங்கோ ஒரு மூலையில் ராகுலனின் நினைவு ஒளிந்து இருக்கவேண்டும். புத்தர் யாருடைய பேச்சையும் செவிமடுக்கவில்லை. அவரது கண்கள் ராகுலனைத் தேடின.   “ஒரு தந்தையாக உங்கள் மகனுக்கு என்ன செய்யப் போகின்றீர்கள் என யசோதா கேட்டாள். மகனே நான் கண்டடைந்த ஞானத்தின் மூலமாக உனக்கு நான் தீட்சை அளிக்கிறேன். நான் துறவு பூணவில்லையென்றால் சத்தியத்தைத் தேடி நீ அரண்மனையைவிட்டு வெளியேறியிருப்பாய். மகனே என்னை கையாலாகாதவன் என எண்ணிவிடாதே. நீ கடக்க வேண்டிய பாதையில் நான் ஒளியாய் இருப்பேன்.   இதோ இந்தத் திருவோட்டைப் பிடி. என் ஞானத்தை உனக்கு நான் பிச்சையாக இடுகிறேன் மகனே. இனி இந்தக் கைகள் தான் எனது பிச்சைப் பாத்திரம். ஞானம் பெற்ற அன்று நான் நீண்ட தூக்கத்திலிருந்து விழித்துக்கொண்டேன் என் மகனே. வாழ்க்கைக் கடலில் நீ மூழ்கிவிடாதபடி உன்னைக் காப்பாற்றத்தான் ஞானமடைந்த அடுத்த நொடியே நான் உன்னைக் காண கபிலவஸ்து நாட்டிற்கு வந்தேன். எனது கடமையை நிறைவேற்றிவிட்டேன். எனது மனக்காயங்கள் இனி ஆறிவிடும். என்னைத் தேடுவதிலேயே நேரத்தை வீணடிக்காதே என் மகனே” என்று விடைபெற்று அவர் மீது விழுந்த அரண்மனையின் நிழலையும் தாண்டி எங்கோ புத்தர் சென்று கொண்டிருந்தார்.     பிழைப்பு   ஆடி மாசம் பொறந்திடிச்சி பூசாரிக்கு அம்மன் கோயில் திருவிழாவை முடிக்கிற வரைக்கும் பிரசவவலிதான். தனிக்கட்டைதான் கோயில் காரியமே கதின்னு கிடக்கிறவரு. ஆடித் திருவிழாவுல இந்த வருஷம் எப்பவும் போல ராமு பிரஸ் தான் நோட்டீஸ் உபயம். அத வாங்கத்தான் இந்த உச்சிவெயில்ல நடையா நடந்து அச்சகத்துக்கு வந்திருக்கிறாரு.   செருப்பை வெளியில கழட்டிப் போடுறப்பவே உள்ளே தரகரும், ஜோசியரும் பேசிகிட்டு இருந்தது அவர் காதில் விழுந்தது. வாய்கயா என்ற ஜோசியர் திருவிசா முடியிற வரைக்கும் உங்க கால் தரையில நிக்காதே என்றார். குத்துவிளக்கு பூசைக்கு எந்த புரோகிதரை ஏற்பாடு பண்ணப் போறீங்க என்றார் தரகர். வசூலைப் பொறுத்துதான் இருக்கு, முதல் நன்கொடை நீங்க ரெண்டு பேருமா இருக்கட்டும் ஆரம்பிச்சு வையுங்களேன் என்றார் பூசாரி.   கேட்டுட்டீங்க, கோயில் காரியம் வேற எம்பேர்ல ஒரு நூறுரூபா எழுதிக்கீங்க என்றார் ஜோசியர். எம் பேர்லயும் தான் என்றார் தரகர். சாமி காரியத்துக்கு கணக்கு பாக்காதீங்க கொடுங்க, அவ எல்லைய காக்குறதுதால தானே நாமே நிம்மதியா இருக்கோம் என்றார் பூசாரி. ஏதோ அவ புண்ணியத்துல தான் நான் வயித்தக் கழுவிகிட்டு இருக்கேன், வேற எந்த புண்ணியவான் எனக்கு அடைக்கலம் கொடுப்பான் இந்த ஊர்ல என்றார் வேதனையுடன் பூசாரி.   என் நிலைமையை ஏன் கேட்கறீங்க, ஜாதகம் பாக்குறதுல பெருசா என்ன சம்பாதிக்க முடியும். பரிகாரம்னு சொல்லிடி நாலு காசு வாங்குறதுல தான் எம் பிழைப்பு ஓடுது என்றார் விரக்தியுடன் ஜோசியர்.   காலத்துக்கு ஏத்த மாதிரி என்னைய மாத்திக்க முடியலை, இந்த காலத்து பொண்ணுங்க எல்லாம் தாங்களே துணையைத் தேடிக்கிதுங்க, நம்மகிட்டனா ஆறேழு ஜாதகம் தான் கையில இருக்கும். கம்யூட்டர்ல தட்டிவிட்டா ஆயிரம் ஜாதகம் வருமாமே? நான் கல்யாணம் கட்டிகிட்டப்ப ஃபோனாவது ஒண்ணாவது, இப்ப பாருங்க வாட்ஸ் அப், ஃபேஸ்புக், டிவிட்டர்ங்கிறாங்க நமக்கு ஒண்ணும் புரியலை போங்க என அலுத்துக் கொண்டார் தரகர்.   நாடு வளருதுங்கிறார்களே, கிராமம் அப்படியே தாங்க இருக்கு வானம் பார்த்த பூமியாதான் இப்பவும் இருக்கு. எண்ணெய் எடுக்கிறேனு விவசாயிங்களை வாழவுடாம பண்ணிட்டா எங்க தான் போவாங்க பிழைப்புக்கு. நாடே இப்ப கம்பெனியா தாங்க செயல்படுது. திருப்பதி தரிசனத்துக்கு இருக்கிற இடத்திலேர்ந்து புக் பண்ணிடலாம்மா, இதைத் தெரியாத ஏழை பாலைங்க தான் க்யூல நின்னு கஷ்டப்படுது என்று தனது ஆதங்கத்தை கொட்டித் தீர்த்தார் பூசாரி.   ஜோசியருங்க முன்னெல்லாம் ஆளைப் பாக்காம ஜோசியம் சொல்ல மாட்டாங்க, இப்ப என்னென்னா செல்லுல மெசேஜ் வருது நிமிடத்துக்கு மூன்று ரூபா உங்க ஜாதகப்பலனை தெரிஞ்சுக்க இந்த நம்பருக்கு டயல் பண்ணுங்கன்னு. டி.வில முகம் காட்டறவனையும், பை ஸ்டார் ஹோட்டல்ல ரூம் போட்டு ஜாதகம் பார்க்கவைனை நம்பித்தான் மக்கள் காசைக் கொண்டு போய் கொட்டுறாங்க என்றார் ஜோசியர்.   ஏழைங்க நிலைமை ஆணி அறைஞ்ச மாதிரி தாங்க. ஊர் நிலவரமும் சரியில்ல. யாரைப் பார்த்தாலும் பஞ்சப்பாட்டு பாடறான். பாடை கட்டி இழுத்தும் மழை பெய்யலைனா பாத்துக்குங்க. எப்பவுமே திருவிழாக் காரியத்தை இழுத்துப் போட்டு செய்யறவனெல்லாம் கண்டும் காணாத மாதிரி போறான். ஊர்ல கோயில்னு எதுக்குங்க கட்டியிருக்காங்க மனசு சஞ்சலப்பட்டா வந்து சாமியை கும்பிடறதுக்குத் தானே. இப்ப காதலிக்கிறவங்களுக்கு ஏத்த இடமா கோயில் மாறிப் போச்சு. போற வர்றப்ப அவங்க பேசுறது இந்தக் காதுல வந்து விழுது கண்றாவி. போய் அம்மன்கிட்ட கேட்டுட்டுத்தான் வந்தேன், நீ எப்படிம்மா இங்க இருக்கேன்னு? என்றார் கனத்த இதயத்துடன் பூசாரி.   ஏன்யா நீ வேற. ஒரு நாள் காலை நேரத்துல போய் பஸ்ல மாட்டிகிட்டேன். இந்த காலேஜ் பசங்க நடத்துற அட்டூழியம் இருக்கே. பக்கத்துல ஆள் இருக்காங்கன்னு பார்க்கிறாங்களா? வயசுக்கு மரியாதை தரவேணா? என்ன சொல்றது போங்க. பெத்தவங்க கஷ்டத்தை நினைச்சிப் பார்த்தா இப்படிப் பண்ண மனசு வருமா? என்றார் ஜோசியர்.   நாலு எழுத்து படிச்சவங்க தானே ஒரு இங்கிதம் வேணாம். அன்னிக்கு ஒரு நாள் என்னை வரச்சொன்னவர் வேறெங்கயோ வேலையா போயிட்டார். சரின்னு ஒரு தியேட்டர்ல சிவாஜிபடம் ஓடுதேனு டிக்கெட் எடுத்துட்டு உள்ள போனா, எல்லாம் ஜோடி ஜோடியா வந்திருக்குதுங்க. யாரும் படம் பாக்க வந்ததா தெரியலை. நான் திரும்பி வந்துட்டேன் என்றார் தன் பங்குக்கு தரகர்.   மனசுல ஈரம் இருந்தாதானுங்க மனுசன், கோயில் மராமரத்து வேலைக்காக துபாய் வீட்ல எவ்வளவு கொடுத்தாங்க தெரியுங்களா? வெறும் ஐம்பது ரூபா. எவ்வளோ பெரிய மனசு. அம்மன் இருக்காளே இருக்கிறவனுக்கு அள்ளிக் கொடுக்கிறா, இல்லாதவன் கோவணத்தையும் சேர்த்து உருவிக்கிறா என்றார் பூசாரி.   பணம இல்லைனா பிணந்தான், வாழ்றதுக்கு பதிலா சுடுகாட்ல போய் கால நீட்டி படுத்துக்கலாம். கலிகாலம் பணமட் பேசுது. பணத்தால எல்லாத்தையும் விலைக்கு வாங்க முடியுது. எனக்கு மூணுமாச வாடகை பாக்கி. எனக்கு இந்தத் தொழில விட்டாக்கா வேறெதுவும் தெரியாது. தலையில என்ன எழுதியிருக்கோ அதான் நடக்கும் போலருக்கு. வாழ்க்கையில கிரகங்கள் எப்படியெல்லாம் விளையாடுது என்றார் ஜோசியர்.   சிவனே பிறந்து வந்தாலும் கோள்களோட ஆதிக்கத்துக்கு கட்டுப்பட்டுத்தானே ஆகணும்.சில பேரோட ஜாதகக் கட்டம் நாற்பது வயசுக்கு மேல தான் வேலை செய்ய ஆரம்பிக்கும். உடும்புப் பிடியா எந்த சாமியையாவது பிடிச்சிக்கணும் வேற வழியே இல்ல என்றார் தெளிவுடன் பூசாரி.   கூழோ, கஞ்சியோ குடிச்சாலும் குடும்பம் பக்கபலமா இல்லைனா மனுசன் வெளியில நடமாட முடியுமா? பாருங்க நம்ம பரமேசு நிலைமைய, ஒரே பொண்ணுன்னு பொத்திப் பொத்தி வளர்த்தாரு அது தன்னோட கூடப்படிக்கிறவனை தான் கல்யாணம் கட்டிப்பேன்னு முடிவா சொல்லிடிச்சி. அதுல விழுந்தவர்தான் வெளிய வந்து யாரு மூஞ்சுலேயும் விழிக்காம ஊட்டுலேயே அடைஞ்சிக் கிடக்கிறாரு. பாவம் மனுசன் என்றார் தரகர்.   யாரு கழுத்துல எப்ப கத்தி விழும்னு தெரியலை, நம்ம வாத்தியார் பொன்னம்பலத்துக்கு ஹார்ட் அட்டாக்காம், வயசுல என்னமா உடம்பை மெயின்ட்டெயின் பண்ணி வச்சிருந்தாரு தெரியுமா? அவருக்கு எப்படின்னு இன்னும் எனக்கு விளங்கலை. ரொம்ப நல்ல மனுசன். இன்னும் ரெண்டு பொண்ணுங்களை கரையேத்துர வரைக்குமாவது அவர் உசிரோட இருக்கணும். பிறப்பும் இறப்பும் அவ கையில தானே இருக்கு நாமெல்லாம் பொம்மைங்க தானே என்றார் கோயில் இருக்கும் திசையைப் பார்த்து பூசாரி.   என் ஜாதகத்தைப் பார்த்துட்டு என் அப்பா உனக்கு சிவப்பதவி கிடைக்காதுடா, நீயும் நம்ம தொழிலுக்கே வந்துடு அப்படின்னுட்டார். அவர் ஒண்ணும் சம்பாதிச்சி வச்சிட்டுப் போகலை. ஒரு வேளை வயித்த நொப்ப அவர் கத்துக் கொடுத்தது தான் இப்ப உதவுது என்றார் கண்கலங்கியவாறு ஜோசியர்.   கண்ணதாசன் சும்மாவா சொன்னாரு உனக்கும் கீழே உள்ளவர் கோடி நினைத்துப் பார்த்து நிம்மதி நாடுன்னு. அதிகமா எதிர்பார்க்காத ஏமாற்றம் தான் மிஞ்சும். ஐம்பது ரூபா கொடுத்தான்னா சந்தோஷமா வாங்கிக்க. இருபத்தி ஐந்து ரூபா கொடுப்பான்னு நினைச்சேன் ஐம்பது கொடுத்திருக்கான்னு சந்தோஷப்படு என்றார் கரிசனத்துடன் பூசாரி.   பொங்கித் திங்கவே ஒவ்வொரு நாளும் பெரும்பாடாய் இருக்கு, எம்புள்ளைங்களை கான்வென்ட்ல படிக்க வைக்கணும்ணு ஆசை. எந்தொழில் அவங்களுக்கு வேணாம். அரசு உத்தியோகத்துக்கு போய், காலாட்டிகிட்டு சாப்பிடனும் அவங்க. அந்த ஆசை எனக்கு இருக்கக்கூடாதா? என்றார் ஆதங்கத்துடன் ஜோசியர்.   புதையலுக்கு மேல உக்காந்து பிச்சையெடுக்கிற கதைதான் நம்ம கதை. எந்த விதை எப்ப முளைக்கும்னு யாருக்குத் தெரியும். படியளக்கறவளுக்கே திருவிழா எடுக்க நான் ஒவ்வொருத்தர்கிட்டேயும் பிச்சையெடுக்க வேண்டியிருக்கு நான் கிளம்பறேன் என்றார் பூசாரி.   அப்படின்னா ஏழைங்க ஏக்கப்பட்டே சாகவேண்டியதுதானா? எனக்கு ஒரு முடிவு சொல்லிட்டுப் போங்க என்றார் ஜோசியர்.   இதப்பாரு நான் சாதாரண ஆளு, ஏதோ அம்மனுக்கு பூசை செஞ்சி வயித்தக் கழுவிகிட்டு இருக்கேன். காரில வந்து இறங்கறவனை பார்த்து நான் அந்த மாதிரி இருக்கணும்னு ஆசைப்பட்டா அம்மன் இருக்கிறதையும் புடுங்கிட்டு உட்ருவா. இந்த வரவு செலவு கணக்குக்கெல்லாம் நீ அவளைக் கூப்பிடாத. முதல்ல நீ அம்மனைப் போய்ப் பாரு, அவளுக்கு எதுக்க ஏதாவது உன்குன்னு கேட்கத் தோணுதான்னு பாரு போ என்றார் தீர்க்கமாக பூசாரி.   கவலைப்பாடா யாருக்குத்தான் கஷ்டமில்ல என்று சொல்லி அங்கிருந்து கிளம்பினார்கள் பூசாரியும், தரகரும்.     சரதல்பம் குருகுல வம்சத்தில் தோன்றிய சந்தனு ராஜனுக்கு கங்கையின் மூலம் பிறந்த ஏழு குழந்தைகளையும் நதிக்குள் வீசியெறிந்துவிட்டாள் கங்காதேவி.எட்டாவது குழந்தையை வீசச் செல்லும் போது, தான் கொடுத்த வாக்கையும் மீறி சந்தனு அரசன் அவளைத் தடுக்க முற்பட்டான்.உரிய வயதில் உன் புதல்வன் உன்னிடம் வருவான் எனக் கூறி நதியினுள் போய் மறைந்து போனாள் கங்கை.வாக்கை மீறிய சந்தனுவின் ஒரு கேள்வியால் உயிர் பிழைத்த கங்கா புத்திரனான பீஷ்மர் வாலிப வயதை எட்டியிருந்தார்.அவர் உலாவும் நதிக்கரையோரம் ஒரு விடிகாலைப் பொழுதில் சூரியனை நோக்கி பிரார்த்தனை செய்து கண்களைத் திறந்து நதியைப் பார்த்தார்.   