[]       இந்து திருமணம் சடங்குகளும் தத்துவங்களும்     தாமரைச் செல்வன்   மின்னூலாக்கம் : சீ.ராஜேஸ்வரி -  sraji.me@gmail.com  வெளியிடு : FreeTamilEbooks.com    உரிமை : Public Domain – CC0  உரிமை – கிரியேட்டிவ் காமன்ஸ். எல்லாரும் படிக்கலாம், பகிரலாம்.                                  பதிப்பு :                   முதற் பதிப்பு வெளியீடு :             2018   விலை: இந்தியா: 249 ரூபாய் சிங்கப்பூர்: 12 SGD  பதிப்பகங்கள்:                                 Singapore: notionpress.com:                                      https://tinyurl.com/hindu-notion                                 India: pothi.com:                                     https://tinyurl.com/hindu-pothi வினியோகம்:                                  Amazon.in:                                    https://tinyurl.com/amazon-marriage                                                                   Flipkart.com:                                    https://tinyurl.com/flipkart-marriage      ஆசிரியர் முகவரி : S. Thamarai Selvan 211, VRR Heritage Apartments Doddanekkundi, Marathahalli P.O Bangalore – 560037 Karnataka State, India. மின்னஞ்சல் : stselvan@yahoo.com                                  பொருளடக்கம் சமர்ப்பணம் 6  கடவுள் வாழ்த்து 8  நன்றி! 11  1. மதிப்புரை 12  2. வாழ்த்துரை 13  3. முன்னுரை 14  4. ஒரு கேள்வியில் உதித்த சிந்தனை 16  5. திருமணம் 19  6. இல்லறம் 22  7. திருமண வகைகள் 24  8. திருமணத்திற்கு முந்தைய படிகள் 26  8.1 ஜாதகப் பொருத்தம் பார்த்தல் 27  8.2 பெண்பார்த்தல் 31  9. திருமணக் கிரியைகள் 33  9.1 நிச்சயதார்த்தம் 35  9.2 பரிசம் போடுதல் 37  9.3 சொந்தம் / நலங்கு செய்தல் 38  9.4 . தாலி செய்தல் / பொன்னுருக்கல் 40  9.5. மங்கலப் பொருட்கள் வாங்குதல் 42  9.6 . முகூர்த்தக் கால் நடுதல் 44  9.7. முளைப்பாலிகை இடுதல் 46  9.8. பந்தல் அமைத்தல் 47  9.9. மணமக்கள் அழைப்பு 48  9.9.1 மணமகள் அழைப்பு 49  9.9.2. மாப்பிள்ளை அழைப்பு 50  9.10 காசி யாத்திரை 51  9.11 குடஜீராரோஹணம் 52   9.12 தேவதா பிரஸ்தம் 54  9.13. கங்கண தாரணம் 55  9.14. நாந்தி - சிரார்த்தம் செய்தல் 56   9.15 பிரம்மோபதேசம் 58  9.16. சகல தேவதா பூஜை 59   9.17. மாலை மாற்றுதல் 61  9.18. பாணிக்கிரகணம் (கைப்பிடித்தல்) 62  9.19 கன்யாதானம் 63  9.20மாங்கல்ய தாரணம் 65  9.21 ஏழடி நடத்தல் 68  9.22 அம்மி மிதித்தல் 70  9.23 அருந்ததி பார்த்தல் 71  9.24 அட்சதாரோபணம் 73  9.25 சுகாசினி தானம் 75  9.26 கங்கணம் அவிழ்த்தல் 76  9.27 தாம்பூலம் 77  10. விருந்து 78  11. விளையாட்டுகள் 79  12. தாம்பூலப் பை! 82   13. பின்னிணைப்பு 1 : சமஸ்காரங்கள் 83  13.1 சோடஸ சமஸ்காரங்கள் 83   13.2 சஷ்டியப்த பூர்த்தி 87   13.3 சதாபிஷேகம் 88  14. பின்னிணைப்பு 2 : கர்மங்கள் 89  15. பின் இணைப்பு 3 : திருமணங்கள் 90  16. பின் இணைப்பு 4 : கடமைகள், யாகங்கள் 91  17. பின் இணைப்பு 5 : சோடஸ உபச்சாரங்கள் 92  18. பின் இணைப்பு 6 : பஞ்ச சூத்திரங்கள் 93   19 . பின் இணைப்பு 7 : சீதனம் 94  20. பின் இணைப்பு 8 : தாம்பூலத் தட்டு 96  சமர்ப்பணம்   முன்னை முதற்பொருள் தன்னருள் முக்தியும் அன்னைத் திருவடி ஆங்கு. நம் அனைவருக்கும் முன்னதான, முதற் பொருளாகிய இறைவன், அவன் அளிக்கின்ற அருளாகிய முக்தி,  ஆகிய அனைத்தும் அன்னையின் திருவடியிலேயே உள்ளன. தந்தையார் தந்ததால்  தந்ததைத்  தந்திட்டேன் சிந்தனைச்  சித்துவி தைத்து. தந்தை என்பவரே தருபவர்களில் முதன்மையானவர். அவர் தம் மகவிற்குத் தன்னையே தந்து விடுகிறார்.  அப்படிப்பட்ட தந்தையே  மகவுக்கு சிந்தனையைத் தருகிறார்.  அவர் எனக்குக் கொடுத்த சிந்தனை விதைகளை மனதில் விதைத்து அதன் பலன்களையே யாவர்க்கும் தருகிறேன்.   முன்னறி தெய்வங்களான என் தாய் தந்தையர் வருதம்மாள் - சித்தேஸ்வரன் []       []                             ஆகியோருக்கு இந்நூல் சமர்ப்பணம் []                                                   நற்குடியிற் பிறந்து அண்டினோரை அரவணைத்து வாழவைத்த குலவிளக்கு! ஒழுக்கம், அன்பு, வாய்மை,  ஈகை, இனியசொல், மென்மை, பணிவு, உள்ளத்தூய்மை, சாந்தம், கருணை எனும் நற்குணங்களின் இருப்பிடமான பள்ளிபாளையம் வி. பழனிசாமி செட்டியார் (வாபா)   அவர்களுக்கு இந்நூல் சமர்ப்பணம்                                 கடவுள் வாழ்த்து கணபதி துதி வழங்கியவர்: சித்திரகவி கி. பிள்ளார் செட்டி     []                             வாதாபி வாசனேவா தந்தபாசா பாதந்த   வானேச வாபிதா வா   பொருள்: வாதாபில் வசிப்ப்வனே வருக! தந்தம், பாசம் ஆகியவற்றை ஆயுதங்களாகக் கொண்டவனே வருக! பா என்னும் மகாபாரதத்தைத் தந்தவனே! அன்பர்களிடம் நேசத்ததைக் கொண்டவனே! அனைத்துயிர்களுக்கும் தந்தையாய், மூலமாய் விளங்குபவனே! வருக! வருக!! மாலை மாற்று: முன்னிருந்து படித்தாலும் பின்னிருந்து படித்தாலும் ஒரே செய்யுளே வருமாறு அமைக்கப்பட்ட சித்திர கவிதை.               முருகன் துதி வழங்கியவர்: சித்திரகவி கி. பிள்ளார் செட்டி   நாகம் – 1        வெண்பா - 1 அருளின் திருவுருவே! அன்பருக்கோ மின்பம் பெருகிடவே செய்யும் பெம்மானே! – முருகனே குன்றேரு மையா! குறைவறு நற்பொரு ளின்றே பெருக அருள். []   நாகம் – 2 வெண்பா - 2 பொருவில் திருவுருவோய்! பொன்மைக் குறமான் நெருங்கிநின் றேஅணைக் கும்நற் – பொருளோனே!   மால்தரும் மாயோன் மருகனே! சீருமை வேலுரு வாக மெழுது.   பொருள்: வெண்பா 1   கருணையின் வடிவமானவனே! உனது அன்பர்களுக்கு என்றும் இன்பத்தையே பெருகச் செய்கிறாய் பெருமானே! அழகனே, குன்றுகளில் ஏறி அமர்ந்த தலைவனே! நீ எனக்கு அருள வேண்டியது ஒன்றுதான். அதுவும் இன்றுதான். அந்தப் பொருள் என்றும், எதனாலும் குறைவுபடாத, மாசுறாத, சேதமோ  அடையாத நன்மையை மட்டுமே கொண்ட உன் அருள் மட்டுமே. அதைப் பெருக்கி அருள்வாயாக. வெண்பா 2 ஒப்பில்லா திருமேனியைக் கொண்டவனே! பொன்மயமான மானைப் போன்ற குறத்தியாம் வள்ளியம்மையை காதலால் நெருங்கிச் சேர்ந்து  அணைப்பவனே! நன்மை தரும் அனைத்துச் செல்வங்களையும் உடையோனே!  மயக்கந்தரும் மாயங்களை புரியும் விஷ்ணுவின் மருமகனே! சீர்மிகும் உமை தந்த வேலைக் கொண்டவனே! அன்னை தந்த அனத வேலின் உருவம் போன்றே என் ஆகமான உடலையும் உறுதியானதாக ஆக்குவாயாக.   இரட்டை நாக பந்தனம்: இரு நாக பிணையல் வடிவலான சித்திரத்தில் அடங்குமாறு இரு தனித்தனி வெண்பாக்களை இயற்றி அமைத்த சித்திர கவிதை. இரட்டை நாக பந்தனம். நாகத்தின் தலையிலிருந்து தொடங்கி வால்வரையில் வெண்பாவின் எழுத்துக்கள் அடங்கும்.                                     நன்றி! []       இந்தப் புத்தகத்தை எழுத வேண்டுகோள் வைத்த புலம் பெயர் தமிழ் நண்பர் ஃபிரான்ஸைச் சேர்ந்த மயூரன் கணேசன்(அமரன்) இந்தப் புத்தகத்தை முழுவதும் படித்து, ஆராய்ந்து திருத்தங்கள் சொன்ன தமிழ்மன்ற நண்பர்   ஆங்கரை சேதுராமன் (கரிகாலன் ஜி) இந்தப் புத்தகத்தை முழுவதும் படித்து, மதிப்புரையும் வாழ்த்துரையும் தந்த    ‘சித்திரக் கவி’ புலவர். கி. பிள்ளார் செட்டி  கீதம் மதிவாணன் இப்புத்தகத்திற்கான அட்டைப்படம் வரைந்தளித்து வடிவமைப்பில் உதவிய நண்பர் திருப்பூர் ரவிக்குமார் (ஆதவன்)                             1. மதிப்புரை   இந்து திருமணம் என்கின்ற இந்நூலை முந்து தமிழில் மொழிந்திட்டார் – விந்தைமிகு தாமரைச் செல்வனிவர் தாரணியில் ஓங்கிவாழ “பா”மறையால் வாழ்த்துரைத் ‘தேன்’   ‘இந்து திருமணம்’ என்னும் இந்(த)நூலைப் படித்துப் பார்த்தேன்; படி(த்)தேன் குடித்தேன். “திருமணம் என்றால் என்ன?” என்பதில் தொடங்கி, “தாம்பூலப் பை” வழங்கி வழியனுப்புதல் வரை உள்ள அனைத்து திருமணச் சடங்குகளையும் அறிவாற்றலுடன் ஆய்ந்ததுடன் அவற்றின் தத்துவ விளக்கங்களையும் வித்தகமாய்த் தந்துள்ளார் நூலாசிரியர். “இல்லறம்” என்னும் தலைப்பில் உள்ள கருத்துகள் இல்லறத்தான். இல்லாள் ஆகியோரின் ஈடில்லாப் பெருமையைச் சுட்டுகின்றன. இவனுக்கு அவள் துணை, அவளுக்கு இவன் துணை; ஒருவருக்கொருவர் துணைவராக இந்த இல்லற இணையரே மற்ற மூவர்க்கும் (பிரம்மச்சாரி, சன்னியாசி, வானப்பிரத்தன் ஆகியோர்க்கு) துணைவராக உள்ளதைத் தெள்ளுதமிழில் தெளிவுபடத் தந்துள்ளார் இவர். ஜாதகப் பொருத்தம் பார்ப்பதைப் பற்றிய இவரது விஞ்ஞானப் பார்வை வித்தியாசமாகவும் சிந்திக்க வைப்பதாகவும் உள்ளது. சுயநலத்திற்காக ஜாதகத்தை மாற்றி எழுதிக் கொடுத்து விட்டால் ஜாதகப் பொருத்தம் அல்லல் தரும் பாதகப் பொருத்தமாக அல்லவா மாறிவிடும்?  என்று அனைவருக்கும் எச்சரிக்கையும் விடுத்துள்ளார் இவர். இந்து திருமணம் தொடர்பான ஆன்மீக அணுகு முறைகளையும், விஞ்ஞான அணுகு முறைகளையும் இந்நூலில் பரவலாகக் காணமுடிகிறது. இந்து திருமணங்களில் பரவலாகக் கடைபிடிக்கப்படும் தெய்வ வழிபாடுகள் முன்னோர் வழிபாடுகள், பொன்னுருக்கல்,  மாப்பிள்ளை அழைப்பு, பெண் அழைப்பு, அரசாணிக்கால் நடுதல், வேள்வி செய்தல், தெய்வங்கள், சான்றோர்கள், அக்னி, ஆகாயம், பூமி, அனைத்து குலத்தோர் ஆகியோரை சாட்சியாக்கி திருமணம் செய்வது என அனைத்து அம்சனங்களையும் ஆய்வு செய்துள்ள அம்சமான நூல் இது. திருமண விருந்து தொடர்பான விளக்கங்களும் அருமை; ஆறாத சுவைமிகு அறுசுவை அவை. இந்து திருமணச் சடங்குகள் அனைத்தும் மூட நம்பிக்கைகள் அல்ல. அவை வாழ்விற்கு வழிகாட்டும் கைகாட்டி மரங்கள் என்னும் இந்நூல் வரிகள், வைர வரிகளாக மின்னுகின்றன. கடைசியில் வரும் பின் இணைப்பு, பின் இணைப்பன்று. பொன் இணைப்பு அது. மொத்தத்தில் இந்து திருமணம்: சடங்குகளும் தத்துவங்களும்   என்னும் இந்த நூலை சீதனமாக.....   தாம்பூலத் தட்டில் வைத்து நமக்குத் தந்துள்ளார் ஆசிரியர். தாமரைச் செல்வன் தந்துள்ள இந்நூல் தா(ம்) மறையாச் செல்வமாக அனைவரின் மனத்திலும் மலர்ந்து மணம் வீசிட நற்றமிழில் வாழ்த்தி மகிழ்கின்றேன்.   ‘சித்திரகவி’ புலவர். கி. பிள்ளார் செட்டி எம். ஏ; பி எட்  தமிழ் முதுகலையாசான் (ஓய்வு)     திருமணச் சடங்குகள் குறித்த தெளிவான விளக்கங்களும் சிந்தனைகளும் அடங்கிய இந்நூல், திருமணம் மற்றும் குடும்பவாழ்வு குறித்த நம்பிக்கையும் பிடிப்பும் சிதைந்துவரும் இன்றைய அவசர யுகத்துக்கு மிகவும் அவசியமான ஒன்று. பிடிக்கவில்லை என்றால் கழற்றி எறியும் ஆடை போல அல்ல திருமண பந்தம் என்பதை ஒவ்வொருவரும், முக்கியமாக இளைய தலைமுறையினர் உணர்ந்து புரிந்துகொண்டு, இல்லற வாழ்வை சிறப்பாக அமைத்துக்கொள்ள உதவும் அழகான வாழ்க்கைக் கையேடு என இந்நூலைக் குறிப்பிடலாம்.   பெற்றோர் பார்த்துவைக்கும் திருமணமுறை குறித்த விளக்கமும் காரணங்களும் வித்தியாசமான சிந்தனை. இந்த அரேஞ்ச்டு மேரேஜ் குறித்த கேள்வியை ஆஸ்திரேலியா வந்தபிறகு ஆச்சர்யத்தோடு பலமுறை எதிர்கொண்டிருக்கிறேன். எனக்குமே அது ஆச்சர்யம்தான். திருமணத்துக்கு முன், நானோ என் கணவரோ புகைப்படம் தவிர நேரில் ஒருவரை ஒருவர் பார்த்ததில்லை. நேரடியாக மணமேடையில் தாலிகட்டும் சமயத்தில்தான் நாங்கள் பரஸ்பரம் அறிமுகமானோம். முன்பின் அறியாத ஒருவரோடு வாழ்க்கை எப்படி அமையப்போகிறதோ என்ற பயமும் சந்தேகமும் நாளடைவில் அன்பும் காதலுமாக மாறி, ஊடலும் கூடலுமாக இழையோடி.. இதோ..  வெற்றிகரமாக வெள்ளிவிழாவை நெருங்கிவிட்டது எங்கள் திருமண வாழ்க்கை. நூலில் குறிப்பிடப்பட்டிருப்பது போல சமூகக் கட்டமைப்பின் மீதான அசைக்க முடியாத நம்பிக்கைதான் காரணம். ஜாதகப் பொருத்தம் பார்ப்பது, தாலி செய்வது போன்ற சடங்குகளின் பின்னாலிருக்கும் காரணங்களை அறிய முடிந்தது. அவற்றோடு முகூர்த்தக்கால் நடுதல், முளைப்பாலிகை விடுதல், கங்கணம் கட்டுதல், திருமண விளையாட்டுகள் என ஒவ்வொன்றுக்குமான விளக்கம் அருமை. அரசாணிக்கால் என்பதன் உண்மைப்பொருள் இப்போதுதான் விளங்கியது.   இந்து திருமணச் சடங்குகளில் காசி யாத்திரை, நாந்தி, பிரம்மோபதேசம் போன்றவை பொதுவான தமிழர் திருமண வகையுள் சேராது எனினும் அவை குறித்த விளக்கங்கள் பற்றி அறிந்துகொள்ள இந்நூல் ஒரு நல்ல வாய்ப்பாக உள்ளது. காசி யாத்திரை என்பதை ஒரு விளையாட்டு போல அர்த்தம் புரியாமல் பார்த்து ரசித்த பலருக்கும் அதன் பொருள் புரியும்போது இன்னும் ஆழமாய் ரசிக்கமுடியும். திருமணச்சடங்குகளின்போது ஓதப்படும் மந்திரங்களை அவற்றின் பொருள் புரிந்துசொல்லும்போது நிச்சயம் நல்ல பலன் இருக்கும். நூலின் பின்னிணைப்புகளாக.. சீமந்தம் முதல் சதாபிஷேகம் வரையிலான சடங்குகள் குறித்தத் தகவல்கள் கூடுதல் சிறப்பம்சங்கள். இந்து திருமணச் சடங்குகள் ஒவ்வொன்றையும் பற்றி நன்றாக அறிந்துகொண்டு உளப்பூர்வமாகவும் உணர்வு பூர்வமாகவும் செயல்பட இது ஒரு அருமையான கையேடு. வாழ்த்துகள் கீதா மதிவாணன், ஆஸ்திரேலியா கவிஞர் / கதாசிரியர் / கட்டுரையாளர் இயற்கை கூர்நோக்கர்             திருமணம் என்றால் என்ன? திருமணம் என்பது இல்லற வாழ்க்கைக்கான இண்டக்சன் கோர்ஸ். அதாவது இல்லற வாழ்வின் கடமைகளை, உரிமைகளை விளக்கும் ஒரு அறிமுகப் பாடம்.  அதற்கான சின்னச்சின்ன உதாரணச் சடங்குகள் உருவாக்கப்பட்டு, அவற்றையே திருமணச் சடங்காக மாற்றி வைத்தனர் நம் பெரியோர்.  தமிழனின் வாழ்க்கை இன்று மேற்கத்திய நாகரீகத்திற்கும், தன் சுய நாகரீகத்திற்கும் இடையில் சிக்கித் தவிக்கிறது.   []                   அரசின் கல்விக் கொள்கையாலும், வேலை வாய்ப்பின் ஆர்வத்தாலும், அடிப்படைப் பண்பாடுகளை இப்பொழுதிருக்கும் தலைமுறை இழந்து கொண்டிருக்கிறது. திருமணம் அவசியமா? திருமணம் செய்து என்ன பயன்? என்று இளைய தலைமுறை கேட்பதும், அதற்கு பதில் சொல்ல முடியாமல் தவிப்பதும் அதிகமாகி விட்டது. போதாக்குறைக்கு பல சினிமா கதாநாயகர்கள் மற்றும் நகைச்சுவையாளர்கள், திருமணம் என்பது வெறும் உடல் சம்பந்தமான விஷயம் என்று சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்.  ஒரு சினிமாவில் பிரபல நட்சத்திர நகைச்சுவையாளர் ஒரு அழகான நவீன மங்கையிடம் கேட்பார், “மேடம் நீங்க ஏன் கல்யாணம் செய்துக்கலை?” அதுக்கு அந்தப் பெண் சொல்லுவார். “இதோ பாருங்க மிஸ்டர், இப்போ எனக்கு காஃபி சாப்பிடணும் போல இருந்தா, ஒரு கப் காஃபி வாங்கி சாப்பிடுவேன். அதுக்கு எதுக்கு காஃபி எஸ்டேட்டை விலைக்கு வாங்கணும்?” அப்பொழுது விவேக்கின் மனைவி அழைப்பார். உங்களை அழைக்கிறாங்களே யார் அது என்று மங்கை கேட்க, “என்னுடைய காஃபி எஸ்டேட்” என்பார் விவேக். இன்றைய “So called பகுத்தறிவாளர்”களுக்கும், நவீன மனிதர்களுக்கும் திருமணம் என்பது இப்படித்தான் புரிந்திருக்கிறது, காரணம் இல்லாமல் இல்லை. இவர்களுக்கு திருமணம், இல்லறம் என்பவை எல்லாம் என்ன என்று தெரிந்து கொள்ள விருப்பமே இருந்ததில்லை. இல்லறம் என்பதை இருவர் இணைந்து வாழ்வது என எளிதாகச் சொல்லி விடுகிறது உலகம். ஒரு ஆணும் பெண்ணும் இணைந்து வாழ்தல் இல்லறம் என்பது மேம்போக்கான சமூக நோக்கில்லாத வரையறை. சமூகத்திற்கும் திருமணத்திற்கும் என்ன சம்பந்தம்? திருமணம் என்பது ஒரு ஆண், ஒரு பெண் என்ற இரு தனிப்பட்ட நபர்களுக்கிடையேயான தனிப்பட்ட ஒப்பந்தம் அல்லவா? பகுத்தறிவுவாதிகள் இப்படித்தான் கேள்விகளைக் கேட்பார்கள். இரு தனிப்பட்ட நபர்கள் செய்து கொள்ளும் தனிப்பட்ட ஒப்பந்தத்திற்கு  சமூகம் ஏன் அங்கீகாரம் வழங்க வேண்டும்? இந்தக் கேள்விக்கு அந்தப் பகுத்தறிவாளர்கள் பதில் சொல்ல மாட்டார்கள். சமூகத்தில் தனி மனிதர்கள் அடங்க வேண்டுமே தவிர, தனிமனிதனுக்கு சமூகம் அடங்காது, அடங்கக் கூடாது.  சமூகத்திற்கும் குடும்பத்திற்கும் கொடுக்கல் வாங்கல் இருக்கத்தான் செய்கிறது. சமூகத்தில் பங்கு பெறும் ஒவ்வொருவருக்கும், சமூகத்திற்கும் மத்தியில் கடமைகள்/உரிமைகள் கொண்ட வழிகாட்டியே தர்மம் எனப்படுகிறது. ஒவ்வொரு சமுதாயத்தின் தர்மமும் இதைத் தெளிவாக விளக்குகிறது.   திருமணம் என்பது நம் நாட்டைப் பொறுத்தவரை இல்லற வாழ்வின் மகத்துவத்தையும், அதன் பொருளையும், அதன் நோக்கம், அதன் பயன் போன்ற அனைத்தையும் எடுத்துச் சொல்லும் நோக்கத்தில் அமைக்கப்பட்ட பல சம்பிரதாயங்களைக் கொண்டது ஆகும். இதனாலேயே சமுதாயங்களுக்கு ஏற்ற மாதிரி, அவரவர் பழக்க வழக்கங்களுக்கு ஏற்ற மாதிரி பல வேறுபாடுகள் திருமணச் சடங்குகளில் வந்தன. ஆரிய மாயை என்ற பெயரில் திராவிட மாயையை நம் தமிழர்கள் மேல் போர்த்தி வைத்திருப்பதால் எதிலெல்லாம் சமஸ்கிருத உபயோகம் இருக்கிறதோ எல்லாம் ஆரியச் சடங்கு என்று ஒதுக்கி விடுகிறார்கள் நவீன தமிழர்கள். உதாரணமாக காளையை அடக்குதல் போன்ற போட்டிகளில் வென்று பெண்ணை மணமுடிப்பது ஆர்ஷூவ விவாகம் என்று சாணக்கியரின் அர்த்த சாஸ்திரத்திலே சொல்லப்பட்டு இருக்கிறது. இந்துமதம் சொல்லும் தர்ம-அர்த்த-காம என்பதையே வள்ளுவர் அறத்துப்பால், பொருட்பால், காமத்துபால் என எழுதி இருக்கிறார். பல சடங்குகளின் கோர்வை, தமிழர் திருமணங்களில் அப்படியே ஒரே போல் இருக்கிறது.  அந்தணர்கள் திருமணங்களில் முன் நின்று சடங்குகளைச் செய்வதால் எல்லோரும் இது கடவுளுக்குச் செய்யும் பூஜையாக நினைக்கிறார்களே தவிர, இது இல்லற வாழ்க்கையின் முன்னோட்டம் என யாருமே உணர்வதில்லை. சடங்குகளை நடத்தி வைக்கும் அந்தணர்களும் மந்திரங்களின் பொருளையும், சடங்கின் தத்துவங்களையும் மணமக்களுக்கு சொல்வதில்லை. முதலில் இல்லற வாழ்வை, அதன் தன்மையை, மேன்மையை புரிந்து கொண்டால் மட்டுமே நாம் பின்னால் பார்க்கப் போகும் பல ஒப்பீடுகள் புரிய ஆரம்பிக்கும். ஆகவே அதைப் பற்றிச் சுருக்கமாக வரும் சில அத்தியாயங்களில் பார்ப்போம்.   []               இந்திய இளம் வயதினரைக் கண்டால் மேலை நாட்டவர் ஆச்சர்யத்துடன் கேட்கும் கேள்வி, உங்கள் நாட்டவர்கள் பெரியவர்களால் நிச்சயிக்கப்பட்ட துணையைத்தான் திருமணம் செய்து கொள்வீர்களாமே? சில நிமிடங்கள் பார்த்து, சில நாட்கள் விசாரித்து ஒரு அன்னியருடன் எப்படி வாழ்க்கை முழுக்க உங்களால் வாழ முடியும்? திருமணம் என்பது தனிப்பட்ட இரு நபர் சம்பந்தப்பட்ட விஷயம் என்ற எண்ணம் ஆணிவேர் விட்டு வளர்ந்திருப்பதால் இந்த ஆச்சர்யம் அவர்களுக்கு எழுவதில் நமக்கு ஆச்சர்யமில்லை. []   அவர்களைப் பொறுத்தவரை கணவனும் மனைவியும் ஒரே மாதிரியான சிந்தனைகளை கொண்டவராக இல்லாவிடில் மணவாழ்க்கை நீடிக்காது. கருத்து வேறுபாடுகள் எழும்.   