[] இனியவை நாற்பது (கட்டுரை) தஞ்சை வெ.கோபாலன் மின்னூல் வெளியீடு : http://FreeTamilEbooks.com சென்னை இனியவை நாற்பது (கட்டுரை) Copyright © 2014 by Creative Commons Attribution-NonCommercial-NoDerivs 3.0 Unported License. This book was produced using PressBooks.com. Contents - அறிமுக உரை - 1. எது இனிது? - 2. பிறர்க்கு ஈதல் இனிது - 3. மூன்றாம் இனிமை - 4. நான்காம் இனிமை - 5. இனியது ஐந்து - 6. இனியது ஆறு - 7. ஏழாவது இனிமை - 8. எட்டாவது இனிமை - 9. ஒன்பதாவது இனிமை - 10. பத்தாம் இனிமை - 11. பதினொன்றாம் இனிமை - 12. இனியது பன்னிரெண்டு - 13. பதிமூன்றாம் இனிமை - 14. இனியது பாதினான்கு - 15. பதினைந்தாம் இனிமை - 16. பதினாறாம் இனிமை - 17. பதினேழாம் இனிமை - 18. பதினெட்டாம் இனிமை - 19. இனியது பத்தொன்பது - 20. இனியது இருபது - 21. இனியது இருபத்தியொன்று - 22. இனிமை இருபத்தியிரண்டு - 23. இனியவை இருபத்திமூன்று - 24. இனியவை இருபத்திநான்கு - 25. இனியவை இருபத்தைந்து - 26. இனியவை இருபத்தியாறு - 27. இனியவை இருபத்தேழு - 28. இனிமை இருபத்தியெட்டு - 29. இருபத்தியொன்பதாம் இனியது - 30. முப்பதாம் இனிமை - 31. இனியவை முப்பத்தியொன்று - 32. இனியவை முப்பத்தியிரண்டு - 33. இனியவை முப்பத்திமூன்று - 34. முப்பத்திநான்காம் இனிமை - 35. இனியவை முப்பத்தைந்து - 36. இனியவை முப்பத்தியாறு - 37. இனியவை முப்பத்தியேழு - 38. இனியது முப்பத்தியெட்டு - 39. இனியவை முப்பத்தியொன்பது - 40. இனியவை நாற்பது (நிறைவுப் பகுதி) - எங்களைப் பற்றி - Free Tamil Ebooks 1 அறிமுக உரை [Cover Image] தமிழ் இலக்கியங்களை அனைவரும் முழுமையாகப் படித்தல் என்பது இயலாது. காரணம் நமது கல்வி முறை. தனித் தமிழில் பட்டப் படிப்புகள் படித்தவர்கள்கூட எல்லா இலக்கியங்களையும் பாடத் திட்டத்தில் படித்திருக்க வாய்ப்பில்லை. ஆர்வம் காரணமாக அவரவர்க்குப் பிடித்தமான இலக்கியங்களைப் படித்து அதில் முழுமையான புலமை பெற்றவர்கள் பலர் உண்டு. அப்படிப்பட்ட ஆர்வத்தை முடிந்த வரை பலருக்கும் ஊட்டவேண்டுமென்கிற எண்ணத்தில் சில இலக்கியங்களின் உட்பொருளை இங்கே கதை வடிவில் கூறினால் என்ன என்ற எண்ணத்தின் வெளிப்பாடு இந்த கட்டுரைத் தொடர். படித்தபின் உங்கள் கருத்துக்களை எழுத்தில் வடித்துக் கொடுங்கள். நன்றி. தஞ்சை வெ.கோபாலன் மின்னஞ்சல்: privarsh@gmail.com   அட்டைப் படம் – ப்ரியமுடன் வசந்த் – vasanth1717@gmail.com அட்டைப் பட மூலம் -  https://www.flickr.com/photos/puntodevista/231159705 மின்னூலாக்கம் – பிரியா – priyacst@gmail.com   [pressbooks.com] 1 எது இனிது? அவனது குழந்தைப் பருவத்தில் அவன் தந்தை காலமாகிவிட்டார். அவர் போன பின்பு குடும்பம் வறுமையில் தடுமாறியது. என்ன செய்வது? உறவினர்கள் எவரும் கைகொடுக்க முன்வரவில்லை. இருந்ததை விற்று ஓரளவு காலம் கடந்ததாயினும், உயர்நிலைப் பள்ளி கல்வி பயில உதவுவார் எவருமில்லை. சென்னையில் இராமகிருஷ்ணா மடத்தில் அண்ணா சுப்பிரமணிய ஐயர் என்பவர் இருக்கிறாராம். அவரிடம் சென்றால் உதவி செய்யக் கூடும் என்று யாரோ தெரிந்தவர்கள் சொன்னார்கள். இவனும் சென்னை சென்றான். மயிலாப்பூர் பகுதியில் இருந்த மடத்துக்குச் சென்று அங்கிருந்த மாணவர் இல்லத்தில் அண்ணாவைச் சந்தித்து வேண்டிக் கொண்டான். அவர்தான் என்ன செய்வார் பாவம். அவர் கட்டுப்பாட்டுக்குள் இருந்த விடுதி நிரம்பி வழிந்தது. புதிதாகச் சேர்த்துக் கொள்ள முடியாத நிலை. வேறு சிலரைப் போல என்றால் நான் என்ன செய்ய முடியும், போய் வேறு எங்காவது பார் என்று சொல்லி விடுவார்கள். அண்ணா இரக்கமும், மனிதாபிமானமும் உடையவர். இந்த கைங்கர்யத்துக்காகவே தன்னை அர்ப்பணித்துக் கொண்டவர்.  அவர் அவன் நிலைமைக்கு இரங்கி ஒரு வழி சொன்னார். மயிலாப்பூர் மாட வீதிகளில் நிறைய வக்கீல்கள் இருக்கிறார்கள். அவர்களில் அனைவருமே வசதியானவர்கள், அவர்களில் இரக்க குணம் படைத்த சிலர் இவனைப் போன்ற ஏழை மாணவர்களுக்கு உணவு கொடுப்பதை தர்மமாகக் கடைப்பிடித்து வந்தனர். ஒவ்வொரு கிழமை ஒருவர் வீடு என்கிற முறையில் ஏழை மாணவன் வாரம் முழுவதும் ஒவ்வொரு வீடாகச் சென்று சாப்பிட முடியும். மீண்டும் அடுத்த வாரம் அதே சுற்று முறையில் சாப்பாடு, தங்கிக் கொள்ள ஒரு நல்ல மனம் படைத்தவர் வீட்டு மாடியில் அமைந்திருந்த கீற்றுக் கொட்டகையில் இடவசதி செய்தி கொடுத்தார்கள். துணிமணி உடைகள் வசதி படைத்த வீட்டுப் பிள்ளைகள் போட்டு பழசான உடைகளை வாங்கி அணிந்து கொள்ள முடிந்தது. இப்படி அண்ணாவின் தயவால் இவன் கல்வி உயர்நிலைப் பள்ளியில் முடிந்து, தொடர்ந்து விவேகானந்தா கல்லூரியில் படிக்கவும் அவர் தயவையும், வேறு சிலர் உதவிகளையும் வாங்க கையேந்தும் நிலை இருந்தது. இது பிச்சைதான் என்ன செய்வது? இது தவறாகுமா? இல்லை “பிச்சை புகினும் கற்கை நன்றே” என்பது தமிழின் ஆணை. இப்படிச் செய்தல் இனியதாம். ஆம்! ஒரு தமிழிலக்கியமும் சொல்லுகிறது. “பிச்சை புக்காயினும் கற்றல் மிக இனிதே” என்று.  இப்படி பிறர் உதவியோடு கற்ற பின் அந்தக் கல்வி தனக்கு மட்டும் என்ற சுயநலம் சரியாகுமா? ஆனால் தன்னைக் காப்பாற்றிக் கொள்ளவும், வாழ்க்கையில் முன்னேறவும் தானே இந்தக் கல்வியைப் பயின்றான். ஆனால் அப்படிப் பயின்ற கல்வி அவனுக்குச் சொன்ன போதனை என்ன தெரியுமா? போ! போய் கற்றோர் மிகுந்த சபையில் கல்வி அறிவு மிக்கோர் பலர் உண்டு. அவர்களுக்கு அவையில் பல உதவிகள் தேவைப்படலாம். அத்தகைய உதவிகளைச் செய்ய நீ பயின்ற கல்வியும் பயன்படலாம். போய் அங்குள்ள பெரியோர்களுக்கு உதவியாக இரு என்கிறத் அதே இலக்கியம். “நற்சபையில் கைக் கொடுத்தல் சாலவும் முன் இனிதே” என்கிறது அது. இப்படி வாழ்வில் பிறர் உதவியோடு படித்து, கற்றோர் அவையில் நல்ல பெயர் எடுத்து வாழ்வில் உயர்ந்து சம்பாதித்து கெளரவமான பதவியும் கிடைத்த பின் முத்து என ஒளிறும் பல் படைத்த பெண்களின் கடைக்கண் பார்வை அவன் மீது படும். அது தவறல்ல. அத்தகைய நற்குணம் கொண்ட பெண்களின் காதலை ஏற்றுக் கொள்வதோடு, சான்றோர்களோடு பழகி, அவர்கள் காட்டும் நல்வழியில் பயணிப்பானானால் அவன் பிறவி எடுத்த பயன் அடைந்தவனாவான். இப்படிச் சொல்கிறது அந்த இலக்கியம். அது எந்த இலக்கியம்? வாழ்க்கைக்கு இனியவைகளாக நாற்பதைச் சொல்லும் “இனியவை நாற்பது” என்ற இலக்கியம்தான் அது. தமிழில் பதினெண் கீழ் கணக்கு எனும் வகையைச் சேர்ந்தது இந்த நூல். இனியவைகளான நாற்பதைக் குறித்து இந்நூல் சொல்கிறது. அதில் முதல் இனியதை இன்று பார்த்தோம். இனி தொடர்ந்து அடுத்தடுத்த செய்திகளையும் பார்க்கலாம்.  இந்த நூலுக்கு “கடவுள் வாழ்த்து” வேண்டாமா? இருக்கிறது. மிக எளிமையாக முத்தொழிலுக்கும் உரிமையுள்ள அந்த மூவரையும் குறிக்கிறது இந்தப் பாடல். இறைவனை மூவராக வழிபடும் அந்தப் பாட்டில் முக்கண்ணன் சிவனை வழிபடுவது இனிமை; துளசி மாலையணிந்த மாயவனைத் தொழுதல் இனிமை; படைப்புத் தொழில் செய்யும் நான்முகனைப் பணிதலும் இனிமை என்கிறது அந்தப் பாடல். “கண் மூன்றுடையான் தாள் சேர்தல் கடிதினிதே தொல் மாண் துழாய் மாலையானைத் தொழல் இனிதே முந்துறப் பேணி முக நான்குடையானைச் சென்றமர்ந்து ஏத்தல் இனிது.” (குறிப்பு: பதினெண் கீழ் கணக்கு நூல்களாவன:– 1. நாலடியார் 2. நான்மணிக்கடிகை 3. இன்னா நாற்பது 4. இனியவை நாற்பது 5. கார் நாற்பது 6. களவழி நாற்பது 7. ஐந்திணை ஐம்பது 8. திணைமொழி ஐம்பது 9. ஐந்திணை எழுபது 10. திணை மாலை நூற்றைம்பது 11. திருக்குறள் 12. திரிகடுகம் 13. ஆசாரக்கோவை 14. பழமொழி 15. சிறுபஞ்ச மூலம் 16. இன்னிலை 17. முதுமொழிக் காஞ்சி 18. ஏலாதி ஆகியவைகளாகும்.) இதற்கு ஒரு பாடல் உண்டு. “நாலடி, நான்மணி, நானாற்ப தைந்திணைமுப் பால்* கடுகங் கோவை பழமொழி மாமூலம் இன்னிலை சொற் காஞ்சியோ டேலாதி யென்பவே கைந்நிலைய வாங்கீழ்கணக்கு” (இதில் முதலடியில் வரும் முப்பால் என்பதுதான் திருக்குறளைக் குறிக்கிறது) 2 பிறர்க்கு ஈதல் இனிது அவர் ஒரு செல்வந்தர். ஏழ்மை நிலையில் இருந்து நல்ல உத்தியோகம் கிடைத்த பிறகு நன்றாக சம்பாதித்து “ஈ உறிஞ்சும் கஞ்சனாக”*வாழ்க்கையை நடத்தி நிறைய பணம் சேர்த்துவிட்டார். இங்கு சிக்கனமாக இருப்பதற்கும் கஞ்சனாக இருப்பதற்குமுள்ள வேற்றுமையை நாம் ஏற்கனவே விளக்கியிருந்தாலும் மறுபடியும் விளக்க விரும்புகிறேன். தன் தேவைகளுக்கு மட்டும் செலவிடுபவன் சிக்கனம். தன் சுய தேவைக்குக் கூட செலவு செய்யாமல் இருப்பவன் கஞ்சன். இவர் இரண்டாவது ரகம். இவரது அதிர்ஷ்டம், ஒரு நிலப் பிரபுவுக்கு இவர் ஏஜெண்டாக இருந்து அவர் நிலத்தைப் பிரித்து லே அவுட் போட்டு விற்க உதவி புரிந்தார். மிக குறைவான விலையில் வந்த அந்த லே அவுட்டில் சில பிளாட்டுகளைக் குறைந்த செலவில் வாங்கி வைத்திருந்தார். சில காலம் கழிந்தபின் அதன் விலை பன்மடங்கு உயர்ந்து அதன் மதிப்பு நூறு மடங்குக்கு மேலும் அதிகரித்து விட்டது. இருந்தாலும் அவர் உடையிலோ, வாழ்க்கை முறையிலோ ‘பளிச்’ மட்டும் கிடையாது. அவருக்கு அடித்த அதிர்ஷ்டம் அவர் பெண்ணை இவருக்கு எந்த செலவுமே இல்லாமல் ஒரு வரன் வந்து திருமணம் செய்து கொண்டு போய்விட்டான். அப்படியிருந்தும் இவர் பார்ப்பவர்களிடமெல்லாம், பெண் கல்யாணத்தில் பணமெல்லாம் செலவாகிவிட்டது என்று அலுத்துக் கொள்வார். குளிர் காலத்தில் வெந்நீர் போட்டுக்கூட குளிக்க மாட்டார். ஞாயிற்றுக் கிழமை விடுமுறை நாட்களில் மூன்று வேளைகளில் புழுங்கலரிசிக் கஞ்சி.  (ஈ உறிஞ்சும் கஞ்சன் என்றால் என்ன விளக்கம்? வாரியார் சுவாமிகள் சொல்லும் விளக்கம் இது. நாம் அருந்தும் காபி அல்லது டீயில் ஈ விழுந்துவிட்டது என்றால் நாம் அதனைக் கொட்டி விடுவோம். சிலர் குவளையைச் சாய்த்து அந்த ஈ இருக்கும் வரை கொட்டிவிட்டு மிகுதியை அருந்துவார்கள். சிலர் ஈயை எடுத்துப் போட்டுவிட்டு டீயைக் குடித்துவிடுவார்கள். ஆனால், இந்த ஈ உறிஞ்சும் கஞ்சன் ஈயைக் கையால் எடுத்து அதில் ஒட்டிக்கொண்டிருக்கும் டீ அல்லது காபியை நன்கு உறிஞ்சிவிட்டு ஈயைத் தூரப் போட்டுவிட்டுக் காப்பி/டீயைக் குடிப்பார்களாம்.) குடும்பம் நடத்தினால் செலவு அதிகம் என்று மனைவியை அடிக்கடி அவள் ஊருக்கு அனுப்பி விடுவார். தானே சோறு பொங்கி சிறிதளவு சாப்பிடுவார். கணவன் மனைவி உறவு எப்படி இனிதாக இருக்கும் இவருக்கு. அகப்பற்று புறப்பற்று எதையும் நீக்கிவிடாமல், அதிலும் ஆசை, காசிலும் ஆசை, இப்படிப் போய்விட்டது இவரது வாழ்க்கை. ஒரு நாள் அலுவலகம் சென்றவர் மார் வலி என்றார் படுத்துவிட்டார். மருத்துவமனையில் இவர் உடலில் இருந்த உயிர் பிரிந்து போய்விட்டதென சொல்லி திருப்பி அனுப்பிவிட்டனர். திருமூலர் “திருமந்திரம்” சொல்லும் பாடலைத்தான் நினைவு படுத்திக் கொள்ள வேண்டியிருக்கிறது. “அடப்பண்ணி வைத்தார், அடிசிலை உண்டார் மடக்கொடி யாரொடு மந்தணம் கொண்டார் இடப்பக்கமே இறை நொந்தது என்றார் கிடக்கப் படுத்தார் கிடந்தொழிந்தாரே.” “ஊர் எலாம் கூடி ஒலிக்க அழுதிட்டுப் பேரினை நீக்கிப் பிணம் என்று பேர் இட்டு சூரை அங்காட்டிடைக் கொண்டு போய்ச் சுட்டிட்டு நீரினில் மூழ்கி நினைப்பு ஒழிந்தார்களே” “பண்டம் பெய் கூரை பழகி விழுந்தக்கால் உண்ட அப்பெண்டிரும் மக்களும் பின் செலார் கொண்ட விரதமும் ஞானமும் அல்லது மண்டி அவருடன் வழி நடவாதே” சரி! யாக்கை நிலையாமை குறித்துப் புரிந்து கொண்டோம். அதற்கு நாம் இப்போது என்ன செய்ய வேண்டுமாம்? என்ன சொல்லுகிறார் திருமூலர். இதோ “அவ்வியம் பேசி அறம் கெட நில்லன்மின் வெவ்வியன் ஆகிப் பிறர் பொருள் வவ்வன்மின் செவ்வியன் ஆகிச் சிறந்து உண்ணும் போது ஒரு தவ்விக் கொடு உண்மின் தலைப்பட்ட போதே.” “வஞ்சகம் பேசாமல், பொய் சொல்லாமல், பிறர்க்குத் துன்பம் தராமல், தீய சொற்களைப் பேசாமல், அறநெறி மீறாமல், பேராசையால் பிறர் பொருள் விரும்பாமல் நல்ல பண்பாளராக ஆகுங்கள். நீங்கள் உண்ணும் போது யாரேனும் வந்து விட்டால் ஓர் அகப்பை உணவை அவர்க்குப் படைத்துவிட்டுப் பின்பு உண்ணுங்கள்.” திருமூலருக்கு என்ன? அவர் சொல்லிவிட்டார். அகப்பட்டது நானல்லவா? எப்படி முடியும். இப்படிக் கொடுத்துக் கொண்டிருந்தால் மலையும் கரைந்து போகும். செல்வமும் இல்லாமல் போகும். ஆகவே சிக்கனம், கஞ்சத்தனம், அதுதான் இன்பம் தரும் என்று வாழ்ந்தார் நம் கதாநாயகர். இவர் போன்றவர்களுக்கென்றுதான் “இனியவை நாற்பது” இரண்டாவது பாடல் சில நீதிகளைச் சொல்லுகிறது. கேட்போமா? “உடையான் வழக்கினி தொப்ப முடிந்தால் மனை வாழ்க்கை முன் இனிது மாணாதா மாயின் நிலையாமை நோக்கி நெடியார் துறத்தல் தலையாகத் தான் இனிது நன்கு.” என்ன சொல்கிறது இந்தப் பாடல்? செல்வம் படைத்தவன் அதனைப் பிறருக்கும் கொடுத்து அந்த அறச் செயல்களின் காரணமாக இன்பமாக வாழ்தல் இனிது. கணவனும் மனைவியும் மனம் ஒப்பி வாழ்ந்தால் மனையறம் இனிது. உடல் நிலையாமையை உணர்ந்து பற்றுகளை நீக்கி வாழ்வாங்கு வாழ்தல் இனிது. பார்ப்போம், இந்த அறவுரை எத்தனை பேர் செவிகளில் படுகிறது, மனங்களில் பதிகிறது என்று. நன்றி. 3 மூன்றாம் இனிமை அது ஒரு கிராமம். அங்குள்ள மக்களின் ஜீவாதார தொழில் விவசாயம். விவசாயத்தைக் கண்ணும் கருத்துமாகச் செய்து வந்த குடும்பத்தில் வந்தவர் அவர். அவருடைய மனைவி, மக்கள் அனைவருமே நல்ல கல்வி கற்று, விவசாயத்திலும் தீவிரமாகக் கவனம் செலுத்தி வந்தனர். ஊரார் பார்த்து பொறாமைப் படுமளவுக்கு ஒற்றுமையும், பிறர்க்கு உதவும் பண்பும் கொண்ட குடும்பம் அது. அடுத்த வீட்டு முதியவருக்கு உடல்நலம் கெட்டுவிட்டது. சில கல் தொலைவிலுள்ள ஒரு சிற்றூருக்குச் சென்று மருத்துவரை அழைத்து வர அவர்கள் வீட்டில் இல்லை. நம் விவசாய நண்பரின் மகன் சைக்கிள் வைத்திருந்தான். செய்தியைக் கேள்விப்பட்டதுமே அவனே முன்வந்து தானே ஓடிப்போய் மருத்துவரைக் கூப்பிட்டுக்கொண்டு வருகிறேன் என்று சென்று காரியத்தை நிறைவேற்றுகிறான். சொல்லாமலே செய்யும் அவனிடம் சொன்னால், எள் என்றதும் எண்ணெயாக நிற்பான் அத்தகைய நல்ல குணம் அமைந்த செல்வன் அவன். அப்படிப்பட்ட மகன் கிடைக்க அந்த விவசாயப் பெருமகன் என்ன தவம் செய்தாரோ? அப்படிப்பட்ட மகனைப் பெற்றது அவருக்கு இனிமை. அல்லவா?  விவசாயம் செய்கிறோம் என்பதால் அந்தக் குடும்பத்தினர் கல்வி கற்பதில் தயக்கம் காட்டியதில்லை. பெரு நகரங்களில் கிடைக்கும் வசதிகள் இந்த கிராமத்தில் இல்லாதபோதும், கிடைக்கும் ஊடகங்கள் மூலம் குடும்பத்தார் கல்வி கற்று சான்றோராகத் திகழ்ந்தனர். அதுவும் அந்த குடும்பத்துக்கு இனிமைதான் அல்லவா? இந்த விவசாயி பெருந்தனக்காரர் இல்லையாயினும், ஓரளவு தன்னிறைவு பெற்ற விவசாயி. தனக்குச் சொந்தமான விளைநிலத்தில் பயிர் விளைத்துப் பயன் பெற்று வருகிறார். தனக்கென்று உழவுக்கு நல்ல ஏரும், எருதுகளும், வீட்டில் பசுக்களும் வைத்திருக்கிறார். உழவுத் தொழிலுக்கு வேண்டிய உபகரணங்கள் அனைத்தும் அவருக்குச் சொந்தமாக இருக்கிறது. பிறகு வேறு என்ன வேண்டும்? அதுதான் இனிமை. அதுமட்டுமல்ல, இவருடைய வாழ்க்கையைக் கூர்ந்து கவனித்தோமானால், இவருக்கு அண்டை அயலாருடன் மட்டுமல்ல, இவர் போகுமிடங்களில் எல்லாம், பழகும் அனைவரும் இவரிடம் அன்பு பாராட்டும் அளவுக்கு நன்னடத்தையும், நாகரிகமும், பண்பாடும் படைத்தவர். ஆகையால் அவர்கள் இவரிடம் நட்பு பாராட்டுவதில் என்ன அதிசயம் இருக்கிறது. ஆகவே இவரது வாழ்க்கையே இனிமை அல்லவா? இப்படிச் சொல்கிறது மூன்றாவது பாடல். அது இதோ. “ஏவது மாறா இளங்கிளைமை முன் இனிதே நாளும் நவை போகான் கற்றல் மிக இனிதே ஏருடையான் வேளாண்மை தான் இனிது ஆங்கினிதே தேரிற்கோள் நட்புத் திசைக்கு. 4 நான்காம் இனிமை அவன் ஒரு குறுநில மன்னன். ஆளும் நாடு மிகச் சிறியதானாலும், விசாலமான அறிவும், ஞானமும் படைத்தவன் அந்த சிற்றரசன். அவன் நாடு செல்வத்தில் சிறந்து விளங்கியது. காடு நிரைந்து, கழனி விளைந்து அரசரின் கஜானா நிரம்பிக் கிடந்தது. இந்த வளமையைக் கண்டு பொறாமையால் சுற்றுப்புற நாட்டு மன்னர்களுக்கு இந்த நாட்டின் மீது ஒரு கண் விழுந்தது. மன்னன் தளர்ந்த நேரம் பார்த்து நாட்டை அபகரிக்க வஞ்சகர்கள் சூழ்ச்சி செய்தார்கள். அறிவுசால் அமைச்சர்கள் அந்த குறுநில மன்னரிடம் சொன்னார்கள், “மன்னா, நீ நாட்டை நேர்மையாக ஆள்வது மட்டும் போதுமானதல்ல, நாட்டில் வளம் பெருகிக் கிடக்கிறது. இந்த நாட்டைப் பாதுகாக்க நீ படைபலத்தை அதிகரித்துக் கொள்” என்றனர். ஆம், மன்னனும் அவர்கள் சொன்ன உண்மையைப் புரிந்து கொண்டு ரத, கஜ, பதாதி படைகளைப் பெருக்கிக் கொண்டான். காலாட்படை, குதிரைப்படை இவைகளைப் பெருக்கிக் கொள்வதில் அதிகம் சிரமம் இருக்கவில்லை. ஆனால் யானைப் படையை அதிகரிக்க அதிகம் பாடுபட வேண்டியிருந்தது. அப்படியொரு யானைப் படையை அவன் தயாரித்துக் கொண்டதும் எதிரிகள் அஞ்சி நடுங்கலாயினர். தாங்கள் படையெடுத்து அவன் நாட்டைப் பிடித்துக் கொள்ள திட்டமிட்டது போக, அவன் எங்கே நம் நாட்டைப் பிடித்துக் கொள்வானோ, அத்தகைய யானைப் படையை வைத்திருக்கிறானே என்று அஞ்சத் தொடங்கினார்கள். அப்படிப்பட்ட யானைப் படையை ஒருவன் ஏற்படுத்திக் கொள்ளுதல் இனிதாகும் என்கிறது “இனியவை நாற்பது” நூல்.  எதிரிகளிடமிருந்து எப்போது ஆபத்து வரும் என்று இருந்த மன்னனுக்கு இப்போது நிம்மதி. எதிரிகள் பயந்து போயிருக்கிறார்கள் என்றதும் போர் பயம் நீங்கி வாழ்க்கையை நன்கு அனுபவிக்கத் தொடங்கினான். அதற்காக பல்லுயிர்களைக் கொன்று அவற்றை உணவாக்கி உண்ணத் தொடங்கினான். உணவுப் பிரியனாக மாறியதால் பிற உயிர்களின் ஊனைத் தின்று தன் உடலை வளர்த்துக் கொள்ளலானான். இதனால் அவனுக்கு சோம்பலும், உடல் உபாதைகளும் தோன்றின. இந்த சூழலைப் புரிந்து கொண்ட எதிரிகள் இவன் மீது பாயத் திட்டமிட்டனர். இதை அறிந்த அமைச்சர்கள் மன்னனின் இந்த உயிர்க்கொலையையும், ஊன் விரும்புதலையும் நிறுத்தச் சொல்லிவிட்டனர். நல்ல காலம் அவனும் பிழைத்தான். பிற உயிர்களின் தசையினைத் தின்று தன் உடலை வளர்த்துக் கொள்ளாமை மிக இனிமை என்பதையும் அவன் உணர்ந்தான்.  அவன் ஊரில் ஒரு முறை தண்ணீர் பஞ்சம். சுற்றுவட்டாரத்தில் பல கல் தூரத்துக்கு ஆறுகள் எதுவும் இல்லை. நிலத்தடி நீரும் குறைந்துவிட்டது. விவசாயம் பாதித்தது. நாட்டின் வளம் குறைந்தது. மக்கள் கூட்டம் கூட்டமாக தலைநகரைவிட்டு போகத் தொடங்கிவிட்டார்கள். பார்த்தான் அரசன், இப்படி நீர்நிலைகள் இல்லாத இடத்தில் தலைநகரைக் கட்டியதால் வந்த நிலை என்பதை உணர்ந்து அவன் ஒரு ஆற்றின் கரையில் தன் தலைநகரை மாற்றிக் கொண்டான். நாடு மீண்டும் வளம்பெறத் தொடங்கியது. வற்றாத ஆற்றின் கரையில் அமைந்த ஊரில் இருத்தல் மிக இனிது என்பதை அவன் உணர்ந்தான். மன்னன் மக்கள் மனம் அறிந்து நல்ல நடத்தையோடு ஆட்சி புரிந்தான். மானத்தை உயிரினும் மேலாக மதித்து நடந்து வந்தான் அப்படிப்பட்ட மானம் உடையவனான மன்னைன் கொள்கை இனிது என்கிறது இனியவை நாற்பது. இனி நான்காம் பாடலைப் பார்ப்போம். “யானை உடைய படை காண்டல் முன் இனிதே ஊனைத் தின்று ஊனைப் பெருக்காமை முன் இனிதே கான் ஆற்றடை கரை ஊர் இனிதாம் இனிதே மானம் உடையார் மதிப்பு.” 