இந்த நதியைப் பார்த்தால் நேற்று கண்ட நதியே இன்றும் இருப்பதாகத் தோன்றுகிறது;ஆனால் நேற்று இருந்த நீர்த்திவலைகளில் ஒன்று கூட இப்பொழுது இல்லை.ஒரு சுடர் எரிவதைப் பார்க்கும் போது, ஒரே சுடர் அணையும் வரை எரிவதைப் போல் இருக்கிறது;ஆனால் ஒரு கணத்தில் எரிந்த சுடர் அடுத்த கணத்தில் இல்லை.இந்த உலகில் காலத்தின் சுழற்சியில் ஒவ்வொன்றும் ஒவ்வொரு கணமும் மாறிக்கொண்டேயிருக்கிறது.நாம் காண்பவை உண்மையைப் போன்று தோற்றமளிக்கிறது ஆனால் அது உண்மையில்லை.மாற்றம் எனும் பெருவெள்ளம் அனைத்தையும் அடித்துக் கொண்டு சென்று கொண்டேயிருக்கிறது.இதில் சாம்ராஜ்யங்கள்,பேரரசர்கள்,யுவதிகள்,மகான்கள் என்று எவருமே தப்புவதில்லை.உடல் செயலற்று அமைதியாக இருந்தாலும் மனம் எண்ணத்தின் மூலம் கர்மம் புரிகிறது.இந்த கர்ம சுழற்சியிலிருந்து தப்ப இயலாது என்பதை பீஷ்மர் உணர்ந்து கொண்டார்.   நதிக்கரையோரத்தில் அவர் ஒரு காட்சியினைக் கண்டார்.பூவில் தேனைக் குடித்து ரீங்காரமிட்ட வண்டை தவளை பிடித்தது;தவளையை பாம்பு ஒன்று கவ்விக் கொண்டிருந்தது.அமுதம் போன்ற சுவையுடைய தேன் வண்டின் நாவில்,அவ்வண்டோ தவளையின் வாயில்,தவளைக்கு வண்டு இரையாகக் கிடைத்துவிட்டது;ஆனால் அத்தவளையோ பாம்பின் பிடியில்.இது தான் வாழ்வா என்று அக்காட்சி அவரை யோசிக்கவைத்தது.கூத்து நடக்கும் இடத்தில் பார்வையாளராக நாம் இருக்கையில் அமர்ந்து இருக்கிறோம்;கூத்து முடிந்தவுடன் அக்கூட்டத்தோடு நாமும் சேர்ந்து வெளியேறிவிடுகிறோம்.ஆனால் அக்கூத்து அன்றோடு முடிந்துவிடுவதில்லை;நாம் போன பின்பு பல்வேறு மனிதர்கள் உலக அரங்கில் நுழைந்துவிடுகிறார்கள்.யுக யுகமாய் அரங்கத்தில் நுழைபவர்களும்,அரங்கத்தை விட்டு வெளியேறுபவர்களுமாய் அக்கூத்து தொடர்ந்து நடந்து கொண்டேயிருக்கிறது.இதோ இந்தச் சூரியன் பல நிகழ்வுகளுக்கு சாட்சியாய் இருந்திருக்கிறது.   பீஷ்மர் புரிந்துகொண்டார்.கர்மம் என்று சொல்லப்படும் செயல்,அனைத்து வினைகளுக்கும் காரணமாகிறது.எண்ணங்களும்,செயல்களும் சூட்சும வடிவில் சூல் கொண்டு அவற்றுக்கான பலன்களைப் பிரசவிக்கிறது.எந்தப் பெண்ணைத் தீண்டினாலும் சம்போகம் முடிந்த சில நிமிடங்களிலேயே அவளுடனான உறவுச்சங்கிலி முறிந்து விடுவதில்லை.அவள் அந்த ஆடவனின் சிசுவை வயிற்றில் சுமந்து கொள்கிறாள்.அந்தக் குழந்தை பிறந்ததிலிருந்து வாலிப வயது வரும் வரை அவனைக் காத்து,கல்வி கேள்வி,வாள் பயிற்சி,குதிரையேற்றம் ஆகியவற்றில் திறம்பட வரும்படி பயிற்சியளிப்பது அந்த ஆடவனின் கடமையாகிறது.அதோடு மட்டுமில்லாமல் அவனுக்கு ராஜ்யபரிபாலனம் கிடைக்கத் தடையாயிருக்கும் சில குடும்பங்கள் மற்றும் அரசாங்க முக்கிய பிரமுகர்களைத் தந்திரமாக வீழ்த்த வேண்டியிருக்கும்.இவ்வாறு பெண் உறவால் விளைந்த சங்கிலி அறுபடாமல் நீண்டு கொண்டேயிருக்கும்;அடுத்த பிறவிக்கு வழிவகுப்பதில் போய் அது முடியும்.முற்பிறவியில் ஆசைகளை அறவே ஒழித்தும்,மரணத்தறுவாயில் ஏற்பட்ட பெண்ணாசையால் இப்பிறவி எடுத்தோம் என்பதை பீஷ்மர் நினைவுக்குக் கொண்டு வந்தார்.இந்த ஜென்மத்தில் ஒரு பெண்ணையும் மோகத்தால் தீண்டாது உயிர்விட வேண்டும் என சங்கல்பம் செய்து கொண்டார்.   உடல் வளர்ச்சி ஆரம்பமாகும் போது மனமும் வளர்ச்சியுறத் தொடங்குகிறது.வாலிப வயதில் நான் ஆண்மகன் என்ற உணர்வு உலகைப் பெண்மையாய் பார்க்கப் பழகுகிறது.யாருமற்ற கடற்கரை மணலில் வானுக்கும் மண்ணுக்குமாய் எழும்பும் அலைகளைப் பார்ததபடி நடந்து கொண்டிருக்கும் போது, கடலலை நுரையில் பொங்கி அமிழும் நீர்க்குமிழி போன்றது வாழ்வு என்று ஜீவாத்மாவுக்கே உண்டான பரமாத்ம ஈர்ப்பு அவரைக் ஆட்கொள்ளும்;சில நிமிடங்களில் எதிரில் ஒரு ஸ்திரி நடந்து வரும்போது, ஆன்ம உணர்வு காற்றில் கரைந்து நான் ஆண்மகன் என்ற அகந்தை விழித்துக் கொள்வதை அறிந்தார்.இவ்வுலகினில் மனமே ஐம்புலன்களாகிய நூல்களைக் கொண்டு பொம்மலாட்ட பொம்மையைப் போல் உடல் இயக்குவதைக் கண்டார்.முற்பிறவியில் காம உணர்வு தூண்டப்பட்டவுடன் தான் எதிர்க்க முடியாமல் கட்டுண்டுவிட்டதை எண்ணி அநேகமுறை வருந்தியிருந்தார்.அலைகளைப் போல் எழுவதும் பின்பு தணிவதுமாய் வாழ்வு முழுவதும் அந்த ஆசைகள் இன்ப வேட்கைக்கு உடலை இரையாக்குவதை வேதனையோடு பார்த்துக் கொண்டிருந்தார்.மனமே உலகினை அனுபவிக்கத்தான் உனக்கு இப்புவியில் எத்தனை, எத்தனை உடல்கள் என்று அவர் எண்ணிக் கொண்டிருக்கையில், கதிரவன் மேற்கில் மறையத் தொடங்கினான் எங்கும் இருள் ஊடுருவத் தொடங்கியது.   கங்கை நதியை வணங்கினார்.வைராக்கியத்தோடு உட்கார்ந்து கண்களை மூடி தியானித்தார். இப்பொழுது அவரது மனம் அஸ்தினாபுர நகரத்துக்கு வெளியே ஒரு ஏழை அந்தணன் வீட்டில் மகனாகப் பிறந்தது.அந்த அந்தணன் தன் மகனுக்கு பெயர் சூட்டி,வேத மந்திரங்களை உச்சரிக்கக் கற்றுக் கொடுத்து,தினமும் சூரிய நமஸ்காரம் செய்த பின் அந்த நாளினைத் தொடங்க பயிற்சி அளித்திருந்தார் அவனுடைய பதினாறாம் வயதில் திருமணம் முடிந்தது;இல்லறத்தில் ஈடுபட்டு குழந்தைகளைப் பெற்றான்.இறை நாமங்களை ஜெபித்து,ஜெபித்து உள்ளுக்குள் சதா ஹரி ஓம் ஹரி ஓம் என்று ஒலித்துக் கொண்டேயிருந்தது.பால்யம்,இளமை இவ்விரு பருவங்களையும் மாயை சர்ப்பம் போல் விழுங்கியது.இன்றோடு அந்த அந்தணன் மகனுக்கு அறுபது வயது பூர்த்தியடைந்தது.தன் பிள்ளைகளுக்குரிய கடமைகளை செவ்வனே செய்து முடித்துவிட்டு மனைவியிடம் விடைபெற்றுக்கொண்டு துறவு பூண்டு கானகம் நோக்கி சென்றான்.   பீஷ்மர் தன் தியானத்தைத் கலைந்தார்.காலம் அதிகாலை பிரம்ம முகூர்த்தத்தைக் கடந்து கொண்டிருந்தது.ஓர் இரவில் அவரது மனம் ஒரு பிறவிக்கடலைக் கடந்து வந்துவிட்டது.பெண் சுகம்,வம்ச விருத்திக்கான குழந்தைகள் எல்லாவற்றையும் பார்த்து தன் ஆசைகளைத் தணித்துக் கொண்டுவிட்டது.இப்போது அவரது மனம் அறுபதாம் பிராயத்தை அடைந்திருந்தது, பீஷ்மரின் உடலின் வயதோ பத்தொன்பது.   அஸ்தினாபுரத்து அரசன் சந்தனு ராஜன் தன்னை விட்டுப் பிரிந்து சென்ற கங்கையைப் போன்று தோற்றமளித்த பரிமளகந்தி எனும் செம்படப் பெண்ணின் மீது மோகம் கொண்டு விட்டார்.தந்தையின் முகவாட்டத்துக்கும்,நிம்மதியின்மைக்கும் காரணத்தை அறிந்த பீஷ்மர்,தகப்பனின் வேட்கையைத் தீர்க்க மீனவப் பெண்ணின் வீட்டிற்கு பெண் கேட்டுச் சென்றான் கங்கை மைந்தன்.அவளுக்கும் சந்தனுராஜக்கும் பிறக்கும் வாரிசுகளே தேசமேற்க வேண்டும் நீ யுவராஜனாகக் கூடாது என்று அவளுடைய தகப்பன் கேட்ட சத்தித்தைக் கொடுத்துவிட்டு அப்பெண்ணை அரண்மணைக்கு அழைத்து வந்தான்.பரிமளகந்தி சந்தனு அரசனை மணந்து பட்டத்தரசி சத்யவதியானாள்.அவர்களுக்கு சித்தராங்கதன்,விசித்திரவீரியன் என்ற இரு புதல்வர்கள் பிறக்கின்றனர். அம்பா? காசி மன்னன் அரண்மணையில் அரசகுமாரரர்கள் அமர்ந்திருக்கும் சுயம்வர மண்டபத்தில் காத்துக் கொண்டிருந்த மூன்று பெண்களை, தனது வில் முனையில் மற்றவர்களை அஞ்சி ஓடச்செய்து தன்னுடைய சகோதரர்களுக்கான மணப்பெண்களாகத் தூக்கிக் கொண்டு ரதத்தில் புறப்பட்டார் பீஷ்மர்.அஸ்தினாபுரத்தை அவர்கள் அடைநதபோது நகரமே விழாக்கோலம் பூண்டது.மூவரில் அம்பா மறுததுவிட்டாள்.தான் சால்வன் மீது கொண்ட நேசம் பொருட்டு அவள் அரசகுமாரரர்கள் இருவரையும் கணவனாக ஏற்க மறுத்துவிட்டாள்.கங்கையின் புத்திரன் அவளை சால்வனிடமே திருப்பி அனுப்பினான்.அம்பா கற்பனைக் கனவுகளோடு சால்வனின் தேசத்திற்குப் புறப்பட்டாள்.   அவளைக் கண்ட சால்வன் திகைத்து நின்றான் "அம்பா நீ வில்முனையில் வெல்லப்பட்டு விட்டாய்;வென்றவனுக்கே சொந்தமாவாய் உன்னை வென்று மணந்திருந்தால், என் கிரீடத்தில் மற்றுமொரு வைரக்கல்லாய் ஜொலித்திருப்பாய்;இன்று வென்றவனால் திருப்பி அனுப்பிவைக்கப்பட்டமையால்,நீ இங்கே வசித்து இந்த அரண்மணையின் அவமானச் சின்னமாகிவிடாதே.உன் இருப்பு என்னைக் கூனிக் குறுகச் செய்கிறது.இதனை கனவென மறக்கவே விரும்புகிறேன்.நீ திரும்பிச் சென்றுவிடு! " என்றான்.   சுவரில் வீசப்பட்ட பந்து போல மீண்டும் அஸ்தினாபுரத்துக்கே திரும்பினாள்.தான் பற்றியிருந்த சால்வன் என்ற கிளை முறிந்தாலும், அவள் பீஷ்மர் என்ற மற்றுமொரு கிளையை நம்பி அரண்மணைக்குள் நுழைந்தாள்.     அம்பாவின் விருப்பத்தை அறிந்த பீஷ்மர் "என்னுடைய நிழல் கூட பெண் உடலைத் தீண்டாது" எனப் பதிலுரைத்தார்.இறைவன் ஒரு கதவை மூடினாலும் மற்றொரு கதவைத் திறப்பான் என எதிர்பார்த்த அம்பா,பீஷ்மரால் நிராகரிக்கப்பட்டதை எண்ணிக் குமுறினாள்.இனி எங்கே?என்ற கேள்வி அவள் மனதில் அகோரமாய் ஒலித்தது.மனதிப் துயர மூட்டையைச் சுமந்து கொண்டு அந்த இரவின் இருளில் வாழ்வில் ஒளிதேடி கானகம் நோக்கிச் சென்றாள்.   நாட்கள் இலக்கின்றி எய்த அம்பு போல நகர்ந்து கொண்டிருந்தது.தன்னைக் காண வரும் பரசுராமரைக் கண்டு அதிர்ச்சியுற்றார் பீஷ்மர்.அவரைத் தொடர்ந்து அம்பா வந்து கொண்டிருந்தது அவரது பதற்றத்தை மேலும் அதிகப்படுத்தியது.சில மேற்கோள்களை எடுததுக்காட்டி நீ அம்பாவை ஏற்றுக் கொளள வேண்டும் என்றார் பரசுராமர். "எனது முடிவு உங்களுக்குத் தவறாகத் தோன்றலாம்,ஆனால் எனது முடிவு ஒருபோதும் தர்மத்திற்கு எதிரானது அல்ல,இதை நீங்கள் உணர வேண்டும்" என தனது நிலைப்பாட்டில் உறுதியுடன் நின்றார் பீஷ்மர்.   தனது கடைசி அஸ்திரமும் பயன்படாது போகவே,அம்பா வெறியுடன் பரசுராமரின் வில்லைப் பிடுங்கி பீஷ்மரைக் கொல்ல முயன்றாள்;ஒரு ஸ்த்ரி கையில் வில்லை ஏந்தக் கூடாது என்றுரைத்து அவள் கையிலிருந்த வில்லைத் தன் கோடாரியால் முறித்தார் பரசுராமர்.அம்பா தன் எண்ணம் நிறைவேறாமல் போன துயரத்தில்,தன் மரணம் தான் தனக்குச் சாந்தி தரும் என்றெண்ணி அக்னியில் விழுந்து உயிர் நீத்தாள்.தன்னுடையை அகோர மரணத்திற்கு கங்கைப் புத்திரனே காரணம் என்ற ரெளத்திர நினைவு மட்டும் அவள் மனதை விட்டு அகலவேயில்லை.   குருவம்சத்தில் பார்வையற்றவனாக திருதராஷ்டிரனும்,இளையவனாக பாண்டுவும் பிறந்தார்கள்.பாண்டுவிற்கு குந்தியின் மூலம் யுதிஷ்டிரன்,பீமன்,அர்ஜுனன்,நகுலன்,சகாதேவன் என்ற ஐவரும் பிறந்தார்கள்.அரசன் திருராஷ்டிரனுக்கு காந்தாரி மூலமாக துரியோதனன் முதலான நூறு சகோதரர்கள் பிறந்தார்கள்.   துருபத அரசனுக்கும் கெளசவிக்கும் சிகண்டி பிறந்தான்.அம்பா என்ற அலைக்கழிக்கப்பட்ட கன்னியே சிகண்டியாக ஆண் உடல் தரித்திருந்தாள்.