இப்படி எழும் வேறுபாடுகளை காணாமல் போகச் செய்யக் கூடிய ஒரே ஒரு விஷயம் காதல். காதல் திருமணத்தை, காந்தர்வ மணம் என இந்தியச் சமூகம் அங்கீகரித்து இருக்கிறது. காதல் திருமணம் என்றால் வேறு எதுவும் தேவையில்லை எனத் தெளிவாக வரையறுத்து வைத்திருக்கிறது. உண்மையான காதல் திருமணம் என்பது அனைவருக்கும் சாத்தியம் இல்லை. யாரையாவது காதலித்தே ஆக வேண்டும் என்ற கட்டாயத்தினாலேதான் பல காதல்கள் உருவாகின்றன என்பது “உலகறிந்த இரகசியம்”  ஒரு சமூகத்திற்கான நெறிமுறைகளை நன்கு கற்றுணர்ந்து, கைக்கொண்டு வளர்ந்த இருவரால் வாழ்க்கை முழுக்க இணைந்து இருக்க முடியும் என்பதே உண்மை. இருவரும் ஒரே வாழ்க்கைத் தத்துவத்தை அறிந்திருப்பதால் எது சரி, எது தவறு, எது இனிமை, எது கொடுமை, யாரின் கடமை என்ன, யாருக்கு என்ன உரிமை என்பதில் வேறுபாடு எழ வாய்ப்பில்லை. உதாரணமாக, கொள்கையில் மாறுபட்ட காமராஜரும், ஜீவானந்தமும் சேர்ந்து நாட்டிற்கு நன்மை செய்தனர். காரணம் அவர்களின் நோக்கம் தமிழ்நாட்டின் நன்மை. அவர்களின் தர்மம் பொதுநலம் நோக்கியது. இன்றைய கட்சிகளுக்கு ஏறத்தாழ கொள்கை ஒன்றுதான். ஆனால் சண்டை போட்டுக் கொண்டே இருக்கின்றன. அவற்றால் நாடு சுரண்டப்பட்டது. காரணம் இவர்களுக்கு தர்மம் கிடையாது. சுயநலமே முக்கியம். இந்தியச் சமூகத்தில் பொதுநலமே முக்கியம். பிறப்பு பொதுநலம் சார்ந்தது. திருமணமும் பொதுநலம் சார்ந்தது. எனவே பொதுநலத்தைக் கடமையாகக் கொண்டவர் இணைந்தால் அவர்கள் வாழ்க்கை மகிழ்ச்சியாகவே இருக்கும். இந்தக் கொள்கையே இந்தியாவின் பெரியோர்களால் நிச்சயிக்கப்படும் திருமணங்களின் ஆணிவேர். இந்தியச் சமூகக் கட்டமைப்பின் அஸ்திவாரம் இல்லறம் என்பதாகும். எனவே திருமணம் என்பது ஒரு கட்டாயத் தகுதியாக பல இடங்களில் இருத்தப்பட்டது. அரசனாக இருக்க, பொதுசபையில் அமர, வேள்வி செய்ய, தன்னுடைய முன்னோருக்கு சிரார்த்தம், இறந்தோருக்கு கர்ம காரியங்கள் செய்ய இப்படிப் பலவற்றுக்கும் தகுதியாக திருமணம் என்பது வைக்கப்பட்டது. ஒரே ஒரு துணையுடன் ஒத்துப் போய், இனிமையாய் குடும்பம் நடத்த இயலாதவர் எப்படி ஊரோடு ஒத்துப் போய் வாழமுடியும் என்ற தர்க்க ரீதியான கேள்விக்கு பதில் சொல்ல முடியுமா? ஒரு இந்துவின் முதல் முக்கியக் கடமை அறம் பயிலுதல். அதாவது எது தர்மம் என்பதைக் கற்றலாகும். இதைத்தான் அடிப்படைக் கல்வி என்று சொல்கிறோம். கல்வியை எத்தனை வகையாகப் பிரித்திருக்கிறோம் பாருங்கள் 1. வித்யாரம்பம் -  எழுத்துக்கள், எண்கள் ஆகியவற்றைக் கற்றல். வாசிக்கக் கற்றுக் கொள்ளுதல், எளிய கூட்டல்-கழித்தல் பற்றி அறிந்து கொள்ளுதல்.  2. அறம் – உலகத்தின் அடிப்படைகளைக் கற்றுக் கொள்ளுதல்.  இதன் மூலமாக உலகம் உண்டானது எப்படி, உயிர்கள் உண்டானது எப்படி, உலக வரலாறு, எது தர்மம், எவை விலக்கப்பட்டவை எனக் கற்கிறோம்.  3. பொருள் – இதன் மூலம் வாழ்க்கைக்குத் தேவையான கல்விகளைக் கற்கிறோம். 64 கலைகள் என வகைப்படுத்தப்பட்ட இவற்றில் நமக்கு ஆர்வமுள்ள ஒன்றிரண்டை மிக ஆழமாகக் கற்கிறோம். இவை நமக்கு பொருளீட்ட உதவுகின்றன.  அறம் / தர்மம் எதுவென கற்றுக் கொண்ட பின்னரே, பொருளீட்டுவதைப் பற்றிக் கற்கிறோம். அதன் பிறகு பொருளீட்டி, திருமணம் செய்து கொண்டு இன்பம் நுகர்கிறோம். இல்லற தர்மத்தைச் சிறப்பாகக் கடைபிடித்தால் மோட்சம் என்பதையே அறம், பொருள், இன்பம், வீடுபேறு என்ற நான்கு தர்மங்களாக இந்தியச் சமூகம் பிரித்து வைத்தது. வள்ளுவர் கூட தனது முப்பாலை, முதலில் அறத்துப் பால், இரண்டாவது பொருட்பால், மூன்றாவது காமத்துப் பால் என மிகச் சரியாக அமைத்திருப்பார். “மைண்ட் கண்டிஷனிங்” என்று  மனோதத்துவ நிபுணர்கள் இன்று கட்டணம் வாங்கிக் கொண்டு சொல்லும் அதே நுட்பம்தான்  அறம் படித்தலில் கடைபிடிக்கப்படுகிறது.   பிறந்த குழந்தைக்கு நல்லது கெட்டது தெரியாது. அறக்கல்வி முதலில் எது சரி, எது தவறு என்று கற்றுக் கொடுத்து மனதைச் செம்மையாக்குகிறது. அதன்பின் தவறின் பக்கம் மனம் திரும்பாது. இன்று, குழந்தைகளை முதலில் உன் சந்தோஷம்தான் முக்கியம் என்று பழக்குகிறோம். அதுதான் சுயநலமாக அவர்கள் நெஞ்சில் விஸ்வரூபமாக நிற்கிறது. அடுத்து இன்பம் பெற முக்கியத் தேவையாக பொருளீட்டலைக் காட்டுகிறோம். அதனால் என்ன செய்தாவது பொருளீட்ட வேண்டும் என்ற வைராக்கியத்தை வளர்க்கிறோம். கடைசியாக இயலாத காலத்தில் அறம் பயிலச் சொல்கிறோம். அப்புறம் எப்படி வாழ்வில் தர்மமும், பொதுநலனும் இருக்கும்? அதனால்தான் திருமணம் என்பது “என் சந்தோஷத்திற்கு”, என்ற எண்ணம் மேலோங்கியது.  கணவன் தான் சந்தோஷமாக இருக்க நினைக்கிறான். மனைவி தான் சந்தோஷமாக இருக்க நினைக்கிறாள். இருவரின் சந்தோஷமும் இருவேறு துருவங்கள் ஆகியபின் திருமணத்தில் சந்தோஷம் எப்படி இருக்கும்? அறம் பயிலாதவரின் திருமணங்களில் சில அதிர்ஷ்டவசமாக மகிழ்ச்சியாக அமைய முடியும்.   அறம் பயின்றவரின் திருமணம் சில துரதிர்ஷ்டவசமாக மகிழ்வின்றி அமையலாம். ஆனால் அதையும் மகிழ்ச்சியானதாக்கிக் கொள்ளும் திடம் அறம்பயின்றோருக்கு உண்டு. அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை பண்பும் பயனும் அது. இல்வாழ்வின் பயன் என்ன? - அறம். இல்வாழ்வின் பண்பு என்ன? - அன்பு. இத்தனை இரத்தினச் சுருக்கமாக உலகத்தில் எந்தப் பண்பாடும் இல்லற வாழ்க்கையை வரையறுத்தது இல்லை. மகிழ்வு என்பது திருமணத்தால் அல்ல, நாங்கள் கற்ற அறத்தினாலும், எங்கள் உள்ளத்தில் வளர்த்த அன்பாலும் வருகிறது. அதனால் எங்களால் பெரியோர்கள் நிச்சயித்த பெண்ணைத் திருமணம் செய்து கொண்டு சந்தோஷமாக இருக்க முடிகிறது. இந்தக் கேள்வி-பதில் 1999 இல் நடந்த ஒரு நிஜ உரையாடல். கேட்டவர் 45 வயது திருமணமாகாத அமெரிக்கப் பெண்மணி.  என்னுடைய திருமணம் நிச்சயம் செய்யப்பட்ட நேரத்தில் அவருக்கு தகவல் அளித்தபோது அவர் கேட்ட கேள்வியும், அதற்கான பதிலுமே இது.   []                                               திருமணம் என்பதைக் கல்யாணம் என்றுதான் சொல்லுவார்கள். கல்யாணம் என்றால் பூரண சுபம் அதாவது மிகச் சிறந்த நற்காரியம் என்று பொருள். அறத்தின் அடிப்படையான இல்லறத்தின் ஆரம்பமே திருமணம். இதைவிடச் சுபகாரியம் என்பது புவியில் கிடையாது. மற்ற அறங்கள் ஒரு முறை மட்டுமே பலன் தரும். திருமணம் மூலம் உருவாகும் இல்லறம், பல்லாயிரக்கணக்கான ஆண்டுகள், மீண்டும் மீண்டும் உண்டாகி, அறத்தை வளர்த்து நிலைநிறுத்த உதவும். []   அறம்  அறத்தால் பொருள்  அறத்தால் வரும் பொருளால் இன்பம்  இப்படிப்பட்ட வரிசை முறையால் வாழ்வது மட்டுமே ஒருவருக்கு வீடுபேற்றைத் தரும்.   இதையே இந்துமதம் அறம் – பொருள் - இன்பம் - வீடுபேறு என வரிசைப்படுத்துகிறது. சமஸ்கிருத சனாதன தர்மம்,  தர்ம – அர்த்த – காம – மோட்ச என்றும் இதைத்தான் கூறுகிறது. திருமணம் என்பது வெறும் உடல் சுகத்திற்காக அல்ல என்பது இந்த அடிப்படை விவரங்களில் இருந்து புரியும். இன்றைய நவீன திருமணங்களில் நாம் சொல்வது என்ன? வாழ்க்கையை வாழப்போகும் அந்த இருவருக்கு மட்டும் பிடித்திருந்தால் போதும். அவர்களின் தனிப்பட்ட வாழ்க்கையில் நாம் குறுக்கிடவே கூடாது. கேட்பதற்கு மிக நியாயமாய் தோன்றும். பலரும் ஒரு படி சிந்தித்து சொல்வது சரியாகத்தானே இருக்கிறது என முடித்துக் கொள்வார்கள். அது அவர்கள் வாழ்க்கை அவர்கள் வாழட்டும் என்று அவர்களுக்கு தனி இடம் தருவதோடு சமூகம் ஒதுங்கிக் கொள்கிறது. ஆனால் உண்மையில் அது அப்படியா? இல்லை. அவ்விருவர் ஒரு குடும்பம். அவர்களுக்கிடையேயான விஷயங்கள் தனி உரிமைதான். ஆனால் அந்த இல்லறவாசிகளுக்கு சமூகம் அங்கீகாரமும் பாதுகாப்பும் அளிக்கிறது. அதேபோல் சமூகத்திற்கு என்னென்ன செய்ய வேண்டும் என கடமைகளையும் விதிக்கிறது. இந்து மதம் சமூகக் கடமைகளை மிகத் தெளிவாக வரையறுத்து உள்ளது. நமக்கு நமது உரிமை மட்டும்தான் முக்கியம். அடுத்தவன் தன் கடமையை செய்யாவிட்டால் குறை சொல்ல மட்டுமே நமக்குத் தெரியும். நம் கடமையையும் அடுத்தவர் உரிமையையும் நாம் மூன்றாம் பட்சமாகத்தானே பார்க்கிறோம். ஒரு சமூகத்தில் ஒரு மனிதன் எப்படியெல்லாம் வாழலாம்? 1. திருமணம் செய்து கொள்ளாமல் வாழலாம் – பிரம்மச்சரியம்  2. திருமணம் செய்து கொண்டு வாழலாம் – இல்லறம்  3. வாழ்வை வெறுத்து தனித்துப் போய் வாழலாம் – சன்னியாசம்  4. மனைவியுடன் கானகம் சென்று துறவு வாழ்க்கை வாழலாம். – வனப்பிரஸ்தம்  இந்த நான்கு வழிகளையும் இந்து தர்மம் சொல்கிறது. இதை வள்ளுவரும் ஏற்றுக் கொண்டு, பெரும் பொறுப்பை அந்த இல்லறத்தானுக்கு கொடுக்கிறார். அதற்குண்டான அதிகாரம் வேண்டுமே! அதையும் இந்து தர்மம் சொல்கிறது. பிறவழிகளில் வாழ்வோர் இல்லறத்தானிடம் பெற்று உண்ண வேண்டுமே தவிர செல்வம் சேர்த்தல் ஆகாது. பலருக்கு இது மிகப் பெரிய அதிர்ச்சியாக இருக்கக்கூடும். இது அநியாயம் என பகுத்தறிவாளர்களுக்கு இரத்தம் கொதிக்க ஆரம்பித்திருக்கலாம். ஆனால் யதார்த்த வாழ்க்கையைப் பார்ப்போம். சன்னியாசிகளின் மடங்களின் சொத்து, அவற்றிற்காக நடக்கும் தில்லுமுல்லுகள் இவையாவும் சமூகத்தின் ஒட்டு மொத்த மதிப்பையே குலைப்பதாக அல்லவா இருக்கிறது! பிரம்மச்சாரிகள் எனச் சொல்லிக் கொள்ளும் பலர் சொத்துக்கள் சேர்த்த பின் அவர்கள் செய்யும் அட்டூழியங்கள் சமூகத்தின் மரியாதையை அல்லவா குலைத்துக் கொண்டுள்ளது! சன்னியாசிகள், பிரம்மச்சாரிகள் ஆகியோருக்கு அவர்களின் வாழ் நாளைக்குப் பின்னான தேவை என்று இல்லவே இல்லை. வானப்பிரஸ்தர்கள் வாழ்ந்து முடித்தவர்கள். அதனால் இவர்கள் மூவர்க்கும் செல்வமோ, சொத்தோ சேர்க்கும் உரிமை கொடுக்கப்படுவதில்லை. இவர்களின் தேவைகளை இல்லறத்தார் தீர்ப்பர். இல்லறத்தாரின் இன்ப துன்பங்களுக்கு இவர்கள் துணை நிற்பர். இப்படிக் கடமைகளையும் உரிமைகளையும் மிக நுண்ணிய நோக்கத்துடன் வகுத்தது இந்திய சமூகம். இல்வாழ்வா னென்பா னியல்புடைய மூவர்க்கு நல்லாற்றி னின்ற துணை. இயல்பான மூன்று வழி மனிதர்களுக்கும் இல்லற வாழ்க்கை வாழ்பவனே துணை நிற்க வேண்டும் என கடமையைக் கொடுக்கிறது. அது மட்டுமல்ல, அவர்கள் நல்லாற்றில், அதாவது நல்லவழியில் நடக்க வேண்டுமென்றால் அப்படி இருப்பதே சிறந்தது என்றும் வகுக்கிறது. இவ்வுலகில் உள்ள அனைத்து இயற்கை வளங்களும் அனைவருக்கும் பொது. அதில் இல்லற வாழ்வு வாழ்வோனுக்கு மட்டும் ஏன் சொத்துரிமை என்பதற்கு பதில்தான் இது. இல்லற வாழ்வு வாழ்பவன், பிற வகையான வாழ்க்கை வாழ்பவர்களை ஆதரிக்க வேண்டும். அதன் தேவைக்காகவே சொத்துரிமை வழங்கப்படுகிறது. பிறப்பு முதல் இறப்புவரை நாற்பது விதமான வைதீகச் சடங்குகளை இந்துக்கள்  தம் வாழ்வில் நடத்துகின்றனர். இவற்றில் முக்கியமானவை பதினாறு. அவை  “சோடஷ கர்மாக்கள்“ என்னும் பதினாறு சம்ஸ்காரங்கள்  என  அழைக்கப்படும். சோடஷ சமஸ்காரங்கள் எனப்ப்டும் பதினாறு முக்கியச் சடங்குகளை பின்னிணைப்பு 1 இல் விரிவாக அறியலாம்.   இப்பதினாறில் விவாகம் என்னும் திருமணம் மிக முக்கியமான ஒன்று. திருமணத்தில் இந்துக்களின் திருமணக் கிரியைகள் பற்பல. இரண்டு பந்தல்கள் இட்டு, ஏழு நாட்கள் திருமணங்கள் நடந்து இருக்கின்றன. பெண் வீட்டார் பந்தல், மாப்பிள்ளை வீட்டார் பந்தல் எனச் சகல சடங்குகளுடன் பழங்காலத்தில் திருமணங்கள் நடந்தன. இன்றைய வாழ்க்கை வேகமிக்கது. அதனால் திருமணங்கள் முதல் நாள் மாலை மணமகன்(ள்) அழைப்பு, விடிந்தால் முகூர்த்தம் என்னும் அளவில் சுருங்கி இருக்கின்றன. சுருங்கிய நிலையிலும் செய்ய வேண்டிய கிரியைகள் அனைத்தும் செய்யப்படுகின்றனவா எனில் இல்லை. சமுதாய ரீதியாக இந்தச் சடங்குகளில் பல மாற்றங்களும் திரிபுகளும் கூட உண்டு. அவற்றைப் பற்றி ஆராய்வதும், திருமணத்தின் மேன்மை, அதன் பலன், சடங்குகளின் பொருள் ஆகியவற்றைப் பற்றி விரிவாகவும் தெளிவாகவும் இனி வரும் சந்ததிகளுக்கு எடுத்துச் செல்வதே இந்நூலின் நோக்கம் ஆகும்.   []                                                         அறம் என்பது விதித்தன செய்தல், விலக்கியன ஒழித்தல் என்பார் பரிமேலழகர். அறம் என்றால் முதலில் வருவது இல்வாழ்க்கை. இல்வாழ்க்கையே மிகச் சிறந்த அறம் என்கிறது தமிழர் பண்பாடு. அனைத்து அறங்களும் பிறக்குமிடம் இல்வாழ்வே.  []     பிறவியின் பயன் என்ன என்ற கேள்விக்கு இந்துக்களின் பண்பாடு சொல்லும் பதில் - பிறருக்கு உதவத்தான்.  தான் ஒருவன் மட்டுமே உதவாமல், காலாகாலத்திற்கும் பூமியில் உள்ள அனைத்திற்கும் உதவ வகை செய்யும் ஒரே வழி இல்வாழ்க்கை மட்டுமே. இல்வாழ்வின் மூலம் சந்ததிகளை பெருக்குவதன் மூலமாக நிலைத்த அறத்தை பூமியில் நிலை நிறுத்துவதால்  இல்வாழ்வே இந்துக்களால் வாழும் வழியாகக் கொள்ளப்படுகிறது. மற்றவை பிற-வழிகள் என்றே சொல்லப்படுகின்றன. இதன் அடிப்படையிலேயே புத்திரன் பெறாமல் போனால் “புத்” என்னும் நரகத்தில் வீழ்வான் என வேதமும் சொல்கிறது. குலவிருத்தியும், அறம்பெருக்கலும் திருமணத்தின் மிக முக்கிய இரு நோக்கங்கள். துறவியோ, சன்னியாசியோ, வனப்பிரஸ்தனோ தம் அறம் மட்டுமே பேணுபவர்கள்.  இல்லற வாழ்க்கை கொண்டவன் இருதன்மை வாய்ந்தவன்.  இல்லறத்தான் தன்னுடைய அறமும் செய்கிறான். பிற இயல்பினரின் அறத்தையும் காக்கிறான்.  அப்படிப்பட்ட இல்லறம் என்பது எந்தக் கடுமையான நோன்பையும் விட உயர்ந்ததாகும். தவம் என்பது சுயநலம் சார்ந்தது. தானம் என்பது பொதுநலம் சார்ந்தது. பிற இயல்பினர் தவம் செய்கின்றனர். இல்லறத்தான் தானம் செய்கிறான்.  இதனால் இன்றைய மக்கள் புரிந்து கொள்ள வேண்டிய இன்னொரு செய்தியும் உண்டு.  இல்லறத்தான், சன்னியாசிகளைப் பணிந்து எனக்கு அதைக் கொடுங்கள், இதைக் கொடுங்கள் எனக் கேட்பது இல்லற தர்மத்திற்கே எதிரானது. அப்படித் தர்மத்தை மீறியதாலேயே பலப்பல போலி சன்னியாசிகளை உருவாக்கி இருக்கிறோம்.  இல்லறத்தானின் துணை இல்லை என்றால் சன்னியாசிகளும், பிரம்மச்சாரிகளும், வனப் பிரஸ்தர்களும்  என்றும் நல்வழியில் செல்ல முடியாது.  ஆக இல்லறம் என்று பெயர் வரக்காரணமே அது இல்லாவிடில் அறம் இல்லை என்பதால்தான்.  கற்புடைத் துணையுடன் ஒழுகும் ஒழுக்கமே இல்லறம். எனவே வாழ்க்கைத் துணைநலம் என்று மனைவி கூறப்பட்டாள். அவள் கணவனுக்கு அடிமை அல்லள். அவள் கணவனுக்குத் துணை. “சகதர்மினி“ என்று வடமொழியில் மனைவிக்குப் பெயர். இல்லறம் நடத்துவதில், தர்மத்தைச் செய்வதில் கணவனுக்குச் சகாயம் (உதவி) செய்பவள் என்பது இதன் பொருள். (1) முன்னோர்கள் (2) தெய்வம் (3) விருந்தினர் (4) சுற்றத்தார் (5) தான் என்னும் இவ்வைவரையும் காக்க வேண்டியது இல்லறத்தார் கடமை.   []                                               பிரம்மச்சர்யம் என்பது கல்வித்தேடல். அறம் பற்றியும், பிரம்மம் பற்றியும் இன்னும் பல வகைக் கல்விகளையும் பல கட்டுப்பாடுகளுடன்  வாழ்ந்து கற்பதே பிரம்மச்சர்யம். பிரம்மச்சர்யம் மேற்கொள்பவன் அறம் கற்கிறான். பின்னர் சமாவர்த்தனம் செய்து பொருளீட்டத் தொடங்குகிறான்.   []   பின் திருமணத்தில்தான் கன்னிப் பெண்ணை மனைவியாக்கி காமத்தை தொடங்குகிறான். இல்வாழ்க்கையின் குணம் அன்பு. இதன் பயன் அறம். ஒருவன் பெறும் மிக உயர்ந்த செல்வம் நற்குணம் நற்செய்கைகள் கொண்ட மனைவியே. “மங்கலம் என்ப மனைமாட்சி அன்றோ?“ (1) பிரம்ம விவாகம் (2) தெய்வ விவாகம் (3) ப்ரஜாபத்ய விவாகம் (4) ஆர்ஷவிவாகம் (5) காந்தர்வ விவாகம் (6) ஆர்ஷூவ விவாகம் (7) ராக்ஷஸ விவாகம் (8) பைசாசம் என திருமணங்கள் எட்டு வகை என்கின்றன சாத்திரங்கள். தமிழ் இலக்கண நூல்களும் இவ்வெட்டுவகைகளை ஒப்புக் கொள்கின்றன. இவற்றைப் பற்றிய விவரங்கள் பின்னிணைப்பு 2 இல் தரப்பட்டுள்ளன.  இந்தத் திருமண வகைகள் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வரையறுக்கப்பட்டவை. இவற்றில் அடங்காத ஒரு திருமண வகையை உலகில் எங்கும் சுட்டுதல் முடியாது. மணமகனும், மணமகளும் ஒருவரை ஒருவர் காதலித்து திருமணம் செய்தல் என்பது அனைவருக்கும் அமைவதில்லை. அத்தகையோர்க்கு இந்து மதத்தில் அவரது குடும்பத்தினரால் திருமணம் ஏற்பாடு செய்விக்கப்படுகிறது. காதல் திருமணம் என்றால் பெற்றோர் சம்மதம் அளித்து முறையான திருமணம் நடத்தி வைக்க வேண்டும்.   மனம் இணைந்தால், மணத்தால் இணைப்பது சமூகக் கடமை ஆகும். காதல் கொண்டோர் தம்மை தம் துணைக்கேற்ப மாற்றிக் கொள்வர். இந்து மதத்தில் உள்ள அத்தனைச் சடங்குகளுமே தத்துவம் சார்ந்தவை ஆகும். மகிழ்வான மனதுடன் இல்லறம் ஆரம்பித்தலால் மணமக்களுக்கு இடையே எளிதில் புரிதல் ஏற்பட்டு பிணைப்பு உண்டாகும். ஆகவே மனதைப் பக்குவப்படுத்தி, இன்பமாக, நேர்மறை நோக்கோடு வைப்பதும், இல்லறத்தின் தத்துவங்களைப் புரிய வைப்பதுவுமே திருமணச் சடங்குகளின் முக்கிய நோக்காகும்.   []                                                   8. திருமணத்திற்கு முந்தைய படிகள்   திருமணத்திற்கு பெண் தேடும் மாப்பிள்ளைக் குடும்பத்தாருக்கு எளிய வழிகளை நீதி நூல்கள் அளிக்கின்றன. பெண் தேடும் ஒருவர், தம் குடும்பத்தின் தன்மைகளை முற்றிலும் அறிந்தவராக இருக்க வேண்டும். அப்படி இருந்தால்தான், குடும்பத்தில் பொருந்த என்ன தேவை என்பது அவருக்குத் தெரியும். அதை ஆராய்ந்து ஏற்ற சூழ்நிலையில் வளர்ந்த பெண்ணைத் தேடுவார். ஒவ்வொரு குடும்பத்திற்கும், குலத்திற்கும், இனத்திற்கும் வித்தியாசமான சிறப்புப்பண்புகள் உண்டு. விவசாயியின் மனைவி மிகுந்த கொடைமனம் கொண்டவராக, கடும் உழைப்பாளியாக, உறவுகள், நட்புகள், அக்கம் பக்கத்தவரை அனுசரிப்பவராக இருக்க வேண்டும்.   பெரிய அரசியல்வாதியின் துணை, நேரம் காலம் பாராமல் விருந்தோம்பல் செய்பவராக, படாடோபம் இல்லாதவராக, அனைவருடனும் அணுகி உதவி செய்பவராக இருக்க வேண்டும்.  