[]     இன்றைய கண்ணாடியும் நாளைய முகங்களும் களந்தை பீர்முகமது         அட்டைப்படம் : லெனின் குருசாமி - guruleninn@gmail.com    மின்னூலாக்கம் :சீ.ராஜேஸ்வரி - sraji.me@gmail.com    வெளியீடு : FreeTamilEbooks.com    உரிமை  - CC-BY-SA    உரிமை – கிரியேட்டிவ் காமன்ஸ். எல்லாரும் படிக்கலாம், பகிரலாம்.                சமர்ப்பணம்     இந்நூல்   நான் செய்யும்   பிரார்த்தனையாக         என் அன்புக் கொழுந்தியாள்   எம்.எஸ். செய்யது ரஹிமாவுக்கு                     அணிந்துரை   கடந்த பத்தாண்டுக் காலத்தில் தம்முடைய அருமையான சிறுகதைப் படைப்புகளின் மூலம் பல்லாயிரக்கணக்கான வாசகர்களின் கவனத்தைக் கவர்ந்து பாராட்டுதல்களைப் பெற்று வருகிறார் முற்போக்கு எழுத்தாளரான திரு. களந்தை பீர் முகம்மது. தாமரையில் 1983ஆம் ஆண்டில் வெளிவந்த இவருடைய முதல் கதையான 'தயவு செய்து' என்னும் கதையோடு தொடங்கும் இத்தொகுப்பில் பதினொன்று கதைகள் அடங்கியுள்ளன. முஸ்லீம் சமுதாயத்தில் நடுத்தர வகுப்பினரிடையேயும் உழைப்பாளி மக்களிடையேயும் தோன்றும் சிக்கல்கள் போராட்டங்கள் போன்றவைகள் மெய்மை வாய்ந்த படப்பிடிப்புகளின் மூலம் இக்கதைகளில் வழங்குகிறார் ஆசிரியர். அவர் படைக்கும் பாத்திரங்களின் உரையாடல்கள் கதைகளுக்கு வலுவைக் கூட்டித் தருகின்றன. இத்தொகுப்பில் இடம் பெற்றிருக்கும் 'இன்றையக் கண்ணாடியும் நாளைய முகங்களும்', 'ஒரு தாய் வயிற்றுப் பிள்ளைகள்' ஆகிய இரண்டும் மத நல்லிணக்கத்தை மனித நேயத்தின் அடிப்படையில் வலியுறுத்திக் காட்டும் கதைகளாகும். கிராமச் சூழலில் இந்து - முஸ்லீம் மற்றும் முஸ்லீம் - கிறிஸ்துவ மக்களிடையே இயல்பாக இருந்து வருகின்ற ஒற்றுமை உணர்வைச் சிதைக்க முற்படுகிற தீய சக்திகள் வீழ்த்தப்பட வேண்டியவை என்பதை இக்கதைகளில் அவர் சொல்லிச் செல்லும் பாங்கு மிகச் சிறப்பாக அமைந்துள்ளது. தங்கள் முஸ்லீம் நண்பருக்கு இந்து நண்பர்கள் பாதுகாப்புத் தர முன்வருவதும், தண்டனை பெறும் முஸ்லீம் இளைஞன் அபராதத்தின் ஒரு பகுதியை மாதா கோவில் உண்டியலில் செலுத்த வேண்டும் என்ற தீர்ப்பு வழங்கப்படுவதும் திரு. பீர் முகம்மது அவர்களின் பரந்துபட்ட நோக்கையும், தீர்க்கதரிசனப் பார்வையையும் நமக்குத் தெரிவிக்கின்றன. இவருடைய கதைகளில் நம்பிக்கையும், நல் எதிர்நோக்கும் இருப்பதைக் கண்டு மகிழ முடிகிறது. 'தயவு செய்து' என்னும் கதையின் முடிவில் வரும் ஜமாலின் சிந்தனையோட்டமும் தனது அறையில் காற்று வீசட்டும் என்பதற்காக ஜன்னலைத் திறந்து வைப்பதும் இதற்குச் சான்றுகள். அவ்வாறே வாழ்க்கை வடிவம் என்னும் கதையில் வரும் மீராப்பிள்ளை தம்முடைய சக ஊழியர்களின் போராட்டத்திற்குத் துணை நிற்கும் கட்டத்தில் அவர் சாதி, சமய உறவுகளைத் தாண்டி நிற்பதைக் காணும்போதும் ஆசிரியர் காட்ட விரும்பும் நல் எதிர்நோக்கு நிலையை நம்மால் புரிந்துகொள்ள முடிகிறது. இத்தொகுப்பில் இடம் பெற்றிருக்கும் நிலைகள், சொல்லிலும் செயலிலும், சாம்ராஜ்யம் போன்ற கதைகள் முஸ்லீம் மக்களின் அன்றாட வாழ்க்கை நிலையையும், அவர்களின் மனப்போராட்டங்களையும், குடும்பச் சிக்கல்களையும் எடுத்துக்காட்டுவதைக் காணலாம். நண்பர் களந்தை பீர் முகம்மது தம்முடைய கதைகள் அனைத்திற்கும் களமாகத் தாமறிந்த இஸ்லாமியச் சமுதாயத்தைத் தேர்ந்தெடுத்துக்கொண்டு கற்பனைகளுக்குப் புறம்பான வகையில் மெய்மை வடிவங்களான பாத்திரங்களை நமக்கு அறிமுகப்படுத்துவதன் மூலம் அவர்களோடு ஒன்றி நின்று வாழ்பவர் அவர் என்பதையும் நமக்குத் தெரியப்படுத்திவிடுகிறார். சொந்தச்சூழல்  அண்மிய களம்  அறிமுகமான பாத்திரங்கள் ஆகிய இவைதாம் எழுத்தாளர்களின் படைப்புகளுக்கு வலுவூட்டும் சக்திகள் என்பதற்கு நண்பரின் கதைகள் பல்வகையிலும் சான்று பகர்கின்றன. இத்தகு கதைகள் பலவற்றை ஆசிரியர் தொடர்ந்து படைத்து வழங்க அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய இறைவன் அருள்வாராக! அன்பன் டாக்டர் தி. தயானந்தன் பிரான்சிஸ் பொதுச் செயலாளர் கிறிஸ்துவ இலக்கியச் சங்கம் சென்னை 17.6.1994 பதிப்புரை இன்றைய கண்ணாடியும் நாளைய முகங்களும் என்னும் இச்சிறுகதைத் தொகுப்பு நூலில் பதினோரு கதைகள் அடங்கியுள்ளன. ஒவ்வொரு கதையிலும் தென் தமிழ் நாட்டின் மணம் முழுக்க முழுக்க வீசுகின்றது. கதைகளைப் படிக்கும்போது அவற்றை வாசிக்கிறோம் என்ற உணர்வைவிட நிகழ்ச்சிகளில் நாம் கலந்து கொள்கிறோம் என்ற உணர்வு ஏற்படும் அளவுக்கு நம்மைப் பாத்திரங்களோடு ஒன்றிவிடச் செய்கிறார் ஆசிரியர். முஸ்லீம் பண்பாடு சார்ந்த அன்றாட நடப்புகளை மையமாக வைத்துப் பின்னப்பட்டவை இக்கதைகள். கிறிஸ்தவ இலக்கியச் சங்கம் வெளியிடும் முதல் இஸ்லாமியச் சிறுகதைத் தொகுப்பு நூல் இது. எங்களின் முஸ்லீம் எழுத்தாளர் திரு. பீர் முகம்மது அவர்களின் இந்த நூலை வெளியிடுவதில் பெருமை கொள்கிறோம். கிறிஸ்தவ இலக்கியச் சங்கம் வெளியிடும் சிறுகதைத் தொகுப்பு நூல்களுக்கு வாசகர்களிடையே பெருத்த வரவேற்பு எப்போதும் உண்டு. அதே வரவேற்பு இந்நூலுக்கும் இருக்கும் என்று உறுதியாக நம்புகிறோம். மிக்க அன்புடன் ஸ்வீட்ஸின் பிரபாகரன் தமிழ்ப் பதிப்பாசிரியர் கிறிஸ்தவ இலக்கியச் சங்கம் சென்னை 2-2-94                                                         இதய உரை   ஒன்றும் சொல்ல முடியவில்லை; ரொம்பவும் மகிழ்ச்சியான நேரம் இது. பத்தாண்டு கால எழுத்துப் பயணத்தில் எனக்கென்று ஒரு நிழல் - இத்தொகுப்பு. எனக்குத் தெரிகிறது என் பலமும் பலவீனமும்! ஆகையால், திருப்தி இல்லாமல்தான் இந்தப் பயணமும்! இந்தத் தொகுதியின் குறைகளையும், நிறைகளையும் நீங்கள் எனக்குத் தெரிவிக்க முன்வந்தால் என் பாதையை ஒழுங்குபடுத்த எனக்குக் கைகொடுத்தவர்கள் ஆவீர்கள்! தயவுசெய்து... எனது முதல் சிறுகதை. கட்டுக்கோப்பில்லாமல் தானே வகுத்த வழியில் போன கதை. "தாமரை” வெளியிட்ட இக்கதையைத்தான் 1983 ஆம் ஆண்டிற்கான சிறந்த சிறுகதையாக இலக்கிய சிந்தனை தேர்ந்தெடுத்துக் கெளரவித்தது. இலக்கியச் சிந்தனை அமைப்பாளர்களுக்கும் தேர்வுபெறக் காரணமாயிருந்த திருவாளர்கள் நீல. பத்மநாபன், ராசி. அழகப்பன் ஆகியோர்களுக்கும் நன்றி கூறுகிறேன். எனது எழுத்துக்கு உரமிட்டவர்களுக்கும், உறுதுணையாய் இருந்தவர்களுக்கும் மற்றும் கலை, இலக்கியப் பெருமன்றம், பரிசளித்துப் பாராட்டிய முற்போக்கு எழுத்தாளர் சங்கம், கோவை இ.எஸ்.டி. ஞானன் பரிசுத் திட்ட அமைப்பு, இத்தொகுதியின் சிறுகதைகளை வெளியிட்ட தாமரை, செம்மலர், கணையாழி இதழ்களுக்கும் மிகுந்த நன்றிகள்! நூலாக்கும் பெரும்பணியை மகிழ்வுடன் ஏற்றுக் கொண்ட கிறிஸ்தவ இலக்கியச் சங்கத்தின் பொதுச் செயலாளர் அருள்திரு. டாக்டர் தயானந்தன் பிரான்சிஸ் அவர்களுக்கும், தமிழ்ப் பதிப்பாசிரியர் திருமதி ஸ்வீட்லின் பிரபாகரன் அவர்களுக்கும், அச்சக ஊழியர்களுக்கும் என் பணிவன்பான நன்றிகள் என்றென்றும் உரித்தாகட்டும்!   அன்பு நிலையம்          என்றும் அன்புடன் 18, முகைதீன் தெரு ஏ.பீர் முகம்மது  ஆழ்வார் திருநகர் 628 612 (களந்தை பீர்முகம்மது)   சிதம்பரனார் மாவட்டம்             பொருளடக்கம் 1. தயவு செய்து 9  2. சார்லஸ் மானேஜர் 16  3. வாழ்க்கை வடிவம் 22  4. பாசமும் சுமையும் 28  5. இன்றைய கண்ணாடியும் நாளைய முகங்களும் 31  6. நிலைகள் 36  7. ஒரு தாய் வயிற்றுப் பிள்ளைகள் 40  8. சொல்லிலும் செயலிலும் 51  9. அம்மா வருகிறாள் 57  10. சாம்ராஜ்யம் 60  11. நிற மாற்றம் 66                          1. தயவு செய்து   இதுவரையில் தனக்கென்று அம்மாவின் கடிதங்கள் தவிர வேறெவரின் கடிதமும் பெறாதவனாயிருந்த ஜமால் முகம்மது இன்று தன் அக்காவின் கடிதமும் தனது ரூமிற்குள் கிடந்தது கண்டு ஆச்சரியப்பட்டான். அவன் தனது குமாஸ்தா வேலையைப் பாக்டரியில் முடித்துவிட்டு வழக்கமாக நண்பர்களுடன் தான் இந்த ரூம் வந்து சேருவான். இன்று காலையிலிருந்தே வயிற்று வலியால் சிரமப்பட்டுக் கொண்டிருந்தான். அதனால் ஒருமணி நேரம் முன்னதாகவே வேலையிலிருந்து தன்னைக் கழற்றிக்கொண்டு அறைக்கு வந்து சேர்ந்தான். நெல்லை மாவட்டத்தின் வறட்சியான பகுதியொன்றில்தான் ஜமால் முகம்மதுவின் உம்மாவும், அக்கா, தங்கையும் வசித்து வருகின்றனர். தான் பெறும் 250 ரூபாய் சம்பளத்தில் ரூம் வாடகை, சாப்பாட்டுச் செலவு, இதர செலவினங்கள் எல்லாம் போக அவன் கையில் முழுசாக நூறு ரூபாய் கூட இதுவரையில் தேறியதில்லை . சில சமயங்களில் எதிர்பாராச் செலவுகள் அவனை மேலும் சித்ரவதை செய்யும். இந்த மாதம் வயிற்று வலி புதிய விருந்தாளியாக வேறு வந்து சேர்ந்திருக்கிறது. இது இன்னும் என்னென்ன செலவுகளைச் செய்யுமோ? ஒவ்வொரு முறையும் ஜமால் தன் உம்மாவுக்குப் பணம் அனுப்பக் கஷ்டப்பட்டான். இருந்தபோதிலும் ஒவ்வொரு மாதமும் அவனது பணம் மட்டுமே அந்தக் குக்கிராமத்திலே வசிக்கின்ற அவன் குடும்பத்தின் வயிற்றுப் பசியைத் தீர்த்து வைக்கிறது. உம்மாவின் பெயருக்குத்தான் அனுப்பும் இந்த எண்பது அல்லது தொண்ணூறு ரூபாய் எந்தெந்தச் செலவுகளுக்கு உறைபோடும் என்று அவன் நினைத்துப் பார்ப்பான். சன்னமான கண்ணீர் இழைகள் அவனது கண்களில் இருந்து பெருக்கெடுக்கும். எனினும் அவன் வேறு வேலைகளுக்கும் கூடுதலான சம்பாத்தியத்திற்கும் முயன்று கொண்டே இருந்தான். வேலைதான் கிடைக்கவில்லை. தான் பணம் அனுப்பினால் அதனைச் 'சந்தோஷத்துடனே’ பெற்றுக் கொண்டதாக உம்மா ஒரு கடிதம் எழுதுவாள். அதற்கிடையில் வேறு கடிதங்கள் வருவதும் இல்லை. இவனிடமிருந்து போவதும் இல்லை. ஆனால் இன்று ஒரு மர்மக்கதையே போல தனது அக்காவிடமிருந்து கடிதம் வந்திருக்கிறது. அனுப்பும் முகவரியிலேயே தனது அக்காவின் பெயர்தான் சுத்தமாக எழுதப்பட்டுள்ளதே; இவள் ஏன் தனக்கு ஒரு கடிதம் எழுத வேண்டும்? என்ன நோக்காடு வந்தது என்று எழுதினாளாம்? ஏகமான அருவருப்புடன் கடிதத்தைப் பிரித்து ஜமால் படிக்க ஆரம்பித்தான். “அன்புத் தம்பி ஜமால்! அக்கா ஜரீனா எழுதிக்கொள்கிறேன்' என ஆரம்பித்தவள் சகல விசாரிப்புகள் இல்லாமல் நேரடியாகவே விஷயத்தைத் தொட்டுக்கொண்டு போனாள். 'அன்று நீ என்னை அடித்த அடியையும், ஏசிய ஏச்சுக்களையும் இன்று நான் மறந்து போய் விட்டேன். அதையெல்லாம் ஞாபகத்தில் வைத்துக் கொண்டிருக்கவும் உன்னைக் குற்றம் சாட்டவும் எனக்கென்ன யோக்யதை இருக்கிறது? நீ அனுப்பிக் கொண்டிருக்கிற பணத்தில் தானே நானும் என் வயிற்றைக் கழுவிக்கொண்டிருக்கிறேன். உம்மாவும் என்னோடு அந்த நாள் முதலாக ஒரு வார்த்தைகூடப் பேசிக்கொள்ளாமலேயே இன்றுவரை இருந்துவிட்டார்கள். ஆனால் என்னைக் கண்கலங்காமல் கவனித்துக் கொள்ள வேண்டும் என்று மட்டும் அவள் நினைக்கிறாள். எனக்கென்று ஒரு கல்யாணமே இனி நடக்கப்போவதில்லை என்றும் அம்மா முடிவெடுத்து விட்டாள். எந்நேரமும் அதற்காகக் கண்ணீர் வடித்தே தன்னைக் கரைத்துக் கொண்டிருக்கிறாள். நான் அவளோடு பேச முயன்ற சமயங்களில் எல்லாம் முகத்தையும் திருப்பிக் கொள்கிறாள். அவளது இதயச் சுமைகளைப் புலம்பினால் அதனைக் காது கொடுத்துக் கேட்பவர்தான் யார்? எங்கும் தடுப்புச் சுவர் உள்ளது. அதுவே எங்களுக்குப் பிழைக்க வழியில்லாமல் செய்துவிட்டது. என் பேச்சுக்குத் துணை மும்தாஜ்தான். அவள் பேச்சுக்கு நானே துணை. நான் என் இயலாமையை வேறு யாரிடம் சொல்ல? பிறரிடம் சொல்ல முடியுமா? சொன்னால் உதவுவார்களா? எனக்கு இன்றுள்ள நிலையில் உதவக்கூடியவன் நீதாண்டா! உன்னைக் கெஞ்சிக் கேட்கிறேன். எனக்கு உடைமாற்றிக் கொள்ளக்கூட இனிமேல் சேலை எதுவும் இல்லை. ஜாக்கெட் மூன்றும் ரொம்ப நாளாகவே என்னை விட்டுப் போகத் துடிக்கின்றன. எந்த அளவுக்குத் தைத்துக்கொண்டு மீண்டும் பயன்படுத்த முடியுமோ அந்த அளவுக்குப் பயன்படுத்திவிட்டேன். இனி அதுவும் இல்லை. நான் உன்னைத் தொந்தரவு செய்வதாக எண்ணாதே தம்பி! தயவுசெய்து இந்த ஒரு உதவியும் செய்துவிடு. உனக்குக் கோடிப் புண்ணியம் உண்டு! என்மீது எவ்வளவு கோபம் இருந்தாலும் என்னை மன்னித்துக்கொள்...”   கடிதம் இன்னும் நீண்டுகொண்டே இருந்தது. அவளை ஒரு கடிதம் எழுத வைக்கக்கூடிய அளவுக்காவது படிக்க வைத்துவிட வேண்டும் என்று தன் வாப்பா அடிக்கடி சொல்லியதை ஜமால் நினைத்துப் பார்த்தான். அவள் படித்த மொத்தப் படிப்பும் இந்த ஒரு கடிதத்திற்குத்தானா? அவனது கால்களில் ஜரீனாவே விழுந்து ஒரு சேலைக்காகக் கதறுவதாகத் தோன்றியது. தனது அருமைச் சகோதரியின் அவல வாழ்க்கை அவனது நெஞ்சிலே ஆயிரம் அம்புகளாகப் பாய்ந்து இரத்தத்தை வெளிக்கொணர்வதாகத் தோன்றியது. கள்ளமற்ற தன் அக்காவை ஊரார், நெஞ்சிலே ஈரம் இல்லாமல் நிர்மூலமாக்கி வதைக்கிற கொடுமை தோன்றியது. கடந்த காலம் கண்களின் முன்னே கொடூரமாகத் தோன்றியது. ஐம்பது வயதுக்குள்ளாகவே தனது வாப்பா மையமாகி எல்லாப் பொறுப்புகளில் இருந்தும் விடுபட்டு மண்ணுக்குள் சுவர்க்கம் தேடிக்கொண்டபோது பாதுகாப்பாற்ற நிலையில் தனது குடும்பமே மூழ்கியது. உம்மா கதீஜா, அக்கா ஜரீனா, தங்கை மும்தாஜ் இவர்களோடு ஒரே ஆண் மகனாகத் தானும் நின்றான். இனி என்ன செய்ய வேண்டும் என்பதைக் கூட யோசிக்க முடியாத இருண்ட பருவம். நாற்பது நாள் வாப்பாவுக்கு பாத்திஹா ஓதவும் பட்ட கஷ்டம் கொஞ்ச நஞ்சமல்ல. இந்நிலைதான் உம்மா இத்தா முடிந்து ஆனால் வெளியே போகும் எண்ணமேயில்லாமல் வீட்டிற்குள்ளேயே அடைபட்டுக்கிடந்தாள். இனிமேல் தனக்கேது படிப்பு என்று கேள்விகேட்டு, பின்னர் தனக்குத் தானே பதிலைத் தேடிக்கொண்டவனாய்ப் படிப்புக்கும் ஒரு முற்றுப்புள்ளியை வைத்தான் ஜமால். உம்மா, 'நீ ஏன் படிப்பை நிறுத்தினாய்?' என்று கேட்கவில்லை. அவளால் கேட்கவும் முடியாது. அவன் செய்தது சரிதான் என்றே எண்ணிக்கொண்டாள். சிறிது காலத்திற்கு இங்கேயே இருந்து வேலை பார்ப்போம் என்று எண்ணியவனுக்கு அந்தக் குக்கிராமத்தில் ஹோட்டல் வேலையைத் தவிர வேறு என்னதான் கிடைக்கும்? உம்மாவும் அக்காவும் ஒரு நாள், ’பீடி சுற்றினால் இன்னும் கொஞ்சம் பணம் கிடைக்கும்' என்று சொன்னார்கள். ஜமால் அதற்கான காரியத்தைச் செய்து முடித்தான். அவர்கள் பீடி சுற்ற ஆரம்பிக்கவும் குடும்பம் நல்ல நிலைக்கு வரும் என எண்ணினார்கள். ஆனால் சோதனைகளே வீட்டு வாசலில் வந்து நின்றன. "கதீஜாம்மா! உம் மாப்ள என்கிட்ட நானூறு ருபா கடன் வாங்கி இருந்தாரும்மா. ரொம்பக் கஷ்டப்படுறான்னு நெனச்சி நானும் குடுத்தேன். திடீர்னு இப்படியெல்லாம் நடக்குன்னு யார்தான் நெனச்சாங்க? இப்ப எனக்கு ரொம்பவும் சிரமமாயிருக்கு. எனக்கு ஏதாவது வழி பண்ணேன்” மகுதூம் மரைக்காயர் வாசலில் உட்கார்ந்துகொண்டே தான் கொடுத்த நானூறு ரூபாய்க்கும் தூண்டில் போட்டார். வறண்டு போன குரலில் கதீஜாம்மா உள்ளே இருந்தபடி பேசினாள். அவள் எப்போதுமே மென்மையான பேச்சுக்காரி. அடாவடித்தனமாக யாரிடமும் பேசியறியாதவள். தன் கணவர் மகுதூம் மரைக்காயரிடம் நானூறு ருபாய்க்குக் கடன் வாங்கியது பற்றி ஒன்றுமே சொல்லவில்லையே என்ற எண்ணத்திலேயே பேசினாள். அவள் குரல் வெளியே வரக்கூட பயந்தபடியே கதவோரமாக நின்றது. மகுதூம் மரைக்காயர் வலுத்தவர். வார்த்தைகளைக் காதிலே எடுத்துப் போட்டுக் கொண்டார். கதீஜா சொன்னது இதுதான். 'அண்ணே ! என்கிட்ட அவரு இதுபத்தி ஒண்ணுமே சொல்லலியே, எதுக்காக வாங்குனார்ன்னு நீங்க சொல்ல முடியுமா?” மகுதூம் மரைக்காயர் பதிலும் சொன்னார். "உம் மகனுக்குக் காலேஜ் ஃபீஸ் வகைக்குன்னு வாங்கினாரு. அப்புறமா பெருநா செலவு வேற இருக்குன்னாரு. உங்க குடும்ப விசயம் எனக்கென்னமா தெரியும்?'' “அப்படீன்னா சரியாத்தானிருக்கும். கொஞ்சம் பொறுத்துக்குங்க. யாருமே இல்லாம அனாதையா நிக்கிறோம். என் கடைசித் தம்பி துபாயில் இருக்கான். அவனுக்கு எழுதிப்போட்டுப் பணம் கேக்குறேன். அதுவரைக்கும் கொஞ்சம் பொறுத்துக்குங்க.” "நான் ரொம்ப நாளா பொறுத்துட்டேம்மா. நீ இத்தால இருக்கிறதுனாலே இவ்வளவு நாளும் வராம இருந்தேன். உன்கிட்ட இப்போ கேக்குறதுக்கு எனக்கும் சங்கடமாத்தானிருக்கு. உன் தம்பிக்குக் கடிதம் எழுதிப்போட்டு சீக்கிரமா கொடுத்துட்டா புண்ணியமா போகுமம்மா! எம் புள்ளைக்கும் கல்யாணம் வந்துக்கிட்டு இருக்கு” என்று சொல்லியவாறே தெருவில் இறங்கினார். அவர் கதீஜாம்மாவின் பதிலை எதிர்பார்க்கவில்லை. கதீஜாம்மாவும் அவள் கணவர் சிக்கந்தர் பாட்சாவும் இருபத்தைந்து வருசங்களுக்கும் மேலாக தாம்பத்திய உறவை நடத்தியிருக்கிறார்கள். அவர்களைப்போல மனமொத்த தம்பதிகளையும் ஒருவருக்கொருவர் அனுசரித்துப் போகும் பண்பையும் வேறெங்கும் காண முடியாதுதான். சிக்கந்தர் ஒரு லாரி டிரைவராக வேலை பார்த்து வந்தார். பழக்கதோஷங்களினாலும் இரவு பகல் எனப் பாராமல் லாரி ஓட்டிக்கொண்டு போக வேண்டியிருந்ததாலும் அவர் 'தண்ணி' போடக் கற்றுக்கொண்டார். தனக்குள்ள சம்பளத்தை அப்படியே கதீஜாவின் கையில் ஒப்படைப்பதும், 'தண்ணி' போட மட்டுமே பிறரிடம் கடன்வாங்கியும் வாழ்க்கையைப் பயின்றார். கதீஜாவுக்கும் சிக்கந்தருக்கும் ஏறத்தாழ சமவயதுதான். பந்த இழை அறுந்து போகக்கூடாது என்று எண்ணியே சம்பந்தக்காரர்கள், இவர்கள் இருவரையும் இணைத்து வைத்தார்கள். சிக்கந்தர் படிப்பறிவு இல்லாதவர். ஆனால் கதீஜாவுக்கு எழுதவும் படிக்கவும் தெரியும். அதுவும் அனுபவ வாயிலாகவே, பள்ளிக்கூடம் சென்றதில்லை. அவள் அண்ணன் தான் அதனைக் கற்றுக்கொடுத்தான். கதீஜாவின் உடன் பிறந்த நான்கு அண்ணன் தம்பிகளும் தங்கள் தங்கள் குடும்பத்தைக் காப்பாற்றவே பிரிந்து போய்விட்டார்கள். அதுவும் கூட வெவ்வேறு ஊர்களுக்குப் போய்விட்டனர். கதீஜா மட்டுமே இந்த ஊரில் தங்கிவிட்டாள். ஒரு பொல்லாத லாரி விபத்தில்தான் பாட்சா மௌத்தாகிவிட்டார். தான் கடன்பட்டிருப்பதாக பாட்சா கதீஜாவிடம் சொல்லவே இல்லை. ஒளிவு மறைவே தங்களிருவர்க்கு இடையிலும் இல்லை என்று கதீஜா நினைத்திருந்தது போக இப்போது புதிய கடன் சுமைகள் முளைத்து விட்டன. மகுதூம் மரைக்காயர் போல இன்னும் சிலர் வந்தார்கள். நூறு இருநூறு என்று கடன் சொன்னார்கள். கறாராகப் பேசினார்கள்; போனார்கள். பாட்சாவின் தோஸ்த் கந்தசாமியும் ஒரு நாள் வந்தான். அவனோடு நெருக்கமானவன் பாட்சா. கந்தசாமி, பாட்சா உயிரோடு இருந்த நாள் வரைக்கும் அடிக்கடி வீடு வந்து செல்பவன். இப்போதும் கதீஜாவுக்கு ஆறுதல் சொல்ல வந்தவன் தான். கதீஜா பிரயாசைப்பட்டுக் கேட்டதன் பேரில் 'ஐயாவுக்குத் தண்ணி போடலேன்னா ஒண்ணும் ஓடாது தங்கச்சி. அதனால்தான் அவுரு கடன் வாங்க ஆரம்பிச்சாரு. நான் எவ்வளவோ சொல்லிப் பார்த்தேம்மா. கேக்கலியே உம் புருஷன். பயித்தியம் புடிச்சுரும் போல இருக்குடா கந்தசாமின்னு சொல்லிக்கிட்டே ஊத்துவாரு. சம்பளப்பணத்துல ஒரு பைசா கூட அவரு தனக்குன்னு எடுத்திருக்க மாட்டாரே'' என்று கூறினான். "அப்படின்னா வாங்குகிற கடனையெல்லாம் எப்படித்தான் அவரு தீர்க்கணும்னு நெனச்சாரு?” கந்தசாமிக்கு பதில் சொல்லத் தெரியவில்லை. தானே இதுவரைக்கும் யோசிக்காத விசயமாகப் பட்டது அவனுக்கு. கந்தசாமியின் மௌனம் கதீஜாவுக்கு மேலும் குழப்பத்தையே ஏற்படுத்தியது. "நான் இத யோசிச்சே பார்க்கலேம்மா! நான் வர்றேன்” என்றபடி கந்தசாமியும் சித்தம் கலங்கியபடி புறப்பட்டு விட்டான். அவனுக்கு கதீஜாவை எண்ணும்போது பரிதாபமாக இருந்தது. தங்களை வாழவைத்த வரைக்கும் கடன் கிடன் என்று எதுவுமே சொல்லிக்கொள்ளாமல் சிக்கந்தர் பாட்சா குடும்பத்துக்குக் கஷ்டம் தராமல் இருந்தார் என்கிற விசயம் இப்போதுதான் அந்தக் குடும்பத்தின் உறுப்பினர்களுக்குத் தெரியவந்தது. காதலையும் கல்யாணக் கனவுகளையும் சுமந்து கொண்டிருந்த ஜரீனாவுக்குத் தன் வாழ்க்கை என்ன ஆகுமோ என்ற பயம் ஏற்பட்டது. ஜமால் கல்லூரிப்படிப்பை விட்டு விட்டான் என்றாலும், வாப்பா வைத்துவிட்டுப் போன கடனும் அதற்கான காரணமும் நெஞ்சை அழுத்தியது. கடைக்குட்டி மும்தாஜ் மட்டும் துயரச் சுவடுகள் தெரியாமல் இருந்தாள். கதீஜாவின் தம்பி துபாயிலிருந்து கொட்டித்தருவான் என்று எதிர்பார்த்த கடன்காரர்கள் அனைவரும் நம்பிக்கை இழக்கத் தொடங்கினார்கள். கதீஜாவின் வீட்டில் பல கால்கள் ஒரே நாளில் ஏறி ஏமாற்றத்துடன் திரும்ப ஆரம்பித்தன. அக்கம் பக்கத்தாருக்கு இனம் காட்ட முடியாத வேதனை உண்டாயிற்று. சிக்கந்தர் இவ்வளவு கடன்களை வைத்திருந்தானா என்பது எல்லோருக்குமே அதிசயமாகவும் கூட இருந்தது. துபாய் போலவே தம்பியும் தூரமாகப் போய் விட்டான் என்பதைக் கூட கதீஜாவும் உணர்ந்தாள். பீடி சுற்றியதால் கிடைத்த பணத்தைச் சிறிது சிறிதாகச் சேமித்தும் தங்களது பசிக்கு அளவான சாப்பாடு மட்டுமே தாங்கள் உண்டும் கடன்காரர்களின் கடன் சுமையைச் சிறிது சிறிதாகக் குறைத்தாள். தன்னையும் தன் கணவரையும் பற்றிப் பிறர் ஏளனமாக எண்ணிவிடக் கூடாது என்ற ஜாக்கிரதை உணர்வே இதற்குக் காரணம். இறந்த பின்னரும் கணவர் மீது அவச்சொல் ஏறுவதை அவள் விரும்பாதவளானாள். அன்பும் அரவணைப்பும் கலகலப்பும் குடியிருந்த வீட்டில் அவை எல்லாவற்றையும் விரட்டி விட்டு துக்கம் தன்னையே ஏகச் சக்ராதிபதியாக அறிவித்துக் கொண்டு உட்கார்ந்திருந்தது. எடுபிடி சேவகர்களாகக் கடன் தொல்லையும் வயிற்றுப்பசியும் விளங்கின. சொற்ப வருமானம் சொர்க்க வாழ்வைத் தருமா? இப்போது கடன் அடைபடுவதைவிட ஓரிருவர் வட்டியோடு கொடுத்திருந்த தொகைக்கு வட்டியை அடைப்பதே பிரதானம் ஆயிற்று. ஒரு விடிகாலைப் பொழுதில் மும்தாஜ் காய்ச்சலால் அவதிப்பட்டுக் கொண்டிருந்தாள். அவளைத் தர்மாஸ்பத்திரிக்கு இட்டுச் சென்று ஹோட்டல் வர நேரமாயிற்று. வழக்கமாகப் பத்து மணிக்கு அண்டஹ் ஹோட்டலின் ஆதிக்கம் சின்ன எஜமான் கைக்குப் போய்விடும். இனி சாயங்காலம் நான்கு மணிக்குத்தான் மறுபடியும் பெரியவர் கையில் ஆட்சிப் பரிமாற்றம். கல்லாவில் சின்ன எஜமான் அப்துல்கபூர் உட்கார்ந்து இருந்தான். ஓட்டமும் நடையும் ஜமாலுக்குத் துணை புரியவில்லை. மணி பத்தரையை நெருங்கி விட்டது. நில்லுடா! ஏன் இவ்வளவு லேட்?' கபூர் அதிகார உச்சஸ்தாயியில் ஜமாலை நிறுத்தினான். “வந்து...வந்துங்க... தங்கச்சி மும்தாஜுக்கு உடம்பு சுகமில்லாம ஆயிடுச்சு. அதனால ஆசுபத்திரிக்குப் போயிட்டு...' 'சீ! நிறுத்துடா! கழுதைங்களா! லேட்டுன்னா ஏதாவது காரணம் சொல்றது ! ஜமால் கோபத்தின் உச்சிக்கு இழுத்துப் போகப்பட்டான். அப்துல் கபூர் தன்னைவிட வயதில் இளையவன் என்பதும், படிப்புக்கு அவனது மண்டையில் இடம் கிடையாது என்பதும், இருவருமே ஒரே பள்ளிக்கூடத்தில் படித்தவர்கள் என்பதும் ஜமாலின் ஞாபகத்துக்கு வந்தது. அவனது கோபத்தைப் பன்மடங்கு கிளறின. “நீங்களெல்லாம் முதலாளி ஆய்ட்டிங்க, இருந்தாலும் கொஞ்சம் மரியாதையாப் பேசினா நல்லாயிருக்கும்!” 'வக்கத்துப் போனவங்களுக்கு மரியாதை வேற கேக்குதோ? ’ ஹோட்டலில் சாப்பிட்டுக் கொண்டிருந்தவர்கள் சாப்பாட்டை மறந்தார்கள். சர்வர்கள் தங்களை மறந்தார்கள். என்னதான் நடந்ததோ தெரியவில்லை. கபூர் கல்லாவில் சுருண்டு கிடந்தான். அவனது சீவிச்சிங்காரித்த அழகுக் கேசம் ஜமாலின் கைப்பிடிக்குத் தோதுவாக இருந்திருக்கிறது. மாறி மாறிக் குத்துக்கள் வாங்கி ஜமாலின் காறி உமிழ்ந்த எச்சிலுக்கும் தனது சுந்தரவதனத்திலேயே இடம் கொடுத்து ஒரு ஆட்டுக்குட்டியைப் போலக் கிடந்தான் அப்துல் கபூர். ஜமால் எங்கே என்று யாருக்கும் தெரியவில்லை. அவன் எப்போதோ போய்விட்டான். தனது கோப உணர்ச்சி அனைத்தையும் ஒன்றுசேர்த்து ஒரு முழு யுத்தம் நடத்திவிட்டுப் போயிருக்கிறான் ஜமால் முகம்மது. அவன் மீது ஏதேனும் அடி விழுந்திருக்குமா என்ற சந்தேகம்கூட அங்கிருந்த ஏனையோருக்கு வந்தது. வினாடிகள் நிமிசங்களாகி, நிமிசங்கள் நாட்களாகி, நாட்கள் வாரம், மாதம் என்று ஏதேதோ ஆகிக் காலப்பயணம் நடந்து கொண்டிருந்தது. கதீஜாம்மாவின் குடும்பத்தில் இன்னும் மகிழ்ச்சி கிளை பரப்பவில்லை. ஜமால் உள்ளூர் வேலையின்றி, அக்கம் பக்கத்து ஊர்களிலும் உருப்படியான வேலையின்றி உழன்று கொண்டிருந்தான். 'ஒரு நாள் யாருமே எதிர்பாராமல் இந்த ஒரு நாள் வந்தது. இந்த ஒரு நாள் வராமலே போய் இருக்கலாம். ஆனால் காலச் சங்கிலி முறையாகக் கோக்கப்படாமல் அந்தரங்கத்தில் நின்று கொண்டிருக்க முடியுமா? யாருக்கோ மீண்டும் மீண்டும் துன்பமும் சோதனையும் பிடிக்கிறதே என்றெண்ணி அந்த நாள்தான் தன்னை உருமாற்றிக்கொள்ள முடியுமா? ஜரீனா எனும் ஒரு இளங்கவிதைக்கு ஒரு களங்கம் உருவாக்கப்பட்டது. அவளின் வீட்டுக்கு மேற்கே நான்கு வீடுகள் தள்ளி இருக்கும் அகமது அசூத் உடன் அவள் காதல் வளர்த்திருந்தாள். எந்தத் தொந்தரவும் குறுக்கீடும் புகுந்து கொள்ளாதவாறு கவனமாகப் புரியப்பட்ட காதல் அது. மசூத் கபடின்றிச் சிரிப்பதாக, உள்ளார்ந்த அன்போடு பார்வைப் பரிமாற்றங்கள் செய்வதாக ஜரீனா எண்ணினாள். சின்னச் சின்னப் பார்வைகளில் அந்தக் காதல் வளர்க்கப்பட்டது. அந்தக் கருக்கலில் ஒரு நாள் அவனது ஸ்பரிசத்துக்கு இவள் தன்னை உட்படுத்தியிருக்கிறாள். பிறிதொரு நாள் இவளை அவன் முத்தங்களால் மேயவிட்டிருக்கிறான். இன்னுமொரு நாள் இவளோ - இது வாப்பாவின் இறப்புக்குப் பின் - ஆற்றில் குளிக்கப் போகிறவள் காலை நாலரை மணிக்கெல்லாம் திண்ணையில் படுத்துக் கொண்டிருந்த மசூத்தை எழுப்பி ஒரு முத்தம் பதித்து புதிய கவிதை எழுதியிருக்கிறாள். அவையெல்லாம் யாராலும் கண்டு கொள்ள முடியாதவையாயிருந்தன. இந்த ஒரு நாள்தான் கடும் துரோகம் செய்து விட்டது. மசூத் மெல்ல மெல்ல விரித்த வலையில் தன்னையே மீனாக்கி அவனது ஆசைகளுக்கும் மானிட சுகத்துக்கும் வடிகாலாகிக்கொண்டு இருந்தாள். சப்த அதிர்வுகளால் மெல்லவே எட்டிப்பார்த்தார் மகுதூம் மரைக்காயர். குறுக்கும் நெடுக்கும் பெரிய பெரிய மரங்களால் - எல்லைகளை வரையறுத்துக்கொண்டிருந்த கட்டை குட்டையான மண் சுவர்களால் - சிறியதான கிணற்றுத் தடுப்புச் சுவரால் - ஆகிய இவை எவற்றினாலும் ஜரீனாவின் மானம் தப்பிப் பிழைக்க வழியில்லாமல் போயிற்று. பல நாள் ஆசையை ஒரு நாள் முடித்துகொண்ட மசூத் எவ்வித பாரமுமின்றி, நைசாக வெளியேறி விட்டான். சூரியக் கதிர்கள் பூமியை எட்டிப்பிடிக்கும் முன்பாகவே ஜரீனாவின் கதை ஊர்வாசிகளுக்கு விளம்பப்பட்டது. சாதாரண வயிற்றுவலியால் காலை நாலு மணிக்கே கொல்லைப்புறம் போன மரைக்காயர் அந்தக் கடனை நீண்ட நேரமான பின் முடித்துவிட்டுத் திரும்பி வரும்போதுதான் இந்தப் புண்ணியத்தைக் கட்டிக்கொண்டார். காலைப்பொழுது விடிய விடிய ஜரீனாவுக்கு உலகம் இருண்டு வந்தது. எல்லோருக்கும் ஒளியை வழங்கிக் கொண்டிருக்கும் சூரியன், தனக்கு மட்டும் ஒளி தராவண்ணம் எங்கோ அண்ட சராசரத்தின் ஒரு மூலைக்குள் பதுங்கிக்கொண்டதுபோல் தோன்றியதை ஜரீனா உணர்ந்தாள். எனினும் மசூத் நம்பிக்கையாகத் தோன்றினான். வீட்டிற்கு ஓடிவந்த ஜரீனா பல சிந்தனைகளுக்கும் பலியாகிக் கொண்டிருந்தாள். வெளியே பல நூறு ஜரீனாக்கள் கதையாகப் பரிகசிக்கப்பட்டார்கள். ஊர் இன்றுதான் ஒரு பெரிய கரும்புக்கட்டு கிடைத்ததென்று இஷ்டப்படிக்கும் சுவைத்துத் துப்பியது. மகுதூம் மரைக்காயரின் மூலக்கதைக்குப் பல விரிவாக்கங்களோடு திரைக்கதைகள் அமைக்கப்பட்டன. மசூத் இப்பவும் சலனமின்றி உறங்கிக்கொண்டிருந்தான். மோதினார், இரவில் கூட்டம் கூடுவதை முறைப்படி வீடு வீடாகச் சென்று அறிவித்தார். இஷா தொழுகைக்குச் சிறிது நேரம் கழித்துத்தான் ஊர்க்கூட்டம் ஆரம்பமாகும். எனினும் அதற்கு முன்னரே கூட்டம் பெருகியிருந்தது. இஷா தொழுகையை முடித்தவர்கள் அப்படி அப்படியே கூட்டத்தில் கலந்தனர். பள்ளிவாசலைச் சுற்றிலும் ஜனத்திரள். பெரியவர்கள் முகப்பில் ஒய்யாரமாக அமர்ந்திருந்தார்கள். குஞ்சு குளுவான்களெல்லாம் திருவிழா கண்ட உற்சாகத்தில் அங்குமிங்கும் ஆர்ப்பரித்துக்கொண்டு ஓடின. பெண்கள் பள்ளிவாசலையொட்டிய வீடுகளில் நெருக்கியடித்துக்கொண்டு உட்கார்ந்திருந்தனர். ஊர்த்தலைவர் இப்ராகிம் சாகிப், ஆதம் சாகிப், குத்தூஸ் முதலாளி, எஞ்சினீயர் மலுக்கு முகம்மது, டாக்டருக்குப் படித்துக் கொண்டிருக்கும் நாகூர் பிச்சை... இன்னும் சிலர். அவர்களைச் சுற்றிப் பிறர். கைகால்கள் முளைத்து ஒரு கதை வெளிவரப் போவதையே எல்லோரும் எதிர்பார்த்துக்கொண்டிருந்தார்கள். ’அவளையும் அவம்மாவையும் வரச் சொல்லுங்க!' என்று மோதினார் குரல் கொடுத்தார். இருவரும் பையப் பைய வந்தனர்; நின்றனர்; தலைகள் மண்பார்த்து நின்றன. மசூத் ஏற்கெனவே எதிர்ப்புறமாய் நின்றுகொண்டிருந்தான். ஜமால் வரவில்லை. வீட்டை விட்டுக் கணவரின் மெளத்துக்குப் பிறகு முதன்முதலாய் வெளிவந்த கதீஜாம்மாவுக்கு இத்தனை ஆண்களின் முன்னிலையிலும் நிற்பது அவமானமாக இருந்தது. இந்தச் சித்ரவதைகளுக்கு இடையிலும் ஜரீனா மசூத்தின் ஆதரவை நம்பி உறுதி குலையாது நின்றாள். 'கூட்டத்தை ஆரம்பிக்கிறோம். எல்லோரும் அமைதியாயிருங்க!' மோதினார், குரல் கொடுத்தார். கடலின் அலைகள் நின்றன. அமைதி நுழைந்தது. பெரியவர் இப்ராகிம் பேச, நீதி சபையின் நிகழ்ச்சி நிரல் துவங்கிற்று. 'என்னப்பா மசூத்! ஊரில் இதுநா வரைக்கும் இல்லாத புதுப்பழக்கம் இன்னிக்குக் காலையில் நடந்திருக்கு. அதுல உனக்குப் பங்கிருக்கு. ஏன் இப்படி சகட்டு மேனிக்கு நடந்துக்கிட்டே? 'தெரியாம ஆயிடுச்சுங்க. சின்னப்புள்ளத்தனமா நடந்துக்கிட்டேன். இனிமே இப்படி எல்லாம் நடக்க மாட்டேங்க!’ வார்த்தைகள் பஞ்சம் இல்லாமல் வந்தன. 'அது எப்படி? நீ படிச்சவன், இதெல்லாம் செய்யலாமா? “செய்யக்கூடாதுதான். என்னை மன்னிச்சிடுங்க! 'ஏம்மா ஜரீனா!' பெரியவர் இப்போது ஜரீனா பக்கம் திரும்ப, கூடவே அனைவரும் தங்கள் கண்களை ஜரீனாமீது அகலமாக வைத்தார்கள். குளோஸ்-அப்பில் பார்த்துவிட வேண்டும். பெரியவர் தொடர்ந்தார் - 'என்ன? நாங்கள்ளாம் ஊர்ல இருக்குறோம்னு நெனச்சியா இல்லியா?' எங்கேயோ ஒருவன் பொருளைச் சூட்சுமமாகப் புரிந்துகொண்டு 'களுக்' என்று சிரித்தான். அந்த அமைதியில் அது பாறையில் விழுந்து நொறுங்கிய கண்ணாடியின் அலறலாய்ப் பீறிட்டது. 