சிகண்டிக்கு அம்பாவின் நினைவலைகள் அதிகமாக இருக்கும் சமயத்தில் அவன் பிறர் கண்களுக்கு ஸ்த்ரியாகவே தென்படுவான்.திருமணத்திற்குப் பிறகும் அம்பாவின் நினைவுகளால் துரத்தப்பட்டான்.மனைவியின் அவமதிப்பிற்குப் பின் அம்பாவின் நினைவுகளிலிருந்து முற்றிலும் விடுபட்டு வலிமையுள்ள ஆடவனின் மனம் கொள்ள விரும்பினான்.   வனத்தில் இருமனம் கொண்ட ஒரு மனிதமாய் அலைந்து திரிந்தான்.அவனுடைய கடுமையானச் சொற்கள் வனத்திலுள்ள மரங்களை திகிலடையச் செய்தன.கேள்விகள் அவன் நாவிலிருந்து வெளியேறிய உடல் வெப்பத்தில் மயங்கிச் சரிந்தான்.   அந்த வனத்தில் உலவிய ஒரு முனிவர் அவளனக் கண்டார்.அவன் சிகண்டி ரூபம் கொண்ட அம்பா என்பதை உணர்ந்து கொண்டார்.ஆண் உடலாலும் பெண் மனதாலும் அலைக்கழிக்கப்படுகிறான் என்பதை உணர்ந்து அவனுடைய வாயில் மூலிகைச் சாற்றைப் பிழிந்து,செவியில் மந்த்ரம் உச்சரித்துவிட்டு தன்னுடைய குடில் நோக்கி சென்றார்.பல மணிநேர உறக்கத்திற்குப் பின்பு விழித்த சிகண்டி உடலாலும்,மனதாலும் தான் ஆண் என்பதை உணர்ந்தான்.அம்பாவின் நினைவுகள் அவனைவிட்டு அகன்று ஒடுங்கியிருந்தது.   தேசாந்தரியாக வனத்தில் திரிந்த பாண்டு இறந்தான்.பாண்டவர்கள் ஐவருடன் குந்தி அஸ்தினாபுரம் வந்தடைந்தாள்.காந்தாரியின் சகோதரனான சகுனியே கெளரவர்களை அரவணைத்து வளர்த்து வந்தான்.   அஸ்தினாபுரம் என்ற நகரம் பல இரவு பகல்களைக் கடந்து சென்று கொண்டிருந்தது.பாண்டவர்களும்,கெளரவர்களும் வாலிப வயதினை அடைந்தார்கள்.பாஞ்சால தேச அரசிளங்குமரி திரெளபதை ஐந்து சகோதரர்களுக்குத் துணைவியானாள்.பாண்டுவின் புதல்வர்கள் இந்திரப்பிரஸ்தம் என்ற நகரத்தை ஸ்தாபித்தார்கள்.அந்த நகரத்தில் மயன் சிருஷ்டித்த மணிமண்டபத்தில் யாகங்கள் நடத்தப்பட்டு பிரவேசிக்க நாள் குறிக்கப்பட்டு, அந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள கெளரவர்களை பாண்டவர்கள் விருந்தி்ற்கு அழைத்திருந்தார்கள்.மண்டபத்தின் முற்றத்தில் தண்ணீர் இருப்பதைக் கண்டு மிக மெதுவாக காலை முற்றத்தின் மீது வைத்தான் துரியோதனன்;பின்பு அந்த ஜலம் பொய்த் தோற்றம் மாயை என உணர்ந்து வெட்கமடைந்தான்.இதனை எங்கிருந்தோ கண்ட பீமன்,அர்ஜுனன் மற்றும் திரெளபதியின் கேலிச் சிரிப்பொலி துரியோதனனை பேராத்திரம் கொள்ளச் செய்தது.விருந்திற்கு அழைக்கப்பட்டு அவமானப்படுத்தப்பட்டுவிட்டோம் என்ற உணர்வு அவனை ஆட்கொண்டது.இதற்கு பழிதீர்க்க வேண்டும் என்ற வஞ்சினத்துடன் அரண்மணைக்குத் திரும்பினான் துரியோதனன்.   துரியோதனன் தன் மனமென்னும் குடுவையில் உள்ள அமிலத்தோடு பாண்டவர்களின் கேலியால் விளைந்த ரெளத்திர அமிலத்தை கலந்தான்.குடுவை எந்நேரமும் வெடித்துச் சிதறி மற்றவர்களைக் காயப்படுத்த உள்ளுக்குள் பொங்கிக் கொண்டிருந்தது.அதற்கான நேரமும் வந்தது.   கெளரவசபை நிர்மாணிக்கப்பட்டு விருந்திற்கு மன்னன் திருதராஷ்டிரனால் பாண்டவர்கள் ஐவரும் அஸ்தினாபுரம் அழைக்கப்பட்டு இருந்தனர்.துரியோதனனுக்கு ஏற்பட்ட அவமானத்தை துடைக்க சகுனி வஞ்சகமாக யுதிஷ்டிரனை சூதாட அழைத்தான்.யுதிஷ்டிரனும் சம்மதித்து சூதாடத் தொடங்கினான்.பகடை உருண்டது அணிகலன்கள்,எருதுகள்,நகரம்,சகோதரர்கள் என்று நீண்டு சென்று சென்று கொண்டே இருந்த யுதிஷ்டிரனின் பணயப் பொருள்,முடிவில் பாஞ்சாலியை வைத்து சூதாடுவதில் வந்து நின்றது.சகுனியின் பகடையாட்டத்தில் திரெளபதியையும் இழந்து தலை கவிழ்ந்து நின்றான்.   துரியோதனனின் உறக்கமற்ற இரவுகளில் திரெளபதியின் கேலிச் சிரிப்பொலி நீண்ட நாட்களாய் அவன் செவியில் ஒலித்துக் கொண்டேயிருந்தது.பாஞ்சாலியை சபைக்கு அழைத்து வரச் சொன்ன துரியோதனன்,தன் வஞ்சத்தைத் தணித்துக் கொள்ள அவள் ஆடையை துகிலுறியச் சொன்னான் துச்சாதனனிடத்தில்.   திரெளபதியின் சேலையைப் பற்றி இழுத்தான் துச்சாதனன்.பாஞ்சால தேசத்து இளவரசியும்,வில்லுக்கு விஜயனாம் அர்ஜுனன் வென்று வந்த யுவதியுமான அவளை,தன்னை நோக்கும ஆடவரை சிறுமை கொள்ளச் செய்யும் அழகியான திரெளபதியை அவளின் மேனி அழகின் செருக்கை வேரோடு பிடுங்கி எறிய வேண்டும் என்ற எண்ணம் அவனுக்கு மேலோங்கியது.அதுமட்டுமின்றி அவனுக்குள் மிருக உணர்வு கிளர்ந்தெழுந்தது,எதிரில் இருப்பது புள்ளிமானாகப்பட்டது.வேட்டையாடுவதில் ஒன்றும் வரம்புகள் விதிக்கப்படவில்லையே விலங்குகளுக்கு.அவனது ஐம்புலன்களாகிய மெய்,வாய்,கண்,மூக்கு,செவி இதில் கண்ணைத் தவிர மற்ற புலன்கள் செயலற்றுவிட்டன;ஏனெனில் துச்சாதனனின் உணர்வுகள் அனைத்தும் கண்களில் குவிக்கப்பட்டு,திரெளபதியின் அலங்கோலத்தைக் காண அவன் கொண்ட வேட்கையால் இமைக்காமல் நின்றது அவனது இரு கண்கள்.அதனால் அவளது ஆடையைப் பற்றி இழுத்த சில நொடிகளில் அந்தகணைப் போன்ற நிலை ஏற்பட்டது துச்சாதனனுக்கு.சேலையின் பிடியைத் தவறவிட்டு காற்றில் கையைத் துழாவித் துழாவி சோர்ந்து சேலைத் தலைப்பு கரங்களில் தென்படாமல் செயலற்று கீழே வீழ்ந்தான்.   அந்த கெளரவ சபையில் கலைந்த கூந்தலை,துரியோதனன் மற்றும் துச்சாதனனின் குருதியில் நனைத்தே முடிவேன் என சபதம் செய்தாள் பாஞ்சாலி.   இறுதியில் நாட்டை இழந்து வனத்தில் வாசம் செய்து கொண்டிருந்தார்கள் பாண்டவர்கள்.யுதிஷ்டிரரின் மனது சமநிலைக்குத் திரும்பும்போதெல்லாம்,தங்களுக்கு நிகழ்ந்த அவமானத்தை,வலியை,ஆறாத காயத்தை திரெளபதியின் முடிக்கப்படாத கூந்தல் உணர்த்திக்கொண்டேயிருக்கும் அவருக்கும் மற்ற சகோதரர்களுக்கும். பழிதீர்க்கும் நெருப்புச்சுடரை திரெளபதி தினசரி தூண்டிவிட்டுக் கொண்டேயிருந்தாள்.அவளின் இந்த உக்கிரம் ஒரு மகா யுத்தத்துக்கு குருவம்சத்தை அழைத்துச் செல்லும் எனக் காலம் அறிந்தேயிருந்தது.   பாண்டவர்களின் பதிமூன்று ஆண்டுகால வனவாசமும்,ஒரு ஆண்டுகால அஞ்ஞாதவாசமும் முடிந்தது.பாண்டவர்கள் துவாரகை மன்னன் வசுதேவ கிருஷ்ணனை தூது அனுப்பி தங்களுக்கு உரியதைத் தந்துவிடுமாறு கெளரவர்களிடம் வேண்டினர்.அத்தூது முயற்சி தோல்வியில் முடியவே யுத்தம் தொடங்கிற்று.   கெளரவ சைன்யம் பீஷ்மரின் தலைமையிலும்,பாண்டவ சைன்யம் திருஷ்டத்யும்மன் தலைமையிலும் குருட்ஷேத்திர யுத்தக் களத்தில் மோதிக் கொண்டனர்.   யுத்த நாட்களில் இரு சேனைகளிலும் பல ஆயிரம் வீரர்களும்,சேனாதிபதிகளும் மாண்டு கொண்டிருந்தனர்.யுத்தம் தொடர்ந்து கொண்டிருந்தது.துரியோதனன் தன் மகனாகிய லட்சுமணனை இழந்தான்.அர்ஜுனன் தன் மகன் அபிமன்யூவை இழந்தான்.   தனக்கு நீர்த்தார் கடன் செய்ய வேண்டிய தன் மகன் அபிமன்யூ பத்ம வியூகத்தில் சிக்கி மாண்டு போனதை நினைத்து சிதையில் எரிந்து கொண்டிருந்த அவன் உடலின் அருகே நின்று அழுதுபுலம்பிக் கொண்டிருந்த அர்ஜுனனின் அருகே வந்த கிருஷ்ணன் "பார்த்தியா இவ்வுலகே ஒரு பத்ம வியூகம் தான்;இதில் எவ்வளவு கோடி ஜீவன்கள் சிக்கிக் கொண்டு தவிக்கிறார்கள் பார்த்தாயா?இந்த பத்ம வியூகத்தை உடைத்து யாரால் இங்கு வெளிவர முடியும்;அப்படி நடந்தால் இவ்வுலகம் தன் ஆயுளை பிரளயத்தில் முடித்துக் கொள்ளாதா? "என்று உபதேசித்து அவனைத் தேற்றினான்.   பத்தாம் நாள் யுத்த களத்தில் தன் எதிரே வில்லுடன் நிற்கும் சிகண்டியின் தோற்றம் பீஷ்மரின் கண்களுக்கு பெண் அம்பாவைப் போல் தெரிந்து துணுக்குற்றார்;வெகுவாக அயற்சியடைந்தன அவரது வில்யேந்திய கரங்கள்.அதற்குள் சிகண்டியின் பாணங்கள் பீஷ்மரைத் துளைத்தன.பீஷ்மர் தன் கையில் பற்றியிருந்த வில்லை அர்ஜுனன் முறித்தான்.   "நிராகரிக்கப்பட்டவளின் வலி இந்த அம்பு உடலில் பாய்ந்ததால் உண்டான வலியை விடக் கொடியது என உணருங்கள்" என அம்பாவின் குரல் அசரீரியாக பீஷ்மருக்கு கேட்டது.அம்பா என்ற ஸ்த்ரி பழி தீர்த்துக் கொண்டடாள் கங்கை புத்திரனை பெண்ணை உடலால் வஞ்சிப்பதை விட மிகக் கொடியது மனதால் வஞ்சிப்பது எனப் புரிந்து கொண்டார் பீஷ்மர்.அம்பாவின் இத்தண்டனையை சிரம் தாழ்த்தி ஏற்றுக் கொண்டார்.இருவருக்கும் இடையேயான இறுதிக்கணக்கு இவ்வுலகத்தில் தீர்க்கப்பட்டுவிட்டது.   அம்புப்படுக்கையான சரதல்பத்தில் கிடத்தப்பட்டார்.கங்கை நதி அவரது தாயானாலும் அவரின் மரணத் தாகத்தை தீர்க்க அவள் வரவில்லை.போரின் முடிவில் கெளரவர்களின் தோல்வியை கண்டுணர்ந்தார்.சூரியன் தென் திசையில் சஞ்சரிக்கும் தட்சிணாயனத்தில் வீழ்த்தப்பட்ட பீஷ்மர், உத்தராயணம் எனப்படும் சூரியன் வடதிசையில் சஞ்சரிக்கும் காலம் வரும் வரை காத்திருந்து தன் திருவுடலை நீத்து வானுலகம் சென்றார்.   மாயை கபிலவஸ்து நாட்டின் அருகாமையில் காட்டிலுள்ள ஒரு குடில் தன் மகன் ராஜ்யத்தின் மீது பற்று இல்லாமல் இருப்பதைக் கண்ட மன்னர் சுத்தோதனர் காட்டிலுள்ள துறவியிடம் சித்தார்த்தனை அனுப்பிவைத்தார்.   குருவின் முன்பு பத்மாசனத்தில் நன்றாக நிமிர்ந்து கண்களை மூடி அமர்ந்திருந்தான் சித்தார்த்தன்.எதிரில் தியானத்தில் ஆழ்ந்திருந்த குரு கண்களைத் திறந்து சித்தார்த்தனை கருணையுடன் நோக்கினார்.தியானத்தில் மூழ்கியிருந்த போதே உணர்ந்திருந்தார் சித்தார்த்தனின் எண்ண ஓட்டத்தை .பல பிறவிகாய் உண்மையின் வாசல் வரை வந்த சித்தார்த்தன் இம்முறை மெய்யாகவே உள்ளே நுழைந்து விடுவானா? பிறவி ஆற்றுச் சுழலிலிருந்து தப்பிவிடுவானா? ஒவ்வொரு முறையும் இயற்கை அவனைப் பந்தாடியதே, சகதியில் காலை வாறிவிட்டு சிரித்தது; அழகிய பெண்ணைக் கொடுத்து கண்ணைப் பறித்தது; உறவுகளின் இறப்பில் அவன் அழுவதைப் பார்த்து பேய்ச் சிரிப்பு சிரித்தது.இவ்வுலகில் உன்னைப் போல எத்தனை பேரை பார்த்திருக்கிறேன் என்ற கர்வம் அதற்கு இறைவனுக்காக தவம் செய்யும் முனிவர்கள் கூட பெண்களின் அழகில் மதி மயங்கி காமப் பித்தனாக அலைவதைக் கண்டு எக்காளமிட்டது.மனிதனுக்கு காமம்,செல்வம்,உணவு,புகழ்,அதிகாரம் போன்ற விலங்கினைப் பூட்டி அருகில் அமிர்தத்தை வைத்தது.மனிதர்களின் ஆசை ஒன்றன்பின் ஒன்றாக சங்கிலித் தொடராய் நீண்டு கொண்டே சென்றது.குழந்தை பருவத்தில் தின்பண்டம், விளையாட்டின் மீது ஆசை, பருவ வயதில் பெண் மோகம், பெண் கிடைத்துவிட்டால் நிலம்,வீடு,வாகனம்,பொன் நகை இதிலும் திருப்தியடையாமல் புகழ், அதன் காரணமாக வரும் பதவி,அதிகாரம்.உயிர் அவனை விட்டுப் பிரியும் தறுவாயில் கூட மனம் இவற்றையே சுற்றிச் சுற்றி வரும்.இறைவன் என்றால் தன்னை விட பெரிய செல்வந்தன் என்ற நினைப்பே மனிதர்களுக்கு அவன் மன்னாதி மன்னன் இவன் தேச எல்லைகளைவிட அவன் தேச எல்லை மிகப் பெரியது என்ற நினைப்பு.   ஆனாலும் பலபிறவியாய் இதையே அனுபவித்து வந்த சில ஜீவாத்மாவுக்கு ஒரு கட்டத்தில் இச்சுகம் திகட்ட ஆரம்பிக்கிறது.