ஆக அந்தக் குடும்பத்திற்கு எந்த குணங்கள் சிறப்போ அந்தக் குணங்கள் கொண்டவராக வாழ்க்கைத்துணை இருக்க வேண்டும். உதாரணமாக படைப்புக்கு முக்கியத் தேவை கலை உணர்வு. படைப்பு தெய்வத்திற்கு கலைமகளை இணை சேர்த்தனர். காத்தலுக்கு முக்கியத் தேவை செல்வம். காக்கும் விஷ்ணுவுடன் இலக்குமியைச் சேர்த்தார்கள். அழித்தலுக்குத் தேவை சக்தி. எனவே சிவனுடன் சக்தியைச் சேர்த்தார்கள். அப்படி குடும்பத்திற்கேற்ப குணங்கள் கொண்டிருப்பது மிக முக்கியமானதாகும். இன்றைய மணமக்கள் தேவை விளம்பரங்களைப் பாருங்கள். ஒரு வாழ்க்கைத் துணையைத் தேர்ந்தெடுக்க அவர்கள் கொடுத்திருக்கும் விவரக் குறிப்புகளைப் பாருங்கள். சிறந்த குணமுள்ள, தெய்வ பக்தியுள்ள, குடும்பப் பாங்கான இந்த மூன்று குணம் சம்பந்தப்பட்ட வார்த்தைகளைத் தவிர குணம் பற்றி ஒரு வார்த்தையேனும் கண்டதுண்டா? எது சிறந்த குணம்? ஒவ்வொருவருக்கும் அது வேறுபட்டுக் கொண்டே இருக்கும். இன்னின்ன குணங்கள் என நம் குடும்ப குணங்களையே நம்மால் பட்டியலிட முடியவில்லை. குடும்பப்பாங்கு என்பது சிக்கனம் என்று அர்த்தமா? விருந்தோம்பல் என அர்த்தமா? அச்சம், மடம், நாணம், பயிர்ப்பு என அர்த்தமா? எது சிறந்த குணம்? அடுத்தவர் விஷயத்தில் மூக்கை நுழைக்காமல் இருப்பதா? எல்லோருக்கும் உதவுவதா? பணம் சேர்த்து வைப்பதா? எது சிறந்த குணம்? நம் குடும்பம் இன்னின்ன குணங்களை சிறந்த குணங்களாகக் கொண்டிருக்கிறது என்ற அறிவு, முதலில் நமக்கு இருக்க வேண்டும். அந்தக் குணங்களைப் பூரணமாகக் கொண்ட வாழ்க்கைத் துணையைத் தேர்ந்தெடுக்க வேண்டும். வாழ்க்கைத் துணை, நம் குடும்ப அமைப்பு முறையில் நாம் சிறப்பாகக் கருதும் சிறந்த குணங்களைக் கொண்டவராக இருந்தால் அங்கே மன நிறைவு இருக்கும். வாழ்க்கை நிறைவாக இருக்கும்.  அக்குணங்கள் இல்லாது போனால், வாழ்க்கையே வெறுமையாகத் தெரியும்.  ஒரு குடும்பப் பெரியவர் ஏன் ஒரு திருமணத்தை முன்னெடுக்கிறார் என்பதன் அடிப்படைக் காரணம் இதுதான்.  தன்னுடைய குடும்பத்தின் அறம் அறிந்தவர், அதே அறத்தை அடிப்படையாகக் கொண்ட குடும்பத்தில் வளர்ந்த பெண்ணைத் தம் குடும்பத்தில் இணைப்பதே இதன் நோக்கம்.   8.1 ஜாதகப் பொருத்தம் பார்த்தல்   ஜாதகம், ஜோசியம் எல்லாம் மூடநம்பிக்கை என்று எல்லாவற்றையும் பொதுவில் ஒதுக்கித் தள்ளிவிட முடியாது. காரணம் சொல்கிறேன். ஜாதகம் பார்த்தல் என்னும் இச்சடங்கை சுயநலம் கொண்ட காரியமாக மாற்றியதால் இந்த புள்ளியியல்-நிகழ்தகவு (Statistical Probability) அடிப்படையில் அமைந்த ஒரு கருவி இன்று மூட நம்பிக்கையாக மாறி விட்டது.  []   மனோதத்துவ ரீதியாக, ஒரு திருமண முன்னெடுப்பை நிராகரிக்க வேண்டுமானால் எதைச் சொல்லி நிராகரிப்பது? ஒரு உறவிற்கான முன்னெடுப்பு மிகப் பெரிய பகைமைக்கான காரணமாக அமைந்து விடக்கூடும். நாசூக்காக ஜாதகம் பொருந்தவில்லை என்று சொல்வதுதான் நாகரீகமான ஒன்று. ஏன் பிடிக்கவில்லை என்ற காரணத்தை நேரடியாகச் சொல்லக் கூடாது. பெண் அழகில்லை. பெண் இயல்பு மாப்பிள்ளையின் அக்காவிற்கு பிடிக்கவில்லை என்றெல்லாம் சொல்லிக் கொண்டிருப்பது நேர்மை என்றாலும் மடமையாகும். பெண்ணை நீங்கள் விமர்சித்தால், மாப்பிள்ளை மீதான விமர்சனமே பதிலாக வரும். இதுவே பெண்ணுக்கு மாப்பிள்ளையை பிடிக்கவில்லை என்றாலும் ஜாதகம் ஒத்து வரவில்லை என்ற ஒற்றை வார்த்தையில் முடித்துக் கொள்வதே நல்லது. ஜாதகத்தை இப்படி ஒரு மனோதத்துவக் கருவியாகவும் பயன்படுத்தலாம். விமர்சனங்களும், எதிர் விமர்சனங்களும் தேவையில்லை. ஜோதிடம் என்பது புள்ளியியல் (Statistics) விவரங்களால் கோர்க்கப்பட்டு, நிகழ்தகவின் (Probability) அடிப்படையில் சொல்லப்படும் ஒரு யூக (Prediction) சாஸ்திரம். அது ஒவ்வொரு நாளும் வளர வேண்டிய சாஸ்திரம். உதாரணமாக புகைப்பிடிப்பவர்களில் 10 சதவிகிதம் பேர் நுரையீரல் புற்றுநோயால் பீடிக்கப்படுகிறார்கள். இப்பொழுது புகைப்பிடித்தல் நுரையீரல் புற்றுநோய்க்குக் காரணமா இல்லையா? ஆமாம் என்பது ஆத்திகவாதம். இல்லை என்பது நாத்திகவாதம். மேலும் ஆராய வேண்டும், இப்போதைக்கு புகைப்பிடித்தலை ஒதுக்கி வைப்போம் என்பதே யதார்த்தவாதம். புள்ளி விவர அடிப்படையிலான யூக சாஸ்திரம் மேலும் மேலும் கூர்மைப்படுத்தப்பட்டால் மட்டுமே அந்த சாஸ்திரம் பயன்படும். ஜோதிடம் பல நூறு வருடங்களாக அப்படி வளராமல் தேங்கி விட்டதால் இன்று அது ஒரு உபகரணமாக இருப்பதை விட, ஆயுதமாக பலரைக் காயப்படுத்திக் கொண்டு இருக்கிறது. அப்படி என்னதான் பொருத்தம் பார்க்கிறார்கள் என்பதைத் தெரிந்து கொள்வோம். 1. தினப் பொருத்தம் : மணமக்களின் ஆயுள், ஆரோக்கியம் இவை இரண்டையும் குறிப்பிடுவது தினப்பொருத்தமாகும். ஒவ்வொரு நட்சத்திரத்திற்கும் குணத்தை வரையறுத்து, இந்த இரு நட்சத்திரங்களை இணைத்தால் இவர்களின் ஆயுள், ஆரோக்கியம் பெருகுமா என அறிவது. அன்று இவற்றை அறிய விஞ்ஞான வசதிகள் இல்லை. அதனால் யூகிக்க வேண்டி இருந்தது. இன்று குடும்ப உடல்நல வரலாறும், மருத்துவச் சோதனையும் வெளிப்படுத்திவிடும். உதாரணமாக இருவர் குடும்பத்திலும் சில பரம்பரை வியாதிகள் இருந்தால் தவிர்க்கலாம். ஒத்து வராத பழக்கங்கள் இருந்தால் தவிர்க்கலாம். 2. கணப்பொருத்தம் :   இது குணநலனைக் குறிக்கும். குணத்தை மூன்று வகைகளாகப் பிரித்தனர். இவை இயற்கை குணங்களாக கருதப்படுகின்றன. தேவகணம் என்பது சாந்தமான குணமாகும். மனித கணம் என்பது மாறும் இயல்புடையது. ராசஸ கணம் என்பது ஆதிக்க குணம் உடையது. 27 நட்சத்திரங்களையும் மூன்று பிரிவாகப் பிரித்து இன்ன நட்சத்திரத்தில் பிறந்தவர் இன்ன கணம் என்று வகுத்துள்ளார்கள். இது மணமக்களின் இயற்கைக் குணம் பொருந்துகிறதா என அறியப் பயன்படுகிறது. முக்கியமாக ஆணுக்கு பெண் அடங்கி நடப்பாளா என்பதையே இதில் பார்க்கின்றனர். இன்று மனோதத்துவ சோதனைகள் மூலம் இயற்கை குணம் அறியலாம். 3. மகேந்திரப் பொருத்தம் : இது, இவ்விருவர் இணைந்தால் குழந்தைகள் பாக்கியம் எப்படி என்று அறிவதற்காகப் பயன்படுத்தப்படுகிறது. இன்று மருத்துவப் பரிசோதனை மூலம் இதை அறிந்து கொள்ளலாம். 4. ஸ்திரீ தீர்க்கம் : இது பெண்வீட்டார் மட்டுமே பார்க்கும் பொருத்தமாகும். இந்த வரனை மணந்து கொண்டால் பெண்ணின் உரிமை நிலைத்திருக்குமா என அறிவதாகும். இன்று இதையும் மனோதத்துவ ரீதியில் அறிந்து கொள்ளலாம். 5. யோனிப் பொருத்தம் : இது மிக முக்கியமானது. பெரும்பான்மையான மனிதர்கள் உடல் தேவையே வாழ்வு என மயங்குகின்றனர். உடல் தேவையைப் பூர்த்தி செய்ய இப் பொருத்தம் வேண்டும். பெண்-மாப்பிள்ளை இருவருக்கும் தாம்பத்ய இச்சை நிலையில் பொருத்தம் இருக்கிறதா? அவர்களின் உடல் அதற்கேற்ற தகுதி கொண்டதா என அறியும் முயற்சி இது. இன்று ஒரு பாலியல் மருத்துவச் சோதனை உண்மை அறிக்கையைத் தந்து விடும். 6. இராசிப் பொருத்தம் :   இது வாழ்வில் இருவருக்கும் துன்பம் வரும் காலம் ஒன்றாக வராமல் இருக்குமா என அறியக் கணக்கிடப்படுகிறது. சில சமயம் ஆண் குடும்பத்தைத் தாங்க நேரிடும். சில சமயம் பெண் குடும்பத்தைத் தாங்க நேரிடும். ஆகவே இருவரும் ஒரே சமயத்தில் துன்பத்தில் உழலாமல் இருப்பதற்காக இது யூகிக்கப்படுகிறது. இன்று இருவரும் பொறுப்பைத் தாங்க வல்லவர்களா என எளிதில் அறியமுடியும். 7. இராசி அதிபதிப் பொருத்தம் :   இது ஒருவரின் வழிமுறை, இன்னொருவரின் வழிமுறைக்கு பொருந்தி வருமா என யூகிக்கும் பொருத்தமாகும். ஒரு செயலைப் பலவழிகளில் செய்யலாம். ஆனால் ஒருவருக்கு ஒருவழிமுறை பிடிக்கும். இன்னொருவருக்கு இன்னொரு வழிமுறை பிடிக்கும். இந்த வேறுபாட்டால் உரசல் வருமா என யூகிப்பதாகும் இது. 8. வசியப் பொருத்தம் :   ஆணுக்கும் பெண்ணுக்குமான இயல்பான ஈர்ப்பு, கெமிஸ்ட்ரி இவர்களிடையே உண்டா என யூகித்தல் ஆகும். 9. ரஜ்ஜூப்பொருத்தம் : இருவர் இணைவதால் என்ன வகைத் துன்பங்கள் உண்டாகும் என ஊகிப்பதாகும் இது. பொருள் சேதம், உயிர் சேதம் போன்றவற்றை யூகிக்கும் முயற்சியாகும். உதாரணமாக வேகமாகக் காரோட்ட விருப்பமுடைய இருவரை இணைத்தால் விபத்தின் நிகழ்தகவு அதிகமாகும். ஆடம்பரச் செலவு செய்யும் இருவரை இணைத்தால் பொருள்சேதம் தவிர்க்க முடியாது. இப்படி ஒரே குணமுள்ள இருவரை இணைக்காமல் மாற்றி இணைப்பதாகும் இது. 10. வேதைப் பொருத்தம் :   மாப்பிள்ளைக்குப் பல குணங்கள், பழக்கங்கள் இருக்கும். பெண்ணுக்கும் பல குணங்கள், பழக்கங்கள். இவற்றில் எதுவும் ஒருவருக்கொருவர் முழுக்கவே ஆகாத பழக்கங்கள் இருக்குமா எனச் சோதித்தல்.  உதாரணமாக குடிப்பழக்கம். பெண்ணுக்கு குடிப்பது அறவே ஆகாமல் இருக்கலாம். மாப்பிள்ளை குடிப்பழக்கம் உள்ளவராக இருக்கலாம். இதனால் இவர்களுக்கிடையே என்றுமே ஒரு வெறுப்பு இருந்து கொண்டே இருக்கும்.  எல்லாவற்றையும் தெரிந்து கொள்ள முடியாது என்பதால் யூகிக்க முயல்கிறார்கள். இந்தப் பத்துப் பொருத்தங்கள் முக்கியமாகப் பார்க்கப்படுகின்றன. இந்தப் பொருத்தங்களையும் சரிபார்த்து இன்ன நட்சத்திரப் பெண்ணிற்கு இன்ன நட்சத்திர வரன் இத்தனை பொருத்தங்கள் அமைகின்றன என்றும் பொருத்தம் உண்டு அல்லது இல்லை என்றும் அறிந்து கொள்ளும் வகையில் ஜோதிட சாத்திரத்தை அமைத்துள்ளார்கள். அதன் பின் இரத்தப் பிரிவுகளை அடிப்படையாக ஊகிக்கும் செவ்வாய் தோஷம், பாலினப் பிரச்சனைகளை அடிப்படையாகக் கொண்ட சர்ப்ப தோஷம், ஆயுளைக் காட்டும் மாங்கல்ய தோஷம் ஆகியவற்றை நிர்ணயித்தனர். இன்றைய பகுத்தறிவாளர்கள் இந்த நடைமுறையைப் பழிக்கலாம். ஆனால் இந்தப் பொருத்தங்களை வேறுமுறைகளில் ஆராயக் கூடாது என்று சொல்கிறார்களா? உடல் தகுதியை மணம் செய்து கொள்ள விரும்புவோர் பரிசோதனை செய்து திருமண விண்ணப்பத்துடன் அளிக்க வேண்டும் எனச் சட்டமே சில நாடுகளில் உண்டு. டேட்டிங் என்ற பெயரில் மேலை நாடுகளில் ஆணும் பெண்ணும் பழகிப் பார்ப்பது குணப்பொருத்தம், சகிப்புத்தன்மை உள்ளதா என அறிந்து கொள்ளத்தானே. பல ஆயிரம் ஆண்டுக்கு முன்பே திருமணத்திற்கு முன்பு இவற்றை ஆராயவேண்டும் என்று சொன்ன சமூகம் எவ்வளவு முன்னேறிய சமூகமாக இருந்திருக்க வேண்டும்? அன்றைய அறிவியல் வளர்ச்சிக்கு, அவர்களுக்கு ஜோதிடம் பார்த்தல் ஒரு கருவியாக இருந்தது. அன்று ஜாதகம் பார்க்கும் ஜோதிடருக்கு பெண்ணைப் பற்றியும், மாப்பிள்ளையைப் பற்றியும் தெரிந்திருந்தது. இன்று ஜோதிடருக்கு கொண்டு வரப்பட்ட ஜாதகம் உண்மையானதா,  பொய்யாய் நேரம் மாற்றிக் கணிக்கப்பட்டதா என்று கூடத் தெரியாது. உதாரணமாக, பிறந்தநேரத்தை 10 மணி என்பதற்குப் பதில், 2 மணி என ஒரு மாற்றம் செய்தால் போதும், ஜாதகம் முழுக்க மாறிவிடும்.   ஜாதகம் உண்மையானதா என்றே அறியாமல் கணிக்கப்படும் பலன் எப்படி உண்மையானதாக இருக்க முடியும்?  இன்று கருவிகள் பெருகி விட்டன. அறிவியல் வளர்ந்து விட்டது. அவற்றைப் பொருத்தம் பார்க்க உபயோகிப்பதில் என்ன தவறு? இதைப்பற்றி நான் தெரிந்து கொள்ள விரும்பவில்லை. சடங்குகளாக, செய்யணும் என்பதற்காகச் செய்கிறேன் என ஜோதிட சாஸ்திரம் மாறிவிட்டது. கண்ணை மூடிக் கொண்டு நம்பாமல், ஜோதிட சாத்திரத்தின் புள்ளியியல் தரவுகளை (Statistical Data) நாம் மேம்படுத்துவதில் ஈடுபட்டிருந்தால், ஜோதிடம் என்னும் சாஸ்திரம் உபயோகமுள்ள கருவியாக மாறி வளர்ச்சி கண்டிருக்கும். கண்மூடித்தனமாக நம்பியதால் அது மூட நம்பிக்கை ஆகிவிட்டது.  அறிவியலும் அப்படித்தான். அப்படியே ஒப்புக் கொண்டால் மூட நம்பிக்கை ஆகிவிடும். ஒவ்வொரு காலகட்டத்திலும் அன்றைக்குப் பெற்ற அறிவினால் தகவல் திரட்டை சரியா, தவறா என ஆராய்ந்து மாற்றங்களைச் செய்து கொண்டே இருக்க வேண்டும். வளர்ச்சி எங்கே நிற்கிறதோ அங்கேயே மரணம் ஆரம்பித்து விடுகிறது. இது உயிரினங்கள், சாத்திரம், அறிவியல், மொழி என அனைத்திற்கும் பொதுவான கருத்தாகும். ஜோதிடம் அப்படியான மரணத்தைச் சந்தித்து விட்டது. இன்று ஜாதகம் பார்ப்பது பயத்தினால் மட்டுமே. எதிர்காலத்தையும், பொருத்தங்களையும் ஊகிக்கும் ஆர்வத்தினால் அல்ல.  எனவே பொருத்தங்கள் பார்க்கவேண்டும் என விரும்புபவர்கள், ஒவ்வொரு பொருத்தத்திற்கும் முறையான சோதனைகள் மூலம் தகவல் அறிந்து கொள்ளலாம். அல்லது விசாரித்து அறிதல் மூலம் நிச்சயப்படுத்திக் கொள்ளலாம்.     []             [] 8.2 பெண்பார்த்தல்   ஒரு பொருத்தமான குடும்பப் பின்னணி கொண்ட, குணம் கொண்ட பெண்ணைத் தேர்ந்தெடுத்த  பின்புதான் பெண்பார்த்தல் என்ற சடங்கு நடக்கிறது. பெண் பார்த்தல் என்னும் சடங்கு ஒரு முறையான அறிமுகப்படலமாகும். பெண் பார்க்க வருவது பெண்களுக்குச் சங்கடம் இல்லை. பேரம் பேசி, வியாபாரம் பேசுவதற்காக  பெண் பார்க்கச் செல்வதுதான் பெண்களுக்குச் சங்கடமான ஒன்று. ஆயிரக்கணக்கான கண்கள் தறிகெட்டத்தனமாக தன் உடலை பட்டப்பகலில் தெருக்களில் மார்க்கெட்டுகளில் பேருந்துகளில் வெறித்ததை சகிக்கிறாள் பெண்,, அப்படிப்பட்ட பெண் தன் அனுமதியுடன் அதுவும் வாழ்க்கைத் துணையாய் தேர்ந்தெடுக்கும் ஒரு நல்ல நோக்கத்துடன் பார்ப்பதை எப்படி அவலம் என்று சொல்லுவாள்? பெண்ணை மாப்பிள்ளை பார்க்கும் அதே நேரத்தில், பெண் மாப்பிள்ளையையும் பார்க்கிறாள். இருவருக்கும் சம வாய்ப்பான இது பெண் வீட்டில், பெண்ணுக்கு வசதியாகவே ஏற்பாடு செய்யப்படுகிறது. இதை சகஜமாக்கவே உபசரித்தல், பாடுதல் போன்ற சில பழக்கங்கள் உருவாக்கப்பட்டன. சடங்குகளைப் பற்றி மட்டுமே கவலைப்படும் மக்கள் தத்துவங்களை மறந்து விட்டனர். பாடச் சொல்வது, சிறந்த பாடகியா என பரீட்சை வைக்க அல்ல. பெண்ணை இயல்பாய் இருக்க வைப்பதற்காகத்தான். பெண்ணின் முடி நீளம் பார்த்தல், எடை பார்த்தல், உயரம் பார்த்தல், வண்ணம் பார்த்தல், கைகால்கள் சரியாக இருக்கிறதா என்று பார்த்தல் என்பதற்கு அல்ல பெண் பார்க்கும் படலம். அதற்கு மாப்பிள்ளை உடன் வரவேண்டிய அவசியமில்லை. பெண்ணிற்கும், மாப்பிள்ளைக்குமான ஒரு அறிமுகமே பெண் பார்த்தல் ஆகும். பெண் பார்க்க வரும் முன்னரே அவற்றை எல்லாம் அறிந்திருக்க வேண்டும். பெண்ணுக்கும், மாப்பிள்ளைக்குமான அறிமுகம் என்ற கோணத்தில் அமைக்கப்பட்ட ஒரு நிகழ்வை, காய்கறி வாங்குவது போல் மாற்றிவிட்ட காரணத்தினால் பெண் பார்க்கும் படலம் என்பது கசப்பான நினைவுகளைப் பெண்கள் மனதில் நுழைத்து விடுகிறது. யாருடைய குறை, நிறைகளையும் அவர் எதிரிலேயே அலசி விமர்சித்து விட்டு, அவர் உங்கள் குடும்பத்தில் வந்து மிகச் சரியாகப் பொருந்த வேண்டும் என எதிர்பார்ப்பது மிகவும் தவறு. பெண் பொருந்தி வரமாட்டாள் என்பதைக் கூட, நாசூக்காக சொல்லும் சமூகம் நம்முடையது. அப்படிப்பட்ட சமூகம் வகுத்த ஒரு நடைமுறையான பெண் பார்த்தல் என்னும் சடங்கில் பெண்ணை மாப்பிள்ளைக்கும், மாப்பிள்ளையை பெண்ணுக்கும் அறிமுகம் செய்ய வேண்டுமே தவிர, குறைகளைப் பற்றிப் பேசிக் கொண்டிருக்கக் கூடாது. அதற்கெனத் தனிப் படலம் உள்ளது. எல்லா வகை விசாரிப்புகளையும், ஆய்வுகளையும் முடித்து விட்டு பெண், மாப்பிள்ளை இருவரும் ஒப்புக் கொண்ட பிறகு பெண்பார்த்தல் நடத்தப்பட வேண்டும். இப்படி நடந்த பெண் பார்க்கும் நிகழ்வுகள் இனிய அனுபவங்களாகவே இருந்திருக்கின்றன.   []                               9. திருமணக் கிரியைகள்   1) நிச்சயதார்த்தம் 2) பரிசம் போடுதல் [] 3) நலங்கு செய்தல் 4) தாலிசெய்தல் / பொன்னுருக்கல் 5) மங்கலப் பொருட்கள் வாங்குதல் 6) முகூர்த்தக் கால் நடுதல் 7) முளைப்பாலிகை இடுதல் 8) பந்தல் அமைத்தல் 9) மணமகள் / மணமகன் அழைப்பு 10) காசி யாத்திரை 11) குடஜீராரோஹணம் 12) தேவதா பிரஸ்தம் 13) கங்கண தாரணம் 14) நாந்தி – சிரார்த்தம் செய்தல் 15) பிரம்மோபதேசம் 16) சகல தேவதா பூஜை 17) மாலை மாற்றுதல் 18) பாணிக்கிரகணம் 19)  கன்யாதானம்    20) மாங்கல்ய தாரணம் 21) ஏழடி நடத்தல் 22) அம்மி மிதித்தல் 23) அருந்ததி பார்த்தல் 24) அட்சதாரோபணம் 25) சுஹாசினி தானம் 26) கங்கணம் அவிழ்த்தல் 27) தாம்பூலம் அளித்தல்     []                                                 9.1 நிச்சயதார்த்தம்   நிச்சயம் செய்தல் என்பது மணமகன் வீட்டாருக்கு மணமகளையும், மணமகள் வீட்டாருக்கு மணமகனையும் அறிமுகம் செய்யவும், மணமக்களை ஊருக்கும் அறிமுகம் செய்யும் ஒரு நோக்கத்தில் அமைக்கப்பட்டது. இந்த அறிமுகம் மிக அவசியத் தேவை. ஒரு திருமணம் நடக்க இருக்கிறது என்பதை சமூகத்திற்கு அறிவிப்பதற்காகவே இந்தச் சடங்கு நடத்தப்படுகிறது. மேலும் இரு சார்பு உறவினர்களும் இந்த நிகழ்வு [] மூலம் ஒருவரை ஒருவர் அறிந்து கொண்டு புதிய உறவுகளை ஏற்றுக் கொள்கிறார்கள்.     இச்சம்பிரதாயம் மணமகள் இல்லத்தில் நடைபெறும். மணப்பெண் வீட்டாரின் முன்னிலையில் உறவினர் புடைசூழ பெண்ணின் இல்லம் பொலிவுற்று இருக்கும். இச்சபைக்குப் பெண் வீட்டாரின் ஊர்/குலத்தலைவர் தலைமை ஏற்று இருப்பார். மணமகன் வீட்டார் சகலவகைச் சீர்கள் (பழம், பலகாரம், தாம்பூலம், ஆடைகள், அணிகலன்கள், நறுமணப்பொருட்கள்  இத்யாதி) கொண்டுவந்து வைத்து மணமகளை தங்கள் வரனுக்கு மணமுடித்துத் தர வாக்குதத்தம் செய்து தரக் கேட்பர். மாப்பிள்ளையின் தகப்பனார் தன் குலம், கோத்ரம் இவைகளைக் கூறி, பெண் பார்க்கவும், நிச்சயம் செய்து கொள்ளவும் தான் வந்திருப்பதாகவும், நாள் நட்சத்திரம், வழிப்பயண சகுனங்கள் சுபமாக இருப்பதால் நிச்சயம் செய்து வைக்க வேண்டும் எனக் கேட்பார். பெண்ணின் தந்தையார் பெரியோர்கள் மற்றும் தன் மனைவி முதலியோரிடம் கலந்து சம்மதம் கூறுவார். மணமகளின் தகப்பனார் அதன்பின் கூறுவது, “உம் மகனுக்கு என் பெண்ணைக் கொடுப்பதாக நான் வாக்கு தத்தம் செய்கிறேன். வரனை (மாப்பிள்ளையை) நான் பார்த்து மகிழ்ந்தேன். சுபமாக நிச்சயதார்த்தம் செய்து கொள்ளலாம்”. இதன் பின் நிச்சயதார்த்த அறிவிப்பு படிக்கப்படும். சில ஊர்களில் நிச்சயதார்த்த ஒப்பந்தம் கையெழுத்தாகும். பிரஜாபத்திய விவாகத்தில் பெண்ணிற்கு பரிசுகள் அளிக்கப்பட்டு, புடவை நகைகள் அணிவித்து மாப்பிள்ளை வீட்டார் தங்கள் வீட்டிற்கு அழைத்துச் செல்வர்.   ஏனென்றால் திருமணம் மணமகன் வீட்டில் நடக்கும். இது திருமண ஒப்பந்தம் செய்து கொள்ளுதல் ஆகும். அக்காலத்தில் மணமகனே மணமகள் வீட்டாருக்கு பொன்னும், பொருளும், பசுவும், சீரும் கொடுத்து பெண்ணைப் பெற்றான். நிச்சயதார்த்தம் செய்வதன் மூலமே திருமணம் அறிவிக்கப்படுகிறது. பெற்றோரின் சம்மதம் பெறுதல் முக்கியம் என்பதை இது காட்டும். திருமணம் அறிவிக்கப்படுவது எல்லா சமூகத்திலும் இருக்கிறது.   []                                                   9.2 பரிசம் போடுதல்   [] பரிசம் போடுதல் என்பது பிற்காலத்தில் உருவான ஒரு வழக்கமாகும். நிச்சயதார்த்தம் செய்தபின்னரே பிற சடங்குகள் ஆரம்பிக்கும் என்றாலும், நிச்சயம் செய்த பிறகு திருமணம் தடைபடக் கூடாது என்பதால் இக்காலத்தில் நிச்சயதார்த்தத்தை பிரித்து, பரிசம் போடுதல் மற்றும் நாள்குறித்தலை முன்னரே செய்து விட்டு திருமணத்துக்கு ஓரிரு நாட்கள் முன்னதாக நிச்சயதார்த்தம் செய்கிறார்கள்.     