'எவண்டா சிரிக்கிறான்? ராஸ்கல், அலகைப் பேத்துடுவேன்டா!' என்சினீயர் மலுக்கு முகம்மது சீறிப் பாய்ந்தார். நிசப்தம் மீண்டும். இவ்வாறெல்லாம் ஒரு கேள்வி தன்னை நோக்கி வீசப்பட்டதைக் கேட்க முடியாதவாறு தன்னையே மறந்து நின்றாள் ஜரீனா. எஞ்சினீயர் ஜரீனாவின் மௌனத்தைப் பொறுக்காமல், 'புதுசாப் பழக்கத்தை உண்டாக்கிட்டா! அவ எப்படிப் பேச முடியும்? மானம் மரியாதையா நடந்துக்கிட்டு வர்றோம். நீ பொட்டக்கழுத உனக்குக் கள்ளசுகம் வேண்டியிருக்கோ?’ இடிந்துபோனாள் கதீஜாம்மா. திக்பிரமை பிடித்தது போலானாள். ஆனால் ஜரீனா எதுவும் பேசவில்லை . 'என்னடி கேட்டுக்கிட்டே இருக்கேன்; பதிலக் காணோம்?' 'அவ எப்படிப் பேசுவா? அந்தச் செறுக்கிதான் இவனக் கையப் பிடிச்சு இழுத்துப் போயிருப்பா. பொட்டச்சி வூட்ல இருக்காம் காலைல நாலு மணிக்கு ஏன் அயலான் தோட்டத்துக்குப் போனா? அவ கூப்புடாமலா மசூத் போயிருப்பான்?' ஆதம் சாகிப் ஆராய்ச்சி செய்து பேசினார். 'இதுங்களை இப்படியே விட்டுவச்சா நம்மப்பசங்களும் கெட்டுப்போவாங்க! சீக்கிரமா இந்த அக்ரமத்துக்கு ஒரு முடிவு கட்டணும்!' என்றார் ஒரு பெரியவர். தன் பங்குக்குப் பேசவில்லையென்றால் ஏதாவது பழி வந்துவிடும் என்று ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாய்க் கருத்துத் தெரிவிக்கலானார்கள். டாக்டராகப்போகிற நாகூர் பிச்சை 'குடிச்சாலும் ஒழுங்கா நடந்துக்கிட்டு இருந்தாரு நம்ம சிக்கந்தர். அவரு புள்ளையா அப்படீன்னுதான் எனக்கு ரொம்ப யோசனை!' என்று வெகுவாய் அங்கலாய்த்தார். ஜரீனாவின் வாய் அசையவேயில்லை. இவ்வாறு நிலைமை போய்க்கொண்டிருப்பதை உணர்ந்து நெஞ்சிலே சிறிது கருணை உள்ளவரும் வம்பு வழக்குகளில் சென்று அறியாதவருமான யூசுப் மட்டும் இப்படிச் சொல்லலானார்: 'சரி! ஏதோ நடந்தது நடந்து போச்சு. சின்னப் பசங்க அறியாம நடந்துகிட்டா நாமதான் பொறுத்துப் போவணும். பிரச்சினையை மேலும் மேலும் சிக்கலாக்காதீங்க!' இவ்வாறு யூசுப் சொன்னதும் சிலருக்கு ஆத்திரம் வந்தது. அதில் ஹோட்டல் முதலாளியும் ஒருவர். தன் மகன் அப்துல் கபூரை ஜமால் நாய்போல் அடித்துப் போட்டதிலிருந்து அவருக்கு நெஞ்சிலே வன்மம். அவர் கேட்டார், 'என்னவே யூசுபு! கதையை எங்கெங்கேயோ இழுத்துக்கிட்டுப் போறீரு?' 'சின்னப்புள்ளத்தனமால்லாம் நீரு பேசாதீரும்!' என்றார் பெரியவர் இப்ராகிம். ’அட நீங்க ஏன் கோபப்படறீங்க? நான் ஒரு நல்ல ஐடியா சொல்றேனே!' என யூசுப் கூறினார். 'அப்படி என்னவே புதுசா நல்லா ஐடியவைக் கண்டு புடிச்சிட்டீரு? எங்களுக்கெல்லாம் தோணாம உமக்கு என்ன அந்த ஐடியா?' குத்தூஸ் முதலாளி குதர்க்கம் பேசினார். யூசுப் தன் ஐடியாவைச் சொன்னார், ’ரெண்டு பேரையும் மேலும் விசாரணை பண்ணாம ஒரு வழியா முடிச்சுப் போடறதுக்கு வழியப் பாருங்கங்குறேன்.' 'லே, யூசுபு! நீரும் உம்ம ஐடியாவும்!' என்றபடியே மசூத்தின் தந்தை சேக் மீரான் எழுந்து நின்று கர்ஜிக்கத் தொடங்கினார். 'என் மகனக் கண்டா உமக்கு அவ்வளவு இளக்காரமாப் போச்சுதோ? அவன் படிப்பும் அந்தஸ்தும் தெரியாமப் பேசாதீங்க. அவனுக்கு ஏற்கெனவே நான் தென்காசியில் பொண்ணு பேசி முடிச்சாச்சு. இந்த நிலைமையில் இந்தப் பரதேசிப் பய மவள் எங்க வூட்டுக்கு மருமகளா வச்சுக்கணுமாக்கும்! உம்ம வேலை என்னவுண்டோ அதப் பார்த்துட்டுப் போவும்!' மேல்மூச்சு வாங்கியது அவருக்கு. 'பரதேசிப்பய மவன்னா அவகிட்டா ஏன் உங்க துரை போனாரு?' யூசுப்பும் விடாமல் வாதாடினார். அவருக்குத் துணையாக வேறு யாரும் இல்லை. 'யூசுப்! நீங்க என்ன பேசறீங்க? ஒரு பொண்ணாப் பொறந்தவ அடக்கம் ஒடுக்கம் இல்லாம நடந்துகிட்டா நீ அவளையில்லா கண்டிக்கணும்? இந்தக் கேள்விங்கள் அவளப் பார்த்துக் கேக்கணும். அதுதான் நியாயம். இப்படி நீரு சப்போர்ட் பண்ணிப் பேசினா அப்புறம் ஊரு கெட்டுக் குட்டிச்சுவராப் போயிடும்!’ ஆதம் சாகிப் பேசவந்ததை மகுதூம் மரைக்காயர் பேசி முந்திவிட்டார். பெரிய வரவேற்பும் கைத்தட்டலும் இருக்கும் என்று மகுதூம் மரைக்காயர் எதிர்பார்த்தார். அவ்வாறு ஏதும் நடக்கவில்லையாயினும் அவர் பேசியது நியாயம் என்றுதான் அனைவரும் எண்ணினர். 'நீங்களாதான் பேசிக்கிட்டிருக்கீங்க. பையனுக்கும் பொண்ணுக்கும் விருப்பம் இருக்கிறப்போ இடையில் உழுந்து நியாயம் பேசுறதுக்கு நாம யாரு? மசூத்தையும் ஒரு வார்த்தை கேட்டுப்புடறது?' என்ற யூசுப் மசூத்தை நோக்கித் திரும்பினார். மசூத் முன்வந்து பேசினான். 'எங்க வாப்பா, உம்மா சொல்ல என்னால மீற முடியாது, அப்படி மீறிப்போனா அவரு எனக்குச் சோறு தண்ணி இல்லாம ஆக்கிப் போடுவாரு!' முடிந்தது; எல்லாம் முடிந்தது; ஜரீனாவுக்கு இந்தச் சொல்மட்டும் - தன் காதல் நாயகன் பேசுகிறானே என்பதால் அவளையுமறியாமல் அவளது செவிகளில் உட்புகுந்தது. அவள் தனது வாழ்க்கையின் முற்றுப்புள்ளிகளாக அந்த வார்த்தைகளைக் கொண்டாள். தான் வாழும் உலகம் தன்னை மட்டும் வானவெளியில் வீசிவிட்டு, அது அதன் கடமையைச் செய்ய உருண்டு உருண்டு எங்கோ சென்றுவிட்டதைக் கண்டாள். பொன் கூரைகளால் வேயப்பட்ட தன் கற்பனைலோகம் கறையான்களின் உணவாகி இற்றுப்போய்த் தன் தலையிலே விழுந்ததாக நினைத்தாள். ஓராயிரம் எண்ணங்களும் ஓராயிரம் கவலைகளும் ஒரே நொடியில் பிறந்து வளர்ந்து பூதாகரமாகி மறைந்து ஓடின. யூசுப்பும் விக்கித்துப் போனார். அவர் கண்களில் குளம் கட்டியது. ஆனால் எவர்க்கும் தெரியாமல் துடைத்துவிட்டுக் கொண்டார். 'சரி! பையனும் வேண்டாம்னே சொல்றான். ஊர்ப்பெரியவங்க என்ன சொல்லப் போறீங்க?' என்றார் எஞ்சினீயர். பெரியவர்கள் ஒருவரோடொருவர் கிசுகிசுத்துக் கொண்டார்கள். இந்த அமைதியை உடைத்தெறிய முடியாதோ எனும்படி வெகு அகலமான அமைதி பரவிக்கிடந்தது. பின்னர் பெரியவர் இப்ராகிம் தன் தொண்டையைக் கனைத்துக் கொண்டே தீர்ப்பைச் சொல்ல ஆயத்தமானார். எல்லோர் கண்களும் அவர்மீது ஆக்ரமித்திருந்தன. 'ஊரோட நன்மையை முன்னிட்டு கதீஜாம்மா குடும்பத்தை மூணு வருச காலத்துக்கு ஊரை விட்டு ஒதுக்கி வைக்கிறோம். பெரிவங்கள்ளாம் இந்த முடிவுக்குத்தான் வந்து இருக்காங்க. எனக்கும் இதுதான் சரின்னு படுது. அதனால் இனிமே அவங்க வீட்டுக்கு யாரும் போகவோ, அவங்களோட யாரும் பேசவோ கூடாது. பீடி சுத்தறதுக்கும் அவங்களுக்கு அனுமதி கிடையாது. இப்படி செஞ்சாத்தான் ஊருல மத்தவங்களும் ஒழுங்கா இருப்பாங்க. அவங்க பாவப்பட்ட குடும்பம் ஆனதுனால மூணு வருசம் காலத்துக்கும் அவங்க கிட்டேயிருந்து பள்ளிவாசலுக்கு வரி வசூல் பண்ணக்கூடாது. ஊர்க்கந்தூரியிலேயும் அவங்களுக்குப் பங்கு கிடையாதுன்னு தீர்மானம் பண்ணிட்டோம். மசூத்துக்கு நூறு ரூபா அபராதம் போட்டிருக்கோம்!” என்றார் பெரியவர். தீர்ப்பு வழங்கப்பட்டதும் கூட்டம் சந்தடியில்லாமல் கிளம்பியது. 'ரொம்பவும் தண்டனை பண்ணிவிட்டாங்களே!' என்று ஒரு சிலர் நினைத்தனர். இருப்பினும் பேசவில்லை. எல்லோரும் சென்ற பிறகே கதீஜாம்மாள் கிளம்பினாள். சிறிது தள்ளி ஜரீனா போனாள். கருத்த மேகங்கள் சந்திரனை மறைக்க ஆரம்பித்தன. இருளில் வழி தெரியாமல் தட்டுத் தடுமாறியவாறு உம்மா செல்வதை ஜரீனா பார்த்தாள். எங்கோ இரண்டொரு நாய்கள் ஓலம் இட்டன. தூரத்தில் நின்றவாறு இவர்கள் செல்வதை யூசுப் பார்த்துக் கொண்டிருந்தார். வீட்டை நெருங்கியபோதுதான் ஜமால் திண்ணையில் உட்கார்ந்திருப்பது தெரிந்தது. கதீஜாம்மாவும் ஜரீனாவும் ஜமாலும் பேசிக்கொள்ளவில்லை. ஆத்திரத்தைக் கட்டுப்படுத்த முயன்ற ஜமால் அதில் தோல்வி கண்டான். வேகமாகச் சென்று ஜரீனாவின் தலைமுடியைப் பிடித்திழுத்தான். அந்த வேகத்தில் அவள் கீழே விழுந்தாள். ஓங்கி மிதித்தான். தீராத கோபம். அவள் முன்னே தலைமுடியைப் பற்றியவாறே உட்கார்ந்து கன்னத்திலும் முதுகிலும் மாறி மாறி அடித்தான். ஜரீனா அழ ஆரம்பித்தாள். 'அறிவுகெட்டவளே! எல்லோரையும் தலைகுனிய வச்சுட்டு வந்து நிக்குறியே! ஏன் இன்னும் உயிரோட இருக்க? ஒரு குளம் கிணறுன்னு போய் சாகறதுக்கா இந்த ஊருலே இடம் இல்லே? அறிவுகெட்ட சிறுக்கி..' அத்தனையையும் ஏற்றுக்கொண்டு தன் பாவங்களுக்குப் பிராயச்சித்தமாக அவள் அழுதாள்போலும். 'உன் கண்ணுலேயே இனிமே நான் முழிக்கமாட்டேன்!' ஓடினான் அவன். இரண்டு வருசம் ஆயிற்று. ஜமால் சென்னைக்கு வந்து வீட்டுக்குப் பணம் அனுப்பிவைத்தபோது அக்காவுக்கு தண்டச்சோறு என்றெண்ணியவனாகவே இருந்தான். இன்று வந்த அக்காவின் கடிதம் அவன் கண்ணைத் திறந்தது. அவனது சிந்தனைகளைக் கிளறி விட்டது. சிந்தனை விரிய விரியத் தங்களுக்கு அநீதி இழைக்கப்பட்டுவிட்டதாக எண்ணினான். இரண்டு மூன்று தினங்களாக அவனால் நிம்மதியாக உறங்கவும் முடியவில்லை. தனது சகோதரிக்காக அவளது கள்ளங்கபடமில்லாத உள்ளத்துக்காக முதன் முறையாகக் கண்ணீர் வடித்தான். தன் குடும்பத்தை ஊரார் ஒழுக்கம் என்ற சொல்லால் இம்சித்ததை இப்போது அவன் பூரணமாக உணர்ந்தான். இப்போதே ஓடிச்சென்று அந்தப் பெரிசு இப்ராகிம், ஆதம் சாகிப், குத்தூஸ் முதலாளி, மகுதூம் மரைக்காயர், மசூத் இவர்களையெல்லாம் பழி வாங்க வேண்டும் எனத் துடித்தான். அவர்கள் இந்தக் கையில் சிக்கினால்.... முறுக்கேறிய தனது கைகளை ஒரு முறை ஒத்திகையாகப் பயிற்சி கொடுத்தான். அவர்களைத் தட்டிக்கேட்காமல் தன்னால் அயர முடியாது என்பதை அவன் உணர்ந்தான். அதற்கு முன் தன் அக்காவின் கண்ணீரைத் துடைக்க வேண்டும். தன்னால் பட்டினி கிடந்து கூடத் தன் அக்காவுக்கு ஒரு நல்ல சேலையை வாங்கிக்கொடுத்து விட முடியும் என்றெண்ணிய ஜமால், தனது அறையில் காற்று வீசட்டும் என்பதற்காக ஜன்னலைத் திறந்தான்.   தாமரை, ஜூன் 1983           2. சார்லஸ் மானேஜர் ஆஜானுபாகுவான தோற்றம். முகத்தில் இன்னமும் கண்ணாடி. சிரித்துக்கொண்டே இருந்தார். அவன் வந்து அப்படிச் சொன்னபோது நாங்கள் நம்பவில்லைதான். ஏனெனில் அதற்கேற்ற தருணம் அதுவல்ல என்பதுபோல் நாங்கள் நினைத்துக்கொண்டோம். அதனால் அதிர்ச்சியடைந்தோம். பின் ராகவன் சொன்னான். 'வா, போய்ப் பார்த்துட்டு வந்துடுவோம்' என்று. எனக்கு அங்குப் போக மனமில்லைதான். அது ஒரு மாதிரியாயிருக்கும். ஆனாலும் மரபு, சம்பிரதாயங்கள் என்றெல்லாம் இருக்கின்றனவே? நேற்றெல்லாம் கூட, ஏன் இன்றைக்குக் காலையில் கூட ஒரே கிணற்றில்தான் நாங்கள் குளித்தோம். மேனியெல்லாம் புசுபுசுவென்று மயிர் அடர்த்தியாகப் படர்ந்திருக்கும். தோள்கள் விம்மிப் புடைத்திருந்தன. ஆனந்தமான முறையில் சோப்புப்போட்டு, அதில் திருப்தி காணாது மறுமுறையும், இப்போது தலைக்கெல்லாம் சேர்த்து சோப்பு போட்டுக் குளித்துக் கொண்டிருந்தார். எப்போதுமே யாரையும் விடக் குளிப்பதற்கு அதிகமான நேரம் எடுத்துக் கொள்கிற நான், இன்றென்னவோ அவரிடம் தோற்றுப்போய்ப் பின்வாங்கிவிட்டது போலிருக்கிறது. நேரம் எட்டுமணியாவது ஆகியிருக்கும். எட்டு மணி என்று துல்லியமாகக் கணக்கு வைத்துக்கொண்டால் இன்னும் இருபத்தியோர் நிமிஷங்கள்தான். 8.21க்கு அரங்கிசையில் பாலமுரளி கிருஷ்ணா பாட ஆரம்பித்து விடுவார். ஆஹா! அந்தத் தேனாமிர்தத்தை ரசிக்க வேண்டும். அதிலேயே லயித்து ஒன்றிப்போக வேண்டும். இதற்காகவேதான் இன்று ஞாயிற்றுக்கிழமை என்றாலும் கூட சீக்கிரமாக விழித்துக்கொண்டது. கணக்குப் போட்டுப் பார்த்தேன். கிணற்றடியிலிருந்து இப்போதே புறப்பட்டாலும் ஏழு நிமிஷத்து நடையில் வீடு கிடைத்து விடும். எண்ணெய் தேய்த்துத் தலை சீவி, லேசாக - எண்ணெய் வழிகிற முகமல்லவா? பவுடர் போட்டுக்கொண்டு ஆங்கிலச் செய்தி அறிக்கையை எந்த அளவுக்குக் கேட்டுக்கொள்ள நேரம் இருக்குமோ அந்த அளவில் கேட்டுக்கொண்டு, பாலமுரளி பாட ஆரம்பித்ததும் அப்படியே ரேடியோ முன் உட்கார்ந்துவிட வேண்டும். குளிக்கிற குளிப்பைப் பார்த்தால் சார்லஸ் மானேஜர் இப்போது கிளம்பி வரப் போகிறவர் மாதிரித் தெரியவில்லை. ஆசைதீரக் குளிக்கவும் சோப்புப் போடவும் இன்றோ நேற்றோ ராத்திரியோ அவர் கங்கணம் கட்டிக்கொண்டு இருந்திருக்கலாம். அதனால் அவரை நானும் கூப்பிடவில்லை. அவர் குளித்து முடிக்கும் வரை நான் காத்து நிற்க வேண்டும் என்று அவர் எப்போதும் விரும்புவது போல இன்று விரும்பியது போலவும் தெரியவில்லை. நடையைக் கட்டி வீட்டை அடைந்து காயாமல் கிடந்த தலையைக் காயவைக்க ஃபேனைப் போட்டதும் ராகவன் உள்ளே வந்தமர்ந்து கொண்டான். அவன் தான் ரேடியோவை ஆன் பண்ணினது. பொற்கோயிலில் பஞ்சாப் அரசே போலீஸை அனுப்பி சீக்கிய பயங்கரவாதிகளை வெளியேற்றித் தள்ளியதாக ஆல் இந்தியா ரேடியோவின் ஆங்கிலச் செய்தி அறிக்கை கம்பீரமாக அறிவித்தது. ராகவன் என்னைப் பார்த்தான். நான் அவனைப் பார்த்தேன். இருவருக்குமே மகிழ்ச்சி தாள முடியவில்லை. பரஸ்பரம் கையை நீட்டினோம். குலுக்கிக் கொண்டோம். சார்லஸ் மானேஜரிடம் கிணற்றடியில் தோற்றுப்போய் விட்ட எனக்கு, பஞ்சாபில் பர்னாலா மூலம் நான் வெற்றி பெற்றதாய் உணர்ந்தேன். இந்த இனிய செய்தியை ராகவனும் பங்கு போட்டுக்கொண்டதால் அந்த மகிழ்ச்சி இரட்டிப்பாகவும் அதற்கு மேலாகவும் பெருகிவிட்டதுபோல் இருந்தது. இத்தனைக்கும் எனது அரசியல் கொள்கைக்கு அவன் நேர் எதிர். ஆனால் இந்தப் பொற்கோயில் வளாக விஷயத்திலும் பயங்கரவாதிகள் விஷயத்திலும் எங்களுக்குள் எப்போதுமே ஓர் ஒற்றுமை ஏற்பட்டிருந்தது. பாலமுரளி பாட இன்னும் இரண்டு நிமிஷங்களே இருந்தன. வேகமாய்த் தலையை வாரிவிட்டுக் கொண்டேன். ஏதோ மறந்து போனதுபோல் இருந்தது. இப்போது ஞாபகம் வந்தது. 'எடி பாத்திமா! இங்கே பாரு, ராகவன் வந்திருக்கான். ரெண்டு பேருக்குமா சேத்துக் காபி கொண்டாந்துடு.' பாத்திமா அடுக்களையை விட்டு விட்டு இரண்டு சின்ன அறைகளைத் தாண்டி வந்து ராகவனை 'வணக்கம்' சொல்லிக் கும்பிட்டு ஷேமம் விசாரித்து, தாயையும் தந்தையையும் அவன் மனைவியையும் விசாரித்து ஒரே சலசல ஆக்கி விட்டாள். பாலமுரளியின் கானம் மிதக்க ஆரம்பித்து விட்டது. 'சரிதான் போ. சீக்கிரம் காப்பிக் கொண்டாடி!' என்று அவளை உள்ளே போகச் சொல்லி உட்கார்ந்துவிட்டேன். இருவருமாய் ரேடியோவின் அருகில் உட்கார்ந்து இசையை ரசிக்க ஆரம்பித்துவிட்டோம். அவனுக்கு என்ன ராகம், என்ன தாளம் என்கிறதெல்லாம் அத்துப்படி. எனக்கு அதெல்லாம் தெரியாது. இசை எவ்வடிவில் வந்தாலும் நன்றாயிருந்தால், நானும் நன்றாக ரசிப்பேன். அவ்வளவே! அதற்குமேல் ராகம், தாளம் என்றெல்லாம் போனதில்லை. ஆனால் எனக்கும் அப்படி ஒவ்வொன்றையும் அடையாளம் கண்டு சொல்ல வேண்டும் என்று ஆசையாக இருக்கும். ஆனால் அதெல்லாம் நடக்கிற காரியமாகத் தெரியவில்லை. இருவருக்கு முன்னும் பாத்திமா காப்பியைக் கொண்டுவந்து வைத்துவிட்டுப் போனாள். நல்ல கானத்தைக் கேட்டுக்கொண்டே நல்ல காப்பியைக் குடிப்பதும் ரசனை மிகுந்ததாகத் தான் இருந்தது. 'சாப்புடுறீங்களா?' என்றாள் பாத்திமா. 'அதெல்லாம் கெடக்கட்டும் தாயே! கொஞ்ச நேரம் இதைக் கேக்கத்தான் விடேன்!' என்று எரிந்து விழுந்தேன். ராகவன் எதையும் காதில் வாங்கிக்கொள்ளாதவன் போல பாலமுரளியோடு ஒத்துப் பாடிக்கொண்டிருந்தான். இவன் முன்னால் இப்படி எரிந்து விழுந்தோமே என்று நான் வருத்தப்பட்டபோது, ராகவன் ரசித்துக்கொண்டிருந்த விதத்தில் அது அவன் காதில் ஏறியிருக்காது என்று ஒரு தலை நியாயம் கற்பித்துக்கொண்டேன். ஆனால் அடுத்தாற்போல் ஒரு சந்தேகம். இவன் எல்லாவற்றையும் கண்ணிலும் காதிலும் வாங்கிக்கொண்டு, வேண்டுமென்று கேளாதவன் போலும் பார்க்காதவன் போலும் உட்கார்ந்திருப்பானோ என்ற சந்தேகம் அது. இதனால் பாலமுரளி என்னிடமிருந்து சற்று விலகி நின்று எனக்காக இன்றி மற்றவர்களுக்காகப் பாட ஆரம்பித்துவிட்டாற் போலத் தோன்றியது. பின் எனக்கும் சேர்த்தே அவர் பாடுகிறார் என்கிற உணர்வை, அவர் பாடி முடிக்கப்போகும் கடைசி சில நிமிஷங்களில் நான் பெற முடிந்தது. ஒரு சின்னக் கேள்விதான்! 'சாப்புடுறீங்களா?' என்று. ‘ பிறகு சாப்பிடுகிறேனே!' என்று மெலிதாகச் சொல்லியிருந்தால்கூட என் சகதர்மிணி அப்படியே நகர்ந்திருப்பாள். இப்படிக் காத்துக் கிடந்த ஒரு கான மழையைத் தவற விட்டிருக்க முடியாது. ஞாயிறு காலையைச் செளந்தர்யமாய் அனுபவித்ததுபோல் இருந்திருக்கும். கொஞ்சம் எரிச்சல் படப்போய், அதுவும் மூன்றாம் மனிதனை முன்னுக்கு வைத்து எரிந்து விழுந்ததில் ஒரு நயமான சங்கீதத்தை முழுவதுமாக நழுவ விட்டுவிட்டது போலாகிவிட்டது. என் மடத்தனத்தை நொந்துகொண்டேன். சாப்பிட உட்கார்ந்தேன். உப்புமா கிண்டி வைத்திருந்தாள். இதனைச் சாப்பிட வென்று ஒரு ஃபார்மால்டிக்காக அவனை அழைப்பதா? என் பாட்டுக்குச் சாப்பிட ஆரம்பித்து விட்டேன். தொண்டையில் இறங்குவேனாக்கும் என்றபடி உப்புமா சண்டித்தனம் பண்ண ஆரம்பித்துவிட்டது. இரண்டு சினிமாப் பாடல்கள் அதே ஸ்டேஷனில் ஒலிபரப்பாகி முடிந்ததும் மீண்டும் பாலமுரளி பாட ஆரம்பித்தார். எனக்கோ சந்தோஷமான சந்தோஷம். அந்தப் பயல் டேப் ரெகார்டரில் அதனைப் பதிவு செய்து கொண்டான் என்பதைக்கூட எவ்விதம் கவனிக்காமல் இருந்துவிட்டேன்? நல்ல சந்தர்ப்பமாகப் போய்விட்டது. உப்புமாவைத் தின்றதில் மீதியை அப்படியே ஓரம் கட்டிவிட்டுக் கைகழுவி வாயைத் துடைத்துக்கொண்டு பாலமுரளி கிருஷ்ணாவிடம் ஒன்றிவிடப் போகிறோம் என்ற ஆனந்தத்தில் அவனிடமிருந்த கோல்ட் பிளேக்கில் ஒன்றை உருவி (அவன் என்ன சிகரெட்டை வைத்திருந்தான் என்பதைத் தெரிந்துகொண்டது கூட ஒரு ஆச்சரியம் தான்.) பற்ற வைத்துக் கொண்டேன். இந்த நாற்றம் எல்லாம் அவளுக்கு ஆகாது என்பதால் எனக்கு இன்னும் சந்தோஷமாக இருந்தது. அவள் மறுபடியும் இப்பக்கமாக வந்து ஆற அமர நின்றுகொண்டு ஏதாகிலும்   கேட்டுவிடப் போவதில்லை. 'சிகரெட் வாழ்க' என்று மூன்றுமுறை கோஷம் போடலாம் போல் இருந்தது. டேப் ஓடி முடிந்து வேறு விஷயங்கள் பற்றிப் பேசிக்கொள்ள என்ன இருக்கிறது என்று யோசித்து முடிப்பதற்குள் பாத்திமா இரண்டாவது தடவையும் காப்பி போட்டு வந்து தந்துவிட்டாள். எனக்குப் பயமாய்ப் போய்விட்டது. மாதக் கடைசியில் இப்படி மணிக்கொரு தரம் காப்பி போட்டுத் தந்தால் கட்டுப்படியாகுமா? நாளைக்குச் சீனி வேண்டும் என்றால் நான் எங்கே போவது? விவஸ்தை கெட்டவளாயிருக்கிறாளே என்று மனதில் சபித்துக்கொண்டேன். பன்னிரெண்டு பத்து, நேயர் விருப்பத்தை நோக்கி நேரம் நகர்ந்து போய்க்கொண்டிருந்தது. இவன் வராமல் இருந்திருந்தால் படிப்பதற்கென்றே இரண்டு புத்தகங்களை - பஞ்சும் பசியும், பள்ளிகொண்டபுரம் - இவற்றில் ஏதாவதொன்றை வாசித்துக் கொள்ளலாம் என்று எடுத்து வைத்திருந்தேன். அவற்றைப் படிக்கத் துவங்கியோ, படித்துக்கொண்டோ இருந்திருப்பேன். ராகவனுக்கும் இலக்கியத்துக்கும் சொல்லி மாள முடியாத இடைவெளி. வேண்டுமானால் ஓளி ஆண்டுகளைக் கணக்கிலெடுத்துக்கொண்டு இந்த இடைவெளியைக் கணித்துக் கொள்ளலாம். வடநாட்டு அரசியலைப் பற்றிப்பிடித்துப் பேச ஆரம்பித்து விட்டான். சரளமாக சரண்சிங்கும் சந்திரசேகரும் வாஜ்பாயும் பகுகுணாவுமாக வந்து வந்து போனார்கள். ஆளை மட்டுமே வைத்துப் பேசுகிற இந்த அரசியல் எனக்குப் பிடிக்காதுதான். ஆனால் கேட்டுத் தொலைய வேண்டும். என் கண்ணோட்டங்களை முன் வைத்துப் பேசினாலும் மறுபடியும் அவன் வாயில் வாஜ்பாயியும் சரண்சிங்கும் கூடவே மேனகா காந்தியோ ராஜீவ் காந்தியோ வந்து நின்று விடுவார்கள். இதனாலெல்லாம் இவன் பேச்சுக்களை விருப்பமிருந்தாலும் விருப்பம் இல்லாவிட்டாலும் கேட்டே ஆக வேண்டும். போச்சு! புத்தகம் படிக்கிற சுவாரசியமே இவனால் இல்லாமல் போச்சு! ஊரில் சுகமில்லாமல் இருக்கிற அண்ணிக்காவது ஒரு கடிதம் எழுதி இருக்கலாம். எதுக்குமே வழியில்லாமல் ஆக்கிவிட்டு கல்லுப்போல உட்கார்ந்து கொண்டு ஏதெல்லாமோ பேசுகிறான். 'போகட்டும்! இதைக் கூட நான் கேட்டதாகப் பாவலா பண்ணாவிட்டால் இவன் என்றைக்கோ அரசியல் சந்நியாசம் வாங்கியிருப்பான். என் மீதுதான் தப்பு. இதை அப்போதே அல்லவா செய்திருக்க வேண்டும். பாவலா காட்டி பாவலா காட்டிக் கேட்பதுபோல் நடித்து, இப்போது இவனிடத்தில் அரசியலைப் பொறுத்தமட்டுக்கும் ஒரு முழு நேர நடிகனாகிவிட்டேன். நெல்லை நேயர் விருப்பம் இன்னும் வருகிற பாடாய் இல்லை. ஆனால் ராஜகோபால் வந்துவிட்டான். அவன் முகத்தில் வேர்வைக்கோடுகள். ஒரு பதற்றம். நாங்கள் வாய்திறந்து கேட்பதற்கு முன்னே அவனே கூறினான்: 'சார்! சார்! சார்லஸ் சார் இறந்துட்டாரு!' இது பலத்த அதிர்ச்சிதான். நாங்கள் இருவருமே ஒரு கணம் சிலையாகி மீண்டோம். 'எப்படி? எனது கேள்விக்கு அவன் சொன்னான். "ஹார்ட் அட்டாக் சார்!”   நம்ப முடியவில்லை . அவருக்கு இதுவரையிலும் இப்படி ஒரு நோய் இருந்ததாக அறியவில்லை. போன மாசம் எங்கள் தெருவிலேயே ஒருத்தருக்கு இப்படித்தான். போய்ச்சேர்ந்து விட்டார். இத்தனைக்கும் அதுதான் முதல் தாக்குதல். மூன்றாவதாக வந்து தாக்கினால்தான் இறப்பு சாத்தியம் என்று பலரும் பலமுறை சொல்லிக் கேள்விப்பட்டிருக்கிறேன். ஆனால் அது பொய்; முதல் தாக்குதல்கூட எமலோகம் அனுப்பிவிடும் என்பதைக் கண்ணாரப் போன மாசம் கண்டுவிட்டேன். சார்லஸ் மானேஜருக்கும் அப்படித்தான் தோன்றுகிறது. இன்று புதிதாக வந்து, வந்த வேகத்தில் தனது பலத்தைப் பிரயோகித்து அப்படியே விழுங்கியிருக்க வேண்டும் அவரை ! ஐயோ , ஐந்து பிள்ளைகள் - இரண்டு ஆண்களும் மூன்று பெண்களுமாய் எல்லாம் பருவம் வந்தும், பருவத்திற்குக் கீழேயுமாய்... நெஞ்சு பதைத்தது. சார்லஸ் சார் அவசரப்பட்டு விட்டார். இதற்கெல்லாம் சேர்த்துத்தான் காலையில் அப்படிக் குளித்துத் தீர்த்தாரா? சோப்புக்கூட இரண்டு முறை போட்டுக் குளித்தாரே! மூன்று மணி நேரத்தில் வெறும் சடலமாகி, பின் மண்ணுக்குள் அடைக்கலமாகப் போகிற உடம்பு மணம் வீசியபடியே போய்ச் சேரட்டும் என்றா அப்படிக் குளித்திருப்பார்? பாத்திமாவை அழைத்து இரண்டு முறை சொம்பில் நீர் வாங்கி நானும் அவனும் மாறி மாறிக் குடித்தோம். முகத்தைக் கழுவினோம். படபடப்பு அடங்கவில்லை. அது சரி! ஒரு மரணச் செய்தியைத் தண்ணீரால் எப்படி நீக்க முடியும்? உடனே சட்டையை மாட்டிக்கொண்டு வேகவேகமாய்க் கிளம்பினோம். போகிற வழியில் கம்பெனி முதலாளிக்கு ஒரு தெரிந்த கடையில் இருந்து போன் செய்தோம். அவரும் அதிர்ந்து விட்டார். அவரைப் பொறுத்தமட்டில் கம்பெனி தூண் சாய்ந்துவிட்டது. அதை நிறுத்த இன்னொரு சார்லஸ் தூணை கண்டுபிடிப்பது சாதாரணமான வேலையல்ல. சார்லஸ் சார் வீட்டை நெருங்கினோம். கூப்பாடு, அழுகைச் சத்தமெல்லாம் அடங்கிப் போய்விட்ட ஒரு மரண வீடா? ஒருவேளை சார்லஸ் சார் இறக்கவில்லையோ? ராஜகோபால் இப்படியுமா ஏமாற்றி விட்டான்? தயக்கத்தோடே வீட்டில் நுழைந்தோம். கொஞ்சம் பேர்களே இருந்தார்கள். அதுவும் அக்கம் பக்கத்தவர்களே. ஆஜானுபாகுவான தோற்றம், முகத்தில் இன்னமும் கண்ணாடி, சிரித்துக் கொண்டே இருந்தார் - சார்லஸ் சார்! ஆனால் சடலம்தான். உயிர்ப்பறவை அவரை மண்ணுக்குரியவராக்கிப் பறந்துவிட்டது. நேற்றுத்தான் மனைவி, மக்களையெல்லாம் பாளையங்கோட்டைக்குப் போய் வரட்டுமே என்று அனுப்பி வைத்தாராம். தகவல் சொல்ல ஆள் போயிருக்கிறது. பாளையங்கோட்டை, தூத்துக்குடி, நாகர்கோவில் சொந்த பந்தங்களெல்லாம் இனிமேல்தான் வரவேண்டும். வந்தால் கூப்பாடும் அழுகையுமாய் வீடே இரண்டுபடும். 'என்னை விட்டுப் போனீரோ மவராசா!' என்று எப்படியாவது ஒரு பெண்மணியின் இசை கலந்த ஒப்பாரி கேட்கும். இப்போது? அனாதையாய்ச் செத்துக் கிடந்தார். கொஞ்சம் கொஞ்சமாய் விவரம் கேள்விப்பட்டுக் கயிறுக் கம்பெனியின் வேலையாட்கள் வாசலில் வந்தமர்ந்தார்கள். எனக்கும் ராகவனுக்கும் இதில் மேற்கொண்டு என்ன செய்ய வேண்டும் என்பது தோன்றவில்லை. நாங்கள் மூவருமே ஒருவருக்கொருவர் அன்னிய மதத்தினர். பக்கத்தில் சாமுவேல் நாடார்தான் கூடமாட சிலரைத் துணைக்கு அழைத்துச் சடலத்தைப் படுக்கப்போட்டுத் துணியால் மூடி ஒரு மாலையும் போட்டிருந்தார். குளித்துவிட்டு வந்தவர்தானாம். சாப்பிட்டபின் சாமுவேல் நாடாரிடம் பேப்பர் வாங்கப் போயிருக்கிறார். அவர் எடுத்துக் கொடுக்கிற நேரம் பார்த்து 'நெஞ்சு வலிக்கிறதே’ என்று சொன்னாராம். சாமுவேல் நாடார் இதில் எப்போதுமே உஷார்ப் பேர்வழியாய் இருந்திருக்க வேண்டும். உடனே வீட்டிற்கு அழைத்துப் போய் ’பாயில் படுங்கள்' என்று பாயை விரித்துப் படுக்க வைத்து விட்டு வேகமாய்ச் சைக்கிளில் ஏறி டாக்டர் வீட்டுக்குப் பறந்திருக்கிறார். அவர் வந்து பார்த்துவிட்டு ’பத்து நிமிஷமாயிடுச்சு' என்று ஒரே போடாய் சார்லஸ் சாரின் வாழ்க்கை முடிவை இரண்டு வார்த்தைகளில் பிரகடனப்படுத்திவிட்டுப் போய்விட்டார். ஒரு நிமிஷம் தயங்கிக் கண்ணீர் வழிய நின்றவர் பின் சுதாரித்து, பதற்றப்படாத முறையில் அமைதியாக எல்லாக் காரியத்தையும் பண்ணிவிட்டார். கயிற்றுக் கம்பெனி முதலாளி ஜெயராஜ் வந்தார். அவர் வந்த விதம் சரியில்லை. தள்ளாட்டம் இருந்தது; நெடி இருந்தது; கண்ணில் அதிகமான சிவப்பேறியிருந்தது. கார் டிரைவர் பூபதி அவரைக் கைத்தாங்கலாய் அழைத்து வந்தான். ஆனால் அப்படி அழைத்து வர வேண்டும் என்கிற அவசியம் ஏதும் அவருக்கு என்றைக்குமே இருந்ததில்லை. ஏனெனில் அவர் அப்படிப்பட்ட வாழ்க்கைக்குத்தான் வாழ்க்கைப்பட்டுள்ளார். என்றாலும் நாலு பேருக்கு மத்தியில் தன் எஜமான் விசுவாசத்தைக் காட்ட விரும்பியோ, சோகத்தினால் கீழே விழும் நிலை ஏற்பட்டுவிடக் கூடாதே என்று கருதியோ பூபதி இவ்வாறு கைத்தாங்கி வந்திருக்கலாம். சார்லஸ் சார் அவஸ்தைப்பட்ட அறிகுறியே இல்லை. ஒருவேளை மரணத்தை அவர் கம்பீரமாக ஏற்றுக்கொண்டிருக்க வேண்டும். எத்தனை பேருக்கு இப்படி இயலும்? 'சார்! சார்லஸ் சார்? முதலாளி வந்திருக்கார். உங்களைக் கூப்பிடுகிறார்' என்று யாராவது கூறினால் போதும் உடனே எழுந்து நின்று 'என்ன சார், என்னைக் கூப்பிட்டீங்களாமே! அப்படியா?' என்று கேட்டபடியே எழுந்துவிடுவார் போலிருந்தது. அப்படித்தான் அவர் 'தூங்கினார்.’ ஆனால் யாருக்கும் அப்படி ஒரு சிந்தனை தோன்றவில்லை. தோன்றியிருந்தால் அவர் மரணத்தை லாகவமாய் வீசியெறிந்துவிட்டு மறுபடியும் ஒரு கயிற்றுக் கம்பெனியின் - ஆயிரம் ஆயிரமாய்ப் பணம் புரளக்கூடிய கம்பெனியின் மானேஜராய் அதிகமான வழியில் ஒரு பைசாவைக்கூட எடுத்துக்கொள்ளத் தெரியாத நல்ல மனிதராகவே அவரால் மீண்டும் எழுந்திருந்திருக்க முடியும். அபாரமான கைச்சுத்தம்; வாக்குச் சுத்தம் ; மென்மையான குரல். இவை எல்லாவற்றையுமே ஒரு காலனால், அதுவும் அவரது மனைவி மக்கள் இல்லாத நேரம் பார்த்துப் பறித்துப்போக முடிந்திருக்கிறது. ஒருவேளை இதைவிட்டால் வேறு சந்தர்ப்பம் கிடைப்பது அரிது என்று எண்ணித்தான் காலதூதன் வந்துவிட்டானோ? இந்த நாற்பது வயது முதலாளியை விடவும் பல ஆண்டுகள் முன் பிறந்து திறமை பெற்றபோதிலும் முதலாளிக்கு முன்னே இவர் சற்று அதிகப் பணிவாய் நடந்துகொண்டது எனக்குச் சில சமயங்களில் எரிச்சலூட்டியிருக்கிறது. அவருக்குரிய நன்னடத்தைக்கும் திறமைக்கும் வயதுக்கும் அது அவசியமானது மட்டுமல்ல; கண்டிக்கப்பட வேண்டியதாகவும் இருந்தது. இருந்தாலும் நானோ ராகவனோ அதை வெளிப்படையாய் எவரிடமும் சொல்லிக்கொண்டதில்லை. எங்களின் வருத்தமும் கோபமும் நாங்களே பரிமாறிக்கொண்டதுதான். என்ன ஆனால் என்ன? இனிமேல் அவர் அப்படி நிற்கப்போவதில்லை. அதைவிட ஒரு விசேஷம் இது! பக்கத்தில் முதலாளி நின்றுகொண்டிருக்கிறார். ஆனால் இவரோ கம்பீரமாய்ப் படுத்துக் கிடக்கிறார் - அதுவும் சிரித்த முகத்தோடு! எழவில்லை; பணியவில்லை . ஒரு மனிதன் தன் வாழ்க்கையில் இழந்துபோன சுய கெளரவங்களை மீண்டும் இந்த மரணத்தின் மூலம்தான் பெற்றுக் கொள்கிறானா? அல்லது இந்த மரணம் மட்டும்தான் அவர்கள் தங்களின் கைகட்டாத, கைக்கெட்டாத - சுய கெளரவத்தை இழக்காத தன்மையை இந்த நசிந்துபோன வாழ்க்கைக் கட்டத்தில் அழைத்துக் கொடுக்கிறதா? அப்படிப் பார்த்தால் மரணம் ஒரு சமயத்தில் நல்ல நண்பனாகவும் இருக்கக்கூடும். எல்லாச் சமயத்திலும் நல்ல நண்பனாகச் செயல்பட இந்த மரணத்திற்கு யாராவது பாடம் பயிற்றுவிக்க வேண்டும். ஆனால் இப்போது நேரம் காலம் தெரியாமல் வந்திருக்கிறதே! எங்களை விடவும் மூத்தவரான, சொல்லப்போனால் எங்களின் தந்தை வயதில் எங்களோடு பணிபுரிந்து என்றுமே கடுமுகம், கடுஞ்சொல், அதிகாரம் காட்டாத அவரின் குணாம்சங்களை எண்ணியபோது என் கண்களில் கண்ணீர் மளமளவென்று பெருக்கெடுக்க ஆரம்பித்தது. இனி வாயிலும் வயிற்றிலும் அடித்துக்கொண்டபடியே, கதறிக்கொண்டு வரப்போகிற, ஒரு பிரயாணத்தை முடித்துக்கொண்ட மனிதனின் முகத்தைக் காண, துயரச்சுமைகளோடு துன்பக் கனல்களோடு ஏதோ ஒரு பஸ்ஸில் ஒரு மனைவி ஆகப்பட்டவளும் ஐந்து குழந்தைகளும் அலறிக்கொண்டு, பிரயாணமாய் வந்துகொண்டிருக்கிற காட்சியைக் காணச் சகியாதவனாய் ஏதோ ஒரு தனிமை சூழ்ந்த இடத்தை நோக்கி நான் நகரலானேன். ராகவனையும் கூடவே அழைத்துச் செல்ல வேண்டும் என்கிற எண்ணமே இல்லாமல்!   