பெண் மோகம் கடலலை போல் தணிகிறது பின்பு எழுகிறது.அந்தப்புரத்தில் பஞ்சு மெத்தையில் கட்டி உருளும் போது இருந்த வெறி காமம் தணிந்த பின் எங்கு சென்றது.எதிரே அதே பெண் மயக்கும் அங்கங்கள் சில நிமிட நேரத்திற்கு முன் போதையேற்றிய அவ்வுருவம் இப்போது அருகிலிருந்தும் வேறு பக்கமாய் படுக்கத் தோன்றுகிறதே.எந்த சுகத்தையும் தொடர்ந்து அனுபவித்துக கொண்டேயிருக்க முடியுமா? ஒரு நாள் முழுவதும் பெண்ணுடன் கட்டிப் புரள முடியுமா? ஒரு நாள் முழுவதும் உணவருந்திக் கொண்டேயிருக்க முடியுமா? ஒரு நாள் முழுவதும் உடையை உடுத்தி உடுத்திக் களைய முடியுமா? செய்த செயலையே திரும்பத் திரும்ப செய்கிறோம்.ஏன் அச்செயலை ஒழுங்காக செய்யவில்லை என்பதற்கா? நாம் இவ்வுலகில் அனுபவிப்பது எல்லாம் இன்பம் மட்டுமே. ஆனந்தம் ஆண்டவனுடையது.ஏனெனில் செய்ததை பற்றிய வருத்தம் அவனுக்கு கிடையாது; .நாளை என்ன நடக்குமோ என்ற பயம் அவனுக்கு இல்லை; இதையெல்லாம் மறக்க நிகழ்காலத்தில் பெண்களின் அருகிலும், மதுவிலும் இன்பம் காண வேண்டிய நிலைமை அவனுக்கு இல்லை.ஆனந்தம் அடைய முடியாததா? எல்லா ஜீவாத்மாவும் எதில் எதிலோ இன்பம் கண்டு அதன் வழியே நித்யானந்தத்தை அடைய முயற்சிக்கிறது.சிறு எறும்பு இமயமலை ஏறும் முயற்சி போல்; ஊர்ந்து செல்வதை விட்டு பறக்க முயற்சித்தால் ஒழிய அதனால் அடைய முடியாது.ஓணான் வானில் பறக்கும் கழுகைக் கண்டு தானும் பறக்க முயற்சித்து கீழே விழுந்தது, கழுகும் ஒரு நாள் இப்படித்தான் கீழே விழுந்திருக்கும் என ஓணான் நினைத்தது.இது சித்தார்த்தனுக்கும் பொருந்தும் தானே.   "சித்தார்த்தன் கண்ணைத் திறந்து என்னைப் பார்.நீ இளவரசன் உன் தந்தைக்கு பிறகு அரியணை ஏற வேண்டியவன்.அன்னை அக்கரையில் நின்று கொண்டிருக்கிறாள் அவளின் இரு மகன்கள் ஆற்றைக் கடந்து அக்கரைககுச் செல்ல வேண்டும்.ஒரு மகன் ஆற்றைக் கண்டு அஞ்சி விலகி வேறுவழியாக ஊரைச் சுற்றிக் கொண்டு அன்னையிடம் வருகிறான்.இன்னொரு மகன் இதோ வருகிறேன் அம்மா என்று ஆற்றின் நீர் மட்டம் எவ்வளவு என்று பார்க்காமல் ஆற்றில் குதித்து நீந்தி அன்னையிடம் வருகிறோன்.அன்னை நீந்திக் கடந்து வந்த மகனை அரவணைத்துக் கொள்கிறாள்.அன்னைக்கு இரு மகன்களின்பால் வேறுபாடு இல்லை.ஒருவன் வேறு வழியாகச் சுற்றிக் கொண்டு வந்தாலும் மனித நடமாட்டம் உள்ள பகுதியின் வழியாக எந்த இடையூறுமின்றி பத்திரமாக தன்னை வந்தடைவான் என்று எண்ணுகிறாள்.ஆற்றில் இறங்கியவனுக்கு முதலைகளாலும்,வெள்ளத்தாலும்,பாம்புகளாலும் ஆபத்து ஏற்படலாம், எனவே லெளகீகம் எனும் ஆற்றைக் கடந்து வந்தவனுக்கே அன்னையின் அரவணைப்பு.ஊரைச் சுற்றுபவன் துறவி;ஆற்றில் நீந்துபவன் இல்லறத்தான்.சித்தார்த்தா நீ ஆற்றைக் கடந்து அன்னையை சென்றடைய வேண்டுமென்பது என் அவா! "     "குருவே உங்களிடம் தர்க்கம் செய்ய எனக்கு வயதில்லை, இருந்தாலும் என் மனம் விடைதேடும் சில கேள்விகள். மாதாவிடம் அறிந்து கொள்ள முடியாததை மனைவியிடம ஒருவன் எப்படி அறிந்து கொள்ள முடியும்? "   "சித்தார்த்தா மனைவியின் இளமை,அழகு இதிலெல்லாம் ஈடுபாடு மூன்று அல்லது நான்கு மாதங்களுக்குள் முடிந்துவிடும்.இது மனைவியால் கிட்டும் அனுபவம்.இளைஞனே குடும்பத்தில் எப்போதும் மனைவியிடத்திலிருந்து இதமான வார்த்தைகளையே கேட்டுக் கொண்டிருக்க முடியாது.சில வேளைகளில் அவள் மனதைக் காயப்படுத்தும் சொற்களையும் வீசுவாள்.அவ்வேளையில் நீ அவளை மனைவியாகப் பார்க்காமல் உன்னுடைய மாதாவாகப் பார்க்க வேண்டும்.உனக்கு இராமகாதை தெரியுமல்லவா? கிருஷ்ணர் சொல்படி நடக்க வேண்டும்; இராமன் வாழ்க்கை வாழ வேண்டும்.இல்லறத்தை நல்லறமாக நடத்தியவன்,தந்தையின் சொல்படி பதினான்கு ஆண்டுகள் வனவாசம் செய்தான்.இதமை நீ நன்கு உணர வேண்டும்.உன் தந்தையின் விருப்பம் என்னவென்று உனக்குத் தெரியும் தானே? " "தெரியும் குருவே.இப்போது நான் எந்தச் சலனமும் இல்லாமல் இருக்கிறேன்.திருமணம் முடிந்த பின் அப்பெண்ணின் சிரிப்பு,பேச்சு,இளமை இவையெல்லாம் என் மனதில் சலனத்தை ஏற்படுத்தாதா? அலைகளற்ற தூய குளத்தில் கல் விழுந்தது போலாகாதா? அவள் வேறொரு ஆடவரோடு பேசிச் சிரித்தால் என் மனதில் சந்தேகம் தோன்றுமல்லவா, நீங்கள் கூறிய இராமகாதையில் இராமச்சந்திரமூர்த்தி கூறியதை உங்களுக்கு இக்கணத்தில நினைவூட்ட விரும்புகிறேன். "   "இராவணனிடமிருந்து சீதையை மீட்டு வந்த இராமன் தன்னைத் தழுவ வந்த சீதையை தடுத்தி நிறுத்தி உனக்கு அத்தகுதி உளதோ?உன்னை லெட்சுமணன் காவலில் விட்டுச் சென்றேன்.பர்ணசாலையை விட்டு வெளியேறாதே என்று லெட்சுமணன் போட்ட கோட்டை தாண்டிவிட்டாய் அல்லவா?என் சொல்லை மீற உன் மனது விழைந்து விட்டதல்லவா?இப்போது என் மனம் உன்னை சோதித்தறிய விரும்புகிறது பெண்களை மனதாலும் தீண்டாத இந்த ராமச்சந்திரமூர்த்திக்கு தன்மனைவியை அக்னி பிரவேசம் செய்யச் சொல்ல தகுதி உண்டல்லவா?என்ன தான் நம் தோட்டத்தில் பூத்த மலரென்றாலும் அழகாயிருக்கிறது என்பதற்காக சேற்றில் விழுந்த பூவை சூடிக்கொள்ள முடியுமா? இந்த ஸ்ரீராமனை உலகம் பிரளயத்தில் அழியும் வரை அவதார புருஷன் என மக்கள் கொண்டாடுகின்ற காலம் வரும்போது,என் மனைவியாகிய உன்னை தர்மபத்தினி என யுகம் தோறும் மக்கள் துதிக்கவேண்டுமல்லவா?இராவணன் சீதையை சிறையெடுத்தான் இராமன் மீட்டு வந்தான் என்பது ஏதோ தன் நாட்டை தன்னிடமிருந்து கைப்பற்றியவளை எதிர்த்து போர் செய்து வெற்றி பெற்று தன் நாட்டை தன் வசமாக்கிக் கொள்வது போலல்ல.இராவணன் ஆசைப்பட வைத்தது உன் மேனி அழகல்லவா அந்நிய ஆடவனை ஆசைப்பட வைத்த அம்மேனியை தீக்கிரையாக்கு, உத்தமியானாள் பெறுவாய் புது எழிலை எழுவாய் அக்னியிலிருந்து,அயோத்தி நாட்டின் சிம்மாசனத்தில் என் அருகில் அமர்வாய் என்று உரைத்தான் - இப்படி அதிகமாக பெண்ணைப் பற்றி உருகியும் பின்பு அதே வாயால் அவளையே ஏசவும் செய்யும் நிலை எனக்கு வரவேண்டுமா குருவா? "   துறவி கண்களை மூடி நீண்ட மெளனத்திற்குப் பிறகு வாய் திறந்தார். "குமாரனே மகாபாரதத்தில் ஒரு சிறு நிகழ்வு.கெளரவர்களில் மூத்தவன் துரியோதனனின் மனைவி தன் கணவனின் நண்பனான கர்ணனுடன் பரமபதம் விளையாடிக் கொண்டிருக்கிறாள்.ஆட்டத்தை முடிக்காமல் பாதியில் எழுந்து சென்ற அவளின் கைகளைப் பிடித்து இழுக்க முயன்ற கர்ணனின் கைபட்டு அவள் கழுத்தில் அணிந்துள்ள முத்துமாலை அறுந்து விழுந்தது இதனை அப்போது ஏதேச்சையாக அங்கு வந்த துரியோதனன் பார்த்தான்.சற்றும் சந்தேகம் கொண்டு முகம் கோணாமல் அவனிடமிருந்து வந்த வார்த்தைகள் எடுக்கவோ கோர்க்கவோ என்பது".   "இதிகாச புராணங்களில் நாயகர்களின் நாவிலிருந்து வந்த தீஞ்சொற்களை பார்க்கும் நீ.கொடியவர்களின் நாவிலிருந்து வரும் நன் சொற்களையும் பார்க்க வேண்டும்.கோகுலத்தில் சீதை, அயோத்தியில் கிருஷ்ணனும் இருந்திருந்தால் என்ன நடந்திருக்கும்.களங்கமற்ற சந்திரனைப் போன்ற உன் குணத்திற்கேற்ற நல்ல குணவதி மனைவியாய் அமைவாள்.இந்த ஏழைத்துறைவியின் வேண்டுகோளை ஏற்கும்படி இறைஞ்சிகிறேன்".   குருவிடம் விடைபெற்றுக் கொண்டு அரண்மனை திரும்பினான் சித்தார்ததன்.தேரோட்டியிடம் மன்னரிடம் கொடுக்குமாறு ஓலை ஒன்றை கொடுத்திருந்தார் துறவி.அதனைப் பிரித்துப் படித்தார் மன்னர் அவ்வோலையில் சித்தார்த்தன் முடிசூடிக்கொண்டால் கபிலவஸ்து நாட்டை மட்டும் ஆள்வான்.இல்லையேல் உலகை ஆள்வான்.மற்றதேச இராஜகுமாரர்களைப் போன்று உன் மகன் இல்லையே என்ற கவலை வேண்டாம்.வானில் நட்சத்திரங்கள் தான் அதிகம் ஆனால் சூரியன் ஒன்றே ஒன்று தான் என்று எழுதியிருந்தது.   அரண்மனை திரும்பிய சித்தார்த்தன் தந்தையிடம் திருமணத்திற்கு சம்மதம் தெரிவித்தார்.தந்தை சுத்தோதனர் எண்ணிய வண்ணமே வெகு விமரிசையாக நடந்த திருமணத்தில் அரசிளங்குமரி யசோதரை சித்தார்த்தனின் மனைவியனாள்.இல்லறம் இனிதே நடந்தது.சில வருடங்களில் ராகுலன் என்ற மகன் பிறந்தான்.   அன்று விசாகம் சித்தார்த்தனின் இருபத்தொன்பதாவது பிறந்த தினம் .உறக்கத்திலிருந்து விழித்தெழுந்த சுந்தோதனருக்கு ஜோதிடர் கூறியது நினைவுக்கு வந்தது.உன் மகன் தன்னுடைய இருபததொன்பதாம் வயதில் துறவு பூணுவான் என்றல்லவா கணித்துச் சொன்னார்.   இன்று வரை சித்தார்த்தனின் கண்கள் வாழ்வின் நிலையாமையை உணர்த்தும் பிணி.மூப்பு,சாக்காடு இவைகளை பார்த்தறியாதவாறு செய்தாகிவிட்டது.அவன் உல்லாசப் பூங்கா வரை தேரில் உலவச் சென்றாலும் அவன் போகும் வழியில் வாழ்வின் அநித்யத்தையும்,துயரத்தையும்,முதுமையையும் வெளிப்படுத்தும் மக்கள் யாரும் எதிர்படா வண்ணம் வீரர்கள் காவல் காக்கும் பாதை வழியாகவே தேரோட்டியை தேரைச் செலுத்த கட்டளைப் பிறப்பிக்கப்பட்டு,அது இன்று வரை நிறைவேற்றப்பட்டும் வருகிறது.துன்பத்தின் நிழல் கூட அவன் மீது படாதவண்ணம் இந்நிமிடம் வரை காப்பாற்றி வந்ததில் சிறிது மனத்திருப்தி ஏற்பட்டது சுத்தோதனருக்கு.   சுத்தோதனர் மகனை அழைத்தார். "இன்று உன் பிறந்த தினம்;நாடே விழாக்கோலம் பூண்டிருக்கும் நீ தேரில் உல்லாச பூங்கா வரைச் சென்று மக்களின் கொண்டாட்டங்களை கண்டு வா" என்றார்.   சித்தார்த்தர் தேரில் ஏறி அமர்ந்தார் "போகலாமா இளவரசே" என்று தேரோட்டி அனுமதி கேட்டான்.குரல் விண்ணிலிருந்து வருவதைப் போலிருந்ததை உணர்ந்த இளவரசர் "சன்னா" என்று அழைத்தார்.தேரோட்டி திரும்பி இளவரசரை பார்த்தான்;தம் தேரோட்டியான சன்னா தான் என்று தெரிந்தது, அவனுடைய முகத்தில் வேறென்றும் இல்லாத அளவுக்கு ஒளிவீசியது;அவனின் இரு கண்கள் சித்தார்த்தனின் உள்ளே ஊடுருவியது "சரி போகலாம்" என்று இளவரசரின் வாய் உரைத்தது.   தேரோட்டி சன்னா அன்றைய தினம் அரண்மனைக்கு உடல்நலக்குறைவால் வர இயலவில்லை.இளவரசரின் தேரைச் செலுத்த வந்தமர்ந்தவர் சன்னாவின் உருவத்திலிருந்த துறவி.அவர்களின் தேர் வீரர்கள் காவலிருக்கும் வழியில் செல்லாமல் மக்கள் நடமாட்டம் மிகுந்த வேறு வழியில் நுழைந்தது.   தேர் சென்று கொண்டிருந்த பாதையில் இருந்த மரத்தை சுட்டிக்காட்டி "மர நிழலில் ஒருவன் போர்வையை போத்திக்கொண்டு படுத்திருக்கின்றானே இவனுக்கு என்ன நேர்ந்தது?உடல் நடுங்கிக் கொண்டுயிருக்கிறதே அவனுக்கு என்னவாயிற்று?" என்றான் தேரோட்டியிடம் சித்தார்த்தன்.   "பிரபோ அவன் ஒரு நோயாளி ஆரோக்கியமாக மனிதன் இருக்கும் போது உடல் காற்றில் இலை பறப்பது போல் இலகுவாக இருக்கும்;நோய் தாக்கிவிட்டால் நத்தை கூட்டினைச் சுமந்து கொண்டு நகர்ந்து செல்கிறதே அது போல உடல் ஒரு சுமையாகிவிடும்.