உற்றார், உறவினர் முன் இவ்வைபவம் நடைபெறும். இது இருவீட்டாரும் திருமணத்திற்கு ஒப்புக்கொள்வதாக ஊருக்கும் உறவுக்கும் முன் உறுதி மேற்கொள்ளுதல் ஆகும். பெண்ணின் தகப்பானரும், மாப்பிள்ளையின் தகப்பனாரும் எதிரெதிர் அமர்ந்து கொள்கின்றார்கள். சந்தனம் பூசிக் கொள்ளல் முதலிய உபச்சாரங்கள்  நடைபெறுகின்றன. பின் பெண்ணின் தகப்பனார் தன் கோத்ரம் மற்றும் மூன்று தலைமுறையினர் பெயர்களைக் கூறி “இன்ன பெயருள்ள கன்னிகையை”  என்று கூறுவார். அதன் பின் மாப்பிள்ளையின் தகப்பனார் தன் கோத்ரம் மற்றும் மூன்று தலைமுறையினர் பெயர்களைக் கூறி “இன்ன பெயருள்ள மணமகனுக்கு” என்று கூறுவார். இருவரும் மாறி மாறி மும்முறை கூற வேண்டும். மூன்றாம் முறையில் பெண்ணின் தகப்பனார் “கொடுத்தோம்” என்று சொல்ல பிள்ளையின் தந்தை “ஏற்றுக் கொண்டோம்” என்று கூறி இருவரும் தாம்பூலம் மாற்றிக் கொள்ள வேண்டும். இதனுடன் திருமணம் மற்ற சடங்குகளுக்கான நாளும் குறிக்கப்படும். []     9.3 சொந்தம் / நலங்கு செய்தல்   இது மணமகனுக்கும் மணமகளுக்கும் தனித்தனியே அவர்களின் தாயின் பிறந்த வீட்டின் சார்பாக செய்யப்படும். [] மணமகனை / மணமகளை தங்கள் இல்லத்திற்கு அழைத்துச் சென்று அவர்களை அமரவைத்து சந்தனம், குங்குமம், மற்றும் வாசனைத் திரவியங்கள் பூசி, பின்னர் குளிக்க வைப்பார்கள். தாயின் பிறந்த வீட்டின் சீர்கள் மணமக்களுக்கு அளிக்கப்படும்.     தமிழர் வழக்கப்படி, தாய்வழி உறவு என்பது ஒருவருக்கு மிக முக்கியமானது ஆகும். தாய்மாமன் மகன்தான் இந்து முறைப்படி ஒரு வரனை மணந்து கொள்ள முதல் உரிமை பெற்றவர் ஆவர்.  தங்கைக்கு தகப்பனாய், அவள் பெறும் குழந்தைகளுக்கு உற்ற பாதுகாவலனாய், நண்பனாக அந்த குழந்தை கேட்டதை எல்லாம் வாங்கிக் கொடுத்து அதன் முகத்தில் அதிக மகிழ்ச்சியை பார்ப்பது தாய்மாமன் தான்.   குழந்தைகளின் ஒவ்வொரு நல்லதுக்கும் தாய்மாமனே முக்கியம் என்று தமிழர் பண்பாடு சொல்கிறது. காது குத்துவதிலிருந்து, திருமணத்திற்கு மாலை எடுத்துக் கொடுப்பது வரையிலும் இன்னும் அனைத்து நல்லதற்கும், கெட்டதற்கும் தாய்மாமனே முன்னிற்பான். தாய்மாமன் தன் உறவின் உரிமையை நிலை நாட்டி தன் பங்கான சீதனத்தை அளிப்பதே இதன் நோக்கம்.  சீதனம் பற்றிய அருணகிரிநாதரின் கந்தரலங்காரப் பாடலில் இதன் விளக்கத்தைக் காணலாம். (பின்னிணைப்பு 6)  தாயின் உருவாகவே இருக்கும் தாய்வழிச் சொந்தங்களின் உறவைப் பலமாக்கும் சடங்கு இது. தாய்மாமன் தாயின் ஆண்வடிவம். அத்தை தந்தையின் பெண்வடிவம்.  தாய் தந்தையின் உடன் பிறந்தோருக்கு பல உரிமைகள் வழங்கப்பட காரணம் இதுதான். தாய்மாமன் – அத்தை உறவு தாய்-தகப்பன் உறவை விட இளையோர்களுக்கு மிக நேசமான உறவாகும். தாய்மாமன் தன் மருமகனுக்கு அந்தரங்கத் தோழனாகவே இருப்பார். அத்தை தன் மருமகளுக்கு மிகச் சிறந்த ஆலோசராக இருப்பார். ஒரு பெண்ணுக்கு தாய்மாமன் மனைவியே உடற்கூறு பற்றிய விளக்கங்களை அளிக்கும் சிறந்த தோழியாக இருப்பார். இந்த நலங்கு வைத்தல் என்னும் சம்பிரதாயம் இப்படி உடலியல் / வாழ்வியல் ஆலோசனைகளை மணமக்களுக்கு மாமனும், அத்தையும் சொல்லவே நடத்தப்படுகிறது. மாமன் – அத்தை உறவுகள் சிறப்பாக உள்ள குடும்பங்களில் என்றும் சந்தோஷங்களுக்கு குறைவு இருக்காது. தலைமுறை வித்தியாசங்களைக் கடந்து நல்ல நட்பைக் கொடுக்கும் உறவுகள் இவை. சொந்தத்தில் திருமணம் செய்வது பலவித பரம்பரை வியாதிகளுக்கும் குறைபாடுகளுக்கும் வழி வகுக்கும் என்று விஞ்ஞானம் நம்மை பயமுறுத்தி வைத்திருக்கிறது. பெண்ணென்றால் தாய்மாமன் மகனுக்கு முதல் மண உரிமை வழங்கலும், பையன் என்றால் அத்தை மகளுக்கு முன்னுரிமை வழங்கலும் நடக்கும். இரண்டாம் உரிமை மாறி வழங்கலாகும். அதாவது மாமன் மகள், அத்தை மகன். ஆனால் மரபணு விஞ்ஞானத்தைப் பார்த்தால், வலிமையான மரபணு வெற்றி பெற்று செம்மையடையும், வலிமையற்ற மரபணு அழியும் என்று சொல்லும். மரபணு பற்றி விளக்கும் ஆரம்பப் பாடமான குட்டை பீன்ஸ் / நெட்டை பீன்ஸ் உதாரணத்தில் கூட காலப்போக்கில் நெட்டை பீன்ஸ் மட்டுமே வழக்கில் இருக்கும். குட்டை பீன்ஸ் அழிந்து விடும் எனச் சொல்லும். மரபணுக்கள் தம்முள் பல தகவல்களை உள்ளடக்கிக் கொள்கின்றன. ஒரு பரம்பரையின் சுற்றுச்சூழல், தொழில் இவற்றிற்கேற்ப அவை மாற்றம் அடைகின்றன. உதாரணமாக வெள்ளையர் பல தலைமுறையாக நில நடுக்கோட்டுப் பகுதியில் வசித்தால் அவர்களும் கறுப்பினமாக பல ஆயிரம் ஆண்டுகளில் மாறுவார்கள். மாமன் மகன் – அத்தை மகளை மணப்பது பண்பணு கலப்பு ஏற்படாமல் குடும்பக் குணம் தனித்து நிற்பதற்கு துணை செய்யும். நோய்கள் வேதிப் பொருட்களால் நமது மரபணுவில் திணிக்கப்படுவை. ஒரே சூழலில் வாழும் அனைவருக்கும் குறிப்பிட்ட  நோய்கள் வரத்தான் செய்யும்.  உண்மையில் மரபணுக் கோளாறுகளுடன் குழந்தைகள் பிறக்கக் காரணம், நமது அரைகுறை அறிவியல். ஒரே வகைப் பழக்க வழக்கங்கள் கொண்டவர்களுக்கு ஒரே வகை நோய்கள் வரக்காரணம் நாம் உபயோகிக்கும் பொருட்களில் கலந்த வேதிப் பொருட்களின் நச்சுத்தன்மையே ஆகும்.  இதை உணர்ந்து நாம் வாழக் கற்றுக் கொண்டால் பரம்பரை வியாதிகள் என்ற வார்த்தை காணாமல் போய்விடும். இன்று அனைத்துத் தொழில்களும் இயந்திரமயமாகி விட்டதால் இன்று தொழில்சார்ந்த மரபணுச் செம்மையாக்கம் தேவையற்றுப் போய்விட்டது. இன்று அறிவைப் பெருக்கிக் கொள்ளுதல், உடல் ஆரோக்கியம் ஆகியவை மட்டுமே இன்றியமையாதத் தேவையாக இருக்கிறது.   []     1. 9.4 . தாலி செய்தல் / பொன்னுருக்கல்   தாலி என்பது திருமணத்தின் மிக முக்கியமான அடையாளச் சின்னமாகும். தாலியில் பல வடிவங்கள் உண்டு. ஒவ்வொரு குலத்தின் தாலியும் வித்தியாசப்படும்.  ஒவ்வொரு குலத் தாலியின் அச்சு வடிவமும் அப்பகுதி பொற்கொல்லரிடம் இருக்கும். எனவே நகைக்கடைகளை விட பொற்கொல்லரிடமே தாலி செய்யக் கொடுக்கப்படுகிறது/வாங்கப்படுகிறது. மாப்பிள்ளை வீட்டாரே தாலி செய்கின்றனர். காரணம் பெண் அவர்கள் குலத்தவராக வாழ வருவதால் []   அவர்கள் குலத் தாலியை அணிய வேண்டும். தாலி என்பது கணவனுக்குச் சமமாக பார்க்கப்படுகிறது. பொன் உருக்கும் பொழுது அதற்கு உரிய விஷ்வப் பிரம்மகுலத்தின் குறையற்ற, ஒருவரே தேர்வு செய்யப்படவேண்டும். - திருமணமாகிக் குழந்தையுள்ளவர் - பூரண சுகதேகி - சுகதேகியான மனைவி குழந்தை உள்ளவர் - பூரண முள்ள அங்கங்கள் கொண்டவர் - வலது கைப் பழக்கமுள்ளவர் - பூரண விஷ்வப்பிரம்ம சாஸ்திரம் தெரிந்தவர் - பூணூல் அணியும் தகுதி உள்ளவர். தாலிக்குக் கூலி பெறுவது கூடாது. ஆனால் அதற்கான தட்சணை அளிக்க வேண்டும். அக்காலத்தில் இயன்ற அளவு தட்சணை கொடுத்தே வைதீக காரியங்கள் செய்யப்பட்டன. இவ்வளவு கூலி எனக் கேட்டு வாங்குதல் குற்றம். இதனால் அனைத்து மக்களும் மகிழ்வோடு விவாகம் செய்து கொள்ள முடிந்தது. திருமாங்கல்யத்திற்குரிய தங்கத்தை (பவுனை) ஆலயத்தில் (இறைவனிடத்தில்) வைத்து பூசை செய்து, ஒரு தட்டில் வெற்றிலை, பாக்கு, மஞ்சள், குங்குமம், பூ, பழத்துடன் தங்கத்தையும் வைத்து பூஜையறையில் வைக்க வேண்டும். தாலிக்கான பொன்னைக் கொடுத்து செய்யும்பொழுது கீழ்கண்டவை கவனத்தில் கொள்ளப்பட வேண்டும். பொன்னுருக்கும் நாளன்று அதை மணமகனின் பெற்றோர் அல்லது பெரியோர் எடுத்து, மணமகனிடம் கொடுக்க, அவர் அதை ஆசாரியாரிடம் கொடுத்து உருக்கவேண்டும். ஆசாரியார் கும்பம் வைத்து விளக்கேற்றி தூபதீபம் காட்டி வெற்றிலை, பாக்கு வாழைப்பழம் முதலியவை வைத்து தேங்காய் உடைத்துப் பூசை செய்து பொன்னை உருக்குவார். உருக்கிய பின் தாய்மாமன் தேங்காய் உடைத்துப் பூசை செய்து அந்த இளநீரை உருக்கிய தணலில் ஊற்றி தீயை தணிப்பார். பின் ஒரு தட்டில் வெற்றிலை பாக்கு, பழம், பூ, மஞ்சள், குங்குமம், தேங்காய் வைத்து வெற்றிலை மேல் உருக்கிய தங்கத்தையும் வைத்து மணமகனிடம் ஆசாரியார் கொடுப்பார். அதை மணமகன் வந்துள்ள சபையோருக்குக் காண்பித்து, அதன் பின் ஆசாரியாரிற்கு அரிசி காய்கறியுடன் தட்சணை அளித்து உருக்கிய தங்கத்தைத் திருமாங்கல்யம் செய்ய ஒப்படைக்க வேண்டும் மற்றபடி ஏற்கனவே செய்யப்பட்ட தாலியை வாங்கினாலும் மன நிறைவு அளிக்கும் இடத்தில் வாங்குவதே சிறந்தது. தாலி பல ஆண்டுகள் நிலைத்திருக்க மனமகிழ்ச்சி மற்றும் தரம் ஆகியவை மிக முக்கியமானதாகும். தாலி என்பது ஒரு மணமான பெண்ணுக்கான அடையாளம் மட்டுமல்ல. அது மங்கலத்தின் அடையாளம். மஞ்சள் நிறம், மஞ்சள் கயிறு, மஞ்சள் நிறம் கொண்ட பொன், மஞ்சள் கொம்பு என அனைத்துமே மங்கலத்தின் அடையாளமாக கொள்ளப்படுகிறது. மஞ்சள் என்பதற்கு அழகு என்றும் ஒரு பொருள் உண்டு. மங்கை மங்கல அடையாளமாக இந்த வீட்டில் விளங்குகிறாள் என காட்டவே மங்கலத்தை அடையாளப்படுத்தும் மஞ்சள், குங்குமம், பூ, பொட்டு என அனைத்து மங்கலங்களின் அடையாளங்களின் உரிமையும் பெண்ணிற்கு அளிக்கப்படுகிறது. பெண்ணே அனைத்தையும் உருவாக்குகிறாள் என்பதால் பெண்களுக்கே அனைத்து மங்கல அடையாளங்களும் அளிக்கப்படுகின்றன. தாலி என்பது வேறு இல்லத்தில் பிறந்த இப்பெண் இந்த இல்லத்தின் அனைத்து அறங்களின், மங்கலங்களின் விருத்தியின் ஆதாரமாக இருக்கிறாள் எனக் காட்டுவதாகும். தாலி மட்டுமல்ல, வாழ்க்கைக்கு ஆதாரமாக ஐந்து நூல் சூத்திரங்களை முன்னோர் நமக்கு வகுத்து அளித்திருக்கின்றனர். அவை 1) அரைஞாண் கயிறு 2) பூணூல் 3) கங்கணம் 4) மாங்கல்யம் 5) சஞ்ஞாத சூத்திரம். இவைகளைப் பற்றிய விவரங்களைப் பின்னிணைப்பு 5 இல் காணலாம்.   []         9.5. மங்கலப் பொருட்கள் வாங்குதல் []   திருமணத்திற்குத் தேவையான பொருட்களை வாங்குவதும் நல்ல நேரம் பார்த்தே வாங்கப்படுகின்றன. அவையாவன - பூசை / யாகத்திற்கு தேவையானவை வாங்குதல் - ஆடை அணிகலன்கள் வாங்குதல் - விருந்திற்கான உணவுப் பொருட்கள் வாங்குதல் - மணமக்களுக்கு பிரத்யேகமான பாய், கூடை இத்யாதிப் பொருட்கள் வாங்குதல் நல்ல நேரம் பார்த்தலை, பலர் தேவையில்லை என எண்ணலாம். ஆனால் திட்டமிட்ட வாழ்க்கைக்கு நேரம் பார்த்தல் மிகச் சிறந்த உதவிகளை கொடுக்கிறது. எந்த ஒரு செயலையும் இந்தக் காலகட்டத்தில் செய்ய வேண்டும் என வரையறுத்துக் கொள்வதால், அச்செயலின் முக்கியத்துவத்தை அந்தக் காலகட்டத்தில் அதிகப்படுத்தி கவனம் செலுத்தி செயலை புரிகிறோம். புராஜக்ட் மேனேஜ்மெண்ட் என்னும் திட்டப்பணி நிர்வாகத்தில் காலம் நிர்ணயித்தல் எவ்வளவு முக்கியமானது என்பது சொல்லித்தரப்படுகிறது. உதாரணமாக, திருமணத்திற்கு நூற்றுக்கும் மேற்பட்ட பொருட்களை வாங்கப் போகிறோம். இன்னும் இரண்டு மாதம் இருக்கிறது. இன்னும் ஒரு மாதம் இருக்கிறது என பல விஷயங்களை நாம் அலட்சியமாக விட்டு விட்டு கடைசி நேரத்தில் அலை மோதுவோம். பல சமயங்களில் சில சின்ன விஷயங்களை மறந்து விடுவோம். நல்ல நேரம் பார்த்துச் செய்தல் என்பதால் இது தவிர்க்கப்படுகிறது. குறுகிய காலம் என்பதால் முன்னரே அமர்ந்து தேவைகளைப் பட்டியலிட்டு விடுகிறோம். புரோகிதர், சமையல்காரர் இன்ன பல நிகழ்வுகளின் ஒருங்கிணைப்பாளர்களும் பட்டியல் தந்து விடுகின்றனர். ஆக குறிப்பிட்ட காலத்தில் செய்ய வேண்டும் என்பதால் நாம் அதை திறமையாக நிர்வகித்து விடுகிறோம். கடைசி நேர அலைச்சல்களும் ஞாபக மறதி நிந்தனைகளும் இருப்பதில்லை. நேரம் குறிக்காமல் செய்தால் நம் கவனம் முழுதும் மிக முக்கிய பணிகள் மீது மட்டுமே இருக்கும். பல சிறு சிறு முக்கிய பணிகளில் அசிரத்தை காட்டுவோம் என்பதால் நேரம் குறித்து பொருட்களை வாங்குதல் வலியுறுத்தப்படுகிறது. கூடவே மன  நிறைவையும் இது அளிக்கிறது. மேலும் நேரம் குறித்து செய்வதால், பலரும் ஒன்று கூடிச் செய்ய முடிகிறது. இதனால் திருமணம் என்பது மகிழ்வான கூட்டு முயற்சியாக உருவெடுக்கிறது.  திட்டமிட்டுச் செய்வதால் பெரிய காரியங்கள் சுலபத்தில் முடியும். []   9.6 . முகூர்த்தக் கால் நடுதல் []   முகூர்த்தக்கால் நடுதல் என்பது இவ்வீட்டில் சுபகாரியம் நடக்க உள்ளது என அறிவிப்பதாகும். முகூர்த்தக்கால் நட்ட வீட்டிற்கு அசுப செய்திகளைச் சுமந்து கொண்டோ அசுப சகுனங்களை கொண்டோரோ வராமல் இருக்க செய்யும் அடையாளம் இது.     மனம் என்பது ஒவ்வொரு சடங்கிலும் மிக முக்கியமானது. முகூர்த்தக்கால் நடப்பட்ட வீடுகளின் அக்கம் பக்கம் இருப்போர் அசுப சகுனங்களுடன் வீட்டாரின் எதிரே தோன்றா வண்ணம் காத்து மன நிறைவுடன் திருமணம் நடத்த இது உதவுகிறது. எந்த ஒரு சுப நிகழ்வு என்றாலும் முகூர்த்தக் கால் இடுதல் என்பது அந்த  நிகழ்வின் ஆரம்பத்தைக் குறிக்கும். நிலத்தில் நடப்படும் மூங்கில் ஒன்று பலவாகத்தானே பெருகி வளர்ந்து தழைத்துச் செழித்தது போல் இன்று மணநாளில் ஒன்று கூடும். இத்தம்பதியரின் இல்லறம் நல்லறமாகி இக்குலம் பெருகிச் செழிக்க வேண்டும் என்பது மூங்கில் நடுவதன் தாத்பர்யம். “மூங்கில் போல் சுற்றம் முசியாமல் வாழவேண்டும்“ என்பது பழமொழி. ஒன்பது கணுக்கள் உள்ள பச்சை மூங்கிலில், கணுவுக்கு கணு செம்மண்-சுண்ணாம்பு பூசி மஞ்சள், குங்குமம், பூ ஆகியவற்றால் அலங்கரிப்பர். விக்னேஸ்வர பூஜைக்குப் பின் மூங்கிலில் அரசங்கொத்தைக் கட்ட வேண்டும். மஞ்சளில் நனைத்த துணியில் நவதான்யம், காசு முதலியன முடிந்து, இம்மஞ்சள் துணியால் மூங்கிலையும், அரசங்கொழுந்தையும், தர்ப்பையும் சேர்த்துக் கட்ட வேண்டும். மூன்று சுமங்கலிகள் இதனுக்குப் பாலாபிஷேகம் செய்து மஞ்சள் குங்குமம் பூசி நட வேண்டும். அம்மூங்கில் கழியை நிலத்தில் ஊன்றியதும் அதற்குத் தேங்காய் உடைத்து, சாம்பிராணி, கற்பூரம் காட்டவேண்டும். அதனடியில் நவதானியத்தோடு பவளம் அல்லது நவமணிகள் இட்டு நீர் பால் ஊற்றி (3 சுமங்கலிப் பெண்கள்) மரத்திற்கு திருநீறு, சந்தனம், குங்குமம் சார்த்தவேண்டும். இது நன்கு வளரவேண்டும் என்று நினைத்து கும்பத்தண்ணீரை ஊற்றலாம். மஞ்சளில் பிள்ளையார் பிடித்து வைத்து வெற்றிலைபாக்கு, பழம் வைத்து தேங்காய் உடைத்துத் தீபம் காட்டி, அடுத்ததாக பந்தல் கால் ஊன்றுவார்கள். பந்தல் காலைத் தொடர்ந்து பந்தல் அமைக்கும் வேலை தொடரும். மணமகள் வீட்டில் ஊன்றிய பின் மணமகன் வீட்டிற்கும் செய்ய வேண்டும். முகூர்த்தக்கால் ஊன்றிய பின் இரு வீட்டாரும் திருமணச் சடங்குகள் முற்றாக முடிவடையும் வரை எந்தவிதமான துக்க நிகழ்ச்சிகளிலும் பங்குபெறுதல் கூடாது. (கால் ஊன்றுபவருக்குத் தட்சணை கொடுக்கவேண்டும்.)   []                                                   9.7. முளைப்பாலிகை இடுதல்   இந்திய சமூகம் விவசாயம் சார்ந்த சமூகம் ஆகும். செழிப்பு, வளம் என்ற சொற்களுக்கு விளைச்சலே இந்தியாவில் பொருளாகும். []   எந்த வீட்டில் திருமணம் நடக்குமோ, அந்த வீட்டில் மூன்று அல்லது ஐந்து மண்சட்டிகள் அல்லது மூங்கில் தட்டிகளில் பசுஞ்சாணம் சேர்த்த மண்பரப்பி  நீர் ஊற்றவும். பாலில் ஊறவைத்த நவதானியங்களை 3 அல்லது 5 சுமங்கலிப் பெண்கள், அச்சட்டிகளில் தூவி, நீரும் பாலும் தெளிக்க வேண்டும். (3 முறை). இவற்றைப் பூஜை அறைக்குள் வைத்து, திருமணத்தன்று மணவறைக்குக் கொண்டு போக வேண்டும். தினம் காலை இளவெயிலில் நீர் தெளித்து வைப்பதால் முளைப்பு செழிப்பாக இருக்கும்.  இதை 3 நாட்களுக்கு முன்னாவது செய்தால் நவதானியம் நன்கு வளர்ந்து இருக்கும். நவதான்யங்களை முளைக்க வைத்து அவற்றைச் சுமங்கலிகள் எடுத்து வந்து மணவறையில் வைத்து இருப்பார்கள். இப்பாலிகைகளைப் பார்த்துக் கொண்டுதான் திருமாங்கல்யம் கட்ட வேண்டும். இம்முளைகள் செழித்து வளமுடன் இருப்பது போல் உங்கள் இல்லறம் செழிக்க வேண்டும் உம் குலம் செழிக்க வேண்டும் என்பது உட்கருத்து. செழிப்பு என்ற நற்சகுனம் கண்ணிற் தெரிய தாலி கட்டுவது மனதில் ஆனந்தத்தை பெருகச் செய்யும்.  குடும்பம் செழித்து தழைப்பதே இந்த திருமணத்தின் நோக்கம் என்பதை மறைமுகமாக மனதிற்கு உணர்த்துவது இது. “பச்சை விரித்த பாலிகை முளைக்கும் நிரையும்” என்கின்றது சிலப்பதிகாரம். இந்தப் பாலிகையை திருமணத்திற்குப் பின் நதியிலே சேர்த்து விடலாம். நவதானியங்கள் :- நெல், கோதுமை, பயறு, துவரை, மொச்சை, எள், கொள்ளு, உளுந்து, கடலை என்ற ஒன்பது வகை தானியங்கள். தானியங்கள் செல்வங்களில் ஒன்றுதான் என்றாலும், அவை தனிச்சிறப்புடன் பார்க்கப்படுபவை.  தன லஷ்மி, தான்ய லஷ்மி என இருவேறு லஷ்மிகள் இவற்றிற்கு அதிபதிகளாக்கப்பட்டனர். முளைப்பாரி சடங்கு, நமது விவசாயச் சமூகத்தையும், விளையும் தன்மைதான் வளம் என்பதையும் அடையாளப்படுத்துவதாகும். []       9.8. பந்தல் அமைத்தல்   முகடுடையப் பந்தல் அமைக்கும் பழக்கம் அக்காலத்தில் நடைமுறையில் இருந்து வந்துள்ளது. பந்தலின் உள்பகுதியில் மேலுக்கு துணிகளைக் கட்டுவார்கள். அழகுக்காகவும் திருமணச் சடங்குகள் நடக்கும் பொழுது பந்தலின் மேலிருந்து தூசி, அழுக்குப் பொருட்கள், பல்லி போன்றன விழுந்து விடாமல் இருப்பதற்காகவும் இந்த ஏற்பாடுகள் செய்யப்படுகின்றன. பந்தலை கமுகு, வாழை, தென்னை ஓலைகளால் அலங்கரிப்பர். []   வாழைமரம் ஒருமுறைதான் குலைபோடும் அதுபோல் எமது வாழ்விலும் திருமணம் ஒருமுறைதான் என்பதை உணர்த்துகிறது. பாக்கு கொத்துக் கொத்தாக காய்ப்பதால் இது தம்பதிகள் ஒற்றுமையாக வாழவேண்டும் என்பதை வலியுறுத்துகின்றது. வாழையும் தென்னையும் கற்பகதருக்கள். இவை தம்மை முழுக்க முழுக்க மனிதர்களுக்கு அளிப்பவை. மேலும் இவை அழியாப் பயிர்கள் ஆகும். தென்னை நூற்றாண்டு வாழக்கூடியது. “வாழையடி வாழையாக” வளர்வது வாழைமரம்.   தேங்காயும் வாழைப்பழமும் இறை வழிபாட்டில் முக்கியமாகின்றது. தம்பதிகள் நிலைத்து நின்று அனைவருக்கும் பயன்படக்கூடியதாக வாழவேண்டும் என்ற தத்துவத்தையே உணர்த்துகிறது.  இதுதான் இல்லறத்தின் முக்கிய கடமை என ஆரம்பத்திலேயே பார்த்தோம். திருமணத்தை வசதிக்கேற்ப வீட்டிலோ, கோயிலிலோ அல்லது வேறு மண்டபத்திலோ வைக்கலாம். அப்படி வேறு மண்டபத்தில் வைப்பதானால் இருவரது வீட்டு வாசல்களும், மண்டப வாயிலும் மாவிலை, தோரணம், வாழை மரங்களால் அலங்கரிக்கப்படுகிறது.  மாவிலை கட்டுவது ஆக்சிஜனைப் பெருக்க ஆகும். மாவிலை பறிக்கப்பட்டு உலரும் வரை ஆக்சிஜனை உற்பத்தி செய்யும். பலர் கூடும் இடத்தில் அனைவரும் விடும் மூச்சுக்காற்றில் உள்ள கரியமில வாயுவை உறிஞ்சி ஆக்சிஜனாக இது மாற்றுவதால் மூச்சுத்திணறல் உள்ளிட்ட சுவாசக் குறைபாடுகள் குறையும். வாசலில் நிறைகுடம் வைக்கவேண்டும். நீர் வெப்பத்தில் ஆவியாதால் ஈரப்பசை காற்றில் எப்பொழுதும் இருக்கும். இந்த ஈரப்பசை வறட்டு இருமலைத் தடுப்பதால் நோய்த்தொற்று குறையும். வசதிக்கேற்ப வீடுகளையும் மண்டபத்தையும் அலங்கரிக்கலாம். மண்டபத்தில் கிழக்கு நோக்கி நன்கு அலங்கரிக்கப்பட்ட மணவறை அமைக்கப்பட வேண்டும். மணவறையின் முன்பு சுவாமி அம்பாள் கும்பங்கள், சந்திரகும்பம், விநாயக பூஜை, பஞ்சகௌவ்விய பூசைக்கென ஒரு கும்பம், அக்கினி கிரியைக்குரிய பாத்திரம், அம்மி, மஞ்சள் நீர் ஆகியவை வைக்கப்படும் 9.9. மணமக்கள் அழைப்பு   இராமாயணத்தில் இராமனின் விவாகம் விதேக நாட்டில் பெண் வீட்டில் நடந்தது. அங்கே மாப்பிள்ளை அழைப்பு நடந்தது. மகாபாரதத்தில் திரௌபதி விவாகம் பாண்டவர் இல்லத்தில் நடந்தது.  