கணையாழி, ஜூன் 1987                                       3. வாழ்க்கை வடிவம்   பதினான்கு வருஷங்களுக்கு முன் - தனது நாற்பதாவது வயதில் தனது சம்பாத்தியத்தையே நம்பியிருந்த தன் குடும்பத்துக்காக நாகர்கோவிலிலுள்ள ஜவுளிக்கடையொன்றில் வேலை பார்ப்பதற்காகப் புறப்பட்டுக் கொண்டிருந்த மீராப் பிள்ளைக்கு, ஹக்கீம் முதலாளியின் அழைப்பு கிடைத்தது. ஆச்சரியத்துடன் அவர் வீட்டை அணுகினார் பிள்ளை . அவர் காப்பி குடித்துக்கொண்டிருந்தார். பிள்ளை நுழைந்ததும் ஒரு காப்பி அவருக்கும் கிடைத்தது. “மீராப்பிள்ளை , சுகமாயிருக்கீங்களா?” “இருக்கேம்ப்பா, ஆண்டவன் புண்ணியத்துல!” “பம்பாயில் இருந்து எப்ப வந்தீங்க?" “போன மாசமே வந்துட்டேன் தம்பி! அங்குலயிருந்து பொழைக்குறதுலே ஒரு லாபமும் இல்லே!” "கேள்விப்பட்டேன். இப்ப என்ன செய்யப் போகிறீங்க?” “நாகர்கோயில்ல தான் ஒரு ஜவுளிக்கடைக்குப் போயி வேலை பாக்கலாம்னு புறப்பட்டுக்கிட்டு இருக்கேன். ஊருக்குப் பக்கமாவும் இருக்குது.'' "இருக்கட்டும். இப்ப நான், தம்பி, மச்சான் எல்லாருமாச் சேர்ந்து அம்பத்தூர் எஸ்டேட்ல டேனரி ஆரம்பிச்சிருக்கோம். பத்துப்பேரு வேலைக்குச் சேந்திருக்காங்க. அடையாறு கம்பெனில் பாதி வேலைய முடிச்சுட்டு அம்பத்தூர்ல மீதிப்பாதி வேலைய நடத்துறோம். இன்னும் கொஞ்ச நாள்ல அம்பத்தூர் டேனரிக்கே தனி டெக்னீஷியன் போட்டு அபிவிருத்தி பண்ணலாம்னு வச்சிருக்கோம். நான் சொல்றதக் கேக்குறீங்களா?'' “கேட்டுக்கிட்டுத்தான் இருக்கேன். மேல சொல்லு.” "கம்பெனி ரெண்டும் நல்லாத்தான் நடந்துகிட்டிருக்கு. இன்ஷா அல்லா. ஆனா இப்ப நம்ப அம்பத்தூர் பேக்டரியில நம்ம ஆட்களு ஒருத்தரும் இல்ல. வசுப்பா ஒரு ஆளு கெடைச்சுதுன்னா பேக்டரியிலேயே தங்க வச்சுக்கிட்டு, நல்லபடியா டேனரிய நடத்தலாம். பாதுகாப்பும் இருக்கும். ரெண்டு நாள்ல நான் மெட்ராசுக்குப் புறப்பட்டுடணும். இன்னிக்குக் காலைலதான் அங்கேயிருந்து வீட்டு விஷயமா வந்தேன். உங்க விஷயமாவும் கேள்விப்பட்டேன்.'' மீராப்பிள்ளைக்கு நன்கு புரிந்தது. ஆனால் அவ்வளவு தூரம் போக இப்போதெல்லாம் மனம் பிரியப்படவில்லை. சங்கடத்தில் நெளிந்தார். ஹக்கீமும், மீராப்பிள்ளையும் யார்? எங்கே போய் எப்படிச் சுற்றி வந்தாலும் இந்த ஏர்வாடி ஊரில் உள்ளவர்களெல்லாம் ஒரு பந்த இழையால் தொடுக்கப்பட்டவர்கள்தான். சின்னப்பா, பெரியப்பா, மாமா, மச்சான், அண்ணன், தம்பி என்று ஏதாவது ஒரு உறவில் முட்டிக்கொள்ளும். நிரந்தரப் பகைமைக்கும் வழியில்லை; நிரந்தர உறவுக்கும் தளமில்லை. ஒவ்வொரு காலமும் அனுசரிப்புதான். "தம்பி, நீ என்ன சொல்ல வர்றேன்னு நல்லா தெரியுது. ஆனா...” “ஒண்ணும் யோசனை பண்ணாதீங்க. வந்துட்டீங்கன்னா எனக்கும் ரொம்பத் தெம்பாயிருக்கும். கண்டும் காணாம சம்பளம் வச்சுத் தர்றேன். நாங்க நல்லா இருந்தா நீங்களும் நல்லா இருப்பீங்க தானே?” மறுநாளே மீராப்பிள்ளை பெட்டி படுக்கைகளுடன் மெட்ராசுக்கு ரயிலேறி விட்டார். மனைவியையும், இரண்டு சமைஞ்ச பெண்களையும், சின்னப் பையன்களையும் விட்டு மீண்டும் வடக்கு நோக்கிச் செல்கின்ற கசப்பான பயணத்தைத் தன் நிலைமைகளைக் கருத்தில் கொண்டு இனிமையாக மாற்றிக் கொண்டார்.   ஹக்கீம் முதலாளிக்குப் பெரும் திருப்தி ஏற்பட்டது. தன்னுடைய டேனரிக்கு எப்படி ஒரு சொந்தமே, காவலாளியாகவும் - வேலையாளாகவும் வந்ததில். வீட்டு வேலைகள் இருப்பினும் கொள்ளை கொள்ளையான வருமானம், எப்போதும் தான் வேலை இருக்கும் - வேலை இருக்காது என்று உறுதியாகச் சொல்வதற்கில்லை. எல்லா நேரமும் வேலை நேரம்தான். எப்போதும் தொழிலாளியாக அங்கு சேர்ந்தவர்கள் இருக்க வேண்டும் என்று முதலாளிகள் எதிர்பார்த்தாலும் மீராப்பிள்ளை மட்டுமே அங்கேயே முடங்கிக் கிடப்பார். மீதமுள்ளோர் பகுதி பகுதியாகப் பிரிந்து அங்கே இருப்பார்கள்; வீடு போவார்கள். விசித்திரமான வேலை நிலைமைதான். வந்த நாளிலிருந்து இந்தத் தொழிற்சாலையின் எல்லாப் பகுதிகளிலும் ஓரோர் சமயம் படுத்தாகி விட்டது. கனத்த குளிரும், அள்ளி வீசும் வெப்பமும் உடம்புக்குப் பழக்கமாகி விட்டது - பம்பாயைப் போல. கசகசவென்ற ஆட்டுத்தோலில் ஒவ்வொரு நாற்றமும் உண்டாகி ரசாயனப்பொருள்கள் படிந்து பல்வேறு எந்திரங்களிலும் நுழைந்து நுழைந்து இறுதியில் கண்ணைப் பறிக்கும் ஒரு பளபளப்பான வஸ்துவாக. அது தவிர, இன்னும் வெவ்வேறு நிலைகளில் அது மாறி வருவதெல்லாம் ஒரு தலைகீழ்ப் பாடமாகி விட்டது. தன் வீட்டுக்கு முன்னால் துள்ளித் திரிந்த ஆட்டுக்குட்டிகளின் தோல் கூட இந்த மெஷின்களில் வந்து விழுந்திருக்கும் என்று மீராப்பிள்ளை நினைத்திருக்கிறார். 'இந்தத் தோலா? அதா?' என்று ஒவ்வொன்றாய் விரித்து விரித்துத் தன் மனத்துள் கேள்வி கேட்டு, பதில் கிடைக்காமல் திணறிப் போயிருக்கிறார். ஸ்டேக்கிங், டாக்லிங், ஸ்ப்ரேயிங், கிளேஸிங், அயனிங் என்று படிப்படியாக ஒவ்வொரு வகையிலும் தலையை நுழைத்தார். அவசரம் என்று முதலாளிமார்கள் பதப்படுத்திய ஆட்டுத்தோல்களைத் தூக்கிக்கொண்டு கிளேஸிங் என்றும் ஃபின்பிளக்ஸ் என்றும் வந்தபோதெல்லாம் இரவாயினும் விழித்துக்கொண்டு, சின்னப்பிள்ளை போல, அந்த வேலைகளைத் துப்புரவாய்ச் செய்து முடித்து அவர்களைத் திருப்தியுடன் அனுப்பி வைத்திருக்கிறார். அவருக்குத் தெரியும் இந்தத் தொழிலில் இப்போது முதலாளிகளைவிடத் தனக்குத் தனித் தேர்ச்சி கிடைத்துவிட்டது என்றும், தன் அளவுக்கு அவர்களால் இதிலுள்ள குறைபாடுகளை உணர முடியாதென்றும். ஆயினும் தனக்கே ஒரு வேலையில் திருப்தி கிடைக்காதவரை அதனை முடிக்க மாட்டார். டெக்னீஷியன் என்று ஒருவர் இந்தக் கம்பெனிக்குத் தேவைதான் என்பதையே தகர்த்து விட்டார். எனினும் மார்க்கெட்டில் ஒரு பெயர் கருதி மட்டுமே அந்த வாணியம்பாடி நம்பியாரை டெக்னீஷியன் என்று போர்டு மாட்டவைத்து நான்கு இலக்க சம்பளத்தில் வைத்திருந்தார்கள். ராத்திரி - நடுநிசி வேளைகளில் எல்லாம் கார் சப்தம் கேட்டதும் எழுந்து போய்க் கேட்டைத் திறந்து, முதலாளிகள் சொன்ன வேலையை டெக்னீஷியன் துணையின்றியே செய்து முடித்தார் மீரா. விடுமுறை நாள் என்ற ஷரத்துக்களெல்லாம் நோட்டீஸாக ஒட்டப்பட்டிருப்பது ஒரு வெளிப்பூச்சு தானேயொழிய, மீராப்பிள்ளை அந்த நாள்களையும் சிறைக்கைதி போல இந்தத் தொழிற்சாலையின் எல்லைக்குள்ளேயே கழித்திருக்கிறார். தனியாளாய் இருக்க முடியாதபோது மட்டும் வாயில் கதவுகளை நன்கு சாத்திக்கொண்டு வெளியே போய் உலக நடப்புகளில் தோய்ந்து விட்டு மறுபடியும் இங்கே வந்து அடை காத்திருக்கிறார். பக்கத்துக் கம்பெனி, எதிர்க் கம்பெனி நபர்களோடு பேசத் தோதுவாக வெளிப்புறமாய் அமர்ந்து உரையாடுவார். அதுபோதுகளில்தான் அவர்களின் அனுபவ அறிவைப் பொறுத்து உலக விவகாரங்கள் சந்திக்கு வரும். தான் சமைத்ததைக் கொண்டு வந்து அவர்களுக்குக் கொடுப்பார். அங்கேயே தங்கியிருப்பதால் சமையலறை ஒன்று வசதியாகக் கட்டப்பட்டிருந்தது. அதே மாதிரி அவர்கள் தருகின்ற உணவுப் பதார்த்தங்களை வாங்கிக் கொள்வார். ஆயுத பூஜை நாள்களில் எல்லாத் தொழிலாளிகளோடும் இணைந்துகொண்டு மெஷின்களைக் கழுவுவது அல்லது தூய்மைப்படுத்துவது, ஒழுங்கு செய்வது போன்றவற்றில் முன் நிற்பார். அவ்வாறு ஒட்டுமொத்த உழைப்பு நேரங்களில் அல்லது இயந்திரங்களைத் தூய்மைப்படுத்தும் சமயங்களில் ஊரில் நடந்த சம்பவங்களையெல்லாம் படுசுவாரசியமாகத் தன் சக தோழர்களிடம் சொல்வார். அவர்களும் வெகு ரசனையுடன் கேட்டுக்கொண்டே தங்கள் பணியின் சுமை தெரியாமல் முடித்து விடுவார்கள். இந்தச் சக தொழிலாளிகள் எப்படிப்பட்டவர்கள்? இவரைவிடப் பல வயது குறைவானவர்கள். திருமணம் ஆகாதவர்கள் - அல்லது புதிய மாப்பிள்ளைகள். பிள்ளைகள் கூடப் பெற்றிராதவர்கள். இவருக்கும் அவர்களுக்கும் உள்ள இடைவெளி இப்படி அமைந்திருந்ததுடன் மதத்தாலும் வேறுபட்டு நின்றவர்கள். ஆனால் ஆயுத பூஜையன்று இதெல்லாம் தெரியாது. ஒவ்வொரு எந்திரத்துக்கும் சந்தனம் தீட்டி, குங்குமப் பொட்டும் வைத்து - நேர்த்தியாக இருக்க வேண்டும் - அழகு பார்ப்பார். இந்த மெஷின்களைக் கண்கண்ட தெய்வமாகக் காண்பதில் அவருக்குச் சங்கடமேதுமில்லை. இந்த மெஷின்கள் அவரின் சொன்ன சொல் கேட்கும் குழந்தைகள் போலாகிவிட்டதை அவர் பலமுறை உணர்ந்ததால் பாசமும் அதிகம். அவர்களாகச் சேர்ந்து பூஜை செய்யும்போது மட்டும் பயபக்தியுடன் இவர் கைகட்டி நின்று கொள்வார். மற்றபடி பொரி, கடலை, தேங்காய், பழம் எல்லாவற்றையும் 'மீராபாய், எல்லாத்துக்கும் பங்கு வச்சுக் கொடு' என்று இவரிடம் தான் கொண்டு வந்து தருவார்கள். நோன்புப் பெருநாள் ஹஜ்ஜுப் பெருநாள் என்று வரும்போது கூட இவர் சொந்த ஊர் போகாமல் இங்கேயே காலம் தள்ளிய சமயங்களும் உண்டு. அப்போது பெருநாள் செலவுக்கென்றும், இருக்கின்ற தொழிலாளர்களுக்குப் பெருநாள் விருந்துக்கென்றும் நூறு அல்லது நூற்றைம்பது முதலாளியாகக் கொடுப்பார். அந்தப் பெருநாள் விருந்து மீராப்பிள்ளையின் கைமணத்தைத் தாங்கும். முதலாளி கொடுக்கும் தொகையை வைத்துக்கொண்டு, கறி எடுத்து, நைசான அரிசி வாங்கி தேங்காய்ச் சோறு ஆக்கிப் போடுவார். வேலை பார்க்கும் அத்தனைபேரும் அன்றைக்கென விடிகாலையிலேயே தொழிற்சாலைக்கு வந்து, மீராபாய்க்குக் கூடமாட ஒத்தாசையாக இருந்து சமையலில் கை கொடுப்பார்கள். யாராவது ஒருவர் தன் வீட்டிலுள்ள டிரான்சிஸ்டரை எடுத்துக்கொண்டு வந்து சவுண்ட் கூட்டிப் பாட்டு வைப்பார்கள். அது வாள் வாள் என்று கத்தினாலும் அப்போது தனி உற்சாகமே. பக்கத்திலுள்ள உடை மரங்களிலிருந்து ஒரு வாரத்திற்கு முன்னதாகவே இதற்காகக் கொப்புகளை வெட்டிவந்து சுள்ளியைக் காயப்போட்டுப் பதமாக வைத்திருப்பார்கள். பெருநாளைக்குள் முறுமுறு என்று காய்ந்து போயிருக்கும். அன்றைக்குக் கள்ளி புகைமூட்டம் இல்லாமல் நன்றாகக் கைகொடுத்து எரியும். எல்லோரும் காப்பி, டீ போட்டு ஆளுக்கொரு வேலையாகப் பங்கு போட்டுச் செய்வார்கள். பெருநாள் தொழுகைக்கென்று மட்டும் ஒரு மணி நேரம் மீராப்பிள்ளை எடுத்துக்கொண்டு பாடியிலுள்ள பள்ளிவாசலுக்குப் போய் வருவார். விட்டுப்போன வேலையை அவர் வந்து செய்து முடித்துச் சமையலைப் பூரணமாக்குவார். ஒரு முறை இப்படித்தான் அவர் தொழுகைக்கென்று பள்ளிவாசலுக்குப் போயிருந்த சமயம் பார்த்து, முதலாளி அவசரம் அவசரமாக ஒரு டஜன் கோட் பீஸ்களை எடுத்துக்கொண்டு கிளேஸிங், அயனிங் செய்ய வேண்டும் என்று வேகவேகமாய் வந்தார். இரண்டு முக்கியமான பார்ட்டிகள் ஹெட் ஆஃபீஸில் காத்திருக்கிறார்கள் என்றும், அவர்களை உடனடியாகச் சந்தித்து இந்தக் கோட் பீஸ்களைக் காட்டி ஆர்டர் வாங்க வேண்டுமென்றும் சொன்னார். மீராப்பிள்ளை பள்ளி வாசலுக்குப் போயிருக்கிறார் என்று சொன்னதும் ஹக்கீம் முதலாளிக்குக் கோபம் பொத்துக்கொண்டு வந்துவிட்டது. 'இப்ப யாரு இவரை அங்கேயெல்லாம் போகச் சொன்னது? சோறு ஆக்கி உண்டுட்டு அல்லான்னு கெடக்க வேண்டியதுதானே? - ஓங்கிச் சத்தம் போட்டார். வாய்க்கு வந்தபடித் திட்டினார். அவருக்கு இருப்புக் கொள்ளவில்லை. பினிபிளெக்ஸ் அறையைத் திறந்து மெஷினில் 110 டிகிரிக்கு ஹீட்டர் போட்டுவிட்டு 'ஏ! மகாலிங்கம்! மீராபாயைப் போயிக் கையோடு இழுத்துட்டு வாடா! தொழுததெல்லாம் போதும்னு போய்ச் சொல்லு. சைக்கிள்ல போ, வேகமாப் போ. சீக்கிரம் ம்... சீக்கிரம்!' விரட்டினார் அவனை. துரைராஜ் ஒரு கிளாஸில் காப்பியை எடுத்துக்கொண்டு போய் அவர் முன் வைத்தான். இவர் தலையைத் தூக்கி அவனை முறைத்துப் பார்த்துவிட்டு 'இப்ப உள்ள வயித்தெரிச்சல்லே இது ஒண்ணுதான் பாக்கி!’ என்றபடி வீசி எறிந்தார். சில்லி சில்லியாக நொறுங்கி உருத்தெரியாமல் போனது. இவன் வந்து ராஜுவிடம் கேட்டான்: 'ஏண்டா, பெருநாளுத் தொழுகை அப்படி விசேஷம், இப்படி விசேஷம்னு சொல்றானுங்கள், இவரு ஏண்டா தொழப்போவாம இங்க வந்து எரிஞ்சு விழுறாரு!' அவன் அர்த்தபுஷ்டியோடு பார்த்துவிட்டு 'காசுடா. எல்லாம் காசு. காசு, உள்ள மவராசங்களுக்கு எண்ணிக்கும் பெருநாளு, தீபாவளிதான். உனக்கும் எனக்கும் தான் அது வருஷத்துக்கு ஒரு நாளு.'   அவர்கள் இருவருக்கும் கோபம் பெருகியது. என்றாலும் இப்போது எதுவும் தேவையில்லை என்று நினைத்தபடி, அடுப்படிக்குள் போய் உட்கார்ந்து கொண்டனர். மீராபாயை மகாலிங்கம் கூட்டி வந்ததும் எரிந்து விழுந்தார்: 'உங்களயெல்லாம் பொறுப்பா வச்சிருந்தா சின்னப்பிள்ளைங்களுக்கும் கீழே போயிடுறீங்களே! முதல்ல இத கிளேஸிங், அயனிங் பண்ணிக்குடுங்க.' அதைச் செய்து முடித்து அனுப்பியதும் மீராப்பிள்ளையின் முகத்தில் கவலைக் குறிகள் தென்பட்டன. மற்றவர்களுக்கு முன்னிலையில் வைத்துத் தன்னை அவர் ஏசியது உறுத்தியது. அவரைப் பற்றிய நல்லெண்ணச் சித்திரம் கொஞ்சம் கொஞ்சமாய்த் தேய்ந்து வந்து அன்றைக்கு முழுவதுமாக நொறுங்கிப் போய்விட்டது. தனக்குப் பெருநாள் தொழுகையைக் கூட அவர் இல்லாமல் ஆக்கி விட்டார். மகாலிங்கம் சொன்னான்: 'இவங்கள்லாம் என்ன மனுசங்க? பெருநாள்னு சொல்லி லீவு குடுத்துட்டு, அப்புறமா வந்து அதைச் செய்ய இதைச் செய்யின்னு வந்து கழுத்தறுக்கிறாங்க. சே! இவங்க பணம்னா, தூங்கவும் மாட்டாங்க; தொழப்போகவும் மாட்டாங்க!' அது மாதிரியான கசப்புக்கள் மீராப்பிள்ளைக்கு மீண்டும் அடிக்கடி நேர ஆரம்பித்தன என்றாலும் வேலையின் மீதான பிடிப்பு மட்டும் கூடிக்கொண்டே போனது. இவரது சேவைகளையோ வேலைகளையோ முதலாளிகள் மனசுக்குள் பாராட்டி வெளியே குறை சொல்லியபடியே இருந்தனர். இன்று - - - - நிலைமைகள் மேலும் சீரழிவாய்ப் போய்விட்டன. பதினான்கு வருஷ உழைப்பில் இவர் வீட்டுக்கு மாதம் முழுவதும் சோறு உண்ணும்படியான அளவுக்குப் பணம் அனுப்ப முடிந்ததில்லை. ஒவ்வொரு மாதமும் பற்றாக்குறைதான். அவரது மனைவி திட்டித் திட்டியே கடிதம் எழுதும் வழக்கத்துக்கு ஆளாகிவிட்டாள். ஆனால் அதனையும் இல்லாததாக்க இப்போது ஹக்கீம் முதலாளியும், அவர் மச்சானுமாகச் சேர்ந்து முயலுகிறார்கள். தம்பியை மனக்கசப்பின் காரணமாகப் பங்குதாரர் அந்தஸ்திலிருந்து விலக்கிவிட்டு, அவருக்குச் சேரவேண்டியதைச் சேர்த்துவிட்டு அண்ணனும் மச்சானுமாக இணைந்து இதே டேனரியை நடத்தப்போவதாக ஒரு பேச்சு எல்லோர் காதிலும் வந்து விழுந்தது. விஷயம் அத்துடன் நில்லாது டேனரித் தொழிலாளர்கள் அனைவரையும் நீக்கிவிட்டு, வெளியூர்களில் இருந்து வந்த புதிய - தொழில் பழக்கமான - நபர்களைச் சேர்க்கவிருப்பதாகவும் விசயம் வெளிப்பட்டது. இதனால் தான் மத்தியானம் ஹக்கீம் முதலாளி வந்தபோது மீராப்பிள்ளை நேரிலேயே போய்த் தன் காதில் விழுந்த செய்திகள் பற்றிக் கேட்டார். 'அம்மா! தம்பி நிறைய ஏமாத்து வேலையெல்லாம் பண்ணிப்புட்டான். அவன் இனிமே எங்களுக்குச் சரிப்பட்டு வராது. அதனால அவனுக்குச் சேர வேண்டியதைக் குடுத்திட்டு ஒதுக்கிறலாம்னு வச்சிருக்கோம்.' 'வேற என்ன செய்யப் போறீங்க?  “புது ஆட்களா வச்சு, தொழில் விருத்தி பண்ணப் போறோம்.’ "அப்படின்னா ? எங்க கதி என்னாவுறது?' 'என்ன பண்ணச் சொல்றீங்க? எங்க நிலைமையையும் நீங்க பாக்கணும்லா. அதனால் உங்களுக்கும் எங்களால முடிஞ்சதத் தந்து அனுப்புறோம். சந்தோஷமா வாங்கிட்டுப் போய்ட்டு வாங்க!’ 'நீங்களாதான் என்னை வலிய வந்து கூப்புட்டீங்க. ஒங்க சொல்லுக்கு மதிப்பு வச்சும், ஒரு வகையில் சொந்தக்காரங்கதானேன்னு நெனைச்சும் நீங்க கூப்புட்டவுடனே வந்திட்டேன். இப்ப இப்படிச் சொல்றீங்களே?’   'அது ஒரு காலம். அன்னிக்குப்போல இன்னிக்கு எல்லாம் இருக்கா? அதோட உங்களுக்கும் வயசாச்சு, அதனால ஊரோட ஒரு இடமாப் பாத்து உக்காந்திடுங்க!' என்று கூறிவிட்டு விடுவிடுவென நடந்து காரிலேறி விட்டார். மீராப்பிள்ளைக்கு ஒருபுறம் வேடிக்கையாகவும், மறுபுறம் கோபமாகவும் இருந்தது. தனக்கு வயதாகி விட்டதாமே! சொல்லிக்கொண்டு போகிறவன் மட்டும் யார்? உழைக்கிறவனுக்கு மட்டும் தான் வயது ஒரு காரணமா? இவர்களுக்கு? வானத்தையே அண்ணாந்து பார்த்தபடி இருந்தார் மீராப்பிள்ளை. கதிர் சாய்ந்துகொண்டு இருந்தது. கன்னத்தில் கையூன்றியபடிப் பலவித யோசனைகளில் ஆழ்ந்தார். பக்கத்திலுள்ள தொழிற்சாலைகளின் எந்திர ஓட்டம் அப்படி ஒன்றும் தூக்கலாக இல்லைதான். என்றாலும் இப்போதைய மனக்கதிக்கு அது பெரிய இடையூறாயிற்று. சில தொழிற்சாலைகளின் வேலை நேரம் முடிவுற்றுப் போனதை அங்கிருந்து வரும் ஆண்கள், பெண்களின் வருகை உணர்த்தியது. சாரி சாரியாகத் தோள்களில் கூடையும் பைகளும் தொங்க, வீட்டுக்குப் போகும் அலாதியான மகிழ்ச்சியில் ஒருவரோடு ஒருவர் பேசிக்கொண்டும், சிரித்துக்கொண்டும் சென்றனர். அந்தக் கலகலப்பும் உற்சாகமும் தனி அலாதியானதுதான். அவர் தன் வேதனையை மறந்து சிறிது நேரம் அதில் கலந்தார். அவர் உள்ளத்தில் என்றும் இல்லாதபடி மகிழ்ச்சி ஊறியது. இன்றைக்குத்தான் இந்தக் காட்சியை இவர் உணர்வுபூர்வமாக ரசிக்க முடிந்ததுபோலும். கேட்டைத் திறந்துகொண்டு மகாலிங்கம், துரைராஜ், ராஜு, கோபால்சாமி, வைகுண்டம் ஆகியோர் வெளியே வந்தனர். தன்னோடு இவர்களுக்கும் இந்த வேலை இல்லாமல் போகிறதைச் சொல்ல வேண்டும். சொன்னார். அந்த வதந்தி ஊர்ஜிதமாகப்போவது எண்ணி அனைவரும் திகைத்தனர். ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டனர். மீராப்பிள்ளை சிரித்தபடி கேட்டார். 'எல்லாருமா என் இப்படி திகைச்சுப் போயி நிக்குறீங்க?' ’நீ அப்படித்தான் சொல்ற...' என்றான் ராஜு. 'அதுக்காக இப்படியா மலைச்சுப் போறது?' 'பாய்! உண்மையைச் சொல்லு.' “உண்மைதாண்டா!' என்று மறுபடியும் சிரித்தார். 'நீ மட்டும் எப்படி பாய் சிரிக்குற?' 'வேற என்னடா செய்யச் சொல்ற? இந்த முதலாளிமாருங்க ஆழம் தெரியாமல் காலை விடுறானுங்க.' 'ஆங்... இப்ப இப்படிச் சொல்லுவ. முதலாளி வந்தா உன் சொந்தம்ங்கறதுதான் ஞாபகம் வரும். அப்புறம்...' 'ஏய் நிறுத்துடா! சொந்தமாவது மண்ணாங்கட்டியாவது. வயசாச்சுன்னா எல்லாம் போயிரும்டா. அவரு அப்படி இப்படித்தான் சொல்லிட்டுப் போனாரு.’   'சரி பாய். இப்ப அத வுடு, நாம் என்ன பண்ண? அத யோசிப்போம்.' 'யோசனை என்ன பெரிய யோசனை. பத்து பேருதான் என்னத்தச் செஞ்சிடுவானுங்கன்னு நெனச்சிருப்பாரு. அதோட யூனியன் இல்லங்கற திமிரு. ஏன், நாம் ஒண்ணாச் சேர்ந்தாதாண்டா காரியம் நடக்கும். இல்லேன்னா நம்ம தலையக் கிள்ளி அவனுங்க வீட்டு அடுப்புல போட்டு எரிச்சிடுவானுங்கடா!' 'பாய்! நீதானா இப்படிப் பேசுற?' என்று மகாலிங்கமும் துரைராஜும் கேட்டனர். 'அப்புறம் அவரு மூஞ்சியப் பார்த்ததும் பால்மாற மாட்டியே!' என்று கேட்டான் ராஜு. 'அதுக்கெல்லாம் வேற ஆளப் போயிப் பாருங்கடா. அவன் என்னடா கிடக்குறான். என்னைப்போல, உன்னைப் போல அவனும் பத்து மாசம்தான். நாம ஒண்ணா சேரலேன்னா அவங்க நம்மளத் தூக்கி எறிஞ்சுடுவாங்க. கழுத்துக்குக் கத்தி வந்தாச்சு. இனிமேலும் தூங்கிட்டு இருக்குறவன் மனுஷன் இல்லே .' அவர்கள் அனைவருக்கும் புதிய தெம்பும், உற்சாகமும் கிடைத்தன. ஏற்கெனவே வழி தெரியாமல் வேதனைப்பட்டுக் கொண்டிருந்த அனைவருக்கும், தாங்கள் இனியும் சிறுபான்மையினர் அல்ல என்பது நன்கு புரிந்தது. மேலும் அந்தப் பகுதியில் உள்ள மற்ற டேனரித் தொழிலாளர்களும் தங்களுக்கு ஆதரவு தருவார்கள் என்ற நம்பிக்கை இருந்தது. கோபமும், ஆத்திரமும் உண்டானது. தங்களால் நின்று நிதானமாக இந்தப் பிரச்சினையில் வெற்றி காணும்வரை போராட முடியும் என்று உணர்ந்தனர். ஆதர்ச சக்தியாக மீராப்பிள்ளை நின்று கொண்டிருந்தார். மகாலிங்கம் உரத்துச் சொன்னான்: 'இன்குலாப் ஜிந்தாபாத்' அவர்கள் தொடர்ந்தார்கள். மீண்டும் மீண்டும் குரல்கள் சங்கமமாகி ஒலித்தன. அது அந்தத் தொழிற்சாலையின் உள்ளே எதிரொலித்தது. அவர்களின் உள்ளத்தைப் பிரதிபலித்துக் கொண்டு வானம் சிவந்திருந்தது. செம்மலர், அக்டோபர் 1986                                               4. பாசமும் சுமையும்   மஃரிப் தொழுகையை முடித்துக்கொண்டு தூஆ கேட்டபின் வீடு நோக்கி நடந்தார் முஸ்தபா . மனதிலுள்ள கவலைகள் மறுபடியும் மறுபடியும் கொந்தளித்த வண்ணமிருந்தன. ஒவ்வொரு செலவினமும் பூதாகரமாகக் கண்முன் தோன்றியபடியே இருந்தன. வீடு போக மனசில்லாமல், அதே சமயத்தில் அதைவிடவும் வேறு வழியில்லாமல் அவர் அங்குதான் போய்ச் சேர்ந்தார். நீட்டி நிமிர்ந்து படுத்துக் கிடந்தாள் சிக்கந்தர்லால் பீவி. மெலிதாக நீண்ட ஒரு விறகுக்குச்சி போலக் கை கால்கள் சூம்பிப்போய், வாரப்படாத தலையும், குழிவிழுந்த கண்களுமாய், தானும் உயிர் வாழ்கிறோம் என்கிற உணர்வேயில்லாமல் அப்படிக் கிடந்தாள் அவள். தலைமாட்டில் முஸ்தபாவின் மனைவி ரஜபுரிஸா கவலையோடு மகளின் தலையைத் தடவியபடிக்கு அமர்ந்திருந்தாள். தலையிலிருந்து தொப்பியை எடுத்து ஸ்டாண்டில் மாட்டி, தோளில் கிடந்த டவலை எடுத்துக் கொடியில் வீசினார். எல்லாமே ஒரு அனிச்சைச் செயல் மாதிரிதான் இருந்தது. சிக்கந்தர்லாலின் தலைமாட்டில் அமர்ந்து முஸ்தபா ஓதலானார். கைவைத்துத் தலையைத் தடவிக் கொடுத்தார். கால்களையும் கைகளையும் பாசமிகுதியால் ஈரமான விழிகளோடு தடவித் தடவிக் கொடுத்தார். ஓதி ஓதி அவளின் முகத்தில் ஊதினார். அந்தத் தடவல்கூட அவளை வருத்தியது போல நெளிந்தாள். சிறு வயதிலேயே மூளை வளர்ச்சியும் உடல் வளர்ச்சியும் சரிசமமாயில்லாமல் ஒரு முழுமையற்ற பெண்ணாகவே ’வளர்ந்து விட்டாள் ' சிக்கந்தர்லால். நடக்க ஆரம்பித்தால் ஒரு கல் தடுக்கினாலும் கீழே விழுந்து விடுகிற பலவீனமான பெண்ணாகி இருந்தாள். அவளோடு ஒத்த வயதுள்ள பெண்களெல்லாம் குதிர் மாதிரி வளர்ந்து பாவாடை தாவணி கட்டி, தளதளவென வளர்ந்திருக்கிறார்கள். விதவிதமாய்த் துணிமணிகளும் அலங்காரமுமாய் வளருகிற அவர்களுக்கும் பீவிக்கும் இடையில்தான் 'கடவுளின் கருணை’ என்ன வேகமாய் இறங்கியிருக்கிறது? ’அல்லா வச்சதுக்கு மாறாவா நடந்திடப் போவுது? ஒரு காலத்துல ஆண்டவன் அவளுக்கும் சுகத்தையும் வாழ்வையும் குடுக்காமலா இருந்துடப்போறான்!' என்று ஆரம்ப காலங்களில் சொல்லி வந்த முஸ்தபா இப்போதும் அதையே அப்படியே எவரிடமும் சொல்லத் தயாரில்லை. பள்ளிக்கூட வாத்தியாராக வேலை பார்த்துக்கொண்டு வாங்கி வருகிற கைப்பிடிச் சம்பளமும் மருத்துவச் செலவுக்கே கணிசமாக வருஷா வருஷமும் அடிபட்டு விடுகிறது. வீட்டிற்கும் அத்தியாவசியச் சாமான்களை வாங்க வழியில்லாது செய்துவிட்ட இந்தச் செலவினம், அவருக்குப் பள்ளிக்கூடத்திற்குப் போய்வரக்கூட ஒழுங்கான துணிமணிகள் இல்லாமல் ஆகிவிட்டது. ஒரு முறை மாவட்டக் கல்வி அதிகாரியே பல ஆசிரியர்கள் முன்னிலையில் வைத்துக் கூறியிருக்கிறார்: 'எவ்வளவுதான் கஷ்டமிருந்தாலும் அதுக்காக நீங்க அழுக்குத் துணியையெல்லாம் கட்டிக்கிட்டுப் பள்ளிக்கூடம் வர்றது அவ்வளவு நல்லாத் தெரியலே.’ அவருக்கு முகம் சுண்டிப்போய்விட்டது. வேண்டுமென்றே கழிவிரக்கத்தோடு அவ்வாறு கட்டிக்கொண்டு போகவில்லை. இரண்டு நாட்களுக்கு முன்னால் துவைத்து நீலமும் போட்டுக் கொண்டதுதான். அவர் முன்பு இருந்த நிலை என்ன? 'இப்ப மறுபடியும் காய்ச்சல் கூடியிருக்கு.’ முஸ்தபாவின் முகத்தைப் பார்க்க மனமில்லாமலே ரஜபு கூறினாள். 'டாக்டரக் கூட்டியாரவா?' ’செய்யுங்க!’ 'இஷா தொழுகைக்குரிய நேரத்தைக் கணித்துக்கொண்டு டவலை எடுத்து மேலே போர்த்தியவண்ணம் அடுத்த வீட்டு சொளுக்கு இடம் பேட்டரி லைட்டையும் பெற்றுக்கொண்டு டாக்டர் வீடு நோக்கி நடக்கத் தொடங்கினார். சற்றுத் தூரம் போனதும் அவரோடு உசேனும் சேர்ந்து கொண்டார். அவரும் சக ஆசிரியரே. பேசியபடி டாக்டர் வீடு நோக்கி நடந்தார்கள். வீட்டை ஒட்டித்தான் ஆஸ்பத்திரியும். இந்நேரம் நோயாளிகள் கூட்டம் இருக்கத்தான் செய்யும். எப்படியாவது அவசரம் என்று சொல்லிக் கூட்டி வந்துவிட வேண்டும். அவரைப் பார்த்தபோது 'நீங்க போங்க, இன்னும் அரை மணி நேரத்துல வீட்டுக்கு வந்துடறேன்' என்றார். வரும் வழியில் உசேன் கேட்டார். "முஸ்தபா, உம் மகளுக்கு இன்னும் எப்படித்தான் இருக்கு?” 'இனிம என்ன புதுசா இருக்கு? பழைய கதைதான் இன்னும். நமக்கு என்னைக்குத்தான் நிம்மதியோ?' 'விரக்தியா இருக்க போலேருக்கு. கொஞ்ச நாள்ள எல்லாம் சரியாப்போவும். நீ ரொம்பவும் கவலைப்படாதே! ’ 'என்னத்த சரியாப் போகப் போவுது? என் வருமானம் பூரா ஒண்ணு மாத்தி ஒண்ணுன்னு அவளுக்குத்தான் எல்லாமே செலவாய்க்கிட்டிருக்கு. ரஜபு கழுத்துல கெடந்த நகை நட்டெல்லாம் போனாலும் பரவாயில்ல. அவ குணாமானா சரிதான்னு செலவழிச்சேன். அப்படியாவது சுகப்பட்டாளா? எல்லாம் எங்கேயோ போச்சு... என்ன வாழ்க்கை இது. சவத்துப்பய வாழ்க்கை’ அவரிடம் பிசிறு தட்டியது குரல். வார்த்தைகள் கோர்வையில்லாமல் வந்து விழுந்தன. இன்னும் என்னென்னமோ சொன்னார். 'அவுலியாக்கள் மேல் ஏதாவது நேர்ந்துக்கிட வேண்டியதுதானே முஸ்தபா?' போய்க்கொண்டே இருந்தவர் இவர் முகத்தைத் திரும்பிப் பார்த்தார். அதில் என்ன உணர்ச்சி இருக்கும் என்பதை உசேன் புரிந்துகொண்டிருப்பார். இருவரும் பல அடிகள் மெளனமாக நடந்தனர். மனதின் பாரத்தைத் தாங்க மாட்டாமல் முஸ்தபா சொன்னார்: 'அவனாவது அவளை அழைச்சுக்கிடக் கூடாதா? நிம்மதியாவது கெடைக்கும். காலம் பூராவும் இந்தச் சித்திரவதையை என்னால தாங்க முடியலேப்பா!' உசேன் சட்டென்று அவர் வாயைப் பொத்தினார்: 'முஸ்தபா! என்ன பேசுறென்னு மதியோடுதான் பேசிறிய? இப்படியெல்லாம் சொல்லலாமா? பாவம் சின்னப் பொண்ணு என்னிக்காவது ஒரு நாள் அவ நோயி குணமாகாமலாப் போகும்? முஸ்தபா குனிந்தபடியே ஒருவித சஞ்சலத்துடன் நடக்கலானார். வீடு வந்து சேர்ந்த பிறகு சிறிது நேரத்தில் டாக்டர் சண்முக சுந்தரம் வந்து ஊசியும் போட்டு மருந்தும் எழுதிக் கொடுத்து விட்டுச் சென்றார். நாளை மறுபடியும் வந்து பார்ப்பதாகச் சொன்னார். முஸ்தபாவுக்குக் கொஞ்சம் நிம்மதியாக இருந்தது. அந்த நிம்மதியோடு இஷா தொழுகைக்குப் புறப்பட்டார். மூன்றாம் நாள் வரைக்கும் காய்ச்சல் நீடித்துக்கொண்டு போனது. முஸ்தபாவின் மனசுக்குள் பல குதிரைகள் அங்குமிங்குமாய்த் தறிகெட்டு ஓடின. பள்ளிக்கூடத்தில் வேறு பரீட்சை நெருங்கி வருவதால் பாடங்களைச் சீக்கிரமே முடிக்க வேண்டிய நிர்ப்பந்தமும் இருந்தது. பள்ளிக்கூடம் போகவும் பரிதவித்தார். ரஜபுநிஸா மகளின் படுக்கையை அவ்வப்போது கழுவிக் கழுவி மாற்றிப்போட வேண்டிய நிர்ப்பந்தத்துக்கு உள்ளானாள். காலையிலும் மாலையிலும் அவுலியாக்கள் பேரில் நேர்ந்துவிட்டு, 'எல்லாம் ஆண்டவன் சரியாக்கி விடுவான்' எனத் தெம்பை வரவழைத்துக்கொண்டு அவர் பள்ளிக்கூடம் போனார். மத்தியானச் சாப்பாட்டுக்கு இடையில் வந்தபோது கொஞ்சம் தெளிச்சியாக இருந்ததுபோல் பட்டது. ஆனால் இன்னும் எழுந்து நடக்க முடியாமலும் இயற்கை உபாதைகளைப் படுக்கையிலேயே ஆக்கிவிடும்படியான கட்டாயமும்தான். மாலையில் பள்ளிக்கூடம் விட்டு வீட்டுக்கு வந்தபோது மனம் குடைந்து கொண்டிருக்கிறது. இனியும் தங்க மகளைக் கவனித்துவர கையில் எல்லாமே சூன்யமாகி விட்டிருந்தது. ஒவ்வொரு முகமும் கடன் தந்த முகமாய்... கடனைக் கேட்க விரும்புகிற முகமாகவே தென்பட்டது. தான் சாவி கொடுக்கப்பட்ட ஒரு எந்திர பொம்மை போல் நடப்பதாக அவருக்கே நன்கு தெரிந்தது. இந்தக் கவலைகளும் குழப்பமும் சூன்யமும் எங்கே போய் நிற்கும் என்பது பிடிபடவில்லை. டாக்டரிடமே கடன் சொல்லிவிட்டால் என்ன? 'திக்’ கென்றிருந்தது. அறியாமலேயே வாய் எதையோ முணுமுணுத்துக்கொண்டது. ஆனாலும் கேவலம்! இப்படி யாரேனும் இது மாதிரி நடந்து கொண்டிருக்கிறார்களா? ஒரு அலட்சியப் புன்னகை இதழோரமாய்த் தோன்றி அழிந்தது. யோசித்ததில் வேறு வழியும் இல்லை! 'இந்தச் சம்பளம் வாங்கி முழுசுமாத் தந்துடுகிறேன்' என்று டாக்டரிடம் சொல்லிப் பார்க்க வேண்டியது தான். மனதில் அதுதான் கடைசித் தீர்மானமாகி நின்றது. மஃரிப் தொழுகையை முடித்த கையோடு டாக்டரிடம் இவ்வாறே சொல்லி அழைத்து வருவோம் என்று எண்ணினார். எத்தனை முறை இதே டாக்டரிடம் போயிருக்கிறார்? அவரும் வந்திருக்கிறார்? தன் வருமானமும் செலவினமும் அவர் அறியாததா என்ன? எப்படியும் தன்மீது கருணை கொண்டு உதவிடுவார் என்று, தான் எடுத்துக் கொண்ட தீர்மானத்துக்கு வலிய வலிய அவரே நியாயங்கள் பூசிக்கொண்டார். வீட்டிற்கு வந்தால் சாயங்காலாமாய்க் கடுங்காப்பி குடிக்கின்ற காலம்தான் இப்போது நடப்பது. சில நாள்களாக அதுவும் இல்லை. இப்படிப்பட்ட சமயத்தில் ஒரு சூடான பானம் அருந்தினால் மன வேதனை குறைந்தது போலவோ, புதிய உற்சாகம் உண்டானது போலவோ இருக்கும். இந்தச் சிறிய செலவினமும்கூட இப்போது தாங்க முடியாமல் ஆகி விட்டதுதானே! காரணமாய்க் கிடந்த மகளைப் பார்த்தார். தொண்டையில் ஏதோ ஒன்று அடைத்தது. நீர் மல்கிக் கண்கள் சிவப்பாகின. வழக்கம் போல மஃரிப் தொழுகையை முடித்துவிட்டு வந்தபோது சிக்கந்தர்லால் பீவிக்குக் கை கால்கள் நடுங்கிக் கொண்டிருந்தன. உடனே டாக்டர் வீட்டை நோக்கி வேகமாக நடக்கலானார். இருள் கவிய ஆரம்பித்தாலும் பழக்கப்பட்ட பாதையாதலால் அவரது வேகம் கட்டுப்படவில்லை. அதே சமயம் அவரை உராய்வது போலப் பின்னாலிருந்து வந்த சைக்கிள் மோதிவிடாதிருக்க விலகி நின்றார். ஆனால் சைக்கிள் அவரருகில்தான் நின்றது. கோபத்தோடு யார் என்று பார்த்ததில் உசேன் தான் என்பது தெரிந்தது. அவர் வாய் திறந்து ஏதோ கேட்பதற்குள் உசேன் சொன்னார்: 'முஸ்தபா! சைக்கிள்ல ஏறு! வீட்டுக்குப் போவோம்!’  “டாக்டரையில்ல பார்க்கப் போறேன்.” “இனிமே அதுக்கு அவசியமில்ல...” படபடப்புடன், நீ என்ன சொல்ற?' என்று கேட்டார். உசேன் மெதுவாகத் தோளைத் தட்டியபடி வாயைத் திறந்தார். குரல் வரவில்லை. மறுபடியும் கனைத்துக் கொண்டு வாயைத் திறந்தார். 'வீட்டுக்கு வா! அவ போய்ச் சேந்துட்டா!...' மளமளவென்று தன்னைச் சுற்றியிருந்த இரும்புச் சங்கிலிகளெல்லாம் 'படீர், படீர்' என்று தெறித்தும் அறுந்தும் விழுந்தன என்பதை மனக்கண்ணில் கண்டார். வழுக்குத் தரையில் பதிந்திருந்த கால்கள் இப்போது உறுதிவாய்ந்த தரையில் பற்றியதை உணர்ந்தார். 'கரன்ஸி நோட்டுக்கள் பறக்காமல் தன் கையோடு ஒட்டிக் கொண்டனவோ?' மனம் ஒருநிலைப்பட்டு லேசாகி மிதந்தது. எத்தனையோ வருஷத் துயர் நீங்கி ஒரு நிம்மதி. உசேனின் கையைப் பற்றி 'வா... போகலாம்' என்று சொல்லித் திரும்பி நின்று நடக்க ஆரம்பித்ததும் 'குபுக்' என்று அழுகை பொத்துக்கொண்டு வந்தது. கண்கள் இருண்டன. கால்கள் துவண்டன. உசேனைப் பற்றிக்கொண்டு அப்படியே நழுவித் தரைமீது விழுந்தார் முஸ்தபா.   