5 இனியது ஐந்து அந்த சிற்றரசனுடைய ராஜ்யம் சிறியதாயினும் வளம் நிரம்பிய நாடு. விவசாயமும், கால்நடைகளும் மண்டிக் கிடக்கும் பிரதேசம். ஆடு, மாடுகள் வளர்ப்பின் மூலம் மக்கள் நன்மைகளை அனுபவித்து வந்தனர். கோழி வளர்ப்பும் அதிகமாக இருந்ததால் செல்வச் செழிப்பில் மக்கள் மகிழ்ந்திருந்தனர். திடீரென்று மக்கள் மத்தியில் தங்கள் எதிர்காலம் பாதிக்குமோ என்ற அச்சம் தோன்றியது. காரணம் அது மிக சிறிய ராஜ்யம் என்பதால் மக்கள் அதிகமாக புலால் உண்பதனால் ஆடு, கோழி இவைகளின் எண்ணிக்கை குறைந்து இருப்பதைக் கண்டனர். என்ன செய்வது? மன்னனிடம் சென்று முறையிட்டனர். மன்னன் மக்களின் எண்ணங்களைப் புரிந்து கொண்டான். கால்நடைகளின் எண்ணிக்கைக் குறைவதற்கு அவர்களது புலால் உணவுப் பழக்கமே காரணம் என்பதைப் புரிந்து கொண்டு, உயிர் வதையைத் தடை செய்வது ஒன்றே அதற்கு வழி என்று உத்தரவு பிறப்பித்தான். ஏராளமாக சத்துள்ள மரக்கறி உணவு வகைகள் இருக்கும்போது உயிருள்ள பிராணிகளை எதற்காகக் கொல்ல வேண்டும் என்று அரசன் சொன்னது மக்களுக்கும் ஏற்றுக்கொள்ளக் கூடியதாக இருந்தது. அதன் பின்னர்தான் மக்கள் உணர்ந்து கொண்டார்கள் உயிர்களைக் கொல்லாமல் இருப்பது இனிமையானது என்று. ஒவ்வோராண்டும் அந்த மன்னனின் பிறந்த நாளன்று அவன் சமஸ்தானத்தில் இருந்த சாதனையாளர்கள், கல்வியாளர்கள், கலைஞர்கள் இவர்களுக்கு விருதுகளைக் கொடுத்து கெளரவப் படுத்துவது வழக்கம். அது போன்றே ஒரு ஆண்டு அவன் விருது பெறுவோர்களின் பெயர்களை அறித்தான். அந்த பட்டியலைக் கண்ட மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். அதில் இருந்து ஒரு சிலரின் பெயர்கள் சிறப்புக்குரியவர்கள் பட்டியலில் இருக்கும் தகுதி இல்லாதது அறிந்து வருந்தினர். யார் போய் மன்னனிடம் சொல்வது? அப்படிப்பட்ட தகுதியில்லாதவர்கள் அரசாங்க பதவிகளில் இருந்து கொண்டே மன்னனுக்கு எதிராக மோசடிகளில் ஈடுபட்டு அரசாங்க கஜானா பணத்தைத் தனக்கும் தான் சார்ந்த உறவினர்களுக்கும் கையாடல் செய்து எடுத்துக் கொண்டதை மக்கள் அறிவார்கள். ஆனால் மன்னனிடம் போய் யாரும் சொல்லவில்லை. அத்தகைய ஊழலில் ஈடுபட்டவனுக்கே அரசன் விருது வழங்கி கெளரவிக்கலாமா. மக்கள் கூடிப் பேசினர். ஊர்ப் பெரியவர்கள் சிலரைத் தேர்ந்தெடுத்து அரசனிடம் சென்று உண்மையை விளக்கிச் சொல்லி, அத்தகைய ஊழல்பேர்வழிகளுக்கு மரியாதை செய்வது மரபல்ல என்பதை எடுத்துச் சொல்லச் செய்தனர். மன்னனுக்கு உண்மை விளங்கியது. அத்தகைய கருப்பாடுகளை பட்டியலில் இருந்து நீக்கியதோடு அல்லாமல் அவர்கள் மீது நடவடிக்கையும் எடுத்துத் தண்டித்தான். அரசன் என்போன் நடுவு நிலைமை தவறி நடக்கும் தன்னிடம் பணியாற்றும் நபர்களைச் சிறப்புச் செய்யாதிருத்தல் இனிது என்பதை புரிந்து கொண்டான்.  மக்களுக்கு மகிழ்ச்சி. செங்கோல் தவறாமல் மக்களின் நலன்களில் அக்கறை கொண்டு நடக்கும் மன்னன் மீது அபார மதிப்பும், மரியாதையும் கொண்டனர். ஒரு மன்னன் என்பவன் செங்கோல் ஆட்சி புரிவது என்பது இனிமை அல்லவா? இதனை மக்கள் மட்டுமல்ல, அந்த அரசனும் புரிந்து கொண்டான். ஒவ்வொரு பருவம் தோறும் மன்னன் மக்கள் மன்றத்தைக் கூட்டுவான். இடைப்பட்ட காலத்தில் தன் ராஜ்ஜியத்தில் நடந்த செய்திகளை அரசாங்க அதிகாரிகள் எடுத்துரைப்பார்கள். அப்போது யார் தவறு செய்தவர்கள், யார் திறமையாகப் பணியாற்றினார்கள் என்பதெல்லாம் மன்னருக்குத் தெரிந்திருந்தாலும், யாரைப் பற்றியும் மன்னன் எந்த குறையும் இந்நாள் வரை சொன்னதில்லை. குறைகளை நீக்கி நல்ல முறையில் திருத்திக் கொள்ள மட்டும் ஆலோசனைகள் சொல்வதுண்டு. யாரையும் புறம்பேசியதுமில்லை. இத்தகைய தகுதி இருப்பது அந்த மன்னனுக்கு மட்டுமல்ல நாட்டுக்கே இனிமை அல்லவா? இதைத்தான் ஐந்தாவது பாடலில் சொல்கிறார். அது இதோ. “கொல்லாமை முன் இனிது, கோல்கோடி மாராயம்  செய்யாமை முன் இனிது, செங்கோலன் ஆகுதல் எய்தும் திறத்தால் இனிது என்ப, யார் மாட்டும் பொல்லாங்கு உரையாமை நன்கு.” மாராயம்: தவறு செய்தோருக்கு சிறப்பு செய்தல். 6 இனியது ஆறு ஓய்வு பெற்ற ஆசிரியர் ஒருவர். மிக எளிமையானவர். பிறருடன் அன்போடு பழகுபவர். அனைவரிடத்தும் நன்கு பழகி அவர்களுக்குத் தேவையான உதவிகளைச் செய்யத் தயாராக இருப்பவர். அப்படிப்பட்டவரிடம் பெரிய அளவில் வசதிகள் இல்லாவிட்டாலும், தன்னால் இயன்ற அளவுக்குப் பிறருக்கு உதவுவதைத் தன் கடமையாகக் கொண்டு வாழ்ந்தார். அப்படிப்பட்டவர் வாழ்க்கை இனிமை உடைத்தது அல்லவா? முற்றும் துறந்து காவியணியா விட்டாலும் பந்த பாசங்கள் நீக்கி, விருப்பு வெறுப்பு அற்றவராகத் துறவி போல வாழ்ந்து வந்த அந்த ஆசிரியர் பிறரிடம் பேசும்போது வெற்றுப் பேச்சுக்களைப் பேசமாட்டார். பயனுடைய சொற்களைத்தான் பேசுவார். அவர் அப்படிப் பேசும் அறிவார்ந்த மொழிகள் இனிமை பயக்கக் கூடியவை. தனக்கென்று நல்ல வசதிகள், வாய்ப்புகள் இருந்த நிலையில் தகுதியில்லாத, வல்லமை அற்ற மக்களைத் தனது பாதுகாப்புக்காகக் கொள்ளுதல் தவறு அல்லவா? அப்படிப்பட்ட மக்களை நீக்கிவிட்டு தகுதி படைத்த வல்லவர்களைப் பாதுகாப்பாகக் கொள்ளுதல் இனிமை தரும். அந்தப் பாடல். “ஆற்றும் துணையால் அறம் செய்கை முன் இனிதே பாற்பட்டார் கூறும் பயமொழி மாண்பு இனிதே வாய்ப்புடையராகி வலவைகள் அல்லாரைக் காப்படையக் கோடல் இனிது.” பாற்பட்டார்: துறவு பூண்டவர்கள். பயமொழி: பயனுடைய சொற்கள் வலவைகள்: வல்லமை 7 ஏழாவது இனிமை வளமான கிராமம். வயல் வெளிகளும், தோப்பும் துரவுமாக கொப்பளித்து ஓடும் நதிக்கரையில் அமைந்திருந்த அந்த அழகிய சிறு ஊரில் அந்தணர்கள் வாழும் தெரு ஒன்று. அதன் மேற்குக் கடைசியில் வைணவ ஆலயமும் கிழக்குக் கடைசியில் ஒரு சிவன் கோயிலும், ஆற்றின் படித்துறை அருகில் ஒரு விநாயகர் கோயிலும் உண்டு. இந்த இடங்களில் ஏதாவதொரு இடத்தில் தினந்தோறும் விடியற்காலையில் சில அந்தணச் சிறுவர்கள் இடையில் ஒரு நான்கு முழத் துண்டும், அதன் மேல் இறுகக் கட்டப்பட்ட மேல்துண்டும், உடலை மறைக்கும்படியான மற்றொரு துண்டுமாக சுமார் பத்து பேர் வந்து உட்கார்ந்து வேத பாராயணம் செய்வார்கள். அவர்களுக்கு ஒரு கணபாடிகள் எனப்படும் வேதம் நன்கு பயின்ற ஆசிரியர் வேதத்தை நல்ல ஸ்வர ஞானத்தோடு சொல்லிக் கொடுப்பார்.  வேதம் என்பது என்ன? இது எப்போது யாரால் இயற்றப்பட்டது என்பதற்கு வேதத்திலேயே பதில் இருக்கிறது. வேதங்கள் எந்தக் காலத்திலும் எவராலும் தனிப்பட்ட முறையில் இயற்றப்பட்டது அல்ல. மனித இனம் பக்குவப்பட்டு, ஊர், நாடு, நகரம் என்று அமைப்பை ஏற்படுத்திக் கொள்வதற்கு முன்பே பல்லாயிரம் வருஷங்களுக்கு முன்பு வாழ்ந்த சில ரிஷிகளுக்கு ஒரு அபாரத் திறமை இருந்ததாம். அது என்ன? இப்போது வானொலி, தொலைக்காட்சி ஆகியவற்றின் ஒலி, ஒளி அலைகளை வாங்கி வானொலிப்பெட்டி, தொலைக்காட்சிப் பெட்டி இவற்றில் ஒலியையும், ஒளியையும் கேட்கவும், பார்க்கவும் செய்கிறதல்லவா அப்படி அன்று வான வெளியில் பரவியிருந்த ஒலி அலைகளிலிருந்து அந்த வாக்கியங்களை வாங்கி மனத்தில் இருத்திக் கொண்டு அதில் நன்கு தேர்ச்சி பெற்றபின் வாயால் பிறருக்கு ஓதி, அவர்கள் காதால் அவற்றை வாங்கி அடுத்த தலைமுறைக்குக் கொண்டு போய் சேர்த்த தெய்வீக வாசகங்கள் வேதம். இதை நான் ஏதோ கற்பனையில் சொல்வதாக நினைக்க வேண்டாம். வேதத்தின் மூலம் அதுதான். சரி கிடக்கட்டும்! இப்போது இது பிரச்சினை அல்ல. வேதத்தை முறையாக ஓதி அதில் பாண்டித்தியம் பெற்ற அந்தணர்கள் வேதத்தை மறக்காமல் இருப்பதே இனிமை என்கிறார் ஆசிரியர்.  பிறரிடம் அன்பும் மரியாதையும், மற்றவர்களுடைய சுக துக்கங்களில் அக்கறையும் கொண்டவனாக இருப்பவன் ஒரு படையைத் தலைமை தாங்கி நடத்துவானானால் அவனுடைய செயல்பாடுகள் நிச்சயம் இனிமையாக இருக்கும். தந்தை தன் மக்களுக்கு வழிகாட்டியாக இருத்தல் அவசியம். தந்தையே மகனை அழைத்து, அடே, மகனே ஓடிப்போய் கடையிலிருந்து நான்கு சிகரெட் வாங்கி வா என்று விரட்டி அவன் வாங்கிக் கொண்டு வந்த சிகரெட்டை அவன் எதிரிலேயே பற்ற வைத்துப் புகைப்பானாகில், அடுத்த நாள், அந்த மகனே ஒன்றை எடுத்து இதில் அப்படி என்னதான் இருக்கிறது என்று தானே புகைக்கத் தொடங்குவான். அது போலவேதான் வீட்டில் மது புட்டிகளைக் கொண்டு வந்து வைத்து, மகனைவிட்டு தண்ணீர் கொண்டு வரச் சொல்லியோ, அல்லது வேறு தின்பதற்குக் கொண்டு வரச் சொல்வதோ, அந்த மகனையும் அந்த பழிக்கு ஆளாக்குகிறான் என்றுதான் பொருள். அத்தகைய தந்தை சொல்வதை, நல்ல மகனாக இருப்பவன் செய்ய மறுப்பதோ, தந்தைக்கு எதிராக நடந்து கொள்வதோ தவறே இல்லை, அது மிகவும் இனிமை என்கிறார் பாடல் ஆசிரியர். அந்தப் பாடல் இதோ. “அந்தண ரோத்துடைமை ஆற்ற மிக இனிதே பந்தம் உடையான் படையாண்மை முன் இனிதே தந்தையே ஆஇனும் தானடங்கான் ஆகுமேல் கொண்டடையா நாகல் இனிது.” இதன் பொருள் அந்தணராக இருப்பவன் வேதத்தை மறக்காமல் இருப்பது இனிது; மக்களிடம் அன்பு கொண்டவன் படைத் தலைமை கொள்வது இனிது; தந்தை தீயவழியில் செல்பவனாக இருந்தால் மகன் அவன் சொற்படி கேட்டு நடக்காமல் இருத்தல் இனிது. 8 எட்டாவது இனிமை ஒரு மன்னன் போருக்குப் புறப்பட்டுப் போகிறான். ரத, கஜ, துரக, பதாதி எனும் நால்வகைப் படைகளைத் திரட்டிக் கொண்டு அந்த பிரம்மாண்ட அணிவகுப்பின் முன்னால் அந்த மன்னன் ஒரு வெண்புரவியின் மீது அமர்ந்து செல்கிறான். அது ஒரு அரேபிய நாட்டுக் குதிரை. நல்ல உயரமும், அதன் தோற்றம், நடை இவைகளைப் பார்த்தவர்கள் கண் இமைக்க மறுப்பார்கள். அப்படிப்பட்ட தரமான குதிரை. இதுபோன்ற நேரங்களில் வீரம் செறிந்த மன்னர்களுக்கு அமைய வேண்டிய குதிரை இதுபோலத்தான் இருக்க வேண்டும். அப்படி அமைந்து விட்டால் அது இனிமையானதாகும். போர் தொடங்குகிறது. யானைகளும் யானைகளும் மோதுகின்றன. சிதறி ஓடும் காலாட்படை வீரர்களைச் சில யானைகள் துரத்துகின்றன. குதிரைகள் பாய்ந்து எதிரிகளின் மீது விழுந்து தாக்க முயலுகையில் யானைகள் அந்த குதிரைகளின் மீது கோபத்துடன் வந்து மலைகள் மோதுவதைப் போல மோதுகின்றன. பெரும் பாறையில் மோதிய அலை சிதறி துகள் துகளாக வீழ்வது போல அந்தக் குதிரைப்படை சிதறிப்போவதைப் பார்ப்பது இனிமை. அறிஞர்கள் கூடிய சபையில் ஒரு பெரியவர் நல்லதொரு சொற்பொழிவை நிகழ்த்தி முடித்துவிட்டு இதுவரை நான் சொன்ன செய்திகளில் கூடியிருப்பவர்களுக்கு ஏதேனும் ஐயப்பாடு இருந்தால் கேட்டுத் தெரிந்து கொள்ளுங்கள். அப்போதுதான் நான் சொன்ன செய்திகள் உங்கள் மனங்களைச் சென்றடைந்ததாகக் கருத முடியும் என்றார். அப்போது ஒருவன் எழுந்து அந்தக் கூட்டத்தில் இருக்கும் அறிவுசால் பெரியோர்கள் வெட்கும்படியாக இதுவரை நீங்கள் என்ன பேசினீர்கள் என்பதை விளக்க முடியுமா என்று கேட்டால் எப்படி இருக்கும். அவர் சொன்ன செய்திகளை உள்வாங்கிக் கொண்டு அதில் ஏற்படும் ஐயப்பாடுகள் நியாயமாகவும், சொன்ன செய்திகளுடன் தொடர்பு உள்ளதாகவும் அல்லவா இருக்க வேண்டும். ஆக அறிஞர்கள் கூடியுள்ள சபையில் எழுந்து கேள்வி கேட்பதற்கு நல்ல மாணவனாகவும் இருதல் அவசியம். அதுவே இனிது. “ஊருங் கலிமா உரனுடைமை முன் இனிதே தார்புனை மன்னர் தமக்குற்ற வெஞ்சமத்துக் கார்வரை யானைக் கதம் காண்டல் முன் இனிதே ஆர்வமுடையார் ஆற்றவும் நல்லவை பேதுறார் கேட்டல் இனிது.” இந்தப் பாடலின் பொருள்: மன்னன் ஏறிச் செல்லுகின்ற குதிரை வலிமையுடையதாக இருத்தல் இனிது; மன்னர்களுக்குப் போர்க்களத்தில் மலைபோன்ற யானைகள் சினந்து செய்யும் போரைக் காண்பது இனிது; நல்ல கேள்விகளை மயக்கம் இல்லாதவராய்க் கேட்பது இனிது. ஊரும் கலிமா: ஏறிச் செல்லும் குதிரை. கதம்: சினம். 9 ஒன்பதாவது இனிமை ஊரில் ஒரு பெரிய மனிதர். நல்ல செல்வமும் செல்வாக்கும் படைத்திருந்ததோடு இரக்க குணமும், பிறருக்குப் பயனுள்ளவராக இருக்க வேண்டுமென்றும் பாடுபட்டுக் கொண்டிருந்தவர். அவரைத் தேடி தினமும் பலர் வருவார்கள். அப்படி வருகின்றவர்கள் எல்லோருமே அவரிடமிருந்து ஏதாவது உதவிகள், நன்கொடை, சிபாரிசு என்றுதான் வருவார்கள். அவரும் ஏதோ தன்னால் முடிந்த அளவுக்கு உதவிக் கொண்டிருந்தார். அப்படி இருக்கையில் ஒரு நாள் ஓர் புதிய மனிதர் அவரைத் தேடி வந்தார். வந்தவர் தோற்றதில் நல்ல செல்வந்தராகவும், வசதி படைத்தவராகவும் காணப்பட்டார். ஓகோ! இவர் நிச்சயம் நம்மிடம் எந்த உதவியையும் எதிர்பார்த்து வந்திருக்க மாட்டார். கெளரவமான தோற்றமுடையவர். செல்வந்தர் போலவும் தோன்றுகிறது. முகத்திலும் நல்ல அறிவாளி என்பதும் புலனாகிறது. சரி வந்தவரை வரவேற்று உட்காரவைத்துவிட்டு வந்தவரைப் பற்றிய விவரங்களை வினவினார். வந்தவர் சொன்னார், தான் சென்னையில் ஒரு பத்திரிகையாளர் என்றும், இந்த ஊரில் இவர் செய்துவரும் உபகாரங்கள், நற்பணிகள் இவற்றைப் பற்றிக் கேள்விப்பட்டு இந்த சுயநல உலகில் இப்படியும் ஒருவரா என்று பார்த்துப் போகவும், முடிந்தால் அவரைப் பற்றித் தன் பத்திரிகையில் எழுதுவதற்காகவும் வந்திருப்பதாகச் சொன்னார். நம் ஊர் பெரியவருக்கு மகிழ்ச்சி. பல காலத்துக்குப் பிறகு உதவி கேட்பதற்கில்லாமல் நம்மைப் பாராட்டிப் போக ஒருவர் வந்திருக்கிறார் என்பதில் அவருக்குத் திருப்தி. வந்தவரை நன்கு உபசரித்துத் தனக்கு எந்த விளம்பரமும் தயவு செய்து கொடுத்து விடாதீர்கள், என் மனதுக்கு நல்லது என்று தோன்றியதைத் தான் செய்து வருவது அப்படியே நடந்து கொண்டிருக்கட்டும். விளம்பரம் என் பணிக்குக் குந்தகம் விளைக்கும் என்று அவரை வழிஅனுப்பி வைத்தார். ஆனால் அவருக்கு ஒரு மகிழ்ச்சி. அது தன்னிடம் வந்து சேர்ந்த ஒருவர் நல்ல செல்வம் படைத்தவராகவும், நல்லவைகளைப் பாராட்டும் குணம் கொண்டவராகவும் இருந்தமையால் இது தனக்கு இனிமை என்று நினைத்தார். அமைதி வேண்டி பெரியவர் ஒருநாள் ஒரு மலை வாசஸ்தலத்துக்குச் சென்றிருந்தார். அங்கு இருந்த தன் உறவினர் வீட்டில் தங்கிவிட்டு மாலையானதும் மலைப் பிரதேசத்தில் வெட்டவெளியில் புல் தரை பரவிக் கடந்த ஒரு பெரிய திடலுக்குச் சென்றார். தூரத்தில் மலைகள் யானைகள் படுத்திருப்பதைப் போல கருமையாகக் காட்சியளிக்க சுற்றிலும் பசும்புல் தரையும், மற்றொரு புறம் வனாந்தரம் போல அடர்ந்த மரக் காடுகளும் மிகவும் ரம்மியமாகக் காட்சியளித்தது சூழ்நிலை. அப்போது பகல் போது முடிந்து இரவு தொடங்கும் நேரம். அன்று பெளர்ணமி. முழு நிலவு கீழ் வானில் வட்டவடிவில் ஆரஞ்சு பழ நிறத்தில் தோன்றியதும் இவருக்கு மகிழ்ச்சி. அடடா! இதுவன்றோ இனிமை என நினைத்தார். ஆம், அந்த காட்சி இனிமைதான். வீடு திரும்பிய பின் முதலில் சென்னையிலிருந்து வந்திருந்த பத்திரிகையாளர் எழுதிய கடிதம் வந்திருந்ததைப் பார்த்தார். அதில் அவர் இவருடைய பெருந்தன்மை, வள்ளன்மை, குற்றமற்ற செயல்களைச் செய்து மக்களின் அன்பைப் பெற்றது இவற்றையெல்லாம் பாராட்டியிருந்தார். ஆம் அந்த நினைவே இனிமையானது அல்லவா? இனி பாடலைப் பார்ப்போம். “தங்கண் அமர்புடையார் தாம் வாழ்தல் முன் இனிதே அங்கண் விசும்பின் அகல் நிலாக் காண்பினிதே பங்கமில் செய்கைய ராகிப் பரிந்துயர்க்கும் அன்புடைய ராதல் இனிது.” இந்தப் பாடலின் பொருள்: நம்மிடம் மிகவும் நம்பிக்கைக்கு உரியவர்களாக விளங்கும் நண்பர்களுக்கு உதவுதல் இனியது; தன்னுடைய பகைவர்களோடு சேராமல் ஒதுங்கி இருப்பவர்களை நமக்கு நண்பர்களாக ஆக்கிக் கொள்வது இனியது; பல தானியங்களைப் பயிர் செய்து பஞ்சமின்றி வாழ்வதும், நம்மைப் பாதுகாத்துக்கொள்ள நல்ல ஏற்பாடுகளைச் செய்துகொண்டு வாழ்வது இனிமை பயப்பதாகும். நட்டார்: நட்பு பூண்டவர். ஒட்டார்: ஒதுங்கி வாழும் பகைவர். 10 பத்தாம் இனிமை அவர் ஒரு கடைநிலை ஊழியர். தனியார் நிறுவனமொன்றில் நிரந்தரம் செய்யப்படாத ஊழியராகப் பல ஆண்டுகளாக வேலை பார்த்து வருகிறார். அவருக்குக் கிடைக்கும் சம்பளத்தில் அவரால் குடும்பம் நடத்துவது மிகவும் சிரமமாக இருந்து வருகிறது. என்ன செய்வார் பாவம். அந்த அலுவலகத்தில் பலரிடம் கடன் வாங்கி திருப்பிக் கொடுக்காமல் இருந்துவிட்டார். அதனால் புதிதாக எவரிடமும் இவரால் கடன் கேட்க முடியவில்லை. கேட்டாலும் கொடுக்க மாட்டார்கள். வேறு வழியின்றி கந்துவட்டிக் காரர் ஒருவரிடம் கைநீட்டி கடன் வாங்கிவிட்டார். அலுவலகத்தில் இருப்பவர்கள் போல அந்த கந்துவட்டிக்காரர் சும்மா இருப்பாரா. சம்பளம் வாங்கும் நாளில் வந்து வட்டியைக் கட்டாயமாக வசூலித்துவிடுவார். அதன் பிறகு வீட்டுக்குக் கொண்டு செல்ல என்ன இருக்கும்? அரைப் பட்டினி, கால் பட்டினியாகக் குடும்பம் நடத்தலானார். அண்டை அயலார் இவரைப் பார்த்து இரக்கப் படுவதற்கு பதில் கேலி பேசினர். கடன் வாங்கி இப்படி வட்டி கொடுத்து விட்டுப் பட்டினி கிடக்க வேண்டுமா? என்ன பிழைப்பு இது. கடன் வாங்காமல் வாழும் வாழ்க்கையே இனிது என்றனர். ஆம், கடன் வாங்கி தூக்கம் கெட்டு, கெட்ட பெயர் எடுப்பதிலும் கடன் இல்லாமல் வாழும் வாழ்க்கையே இனிது என்கிறது இனியவை நாற்பது நூல். இவன் தன் தகுதிக்கு மேல் இவனுடைய மனைவி வாழ நினைத்தாள். பலன் அவள் பார்வை வசதி படைத்த சிலரின் பக்கம் சாய்ந்தது. மனைவி வேலிதாண்டிவிட்டாள் என்பதைப் புரிந்து கொண்டாலும், அதற்குத் தன் வறுமையும் கடனும்தான் காரணம் என்பதால் இனி அவளோடு வாழ்வது இயலாது என்பதைப் புரிந்து கொண்டு அவளைவிட்டு விலகிவிட்டான். இனியாவது தான் நல்ல வழிகளைப் பின்பற்றி கடன் இல்லாமல், வாழ்க்கையில் அதிர்ச்சிகள் ஏற்படாமல் இருக்க முடிவு செய்து கொண்டான். இந்த முடிவுக்கு வர அவன் தன் மனைவியை நீங்கியதும் ஒரு காரணமாக அமைந்துவிட்டது. கற்பிழந்த பெண்ணுடன் வாழ்வதினும் அவளை விட்டு விலகுவதே இனிமை என்பதைப் புரிந்து கொண்டான். தான் கடன்காரன் ஆவதற்கும், வாழ்க்கையில் தோல்வி கண்டதற்கும் தான் மட்டுமா காரணம் என்று சற்றி நிதானமாகச் சிந்தித்தான். தன்னைச் சுற்றி நல்ல குணங்கள் இல்லாதவர்களும், தீயவர்களும் சூழ்ந்திருப்பதைத் தெரிந்து கொண்டான். தன் மனைவியே தன்னை ஏமாற்றிவிட்ட பிறகு இதுபோன்ற தீயவர்களைப் பற்றி கேட்பானேன். அத்தகைய தீய சூழலைவிட்டுப் பிரிந்து சென்றான். தனித்து வாழ்ந்தான். நேர்மையாகவும் கடன் இல்லாமலும் வாழ்ந்து தன் வாழ்க்கை இப்போது இனிமை என்பதைத் தெரிந்து கொண்டான். இனி பாடல். “கடமுண்டு வாழாமை காண்டல் இனிதே திறை மாண்பில் பெண்டிரை நீக்கல் இனிதே மனமாண்பு இலாதவரை அஞ்சி யகறல் எனை மாண்புந்தான் இனிது நன்கு.” இந்தப் பாடலின் கருத்து: வாழ்க்கையில் கடன் வாங்கி வாழாதிருத்தல் இனிமை; கற்பில்லாத மனைவியை நீங்கிவிடுவது இனிமை; வக்கிர மனம் கொண்டவர்களை அஞ்சி நீக்கிவிடுதல் எல்லா மாண்புகளிலும் இனிமை பயக்கும். 11 பதினொன்றாம் இனிமை கிராமத்தில் எந்த சொத்தும் பந்தமும் இல்லாமல் வாழ்ந்து வந்தான் ஒருவன். அன்றாடம் உணவுக்கே பிறரிடம் கையேந்தும் நிலைமை. அந்த சின்னஞ்சிறு கிராமத்தில் இவனுக்கு யார் தினந்தோறும் உணவளிப்பர்? வேறு வழியின்றி ஊர் ஊராகப் போய் அங்கெல்லாம் கைநீட்டி பிச்சை வாங்கி உண்டு கொண்டிருந்தான். ஒரு நாள் இவன் தன்னுடைய கேவலமான பிழைப்பை எண்ணி வருந்தினான். இப்படி பல ஊர்களுக்கும் சென்று யாசகம் வாங்கி உண்ணும் நிலை இல்லாதிருந்தால் எத்தனை இன்பமாக இருக்கும்? ஆம் பல இடங்களுக்கும் சென்று இரந்து வாழாமை இனிமை தரும் என்கிறது பாடல். ஒரு தமிழ்ப் பாடல், அதற்கு நேரடியாக பொருள் கொள்ளும்படியாக எளிமையாகத்தான் இருக்கிறது. இருந்தாலும் ஒரு வக்கிர புத்திக்காரன் நேரடியாகப் புரியக்கூடிய அந்தப் பொருள் தவறு என்றும், அந்தப் பாடலில் வரும் சொற்களுக்கு மறைவாக வேறொரு பொருள் உண்டு எனவும், சரியான பொருளுக்கு நேர் எதிரான கற்பனையான ஒரு பொருளைக் கற்பித்த்துப் பேசி வந்தான். அப்படிச் செய்தது அவனுடைய வக்கிர புத்தியைத்தான் காண்பிக்குமே தவிர புலமையை அல்ல என்பது ஏனையோர் கருத்து. தவறான வழியில் ஒரு சொல்லிற்கு பொருள் கொள்ளாத அறிவின் நுட்பமே இனிமை பயக்கும் என்கிறது பாடல்.  