பசு தின்னப்பட்ட வைக்கோலை வாய்க்கு திரும்பிக் கொண்டு வந்து அசைபோடுவதைப போல் பின்னோக்கிய நினைவுகளோடேயே ஒரு நொடியினை யுகமாய் கழிக்க வேண்டியிருக்கும்.பிறந்துவிட்டாலே பிணிங்கிறது இயற்கை தானே இளவரசே, அதை யாரால் தடுக்க முடியும்.அசுரனைப் போல் திடகாத்தரமாய் இருப்பவனையே நோய் சில வருடங்களில் எலும்பாய் உருக்கிவிடுகிறதே" எனறு பதிலுரைத்தார் தேரோட்டி வடிவிலிருந்த குரு.   சிறிய தூரம் சென்ற பிறகு கையில் கோல் ஊன்றி முடி நரைத்து தோலில் சுருக்கங்களுடன் கூனிக்குறுகி நடந்து வரும் முதியவரைக் காட்டி "இது என்ன வேடம்?கூத்திலிருந்து அரிதாரத்தை கலைக்காமல் சென்று கொண்டுயிருக்கின்றானா?நல்ல வேடிக்கையாக இருக்கிறதே! "என்றார் சித்தார்த்தர்.   "பிரபோ அவன் ஒரு வயோதிகன் வயது தொண்ணூறுக்கு மேல் இருக்கும் மரத்தில் பூ காயாகி கனியாவதில்லையா? காயாயிருக்கும் போது அதன் இயல்பு புளிப்பு;கனியானால் இனிப்பு.அதன்படி மனித உடல் குழந்தையாயிருக்கும் போது இலவம் பஞ்சு போல் மென்மையாக இருக்கும்;பருவ வயதில் நரம்புகள் புடைக்க முறுக்கேறி இருக்கும்;முதிய வயதில் தோல்கள் சுருங்கி தலைமுடி நரைத்து உடல் தளர்ந்து கூன் விழுந்து மரத்திலிருந்து காய்ந்த இலை எப்போது உதிருமென்று சொல்ல முடியுமா இளவரசே" என்றான் தேரோட்டி.   பூங்காவை நெருங்கும் வேளையில் ஒரு பிணத்தை நால்வர் சுமக்க.உறவினர்கள் கதறி அழ மயானம் நோக்கிச் சென்று கொண்டிருந்தது அக்காட்சியைக் சித்தார்த்தர் "அவனை ஏன் நான்கு பேர் சுமந்து செல்கிறார்கள்?அதன் அருகில் இவ்வளவு ஜனங்கள் அழுது அரற்றிக் கொண்டிருக்கின்றார்களே, அவள் ஏன் காதில் வாங்காமல் காலை நீட்டி படுத்துக் கொண்டிருக்கின்றான்? " என்ற இளவரசரின் கேள்விக்கு தேரோட்டி விடை கூறத் தொடங்கினான்.   "பிரபோ தோன்றுவதெல்லாம் ஒரு நாள் அழியத்தானே வேண்டும் - எத்தனையோ சக்கரவர்த்திகள், தேவலோகப் பெண்களைப் போன்ற அழகிகள், ஞானிகள் எல்லோரும் இறுதியில் மண்ணாய்த்தானே போனோர்கள்.ஏழை,பணக்காரன்,உயர்ந்த குலம்,தாழ்ந்த குலம்,விவசாயி,போர் வீரன்,மன்னன்,சந்நியாசி என சமூக அந்தஸ்து பேதம் வைத்த இறைவன் மரணத்தை மட்டும் அனைவருக்கும் பொதுவில் அல்லவா வைத்துவிட்டான்.ஊரில் பல பேர்கள் எத்தனையோ மரணமடைந்தரவர்களின் வீடுகளுக்கு சென்று வந்தாலும் தாங்களும் இறந்துவிடுவோம் என்ற உறுத்தலே இல்லாமல் செருக்குடன் நடமாடுகிறார்களல்லவா இளவரசே" என்று சொல்லிக் கொண்டே   மயக்கம் தானோ மாயைதானோ பார்க்கின்ற எல்லோரும் மாயமாய் மறைகிறார்கள் சென்றதடம் எதுவுமில்லை அப்பா என்றும் அம்மா என்றும் எவ்வளவு தான் கத்தினாலும் விட்டகன்ற மூச்சி தான் விரைந்து உடல் திரும்புமோ என்று பாடத்துவங்கினான் தேரோட்டி   "சன்னா, மனைவி, மக்கள், தாய், தந்தை இருந்தும் இப்போது நான் யாருமற்ற வனத்தில் தனிமையாய் இருப்பதைப் போன்று உணர்கிறேன்;உடனே தேரை அரண்மணைக்குத் திருப்பு" என்றார் இளவரசர்.   "ஒருவர் வலியை மற்றொருவர் உணரமுடியாதவரை எவ்வளவு உறவிருந்தாலும் இவ்வுலகத்தில் எல்லோரும் தனிமையானவர்கள் தான் இளவரசே மனம் அமைதி அடையுங்கள்" என்றான் தேரோட்டி.   அரண்மனை திரும்பிய சித்தார்ததர் மனக் குழப்பத்தோடேயே இரவு உறங்கச் சென்றார்.நித்திரையில் கழுகாய் வானில் பறப்பது போல் கனவு திடீரென கண்விழித்த சித்தார்த்தரருக்கு மூளையில் ஒரு மின்னலடித்தது.நான் நான் கழுகாய் பறப்பதாக கனவு காண்கிறேனா?இல்லை அக்கழுகு அரசகுமாரனாய் இருப்பதைப் போல் கனவு காண்கிறதா?எது உண்மை?மனம் தான் கழுகாகவும், மனிதனாகவும் தனக்கு உடல் இருப்பதைப் போல் கற்பனை செய்கிறதா? கழுகு வானில் பறக்கும் போதும் அதன் இருகண்கள் மட்டும் தரையில் உள்ள அதன் இரையிலேயே பதிந்திருக்கிறதே எந்த வினாடியும் அந்த இரையின் மீது பாய்ந்து கவ்வி அவ்வுயிரைக் குரூரமாக்கி புசித்துவிடும் வேட்கை அதற்கு.அது போல மனிதமனம் ஆசையினால் விளையும் இன்பத்தை நோக்கி எந்தக் கணமும் பாய்ந்துவிட தயாராக இருக்கிறதே;இந்த உண்மையறியா உறக்கத்திலிருந்து எப்போது விழிததெழுவது.   கூண்டுக்குள் இருக்கும் கிளி ஜோசியக்காரன் கொடுக்கும் இரு அரிசிக்கு சுவடி எடுத்துக் கொடுத்துவிட்டு உள்ளே திரும்பவும் செல்வதைப் போல், உலகம் எனும் சிறையில் பெண்,பொன்,புகழ் என்ற ஆசையினால் சிறைக்கு வெளியே செல்லும் பாதையை மறந்து உலகமாயையில் சிக்கி துன்பம்,இன்பம் என மாறி மாறி எதிர்ப்படும் நெடும்பாதையில் அச்சாணி இல்லாத தேரை எவ்வளவு நாள் செலுத்துவது என்று வாழ்க்கையின் உண்மையான அர்த்தததைப் பற்றி ஆழ்ந்து சிந்திக்கலானார்.   கட்டிலை விட்டு எழுந்து மனைவி மற்றும் மகனை கண் இமைக்காமல் பார்த்தார்.கண்ணாடி முன் சென்று தன் அரசகுல அணிகலன்களை ஒவ்வொன்றாக கலைந்தார்;வாளால் தன் சிகையினை வெட்டியெறிந்தார்.ராஜகுமாரனாக அவரைக் காட்டிய நிலைக் கண்ணாடியிலிருந்து அத்தோற்றம் மறைந்து இப்போது சந்நியாசக் கோலத்தை பிரதிபலித்தது.   நாடே உறக்கத்தில் ஆழ்ந்திருந்தது;சித்தார்த்தர் விழிப்புணர்பு பெற்றுவிட்டதை அறியாமல்.வெளிப்புற வாயிலை வீரர்கள் காவலிருப்பதை அறிந்து வேறொரு வாயில் வழியாக அரண்மணையைவிட்டு வெளியேறினார்.சித்தார்த்தர் ஞானம் அடைந்து புத்தராய் மலர்ந்த அரச மரத்தடி அவரின் வருகைக்காக காத்திருந்தது.இலக்கற்ற பயணத்தில் நிலவொளியில் அவரின் மேனி மீது விழுந்த அரண்மணையின் நிழலை சித்தார்த்தரின் திருப்பாதங்கள் கடந்து சென்றன சூன்யத்திலிருந்து வந்தவன் திரும்புவும் சூன்யத்துக்குள் நுழையும் வரை இவ்வுடலைத் தாங்கி உலக மக்களின் துன்பங்களுக்கான உண்மையான காரணங்களைக் கண்டறிவேன் என எண்ணிக்கொண்டடே இருளில் மறைந்தார்.   கூடு வெயில் சற்றே தணியத் தொடங்கியிருந்தது. வானம் மேகக் கூட்டங்கள் இல்லாமல் நீலவண்ணமாக இருந்தது. பள்ளிக் குழந்தைகள் வீடு நோக்கிச் சென்று கொண்டிருந்தனர். தேநீர் கடையில் கூட்டம் மொய்க்கத் தொடங்கியிருந்தது.கலையரசன் பேருந்து நிறுத்தத்தை நோக்கிச் சென்று கொண்டிருந்தான். திருவாரூர் செல்லும் பேருந்து வந்தது.அவ்வளவு கூட்டம் இல்லை.கலையரசன் ஜன்னலோர இருக்கையில் அமர்ந்தான். அவன் இப்போது மடாலயத்திற்கு சென்று கொண்டிருக்கிறான். வாழ்க்கையில் அவன் எதிர்கொண்ட அனைத்திலுமே தோல்வியடைந்திருக்கிறான். காதல்,கல்வி,வேலை என அனைத்தும் அவனுக்கு ஏமாற்றத்தையே பரிசாக அளித்தன. ஊருவிட்டு ஊரு வந்து சென்னையிலுள்ள பெண்ணைக் காதலிக்க நெஞ்சுரம் வேண்டாமா? கடைசியாக அப்பெண் வானனும் பூமியும் எப்போதும் ஒன்று சேர்வதில்லை என வசனம் பேசிவிட்டு விடை பெற்றுக் கொண்டாள். கல்லூரியில் கடைசி ஆண்டு தேர்வில் தோல்வி அடைந்ததால் இரண்டாம் வகுப்பில் தான் தேர்ச்சி பெற முடிந்தது கலையரசனால். கிட்டதட்ட அரை சதம் அடித்திருப்பான் நேர்முகத் தேர்வில். அதில் சில இடங்களில் வேலை பார்த்தும் சரிவராமல் விட்டுவிட்டான். மனதை ஒரு முகப்படுத்தி எந்த இடத்திலேயும் அவனால் நிலைக்க முடியவில்லை. தோல்வியால் துவண்டிருந்த அவன் இந்த உலக இயக்கத்திற்கு அடித்தளமாக விளங்கும் சக்தியை அறிந்து கொள்வதற்கு முயன்றான். பணம் பிரதானமாய்ப் போன உலகமாக ஏன் மாறியது இவ்வையகம் என தனக்குத்தானே கேட்டுக் கொண்டான். பேருந்து முன்னோக்கிச் செல்ல மரங்களும்,வீடுகளும் பின்னோக்கிச் சென்ற வண்ணமிருந்தன. இதுவரை தான் சந்தித்த நபர்களில் பலபேர் தாங்கள் என்னமோ வானிலிருந்து குதித்து வந்தவர்கள் மாதிரியும் மற்றவர்கள் மட்டும் பிறந்து வந்த மாதிரியும் நடந்து கொண்டதைக் கண்டு மனம் குமைந்திருக்கிறான். பணம் முதன்மைப்படுத்தப்படும் உலகில் வாழப்பிடிக்கவில்லையென்றால் என்ன செய்வது? பிறப்பையும் இறப்பையும் நிர்ணயிக்கும் சக்தி எது. வாழ்க்கையின் பொருள் என்ன. பிரபஞ்சத்தின் பிரம்மாண்டத்தில் மனிதன் சிறு தூசு என தன்னை உணராமல் ஏன் தான்தோன்றியாக் குதி்க்கிறான். உண்மையின் பாதை கடினமானது என்பதை உணர்ந்திருந்தான் கலையரசன். கைபட்டவுடன் சுருண்டு கொள்ளும் மரவட்டை மாதிரி தோல்வி என்ற அடி கிடைத்த பின் மனம் ஏன் உள்முகத் தேடலில் ஈடுபடுகிறது.ஆலயங்களில் கூட்டம் குவிகிறது இருந்தும் பாலத்காரமும்,கொலையும்,திருட்டும் குறைந்திருக்கிறதா என்ன? கோவிலிலுள்ள தெய்வங்கள் மனிதனால் படைக்கப்பட்டவை, ஆதலால் தான் தங்க ஆபரணங்கள் சூட்டி அழகு பார்க்கிறார்கள். ஒவ்வொருவனுக்கும் தனித்தனி தெய்வமா என்ன? எல்லோருக்கும் ஒரே தெய்வம் தானே, தெய்வங்களை நேசிப்பவர்கள் அவர்களின் படைப்பான மனிதர்களை மட்டும் ஏன் வெறுக்கிறார்கள். மனசாட்சிக்கு விரோதமாய் தவறுகளை செய்துவிட்டு யாகம் வளர்த்தால் சொர்க்கத்துக்கான சாவி கையில் கிடைத்துவிடுமா என்ன? மக்களின் உழைப்பைச் சுரண்டுபவர்களும், சித்து வேலைக் காட்டுபவர்களும் தான் பணத்தை குவிக்கிறார்கள். இதெல்லாம் விட கொடுமை இவர்களின் நன்கொடையில் தான் கோயிலுக்கு கும்பாபிஷேகம் நடைபெறுகிறது. இந்த பாரத மண்ணில் எத்தனையோ ஞானிகள் தோன்றி இருக்கிறார்கள். தெய்வ அனுபூதி பெற்ற அவர்களிடம் மக்கள் சென்று செல்வத்தையும், வசதி வாய்ப்பையும் வேண்டுகிறார்கள். இந்த பேருந்து மாதிரி காலம் எவ்வளவு வேகமாக ஓடுகிறது.கால வெள்ளத்தில் எவ்வளவு பெரிய சாம்ராஜ்யங்கள், சக்கரவர்த்திகள், பேரழகிகள் அடித்துச் செல்லப்பட்டு மண்ணோடு மண் ஆனார்கள். குருமார்களிடம் நான் மட்டும் ஏன் அவஸ்தைபடுகிறேன் எனக் கேட்டால். கர்ம வினை என இரண்டே வார்த்தைகளில் வாயை அடைத்துவிடுவார்கள். கண்ணுக்குப் புலனாகாத வலையில் சிக்கிக் கொண்டுள்ளேன் என்பது மட்டும் உண்மை. தீபம் இருட்டை விரட்டுவது போல குரு தன்னை வெளிப்படுத்திக் கொண்டு வாழ்க்கையில் ஒளியேற்ற மாட்டாரா என மனம் சரணடைய புனிதருடைய பாதக் கமலத்தை தேடியலைகிறது. வாழ்க்கையின் இன்னல்களைக் காணும் போது மரணம் ஒரு விடுதலையாகப்படுகிறது. மரண சர்ப்பம் எவரையும் தீண்டாமல் விடாது என்கிற போதும் மனிதர்கள் அகங்காரத்துடன் நடந்து கொள்வது ஏன்? கண்முன்னே ஒவ்வொருவராக சாகும் போதும் மனிதன் தன்னை சாவு நெருங்காது என ஆணவத்துடன் நடந்து கொள்வது எதனால்? காலமே புதிர்களைப் போடுகிறது. காலமே புதிர்களை அவிழ்க்கிறது. மனிதம் தொலைத்த மானுடம் தன்னுடைய கோர முகத்தை மறைத்து முகமூடியுடன் உலாவுகிறது. மடாலயத்தில் ஓர் இரவு கழித்த பிறகாவது வாழ்க்கையில் திருப்பம் நேருமா என்ற யோசனையில் பயணித்து வந்தான் கலையரசன். "மடப்புரம் எல்லாம் எழுந்து வாங்க" என்ற கண்டக்டரின் குரல் அவன் சிந்தனையைக் கலைத்தது. பேருந்தை விட்டு கீழே இறங்கினான். கோயிலை நோக்கி நடந்தான்.