செம்மலர், அக்டோபர் 1986                     5. இன்றைய கண்ணாடியும் நாளைய முகங்களும்   வீறிட்டு அலாரம் அடிக்க ஆரம்பித்ததுமே யாக்கூப் தூக்கத்தை உதறிவிட்டு ’விருட்’டென்று எழுந்து விட்டார். அலாரத்தை உணர்ந்தவளாயிருந்தும் எழுந்திருக்க மனமில்லாமல் புரண்டு படுத்தாள் ஜெய்லானி. மெலிதாய் எரிந்துகொண்டிருந்த விளக்கு ஜெய்லானியின் அழகை ஒவியமாக வடித்துக் காட்டியதும். யாக்கூப் கண் இமைக்க மறந்து அவளையே பார்த்துக் கொண்டிருந்தார். காலைக் குளிர் ஊசிபோல் மேனியைத் தைத்தது. தலைமாட்டுக்குக் கீழேயிருந்த பீடிக்கட்டை எடுத்து ஒன்றை உருவிப் பற்றவைத்தார். புகையை உள்வாங்கியதும் குளிரின் தாக்கம் குறைந்ததாக உணர்ந்தார். சேவல்களின் கூவும் குரல்கள் தொலை தூரத்திலிருந்து கேட்டது. சோம்பல் முறித்தபடியே அவளை லேசாகத் தட்டி, 'ஏய்.. ஏய்... எழுந்திரு... விடிஞ்சிருச்சி' என்று எழுப்பினார். 'விடிஞ்சிருச்சி' என்ற சொல் காதில் விழுந்ததுமே அவள் அரக்கப் பரக்க எழுந்து உட்கார்ந்தாள். அடுத்தடுத்து அங்குமிங்கும் தாறுமாறாய்க் கால்கள் பரப்பிக் கிடந்த குழந்தைகளை ஒழுங்காய்ப் படுக்கையில் இழுத்துப் போட்டுவிட்டு நகர்ந்தனர். வீடும் ஹோட்டலுமாக ஒருங்கே அமைவுற்ற அந்தப் பகுதி ஓலைகளால் வேயப்பட்டிருந்தது. குடிசையின் முன் பகுதியைச் சற்று விசாலமாக அமைத்து இரண்டு பெஞ்சுகள் - டேபிள்கள் போட்டு முன்பக்கமாய் பாய்லரை வைத்திருந்தனர். ஒரு குடும்பம் வசிக்கத்தக்க அளவில் அதன் பின்புறத்தை மாற்றிக்கொண்டனர். சுவருக்குப் பதிலாக மூங்கில் தட்டிகளும், ஓலைகளுமே. இருவருமாய் முன்பகுதிக்கு வந்து அன்றைய தங்கள் வியாபாரத்துக்கான ஆயத்தப் பணிகளில் ஈடுபட்டனர். பாய்லரையும் அடுப்பையும் கரிபோட்டு சூடுபடுத்திக் கொண்டிருந்தபடியே, கடையைப் பெருக்கவும் தண்ணீர் தெளிக்கவுமாக இருவரும் இயங்கினர். 'டீ கொடு மாப்ளே!' என்றபடி பாண்டித்துரை உள்ளே நுழைந்தார். கூடவே விநாயகமும் வந்தான். சிறிது நேரத்தில் சீனிவாச நாயக்கர், கஜேந்திர முதலியார், மாசிலாமணீ என்று முதல் ரவுண்டுக்கு வரும் அத்தனை பேரும் வந்தமர்ந்து விட்டனர். ஒவ்வொருவரின் ரசனைக்கேற்றபடி டீ தயாரித்து ஒவ்வொருவர் முன்னும் வைத்துக் கொண்டிருந்தார் யாக்கூப். ஜெய்லானி கூடமாட ஒத்தாசையாக இருந்துவிட்டு, ’நான் இட்லி, ஆப்பம் ரெடி பண்ணப் போறேன், பாத்துக்குங்க!' என்றபடி உள்ளே நுழைந்தாள். டீ அருந்திக் கொண்டிருந்தவர்கள் கலகலப்பாகப் பல்துறை விஷயங்களும் வாழ்விற்கான உற்சாகத்தைப் பேசியபடி அன்றைய பெற்றுக்கொண்டிருந்தனர். தினமும் இங்கே இவர்களுக்கு இப்படித்தான் விடிகிறது. விவசாயமோ வியாபாரமோ உத்தியோகமோ, எவரெவர் எந்தெந்தத் தொழிலைக் கொண்டிருந்தாலும் அவர்களின் தினசரி வாழ்க்கை இங்கிருந்துதான் துவங்குகிறது. பரஸ்பரம் சொந்த விஷயங்களில் ஆலோசனை கேட்டுக்கொண்டு, சூடான செய்திகளைத் தாங்கிக்கொண்டு வரும் பத்திரிகைய ஆளுக்கொரு பாகமாகப் பிரித்துக்கொண்டு நேற்று விட்டுப்போன கதையைத் தொடர்ந்து கொண்டு, அரசியலை அலசி, பார்வையை விரியவிட்டபடி தங்களின் இருப்பை ஸ்திரப்படுத்திக்கொள்கிறார்கள். கடந்த ஒன்பது வருஷகாலமாக இவர்கள் அனைவரும் ஒருவருக்கொருவர் ஐக்கியப்பட்டு, கூடவே யாக்கூப்பின் வியாபாரத்தையும் பலப்படுத்தி வருகிறார்கள். 'மாமா, நேத்து ஒங்க மருமகன வாயக்கல்ல கண்டேனே! என்ன விஷயம்?' - நாயக்கரை யாக்கூப் விசாரித்தான். 'எல்லாம் நல்ல விசயம்தான் மருமவனே, உங்க எல்லார்கிட்டேயும் சொல்லணும்னுதான் இருந்தேன். மாப்பிள்ளைக்குப் பிரமோஷன் ஆயிடுச்சாம். பெங்களூர்ல போயி டூட்டியை ஒத்துக்கிடணுமாம். அதுவரைக்கும் மகளையும் பேத்தியையும் பத்திரமாப் பாத்துக்கிடுங்கன்னு சொல்லி விட்டுட்டுப் போனாரு!’ பாண்டித்துரை குறுக்கிட்டு, 'அடிசக்கே! காத்தாடி பயில்வான்னு சொல்வாங்களே அவருக்கா பிரமோஷன்? அப்ப இனிமே நாயக்கரக் கையில் புடிக்க முடியாதுன்னு சொல்லுங்க!' 'இந்தா புடிச்சிக்கோ!' என்றபடி கையைப் பாண்டித்துரையை நோக்கி நீட்டவும், மற்றவர்கள் 'கொல்' என்று சிரித்தனர். கலகலப்பான சப்தத்தினால் எழுந்த யாக்கூப்பின் இளைய மகள், ரைஹானா தூக்கக் கலக்கத்தோடு வந்து அவர்களின் முன் நின்றாள். முடி கலைந்து பரட்டைத் தலை போல் இருந்தது. கண்களைக் கசக்கிக்கொண்டே கொட்டாவி விட்டாள். முதலியார் அவளைத் தூக்கி எடுத்து முத்தம் கொடுத்தார். அவள் எல்லோரையும் திருத்திருவென்ற விழிகளால் நோக்கினாள். அது அழகை வாரியிறைத்த காட்சியாக இருந்தது. 'இறக்கி விட்டுடுங்க, இல்லேன்னா ஒண்ணுக்கிருந்திடுவா' என்று கூறிக்கொண்டே வந்தாள் ஜெய்லானி. 'பேத்தி ஒண்ணுக்கிருந்தா தாத்தாமார்களுக்குக் கொண்டாட்டம்தான் அக்கா' என்றான் விநாயகம். 'ஏலே, யாரு தாத்தா? நானாலே? வந்து பாக்குறியா? நான் உன்னையும் உங்க அப்பனையும் சேத்துத் தூக்கிக் காட்டுதேன்!' என்று முஷ்டியை மடக்கிக்கொண்டு வேகமாய் எழுந்தார் முதலியார். ’ஆள விட்டாப் போதுமய்யா!' என்று கூறியபடி வெளியே ஓடினான் விநாயகம். உடனே முதலியார் அந்த வயதிலும் வாலிபப் பருவத்தினனைப் போல கம்பீரமாக மீசையை நீவி விட்டு எல்லோரையும் ஒரு நோட்டம் விடவும் மீண்டும் சிரிப்பலை தோன்றியது. இன்னும் சிலர் டீ குடித்துவிட்டுச் சென்றனர். ரைஹானாவும் உறிஞ்சி உறிஞ்சிக் குடித்துக்கொண்டேயிருந்தாள். மாசிலாமணி அவளைப் பார்த்துக்கொண்டே சொன்னார்: 'உங்க வாப்பாகிட்ட சொல்லி நிறையப் பணம் சேக்கச் சொல்லு. அப்பத்தான் நல்ல மாப்பிளயாப் பாக்கலாம்!’ நாயக்கர் குறுக்கே விழுந்து சொன்னார். ’அது என்ன பெரிய காசு பணம்னுகிட்டு? இருக்கவே இருக்கான் பாண்டித்துரை மவன் - அப்பப்ப வந்து டாவடிச்சுக்கிட்டு இருக்கான். அப்புறம் எதுக்குக் காசு பணம்?' 'அப்படிச் சொல்ல முடியுமா? பாண்டித்துரை அவ்வளவு ஏமாளியா? இல்லே அவரு பொண்டாட்டிதான் விட்டுக் குடுத்துருவாளா? ’ வெளியே நின்றபடித் தலையை நீட்டிக்கொண்டே பேசினான் விநாயகம். 'நீ சும்மாக் கெடல, சாய்புமாருங்களுக்கும், தேவமாருங்களுக்கும் மாமா - மச்சான் உறவு முறையெல்லாம் உண்டு. நாம் இப்பச் சொல்லாட்டிக்கூட அவங்களாவே முந்துனாலும் முந்திருவாங்க' என்று ஆமோதித்தார் முதலியார். 'இப்பவே தயாராயிடுங்க, பிரியாணி உண்டு வயிறு முட்ட, ' என்று மாசிலாமணி தன் ஆசையை வெளியிட்டான். மகிழ்ச்சி நிரம்பி வழிந்தது. தினமும் இனிமையுறப் பேசி இதயத்தை பலப்படுத்தி நேயமிக்க உறவுகளை வெளிப்படுத்திப் பிரிவார்கள். ஒரு நாளும் தவறியதில்லை. ஏதாவது ஒரு காரணம் கொண்டு அவர்களில் ஒருவர் ஒரு நாள் இங்கு ஆஜராகவில்லை என்றாலும் கூட எதையோ வலியப் பறி கொடுத்தவர்கள் போல் ஆகிவிடுவார்கள். ஒரு மாத காலம் கானகத்தில் வசித்ததான ஏக்கம் வந்து சேர்ந்து விடும். காலம் முழுவதும் இவர்களின் சங்கமத்தில் கவிதை தீட்டப்பட்டுக் கொண்டே வருகிறது. தொடைவரைக்கும் விலகிப்போயிருந்த பாவாடையை இழுத்துவிட்டு மகள் பானுவை எழுப்பினாள் ஜெய்லானி. அவள் விழித்துப் பார்த்துவிட்டு மீண்டும் ஒருக்களித்துப் படுத்தாள். எழுந்திருக்கிற மாதிரித் தெரியவில்லை. ’இந்தா... எழுந்திருடி, நேரமாச்சு' என்று லேசான கண்டிப்பில் கூறினாள் தாய். அவள் தூக்கத்தை மறுதலிக்கிறோமோ என்று மனம் சங்கடப்பட்டாலும் வேறு வழியில்லை. ஒவ்வொரு நாளும் இப்படித்தான். ஆனாலும் மனவேதனையும் சங்கடமும் தினமும் புதிய புதிய ரூபத்தில் தோன்றிக்கொண்டே உள்ளன. இவை கால்பாவி நிற்க அவர்கள் வாழ்க்கையில் இடமில்லை. 'ம்... சொல்லச் சொல்லக் கேக்க மாட்டேங்குறியே. இட்லி தோசை எல்லாம் ரெடியாச்சி. நீ வந்து சட்னி அரைச்சு தரவேண்டியதுதான் பாக்கி!' என்று ஜெய்லானி கூறிவிட்டு நகரவும் தலையைப் பிறாண்டியவளாய்ச் சிணுங்கிக்கொண்டே எழலானாள் பானு. சூரியன் மேற்கில் தலை சாயவும் இருள் துணிகரமாகப் பரவத் தொடங்கியது. வியாபாரம் முடிவுறும் நேரம் பாத்திரங்களைக் கழுவிச் சுத்தப்படுத்திக் கொண்டிருக்கும்போது, பெங்களூரிலிருந்து வந்த நாயக்கரின் மருமகன் மனைவியையும் குழந்தையையும் அழைத்துக்கொண்டு போவதாக வழி சொல்லிவிட்டுப் போனார். வீடு கிடைக்க மூன்று மாதம் ஆகிவிட்ட சோகக்கதையை வேறு சொல்லிவிட்டுப் போனார். மூங்கில் தட்டியை எடுத்து முன்வாசலை அடைத்துவிட்டுத் தெருவிற்குள் இறங்கினார் யாக்கூப். ஜெய்லானி சோப் டப்பாவைக் கொண்டுவந்து நீட்டினாள். தெருவின் முனையில் கும்பலாகச் சிலர் பேசிக்கொண்டு நின்றார்கள். சிலர் கூச்சல் எழுப்பிக்கொண்டிருந்தார்கள். அவர்கள் என்ன சொல்லிக் கொண்டிருக்கிறார்கள் என்பது காதில் விழவில்லை. இருவரும் கூர்மையாய்ப் பார்த்துக்கொண்டு நின்றனர். நேரம் விரைந்தது. 'சரி பாத்துக்க, குளிச்சுட்டு வாரேன். போற வழியில் என்ன தகராறுன்னு பாத்துட்டுப் போறேன்' என்று அவர் புறப்படவும் முனையில் நின்ற கும்பல் ஆவேசமான கோஷங்கள் எழுப்பியபடிக் கிளம்பவும் சரியாக இருந்தது. அந்தக் கோஷங்களும் எழுந்த கூச்சல்களும் கணவன் மனைவி இருவரையுமே அதிர்ச்சி கொள்ள வைத்தன. இனமறியா அச்சவுணர்வுகள் சுற்றிச் சூழ்ந்தன. அவளுக்குப் பீதியில் முகம் வெளிறியது. கைகால்கள் நடுங்க ஆரம்பித்தன. யாக்கூப்புக்கும் என்ன செய்வதென்று புரியவில்லை. வகுப்பு வேறுபாட்டை வாழ்க்கையில் நேரடியாய்ச் சந்திக்கிற முதல் அனுபவமாய் அது இருந்தது. இருந்தாலும் தோன்றிய அச்சத்தை வெளிக்காட்ட விரும்பாதவராக, 'ஏய், முதல்ல நீ உள்ளே போ!' என்று அவளை உள்ளே தள்ளிவிட்டு மூங்கில் தட்டியின் முன்னே பெருகிவரும் பீதியோடு நின்றார். கும்பல் அவரை நெருங்கிக்கொண்டிருந்தது. ’நீங்க உள்ள வாங்க, வாங்க' என்று அலறியபடி தட்டியின் இடைவெளியோடு கையை நீட்டி அவரை இழுத்தாள். குழந்தைகள் ஓடிவந்து அவளைக் கட்டிக்கொண்டு மலங்க மலங்க விழித்தன. ’நீங்க ரூமுக்குள்ள போங்கம்மா!' என்றபடி அவர்களை உள்ளே இழுத்துச்சென்று விட்டுவிட்டு வேகமாய் முன்வந்தாள். ஆனாலும் அவர் உள்ளே வரவில்லை . அவள் நீரில் தத்தளிக்கும் குழந்தையைப் போலக் கையை நீட்டி இழுத்துக்கொண்டேயிருக்க கும்பல் அவர்களைச் சமீபத்திருந்தது. அவள் பயந்தபடியே ஒடுங்கிக் கொண்டாள். கடையின் முன் நின்ற கும்பல் ஆவேசமாய்க் கத்தியது. சிலர் அவரைப் பார்த்துக் கேலி புரிந்தனர். யாக்கூபுக்குக் கண்கள் மருண்டன. எனினும் அவரது அச்சம் விலகிச்செல்லும் வண்ணம் மாசிலாமணியை அந்தக் கும்பலில் கண்டார். ஆனால் மணிக்கும் இந்தக் கும்பலுக்கும் என்ன உறவு? எத்தனை நாளாக? எப்பவாவது ஒரு முறை வந்தாலும் அன்புடன் பேசிப் பழகிச் செல்லும் கருப்பசாமியும் ஆவேசமாய் நின்றிருப்பது தெரிந்தது. சில பெரியவர்கள், வாலிபர்கள்..... பஜாரிலும் டூரிங் டாக்கீசியிலும் அடிக்கடி பார்க்கின்ற முகங்களாய் அவர்கள்! மாசிலாமணி இன்னொரு நபரோடு அவரை நெருங்கி வந்தான். அதிர்ச்சியுடன் நோக்கினார் யாக்கூப். 'காக்கா, பஜார்ல நாளைக்கு எல்லாக் கடையும் அடைப்பு. நீங்களும் அடைச்சிறணும்.' “என்ன மணி, திடீர்னு வந்து நின்னுக்கிட்டுக் கடைய அடைக்கச் சொல்றீங்க?' "பக்கத்தூருல உங்க ஆளுங்கல்லாம் சேர்ந்து எங்க பையங்க ரெண்டு பேரு வயல்ல திருடிப்போட்டான்னு சொல்லி அடிச்சு நொறுக்கிப் போட்டானுங்க, தெரியுமில்ல?' 'பதிலுக்கு அவங்க வாழைத்தோப்பை அழிச்சுப் போட்டாங்கன்னும் கேள்விப்பட்டேனே?' 'அதப்பத்தி நீங்க ஒண்ணும் பேச வேண்டாம். அடிச்சதைக் கண்டிச்சு நாளைக்கு எல்லாக் கடையையும் அடைக்கச் சொல்லியாச்சு!' 'மீறித் தொறந்தீங்கண்ணா என்னைக்கும் இந்தத் தொழில் நடத்த முடியாதபடிக்கு ஆக்கிடுவோம்' என்று குறுக்கிட்டு வந்து சொன்னான் கருப்பசாமி. அவர் ஸ்தம்பித்து நின்றார். கும்பலாய் நின்றவர்கள் மீண்டும் கோஷங்கள் எழுப்பியபடி நகர்ந்தார்கள். புயல் வீறுகொண்டு எல்லாவற்றையும் அடித்து நொறுக்குவதுபோல் இருந்தது. நிற பேதமற்ற வாழ்க்கையை இந்நாள் வரை ஆண்டனுபவித்த பின், அவருக்கென்று ஒரு நிறம், வகுப்பு ஒதுக்கப்பட்டு, பிரித்து விட்டாயிற்று. கோடு கிழித்து, பகைக்கும்படி என்ன சம்பவித்து விட்டது? மாசிலாமணியுமா ..? குளிக்கப்போக மனமின்றிப் புழுக்கத்தில் தவித்தார். துண்டால் விசிறி விசிறிப் பார்த்தார். அனல்; மேலும் அனல். சூடு தாங்க முடியவில்லை. வேகமாக விரைந்து போய் வாய்க்காலுக்குள் விழுந்தார். குழந்தைகளை அரவணைத்தபடி சாப்பிட மனமின்றி, உட்கார்ந்திருந்தாள் ஜெய்லானி. குழந்தைகள் அரண்டு போய் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக் கொண்டிருந்தன. நடப்பதற்குக் கால்களின்றி இரவுப்பொழுது அப்படியே தேங்கி விட்டதைப் போலிருந்தது. திடுமென உணர்வு வந்தவராய் எழுந்தார் யாக்கூப். முழங்கால்களைக் கட்டியபடி அதில் தலையைச் சாய்த்துத் துவண்டு போயிருந்தாள் ஜெய்லானி. ஒருவர் முகத்தை ஒருவர் உற்றுப் பார்த்தனர். அந்த இருளிலும் ஒருவர் முகத்தின் பீதி மற்றவர்க்குத் தெரிந்தது. “எப்ப முழிச்சே ?' 'தூங்குனாத் தானே?' யாக்கூப் அவள் தோள் மீது கையைப் போட்டார். தைரியத்தை வெளிப்படுத்தக் கையைப் போட்டாலும் அதிலும் நடுக்கத்தை உணர்ந்தாள் அவள். 'எனக்குப் பயமாயிருக்கு' - அவள் குரல் வெடவெடத்துக் கம்மியது. 'பயந்து என்ன ஆகப்போறது? எல்லாம் ஆண்டவன் வச்சபடிதான் நடக்கும்.' சற்று மெளனித்த பின் அவள் கேட்டாள்: 'எல்லாருமா ஒரே ஆண்டவனைத்தான வணங்குகிறோம். பேரு மட்டும் தான் வேற. அப்ப ஏன் இப்படியெல்லாம் பிரிச்சு வெச்சுப் பேசுறாங்க? அவன் குழம்பியபடி சொன்னான்: 'ஆண்டவரைப்பத்தி யார் பேசுறா? மதத்தைப் பத்தில்லா பேசுறாங்க?' பேச்சு முடிவில்லாமல் நீண்டது - ஆண்டவனின் திருநாமங்கள் போல! ஆனால் மனங்கள் சோர்ந்து விட்டன. திடீரென்று 'யாக்கூப்! யாக்கூப்!'' என்று குரல் கேட்டது. இருவரும் பம்மினார்கள். ஆனால் அது முதலியார் குரல்தான். 'ஜெய்லானியம்மா.... ஜெய்லானியம்மா!' கரகரத்த குரலில் நாயக்கர் அழைத்தார். 'என்ன இது சத்தத்தையே காணோம்!' அவர்களின் குரல்களில் பதற்றம் தென்பட்டது. 'ஏலே பாண்டி, எனக்கென்னமோ சந்தேகமாயிருக்கு. அதுங்க பயந்து போயி ஒண்ணுலாட்டா ஒண்னு பண்ணிக்கிட்டா? அந்தத் தட்டியப் பிச்சியெறி வே. முதல், டார்ச்சை அடியும் முதல்ல... உள்ள போயி பார்ப்போம்' - நாயக்கர் உத்தரவிட்டார். சொன்ன மாத்திரத்தில் வேகமாய்த் தட்டியைப் பிய்த்தெறிந்து புயல் போலச் சாடினார் பாண்டித்துரை. அவர்களின் உணர்வையும் வேகத்தையும் புரிந்துகொண்டு முன்பகுதிக்கு வந்து விளக்கைப்போட்டு அச்சத்துடன் நின்றனர் இருவரும். வேகமாய் உள்ளே நுழைந்தவர்கள் அவர்களை ஒருசேரக் கண்டதும் நிம்மதிப் பெருமூச்சு விட்டார்கள். அவர்கள் விறுவிறுத்துப் போயிருப்பதைக் கண்டனர். 'அடப் பாவிங்களா! எவ்வளவு சத்தம் போட்டோம்? கல்லோ மரமோன்னு இருந்திட்டீங்களே!' - கோபமாய்க் கேட்டார் முதலி. நாயக்கர் பக்கமாய் நெருங்கி வந்து கேட்டார்: 'இப்ப என்ன ஆயிப்போச்சுன்னு இப்படிக் கெடந்து பயந்து சாவுறீங்க?' 'மாப்ள, இதெல்லாம் ஒரு ஆம்பளைக்கு அழகா? நீங்களே இப்படிப் பயந்தீங்கன்னா... எங்களப்பத்தி நீங்க என்னதான் முடிவெடுத்திருக்கீங்க? எதப்பத்தியும் இனிய யோசிக்க வேண்டாம். வந்து பாய்லரப் பத்த வையிங்க. நாங்களாச்சு துணைக்கு' என்று கனிவுறக் கூறினார் பாண்டித்துரை.   'வேண்டாம்... வேண்டாம்...! நாங்க ஊரை விட்டுப் போயிடறோம். போயி எங்க ஜாதி ஜனங்களோட சேர்ந்து வாழுறோம்' என்று யாக்கூப் கூறவும் ஆத்திரம் மூண்ட குரலில் நாயக்கர் கூறினார்: 'அது என்னவே உம்ம ஜாதி ஜனம்..... எங்க ஜாதி ஜனம்னு. புதுசாப் பேசுறீரு. போக்கிரிப் பசங்க ஏதோ சொன்னானுங்கன்னா உம்ம புத்தியுமா இப்படிப் போவும்?... அவர் தொடர்ந்து கூறினார். 'ஏ பாண்டித்துரை போ - பாய்லரப் பத்த வையி. இந்தா விநாயகமும் வந்துட்டான். நானும் அவனுமாப் போய்ப் பால் வாங்கிட்டு வந்துடறோம். நாயக்கரு உனக்குத் துணையா இருப்பாரு. எவன் வந்து இன்னைக்கு என்ன ஆயிடப்போவுதுன்னு பார்ப்போம்!' என்றபடி விநாயகத்தை இழுத்துக்கொண்டு புறப்பட்டார் முதலியார். இவ்வளவுக்கும் பின் அச்சம் நீங்கிய தம்பதிகள் அவர்களின் துணையில் தங்கள் மாமூல் வாழ்க்கையில் கால் பதிக்கலானார்கள். இருளை வீழ்த்திய வெற்றிப் புன்னகையோடு சூரியன் மேலெழுந்தான். வழக்கம்போல் அந்தக் கிராமம் சுறுசுறுப்பின் எல்லையைத் தொட்டது. வழக்கத்திற்கு மாறாக பாண்டித்துரை, கஜேந்திர முதலியார், சீனிவாச நாயக்கர், விநாயகம் உட்பட மற்றும் சிலர் அங்கேயே உட்கார்ந்து பேசிக் கொண்டிருந்தனர். சிறிது நேரத்தில் கூச்சலும் ஆரவாரமும் கேட்டது. 'அவங்க இந்தப் பக்கமாத்தான் வந்துக்கிட்டு இருக்காங்க!' என்று ஒரு பையன் சொல்லிவிட்டு ஓடினான். அந்த வார்த்தையைக் கேட்டதும் யாக்கூபுக்கும் ஜெய்லானிக்கும் பயம் வந்து பிடித்தாட்டியது. சீறி எழுந்தார் பாண்டித்துரை. 'விநாயகம் எல்லாரையும் உஷார் பண்ணு. முதலியாரே .... நாயக்கரே இது இன்னிக்கு மட்டும் உள்ள வேலை இல்ல. எந்தக் காலத்திலேயும் இதமாதிரி ஒண்ணு நடக்க நாம இடம் கொடுக்கக் கூடாது’ என்றபடி வெளியே வந்தார் பாண்டித்துரை. கடையின் முன்பிருந்த அத்தனை பேரும் புது வேள்விக்குத் தங்களைத் தயார்படுத்திக்கொண்டு எழுந்தனர். முதலியாரும் நாயக்கரும் எல்லாருக்கும் முன்னால் வந்தனர். இப்போது கும்பல் தெரு முனையில் திரும்பியதைப் பார்த்தார்கள். அந்தப் பரபரப்பினூடே முதலியார் சொன்னார்: 'சுதந்திரப் போராட்ட காலத்திலேயே வெள்ளைக்காரன்கிட்டே அடிபட்டு மிதிபட்டுப் போராடுவோம். எலும்பு முறிஞ்சதைப் பத்திக்கூடக் கவலைப்படாம வெள்ளைக்காரனை விரட்டியடிச்சோம். நாயக்கரும் நானும் எவ்வளவு நாள் கஷ்டப்பட்டிருக்கோம். அப்படி வாங்கின சுதந்திரம் இன்னைக்கு இப்படியாயிடுச்சா? எத்தனை ஜாதிக்காரங்க, எத்தனை மதத்துக்காரங்க, எத்தனை மொழி பேசினவங்க... எல்லாருமா ரத்தம் சிந்திப் பெற்ற சுதந்திரம் இன்னைக்கு இவங்களுக்கு வேட்டைக்காடாப் போகணுமா?’ 'நாம நெனச்ச இந்தியாவும் தமிழ்நாடும் இது இல்ல. போராட வேண்டிய காலம், இங்க இன்னும் முடியல!' என்று ஆவேசமாய் மீசையைத் திருகியபடி ஊறினார் சீனிவாச நாயக்கர்... 'நம்முடைய வலிமை என்னங்குறதை மட்டும் அவங்களுக்கு உணர்த்தணும். அதுதான் நம்ம வேலை!' என்று பாண்டித்துரை கூற அனைவரும் ஆமோதித்தனர் தத்தமது உற்சாகக் குரல்களால் அந்தக் கும்பல் கலகக்குரலோடு வந்துகொண்டிருந்தது. ஆவேசம் ஊட்டப்பட்டவர்களாய்த் தெருவில் புழுதியைக் கிளப்பிய வண்ணம் நேற்றைய கோஷங்களோடு வந்து கொண்டிருந்தனர். ஆனால், அவர்களை  எதிர்கொண்டபடி கண்களிலே சத்திய ஆவேசம் ஒளிர, நெஞ்சிலே உரம் ஏற, புது வைராக்கியம் உடலெங்கும் பாயத் தங்களது உணர்வும், போராட்டமும் சகல ஜீவராசிகளுக்கும் உரியவை எனும் நெறியோடு இவர்கள் இமயம் போல் எழுந்து விசுவரூபம் கொண்டனர். கும்பல் இவர்களை அண்மித்தபோதும் ஒரு சிறு புள்ளியாக - ஊதினால், பறந்து போகும் பஞ்சாகவே சிறுத்துப் போய்க்கொண்டிருந்தது.   செம்மலர், நவம்பர் 1988 6. நிலைகள்   சல்மா கிரைண்டரில் அரிசியைப் போட்டு நிரப்பிவிட்டு 'ஆன்' பண்ணும்போதுதான் சலாகுத்தீன் வீட்டுக்குள் நுழைந்தார். ஆனால் அவர் நுழைவை முதலில் பார்த்து ’வாங்க மாமா’ என்று வாயார வரவேற்றவள் அலிமுத்து தான். ஒற்றை மருமகள், அவளுக்கென்றே ஆசையாய் வாங்கிவந்த மிட்டாய்ப் பொட்டலத்தைக் கொடுத்தார். 'வாங்க காக்கா' என்று பின்னர்தான் சல்மா சொல்லியபடியே அடுப்படிக்குள் நுழைந்தாள். 'ஏலா அலிமுத்து! மாமாவுக்குப் பாயை எடுத்துப் போடுலா' என்று மகளை ஏவினாள் தாய். அவள் சொல்வதற்கு முன்னாடியே பாயை உருவி எடுத்து கீழே விரித்திருந்தார் சலாகுத்தீன். 'கொஞ்சம் தண்ணீர் தாம்மா!' என்று மருமகளைக் கேட்டார். அவள் தண்ணீர் கொடுத்ததும் அதனை மடக்மடக் என்று நன்றாகக் குடித்துவிட்டு மடியிலிருந்து ஒரு பீடியை எடுத்துப் பற்றவைத்துக் கொண்டார். கூடவே இருமலும் சேர்ந்து வந்தது. கொஞ்சம் அருவருக்கும்படியாகவே இருமிக் கொண்டார். பாயிலிருந்து எழுந்து வெளியே சென்று காறலைத் துப்பிவிட்டு வந்து மீண்டும் பாயில் சம்மணம் கட்டி வசதியாக உட்கார்ந்து கொண்டார். கிரைண்டர் வேகவேகமாகச் சுற்றி மாவை அரைத்துக் கொண்டிருந்தது. அலிமுத்து ’சோலைக்குயிலே...'யைப் பாடாமல் நிறுத்திவிட்டு வந்தாள். இதே சமயத்தில் உள்ளே நுழைந்த சல்மா, தன் காக்காவின் முன் காபியை வைத்துவிட்டுக் கேட்டாள், 'என்ன காக்கா! வீட்டுல எல்லாரும் சொகமாயிருக்காங்களா?' 'ஆமாம்மா! நீங்க எல்லாரும் நல்ல சுகம்தானே?' என்ற சலாகுத்தீன் வார்த்தையையோ இந்தக் கேள்வியையோ முடிக்காமல் 'கிரைண்டர் எப்பம்மா வாங்கினே?' என்று கேட்டார். 'அது வந்து ஒரு மாசம் கிட்டே ஆகப் போவுதே காக்கா!' என்று கூறினாள் சல்மா. எதிரே மாட்டியிருந்த மாதக் காலண்டரில் நாட்களை நோட்டம் விட்டார் அவர். 'இங்க நடந்த சேவு மாமா வூட்டுக் கல்யாணத்துக்கு வந்து போயி சரியா முப்பத்து நாலு நாளுதான் ஆவுது. அப்போதுகூட கிரைண்டர் வாங்குவதான எண்ணம்பற்றியோ அல்லது அது வந்துவிடப் போவது பற்றியோ தங்கச்சி தன்னிடம் ஒன்றுமே சொல்லிக் கொள்ளவில்லையே' என்று எண்ணிக் கொண்டார். ’அது என்ன மாதிரி வந்தது? தம்பி ரூபா அனுப்பிக் குடுத்திருப்பான்' என்று கேள்வியையும் பதிலையும் ஒரே வரியில் இணைத்து எண்ணிக்கொண்டார். ஆனால் சல்மாவிடம் எதுவும் கேட்டுக்கொள்ள விரும்பவில்லை. முன்னே வைத்த காபியை எடுத்துக் குடிக்கப் போனபோது அவர் வாங்கி வந்திருந்த மிட்டாய்ப் பொட்டலத்தை அவிழ்த்து சிறிது மிட்டாயும் காரச்சேவும் எடுத்து ஒரு தட்டில் வைத்தாள். அவர் அதையும் எடுத்துக் கொறித்துக் கொண்டார். மீண்டும் இருமல் தாக்கியது. 'ஏன் காக்கா? இன்னும் நூடிய பீடியக் குடிச்சி உடம்பைக் கெடுத்துக்கிறீங்க?’ எத்தனையோ முறை அலுக்காமல் சலிக்காமல் கேட்கப்பட்டு, அத்தனை முறையும் பதிலே வராமல் போய்விட்ட கேள்வி. நிரந்தர கேள்வியும் நிரந்தர பதிலின்மையும். 'அதெல்லாம் இருக்கட்டும்மா! தம்பி கடிதமெல்லாம் வந்துக்கிட்டு இருக்குல்ல?' 'ம். வந்துக்கிட்டு போய்க்கிட்டுத்தான் இருக்கு.' ’ரூபால்லாம் ஒழுங்கா அனுப்பி வச்சுக்கிட்டு இருக்காம்லா?' 'முன்னப்போல இல்லேன்னாலும் அப்பப்ப பணம் வரத்தான் செய்யுது.' 'சரி, எப்படியோ பணம் வந்துக்கிட்டு இருக்குல்லா, அதுக்காவ சந்தோசப்படும். இப்ப அவனும் ரெண்டு மூணு பொட்டப்புள்ளங்களுக்குத் தகப்பனாயிட்டான். நாம் அதையும் கவனத்துல வெச்சுக்கிடத்தான் செய்யணும்.' இதற்குப் பிறகு இவர்களது சம்பாஷணையில் சிறிது நேர இடைவெளி விழுந்தது. இந்த இடைவெளியை சற்றே நாம் பயன்படுத்திக் கொள்வோம். சலாகுத்தீனுக்கு நேர் இளையவராகவும் சல்மாவுக்கு நேர் மூத்தவராகவும் உள்ள உஸ்மான் தற்போது ஏதோ ஒரு அரபு நாட்டில் சம்பாத்தியம் பண்ணிக்கொண்டு இருக்கிறார். அவருக்கும் பக்கத்து ஊரான பெட்டைக்குளத்தில் குழந்தைகள் - சம்சார சகிதமாகக் குடும்பம் உண்டு. கல்யாணம் ஆன பின்னர் மாமனார் வீட்டோடேயே தங்கியிருக்க வேண்டியதான நிர்ப்பந்தத்தில்தான் குடும்பமே அங்கே இருந்தது. ரொம்ப கால கஷ்டஜீவனத்துக்குப் பிறகு அவர் துபாய் போய்ச் சேர்ந்தார். ஏதோ ஒரு அரபு நாடு என்று சொல்லிவிட்டு, பின்பு துபாய் எனக் குறிப்பிடுவதால் ஒன்றும் கெட்டு விடவில்லை. அவர்கள் எந்த அரபு நாட்டில் வேலை பார்த்தாலும் இங்கே துபாய் அல்லது குவைத்து தான். தன் தங்கையின் புருஷன் உருப்படாதவன் என்பதாலும், தன் அண்ணன் மிகுந்த கஷ்டப்பட்டு ஜீவனம் நடத்துகிறார் என்பதாலும் குடும்பப் பாச எல்லையை விட்டு வெளியேறாமல் கூடப் பிறந்தவர்களுக்குத் தாராள சிந்தையோடு பணம் அனுப்பி வருகிறார். மூத்தவரான சலாகுத்தீன் நிரந்தரமான வேலையும் வருமானமும் இன்றி வறுமைக்கோட்டின் கடைசிப்புள்ளியில் சுழன்றார். மூன்று நேரமும் வீட்டில் அனைவரும் சாப்பிட்டதான வரலாறு அநேக வருசங்களுக்கு முன் நடந்த அதிசயம். 'மாமா! இப்ப நேரா ஊர்லேருந்தா வாறீங்க?' அலிமுத்து கேட்டதும் அவர் அவளுக்குப் பதில் சொல்லத் துவங்கினார். 'ஆமாமா! காலைல முத பஸ்ஸுக்குப் புறப்பட்டேன். நாங்குனேரி வந்து அங்கேர்ந்து வள்ளியூர் டவுன் பஸ்ஸைப் புடிச்சி இங்கே வந்தேன். என்னா வெயிலு? தாங்க முடியல’ ஏதோ ஒன்றை சூசகமாகச் சொல்லிவிட்டது போல் இருந்தது. சல்மா கிரைண்டரிலிருந்து மாவை அள்ளி அள்ளி ஒரு எவர்சில்வர் பாத்திரத்தில் போட்டாள். நன்றாக வழித்து முடிந்தபின் இன்னொரு பாத்திரத்திலிருந்து அரிசியை எடுத்து மெஷினில் போட்டு சுவிட்சைத் தட்டினாள். அது நல்லபடியாகக்கூட ஒய்வெடுக்காமல் மீண்டும் அரிசியை அதன் உருத்தெரியாமல் சிதைக்க ஆரம்பித்தது. 'ஏலா அலிமுத்து! சுந்தரி அக்கா வூட்டு அரிசி எதுலா? மாறிப்போயிருக்கும் போலத் தெரியுதே?' என்று குழப்பத்தினூடே கேட்டாள் தாய். 'நீந்தான் வரிசை வரிசாயா எல்லாப் பாத்திரத்தையும் வச்ச. இப்ப எங்கிட்ட என்ன கேக்குற? 'கேட்டா ஒழுங்கா பதிலச் சொல்லேன். அதுக்கு ஏன் வரிச்சுக் கட்டிக்கிட்டு சண்டைக்கு வர்றவ மாதிரி பேசுதே?' 'நான் ஒண்ணும் சண்டைக்கு வரலப்பா!' என்று இவளும் நழுவினாள். கிரைண்டர் எந்தக் காரணத்தோடு இந்த வீட்டிற்கு வந்திருக்கிறது என்பதைப் புரிந்து கொண்டார் சலாகுத்தீன். காலையில் வெறும் வயிற்றோடு பஸ் ஏறி வந்த மயக்கம் அவருக்கு வேகமாக இருந்தது. வெறும் பச்சைத் தண்ணீர் தான் முதல் ஆகாரம். நாங்குனேரிக்கு வந்தபின் யோசித்துத்தான் ஒரு டீ சாப்பிட்டார். இங்கே ஒரு காபி கிடைத்தது. சூசகமாகச் சொன்ன பின்னும் இங்கே டிபனுக்கு வழியில்லாமல் போய்விட்டது. இனி இங்கிருந்து ஊர் திரும்புவதாயிருந்தால் கூட மத்தியானச் சாப்பாட்டுக்கு அப்புறம் மூன்று மணி அல்லது நான்கு மணி வாக்கில்தான் புறப்பட வேண்டும் எனத் தீர்மானித்துக் கொண்டார். தங்கச்சி வீட்டுக்கு வரும் வழியில் பக்கீரப்பா கடையில் பேயன் பழமும் கதலிப் பழமும் நன்கு பழுத்த நிலையில் தொங்கிக் கொண்டிருந்ததைப் பார்த்துத்தான் வந்தார். பழம் சாப்பிடப்போறது இங்கே தெரிய வேண்டாம் என எண்ணிக்கொண்ட சலாகுத்தீன் சல்மாவை வினவினார்: 'ஆத்துல தண்ணி வருதாம்மா?' 'கொஞ்சுக்காணும் வருது காக்கா! 'இந்த வெயில்ல அதாவது வருதே' என்று திருப்திப்பட்டவராய், 'நான் ஆத்துக்குப் போயிட்டு வந்துடறேம்மா...' என்று கூறியபடிக்கே எழுந்தார். 'தம்' பற்ற வைத்துக் கொண்டார். நேராகத் தெற்கு நோக்கி வந்தவர் ஆற்றை நெருங்கின வழியிலேயே நடையைக் கிழக்குப் பக்கமாகத் திருப்பி ஒரு வீச்சில் பக்கீரப்பா கடைக்கு வந்தார். மீண்டும் அந்தப் பழங்கள் ஆசையை விருத்தி செய்வனவாய்த் தொங்கிக் கொண்டிருந்தன. கணிசமாக இரண்டு பேயன் பழங்களை உரித்து வாயில் போட்டு ஒரு சிசர்ஸும் வாங்கிப் பைக்குள் பத்திரப் படுத்திக் கொண்டார். இந்தப் பத்திரத்துக்கு உத்தரவாதமாய் சல்மா வீட்டில் கிரைண்டர் சுழற்சி இருந்தது. அவருக்குத்தான் வந்த விஷயம் குறித்து கவலை கொள்ளத் தோன்றவில்லை. மத்தியானச் சாப்பாட்டில் பிரியமான அம்சமாகக் கருவாட்டுக் குழம்பு மணத்தது. ருசி பார்க்கும் தன்மையைத் தன் நாக்கு இன்னமும் வைத்துக் கொண்டிருக்கத் தானே செய்கிறது என வியந்துகொண்டார். சாப்பாட்டின் ஊடாக அதைப் பரிமாறிய மருமகளிடம் கேட்டார்: 'இந்த மாவு அரைக்குறதுல ஒங்களுக்கு ஒரு நாளைக்கு எவ்வளவும்மா கெடைக்கு?' அவள் பதில் சொல்லும் முன் சல்மா முந்திக்கொண்டாள். 'அத சரியாச் சொல்ல முடியாது காக்கா. அஞ்சும் கெடைக்கும் ரெண்டும் கெடைக்கும். சமயத்துல அதுவும் இல்லாமப் போனாலும் போயிடும்.' 'சின்ன ஊருதானம்மா. போவப் போவ செல்லாம் சரியா வந்திடும்.' 'காக்கா, ராதாபுரத்துல் யாரோ ஒரு கடைக்காரரு மெட்ராசுலே உள்ள கடைக்குக் கூப்புடுறாரு, போவணும்னு சொன்னீங்களே! என்ன ஆச்சு அந்த விசயம்?' 'அவரு இன்னும் போவல. எப்பப் போறார்னும் தெரியல. இப்ப நான் பூச்சிக்காட்டுலதான் ஒரு பலசரக்குக் கடையில் நின்னுக்கிட்டு இருக்கேன்.' 'அந்த வருமானத்த வச்சிக்கிட்டு எப்படித்தான் சமாளிச்சிட்டு இருக்கீங்க? இதைச் சொல்லிவிட்டு நாக்கைக் கடித்துக் கொண்டாள். அனாவசியமாகத் தானே முந்திக்கொண்டு விட்டதாகத் தன்னையே அவள் கடிந்து கொண்டாள். அவளது அந்தச் சொல்லையே பற்றுக்கோடாக வைத்து, 'என்ன செய்யம்மா, ஒரு வேலையும் அமைய மாட்டேங்குது, புள்ளங்களுக்கும் ஒண்ணுலாட்டா ஒண்ணு வந்து ரொம்பவும் தொந்தரவு பண்ணுது. நேத்துக்கூட மூணாவது புள்ளக்கு ஒரே சீதபேதியா ஆயிட்டுது. அவன் பெரியவன், நான் எப்படியும் காலேஜில் சேர்ந்திடணும்னு ஒத்தக்கால்ல நின்னுட்டு இருக்கான். நல்லாப் படிக்கிற பையன் சும்மாக் கடை கண்ணிக்குன்னு வேல பாக்க வச்சுக் கெடுத்திடாதீங்கன்னு அவன் வாத்தியாமாரும் சொல்றாங்க. தம்பிக்கும் இதை எல்லாம் விளக்கிக் கடிதம் போட்டேன். இன்னும் பதிலக் காணோம். ஊருலயும் ரண்டு மூணு பேருக்கிட்டக் கேட்டேன். யாரும் உதவுற ஆளாத் தெரியல. அதான் நான் இங்க வந்தேன்.' 'ம்... அப்படியா' என்று இழுத்தாள், சுரத்தில்லாதபடிக்கு, சலாகுத்தீனுக்கு இந்த இழுப்பைப் புரிந்துகொள்ள ஒன்றும் சிரமப்படவில்லை . அதனால் வலியவே, 'தம்பி பணம் வந்ததும் உனக்கு எப்படியும் திருப்பி அனுப்பிடறேம்மா. நீ இப்ப ஒண்ணும் யோசிக்காதே’ என்று கூறினார். 'இப்படித்தான் முன்னாலயும் ஒருக்கத் திருப்பித் தந்துடறேன் அப்படீன்னு சொல்லி வாங்கிட்டுப் போனாங்க. இதுநா வரைக்கும் அத நீங்க திருப்பியே தரலே. எனக்கும் இப்ப மெஷின் எடுத்த வகையில் நெறைய செலவாயிப் போச்சு' என்று சல்மா தயங்காமல் பதிலளித்தபோது அவர் மிகவும் சங்கோஜப்பட்டார். திருப்பி அனுப்ப முடியாத சூழ்நிலையை அவளிடம் எப்படிச் சொன்னாலும் அதை அவள் நம்புவது சிரமமே. அவள் இப்போதும் இதை ஞாபகத்தில் வைத்திருப்பதும் அதைச் சொல்லிக் காட்டுவதும் தனக்குரிய தண்டனைதான். அவர் மனசிலிருந்து இழைகள் பிரிந்தன. 