பசி வந்தால் ஏற்கக்கூடிய தகுதி உள்ளவர்கள் கையால் உணவு வாங்கி உண்ணலே சிறந்தது. அப்படியில்லாமல் எந்தத் தகுதியும் அற்ற ஒருவனிடம், தகாத செய்கைகளால் மக்களால் வெறுக்கப்படும் ஒருவனிடம் கையேந்தி அவன் கொடுக்கும் உணவை, உயிர் போவதாக இருந்தாலும் வாங்கி உண்ணாமை இனிமை தரும். அப்படி மறுப்பதைப் போல சிறப்புடைய செயல் வேறு இல்லை என்கிறது இந்தப் பாடல். “அதர்சென்று வாழாமை ஆற்ற இனிதே குதர்சென்று கொள்ளாத கூர்மை இனிதே உயிர்சென்று தான்படினும் உண்ணார் கைத் துண்ணாப் பெருமை போற் பீடுடையது இல்.” அதர் = வழி. குதர் = தவறான வழி. ஊர் ஊராகச் சென்று பலரிடமும் கையேந்தி இரந்துண்டு வாழாமை இனிமை; ஒரு மேன்மை பொருந்திய நூலுக்கு அதன் உண்மைப் பொருளுக்கு மாறாக தவறான பொருளைச் சொல்லாத அறிவின் நுட்பம் இனிமை; உயிரே போவதாக இருந்தாலும் அந்த நிலையிலும் தகாதவர் தந்த உணவை உண்ணாதிருப்பது இன்பம் தரும். 12 இனியது பன்னிரெண்டு வீட்டிலுள்ள குழந்தைகள் பிணியின்றி நன்கு விளையாடிக் கொண்டிருத்தல் போல இன்பம் பயக்கக்கூடியது எதுவும் கிடையாது. அதை விடுத்து நாள் தோறும் ஏதாவதொரு பிணியால் அந்தக் குழந்தை வருந்தி அழுது கொண்டிருந்தால் வாழ்க்கை இனிக்காது. கற்றோர் நிறைந்த அவையில் ஒருவர் தவறுதலாகவோ, அல்லது புரிதலில் ஏற்பட்ட கோளாறு காரணமாகவோ தவறான ஒரு செய்தியைச் சொல்கிறார் என்று வைத்துக் கொள்வோம். அவர் பெரியவர், அத்தனை பேர் கூடியிருக்கிற அவையில் அவர் சொல்லுகின்ற கருத்துக்கு மறுப்பு சொல்ல அனைவரும் தயங்கிக் கொண்டிருக்கின்றனர். அவர் சொல்வது தவறு என்று தெரிந்திருந்தும் எவரும் வாய் திறக்கவில்லை. ஆனால் அவர் சொல்வது தவறு என்பதை உண்மையான ஈடுபாடும், அக்கறையும் கொண்ட ஒருவன் சொல்லுவானானால் அதுவே அவன் கற்ற கல்வி இனிதானதாகக் கருதப்படும். அவைக்கு பயந்து தவறை ஒப்புக்கொள்ளாத தன்மையே ஒருவன் அறிவாற்றலுக்குச் சிறப்பு. வாழ்க்கையில் எத்தனையோ சருக்கல்கள், தவறுகள் செய்ய வாய்ப்பிருந்தும் அப்படி எதையும் செய்யாமல், மிகவும் எச்சரிக்கையாக வாழ்க்கையைப் பயணிக்கும் பெரும் அறிவுசால் பெருமகனிடம் செல்வம் சேருமானால், அது அவனைவிட்டு அகலாமல் நிற்கும், அப்படி அந்த செல்வம் தக்கோரிடம் சேர்வது இனிமை தரும் என்கிறது இந்தப் பாடல். “குழவி பிணியின்றி வாழ்தல் இனிதே கழறும் அவை அஞ்சான் கல்வி இனிதே மயரிகள் அல்லராய் மாண்புடையார்ச் சேரும் திருவும் தீர்வின்றேல் இனிது.” மழலைச் செல்வங்கள் பிணியற்றோராய் வாழ்தல் இனிது; அவையில் இருப்போர் என்ன சொல்வார்களோ என்று அஞ்சாமல் உண்மையைப் பேசும் கல்வி இனிது; தவறுகள் இழைக்காத மாண்புடையோரிடம் சேரும் செல்வம் நிலைக்குமானால் அதுவும் இனிது என்கிறது இந்தப் பாடல். குழவி = குழந்தை. பிணி = நோய். மயரிகள் = உன்மத்தன் person whose mind is confused அல்லது காமுகன், அறிவீனன் or ignorant person. 13 பதிமூன்றாம் இனிமை ஒரு நல்ல மனிதர். தானுண்டு தன் வேலையுண்டு என்றிருந்தவர். தன் ஒரே மகனை நன்றாகப் படிக்க வைக்க வேண்டுமென்பதற்காக அவருடைய சக்திக்கு மேற்பட்டு வெளியில் கடன் வாங்கி நகரத்தில் படிக்க வைக்கிறார். அந்த நல்ல மனிதருக்கு ஏற்ற மனைவி. கணவர் சொல்வதைத் தட்டாதவர். மகன் படிப்புக்காக அவர் தவிக்கையில் தான் அணிந்திருந்த தங்கச் சங்கிலியைத் தயங்காமல் எடுத்துக் கொடுத்தவர். அப்படிப்பட்ட நல்ல குடும்பத்துக்கு ஒரு சோதனை ஏற்பட்டது. மகனின் கல்வியோ முடியவில்லை. இன்னமும் பணம் தேவைப்பட்டது. என்ன செய்வது? ஊரிலுள்ளோர் எவரும் இவரது ஏழ்மை நிலைமையைக் கருத்தில் கொண்டு இவரால் வாங்கிய பணத்தைக் கொடுக்க முடியுமோ என்று அஞ்சி உதவி செய்ய மறுத்து விட்டனர். வேறு வழியில்லாமல் முன்னமேயே வட்டிக்கு வாங்கியிருந்தவரிடம் கேட்டு மேலும் பணம் வாங்கினார். அந்த நபர் பணத்தைத் திரும்பக் கேட்டு தொல்லை கொடுக்கத் தொடங்கினார். இவரும் என்ன செய்வார் பாவம். நிலமோ, வீடோ கிடையாது. உதவி செய்யவும் யாரும் இல்லை. மானத்தோடு வாழ்ந்த அவருக்கு இப்படிப்பட்ட கதி ஏற்பட்டுவிட்டது.  ஒரு நாள் கடன்கொடுத்தவன் வீட்டு வாயிலில் வந்து அவரை மிகவும் கேவலமாகப் பேசித் திட்டித் தீர்த்துவிட்டான். அவர் மனைவி வந்து ஏதோ சமாதானம் சொல்வதையும் கேட்காமல் அந்த அம்மையாரையும் திட்டித் தீர்த்துவிட்டான். உனக்கு மானம் மரியாதை இருந்தால் உடனடியாகப் பணத்தைக் கீழே வை என்றான். இப்படிப்பட்ட வாழ்க்கை வாழ்வதைவிட சாகலாம் என்று வேறு சொல்லிவிட்டான். அன்று முழுவதும் அதே வருத்தத்தில் இருந்த அந்த நபர் அன்றிரவு தன் மனைவிக்கும் தெரியாமல் எழுந்து சென்று தற்கொலை புரிந்து கொண்டார். அவருக்காக அவர் மனைவியைத் தவிர உளம் நொந்து வேதனைப் பட்டவர்கள் அவ்வூரில் யாரும் இல்லை. தன்னுடைய பெருமை கெட்டு, மானம் போனபின் வாழாமை இனிது என்று அவர் அந்தக் காரியத்தைச் செய்து விட்டார். அதன் பின் அவருடைய மகன் படிப்பை நிறுத்திவிட்டு ஒரு வேலையைத் தேடிக்கொண்டு, ஊருக்கு வந்து தன் தாயாரையும் அழைத்துக் கொண்டு எங்கோ சென்று விட்டான். அவர் எங்கிருக்கிறான், என்ன வேலை பார்க்கிறான் என்பதெல்லாம் ஊரில் யாருக்கும் தெரியவில்லை. ஆனால், கடன்காரனுக்கு மட்டும் அவனிடம் வாங்கியிருந்த அசல், வட்டி அனைத்தையும் அந்த மகன் அனுப்பி விட்டான். இப்படிப்பட்ட நல்லவர்களுக்குத் தான் செய்த அநியாயத்தை எண்ணி அந்த கந்துவட்டிக்காரன் மனம் வருத்தப்பட்டதாகத் தெரியவில்லை. ஆனால் கடன்பட்டு தந்தையை இழந்து அவர் பட்ட கடனையும் வட்டியோடு திரும்பக் கொடுத்த அந்த மகன் தான் இருக்கும் இடம் தெரியாமல் அடக்கத்தோடு தன் தந்தை கட்டிக் காத்த மரியாதையைத் தொடர்ந்து கடைப்பிடித்து வாழ்ந்தான் என்றால் அந்த அடக்கமான வாழ்வு இனிமை அல்லவா? நாளடைவில் அந்த மகன் நன்கு சம்பாதித்து கணவனை இழந்த தன் தாய் துன்பப்படாமல் நன்கு காப்பாற்றி, ஊரார் மெச்சும்படியாக கண்காணாத ஊரில் சொந்த ஊரின் தொடர்பில்லாமல் தனித்து வாழ்ந்தான். அவனிடம் இப்போது செல்வம் இருந்தது, கண்ணியம் இருந்தது, ஊராரின் மதிப்பு இருந்தது அப்படிப்பட்ட சூழலில் வாழ்வது இனிமை என மனம் மகிழ்ந்தான் அவன். அந்தப் பாடல். “மானம் அழிந்தபின் வாழாமை முன் இனிதே தானம் அழியாமைத் தானடங்கி வாழ்வினிதே ஊனம் ஒன்றின்றி உயர்ந்த பொருளுடைமை மானிடவர்க்கு எல்லாம் இனிது.” மானம் = பெருமை. தானம் = தான் இருக்கு நிலைமை. இதன் பொருள்: பெருமை அழிந்த பிறகு ஒருவன் உயிர்வாழாமை இனிதாகும்; தான் வாழ்கின்ற வாழ்க்கையின் சிறப்பு குறையாதபடி வாழ்தல் இனிதாகும்; நல்ல செல்வத்தோடும் கெளரவத்தோடும் வாழ்தல் என்றும் இனிமை. 14 இனியது பாதினான்கு அந்த இளைஞனுக்குத் திருமணம் ஆனது. நற்குணம் வாய்த்த ஒரு பெண் அவனுக்குத் துணைவியானாள். இருவரும் நல்லறமாகக் குடும்பம் நடத்தினர். ஓராண்டில் அவன் மனைவிக்கு ஒரு குழந்தை பிறந்தது. அந்த குழந்தை நாளொரு மேனியும், பொழுதொரு வண்ணமுமாக என்று சொல்வார்களே அப்படி வளர்ந்தது. அந்த குழந்தையின் முதலாமாண்டு நிறைவின் போது அக்குழந்தை மெல்ல எழுந்து தடுமாறி, தளர்நடை நடக்கத் தொடங்கியது. அந்தக் காட்சியைப் பார்த்து கணவனும் மனைவியும் மட்டுமல்ல, அண்டை அயலார் அனைவருமே பார்த்து மகிழ்ந்து போயினர். அப்படிப்பட்ட நேரத்தில் அந்தக் குழந்தையின் பெற்றோர் அடையும் இன்பத்துக்கு ஈடு உண்டா. எப்படிப்பட்ட இனிமை அது? அந்தக் குழந்தை மெல்ல மெல்ல சொற்களை முதலில் குழறிக் குழறிச் சொன்னாலும் வெகு விரைவில் பளிச்சென்று சொற்களை உச்சரிக்கத் தொடங்கியது. அந்தக் குழந்தையின் மழலையைக் கேட்கத்தான் எத்தனை இனிமை. அதனால்தான் வள்ளுவர் பெருமானும் சொன்னார், “குழலினிது, யாழினிது என்பர் தம் மக்கள் மழலைச்சொல் கேளாதவர்” என்று. தன் மக்களின் மழலை அமிழ்தினும் இனிது அல்லவா? ஒருவன் இளம் வயதில் கெட்டவனாகத் திரிந்து கொண்டிருந்தான். அவன் தீச்செயலைக் கண்டு சில நற்குணமுள்ள பெரியோர்கள் அவனுக்குத் தகுந்த புத்திமதி சொல்லி திருத்த முயன்றனர். இளம் வயது என்பதால் அவன் வாயில்லா ஜீவராசிகளுக்குப் பல தொல்லைகளைக் கொடுத்து வந்தான். நாய்களைக் கண்டால் கல்லெடுத்து அவற்றை அடித்துத் துரத்துவான். ஓணான் போன்றவற்றை அடித்துக் கொல்வான். இப்படிப்பட்ட ஜீவஹிம்சை செய்தால் உனக்குத் துன்பம் வரும் என்றெல்லாம் பெரியோர்கள் சொன்னது அப்போது அவன் காதுகளில் விழவில்லை. பின்னர் நாட்பட நாட்பட அவன் திருந்தி நல்லவனாக வாழும்போது அவன் முன்பு இளம் வயதில் செய்த கொடிய செய்கைகளாலோ என்னவோ, இவனுக்குப் பிறந்த குழந்தை ஊனமாகப் பிறந்தது. இதற்கெல்லாம் தான் அன்று செய்த பாவங்களே காரணமோ என்று மனம் வருந்தினான். சரி! நான் செய்த வினை எனக்கே வருகிறது என்ன செய்ய முடியும், இனி நம் பிள்ளைகளாவது பாவம் செய்யாமல் இருக்கட்டும் என்று மனதைத் தேற்றிக் கொண்டு தைரியமாக வாழ்க்கையை எதிர் கொண்டான். அவனுடைய அந்த அஞ்சாமை இனிது. அந்தப் பாடல் “குழவி தளர்நடை காண்டல் இனிதே அவர் மழலை கேட்டல் அமிழ்தின் இனிதே வினையுடையான் வந்தடைந்து வெய்துறும் போழ்து மனனஞ்சான் ஆகல் இனிது.” இதன் பொருள்: குழந்தையின் தளர்நடை காண்டல் இனிது; அதன் மழலையைக் கேட்பது அமிழ்தத்தை விட இனிது; ஒருவன் தான் செய்த வினைக்குப் பயனாகத் துபம் வந்தடையும்போது மனம் அஞ்சாமல் எதிர்கொள்வது இனிதாகும். 15 பதினைந்தாம் இனிமை அந்த இளைஞனுக்குத் திருமணமாகிவிட்டது. அவனுக்கு வாய்த்த மனைவி நல்ல அழகி அதோடு நல்ல குணவதியும் கூட. கணவனிடம் மாறாத அன்பும் பாசமும் வைத்திருந்தாள். ஆனால் அந்த இளைஞன் அவள் அளவுக்கு அவனுடைய மனைவியிடம் உண்மையாக நடந்து கொள்வதாகத் தெரியவில்லை. சற்று சபல புத்தியுள்ளவன். தெருவின் தன் மனைவியோடு நடந்து செல்லும்போதே எதிரில் வரும் அழகியை வெட்கமின்றி வெறித்துப் பார்த்துத் தன் சபலத்தை வெளிக்காட்டும் குணம் படைத்தவன். அவன் மனைவியோ இவன் செயலுக்கு வருந்தினாலும் கடிந்து கொள்வதில்லை. கடிந்து கொண்டால் அவனுக்குத் தன்மீது அன்பு குறைந்து விடுமோ எனும் ஐயப்பாடு. இப்படிப்பட்ட கணவனோடு வெளியில் போவதற்கே அவன் மனைவி ஒரு கட்டத்தில் தயக்கம் காட்ட ஆரம்பித்தாள். என்ன விஷயம் ஏன் இப்படி என்று அவள் தாய் கேட்டபோது அவள் சொன்ன செய்திதான் அதிர்ச்சியளிக்கும்படியாக இருந்தது. ஒரு முறை கடற்கரைக்குக் கூட்டிக் கொண்டு போகச் சொல்லி இவள் வற்புறுத்தியதால் வேண்டா வெறுப்போடு மனைவியை அழைத்துக் கொண்டு இளைஞன் கடற்கரைக்குப் போனான். போய் மணலில் ஓரிடத்தில் உட்கார்ந்து கொண்டு சுண்டல் விற்றுக் கொண்டு வந்த சிறுவனிடம் இரு பொட்டணங்கள் சுண்டல் வாங்கிக் கொண்டனர். அந்த நேரம் பார்த்து இவர்களைப் போலவே ஒரு இளம் ஜோடி அந்த வழியாக வந்து கொண்டிருந்தது. ஏதோ வெறு திசையில் சற்று இவன் மனைவியின் கவனம் திரும்பியிருந்த நேரத்தில் எதிரில் வந்த ஜோடியில் பெண்ணிடம் இவன் ஏதோ தகாத வார்த்தை சொல்லியிருக்கிறான். உடனே அந்தப் பெண்ணின் கணவன் இவனை அடிக்காத குறையாகத் திட்டித் தீர்த்துவிட்டு, உன் மனைவியை நான் அப்படிப் பேசட்டுமா என்றதும் இவள் அவமானப்பட்டு தலைகுனிந்து வீடு திரும்பும் வரை பேசாமலேயே வந்து விட்டாள். பின்னரும் அவளது உறவு அவனிடம் முன்போல் இல்லாமல் போய்விட்டது. இத்தனைக்கும் காரணம் அந்த இளைஞனின் சபலம். வீண் வம்பு இழுத்து பிறன் மனைவியிடம் வாங்கிக் கட்டிக் கொண்டதுதான் மிச்சம். அப்படி பிறன் மனை நோக்காத ஆண்மை மிக இனிமை அல்லவா? அதனால்தான் வள்ளுவர் பெருமானும் பிறன் மனை நோக்காமைக்கு ‘பேராண்மை’ என்று பெயர் சூட்டினார் போலும். அந்த ஆண்டில் பருவ மழை சரிவர பெய்யவில்லை. மாதந்தோறும் அவ்வப்போது பெய்யும் மழையும் சுத்தமாக இல்லாமல் போய்விட்டது. எங்கும் பசுமை வற்றி காய்ந்து போய்க் கிடந்தது. ஊரில் விவசாயமும் மழை இல்லாமையால் முடங்கிப் போய் கிடந்தது. அந்த நிலையில் திடீரென்று வானம் கருத்து, இடி மின்னலுடன் பல மணி நேரம் மழை பெய்து பூமி குளிர்ந்து, எங்கும் மழை நீர் ஓடத் தொடங்கினால் அது எத்தனை இனிமை? நீரின்றி வாடும் பயிர்களுக்கு மழை பெய்தால் இனிமைதான் அல்லவா? ஒரு மன்னனுக்கு யானைப் படை மிகவும் முக்கியமானது, பெருமையுடையதும் கூட என்பதை முன்பு ஒரு பாடலில் பார்த்தோம். அரண்மனையின் யானைக் கொட்டிலில் ஏராளமான யானைகள் கட்டப்பட்டு, அவற்றின் பிளிறல் கேட்டுக் கொண்டிருந்தால் மன்னனுக்கு இனிமைதான். இல்லையா? இதோ பாடல்:– “பிறன் மனை பின்னோக்காப் பீடு இனிதாற்ற வறனுழக்கும் பைங்கூழ்க்கு வான்சோர் வினிதே மற மன்னர் தங்கடையுள் மாமலை போல் யானை மத முழக்கம் கேட்டல் இனிது.” இதன் பொருள்: பிறன் மனை நோக்கா பேராண்மை இனிது; நீர் இன்றி வாடித் துவளும் பயிர்களுக்கு மழை பெய்தால் இனிது; வீரமுள்ள மன்னனுடைய வாயிலில் யானைகளின் முழக்கம் இனிது. வறன் = வறட்சி. 16 பதினாறாம் இனிமை இவன் ஒரு அலுவலகத்தில் முப்பது ஆண்டுகளுக்கு மேலாக பணி புரிந்து ஓய்வு பெற்றிருந்தான். இவனுக்குப் படிக்கும் காலத்திலேயே இலக்கியங்களின் மீது காதல். நேரம் கிடைத்த போதெல்லாம் பல இலக்கிய நூல்களை வாங்கிப் படிப்பான். பல அறிவுசால் பெரியோர்கள் பேசும் இலக்கியக் கூட்டங்களுக் கெல்லாம் சென்று கவனமாகக் கேட்பான். அப்படி அவர்கள் சொல்லும் பல புதிய செய்திகளை மனத்தில் வாங்கிக் கொண்டி இவன் அந்த இலக்கியத்தைப் படிக்கும் போது அவற்றை நினைவு கூர்ந்து மகிழ்வான். பணி ஓய்வு கிடைத்ததும் இனி என்ன செய்வது என்ற கவலை அவனுக்கு. அந்த நேரத்தில் இவனுடைய நண்பனொருவன் இவனை ஒரு இலக்கிய வட்டத்தில் சேர்த்து விட்டான். அங்கு இவனுக்குப் பல புதிய இலக்கியங்களைப் படிக்கவும், பல பெரியோர்களின் துணையும் கிடைக்கும்படி நேர்ந்தது. இவன் மிகக் குறுகிய காலத்தில் அந்த இலக்கிய வட்ட பெரியோர்களுக்குச் சமமாக உட்கார்ந்து விவாதிக்கவும், படித்தும் கேட்டும் தெரிந்து கொள்ளவும் வாய்ப்பு கிட்டியதனால் இவனும் நல்ல பணிதனாக ஆனான். அப்படிப் பட்ட சூழ்நிலையில் அனைவராலும் மதிக்கப்பட்ட ஒரு இலக்கியவாதி இவனைத் தனக்குச் சமமாக எண்ணி, இவனோடு பல இலக்கிய விஷயங்களைப் பேசப் பேச இவனுக்கும் சமூகத்தில் ஒரு அந்தஸ்து ஏற்படுகிறது. பல நேரங்களில் நன்கு கற்றறிந்த அறிஞர்கள் கூடியிருக்கின்ற அவையில் அவர்களுக்குச் சமமாக இவனையும் பங்கேற்க வைத்தனர். அப்போதெல்லாம் இவனை சில தலைப்புக்களில் கருத்துக்களைச் சொல்லும்படி கேட்பார்கள். இவனும் தான் படித்தறிந்த பல இலக்கியங்களிலிருந்து சான்றுகளுடன் எடுத்துச் சொல்வதை அவர்கள் விரும்பி ஏற்றுக் கொண்டனர். இவனும் அவர்களுக்குச் சமமாக இருக்கும் நிலை ஏற்பட்டது குறித்து இவனுக்கும் மகிழ்ச்சி. எத்தனை இனிமையான செய்தி இது! இப்படி இலக்கியத் தொடர்பால் பல அரிய அறிஞர்களோடு ஏற்பட்ட நெருக்கமும் எத்தனை இனிமை? இவன் பணி ஓய்வு பெற்றிருந்தாலும் ஓய்வூதியம் கிடைத்து வந்தது. அவனுக்குப் போதுமானதாக இருந்ததோடு அந்த தொகைக்குள் பல நல்ல காரியங்களுக்கும் இவனால் உதவி செய்ய முடிந்தது. பணியில் இருந்த காலத்தில் பல நேரங்களில் இவன் கடன் வாங்கி செலவு செய்யும் நிலை இருந்தது. ஆனால் இப்போது அவன் தனக்குப் போக மீதத்தை பலருக்கு உதவ பயன்படுத்தினான். மிகவும் ஏழ்மை நிலையில் இருந்த மாணவ மாணவியர் சிலருக்குப் படிக்கவும், புத்தகங்கள் வாங்கவும் இவன் உதவி செய்தான். அந்த நிலை எத்தனை இனியது. “கற்றார்முன் கல்வி உரைத்தல் மிக இனிதே மிக்காரைச் சேர்தல் மிகமாண முன் இனிதே எட்டுணை யானும் இரவாது தான் ஈதல் எத்துணையும் ஆற்ற இனிது” இதன் பொருள்: நன்கு கற்றறிந்த அறிஞர்கள் கூடியிருக்கும் அவையில் தான் கற்ற கல்வியைப் பிழையின்றி எடுத்துரைத்தல் இனிது; தன்னைக் காட்டிலும் அறிவிலும் ஆற்றலிலும் மேம்பட்டவர்களோடு பழகும் வாய்ப்பு கிடைத்தல் மிக இனிது; எள் அளவுகூட பிறரிடம் கையேந்தாமல் தான் முடிந்த மட்டும் தர்மம் செய்யும் குணம் அமைதல் அனைத்தினும் இனிது. 17 பதினேழாம் இனிமை பலரோடும் பழகும் தன்மை கொண்ட ஒருவன், பல நண்பர்களை அடைகிறான். அப்படி இவனுடன் சேர்ந்த நண்பர்களுக்கு பல நேரங்களில் அவர்களுக்குத் தேவைப்படும் நன்மைகளை மனமுவந்து இவன் செய்யத் தொடங்கினான். ஆகையால் இவனுடன் நட்பு கொள்ள பலரும் ஆவலுடன் இருந்தனர். இப்படி நண்பர்களுக்கு நல்ல காரியங்களுக்கு உதவுதல் எத்தனை இனிமை? ஒருவனுக்கு எல்லோருமே நண்பர்களாக இருந்து விடுவதில்லை. ஒரு சிலர் இவனுக்கு எதிரிகளாகவும் அமைந்து விடலாம். அப்படிப்பட்ட எதிரிகள் தவறிழைப்பவர்களாகவும் கெட்ட குணங்களுடையவர்களாகவும் இருத்தலால், அப்படிப்பட்டவர்களிடம் சேராமல் ஒதுங்கியிருப்பவர்களும் உண்டு. அத்தகையவர்களை, நம் எதிரியோடு உறவு இல்லாமல் இருக்கும் காரணத்தினாலேயே, நாம் உறவு வைத்துக் கொள்ளுதல் இனிது. மனிதனுக்கு முக்கியத் தேவை உணவு. உணவுக்கு வேண்டிய தானியங்கள் மிக்க அளவில் விளந்திருக்கின்றன. வீடு நிறைய தானியக் குவியல்கள். பஞ்ச காலம் வந்தாலும் தாக்குப் பிடிக்கக்கூடிய அளவு விளைந்து வந்து வீட்டில் கொட்டி வைக்கப்பட்டிருக்கின்றன. மேலும் தன்னையும் காத்துத் தன் செல்வத்தையும் காத்துக் கொள்ள வேண்டுமாயின் நல்ல மெய்க்காப்பு வீரர்கள் தேவை. இப்படி உணவு தானியங்களும், பாதுகாவலுக்கு மெய்க்காவலர்களும் அமைதல் இனிது. “நட்டார்க்கு நல்ல செயல் இனிது எத்துணையும் ஒட்டாரை ஒட்டிக் கொளல் அதனின் முன் இனிதே பற்பல தானியத்தது ஆகிப் பலருடையும் மெய்த்துணையும் சேரல் இனிது.” இதன் பொருள்: தன்னோடு நட்பு கொண்டவர்களுக்கு நன்மை செய்தல் இனிது; நம் பகைவருக்கு எதிரானவர்களை நம்மோடு உறவு வேண்டி சேர்த்துக் கொள்ளுதல் இனிது; நல்ல தானியக் குவியல்களும், நல்ல பாதுகாவலர்களும் இருந்தால் மிகவும் இனிது. 18 பதினெட்டாம் இனிமை அந்த ஊர் சிறிய ஊரானாலும், கற்றறிந்த பெரியோர்கள் வாழ்கின்ற ஊர். ஊர் மன்றில் கூட்டங்கள் நடக்கும் போது அங்கு அறிவார்ந்த விஷயங்கள் பேசப்படும். கடுஞ்சொற்கள் நீக்கி பண்போடு பேசும் மக்கள் அந்த மன்றில் கூடி விவாதிப்பார்கள். அங்கு சென்று அத்தகைய கூட்டங்களைப் பார்த்து பேசுபவற்றை கேட்பதே ஓர் இனிய அனுபவமாக இருக்கும். அத்தகைய மூத்த அறிவார்ந்த குடிமக்கள் வாழும் ஊரில் வாழ்வதே இனிமை என்கிறது நூல். தவசிகள் என்போர் அனைத்தையும் துறந்து வனாந்தரங்களில் தவம் செய்பவர்கள். அப்படியில்லாமல் ஊருக்குள்ளேயே இருந்து கொண்டு தன்னை ஆசாபாசங்களிலிருந்தும் விலக்கி நன்மைகளை நினைத்து செய்யும் பெரியோர்களும் உண்டு. இத்தகையவர்கள் நேர்மை பிசகாதவர்கள். நல்லதை எண்ணி, மற்றவர்களுக்கு நன்மைகளை மட்டுமே நினைப்பவர்கள். பிறருக்குத் தீங்கு செய்யாதவர்கள். நல்ல ஆலோசனைகளைச் சொல்லி மக்களை நல்வழிப்படுத்தும் சான்றோர்கள். அத்தகையோரின் கூட்டுறவே இனிமை தரும். காலை பொழுது விடிந்ததும் குடும்பத்துப் பெரியோர்கள் தாய் தந்தையர்கள் இருக்கும் இடம் தேடிச் சென்று அவர்களை வணங்கி ஆசி பெறுதல் இனிமை தரும். இனி பாடல்: “மன்றின் முதுமக்கள் வாழும் பதி இனிதே தந்திரத்தின் வாழும் தவசிகள் மாண்பினிதே எஞ்சா விழுச்சீர் இருமுது மக்களைக்  கண்டெழுதல் காலை இனிது” ஊர் அவையில் நல்ல தேர்ந்த அறிவுடைய மக்கள் வாழும் ஊர் இனிமையுடையது. சாஸ்திர நூல்கள் சொல்லும் முறையில் வாழும் தவ முனிவர்களின் மாண்பு இனிதாகும். குடும்பத்தின் மூத்தவர்கள், தாய் தந்தையர்களை காலையில் வணங்கி எழல் இனிமையுடைத்து. 