மன்னார்குடியிலிருந்து கிளம்பும் முன்பு சிக்கலில் உள்ள தனது நண்பன் முகுந்தனுக்கு போன் செய்து எட்டரை மணிக்குள் வந்துவிடச் சொல்லியிருந்தான். தெட்சிணாமூர்த்தி சுவாமிகள் ஜீவ சமாதியடைந்த இடத்தில் பத்து நிமிடங்கள் தியானம் செய்தான்.கடிகாரத்தைப் பார்த்தான் மணி ஏழு ஆனது.முகுந்தனை எதிர்பார்த்து கோயில் பிரகாரத்தில் அமர்ந்தான். முன்பு இரண்டொரு முறை இந்தக் கோயிலுக்கு வந்திருக்கிறான்.இரவில் எங்கு படுப்பார்கள் என்ற விவரமெல்லாம் கலையரசனுக்குத் தெரியாது.முகுந்தன் தான் அடிக்கடி வியாழக்கிழமை இரவுகளில் வந்து தங்கிவிட்டுப் செல்வதாகச் சொல்வான். ஆலயத்திற்கு வருவோர் எண்ணிக்கை கொஞ்சம் கொஞ்சமாக குறையத் தொடங்கிது.மணி ஒன்பதரையை நெருங்கியது. அப்போது பின்னால் யாரோ தொடுவது போலிருந்தது கலையரசன் திரும்பிப் பார்த்தான், முகுந்தன் நின்றிருந்தான்.கலையரசனுக்கு இப்போது தான் உயிர் வந்தது. முகுந்தன் "இன்றிரவு தங்க வேண்டாம் வா போகலாம்" என்று சொல்லி கலையரசனின் கையைப் பிடித்து இழுத்துச் சென்றான். இவ்வளவு வேகமாக ஒருவனால் நடக்க முடியுமா என வியந்தபடி அவன் பின்னால் சென்றான் கலையரசன்.இருவரும் திருவாரூர் பேருந்து நிலையத்தை அடைந்தார்கள்."மன்னார்குடிக்கு இதான் கடைசி பஸ்" ஏறு என்றான் முகுந்தன். கலையரசனுக்கு ஒன்றுமே சொல்லத் தோன்றவில்லை பேருந்தில் ஏறி அமர்ந்தான்.வீட்டை அடைந்து படுத்துறங்கினான்.காலை மணி ஒன்பது இருக்கும் தொலைபேசி அழைப்பு மணி ஒலித்தது, கலையரசன் போனை எடுத்தான்.மறுமுனையில் முகுந்தன் "நேற்றைக்கு என்னால் வரமுடியலைடா மாப்ள, வேலை இருந்துச்சி தப்பா நினைச்சிக்காத. நீ கோயில்ல தான் படுத்து இருந்தியா?" என்றான். உறைந்து போனான் கலையரசன், அப்போ வந்தது யாரு என்று தனக்குள் கேட்டபடி நாற்காலில் சாய்ந்தான்.     அரவான்   தன்னுடைய நடையை விரைவாக்கினான் நந்தகுமார்.அவன் பத்தாவது படிக்கும் பள்ளிக்கூடம் ஒன்றும் வெகுதொலைவில் இல்லை;வகுப்புகள் துவங்கவும் இன்னும் இருபது நிமிடமிருந்தது.   அவனது நடைவேகத்துக்குக் காரணம் விடலைப் பருவ பையன்களின் கேலி.தனக்குள் ஏதோ மாற்றம் நிகழ்ந்து கொண்டிருப்பதைப் சில மாதங்களாய் உணர்ந்து கொண்டு வந்தான்.தன்னை ஒத்த பிராயமுடையவர்களின் உடலில் ஏற்பட்ட மாற்றம் தன்னிலிருந்து வேறுபடுவதை எண்ணி அச்சம் கொண்டான்.   அரும்பு மீசை உதட்டின் மேல் வளர்ந்து, குரல் உடைந்து சற்றே கரகரப்பாக மாறிக் கொண்டிருந்த டீன் ஏஜ் பையன்கள் நிறைந்த வகுப்பில்,நந்தகுமார் குரல் மட்டும் கீச்சி கீச்சுவென ஒலிக்கும் போது வகுப்பே சிரிப்பலையில் மூழ்கும்.   சமூக அறிவியல் வாத்தியார் பாடத்தின் இடையே பொது அறிவு வினாவிற்கான பதிலை ஒவ்வொரு மாணவனாக எழுப்பி கேட்டுக்கொண்டு வரும்போது எழுந்து நின்ற நந்தகுமாரை "தெரியாதுன்னா அப்படியே சும்மா நிக்கவேண்டியது தானடா, என்னடா மேனா மினுக்கியாட்டம் நெளியற நிமிர்ந்து நின்னுடா விறைப்பா" என்று நையாண்டி செய்த போது மாணவிகள் அனைவரும் முகத்தைப் பொத்திக் கொண்டு சிரிக்க நந்தகுமாரின் முகம் வாடிப்போய் காற்றுப் போன பலூனாகிவிட்டது.உள்ளுக்குள் உடைந்து போனான்.அவனது கட்டுப்பாட்டுக்குள் இல்லாமல் அனிச்சையாக நடக்கும் செயலுக்கும் நந்தகுமார் தொடர்ந்து தண்டணைப் பெற்று வந்தான்.   பள்ளியின் நுழைவாயிலை அடைந்தவுடன் அவன் மனம் நிம்மதியடைந்தது.ஆமாம்! இன்று அவன் எதிர்ப்படவில்லை.இரு தினங்களாய் வாட்டர் டாங்க் அருகில் அமர்ந்து கொண்டு அவ்விடத்தைக் கடந்து செல்லும் போது ஒம்போது என உரக்கச் சத்தமிடுபவனிடமிருந்து தப்பித்து வந்துவிட்டோமென்று பெருமூச்சுவிட்டான்.   மறுநாள் காலை பாத்ரூமில் குளிக்கும் போது அக்கா முகத்தில் தேய்த்துவிட்டு மீதம் வைத்திருந்த மஞ்சளைப் பார்த்தான்.நீண்ட நாட்களாய் அவனது மனதில் ஒரு குறுகுறுப்பு,மஞ்சள் பூசி குளித்து ரோஸ்பவுடர் அப்பிக் கொண்டு கண்ணாடியில் தன் எழிலை பார்த்துவிட வேண்டுமென்று.   நீண்ட நேரமாய் நிலைக்கண்ணாடி முன்பு முகத்தைப் பார்த்தபடி நின்றிருந்த நந்தகுமாரை அவனது அப்பா ரெங்கநாதன் அவனுடைய கையைப் பற்றித் திருப்பி “என்னடா அப்படியே மெய்மறந்து பார்த்துகிட்டு இருக்கிற மூஞ்சிய தேனா வழியுது” என்று கேட்டபோது அவனது முகத்தில் அப்பியிருந்த மஞ்சளைப் பார்த்துவிட்டு ஓங்கி கன்னத்தில் ஒரு அறைவிட்டார்.கேடுகெட்ட ஒரு புள்ளையை திருஷ்டிப் பரிகாரமாதிரி பெத்து வச்சிருக்கா;அவனவன் சின்ன வயசிலேயே கம்ப்யூட்டர்,ரோபோன்னு ஆராய்ச்சி பண்ணி டாக்டர் வாங்குறான்;இவன் முகத்துல மஞ்சளைத் தடவிகிட்டு பொட்டபுள்ள மாதிரி அழகு பார்த்துகிட்டு இருக்கான்.இந்தக் கண்றாவியெல்லாம் பாக்கணும்னு என் தலையெழுத்து எனத் திட்டினார்.   இரண்டு வாரம் கழித்து ஒரு ஞாயிற்றுக்கிழமையன்று அப்பாவுடன் பக்கத்து ஊருக்கு செல்ல பேருந்தில் ஏறிய நந்தகுமார்,ஆண்கள் இருக்கை காலியாயிருக்க அவர்களின் அருகே உட்கார கூச்சப்பட்டு பெண்கள் உட்கார்ந்திருக்கும் ஸீட்டில் மத்திம வயதுடைய பெண்ணருகில் அமர,அவன் இவனுடைய முகத்தைப் பார்த்துக் காறி உமிழ்ந்துவிட்டுப் போனாள்.   பேருந்தின் பின்பகுதியிலிருந்து நடந்ததைப் பார்த்துக் கொண்டிருந்த ரெங்கநாதன் அவனை நோக்கிப் பாய்ந்து வந்து ஓர் அறை அறைந்து “இனிமே வீட்டுப்பக்கம் வராத ஒழிஞ்சுபோ எங்கயாச்சும்;நீ பண்ற கூத்தையெல்லாம் பொறுத்துகிட்டு இருக்கமுடியாது.உன்னை அவதுப்புல,உன்னைய பதினைஞ்சு வருஷமா வளர்த்தேன் பாரு அதுக்கு என்னையத் துப்பிட்டுப் போறா.போ ஒரேயடியா இன்ணையோட தலை மூழ்கிட்டேன்” எனச் ஆவேசத்துடன் சொல்லிவிட்டு பஸ்ஸிலிருந்து இறங்கி விறுவிறுவென திரும்பிப் பார்க்காமல் சென்று மறைந்தார்.   ஆண்கள் கூட்டத்தில் அவமானப்படுத்தப்பட்டு வார்த்தைகளால் காயப்படுத்தி துரத்தியடிக்கப்படுவதும்.தானாய் ஒதுங்கி தனிமையில் அறையில் அடைந்து கிடந்த போது பித்துப் பிடித்துவிடும் நிலையிலிருந்துத் தப்பிக்க பெண்களிடம் நட்புணர்வுடன் பழகப்போய் அவர்களால் பிராணியைப் போய் முகம் சுளித்து அருவருப்பாய் விரட்டப்படுவதுமான இந்த அன்றாட நிகழ்விலிந்து தன்னைக் காப்பாற்ற,தன் உணர்வை புரிந்துகொண்டு அரவணைக்க ஓர் அன்புள்ளம் இல்லையா இந்த உலகில் என்ற கேள்விகோடு ஏதோ ஒரு ஊரில் நடத்துனரால் இறக்கிவிடப்பட்டு கால்போன போக்கில் நடக்கத் துவங்கினான்.   பாதைகள் கிளைகிளையாகப் பிரிந்து சாலை போக்குவரத்தால் நெருங்க இயலாத பொட்டல் கிராமத்திற்கு அவனை இழுத்துச் சென்றது.இருள் மெல்லக் கவ்வத் துவங்கியது, குளத்தருகே அமர்ந்திருந்த அவனை அருகாமையிலிருந்து வரும் சத்தம் ஈர்த்தது.   அவ்விடத்தை அவன் அடைந்த போது கோவில் திருவிழாவில் பாரதத்திலிருந்து விராடபர்வம் தெருக்கூத்து நடந்து கொண்டிருந்தது.   பாண்டவர்கள் வனவாசத்தின் இறுதில் அஞ்ஞாதவாசத்தில் ஐவரும் மாறுவேடமிட்டு விராட தேசத்தில் நுழைகிறார்கள்.விராட தேசத்து அரசபையில் தங்கள் திறமையை அரசன் முன்பு வெளிப்படுத்தி பணியாட்களாக சேர்த்துக் கொள்ளுமாறு வேண்டுகிறார்கள்.தருமர் அரசனுக்கு அருகில் மதியூகியாயிருந்து அவ்வப்போது அரசருடன் பகடையாடுபவராக,பீமன் சமையற்கலைஞனாக,அருச்சனன் திருநங்கை வேடமிட்டு அந்தப்புர பணிப்பெண்ணாக,நகுலனும் சகாதேவனும் கால்நடைகளைப் பராமரிப்பவனாக பாண்டவர்கள் தங்களின் ராஜவம்ச வாழ்வை மறந்து சாதாரண வேலைக்காரர்களாக ஆகும் காட்சிகளில் அக்கிராமமே தெருக்கூத்துக் கலைஞர்களின் நடிப்பை ஆவென வாயைப் பிளந்துப் பார்த்துக் கொண்டிருந்தது.   அந்தப்புரத்தில் சேவைபுரியும் திருநங்கை வேஷமிட்ட அருச்சுனன் கதாபாத்திரத்தை சுற்றிலும் அரவானிகள் கூட்டம் நிற்பதைப் நந்தகுமார் அங்கு கண்டான்.அவனது விரக்தியடைந்த மனதில் நம்பிக்கை துளிர்விட ஆரம்பித்தது   கூத்து முடிந்தது அரிதாரத்தைக் கலைந்து வேறு ஊருக்குக் கிளம்பி கொண்டிருந்த அரவானிகளிடம் வந்து மிரள விழித்தபடி நி்ன்றான்.   “என்ன பையா யாரு நீ?” என்றாள் ஒரு அரவானி   “நான் வீட்டைவிட்டு ஓடிவந்துட்டேன், என்னைய உங்க கூட்டத்துல சேர்த்திருப்பீங்களா?” என்றான் அப்பாவியாக.   வயதில் மூத்த அரவானி அவனை தன்னருகே அழைத்து விபரத்தைக் கேட்க,நடந்த அனைத்தையும் கூறினான்.     சில நிமிடநேரம் யோசித்த அவன் ”சடங்கு முடிஞ்சாத்தான் எங்க சமூகத்துல சேர்த்துப்போம்,அதுக்கு மும்பை போகணும் பயமில்லாம?” என்றாள்.   சரியென்று தலையாட்டினான்   இரு தினங்கள் கழித்து மும்பை செல்லும் ரயிலில் இரு அரவானிகளுடன் அமர்ந்திருந்தான் நந்தகுமார்.மௌனமாக அமர்ந்திருந்த அவனைப் பார்த்து “என்னப்பா சோகமாயிருக்குற இப்படி ஆயிட்டோம்ன்னா ...., எப்படி ஆயிட்டோம் நம்ம சொல்லு?”   "......"   “ஸ்டேஷனுக்கு வர்ற வழியில இறுதி ஊர்வலம் போனிச்சேப் பார்த்தியா?”   “பார்த்தேன்” என்றான்   “பாடையில படுக்கவைச்சிக் கொண்டு போறாங்களே, அது என்ன?”   “பொணம்”   “சரி ஆம்பளையா? பொம்பளையா? அது?”   “பொம்பளை”   “பத்தியா கல்யாணங்கட்டி மவராசியா வாழ்ந்து குழந்தை குட்டிகளோட இருந்தவ உயிர் போச்சுனா அவ பொணமாயிடுறா;நாம இறந்தாலும் பொணம் தான்.சடலத்துல இது அரவானிப் பொணம்ன்னு வேறுபாடு இருக்கா என்ன? எல்லாம் தசைப் பிண்டம் தான்.நம்ம சமூகத்தைப் பத்தி பையிள்ல ஒரு வாக்கியம் வரும் படிச்சிருக்கியா பரலோக ராஜ்யத்தில் அவர்களுக்கு இடமுண்டுன்னு, அதை நினைச்சு இந்தக் கஷ்டங்களைத் தாங்கிக்கணும்”   “இனிமே சோத்துக்கும் உடுத்த துணிமணிக்கும் என்ன பண்ணப் போறோம், பிச்சையெடுக்கிற நிலைமை வந்திருமோன்னு பயப்படுறீயா?ஏன் உன்னால சொந்தக் கால்ல நின்னு சுயமா சம்பாதிக்க முடியாதா என்ன?இது ஒரு ஊனம்னு நினைக்காத படிப்பு,வேலைன்னு உன்னை பிஸியா வைச்சிக்கிட்டீனா உன்னைப் பத்தின ஞாபகம் மறந்து காலம் தன்னால ஓடிடும்.”எனக் கூறி அவனைத் தேற்ற முயன்றாள் அந்த அரவானி.     ரயில் இருளை கிழித்தபடி அதிவேகமாக பல்வேறு ஊர்களை கடந்து சென்று கொண்டிருந்தது.தூங்காமல் விழித்துக் கொண்டு ஓரிடத்தில் நிலைகுத்திய பார்வையோடு ஜன்னலருகே உட்கார்ந்திருந்த அவனைப் பார்த்த அரவானியில் ஒருவள் மெல்ல அருகில் வந்து “ஊரை இழந்திட்ட,உறவை இழந்திட்ட, ஆனா நம்பிக்கையை இழந்திட்டீனா வாழ்றது கஷ்டமாயிடும்,எதையும் தைரியமா எதிர்கொள்ளனும்.இங்க நிலையா இருக்கிற இயற்கை நம்ம மேல ஒரு பாகுபாடும் காட்டறதில்லை,நிலையில்லாத வாழ்க்கையில நீர்க்குமிழி மாறி கண நேரம் வந்து போற மனிதர்கள் தான் நம்மை உதாசீனப்படுத்துறாங்க.