'என் புள்ள பெரிய மனுஷியானாள்; அதுக்குத் தாய்மாமங்குற முறையிலே என்ன செஞ்சீங்க? நீங்க செய்யலேங்குறதுக்காக நாங்க ஏதும் தப்பாவா நடந்துக்கிட்டோம்? உங்க நெலம அவ்வளவுதான்ன்னு நாங்களும் பேசாம இருந்துட்டோம். அதுமாதிரி நீங்களும் எங்களத் தொந்தரவு பண்ணாம விட்டுட வேண்டியதுதான். எப்பப் பார்த்தாலும் ரூபா ரூபான்னு அடிச்சுக்கிறீங்களே!' என்றாள் சல்மா. சலாகுத்தீன் சிதைந்தார். தான் நேசமாய்க் கொண்டு திரிந்த அன்புத் தங்கச்சி - தந்தைக்கும் தாய்க்கும் பின்னர் மனைவியைக் கூட நேசிக்கத் தெரியாமல் கூடப் பிறந்தவளையே நேசித்த அருமை அண்ணன், உறவுகள் சாசுவதமில்லை. நிச்சயமான உதவியை எதிர்பார்த்து வந்தவர், அவளது வாழ்க்கைக்கு மேலும் ஒரு ஆதாரம் இங்கு வந்தபின் கண்டவர், இப்போது வார்த்தைச் சுமைகளால் துவளலானார். மூன்று மணிக்கு மேல்தான் - சாப்பாட்டுக்குப் பின்னர் ஒரு குட்டித் தூக்கம் போட்டுவிட்டு சுகமாக ஊர் புறப்பட வேண்டும் என்று திட்டமிட்டார். எல்லாவற்றையும் ஒரு நிமிசத்தில் பறிகொடுத்துவிட்டு எழுந்தார், புறப்படுவதற்காக. கண்களில் பொங்கிவந்த கண்ணீரைக் கைத்துண்டால் துடைத்துவிட்டு, தோளின் மேல் அதைப் போட்டுக்கொண்டு, 'சல்மா! நான் போய்ட்டு வர்றேம்மா!' என்றார். சல்மா ஓடோடிப்போய் பீரோவைத் திறந்தாள். அலிமுத்து எல்லாத்துக்கும் சாட்சியாக நின்றாள். எதையோ எடுப்பது போலத் தெரிந்தது. 'அலிமுத்து! போயிட்டு வரேம்மா!' என்று அவளைப் பார்த்தார். அவள் நின்ற இடத்தில் இல்லை. 'இங்க தான் அவ நின்னுக்கிட்டு இருந்தா... திடீர்னு ஆளக் காணமே!' என்று எண்ணமிட்டவராய் வாசல் பக்கம் சென்று செருப்பை மாட்டிக்கொண்டு புறப்படலானார். சல்மா வேகமாகக் காக்காவின் முன் வந்து, 'வருத்தப்படாதீங்க காக்கா. இந்தாங்க இந்த இருபது ரூபாவையும் வச்சிக்கிடுங்க. மச்சியையும் மாமியையும் நான் கேட்டதால் சொல்லுங்க' என்றாள். ஆனால் அவர் திரும்பிப் பாராமல் கீழே இறங்கி விட்டார். சல்மாவுக்கு இவ்வளவு விரைவான சம்பவம் அதிர்ச்சியை அளித்திருக்க வேண்டும். வாசலில் பிரமிப்போடு நின்றாள். சில வீடுகள் தாண்டி அவர் வந்ததும் 'மாமா' என்று குரல் கேட்டது. அலிமுத்து அவளது சின்னாப்பா வீட்டில் நின்று கொண்டிருந்தாள். 'நீ இங்கேயாமா நிக்குற! வீட்டுலேர்ந்து திடீர்னு காணாமப் போயிட்டியே. நான் போயிட்டு வர்ரேம்மா!' என்று சொன்னார் சலாகுத்தீன். 'கொஞ்சம் இங்கு வந்துட்டுப் போங்க மாமா!' வீட்டுக்குள் யாருமே இல்லாதது போல் தோன்றியது. 'என்னம்மா' என்றபடி உள்ளே போனார். 'இந்தாங்க மாமா! இந்த நூறு ரூபாயச் செலவுக்கு வச்சுக்கிடுங்க ' என்று நீட்டினாள். சலாகுத்தீன் கேள்விக்குறியாய்ப் பார்த்தார். ஆச்சரியமும் அன்பும் தோன்றியது. 'மாமா! நான் கொஞ்சம் கொஞ்சமா சேத்து வச்சது. வேறு யாரு பணத்தையும் நான் எடுத்துட்டு வரல. என் சொந்தப் பணமாக்கும்' என்று எடுத்துரைத்தாள். தான் அனாதையாகிவிட்டோமோ என்ற அவசரத்தில் உலகை இழந்து வெறும் நடைபோட்ட சலாகுத்தீனுக்குத் தன் முன்னே ஆதரவுக் கைகள் நீண்டதைப் பொங்கும் மகிழ்ச்சியினூடே கண்டு அவளை அப்படியே கட்டி அணைத்துக் கண்ணீர் பொங்கியவர் மறு நிமிசமே தெருவில் இறங்கி 'விருட்’டென்று நடக்கலானார்.   தாமரை, ஜனவரி 1985                     7. ஒரு தாய் வயிற்றுப் பிள்ளைகள்   பிலோமினா அழுக்குத் துணிகளைப் பக்கெட்டில் போட்டுக்கொண்டு, அந்தத் தர்காவைத் தாண்டி தோழி ஆக்ஸிலியாவுடன் எதையோ பேசிக்கொண்டு போனபோதுதான் ஒரு கலகத்துக்கான வித்து விழுந்தது என்று சொல்ல வேண்டும். இந்த அழகியல்லாத அழகி (எப்படித்தான் இருந்தாலும் 'அழகி' என்றுதானே தினசரிப் பத்திரிகைகள் செய்திகளை வெளியிடும்). பிலோமினாவும் ஆக்ஸிலியாவும் கீழ்வானக் கிணற்றிலிருந்து கதிரவன் எழுமுன்னமேயே குளிக்கப் போய்விட்டுத் திரும்பி விடுகிற வழக்கம் உள்ளவர்கள். இன்று லேட்; சிறிது நேரம் தான். ஆனால் வழக்கமில்லாத வழக்கமாக மஸ்தான் இன்றைக்கென்று சீக்கிரமாகக் குளிக்கப் போயிருந்தான். அவனுக்குப் பல அடி தூரத்தில் குளித்துவிட்டு வந்து கொண்டிருந்தாள் நசீமா. தலையை டவலால் உலர்த்தியபடிக்கு வந்துகொண்டிருந்தவன் பிலோமினாவும் ஆக்ஸிலியாவும் எதிரே வருவதைக் கண்டான். சமயா சமயங்களில் இருவரின் அழகையும் கண்டு ரசித்திருக்கிறான். யாரைத்தான் ரசிக்காமல் விட்டிருந்தான்? அப்போதெல்லாம் அது ரசனை என்கிற அளவில்தான் நின்றிருந்தது. இவர்களைக் கண்டதும் குஷியாக விசிலடித்துக்கொண்டே எதிர்த்திசையில் அவர்களை நெருங்கினான். இவனை அவர்கள் சமீபித்தபோது லேசாய்ப் பார்த்துச் சிரித்தான். ஆக்ஸிலியா வேகமாக நடைபோட ஆரம்பித்தாள். பிலோமினா இவனைப் பார்த்து முறைத்துக்கொண்டே ஆக்ஸிலியாவை வேகமாய்த் தொடர்ந்தாள். இவனோ விடவில்லை. 'என்னடி பெரிய இவ கணக்காதான் முறைக்கிற?’ உண்மையிலேயே இருவருக்கும் அச்சம் வந்துவிட்டது. 'சாயங்காலமா வாய்க்காப் பக்கம் வாங்க ரெண்டு பேருக்கும் பூ வாங்கித் தர்றேன்.' 'நாசமாப் போற பயல; பல்ல ஒடைச்சிருவேன்' என்றபடி ஆக்ஸிலியாவும் பிலோமினாவும் ஓடினார்கள். பின்னாலே வந்து கொண்டிருந்த நசீமாவுக்கு அவன் சொன்னது தெளிவாய்க் கேட்டது. ’அட கிறுக்கு மாடன். இவனுக்கு என்ன பைத்தியமா புடிச்சிருக்கு. புள்ளயும் குட்டியுமா இருக்கிற பயலுக்கு இப்படியொரு ஆசையா?' அவசரம் அவசரமாய் பிலோமினாவும் ஆக்ஸிலியாவும் குளித்துவிட்டுத் தங்கள் கிராமத்தில் புகுந்ததும் பிரச்சினை கொழுந்துவிட்டு எரியலாயிற்று. அவள் தன் கணவனிடம்தான் முதலில் சொன்னாள். பீட்டருக்கு அந்த நொடியிலேயே இரத்தம் கொதித்துவிட்டது. அத்தையின் காதிலும் மாமனாரின் காதிலும் அவள் அழுதுகொண்டே இதைச் சொன்னது சரியானபடிக்குக் காதில் விழுந்தது. மூவரும் சேர்ந்து காட்டுக்கத்தலாய்க் கத்தத் தொடங்கினார்கள். ஆக்ஸிலியாவின் வீட்டுக்கு ஓடோடிச் சென்றான் பீட்டர். பக்கம்தான் வீடு. நடந்து போயிருக்கலாம். ஆனால் அவனுக்கு ஓடிச்செல்வதைத் தவிர ஒன்றும் தெரியவில்லை. அவன் வேகத்தையும் கோபத்தையும் கண்டு அவள் அரண்டு போனாள். 'இப்பிடி ஒரு தறுதலைப்பய கேட்டிருக்கான். அவன் முகத்துல காறித் துப்பாமயாட்டி ரெண்டுபேரும் வந்திருக்கீங்க?' ஆக்ஸிலியாவின் தாய் ஆத்திரமேறிக் கேட்டாள். ஜனங்கள் அங்குமிங்குமாய்க் கூடிவிட்டார்கள். பலரும் பல மாதிரிக் கொந்தளித்தார்கள். அவன் என்ன தலைய வெட்டிக் கொண்டு போயிடப் போறானோ? கேடுகெட்ட பொம்மனாட்டிங்களா வந்து அழுவுறீங்களே? 'இதுநா வரைக்கும் இப்படி ஒரு பய கல்யாணமான பொண்ணா இருக்கட்டும், வயசுக்கு வந்த பொண்ணா இருக்கட்டும், நாக்குலே கொழுப்பேறி இப்படிக் கேட்டிருப்பானா? ’ 'சொன்னவன் எவம்ல? அவனக் கண்டம் துண்டமா வெட்டிர்ரேன் வெட்டி! யாரும்மா சொல்லு?’ ஆக்ஸிலியாவை நெருங்கி நின்று ஒருவன் கேட்டான். ஊரிலுள்ள அத்தனைபேரும் ஒரு நிமிசத்தில் கூடிவிட்டது போல் இருந்தது. பல வகையான காரசாரமான வார்த்தைகள் வெளிப்பட்டு வரலாயின. இதெல்லாம் சேர்ந்து பீட்டரை உச்சாணிக் கொம்பிற்குக் கோபம் கொண்டுபோய் விட்டது. மீண்டும் தன் வீட்டுக்கு ஓடினான். ஓடிய வேகத்தில் கையிலே அரிவாளை எடுத்துக்கொண்டு தெருவுக்கே வந்தான். பிலோமினாவையும் கையைப் பிடித்து ஆவேசமாகத் தெருவுக்கு இழுத்து வந்தான். 'ஏட்டி இங்க பாரு! ஒண்ணு நான் இருக்கணும் இல்லே, அவன் இருக்கணும். யாரடி அந்தச் செருக்கிப்பய புள்ள! யாரு? சொல்லு! சொல்லு!' என்று உலுப்பினான். அவளுக்கு அழ முடிந்தது. அந்த அழுகையினூடே அவன் இன்னின்ன மாதிரி இருப்பான் என்று அடையாளம் சொல்ல முடிந்தது. ஆனால் அங்கிருந்த கூச்சலிலும் அவள் கேவிக் கேவி அழுதுகொண்டு சொன்ன முறையிலும் 'இன்னார்தான்' என்கிற சித்திரம் சிதைந்து போய்த் தாறுமாறாகக் கிடந்தது. ஆனால் ஆக்ஸிலியாவுக்குத் தலைகீழ்ப்பாடம்! யார்? எவர் யாருடைய பிள்ளை என்பதையெல்லாம் இன்ஸ்டிடியூட் போகிற - வருகிற வழியிலும் பள்ளிக்கூடத்தில் கெட்டிக்கார மாணவியாய் விளங்கி அறிந்துகொண்டதாலும் அத்தனை முஸ்லீம் வீடுகளின் பட்டப்பெயர் முதற்கொண்டு தெரியும். கூடவே அவளுக்கு முஸ்லீம்களிடத்தில் ஒரு தனிப்பட்ட பிரியம் உண்டு. ஏதாவது ஒரு வகையில் ஒவ்வொருவருடனோ அல்லது குறிப்பிட்டவர்களுடனோ அவளுக்கு நல்ல அறிமுகம் இருந்தது. அதனால் அனைவரும் அவளைச் சூழ்ந்து கொண்டார்கள். 'யாருடி அவன்? யாரும்மா அவன்? நல்லாருப்பே சொல்லிடும்மா!’ ஒவ்வொருவரின் தரத்திற்கேற்பவும் கேள்விகள் இவளைச் சுற்றின. இன்னார் என்பதைத் தான் அடையாளம் காட்டிவிட்டால் இந்த ஞானபுரம் கிராமத்திற்கும் முஸ்லீம்களுக்கும் இடையில் பெரிய ரணகளம் ஏற்பட்டு உயிர்ப்பலி ஏற்பட்டுவிடும் என்று அச்சம் உண்டாயிற்று. திடீரென்று அவள் கண்களின் முன்னே தான் இன்ஸ்டிடியூட் போய்வரும்போது துள்ளி விளையாடித் திரிகிற முஸ்லீம் குழந்தைகளின் முகம் நிழலாடிற்று. ஐயோ? இவர்களில் யாராவது ஏன்னா ...? அப்படியே குலைநடுக்கம் உண்டாயிற்று. ’ஹும் மாட்டேன்.... எனக்குத் தெரியாது.' பாசாங்கு பண்ணினாள். தெரியாததுபோல் நடிக்க ஆரம்பித்தாள். யாருமே அவளை நம்பத் தயாராக இல்லை. 'உனக்குத் தெரியும். சொல்லு! சொல்லு!' என்று குரல்கள் கர்ஜித்தபோதெல்லாம் அவள் பதுங்கி ஊமையாகக் கிடந்தாள். 'இவகிட்ட மயிலே எறகு போடுன்னா போடமாட்டா! நாலு அறை அறைஞ்சாத்தான் சரிப்படுவா!' என்று யாரோ ஒருவர் அபிப்ராயம் தெரிவித்தார். 'சீ! பொட்டபுள்ளயக் கை நீட்டி அடிக்கிறதாவது? சும்மாக் கெடங்கப்பா! அவன் இப்ப சொல்லிடுவா பாரேன்!' இப்படி ஒரு நயமான பேச்சு தெறித்து விழுந்தது. அவளோ மனசை இறுக்கிக்கொண்டு அழுதாள். 'அடி, கேடுகெட்ட முண்டச்சி! இத்தன பேரா நின்னு உன்னத் தாங்கு தாங்குன்னு தாங்குறோம். வாயவா தொறக்க மாட்டேன்கிறே? உன் மனசுல என்ன இருக்குங்குறது எனக்குத் தெரியும். அதுதான் இப்படி நிக்குற, ஏல, ஆளுக்கொரு கத்தியும் அரிவாளுமா ஊருக்குள்ள போவோமுல. அப்பத் தெரியும் சங்கதி' என்று உரக்கக் கூறினான் அவள் அண்ணன் கிளமெண்ட். 'அதுதான் சரி, நாலுபேரைப் புடிச்சு அடிக்குற அடில தானா வந்து விழுந்துறதா எந்தக் களவாணிப்பயன்னு?' என்று சேவியர் கூறினான். இப்போது அவள் கண் முன்னே எல்லா ஆண்களும் பெண்களும் குழந்தைகளும் திடீர்த் தாக்குதலினால் ரத்தம் சிந்தி... ஓலமிட்டுக் குற்றுயிரும் குலையுயிருமாய்... கீழே விழுந்து துடிதுடித்து.... 'ஐயோ! வேண்டாண்ணே வேண்டா! நான் உண்மையைச் சொல்லிடறேன். நம் பிச்சைக்கனி ராவுத்தரு மகன் மஸ்தான் தான் அப்படிச் சொன்னான். 'இத அப்பவே சொல்லித் தொலைக்குறதுக்கென்ன கழுதை?' என்று ஓங்கி ஒரு அறை அறைந்துவிட்டுப் பறந்தான் கிளமெண்ட். அத்தனை பேரும் அவனோடு ஓடலானார்கள். 'குத்துல; வெட்டுல. அந்தப் பய இன்னியோட செத்தான்' என்றபடி 'ஏல, அவன் அப்படியே மடக்கி ஆளுக்கொரு பீஸா உருவிடணும்' என்றபடி வெவ்வேறு கோபாவேச அபிப்ராயங்களுடனும் கட்டுக்குள்ளில்லாத கூச்சலுடனும் ஓடலானார்கள். சின்னக் குழந்தைகள் குஷி தாங்காமல் 'ஹே! ஹே!' என்று கூச்சலிட்டு அவர்களும் ஓடினர். மதயானைகள் போல் திமிர்ந்தெழுந்து ஒடுகிற கூட்டம் கண்டு அச்சம் கொண்டு வயிற்றில் புளியைக் கரைத்தபடி அங்குள்ள பெரியவர்களும் தாய்மார்களும் 'ஏ, ஏ, போவாதீங்கடா! நில்லுங்கடா! நில்லுங்கடா' என்று கூறிக்கொண்டே ஓடினர். ஒரு ஆவேசத்தின் பொருட்டு கன்னிப் பெண்களைத் தவிர ஞானபுரம் கிராமமே காலியாகிக் கொண்டிருந்தது போலிருந்தது. வீட்டில் கிடந்த ஆயுதங்களுக்கும் அதே நிலை தானே? முஸ்லீம்க்கள் வாழும் அந்தக் கோவனேரிப் பகுதி எதிர்நோக்கி வருகிற எந்த ஆபத்தையும் அறியாதபடிக்கு எப்போதும்போல் அமைதியாகக் கிடந்தது. இன்னும் பள்ளிக்கூடம் அலுவலகம் செல்லும் நேரம் ஆகவில்லை. ஆதலால் குளிக்கப் போவதும் குளித்து வருவதுமான செயலையன்றி வெளிப்படையாய் வேறேதுவும் தெரியவில்லை. திடீரென்று கூச்சலும் ஆரவாரமும் 'குத்துடா, வெட்டுடா' என்ற சத்தமும் கேட்க ஆரம்பித்ததும் என்ன ஏதுவென்று எட்டிப் பார்க்க ஆரம்பித்தார்கள் சிலர். ஓடிவரக்கூடிய கூட்டத்தைக் கண்டு சின்னப் பிள்ளைகள் 'அய்யோ! அம்மா' என்றலறியபடித் தத்தமது வீட்டை நோக்கி ஓடின. வாய்க்காலில் குளித்துக்கொண்டு இருந்தவர்கள் மத்தியிலும் இந்த ஆரவாரம் விழ அவசரம் அவசரமாய் அப்படி அப்படியே துணிமணிகளையெல்லாம் வாய்க்கால் படிக்கட்டுக்களில் போட்டுவிட்டு ஓடிவரலானார்கள். அலறிப் போன பெண்கள் கதவுகளையும் ஜன்னல்களையும் எந்திரவேகத்தில் சாத்தித் தங்கள் குழந்தைகளை மார்போடு கட்டியணைத்துக் கொண்டார்கள். சிலர் அழ ஆரம்பித்தார்கள். வெளியே போயிருக்கிற நிர்க்கதியான ஆண்களைப்பற்றி எண்ணி வேறு சிலர் ஒப்பாரி வைக்கலானார்கள். ஆனாலும் அந்தக் கும்பல் தனக்குள் ஒரு நியதியை உணர்வுபூர்வமாகவே வகுத்துக்கொண்டதுபோல் இரண்டாம் தெருவின் கடைக்கோடியிலிருக்கும் பிச்சைக்கனி ராவுத்தர் வீடு நோக்கியே ஓடியது. இந்தக் கூச்சலையும் பாஷைகளின் கோரத்தையும் மஸ்தானின் செவிகள் உணர ஆரம்பித்ததும் தன் உயிர் அக்கணமே பறந்தோடி விட்டதாக உணர்ந்தான். ஒரே விநாடியில் வியர்வையால் முழுக்கக் குளித்து விட்டான். தன் உயிரை வாங்க என்றோ ஒரு நாள் ஒரு எமன் தான் வருவான் என்று எண்ணிக்கொண்டிருந்தவனுக்கு ஒரு கிராமமே எமன் உருக்கொண்டு பாய்ந்து வருவதை அறிந்து பதறினான்; சம்மணமிட்டு சாப்பிட்டுக்கொண்டு இருந்த கால்கள் கட்டிப் போடப்பட்டு விட்டதா? மூச்சு திணறியது. குழந்தைக்குப் பாலூட்டிக்கொண்டிருந்த அவன் மனைவிக்கு ஒன்றுமே புரியவில்லை. மார்பகத்திலிருந்த குழந்தையை அப்படியே பிடுங்கித் தரையில் படுக்க வைத்துவிட்டு வேகமாய்ப் போய்க் கதவைச் சாத்தலானாள். ஆனாலும் அது தன் வீட்டுக்குரிய அபாயம் அல்ல என்றெண்ணியவளாய்த்தான் அதைச் செய்தாள். திரும்பியபோது மஸ்தானைக் காணவில்லை. அவன் புழக்கடைப் பக்கமாய் மண் சுவரையும் தென்னந்தட்டிகளையும் அசுர பலத்தால் பிய்த்துக்கொண்டு ஓடிப்போவதைக் கண்ட அவன் உம்மா, 'வாப்பா வாப்பா எங்கேப்பா ஓடுற?' என்றாள். நேராக ரோட்டுக்கு வந்தவன் எதிரே வந்த டவுன் பஸ்ஸை நடுரோட்டிலே நின்று மறித்து உள்ளே தாவினான். வயலிலிருந்து வீட்டுக்குப் போய்க்கொண்டு இருந்த அவனது தூரத்து உறவினர் செய்யது ஒன்றும் புரியாமல் திருதிருவென்று விழித்தபடி மீண்டும் சைக்கிளை அழுத்தினார். கூச்சலும் குழப்பமும் வீட்டை நெருங்க நெருங்க அதிகரிக்கவே அவர் மருண்டுபோய் உடைமரக் காட்டில் பத்திரமாகிக் கொண்டார். ஓடிவந்த கட்டுக்கடங்காத கூட்டமும் பிச்சைக்கனி ராவுத்தர் வீட்டு முன் நின்று கூச்சலிடவும் கற்களை விட்டெறியவும் ஆரம்பித்தன. 'டேய் மஸ்தான் பயல! வெளிய வாடா! உன்னை இங்குனயே வெட்டிப் பொதைச்சிர்றோம்!' 'ஓய் பிச்சைக்கனி ராவுத்தரே! வெளியே வாரும்வே! புள்ளயவா பெத்து வச்சிருக்கீரு! உம்மையும் ஒரு கை பாத்துடறோம்!'   'மரியாதையா கதவைத் தொறந்திரும்! இல்லே கதவை உடைச்சிக்கிட்டு உள்ளே பூந்துருவோம்.' 'உம்ம உயிரு உம்ம உடம்புல இருக்கணுமா, கூடாதா?' வேகமாய்க் கதவைத் தட்டினார்கள். அந்தக் காலத்துக் கதவு என்பதால் தாக்குப் பிடித்துக்கொண்டிருந்தது போலும். உள்ளே இருந்த அவன் உம்மா அப்படியே மயக்கம் போட்டு விழுந்து விட்டாள். அவன் மனைவியோ குழந்தையைத் தோளில் போட்டுக்கொண்டு பின்புறமாகவே தன் வீட்டை நோக்கி ஓடலானாள். வழியிலேயே படபடத்துப்போய்க் கைக்குழந்தையோடு கீழே விழுந்து மூர்ச்சையானாள். வீல்வீலென்று குழந்தை கதற ஆரம்பித்தது. யாரோ அவளை நெருங்கிக் கொண்டிருந்தார்கள். ஊர்ப் பெரிய மனிதர்களாய் இப்போது பலர் விரைவாகச் சேர்ந்து பிச்சைக்கனி ராவுத்தர் வீட்டு முன்னாலுள்ள கும்பலை நோக்கி ஓடலானார்கள். இதனைக் கண்ணுற்ற இன்னும் சிலரும், இளைஞர்களும் அவர்களோடு சேர்ந்து விரைந்தார்கள். அதே சமயம் கிறிஸ்தவப் பெரியோர்களும் பெண்களும் ஒன்றாய் விரைந்தோடி வந்தார்கள். இப்போது ஒருவரோடொருவர் மோதிக்கொள்கிற சூழல் தோன்றியது. ஆனால் தேவசகாயம், டிபெட்ரியஸ், ஆசிர்வாதம், மோசஸ் போன்ற பெரிய மனிதர்கள் எல்லாம் இடையில் நின்று வழிமறித்து இரு சாராரையும் பிரித்தார்கள். 'நீங்க யாரும் இப்ப இங்க வர வேண்டாம். அங்க ஒதுங்கிடுங்க. அந்தப் பயலை மட்டும் ரெண்டுல ஒண்ணு பாத்துட்டுத் திரும்பிடறோம். வேற யாரையும் எதுவும் செய்ய மாட்டோம். எங்களத் தடுக்காதீங்க' என்று ஆளுக்காளாய்ச் சொன்னார்கள். 'என்னப்பா? என்ன விசயம்? என்ன நடந்ததுன்னு சொல்லுங்களேன்? என்று கேட்டார்கள். லெப்பைக்குட்டி ஹாஜா முகைதீன், பதுருதீன் போன்ற பெரியவர்கள். ஆனால் விடை கிடைக்கவில்லை. விடை கிடைக்கவும் செய்யாது போலிருந்தது. என்ன மாதிரி இவர்களை வழிக்குக் கொண்டுவருவது என்று தெரியவில்லை. கூட்டம் இப்போது திமிறிக்கொண்டு வீட்டின் கதவை வேகமாய்த் தள்ள ஆரம்பித்து விட்டது. டிபெட்ரியஸ், மோசஸ், தேவசகாயம் ஆகியோர் தங்கள் புஜபல பராக்கிரமங்களைக் கூடுமான மட்டும் வளமையாய்ப் பிரயோகித்துத் திண்ணைக்கும் கீழே தள்ளி விட்டார்கள். 'பெரியப்பா! இதுல மட்டும் தலையிடாதீங்க! நான் ஜெயிலுக்குப் போயிட்டாலும் பரவால்லே ! எனக்குக் கவலை இல்லே! என் பொண்டாட்டி எப்படியும் பொழைச்சிக்கிடுவா! ஆனா இப்போ அவனை நான் குளோஸ் பண்ணிடனும்!” என்று பீட்டர் மோசஸைப் பார்த்து கர்ஜித்தான். சொல்லிக்கொண்டே அருவாளைத் தூக்கிக் கதவின்மீது வீசினான். அவனோடு இன்னும் சில இளைஞர்கள் சேர்ந்து திண்ணை மீது ஏற முயன்றனர். இப்போது லைப்பைக்குட்டி, பதுருதீன், ஹாஜா முகைதீன், மீரான்... போன்ற பெரியவர்களும் ஜான்சன், ஆசிர்வாதம், ராபின் போன்றவர்களும் இந்த இளைஞர்களின் வேகத்தை மிஞ்சித் திண்ணையில் நின்று கைகோர்த்தபடி வழிமறித்து அவர்களை ஏறவொட்டாமல் தடுத்தார்கள். 'சாச்சாமார்களே! வாருங்கப்பா, என்ன விசயம்னு ஒக்காந்து பேசுவோம். எங்களுக்கு என்னென்ன விசயம் புரியலியே. அதையாவது சொல்லித் தொலைங்களேன்' என்றார் லெப்பைக்குட்டி. 'அதெல்லாம் ஒன்கிட்டே சொல்ல வேண்டிய அவசியம் இல்ல. மரியாதையா விலகிடும். இல்லேன்னா முத வெட்டு உமக்குத்தான். அனாவசியமா செத்துகித்துப் போயிடாதேயும்!” என்றான் ஆக்ஸிலியாவின் அண்ணன் கிளமெண்ட். 'ஏலே! என்னலே சொன்ன?' என்று கூறியபடியே மோசஸும் கூடவே தேவசகாயமும் அவன் மீது வேகமாய் மோதி, மோதிய வேகத்தில் அரிவாளைத் தட்டிவிட்டு அவனைக் கீழே தள்ளினார்கள். ஆசீர்வாதம் ஓடிச்சென்று அவனது கையை மடக்கிப் பிடித்து மாறிமாறி அறைந்தார். எல்லோருமே சிலைபோன்று அசையாதிருந்தார்கள். அவர்களால் என்ன நடக்கிறது, என்ன செய்ய வேண்டும் என்பதைக்கூட ஊகிக்க முடியவில்லை. 'தப்பு செஞ்சுது ஒருத்தன். அதுக்குத் தண்டனை வாங்கறது இன்னொருத்தரா?' என்று கேட்டார் மோசஸ். 'தப்பு செஞ்சவனத்தான பழிவாங்கப் போனோம். இவரல்லியெ. அப்ப இவரு வந்து ஏன் தடுக்கணும்? தன்னோட மதத்து ஆளுன்னுதான?' - கிளமெண்ட் இப்படிச் சொன்னதும், 'சீச்சீ! போங்கடா போக்கத்தவனுங்களா! ஏலே, இவ்வளவு நாளாச்சுல்லே, என் மதம்னு நாம் எண்ணிக்கில்ல பிரிச்சு வச்சுப் பார்த்தோம் - மடப்பசங்களா! இன்னைக்குத்தான் மதம் கண்ணுக்குத் தெரியுதால்லே. எல்லோரும் வீட்டப் பாத்துத் திரும்புங்களே! அப்புறமா கூடி உட்கார்ந்து பேசுவோம்!' என்று கூறினார் டிபெட்ரியஸ்.   'ரெண்டுலே ஒண்ணு. அதுக்கு இடையிலே பேச்சும் இல்ல; ஒரு மண்ணாங்கட்டியும் இல்ல!' கூட்டத்திலிருந்து யாரோ குரலெடுத்தான். 'சொல்றவன் எவம்ல? தைரியமா முன்ன வந்து நில்லுல பாப்பம். அதுதான் உங்க முடிவுன்னா முதல்ல என்னயத் தாண்டிக்கிட்டு இந்த வீட்டுக்குள்ள நுழையுங்கள்!' என்றபடி மண் தரையில் அப்படியே படுத்தார் ஆசீர்வாதம். கூடவே டிபெட்ரியஸும் படுத்துக்கொண்டார். கசாப்புக்கடை வைத்திருந்த காஜா முகைதீன் அவர்கள் அனைவரையும் பார்த்துச் சொன்னார்: 'சாச்சாமாருங்களே! உங்க எல்லாரையும் நான் கையெடுத்துக் கும்பிட்டுக்கிட்டு கேக்குறேன். இது என்ன குழப்பம்னே மொதல்லே தெரியல்ல. அது தெரியாம நாங்க எப்படி இந்த விசயத்துல விசாரிக்க முடியும்? முதல்ல அதச் சொல்லுங்க’ என்று கூறிவிட்டு ஆசீர்வாதத்தையும் டிபெட்ரியஸையும் எழுந்திருக்கச் சொன்னார். மற்றவர்களும் வற்புறுத்தினார்கள். ஆனால் அவர்களோ எழுந்திருக்கவில்லை. 'கல்யாணமாகிக் குழந்தையைப் பெறப்போற ஒரு பொண்ணப் பாத்து, குளிக்கப்போகும்போது இந்தப் பிச்சைக்கனி ராவுத்தரு மவன் முறைச்சுப் பார்த்ததும் காணாதுன்னு சாயங்காலம் வா, பூ வாங்கித் தாரேன்னு சொல்லியிருக்கான். இதுக்கு என்ன அர்த்தம்? சொல்லுங்க என்ன அர்த்தம்? இந்தப் பயலும் கல்யாணம் முடிஞ்சவன் தான். இவன் பொண்டாட்டியப் பார்த்து வேற எவனாவது அப்படிச் சொன்னா அவன் பொறுத்துப்பானா? மானமுள்ள எவனாவது விட்டு வைப்பானா அவன்? அந்தப் பொண்ண இந்த இடத்துக்குக் கூட்டிட்டு வர்ரோம். மீசை முளைச்ச பயலா இருந்தா எங்கிட்ட வச்சு அவகிட்ட சொல்லிப் பாக்கட்டும்' என்று கூறினான் சேவியர். இவனை மணமுடிக்கப் போவதாகப் பிலோமினாவும், பிலோமினாவையே மனைவியாக்கப்போவதாக சேவியரும் ஒரு காலத்தில் கனவுக்கோட்டை கட்டி அது தகர்ந்தும் போய்விட்டது. இந்த விசயத்தைக் கேட்டதும் அங்கிருந்த முஸ்லீம்களுக்கு ஆத்திரமும் கோபமும் பொங்கிற்று. இது என்ன சுத்தப் பொறுக்கித்தனமான பேச்சு? எல்லோருக்கும் இப்படியொரு எண்ணம் உண்டாயிற்று. 'இது எப்ப நடந்துச்சு சேவியர்?’ - லெப்பைக்குட்டி அவனைப் பார்த்துக் கேட்டார். 'இன்னைக்குக் காலைல.' 'இந்தப் பையன் தான்னு நல்லாத் தெரியுமா?' "ஓ! நல்லாவே தெரியும். ஆக்ஸிலியாவும் கூடத்தான் வந்திருக்கா. அவளையும் சேர்த்துத்தான் கிண்டல் பண்ணியிருக்கான் இந்தப் பரதேசிப் பய மவன்!' இப்போது எவருக்குமே சந்தேகம் இல்லை. ஏனெனில் ஆக்ஸிலியா சிறு பெண்ணாக இருந்தாலும் அங்கு அத்தனை பேரின் மத்தியிலும் அவளுக்கு நல்ல பெயர் இருந்தது. அவள் வார்த்தைக்கு மதிப்புக் கொடுப்பது என்பது அவசியமானதொரு விசயம். அப்துல்லா முன்னே வந்து காஜா முகைதீன் அவர்களை நெருங்கிச் சொன்னான்: 'மாமா! இது ரொம்பவும் அசிங்கமான விசயம். இதே மாதிரி நம்ம பொண்ணுங்களுக்கும் நாளக்கி நடக்கும். அதுனால இத உடனே தட்டிக் கேக்கணும். பாரபட்சமே காட்டக்கூடாது! நம்ம இரண்டு ஊருக்குள்ளேயும் இதுவரைக்கும் இப்படி ஒரு அசிங்கம் புடிச்ச காரியம் நடந்ததில்லே. இனிமேலும் நடக்கக்கூடாது. நீங்க பெரியவங்களா சேர்ந்து உடனே ஒரு நல்ல முடிவா எடுக்கணும்! அவங்க உணர்ச்சிக்கு மதிப்புக் கொடுக்கணும்!’' என்று தாழ்மையாகச் சொன்னான் அப்துல்லா. 'அப்துல்லா சொல்றதுதான் சரி. மொதல்ல அவனக் கூப்புட்டு விசாரிங்க. படுவாப் பயல நாலு சாத்து சாத்துனாதான் சரிப்படுவான். கல்யாணமாகிக் குழந்தை பெத்த பயலுக்கு இப்படி ஒரு காட்டுமிராண்டிக் குணமா? அந்த ராஸ்கல ஒடனே வெளியே இழுத்துப் போடுங்க!' என்று இரண்டு மூன்று பேராய்த் தங்கள் கருத்தை வெளியிட்டார்கள். உடனே டிபெட்ரியஸும் ஆசீர்வாதமும் எழுந்துகொண்டார்கள். 'கேட்டீங்களாடா - கேட்டீங்களாடா மடப் பசங்களா! அவங்களுக்குள்ளேயும் எவ்வளவு ஆவேசம் இருக்குன்னு பாருங்கடா! தன் இனத்தாளு, மதத்தாளுன்னா அவங்க பேசுறாங்க? நியாயம் எது அநியாயம் எதுன்னு தெரிஞ்சு பேசுறாங்கடா! இப்படி ஒக்காந்து பேசுனா நாம மறுபடியும் எவ்வளவோ சந்தோஷமா நிம்மதியா காலம் பூராவும் சேர்ந்து வாழ முடியும்! அதை விட்டுப்போட்டு கத்தி - கப்டான்னு தூக்கிட்டு வந்து எல்லாத்தையும் நாசம் பண்ணப்பாத்தீங்களேடா? ஒங்க கையில் உள்ளதையெல்லாம் கீழே போடுங்க மொதல்ல' என்றார் டிபெட்ரியஸ். சிலர் கீழே போட்டனர். சிலர் இன்னும் போடாமல் இருந்தார்கள். ஏற்கெனவே தங்கள் பிள்ளைகள் என்ன செய்வார்களோ என்று அஞ்சியவண்ணம் பின்னாலேயே ஓடிவந்த தாய்மார்கள் தத்தம் பிள்ளைகளிடமிருந்தும் மற்றவர்களிடமிருந்தும் வலுக்கட்டாயமாகப் பிடுங்கி எறிந்தார்கள். ஆனால் பீட்டர் மட்டும் இன்னும் ஆவேசம் தணியாதவனாய், ஆயுதத்தைக் கீழே போடாதவனாய் நின்று கொண்டிருந்தான். லெப்பைக்குட்டியும் காஜா முகைதீனும் அவன் பக்கமாய் நெருங்கி 'தம்பி அமைதியாயிருங்க, கோபப்படாதீங்க. அவனை முழுமையா விசாரிச்சு நீங்க என்ன தண்டனை கொடுக்கணும்னு சொல்றீங்களோ அதைக் கொடுத்திடுவோம். பிலோமினா வேற, என் மகள் ஆமீனா வேற இல்ல! எனக்கு ரெண்டு பேருமே ஒண்ணுதான், போடு தம்பி போடு!' என்று லெப்பைக்குட்டி சொன்னதும் அவன் அரிவாளைக் கீழே போட்டுவிட்டு காஜா முகைதீனின் தோளைப் பற்றிக்கொண்டு குலுங்கிக் குலுங்கி அழ ஆரம்பித்தான். அவருக்கும் அழுகை வந்தது. கண்களைத் துடைத்துக் கொண்டார். லெப்பைக்குட்டி அவனை ஆதரவாகப் பற்றி உட்காரவைத்துத் தானும் அவன் பக்கமாய் உட்கார்ந்து அரவணைத்துக் கொண்டார். சிக்கந்தர் முன்வந்து கதவைத் தட்டினார். 'மஸ்தான்! மஸ்தான்!' அவன் எங்க இங்கே இருக்கான்? அப்பலயே அவன் பாஞ்சி போயி பஸ்ஸைப் பிடிச்சு ஸ்ரீவைகுண்டம் போயிட்டானே! எனக்கும் ஒங்களப்போல விசயம் தெரியாது. தெரிஞ்சிருந்தா நானே போயி இளுத்து வந்திருப்பேனே!' என்றார் செய்யது. 'அப்ப வீடு பூட்டிக்கிடக்க, உள்ளுக்குள்ள யாரு இருக்கா?' என்று கதவைத் தட்டினார்கள். பதிலில்லை. உடனே இரண்டு பேர் பக்கத்து வீடு வழியாகச் சென்று தோட்டத்தில் நுழைந்து பின்வாசல் வழியாக நுழைந்தார்கள். அங்கே அவன் தாயார் மூர்ச்சையாகிக் கிடந்தாள். ஓடோடிச் சென்று முன்புறக் கதவைத் திறந்தார். முகத்தில் தண்ணீர் தெளித்து மயக்கம் நீக்கிய பின், ஸ்ரீவைகுண்டத்திற்கு இருவர் சென்று அவனைத் தேடிக் கண்டுபிடித்து வந்து, இரவில் கூட்டம் போட்டு விவகாரத்தைப் பேசி முடிப்பதாகத் தீர்மானம் ஆயிற்று. ஆத்திரப்பட்டு வந்த இளைஞர்களெல்லாம் தங்கள் ஆத்திரத்தைத் தீர்க்க வழியில்லாது மிகவும் சிரமப்படுவது தெரிந்தது. 'இந்தக் கிழங்க வந்தாலே இப்படித்தான்' என்று ஒருவன் சலித்துக்கொண்டான். 'சும்மா இரியம்ல, அதுதான் ராத்திரி என்ன முடிவு எடுக்காங்கன்னு பாப்பமே! அவசரக்குடுக்கை மாதிரியில்லா இருக்கே!' என்று இன்னொருவன் சமாதானம் சொன்னான். அவர்கள் கிராமம் சென்றடையும் வரை லெப்பைக்குட்டியும் ஹாஜா முகைதீனும் இன்னும் சில முஸ்லீம் இளைஞர்களும் கூடவே சென்றுவிட்டு வந்தனர். 'தொழுகை ராத்திரி எட்டு மணிக்கு முடிஞ்சிடும். அவனையும் எப்படியாவது கண்டுபிடிச்சுட்றோம். நீங்க எல்லாம் அந்தச் சமயத்துக்கு வாங்க!' என்று சொல்லிவிட்டுத் திரும்பினார்கள். மூடிக்கொண்ட கதவுகள் இப்போது திறந்து கொண்டன. ஊரிலுள்ள ஆண்களெல்லாம் வயது வித்தியாசமின்றிப் பள்ளிவாசலுக்கு வந்தார்கள். எல்லோரும் தொழுதார்கள் என்று சொல்வதற்கில்லை. அதற்கு முன்பே வந்து காத்துக்கொண்டிருந்த ஞானபுரம் கிறிஸ்தவர்களைப் பள்ளிவாசலின் முன்புறமாய் உட்காரச் சொன்னார்கள். அமைதியாக உட்கார்ந்தார்கள். குளுமையான சுகமான காற்று வீசி உடம்பை நீவிவிட்ட போதும் இதயங்கள் என்னவோ எரிமலைப் போலத்தான் குமுறிக்கிடந்தன. தொழுகை ஆரம்பமானதும் அதனைக் கண்டுகொள்ளாமல் பார்த்துக்கொண்டு இருந்தார்கள். வேறு சிலர் இங்கு என்ன மாதிரியான முடிவு உருவாகும் என்று யோசித்துக்கொண்டும், அதுபற்றி பிரஸ்தாபித்துக்கொண்டும் இருந்தார்கள். ஆக்ஸிலியா தன் அண்ணனோடு வந்திருந்தாள். மற்ற பெண்களெல்லாம் வயது முதிர்ந்தவர்கள். நடுப்பிராயம் தாண்டியவர்கள் மஸ்தான் ஸ்ரீவைகுண்டம் அக்காள் வீட்டில் கண்டுபிடிக்கப்பட்டு வீட்டுக்கு அழைத்து வரப்பட்டு விட்ட செய்தியும் அவர்களுக்கு நிறைவை அளித்தது. தொழுகையை முடித்துக்கொண்டு லெப்பையும் மோதினாரும் வெளியேறிய பின் மற்றவர்கள் அமர்ந்தனர். நெருக்கியடித்துக்கொண்டார்கள். கிழக்கு நோக்கியிருந்த முஸ்லீம்களை மேற்கு நோக்கியவண்ணம் கிறிஸ்தவர்கள் எதிர்கொண்டிருந்தார்கள். விசாலமான பள்ளிவாசல் என்பதால் பாதி கிறிஸ்தவர்களைப் பள்ளிவாசலின் முன்பகுதியில் அமரச் செய்தார்கள். 'எல்லோரும் வந்துட்டோம். இன்னும் துரையக் காணலியோ. குதிரை பூட்டின சாரட்டு வண்டி வந்து அழைச்சிட்டுப் போவும்னு நெனச்சிகிட்டு இருக்காரு போல இருக்கு. போயி பொடதில் நாலுபோட்டு அவனை இழுத்துட்டு வாங்கடே!' என்று ஹாஜா முகைதீன் ஆணையிட்டார். பெரும்பாலானோர் எழுந்து ஓட ஆரம்பித்தார்கள். 'ஏஏ , எதுக்குப்பா இத்தனை பேரு? ரெண்டு மூணு பேரா போனா போதும்' என்று செய்யது சொல்லி முடிப்பதற்குள் பாதிப்பேர் ஓடிப்போயிருந்தார்கள். சிலர் 'சரிதான்' என்றபடி அமர்ந்து கொண்டார்கள். மஸ்தானும் அவன் வாப்பா பிச்சைக்கனியும் அழைத்து வரப்பட்டபோது தவிர்க்க முடியாதபடி சலசலப்பு எழுந்தது. வந்தவர்களைச் சபையின் நடுவே உட்காரச் சொன்னார்கள். தலையைக் குனிந்தபடி மஸ்தான் அப்படியே கல்லாய்ச் சமைந்துவிட்டான். லெப்பைக்குட்டி பிச்சைக்கனியைப் பார்த்துச் சொன்னார், ’பிச்சைக்கனி! எல்லா விஷயமும் நீ கேள்விப்பட்டிருப்பேன்னு நெனைக்கிறோம். இன்னிக்குக் காலைல உன் மகன் கொஞ்சம்கூடத் தகாத முறையில் நடந்துகிட்டான்னு தெரியுது. இது ஏதோ நம்ம ஜாதி ஜனங்களுக்குள்ளே நடந்திருந்தாக்கூட பிரச்சினை வேற மாதிரி போயிருக்கும். ஆனா நடந்தது நமக்கும் நம்ம வேதக்காரங்களுக்கும் மத்தியில் சாச்சாமாரும் சாச்சிமாருமா உறவு வச்சிருந்த நமக்குள்ளேயே நடந்து முடிஞ்சிருக்கு. இதுதான் பெரிய சிக்கல். அந்தக் காலம் தொட்டு இந்தக் காலம் வரைக்கும் நம்ப ரெண்டு ஊருக்கிடையில் இப்படி ஒரு சம்பவம் நடந்தது கிடையாது. ஒருத்தர் மாத்தி ஒருத்தர்தான் விட்டுக்கொடுத்து வச்சுத்தான் கொஞ்ச காலத்துக்கு முன்னால வரைக்கும் பஞ்சாயத்து போர்டுக்குத் தலைவராகவும் மெம்பராகவும் போயி வந்திருக்கிறோம். இன்னைக்கு என்னடான்னா ஒரு நிமிசத்துல உன் புள்ள செஞ்ச வேலையில் எல்லாமே மாறிப்போச்சு. தீராத கசப்பு உண்டாயிடுச்சி. இதுக்கு என்ன சொல்றீங்க?' 'நீங்க எல்லாருமா சேர்ந்து என்னெல்லாமோ சொல்லிக்கிட்டு இருக்கீங்க. எம்புள்ள அப்படியெல்லாம் செய்ய மாட்டான். வேணுமின்னே யாரோ இப்படியெல்லா புரளி கிளப்பிவிட்டிருக்காங்க.' 'ஷ்! சின்னப் புள்ளங்க மாதிரி முன்ன பின்ன யோசிக்காம இப்படியெல்லாம் பேசாதீங்க பிச்சைக்கனி! ஒருத்தரை ஒருத்தர் அடிச்சிக்கிட்டு வெட்டிக்கிட்டு பலி விழுற நெலமைக்கு வந்தாச்சுவே! ஆத்திரத்துல அவசரத்துல பேசி எந்தப் பலனும் இல்ல' என்றார் ஹாஜா முகைதீன். 