[] இனி இல்லை தோல்வி! நிர்மலா ராகவன் freetamilebooks.com Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 இனி இல்லை தோல்வி! 1. இனி இல்லை தோல்வி! 1. முன்னுரை 2. 1. ஆண்-பெண்-பள்ளி 3. 2. இடக்கைப் பழக்கம் 4. 3. இனி இல்லை தோல்வி 5. 4. உறவுகளும் நட்பும் 6. 5. என்னைப்போல் உண்டா! 7. 6. சகோதரச் சண்டைகள் 8. 7. சவாலைச் சமாளி! 9. 8. சிரிப்புதான் வருகுதையா! 10. 9. சுய விமரிசனம் 11. 10. தலைமைத்துவமும் பணிவும் 12. 11. தந்தையைப்போல் ஒருவன் 13. 12. தற்காப்புக் கலைகள் 14. 13. நாமகரணங்கள் 15. 14. நிகழ்காலத்தில் வாழ்வது 16. 15. பூனைகள் பலவிதம் 17. 16. பொறுமை எதுவரை? 18. 17. மகிழ்ந்திருங்கள் 19. 18. மனோபலமே பலம் 20. 19. யாரோ செய்த பாவபுண்ணியங்கள் 21. 20. விடு, விட்டுத்தள்ளு! 1. எங்களைப் பற்றி - Free Tamil Ebooks இனி இல்லை தோல்வி! இனி இல்லை தோல்வி (கட்டுரைகள்)   நிர்மலா ராகவன   மின்னூல் வெளியீடு : freetamilebooks.com   உரிமை : Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 கிரியேட்டிவ் காமன்ஸ். எல்லாரும் படிக்கலாம், பகிரலாம்.   மின்னூலாக்கம் & அட்டைபடம் - லெனின் குருசாமி - guruleninn@gmail.com   This book was produced using pandoc   முன்னுரை சமூக இயலும், உளவியலும் கலந்த கட்டுரைகள் இவை. குறுங்கதை மாந்தர்கள் பல இனங்களையும் நாட்டையும் சேர்ந்தவர்கள். இக்கட்டுரைகளை வல்லமை.காமில் தொடராக வெளியிட்ட திருமதி பவளசங்கரிக்கு என் மனமார்ந்த நன்றி. நன்றி. நிர்மலா ராகவன், மலேசியா 1. ஆண்-பெண்-பள்ளி பெண்களும் பையன்களும் சேர்ந்து படிக்கும் இடைநிலைப்பள்ளி அது. ஆரம்பப் பள்ளியிலிருந்தே அப்படித்தான் என்றாலும், இந்த வயதிலேயே அவர்களை நல்வழிப்படுத்த வேண்டும் என்ற துடிப்பு உயர்பதவியிலிருந்த சில ஆசிரியைகளுக்கு வந்தது. அதன் பலனாக, கோலாலம்பூருக்கு அருகிலிருந்த அப்பள்ளியில் ஒரு புதிய விதி அமலுக்கு வந்தது. எல்லா வகுப்பறைகளிலும் ஆண்கள்தாம் முதல் வரிசைகளில் அமர வேண்டும். காரணம்: பெண்கள் முன்னிருக்கைகளில் உட்கார்ந்தால், அவர்களுடைய பின்னழகைப் பார்க்கும் விடலைப் பையன்களின் மனம் சலனப்பட்டுவிடும். பிறகு, பாடங்களில் மனம் செலுத்துவது எப்படி? ஆசிரியர்களின் பொதுக்கூட்டத்தில் இந்த விதி தெரிவிக்கப்பட்டபோது, ‘பெண்கள் மட்டும் பையன்களைப் பார்க்கலாமா?’ என்று யாரோ முணுமுணுத்தார்கள். (சத்தியமாக நானில்லை. நான் முணுமுணுப்பதெல்லாம் கிடையாது. போட்டால் சண்டைதான்). மேலதிகாரிகள் என்ன சொன்னாலும், (பிதற்றினாலும்), ஆமோதிக்கும் வண்ணம் தலையாட்டி வைக்கவேண்டும் என்று அவளுக்குத் தெரிந்திருக்கவில்லை, பாவம்! நான் புருவத்தை மட்டும் உயர்த்தினேன், ‘இது என்ன முட்டாள்தனம்?’ என்பதுபோல். மாணவர்களுக்கோ பெருமை தாங்கவில்லை. அவர்களிடம் உண்மைக் காரணம் சொல்லப்படாததால், இருபாலரில் தாங்களே உயர்ந்தவர்கள், அதனாலேயே அப்படி ஒரு சிறப்பு என்று எண்ணினார்கள். நான் போதித்த பரிசோதனைக்கூடத்துக்கு வந்தபோது, வழக்கமாக பெண்கள் உட்காரும் இடத்துக்குப் பையன்கள் வந்தார்கள். நடையிலேயே ஒரு துள்ளல். பெண்களைக் கேலியாகப் பார்த்தார்கள். ஒரு மாதம் ஆகியது. ஆண்களுக்குப் பெருமை அடங்கவில்லை. தாங்கள் அவ்வளவு உயர்வானால், உழைத்துப் படிப்பானேன் என்ற எண்ணம் வந்திருக்க வேண்டும். வாய் ஓயாமல் பேசினார்கள். நான் கற்பித்தது பின்னாலிருந்த பெண்களுக்குக் கேட்கவில்லை. அவ்வளவு இரைச்சல். அவர்களை நான் திட்டப்போனால், ‘Racist’, எங்கள் இனத்திற்கு இவள் எதிரி!’ என்ற பழி வரும். எதற்கு வம்பு! மாணவிகள் ஒன்று திரண்டு வந்து, ‘பையன்கள் உயரமாக இருக்கிறார்கள். எங்களுக்குக் கரும்பலகை தெரிவதில்லை!’ என்று என்னிடம் முறையிட்டார்கள். சிறிது யோசித்துவிட்டு, “அடுத்த முறை நீங்கள் சற்று சீக்கிரம் வந்து, முன்னால் உட்கார்ந்துகொள்ளுங்கள்!” என்றேன். வழக்கம்போல், வெகு நிதானமாக வந்த மாணவர்கள் கோபமாக, “ஏய்! இது எங்கள் இடம்! பெண்கள் எல்லாரும் எழுந்திருங்கள்!” என்று விரட்ட, “டீச்சர்தான் சொன்னார்கள்!” என்று பதிலளித்தார்கள், பிடிவாதத்துடன் இறுகிய உதட்டுடன். “டீச்சர்! உங்களுக்குப் பள்ளிக்கூட விதி தெரியாதா?” என்று ஒரு மாணவன் சவாலாகக் கேட்க, “இது உங்கள் வகுப்பறை இல்லை. என் இடம்! இங்கு நான் வைத்ததுதான் சட்டம். உங்களுக்குத்தான் படிப்பில் அக்கறை இல்லையே! பின்னால் உட்கார்ந்து, தாராளமாகப் பேசுங்கள்!” என்றேன். அதிர்ந்தவர்களாக பின்னால் நகர்ந்தவர்கள், ‘எல்லாம் உன்னால்தான்!’ என்று ஒருவரையொருவர் திட்டிக்கொண்டார்கள். ஆனால், அவர்கள் மனம் படிப்பில் லயிக்கவில்லை. அவமானம் தாங்காது, குனிந்த தலையுடன் இருந்தார்கள். அவர்களைக் கவனிக்காததுபோல் நான் பாடத்தை நடத்த, பெண்கள் உற்சாகமாகக் கற்றார்கள். (மலாய் பெண்கள் ஆண்களைவிட கல்வியில் அதிக கவனம் செலுத்தி, உயர்கல்விக்குப் போகிறார்கள் என்ற தகவல் தினசரிகளில் வந்திருக்கிறது. ஏதாவது தடங்கல் இருக்கும்போதுதான் அதைத் தாண்டிக்கொண்டு, முன்னேற வேண்டும் என்ற உந்துதல் பிறக்கிறதுபோலும்!) ஒரு மாதம் கழிந்தது. மாணவர்களின் உற்சாகம் அறவே வடிந்தது. தங்கள் நிலையை ஏற்றுக்கொண்டார்கள். எப்போதும்போல் பேச ஆரம்பித்தார்கள். நான் பெண்களுடன் கலந்தாலோசித்துவிட்டு, பழையபடி, மாணவர்களை முன்னால் உட்காரச் சொன்னேன். “தாங்க்யூ டீச்சர்!” என்றார்கள், மலர்ந்த முகத்துடன். இப்போது அவர்கள் பேசத் துணியவில்லை. ‘மீண்டும் பெண்களுக்குப் பின்னால் தள்ளப்படும் இழிநிலைக்கு ஆளாகிவிடுவோமோ?’ என்ற பயத்தால் படிப்பில் கவனம் போயிற்று. பதின்மூன்று வயதில், ‘நீங்கள் பெண்களைவிட உயர்ந்தவர்கள்!’ என்று இந்த ஆண்பிள்ளைகளுக்குச் சொல்லிக்கொடுக்கப்படுவதால், பெற்ற தாயாக இருந்தாலும், அவளுக்கு அடங்குவதில்லை. தாய் மரியாதையாக அவர்களை நடத்த வேண்டும். என் சக ஆசிரியை ஒருத்தி தன் மகனை அதட்டியபோது, ‘நீ பெண்! எனக்குப் புத்தி சொல்லும் தகுதி உனக்கில்லை!’ என்றானாம். ஆசிரியர்களின் பொதுஅறையில் புலம்புவாள். அவளுக்கு அப்போது எழுந்த வருத்தம் பிறர்மேல் ஆத்திரமாக மாறியது. தனக்குக் கீழே வேலை பார்த்தவர்களை படாதபாடு படுத்தினாள். தனியார் பள்ளிகளில் மாணவ மாணவிகளை பால் ரீதியாக வித்தியாசப்படுத்துவதில்லை. அதனால் ஒன்றாகப் பேசிப் பழகுவார்கள். ‘இதெல்லாம் பெண்கள் சமாசாரம்!’ என்ற பாகுபாடு இல்லாததால், பதின்ம வயது ஆண்கள் மாதவிடாய்பற்றி அறிந்து வைத்திருக்கிறார்கள். உடல் வலியுடன் பெண்கள் இருக்கும் அச்சமயத்தில் கனமான பொருள் எதையாவது தூக்க பெண்களுக்கு உதவி செய்கிறார்கள். ‘இது பெண்கள் வேலை!’ என்று எதையும் இழிவாகக் கருதாது, சமையலிலும், வீட்டைச் சுத்தப்படுத்துவதிலும் ஈடுபாடு செலுத்துகிறார்கள். அப்படி ஒரு பையன், ‘எனக்குப் புத்தகத்தை எடுத்துப் படிக்கப் பிடிக்காது. அதனால் படிப்பதே கிடையாது,’ என்றபோது, ‘பின்னே எப்படி நல்ல தேர்ச்சி பெறுகிறாய்?’ என்று கேட்டேன். ‘பெண்கள் ஓயாமல் பாடங்களை விவாதிப்பார்கள். அதைக் கேட்டாலே போதுமே!’ என்றான், அலட்சியமாக. ஆண்களுக்கும் பெண்களுக்கும் ஒருவிதமான உறவுதான் இருக்கமுடியும், அவர்கள் கலந்து பேசினால், நிச்சயம் நடக்கக்கூடாதது நடக்கும் என்ற மனப்பான்மை இன்றும் நம்மில் பலருக்கு இருக்கிறது. இதன் விளைவாக, யாரைப் பார்த்தாலும் வேண்டாத ஈர்ப்புதான் ஏற்படும். திருமணம் ஆனபின்னர், மனைவி கணவனைப் பார்த்துப் பயப்படுவதும், ‘இவளைப் புரிந்துகொள்ளவே முடியவில்லையே!’ என்று கணவனுக்கு ஆயாசம் ஏற்படுவதும் இயல்பு. இதனால் இவர்களுடைய தாம்பத்திய உறவு நெருக்கமானதாக இருக்க முடியுமா? அந்த உணர்ச்சிகளுக்கு வடிகாலாக, தம்மைப் போன்றில்லாது, இன்னொரு பாலருடன் சகஜமாகப் பேசுபவர்களைப் பழிக்கிறார்கள் நான் பார்த்த பெண்கள். (ஆண்களும் இப்படி வம்பு பேசுகிறார்களா என்று தெரியவில்லை). நான் ஆரம்பக்கல்வி பயின்றபோது, கூடப்படித்த பையன்களுடன் பேசிப் பழகினால் காது அறுந்துவிடும் என்று ஆசிரியர்கள் பயமுறுத்தி வைத்திருந்தார்கள். அதனால், சொந்த அண்ணனைக்கூடத் தெரியாததுபோல் நடந்துகொள்ள வேண்டிய நிலை. இப்படிப் பயமுறுத்தி வைத்தால், பதின்ம வயதில் வேண்டாத கற்பனைகளும் நடத்தையும்தான் வரும். நம் குழந்தைகள் தம்முடன் படிப்பவர்களையோ, உத்தியோகம் பார்ப்பவர்களையோ வீட்டுக்கு அழைத்துவந்தால், அவர்களுடன் நாமும் கலந்து பேசினால், அவர்களுக்கு நம் மீது மரியாதையும், தம்மீதே நம்பிக்கையும் ஏற்படாதா! அந்த நம்பிக்கையைக் காப்பாற்றிக்கொள்ள முனைவார்கள். கதை படித்து முடித்து பதினைந்து வருடங்கள் ஆனபின்னர் எங்கள் வீட்டுக்கு வந்தான் என் மகளுடன் பள்ளியில் படித்த ஒருவன். அப்போது இரவு பத்து மணி இருக்கும். வேற்றூரில் இருந்து அந்தப் பக்கமாக வந்தவன், முன்பு எங்கள் வீட்டுக்குத் தீபாவளி சமயத்தில் நினைவு வைத்துக்கொண்டு, மீண்டும் வந்திருந்தான். “அம்மா! ங்(Ng) வந்திருக்கான்!” என்று என் மகள் அழைக்க, “சரி,” என்று மட்டும் சொன்னேன். இரண்டு, மூன்று முறை அவள் கூப்பிட, புரிந்து, “ஓ! என்னைப் பாக்கணும்கிறானா?” என்று அறைக்கு வெளியே வந்தேன். மகிழ்ச்சியுடன் பேசிக்கொண்டிருந்தோம். “ஆன்ட்டி! நான் ரவை உருண்டை சாப்பிடுவதையே விட்டுவிட்டேன்,” என்று அவன் கேலியாகச் சொல்ல, சிரிப்பு பலத்தது. அவனுக்குப் பதினேழு வயதாக இருந்தபோது, ‘எங்கள் சம்பிரதாயம்! உருண்டையை முழுவதாகத்தான் வாயில் போட்டுக்கொள்ள வேண்டும்,’ என்று நான் அளக்க, அந்த சீனப் பையனும் அதை நம்பி, அப்படியே செய்து, விழி பிதுங்க திண்டாடினதை மறக்க முடியுமா?! 2. இடக்கைப் பழக்கம் தவறான போதனை? பண்டைய ரோமாபுரி ஆட்சி காலத்திலிருந்தே இவ்வுலகம் வலது கைப்பழக்கம் கொண்டவர்களுக்காகவே இயங்குகிறது. நூற்றில் பத்துபேருக்கும் குறைவானவர்கள்தாம் இடதுகைப் பழக்கம் கொண்டவர்கள். இவர்களால் உலகை எதிர்க்க முடியுமா? ஒத்துப்போவதைத் தவிர வேறு வழியில்லை. ‘நாம் பிறருக்கு எதைக் கொடுக்கும்போதும், அவர்களிடமிருந்து வாங்கும்போதும், வலது கையைத்தான் பயன்படுத்த வேண்டும்,’ என்று சிறுவயதிலிருந்தே போதிக்கப்படுகிறது. ஆசிர்வதிக்கும்போதும் வலது கைதான். இதையெல்லாம் மத சம்பந்தமானதாக ஆக்கிவிட்டார்கள் – இதனால் விளையும் குழப்பங்களைப் புரிந்துகொள்ளாது. கதை “வலது கைதான் உயர்த்தி!” என்று கதாகாலட்சேபங்களில்கூட நான் அடிக்கடி கேட்டதால், இடது கையை உபயோகிப்பது என்னமோ பாபம் என்ற மனப்பான்மை சிறுவயதிலேயே தோன்றிவிட்டது. அதை உபயோகிப்பதைக் கூடியவரை தவிர்த்தேன். நாளடைவில், ஒரு கோப்பையைக்கூட இடது கையால் தூக்க முடியவில்லை – உபயோகிக்கப்படாததால், அவ்வளவுதூரம் வலுவிழந்திருந்தது. நாற்பது வயதுக்குமேல் சுயமாக நீச்சல் கற்க ஆரம்பித்தபோது, “உடல் ஒரு பக்கமாக சாய்கிறதே!” என்று ஒருவர் விமர்சிக்க, மிகவும் பிரயாசைப்பட்டு, கொஞ்சம் கொஞ்சமாக இடது கரத்தை நீட்டப் பழக்கினேன். ஒரே வலி. இயற்கை நமக்கு இரண்டு கரங்கள் கொடுத்திருப்பது ஒன்றை மட்டும் உபயோகிக்க இல்லை என்று புரிந்தது. கதை என் மகள் இடது கைப்பழக்கம் இயற்கையாக அமையப் பெற்றவள். அவளுக்கு மூன்று வயதாக இருந்தபோது, எங்கள் வீட்டில், ‘சாமிக்குப் பூ போடு!’ என்று நான் ஓர் அபிநயம் கற்றுக்கொடுக்க, ‘இடது கையால போடறா!’ என்று யாரோ வியந்தபோதுதான் நானே அதை உணர்ந்தேன். பாலர் பள்ளிக்கு அனுப்பியபோது, அங்கிருந்த ஆசிரியை அவளை ஒரேயடியாக மிரட்டி, வலது கையால் எழுதச் சொல்லியிருக்கிறார். அது அப்போது எங்களுக்குத் தெரியவில்லை. குழந்தைகளின் சுபாவத்தின்படி, அவளுக்கும் தன் குழப்பத்தை, அவதியை, வெளியில் சொல்லத் தெரியவில்லை. முதல் வகுப்பு படிக்கும்போது, எதையுமே குறித்த காலத்திற்குள் எழுதத் தெரியவில்லை என்று பள்ளியிலிருந்து வீட்டுக்குத் தகவல் வந்தது. நெடுநேரம் விசாரித்தபோது, ‘என்னால எழுத முடியலே!’ என்று கதறினாள். அவளது இடக்கையைத் தூக்கி, ‘இந்தக் கை முடியுமா? உனக்கு எப்படி சௌகரியமாக இருக்கிறதோ, அப்படி எழுது!’ என்று நானும் என் கணவரும் அனுசரணையுடன் கூற, அவளுடைய அழுகை பலத்தது. ‘இடது கையால எழுதறது ஒண்ணும் தப்பில்லே,’ என்று ஆதரவளித்தேன். ‘டீச்சர் ஸ்டுபிட்!’ வருட இறுதியில் வகுப்பில் முதல் மாணவியாக வந்தாள். இப்போது, சாப்பிடுவதைத் தவிர, மற்ற எல்லாக் காரியங்களும் இடது கையால்தான் செய்கிறாள். துரிதமாகச் செய்ய முடிகிறது. எதிர்விளைவுகள் ஒரு பூட்டைத் திறப்பதோ, மூடியிருக்கும் பாட்டிலைத் திறப்பதோ இடது கையால் முயலுவது முதலில் கடினமாக இருக்கும். கத்தரிக்கோலை உபயோகிப்பதுதான் இம்மாதிரியானவர்களுக்கு மிகக் கடினமானதாம். அப்போதெல்லாம், ‘என்னால் ஏன் எதுவும் எளிதாகச் செய்ய முடியவில்லை?’ என்று வருத்தமோ அல்லது ஆத்திரமோ எழும். தான் ஏதோ ஒரு வகையில் தாழ்ந்தவன் என்ற அவமானமும், குற்ற உணர்வும்கூட உண்டாகலாம். ‘முடியாததை ஏற்க வேண்டியதுதான்!’ என்று சிலர் மிகுந்த பொறுமைசாலிகளாக ஆகிறார்கள். வேறு சிலர், ‘எல்லாமே நமக்கு எதிராக இருக்கிறதே!’ என்று எளிதாக ஆத்திரத்துக்கு உள்ளாகிறார்கள். கதை மூன்று வயதிலேயே பாபு என்ற சிறுவன் எல்லாவற்றிற்கும் இடது கையை நாட, அவனுடைய தாய் மாமன் ஒரு கனமான பூட்சை அதற்கெனவே அணிந்து, அக்கையை மிதிப்பார், ‘இது என்ன கெட்ட பழக்கம்! இனிமே இதை உபயோகிப்பாயா?’ என்று மிரட்டியபடி. ‘நான் செய்வது எல்லாமே ஏன் தவறாகப் போகிறது?’ என்ற குழப்பம் அக்குழந்தைக்கு ஏற்பட்டது. அளவற்ற அச்சமும், ஆத்திரமும் கொண்டு வளர்ந்தான். வலது கையால் எழுதும்போது தெளிவாக இருக்கவில்லை. எழுதுவதே பிடிக்காமல் போயிற்று. வளர்ந்தபின், யாராவது அவனிடம் ஏதாவது தப்பு கண்டுபிடித்து விட்டால் ருத்ரத் தாண்டவம்தான். தான் சிறுவயதில் பட்ட துயரத்தைப் பிறருடன் பகிர்ந்துகொள்ள, பாபுவிற்குச் சற்றுத் தெளிவு உண்டாயிற்று. தான் செய்வது எல்லாமே தவறில்லை, அறியாக் குழந்தையிடம் வன்முறை பிரயோகித்த மாமாதான் உண்மையாகவே தவறிழைத்திருக்கிறார் என்று புரிந்தது. எல்லாம் நன்மைக்கே சிறு வயதிலிருந்தே விளையாட்டுகளில் மிகுந்த ஈடுபாடு கொண்டான் பாபு. அநாவசியமான குற்ற உணர்வும், ஆத்திரமும் சற்று அடங்கின. டென்னிஸ், குத்துச்சண்டை எல்லாம் விரும்பிப் பயின்றபோது, வலது கைப்பழக்கம் கொண்ட எதிராளியை வீழ்த்துவது எளிதாக இருந்தது. ‘என்னால் சில காரியங்கள் இவர்களைவிடச் சிறப்பாகச் செய்யமுடியும்!’ என்ற பெருமிதம் உண்டாயிற்று. இடது கைப்பழக்கம் ஒரு விதத்தில் பெரிய நன்மை. அக்கரம் ஒன்றால் மட்டும் 3,400 வார்த்தைகளை ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய முடியும். அதுவே, வலக்கையை மட்டும் பயன்படுத்தினால், நானூற்று ஐம்பது வார்த்தைகளை மட்டுமே தட்டச்சு செய்ய இயலுமாம். தாம் பார்ப்பது, கேட்பது எல்லாவற்றையும் வித்தியாசமான முறையில் அலசுவார்கள் இவர்கள். அதனால், பிறருக்கு இவர்களைப் புரிந்துகொள்வது எளிதல்ல. சதுரங்க விளையாட்டில் இது மிகுந்த நன்மையை அளிக்கும். கலைநயம் இடது கரப்பழக்கம் உள்ளவர்களுக்கு மூளையின் வலப்புறம் நன்கு செயல்படுவதால், அவர்கள் கலைநயம் பொருந்தியவர்களாக இருப்பார்கள். படிப்பது, கேட்பது எல்லாவற்றையும் காட்சியாகப் பார்க்கும் திறன் அமைந்திருப்பதால், சித்திரம் வரைவதில் தேர்ந்தவர்களாக இருப்பார்கள். உதாரணம்: லியானார்டோ டாவின்சி, மைக்கலேஞ்சலோ. (என் மகள் வசதி குறைந்த மாணவிகளுக்காக இலவசமாக நடத்தும் பரதநாட்டிய வகுப்பில் பெரும்பாலான மாணவிகள் இடக்கைப் பழக்கம் அமைந்தவர்கள். பல சமூக சேவகிகள் அவர்களுக்கு தமிழோ, இசையோ கற்றுக்கொடுக்க முன்வந்து, ‘இவர்களால் எதையுமே புரிந்துகொள்ள முடியவில்லை! முட்டாள்கள்!’ என்று பின்வாங்கி விட்டனராம் – அப்பெண்களில் ஒருத்தி தொலைகாட்சியில் தெரிவித்த சமாசாரம். ‘இந்த ஒரு டீச்சர்தான் எங்களைக் கைவிடவில்லை,’ என்று நன்றியுடன் குறிப்பிட்டாள்). ஜீனியஸ்! நாளடைவில், இயற்கையாக அமைந்த வலது பக்க மூளைத்திறனுடன், இவர்களும் 70% இடது பக்க மூளையைப் பயன்படுத்தப் பழகிவிடுகிறார்கள். இதனால் அறிவுக்கூர்மை மிகுந்து விடுகிறது. ‘இருபது வயதுவரைக்கும் திண்டாட்டமாக இருக்கும். அதன்பின், வலது கைக்கு முக்கியத்துவம் கொடுக்கும் உலக வழக்கத்தைப் புரிந்துகொண்டுவிடுகிறோம். அதனால், எந்த பாதிப்பும் இல்லாமல் எல்லாவிதப் பிரச்னைகளையும் எதிர்கொள்ள முடிகிறது,’ என்று தெரிவித்தார் ஒருவர். 3. இனி இல்லை தோல்வி வெகு சிலரே வாழ்க்கையில் வெற்றி அடைகிறார்கள். அவர்களுக்கு மட்டும்தான் அறிவோ, திறமையோ இருக்கிறதென்று அர்த்தமில்லை. எல்லாம் இருந்தும், வெற்றி பெறுவதை எண்ணிக்கூடப் பார்க்க முடியாதபடி ஒருவித பயம் பலருக்கும். யார் யாருக்கு இந்தப் பயம்? 1. தந்தை, ‘எதையும் ஒழுங்காச் செய்யத் தெரியாது! நீ உருப்பட மாட்டே!’ என்று மகனைப் பழிப்பதைக் கேட்டிருப்பீர்கள். இப்படி மட்டம்தட்டிப் பேசுவதுதான் ஊக்குவிப்பது என்று தவறாக நினைத்துக் கொண்டிருந்தார்கள், கடந்த தலைமுறையில். இன்றும் சில பழமைவாதிகள் இதே முறையைத்தான் கையாள்கிறார்கள். சிறுவயதில் பழிக்கப்பட்டவர்கள் முன்னுக்கு வரமுடியாதவர்களாக இருக்கிறார்கள். அவர்கள் பெரியவர்கள் சொல்வதை அப்படியே நம்பிவிடுவார்கள். தாழ்வு மனப்பான்மையும் அதனால் விளையும் அச்சமும் மட்டும் நிரந்தரமாக அவர்களுடன் தங்கிவிடுகிறது என்பதுதான் பரிதாபம். அப்புறம் முன்னுக்கு வருவது ஏது! 2. இயற்கையாகவே கூச்ச சுபாவம் உடைய குழந்தைகள். கதை சிறுவயதில் கிராமத்தில் பாட்டி, தாத்தாவுடன் மிகவும் அருமையாக வளர்ந்தவன் சோமு. பள்ளிப்படிப்புக்கு பெரிய நகரத்தில் பெற்றோர் வீட்டுக்கே வந்துவிட, தந்தையின் முரட்டுத்தனமான கண்டிப்பு அவனை மிரளச் செய்தது. தமிழ்ப்படங்களில் வருவதுபோல், தாய் மகனுக்குப் பரிய, தந்தை இன்னும் மூர்க்கமாக வாயாலேயே அவனை வதைத்தார். பரீட்சையில் தோல்வி அடைந்தால் அடி. ஆண் பிள்ளைக்கோ தந்தைதான் முன்னோடி. அவர் சொன்னால் சரியாகத்தான் இருக்கும் என்று சோமு தன் தந்தை பழித்ததுபோலவே நடக்கத் தொடங்கினான். வெவ்வேறு சூழ்நிலைகளில் வளர்க்கப்பட்டதால் உண்டான கூச்ச சுபாவம், தோல்வி அடைந்தால் இன்னும் பழிச்சொல்லுக்கு ஆளாக வேண்டுமே என்ற பயம் எல்லாம் சேர்ந்து கொண்டன. பிறருடன் கலகலப்பாகப் பேசக்கூடப் பயந்து, புதிதாக எக்காரியத்தைச் செய்யவும் தைரியமின்றி, எதிலும் தோல்வி காண்பவனாக ஆகிப்போனான் சோமு. சில பெற்றோர்கள் தம் பெண் குழந்தைகளுக்கு நல்லது செய்கிறோம் என்றெண்ணி, ‘நீ கடுமையாக உழைத்து, சிறந்த தேர்ச்சி பெற வேண்டும் என்கிற அவசியமில்லை. எப்படியும் கல்யாணம் செய்துகொள்ளத்தானே போகிறாய்! இளமைக்காலம் ஒருமுறைதான் வரும். இப்போதே நன்றாக அனுபவித்துவிடு!’ என்று சொல்வார்கள். இதை அப்படியே ஏற்று நடக்கும் பெண்களில் சிலர் ‘அப்பா மிக நல்ல அறிவுரை கூறினார்! அதற்குப்பின் அப்படி மகிழ்ச்சியாகவே இல்லை!’ என்பார்கள். வேறு சிலர், ‘நான் நிறையப் படித்து, நாலுபேர் மெச்ச வாழவேண்டும்!’ என்றெல்லாம் ஆசைப்பட்டாலும், அப்பாவுக்கு எதிராக நடப்பது சரிதானா என்ற குழப்பம் உண்டாக, வெற்றியைக்கண்டு அஞ்சுபவர்களாக ஆகிவிடுகிறார்கள். அளவுக்கு மீறிய பொறுமை பிடிக்காத உத்தியோகத்திலிருந்து மாறப் பயந்து, அதைப்பற்றிப் புலம்பிக்கொண்டு, அதிலேயே நிலைத்திருப்பவர்கள் பொறுமைசாலிகள்தானா? வேறு வேலை கிடைக்கும் என்றாலும், புதிய ஒன்று எப்படி இருக்குமோ என்ற பயமே அவர்களை அப்படி இருக்கச் செய்கிறது. அதேபோல்தான் கணவன் என்ன வதைத்தாலும் அதைத் தாங்கிப்போகும் பெண்களும். ‘பிறர் என்ன சொல்வார்களோ?’ என்ற அச்சம் எழ, பொறுக்க முடியாத வாழ்க்கையையும் எப்படியோ சமாளித்து வாழ்ந்தார்கள் இவர்கள், அண்மைக்காலம்வரை. பெண்களுக்கு கல்வியும், சொந்தக்காலில் நிற்கும் திறனும் இருப்பதால், இப்போது நிலைமை சற்றே மாறியிருக்கிறது. வெற்றியே பாரம் ஏன் வெற்றி பெறுவதை ஒரு பாரமாக நினைக்கிறார்கள்? கதை ‘இவளைப்போன்ற அறிவாளியை நான் இதுவரை பார்த்ததே கிடையாது. வகுப்பில் முதலாவதாக ஏன் வருவதில்லை?’ என்று பூர்ணிமாவின் ஆசிரியை குழப்பத்துடன் அவள் தாயைக் கேட்டாள். தாய்க்கு என்ன நடந்திருக்கும் என்று ஊகிக்க முடிந்தது. வீட்டுக்குப் போனதும், மகளைக் கோபிக்காது, ‘நான் பாடம் சொல்லிக் கொடுத்தபோது, எல்லாவற்றிற்கும் சரியாகப் பதில் சொன்னாயே! வேண்டும் என்றே தப்பும் தவறுமாக எழுதியிருக்கிறாய். இல்லையா?’ என்று கேட்டாள் புன்சிரிப்புடன். அந்தப் பத்துவயதுச் சிறுமி ஒப்புக்கொண்டாள். முதலாவதாக வரும் பெண்ணைப்போல் கர்வியாக, தான் எது சொன்னாலும், செய்தாலும் சரிதான் என்று அடம்பிடிப்பவளாக ஆகப் பிடிக்கவில்லை என்று. அதனாலேயே அப்பெண்ணுக்கு நெருங்கிய தோழிகளே கிடையாது, தானும் அப்படித் தனித்து இருக்க விரும்பவில்லை என்றாள்! ‘எனக்கு எவருடனும் ஒத்துப்போக முடியும்,’ என்று பெருமையாகச் சொல்லிக்கொள்பவர் தன் முழுத்திறமையை வெளிப்படையாகக் காட்டமாட்டார். வெற்றி, அதனால் கிடைக்கும் பதவி என்றால் பொறுப்புகளும் அதிகரித்துவிடும் என்பது ஒருபுறமிருக்க, பலருக்கும் தன்னைப் பிடிக்காமல் போய்விட்டால் என்ன செய்வது என்று, ஒரே நிலையில் இருப்பார்கள். ஆனால், இவர்களைப் போன்றவர்கள் நிம்மதியாகவோ, மகிழ்ச்சியாகவோ இருக்கிறார்கள் என்று சொல்லிவிட முடியாது. வெற்றியை நினைத்துப்பார்க்கவும் அஞ்சுபவர்களுக்கு இலக்கே கிடையாது. மாற்றமில்லாத வாழ்க்கையே பாரமாகி விடுகிறது. தம்மையும் தம் குறைகளையும் மறக்க சிலர் தம்மைத் தாமே குலைத்துக்கொள்ளும் நடவடிக்கைகளில் ஈடுபடுவார்கள். மது, மாது, போதைப்பழக்கம் என்று ஏற்படுத்திக்கொள்வார்கள் என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள். தம் திறமைக்கு மீறிய காரியங்களில் ஈடுபட்டு (உதாரணம்: வியாபாரம்) தோல்வி அடைவார்கள். எப்படி இந்த நிலையை மாற்றுவது? 1. தன் குறை என்ன என்று புரிந்து, அதை நிவர்த்தி செய்துகொள்ள முயலுவது. பூர்ணிமாவுக்குச் சற்று விவரம் புரிந்ததும், அவள் தாய் கூறியது: ‘கடவுள் உனக்கு நல்ல அறிவைக் கொடுத்திருக்கிறார். அதை முழுமையாகப் பயன்படுத்தாது விடலாமா?’ அதன்பின் அப்பெண் தன் புத்திசாலித்தனத்தை மறைத்துக்கொள்ள முயலவில்லை. அவளைப்போலவே இருந்த சிலருடன் நட்புடன் பழகிவந்தாள். 2. சிறு பிராயத்தில் கேட்ட வசவுகளால் தான் குறைபாடு உள்ளவனாக ஆகிவிடமாட்டோம் என்ற உறுதியுடன் செயல்படுவது. 3. தன்னைத் தாழ்த்த முயல்கிறவர்களின் தொடர்பைக் குறைத்துக்கொண்டு, அவர்கள் முயற்சியைத் தோற்கடிப்பது. வெற்றி பெற்றால், பலருடைய வாய்க்கு அவலாக ஆகிவிடுவோம், அதனால் பாதிப்படையக்கூடாது என்று தெளிவடைவது. பிறர் நம்மைத் தாழ்த்தவோ, காயப்படுத்தவோ முயன்றால், அதனால் நாம் இழிந்தவர்களாக ஆகி விடப்போவதில்லை. அவர்கள் சொல்வதில் உண்மை இருக்குமோ என்று நினைத்துக் குழம்புவது அநாவசியம். அவர்கள் எப்படியோ போகட்டும், விடுங்கள்! உடலாலோ, மனதாலோ, உணர்ச்சிகளாலோ நாம் அவர்களை எதிர்க்காது இருப்பதே சிறந்தது. இதைப் புரிந்துகொண்டால், வெற்றிக்கு அஞ்ச வேண்டியதில்லை. தோல்வியையும் புறந்தள்ளலாம். 