அடுத்தவங்க நம்ம என்ன நினைப்பாங்களோன்னு எண்ணிக்கிட்டே இருந்தா யாரால எதைச் செய்ய முடியும் சொல்லு ராமர் மேல வைச்ச நம்பிக்கையில அனுமார் ஒரே தாவல்ல கடலைத் தாண்டிட்டார்.ராமச்சந்திர மூர்த்தி கடலைத் தாண்ட சேது பாலம் கட்ட வேண்டியதாப் போச்சு.நாளைக்கு விடியும்னு நம்பிக்கையிருந்தாம்ப்பா படுக்கையில நிம்மதியா உறங்க முடியும்” என்ற அரவானியின் ஆறுதல் வார்த்தைகள் அவனது மனக்காயத்தை ஆற்ற அப்படியே உறங்கிப்போனான் நந்தகுமார்.   அன்றைய காலை பொழுது அவனுக்கு விடிந்தது.மும்பை நகரம் அவனுக்கு வியப்பளித்தது.இப்பூமியில் இப்படியும் ஒரு நகரம் இருக்க முடியுமா?என வானுயர்ந்த கட்டிடங்களை அண்ணாந்து பார்த்துக் கொண்டே வந்தான்.ஏதோ ஒரு உந்து சக்தி தன்னை தள்ளிக் கொண்டே வந்து இங்கு நிறுத்தியிருப்பதை எண்ணினான்.   இனிமேல் தன் பெயர் நந்தகுமார் இல்லை, நந்தகுமாரி நந்தகுமாரி நந்தகுமாரி என மூன்று முறை மனசுக்குள் அழுத்தமாக உச்சரித்தான்.அவமானங்கள் அனைத்தும் அவனுக்குள் வைராக்யம் வேர்விடுவதற்கு வித்திட்டன. காற்று முழுவேகத்தோடு அவன் மீது மோதி தோளில் சுமந்து வந்த பழைய நினைவுக் குப்பைகளை அடித்துக் கொண்டு அரபிக்கடல் நோக்கிச் சென்றது.   வெண்மேகம்   பொழுது நன்றாக விடிந்து விட்டிருந்தது.பால்காரனின் மணிச்சத்தம் அருகாமையில் கேட்டது.நாளிதழ் போடும் பேப்பர் பையன் வீசிய தினசரி கதவில் மோதி கீழே விழுந்து டொப் என்ற சத்தத்தை எழுப்பியது;எழுந்து போய் எடுத்து படிக்க ஆரம்பித்துவிட வேண்டுமென்ற உணர்வு ஏற்பட்டது சங்கரனுக்கு.எழுந்து தினசரிக்குள் மூளையை திணிக்காவிட்டால்,மனம் கவலை கொள்ள ஏதவதொரு பிரச்சனையை கொண்டு வந்து அதைச் சுற்றியே சுழல ஆரம்பித்துவிடும்.பேப்பரில் அச்சியப்படும் செய்திகளை உருவாக்குகிறவர்களாக சில நபர்கள் நாட்டில் இருக்கிறார்கள்;பல பேர் அதனைப் படிப்பதோடு நிறுத்திக்கொள்கிறார்கள்,அதில் சங்கரனும் ஒருவன். திரும்பவும் பைரவியின் முகம் அவனுடைய மனதில் தோன்றியது.அவன் பயின்று வந்து அதே காலகட்டத்தில் வேறோரு துறையில் படித்து வந்த பெண் அவள் மூன்று வருடங்களில் மூவகைத் தோற்றம் கண்டான் அவளிடம் ஸ்ரீதேவியாய்,கலைமகளாய்,திருமகளாய் தெய்வமாய் நினைத்து வணங்கிச் சென்றிருக்கலாம்;கோவில் தெய்வம் தன்னுடைய வீட்டில் குடியிருக்க வேண்டுமென ஆசைப்பட்டான் சங்கரன்!தன்னை கும்பிட வருபவனையே சோதனை செய்யும் தெய்வம், குடியிருக்க அழைத்தால் சும்மா விடுமா? இதயச் சிப்பிக்குள் விழுந்த அவளின் நினைவுகளைப் பக்குவமாய் பாதுகாத்து வந்தான் சங்கரன்.சில வருடங்களில் நினைவுத் துளிகள் முத்தாய் உருமாறியது.இந்த விலை மதிப்பற்ற முத்து அனுமனைப் போல் தன் ஆற்றல் உணராமல் தன்னை மாலையாக்கிச் சூடிக்கொள்ள பைரவியின் கழுத்தை ஏக்கத்துடன் எதிர்பார்த்து நின்றது. உலக வரலாற்றில் சரிந்தன பல சாம்ராஜ்யங்கள் பெண்களின் கடைக்கண் பார்வைக்காக!சாம்ராஜ்யங்களே அப்படியென்றால் அதில் ஒரு துரும்பு சங்கரன்.சங்கரனைப் பொறுத்தவரை உலகிலேயே பாக்கியசாலி யாரென்றால் பெண்ணால் காதலிக்கப்படுபவன் என்பான்!இவனைச் சொல்லி என்ன பயன் சரியும் சீட்டுக் கட்டில் இவனும் ஒரு சீட்டு அவ்வளவே. ஜடப்பொருள் மூலக்கூறுகளின் சரியான ஒருங்கிணைப்பால் அமைந்த அவளது முகத்தில் வசீகரம் அவனை ஈர்த்தது;எந்த ஒரு மூலக்கூறுகளின் கூட்டமைவும் இறுதியில் பிரிந்து அழியும் என அவன் உணர்ந்திருக்கவில்லை.சந்ததிகள் உருவாகவும்,மனித இனம் அழியாமல் இருக்கவும், இயற்கை நடத்தும் விளையாட்டு இது.இவற்றை பகுத்தறிந்து உணர்வதற்கு இவன் ஆதிசங்கரனல்ல வெறும் பி.எஸ்.சி தேர்ச்சியுறாத சங்கரன். தன் காதலை பேனா மையின் உதவியால் காகிதத்தில் வெளிப்டுத்தி கடிதத்தை அவளிடம் கொடுத்தான்.மறுநாள் பதில் வருமென்று எதிர்பார்த்து வகுப்பறையில் காத்திருந்த சங்கரனுக்கு கல்லூரி முதல்வரிடமிருந்து அழைப்பு வந்தது.முதல்வர் அறையில் ஐந்தாறு நபர்கள் வெள்ளை வேஷ்டி சட்டையுடன் இருந்வர்கள் அறையில் நுழைந்த சங்கரனை முறைத்துப் பார்த்தார்கள்.மேஜையில் அவன் பைரவிக்கு கொடுத்த காதல் கடிதம் இருந்தது. சங்கரனின் தந்தையை கல்லூரிக்கு அழைத்துவர ஏற்கனவே ஆள் அனுப்பிவிட்டார்கள்.விவரம் என்னவென்று அறியாமல் வந்த சங்கரனின் அப்பா சண்முகத்தை பைரவியின் அண்ணன்கள் தரக்குறைவாகப் பேசவே, அவருக்கு சங்கரன் மீது கோபம் திரும்பியது;அங்கேயே அவனை இரு கன்னத்திலும் அறைந்தார்.முதல்வர் சங்கரனின் படிப்பு கெட்டுவிடக்கூடாது என்பதற்காக பைரவியின் அப்பாவிடம் சமரசம் பேசினார்.ஆனால் அவர்கள் விடாப்பிடியாக மறுத்ததுடன்,அவன் மீது நடவடிக்கை எடுக்கவில்லையென்றால் ஈவ்டீசிங்னு போலீஸில புகார் பண்ணிடுவோம்னு மிரட்டவே,கல்லூரியின் பெயர் கெட்டுவிடக் கூடாதென்று சங்கரனை சஸ்பெண்ட் செய்து வைத்தார் கல்லூரி முதல்வர்.அவனுடைய கடைசி பருவத் தேர்வை எழுதவும் கல்லூரி நிர்வாகம் அனுமதிக்கவில்லை. இந்த விஷயம் காட்டுத்தீபோல் ஊரில் பரவியது. சண்முகம் வேலை செய்யும் அலுவலகத்திலும்,ஊரிலும் அவரைத் தெரிந்தவர்கள் இதைப் பற்றி விசாரிக்கவும்,வளர்ப்பு சரியில்லையென்று அவர் காதுபடவே ஏசவும் செய்யவே, அவருக்கு அவமானமாக இருந்தது.அடக்கிவைத்திருந்த கோபத்தை வீட்டில் காட்டினார். "கண்ணாடிவீட்டிலேர்ந்து கல்லெறிந்து விட்டான்டி உம்புள்ள;அவனவன் படிக்க வைக்க காசில்லாமல் டேபிள் துடைக்கிறானுங்க!இவனை படிடான்னு காலேஜ்ல சேர்த்துவிட்டு கையில் பணமும் கொடுத்து அனுப்பிவைச்சா அவன் மேல வைச்ச நம்பிக்கையை பொய்யாக்கிட்டு போற வர பொண்ணுங்க பின்னாடி அலைஞ்சிகிட்டு இருந்திருக்கான்.எப்ப அவன் மனசில வேற எண்ணம் வந்திருச்சோ இனிமே அவன் படிப்புக்குன்னு ஒரு பைசா கூட கொடுக்க மாட்டேன் பெத்திட்டேங்கிறதுக்காக வீட்ல இருந்துட்டுப் போகட்டும்;இனிமே ஒரு பிரச்சனையை இழுத்துகிட்டு வீட்டுக்கு வந்தான்னா, நானே அவனை போலீஸில ஒப்படைச்சிட்டுப் போயிடுவேன்.அங்க போய் கம்பி எணணுனா புத்தி வந்துடும் உம்புள்ளைக்கு!" என்றார் தன்னுடைய மனைவி வனஜாவிடம் சண்முகம்   "கொஞ்சமாவது யோசிச்சிப் பாத்தியாடா? அம்மா,அப்பா,குடும்பத்தைப் பத்தி, உம்படிப்பைப் பத்தி அதுக்குள்ள என்னடா உனக்கு அவசரம்?இப்ப அம்புட்டையும் தொலைச்சிட்டு வந்து நிக்கிறியேடா!இத்தனை வருஷம் ராப்பகலா படிச்சிம், எல்லாம் வீணாப்போயிட்டுதே, அப்பவே ஜோசியக்காரன் சொன்னான் பையனுக்கு ராகுபுத்தி நடக்குதுன்னு பயந்தமாதிரியே நடந்திடுச்சி!" என்று சங்கரனிடம் புலம்பினாள் அவனது அம்மா வனஜா. இப்பொழுது அவள் கீரைக்காரியிம் பேசிக் கொண்டிருப்பது அவன் காதில் விழுந்தது.முகத்தை மூடியிருந்த போர்வையை விலக்கி கடிகாரத்தைப் பார்த்தான் மணி ஏழரை ஆகியிருந்தது.இன்னும் சரியாக நாற்பத்தியெட்டு மணிநேரத்தில் சென்னை விமான நிலையத்தில மலேசிய விமானத்திற்காக காத்துக்கிடக்க வேண்டும் என்ற நினைவு வந்தது.டவுனுக்குச் சென்று ஏஜெண்ட்டிடம் சில விவரங்களை கேட்க வேண்டிய வேலையிருந்தது.குளித்த பின் சாப்பிட்டுவிட்டு டவுன் நோக்கி சைக்கிளில் சென்றான் சங்கரன். சில வாரங்களாகவே அவனுடைய வீட்டில் ஒரு இறுக்கமான சூழ்நிலை நிலவுகிறது.அவரவர் மனங்களில் ஒரு புழு குடைவது போன்ற உணர்வு.அதற்குக் தற்போதையை காரணம் சங்கரனல்ல அவனுடைய அக்கா உஷா. சண்முகம் அரசுப் பணியிலிருந்து ஓய்வுப் பெற்று ஒரு வருடம் முடியப்போகிறது.வீட்டில் போர் அடிப்பதால் தனியார் கல்வி நிறுவன அலுவலகத்திற்கு வேலைக்குச் சென்று வருகின்றார்.ஓய்வுக்குப் பின் வந்த பி.எப் பணத்தில் ஒரு பகுதியை ஏற்கனவே அக்காவின் கணவர் தொழில் துவங்க கொடுத்திருந்தார்.அன்று மீண்டும் ஒரு யாசகம் அக்காவிடமிருந்து தொலைபேசி வழியாக " இப்போதைக்கு எவ்வளவு புரட்ட முடியும்னு தெரியலை, நான் பாத்துகிட்டு நாளைக்கு காலையிலே போன் பண்றேனே! " என்று சண்முகம் ரிசீவரை கீழே வைத்தார். சிறிது நேரம் தன்னை ஆசுவாசப்படுத்திக் கொண்டு மனைவியிடம் விஷயத்தைச் சொன்னார்.அதற்கு அவள்" எதையும் யோசனை பண்ணி செய்யுங்க நமக்கும் ஒரு புள்ள இருக்கான்!அவனுக்கும் சரியா வேலை எதுவும் அமையலை " என்றாள். "இல்ல வனஜா, பணத்தை கொடுத்துட்டு அவரு பிசினஸில இவனையும் சேர்த்துவுட்டு பார்த்துக்கடான்னா பார்த்துக்கமாட்டான், அப்படி இப்படி ஒத்தாசையா இருந்தான்னா இவனுக்கும் ஏதோ மாசத்துக்கு இவ்வளதுன்னு செலவுக்கு கொடுக்கமாட்டாரா மாப்பிள்ளை! " என்றார் சண்முகம். "ஏங்க அந்தப் பணத்துல இவனுக்கே ஒரு தொழில் வச்சிக் கொடுத்தா நல்லா பண்ணமாட்டானா?நீங்க என்னமோ அவருகிட்ட பணத்தை கொடுத்திட்டு, இவனும் அங்க போய் ஒத்தாசையா இருப்பானாம், அவரு ஏதோ பாத்து செலவுக்கு ஏதாச்சும் கொடுப்பாராம்!ஏங்க உங்களுக்கு இப்படி தோணுது? பணத்தையும் கொடுததுட்டு அவனையும் அனுப்பிவைச்ச நல்லா இருக்கும் " என்று கடுகடுத்தாள். சங்கரன் காதுக்கு விஷயம் எட்டியது.அச்செய்தி அவனுக்கு வேம்பாய்க கசந்தது. "எந்த அத்தாட்சியும் இல்லாம பணத்தை ஏற்கனவே கொடுத்திருக்கோம்.இப்ப திரும்பவும் கொடுத்திட்டு, நாளைக்கு அவசரத்துக்கு கேட்டா அவர் கொடுப்பாரா நாம தான் கறாரா கேட்க முடியுமா?இன்னொருத்தர் கிட்ட பணம் வாங்கினா திரும்பக் கொடுக்கணுமேன்னு ஒரு மனசில எண்ணம் இருக்கும்.இப்ப நம்ம அப்பாகிட்ட வாங்கினாக்கா மாமா தானே ஒண்ணும் சொல்லமாட்டார் அப்படின்னு தோணும்" என அம்மாவின் காதில் போட்டு வைத்தான் சங்கரன். ஏற்கனவே சங்கரனால் ஏற்பட்ட தலைகுனிவை மனதில் வைத்திருந்த சண்முகம் "அவன் போறதும், போகாததும் அவனிஷ்டம் என்னை பணம் கொடுக்காதீங்கன்னு சொல்ல அவனுக்கு என்ன உரிமை இருக்கு? "என்றார் கோபமாக சங்கரனின் யோசனையை சொன்ன தன் மனைவியிடம். வனஜா சங்கரன் தனியாக இருக்கும் போது அவனிடம் வந்து " அவருக்கு உம்மேல இருக்கிற கோபம் இந்த ஜென்மத்துல தீராதய்யா; அவரு ஏதோ சொத்தை பிரிக்கறேன்னு வக்கீலைப் பார்க்க போயிருக்கிறார்.வயித்துப் புருஷனுக்கா, கயித்துப் புருஷனுக்கா யாருக்கு நான் பரிஞ்சு பேசுறது? அவர்கிட்ட ஏடாகூடமா ஏதாவது பேசிவைககாம கொடுக்கிறதை வாங்கிக்க ராசா;நீ நல்லாயிருப்ப, சொத்து,பணம் எல்லாம் ஆத்து தண்ணி மாதிரி நிலையா இருக்காதுய்யா உம் அம்மாவோட ஆசிர்வாதம் உங்கூடவே வரும்யா " என்றாள் கண்ணீருடன். தான் மறைந்த பிறகு அப்பா எனக்கும் ஒண்ணும் செய்யலை என்ற பேச்சி வந்துவிடக் கூடாது என்பதாலும்.