'ஹாஜா முகைதீன்! நீரு எனக்கு ஒரு வகையில் மச்சினன் முறை. என்னப் பாத்து சின்னப் புள்ளன்னு சொல்றீரு. கொஞ்சம் முன்ன பின்ன யோசிச்சு நீரும் பேசும். என்னவோ எம்புள்ள அயோக்கியன்; மத்தவனெல்லாம் யோக்கியங்குற மாதிரியில்லா எல்லாரும் பேசுறீங்க!' ' ஆமாவே அப்படித்தான்வே!; என்று ஆவேசமாய் எழுந்தான் பக்கீர் முகைதீன். 'உம்ம மவன விசாரிச்சா எல்லாம் தெருஞ்சிடப்போவுது!' 'ஏ உக்காரு! உக்காருப்பா!' என்று பக்கத்திலிருந்தவர்கள் எல்லாரும் அவனை இழுத்து உட்கார வைத்தார்கள். 'பெரியவங்களாப் பேசி முடிக்கட்டுமே! நீ ஏன் அவசரப்படுறே?' 'மஸ்தான், நீ சொல்லுப்பா உன் வாக்குமூலத்தை ' என்றார் சிக்கந்தர். 'நான் குளிக்கப்போனது வந்தது எல்லாம் வாஸ்தவம் தாங்க! ஆனா நான் நீங்கள்லாம் சொல்ற மாதிரி அவங்களப் பாக்கவுமில்லை; ஏதும் சொல்லவுமில்ல!' 'உண்மையாகவா?' “உண்மையாதான்!' ஹாஜா முகைதீன் எழுந்து, 'சாச்சா! ஆக்ஸிலியா வந்திருக்காள்தானே! அவள் முன்னாலே வரச்சொல்லுங்க!’ ஆக்ஸிலியா சற்று சிரமத்துடனேயே எழுந்தாள். அவள் கால்கள் மேற்கொண்டு நடக்க ஆயத்தமாகவில்லை. சங்கோஜப்பட்டாள். “வாம்மா ஆக்ஸிலியா சும்மா வா! எல்லாம் நாம தான் இருக்கோம். பயப்படாம முன்னால வா!' அவள் முன் வந்தாள். மஸ்தானும் பிச்சைக்கனியும் சற்றுத் தலையைத் தூக்கி அவளைப் பார்த்தார்கள். இவன் ஒரு மொறை மொறைத்தான். அவளோ கண்டுகொண்டதாகவே காட்டிக்கொள்ளவில்லை. 'மஸ்தான்! உனக்கு ஆக்ஸிலியாவ நல்லாத் தெரியும். பள்ளிக்கூடத்துல அவ படிச்ச படிப்பு நம்ம புள்ளங்களுக்குக் கூட வந்ததில்ல. அவளுக்கு நாம் எவ்வளவு மதிப்புக் குடுத்து வச்சிருக்கோம். அதே மாதிரி அவ நம்மள எந்த அளவுக்கு மதிச்சு வந்திருக்காங்கிறதெல்லாம் நான் சொல்லித்தான் நீயோ உன் வாப்பாவோ தெரிஞ்சுக்க வேணும்கிற அவசியமில்ல. அவளே சொல்றா இப்ப! அவ முகத்தைப் பாரு! பாத்து நல்லா சொல்லு!' என்றார் லெப்பைக்குட்டி. தோளில் இருந்து நழுவி விழுந்த நேரியலை இழுத்துவிட்டுக் கொண்டார். அவன் முகத்தைத் திருப்ப மறுத்தான். 'பொட்டச்சின்னு சொல்லி யாரு எது சொன்னாலும் அத அப்படியே நம்பிக்கிருவீங்களோ?' என்று காரமாய்க் கேட்டார் பிச்சைக்கனி. ஆக்ஸிலியாவுக்கு அதிகம் பேச வேண்டிய அவசியம் இல்லாதபடி 'வேணுமின்னா மூணாம் தெருவுல இருக்கிற நசீமா சாச்சியக் கூப்பிட்டு விசாரிங்க. உண்மையா பொய்யான்னு தெரியும்.' இந்த உண்மை இப்போதுதான் இவர்களனைவர்க்கும் தெரிய வந்தது. நசீமாவும் இதுவரை மூச்சுவிடாமலே இருந்தாள். ஆக்ஸிலியாவும் இதுவரை நசீமா பெயரை இழுக்கவில்லை. ஆக்ஸிலியாவின் மீது உண்டான நம்பிக்கையின் பேரிலேயே இந்தச் சம்பவம் உண்மையாயிருக்கும் என்று இங்குள்ள முஸ்லீம்கள் நம்பினார்கள். ஆனால் இப்போது தங்கட்குள்ளேயே நசீமா என்கிற சாட்சி இருக்கிறது என்னும்போது ஒரு ஆச்சரியமும் மகிழ்ச்சியும் கிடைத்தது. பிரச்சினைக்கு வெகு சீக்கிரமாய் ஒரு நல்ல தீர்வைக் காண நசீமாவின் சாட்சியம் உதவும் என்ற நம்பிக்கை ஏற்பட்டது. ஆரவாரம் ஏற்பட்டது. லெப்பைக்குட்டியும் ஹாஜா முகைதீனும் சேர்ந்து கலந்து பேசி குப்பை மீரான், ஈசா வாத்தியார், இன்னும் சேவியர் மூவரையும் அனுப்பி நசீமா அம்மாளிடம் உண்மையைக் கேட்டு வர வேண்டும் என்று தீர்மானித்தனர். அதன்படி மூவரையும் அழைத்து நசீமா வீட்டுக்குப் போய் விசாரித்து வரும்படிக் கேட்டுக்கொண்டார்கள். அவர்கள் வெளியேறியதும் ஒருவர் எழுந்தார். அவர் ஒரு கல்லூரிப் பேராசிரியர். மதத்தின் மகிமை பற்றியும் ஷரத்துக்கள் பற்றியும் முஸ்லீம் பத்திரிகைகளுக்குக் கட்டுரை அனுப்புகிற பேர்வழி. இளைஞர்களை எல்லாம் திரட்டி மதத்தின் பெயரால் ஒரு மன்றம் துவக்க ஆசைப்பட்டுக் கொண்டிருந்தார். துவக்கமாகத் தோரணையாக செண்ட் மணம் கமழும்படியாக எண்ணெய்ப் பிசுக்கற்ற முகத்தோடேயே திவ்யமாய்க் காட்சி தரக்கூடியவர். புசுபுசுவென்று ஒரு குல்லாவைத் தலையில் மாட்டி அவர் என்னவோ பார்க்க நன்றாகத்தான் இருந்தார். அவர் இயற்பெயரை அறிந்து கொள்ள முடியாதபடி ஒரு புனைபெயர் இருந்தது. அதன் பேரில்தான் கவிதையும் கட்டுரையும் வெளிவந்தன. 'அஸலாமு அலைக்கும்!' 'அலைக்கும் ஸலாம்!' என்று கூட்டத்திலிருந்தவர்கள் திருப்பிச் சொல்லிக் கொண்டார்கள். எல்லோரும் தங்கள் கவனத்தை அவர்மேல் பதித்தார்கள். ஒரு படிப்பாளியின் யோசனை இந்தத் தீயை அணைத்துவிடும் என்று கருதிக் கொண்டார்கள். 'நாம தனி வழியில தான் நம்ம கடமையைச் செஞ்சு வர்றோம். நமக்கு ஒவ்வொரு விசயத்துலயும் ஆண்டவன் இறக்கி வச்ச மறையில தீர்வு காண முடியும். இன்னின்ன விஷயங்கள்ல இன்னின்ன மாதிரிதான் நடக்கணும், தீர்ப்பு வழங்கணும்னு ரசூலுல்லா மூலமா நமக்கு அறிவிச்சிருக்கான். பின் விளைவுகள் என்ன ஏதுங்குறதப் பத்தி எந்தவிதமான கவலையும் படாம மறை வழி நின்னுதான் நாம் தீர்ப்புக் கூறணும். அதுல உயிரே போனாலும் சரிதான். அதை விட்டுட்டு மத்த வழியில இறங்குறவங்களுக்கு அநீதம்தான் ஆண்டவன் கொடுப்பான். சொர்க்க வாசல் மூடிடுவான்! ’ 'நீங்க சொல்றதெல்லாம் சரிதான் லத்தீபு. ஆனா எதுக்காக இந்தப் பேச்சை எடுக்கறீங்கன்னு எங்களுக்குப் புரியலியே!' என்று சிக்கந்தர் கேட்டார். ’அதைக் கொஞ்சம் விவரமாச் சொல்லுங்க தம்பி!' என்று இன்னொரு நபர் வேண்டுகோள் விடுத்தார். உடனே லத்தீபு ஆக்ஸிலியாவின் பக்கம் திரும்பி, 'ஏம்மா! இந்த மஸ்தான் இருக்கானே, இவன் அந்தப் பொண்ணப் பார்த்து முறைச்சான்னு உனக்கு எப்படித் தெரியும்?’ 'நல்லாக் கேட்டீங்க சார் கேள்வி! நாங்க ரெண்டு பேரும் தான் ஒண்ணா குளிக்கப் போனோம். எங்க ரெண்டு பேரையும் பாத்துத்தான் அவன் மொறைச்சான். கண்ணச் சிமிட்டி விசிலடிச்சான். யாரும் இல்லேங்குற தைரியத்துல அப்புறமா சாயங்காலம் வா - பூ வாங்கித் தாரேன்னான்.' 'ஒங்க ரெண்டு பேரையும் கேலி பண்ணுனதுக்கு யாரு சாட்சி?' 'நசீமா சாச்சி!’ 'வேற?' 'வேற யாரும் இல்ல. அவங்க மட்டும்தான் அவன் பின்னாடி வந்துகிட்டு இருந்தாங்க.' இனி இவர்களை விசாரிப்பது தேவையில்லை என்பதைப் போல் மற்றவர்களைப் பார்த்துப் பேசலானார். ’ஆக்ஸிலியா சொல்றபடி இவங்க ரெண்டு பேரையும் அவன் கேலி பண்ணுனதையும், விசிலடிச்சதையும் ஒரே ஒரு பொம்பள மட்டும்தான் பாத்திருக்காங்க. வேறே யாரும் இல்லே. ஆக்ஸிலியாவும் இதை ஏத்துக்கிட்டா. இப்ப நான் சொல்றத ரொம்ப நல்லாக் கேளுங்க. குர் ஆன்ல ரொம்பத் தெளிவாக அறிவிக்கப்பட்டிருக்கும். ஒரு சம்பவத்த ஒரே ஒரு பெண் மட்டும் பார்த்ததாகச் சொன்னா அந்தச் சாட்சியத்த ஏத்துக்க முடியாது. ரெண்டு பெண்ணுங்களா பார்த்து சொன்னாத்தான் அதை நாம் விசாரணைக்கு ஏத்துத் தீர்ப்பைச் சொல்ல முடியும். அப்படி இல்லே, ஒரு ஆம்பளை போதும். நம்ம மதத்தப் பொறுத்த மட்டும் ஒரு ஆணும் சரி, இரண்டு பொண்ணும் சரி. ஆகக்கூடி இந்த வழக்குல சாட்சியாக எந்த ஆணும் இல்ல; ரெண்டு பொண்ணும் இல்ல. அப்படி இருக்கறப்போ ஒரு பொம்பள சொல்றத சாட்சியா வச்சுக்கிட்டு நீங்க தீர்ப்பு சொல்லக்கூடாது. அதை நான் வன்மையா ஆட்சேபிக்கிறேன்!' சுமுகமாய்ப் போய்ச் சீக்கிரமாய் முடியவிருந்த ஒரு விஷயத்தில் லத்தீப் ஆசிரியரின் பேச்சு ஒரு சிக்கலை உண்டாக்கியது போலிருந்தது. அதை அப்படித்தான் சொல்ல வேண்டும். பிச்சைக்கனிக்கும் மஸ்தானுக்கும் அதிகத் தெம்பு உண்டாயிற்று. கொஞ்சம் முகம் மலர்ந்து கொண்டார்கள். கூட்டத்தில் மீண்டும் சலசலப்பு உண்டானது. கிறிஸ்தவர்கள் மத்தியில் இனம் காண ஏலாத பதற்றம் உண்டாகி விட்டது. யாருக்கு என்ன செய்வது அல்லது கேட்பது என்று புரியவில்லை. லெப்பைக்குட்டி, ஹாஜா முகைதீன் போன்ற பெரியவர்களுக்குக்கூட இதில் தர்மசங்கடம் ஏற்பட்டு விட்டது. இந்நேரம் ஒருவர் எழுந்து கேட்டார்: 'அப்ப இதுக்கு என்னதான் செய்யணும்னு சொல்றீங்க? அதை முதல்ல சொல்லுங்க!' 'நசீமாவோட வாக்குமூலத்த வச்சி தீர்ப்பு சொல்றது அநீதம். அது நாம் ஏத்துக்கொண்ட இஸ்லாத்துக்கே விரோதமானது. இதுல யாரும் யாருக்கும் பயப்பட வேண்டாம். தைரியமா இருங்க அது போதும்' என்று உரைத்தார் லத்தீப். 'நான்சென்ஸ்! சுத்தப் பேத்தல் இது. ஒரு தப்பு நடந்திருச்சி, சாட்சிய வச்சுக்கிட்டு எவனாவது தப்பு செய்வானா? தப்பு நடக்கப்போறதுன்னு தெரிஞ்சு நாமதான் ரெண்டு பொண்ணு ஒரு ஆணுன்னு சாட்சிய அனுப்ப முடியுமா? தாயும் புள்ளையுமா காலம் காலமா வாழ்ந்துகிட்டிருக்கோம். 'செருக்கி புள்ளே, ஏசாமவனே'ன்னு கூட ஒருத்தரை ஒருத்தரு திட்டி சந்தோசப்பட்டிருக்கோம். நம்ம ஊருல கொடியேத்தம், கந்தூரின்னா அவங்களும் தங்களோட காரியம்னு நம்ம கூட்ட நாட்டங்கள்ள கலந்திருக்காங்க. இவ்வளவு நேசமும் பாசமுமா ஒரு தாய்ப் புள்ளையா வாழ்ந்த நமக்கு ஒரு சோதனைக் காலம் விடிஞ்சிருக்கு. இன்னைக்கு இதுக்கு ஆக்கபூர்வமான முறையில் நடைமுறைய யோசிச்சி எப்படி நடக்கணுமோ அப்படி நடக்குறதுதான் முறை. அதுதான் உத்தமம். அதை விட்டுப்போட்டு நம்ம சட்டப்படி, குர் ஆன்ல உள்ளபடிதான் கறாரா நடக்கணும்னா இங்கே இரத்தக்காடுதான் மிஞ்சும். பழி பாவமறியாத குழந்தைகளும் ஜனங்களும் மடிய வேண்டியதுதான். இதைத்தான் நம்ம மார்க்கம், நம்ம வழிமுறைங்குற பேருல நீங்க விரும்புறீங்களாக்கும்?' என்றார் ரசாக். உடனே எல்லோரும் ஆரவாரித்தார்கள். கை தட்டினார்கள். 'தம்பி! நீங்க இளரத்தம் இப்ப அப்படித்தான் பேசுவீங்க. அல்லா மீதும் நாயகம் மீதும் நாம ஈமான் கொண்டிருக்கோம். அதை மறந்துடாதீங்க.' ’லத்தீப் நீங்க சொல்றத இப்ப யாரு இல்லேன்னா? குர் ஆன்ல உள்ளபடிதான் நடக்கணுமின்னு நாம மனசார விரும்புறோம். அதே மாதிரி அவங்களும் பைபிள்ல உள்ளது மாதிரிதான் தீர்ப்பாகணும்னு விரும்புவாங்க. அதனால இதுல எந்த விதத்திலயும் தீர்வு காண முடியாது. நல்லா யோசிச்சுப் பாருங்க. சில இடங்கள்ல சில விசயங்கள்ல விட்டுக் கொடுத்திட வேண்டியதுதான். எல்லாம் மாறும்போது நாமளும் கொஞ்சம் மாறிக்கிட வேண்டியதுதான். அதுமட்டுமா? ஒங்க வீட்டுப் பொண்ணும் எங்க வீட்டுப் பொண்ணும் இதே மாதிரி மஸ்தான்களோடதான் வாழ வேண்டியிருக்கு. இன்னைக்குக் கிடைச்ச இந்த ஒரு நசீமாவும் நாளைக்கு நம்ம வீட்டு புள்ளைங்க விசயத்துல கெடைக்கலேன்னா..... ஆண்டவன் பேரால நம்ம வீட்டுப் புள்ளங்கள் நாமளே அனாதரவா விட்டுற வேண்டியிருக்கும். அப்படியே சாட்சியம் கெடச்சிட்டாலும் நம்ம ஷரீ - அதில் உள்ளபடிதான் நாம் தண்டனை குடுத்திடப் போறோமா? இப்படியெல்லாம் முன்ன பின்ன யோசிக்காம பேசி நம்மகிட்ட இருக்குற சௌஜன்யத்தைக் கெடுத்துட்டுப் போயிடாதீங்க!' என்று விஸ்தாரமாகப் பேசினார் ஹாஜா முகைதீன். லத்தீபுக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை. இதற்குள் ஈசா, குப்பைமீரான், சேவியர் மூவரும் திரும்பி வந்து ஆக்ஸிலியா சொன்னதை உறுதிப்படுத்தினார்கள். ஒரு கலங்கல் நீங்கித் தெளிவு உண்டாயிற்று போல் இருந்தது. என்றாலும் லத்தீப் விடவில்லை. 'மறுபடியும் சொல்றேன். இதயெல்லாம் வச்சுத் தீர்ப்பு வழங்கிடாதீங்க. தீராப் பழிக்குத்தான் ஆளாவோம்.' உடன் ஆவேசமாய் சிலர் எழுந்தனர். அவர் ஒரு பேராசிரியர் என்பதையும் மறந்து, மார்க்கக் கட்டுரைகள் எழுதிப் பெயர் வாங்கினவர் என்பதையும் மறந்து 'வே, நீருமாச்சு; உம்ம படிப்புமாச்சு. கண்ணிருந்தும் குருடனாயிருக்கீராவே; நீரெல்லாம் ஒரு மனுசனாவே - போவே. போவும். ஒம்ம மாதிரி ஆட்களையெல்லாம் வச்சுக்கிட்டிருந்தா ஊரு உருப்பட்ட மாதிரிதான்' என்றபடி ஆவேசமாய்ச் சூழ்ந்தார்கள். பெரிய மனிதர்கள் அனைவரும் சடாரென்று எழுந்து அவர்களைப் படாத பாடுபட்டு அடக்கி உட்கார வைத்தார்கள். தனக்கு நேர்ந்த அவமானம் பொறுக்க மாட்டாமல் பள்ளிவாசலை விட்டு லத்தீப் கீழே இறங்கினார். சிலர் கேலி செய்தனர் தான் சம்பாதித்த அத்தனை பேரும் புகழும் அந்த இடத்தில் சிதறு தேங்காயாகி விட்டதைக் கண்டு தலை குனிந்தபடியே நடக்கலானார். அவர் வெளியேற்றத்தை ஒரு பொருட்டாகக் கருதும் அளவுக்கு இப்போது சூழ்நிலை இல்லை. ஆசீர்வாதம் எழுந்தார், அவர்களனைவரையும் கைகூப்பித் தொழுதார். உணர்ச்சியின் வேகத்தில் விம்மி விம்மிப் பேசலானார். 'சாச்சா மக்களே! எவ்வளவு நேர்மையா சபைய நடத்திட்டீங்க! உங்களுக்குள்ளேதான் எத்தனை கருணையும் அன்பும் இருக்கு. எத்தனையோ பாரம்பரியமா நாம் கட்டி வச்ச கோட்டைத் தகர்ந்து விழுந்து நாசமாயிடுமோ, தீராத பகை வந்துடுமோன்னு எவ்வளவோ பயந்துகிட்டிருந்தோம். அதுக்காகத்தான் நீங்க பேசி முடிவு எடுக்குற வரைக்கும் ஆத்திரப்பட்டு அனாவசியமா எங்க புள்ளங்க யாரும் இடையில் குறுக்கிட்டு வீணா நிலைமைய சிதைச்சிறக் கூடாதுன்னு சொல்லி வச்சிருந்தோம். நாங்களா எதுவுமே சொல்லாதபடிக்கு நல்ல முறையில் நடந்துக்கிட்டீங்க, கும்புடுறேன் ஐயா உங்க எல்லாத்தையும்!’ லெப்பைக்குட்டி எழுந்து சொன்னார்: 'எவ்வளவோ பண்பட்ட மனசோட இது வரையிலும் நாம் நடந்துக்கிட்டு வந்திருக்கோம். இன்னிக்கு ஒரு சின்ன முள்ளு நம்ம எல்லாருடைய நெஞ்சிலும் குத்திட்டு மஸ்தான் நடந்துக்கிட்ட முறைக்காக எங்க ஜமாத் சார்பாக சாச்சாமாருங்க சாச்சிமாருங்க இளவட்டங்க எல்லாத்துக்கிட்டேயும் நாங்க மன்னிப்புக் கேட்டுக்குறோம். இனிமேலும் இப்படி நடக்காதுன்னு நாங்க உறுதிபடக் கூறுறோம். நமக்குள்ள எந்த விசயமோ அதைக் கோபப்படாம ஆத்திரப்படாமதான் பேசி முடிவெல்லாம் எடுக்கணும். இப்ப இதுக்கு என்ன தண்டனை கொடுக்கணும்னு நீங்க விரும்புறீங்க. அதச் சொல்லுங்க.' 'இதுக்குமேல என்னங்க இருக்கு? எல்லாருமா இனிமே இத மறந்துட வேண்டியதுதான். ஒரு அம்பது ரூபா அபராதம் போட்டு, உங்க உண்டியல்லிலே போடச் சொல்லுங்க' - டிபெட்ரியஸ் சொன்னார். அங்குள்ள முஸ்லீம்கள் அனைவருமே ஆச்சரியப்பட்டார்கள். எவ்வளவு தயாளமான - சீரான பண்பாயிருந்தால் அவர்கள் தங்களுக்குள் கூடிப் பேசி இப்படி ஒரு முடிவை எடுத்திருக்க வேண்டும்? இதற்காகவே மஸ்தானைக் கடுமையாகத் தண்டிக்கலாம். சில இளைஞர்களாய்க் கூடிப்பேசி அவர்கள் சார்பாக ரசாக் எழுந்து நின்றான். ‘அது மட்டும் போதாதுங்க. தப்பு செஞ்சும் அதை வேணும்னே மறைச்சிட்டான். அதனால் நமக்கு இடையில் ஒரு பெரிய புயலையே உண்டாக்கிட்டான். இந்தக் கசப்பு எப்பவும் நம்ம மனசுல தங்கும்படியா வச்சுக்கிட்டான். அதுக்காக இன்னொரு அம்பது ரூபாய் அபராதம் போட்டு அவங்க மாதா கோயில் உண்டியல்ல நாளைக்கே போட்டுடணும்' என்று கூறினான். சபையில் இருந்த அத்தனை பேரும் ஏகமனதாக 'சரிதான் - சரிதான்' என்றபடி தங்கள் ஆமோதிப்பை வழங்கினார்கள். இருண்ட மேகங்கள் எல்லாம் மழையைக் கொட்டிவிட்டு நிர்மலமாகி விட்டன. சந்தோஷம் மேலிட்டது. வெளியே இறங்கிய முஸ்லீம்களும் கிறிஸ்தவர்களும் பரஸ்பரம் ஒருவரையொருவர் கட்டி அணைத்து சிறிதாக இருந்த தங்கள் மகிழ்ச்சியை இரட்டிப்பாக ஆக்கிக் கொண்டார்கள். முத்தங்களைப் பரிமாறிக் கொண்டார்கள். இப்போது இரவுகூடப் பகலவன் பூத்தது போலாகிவிட்டது. மறுநாள் காலையில் மஸ்தானை அழைத்துக்கொண்டு அங்குள்ள பெரியவர்களும் சிறியவர்களும் இளைஞர்களுமாய் ஞானபுரம் மாதாகோயிலை நோக்கி நடக்கலானார்கள். இந்த வட்டாரத்தின் சரித்திரத்தில், இந்த நாள் அதீதமான பெருமைகளைச் சுமந்துகொண்டு கர்வத்தோடு நிமிர்ந்தது.   தாமரை, பிப்ரவரி 1987                             8. சொல்லிலும் செயலிலும்   ஆனாலும்கூட ஜமாத்தாரின் முடிவுப்படித்தான் மூன்றாம் தெருவில் அந்த வேலை ஆரம்பமானது. வேலைகள் ஆரம்பமானதும், முசாபர் அந்த இடம் வந்து ஆவல் பொங்கிடும் உள்ளமாக உன்னிப்பாய்ப் பார்த்தபடி நின்றான். இப்போதும் கூடத் தன் வயிற்றுப்பாட்டுக்காகக் கூப்பிட்டு விட்டிருந்த சிலரின் வீட்டுக்குப் போகவேண்டி இருந்தது. அவனுக்காகக் காத்திருந்தோர் அவனது ஞாபகத்தில் வர முடியவில்லை. இரண்டு வருஷக் காலமாகக் கண்களில் தேங்கிக்கிடந்த கனவுகள் நேர் செயலுருவம் அடையும்போது அந்த ஆனந்தத்தையும் அதனால் உண்டாகிற சிலிர்ப்பையும் அடக்கிக்கொள்ள அவனுக்குத் தெரியவில்லை. ஜமாத் தலைவராகப் புதிதாகப் பொறுப்பேற்ற மீரான் காக்காவிடம் பழைய தீர்மான விவரங்களை ஞாபகப்படுத்தி, தன் கஷ்ட காலத்தைப் போக்கும்படி விண்ணப்பித்துக் கொண்டான். தீர்மானம் நிறைவேறிய காலத்தில் அவரும் இருந்தவர்தானே! அவனது குறைகளை அனுதாபமாய்ச் செவிமடுத்து, பழைய தீர்மானத்தைத் தூசிதட்டி எடுத்து, நிதி நிலவரங்களை ஆராய்ந்து, வேலை தொடங்க ஆவன செய்தார் மீரான் காக்கா. நொம்பலப்பட்டுப் போன அவன அலைச்சல்கள் எல்லாம் ஒரு முற்றுப்புள்ளியைப் பெறுகின்றன. ஒரு வாரத்தில் இந்த வேலை முடிந்துவிடும். பின் அவனது சாம்ராஜ்யம் இங்கே இருக்கும். யார் யாரெல்லாம் அவன் மீது குறை கூறும் புகார்ப்பட்டியல் வைத்திருந்து வாசித்தார்களோ, அவர்களேதான் இந்தச் சாம்ராஜ்யம் நிறுவப்படக் காரணமாகிவிட்டார்கள். வீட்டுக்கு வருவதில்லை என்று புகார் வந்தாலும் காத்திருப்பதில்லை. முதல் தெருவில் சாயிபு கூப்பிட்டார்; மூன்றாம் தெருவில் முகைதீன் கூப்பிட்டார் என்று பரபரக்கிறானாம். காலில் சுடுநீரை ஊற்றிக்கொண்டவன் போல் தான் எப்போதும் வீட்டுக்கு முன் வந்து நிற்கிறான் என்று அவனை நோக்கிக் குற்றம் சாட்டிய விரல்கள். முசாபரைக் கண்டித்து ஒரு கட்டுக்குள் நிறுத்திவைக்க சேவகம் செய்யவைக்க வேணும் என்பதற்காக ஜமாத் கூட்டத்தில் வந்தவர்கள் அவனைக் கடித்துக் குதறினார்கள். புகார்க் காண்டம் நடந்தபோது அவஸ்தை தாங்காமல் அவன் கொஞ்சம் தைரியம் கொண்டு சொன்ன சொற்களின் பலன் எப்படி ஆயிற்றென்றால் லகான் போட வந்தவர்களுக்கே லகான் போடப்பட்ட மாதிரி ஆகிவிட்டது. விஷயம் இப்படிக் காலை வாரிவிடும் என்று கற்பனையிலும் கருதியதில்லை. தங்கள் கோஷ்டியினரின் எண்ணிக்கையைச் சரியாகக் கணக்கிடாமல் இப்படி ஒரு பிரச்சினையை ஜமாத்தில் எழுப்பியதற்குத் தங்களையே நொந்துகொண்டனர். வால் முளைத்தவர்களும் நாடு - நகரம் சுற்றிவிட்டு வந்தவர்களும் அங்கு இருந்ததைக் கவனிக்காமல், சபையில் பேசியிருக்கக் கூடாது என்று முடிவு கண்டார்கள். தங்களது முயற்சி தவிடு பொடியானதை விட அவர்களுக்கு இன்னும் வியப்பாகவும் கலக்கமாகவும் இருந்த விஷயம் ஒன்று இருந்தது. 'இவனுக்கு இந்த மூளைய யாரு குடுத்திருப்பா?' என்பதே அது. அவர்களது புகார்ப் பட்டியலை அவன் அப்படித்தானே நீர்த்துப்போகச் செய்தான். ‘நான் வீட்டுக்கு வர்ற நேரமெல்லாம் நீங்கதான் என்னை இழுத்தடிக்கிறீங்க... பேசாம எனக்கு ஊருக்குள்ள ஒரு கடையைக் கட்டித் தந்திட்டீங்கன்னா நான் எல்லாருக்கும் பொதுவா இருந்து தொழில் நடத்திக்கிடுவேன்...' என்று அவன் விளக்கம் கொடுத்துக் கொண்டிருந்தபோதே இடையில் ஒரு குரல் விழுந்தது. 'அவன் சொல்றதும் சரிதான். அவனையும் பந்து மாதிரி அங்கேயும் இங்கேயுமா உதைச்சா அவந்தான் என்ன பண்ணுவான்? பேசாம ஒரு நல்ல இடமாப் பாத்து ஒரு கடை கட்டிக் குடுத்திடுவோமே!' ஒரு அதிசயம்தான் நடந்தது. நிறையக் குரல்கள் ஆமோதித்து விட்டன. இப்படித் தங்களை வெற்றிகொள்ளும் ஒரு யோசனையை அவன் வைத்திருப்பான் என்பதே நம்ப முடியாமல் போயிற்று. எப்படியோ இரண்டு வருஷ காலமாகக் கடை கட்டும் வேலையை நடக்க விடாமல் தடுத்தது மட்டும்தான் அவர்களது வெற்றியாக அமைந்தது. முசாபரும் பொறுத்திருந்து காரியம் சாதித்தது போல் ஆனது. ஒரு வாரத்தில் முடிவடையப்போகும் அவனது தற்கால வாழ்க்கை நிலவரம் இப்படியாக இருந்தது... வளைந்தும் நெளிந்தும் போன ஒரு தகரப்பெட்டியில் எல்லாச் சாமான்களையும் வைத்துக்கொண்டு லொட லொட கீச் கீச் ... என்பன போன்று சிறிய நாராச சப்தங்கள் அவன் வருகைக்குப் பின்னணி போன்று அமைய, அடர்த்தியான கலர்ச்சாரமும் - எப்போதோ யார் யாரோ கொடுத்த அல்லது யார் யாரிடமோ பல நாளும் கேட்டுக் கேட்டுச் சலித்துப் போனபின் அவரிடமிருந்து பெற்ற சட்டையும் அணிந்துகொண்ட தோரணையில் கூப்பிட்ட நேரத்திற்குப் போய் நிற்க வேண்டியதுதான் முசாபரின் பணி. தினசரிப் பணி சாப்பாட்டுக்கு ஆதாரம். எல்லோரும் மத்தியானச் சாப்பாடுக்குப் போகிற நேரத்திலும் கூட இவன் காலை நாஷ்டாவை முடிக்காமல், முடிக்க வழியில்லாமல் அலைவான். காலை ஏழு மணிக்கு வீட்டுக்கு வரச்சொல்லிக் கூப்பிட்டிருந்த நபர்கள் அவன் கண்களிலேயெ அகப்படாத ஜோலியும் அலைச்சலுமாக இருப்பார்கள். கண்களில் படுகிற மாதிரி விட்டிலேயே இருந்தாலும், 'கொஞ்சம் கழிச்சு வாயேன்’ என்றோ அல்லது 'திண்ணையில் இரி.. இன்னா வந்துர்றேன்' என்றோ கூறிவிட்டு அவனை மறந்துவிடுவார்கள். 'யா ரஹ்மானே...' என்று மனதில் கசங்கி நெரிபடுதல் தவிர வேறொன்றும் வழியில்லை. இவன் தனக்காக மட்டுமே இந்தப் பெட்டியைத் தூக்கிக்கொண்டு அலைகிறான் என்பதே போலும் அவரவர் எண்ணம். நேரமும் பொறுமையும் காலியாகிவிடும். அடுத்த தெரு ஓடுவான். பள்ளிக்கூடம் போகும் பையனை இவன் வருகைக்காகக் காக்க வைப்பதில்லை. 'இவ்வளவு லேட்டா வந்தா எப்படிடே? அவன் பள்ளிக்கூடம் பொவேண்டாமா? போய்ட்டு நாளைக்கி வா' என்பார்கள். இவன் அவர்களுக்குப் பதில் சொல்லுவான், 'அங்க சம்சு காக்கா கூப்புட்டாங்கன்னு போயி காத்திருந்தேன். என்னை வரச் சொல்லிட்டு அவங்க வயக்காட்டுக்குப் போயிட்டாங்களாம். வந்தா உன்ன உக்காரச் சொன்னாங்கன்னு சொல்லி உக்கார வச்சுட்டாங்க. நம்ம ஆளுங்க கூத்துத் தெரியாதா உங்களுக்கு? உடனே நான் இங்கே ஓடியாந்துட்டேன்னு வய்யிங்க. சும்மா புருபுருன்னுட்டு வருவாங்க. அதுக்காவ இம்புட்டு நேரமும் உக்காந்து பாத்தும் வராமத்தான் அவங்களட்ட சொல்லாமக் கொள்ளலாம ஓடியாந்திட்டேன்' தான் அப்படி ஓடி வந்ததே ஒரு சாதனை என்று பிறர்க்குத் தெரியாது. 'உனக்கு மூளை கொஞ்சம் காணாதுடே! வயலுக்குப்போன மனுஷங்க உடனே வந்தாங்கன்னு கத உண்டுமா? நீ அந்தானக்கி இங்க பாக்க வந்து காரியத்த முடிச்சுட்டுப் போயிருக்க வேண்டியதுதானே!' 'காக்கா! நீங்க சொல்றது ஞாயம்தான். ஆனா அப்படி நான் வந்துட்டேன்னா மானாங்கன்னியா புடிச்சு ஏசுதாங்க காக்கா... கவர்னர் உத்தியோகம் போயிடும்னாடே இப்படிக் கெடந்து ஓடுறேன்னு கிண்டல் பண்ணுதாங்க... மனதில் பொங்கிய சோகம் கண்களில் முட்டிக்கொண்டு நிற்கும். ஆனால் வாய் என்னவோ சிரித்தபடி பேசும். 'சரி சரி... உன் கதய எங்கிட்டச் சொல்லி அழாத... நீ சொல்லி என்னாவப் போவுது? நான் கேட்டு என்னாவப் போவுது? நாளைக்கி விடியகாலேல்ல வந்திரு!' என்பார்கள். மீண்டும் சம்சு காக்கா வீட்டுக்குத்தானே போக வேண்டும்! அவர் வயலிலிருந்து வந்திருக்கலாம். முசாபர் போய் நின்றதும் அவர் ஏற இறங்கப் பார்க்க வேண்டும்; ‘வீட்டுல இருக்கச் சொன்னாங்களாமே! நீரு வாட்டுல புடிச்சிக்கிட்டுப் போயிட்டீரு! கொஞ்சம் காத்திருக்க முடியாதோ? சொல்ல பதில் இல்லாமல் இருப்பான். 'ம்... ம்... உக்காரு வர்ரேன்' என்று சொல்லி வீட்டுக்குள் அடைந்துவிடுவார். தண்டனை நிமிஷங்கள் பத்திலிருந்து பதினைந்து வரை. இவன் உத்தரவு வந்ததே என்று ஆர்வமாய்த் துண்டை எடுத்து விரிப்பான். தகரப் பெட்டியைத் திறப்பான். ஒவ்வொன்றாக எடுத்து வைப்பான். விரிக்கப்பட்ட துண்டின்முன் குத்தவைத்து உட்கார்ந்து இரண்டு கைகளையும் கன்னத்தைத் தாங்கும்படி வைத்துக் கொள்வான். பார்வையில் வீசும் கொந்தளிப்பு அவர் வந்து உட்காரத்தான் வேண்டும் - இவன் தயாராவான் தனது நாவிதத் தொழிலுக்கு. ஏழு மணி தொழிலுக்கு வந்தவனின் முதல் சம்பாத்தியம் இப்படியாக ஒன்பது மணி தொடக்கம் பத்து மணிக்குள் ஆரம்பமாகும் சாத்தியக்கூறுகள் உண்டு. இதில் சம்சு காக்கா என்ற நபரையோ பெயரையோ மாற்றி வேறு எந்த நபரின் பெயரையோ போட்டுக் கொள்ளலாம். ஆனால் காரியங்கள் மட்டும் அச்சில் வார்த்த மாதிரி தினமும் இப்படியே. தெருவில் பெரும் பகுதியில் பூவரசு மரங்களும் முருங்கை மரங்களும் அடர்த்தியாகக் கைகோர்த்து வளர்ந்து தனி சோபை தரும். நிழல் இருக்குத் திட்டுகளாகப் பரவிக் கிடக்கும். காற்று ஜிலு ஜிலு என்று வீசும். காரியம் நடக்க ஆரம்பித்துவிட்டால் மட்டும் எங்கிருந்து வந்து இந்த அன்யோன்யம் ஒட்டிக்கொள்கிறது என்று கண்டுபிடிக்க முடியாது. பேச்சு களைகட்டும். உலகை ஒரு சுற்றுச் சுற்றும். உள்ளுரை அலசும். ஒருவரின் வார்த்தைக்கு மற்றவரின் ஆமோதிப்பு பலமாகக் கிடைக்கும். மறந்துபோய்த் தலை ஆட்டுகிறவர்களுக்குக் கத்தி தன் பாஷையை எழுதிவிட்டுச் செல்லும். இந்த சுகத்துக்காக வேண்டித்தான் இந்தக் காரியம் இங்கே நடக்கிறதோ என்று எண்ணத் தோன்றும். அவனை மதிக்கிறவர்களின் வீட்டில் ஒரு கிளாஸ் சர்பத் தண்ணி போனஸாகக் கிடைக்கும்.... இவைகளை ஓரம் கட்டப்போகிற சலூன் இதோ எழும்பிக் கொண்டு இருக்கிறது. மீரான் காக்காவையும் முன்பு தீர்மானம் நிறைவேற்றித் தந்தவர்களையும் மனம் சுற்றிச் சுற்றி வருகிறது. பள்ளிவாசலை அடுத்த காலிமனையில்தான் அந்தக் கடை எழும்புகிறது. மூன்றாம் தெரு வாசிகள் சிலர் அது கண்டு கூடிப் பேசினார்கள். மேலும் சிலரைக் கூட்டிப் பேசினார்கள். ஆனால் சிறிது நேரத்தில் கூடிப் பேசியவர்களின் கூட்டம் குறைந்து போயும் இருந்தது. மீதமிருந்த ஐந்தாறு நபர்கள் மட்டும் பள்ளிவாசல் அருகில் வந்தார்கள். வேலை நடந்த இடத்தின் பக்கமாய்ச் சென்று ஏதேதோ ஆவேசமாய்ச் சத்தமெழுப்பினார்கள். வேலையை நடத்த எதிர்ப்புத் தெரிவித்தார்கள். கொத்தனாரும் சித்தாள்களும் ஒன்றும் விளங்காமல் வேலையை நிறுத்தி விட்டார்கள். பார்த்துக் கொண்டிருந்த முசாபருக்கு அதிர்ச்சி. அவனது கனவை யாரும் கலைக்க முடியாது. தீர்மானம் தீய்ந்து போகக்கூடியதா? கைகள் நடுநடுங்க படபடத்துப் போய்க் கேட்டான், 'ஏன் காக்கா எதுக்கு நிறுத்தச் சொல்றீங்க?' 'வாய மூடுல், கடை கட்டித் தரல்லேன்னா வந்து வேலையச் செய்ய மாட்டீரோ?’ 'ஏற்கெனவே பேசி முடிச்சுத் தீர்மானம் போட்டது தானேங்க?' 'வாய மூடுலேங்கிறேன். மறுபடியும் கேள்வி வேறயா கேள்வி? தீர்மானம் பெரிய தீர்மானம். அதத் தீயில் தூக்கிப் போடு! இதுக்குப்போயி ஒரு தீர்மானமாக்கும்?' 'காக்கா, நீங்க அப்படிச் சொல்லக்கூடாது. தயவு செஞ்சு பெரிய மனசு பண்ணுங்கோ காக்கா.' 'பெரிய மனசு வேணுமோ பெரிய மனசு. இப்போ சொல்றோம் பாரு. காதாரக் கேட்டுக்கோ. இந்த ஜென்மத்துல உனக்குக் கடை கெடையாது பாத்துக்கோ. பெட்டியத் தூக்கிட்டுப் பேசாம ஓடிரு... ஓடுல...' ஒன்றும் ஓடாமல் அவன் திகைப்புற்று நின்றிருந்தான். தடுத்து நிறுத்தியவர்கள் வெற்றிகரமாகத் தெருவுக்குள் நுழைந்தார்கள். எல்லாவற்றையும் வீட்டுத் திண்ணையில் நின்றபடியே பார்த்த ஒருவர் கேட்டார். 'பாத்தீங்களா காலம் கெடக்குற கெடப்ப. இவன்கூட தாசில்தாரு மாதிரிக் காலுக்கு மேல் காலப்போட்டு உத்தியோகம் பாக்கணுமுன்னு ஆசைப்படுறத.... அவரு நம்ம வீட்டுக்கு அலஞ்சதுபோக, இப்ப நாம அவன் கடைக்கு அலையணும்னு நெனக்குறதப் பாத்தீங்களா.... துரைக்கு அலைஞ்சு அலைஞ்சு காலு தேஞ்சு போச்சுதோ?' முசாபருக்குச் சகித்துக் கொள்ள முடியவில்லை. பெட்டியும் கையுமாக ஜமாத் தலைவர் வீட்டுக்கு ஓடினான்; விபரம் சொன்னான். எழுந்தார் மீரான் கோபமாக. வேலையை விட்டு விட்டுக் கொத்தனாரும் சித்தாள்களும் பூவரச மரத்தடியில் உட்கார்ந்து பேசிக்கொண்டு வெற்றிலை குதப்பினார்கள். தம் அடித்தார்கள். அதையும் காணப் பொறுக்கவில்லை. சிலர் வந்தனர். 'இப்ப நீங்க எதுக்கு இங்கே உக்காந்திட்டிருக்கீங்க? எழுந்திச்சிப் போங்க. வேற எங்கனாச்சும் வேலை இருக்கும். போய்ச் சேருங்க' என்று அவர்களையும் விரட்டி அடித்தார்கள். பயந்துபோய் எழுந்து துண்டுகளை மேலே போட்டுக்கொண்டு அவர்கள் கொண்டுவந்த கொத்துச்சட்டி, மண்வெட்டி, கடப்பாரை என்கிற தட்டுமுட்டுச் சாமான்களோடு நடையைக் கட்டினார்கள். எதற்கும் மீரான் காக்காவைப் பார்த்து விஷயம் சொல்லிவிட்டுப் போவதே நல்லது என்கிற மாதிரியான எண்ணமாகச் சென்ற வழியிலேயே, எதிர்த்திசையில் இருந்து மீரான் காக்காவும் முசாபரும் விரைந்து வந்தனர். வேலையையும் செய்யவிடாமல், வந்த வேலையாள்களைத் தன்னிச்சையாக விரட்டியும் அடித்தது அவரது கோபமும் வெறியும் அதிகமாகிட உதவிபுரிந்தன. அவர் திரும்பவும் அவர்களைத் தன்னோடே வழிநடத்திச் சென்றார். பள்ளிவாசலுக்கு முன்போய் நின்று மூன்றாம் தெருவைப் பார்த்தார். அனேகமாக ஆண்கள் யாருமில்லை. சிறு குழந்தைகள்தான் தெருவுக்கு உயிர் இருப்பதை உணர்த்தின. பள்ளிவாசலுக்குச் சற்று விலகியிருந்த பம்படியில் ஒரு பெண் தண்ணீர் அடித்துக்கொண்டிருந்தாள். அவர் பின்னால் வந்த முசாபர், கொத்தனார், சித்தாள்கள் அவரையே நோக்கினர். மீசையைத் திருகினார். அது கம்பீரமாக அவர் முகத்தை ஆக்கிரமித்திருந்தது. இடக்கையால் மீசையை அங்கும் இங்கும் திருகி விட்டபடி, வலது கையை இடுப்பில் வைத்துக்கொண்டு பார்த்தவாறே இருந்தார். திரும்பிப் பார்த்துச் சொன்னார். 'ம்... வேலய நடத்துங்க. எவன் வாராம்னு பாப்போம்.’ சுவிட்ச் தட்டிவிட்ட மெஷினாக வேலை நடந்தது. முசாபரும் தகரப் பெட்டியை ஒரு ஓரமாக வித்துக் கையாளாக மாறி வேலையாள்களோடு கலந்தான். மீரான் நிமிஷத்துக்கொரு தரம் தெருவை நோக்கி முகம் திருப்பினார். யாரும் வரக் காணோம். பள்ளிவாசல் முகப்பில் உட்கார்ந்தார். கோபம், உட்காருவது. சரிப்படாது என்பது போல அவரை எழுப்பிவிட்டது. வேலையைப் பார்ப்பதும் திரும்புவதும் அங்கேயே சின்னச் சுற்றாய்ச் சுற்றுவதுமாக இருந்தார். திரும்பியபோது தெருவின் நடுவில் இரண்டு பேர் நின்று இங்கேயே பார்த்துப் பேசுவது தெரிந்தது. அவர்கள் இன்னரென்றும் புரிந்தது. கை தானாகவே சென்று மீசையைத் தடவியது. இவரும் அவர்களைத்தான் பார்த்து நின்றார். இன்னும் சில நிமிஷங்களில் மேலும் சிலர் அவர்களைச் சென்று சேர்ந்து நிற்பதும் கூடிப்பேசுவதும் தெரிந்தது. அவர்கள் ஒருமித்துத் பள்ளிவாசலை நோக்கி நகரத் துவங்கினர். பின்பு அவர்கள் நடுத்தெருவிலேயே சத்தம் போட்டு யாரையெல்லாமோ கூப்பிடுவதும் இங்கே கேட்டது. சிலர் வீட்டுத் திண்ணையில் வந்து எட்டிப் பார்த்து நின்றார்கள். சிலர் தென்பட்ட நிமிஷத்திலேயே மறைந்து போனார்கள். வந்தவர்கள் மெதுவாகவே வந்தனர். இவர் சாவதானமாக வந்து மரத்து நிழலில் நின்றார். ஆனால் அவர்களைக் கவனிக்காதது மாதிரியும் இருந்தார். வந்தவர்கள் சற்று நேரம் எதுவும் பேசாமல் அவரையும் வேலை நடப்பதையும் மாறிமாறிப் பார்த்துக்கொண்டிருந்தார்கள். ஆனால் வேலை செய்து கொண்டிருந்தவர்களுக்கு ஒரு வகையான பயம் உண்டானது. இருந்தாலும் மீரான் நிற்கிற தைரியத்தை மனதில் ஏற்றிக்கொண்டு தொடர்ந்தனர். ஒருவர் மட்டும் மீரானை நெருங்கினார். 