[] []     இதயத்தின் இதயம் கவிதைகள்   கவிதா காசிமணி      மின்னஞ்சல் : idhayathinidhayam@yahoo.com    மின்னூலாக்கம் : சீ.ராஜேஸ்வரி -  sraji.me@gmail.com  வெளியீடு : FreeTamilEbooks.com    உரிமை :Creative Commons Attribution-Non-commercial-No Derivatives 4.0 International License. உரிமை – கிரியேட்டிவ்   காமன்ஸ். எல்லாரும் படிக்கலாம், பகிரலாம்.                     பொருளடக்கம் முன்னுரை 6  அம்மா 7  அப்பா 8  கவிதாஞ்சலி 9  என்னவள் ! 10  இதயத்தின் இதயத்திற்கு 11  நிலவோடு தேநீர்! 12   இயற்பியல்........! 13  இருவிழி கவிதை....... 14  நட்சத்திரம் 15  தீபச்சுடரே! 16  நதியோர கால்தடங்கள் 17  மௌனம் 18  காதல் 19  இருளில் ஒளியாய்! 20  அன்பே உந்தன் அன்பில் 21  நீயின்றி நான் 22  கனவுகள் 23  நெருக்கத்தின் தூரம்! 24  தாயுமானேன்! 25  தேடியே தொலைகிறேன்! 26  காதலினாலே 27  உனக்காக 28  உன்னோடு மட்டும்........ 29  உனக்குமாய்...... 30  புரியவில்லை உன் பிரியம்..... 31  காதல் வதைகள்....... 32  யாதுமாகினாய்……. 33  நினைவு வீணை 35  உன் நினைவோடு....... 36  காதலா கருணையா? 37  எரிந்தும் உருகாத மெழுகாய்......... 38  கண்ணாளனே கண்ணாக வா! 39  நினைவு அணை........ 40  திரும்பி பார்க்கிறேன்! 41  கண்ணீர் யுத்தம்........ 42  முப்பொழுதும் நீயே....... 43  கண்ணீராய்......... 44  என்ன தருவாய் 45  தேடல்....... 46  கண்ணீர் இரவுகள் 47  இனிக்கும் விஷம்..... 48  கண்ணீராய் 49  அமாவாசை நிலவு.... 50  மறந்துவிட்டேன் மறப்பதற்கே 51  வேண்டுமொரு ஜென்மம் 52  உயிரை தொலைத்தேன் 53  என்னுயிர் கள்வனே.......! 54  நீ நான் பேருந்து நிலையம் 55  எதிர்...... எதிரே...... 56  காதலுடன் காத்திருப்பேன் 57  உனக்கொரு கேள்வி ........? 59                                                        இந்த ஏடுகள் சுமக்கும் எழுத்துக்கள் பற்றி:    "இதயத்தின் இதயம்"- எந்த ஒரு படைப்பாக இருப்பினும் உணர்வுகளுக்கு உருவம் கொடுப்பதாகவே அமைகிறது. ஓவியன் தன் உணர்வுகளை வண்ணமாக தீட்டுகிறான், சிற்பி  தன் உணர்வுகளை சிற்பமாக செதுக்குகிறான். அதே வரிசையில் கவிதையாய் மிளிர்கிறது என் உணர்வுகள் இந்த புத்தக பக்கங்களிடையே.    பெரும்பான்மை காதலே நடையிடும் இந்த நூலின் ஏதேனும் ஒரு பதிவிலாவது என் உணர்வுகள் உங்கள் இதயத்தோடு உறவாடும் என நம்புகிறேன்.       முன்னுரை மொழி தந்த தமிழையும், வாழ வழி தந்த தாய்மண்ணையும், உயிர் கொடுத்த தந்தையையும், தன் உதிரம் கொண்டு உருக் கொடுத்த அன்னையையும் - வணங்கி!  என் முதல் நூலிற்க்கு பிள்ளையார் சுழி இடுகிறேன். 'காதல்'’ தாய்மையை போலவே அதுவும் ஓர் அழகன சகாப்தம். பெரிய தவறுக்கே கிடைத்துவிட்ட மன்னிப்பு, சின்னஞ்சிறு தவறுகளிடையே சிக்கிக்கொண்டு தவிக்கும் போது தான் புரியும் காதல் இனிமையான இம்சை என்று. பலரின் அனுபவத்திலும், சிலரின் படைப்பாற்றலாலும் நான் அறிந்த காதலை காதலித்து எழுதிய கவிதைகள் அந்த காதலுக்கே சமர்ப்பணமாய் நிழல் தேடும் நினைவுகளாய் "இதயத்தின் இதயம்". [] By         அம்மா   சிறு உயிர்த்துளிக்கு உருக்கொடுத்தாய்........ உன் உயிர் பிழிந்து நான் உயிர் துளிர்த்தேன்...... உதிரம் கடைந்து அமிர்தம் கொடுத்தாய்...... உனதிரு விழிகளுக்குள் இன்றும் கருவானேன்......... வெறும் மெய்யாக நீயிருந்து உயிராக என்னை வளர்த்த அன்னைக்கு! இந்த கவிமழையின் முதல் துளி சமர்ப்பணம்.......!   