19 இனியது பத்தொன்பது ஒருவனுக்கு ஏராளமான நண்பர்கள் இருந்தார்கள். அவர்கள் அனைவரிடமும் இவன் நன்கு பழகுவான். சிலரிடம் சில குறைகள் உண்டு. இருந்தாலும் இவன் அவற்றைப் பொருட்படுத்தவில்லை. மற்ற சிலர் நல்ல குணங்கள் அற்றவராக இருந்தாலும், இவன் அவர்களைப் பற்றி எந்த குறையும் சொல்வதில்லை. அவர்களைப் பற்றி எங்கும் புறம் கூறுவதில்லை. இந்த காரணத்தினாலேயே அவனுக்கு நண்பர்கள் மத்தியில் நல்ல பெயர் உண்டு. நன்கு பழகும் நண்பர்களைப் பற்றி புறம் கூறாமல் இருத்தல் இனியது. இவனுக்கும் பொய் சொல்லும் பழக்கம் கிடையாது. எப்போதும் உண்மையையே பேசுபவன். ஆகையால் சில நேரங்களில் சில சங்கடங்களைச் சந்திக்க நேர்ந்தாலும் இறுதியில் இவன் சத்தியத்தையே பேசிவந்தமையால் இவனுக்கு மரியாதையும், நல்ல மதிப்பும் இருந்தது. இவன் அனைவரிடமும் மரியாதையுடந்தான் பேசுவான், நடந்து கொள்வான், அப்படி வாழ்தல் இனியது என்கிறது நூல். இவன் கடுமையாக உழைத்தான். பொருள் சேரத் தொடங்கியது. ஒரு நேரத்தில் இவன் எதிர்பார்த்திருந்ததை விட மிக அதிகமான பொருள் இவனிடம் சேர்ந்தது. அப்படிச் சேர்ந்த பொருளை இவன் வீணாக செலவு செய்யவில்லை. மாறாக தக்கோர்க்கு, தேவைப்படும் எளியவர்களுக்குப் பல உதவிகளைச் செய்ய இந்த செல்வத்தைப் பயன்படுத்தினான். அதனால் இவன் மனதுக்கும் இனிமை ஏற்பட்டது. அந்தப் பாடல். “நட்டார்ப் புறங்கூறான் வாழ்தல் நனி இனிதே பட்டாங்கு பேணிப் பணிந்தொழுகல் முன் இனிதே முட்டில் பெரும் பொருள் ஆக்கியக்கால் மற்றது தக்குழி ஈதல் இனிது.” இதன் பொருள்: தன்னுடைய நண்பர்கள் குழாம் குறித்து புறம் கூறாதிருத்தல் இனிமை தரும்; நன்மைகள் செய்து அனைவரிடமும் பணிவோடு நடந்து கொள்வது இனிமை; அதிக அளவில் பொருள் சேர்ந்து விட்டால் அதைத் தேவை உணர்ந்து தக்கார்கு வழங்குதல் இனிமை தரும். 20 இனியது இருபது நம்மைச் சுற்றி எத்தனை வகை மனிதர்கள். நம்மிடம் உயிருக்குயிராகப் பழகும் நற்பண்புள்ள நண்பர்கள்; நம்மீது அழுக்காறு கொண்டவர்கள்; வாய்ப்பு கிடைத்த போதெல்லாம் நமக்குத் துணை நிற்பவர்கள்; நமக்கு எப்போது தீங்கு விளைக்கலாம் என்று காத்திருக்கும் வஞ்சகர்கள் இப்படி எத்தனை வகை மனிதர்கள். இவர்களோடு பழகும்போது நமக்கு இவர்களின் ஆழ்குணம் தெரிவதில்லை. ஏதாவதொரு சந்தர்ப்பம் அமையும் போதுதான் யார் எப்படி என்று தெரிந்து கொள்ள முடியும். எதிர் வீட்டில் ஒருவன் யாரோடும் அதிகம் பேச மாட்டான். பார்வைக்கு அவன் ஒரு அகம்பாவம் பிடித்தவன் போல் தோன்றுவான். ஒரு நாள் பள்ளிக்கூடம் விட்டுத் தன் சைக்கிளில் திரும்பிக் கொண்டிருந்த சிறுவன் வேறொரு வண்டி மோதி சாலையில் விழுந்து விட்டான். அங்கு முதலில் ஓடிப்போய் அவனுக்கு முதலுதவி செய்து மருத்துவமனைக்குக் கொண்டு போய் சேர்த்து, அவன் நலம் பெறும் வரையில் அவனோடு பாடாய்ப் பட்டான் எதிர் வீட்டுக் காரன். அங்கிருந்த அனைவருக்கும் இது புதிராக இருந்தது. ஆனால் மற்றவர்களோடு நல்லவன் மாதிரி பழகிவிட்டு, பிறரது நம்பிக்கைக்குப் பாத்திரமான பிறகு வஞ்சக எண்ணத்துடன் ஒருவன் பல தீய காரியங்களைச் செய்து மாட்டிக் கொண்டான். அப்போதுதான் அனைவருக்கும் தெரிந்தது பார்வையில் ஒருவனை எடை போட முடியாது. அவனுடைய குணங்களை அறிந்துதான் புரிந்து கொள்ள வேண்டுமென்று. தேர்ந்து ஆய்ந்து நல்லவர்களோடு மட்டும் பழக வேண்டும். வஞ்சக குணம் கொண்டோரை நம்மிடம் அண்ட விடாமல் பார்த்துக் கொள்வது இனிமையானது என்கிறது பாடல். தெருவில் ஒரு பெரியவர். மரியாதைக் குரியவர். அன்பும் பண்பும் உடைய பெரியவர். பலருக்கும் அவர் பல சந்தர்ப்பங்களில் ஆலோசனைகளைச் சொல்லியும், அவரே அலைந்து பிறருக்கு வேண்டிய காரியங்களைச் செய்து கொடுக்கவும் செய்வார். பிரச்சினைகளோடு அவரிடம் செல்பவர்களுக்கு அந்த பிரச்சினையை எப்படி தீர்க்கலாம் என்பதைப் பற்றி அறிவுபூர்வமாக ஆலோசனைகளைச் சொல்லுவார். அப்படிப்பட்ட பெரியவரின் சொற்களை மரியாதையுடன் ஏற்று நடந்து கொள்வது இனிது. முதலிலேயே சொன்னபடி நம்மைச் சுற்றி ஏராளமான மனிதர்கள், பறவைகள், மிருகங்கள் இப்படி எத்தனை ஜீவராசிகள் இருக்கின்றன. இவை பறவைகள் தானே, அவை மிருகங்கள் தானே, என்று ஒதுக்கிவிட்டுவிடாமல் எல்லா உயிர்களிடத்தும் அன்புடனும், பாசத்துடன் பழகுதல் வேண்டும். இறைவன் படைத்த உயிர்களில் பாகுபாடு எதற்கு அனைத்துக்கும் என்னென்ன தேவைகளோ அதற்கேற்றாற்போல உதவி புரிதல் வேண்டும். வள்ளலார் பெருமான் சொன்னார், ஆருயிர்களிடத்தில் அன்பு செய்ய வேண்டுமென்று. அதனைக் கடைப்பிடித்தல் இனிது. அந்தப் பாடல் இதோ: “சலவரைச் சாரா விடுதல் இனிதே புலவர்தம் வாய்மொழி போற்றல் இனிதே மலர்தலை ஞாலத்து மன்னுயிர்க்கு எல்லாம் தகுதியால் வாழ்தல் இனிது.” சலவர்: வஞ்சனை புரிபவர். பொருள்: வஞ்சக எண்ணம் கொண்டவர்களை விலக்கிவிடுதல் இனிமை; அறிவுடைய பெரியோர்கள் சொற்களைப் போற்றுதல் இனிமை; உலகில் வாழும் எல்லா ஜீவராசிகளிடத்தும் அவற்றிற்கு ஏற்றார்போல அன்பு செய்தல் இனிமை. 21 இனியது இருபத்தியொன்று பொதுவாக பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்கள், மக்கள் அதிகம் கூடும் பல இடங்கள், இங்கெல்லாம் வேலையற்ற சிலர் சுற்றிக் கொண்டிருப்பார்கள். பார்வைக்கு அவர்கள் வித்தியாசமாகத் தெரிய மாட்டார்கள். சிலர் மிகவும் நைச்சியமாகப் பேசி நம்மிடம் பழகக்கூடத் தொடங்குவார்கள். முன்பின் அறிமுகமில்லாத நபர்களுடன் அதிகம் பேச்சு வைத்துக் கொள்வது ஆபத்து. நாம் யார் எங்கிருந்து வருகிறோம், என்ன வேலையாக வருகிறோம் என்பதையெல்லாம் அவர்களுக்குத் தெரியக்கூடாது என்பதில் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். நம்மை நம்பவைத்த பின் சற்று என் பெட்டி, பைகளைப் பார்த்துக் கொள்ளுங்கள், கழிப்பறை வரை சென்று வருகிறேன் என்று புதியவரை நம்பி விட்டுவிட்டுச் சென்றால், திரும்ப வரும்போது அங்கு உங்கள் பொருட்கள் எதுவும் இருக்காது. ஆனால் பிறர் பொருட்களை பறித்துக் கொள்வதற்கென்றே சிலர் திரிந்து கொண்டிருக்கிறார்கள். நாம் விழிப்போடு இருந்தால்தான் இத்தகைய நபர்களிடமிருந்து தப்பிப் பிழைக்கலாம். இதுபோன்ற ஈனப் பிறவிகளை நினைக்கும்போது, இவர்கள் மற்றவர்கள் கைப்பொருளைத் திருடி வயிறு வளர்ப்பதை நினைக்கும்போது வருத்தமாக இருக்கிறது. அப்படி பிறர் பொருளைப் பறிக்காமல் வாழும் வாழ்க்கையே இனிது என்கிறது இனியவை நாற்பது இருபத்தியொன்றாம் பாடல். மனிதன் பிறர் பொருளைக் கவராமல் இருப்பது மட்டுமல்லாமல், மனதில் இரக்கம் உள்ளவனாகவும், பிறருக்கு உதவி செய்பவனாகவும், தான தர்ம காரியங்களைத் தனக்கு முடிந்த வரையில் செய்து வருபவனாகவும் இருத்தல் மேலும் இனிமை பயக்கும். நாம் தினந்தினம் எத்தனையோ மனிதர்களிடம் பழகுகிறோம், பார்க்கிறோம். ஆனால் அத்தனை பேரும் நாம் நட்பு கொள்ளக்கூடிய தகுதி படைத்தவர்களாகக் கருத முடியாது. சிலர் வஞ்சக எண்ணம் கொண்டவர்கள்; சிலர் பொறாமை கொண்டவர்கள், சிலர் நம்மிடம் ஏதாவது கிடைக்காதா என்று காத்திருப்பவர்கள், சிலர் கல் நெஞ்சுக்காரர்கள் ஆபத்தில்கூட உதவமாட்டார்கள். இப்படிப்பட்ட உபயோகமற்ற நபர்களை ஆராய்ந்து பார்த்து அவர்களிடமிருந்து ஒதுங்கி வாழ்தல் இனிதாகும். “பிறன் கைப்பொருள் வெளவான் வாழ்தல் இனிதே அறம் புரிந்து அல்லவை நீக்கல் இனிதே மறந்தேயும் மாணா மயரிகள் சேராத் திறம் தெரிந்து வாழ்தல் இனிது.” வெளவுதல் என்றால் பறித்துக் கொள்ளுதல். மயரிகள் என்றால் அறிவற்ற மக்கள். மற்றவருடைய பொருட்களை கவர்ந்து கொள்ளாதிருத்தல் இனிது; தர்ம காரியங்களைச் செய்து, நாம் செய்திருக்கக்கூடிய பாவங்களிலிருந்து மீளல் இனிது; மறந்துகூட அறிவற்ற வீணர்களுடன் சேராமல் இருத்தல் இனிது. 22 இனிமை இருபத்தியிரண்டு மும்பையில் சிறுவயதிலேயே சென்று ஒரு வேலையைத் தேடிக் கொண்டு திரும்ப தமிழ்நாட்டுக்குத் தன் சொந்த ஊருக்குத் திரும்பியவர் அவர். மும்பை போவதற்கு முன்பு மிக மிக சாதாரண ஏழைக் குடும்பத்தைச் சேர்ந்தவர் அவர். நல்ல வேலையில் சேர்ந்து நன்றாக சம்பாதிக்கும் அவருக்கு நான், நீ என்று பெண் கொடுக்க உறவினர்கள் முன்வந்தனர். திருமணமாகி குழந்தைகளைப் பெற்று மிகவும் கெளரவமான நிலையில் வாழ்ந்து வந்தார் அவர். அவர் வேலை பார்த்த அலுவலகத்தில் ஏனைய ஊழியர்கள் அனேகம் பேர் இவரைக் காட்டிலும் வயதில் இளையவர்கள். அவர்கள் எல்லாம் இவரிடம் மிகவும் அன்பு பாராட்டுவார்கள். அவருடைய இளகிய குணத்தையும், அன்பையும் தவறாகப் பயன்படுத்திக் கொண்டு அங்கு வேலை பார்த்த சில கடைநிலை ஊழியர்கள், தாங்கள் சீட்டாடவும் பணம் வேண்டுமென்பதற்காக பொய் சொல்லி, மருத்துவச் செலவுக்கு என்றும், சாப்பாட்டுச் செலவுக்கு என்றும் இவரிடம் பணம் கேட்பார்கள். இவரும் அவர்களுடைய பொய்யை நிஜம் என்று நம்பி தன் சக்திக்கு மேல் கடன் கொடுத்து விடுவார். கொடுத்ததைக் கேட்பது, கண்டிப்பாக இருப்பது என்பது இவரிடம் கிடையாது. அதன் பலனாக இவருக்கு வருவாய்க்கு மேல் கடன் ஏற்பட்டு கூட்டுறவு சங்கத்தில் கடன்பட்டு கஷ்டப்பட்டார். அப்போது அவருக்கு மிகவும் நெருக்கமாக இருந்த சில நண்பர்கள் அவருக்கு தனக்கு மிஞ்சிதான் தானமும் தர்மமும். பொய் சொல்லி பணம் பறிக்கும் சூதாடிகளுக்கும், குடிகாரர்களுக்கும் உதவி செய்வது நல்லதல்ல என்பதை எடுத்துரைத்தனர். அப்போதுதான் அவரும் புரிந்து கொண்டார் வருவாய்க்கு ஏற்பதான் வழங்க வேண்டும் என்பதை. அதுவே இனிமை என்பதும் புரிந்தது. இவர் பணிபுரிந்து அலுவலகத்தில் இரு வேறு தொழிற்சங்கங்கள் இருந்தன. இவருக்கு தொழிற்சங்கத்தின் மீது அபிமானம் உண்டு. ஆனால் அரசியல் கட்சிகளின் அங்கமாக அவை இயங்குவதை அவர் ஏற்றுக் கொள்வதில்லை. ஆகவே இவர் ஒரு சங்கத்தில் பட்டும் படாமலும் இருந்து வந்தார். அந்தச் சங்கம் ஒரு கட்சியாகவே நடத்தப்பட்டு வந்தது. அதில் உறுப்பினர் இல்லாதவர்களை ஒதுக்கி வைத்தார்கள். இடையூறுகளைக் கொடுத்தார்கள். அவர்களைப் பற்றி அவதூறு பரப்பினார்கள். இதையெல்லாம் கவனித்த நமது நண்பர் எந்த சங்கத்திலும் தீவிரமாக ஈடுபடாமல் ஒப்புக்கு இரு பக்கத்தினரும் சமாதானம் அடையும் வகையில் மிக சாமர்த்தியமாக ஒருதலை பட்சமாக எவர் பக்கமும் சாயாமல் இருந்து விட்டார். அவர்கள் இருவராலும் இவருக்கு எந்த பயனும் இல்லையென்றாலும் இவருக்குத் தொல்லை இல்லாமல் இருதந்தே இனிமையான அனுபவம் தானே. மற்றவர்களைப் போல இவரும் ஆடம்பரமாகவும், வசதிகளைப் பெருக்கிக் கொண்டும் சுயநலத்தோடு வாழ்ந்திருக்கலாம். ஆனால் அவருடைய பிறவி குணம் அவரை அப்படி இருக்க விடவில்லை. தான் விரும்பியதையெல்லாம் அடைய வேண்டும் என்கிற வெறி அவரிடம் இல்லை. அவருடைய வீட்டிற்குச் சென்றால் ஆடம்பரப் பொருட்கள் எதையும் காணமுடியாது. மனைவின் கழுத்திலும் தாங்கமுடியாத தங்கத்தைக் காண முடியாது. எளிமை, நேர்மை அதுவே இனிமை என்பதை உணர்ந்து வாழ்ந்தவர் அந்த உத்தமர். அப்படியொருவார் வாழ்ந்தார், அது உண்மை. “வருவாய் அறிந்து வழங்கல் இனிதே ஒருவர் பாங்காகாத ஊக்கம் இனிதே பெரு வகைத்தாயினும் பெட்டவை செய்யார் திரிபின்றி வாழ்தல் இனிது.” இதன் பொருள்: தன்னுடைய வருவாய்க்குத் தகுந்தாற்போல பிறர்க்கு வழங்குவது இனிது; யார் பக்கத்திலும் சாய்ந்து ஒருதலை பட்சமாக நடக்காமல் இருப்பது இனிது; பெரும் பயன் விளைவிப்பதாயினும், தான் விரும்பியபடியெல்லாம் வாழாமல் தன் இயல்புக்கேற்ப எளிமையாக வாழ்தல் இனிது. 23 இனியவை இருபத்திமூன்று ஒருவர் தான் பிறந்த அந்த சின்னஞ்சிறு கிராமத்துக்குத் தான் பணியிலிருந்து ஓய்வு பெற்ற பிறகு, சொந்த ஊரைப் பார்த்து வரலாமே என்று போய்ப் பார்த்தார். அவருக்கு நாற்பது ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு பார்த்த அந்த பசுமையான, அழகான, சுத்தமான எங்கும் மக்கள் அன்போடு பழகும் மக்களையும் மனதில் வைத்திருந்து இப்போது இத்தனை ஆண்டுகள் கழிந்து அங்கு போனபோது ஏமாற்றம்தான் மிகுந்திருந்தது. அந்த சிறு கிராமத்துக்கு அங்கிருந்த சிவன் கோயிலும், ஊருக்குக் கிழக்கே இருந்த மாரியம்மன் கோயிலும்தான் பெருமை சேர்த்தவை. ஆனால் இன்று சிவன் கோயில் பாழடைந்து கிடந்தது. ஏதோ செய்ய வேண்டுமே என்று கோயிலுக்கு விளக்கேற்றி பூஜைகள் செய்ய ஒருவர் இருந்தார். மாரியம்மன் கோயில் ஓரளவு பரவாயில்லை. மக்கள் நடமாட்டம் அங்கு இருந்தது. சிவன் கோயில் சந்நிதியில் சுமார் பத்து பதினைந்து வீடுகள் அந்தக் காலத்தில் இருந்தன. அது தவிர கோயில் திருக்குளமொன்று சந்நிதித் தெருவில் வடபுறம் அமைந்திருந்தது. அழகான மண்டபத்துடன் கூடிய படித்துறை, நான்கு புறமும் குளத்துக்குப் படிக்கட்டுகள். அந்த பத்து வீடுகளிலும் கோயில் பூஜை செய்வோர், நாதஸ்வர வித்வான்கள், கோயில் நிர்வாகி ஆகியோர் இருந்தனர். சில வீடுகள் இடிந்து பாழடைந்து கிடந்தன. இவருக்கு மனம் வேதனையால் தவித்தது. கோயில் சந்நிதித் தெருவில் இரு வரிசையில் அந்தக் காலத்தில் வளர்ந்திருந்த இலவம் மரங்களும், திருவிழா காலத்தில் ஈச்சை, இளநீர், மாவிலை, தோரணங்கள் அழகு செய்யவும், பந்தல் போடவும் அந்த மரங்கள் பயன்பட்டன. இன்று ஒன்றும் இல்லை. ஒரே மணல் வெளி. காரணம் அங்கிருந்து ஐந்து கல் தூரத்தில் கடற்கரை. இவர் ஓர் முடிவுக்கு வந்தார். அந்த சந்நிதித் தெருவில் இடிந்து விழுந்திருந்த ஒரு வீட்டை விலைக்கு வாங்க முடிவு செய்தார். தன்னுடைய முயற்சியால் இடிந்து கிடந்த திருக்குளத்தை சீரமைக்கவும், கோயிலில் எல்லா கால பூஜைகளும் நடக்கவும் முயற்சி எடுக்க முடிவு செய்தார். சந்நிதித் தெரு வீட்டையும், அதன் பின்புறம் இருந்த ஏராளமான தரிசு நிலத்தையும் விலைகொடுத்து வாங்கினார். அந்த சந்நிதி புதுத் தோற்றம் பூண்டது. சுற்றியிருந்த நிலத்தில் ஒரு ஆழ்துளை கிணறு தோண்டினார். நீர்பாய்ச்சி அங்கு ஒரு அழகான தோட்டத்தை வளர்த்தார். இவரது முயற்சி அவ்வூராருக்கும் தெம்பைக் கொடுத்து, கோயில் மீண்டும் புத்துணர்வு பெற ஆரம்பித்தது. சுற்றுலா வருபவர்களும், ஆலயங்களுக்கு வரும் பக்தர்களும் அதிகரித்தனர். அவர்கள் கண்களைக் கவர்ந்தது அவர் வளர்த்த அந்தப் பூஞ்சோலையும், புது வீடும் தான். இன்று அந்த கிராமத்துச் சிவன் கோயிலுக்கு தினமும் நூற்றுக் கணக்கானோர் வருகின்றனர். அவரது பூஞ்சோலையில் அமர்ந்து வெயில் வேளையில் ஓய்வு கொள்கின்றனர். உணவு சாப்பிடுகின்றனர். எதிரிலுள்ள கோயில் திருக்குளத்துக்கு புது நீர் வரும் பாதை சரி செய்யப்பட்டு நீர் நிரப்பப்பட்டது. குளம் இன்று மீண்டும் பயன்பாட்டுக்கு வந்து விட்டது. மக்கள் மகிழ்ச்சியடைந்தனர். அத்தகைய ஊரில் இப்படிப்பட்ட சோலை அமைப்பதும், குளத்தைச் சீரமைப்பதும் இனிமையானது அல்லவா? முன்பெல்லாம், அதாவது லார்டு மெக்காலேயின் கல்வித் திட்டம் கொண்டு வரப்படும் முன்னர், அதாவது நூற்றைம்பது ஆண்டுகளுக்கு முன்பெல்லாம் நம் தமிழகத்தில் தொழிலை அடிப்படையாகக் கொண்டு பிரிவுகள் இருந்தன. அவற்றில் ஏற்றத் தாழ்வு இல்லை. அந்தந்த தொழில் செய்வோர் தங்களுக்குள் உறவுகளை ஏற்படுத்திக் கொண்டனர். அவர்களது பழக்க வழக்கங்கள் அந்தந்தத் தொழில் செய்வோர் மத்தியில் ஒரே மாதிரியாக இருந்தன. மற்ற தொழில் புரிவோர் அவர்கள் மக்களின் பழக்க வழக்கங்களை மேற்கொண்டனர். இப்படி தொழில் ரீதியாகப் பிரிந்திருந்தவர்கள் ஊர் பொதுக் காரியம் என்றால் ஒன்று சேர்ந்தனர். இவர்களுக்குள் ஏற்றத் தாழ்வுகள் இல்லை. இதில் ஒரு பிரிவினர் மக்கள் நலனுக்காக யாகம் புரிவதும் வேதம் படிக்கவும், கல்வியை மற்றவர்களுக்குக் கற்பிக்கவும், அவர்கள் தரும் பொருளில் தங்கள் வாழ்க்கையை நடத்திக் கொள்ளவுமாக இருந்தனர். ஆங்கிலேயரின் வருகையால் இந்தப் பிரிவுகள் கலகலத்தன. ஏற்றத் தாழ்வுகள் கற்பிக்கப்பட்டன. அதனால் ஒற்றுமையோடு இருந்த சமுதாயம் பிரிந்து நின்றது. பிரித்தாளும் சூழ்ச்சியை எல்லா நிலைகளிலும் கடைப்பிடித்து வெள்ளையர்கள் நம் சமூகத்தின் ஒற்றுமையைக் குலைத்தனர்.  அப்படிப் பிரிவினைகள் ஏற்படாத காலத்தில் உலக நன்மைக்காக யாகங்களைச் செய்து வந்த அந்தணர்களுக்கு மற்ற சமூகத்தார் வேண்டிய உதவிகளைச் செய்தனர். பசுக்களை தானம் செய்தனர். பொன்னையும் பொருளையும் கொடுத்து வாழ்வித்தனர். அந்த காலத்துச் சூழ்நிலையில் அப்படிப்பட்ட அறச் செயல் இனிமையாக இருந்தது. அப்படி வேதம் பயின்று பிறர் நலனுக்காக வேண்டும் இனத்தார் தங்களுக்கென்று எந்த சொத்தும் சேர்த்து வைத்துக் கொள்ளக் கூடாது. நாளைக்கு என்று கூட சேர்க்கக் கூடாது. பிறர் தரும் பொருளில்தான் வாழ வேண்டும் என்ற நியதி இருந்தது. நியமம் தவறாமல் வாழ்ந்த இவர்களை மதித்து பசு, பொன் போன்றவற்றை ஏனையோர் கொடுத்து வந்தனர். இது இனிமையானது என்கிறது இந்தப் பாடல். பாவ புண்ணியத்துச் சூதாடிகள் அஞ்சுவதில்லை. ஏமாந்தால் ஏழையைக் கூட மொட்டையடித்து விடுவார்கள். தெருவோரத்தில் நான்கு சீட்டுகளை மாற்றி மாற்றி விரித்து வைத்து அதன் மீது ஒரு தகர டப்பாவை கவிழ்த்து அதனடியில் இருக்கும் சீட்டின் அடையாளத்தில் பணம் கட்டினால் பன்மடங்கு தருவதாகச் சொல்லி எளியவர்களை மொட்டையடிக்கும் மோசடிப் பேர்வழிகள் ஏராளமாக இருக்கின்றனர். பொய் சொல்லி, ஏமாற்றி, சூதாடவைத்து இப்படி மக்களை மோசடி செய்யும் பேர்வழிகளை ஒதுக்கி, அவர்கள் நிழல்கூட நம் மீது படாமல் பார்த்துக் கொள்வது இனிமை தரும். “காவோடு அறக் குளம் தொட்டல் மிக இனிதே ஆவோடு பொன் ஈதல் அந்தணர்க்கு முன் இனிதே பாவமும் அஞ்சாராய்ப் பற்றும் தொழில் மொழிச் சூதரைச் சோர்தல் இனிது.” இதன் பொருள்: நல்ல பசும் சோலையை வளர்ப்பதும், அறம் செய்வதற்கென்று நீர்நிலைகள் குளங்களை வெட்டுதல் மிக இனிமை பொருந்தியது. பசுவையும் பொன்னையும் வேதம் பயின்ற எளிய அந்தணர்க்குக் கொடுப்பது இனிது; பாவங்களுக்கு அஞ்சாத சூதாடிகளை விட்டு நீங்குதல் மிக இனிது. 