அர்ச்சுனன் திரௌபதியை [] போட்டியில் வென்று வீட்டிற்கு அழைத்து வந்தான். பின்னர் பாண்டவர்கள் வீட்டில் திரவுபதிக்கும்   பாண்டவர்களுக்கும் திருமணம் நடந்தது [] இராமனுக்கு மாப்பிள்ளை அழைப்பும், திரவுபதிக்கு பெண் அழைப்பும் நடந்தது.     9.9.1 மணமகள் அழைப்பு இது பிரஜாபத்ய விவாகத்தின் பழக்கமாகும். பிரஜாபத்யத்தின் படி  மணமகன் வீட்டில் திருமணம் நடப்பதாய் இருப்பதால் மணப்பெண் நிச்சயதார்த்தம் முடிந்த உடனேயே மணமகன் வீட்டிற்கு அழைத்துக் கொண்டு வரப்படுவாள்.   []   மணப்பெண்ணிற்கு நிச்சயம் செய்ய அளிக்கப்பட்ட ஆடை ஆபரணங்களை அணிவித்து, பிறந்த வீட்டினரின் ஆசிகளை அளித்து, மணமகன் வீட்டுக்கு மணமகள் அனுப்பப்படுவாள். மணமகன் வீடு அருகே என்றால் ஊர்வலமாக பெண் அழைத்து வரப்படுவாள். இல்லையென்றால் மணமகன் வீட்டிற்கு அருகில் உள்ள கோவிலில் இருந்து வீட்டிற்கு அழைத்து வரப்படுவாள். மாப்பிள்ளை வீட்டில் ஆரத்தி எடுத்து திருஷ்டி கழித்தபின், மாப்பிள்ளை வீட்டாரின் மூத்த சுமங்கலிப் பெண் நிறைகுடம் கொடுக்க அதை இடுப்பில் சுமந்து,  வாசல்படியில் வைத்திருக்கும் படிநெல் – காசுகள் தெறித்து விழுமாறு தட்டி, வீட்டிற்குள் தன-தான்யம் பரவ, தன் புகுந்த வீட்டிற்குள் மணமகள் புகுவாள். அந்த  நிறைகுடம் சமையல் அறையில் உள்ள நிறைகுடத்துடன் வைக்கப்படும். மணப்பெண் நிறைகுடமாய் இருக்க வேண்டும் என்பதையும், அவள் கால்பட்டதும் தனம் – தான்யம் பெருக வேண்டும் என்பதையும் குறிப்பால் உணர்த்துவது இந்தச் சடங்காகும்.    புகுந்த வீட்டில் முதலில் பூஜை அறையில் குத்து விளக்கேற்றி மணமகள் வணங்குவாள். பின் சமையலறைக்கு அழைத்துச் செல்லப்பட்டு அங்கு நிறைந்திருக்கும் அரிசி, பருப்பு, உப்பு ஆகியவற்றைக் கையில் அள்ளி அள்ளி பார்ப்பாள். ஒரு இல்லத்தலைவியின் கடமை, வீட்டில் உணவுப்பொருட்களை தேவையான அளவு இருக்கிறதா என என்றும் அறிந்திருக்க வேண்டியதும், அவற்றைக் கொண்டு பிறர் பசி தீர்ப்பதும் ஆகும். ஒரு தலைவனின் கடமை அந்த தானியங்களால் வீட்டை நிறைத்து வைத்திருப்பது ஆகும். [] இதன் பின் மணமகள் மணப்பந்தலுக்கு அழைத்து வரப்படுவாள்.    9.9.2. மாப்பிள்ளை அழைப்பு   []   இது பெண்வீட்டார் செய்யும் திருமணங்களில் நடத்தப்படும். மாப்பிள்ளை மண்டபத்திற்கு வந்தவுடன் அவரை பெண் வீட்டார் மேளதாளத்தோடு வரவேற்பர். அங்கு தோழன் மாப்பிள்ளையின் காலைக் கழுவிவிடுவார். அதற்கு உபகாரமாக மாப்பிள்ளைத் தோழனுக்கு மோதிரம் ஒன்றை அணிவிப்பார். பின் பெண்ணின் தகப்பன், மாப்பிள்ளைக்கு மாலை சூடி வரவேற்பார்.  இரு சுமங்கலிப் பெண்கள் ஆரத்தி எடுப்பர். []   9.10  காசி யாத்திரை   மணமகன் தன் பிரம்மச்சர்ய விரதத்தை முடித்துக் கொண்டு வருவதற்காக, தன் பெற்றோரிடம் அனுமதி கேட்க வேண்டும். அப்போது மணமகன் கூறுவது  “நான் பிரம்மச்சர்ய விரதத்தை கைக்கொண்டு இருக்கின்றேன். இவ்விரதத்தை முடித்துக் கொண்டு வருவதற்கு காசியாத்திரை செல்கின்றேன். எனக்குச் சுபமாக உத்தரவு கொடுக்க வேண்டும். தாயே! பிட்சை இடுக”. [] இச்சமயத்தில் மாப்பிள்ளையின் தோளில் தொங்கும் ஜோளியில் (ஜோல்னாபை) உறவினர்கள் பிட்சை இடுவார்கள். இந்தப் பிட்சை தட்சிணையாக மாப்பிள்ளைத் தோழனுக்குச் சேரும். மணமகன் பிட்சை பெற்றுக் கொண்டு ஆலயம் சென்று அமர்கின்றான்.   இன்றும் இளைஞர்களிடையே கல்வியை முடித்த பின் ஒரு நீண்ட சுற்றுலா சென்று வரவேண்டும் என்ற ஆர்வம் இருக்கிறது. ஒரு “லாங் ரோட் டிரிப்” போக வேண்டும் என்பதே அன்று காசியாத்திரையாக இருந்தது. ஒரு யாத்திரை என்பது உலக அறிவை ஊட்டக் கூடிய ஒன்று. அதனாலே காசியாத்திரை என்ற சடங்கு சேர்க்கப்பட்டது.  பெண்ணின் தாய், தகப்பனார் ஆலயம் சென்று, மாப்பிள்ளைக்குப் பாதபூசனை செய்கின்றனர். அப்போது சொல்ல வேண்டியது , “சர்வ அலங்காரத்துடன் தேவதை போல் வீட்டில் இருக்கும் எங்கள் மகளை நீ பாணிக்கிரஹணம் செய்து கொள்வாயாக. அவளை உனக்கு கன்யாதானம் செய்கிறோம். காசியாத்திரையை விடுத்து எங்கள் வீட்டிற்கு வருக! இல்லற வாழ்வில் ஈடுபட்டு குலவிருத்தி செய்து கர்மங்களை புரிந்து நிறைவுடன் வாழ வருக!” எனச் சொல்லி  அழைத்து வருகின்றனர். இது இல்லற வாழ்வின் பயன்களையும், அது ஏன் முக்கியமானது என்பதையும் எடுத்துச் சொல்லும் நிகழ்வாகும். இல்லற வாழ்வின் பயனாகிய அறம் வளர்த்தல், அதற்கான சந்ததியைப் பெற்று அறத்தை நிலை நிறுத்தல் ஆகியவை செய்யாமல் சன்னியாசம் பூணுவது வீண் என்பதை எடுத்துச் சொல்ல வேண்டியது இங்கு அவசியம். [] இது பிரம்ம விவாகத்தின் பழக்கமாகும்.  பலர் காசி யாத்திரை செய்யாமல் மாப்பிள்ளை அழைப்பு மாத்திரமே செய்கின்றனர். அதாவது கோவிலில் இருந்து மாப்பிள்ளையை ஊர்வலமாய் அழைத்து வருகின்றனர்.     [] 9.11  குடஜீராரோஹணம்   காசி யாத்திரையில் இருந்து மணமகன் அழைத்து வரப்படுகின்றான். மாப்பிள்ளை கிழக்கு முகமாகவும், பெண் மேற்கு முகமாகவும் அமர்கின்றனர். இருவருக்கும் நடுவில் முகம் தெரியாத அளவில் திரை. நாட்டுச் சர்க்கரை, ஜீரகம் இரண்டும் கலந்ததை மாப்பிள்ளை முதலில் பெண்ணின் சிரசில் தூவ, பின் பெண் மாப்பிள்ளை சிரசில் தூவுகிறாள்.   பின் முகத்தளவாகத் திரை இறக்கி முகம் காட்டல் நடத்தப்படும். பெண்ணின் பக்கம் ஏழு சுமங்கலிகள் ஏழு நெய் மாவிளக்கு ஏந்தி நிற்க வேண்டும். புரோகிதர் : எதிரில் என்ன தெரிகிறது?  மணமகன் : ஜோதி தெரிகின்றது.  புரோகிதர் : ஜோதிக்குப் பக்கத்தில் என்ன இருக்கின்றது?  மணமகன் : ஜோதிக்குப் பக்கத்தில் கன்னிகைதான் இருக்கின்றாள்.  புரோகிதர் : கன்னிகையை மணந்து கொள்கின்றாயா?  மணமகன் : மணந்து கொள்கின்றேன்.  புரோகிதர் : பூதேவி, ஆகாயவாணி சாட்சியாக, குல தெய்வம் சாட்சியாக, இஷ்ட தெய்வம் சாட்சியாக, அக்கினி சாட்சியாக, அனைத்து குலத்தார் சாட்சியாக மணம் செய்து கொள்கிறாயா?   மணமகன் : பூதேவி, ஆகாயவாணி சாட்சியாக, குல தெய்வம் சாட்சியாக, இஷ்ட தெய்வம் சாட்சியாக, அக்கினி சாட்சியாக, அனைத்து குலத்தார் சாட்சியாக மணம் செய்து கொள்கின்றேன்.  திருமணத்தின் அவசியம் புரிந்த பின்னர் மணமகளை, மணமகனுக்கு அறிமுகப்படுத்தும் சடங்கு இதாகும்.  வாழ்வின் ஒளியாக இருப்பவளைக் காண்கிறாய் என்பதற்காகவே தீபம் வைக்கப்படுகிறது.  கூடவே மணமகன் அக்னியின் சாட்சியாக மணமகளை விவாகம் செய்ய விரும்புவதாக ஒப்புதல் அளிக்கிறான். எந்த நேரத்திலும், ஒருமுறைக்கு இருமுறை ஒருவரின் சம்மதத்தை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும் என்பது இதன் மூலம் சொல்லித் தரப்படும் பாடமாகும். இப்படி செய்வது பிரம்ம விவாகத்தில் மாத்திரமே நடப்பதாகும். []      9.12 தேவதா பிரஸ்தம்   குலதெய்வம், இஷ்ட தெய்வம், கிருஹதெய்வம் என ஒவ்வொருவருக்கும் பல தெய்வ வணக்கங்கள் கூறப்பட்டுள்ளன. தேவதா பிரஸ்தம் என்பது, தன் வீட்டுத் தெய்வத்தை (கிருஹ தெய்வத்தை) வணங்குதல் ஆகும். குலதெய்வம் என்பது வேறு. கிரஹ தெய்வம் என்பது வேறு. [] இவ்வழிபாட்டில் மாப்பிள்ளையின் சகோதரிகளுக்கு மரியாதைகள் செய்யப்பெறும். இச்சடங்குகள் தேவதா ப்ரஸ்தம் எனப்படும். ஒவ்வொருவர் குல உட்பிரிவுகளுக்கு ஏற்ப இந்த வழிபாடு மிகுந்த வேறுபாடுகளுடன் இருக்கும்.     என் மகனையும் எங்களையும் அனுக்கிரகித்து புத்திரர், பௌத்திரர்களும் அஷ்ட ஐஸ்வர்யங்களும் பெருகும்படி ஆசீர்வசித்துக் காப்பாற்ற வேண்டும் என வேண்டிக்கொள்ளுதல் இதன் நோக்கமாகும். கிரஹ தெய்வ வழிபாட்டை எப்படி மேற்கொள்ள வேண்டும் என இல்லறத்தலைவனுக்கு அறிமுகம் செய்யவும், எந்த செயலுக்கு முன்பும் கிரஹ தெய்வத்தை வணங்குதல் முக்கியம் என்பதைக் காட்டவுமே இந்த பூஜை நடத்தப்படுகிறது. []     9.13.  கங்கண தாரணம்   மணமக்களுக்கு மந்திரப் பூர்வமாகக் கங்கணம் கட்ட வேண்டும். மணமக்களின் தாய்மாமன்மார் கங்கணம் கட்டுவது சிலரின் நடைமுறையில் இருந்து வருகின்றது. பிற இடங்களில் புரோகிதரே இதைச் செய்வார். கங்கணம் கட்டுதல் என்பது எந்தத் தெய்வக் கிரியைகள் செய்யும் முன்பும் நடக்கும்.  கங்கணம் கட்டியபின், ஒருவன் தான் எண்ணிய காரியத்தில் முழுமூச்சாய் ஈடுபடுவான்.     []   பூக்குழி இறங்குதல், காவடி எடுத்தல், பூங்கரகம் எடுத்தல் என தெய்வக் காரியங்கள் செய்யும் முன் உறுதிக்காகவும் காப்பிற்காகவும் கையில் கங்கணம் கட்டப்படும். தொடங்கிய கருமம் நிறைபெறும் வரை எந்தவிதத் தீட்டுக்களோ, இடையூறுகளோ துக்கங்களோ மணமக்களைச் சாராதிருக்க வேண்டிப் பாதுகாப்புக் கருதி செய்யப்படுவது கங்கண தாரணம் ஆகும். இதற்கு ஒரு தாம்பாளத்தில் அரிசி பரப்பி தேங்காய், வெற்றிலை, பாக்கு, பழம் காப்பு நூல் முதலியவற்றை வைத்துப் பூசித்து மணமக்களின் வலது மணிக்கட்டில் காப்புக் கட்டுவார்கள் காப்பு கட்டும்போது மாப்பிள்ளை வீட்டார் ஒரு தேங்காய் உடைப்பார்கள். பின்னர் குருக்கள் சிவன், பார்வதி பூசை முதலியவற்றை மந்திர உச்சாடனத்துடன் செய்வர் (பின்னர் அக்கினி மூட்டப்பட்டு அதற்குரிய பூசை வழிபாடுகள் நடைபெறும்). கங்கணம் அணிவித்த பின் மாப்பிள்ளைக்கு மாப்பிள்ளையின் தாய்மாமன் மெட்டி அணிவிப்பார். (பெண்ணிற்கு அம்மி மிதிக்கும் பொழுது மாப்பிள்ளை மெட்டி அணிவிப்பார்.) பின் மணமக்களுக்கு தாய்மாமன்மார் பலகாரம் உண்ணுவித்தல் நடைபெறும். கங்கணம் கட்டிக் கொண்டு வேலை செய்கிறான் என்ற சொலவடையை நாம் உபயோகிக்கிறோம். முழு ஈடுபாட்டுடன் சிரத்தையுடன் செயல் புரிதலுக்கு அடையாளமாக கங்கணம் என்னும் காப்பு அணிவிக்கப்படுகிறது. கங்கணம் அணிந்த பின் மணமக்கள் திருமண காரியங்கள் தவிர மற்ற காரியங்கள் செய்வதில்லை. மணவிடம் விட்டு வெளிவருதலும் இல்லை.   []   9.14.  நாந்தி - சிரார்த்தம் செய்தல்    முன்னோர் வழிபாடு என்பது நம் நாட்டின் மிக உயரிய பாரம்பரியம். வேத சாத்திரங்கள் முன்னோர்களைப் பித்ருக்கள் என அழைக்கும். பித்ரு லோகத்தில் இருந்து கொண்டு, நமது முன்னோர்கள் நம்மை ஆசிர்வதிக்கின்றார்கள். அவர்களைத் திருப்தி செய்ய வேண்டும். புது வாழ்வில் ஈடுபடும் தம்பதியினருக்குப் பித்ருக்களின் நல்லாசியைப் பெற்றுத் தரவே இவ்வழிபாடு செய்யப்படுகின்றது. இச்செயல் நாந்தி அல்லது சிரார்த்தம் எனப்பெறும். தாய், தகப்பனார் தமக்கு நடுவில் மாப்பிள்ளையை உட்கார வைத்துக் கொள்ள வேண்டும். அட்சதை அரிசி நிரம்பிய தட்டை, மணமகனின் தகப்பனார் தமது துடையில் வைத்துக் கொள்ள வேண்டும். மஞ்சள் கொம்புகளை அருகில் வைத்துக் கொள்ள வேண்டும். ஒவ்வொரு முறையும் மந்திரம் சொல்லும் போது மஞ்சள் கொம்பு ஒன்றனை எடுத்து அதனைத் தட்டில் தட்டியபின் தட்டில் உள்ள அட்சதை அரிசியில் வைக்க வேண்டும். மாப்பிள்ளையின் தகப்பனார் / அல்லது அவருக்கு மூத்த தலைவர்  இச்சடங்கை இவ்வழிப்பாட்டைச் செய்கின்றனர். உதாரணமாக மாப்பிள்ளையின் தந்தை வழி ஆண்களில் மூத்தவர் (நேரடி வம்சம் மட்டுமே, தந்தை - தாத்தா – தாத்தாவின் உடன்பிறந்தோர்) இதைச் செய்வார். நாந்தி சிரார்த்தத்தில் மாப்பிள்ளையின் தகப்பனார் மாப்பிள்ளையின் தந்தையார் வழி கோத்ரம் கூறி பின் வரும் மந்திரங்களைக் கூறி நாந்தி செய்ய வேண்டும்.  (5 தலைமுறை) இச்சடங்கில் நினைக்க வேண்டிய பித்ருக்கள் (முன்னோர்கள்). 1) முதலில் தன் கோத்ரம் / தகப்பனார் பெயர்  மும்முறை கூறி ஒவ்வொருமுறையும் மஞ்சள் கொம்பை எடுத்துத் தட்டில் தட்டி அட்சதையில் வைக்க வேண்டும். 2) தன் கோத்ரம் / தாய் பெயர்  மும்முறை கூறி ஒவ்வொருமுறையும் மஞ்சள் கொம்பை எடுத்து தட்டில் தட்டி அட்சதையில் வைக்க வேண்டும். 3) தன் கோத்ரம் / பாட்டனார்-பாட்டி பெயர் மும்முறை கூறி ஒவ்வொரு முறையும் மஞ்சள் கொம்பை தட்டில் தட்டி அட்சதையில் வைக்க வேண்டும். 4) தன் கோத்ரம் / முப்பாட்டனார்-முப்பாட்டி பெயர் மும்முறை  கூறி ஒவ்வொரு முறையும் மஞ்சள் கொம்பை தட்டில் தட்டி அட்சதையில் வைக்க வேண்டும். 5) தன் தாய்வழி கோத்ரம் / தாயின் தந்தை-தாயார் பெயர் மும்முறை கூறி ஒவ்வொரு முறையும் மஞ்சள் கொம்பை தட்டில் தட்டி அட்சதையில் வைக்க வேண்டும். 6) தன் தாய்வழி கோத்ரம் / தாயின் பாட்டனார்-பாட்டி பெயர்  கூறி ஒவ்வொரு முறையும் மஞ்சள் கொம்பை தட்டில் தட்டி அட்சதையில் வைக்க வேண்டும். இதன்பின் மாப்பிள்ளையின் தாயார் வழி கோத்ரம் கூறி பின் வரும் மந்திரங்களைக் கூறி நாந்தி செய்ய வேண்டும். இதனைச் செய்ய வேண்டியவரும் மாப்பிள்ளையின் தகப்பனார் ஆவார். (5 தலைமுறை) 1) மாப்பிள்ளையின் தாய்வழி கோத்ரம் / தாயின் அப்பா பெயர் மும்முறை கூறி ஒவ்வொருமுறையும் மஞ்சள் கொம்பை தட்டில் தட்டி அட்சதையில் வைக்க வேண்டும். 2) மாப்பிள்ளையின் தாய்வழி கோத்ரம் / தாயின் அம்மா பெயர் மும்முறை கூறி ஒவ்வொருமுறையும் மஞ்சள் கொம்பை தட்டில் தட்டி அட்சதையில் வைக்க வேண்டும். 3) மாப்பிள்ளையின் தாய்வழி கோத்ரம்/ தாயின் பாட்டனார்-பாட்டி பெயர் கூறி மும்முறை கூறி ஒவ்வொருமுறையும் மஞ்சள் கொம்பை தட்டில்தட்டி அட்சதையில் வைக்க வேண்டும். 4) மாப்பிள்ளையின் தாய்வழி கோத்ரம் கூறி / தாயின் முப்பாட்டனார்-முப்பாட்டி  பெயர் மும்முறை கூறி ஒவ்வொரு முறையும் மஞ்சள் கொம்பை தட்டில் தட்டி அட்சதையில் வைக்க வேண்டும். 5) மாப்பிள்ளையின் தாய்வழி கோத்ரம்/ தாயின் தாய்வழிப் பாட்டனார்-பாட்டி பெயர் கூறி மும்முறை கூறி ஒவ்வொருமுறையும் மஞ்சள் கொம்பை தட்டில் தட்டி அட்சதையில் வைக்க வேண்டும். 6) மாப்பிள்ளையின் தாய்வழி கோத்ரம் கூறி / தாயின் தாய்வழி முப்பாட்டனார்-முப்பாட்டி  பெயர் மும்முறை கூறி ஒவ்வொரு முறையும் மஞ்சள் கொம்பை தட்டில் தட்டி அட்சதையில் வைக்க வேண்டும். இது குடும்பத்தில் இறந்த முன்னோரின் ஆசி பெற செய்வது ஆகும். இறந்து போன பத்து தலைமுறையினரின் ஆசி கிட்ட வேண்டி இது செய்யப்படுகிறது. இதைப் பலர் செய்வதில்லை. ஒவ்வொருவரும் தங்கள் பரம்பரை என்ன,  வம்சாவழி என்ன என்பதை அறிந்திருக்க வேண்டியது அவசியம் ஆகிறது.  அவற்றை இல்லறத் தலைவனாக மாறப்போகும் மகனுக்கு அப்பா உணர்த்துகிறார். இதன் மூலமாகவே தூரத்துச் சொந்தங்கள் விலகிப் போகாமல் சுற்றம் சூழ வாழ முடியும்.   முன்னோர் வழிபாட்டில் இருபத்தியோரு தலைமுறைகளை வணங்குகிறோம். கணவன் வழி பதினோரு தலைமுறை, மனைவி வழி பத்துத் தலைமுறை சேர்ந்தது இருபத்தியோரு தலைமுறைகளாகும். முன்னோர் வழிபாட்டைக் கடைப்பிடிக்க வேண்டிய இல்லறத்தலைவனுக்கு தலைமுறைகளை அடையாளம் காட்டவே இந்தச் சடங்கு. குறைந்த பட்சம் பத்துத் தலைமுறைச் சொந்தங்களுடன் கூடி வாழ்வதே ஒரு நல்ல குடும்பத்தலைவனின் இலட்சணமாகக் கருதப்படுகிறது. []     [] 9.15  பிரம்மோபதேசம்   இதன் பின், முகூர்த்தத்திற்கு முன் செய்ய வேண்டியக் கிரியைகளைப் புரோகிதர் செய்ய ஆரம்பிக்க வேண்டும். வழக்கமாக ஒரு ஆண் குழந்தைக்கு 7 லிருந்து 10 வயதிற்குள் பூணூல் அணிவித்து, காயத்ரி மந்திரத்தை உபதேசித்து உபநயனம் செய்து வைப்பர். உப என்றால் அருகில் எனவும் நயனம் என்றால் அழைத்துச் சொல்வது என்று இதன் பொருள்.   எனவே உபநயனம் என்றால் குழந்தையை குரு அல்லது ஆசிரியரிடம் அழைத்துச் சென்று முறையான கல்வி புகட்டுதல் என்று பொருள்படும். பலர் உபநயனம் செய்து முறையாக வேதபாடங்களை கற்பதில்லை. பூநூல் இன்றி வேத காரியங்களில் யாரும் ஈடுபடக் கூடாது. அறம் பயிலாமல் எந்தவிதக் கர்ம கார்யங்களையும் செய்யக் கூடாது என்பதற்காக பூநூல் அணிவித்து வேதங்களின் சாரமான காயத்ரி மந்திரம் உபதேசிக்கப்படுகிறது. இதன் மூலம் பலவித காரணங்களினால் மணமகன் வேதம் பயிலவில்லை என்ற குறை நிவர்த்திக்கப்படுகிறது. ஓம் பூர்; புவ; ஸீவ: தத் ஸவிதுர் வரேணியம் பார்க்கோ தேவஸ்ய தீமஹி த்யோயோன ப்ரசோதயாத் என்னும் இக்காயத்ரி மஹா மந்திரத்தை மணமகனின் வலது காதில், அவன் தகப்பனார் உபதேசம் செய்ய வேண்டும். உபதேசம் செய்யும் போது அவர் தமது வலது கையை மகனின் சிரசில் வைத்து இருக்க வேண்டும். பூஜிக்கப்பட்ட ஒற்றை முடிப் பூ நூலை மாப்பிள்ளைக்கு அணிவிக்க வேண்டும். இம் முதற் பூநூல் (ஒற்றை முடி) தாய் தந்தையரால் அணிவிக்கப்பட வேண்டும். இது “பிரம்மோபதேசம்“ எனப்படும். இதன் பின்னரே மணமகன் விவாகத்திற்கான பூஜை, யாகங்களில் பங்கேற்க இயலும். இல்லறத் தலைவனாகப் போகும் மாப்பிள்ளை, தனக்குப் பிறக்கும் குழந்தைக்கு பிரம்மோபதேசம் செய்ய வேண்டும் எனில் அவர் பிரம்மோபதேசம் பெற்றிருக்க வேண்டும். ஆகவே விட்டுப்போன ஒரு சடங்கை நிறைவு செய்யவே பிரம்மோபதேசம் செய்யப்படுகிறது. 9.16. சகல தேவதா பூஜை   பூநூல் அணிந்த பின்னே, சகல தேவதைகளுக்கும் உண்டான பூஜைகளை புரோகிதர் மூலம் மணமகன் செய்கிறான். இவற்றின் வரிசை பின்வருமாறு. 1. விக்னேஸ்வர பூஜை 2. வருணகலச பூஜை 3. குல தெய்வ பூஜை [] 4. குரு பூஜை 5. அக்னி கார்யம் ஆகியனவற்றைச் செய்ய வேண்டும். இவை அனைத்து தேவர்களையும் யாகத்தின் மூலம் அழைத்து அவர்களுக்கு உரிய அவிர்பாகம் அளித்து, திருமணத்துக்கு சாட்சியாய் இருந்து மணமக்களை வாழ்த்தி அருள வேண்டுவதாகும். இந்து மதத்தில் எந்த நற்செயலையும் தேவர்களை அழைத்து அவர்களுக்கு அவிர்பாகம் அளித்து திருப்தி   செய்து அவர்களின் ஆசியை வேண்டிய பிறகே செய்யப்படுகிறது. முழு நேர்மறை நோக்கத்துடன் மனதை நிறைவுடன் வைத்துக் கொள்வது இப்பூசையின் நோக்கமாகும். நாம் செய்வது நன்மையை நாடும் நற்காரியம், இதற்கு எந்த இடைஞ்சலும் வராமல், முழுப்பயன் கிட்ட தேவர்கள் உதவி செய்வார்கள் என்ற நம்பிக்கையை  இது உண்டாக்குகிறது. அரசாணிக்கால் இடுதல் (கால் என்பது கோலை ஊன்றுவதாகும்) முற்காலத்தில் திருமண வைபவங்களுக்கு அரசனுக்கும் அழைப்பிதழ் அனுப்புவார்கள். அரசனுக்கும் எல்லாத் திருமணங்களுக்கும் செல்ல முடியாத நிலை இருக்கும். எனவே அவர் தனது ஆணைக்கோலை அனுப்பி வைப்பார். அரசு ஆணைக்கோல் மருவி அரசாணைக்கால் ஆகிவிட்டது. இன்று பதிவுத் திருமணம் போல் அன்று ஆணைக்கோல் வந்துவிட்டால் அரசனால் அங்கீகரிக்கப்பட்டது. ஆகவே அத்திருமணம் அங்கீகாரம் பெற்றுவிடுகிறது.   இதுவே இன்று திருமணப் பந்தலில் அரச மரக்கிளை ஒன்றை வைத்து அதற்கு பட்டுச்சாத்தி அலங்கரித்து வைப்பர்.   