அப்பா    கடற்கரை மணலில் உம் விரல் பிடித்து நடை பயில அலை என்னை மோதும் முன்பே உம் கரங்களுக்குள் தஞ்சம் புகுந்தேன்! பள்ளி பருவத்தில் ஐந்தாம் வேதமாய் உம் பெயரை எழுதினேன்! சில சமயங்களில் தோழனாக மாறிப்போன உம்மை நினைத்து நெகிழ்த்தேன்! பௌர்ணமி நிலவாய் ஒளிவீசிய  உம்மை அமாவாசையில் தேடுகிறேன்! நேற்று நிஜத்தில் நிழலாய் தொடர்ந்த உம்மை இன்று என்னை தீண்டும் தென்றலில் சுவாசமாய் தேடுகிறேன்! நிகழ்கால வெறுமையை போக்க இறந்த காலமாய் மாறிப்போன உம்மை அழைக்கிறேன்! என் தன்மானம் தடுத்த போதிலும் எனது ஏக்கம் யாவும் மழலையாக மகிழ்ந்திருக்க வேண்டும் உமது இருக்கரங்களுக்குள்!                     கவிதாஞ்சலி (தாயின் தாயிர்க்காக)    நினைவலைகள் விழிவழியே உதிர......... ஊமையாகி போன இதழ்களோடும்........... உடைந்து போன இதயத்தோடும்........... ஓடோடி வந்தேன் உங்கள் உயிரில்லா உடலை காண! கைபிடித்து கதைப்பேசி நடந்த நினைவுகளால்......... கட்டி தழுவ நினைத்த எனக்கோ அனுமதி மறுக்கப்பட்டது! உம்மை இப்போது சுமக்கும் கண்ணாடி பேழையால்........ இதுவரை கண்ணீர் சிந்திய வானம் இப்போது புன்னகைக்கிறது இரவலாய் எமக்கு தந்த தன் வெண்ணிலவை மீண்டும் பெற்றுக்கொண்டதால்! பூமித்தாயும் பூவாய் மலர்கிறாள் உம் பூந்தேகம் தனை மடியேந்திட! கண்ணின்மணியாய் நீங்கள் காத்த பேதைமகள் அழுகிறேன்......... இனி உம்மை காணப்போவதும் இல்லை இந்த துயர் மீளப்போவதும் இல்லை தாயின் தாயிர்க்காக கண்ணீருடன்........           என்னவள் !   மேகங்கள் மோதிக் கொள்ள சிதறி விழுந்த ஒரு துளி தான் உன் இதயமானதோ!   ஆர்ப்பரிக்கும் அலைக்கடலின் அடி ஆழம் புதைந்திருக்கும் மௌனம் தான் உன் பெண்மையானதோ !   கம்பன் வடித்த கவிதை வரிகள் கழன்று விழுந்து உனதிரு விழிகளானதோ!   வல்லினம் வலுவிழந்து மெல்லினம் மோகம் கொண்டு இடையினம் இடறிவிழுந்து உன் இடையானதோ!   வியக்கிறேன்...... அந்த பிரம்மனை கண்டு வியக்கிறேன்.......   துடிக்கிறேன்........ மொழியேதும் இன்றி அவன் படைத்த கவிதையை செந்தமிழில் மொழிபெயர்க்க துடிக்கிறேன்! இதயத்தின் இதயத்திற்கு   என் இதயமே ! தெளிந்த பகல் வானில் தெரியாத வெண்ணிலைவாய் நானிருந்த போதும்.......... என் பெண்ணிலவு உன் நினைவில் தான் கடந்து வந்தேன் தனிமை கடல் யாவும்!   எனது தேடலின் பாதை - ஏனோ தோல்வி களைப்பில் முட்டுச்சந்தில் மோதி நின்றபோதெல்லாம் நான் இளைப்பாற இடம் தந்தது என் இனியவளே! உனதிரு இமைகள் தானே...…   உனக்காய் என்னிடம் கவிதை கேட்கும் கவிதையே!   ஒவ்வொரு முறையும் மொழிமறந்து மௌனியாகிறது எனது எழுதுகோல்! உன் கயல்விழி அழகிலோ மதிமுக வடிவிலோ  - அல்ல!   கருவறையிலிருந்து தன்னை இம்சிக்கும் சதை பிண்டத்தை நேசிக்கும் தாயாய்........ நீ தரும் அன்பில்!       நிலவோடு தேநீர்!   என் பெண்ணிலவே! பயண இடைவெளியில் உன்னோடு பருகிய தேநீர்........ நினைவுகளில் இனிக்குதடி! நிழலாடும் நொடிகளாய் மனதில் வெண்சாமரம் வீசுதடி!    இயற்பியல்........!   என்னவென்று சொல்வேன் இன்னமுதே! உன்னை இன்னதென்று சொன்னால் தகுமோ? எடிசன் அளித்த ஒளியின் கருவே......... இறைவன் படைத்த இயற்கை வரமே! நியூட்டன் கனவுகளின் களமே....... காலம் காட்டும் கடிகார முட்களின் இசையே! யாதுமாகி நீ நின்றால் வேறென்ன நான் சொல்வேன் .........!   