'காக்கா இது என்ன திடீர்னு வேல நடக்குது?' என்றார். மீரானுக்கு எக்கச்சக்கமான கோபம்; ஆனாலும் சமாதானப்படுத்திக் கொண்டார். 'பேசி முடிச்ச வேல தான்.' 'அது ரெண்டு வருஷத்துக்கு முன்னாலே பேசி முடிச்சுது. அத எல்லாருமே மறந்திட்டோம். இப்ப என்ன அதுக்கு அவசரம்?’ 'ஆனாலும் நம்ம பேசுனது தான்’. அவர் பார்வையில் அனல் ஏறிக்கொண்டே இருந்தாலும், அவர் ஏதோ எங்கயோ பேசிக் கொள்பவர் போலப் பேசினார். இப்போது மற்றவர்களும் அவரருகில் வந்து நின்றனர். அதிலிருந்த இன்னொருத்தர் சொன்னார். ‘இருந்தாலும் அத ஏன் இங்க வந்து கட்டணும்? வேற இடமாப் பாத்துக் கட்ட வேண்டியது தானே?' “இது வசதியான இடம். ' 'கடை கட்டலாம்னு பேசியிருந்தாலும் எந்த இடத்திலே கட்டுறதுங்கிறதப்பத்தி அப்போ யாரும் பேசிக்கல. முடிவும் எடுக்கல. அப்படி இருக்கும்போது இங்க யாருகிட்டக் கேட்டுக் கட்டறீங்க?' அவர் கேள்வி கேட்டவன்மீது அலட்சியப் பார்வையை வைத்தார். 'அதுக்கு அவசியம் இல்லே.' 'நாங்க என்னெல்லாமோ கேக்கிறோம். நீங்க கலெக்டர் மாதிரி பதில் சொல்றீங்க. முறையான பதிலா இல்லே!’ அவர் சிரித்துக் கொண்டார். வேலை நடக்கிறதில் தேக்கம் உண்டாகியிருப்பதைக் கண்டார். மெதுவாக வேலையாள்கள் பக்கம் என்று வேலை நடப்பது பற்றி ஆலோசனை கூறி வேகம் ஊட்டினார். ஒரு பார்வைக்குச் சுற்றி வந்தார். வந்தவர்களின் நெஞ்சங்களில் விசை கொண்டது கோபம். தங்களை இவ்வளவு கேவலமாகவும் ஒருத்தரால் நடத்த முடிகிறது. ஒருத்தர் வேகமாய் வந்தார். 'காக்கா! இந்த இடம் சரியில்ல. தர்கா பக்கம் இடம் கெடக்கு நெறைய. அங்க போயிக் கட்டலாம்’ என்றார் அவசர அவசரமாக. அது காடு, நீ வேண்ணா ஒரு கடை கட்டிக்க!' என்று சிரித்தார். நெருப்பில் ஊற்றிய நெய் அந்தச் சிரிப்பு. அவர் வேண்டுமென்றேதான் அதைச் செய்தார்.   'இது பொம்பளங்க தண்ணி புடிக்க வார இடம். தெரியுமல்ல இங்குன கட்டுறது முறையாகாது.' 'அதையும் யோசிச்சுதான் செய்றோம்.' 'இப்படி வம்பு, தும்பா ஏதாவது பேசிகிட்டே இருந்தா அப்புறம் எல்லாமே அப்படித்தான் நடக்கும்!’ அவர் மீசையைத் திருகியவாறு கேட்டார். 'என்ன நடக்கும்?' 'கடைய இடிப்போம், இல்லாமே ஆக்கிடுவோம்.' 'நான் முதல்ல கடையக் கட்டுறேன். அப்புறமா நீ வந்து உன் திறமையைக் காட்டு. சரிதானா? பிறகு எதுக்கு வீண் பேச்சு? எல்லாருமா போய்ட்டு வரலாம்.' அவர்கள் நிலை தெரியாமல் தவித்தார்கள். பின் அவர்கள் மறுபடியும் தங்களுக்குள் பேசிக்கொண்டனர். நின்ற இடத்தில் இருந்தபடியே ஒருவர் சொன்னார், 'காக்கா! நாம் மறுபடியும் ஜமாத்த கூட்டுவோம். எங்கே எப்படிக் கட்டுறதுன்னு யோசிப்போம். அதுவரைக்கும் வேலைய நிப்பாட்டி வைங்க.' 'இந்தப் பேச்சு இந்த ஆர்டர் எல்லாம் இங்கே வச்சுக்காதீங்க. முதல்ல இடத்தக் காலி பண்ணுங்க எனக்குக் கெட்ட கோவம் வந்திரும்.' 'என்ன, எதுக்கெடுத்தாலும் இப்படி எடுத்தெறிஞ்சு பேசுறீங்க?' 'இவ்வளவு தூரம் உங்ககிட்ட பேசிட்டிருந்தேன் பாருங்க. அதுவே தண்டம்.' 'உங்க இஷ்டத்துக்கு செய்வீங்க. ஆனா யாரும் எதுத்துப் பேசக்கூடாது. அப்படியா?' 'ஜமாத் தலைவருக்கு அதிகாரம் இருக்கு. அதனால்தான் செய்றேன். அப்பவும் நாலு பேரக் கலந்து பேசித்தான் முடிவு எடுத்திருக்கேன்.' 'ஆனா எங்களக் கேட்டுக்கல்ல. எங்க தெருவுல கட்டறதா இருந்தா எங்களக் கேக்க வேண்டாமா?’ 'என்னடா உங்க தெரு, எங்க தெருவுன்னு பிரிச்சுக்கிட்டு. ஜமாத்துக்குத் தலைவர்னா எல்லாத் தெருவுக்கும் சேத்துத்தாண்டா.... போடா..'' உக்கிரம் பெற்றதும் ஒவ்வொருத்தனின் குரலும் உயர்ந்தது. வேலை நின்றது. முசாபர் படபடத்தான். அவனை உயிருடன் வதைப்பது மாதிரி ஆகிவிட்டது. ஏற்கெனவே ஓரிருவராய் வந்திருந்தவர்கள் இப்போது ஒரு கூட்டமாகி விட்டார்கள். இரண்டு கோஷ்டிகள் ஏற்பட்டன. ஒவ்வொரு கோஷ்டியும் பலம் பெற்றுவிட்டன. கை கலக்கும் விபரீதம். அதற்கான வித்து விழுந்துவிட்டது. மோதுகிற இரண்டு தரப்பினரையும் அங்கும் இங்குமாகப் பலர் தள்ளிக்கொண்டு போனார்கள். தள்ளிக்கொண்டு போனவர்களையும் தள்ளிக்கொண்டு சிலர் குறுக்கு சாலில் பாய்ந்தனர். இதுவும் போதாதென்று சற்று வயது போன பெண்மணிகளும் தத்தமது உறவினர்களைக் கலகத்தில் இருந்து மீட்கும் பொருட்டு முட்டாக்குகள் நழுவி விழுந்தன. கெட்ட வார்த்தைகள் உரசின. கெட்ட வார்த்தை பேசி முசாபர் கையிலிருந்த தகரப் பெட்டியை ஒருத்தன் பிடுங்கினான். வானத்தில் வீசினான். பெட்டிச் சிறையை உடைத்துக்கொண்டு விழுந்தன சாமான்கள். முசாபர் கெட்ட வார்த்தைகளை உதித்துக்கொண்டு தொண்டை கிழியக் கத்தினான். கண்களில் கண்ணீர் பொங்கியது. பெட்டியை வீசியவனைப் பிடித்துக்கொண்டது இருவர்; அவனைக் குனிய வைத்துக் குத்து விட்டுத் தரையோடு தரையாக வீழ்த்தியது ஒருவர். ஆக மொத்தம் மூவரின் பலத்தில் கிழே விழுந்தவன்மேல் தப்பிக்கிற சிலர் அவனை மிதித்துக்கொண்டு ஓட வேண்டியதாயிற்று. அவன் எழுந்திருக்கவே முடியவில்லை . முசாபர் வெறி பிடித்தவன் போல ஓடிவந்து அவன் வாயில் மண்ணை அள்ளித் திணித்தான். அதன் பின் கீழே விழுந்த சாமான்களைத் தேடிய போது அவன் மீதும் ஒரு அடி மர்மமாய் விழுந்தது. அவன் திரும்பியபோது யார் என்றே தெரியவில்லை . ஆதரவு - எதிர்ப்பு நபர்களை அந்தக் கூட்டத்தில் இனம் காணுதல் சிரமமானது. பழைய ஜமாத் தலைவரும் வேறு பலரும் அவ்விடம் ஓடி வந்து மிகுந்த சிரமத்திற்கிடையில் சமாதானம் செய்தபடி இருந்தார்கள். ஆத்திரத்திலும் கடுங்கோபத்திலும் இருந்த மீரான், ஏற்கெனவே சில நபர்களை நன்கு தாக்கி விட்டார். நாலு முழக் கதர் வேஷ்டியை மடித்து விட்டுக்கொண்டு அவர் பல சாகசங்கள் செய்து விட்டார். அவரைப் பிடித்து ஒரு நிலைப்படுத்தப் பெரும் பாடாயிற்று. 'லே, உப்புக்குப் பொறாத விஷயம்லே. இதுக்காவ போட்டு கையக் கால உடைச்சோம்னா வெளியிலே இருந்து பாக்குறவன் நம்மளப் பாத்து சிரிப்பாலே. போங்க... போங்கப்பா எல்லோரும் வீட்டப் பாத்து' என்று வயதான பெண்மணி தனது சொந்தக்காரனைப் பிடித்துத் தள்ளினாள். ஆவேசமாய் அவளைப் பிடித்துத் தள்ளிய அவன் சொன்னான்: 'வாய மூடுலா விவரம் புரியாம பேசிக்கிட்டு. இன்னைக்கு நாசுவனுக்குக் கடை கட்டிக் குடுத்தா நாளைக்கி நம்ம தெருவப் பாத்து எல்லோரும் என்ன சொல்லுவானுவோ தெரியுமா? நாசுவன் தெருன்னு சொல்லுவானுவோ. அப்படின்னா உன் புள்ள நாசுவன் நீ நாசுவத்தி நான் நாசுவன். உன் பேரன், பேத்தி மக்க எல்லாரும் நாசுவங்க... சீச்சீ... நாசுவன் தெருக்காரன்னு நம்மள பட்டம் கட்டி விடுறதும் காணாதுன்னு எல்லாரையும் அப்படியே ஆக்கிட வச்சிருவானுவோ. இந்த மாடதுக்காச் சுட்டிதான் கடை இங்கு வேண்டாம்னு சொல்றது. அது தெரியாம நீ வேற இடையிலே வந்து விழுந்துக்கிட்டு.' அவன் சொன்னது எல்லோருடைய காதிலும் விழுந்தது. அப்படிச் சொன்னவனையே அந்த அம்மா பார்த்தபடி நின்றாள். பின்பு பொங்கி வந்த சிரிப்பினூடே சொன்னாள். ‘அட பைத்தாரப்பயலே.... நாலு தலைமுறைக்கு முன்னாலே நீயும்...' இப்போது நின்றவர்கள் எல்லாம் சிரிக்க வேண்டியதாயிற்று. சில தலைகள் அந்த நிமிஷமே மறையலாயின. சில ஆதரவில்லாமல் வாய் மூடின. முசாபருக்கு சாம்ராஜ்யம் கட்டும் கைகள் வலுக்கொண்டு இயங்கின.   தாமரை, பிப்ரவரி 1982                                   9. அம்மா வருகிறாள்   கண்களுக்கு முன் வெயிலின் உக்கிரம் அலை அலையாய் ஊர்ந்தது. பேருந்து நிலையம் வெறிச்சோடித்தான் போகும். பஸ்கள் நின்றிருந்த அளவுக்குப் பயணிகள் இல்லாமல் இருந்ததை இப்போதுதான் பார்க்க முடிகிறது. தாஹிர் குழந்தையைத் தோளிலே தூக்கிப் போட்டுக்கொண்டு அவ்விடமாய் வந்து நின்றான். ‘நானும் வருவேன்' என்று அடம் பிடித்து அழுத குழந்தை சுகமாகத் தூங்கிப் போயிருந்தது. ஆனால் தாஹிரோ உச்சமான வெயிலில் குழந்தையையும் சுமந்துகொண்டு வீட்டிலிருந்து இங்கு வருவதற்குள் களைத்துப் போனான். புதிதாக நீளவாக்கில் கட்டப்பட்டிருந்த பேருந்து நிலையத்தின் புதிய கட்டிடத்தின் சிமெண்ட் பெஞ்சில் உட்கார்ந்தான். அவன் கண்ணெதிரேயுள்ள கிழக்குத் திசை விரிந்து பரந்த பெரிய அளவிற்குச் செடிகளற்ற, கொடிகளற்ற, மரங்களற்ற வெட்டவெளியாகவே இருந்தது. சிறிது வலக்கைப் பக்கமாய் முகம் திருப்பினால் ஆலய கோபுரம் வானத்தைக் கீறி வளர்ந்துவிட்டதோ என்னும்படி கனகம்பீரமாய்ப் புதிதாய்த் தீட்டப்பட்ட வர்ணங்களுடன் நின்று கொண்டிருந்தது. கோபுரத்தின் கீழே சுற்றிச் சூழவும் பச்சைப் பசேல் என்றிருந்த மரங்களும் மரங்களுக்குள்ளேயே அமிழ்ந்துபோய் வெறேதையோ தலை நீட்டி ரசிக்க வந்தவை போலத் தோன்றுகிறதான வீடுகளும்! ஒரு கைதேர்ந்த ஓவியன் காலம் காலமாய் மோனத் தவமிருந்து வானளாவ உயர்ந்து நின்று அரும்பாடுபட்டுத் தீட்டிய அற்புதமான சித்திரம் போலவே இருந்ததின்றி, நிஜமான நிஜம்தான் என்று அமைதியடைய முடியவில்லை. ஒரு மூலையில் திரண்டுபோய் ஒளிந்திருந்த காற்றுத்தான் தங்குதடையில்லாமல் இப்போது வீசுகிறதோ எனும்படிச் சுகமுற, இருந்த அனைவரையும் தழுவிச் சென்றது. குழந்தையின் மீதும் காற்று நன்கு தழுவட்டும் என்பதற்காகச் சற்றுக் கால்களை நீட்டி குழந்தையைச் சாய்த்ததும், ஒழுங்காய்க் கிடைத்த சாய்மானம் கலைந்து வேறொரு நிலை அமைந்ததால் தூக்கத்திலிருந்து விடுபட்டுவிட்டது. அவனைப் பார்த்துத் திருதிருவென்று முழித்தது. குழந்தை எழுந்து உட்கார்ந்து ஜனங்களற்ற பஸ்கள் நிரம்பிய அந்த இடத்தை ஒருவித மருட்சியுடன் நோக்கியது. எதிரில், தென்பட்ட குளிர்பானக்கடையின் மிட்டாய்கள் நிரம்பிய பாட்டில்களை நோக்கிக் கையை நீட்டியது. எழுந்து சென்று ஒரு மிட்டாய் வாங்கிக் கொடுத்தபடியே கேட்டான்: 'களக்காட்டிலேருந்து வருமே பெவின் பஸ்ஸு... அது எப்பங்க வரும்? கைக்கடிகாரத்தைப் பார்த்த கடைக்காரர் வந்திருக்க வேண்டிய நேரம்தான். ரொம்பத் தூரமா இருந்து வர்ற பஸ்ஸில்லியா? கொஞ்சம் முன்ன பின்ன ஆவலாம்!' என்றார். அவர் சொன்னது சரிதான். அறுபது மைல்களில் உள்ள ஊரை மேலும் இருபதுக்கும் மேற்பட்ட மைல் கணக்கில் காட்டுப்பாதைகளிலும் செம்மண் பிரதேசங்களிலும் சுற்றிவர வேண்டி இருப்பதால் அப்படிக் குறிப்பிட்ட நேரத்துக்கு முன்னதாக வந்துவிட முடியாதுதான். ஆனால் ம்மாதான் எதிர்பார்த்த சமயத்தைவிட முன்னமேயே வருபவளாய் இருக்கிறாள். அதுதான் அவனது கவலையைப் பன்மடங்காய்ச் செய்தது. தாஹிருக்கும் அவன் மனைவி அலிமாவுக்கும்கூட இன்றைக்கு அவள் வருவது விரும்பக்கூடியதாகவோ சந்தோஷமாகவோ இல்லை. ம்மாவை விட்டு ரொம்ப தூரமாய்ப் பிரிந்துபோய் காலேஜில் படித்த நாள்களில், ஊர் திரும்பும் வேளையில் ம்மாவைக் காணும் வேகமாய் வினாடிகள் தோறும் அசைபோட்டுச் செல்கின்ற ஆசை மனம், இந்த வயசில் அமையாது போலும். இப்போது தனித்தனி வாழ்க்கையும் வாழ்விடங்களும் ஆகிவிட்டன. தாஹிர் வேலை பார்த்துவந்த தொழிற்சாலையை சாக்கு போக்குச் சொல்லி மூடியதும், அவனோடு தங்கியிருந்த ம்மா களக்காட்டிலே உள்ள மற்ற மகன் - மகள் வயிற்றுப் பேத்திகளைக் காண வேண்டும் என்கிற ஆவலாய் ஓடியதும் ஒரே சமயத்தில் நிகழ்ந்தன. வருமானம் பறிபோய் நிர்க்கதியாய் நின்ற நேரத்தில் பேரன் - பேத்திகளைக் காணப்போகிறேன் என்று ம்மா களக்காடு புறப்பட்டுச் சென்றது மதி நிறைந்த விவேகமான செயல்தான். எல்லா மகன்களின் வீட்டிலும் ஒரு குறிப்பிட்ட அட்டவணைப்படி ம்மா தங்கியிருப்பதுதான். அந்தக் கணக்கில், தாஹிரின் வீட்டில் இன்னும் அதிக நாள்கள் இருக்கலாம். ஆனால் மறுப்பேதும் சொல்லாமல் அங்கேயாவது போய் இந்த வயசுக் காலத்தில் நிம்மதியாய்ச் சாப்பிட்டுப் பேத்திகளோடும் பேரன்களோடும் சந்தோஷமாய் இருந்துவிடட்டும் என்கிற எண்ணமாகவே தாஹிரும் அலிமாவும் இதே பஸ்ஸில் வழியனுப்பி வைத்தார்கள். அப்படி ஊர் போய் ஒரு மாதமே ஆகிறது. எதனால் அவசரப்பட்டுக் குறுகிய காலத்தில் மீண்டும் இங்கே வர வேண்டும்? பெரிய - சின்னக் காக்காமார்களும் தாத்தா (அக்கா)வும் அங்கும் இங்குமாய்ப் பம்ப்செட் விவசாயமும் வியாபாரமுமாய் இருக்கிற செல்வச்சூழலில் இருந்து இங்கே - இன்னமும் வேலைக்கு வழியில்லாத தாஹிரின் வீட்டுக்கு ஓடிவர வேண்டிய அவசரம் என்ன? இந்த ஊர்த் திருவிழாக் காணக் களக்காட்டிலிருந்து வந்த தச்சு ஆசாரி பிச்சமுத்து சின்னனியாவிடமும் அவர்கள் மனைவி சீதா சித்தியிடமும் இப்போதைய நிலவரங்களை எல்லாம் சொல்லி அனுப்பிய பிறகும் கூட ம்மாவுக்குப் புரியாமல் போனதில் தாஹிருக்கு இன்னும் அதிக வருத்தம் உண்டானது. அப்பாவும் கூட இவளது நிலையைச் சொல்லி காக்காமார்களும் தாத்தாவும் தங்களுடனேயே தங்கும்படிச் சொல்லியிருக்க வேண்டும். அதை விட்டுவிட்டுப் பெரிய காக்காதான் தாஹிருக்குக் கடிதம் அனுப்பியிருக்கிறார். 'நாளைக் காலை 9 மணிக்குப் புறப்படும் பஸ்ஸில் ம்மா அவ்விடம் புறப்பட்டு வருகிறார்கள். எதிர்பார்க்கவும்.’ இந்த மனிதர்களுக்குக் கடிதம் எழுதுவதுகூட சிரமமான ஜோலிதான் போலும். பதினைந்து பைசா போஸ்ட் கார்டில் தந்தி வாசகம் போலச் சுருக்கமாய் விஷயங்கள். இவனுக்கு இவ்வளவுதான் எழுதணும் என்பது போலவும் இருந்தது காக்காவின் கடிதம். அவருக்கு ஆயிரத்தெட்டு ஜோலிகள். வயலுக்கும் கடைக்கும் ஓடியாடி அடையவே வாழ்வும் பொழுதும் சரியாயிருக்கும். நேற்று அவர் அனுப்பிய கடிதம் இன்றைக்கு - நல்ல வேளையாக வந்து சேர்ந்தது. தாஹிருக்குக் கடிதம் கையில் கிடைத்த நேரத்திற்கும் முன்பாகவே ம்மா பயணத்தைத் துவங்கியிருப்பாள். 'இப்ப வராங்களே! நம்மால் எப்படி கவனிக்க முடியும்?' என்று அலிமா வெளிப்படையாகத் தன் அதிருப்தியையும் கவலையையும் காட்டிக்கொண்டது போல் இவனால் முடியாது. தன் ம்மாவைப் பொறுத்தமட்டில் அலிமா ஒருபோதும் பாரபட்சமாக நடந்து கொள்வதில்லை என்பது தாஹிர் தெளிவாய்த் தெரிந்து கொண்ட விஷயம். இப்போதைய அவளது வேதனைக்கும் இயலாமைக்கும் தான் தானே காரணம்? முதன் முதலாக அவளது அதிருப்திக் குரலை அறிய நேர்ந்ததில் வருத்தமேயொழிய, கோபம் இல்லை. இன்னும் ம்மாவுக்கும் அலிமாவுக்கும் இடையில் வெகு சௌஜன்யமான உறவுகள் உண்டு. தாயும் மகளும் போலத்தான். மருமகள்களிலேயே அலிமாவைத்தான் ம்மா அதிகமாய் நேசிக்கிறாள் என்பது மற்ற மருமகள்களுக்குச் சற்றுக் கசப்பான விஷயம்தான். ம்மாவுக்கும் மனைவிக்கும் இடையில் கிடந்து ஊசலாடும் அவஸ்தைகள், தர்மசங்கடங்கள் தாஹிருக்கு நேர்ந்ததில்லை. அதனால்தான் இன்று அவள் தன் அதிருப்தியை வெளியிட்டதும் ம்மாவின் வருகையில் ஆர்வமே இல்லாமல் போனான். பஸ் உள்ளே வந்துகொண்டிருந்தது. டிரைவருக்கு அடுத்து உள்ள சீட்டில் ம்மா உட்கார்ந்திருப்பது இங்கிருந்து பார்த்தாலே தெரிந்தது. இவன் தன் மகளை 'அங்க பாரு' என்று சுட்டிக் காட்டினான். பஸ் நெருங்கி வந்துவிடவும் குழந்தையும் ம்மாவை அடையாளம் கண்டு 'ஐ... வாப்பும்மா' என்றது. கைகொட்டிச் சிரித்தது. மகனும் பேத்தியும் நின்று கொண்டிருப்பதை ம்மா இன்னும் கவனிக்கவில்லை. பஸ் அருகில் போனான். எல்லோரும் இறங்கவிட்டுத்தான் ம்மா இறங்கினாள். களைப்பாய் இருந்தாள். 'வாப்பும்மா' என்ற குரல் கேட்டதும்தான் அவள் திரும்பிப் பார்த்தாள். பேத்தியைக் கண்டதும் களைப்பும் சோர்வும் நீங்கி முகம் மலர்ந்தாள். 'சொகமாயிருக்கீங்களா...'' என்றபடியே பேத்தியை நோக்கிக் கை நீட்டினாள். ஆவலாய்ப் பற்றிப் படர்ந்து கொண்டது குழந்தை. இவன் பஸ்ஸினுள் இருந்த துணிப்பைகள் இரண்டையும் எடுத்துக்கொண்டான். ஊர் ஷேம நலன்களை விசாரித்து அறிந்தான். பேத்தியைத் தூக்கிக்கொண்டு, இந்த வெயிலில், ம்மாவால் பத்தடி தூரம்கூட நடந்துவிட ஏலாது. துணிப்பைகளும் கனமாக இருந்தன. எப்படி அம்மாவையும் பேத்தியையும் வழிநடத்திச் செல்வது என்று ரொம்பவே யோசிக்கலானான். வீட்டுக்குச் சென்றுகொண்டிருப்பது பாலைவனப் பயணம் போலவே ஆகிவிட்டது. நிழலைக் கண்டதும் ஒதுங்கி நிற்பதும், வெயிலில் விரைந்து ஓடி வருவதுமாய் ம்மா நடந்தாள். எதிரே குதிரை வண்டிக்காரர்கள் யாராவது தென்பட்டால் தேவலாம் என்றிருந்தது. தாஹிர் தனது கட்சியின் தொடர்பால் குதிரை வண்டிக்காரர்கள் சங்கத்துக்குத் துணைத் தலைவராகக் கூட இருக்கிறான். ஆனால் ஒருபோதும் அதன் மூலமான வசதிகளைப் பெற்றுக் கொள்வதில்லை. இன்று அவர்கள் யாரும் தென்படாமல் போனது ஆச்சரியமாகவே இருந்தது. வீட்டை நெருங்கியபோதுதான் ஒரு குதிரை வண்டி எதிரில் வந்தது. அவன் சலாம் போட்டுவிட்டுப் போனான். இன்முகத்தோடுதான் அலிமாவும் வரவேற்றாள். குழந்தையோடு மூவரும் சாப்பிட உட்கார்ந்தார்கள். 'நீங்க முதல்ல சாப்பிட்ற வேண்டியதுதானே! எனக்காக ஏன் பசி வயித்தோட காத்துக்கிட்டிருக்கணும்?' என்று ம்மா கேட்டாள். 'கூடவோ கொறையவோ இதுன்னா எல்லாரும் அனுசரிச்சு சாப்டுக்கலாம் இல்லியா?' என்றாள் அலிமா. ம்மாவுக்கு வேதனை மேலெழுந்து வர ஆரம்பித்தது. 'இன்னும் எத்தினி நாளைக்குத்தான் ஆண்டவன் நம்மள இப்படி வச்சிருக்கப் போறானோ தெரியலியே!' என்றபடியே ஒரு கவளம் சோற்றை எடுத்துப் பேத்தியின் வாயில் ஊட்டினாள். 'மாமி மெலிஞ்சுபோன மாதிரித் தெரியுதே' என்றாள் அலிமா. ’கொஞ்ச நாளா உடம்புக்குக் கெதியில்லாம இருந்து என்னா பாடுபட்டேன்கிறே! உன் மச்சான்மாருதான் டாக்டரக் கூட்டிட்டு வந்து காண்பிச்சு மருந்து, மாத்திரை, டானிக்குன்னு வாங்கித் தந்தானுவோ!’ தாஹிரும் அலிமாவும் கூர்ந்து பார்த்தார்கள். தட்டில் சோற்றை அளைந்துகொண்டேயிருந்தார்கள். சாப்பிடும் ஆர்வமே இல்லை. சிறிது நேரம் கழித்துச் சொன்னாள். நான் இப்ப இங்கே வர்றதுக்கே அவங்க யாரும் சம்மதிக்கலே மேலும் எதையோ சொல்ல நினைத்து நிறுத்திக் கொண்டார்கள். 'வாப்பும்மா பேசிக்கிட்டே இருக்கியே! எனக்கு மிட்டாயி தாயேன்!' என்று கையை அபிநயித்து நீட்டியது குழந்தை. 'சாப்புட்டு முடிங்க ராசாத்தி தர்றேன்.' சாப்பிட்டு ஊர்க்கதையெல்லாம் பேசிக்கொண்டிருந்தபோது துணிப்பையை எடுத்து ஒவ்வொன்றாய் வெளியில் வைத்தாள். அல்வா பொட்டலம், மிக்சர், ஆப்பிள், மாம்பழங்கள் என்று நிறைய இருந்தன. பொட்டலத்தைப் பிரித்து அல்வாவைப் பிய்த்துப் பேத்தியின் வாயில் திணித்தாள். சப்புக்கொட்டி ஆர்வமாய்த் தின்றது. இடுப்பில் தொங்கிய சிறு சாவிக்கொத்தை எடுத்து அதில் தொங்கிய சிறு கத்தியால் ஒரு மாம்பழத்தைத் தோல் சீவினாள். தாஹிருக்குக்கூட இப்படித் தோலை மட்டும் லாவகமாக வெட்டியெறியத் தெரியாது. ம்மாவுக்கு இது பல்லாண்டுக் கால் அனுபவம். ’ஊருல நல்ல செழிப்பாயிருக்கு. மழை பெஞ்சு ஆறு நெறையத் தண்ணி ஓடி விவசாயமெல்லாம் செழிச்சு நல்லாயிருக்காங்க எல்லோரும். பெரியவனுக்கும் சரியான விளைச்சல் . மாம்பழம், கொய்யா, நெல்லுன்னு வீடே நிறைஞ்சு போய்க் கெடக்கும். சின்னவனுக்கும் வியாபாரம் போடு போடுன்னு போடுது. மீனு, முட்டை, கறி, தேங்காச் சோறுன்னுதான் இரண்டு பேரு வீட்லயும் சாப்பாட்டுக் காரியம் நடக்குது. என்ன சாப்புட்டு என்ன செய்ய? அங்குள இருக்கிற புள்ளங்களும் பேத்தியும் சாப்புட்டாங்களா சாப்புடலியான்னுதான் மனசு கெடந்து அடிக்குது. கூடச் சாப்பிட்டாலும் கொறையாச் சாப்புட்டாலும் உங்களோடயே கெடந்துடுவோம்னுதான் எல்லோரும் கையைப் புடிச்சு இருக்கச் சொல்லியும் கேக்காம ஓடியாந்துட்டேன் இங்கே!' என்றபடி, பேத்தியை இறுக அணைத்து முத்தமீந்தவளாகப் பழத்துண்டுகளைப் பேத்தியின் வாயில் ஊட்டலானாள். செம்மலர், ஜூன் 1991                           10. சாம்ராஜ்யம்   வீட்டுக்கு முன்னிருந்த வேப்ப மரத்தில் நின்று காகம் ஓயாமல் கரைந்தது. திடும்மென்று உணர்வு தட்டியவள் போல் பதறி எழுந்து 'ரொம்ப நேரமாத் தூங்கிட்டேனோ' என்று முணுமுணுப்பாய்ச் சொல்லிவிட்டு அப்படியுமாகப் பரக்கப் பரக்கப் பார்த்துவிட்டு அடுக்களை போனாள் நஸிமா. பாத்திரங்கள் துலக்கிக்கொண்டு இருக்கும்போது கூடக் காகம் கரையவே செய்தது. மற்ற நாள்களென்றால் இந்நேரம் சாயாப் போட்டு முடித்திருப்பாள். இன்றைக்குத் தான் இப்படித் தூக்கம் அவளை வென்றெடுத்திருக்கிறது. ஆனாலும் இவ்வாறு காலதாமதாகமாக எழுந்ததால் யாரும் அலுவலகம் போவதோ அல்லது ஆயிரம் ஆயிரமாய்ப் பணம் சம்பாதிப்பதோ கெட்டுப்போய் விடாது. அப்படி எல்லாம் பரபரப்பே வாழ்க்கை எனக் கொண்ட மனிதர்களை இந்த வீடு கொண்டிருக்கவும் இல்லை. கொடுத்து வைத்த வீடு. இவளின் காரியமும் முக்கிதக்கிப் போகாது. ஆனால் என்னவென்றால், அதிக நேரம் உணர்வுகள் விழிப்புற்று இருந்தும் கண்கள் பொய்த்தூக்கம் கொண்டு தன்னை அசமந்தமாக்கி விட்டதே என்ற ஆதங்கம்தான் அவளுக்கு. ஒரு கடமையாகக் கொண்டுவிட்டதைப் போல காகம் கரைந்து கொண்டே இருக்கவும்தான் நஸிமாவின் கவனம் அதில் போய் விழுந்தது. பாத்திரங்கள் துலக்குவதைக் கை தானாகவே நிறுத்திவிட, காதுகளின் கவனம் முழுவதும் அந்தச் சத்தத்தில் பதிந்தது. வயிற்றை ஒரு கலக்குக் கலக்கியது. ’விடிஞ்சும் விடியாமக் காகம் கத்துச்சுன்னா வீட்டுக்கு விருந்தாளிங்க வருவாங்கன்னு சொல்லுவாங்களே. 'இதற்குச் சான்றாகப் பலரும் பலவிதமான அனுபவங்களை வக்கணையாகக் கூறியிருந்ததை வரிசையாக அவள் ஏனோ ஞாபகம் செய்து பார்த்தாள். முன்னர் கூறியிருந்தவை அனைத்தும் ஞாபகம் பெறப்பட்டதால் உள்ளத்தில் தானே கவலை இழைகள் பின்னின். தன் வீட்டுக்கு வருகிற மாதிரி யாராவது இப்போது இருக்கிறார்களா என்று குளிக்கும்போதே யோசனையாய்க் குளித்தாள். அவள் ஏற்கெனவே சம்சயப்பட்டு இருந்ததற்கு ஏற்ப, காக்காவினுடையவும் மச்சியினுடையவும் முகங்கள்தான் மீண்டும் மீண்டும் கண்களின் முன் தோன்றின. அம்மாடி! வந்தால் ஒருத்தராக அல்ல - இரண்டு பேராக! கவலையின் சுமை அடுத்த விநாடிக்குள் இரட்டிப்பாகி விட்டது. காக்காவுக்கும் மச்சிக்கும்தான் ஒரு 'பொட்டை' இருக்கிறது - எந்த நிமிஷத்திலும் 'உட்கார்ந்து’ விடும்படியாக மூன்று மாதத்துக்கு முந்தி ஊருக்குச் சின்னாப்பா வீட்டுக் கல்யாணத்துக்குப் போயிருந்தபோது அவள் குதிர் மாதிரி வளர்ந்து பெரிய மனுஷி தோரணையில் 'விடைப்பாக’ நின்றுகொண்டிருந்தாள். நஸீமாவின் கவனம் பல முறை அன்றே அவள்மீது திரும்பத் திரும்பப் போய் விழுந்தது. அதுவே ஒரு சந்தோஷமும் ஒரு கவலையும் தான். அப்போதே அவள் கணக்குப்போட்டாள். 'சின்னாப்பா வீட்டுக் கல்யாணம் முடிஞ்சு ஊருக்குப் பொறப்படறதுக்கு உள்ளேயே இவ உக்காந்தாலும் உக்கார்ந்திருவா போல இருக்கே! ’ இவ்வளவு நாளும் தப்பிப் போய்விட்டன. ’அவ பெரிய மனுஷி ஆயிருப்பா. இன்னைக்குக் காக்காவும் மச்சியும் சடங்குக்குக் கூப்புட்டு வந்தாலும் வருவாங்க போலத் தெரியுது. அதான் ஒரு நாளும் இல்லாத திருநாளா காக்காச்சி இப்படிக் கெடந்து கத்துது.’ விஷயம் நல்லதாய் இருந்தாலும் பயமாகவும் இருக்கிறது. கவலையும் பயமும்தான் எவ்வளவு வேகமாய்ப் பெருகிவிடுகின்றன? மழையால் வியாபாரம் பாதித்து, வீட்டுச் செலவிலே கையிருப்புக் கரைந்து போக, கொஞ்சமாக இருக்கிறது பணம். அதை எடுத்துத்தான் ராத்திரியே திருநெல்வேலிக்குப் போனான் கலீல். சரக்கு வாங்கக் காசு பத்தாதே என்று முணுமுணுத்தவனாய்க் கவலை படியப் போனான் அவன். இப்போதே புருஷன்காரன் வீடு திரும்பி, சரக்கு விற்று வர சைக்கிளில் ஏறிப்போனாலும் ஆடி அசைந்து வீடு வந்து சேர சாயங்காலம் ஆகிவிடும். அது வரைக்கும் வீட்டுக்கு விருந்தாட வந்தவர்களை வைத்துக்கொண்டு என்ன பண்ண? காரணம் கூறிப் பணம் கேட்டாலும்கூட கலீல் என்ன சொல்வான் தெரியுமா? 'இன்னா இருக்கு ஆரஞ்சு மிட்டாயி - கடலை மிட்டாயி பாக்கெட்டு. தட்டு நெறய்ய எடுத்து வச்சு வயிறாரச் சாப்புட்டுப் போவச் சொல்லு’ என்று சிரிக்காமல் கூறிவிடக் கூடியவன். தெரிந்தேதான் இருந்தது! இருந்தாலும் ஒரு ஆத்மதிருப்திக்காக வேண்டித் திறந்தாள். அரிசிப்பானை. உற்றுப் பார்த்தாள். கையை விட்டு அளைந்தும் பார்த்தாள். அது எப்போதுமே வைகை ஆறு. கூட மச்சி வராமல் காக்கா மட்டும் வந்தால்..... அப்பவும் சரிப்படாது. ஆனால் காகம் நீண்ட நேரமாய்க் குறிவைத்துக் கரைந்ததைப் பார்த்தால் விருந்தாள் எண்ணிக்கை ஒன்றுடன் நின்று விடாது என்றே அவள் புத்தி அவளுக்குச் சொல்லிக் காட்டிற்று. வீட்டுக்காரர் ஜவுளிக்கடை போவதற்கான சமையலைத் துவக்கி இருந்தார் சரோஜா அம்மாள். நிழலின் அசைவு கண்டு எட்டிப்பார்த்தபோது நஸிமா நின்றதைப் பார்த்து ஆச்சரியம் உண்டாயிற்று. அவசியமின்றி நஸீமா வரமாட்டாள். அதுவும் காலைப்பொழுதில். பொதுவான பேச்சு என்பது இருவருக்கும் தத்தமது அடுப்படியிலே இருந்து பேசினாலே போதும். அந்த அடுப்படியின் கேள்விக்கு இந்த அடுப்படி பதில் கூறும். ஊர்க்கதைகள், உலகக் கதைகள், படு விசேஷமான ரகசியங்களைக்கூட இப்படியே இருந்து பேசித் தீர்த்து விட முடியும். அதையும் மீறி நஸீமாவுக்கு எது தேவை என்றாலும், பேச்சுப் போகும் போக்கினிலேயே தன் தேவையைக் குறிப்பிட்டு விடுவாள். அப்போது கிடைக்கும் பதிலைப் பொறுத்துத்தான் சரோஜா அம்மாளின் வீட்டுக்குள் நுழைவதும் நுழையாததும். அதுவும் தலைபோகிற அவசியம் இருந்தாலும் காலைப்பொழுதில் சரோஜாம்மாளின் வீட்டில் நுழைய கன பாடுபட்டு யோசனை பண்ணி வருவதுதான் வழக்கம். சரோஜா அம்மாள் வீட்டுக்காரர் கையையும் காலையும் சிலுவையில் தன்னைத்தானே அறைந்து கொண்டவர் மாதிரி விரியப்போட்டுத் தூங்கிக்கொண்டிருக்கலாம்.அடுக்களையையொட்டி வெறும் ஜட்டியோடு என்றுதான் நஸீமா தன் அதிரடி நுழைவைத் தடுத்து வைத்துக்கொண்டு இருக்கிறாள். இருவரின் வயதும் வித்தியாசப்பட்டுக் கிடப்பினும் சரோஜா அம்மாளும் நஸீமாவும் சகோதரிகள் போலவே! அதிரடியாய் வராத நஸீமா இப்போது வந்து நிற்கிறாள். 'என்ன நஸீமா? பேச்சு மூச்சு இல்லாமே வந்துட்டே!' 'நம்ம பொழப்பே பேச்சு மூச்சு இல்லாமத்தான கெடக்குது! 'அப்படிச் சொல்லு தங்க வாயால’ என்று கலகலவெனச் சிரித்தபடி உடனே ஆமோதித்தார் சரோஜா அம்மாள். 'ஆமா.. காலைலேருந்து உன் வீட்டு முன்னால் காக்கா கத்திக்கிட்டே இருக்கே! கவனிச்சியா நீ! வீட்டுக்கு விருந்தாளிங்க வந்தாலும் வரும்.' என்று சரோஜா அம்மாளே எடுத்துக் கொடுத்தார் பிடியை. 'நீங்களும் இப்போ அதத்தான் சொல்ல வாரீங்களா? என் மனசே இப்போ அதோடதான் கெடந்து படபடக்குது!' 'ஆங்... புரியுது.... புரியுது... கையில பூஜியமா இருக்கிற நேரத்துலதான் எல்லாச் சனியனும் ஒண்ணா வந்து சேரும்!' என்று சரோஜாம்மாள் சொல்லிவிட்டுத் தானே சிரித்தார். காலையின் பிரகாசம் இல்லாமல் துயர் படர்ந்த நஸீமாவின் முகம் கண்டார். 'நஸீமா! என் வாயி தவறி சனியன்னு சொல்லிட்டேன் பாத்துக்கோ. மனசுல வச்சுக்காதே! ஒரு பேச்சுக்குத்தான் சொல்லுதேன். கையில் காசு பணம் இல்லாத நேரத்துல ஒண்ணுலாட்டா ஒண்ணு நடந்துச்சுன்னா மனுஷிக்குப் பொசமுட்டித்தான் போவும். நம்ம கஷ்ட நஷ்டங்கள் வீட்டுக்கு வாறவா போறவா கிட்டே யெல்லாம் சொல்லிக்கிட்டா இருக்க முடியும்?' என்று ஆறுதல் போல சரோஜாம்மாள் சொன்னதும், 'சரிதானே நீங்க சொல்றதும். ஒரு வேள் இன்னிக்கு எங்க அண்ணனும் அண்ணியும் வருவாங்களோன்னு நெனக்கிறேன். ராத்திரி டவுணுக்குப் போயி சரக்கு வாங்கிட்டு வரப்போறேன்னு சொல்லிட்டுப் போன மனுஷன் இன்னும் ஆளக் காணோம். அவங்க வந்தாலுமே சரக்கு வித்து சாயங்காலம்தான் ரூபா கைக்கு வந்து சேரும். அப்படி தப்பித்தவறி வீட்டுக்கு யாரும் வந்தாங்கன்னா கொஞ்சம் அரிசி தருவீங்களாம்மா?’ சரோஜாம்மாவுக்கு ரொம்பக் கஷ்டமாகிவிட்டது. 'ஏ நஸீமா! என் வீட்டு அரிசிப்பானைய வந்து பாரேன். ஒங்க வீட்டுக் கதைதான் இங்கேயும்,' என்று அவசரமாய் எழுந்து நஸிமாவின் கையைப் பற்றினார். 'வேண்டாம்மா வேண்டாம்! யாரு யாருகிட்டே பொய்யி சொல்லப்போறோம்?’ எவ்வளவு பெரிய ஏமாற்றம்! நஸிமா துவண்டு போனாள். 'நானும் இவங்கள்ட்ட சொன்னேன் பாத்துக்க. காதுலேயே விழமாட்டேங்குது. நாம் கொடுத்தாலும் கொடுக்காட்டாலும் பொம்பளதான் - எப்படியும் சோறாக்கிப் போட்டுருவான்னு இந்த ஆம்பளங்கிளுக்கு ஒரு மத மதப்புத்தான் எப்பவும். நானும் இன்னைக்கு ராத்திரி இவங்க வேல முடிஞ்சு வரட்டும்னுதான் காத்துக்கிட்டு இருக்கேன். பேசாம உப்புமாவக் கிண்டி முன்னுக்க வச்சிரணும்ணு பிளானு பண்ணிக்கிட்டு இருக்கேன். அப்படிச் செஞ்சு வச்சாத்தான் அவங்க மூளையில் நல்லா உறைக்கும். அதச் செஞ்சுட்டோம்னு வய்யி. சாப்புட்ட கையும் சாப்புடாத கையுமாப் பைய எடுத்துக்கிட்டு ஒரே ஓட்டமா ஓடி அரிசி வாங்கப் போயாவும். இன்னைக்கு ராத்திரில்லா இருக்கு வேடிக்கை' என்று சரோஜா அம்மாள் தன் கணவனுக்கு எதிரான சதித்திட்டத்தை வெளியிடவும் - அது அப்படியே நடந்தது போல, அய்யா வேலை முடிந்து வந்த களைப்பையும் பொருட்படுத்தாமல் அப்போதே பையைத் தூக்கிக்கொண்டு ராத்திரியோடு ராத்திரியாகத் தட்டுத் தடுமாறி கடைக்கு ஓடிப்போய் வேர்க்க விறுவிறுக்க அரிசி வாங்கி வருகின்ற காட்சியை எண்ணிப்பார்க்க, சிரிப்பாணி பொத்துக்கொண்டு வந்து இருவரும் மனம் போனபடிக்கு சிரித்துக் களித்தார்கள். மனம் அமைதிப்படாது வீட்டுக்குத் திரும்பினாள். குழந்தைகள் இரண்டும் முழித்து கெச்சக்கால் அடித்துக் கொண்டிருந்தன. 'சரக்கு வாங்கப்போன மனுஷனாவது போனோம் - வந்தோம்னு இருக்காரா? போனாப் போன இடம், வந்தா வந்த இடம். எல்லா ஆம்புளங்களுமே இப்படித்தான் இருப்பாங்க போலருக்கு. கொஞ்சமாவது வீட்டுக் கவலையே கிடையாது. எந்தக் காரியம்னு திருநெல்வேலிக்குப் போனாலும் ஏதாவது சினிமா பாத்தாவணும் இவுங்களுக்கு. இல்லேன்னா தலை வெடிச்சுப் போயிடும்மோ என்னமோ? சீ...' என்று ம்மா வீட்டுக்குள் அங்குமிங்குமாய்ப் புலம்பித் திரிந்ததைக் குழந்தைகள் வேடிக்கை பார்த்துச் சிரித்தன. சாயா போட்டாள். 