4. உறவுகளும் நட்பும் உறவுகளை நாம் தேர்ந்தெடுக்க முடியாவிட்டாலும், நல்ல நண்பர்களையாவது பெறும் பாக்கியம் இருக்கிறது என்பது ஆறுதலளிக்கும் விஷயம். ‘குற்றம் பார்க்கில் சுற்றம் இல்லை’ என்கிறார்கள். ஆனால், நம்மிடம் என்னென்ன குறைகள் இருக்கின்றன என்றே ஆராய்பவர்களிடம் போலியாகப் பழகினால்தான் அவர்களுடைய மதிப்பைப் பெறமுடியும். அப்போது நாம் நமக்கே உண்மையாக இருப்பது எப்படி நடக்கும்? நிறைவுதான் கிட்டுமா? உறவினரோ, நண்பர்களோ நம்மால் ஏதாவது காரியம் ஆகவேண்டியிருந்தால், சிலர் துதி பாடுவார்கள். வேறு சிலர் பொறாமையால் நமது முன்னேற்றத்தைத் தடுக்க நைச்சியமாகப் பேசி நடப்பார்கள். இன்னொரு பிரிவினர், ‘இப்படி நடப்பதுதான் சிறந்தது,’ என்று தம் அபிப்ராயங்களைப் பிறரிடம் வலுக்கட்டாயமாகத் திணிப்பவர்கள். அவர்கள் அதிகாரத்தை விரும்புகிறார்களே தவிர, அறிவுரை அக்கறையால் இருக்காது. தனித்து இயங்கும் துணிவு குறைவானவர்கள்தாம் இப்படி நடக்கிறார்கள். தவிர்க்க முடியாவிட்டால், அவர்கள் எதிரில் தலையாட்டிவிட்டு, அவர்கள் சொல்வதை அலட்சியம் செய்வதைத் தவிர வேறு வழியில்லை. இதனால்தான் தகாத நட்பினருடன் பழகுவதைவிடத் தனிமை சிறந்தது என்று சொல்கிறார்களோ! தனிமையில் இனிமை சிந்திப்பதற்குத் தனிமையைப்போல் வேறில்லை. வாய் மூடினால் காதும், கண்ணும் இன்னும் சிறப்பாக வேலை செய்ய, எதையும் பகுத்தறியும் தன்மை வளரும். இது புரியாதவர்கள்தாம் யாருடனாவது, எதைப்பற்றியாவது எப்போதும் பேச முனைகிறார்கள். தனிமையிலிருப்பவர்களைப் பார்த்து, ‘இவர்கள் ஏன் நம்மைப்போல் இல்லை?’ என்று அதிசயப்படுகிறார்கள். ‘ஒரு வேளை, நம்மை மதிக்கவில்லையோ!’ என்ற ஆத்திரமும் ஏற்படுகிறது. எப்போதும் பிறருடன் சேர்ந்து கலகலப்பாகப் பழகினால் மட்டுமே மகிழ்ச்சி என்றிருந்தால் ஆழ்ந்து யோசிப்பது எங்ஙனம்? தனிமையில் பெரும்பொழுதைக் கழிப்பவர்களுக்கு உலகத்தினரின் போக்கு புரிந்துபோகிறது. அதிகம் பேசாது, பிறரது பிரச்னைகளை அவர்களே பகிர விரும்பும்போது உன்னிப்பாகக் கேட்க முடிகிறது. பிறருக்கு ஏற்ற ஆலோசனை அளித்து, ஆதரவாக இருக்கும் தன்மை வளர்கிறது. விரும்புகிறார்களோ, இல்லையோ, எழுத்தாளர்கள் தனிமையில் கழிக்க வேண்டிய பொழுது அதிகம். அதற்காக, எல்லா நேரத்தையும் தனிமையில் கழிக்க வேண்டும் என்பதுமில்லை. மனிதன் தனியான தீவில்லை. திருமணம் குறுகியகாலப் பயிரா? ஒரே பார்வையில் ஒருவரை பிடித்துப்போனாலும், எந்த உறவும் பலப்படுவதற்கு நீண்ட அவகாசம் பிடிக்கும். இதனால்தான் திருமணம் ஆயிரங்காலத்துப் பயிர் என்று சொல்லியிருக்கிறார்கள். ஆனால், இன்றோ! கதை மணமகள் தேவை என்ற பகுதியில் விண்ணப்பம் செய்து மனைவியாகி இருந்தாள் காஞ்சனா. மணமகனான மகாதேவனுக்கு அப்போது நாற்பது வயதுக்குமேல் ஆகியிருந்தது. நோயாளியான அண்ணனையும், சக்கர நாற்காலியில் வாசம் செய்த தாயையும் பொறுப்பாகப் பார்த்துக்கொண்டிருந்தவருக்கு ஒரு கல்யாணம் செய்துகொண்டால், தன் வாழ்க்கையைப் பகிர்ந்துகொள்ள, அதில் சிறிதாவது இன்பம் சேர்க்க ஒரு ஜீவன் கிடைக்குமே என்ற ஆசையில் விளம்பரம் செய்திருந்தார். திருமண நாள் குறிக்கப்பட்டதுமே கடன் வாங்கி, சொந்த வீட்டைப் புதுப்பிக்கும் முயற்சியில் உற்சாகமாக இறங்கினார். முதல் இரவிலேயே காஞ்சனா சில நிபந்தனைகளை விதித்தாள்: அண்ணன் அவர்களுடன் இருக்கக்கூடாது, சொந்த வீட்டைத் தன் பெயருக்கு எழுதிக்கொடுத்துவிட வேண்டும். ‘பெற்றோர் இருந்துவிட்டுப்போகட்டும்’ என்று பெரிய மனது(!) பண்ணினாள். புதுமனைவியா, நினைவு தெரிந்த நாள்முதல் இரட்டைப்பிறவிபோல் பழகிய அண்ணனா என்றெல்லாம் மகாதேவன் யோசிக்கவே இல்லை. உடனே அவ்விடத்தைவிட்டு வெளியேறினார். இப்போதெல்லாம், ‘திருமணம்’ செய்துகொண்டால், குறுக்கு வழியில் பணக்காரி ஆகலாம் என்று பல பெண்கள் நினைப்பதுபோலிருக்கிறது. இதுவும் தமிழ்நாட்டில் நடந்த கதைதான். முதலிரவன்றே உடல் நிலை சரியாக இல்லை என்று சாக்கு சொல்லிவிட்டு, தன் வீட்டுக்குப் போய்விட்டாள் சௌந்தரி. கணவன் எவ்வளவு முயன்றும் அவனுடன் வாழ ஒப்பவில்லை. வேறு வழியில்லாமல், ‘விவாகரத்து’ என்றபோது, ‘இரண்டு லட்சம் ரூபாய் கொடுத்தால்தான்!’ என்றாளாம் சௌந்தரி. என்ன செய்வது என்று அவர்கள் திகைத்துக்கொண்டிருந்தபோது, “திருமணம் நிறைவு பெறவில்லை என்று காரணம் காட்டினால் கிடைக்கும்,” என்று ஓர் உபாயத்தைச் சொன்னேன். அவளிடமிருந்து விடுதலை கிடைத்தாலும், மன நிம்மதி போய்விட்டது அந்த அப்பாவிக் கணவனுக்கு. அதிகம் விசாரிக்காமல் பண்ணிக்கொண்டதன் விளைவு! ஒரு பெண்ணால் புறக்கணிக்கப்பட்டோம் என்ற அதிர்ச்சி மறக்கக்கூடிய ஒன்றா! குறுகிய காலத்தில் பணக்காரியாக ஆகும் திட்டத்துடன் ஏமாற்றி, பொய்யுரைத்து, ஆண்களின் உணர்ச்சிகளுடன் விளையாடும் பெண்களும் நம்மில் இருக்கிறார்கள் என்கிற நிதரிசனமே அதிர்ச்சியாக, கசப்பாக இருக்கிறது. ஏமாறுவதும் ஏமாற்றுவதும் இரு பாலருக்கும் உள்ள குணம்தான் என்றாலும், ஏமாற்றப்பட்டவர்களைப் பார்த்துப் பரிதாபப்படாமல் இருக்க முடியவில்லை. கதை நிறையப் படித்து, பெரிய வேலையிலிருந்த காரணத்தினாலேயே ரூபாவிற்குத் திருமணம் தடைபட்டுக்கொண்டே போயிற்று. அவளையும் ஒருவர் மணக்க முன்வந்தபோது, பூரித்துப்போனாள். கணவர் சொற்படி கேட்டு, வேலையை விட்டாள். ‘நல்ல வேலையை ஏன் விட்டாய்?’ என்று அங்கலாய்ப்புடன் கேட்டவர்களிடம், ‘எங்களுக்கு இன்னும் பணம் வந்து ஒன்றும் ஆகவேண்டாம். அவர் சம்பாதிக்காததா!’ என்று பெருமை பேசினாள் ரூபா. ‘என் கணவர் என்னைவிட்டு ஒரு வருடம் பிரிந்திருந்தால்கூட இன்னொரு பெண்ணை நாடமாட்டார். எனக்கு அந்த நம்பிக்கை இருக்கிறது!’ என்பாள் கர்வத்துடன். நாற்பதாண்டு இல்லறத்துக்குப்பின் அந்த நம்பிக்கை பொய்த்தபோது, அதன் தாக்கம் அதிகமாக இருந்தது: ‘மகனின் மனைவியிடமே தவறாக நடந்துகொள்பவனையா குணக்குன்று என்று நம்பினோம்!’ (விழாக்காலங்களில் அவளே கணவனை பழித்தபோதுதான் எல்லாருக்கும் உண்மை தெரிந்தது). தான் எவ்வளவு முட்டாளாக இருந்திருக்கிறோம் என்ற ஏமாற்ற உணர்வில் அன்பாகப் பழகியவள் ஆத்திரக்காரியாக மாறினாள். எதுதான் நல்ல இல்லறம்? கணவனும், மனைவியும் இரு தனி மனிதர்கள். இருவருக்கும் ஒரே மாதிரியான குணாதிசயங்கள் அமைய வேண்டுமானால், இரட்டையரைத்தான் தேர்வு செய்ய வேண்டும். இது புரியாது, ஒருவரோடு மற்றொருவர் போட்டி போட்டுக்கொண்டிருந்தாலோ, அல்லது, வித்தியாசமாக இருப்பதால் பழித்துக்கொண்டிருந்தாலோ, இருவருமே வீழும் சாத்தியக்கூறு அதிகம். கோபமாக இருக்கும்போது அதை அடக்கிக்கொண்டு யோசித்தாலும், பழைய குப்பைகளைக் கிளாறமலும் இருந்தாலே பல பிரச்னைகளைத் தவிர்த்துவிடலாமே! ஒரு தமிழ்ப்படத்தில், ‘உனக்கு என்மேல் காதல்! அதை ஒப்புக்கொள்!’ என்று கதாநாயகன் ஒரு பெண்ணை கன்னத்தில் அறைகிறான், திரும்பத் திரும்ப! ‘அன்பு’ என்பது அடித்தால், மிரட்டினால், கெஞ்சினால் வருமா, என்ன? ஒத்துப்போன சில விஷயங்களைப் பங்கு போட்டுக்கொண்டு, (உ-ம்: ஏதாவது பொழுதுபோக்கு), அவரவருக்குப் பிடித்ததைச் செய்தால், குடும்பத்தில் நிம்மதியும் மகிழ்ச்சியும் நிலவும். இத்தகையச் சூழ்நிலையில் வளரும் குழந்தைகளும் மன ஆரோக்கியத்துடன் இருப்பார்கள். 5. என்னைப்போல் உண்டா! இரண்டே வயதான குழந்தை அவள். எந்த ஒரு புதிய உடையையோ, சட்டையையோ அணிந்தபின், ஓடிப்போய் கண்ணாடிமுன் நின்று அழகு பார்த்துக்கொள்வாள். இன்னொரு குழந்தை, ஒரு முறை தலைமயிரை வெட்டிக்கொண்டு வந்ததும், ‘அழகா இருக்கியே!’ என்று எல்லாரும் பாராட்ட, தினசரி தானே வெட்டிக்கொள்ள ஆரம்பித்தாள்! வீட்டிலிருந்த கத்தரிக்கோல்கள் எல்லாவற்றையும் ஒளித்துவைக்க நேர்ந்தது! பண்டைக்காலத்தில் கிரேக்க நாட்டில் வாழ்ந்த நார்சீஸஸ் (Narcissus) என்பவன் நீரில் தெரிந்த தனது பிம்பத்தைக் கண்டு சொக்கிப்போய், நகராது அதையே பார்த்துக்கொண்டு இருந்தானாம். நாளடைவில், ஒரு மலராகி விட்டானாம்! இது காதில் பூசுற்றும் வேலையோ, என்னவோ, ஒரு பூவிற்கு இன்றளவும் அவன் பெயர்தான். சிறுகுழந்தை, ‘உலகமே தன்னைச்சுற்றித்தான் இயங்குகிறது!’ என்பதுபோல் நடந்துகொள்வது இயற்கை. வளர்ந்த பின்னரும் அப்படியே இருப்பவர்களுக்கு நார்சீஸிஸம் (Narcissism) என்ற தன்மை இருப்பதாகப் பெயர். இது அளவுக்கு மீறினால், ஒருவித மனநோயாகிறது. ‘நான் தவறே செய்யமாட்டேன்!’ என்று கடவுளைப்போல் தன்னை நினைக்கும் ஒருவன், ‘நான் செய்வதெல்லாம் சரிதான்!’ என்று அலட்டிக்கொண்டு, அவன் சொல்லிலோ, செயலிலோ குற்றம் கண்டுபிடிப்பவர்களை எதிரியாகப் பாவித்து நடத்துவது நார்சீஸிஸம். அளவுக்கு அதிகமான சுயநலம், தன் திறமைகளையும் அழகையும் தானே மெச்சி, ‘என்னைப்போல் உண்டா!’ என்ற பெருமிதம் கொள்வது, பிறரது பாராட்டுக்காக ஏங்குவது போன்ற குணங்கள் நார்சீஸிஸத்தால் பாதிக்கப் பட்டவர்களுக்கு ஏற்பட்டுவிடும். எதற்குப் பிறர் மெச்சுவதுபோல், பிறரைப்போல் இருக்க வேண்டும்? நாம் நாமாகவே இருந்தால் நிறையச் சாதிக்கலாமே! இது புரிந்து, ‘என்னால் முடியும்!’ என்று தன் திறமையின் எல்லையை உணர்ந்து, நம்பிக்கையுடன் ஒரு காரியத்தைச் செவ்வனே செய்து முடிப்பது தன்னம்பிக்கை. தன்னம்பிக்கையை வளர்த்துக்கொள்ளும் வழிகள்: நம்மை பயப்பட வைக்கும் (நல்ல) காரியம் ஒன்றைச் செய்து முடிக்க வேண்டும். நம் குறைகளை அப்படியே ஏற்றுக்கொள்ளுதல் சிறப்பு. நாம் நம்மையே தாழ்வாக நினைக்கும்போதுதான் பொறாமை பிறக்கிறது. நார்சீஸிஸம் ஏன் வருகிறது? தமக்கு என்ன வதை நேர்ந்தாலும், அதைப் பிறருடன் பகிர்ந்துகொள்ளத் தெரியாது சிறுவர்களுக்கு. ஆனால், அதை மறக்க முடியாது, அல்லது ஏதாவது சிகிச்சையால் அதை ஏற்கும் திறனையும் பெறாது, பெரியவர்களான பின்னரும் அதன் பாதிப்புடன் இருப்பார்கள் ஒரு சிலர். அப்படிப்பட்ட ஒருவரின் கதையைப் பார்ப்போமா? சீராகச் செயல்படாத குடும்பம் அது. மிகுந்த கோபக்காரரான தந்தை மனைவியுடன் அவள் பெற்ற குழந்தைகளையும் உடல் வதைக்கு ஆளாக்கினார். பணத்தட்டுப்பாடு வேறு. சகோதர சகோதரிகளுக்குள் மட்டும் எப்படி ஒற்றுமை ஏற்படும்? இல்லை, கல்வியில்தான் மனம் போகும்? குடும்பத்தில் எல்லாருக்கும் சொல்ல முடியாத அவமானம் மற்றும் தாழ்மை உணர்ச்சி. சிறு பிராயத்துத் தேவைகள் மாறாமலே வளர்ந்த அந்த ஒருவன் தன் தேவைக்காகத்தான் பிறர் இருக்கிறார்கள் என்பதுபோல் பிறரை நடத்தினான். தான் சொல்வதைக் கேட்காவிட்டால் அளவுகடந்த ஆத்திரம் எழும். தன் குறைபாடுகளை ஏற்கத் துணியாது, பிறரது குற்றங்களையே கவனிப்பான். ‘நான் ஏதோ விதத்தில் தாழ்ந்தவன்!’ என்று உள்ளுணர்வு உறுத்திக்கொண்டே இருக்க, தெரிந்தவர், தெரியாதவரை எல்லாம் மட்டம் தட்டி, அதனால் தான் ஓரளவு உயர்ந்துவிட்டதாக மனப்பால் குடித்தான். முன்பின் தெரியாதவர்களுடன் அலட்டலாகச் சிரித்துப் பேசி, பலரது நட்பைப் பெற்றுவிட்டோம் என்று பெருமிதம் கொள்பவர்கள் இவனைப் போன்றவர்கள். ஆனால், தம் குடும்பத்தாருடன் இணக்கமாக நடக்க மட்டும் தெரியாது. பிறருக்கு உரிய அன்பையும் மரியாதையையும் அளிக்கத் தவறிவிடுவதால், காலப்போக்கில் பிறரது மரியாதையை இழந்துவிடுகிறார்கள். இதெல்லாம் பயத்தால் ஏற்படுவது என்கிறார்கள் உளவியல் நிபுணர்கள். என்ன பயம்? பிறர் நம் தோற்றம், செயல்களை எப்படி எடுத்துக்கொள்வார்களோ என்ற பயம் இத்தகையவர்களிடம் நிலைத்திருக்கும். ஆகையால், பிறர் பாராட்டுவார்கள் என்று உறுதியாக நம்புவதைத்தான் வெளிக்காட்டுவார்கள். இதற்காகவே பிறருக்காக நிறைய நேரத்தைச் செலவிடுவார்கள். இப்படிப்பட்ட குணங்களைக் கொண்டவர்களுக்கு ஆரம்பத்தில் நிறைய நண்பர்கள் வாய்ப்பதில் ஆச்சரியமில்லை. இக்குணம் கொண்ட ஒருவன் கையாளும் பொதுவான சில முறைகள் தான் செய்த தவற்றுக்குப் பிறரைக் காரணம் காட்டுவான். எந்த ஒரு சிறு விஷயத்திற்கும் அநாவசியமான பொய். உதாரணம்: நண்பர்களுடன் திரைப்படம் பார்க்கச் சென்றுவிட்டு, நுழைவுச்சீட்டு கிடைக்காது திரும்பியதும், ‘உன்னை விட்டுப்போக மனமில்லை. அதனால் திரும்பிவிட்டேன்!’ என்று கூசாமல் மனைவியிடம் கூறி, அவளுடைய நல்லெண்ணத்தைப் பெற முயற்சிப்பது. மிரட்டல். (‘யாருமே நான் சொல்வதைக் கேட்பதில்லை. நான் இருந்து என்ன பயன்? தற்கொலை செய்துகொள்ளப்போகிறேன்!’) கொடுமைப்படுத்துதல். ‘உன் மனசில யாரோ இருக்கான்!’ என்று, சந்தர்ப்பம் கிடைத்தபோதெல்லாம், மனைவியைச் சாடுவது. மனைவியை உடல் மற்றும் உணர்ச்சிபூர்வமான வதைக்கு உட்படுத்திவிட்டு, ‘தப்பு செய்தது நீதானே? நான் உன்னை இப்படி நடத்துவது சரிதானே?’ என்று குற்ற உணர்ச்சியை அவளுக்கே திருப்புவது. பிறர் சொல்லில், செயலில் ஓயாது குற்றம் கண்டுபிடிப்பது. பொய்யான வாக்குறுதிகள். (‘உன்னைத் தங்கத்தாலேயே இழைக்கப்போகிறேன்!’ ‘நாம் வெளிநாடுகளுக்குச் சுற்றுலா போகலாமா?’) மேற்கண்ட எதுவும் பலிக்காவிட்டால், முகத்தைத் தூக்கிக்கொண்டு, மௌனமாக நாட்களைக் கடத்தல். இது கெஞ்சலில் முடியும். இப்படிப்பட்டவர்களை எப்படித்தான் சமாளிப்பது? ‘நான் ரொம்ப கஷ்டங்களை அனுபவித்துவிட்டேன்!’ என்று பரிதாபகரமாக ஒரு இளைஞன் கூறும்போது எந்தப் பெண்ணின் மனமும் உருகிவிடாதா! ஆனாலும், திருமணத்துக்குமுன் ஒருவன் இக்குணங்களை வெளிப்படுத்தினால், அவனைவிட்டு விலகுவதுதான் புத்திசாலித்தனம். திருமணமானதும் சில பெண்கள், ‘உணர்ச்சிபூர்வமான வதை’ என்று விவாகரத்து கோருகிறார்கள். பொறுத்துப்போகவேண்டிய கட்டாயம் இருப்பவர்கள், தான் எந்தத் தவறும் செய்யவில்லை, கணவருக்குத்தான் மனநிலை சரியில்லை என்று புரிந்து, அவர் வாயிலிருந்து வெளிப்படும் கடும் சொற்களுக்கு மதிப்பளிக்காது, தன் சுயமரியாதையைக் காப்பாற்றிக்கொண்டால், ஓரளவு அமைதி பெறலாம். நார்சீஸிஸம் பெரும்பாலும் ஆண்களுக்குத்தான் இருக்கிறதாம். குற்றவாளி: அவர்களுடைய ஹார்மோன். தகுதி இல்லாவிட்டாலும் எத்துறையிலாவது பிரபலமாக விழைபவர்கள், நடிப்புத்துறையில் ஈடுபடும் ஆசை இருப்பவர்கள் அல்லது ஈடுபட்டிருப்பவர்களில் பலரும் நார்சீஸஸத்தால் பாதிக்கப்பட்டவர்களாம். (நடிகைகள் சிலர் தொலைகாட்சியில் பேட்டி அளிக்கும்போது தம் நீண்ட (போலி) முடியை மார்பில் விட்டுக்கொண்டு, அடிக்கடி அதைத் தடவுவது இதனால் இருக்குமோ?) 6. சகோதரச் சண்டைகள் கல்யாணமாகியிருந்த ஓர் இளம்பெண்ணிடம், ‘உன் சிறுவயதில் நடந்ததில் ஏதாவது ஒன்று மீண்டும் நடக்காதா என்று நீ ஆசைப்படுவது எது?’ என்று கேட்டேன். யோசிக்காது வந்தது அவள் பதில்: ‘என் அண்ணனுடன் பிடித்த சண்டைகள்!’ பிறகு, சற்று ஏக்கத்துடன் தொடர்ந்தாள் ‘இப்போது சண்டையே போட மாட்டேன் என்கிறான். விட்டுக்கொடுத்து விடுகிறான்!’ கூடப்பிறந்தவர்களுடன் சண்டை போடாத குழந்தை இருக்கிறதா? சந்தேகம்தான். போட்டி பெற்றோரின் அன்பில் தனக்குப் போட்டியாக வந்துவிட்டதே என்று மூத்தவனும், ‘நான்தான் அம்மா வயத்திலேருந்து முதல்லே வந்திருக்கணும். அண்ணாவுக்குத்தான் எல்லாம் நிறையக் கிடைக்கிறது!’ என்று சிறியவனும் பொருமுகிறார்கள். கதை: கத்திச்சண்டை சிறு குழந்தைகள் சண்டை போடுவதற்குக் காரணம் எதுவும் தேவையில்லை. நீண்ட காம்பைக்கொண்ட ஒரு பழுத்த இலையை கத்தியாகவே பாவித்து அதற்காகச் சண்டை போடுவார்கள். ‘இது என் இலை! நான்தானே பறித்தேன்? என்னுடையதுதான்!’ ‘நான்தான் முதலில் பார்த்தேன்? எனக்குத்தான் சொந்தம்!’ இவர்களுக்கு நடுவில் மாட்டிக்கொண்டு இளம் தாய் முழிப்பாள். “இப்படி எல்லாவற்றிற்கும் சண்டைதான்! இரண்டுபேருமே குழந்தைகள்! எனக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. அடிக்கவும் மனம் வரவில்லை,” என்றாள். “‘உனக்கும் ஒரு கத்தி பறித்து தருகிறேன்,’ என்று சிறியவனைச் சமாதானப்படுத்தினால் தீர்ந்தது கதை!” என்றேன் சிரிப்புடன். அவளும் சிரித்தாள். “அவ்வளவுதானா?” சிறிது நேரத்தில் இரு சிறுவர்களும் முதலில் போட்ட வாய்ச்சண்டையை மறந்து, ‘கத்திச்சண்டையில்’ தீவிரமாக ஈடுபட்டார்கள். அவர்கள் வாயிலிருந்தும், அடித்தொண்டையிலிருந்தும் கார்ட்டூன் படங்களில் பார்த்திருந்த ஒலிகள் எழும்பிக்கொண்டிருந்தன! கத்தி உடையும்வரை அவர்கள் விளையாட்டு நீடித்தது. சிறிது நேரம் கழித்து, வேறு எதற்காவது சண்டை போடுவார்கள். இப்படிச் சமாதானம் செய்யாமல், ‘அவன் சின்னவன்! அவனோடு உனக்கென்ன சண்டை? அழவிடாதே. குடு!’ என்று தாய் கூறியிருந்தால், அம்மாவுக்கு என்னைவிட தம்பிதான் உயர்த்தி என்ற எண்ணம் எழும் மூத்தவனுக்கு. இளையவனோ, அம்மா தன்பக்கம்தான் பேசுவாள், எது வேண்டுமானாலும் அழுது சாதிக்கலாம் என்று எண்ணிவிடுவான். ஐந்து வயதுக்குள் பிறருடன் பழகும் தன்மை புரியாததால் சண்டை வருகிறது. குடும்பத்தினர் அவர்களது சண்டையில் குறுக்கிட்டு தக்கபடி வழிநடத்தாவிட்டால், அப்போது எழும் மனக்கசப்பு எல்லா வயதிலும் நிலைத்திருக்கும். என்னையும் கவனியேன்! குடும்பத்தில் கடைக்குட்டி தாயிடம் ஒட்டிக்கொண்டிருக்கும். அதுபோல்தான், நோய்வாய்ப்பட்டிருக்கும் குழந்தையும். அதன் அண்ணனோ, அக்காளோ தனக்கும் தாயின் பிரத்தியேக கவனிப்பு கிடைக்கவேண்டும் என்று பெருமுயற்சி எடுத்துக்கொள்வார்கள். இது நல்லதல்ல. ஒரு தாய் எல்லாக் குழந்தைகளையும் அவரவர் தேவைக்கு ஏற்றபடி கவனித்துத்தான் ஆகவேண்டும். அம்மாவின் கவனத்தைத் தங்கள் பக்கம் திருப்பவும் சில குழந்தைகள் சண்டையில் ஈடுபடலாம். அம்மாதிரித் தருணங்களில், அவர்களைக் கவனிக்காது விடுவதுதான் சரி. தன் ஒவ்வொரு நிமிடத்தையும் குழந்தைகளுக்காகவே செலவழிக்க நேரிட்டால், தாய்க்குத்தான் நிம்மதி பறிபோய், மன அழுத்தம் ஏற்பட்டுவிடும். (இதேபோல், வீட்டில் போதிய கவனிப்பு இல்லாத சிறுமிகள் பள்ளிக்கூடத்தில் ஆசிரியையின் கவனத்தைப் பெறவேண்டி, வேண்டுமென்றே ஏதாவது தவறிழைப்பார்கள். அவர்களைக் கவனிக்காமல், அலட்சியப்படுத்துவதுதான் அவர்களுக்கு அளிக்கக்கூடிய பெரிய தண்டனை). இது உன் வேலை! சற்றுப் பெரியவர்களாக ஆனதும், வீட்டு வேலைகளை யார் செய்வது என்பது சண்டைக்கு முக்கியமான காரணமாக அமையும். இதைத் தவிர்க்க, காலையில் ஒருவர், மாலையில் ஒருவர், அல்லது வாரத்தில் சில நாட்கள் ஒருவருக்கு என்றெல்லாம் பகிர்ந்துவிடலாம். வயதுக்கு ஏற்றபடி அவர்களுக்கு அளிக்கப்படும் வேலையை அவரவர்தான் தவறாது செய்ய வேண்டும் என்று வகுத்துவிட்டால், முணுமுணுக்காமல் செய்வார்கள். வசவு கற்றுக்கொடுப்பது ஒரு குடும்பத்தில் தாயும் தந்தையும் வாக்குவாதம் செய்துகொண்டே இருந்தால், அவர்களைப்போல் நடக்கத்தானே குழந்தைகளும் கற்பார்கள்? இதற்குத்தான் பெரியவர்கள் பேசும்போது குழந்தைகள் அங்கு இருக்கக்கூடாது என்று விலக்கி வைப்பது. வயதுக்கு மீறிய வளர்ச்சி வேண்டாமே! திரைப்படங்களைப் பார்த்தும் வேண்டாத வசவுகளைக் கற்கிறார்கள் குழந்தைகள். நானும் அப்படித்தான் கற்றேன். சொந்தக்கதை நான் சிறியவளாக இருந்தபோது பார்த்த படங்களில், வில்லன் தன் மனைவியைத் திட்டுவான். (கெட்டவன் என்றால் துளிக்கூட நல்ல குணம் இருக்கக்கூடாது என்பது திரைப்பட விதி). ‘பாவி, துரோகி, சண்டாளி, நயவஞ்சகி,’ என்று அடுக்கிக்கொண்டே போவான். ஒவ்வொரு சொல்லுக்கு அடுத்தும், ‘நானா!’ என்று நெஞ்சில் கைவைத்து அதிர்பவள்தான் நல்ல மனைவி. இதில் வேடிக்கை என்னவென்றால், எல்லாப் படங்களிலும் இதே வரிசையில், இதே வார்த்தைகள்தாம் வரும். எங்கள் குடும்பத்தில் இந்தமாதிரி வார்த்தைகள் எல்லாம் உபயோகிக்கப்படாததால், இப்புதிய வார்த்தைகளை ஆர்வத்துடன் கற்றேன். எப்போது, எவ்வாறு உபயோகிக்க முடியும் என்றெல்லாம் யோசிக்கவில்லை. எட்டு வயதுக்குட்பட்ட எனக்கும், என் தங்கைக்கும் சண்டை வரும்போது, நான் ‘பாவி!’ என்று ஆரம்பிக்க, அவள் அடுத்த வார்த்தையைப் பிரயோகிப்பாள். இருவருக்கும் எதற்கும் அர்த்தம் தெரியாது என்பது ஒருபுறமிருக்க, அவற்றை உச்சரிக்கும்போதே பலம் பெருகி, எதிராளியை வீழ்த்திவிட்டதுபோல் உணர்வோம். முடிந்தவரை உரக்கக் கத்துவோம் – அம்மா, ‘ஏய்! என்ன அசிங்கம் இது?’ என்று எங்கிருந்தாவது குரல் கொடுக்கும்வரை. இரண்டுபேரும் ஒரே சமயத்தில் ஒற்றுமையாகி, ‘ஒண்ணுமில்லேம்மா,’ என்று குரல் கொடுப்போம். ஒருவரையொருவர் பார்த்துப் பெருமையுடன் சிரித்துக்கொள்வோம். பல முறை இதுபோன்ற சம்பவங்கள் நடந்துவிட, அவ்வார்த்தைகள் மனதில் பதிந்துவிட்டன. எதற்குச் சண்டை போட்டோம் என்று நினைவில்லை. சமீபத்தில் ஏதோ அரதல் பழசான படத்தில் வில்லன், ‘பாவி!’ என்று ஆரம்பிக்க, நான் மகிழ்ச்சியுடன், மீதி வார்த்தைகளைப் பூர்த்தி செய்தேன்! வீட்டில் எல்லாருக்கும் ஒரே சிரிப்பு. சண்டை அவசியம் சகோதர சகோதரிகள் சண்டை போடுவது பிற்கால வாழ்க்கைக்கு அவசியம். எப்படி என்கிறீர்களா? பிறரது எண்ணப்போக்கைப் புரிந்துகொண்டு, அனுசரணையாக நடந்துகொள்ளவும், நல்லவிதமாகப் பழகவும் சிறுவயதில் நாம் போடும் சண்டைகள் உதவுகின்றன. ‘இந்தப் பொம்மையை நீ வெச்சுக்கோ, அதை நான் எடுத்துக்கறேன்,’ என்று சமாதானம் பேசும் குழந்தை தகறாறின்போது பேச்சுவார்த்தை நடத்தக் கற்கிறது. முரட்டுத்தனமாக நடப்பது நன்மையில் முடிவதில்லை என்று புரிந்து, அதை அடக்கிக்கொள்ள முயல்கிறது. எப்போதும் சிறிய மகனையோ, மகளையோ பெரிய குழந்தைக்கு எதிராக ஆதரித்துப் பேசும் தாய் தன்னையுமறியது அதற்குக் கேடு விளைவிக்கிறாள். எல்லாருமே எப்போதுமே விட்டுக்கொடுத்துக்கொண்டே இருப்பார்களா, என்ன! சண்டை போடவும் தைரியம் இல்லாது, சமாளிக்கும் வழியும் புரியாது விழிப்பார்கள் அப்படி வளர்க்கப்பட்ட சிலர். ‘என்னையும் அடிச்சு வளர்த்திருக்கணும்!’ என்று தாயிடமே குறைகூறுவார்கள். வேறு சிலர் எல்லாவற்றிற்கும் பிறருடன் சண்டை போடுவார்கள். கதை: வளர்ந்த செல்லக்குழந்தை என்னுடன் உத்தியோகம் பார்த்த ஓர் ஆசிரியை விஞ்ஞானப் பாடத்தை என்னுடன் பகிர்ந்து கற்பித்தாள். நான் பௌதிகம் மற்றும் ரசாயனம் மட்டும். ஒரு பரீட்சைக்கு, ‘நீ உன் பாடத்தில் கேள்வித்தாளை அமைக்க வேண்டுமாம். உன்னிடம் தெரிவிக்கும்படி தலைமை ஆசிரியர் என்னிடம் சொல்லிவிட்டுப் போனார்,’ என்று நான் அவளிடம் கூறினேன். ‘நான் பண்ணமாட்டேன், போ! நீ என்ன சொல்வது?’ என்று அவள் முரண்டுசெய்தது பிற ஆசிரியர்களுக்கு வேடிக்கையாக இருந்தது. எனக்கோ ஒரே எரிச்சல். ‘என்னவோ பண்ணிக்கொள்!’ என்றேன். அவள் போய் தலைமை ஆசிரியரைச் சந்தித்தாள். அவர் என்ன ‘டோஸ்’ விட்டாரோ! தோல்வியடைந்தவள்போல் முகத்தை வைத்துக்கொண்டு, ‘சரி. நானே செய்யறேன்!’ என்று என்னிடம் வந்து கூறினாள், எனக்காக ஏதோ பெரிய தியாகம் செய்வதுபோல. நான் எதுவும் பேசவில்லை. அவள் அப்பால் சென்றதும், ‘இவளுக்கு ஆறு அண்ணன்மார்கள். இவள் ஒருத்திதான் பெண். வீட்டில் செல்லக்குழந்தையாக இருந்திருக்கலாம். அதற்காக எப்போதுமே எல்லாருமே அருமையாக நடத்தவேண்டும் என்றால் நடக்கிற காரியமா?’ என்றார் முதிர்ச்சியுடைய ஆசிரியை ஒருவர். அதை ஒப்புக்கொண்டு, எல்லாரும் நமட்டுச்சிரிப்புச் சிரித்தோம். உங்கள் குழந்தைகள் சண்டை போடுகிறார்களா? ஒருவர் பக்கமும் சாயாமல், அவர்களை ரசியுங்கள். அடிதடியில் இறங்கினால் மட்டும் குறுக்கிடலாம். தானே பெரியவர்களானதும், ஒற்றுமையாகிவிடுவார்கள். அப்போது அவர்கள் போட்ட சண்டைகளையெல்லாம் நினைவுகூர்ந்து சிரிக்கலாம். அவர்களுக்குப் பிறகு பிறந்த குழந்தைகள், ‘எவ்வளவு வேடிக்கை! இப்போ சண்டையே போடறதில்லையே!’ என்று ஏங்கும் அளவுக்கு! சமமாக நடத்த முடியுமா? சில பெற்றோர் , ‘நான் என் குழந்தைகள் மூவரையும் சமமாக நடத்துகிறேன்!’ என்று பெருமையாகக் கூறுவது நடக்காத காரியம். ஏனெனில், முதலாவதாகப் பிறந்த குழந்தையின் குணாதிசயங்கள் அதற்குப் பிறகு பிறக்கும் குழந்தைகளிடமிருந்து வேறுபடும். இது இயற்கை நியதி. அத்துடன், வயதுக்குத் தகுந்தாற்போல் திறமைகளும் இருக்குமே! இவர்கள் அனைவரையும் சமமாக நடத்த எப்படி முடியும்? வயதுக்கேற்ற வேலை ஒரு குடும்பத்தில் குழந்தைகளை நடத்துவது – வீட்டு வேலையோ, பாராட்டோ, தண்டனையோ –அவரவர் வயதுக்கும் திறமைக்கும் ஏற்றபடி இருக்கவேண்டும். உதாரணமாக, எட்டு வயதான மகன் தான் சாப்பிட்ட தட்டைத் தானே கழுவுகிறான் என்று வைத்துக்கொள்வோம். அது அவன் வேலை என்று சொல்லப்படுகிறது. ஆனால் அவனுடைய மூன்று வயது தம்பிக்கோ, தங்கைக்கோ அது கடினமான வேலை. அதற்குப் பதிலாக, அவர்களால் எளிதில் செய்யக்கூடிய வேலைகளைக் கொடுத்தால், அவர்களுக்கும் சுயமதிப்பு பெருகும். ‘அப்படி என்ன வேலை இருக்கிறது?’ என்கிறீர்களா? காலணிகளை வரிசையாக அடுக்கிவைப்பது, சப்பாத்தி, தோசை போன்றவற்றை ஒரு தட்டில் போட்டு அவர்களிடம் கொடுத்து, பிறருக்குப் ‘பரிமாற’ச் செய்வது இப்படி எதையாவது கொடுத்தால், மிகப் பெருமையுடன் செய்வார்கள். ’எவ்வளவு சமர்த்தா வேலை செய்யறது, பார்!’ என்று பாராட்டிவைத்தால், எந்த வயதிலும் பொறுப்பு, வேலை என்றால் அஞ்சி ஓடமாட்டார்கள். பாராட்டால் மனவலிமை வயதுக்கும் திறமைக்கும் ஏற்றதாக இல்லாத பொறுப்புகளைச் சிறுவர்களுக்குக் கொடுக்கும்போது தவறுகள் நிகழலாம். தவற்றைப் பெரிதுபண்ணாது, அல்லது குற்றம் சாட்டாது, அடுத்த முறை அதே காரியத்தை எப்படிச் செய்தால் சரியாக அமையும் என்று விளக்கினால், தவறோ, ஏமாற்றமோ விளைந்தால் தாங்கும் மனவலிமை வரும். பொறுப்பாக முனைந்து செய்ததற்காகப் பாராட்டித்தான் ஆகவேண்டும். பாரபட்சம் ஏன்? ஆண், பெண் என்ற பாரபட்சம் காட்டாமல் வளர்த்தல் அவர்களுடைய பிற்காலத்திற்கு நல்லது. பல இல்லங்களில், ‘என்ன இருந்தாலும், நீ ஒரு பொண்ணு! ஒன் தம்பி ஆம்பளை! அவனோட நீ போட்டி போடலாமா?’ என்று கூறிக் கூறியே பெண் குழந்தைகளை வளர்த்துவிடுகிறார்கள். இதனால், தாங்கள் ஏதோ ஒரு விதத்தில் தாழ்ந்தவர்கள் என்ற மனப்பான்மை பெண்கள் மனதில் சிறுவயதிலேயே விதைக்கப்பட்டு விடுகிறது. துணிச்சலாக எந்தக் காரியத்தைச் செய்யவும் தயங்கி, ‘இப்படிச் செய்வதால் நமக்கு அவப்பெயர் வந்துவிடுமோ?’ என்று யோசிக்க முனைகிறார்கள். வேறு சில இல்லங்களில் இதற்கு நேர் எதிரிடையான வளர்ப்புமுறை. ‘சில காலம்தான் நம்முடன் இருக்கப்போகிறாள். கல்யாணமானால், எப்படியெல்லாம் கஷ்டப்பட நேரிடுமோ!’ என்று, பெண்களுக்கு நிறைய சுதந்திரமும் சலுகையும் கொடுத்து வளர்ப்பார்கள். ஆனால், திருமணமானபின்னரும் அவள் விரும்பியதெல்லாம் கிடைக்கும், அவளது தனித்துவத்திற்கு மதிப்பு கிடைக்கும் என்பது உறுதியில்லை. பிறர் பாராட்டியபோது பல வெற்றிகளைப் பெற்றவள், இப்போது அடுக்கடுக்காக தோல்வியைச் சந்திக்கிறாள். அப்போது, ‘பிறந்த வீட்டில் மகிழ்ச்சியாக இருந்தோமே! இப்போது என்ன ஆகிவிட்டது?’ என்ற குழப்பமும் வருத்தமும்தான் மிஞ்சும். இளம் வயதில் குடும்பத்தினர் அளித்த துணிவு கைகொடுக்க, மீண்டும் எழ வாய்ப்பிருக்கிறது. வேலையில் என்ன வேற்றுமை? ‘இது ஆணின் வேலை, இது பெண்ணின் வேலை’ என்ற பாகுபாடு இக்காலத்திற்கு ஏற்றதல்ல. இருவருமே கல்வி பயில்கிறார்கள், வெளிவேலைக்குப் போகிறார்கள். ஆகையால், சிறுவயதிலிருந்தே எளிதான வீட்டுக்காரியங்களில் இருபாலரையும் ஈடுபடுத்தினால், அவர்கள் சுதந்திரமாக வாழப் பழகிக்கொள்வார்கள். சில சமயம், ‘நான்தான் வேலைக்காரியா?’ என்று முரண்டு செய்வார்கள் சிறுவர்கள். ‘நான்தானே தினமும் சமைக்கிறேன்! நான் என்ன, சமையல்காரியா?’ என்று கேட்டு அவர்களைச் சிரிக்க வைத்துவிட்டு, ‘நம் வீட்டில் வேலை செய்தால் அதில் தவறோ, கேவலமோ இல்லை,’ என்று புரிய வைக்கலாம். இதனாலெல்லாம் பெரியவர்கள் அவர்களைத் துன்புறுத்துகிறார்கள் என்பதில்லை. பிற்காலத்தில் அவர்களுக்கு நன்மையாகத்தான் முடியும். கதை 1 எங்கள் குடும்ப நண்பரான இஸ்மாயில் குழந்தை வளர்ப்பை மனைவிடம் விட்டிருந்தார். அசிரத்தையால் அல்ல; அது அவளுடைய பொறுப்பு, நாம் குறுக்கிடுவது நாகரீகமாகாது என்ற பெரிய மனதுடன். இஸ்மாயில் அரசாங்க நிறுவனம் ஒன்றில் பெரிய அதிகாரி. மனைவியோ அதிகம் படிப்போ, குழந்தைகளின் மனோபாவத்தைப் புரிந்துகொள்ளும் திறமையோ இல்லாதவள். ‘என் குழந்தைகளெல்லாம் ரொம்ப வீக்!’ என்று, என்னைப் பார்க்கும்போதெல்லாம் அரற்றுவார் நண்பர். ‘எதை ஆரம்பித்தாலும் பாதியில் விட்டுவிடுகிறான்!’ என்று பதினேழு வயதான கைருல்லை என்னிடம் அனுப்பினார். ஏதாவது வேலை கொடுத்தால், நாற்காலியில் சரிந்து உட்கார்ந்துகொள்வான். ஈராண்டுகள் அவனுக்குப் பாடங்களைப் போதிப்பதற்குள் போதும் போதும் என்றாகிவிட்டது எனக்கு. கைருல் ஒரு வழியாக பள்ளி இறுதியாண்டுப் படிப்பை முடித்ததும், ‘அவனுக்கு படிப்பில் கொஞ்சங்கூட பிடிப்பில்லை. சித்திரம் வரைய மிகவும் பிடித்திருக்கிறது. நல்ல திறமையும் இருக்கிறது. அத்துறையில் ஈடுபடுத்தினால், நன்றாக முன்னுக்கு வருவான்,’ என்றேன். என் வார்த்தைகளை மதித்து, மகனை ஃபிரான்சு நாட்டிற்கு அனுப்பினார், அத்துறையில் சிறக்க. துணிச்சலான பெண்கள் நான் பார்த்தவரை, தற்காப்புப் பயிற்சியைப் பயின்ற பெண்கள் தன்னம்பிக்கையுடன் செயல்படுகிறார்கள். கதை 2 எனது பதின்ம வயது மாணவிகளில் ஒருத்தியான ராபியா பிற பெண்களைவிட வெளிப்படையாகப் பேசுவாள். பிற பெண்கள் தம் உடலைக் குறித்து வீண் வெட்கம் கொள்வது ஏன் என்று என்னுடன் கலந்து பேசியிருக்கிறாள். அவள் சிலாட் (SILAT) என்னும் தற்காப்புக்கலையில் சிறந்தவள் என்று பிறகு அறிந்தேன். இம்மாதிரிப் பெண்கள் நளினமாக, ஒரு காலின் முன்னால் இன்னொன்றை வைத்து, நடக்கமாட்டார்கள். தம் வயதொத்த பையன்களுடன் சரிசமமாகப் பழகுவார்கள். இதனால் எல்லாம் பிற பெண்களின் கேலிக்கு ஆளானாலும், அதைப் பொருட்படுத்தமாட்டார்கள். கதை 3 சுயநம்பிக்கையுடன் வளர்க்கப்பட்ட ஒரு தமிழ்ப்பெண் உயர்கல்வி கற்று, ஓர் அலுவலகத்தில் புதிதாக வேலைக்குச் சேர்ந்தாள். அவளைவிட அனுபவம் முதிர்ந்த சீனப்பெண்மணி, “இந்தமாதிரி ஆடைகளையெல்லாம் நீ உடுத்தி வரக்கூடாது!” என்று கண்டித்தாள். “நான் அணிந்திருப்பது பஞ்சாபி ஆடை. இந்தியப் பாரம்பரிய உடை. இது தவறு என்று எழுதப்பட்ட ஏதாவது சட்டம் இங்கு இருக்கிறதா? எனக்கு அதைக் காட்டு!” என்று கேட்க, மற்றவள் வாயடைத்துப்போனாளாம். இச்செய்தி பிற இந்தியப் பெண்களிடம் பரவ, வழக்கமாக குட்டைப்பாவாடையோ, கவுனோ அணிபவர்கள் அதன்பின், ‘சௌகரியமாக இருக்கிறது!’ என்று ஸல்வார், சூடிதார் போன்ற உடைகளை அதிகம் வாங்கி அலுவலகத்திற்கு அணிந்துவந்தார்களாம்! பெண்களை வதைக்கும் ஆண்கள் ஆண்பிள்ளையைப் பெற்றெடுத்துவிட்டால், எதையோ பெரிதாகச் சாதித்துவிட்டதுபோல் நினைத்துக்கொள்ளும் தாய்மார்கள் தவறு செய்யும்போது அவர்களைக் கண்டித்து வளர்க்கமாட்டார்கள். வேறு சில பெற்றோர் குழந்தை வளர்ப்பில் அசிரத்தையாக இருந்துவிடுகிறார்கள். இப்படி வளர்க்கப்பட்டவர்கள் தாம் என்ன செய்தாலும் சரிதான் என்ற மனப்போக்குடன் வளர்வதால், பெண்களை வம்புக்கு இழுக்கிறார்கள். அல்லது, பாலியல் ரீதியில் வதை செய்யத் துணிகிறார்கள். கதை 4 பதினான்கு வயதான மாணவர்கள் தம் நீலப்படப் பழக்கத்தை (!) என்னுடன் பகிர்ந்துகொண்டபோது, வகுப்பில் மாணவர் தலைவன் மட்டும் ஏனோ அவைகளைப் பார்க்க விரும்புவதில்லை என்று அதிசயப்பட்டார்கள். அவனை அழைத்து விசாரித்தேன். ‘எல்லாம் பெண்களை இழிவுபடுத்துவதாக இருக்கின்றன!’ என்றான். நான் முகமலர்ச்சியுடன், ‘உனக்கு உன் தாயை ரொம்பப் பிடிக்குமோ?’ என்று கேட்டேன். ஒரு தாய் பிள்ளைகளின் உணர்வுகளுக்கு மதிப்பு கொடுத்து நடந்தால், எந்தப் பிள்ளையும் கெட்டுப்போகமாட்டான். கதை 5 மலேசியாவில், விவாகரத்து சம்பந்தமான புள்ளி விவரங்களைச் சேகரிக்கவென சம்பந்தப்பட்ட அரசாங்கத்துறைக்குச் சென்றிருந்தேன். அங்கு வேலை செய்த ஒரு மலாய்ப்பெண், ‘நானும்தான் வேலைக்குப் போகிறேன். ஆனால், வீட்டுக்கு வந்ததும், சமையல், துணி தோய்த்தல், குழந்தைகளுக்கு வீட்டுப்பாடம் கற்றுக்கொடுத்தல் – இவை எல்லாவற்றையும் நானேதான் செய்யவேண்டும். என் கணவரோ, டி.வி பார்ப்பார். இல்லாவிட்டால், தினசரியில் மூழ்கிவிடுவார்,’ என்று என்னிடம் பொரிந்தாள். அப்படியும் மனம் ஆறாது, ‘அதுதான் என் கணவர்!’ என்றாள் அழுத்தமாக. ‘எல்லாக் கணவன்மார்களும் அதே லட்சணம்தான்!’ என்றாள் பக்கத்திலிருந்தவள், நிராசையுடன் கூடிய பெருமூச்சுடன். இப்படிப்பட்ட மனக்கசப்புடன் இருக்கும் பெண்ணிடம் அவள் கணவன் எப்படி அன்பை எதிர்பார்க்க முடியும்? இனி பேச என்ன இருக்கிறது! பல இல்லங்களில் முப்பது, நாற்பது வருட இல்லற வாழ்க்கைக்குப்பின், கணவனோ, மனைவியோ, ‘நாங்க ரெண்டு பேரும் அதிகமா பேசிக்கிறதே கிடையாது!’ என்று சொல்லிக்கொள்வது சர்வசாதாரணமாகிவிட்டது. உடலுறவுக்கும், பிள்ளை பெறுவதற்கும்தானா திருமண பந்தம்? பெண்களை மதிக்கக் கற்றவர்கள் மனைவியை உற்ற தோழியாக நடத்துவதால், வயதானபின்னரும் அவர்களால் கலந்து பேச முடிகிறது. மனைவியின் வேலைப்பளுவைப் புரிந்து அதைக் குறைக்க தம்மால் ஆனதைச் செய்கிறார்கள். வீட்டுவேலைகளிலும், குழந்தை வளர்ப்பிலும் விரும்பிப் பங்கெடுக்கிறார்கள். அன்றாட வாழ்க்கையில் நடக்கும் சிறு சிறு விஷயங்களைப்பற்றிப் பேசினால்தானே உறவு பலப்படும்? 7. சவாலைச் சமாளி! சுவரும் சித்திரமும் அமெரிக்க பல்கலைக்கழகமொன்றில், முனைவர் பட்டப்படிப்புக்கு பத்துபேர் சேர்ந்திருந்தனர். இறுதியில் இருவர் மட்டுமே நிலைக்க, மற்றவர்கள், ‘மிகக் கடினம்!’ என்று பாதியிலேயே விட்டுவிட்டுப் போய்விட்டார்களாம். ‘ஏன் அப்படி நம்மைவிட்டுப் போய்விட்டார்கள்? என்று எதிர்மறையாகச் சிந்திக்காது, ’நம்மிருவருக்குள் என்ன ஒற்றுமை?’ என்று ஆராய்ந்தபோது, எவ்வளவு வேலைகள் இருந்தாலும் அடிக்கடி உணவு உட்கொள்ளும் பழக்கம் இருவருக்கும் இருந்தது தெரியவந்தது. அவர்களுள் ஒருத்தி என் மகள். அவள் பள்ளி இறுதியாண்டு பரீட்சைக்குப் படித்துக்கொண்டிருந்தபோது, மணிக்கொருமுறை ஏதாவது தின்னக் கொடுத்துக்கொண்டே இருப்பேன். (என் தாய் எனக்குச் செய்தது). உதாரணமாக, தக்காளிப்பழத்தை வில்லைகளாக நறுக்கி, அரிந்த வெங்காயம், கொத்துமல்லி ஆகியவைகளுடன் உப்பு, மிளகுபொடி தூவித் தின்பது புத்துணர்வைத் தரும். அப்போதெல்லாம், ‘என்னைக் குண்டா ஆக்கப் பாக்கறியா?’ என்று கேலியாகச் சிரித்தபடி, வேண்டாவெறுப்பாகச் சாப்பிட்டவள், தான் தனியாகப் போனபின்னரும், தன்னையும் அறியாது, அதே பழக்கத்தைக் கடைப்பிடித்திருக்கிறாள். நிறைய வேலை இருந்தால், அடிக்கடி சிறிதேனும் நல்ல ஆகாரம் உட்கொள்ள வேண்டும். மனிதன் ஒட்டகமில்லை. அவ்வப்போது சாப்பிட்டால்தான் உடலைப் பேண முடியும். சுவர் இருந்தால்தானே சித்திரம் வரையமுடியும்? ‘வேலை மும்முரம்’ என்று பலர் உடல்நிலையைச் சரியாகக் கவனிக்காது விட்டுவிட்டு, ‘நான் மட்டும் ஏன் சிறிது நேரத்திலேயே அயற்சி அடைகிறேன்!’ என்று அயர்கிறார்கள். ஓரிடத்திற்கு எவ்வளவுதான் அவசரமாகப் போகவேண்டும் என்றாலும், காரில் போதிய பெட்ரோல் இருக்கிறதா என்று முதலிலேயே பார்த்துக்கொள்வது அவசியமில்லையா? காப்பியும் டீயும் ஓயாமல் காப்பி குடித்தால் சுறுசுறுப்பு வரலாம். ஆனால் தலை நரைக்கும்! “பரீட்சைக்குப் படிக்கும்போது, ஒரு நாளைக்கு பதினாறு கப் காப்பி குடிப்பேன்! அதில் சர்க்கரை சேர்க்கிறோமா! ரொம்ப குண்டாகிவிட்டேன்!” – இது ஓர் இளைஞன் என்னிடம் புலம்பியது. அளவுக்கு அதிகமாக டீ குடித்தாலோ, ஒரு கப் டீ குடித்தவுடனேயே, ‘அடுத்து எப்போது கிடைக்கும்?’ என்று அந்த போதையை எதிர்பார்க்க ஆரம்பித்துவிடும் மனம். வேளாவேளைக்கு குடித்தே ஆகவேண்டும், இல்லையேல் தலைவலி என்று பாடுபடுத்தும். சிலருக்கு பித்தம் அதிகமாகி, தலை சுற்றல், வாந்தி, பாதத்தில் வெடிப்பு போன்ற தொல்லைகளும் எழும். பிறர் சிரிப்பார்களே! வாழ்வில் எல்லாம் எளிதாகவே இருக்கவேண்டும் என்று எதிர்பார்ப்பவர்கள் சராசரிக்குக் கீழேயே காலமெல்லாம் இருக்கத் தயாராக வேண்டும். ஏதாவது புதிய காரியம் ஒன்றைச் செய்ய முற்படும்போது தவறுகள் நிகழத்தான் செய்யும். ‘தவறுகள் நிகழ்ந்துவிடுமோ?’ என்ற பயமோ, பிறர் நம்மைப் பார்த்துச் சிரிப்பார்களே என்ற கலக்கமோ கொள்பவர்களால் பெரிதாக எதையும் சாதிக்க முடியாது. உன்னால் முடியும்! ஒரு புதிய காரியத்தை நாம் செய்ய முற்படும்போது, ‘உன்னால் முடியாது!’ என்று நமக்கு நெருங்கியவர்கள் அவநம்பிக்கை தெரிவித்தால், அது நம் நலனைக் கருதிச்சொல்லும் வார்த்தைகள் என்று எடுத்துக்கொள்ள முடியாது. மறைந்துகிடக்கும் நம் ஆற்றல் அவர்களுக்குத் தெரியாமல் இருக்கலாம். பொறாமையாலும் இருக்கலாம். ஒரு காரியத்தை ஒன்பது முறை செய்ய முயன்று, பத்தாவது முறை வெற்றி அடைபவர் என்ன சொல்வார், தெரியுமா? ‘ஒன்பது முறை இதை எப்படியெல்லாம் செய்யக்கூடாது என்பதைக் கற்றேன்!’ இவர் தன் ஆற்றலில் நம்பிக்கை வைத்திருப்பவர். ஒருவர் தன்னைத்தானே நம்பாவிட்டால், எடுத்த காரியத்தை எப்படி முடிக்க முடியும்? தோல்வியால், அல்லது பிறரது கேலியால், ஒருவர் சிறிது காலம் மனம் தளரலாம். ஆனால், அந்த தோல்வியையே எண்ணி மறுகாது, திரும்பத் திரும்ப அதே காரியத்தை வெவ்வேறு விதங்களில் செய்வது நன்மையில் முடியும். இப்படித்தான் பல கண்டுபிடிப்புகள் உருவாகி இருக்கின்றன. விஞ்ஞானம் மட்டுமில்லை, இசை, சினிமா, என்று பல துறைகளிலும் இப்படித்தான் மாறுதல்கள் ஏற்படுகின்றன. சமையலில்கூட. சமையலிலா! சாதாரணமாக, உருளைக்கிழங்கின் தோலைச் சீவிவிட்டுத்தான் சமையலுக்குப் பயன்படுத்துவார்கள். இல்லாவிட்டால். வேகவிட்டு, தோலை உரித்து.. என, நிறைய நேரத்தைச் செலவழிக்க வேண்டும். எனக்குக் கண்புரைச் சிகிச்சை நடந்தபின், ஒரு மாதமேனும் அனலில் நிற்கக்கூடாது என்று எச்சரித்திருந்தார்கள். ஒரு நாள் சமைத்துத்தான் ஆகவேண்டும் என்ற கட்டாயம் ஏற்பட, தோலைச் சீவாது, சற்றே பெரிய துண்டங்களாக நறுக்கி, அரிந்த வெங்காயம், கறிவேப்பிலையுடன், பொரியலுக்கு வேண்டிய உப்பு, பெருங்காயம், மிளகாய்த்தூளைச் சேர்த்து, கடிகாரத்தில் அலாரம் வைத்து இருபது நிமிடங்கள் கழித்து நிறுத்திவிட்டேன். Pressure Pan -ல் குறைந்த சூட்டில் சமைத்தேன். அப்போதுதான் அடுப்படியில் நின்று கிளறிக்கொண்டே இருக்க வேண்டாம். தோலுடன் சமைப்பதால், வாயுத்தொல்லை கிடையாது. ‘இனி எப்போதும் இப்படித்தான் ஆக்கவேண்டும்!’ என்று நினைக்கும் அளவுக்கு பதம் நன்றாக அமைந்திருந்தது. இன்று அதன் பெயர், ’Accidental Potato Curry!” – தற்செயலாக நிகழ்ந்த நற்காரியம். எளிதில் உணர்ச்சிவசப்படுவது சிலரைப் பார்த்தால், இவர்கள் மட்டும் பெரும்பாலும் அமைதியாக இருப்பது எப்படி, இவர்களுக்கு உணர்ச்சிகளே கிடையாதா என்ற ஆச்சரியமெல்லாம் எழும். ஒருவர் தன்னைத் திட்டினால், பதிலுக்குத் தானும் அடித்தோ, திட்டியோ ஆகவேண்டும் என்ற சினிமாத்தனமான கொள்கை இவர்களுக்குக் கிடையாது. அளவுக்கு அதிகமாக உணர்ச்சிவசப்பட்டால், தெளிவான சிந்தனை எழாது என்பதால் உணர்ச்சியைக் கட்டுப்படுத்திக்கொள்ளத் தெரிந்தவர்கள் இவர்கள். உணர்ச்சிவசப்பட்டு நல்ல எதிர்காலத்தை இழந்தவர்கள் பலர். கதை இளம்பெண்ணான தேவிகாவுக்கு சிபாரிசால் ஒரு நிறுவனத்தில் உத்தியோகம் கிடைத்தது. போனஸ் அறிவிக்கப்பட்டபோது, மேலதிகாரியிடம் போய், தன்னை ஏமாற்றிவிட்டதாக அழுதாள். தான் புதிதாக வேலைக்குச் சேர்ந்தவள் என்பதை மறந்து சண்டை பிடித்தாள். காரணம்: அது எப்படி மேலாளருக்கு அவளைவிட அதிகமான தொகை அளிக்கலாம்? சம்பளத்துடன், தேவிகாவின் உத்தியோக உயர்வுக்கான மேற்படிப்புச் செலவையும் அந்த நிர்வாகமே ஏற்றுக்கொண்டிருப்பது சுட்டிக் காட்டப்பட்டது. உணர்ச்சிக் கொந்தளிப்பில், எந்த சமாதானத்தையும் ஏற்க இயலவில்லை அவளால். ஆத்திரத்துடன் வேலையை ராஜிநாமா செய்தாள். இப்போது படிப்பும் அரைகுறையாக நின்றுபோயிற்று. இதனால் யாருக்கு நஷ்டம்? இதனால், எப்போதும் அமைதியாக இருப்பதாகக் காட்டிக் கொள்பவர்கள் சரியானவர்கள் என்றில்லை. இவர்கள் அளவுக்கு மீறிய தன்னம்பிக்கை கொண்டவர்கள். அதனாலேயே, எந்த விஷயத்திலும் ஆழம் பாராது ஈடுபட்டு மாட்டிக்கொள்வதும் உண்டு. மனோதிடம் வளர.. பிறர் செய்ய அஞ்சும் (நல்ல) காரியங்களைச் செய்யப் பழகிக்கொள்வது மனோதிடத்தை வளர்க்கும். ஒரு வேளை, வெற்றி கிட்டாமல் போகலாம். அதனால் என்ன! செய்ய காரியங்களா இல்லை? ஒரு காரியத்தைச் செய்துவிட்டு, உடனுக்குடனே பலனை எதிர்பார்ப்பது சமூகத்தின் அடித்தளத்திலிருப்பவர்களின் தன்மை என்கிறார்கள் சமூக இயலில். கதை எங்கள் உறவினர் வீட்டில் வேலை பார்த்த பெண்மணியின் பதினைந்து வயது மகள் அவ்வப்போது துணைக்கு வருவாள். சிறுமிக்கு எழுதப் படிக்கச் சொல்லிக்கொடுத்த முயற்சி பயனற்றுப்போனது. அவளைப் பொறுத்தமட்டில், வீட்டு வேலை செய்தால், மாதக்கடைசியில் பணம் கிடைக்கும். பிடித்ததாக ஏதாவது வாங்கிக்கொள்ளலாம். படிப்பதால் என்ன லாபம்? உடலை வருத்தி நாளெல்லாம் சம்பாதித்ததை அன்றிரவே புதிய திரைப்படத்தின் முதல் காட்சியைப் பார்ப்பதற்காகவோ, மதுபோதைக்காகவோ செலவிடுபவர்களும் இந்த ரகம்தான். ஊக்கத்தைக் கைவிடாது பல வருடங்கள் கல்வி கற்றால், அல்லது ஏதாவது தொழிலைக் கற்றால் நல்ல வேலையும் அதற்குரிய ஊதியமும் கிடைக்காது போகாது. ஆனால் அத்தகைய தூரநோக்குப்பார்வை எல்லாருக்கும் இருப்பதில்லை. சில பிரபல நடிகர்கள் (நடிகைகள்) ஆரம்ப காலத்தில் நடித்த படங்களைப் பார்த்தால் சிரிப்புதான் வருகிறது. நடிப்பு அவ்வளவு சுமார். ஆனால், ‘இதுதான் நான் பயணிக்கப்போகும் பாதை!’ என்று முடிவெடுத்துக்கொண்டு, தேர்ந்தவர்களிடம் கற்று, விடாமுயற்சியுடன் சிறுகச் சிறுக முன்னேறி இருக்கிறார்கள். இவர்கள் உடனடியாக ஆதாயம் கிடைக்க வேண்டும் என்று எதிர்பார்த்து, அதன்படி நடக்கவில்லை. ஏளனமோ, தோல்வியோ, எதையும் கண்டு ஒரேயடியாக அயர்ந்துவிடவுமில்லை. தம் இலக்கினையே குறி வைத்து எவ்வித சவாலையும் எதிர்கொண்டிருக்கிறார்கள். எத்துறையை எடுத்துக்கொண்டாலும், சவாலைச் சமாளிக்கும் நெஞ்சுறுதி உள்ளவர்கள்தாம் இறுதியில் மனதில் நிற்கிறார்கள். 8. சிரிப்புதான் வருகுதையா! ‘சிரிப்பு ஆன்மாவை சுத்தப்படுத்தும்’ என்கிறது யூதர்களின் பழமொழி. ‘பெண் சிரிச்சாப் போச்சு..!’ தமிழர்களுக்குப் பழக்கமான பழமொழி. ‘பெண்குழந்தைகள் அதிகமாகச் சிரிக்கக்கூடாது. அப்புறம், வாழ்க்கையே சிரிப்பாச் சிரிச்சுப்போயிடும்!’ முதிய பெண்டிரின் அறிவுரை. ‘எப்பவும் கஷ்டம்தான். சிரிக்க என்ன இருக்கிறது?’ பொதுமக்கள். இதனால் எல்லாம் சிரிப்பு என்று ஒரு மருந்து இருப்பதே மறந்து போய்விட்டது நம்மில் பலருக்கும். சிரிப்பதற்காகவென ஏற்படுத்தப்பட்ட அமைப்புகளில் சேர்ந்து, உடல் நலத்திற்காக பூங்கா போன்ற பொது இடங்களில், காரணமின்றி ‘ஹாஹ்ஹா’ என்று சிரிக்கிறார்கள் இவர்கள். ‘எதற்காகச் சிரிக்க வேண்டும்? அதனால் பிரச்னைகள் தீர்ந்துவிடுமா?’ என்பவர்களுக்குப் பதில்: பிரச்னைகள் தீராவிட்டாலும், அவைகளை ஏற்கும் பக்குவம் வரும். இதோ ஒரு உதாரணம். என் தோழி மிஸஸ். ஃபாங் தானே கார் ஓட்டுவாள். எப்படி என்றெல்லாம் கேட்கக்கூடாது. ‘இவளுக்கு யார் லைசன்ஸ் கொடுத்தார்கள்!’ என்று பிற வாகன ஓட்டிகளை அயரவைக்கும் அவளுடைய திறமை. ஒரு நாள் காலை, மிஸஸ். ஃபாங் கோபமாக வந்தாள் நாங்கள் வேலை பார்த்த இடத்திற்கு. தானே ஆரம்பித்தாள். “நேற்று என் கணவர் பக்கத்தில் உட்கார, நான் காரை ஓட்டிப்போனேன்,” என்று ஆரம்பித்ததுமே நாங்கள் புன்னகைக்காமல் இருக்கப் பாடுபட்டோம். மனைவி காரை ஓட்டிப் போகும்போது, எந்தக் கணவர்தான் திட்டாமல் இருக்கிறார்! அதிலும், இவளுடைய காரோட்டும் திறனோ – கேட்கவே வேண்டாம்! மரியாதை குறித்து, “அவர் ஏதாவது திட்டினாரா?” என்று விசாரித்து வைத்தேன். “திட்டினால்தான் தேவலையே! நான் சரியாக ஓட்டும்போதே, எதுவும் பேசாமல் பெருமூச்சு விட்டுக்கொண்டே இருந்தாரா! கார் நின்றுவிட்டது!” தொடர்ந்து, “உணர்வுபூர்வமாக நம்மைத் தூண்ட ஆண்களில்லாமல் நாம் என்னதான் செய்யப்போகிறோம்!” என்றாளே பார்க்க வேண்டும்! அதற்கு மேலும் எங்களால் சிரிப்பை அடக்க முடியவில்லை. அவளும் சேர்ந்து சிரித்தாள். ‘துன்பம் வருங்கால் நகுக’ என்று இதற்குத்தானோ சொல்லிப் போனார் திருவள்ளுவர்? தான் செய்வதில் ஓயாது குற்றம் கண்டுபிடிக்கும் கணவரை எண்ணி எதற்காக மனைவி வருந்தவேண்டும்? இல்லை, பார்ப்பவர்களிடமெல்லாம் ஆதங்கத்துடன் சொல்லி, அவர்கள் ஆதரவை நாட வேண்டும்? அவர் செய்ததையே வேடிக்கையாக நினைத்து, உற்ற பிறருடன் பகிர்ந்தபடி சிரித்துவிட்டால், மனப்பளு குறையுமே! வர வர, சிறுநீர் கழிப்பதெல்லாம் வேடிக்கை என்று நம்மைச் சிரிக்க வைக்க முயல்கிறார்கள் தமிழ்ப்படங்களில். பிறரது தோற்றதைக் கேலி செய்வதும் நகைச்சுவைதான் என்றும் அவை காட்டுகின்றன. பிறரைக் கிண்டல் செய்வது எளிதுதான். ஆனால், கேலி செய்யப்படுவது தாமாக இருந்தால் ஒருவரால் ஏற்க முடியுமா? பொதுவாக, பெண்களால் பிறர் தம்மைக் கேலி செய்வதை எளிதில் ஏற்க முடியாது. தாமே தம்மைச் சிறுமைப்படுத்திக்கொள்வதுபோல் பேசுவதும் அவர்களால் முடியாத காரியம். அதனால்தான் பெண்கள் நகைச்சுவை எழுத்தாளர்களாகவோ, நடிகைகளாகவோ இருப்பதில்லை என்று முன்பு ஒரு பத்திரிகையில் படித்தேன். தமிழில் மனோரமா, அமெரிக்காவில் லூசில் பால் (Lucile Ball) , காரல் பர்னெட் இவர்கள்தாம் குறிப்பிடத்தக்கவர்கள். பிறர் மற்றவரைக் கிண்டல் செய்து, எரிச்சல் மூட்டுவதோடு சரி. ‘அவன்மேல் உனக்கு எப்படி காதல் வந்தது?’ என்று கேட்டால், ‘அவன் என்னைச் சிரிக்க வைக்கிறான்!’ என்று பதிலளிப்பார்கள் அனேகப் பெண்கள். பிறரிடம் எளிதாக நட்பு கொள்ள சிரிப்பு ஒரு நல்ல வழி. சமீபத்தில் ஒரு மருத்துவமனையில் நான் கண்டு ரசித்த காட்சி: “அங்கிள்! நீங்கள் அரசாங்க உத்தியோகத்தில் இருந்தவரா?” கேட்டவர் குண்டாக இருந்த ஒரு சீனர். ஐம்பது வயதிருக்கும். மலாய்க்கார முதியவர் ஆமென்றார். “உங்களுக்கென்ன! மருந்து, சிகிச்சை எல்லாவற்றிற்கும் அரசாங்கமே கொடுத்துவிடுகிறது! என்னைப்போலவா! கைவிட்டு அழ வேண்டியிருக்கிறது!” என்றார் மிஸ்டர். குண்டு. “நீங்கள்தாம் பணக்காரர் ஆயிற்றே!” (பெரும்பாலான சீனர்கள் வியாபாரம் செய்வதால் அவர்களிடம் நிறையப் பணம் புழங்குகிறது என்பது பொதுவான கணிப்பு. ஆனால் உண்மை அதுவல்ல). “எங்கே! அரசியல்வாதிகளின் மனைவிகளிடம்தான் எல்லாப் பணமும்!” சுற்றி உட்கார்ந்து வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த எல்லாரும் பலக்கச் சிரித்தோம். “எனக்கு எத்தனை வயது தெரியுமா? எண்பத்து இரண்டு! இருதய சிகிச்சை நடந்து இருபது வருஷங்களாகி விட்டன!” பெருமையுடன் தெரிவித்தார் முதியவர். “உங்களுக்கென்ன! இப்போதும் மாப்பிள்ளைமாதிரிதான் இருக்கிறீர்கள்!” என்று பாராட்டிவிட்டு, “அந்த அக்கா சம்மதித்தால், நீங்கள் அவர்களைக் கல்யாணம் செய்துகொள்ளலாம்!” என்று சற்று தூரத்திலிருந்த பெண்மணியைக் காட்டினார். “ஹேய்! நான் அவர் மருமகள்!” என்று அவள் சிரிப்புடன் எதிர்க்க, அங்கிருந்த நோயாளிகள் தம்மை மறந்து சிரித்தனர். நினைத்து நினைத்துச் சிரித்தபடி இருந்தார்கள். அவர்களால் நோயின் கடுமையைத் தாற்காலிகமாக மறக்க முடிந்தது. சிரிப்பும் புளிப்பும் சில காலம்தான். பதின்மவயதுப் பெண்கள் ஒன்று சேர்ந்தால், அவர்களுக்குக் காரணமின்றி சிரிப்பு பொங்கும். அந்த வயதாக இருந்தபோது, ‘நான் இன்று ரொம்ப சிரிக்கிறேன். ராத்திரி அழப்போகிறேன்!’ என்று அஞ்சுவாள் என் தோழி பத்மஜா. சிரிப்பும், அழுகையும் பகலும், இரவும்போல. ஒன்றையடுத்து ஒன்று வரத்தான் செய்யும். அதற்காக சிரிக்காமல் இருப்பார்களா, யாராவது! சிரிப்பதற்கு முகத்திலுள்ள பதினேழு தசைகள்தாம் பயன்படுகின்றன. சிடுசிடுப்புக்கோ நாற்பத்து மூன்று! மனம்விட்டுச் சிரியுங்கள். அப்படியாவது அழகு வளர்ந்துவிட்டுப் போகட்டுமே! 9. சுய விமரிசனம் அபய முத்திரை இந்துக்கோயில் சிலைகளில் இந்த முத்திரையைப் பார்த்திருப்பீர்கள். பக்கவாட்டில் இருக்கும் வலது உள்ளங்கை வெளியில் தெரிய, விரல்கள் மேல் நோக்கி அமைந்திருக்கும். பயம் என்ற வார்த்தைக்கு எதிர்ப்பதம் அபயம். அதாவது, ‘பயமின்றி இரு, உன்னைத் தீய சக்திகளிடமிருந்து காப்பாற்றுகிறேன்!’ என்று ஒருவருக்கு உணர்த்தி, அவரை அமைதிப்படுத்துவது இந்த அபய முத்திரை. இதைக்கொண்டு புத்தர் ஒரு மதயானையைக் கட்டுப்படுத்தினாராம். எல்லா புத்தர் சிலைகளிலும் இம்முத்திரையைக் காணலாம். இடக்காலைத் தூக்கி ஆடும் நடராஜரின் வலது கரமும் இப்படித்தான் அமைந்திருக்கும். அபய முத்திரையைக் காட்டி, நமக்கு நாமே நல்லது செய்துகொள்ளலாம். எதற்காக என்கிறீர்களா? நம்மைப் பாதுகாத்துக்கொள்ள, தவறிழைத்துவிட்டு அதையே நினைத்துக்கொண்டு ஆரோக்கியத்தைப் பாழடித்துக்கொள்ளாமலிருக்க. நம்மை நாமே மன்னித்துக்கொள்ள. பொழுதைப் போக்க உறவினர்கள், நண்பர்கள், அரசியல்வாதிகள் என்று பலரைப்பற்றியும் (வேண்டாத) விமரிசனங்கள் செய்வது பலரது பழக்கம். இதனால் தாம் பேசுவதிலும், செய்வதிலும் மற்றவர்கள் எப்படியெல்லாம் குறை கண்டுபிடிப்பார்களோ என்ற பயம் எழுகிறது. எப்போதும் நம்மையே நாம் விமரிசித்துக்கொண்டு, நமது குறைபாடுகளை பறைசாற்றிக்கொண்டு இருக்க வேண்டுமா? நாம் செய்வது நமக்குச் சரி என்று பட்டால் போதாதா? குற்ற உணர்வு குற்ற உணர்வு சிறு பிள்ளைக்கும் உண்டு. அம்மாவுக்குப் பிடிக்காத காரியத்தைச் செய்துவிட்டு, திருதிருவென குழந்தை முழிப்பது இதனால்தான். ‘குழந்தை தெரியாமல் செய்துவிட்டது!’ என்று பெருந்தன்மையுடன் அதன் காரியத்தைப் பெரிதுபண்ணாது விட்டுவிட்டால், குழந்தை அநாவசிய பயமின்றி வளரும். அதைவிட்டு, திட்டியோ, அடித்தோ, இன்னும் கூறப்போனால், ‘அவர்கள் வீட்டிலே நீ அழகான கண்ணாடி ஜாடியை உடைத்தாயே!’ என்று நீண்ட நாட்கள் அதையே சொல்லிக் காட்டிப் பழித்துக்கொண்டு இருந்தால் பெரியவர்கள் தம் பலம் பெருகிவிட்டதாக எண்ணலாம். ஆனால், நாளடைவில், தான் செய்வது எல்லாமே ஏதோ ஒரு விதத்தில் குறைவுள்ளது என்ற சிறுமை உணர்வு எழும். ‘நான் ஏனோ இப்படி இருக்கிறேனே!’ என்ற சுயபச்சாதாபமும் எழும். பெற்றோர்கள் அன்பானவர்களாக இருந்தாலும், ஒரு சில ஆசிரியர்கள் குழந்தைகள் மனதில் நச்சை விதைத்துவிடுவார்கள். அண்மையில், ஒரு ஒன்பது வயதுச் சிறுவன் வகுப்பில் பேசினான் என்பதற்காக அவனுடைய ஆசிரியர் பிற மாணவர்களை அவனுடன் சேரக்கூடாது என்றாராம். அப்பையன் வாழ்க்கையை வெறுத்து, தற்கொலை முயற்சிவரை போய்விட்டான். இது நடந்தது மலேசியாவில். அவன் செய்தது அப்படி ஒன்றும் பழிக்கக்கூடிய காரியம் இல்லை, ஆசிரியர்தான் அதிகார பலத்தால் தவறிழைத்தவர் என்று புரியும் வயதாகவில்லை அவனுக்கு. உருவத்தில் கோளாறா? ‘குண்டு,’ ‘வழுக்கை’ என்றெல்லாம் பிறர் கேலி பேசும்போது சிரித்து வைத்தாலும், சிறுமை உணர்ச்சி எழுவதைத் தடுக்கமுடியுமா? அதை மறைக்க, தம்மைத்தானே கேலி செய்துகொள்வார்கள். இது தம்மையுமறியாது, பிறரை உயர்த்திப் பேசும் வழியும்கூட. பொதுவாக, எந்தக் குடும்பத்திலும் இரண்டாவது மகன் மூத்தவனைவிட உயரமாக இருப்பான். தங்கை அக்காளைவிட உயரமாக இருப்பாள். இதுவும் இயற்கைதான். இதற்கெல்லாம் அவமானத்தால் சுருங்குவது எதற்கு? கதை ‘நான் தனியா எங்கேயும் போகமாட்டேம்பா. எல்லாரும் என்னையே முறைச்சுப் பாப்பாங்க. அழுகை வரும்!’ பதினாறு வயதில் என்னுடன் படித்த அருள்மேரி கூறியது இது. அவளுடைய ஐந்தடி எட்டங்குல உயரத்தைப் பார்த்து சிநேகிதிகள் பிரமித்தாலும், அவளுக்கு வித்தியாசமான அந்த உயரமே பெரிய குறையாக, அவமானகரமாக இருந்தது. எப்போதுமே இரண்டு, மூன்று பேர் அவளுடன் இருக்கும்படி பார்த்துக்கொள்வாள். சராசரிக்கு அதிகமான உயரங்கொண்ட பெண்ணும், அதற்குக் குறைவான ஆணும் தங்களை ஏதோ விதத்தில் தாழ்ந்தவர்களாக நினைத்து வருந்துகிறார்கள். கதை இந்திரன் அரசாங்க நிறுவனம் ஒன்றில் பெரிய அதிகாரி. உருவம் மட்டும் குள்ளம். எதற்காவது தப்பு கண்டுபிடித்து எல்லாருடனும் – பலர் பார்க்க – சண்டை போடுவார். ‘Shorty’ என்று எல்லாரும் அவரை முகத்திற்கு நேரேயே குறிப்பிட்டது அவரை அவ்வளவு தூரம் பாதித்திருக்கலாம். தன்கீழ் வேலை செய்தவர்கள் எந்தவித தவறும் செய்யக்கூடாது என்று எதிர்பார்த்தார். நடக்கக்கூடிய காரியமா அது! யார்தான் தவற செய்யவில்லை? அலுவலகத்தில் மட்டுமில்லை. யார் வீட்டுக்குப் போனாலும், அங்கேயும் குற்றம் கண்டுபிடிப்பார். இதனால் அவருக்கு உற்ற நண்பர்கள் என்று யாரும் இருக்கவில்லை. எல்லாரும்தான் பயந்து ஓடினார்களே! மதுவே உற்ற தோழன் என்றாக, மனைவி, குழந்தைகளுக்குக்கூட அவரிடம் மரியாதை போயிற்று. அவருக்குக் கீழிருந்த ஒருவர் தன் நேர்மையான உழைப்பு, மற்றவர்களை அனுசரித்துப்போகும் குணம் ஆகியவற்றால் அரசாங்க விருதுகளைப் பெற்றபோது, ‘எனக்கு எதுவும் கிடைக்கவில்லையே!’ என்றார் ஆற்றாமையுடன், தான் எங்கு தவறு செய்தோம் என்று புரியாது. இந்திரன் போன்றவர்களுக்கு அபய முத்திரை அவசியம். ‘நான் குள்ளமாக இருந்தால் யாருக்கு என்ன வந்தது? இயற்கையை எதிர்த்துப் போராட முடியுமா!’ என்று, குறைகளுடன் தன்னைத்தானே ஏற்றால், பிறரையும் மதிக்கும் குணம் வருமே! கோபத்தை விடு, முன்னேறலாம் நாம் செய்த காரியத்தில் நிறைவு இல்லாவிட்டால், அதைச் சுட்டிக் காட்டுபவர்களிடம் ஆத்திரம் வருகிறது. சண்டை போடத் தோன்றுகிறது. நான் ஆங்கில தினசரி ஒன்றிற்கு இந்திய இசை, நாட்டிய விமரிசகராக இருந்தபோது, கலைஞர்களின் தரத்தை அலசி, பாராட்டத் தக்கவைகள் பலவற்றைக் குறிப்பிட்டிருந்தாலும், ஓரிரண்டு குறைகளைச் சுட்டிக்காட்டியதற்காக அவர்கள் கோபத்துக்கும், தீராப்பகைக்கும் ஆளாகி இருக்கிறேன். அதிலிருந்து, ‘உலகப் புகழ் வாய்ந்தவர்கள்’ என்ற பெயர்பெற்றவர்களைப்பற்றி மட்டும் எழுத ஒப்புக்கொள்வேன். எதற்கு வம்பு! சுமாரான ஒரு நடன ஆசிரியை தன் நிகழ்ச்சிக்கு வந்து அதைப்பற்றி எழுதும்படி என்னைக் கேட்டுக்கொண்டாள், தொலைபேசிமூலம். “நான் எப்படி எழுதுவேன்னு தெரியுமில்லையா?” என்று கேட்டு அவளை யோசிக்கவிட்டு, பிறகு, “எழுதணுமா?” என்று சமாதானமாகக் கேட்டேன். அவள் பயந்து, “பரவாயில்லை. சும்மா வாங்க,” என்றாள். அவளுக்கே தன் திறமையில் நம்பிக்கை இல்லைபோலும்! பள்ளியில் படிக்கும்போது, ‘பிழைதிருத்தம்’ என்று பண்ணினோம். அடுத்த முறை அதே தவறுகள் வராது பார்த்துக்கொண்டபோது, மதிப்பெண்கள் கூடின. நாம் வளர்ந்து பெரியவர்களானதும் அக்குணம் ஏன் மாறியது? வயதான கோளாறா? வயதானவர்களுக்கு – தம்மைத் தாமே ஏற்க – அபய முத்திரை மிகவும் உபயோகமானது. ‘இளம் வயதில் இருந்த உடல் வலிமை, உத்தியோகம், வருமானம் எதுவுமே இப்போது இல்லையே!’ என்ற வருத்தம் ஏற்பட, அது மனைவியின்மேல் ஆத்திரமாக மாறுகிறது. அவள் எது சொன்னாலும், தன்னைப் பழிப்பதாக எடுத்துக்கொள்கிறார்கள். “என் கணவருக்குப் படிக்க மிகவும் பிடிக்கும். ஓயாமல் படிப்பார்,” என்றாள் ஒரு சிநேகிதி. நான் சில இணையதளங்களைப்பற்றிக் கூறினேன். பதிலாக, “அவ்வளவுதான்! கத்த ஆரம்பித்துவிடுவார். நான் என்ன சொன்னாலும் அவருக்குப் பிடிப்பதில்லை!” என்றாள். மேற்கண்ட வசனத்தை வெவ்வேறு நாடுகளிலிருந்த பல பெண்கள் கூறக் கேட்டிருக்கிறேன். பெண்களுக்கு இயற்கை உபாதைகள் பன்னிரண்டு வயதிலிருந்தே ஆரம்பித்து, பிள்ளைப்பேறு காலங்களிலும் தொடர்வதால், முதுமையின் தளர்ச்சி அவர்கள் மனதை அவ்வளவாகப் பாதிப்பதில்லையோ? எழுத்தாளர்களும் சுயவிமரிசனமும் தன்னைத்தானே விமரிசித்துக்கொண்டு, தான் செய்தது நிறைவாக இல்லை என்று ஒப்புக்கொள்ளும் குணம் எழுத்தாளர்களுக்கு மிக அவசியம். ‘இரவு பகலாக எழுதினேனே! இதில் சிலவற்றைக்கூட அடிக்க மனம் வரவில்லையே!’ என்று தான் எழுதியதன்மேல் காதல் கொள்பவர்களின் எழுத்து வாசகர்களுக்கு நிறைவைத் தராது. பத்திரிகை ஆசிரியர்களின் தொழிலே அதுதான் என்பதை புரிந்துகொள்ள விரும்பாது, ‘நான் கஷ்டப்பட்டு எழுதினதை கன்னாபின்னான்னு சுருக்கிட்டான்!’ என்று புலம்பும் எழுத்தாளர்கள் உண்டு. ‘இது அநாவசியம். அல்லது, தவறு!’ என்று நம்பகமான ஒருவர் விளக்கங்களுடன் சுட்டிக்காட்டும்போது அதை எப்படி சரிப்படுத்தலாம் என்று யோசித்தால்தானே முன்னேற முடியும்? ஒரு துறையில் எத்தனை ஆண்டுகால அனுபவமாக இருந்தாலும், தவறுகளைத் தவிர்க்க முடியாது. ‘நான் என்ன கடவுளா, தப்பே செய்யாமலிருக்க!’ என்று மன்னித்துக்கொள்ள வேண்டியதுதான். ஆரோக்கியமாவது கெடாமலிருக்கும். அபய முத்திரை இருக்கவே இருக்கிறது! 10. தலைமைத்துவமும் பணிவும் ஒரு சிற்றூரிலிருந்து மேற்பயிற்சிக்கு வந்திருந்த ஓர் ஆசிரியை, “பிரபலமாக இருப்பவர்களெல்லாம் கர்விகளாக இருக்கிறார்கள்!” மூக்கைச் சுளித்தபடி கூறினாள். தான் எதிலும் புகழ் பெறும் தகுதியற்றவள் என்று அவள் தன்னைத்தானே மதிப்பிட்டுக்கொண்டதுதான் அவளைப்போல் இல்லாத பிறரைப் பழிக்கக் காரணமாக இருந்திருக்குமோ? ஒரு சிறுகதைப் போட்டியில், முதல் பரிசு தாராவிற்குத்தான். அதை வெளிப்படையாகச் சொன்னால், தன்னைக் கர்வி என்று நினைத்துவிடுவார்களோ என்று ‘அடக்கத்துடன்’ என்னிடம் கூறினாள்: “என் ஃப்ரெண்டுக்குப் பரிசு கிடைச்சிருக்கு. அவங்க சார்பில வாங்கிட்டுப் போக என்னை அனுப்பினாங்க!” இப்பெண்களுக்கு தன்னம்பிக்கைக்கும் கர்வத்திற்கும் இடையே உள்ள வித்தியாசம் தெரியவில்லை என்றே தோன்றுகிறது. எது பணிவு? பிறருக்குமுன் கூனிக்குறுகி நடப்பதும், தன்னைத்தானே மட்டம் தட்டிக்கொள்வதும்தான் பணிவின் அறிகுறியா? தனக்குமுன் பிறர் அப்படி நடப்பது தன் பராக்கிரமத்தை உயர்த்திவிடுகிறது என்று தப்புக்கணக்குப் போடுகிறவர்கள்தாம் – தகுதி இல்லாவிட்டாலும் – பதவிக்கு அலைகிறார்கள். செய்வதெல்லாம் சரி! பதவி வந்ததும், தாம் தப்பே செய்ய முடியாது என்ற இறுமாப்பு. அவர்கள் சொல்வதையோ, செய்வதையோ, ‘தவறு’ என்று சுட்டிக் காட்டுகிறவர்கள் பகைவர்களாக ஆகிறார்கள். அண்மையில், இம்மாதிரியான ஒரு தலைவரிடம் நான் அவரது குறைகளை எடுத்துச் சொன்னேன். எவ்வித தடங்கல் எழுந்தாலும் சிறிதும் மனம் தளராது, நினைத்த காரியத்தைச் செவ்வனே செய்து முடிப்பவர் அவர். இருந்தாலும், அதிகாரம் கைக்கு வந்ததும், தன் கீழ் இருப்பவர்களிடம் அவர்களது வாழ்க்கைப் பின்னணிக்கேற்ப பழகுவது எப்படி, எவ்வித பொறுப்புகளை அவர்களிடம் கொடுக்கலாம் என்பதை அறிந்திருக்கவில்லை. வெற்றி கண்டுவிட்டவர்கள் எந்த வினாடியும் கீழே விழலாம் என்பதை உணரத் தவறிவிடுகிறார்கள். பலருடன் பகைமை ஏற்பட்டுவிட, தளர்ந்து, என்னுடன் தொடர்பு கொண்டார். நமக்குக் கீழே பலர் இருக்கிறார்கள். அவர்களை நம் தரத்துக்கு உயர்த்த முயன்று, நம்மைவிட மேலேயும் சிலர் இருக்கிறார்கள் என்ற உண்மையை ஒப்புக்கொண்டு அவர்களை மதித்து நடந்தால்தான் ஒருவர் வெற்றிப்படியின் மேலே, மேலே நடக்க இயலும். “ஆதாயம் கிடைக்குமென்று நம்பி, ‘ஆமாம் சாமி’ போட்டவர்களை நம்பினீர்கள். ஒருவரைப்பற்றி இன்னொருத்தர் கோள் மூட்டினால், யார் பக்கம் நியாயம் என்று விசாரிக்காமல் ஆத்திரப்பட்டுத் தண்டித்தீர்கள். உங்களுடன் இருப்பவர்கள் சிலரைத் தூக்கிவைத்துப் பேசி, பாரபட்சம் காட்டினீர்கள்,” என்று, ஒரு தலைவருக்கு இருக்கக்கூடாத அவருடைய குணங்களை உரையாடலுக்கு ஊடே, ஒவ்வொன்றாக விளக்கிக் கூறினேன். நான் எந்த அணியையும் சேராமல் தனித்தே இருந்ததால், என்னை அவருக்கும், அவரை அண்டியவர்களுக்கும் புரியவில்லை. அதனாலேயே அச்சம். எனக்குப் பின்னால் ஏதேதோ பேசினார்கள். நெடுநேரம் மௌனமாக இருந்துவிட்டு, “பத்து வருஷத்துக்கு முந்தி நீங்க என்னைத் தனியாக் கூப்பிட்டு இதையெல்லாம் சொல்லியிருந்தா, நான் எத்தனையோ பேரோட பகைக்கு ஆளாகி இருக்கமாட்டேன்!” என்றார். உண்மையான வருத்தம்போல்தான் தோன்றியது. நொந்தவாறு, இதையே பல முறை கூறியபோது, “அப்போது அதைக் கேட்டிருக்க மாட்டீர்கள். ’இவ யார் எனக்குப் புத்தி சொல்ல?’ன்னு ஆத்திரம்தான் வந்திருக்கும்!” என்றேன் லேசாகச் சிரித்தபடி. எளிமையும் பணிவும் இருந்தால் – தலைமைப் பதவியை விடுங்கள் – வாழ்வில் எவ்வித இடரையும் சமாளிக்கும் நெஞ்சுரம் வந்துவிடும். ‘நான்தான் பெரியவன்!’ என்ற ஆணவத்துடன் ஒவ்வொருவரும் சுயலாபத்தையே நாடினால், எந்த நற்காரியமும் நிலைத்து இருக்க முடியாது. எனக்கு எல்லாம் தெரியும் பணிவு என்பது தன்னம்பிக்கையின் மறுபக்கம். தான் செய்த தவறுகளை ஒப்புக்கொள்ளும் துணிச்சல். ஆசிரியப் பயிற்சியை மேற்கொண்டிருந்தபோது, எங்கள் விரிவுரையாளர் ஒரு கேள்வியைத் தொடுத்தார்: “ஒரு மாணவன் கேட்கும் கேள்விக்கு உங்களுக்குப் பதில் தெரியவில்லை என்று வைத்துக்கொள்வோம். அப்போது என்ன செய்வீர்கள்?” பலரும், “ஏதாவது சொல்லிச் சமாளித்துவிடுவோம்,” என்றார். என் முறை வந்தபோது, “எனக்குத் தெரியாது என்று உண்மையை ஒப்புக்கொள்வேன்,” என்றேன், உறுதியாக. “அப்போது உங்களை ‘முட்டாள்’ என்று அவர்கள் நினைக்க இடம்கொடுத்து விடுகிறீர்களே?” என்று கேலியாகக் கேட்டார். “எப்போதும் அப்படிச் சொல்லப் போவதில்லையே! அத்துடன், அதற்கான பதிலை அறிந்துகொண்டு வந்து சொல்வேன்!” என்றேன். விரிவுரையாளர், “நீங்கள் மிக நல்ல பள்ளிக்கூடத்தில் படித்திருக்க வேண்டும்!” என்று வியந்து பாராட்டினார். சிலருக்கு செய்த தவற்றைப் பணிவுடன் ஒத்துக்கொண்டால், கௌரவக்குறைவு. ‘நீங்கள் கூறுவது சரி,’ என்றால், மற்றவர் தன்னைவிட உயர்வு என்றாகிவிடுமோ என்ற பயம். ஏதேதோ சொல்லி, தம் தவற்றைச் சரியென்று சாதிப்பார்கள். குறை கூறியவர்களைப் பழிக்கவும், பழிவாங்கவும் தயங்கமாட்டார்கள். இவர்களைப் போன்றவர்கள் மேல் நிலையை அடைந்தாலும், அது நீடிக்காது. சில சந்தர்ப்பங்களில், ‘எனக்குத் தெரியாது!’ என்று உண்மையை ஒப்புக்கொண்டால்தான் பிறர் நமக்களிக்கும் மரியாதை நிலைக்கும். கதை என்னுடன் வேலை பார்த்த ஆசிரியை மிஸஸ். டானுக்கு விஞ்ஞானம் பிடிக்காது. வரவும் வராது. ஆனால், அதுதான் மதிப்பு என்று அவளுடைய தந்தை அப்பாடத்தை அவள் எடுத்துக்கொள்ளச் சொன்னாராம். (மனக்குறையுடன், என்னிடம் அவள் சொன்ன தகவல்). பௌதிகம், உயிரியல், வேதியியல் மூன்றும் மிஸஸ். டான் கற்பிக்க ஏற்பாடாகி இருந்தது. அவள் மாணவிகளுக்கு ஒரு பௌதிகக் கணக்கைச் சொல்லிக்கொடுக்க முயன்று, விடை சரியாக வராததால், ‘கேள்வியே தப்பு!’என்று கூறிவிட்டாள். பல மாணவிகள் ஒவ்வொருவராக என்னிடம் வந்து கேட்டார்கள். (நான் அப்பாடத்தின் மூத்த ஆசிரியை என்று பெயர்). முதல் ஆண்டே பதினோரு வகுப்புகளுக்கு அதையே கற்பிக்க வேண்டிய நிலையில், ’எப்படியோ அடிச்சு விடலாம்!’ என்று என்னால் இருக்க முடியவில்லை. ஒரே பாடத்தைக் கற்பிக்க பல புத்தகங்களைப் படித்தேன். லேசாகப் புரிந்தது. மாணவர்களுக்குத் திரும்பத் திரும்பச் சொல்லிக்கொடுக்க, இன்னும் அதிகமாகப் புரிந்தது. இப்போது அக்கணக்கை எப்படிப் போடுவது என்று விளக்கினேன். “மிஸஸ்.டான்..,” என்று அவர்கள் ஆரம்பித்தார்கள். அவர்களைத் தடுத்து, “நான் இப்படித்தான் போடுவேன்!” என்று அவர்கள் வாயை அடைத்துவிட்டேன். ‘பணிவு’ என்பது நாம் முன்பு இருந்ததைவிட இப்போது முன்னேறி இருக்கிறோம், இன்னும் முன்னேற முடியும் என்பதை அறிவது. நம்முடன் நாமே போட்டியிடுவது. 11. தந்தையைப்போல் ஒருவன் கோலாலம்பூர் அருகில் ஒரு சிற்றூரில் நாங்கள் குடியிருந்தபோது, அடிக்கடி எங்கள் வீட்டுக்கு வந்து என்னுடன் பேசுவாள் ரேவதி. எங்களிருவருக்கும் சமவயது – முப்பதைத் தாண்டவில்லை. அவள் சம்பாதித்துத்தான் தாயையும், உடல், மூளை இரண்டுமே சரியில்லாத அக்காளையும் காப்பாற்ற வேண்டும் என்ற நிலை. பெண்ணுக்கு மூளை சரியில்லை என்று தெரிந்ததும், அப்பா கண்காணாமல் போய்விட்டதாகச் சொல்வாள். ‘பணத் தட்டுப்பாடு இல்லாமல் வாழ வேண்டும் என்ற ஆசை எனக்கு. எத்தனை காலம்தான் இப்படி முகத்தைத் தூக்கி வைத்துக்கொண்டிருக்கும் அம்மாவையும், அம்மா அக்காளுக்குச்செய்யும் உபசரணைகளையும் பார்த்துப் பொறுத்துக்கொண்டிருப்பது! வாழ்க்கையில் மகிழ்ச்சியே இல்லை. எங்காவது தொலைந்து போய்விடலாம் என்றிருக்கிறது,’ என்பாள். இவளுக்கு நேர் எதிரிடையாக அந்த ஊரிலேயே இருந்தவன் கர்ணா. தாய்க்கு ஒரே மகன். பெரிய வீடு இருந்தது. சுமாரான படிப்பு, உத்தியோகம். கைநிறையப் பணத்துடன் அவனுக்குப் பெண்கொடுக்கப் பலர் வந்தார்கள். ஆனால் அவன் இணங்கவில்லை. ‘நான் காதல் கல்யாணம்தான் செய்துகொள்ளப்போகிறேன்!’ என்று வாய்க்கு வாய் சொல்வான். நண்பர்கள் எதற்காக இருக்கிறார்கள்! நன்கு படித்து, நிரந்தரமான உத்தியோகம் பார்த்துவந்த ரேவதியை அவனுக்கு அறிமுகம் செய்துவைத்தார்கள். இருவருடைய தேவைகளும் ஒத்திருந்ததால், ‘காதல்’ என்று மயங்கினார்கள். கர்ணா என் கணவரைப் பார்த்துப் பேச அடிக்கடி எங்கள் வீட்டுக்கு வருவான். அரட்டை அவனுக்குப் பிடித்தமான பொழுதுபோக்கு. என்னிடம், ‘ரேவதி எனக்கு ஏற்றவள் என்று நீங்கள் சொன்னால், அவளைக் கல்யாணம் செய்துகொள்கிறேன்,’ என்றான். ‘உன்னை அவள் மணக்கச் சம்மதித்தால், உன் அதிர்ஷ்டம் என்று நினைத்துக்கொள்! நீ அவளுக்கு ஏற்றவனே இல்லை!’ என்றேன். அவன் போனபிறகு, ‘அதெப்படி நீ அவனிடம் அப்படிச் சொல்வாய்?’ என்று என் கணவர் சண்டை பிடிக்க, ‘இவனுக்கு எதிலும் பிடிப்பில்லை. சும்மா அரட்டையடித்துக்கொண்டு, ஊர் சுற்றுகிறான். என் அபிப்ராயத்தைக் கேட்டான். அதான் நான் சொன்னேன்,’ என்றுவிட்டு, ‘ரேவதி, பாவம், நல்ல பெண்! போயும் போயும் இவன்தானா கிடைத்தான்!’ என்று பரிதாபப்பட்டேன். கல்யாணத்துக்குச் சில தினங்களே இருந்தன. ரேவதியின் கண்கள் கிறங்கியிருந்தன. ஏதோ கனவுலகில் சஞ்சரிப்பவள்போல் தோன்றினாள். ‘காதல் வயப்பட்டால் இப்படியா!’ அதிசயப்பட்டேன். நான் அதற்குமுன் யாரையும் அப்படிப் பார்த்ததில்லை. அவளைப் பார்த்தால் பாவமாகவும் இருந்தது. ஏனென்றால், எப்படியும் அந்தக் கல்யாணத்தைத் தடுத்து நிறுத்த முடியாது என்று புரிந்துவிட்டது. அதன்பின் நாங்கள் வீடு மாற, அவர்களுடன் தொடர்பு அற்றுப்போயிற்று. ‘ஆண்கள் காதலிக்கும்போது ஒருமாதிரி இருக்கிறார்கள். கல்யாணமானதும் வேறு மாதிரி இருக்கிறார்கள்,’ என்று அவள் புலம்பிய நாளும் வந்தது. தந்தையைப்போலவே கணவனும் பொறுப்பற்றவன் என்று ரேவதிக்கு சில ஆண்டுகளிலேயே தெரிந்துவிட்டது. சம்பதித்ததையெல்லாம் சூதாட்டத்தில் விட ஆரம்பித்திருந்தான். பொறுக்க முடியாது, சில காலம் அவனைப் பிரிந்து போனாள் ரேவதி. கர்ணாவே அவளைச் சமாதானப்படுத்தி மீண்டும் அழைத்துப்போனான். ‘நீ போனதும் நல்லதாகப் போயிற்று. கடன்காரர்கள் வீட்டிலிருக்கும் எல்லா பொருட்களையும் எடுத்துப்போய்விட்டார்கள்!’ என்றானாம். இதெல்லாம் எங்கள் வீட்டுக்கு இருவரும் வந்திருந்தபோது அவள் தனிமையில் என்னிடம் தெரிவித்தது. இப்போது ரேவதியின் சம்பளத்தில்தான் குடும்பம் நடக்கிறது. ‘எனக்குத்தான் தெரியவில்லை. நீயாவது கல்யாணத்துக்கு முன்னாலேயே என்னை எச்சரித்திருக்கக் கூடாதா?’ என்று வருத்தத்துடன் என்னைக் கேட்டாள். ஒருவர் கேளாமலேயே அறிவுரை வழங்கினால் அதற்கு மதிப்பு கிடையாது. அப்படியே அவர்கள் ஒரு பிரச்னைக்குத் தீர்வு கேட்டாலும், நாம் பல கேள்விகள் கேட்டு, அவர்களே தம் மனதைப் புரிந்துகொள்ள வழிவகுக்க வேண்டும். சுயமாகச் சிந்திக்கத் தெரியாதவர்களுக்கு மட்டும் என்ன செய்வது என்று சொல்லிக்கொடுக்கலாம். கேட்பதும் கேட்காததும் அவர்கள் பாடு. ‘அன்றே கர்ணாவிடம் சொன்னேன், நீ ரேவதிக்கு ஏற்றவனில்லை என்று. ஆனால், நான் சொன்னாலும் கேட்கும் நிலையில் நீ இருக்கவில்லை! என்னமோதான் சொக்கிப் போயிருந்தாய்!’ என்று நான் கூறியது அவளை யோசிக்கவைத்தது. மிகுந்த வருத்தத்துடன், ‘உண்மைதான். நான் அன்று இருந்த நிலையில் யார் எது சொன்னாலும் கேட்டிருக்க மாட்டேன்!’ என்று ஒப்புக்கொண்டாள். பிறந்தகச் சூழ்நிலை சரியில்லை என்று அதிலிருந்து தப்பித்துக்கொள்ளப் பார்த்தால், அதேபோன்ற வாழ்க்கைதான் திருமணம் செய்தபின்னரும் அமையும். தன்னையும் அறியாமல், தந்தையைப் போன்ற ஒருவரை கணவராக வரித்து, தாயைப்போல தனியாகவே பிள்ளைகளை வளர்த்து, துன்பத்தில் உழல நேரிட்ட இன்னொரு பெண் ரேவதி! 12. தற்காப்புக் கலைகள் அந்தப் பையன் ஒரே படுத்தல்! இவ்வளவு மோசமாகவா வளர்ப்பார்கள்!’ ‘பெண்ணா இது! ரொம்ப முரடு! எவன் மாட்டிக்கொண்டு திண்டாடப்போகிறானோ!’ ஐந்தே வயதான குழந்தைகளுக்குக் கிடைத்த (வேண்டாத) விமர்சனங்கள் மேலே குறிப்பிட்டவை. குழந்தைகளும் பெரியவர்கள்போல் நடக்க வேண்டும் என்ற எதிர்ப்புதான் பிறரை இப்படியெல்லாம் பேசவைக்கிறது. ‘நல்லதற்குத்தானே சொல்கிறோம்!’ என்று அவர்கள் திருப்தி பட்டுக்கொண்டாலும், இத்தகைய ஓயாத கண்டனத்தால் குழந்தைகளை பலவீனர்களாக ஆக்குகிறோம் என்று அவர்களுக்குப் புரிவதில்லை. அதைப்பற்றி அவர்களுக்கு அக்கறையும் கிடையாது. யாரோ பெற்ற குழந்தைதானே! அவரவர் குடும்பத்திலேயேகூட, தம் வயதுக்கேற்ப நடந்துகொள்வது சில குழந்தைகளுக்குப் பிரச்னையாக முடியலாம். அம்மாவைப் படுத்துதல் எங்கள் உறவினர் குழந்தை அமெரிக்காவிலிருந்து என்னுடன் தொலைபேசியில் பேசினான். நாங்கள் இருவரும் சந்தித்துக்கொண்டதே கிடையாது. இருந்தாலும், அவனுக்குத் தன் மனக்குறையை யாரிடமாவது சொல்லவேண்டும்போல இருந்தது போலும்! எடுத்த எடுப்பிலேயே, ‘நிம்மலா பாட்டி! அம்மா என்னைக் கோச்சுக்கறா!’ என்றான், வருத்தம் தோய்ந்த குரலில். ‘நீ என்னப்பா பண்ணினே?’ என்று கேட்டதும், ‘படுத்தினேன்!’ என்றான் அந்த மூன்று வயதுக் குழந்தை. எனக்குச் சிரிப்புப் பொங்கியது. ‘படுத்தல்’ என்று பொதுவாகச் சொல்வது அதீத சுறுசுறுப்பான குழந்தை ஒன்றின் நடத்தையை. எதையும் அறியவேண்டும் என்ற ஆர்வத்துடன் நிறையக் கேள்விகள் கேட்பது குழந்தைகளின் இயல்பு. எப்படிச் சொல்லிப் புரியவைப்பது என்று புரியாததாலோ, ‘முக்கியம்’ என்று படும் வேறு வேலையில் ஈடுபட்டிருப்பதாலோ, பெற்றோர் அல்லது ஆசிரியர்கள் அவனது இயற்கையான ஆர்வம் தவறு என்பதுபோல் திட்டுவார்கள், தண்டிப்பார்கள். பல குழந்தைகளின் இயற்கையான ஆர்வம் தடைப்பட்டு, சற்றே மந்தமாகப் போவதற்கு இதுவும் ஒரு காரணம். சில சிமயம், வளர்ப்பு முறையால், அதாவது ‘அன்பு’ என்றெண்ணி பெரியவர்கள் பார்த்துப் பார்த்து எல்லாவற்றையும் செய்வது குழந்தைகளுக்கு எதிர்மறையான விளைவைத்தான் உண்டுபண்ணும். ‘கடைசிக் குழந்தை (அல்லது ஒரே குழந்தை) என்று ரொம்ப செல்லம் கொடுத்ததில் தானாக எதுவும் செய்துகொள்ளத் தெரியவில்லை இவளுக்கு! சோம்பேறி!’ குடும்பத்தில் கிடைக்காத கவனிப்பை எப்படியாவது பெற்றுவிட வேண்டும் என்று சில சிறுவர்கள் பிற மாணவர்களிடம் முரட்டுத்தனமாக நடந்துகொள்வதும், தெரிந்தே தவறு செய்வதும் உண்டு. தவறு செய்தால் தண்டனை பெறும்போதாவது பிறர் கவனிக்கிறார்களே! பதின்ம வயதினருக்கு ஹார்மோன் மாற்றத்தால் அதிக சக்தி இருக்கும். தினசரி பள்ளிக்கூடம், வீட்டுப்பாடம் என்ற வாழ்க்கை சலிப்புதட்ட, தீய வழிகளில் மனம் செல்லும். பிறரை வீண்வம்புக்கு இழுக்கத் தோன்றும். ‘என்னைப் பாத்து ஏண்டா முறைக்கிறே?’ என்று காரணமே இல்லாது பிறருடன் சண்டைக்குப் போவார்களாம். (இப்படி நடந்துவந்த ஒரு மாணவன் பெருமையுடன் என்னிடம் தெரிவித்தது). எப்படிச் சமாளிப்பது? சுறுசுறுப்பான குழந்தையோ, பிறருடன் பழகத்தெரியாது வெட்கி ஒளிபவனோ, தன் தேவைகளைத் தானே பூர்த்தி செய்துகொள்ள முயலாது பிறரது கையை எதிர்பார்ப்பவனோ அல்லது பிறரது கவனிப்பைத் தவறான வழிகளில் பெறத் துடிப்பவனோ இவர்கள் அனைவரும் தன்னம்பிக்கையுடன் வளர ஒரு சிறந்த வழி இருக்கிறது. தற்காப்புக் கலை அதிகபட்சமான சக்தியை நல்ல வழியில் செலுத்தும் வழி தற்காப்புக் கலையைப் பயிலுவது. ஒவ்வொரு பயிற்சியின் முடிவிலும் உடல் சோர்ந்து போகலாம். ஓர் இலக்கை நோக்கிப் பயணிக்கும் உறுதி, அதை அடைந்தவுடன் கிடைக்கும் ஆனந்தம் இவைகளால் மனம் உற்சாகத்தை அடையும். தற்காப்புக்கலை என்று பெயர்தான். கற்க ஆரம்பிக்கையிலேயே அநாவசியமாக இத்திறனைகளைப் பயன்படுத்தக் கூடாது என்று மாணவர்களுக்குப் போதிக்கப்படுகிறது. ஆனாலும், அவசியம் இருந்தால், தற்காத்துக்கொள்ளத்தானே வேண்டும்! கதை ஜூடோவில் முதல் பாடமாக, தன்னிடம் முறைகேடாக நடக்க முயலும் ஆணை எப்படி எதிர்ப்பது என்பதைக் கற்றாள் அப்பெண். ஐந்து வருடங்களுக்குப்பின், அவளுடைய பதினேழாவது வயதில், ஆள் நடமாட்டம் அதிகமாக இருந்த ஒரு நகரில் ஒரு கயவன் அவளுடைய இடுப்பைப் பின்னாலிருந்து இரு கரங்களாலும் இறுகப் பிடிக்க, அவள் யோசிக்கவேயில்லை. திரும்பி அவனுடைய மர்ம பாகத்தில் ஓங்கி ஓர் உதை விட்டாளாம். அவன் அலறியபடி கீழே விழுந்தான். ஜூடோ போட்டிகளில் பரிசு பெற்றிருந்த அப்பெண் திரும்பிப் பாராது நடந்துவிட்டாள், அவனைச் சுற்றி ஒரு கும்பல் கூடியதைக் கண்டு திருப்தி அடைந்தவளாக. யாவரும் வெல்லலாம் பள்ளிக்கூடத்தில் நடக்கும் விளையாட்டுப் போட்டிகளில் எல்லாக் குழந்தைகளும் வெற்றி பெற முடியுமா? ஆனால், ஜூடோ, கராத்தே, டேக்வான்டோ (Taekwando) போன்ற தற்காப்புக் கலைகளில் அவரவர் திறமைக்கு ஏற்ப முன்னேறலாம். எப்படியென்றால், வாராவாரம் பயிற்சி அளிக்கப்படும். ஒவ்வொரு வருடமாக, வெள்ளை, மஞ்சள் என்று வெவ்வேறு நிறங்களைக்கொண்ட இடுப்புப் பட்டியைப் பெறும் தகுதியை அடைகிறார்கள். ‘முன்னேறிக்கொண்டிருக்கிறோம்!’ என்ற நிதரிசனம் ஒரு சிறுவனுக்குப் பெருமையை ஊட்டி, தன்னம்பிக்கையையும் வளரச் செய்கிறது. கதை சாங் என்ற பதினான்கு வயதுப் பையனுக்கு ஆடிசம். பிறருடன் பழகத் தெரியாது. தனி ஒரு உலகத்தில் சஞ்சரித்துக்கொண்டிருப்பான். பிற பையன்கள் அவனை ஒரு கேலிப்பொருளாகக் கருதி, பலவாறாக வதைத்தனர். அதைக் கண்ட ஆசிரியர் அவனை ஒரு கோடியில் உட்கார வைத்துவிட்டு, அவன் பக்கத்தில் தற்காப்புக் கலையில் தேர்ச்சி பெற்ற அர்ஜூனனை அமர்த்தினார். எதுவும் வெளிப்படையாகச் சொல்லவில்லை. (கறுப்பு நிற இடுப்புப்பட்டி ஒருவன் தற்காப்புக்கலையில் நல்ல திறமையைப் பெற்றுவிட்டான் என்பதைக் குறிக்கும். அதற்குப் பிறகும் பல ஆண்டுகள் இடைவிடாமல் மேற்பயிற்சி உண்டு. இந்தகையவர்கள் தமது ஆத்ம பலத்தைப் புரிந்துகொண்டுவிட்டதால், பார்க்க சாதுவாக இருப்பார்கள்). அர்ஜூனனது திறமையை பள்ளிக்கூட விளையாட்டுத் தினத்தன்று எல்லாருமே பார்த்து அயர்ந்திருந்தனர். ‘ஒரு கையால் மட்டும் கனமான மரக்கட்டையை ஒரே அடியில் சுக்குநூறாக உடைப்பவன் ஆயிற்றே! இவனுடன் மோதுவதா!’ என்றஞ்சி ஒதுங்கினர். ஒரு பையன் மட்டும் அசட்டுத்துணிச்சலுடன் வம்புக்கு வந்துகொண்டே இருந்தான். ஒருவன் சாதுவாகத் தோற்றமளித்தால், வம்புக்கு இழுக்கும் உலகம் அல்லவா இது! அவனது தொல்லை பொறுக்க முடியாது போக, அர்ஜூனன் அவனுடைய மணிக்கட்டை இறுகப் பிடித்து ஒரு விதமாக அமுக்க, அப்படி ஒரு எதிர்ப்பை எதிர்பாராதவனின் முகம் அதிர்ச்சியாலும், உடல் வேதனையாலும் துடித்தது. அவன் கையை விட்டுவிட்டு, அமைதியாக, ‘so we understand each other!’ என்றானாம் அர்ஜூனன். மறைமுகமாக, ‘என் பலத்தைப் புரிந்துகொள்ளாது விளையாடாதே!’ என்று எச்சரிக்கை விடுத்திருக்கிறான். ‘சமயம் வரும்போது நம்மையும் காப்பான்!’ என்ற நம்பிக்கை பிறருக்கு வந்துவிட, அதற்குப் பிறகு யாரும் அவனுடன் மோதவில்லை. ஆடிசத்தால் பாதிக்கப்பட்ட பையன் சாங் நிம்மதியாக இருக்க முடிந்தது. அர்ஜூனன் செய்ததுபோல், தன்னையும் தன்னைச் சார்ந்தவர்களையும் பாதுகாக்க முடியும் என்ற உண்மை நிலை புரியும்போது, ஒருவன் தன்னுடைய சக்தியை உணர்கிறான். அமைதியாக எந்த பிரச்னையையும் அணுக முடிகிறது. மேலும் பல பலன்கள் யாருமே, ‘தற்காப்பு பயில்வது கடினம். என்னால் முடியாது!’ என்று அரைகுறையாக விலகி விடுவதில்லை. சுமார் நான்கு ஆண்டு தற்காப்புப் பயிற்சிக்குப்பின், குஸ்தியைப்போல இருவர் ஒருவரோடு ஒருவர் மோதுவர் (Sparring). ஆரம்பத்திலும், இறுதியிலும் தலை குனிந்து எதிராளியை வணங்குவர். பிறரை மதிக்கும் குணமும், நியாயமாகப் போராட வேண்டும் என்ற தன்மையும் வளர்கின்றன. அத்துடன், தன்னைவிடப் பெரிய உருவமோ, மிகுந்த பலமோ உடைய ஒருவனைக்கூட வீழ்த்தமுடியும் என்ற நிதரிசனம் புரிய, தன்னம்பிக்கை பெருகிறது. வீண் கர்வம் ஒழிகிறது. பல காலம் இடைவிடாது கடுமையாக உழைத்து பயிற்சி செய்து முன்னேறி இருப்பார்கள். அதனால், நன்கு உழைத்தால் எதிலும் பலன் கிடைக்கும் என்று தோன்றிப்போகிறது. தம்மை ஒத்த பலருடன் விட்டுக்கொடுத்துப் பழகும் குணம் வருகிறது. சாப்பிடப் பிடிக்குமா? பதின்ம வயதினருக்கு, முக்கியமாக ஆண் பிள்ளைகளுக்கு, உடல் வெகுவாக வளர்வதால், அப்பருவத்தில் உணவில் விருப்பம் அதிகரிக்கும். அளவு தெரியாமல் சாப்பிடுவார்கள். உடல் பருமனால் என்னென்னவோ உபாதைகள்! தற்காப்புக்கலை பயிலும்போது, எவ்வளவு சாப்பிட்டாலும் உடலில் சதை போடாது. அதனால் அவர்கள் ஆசைதீர சாப்பிட முடியும். (அளவுக்கு மீறி குண்டானால், ‘மாஸ்டர்’ கண்டித்துவிடுவார்). சில ஆண்டுகளில், தசைநார்கள் மெல்லியதாக, ஆனால் உறுதியாக ஆகும். அதனால், உடல் வலு, விரைவு, எதையும் தாங்கும் மன உறுதி போன்ற நல்ல ‘பக்கவிளைவுகளும்’ உண்டு. பிறரை நாம் அடிக்கும்போதோ, அடி வாங்கும்போதோ, அதை எப்படித் தடுப்பது என்று கவனமாக இருக்க வேண்டும் அல்லவா? இந்தப் பயிற்சியால் செறிவுடன் (Concentration) எதையும் செய்வது பழகிவிடுகிறது. கால் தடுக்கினாலும் கீழே விழாமல் சமாளிக்க முடியும். பெரியவர்களுக்கு நான் பார்த்த டேக்வான்டோ வகுப்பில், ஒரு சிறுவனுடன் அவனுடைய தந்தையும் கற்க ஆரம்பித்தார். ‘முன்பெல்லாம் என் மகனுக்குப் பிறருடன் பழகத் தெரியாது. இப்போது தன் வயதை ஒத்தவர்களுடன் கலகலப்பாகப் பேசிப் பழகுகிறான். பள்ளிக்கூடப் பாடங்களிலும் முனைப்பு அதிகமாகி இருக்கிறது!’ என்றார். வேலைப்பளுவால் அவருக்கு ரத்த அழுத்தம் இருந்தது. போதிய பயிற்சி இல்லாததால் உடல் பருமனாகியது. எப்போதும் அயர்ச்சியாக இருந்ததாம். ‘இப்போது சுறுசுறுப்பாக இருக்கிறது. உடலை வளைத்து, முன்பைவிட நிறைய காரியங்கள் செய்ய முடிகிறது!’ என்றார் மகிழ்ச்சியுடன். ‘என் மகன் மூன்றாவது. நான் முதல் வகுப்புதான்! ஆறு வயதுப் பையன்களுடன் சரிசமமாகக் கற்பது நானும் சிறுவனாகிவிட்டதுபோல் இருக்கிறது!’ என்று சிரிக்கிறார். நம் வாழ்க்கையைச் சரியான பாதையில் செலுத்த வயது ஒரு பொருட்டா என்ன? 13. நாமகரணங்கள் கதை 1: ‘டார்லிங்!’ புதிதாக மணமானவர்கள் இப்போது தம் கணவரையோ, மனைவியையோ விளிக்கும் விதம் இது என்றுதான் நினைத்திருந்தேன். எனக்குத் தெரிந்த ஒரு பெண்மணி கணவரை இப்படி அழைப்பது கண்டு வியந்து போனேன், ‘ஆகா! கல்யாணமாகி பத்து வருடங்களுக்குப் பின்னரும் இவளுக்கு இவ்வளவு காதலா!’ என்று. ஒரு நாள் இருவரும் ஏதோ வாக்குவாதம். இறுதியில், அதற்கு மேலும் பொறுக்க முடியாத மனைவி, “ஷட் அப், டார்லிங்!” என்றாளே பார்க்க வேண்டும்! எனக்குச் சிரிப்புதான் வந்தது. அவளைப் பொறுத்தவரை, டார்லிங் என்பது அவருடைய பெயர். அவ்வளவுதான். அச்சொல்லில் அன்பு கிடையாது. கதை 2: துர்கா இதற்கு நேர் எதிரிடை. அவளுக்கு நிறையத் துன்பங்கள் கொடுத்தவர் அவளது கணவர். எல்லாவித கெட்ட பழக்கங்களுக்கும் அடிமையானவர். அவள் அவருடன் பேசுவதையே விட்டுவிட்டாள். ஆனால் அவர்மேலிருந்த ஆத்திரத்தை மகன்மேல் காட்டினாள். மகனுக்கு என்ன பெயர் வைத்தார்களோ, அவனை ‘துடைப்பக்கட்டை’ என்றுதான் அழைப்பாள். அவனுடைய அக்காள்மேல் எந்த வருத்தமுமில்லை துர்காவுக்கு. ஏனெனில் அவளும் தன்னைப்போல் ஒரு பெண். அப்பாவைப்போல் நடக்க மாட்டாள் என்ற நம்பிக்கை இருந்தது. தாயின் நம்பிக்கை பொய்க்கவில்லை. மகள் ஓரளவு படித்து, உத்தியோகத்திலும் அமர்ந்தாள். மகனுக்கோ, ‘நான் உதவாக்கரை!’ என்ற எண்ணத்தை பெற்ற தாயே சிறுவயதிலிருந்தே மனதில் பதிய வைத்திருந்ததால், படிப்பும் ஏறவில்லை. மதுவுக்கு அடிமையானான். ஆறு மாதங்கள் ஏதாவது வேலை செய்து, கையில் கொஞ்சம் காசு சேர்ந்ததும், வேலையை விட்டுவிடுவான். பகலில் அக்கம்பக்கத்தினருக்கு உதவியாக ஏதாவது செய்வான். ‘சாயங்கால வேளைகளில் அவனுடைய போக்கே மாறிவிடும்,’ என்கிறார்கள் அவனுடைய அண்டைஅயலார். நான் பார்த்தபோது, சாதுவாக, தன்னம்பிக்கை குன்றியவனாக காணப்பட்டான். அவனுடைய கதையைக் கேட்க பரிதாபமாக இருந்தது. ஏதோ காரணத்தால் மனத்துக்குப் பிடிக்காத மணாளனுடன் சேர்ந்து வாழவேண்டிய நிர்ப்பந்தம் இருக்கும் பெண்கள் தம் விதியையே நினைத்து மருகி, அந்த நிராசையை பெற்ற பிள்ளைகளின்மேல் காட்டினால், வாழையடி வாழையாக குடும்பம் உருப்படாமல்தான் போகும். பெற்றவர்களில் ஒருவர் ஆதரவாக இருந்தால்கூட பிள்ளைகள் நல்ல விதமாக வளர வாய்ப்பிருக்கிறதே! கதை 3: பதினைந்து வயதான லேகாவிற்குத் தான் புத்திசாலி என்பதில் கொள்ளைப் பெருமை. அவள் வளர்க்கும் நாய்க்கோ, அறிவு குறைவாகத்தான் இருந்தது என்று அவளுக்கு இளக்காரம். தினமும் உலாவ அந்த நாயை அழைத்துச் செல்வாள். அதுவோ, நாயின் குணப்படி அங்கும் இங்கும் எதையோ தேடி அலையும். ‘இடியட்!’ என்று உரக்கக் கத்தி, அதன் கழுத்துப்பட்டியில் பொருத்தப்பட்டிருந்த சங்கிலியை இழுப்பாள். சிறிது நேரத்திற்குப்பின், இதே நிகழ்ச்சி தொடரும். தினமும் அக்காட்சியைப் பார்த்துக்கொண்டிருந்த எனக்குப் பொறுக்கவில்லை. “பாவம்! அதை ஏன் அப்படிக் கூப்பிடறே?” என்று லேகாவைக் கேட்டேன். நாய்க்கு ஆங்கிலமோ, இடியட் என்ற வார்த்தைக்கு அர்த்தமோ தெரிந்திருக்க நியாயமில்லை. ஆனாலும், கூப்பிடும் தொனி புரியாதா, என்ன! “இது சொன்னாலே கேக்கறதில்லே!” என்றாள். “அதுக்கு அவ்வளவுதான் தெரியும். ஒன் நாய்க்குப் பேர் கிடையாதா? அதைச் சொல்லிக் கூப்பிடு,” என்றதும், எதுவும் பேசாது நடையைக் கட்டினாள். பொதுவாக எல்லா மிருகங்களின்மேலும் உயிராக இருக்கும் ஒரு பையன் அவர்கள் வீட்டுக்குத் தினமும் போவான். அதே நாய் அவன் முகத்தை நக்கிக் கொஞ்சுகிறது என்று அவ்வீட்டிலுள்ளவர்கள் ஆச்சரியப்பட்டார்கள். ‘குழந்தையும் தெய்வமும் கொண்டாடும் இடத்தில்’ என்பதில், ‘மிருகங்களும்’ என்று சேர்த்துக்கொள்ளலாம். கதை 4: மலேசியாவில் ஒரு சிற்றூரில் அமைந்திருந்த மிருகக்காட்சி சாலைக்குப் போயிருந்தேன். இருபது வயதை எட்டியிராத ‘தமிழன்’ எல்லா மிருகங்களையும் அன்புடன் அழைத்து, பரிவுடன் நடத்துவதைப் பார்க்கவே மகிழ்ச்சியாக இருந்தது. “உனக்கு மிருகங்கள் என்றால் ரொம்பப் பிடிக்குமா?” என்று அநாவசியமான கேள்வி ஒன்றைக் கேட்டேன். “சின்ன வயசிலேருந்தே அப்படித்தான், ஆன்ட்டி,” என்று ஒத்துக்கொண்டவன், “எல்லாரும் என்னைப் பைத்தியம்கிறாங்க. அதான் வீட்டுக்கே போறதில்லே. இங்கேயே தங்கிடறேன்!” என்றான், வருத்தத்துடன். “நீ ரொம்ப நல்லவன். இப்படி இருக்கறதுதான் சரி. மாறிடாதே!” என்றேன். “இதுங்களையும் சாமிதானே படைச்சார்?” என்று அவன் கேட்டதில் தான் செய்வதன் நியாயத்தை ஏன் பிறர் புரிந்துகொள்ள மறுக்கிறார்கள் என்ற குழப்பம் வெளிப்பட்டது. அவன் ஞானி என்றுதான் எனக்குத் தோன்றியது. பெற்ற பிள்ளைகளை ஒரு தாய் இழிவாக நடத்துவதையோ, தன் ‘செல்லப் பிராணி’யை ஒரு பெண் கண்டபடி திட்டுவதையோ பொறுக்கும் உலகம் மனித நேயத்துடன் நடக்கும் ஒருவனை ’பைத்தியம்’ என்கிறது! இது மோசமான உலகமா, இல்லை உண்மைக்கும், பொய்க்கும் வித்தியாசம் தெரியாத முட்டாள் உலகமா? 14. நிகழ்காலத்தில் வாழ்வது எப்போதும் சிரித்த முகத்துடன் காணப்படுபவர்கள் முன்னுக்கு வரத் துடிக்கும் நடிகைகளும், அரசியல்வாதிகளும் மட்டுமில்லை. ‘வாழ்க்கையை எப்படி எதிர்கொள்வது என்பது நம் கையில்தான் இருக்கிறது’ என்பதைப் புரிந்துகொண்டவர்களும்தான். இவர்களிடம் அப்படி என்ன சிறப்பு என்றால், இவர்கள் கடந்த காலத்தைப் பெரிது பண்ணுவதில்லை. நான் கானடா நாட்டிலுள்ள விக்டோரியா தீவிற்குச் சென்று மூன்று வாரங்கள் தங்கியிருந்தபோது, குறிப்பாக விவாகரத்து செய்த பெண்களுடன் கலந்து பேசவேண்டும் என்று கேட்டதற்கு இணங்கி வந்திருந்தார்கள் சிலர். ‘நீங்கள் உங்கள் அப்பா மடியில் உட்கார மாட்டீர்களா? அவரைக் கட்டி அணைப்பதோ, முத்தமிடுவதோ கிடையாதா?’ என்று என்னைப் பார்த்து ஆச்சரியப்பட்டு, ‘இவளிடம் என்ன வேண்டுமானாலும் சொல்லலாம்’ என்று நெருங்கிப்போனார்கள். கதை “என் குழந்தை உருவான தேதி..,” என்று குறிப்பிட்டுப் பேசினாள் காதரின். முப்பது வயதுக்குள் இருக்கும். “பிறந்த தேதி என்று சொல்லுங்கள்,” என்று திருத்த முயன்றேன். “சரியாகத்தான் சொல்கிறேன். நான் உறங்கும்போது, என் அனுமதி இல்லாமல் என் கணவர் செய்த செயலால் அன்று உருவான குழந்தை!” என்றாள் கசப்புடன். “அவர் செய்தது கற்பழிப்புக்குச் சமானம்! அதனால் விவாகரத்து செய்வதைத் தவிர வேறு வழி தெரியவில்லை!” சிறிது பொறுத்து, “எங்கள் வாழ்க்கையில் சில மகிழ்ச்சியான தருணங்களும் இருந்தன,” என்றவளைப் பார்த்து ஆச்சரியப்பட்டேன். கடந்துபோன வாழ்க்கையில் ஓரளவு இன்பமும் இருந்தது என்று பலர் ஒத்துக்கொள்வதில்லை. இவளைப்போன்ற பெண்கள் கடந்த காலத்திலேயே உழன்று, தம் நிம்மதியையும், மகிழ்ச்சியையும் குலைத்துக்கொள்ளாது இருக்கிறார்கள். விவாகரத்து செய்த பல பெண்கள் தாம் விட்டு விலகியவரைப்பற்றி வாய்க்கு வந்தபடி பேசுவதைக் கேட்டிருக்கிறேன். இல்லையேல், தம் துரதிர்ஷ்டத்தை ஓயாது நொந்துகொள்வார்கள். மேரியைப்போல. கதை மேரி அழகிய, பணக்கார வீட்டுப் பெண். மணமானபின் அமெரிக்காவிலிருந்து வந்தவள். ஐம்பது வயதிலும் மிக இளமையாக இருந்தாள். “நானும் என் கணவரும் ஓயாது சண்டை போடுவோம். எப்படி தெரியுமா? அவர் தொலைகாட்சிப் பெட்டியை தூக்கி எறிவார். நான் மட்டும் என்ன சளைத்தவளா? நானும்..,” என்று சொல்லிக்கொண்டே போனவளை அதிர்ச்சியுடன் பார்த்தேன். விவாகரத்துக்குப்பின் ஆளுக்கொரு மகன் என்று தீர்ப்பாயிற்று. இவளுடைய பொறுப்பில் வந்த மூத்த மகனுக்குக் கல்யாணம் ஆனதும் இவள் பாடு திண்டாட்டமாகப் போயிற்று. மருமகள் இவளைப் படாதபாடு படுத்த, விலகினாள் – ஓர் அட்டைப்பெட்டியில் தன் உடமைகளை அடைத்துக்கொண்டு. “என் மகனுக்கு நிறையப் பணம் வருகிறது. ஆனால், எனக்கு இந்தக் கதி!” என்று என்னிடம் புலம்பினாள், என் தோழி இல்லாத சமயத்தில் அவள் வீட்டையும் செல்லப்பிராணிகளையும் பார்த்துக்கொண்ட இந்த house sitter. உற்றவர் யாருமே இல்லாத நிலையில் மேரி தன்னைக் கவனித்துக்கொள்ளத் தவறிவிட்டாள் என்று நினைக்கவைத்தது அவளுடைய பரிதாபகரமான தோற்றம். “முதலில் நீ கடைக்குப் போய், உன் தலைமயிரைச் சீர்படுத்திக்கொண்டு வா. பிறகு உன் மகன் வீட்டுக்குப் போ. அப்புறம் என்ன நடக்கிறது என்று பார்!” என்றேன். சில நாட்கள் கழித்து, பெரிதாகச் சிரித்தபடி வந்து கூறினாள்: “நான் நாகரிகமாக என்னை மாற்றிக்கொண்டு போனேனா! மருமகள் ஒரேயடியாக உபசாரம் செய்தாள், போங்கள், ‘என்ன குடிக்கிறீர்கள்? சில நாட்கள் தங்கிவிட்டுப் போங்களேன்,’ என்று!” அவளுடைய சிரிப்பில் நானும் கலந்துகொண்டேன். “நான்தான் சொன்னேனே! வெளித்தோற்றத்தை வைத்து ஒருவரை எடைபோடும் உலகம் இது!” ஒரு மருந்துக்கடையில் ஆள் எடுக்கிறார்கள் என்ற அறிவிப்பைப் பார்த்து, என்ன பேசவேண்டும், எப்படி அவர்களைக் கவர்வது என்று படித்துப் படித்துச் சொல்லிக்கொடுத்தேன். “உன் கஷ்டங்களை எல்லாரிடமும் சொல்லிக்கொண்டிருக்காதே!” ஓரிரு தினங்களுக்குப்பின், “எனக்கு வேலை கிடைத்துவிட்டது!” என்றாள் மகிழ்ச்சியாக. பிறகு, ஒரு பொது இடத்தில் என்னைப் பார்த்துவிட்டு, ஓடிவந்து அணைத்தாள் மேரி. உள்நாட்டவர்கள் ஆச்சரியத்துடன் எங்களிருவரையும் மாறி மாறிப் பார்த்தனர். வெள்ளைக்காரிக்கும், புடவை அணிந்த இந்த ஆசியப் பெண்மணிக்கும் அப்படி என்ன தொடர்பு இருக்க முடியும் என்று யோசித்திருப்பார்கள். சிலருக்கு, ‘கடந்த காலத்திலேயே வாழ்ந்து, உன் நிகழ்காலத்தைப் பாழடித்துகொள்ளாதே!’ என்று சொல்லிக்கொடுக்க வேண்டியிருக்கிறது. வேறு சிலருக்கு எவ்வளவு வயதானாலும், நிகழ்காலத்தில் பிரச்னை எதுவும் இல்லையென்றாலும், சில கசப்பான நிகழ்வுகள் மனதில் அலைமோதிக்கொண்டுதான் இருக்கும். ‘உன்னிடம் மட்டும் என் கதையைச் சொல்கிறேன்,’ என்று ஆரம்பித்திருந்தாள் ஏஞ்சல். கதை “என் வாழ்க்கையே ஒரு பொய் என்று தோன்றியது. கணவரோ வேறு ஒரு பெண்ணுடன் தொடர்பு வைத்துக்கொண்டிருந்தார். வெளி உலகத்திற்கு நாங்கள் ஆதர்ச தம்பதிகளாகத் தோற்றம் அளித்தோம்,” என்று தன் அந்தரங்கத்தை என்னிடம் கொட்டினாள். “‘எதற்காக இப்படி ஒரு அவமதிப்பைத் தாங்கிக்கொள்கிறாய்?’ என்று என் மகளே இடித்துக் கேட்டபின்தான் விவாகரத்துக்கு மனு செய்தேன்”. “ஜீவனாம்சம் கிடைத்ததா?” என்று விசாரித்தேன், கரிசனத்துடன். “விருப்பமில்லாமல் கொடுப்பார். அதனால் வேண்டாம் என்றுவிட்டேன்”. இதைத் திரும்பத் திரும்பச் சொன்னாள். ஏஞ்சலும் அவள் கணவரும் ஒரே துறையில் இருந்தவர்கள். அவள் சாதித்ததைத் தான் செய்ததாகச் சொல்லிக்கொள்வாராம். அவளுக்குக் கூடுதலான திறமை. அதுதான் தன்னைவிட மிகக் கீழான நிலைமையிலிருந்த பெண்ணுடன் தொடர்பு வைத்துக்கொண்டார்போலும்! “அறுபத்தோறு வயதிலா விவாகரத்து செய்தாய்?” என்று நான் ஆச்சரியப்பட்டபோது, “வயது ஒரு பொருட்டாகவே படவில்லை. நிம்மதியை இழந்து என்ன வாழ்க்கை!” என்றவள் உலகெங்கும் சுற்றியவள். இன்னொரு பெண்ணைப்பற்றிக் கூறியபோது, “இவளிடம் என்ன குறை கண்டு, இவளை விவாகரத்து செய்தான் இவளுடைய கணவன்? தான் எந்த விதத்திலோ தாழ்மையானவள் என்ற வருத்தம் இவளுக்கு இருக்குமல்லவா?” என்று மெல்லக் கேட்டாள். எதற்குக் கேட்கிறாள் என்று புரிந்துகொள்ளாமல், “இவளுடைய அருமை அவனுக்குப் புரியவில்லை என்றுதான் வைத்துக்கொள்ள வேண்டும்!” என்றேன் உடனே. மேரியின் முகம் மலர்ந்ததைப் பார்த்து, ’இவள் தன்னை அந்தப் பெண்ணின் நிலையில் இருத்திக்கொண்டுதான் அப்படிக் கேட்டாளா! என்று ஆச்சரியப்பட்டேன். கதை எங்கள் வீட்டில் வேலை செய்த இந்தோனீசிய பணிப்பெண், ஈடா (Ida) உதட்டுப்பூச்சுடன் அழகாக அலங்கரித்துக்கொள்வாள். ‘கருமமே கண்ணாயினார்’ என்பதைப்போல, சிரித்த முகத்துடன், உழைத்து வேலை செய்வாள். அவளைப் பார்ப்பவர்களுக்கு இன்பமான வாழ்க்கை இவளுக்கு வாய்த்திருக்கிறது என்றுதான் தோன்றும். சாதாரணமாக, அவர்கள் இன ஆண்கள் செய்வதைப்போல, இவளையும் கணவன் விவாகரத்து செய்துவிட்டான் என்றறிந்தபோது அதிர்ச்சியாக இருந்தது. பிறவி எடுத்ததே திருமணம் செய்துகொள்வதற்குத்தான் என்று வளர்க்கப்படுகிறார்கள் இந்த ஏழைப்பெண்கள். (என் மகளுக்கு பதின்மூன்று வயதானபோது, ஒருத்தி, ‘ஏன் இன்னும் நீங்கள் மகளுக்குக் கல்யாணம் செய்துவைக்கவில்லை?’ என்று கேட்டாள் என்னிடம்!) அதன்பின், விவாகரத்து செய்யப்பட்ட இன்னொரு பெண், டியானா, உலகமே தலையில் இடிந்து விழுந்து விட்டதைப்போல் நடக்க, “ஈடாவைப் பார்த்துக் கற்றுக்கொள்,” என்றேன் கண்டிப்பாக. “நிமிர்ந்து நட. நன்றாக அலங்கரித்துக்கொள். நீ சோர்ந்துபோனால், உன் குழந்தைகளை யார் பார்த்துக்கொள்வார்கள்?” டியானா விரைவிலேயே தேறினாள். கடுமையான உழைப்பால் உடல் உறுதியாகியது. ஒரு பெண் அழகாக இருந்தால், யார் சும்மா விடுவார்கள்? வேறோரு பெண்ணின் வாழ்க்கையைக் கெடுக்கிறோமே என்ற சிந்தனை சிறிதுமின்றி, ஒரு நாள் யாரோ ஒருவனுடன் ஓடிப்போனாள் டியானா! அவள் வாழ்நாள் பூராவும் அழுதே கழிக்கவில்லையே என்று ஆறுதல் பட்டுக்கொள்ள வேண்டியதுதான்! 15. பூனைகள் பலவிதம் பூனையே கடவுள் பண்டைய எகிப்தில் பூனை வடிவிலிருந்த கடவுளைத் தொழுதுவந்தார்கள். ஏனெனில், உயிருக்கு அபாயம் விளைவிக்கும் தேள், பாம்பு போன்ற விஷ ஜந்துக்களைக் கொல்லும் ஆற்றல் பூனைக்கு இருந்தது. அதன்பின், ஒரு குடும்பத்தின் மக்கள் பெருக்கம், அமைதி ஆகியவைகளுக்கான தெய்வமாக மாறியது. இப்போது எல்லா நாடுகளிலும், வீட்டுக்குள்ளேயே வளர்க்கப்படும் செல்லப்பிராணிகளாக பூனைகள் இருந்து வருகின்றன. மனிதர்களைப்போலவே பிராணிகளுக்கும் உணர்வுகள், திறமைகள் எல்லாம் இருக்கின்றன. அது புரியாதவர்கள்தாம், ‘எனக்கு நாய், பூனையெல்லாம் பிடிக்கவே பிடிக்காது. சூ, சூன்னு விரட்டுவேன்!’ என்கிறார்கள். பூனைகள் மக்கு! முன்பொருமுறை ரீடர்ஸ் டைஜஸ்ட் ஆங்கிலப் பத்திரிகையில் ஒரு கேலிப்படம் பார்த்தேன். ‘நில், படு, கைகுலுக்கு!’ என்று என்ன ஆணை பிறப்பித்தாலும் ஒரு பூனை எதுவும் புரியாது, அப்படியே உட்கார்ந்திருப்பதுபோல் வரையப்பட்டிருந்தது. இறுதியில், ‘சமர்த்துப் பூனை!’ என்று பாராட்டுவார் கட்டளையிட்டவர். அப்போது வேடிக்கையாக இருந்தது. ஆனால், நாய்களைப்போல் பூனைகளுக்கு எதுவும் புரியாது, மனிதர்கள் சொன்ன சொல் கேட்டு நடக்காது என்ற கருத்து எவ்வளவு தவறு என்று பூனைகளுடன் நெருங்கிப் பழகியபின் புரிகிறது. பூனைக்குட்டிகளின் வரவு ஒரு தாய்ப்பூனை வருடத்திற்கு மூன்று அல்லது நான்கு முறை பிரசவிக்கும். ஒரே சமயத்தில் மூன்று குட்டிகளை ஈனும்போது, அவைகளைப் பார்த்துக்கொள்ளும் சக்தி இல்லாவிட்டால், எங்காவது கொண்டு விட்டுவிடும். அப்படி எங்கள் வீட்டுக்கு ஐந்து முறை பூனைக்குட்டிகள் வந்திருக்கின்றன. பாவம் வரும்! எங்கள் பாட்டி வீட்டில் பூனைகள் சர்வசாதாரணமாக நடக்கும். சிறு வயதில், ‘பூனைகளைத் தொடாதே! அதன் ஒரு ரோமம் உதிர்ந்தால், ஏழேழு ஜன்மங்களிலும் துயர்ப்படுவாய்!’ என்று பயமுறுத்தி இருந்தார்கள். அத்துடன், ‘பூனை பிராண்டிவிடும்!’ என்ற மிரட்டல் வேறு. அதனால், பூனைகளைப் பார்த்தாலும் பாராததுபோல் நடந்துவிடுவேன். முதலாம் குட்டி பதின்மூன்று வருடங்களுக்குமுன் நடந்த சம்பவம் அது. எங்கள் வீட்டு வாசலில் நிறுத்தப்பட்டிருந்த காருக்கு அடியிலிருந்து ஒரு பூனைக்குட்டியின் மெல்லிய குரல் இடைவிடாமல் கேட்டுக்கொண்டிருந்தது. ‘ஐந்து நாட்களே ஆன குட்டி!’ என்றார் மிருக வைத்தியர். அக்குட்டியின் உடல் ரோமம் இல்லாது வழவழவென்று இருந்தது. ‘யாரோ அதைக் கொல்ல முயற்சித்து, சுடுநீரை அதன்மேல் கொட்டியிருக்கவேண்டும்!’ என்று அவர் மேலும் கூற, அதிர்ந்தோம். அந்தக் குட்டியின் வாயில் பாலில் தோய்த்த பஞ்சைப் பிழிய ஒருவர், மடியில் போட்டுக் கொஞ்ச சிறுவர்கள் என்று சிலர் எங்கள் குடும்பத்தில் இருந்ததால், எனக்கு வேடிக்கை பார்க்கும் வேலைதான் கிட்டியது. ஆனால், அடிக்கடி இடியோசை கேட்கும்போதெல்லாம் குட்டி (அந்தப் பெயரே நிலைத்துவிட்டது) என் மடியில் வந்து உட்கார்ந்துகொள்ளும். நான் விறைத்துப்போவேன். அதைத் தொடப் பிடிக்காது, ‘யாராவது இதைக் கீழே போடுங்களேன்!’ என்று கத்துவேன். ‘பாவம்! அது உன்னை அம்மாவா நினைக்கிறதும்மா. விரட்டாதே!’ என்று என் மகள் கூற, சற்று இளகினேன். அதுவரைக்கும் சில பூனைக்குட்டிகள் எங்கள் வீட்டில் கொண்டுவிடப்பட்டிருந்தாலும், அவைகளை வீட்டில் வளர்க்கக்கூடாது என்பதில் நான் உறுதியாக இருந்ததால், மார்க்கெட்டில் கொண்டு விட்டுவிடுவோம். இந்தக் குட்டிக்கோ சரியாக நடக்கத் தெரியவில்லை. தடுமாறி விழுந்துகொண்டே இருந்தது. மருத்துவரின் உதவி தேவைப்பட்டது. ‘நாமே கவனிக்காவிட்டால், என்ன பண்ணும், பாவம்!’ என்று, அது தங்கலாம் என்று பெரிய மனது பண்ணினேன். காலையில் என் அறைக்கு வெளியே குட்டி கத்தியதால், ஆகாரம் அளிக்கும் பொறுப்பு என்னுடையதாயிற்று. ‘உள்ளே வாயேன்!’ என்று நான் அழைக்கும்வரை கதவுக்கு வெளியே காத்து நிற்கும். எல்லாருடைய அன்புக்கும் உகந்ததாக ஆன குட்டி, எட்டு மாதங்களுக்குப்பின் காணாமல் போயிற்று. அதன் உடல்நிலை சீராக ஆகாததால், எங்காவது தனியாகப் போய் இறந்திருக்கும். அந்த துக்கம் மறைய சில மாதங்களாயின. அம்மா பூனை சில வருடங்களுக்குப் பிறகு வெள்ளையும் கறுப்புமான ஒரு தாய்ப்பூனை தன் குட்டி ஒன்றுடன் வாசலில் நின்று எதையோ வேண்டுவதுபோலக் குரல் எழுப்பியது. ‘பசி!’ என்று அதை உள்ளே அழைத்து உணவு அளிக்கப்பட்டது. அதுவும் தங்கிவிட்டது. ஆனால் வீட்டுக்குள் வரக்கூடாது என்ற தடையை மீறவேயில்லை. நான் தமிழில் என்ன பேசினாலும் உடனே புரிந்துகொண்டது. ‘தட்டில் தண்ணி விடறேன். நகர்ந்துக்கோ,’ என்றால் விலகும். ‘இப்போ குடி!’ என்று நான் சொல்லும்வரை ஒதுங்கி நிற்கும். சில நாட்களுக்குப்பின் அதன் குட்டி காணாமல் போய்விட, தாய் துடிதுடித்தது. என் காலைச் சுற்றி சுற்றி வந்தது. அதன் வேதனை எனக்குப் புரிய, அருமையாகத் தடவிக்கொடுத்தேன். இப்போது பயமோ, அருவருப்போ இருக்கவில்லை. மாஞ்சா அதே சமயத்தில் இன்னொரு குட்டி பின்பக்கத்திலிருந்த கதவின்வழி எட்டிப்பார்த்து, தீனமான குரலில் கத்தியது. குழந்தைகள் குதூகலமாக அதைத் தேட, பயந்துபோய் எங்கோ ஒளிந்துகொண்டது. ‘வேண்டாம்!’ என்று பெற்ற தாயே எங்கோ கொண்டுவிட்டபிறகு, யாரை நம்புவது! அம்மா பூனையிடம், ‘எங்கே அந்த இஞ்சி நிறக் குட்டி?’ என்று கேட்க, அது புதரிடையே ஒளிந்திருந்ததைக் காட்டிக்கொடுத்தது. இருந்தாலும் பெரிய பூனைக்கு அந்தப் புதிய வரவு பிடிக்கவில்லை. தனக்கு ஆகாரம் கிடைக்காமல் போய்விடுமோ என்ற பயம். ‘ஸ்..’ என்று அதனருகில் போய் சீறும். குட்டி நடுங்கும். இந்தப் புதிய குட்டி எல்லாரிடமும் மிகவும் அன்பாக இருந்தது. அதன் அன்பைக் கண்ணிலேயே காட்டும். என் பேரன் உடலெல்லாம் ஏறி விளையாடும். ‘ரொம்பத்தான் செல்லம் கொஞ்சுகிறது! மாஞ்சா!’ (MANJA - மலாய் மொழியில் செல்லம்) என நாங்கள் கேலி செய்ததால், அந்தப் பெயரே நிலைத்துவிட்டது. ஓயாத கர்ப்பம் குட்டிகள் பிறந்த உடனே தாய்ப்பூனை மீண்டும் கருவுற்றுவிடும். மூன்றே மாதங்களில் மற்றொரு பிரசவம். அம்மா பூனையும் இந்த விதிக்கு விலக்கில்லை.பருத்த வயிற்றுடன் அது தள்ளாடியபடி நடக்க, மாஞ்சா அதைத் துரத்தியது! மூன்று குட்டிகள்! அவை தாய்ப்பால் குடிக்கும்போது, மாஞ்சாவும் குடிக்க ஆரம்பித்தது. தடுக்காமல், அம்மா பூனை அதைத் தான் பெற்றதாகவே ஏற்று, அருமையாக நக்கும். ஒரு குட்டியைத் தானே எங்கோ கொண்டுபோய்விட, மிஞ்சியிருந்த இரண்டில் ஒன்று காரில் நசுங்கி இறந்தது. மிஞ்சியிருந்த ’கறுப்புக்குட்டி’க்கு சுவற்றின்மேல் தாவுவது, ஒரு மெல்லிய சுவற்றின்மீது நடப்பது போன்ற வித்தைகளையெல்லாம் கற்றுக்கொடுக்கும் பொறுப்பை மாஞ்சா விரும்பி ஏற்றுக்கொண்டது. மீண்டும் கருவுற்ற அம்மா பூனை எங்கோ போய் இறந்துவிட, மாஞ்சாதான் மிகவும் துக்கப்பட்டது. இரண்டு முறை, பெற்ற தாயையும், பாலூட்டி வளர்த்த தாயையும் இழந்த துயரம் அதற்கு. சாப்பிடுவதில் ஆர்வம் குறைந்தது. ரொம்ப இளைத்தது. உடல் உபாதைகள் வர ஆரம்பித்தன. ஆதரவாக ஒரு அண்ணன் இருந்ததால், கறுப்புக்குட்டிக்குத் தாயின் இழப்பு எந்த பாதிப்பையும் ஏற்படுத்தவில்லை. அதற்கோ சாப்பிடுவதுதான் உலகமே. தன் பங்கை அவசரமாகச் சாப்பிட்டுவிட்டு, மாஞ்சாவின் தட்டுக்குப் போகும். அதைத் தவிர்க்க, அதைக் குண்டுக்கட்டாக வீட்டுக்குள் தூக்கிப்போய், கதவைச் சாத்திவிடுவோம். வெளியே மாஞ்சா சாவதானமாகச் சாப்பிடும். ஒரு முறை, ‘மாஞ்சா பாவம், குட்டி! அதைச் சாப்பிட விடு! நீதான் சாப்பிட்டாச்சே!’ என்று நான் சொல்ல, தன்னைத்தானே தண்டித்துக்கொள்வதுபோல வீட்டுக்குள் போய் உட்கார்ந்துகொண்டது! சங்கீதம் சாயந்திர வேளைகளில் பூனைகளுக்கு ஆகாரம் போட்டுவிட்டு, என் பேத்தி என்னிடம் இசை கற்க வருவாள். அப்போது இரண்டு பூனைகளும் உள்ளே வரும். ‘எப்படி ஒலி எழும்புகிறது?’ என்று ஸ்ருதிப்பெட்டியை கடித்துப் பார்த்து, திட்டு வாங்கியது மாஞ்சா! ‘அடிப்பேன்!’ என்று நான் ஆள்காட்டி விரலைக் காட்டி மிரட்ட, அதற்குப்பின், விட்டுவிட்டது. இசைஞானமுள்ள பூனைக்குட்டி ஒரு நாள், நான் எங்கள் வீட்டுக் காம்பவுண்டுக்குள் நடந்துகொண்டிருந்தேன். அப்போது, அங்கு ஒரு மேசைமேல் கண்ணை மூடியபடி படுத்துக்கொண்டிருந்த கறுப்புக்குட்டி ஒரு நீண்ட மூச்சை இழுத்து, ‘ஸா’ என்ற ஸ்வரத்தை நீண்ட நேரம் மூச்சுப்பிடித்துப் பாடியது! எனக்கு மகிழ்ச்சியும், ஆனந்தமும் பொங்கின. நான் யாருக்கோ கற்றுக்கொடுப்பதை இந்தப் பூனைக்குட்டி சரியாகக் கற்றுக்கொண்டுவிட்டதே! ‘அட சமர்த்து! இன்னொரு தடவை பாடு!’ என்றதும், மிகக் குறுகிய காலம் அதையே பாடிவிட்டு, தூங்கிவிட்டது! அதன்பின், சில நாட்கள் நான் ஒவ்வொரு ஸ்வரமாகப் பாடிக் காட்டி, ‘எங்கே பாடு! சமத்து!’ என்று கொஞ்ச, திரும்ப இசைக்கும். உச்சரிப்பு சீனர்களுடையதைப்போல. அதாவது, ‘கா’ என்றால், ‘ங்கா!’ என்று கேட்கும். ‘மா’ என்ற ஸ்வரம் ‘ம்வா’ என்று கேட்கும். ஸ்ருதி சுத்தமாகப் பாடி, கேட்பவர்களை ஆச்சரியப்பட வைக்கும். என்னைத் தவிர வேறு யார் பாடச் சொன்னாலும் காதில் வாங்கிக்கொள்ளாது இருந்துவிடும். குரு வந்தனம் ஒரு முறை, கறுப்புக்குட்டி தன் நெற்றியால் என் காலைத் தேய்த்து, அதன்பின் நக்கியது. ‘என்ன பண்றது?’ என்று நான் அதிசயப்பட்டபோது, பேத்தி விளக்கினாள்: ‘பாடி முடிந்ததும் நான் உன் காலைத் தொட்டு வணங்குவதுபோல் இதுவும் செய்கிறது!’ தீனிப்போத்தி தீபாவளிக்கு எங்கள் வீட்டுக்கு வந்திருந்தவர்கள் பேச்சும், சிரிப்புமாகப் பலகாரங்களை ஒரு கை பார்த்துக்கொண்டிருக்க, ’தீனிப்போத்தி’யான (பாலக்காட்டு பிராமணர்களிடம் நான் கற்ற சொல்) கறுப்புக்குட்டி, அங்கேயே வட்டமிட்டது. ‘நீ பாடு, மொதல்லே!’ என்று நான் ஒவ்வொரு ஸ்வரமாகப் பாட, அதுவும் உணவு கிடைக்கப்போகிறது என்ற மகிழ்ச்சியில் பாடிக் காட்ட, விருந்தினர் பிரமித்தார்கள். பரிசாக, அன்று சாப்பாட்டு நேரத்திற்கு முன்னரே குட்டிக்கு உணவு. யாரோ மாஞ்சாவைக் காட்டி, ‘இது பாடாதா?’ என்று கேட்டார்கள். விட்டுக்கொடுக்காமல், ‘இது வேட்டைத்திறன் மிக்கது!’ என்று பதிலளித்தேன். பல்லி, கரப்பான் பூச்சி, தவளை, வெட்டுக்கிளி, போன்றவைகளை எங்கள் காலணிமேல் கொண்டுவந்து அர்ப்பணித்திருக்கிறது மாஞ்சா – ‘நீங்கள் எனக்கு ஆகாரம் கொடுக்கிறீர்கள். பிரதிபலனாக, நானும் என்னால் முடிந்ததை உங்களுக்கு அளிக்கிறேன்!’ என்பதுபோல். ஒரு முறை, இரண்டு பூனைகளும் என் காலணியைச் சுற்றி உற்சாகமாகத் துள்ளிக் குதித்துக்கொண்டிருந்தன. அருகில் போய் பார்த்தால், ஓரடி நீளத்தில் உயிருள்ள பாம்பு! (அருகே இருந்த செம்பனைத் தோட்டங்களை நாசம் செய்யும் எலிகளைக் கொல்ல பாம்புகளை வளர்ப்பார்கள்). ‘நான் பாம்பெல்லாம் சாப்பிடுவதில்லை. தாங்க்ஸ், மாஞ்சா!’ என்றேன். சிறிது நேரத்தில் அந்தப் பாம்பு இறந்ததும், அதை வீட்டுக்கு வெளியே எறியலாம் என்று பேசிக்கொண்டிருந்தோம். மாஞ்சாவுக்கு அது புரியும் என்று நாங்கள் எதிர்பார்க்கவில்லை. துடைப்பத்துடன் வந்தபோது, பாம்பைக் காணோம். தேடியபின், மாஞ்சா அதைக் காரின் அடியில் ஒளித்து வைத்திருந்தது தெரியவந்தது. அரைமணி நேரம் அதனுடன் போராடி, அந்தப் பாம்பை வெளியே எடுத்து, வாசலில் தூக்கிப்போட்டோம். மீண்டும் மீண்டும் தூக்கிக்கொண்டு வந்தது! இன்னொரு முறை ஒரு குருவிக் குஞ்சைக் கொண்டுவந்தது. ‘அதைத் தூக்கி எறியணும். வீட்டு வாசலெல்லாம் இறகும், ரத்தக்களறியுமாக ஆகிவிடும்,’ என்று நாங்கள் பேசியபடி உள்ளே போய்விட்டு வந்தபோது, குருவியைக் காணோம். ’GOOD BOY, MANJA!” ‘எங்கே போட்டே, மாஞ்சா?’ என்று நைச்சியமாகக் கேட்டதும், ஒளித்த இடத்திலிருந்து கொண்டு வந்து காட்டியது! பெரியவர்களால் ஏமாற்றப்படும் குழந்தைக்கும், இந்தப் பூனைக்கும் என்ன வித்தியாசம்? பூனைகளால் விளையும் நன்மைகள் பூனைகள் ரத்த அழுத்தத்தையும், ஒவ்வாமையையும் குறைக்கும். ஒரு முறை பூனையைத் தடவினாலே நம் மனது அமைதிப்பட்டுவிடும். மாரடைப்பு வரும் சாத்தியக்கூறும் குறைவுதான் என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள். இதெல்லாம் நானும் அனுபவத்தில் கண்ட உண்மை. 16. பொறுமை எதுவரை? ஒரு மலேசியப் பத்திரிகையில் வந்த கேள்வி: ‘திருமணமான முப்பது வருடங்களில் என்னை என் கணவர் அடிக்காத நாளே கிடையாது! எலும்புகள் நொறுங்கி, மருத்துவச் சிகிச்சைக்குப் போனதும் உண்டு. இதற்கு நான் என்ன செய்வது?’ பதில்: உங்கள் பொறுமைக்கு நல்ல பயன் கிடைக்கும். சம்பந்தப்பட்ட பெண்ணைப்போல் என்ன விளைந்தாலும் பொறுமை காத்தவர்கள் முன்பற்களை இழந்து, காலைச் சரியாக ஊன்றமுடியாது நடப்பதைக் கண்டிருக்கிறேன். வதையால் சிலர் இறந்துகூடப் போயிருப்பார்கள். ‘பொறுமை’ என்பது பெண்களின் அணிகலன் என்று தப்பாகச் சொல்லிவைத்துவிட்டார்களோ என்றுதான் தோன்றுகிறது. பொறுமை என்றால் அறவே யோசிக்காமல் ஒரு நிகழ்வை ஏற்பதாகாது. ஏன் அப்படி நிகழ்கிறது, பொறுத்துக்கொண்டே போனால் இறுதியில் என்ன ஆகிவிடும் என்றெல்லாம் சிந்தித்தால் பொறுமைக்கும் எல்லை உண்டு என்பது புலனாகும். கதை ஒன்றாகப் படித்த, ஆனால் தன்னைவிடச் சிறப்பாகத் தேர்ச்சிபெற்ற கல்லூரி அழகு ராணி மேகலாவை காதல் கல்யாணம் செய்துகொண்டான் ரகு. திருமணமாகி இரண்டே வருடங்களுக்குப்பின் அவள் உத்தியோகம் பார்க்கக்கூடாது என்றவன், பொறாமை தாங்காது அவளைப் பலவாறாக துன்புறுத்தினான். மேகலாவின் தந்தை அவளைப்போலவே பரமசாது. அந்த நல்லவரை பலர் முன்னிலையில் தன் தாய் தலைகுனிவாகப் பேசியதைப் பார்த்து வளர்ந்திருந்த மேகலா தானும் அப்படி இருக்கக்கூடாது என்று முடிவெடுத்திருந்தாள். அவளுடைய பொறுமை இருபத்து ஐந்து வருடங்களுக்குமேல் நீடித்தது. ஒரு முறை பொறுக்க முடியாதுபோக, வதையின் உக்கிரம் தாங்காது, காவல்துறையை அழைக்கத் துணிந்தாள். விளைவு: ரகுவின் கைகளுக்கு விலங்கு மாட்டப்பட்டது. ஆத்திரத்துடன் மேகலாவை விவாகரத்து செய்தான் அவன். அப்போதும், ‘என்னைக் கைவிடாதீர்கள்!’ என்று அவள் கெஞ்சி அழுதாளாம். இப்படி ஒரு பொறுமை பெண்களுக்கு அவசியம்தானா? இன்னொரு கதை அவளும் அவளை மணந்தவரும், இருவருமே, பொறுமை அற்றவர்கள். அவள் அன்பான, செல்வச்செழிப்பு மிக்க குடும்பத்தில் பிறந்து வளர்ந்தவள். அவளுக்கு வாய்த்தவரோ சிறு வயதில் எந்த ஆசையும் நிறைவேறாது. ஏமாற்றமும் அதனால் விளைந்த ஆத்திரமும் கொண்டு வளர்ந்தவர். மனைவியைத் தன் ஆதிக்கத்தில் கொண்டுவர முயற்சித்து, அவள் தனக்குமீறி எதுவும் செய்யக்கூடாது என்பதுபோல் அப்படி ஒரு கட்டுப்பாட்டில் வைத்திருந்தார். ‘கணவன் சொற்படி நடப்பதே ஒரு பெண்ணுக்குப் பெருமை,’ என்று போதிக்கப்பட்டு வளர்ந்திருந்த அவள் முதலில் பொறுத்துப்போனாள். பிறகு, வாக்குவாதம் செய்தாள். இருவரும் மோத, சிக்கிமுக்கி கற்களைப்போல் நெருப்பு வளர்ந்தது. தான் பெற்ற குழந்தைகளுக்கு ஒரு அப்பா வேண்டும் என்று பொறுத்துப்போன அவள், பொறுமையின் எல்லையைக் கடந்தாள். யோசித்துப் பார்க்க, சிறு பிராயத்தில் அடைந்த துன்பங்களைக் கணவரால் மறக்க முடியவில்லை, அதனால் அவரைத் தன்னால் மாற்ற முடியாது என்று புரிந்துகொண்டாள். தான் மாறினாள். அவர் எது சொன்னாலும் வாய்திறவாது கேட்டுவிட்டு, பின் தனக்குச் சரியென்று பட்டதைச் செய்ய ஆரம்பித்தாள். அவள் எதிர்த்து வாயாடாததால், அவருக்கும் சண்டையில் சுவாரசியம் இல்லாது போயிற்று! அவள் போக்கில் விட்டார். பொறுமை இல்லையே! கேக் செய்த கதை அத்தம்பதிகள் புதிதாக மணந்தவர்கள். எது செய்தாலும் ஒன்றாக இணைந்து செய்வதில் இன்பம் காண விழைந்து, கேக் செய்ய முயற்சித்திருக்கிறர்கள். ”ஏனோ நாங்கள் எப்போது கேக் செய்தாலும், உதிர்ந்து போகிறது!” என்றார் அந்த மலாய் நண்பர். பக்கத்து வீட்டுக்காரர். “சூடு ஆறுவதற்குள் வெட்டியிருப்பீர்கள்!” என்றேன். (எல்லாம் சொந்த அனுபவம்தான்!) அவர் அசட்டுச்சிரிப்புச் சிரித்தார். “பார்க்க நன்றாக இருந்ததா! எங்களால் பொறுமையாக இருக்க முடியவில்லை!” தெருவில் வாகனமோட்டிச் செல்பவர்கள் சிவப்பு விளக்கு பச்சையாக மாறும்வரை பொறுமை இல்லாமல் விரைந்து, எதிர்ப்படும் வாகனத்தில் மோதி உயிர் இழப்பதும் நடந்துகொண்டுதான் இருக்கிறது. கதை வேண்டுமா? ஒரு மாது என்னிடம் சொன்னாள், “என்னிடம் யாராவது தங்களைப்பற்றிப் பேச வந்தால், ‘உங்கள் கஷ்டம் எனக்கெதற்கு? என் வாழ்வே சிரிப்பாய் சிரிக்கிறது!’ என்று கத்தரித்து விடுவேன்!” என்று. தன் கஷ்ட நஷ்டங்களையே சிந்தித்துக் கொண்டிருந்தால் உற்சாகம் குன்றிப்போகாதா! பிறர் நம்மைவிடத் துன்பப்படுகிறார்கள் என்று அறியும்போது நிம்மதி பிறக்குமே! ஒரு சிலரிடம், அவர்கள் கேளாமலேயே, பலரும் தம் கதையைச் சொல்லிக்கொள்வார்கள். பிறர் சொல்வதை உன்னிப்பாகக் கவனித்துக் கேட்கவும் பொறுமை அவசியம், அல்லவா? எழுத்தாளராகவோ, நடிகராகவோ ஆக விருப்பம் இருப்பவர்கள் பிறரை ஆழ்ந்து கவனித்து, முடிந்தால் அவரகள் கதையையும் அறிந்துகொண்டால்தானே கற்பனை பெருகும்! பொறுமையற்ற பிள்ளைகள் பெற்றோரில் ஒருவர் பொறுமையற்றவராக இருக்கிறார் என்று வைத்துக்கொள்வோம். அவர்களைப் பார்த்தே எதையும் கற்கும் அவர்களது குழந்தைக்கும் அதே தன்மை வரும் சாத்தியம் உண்டு. மிகவும் சுறுசுறுப்பாக இருக்கும் குழந்தைக்கும் எல்லாவற்றையும் பொறுமையாக ஏற்கமுடியாது. விதையை மண்ணில் நட்டுவிட்டு, முளைத்துவிட்டதா என்று தினமும் முதல் வேலையாக மண்ணை விரலால் தோண்டிப் பார்க்கும். குழந்தைகள் பொறுமையாக இல்லாதிருப்பது அவர்களுடைய அனுபவக் குறைவைத்தான் காட்டுகிறது. மூத்தவர்கள் நிதானமாக விளக்கினாலோ, செய்துகாட்டினாலோ தானே அவர்களைப் பின்பற்றுவார்கள். எழுத்தாளர்களுக்குப் பொறுமை ஆரம்ப எழுத்தாளர்கள் எதையாவது அவசரமாக எழுதி பத்திரிகைக்கு அனுப்பிவிட்டு, தங்கள் படைப்பு பிரசுரமாகவில்லையே என்று மனமுடைந்து போனால், அவர்கள் அத்துறையில் நிலைத்து இருக்கமுடியாது. ஒருவரது படைப்பு சிறப்பாக அமைய வேண்டுமென்றால், பல முறை திருத்தி எழுதும் பொறுமை வேண்டும். எழுதியதை அப்படியே வைத்துவிட்டு, சில நாட்கள் கழித்துப் படித்துப் பார்த்தால், யாருடையதையோ படிப்பதுபோல் இருக்கும். பல குறைகள் தென்படும். ‘எவ்வளவு பிரயாசைப்பட்டு எழுதினேன்!’ என்று சுயபச்சாதாபம் கொள்ளாமல், இரக்கமின்றி அடித்துத் திருத்த வேண்டியதுதான். இப்போது கணினியால் அந்த வேலை எளிதாகிவிட்டது. ஆங்கிலத்தில் சொல்வார்கள், ‘You don’t write. You rewrite!’ என்று. படித்து முடித்துவிட்டீர்களா? உங்கள் பொறுமைக்கு ஒரு பாராட்டு! நீங்களே முதுகில் தட்டிக்கொள்ளுங்கள். 17. மகிழ்ந்திருங்கள் ‘நான்கு வயதிலிருந்தே எல்லா பாட்டுப் போட்டிகளிலும் நான்தான் முதல்! எனக்குப் பாடகராக வேண்டும் என்றுதான் ஆசை. ஆனால் என் பெற்றோர் என்னைக் கலந்து பேசாமல், இஞ்சினீயராக ஆக்கிவிட்டார்கள்!’ நாற்பது வயதாகிவிட்ட ஒருவரின் ரகசியப் புலம்பல் இது. தனக்குப் பிடித்த துறையை பெற்றோர்களுடன் பகிர்ந்துகொள்ளும் அளவுக்கு அவருக்குச் சுதந்திரம் அளிக்கப்படவில்லை. ‘மகனுக்கு நல்லதுதானே செய்கிறோம்!’ என்று நினைத்து அவர்கள் செய்தது அவருக்குப் புரிந்தாலும், கௌரவமான பதவியோ, நல்ல வருமானமோ அவருக்கு மகிழ்ச்சியைத் தரவில்லை. வேண்டாவெறுப்பாகவே உத்தியோகம் பார்க்க வேண்டிய நிலைமை. மகிழ்ச்சியை எப்படி அடைவது? நமக்கு வேண்டும் என்பதை அடைந்தால் மகிழ்ச்சி. இது மனிதருக்கு மனிதர் மாறுபட்டிருக்கும். ‘என் குழந்தைகள் உடல் உபாதை எதுவுமில்லாது, சிரித்தபடி இருந்தால் எனக்கு மகிழ்ச்சியாக இருக்கும்!’ என்கிறார் ஒரு தாய். ‘எனக்குப் பிடித்த ஒரு காரியத்தை நல்லவிதமாகச் செய்து முடித்தால்!’ – இன்னொருவர். பலர் மனதில் எழும் கேள்வி: ‘நான் எவ்வளவோ பாடுபட்டும் எல்லா முயற்சிகளும் தோல்வியிலேயே முடிகின்றனவே?’ கதை ஒரு காய்கறிச்சந்தையில் இந்திய தம்பதி இருவர் இட்லி வியாபாரம் செய்துகொண்டிருந்தனர். இட்லியுடன் இருவகை சட்னி. மலாய், சீனர்கள் எல்லாரும் ஆசையுடன் வாங்கிப்போனார்கள். அந்த மாது என்னிடம் கூறினார், “போன வாரமும் கடைபோட்டோம். ஒரே நஷ்டம்!” வியாபாரம் செய்தால் நிறைய பணம் ஈட்டலாம் என்று நம்பி வந்திருக்கிறார்கள். ஆனால், அதற்குமுன் கணக்கு கற்கத் தவறிவிட்டார்கள். சுவையான, அளவில் பெரிதான இட்லிகள். இரண்டு இட்லி நாற்பத்தைந்து காசு என்று ஏதோ விலை சொல்லி, அதற்குமேல் ஒருவர் வாங்கிப்போனால், அதற்கான கிரயத்தைச் சரியாகச் சொல்லத் தெரியாது, வாய்க்கு வந்ததைக் கேட்டு வாங்கியிருக்கிறார்கள். ‘இரண்டு இட்லிக்கு இவ்வளவு செலவாகிற்று. அதைவிடக் கூடுதலாக விலை சொன்னால்தான் லாபம்,’ என்றெல்லாம் கணக்குப்போடத் தெரியாமல் போக, ஆழம் தெரியாமல் காலை விட்டிருக்கிறார்கள். ஒரு காரியத்தைச் செய்யுமுன், அதற்கான திறமை நம்மிடம் இருக்கிறதா என்று தெரிந்துகொள்ளவேண்டாமா? பொதுவாக, எந்த ஒரு காரியத்திலும் வெற்றி கிட்ட நம் இலக்கு சரியாக இருக்க வேண்டும். அதன்பின், அதை நோக்கி உழைக்க வேண்டும் – என்ன இடர் வந்தாலும் மனந்தளராது. “உழைப்பு, விளையாட்டு, மௌனம் மூன்றும் கலந்தது வெற்றி”. (ஐன்ஸ்டைன்) மௌனம் எதற்கு என்று யோசித்தோமானால், நாம் செய்யப்போவதைப்பற்றி எல்லாரிடமும் தம்பட்டம் அடித்துக் கொண்டிருக்கக்கூடாது என்பது புரிகிறது. எல்லாரும் நம்மைப்போலவே சிந்திப்பார்கள் ன்று சொல்ல முடியாது. ஊக்குவிப்பதற்குப் பதில் அச்சத்தை ஏற்படுத்திவிட்டுப் போய்விடுவார்கள். ஆரம்பத்திலேயே தளர்ச்சி அடைந்துவிடுவோம். விளையாட்டு என்பது ஒரே காரியத்தை அலுக்கும்வரை செய்யாது, போதுமான ஓய்வு அல்லது வேறு காரியங்களிலும் ஈடுபடுவது என்று கொள்ளலாம். செய்பவருக்கு அலுப்பு தட்டினால், அக்காரியம் சோடையாகிவிடும். இதெல்லாம் ஒரு வெற்றியா! வெற்றி, மகிழ்ச்சி என்பதெல்லாம் சமூகத்தில் ஒருவருக்கு என்ன இடம், அவரிடம் என்னென்ன இருக்கிறது என்பதைப் பொறுத்தல்ல. இக்காலத்தில் பதவி மோகம் என்ற வியாதி பெரும்பான்மையோரை ஆட்டுவிக்கிறது. விலையுயர்ந்த கார்கள் பல, கிலோ கணக்கில் தங்க நகைகள், பட்டங்கள் இதெல்லாம் ஒருவருக்கு உண்மையான மகிழ்ச்சியைத் தருமா என்பது யோசிக்க வேண்டிய சமாசாரம். சட்டத்துக்கு உட்பட்டு இவ்வளவும் சம்பாதிக்க முடியுமா என்பது கேள்விக்குறிதான். எப்படி எப்படியோ சேர்த்த சொத்தைப் பிறர் கண்ணில் படாது ரகசியமாக வைத்துக்கொள்ள வேண்டுமே, பிடிபட்டுவிட்டால் என்ன செய்வது என்ற கவலையில் உழன்றிருந்தால் மகிழ்ச்சி எப்படிக் கிடைக்கும்? வெற்றி கிட்ட எந்த ஒரு காரியத்தில் ஈடுபடும் முன்னரும் பயம் எழுவது தவிர்க்க முடியாதது. ‘வெற்றி பெற்றே தீருவேன்!’ என்ற தீவிரம் ‘தோல்வி அடைவோமோ?’ என்ற பயத்தைப் போக்கிவிடும். நாற்பது வயதுக்குமேல் ஒரு பெண்மணி நீச்சல் கற்றுக்கொள்ள முடியுமா? எனக்கு வயது ஒரு பொருட்டாகவே படவில்லை. வீடியோவைப் பார்த்துக் கற்க ஆரம்பித்தேன். முதலில் திணறலாக இருந்தது. அவ்வப்போது என் மகள் வந்து கற்றுக்கொடுக்க முயற்சித்து, ‘உன் டீச்சர்கள் உனக்கு எப்படித்தான் பாடம் சொல்லிக்கொடுத்தார்களோ!’ என்று தலையில் அடித்துக்கொண்டாள். எந்த ஒரு காரியத்தையும் எப்படிச் செய்வது என்பது அவரவர் திறமையையும் துணிச்சலையும் பொறுத்தது. முப்பதுக்குமேல் வயதானவர்களுக்கு எந்த புதிதான விஷயத்தைக் கற்பிப்பதானாலும், சிறுவர்களுக்குச் சொல்லிக்கொடுப்பதுபோல், ‘இப்படிச் செய், அப்படிச் செய்’ என்று கூறுவது தவறு. இம்முறையால், ‘என்னால் முடியுமா?’ என்ற அவர்களுடைய குழப்பமும், பயமும் இன்னும் அதிகரிக்கும். நீருக்குள் மூச்சு விடுதல், கைகளை எப்படி அசைப்பது என்று ஒவ்வொன்றாகச் சொல்லி, நீந்துவதை அவர்கள் போக்கில் விடவேண்டும். (என் மகள் ஆரம்பப்பள்ளி மாணவியாக இருந்தபோது, இருபதடி உயரத்திலிருந்து நீருக்குள் குதிக்கச்சொல்வார்கள். அந்த வயதில் பயம் தெரியாது. எப்படியோ திணறி, நீர்மட்டத்துக்குமேல் வந்துவிடுவாள்). பெரியவர்களின் மனநிலை புரியாது, ஒரு நீச்சல் பயிற்சியாளர், தன்னிடம் பழகவந்த பெண்களுக்குத் தான் சொல்வது புரியவில்லையே என்ற எரிச்சலுடன், ‘உங்களுக்கு ஆங்கிலம் புரியுமா, இல்லையா?’ என்று விரட்ட, எல்லாரும் அவரிடம் கற்பதை நிறுத்திக்கொண்டார்கள். சில பெண்கள், ‘நீச்சலால் உடல் குண்டாகி விடுகிறது!’ என்று பாதியில் விட்டார்கள். புதிய உடற்பயிற்சியினால் பசி அதிகமாக எடுக்கத்தான் செய்யும். அதற்காக உணவின் அளவை அதிகரித்தால், எடை கூடாமல் என்ன செய்யும்? வேறு சிலர் முகம் கறுத்துவிடுகிறது என்று நிறுத்தினார்கள். எதைக் கற்கும்போதும் பல இன்னல்களுக்கும், தடங்கல்களுக்கும் ஆளாகுவது தவிர்க்க முடியாத ஒன்று. அதற்காகப் பயந்து பாதியில் விட்டால் முழுமையாகக் கற்பது எப்படி? நான் நீச்சல் கற்கும்போது, (நிசமாகவே) கண்ணை மூடிக்கொண்டு எதிரில் நீந்திவந்து கொண்டிருந்த ஒருவர் கைகளை சுழற்றிப்போடும்போது, அது அறைவதுபோல் என் முதுகில் பட, நான் அமிழ்ந்து போய்விட்டேன். எப்படி நீருக்குமேலே வருவது என்று புரியாமல் திணறிக்கொண்டு, ஏதேதோ முயற்சிகள் செய்தபோது, ஆபத்பாந்தவனாக ஒரு கரம் என்னைத் தூக்கிவிட்டது. காவலர்தான். சிறிது நேரம் உட்கார்ந்து ஆசுவாசப்படுத்திக்கொண்டு, பின் வீடு திரும்பினேன். ஒரு பெண்மணி, ‘என்னையும் ஒரு தடவை காப்பாற்ற நேரிட்டது,’ என்று கூறியது பலம் தருவதாக அமைந்தது. வழக்கம்போல் மறுநாளும் உற்சாகம் குன்றாது போனேன். நீச்சல் காவலர்கள் என் மகளிடம் சொன்னார்களாம், ‘எங்களுக்கு தண்ணீரில் இறங்கிச் சொல்லிக்கொடுக்க அனுமதி கிடையாது. ஆனால் உன் தாயின் மன உறுதி அவர்களுக்கு உதவ வேண்டும் என்ற எண்ணத்தை எழுப்புகிறது!’ என்று. குளத்திற்கு வெளியே நின்ற நிலையில், கையசைவைச் சொல்லிக் கொடுத்தார்கள். தண்ணீரில் அமிழ்ந்து கிடப்பது எனக்குப் பிடித்த விஷயம். உடலில் புத்துணர்ச்சி பெருகும். ஒவ்வொரு நாளும் இதுவரை உபயோகப்படுத்தப்படாத ஒரு பாகத்தில் வலி உயிர்போகும். இருந்தாலும், எடுத்த முயற்சியை அரைகுறையாக விட மனமிருக்கவில்லை. மிக ஆழமாக இல்லாத இடத்திலேயே பயமின்றி, சாவகாசமாக நீந்திக்கொண்டிருந்தவளை, ஒரு காவலர், ‘நீங்கள் ஆழமான இடத்தில் LAPS செய்யத் தயாராகிவிட்டீர்கள்,’ என உற்சாகப்படுத்த, அடுத்த கட்டத்துக்குத் தாவினேன். அதனால், இரண்டு மாதங்களில் 500 மீட்டர் தொலைவு நீந்த முடிந்தது. ஒரு நாள் விடாது போவேன். வெற்றி என்பது எடுத்த காரியத்தில் பிரச்னைகளையும், தோல்விகளையும், பிறரது கேலியையும் லட்சியம் செய்யாதிருப்பது. யாரோ சொல்கிறார்களே என்று நமக்கு உடன்பாடில்லாத ஒன்றில் ஈடுபட்டால், திருப்தியோ, மகிழ்ச்சியோ கிடைக்காது – ஆரம்பத்தில் பார்த்த பொறியாளர்போல். விரக்திதான் மிஞ்சும். நமக்குப் பிடித்தவற்றை, நம் தகுதியை உணர்ந்து செய்தால் வெற்றியும், அதனால் கிடைக்கும் மகிழ்ச்சியும் உறுதி. நிகழ்காலத்தில் வாழ்வது எப்போதும் சிரித்த முகத்துடன் காணப்படுபவர்கள் முன்னுக்கு வரத் துடிக்கும் நடிகைகளும், அரசியல்வாதிகளும் மட்டுமில்லை. ‘வாழ்க்கையை எப்படி எதிர்கொள்வது என்பது நம் கையில்தான் இருக்கிறது’ என்பதைப் புரிந்துகொண்டவர்களும்தான். இவர்களிடம் அப்படி என்ன சிறப்பு என்றால், இவர்கள் கடந்த காலத்தைப் பெரிது பண்ணுவதில்லை. நான் கானடா நாட்டிலுள்ள விக்டோரியா தீவிற்குச் சென்று மூன்று வாரங்கள் தங்கியிருந்தபோது, குறிப்பாக விவாகரத்து செய்த பெண்களுடன் கலந்து பேசவேண்டும் என்று கேட்டதற்கு இணங்கி வந்திருந்தார்கள் சிலர். ‘நீங்கள் உங்கள் அப்பா மடியில் உட்கார மாட்டீர்களா? அவரைக் கட்டி அணைப்பதோ, முத்தமிடுவதோ கிடையாதா?’ என்று என்னைப் பார்த்து ஆச்சரியப்பட்டு, ‘இவளிடம் என்ன வேண்டுமானாலும் சொல்லலாம்’ என்று நெருங்கிப்போனார்கள். கதை “என் குழந்தை உருவான தேதி..,” என்று குறிப்பிட்டுப் பேசினாள் காதரின். முப்பது வயதுக்குள் இருக்கும். “பிறந்த தேதி என்று சொல்லுங்கள்,” என்று திருத்த முயன்றேன். “சரியாகத்தான் சொல்கிறேன். நான் உறங்கும்போது, என் அனுமதி இல்லாமல் என் கணவர் செய்த செயலால் அன்று உருவான குழந்தை!” என்றாள் கசப்புடன். “அவர் செய்தது கற்பழிப்புக்குச் சமானம்! அதனால் விவாகரத்து செய்வதைத் தவிர வேறு வழி தெரியவில்லை!” சிறிது பொறுத்து, “எங்கள் வாழ்க்கையில் சில மகிழ்ச்சியான தருணங்களும் இருந்தன,” என்றவளைப் பார்த்து ஆச்சரியப்பட்டேன். கடந்துபோன வாழ்க்கையில் ஓரளவு இன்பமும் இருந்தது என்று பலர் ஒத்துக்கொள்வதில்லை. இவளைப்போன்ற பெண்கள் கடந்த காலத்திலேயே உழன்று, தம் நிம்மதியையும், மகிழ்ச்சியையும் குலைத்துக்கொள்ளாது இருக்கிறார்கள். விவாகரத்து செய்த பல பெண்கள் தாம் விட்டு விலகியவரைப்பற்றி வாய்க்கு வந்தபடி பேசுவதைக் கேட்டிருக்கிறேன். இல்லையேல், தம் துரதிர்ஷ்டத்தை ஓயாது நொந்துகொள்வார்கள். மேரியைப்போல. கதை மேரி அழகிய, பணக்கார வீட்டுப் பெண். மணமானபின் அமெரிக்காவிலிருந்து வந்தவள். ஐம்பது வயதிலும் மிக இளமையாக இருந்தாள். “நானும் என் கணவரும் ஓயாது சண்டை போடுவோம். எப்படி தெரியுமா? அவர் தொலைகாட்சிப் பெட்டியை தூக்கி எறிவார். நான் மட்டும் என்ன சளைத்தவளா? நானும்..,” என்று சொல்லிக்கொண்டே போனவளை அதிர்ச்சியுடன் பார்த்தேன். விவாகரத்துக்குப்பின் ஆளுக்கொரு மகன் என்று தீர்ப்பாயிற்று. இவளுடைய பொறுப்பில் வந்த மூத்த மகனுக்குக் கல்யாணம் ஆனதும் இவள் பாடு திண்டாட்டமாகப் போயிற்று. மருமகள் இவளைப் படாதபாடு படுத்த, விலகினாள் – ஓர் அட்டைப்பெட்டியில் தன் உடமைகளை அடைத்துக்கொண்டு. “என் மகனுக்கு நிறையப் பணம் வருகிறது. ஆனால், எனக்கு இந்தக் கதி!” என்று என்னிடம் புலம்பினாள், என் தோழி இல்லாத சமயத்தில் அவள் வீட்டையும் செல்லப்பிராணிகளையும் பார்த்துக்கொண்ட இந்த house sitter. உற்றவர் யாருமே இல்லாத நிலையில் மேரி தன்னைக் கவனித்துக்கொள்ளத் தவறிவிட்டாள் என்று நினைக்கவைத்தது அவளுடைய பரிதாபகரமான தோற்றம். “முதலில் நீ கடைக்குப் போய், உன் தலைமயிரைச் சீர்படுத்திக்கொண்டு வா. பிறகு உன் மகன் வீட்டுக்குப் போ. அப்புறம் என்ன நடக்கிறது என்று பார்!” என்றேன். சில நாட்கள் கழித்து, பெரிதாகச் சிரித்தபடி வந்து கூறினாள்: “நான் நாகரிகமாக என்னை மாற்றிக்கொண்டு போனேனா! மருமகள் ஒரேயடியாக உபசாரம் செய்தாள், போங்கள், ‘என்ன குடிக்கிறீர்கள்? சில நாட்கள் தங்கிவிட்டுப் போங்களேன்,’ என்று!” அவளுடைய சிரிப்பில் நானும் கலந்துகொண்டேன். “நான்தான் சொன்னேனே! வெளித்தோற்றத்தை வைத்து ஒருவரை எடைபோடும் உலகம் இது!” ஒரு மருந்துக்கடையில் ஆள் எடுக்கிறார்கள் என்ற அறிவிப்பைப் பார்த்து, என்ன பேசவேண்டும், எப்படி அவர்களைக் கவர்வது என்று படித்துப் படித்துச் சொல்லிக்கொடுத்தேன். “உன் கஷ்டங்களை எல்லாரிடமும் சொல்லிக்கொண்டிருக்காதே!” ஓரிரு தினங்களுக்குப்பின், “எனக்கு வேலை கிடைத்துவிட்டது!” என்றாள் மகிழ்ச்சியாக. பிறகு, ஒரு பொது இடத்தில் என்னைப் பார்த்துவிட்டு, ஓடிவந்து அணைத்தாள் மேரி. உள்நாட்டவர்கள் ஆச்சரியத்துடன் எங்களிருவரையும் மாறி மாறிப் பார்த்தனர். வெள்ளைக்காரிக்கும், புடவை அணிந்த இந்த ஆசியப் பெண்மணிக்கும் அப்படி என்ன தொடர்பு இருக்க முடியும் என்று யோசித்திருப்பார்கள். சிலருக்கு, ‘கடந்த காலத்திலேயே வாழ்ந்து, உன் நிகழ்காலத்தைப் பாழடித்துகொள்ளாதே!’ என்று சொல்லிக்கொடுக்க வேண்டியிருக்கிறது. வேறு சிலருக்கு எவ்வளவு வயதானாலும், நிகழ்காலத்தில் பிரச்னை எதுவும் இல்லையென்றாலும், சில கசப்பான நிகழ்வுகள் மனதில் அலைமோதிக்கொண்டுதான் இருக்கும். ‘உன்னிடம் மட்டும் என் கதையைச் சொல்கிறேன்,’ என்று ஆரம்பித்திருந்தாள் ஏஞ்சல். கதை “என் வாழ்க்கையே ஒரு பொய் என்று தோன்றியது. கணவரோ வேறு ஒரு பெண்ணுடன் தொடர்பு வைத்துக்கொண்டிருந்தார். வெளி உலகத்திற்கு நாங்கள் ஆதர்ச தம்பதிகளாகத் தோற்றம் அளித்தோம்,” என்று தன் அந்தரங்கத்தை என்னிடம் கொட்டினாள். “‘எதற்காக இப்படி ஒரு அவமதிப்பைத் தாங்கிக்கொள்கிறாய்?’ என்று என் மகளே இடித்துக் கேட்டபின்தான் விவாகரத்துக்கு மனு செய்தேன்”. “ஜீவனாம்சம் கிடைத்ததா?” என்று விசாரித்தேன், கரிசனத்துடன். “விருப்பமில்லாமல் கொடுப்பார். அதனால் வேண்டாம் என்றுவிட்டேன்”. இதைத் திரும்பத் திரும்பச் சொன்னாள். ஏஞ்சலும் அவள் கணவரும் ஒரே துறையில் இருந்தவர்கள். அவள் சாதித்ததைத் தான் செய்ததாகச் சொல்லிக்கொள்வாராம். அவளுக்குக் கூடுதலான திறமை. அதுதான் தன்னைவிட மிகக் கீழான நிலைமையிலிருந்த பெண்ணுடன் தொடர்பு வைத்துக்கொண்டார்போலும்! “அறுபத்தோறு வயதிலா விவாகரத்து செய்தாய்?” என்று நான் ஆச்சரியப்பட்டபோது, “வயது ஒரு பொருட்டாகவே படவில்லை. நிம்மதியை இழந்து என்ன வாழ்க்கை!” என்றவள் உலகெங்கும் சுற்றியவள். இன்னொரு பெண்ணைப்பற்றிக் கூறியபோது, “இவளிடம் என்ன குறை கண்டு, இவளை விவாகரத்து செய்தான் இவளுடைய கணவன்? தான் எந்த விதத்திலோ தாழ்மையானவள் என்ற வருத்தம் இவளுக்கு இருக்குமல்லவா?” என்று மெல்லக் கேட்டாள். எதற்குக் கேட்கிறாள் என்று புரிந்துகொள்ளாமல், “இவளுடைய அருமை அவனுக்குப் புரியவில்லை என்றுதான் வைத்துக்கொள்ள வேண்டும்!” என்றேன் உடனே. மேரியின் முகம் மலர்ந்ததைப் பார்த்து, ’இவள் தன்னை அந்தப் பெண்ணின் நிலையில் இருத்திக்கொண்டுதான் அப்படிக் கேட்டாளா! என்று ஆச்சரியப்பட்டேன். கதை எங்கள் வீட்டில் வேலை செய்த இந்தோனீசிய பணிப்பெண், ஈடா (Ida) உதட்டுப்பூச்சுடன் அழகாக அலங்கரித்துக்கொள்வாள். ‘கருமமே கண்ணாயினார்’ என்பதைப்போல, சிரித்த முகத்துடன், உழைத்து வேலை செய்வாள். அவளைப் பார்ப்பவர்களுக்கு இன்பமான வாழ்க்கை இவளுக்கு வாய்த்திருக்கிறது என்றுதான் தோன்றும். சாதாரணமாக, அவர்கள் இன ஆண்கள் செய்வதைப்போல, இவளையும் கணவன் விவாகரத்து செய்துவிட்டான் என்றறிந்தபோது அதிர்ச்சியாக இருந்தது. பிறவி எடுத்ததே திருமணம் செய்துகொள்வதற்குத்தான் என்று வளர்க்கப்படுகிறார்கள் இந்த ஏழைப்பெண்கள். (என் மகளுக்கு பதின்மூன்று வயதானபோது, ஒருத்தி, ‘ஏன் இன்னும் நீங்கள் மகளுக்குக் கல்யாணம் செய்துவைக்கவில்லை?’ என்று கேட்டாள் என்னிடம்!) அதன்பின், விவாகரத்து செய்யப்பட்ட இன்னொரு பெண், டியானா, உலகமே தலையில் இடிந்து விழுந்து விட்டதைப்போல் நடக்க, “ஈடாவைப் பார்த்துக் கற்றுக்கொள்,” என்றேன் கண்டிப்பாக. “நிமிர்ந்து நட. நன்றாக அலங்கரித்துக்கொள். நீ சோர்ந்துபோனால், உன் குழந்தைகளை யார் பார்த்துக்கொள்வார்கள்?” டியானா விரைவிலேயே தேறினாள். கடுமையான உழைப்பால் உடல் உறுதியாகியது. ஒரு பெண் அழகாக இருந்தால், யார் சும்மா விடுவார்கள்? வேறோரு பெண்ணின் வாழ்க்கையைக் கெடுக்கிறோமே என்ற சிந்தனை சிறிதுமின்றி, ஒரு நாள் யாரோ ஒருவனுடன் ஓடிப்போனாள் டியானா! அவள் வாழ்நாள் பூராவும் அழுதே கழிக்கவில்லையே என்று ஆறுதல் பட்டுக்கொள்ள வேண்டியதுதான்! 18. மனோபலமே பலம் ‘நான் பலசாலி!’ என்று தன் புஜபலத்தால் மார் தட்டிக்கொள்ளும் ஒருவர் தனக்கென வாழ்வில் ஒரு இடர் வந்துவிட்டால் அதைத் தாங்கிக்கொள்வாரா? யோசிக்கவேண்டிய விஷயம். உடல் வலிமை இருந்தால் மட்டும் போதும் என்று நிறைவடைவது கற்காலத்திற்கு ஏற்றதாக இருந்திருக்கலாம். இன்று நாம் எந்த கொடிய விலங்குகளுடன் நேருக்கு நேர் மோதுகிறோம்! மாற்ற முடியாததை ஏற்பது நம் வாழ்வில் நடப்பவை எல்லாமே நம் கட்டுப்பாட்டுக்குள் இருப்பதில்லை. இயற்கைச் சீற்றத்தால், பிற மனிதர்கள் அளிக்கும் தொல்லையால், அல்லது நம் மனமே நமக்கு எதிராகச் செயல்படுவதால் துன்பம் வரக்கூடும். வெளியிலிருந்து வரும் கஷ்டங்களை தவிர்க்க முடியாதுதான். ஆனால், நம் மனத்தை மாற்றிக்கொண்டால், அவைகளைச் சமாளிக்கலாமே! பலம் எப்படி வருகிறது? ‘என்னை ஒருவருக்குப் பிடிக்கிறது!’ என்ற உணர்வு எழும்போது, மனோபலமும் வருகிறது. சிறு வயதில், குடும்பத்தினர் எந்த எதிர்பார்ப்புமில்லாது காட்டும் அன்பே ஒரு குழந்தைக்குப் பலம் அளிக்கிறது. வாழ்க்கையில் ஒரு துன்பம் வந்தால், அதை எப்படிச் சமாளிப்பது என்று புரியாது, கோபத்தாலும் வருத்தத்தாலும் தம் இயலாமையை வெளிப்படுத்திக்கொள்பவர்கள் எவ்வளவுதான் தேக பலம் கொண்டவர்களாக இருப்பினும், அவர்களை வலிமை மிக்கவர்கள் என்று ஏற்றுக்கொள்ள முடியாது. கவலைப்பட்டுக்கொண்டே இருப்பவர்களுக்கு பலமும் குறைந்துகொண்டே போகாதா! மாறாக, மாற்றமுடியாதவைகளை ஏற்று, துன்பத்தால் தம் தைரியத்தை இழக்காது இருப்பவர்களே பலம் பொருந்தியவர்கள். நீண்ட காலம், இடைவிடாது, போராட நேரிடலாம். இருந்தாலும், இவர்கள் மனம் தளர்வதில்லை. நினைப்பதைச் சாதிப்பார்கள். கதை ஹெலன் கெல்லர் (1880 - 1968) தமது ஒன்றரை வயதிலேயே பார்வை மட்டுமின்றி, செவிப்புலனையும் இழந்தவர். பேச மட்டும் முடியும் என்ற நிலை. ஆனால், பார்க்கவோ, கேட்கவோ முடியாது, எப்படிப் பேச முடியும்? ஆசிரியையின் உதட்டைத் தொட்டு, ‘தண்ணீர்’ என்ற சொல்லை அறிய கொட்டும் நீரின்கீழ் கையை வைத்து உணர்ந்து, ஒவ்வொரு எழுத்தாக உச்சரிக்கவும், பேசவும் கற்றார். பிற்காலத்தில், பட்டதாரி, விரிவுரையாளர், பதினோரு புத்தகங்களை எழுதியவர், தன்முனைப்புப்பற்றிய மேடைப்பேச்சாளர் என்று இவரது சாதனைகள் பல. பெற்ற தாய் மட்டுமின்றி, அவருக்குக் கற்பித்த ஆசிரியையின் அன்பினாலும், விடாமுயற்சியாலும்தான் பிற்காலத்தில் ஹெலன் கெல்லர் பலருக்கும் ஒரு முன்னுதாரணமாக ஆனார். கூடி வாழ்ந்தால்.. பலத்தை அதிகரிக்க இன்னொரு வழி நம்மை ஒத்தவர்களுடன் கூடிச் செயல்படுவது. என் பள்ளி நாட்களில், ‘Combined study’ என்ற முறையை வற்புறுத்துவார்கள் ஆசிரியைகள். படித்து முன்னுக்கு வருவதில் ஆர்வம்கொண்ட நான்கு மாணவிகள் ஒரு குழுவில் இருக்கவேண்டும். ஒவ்வொருவரும் ஒரு பாடத்தைப் படித்துவந்து, தனக்குத் தெரிந்த விதத்தில் விளக்கவேண்டும். நிறைய விவாதங்களும் இருக்கும். யாராவது ஒருவர் அநாவசியமாகப் பேசி நேரத்தை வீணடித்தால், அவர் எச்சரிக்கை செய்யப்படுவார். இம்முறையால் கல்வி கற்பது சுவாரசியமாக இருக்கும். குறைந்த நேரத்தில் நிறைய கற்கவும் முடியும். தோழிகளுடன் கலந்து பேசுவதால், கண் மட்டுமின்றி, காது, வாய் எல்லாவற்றிற்கும் வேலை. அதனால் பாடம் மறக்கவே மறக்காது. பலவீனமாக இருக்கும் பலர் ஒன்றுகூடி, பலம் பெற்றுவிட்டதாக மனப்பால் குடிப்பதும் உண்டு. இவர்களுக்குத் தனியாக நின்று எதையும் செய்யத் துணிவு இருப்பவர்களைக் கண்டு பயம் எழும். கதை இருபத்து ஐந்து வருடங்களுக்குமுன், நான் ஒரு புதிய பள்ளிக்கூடத்திற்கு மாற்றலாகிச் சென்றேன். அங்கு பெரும்பான்மையான ஆசிரியைகளும் மாணவிகளும் சீனர்கள். ஆரம்பத்திலிருந்தே அவர்களுக்கு நான் வித்தியாசமாக இருந்ததாகப் பட்டிருக்க வேண்டும். ஏனெனில், அவர்கள் மாஜோங் என்ற சூதாட்டத்துக்கு இரவு வேளைகளில் வரும்படி என்னை அழைத்தபோது மறுத்துவிட்டேன். அவர்கள் அளித்த பன்றி இறைச்சி கலந்த உணவுப்பொருட்களையும் வாங்கவில்லை. ‘நாங்கள் கொடுக்கும் உணவுப்பொருட்களை வாங்காதவர்களை Rude (முரட்டுத்தனமானவர்கள்) என்போம்!’ என, நான் பதிலுக்கு, ‘என்னுடைய கொள்கைகளை மதிக்காதவர்களைத்தான் நான் அப்படி நினைத்துக்கொண்டிருக்கிறேன்!’ என்றேன். போதாத குறைக்கு, நெற்றியில் திலகமிட்டு, புடவை கட்டிப்போனேனா! (அங்கிருந்த ஆறு தமிழ் பேசும் ஆசிரியைகளும் கேலி செய்யப்பட்டதால், பொட்டு வைத்துக்கொள்வதையே விட்டுவிட்டதாக பிறகு அறிந்தேன். ‘நீங்கள் வந்தபிறகுதான் தைரியமாக பொட்டு வைத்துக்கொள்கிறோம்!’ என்று ஓர் ஆசிரியை தெரிவித்தாள்!) என்னையும் அப்படிப் பணியவைக்க முடியவில்லையே என்ற ஆத்திரத்தில், பிறர் சார்பில் ஒருத்தி மட்டும் ஓயாது என்னை கேலி செய்வதுபோல் மட்டம் தட்டி, துன்புறுத்தியவண்ணம் இருந்தாள். ஒரு நாள் பொறுக்கமுடியாது, “You think I am also stupid like you aah? (என்னையும் உன்னைப்போல் முட்டாள் என்று நினைத்தாயா) என்று இரைந்தேன். எல்லாருடைய முகத்திலும் ஒரே கோபம். ஆனால் மேலே எதுவும் பேச அவர்களுக்குத் துணிவிருக்கவில்லை. அதற்குப்பின் என்ன! ஒரே மரியாதைதான், அது போலியாக இருந்தாலும்! பரோபகாரம் பலமாகுமா? வெகு சிலர், ‘பிறருக்கு உதவுவது நல்லது, எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது,’ என்று செயல்படுவார்கள். இவர்களது குணமறிந்த பலரும் இவர்களை வேலைவாங்கி, பிறகு கண்டும் காணாததுபோல் நடந்துகொள்வார்கள். அப்போது ஏமாற்றத்தால் இவர்களது மனம் உடைந்துவிடும். பொதுவாக, உலகின்மேலேயே கசப்பு ஏற்பட்டுவிடும். உதவி செய்பவர் பலமடைய, யாரால் தமக்குத் தாமே உதவி செய்துகொள்ள முடியவில்லையோ அவர்களுக்குமட்டும் உபகாரம் செய்வது அவசியம். இதை ஒட்டித்தான், ‘பாத்திரமறிந்து பிச்சையிடு’ என்று சொல்லி வைத்திருக்கிறார்கள். அதிகாரத்தால் பலமா? தமக்குக் கீழே இருப்பவர்களை ஓயாது அதிகாரம் செய்வது ஒருவரது பலவீனத்தைத்தான் குறிக்கிறது. பிறரின் ஒத்துழைப்பை அதிகாரத்தால் பெற முடியாது. கதை என் மாணவிகள் கழுத்தில் சுளுக்கு, வயிற்றுவலி என்று என் உதவியை நாடுவார்கள். அவர்களின் விரல்களை Reflexology முறைப்படி அழுத்தியோ, ஹிப்னாடிச முறைப்படியோ குணப்படுத்துவேன். ஜாவியா என்ற ஆசிரியை ‘தலைவலி’ என, சில மாணவிகள், என்னைக் கைகாட்டி விட்டிருக்கிறார்கள். என்னிடம் வந்து அதிகாரமாக, “என் கையை அமுக்கி, என் தலைவலியைப் போக்கு,” என்றாள். அவள் குடும்பத்தில் மூத்தவள். அவளுக்குப்பின் பத்து பேர். ஆளுங்கட்சியில் ஏதோ ஒரு குழுத்தலைவியாம். அதற்காக பார்ப்பவர்கள் எல்லாரும் தான் சொற்படிதான் நடக்க வேண்டும் என்றால் முடியுமா? நான் அலட்சியமாக, “நீயே செய்துகொள்ளலாம். இந்த இடங்களை அமுக்கிக்கொள்,” என்று காட்டிவிட்டேன். ஒருவருக்கு இம்முறையால் சிகிச்சை அளித்தால், அளிப்பவர் தன் கையை நன்றாகக் கழுவிவிட வேண்டும். இல்லையேல், அந்த உபாதை அவருக்கும் வந்துவிடும். “நீதான் பண்ணணும்,” என்று அவள் பிடிவாதம் பிடிக்க, “ஸாரி. இது சின்ன விஷயம்தானே?” என்று விலகினேன். உரக்கவோ, அதிகாரமாகவோ பேசினால்தான் பலம் என்று நினைத்து வந்திருக்கிறாள் ஜாவியா. என்னிடம் அடைந்த தோல்வியை எதிர்பாராததால், அவள் முகத்தில் அப்படி ஓர் ஆத்திரம்! அமைதி குன்றாமல், மென்மையாகப் பேசுகிறவர்களை பலவீனர்கள் அல்லது முட்டாள்கள் என்று எடைபோடுகிறது இன்றைய உலகம். அப்படி எண்ணுபவர்கள்தாம் முட்டாள்கள். 19. யாரோ செய்த பாவபுண்ணியங்கள் பள்ளி விடுமுறை வந்தால், எங்கள் பாட்டி வீட்டில் குழந்தைகளும் பெரியவர்களுமாக வெளியூர்களிலிருந்து பலர் வந்து தங்கிவிடுவோம். முப்பது, நாற்பது பேருக்கு வேண்டுமே என்று வழக்கத்தைவிட முப்பது மடங்கு பால் வாங்க முடியுமா? தயிரில் நிறைய தண்ணீர்விட்டு, நீர்மோராக்கிவிடுவார்கள். ‘மோர்தான்!’ என்று சத்தியம் செய்தால்தான் நம்ப முடியும். அப்படி ஒரு திரவமாக இருக்கும். அதைச் சாப்பிடப் பிடிக்காமல், நான் ஒரு முறை துணிந்து, ‘பாட்டி! இன்னிக்கு ஒரே ஒரு நாள் எனக்கு மட்டும் கெட்டியா தயிர் குத்த முடியுமா?’ என்று கெஞ்சிக் கேட்டுவிட்டேன். பாட்டியின் பதில் உடனடியாக வந்தது: ‘நான் மாட்டேம்பா. பாரபட்சம் காட்டினா, அப்புறம் கடைசி காலத்திலே கை கால் விளங்காமப் போயிடும்!’ இப்படி ஏதாவது பயமுறுத்தி வைத்தால்தான் மனிதர்கள் ஒழுங்காக இருப்பார்கள் என்று யாராவது கட்டிவிட்ட கதையோ என்று அப்போது தோன்றியது. ஆனால், இறக்கும்வரை பாட்டி நன்றாகத்தான் இருந்தார்கள். வாழும்போது ஒருவரின் நடத்தை எப்படி இருக்கிறதோ, சாகும்வரை, இன்னும் சொல்லப்போனால், இறப்பிறகுப் பின்னும் அதன் பாதிப்பு இருக்கும். அதாவது, ஒருவருடைய சந்ததிகள் மூத்தவர்களின் செயலின் விளைவுகளை அனுபவிக்கிறார்கள். நான் என் பாடல்களைப் பதிவு செய்யத் தமிழ்நாட்டுக்குப் போயிருந்தபோது, இளம் பெண்பாடகி ஒருத்தியின் இசைப்புலமையைப் பாராட்டினேன். “எல்லாம் ஒங்க ஆசிர்வாதம்,” என்றாள். ‘பெரியவர்களின் நல்வாழ்த்துகள் நன்மையை விளைவிக்கும் என்றால், ஒருவர் தீங்கு செய்தால்?’ என்று என் யோசனை போயிற்று. கதை 1 ’உங்களுக்கு எட்டு குழந்தைகள் பிறந்தபின், எதற்காக இன்னொரு கல்யாணம் பண்ணிக்கொண்டீர்கள்?” என்று உறவினர் ஒருவரைக் கேட்டேன். ‘ஆரஞ்சு பழத்தின் சக்கையை உறிஞ்சிவிட்டேன். சக்கையைத் தூக்கித்தானே போடணும்?” என்றார் அலட்சியமாக. ’சக்கை’ என்று அவர் வர்ணித்த முதல் மனைவி அவரை வெறுத்ததில் ஆச்சரியமில்லை. தான் ஒருத்தியாகவே பாடுபட்டு குழந்தைகளை வளர்க்க நேரிட்டபோது, தந்தையைப்பற்றி பெருமையாக எதுவும் சொல்ல முடியவில்லை. குழந்தைகளும் தான்தோன்றித்தனமாக வளர்ந்தார்கள். தாய் கவலைப்படவில்லை. ‘பெரியவர்கள் ஒழுங்காக இருந்தால்தானே அதைப் பார்த்து, அவர்கள் குழந்தைகளும் சரியாக வளர்வார்கள்!’ என்று அலட்சியமாகச் சொன்னார். வயதானபின், இரண்டாவது மனைவியையும் நிராதரவாகவிடத் தயங்கவில்லை மனிதர். அடைக்கலம் தேடி முதல் மனைவியிடம் வந்தார். ஆனால், யாரும் அவரை ஏற்கவில்லை. கதை 2 பதின்ம வயதான தன் மகள்களை ஒத்த பெண்களை சிரிப்பும், வேடிக்கையுமாகப் பேசிக் கவர்வதே தான் ஆணாகப் பிறந்ததன் பலன் என்பதுபோல் நடந்துகொண்டார் அந்த மனிதர். பதின்ம வயதுப்பெண்களைச் சிரிக்க வைத்தால், அவர்களது எதிர்ப்பு குறைந்துவிடும், எளிதில் தன் வலையில் விழுந்துவிடுவார்கள் என்று அவர் போட்ட கணக்கு தப்பவில்லை. பெற்ற மகள்களே அவமானத்துடன் குறுகும்படி இருந்தது அவரது நடத்தை. உறவினர்கள் அவரைத் தம் வீட்டில் சேர்க்கவே அஞ்சினார்கள். (மேல் நாடுகளில் இந்த சமாசாரத்தைப் பெரிதாக எடுத்துக்கொள்ள மாட்டார்களோ, என்னவோ! ஆனால், இந்தியாவில் அறியாப்பெண்களின் மனநிலையை, அவர்களது எதிர்காலத்தை, பெரிதும் பாதிக்கும்). அவரது காலம் முடிவதற்கள் தன் லீலைகளின் விளைவுகளை அவர் காணவேண்டிவந்தது. சில பிள்ளைகளுக்குப் பிள்ளைப்பேறே கிட்டவில்லை. ஒருவனுக்கு ஆண்மை இல்லை. தப்பிப் பிறந்த பேரக்குழந்தைகளையும் அவரது வினை தொடர்ந்தது. பிறக்கும்போதே நோய். ஒருவனுக்குக் கல்யாணமான அன்றே மனைவி அவனுடன் வாழ மறுத்துப் போய்விட்டாள். ‘அப்பாவியான குழந்தைகள் எப்படித் துயர்ப்படுகிறார்கள்!’ என்று உறவினர்கள் பரிதாபப்பட்டாலும், அவர்களுக்கும் காரணம் தெரிந்தே இருந்தது. பல தாய்மார்களின் சாபம் சும்மா விடுமா! வேறு சிலர், தம் நடத்தையில் மி்கக் கவனமாக இருப்பார்கள். ‘என்னைப்பற்றித் தவறாகப் பேச என்ன இருக்கிறது!’ என்ற மிதப்புடன், பிறரை ஓயாஉ விமர்சிப்பார்கள். கதை 3 விவரம் அறியாத வயதில் வத்சலாவை சற்று வயதானவருக்கு மணமுடித்தார்கள். அதனால் விளைந்த கலக்கமோ, என்னவோ, அவளுக்கு ஆண்-பெண் உறவைப்பற்றி கண்டபடி பேசுவதில் அளப்பற்ற ஆர்வம். அண்ணன்-தங்கை அன்பாக இருந்தால்கூட அவர்களுக்குள் தகாத உறவு இருக்கவேண்டும் என்று பேசுவாள். விளைவு: தன் இறுதிக்காலத்தில் இருபது ஆண்டுகள் படுத்த படுக்கையாக, அத்தியாவசியத் தேவைக்காக பேசக்கூட இயலாத நிலை ஏற்பட்டது. நாவைச் சரியான முறையில் பயன்படுத்தாத பாவமோ! வத்சலா பெற்ற குழந்தைகளுக்கும் இன்பகரமான வாழ்க்கை அமையவில்லை. அம்மா பேசுவதைக் கேட்டே வளர்ந்த ஆண்குழந்தைகள் பதின்ம வயதிலேயே ‘செக்ஸ்’ என்ற விஷயத்தில் அதீத ஆர்வம் காட்டி, பல சிறுமைகளுக்கு உள்ளாகி, நோய்வாய்ப்பட்டுப்போனார்கள். அதற்கு அடுத்த தலைமுறையிலும் பல கோளாறுகள். பெரும்பாலான இளைஞர்களுக்கு முதியோர் என்றால் இளக்காரம். தாம் என்றும் இளமையாகவேதான் இருக்கப்போகிறோம் என்ற மிதப்புடன் நடந்துகொள்வார்கள். அவர்களே மூப்படைநதும், அவர்கள் நடந்துகொண்டதைப்போலவே இளைஞர்கள் அவர்களை அலட்சியப்படுத்த, அதை மாற்றத் தெரியாது, வருத்தத்துடன் ஏற்பதைத் தவிர, வேறு என்ன செய்ய முடியும்? சிறு வயதிலிருந்தே எனக்கு முதியவர்களுடன் பேசுவதும் பழகுவதும் பிடித்த சமாசாரம். ‘இவர்களுக்குத்தான் எவ்வளவு விஷயங்கள் தெரிந்திருக்கிறது!’ என்று வியப்பாக இருக்கும். ஒரு முறை என் தாயின் அத்தை சென்னையிலிருந்த எங்கள் வீட்டுக்கு வந்திருந்தார். அவரை எப்படித் தனியாக ரயில் நிலையத்துக்கு அனுப்புவது என்ற பிரச்னை எழுந்தது. பதினைந்து நிமிடத்துக்குமேல் நடந்து போகவேண்டும். (அந்தக் காலத்தில் ஆட்டோ ரிக்ஷா கிடையாது) என் பாட்டி பதின்ம வயதாக இருந்த என்னைச் சிபாரிசு செய்தார், ‘நிரு கையைப் பிடிச்சுண்டு போய், மெதுவா எல்லாத்தையும் காட்டி அழைச்சிண்டு போகும்!’ என்று. என் வழக்கம்போல், சிறு குழந்தைக்குச் சொல்லிக்கொடுப்பதுபோல், பார்ப்பதையெல்லாம் விளக்கினேன். வெளியில் அதிகம் போய்வர உடல் வலுவோ, வாய்ப்போ இல்லாதவர்கள், பாவம்! அத்தை பாட்டி அந்நாளை எவ்வளவு தூரம் மதித்தார்கள் என்று பதினேழு வருடங்களுக்குப்பின் தெரிந்தது. “நீ அத்தைக்கு என்ன பண்ணினே? என்னை எப்போ பார்க்கிறபோதும், ’நிர்மலாவுக்குக் கல்யாணமாகி, பதினோரு வருஷத்துக்கு அப்புறம் ஒரு பிள்ளைக்குழந்தை (ஆண்) பிறந்து, அதுவும் அல்பாயுசில போயிடுத்தாடி?’ன்னு அழறா!” என்று என் தாய் கேட்டபோதுதான் எனக்கு அந்தச் சம்பவமே நினைவில் வந்தது. ‘இதெல்லாம் ஒரு பெரிய விஷயமா!’ என்று சிரித்தபடி சொன்னேன். ‘எவ்வளவு அனாதரவாக உணர்ந்தால், இதைப்போய் நினைவு வைத்திருப்பார்கள்!’ என்ற பரிதாபம் ஏற்பட்டது. சமீபத்தில் ஒரு மருத்துவர், ‘உங்களுக்கு ஒரு பல்கூட ஆடவில்லையா? ரத்த அழுத்தம், சர்க்கரை வியாதி போன்ற எந்த வியாதியும் கிடையாதா?’ என்று ஆச்சரியப்பட்டுக் கேட்டபோது, ‘என்றோ பெரியவர்கள் செய்த ஆசிர்வாதம்!’ என்று சொல்லத் தோன்றியது. 20. விடு, விட்டுத்தள்ளு! ஒரு குழந்தை பலூனைப் பிடித்திருந்தது. கையை லேசாகத் திறக்க, பலூன் பறந்தே போய்விட்டது. பறிபோன பலூனையே நினைத்து அக்குழந்தை கதறிக்கொண்டிருந்தது – இன்னொன்று கையில் கிடைக்கும்வரை. அந்த நிலையில்தான் நம்மில் பலரும் இருக்கிறோம், வளர்ந்தபின்னரும். பலூனுக்குப் பதில் நினைவுகள். அவை இன்பம் அளிப்பனவாக இல்லாவிட்டாலும், கைவிட்டுப் போகாமல் அவைகளை கெட்டியாகப் பிடித்து வைத்துக்கொள்ள முயற்சிக்கிறோம். ஒன்று போனால், இன்னொன்று. அடுத்து என்ன செய்வது என்று புரியாததால் இந்தக் குழப்பம். சில சமயம், மீளாத்துயர். பொதுவாகவே, நாம் அனுபவித்த துன்பம் சம்பந்தமான எதையோ கேள்விப்படும்போதோ, படிக்கும்போதோ பழைய நினைவுகள் வந்து அலைக்கழிக்கும். விவாகரத்துபற்றி நான் எழுத, என்னைத் தொடர்புகொண்டு, தன் அவல வாழ்க்கையை நெடுநேரம் பகிர்ந்துகொண்டாள் ஒரு பெண்மணி. கதை கணவனது நீண்ட காலக் கொடுமையைத் தாங்கமுடியாது போனாலும், தன் குழந்தைகள் சற்று பெரியவர்களானதும் விலகலாம் என்று நிச்சயித்திருந்தாள் யமுனா. இறுதியில் விவாகரத்து பெற்றாள். ஆனாலும், அவர்பால் எழுந்த வெறுப்பை மறக்க முடியவில்லை. பிறரது செயல்களையோ, சொற்களையோ நாம் கட்டுப்படுத்த முடியாது. ஆனால், நம்மையே கட்டுப்படுத்திக்கொள்ள முடியும். அப்படிச் செய்தால்தான் நிம்மதி கிட்டும். ‘இத்தனை காலமாக எதற்காக இப்படி ஒருவரைப் பொறுத்திருந்தோம்! எவ்வளவு மடத்தனம்!’ என்று மனதிற்குப் பட்டாலும், நம்மையே மன்னித்துக்கொண்டால்தான் அமைதி கிட்டும். பிறரை வெறுப்பதால் எந்தப் பலனுமில்லை. அவர் நம் எண்ணத்தால் மாறப்போவதுமில்லை. ‘கணவன் எப்படி இருந்தால் என்ன, இனி அவன் என்றும் நம்மைப் பாதிக்க முடியாது!’ என்று விட வேண்டியதுதான். “இப்போது என்ன செய்கிறீர்கள்?” என்று யமுனாவை நிகழ்காலத்திற்கு இழுத்துவந்தேன். நல்லவேளை, அவள் மாற்றத்துக்கு அஞ்சி ஒடுங்கவில்லை. தன் புதிய தொழிலைப்பற்றி, குழந்தைகளைப்பற்றி உற்சாகமாகப் பேசினாள். நாம் கடந்தகால நினைவுகளையே அசைபோட்டுக்கொண்டிருந்தால், நிகழ்காலம் நரகமாகிவிடாதா! அத்துடன், எதிர்காலத்திற்கான ஆயத்தங்களையும் செய்ய முடியாது போகிறது. இருப்பினும், சில நிகழ்வுகளை, ‘விட்டுத்தள்ளு!’ என்று ஒதுக்க முடிவதில்லையே! கதை என் ஒரே மகன் சசி நீரில் மூழ்கி இறந்தபின், குடும்பத்தாருடன் நான் அவனைப்பற்றியே பேசிக்கொண்டிருந்தேன். அப்போதெல்லாம் நான்கு வயதே ஆன சசி எங்களுடனேயே இருப்பதுபோன்ற ஒரு திருப்தி, மகிழ்ச்சி, உற்சாகம் – எல்லாருக்குமே. பிறகு கவுன்சிலர்போன்ற ஒரு தோழி எனக்காக நேரத்தை ஒதுக்கினாள். எதிர்பாராத சம்பவம் என்பதால் அதன் பாதிப்பு மிகுந்த அதிர்ச்சியை அளித்திருந்திருந்தது. ஏழு மாதங்களுக்குப்பின், ’நீங்கள் சொன்னதையே திரும்பத் திரும்பச் சொல்கிறீர்கள். இவையெல்லாம் அற்புதமான நினைவுகள். காலப்போக்கில் மறந்துவிடுமே! அவைகளை எழுதிவைங்கள்!” என்றபோது, அயர்ச்சியாக இருந்தது. மறக்கக்கூடியவையா அவை! “ஆங்கிலத்திலா! எப்படி எழுதுவது?” “என்னிடம் சொல்வதுபோலவே!” குழந்தை என் பக்கத்தில் இல்லாவிட்டால் என்ன! எவ்வளவோ மகிழ்ச்சியான தருணங்களை அவனுடன் கழித்திருந்தேனே! அப்படி ஆரம்பித்தது இருநூறு பக்கங்களில் நிறைவடைந்தது. Through My Heart என்ற தலைப்பில், nirurag@wordpress.com என்ற தளத்தில் முப்பது ஆண்டுகளுக்குப்பின் வெளியிட்டேன். உலகின் பல பாகங்களிலிருந்தும் கடிதங்கள் வந்தன. பிறரும் என்னுடன் சேர்ந்து கலங்குகிறார்கள் என்பது சொல்லமுடியாத ஆறுதலை அளித்தது. என் துக்கம் சற்றே குறைந்தது. பெற்ற குழந்தையை இழந்த சில தாய்மார்களைப்போல் நான் பூஜை அறையைவிட்டே வெளியே வராது, நிம்மதி தேட முயற்சிக்கவில்லை. அன்றாட வாழ்க்கையில் ஈடுபட்டிருந்தேன். அதனால் எதிர்காலத்தைப்பற்றியும் யோசிக்க முடிந்தது. காதல் தோல்வியா? விடு! காதல், திருமணம் ஆகியவைகளில் தோல்வி அடைந்தவர்கள், ‘விடு!’ என்ற மனப்பான்மை இருந்தால்தான் முன்னேற முடியும். ஒரு பெண்ணால் விரக்தி அடைபவர்களில் பலருக்கு எல்லாப் பெண்களுமே நம்பத் தகாதவர்கள் என்ற அச்சம் ஏற்பட்டுவிடுகிறது. இப்படிப்பட்ட இருவர் தம் கதையை என்னுடன் பகிர்ந்துகொண்டிருக்கிறார்கள், வெவ்வேறு தருணங்களில். “சில பெண்களுக்கு எவ்வளவுதான் சுதந்திரம் கொடுத்தாலும், கணவனை ஏசிப் பேசுகிறார்களே!” என்று ஆரம்பித்திருந்தார் ஒருவர். குறுக்கே சில கேள்விகள் கேட்டு, சரியாகப் புரிந்துகொள்ள முயற்சித்தேன். (சிலர் வாய்மூடி, தலையாட்டியபடி கேட்டுக்கொள்வார்கள். அம்முறை ஆறுதல் தருவதில்லை என்று கூறினார் அவர்). அதன்பின், “உங்களிடம் என் கதையைச் சொல்ல வேண்டுமே!” என்றார், கெஞ்சலாக. அவர் கதையை முழுமையாகக் கேட்டுவிட்டு, “நடந்ததையே நினைத்து வருத்தப்படாதீர்கள். இன்னொரு கல்யாணம் பண்ணிக்கொள்ளுங்கள்!” என்று சமாதானப்படுத்தினேன். ஒரேமாதிரி இருவரும் பதிலளித்தார்கள்: “ஐயோ, வேண்டாம்பா!” ஒருவரை அவர் இருப்பதுபோலவே ஏற்காதவர்களைப்பற்றி எண்ணிக் குழம்பி, நேரத்தை வீண்டிப்பானேன்! நம் அருகில் இல்லாவிட்டாலும், அப்படிப்பட்டவர் நம்மைக் கட்டுப்படுத்திக்கொண்டேதான் இருப்பார். நமக்குப் பிடிக்காத ஒருவருக்கு எதற்காக அந்த உரிமையைக் கொடுக்க வேண்டும்? கதை எனக்கு ஒரு அமெரிக்க தம்பதிகள் நண்பர்களாக இருந்தார்கள். எங்கள் வீட்டு விருந்துக்கு அழைத்தபோது, அவர்களுடைய நெருக்கத்தைக் கண்டு வியந்திருக்கிறேன். லூசி தன் நாட்டுக்குத் திரும்பிய பின்னரும், எங்கள் நட்பு தொடர்ந்தது. கோலாலம்பூரில் இரவு நேரங்களில் கோல்ஃப் ஆடப்போவதாகச் சொல்லி, கிளப்பில் வேலைபார்த்த ஒரு சீனப்பெண்ணுடன் கணவர் உறவு வைத்துக் கொண்டிருந்ததை அறிந்து விவாகரத்து செய்துவிட்டதாக எழுதியிருந்தாள். அதன்பின், ஒரு வயோதிகரை மணம் செய்துகொண்டாள். இருந்தும், ‘தன்னை நம்பச்செய்து ஒருவன் ஏமாற்றிவிட்டானே!’ என்று முதல் கணவர்மீது கொண்ட ஆத்திரம் அடங்கவில்லை. என் அமெரிக்கப் பயணத்தின்போது, நான் லூசியுடன் தொலைபேசியில் தொடர்புகொண்டேன். திக்கித் திக்கிப் பேசினாள். ‘உன்னை யார் அழைக்கச் சொன்னது?’ என்பதுபோலிருந்தது அவள் பேசிய முறை. எனக்கு ஒன்றும் புரியவில்லை. விவாகரத்து ஆன இன்னொரு பெண்மணி சமாதானமாகக் கூறினாள்: “அவள் பேசிய விதத்திற்கும் உனக்கும் சம்பந்தமில்லை. ‘மலேசியா’ என்ற வார்த்தை காதில் விழுந்ததுமே அவளுக்கு கடந்தகாலக் கசப்புகள் மேலெழுந்துவிட்டன!” பழையன கழிதலும் புதியன புகுதலும்தான் வாழ்க்கைத் தத்துவம். அதனால்தான் இந்துக்களின் போகி பண்டிகையின்போது, பழைய சாமான்களை எரிப்பதைப் பழக்கமாக வைத்திருக்கிறார்கள். சீனர்களும் அப்படித்தான். “துடைப்பம், முறம், பழைய தினசரி எல்லாவற்றையும் ஏன் குப்பைமாதிரி வீட்டின் முன்வாசலிலேயே ஓரமாகக் குவித்து வைத்திருக்கிறார்கள்?” என்று நான் உறவினர் ஒருவரைக் கேட்டபோது, “பண்டிகைக்குமுன் எரிப்பார்கள்,” என்று பதில் வந்தது. பழங்குப்பைகளோடு நம்மை வாட்டும் நினைவுகளையும் ஒதுக்கினால், ‘உரக்கச் சிரித்தால்தான் மகிழ்ச்சி!’ என்ற பொய்யான நிலைமை மாறும். எங்களைப் பற்றி - Free Tamil Ebooks மின்புத்தகங்களைப் படிக்க உதவும் கருவிகள்: மின்புத்தகங்களைப் படிப்பதற்கென்றே கையிலேயே வைத்துக் கொள்ளக்கூடிய பல கருவிகள் தற்போது சந்தையில் வந்துவிட்டன. Kindle, Nook, Android Tablets போன்றவை இவற்றில் பெரும்பங்கு வகிக்கின்றன. இத்தகைய கருவிகளின் மதிப்பு தற்போது 4000 முதல் 6000 ரூபாய் வரை குறைந்துள்ளன. எனவே பெரும்பான்மையான மக்கள் தற்போது இதனை வாங்கி வருகின்றனர். ஆங்கிலத்திலுள்ள மின்புத்தகங்கள்: ஆங்கிலத்தில் லட்சக்கணக்கான மின்புத்தகங்கள் தற்போது கிடைக்கப் பெறுகின்றன. அவை PDF, EPUB, MOBI, AZW3. போன்ற வடிவங்களில் இருப்பதால், அவற்றை மேற்கூறிய கருவிகளைக் கொண்டு நாம் படித்துவிடலாம். தமிழிலுள்ள மின்புத்தகங்கள்: தமிழில் சமீபத்திய புத்தகங்களெல்லாம் நமக்கு மின்புத்தகங்களாக கிடைக்கப்பெறுவதில்லை. ProjectMadurai.com எனும் குழு தமிழில் மின்புத்தகங்களை வெளியிடுவதற்கான ஒர் உன்னத சேவையில் ஈடுபட்டுள்ளது. இந்தக் குழு இதுவரை வழங்கியுள்ள தமிழ் மின்புத்தகங்கள் அனைத்தும் PublicDomain-ல் உள்ளன. ஆனால் இவை மிகவும் பழைய புத்தகங்கள். சமீபத்திய புத்தகங்கள் ஏதும் இங்கு கிடைக்கப்பெறுவதில்லை. எனவே ஒரு தமிழ் வாசகர் மேற்கூறிய “மின்புத்தகங்களைப் படிக்க உதவும் கருவிகளை” வாங்கும்போது, அவரால் எந்த ஒரு தமிழ் புத்தகத்தையும் இலவசமாகப் பெற முடியாது. சமீபத்திய புத்தகங்களை தமிழில் பெறுவது எப்படி? சமீபகாலமாக பல்வேறு எழுத்தாளர்களும், பதிவர்களும், சமீபத்திய நிகழ்வுகளைப் பற்றிய விவரங்களைத் தமிழில் எழுதத் தொடங்கியுள்ளனர். அவை இலக்கியம், விளையாட்டு, கலாச்சாரம், உணவு, சினிமா, அரசியல், புகைப்படக்கலை, வணிகம் மற்றும் தகவல் தொழில்நுட்பம் போன்ற பல்வேறு தலைப்புகளின் கீழ் அமைகின்றன. நாம் அவற்றையெல்லாம் ஒன்றாகச் சேர்த்து தமிழ் மின்புத்தகங்களை உருவாக்க உள்ளோம். அவ்வாறு உருவாக்கப்பட்ட மின்புத்தகங்கள் Creative Commons எனும் உரிமத்தின் கீழ் வெளியிடப்படும். இவ்வாறு வெளியிடுவதன் மூலம் அந்தப் புத்தகத்தை எழுதிய மூல ஆசிரியருக்கான உரிமைகள் சட்டரீதியாகப் பாதுகாக்கப்படுகின்றன. அதே நேரத்தில் அந்த மின்புத்தகங்களை யார் வேண்டுமானாலும், யாருக்கு வேண்டுமானாலும், இலவசமாக வழங்கலாம். எனவே தமிழ் படிக்கும் வாசகர்கள் ஆயிரக்கணக்கில் சமீபத்திய தமிழ் மின்புத்தகங்களை இலவசமாகவே பெற்றுக் கொள்ள முடியும். தமிழிலிருக்கும் எந்த வலைப்பதிவிலிருந்து வேண்டுமானாலும் பதிவுகளை எடுக்கலாமா? கூடாது. ஒவ்வொரு வலைப்பதிவும் அதற்கென்றே ஒருசில அனுமதிகளைப் பெற்றிருக்கும். ஒரு வலைப்பதிவின் ஆசிரியர் அவரது பதிப்புகளை “யார் வேண்டுமானாலும் பயன்படுத்தலாம்” என்று குறிப்பிட்டிருந்தால் மட்டுமே அதனை நாம் பயன்படுத்த முடியும். அதாவது “Creative Commons” எனும் உரிமத்தின் கீழ் வரும் பதிப்புகளை மட்டுமே நாம் பயன்படுத்த முடியும். அப்படி இல்லாமல் “All Rights Reserved” எனும் உரிமத்தின் கீழ் இருக்கும் பதிப்புகளை நம்மால் பயன்படுத்த முடியாது. வேண்டுமானால் “All Rights Reserved” என்று விளங்கும் வலைப்பதிவுகளைக் கொண்டிருக்கும் ஆசிரியருக்கு அவரது பதிப்புகளை “Creative Commons” உரிமத்தின் கீழ் வெளியிடக்கோரி நாம் நமது வேண்டுகோளைத் தெரிவிக்கலாம். மேலும் அவரது படைப்புகள் அனைத்தும் அவருடைய பெயரின் கீழே தான் வெளியிடப்படும் எனும் உறுதியையும் நாம் அளிக்க வேண்டும். பொதுவாக புதுப்புது பதிவுகளை உருவாக்குவோருக்கு அவர்களது பதிவுகள் நிறைய வாசகர்களைச் சென்றடைய வேண்டும் என்ற எண்ணம் இருக்கும். நாம் அவர்களது படைப்புகளை எடுத்து இலவச மின்புத்தகங்களாக வழங்குவதற்கு நமக்கு அவர்கள் அனுமதியளித்தால், உண்மையாகவே அவர்களது படைப்புகள் பெரும்பான்மையான மக்களைச் சென்றடையும். வாசகர்களுக்கும் நிறைய புத்தகங்கள் படிப்பதற்குக் கிடைக்கும் வாசகர்கள் ஆசிரியர்களின் வலைப்பதிவு முகவரிகளில் கூட அவர்களுடைய படைப்புகளை தேடிக் கண்டுபிடித்து படிக்கலாம். ஆனால் நாங்கள் வாசகர்களின் சிரமத்தைக் குறைக்கும் வண்ணம் ஆசிரியர்களின் சிதறிய வலைப்பதிவுகளை ஒன்றாக இணைத்து ஒரு முழு மின்புத்தகங்களாக உருவாக்கும் வேலையைச் செய்கிறோம். மேலும் அவ்வாறு உருவாக்கப்பட்ட புத்தகங்களை “மின்புத்தகங்களைப் படிக்க உதவும் கருவிகள்”-க்கு ஏற்ற வண்ணம் வடிவமைக்கும் வேலையையும் செய்கிறோம். FreeTamilEbooks.com இந்த வலைத்தளத்தில்தான் பின்வரும் வடிவமைப்பில் மின்புத்தகங்கள் காணப்படும். PDF for desktop, PDF for 6” devices, EPUB, AZW3, ODT இந்த வலைதளத்திலிருந்து யார் வேண்டுமானாலும் மின்புத்தகங்களை இலவசமாகப் பதிவிறக்கம்(download) செய்து கொள்ளலாம். அவ்வாறு பதிவிறக்கம்(download) செய்யப்பட்ட புத்தகங்களை யாருக்கு வேண்டுமானாலும் இலவசமாக வழங்கலாம். இதில் நீங்கள் பங்களிக்க விரும்புகிறீர்களா? நீங்கள் செய்யவேண்டியதெல்லாம் தமிழில் எழுதப்பட்டிருக்கும் வலைப்பதிவுகளிலிருந்து பதிவுகளை எடுத்து, அவற்றை LibreOffice/MS Office போன்ற wordprocessor-ல் போட்டு ஓர் எளிய மின்புத்தகமாக மாற்றி எங்களுக்கு அனுப்பவும். அவ்வளவுதான்! மேலும் சில பங்களிப்புகள் பின்வருமாறு: ஒருசில பதிவர்கள்/எழுத்தாளர்களுக்கு அவர்களது படைப்புகளை “Creative Commons” உரிமத்தின்கீழ் வெளியிடக்கோரி மின்னஞ்சல் அனுப்புதல் தன்னார்வலர்களால் அனுப்பப்பட்ட மின்புத்தகங்களின் உரிமைகளையும் தரத்தையும் பரிசோதித்தல் சோதனைகள் முடிந்து அனுமதி வழங்கப்பட்ட தரமான மின்புத்தகங்களை நமது வலைதளத்தில் பதிவேற்றம் செய்தல் விருப்பமுள்ளவர்கள் freetamilebooksteam@gmail.com எனும் முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பவும். இந்தத் திட்டத்தின் மூலம் பணம் சம்பாதிப்பவர்கள் யார்? யாருமில்லை. இந்த வலைத்தளம் முழுக்க முழுக்க தன்னார்வலர்களால் செயல்படுகின்ற ஒரு வலைத்தளம் ஆகும். இதன் ஒரே நோக்கம் என்னவெனில் தமிழில் நிறைய மின்புத்தகங்களை உருவாக்குவதும், அவற்றை இலவசமாக பயனர்களுக்கு வழங்குவதுமே ஆகும். மேலும் இவ்வாறு உருவாக்கப்பட்ட மின்புத்தகங்கள், ebook reader ஏற்றுக்கொள்ளும் வடிவமைப்பில் அமையும். இத்திட்டத்தால் பதிப்புகளை எழுதிக்கொடுக்கும் ஆசிரியர்/பதிவருக்கு என்ன லாபம்? ஆசிரியர்/பதிவர்கள் இத்திட்டத்தின் மூலம் எந்தவிதமான தொகையும் பெறப்போவதில்லை. ஏனெனில், அவர்கள் புதிதாக இதற்கென்று எந்தஒரு பதிவையும் எழுதித்தரப்போவதில்லை. ஏற்கனவே அவர்கள் எழுதி வெளியிட்டிருக்கும் பதிவுகளை எடுத்துத்தான் நாம் மின்புத்தகமாக வெளியிடப்போகிறோம். அதாவது அவரவர்களின் வலைதளத்தில் இந்தப் பதிவுகள் அனைத்தும் இலவசமாகவே கிடைக்கப்பெற்றாலும், அவற்றையெல்லாம் ஒன்றாகத் தொகுத்து ebook reader போன்ற கருவிகளில் படிக்கும் விதத்தில் மாற்றித் தரும் வேலையை இந்தத் திட்டம் செய்கிறது. தற்போது மக்கள் பெரிய அளவில் tablets மற்றும் ebook readers போன்ற கருவிகளை நாடிச் செல்வதால் அவர்களை நெருங்குவதற்கு இது ஒரு நல்ல வாய்ப்பாக அமையும். நகல் எடுப்பதை அனுமதிக்கும் வலைதளங்கள் ஏதேனும் தமிழில் உள்ளதா? உள்ளது. பின்வரும் தமிழில் உள்ள வலைதளங்கள் நகல் எடுப்பதினை அனுமதிக்கின்றன. 1. vinavu 2. badriseshadri.in 3. maattru 4. kaniyam 5. blog.ravidreams.net எவ்வாறு ஒர் எழுத்தாளரிடம் Creative Commons உரிமத்தின் கீழ் அவரது படைப்புகளை வெளியிடுமாறு கூறுவது? இதற்கு பின்வருமாறு ஒரு மின்னஞ்சலை அனுப்ப வேண்டும். துவக்கம் உங்களது வலைத்தளம் அருமை [வலைதளத்தின் பெயர்]. தற்போது படிப்பதற்கு உபயோகப்படும் கருவிகளாக Mobiles மற்றும் பல்வேறு கையிருப்புக் கருவிகளின் எண்ணிக்கை அதிகரித்து வந்துள்ளது. இந்நிலையில் நாங்கள் http://www.FreeTamilEbooks.com எனும் வலைதளத்தில், பல்வேறு தமிழ் மின்புத்தகங்களை வெவ்வேறு துறைகளின் கீழ் சேகரிப்பதற்கான ஒரு புதிய திட்டத்தில் ஈடுபட்டுள்ளோம். இங்கு சேகரிக்கப்படும் மின்புத்தகங்கள் பல்வேறு கணிணிக் கருவிகளான Desktop,ebook readers like kindl, nook, mobiles, tablets with android, iOS போன்றவற்றில் படிக்கும் வண்ணம் அமையும். அதாவது இத்தகைய கருவிகள் support செய்யும் odt, pdf, ebub, azw போன்ற வடிவமைப்பில் புத்தகங்கள் அமையும். இதற்காக நாங்கள் உங்களது வலைதளத்திலிருந்து பதிவுகளை பெற விரும்புகிறோம். இதன் மூலம் உங்களது பதிவுகள் உலகளவில் இருக்கும் வாசகர்களின் கருவிகளை நேரடியாகச் சென்றடையும். எனவே உங்களது வலைதளத்திலிருந்து பதிவுகளை பிரதியெடுப்பதற்கும் அவற்றை மின்புத்தகங்களாக மாற்றுவதற்கும் உங்களது அனுமதியை வேண்டுகிறோம். இவ்வாறு உருவாக்கப்பட்ட மின்புத்தகங்களில் கண்டிப்பாக ஆசிரியராக உங்களின் பெயரும் மற்றும் உங்களது வலைதள முகவரியும் இடம்பெறும். மேலும் இவை “Creative Commons” உரிமத்தின் கீழ் மட்டும்தான் வெளியிடப்படும் எனும் உறுதியையும் அளிக்கிறோம். http://creativecommons.org/licenses/ நீங்கள் எங்களை பின்வரும் முகவரிகளில் தொடர்பு கொள்ளலாம். e-mail : freetamilebooksteam@gmail.com FB : https://www.facebook.com/FreeTamilEbooks G +: https://plus.google.com/communities/108817760492177970948 நன்றி. முடிவு மேற்கூறியவாறு ஒரு மின்னஞ்சலை உங்களுக்குத் தெரிந்த அனைத்து எழுத்தாளர்களுக்கும் அனுப்பி அவர்களிடமிருந்து அனுமதியைப் பெறுங்கள். முடிந்தால் அவர்களையும் “Creative Commons License”-ஐ அவர்களுடைய வலைதளத்தில் பயன்படுத்தச் சொல்லுங்கள். கடைசியாக அவர்கள் உங்களுக்கு அனுமதி அளித்து அனுப்பியிருக்கும் மின்னஞ்சலைfreetamilebooksteam@gmail.com எனும் முகவரிக்கு அனுப்பி வையுங்கள். ஓர் எழுத்தாளர் உங்களது உங்களது வேண்டுகோளை மறுக்கும் பட்சத்தில் என்ன செய்வது ? அவர்களையும் அவர்களது படைப்புகளையும் அப்படியே விட்டுவிட வேண்டும். ஒருசிலருக்கு அவர்களுடைய சொந்த முயற்சியில் மின்புத்தகம் தயாரிக்கும் எண்ணம்கூட இருக்கும். ஆகவே அவர்களை நாம் மீண்டும் மீண்டும் தொந்தரவு செய்யக் கூடாது. அவர்களை அப்படியே விட்டுவிட்டு அடுத்தடுத்த எழுத்தாளர்களை நோக்கி நமது முயற்சியைத் தொடர வேண்டும். மின்புத்தகங்கள் எவ்வாறு அமைய வேண்டும்? ஒவ்வொருவரது வலைத்தளத்திலும் குறைந்தபட்சம் நூற்றுக்கணக்கில் பதிவுகள் காணப்படும். அவை வகைப்படுத்தப்பட்டோ அல்லது வகைப்படுத்தப் படாமலோ இருக்கும். நாம் அவற்றையெல்லாம் ஒன்றாகத் திரட்டி ஒரு பொதுவான தலைப்பின்கீழ் வகைப்படுத்தி மின்புத்தகங்களாகத் தயாரிக்கலாம். அவ்வாறு வகைப்படுத்தப்படும் மின்புத்தகங்களை பகுதி-I பகுதி-II என்றும் கூட தனித்தனியே பிரித்துக் கொடுக்கலாம். தவிர்க்க வேண்டியவைகள் யாவை? இனம், பாலியல் மற்றும் வன்முறை போன்றவற்றைத் தூண்டும் வகையான பதிவுகள் தவிர்க்கப்பட வேண்டும். எங்களைத் தொடர்பு கொள்வது எப்படி? நீங்கள் பின்வரும் முகவரிகளில் எங்களைத் தொடர்பு கொள்ளலாம். email : freetamilebooksteam@gmail.com Facebook: https://www.facebook.com/FreeTamilEbooks Google Plus: https://plus.google.com/communities/108817760492177970948 இத்திட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் யார்? Shrinivasan tshrinivasan@gmail.com Alagunambi Welkin alagunambiwelkin@fsftn.org Arun arun@fsftn.org இரவி Supported by Free Software Foundation TamilNadu, http://www.fsftn.org Yavarukkum Software Foundation http://www.yavarkkum.org/ உங்கள் படைப்புகளை வெளியிடலாமே உங்கள் படைப்புகளை மின்னூலாக இங்கு வெளியிடலாம். 1. எங்கள் திட்டம் பற்றி - http://freetamilebooks.com/about-the-project/ தமிழில் காணொளி - http://www.youtube.com/watch?v=Mu_OVA4qY8I 2. படைப்புகளை யாவரும் பகிரும் உரிமை தரும் கிரியேட்டிவ் காமன்ஸ் உரிமம் பற்றி - கிரியேட்டிவ் காமன்ஸ் உரிமை - ஒரு அறிமுகம் http://www.kaniyam.com/introduction-to-creative-commons-licenses/ http://www.wired.co.uk/news/archive/2011-12/13/creative-commons-101 https://learn.canvas.net/courses/4/wiki/creative-commons-licenses உங்கள் விருப்பான கிரியேட்டிவ் காமன்ஸ் உரிமத்தை இங்கே தேர்ந்தெடுக்கலாம். http://creativecommons.org/choose/ 3. மேற்கண்டவற்றை பார்த்த / படித்த பின், உங்கள் படைப்புகளை மின்னூலாக மாற்ற பின்வரும் தகவல்களை எங்களுக்கு அனுப்பவும். நூலின் பெயர் நூல் அறிமுக உரை நூல் ஆசிரியர் அறிமுக உரை உங்கள் விருப்பான கிரியேட்டிவ் காமன்ஸ் உரிமம் நூல் - text / html / LibreOffice odt/ MS office doc வடிவங்களில். அல்லது வலைப்பதிவு / இணைய தளங்களில் உள்ள கட்டுரைகளில் தொடுப்புகள் (url) இவற்றை freetamilebooksteam@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்பவும். விரைவில் மின்னூல் உருவாக்கி வெளியிடுவோம். நீங்களும் மின்னூல் உருவாக்கிட உதவலாம். மின்னூல் எப்படி உருவாக்குகிறோம்? - தமிழில் காணொளி - https://www.youtube.com/watch?v=bXNBwGUDhRs இதன் உரை வடிவம் ஆங்கிலத்தில் - http://bit.ly/create-ebook எங்கள் மின்னஞ்சல் குழுவில் இணைந்து உதவலாம். https://groups.google.com/forum/#!forum/freetamilebooks நன்றி !