24 இனியவை இருபத்திநான்கு அரசியல் பிரமுகர் ஒருவர். சற்று வசதியானவர். மக்கள் நலனில் உண்மையான அக்கறையும் நாட்டமும் கொண்டவர். நேர்மையானவர். ஆம்! அரசியலில் ஈடுபட்டிருந்தும் நேர்மை தவறாமல் நடந்து கொள்பவர். ஆனால் அவரைச் சுற்றியிருக்கும் அரசியல் வாதிகளின் நடத்தையினால் மக்கள் சற்று கோபமடைந்திருந்தாலும், இவர் மீது மட்டும் நல்ல எண்ணம் கொண்டிருந்தார்கள். இவருக்கு ஏன் இந்த அரசியல், பேசாமல் இவர் பொதுக் காரியங்களைச் செய்துகொண்டு நேர்மையாளர் என்கிற பெயரைக் காப்பாற்றிக் கொள்வதை விட்டு இவருக்கு எதற்காக அரசியலும், தேர்தலும் என்று சிலர் வெளிப்படையாகவே விமர்சிப்பார்கள். அவர் சார்ந்திருந்த கட்சி இவரைத் தேர்தலில் நிற்க வைத்துவிட்டது. என்ன செய்வார் பாவம்! வீடுவீடாகச் சென்று மக்களைச் சந்தித்து கரங்களைக் கூப்பி வாக்குக் கேட்கத் தொடங்கினார். இவரைப் பற்றி நன்கு தெரிந்தவர்கள் மன மகிழ்ச்சியோடு இவரை வரவேற்றாலும், ஐயா தங்களுக்கு எதற்கு இந்த வீண் வேலை. தங்கள் கெளரவம் கெட்டுவிடாதா என்றெல்லாம் கூட கேட்டார்கள். இவரைப் பற்றி அதிகம் தெரிந்து கொள்ளாதவர்கள் அரசியல்வாதிகள் என்றால் ஒரு அபிப்பிரயம் கொண்டிருந்தவர்கள், இவரை கேள்வி மேல் கேட்டு இவரது பொறுமையை அதிகம் சோதித்தனர். இவருடன் இருந்தவர்கள் அந்த மக்களிடம் கோபப்பட்டு பதில் சொன்னாலும், இவர் அவர்களை அடக்கிவிட்டு, அடக்கத்துடன் உங்கள் கோபம் நியாயமானதுதான். இயன்றவரை நீங்கள் சொல்லும் குறைகள் ஏற்படாமல் பார்த்துக் கொள்வது என் பொறுப்பு. அப்படி முடியாவிட்டால் இதை விட்டுவிடுகிறேன் என்று பொறுமையாக பதில் சொல்லுவார். மற்றவர்கள் இவர் ஏன் இப்படி அடங்கிப் போகிறார் என்று கவலைப் பட்டார்கள். ஆனால் தேர்தலின் முடிவில் இவர்தான் அதிகம் வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். அதற்கு அவரது பொறுமையும், கோபப்படாமல் சொன்ன பதில்களும்தான் காரணம் என்பதை அனைவரும் புரிந்து கொண்டனர். ஆகவே தான் வெற்றியடைய வேண்டுமானால், அது எந்தத் துறையானாலும் கோபப்படாமல் தவம் செய்வது போல வாழ்க்கையை கசடு நீக்கிக் நடந்து கொள்வானானால் அது இனிமை தரும். அந்த பகுதி மக்களுக்குப் பல தேவைகள் இருந்தன. குடிநீர் பிரச்சினை நிலவி வந்தது. சில கல் தூரத்தில் இருந்த ஒரு பெரிய ஆற்றிலிருந்து குடிநீர் குழாய்கள் மூலம் கொண்டு வந்து மேல் நிலைத் தொட்டிகள் அமைத்து ஆங்காங்கே குடிநீர் விநியோகம் செய்தால் இந்தப் பிரச்சினை தீரும். ஆனால் அந்தக் குழாய்களைக் கொண்டு வரும் வழியில் இருக்கும் நிலச் சொந்தக்காரர்கள் தங்கள் நிலங்களை விட்டுக் கொடுக்க மறுத்தனர். இவர் பொறுமையாக அனைவரையும் சந்தித்து, ஒட்டுமொத்த மக்களின் நலனுக்காகச் சிலர் தங்கள் சொந்த நலனை விட்டுக் கொடுத்தல் தியாகம் அல்லவா. அந்தத் தியாகத்தை நீங்கள் ஏன் செய்யக் கூடாது என்பதையெல்லாம் எடுத்துச் சொல்லி, மெல்ல அவர்களைச் சம்மதிக்க வைத்து குடிநீர் பிரச்சினையைத் தீர்த்து வைத்தார். இதுபோல பல விஷயங்களில் அவருடைய விடாமுயற்சியும், உறுதியும் மக்கள் நலனுக்கு உகந்ததாக அமைந்தது. இவருடைய இப்படிப்பட்ட ஆற்றல் இனிமையானது அல்லவா? இவருடைய திறமையையும், ஆற்றலையும் கண்ட அவரது கட்சிக்காரர்கள் இவர் அமைச்சராக ஆனால் மேலும் பல நன்மைகளைச் செய்யலாமே, மாநிலம் முழுவதுக்கும் இவரது திறமை பயன்படுமே என்றெல்லாம் சொல்லி இவர் மனத்தில் சலனத்தை ஏற்படுத்த முயன்றனர். ஆனால் இவருக்கு அத்தகைய ஆசையோ, ஆர்வமோ சிறிதும் இல்லை. இருக்கும் பதவியைக் கொண்டு எத்தனை பேருக்கு நல்லது செய்யமுடியுமோ அதைச் செய்தால் போதும். எட்டாத கனிக்கு ஆசைப்பட்டு தவறான பாதைக்குப் போக நான் விரும்பவும் இல்லை. அந்த எண்ணம் எனக்கு இல்லவும் இல்லை என்று சொல்லிவிட்டு அவர் தொடர்ந்து தன் தொகுதி மக்களுக்கு நல்லவைகளைத் தொடர்ந்து செய்து வந்தார். இவரது மனம் இல்லாத ஒன்றுக்கு ஆசைப்படாமல், இருப்பதைக் கொண்டு நல்லவை செய்ய நினைத்தது இனிமையானது அல்லவா? “வெல்வது வேண்டி வெகுளாதான் நோன்பு இனிதே ஒல்லும் துணையும் ஒன்று உய்ப்பான் பொறை இனிதே இல்லது காமுற்று இரங்கி இடர்ப்படார் செய்வது செய்தல் இனிது.” வெற்றி பெறுவதுதான் நோக்கம் என்றால், எதற்கும் சலனப்படாமல், கோபப்படாமல் தவம் போல் வாழ்பவனது செயல் இனிமையானது; தான் ஈடுபட்ட செயலை முடிப்பதையே நோக்கமாக இருந்து காரியத்தை முடிப்பவனின் ஆற்றல் இனிமை தரும். தன்னிடம் இல்லாத ஒன்றுக்காக விரும்பியும் அது கிடைக்காமல் போவதால் மனம் துன்பப்படாமல் இருப்பதைக் கொண்டு மகிழ்பவனின் செயல் இனிமை தரும். 25 இனியவை இருபத்தைந்து மனிதனை வழிநடத்தும் இயந்திரங்களை ஐம்பொறிகள் என்கிறோம். அதாவது மெய் (உடல்) வாய், கண், மூக்கு, செவி ஆகியவையாகும். உடலால் பல உணர்வுகளை அடைகிறோம். வாய் சுவைக்கிறது, பேசுகிறது, சிரிக்கிறது, அழுகிறது, குரல் எழுப்புகிறது, கண்கள் பார்க்கின்றன, மூக்கு நுகர்கிறது, செவி கேட்கிறது. இப்படி மனிதனுக்கு வேண்டிய அத்தியாவசியமான செயல்கள் அனைத்தையும் செய்வது இந்த ஐந்து பொறிகள். இவை மனிதனின் கட்டுப்பாட்டுக்குள் இருக்க வேண்டும். அப்படி கட்டுப்பாட்டை இழந்து அவை தன் போக்கில் செயல்பட ஆரம்பித்தால் என்ன ஆகும்? ஒரு பழைய திரைப்பட பாடல் உண்டு. ‘கண் போன போக்கிலே கால் போகலாமா, கால் போன போக்கிலே மனிதன் போகலாமா?’ என்று அந்த பாடல் இருக்கும். இந்த ஐம்பொறிகளும் தன் இயல்பினாலே அவற்றுக்கு உகந்த வகையில் நடந்து கொள்ளும். ஆனால் அவை அப்படி நடக்காமல் அவற்றைத் தன் மனம் கட்டுப்படுத்தி வைத்துக் கொள்ள வேண்டும். பெரிய புராணத்தில் ‘எறிபத்த நாயனார்’ என்பவரின் வரலாறு உண்டு. அவர் தேவார மூவரைப் போல பாடிப் பரவியவர் அல்ல. ஆனால் அசைக்கமுடியாத முரட்டு சிவபக்தி அவருக்கு. சிவனடியார்களுக்கு யாராவது தீங்கு செய்தால் பொறுத்துக் கொள்ள மாட்டார். அப்படியொருநாள் சிவகாமியாண்டார் எனும் சிவநேசச் செல்வர் கருவூரில் கோயில் கொண்டுள்ள ஆநிலையப்பருக்கு மலர்கள் கொய்து பூந்தாமத்தை ஏந்தி ஆம்பிராவதி நதிக் கரையிலிருந்து ஆலயம் நோக்கி வந்து கொண்டிருந்தார். அப்போது உறையூரைத் தலைநகராகக் கொண்டு சோழ நாட்டை ஆண்டு வந்த புகழ்ச்சோழ மன்னன் கருவூருக்கு வருகை தந்து தன் அரண்மனையில் தங்கி இருந்தான். அவனுடைய பட்டத்து யானையை பாகர்கள் ஆம்பிராவதி நதிக்குக் கொண்டு சென்று நீராட்டி, கரும்பு, வாழை முதலிய உணவுகளைக் கொடுத்து அதற்குச் சிவச் சின்னங்களை அணிவித்து, பட்டத்து யானை அல்லவா? அதனால் அதன் மேல் ஒரு பாகன் இரு புறமும் இரு பாகர்கள் ஆக மொத்தம் ஐந்து பாகர்கள் அதனை வழிநடத்தி வந்தனர். நீராடிய மகிழ்ச்சி, உணவு உண்ட திருப்தி அந்த யானை வழியோடு போன சிவகாமியாண்டாரின் பூந்தாமத்தைப் பறித்து வீசி காலால் துவைத்துவிட்டது. இதனைக் கண்ட எறிபத்தர் தன் கையிலிருந்த மழு எனும் கூரிய ஆயுதத்தால் அந்த யானையின் துதிக்கையை வெட்டினார். யானை பிளிறி அலறியது. பாகர்கள் சண்டைக்கு வந்தனர். அந்த ஐந்து பாகர்களையும் எறிபத்தர் வெட்டி வீழ்த்தினார். செய்தி கேட்டு எதிரி நாட்டு படைதான் வந்து தன் யானையைக் கொன்றுவிட்டதோ என்று மன்னன் தன் குதிரை மீதேறி வேகமாக வந்தான். இங்கு பார்த்தால் உடலெங்கும் திருநீறு பூசிய சிவனடியார் ரத்தம் சொட்டும் மழுவுடன் நிற்கிறார். மன்னன் புகழ்ச்சோழனும் சிறந்த சிவபக்தன், அறுபத்து மூன்று நாயன்மார்களில் ஒருவன். அவன் உடனே குதிரையினின்றும் கீழிறங்கி சிவனடியாரான எறிபத்தரிடம் சிவனடியாரான தாங்கள் தவறு செய்திருக்க முடியாது. என் யானைதான் தவறு செய்திருக்க வேண்டும். அடியேனின் யானை செய்த தவற்றுக்கு என்னை தண்டியுங்கள் என்று தன் வாளை எடுத்துக் கொடுக்க, அதை வாங்கி தங்களைப் போன்ற சிவனடியாருக்கு நான் செய்த தவற்றுக்கு என்னை நானே தண்டித்துக் கொள்கிறேன் என்று எறிபத்தர் தன்னை வெட்டிக்கொள்ள முயல சிவபெருமான் தோன்றி இரு சிவனடியார்களையும் வாழ்வித்தார் என்கிறது கதை. இதில் மதங்கொண்ட யானைதான் ஆணவ மலம். அதனைக் கட்டுப்படுத்த தவறிய பாகர்கள் ஐவரும் ஐம்பொறிகள். சிவதீட்சைதான் எறிபத்தர். ஆகவே மனிதனை நல்வழிப்படுத்துவதற்கு இப்படிப்பட்ட கதைகளை உண்மை வரலாற்றோடு கலந்து கொடுத்திருக்கின்றனர் நமது பெரியோர்கள். ஆகையால் இந்த இனியவை நாற்பது பாடலில் சொல்வது போல ஐம்பொறிகளைக் கட்டுக்குள் வைப்பது இனிது. ஒரு காரியத்தைச் செய்வதால் கை நிறைய செல்வம் வரும் என்றாலும், அப்படிச் செய்யக் கூடிய காரியம் கல்லாத புல்லர் ஒருவரின் மூலம் கிடைக்கிறது என்றால் அதனை வேண்டாம் என்று ஒதுக்கி அப்படிப்பட்ட செல்வத்தைப் பெறாமல் தவிர்ப்பதும் இனிமைதான். ஊரில் ஒருவன் எல்லோரிடமும் மரியாதையின்றி நடந்து கொள்வான். அடக்கமின்றி செயல்படுவான். நல்லவர்களும், பெண்மணிகளும் அவனைக் கண்டு அஞ்சுவார்கள். ஒரு நேரம் போல மறு நேரம் இல்லாமல் நிலையற்ற மனம் கொண்டவன். அத்தகைய தீயவனைக் கண்டு அஞ்சி அவனோடு சேராதிருத்தல் நன்மை தரும். அதுவும் இனிமைதான். “ஐவாய வேட்கை அவாவடக்கல் முன் இனிதே கைவாய்ப் பொருள் பெறினும் கல்லார்கண் தீர்வினிதே நில்லதே காட்சி நிறையில் மனிதரைப் புல்லா விடுதல் இனிது.” மெய், வாய், கண், மூக்கு, செவி ஆகிய ஐம்புலன்களின் வழியாக வரும் ஆசைகளையும், நினைவுகளையும் அடக்கிக் கொள்ளுதல் இனிமை; கை நிறைய பொருள் பெருவதாயினும் கல்லாதவரைச் சேரா விடுதல் இனிமை. நிலையற்ற அறிவையுடைய அடக்கமில்லாத வீணனைச் சேராதிருத்தல் இனிமை தரும். 26 இனியவை இருபத்தியாறு சிறு வயது முதல் ஒரு பொருளைத் தன்னுடையதாக ஆக்கிக் கொள்ள வேண்டுமென்று விரும்பி காத்திருந்தான் அவன். அந்த பொருள் நேபாளத்தில் கிடைக்கும் அரிய வகை சாளக்கிராமம் எனும் கருமையான கல். ஒவ்வொரு கல்லும் ஒவ்வொரு சுவாமியை அடையாளமாகக் காட்டும் என்பார்கள். அவற்றை பக்தி சிரத்தையோடு வைத்து பூஜை செய்ய வேண்டும். அப்படியொரு சாளக்கிராமக் கல்லை வாங்கி வரவேண்டுமென்று அவருக்கு நெடுநாள் ஆசை. ஒரு முறை அவர் பத்ரிநாத், நேபாளம் முதலிய இடங்களுக்கு சுற்றுப்பயணம் மேற் கொண்டபோது கண்டகி நதியில் கிடைத்த அரிய வகை கல்லொன்றை வாங்கி வந்து தன் பூஜை அறையில் வைத்துக் கொள்வதற்காகக் கொண்டு வந்தார். சுற்றுப்பயணம் செய்து வந்த இவரைப் பார்ப்பதற்காக இவரது நண்பர்கள் பலர் இவரது இல்லத்துக்கு வந்தனர். அப்படி வந்தவர்கள் இவர் வாங்கி வந்த அரிய சாளக்கிராமத்தையும் பார்த்து வியந்தனர். அதில் ஒருவர் குறிப்பிட்ட இறைவனை வழிபடுபவர். அவர் சொன்னார் இந்தக் கல் நான் வழிபடும் இறைவனைக் குறிக்கும் கல். இது எனக்குக் கிடைத்தால் தினசரி பூஜைகளைச் செய்து ஜாக்கிரதையாக வைத்துக் கொள்வேன் என்றார். அவரது ஆசையை உணர்ந்த தான் விரும்பி வாங்கி வந்த அந்த சாளக்கிராமத்தை அவருக்கு மனம் உவந்து கொடுத்தார். அந்தச் செயல் இனிமையானது அன்றோ. சோழநாட்டு சிறிய ஊர் ஒன்றிலிருந்து சென்னைக்கு வேலை கிடைத்துப் போன ஒருவர் தனக்குத் தெரிந்த நண்பர் வீட்டில் சிலகாலம் தங்கியிருந்தார். உணவை வெளியில் ஓட்டலில் வைத்துக் கொண்டாலும், தனக்குத் தனியாக அறையை வாடகைக்கு எடுத்துக் கொள்ளாமல் தூரத்துச் சொந்தக்காரரான அவருக்குத் தெரிந்தவர் வீட்டிலேயே இருந்து வந்தார். இவர் போய்விடுவார் போய்விடுவார் என்று காத்திருந்த அந்த நண்பரும் அவரது குடும்பத்தாரும் இவரிடம் வெறுப்பை உமிழத் தொடங்கினர். இவர் வந்தவுடனேயே படுக்க இடம் இல்லை, தூங்க இடம் இல்லை என்றெல்லாம் சொல்லிக் காட்டியும் இந்த நண்பருக்குப் புரியாமல் அங்கேயே டேரா போட்டிருந்தார். அந்த நிலையில் இவருடைய அலுவலக நண்பர் ஒருவர் இவரோடு இவர் இருந்த வீட்டுக்கு வந்தபோது சூழ்நிலையைப் புரிந்து கொண்டு அந்த மரமண்டைக்குப் புரியும்படியாக, அடே! நீ தங்கியிருக்கும் வீட்டில் நீ இருப்பதை விரும்பவில்லை என்பதை புரிந்து கொள்ளவில்லையா? ஏன் இப்படி பிறர் விரும்பாத இடத்தில் இருக்கிறாய். வேறு அறை பார்த்துக் கொண்டு போய்விடு என்று சொன்ன பிறகு இவரும் போய்விட்டார். மதிப்பு இல்லாத இடத்தில் வாழாத வாழ்க்கை இனிமை தரும் என்கிறது இந்தப் பாடல். தான் விரும்பி வாங்கிவந்த அரியவகை கல்லை வேறொருவர் கேட்டார் என்பதற்காக மனம் உவந்து கொடுத்த இவரது பண்பை எல்லோரும் பாராட்டினார்கள். அதைவிட இனியது வேறு என்ன இருக்கிறது. “நச்சித்தற் சென்றார் நசைகொல்லா மாண்பினிதே உட்கில் வழிவாழா ஊக்கம் மிக இனிதே எத்திறத்தானும் இயைவ கரவாத பற்றினின் பாங்கினியது இல்.” தன்னை நாடிவந்து எனக்கு உன்னிடம் உள்ள இந்தப் பொருளைக் கொடு என்று கேட்பவரின் விருப்பத்தை நிறைவேற்றும் பண்பு இனியது; மதிப்பு இல்லாத இடத்தில் வாழாதிருத்தல் மிகவும் இனியது; தன்னிடம் உள்ள பொருளை மறைக்காமல் கேட்டவருக்குத் தரும் அன்பு மிக இனியது. 27 இனியவை இருபத்தேழு இந்தப் பாடலின் கருத்தைச் சற்று விவரமாக பார்க்க வேண்டும். இந்தப் பாடலின் கருத்துக்கு தஞ்சை மராத்தியர் வரலாற்றிலிருந்து ஒரு நிகழ்ச்சியை உங்களுக்குச் சொல்ல வேண்டும். ஆற்காட்டு நவாப் அன்வர்தீன் கானின் மகனான முகமது அலியை அவனது உறவினன் சந்தா சாஹேப் பிரெஞ்சுக் காரர்களின் உதவியோடு ஆற்காட்டைவிட்டுத் துரத்திவிட்டு ஆட்சியைப் பிடித்துக் கொண்டான். பின்னர் முகமது அலி தஞ்சை மராத்திய மன்னர் பிரதாபசிம்ம ராஜாவின் உதவியோடு சந்தாசாஹேபை தோற்கடித்து ஆற்காட்டை மீட்டு முகமது அலியிடம் கொடுத்தார். பின்னர் சந்தா சாஹேப் பலத்த படையுடன் தஞ்சைக்கும் திருச்சிக்கும் படையெடுத்து வந்தான். அவன் படைகள் திருவரங்கத்தில் தங்கி போரிட்டது. அவனை எதிர்த்து ஆங்கில கம்பெனி படைகளும், மைசூர் படைகளும், கிழக்கிலிருந்து தஞ்சை மராத்தியர் படையும், இராமநாதபுரம் சேதுபதி படைகளும் போரிட்டன. மராத்தியர்களின் படை தளபதி மானோஜி ராவ் தலைமையில் கோயிலடி எனும் இடத்தில் (கல்லணைக்குப் பக்கத்தில் திருக்காட்டுப்பள்ளி அருகில்) தங்கியிருந்தது. இடையில் மாட்டிக் கொண்ட சந்தா சாஹேப் தப்பிக்க வழியின்றி இரவோடு இரவாக கோயிலடி வந்து மானோஜி ராவிடம் சரணடைகிறான். முகமது அலியிடம் மாட்டிக் கொண்டால் சித்திரவதை செய்துவிடுவான் என்று மானோஜி ராவிடம் அடைக்கலம் கேட்டான். மன்னர் பிரதாபசிம்மரும் இந்த சந்தாசாஹேப் தஞ்சையை கொள்ளை யிட்டவன், அக்கிரமங்கள் புரிந்தவன் என்றாலும் அடைக்கலம் என்றதும் வேறு வழியில்லை. நமது தர்மப்படி அடைக்கலம் அடைந்தவனைக் காப்பது நம் கடமை என்று அவனுக்கு அடைக்கலம் கொடுத்து தஞ்சையில் அரண்மனைத் தோட்டத்தில் ஒரு வீட்டில் சிறை வைத்தார். அப்படிப்பட்ட பிரதாபசிம்மருடைய வீரம் இனிமையுடையது. சந்தா சாஹேப் தஞ்சையில் அடைக்கலம் புகுந்துவிட்டான் என்ற செய்தி கேட்டதும், முகமது அலியும், ஆங்கிலேயர்களும் அவனைத் தங்களிடம் ஒப்படைக்குமாறு பிரதாபசிம்மரை வற்புறுத்தினர். தாங்கள் அவன் உயிரைக் காப்பதாகச் சொன்ன வாக்குறுதிக்காக மன்னரும் பெரும்பாடுபட்டு அவனை அனுப்பாமல் இருந்தார். ஆனால் இறுதியில் அவனை அவர்களிடம் ஒப்படைக்கும்படியான கட்டாயம் வந்தது. சந்தா சாஹேபும் தான் இருந்த இருப்பும் இன்று அடைந்த தோல்வியும் அவமானமும் ஒன்று சேர்ந்து, அவர்களிடம் சித்திரவதை அனுபவித்து இறப்பதைக் காட்டிலும் உங்கள் கையால் கொன்று விடுங்கள் என்றான். அதன்படியே அவன் தலை வெட்டப்பட்டு முகமதலியிடம் அனுப்பப்பட்டது. மானம் போனபின் வாழ்வதிலும் உயிர் விடுவதே மேல் என்று சந்தா சாஹேப் முடிவு செய்து விட்டான். அந்த முடிவு இனிது. இழந்த ஆட்சியை மீட்டுக் கொடுத்து, எதிரியான சந்தா சாஹேபைப் பிடித்துக் கொடுத்து ஏராளமான உதவிகளை தஞ்சை பிரதாபசிம்ம ராஜா செய்திருந்தும் ஆற்காட்டு நவாப் சலுகை கொடுத்திருந்த கப்பப் பணத்தை முந்தைய ஆண்டுகளுக்கும் சேர்த்துத் தர வேண்டுமென்று தஞ்சைக்குத் தன் படைகளை அனுப்பி தஞ்சை ராஜாவாக இருந்த துளஜாவை சிறையில் அடைத்துவிட்டு தஞ்சையைப் பிடித்துக் கொண்டான். துளஜா ராஜா ஆங்கில கவர்னருக்கும், அவர்கள் மூலம் இங்கிலாந்துக்கும் முறையிட்டு மீண்டும் தஞ்சை ஆட்சியை ஆங்கில கம்பெனியார் மீட்டுக் கொடுத்தனர். தான் செய்த நன்றியை மறந்து தங்கள் ராஜ்யத்தையே அபகரித்துக் கொண்ட ஆற்காட்டின் மீது துளஜாவோ, தஞ்சை மன்னர்களோ குற்றம் கண்டு விரோதம் பாராட்டவில்லை என்பதும் இனிதுதானே. பாடல்: “தானம் கொடுப்பான் தகையாண்மை முன் இனிதே மானம் படவரின் வாழாமை முன் இனிதே ஊனம் கொண்டாடார் உறுதி உடையவை கோள் முறையாற் கோடல் இனிது.” பொருள்: அடைக்கலம் என்று வந்தவர்க்கு அடைக்கலம் தந்து ஆதரிக்கும் பெருமையுடைய வீரம் இனியது; மானம் அழியும் நிலை உருவானால் உயிர் வாழாமை இனிமை தரும்; பிறர் குற்றங்களை பெரிது படுத்தாமல் நல்லவைகளை மட்டும் மனதில் கொள்ளுதல் சாலவும் இனிமை தரும். 28 இனிமை இருபத்தியெட்டு மகாகவி பாரதி கண்ணன் என் சீடன் என்றொரு பாடலை எழுதியிருக்கிறார். அது தத்துவார்த்தமான பாடல் என்றாலும் அந்தப் பாடலில் முதலில் காணப்படும் அந்த கவைக்குதவாத சீடனைச் சற்று நினைத்துப் பார்ப்போம். எதைச் சொன்னாலும் அதற்கு மாறாகச் செய்வது; அல்லது செய்யாமல் இருப்பது; அல்லது செய்யத் தெரியாமல் விழிப்பது. இப்படி. இந்தப் பாடலின் கருத்து வேறு. ‘நான் செய்வேன்”, இந்த சீடனை நான் மாற்றிக் காட்டுவேன் என்று அகந்தை மிகுந்திருந்த போது கண்ணனாகிய அந்த சீடன் குருவின் சொல்லை கேட்கவேயில்லை. கடைசியில், நான் உன்னிடம் தோற்றேன் என்று சொன்னதும், உடனே அந்த சீடன் எள் என்றவுடன் எண்ணெயாக அத்தனை வேலைகளையும் நொடிப்பொழுதில் செய்து முடிக்கிறான். ஆனால் இங்கு நாம் பார்க்கப்போகும் ஆள் எதற்கும் ஆகாதவன். எந்தச் செயலையும் செய்ய வக்கில்லாதவன். சாமர்த்தியம் கிடையாது. அவசரமாக ஒரு பொருள் வேண்டுமென்று சொன்னால் அவன் போனவன் போனவந்தான் திரும்பி வருவதே கிடையாது. நம் வேலையும் கெட்டுப் போகும். அவனை நம்பினால் மண்குதிரையை நம்பிய கதைதான். அப்படிப்பட்ட கவைக்குதவாத மனிதனிடம் எந்தப் பொறுப்பையும் ஒப்படைத்து இதனைச் செய்து முடி என்று சொல்லாதிருத்தல் இனிமை தரும். வாழ்க்கை நிலையாமையை மனிதன் முதுமையை அடையும்போதுதான் உணர்கிறான். அது வரை ‘ரத்தத் திமிர்’ என்பார்களே அந்த இளமைக் காலத்தின் அகம்பாவமும், அலட்சியமும் அவனைத் தானே எல்லாவற்றையும் செய்யும் ஆற்றல் மிக்கவன், தனக்கு மிக்கவன் யாரும் கிடையாது என்றெல்லாம் நினைக்கிறான். கிடைத்த பொருளை அபகரித்துச் சேகரித்துக் கொள்கிறான். பொய்யும், களவும், பிறர் பொருளை ஏமாற்றி அபகரிக்கும் வஞ்சகமும் அதிகரித்து ஏராளமான சொத்துக்களை வாங்கிக் குவித்துக் கொள்கிறான். ஆனால் இளமையும், பேராசையும் இருக்கும் வரை இவனுக்கு வாழ்க்கை நிலையாமை குறித்த அறிவே இருப்பதில்லை. தன் தேவைக்கு மேல் ஒரு சிறிது ஆபத்துக்கு உதவட்டுமே என்று சேர்த்து வைத்துக் கொள்வதில் தவறு இல்லை. ஆனால் கொண்ட மட்டும், ஆகாயமே எல்லை என்று கிடைத்ததை எல்லாம் சுருட்டிக் கொள்ளும் கயமைத்தனம் தேவையில்லை. எதற்காக இத்தனை? இவைகள் எல்லாம் இவன் போகும்போது கொண்டு போகப் போகிறானா? அல்லது இவன் வாரிசுகள் அவைகளைக் கட்டிக் காக்குமா? எமன் ஒரு நாள் வரப்போகிறான். நம்மைக் கொண்டு சென்று விடுவான். நம் வாழ்க்கை சாசுவதம் இல்லை என்கிற வாழ்க்கை நிலையாமையைப் புரிந்து கொண்டால், தானும் வாழ்ந்து, பிறரும் வாழ உதவி அனைவரும் போற்றும் குணவானாக இருப்பதே நன்று. அப்படிப்பட்டவனின் வாழ்வும் எண்ணமும் இனிது. ஒருவன் வாழ்ந்த காலத்தில் நல்ல செல்வாக்கும், செல்வமும், இட்ட கட்டளைகளை நிறைவேற்றும் படை குடிகளும் இருக்கும் வரை முகத்தில் நிம்மதியையும், புன்னகையையும் சிந்திக் கொண்டிருந்துவிட்டு, இவை அனைத்தும் போய் வறுமையின் பிடியில் சிக்கித் தவிக்கும் காலத்தில் இவனிடம் உதவி கேட்டுப் பெற்றவர்களையெல்லாம், திருட்டுப் பயல்கள் இருந்த காலத்தில் பிடுங்கித் தின்றார்கள். இன்று எனக்கு இல்லை என்றதும் ஒரு பயலும் என்னைக் கவனிக்கவில்லை. கேடுகெட்ட மனிதர்கள் செய்நன்றி கொன்ற அயோக்கியர்கள். இவர்களுக்கெல்லாம் போய் நான் உதவிகளைச் செய்தேனே. இன்று என்னை கவனிக்க ஒருவரும் வரவில்லையே என்றெல்லாம் பிறர் மீது கடும் சொற்களை வீசாமல், பாவச் சொற்களை சொல்லாமல், தெளிவோடு, அறிவு பூர்வமாக தாழ்ந்திருந்த போதும் பெருந்தன்மையான சொற்களை உபயோகித்துப் பேசுவது இனிமை தரும். இல்லையா? “ஆற்றானை யாற்றென் றலையாமை முன் இனிதே கூற்றம் வரவுண்மை சிந்தித்து வாழ்வினிதே ஆக்க மழியினும் அல்லவை கூறாத தேர்ச்சியின் தேர்வினியது இல்.” “செயல் திறன் இல்லாத ஒருவனிடம் இந்த காரியத்தைச் செய் என்று ஒப்படைத்துவிட்டு அவன் செய்யாதது கண்டு மனம் வருந்துவதைக் காட்டிலும் அவனிடம் வேலையை ஒப்படைக்காமல் இருப்பது இனியது. கூற்றுவன் நம் உயிரை ஒரு நாள் கொண்டு போவது உறுதி என்பதை அறிந்து கொண்டு நல்ல வண்ணம் சிந்தித்து ஒழுங்கோடு வாழ்வது இனியது; செல்வங்களை இழந்து வரிய நிலைக்குத் தள்ளப்பட்டுவிட்ட நிலையில் பாவச் சொற்களைச் சொல்லாமல் தெளிவோடு வாழ்வது இனியது. 