'அதையாவது காலா காலத்துல் குடிப்போம்' என்று அடுப்படி முன் உட்கார்ந்ததும் குழந்தைகளும் ம்மாவின் முகம் பார்த்த வண்ணம் அங்கேயே உட்கார்ந்தன. 'உங்களுக்கும் வேடிக்கையாப் போச்சு என் பொழப்பு. போயி குளிச்சிட்டு வாங்க. முழிச்சும் முழிக்காம டீ கேக்குதாக்கும் டீ' என்றாள். யாருக்கோ வந்த பேச்சு என்பன போலக் குழந்தைகள் அமைதி காத்து சாதுபோல அமர்ந்திருந்தன. சாயாவை இறக்கவும் சரோஜாம்மாள் வந்தார். ’நஸீமா! கவலப்படாதே! நான் அரிசி தாரேன் உனக்கு!' என்று புன்னகை முகமாய்ச் சொன்னார். நஸீமா சந்தோஷமாய் ஏறிட்டுப் பார்த்தாள். 'நீ வீட்டுக்கு வந்து போனதத் தெருவுல வரும்போதே அவுங்க பாத்துட்டு வந்திருக்காங்க. நஸீமா வந்துட்டுப் போறாள் என்ன விஷயம்னு கேட்டாங்க. சொன்னேன். அவங்க கடைக்குப் போனவுடனே முதலாளிட்ட ரூபா கேட்டு கடைப்பையன்ட்ட அரிசி வாங்கிக் குடுத்து அனுப்புறேன்னுட்டாங்க.' நஸீமாவுக்குச் சற்றுத் தெம்பு வந்தது. ஒரு கடல் தாண்டி வந்த சோதனை. ஆனாலும் இன்னும் எவ்வளவோ இருக்கிறதே! சோறாக்கி, வாய்க்கும் ருசியாக வைத்தால்தானே திருப்தி கொள்ள முடியும், கடற்கரை ஊர் வருகிற யாருக்கும் மீன் திங்க வேண்டும் என்றுதான் ஆசை இருக்கிறது. கறி என்றால் எங்கும் சாப்பிட்டுக் கொள்ள முடியும். ஆனால், 'என்ன கொள்ள போச்சுன்னு தெரியல்ல. கையில் ரெண்டு மீன் வச்சுக்கிட்டு ஆனவில் குதிரவில சொல்லுதானுவோ. சாளை, முரலும், வாழைன்னா நல்லாருக்காது - மாவுலா - நெய்மீனுன்னு வச்சாத்தான் வசுப்பா இருக்கும் அரிசிக்கி முட்டி, முட்டி பேந்து போச்சு. இப்ப கறிக்கு என்ன பண்ணன்னு தெரியல்ல. காக்காவும் மச்சியும் ஒண்ணுபோல வந்துட்டாங்கன்னா நெய்மீனு பொறிக்க வெக்கணும்! அப்படி வச்சா எப்படியிருக்கும்? பிரியாணியக்கூட எங்கே வந்தேன்னு கேட்டுருமே! அவுங்களுக்கும் நெய்மீனுன்னா ஒரு மாதிரி ஆசதான்.' யோசனைகள்தான் பலவும் வருமே! காசா? பணமா? வந்த யோசனைகள் கலீல் மீது கோபம் தந்து சென்றன. ’நாமெல்லாம் ஜடமாப் போனோம் அவுங்க கண்ணுக்கு. வீட்டுல இருக்குறவ ஒரு மனுஷிதானேன்னு நெனைப்பே கெடையாது. ராத்திரிக்குப் போனவரு விடிஞ்சி இம்புட்டு நேரம் வரைக்கும் வரலேன்னா என்ன மனுஷன்? கம்பெனிய கம்பெனியச் சுத்தி வந்தா இங்க இருக்குறவதான் என்ன பண்ணுவா? சரக்கு வாங்கப் போறேன்னு போயி, ராத்தங்கிட்டு நல்லா ஜோக்கா கண்ட கண்ட படமெல்லாம் பாத்துட்டு வர்றதுக்கெல்லாம் கையில் காசு இருக்கும்போல. வரட்டும் இன்னிக்கு நாலு கேள்வி கேட்டாத்தான் மனசு ஆறும். நம்மகிட்டயும் தான் நாலு காசு தந்துட்டுப் போனா என்ன?' என்று தானே தீர்மானம் போட்டு அதை நிறைவேற்றியும் கொண்டாள். குழந்தைகள் காரியங்களை ஒப்பேற்றி பள்ளிக்கூடம் அனுப்பிவைத்தாள். தனிமை அவள் துணையாகி வந்தது. யார் எப்போது வரப்போகிறார்கள் என்று சித்திரங்கள் போட்டுப்போட்டு அழித்து வேடிக்கை காட்டியது அவளுக்கு உறுதுணையாக இருக்க மறுத்த கணம். அடிக்கொரு தரம் எழுந்து வந்து வாசலில் நிற்பதும், தெருவில் நேர் வடக்காய்ப் பார்ப்பதும் அவள் நடத்திவந்த காரியங்கள். காலை உன்னிக்கொண்டு தலையை அசாத்தியமாக உற்றுப் பார்க்கிற வகையில் நீட்டிக்கொண்டு, வருகிறவர்கள் யாராய் இருக்கும் என்று நோக்குவாள். தெளிவானவை அவள் கண்கள்; எப்படி நம்பிக்கை இழந்து போயின? ஜோடிபோல் வருகிறதாய்த் தெரிந்தால் இன்னும் கூடுதலான இருதயத் துடிப்புகளோடு, அவர்களின் உருவம் நன்கு புலனாகின்ற வரைக்கும், பக்கமாய் வந்து தன்னைக் கடந்துபோகிற வரைக்கும் பார்த்து நிம்மதிப் பெருமூச்சு விட்டாள். வீட்டுக்குள் வந்தாள். ஓரிடத்தில் தரிக்க மறுத்த கால்கள் அவள் உடம்பைச் சுமந்துகொண்டு சுற்றி வந்தன. படபடப்பு ஓய மறுத்தது. ட்ரான்சிஸ்டரைத் திருகினால், சாந்தம் கிடைக்கும். நீங்கள் கேட்டவை நேரம். தமிழ்ப் பாட்டுகள் கரகரப்புடன் வந்தன சிலோனில் இருந்து. மனசுக்குப் பிடித்தமான பழைய பாடல்கள். தென்றல்போல் உள்ளம் தடவிச்சென்றன. அப்போதும் கண்கள் அலைபாயத் தவறாது. 'காக்காச்சிக்கு என்ன இம்புட்டு மருவாதி? நம்மள நாமே பைத்தியமாக்கி விட்டுருவோமோ?’ 'வர்றவங்க வரட்டும். அதுவரைக்கும் கொஞ்சம் தலை சாய்ப்போம். யார் வர்றாங்கன்னு பாத்துட்டுத்தான் சமயக்கட்டுல போயி உக்காரணும்' என்று தனக்குள் சொன்னவளாய், விடைபெற்றுக் கிடந்த நார்க் கட்டிலில் தலை சாய்த்து, வாசலுக்கு நேரே பார்வை வைத்து, தூங்குவது போலவும் - தூங்காமல் ஓய்வெடுப்பது போலவும் கிடந்தாள். அவள் நிலை அப்படி ஆகவுட்டுத்தான் திடுதிப்பென்று ஏறி வந்தான் கலீல். கடன் சொல்லி வாங்கி வந்திருப்பானோ என்று எண்ணுமளவுக்கு நிறைய இருந்தன சரக்குகள். அவன் களைத்து, கசகசத்து அட்டுப்பிடித்து வந்தான். இவள் இப்படிப் படுத்துக் கிடந்தாள். 'சீச்சீ! எந்திரி... எந்திரி. இது என்ன பொம்பள. இப்படிக் காலைல சொகுசாப் படுத்துத் தூங்கிக்கிட்டு.... அய்யய்யய்ய... அசமந்தம் புடிச்சுக் கெடக்குறதப் பாரேன்...... காலையிலேயே இப்படிக் கிடந்தா மூதேவி தானாவே வீட்டுக்குள்ள வந்துருவாள்!.... ம்......ம்.... எந்திரி...’ அவன் இட்ட ஆணை தூள் பறந்தது. அடித்துப் பிடித்து எழுந்தாள். 'ஆமா! மூதேவி வருவா...? தன்ன மறந்து வருவாளாக்கும்? ராத்திரி போன ஆளா நீங்க? போயி சேந்தீங்கன்னு கண்டது யாரு? சேரலேன்னு கண்டது யாரு? போனோமா வந்தோமான்னு இருக்கத் தெரியலியே இந்த ஆம்பிளங்களுக்கு? இங்க பொம்பள கெடந்து படுற பாடு உங்களுக்கு என்ன தெரியும்?' என்றபடிக்கே எழுந்து நார்க்கட்டிலைச் சாய்த்துப்போட்டு சேலையைச் சரிப்படுத்தி முகத்தைச் சுறுசுறுப்பாக்க இரண்டு கைகளாலும் தடவி விட்டாள். கோபமோ அல்லது மனசுக்குள் வந்த சலிப்போ ஓடிப்போக அவளைப் போய்க் கட்டிப் பிடித்தான். அவனது வியர்வைக் கசகசப்புக்குள் சிக்கிப் போனாள். அப்படிச் சிக்கியதிலோர் சுகம். புலன்களை எல்லாம் படபடப்பில் இருந்து இழுத்துப் போட்டு வேறு வகை அமைதிக்குள் அழைத்துப் போன சுகம். எல்லாம் நேராகி விட்ட மாதிரி. இவன் இருக்கும்போதே விருந்தாளிகள் வந்துவிட்டால், மல்லுக்கட்டி இவனோடு பேச்சையும் ஆவியையும் தொலைப்பதுதான் மிச்சம். 'தண்ணி அடிச்சு வச்சிருக்கியா? குளிக்கணும். வேணா வெயில்ல இன்னிக்கு ரொம்ப தூரம் போவ வேண்டியிருக்கு' என்று துரிதப்படுத்தினான். அவனுக்கான எல்லாமே தயாராகத்தான் இருந்தன. அவனது காலைக் கடன்கள் முடிந்தன.   சைக்கிளில் சரக்குகளை எப்போதும்போல் பயம் பத்திரமாக வைத்தான். அவனை அவள் நெருங்கி மெலிதான குரலில் 'கையில காசு ஏதும் இருந்தா தந்துட்டுப் போங்களேன்' என்றாள். ஒரு வாரத்திற்குப் பின் வியாபாரத்துக்குப் புறப்படும்போதே நஸீமா இப்படிக் கேட்டது கலீலுக்குக் கடுப்படித்தது. 'இன்னைக்கு என்ன புதுப் பழக்கமா இருக்கு? சரக்கு வாங்கியார்றதுக்கே படாத பாடுபட்டு, நாடி தாங்கி நல்ல வார்த்த சொல்லி வாங்கியாந்திருக்கேன். சல்லிக்காசுகூட இப்பக் கையில் இல்லே பாத்துக்கோ. பேசாமப் போயிரு!’ இவளுக்கும் ஆத்திரம், அவசரம் எல்லாம் இருக்கிறது. 'ஏன் சொல்ல மாட்டீங்க? எல்லாம் சொல்லித்தான் செய்வீங்க. மத்தியானத்துக் என்னதான் செய்யிறது?' 'சும்மா வம்பளந்திட்டு நிக்காத. என்ன கெச்சக்கரணம் போட்டாலும் பைசாக் காசும் பேராதுடி. சும்மாத் தொவையலு அரைச்சி வய்யி. கருவாடோ கத்திரிக்காயோ நாளக்கிப் பாத்துக்கலாம்.' எவ்வளவு சுலபமாகச் சொல்லிவிட்டான்? அவள் நெய்மீன் வாங்கவும், முடிந்தால் பொறித்து வைக்கவும் ஆசைப்பட்டுக் கிடக்கிறாள். துவையலாம் துவையல். அவனிடம் காகம் கரைந்ததும், அதற்காக விருந்தாளி வரப்போகிற கதையும் சொன்னோமென்றால் கேலியும் கிண்டலும் பண்ணுவான். அவன் கிண்டல் பண்ணினால் வாயில் இன்ன வார்த்தை வரும் என்று சொல்ல முடியாது. அவன் ஏதும் தர மனத்தளவில் எண்ணி இருந்தாலும் இப்படி ஒரு காரணம் கூறி கதை ஜோடித்தால் அது வேண்டும் என்றே காரியத்தைக் கெடுத்த மாதிரி. வேறு இவனிடம் எப்படித்தான் கேட்பது என்றும் புரியவில்லை. அவனோ இவள் கேட்டது, அதற்கு அவன் பதில் சொன்னது என்று எல்லாவற்றையும் எப்போதோ மறந்துவிட்டது போல கணக்கு நோட்டை எடுக்கவும், பணப்பையைத் தேடுவதுமாக உள்ளேயே அலைபாய்ந்து தடபுடல் பண்ணிக்கொண்டிருந்தான். அவள் தைரியம் வரவழைத்து சொன்னாள், 'இன்னைக்கி என் காக்காவும் மச்சியும் வந்தாலும் வருவாங்க போலத் தெரியுது.' அவன் அதிசயமாகத் திரும்பிப் பார்த்தான். 'வரப்போறோம்னு நம்ம வீட்டுப் போன்ல பேசுனாங்களா? எப்ப வந்துச்சு போனு?' 'இந்தக் கிண்டல்தான் வேண்டாங்குறது! சும்மா வாய மூடுங்க!' 'சரி... மூடிட்டேன்.' 'என்ன சரி.. சரின்னுகிட்டு! எங்கியாவது போயி முட்டிக்கலாம்னு தோணுது.' ’அப்ப முட்டு! எங்க போயி முட்டப் போற?' 'யா அல்லா! அல்லா! போதும்பா உங்களோட கெடந்து மனுஷி அவஸ்தைப்படறது?' 'அப்பச் சொல்லு. எப்படி அவ்வளவு கரெக்டா சொன்னே?' 'ராத்திரி கனவு கண்டேன். பெரிய புள்ள சடங்காயிட்டா. அதுக்கு நம்மள கூப்புட்டு வர்றமாதிரிக் கனவு வந்துச்சு. ' 'அதுக்கு முதல்ல கடிதம் வரட்டும். மத்ததப் பின்னாலே பாத்துக்கலாம். ' 'கடிதம் ஏன் வரணும்? அதான் நேர்லயே வரப்போறாங்களே!' 'யாரு? உங்க அண்ணாச்சி? அடேயப்பா.... பாசம் பொத்துக்கிட்டு வழியுது.' 'அது எதுக்குங்க வீண் பேச்சு? அவுங்க வந்தா ஏதாச்சும் வாய்க்கு ருசியா வெக்க வேண்டாமா? வெறுஞ் சாதத்தையா அள்ளித் திங்கச் சொல்றது?’ 'ஆனா உங்க அண்ணனுக்கு அப்புடிக் குடுக்கலாம்.... வந்தவருக்கு எதுவும் இல்லேன்னு சொல்லாம சோறாவது குடுத்து அனுப்புறமே! அதச் சொல்லு.' நஸிமாவுக்குக் கோபமாகி விட்டது. எதைப் பேசினாலும் எந்த வழி போனாலும் பிடி கொடுக்கிறாரா? எக்காளமும் வேடிக்கையுமாத்தானே போச்சு! 'நேத்து டவுன்ல போயி சினிமா பாக்குறதுக்கு மட்டும் காசு இருந்துச்சா?' ’மூஞ்சில ஓங்கி ஒரு குத்து விட்டேன்னா எப்படியிருக்கும் தெரியுமா? மனுஷன் வியாபாரத்துக்குப் போற நேரத்துல மூட் அவுட்டாக்கிட்டு நிக்காதே!’ அவன் சொன்ன வேகமும் புறப்பட்ட வேகமும் சரியாக இருந்தது. அவளுக்கு ஆத்திரமானால் சொல்ல முடியாத ஆத்திரம். எப்படியும் அவன் ஜெயித்துவிட்டானே. 'என்ன மனுஷன் இவுரு?' அவளுக்கு விருப்பம் இல்லாமலேயே அவள் அழுதுவிடுவாள்போல இருந்தது. தான் அழ நேரிடும்போது யாரும் வந்துவிடக் கூடாதே என்ற அச்சமாக வெளியே வந்து நீர்மல்கிய கண்களுடன் கண்ணோட்டம் விட்டாள். அப்போதே மணி பதினொன்றைத் தாண்டிவிட்டிருந்தது. ஊரில் இருந்து யார் புறப்பட்டு வந்தாலும் கிட்டத்தட்ட வரக்கூடிய நேரந்தான் இது. காலையில் காகம் கரைந்தது மனதில் இருந்து அந்த எண்ணத்தை மட்டும் பிடுங்கிப்போட முடியவில்லை. நேரம் விரைந்தும், ஓரோர் சமயம் மெதுவாயும் கரையக் கரைய கலீல் மீதான கோபம் கரைந்து பலவீனமான நிலையில் கிடந்தது. 'பாவம்! அவருந்தான் என்ன செய்வாரு? கையில் வச்சுக்கிட்டா இல்லெங்குறாரு? யாரு வந்தாலும் போதும் போதும்னு அவுங்களா இவுங்க கையப் புடிச்சி வலுக்கட்டாயமாக் கெஞ்சுறவரைக்கும் உபசரிக்கத்தான் செய்யறாரு. வேண்டாத ஆளு - வேண்டிய ஆளுன்னு கணக்குப் போட்டுப் பாத்த நாளு உண்டுமா? இந்த வீட்டுல கால் வச்சு வந்தவங்க யாரையுமே என்னைக்குமே பிரிச்சுப் பார்த்த நாளே கெடையாதே! இப்படி மனுஷாளுங்களா எத்தன வீட்டுல பாக்க முடியும்? என்ன ஒண்ணுன்னா எதையெடுத்தாலும் கேலி செஞ்சாத்தான் அரிப்பு தீரும்குற மாதிரி நடந்துக்கிடுவாரு. அதுதான் பத்திக்கிட்டு வருது! சொல்லுற மனுஷன் எதையும் பக்குவமாச் சொன்னா என்ன? குடியா முழுவிப் போயிரும்?' பழைய மனுஷியானாள் - கொஞ்ச நேரம் சுவரில் சாய்ந்து ஆசுவாசப்பட்டாள். கண்களை வாசலில் நிலைக்கச் செய்தாள். நீண்ட நேரமாய் நிறைய மனுஷர்களும் மனுஷிகளும் கண்களில் பட்டு, பின் நழுவினர். 'என்னமோ ஒரு நேரம் இப்படி மாட்டிக்கிட்டோம். எல்லாக் காலமும் இப்படியேவா இருந்துறப் போறோம்? கஷ்டப்படுறோம்னு யாரும் வேண்டாம்னா ஆயிருச்சி? மனசு கெடந்து இப்படிக் கழுதப் பொரட்டுப் பண்ற அளவுக்கா நாம மோசமாப் போயிட்டோம்? கண்டிப்பா இன்னைக்கு யாராவது நம்ம வீட்டுக்கு வரணும்!' அடுக்களை வேலையினூடே எட்டி எட்டிப் பார்த்தாள். உச்சியை அடைந்த சூரியன் மேற்குத் திசைப் பிரியமாய் நகரலானான். உள்ளூரிலேயே ஒரு ரவுண்டு வேக வேகமாக முடித்து விட்டு பக்கத்துக் கிராமங்களுக்குப் போகிற வழியில் வீட்டுக்கு வந்தான் கலீல். சைக்கிளை வெளியே நிறுத்திவிட்டு உள் நுழைந்து அரக்கப் பரக்கப் பார்த்தான். எவருமே வந்து சேரவில்லை. ஏனென்றும் புரியவில்லை. நட்ட நடு வீட்டில் இருப்பின் மீது இரு கைகளையும் வைத்து அசையாமல் நின்று, நிலைகுத்திய பார்வையோடு என்னவோ யோசனையாக இருந்தவன் முந்தியை அவிழ்த்து இருபது ரூபாயை எடுத்துக் கொடுத்தான். 'இன்னும் கொஞ்சம் பொறுத்துப் பாரு. ஹோட்டல்லியாவது எதையாவது வாங்கிக்குடு. நான் போயிட்டு வெரசலா வந்துருதேன்' என்றான். அவளுக்கு இன்று வாழ்க்கை பூரணமாகக் கிடைத்ததைப்போல இருந்தது. மீண்டும் வெளியே வந்து வெயிலின் கோரத்தைப் புறந்தள்ளிவிட்டு சைக்கிளை மிதித்துப் பறந்தான். சொன்னபடிக்கே அனேகக் காடு கரைகளுக்கும் போய்விட்டு வீட்டுக்கு வந்திருக்கும் விருந்தாள்கள் பற்றிய சிந்தனையோடு கனவேகமாய் வந்தும் யாரும் வந்திருக்காத வீட்டையே காண முடிந்தது. அன்று மட்டுமல்ல; அதன்பின் பல நாட்களுக்கும் கூடத்தான். தாமரை, அக்டோபர் 1992 11. நிற மாற்றம்   எடுத்த எடுப்பிலேயே தகராறு மூண்டு விட்டது. கனத்த உரத்த குரல்களால் அந்த இடமே சந்தை போலாகிவிட்டது. ஜப்பார் சற்றே பயத்தோடும் வெட்கத்தோடும் நடுங்கிக் கொண்டிருந்தான். பாலகிருஷ்ணன் தன் நிலைமையிலேயே நின்றபடி ஜப்பாரோடும் அவனது தாலுகா அலுவலக நண்பர்களோடும் தர்க்கித்துக் கொண்டிருந்தான். எதிரே கண் சிவக்க நின்றிருந்த காவன்னா முதலாளி பாலகிருஷ்ணனை எரித்து விடுவது போலப் பார்த்தார். இந்த விஷயத்தில் அவனது வேலை, அந்தஸ்து, பரஸ்பர நம்பிக்கை, காவன்னா முதலாளிக்கும் அவனது அப்பா வேல்சாமிக்கும் உள்ள உறவு என்று எல்லாமே அகன்று போய்விடும். பரிதாபமாய் நின்றபடி ஜப்பார், பாலகிருஷ்ணனை நோக்கிக் கூறினான். 'மனசறிஞ்சு பொய் சொல்லாதே, பாலு!’ 'நான் பொய் சொல்லலே சார்! நீங்களே நல்லா யோசிச்சுப் பாருங்க. சத்தியமா என் கையில் ரூபாயத் தரவேயில்ல. தந்திருந்தீங்கன்னா உடனே ஒங்க கணக்குல வரவு வச்சிருப்பேன் சார். தயவு செய்து என் பொழைப்புல மண்ண வாரிப் போட்டுறாதீங்க!' என்று பாலகிருஷ்ணன் கெஞ்சினான். 'என்ன பாலு இப்படியெல்லாம் வார்த்தையப் போட்டு முகத்தை முறிக்கிற மாதிரிப் பேசுற? நல்லா யோசிச்சுப் பாரு. ஊருக்குப் போற அவசரத்துல உன் கையில் ரூபாயத் தந்துட்டு வரவு வச்சுக்கோண்ணு சொல்லிட்டுப் போனேன். இந்தளவுக்கு நீ மறந்து போயிடுவேன்னு தெரிஞ்சா நானே என் கையால் வரவு வச்சிட்டுப் போயிருப்பேனே! இப்ப வந்து இப்படியெல்லாம் பொய் பேசுறீயே!’ ஜப்பார் தெவிங்கி தெவிங்கிப் பேசினான். வார்த்தைகளை ஒழுங்காய் அவனுக்கு அடுக்க முடியவில்லை. தன் வாதமும் முயற்சியும் இப்படிப் பலரடங்கிய ஒரு அந்தஸ்து மிக்க கூட்டத்தின் முன் கொஞ்சமும் எடுபடாமல் நொறுங்கி விழுவதைப் பொறாமல் காவன்னா முதலாளியிடமே பாலகிருஷ்ணன் கெஞ்சினான். 'முதலாளி என்னய நீங்க அப்படிப் பார்க்காதீங்க. நெசம்மாவே இவரு என்கிட்ட ரூபாயத் தரவுமில்ல; நான் பொய் சொல்லவுமில்லை. அவருதான் எங்கியோ பணத்த விட்டுப்போட்டு இப்ப என்னப்பாத்துக் குத்தம் சுமத்துறாரு!’' அவன் குரல் நடுங்கியது. கண்களில் மருட்டு தென்பட்டது. 'படுவா, ராஸ்கல்! நீ வரவரப் பொய் பேச ஆரம்பிச்சுட்டே! எனக்கு நீ காட்டுற விசுவாசமா இது? எவ்வளவோ கஷ்டப்படுறியேன்னு தான் இந்தக் கல்லாவுல உன்னப் பொறுப்புல வச்சேன், பொய் பேச வேண்டிய அளவுக்கு அவங்க யாரும் வேலையிலியோ அந்தஸ்திலியோ கொறைஞ்சு போனவங்க இல்ல. அத முதல்ல தெரிஞ்சிக்கிடா சின்னப் பயலே!' என்றபடி ஆவேசமாய்ப் பாலகிருஷ்ணனின் சட்டையைப் பிடித்து உலுக்கினார். அவன் திணறினான். 'முதலாளி, நான் எந்தப் பள்ளிவாசலுக்கும் இல்லே கோயிலுக்கும் வந்து சத்தியம் பண்றேன். அத மாதிரி அவரும் வந்து தைரியமா சத்தியம் பண்ணட்டும் பாப்போம்!' என்று ஜப்பாரை முறைத்தபடியே ஓங்கிய குரலில் கூறினான். 'இவ்வளவு தூரம் பேச வந்துட்டியா பொறுக்கிப் பயலே!' என்றபடி ஜப்பாருக்குப் பின்னால் நின்று கொண்டிருந்த மாயாண்டி ஆவேசத்துடன் முன்னே வந்து பாலகிருஷ்ணனின் கன்னத்தில் ஓங்கி அறை விட்டான். ஒரு கணம் அவன் அதிர்ந்து விட்டான். கண்முன் பூச்சிகள் நெளிந்தன. உஷார் நிலைக்குத் திரும்பியதும் அவனும் மாயாண்டியைக் கன்னத்தில் அறைய முயன்றபோது ஜப்பானின் நண்பர்களும் கடையில் சாப்பிட வந்து வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தவர்களுமாய்க் கூடி அப்படியொரு அசம்பாவிதம் நிகழாமல் தடுத்தார்கள். அவன் தளராமல் முண்டிக் கொண்டிருந்தான். கூட்டத்திலிருந்த யாரோ ஒருவர் 'இவனுங்களக் கல்லாவுல பொறுப்பா வச்சிருந்தா முதலாளிக்குப் பட்டை நாமம் போட்டுறுவானுங்க. முதலாளி அம்போன்னு போயிட வேண்டியதுதான்.' ஹோட்டல் கல்லாவின் முன் நிகழ்ந்த இந்த அசம்பாவிதத்தாலும், ஜப்பார் பணத்தைத் தரவில்லையென்று பொய் கூறி விட்டானே என்கிற ஆத்திரத்தாலும், எல்லோரும் கூடி நின்று வேடிக்கை பார்க்கவும், வியாபாரம் பாதிக்கவுமாச்சே என்கிற எரிச்சலினாலும் காவன்னா முதலாளி பாலகிருஷ்ணனைக் கழுத்தைப் பிடித்து வேகமாய் வெளியே தள்ளினார். 'இந்தப் பணத்தோட போய்ச் சேருடா- நன்றி கெட்டவனே!’ பலரின் முன்னிலையில் அடிபட்டு, அவமானமடைந்து வேலையும் இழந்த குரூரத்தினால் ஏறெடுத்துப் பார்க்கவும் வகையற்றவனாய்ச் சுவடு இல்லா வேகமாய்ப் போனான் அவன். ஹோட்டலிலும் ரோட்டோரத்திலும் நின்று ஆவலுறப் பார்த்த அனைவரும் பாலகிருஷ்ணன் வெளியேறிய பின் காட்சிகள் எதுவுமில்லையென்று கலைந்து போயினர். 'ஜப்பார்! நடந்ததை மறந்துடுங்க. அவன் கணக்குல நான் சரிக்கட்டி சிடறேன். வழக்கம்போல் நீங்க சாப்பிட வாங்க. மனசுல வருத்தம் வச்சுக்காதீங்க' என்று காவன்னா முதலாளி அவன் கையைப் பற்றியவாறு கேட்டுக் கொண்டார். வெளியே வந்ததும் மாயாண்டி கேட்டான், 'ஜப்பார்! நல்லா யோசிச்சுப் பாரு. உண்மையாகவே நீ ரூபா குடுத்தியா? ஏன்னா பாலகிருஷ்ணனும் தெவுங்கிட்டான். அவன் பொய் பேசுற பையனாவும் தெரியல!' 'மாயாண்டி! நீயுமா என்னய சந்தேகிக்கிற?' என்று பரிதாபமாய்க் கேட்டான். கூட வந்திருந்த பார்த்திபன் சொன்னான், 'தப்பா எடுத்துக் கிடாத ஜப்பாரு! உனக்கும் உன் குழந்தை படுற கஷ்டத்துல மறதியாயிருக்கலாமில்லியா. அதனால் தான் மாயாண்டி அப்படிக் கேக்கிறான்.' மற்ற நண்பர்கள் ராமுவும் குமாரும் அவனை நன்கு யோசித்துப் பார்க்கும்படியும் அனாவசியமாய் ஒருவனின் வேலை கெட்டுப் போகக் கூடாது என்றும் ஜப்பாரிடம் அபிப்ராயம் தெரிவித்தார்கள். மேன்மை மிக்க ஸ்தானத்திலிருந்து கீழே கீழே நழுவி வருவதைப் போல் இருந்தது. அவனை பஸ் ஸ்டாண்டில் விடை கொடுத்து நண்பர்கள் பிரிந்து சென்றதும் தனியாளானான். எல்லா நிலைகளிலும் தான் தனியாளாகி விட்டோமோ என ஜப்பார் ஐயுற்றான். விடை பெறுகையில் மீண்டும் மாயாண்டி சொல்லிவிட்டுச் சென்றது ஞாபகம் வந்தது. 'எப்பாடு பட்டாவது உன் குழந்தைய நல்லா கவனிச்சுக்கோ. உனக்கு அந்தக் குழந்தை ஞாபகத்தாலேயே எல்லா வகையிலும் நீ சோர்ந்திட்டே இருக்கிறது ஒரே ஒரு ஆண் குழந்தை. நல்லா கவனிச்சுக்கோ. என்ன செலவானாலும் பரவால்ல. பார்க்கவே பாவமாத் தோணுற!' 'பாவம் - பாவம்! யாரைப் பாத்துப் பாவம்னு சொல்ற? நான் யாரு தெரியுமா? பொட்டை குளம், ஹாஜி ஆனா செனா சாகிபோட பேரனாக்கும்! என்னப் பாத்தா பாவம்னு சொல்ற!' அவனிடம் இதனைச் சொல்லாமல் விட்டோமே என்னும் கூடுதலான ஆத்திரத்தால் மனம் இன்னும் குமுறியது. குமுறி என்ன செய்ய? எப்படிப் பார்த்தாலும் இன்றைக்குப் பழம் பெருமை பேசித்தானே ஜம்பம் அடிக்க வேண்டியுள்ளது! நெஞ்சை நிமிர்த்தி கெளரவமாய் வாழும் வாழ்க்கை அற்றுப் போச்சே! ஜப்பாரின் நடை தொய்ந்து போனது. ஆபீஸ் முடிந்து ஹோட்டலில் தாவா பண்ணிய பின் ஊர் வந்து சேர்ந்த பிறகும் அமைதியுறாமல் தவித்தது. துவண்டது. தன் மீதுதான் எல்லோருக்கும் சந்தேகம் முளைவிடுகிறதா? தன் முகமும் தன் பேச்சுமே தான் தான் குற்றமுள்ளவன் என உணர்த்துகிறதா! சே! என்ன வாழ்க்கை? அரைக்காசு உத்தியோகமானாலும் அரசாங்க உத்தியோகம் என்று பெருமையடிக்கவா முடிகிறது? வாய்க்கும் கைக்கும் தான் சரியாகிப் போகிறதே; அவன் இப்போது பச்சாதாபப்பட்டன் தன் மீதே. 'என்னங்க சோர்வாயிருக்கீங்க?' குழந்தையை இடுப்பில் வைத்துக் கொண்டிருந்த நஸ்ரின், அவன் வீட்டில் நுழைந்த மறு நிமிஷமே இந்தக் கேள்வியைத்தான் கேட்டாள். எப்போதும் வருகிறாற் போல் இப்போது அவன் வரவில்லை என்று அவளுக்குப் புரிந்தது. வாரத்தின் வெள்ளிக்கிழமை இரவில் ஊர் வந்து பின் திங்கள் காலை வேலைக்குப் பயணமாவான். வேலை பார்க்கும் ஊரில் வசதியாய் வீடு கிடைக்காததும், சொந்த ஊரை விட்டு அப்படி ஒன்றும் பெரிய தூரமல்ல என்றெண்ணியும் தான் அங்குமிங்குமாய் அலைய நேரிட்டது. குழந்தைக்கு சுகமில்லை என்றான இந்த ஒரு மாத காலமும் அவன் வேலைக்குப் போகவே வேண்டும். அவன் நிலை அப்படி கிடந்தது. அதிலும் இன்று மாலை ஒரு கருப்பு அத்தியாயம் நேர்ந்து விட்டது. 'சோர்வுன்னு ஒண்ணுமில்ல. பையனப் பத்திதான் மனசு இன்னும் அலைபாஞ்சிட்டு இருக்கு ! தன் குழந்தையின் மீது நோய் தொடுத்திருக்கும் தாக்குதலை எப்படியேனும் முறியடித்துவிட வேண்டும் என்ற தொனியினால்தான் அவனால் பேச முடிந்தது; ஆனால் ஒரு பாதி உண்மையைத் தான் நஸ்ரின் நம்பினாள். 'நேரமாயிட்டே இருக்கு. உங்களைத்தான் எதிர்பார்த்துக்கிட்டு இருந்தேன். வாங்க டாக்டர் கிட்ட போய்ட்டு வருவோம்!' என்று படபடப்பாய் அவள் அவனை அழைத்தாள். ஓடியாடித் திரிந்த குழந்தைக்கு என்னதான் ஆகிவிட்டது? காய்ச்சல், வயிற்றுப்போக்கு என்று உடல் தளர்ந்து நோய் வளர்ந்து இப்போது ஒரேயடியாகப் படுத்துவிட்டது. இளைப்பு சேர்ந்து கொண்டது. எத்தனையோ டாக்டர்களை உள்ளூரிலும் சுற்று வட்டாரத்திலும் பார்த்தாயிற்று. சரிப்பட்டு வரவில்லை. செலவோ வாரிக்கொண்டு போய்விட்டது. இப்படியே விட்டுக்கொண்டிருந்தால் குழந்தை எப்படி உருப்பெறும்? பெண் குழந்தையல்லாமல் ஆண்டவன் தன்மீது கருணைப்பட்டே கொடுத்த இந்த ஆண் குழந்தையும் பிரிந்து விட்டால்...? அவனால் நினைத்துப் பார்க்க முடியாத அளவுக்கு வேதனைகள் உருக்கொண்டு வளர்ந்திருந்தன. அதன் பொருட்டே பலவிதமாகவும் கசிந்துபோய், பிறரின் துன்ப துயரங்களையும் மனத்திலெண்ணாது பொய் புகன்றும், மாசில்லாத தன் வேலையில் சமீப காலங்களில் மாசினை உண்டாக்கியும் உருண்டு கொண்டிருந்தான். ஆயினும் கூட இன்னமும் ஓர் அரசாங்க குமாஸ்தாவின் எல்லைக்கும் தகுதிக்கும் மீறிய செலவினமே. 'பொறுத்ததே பொறுத்த நஸ்ரின்! காலைல வரைக்கும் பொறுத்துக்கோயேன். ஹைகிரவுண்டுல ஒரு நல்ல டாக்டர் இருக்காராம். எப்பேர்ப்பட்ட நோயாயிருந்தாலும் அவரு குணப்படுத்திடுறாராம். காலைல மொத பஸ்ஸில் நாம் புறப்பட்டுருவோம்.' நஸ்ரினுக்கு ரொம்பவும் சந்தோஷமாக இருந்தது. குழந்தைக்கு நலம் வந்து சேரும் என்ற நம்பிக்கையும் உண்டாயிற்று. விடியலை நோக்கிக் குழந்தையை மடியில் வைத்துத் தாலாட்டியபடியே காத்திருந்தாள். பஸ்ஸில் சென்று கொண்டிருந்த அந்த அதிகாலை வேளையிலும்கூட அவனது இருப்பும் முகபாவமும் அவளுள் பல்வேறு குழப்பங்களை உண்டுபண்ணிய படிக்கே இருந்தது. வாயைத் திறந்து கேட்க நினைத்துப் பின் அவன் எரிச்சலடைவானோ, கோபப்படுவானோ என்கிற எண்ணத்தில் பல முறை கேட்காமலேயே விட்டு விட்டாள். ஆனாலும் மனம் பொறுக்க வழியில்லாமல் இறுதியாக அவள் நாக்கு அசைந்தது. நானும் கவனிச்சிட்டேதான் இருக்கேன். நேத்து நீங்க வந்ததிலேருந்து ரொம்பவும் சோர்ந்தே போய் இருக்கீங்களே, என்கிட்ட என்னன்னு சொல்லக் கூடாதா?’ அவன் சொல்லவில்லை. ஆத்திரத்துடன் கேட்டாள். ‘அந்த அளவுக்கு நான் அன்னிய ஆளா?' இப்போது அவள் அன்னியளாகத்தான் பட்டாள். இந்தக் கூறுபட்டுப் போயிருக்கிற உள்வெளி மானங்களிலிருந்து எந்த உடைந்த பகுதியைத் தூக்கி இவள் முன்பு காட்டுவது? எவ்வளவோ உயர்வாய் மதித்துக் கொண்டு நடந்து வருகிறாளே! தன் இன்னொரு முகத்தைக் காட்டினால், அதன் நிஜ ரூபத்தை வெளிப்படுத்தினால் காறித்துப்ப மாட்டாளா இவள்? நோய்ப்பட்ட குழந்தையின் பொருட்டுத்தான் இன்னின்ன மாதிரியெல்லாம் நடக்க வேண்டியதாயிற்று என்று சொன்னால் இவள் தன்னோடு இசைந்து விடுவாளா? ஒருத்தன் குடும்பத்தைப் பரிதவிக்க விட்டுட்டு நம்ப குழந்தையை எப்படிங்க சுகப்படுத்துறது? ஆண்டவனுக்கே பொறுக்காதே என்று தான் அவளால் கேட்க முடியும். பிற பாவ புண்ணியங்களின் பொருட்டேதான் தன் குடும்ப வாழ்க்கையின் ஏற்றமும் இறக்கமும் என்றெண்ணி வருகிற பெண்களின் மத்தியில்தான் அவளும் அவளது நியாய ஒழுங்குகள் கூட இவ்வாறான நம்பிக்கையின் அடிப்படையில்தான் இயங்க முடியும் என நம்புவதற்கில்லை. இயல்பாகவே அவளது நல்ல மனம் ‘நமக்குள்ள பணக் கஷ்டத்துலதான் இப்படி செஞ்சுட்டீங்க. நாளைக்கே போயி உண்மையை ஒத்துக்கிட்டு பணத்தைக் குடுத்துட்டு வந்திடுங்க' என்று அவள் சொன்னால் அவன் என்ன செய்ய முடியும்? பணமும் உண்டா? இத்தனை அசம்பாவிதமான சம்பவங்களை நிகழச் செய்துவிட்டு ஒருவனைத் திருட்டுப் பட்டம் சுமக்க விட்டு, இனிப் போய் உண்மையை ஒத்துக் கொண்டால்   இன்னமும் களங்கப்பட்டுப் போகும் வாய்ப்பு தானே. ஒரு மாயத்திரை இப்போது அது மேன்மையைத் தருவதாயிருக்கையில், அதை அப்படியே விட்டு விடுவதுதானே சிறப்பு. உண்மையை ஒப்புக் கொள்ளும் பட்சத்தில் அதன் சரியான கோணத்தை எல்லாராலும் உணர்ந்தறியும் திறன் இருக்குமென அவன் நம்பவில்லை. ஒரு பக்திமானாக இருந்தும் அடுத்தவன் வாழ்க்கையை நாசப்படுத்த முதல்ல மனசு எப்படி வந்தது என்று யாராவது ஒருவர் கேட்டுவிட மாட்டார் என்பது என்ன உத்தரவாதம்? எண்ண எண்ண அவமானப் பாம்புகள் சூழ நின்று சீறிப் பாய்வன போல் பயந்தான். மனைவியின் முகம் பார்க்கவும் மனமில்லாமல் சீட்டில் தலை சாய்ந்தான். கள்ளங்களையும் காடுகளையும் ஒருவன் புரியவிட்டு விட்டு, கள்ளங் கபடுகள் இல்லாத குழந்தை அவள் மடிமீது சயனித்திருந்தது. நஸ்ரின் அவனைக் கூர்ந்து நோக்கியபடியே இருந்தாள். அவனது ஒவ்வொரு அசைவினிலும் வித்தியாசம் தெரிகிறது. அவன் அவனாகவே இல்லை என்பதும் புரிகிறது. எந்த விஷயம் கொண்டு அவன் இப்படி ஆனான்? அவளது கனத்த குழப்பத்திற்கு விடை கிடைக்க முடியாதபடி ஹைகிரவுண்ட் ஸ்டாப்பை பஸ் எட்டிப் பிடித்திருந்தது. டாக்டர் மிகுந்த தெம்பையும் மனச்சாந்தியையும் கொடுத்தார். குழந்தை எவ்வளவு அவஸ்தைப்பட்டுப் போயிருந்தாலும் நோய் முற்றாத ஓர் இடை நிலைக் கட்டம்தான் என்றும் தொடர்ந்து இரண்டு மாதங்கள் வரைக்கும் மாத்திரைகளும் டானிக்கும் கொடுத்து வந்தால் பூரண சுகம் கிடைத்து விடுமென்றும் அவர் நம்பிக்கை சுடர்வீசச் சொன்னபோது ஒரு சிதிலமடைந்த உலகம் புதுப்பிக்கப்பட்டு, கைமீது தரப்பட்ட புத்தம்புது உற்சாகம் கரை புரண்டு பெருகிப் பாய்ந்தது. ஆஸ்பத்திரியை விட்டு மலர்ச்சியான முகத்தோடு உற்சாக நடைபோட்டு இருவரும் வெளிவந்தபோது இனிய தென்றல் அவர்களைத் தொட்டுத் தழுவிக் கவிதை பாடிச் சென்றது. திடீரென்று பாலகிருஷ்ணனின் முகத்தில் மாயாண்டி அறைகிற காட்சி விசுவரூபமெடுத்தது. திசை நான்கிலிருந்தும் கூரிய அம்புகள் ஜப்பாரை நோக்கிப் பேரிரைச்சலோடு பாய்ந்தன. விண்விண் என்று நரம்புகள் தெறித்தன. தலைமீது பெரும் பாறாங்கல் ஏறி அமர்வதைப் போன்றிருந்தது. ஒரு கணம் தலையை வேகமாகச் சிலுப்பிக்கொண்டான். நஸ்ரின் குழந்தையின் முகத்தில் மாறிமாறி முத்தங்களைப் பொழிந்த வண்ணம் இருந்தாள். மனதை எதிலும் நிலைநிறுத்த முடியாமல் இவன் திணறியபோது நெஞ்சுக்குள் வலிமை கொண்ட வலி தாக்கிற்று. சட்டைப் பையிலிருந்து வேகமாய்க் கைத்துண்டை உருவி முகத்தை மூடிக்கொண்டும், நெஞ்சைப் பிடித்துக்கொண்டும் வேப்பமர நிழலில் உட்கார்ந்தான். எதையும் வாய் திறந்து சொல்ல முடியாமல் மரத்தின் அடிப்பகுதியில் சாய்ந்தான். தன் எதிரியாகத் தானே எதிரில் நிற்பதுபோல் தோன்றியது. வேறெதிலும் கவனமின்றி, நிழலை அநுபவித்துக்கொண்டே குழந்தைக்கு முத்தங்களைப் பொழிந்தவண்ணம் பஸ்ஸுக்காகக் காத்திருந்தாள் அவள்.   தாமரை, மார்ச் 1988                     ஆசிரியர் குறிப்பு திருநெல்வேலி மாவட்டம் களக்காட்டைச் சேர்ந்தவர் களந்தை பீர் முகம்மது. 30 ஆண்டுகளாக கதைகளும், கட்டுரைகளும் எழுதி வருகிறார். இந்தியா டுடே, காலச்சுவடு, குமுதம், அவள் விகடன், தீராநதி, ஸன்டே இந்தியன், தாமரை, செம்மலர், கணையாழி, புதிய பார்வை, ஓம் சக்தி, ஜன சக்தி, தீக்கதிர், கல்கி, தமிழர் கண்ணோட்டம் போன்ற பத்திரிக்கைகளில் இவருடைய படைப்புகள் வெளிவந்துள்ளன. தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றத்தின் வழியாக உருவான படைப்பாளி இவர். காலச்சுவடு மாத இதழில் ஆலோசனைக் குழு உறுப்பினராக இருக்கின்றார். கலை இலக்கிய பெருமன்றம், முற்போக்கு எழுத்தாளர் சங்கம், இலக்கிய சிந்தனை, திருப்பூர் தமிழ்ச்சங்கம், இஸ்லாமிய இலக்கியக் கழகம் போன்ற அமைப்புகளில் தன்னுடைய படைப்புகளுக்காக பரிசுகளைப் பெற்றிருக்கிறார். கோவை லில்லி தேவசிகாமணி நினைவு பரிசு, ஜோதி விநாயகம் நினைவுப் பரிசுகளையும் பெற்ற பெருமை இவருக்கு உண்டு. 60க்கு மேற்பட்ட சிறுகதைகளை எழுதியிருக்கிறார்.