சண்முகத்துக்கு ரெண்டு பிள்ளைங்க தான் அதுகளே ஒண்ணுக்கொண்ணு விட்டுக்கொடுத்துப் போகாம கோர்ட்ல போய் நிக்கிதுக என்ற அவப் பெயர் வந்துவிடக்கூடாது என்பதால் உயிருடன் இருக்கும் போதே சொத்தைப் பிரித்து நிலத்தையும்,வீட்டு மனையையும் பெண்ணுக்கு கொடுத்து விட்டு அதற்சு ஈடாக சங்கரனுக்கு ஒரு தொகையை கொடுத்தார்.வீட்டை மட்டும் தன் பேரிலேயே வைததுக்கொண்டார் சண்முகம். "இனி அவங்கவங்க சொந்தக்காலிலே நிக்கப் பழகிக்கிங்க இந்த வயசான காலத்தில பணம் கொடு கொடுன்னு ஒரு பக்கமும் கொடுக்காதே கொடுக்காதேன்னு ஒரு பக்கமும் சொன்னா நான் என்னத்த செய்ய?ரெண்டும் எம்புள்ளைங்க தான்.அதான் பிரிச்சிக் கொடுத்திட்டேன்;அத வச்சி ஏதாவது பண்ணிக்கட்டும்.சங்கரன் பிரச்சனை பண்ணினதுனால அவன் இந்த வீட்ல இருந்தா மாப்பிள்ளை வீட்டிலேர்ந்து யாரும் இங்க வந்துபோகமாட்டாங்க அதனால கொஞ்ச நாள்ல அவனை வேற எங்கயாச்சும் தங்கிக்கச் சொல்லிரு.உத்யோகம் கிடைச்சி கல்யாணம்னா, அதுவும் வந்து சொன்னான்னா பெத்தவன்ங்கிற கடமைக்கு வந்து அட்சதை போடறேன்!செத்த பின்னாடி கொள்ளி அவன் தான் வைக்கணும்னு இல்ல யார் வைச்சாலும் எரியும் இந்த கட்டை சொல்லிட்டேன்" என்று கூறி மெளனமானார். அன்று இரவு வீட்டிற்குச் செல்லாமல் விரக்தியான மனநிலையில் இரண்டு கிலோமீட்டர் தொலைவிலுள்ள பழமையான சிவன் கோவில் மடத்திற்குச் சென்று படுத்துக் கிடந்தான் சங்கரன்.அருகில் இருக்கும் இடுகாட்டுக்கு தப்புச் சத்தத்தோடு பிணம் சென்று கொண்டிருந்தது.என்றேனும் ஒரு நாள் நாமும் இறந்துவிடுவோம் நடந்ததைப்பற்றிய மனக்கசப்புகளும்,நடக்கப் போவதைப்பற்றிய எதிர்ப்பார்ப்புகளும,திட்டங்களுமின்றி சிவனே என்று சரணடையலாம். உயிருடன் இருக்கும்போது முடியாத சரணடைதல் உடலை விட்டு நீங்கியதும் முடிகிறதே எப்படி என்று தன்னைத்தானே கேட்டுக்கொண்டான்.   இந்த சிந்தனை அவனுக்கு அமைதியைத் தந்தது என்றாலும், சங்கரன் என்ற இந்த உடலைச் சுமக்கும் வரை சில தன்மானங்களை,சுய மரியாதையையும் கடைப்பிடிக்க வேண்டி உள்ளது என எண்ணினான்.தியாகம்,தியாகம்,தியாகம் இவையில்லையென்றால் வேறெப்படி அடைய முடியும் இறைவனை என்ற என்றோ படித்த ஆன்மிக பெரியோர் ஒருவரின் பேருரைகளின் சாரம் ஞாபகத்திற்கு வந்தது அவனுக்கு, ஆனாலும் மற்றவர்களின் வளர்ச்சிக்காகவும்,வசதிக்காவும் நம்மை வளைக்க முற்படும்போது இயல்பாகவே கோபம் எழுகிறது.மற்றவர்கள் உயரே செல்ல யார்தான் படிக்கல்லாய் இருக்க ஆசைப்படுவார் இவ்வுலகில்?இயலாமையினால் அவர்களின் வலையில் சிக்கி நம் கனவு,கற்பனை சிதைந்துவிடுமோ என்ற பயம் அவனை ஆட்கொண்டது.தரையில் படுத்திருந்தவன் எழுந்து உட்கார்ந்தான் பிரச்சனைகளை எதிர்கொள்ள முடியாமல் கோழையாயிருப்பதை விட உலகைத் துறந்துவிடலாம் அல்லது இறந்துவிடலாம் என்ற எண்ணமும்,இவ்வுளவு தானா என் வாழ்க்கை முற்றுப் பெறாத கதையாகிவிட்டதே ?எப்படி இருப்பினும் இழப்பு தனக்குத்தான் என்ற எண்ணமும் மேலோங்கி அவனை அழவைத்தது. அழுது கொண்டிருந்த அவன் தோளை பற்றி உலுக்கியது ஒரு கை;திரும்பிய சங்கரன் மடத்தின் மாடவிளக்கின் வெளிச்சத்தில் பரதேசிக் கோலத்தில் இருந்த ஒருவனைப் பார்த்தான். "கோவில் மடத்திற்கு வந்து படுத்துக் கொண்டு வீட்டை நினைத்து அழுகிறாயா?உனது பருவத்தைப் பார்த்தால் பெண் ஸ்நேகிதத்தில் தோல்வியாயிருக்குமென்று தோன்றுகிறது " என்று சொல்லிவிட்டு சற்று நேரம் நிதானித்தான். "உண்மையா, இல்லையா?.ஆமாம் அல்லது இல்லையென்று சொல் "என்றார் குரலில் கண்டிப்புடன்.ஆமாம் என்று தலையசைத்தான் சங்கரன். " விரும்பியவளையே திருமணம் செய்து கொண்டால் அவள் உனக்குச் சொந்தமாகிவிடுவாளா? " என்ன யோசிக்கிற சொல்றேன் கேளு என்று ஆரம்பித்தான் அப்பரதேசி. சக்திக்கு வரம் தந்து அதனால் சிவன் தன் இடந்தந்து குமரியில் அவள் குங்குமம் கலந்து மண்ணே செந்நிறமாய் யுகயுகமாய் காட்சி தந்து காமனை நெற்றிக்கண் நெருப்பால் எரித்து கையிலையில் தேவியுடன் தாண்டவம் புரிந்து மந்தை ஆடுகளின் மீது பாயும் புலிகளைப் போல் இன்பத்தின் மீது வெறிகொண்டு அலையும் ஐம்புலன்களாகிய புலிகளைக் கொன்று அதன் தோலில் அமர்ந்திருக்கும் சிவனையன்றி வேறு யாரைத் தீண்டுவாள் அந்தசக்தி என்று உரக்க பாடிவிட்டு தன் பேச்சைத் தொடர்ந்தான் அப்பரதேசி "இந்த ஆண்டியும் ஒரு நாள் அரசனைப் போல் வாழ்ந்தவன் தான்!இல்லறத்தில் ஈடுபட்டு அழகான மனைவி மக்களைப் பெற்றவன் தான்,சிங்கத்தை அதன் குகையில் சந்திப்பதைப் போல் நிஜத்தை ஒரு நாள் எதிர் கொண்டேன்;ஒரு அறை விழுந்தது, சிங்கத்தின் அறையல்லவா இவ்வுலகத்தைப் பொறுத்தவரை நான் மாண்டவன் தான்.புல்,பூண்டு முதல் மனிதன் வரை எல்லாம் அவன் சொத்து என உணர்ந்தேன்.அதனை அனுபவிக்கலாம் தனக்குத்தான் உரிமையென சொந்தம் கொண்டாட முடியாது! என்ன விளங்கிச்சா? " என்றவன். "உன் முடிவை கைவிடலை போலிருக்கே அதான் தற்கொலை பண்ணிக்கிறதை சொன்னேன்.உன் அகம் துடிக்கிறது எனக்குத் தெரியுதே!ஒண்ணு புரிஞ்சிக்க இங்க எல்லோரும் போறத்துக்காகத் தான் இருக்கோம் கொடுத்த வேலை முடியட்டும் " என்று சிறிது நேரம் கண்களை மூடி கழுத்தில் கிடந்த ருத்ராட்சையை நெற்றிப் பொட்டில் சில வினாடிகள் வைத்திருந்து பிறகு கண்களைத் திறந்து பேச ஆரம்பித்தான். "சாகிறத பத்தி நான் ஒண்ணும் சொல்லலை,அதோட வாழ்க்கை முடிஞ்சிட்டுதா என்ன?அதே போல் சந்நியாசம் கொள்வதும் எளிதல்ல யோசிப்பாரு வசதி இருக்கும் போது அதை அனுபவிக்காம இருந்தாலும், அவை நம் சொத்து என்ற எண்ணம் மனநிறைவைத் தரும்;எல்லாத்தையும் துறந்திட்டா எதைக்கண்டு நிறைவடைய முடியும்? எது வாழ்க்கைக்கு ஆதாரமாக இருக்கும்? " "இன்னொன்னு என்ன தான் வெளியில திருவோடு ஏந்தி, திருநீறு அணிந்தாலும் முற்றத்தில் சோற்றை வைத்தாலும் தெருவில் கிடக்கும் மலத்தை தின்னும நாயைப் போல் மனம் மோகம் கொண்டு வீதியில் அலையும்.காவி உடுத்தினா மட்டும் பத்தாது,ஈசன் மாலையிலும் மலத்திலும் மாறி மாறி உட்காரும் ஈக்களைப் போல் இருக்கப்படாது. " "விரக்தியின் விளிம்பில் தற்கொலை,அதைப் போல விரக்தியின் விளிம்பில் சந்நியாசம்.எனக்கு ஏன் சாவு வரமாட்டேங்கிது, சாவு வரமாட்டேங்கிதுன்னு நாள் பூரா சொல்றவன் பாம்பு கடிச்சா உடனே வைத்தியர்கிட்ட ஓடுவான்.காலமே காயங்களை ஏற்படுத்தும்;காலமே காயங்களுக்கு மருந்தாகும்.குட்டையாய தேங்கிவிடாதே,ஆறாய் ஓடு;எதிர்ப்படும் காமம்,மோகம்,புகழ், மழலைச் செல்வம் ஆகியவற்றைக் கடந்து வா, அமைதிக்கடலில் சங்கமிக்க வா.பறவைகளுக்கு கலங்கரை விளக்கமா வைக்கிறாங்க, இல்ல மழைத் தண்ணிக்கு வாய்கால் வெட்டுறாங்களா?மழைத்துளி மாதிரி விழுகின்ற இடம் தெரியாமல் பிறக்கிறோம்;விழுந்த இடம் குளம்னா,குட்டைனா,ஏரினா,சாக்கடைனா நம்மளும் அதான்.அதுலேர்ந்து விழுந்த மழைத்துளியை மட்டும் பிரிக்க முடியுமா? " "அப்புறம் என்னவோ ஊட்ல அக்கா குடும்பத்தோட,அப்பாவோட பணவிஷயத்துல மனஸ்தாபம்னு புலம்பறியே.நடந்து போகும் வழியில் பெரிய குழியில் விழுந்துட்டோன்னு வை.இரண்டு கைஇருக்கிறதுனால மட்டும் மேல ஏறிட முடியுமா?மனசில நம்பிக்கை வேணும், அப்பதான் மேல ஏற முயற்சி பண்ணத் தோணும்.வாழ்க்கையில நிறைய பள்ளம் இருக்கு தம்பி;நல்ல வேளை இந்த சின்ன குழியில விழுந்துட்டோன்னு சந்தோஷப்பட்டு, யானைக்கு வெட்டின குழிக்குள்ள நம்ப விழுந்திட்டா என்னாகும் நினைச்சிப்பார்! தும்பிக்கை இல்லைனா விநாயகப் பெருமான் இல்லை.நம்பிக்கை இல்லைனா மனுசன் இல்லை. "     "காலையில் அவன் வீ்ட்ல இருக்கணும் இல்லாட்டி முருகன் கோச்சிப்பான் " என்று சொல்லிவிட்டு அந்த இருளில் கிளம்பிய அவன் எழுந்து நின்று சிறிது நேரம் ருத்ராட்சை மாலையை கைவிரலால் உருட்டிய பின் கண் திறந்து சங்கரனை நோக்கி " உளியால் அடிப்பது வலிக்குதேன்னு கல் நினைத்தால் அது தெய்வச்சிலையாக முடியுமா? விடியப்போகுது தம்பி நான் கிளம்பறேன் " என்று விடைபெற்றான் அப்பரதேசி. அங்கிருந்து நெஞ்சுறுதியோடு வீட்டுக்கு கிளம்பினான் சங்கரன் யாருமற்ற வீதிகளில் வீசும் காற்று அவனுடைய எதிர்மறையான எண்ணங்களை அடித்துச் சென்றது. அதன் பிறகு தன்னுடைய பங்காகக் கொடுக்கப்பட்ட பணத்திலிருந்து டிராவல்ஸ் ஏஜெண்ட்டிடம் பணம் கொடுத்து பாஸ்போர்ட்,விசா வாங்கி பணிக்காக இப்பொழுது மலேசியா செல்லத் தயாராகி வருகிறான் சங்கரன்.பயணப்படுவதை உறுதிப்படுத்திக் கொள்ளவும் விமான பயணச் சீட்டை பெற்றுக்கொள்ளவும், சென்னை செல்லும் பேருந்தில் டிக்கெட் ரிசர்வ் செய்யவும் இப்போது சைக்கிளை மிதித்துக் கொண்டு டவுன் நோக்கிச் சென்று கொண்டிருக்கிறான் சங்கரன். மாலை மணி ஆறு சென்னை செல்லும் பேருந்தில் ஜன்னலோர இருக்கையொன்றில் அமர்ந்திருக்கும் சங்கரனுக்கு பேருந்து முன்னேறிச் செல்லும் பாதையில் அவன் நீச்சலடித்த ஆறு,விளையாடிய மைதானம்,படித்த பள்ளி,கோவில் ராஜகோபுரம் பேருந்தின் வேகத்தில் பின்நோக்கிச் சென்று அவனுக்கு விடை கொடுத்தன. வானில் அவன் கூடவே பயணிக்கும் வெண்மேகத்தைக் கவனித்துக் கொண்டே வந்தான் சங்கரன்;சில நிமிடங்களில் அம்மேகம் சிறிது சிறிதாக காற்றில் கரைந்து அம்மேகம் இருந்ததற்கான சுவடே இல்லாமல் முற்றிலும் காற்றில் கரைந்துவிட்டது.வாழ்க்கை எனும் காற்று வீசும் திசையில் சங்கரன் பயணித்துக் கொண்டு இருக்கிறான்;காற்றுக்கு எதிராக பயணிக்க அவனால் முடியுமா?ஆஃப்டர் ஆல் ஒரு வெண்மேகமல்லவா அவன்.                       [photo.jpg]ப.மதியழகன்(28.3.1980)   திருவாரூர் மாவட்டம் – மன்னார்குடி எனும் நகரத்தைச் சேர்ந்தவர் ப.மதியழகன்.நாகை வலிவலம் தேசிகர் பாலிடெக்னிக்கில் மெக்கானிக்கல் பிரிவில் டிப்ளமா பெற்றவர்.கீற்று, வார்ப்பு, திண்ணை, உயிரோசை, பதிவுகள், மலைகள் ஆகிய இணைய இதழ்களிலும், நவீன விருட்சம், அம்ருதா, தாமரை,இனிய உதயம் ஆகிய இலக்கிய இதழ்களிலும், குங்குமம் போன்ற வெகுஜன இதழ்களிலும் இவரது கவிதைகள் வெளிவந்துள்ளது. முதல் கவிதை தொகுப்பு ‘தொலைந்து போன நிழலைத் தேடி’ 2008ல் வெளிவந்தது.இரண்டாவது கவிதை தொகுப்பு ‘சதுரங்கம்’ 2011ல் வெளிவந்தது.மூன்றாவது கவிதை தொகுப்பு ‘புள்ளிகள் நிறைந்த வானம்’ 2017ல் வெளிவந்தது. நான்காவது கவிதைகளும், கட்டுரைகளும் சேர்ந்த தொகுப்பாக துயர்மிகு வரிகள் எனும் தலைப்பில் 2017ல் வெளிவந்தது. இணைய இதழ்களில் இவரது சிறுகதைகளும் வெளிவந்துள்ளது. தற்போது மன்னார்குடியில் தனியார் கணினி பயிற்சி மையத்தில் கணினி பயிற்றுனராக வேலை செய்து வருகிறார்.