29 இருபத்தியொன்பதாம் இனியது ஒரு நல்லவன் வாழ்கின்ற பகுதியில் சுற்றுப் புறத்தில் பல கீழ் மக்களும் வாழ்ந்தனர். சுற்றிலும் இருக்கிற இவர்கள் போன்ற தீயவர்களிடமிருந்து இவன் ஒதுங்கி இருக்க நினைத்தாலும், அக்கம் பக்கத்தில் இருப்பவர்களை எப்படி ஒதுக்கி வைக்க முடியும். அவர்கள் கெட்டவர்கள், ஒழுக்கமில்லாதவர்கள், தீய செயல்களில் ஈடுபடுபவர்கள் என்பது தெரிந்து, கூடிய வரையிலும் அவர்கள் முகத்தில் விழிக்காமல் ஜாக்கிரதையாக இருத்தல் நலம். அப்படி சந்தர்ப்ப வசத்தால் அந்த தீயவர்கள் கூடியிருக்கும் நேரத்தில் இவன் வீட்டைவிட்டு வெளியே போக நேரும் சந்தர்ப்பங்களில் அவர்களோடு நட்புரிமை பாராட்டாமல், மிகவும் சாமர்த்தியமாக அவர்களை விரோதப் பார்வையும் பார்க்காமல் நழுவிவிடுதல் நலம். கூடியவரை அவர்களிடமிருந்து ஒதுங்கி வாழ்தல் இனிமை தரும். சாதாரணமாக கீழ் மட்டத்தில் இருந்த ஒருவன் தன் உழைப்பினாலும், நேர்மையினாலும் மெல்ல மெல்ல தான் பணிபுரியும் இடத்தில் உயர்வுகளைப் பெற்று வந்தான். தனக்குக் கிடைத்திருக்கிற இந்த உயர்வுக்குக் காரணம் தன்னுடைய வசதிகளோ, சிபாரிசுகளோ இல்லை என்பதும் தன்னுடைய உழைப்பு, நேர்மை இவைகள்தான் காரணம் என்பதைத் தெரிந்து கொண்டு மேலும் உயர்வதற்காக கடின உழைப்பைக் கொடுத்து, நேர்மைத் திறத்தை வளர்த்துக் கொண்டு தன் முன்னேற்றத்திலேயே கண்ணும் கருத்துமாக இருப்பது இனிமை தரும். இவனுக்கு நெருங்கிய நண்பர்கள் உறவினர்கள் அனைவருமே மிக மிகச் சாதாரணமானவர்கள். இவனுக்குக் கிடைத்த வசதிகள்கூட இல்லாதவர்கள். மிக எளிமையானவர்கள், வறுமையில் வாடுபவர்கள் என்றாலும் செம்மையாக வாழ்பவர்கள். இவர்கள் வறியவர்கள்தானே என்று எண்ணாமல் அவர்களை மதித்து பண்போடு பாராட்டி நடப்பது இனிமை தரும். “கயவரைக் கையிகந்து வாழ்தல் இனிதே உயர்வுள்ளி ஊக்கம் பிறத்தல் இனிதே எளியர் இவரென் றிகழ்ந்துரையா ராகி ஒளிபட வாழ்தல் இனிது.” கயமைக் குணம் படைத்தவர்களிடமிருந்து ஒதுங்கி வாழ்தல் இனியது; தன்னுடைய உயர்வுக்குத் தேவையான உள்ள எழுச்சியோடு வாழ்தல் இனியது; வறியவர்களை இகழ்ச்சியாக எண்ணாமல் கெளரவமாக நடத்துதல் இனியது. 30 முப்பதாம் இனிமை ஒருவன் தான் எளியவனாக இருந்த காலத்தில் தனக்கு உதவி செய்தவர்களை, கல்வி பயிலவும், வேலை கிடைக்கவும், சில நேரங்களில் இவனுடைய தேவைகளுக்கு பண உதவி செய்தவர்களையும் நன்றியோடு எப்போதும் நினைத்துப் பார்க்க வேண்டும். நன்றி மறப்பது நன்றன்று, நன்றல்லது அன்றே மறப்பது நன்று எனும் குறள் சொல்லும் நெறியில் வாழ்ந்து வருவது இனிமை தரும். ஒரு நீதிமன்றத்தில் தவறு செய்தவன் மீது வழக்கு. அவன் செய்தது தர்மத்துக்கு எதிரான செயல். அவன் இவனுக்கு வேண்டியவனோ, தெரிந்தவனோ எப்படியிருந்தாலும், அவனுக்கு எதிராக சாட்சி சொல்ல நேரும்போது மனச்சாட்சிக்கு விரோதமில்லாமல் தர்மமும் நீதியும் நிலைபெற வேண்டுமென்ற நோக்கத்துடன் நியாயமாக சாட்சி சொல்ல வேண்டும். ஒரு சார்பில் நின்று பொய் சாட்சி சொல்லக்கூடாது. அப்படிப்பட்ட மாட்சிமை இனிமை தரும். ஒரு அவசர தேவைக்கா க  தெரிந்தவர் ஒருவர் தன்னிடம் ஒரு பொருளை அடமானமாகக் கொடுத்து இதை வைத்துக் கொண்டு எனக்கு அவசரத் தேவைக்காக பொருள் கொடுங்கள் என்று வாங்கிச் சென்றார். அவர் கொடுத்து வைத்ததோ, தான் பணம் கொடுத்ததோ யாருக்கும் தெரியாது என்ற நினைப்பில் அவர் திரும்பக் கொடுக்கும்போது அப்படி எந்தப் பொருளையும் அடமானமாக என்னிடம் தரவில்லையே என்று பொய் சொல்லி அபகரிக்காமல் இருப்பது இனியது. “நன்றிப் பயன் தூக்கி வாழ்தல் நனி இனிதே மன்றக் கொடும் பாடுரையாத மாண்பு இனிதே அன்றறிவார் யாரென் றடைக்கலம் வெளவாத நன்றியின் நன்கினியது இல்.” ஒருவருக்குச் செய்த உதவியின் பயன் கருதி நன்றியோடு நினைந்து வாழ்தல் இனிது; அறம் கூறும் அவையில் ஒருபக்கச் சான்று அளியாத மாட்சிமை இனியது; தன்னிடம் வைத்த பொருளை யாருக்குத் தெரியும் என்ற எண்ணத்தில் அபகரிக்க நினைக்காமல் பண்போடு திரும்பக் கொடுத்தல் இனியது. 31 இனியவை முப்பத்தியொன்று நமது பாரதத் திருநாட்டின் இதிகாசங்கள் இராமாயணமும், மகாபாரதமும் என்பது அனைவருக்கும் தெரியும். அதுபோலவே இந்த இதிகாசக் கதைகளும் அனைவருக்கும் ஓரளவு நன்கு தெரிந்திருக்கும். இதில் முதல் இதிகாசமான இராமாயண காப்பியத்தில் தன் உற்றார், உறவு இவர்களிடமிருந்து பிரிந்து போய் வேறொருவரிடம் அடைக்கலம் என அடைந்தவர்கள் சுக்ரீவனும், விபீஷணனும் ஆவர். இவர்களில் சுக்ரீவனுக்குத் தன் அண்ணன் வாலியினால் ஏற்பட்ட தொல்லைகள் தீர இராமனின் உதவியை நாடி அவனிடம் அடைக்கலம் புகுந்தான். விபீஷணன் நன்னெறிகளில் ஊறித் திளைத்தவன். இராவணனின் ‘பிறன் மனை நோக்கும்’ பிழையை திருத்திக் கொள்ள வாய்ப்பளித்தும் அவன் திருந்தாததோடு, விபீஷணனின் உயிருக்கும் ஆபத்தாக இருந்த காரணத்தால், அவன் இராமனிடம் வந்து சரணடைந்தான். இப்போது இராமனுக்கு இரட்டைப் பொறுப்பு. தன்னைச் சார்ந்தவர்களைப் பாதுகாப்பதோடு தன்னிடம் அடைக்கலம் என்று வந்தவர்களின் பாதுகாப்பும் சேர்ந்து கொண்டது. இப்படி அடைக்கலம் வந்து அடைந்தவர்களின் உயிருக்கு எப்போதும் அவர்கள் யாரிடமிருந்து பிரிந்து வந்து இங்கு சேர்ந்தார்களோ அந்த முந்தைய உறவிடமிருந்து உயிருக்கு ஆபத்து வரும் அச்சம் இருந்து கொண்டே இருக்கும். வாலி இறக்கும் தருவாயில் இராமனிடம் விடுத்த வேண்டுகோள் என்ன தெரியுமா? இராமா! என் தம்பி சுக்ரீவனைச் சுற்றிலும் எப்போதும் பாதுகாப்புக்காக வீரர்களை இருக்க ஏற்பாடு செய் என்பதுதான். அதுபோலவே விபீஷணனின் உயிருக்கு ஆபத்து வராதபடி இராவணாதியரிடமிருந்து காப்பாற்ற வேண்டிய கடமையும் இராமனுக்கு இருந்தது. அப்படிப்பட்ட சூழ்நிலையில் இவர்களைப் பாதுகாப்பது என்பது மிகவும் கடுமையான செயல். அப்படி எதிரிகளிடமிருந்து சுக்ரீவனைக் காக்க அவன் அண்ணனான வாலியை இராமன் வந்தம் செய்ய நேர்ந்தது. விபீஷணனுக்கு ஏற்பட்ட பல சோதனைகளில் இராமன் உதவி செய்ததோடு இராவணன் இருக்கும்போதே விபீஷணனுக்கு இலங்கை அரசனாக முடிசூட்டியும் வைத்தார். இப்படித் தம்மிடம் அடைக்கலமாக வந்தவர்கள் துன்பம் அடையாமலும், நன்மை செய்தும் காப்பது இனியது என்கிறது இந்த நூல். நம்மிடம் நெடுங்காலம் பணியாற்றிய பணியாளர் ஒருவர். நம்மையே நம்பி இருப்பவர். அவருக்கு உலகமே நாம் தான். அப்படிப்பட்ட சூழ்நிலையில் அவருடைய நன்மையைக் கருத்தில் கொண்டு அவருக்குத் தேவையான நேரத்தில் உதவி செய்ய வேண்டிய பொறுப்பு நமக்கு உண்டு. அப்படி நம்மிடம் பணியாற்றும் ஒரு கணக்குப் பிள்ளை, அவருடைய ஒரே மகளுக்குத் திருமணம் நிச்சயம் செய்து விடுகிறார். ஆனால் அந்தத் திருமணத்துக்கு வேண்டிய பொருள் அவரிடம் அப்போது இல்லை. நிச்சயம் நமது எஜமானர் நமக்கு வேண்டிய உதவிகளை இந்த நேரத்தில் செய்து விடுவார் என்று அவர் நம்பியிருந்தார். ஆனால் அந்த எஜமானருடைய நிதி நிலைமை அந்த நேரத்தில் சரியாக இல்லை. தன் ஊழியரின் மகள் திருமணத்துக்கு வேண்டிய பொருளுதவி செய்யப் போதிய பணம் இல்லாத காரணத்தால், அது தன் கடமை, அவர் தன்னையே நம்பி இருப்பவர் என்பதால் வெளியில் கடன் வாங்கி தன் ஊழியரின் மகள் திருமணம் நன்கு நடைபெற ஏற்பாடு செய்து விட்டார். தன் நிதி நிலைமை சரியானதும் வாங்கிய கடனைத் திரும்ப அடைத்து விடலாம்; ஆனால் இவரது மகள் திருமணம் இந்த காரணத்துக்காக நின்று விடக்கூடாது என்கிற நல்ல எண்ணம். இப்படிப்பட்ட சூழ்நிலையில் வெளியில் கடன் வாங்கியாவது செய்ய வேண்டிய கடமையை ஒழுங்காகச் செய்து முடித்தல் இனியது. அவர் நன்கு கல்வி கேள்விகளில் தேர்ந்தவர். கற்றவர்களால் மதிக்கப்படுபவர். மற்றவர்களுக்கு ஏற்படும் சிக்கல்களுக்கு சரியான தீர்வு கண்டு சொல்பவர். அவரிடம் ஒரு தர்ம சங்கடமான பிரச்சினை வந்தது. அது குறித்து அவர் தீர்க்கமான ஆலோசனைக்குப் பிறகு எது சரி எதைச் செய்யலாம் என்பது குறித்து ஆலோசனை வழங்க வேண்டும். அப்படி அவர் சொல்லும் ஆலோசனையினால் யாரும் பாதிக்கப்படவும் கூடாது, யாருக்கும் எதிராகவும் போய்விடக்கூடாது. ஆனால் பிரச்சினை சுமுகமாக தீர்க்கப்பட வேண்டும். அந்த சூழ்நிலையில் அவர் நிதானமாக ஆற அமர ஆய்ந்து பார்த்துத்தான் தன் தீர்வைச் சொல்ல வேண்டுமே தவிர எடுத்தேன் கவிழ்த்தேன் என்று எந்த முடிவையும் அறிவித்துவிட முடியாது அல்லவா? எதிலும் ஆராய்ந்து பார்த்து முடிவு சொல்வது என்பது நன்கு கற்றுணர்ந்தவராயினும் அதுவே நன்மை தரும்; இனிமையானது. “அடைந்தார் துயர்கூரா ஆற்ற இனிதே கடன் கொண்டும் செய்வன செய்தல் இனிதே சிறந்தமைந்த கேள்விய ராயினும் ஆராய்ந்து அறிந்துரைத்தல் ஆற்ற இனிது.” தம்மிடம் அடைக்கலம் என்று வந்தவர்கள் துன்பப்படாமல் காப்பது இனிமை தரும்; செய்யத் தகுந்த காரியங்களுக்காக கடன் வாங்கியாவது அந்தக் காரியத்தை முடிப்பது இனிமை தரும்; சிறந்த கேள்வி ஞானம் உடையவராயினும் நன்கு ஆராய்ந்தறிந்து முடிவைச் சொல்லுதல் இனிமை தரும். 32 இனியவை முப்பத்தியிரண்டு நாம் எந்தக் காரியத்தைச் செய்யும் முன்பாக நன்கு கற்றறிந்த பெரியோரிடம் சென்று அவர்களிடம் விளக்கிவிட்டு, நாம் செய்யப் போகும் காரியத்தை எப்படிச் செய்ய வேண்டும், எப்படிச் செய்தால் சிறப்பாக இருக்கும் என்பதையெல்லாம் கேட்டுத் தெளிவு பெற வேண்டும். ஏதோ எடுத்தோம் கவிழ்த்தோம் என்று எந்தவொரு காரியத்தையும் நாமாக அரைகுறையாகச் செய்துவிட்டுத் தோல்வியைச் சந்திக்கக்கூடாது. கற்றறிந்த பெரியோர்கள் நல்ல அனுபவம் உள்ளவர்களாக இருப்பார்கள். நல்லது கெட்டது தெரிந்து வைத்திருப்பார்கள். எதை யாரால் செய்து முடிக்க வேண்டும் எனும் உண்மையைப் புரிந்து கொண்டிருப்பார்கள்; அத்தகைய பெரியோர்கள் கூறும் வழிகாட்டுதலின்படி நாம் காரியத்தைச் செய்யத் தொடங்குவோமானால் நிச்சயம் வெற்றிதான் கிட்டும். அது இல்லாமல் போகிறவர் வருகிறவர்களிடமெல்லாம் நாம் செய்யப்போகும் காரியத்தைச் சொல்லிக் கொண்டிருந்தோமானால், அவரவர்க்கு மனம்போனபடி ஏதாவது சொல்லிவிட்டுப் போய்விட்டால் நஷ்டம் நமக்குத்தானே தவிர அவர்களுக்கு அல்ல. ஆகையால் கற்றறிந்தவரிடம் ஆலோசனை கேட்டுச் செய்தால் நல்ல பயன் கிட்டும் என்பது இனிமை அல்லவா? ஒரு அரசன். சுகவாசி. அரண்மனையில் இருந்து கொண்டு வெளியே மக்களின் இன்ப துன்பங்களைப் பற்றி எதையும் தெரிந்து கொள்ளாமல் இருந்தால் அந்த நாடு எப்படி இருக்கும். முன்பெல்லாம் தெருக் கூத்துக்களில் வரும் ராஜா அமைச்சரைப் பார்த்துக் கேட்பார், ‘மந்திரி! நாட்டில் மும்மாரி மழை பொழிகிறதா?’ என்று. நாட்டில் மழை பொழிவது கூட தெரியாத மன்னன் இருந்தென்ன, இல்லாமல் இருந்தென்ன? மக்களின் கஷ்டங்களை உணர்ந்தவனாக மன்னன் இருக்க வேண்டும். மெக்சிகோ எனும் நாட்டில் இப்படியொரு கொடுங்கோல் சர்வாதிகாரி இருந்தான். அவனுக்கு மக்களைப் பற்றி கவலை இல்லை. மழையின்றி, மக்கள் விளைச்சல் இல்லாமல், உணவுக்குச் சிரமப்பட்டுக் கொண்டிருந்த நிலையிலும் வரிப்பணம் கொடுக்கச் சொல்லி அவர்களைத் துன்புறுத்தி வசூலித்தான். இதனை எதிர்த்து விவசாயப் பெருங்குடி மக்கள் அவனிடம் சென்று முறையிட்டுத் தங்கள் துன்பத்தை எடுத்துரைத்தனர். அவனோ கல்நெஞ்சுக் காரனாக இருந்து அடித்து உதைத்து சிறையிலிட்டு கொடுங்கோல் புரிந்தான். மக்கள் துன்பம் தாங்காமல் நாட்டைவிட்டு வெளியேறத் தொடங்கினர். அவனை எதிர்த்து விவா சபாட்டா எனும் இளைஞன் வீறுகொண்டு எழுந்தான். மக்களை ஒன்று திரட்டி மன்னனை எதிர்த்துப் போரிட்டு அவனை நாட்டை விட்டு ஓடவைத்தான். பின்னர் அந்த விவா சபாட்டாவை மன்னனாக மக்கள் ஒப்புக் கொண்டார்கள் என்று மெக்சிகோ நாட்டுக் கதையொன்று கூறுகிறது. இப்படிப்பட்ட கொடுங்கோலன் ஆட்சியில் வாழ்வதைக் காட்டிலும் வெளியேறி வேறிடங்களுக்குச் சென்றுவிடுவது இனிமை தரும். நமக்கு ஆலோசனை சொல்லுபவர்கள் ஒரு காரியத்தை நன்கு புரிந்து கொண்டு நல்ல வழியைக் காண்பிக்க வேண்டுமே தவிர, நமக்கென்ன ஆயிற்று என்று ஏதோ போகாத ஊருக்கு வழி காட்டுவது போல நடந்து கொள்ளக் கூடாது. அப்படி தவறாக வழிகாட்டப்பட்டுத் துன்பங்களுக்கு ஆனானவர்கள் பின்னர் அப்படி நடந்து கொள்பவர்களிடம் வன்மம் வைத்துக் கொள்வது தேவையில்லை. அவர்களுக்குத் தெரிந்தது அவ்வளவுதான். இனிமேல் அப்படிப்பட்டவர்களிடம் எந்த ஆலோசனையையும் கேட்கக்கூடாது என மனதில் உறுதி எடுத்துக் கொள்ள வேண்டுமே தவிர அவர்களை விரோதிகளாகக் கருதத் தேவையில்லை. நாம் சிக்கித் தவிக்க வேண்டுமென்றுகூட சொல்லியிருக்க மாட்டார்கள்; அவர்களுக்குத் தெரிந்தது அவ்வளவுதான் என்று அவர்களிடம் வன்மம் இல்லாமல் அன்பைத் தொடருவது இனிமை தரும். “கற்றறிந்தார் கூறும் கருமப் பொருள் இனிதே பற்றமையா வேந்தன்கீழ் வாழாமை முன் இனிதே தெற்றென இன்றித் தெளிந்தாரைத் தீங்கூக்காப் பத்திமையிற் பாங்கினியது இல்.” பொருள்: கற்றறிந்தவர்கள் கூறும் செயலின் பயன் இனிமையுடையதாகும்; குடிமக்களிடம் அன்பு பாராட்டாத மன்னனின் கீழ் வாழாமை இனிதாகும்; ஆராய்ந்து பார்க்காமல் தன்னை ஒரு செயலைச் செய்ய வைத்தவரிடம் தீங்கு பாராட்டாமல் அன்புடமை இனியது. 33 இனியவை முப்பத்திமூன்று அந்த இளைஞன் மிகவும் சுறுசுறுப்பானவன். அந்த கிராமத்தில் எந்த பொது வேலையென்றாலும் முன்னின்று செய்யக் கூடியவன். ஓடியாடி அவன் சோம்பலின்றி செயலாற்றும் திறமையை அனைவருமே பாராட்டுவார்கள். அப்படிப்பட்டவனிடம் ஒரு குறையும் உண்டு. தேவையில்லாத சில கொண்டாட்டங்களை இவன் முன்னின்று நடத்தத் தொடங்குவான். ஏதோ யாரோ ஒரு நடிகரின் பெயரால் ஒரு மன்றத்தை வைத்துக் கொண்டு அவருக்குப் பிறந்த நாள் என்று எங்கோ ஒரு மூலையில் இருக்கும் இந்த கிராமத்தில் கொண்டாடுவான். அந்த நபரின் படத்தைப் பெரிதாகப் போட்ட பேனர்களைக் கட்டுவான். ஊரில் வசூலில் இறங்கிவிடுவான். இவன் நல்லவன் என்பதால் இவன் கேட்கிறானே என்று விரும்பாவிட்டாலும் ஒழியட்டும் என்று ஏதாவது ஒரு தொகையை இவனுக்குக் கொடுப்பார்கள். ஆனால் இவன் நடத்தும் இந்தத் தேவையில்லாத விழாவை மக்கள் விரும்பவில்லை. வேறொரு நல்ல காரியத்துக்கு இவன் நேரத்தையும் பணத்தையும் செலவிட்டால் என்ன என்று எண்ணத் தலைப்பட்டார்கள். பேனர் வைத்து, வாழைமரங்கள், தோரணங்கள் கட்டி, ஒலிபெருக்கி வைத்து பாடல்களை ஒலிபரப்பி இவன் செய்யும் அட்டகாசம் சகிக்கவில்லை. இதை சிலர் அவனிடம் சுட்டிக் காட்டி நல்லவனான நீ ஏன் இப்படி வீணான காரியங்களில் உன் சக்தியைச் செலவிடுகிறாய் என்று சொன்னபிறகு தன் தவற்றைத் திருத்திக் கொண்டு நல்வழிப்பட்டான் அந்த இளைஞன். ஊரில் உள்ளவர்கள் வெறுக்கிறார்கள் என்பதை உணர்ந்து தன்னை மாற்றிக் கொண்ட அவனது மன எழுச்சி இனிமையுடையது. மனிதனின் முன்னேற்றத்தையும், வளர்ச்சியையும் கெடுப்பது சோம்பல். இது குழந்தைப் பருவத்திலிருந்தே உடம்போடு தங்கி விடுகிறது. அந்த சோம்பல் எனும் பேயை உடலைவிட்டு விரட்டினால் மட்டுமே ஒருவன் முன்னேற முடியும். முன்பெல்லாம் பள்ளிக்கூட பாடப் புத்தகத்தில் ஒரு பாடல் இருக்கும். அந்தப் பாடல் சோம்பலால் செய்ய வேண்டிய காரியங்களைத் தள்ளிப் போடாதே என்பதை வலியுறுத்தும் பாடல். அது:- “நாளை நாளை என்னாதே! நாளை வீணில் போக்காதே! நாளை செய்யும் காரியத்தை நலமாய் இன்றே முடிப்பாயே!” என்று இருக்கும். இப்படி காரியத்தைத் தள்ளிப் போடுவதற்குக் காரணம் சோம்பல் அல்லவா? ஒரு இளைஞனுக்கு காலையில் தூக்கம் விழித்துப் படுக்கையை விட்டு எழுவது என்பதே பிரம்மப் பிரயத்தனம். அதாவது முடியாத காரியம். அப்படி அவன் எழுந்து விட்டாலும் ஆதவன் உச்சிக்குச் சென்றிருப்பான். அத்தனை நேரம் தூக்கம். இந்தக் கெட்டப் பழக்கம் அவனுக்குப் பல துன்பங்களைக் கொண்டு வந்து சேர்த்தது. பலமுறை வேலைக்கு இவனுக்கு நேர்காணலுக்கு அருகில் பத்து மைல் தூரத்தில் உள்ள நகரத்துக்கு வரச் சொல்லியிருப்பார்கள். இவன் தூங்கி எழும்போதே அந்த நேரம் முடிந்திருக்கும். இதைக் கண்டு அவனுக்கு வேண்டியவர்கள் உன்னைக் கெடுப்பது இந்த சோம்பல்தான் இதை உதறினாலொழிய நீ முன்னேற முடியாது என்று எடுத்துரைத்தார்கள். அதையடுத்து அவன் இரவு படுக்கப் போகும் முன்பே நாளை காலை சரியாக ஆறு மணிக்குள் எழுந்துவிடுவேன் என்று மனதிற்குள் பலமுறை சொல்லிக் கொண்டு படுப்பான். அன்றே அது முடியாவிட்டாலும் மன உறுதியினால் சிறுகச் சிறுக அவனால் அப்படி எழுந்திருக்க முடிந்தது. காரியங்களைச் சோம்பலின்றி முடிக்க முடிந்தது. தன் மன உறுதி காரணமாக அவன் படிப்படியாக முன்னேறி நல்ல பதவியை அடைகிறான், இது இனிமையானது இல்லையா? ஒரு சிற்றரசன். அவன் நாட்டுக்கும் அண்டை நாட்டுக்கும் அடிக்கடி சண்டை நடக்கும் ஒவ்வொரு முறை போர் நடக்கும் போதும் இவனது நாட்டுக் குடிமக்கள் போரில் அதிகம் மடிந்து போவார்கள். இதனால் இவன் நாட்டில் போர் என்றால் மக்களுக்கு வெறுப்பு ஏற்பட்டது. இந்த மன்னனுக்கு மட்டும் ஏன் எதிரிகள் அதிகம் இருக்கிறார்கள். இவன் தன்னுடைய போக்கை, அயலாருடனான உறவை மேம்படுத்திக் கொண்டால் போரைத் தவிர்க்கலாமே, இவன் ஏன் அப்படிச் செய்யக் கூடாது என்று மன்னனிடமே போய் முறையிட்டார்கள். மன்னனும் தன் தவற்றை உணர்ந்து அண்டை அயல் நாட்டாருடன் நட்புடன் இருக்கப் பழகி போரைத் தடுத்து வந்தான். இப்படி உயிரிழப்பை தவிர்க்கும் நிலைமை இனிமையானது தானே! “ஊர்முனியா செய்தொழுகும் ஊக்கம் மிக இனிதே தானே மடிந்திராத் தாளாண்மை முன் இனிதே வாள் மயங்கு மண்டமருள் மாறாத மாமன்னர் தானை தடுத்தல் இனிது.” பொருள்: ஊரார் வெறுக்கும் காரியத்தைத் தவிர்த்துவிடுதல் இனிமை; சோம்பரை நீக்கி சுயமுயற்சியால் தன்னை ஆளும் திறம் இனிமை; உயிர்ப்பலி கொள்ளும் போரைத் தவிர்க்கும் மன்னனின் செயல் இனிது. 