மேலும் அரசமரத்தின் அடிப்பாகத்தில் பிரம்மனும் நடுவில் விஷ்ணுவும் நுனியில் சிவனும் வாசம் செய்கின்றனர். எனவே திரிமூர்த்திகளின் வணக்கம் செய்யப்படுகிறது. மணவறையில் திரிமூர்த்திகளின் சான்னித்யம் ஏற்படுகின்றது. அரசங்கொழுந்து கட்டுவதன் கருத்து அரசமரத்தின் விதை மிகச்சிறியது. அதிலிருந்து முளைக்கும் மரமோ மிகப்பெரியது. நாம் செய்யும் நற்செயல் சிறியதாயினும் அதினின்று பெருகும் நற்பயன் மிகப் பெரியது. எனவே சிறியவை என்று கருதாமல், செயல்கள் நல்லவை ஆயின் அவற்றை உடனே இத்தம்பதியர் செய்ய வேண்டும், என்று இதன்வழி சுட்டிக்காட்டப் படுகின்றது. []      9.17. மாலை மாற்றுதல்   மணமகள் எழுந்து வடக்கு நோக்கி இறைவனை தியானித்து மணமகள் கழுத்தில் மாலை சூட்டுவாள். மணமகன் மணமகளைத் தன் இடப்பக்கத்தில் அமரச் செய்து மாலை சூட்டுவான். மாலை மாற்றுதலின் பொருள் இருமனம் கலந்து ஒரு மனமாகி இல்வாழ்க்கையை ஆரம்பித்தல். மூன்று முறை மாலை மாற்ற வேண்டும். []     தொடர்ந்து, கொண்டு வந்த மங்கலப் பொருட்களாகிய மஞ்சள், குங்குமம், பூ, வாசனைப் பொருட்கள், சீப்பு, கண்ணாடி முதலியவற்றை மணமகன் மணமகளிடம் கொடுப்பார். கணவன் மனைவியாக ஆனபின் தம் மங்கலக் கோலத்தை இருவரும் கண்ணாடியில் பார்த்து மகிழ்வார்கள். மாலைமாற்று என்பதற்கு  அழகான பொருள் உண்டு. குடகு, விகடகவி என முன்னிருந்து பின்னும் பின்னிருந்து முன்னும் ஒரே மாதிரி ஒலிக்கும் சொற்களுக்கும் யாமாமாநீ யாமாமா யாழீகாமா காணாகா காணாகாமா காழீயா மாமாயாநீ மாமாயா போன்று முன்னிருந்து பின்னும் பின்னிருந்து முன்னும் ஒரே மாதிரி ஒலிக்கும் பதிகங்களுக்கும் மாலைமாற்று என்றே பொருள். மாலை மாற்றுதல் மூலமும் இதுவேதான். இருவர் சிந்தையும் ஒருமையாதலே மாலை மாற்றுதலின் பொருள். அதனாலேயே எல்லா வகைத் திருமணங்களிலும் எதையாவது மாற்றிக் கொள்ளுதல் முக்கியமான சடங்காக ஆக்கப்படுகிறது. தன்னுடைய முழுமையையும் மணமகள் மணமகனிடம் ஒப்புவிக்கிறாள். மணமகன் மணமகளிடம் ஒப்புவிக்கிறான். இதுவே மாலைமாற்றின் முக்கிய பொருளாகும். அதன் பின் மணமகன் நோக்கிலும் சரி, மணமகள் நோக்கிலும் சரி இல்லறம் என்பது ஒன்றுதான். [] 9.18.  பாணிக்கிரகணம்  (கைப்பிடித்தல்)   தருமம் செய்வதற்காகவும் சந்ததி விருத்திக்காகவும் திருமணம் செய்யப்படுகின்றது. பாணிக்கிரகணம் என்றால் மணமகளின் கையை மணமகன் சுவீகரிப்பது என்று பொருள். ‘நீயும் நானும் முதுமையடைந்து விட்டாலும் கூட ஒருவரை ஒருவர் பிரியாதிருப்போம் என்று கையைப் பிடிக்கிறேன்’ என்று கூறி மணமகளின் கையைப் பிடிக்கவேண்டும்.   பெண் தனது வலக்கை விரல்களை தாமரை மொட்டு போல குவித்து வைத்துக் கொள்ள, அந்தக் கையை மணமகன் தன் வலக்கையால் பற்றுகிறான். பஞ்ச பூதங்களின் சாட்சியாக கையைப் பிடிப்பதாக ஒரு கருத்து சொல்லப்படுகிறது. மணப்பெண்ணால் ஐம்புலன்களால் செய்யப்படும் செயல்கள் கணவனுக்கு மட்டுமே உரியவை. மணமகனால் ஐம்புலன்களால் செய்யப்படும் செயல்கள் மனைவிக்கே உரியவை. எந்நிலையிலும் ஒருவரை மற்றவர் கைவிடாது இருக்க வேண்டும் என்பதே இதன் அர்த்தமாகும்.   []   9.19 கன்யாதானம்   இது தாரை வார்த்தல் எனப்படும். தாரை வார்த்த பின்புதான் மாங்கல்ய தாரணம் (தாலி கட்டுதல்) நடைபெற வேண்டும். ஜனகன் தாரை வார்த்த பின் சீதையின் கழுத்தில் இராமபிரான் தாலிகட்டினார். இமவான் தாரை வார்த்தபின்தான் பார்வதி கழுத்தில் சிவபிரான் தாலி கட்டினார். இந்திரன் தாரை வார்த்த பின்தான் தெய்வானை கழுத்தில் முருகன் தாலி கட்டினார் என்பன பல ஆதாரங்கள்.   []   கன்யாதானத்திற்கு முன் புரோகிதர் மகாசங்கல்பம் செய்த உடன் மணமக்கள் இருவரின் தகப்பனாரும் பூநூல் தரிக்க வேண்டும். பின்னர் மாப்பிள்ளையின் தாய், தந்தையார் கையில் தட்டுடன் நிற்பர். தட்டில் மாப்பிள்ளையின் கைகளை அஞ்சலி பரமாக வைக்க வேண்டும். மணமகள் தன் கைகளை மாப்பிள்ளையின் கைகள் மேல் அஞ்சலி பரமாக வைக்க வேண்டும். பெண்ணின் கையில் தாம்பூலத்துடன் சக்திக்குத் தக்க திரவியம் வைக்க வேண்டும்.  பெண்ணின் கைகளை அவள் தகப்பனார் பிடித்துக் கொள்ள அவள் தாயார் கலசத்திலிருந்து நீரூற்றுவார். இது பெண்ணின் தகப்பனார் கையில் அங்கிருந்து வழிந்து பெண்ணின் கையில் விழுந்து, பின் தாம்பூலத்துடன் மாப்பிள்ளையின் கையில் சேர்ந்து, பின் தாம்பூலத்துடன் தட்டில் சேரவேண்டும். இத்தட்டினை மணமகனின் பெற்றோர் ஏற்றுக் கொண்டு பூரண கும்பத்தில் வைக்க வேண்டும். மந்திரம் “கன்யாம் கனக ஸம்பன்னாம் கனகா பரணைர் யுதாம் த்ஸ்யாமி விஷ்ணவே துப்யம் ப்ரம்ம லோகம் ஜிகீ ஷஹ“ (பொருள் :- இக்கன்னிகையைத் தங்க ஆபரணங்கள் சகிதம் உனக்கு உரிமையாக்குகிறேன். பிரம்மலோகம் வரை உங்கள் புகழ் பரவட்டும்.) பெண் அணிந்துள்ள நகை ஊர்த்தலைவர் முன் மாப்பிள்ளை வீட்டார் பேசி அணிவித்த நகையாகும். கன்யாதானம் செய்த பின் பெண்ணின் பெற்றோர் ஒற்றைமுடி உள்ள ஒரு பூநூலை மணமகனுக்கு அணிவிக்க வேண்டும். இத்துடன் மணமகன் இரண்டு முடியுடன் கூடிய பூநூல் அணிகின்றான். மூன்றாம் முடி உத்தரீயத்திற்குப் (மேல் துண்டுக்குப்) பதிலாக அணிவது என்பது சாஸ்திரம். மாப்பிள்ளையின் கையை மாமனார் பிடித்துக் கொண்டு “நான் இதுவரை வளர்த்த கன்னிகையை உனக்குக் கன்னிகாதானம் செய்து இருக்கின்றேன். இவளை நீ தர்ம, அர்த்த, காம, மோட்ச (அறம், பொருள், இன்பம், வீடு) என்னும் நான்கு புருஷார்த்தங்களுக்கும் கைவிடாமல் காப்பாற்ற வேண்டும் என்று கூற வேண்டும்”. என்று சொல்லுவார். “காப்பாற்றுகின்றேன்” என்று மணமகன் கூற வேண்டும். இந்த உலகில் பலவித தானங்கள் செய்யப்பட்டாலும் அவை எல்லாவற்றிலும் உயர்ந்தது இந்த கன்னிகாதானமே என்பதற்கு இந்த நிகழ்வின்போது சொல்லப்படுகிற சங்கல்பமும், மந்திரமுமே சாட்சி. தசானாம்பூர்வேஷாம், தசானாம்பரேஷாம், மம ஆத்மனஸ்ச ஏகவிம்சதிகுல உத்தாரண.  என்று அந்த மந்திரம் நீள்கிறது. பூர்வேஷம் என்பது பிறந்த வீடாகும். பரேஷம் என்பது புகுந்த வீடாகும். பிறந்த குலத்தின் பத்து தலைமுறை. புகுந்த வீட்டின் பத்து தலைமுறை. இதுதான் "தசானாம்பூர்வேஷாம், தசானாம்பரேஷாம்" என்பதன் பொருளாகும்.   மம ஆத்மனஸ்ச - என்னுடைய இந்த சுய குலம் (கூடிய). ஒரு திருமணத்தால் ஒரு புதிய தலைமுறை உருவாகிறது.  அந்த குலத்துடன் சேர்த்து  ஏகவிம்சதி குல உத்தாரண – இருபத்தி ஓர் குலங்கள் மேன்மை பெற  இந்தப்பெண்ணின் பூர்வ குலத்தின், அதாவது பிறந்த வீட்டின் பத்துத் தலைமுறையும் இந்தப்பெண்ணின் பர குலத்தின், அதாவது புகுந்த வீட்டின் பத்துத் தலைமுறையும் இந்தத் திருமணத்தால் உண்டாகும் புதிய தலைமுறையும் கூடிய இருபத்தியோரு குலமும் உயர்வு பெற என்பதே இந்த மந்திரத்தின் உண்மையான பொருளாகும். திருமணம் என்பது வம்ச விருத்திக்காக, முக்கியமாக புத்திரனைப் பெறவே செய்யப்படுகிறது. இந்தப் புத்திரனின் கடமை தன்னுடைய 21 தலைமுறை முன்னோர்களுக்கும், கர்மங்களும், தர்ப்பணமும் செய்து பித்ரு லோகத்தில் அவர்களை இன்பமுடன் வைத்தல் ஆகும். அப்படிப்பட்ட புத்திரனைப் பெறாதவர்கள் “புத்” என்னும் நரகத்தில் உழல்வார்கள் எனச் சொல்லப்படுகிறது. ஆக ஈமச்சடங்குகள் செய்து, முன்னோருக்கு கர்மங்கள் செய்ய புத்திரன் பிறக்கிறான். தாய், தந்தை ஒரு தலைமுறை, தந்தை வழி பத்துத் தலைமுறை, தாய்வழி பத்துத் தலைமுறை ஆகிய இருபத்தியொரு தலைமுறைக்கு தர்ப்பணம் செய்தலை நினைவு கொள்ளவேண்டும்.   []                 9.20மாங்கல்ய தாரணம்   புரோகிதர் முறைப்படி மாங்கல்ய பூஜை செய்ய வேண்டும். மாங்கல்ய பூஜைக்குப்பின்னர் மாங்கல்யத்தை பெரியோர்களும், சுமங்கலிகளும் தொட்டு ஆசி வழங்குகின்றனர். மாங்கல்யன் அணிவிக்கப்படும்பொழுது பின்வரும் மந்திரம் சொல்லப்படுகிறது.   []   “மாங்கல்யம் தந்த்து நாநேன மம ஜீவன ஹேது நாம் கண்டே பத்நாமி ஸூபகே த்வம் ஜீவ ஸதா ஸதாம்” (பொருள் – நூலில் கோர்த்துள்ள இம்மாங்கல்யத்தை நாம் இருவரும் இல்வாழ்வு வாழ்வதற்காக உன் கழுத்தில் சுபமாகக் கட்டுகின்றேன். ஜீவன் இருக்கும்வரை என் சுக துக்கங்களில் எப்பொழுதும் சரி நிகர் பங்கு அளித்து நான் உன்னைக் காப்பாற்றுகின்றேன்.) மாங்கல்யம் சூட்டுவதன் மூலம் மணமகன் மணமகளுக்கு உறுதி அளிக்கிறான். மணமகனான மாப்பிள்ளை, தொழில் மற்றும் இன்னும் பல நிமித்தங்களால் பெண்ணை விட்டுப் போனாலும் அவன் அளிக்கும் இந்த உறுதி பெண்ணின் உள்ளத்தில் என்றும் நிம்மதியை அளிக்கும். மாங்கல்யத்தின் மூன்று முடிச்சுகளுக்கும் பல அர்த்தங்கள் சொல்லப்படும் 1. முதல் முடிச்சு போடும்போது, தங்களுக்குப் பிறக்கப்போகும் குழந்தை, ஆரோக்கியமாகவும், சிறந்த அறிவாளியாகவும் திகழ, படைக்கும் கடவுளான பிரம்மாவையும், ஞானத்தை ஊட்டும் சரஸ்வதி தேவியையும் வணங்கி, முதல் முடிச்சு போடப்படுகிறது.   இரண்டாவது முடிச்சு போடும்போது, ஆரோக்கியமான, அறிவாளியான குழந்தை பிறந்தாலும், அக்குழந்தை நற்குணங்களோடு பிறருக்கு உதவி செய்து நல்ல‍வனாகத் திகழவும், செல்வச் செழிப்புடன் வாழவும், காக்கும் கடவுளான திருமாலையும், செல்வங்களை அள்ளித்தரும் லஷ்மியையும் வணங்கி இரண்டாவது முடிச்சு போடப்படுகிறது. மூன்றாவது முடிச்சு போடும்போது, ஆரோக்கியமான, அறிவான குழந்தை பிறந்து, அது நற்குணங்களோடு செல்வச்சீமானாக வாழ்ந்தாலும், அக்கிரமங்களை தட்டிக்கேட்டு, அவை தலைதூக்கும் முன்பே, அழித்து தர்மத்தை நிலைநாட்ட‍, அழித்த‍ல் தொழிலை மேற்கொண்டிருக்கும் சிவனையும், வீரத்திற்கு பெயர் பெற்ற‍ பார்வதி தேவியையும் வணங்கி மூன்றாவது முடிச்சு போடப்படுகிறது. 2. மணமக்க‍ள் இருவரது மனம், வாக்கு, செயல் ஆகிய மூன்றிலும் ஒன்றுபட்டு வாழ்ந்திருக்க‍ மூன்று முடிச்சுகள் இடப்படுகின்றன. 3. கணவன் மனைவி இருவருக்கும் உள்ள இணைப்பு, இருகுடும்பங்களின் இணைப்பு ஆகும். மூன்றாம் முடிச்சு நாத்துனர் முடிச்சு. ஒரு பெண் ஒரு இடத்தில் பிறந்து வேறு இடத்தில் நாத்து போல் இடம் பெயர்வதால் அவர்கள் நாத்துனார் என்று அழைக்கப்படுகிறார்கள். அப்படி வரும் பெண், இந்த வீட்டில் உள்ள பெண்ணுக்கு உரிய இடத்தை நிரப்புவாள் என்பதற்காக மூன்றாம் முடிச்சு. 4. பெண்ணுடைய கடந்த காலத்தில் ஏற்பட்டவைக்கும், நிகழ் கால, எதிர் காலத்தில் ஏற்படும் விஷயங்களுக்கு நான் பொறுப்பாவேன் என்று ஆண் உறுதி அளித்தல். 5.  நம்முடைய பெற்றோர், விருந்தாளி, பித்ருக்கள் ஆகிய மூவருக்கும் செய்ய‍ வேண்டிய‌ கடமையில் இருந்து நாம் தவற மாட்டோம் என்று உறுதி அளித்தல். 6. பிறந்த வீட்டுப் பெருமைகளையும், புகுந்த வீட்டுப் பெருமைகளையும் செவ்வ‍ன எடுத்துச்சென்று எதிர்கால சந்ததியினருக்கு பரிசாக கொடுத்து, குடும்பப் பெருமைகளை காப்பாற்றும் பெரும் பொறுப்பை பெண்ணுக்கு அளித்த‍ல். 7.  திருமாங்கல்யக் கயிறில் மூன்று முடிச்சு இடுவது தான் தாலிகட்டுதல். விழிப்பு, கனவு, ஆழ்ந்த உறக்கம் என்னும் மூன்று நிலைகளை இந்த முடிச்சுகள் குறிக்கும். இந்த மூன்று நிலையிலும் உன்னை மறவேன் என ஆண் உறுதியளிப்பதாகும். 8.  இறைவன், தேவர்கள் மற்றும் விண்ணவர்களின் சாட்சியாக போடப்படுவது முதல் முடிச்சு. முன்னோர்களின் சாட்சியாக இரண்டாவது முடிச்சு. பெற்றோர்கள், திருமணத்திற்கு வருகை தந்தவர்களின் சாட்சியாக கட்டப்படுவது மூன்றாம் முடிச்சு. 9. அறம், பொருள், இன்பம் இவற்றின்படி வாழ்க்கை நடத்துவோம் என்பதைக் குறிப்பதற்கு மூன்று முடிச்சு. 10. கணவன், மூத்தோன், இறைவன் ஆகிய மூவரின் சொற்படி நடக்க மூன்று முடிச்சு. 11. உடல், மனம் ஆன்மா இந்த மூன்றிலும் உன்னை என்னுடன் இணைத்துக் கொள்கிறேன். இப்படி மூன்று முடிச்சுகளுக்கு பல அர்த்தங்கள் சொல்லப்படுகின்றன. மாங்கல்யம் என்பது எப்படிச் சொல்லப்பட்டாலும். அது ஒரு கணவன் மனைவிக்குத் தரும் உறுதியாகும்.  அந்த உறுதியே அவளுக்கு பாதுகாப்பு உணர்வை உண்டாக்குவது ஆகும்.  தன் மனைவியை பார்க்கும் பொழுதெல்லாம் கணவனுக்கு இந்த நினைவு மேலோங்க வேண்டும். இந்தப் பெண்ணிற்கான நல்வாழ்வை உறுதி அளித்திருக்கிறோம் என்ற நினைவு மேலோங்க வேண்டும்.  மாங்கல்யம் கட்டும் பொழுது சொல்லப்படும் மந்திரத்தின் பொருளைக் கவனியுங்கள். அது மாங்கல்யத்தைக் கட்டும் கணவன் அளிக்கும் உறுதிமொழியேதான் அல்லவா? ஒரு உறுதிமொழிப் பத்திரத்தில் கையெழுத்திடுவது போல மாங்கல்யம் கட்டப்படுகிறது. அதற்கு பூசையில் அழைக்கப்பட்ட தேவர்கள், பங்கெடுத்த அத்தனை மனிதர்கள் சாட்சியாக இருக்கிறார்கள். அதே போல் பார்க்கும் அனைவருக்கும் இவள் நம் குலத்தை விருத்தி அடையச் செய்ய வந்தத் திருமகள் என்ற எண்ணம் எழவேண்டும் என்பதால் தாலி பெண்ணிற்கு அணிவிக்கப்படுகிறது. பெண்ணிற்கான வாழ்வுறுதி, மரியாதை போன்றவற்றை அளிக்கும் மாங்கல்யத்தை, அடிமைச் சங்கிலியாகக் கருதும் எண்ணம் மாறவேண்டும். []     9.21  ஏழடி நடத்தல்   பெண்ணின் வலக்காலை மணமகன் கைகளால் பிடித்து ஏழடி எடுத்து வைக்கும்படி செய்யவேண்டும். ஒவ்வொரு அடிக்கும் ஒவ்வொரு மந்திரம் சொல்லப்படும்.   []   1. உனக்கு வாழ்க்கையில் உணவு குறைவில்லாமல் அளிப்பதற்கு இறைவன் உன்னைப் பின் தொடர்ந்து வரட்டும். 2. உடல் வலிமை கிடைக்க இறைவன் பின் தொடரட்டும் 3. விரதத்தை அனுஷ்டிக்கும் பொருட்டு உன்னை இறைவன் பின் தொடர்ந்து வரட்டும். 4. சுகமும், மனச்சாந்தியும் கிடைக்க இறைவன் உன்னைப் பின் தொடரட்டும் 5. பசுக்கள் முதலான தூய்மையான பிராணிகள் பெருக இறைவன் உன்னை பின் தொடர்ந்து வரட்டும். 6. சகல சௌபாக்கியங்களும் கிடைக்க இறைவன் உன்னைப் பின் தொடர்ந்து வரட்டும். 7. உடன் வாழ்வில் இடம்பெறும் சுபகாரியங்கள், ஹோமங்கள் குறைவின்றி நிறைவேற்ற இறைவன் உன்னைப் பின் தொடர்ந்து வரட்டும். ஏழடிகள் நடந்த நாமிருவர்கள் சினேகிதரானோம். இருவரும் சேர்ந்து அனுபவிப்போம். என்னுடன் கூடவா என்னும் பொருளில் இந்நிகழ்ச்சி அமையும். இதற்கு “ஸப்த பதி” என்று பெயர்.  பலர் ஹோமகுண்டத்தை சுற்றி வந்து வணங்குவதாக இதை மாற்றி விட்டனர். ஏழு என்பது மிகச் சிறந்த எண். எண்ணற்ற உலகங்களை ஏழு உலகங்கள் என்று அடக்கி விடுவோம். எண்ணற்றப்  பிறவிகளை ஏழேழு பிறவி என்போம். எண்ணற்ற அதிசயங்களில் முக்கியமானவை ஏழு அதிசயங்கள் என்போம். அதே போல் ஏழு அடிகள் இணைந்து எடுத்து வைப்பது வாழ்க்கை முழுதும் இணைந்து வாழ்வதற்கான அடையாளம் ஆகும். மனைவியை வழிநடத்த வேண்டியது கணவனின் கடமை. வாழ்வு முழுவதும் கணவன் மனைவிக்கு என்னென்ன அளிக்க வேண்டும் என்பதை இதில் கணவன் சொல்லுகிறான். 1. திருப்தியாகும் அளவிற்கான உணவு. 2. உடல் வலிமையைக் கூட்டும் மருந்துகள், வழிமுறைகள் 3. விரதங்களை அனுஷ்டிக்க உதவுதல் 4. மனச்சாந்தியையும், சுகத்தையும் அளித்தல் 5. பசுக்கள் போன்ற கால்நடைச் செல்வங்கள் 6. அனைத்து வகைச் செல்வங்கள் 7. இறை காரியங்கள் செய்ய உடனிருத்தல் இவற்றில் எல்லாம் கணவன், மனைவியை முன்னின்று வழிநடத்துவேன் என உறுதி கொடுத்த பின்னரே அம்மி மிதித்தலும் அருந்ததி காட்டுதலும் நடைபெறுகிறது. []   9.22  அம்மி மிதித்தல்   பெண்ணின் வலதுகாலை (அதாவது எட்டாவது அடி) மணமகன் கையால் தூக்கி அம்மியில் வைத்து பெருவிரலுக்கு அடுத்துள்ள விரலில் மெட்டி அணிவிப்பார். “இந்தக் கல்லைப் போல் நிலையாக நின்று உன் எதிரிகளைச் சகித்துக் கொள்” என்பது இதன் பொருளாகும். இது பெண்ணிற்கு கற்பையும் ஆணுக்கு ஒழுக்கத்தையும் புகட்டுகின்றது. கல் எப்படி எதையும் தாங்குமோ அதுபோல் வாழ்க்கையிலும் இன்ப துன்பங்களைக் கண்டு கலங்காமல் உறுதியான கொள்கைகளைக் கடைப்பிடித்து நடக்கவேண்டும் என்று உணர்த்துகிறது.   []   தொடர்ந்து அக்கினியை வலம் வந்து ஓமகுண்டத்தில் நெற்பொரியும் ஓமப் பொருட்களையும் இடுவார்கள். திரும்பவும் இரண்டாம் முறை அக்கினியை வலம் வரும்போது இடக்காலை அம்மியில் வைத்து மெட்டி அணிவிக்கப்படும். திருமணமான பெண்ணிற்கு அவளைப் பார்க்கும் இன்னொரு ஆடவன் அவள் திருமணமானவள் என்பதை உணர்த்த மெட்டி அணிவிக்கப்படுகின்றது. அம்மிக்கல் மிதித்தலின் கருத்து – பெண்ணே! கல்லைப் போல் உறுதியுடன் இரு. பகைவர்களை மிதித்து விடு. அவர்களை அழித்துவிடு என்பதுடன், ஜடவஸ்துக்களான அம்மியும், குழவியும் இணை பிரியாமல் இருக்கின்றன. இவை பிரிந்தால் அரைத்தல் காரியம் நிகழாது. அறிவற்ற பொருள்கள் கூட இணைந்து இருந்து காரியம் நிகழ்த்துகின்றன. அறிவுள்ள நாம் அவைபோல் இணைபிரியாமல் இருந்து இல்லறம் செய்வோம் என்பதனையும் ஆன்றோர் கருத்தாகக் கூறுகின்றனர். சில இடங்களில் அம்மி, குழவிகளுக்குப் பதிலாக சந்தனக்கல், சந்தனக்கட்டையும், தானியங்களை அரைத்து மாவாக்க உதவும் கல்யந்திரத்தையும் வைப்பதைப் பழக்கமாகக் கொண்டு இருக்கின்றனர். அனைத்திற்கும் கருத்து ஒன்றே, சந்தனக்கட்டையும் கல்லும் சேர்ந்தால் தான் சந்தனம் அரைக்க முடியும். அடிக்கல்லும், மேற்கல்லும் சேர்ந்தால்தான் தானியத்தை அரைக்க முடியும். இம்மூன்றிலுமே பிரிவில் காரியம் இல்லை. இணைப்பில் காரியம் உண்டு அதுபோல் நம் இணைப்பிலேயே இல்லறம் என்னும் கருத்து வலியுறுத்தப்படுகிறது. தாலி கட்டும் போது ஒரு உறுதிமொழியை கணவன் அளித்தான். ஏழடி நடக்க வைத்து, ஏழு உறுதிமொழிகளைக் கணவன் அளித்தான். ஆக எட்டு உறுதி மொழிகளைக் கொடுத்த கணவன் அதன் பிறகு ஒரே ஒரு வேண்டுகோளினை வைக்கிறான். இப்படி முழுமையாக ஊன்றிக் கவனித்துப் பார்த்தால் இது ஆணாதிக்கமா இல்லையா என்பது புரியும். 9.23 அருந்ததி பார்த்தல்   மூன்றாம் சுற்றில் அருந்ததி பார்த்தல் நடைபெறும். இருவரையும் கூட்டிக்கொண்டு மண்டபத்தின் வடக்கு வாசலுக்கு வந்து வானத்தில் இருக்கும் நட்சத்திரங்களுக்குப் பூஜை செய்து  புரோகிதர் அருந்ததியைக் காண்பிப்பார். அருந்ததி காணல் என்பது “நிரந்தரக் கற்பு நட்சத்திரமாக மின்னுவேன்” என்று ஆணையிடுவதாகும். []     அருந்ததி வசிட்டரின் மனைவி. சிறந்த பதிவிரதை. வானத்தில் துருவ மண்டலத்திற்கு அருகில் ஏழு நட்சத்திரங்களிற்கிடையில் வசிட்ட நட்சத்திரமும் அதன் அருகில் அருந்ததியும் இருப்பதாகப் புராணங்கள் கூறுகின்றன. கற்பில் முதலானவளான அருந்ததியை எப்படி வசிட்டருடன் நிலைத்திருக்கச் செய்தார்களோ அப்படி இந்த அருந்ததியை தரிசனம் செய்வதால் என்னுடைய மனைவி கற்புக்கரசியாக வளர்ச்சி பெறட்டும் என்பது இதன் பொருள். இந்த நட்சத்திரத்தைக் காட்டுவது நல் வாழ்க்கையும் வளத்தையும் பெறுவதற்கேயாகும். அருந்ததியோடு சேர்த்து துருவ நட்சத்திரத்தையும் காட்டுவர். துருவ நட்சத்திரம் விண்ணில் ஒரு நிலையான இருப்பிடத்தை உடையவராகவும் மற்ற விண்மீன்கள் நிலைத்திருப்பதற்குக் காரணமாகவும் கட்டுத்தறியாகவும் இருப்பதால் எங்களை எதிரிகளிடமிருந்து காப்பாற்றுவீராக என்று தரிசிப்பதாகும். இவர்கள் எம்வாழ்க்கையில் ஒரு வழிகாட்டியாக அமைகிறார்கள். துருவனைப்போல் மணமகனுக்கு ஸ்திரத்தன்மையும் அருந்ததியைப் போல் மணமகளுக்குப் பதிவிரதத்தன்மையும் இருத்தல் வேண்டும். அனைத்து நட்சத்திரங்களும் சுழலும் தன்மை கொண்டவை. துருவ நட்சத்திரம் ஒரே இடத்தில் நிலைத்து நிற்கின்றது. சிறுவயதிலேயே மன உறுதியால் மேன்மை பெற்றவன் துருவன். துருவனைப் போல் நம் உள்ளங்கள் ஒற்றுமையால் உறுதி பெறட்டும் என்பது கருத்து. “த்ருவந்த் தே ராஜா வருணஹ த்ருவம் தேவோ ப்ருஹஸ் பதிஹி த்ருவந்த்த இந்த்ரஸ் சாக்னிஸ்ச ராஷ்டரம் தாராயதாம் த்ருவம்” எட்டு உறுதிமொழிகளை கொடுத்து ஒரு உறுதிமொழி பெற்ற மணமகனும் மணமகளும் பரஸ்பரம் ஆளுக்கு ஒரு உறுதிமொழியை கொடுத்துக் கொள்கிறார்கள். நீ வசிஷ்டரின் அருந்ததி போல என்னைப் பிரியாமல் இருப்பாயா என்று மணமகன் கேட்க, நீங்களும் துருவனைப் போல எப்பொழுதும் மாறாமல் உறுதியாய் இருங்கள் என்கிறாள் பெண்.   []   9.24 அட்சதாரோபணம்   அம்மி மிதித்து அருந்ததி கண்டபின் மணமக்கள் நின்று கொண்டு மஞ்சள் அரிசி, மலர்கள் இவற்றை ஒருவர் சிரசில் மற்றவர் இட்டுக் கொள்ளல் வேண்டும். 1) மணமகன் : “ப்ரஜா மே காம ஸம்ருத்தியதாம்“ என்று கூறி    []   அட்சதையை மணமகள் சிரசில் இட வேண்டும். புத்திர விருத்திக்கான ஆசை நிறைவேறட்டும் என இதன் பொருள் 2) மணமகள் : “ ஸ்ரீயோ மே காம ஸம்ருத்தியதாம்“ என்று கூறி  அட்சதையை மணமகன் சிரசில் இட வேண்டும். உனக்கு சகல சௌபாக்கியங்களும் சிறப்புற கிடைக்கட்டும் என்பது இதன் பொருளாம். 3) மணமகன் : “தனம் மே காம ஸம்ருத்தியதாம்“ என்று கூறி  மணமகள் சிரசில் அட்சதை இட வேண்டும். உனக்கு சகல செல்வங்களும் கிட்டட்டும் என்பது இது பொருளாம் 4) மணமகள் : “ஆயுர் மே காம ஸம்ருத்தியதாம்“ என்று கூறி  மணமகன் சிரசில் அட்சதை இட வேண்டும். உங்கள் ஆயூள் நீண்டு இருக்கட்டும் என்பது இதன் பொருளாம் 5) இருவரும் “யக்ஹோ மே காம ஸம்ருத்தியதாம்“ என்று கூறி அட்சதை இட்டுக் கொள்ளல் வேண்டும். அது போல நானும் விருப்பப்படுகிறேன் என்பது இதன் பொருளாம்.  இதன் பின்னர்தான் பெண் மாப்பிள்ளைக்கு இடப்புறம் அமர, மற்றவர்கள் அட்சதை இட்டு ஆசி வழங்கல் வேண்டும். சில இடங்களில் மட்டும் பெண்ணை மணவறையில் அமர வைக்கும்போதே மணமகனின் இடப்புறம் அமர வைக்கின்றனர். முதலில் வலப்புறம் அமர்ந்து, மாங்கல்ய தாரணத்தின் பின் அக்னி வலம் அம்மி மிதித்து அருந்ததி கண்டு அட்சதா ரோபணத்தின் பின் இடப்புறம் பெண் அமர வேண்டியதுதான் முறைமை. வலப்புறத்தில் முதலில் பெண் அமர்வது போகார்த்தமாக. அதாவது அறம், பொருள், இன்பம் என்னும் இவற்றைப் பெற வேண்டும் என்பதனைக் காட்ட வலப்புறம் துவக்கத்தில் அமர வேண்டும். இவற்றைப் பெற்று மண்ணில் நல்ல வண்ணம் இருவரும் வாழ்ந்து பின் ‘சதுர்த்தம்‘ என்னும் நான்காவது புருஷோத்தமான மோட்சத்தைப் பெற இவள் கணவனுக்கு உதவுபவள் என்பதனைக் காட்ட இடப்புறம் அமர வேண்டும் என்பது விதி. அறம், பொருள், இன்பம், வீடு என உறுதிப் பொருள் நான்கு, இவற்றுள் அறம், பொருள், இன்பம் என போகார்த்தமானவை. வீடென்பது சிந்தையும், மொழியும் செல்லா நிலைமைத்து. இவ்வீட்டின்பம் இல்லறத்தின் முடிவில் மனைவியுடன் பெறத்தக்கது. வையத்தில் வாழ்வாங்கு வாழ்ந்து முடிவில் சிறந்ததான வீட்டு நெறியை ஏற்க வேண்டும் என்பார் தொல்காப்பியர். “கிழவனும் கிழத்தியும் சிறந்தது பயிற்றல் இறந்ததன் பயனே“ என்பதனைக் காண்க. ஆரம்பத்திலேயே பெண்ணை இடப்புறத்தில் அமரவைத்தால் இருவரும் துறவு மார்க்கத்தில் ஈடுபடப் போகின்றனர் என்று பொருள் ஆகிவிடும். இந்நுணுக்கத்தை நன்கு உணர்ந்த நம் முன்னோர் இன்று மணம் புரிந்து கொள்ளும் இவ்விருவரும் அறம், பொருள், இன்பம் என்னும் இவ்வுலக போகங்களை நன்கு பெற்று வாழ இருக்கின்றனர் என்பதனைக் காட்ட பெண்ணை வலப்புறத்திலும், இவர்களின் இல்லறத்தின் பயன் முடிவில் மோட்சமே என்பதனைக் காட்ட பெண்ணை இடப்புறத்திலும் அமர வைத்தனர். முனை முறியாத பச்சரிசி, அறுகம்புல், மஞ்சள்மாவு கலந்த கலவையே அறுகரிசி என்று சொல்வார்கள். வடமொழியில் இது அட்சதை எனப்படும். பெரியோர் இரண்டு கைகளாலும் அறுகரிசி எடுத்து “ஆல் போல் தழைத்து அறுகுபோல் வேரூன்றி மூங்கில் போல் சுற்றம் முழுமையாய்ச் சூழப் பதினாறு பேறு பெற்றுப் பெருவாழ்வு வாழ்க” என வாழ்த்தி உச்சியில் 3 முறை இடவேண்டும். []   9.25 சுகாசினி தானம்   திருமணத்திற்குப் பின் மணப்பெண் வெற்றிலைப் பாக்கில் மஞ்சள், குங்குமம், தக்ஷிணையுடன் சுமங்கலிப் பெண்களுக்கு வழங்கல் சுகாசினி தானம் எனப்படுகிறது. இவ்விதம் வழங்குவதின் நோக்கம் சுமங்கலிகளின் ஆசியால் மணமக்கள் தீர்க்காயுள், புத்திரர், பௌத்திரர் முதலான பாக்யங்களுடன் வாழ்வர். மணமகள் தீர்க்க சுமங்கலியாக இருப்பாள். ஏன் சுமங்கலிகள் சுமங்கலிகளுக்கு மட்டும் தானம் என்ற கேள்வி எழலாம். []   வாழ்த்துவோர் மனம் வருத்தமோ, பொறாமையோ இன்றி இருக்க வேண்டும் என்பதே இதன் முக்கிய நோக்கமாகும். கணவனை இழந்தோருக்கு தன் கணவன் இல்லையே என்ற வருத்தம்/பொறாமை உண்டாகலாம். திருமணம் ஆகாத பெண், மணப்பெண்ணை விடச் சிறியவளாக இருக்கலாம். சிறியவர்கள் ஆசிர்வதிக்க இயலாது. பெரியவளாக இருந்தால் தனக்கு  இன்னும் மணமாகவில்லையே என்ற வருத்தம்  / பொறாமை உண்டாகலாம். எனவே மன நிறைவான வாழ்க்கை வாழும் பெண்களுக்கு தானம் தந்து ஆசிர்வாதம் பெறுகிறாள் மணமகள். . []       9.26 கங்கணம் அவிழ்த்தல்   இதன்பின் பெரியவர்கள் முன் அவர்கள் அனுமதியுடன் கங்கணம் அவிழ்த்தலும், பின் மஞ்சள் நீராடும் வசந்தமும் நடைபெறும். கங்கணம் கட்டும் போது மணமக்களுக்கு அவரவர் தாய்மாமன்மார் பலகாரம் உண்பிக்கின்றனர். மணமக்களுக்கு அவரவர் தாய்மாமன்மாரே சொந்தக்காரர்கள். கங்கணம் அவிழ்க்கும்போது மணமக்கள் ஒருவருக்கொருவர் பலகாரம் உண்பித்துக் கொள்கின்றனர். வேதவிதிகள், சடங்குகள் அனைத்தும் தட்சிணைகளோடு கூடியன. தட்சிணைகளோடு கூடியதுதான் யாகம். எனவே தட்சிணைகளைச் சக்திக்குத்தக்கவாறு மனமுவந்து தாராளமாகக் கொடுத்துப் புரோகிதர்களைக் கௌரவித்து அவர்கள் ஆசியைப் பெற்றுக் கொள்ளல் வேண்டும். கங்கணம் அவிழ்த்தல், திருமணம் பூர்த்தி அடைந்ததைக் குறிக்கும்.   []     9.27 தாம்பூலம்   நம் திருமண காலங்களில் மணமக்களுக்குக் கங்கண தாரணம் ஆனவுடன் ஊர்த்தலைவர் முன்னிலையில் ஒருமுறையும், கங்கணம் அவிழ்த்தபின் ஒருமுறையும் தாம்பூலம் அளித்தல் நடைபெறும். மணமக்களின் பெற்றோர்கள் வந்தவரை வரவேற்கவும், திருமணம் முடிந்தபின் வீடு []   திரும்புவோரை வழியனுப்பவும் இது செய்யப்படுகிறது.   []                               10. விருந்து []   இல்லறத்தின் முக்கிய கடமை விருந்தோம்பல், திருமணத்தில் சிறப்பிடம் பெறுகிறது. இருந்தோம்பி இல்வாழ்வ தெல்லாம் விருந்தோம்பி வேளாண்மை செய்தற் பொருட்டு.     இல்லறத்தின் ஆரம்பமான திருமணத்தில் விருந்து அதேபோல் முக்கிய இடத்தைப் பெறுகிறது. திருமணத்திற்கு வருபவர் அனைவரையும் வேறுபாடு காட்டாமல் விருந்தளிப்பது முக்கிய கடமை ஆகும். அவரவர் குடும்ப வழக்கப்படி, கல்யாண விருந்தின் பதார்த்தங்கள் முடிவு செய்யப்படுகின்றன.   விருந்தோம்பலில் முக்கிய விஷயம் இன்முகம் காட்டிப் பரிமாறுதலும், விருந்து விசாரித்தலும் ஆகும்.  இன்று பல மணவீட்டினர், விருந்து பரிமாறும் இடத்திற்கு வருவதே இல்லை. இது தவறான அணுகுமுறை ஆகும். விருந்தைக் கவனிக்க என உறவினர்களையாவது ஏற்பாடு செய்வது முக்கியம். நமது கலாச்சாரத்தின் ஆணிவேரே விருந்தோம்பல் தானே.   []   11. விளையாட்டுகள்   இந்தச் சடங்குகள் முடிந்த பிறகு வாழ்க்கையைக் கற்றுத்தரும் விளையாட்டுச் சடங்குகள் ஆரம்பமாகிறது. அவரவர் பழக்கத்திற்கேற்ப பல சடங்குகள் உண்டு.   1. கோபித்த மணமகனை சமாதானம் செய்தல் – வாழ்க்கையில் கோபதாபங்கள் சகஜம் எனக் காட்டுவது 2. குழந்தை எனச் சொல்லி தொட்டிலில் தேங்காய் இட்டு ஆட்டுதல் – குழந்தை வளர்ப்பைச் சொல்லித்தருதல் []   3. மஞ்சள் நீர் குடத்தில் மோதிரமிட்டு எடுத்தல்  - விட்டுக் கொடுத்தலைக் கற்றுத்தருதல் 4. தேங்காய் உருட்டுதல் 5. தலையில் அப்பளமிட்டு நொறுக்குதல் 6. ஊஞ்சல் – ஓய்வெடுத்தல் 7. மஞ்சள் நீர் விளையாடல் – வசந்த விளையாட்டு. மகிழ்ச்சியை வெளிப்படுத்தல் இந்த விளையாட்டுகளின் மூலம் மணமக்களிடையே இணக்கமும் நெருக்கமும் உண்டாக்கப்படுகிறது. இப்பொழுதெல்லாம் சில மேடைகளில் மணமக்கள் ஆளுக்கு ஒரு ஓவர் கிரிக்கெட் கூட விளையாடுகிறார்கள். இதன் பின் முளைப்பாலிகையை நீர் நிலையில் மணமக்கள் கரைக்க வேண்டும். பின்னர் கோவிலுக்குச் சென்று வணங்கி மணமக்கள் மணமகனின் இல்லத்திற்கு அழைத்து வரப்படுகிறார்கள். அங்கே ஆரத்தி எடுக்கப்பட்டு மணமகள் தன் புகுந்த வீடு நுழைகிறாள்.  முன்னதாக மணமகள் அழைப்பு நடக்காத பட்சத்தில் மணமகள் அழைப்பின் போது செய்த சடங்குகள் இப்பொழுது நடக்கும். வீட்டில் ஆரத்தி எடுத்து திருஷ்டி கழித்தபின், மாப்பிள்ளை வீட்டாரின் மூத்த சுமங்கலிப் பெண் நிறைகுடம் எடுத்துக் கொடுப்பார். சுமங்கலிகள் கொடுத்த நிறைகுடத்தை இடுப்பில் சுமந்து வாசல்படியில் வைத்திருக்கும் படி நெல் – காசுகள் தெரித்து விழுமாறு தட்டி வீட்டிற்குள் தன-தான்யம் பரவ தன் புகுந்த வீட்டிற்குள் புகுவாள். குடிநீர் சமையல் அறையில் நிறைகுடத்துடன் வைக்கப்படும். புகுந்த வீட்டில் முதலில் பூஜை அறையில் குத்து விளக்கேற்றி மணமகள் வணங்குவாள். பின் சமையலறை அழைத்துச் செல்லப்பட்டு அங்கு நிறைந்திருக்கும் அரிசி, பருப்பு, உப்பு ஆகியவற்றை கையில் அள்ளி அள்ளி பார்ப்பாள். மணப்பெண் நிறைகுடமாய் இருக்க வேண்டும் என்பதையும், அவள் கால்பட்டதும் தனம் – தான்யம் பெருக வேண்டும் என்பதையும் குறிப்பால் உணர்த்துவது இந்தச் சடங்காகும். மணமகள் தன் கணவன் வீடு சேர்ந்த உடன் மணமகள் வீட்டார் சீருடன் மணமகளைக் காண வருவர். இந்த தாய்வீட்டுச் சீதனம் மணமகளுக்கு மட்டுமே உரியது. சீதனம் பற்றிய விளக்கத்தைப் பின்னிணைப்பு 6 இல் காணலாம்.  சீதனத்திற்குப் பின் அவரவர் குடும்ப வழக்கத்திற்கேற்ப பால் பழம் அளித்தல், நலங்கு செய்தல், சாந்தி முகூர்த்தம், மறுவீடு செல்லுதல், குலதெய்வ கோவிலுக்குச் செல்லுதல். உறவினர் வீடுகளுக்குச் செல்லுதல் என பல வழக்கங்கள் உண்டு. ஆனால் இந்த நூலில் விவரிக்கப்பட்ட 27 சடங்குகள் மிக முக்கியமாக சில வேறுபாடுகளுடன் அனைத்து வகை திருமணங்களில் இருக்கிறது. ஒவ்வொரு சடங்கின் நோக்கமும் புரிந்து ஆத்மார்த்தமாக திருமணம் செய்து கொள்ளுதல் என்பது இன்றில்லை என்றாலும், இவற்றைப் புரிந்து கொள்ளும் எண்ணம் பலருக்குள் வளர்ந்து வருவது மிகவும் மகிழ்ச்சியான ஒன்று. திருமணம் என்பது எதற்காக என்பதைப் புரிந்து கொண்டு திருமணம் செய்து கொண்டவர்கள் மத்தியில் பிணக்குகள் மிகக் குறைவு. காரணம் அவரவர் கடமையை அவரவர் தெளிவுறத் தெரிந்து கொண்டு இல்லறம் பயிலுகிறவர்களாக அவர்கள் இருக்கிறார்கள். ஒருவர் தன்னுடைய சுய மகிழ்ச்சிக்காக மட்டுமே திருமணம் என்னும் இந்தப் புனிதமான உறவு முறையைத் தேர்ந்தெடுப்பாராயின் அவரது திருமண வாழ்க்கை ஏமாற்றத்துடனேயே அமைந்து விடும். இல்லற வாழ்க்கை என்பது எப்பொழுதுமே பிறர் நலம் நாடுவதையே முதற்கடமையாக கொண்டதாகும். அதனாலேயே இல்லற வாழ்க்கையை குடு – இன்பம் என்று குடும்பம் எனப் பேச்சுத்தமிழிலும் கூறுகிறோம். அறம்  அறத்தால் செல்வம்  அறத்தால் வந்த செல்வத்தால் இன்பம்  அதுவே முக்திக்கான வழியாகும்.  திருமணம் ஏன் ஒரு தெய்வீக காரியமாக, பூரண சுப காரியமாக கருதுகிறோம் என்பதற்கான முழுக்காரணம் இதுவே ஆகும். மதம், சடங்குகள் என்பவை மூட நம்பிக்கைகள் அல்ல. அவை வாழும் நெறி. அவை வாழ்விற்கு வழிகாட்டும் கைகாட்டி மரங்கள் என்பதைப் புரிந்து கொள்ளுதல் மிக அவசியம். இன்னும் ஐம்பதாண்டுகளுக்கு பிறகு மனோதத்துவ விஞ்ஞானம் இதையேதான் உலகிற்கு அறிவியல் கண்டுபிடிப்பாகச் சொல்லப்போகிறது,   மனதைக் கட்டுப்படுத்த பல சடங்குகளை அது சொல்லித்தரும்.   இல்லறத்தைப் புரிதலுடன் தொடங்குவோம். புரிதலுடன் நடத்துவோம். புதிய ஆற்றலும் அறிவும் கொண்ட சமுதாயம் உண்டாக்குவோம்.     []   12.  தாம்பூலப் பை!   நம் விழாவிற்கு வந்தவர்களை வெறும் கையுடன் அனுப்பும் பழக்கம் நம்மிடம் கிடையாது. ஆகவே திருமணத்திற்கு வந்தவர்களுக்கு தாம்பூலப் பை அளிக்கிறோம். தாம்பூலம் என்பது மங்கலச் சின்னமாகும். அதனுடன் தேங்காய் அல்லது பழம் போன்றவற்றைச் சேர்த்து விருந்தினர்களுக்குத் தந்து இன்முகத்துடன் வழியனுப்பி வைக்கிறோம். []     []    13. பின்னிணைப்பு 1 : சமஸ்காரங்கள் 13.1  சோடஸ சமஸ்காரங்கள் இந்துக்களுக்கு மொத்தம் 40 சமஸ்காரங்கள் அல்லது சடங்குகள் நிர்ணயிக்கப்பட்டு உள்ளன. அவற்றில் பதினாறு மிக முக்கியமானவை. அவை சோடஸ சமஸ்காரங்கள் எனப்படுகின்றன. அவையாவன.  கர்ப்பதானம் - கருவுறுதலுக்கு சமய அங்கீகாரம் அளிக்கும் சடங்கு இது. இந்தச் சடங்கு குறித்து வேறுபட்ட பல கருத்துகள் உண்டு. புதிதாய் மணமான தம்பதியர் முதல்முறை ஒருவரையொருவர் கூடுவதற்கு முன் சொல்ல வேண்டிய மந்திரங்களின் தொகுப்பு இவை என்று சிலர் கருதுகின்றனர், வேறு சிலர், இந்த மந்திரங்களைக் முதல் சம்போகத்தின்போது சொல்ல வேண்டும் என்று கூறுகின்றனர். இன்னும் சிலர், ஓவ்வொரு முறை கலவியில் ஈடுபடும்போதும் கணவன் இந்த மந்திரங்களை ஜபிக்க வேண்டும் என்று கருதுகின்றனர். ஹோமம் வளர்த்து ஆகுதி அளித்து இந்த மந்திரங்கள் பிரயோகிக்கப்படுவது வழக்கம் என்று சொல்பவர்களும் உண்டு.   எது எப்படியானாலும், பாலுறவு அனுபவத்தை ஒரு புனிதச் செயலாக இந்தச் சடங்கு துவக்கி வைக்கிறது. [] பும்சவனம் – கருவில் உள்ள குழந்தையை இவ்வுலகில் பிணைத்து, அதற்கு ஊட்டம் அளிக்கும் நோக்கத்தில், கர்ப்பம் தரித்த மூன்றாம் மாதத்தில் இந்தச் சடங்கு செய்யப்படுகிறது. இந்தச் சடங்கில் கருத்தரித்த அன்னை, வேத மந்திரங்களைக் கேட்டபடியே ஒரு மணி பார்லியையும், இரு மணி கருப்பு எள்ளையும் சிறிது தயிரையும் உட்கொள்கிறாள். அரச மர வேரைக் குழைத்தும் அதிலிருந்து எடுக்கப்பட்ட சிறிது பாலையும் வலது நாசிக்குள் பூசுவதும் உண்டு.  []       சீமந்தம் - கர்ப்ப காலத்தின் மிக முக்கிய கட்டத்தில் தாயையும் கருவையும் பாதுகாக்கச் செய்யப்படும் சடங்கு இது. வழக்கமாக, கர்ப்ப காலத்தின் நான்காம் மாதத்தில் வளர்பிறை நாட்களில், குறிப்பிட்ட சில நட்சத்திரங்களில் சந்திரன் பிரவேசிக்கும் போது இந்தச் சடங்கு நடத்தப்படுகிறது.         ஓம் என்ற பிரணவ மந்திரம், அல்லது பூஹ், புவஹ், ஸ்வஹ் என்ற வியாகரங்கள் ஒலிக்க, ஒன்றாய்க் கட்டப்பட்ட மூன்று தர்ப்பை புற்களைக் கொண்டு அன்னையின் உச்சியில் வகிடெடுத்தல் இந்தச் சடங்கு. ஜாதகர்மம் - குழந்தை பிறந்தபின் தொப்புள் கொடி அறுக்கும்பொழுது நிகழ்த்தப்படும் சடங்கு ஜாதகர்மம். பிறந்த குழந்தையின் நாவில், சிறிது பொன், நெய், மற்றும் தேன் கலந்த கலவையைத் தந்தை தடவி, இம்மந்திரங்களைச் சொல்வார். அந்த மந்திரங்கள் இதோ  அங்கத் அங்கத் சம்பவாசி ஹிருதயத் அபிஜெயாஸே ஆத்மா வை புத்ர நாமாஸி ஸ ஜீவ சரதாஹ் சதம் பொசோ ஹு த்வததீனோ மெ சந்தானம் அபி காகஸ்யன் தஸ்மத் த்வம் ஜீவ மெ வத்ஸ சுசுக்ஷி சரதாம் சதம். நாமகரணம் - இது குழந்தைக்குப் பெயர் சூட்டும் சடங்கு. பஞ்சாங்கத்தின் துணையோடு குழந்தைக்குப் பொருத்தமான பெயர் தேர்ந்தெடுக்கப்படுகிறது. அதன்பின், அந்தப் பெயரை, தாயின் வலது செவியில், தந்தை மும்முறை கூறுகிறார். தாய், குழந்தையை வைத்துக் கொண்டு, அந்தப் பெயரை மும்முறை கூறுகிறார். குழந்தை பிறந்த நாள், அல்லது அது பிறந்த பத்தாம் அல்லது பன்னிரண்டாம் நாள் இந்தச் சடங்கு நடைபெறுவது வழக்கம்.   []               நிஷ்க்ரமணம் - குழந்தை முதல் முறை வீட்டைவிட்டு வெளியே எடுத்துச் செல்லப்படும்போது செய்யப்படும் சடங்கு. இதை நான்காம் மாதம் செய்வது வழக்கம்.    [] அன்னப்பிரசன்னம் - குழந்தைக்கு ஆறு மாதம் ஆனபின் செய்யப்படும் சடங்கு இது. சமைக்கப்பட்ட உணவு, முதல் முறையாகக் குழந்தைக்கு ஊட்டப்படுகிறது. வேக வைத்த அரிசியை நெய்யிலும் தேனிலும் பிசைந்து தந்தை குழந்தைக்கு ஊட்டுகிறார், அதன்பின் தாயும் அதை உட்கொள்வார். தற்காலத்தில், குழந்தை ஒரு கோவிலுக்கோ திருத்தலத்துக்கோ அழைத்துச் செல்லப்பட்டு, அங்குள்ள அர்ச்சகர்களின் முன்னிலையில் இந்தச் சடங்கு நிறைவேற்றப்படுகிறது.    சூடாகரணம் - குழந்தையின் தலைமுடியை முதல்முறையாக மழிக்கும் சடங்கு இது. இதை சௌலம் அல்லது முண்டனம் என்றும் சொல்வதுண்டு.   [] குழந்தைக்கு ஒன்று, அல்லது மூன்று அல்லது ஐந்து வயது ஆனபின் இந்தச் சடங்கு செய்யப்படுகிறது. புனர்வசு நட்சத்திரத்தில் இந்தச் சடங்கு நடைபெறுவது வழக்கம். அதைவிட முக்கியமாக, இந்தச் சடங்கு நவமி, அதாவது அமாவாசையை அடுத்த ஒன்பதாம் நாளில் நடைபெறுகிறது. கர்ணவேதனம் - காது குத்தும் சடங்கு. ஆண் குழந்தைகளின் வலது காதிலும், பெண் குழந்தைகளுக்கு இடது காதிலும் முதலில் துளை இடப்படுகிறது. தந்தை அல்லது தாய்மாமன் தன் மடிவில் குழந்தையை வைத்துக் கொண்டு காது குத்துவது வழக்கம். ஆனால், தற்போது, ஆசாரி ஒருவரைக் கொண்டு இது செய்யப்படுகிறது.  வித்யாரம்பம் - குழந்தைக்கு நான்கு அல்லது ஐந்து வயதானதும், அதன் கல்வியைத் துவக்கும் சடங்கு இது.   [] குழந்தைக்கு அகர முதலியின் முதல் சில எழுத்துக்கள் கற்றுத் தரப்படுகின்றன. உலோகத்தாலான ஒரு பாத்திரத்தில் நெல் குவிக்கப்பட்டு, அதில் இந்த எழுத்துக்களையும் சில மந்திரங்களையும் உரக்கச் சொல்லிக்கொண்டே, குழந்தை எழுதுகிறது.       உபநயனம் - யக்ஞோபவீதம் என்று அழைக்கப்படும் பூணூல் அ [] ணிவிக்கப்படும் சடங்கு இது. ஐந்து வயது அடைவதற்கு முன் ஆண் குழந்தைக்கு உபநயனம் செய்யப்படுகிறது. முடியிடப்பட்ட முப்புரி நூலொன்று இடம் வலமாக தோளில் அணிவிக்கப்படுகிறது. பிரம்மோபதேசம் என்று சொல்லப்படும் காயத்ரி மந்திரோபதேசமும் அளிக்கப் படுகிறது. உபநயனம் என்ற சொல்லின் வேரசைகள்,   உப என்பதன் பொருள் – அருகில்; நயனம் - கொணர்தல், என்ற பொருள் உள்ளவை. எனவே உபநயனம் என்றால் குழந்தையை குரு அல்லது ஆசிரியரிடம் அழைத்துச் சென்று முறையான கல்வி புகட்டுதல் என்று பொருள்படும். பிரம்மோபதேசம் முடிந்தபின் உபநயனம் அளிக்கப்படுகிறது. இது அவனுக்கு இன்னொரு கண் கொடுத்து, புதிய பிறவி அளிப்பதாக நம்பப்படுகிறது. ப்ரைஸார்த்தம் - வேதக்கல்வியின் துவக்கம். இந்தச் சடங்குக்குப்பின் குழந்தைக்கு வேதங்களும் உபநிடதங்களும் கற்பிக்கப்படுகின்றன. குருகுலவாசமும் இனி துவங்குகிறது. []                 ருதுசுத்தி - பெண்ணின் முதல் மாதவிடாயின் போது நடத்தப்படும் சடங்கு. இது தொடர்பாக எண்ணற்ற சடங்குகளும் பழக்க வழக்கங்களும் உண்டு.  []                 சமாவர்த்தனம் - பிரம்மச்சரிய ஆசிரமம் என்று சொல்லப்படும் மாணவ பருவம் நிறைவடைவதைக் குறிக்கும் சடங்கு இது.  [] விவாகம் - திருமணச் சடங்கு. ஆணும் பெண்ணும் மனது அளவிலும் உடல் அளவிலும் கூடுவதற்கு சமய அந்தஸ்து கொடுக்கும் புனிதச் சடங்கு இது. வாழ்வில் வளர்ச்சி காண இது ஒரு தளம் அமைத்துக் கொடுக்கிறது. திருமணம், புலன் இன்பங்களைத் துய்ப்பதற்கான மட்டமான ஏற்பாடு அல்ல. காம விழைவுக்கு நிறைவு காணும்போதே, இல்லற வாழ்வின் பொறுப்புகளையும் கடமைகளையும் சமபங்கு பகிர்ந்து கொள்ளவும் அறிவுறுத்தப்படுகிறது. மிருக இச்சைகளைக் கட்டுப்படுத்தி உயர்வான நோக்கங்களையும் அனுபவ யதார்த்தங்களையும் நோக்கித் திருப்பி, நான்கு புருஷார்த்தங்கள், அல்லது இந்து சமூகத்தின் நான்கு இலட்சியங்களை அடைய விவாகமே முதல் படி.  சமூக ஒழுங்கு நலனைக் காக்கவும் திருமண அமைப்பு உதவுகிறது.  அந்த்யேஷ்டி - நீத்தார்களுக்காகச் செய்யப்படும் சடங்கு. மரண தினச் சடங்குகள் மட்டுமல்ல, இறந்தவர்களுக்கும் பிற தேவதைகளுக்கும் அளிக்கப்பட வேண்டிய ஸ்ரார்த்தங்கள் என்னென்ன என்று வெவ்வேறு சாஸ்திரங்களில் இந்த சம்ஸ்காரம் குறித்து விளக்கமாக விவரிக்கப்படுகின்றன.   இவை தவிர முக்கியமானவை பீம சாந்தி – 55 ஆவது பிறந்த தினம் – உடல் நலனுக்காக  உக்ர ரத சாந்தி -60 ஆவது பிறந்த தினம் (60 வயது ஆரம்பம் – சினம் தவிர்த்தல்)  சஷ்டிதம அப்த பூர்த்தி- 61 ஆவது பிறந்த தினம்  பீம ரத சாந்தி — 70 ஆவது பிறந்த தினம்  பீஷ்ம ரத சாந்தி – 75 ஆவது பிறந்த தினம்  விஜய சாந்தி –78 ஆவது பிறந்த தினம்  ப்ர பௌத்ர சாந்தி – பேரனுக்கு ஆண்குழந்தை பிறந்தவுடன். அப்போது கனகாபிஷேகமும் செய்வர்.  சதாபிஷேகம் – 80 ஆண்டு 8 மாதம் முடிந்த பின்னர்  ஆயிரம் பிறை கண்டவர்  ம்ருத்யுஞ்சய சாந்தி – 85 ஆவது பிறந்த தினம்  பூர்ணாபிஷேகம் : 100 வயது முடிவு. கனகாபிஷேகம்  []      13.2 சஷ்டியப்த பூர்த்தி []   சஷ்டியப்த பூர்த்தி என்பது பொதுவாக 60 வயது பூர்த்தியாகும் தினத்தன்று கொண்டாடப்படுகிறது. இதற்கு, எண்ணிக்கையில் தமிழ் வருடங்கள் 60 என்பதையும், அந்த 60 வருட முடிவில் நம் ஜென்ம நட்சத்திரமும் திதியும் இணைந்து வருபதையும் காரணமாக குறிப்ப்பிடுகின்றனர்.   "ஆதிபௌதீகம் - இயற்கை, ஆதிதைவீகம் – தெய்வ குற்றம், ஆதிஆத்மீகம் – கர்மா " ஆகிய மூன்று வழிகளில் தீயபலன்கள் வருகின்றன.  சேர்கின்றன.   இயற்கை, தெய்வ குற்றம், தன் செயலால் ஏற்பட்ட பாவகாரிய பலன்கள் ஆகியவை வந்து தீயபலன்களைக் கொடுக்காமல் இருக்கவும், அதிலிருந்து தன்னைக் காத்துக் கொள்வதற்காகவும் அவனது 60 மற்றும் 70 வயது, 80 ஆம் ஆண்டு நிறைவு, 100 ஆம் ஆண்டு நிறைவு ஆகிய காலகட்டங்களில் அதற்குரிய சாந்தி சடங்குகளை செய்து கொள்ள வேண்டும் என்று இந்து மதம் வலியுறுத்துகிறது. அறுபதாம் கல்யாணம் செய்வதால் 1. நாம் நம் நிறைவான கர்ம வாழ்க்கை வாழ்ந்ததை அறிவிக்கிறோம். 2. கர்மத்தின் காரணமாக நாம் செய்த பாவங்களுக்கு வருந்தி, பரிகாரம் என்ற பெயரில் மனதை சுத்தமாக்கிக் கொள்கிறோம் 3. இனி தர்ம வழியிலான பொதுவான வாழ்க்கையை அமைத்துக் கொள்ள உறுதிகொண்டு இவ்வளவு காலம் கூட வந்த மனைவியை மீண்டும் மணந்து இவ்வளவு காலம் கடமைகளினால் தரமுடியாத நல்லற வாழ்வை தருகிறோம். []        13.3 சதாபிஷேகம் []   சதாபிஷேகம் செய்ய வேண்டிய நாளை கணக்கிடும் முறையை காண்போம். ஒருவரின் பிறந்த தேதி, நட்சத்திரம், திதி ஆகியவற்றை குறித்துக் கொள்ளவும். பிறந்த நாளிலிருந்து அடுத்து வரும் 'சுக்ல பக்ஷ துவித்யை' திதியை குறித்துக்கொள்ளவும். இது முதல் பிறை நாளாகும். இதிலிருந்து 1008 வது பிறை நாளை கணக்கிடவும்.   அதாவது 1007 * 29.53 = 29736.71 நாட்களாகும். . இதை முதல் அமாவாசை கழிந்த பின் வளர்பிறையில் வரும் 'சுக்ல பக்ஷ துவித்யை' நாளில் இருந்து கூட்ட 1008 வது பிறை நாளை தெரிந்துகொள்ளலாம். அதன் பிறகு வரும் ஜென்ம நட்சத்திர நாளில் சதாபிஷேகம் செய்ய வேண்டும். ஆயிரம் பிறைகண்ட அனைவரும் தெய்வங்களுக்கு இணையாக வணங்கத் தகுந்தவர் ஆவர். []   14.  பின்னிணைப்பு 2 : கர்மங்கள்   கர்மங்கள் அல்லது செயல்களை காம்ய கர்மம், நிசித்த கர்மம், நித்ய கர்மம், நைமித்திக கர்மம், பிராயசித்த கர்மம் என ஐந்து வகையாக வேதங்களும் வேதாந்தச் சாத்திரங்களும் வகைப்படுத்தியுள்ளன.   காம்ய கர்மம்  என்பது வேதத்தில் கூறியபடி, ஒரு மனிதன், தான் விரும்பும் பயன் கருதி செய்யும் செயலே காம்ய கர்மம் என்பர். எடுத்துக்காட்டு: செல்வம், குழந்தைகள், பதவி, பட்டம், புகழ், இன்பம், மழை, சொர்க்கம், மேலும் விரும்பிய வேண்டுதல்கள் நிறைவேறச் செய்யும் வேள்விகள், பூசைகள்  மற்றும் விரதங்கள் காம்ய கர்மம் என்று அழைக்கப்படுகிறது.  நித்திய கர்மம்  நித்திய கர்மம் ஒரு மனிதன் நாள்தோறும் செய்ய வேண்டியவையாக வேத வேதாந்த சாத்திரங்களில் கூறப்பட்ட செயல்களே (கருமங்கள்) நித்திய கர்மம் ஆகும். எடுத்துக்காட்டு: அதிகாலை, நண்பகல் மற்றும் மாலை வேளைகளில் காயத்திரி மந்திரம் கூறி சந்தியாவந்தனம் செய்தல், அக்கினி ஹோத்திரம் எனும் சிறு வேள்வி செய்தல் மற்றும் பஞ்சமகா யக்ஞம் செய்தல்.  நிசித்த கர்மம் நிசித்த கர்மம் எனில் வேத வேதாந்த சாத்திரங்களில் ஒரு மனிதன் செய்யக்கூடாத, தவிர்க்க வேண்டிய செயல்களை நிசித்த கர்மம் என்பர்.   எடுத்துகாட்டாக மது பானம் குடித்தல், விபச்சாரம் செய்தல், பொய் கூறுதல், திருடுதல், பிறர்க்கு சொல், செயல் மற்றும் உடல் மூலம் துயரமடையச் செய்தல் போன்றவைகளே நிசித்த கர்மம் ஆகும். நைமித்திக கர்மம்  நைமித்திக கர்மம் எனில் ஒரு நோக்கத்துடன் கூடிய அல்லது காரணத்துடன் கூடிய செயலே நைமித்திக கர்மம் ஆகும். ஏதாவது ஒரு தனிப்பட்ட நோக்கம் அல்லது காரணத்தினால் செய்யத் தக்க கர்மம் நைமித்திக கர்மம் ஆகும். எடுத்துக்காட்டு: வேதத்தில் கூறியவாறு குழந்தை பிறந்தவுடன் செய்யும் ஜாதேஷ்டி யாகம் அல்லது ஜாதகர்மா மற்றும் உபநயனம் போன்ற கர்மங்கள் நைமித்திக கர்மங்கள் ஆகும். மேலும் அமாவாசை, பௌர்ணமிகளில் செய்ய வேண்டிய யாகங்கள், சிரார்த்தம் போன்ற கர்மங்கள் நைமித்திக கர்மங்களின் வகைகள் ஆகும்.  பிராயச்சித்த கர்மம்  பிராயச்சித்த கர்மம் என்பது ஒரு மனிதன் தான் செய்த பாவத்தை நீக்கிக் கொள்வதற்கு அல்லது குறைத்துக் கொள்வதற்கு உறுதுணையாக உள்ள சாந்திராயணம் போன்ற யாகங்கள் செய்வதை பிராயச்சித்த கர்மம் என்பர். முற்பிறவியில் செய்த தீய செயலின் பலன்தான் பாவம் ஆகும். இப்பாவத்தின் விளைவுதான் துயரம், வேதனைகளை ஏற்படுத்துகிறது. பாவம் செய்தவன் அதன் விளைவுகளிலிருந்து தப்பித்துக் கொள்ளவேண்டும் எனில், வேதாந்த சாத்திரங்கள் வகுத்துள்ள பாவத்தை நீக்கும் பிராயசித்தக் கர்மங்களை செய்ய வேண்டும்.  தருமசாத்திர நூல்களில் பலவிதமான பாவங்களும் அதற்குரிய பிராயச்சித்தங்களும் விவரிக்கப்பட்டுள்ளது. எடுத்துக்காட்டுகள்: அகமர்ஷணம், அதிக்ருச்சரம், அர்த்தக்கிருச்சரம், கோவிரதம், சந்திராயணம் எனும் விரதங்களே பிராயச்சித்த கர்மங்கள்.   []   15.  பின் இணைப்பு 3 :  திருமணங்கள்   (1) பிரம்ம விவாகம் - நல்லொழுக்கனாக இருக்கின்ற பிரம்மச்சாரியைத் தானாகவே அழைப்பித்து அவனை நூதன வஸ்திரத்தால் (புத்தாடைகளால்) அலங்கரித்து, கன்னிகையையும் அப்படியே நூதன பூஷண அலங்காரம் (பெண்ணையும் நகை, ஆடைகளால் ) செய்வித்து அவ்வரனுக்கு அவளைத் தானம் செய்வது பிராம்மம் ஆகும். (பெண் வீட்டில் திருமணம் நடக்கும்) (2) தெய்வ விவாகம் - தனக்குப் புரோகிதனாக இருப்பவனுக்கு தன் பெண்ணை அலங்கரித்துக் கொடுப்பது (பெண் வீட்டில் திருமணம் நடக்கும்)  (3) ப்ரஜாபத்ய விவாகம் - ஒரு பிரம்மசாரியை அழைத்துப் பூசித்துத் தன் பெண்ணைத் தானம் பண்ணும்போது நீங்கள் இருவரும் தருமம் செய்யுங்கள் என்று கொடுப்பது. பெண்ணின் தந்தை கேட்கும் பணத்தைக் கொடுத்து, பெண்ணுக்கு நகைகள் வாங்கிப் போட்டுக் கல்யாணம் செய்து கொள்வது.   (4) ஆர்ஷவிவாகம்  - தான் செய்ய வேண்டிய யாகாதி கர்மங்களுக்காக வரனிடத்தில் ஒன்று அல்லது இரண்டு ரிஷபங்களையும் (காளை மாடு) பசுக்களையும் வாங்கிக் கொண்டு கல்யாணம் செய்துகொடுப்பது (மாப்பிள்ளை வீட்டில் திருமணம் நடக்கும்)  (5) காந்தர்வ விவாகம்  - ஸ்த்ரீயும் புருஷனும் ஒருவருக்கு ஒருவர் ஆசையால் மனம் ஒத்துச் சேர்தல் (காதல் திருமணம்)  (6) ஆஸீரவிவாகம்  - ஆசுரம் (அசுரர் போன்ற) வகைக் கல்யாணங்களில் வீரதீரச் செயல்கள் செய்வோருக்குப் பெண் கொடுப்பர். காளை அடக்கல், சுயம்வரப் போட்டிகள் இதில் அடக்கம்.  (7) ராக்ஷஸ விவாகம்  - ஒருவன் தன் பலத்தினால் கன்னிகை (பெண்) அழும்போது அவள் வீட்டினின்றும் அவளது பந்துக்களை (சொந்தக்காரர்கள்)  அடித்தும், கொன்றும் வலிமையால் கொண்டுபோவது (8) பைசாசம் - ஒரு கன்னிகை தூங்கையில், தன்னை மறந்திருக்கையில், பைத்தியமாய் இருக்கையில் அவளை மனைவியாக்கிக் கொள்ளுதல்.    முதலாறும் ஒப்புக் கொள்ளப்பட்ட வகைகள். கடைசி இரண்டும் பெற்றோர் சம்மதம் இருப்பின் ஒப்புக் கொள்ளப்படும். ஆனால் தண்டனை உண்டு. பெற்றோர் மற்றும் மணமகள் சம்மதம் பெற இயலாவிடின் திருமணம் செல்லாது.   []   16.  பின் இணைப்பு 4 : கடமைகள், யாகங்கள் ரிஷிகளுக்கு பிரமச்சரியத்தையும், தெய்வங்களுக்கு யாகங்களையும், பித்ருக்களுக்கு வம்சத்தையும்,  உயிர்களுக்கு நன்மையும், அதிதிகளுக்கு உணவும் அளித்தல் ஒவ்வொரு மனிதனின் ஐம்பெருங்கடமைகளாகக் கொள்ளப்படுகின்றன. இந்த ஐம்பெருங்கடமைகளையும் இல்லறத்தான் மட்டுமே செய்ய முடியும். மற்ற வழிகளில் வாழ்வோர் இக்கடமைகளைச் செய்தல் இயலாது. இந்து சமய பண்பாட்டின்படி தொல்காலம் தொட்டே தினமும் கடைபிடிக்க வேண்டும் என்று சொல்லப்படும் ஐந்து கடமைகளும் பஞ்சமகா யக்ஞங்கள் என்று அழைக்கப்படுகின்றன. இவை அனைத்தும் யாகங்கள் என்று சொல்ல முடியாது, இவை அனைத்தும் அக்னி வளர்த்து ஆகுதி அளிப்பவை அல்ல. ஆனாலும் அவை யக்ஞங்கள் என்று அழைக்கப்பட காரணம், இந்து மதத்தைச் சார்ந்தவனின் வாழ்வில் அவற்றுக்கு அவ்வளவு முக்கியத்துவம் உள்ளது என்பதுதான். இவை முறையே 1.பிரம்ம யக்ஞம் – பிரம்மத்துக்கு அளிக்கப்படும் யாகம் – வேதங்கள் தத்துவங்கள் கற்றல், பிரசங்கங்கள் செய்தல் தவம், யோகம் முதலியன  2.தேவ யக்ஞம் – தெய்வங்களுக்கு அளிக்கப்படும் யாகம் – இவை பூஜைகள் மற்றும் யாகங்கள் ஆகும்  3.பூத யக்ஞம் – அனைத்து உயிர்களுக்கும் அளிக்கப்படும் யாகம் - வாஸ்து பூஜை, சூரிய நமஸ்காரம், பசுக்கள், பறவைகள், எறும்புகள் என பிற உயிரினங்களுக்கு அன்னமளித்தல் பூஜித்தல்  4.பித்ரு யக்ஞம் – மூதாதையர்களுக்கு அளிக்கப்படும் யாகம் – சிரார்த்தம் திதி போன்றவை  5.மானுஷ்ய யக்ஞம் – மனிதர்களுக்கு அளிக்கப்படும் யாகம் – தானம், தர்மம் போன்றவை    []   17.  பின் இணைப்பு 5 : சோடஸ உபச்சாரங்கள் நாம் கடவுளுக்கு செய்யும் பூஜை முறைகள் உபச்சாரம் என்றே அழைக்கப்படுகின்றன. மொத்தம் பதினாறு வகையான உபச்சாரங்கள் உண்டு. இவற்றை சோடச உபச்சாரங்கள் என்கிறோம். இந்த உபச்சாரங்கள் ஒரு விருந்தினர் நம் வீட்டிற்கு வந்தால் நாம் எப்படி எப்படியெல்லாம் அவரை உபசரிக்க வேண்டும் என நமக்குச் சொல்லித்தருபவை. ஆவாஹணம் :  வரவேற்றல் பாத்யம் :  கால் கழுவ நீர் தருதல் அர்க்கியம் :  கை கழுவ நீர் தருதல் ஆசமனம் :  அருந்த நீர் தருதல் ஆசனம் :  அமர ஆசனம் அளித்தல் அபிஷேகம் :  குளிக்க  வைத்தல் வஸ்திரம் :  ஆடை அளித்தல் ஆபரணம் :  ஆபரணங்கள் அளித்தல் திரவியம் :  நறுமணப் பொருட்கள் நைவேத்தியம் :  உணவளித்தல், தாம்பூலம் :  தாம்பூலம் அளித்தல் சாமரம் :  விசிறுதல் அர்ச்சனை :  போற்றிப் புகழுதல் தூபம் :  தூபம் காட்டுதல் தீபம் :  ஆரத்தி தீபங்கள் காட்டுதல் பிரார்த்தனை :  கோரிக்கைகள் வைத்தல் ஊஞ்சல் :  உறங்க வைத்தல் கோவிலில் செய்யும் பூஜை வழிபாடுகளை உற்று கவனித்தால் பெரியவர்கள், விருந்தினர், குழந்தைகள் ஆகியோரை நாம் எப்படி உபசரிக்க வேண்டும் என்று கற்றுத் தருவதாகவே அது இருக்கும். கோவிலில் சேவை செய்யும் பெண் என்றால் கணவனுக்கு சேவை செய்வது எப்படி என்பது அவளுக்கு அத்துப்படி. கோவிலில் கற்றுத் தருவது வாழ்க்கைப் பாடமே!!! இந்து மதத்தில் கடவுளரை படைத்ததே மனிதனுக்கு வாழ்க்கையைச் சொல்லித்தரத்தான். மூட நம்பிக்கையை வளர்க்க அல்ல   []       18.  பின் இணைப்பு 6 : பஞ்ச சூத்திரங்கள்   பஞ்ச சூத்திரங்கள் என்பவை நாம் வாழ்வில் உபயோகம் செய்யும் ஐவகை நூலாலான கயிறுகள் ஆகும். பூணூல் வேதம் படிக்கவும், வைதீகக் கருமங்களைச் செய்யவும் ஒருவருக்கு அதிகாரம் அளிப்பது பூணூல் அணிவித்தல் என்ற சடங்கால் செய்யப்படுகிறது. பூணூல் இல்லாமல் எந்த விதக் கருமங்களையும் செய்தல் கூடாது. இது உத்தரீயம், அதாவது மேலே அணியும் ஆடை என்று சொல்லப்படுகிறது.  திருமாங்கல்யம் தாலி என்னும் திருமாங்கல்யம் இரண்டாம் சூத்திரம் ஆகும். இது அனைத்து அறங்களுக்கும் ஆதாரம் ஆவதாலே இதற்கு மங்கல சூத்திரம் என்றும் பெயர்.   கடி சூத்திரம் அரைஞாண் கயிறு. இது காப்பிற்காக கட்டப்படுகிறது என்றாலும் இதற்குப் பல பயன்கள் உண்டு.  1. மனிதன் ஆடையின்றி இருக்கக் கூடாது. கடி சூத்திரம் இடுப்பு ஆடையாகக் கருதப்படுகிறது. 2. குடலிறக்க நோயைத் தடுக்கிறது. விஷக்கடிகளின் போது கடிபட்ட இடத்தில் உடனடியாகக் கட்ட உதவுகிறது. கங்கண சூத்திரம்  வைதீகக் காரியங்களில் வலக்கையில் கட்டப்படுவது. கங்கணம் கட்டி துவங்கிய காரியத்தை முடித்துவிட்டே மறுவேலை பார்க்க வேண்டும் என்று உறுதி கொள்வது ஆகும். சஜ்ஞாத சூத்திரம் கர்ப்பிணிப் பெண்களுக்குப் பிரசவ காலத்தில் சுகப் பிரசவத்திற்காக குலதெய்வத்தைத்  தியானித்து வயிற்றில் கட்டப்படும் கயிறு. இது கருப்பைக்கு தாங்குதலாக அமைவதால், கருப்பை வாய்மீது அழுத்தம் தராமல் காக்கிறது.   []    19 . பின் இணைப்பு 7 : சீதனம்   சீதளங்கோடு புயங்கைக் கொண்டார்தம் திருமருக சீதளங்கோடு முடியாளர் சேய் தனக்கு ஏதுளதோ சீதளங்கோடு இனிதரும் என்பார் தொழும் தேவிபெரும் சீதளங்கோடு கொடிவேள் மயூரம் சிலையரசே –- அருணகிரிநாதர் சீதனம் - அதில் என்னவெல்லாம் இருக்கிறது தெரியுமா? தாய்மாமனின் அன்பு, பெற்றவர்களின் பாசம், உடையவரின் பெருமை, உயர்வு. ஒரு மருமகள் தான் கொண்டு வருகிற சீதனத்தில் இத்தனையும் சேர்த்துக் கொண்டு வருகிறாள்.   ஏன் தாய்மாமன்? சிற்றப்பன் இல்லையா என்று கேட்கலாம். ஆனால் சிற்றப்பன் அப்பனில் அடக்கம். அம்மா, அத்தை ஆகியோர் சீதனம் கொடுப்பதில் அவர்கள் தங்கள் துணைவர்களுடன் இணைந்து விடுகிறார்கள். திருமணத்தில் நலங்கு வைக்கும் உரிமை தாய்மாமனுக்கும், தாரை வார்க்கும் உரிமை தந்தைக்கும் இருப்பதை நுட்பமாக கவனித்தால் அறியலாம். முருகன், யாருக்கு மருகன்? அவரிடம் என்ன இருக்கிறது? திருமால்.. சீ (ஸ்ரீ) எனப்படும் திருமகள் வசிக்கும் தளம் ஆகிய தாமரை மற்றும் கோடு எனப்படும் சங்கை அவர் தம் கையில் ஏந்தி புஜத்தின் மீது வைத்து ஓங்காரத்தை வெளிப்படுத்த தயாராகவே இருக்கிறார். அவனுடைய அப்பனாகிய சிவனோ, சீதளம் எனப்படும் குளிர்ச்சி பொருந்திய கோடு எனப்படும் பிறைச் சந்திரனை தன் முடியில் முடிந்திருகின்றான்.   []   அப்படிப்பட்ட முருகனுக்கு பெண்தர அவனிடம் என்ன செல்வம் உள்ளது என்று கேட்கலாகுமா? ச்சீ என்று வெறுக்கப்படும் அருவெறுக்கத்தக்க செல்வம்,  கோடு எனப்படும் குற்றம் மற்றும் துன்பத்தைத் தரும் என்று சொல்லும் பற்றற்ற தளத்தில் அதாவது நிலையில் உள்ளோர் வணங்கும் வள்ளி நாயகி கொண்டு வந்த பெரும் சீதனங்கள் என்ன தெரியுமா? சீதளம் - ஊது கொம்பு. கோடு - மலை. அவள் குறிஞ்சி நிலத்தவள் அல்லவா. மலைகள் எல்லாம் அவர்களுக்கே உரிமை உடைத்து அல்லவா? கொடி- சேவல்கள். முருகனுக்கு உரிய கொடியில் அடையாளமாகிய சேவல். வேன் - வேல். முருகனுக்கு அவன் அன்னை அளித்த சக்தி வேல். மாயூரம் - அவனது வாகனமாகிய மயில்கள். ஏன் இப்படிப் பட்ட சீதனங்கள்? இந்தச் சீதனங்கள் எதனால் சிறப்புடையவை ஆகின்றன? ஊதுகொம்புகளின் ஓங்கார ஓசை உலகத்தோருக்கு பிரணவம் உணர்த்தும். முருகன் எங்கே எனத்தேடும் அடியார்களுக்கு, குன்று தோறும் குமரன் இருப்பான். அவன் கொடிகள் பெருகுவதால் உலகெங்கும் அவன் அருளாட்சி என உற்சாகம் பொங்கும். அவன் பக்தர்களோ அதிகம். அவர்களின் துன்பங்களும் அனேகம். அத்தனை துன்பங்களைப் போக்க அவனுக்கு ஒரு வேல் போதுமா என்ன?  அதனால் பலப்பல வேல்கள். கோடானு கோடி பக்தர்களைக் காக்க அவன் விரைந்து செல்ல வேண்டி இருக்கிறது. முருகன் பலராய் மாறலாம். வாகனம்? அதனாலேயே பலப்பல மயில்கள். சீதனம் என்பதை எவ்வளவு அழகாக விளக்கி இருக்கிறார் பாருங்கள். தான் வாழப்போகும் வீட்டில் அதில் வாழும் உறுப்பினர்களின் நன்மைக்கு எது எல்லாம் தேவையோ அவற்றை எல்லாம் சீதனமாகக் கொண்டு வருகிறாள் மருமகள். அந்த வீட்டில் காலெடுத்து வைக்கும் முன்னரே அந்தக் குடும்பத்தின் தாயாக அவள் மாறிவிடுகிறாள். ஒவ்வொரு மணமகனும் - மணமகளும் அத்தனை உறவுகளும் மனதில் கொள்ள வேண்டிய பக்குவம் இது. இதை உணர்ந்து இல் வளர்த்து அறம் வளர்த்து வாழ்வது நன்று.   []   20. பின் இணைப்பு 8 : தாம்பூலத் தட்டு நிச்சயதார்த்தத்திலும், சடங்குகளிலும் தேங்காய் பழத் தட்டுகள் வைப்பார்கள். அதில் தேங்காய், வாழைப்பழம், பூ, வெற்றிலை பாக்கு இவை இருக்கும். இவை முறையே இலை, பூ, காய், கனி, விதை இவற்றைக் குறிக்கும். ஒரு தாவரத்தின் வாழ்க்கையின் அனைத்து பகுதிகளையும் குறிக்கும் இது, முழு வாழ்க்கை என்பதை குறிக்கும் அடையாளம்.  இதிலும் எதைக் கொண்டு குறிக்கிறார்கள் வெற்றிலைக் கொடியின் பெரும்பயன் வெற்றிலை பாக்கு மரத்தின் பெரும்பயன் பாக்கு தென்னையின் பெரும்பயன் தேங்காய் வாழையின் பெரும்பயன் பழம் மல்லிகையின் பெரும் பயன் பூ வாழ்க்கையின் ஒவ்வொரு கட்டத்திலும் பெரும் பயனுள்ளவராய் இருத்தலே நிறைவான வாழ்க்கை. அதனாலேயே இவை கொண்டு தாம்பூலத் தட்டு உருவாக்குகிறோம். இதனாலேயே ஒவ்வொரு சுப காரியங்களிலும் முழு வாழ்க்கை கண்ணோட்டத்தில் இச்சுபகாரியம் செய்கிறோம் என்பதற்காகவே இந்தத் தாம்பூலத் தட்டை முன் வைக்கிறோம்.     []                                 []