[] [cover image] இம்மையில் இன்பம் சூழ (கட்டுரைத் தொகுப்பு) நிர்மலா ராகவன் FreeTamilEbooks.com CC0 இம்மையில் இன்பம் சூழ (கட்டுரைத் தொகுப்பு) 1. இம்மையில் இன்பம் சூழ (கட்டுரைத் தொகுப்பு) 1. முன்னுரை 2. நன்றி 3. சமர்ப்பணம் 2. தந்தையும் மகளும் 3. எதிர்த்துப் பேசும் சிறுவர்கள் 4. போற்றுவார் போற்றட்டும் 5. பாராட்டு – பொறுமை 6. ஞாபகம் வருதே! 7. கலையால் இணைவோம் 8. பண்டிகை என்றாலே கொண்டாட்டம்தான்! 9. இல்லறத்தில் இன்பம் சூழ 10. நாளைக்குப் பண்ணலாமே! 11. சிறார்களும் கேள்விகளும் 12. வயதாகிவிட்டதா? அதனால் என்ன! 13. ஊர்வம்பு 14. நாம் நாமாக இருக்க 15. அஞ்சுவதற்கு அஞ்சு 16. குழந்தைகளின் திறனைக் கண்டுகொள்ளலாமே! 17. கட்டுப்படுத்துதல் அன்பா? 18. ஏமாறாதே, ஏமாற்றாதே 19. என்ன மனிதரோ! யாருடனும் ஒத்துப்போகாத ஜன்மம்! 20. உடனே வேண்டும்! 21. தாழ்த்தாதே, தாழ்ந்துபோகாதே! 22. சுற்றமும் குற்றமும் 23. உன்னையே மதிப்பாய்! 24. ஏன் இவ்வளவு சிக்கல்கள்? 25. இருவரும் வெற்றி பெறலாமே! 26. கேள்விகள் ஏனோ? 1. நிர்மலா ராகவனைப்பற்றி… இம்மையில் இன்பம் சூழ (கட்டுரைத் தொகுப்பு) இம்மையில் இன்பம் சூழ (கட்டுரைத் தொகுப்பு)   நிர்மலா ராகவன்   தமிழாக்கம் -       மின்னூல் வெளியீடு : FreeTamilEbooks.com   உரிமை : CC0 கிரியேட்டிவ் காமன்ஸ். எல்லாரும் படிக்கலாம், பகிரலாம்.   மின்னூலாக்கம் - லெனின் குருசாமி - guruleninn@gmail.com   This book was produced using pandoc   பதிவிறக்கம் செய்ய - http://FreeTamilEbooks.com/ebooks/Immaiyil_Inbam_Soozha} முன்னுரை நாம் வாழ்க்கையில் சந்திப்பவர்கள், இதுவரை சந்தித்து இருப்பவர்கள் எல்லாரையும் எப்படிச் சமாளித்தோம், இவர்களில் ஒவ்வொருவரும் சிறிதளவாவது நமது அமைதியைக் குலைத்திருப்பார்களே என்ற மலைப்பு இக்கட்டுரைத் தொகுப்பில் காணப்படும். பல நாட்டவர், பல இனத்தவர் இக்கட்டுரைகளில் வலம் வருகிறார்கள். அவர்களுக்கிடையே இருக்கும் ஒற்றுமை – எல்லாரும் மனிதர்கள், உணர்ச்சிபூர்வமானவர்கள். நன்றி இக்கட்டுரைகளை வல்லமை.காமில் தொடராக வெளியிட்ட ஆசிரியை திருமதி பவள சங்கரிக்கு. எனது புதினங்கள், தொகுப்புகள் ஆகியவற்றை மின்னூலாக்கி, பல்லாயிரக்கணக்கானோர் படிக்க வழிசெய்துவரும் FreeTamilEbooks.com T. சீனிவாசன் மற்றும் அவருடைய குழுவினருக்கு. சமர்ப்பணம் எவ்வளவோ சோதனைக்கப்பாலும் இன்னும் பித்துப்பிடிக்காமல் இருப்பவர்களுக்கு. நிர்மலா ராகவன் தந்தையும் மகளும் ‘உங்கள் தந்தையைப்பற்றி சில வாக்கியங்களை அமையுங்கள்!’ என்று பன்னிரண்டு வயதுக்குட்பட்ட குழந்தைகளிடம் கேட்டிருந்தார்கள், மலேசிய ஆங்கில தினசரி ஒன்றில். எல்லாச் சிறுமிகளும் ஒரேமாதிரிதான் எழுதியிருந்தார்கள்: ‘என் அப்பா வெளியில் அழைத்துப்போவார். எனக்காக நிறையச் செலவழிப்பார்! நான் கேட்பதையெல்லாம் வாங்கிக்கொடுப்பார்!’ அப்பா என்றால் பணம் கொடுக்கும் இயந்திரம் என்றுதான் குழந்தைகளின் மனதில் படிந்திருக்கிறது. இதைவிட வெளிப்படையாகத் தனது அன்பைக் காட்டிக்கொள்ள தந்தையால் முடியாதா? சில இல்லங்களில், “அப்பா ஆபீஸிலிருந்து வரட்டும்! ஒனக்கு இருக்கு!” என்று அம்மா குழந்தைகளை மிரட்டிவைப்பாள். அப்பா என்றால் அன்புடன் மரியாதையும் அளிக்கப் பழக்க வேண்டும். பயமுறுத்த அவர் என்ன பூதமா? ‘அன்புக்குத் தாய், அறிவுக்குத் தந்தை’ என்று சொல்வதுண்டு. அப்படியானால், தாய்க்கு அறிவு புகட்டத் தெரியாதா, இல்லை, தந்தைக்குத்தான் அன்பே கிடையாதா? பிள்ளைகளிடம் தங்கள் அன்பை விதவிதமாகக் காட்டுவார்கள் ஆண்கள். அன்பு என்று அவர்கள் நினைப்பதே சில சமயங்களில் அதீதமாகிவிடுகிறது. கதை மரீனா நான்கு அண்ணன்மார்களுக்குப்பின் பிறந்ததால் பெற்றோர் இருவருக்குமே அலாதி செல்லம். ‘நான் மிக உயர்த்தி, அதனால்தான் கொண்டாடுகிறார்கள்,’ என்ற எண்ணத்தில் திமிர் எழுந்தது. பதினைந்து வயதுப் பெண்ணை அப்பா கையைப் பிடித்து அழைத்துப் போவார், கும்பலே இல்லாத இடத்தில்கூட! பள்ளிக்கூடத்திலும் எல்லா பொறுப்புகளையும் தட்டிக்கழிப்பாள் என் மாணவியான அவள். அவளை ஒரு வேலையும் செய்ய விடாததால், சோம்பல் மிகுந்திருந்தது. அண்ணன்களை மரியாதை இல்லாது நடத்துவாள். ஆனால் யாருக்கும் அவளைக் கண்டிக்கத் தோன்றவில்லை. அப்பா செல்லமாயிற்றே! அதனால் பொறுத்துப்போனார்கள். இந்தமாதிரி வளர்க்கப்படும் பெண்கள் கல்யாணமானாலோ, அல்லது உத்தியோகத்தில் அமர்ந்தாலோ, ‘நீதான் ராணி!’ என்பதுபோல் தம் வீட்டில் அனுபவித்ததை எதிர்பார்க்கிறார்கள். கிடைக்காதபோது, சண்டை போடுகிறார்கள். இல்லையேல், ஒரேயடியாக ஒடுங்கிவிடுகிறார்கள். எல்லாப் பெண்களும் அழுமூஞ்சிகள்! இன்னொருவருக்கு ஒரே ஆண்குழந்தைதான். ஒன்றரை வயதான என் மகள் அழுதபோது, “இந்தப் பெண்களே இப்படித்தான்! எல்லாவற்றிற்கும் அழுவார்கள்!” என்று முகத்தைச் சுளுக்கினார். அவரது மகன் அந்த வயதில் அழுதிருக்க மாட்டானா, என்ன! வயதான தந்தை எங்கள் குடும்ப நண்பரான சிங் ஐம்பது வயதில் கல்யாணம் செய்துகொண்டார். “மனைவியுடன் சண்டை போட ஆரம்பித்துவிட்டீர்களா?” என்று குசலம் விசாரித்தேன். “உங்களுக்குத் தெரியாதா, ஆன்ட்டி!” என்றார், அலுப்புடன். சுவாரசியத்துடன், “எதற்குச் சண்டை போடுவீர்கள்?” என்று மேலும் துளைத்தேன். “குழந்தை ஓயாமல் நை நையென்று அழுகிறாள். என்னால் சகிக்க முடிவதில்லை. நான் இரைந்தால், அவளுடைய அழுகை இன்னும் அதிகமாகி விடுகிறது. அப்போதெல்லாம் மனைவியைப் பார்த்துக் கத்துவேன். அவள் குழந்தையை உள்ளே தூக்கிப் போய்விடுவாள்!” என்றார். எனக்கு ஒரே சிரிப்பு. சின்னஞ்சிறு குழந்தைகளுக்கு அழுகைதான் மொழி. சில தினங்கள் அவர்களுடனேயே கழித்து, உன்னித்துக் கவனித்தால் பசிக்கு ஒரு மாதிரி அழுகை, உடை மாற்ற, தூங்கவைக்க என்று வெவ்வேறு விதமாக அவர்கள் அழுவது புலப்படும். அது அவருக்குப் புரியவில்லை. ‘குழந்தையை ஏன் அழ விடுகிறாய்?’ என்று மனைவியுடன் சண்டை போட முடியுமா! சுயநலமான அப்பா குடும்பப்பொறுப்பே இல்லாமல் ஒருவர் பிற பெண்களுடன் உறவு வைத்திருந்தார். அவர் பெற்ற பெண்களுக்கு அவரது வழிகாட்டலோ, அன்போ கிடையாது. இப்படிப்பட்ட பெண்கள் தம்மையும் அறியாது, அப்பாவைப்போன்றவரையே காதலித்து மணந்துகொள்கிறார்கள். நிச்சயிக்கப்பட்ட திருமணமானாலும், கணவர் நடத்தை எப்படி இருந்தாலும், ‘நம் அப்பா இல்லையா! எல்லா ஆண்களும் இப்படித்தான்!’ என்று ஏற்றுக்கொண்டுவிடுகிறார்கள். ‘நீங்கள் என்னை மிஞ்ச முடியாது!’ என்று தந்தை தாம் பெற்ற குழந்தைகளுடனேயே போட்டி போடும்போது, அவர்கள் மனம் தளரலாம். இல்லையேல், தம் திறமைகளை ஒளித்து வாழலாம். இயற்கை நியதி தாய்க்குத் தான் பெற்ற ஆண்குழந்தைகளைப் பிடிக்கும். தந்தைக்கு மகள்பால்தான் பேரன்பு. இதனால் பெற்றோரிடையே போட்டி வந்துவிட்டால், குழந்தைகளின்பாடுதான் திண்டாட்டம். ‘அம்மா செல்லம் கொடுத்து உன்னைச் சீரழிக்கிறாள்!’ என்னும் தந்தை அதற்கு மாற்று மருந்துபோல் ஓயாத சிடுசிடுப்பைக் காட்டுகிறார். மகன் செய்வதெல்லாம் தவறு என்று பழிப்பு. சிறு தவற்றுக்கும் கடுமையான தண்டனை. மகளிடமோ, மிக அருமை. இந்த பாரபட்சத்தினால் சகோதர சகோதரிக்குள் கசப்பு எழும் என்பது ஒருபுறமிருக்க, தந்தையை முன்மாதிரியாக எடுத்துக்கொள்ளும் மகனது தன்னம்பிக்கை வெகுவாகக் குறைந்துவிடுகிறது. ஆணோ, பெண்ணோ, ‘நீ தைரியசாலி! மகா புத்திசாலி!’ என்று சிறுவயதிலிருந்தே இரு குழந்தைகளிடமும் சொல்லிச் சொல்லி வளர்த்தால், பெரியவர்கள் சொன்னால் சரியாகத்தான் இருக்கும் என்ற நம்பிக்கை எழ, அவர்களுக்கு அக்குணங்கள் படியும். ஒரு தந்தையின் அன்பும் ஊக்கமும் கிடைக்கப்பெற்ற பெண் ஆண்களைப் புரிந்துகொள்கிறாள். அவர்களைப்போன்றே ஒரு முடிவை எடுப்பதற்கு அறிவைப் பயன்படுத்துகிறாள். உணர்ச்சிகளை நம்புவதில்லை. ஆனால், தந்தையின் அந்த அன்புடன் கண்டிப்பும் இருக்கவேண்டுவது அவசியம். அறியாப்பருவத்தினர் தவறு செய்வதைத் தண்டிப்பதால், நம் அன்பு குறைந்துவிட்டதென்ற அர்த்தமில்லை. அப்படிச் செய்யாவிட்டால்தான், நம்மையுமறியாது, அவர்களுக்குத் தீங்கிழைக்கிறோம். ‘ஒரே மகள்! திருமணமாகி நீண்ட காலம் கழித்துப் பிறந்ததால் எனக்கு ரொம்ப அருமை. என்ன செய்தாலும் திட்டக்கூட மனம் வரவில்லையே!’ என்பவர்களுக்கு: தற்காப்புக்கலை போன்ற உடற்பயிற்சி அளிக்கும் விளையாட்டுகளில் மகளை ஈடுபடுத்துங்கள். அவைகளைக் கற்பிக்கும் ஆசிரியராவது கண்டிப்பாக இருப்பார். அதனால், தானே கட்டொழுங்கு வரும். அருமை மகள் திருத்தப்படும்போது மனம் பதைபதைத்துப்போகிறதா? எதிர்காலத்தில் அவள் பிரகாசிக்க வேறு வழியில்லை. முக்கியமாக, போட்டியின்றி, குழுவோடு ஒரு காரியத்தைச் செய்யும்போது சிறுபிள்ளைத்தனத்துடன் சுயநலமும் மறையும். எதிர்த்துப் பேசும் சிறுவர்கள் “இந்தப் பசங்களே மோசம்,” என்று எல்லா பதின்ம வயதுப் பையன்களையும் ஒட்டுமொத்தமாக வைதாள் அம்மாது. “என்னமோ, ‘சுதந்திரம், சுதந்திரம்’ என்று அடித்துக்கொள்கிறார்கள். ஆனால், அவர்கள் செலவுக்கு நாம்தானே பணம் கொடுக்க வேண்டியிருக்கிறது!” சிறுவர்கள் எல்லா வயதிலும் இப்படி – பெரியவர்களிடம் மரியாதை கொடுக்காது – பேசுவது இயல்பு. அதிலும் பதின்மூன்று வயதுக்குமேல், ‘நான் இன்னும் குழந்தை இல்லையே!’ என்று சற்று அதிகமாகவே திமிறுவர். அவர்களது எதிர்ப்பு பலவிதமாக வெளிப்படும். சிலர், ‘ஆரம்பித்துவிட்டீர்களா!’ என்பதுபோல் கண்களைச் சுழற்றுவர், இல்லையேல், பெருமூச்சு வெளிப்படும். வேறு சிலர், ‘உங்கள் காலமே வேறு! உங்களுக்கு எங்களைப் புரிந்துகொள்ள முடியாது!’ என்று பழியைத் திருப்புவர். கதை: ஆசிரியைகளுடன் மோதல் ஒருமுறை, ‘படிப்பதற்கு இன்னும் கூடுதலான நேரம் செலவழிக்கக் கூடாதா!’ என்று நான் என் மாணவிகளிடம் கெஞ்சலாகக் கூறியபோது, “உங்கள் காலத்தில் டி.வி கிடையாது. இப்போது அப்படியா? பொழுதைக் கழிக்க எங்களுக்கு நிறைய வழிகள் இருக்கிறதே” என்றாள். நான் வாயடைத்துப்போனேன். எது முக்கியம், வாழ்க்கையை நல்வழியில் கொண்டு செல்லும் என்று இவர்களுக்குப் புரிவதில்லை. அடிக்கடி வற்புறுத்தினால், வேண்டுமென்றே எதிர்வழியில் நடப்பார்கள். ‘என் மகள் நான் என்ன சொன்னாலும் கேட்பதில்லை. எப்படியோ தொலையட்டும் என்று விட்டுவிட்டேன்!’ இம்மாதிரி கூறும் தாய் மகளைப் புகழவே செய்யாது, ஓயாமல் குற்றம் கண்டுபிடிக்கிறாள். தான் என்ன சொன்னாலும் கீழ்ப்படிய வேண்டும் என்று எதிர்பார்க்கிறாள். மனம் போனபடி நடந்து, முதலில் சுதந்திரமாக உணரும் மகளோ, போகப்போக, அஞ்ச ஆரம்பித்துவிடுவாள். நான் படித்த காலத்தில், விடுமுறை நாட்களில் பரீட்சைக்கு எந்தந்த பாடங்களை முதலில் படிக்க வேண்டும் என்று ஆசிரியைகள் சொல்லிக்கொடுத்தார்கள். காலையில் மனம் தெளிவாக இருக்கும்போது கணக்கில் ஆரம்பித்து விஞ்ஞானம் (இந்த இரண்டு பாடங்களையும் எழுதிப் பார்க்க வேண்டும்), பிறகு பூகோளம், சரித்திரம் என்று தொடர்ந்து, இறுதியில் மொழிகளில் முடிக்க வேண்டும். அவ்வப்போது இடைவெளி, சிறிது உணவுக்காக. படித்துக்கொண்டிருக்கும்போதே இசையைச் செவிமடுத்தால் நன்றாக மனதில் பதியும். நீண்ட காலம் மறக்காது. ஒரு நாளைக்கு இத்தனை பக்கங்கள் படிக்க வேண்டும் என்று ஓரிரு வாரங்களுக்கான அட்டவணையை முதலில் தயாரித்துக்கொள்வது மன இறுக்கத்தைத் தவிர்க்கும் வழி. ஆசிரியைகள் வற்புறுத்திக் கூற, ‘செய்துதான் பார்க்கலாமே!’ என்று நான் இம்முறையைக் கடைப்பிடித்தேன். பரீட்சைக்கு முதல்நாள் பக்கங்களை புரட்டிப் பார்த்ததுடன் சரி. இரவெல்லாம் கண்விழித்துப் படித்தது கிடையாது. பதினேழு வயது மாணவர்களிடம் இதை விளக்கிச் சொல்லி, விடுமுறைக்காலம் முடிந்து அவர்கள் திரும்பியதும், “நான் கூறியபடி படித்தீர்களா?” என்று ஆவலுடன் வினவினேன். “டீச்சர் ரொம்ப கண்டிப்பு!” என்று பதில் வந்தது! இது மறைமுகமான எதிர்ப்பு. சிறுவர்கள் எதிர்க்கும்போது, நாம் மேலும் எகிறாமல், அமைதியாக இருத்தல் அவசியம். ஒரு பையன், ‘நான் எப்படிப் போனால் உங்களுக்கென்ன, டீச்சர்? உங்களுக்குத்தான் சம்பளம் கிடைத்துவிடுமே!’ என்றுகூட என்னிடம் கூறியிருக்கிறான். அவனைப்போல், விதண்டாவாதம் செய்வதுதான் வளர்ந்த பிள்ளைகளுக்கு அழகு என்று நினைத்திருப்பவர்களிடம் பேசுவது வீண். ‘உங்கள் நன்மைக்காகத்தான் சொல்கிறேன். கேட்டால் கேளுங்கள்! எனக்கொன்றும் நஷ்டமில்லை!’ என்று விடவேண்டியதுதான். எதில் காதல்? பதின்ம வயதுப் பையன்களுக்கு தங்கள் தலைமுடியின்மேல் அபார பிரேமை, பெருமை. பதினேழு நிமிடம், இருபது நிமிடம் என்று ஏதோ கணக்கு வைத்துக்கொண்டு, ஒவ்வொரு முறையும் தலைசீவிக் கொள்வார்கள். எவ்வளவு அலங்கோலமாக ஆனாலும், அதை வெட்டிக்கொள்ள மனம் வராது. அவ்வளவு அருமை! “வாய் ஓயாமல் இருமறியே! சலூனுக்குப் போகக்கூடாது?” என்று தினமும் வீட்டில் நச்சரிப்பார்கள். பையனின் காது தாற்காலிகமாக செவிடாகிவிடும்.. அதைவிட்டு, “என்னிக்கு தலைமயிரை வெட்டிக்கிறதா உத்தேசம்?” என்பதுபோல் முடிவை அவர்களிடமே விட்டால், ஏதாவது ஒரு தினத்தைக் குறிப்பிடுவார்கள். ஆனால், அன்று மறந்ததுபோலிருப்பார்கள்! “இன்னிக்கு என்னமோ பண்ணப்போறதா சொன்னியே!” என்று மறைமுகமாக நினைவுபடுத்தினால் போதும். தம் வாக்கைக் காப்பாற்றுவார்கள். இந்த மனோதத்துவம் புரியாது, எங்கள் பள்ளியிலிருந்த கட்டொழுங்கு ஆசிரியர், கையில் கத்தரிக்கோலுடன், ஏதாவது வகுப்பிற்குள் நுழைவார். மாணவர்ளை தரதரவென்று வகுப்பிற்கு வெளியே இழுத்துச் சென்று, வேண்டுமென்றே தாறுமாறாக வெட்டுவார், ‘பள்ளி விதிமுறை தெரியாது? சட்டைக்காலரை இடிக்கிறது உன் முடி!’ என்ற வசவுடன். அன்று பூராவும் அந்த மாணவன் ஆத்திரமாக அமர்ந்திருப்பான். எந்தப் பாடத்திலும் கவனம் போகாது. கதை: வீட்டில் குழப்பம் புத்திசாலியாக, நல்லொழுக்கத்துடன் இருந்தவன் ரசாலி. பதினான்கு வயதில் பெற்றோர்கள் ‘தரையில் கட்டிப் புரண்டு’ சண்டை போட (அவனே சொன்னது), அவன் நிம்மதி கெட்டது. படிப்பிலும், உடையிலும் அக்கறை போயிற்று. மரியாதையின்றி ஆசிரியர்களையும் எதிர்க்க ஆரம்பித்திருந்தான். ஒரு நாள், நான் அவனை அழைத்து, “உன் தலைமயிரை வெட்டிக்கொள்ள வேண்டும்போல இருக்கிறதே! ரொம்ப நீளமாக இருக்கிறது. ஆசிரியர் பார்த்தால், கன்னாபின்னா என்று வெட்டிவிடுவாரே!” என்றேன் ரகசியக்குரலில். “எப்போ வெட்டிக்கணும்?” “இன்னிக்கு?” சும்மா சொல்லிப்பார்த்தேன். “நாளை சனிக்கிழமை. பள்ளி விடுமுறை. அப்போது வெட்டிக்கொள்ளட்டுமா?” என்று கேட்டுவிட்டு, நான் ஒப்பியதும், அதன்படி செய்தான். (‘இன்றே வெட்டிக்கொள்!’ என்று நான் மிரட்டியிருந்தால், கேட்டிருக்க மாட்டான்). எந்த விஷயத்திலும் அவர்களே முடிவு செய்வதுபோல் இருக்கச் செய்வது நாம் சொல்வதற்கேற்ப சிறுவர்களை நடக்க வைக்கும் உபாயம். சொல்லி வைத்தாற்போல், திங்கள் காலை அந்த ஆசிரியர் மேலும் இரண்டு உதவியாளர்களுடன் வந்தார். சில மாணவர்களை இழுத்துப்போனார். ரசாலி பெருமையுடன் தலையை நிமிர்த்தியபடி உட்கார்ந்திருந்தான். நாங்கள் ஒருவரையொருவர் பார்த்து நமட்டுச்சிரிப்புச் சிரித்தோம். “தப்பித்தாய்!” என்று ரகசியக்குரலில் கூறினேன், மலாய் மொழியில். அவனும் புன்சிரிப்புடன், ‘தப்பித்தேன்!’ என்றான். பக்கத்திலிருந்த நண்பனிடம், “டீச்சர்தான் என்னைக் காப்பாற்றினார்கள்!” என்றது எனக்குக் கேட்டது. சில வருடங்களுக்குப்பின், நான் அப்பகுதியில் காரை ஓட்டிப்போகையில், ரசாலியைப் பார்த்தேன். ஹார்னை விடாமல் அடித்தேன். சற்றுப் பொறுத்து, “அந்தப் பையனுக்கு ஒன்னைப் பாத்து என்னம்மா அவ்வளவு சந்தோஷம்? ரோடிலே எதுக்கு அப்படிக் குதிச்சான்?” என்று கேட்டாள் என் மகள். வீட்டில் நிம்மதி இல்லாதவன்மேல் சிறிது அக்கறை காட்டினேன். அவ்வளவுதான். ஆனால், அவனைப் பொறுத்தவரை, அது பெரிய விஷயம். நான் அவன் மானத்தைக் காப்பாற்றி இருக்கிறேன். வயதில் இளையவர்களுடன் பழகும்போது, அவர்கள் நிலையில் நம்மை வைத்துப் பார்த்தால், அவர்களைப் புரிந்துகொள்ள முடியும். அவர்கள் நம்மை எதிர்க்கும் சந்தர்ப்பங்களும் குறையும். போற்றுவார் போற்றட்டும் தனது முதல் குழந்தையை முதன்முதலாகப் பார்க்கும் தாய், ‘இவனுக்காக உயிரையே கொடுப்பேன்!’ என்று எண்ணக்கூடும். பார்ப்பவர்கள் அனைவரும் தன் குழந்தையை மெச்சவேண்டும் என்ற ஆவல் பிறக்கும். ஆனால், பிறருக்கு அதுவே தொல்லையாகிவிடும். ‘எப்போதும் அந்தக் குழந்தையையே பாத்துண்டு இருக்கணும் என்பார்கள்!’ என்று ஒருவரும், ‘எத்தனையோ குழந்தைகளைப் பாத்தாச்சு, போ!’ என்று அலுத்துக்கொண்ட பெண்மணிகளையும் கண்டிருக்கிறேன். அந்தமாதிரி ஒர் உறவினர் வீட்டில் தங்கியபோது, ‘இவளைப் பாருங்களேன்!’ என்று தன் இரண்டு வந்து மகளின் பராக்கிரமத்தை ஓயாது பறைசாற்றினாள் அவளுடைய தாய். குழந்தை என்னவோ, வயதுக்கு மீறிய புத்திசாலிதான். ஆனால், அவளை மெச்சுவதைத் தவிர நமக்கு வேறு வேலை இல்லையா, என்ன! ஒரு முறை, ‘நான் படிச்சுண்டு இருக்கேன். தொந்தரவு பண்ணாதே!’ என்றேன் முகத்தை சற்றே திருப்பி. அவளுடைய வாய் அதிர்ச்சியில் பிளந்தது. சில வருடங்கள் கழித்து, அவளுடன் பேசும்போது, “உன் குழந்தையைப் பார்ப்பவர்களிடமெல்லாம் காட்டிப் பெருமைப்பட்டுக்கொள்ளாதே!” என்றேன், அறிவுரை கூறும் வகையில். “நான் இப்போதெல்லாம் அப்படிச் செய்வதில்லை. அவளுடைய அப்பாவை அப்படித்தான் நடத்தினார்களாம். அதனால் வேண்டாம் என்கிறார்!” என்றாள். ஏன் கூடாது என்று அவளுக்குப் புரியவில்லை. பிறரிடம் தம்மைப் புகழ்கிறார்களே என்று குழந்தைகளுக்கு முதலில் பெருமையாக இருக்கும். நாளடைவில், ‘நான் செய்வதெல்லாம் பெற்றோருக்குப் பெருமை தரக்கூடியதாக இருக்கிறதோ?’ என்று யோசித்து, யோசித்து ஒவ்வொரு காரியத்தையும் செய்ய முனைவர். அதற்கு ஈடாக, பெற்றோரும் குழந்தைகள் செய்ய வேண்டிய காரியத்தையும் தாமே முன் நின்று செய்வர். குழந்தைகளுக்குச் சுதந்திர உணர்ச்சி எப்படி வரும்? எதிலாவது வெற்றி பெறாவிட்டால், ‘பெற்றோர் கலங்குவார்களே!’ என்ற ஏமாற்றம் எழும். புதிதாக எதையும் செய்யும் ஆர்வமோ, துணிவோ இல்லாது போய்விடும். ‘நான் ரொம்ப அழகாம்!’ பதின்ம வயதினருக்கான பள்ளிக்கூடம் ஒன்றில், கல்வியில் நாட்டமோ, திறமையோ இல்லாத மாணவிகள் நிரம்பிய வகுப்பில் ஒரு பொதுவான தன்மை இருந்ததைக் கண்டு ஆச்சரியம் எழுந்தது எனக்குள். எல்லாருமே அழகாக இருந்தார்கள். சிறு வயதில், ‘அழகு!’ என்று பலரும் கொஞ்சியிருப்பார்கள். அதனால் அதற்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுத்து வளர்ந்திருக்கிறார்கள். வகுப்பில் ஒரு சிறு கண்ணாடியைக் கையில் வைத்துக்கொண்டு தம் முகவசீகரத்தை ரசித்துக்கொண்டிருப்பார்கள்! அழகு, அறிவு – இப்படி ஏதாவது ஒன்று இருந்தால் போதுமா? குணம்? உணர்ச்சிமயமான தாய் அச்சிறுமிக்கு இரண்டு வயதுதான். ஆனாலும், முதல் குழந்தை ஆயிற்றே, பிறர் பாராட்டுவதுபோல் நடக்க வேண்டாமா என்று தாய் ஓயாது அவளைத் திருத்துவாள். வெளியில் அழைத்துப் போகுமுன்னர் ‘அதைச் செய்யாதே, இப்படிப் பேசாதே’ என்று போதனை நடக்கும். மகள் மிரண்டுபோய் வாய்பேசாது இருப்பாள். அப்படியும் தப்பு கண்டுபிடித்து, வீட்டிற்கு வந்ததும் திட்டுவாள் தாய். ஐந்து வயதிற்குள் தாயின் குணம் குழந்தைக்குப் படிந்தது. தாய் பேசுவதைப்போலவே அவளிடமும் பிறரிடமும் மரியாதையின்றி பேச ஆரம்பித்தாள். ’எவ்வளவு கண்டிப்பாக வளர்த்தேன்! இப்படி நடந்துகொள்கிறாளே!” என்று பெரியவள் கலங்குகிறாள். அவளுடைய வசவு அதிகரிக்கிறது. பெரியவர்களைப்போல் குழந்தைகள் எப்போதுமே நடக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு சரியல்ல. அவர்கள் செய்யும் சிலவற்றை ‘குழந்தைத்தனம்’ என்று விட்டுவிட வேண்டியதுதான். அளவுக்குமீறி உணர்ச்சிவசப்பட்டால் எதிர்விளைவுக்குத் தயாராக இருக்க வேண்டும். எல்லாரையும் மட்டம் தட்டும் தாய் தன் மகன் புத்திசாலி என்று பெருமைப்பட்டுக்கொள்ளும் தாய் அவள். ஆனால் எங்கள் பள்ளிக்கூடத்தில் அவன் வாங்கிய மதிப்பெண்களோ அவள் நினைப்பைப் பொய்ப்பிக்க வைப்பதாக இருந்தது. ‘உங்கள் ஆசிரியைகள் எல்லாரும் முட்டாள்கள்! உன் அறிவை அவர்களால் புரிந்துகொள்ள முடியவில்லை!’ என்று மகனிடமே பழித்தாள். மகன்மூலம் பள்ளிக்கு ஒரு கடிதம் அனுப்பினாள், ‘என் மகனுக்கு நீங்கள் அளிக்கும் மதிப்பெண்களைவிட அதிகம் வாங்கத் திறமை இருக்கிறதென்று எண்ணுகிறேன்!’ என்று! சிலர், “நம் பக்கத்து வீட்டுக்காரர்கள் காட்டுமிராண்டிகள். இப்படியா, உரக்க டி.வியும் ரேடியோவும் போடுவார்கள்!” என்பார்கள். இதையெல்லாம் கேட்டு வளரும் மகன் மட்டும் எப்படிப் பிறரை மதித்து நடப்பான்? முதலில் வீட்டுக்கு வெளியே இருப்பவர்களைக் குறை கூறுவதில் ஆரம்பித்து, பிறகு பெற்றோரிடமும் மரியாதை இல்லாதுதான் நடப்பான். ஏனெனில், அதுதான் சிறுவயதிலேயே அவனிடம் படிந்த குணம். முன்பு, கிழக்கு மலேசியாவில் (போர்னியோ) பணியாற்றிய ஆசிரியர் ஒருவர் சிரித்தபடி கூறினார்: “பெற்றோர் பிரம்பைக் கொண்டு கொடுத்து, ‘எங்கள் மகன் தவறு செய்தால் இதைக்கொண்டு அடியுங்கள்!’ என்பார்கள்!” “இப்போது, மகனை அடித்தால், அப்பாவே நம்மை அடிக்க வருவார்!” என்று சிரித்தோம். பெரியவர்களிடம் மரியாதையாக இரு! போதனையால் திருந்தியவர்கள் எத்தனை பேர்? நாமும் இளையவர்களது உணர்ச்சிகளுக்கு மதிப்பு கொடுத்து , பிறரிடமும் மரியாதை குன்றாது நடந்துகொண்டால், இளையவர்களுக்கு இயல்பாகவே அக்குணம் வரும். குழந்தைகளிடம் உண்மையான அக்கறை கொண்ட பெற்றோர், அவர்கள் தோல்வி அடையும்போதும் கலங்காது, பக்கபலம் அளிப்பவர்களாக இருப்பார்கள். உதாரணமாக, ஒரு சிறுவன் ஏதாவது போட்டியில் கலந்துகொண்டு வெற்றி பெறாவிட்டால், தாயும் சேர்ந்து அழாது, ‘நீ சிறப்பாகத்தான் செய்தாய். ஆனால், மற்றவர்கள் உன்னைவிட வயதிலும் அனுபவத்திலும் பெரியவர்கள். அந்த வயது வந்தால், நீயும் நன்றாகச் செய்வாய்!’ என்றால், அவனுடைய உற்சாகம் குன்றாது. ‘போட்டி’ என்றால் வெற்றியும் இருக்கும், தோல்வியும் இருக்கும் என்று புரிந்துகொள்வான். சேருவதற்கு முன்னர் கலக்கம் ஏற்படாது. அன்பில்லாமையால் எதிர்ப்பு தாயற்ற பெண் என்று வீட்டிலுள்ள பெண்டிர் எல்லாரும் தன்னைத் திட்டுவதாக எப்போதும் என்னிடம் குறையாகக் கூறுவாள் என்னுடன் படித்துக்கொண்டிருந்த வித்யா. அவள் அடிக்கடி எங்கள் வீட்டுக்கு வருவாள். என் தாய் சமையலறையிலிருந்து, “கடைக்குப் போய் கொஞ்சம் சாமான் வாங்கி வருகிறாயா?” என்று உரக்க என்னிடம் கேட்டபோது, “இப்போதே வேண்டுமா, கொஞ்ச நேரம் கழித்துப் போகட்டுமா?” என்று கேட்டேன். “அவசரமில்லை,” என்று பதில் வந்தது. எங்கள் உரையாடலைக் கேட்டுக்கொண்டிருந்த வித்யா, “என்ன, நீ! உடனே சரியென்று சொல்கிறாய்! நானாக இருந்தால், ‘மாட்டேன்!’ என்று சண்டை பிடித்திருப்பேன்,” என்றாள். அவள் ஏன் அதிசயப்பட்டாள் என்று நான் யோசித்தபோது புரிந்தது: பிறர் சொல்வதை உடனுக்குடன் நிறைவேற்றியாக வேண்டும் என்ற கட்டாயம் எனக்கு இருக்கவில்லை. அம்மா, ‘வாங்கி வா!’ என்று கட்டளை இடவில்லை. கோரிக்கை விடுத்தாள். அதனால், செய்யலாமா, வேண்டாமா என்ற முடிவு எனக்கே விடப்பட்டிருந்தது. வித்யாவோ, தன்னிடம் அன்பு காட்டாதவர்களிடம் கொண்ட எதிர்ப்பை வேறு விதமாகக் காட்டினாள். (தாயற்ற பெண்ணைத் தவறாக வளர்த்துவிட்டோம் என்று பிறர் குறை கூறிவிடுவார்களோ என்று பயந்து, அன்பை மறைத்து, கடுமையாக நடந்துகொண்டார்களாம்). அவளது போக்கால் அனைவரும் அயர்ச்சி அடைவது அவளுடைய வெற்றி! ஆசிரியைகளிடமும் அதே போக்கு தொடர்ந்தது. தன்னிடம் ஓயாது குற்றம் கண்டுபிடிப்பவர்களை எதிர்ப்பதுதான் தன் சுதந்திரத்தை நிலைநாட்டும் வழி என்றும் நினைத்திருக்கிறாள். தண்டனை பெறப் பெற, இக்குணமும் கடுமையாகியது. ஒரே நிலையான நடப்பு சிறுவர்கள் செய்த தவற்றை சில சமயம் கண்டுகொள்ளாமல் இருப்பதும், வேறு சமயங்களில் (பிறர் தப்பாக நினைத்துவிடப்போகிறார்களே என்று) அளவுக்குமீறி தண்டிப்பதும் அவர்களைக் குழப்பத்தில்தான் ஆழ்த்தும். “நீங்கள் சொன்னால் வாய்மூடி கேட்டுக்கொள்கிறான்! இதையே நாங்கள் சொன்னால் எதிர்த்துப் பேசுவான்!” என்று பல பெற்றோரும் வளர்ப்பவர்களும் என்னிடம் வருத்தத்துடன் கூறியிருக்கிறார்கள். மரியாதை கொடுத்தால்தான் திரும்ப வாங்கலாம். இந்த நியதி எல்லா வயதினருக்கும் பொருந்துமே! அவர்களுடைய நன்மைக்காகச் சொல்கிறாம், நம் அதிகாரத்தைக் காட்டுவதற்காக இல்லை என்பதைப் புரிய வைக்கவேண்டும். மிரட்டாமலோ, பிறர்முன் கேலி செய்யாமலோ இருந்தால் ஏன் கேட்கமாட்டார்கள்? பாராட்டு – பொறுமை வீட்டைச் சுத்தப்படுத்தினாலோ, தோட்டவேலை செய்தாலோ, திறம்பட சமைத்தாலோ, ஏன், எந்த காரியத்தையும் புகழ்ச்சியை எதிர்பார்த்தே செய்வார்கள் சிலர். ‘பிறர் என்னைப் பாராட்டவேண்டும்!’ என்று மட்டுமே ஒரு காரியத்தைச் செய்ய ஆரம்பித்தால், அதில் முழு ஈடுபாடு இருக்கலாம். ஆனால் எதிர்பார்த்த அங்கீகாரமோ, வெற்றியோ கிடைக்காதபோது, ஏமாற்றம்தான் மிஞ்சும். கதை மாலதியின் தாய் சிறு வயதிலிருந்தே அவளைக் காரணமின்றி திட்டுவாள். தந்தையின் அளவுகடந்த அன்புக்குப் பாத்திரமாக இருந்ததுதான் அவளுடைய குற்றமாகப் போயிற்று. ‘ஏன் அம்மாவுக்கு நம்மைப் பிடிக்காமல் போய்விட்டது?’ என்று வருந்திய குழந்தை மனம், ‘நான் போட்டிகளில் கலந்துகொண்டு பரிசு பெற்றால், அம்மாவின் முகத்தில் சிரிப்பு வரும்,’ என்று புரிந்துகொண்டது. இத்தகைய நடவடிக்கை அநாவசியமான மன இறுக்கத்தில் கொண்டுவிடும். நமக்குப் பிடித்ததைச் செய்யும்போதுதான் மனநிறைவு கிட்டுகிறது. அதையும் நம்மால் இயன்றவரை முயற்சி செய்து பார்க்கவேண்டும். நாம் செய்ய விரும்புவது நம் தகுதிக்கு ஏற்புடையதாக இருக்கிறதா என்பதை ஆராய்ந்து பார்க்க வேண்டுவதும் முக்கியம். இல்லாவிட்டால் ஏமாற்றம்தான் மிஞ்சும். கதை “அம்மா என்னை வீணை கத்துக்கச் சொல்றாங்க, டீச்சர். எனக்குப் பிடிக்கலே,” என்று என்னிடம் அழமாட்டாக்குறையாகத் தெரிவித்தாள் ஓர் இளம்பெண். தந்தையை இழந்தவள். அவளைச் சிறுவயதிலிருந்தே நான் அறிவேன். “எங்கே, பாடு!” என்று ஒரு ஸ்வரத்தை இழுத்தேன். அவள் உடனே பாடிக் காட்டினாள். இரண்டு முறையும் அபஸ்வரம்தான். அப்போது புரிந்தது அவளுக்கு ஏன் இசை கற்பதில் ஆர்வம் இல்லையென்று. அவள் பாடியதற்கும் நான் பாடியதற்கும் சம்பந்தமே இருக்கவில்லை. இந்தப் பெண்ணுக்கோ வேறு துறைகளில் அபாரத் திறமை. எதற்காக வராததை எண்ணி முட்டிக்கொள்ளவேண்டும்? “ஒங்கம்மாவிடம் கண்டிப்பா சொல்லிடு. நான் என்னால முடிஞ்சதைத்தான் செய்வேன்னு!” என்று சொல்லிக்கொடுத்தேன். அவள் முகம் மலர்ந்தது. தாயின் பேச்சை மீறலாம், மீறினால், அப்படியொன்றும் தான் தகாத காரியம் செய்பவளாக ஆகிவிடமாட்டோம் என்று புரிந்த மலர்ச்சி அது. ‘இப்படிச் செய்யேன்!’ என்று பிறர் வற்புறுத்திச் சொல்லும்போது, ‘முயற்சி செய்கிறேன்!’ என்றால், அனேகமாக அது நல்லவிதமாக நடைபெறாது. விடாமுயற்சி பட்டதாரியான என் தோழி அய்னுன் முதல் வகுப்புக்கான பரீட்சைக் கேள்விகளைப் பார்த்துவிட்டு, “எவ்வளவு எளிதாக இருக்கிறது!” என்று அதிசயப்பட, நான் சிரித்தபடி, “அந்த வயதில் உனக்கும் இதெல்லாம் கடினமாகத்தான் இருந்திருக்கும்!” என்றேன். ‘எதுக்கு ஸ்கூலுக்குப் போகணும்?’ என்று அடம்பிடித்த குழந்தைகளில் நானும் ஒருத்தி. பழகிய சூழ்நிலைதான் பாதுகாப்பு என்று நினைத்த வயது அது. அப்படிப்பட்ட குழந்தைகளுக்கு, ‘படிச்சாதான் புத்திசாலியா ஆகலாம். ஒன்னை எல்லாருக்கும் பிடிக்கும்,’ என்று, அவர்களுக்குப் புரிவதுபோல் எதையாவது சொல்லி சமாதானப்படுத்த வேண்டியதுதான். என்னைப்போலவே இருந்த எங்கள் வீட்டுக் குழந்தைக்கு நான் ஒரு கதை சொன்னேன்: ஒருவன் மேசை, நாற்காலிகள் போட்டிருந்த ஒரு கடைக்குப் போய் ‘காப்பி!’ என்று கேட்க, ‘ஏய்! வெளியில் போர்டைப் பாக்கலியா? இது ஹோட்டல் இல்லே,’ என்று திட்டி, அடித்தார்கள். அதுவோ, மரச்சாமான்கள் விற்கும் கடை. “பாவம்! அவனுக்குப் படிக்கத் தெரியாதால் அடி வாங்கினான்,” என்று முடிப்பேன். எத்தனையோ கெஞ்சியும், கொஞ்சியும், மிரட்டியும் படியாத பிள்ளை அக்கதையால் மனம் மாறினான். படிக்கத் தெரியாவிட்டால் அடியும் திட்டும் வாங்க வேண்டுமோ என்று அஞ்சி, அதற்குப்பின் ஒழுங்காக பாலர் பள்ளிக்குப் போனான். ‘முட்டாள்தனமான கதை!’ என்று பெரியவர்கள் சிரித்தாலும், அவனுக்குப் புரிந்தது. எடுத்த காரியத்தை முடி பலர் படிப்பையோ, வேறு எந்த காரியத்தையோ அரைகுறையாக விட்டுவிடுகிறார்கள். வெற்றி பெறுபவர்கள் விடாமுயற்சி உள்ளவர்கள். அதுதான் அவர்களுக்கும் மற்றவர்களுக்கும் இடையே உள்ள வித்தியாசம். நாம் கடக்க வேண்டிய பாதையைக் கண்டு முதலில் மலைப்பாக இருந்தாலும், அஞ்சக்கூடாது. முயற்சி திருவினையாக்கும். ஒரு காரியத்தை முனைந்து செய்வது ‘பிடிவாதம்’ என்று பிறர் பழிக்கலாம். ஆனால், சிறுகச் சிறுக நீண்ட காலம் ஒரே காரியத்தைச் செய்தால்தான் வெற்றி கிட்டும் என்பது அவர்களுக்குப் புரியவில்லை. நீண்ட தூரத்தைக் கடக்க ஒவ்வொரு அடியாக வைத்தால்தானே முடியும்! இலக்கை நோக்கி நட எந்தக் காரியமும் ஆரம்பிக்கும்போது மலைப்பாக இருக்கும். ‘இதை நம்மால் செய்ய முடியுமா?’ ‘பிறர் என்ன சொல்வார்கள்?’ என்றெல்லாம் யோசனை போனால், தயக்கம்தான் மிஞ்சும். புதிய விளையாட்டுகளில் ஈடுபடுகிறவர்களது உடலின் பல பாகங்களிலும் வலி உண்டாகாமல் இருக்காது. அதைப் பொருட்படுத்தாது, உரிய மருந்துகளின் உதவியோடு தொடர்ந்து விளையாடினால், தானே ஆர்வம் பெருகும். நாற்பது வயதுக்குமேல் நாங்கள் – பத்து பெண்கள் – நீச்சல் கற்க ஆரம்பித்தோம். என்னைத் தவிர பிறர் எல்லாரும் சீனர்கள். அவர்கள் எல்லாரும் அரைகுறையாக விட்டுப்போய்விட்டார்கள். காரணங்கள்: உடல் கறுக்கிறது. பசி மிகுந்து, நிறையச் சாப்பிடுவதால் குண்டாகிவிட்டேன். முடி உதிர்கிறது. நானோ, எடுத்த காரியத்தை முடிக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தேன். ‘பசித்தால் என்ன!’ என்று அலட்சியப்படுத்தினேன். முடி அதிகம் கொட்டாமல் இருக்க இரு கை நகங்களையும் ஒன்றன்மேல் ஒன்றாக வைத்து, மேலும் கீழுமாகத் தேய்க்க வேண்டும். (Reflexology – buffing the nails). நல்ல பலனளித்தது. உடலெல்லாம் வலிக்கிறதே!‘என்று நான் கூற, ’வெந்நீரையும் பச்சைத்தண்ணீரையும் மாற்றி மாற்றி விட்டுக் குளியுங்கள்!’ என்று ஆலோசனை வழங்கப்பட்டது. ஒவ்வொரு நாளும் மாறுதல் தெரிந்தது. ஊளைச்சதையும், கையின் வெளியில் தெரிந்த நரம்புகளும் மறைவதைக் கண்டு மகிழ்ச்சியாக இருந்தது. தற்காப்புக்கலையை பதினைந்து வருடங்களுக்குமேல் பயின்ற ஒரு இளைஞனைக் கேட்டேன்: “இன்று பயிற்சிக்குப் போனாயே! வலிக்கிறதா?” பதில் யோசியாது வந்தது: “வலிக்காவிட்டால், அது முறையான பயிற்சியே இல்லை!” தனக்கென ஓர் இலக்கு வகுத்துக்கொண்டு, அதை நோக்கிப் பயணம் செய்துகொண்டிருந்தான் – எந்தவிதத் தடங்கலையும் லட்சியம் செய்யாது. அதுதான் அவன் வெற்றி. வெற்றி தொடர சிலர் ‘ஆரம்பசூரத்தினால்’ வெற்றி பெற்றிருப்பார்கள். உடனே, தலையைச் சற்றே நிமிர்த்தி, நெஞ்சை நிமிர்த்துக்கொண்டு நடப்பதுதான் தம் ‘மேலான’ தன்மையை பிறருக்குப் புரியவைக்கும் என்று எண்ணுவதுபோல் நடப்பார்கள். ‘யாரிவர்?’ என்று பார்ப்பவர்கள் புருவத்தை உயர்த்தினாலும், இதனால் மரியாதை கிடைத்துவிடும் எனபதில்லை. ‘ரொம்பத்தான் காட்டிக்கறான் (ள்!)’ என்று அவன்(ள்) காதுபடவே சிலர் முணுமுணுக்கும்போது அதிர்ச்சி அடைந்தாலும், அவர்கள் தம்மை மாற்றிக்கொள்வதில்லை. இப்படிப்பட்டவர்கள் சிறு வெற்றி அடைந்தாலே திருப்தி அடைந்துவிடுவர். அதனால், அதிக முன்னேற்றத்துக்கு வழியில்லை. பெருங்காயம் வைத்த பாண்டமாக, என்றோ செய்து முடித்தவைகளையேதான் பறைசாற்றிக்கொண்டு இருக்கவேண்டும். அதிலும், இளம் வயதிலேயே அதிகமான முன்னேற்றத்தை அடைபவர்களுக்கு தம் நற்பெயரைத் தக்கவைத்துக்கொள்ளும் முதிர்ச்சி இருப்பதில்லை. கதை அவர் இருபத்தைந்து பிராயத்துக்குள் கலைத்துறையில் பெரிய வெற்றிகளைப் பெற்றிருந்தவர். எந்தப் பொது நிகழ்ச்சியில் கலந்துகொள்ள அவரை அழைத்தாலும், தன்னை உரிய விதத்தில் கவனிக்கவில்லை, தன் மதிப்பை உணராது கால தாமதம் செய்து தன் பொன்னான நேரத்தை வீணாக்குகிறார்கள் என்று ஏற்பாட்டாளர்களுடன் வாதிடுவார். முதலில் அவர்கள் அஞ்சினாலும், போகப் போக, தம்மீது தவறில்லை, இவர் பலரிடமும் இப்படித்தான் நடந்துகொள்கிறார் என்று புரிந்துகொண்டார்கள். அதன்பின், அவரை எந்த நிகழ்ச்சிக்கும் அழைக்கத் தயங்கினார்கள். பொறுமை இல்லாததால், திறமை இருந்தும் அவர் சோபிக்கவில்லை. வாய்ப்புகள் குன்ற பொருளாதாரம் ஆட்டம் கண்டது. பொறுமை மேலும் குன்றியது. வறுமையிலோ, நோயிலோ வாடும்போதுதான் பொறுமை எல்லை மீறும் என்பதில்லை. எந்த நிலை வந்தாலும் பொறுமை இழக்காது, காலம் மாறும், நம் அதிர்ஷ்டத்தை மாற்றிக்கொள்வது நம் கையில்தான் இருக்கிறது என்பதை உணர்ந்தாலே போதும். கதை ‘எனக்குப் பொறுமையே கிடையாது!’ இப்படி அடிக்கடி சொல்வாள் அவள். தான் பெற்ற குழந்தைகளை சிறு தவற்றுக்குக்கூட அடித்து நொறுக்குவாள். ‘அப்படிச் செய்யாதே!’ என்று மூத்தவர்கள் அறிவுரை வழங்கும்போது, “எனக்குப் பொறுமையே கிடையாது! அதுக்கு என்ன பண்றது!” என்பாள். அவளைப் பொறுத்தவரை, செல்வச் செழிப்புக்குக் குறைவு கிடையாது. இருந்தாலும், கிடைக்காத எதையோ எண்ணி தானும் நொந்து, பிறரையும் நோகடிப்பாள். தங்களிடம் இருப்பவைகளை மனதில்கொண்டு திருப்தி அடையாது, பிறருடன் தம்மை ஒப்பிட்டுக்கொண்டே நிம்மதி இழப்பவர்களை என்ன சொல்வது! இவர்களால் பிறருக்கு எந்த இழப்புமில்லை. நஷ்டம் இவர்களுக்குத்தான். ஞாபகம் வருதே! “ஆனாலும் எனக்கு ரொம்ப மறதி!’ என்று அலுத்துக்கொள்கிறார் ஒருவர். இன்னொருவரோ, ‘நினைக்கத் தெரிந்த மனமே! உனக்கு மறக்கத் தெரியாதா!’ என்று கெஞ்சுகிறார். (அனேகமாக, காதலராகத்தான் இருக்கும்). வாழ்வில் மிக இனிமையானவை கடந்துபோன தருணங்கள். அக்காலத்தில் பொறுக்க முடியாத சில சந்தர்ப்பங்களும் இருந்திருக்கும். அவைகளை ஒதுக்கிவிட்டுப் பார்த்தால், ஆடையின்கீழ் இருக்கும் பால்போல், மறக்கமுடியாதவை, மறக்கக்கூடாதவை, தெளிவாகத் தெரியும். அதற்காகத்தான் திருமணம், பிறந்தநாள் போன்ற மகிழ்ச்சிகரமான நிகழ்வுகளை புகைப்படங்களில் பத்திரப்படுத்திக் கொள்கிறோம். ஒரு பள்ளிக்கூடத்திலோ, அல்லது கல்லூரியிலோ ஒன்றாகப் படித்தவர்கள் இருபத்தைந்து வருடங்களுக்குப்பின் ஏன் கூடுகிறார்கள்? அக்காலத்தில் தாம் அனுபவித்தவை, தண்டித்த ஆசிரியை, செய்த விஷமங்கள் என்று எல்லாவற்றையும் அசைபோடும்போதே ஒரு மகிழ்ச்சி. நாம் எங்கு சென்றாலும் நம்முடன் தொடர்ந்து வருவது கல்வி மட்டுமல்ல, நினைவுகளும்தான். கதை அப்போது நான் இடைநிலைப்பள்ளியில் படித்துக்கொண்டிருந்தேன். அடுத்த பாடத்தை எடுக்க வரும் ஆசிரியை வகுப்பிற்குள் நுழைவதற்குள் எங்களில் சிலர் பலரது வேண்டுகோளுக்கு இணங்க திரைப்படப் பாடல்களைப் பாட ஆரம்பித்தோம். எப்போதும் இடைவேளையின்போதுதான் நான் பாடுவேன் – பின்னணி இசையை எல்லாம் வாயாலேயே அளித்து! அன்று என்னவோ, புத்தி கெட்டுப்போயிற்று. (ஒரு வேளை, மறக்கமுடியாத தருணம் ஒன்று அமைய வேண்டியிருந்தோ?) குழுவாகப் பாடப் பாட உற்சாகம் பீறிட்டது. இருபது நிமிடங்கள் கடந்திருக்கும். ‘இன்னிக்கு மிஸ் வரலே!’ என்று மகிழ்ச்சியுடன், எங்கள் கச்சேரியைத் தொடர்ந்தோம். வகுப்பில் ஒரே ஆரவாரம். கைதட்டி எங்களை ஊக்குவிக்க தோழிகள் இருந்தபோது, ஆசிரியை உள்ளே நுழைந்தது கண்ணில் படுமா? மணி அடிக்கும் சமயம் ஆசிரியை மீண்டும் வந்தார். அவர் முகத்தில் தெரிந்த கோபம் எங்களை அச்சுறுத்தியது. முதலிலேயே வகுப்புக்கு வந்தாரா! அது எப்படி கவனிக்காமல் போனோம்? “கிளாஸ் மானிட்டரே இப்படி இருந்தால் என்ன சொல்வது?” என்று என்னை ஒரு பார்வை பார்த்தார். குறித்த நேரத்தில் ஆசிரியை ஒருவர் வராவிட்டால், போய் விசாரிக்க வேண்டியது என் கடமையாக இருந்தது. பொங்கிய சிரிப்பை அடக்கிக்கொண்டு தலையைக் குனிந்தேன். என்னுடன் சேர்ந்து பாடிய (அமர்க்களம் செய்த என்று புரிந்துகொள்ளவும்) பெண்ணின் பெயர் டி.ஸ்.வசந்தகுமாரி. அவளைப் பார்த்து, “உன் பெயர் M.L. வசந்தகுமாரி இல்லை. நினைவு வைத்துக்கொள்!” என்று சீறினார். எங்களுக்கெல்லாம் சிரிப்பு வந்தது. நிலைமையை இன்னும் மோசமாக்க வேண்டாம் என்று அடக்கிக்கொண்டோம். “உன் பெயர் M.L. வசந்தகுமாரி இல்லை. நினைவு வைத்துக்கொள்!” என்று சொல்லிச் சொல்லி, அந்த ஆண்டு பூராவும் அவளைக் கேலி செய்தோம். பரிசோதனைக்கூடத்தில், ஐஸ் கட்டிகளை என் ஜாக்கெட்டுக்குள் போட்டு, வெளியே சொல்லவும் முடியாது, ஆசிரியை எதிரே என்னை நெளிய வைத்ததை மறக்க முடியுமா! இதைப்போன்று எவ்வளவோ! அதெல்லாம் பசுமையாக மனதில் படிந்துவிட்டதால், ‘இந்த வயதில் இதெல்லாம் சகஜம்!’ என்று ‘பெரிய மனதுடன்’ பிற்காலத்தில் மாணவர்கள் செய்யும் சிறு குறும்புகளை என்னால் ரசிக்க முடிந்தது. ஒலி தூண்டும் நினைவுகள் ஏதாவது பழைய பாட்டைக் கேட்டால், அதை நாம் ரசித்த காலம், அப்போது நம்முடன் இருந்தவர்கள் என்ற ஏதேதோ நினைவில் இனிமையாக எழும். கதை என் பேத்திக்கு ஒரு வயதாக இருந்தபோது, நான் மருத்துவ மனையில் இருந்தேன். “பொண் குழந்தைக்கு பொட்டு இடவேண்டாம்?” என்று மகளைக் கடிந்துகொண்டு, கன்னத்தைத் தொட்டபோது குழந்தை பயந்தாள். ஒரே நாள்தான். இருந்தாலும், வேறு உடையில் என்னை அடையாளம் தெரியவில்லை. உடனே நான் என்னுடன் கொண்டு வந்திருந்த சாந்தை எடுத்து, நாக்கு நுனியால் கீழுதட்டின் உள்பாகத்தில் ஓசை எழுப்பினேன். சிறு குழந்தைகள் அசங்காமலிருக்க, பொட்டோ, கண் மையோ இடும்போது இந்த யுக்தியைக் கையாள்வது வழக்கம். ‘பாட்டிதானே இப்படிப் பண்ணி பொட்டு இடுவாள்!’ என்ற நினைவு எழ, சிரித்தபடி என்னிடம் தாவினாள். இதை அவளிடம் இப்போது கூற, சிரிக்கிறாள். (பால்யப்பருவத்தைப்பற்றிக் கூறி வளர்த்தால், குழந்தைகளுடைய ஞாபகசக்தி பெருகுமாம்). வாசனையும் நினைவுகளும் சமையல் செய்யும்போதோ அல்லது ஏதாவது உணவுவகையை நெடுநாளைக்குமுன் உண்ண நேரிட்டாலோ, நம் நினைவு எங்கோ பறக்கும். கதை நான் முதன்முதலில் தோசை வார்க்கும்போது non-stick (ஒட்டாமல் இருப்பது) தோசைக்கல் கிடையாது. என்னை நம்பி என் குடும்பத்தினரை விட்டுவிட்டு என் தாய் வெளியூர் போய்விடுவாள், தன் தாயைப் பார்க்க. நான் தோசை வார்த்தால், சரியான பதம் புரியாமல் அதை நூறு கிழிசல்களாக எடுத்துவிடுவேன். சிலாகிப்பதுபோல் “கிழிச்சு திங்கற வேலை வைக்காம, எவ்வளவு ஜோரா பண்ணறா!” என்று கேலி செய்வார்கள். “இப்படியெல்லாம் கேலி பண்ணினா, இனிமே நான் சமைக்கவே மாட்டேன்!” என்று சண்டை பிடிப்பேன். இப்போது பத்து வயதுக் குழந்தைகள்கூட கிழியாமல் தோசையைத் திருப்பும்போது, அவர்களிடம் அந்த தருணங்களை நினைவுகூர்வேன். பெரியவர்களைப் பார்த்துச் சிரிப்பது மரியாதையாக இருக்குமா என்று யோசித்துச் சிரிப்பார்கள்! நல்லதை நினைவில் வை ‘அம்மா என்னை எப்பவும் திட்டுவாள்!’ என்று ஒரு பெண்மணி சிறு வயதில் தன்னைக் கண்டித்த தாய்மீது வன்மம் கொள்கிறாள். (தந்தையும் திட்டியிருப்பார். அது மனதில் நிலைப்பதில்லை சிலருக்கு). ‘அம்மா என்னை கண்டிப்பாக வளர்த்ததால்தான் நான் இன்று நல்ல நிலைக்கு வந்திருக்கிறேன்!’ என்று கூறுவார் இன்னொருவர். ஒரேவித வளர்ப்புதான். ஆனால் ஞாபகசக்தி நல்லவைகளை மறந்துவிட்டது. எப்போதோ நடந்த சோகக்கதைகளைச் சொல்லி, தன்மேல் பிறரைப் பரிதாபம் கொள்ளச்செய்வதுதான் பாசம் என்று தவறாக எண்ணுகிறார்கள் சிலர். பழைய நினைவுகளிலேயே காலத்தைக் கழிக்க நினைப்பது நிகழ்காலத்திற்கு நல்லதல்ல. நாம் களைத்துப்போய், அல்லது வருத்தமாக இருக்கும்போது தம் மனதிற்கு மகிழ்ச்சியூட்டிய தருணங்களை நினைவுகூர்ந்தால் உற்சாகமாக உணரமுடியும். உணர்வுகளும் நினைவுகளும் நாம் என்றோ செய்த தவறுகளை நினைக்கவே அஞ்சுகிறோம். அவைகளை அசைபோட்டால், மீண்டும் அதே தவற்றைச் செய்யாதிருக்கலாம். ஏன், பிறர் செய்த தவறுகளிலிருந்தும் பாடம் கற்கலாமே! விவாகரத்து செய்துகொண்ட பல பெண்களைச் சந்தித்திருக்கிறேன். முதலில், அவர்களுடைய கசப்பு கணவர்மேல் எழும். காலப்போக்கில், தன்மீதே பரிதாபமும், வெறுப்பும் எழும். ஒரே ஒரு பெண் மட்டும் தான் எந்த சூழ்நிலையில் கணவனை விவாகரத்து செய்ய நேர்ந்தது என்று கூறிவிட்டு, ‘நாங்கள் ஒன்றாக இருந்தபோது, சில இனிமையான தருணங்களும் இருந்தன,’ என்று ஒத்துக்கொண்டாள். வேண்டாத நினைவுகளையே விடாப்பிடியாக பிடித்துக் கொண்டிருக்காததால் அவளால் எதிர்காலத்தைத் தைரியமாக நோக்க முடிந்தது. கடந்த காலத்திலேயே வாழ்க்கை தேங்கிவிடவில்லை. ஞாபகசக்தி வளர ஒரு கையின் விரல்களின் நுனியை இன்னொரு கையிலுள்ள அதே விரல்களுடன் (கட்டை விரல்- கட்டை விரல், ஆள்காட்டி- ஆள்காட்டி, இப்படி) சேர்த்து, கோபுரம்போல் பிடித்துக்கொண்டால், மறந்தது சிறிது நேரத்தில் நினைவு வந்துவிடுகிறது. வகுப்பறையில் ஆசிரியர்கள் போதிக்கையில் மாணவர்கள் இப்படிச் செய்தால், பாடம் மனதில் நன்கு படியும். ‘நீங்கள் சொன்னபடி செய்து பார்த்தேன். வீட்டுப்பாடங்களை சிறிது நேரத்திலேயே செய்து முடித்துவிட்டேன்!’ என்று பெருமகிழ்வுடன் தெரிவித்தாள் என் மாணவி ஒருத்தி. நான் சமீபத்தில், ‘ஒரு நடிகையின் தாய் சிறு, சிறு வேடங்களில் நடிப்பாளே, அவள் பெயர் என்ன?’ என்று நினைவுகூர இம்முறையைக் கையாண்டேன். அது தெரிந்து எனக்கு ஒன்றும் ஆகப்போவதில்லை. எனினும், எனக்குப் பதில் கிடைத்தது! ‘வேண்டாத விஷயம்!’ என்று மூளை சிலவற்றை மறந்துவிடுவது இயற்கை. அவை மறந்ததுபோலவே இருக்கட்டுமே! எதற்கு அநாவசியமான பரீட்சை? கலையால் இணைவோம் பாரம்பரிய இசை, நாட்டியம் எல்லாம் பக்தி மார்க்கமாக இருந்தவை. பிறர் பாராட்ட வேண்டும், பெரும்பொருள் ஈட்ட வேண்டும் என்ற காரணங்களுக்காக இவைகளைக் கற்க நினைத்தால் ஓரளவுதான் வெற்றி பெற முடியும். சுயநலம் கொண்ட பெற்றோர் எழுபது வயதுக்கு மேலான ஒரு பரதநாட்டிய ஆசிரியை என்னிடம் கூறினார்: “அந்தப் பெண் நன்றாக ஆடுவாள். ஆனால் அவளுடைய தாய் அவளையே நான் கவனித்துக்கொண்டிருக்க வேண்டும், பொது இடங்களில் ஆட அவளுக்குத்தான் நிறைய வாய்ப்புகள் வழங்க வேண்டும் என்று வற்புறுத்தினார். ‘இனி வராதே!’ என்று நான் அவளை நிறுத்திவிட்டேன்”. சொல்லும்போதே அவர் முகத்தில் அப்படி ஒரு கோபம். இதனால் பாதிப்படைந்தவர்கள் பலர். முன்னுக்கு வரவேண்டிய மாணவியை இழந்த ஆசிரியை, கலையார்வம் பாதியிலேயே நிறுத்தப்பட்டுவிட்டதால் ஏமாற்றமடைந்த மாணவி. போதாத குறைக்கு, தாயின் கனவுகளும் பேராசையால் நொறுங்கிவிட்டன. எத்தனை பாட்டுகள் தெரியும் என்று விரல்விட்டுக் கணக்குப் போடுவதைவிட, கற்ற சிலவற்றை ஒருவர் எவ்வளவு முழுமையாகக் கற்றிருக்கிறார் என்பதுதான் முக்கியம். திறமையைக் காட்ட அவசரம் ஒரு முறை நான் மேடையில் பாடி முடிந்ததும், “சங்கீதம் படிச்சுக் குடுப்பீங்களா? எத்தனை மாசத்திலே மேடை ஏத்துவீங்க?” என்று தாய்மார்கள் கேட்டபோது திகைத்துப்போனேன். இவர்களைப்போன்ற பெற்றோர் ஆசிரியர்களுக்குச் சம்பளம் கொடுக்கிறோம், அதனால் அவர்கள் நாம் சொல்வதையெல்லாம் கேட்டாக வேண்டும் என்று நினைக்கிறார்கள். இவர்களுக்கு இணங்கி சொல்லிக்கொடுத்தால், பாட்டுகூட ஏதோ பாடத்தை ஒப்பிப்பதுபோல் இருக்கும். அனுபவித்துப் பாடுவதுபோல் இருக்குமா? பாவம் எப்படி வரும்? இப்படிச் செய்வது தவறான முறை என்று ஆசிரியர்களுக்குப் புரியாமல் இல்லை. ஆனாலும், ‘வேறு வாத்தியார்களை நாடிப் போய்விட்டால், நம் வருமானத்திற்கு என்ன வழி?’ என்று, வாரத்துக்கு ஓர் உருப்படி என்று பெயருக்குச் சொல்லிக் கொடுப்பார்கள். அதனால் சொல்லிக் கொடுப்பவருக்கோ, கற்பவருக்கோ கிஞ்சித்தும் மனநிறைவு கிடைக்காது. குழுவாகப் பங்கேற்பது ஒன்றிற்கு மேற்பட்டவர்கள் நுண்கலை சம்பந்தப்பட்ட ஒரு காரியத்தில் ஈடுபடுகையில், போட்டி மனப்பான்மை எழக்கூடும். ‘பார்ப்பவர்கள் என்னையே பாராட்ட வேண்டும்!’ என்ற எண்ணத்துடன் செய்வார்கள். அவர்கள் எதிர்பார்த்த பாராட்டு பிறருக்குக் கிடைத்துவிட்டாலோ, ஆத்திரமும் பொறாமையும் கொள்வார்கள். இதைத் தவிர்க்க, ஆசிரியர் ஒரு மாணவன்மீது கூடுதலான அன்பையோ, கவனத்தையோ காட்டாமல் இருப்பது அவசியம். ஓர் அமைப்பின்கீழ் பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்கையில், பங்கு பெறுபவர்களின் பெயர்கள் தனித்தனியாகக் குறிப்பிடாமல் இருக்கும்போது, ‘நாம் எல்லாரும் இணைந்து இயங்கினால்தான் நிகழ்ச்சி வெற்றி பெற முடியும்!’ என்ற மனப்பக்குவம் அவர்களுக்கு வருகிறது. போட்டியோ, கர்வமோ எழ வாய்ப்பில்லை. சமீபத்தில் இப்படி ஒரு நாட்டிய நிகழ்ச்சிக்குச் சென்றிருந்தேன். பத்து மாணவிகள் ஒருவருக்கொருவர் ஒப்பனை செய்து, பிறர் ஏவாமலேயே மண்டபத்தை அலங்கரிப்பதிலிருந்து நாற்காலிகளைக் கொண்டுவந்து போடுவதுவரை எல்லா வேலைகளையும் தாமே முன்னின்று செய்தார்கள். ‘கடினமான வேலை’ என்று அஞ்சி நழுவாது, பார்த்துப் பார்த்து ஒவ்வொன்றையும் செய்கிறார்களே என்று ஆச்சரியமாக இருந்தது. இவர்கள்தாம் தலைமைப் பதவிக்கு ஏற்றவர்கள் என்று தோன்றிப்போயிற்று. ‘பிற வகுப்புகளைச் சார்ந்த மாணவிகள் ஆடும்போது, கேலியாகச் சிரிக்கவோ, பேசவோ கூடாது,’ என்ற நியதியைப் பின்பற்றுகிறார்கள் இவர்கள். அப்படிச் செய்தால்தான், ‘நான்தான் உயர்த்தி!’ என்ற தலைக்கனம் கூடுகிறது. ஒருவரது திறமையும் ஆட்டங்கண்டு போகிறது. இம்மாணவிகளின் குடும்பத்தினர் ஆசிரியையிடம் தம் பெண்களை ஒப்படைத்துவிட்டதைப்போன்று நடந்துகொண்டனர். குறுக்கே வரவில்லை. தாங்களும் சேர்ந்து உழைத்தார்கள். இவர்களுக்குள் மொழி வேறுபாடு இருந்தாலும், அதைப் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. பிறரது பார்வையில் ஒரு பரதநாட்டிய நிகழ்ச்சியின்போது, தமிழரல்லாத ஒருவர் என்னைக் கேட்டார், “உங்கள் நாட்டியத்தில் ஒவ்வொரு விரலசைவுக்கும் அர்த்தம் இருக்கிறது போலிருக்கிறதே?” என்று. “ஒவ்வாமைக்கும், அசுரனுக்கும் ஒரே முத்திரைதான்,” என்று நான் ஆரம்பித்து, சிலவற்றை விளக்கச் சிரித்தார். அவர் மேலும் துளைத்தார்: “யோகாசனம் செய்வது போல் சில சமயம் வருகிறதே?” யோகா பயின்றால் நாட்டியம் ஆடுவது எளிது. குனியும்போது மூச்சை வெளிவிட வேண்டும், நிமிரும்போது மூச்சை உள்ளுக்கிழுக்க வேண்டும். ஒரே காலில் நீண்ட காலம் நிற்க இவர்களால் முடியும். இந்த மாணவிகள் ஒவ்வொரு வகுப்பும் தொடங்குமுன் சில யோகாசனப் பயிற்சிகள் செய்கிறார்களாம். பாட்டில் உணர்ச்சி வேண்டாமா? வாய்ப்புகள் அதிகமாக வேண்டும் என்ற எண்ணத்துடன், ஊடகத்தைச் சேர்ந்த புகைப்படக்காரர் இருந்தால், ஒரு கலைஞர் வலியப்போய் அவருடன் நட்பு கொண்டவர்போல் நடிப்பது பயனளிக்கலாம். ஆனால், அவர்தான் திறமை மிக்கவர் என்று எல்லாரும் ஒப்புக்கொள்வார்களா என்பது சந்தேகம்தான். நானே சகலம்(?) ஒவ்வொரு ஆண்டும், திருவையாற்றில் நடைபெறும் தியாகராஜ ஆராதனையின்போது நூற்றுக்கணக்கான இசை வல்லுனர்கள் தம் பக்தியைச் செலுத்த வருவதாகப் பெயர். ஆனால், ஒரு பாடகி முதல் வரிசையில் அமர்ந்துகொண்டு, தன்முன் மூன்று ஒலிபெருக்குகளை வைத்துக்கொண்டு பாடியதையும், முன்பொருமுறை ஒரு புகைப்படக்காரரைப் பார்த்து புன்னகை பூத்து, அச்சமயம் பாடாமல் இருந்ததையும் தொலைகாட்சியில் கண்டபோது மனம் நொந்தேன். தன்னையே நினைத்துக் கொண்டிருந்தால் பக்தி எப்படி வரும்? பாட்டில்தான் உயிர் இருக்குமா? நல்ல வேளை, ‘இசையே இறைவனைத் துதிக்கும் வழி!’ என நம்பி வாழ்ந்த வாக்கேயக்கார்கள் இப்போது உயிருடன் இல்லை! மேடைக் கச்சேரிகளின்போது, பாடகரும், வாத்தியக்காரர்களும் ஒருவரது திறமையை மற்றவர் ‘பேஷ்!, ’பலே!’ என்று வாயாரப் பாராட்டினால் கச்சேரியும் சிறக்கும், இரு தரப்பினர் இடையே ஆழ்ந்த நட்பும் உண்டாகும். பல ஆண்டுகளுக்குமுன் பார்த்த சம்பவம் நினைவுக்கு வருகிறது. பார்வையற்ற ஒரு வாத்தியக்காரரை சபையோர்கள் கைதட்டி உற்சாகப்படுத்தியபோது பாடகர் முகத்தில் ஆத்திரம் கொப்புளித்தது. ‘நாம் தலையாட்டி ரசித்தால் அது வாத்தியம் வாசிப்பவருக்குத் தெரிய வழியில்லையே!’ என்ற நோக்கத்துடன் அப்படி ஆரவாரம் செய்தார்கள் என்பது அவருக்குப் புரியவில்லை! அவர் முன்னணியில் இருந்த பாடகர். ஆனால், எல்லோருடைய கவனமும், ‘அவர் முகத்தில் எத்தனை கோபம், பாரேன்!’ என்று அவர் முகத்தில்தான் இருந்தது. இசையில் நிலைக்கவில்லை. மனிதன் தீவா? தீவுதான் தனியாக இருக்கும். எப்போதாவது, எதற்காகவாவது நாம் பிறரை நாடாமல் இருக்கிறோமா? ‘இவரால் நம் காரியம் ஆகவேண்டும்,’ என்ற முன்யோசனையில்லாது பிறருடன் பழகுவது நன்மையைத்தான் விளைவிக்கும். அண்மையில் ஒரு கலைநிகழ்ச்சிக்குப் போயிருந்தேன். ஆங்கில இசையுடன் கூடிய ‘கோரஸ்’, குழுவாக வயலின், பியானோ, பரதநாட்டியம் என்று சகலமும் இருந்தன. அக்கலைஞர்களை ஒருங்கிணைத்தது இசை, வறுமை. வசதி குறைந்த இளைஞர்கள் பல ஆசிய நாடுகளிலிருந்து வந்திருந்தனர். அவர்களுக்குப் போதிப்பவர்கள் தாம் கற்றுத் தேர்ந்த கலைகளை இலவசமாகப் பரப்புவதன்மூலம் சமூக சேவை செய்பவர்கள். நிகழ்ச்சி ஏற்பாட்டார்களுடைய குழந்தைகள் வசதி நிறைந்தவர்கள் ஆனாலும், தம்மைப்போல் இல்லாதவர்களுடன் கலந்து பழகி, அதனால் நன்மை பெற்றவர்கள். இவர்களுடைய இயல்பான தாராள மனப்பான்மை வசதியற்றவர்களுக்கும் பழகிப்போக, அவர்களும் பிறருக்கு உதவி செய்வதிலும், தமக்குத் தெரிந்தவற்றைப் பகிர்ந்துகொள்வதிலும் மகிழ்ச்சி அடைந்தனர். கோடீஸ்வரரின் புதல்வியான ஒரு சீனப்பெண் புடவையும் பொட்டும் அணிந்து, அறிவிப்புகள் செய்தாள். அவளுக்குப் புடவை அணிவித்தது வசதியற்ற தமிழ்ப்பெண். ஆனால், கலைகளில் சிறந்தவள். பரோபகாரத்தால் இருவருக்குமிடையே நல்லுறவு ஏற்பட்டது. செல்வச்செழிப்பு ஒருத்தியை கர்வியாகவும் ஆக்கவில்லை, ‘அப்படி நாமும் இல்லையே!’ என்ற ஏக்கமோ, பொறாமையோ இன்னொருத்திக்கு எழவுமில்லை. கலையிலிருந்த ஆர்வத்தால் இருவரும் ஒன்றாகிப்போனார்கள். கலை பேதங்களை விலக்கும் என்பதற்கு வேறு என்ன சான்று வேண்டும்! சுயநலத்தையே பெரிதாகக் கருதி ஈடுபட்டால், நாமும் வளரமாட்டோம், நம் கலையும் வளராது. பண்டிகை என்றாலே கொண்டாட்டம்தான்! பல வருடங்களுக்குமுன், என்னுடன் வேலை பார்த்த ஒரு பெண்மணி கேட்டாள், “தீபாவளிக்கான ஆயத்தங்களை ஆரம்பித்துவிட்டாயா?” “என் மாமியார் வீட்டில் அழைத்திருக்கிறார்கள். அதனால் நான் ஒன்றும் செய்யப்போவதில்லை!” என்றேன். “அப்படியானால், குழந்தைகளுக்கு பண்டிகை வரும் மகிழ்ச்சியே இருக்காதே!” பண்டிகை என்றாலே கொண்டாட்டம்தான். பெரியவர்களுக்கு வேலை அதிகம் என்றாலும், பழைய கதைகளைப் பேசிக்கொண்டு, ஒன்றாக இணைந்து வேலை செய்வதில் ஒரு தனி மகிழ்ச்சி இருக்கத்தான் செய்கிறது. குழந்தைகளுக்கும் (ரவை உருண்டை பிடிக்கச் செய்வதுபோல்) சிறு சிறு வேலைகளைப் பகிர்ந்து கொடுப்பதன்மூலம் அவர்களது பொறுப்புணர்ச்சியை அதிகரிக்கச் செய்ய இதுதான் தக்க சமயம். மலேசியாவில் தீபாவளிக்குப் பொது விடுமுறை. (தைப்பூசத்திற்கு சில மாநிலங்களில் விடுமுறை உண்டு). அதனால் எல்லா மக்களுக்குமே குதூகலம். பேரங்காடிகளில் இச்சமயத்தில்தான் வருடத்திலேயே மிக மலிவாக துணிமணிகள கிடைக்கும். அதனால், இந்துக்கள் மட்டுமின்றி, பலரும் கடைகளில் மொய்த்துக்கொண்டிருப்பதைக் காணலாம். ‘தீபாவளி சிறப்பு விற்பனை!’ என்று நடைபாதையை அடைத்துக் கடைகள் போட்டிருப்பார்கள். எங்கும் தமிழ் ஒலிக்கும். சூடிதார், வளையல், வீட்டுக்கு அலங்காரமாக பிளாஸ்டிக் தோரணங்கள் என்று தடபுடல் படும். “‘தோரணம் ஏன் கட்டுகிறீர்கள்?’ என்று பலரைக் கேட்டுவிட்டேன். சம்பிரதாயம் என்கிறார்கள்,” என்று எங்கள் இல்லத்திற்கு ஒரு சீன விருந்தினர் குறைப்பட்டுக்கொண்டார். “விஞ்ஞான ரீதியாக ஏதாவது காரணம் இருக்குமே!” நல்ல வேளையாக, நான் அவ்வருடம்தான் ஏதோ ஆன்மிக பத்திரிகையில் அதைப்பற்றிப் படித்திருந்தேன். விருந்தினர் பலர் நம் வீட்டுக்கு வருகை புரியும்போது அவர்கள் விடும் மூச்சுக்காற்றிலுள்ள கரியமில வாயுவை உள்வாங்கிக்கொண்டு விடுகிறது மாவிலை என்று விளக்கி, என் ‘அறிவுத் திறமையை’ அவரிடம் காட்டிக்கொண்டேன். கோலாலம்பூரிலுள்ள ஒரு பாலர் பள்ளியில் குத்துவிளக்கு, தோரணம், பாவாடை, புடவை என்று எல்லாவற்றையும் வைத்துச் சொல்லிக் கொடுக்கிறார்கள். தீபாவளியை ஒட்டி அவர்கள் நடத்தும் விழாவில் – எல்லாக் குழந்தைகளும் (பலர் வெளிநாட்டைச் சேர்ந்தவர்கள்), அவர்களுடைய பெற்றோர்களும் – வித்தியாசமின்றி, இந்திய ஆடைகள் அணிகிறார்கள். அங்கு வழங்கப்படும் தோசை, சப்பாத்தி வகைகளை சட்னி, சாம்பாருடன் சாப்பிடுகிறார்கள். பிரபலமான தமிழ், இந்தி படப் பாடல்கள் ஒலிக்கும். ஓர் ஆசிரியை, தெரியாத்தனமாக ‘கொலவெறி’ பாட்டைப் போட்டுவிட்டு, அவசரமாக நிறுத்தினாள்! சீன ஆசிரியை குழந்தைகளுக்கு பாலிவுட் படங்களில் வருவதுபோல் நடனம் ஆடச் சொல்லிக்கொடுத்துக் கொண்டிருந்தாள். அவளுக்கு கற்பனை வற்றிவிட்டபோது, நான் என் பங்குக்கு டப்பாங்குத்து ஆடச் சொல்லிக்கொடுத்தேன்! அரசியல் பிரமுகர்கள் அவரவர் மதப் பண்டிகைகளை ஒட்டி OPEN HOUSE என்று கொண்டாடுவார்கள். அரண்மனையிலோ, ஸ்டேடியத்திலோ அல்லது ஒருவரது வீட்டிலோ நடைபெறும் இந்த ‘திறந்த வீட்டிற்குள்’ நுழைய மைல் கணக்கில் வரிசை பிடித்து நிற்பார்கள் பொதுமக்கள். மலேசிய கின்னஸ் ரெகார்டில் “திறந்த வெளியில் நடைபெறும் மிகப் பெரிய சந்தை” என்று பெயர் வாங்கிய சந்தைக்குப் போயிருந்தேன். கோலாலம்பூர் புக்கிட் ஜாலில் (BUKIT JALIL) என்ற இடத்திலிருக்கும் ஸ்டேடியத்தின் வெளிப்புறத்தில் கார் நிறுத்துமிடத்தில் தீபாவளிக்கு பத்து நாட்கள் முன்னதாக நடைபெறும். தொடர்ந்து எட்டு ஆண்டுகளாக நடைபெறுகிறது. இது ஒன்பதாம் ஆண்டு. இந்தியாவிலிருந்து இதற்காகவே வரும் வியாபாரிகள் கூட்டத்தை மனதில் கொண்டு, பொருட்களை பாதி விலையில் விற்பார்கள், ‘வாங்கே! வாங்கே!’ என்று கூவி அழைத்தபடி. அந்த வட இந்தியர்களுக்குத் தமிழ் சொல்லிக்கொடுத்தவர் ஆரவாரமான அந்த வரவேற்பைச் சரியாகச் சொல்லிக் கொடுத்திருக்கலாம். ஆனால் அதுவும் வேடிக்கையாகத்தான் இருந்தது. பெரும்பாலும், பெண்களுக்கான பொருட்கள்தாம். தெரியாத்தனமாக, மனைவிகளுடனோ, காதலியோடோ வரும் ஆண்களின் முழி பிதுங்குவது ரசிக்கும்படியாக இருந்தது. ‘எல்லாக் கடைளையும் சுற்றிப் பார்க்கப்போகிறாயா!” என்று ஆயாசத்துடன் கேட்கும் காதலன், ’உனக்குப் பார்ப்பதை எல்லாம் வாங்கிவிட வேண்டும்!’ என்று பலர் கேட்க கடிந்துகொள்ளும் கணவனாக சில வருடங்களில் மாறிவிடுகிறான். அனேகமாக, எல்லா பெரிய கடைகளிலும் யாராவது தமிழர் இப்படிக் கத்திக்கொண்டிருப்பார். எவரும் அதிர்ந்து, திரும்பிப் பார்ப்பதெல்லாம் கிடையாது. பழகிவிட்டது. ‘மகிழ்ச்சியாகச் சுற்றிப் பார்க்கும்போது எதற்கு இப்படி ஒரு அவதி!’ என்று தெளிந்து, பல இளம்பெண்கள் ஒன்றுசேர்ந்து வருகிறார்கள். சற்று வயதானவர்களை அவர்களுடைய மகள் அழைத்து வருகிறாள். சாமான்களைத் தூக்கிச் செல்ல வசதியாக பதின்ம வயது மகனை அழைத்து வந்திருந்தார்கள் சில தாய்மார்கள். அந்தப் பையன்கள், ‘தெரியாமல் மாட்டிக்கொண்டோமே!’ என்று எந்த நிமிடமும் அழுதுவிடுவார்கள்போல் இருந்தார்கள். சலிப்படைந்த ஆண்களின் மனப்போக்கு புரிந்து ஒரு பஞ்சாபி நான்கு இடங்களில் பால்கோவா போன்ற இனிப்புவகைகள் விற்கும் கடை போட்டிருந்தார். ‘மசாலா டீ!’ என்று அவர் கூவிக் கூவி விற்க, தம் ஆயாசத்தைச் சற்றே குறைத்துக்கொள்ள ஆண்கள் அக்கடைகளை மொய்த்திருந்தனர். எல்லா தரப்பினரும் வாங்குவதற்கு ஏற்ப கண்ணாடிக் கற்கள், அல்லது ஜெய்ப்பூர் மாணிக்கக் கற்கள் பதிக்கப்பட்ட கம்மல், நெக்லஸ் முதலியவை கண்களைப் பறித்தன. பெண்கள் திரளும் இடத்திற்கு பாத்திரங்கள், கைப்பை விற்கும் கடைகளும் இல்லாமலா! ‘என் மகள் மறுக்கு வாங்கி வரச்சொன்னாள்!’ என்ற மலாய்க்குரல் கேட்டது. (தேன்குழல் போன்ற பொரித்தவைகளின் பெயர் முறுக்கு). எவ்வளவு திருத்தினாலும், ‘முறுக்கு’ என்ற வார்த்தை அப்படித்தான் மருவிவிட்டது. பழங்காலத்துச் சித்திரங்கள், மரச்சாமான்கள் என்று ஓரிரு கடைகள். பல்லாயிரக்கணக்கான ரிங்கிட் விலையில், அவைகளை வேடிக்கைதான் பார்க்க முடியும் என்ற நிலை அனேகருக்கும். ஒரு மூதாட்டியை சக்கர வண்டியில் ஒரு பெண்மணி அழைத்து வந்திருந்தாள். வாங்குகிறோமோ, இல்லையோ, ஜொலிக்கும் பொருட்களையும், அவைகளை பெருமகிழ்ச்சியுடன் வாங்கிப்போகிறவர்களையும் பார்த்தாலே அவர்களது மகிழ்ச்சி நம்மையும் தொத்திக்கொண்டு விடுகிறது. இதைப் படிப்பவர்களுக்கும் படிக்காதவர்களுக்கும் என் மனங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்! இல்லறத்தில் இன்பம் சூழ பணம் மட்டும் மகிழ்ச்சியைத் தருமா? என் சக ஆசிரியை மிஸஸ் சின்னின் கதையைக் கேளுங்கள். பதில் கிடைக்கும். முப்பத்தைந்து வயதான மிஸஸ் சின் மலேசியாவிலுள்ள ஒரு சிற்றூரைச் சேர்ந்தவள். “நான் மிகவும் மகிழ்ச்சியானவள், இல்லை?” அடிக்கடி இப்படிக் கேட்பாள். இன்னாரிடம் என்றில்லை. “திருமணத்துக்கு முன்பு, நாங்கள் காதலர்களாக இருந்தபோது, எப்போது அவரை மீண்டும் பார்ப்போம் என்றிருக்கும் எனக்கு. இப்போதோ…!” என்று தலையில் அடித்துக்கொள்வாள். அவனது வேலையிலேயே முழுகிப்போயிருந்த ஒரு பணக்காரன் அவளுடைய அழகிற்காக அவளைக் கல்யாணம் செய்துகொண்டிருக்க வேண்டும். நண்பர்களிடையே பெருமையாகக் காட்டிக்கொள்ள அப்படி ஒரு மனைவி தேவைப்பட்டிருப்பாள். அதன்பின், அவளை அதிகம் கவனிக்கத் தோன்றவில்லை. அப்படி ஒரு ஏமாற்றத்தை, பராமுகத்தை, எந்தப் பெண்தான் தாங்குவாள்! ‘அவள் வீட்டுக்கு எந்த வேளையில் போனாலும், சாப்பிட ஒன்றும் இருக்காது!’ என்று ஒரு சில ஆசிரியைகள் தெரிவித்ததுண்டு. ஒரு முறை, எங்கள் பள்ளிக்கூட ஆசிரியைகளுக்கு மட்டும் என்று நடந்த ஒரு விருந்தில் அவளுடைய கணவன் விரைந்து வந்து சாப்பிட ஆரம்பித்தான், அழையா விருந்தாளியாக. எவ்வளவு பணம் இருந்தென்ன! மிஸஸ் சின் சொல்வதைக் கேட்டு, ‘அவளுக்கு மகிழ்ச்சிக்கு என்ன குறை! கணவன் கைநிறைய சம்பாதிக்கிறார்! பெரிய கார் வைத்திருக்கிறாள்!’ என்பார்கள் பிறர். நான் மட்டும், “உண்மையில் அவளுக்குச் சந்தோஷமே கிடையாது. மகிழ்ச்சியாக இருக்கிறோமோ என்ற சந்தேகம் அவளுக்கே வந்துவிட்டது. அதனால்தான் அடிக்கடி பிறரிடம் அப்படிக் கேட்கிறாள்!” என்பேன். “எதனால் அவளுக்கு மகிழ்ச்சி இல்லை?” என்று ஒருத்தி கேட்டபோது, “அவள் எதிர்பார்த்த இல்லற வாழ்க்கை கிடைத்திருக்காது. கணவன் தன் வேலையிலேயே ஆழ்ந்துபோகிறான். இவளுக்காகத் தனியாக நேரம் ஒதுக்குவது கிடையாது. இதெல்லாம் அவள் சொல்வதுதானே! அவள் எப்படி கணவரைப்பற்றியே பேசிக்கொண்டிருக்கிறாள் என்று கவனியுங்கள். புரியும்,” என்று பதிலளித்தேன். ‘என்னையும் கொஞ்சம் கவனிக்கக்கூடாதா!’ என்று கணவரிடம் கெஞ்சினால், அவர் என்ன சொல்லிவிடுவாரோ என்ற அச்சம் அவளைப் போன்றவர்களுக்கு. ‘பெரிய வீடு வாங்கியிருக்கிறார், நான் என்ன செலவு செய்தாலும் கண்டுகொள்வதில்லை. இதைவிட வேறு என்ன வேண்டும் ஒரு பெண்ணுக்கு?’ என்று சமாதானம் செய்துகொள்ள முயற்சித்து, தோல்வி கண்டவள் அவள். அவர் கொடுக்கும் பணத்தால் அவள் விரும்பும் ஆடையணிகளையும், கைப்பைகளையும் வாங்க முடியும். அதனால் மட்டும் நிறைவு கிடைத்துவிடுமா? ‘இன்னுமா உனக்குப் பேராசை?’ என்று கேட்டுவிட்டால்? ‘நான் மகிழ்ச்சியாகத்தான் இருக்கிறேன்!’ என்று சொல்லிக்கொண்டவள், பிறரும் அப்படியே நினைக்கவேண்டும் என்பதுபோல் இருந்தது அவள் பேச்சும் நடத்தையும். தனக்குத்தானே தடை விதித்துக்கொண்டாள். அதனால் ஏற்பட்ட மன உளைச்சல் பொறுக்க முடியாமல் போய்விட்டது. சமைக்கத் தோன்றவில்லை. தான் பெற்ற சிறு பிள்ளைகளை வேலை வாங்குவதுபற்றி பெருமையாகப் பேசிக்கொள்வாள். இப்படி ஒரு சூழ்நிலையைத் தவிர்க்க ஒரே வழி தம்பதிகள் மனம்விட்டுப் பேசுவதுதான். சாதாரணமாக ஆரம்பித்த உரையாடல் சண்டையில் முடியலாம். ஆனாலும் வேறு வழியில்லை. இருவரில் ஒருவருக்கு மனத்தாங்கல் என்றாலும், அதை மற்றவரிடம் தெரிவித்தால்தானே மற்றவருக்குப் புரிய வைக்க முடியும்? நிலைமையில் மாற்றம் ஏற்படுகிறதோ, இல்லையோ, தனது குறையைச் சொல்லிக்கொள்பவருக்கு ‘முயற்சி செய்து பார்த்துவிட்டோம்,’ என்ற ஆறுதலாவது கிடைக்கும். தம்பதிகள் இரட்டையரல்ல பல தம்பதியர் ஒருவர்போலவே மற்றவரும் இருப்பதுதான் காதலின் அடையாளம் என்று எண்ணுகிறார்கள். மாறுகிறார்கள், அல்லது மாற்றுகிறார்கள். உண்மையில், அன்பைத் தகர்க்கும் வழி இது. நொந்துவிட்டதுபோல் நயமாகப் பேசி (‘நான் சொல்வதைக் கேட்காவிட்டால், உனக்கு என்னைப் பிடிக்கவில்லை என்றுதான் அர்த்தம்’), அது பலிக்காவிட்டால் வசவுகளால், அல்லது வன்முறையால் தாம் நினைத்தபடி வாழ்க்கைத்துணையை நடக்க வைப்பார்கள் சிலர். கதை கீதா இயல்பிலேயே கலகலப்பானவள். தந்தையின் பரிபூரணமான அன்பிற்குப் பாத்திரமாகி இருந்ததால், எல்லா ஆண்களுடனும் தயக்கமின்றி பழக முடிந்தது. அவளுக்கு நேர் எதிரிடையானவன் முரளி. பாசமற்ற பெரிய குடும்பத்தில் வேண்டாத மகனாகப் பிறந்தவன். பிறருடன் பேசவே வெட்கம் தடுக்க, தயக்கப்பட்டவன். கீதாவின் கலகலப்பு அவனை அயரவைத்தது. அவளுக்கு அவனது வாழ்க்கைப் பின்னணி தெரிந்திருந்தபோதும், தன்னால் அவனை மகிழ்விக்க முடியும், சமூகத்தில் பிறர் மதிக்கும் நிலைக்குக் கொண்டுவர முடியும் என்று நம்பினாள். கல்யாணமாகி ஓரிரு மாதங்களிலேயே புரிந்தது, முரளியால் மாற முடியாது என்று. ஏனெனில், அவளை அவன் மாற்ற முயன்றான். கீதாவின் குணம் புரிந்திருந்தும், பிற ஆண்களைப்பற்றிப் பேசினாலே சந்தேகம் வந்துவிடும். வார்த்தைகளாலேயே அவளை வதைத்தான். அவளோ, பிடிவாதமாக, ‘என்னால் அவரை மாற்றிக்காட்ட முடியும். என்னைப் பழையபடி சுதந்திரமாக இருக்க விடுவார்!’ என்று நம்பினாள். எல்லாவற்றையும் பொறுத்துப்போனாள். இதனால் அவளுக்கு மன அழுத்தம் அதிகரிக்க, உடல் உபாதைகள் ஏற்பட்டதுதான் கண்ட பலன். இம்மாதிரியான சில பெண்கள் ஏதாவது ஒரு வகையில் பிறர் பக்கபலம் அளிக்க, பழைய தன்மையைப் பெறுவார்கள் – அப்படி மாறுவது குடும்ப மகிழ்ச்சியை ஓரளவு குறைக்கும் என்பதை ஏற்று. விட்டுக்கொடுப்பதால் யாருக்கு மகிழ்ச்சி? தன் சுக துக்கங்களைவிட தனக்குத் தாலி கட்டிய கணவரின் மகிழ்ச்சியே முக்கியமானது என்று போதிக்கப்பட்டிருக்கும் பெண்கள், ‘விட்டுக்கொடுப்பதுதான் நல்ல மனைவிக்கு அடையாளம்!’ என்று நம்புகிறார்கள். அப்படியானால், ஒரு பெண்ணின் மன நிலை, இன்ப துன்பம் இதெல்லாம் மறைக்கப்பட வேண்டியனவா, இல்லை, முக்கியம் கிடையாதா? கணவர் என் குழந்தை ‘என் கணவருக்கு ஒவ்வொன்றையும் நான்தான் பார்த்துப் பார்த்துச் செய்ய வேண்டும். அவர் ஒரு சிறு குழந்தைபோல!’ என்று பெருமை பேசிக்கொள்ளும் பெண்களைப் பார்த்திருக்கிறேன். கணவர் எந்த விதத்திலாவது தன்னை நாட வேண்டும் என்று நினைக்கும் பெண்கள் தம் கணவருக்குச் சுயேச்சையாக எதையும் செய்துகொள்ளத் தெரியாதபடி ஆக்கிவிடுகிறார்கள். நாளடைவில் அம்மாதிரியான நடப்பே இரு தரப்பினருக்கும் எரிச்சலை மூட்டிவிடும். ‘நீ இல்லாமல் நான் என்ன செய்வேன்!’ என்று தம்பதியரில் ஒருவர் கேட்பது மற்றவருக்குப் பெருமையில்லை. ஒருவர் சொன்னார், “நான் கல்யாணம் செய்துகொண்டால், மனைவி என் சட்டையில் பிய்ந்துபோன பித்தான்களை தைத்துத் தருவாள் என்று நினைத்துக்கொண்டிருந்தேன்!” என்று. அப்போது அவர் அக்காரியத்தைத் தானேதான் செய்துகொண்டிருந்தார். புரிந்தும், “என்ன ஆச்சு?” என்று நான் சிரித்தேன். “‘நீங்களே தைத்துக்கொள்ளுங்கள்,’ என்றுவிட்டாள்!” ஏமாற்றத்துடன், பெருமூச்சு விட்டார். அவருக்கு அப்போது புரியவில்லை, தன்னைச் சுதந்திரமாக வாழப் பழக்குகிறாள் மனைவி என்று. ஒருவரைச் சார்ந்து ஒருவர் வாழ்வது என்றால் அது ஒருவரின் விருப்பத்திற்கு எல்லாம் மற்றவரும் செவிசாய்க்க வேண்டும் என்பதில்லை. அதிகாரம் செலுத்துபவர் ஆரம்பத்தில் பெருமையாக உணரலாம். ஆனால், ‘என் மனைவி நான் கிழித்த கோட்டைத் தாண்டமாட்டாள்!’ என்று பெருமை பேசுகிறவர் சில வருடங்களுக்குப்பின் அவளுக்கு அடங்கிப்போவதுதான் நடக்கிறது. நாளைக்குப் பண்ணலாமே! “நாளை என்பது இன்று செய்ய வேண்டிய காரியங்களைச் செய்யும் தினம்!” இப்படி வேடிக்கையாகக் கூறுகிறார் ஒருவர். ஒத்திப்போடும் தன்மை பலருக்கும் இருப்பதால், அதுதான் சரி என்பதுபோல் ஆகிவிட்டது. இக்குணம் ஏன் ஏற்படுகிறது? சோம்பலும், எது அவசியம் என்று புரிந்துகொள்ளாததும் ஒரு முக்கிய காரணம். செய்யத் துணிவில்லாததை, ‘பிறகு பார்த்துக்கொள்ளலாம்!’ என்று அலட்சியப்படுத்துகிறோம். நாம் விரும்பாதவர்களைச் சந்திப்பதை ஒத்திப்போடுவதும் இதனால்தான். சில நாட்களில் ஒரே சமயத்தில் பல வேலைகள் காத்திருக்கும். எங்கு ஆரம்பிப்பது என்று புரியாது, எதையும் ஆரம்பிக்கத் துணிவின்றி விழித்ததுண்டா நீங்கள்? ‘நாளை பார்த்துக்கொள்ளலாம்,’ என்று ஒத்திப்போடத் தோன்றிவிடும். இன்று இருப்பதைவிட நாளை புத்தி கூர்மையாகிவிடுமா? அல்லது, இன்று கடினமாக இருப்பது நாளை எளிதாகிவிடுமா? . எப்படியானாலும், பதட்டம் ஏற்பட்டிருக்குமே! எங்காவது ஆரம்பித்தால்தான் ஒரு காரியத்தைச் செய்து முடிக்க முடியும் என்பது பிறர் சொல்லித் தெரிய வேண்டியதில்லை. செய்ய வேண்டியதைத் திருப்திகரமாகச் செய்ய முதலில் ஒரு பட்டியல் தயாரித்துக்கொள்ளலாம். மிக முக்கியமானதை முதலில் செய்துவிட்டு, பிறகு மற்றவைகளைக் கவனிக்கலாம். (எளிதானவற்றை முதலில் செய்து முடிப்பது நம் மீது நாமே கொண்டிருக்கும் அவநம்பிக்கையைக் காட்டுகிறது). பாடங்களை ஒத்திப்போடுவது பள்ளி அல்லது கல்லூரிப் பாடங்களைவிட திரைப்படங்களும், தொலைகாட்சியும் சுவாரசியமாக இருக்கும். அதில் சந்தேகமில்லை. இரவு எத்தனை நேரமானாலும் தூக்கம் கண்ணைச் சுழற்றாது. ஏனென்றால், அப்போது மூளை கடுமையாக உழைத்து வேலை செய்ய வேண்டியதில்லை. அதனால் பாடம் படிப்பது இரண்டாம்பட்சமாகிவிடும். அலட்சியப்படுத்தி விடுகிறோம். நாம் புதிதாகக் கற்பது எதுவும் இருபத்து நான்கு மணி நேரம்தான் நம் நினைவில் நிற்கும். இதைவிட்டு, ஆசிரியை கற்பித்து சில மாதங்கள் கழித்து பரீட்சை வரும்போது புத்தகத்தை எடுத்தால், எதுவும் புரியாது. ‘இப்பாடம் நடத்தப்பட்டதா, என்ன?’ என்ற சந்தேகம்கூட எழும். சிறப்பான தேர்ச்சி பெற்ற எந்த மாணவியையாவது கேட்டுப்பாருங்கள். “சொல்லிக்கொடுக்கப்பட்ட அன்றே அப்பாடங்களை மேலெழுந்தவாறு ஒரு பார்வை பார்ப்பேன். (அதாவது, இருபத்து நான்கு மணிக்குள்). வாராந்திர விடுமுறையின்போது கவனமாகப் படிப்பேன். அவ்வளவுதான்!” என்பாள். இம்முறையைக் கைப்பிடித்தால் அதன்பின் மறக்காது. பரீட்சைக்கு முதல் நாள் புத்தகத்தை ஒரு புரட்டு புரட்டினாலே போதும். பெரும்பாலான மாணவர்கள் பரீட்சைக்கு முதல் நாள்தான் பாடம் படிக்க வேண்டியதன் அவசியத்தை உணர்வார்கள்! இரவு முழுவதும் கண்விழித்துப் படிப்பார்கள். எல்லாம் புரிந்ததுபோல்தான் இருக்கும். ஆனால், உடலும் மனமும் ஒருங்கே களைத்துப்போக, படித்ததில் பலவும் பரீட்சை எழுதும்போது மறந்துபோயிருக்கும். (‘எல்லாரும் செய்கிறார்களே, நாமும் அப்படிச் செய்தால் என்ன?’ என்று நான் ஒரு முறை பரிசோதித்துப் பார்த்ததன் விளைவு அது). கதை ஒரு பத்திரிகை ஆசிரியர் என்னிடம் ஒரு வாரத்திற்குள் ஒரு கதை எழுதித் தரும்படி கேட்டுக்கொண்டிருந்தார். மூன்று நாட்களில் எழுதி அனுப்பினேன். அடுத்த முறை என்னைச் சந்தித்தபோது, “என்னங்க, இப்படிப் பண்ணிட்டீங்களே!” என்றார், குற்றம் சாட்டுவதுபோல். “உடனே எழுதி அனுப்பினேனே! கிடைக்கலே?” என்றேன். “கிடைச்சிச்சு. அதான் சொல்றேன்!” எனக்குப் புரியவில்லை. நன்றி சொல்வதற்குப் பதிலாக ஏன் தாக்குகிறார்? அவரே தொடர்ந்தார்: “எல்லாரும் அனுப்பறேம்பாங்க. ஆனா அனுப்பமாட்டாங்க. நீங்க என்னடான்னா..!” நான் சிரித்தேன். “இந்தக் காலத்திலே நல்லவளா இருக்கிறதுகூட தப்பு!” அவரும் என் சிரிப்பில் கலந்துகொண்டார். பலருக்கும் ஒத்திப்போடும் குணம் இருக்கிறது. கேட்டால், ‘சோம்பல்,’ ‘மறதி,’ ‘வேறு வேலை வந்துவிட்டது’ என்று சமாளிப்பார்கள். அதை அவர்கள் மாற்றிக்கொள்ள விரும்பாததற்குக் காரணம் பிறரிடமிருந்து மாறுபட்டிருக்க வேண்டாம் என்பதுதானோ? ‘ஊருடன் ஒத்து வாழ்!’ என்று சொல்லிப்போனவர் கட்டாயம் இதை எதிர்பார்த்துச் சொல்லி இருக்கமாட்டார். கதை பல வருடங்களுக்குமுன் நான் ஆசிரியப் பயிற்சி மேற்கொண்டபோது, ஒரு பாடத் திட்டத்தைத் தயாரிக்கச் சொல்லி இருந்தார்கள். ஒரு மாதத்திற்குமேல் அவகாசம் கொடுக்கப்பட்டிருந்தது. அடுத்த நாளே வாசகசாலைக்குச் சென்று, வேண்டிய புத்தகங்களைத் தேடி எடுத்துக்கொண்டேன். முடிவு நாளுக்கு முதல்நாள் விரிவுரையாளரிடம் என் உழைப்பின் பலனைக் கொடுக்கச் சென்றேன். அங்கு உடன் படித்த பல மாணவ மாணவிகள் நின்றிருந்தார்கள், சண்டை பிடிப்பவர்கள்போல். அவர்களுடைய விவாதம்: கொடுக்கப்பட்ட நேரம் போதவில்லை. ஒரே சமயத்தில் எல்லாருக்கும் தேவைப்படுவதால், வாசகசாலையில் அப்புத்தகங்கள் கிடைப்பதில்லை. அவர்கள் கோரிக்கையை ஏற்று, முடிவு நாள் இன்னும் ஒரு மாதத்திற்கு ஒத்திவைக்கப்பட்டது. நான் ஒருத்திதான் உரிய காலத்தில் வேலையை முடித்திருந்தேன். அதற்காக பாராட்டினார்களா? பாராட்டாவது! விரிவுரையாளர் என்னைக் கேலியாகப் பார்த்து, “This one is an early bird!” என்றார்! ஒரு சிலர் பொறாமையாக என்னை வெறித்தார்கள். சிலர் கேலியாகப் பார்த்தார்கள், நான் ஏதோ தவறு செய்துவிட்டவள்போல. ‘பிறருடன் ஒத்துப்போக வேண்டாமா! இவளுக்கு மட்டும் என்ன அவசரம்!’ என்று உள்ளுக்குள் ஆத்திரப்பட்டிருப்பார்கள். நாளை என்பது நமனது கையில் ‘நினைச்சதை உடனே சாதிச்சுடணும் ஒனக்கு!’ இந்த வசவை நான் பலமுறை பெற்றிருக்கிறேன். இப்படிக் கண்டனம் செய்பவர்களிடம், “நாளைக்கு நான் உயிரோடு இருப்பேனோ, என்னவோ!” என்று சொல்லிவிடுவேன், சிறு சிரிப்புடன். உண்மைதானே! இன்று செய்ய வேண்டியதை உடனுக்குடன் செய்தால் நம் அமைதியும், நிம்மதியும் கெடாது, அல்லவா? ஒரு வேளை, உயிர் போகாது பிழைத்துக் கிடந்தால், நாளைக்கும் ஏதாவது வேலை வரும். செய்துவிட்டுப்போகிறது! சிறார்களும் கேள்விகளும் எதையும் அறியவேண்டும் என்ற ஆர்வம் குழந்தைகளிடம் இயற்கையாகவே அமைந்திருக்கிறது. தர்மசங்கடமான கேள்விகள் ‘நான் எப்படிம்மா ஒன் வயத்துக்குள்ளே போனேன்? என்னை ஏன் முழுங்கினே?’ ‘முழுங்கலே..,’ என்று விழிப்பாள் தாய். ‘அசட்டுப்பிசட்டுன்னுன்னு ஏதாவது கேக்காதே. போய் விளையாடு!’ என்று அதட்ட, சிறுமியின் கண்ணில் நீர் எட்டிப்பார்க்கும். ‘நீ என்னை அசடாக்கப் பாக்கறே!,’ என்று குற்றம் சாட்டிவிட்டு, ‘நீ சொல்லாட்டா, நான் எப்படி அம்மாவா ஆக முடியும்?’ என்று மீண்டும் ஒரு கேள்வி கேட்பாள்! தடை உத்தரவு பல பெற்றோர் இந்தப் போக்கிற்கு ஆரம்பத்திலேயே தடை போட்டுவிடுவார்கள்: ‘எனக்கு நிறைய வேலை இருக்கு. நீ கேக்கறதுக்கெல்லாம் பதில் சொல்லிட்டிருந்தால், பொழுது விடிஞ்சுடும்!’ இப்படிச் செய்வதால், தம்மையும் அறியாமல் குழந்தைகளின் ஆர்வத்திற்கு, அவர்கள் அறிவுத்திறன் வளர்வதற்கு, தடைபோட்டு விடுகிறார்கள். ஒரு குழந்தை கேள்வி கேட்டால், அறிவுபூர்வமாக பதிலை ஏற்க அவன் தயார் என்பதுதான் உண்மை. வயதுக்கேற்றபடி, எளிமையாகக் கூறலாம். ‘செய்யாதே! என்று தடைவிதிக்கப்பட்டவைகளை, ’செய்’ என்று எடுத்துக்கொள்வார்கள் சிறு குழந்தைகள். சகுனத்தடை என்பதால், ‘அப்பா வெளியே போறபோது, ’எங்கே போறே?’ன்னு கேக்காதே!’ என்று அம்மா குழந்தையிடம் நினைவுபடுத்துகிறாள். அடுத்தமுறை அப்பா எங்காவது புறப்பட்டால், ஞாபகமாக, ‘அப்பா! எங்கே போறே?’ என்று கேட்கும்! (நான் அப்படித்தான் கேட்டிருக்கிறேன்). மாறாக, ‘இவள் சமர்த்து. யாராவது வெளியே புறப்படறபோது, எதுவும் கேக்கமாட்டா! நானும் வரேன்னு அடம் பிடிக்கமாட்டா,’ என்று பாராட்டினால், குழந்தை அடங்கிவிடும். பள்ளியில் கேள்விகள் 1 ஒரு முறை, விஞ்ஞானப் பாடத்தை நடத்திவிட்டு, “ஏதாவது கேள்வி இருக்கிறதா?” என்று நான் கேட்க, “ஆண்கள் பிள்ளை பெற்றுக்கொள்ள முடியுமா?” என்று ஒரு பதின்ம வயது மாணவி கேட்டாள். “பாட சம்பந்தமாகக் கேட்கத்தான் சொன்னேன்!” என, வகுப்பில் ஒரே சிரிப்பு. மாணவர்கள் கேள்வி கேட்கும்போது சில ஆசிரியர்கள் ‘இவர்கள் நம்மை ஆழம்பார்க்கிறார்கள்!’ என்று ஆத்திரப்படுவார்கள். உண்மை அதில்லை. எதை எந்த நேரத்தில் கேட்க வேண்டும் என்று அவர்களுக்குப் புரியாது. 2 ஸிதி(Siti) என்ற மாணவி எப்போதோ நடத்தப்போகும் நடத்தப்போகும் பாடத்திலிருந்து பல கேள்விகள் கேட்பாள். அவளுக்கு இன்றைய பாடமே புரிந்திருக்காது. சராசரிக்கும் குறைந்த மாணவி. தன்னை, தான் மிக அழகாக இருப்பதை, ஆசிரியர்கள் கவனிக்க வேண்டும் என்று கையாண்ட தந்திரம் அது. வகுப்பில் நுழைந்த ஒவ்வொரு ஆசிரியரையும் இப்படியே தொணதொணப்பாள். என் சக ஆசிரியை, ‘ஓயாது கேள்வி கேட்டால், புத்திசாலி என்று நினைப்பார்கள் என்று யாரோ ஸிதிக்குச் சொல்லி இருக்கவேண்டும்!’ என்றாள் கேலியாக. சரியான கேள்விதான் அறிவை வளர்க்கும். நான் அலுத்துப்போய், “முதலில் இப்போது நடக்கும் பாடங்களைக் கவனி! இதையே புரிந்துகொள்ளாமல், எதை எதையோ ஏன் இப்போதே கேட்கிறாய்?” என்று ஸிதியைக் கண்டித்தேன். அவள் முகம் வாடினாலும், அதன்பிறகு கேள்விகள் நின்றன. கிடைக்கும் பதிலும் கேள்வியைப் பொறுத்தது. 3 சில கேள்விகள் எழுவதைத் தவிர்க்க முடியாது. பிரசவ காலம் முடிந்து வகுப்பிற்குள் நுழைந்தேன். “ஆணா, பெண்ணா?” என்ற கேள்வி பின்னாலிருந்து கேட்டது. நான் அதை மரியாதைக்குறைவாக எடுத்துக்கொள்ளவில்லை. பெரிய உருவத்துடன் இருந்த ஒருத்தியை பழைய நிலைக்கு மாற்றிவிட்ட குழந்தையைப்பற்றி அறியும் ஆர்வம் எவருக்கும் ஏற்படுவதுதானே! புன்சிரிப்புடன், “ஆண் சாயலில் ஒரு பெண்!” என்று சொல்லிவைத்தேன். மாணவ மாணவிகளை சிரிக்க வைத்தால், நம்மை எளிதாக ஏற்பார்கள். 4 நான் புதிய பாடம் ஒன்றை நடத்த ஆரம்பிக்கும்போது, அதன் தலைப்பை கரும்பலகையில் எழுதுவேன். உடனே, “அப்படியென்றால் என்ன, டீச்சர்?” என்ற கேள்வி உரக்க எழும். “தலைப்புடனேயே நிறுத்திவிடப்போகிறேனா? பாடம் நடத்தியபின் தானே புரியப்போகிறது!” என்பேன். பதினேழு வயதான டின் (DIN) வயதுக்கேற்ற வளர்ச்சி இல்லாது, பன்னிரண்டு வயதானவன்போல் இருப்பான். தனது சிறிய உருவம் அவனுக்குப் பெருங்குறையாக இருந்திருக்க வேண்டும். தன்னை எங்காவது கவனிக்காமல் போய்விடுவார்களோ என்று நினைத்தவனாக, “அப்படியென்றால் என்ன, டீச்சர்?” என்று கேட்பதை அவன் நிறுத்தவேயில்லை – ‘சும்மா இருடா!’ என்று பிற மாணவர்கள் அவனைக் கண்டித்தபோதும்! 5 அமீர் என்ற மாணவன் வகுப்பில் எழுந்து நின்று, என்னை ஒரு கேள்வி கேட்டான். நடந்த பாடத்தில்தான். உடனே, சகமாணவன் ஒருவன், “ஐயே! உனக்கு இதுகூடத்தெரியாதா?” என்று கேலிக்குரல் எழுப்பினான். (அவனுக்கும் தெரியாது. ஆனால் தன் சந்தேகத்தைக் கேட்டுவிட்டால், யாராவது கேலி செய்வார்களோ என்ற பயம்). “தெரியாது. அதான் கேட்கிறேன்!” என்றான் அமீர், சற்றும் அயராது. அமீரைப் போன்றவர்கள் புத்திசாலிகள். கேள்வி கேட்பதற்குப் பயந்துகொண்டிருந்தால், முட்டாளாகவேதான் இருக்கவேண்டும் என்பதைப் புரிந்து வைத்தவர்கள். அதிகப்பிரசங்கித்தனமா? பள்ளிக்கூடங்களில் பெரும்பாலும் ஆசிரியரின் குரல்தான் ஒலிக்கவேண்டும் என்பது எழுதப்படாத விதி. ஆசிரியரின் விளக்கம் மாணவனுக்கு ஏற்புடையதாக இல்லாவிட்டாலும் மௌனமாகத்தான் இருந்தாக வேண்டும். ஏன், எப்படி, எதற்காக போன்ற கேள்விகளைக் கேட்டால், ‘அதிகப்பிரசங்கி’ என்ற பெயர்தான் கிடைக்கும். சிறு வயதிலேயே இவ்வாறு ஒடுக்கப்பட்டபின், படிப்பு முடிந்தபின் மட்டும் கேள்வித்திறனோ, அதற்கான தைரியமோ வந்துவிடுமா? வாழ்வைப் புரிந்துகொள்ள கேள்விகள் அவசியம். இருந்தாலும், நாம் கேட்கும் கேள்விகள் ‘தொணதொணப்பு’ என்று பிறர் நினைக்கும் அளவுக்கு இருக்கக்கூடாது. சரிதானா? வயதாகிவிட்டதா? அதனால் என்ன! ‘ஆண்களிடம் சம்பளமும் பெண்களின் வயதையும் கேட்கக்கூடாது!’ சிறு குழந்தைகள் தம் வயதைவிட ஒன்றிரண்டைக் கூட்டிச் சொல்வார்கள், பெருமையுடன். பிறர் தம்மை ஒரு பொருட்டாகக் கருதமாட்டார்களோ என்ற பயம்தான் காரணம். ஒரே கவலை பொதுவாகவே, வயதாக ஆக, நாம் மரணத்தின் அருகில் இருக்கிறோமே என்ற கவலை பலருக்கும் வந்துவிடுகிறது. அதனால், இன்று உயிருடன்தானே இருக்கிறோம் என்று திருப்தி அடைய முடியாது போகிறது. சிலருக்குத் தம் கஷ்டங்களுக்கெல்லாம் காரணம் மனைவிதான் என்பதில் அசைக்க முடியாத நம்பிக்கை. தமக்கு வயதாகிவிட்டது என்பதை ஏற்றுக்கொள்ள இவர்களுக்கு மனமில்லை. ‘நான் முன்பெல்லாம் இப்படியா பலகீனமா இருந்தேன்! எல்லாம் உன்னைக் கல்யாணம் பண்ணிக்கொண்டதால்தான்!’ என்று மனைவியிடம் பாய்வார்கள் – நாற்பது வருட ’இல்லறத்துக்கு’ப்பின்! “எனக்கு முடி நரைக்க ஆரம்பித்துவிட்டது. அவமானமாக இருக்கிறது!” என்றாள் என் சக ஆசிரியை பரம்ஜித் கௌர். “இதில் அவமானமென்ன! உதிர முடி இருக்கிறதே என்று திருப்தி அடைய வேண்டியதுதான்!” என்றேன் அவளுக்கு ஆறுதலாக. நடையில் தளர்ச்சியா? நடக்கவாவது முடிகிறதே என்று சந்தோஷப்படுக்கொள்ளலாமே! ஐம்பது வருடங்களுக்குமுன் ஒருவர் பதவியிலிருந்து விலகி ஓய்வு பெறும்போது, நண்பர்கள் எல்லாரும் கைத்தடிதான் பரிசாக அளிப்பார்களாம். இன்றோ! தள்ளாடி நடந்து, எப்போது விழுந்துவிடுவாளோ என்ற பயத்தைப் பார்ப்பவருக்கு அளிக்கும் என் உறவினரிடம், “ஒரு தடி வைத்துக்கொள்ள மாட்டாயோ!” என்றேன், கரிசனத்துடன். “வயசானவள்னு நினைச்சுடுவாடி!” என்றாள். அவளுடைய பேரனுக்குக்கூட கல்யாணம் ஆகியிருந்தது! வயதானதில் பெருமை சிலர் ‘எனக்கென்ன! வயசானவன்!’ என்று அடிக்கடி கூறுவார்கள். பெருமையாக. தம்மை எல்லாரும் மதித்து நடத்த வேண்டும், தாம் சொல்வதை அப்படியே கேட்டு நடக்கவேண்டும் என்ற எதிர்பார்ப்பு அவர்களுடைய குரலில் இருக்கும். அந்த எண்ணம் ஏமாற்றத்தில்தான் முடியும். வயதானால் அனுபவங்கள் நிறைய இருக்கலாம். ஆனால், மாறிக்கொண்டே இருக்கும் காலத்தில் அவர்களுடைய அதிகாரத்தை எத்தனை இளையவர்கள் ஏற்பார்கள்? கதை தொண்ணூறு வயதான மீனாட்சி பாட்டி படுக்கையிலேயேதான் நாட்களைக் கழிக்க வேண்டியிருந்தது. ஒரு முறை, சிறுவனான பேரன் கையைச் சொறிந்தபடி பெரிதாக அழ, “பூச்சி கடிச்சிருக்கும். புளியை ஜலத்திலே கெட்டியா கரைச்சுத் தடவினால் சரியாப் போயிடும்!” என்றார். உடனே குணம் தெரிந்தது. எக்காலத்திற்கும் ஏற்றதாக இருப்பவைகளைப் பகிர்ந்துகொள்ளலாம். ‘எப்பொருள் யார்யார் வாய்க் கேட்பினும்..’ என்பதைக் கடைப்பிடிப்பவர்கள் தகுந்த அறிவுரைகளைப் பின்பற்றி பலன் அடைகிறவர்கள். தவிர்க்க முடியாதது மனிதனாகப் பிறந்த எவருமே தாமும் ஒரு நாள் முதுமை அடையப்போகிறோம் என்பதை உணரத் தவறிவிடுகிறார்கள். இளமையில் முதியவர்களைப் பார்த்துக் கேலி, இளக்காரம். அவர்களுடைய அறிவுரையோ, ‘தொணதொணப்பு’. அவர்களே முதுமை அடையும்போது, ‘எத்தனையோ சொன்னார்கள். நான் கேட்கவில்லை!’ என்ற வருத்தம்தான் மிஞ்சும். அதிகாரம் செலுத்தாது, கட்டுப்படுத்த நினைக்காது குழந்தைகளுடனும் இளையவர்களுடனும் பழகினால், இளமைக்கே உரிய உற்சாகம் பிறரையும் தொற்றிக்கொள்ளும். அலட்சியமும் இலட்சியமும் இருபது வயதை எட்டும் இளைஞர்கள் இலட்சியவாதிகளாக இருக்கிறார்கள். வயது ஏற, ஏற, உலகின் போக்கு பிடிபட்டுப்போகிறது. அதனால் கசப்பு ஏற்படலாம். அவர்களைப் பாதித்தவைகளைக் கண்டு அலட்சியம் மிக, சுயநலவாதிகளாக மாறுகிறார்கள். காலங்கடந்த வருத்தம் பழையதொரு புத்தகத்தைப் புரட்டிப் பார்ப்பதைப்போல, தாம் வாழ்ந்த காலங்களை அசைபோடும்போது, எத்தனையோ கைகூடாத லட்சியங்களும், கனவுகளும் பெரிதாகப் புலன்படும். அவைகளை நினைத்து வருந்தினால் முதுமையின் பாதிப்புதான் அதிகரிக்கும். எவ்வளவு ஆசைப்பட்டாலும், எத்தனை முயற்சிகள் எடுத்தாலும், இளமை என்னவோ திரும்பிவிடப் போவதில்லை. கதை எனது நெருங்கிய தோழி ஒரு மருத்துவ நிபுணர். ‘இதில் கால்சியம், இதில் புரோதச்சத்து,’ என்று பார்த்துப் பார்த்துச் சாப்பிடுவாள். குதிரையேற்றத்திலிருந்து ஏதேதோ உடற்பயிற்சிகள் வேறு. எழுபது வயதை எட்டியதும், “என்னதான் கவனமாக இருந்தாலும், முதுமையைத் தோற்கடிக்க முடியாது!” என்றாள் விரக்தியுடன். “இன்னும் எதற்கு தலைமுடிக்குக் கறுப்புச் சாயம்!” தோற்றத்தில் முதுமையை ஏற்றவுடன் மனமும் தெளிவடைய, ஆன்மிகத்திலும் சமூக சேவையிலும் நிறைவு காண்கிறாள். எதையாவது புதியதாகக் கற்றுக்கொண்டே இருப்பது மனதை, அதன்மூலம் உடலையும், இளமையாகவே வைத்திருக்கும். உலகில் இருக்கும் எல்லா அவலங்களையும் ஒருவரால் ஒழிக்க முடியாவிட்டாலும், ஒத்த மனதுடையவருடன் இணைந்து ஆதரவற்றவர்களுக்கு உதவி செய்யலாமே! வாழ்விலும் ஒரு பிடிப்பு ஏற்பட இது நல்ல வழி. ‘வண்டி’ ஓடும்வரை வயதானதால் உடல் சற்றுத் தளரலாம். ஆனால், மனதையும் தளரவிடுவது உயிர் இருக்கும்போதே இறப்பதுபோல்தான். “உயிரை நடத்திச்செல்லும் வாகனம் உடல்,” என்கிறார்கள். நம்முடைய வாகனம் ஒன்று சற்று பழையதாகிவிட்டால், அதில் அடிக்கடி கோளாறு உண்டாகிறதல்லவா? தூக்கியா ஏறிந்துவிடுகிறோம்? நம் உடலும் அப்படித்தான். நோய்வாய்ப்படுவதைத் தவிர்க்க முடியாது. அதைப்பற்றியே சிந்தனையை ஓடவிடாது, பிறரிடமும் நம் ’போதாத காலத்தை’ப்பற்றிப் பேசாது இருந்தாலே வியாதிகளும் நம்மைப் பார்த்து அஞ்சி விலகும். ஞாபகசக்தி குறைவா? பழைய கஷ்டங்களும் மறந்திருக்குமே! ‘என்னாலே ஒண்ணுமே முடியலே!’ இப்படிச் சொல்வது சோம்பலின் அறிகுறியா, இல்லை, ‘உன் வயதுக்கேற்றபடி நட!’ என்று யாராவது கூறிவிடுவார்களோ என்ற பயமா? ‘உன்னால் எதையும் சரியாகச் செய்ய முடிவதில்லை. மறந்து, மறந்து போய்விடுகிறாய்! ஒதுங்கி இருந்து, நடப்பதை வேடிக்கை பார்!’ என்பது கொடுமை. நம்மால் இயன்றதை சிரத்தையுடன், சற்று சிரமப்பட்டாவது செய்யலாமே! இந்த வயதிலுமா ‘பிறர் பழிப்பார்களே!’ என்று அஞ்சி நடக்கவேண்டும்? கதை எனக்குச் சற்று பரிச்சயமாகி இருந்த லிண்டாவிடம் அவள் வயதைக் கேட்டேன். சுற்றுமுற்றும் பார்த்துவிட்டு, “ஐம்பத்து ஏழு!” என்றாள் ரகசியக்குரலில். அதற்கு முன்பு, ‘நான் எப்போது ஷாப்பிங் போனாலும், லிப்ஸ்டிக் வாங்குவேன்!’ என்று தெரிவித்திருந்தாள் மகிழ்ச்சியுடன். லிண்டாவற்குப் பேரக்குழந்தைகள் இருந்தார்கள். அதனால் என்ன! வயதானதால் மட்டும் ஒருவர் தம் விருப்பு வெறுப்புகளுக்குத் தடை விதித்துவிட வேண்டுமா? தனக்கு இளமையில் கைகூடாமல் போன ஆசைகளை உயிர் இருக்கும்போதே நிறைவேற்றாமல், ‘அடுத்த ஜன்மத்தில் பார்த்துக்கொள்ளலாம்!’ என்று ஒத்திப்போடுவார்களா யாரேனும்? உலகின் போக்கு நான் சந்தித்த மலாய் ஆசிரியைகளின் வயதைக் கேட்டால், ‘நாற்பதுக்கு மேலே!’ என்று பூசி மெழுகுவார்கள். 41? 50? 100? எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம். மீதியை நம் கற்பனைக்கு விட்டுவிட வேண்டியதுதான். அவர்களைத் துளைத்து, தர்மசங்கடத்திற்கு ஆளாக்குவானேன் என்ற பெரிய மனதுடன் யாரும் மேற்கொண்டு கேட்கமாட்டார்கள். பி.கு: என் வயதுதானே? அது ஆச்சு, மூணு கழுதை வயசு! (ஒரு கழுதையின் ஆயுட்காலம் எத்தனை என்று ஆராய்வது உங்கள் பாடு!). ஊர்வம்பு முன்பெல்லாம், ‘கிசு கிசு’ என்று திரைப்பட நடிகர்கள் மற்றும் நடிகைகளைப்பற்றிய ரகசியங்களை வெளியிட்டு வந்தது ஒரு பத்திரிகை. சம்பந்தப்பட்டவரே அதைப் படிக்கும்போதுதான் அந்த விஷயத்தை அறிந்திருப்பார். அவ்வளவு உண்மை இருக்கும் அச்செய்தியில்! இன்றைய கலாசாரத்தின்படி, வம்பு பேசுவது செய்தி. கூறப்படுவதில் நல்லது எதுவும் இருக்காது என்பது வேறு விஷயம். பிறரைப்பற்றி நல்லது இருந்தால் அதில் என்ன சுவாரசியம்! அதனால்தான் இப்போது தொலைகாட்சியும் கணினியும்கூட அப்பாணியைக் கைப்பிடிக்கின்றன. எந்த நடிகை மூக்கில் அறுவைச் சிகிச்சை செய்துகொண்டாள், இந்த நடிகைக்கும் அந்த நடிகருக்கும் இருக்கும் தொடர்பு காதலா, இல்லை, வெறும் நட்பு மட்டும்தானா என்றெல்லாம் ஆராயும் நேரத்தில் உபயோகமாக எதையாவது செய்யலாமே என்று நிறைய பேர் நினைப்பதில்லை. ஏன் வம்பு? ‘வம்பு’ என்றாலே எதிர்மறையான எண்ணம்தான் வருகிறது. தன் குறைகளைப்பற்றிப் பிறர் எண்ணிவிடவோ, பேசவோ இடங்கொடுக்க விரும்பாததாலோ பலரும் வம்பு பேசுகிறார்கள். இவைகளைப் பார்ப்பவர்களும் கேட்பவர்களும் பிரபலமானவர்களின் பலவீனங்களை அறிவதால் நாம் அவர்களைவிட உயர்ந்துவிட்டோம் என்று நினைக்கிறார்களா, இல்லை, பொழுதுபோகாமல் இருக்க, எப்படியோ நேரத்தைக் கடத்தினால் சரி என்ற எண்ணமா? வம்பு பேசுவது பொய்யுரைப்பதற்குச் சமானம் (பழமொழி). சிற்றூர்களில் வம்படிப்பது பிரதான பொழுதுபோக்கு. செய்வதற்கு நிறைய காரியங்கள் இல்லாத சலிப்புடன், ஊரிலிருப்பவர்கள் என்ன செய்கிறார்கள் என்று பார்த்து, அதை ஒன்றுக்குப் பத்தாக பரப்புவார்கள். தம்மைப்பற்றி நினைக்கவும் விரும்பாது, பிறரது வாழ்வு எப்படி அமைகிறது என்று ஆராய்வதில் இவர்களுக்கு எல்லை கடந்த ஆர்வம். பெரிய நகரத்திற்குக் குடிபெயர்ந்தாலும், பழைய பழக்கம் மாறுவதில்லை. கதை சக ஆசிரியையான ராணி பென்ஸ் காரை ஓட்டிவந்து, தினமும் கெட்டி ஜரிகை போட்ட பட்டுப்புடவைகளை உடுத்து வருவதைப் பார்த்து மிஸஸ் யாப்பிற்கு ஒரே வயிற்றெரிச்சல். அவளுக்கு எல்லாருடனும் போட்டி. ஒரு முறை, “ராணியின் கணவருக்கு எங்கு வேலை?” என்று என்னிடம் ரகசியக் குரலில் விசாரித்தாள். அலட்சியமாக, “நீ அவளிடமே கேட்பதற்கென்ன!” என்றேன். என்னைப்பற்றியும் நாளை வம்பு பேசுவாள்! அதற்கு நானே இடங்கொடுக்கலாமா! என் தலை ,மறைந்ததும், ‘பிறருடன் ஒத்துப்போகாத ஜன்மம்!’ என்று என்னைப்பற்றி யாரிடமாவது புலம்பி இருப்பாள். ஜாவியா இன்னொரு ‘வம்பி’. “குள்ளமாக இருக்கிறாள்! இவ்வளவு பெரிய ஜரிகை போட்ட புடவைகள் சகிக்கவில்லை! இதுகூடத் தெரியாதா!” என்று ராணியை விமரிசித்தாள் என்னிடம். நான் அவளை ஆமோதிக்காததால், பொதுவாகவே ’நட்புடன் பழகத் தெரியாதவ’ளாகிப் போனேன். வம்பு பிறர் வாழ்வை எப்படிப் பாதிக்கும் என்பதில் இவர்களைப் போன்றவர்களுக்கு அக்கறை இல்லை. இப்படிப்பட்டவர்கள் எல்லாவற்றிலும், எவரிடத்திலும் குற்றம் காண்பவர்கள். பிறர் மகிழ்ச்சியாகவோ, தம்மைவிடச் சிறப்பாகவோ இருப்பதைக் காணப் பொறாதவர்கள். ஒருவரது முகத்திற்கு நேரே கூற தைரியம் இல்லாததை பிறரிடம் விவாதித்து நிறைவடைகிறவர்கள். சில சமயம், தாம் சந்தித்தே இராதவரைப்பற்றிக்கூட அலசுவார்கள். கதை ஆசிரியர்களின் பொது அறையில், மூன்று பேர் எதையோ காரசாரமாக விவாதித்துக் கொண்டிருந்தனர். நான் ஒரு புத்தகத்தில் ஆழ்ந்திருந்தேன். என்னைப் பலமுறை அழைத்து என் கவனத்தைக் கவர்ந்து, “நீ என்ன நினைக்கிறாய்?” என்று கேட்க, “எதைப்பற்றி?” என்று புரியாமல் கேட்டேன். “நாங்கள் இப்போது பேசிக்கொண்டிருந்ததைப்பற்றி!” “என்ன பேசிக்கொண்டிருந்தீர்கள்?” படிக்கும்போது என் கவனம் எதிலும் செல்லாது, காது தற்காலிகமாக செவிடாகிவிடும், இதனாலேயே பள்ளி நாட்களில் பல முறை திட்டு வாங்கியிருக்கிறேன் என்று தெரிந்து ஆச்சரியப்பட்டார்கள். இந்தியாவிலும், வெளிநாட்டிலும் குருவாகப் போற்றப்படும் ஒருவர் உண்மையிலேயே உயர்ந்தவர்தானா என்று ஆராய்ந்து, அவர்கள் எதிர்மறையான முடிவுக்கு வந்திருந்தார்கள். அவரைப்பற்றி அவர்களுக்குக் கேள்விஞானம் மட்டுமே. “எனக்குத் தெரியாத விஷயத்தில் நான் எப்படி கருத்து சொல்வது?” என்று மறுத்துவிட்டேன். சராசரி மனிதர்கள் நிகழ்வுகளை விவாதிப்பர் எனில், எதிரில் இல்லாதவரைப்பற்றி அவதூறாகப் பேசுகிறவர் எதில் சேர்த்தி? கதை ‘கேட்பது எதையும் நம்பாதே, காண்பதில் பாதியை நம்பாதே!’ எங்கள் பகுதியில் வசித்துவரும் முதிய பெண்மணியான லீ என்னிடம் கேட்டார், “உங்கள் பக்கத்து வீட்டில் இருக்கும் பெண் உங்கள் தங்கையாமே! சொல்லிக்கொள்கிறார்கள்!” பக்கத்து வீட்டுக்காரி இந்தியனே அல்ல. ஆங்கிலமும் சீனக் கலப்பும் கொண்டவள். கவுன்தான் அணிவாள். நான் மறுத்ததும், விடாப்பிடியாக, “அவளுடைய கணவர் உங்கள் மாப்பிள்ளையின் தம்பியாம்!” என்று தொடர்ந்தாள். அதுவும் தவறு. அவர்களுக்கெல்லாம் பொழுது போகவில்லை என்பதால், என் மண்டையை உருட்டுகிறார்கள். அவர்கள் பேசும் சீன மொழி எனக்குப் புரியாது என்பதாலும் இருக்கலாம். ‘கேள்விப்பட்டேன்,’ ‘சொன்னார்கள்,’ என்றெல்லாம் ஆரம்பிக்கும் செய்தியில் அனேகமாக உண்மையின் கலப்பு இருக்காது. தடுக்க முடியாது, தொத்து வியாதி யாருக்கும் உபயோகமற்ற வம்பைத் தடுக்கும் வழி தன்னைப்பற்றி தாறுமாறாகப் பேசியவரை நேருக்கு நேர் சந்தித்து, அவரிடம் நியாயம் கேட்பதுதான் என்கிறார்கள் சிலர். அப்போது வம்பர்கள் சற்றுத் தடுமாறலாம். ஆனாலும், குணம் மாறவா போகிறது! ஆகவே, அதை அலட்சியம் செய்வதுதான் சிறந்த வழி என்று தோன்றுகிறது. எப்போதுமே சிரித்த முகத்துடன் இருப்பார்கள் வம்பர்கள். இவர்களை நம்ப முடியாது. அவர்களுடன் நெருங்கிப் பழக நேர்ந்தால், நம்மையும் அறியாது, இந்த வியாதி தொற்றிக்கொள்ளும். யாரோ, எதுவோ செய்துகொள்ளட்டும் என்று விட்டுவிட வேண்டியதுதான். வம்பா? ஹையா! புனைக் கதைகளுக்கு வம்பு இன்றியமையாதது. ஒருவரைப் பார்த்து, ‘இப்படித்தான் இருக்குமோ?’ என்று அவரைப்பற்றி நம் எண்ணங்களைச் சுழலவிட்டால் நல்ல கதைகள் கிடைக்கும். அவரது பெயரை மாற்றி, எதிர்காலத்தையும் கணித்து நாம் அளப்பதில் உண்மை இருக்காது. அதனால் அவர் நம்மேல் ஆத்திரப்பட முடியாது. பத்திரிகைகளில் ரகசியச் செய்திகளைத் திரட்டி எழுதுபவருக்கு இது எளிதில் சம்பாதிக்கும் வழி. முன்பு ஒரு ‘மஞ்சள்’ பத்திரிகையில் இதே தொழிலாக, ‘கண்ணில் விளக்கெண்ணை ஊற்றிக்கொண்டு,’ எந்த ஊரில் யார், யாருடன் கள்ளத்தொடர்பு வைத்திருக்கிறார்கள் என்று ஆராய்ந்து வெளியிடுவார்களாம். அப்படி என் தாத்தாவின் கிராமத்தில் ஒருவரைப்பற்றி அவதூறாகச் செய்தி வர, அவமானம் தாங்காமல் அந்த மனிதர் தற்கொலை செய்துகொண்டாராம். இந்த நிகழ்வை என் தாய் அடிக்கடி தெரிவித்ததால், இன்னொருவரைப்பற்றித் தவறாகப் பேசுவது தீய குணம் என்று என் மனதில் படிந்துவிட்டது. உண்மையாகவே இருந்தாலும், உரக்கச் சொல்லக்கூடாதவைகளைப் பரப்புவானேன்! கதை நாகலட்சுமிக்குச் சிறு வயதிலேயே திருமணம் செய்துவிட்டார்கள். மணமகனோ, மனைவியை இழந்தவர். ஒரு குழந்தையின் தந்தை. இருவருக்கும் பெரிய வயது வித்தியாசம். எல்லாப் பெண்களையும் ஏதாவது ஒரு ஆணுடன் தகாத முறையில் சம்பந்தப்படுத்திப் பேசுவதிலேயே ஓய்ந்த பொழுதைக் கழித்தாள் நாகலட்சுமி. இதனால் பேசப்பட்ட பெண்களுக்கு மட்டுமின்றி, அவர்களுடைய குடும்பத்தினருக்கும் மன வேதனை. தாம்பத்தியங்களில் பிளவு உண்டாயின. ஒரு பெண் தற்கொலை முயற்சியில் இறங்கினாள். ‘அறியாப் பருவத்தில் உடலுறவு ஏற்பட்டதால், கற்பழிப்புக்கு ஆளானதுபோல் நாகலட்சுமி மனதளவில் பாதிக்கப்பட்டுவிட்டாள்,’ என்கிறார் ஓர் உளவியல் மருத்துவர். (எல்லாப் பெண்களும் ஒரே மாதிரி பாதிக்கப்படுவதில்லை). அந்திம காலத்தின் இருபது வருடங்களைப் ஒரு வார்த்தைகூட பேச முடியாமல், படுக்கையிலேயே கழிக்க வேண்டிய நிலை ஏற்பட்டது நாகலட்சுமிக்கு. ‘இவளுக்கு ஏன் இப்படி ஒரு நிலை!’ என்று மிகச் சில உறவினர்கள் பரிதாபப்பட்டார்கள். பாதிக்கப்பட்டவர்கள் ஒரே வார்த்தையைத்தான் சொன்னார்கள்: “பேச்சு?” ஒருவர் தாழ்ந்திருக்கும்போது உதவி செய்யும் எண்ணம் கிஞ்சித்தும் இல்லாது, அவர்களது வீழ்ச்சியிலேயே ஆனந்தம் காணலாமா? இதற்கு நேர் எதிராக இருப்பவர்களும் உண்டு. பிறரது நற்பண்புகளையும் செயல்களையும் பாராட்டுகிறவர்கள் பொறாமையை வென்றவர்கள். இவர்கள் பிறருடன் நல்ல கருத்துக்களைப் பரிமாறிக்கொண்டு, முன்னேற்றப் பாதையில் பீடுநடை போடுபவர்கள். நாம் நாமாக இருக்க ‘தீர்க்காயுசா இரு!’ என்று வாழ்த்துகிறார்கள். நீண்ட ஆயுள் மட்டுமின்றி, ஒவ்வொரு நாளும் நமக்கு மட்டுமின்றி, பிறருக்கும் பயனுள்ளதாக இருக்கிறதா என்பதுதானே முக்கியம்? நமக்காக மட்டும் நாம் செய்வது நம்முடனேயே மறைந்துவிடுகிறது. பல நூறு, ஆயிரம் ஆண்டுகளுக்குமுன், அசோகரும், ராஜராஜ சோழனும் சாதித்து இருப்பவை இன்றுவரை பேசப்படுகின்றன. ஏனெனில், இவர்கள் பொது நலத்தை மனதில் கொண்டிருந்தவர்கள். மாறுபாடு செயல் மட்டுமின்றி, எண்ணங்களில் ஒருவர் மாறுபட்டிருந்தால்கூட ஏற்பது கடினமாக இருக்கிறது மற்றவருக்கு. இதனாலேயே, நிறைய நல்ல விஷயங்களை யோசித்து வைத்திருப்பவர்கூட அதைச் செயலில் காட்டத் துணிவதில்லை. எல்லாரும் யாரோ விதித்த பாதையில் போகையில் ஒருவன் மட்டும் இன்னொரு வழியைத் தேர்ந்தெடுத்தால், ‘புரட்சிக்காரன்’ என்கிறோம். அவனுக்குப் பல எதிரிகள் வாய்ப்பார்கள். உதாரணம், மகாத்மா காந்தி, ஆப்ரஹாம் லிங்கன். ‘நமக்கென்ன வந்தது!’ என்று இவ்விருவரும் அலட்சியமாக இருந்திருந்தால்? பழிக்கு அஞ்சி பிறரது கைப்பொம்மையாக மாறினால், இறுதியில் வெறுமைதான் மிஞ்சும். தற்காலத்தில், ‘இவனால் நமக்கு என்ன நன்மை?’ என்று யோசிப்பவர்கள்தாம் அதிகம். அவர்களுடைய சொந்த நலனுக்காக மற்றவர்களை மாற்ற முயற்சிக்கிறார்கள். அவர்களுடைய ஆர்ப்பாட்டமான நடத்தையில் சற்று பலவீனமாக உணர்பவர்களும் மயங்குகிறார்கள். பிறருக்கு அஞ்சியே வாழ்க்கை நடத்தும்போது நம்மை கட்டுப்படுத்தும் உரிமையைப் பிறருக்கு அளித்துவிடுகிறோம். நாளடைவில் வாழ்க்கை இயந்திரத்தனமாக ஆகிவிடுகிறது. கதை ‘பெரியவர்கள் சொல்வதைக் கேட்டு நட. நீ நல்ல பெண்!’ என்ற அறிவுரையைக் கேட்டிருக்கிறோம். இம்மாதிரியாக, ‘நல்ல பெண்’ என்று பெயர் வாங்கினாள் கமலா. நெருங்கிய உறவினர்களுள் வயதில் மூத்த ஆண்கள் தகாத முறையில் பழகியபோதும், அதைத் தப்பாக எடுத்துக்கொள்ளத் தோன்றவில்லை அப்பேதைக்கு. இருபது வயதில்தான் விவரம் புரிந்தது. சுயவெறுப்பு அவள் மனநிலையைப் பாதித்தது. உற்ற நண்பர்கள் என்று கருதுகிறவர்களில் எவர் என்ன சொன்னாலும் அதை அப்படியே கடைப்பிடிப்பதுகூட வேண்டாத விளைவில்தான் கொண்டுவிடும். கதை முப்பது வயதுக்குள் நிறைய முடி உதிர்கிறதே என்ற கவலை அந்த மனிதருக்கு. நண்பர்கள் ஆளுக்கொரு எண்ணையைப் பரிந்துரைத்தார்கள். எல்லாவற்றையும் வாங்கி, ஒன்று மாற்றி ஒன்றாக அடுத்தடுத்த நாட்களில் உபயோகித்துப் பார்த்தார். நிலைமை இன்னும் மோசமானதுதான் கண்ட பலன்! தனித்தன்மை மனிதராகப் பிறந்த ஒவ்வொருவருக்கும் அவரவர் வாழ்க்கைப் பின்னணி, சுபாவம் ஆகியவைகளைப் பொறுத்து சில திறமைகள் அமைகின்றன. ஒரே குடும்பத்தில் பிறந்தவர்களாக இருப்பினும், ஒவ்வொருவருக்கும் தனித்தன்மை இருக்கும். பல பெற்றோர் இதைப் புரிந்துகொள்ள மறுக்கிறார்கள். ஏனெனில், அவர்களுடைய நிறைவேறாத ஆசைகளை நிறைவேற்றப் பிறந்தவர்கள் பிள்ளைகள் என்ற எண்ணம் அவர்களுக்கு. கதை ‘என் மூன்று குழந்தைகளும் மருத்துவப் படிப்புதான் படிக்க வேண்டும்!’ என்ற கனவுடன், தன் எண்ணத்தில் வெற்றியும் அடைந்தாள் ஒரு தாய். தான் அதிகம் படிக்காத குறை அவளுக்கு. மகளுக்கு இசையில் ஆர்வம். மகனுக்கோ சித்திரம் வரைதல்தான் உயிர் மூச்சு. ‘இதனாலெல்லாம் நிறைய சம்பாதிக்க முடியாது!’ என்று தாய் அவர்களது ஆசைக்கனவுகளுக்கு முட்டுக்கட்டை போட்டாள். பெற்ற தாயின் ஆசையை நிறைவேற்ற தாம் விரும்பியவற்றை மறக்கத் துணிந்தார்கள் குழந்தைகள். தாய்க்குச் சமூகத்தில் மதிப்பு கிடைத்தது. அவள் பெற்ற பிள்ளைகளுக்கோ முகத்தில் சிரிப்பே மறைந்தது. வாழ்க்கை பாரமாகியது. இழந்ததை பணத்தால் ஈடு செய்ய முடியவில்லை. ‘ஒவ்வொரு நாளும் ஒரு யுகமாகப் படுகிறது!’ என்கிறாள் மகள். ‘யாருக்குமே வியாதி வரமாட்டேங்குது! நான் எப்படிப் பிழைக்கிறது!’ என்று அரற்றுகிறான் மகன். பிறர் ஆரோக்கியமாக இருக்க வழிசெய்ய வேண்டியவன் அவர்கள் ஆரோக்கியமாக இருக்கிறார்களே என்று கவலைப்படுகிறான்! என்னைப்போல் நட! ‘நான் திறமைசாலியாக இருக்கிறேன். பிறர் என்னைப் பெரிதும் மதிக்கிறார்கள். எல்லாரும் என்னைப்போல்தான் நடக்க வேண்டும்!’ என்று முழங்குபவர்களும் நம் தனித்தன்மையைப் பறிக்க நினைப்பவர்கள். என்னதான் வாழ்வில் வெற்றி பெற்றவராக இருந்தாலும், அவரைப்போல பிறரையும் மாற்ற நினைப்பது மடமை. நம் எதிர்பார்ப்பு, திறமையில் வித்தியாசம் இருக்காதா! நாம் நாமாகத்தான் இருக்க முடியும். நமக்குச் சரியென்று பட்டதை பிறர் ‘தவறு’ என்று பழித்தாற்போல் அது தவறாகிவிடாது. யாரைத்தான் நம்புவது? ‘ஏன் இப்படி இருக்கிறாய்!’ அலுப்புடனும், ஆச்சரியத்துடனும் பலரும் என்னைக் கேட்டிருகிறார்கள். ஒரு மேற்பயிற்சிக்காக மலைப்பகுதியில் நாட்களைக் கழிக்க நேர்ந்தது. ரம்மியமான இடம். பகல் பூராவும் விரிவுரையாளர்களின் குரல். எனக்கு அமைதி வேண்டியிருந்தது. அங்கு போய், ஓய்வான தருணங்களில் பிறரைப்பற்றிய வேண்டாத வம்பு பேசுவார்களா! ஆனால், என்னைத் தவிர வேறு யாரும் அப்படி நினைத்ததாகத் தெரியவில்லை. நான் புதர் மறைவில் அமர்ந்து, பசுமைச் சூழலை ரசித்தபடி உரக்கப் பாடிக்கொண்டிருந்தேன். “ஏன் எப்போதும் தனியாகவே இருக்கிறாய்?” என்று ரங்கன் என்ற ஒரு ஆசிரியர் என்னைக் கேட்டார். நான் நானாக இருக்கக் கூடாதா? “எனக்குப் பிடிக்கும்!” என்றுதான் பதிலளிக்க முடிந்தது என்னால். குழப்பத்துடன் என்னை நோக்கினார் கேட்டவர். அவரைப் போன்றவர்களுக்கோ, தம்மையொத்த பலருடன் சேர்ந்திருப்பதுதான் பலம். இப்படியே சில நாட்கள் தொடர்ந்தன. “எப்போதும் பிறருடனேயே பேசிக்கொண்டு இருந்தால், எப்படி சிந்திக்க முடியுமாம்?” என்று ஒரு சீன நண்பர் என்னிடம் ஆற்றாமையுடன் கேட்டார். அவர் தற்காப்புக் கலையைப் போதிப்பவர். நான் எதுவும் கூறாமலேயே, என்னைப்பற்றிய வம்புப் பேச்சால் மனம் தளர்ந்துவிடுவேனோ என்று ஆதரவாகப் பேசியிருக்கிறார்! நம்மை நாம் இருப்பதுபோலவே குறை நிறைகளுடன் ஏற்பவர்தான் உண்மையான நண்பர். இப்படிப்பட்டவரிடம் எதை வேண்டுமானாலும் கூறலாம். நமது அடிப்படைக் குணங்களையும் சந்தர்ப்பத்திற்கு ஏற்றபடி மாற்றிக்கொண்டிருக்க வேண்டாம். ‘நம்மால் இப்படி இருக்க முடியவில்லையே! இவள் மட்டும் ஏன் வித்தியாசமாக இருக்கிறாள்?’ என்று பிறருடன் எப்போதும் தன்னை ஒப்பிட்டுக்கொண்டு, போட்டி மனப்பான்மையுடன் இருப்பவருக்கு நிம்மதியோ, மகிழ்ச்சியோ ஏது! பிறர் ஏதாவது சொல்லி விடுவார்களோ என்று எப்போதும் பயந்து, நமக்கென்று ஒரு மனம் இருப்பதையே மறந்தவர்கள்போல் நடப்பது நாம் நாமாக இருக்க வழி செய்யாது. தனித்தன்மையுடன் நடப்பவர்களுக்கு ஏதாவது ஒரு காலத்தில் பிறரது மதிப்பு கிட்டலாம். இல்லாவிட்டாலும், வாழ்க்கை நிறைவாக இருக்கும். சிரிப்பும் தொடர்ந்து வரும். அஞ்சுவதற்கு அஞ்சு ‘துணிச்சல் கட்டை!’ இப்படி ஒரு பட்டம் வாங்கினாற்போல், ஒருவர் எதற்கும் அஞ்சமாட்டார் என்றுஆகிவிடாது. அச்சம் இயற்கையிலேயே அமைந்துவிடும் குணம். அதை எதிர்கொண்டால் நிறைய சாதிக்கலாம். நம் திறமையை, எல்லைகளைப் புரிந்துகொள்ள வேண்டும். அவ்வளவுதான். ‘நான் பயந்தாங்கொள்ளி!’ என்று பெருமையாகச் சொல்லிக்கொள்கிறவர் சொல்வதுபோலவே ஆகியும் விடுவார். இதில் என்ன பெருமை? இப்படிப்பட்ட ஒருவர் தன் பொழுதைப் பிறர் பழிக்காத வழிகளில் – தொலைகாட்சி பார்த்துக்கொண்டோ, சாப்பிட்டோ – கழித்துச் சற்றே சமாதானம் அடையலாம். ஆனாலும், தன் திறமையைச் சரியாகப் பயன்படுத்தத் தெரியாது மனம் வெதும்ப, பிறரது ஆற்றல் எரிச்சலை உண்டாக்குகிறது. துணிச்சலாக இருப்பவர்களை என்னமோ தவறிழைப்பவர்போல் கருதுவார். அசட்டுத்துணிச்சல் ‘நான் எதற்கும் துணிந்தவள். எனக்கென்ன பயம்!’ என்று ஒரு பெண் இருண்ட சாலையில் தனியாக நடந்துபோவது துணிச்சல் இல்லை. வாகனங்கள் விரையும் சாலையில் குறுக்கே ஓடுவதும் அப்படித்தான். அஞ்சுவதற்கு அஞ்சத்தான் ஆகவேண்டும். ஆசிரியர்களிடமோ, மேலதிகாரிகளிடமோ அவர்கள் செய்த தவற்றைச் சுட்டிக் காட்டினால்..?! எவ்வளவு தைரியசாலியாக இருந்தாலும், சில சமயங்களில் வாயை மூடித்தான் தொலைக்க வேண்டும். பிறரிடம் பயம் பயம் இருக்குமிடத்தில் அன்போ, உண்மையான மரியாதையோ இருக்காது. “எனக்கு திரைப்படங்கள் பார்க்கப் பிடிக்கும். என் கணவருக்குப் பிடிக்காது. அதனால் போக விடமாட்டார்,” என்றாள் ஒரு சக ஆசிரியை. “சிநேகிதிகளுடன் போவதுதானே?” என்று ஒரு வழி காட்டினேன். “கணவர் கோபித்தால்?” என்று பயந்தாள். பொழுதுபோக்கிற்கும் தடையா! இவளுக்கும் எதில்தான் விட்டுக்கொடுப்பது என்று ஒரு வரையறை கிடையாதா! எனக்குத் தெரிந்த ஒருவருக்கு மனைவி புதிய புடவை வாங்கிக்கொண்டால் ஆத்திரம் வரும். ‘இப்போ எதுக்கு இன்னொரு புடவை?’ என்று இரைவார். பணப்பிரச்னை எதுவும் கிடையாது. ஒவ்வொரு முறை புடவை வாங்கிக்கொள்ளும்போதும் மனைவிக்குப் பயமோ, அல்லது குற்ற உணர்வோ ஏற்படும். ஆனாலும், அவள் தன்பாட்டில் புடவை வாங்குவாள். கணவர் முகத்தைத் தூக்கி வைத்துக்கொண்டிருப்பார். கல்வியால் அச்சமின்மை கல்வி அச்சத்தை எதிர்கொள்ளப் பழக்க வேண்டும். தவறானதை ‘தவறு’ என்று கூறும் தைரியத்தை வளர்க்க வேண்டும். அமைதியாக உட்கார்ந்திருக்கும் மாணவர்களின் முதுகில், (கட்டொழுங்கு என்ற பெயரில்) பிரம்பால் அடிக்கும் ஆசிரியர்கள் இருந்தால், துணிச்சல் எப்படி வரும்? (இதே ஆசிரியர்கள் மேலதிகாரிகளின் முன்னர் நடுங்கி நிற்பார்கள் என்பது வேறு விஷயம்). எதனால் பயம்? ‘இயலாத காரியம்!’ என்று நம் திறமையை நாமே குறைவாக மதிப்பிட்டுக்கொள்வதால். ‘இந்த முயற்சியில் ஈடுபட்டால் வெற்றி கிடைக்கும் என்று என்ன நிச்சயம்?’ என்ற சந்தேகத்தால். (வாழ்வில் எதுதான் நிலையானது?) ‘பிறர் கேலி செய்வார்களோ?’ என்ற தயக்கத்தால். (‘அவர்கள் கிடக்கிறார்கள்!’) ‘எல்லாரும் ஒரு குறிப்பிட்ட பாதையில் பயணிக்கையில், அவர்களை ஒட்டி நடக்காவிட்டால் நான் மட்டும் தனியாகிவிடுவேனோ?’ என்ற எண்ணத்தால். அல்லது, சிறு வயதில் மிரட்டப்பட்டிருப்போம். சில குடும்பங்களில் ஆண் குழந்தைகளை அனாவசியமாக மிரட்டி வளர்ப்பார்கள். அப்போதுதான் ‘ஆண்பிள்ளைத்தனமாக’, தீய பழக்கங்களில் ஈடுபடாது வளர்வான் என்ற தவறான எண்ணம். அந்த அறியா வயதில் ஏற்பட்ட பயம் வளர்ந்தபின்னரும் தொடரும் என்பது அவர்களுக்குப் புரிவதில்லை. என்னதான் ஆகிவிடும்? ‘என்ன நடக்குமோ!’ என்று ஒவ்வொரு நிமிடமும் பயந்து வாழ நினைத்தால், வாழ்வே நரகமாகிவிடாதா! எது வந்தாலும் ஏற்கத் தயாராகும் மனப்பான்மையை வளர்த்துக்கொண்டால் இத்தகைய எண்ணங்களை எதிர்கொள்ளலாம். கதை பதின்ம வயதில் நீச்சல் கற்றுக்கொள்ளவேண்டும் என்ற ஆசை எனக்குள் எழுந்தது. அம்மாவிடம் கேட்டேன். “பைத்தியம் பிடிச்சிருக்கா?” என்ற எதிர்கேள்வி வர, என் ஆசை தற்காலிகமாக முடங்கியது. இறந்ததும் என் உடலின் பல பாகங்களையும் தானமாக எடுத்துக்கொள்ளலாம் என்று எழுதிக் கொடுத்தபின், பிறருக்காக இந்த உடலை நோய்நொடியில்லாது நன்றாகப் பாதுகாக்க வேண்டும் என்ற துடிப்பு எழுந்தது. எனது நாற்பத்து நான்காவது வயதில் எங்கள் வீட்டருகே பெரிய நீச்சல் குளத்துடன் ஒரு கிளப் திறக்கப்பட்டது. மலிவான ஒரு நீச்சல் உடையுடன் குளத்தில் இறங்கினேன். (நன்றாக நீந்த வரும்போதுதான் நல்ல உடை என்று என்னுள் ஒரு வீம்பு). அவ்வப்போது என் மகள் வந்து சொல்லிக்கொடுத்தாள். மீதியெல்லாம் வீடியோவிலிருந்துதான். “நீங்கள் laps செய்யலாமே!” ஒருவர் கூற, பயம் எழுந்தது. என் தலைக்குமேல் இருக்கும் ஆழத்தில் என்னால் இருபத்தைந்து அல்லது ஐம்பதடி நீளம் நீந்த முடியுமா? இந்த மாதிரி சந்தர்ப்பங்களில், ’What is the worst that can happen?” (அப்படி என்னதான் நடந்துவிடும்?) என்று கேட்டுக்கொண்டால் நாம் துணிந்துவிடுவோம். எனக்கு உடனே இரு பதில்கள் கிடைத்தன. நீளமான குளத்தில் முன்னும் பின்னும் நீந்த வரும். இல்லாவிட்டால், மூழ்கி விடுவேன். இறந்தால் என் மகனிடம் போவேன். (நான்கு வயதில் அவன் குளத்தில் மூழ்கி இறந்துபோனதைப்பற்றி ஏற்கெனவே எழுதியிருக்கிறேன்). இரண்டாவது எண்ணமே இனிமையாகப்பட, அதன் உந்துதலுடன் எந்த தயக்கமும் இல்லாமல் உடனே நீந்த ஆரம்பித்தேன். யாருடைய தடையும், கேலியும் (‘ஆண்களும், பெண்களும் பக்கத்தில், பக்கத்தில் குளிப்பீர்களா?’), பரிதாபமும் (‘நல்ல கலராக இருந்தீர்களே! ஏன் இப்படிக் கறுத்துவிட்டீர்கள்?’) என்னைப் பாதிக்கவில்லை. புதிய செயலால் ஆபத்து ஒரு முறை, கண்ணை மூடியபடி நீந்திவந்த ஒருவர் எதிர்ப்புறமாக வந்த என்னைக் கவனியாது தன் கையை ஓங்கி வீச, நான் நீருக்கடியில் போய்விட்டேன். கண்ணைத் திறக்கவும் பயந்து, சிறிது நேரம் திணறல். ஆபத்பாந்தவனாக ஒரு கை என்னை மேலே இழுத்தது. கரையில் இருந்த ஒரு பெண்மணி, “நானும் இப்படித்தான் காப்பாற்றப்பட்டேன்,” என்றாள் என்னைச் சமாதானப்படுத்தும் வகையில். சற்றே அவமானம் அவள் முகத்தில். இதற்குப்போய் முகத்தைச் சுருக்குவானேன்! எதையும் கற்கும்போது தவறிழைப்பதை தவிர்க்க முடியுமா? பென்சிலால் எழுதியது தப்பாக, ரப்பரால் அழித்ததில்லையா? உபயோகமான அறிவுரைகள் வழங்கப்பட்டன: ‘இன்றே நீங்கள் பயத்தை எதிர்க்க வேண்டும். இல்லாவிட்டால், நீச்சல் என்றாலே பயம்தான் எழும்!’ பாலும் சர்க்கரையும் சேர்க்காத சூடான காப்பியை உடனே குடிக்க வேண்டும்!’ எப்படியோ, நான் சாகவில்லை. ஓர் ஆற்றல் பிறந்தது. ‘என்னதான் ஆகிவிடும்!’ என்பதை மந்திரம்போல் கெட்டியாகப் பிடித்துக்கொண்டேன். ஆறு வயதில் கற்றுக்கொண்டிருந்தால் பயம் இருந்திருக்காது. எல்லாவற்றிற்கும் வேளை வர வேண்டாமா! தவழும் குழந்தை கீழே விழுந்துவிடுகிறதே என்று எதற்குப் பயம்? அதற்குப் பாதுகாப்பாக தலைக்குள் கவசம் மாதிரி ஒன்று இயற்கையிலேயே அமைந்திருக்கிறது. ஒன்றரை வயதுவரை கவலையில்லை. சிறு குழந்தைகளுக்கு இயற்கையாக பயம் இருக்காது. இரண்டு மாதங்களே ஆன குழந்தைகளை இரண்டு மீட்டர் ஆழமான குளத்தில் விட்டால், எப்படியோ சமாளித்து, மேலே வந்துவிடும். (தொலைகாட்சியில் பார்த்தது). கருவாக இருந்தபோது, தாயின் வயிற்றில் நீந்திய அனுபவம்தான். அச்சத்தை விலக்கு நம் அநாவசியமான பயங்களை எதிர்கொண்டால், ஒருவித சுதந்திர உணர்வு நம்முடன் எப்போதும் இருக்கும். அச்சம் விளைவிக்கும் தடுமாற்றம் விலகிவிடும். பிறரைக் கட்டுப்படுத்தவும் மாட்டோம். எதிர்காலத்தை மகிழ்ச்சியுடன் ஏற்கும் திடம் வரும். குழந்தைகளின் திறனைக் கண்டுகொள்ளலாமே! உங்கள் வீட்டுக்குக் குழந்தை சுவற்றில் கிறுக்கினால் கோபம் எழுகிறதா? என்னதான் காகிதமும் பென்சிலும் கொடுத்தாலும், குழந்தைக்கு என்னவோ கண்ட இடத்தில் கிறுக்குவதுதான் உவப்பாக இருக்கும். பெரியவர்கள் திட்டினால், தம் தொடையிலேயே வரைந்துகொள்ளும் குழந்தைகளையும் கண்டிருக்கிறேன். அவர்களால் வரைவதை நிறுத்த முடியாது. இயற்கை ஒவ்வொரு குழந்தைக்கும், அவர்களுக்கே தெரியாமல், ஏதோ திறமையைக் கொடுத்திருக்கிறது. பெற்றோருடையதை ஒத்திருக்கும் என்பதுமில்லை. சிறு வயதிலேயே ஒரு குழந்தையின் திறனைக் கண்டுகொள்ளும் பெற்றோர் அத்திறன் மேன்மேலும் வளர துணை புரிகிறார்கள். மகா புத்திசாலி என்னும் குழந்தைகூட எல்லாத் துறைகளிலும் சிறந்திருக்காது. ஏதோ, ஒன்றிரண்டில்தான். மிகப் பிரபலமான ஒரு மிருதங்க வித்வான் என்னிடம் கூறியது: “நான் முதலில் வாய்ப்பாட்டுதான் கற்றேன். ஒரு திருவிழாவின்போது என் தகப்பனார் தன் தோளில் என்னைத் தூக்கிக்கொண்டு நடந்தபோது, அவர் தலையில் இரு கைவிரல்களாலும் தாளம் போட்டுக்கோண்டே இருந்தேன். ‘இந்தப் பயலுக்கு தாளத்தில்தான் அதிக ஆர்வம்!’ என்று அவர் என்னை மிருதங்கம் கற்க அனுப்பினார்”. பதினெட்டு வயதிலேயே இந்தியாவில் தேசிய விருது பெற்றிருக்கிறார் இவர். குருகுல வாசம் என்னும் முறைப்படி பல மாணவர்களுக்கு இக்கலையைப் போதிக்கிறார். உலகின் பல பாகங்களிலும் இவரது பாணி தவறாது, சீடர்கள் தாளவாத்தியக் கலையைப் பரப்புகிறார்கள். கேள்வி: யார் இவர்? இன்னொரு சிறுவன் தன் அண்ணன் தற்காப்புப் பயிற்சிக்குச் செல்லும்போதெல்லாம் ஏக்கத்துடன் கதறி அழுவான். இவனுக்கோ நான்கு வயதுதான். சமாதானப்படுத்த அண்ணனைப்போன்ற உடை வாங்கிக்கொடுத்தார்கள் பெற்றோர். ஏழு வயதில் முறையாக ஆரம்பித்த பயிற்சியால் இன்று நாட்டைப் பிரதிநிதித்து முன்னணியில் இருக்கிறான். இது மலேசியாவில். பிரபல தபேலா வித்வான் ஜாகிர் ஹுசேன் பள்ளிப்பருவம் வரும்வரை காலை ஆறு மணியிலிருந்து வாத்தியத்தை வாசித்துப் பழக வேண்டும் என்று அவருடைய ஆசிரியர் (தந்தை) கண்டிப்பாக இருந்தார். ஆறு வயதுக்குமேல் அதிகாலை இரண்டு மணியிலிருந்து சாதகமாம்! அவருக்கு ஆர்வமும் திறமையும் ஒருங்கே அமைந்திருந்தன. அதனால் பிற குழந்தைகளை அவரைப்போல் பெற்றோர் நடத்தவில்லை என்பது குறையாகப்படவில்லை. ஒரு கச்சேரிக்குப்பின், விமர்சகரான நான் அவரைப் பாராட்டியபோது, வெட்கத்துடன் நுனிநாக்கை வெளியே நீட்டி, தோள்களைத் தூக்கிக்கொண்டார் – ஒரு குழந்தைபோல! எதுவும் பேசவில்லை! சுவற்றில் கிறுக்கிய குழந்தைக்கு சிறு வயதிலிருந்தே வித விதமான வண்ணக்கலவைகளும், வரைவதற்கென்றே தயாரிக்கப்பட்ட பென்சிலும் வாங்கிக் கொடுத்தாள் அதன் தாய். சிறு வயதில் தான் தொடையில் கிறுக்கிக்கொண்டது அவளுக்கு மறக்கவில்லை. மணிக்கணக்கில் சாப்பிடக்கூட மறந்து வண்ணம் தீட்டுகிறாள் அவளுடைய மகள். இப்படியாக, கலை, விளையாட்டு போன்ற பல துறைகளிலும் சாதித்தவர்களின் பின்னணியைப் பார்த்தால், அவர்களுடைய இயற்கையான ஆர்வமும் திறமையும் பெற்றோராலும், ஆசிரியர்களாலும் வளர்க்கப்பட்டிருப்பது புரியவருகிறது. சாதனையாளர்கள்தாம் குழந்தைப் பருவத்திலேயே தம் திறனை வெளிக்காட்டுகிறார்கள். பெற்றோருக்கு அவர்கள் தேர்ந்தெடுத்த துறையைப்பற்றி அதிகம் தெரிந்திருக்காவிட்டாலும், ஊக்கம் அளிக்கிறார்கள். குழந்தைகளின் மகிழ்ச்சியே முக்கியமாகப்பட, ‘இதனால் பணமும், புகழும் கிடைக்குமா?’ என்ற யோசனை வருவதில்லை. ஒருவருக்குப் பிடித்த பொழுதுபோக்குகளில் ஈடுபடும்போது மனதில் பரிபூரண அமைதி நிலவுகிறது. முன்னுக்கு வந்தவர்களைப் பார்த்துப் பொறாமை எழுவதில்லை. ஏனெனில் அவர்களுக்குத் தாம் செய்வதில் மனநிறைவு கிட்டிவிடுகிறது. சிறு வயதில் ஆர்வத்திற்கு முட்டுக்கட்டையாக பெற்றோர் இருந்திருந்தாலோ, இயற்கைத்திறன் அப்போதே நசித்துவிடும். ஏக்கமும், ஏமாற்றமும்தான் தொடரும். திறமையை எப்படி வெளிக்கொணர்வது? படிப்பது, விளையாட்டு, பொழுதுபோக்கு, கலை, மனிதர்களுடன் பழகுவது என்று பல விஷயங்களிலும் ஒரு சிறுவனை ஈடுபடுத்துவது நல்லது. தனக்குப் பிடித்தது என்னவென்று புரிந்து, அதில் முனைப்புடன் ஈடுபடுவான். படிக்கக் கற்பதற்குமுன் வாய் ஓயாது தனக்குத்தானே பேசிக்கொள்ளும் சிறுமி எழுத்தாளராகவோ, பேச்சாளராகவோ ஆகலாம். உதாரணம்: அடியேன்! பிடித்துத் தள்ளாதே! சிலருக்குத் திறமை இருந்தும் அத்துறையில் ஆர்வம் இல்லாது போகலாம். அப்போது அவர்களை வற்புறுத்தி அதில் ஈடுபடச் செய்வது மகிழ்வை ஊட்டாது. ‘நீ பெரிய பாடகியாக வேண்டும். விளையாடி பொழுதை வீணாக்காதே!’ என்று பிற குழந்தைகளுடன் கலந்து பேசி, விளையாடக்கூட அனுமதிக்காத தாயைப்பற்றி கசப்புடன் பேசும் பாடகியை அறிந்திருப்பீர்கள். ஆசையா, பேராசையா? குழந்தைப் பருவத்திலேயே பல துறைகளிலும் சிறந்து விளங்கவேண்டும், அல்லது ஒரே துறையில் முழுமனதாக கவனம் செலுத்த வேண்டும் என்ற எதிர்பார்ப்பு பேராசைதான். பாடம், பயிற்சி என்பதெல்லாம் மகிழ்ச்சி ஊட்டுவதாக, ‘அடுத்த பாடம் எப்போது?’ என்ற எதிர்பார்ப்பை உண்டுபண்ணுவதாக இருக்க வேண்டும். அலுப்புக்கும், அச்சத்திற்கும் அங்கு இடமில்லை. திட்டியும் அடித்தும் பாடம் சொல்லிக்கொடுக்கிற ஆசிரியர்கள், ‘படிப்பதெல்லாம் போட்டிக்காக, அல்லது பரீட்சை சமயங்களில்தான்!’ என்ற சலிப்பை உண்டுபண்ணுகிறார்கள். இளமைக்காலத்துக்கே உரிய களிப்பு, சிரிப்பு, விளையாட்டு, பிறருடன் பழக முடிவதால் யாரை நம்பலாம், யாரை ஒதுக்க வேண்டும் என்ற – வாழ்க்கைக்கு முக்கியமான – அனுபவங்களெல்லாம் அவர்களுக்குக் கிடைப்பதில்லை. ஆத்திரம் வராமல் என்ன செய்யும்? ஒப்பிடாதே! எல்லாருமே சாதனையாளர்கள் ஆகிவிட முடியுமா? இதனால் மற்ற குழந்தைகள் திறமையற்றவர்கள் என்று அர்த்தமில்லை. ‘நீயும் இருக்கிறாயே! உன் தம்பியைப் பார்! எவ்வளவு புத்திசாலி!’ என்று இழித்துரைக்கும் பெற்றோர் இத்தகைய ஒப்பிடுதலால் தாழ்வு மனப்பான்மையை விதைத்து, ஒரு சிறுவனுக்கு இருக்கும் சொற்ப திறமையையும் அழித்துவிடுகிறார்கள். அடக்க முடியவில்லை பள்ளிக்கூடத்தில் தண்டிக்கப்பட்ட குழந்தைகள் ஏன் அப்படி இருக்கிறார்கள்? கதை ஒரு வயதுக்குள்ளாகவே ஏதாவது ராகத்தை இழுத்துக்கொண்டிருப்பாள் சந்திரிகா. ஒன்றரை வயதில் கதை சொல்வாள் – மழலையில்தான். அவளுக்கு நான்கு வயதானபோது, பாலர் பள்ளி ஆசிரியை புகார் செய்தாள் – அடிக்கடி வகுப்புக்கு வெளியே அவள் போய்விடுகிறாள், அவளைப் பின்தொடர்ந்து மற்றவர்களும் போய்விடுகிறார்கள் என்று. தாய் மகளிடம் கேட்டபோது, “நடப்பது உடம்புக்கு நல்லது என்று சொல்லியிருக்கியேம்மா! எனக்கு டீச்சர் சொல்லிக்கொடுப்பது புரியவில்லை. அதுதான்!” என்றாள்! முதல் வகுப்பிலிருந்து பல வருடங்கள் சந்திரிகாவுடைய கையெழுத்து மோசம் என்ற புகார் வந்தது. பள்ளிக்கூடத்தில் திட்டி, அடிக்கிறார்களே என்று தாயும் அதுபோல் செய்யாது, மகளுக்குப் பக்கபலமாக இருந்தாள். குழந்தைகளின் குறைகளைப் பெரிதுபடுத்தாது இருத்தல் நன்மையை விளைவிக்கும். ஒரே ஒரு ஆசிரியை மட்டும் சொன்னாள், ‘இவளைப்போன்ற புத்திசாலியைப் பார்த்ததேயில்லை!’ என்று. ‘SUPER BRAINS’ என்ற பிரிவைச் சேர்ந்தவள் சந்திரிகா. வயதுக்குமீறிய அறிவு இருக்கும் ஒரு குழந்தைக்கு மூளை வேலை செய்யும் வேகத்திற்கு கைகள் ஒத்துழைக்காது. எதையும் வேகமாகச் செய்ய முற்படுவதால் எழுதுவது கிறுக்கலாக இருக்கும். எதையும் வித்தியாசமாக யோசிப்பார்கள். இன்று இசை, கல்வி இருதுறைகளிலும் முன்னணியில் இருக்கிறாள் உளவியல் பேராசிரியையான இப்பெண். மேற்கொண்டு செய்யவேண்டுவது உங்கள் குழந்தைக்குப் பாட்டு கேட்கப் பிடிக்கிறது என்று வைத்துக்கொள்வோம். (‘யாருக்குத்தான் பிடிக்காது?’ என்று கேட்கக் கூடாது, ஆமாம்! ஔரங்கசீப்புக்கு இசை பிடிக்காது என்று படித்திருக்கிறேன்). உங்களுக்கோ சங்கீதத்தில் ஞானமோ, ஆர்வமோ கிடையாது. இருந்தாலும், குழந்தையை பாட்டு வகுப்பில் சேர்த்துவிடுகிறீர்கள். மாதாமாதம் ஆசிரியருக்குச் சம்பளம் கொடுத்துவிடுவதோடு உங்கள் கடமை முடிந்து விடுவதில்லை. அத்துறையில் சிறந்தவர்களின் கச்சேரிக்கு அழைத்துப்போனால், அறிவு விரிவடையும். தோல்வியா? மக்கு! போட்டிகளில் வெற்றிபெற்றால் குழந்தையைக் கொண்டாடி, தோல்வி அடைந்தால் தண்டிப்பது ஒரு குழந்தையைப் பயங்கொள்ளியாக ஆக்கும் செயல். மாறாக, ‘அடுத்த முறை நன்றாகச் செய்வாய், பார்!’ என்பதுபோல் ஊக்கமளித்தால் தன்னம்பிக்கையுடன், எந்த நிலையிலும் ஊக்கத்தை இழக்காது இருப்பதுடன், வேறு புதிய துறைகளிலும் ஆர்வத்துடன் வளர்வான். எல்லாக் குழந்தைகளும் சாதனையாளர்கள் ஆகமுடியாதுதான். ஆனாலும், அவர்களால் முடிந்ததைச் செவ்வனே செய்து முடிக்கப் பிறர் ஆதரவு காட்டினால், திருப்தியாவது கிடைக்குமே! யார் அந்த மிருங்க வித்வான்? பதில்: குரு காரைக்குடி மணி. கட்டுப்படுத்துதல் அன்பா? ”நான் வாங்கிக்கொடுத்த புடவையை கட்டிக்கொண்டால்தான் உனக்கு என்மேல் அன்பு இருக்கிறதென்று அர்த்தம்!” கணவனின் ’அன்பு’க் கட்டளை. அவளுக்கும் அந்தப் புடவை பிடிக்குமா என்று அவன் யோசிப்பதில்லை. இதில் அன்பில்லை. மனைவியைக் கட்டுப்படுத்தும் முயற்சிதான் இது. ஆரம்பத்தில் விட்டுக்கொடுப்பவள், போகப் போக தான் செய்யும் ஒவ்வொரு காரியத்திலும் கணவன் தலையிடும்போது, ‘அவர் என்ன சொல்வாரோ?’ என்று எதைச் செய்யும்போதும் யோசிக்க ஆரம்பித்து, அவனைக் கேட்கிறாள். இப்போது சலித்துப்போய், ‘உனக்கு சுயபுத்தியே கிடையாதா?’ என்று கணவன் ஏசக்கூடும். ஆனால், எல்லாப் பெண்களும் விட்டுக்கொடுத்துப் போவதில்லை. கதை “கல்யாணத்திற்குமுன் நாங்கள் மூன்று வருஷங்கள் பழகினோம். அப்போது லதா நான் சொல்வதையெல்லாம் கேட்பாள். இப்போது ஏறுக்கு மாறாகச் செய்கிறாள்!” என்று என்னிடம் முறையிட்டான் ஓர் இளைஞன். ‘என் மனைவி நான் சொல்கிற பேச்சைத் தட்டுவதில்லை!’ என்று நெருங்கிய நண்பர்களிடம் பெருமை பேசிக்கொள்ள முடியவில்லையே என்ற ஏக்கமோ! ‘காதல்’ என்ற பெயரில் கட்டுப்படுத்துபவருக்கு தான் பெரிய பராக்கிரமசாலி என்ற கர்வம் எழலாம். ஆனால் கணவர் சொல்கிறபடியெல்லாம் ஆடினால் தனக்கு சுதந்திர உணர்ச்சியே போய்விடும் என்று லதாவுக்குப் புரிந்திருந்தது. ஏன் கட்டுப்படுத்துகிறார்கள்? தன்னைத்தானே கட்டுப்படுத்திக்கொள்ள இயலாதவர்கள் பிறரைக் கட்டுப்படுத்தி, அதிலேயே நிறைவு அடைந்துவிடுகிறார்கள். அவர்கள் விரும்பியபடி வாழ்க்கை அமையவில்லை என்ற ஏமாற்றமே அடிப்படை காரணம். கதை குடும்பப் பொறுப்பைச் சுமக்க விரும்பாது, மனைவியையும், ஆறு குழந்தைகளையும் நிர்க்கதியாக விட்டுச் சென்றவர் ரவியின் தந்தை. மூத்த மகன் ஆனதால், பதின்ம வயதிலேயே வேலை பார்த்துக்கொண்டு, அவருடைய இடத்தைப் பூர்த்தி செய்ய வேண்டிய கட்டாயம் ரவிக்கு ஏற்பட்டது. தம்பி, தங்கைகளைக் கட்டுப்பாட்டுடன் வளர்க்கப் பிரயத்தனப்பட்டதில், எவருடன் நெருங்கிய உறவு வைத்துக்கொண்டாலும், அப்பாவைப்போல் அவரும் தன்னை விட்டுப் போய்விடுவாரோ என்று மனத்தடியில் ஏற்பட்ட பயம் நிலைத்தது. எவரையும் நம்ப முடியவில்லை ரவியால். திருமணம் ஆனபின்னரும், மனைவி மக்கள் தான் சொல்வதை அப்படியே கைப்பிடிக்க வேண்டும் என்ற பிடிவாதம். அவர்கள் கேட்காவிட்டாலோ, முகத்தைத் தூக்கி வைத்துக்கொண்டிருப்பான். காதலியோ, மனைவியோ, தன்னை விட்டுப் போய்விடுவாளோ என்ற பயத்தில் அவள் செய்யும் ஒவ்வொரு காரியத்தையும், அவளுடன் பழகும் ஒவ்வொருவரையும் கவனிப்பது உறவுகளை பலகீனமாக்கிவிடுகிறது. மேற்காணும் கதையில் ‘ரவி’ என்ற பெயருக்குப் பதிலாக ‘ரமா’ என்று போட்டாலும், விளைவு ஒன்றுதான். அவநம்பிக்கை, சிறுபிள்ளைத்தனமான பிடிவாதம், நாட்கணக்கில் மௌனம் சாதிப்பது எல்லாம் இருபாலருக்கும் பொதுவான குணங்கள்தாமே? பெண்களுக்குக் கூடுதலான ஓர் ஆயுதம் உண்டு – கண்ணீர்! தான் ஒருவரை மிஞ்ச முடியாவிட்டால், அவரைக் கட்டுப்படுத்தி, கெஞ்சல், கொஞ்சல், மிரட்டல் என்று பலவித அஸ்திரங்களையும் பிரயோகித்து, அவரைக் கீழே கொண்டுவர வேண்டும் என்ற மனநிலை உடையவர்களும் உண்டு. அதன்மூலம் சுயக்கட்டுப்பாடு அற்ற தங்கள் குறையை ஈடு செய்ய நினைக்கிறார்கள். தாங்கள் செய்வது பிறரை எப்படிப் பாதிக்கும் என்ற யோசனையோ, அக்கறையோ இவர்களுக்குக் கிடையாது. கதை தன்னைவிட படிப்பிலும் அந்தஸ்திலும் உயர்ந்த பெண்ணை மணந்துவிட்டோம் என்ற சந்திரனுடைய கர்வம் விரைவிலேயே மறைந்தது. எல்லாம் நண்பர்களின் தூண்டுதலால்தான். ‘அவளை இப்படியே வளரவிடாதே. அப்புறம் உன்னை எங்கே மதிக்கப்போகிறாள்!’ என்று தூபம் போட்டார்கள். மனைவி தாராவை ஓயாது மட்டம் தட்டினான். பிறர் முன்னிலையிலும் பழித்தான். விரைவில், அவளுடைய உடல்நிலை கெட்டது. அதிசயமாக, அப்போது தன் போக்கை மாற்றிக்கொண்டான் சந்திரன். அவள்மேல் அன்பைப் பொழிந்தான். கணவனின் அன்பைப் பெற தான் நோய்வாய்ப்பட வேண்டும் என்று அவளையுமறியாமல் மனதில்பட, தாரா அடிக்கடி நோய்வாய்ப்பட்டாள். பல முறை இப்படி ஆனபின், நடந்ததில் தன் தவறு எதுவுமில்லை என்று தெளிந்தாள். தானும் உயரலாம் என்ற உத்வேகம் அவனிடம் இல்லை என்று புரிந்தது. தன் தேக ஆரோக்கியம் கணவனது அன்பைவிட முக்கியம் என்று உணர்ந்தபின், கணவனது ஏச்சுப் பேச்சை அசட்டை செய்ய முடிந்தது. அக்கறையா, சந்தேகமா? தம்பதியரில் ஆணோ, பெண்ணோ, மற்றவரின் ஒவ்வொரு நிமிடமும் எப்படிக் கழிந்தது என்று தெரிந்துகொள்ள ஆர்வம் காட்டுவார்கள். ‘இன்று நீ வேலைபார்க்கும் இடத்தில் என்ன நடந்தது?’ என்று கணவன் விசாரித்தால், அவருக்குத்தான் தன்மேல் எவ்வளவு அக்கறை என்ற மிதப்பு ஆரம்பத்தில் ஏற்படக்கூடும். போகப் போக, தன்மேல் உள்ள கரிசனத்தால் அவர் இப்படிக் கேட்கவில்லை, பொறாமையும் சந்தேகமுமே இதன் அடிப்படை என்று புரிய, கசப்பு ஏற்படும். ஒருவரது கைத்தொலைபேசி, மின்னஞ்சல்வழி யார் யாருடன் தொடர்பு வைத்திருக்கிறார் என்று பார்ப்பதும் பரஸ்பர நம்பிக்கை இல்லாததால்தான். எப்படிச் சமாளிப்பது? தம்மைக் குறைவாக எடைபோடுகிறவர்களுக்கு எப்போதும் பாராட்டும், புகழ்ச்சியும் தேவைப்படுகிறது. தனித்துப்போய்விடுவோமோ என்று பயப்படுகிறவர்களுக்கு, ‘நான் உங்களை விட்டுப் போகமாட்டேன்!’ என்ற உறுதி அவசியமாகிறது. கட்டுப்படுத்த எத்தனையோ வழிகள். பெற்றோரையும் அது விட்டு வைப்பதில்லை. கதை: என்னை விட்டுப் போகாதே! என்னுடன் வேலைபார்த்த ஸலேஹா தன் மனக்குறையை யாரிடமாவது தெரிவிக்க வேண்டும் என்று எண்ணியிருக்க வேண்டும். தானே என்னிடம் வந்து முறையிட்டாள்: ”எனக்குக் கல்யாணம் நிச்சயம் ஆகியிருக்கிறது. என் காதலர் என்னை வெளியே அழைத்துப்போக அடிக்கடி எங்கள் வீட்டுக்கு வருவார்,” என்று ஆரம்பித்தவள் உணர்ச்சிவசப்பட்டாள். “ஒவ்வொரு முறையும், என் அம்மா, ‘நெஞ்சு வலி,’ ‘மண்டையிடி’ என்று ஏதாவது வியாதி சொல்வார். நானும் அம்மாவைக் கவனித்துக்கொள்ள வீட்டிலேயே தங்கிவிடுவேன். இப்படிப் பலமுறை நடந்தபின், என் தாயிடம் அழுதேன், ‘நான் கல்யாணம் பண்ணிக்கொள்ளக்கூடாது என்றால் வெளிப்படையாகச் சொல்லிவிடு,’ என்று”. தந்தையை இழந்த பெண். சம்பாதிப்பவள். மகளும் தன்னைவிட்டுப் போய்விடுவாளோ என்ற பயம் வந்திருக்கலாம் தாய்க்கு. கட்டுப்படுத்துதலும் வதையே, அன்பில்லை! நான்கு வயதுச் சிறுவன் ராமு ஒரு பெரிய தட்டில் குவித்து வைத்திருந்த சாதத்தைச் சாப்பிட்டுவிட்டு, “அம்மா! முடித்துத்தேன்!” என்று தான் முடித்துவிட்டதைப் மகிழ்ச்சியுடன், மூச்சிறைக்க, அறிவித்தான். தான் அம்மாவை மகிழ்விக்க வேண்டுமானால் அவள் என்ன, எப்போது, எவ்வளவு உணவளித்தாலும் சாப்பிட வேண்டும் என்று அவன் மனதில் பதிந்திருந்தது. பள்ளிக்கூடத்தில், ‘குண்டு’ என்று நண்பர்கள் கேலி செய்யும்போது, ராமுவைப்போன்ற குழந்தைகள் ஒடுங்கிப்போகிறார்கள். ராமுவைத் தற்காப்புப் பயிற்சியில் சேர்த்தார்கள். வளைய, ஓட, குதிக்க, உதைக்க, தாண்ட என்ற எல்லாவித பயிற்சிகளும் பெற உடல் ஒத்துழைக்க வேண்டாமா! அவனையொத்தவர்களைவிட மிகவும் கீழ்நிலையில்தான் இருக்க முடிந்தது. அவர்கள் கேலியாகச் சிரிக்க, அந்த முயற்சியில் ஆர்வம் போயிற்று. பதின்ம வயதில், ராமுவை மருத்துவரிடம் அழைத்துப்போனார்கள் – ‘ஒரே இடத்தில் உட்கார்ந்திருக்கிறான். படிப்பதைத் தவிர வேறு எதையும் செய்ய முடிவதில்லை!’ என்று. ‘அவன் பருமனாக இருப்பதைப்பற்றியே பேசாதீர்கள். மனம் நொந்துவிடுவான்!’ என்றாராம். (தாய் என்னிடம் கூறியது). ‘அன்பான கவனிப்பு’ என்ற பெயரில் அளவுக்கு மீறி உணவளித்தது தன் தவறு என்று அவள் ஒப்புக்கொள்ளத் துணியவில்லை. தாம் சொல்வதைக் கேட்டு அப்படியே நடக்கும் குழந்தைகள்தாம் தம்மீது அன்பு செலுத்துபவர்கள் என்ற தவறாக நினைத்துக்கொண்டிருக்கிறார்கள் கட்டுப்படுத்தும் தாய்மார்கள். ஆகவே, பல குழந்தைகள் இருந்தாலும், அவர்களில் ஒரு குழந்தை துணிந்து, தன்னிச்சைப்படி நடக்கும்போது, தன்னை அவள் மதிக்கவில்லை என்ற ஆத்திரம் எழுகிறது. மாறாக, தங்களைச் சார்ந்தவர்களைச் சற்று சுதந்திரமாக விட்டு, அவர்களுடைய போக்கிற்கு மதிப்புக் கொடுத்து நடத்தினால் அன்பும் மரியாதையும் நிலைக்கும். ஆனால், தங்களிடம் குறை இருக்கிறது என்று யார்தான் ஒப்புக்கொள்வார்கள்! ஏமாறாதே, ஏமாற்றாதே விழாக்காலங்களில் துணிக்கடைகளிலும் பேரங்காடிகளிலும் ‘மலிவு விற்பனை’ என்று பிரமாதமாக விளம்பரப்படுத்துவார்கள். 70% தள்ளுபடி என்று போட்டிருந்தால், யாருக்குத்தான் ஆசை எழாது? கூட்டம் அலைமோதும். சாப்பாட்டுச் சாமானாக இருந்தால், இன்னும் எத்தனை நாட்களுக்கு அல்லது மாதங்களுக்குப் பயன்படுத்த முடியும் என்று பார்க்கத் தோன்றினால் பிழைத்தோம். இல்லாவிட்டால், ‘ஏமாத்திட்டான் கடங்காரன்!’ என்று திட்டுவதோடு திருப்தி அடைய வேண்டியதுதான். இப்படி ஏமாறுவதும், ஏமாற்றுவதும் பேராசையால்தானே! சே! இவ்வளவுதானா இவ்வுலகம்! உலகில் எல்லாருமே நல்லவர்கள் இல்லை என்று ஒப்புக்கொள்வது ஆரம்பத்தில் வருத்தத்தை விளைவிக்கலாம். நாளடைவில், இந்த உண்மையை ஏற்கும்போது ஏற்படும் அறிவு முதிர்ச்சியால் பிறரைச் சமாளிக்கும் வழிகள் புலப்படுகின்றன. இருந்தாலும், நாம் ஏமாறுவதை அறவே தவிர்க்க முடிவதில்லை. தர்மம் தலைகாக்கும் ‘அறம் செய்ய விரும்பு’. நமக்குக் கற்பிக்கப்பட்ட முதல் பாடம். இதைத்தான் சுயநலக்கார்கள் எப்படியெல்லாம் தமக்குச் சாதகமாகப் பயன்படுத்திக்கொள்கிறார்கள்! கோயில்களுக்கு வெளியே வரிசையாக அமர்ந்திருக்கும் பிச்சைக்காரர்கள் இதற்குச் சாட்சி. கோலாலம்பூரில் ஒரு தைப்பூசத் திருவிழாவின்போது, அங்கக் குறைபாடுள்ள பிச்சைக்காரர்கள் கிட்டத்தட்ட நூறுபேர் அமர்ந்திருந்தார்கள். இதற்கென சில தீய அமைப்புகளால் வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டவர்கள்! கதை குண்டர் கும்பலுக்குத் தகுதியான ஆளைச் சிறு வயதிலேயே இனம் கண்டுகொள்கிறார்கள். ஒரு பதின்ம வயதுப்பையன் தன் அனுபவத்தை என்னிடம் விவரித்தான்: “எங்க வீடு புறம்போக்கில இருன்ச்சு. எப்பவும் வீட்டு வாசல்ல வ்ளாடிட்டிருப்பேன். ஒருக்கா நாலஞ்சு பசங்க என்னை அடிக்க ஆரம்பிச்சாங்க. பக்கத்து டீக்கடையில ஒரு தமிளாள் இருந்தாரு. நான் ’அண்ணே! அடிக்கிறாங்கண்ணே!’ன்னு கூவினேன். அவரு, ’டேய்! சின்னப்பய, பாவம்! அவனை விடுங்கடா!’ன்னு சத்தம் போட்டாரு. அவங்க பயந்து ஓடிட்டாங்க. எனக்கு அப்போ புது பலம் வந்தாப்போல இருன்ச்சு. அப்றமேல அவரு சொன்னதையெல்லாம் கேக்க ஆரம்பிச்சேன்!” ஏழைப்பையன். படிப்பிலும் நாட்டமில்லை. அவனுக்குப் பத்து வயதிலேயே மதுப்பழக்கத்தை ஏற்படுத்தி, பிறரை அடித்துத் தன் வழிக்குக் கொண்டுவருவதையெல்லாம் கற்பித்தார் அந்த ‘அண்ணன்’. அவருடைய ஆணைப்படிதான் முதலில் தன்னை அடித்தார்கள் என்பது அவனுக்குப் புரியவேயில்லை. “குடிச்சா, வீட்டுக்குத் தெரியாதா?” என்று கேட்டேன். “பேசாம போய் படுத்துத் தூங்கிடுவேன். ’என்னடா இப்படித் தூங்கறே?’ன்னு அம்மா கேப்பாங்க. அவ்வளவுதான்!” ஐந்து வருடங்களுக்குப்பின், ஒரு பாதிரியாரின் உரை கேட்டுத் திருந்தியதாகச் சொன்னான். “சின்னப்பிள்ளையா நான் இருந்த காலம் பாழாப்போச்சு. நாங்க சம்பாதிச்சுக் குடுத்ததிலே, பாஸ் பென்ஸ் கார்ல போறாரு!” என்றவனின் குரலில் பெருங்கசப்பு. தான் இப்படி ஏமாந்துவிட்டோமே, தன்னை இப்படியுமா ஏமாற்றுவார்கள் என்ற ஆத்திரம் அவனுக்கு அடங்கவேயில்லை. காவல் துறையினரிடம் தண்டனை பெற்றிருக்கிறான். பேச்சு குளறுகிறது. மந்தமாக இருக்கிறான். பெற்றோரிடம் நடந்ததை வருத்தத்துடன் கூறி, தான் திருந்தி வாழ விரும்புவதாகத் தெரிவித்ததும், அவர்கள் அவனை மறுபேச்சின்றி ஏற்றார்கள். “நல்லவேளை, ஒன்னைத் திட்டலியே!” என்றேன். “என்னோட கூட்டாளி ஒத்தனுக்கு அப்படி ஆயிடுச்சு. ’நீ எங்க புள்ளையே இல்ல!’ன்னு வீட்டில வெரட்டிட்டாங்க. அவன் திரியும் (திரும்பவும்) அந்தக் கும்பல்லே சேர்ந்துட்டான்!” என்றான், யதார்த்தமாக. தந்தை இவனை ஒரு வேலையில் சேர்த்தார். ஆனால், ஏமாற்றமும், நாட்பட்ட மதுப்பழக்கத்தால் மூளையில் ஏற்பட்ட பாதிப்பாலும், கார் ரிப்பேர் செய்யும் இடத்தில் முதலாளியின் மண்டையை ஒரு பெரிய ஆயுதத்தால் தாக்கி இருக்கிறானாம். இதைச் சொல்லிவிட்டு, எதையோ சாதித்ததுபோல் அவன் சிரித்தபோது, எனக்குப் பெரும் அதிர்ச்சியாக இருந்தது. ஏன் ஏமாந்தான்? இப்பையன் உலகம் அறியாதவன். பழக்கமே இல்லாத ஒரு புதிய நபர் தனக்குப் பரிந்து ஒரு நன்மை செய்தபோது, அவரை முழுமையாக நம்பலாம், நமக்குக் கெடுதல் செய்யமாட்டார் என்று தோன்றிவிட்டது. வீட்டிலும் அவன்மேல் அதிக கவனம் செலுத்தவில்லை. பத்து வயதுச் சிறுவன் இரவில் நேரங்கழித்து வீட்டுக்கு வந்து, தூங்கியபடியே இருந்தால், உடலில் ஏதோ கோளாறு இருக்கலாம் என்று மருத்துவரிடம் அழைத்துப் போயிருக்கமாட்டார்களா? நம்மைப்போலவே பிறரும் நல்லவர்களாக இருப்பார்கள் என்ற நம்பிக்கை ஒருவருக்கு இருக்கும்வரை ஏமாறத்தான் செய்வார். ‘பணக்காரர் ஆவது எப்படி?’ என்பதுபோன்ற புத்தகங்களை வெளியிடுவோர்தாம் பணக்காரர் ஆகிறார்கள். அவைகளைப் படித்து எத்தனைபேர் செல்வந்தர்களாக ஆகியிருக்கிறார்களோ! குழப்பத்தால் நமக்குத் தெரியாததை நம்புகிறோம். மனோதிடம் இல்லாதவர்களை அச்சுறுத்தி, அதனால் ஏமாற்றி, தமக்குச் சாதகமாகப் பயன்படுத்திக்கொள்வர் பலர். பள்ளிக்கூடக் கதைகள் 1 எங்கள் பள்ளியில் உதவித் தலைமை ஆசிரியையாக இருந்தவள் எல்லாரையும் படாதபாடு படுத்தினாள்.அவளுக்கு மேலதிகாரியாக வேறொருத்தி வரவிருந்ததைத் தடுக்கப் பெருமுயற்சி செய்தாள். “வரப்போகிறவள் புலிமாதிரி – கொடுமைக்காரி! உங்களுக்குத் தெரியுமா?” என்று பயமுறுத்திவிட்டு, “எனக்கும்தான் பதவி உயர்வு கிடைத்தாக வேண்டும்,” என்று தன்னிரக்கத்துடன் கூற, பயந்த அனைவரும் கல்வி இலாகாவிற்கு ஒரு மனு அனுப்பினார்கள் – இவளேதான் தலைமை ஆசிரியையாக வேண்டும் என்று. நான் மட்டும் கையெழுத்துப் போட மறுத்துவிட்டேன். ‘நாம் இவளை வேண்டாம் என்று சொல்லி, அப்புறம் இவளே பதவிக்கு வந்தால், இன்னும் கஷ்டப்படுத்துவாளே! வரப்போகிறவள் இன்னும் மோசமாக இருந்தால்?’ என்று சில ஆசிரியைகள் கூற, எனக்கு ஒரே ஆத்திரம். மனிதர்கள் ஏன் இவ்வளவு பயந்த சுபாவமாக இருக்கிறார்கள்! (நல்ல வேளை, அவளை வேலை மாற்றம் செய்துவிட்டு, பதவி உயர்வு கொடுத்தார்கள். புதிய இடத்தில் அவள் அதிகாரம் செல்லவில்லை, ஆசிரியர்கள் அவளை மிரட்டிவைத்தார்கள் என்று அறிந்து மகிழ்ந்தோம்). 2 ஒரு நோட்டுப் புத்தகத்தைத் திருத்துகையில், என் கையெழுத்து வேறுமாதிரி போடப்பட்டிருப்பதுகண்டு சந்தேகம் எழுந்தது. பல பக்கங்களில் இதேபோன்று இருந்தது. அட்டையில் மாணவனின் பெயரைப் பார்த்துவிட்டு, அவன் இருந்த திசையை நோக்கினேன். அவன் – ரசாலி –கண்கொட்டாமல், என்னையே சற்று பயத்துடன் பார்த்துக்கொண்டிருப்பது தெரிந்தது. அவனை அழைத்து, “இது உன் கையெழுத்துதானே?” என்று கேட்டதுமே ஒப்புக்கொண்டான், அழுகையுடன். (அதிகம் ஏமாற்றிப் பழகவில்லை போலிருக்கிறது!) “ஏன் இப்படிச் செய்தாய்?” என்று துருவ, “எல்லாரும் கொடுத்தபோது, நான் எழுதி முடிக்கவில்லை!” என்று பதிலளித்தான் ரசாலி. நான் அவனிடம் மேற்கொண்டு எதுவும் பேசாது, வகுப்பில் பொதுவாக, ’ஏமாற்றினால் எப்போதாவது மாட்டிக்கொள்வீர்கள்,” என்று எச்சரித்தேன். 3 கமலா, விமலா என்ற இரு மாணவிகள் தம் மதிப்பெண் அட்டைகளைத் திறந்து வைத்துக்கொண்டு, மாடிப்படி அருகே நின்றுகொண்டிருந்தார்கள் – மணிக்கணக்கில். “எதற்குத் தண்டனை?” என்று வேறோரு ஆசிரியையிடம் விசாரித்தேன். “குறைந்த மதிப்பெண்களை வாங்கி, அவைகளை வெள்ளை மை (correction liquid) உபயோகித்து அழித்து, தேர்ச்சி பெற்றதுபோல் வீட்டில் காட்டியிருக்கிறார்கள் – வசவுக்கும், அடிக்கும் பயந்து!” என்றாள் சிரிப்புடன். “திரும்பவும் திருத்தியிருக்கிறார்கள்!” ஏமாற்றத் தோன்றும் அறிவை நல்லபடியாகப் பயன்படுத்தி இருக்கலாமே! ஏமாற்றப் பழக்குவது நாம் முதலில் ஏமாற்றுவது குழந்தைகளை. சில சமயம் பயமுறுத்துகிறோம். நம்மைப் பிறர் புகழ்ந்தாலும், அவரை நமக்குப் பிடித்துப்போக, அவர் சொற்படி நடக்க முற்படுகிறோம். ‘சமர்த்தா சாப்பிடு. இல்லாட்டா, பூச்சாண்டிகிட்ட பிடிச்சுக் குடுத்துடுவேன்!’ என்று பயமுறுத்துவதை குழந்தை நம்பலாம். ஆனால் எந்தத் தாயாவது குழந்தையைப் பிறர் பிடித்துக்கொண்டு போவதை அனுமதிப்பாளா? மனமறிந்து பொய் சொல்கிறாள். உலகப்போக்கை உணரும் வயது வராத குழந்தையும் தாயின் பேச்சை நம்புகிறது. கதை எனது இடைநிலைப் பள்ளிநாட்களில் சொல்லிவைத்தாற்போல், பல ஆசிரியைகள், கேட்பார்கள்: “உலகிலேயே மிகச் சிறந்த நாடு எது?” “இந்தியா!” என்று மகிழ்ச்சியுடன் கோரஸ் ஒலிக்கும். நான் மட்டும் மௌனமாக இருப்பேன். ஏனெனில், எனக்குப் பல நாடுகளில் வாழ்ந்த பழக்கம் கிடையாது. அவைகள் எப்படி இருக்கும் என்றே தெரியாத நிலையில், எப்படி நம் நாட்டுடன் ஒப்பிட முடியும் என்று என் அறிவு விவாதித்தது. அடிக்கடி இப்படிக் கேட்பதால் பள்ளிச்சிறுமிகளின் நாட்டுப்பற்று வளர்ந்துவிடும் என்று ஆசிரியைகள் நினைத்திருப்பார்கள். ஆனால், நமக்குப் போதிக்கப்பட்டபடி நாடு அப்படி ஒன்றும் மேன்மையானது இல்லை என்று புரியவந்ததும் விளையும் ஏமாற்றம் கசப்பில் முடிகிறது. எவர் சொல்வதையும் நம்பிவிடக்கூடாது என்ற உறுதி பிறக்கிறது. எவரையும் நம்பாது இருப்பது ஏமாற்றத்தைத் தவிர்க்கலாம். ஆனால், இக்குணம் ஒருவரைத் தனித்துவிடும். இல்லையேல், தாமும் பிறரை ஏமாற்றும் வழிகளை ஆராய்வார். பிறர் சொல்வதில் உண்மை இருக்கிறதா என்று கூடியவரை ஆராய்ந்து, புகழ்ச்சிக்கு மயங்காது இருந்தாலும் ஏமாறுவதை ஓரளவு தவிர்க்கலாமே! ‘என்ன மனிதரோ! யாருடனும் ஒத்துப்போகாத ஜன்மம்!’ அந்த ஒத்துப்போகாத மனிதர் – கோபு – எப்போதும் தன் அறையில் படித்துக்கொண்டு இருப்பார். அதன்மூலம் புதிய விஷயங்களைக் கற்பார். இல்லாவிட்டால், ஏதாவது சாதனத்தைப் பிரித்து, மீண்டும் பொருத்துவதில் முனைவார். மனைவி மீனாவோ, “யாராவது பேசுவதைக் கேட்டுக்கொண்டே இருந்தால், எனக்கு சாப்பாடு, தூக்கமே வேண்டாம்!” என்னும் வர்க்கம். பெரிய குடும்பத்தில் வளர்ந்ததாலோ, என்னவோ, இவளுக்கு ஓயாத சத்தம் ஒரு பொருட்டில்லை. சிறிது நேரம் தனியாகக் கழிக்க நேர்ந்தால், தவித்துப்போய்விடுவாள். யாருடைய குரலையாவதைக் கேட்டாக வேண்டும் – அது தொலைகாட்சி அல்லது தொலைபேசிவழி இருந்தாலும்! படிப்பது என்ன வழக்கமோ! கோபு வீட்டில் எப்போதும் ஏதாவது படித்துக்கொண்டிருப்பார். “வயதான காலத்திலே அக்கடா என்று இருக்காமல், அப்படி என்ன படிப்போ!” என்று கண்டனம் செய்பவளை அமைதியாக எதிர்ப்பார் கோபு: “பில் கேட்ஸ் (Bill Gates) வாரத்தில் ஐந்து மணி நேரமாவது படிச்சு புதுசு புதுசா எதையாவது கத்துக்கறார், தெரியுமா?” மீனா அயல்நோக்கு கொண்டவள். படிக்கும் பழக்கம் இருப்பவர்களுக்குப் பிற மனிதர்களுடன் தொடர்பு அற்றுப்போய்விடும், படிப்பதெல்லாம் பள்ளி, கல்லூரி நாட்களில் பரீட்சையில் தேர்ச்சி பெறத்தான் என்று சாதிக்கும் கட்சி. ஆகையால் அமைதியையும் மௌனத்தையும் நாடும் கணவரது குணம் புரியாமல் போனதில் ஆச்சரியம் ஒன்றுமில்லை. ஏன் படிக்கணும்? படிப்பதால் மூளைக்கு வேலை அளிக்கப்படுகிறது. வயதானவர்களுக்குச் இயற்கையிலேயே ஏற்படும் மறதிசார்ந்த நோய்கள் அதிகம் படிப்பவரை அணுகுவதில்லை. ஓயாமல் கதை புத்தகங்கள் படிப்பவர்கள் கதாபாத்திரங்களுடன் தம்மை ஐக்கியப்படுத்திக்கொள்வார்கள். இதனால் தம்மைத் தாமே புரிந்துகொள்வதும் சிலருக்குச் சாத்தியமாகிறது. உள்நோக்கும் அயல்நோக்கும் உள்நோக்கு உடையவர்களுக்கு தனிமையில் செய்யக்கூடிய காரியங்களில்தான் நாட்டம் போகும். உடலில் இறுக்கமின்றி ஓய்வாக இருக்க படிப்பது, எழுதுவது, வரைவது, வாத்தியம் இசைப்பது போன்ற ஏதாவது ஒரு காரியத்தில் முழுமூச்சுடன் ஈடுபடுவார்கள். கல்யாண வீடு போன்ற இரைச்சல் அதிகமாக இருக்கும் இடங்களுக்கு இவர்களை அழைத்துப்போனால், மரியாதைக்குக் கொஞ்சம் பேசுவார்களே தவிர, சீக்கிரமாகவே உடலும் மனமும் சோர்ந்துபோக, சிறு குழந்தைகள்போல், ‘போகலாமா?’ என்று நச்சரிப்பார்கள். இப்படிப்பட்டவர்களுக்குப் பிற மனிதர்களுடன் தொடர்பு அநாவசியம் என்பதில்லை. ஆனால் சந்திப்பவர்கள் அனைவருடனும் ‘என்றைக்காவது உதவும்!’ என்ற மனப்பான்மையுடன் தோழமை கொள்வது இவர்களுடைய தன்மை இல்லை. தம்மைப் புரிந்துகொண்டு ஊக்குவிக்கும் சிலருடன் ஆழ்ந்த நட்புடன் பழகுவார்கள். பொதுவாக, ஒத்த மனதுடைய ஒருவர் எதிரே இருந்தால், அவருடன் நிறையப் பேசுவார்கள். பல தம்பதிகள் இப்படித்தான் மாறுபட்ட குணத்தவராக இருக்கிறார்கள். ‘இவர் ஏன் என்னைப்போல் இல்லை?’ என்ற எரிச்சல் அயல்நோக்குடையவர்களுக்கு எழுகிறது. குட்டிக்கதை அவளும் பாடகிதான். ஆனாலும், ஒரே இடத்தில் அமர்ந்து நெடுநேரம் வயலின் வாசிக்கும் கணவரை ‘கரையான்!’ என்று பழிப்பாள்! தன்மேல் முழுமையான கவனம் செலுத்தாமல், வேறு எதிலோ ஆழ்ந்திருக்கிறாரே என்ற சிறுபிள்ளைத்தனமான ஏக்கத்தில் பிறந்த கசப்பு அது. அவரோ, வாய்திறவாது, தம் காரியத்திலேயே கண்ணாக இருப்பார்! பலகீனமானவர் என்பதில்லை. தான் மனைவியிடமிருந்து வித்தியாசப்பட்டிருக்கிறோம், மாறினால் மனவருத்தம்தான் மிகும் என்பதைப் புரிந்துகொண்ட விவேகம். கதை மைமூனாவுக்கு அடிக்கடி வீட்டிலுள்ள நாற்காலி, சோபா போன்றவைகளை இடம் மாற்றி, மாற்றி வைத்துக்கொண்டே இருக்கவேண்டும். கணவர் நாவிக்கோ (NAWI) மாறுதலே பிடிக்காது. தான் பேசுவதைவிட பிறர் பேசுவதில் ஆழ்ந்த கவனம் செலுத்துவார். யாராவது கேட்டால்தான் நாவி தன் அபிப்ராயத்தைக் கூறிவாரேயொழிய, தன் ‘குரலைக் கேட்பதற்கென்று’ பேசுவது இவரால் இயலாத காரியம். அதாவது, பலர் கூடியிருக்கும் சபையில் தனித்திருப்பவர். எதையும் தீர்க்கமாக யோசித்துத்தான் முடிவெடுப்பார். அசாத்திய திறமை இருந்தாலும், எல்லாரும் தன்னைக் கவனிக்கவேண்டும் என்ற துடிப்பு கிடையாது. மீனா மற்றும் மைமூனாவை ஒத்தவர்கள் பலருடன் பழகினாலும், அவர்களுடன் நெருக்கம் இருக்காது. கவனக்குறைவு வேறு! இத்தகையவர்களுக்கு பிறரைப்பற்றி அறிவதில்தான் ஆர்வம். எப்போதும் பேசிக்கொண்டும், பிறர் பேசுவதைக் கேட்டுக்கொண்டும் இருப்பதால், ‘நன்றாகப் பழகுகிறாள்!’ என்று பிறர் பாராட்டலாம். ஆனால், மனமும் உடலும் சோர்ந்துவிடாதா! அதனால், அநாவசியமாக கோபம் எழும். எப்போதோ நடந்தவைகளை நினைத்து, எதிரிலிருப்பவருடன் காலங்கடந்து சண்டை போடுவார்கள்! தனிமை எதற்கு? நாம் இனிமையாகப் பேச, பிறர் கூறுவதை ஆழ்ந்து கவனிக்க வேண்டுமென்றால், தனிமையில் கழிக்க சிறிது நேரத்தை ஒதுக்க வேண்டுவது அவசியம். உடலுக்குத் தேவையான ஓய்வு அப்போது கிடைத்துவிடுகிறது. புகழ்பெற்ற நாவலாசியர்களைக் கேட்டால், ‘எனக்கு எழுத வருகிறது. எழுதுகிறேன். ஆனால் தனிமையில் பல நாட்கள், பல மணி நேரத்தை செலவிட வேண்டியிருப்பது கொடுமை!’ என்று அலுத்துக்கொள்வார்கள். இப்படிச் சலித்துக்கொள்பவர்களுக்கு கற்பனை வரண்டுவிடாதா! கற்பனை வரட்சியிலிருந்து மீள சில வழிகள் இரவில் தூங்குமுன், அடுத்து என்ன எழுதுவது, இந்தக் கதாபாத்திரம் எப்படி யோசிக்கும் என்ற கேள்வியை நமக்குள் எழுப்பிவிட்டுத் தூங்கினால், மறுநாள் தொடர்ச்சியாக மீண்டும் எழுத இயலும். அதேபோல், யோகா பயின்றால், உள்மனதில் ஆழமாகப் பதிந்து போயிருப்பவை – நாம் எப்போதோ கண்டது, கேட்டது எல்லாம் மேலே எழ, ஒரு நல்ல தீர்வு கிடைக்கும். அடுத்து என்ன செய்ய வேண்டும் என்பது புலனாகும். தியானமும் யோகா மாதிரிதான். ‘இம்மாதிரியான தருணங்களில் எவரும் வெறுமையாக உணர்வது கிடையாது. மனம் அமைதியாக இருக்கும்,’ என்பார்கள் உள்நோக்குடையவர்கள். மேலும், மனம் பழைய அனுபவங்களை அசைபோட, செய்த தவற்றை தவிர்க்கும் வழிகள் புலனாகும். அடுத்து என்ன செய்ய வேண்டும் என்ற தெளிவும் பிறக்கும் என்பதை நடைமுறையில் கண்டிருக்கிறேன். அயல் + உள் நோக்குபவர்கள் மிகச் சிலர் இருவித குணங்களையும் கொண்டிருப்பர். இவர்களுக்குத் தனிமையும் பிடிக்கும், பிறருடன் பழகுவதும் கைவரும் குணம். பல சாதனையாளர்கள் இத்தன்மை கொண்டவர்கள்தாம். இவர்களுடைய கலகலப்பான சுபாவத்தை ஒரு முறை பார்த்து ரசித்தவர்கள், அதனால் அகமகிழ்ந்து, எப்போதும் அவர்களை மகிழ்விக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்புடன் நடந்துகொள்வார்கள். இவர்களோ, கார் பேட்டரியை அவ்வப்போது சார்ஜ் செய்வதுபோல், எப்போது தனிமையை நாடவேண்டும் என்று புரிந்துவைத்திருப்பவர்கள். அதனால், சோர்வு அதிகரிக்குமுன் விலகிவிடுவார்கள். ‘மாறிப்போயிட்டா!’ என்று சற்று ஏக்கத்துடன் இவர்களைக் குறிப்பிடுகிறவர்களுக்கு இவர்களுடைய தேவை, அது என்னவென்று இவர்கள் புரிந்துவைத்திருப்பது, புரிவதில்லை. மனிதர்கள் பலவிதம். எல்லாரும் நம்மைப்போலவே இருக்கவேண்டும் என்று எதிர்பார்ப்பது நடக்கிற காரியமா? இதற்காக கோபமும், மனவருத்தமும் கொள்வது சக்தியை விரயமாக்கும் முயற்சிதான். சரியான துணைதானா? எதிர்மறையான குணமிருப்பவர்கள்தான் முதலில் ஈர்க்கப்படுகிறார்கள். இருந்தாலும், நாளடைவில், ‘இவள் ஏன் தன்னைப்போல் இல்லை?’ என்ற எரிச்சல் உண்டாகிறது. இம்மாதிரியான சண்டையைத் தவிர்க்க ஒரு சாரார் தம்மை மாற்றிக்கொள்கிறார்கள். இறுதியில் விரக்திதான். சிலர் மாற மறுத்து, தம் போக்கிலேயே நடக்க முற்படுகிறார்கள். ‘சண்டை வருமே?’ என்கிறீர்களா? எந்தக் குடும்பத்தில்தான் எப்போதும் அமைதி நிலவுகிறது! அத்துடன், ‘மாற்ற முடியாது!’ என்று புரிந்துபோனதும், அடங்கி விடுவார்கள். இம்மாதிரியான குழப்பங்களைத் தவிர்க்க, ஒரேமாதிரியான குணம் உடையவர்கள் ஒன்று சேர்ந்தால்தான் இல்வாழ்க்கையில் ஒற்றுமை நிலவும் என்கிறார்கள் உளவியல் நிபுணர்கள். குணத்திற்கேற்ற தொழில் குடும்ப வாழ்க்கையில் மட்டுமில்லை, ஒருவர் தேர்ந்தெடுக்கும் தொழிலும் அவரது குணத்திற்கு ஏற்றவாறு இருக்கவேண்டும். கதை இயற்கையிலேயே கூச்ச சுபாவம் கொண்டவர் கமலநாதன். இவருக்கோ, பலருடன் பழக வேண்டிய வேலை! தடுமாற்றம் ஏற்படுவதைத் தவிர்க்க முடியவில்லை. தனக்குத் தைரியம் போதவில்லை என்று முடிவெடுத்து, மது அருந்த ஆரம்பித்தார் கமலநாதன். அதன்பின், பழகுவதில், அவுட்டுச் சிரிப்புச் சிரிப்பதில் கஷ்டம் இருக்கவில்லை. ஆனால், முரட்டுத்தனமும் சேர்ந்துவர, அவருடைய குடும்பத்தினர்தாம் அவரை அனுசரித்துப் போகச் சிரமப்பட்டார்கள். பல வருடங்கள் கழித்து, ‘என் உத்தியோகத்தால் கெட்டுப்போனேன்!’ என்று புலம்புகிறார். அவரது சுபாவத்துக்கு ஏற்றபடி, தனித்துச் செய்யும் உத்தியோகத்தில் அவர் ஈடுபட்டிருந்தால், நிம்மதியும், நிறைவும் கிடைத்திருக்கும். வெற்றிகளும் குவிந்திருக்கும். நாம் எத்தன்மையர் என்று புரிந்துகொண்டால், பிறரை மகிழ்ச்சிப்படுத்துவதற்காக மாறி, நம்மையே வருத்திக்கொள்ள வேண்டியிருக்காது. உடனே வேண்டும்! சின்னஞ்சிறு குழந்தை பசியால் வீறிட்டு அழும். பால் கிடைக்கும்வரை அழுதுகொண்டே இருக்கும். அதன் தேவை உடனுக்குடன் நிறைவேற்றப்பட வேண்டும். ‘பொறுமையாகக் காத்திருந்தால், அம்மா தானே பால் கொடுப்பாள்!’ என்ற எண்ணம் அதற்குக் கிடையாது. ‘குழந்தை அழுது, அழுது விறைச்சுப் போயிடும், பாவம்!’ என்று தாய் விரைவதும் இயற்கை. ஆனால், வளர்ந்தபின்னும் சிலருக்கு நினைத்தது எதுவும், ‘உடனே வேண்டும்!’ என்ற மனப்பான்மை இருந்தால், அவர்கள் வளரவேயில்லை என்றுதானே கூறவேண்டும்! கதை ‘ஐம்பது வயதிலேயே நம் தோற்றம் முதுமையைக் காட்டுகிறதே!’ என்ற அயர்ச்சி அந்த செல்வந்தருக்கு. ஓர் அயல்நாட்டிற்குப்போய், ‘பிளாஸ்டிக்’ அறுவைச் சிகிச்சைமூலம் உடலின் பல பாகங்களையும் சீர்படுத்திக்கொண்டார் – அடுத்தடுத்த நாட்களில்! ஆறாவது நாளில் தமது நாடு திரும்பியவர் அந்தப் புதிய ‘இளமையை’ அனுபவிக்க முடியவில்லை. அடுத்த நாளே இறந்துபோனார். ஓர் அறுவைச் சிகிச்சை முடிந்தபின், அதற்கடுத்த நாளே இன்னொரு பாகத்திலும் பண்ணிக்கொள்ள அவசரப்பட்டதன் விளைவோ? அவருடைய சிகிச்சை முடிந்தாலும், உடல்நிலை சீராகும்வரை மருத்துவமனையில் தங்கியிருந்து, தகுந்த கவனிப்புடன் இருந்திருக்க வேண்டும் என்று மருத்துவர்கள் எச்சரித்ததை அலட்சியம் செய்திருப்பாரோ? என்னதான் அவாவும் உத்வேகமும் இருந்தாலும், பொறுமை இருந்திருந்தால் இம்மாதிரியான வேண்டாத விளைவுகளைத் தவிர்க்கலாமே! பல ஆயிரங்கள் செலவழித்துவிட்டு, பலனை அனுபவிக்காமலே போய்விட்டார், பாவம்! யாருக்கு அவசரம்? ஆரோக்கியக் குறைவால் அவதிப்படுகிறவர்களுக்கு. அன்பான சூழலில் வளரும் பாக்கியம் கிட்டாது, போட்டி போட்டுத்தான் எதையும் பெற முடியும் என்ற நிலைக்குத் தள்ளப்பட்டிருந்தவர்களுக்கு. இவர்கள் விரைவாக உணர்ச்சிக் கொந்தளிப்புக்கு ஆளாகிறார்கள். வேண்டியதெல்லாம் உடனுக்குடன் கிடைத்துவிட வேண்டும். இல்லாவிட்டால், ஆத்திரம்தான். ‘நடக்கக்கூடாதது நடந்துவிட்டால்?’ என்ற பயம் இவர்களைத் தொடர்ந்து வரும். ‘நாமும் இறந்துவிடுவோமே!’ என்று இருபது வயதில் உறைக்கும்போது எழும் அச்சத்தால் பொறுமை இழக்கிறவர்களுக்கு. அவர்களுடைய தேவைகள், ஆசைகள் உடனே நிறைவேற வேண்டும். அப்படி நடக்காவிட்டால், மன இறுக்கம் கொண்டு, முகத்தைத் தூக்கி வைத்துக்கொள்வார்கள். வித்தியாசமானவர்கள் சிலரே! இப்போது உல்லாசமாகப் பொழுது கழியாவிட்டாலும் பரவாயில்லை, சிறிது காலம் சிரமப்பட்டால், பிற்காலத்தில் வாழ்க்கை சற்று எளிதாக இருக்குமே என்ற அறிவு எத்தனை பேருக்கு இருக்கிறது! பொதுவாக, அறிவுகூர்மை உடைய சிறுவர்கள் உடனடியான வெகுமதியை எதிர்பார்ப்பதில்லை. இவர்களுக்கு எதிர்காலத்தை எப்படிக் கழிக்க வேண்டும் என்ற தீர்மானம் இயற்கையிலேயே அமைந்திருக்கிறது. ‘வீட்டில் எல்லாரும் திரைப்படம் பார்க்கப்போனால் போகட்டும், எனக்கு அடுத்த வாரம் வரப்போகும் பரீட்சைக்குப் படிக்க வேண்டும்!’ என்ற திடசித்தமும், சுயகட்டுப்பாடும் உள்ளவர்கள்தாம் முன்னேறுகிறார்கள். இளமையில் நேரத்தைச் சரியான முறையில் செலவிட்டால், பிற்காலத்தில் பல வருடங்கள் எளிதான, குறையற்ற வாழ்க்கை அமையும் என்று இவர்கள் புரிந்து வைத்திருக்கிறார்கள். உடன் வருமாறு பிறர் வற்புறுத்தினாலும், மரியாதையுடன் மறுத்துவிடுவார்கள். இப்படி முனைப்புடன் ஒரு காரியத்தில் ஈடுபட பொறுமை, தூரநோக்கு இரண்டும் அவசியம். அப்பா இருக்கிறாரே காப்பாற்ற! பெரும்பாலான இளவயதினர் எதையும் தீர யோசிப்பதில்லை. ‘என் செலவுக்கு எப்போதும் என் தந்தை பணம் கொடுப்பார்!’ என்று அவர்கள் சொல்லக் கேட்டிருக்கிறேன். ‘எத்தனை காலம் கொடுப்பார்? அவருக்குப்பின், உனக்கு வயதாகிவிட்டால் யார் காப்பாற்றுவார்கள்?’ என்று எதிர்கேள்வி கேட்டிருக்கிறேன். அவர்களிடம் பதிலில்லை. அதைப்பற்றி யோசிக்கக்கூட அவர்கள் விரும்புவதில்லை. ‘இன்று கேட்பதெல்லாம் கிடைக்கிறது, அது போதாதா!’ என்ற மெத்தனம். இப்படிப்பட்டவர்களுக்குத் தொலைநோக்கு கிடையாது. நாம் கூறும்போது சிறிது அச்சம் உண்டாகுமே ஒழிய, மாறுவது கடினம். கதை எங்கள் வீட்டுப் பணிப்பெண் தன் உறவுக்காரியான பதினைந்து வயதுப் பெண்ணைத் தனக்குப் பதிலாக அனுப்பத் தொடங்கினாள். அந்தச் சிறுமிக்குக் கல்வியறிவு புகட்ட முயன்று தோற்றோம். அவளைப் பொறுத்தவரையில், வீட்டு வேலை செய்தால், மாத இறுதியில் சம்பளம் கிடைக்கும். புதிதாக ஆடை, பிடித்த சாப்பாட்டுச் சாமான் வாங்கிக்கொள்ளலாம், திரைப்படத்துக்குப் போய் பொழுதை உல்லாசமாகக் கழிக்கலாம். படித்தால் என்ன கிடைத்துவிடப்போகிறது! இம்மாதிரியான மனப்பான்மை உள்ளவர்களின் முழுத்திறமையும் வெளிப்பட வாய்ப்பில்லை. ஆயுள் முழுவதும் ஒரே நிலையில் உழல வேண்டியதுதான். தூக்கம் வர பாடபுத்தகத்தை எடு! ‘பாட புத்தகத்தை எடுத்தாலே தூக்கம் வருகிறது. ஆனால் இரவு எந்நேரமானாலும் தொலைகாட்சியில் படம் பார்க்க முடிகிறதே! ஏன், டீச்சர்?’ என்ற என் மாணவிகள் ஒருமுறை என்னைக் கேட்டார்கள். உடனடியான மகிழ்ச்சியை எதிர்பார்ப்பதன் விளைவு இது. ‘படித்தால், பல நாட்கள் பாடங்களை நினைவு வைத்திருக்க வேண்டும். பரீட்சையில் நமக்குத் தெரிந்த பாடங்களில் கேள்வி வர வேண்டும். அப்படியே தேர்ச்சி பெற்றாலும், வேலை கிடைத்துவிடப்போகிறதா? பெண்களாக இருந்தால், ஒரு வேளை, கல்யாணமானபின் வீட்டிலேயே தங்க வேண்டிய நிலை ஏற்பட்டால்? இவ்வளவு நேரத்தைச் செலவழித்து, பல சுகங்களைத் தியாகம் செய்து படிப்பதால் என்ன பயன்?’ இப்படியெல்லாம் யோசனை போவதால் கல்வியின் அருமை புரிவதில்லை பலருக்கு. கதை “எங்கள் வீட்டுப் பணிப்பெண், நான் வீட்டில் இல்லாத சமயத்தில் முந்திரிப்பருப்பை எல்லாம் எடுத்துச் சாப்பிட்டு விடுகிறாள். அது எப்படி, ஒரு கிலோ முந்திரியை நான்கு நாட்களுக்குள் சாப்பிடுகிறாள்?” என்று அலுத்துக்கொண்டாள் என் சக ஆசிரியை, மிஸஸ் ஜோசப். “நாம் அப்படிச் செய்வது இல்லையே!” “நம்மால் எப்போதும் வாங்கித் தின்ன முடியும். அவளுக்கோ, இந்த வேலையில் நிலைத்திருக்கும்வரைதான் கிடைக்கும்!” என்றேன். சாப்பாட்டுச் சாமான்கள் என்று மட்டுமில்லை, வேறு எதிலாவது கைவைத்தால் அவமானத்துக்கு உள்ளாகலாம் என்ற அறிவு இவர்களைப் போன்றவர்களுக்குக் கிடையாது. உடனுக்குடன் தமக்குப் பிடித்ததை அடையும் வெறி கொண்டிருப்பவர்கள் படித்தவர்களாக ஆனாலும், இன்னலுக்குத்தான் ஆளாவார்கள். இப்படியா வாழ்க்கையை அனுபவிப்பது! முன்பு ஏதாவது புதிய விஷயம் கற்க வேண்டுமானால், வாசகசாலையைத் தேடிப் போகவேண்டும். இப்போதோ, வீட்டிலேயே அமர்ந்து, இணையத்தில் தேடினால் போதும். இசை, நாட்டியக் கச்சேரிகளும் அப்படித்தான். இதெல்லாம் சௌகரியம்தான் என்பதை மறுக்க முடியாது. ஆனால், எல்லாமே இப்படி நினைத்தவுடன் கிடைக்கவேண்டும் என்பது நடக்கிற காரியமா? தள்ளிப்போடு நாளை செய்யக்கூடியவற்றையும், கிடைப்பதையும் இன்றே, இப்போதே அடைய வேண்டும் என்று அவசரப்பட்டால், அரைகுறையாகத்தான் செய்ய முடியும். இழப்பிலும் முடியக்கூடும். ‘எதுவும் நினைத்தவுடன் கிடைக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு நல்லதல்ல,’ என்று பெற்றோரும், ஆசிரியர்களும் அடிக்கடி போதித்தல் பயன் தரும். வசதியான குடும்பத்தில் பிறந்த குழந்தைகளாக இருந்தால், ‘நீ இப்போது அனுபவிப்பதுபோல், அல்லது இதைவிடக் கூடுதலாக அடைய விரும்பினால், கல்வி கற்பது ஒரு சிறந்த வழி!’ என்று பெற்றோர் சுட்டிக்காட்டுவது சிறந்த பலனளிக்கும். இப்படி வளர்க்கப்பட்ட குழந்தைகள் பொறுப்புணர்ச்சியுடன் வளர்கிறார்கள். புதிய சாதனம் வேண்டும் என்று நச்சரிக்கும் இளவயதினரிடம், “நீ சம்பாதிச்சு வாங்கிக்கோ!” “போய் படி!” என்று பல வகையாக விரட்டுவார்கள் சில பெற்றோர். முதலில் ஆத்திரப்பட்டாலும், வீறாப்புடன் கவனத்தைக் கல்வியிடம் செலுத்தி, வெற்றி காண்பார்கள் பிள்ளைகள்! குறையான போதனை ‘நீ நிறையப் படித்துப் பெரிய வேலைக்குப் போகவேண்டும்!’ என்பதை மட்டும் வலியுறுத்தினர் பெற்றோர். அவர்களுடைய கனவை நிறைவேற்றினான் மகன். தான் பெரிய அறிவாளி என்ற கர்வம் மிகுந்தது. பெற்றோரைக் காப்பது தன் கடமை என்பதை உணரவில்லை. அதையும் அவர்கள் மறைமுகமாகச் சொல்லிக்கொடுத்திருக்க வேண்டுமோ? வெறும் ஏட்டுக்கல்வி மட்டும் போதுமா? பிறருடன் இணைந்து பழகுவது, எந்தக் காரியத்தை எடுத்துக்கொண்டாலும், அதைச் சிறப்பாகச் செய்வது, இயன்றவரை பிறருக்கு உதவி செய்வது – ஆகிய குணங்களையும் சிறுவயதிலிருந்தே வளர்த்தால், கண்டவருடனெல்லாம் போட்டி போடும் சுயநலமிகளாக வளரமாட்டார்கள். ‘உடனே அடையவேண்டும்’ என்ற வெறி மறைந்து, பிறரையும் புரிந்துகொள்ளும் மனப்பக்குவம் உண்டாகும். பிறகு வெற்றி பெறத் தடையேது! தாழ்த்தாதே, தாழ்ந்துபோகாதே! மனிதப்பிறவிக்குத்தான் சிறு பிராயத்திலிருந்தே எத்தனை எத்தனை உணர்ச்சிகள்! தன் குட்டித் தம்பிக்காக தாய் செலவிடும் நேரம் ஒன்றரை வயதுக் குழந்தைக்கு சலனத்தை உண்டாக்கும். கைக்குழந்தையின் கண்ணைக் குத்தப்பார்க்கும். அல்லது, போர்வையைப் பிடுங்கிக் கீழே எறியும். ஓரிரு முறை இப்படிச் செய்துவிட்டு, ‘குட்டிப் பாப்பா, பாவம்!’ என்று பிறர் புத்தி சொல்கையில், ‘ஏதோ தப்பு செய்கிறோம்!’ என்று புரிந்து, பிறரது கையைப் பிடித்து அழைத்து வந்து, தன் தகாத செயலைக் காட்டும்! ‘அம்மாவுக்கு நம்மைப் பிடிக்காமல் போய்விட்டதோ!’ என்று, சொல்லத் தெரியாத கலக்கம்தான் இத்தகைய செயலுக்குக்கெல்லாம் காரணம். பொறாமை இயல்பாகவே ஒருவருக்கு ஏற்படும் குணம். யாரைப் பார்த்துப் பொறாமை? அழகு, திறமை, வெற்றி ஆகியவற்றில் ஒன்றோ, இல்லை அனைத்துமோ பெற்று, அதனால் பிறரது பாராட்டையும் பெற்றிருப்பவர்பால் பொறாமை எழுகிறது. பிறரது வெற்றியையும் பலத்தையும் பொறுக்காதவர் அவர்களுடைய பலவீனங்களைப் பரப்பி, அல்லது அவர்களைத் தாழ்த்தி, அதில் அற்பசந்தோஷம் அடைகிறார். அதனால் பிறருக்கு ஒரு நஷ்டமும் கிடையாது. அவர்தான் வேண்டாத உணர்ச்சிகளால் உடல் மற்றும் மன நலனை இழக்க நேரிடும். யார் பொறாமைப்படுகிறார்கள்? தம் திறமையை முழுமையாக உணராது, அல்லது பயன்படுத்தும் வாய்ப்பை இழந்தவர்கள். திறமையை வெளிக்கொணராது இருப்பதற்கு எத்தனையோ காரணங்களைச் சொல்லலாம் – வசதியின்மை, வளர்த்தவர்கள் ஊக்கமளிக்காது குறை கூறியே வளர்த்தது, ஆண்பிள்ளையைப் பாராட்டி, பெண்குழந்தைகளை ஒடுக்கி வைத்தல் இப்படி. இவ்வாறு வளர்க்கப்பட்டிருந்தவர்கள் தன்னம்பிக்கை குறைய, ஒடுங்கிப்போகிறார்கள். தம்மைப்போல் இல்லாத பாக்கியசாலிகளைப் பார்த்தால் எரிச்சல் எழுகிறது. ஏன் பொறாமை வருகிறது? ‘பிறர் அவரையே கவனிக்கிறார்களே!’ என்ற ஆதங்கத்துடன், ‘அவர் என்னைவிட நிறைய சாதிக்கிறாரே!’ என்ற அச்சமும் ஏற்படும்போது ஒருவருக்குப் பொறாமை எழுகிறது. தன்னையும் பிறர் அப்படி மதிக்க மாட்டார்களோ என்ற அவநம்பிக்கை எழுவதால் வயிற்றெரிச்சல். கதை சுமார் நாற்பது வருடங்களுக்குமுன் என் கதைக்குப் பவுன் பரிசு கிடைத்தது. முதல் கதை! பெருமையாக இருந்தது. டாலரை என் சங்கிலியில் கோர்த்து அணிந்து, பள்ளிக்கூடத்திற்குப் போனேன். நம்மில் ஒருத்திக்குப் பரிசு கிடைத்திருக்கிறதே என்று பலரும் மகிழ்ந்து பாராட்ட, “இரண்டு பவுன்தான் இருக்கும்!” என்ற இளக்காரமான குரல் ஒன்று எழுந்தது, ஒரு சக இந்திய ஆசிரியையிடமிருந்து. (தங்கம் மலிவாக விற்ற நாடு இது). என் மகிழ்ச்சியை எப்படியாவது குறைக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் சொன்ன வார்த்தைகள் அவை. பரிசு, பரிசுதான். சந்தையில் என்ன விலைக்குப் போகும் என்று நிறுத்தா பார்ப்பார்கள்? அவளை யாரும், என்றுமே, இப்படிப் பாராட்டியதில்லையே என்ற ஏக்கத்தின் எதிரோலி அது. சில சமயம், பல திறமைகளுடன் முன்னேறியிருப்பவர்கள்கூட இதற்கு விதிவிலக்கல்ல. ‘இவர் எவ்வளவு நல்லவர்!’ என்று அவருக்கு மிகவும் தாழ்ந்த நிலையிலிருந்தவர்கள் பூரித்தார்கள். தன்னை எப்படியும் இவர்களால் மிஞ்ச முடியாது என்று கீழே உள்ளவர்களிடம் தனது இயற்கையான நல்ல குணத்தைக் காட்டி நடந்துகொள்வார். அவர்களுக்குத் தெரியாது, அவருக்கும் பிறரது வளர்ச்சியைக் கண்டு பொறாமை மிகும், சந்தர்ப்பம் கிடைத்தபோதெல்லாம் அவர்களை மட்டம் தட்டுவார் என்று. ஒரே மனிதரிடம் இப்படி மாறுபட்ட இரு குணங்களும் இருப்பதில் அதிசயமில்லை. கதை அவருக்கு வேற்றூரில் பெரிய உத்தியோகம். தீவிர ஆன்மிகவாதி என்று சொல்லிக்கொள்வார். நிறைய கட்டுரைகள் எழுதியிருந்தார். ஏழு ஆண்டுகள் மிகுந்த பிரயாசைப்பட்டு என் தொலைபேசி எண்ணை வாங்கியதாகச் சொன்னார். (பத்திரிகைக்காரர்கள் கொடுக்க மறுத்துவிட்டார்களாம்). ஒரு முறை நேரில் சந்தித்தபோது, என்னிடம், “நீங்கள் எழுதுவதெல்லாம் அடிக்கடி வெளியாகிறதே என்று நினைத்து மகிழாதீர்கள். பந்தை மேலே, மேலே அடிக்கிறவனே அப்புறம் அதைக் கீழே தள்ளுவான்!” என்று பலமுறை கூறியது ஏனென்று எனக்கு அப்போது புரியவில்லை. ஏன் இதையே திரும்பத் திரும்பச் சொல்கிறார் என்ற குழப்பம்தான் ஏற்பட்டது. “நான் உங்கள் ரசிகன்!” என்று அறிமுகப்படுத்திக்கொண்டவர், நான் எதை எழுதவேண்டும், எப்படி எழுதவேண்டும் என்று விரிவாகப் போதிக்க ஆரம்பித்தார். “நான் ஒ..ரு கதை எழுதியிருக்கேன்!” என்று என்னிடம் பெருமையாகச் சொல்லிக்கொண்டபோதும், என்னுடன் போட்டி போடுகிறார் என்பது எனக்கு உறைக்கவில்லை. ‘நீங்கள் புரட்சிக்காரர்!’ என்று என்னைப் பழித்தார். அவர் தன் மனைவியை அதிகாரம் செலுத்தி வேலை வாங்குவதைப் பார்த்தேன். அவள் செய்தது எல்லாவற்றிலும் தலையிட்டு, தன் விருப்பப்படி செய்ய வைத்தார். ஆணாதிக்க மனப்பான்மை கொண்டிருந்த அவருக்குத் தன்னைவிட ஒரு பெண் மேல்நிலையில் இருப்பதா என்ற எரிச்சல். தாழ்வு மனப்பான்மை. அதனால் என்னையும் அதே உணர்ச்சிக்கு ஆளாக்கி, கட்டுப்படுத்த நினைத்திருக்கிறார் என்பது புரிந்தது. இந்த மனப்பான்மை இக்காலத்திற்கு ஒவ்வாது என்றும், பெண்களை மதித்து நடத்த வேண்டும் என்றும் நான் பலவாறாக (ஆங்கிலத்தில்) எழுதியதில் அவரது தைரியம் ஆட்டம் கண்டிருக்கவேண்டும். நான் துளிக்கூட மசியவில்லை என்றதும், அவரது உற்சாகம் குன்றிப்போயிற்று. எந்தத் துறையானாலும், அதில் முன்னுக்கு வரவேண்டுமானால், யார் சொல்வதையும் காதில் வாங்கிக்கொள்ளக்கூடாது. ஏதோ, நமக்குத் தெரிந்ததை நம்மால் இயன்றவரை செய்கிறோம் என்று நிறைவு அடைய வேண்டியதுதான். முன்னணியில் இருக்கும் ஓர் அமெரிக்க நடிகையின் உபதேசம்: ‘வெற்றியில் நாட்டம் இருக்கிறதா? அப்படியானால், உனக்காக உண்மையிலேயே மகிழ்பவர்களைக் காண்பது அரிது’. தெரிந்தவர்கள் மட்டுமல்ல, தம்பதியருக்குள்ளும் போட்டி, பொறாமை எழுகிறது. அன்பால் அல்ல ‘மனைவி வெளிவேலைக்குப் போகிறாளே, அங்கு பிற ஆண்களுடன் எப்படிப் பழகுகிறாளோ! அவர்கள் தன்னைவிடச் சிறப்பாக இருப்பார்களோ’ என்ற சந்தேகம் எழ, ஓயாமல் அந்த ஆண்களைப்பற்றி ஒருவன் துளைக்கிறான். அன்பை ஏற்று அனுபவித்தால் உண்டாகும் மகிழ்ச்சி அவனுடைய கேள்விக்கணையால் கிடைக்குமா? ‘எனக்கு உன்மேல் மிகுந்த அன்பு!’ என்று சொல்லி மனைவியைச் சமாதானம் செய்கிறான். தன்மேலேயே நம்பிக்கை இல்லாததால் உண்டாகும் சிறுபிள்ளைத்தனம் இது. போட்டி மனப்பான்மையால் பொறாமை எங்குதான் எழும் என்று கூறுவது சாத்தியமில்லை. கதை வித்யா தன் தாயைவிட கல்வி நிலையில் உயர்ந்து, நல்ல வேலையிலும் அமர்ந்தாள். மேற்படிப்புக்கும் அந்த உத்தியோகத்தில் வசதி உண்டு. ‘மகள் தன்னைவிட உயர்ந்த நிலைக்குப் போய்விட்டால் தன்னை மதிப்பாளோ?’ என்ற கலக்கம் தாய்க்கு ஏற்பட்டது. “படித்துக்கொண்டே வேலைக்கும் போவதால் உன் ஆரோக்கியம் கெட்டுவிடும். வேலையை விட்டுவிடு!” என்று நச்சரிக்க ஆரம்பித்தாள். குழம்பிய வித்யா, சக ஊழியர்களிடம் தான் வேலையை விட்டு விலகப் போவதாக அறிவிக்க, அவர்கள் அதிர்ந்து, ‘கிடைத்த நல்ல வேலையை விடாதே!’ என்று எச்சரித்தார்கள். இறுதியில், தாய் சொல்லைத் தட்டாது நடந்துகொண்டாள் மகள். உத்தியோகம் சம்பந்தமான பரீட்சைக் கேள்விகளைப் புரிந்துக்கொள்ள வேலையில் நிலைத்து இருந்திருக்க வேண்டும் என்று காலங்கடந்து உறைத்தது. வேலையும் போயிற்று, பரீட்சைகளில் தேர்ச்சி பெறுவதும் கடினமாயிற்று. எப்படி வெல்லலாம்? தன் வயதொத்த ஒரு சிறுவன் அணிந்திருக்கும் இருவண்ணம் கொண்ட சட்டையைப் பார்த்து, “எனக்கும் இதேமாதிரி வாங்கித் தர்றியா?” என்று கேட்கும் பாலகனுக்குப் பொறாமை இல்லை. தானும் அவன் நிலைக்கு உயரலாம் என்று புரிந்திருக்கிறான். ‘உனக்கு யாரைப் பார்த்துப் பொறாமை வருகிறதோ, அவரைப்போல் ஆக முயற்சி செய்!’ என் தாய் எனக்களித்த பாடம். நாம் என்ன ஆகவேண்டும் என்று நிர்ணயித்துக்கொண்டு, அந்த இலக்கை நோக்கி நடக்கையில், அதற்கான சாத்தியக்கூறுகள் நமக்குள் ஒளிந்துகிடப்பதைப் புரிந்துகொள்ள முடியும். தாழ்த்தாதே, தாழ்ந்துபோகாதே! அதைவிட்டு, விரைவில் உச்சிக்குச் செல்லும் ஆசையுடன் குறுக்கு வழியில் கால் வைத்து, தன்னைவிட உழைப்பாளிகளோ, அல்லது திறமைசாலிகளோ இருந்தால் அவர்கள்மேல் பொறாமை கொண்டு தாழ்த்த நினைப்பது ஒருவரை மேலும் சறுக்கிவிடும். சுற்றமும் குற்றமும் ‘நாங்க ரொம்ப பேசிக்கிறதே இல்லை!’ என்றாள் ஒரு மாது, பேச்சுவாக்கில். ‘இது எல்லா குடும்பங்களிலும் நடப்பதுதானே!’ என்பதுபோன்ற தொனி அவள் குரலில். இருபது வருடங்களுக்குமேல் ஒன்றாக வாழ்ந்திருந்த தம்பதிகள் அவர்கள். அன்பு என்ற வார்த்தைக்கு எதிர்ப்பதம் என்னவென்றால், அது வெறுப்பு இல்லை. அலட்சியம்தான். பேசுவதற்கு விஷயமா இல்லை? வாழ்க்கையில் தினம், தினம் எத்தனையோ நடக்கின்றனவே! அவைகளைப் பகிர்ந்துகொண்டாலே போதுமே! ஆனால், நிறையப் பேசுவதால் மட்டும் அன்பு இருக்கிறதென்று அர்த்தமில்லை. ‘இவளுடன் என்ன பேசுவது! புத்திசாலித்தனமாக இரண்டு வார்த்தை பேசத் தெரிகிறதா!’ என்று மனைவியைப்பற்றி அலுத்துக்கொள்ளும் ஆண்களைச் சந்தித்திருக்கிறேன். இந்தக் குறை திருமணம் செய்துகொள்வதற்குமுன் ஏன் தெரியவில்லை? கொள்ளை அழகு, ஜாதகப் பொருத்தம், சுயமாகச் சம்பாதிப்பவள், நிறைய வரதட்சணையுடன் வருபவள், பெற்றோருக்குப் பிடிக்கும், முறைப்பெண் என்று ஏதாவது ஒரு காரணம் அவர்களை இணைத்திருக்கும். ஆனால், ஆரம்பகால ஈர்ப்பு மழுங்கத் தொடங்கியவுடன், மனைவியின் குறைகள் பெரிதாகத் தெரியும். பெரும்பாலான பெண்கள், ‘அவரது குறை நியாயமானதுதானே!’ என்று அடங்கியிருப்பார்கள். அவர்களுக்குள் ஏதாவது திறமை உறங்கி இருக்கிறதா என்று அவர்களுக்கே சந்தேகம் வந்துவிடும். ஏதோ இயந்திரம்போல் தங்கள் கடமையைச் செய்து காலத்தைக் கழிப்பார்கள். எது அன்பு? ‘அன்பு’ என்றால், இன்னொருவரின் மகிழ்ச்சிக்காக தன் சொந்த நலனை விட்டுக்கொடுப்பதல்ல. கதை நந்தினி நாட்டியத்தில் தேர்ந்தவள். அது தெரிந்தே அவளை மணந்தவன், ‘இனி நீ ஆடவே கூடாது!’ என்று கட்டளையிட்டான். அவனை எதிர்த்துக்கொண்டு, தாய் வீட்டுக்கே போய்விடலாம் என்று முதலில் எழுந்த யோசனையைக் கைவிட்டாள். கீழ்ப்படிந்தாள். ஆனால் மனம் குமுற, அதை அடக்கும் வழியென, ஓயாது உணவருந்தினாள். செல்வச்செழிப்பு இல்லாதிருந்தும், மிகுந்த பிரயாசையுடன் மகளை நாட்டியத்தில் ஈடுபடுத்தியிருந்த தாய்க்குத்தான் வருத்தம். என்னைப் பார்க்கும்போதெல்லாம், “உங்க மகள் டான்ஸ் ஆடிண்டிருக்காளா?” என்று விசாரிப்பாள். பிறகு, “மருமகன் நந்தினியை ஆடக்கூடாதுன்னு சொல்லிட்டார். இப்ப ஒரே குண்டாப்போயிட்டா!” என்று தெரிவிப்பாள். கடந்த இருபது ஆண்டுகளில் நாங்கள் எப்போது சந்திக்கும்போதும் இதையே சொல்லத் தவறுவதில்லை. தாய்க்கே இப்படி என்றால், தன் திறமையையும் ஆசையையும் துறந்த மகளுக்கு எப்படி இருக்கும்! நந்தினியின் கணவரைப் போன்றவர்களுக்கு ‘நாட்டியம்’ என்றால் அரைகுறையாக ஆடையணிந்து, இடுப்பை ஆட்டியபடி, கண்டபடி கையையும் காலையும் தூக்கி, அதன்மூலம் காமத்தைத் தூண்டுவது. எல்லாம் திரைப்படங்கள் கற்றுக்கொடுத்த பாடம்தான்! முறையாக பரதநாட்டியம் கற்றவர்களின் கைகள், முகத்தைத் தவிர பிற அங்கங்கள் மறைக்கப்படும்போது, அவர்களிடமிருந்து கலைத்திறனும், பக்தியும் மட்டும்தான் வெளிப்படும். யாரும் இவர்களைத் தவறான கண்ணோட்டத்துடன் அணுகுவதில்லை. கற்பனை உலகில் காதல் பல திரைப்படங்களில், காதலர்கள் பெரும்பகுதியில் சண்டை போட்டுவிட்டு, இறுதியில் தாபத்துடன் ஓடி வந்து அணைப்பார்கள். காதல் மணம் புரிந்துகொண்ட ஒரு பெண், “ஐந்து வருடங்களுக்குப்பின் இவர்கள் எப்படி இருப்பார்கள் என்று பார்க்க வேண்டும்!” என்று சிரித்தாள். எந்த முறையில் கல்யாணம் செய்துகொண்டாலும், காதலோ, மோகமோ நிலைத்திருப்பதில்லை என்று அனுபவப்பட்டவர்கள் தெரிவிக்கிறார்கள். அதிக பட்சம் ஈராண்டுகள்! அதன்பின் சண்டை, பூசல் எழுவதைத் தவிர்க்க முடியாது. படம் பார்க்கும் அப்பாவிகளுக்கோ, ‘காதல் என்ற உணர்வு இவ்வளவு கிளுகிளுப்பானதா!’ என்ற பிரமிப்பு உண்டாகும். நம் வாழ்க்கையும் இப்படித்தான் அமையவேண்டும் என்று எதிர்பார்த்தால், ஏமாற்றம்தான் மிஞ்சும். இஸ்மாயில் என்ற எங்கள் நண்பர், ‘இந்த மனைவியைப் பிடிக்கவில்லை!’ என்று இன்னொரு பெண்ணை மணந்தார். சில ஆண்டுகளுக்குப்பின் அவளுடைய குறைகளும் பூதாகாரமாகத் தெரிய, ‘எல்லாப் பெண்களும் மோசம்!’ என்று கூற ஆரம்பித்தார். பெண்களிடமே குற்றம் கண்டுபிடிக்கும் ஆண்கள் தங்களுக்கும் குறைகள் இருக்கலாம் என்பதை ஏனோ நினைத்துப் பார்ப்பதில்லை? மனமொத்து இருப்பவர்களின் ரகசியம் நீண்டகால உறவுமுறைகளுக்கு நேர்மை, பொறுமை ஆகிய குணங்கள் அவசியம். இவர்கள் ஒருவர் குறைகளை மற்றவர் தெரிந்துகொண்டவர்கள். அவைகளைப் பெரிதுபடுத்தாது இருந்தால்தான் வாழ்வில் நிம்மதியும் மகிழ்ச்சியும் நிலவும் என்பதைப் புரிந்துகொண்டவர்கள். மற்றவரின் சிறப்பான குணங்களை மட்டும் எடுத்துக்கொள்பவர்கள். இது புரிய இருபது வருடங்கள்கூட ஆகலாம். ஒல்லியாக, அழகாக இருந்த மனைவி இரு பிள்ளைகளைப் பெற்றபின் மிகப் பருமனாக ஆனபோதும், அவளை அழகியாகவே பார்க்கும் மனப்பக்குவம் சிலருக்கே வாய்க்கிறது. அவள் நோய்வாய்ப்பட்டால் சிடுசிடுக்காமல், சிரத்தையாகப் பார்த்துக்கொள்வதும் அப்படித்தான். இவர்களுக்குள் சிறு பூசல்கூட வராது என்பதில்லை. வாழ்க்கை எப்போதும் ஒரே சீராக, நிறைவு அளிப்பதாகவே இருப்பதில்லை என்று இவர்களுக்குத் தெரியும். ஆகையால், இன்பம் மட்டுமே நிலைத்திருக்கவேண்டும் என்ற நடவாத எதிர்பார்ப்பு இவர்களிடம் கிடையாது. கதை பெரிய குடும்பத்தில் பிறந்து, போதிய அன்பும் கவனிப்பும் கிடைக்காது வாடி, ‘என்னை யாருக்கும் பிடிக்கவில்லை!’ என்ற ஏக்கத்துடன் வளர்ந்தவன் அவன். எந்தப் பெண்ணுடனும் நெருக்கமான தொடர்பு வைத்துக்கொள்ள அச்சம். அவர்களுக்கும் தன்னைப் பிடிக்காமல் போய்விட்டால்? திருமணம் ஆனபின்னரும், மனைவிக்குத் தன்னைப் பிடிக்கிறதோ என்று பலவகையாக சோதித்துப் பார்த்தான். முரட்டுத்தனத்தை வரவழைத்துக்கொண்டான். இவனைப்போல், ‘உன்னால் என் வாழ்க்கை கெட்டுவிட்டது. இப்போது மகிழ்ச்சியே போய்விட்டது!’ என்று பிறத்தியாரைச் சாடுபவர் ஒன்றை உணரத் தவறிவிடுகிறார். ஒருவருடைய மகிழ்ச்சிக்கு அவரேதான் பொறுப்பு. வேறு யாரும் அவரது கனவுகளை நிறைவேற்ற முடியாது. உறவில் சிக்கல் தம்பதியரோ, உடன்பிறந்தவர்களோ, இல்லை, நண்பர்களோ, எவரும் நம் நன்மைக்காகவே எப்போதும் இயங்குவார்கள் என்று கூறமுடியாது. கணவர் வேறு பெண்ணுடன் தொடர்பு கொண்டிருக்கலாம், உடன்பிறந்தவர்கள் பரம்பரைச் சொத்தில் பெரும்பகுதியை அபகரித்திருக்கலாம், நண்பர்கள் புறம்பேசி நமக்குக் கெடுதல் விளைவித்திருக்கலாம். இவை எல்லாமே நடந்தபோது மனப்பாரத்தைக் கொடுத்திருக்கும். ஆனால், நம்மை அலைக்கழித்தவைகளையே விடாது பிடித்துக்கொண்டிருந்தால் நிம்மதி ஏது! கதை “என் கணவரை அவருடைய மேலதிகாரியே சூதாட அழைத்துப்போனார்!” என்று வருத்தத்துடன் தெரிவித்தாள் என் சிநேகிதி மரியா. அவள் பிலிப்பீன் நாட்டவள். கணவர் வாங் வேறு நாட்டவர். “குடிப்பாரா?” என்று கேட்டுவைத்தேன். “எல்லாம், எல்லாம்!” என்றாள். இந்த செலவுகளுக்காக வாங் வட்டிமுதலைகளிடம் நிறைய கடன் வாங்கியிருந்தார். அவர்கள் அச்சுறுத்த, மரியா தான் வாங்கியிருந்த பங்களாவைப் பாதிவிலைக்கு அவசரமாக விற்றாள். “இதையெல்லாம் எல்லாரிடமும் சொல்லிக்கொண்டிருக்காதே!” என்று எச்சரித்தேன். “இல்லை. உங்களிடம் மட்டும்தான் சொல்கிறேன்,” என்றவள், “இப்போது சம்பளத்தை என் கையில் கொடுக்கிறார். குழந்தைகளுடன் நான் அவரையும் பார்த்துக்கொள்ளவேண்டும்,” என்றாள், கடமை உணர்ச்சியுடன். சில மாதங்கள் கழிந்தன. தீய பழக்கங்கள் மீண்டும் அவரை அழைத்தன. மனைவியின் நற்குணத்தை அவர் புரிந்துகொள்ளவில்லை. பொறுமைக்கும் எல்லை இல்லையா, என்ன! குழந்தைகளுடன் தன் நாட்டுக்கே திரும்பப் போய்விட்டாள் மரியா. நல்லவரோ, கெட்டவரோ, கொண்டவரை மாற்றுவது எளிதல்ல. கதை கமலத்திற்குத் தன் கணவர் பட்டதாரி இல்லையே என்ற குறை. திருமணமாகி இருபது வருடங்களுக்குமேல் ஆகியிருந்தும், அவரை நச்சரித்துக்கொண்டே இருப்பதாக என்னிடம் பெருமையுடன் கூறினாள், ‘நான் செய்வது சரிதானே?’ என்று நியாயம் கற்பிப்பதுபோல். அவரோ, விளையாட்டுகளில் ஈடுபாடு கொண்டவர். தனக்குப் பிடித்தமான உத்தியோகத்தில் இருந்தார். ‘எதற்காக இன்னும் படிக்க வேண்டும்!’ என்ற அலுப்புடன், மனைவியின் நச்சரிப்பைத் தாளமுடியாது, “ஆரம்பிச்சுட்டியா?” என்று விலகிப் போய்விடுவாராம். தங்கள் உறவில் ஏன் விரிசல் என்று கமலத்திற்குப் புரியவில்லை. ‘எனக்கு மட்டும் ஏன் நிறையப் படித்த, புத்திசாலியான கணவர் வாய்க்கவில்லை?’ என்று அவள் கொண்ட சுய பரிதாபம்தான் அவளை இப்படி ஆட்டுவித்ததோ? நமக்குப் பிடித்தவகையில் இன்னொருவர் மாறவேண்டும் என்று எதிர்பார்த்தால் ஏமாற்றம்தான். முதலில், நாம் மாற்ற விரும்புகிறவர் தான் மாற வேண்டும் என்ற எண்ணம் கொண்டிருக்க வேண்டும். அவருக்கே வழி தெரியாதபோது, ஆதரவளித்து, அவருடைய சிறப்புகளைப் பாராட்டி, முன்னேற வைக்கலாம். எந்த எதிர்பார்ப்பும் இல்லாது, எவரையும் மாற்ற நினைக்காது, அவரவர் இருக்கிறபடியே ஏற்றால்தான் சுற்றம் நிலைக்கும். உன்னையே மதிப்பாய்! ‘நான் ஏனோ இப்படி இருக்கிறேன்! எதையும் உடனடியாகச் செய்யத் தெரியாது!’ இப்படி வருந்திய ஒரு தோழியிடம், “ உன் குறைகளை ஏன் வெளியில் சொல்கிறாய்? பிறர் கண்டுபிடித்துக் கொள்ளட்டும் என்று விட்டுவிடு,” என்றேன். அடக்கம் என்றெண்ணியோ, இல்லை, மனம் பொருமுவதாலோ, பலர் தம் இயலாமையை வெளியில் சொல்கிறார்கள். பிறர் நம்மை மட்டமாக நினைத்து நடத்த நாமே வழி வகுப்பானேன்! நாம் பிறரை மதிக்க வேண்டுமென்றால் முதலில் நம்மையே மதிக்கக் கற்க வேண்டும். ‘இது கர்வமில்லை?’ என்ற சந்தேகமே வேண்டாம். இது சுய மரியாதை! இதில் தற்பெருமை கிடையாது. கதை கேட்பவருக்கெல்லாம் உதவி செய்யும் தனது நற்குணத்தைப்பற்றி கவினுக்குக் கொள்ளைப்பெருமை. ‘இந்தக் காலத்தில் யார் இப்படி இருக்கிறார்கள்!’ என்று பார்ப்பவரெல்லாம் புகழ்ந்தார்கள். ஒரு நாள் விளையாடும்போது அவன் காலில் அடிபட்டுவிட்டது. வலியை வெளியில் காட்டிக்கொள்ளவில்லை. வழக்கம்போல், அவனுடைய ஆசிரியர் மூன்றாவது மாடியில் தன் புத்தகங்களைக் கொண்டுவைக்கும்படி கூற, அவனும் அப்படியே செய்தான். கால் நன்றாக வீங்கிப்போயிற்று. சில நாட்கள் பள்ளிக்குப் போக முடியவில்லை. “காலில் அடி பட்டிருக்கிறது, நடக்க முடியவில்லை என்று ஏன் என்னிடம் முதலிலேயே சொல்லவில்லை?” என்று ஆசிரியர் கடிந்துகொண்டார். “பிறருக்கு நல்லவனாக இருக்க உனது நலனைத் தியாகம் செய்யக்கூடாது! இப்போது கஷ்டப்படுகிறாய், பார்!” என்று அவன் தாயும் அறிவுரை கூறியவாறு அங்கலாய்த்தாள். நம்மை நாமே மதிக்க வேண்டுமென்றால், நம்மிடமோ, அல்லது பிறரிடமோ, ‘இப்போது முடியாது!’ என்று (மரியாதையுடன்தான்!) சொல்லும் தைரியத்தை வளர்த்துக்கொள்ள வேண்டும். கதை குடும்பத்தில் எல்லாரும் ஒரு திரைப்படத்திற்குப் போனபோது எனக்குப் பரீட்சை சமயம். “நீயும் வாயேன்! ஒரு நாளில் என்ன வந்துவிடப் போகிறது!” என்று எனக்கு ஆசை காட்டினார்கள். “படிக்கணும்,” என்று அரைமனதாக முணுமுணுத்தேன். நான் ஏதும் கூறுமுன், என் சித்தி, “அவள் என்னைமாதிரி! வேண்டாம் என்றால் வேண்டாம்தான்!” என்றாள். படித்து, பெரிய உத்தியோகத்தில் இருப்பவள்! அவளைப்போல் நான் இருக்கிறேனாமே! ‘நம்மைப்பற்றி ஒருவர் இவ்வளவு நல்ல அபிப்ராயம் வைத்திருக்கிறாரே! அதை நாமே கெடுத்துக்கொள்ளலாமா?’ என்று தோன்றிப்போயிற்று. அப்போது எழுந்த பெருமையில், எனக்கு வெளியே போய், நேரத்தை உல்லாசமாகக் கழிக்கத் தோன்றவில்லை. சபலமாக இருந்தாலும் அடக்கிக்கொண்டேன். சுய கட்டுப்பாடு வந்தது. எல்லாரையும் மதிக்க வேண்டும், ஆனால் ஒருவரது பணிவோ, அடக்கமோ பலவீனம் என்று துச்சமாக நினைப்பவர்களை ஏற்காமல் விலகி இருக்க வேண்டும் என்று புரிய ஒரு சம்பவம் வாய்த்தது. கதை பள்ளித் தலைமை ஆசிரியர் பழனியப்பன் தம் வீட்டில் பசு மாடுகளை வளர்த்து, எங்களுக்குப் பால் விற்று வந்தார். கன்று ஈன்றிருந்த மாட்டின் பாலை அவர் கொடுத்துவிட, என் தாய் அதை திருப்பி அனுப்பிவிட்டாள், என் உடம்புக்கு ஆகாது என்று. நானும் பிள்ளை பெற்றிருந்த சமயம் அது. ஒரேயடியாகக் கோபித்து, பால் அனுப்புவதை நிறுத்திவிட்டார் பழனியப்பன். சில மாதங்கள் கழித்து, நான் நேரில் விசாரிக்கப் போனேன். ஒரேயடியாக இரைய ஆரம்பித்தார். ”வேண்டாம் என்றால் மரியாதையாக என்னிடம் வந்து சொல்லியிருக்க வேண்டும். அதுதான் முறை!” இந்த இரண்டாவது வாக்கியத்தை மீண்டும் மீண்டும் சொன்னார். வல்லின றகரம் அவர் வாயில் படாத பாடு பட்டது. “அம்மா விளக்கிச் சொல்லி அனுப்பினார்களாமே!” என்றேன். அச்சமயம் நான் வெளியில் நடமாட இயலாதவளாக இருந்தேன் என்று சொல்லியாயிற்று. அப்படியும் சண்டை பிடித்தால் என்ன செய்வது? “நீங்களே வந்து சொல்லியிருக்க வேண்டும். அதுதான் முறை!” என்றார், விடாப்பிடியாக. இன்னும் சிறிது நேரம் கத்தினார். பொறுக்க முடியாது எழுந்தேன். “எவ்வளவு வேண்டும்?” வந்த வியாபாரத்தை விடுவதா என்ற அக்குரல் அதிகாரமாக ஒலித்தது. நான் மெல்லத் திரும்பினேன். “வேண்டாம்! உங்களுக்கு எதுக்கு அவ்வளவு கஷ்டம்?” என்றேன் – இனிமையாக. அதைச் சற்றும் எதிர்பாராது அவர் திகைத்து நிற்க, விறுவிறுவென்று நடையைக் கட்டினேன். பழனியப்பன்மாதிரி சிறுவர்களிடமும் பெண்களிடமும் அதிகாரமாக நடப்பவர்கள் மேலதிகாரிகளின் முன்னிலையில் கூனிக் குறுகுவார்கள். அவர்களது சுய மரியாதை இடம், பொருள் மற்றும் காலத்தைப் பொறுத்து வளையும். அதனால் அவர்களுக்கே ஏதோ வெறுமை உண்டாக, எப்போதும் விறைப்பாக நடந்துகொள்வார்கள். நான் தகுந்த காரணம் சொல்லியும், ஏதோ பெரிய அவமானத்திற்குத் தன்னை உள்ளாக்கிவிட்டதுபோல் சண்டை பிடித்தாரே, இதில் என் தவறு என்ன? என்னை அவமானப்படுத்த நினைத்தவரின் குற்றச்சாட்டை நான் ஏற்கவில்லை. என் சுயமரியாதை அப்போது வீறுகொண்டு எழுந்திருக்க வேண்டும். நிமிர்ந்த தலையும் நேர்ப்பார்வையும் கொண்டவரைப் பார்த்து மரியாதை ஏற்படுகிறதோ, இல்லையோ, அச்சம் எழும். இவர்களைத் தளரச்செய்ய பிறர் பல உத்திகளைக் கையாள்வார்கள். 1 ‘இந்தமாதிரி நீ சண்டை பிடித்தால் பிறருக்கு உன்னைப் பிடிக்காமல் போய்விடும்!’ அட, மற்றவர்கள் என்ன வேண்டுமானாலும் நினைத்துவிட்டுப் போகட்டும்! நம்மையே நமக்குப் பிடித்தால்தானே பிறரையும் நம்மால் உண்மையாக விரும்ப முடியும்? பிறர் உன்னை மதிக்க, முதலில் நீ உன்னை மதி. குறைகளுடன் நம்மை நாமே ஏற்பது முதல் படி. அந்த நிலை வந்தால், பிறரைப் பார்த்து பொறாமை எழாது. எப்போதும் அமைதியாக, மகிழ்ச்சியுடன் இருக்கலாம். 2 ‘நீ அவளைப்போல், இவளைப்போல், இருக்க வேண்டும்!’ பிறருடன் நம்மை ஒப்பிட்டுக்கொண்டால், அது நம்மையே தாழ்த்திக்கொள்வதுபோல்தான். பிறர் வித்தியாசமாக இருக்கலாம். அது அவர்கள் குணத்தை, வாழ்க்கைப் பின்னணியைப் பொறுத்தது. நான் என்னைப்போல் இருந்தால்தான் அசலாக இருப்பேன். பிறரிடமிருந்து வித்தியாசமாக, சுய சிந்தனையுடன் இருக்க இயலும். இன்னொருவரைப் பின்பற்றி, எதற்குப் போலி வேஷம்? (இசைப் போட்டிகளில், பிரபல பாடகர்களைப்போல் கடும் பிரயத்தனத்துடன் பாடுகிறார்கள் சில இளம்பாடகர்கள். அவர்களைவிட, தம் சொந்தக்குரலில் பாடுகிறவர்களையே நீதிபதிகள் பாராட்டுவது ஏன் என்று அவர்களுக்குப் புரிவதில்லை). கெஞ்சாதே! கணவனிடம் வதைபட்ட பெண் ஒருத்தியுடன் நான் தொடர்புகொள்ள விரும்புவதாக சமூகநல அதிகாரிகளான என் தோழிகளிடம் தெரிவித்திருந்தேன். அப்படி என்னுடன் வலியப் பேசவந்தவள்தான் திலகா. “என் கணவருக்கு என்னைக் கண்டால் ரொம்பப் பிடிக்கும், என்றாள், பெருமையுடன். “ஆனால், கொஞ்சம் முன்கோபி!” ‘ரொம்பப் பிடித்த கணவர்’ ஒரு மூர்க்கன். உயிர் போகும் நிலையில் அவனால் அடித்து உதைக்கப்பட்டு, காவல் துறையினர் மூலம் சமூகநல அதிகாரிகளின் பொறுப்பிற்கு வந்தபின்னரும் திலகா இதையேதான் சொல்லிக்கொண்டிருந்தாள். அன்புக்காக ஏங்கி, தன்மானத்தை விடலாமா? அப்படியாவது என்ன இல்லற இன்பம் வேண்டிக் கிடக்கிறது! பிறருடன் சுமுகமான உறவு இருக்கவேண்டுமே என்று எந்த அவமானத்தையும் பொறுத்துக்கொள்வது நம்மையே நாம் மதிக்கவில்லை என்பதைத்தான் காட்டுகிறது. நம்முடன் ஒருவரால் ஒத்துப்போக முடியவில்லை என்ற நிலை வரும்போது, நாம் கெஞ்சுவது நம்மையே இழிவு படுத்திக்கொள்வதுபோல்தான் . பாதுகாப்பு, பணம், சமூகத்தின் அங்கீகாரம் என்ற ஏதாவது காரணத்துக்காக நைந்துபோன உறவை விடாது பிடித்துக்கொண்டு, கெஞ்சலால் நீடிக்க முயன்றால் மேலும், மேலும் இழிவுபடுத்துவார்கள். “சுயகௌரவத்தை இழப்பதைவிடப் பெரிய இழப்பு வேறொன்றுமில்லை!” (மகாத்மா காந்தி) ஏன் இவ்வளவு சிக்கல்கள்? ‘வெளிநாட்டுக்குப் போனோமா! ஒரு இடம் விடாமல் சுத்தினேன். இன்னும் ஒரு வாரத்திற்கு எழுந்திருக்க முடியாது!’ என்று பெருமையாகச் சொல்லிக்கொண்டாள் கமலா. ‘ஆனா, எங்க வீட்டுக்காரர் இருக்காரே, சுத்த மோசம்! எதுக்கு வீண் அலைச்சல்னு பாதி நேரம் ஹோட்டல்லேயே தங்கிட்டார்!’ என்று கண்டனம் தெரிவித்தாள். இதில் யார் செய்தது புத்திசாலித்தனம்? உடல் நோக அலைந்த கமலாவா, தன்னால் இவ்வளவுதான் முடியும் என்று தன்னையே தடுத்துக்கொண்ட அவளது கணவரா? முன்பு எப்போதோ பயணித்தபோது, ‘உயிர் வாழ்வதே உணவருந்தத்தான்!’ என்று ஓயாது சாப்பிட்டு, உடல் நிலை சரியாக இல்லாமல் போக, பயணமே வேண்டாம் என்றிருப்பவர்களும் உண்டு. தவறு செய்தால் என்ன! அதிலிருந்து கற்கலாமே! அடுத்த முறை சற்று ஜாக்கிரதையாக இருந்தால் போயிற்று. இப்போது நம் தினசரி வாழ்க்கையை கமலாவின் பயணத்துடன் ஒப்பிட்டுக்கொள்ளுங்கள். நம்மால் முடியுமா என்றே யோசிக்காது, எல்லாவற்றையும் இழுத்துப் போட்டுக்கொள்கிறோம். பிறகு உடல் ஓய்ந்துவிடுகிறது. கதை தம் மகன் எல்லாவற்றிலும் சிறந்து விளங்க வேண்டும் என்ற பேராவல் தினேசனின் பெற்றோருக்கு. அவர்களிடம் அதற்கான பொருள் வசதியும் இருந்தது. பதினாறு வயதான தினேசனின் தினசரி நடப்பு இப்படி: காலை ஏழு மணிக்குப் பள்ளிக்கூடத்திற்குப் புறப்படுவான். வீடு திரும்ப நாலரை மணி ஆகிவிடும். அவசர அவசரமாக எதையோ சாப்பிட்டுவிட்டு, டியூஷன் அல்லது பியானோ வகுப்பு. அதன்பின் வீட்டுப்பாடம். தூங்குமுன் அரைமணி தொலைகாட்சி. ‘இளம் வயதில்தான் கற்க முடியும். இல்லாவிட்டால், பெரியவனானதும் ரொம்பக் கஷ்டப்படுவாய்!’ என்று தந்தை தினமும் சொல்வதை ஏற்று, அதன்படி நடக்கிறான் பையன். ஆனாலும், தனக்கு ஏன் மகிழ்ச்சி இல்லை, எப்போதும் சோர்வாக இருக்கிறது என்று அவனுக்குப் புரியவில்லை. தன் நலனுக்குத்தானே செய்கிறார்கள் என்று பெரியவர்களை எதிர்க்கத் தோன்றவில்லை. சுறுசுறுப்பு என்றால் ஒரு நிமிடத்தைக்கூட வீணாக்காது, எதையாவது செய்துகொண்டே இருப்பதல்ல. ‘பயனுள்ள காரியம்’ என்று நாம் நினைக்கலாம். ஆனால், நேரம் போகப்போக, தளர்ச்சி உண்டாக, எடுத்த காரியம் விரைவில் முடிவதில்லை. இப்போது மனமும் சோர்வடைய, பொறுமை மீறுகிறது. ‘ஏன்தான் ஆரம்பித்தோமோ!’ என்று நம்மையே நொந்துகொள்ளும் நிலை வருகிறது. இப்படி நம் வாழ்க்கையைச் சிக்கலாக்கிக்கொள்ள நம்மையறியாது என்னென்னவோ செய்கிறோம். என்ன சொல்வார்களோ! பிறர் என்ன சொல்வார்களோ என்று பயந்தே பலர் புதிய முயற்சிகளில் ஈடுபடத் தயங்குவது உண்டு. திறமை இருக்கலாம். ஆனால் வேண்டாத உணர்ச்சிகளால் அலைக்கழிக்கப்பட்டு, அவர்கள் தம்மால் இயன்றதைச் செய்யத் தவறிவிடுகிறார்கள். பழி – அதிர்ஷ்டத்தின்மேல். ‘குடும்பத்தில் நடப்பதையெல்லாம் இப்படி – உங்களைப்போல – வெளியில் சொல்ல முடியுமான்னு பயம். அதான் நான் எழுதறதில்லே!’ என்று என்னிடம் தெரிவித்தாள் திருமணமான பெண்ணொருத்தி. இவளுக்குத் தன்னால் ஏன் தைரியமாக எழுத முடிவதில்லை என்ற ஏக்கம். பிறருடன் நம்மை ஒப்பிட்டுக்கொண்டே இருந்தால், நம் தரத்தைக் குறைத்து எடைபோட்டுவிடும் அபாயம் உண்டு. கதை “எனக்கு பேனா பிடிச்சு, ஒரு வார்த்தையாவது எழுதணும்னு ஆசை!” என்றாள் மாலதி. பெரிய படிப்பு படித்திருந்தாள். ஆனால் இப்போது கதைப்புத்தகம்கூட படிக்கப் பிடிக்காதாம். இலக்கு இருந்தால் மட்டும் போதாது. அதை எப்படி அடைவது என்று முயற்சிக்க வேண்டாமா! “தொடர்ந்து எழுதிக்கொண்டே இருக்க, நிறையப் படிக்க வேண்டும். புதிய, பழைய புதினங்கள், பிரபலமானவர்களின் வாழ்க்கை வரலாறு..,” என்று நான் அடுக்க, அதைக் கேட்டுக்கொண்டிருந்த இன்னொருத்தி, “நீங்க இப்பவும் படிக்கிறீங்களா!’ என்று அதிசயப்பட்டாள். அவளுடைய ஆச்சரியம் என்னைத் தொற்றிக்கொண்டது. படிப்பதற்கு வயது ஒரு தடையா! “நான் எதை, எப்படி எழுதப்போகிறேன் என்று நண்பர்களிடம் விவாதிப்பேன்!” என்றார், எழுத்துத்துறையில் ஆர்வம் கொண்டிருந்த முத்து. அவர்கள் ‘இதெல்லாம் நன்றாக இல்லை. சுவாரசியமே இல்லை,’ என்றால் இவரது உற்சாகம் குன்றிவிடும். எழுதுவதற்குமுன்னரே தமக்குத் தடை விதித்துக்கொள்வார். உருப்படியாக எதையும் ஏன் எழுத முடியவில்லை என்று அவருக்குப் புரியவில்லை. ஏதாவது பேட்டி கொடுத்ததும் சிலர், ‘எப்படி எழுதப்போகிறீர்கள்?’ என்று விசாரிப்பார்கள். தெரிந்துகொள்ளும் ஆர்வம் அவர்களுக்கு இருக்கலாம். ஆனால் அது எழுத்தாளர்களின் கற்பனைக்கு இடையூறு. கதை மலேசிய நாட்டில் விவாகரத்தைப்பற்றி எனக்குப் புள்ளிவிவரம் சேகரித்துக் கொடுத்தவர், “எப்படி எழுதப்போகிறீர்கள்?” என்று விசாரிக்க, “தெரியாது!” என்று நான் பதிலளித்தேன். என்னைப் பொறுத்தவரை, நான் எதை, எப்படி எழுதப்போகிறேன் என்று எழுதி முடிக்கும்வரை எனக்கே தெரியாது. அதை அவரால் நம்ப முடியவில்லை. கோபத்தை வெளிக்காட்டினார். “அது எப்படி, இப்படிச் சொல்கிறீர்கள்? நாங்கள் இவ்வளவு உதவி செய்கிறோம்..,” என்று ஆரம்பித்தார். நிறைய தாக்கினார். வேண்டுமென்றே சண்டை போடுகிறாரா? “நான் எழுதுமுன் யாரிடமும் அதைப்பற்றிக் கூறுவதில்லை. If you want to argue..,” என்று இழுத்தேன். அவர் சட்டென்று அடங்கிப்போனார். அவருடைய மேலதிகாரியின் உத்தரவுப்படி எல்லாம் கொடுத்தாயிற்று. இவளிடமின்று கழன்றுகொண்டால் போதும் என்று நினைத்திருப்பார். பிறரது எதிர்பார்ப்பின்படி எப்போதும் நடப்பது நமக்கு உகந்ததா என்று எண்ணிப்பார்த்தால், அவசியமில்லாததைத் தவிர்க்க இயலும். வாழ்க்கைச் சக்கரத்திற்கு இன்னொரு எண்ணை. கதை சுதாவின் கணவருக்கு வெளிநாட்டிலிருந்து அவருடைய அலுவலகத்திற்கு வருகை புரிபவர்களைக் கவனித்துக்கொள்ளும் உத்தியோகம். அப்போதெல்லாம் நடக்கும் இரவு விருந்துபசாரத்தில் அவளும் கலந்துகொண்டாக வேண்டும். அது மரியாதை என்று கருதப்பட்டது. சுதாவோ வெளிவேலை செய்பவள். வீட்டில் குழந்தைகளை விட்டுவிட்டு பகல் நேரத்தைக் கழிப்பதை தவிர்க்க முடியாது. ஆனால் இரவிலும் அவர்களைப் பிரிந்து, முன்பின் பழக்கமில்லாதவர்களுடன் அர்த்தமில்லாமல் பேசிச் சிரிப்பதில் அவளுக்கு உடன்பாடில்லை. அத்துடன், மறுநாள் உடல் ஓய்ந்துவிடும். தனக்குப் பிடித்ததில் மட்டும் ஈடுபடுத்திக்கொண்டு, கட்டுப்பாட்டுடன் இருந்ததில் சுதாவின் வாழ்க்கையில் சிக்கல் கிடையாது. ‘இவள் என்ன, இப்படி இருக்கிறாளே!’ என்று பிறர் நினைத்திருக்கலாம். அவர்களுக்கு அவளைப்போல் துணிச்சலாக நாம் இல்லையே என்ற ஏக்கம். அவள் பெற்ற குழந்தைகளுக்கோ, ‘அம்மாவுக்கு எங்களுடன் இருக்கத்தான் பிடிக்கும்!’ என்று கொள்ளைப்பெருமை. சிலர், வெளிப்படையாகவே தம்மிலிருந்நது மாறுபட்டவர்களைத் தாக்கி, அதில் அற்ப மகிழ்ச்சி அடைவார்கள். இவ்வாறு பிறரின் மகிழ்ச்சியையும் சுயகௌரவத்தையும் பறிப்பவரிடமிருந்து ஒதுங்கி வாழ்ந்தால்தான் நிம்மதி. பிரச்னையா? தீர்வை யோசி! கானடா நாட்டில் சில பெண்மணிகளைப் பேட்டி கண்டேன். காதரின் என்ற வெள்ளைக்கார பெண்மணி, “நான் இங்கிலாந்தில் பிறந்து வாழ்ந்தவள். கல்யாணத்திற்கு முன்பே என் கணவருக்கு இங்கு வருவதாக யோசனை இருந்திருக்கிறது. ஆனால் அதை என்னிடம் கூறவில்லை. முன்பே தெரிந்திருந்தால், நான் சம்மதித்திருக்கவே மாட்டேன்!” என்றாள் தீராத கசப்புடன். அவளுக்கு அறுபது வயதுக்குமேலிருக்கும். முப்பது ஆண்டுகளாக கசப்பிலேயே உழன்றிருக்கிறாள்! மாற்ற முடியாது என்ற நிலையில், வந்ததை ஏற்றுக்கொண்டிருந்தால் புதிய சூழ்நிலையில் மகிழ்ச்சியுடன் இருந்திருக்கலாமே! மலேசியாவிலும் ஒரு பெண்மணி இப்படித்தான். “இங்க வந்து நன்னா மாட்டிண்டாச்சு!” என்று என்னிடம் சலித்துக்கொண்டாள். கணவருக்கு நல்ல ஊதியம் கிடைக்கும் என்று அயல்நாட்டுக்கு வரும்போது இருந்த எதிர்ப்பு ஏமாற்றத்தில் முடிந்தது. “இந்தியாவிலேயே இருந்திருந்தா, என் பெண்ணுக்கு பாட்டு, டான்ஸ் எல்லாம் கத்துக்குடுக்கலாம்!” என்ற மேலும் அரற்றியவளிடம், “இங்கேயும்தான் கத்துக்குடுக்கறவா இருக்காளே!” என்றேன், மெள்ள. ‘இப்படி இருந்திருக்கலாம், அப்படி இருந்திருக்கலாம்!’ என்றெல்லாம் நடக்காத காரியங்களை அடுக்குவதைவிட, இன்று என்ன செய்யலாம் என்று முடிவெடுக்கலாமே! சூழ்நிலைக்கு ஏற்ப நம்மைச் சிறிதளவாவது மாற்றிக்கொண்டால்தான் வாழ்க்கையில் முன்னேற முடியும். குறைந்த பட்சம், சிக்கல் இல்லாத வாழ்க்கையால் நிம்மதியாவது நிலைத்திருக்கும். இருவரும் வெற்றி பெறலாமே! நல்லதொரு தாம்பத்தியம் என்றால், இரு சாராரும் பிணைப்பால் நன்மை பெறுவதாக இருக்கவேண்டும். நமக்கு நெருங்கியவர்கள் மகிழ்ச்சியையும், அமைதியையும் அளிப்பவர்களாக இருக்க வேண்டுவது அவசியம். மாறாக, ‘இப்படிச் செய்தால் அவர் என்ன சொல்வாரோ?’ என்ற பயமெழ, எந்த காரியம் செய்யுமுன்னரும் தயக்கம் ஏற்பட்டால், மன இறுக்கத்தைத் தவிர்க்க முடியாது. கதை முனைவர் பட்டம் வாங்கிய ஸாரா ஒரு மலாய் பெண். அவள் இருமுறை பத்திரிகையில் எழுதியவற்றிற்குப் நல்ல வரவேற்பு இருந்தது. “ஏன் அதற்குப்பின் நீங்கள் எழுதவேயில்லை?” என்று கேட்டேன். “அவை வெளிவந்தபோது, பல தினங்கள் என் கணவர் என்னுடன் பேசவேயில்லை,” என்று பதிலளித்தாள். குரலில் வருத்தமில்லை. லேசான சிரிப்புடன், “ஆண்கள் அப்படித்தான்!” என்றாள். ஸாராவைப் பொறுத்தவரை, குடும்பத்தில் அமைதி நிலவ வேண்டுமானால் கணவர் ஆத்திரப்படாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். அவர் அவளைக் கட்டுப்படுத்தக் கையாண்ட வழி அவளை அலட்சியப்படுத்துவது. ‘உங்களுக்குப் பிடிக்கிறதோ, இல்லையோ, நான் எழுதிக்கொண்டுதான் இருப்பேன்!’ என்று ஆரம்பத்திலேயே ஸாரா திட்டவட்டமாகக் கூறியிருந்தால், கணவர் தொடர்ந்து எதிர்த்திருக்கமாட்டார். மனைவி தன்னைவிட அதிக வளர்ச்சியடைந்தால் தன்னை மதிக்க மாட்டாளோ என்ற பொறாமை கலந்த பயத்துடன், நண்பர்கள் கேலி செய்வார்களே என்பதும் சேர்ந்து ஒரு சில ஆண்களை இப்படி ஆட்டுவிக்கிறது. அலட்சியம் காட்டுவது, ஆத்திரப்படுவது, மட்டம் தட்டுவது – இதெல்லாம் ஒருவரைக் கட்டுப்படுத்தும் ஆயுதங்கள். உடல் வதையைவிட உணர்ச்சிபூர்வமான வதையால்தான் பாதிப்பு அதிகம். முதலில் அடங்கிப்போனால், ‘என்னை எப்படி வேண்டுமானாலும் நடத்தலாம். உங்களுக்கு அந்த உரிமை இருக்கிறது!’ என்று அனுமதி கொடுத்தாற்போல் ஆகிவிடும் அபாயமுண்டு. கதை தன்னைவிட மனைவி பெரிய பதவியில் இருந்ததை ஆரம்பத்தில் பெருமையாக நினைத்த சந்திரன் தன் தொழிலில் தோல்வியுற்றதும் மாறிப்போனார். மனைவி தன்னைக் குறைத்து மதிப்பிட்டுவிடப்போகிறாளே என்றஞ்சி, தன் அதிகாரத்தை நிலைநாட்டிக்கொள்ள முயன்றார். வார்த்தைக்கு வார்த்தை, ‘முட்டாள்’ என்று அவளைப் பழித்தார் – பலர் முன்னிலையில். தனிமையில், பேச்சாலோ, அழுகையாலோ எதிர்த்தால், “உனக்கு எதையும் சாதாரணமாக எடுத்துக்கொள்ளத் தெரியாது. சும்மா ஜோக்தானே!” என்றுவிடுவார், அலட்சியமாக. அவரைப் பொறுத்தவரை, அவருக்கு மட்டும்தான் உணர்ச்சிகள் உண்டு. அவள் அவரது வார்த்தைகள் தன் காதில் விழாததுபோல் இருக்கத் தலைப்பட்டாள். முகத்தில் எந்தவித உணர்ச்சியும் காட்ட மாட்டாள். தான் கோபித்துக் கத்தினாலோ, எதிர்த்துப் பேசினாலோ நிலவரம் இன்னும் மோசமாகிவிடும் என்று புரிந்து, அடங்கிப்போனாள். அதனால் பல வகையான உடல் உபாதைகள் ஏற்பட்டதைத் தவிர்க்க முடியவில்லை. கணவர் எப்போதாவது அவளைப் புகழ்வார். பரிசுப்பொருட்கள் வாங்கியளிப்பார். இதனால் அவருக்கு அவளைக் கட்டுப்படுத்தும் நோக்கம் கிடையாது என்பதில்லை. தனக்குக் குற்ற உணர்ச்சி ஏற்படாது பார்த்துக்கொள்கிறார். அவ்வளவுதான். பிறருக்கும் உணர்ச்சிகள் இருக்கலாம் என்பது இவரைப் போன்றவர்களுக்குப் புரிவதில்லை. தன்னைத்தானே கட்டுப்படுத்திக்கொள்ளத் தெரியாது, பிறரைக் கட்டுப்படுத்த நினைப்பவர் வீரரல்ல. இவர் பயந்தவர். ஒருக்கால் இவர் தவறு செய்தாலும், செய்யவே இல்லை என்று முதலில் சாதித்துவிட்டு, பிறகு பழியை வேறு ஒருவர்மேல் சுமத்துவார். ஆணோ, பெண்ணோ, தம்பதியரில் ஒருவரை ஒருவர் கட்டுப்படுத்துதலில் வித்தியாசம் கிடையாது. யார் கை ஓங்கி இருக்கிறது, யார் அதிகமாக விட்டுக்கொடுத்துப்போவார் என்பதில்தான் சூட்சுமம் அடங்கியிருக்கிறது. கதை பத்து வயதுக்குமேல் வித்தியாசமாக இருந்த தம்பதிகளில் இளையவளான அருணா ஓயாமல் கணவரைப் பழிப்பாள். அவர் தனக்கு நிகரில்லை, வழுக்கை வேறு என்று ஏதேதோ குறைகள் அவளுக்கு. தன்மேல்தான் குறை என்று மனைவிக்கு விட்டுக்கொடுத்தே பழகியவருக்கு இறுதியில் பொறுக்கவே முடியாது போய்விட, உணவு உட்கொள்ளவே மறுத்தார் – மரணம்தான் தனக்கு விடுதலை அளிக்கவல்லது என்று முடிவு செய்தவர்போல. எல்லா ஆண்களும் இப்படி இருப்பதில்லை. பலர், ‘அவள் அப்படித்தான்! எல்லாவற்றிற்கும் கத்துவாள்,’ என்று அலட்சியப்படுத்திவிட்டு வெளியே போய்விடுவார்கள். நண்பர்களுடனாவது உல்லாசமாக இருக்கலாமே! இதனால் இவர்களுடைய சுதந்திரம் குறைந்து போவதில்லை. இவனா தலைவன்?! குடும்பத்தில் மட்டுமின்றி, பொது அமைப்புகளில் இருப்பவர்களும் தம்மைத்தாமே தலைவன் என்று நினைத்துக்கொள்வது வழக்கம். ‘நான் சொல்வதுதான் சரி. ஏனெனில் நான் தலைவன்!’ தலைவன் என்ற ஆணவம் இருப்பதால் பிறர் என்ன செய்யவேண்டும் என்பதையும் தானே நிர்ணயிக்கும் உரிமையை எடுத்துக்கொள்வார். தன் கீழ் இருக்கும் அனைவரும் தன் விருப்பப்படிதான் நடக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பார். யாராவது மறுத்தால், ‘தலைவரது’ கோபத்துக்கு ஆளாகத் தயாராக இருக்கவேண்டும். எப்படிக் கண்டுபிடிப்பது? கட்டுப்படுத்துபவர்களுக்குச் சில பொதுவான குணங்கள் உண்டு. பிறர் பேசுவதைக் கேட்பதைவிடத் தாமே பேசுவது அதிகம். (ஆசிரியர்கள் விதிவிலக்கு!) கோபம், எதிலும் எதிர்மறையான அணுகுமுறை, கூசாமல் பொய்யுரைப்பது இதெல்லாம் இவர்களுக்குக் கைவந்த கலை. பிறரிடம் ஓயாது தப்பு கண்டுபிடிப்பார். ஆனால், அவர் செய்த தவற்றை யாரேனும் சுட்டிக் காட்டினால், அவர் தன்னை மோசமாக நடத்துவதுபோல் பாவனை செய்வார். தனக்குப் பயந்து நடக்காதவர்களை, அடிமையாக இருக்க விரும்பாதவர்களை இகழ்வார். (‘அவங்க ஒருமாதிரி! ராங்கி பிடிச்சவங்க!’) பிறருக்குத் தன்மேல் பரிதாபம் உண்டாக்க முயற்சி செய்வார். (‘நான் உங்களுக்காக எவ்வளவு செய்யறேன்!’) இந்தத் தலைவரைச் சார்ந்திருந்தால் நமக்குத்தான் நன்மை என்று பிறரும் அவருக்குப் பிடிக்காதவர்களிடமிருந்து ஒதுங்கிவிடுவர். தனிமைப்படுத்தப்பட்டவர் பொறுக்க முடியாது, தாழ்ந்துபோவதும் உண்டு. தப்பிக்க வழி உண்டா? நம்மைப் பலகீனமாக ஆக்க பெருமுயற்சி எடுப்பவர்களுடன் மோதுவதோ, மாற்றுவதோ இயலாத காரியம். ஆனால், நம்மை நாமே காப்பாற்றிக்கொள்ள முடியும். நம்மை அடிமைப்படுத்த நினைக்கும் இம்மாதிரியான ’விஷ ஜந்து’க்களிடமிருந்து ஒதுங்கிவிட வேண்டும். பிடிக்காததை ஏற்பானேன்! மகிழ்ச்சியாக இருக்கத் தெரியாதவர்கள்தாம் பிறர் மகிழ்ச்சியைப் பறிக்க நினைக்கிறார்கள். இது புரிந்தால், நாம் கோபப்பட்டு, நம்மையே வருத்திக்கொள்ளத் தேவையில்லை. அவர்கள்மேல் பரிதாபம்கூட கொள்ள முடியும். பாவம், உடல் வளர்ந்தும், சிறுபிள்ளைத்தனம் மாறாது, வளர்ச்சி குன்றிப்போய் இருக்கிறவர்கள்! தானும் வாழ்ந்து, பிறரையும் வாழவைத்தால் மகிழ்ச்சி இரட்டிப்பாக ஆகும் என்பது புரியாதவர்கள்! கேள்விகள் ஏனோ? ஒருவர் கேட்கும் கேள்வியை வைத்தே அவரைப்பற்றிப் புரிந்துகொண்டு விடலாம். தாம் மற்றவரைவிட உயர்த்தி என்று காட்டிக்கொள்ளும் பொருட்டு எதையாவது கேட்டுவைப்பது சில அறிவிலிகளின் வழக்கம். கதை நான் அசைவ உணவு சாப்பிடுவதில்லை என்று சொல்லக் கேட்டு, ஒருத்தி கேலியாகக் கேட்டாள், “அப்படியெல்லாம் உயிர் வாழ முடியுமா?” அவளுக்குத் தெரிந்தது அவ்வளவுதான் என்று என்னால் விட்டுவிட முடியவில்லை. “என்னைப் பார்த்தால் இப்போதே செத்துவிடுகிறவள்போலவா இருக்கிறது?” என்று பதில் கேள்வி கேட்டேன். யாரோ சிரிக்க, அவளுக்கு அவமானமாகிவிட்டது. என்னை அவமானப்படுத்த நினைத்தவள் தானே பலியானாள். கதை “உன் தந்தை இன்னும் குதிரைப் பந்தயத்துக்குப் போகிறாரா?” என்று ஓர் இளைஞன் இன்னொருவனைக் கேட்டான். பலர் முன்னிலையில். குறிப்பிடப்பட்ட நபருக்கு அந்த பழக்கமே கிடையாது. அறிவாளியாக இருப்பினும், எதிர்பாராது வந்த கேள்வியால், மகனுடைய வாய் அடைத்துப்போயிற்று. கேள்வி கேட்டவனுக்குப் பதில் வராது என்று தெரிந்துதான் இருந்தது. அவனுடைய நோக்கம் தன்னைவிட மேலான நிலையில் இருந்தவனைத் தாக்குவதுதானே! அவன் எண்ணம் கைகூட, இம்முறையைப் பிறர்மீதும் கையாள்வான். நம்மையே நாம் கேட்டுக்கொள்ளும் கேள்வி நோயோ, உற்றவருக்கு மரணமோ சம்பவித்தால், நமக்குள் ‘ஏன்?’ என்ற கேள்வி எழுகிறது. உடனே பதில் கிடைக்காது. பொறுமையாக இருந்தால், பல ஆண்டுகளுக்குப் பின்னர் பதில் கிடைக்கக்கூடும். கதை ஒரு பெண்ணுக்குத் திருமணம் தட்டிக்கொண்டே போயிற்று. ஒரு முறை, திருமணத்திற்கு முதல் நாள் நின்று போயிற்று – யாரோ அத்தை, ‘இந்தப் பெண் ரொம்ப ஒல்லியா இருக்கா. டி.பியா இருக்கும்!’ என்று சொன்னதால். கன்னியாகவே அப்பெண்மணி தொண்ணூறு வயதுக்குமேல் நோய்நொடி இல்லாமல் வாழ்ந்தாள். ‘எனக்கு ஏன் கல்யாணமே ஆகவில்லை?’ என்று நினைத்திருக்கமாட்டாளா, என்ன! அவளுக்கும் கல்யாணமாகி, குழந்தைகள் பெற்றிருந்தால், தன் குடும்பம், குழந்தை என்று சுயநலமியாக ஆகியிருப்பாள். இப்போதோ, எவர் பெற்ற குழந்தையாக இருந்தாலும் பரிவும் பாசமுமாக நடத்த முடிந்தது. இன்னொரு கதை எனது சீன நண்பர் ஒருவர் இருமுறை திருமணம் புரிந்துகொண்டும், தனக்குக் குழந்தைகளே இல்லை என்று என்னிடம் மிகுந்த வருத்தத்துடன் தெரிவித்தார். “உங்கள் சகோதர சகோதரிகளின் குழந்தைகள் உங்களிடம் அன்புடன் இருப்பார்களே!” என்றேன். உற்சாகமடைந்து, “ஆமாம். அவர்களைப் பெற்றவர்களைவிட என்னிடம்தான் அவர்களுக்கு ஒட்டுதல்!” என்றார். ‘எனக்கு மட்டும் ஏன் இப்படி?’ என்று தன்னையே கேட்டுக்கொண்டு வருந்தியவருக்கு ஒரு நல்ல காரணம் கிடைத்ததில் மகிழ்ச்சி. தகுந்த வாழ்க்கைத் துணையைத் தேர்ந்தெடுக்க கீழ்க்கண்ட கேள்விகளைப் பரிந்துரைக்கிறார்கள் நிபுணர்கள்: 1 அவன் எப்போதும் உன்னை மரியாதையாக நடத்துகிறானா? 2 உன் முன்னேற்றத்தில் பொறாமை கொள்ளாது, அக்கறை செலுத்துவானா? 3 பத்து வருடங்களுக்குப் பின்னரும் நீ அவனுடன் இருக்க விரும்புகிறாயா? இங்குதான் கேள்வி அவசியமாகிறது: மேற்கண்ட கேள்விகள் எந்த அளவுக்குப் பலன் தரும்? மனிதன் எப்போதும் மாற்றம் அடையாது இருப்பானா? பொழுதைப் போக்க அநாவசியமான கேள்விகள் கேட்பர் சிலர். கடைத்தெருவில் பார்ப்பவரை, ‘கடைக்கு வந்திருக்கிறீர்களா?’ என்று கேட்பது உரையாடலை ஆரம்பிக்க ஒரு வழி. இதையே நான் சற்று மாற்றிக் கேட்டேன், ஒரு முறை. பேரங்காடியில் சந்தித்த என் மாணவியிடம், “ஊர் சுற்ற வந்திருக்கிறாயா?” என்று கேட்டேன். பள்ளி மாணவ மாணவிகள் வீட்டுக்குப் போகாது, கடைத்தெருக்களில் சுற்றி நேரத்தை வீணாக்குகிறார்கள் என்று தினசரியில் வரும். அவள் போலியாகக் கோபித்து, “ஆங்! சாமான் வாங்க வந்தேன்,” என்றாள். ‘இன்று உங்கள் வீட்டில் என்ன சமையல்?’ என்று வெளிநாட்டிலிருப்பவரைக் கேட்பதும் இந்த ரகம்தான். கேட்பவருக்குச் சமைப்பதிலும் உண்பதிலும் ஆர்வம் இருக்கலாம். ஆனால், எல்லாரும் அப்படியே இருப்பார்களா! எரிச்சல்தான் மிகும். கேள்வி கேட்பது நன்மையா? வாழ்வைப் புரிந்துகொள்ள கேள்விகள் அவசியம். நம்மைச்சுற்றி நடப்பவை எல்லாவற்றையும் பார்த்தவுடனே புரிந்துகொள்ள முடியாது. கேள்விகள் அவசியமாகின்றன. ஒரு விஞ்ஞானிக்குள், ‘ஏன் இப்படி?’ என்ற கேள்வி எழுந்தால்தான் புதிதாக எதையாவது கண்டுபிடிக்க முடிகிறது. பதிலையும் அவரே தயாரித்துக்கொள்ளவேண்டிய நிலை. அது தவறு என்று புரிந்ததும், ‘ஒரு வேளை, இப்படி இருக்குமோ?’ என்று வேறு கோணத்தில் பிரச்னையை அணுகுகிறார். அவருக்குத் தோன்றிய பதிலால் பிறருக்கு நன்மை விளைகிறது. படைப்பாளிகள், ‘இப்படியும் இருக்கலாமோ?’ என்று யோசிப்பதால் வித விதமான புனைக்கதைகள் கிடைக்கின்றன. மூடநம்பிக்கைகளை ஒழிக்க சிறு வயதில் பயமுறுத்தி வைத்திருந்ததை நம்பி, எப்போதுமே ஒரு செயலுக்குப் பயப்படுவது சரிதானா? ‘பொய் சொன்னால் சாமி கண்ணைக் குத்தும்’. பொய் சொல்ல வேண்டும் என்பதில்லை. ஆனால், வீணாக தெய்வத்தை இழுப்பானேன்? உடனுக்குடனே தண்டனை அளித்தால், கடவுள் எப்படி கருணை மிக்கவர் ஆவார்? அவருக்கும் மானிடனுக்கும் என்ன வித்தியாசம்? கடவுள், மதம் என்ற பெயரால் மனிதனின் சிந்திக்கும் திறனை, அத்திறனால் கேள்வி கேட்கும் பழக்கத்தை ஒடுக்கி விடுகிறார்கள் சிலர். எனக்கு ஒரு பெண் விரிவுரையாளர் எழுதியது: ‘நீ நிறைய கேள்விகள் கேட்கிறாய். எல்லாவற்றையும் கடவுள் கொடுத்தது என்று ஏற்றுக்கொள்!’ கடவுள் பெயரைத் தனக்குச் சாதகமாக ஆக்கிக்கொண்டு, மனிதன் விதித்த நடைமுறைகளை கேள்வி கேட்காது ஏற்க வேண்டுமா? நிர்மலா ராகவனைப்பற்றி… பெங்களூரில் படித்துப் பட்டம் பெற்று, திருமணமானபின் மலேசியா வந்தவர். 1966-லிருந்து கோலாலம்பூரில் வசித்து வருகிறார். மூத்த பௌதிக ஆசிரியையாக மலேசிய அரசாங்கப் பள்ளிகளில் பணிபுரிந்தவர். தமிழ், ஆங்கில இருமொழி எழுத்தாளர். தமிழில் சிறுகதை, தொடர்கதை, கட்டுரை, வானொலி நாடகம், கலை விமரிசனம் ஆகியவைகளை 1967-லிருந்து எழுதிவருகிறார். பல சிறுகதை, நாடக, நாவல் போட்டிகளில் பரிசு பெற்றுள்ளார். இவரது “ஏணி” என்ற சிறுகதைத் தொகுப்பு தமிழ்நாட்டுக் கல்லூரி ஒன்றில், இளநிலை பட்டப் படிப்புக்குப் பாட புத்தகமாக வைக்கப்பட்டிருந்தது. சிறந்த சிறுகதை எழுத்தாளருக்கான விருது (தங்கப் பதக்கம், மலேசிய தமிழ் எழுத்தாளர் சங்கம், 2006), சிறுகதைச் செம்மல்” விருது, 1991, சிறந்த பெண் எழுத்தாளருக்கான விருது (சூரியன் மாதப் பத்திரிகை வாசகர்களால் 1993-ல் தேர்ந்தெடுக்கப்பட்டது)). சிறுகதை, நாடகத்திற்கான பட்டறை நடத்தியுள்ளார். போட்டி நீதிபதியாகவும் இருந்திருக்கிறார். பல மேடைகளிலும், கருத்தருங்குகளிலும் பேசியுள்ளார். 2015-ல், சாஹித்ய அகாடமி, இந்திய தூதரகம், மலேசிய தமிழ் எழுத்தாளர் சங்கம் முதலியவை இணைந்து, கோலாலம்பூரில் நடத்திய இலக்கியக் கருத்தரங்கில் உரையாற்றியுள்ளார். ஆங்கிலத்தில் கல்வி, சமூக இயல், மனோதத்துவம், இந்திய பாரம்பரியக் கலை விமரிசனம், மருத்துவம் முதலான பொருட்களில் தினசரிகளில் பதின்மூன்று வெவ்வேறு பகுதிகளில் எழுதியுள்ளார். வானொலி நாடகங்களும் ஒலிபரப்பாகி உள்ளன. தனது இரு கதைகளை ஆங்கிலத்தில் இவர் மொழிபெயர்க்க, அவை அகில உலக இஸ்லாமிய பல்கலைக்கழக சஞ்சிகையில் வெளியாகி உள்ளன. ஆங்கிலத்தில் இவர் எழுதிய பெண்ணியக் கட்டுரைகள் ஸ்வீடன் மற்றும் மலேசியாவில் முனைவர் பட்ட ஆராய்ச்சிக்கு எடுத்துக்கொள்ளப் பட்டிருக்கின்றன.