34 முப்பத்திநான்காம் இனிமை இப்பொழுதெல்லாம் இரவு நேரம் என்பது பகல் பொழுதைப் போலவே மாறிவிட்டது. எங்கும் விளக்குகள். வெளிச்சம். இரவெல்லாம் போக்குவரத்து, ஜன நடமாட்டம் இப்படி வளர்ந்து விட்டது. ஆனால் இந்த நூல் இயற்றப்பட்ட காலம் அப்படிப்பட்டதல்ல. இரவானால் ஊர் அடங்கிவிடும். எங்கும் இருட்டு. வழிப்பயணம் செய்ய அஞ்சுவர். இப்படிப்பட்ட மாற்றங்கள் இருந்தாலும் பெண்கள், குழந்தைகள் இப்போதும் கூட தனியாக இரவில் பயணம் செய்வது ஆபத்து ஏற்படக்கூடியதாகத்தான் இருக்கிறது. ஆகவே தான் அந்த நாட்களில் இரவில் பயணம் செய்யாதிருப்பது இனிமை தரும் என்கிறார் இந்த நூலின் ஆசிரியர். வகுப்பில் ஒரு ஆசிரியர் பாடம் எடுக்கிறார். நீண்ட நேரம் பல விஷயங்களை அடுக்கடுக்காகச் சொல்லி மாணவர்களுக்குப் புரிய வைக்க வேண்டும். அவர் தொடங்கும் போது இருக்கும் வேகம் நேரம் ஆக ஆக குறைந்து போகுமானால், மாணவர்களின் கவனமும் சிதறுண்டு போகும். ஆகவே தொடங்கிய வேகத்திலேயே அவர் தொடர்ந்து பல விஷயங்களைச் சொல்லிக் கொண்டு போக வேண்டும். சில விழாக்களில் தொகுப்பாளர்கள் என்பவர் இருப்பர். இவர்கள் சொல்ல வேண்டிய கருத்துக்களை சோர்வின்றி விறுவிறுப்பாகச் சொல்லிக் கொண்டிருக்க வேண்டும். தொய்வு ஏற்பட்டால் விழாவின் சிறப்பு மங்கிவிடும். ஆகவே தொய்வின்றி சோர்வு இல்லாமல் சொல்வது இனிமை தரும். நம் அண்டை வீட்டுக்கு ஒருவர் புதிதாகக் குடி வருகிறார். நமது பண்பாடு யாராவது புதியவர் நம் பகுதிக்கு குடிவருகிறார் என்றால், அவருக்கு நம்மால் ஆன உதவிகளைச் செய்வது என்பது நமது பாரம்பரியமான குணம். அதன்படி அந்த அண்டை வீட்டாரிடம் சென்று நம்மை அறிமுகம் செய்துகொண்டு விசாரிக்கிறோம். ஏதாவது உதவிகள் தேவையென்றால் செய்யவும் தயார் என்பதை தெரிவிக்கிறோம். ஆனால் அந்த மனிதர் நம்மை ஏதோ பூச்சி புழுவைப் பார்ப்பதைப் போல பார்த்து, எனக்கு ஏராளமான பேர் இருக்கிறார்கள். அவர்கள் பார்த்துக் கொள்வார்கள் என்று அலட்சியமாக நம்மை அனுப்பிவிட்டார் என்று வைத்துக் கொள்ளுங்கள். அவரிடம் அதன் பிறகு பழக விரும்புவோமா? ஏதோ ஒரு அசம்பாவிதம் அந்த வீட்டில் நடந்து விடுகிறது என்று வைத்துக் கொள்ளுங்கள், நாம் ஓடிப்போய் உதவி செய்வது என்பது நம் உடம்போடு பிறந்த குணம். ஆனால் இந்த மனிதருக்கு அப்படிச் செய்யத் தோன்றுமா? அப்படிப்பட்டவரின் நட்பை உதறிவிடுவது இனிமை தரும். “எல்லிப் பொழுது வழங்காமை முன் இனிதே சொல்லுங்கால் சோர்வின்றிச் சொல்லுதல் மாண்பினிதே புல்லிக் கொளினும் பொருளல்லார் தங்கேண்மை கொள்ளா விடுதல் இனிது” எல்லி: இருள் வழங்காமை: இயங்குதல் பொருளல்லார்: நேர்மையில்லாத (பொருள் எனும் சொல்லுக்குப் பல பொருள் உண்டு) சூரியன் மறைந்த பின் இருளில் அலையாமல் இருப்பது இனிமை; சோர்வின்றி சொல்லும் திறம் உடைமை இனிது; நம்மை பொருட்டாய் மதியாத நேர்மையற்றோரிடம் நட்பு கொள்ளாமல் இருதல் இனிது. 35 இனியவை முப்பத்தைந்து மன்னர்கள் ஆட்சிக் காலத்திலும் சரி, இப்போதைய குடியரசு ஜனநாயக நாடுகளிலும் சரி, ஒரு நாடு தன்னை வெளிநாட்டு நடப்புகளில் தங்கள் நாட்டுக்கு ஏதாவது எதிரான நடவடிக்கைகள் இருந்தால் தெரிந்து கொள்ளவும், ராஜாங்க ரகசியங்களை தெரிந்து கொள்ளவும் உளவு அமைப்புக்களை வைத்திருக்கிறார்கள். அந்தக் காலத்தில் உளவு வேலை என்பது மிகவும் சாமர்த்தியமாக நடந்து கொள்ள வேண்டிய வேலை. இந்த ஒற்றர்களாக யார் இருப்பார் என்பதைக் கூட அனுமானிக்க முடியாதபடி இவர்கள் பல வேடங்களில் இருப்பார்கள். மன்னன் ராஜராஜ சோழன் காலத்தில் படைவீரர்கள் மட்டுமல்லாமல், நாட்டு குடிமக்களில் பல தரப்பாரும் இந்த வேவு வேலை செய்திருப்பதாகத் தெரிகிறது. எழுத்தாளர் பாலகுமாரன் எழுதியுள்ள உடையார் எனும் புதினத்தில் நடனம் ஆடும் மங்கையரும், வேதம் ஓதும் பிராமணரும் கூட ஒற்றர்களாகச் செயல் பட்டிருக்கிறார்கள் என்பது தெரிய வருகிறது. இப்படி ஒற்று பார்ப்பது என்பதை யாருக்கும் எதிரானது அல்ல. நம் நாட்டை அன்னிய சக்திகளிடமிருந்து காப்பாற்றவும், நம்மைச் சுற்றி என்னென்ன நடந்து கொண்டிருக்கிறது, ராஜாங்க ரகசியங்கள் எவையெவை என்பதையெல்லாம் ஒரு நாட்டின் மன்னன் அறிந்திருக்க வேண்டும்.அப்படி ஒற்றர்கள் நாலாபுறமும் சென்று கொண்டு வரும் செய்திகளை மன்னன் தன்னுடைய அந்தரங்கமான அமைச்சர்களுடன் உட்கார்ந்து பகிர்ந்து கொண்டு அவற்றிலுள்ள உண்மையைத் தெளிவுபடுத்திக் கொள்வது என்பது இனிமை. எந்தவொரு காரியத்தையும் செய்யும் முன்பாக ஒன்றுக்கு பலமுறை நன்கு ஆலோசனை செய்தபின் தொடங்க வேண்டும். அதில் ஏதாவது ஐயப்பாடு இருக்குமானால், அறிவில் சிறந்த பெரியோரின் துணையையும் ஆலோசனைகளையும் கேட்டுக் கொண்டு தெளிவு பெற்றபின் தொடங்க வேண்டும். ஆராயாமல் அவசர கதியில் செய்யும் காரியங்கள் பெரும்பாலும் தோல்வியடையும். ஆகவே ஒரு செயலைச் செய்வதற்கு முன்பு ஆராய வேண்டியவைகள் எவை என்பதை தீர்மானித்து அவற்றை நன்கு ஆராய்ந்து முறைப்படி செய்து முடித்தல் இனியது. இராமாயணத்தில் சீதையின் தந்தை ஜனக மகாராஜன். இந்த ராஜாவை ராஜரிஷி என்பர். இவர் தவத்திற் சிறந்த ஒரு முனிவருக்கு ஒப்பானவர். தான், தனது என்பதெல்லாம் இல்லாமல் மக்களின் உணர்வை பிரதிபலிப்பவராக, சுயநலமில்லாதவராக, நாட்டுக் குடிமக்கள் ஒவ்வொருவர் நலனிலும் அக்கறை உள்ளவராக இருந்தார் என்கிறது இராமகாதை. இதனால்தான் கம்பர் பெருமானும் தசரத சக்கரவர்த்தியைப் பற்றி அறிமுகம் செய்யும் போது நாட்டுமக்கள் எல்லாம் உயிர் என்றால் அந்த உயிர்களுக்கான உடம்பாக தசரதன் இருந்தான் என்கிறார். அப்படி மக்கள் அனைவரின் பிரதிநிதியாக அவர்களது இன்ப துன்பங்களில் பங்கெடுத்துக் கொள்ளும் தலைவனாக மன்னன் இருத்தல் அவசியம். தான் எதிலும் பற்று கொள்ளமல் இருந்து கொண்டு, மக்களின் பற்றை உணர்ந்து அவர்களாக வாழ்தல் ஒரு மன்னனுக்கு இனிமை என்கிறது இந்தப் பாடல். “ஒற்றினான் ஒற்றிப் பொருள் தெரிதல் முன் இனிதே முற்றான் தெரிந்து முறைசெய்தல் முன் இனிதே பற்றிலனாய்ப் பல்லுயிர்க்கும் பாத்துற்றுப் பாங்கறிதல் வெற்றிவேல் வேந்தர்க்கு இனிது.” பொருள்: ஒற்றறிந்து உண்மையை உணர்தல் ஒரு மன்னனுக்கு இனிது; ஆராய்ந்து பார்த்து ஒரு செயலைச் முறைப்படி செய்தல் இனிது; தான் பற்று இல்லாதவனாய், பற்று கொண்ட மக்களின் பற்றைப் பகிர்ந்து கொண்டு வாழ்தல் மன்னனுக்கு இனிது. 36 இனியவை முப்பத்தியாறு “அழுக்காறு அவா வெகுளி இன்னாசொல் நான்கும் இழுக்கா இயன்றது அறம்” என்கிறது திருக்குறள். அழுக்காறு என்பது பொறாமை, அவா என்பது பேராசை, வெகுளி என்பது கோபம், இன்னாசொல் என்பது கடுமையான சொற்கள், இப்படி இந்த தீய குணங்களை வெறுத்து நீக்கி வாழ்வதே அறம் என்கிறது தமிழ் நூல். நாம் அன்றாட வாழ்வில் பலருடன் பழகுகிறோம், அவர்களோடு சில நேரம் மகிழ்ச்சியாகவும், சில நேரங்களில் மன வருத்தப்பட்டும் நடக்கிறோம். ஒரே மாதிரியான பதவி, ஒரே மாதிரியான வருமானம், குடும்ப நிலையிலும் சமத்தன்மை இத்தனையும் இருந்தும் அடுத்தவனுக்கு ஏதாவதொரு உயர்வு கிடைத்து விட்டால் தனக்குக் கிடைக்கவில்லையே என்று அவன் மீது பொறாமை ஏற்படுகிறது. ஏற்றத் தாழ்வு அதிகம் உள்ள சமுதாயத்தில் நம்மைவிட மிக உயர்ந்த நிலையில் இருப்பவனிடம் நாம் அவனிடம் அதிகம் உறவு வைத்துக் கொள்ளவில்லை என்பதாலோ, அவனுக்கும் நமக்கும் சம்பந்தம் இல்லை என்பதாலோ அதிகமாக பொறாமை ஏற்படுவதில்லை. சம நிலையில் இருந்து நன்றாகப் பழகி வருபவனிடம்தான் இந்தப் பொறாமை அதிகம் வருகிறது. அப்படி நேரும் சந்தர்ப்பங்களில் பொறாமை காரணமாக நாம் வேண்டுமென்றே அவன் ஏதோ குறுக்கு வழியில் இந்தப் பெருமையைப் பெற்று விட்டான். எழுத்தாளனாக இருந்தால் இவன் யாரையோ பிடித்துத் தன் நூலுக்குப் பரிசு வாங்கிவிட்டான் என்றெல்லாம் வார்த்தைகளைக் கொட்டுவார்கள். வேண்டாம். பொறாமையில் அப்படிப்பட்ட இல்லாத பொல்லாத சொற்களைத் தவிர்த்து விடலாம். அப்படித் தவிர்த்துவிடுவது இனிமை தரும் என்கிறது இந்தப் பாடல். கோபம் என்பது உடன் பிறந்த வியாதி. நமது முதல் இந்தியப் பிரதமர் ஜவஹர்லால் நேரு ஒரு முன்கோபக்காரர். சட்டென்று கோபம் வந்துவிடும். அது வந்தது போல சட்டென்று நீங்கியும் விடும். கோபப் படாதவர்கள் யார் சொல்லுங்கள். ஒருவரைப் பற்றி நாம் ஆகா ஓகோ என்று புகழ்வதைப் பார்த்திருக்கிறோம். அப்படிப்பட்ட புகழ்ச்சியெல்லாம் வெளிப்பார்வைக்குத்தான் உள்ளே நுழைந்து பார்த்தால் தெரியும் அத்தகையோர் மனதில் ஆழ்ந்திருக்கும் கோபமும், கெட்ட எண்ணங்களும். வெளிப்பார்வைக்கு யாரும் நல்லவர்கள் போலத்தான் இருப்பார்கள். ஆழ்மனத்தை உணர்ந்து கொண்டால்தான் அவர்கள் யார் என்பது தெரிய வரும். சிலர் கோபத்தில் தங்கள் தகுதிக்குச் சம்பந்தமில்லாமல் மிகக் கீழ்த்தரமாகக்கூட பேசி விடுவார்கள். என்ன செய்வது? கோபம் என்கிற பேய் மனத்தைப் பிடித்து ஆக்கிரமித்துக் கொண்டிருக்கும்போது அறிவு பின்னுக்குத் தள்ளப்பட்டு விடுகிறது. கோபப் படுபவனுக்கு அதிகம் நண்பர்கள் இருக்க மாட்டார்கள். நாளடைவில், வேண்டாம், அவனிடம் போகாதீர்கள் அவன் கோபக்காரன். ஏதாவது கோணா மாணாவென்று பேசிவிடுவான் என்ற கெட்ட பெயரும் ஏற்பட்டுவிடும். ஒருவன் மிகவும் சிரமப்பட்டு கோபப் படுவதை கட்டுப் படுத்திக் கொண்டாலும், அவனுடைய இயற்கை குணம் சில நேரங்களில் பிளந்து கொண்டு வெளிப்பட்டு விடும். சிலர் ஆலோசனை சொல்வார்கள். கோபம் வரும்போது ஒன்று, இரண்டு என்று எண்ணத் தொடங்கு, கோபம் அடங்கிவிடும் என்று. இதெல்லாம் செயலுக்கு ஒத்து வருமா? ஒரே வழி. மனதை அமைதியாக இருக்கும்போது இனி கோபப்படக் கூடாது என்று சொல்லிச் சொல்லி, நாளடைவில், பல ஆண்டுகள் பழகியாவது கோபத்தை அடக்கிவிட வேண்டும். அது இனியது. ஒரு பொருளின் மீது ஒருவனுக்கு ஆசை. அது தன்னிடம் இருந்தால் நன்றாக இருக்குமே என்ற ஏக்கம். ஆனால் அந்தப் பொருள் மீது அவனுக்கு உரிமை இல்லை. ஒரு சந்தர்ப்பத்தில் அந்தப் பொருளுக்குச் சரியான காவல் இல்லை. யாரும் கவனிக்கப் போவதுமில்லை. இதுதான் சரியான நேரம் அதை அமுக்கிவிட்டால் என்ன என்ற கெட்ட எண்ணம் இல்லாமல் இருப்பது இனிமை. “அவ்வித் தழுக்கா றுரையாமை முன் இனிதே செவ்வியனாய்ச் செற்றுச் சினம் கடிந்து வாழ்வினிதே கவ்வித்தாங் கொண்டுதாங் கண்டது காமுற்று வவ்வார் விடுதல் இனிது.” பொருள்: மனமாறுபாட்டல் பொறாமை கொண்டு பேசாமை இனிது; மனத் தெளிவோடு கோபத்தை நீக்கி வாழ்தல் இனிது; மனத்தில் ஆசை கொண்டு தான் காமுற்ற பொருளை விரும்பி தக்க சமயம் பார்த்து கவர்ந்து கொள்ளாதிருத்தல் இனிது. 37 இனியவை முப்பத்தியேழு ஒரு முதியவர் பேருந்தில் நின்று கொண்டு பயணம் செய்தார். ஓட்டுனர் பேருந்தை அவசரமாக நிறுத்தும் போதெல்லாம் இவர் தடுமாறி விழப்போனார். ஐயோ பாவம் என்று உட்கார்ந்திருந்த எவரும் இவருக்கு இடம் தரவில்லை. ஆனால் உட்கார்ந்திருந்த இளைஞன் ஒருவன், இவர் ஒருமுறை விழப்போன தருணம் சொன்னான், “ஏ பெரிசு, நல்லா பிடிச்சுக்கிட்டு நில்லு” என்று. அவனுக்கு ஒரு நினைப்பு; தான் என்றும் இப்போது போலவே சிறிசாகவே இருக்கப் போகிறோம் என்ற எண்ணம். மூப்பும், முதிர்வும் அனைவருக்கும் வந்தே தீரும் எனும் உண்மையை அவன் புரிந்து கொள்ளவில்லை. இன்று ‘பெரிசு’ என்றழைக்கப்பட்டவரும் ஒரு காலத்தில் இவனைப் போல் திமிர் பிடித்து அலைந்திருக்கலாம். இளமை சாசுவதமல்ல என்பதை உணர்ந்து கொண்டால் தோற்றத்தை, மூப்பை, உடல் ஊனத்தை இழிவாகப் பேசத் தோன்றாது. ஒவ்வொருவரும் தனக்குள்ள இளமை ஒரு நாள் மாறும் என்பதையும், மூப்பு இவனையும் வந்தடையும் என்பதை உணர்ந்து கொள்ளுதல் இனிமை. நமக்குச் சொந்தங்கள் அதிகம். பிறந்த தாய் வழி, தந்தை வழி, கொண்ட மனைவி வழி, மக்கள் வழி என்று உறவு அதிகரித்துக் கொண்டே போகும். அப்படி அதிகரிக்கும் உறவினர்களிடமிருந்த நான் நலம், நீங்கள் நலம்தானே என்று செய்தி வந்தால் மனம் மகிழ்ச்சியடையும். மாறாக வருகின்ற செய்திகள் எல்லாமே ஏதாவது துன்பத்தைத் துயரத்தைத் தாங்கி வந்தால் என்ன செய்வது? அப்படி இல்லாமல் துன்மம் இல்லாத செய்தியை அவர்களிடமிருந்து கேட்பதே இனிமை. பெண்களைப் பற்றி கவிஞர்கள் வர்ணித்திருப்பதை நாம் அறிவோம். பட்டினத்தார் போன்றவர்களும், அருணகிரிநாதர் தன்னுடைய திருப்புகழிலும் பெண்களைப் பற்றிக் கூறியிருப்பதையும் நாம் அறிவோம். இந்த இலக்கியம் தோன்றிய நாளில் இதன் ஆசிரியரின் எண்ணம் எப்படி இருந்ததோ நாம் அறியோம். ஆனால் அவர் மேலே சொன்ன இருவரின் வழியில் பெண்களைப் பற்றி கருத்துச் சொல்லியிருக்கிறார். கூரிய கத்தி இருக்கிறது. அது காய், கனிகளை நறுக்கவும் உதவுகிறது. ஆளைக் காயப்படுத்தவும் செய்கிறது. ஆகவே கத்தி என்பது காயப்படுத்துவது என்றோ, கனிகளை நறுக்குகிறது என்றோ நிச்சயப்படுத்திச் சொல்ல முடியாது அல்லவா? அது போலத்தான் நாம் பார்க்கும் பார்வை, நடந்து கொள்ளும் முறை இவற்றிலிருந்து பெண்ணைப் பற்றிக் கருத்துக் கூற முடிகிறது. சிலர், குறிப்பாக சக்தி உபாசகர்கள் பெண்களை சக்தியின் வடிவம் என்கிறார்கள். பெண்களின் தாய்மைதான் மிக உயர்ந்த பேறு என்பது சிலரது கருத்து. ஆனால் இளயோர் வட்டத்தில் காதல் என்ற உறவு, அதில் கிடைக்கும் தோல்வி, அப்படி பிரியும்போது ஆணின் மனம் வருந்துவது போல பெண் வருந்துவதில்லை. கிடைத்த வாழ்க்கையை ஏற்றுக் கொள்ளும் மனத் திட்பம் அவர்களுக்கு இருக்கிறது, அதற்கு முந்தைய காதல், கீதல் இதெல்லாம் தொடர்ந்து மனத்தில் கொண்டு வருந்துவதில்லை. தாடி வைப்பது, போதைக்கு அடிமையாதல் இவையெல்லாம் ஆண்களுக்குத்தான். எங்காவது காதலில் தோல்வியடைந்த பெண் போதைக்கு அடிமையாகி வருந்தியதாகப் படித்திருக்கிறோமா? ஒரு தேவதாஸ் கதை போதாதா நமக்கு. சரி இந்தப் பாடலில் இவர் சொலும் கருத்து மென்மையான மூங்கில் போன்ற தோள்களையுடைய தளிர் போன்ற மென்மையான மகளிரை நஞ்சு என்று எண்ணுதல் இனிது என்கிறார். பிரச்சினைக்குரிய கருத்து. அவரவர் அனுபவத்துக் கேற்ப இந்த வரிக்குப் பொருள் கொள்ளுங்கள். காரணம் நஞ்சு அளவோடு இருந்தால் மருந்து. அளவுக்கு மிகுந்தால் இறப்பு. இதில் எதை நாம் புரிந்து கொள்ள வேண்டுமோ அப்படிப் புரிந்து கொண்டால் சரி. “இளமையை மூப்பென் றுணர்ந்தல் இனிதே கிளைஞர் மாட்டச் சின்மை கேட்டல் இனிதே தடமென் பணைத்தோள் தனிரிய லாரை விடமென் றுணர்தல் இனிது.” பொருள்: ஒவ்வொரு இளைஞனும் தனக்கும் ஒருநாள் முதுமை வரும் என்பதை உணர்தல் இனிது; சுற்றத்தாரிடமிருந்து அச்சம் தரும் துன்பமில்லாத செய்தியைக் கேட்பது இனிது; மென்மையான மூங்கில் போன்ற தோளையுடைய மெல்லியலாரை நஞ்சு என எண்ணிதல் இனிது. 38 இனியது முப்பத்தியெட்டு ஒரு மனிதனுக்கு அவனுக்கென்று உறவு, நட்பு என்று பெருந்திரளானவர்கள் சுற்றியிருந்தால் அவனுக்கு இருக்கும் தைரியமே தனிதான். தனி மனிதனாக இருந்தால் எங்கு, எப்போது, யாரிடமிருந்து ஆபத்து வருமோ என்கிற அச்சம் இருக்கும். ஆட்கள் சூழ இருப்பவனுக்கு அந்தக் கவலையே கிடையாது. எவர் எதிர்த்து வந்தாலும் அவர்களைச் சமாளித்து அனுப்ப மனிதர் கூட்டம் சுற்றிலும் இருக்கிறதே. ஆகவே தனி மரமாக இருப்பதைக் காட்டிலும் தோப்பாக இருப்பது நன்று. நம்மைச் சுற்றி நட்பும், சுற்றமும் சூழ்ந்து இருந்தால் அவனுடைய ஆயுதம், படைக்கலம் பெருமையுடையது. அந்த நிலைமை இனியது. இப்படி உறவும் நட்பும் சூழ இருப்பவனுக்கு பகை ஏற்படுவது கிடையாது. அப்படி யாரேனும் பகைவர் இருந்தாலும் இவனைச் சுற்றி இருக்கும் படை பலத்தைப் பார்த்து, இவனிடம் மோதக் கூடாது இவனுக்கு ஆள்பலம் அதிகம் என்று விலகி விடுவார்கள். ஆகையால் யாரையும் விரோதித்து ஒதுக்கி விடாமல் எப்போதும் மக்கள் சூழ, உறவும் நட்பும் சூழ இருப்பது இனியது. அவனது எதிர்ப்பை சமாளிக்கும் தன்மை இனிதாகும். முன்பெல்லாம் கிராமங்களில் அனேகமாக ஒவ்வொரு வீட்டிலும் ஒரு பசுவும் கன்றும் கட்டாயம் இருக்கும் இன்று போல காகிதப் பொட்டணங்களில் அடைக்கப்பட்ட பதப்படுத்தப் பட்ட பாலுக்காக வரிசையில் நிற்கும் வழக்கம் அப்போதெல்லாம் கிடையாது. ஒன்று அவரவர் வீட்டில் ஒரு பசு வளர்ப்பார்கள். அல்லது அடுத்துள்ள இல்லத்தில் பசு இருப்பவரிடம் பால் வாங்கிக் கொள்வார்கள். இப்போது பசு வளர்ப்பது என்பது அரிதாகப் போய்விட்டது. வீட்டுக்கு திடீரென்று விருந்தாளி வந்து விடுகிறார். உடனே நாம் குளிர்சாதனப் பெட்டியில் வாங்கி வைத்திருக்கும் பால் பொட்டணத்தைத் தேடுகிறோம். இல்லாவிட்டால் கடைக்குச் சென்று அங்கு குளிர்சாதனப் பெட்டியிலுள்ள பாலை வாங்கி வருகிறோம். சற்று இருங்கள் இதோ பால் கறந்து வருகிறேன். பால் அருந்திச் செல்லுங்கள் என்று சொல்லுவார் இல்லை. இடமும் வசதியும் இருக்குமானால் ஒவ்வொரு வீட்டிலும் கன்றோடு ஒரு பசுவையும் வளர்ப்பது இனியது. அப்படிப்பட்ட இல்லத்தில் விருந்தினராகப் போவது அதனினும் இனிது. “சிற்றாளுடையான் படைக்கல மாண்பினிதே நட்டா ருடையான் பகையாண்மை முன் இனிதே எத்துணையும் ஆற்ற இனிதென்ப பால்படும் கற்றா உடையான் விருந்து.” பொருள்: ஆள்பலம் உள்ளவனின் ஆயுதம் பலம் உள்ளது. உறவினர்கள் அதிகம் உள்ளவர்களால் பகையை எளிதில் சமாளிக்க முடியும் என்பது இனியது; கன்றும் பசுவும் உடையவன் வீட்டில் விருந்தாகப் போவது இனியது. 39 இனியவை முப்பத்தியொன்பது ஒரு நாள் நடு வயது பிச்சைக்காரன் ஒருவன் வீடு வீடாகச் சென்று ‘அம்மா! பிச்சை போடுங்க’ என்று உரக்கக் கூவிக் கொண்டிருந்தான். பல வீடுகளில் ஏதோ காசோ, அல்லது அரிசியோ கொண்டு வந்து போட்டார்கள். அவனைப் பார்த்தால் உடலில் ஊனம் எதுவும் இருப்பதாகவோ, அல்லது வயதானவனாகவோ தெரியவில்லை. நன்றாக ‘கிண்’ணென்று ஆரோக்கியமான உடலோடுதான் இருந்தான். பின் ஏன் பிச்சை எடுக்க வேண்டும். ஏதாவது வேலை கொடுத்தால் செய்வானோ, அருகில் வந்ததும் அந்த வீட்டுக்காரர் கேட்டார், இந்தாப்பா, இந்த தோட்டத்தைக் கூட்டிக் குப்பையை எடுத்துப் போய் தொட்டியில் போடு, காசு தருகிறேன் என்றார். அதற்கு அவனுக்குக் கோபம் வந்ததே பார்க்க வேண்டும். பிச்சை போட இஷ்டம்னா போடு, இல்லைன்னா இல்லைன்னு சொல்லு. எனக்கு வேலை கொடுக்கச் சொல்லி உன் கிட்டே கேட்டேனா என்று படு சண்டைக்குப் போய்விட்டான். அதற்கு அவர் நீ உடல் நிலை நன்றாகத்தானே இருக்கிறாய் பின்னே எதற்காகப் பிச்சை எடுக்கிறாய் என்று கேட்டுவிட்டார். அவ்வளவுதான் அவன் அவரைப் பிடி பிடியென்று பிடித்து விட்டான். அவருக்கு இவனிடம் போய் ஏன் வாயைக் கொடுத்தோம் என்று தலை குனிந்து உள்ளே போய்விட்டார். அவன் அங்கிருந்து கண்ணுக்கு மறையும் வரை திட்டிக் கொண்டே போனான். அப்படி அவன் திட்டும்படியாக அவர் அவனை என்ன கேட்டுவிட்டார்? வேலை செய் கூலி தருகிறேன் என்றது தவறா? இல்லை பிச்சை எடுப்பது என்பது அவனது பிறப்புரிமை, போட வேண்டியது மக்கள் கடமை என்ற எண்ணத்தை அவன் மனதில் ஏற்றுக் கொண்டு விட்டான். ஒரு முறை ஒரு முதியோர் இல்லத்து நிர்வாகிகள் அவர்கள் இல்லத்தில் சேர மனுச்செய்திருந்த வயதானவர்களை நேர்முகம் காண்பதற்காக வரச்சொல்லி யிருந்தார்கள். பலர் வந்திருந்தனர். அதில் ஒருவன் சுமார் 35 அல்லது 40 வயதிற்குள் இருக்கும் நல்ல திடகாத்திரமான ஆள். திருமணம் ஆகவில்லை. எப்போதாவது சமையல் வேலைக்கோ அல்லது பரிமாறவோ கூப்பிட்டால் போவானாம். அவன் முதியோர் இல்லத்தில் சேர மனுச்செய்திருந்தான். இல்லத்து நிர்வாகி அவனிடம் உனக்கென்ன அவசியம் முதியோர் இல்லத்துக்கு வந்து சேருவதற்கு. நீ இன்னும் ஐம்பது வருஷம் இருக்கலாம். அதுவரை முதியோர் இல்லத்தில் இலவசமாக சாப்பிட்டுப் பொழுது போக்கவா என்றார். அவன் சொன்னான், சேர்த்துக் கொள்வதாக இருந்தால் சேர்த்துக் கொள்ளுங்கள், அநாவசியமாகப் பேச வேண்டாம் என்று சண்டைக்கு வந்து விட்டான். இப்படியும் சில மனிதர்கள். கேட்பது பிச்சை. அப்படிக் கேட்குமிடத்தில் கோபப்பட்டு சண்டைக்குப் போவது சரியா? அப்படி நடந்து கொள்ளாமல் இருப்பது இனியது என்கிறது இந்தப் பாடல். ஒருவர் மிகச் சிறிய குடிசை வீட்டில்தான் வாழ்ந்து வந்தார். விவசாயக் கூலி வேலைக்கு யார் கூப்பிட்டாலும் சென்று வருவார். தினமும் சம்பாதிக்கும் பணத்தில் நன்றாக சாப்பிட்டு ஆரோக்கியமாக இருந்தார். அவருக்கு யாரிடமும் போறாமையோ, வருத்தமோ இல்லை. பொதுக் காரியங்களிலும் ஆர்வமாகக் கலந்து கொள்வார். பெரிய வீட்டுக்காரர்கள் கலந்து கொள்கிறார்களே என்று இவர் எங்கும் ஒதுங்கிப் போவதில்லை. எல்லோரிடத்தும் அன்போடு பழகுவார். ஆகவே இருக்கும் இடம் குடிசை என்றாலும், மனத்தால் ஆரோக்கியமாகவும், மாட்சிமையோடும் வாழ்ந்த வாழ்க்கை இனியது. அரசுப் பணியில் ஒரு சாதாரண வேலையில் இருக்கும் ஒருவருக்குத் தான் மேலும் பதவி உயர்வு பெற்று அதிகாரியாக வந்து பணியாற்ற வேண்டுமென்கிற ஆசை நிறைய இருந்தது. ஆனால் அவர் நேர்மையானவராகவும், லஞ்ச லாவண்யங்களில் ஆர்வமில்லாதவராகவும், மக்கள் பணியில் உண்மையாகவும், நேர்மையாகவும் நடந்து கொண்டார். இவருக்கு மேல் நிலையில் இருப்பவர்களை இவர் மகிழ்ச்சியடைய வைக்கவில்லை, மாறாகத் தன் கடமையில் கண்ணும் கருத்துமாக இருந்து பணியாற்றினார். இப்படி நேர்மை தவறாமல் இருந்தால் உயர்வுகள் கிடைக்குமா? கிடைக்கவில்லை. அதற்காக அவர் மனம் தளறவோ, உற்சாகம் இழக்கவோ இல்லை. அவருடைய பணிகளிலும் எந்தவித குறைவும் இல்லாமல் வழக்கம் போல நடந்து கொண்டார். அற வழியிலிருந்து நீங்க வைக்கும் மனத் தளர்ச்சி ஏற்படாமல் வாழ்ந்த அவரது வாழ்க்கை இனியது. “பிச்சை புக்குண்பான் பிளிறாமை முன் இனிதே துச்சி லிருந்து துயர்கூரா மாண்பினிதே உற்ற பேராசை கருதி அறனொரூம் ஒற்கம் இலாமை இனிது” ஒற்கம்: மனத் தளர்ச்சி பொருள்: பிச்சையெடுப்பவன் கோபம் கொள்ளாமல் இருப்பது இனிது; எளிய குடிசையில் வாழ்ந்தாலும் துன்பமோ வருத்தமோ இல்லாத மாட்சிமை இனியது; தன் ஆசை நிறைவேறு வதற்காக அறவழி பிறழ்ந்து மனத் தளர்ச்சி அடையாமை இனிது. 40 இனியவை நாற்பது (நிறைவுப் பகுதி) அவர் வாழும் அதே ஊரில் பிறந்து, வளர்ந்து படித்து வேலையும் பார்த்தவர். திருமணமாகி குழந்தைகள் வளர்ந்து பெரியவர்களான பிறகு அவர்கள் பிழைப்பு தேடி, வெளி நாடுகளுக்கும், வெளி ஊர்களுக்கும் சென்று விட்டார்கள். ஒரே பெண் திருமணமாகி புகுந்த வீடு சென்று விட்டாள். பணியிலிருந்து ஓய்வு பெற்றுவிட்ட இவரை அவரது மகன்கள் தங்களுடன் வந்துவிடுமாறு எவ்வளவோ வற்புறுத்தியும் இவர் கேட்கவில்லை. அப்படி இந்த ஊரில் என்னதான் இருக்கிறது. ஆணி அடித்தது போல இங்கேயே உட்கார்ந்து கொண்டு நகர மறுக்கிறீர்களே என்றெல்லாம் சொல்லிப் பார்த்தார்கள். அவர் கேட்கவில்லை. அவருக்கு அப்படி என்னதான் இருக்கிறது அந்த ஊரில். அதற்கு அவரது மனதைப் புரிந்து கொண்டால்தான் விடை காண முடியும். அவர் நினைவு தெரிந்து பார்த்தது அந்த ஊரில் அந்தத் தெரு, செடி, கொடி, மரங்கள், மனிதர்கள் இவைகளைத்தான். அவர் பழகியது, படித்தது அனைத்தும் அங்கேதான். தான் வாழ்ந்து முழுமையாகப் பூர்த்தியடைந்த பிறகும் அந்த ஊரைப் பிரிந்து வாழ முடியாது என்று அவர் மனம் உணர்ந்தது. தனது முடிவும் அதே ஊரில் அதே சூழ்நிலையில்தான் இருக்க வேண்டுமென்று கருதினார். அதில் என்ன தவறு? மனைவியும் போய்ச்சேர்ந்த பிறகும் அவர் அந்த மண்ணில் வாழ்வதையே விரும்பினார். மகாகவி பாரதி பாடினார்:- “எந்தையும் தாயும் மகிழ்ந்து குலாவி இருந்ததும் இந்நாடே – அதன் முந்தயர் ஆயிரம் ஆண்டுகள் வாழ்ந்து முடிந்ததும் இந்நாடே – அவர் சிந்தையில் ஆயிரம் எண்ணம் வளர்ந்து சிறந்ததும் இந்நாடே – இதை வந்தனை கூறி மனத்தில் இருத்தி என் வாயுற வாழ்த்தேனோ? – இதை வந்தேமாதரம் வந்தேமாதரம் என்று வணங்கேனோ? இன்னுயிர் தந்தெமை ஈன்று வளர்த்து அருள் ஈந்ததும் இந்நாடே – எங்கள் அன்னையர் தோன்றி மழலைகள் கூறி அறிந்ததும் இந்நாடே – அவர் கன்னியராகி நிலவினில் ஆடிக் களித்ததும் இந்நாடே – தங்கள் பொன்னுடல் இன்புற நீர்விளையாடி, இல் போந்ததும் இந்நாடே – இதை வந்தேமாதரம் வந்தேமாதரம் என்று வணங்கேனோ? மங்கையராய் அவர் இல்லறம் நன்கு வளர்த்ததும் இந்நாடே – அவர் தங்க மதலையள் ஈன்று அமுதூட்டித் தழுவியதும் இந்நாடே – மக்கள் துங்கம் உயர்ந்து வ்ளர்கெனக் கோயில்கள் சூழ்ந்ததும் இந்நாடே – பின்னர் அங்கவர் மாய அவருடற் பூந்துகள் ஆர்ந்ததும் இந்நாடே – இதை வந்தேமாதரம் வந்தேமாதரம் என்று வணங்கேனோ? இந்த கருத்துக்கள் நாட்டுக்கு மட்டுமல்ல, ஊர்களுக்கும் உண்டு என்பதை இவர் மெய்ப்பித்து வந்தார். பல்பொருள் கொடுத்து வலிய அழைத்தாலும் இவர் தன் சொந்த மண்ணை விட்டு அகலாமல் வாழ்ந்த வாழ்க்கை இனியது. பெரிய புராணத்தில் வரும் ஒரு அடியாரின் வரலாற்றில் சிவபெருமான் அந்தத் தொண்டரைச் சோதிக்க விரும்பி ஒரு நாள் இரவு, கடும் மழை பொழியும் நேரத்தில், அகாலத்தில் அவரிடம் வந்து தனக்குப் பசிக்கிறது உணவு கொடு என்கிறார். அந்த அடியோரோ சிவனடியாருக்கு உணவு தருவதையே தனது கடமையாகக் கொண்டவர். அப்படி சிவபெருமான் வந்து கேட்கும் நேரத்தில் அவர் வீட்டில் உணவுக்கு எதுவும் இல்லை. அன்று மாலைதான் விதை நெல்லைக் கொண்டு போய் வயலில் தூவிவிட்டு வந்தார். ஆகவே அந்த சந்நியாசியை உட்காரவைத்துவிட்டு இருட்டில் மழையில் வயலுக்குச் சென்று அன்று வயலில் தூவிய நெல்லைத் துழாவி எடுத்து வந்து குத்தி சோறாக்கி உணவு படைத்தாராம். அப்படிப்பட்ட சோதனை எந்த மனிதனுக்கும் வரக்கூடாது. விதை நெல் என்பது ஒன்றை நூறாக்கி பலமடங்கு பெருக்குவதற்காக ஏற்பட்டது. அதைக் குத்தி, புடைத்து சோறாக்கித் தின்றுவிட்டால் பின்னர் விளைச்சல் இல்லாமல் போகாதா? செடி கொழுந்துவிட்டு வளரும் நேரத்தில் அதனைக் கிள்ளி விட்டால் அது வளர்ந்து பலன் கொடுப்பது எப்படி? ஆகையால் விதைக்கான தானியங்களை விதைக்க மட்டுமே பயன்படுத்த வேண்டும். அதைக் குத்தி உண்ணக் கூடாது என்பது இனியது. சிலர் இருக்கிறார்கள். என்ன செய்து கொண்டிருக்கிறாய் என்றால், சும்மா இருக்கிறேன் என்பார்கள். சும்மா என்றால் எதுவுமே செய்யாமல் இருப்பது. அப்படியானால் அவரது மனம் சோம்பித் திரியும். சோம்பல் உள்ளவன் மனம் இஷ்டம் போல் உலாவும். ஆங்கிலத்தில் ஒரு பழமொழி உண்டு. Idle man’s brain is devil’s workshop என்று. சோம்பித் திரிபவனின் மனம் பிசாசின் இருப்பிடம் என்பது உண்மை. ஆகவே சோம்பித் திரிந்து, நேரத்தையும், காலத்தையும் வீணடிக்காமல் நல்ல நூல்களைப் படித்துப் பண்பட்டு நல்ல மனிதனாக வாழ முயற்சிக்க வேண்டும். “பத்துக் கொடுத்தும் பதியிருந்து வாழ்வினிதே வித்துக்குற் றுண்ணா விழுப்பம் மிக இனிதே பற்பல நாளும் பழுதின்றிப் பாங்குடைய கற்றலிற் காழினியது இல்.” பொருள்: பத்துப் பொருள் கொடுத்தாலும் தன் சொந்த ஊரில் வாழ்வது இனியது; விதைக்கான நெல்லைக் குத்தி உண்ணாத இயல்பு இனியது; நாளை வீணாக்கி வெட்டிப் பொழுது கழிப்பதிலும், நல்ல நூல்களைக் கற்பது இனியது. இதுவரை இனியவை நாற்பதைப் பார்த்தோம். இவற்றில் சில இந்த காலத்துக்கு ஒத்துப்போகாமல் இருந்தாலும், இவையெல்லாம் பொதுவான நீதி என்பதால் அவற்றைக் கடைப்பிடித்து வாழ்வோமானால் என்றும் இன்பம், எதிலும் இன்பம். வாழ்க்கைப் பயனுடையதாக அமையும். 1 எங்களைப் பற்றி - Free Tamil Ebooks மின்புத்தகங்களைப் படிக்க உதவும் கருவிகள்: மின்புத்தகங்களைப் படிப்பதற்கென்றே கையிலேயே வைத்துக் கொள்ளக்கூடிய பல கருவிகள் தற்போது சந்தையில் வந்துவிட்டன. Kindle, Nook, Android Tablets போன்றவை இவற்றில் பெரும்பங்கு வகிக்கின்றன. இத்தகைய கருவிகளின் மதிப்பு தற்போது 4000 முதல் 6000 ரூபாய் வரை குறைந்துள்ளன. எனவே பெரும்பான்மையான மக்கள் தற்போது இதனை வாங்கி வருகின்றனர். ஆங்கிலத்திலுள்ள மின்புத்தகங்கள்: ஆங்கிலத்தில் லட்சக்கணக்கான மின்புத்தகங்கள் தற்போது கிடைக்கப் பெறுகின்றன. அவை PDF, EPUB, MOBI, AZW3. போன்ற வடிவங்களில் இருப்பதால், அவற்றை மேற்கூறிய கருவிகளைக் கொண்டு நாம் படித்துவிடலாம். தமிழிலுள்ள மின்புத்தகங்கள்: தமிழில் சமீபத்திய புத்தகங்களெல்லாம் நமக்கு மின்புத்தகங்களாக கிடைக்கப்பெறுவதில்லை. ProjectMadurai.com எனும் குழு தமிழில் மின்புத்தகங்களை வெளியிடுவதற்கான ஒர் உன்னத சேவையில் ஈடுபட்டுள்ளது. இந்தக் குழு இதுவரை வழங்கியுள்ள தமிழ் மின்புத்தகங்கள் அனைத்தும் PublicDomain-ல் உள்ளன. ஆனால் இவை மிகவும் பழைய புத்தகங்கள். சமீபத்திய புத்தகங்கள் ஏதும் இங்கு கிடைக்கப்பெறுவதில்லை. எனவே ஒரு தமிழ் வாசகர் மேற்கூறிய “மின்புத்தகங்களைப் படிக்க உதவும் கருவிகளை” வாங்கும்போது, அவரால் எந்த ஒரு தமிழ் புத்தகத்தையும் இலவசமாகப் பெற முடியாது. சமீபத்திய புத்தகங்களை தமிழில் பெறுவது எப்படி? சமீபகாலமாக பல்வேறு எழுத்தாளர்களும், பதிவர்களும், சமீபத்திய நிகழ்வுகளைப் பற்றிய விவரங்களைத் தமிழில் எழுதத் தொடங்கியுள்ளனர். அவை இலக்கியம், விளையாட்டு, கலாச்சாரம், உணவு, சினிமா, அரசியல், புகைப்படக்கலை, வணிகம் மற்றும் தகவல் தொழில்நுட்பம் போன்ற பல்வேறு தலைப்புகளின் கீழ் அமைகின்றன. நாம் அவற்றையெல்லாம் ஒன்றாகச் சேர்த்து தமிழ் மின்புத்தகங்களை உருவாக்க உள்ளோம். அவ்வாறு உருவாக்கப்பட்ட மின்புத்தகங்கள் Creative Commons எனும் உரிமத்தின் கீழ் வெளியிடப்படும். இவ்வாறு வெளியிடுவதன் மூலம் அந்தப் புத்தகத்தை எழுதிய மூல ஆசிரியருக்கான உரிமைகள் சட்டரீதியாகப் பாதுகாக்கப்படுகின்றன. அதே நேரத்தில் அந்த மின்புத்தகங்களை யார் வேண்டுமானாலும், யாருக்கு வேண்டுமானாலும், இலவசமாக வழங்கலாம். எனவே தமிழ் படிக்கும் வாசகர்கள் ஆயிரக்கணக்கில் சமீபத்திய தமிழ் மின்புத்தகங்களை இலவசமாகவே பெற்றுக் கொள்ள முடியும். தமிழிலிருக்கும் எந்த வலைப்பதிவிலிருந்து வேண்டுமானாலும் பதிவுகளை எடுக்கலாமா? கூடாது. ஒவ்வொரு வலைப்பதிவும் அதற்கென்றே ஒருசில அனுமதிகளைப் பெற்றிருக்கும். ஒரு வலைப்பதிவின் ஆசிரியர் அவரது பதிப்புகளை “யார் வேண்டுமானாலும் பயன்படுத்தலாம்” என்று குறிப்பிட்டிருந்தால் மட்டுமே அதனை நாம் பயன்படுத்த முடியும். அதாவது “Creative Commons” எனும் உரிமத்தின் கீழ் வரும் பதிப்புகளை மட்டுமே நாம் பயன்படுத்த முடியும். அப்படி இல்லாமல் “All Rights Reserved” எனும் உரிமத்தின் கீழ் இருக்கும் பதிப்புகளை நம்மால் பயன்படுத்த முடியாது. வேண்டுமானால் “All Rights Reserved” என்று விளங்கும் வலைப்பதிவுகளைக் கொண்டிருக்கும் ஆசிரியருக்கு அவரது பதிப்புகளை “Creative Commons” உரிமத்தின் கீழ் வெளியிடக்கோரி நாம் நமது வேண்டுகோளைத் தெரிவிக்கலாம். மேலும் அவரது படைப்புகள் அனைத்தும் அவருடைய பெயரின் கீழே தான் வெளியிடப்படும் எனும் உறுதியையும் நாம் அளிக்க வேண்டும். பொதுவாக புதுப்புது பதிவுகளை  உருவாக்குவோருக்கு அவர்களது பதிவுகள்  நிறைய வாசகர்களைச் சென்றடைய வேண்டும் என்ற எண்ணம் இருக்கும். நாம் அவர்களது படைப்புகளை எடுத்து இலவச மின்புத்தகங்களாக வழங்குவதற்கு  நமக்கு அவர்கள் அனுமதியளித்தால், உண்மையாகவே அவர்களது படைப்புகள் பெரும்பான்மையான மக்களைச் சென்றடையும். வாசகர்களுக்கும் நிறைய புத்தகங்கள் படிப்பதற்குக் கிடைக்கும் வாசகர்கள் ஆசிரியர்களின் வலைப்பதிவு முகவரிகளில் கூட அவர்களுடைய படைப்புகளை தேடிக் கண்டுபிடித்து படிக்கலாம். ஆனால் நாங்கள் வாசகர்களின் சிரமத்தைக் குறைக்கும் வண்ணம் ஆசிரியர்களின் சிதறிய வலைப்பதிவுகளை ஒன்றாக இணைத்து ஒரு முழு மின்புத்தகங்களாக உருவாக்கும் வேலையைச் செய்கிறோம். மேலும் அவ்வாறு உருவாக்கப்பட்ட புத்தகங்களை “மின்புத்தகங்களைப் படிக்க உதவும் கருவிகள்”-க்கு ஏற்ற வண்ணம் வடிவமைக்கும் வேலையையும் செய்கிறோம். FreeTamilEbooks.com இந்த வலைத்தளத்தில்தான் பின்வரும் வடிவமைப்பில் மின்புத்தகங்கள் காணப்படும். PDF for desktop, PDF for 6” devices, EPUB, AZW3, ODT இந்த வலைதளத்திலிருந்து யார் வேண்டுமானாலும் மின்புத்தகங்களை இலவசமாகப் பதிவிறக்கம்(download) செய்து கொள்ளலாம். அவ்வாறு பதிவிறக்கம்(download) செய்யப்பட்ட புத்தகங்களை யாருக்கு வேண்டுமானாலும் இலவசமாக வழங்கலாம். இதில் நீங்கள் பங்களிக்க விரும்புகிறீர்களா? நீங்கள் செய்யவேண்டியதெல்லாம் தமிழில் எழுதப்பட்டிருக்கும் வலைப்பதிவுகளிலிருந்து பதிவுகளை எடுத்து, அவற்றை LibreOffice/MS Office போன்ற wordprocessor-ல் போட்டு ஓர் எளிய மின்புத்தகமாக மாற்றி எங்களுக்கு அனுப்பவும். அவ்வளவுதான்! மேலும் சில பங்களிப்புகள் பின்வருமாறு: 1. ஒருசில பதிவர்கள்/எழுத்தாளர்களுக்கு அவர்களது படைப்புகளை “Creative Commons” உரிமத்தின்கீழ் வெளியிடக்கோரி மின்னஞ்சல் அனுப்புதல் 2. தன்னார்வலர்களால் அனுப்பப்பட்ட மின்புத்தகங்களின் உரிமைகளையும் தரத்தையும் பரிசோதித்தல் 3. சோதனைகள் முடிந்து அனுமதி வழங்கப்பட்ட தரமான மின்புத்தகங்களை நமது வலைதளத்தில் பதிவேற்றம் செய்தல் விருப்பமுள்ளவர்கள் freetamilebooksteam@gmail.com எனும் முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பவும். இந்தத் திட்டத்தின் மூலம் பணம் சம்பாதிப்பவர்கள் யார்? யாருமில்லை. இந்த வலைத்தளம் முழுக்க முழுக்க தன்னார்வலர்களால் செயல்படுகின்ற ஒரு வலைத்தளம் ஆகும். இதன் ஒரே நோக்கம் என்னவெனில் தமிழில் நிறைய மின்புத்தகங்களை உருவாக்குவதும், அவற்றை இலவசமாக பயனர்களுக்கு வழங்குவதுமே ஆகும். மேலும் இவ்வாறு உருவாக்கப்பட்ட மின்புத்தகங்கள், ebook reader ஏற்றுக்கொள்ளும் வடிவமைப்பில் அமையும். இத்திட்டத்தால் பதிப்புகளை எழுதிக்கொடுக்கும் ஆசிரியர்/பதிவருக்கு என்ன லாபம்? ஆசிரியர்/பதிவர்கள் இத்திட்டத்தின் மூலம் எந்தவிதமான தொகையும் பெறப்போவதில்லை. ஏனெனில், அவர்கள் புதிதாக இதற்கென்று எந்தஒரு பதிவையும்  எழுதித்தரப்போவதில்லை. ஏற்கனவே அவர்கள் எழுதி வெளியிட்டிருக்கும் பதிவுகளை எடுத்துத்தான் நாம் மின்புத்தகமாக வெளியிடப்போகிறோம். அதாவது அவரவர்களின் வலைதளத்தில் இந்தப் பதிவுகள் அனைத்தும் இலவசமாகவே கிடைக்கப்பெற்றாலும், அவற்றையெல்லாம் ஒன்றாகத் தொகுத்து ebook reader போன்ற கருவிகளில் படிக்கும் விதத்தில் மாற்றித் தரும் வேலையை இந்தத் திட்டம் செய்கிறது. தற்போது மக்கள் பெரிய அளவில் tablets மற்றும் ebook readers போன்ற கருவிகளை நாடிச் செல்வதால் அவர்களை நெருங்குவதற்கு இது ஒரு நல்ல வாய்ப்பாக அமையும். நகல் எடுப்பதை அனுமதிக்கும் வலைதளங்கள் ஏதேனும் தமிழில் உள்ளதா? உள்ளது. பின்வரும் தமிழில் உள்ள வலைதளங்கள் நகல் எடுப்பதினை அனுமதிக்கின்றன. 1. www.vinavu.com 2. www.badriseshadri.in 3. http://maattru.com 4. kaniyam.com 5. blog.ravidreams.net எவ்வாறு ஒர் எழுத்தாளரிடம் Creative Commons உரிமத்தின் கீழ் அவரது படைப்புகளை வெளியிடுமாறு கூறுவது? இதற்கு பின்வருமாறு ஒரு மின்னஞ்சலை அனுப்ப வேண்டும். <துவக்கம்> உங்களது வலைத்தளம் அருமை [வலைதளத்தின் பெயர்]. தற்போது படிப்பதற்கு உபயோகப்படும் கருவிகளாக Mobiles மற்றும் பல்வேறு கையிருப்புக் கருவிகளின் எண்ணிக்கை அதிகரித்து வந்துள்ளது. இந்நிலையில் நாங்கள் http://www.FreeTamilEbooks.com எனும் வலைதளத்தில், பல்வேறு தமிழ் மின்புத்தகங்களை வெவ்வேறு துறைகளின் கீழ் சேகரிப்பதற்கான ஒரு புதிய திட்டத்தில் ஈடுபட்டுள்ளோம். இங்கு சேகரிக்கப்படும் மின்புத்தகங்கள் பல்வேறு கணிணிக் கருவிகளான Desktop,ebook readers like kindl, nook, mobiles, tablets with android, iOS போன்றவற்றில் படிக்கும் வண்ணம் அமையும். அதாவது இத்தகைய கருவிகள் support செய்யும் odt, pdf, ebub, azw போன்ற வடிவமைப்பில் புத்தகங்கள் அமையும். இதற்காக நாங்கள் உங்களது வலைதளத்திலிருந்து பதிவுகளை பெற விரும்புகிறோம். இதன் மூலம் உங்களது பதிவுகள் உலகளவில் இருக்கும் வாசகர்களின் கருவிகளை நேரடியாகச் சென்றடையும். எனவே உங்களது வலைதளத்திலிருந்து பதிவுகளை  பிரதியெடுப்பதற்கும் அவற்றை மின்புத்தகங்களாக மாற்றுவதற்கும் உங்களது அனுமதியை வேண்டுகிறோம். இவ்வாறு உருவாக்கப்பட்ட மின்புத்தகங்களில் கண்டிப்பாக ஆசிரியராக உங்களின் பெயரும் மற்றும் உங்களது வலைதள முகவரியும் இடம்பெறும். மேலும் இவை “Creative Commons” உரிமத்தின் கீழ் மட்டும்தான் வெளியிடப்படும் எனும் உறுதியையும் அளிக்கிறோம். http://creativecommons.org/licenses/ நீங்கள் எங்களை பின்வரும் முகவரிகளில் தொடர்பு கொள்ளலாம். e-mail : freetamilebooksteam@gmail.com  FB : https://www.facebook.com/FreeTamilEbooks G +: https://plus.google.com/communities/108817760492177970948 நன்றி. மேற்கூறியவாறு ஒரு மின்னஞ்சலை உங்களுக்குத் தெரிந்த அனைத்து எழுத்தாளர்களுக்கும் அனுப்பி அவர்களிடமிருந்து அனுமதியைப் பெறுங்கள். முடிந்தால் அவர்களையும் “Creative Commons License”-ஐ அவர்களுடைய வலைதளத்தில் பயன்படுத்தச் சொல்லுங்கள். கடைசியாக அவர்கள் உங்களுக்கு அனுமதி அளித்து அனுப்பியிருக்கும் மின்னஞ்சலைfreetamilebooksteam@gmail.com எனும் முகவரிக்கு அனுப்பி வையுங்கள். ஓர் எழுத்தாளர் உங்களது உங்களது வேண்டுகோளை மறுக்கும் பட்சத்தில் என்ன செய்வது ? அவர்களையும் அவர்களது படைப்புகளையும் அப்படியே விட்டுவிட வேண்டும். ஒருசிலருக்கு அவர்களுடைய சொந்த முயற்சியில் மின்புத்தகம் தயாரிக்கும் எண்ணம்கூட இருக்கும். ஆகவே அவர்களை நாம் மீண்டும் மீண்டும் தொந்தரவு செய்யக் கூடாது. அவர்களை அப்படியே விட்டுவிட்டு அடுத்தடுத்த எழுத்தாளர்களை நோக்கி நமது முயற்சியைத் தொடர வேண்டும். மின்புத்தகங்கள் எவ்வாறு அமைய வேண்டும்? ஒவ்வொருவரது வலைத்தளத்திலும் குறைந்தபட்சம் நூற்றுக்கணக்கில் பதிவுகள் காணப்படும். அவை வகைப்படுத்தப்பட்டோ அல்லது வகைப்படுத்தப் படாமலோ இருக்கும். நாம் அவற்றையெல்லாம் ஒன்றாகத் திரட்டி ஒரு பொதுவான தலைப்பின்கீழ் வகைப்படுத்தி மின்புத்தகங்களாகத் தயாரிக்கலாம். அவ்வாறு வகைப்படுத்தப்படும் மின்புத்தகங்களை பகுதி-I பகுதி-II என்றும் கூட தனித்தனியே பிரித்துக் கொடுக்கலாம். தவிர்க்க வேண்டியவைகள் யாவை? இனம், பாலியல் மற்றும் வன்முறை போன்றவற்றைத் தூண்டும் வகையான பதிவுகள் தவிர்க்கப்பட வேண்டும். எங்களைத் தொடர்பு கொள்வது எப்படி? நீங்கள் பின்வரும் முகவரிகளில் எங்களைத் தொடர்பு கொள்ளலாம். - email : freetamilebooksteam@gmail.com - Facebook:  https://www.facebook.com/FreeTamilEbooks - Google Plus:  https://plus.google.com/communities/108817760492177970948 இத்திட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் யார்? - Shrinivasan tshrinivasan@gmail.com - Alagunambi Welkin   alagunambiwelkin@fsftn.org - Arun   arun@fsftn.org -   இரவி Supported by - Free Software Foundation TamilNadu,  www.fsftn.org - Yavarukkum Software Foundation  http://www.yavarkkum.org/