கரையும் காற்றின் மொழியனாய்......... சுழலும் காற்றாடியின் உயிரானாய்.......... உரு இன்றியே உருவமானாய்......... அழிவில்லாத ஆதியுமானாய்............ புரியாத புதிர் நீ என்றால் ஏதேனும் விடை உண்டோ?   விடையும் நீயானால் கேள்விகள் வேள்வியாகுமே!   இயங்கும் உலகின் இதயத்துடிப்பே............ உன்னை என்னவென்று நான் சொல்வேன் என்னமுதே!             இருவிழி கவிதை.......   நான் மை கொண்டு தீட்டுகிறேன் சில கவிதை........!   நீயோ...... இரு கவிதைகளுக்கே மை தீட்டுகிறாய்.........! நட்சத்திரம் மேகமகள்  கோலமிட எண்ணி......... இட்டு விட்ட புள்ளிகளில் காதல் மயக்கத்தால் விட்டு வைத்த மிச்சம் தான் நட்சத்திரங்களோ!      தீபச்சுடரே!   இரவின் இருளில் மிளிரும் தேவதை நீ! கோவில் கருவறையில் கடவுளின் மறுவுரு நீ! ஒற்றை சூரியன் போதாதென்று வீட்டிற்கொரு சூரியனாய் உன்னை ஏற்றி வைத்தோம்......!   ஆயிரம் மின்விளக்குகள் ஒளிர்விட்டும் - எட்டவில்லை உன் ஒற்றை சுடரழகு....... மை இன்றி........ சொற்கள் ஏதுமின்றி......... மனிதன் படைத்த முதல் கவிதை நீ!       நதியோர கால்தடங்கள் தத்தி தாவி மண்ணோடு தவழ்ந்த ஒற்றையடி பாதைகள்.........! கல்வியோடு நட்பும் கற்பித்த பாடசாலை....... உணவோடு சமத்துவம் ஊட்டிய மரத்தடி நிழல்........ முதல் சந்திப்பை இன்றும் முகவரியிட்டு காட்டும் பள்ளித்தோழியின் புன்னகை - என சில நினைவு சிதறல்கள்.......!   ஓராண்டு காத்திருப்பில் புத்தாடை கனவுகளுக்கு இடையில் தீபாவளிக்கு எடுத்து வந்த பள்ளி சீருடை........   வார இறுதி நாளன்று மட்டும் தேவைக்கும் குறைவாய் கையேடு கதைப்பேசும் திண்பண்டங்கள்..........   கண்ணோடு கலந்து கருத்தோடு மட்டும் நிறைந்து இன்றும் மனக்கண்ணில் மையல் கொள்ளும் இசை பொம்மை - என ஏற்றிய விளக்கட்டியில் தங்கிவிட்ட இருளாய் ஏழ்மையின் புகைப்படங்கள்..............   மனதில் புதைந்த நினைவுகள் விதைத்து செல்லும் இதழோர புன்னகையில்...... சிக்கிக் கொண்டு தவிக்கிறது கடத்த கால ஏக்கங்கள்! மௌனம் இந்த உலகின் மிக அழகான கவிதை....... கண்ணீர் தெக்கி நிற்கும் விழியோடு பிரிய மறுத்து புன்னகை பூக்கும் இதழ்களோடு ஒலியற்ற மொழி பேசும் பெண்மையின் மௌனம்! காதல் பூக்கள் இசைந்த பிறகும் மதுரம் மறந்து நிற்கும் வண்டுகள்.........   காதல்!     []   இருளில் ஒளியாய்!   எதற்கு தான் இங்கு நான் பிறந்தேனென்று இருள்வானை......... நான் பார்த்த நேரம் எனக்கு தானென்று எதிரில் நீ வந்தாயடா கனவில்...........!                                                 அன்பே உந்தன் அன்பில் முற்றும் துறந்த முனிவரும் சுற்றும் மறந்து........ சற்றே மயங்கும்......... மழலையின் கொஞ்சல் நீ!   பிள்ளை பசியாற............ வெள்ளை மனதோடும் கொள்ளை பசியோடும் புன்னகைக்கும்......... தாய்மையின் கர்வம் நீ! ஆசை ஓசை மறைத்து........ மௌன பாசை பேசி.......... விலகி நிற்கும்........ பெண்மையின் பெருமை நீ! அன்பே! உந்தன் அன்பில்....... மொழிகள் மறந்து போனேன், மரண நிலையும் கடந்து போனேன்! எத்தனை வர்ணனை தந்தும் பித்தனை போல் அலைகிறது எந்தன் சிந்தை! வரிகளற்ற வசனங்களில்.......... வார்த்தைகளற்ற கவிதைகளில்......... உன் புகழ் பாட துடிக்கிறது என் பேனா! இருந்தும்.............. தன்னிலை மாறாமல் என்நிலை கண்டு நகைக்கிறது வெள்ளைக்காகிதம்!        நீயின்றி நான் காதலில் கசிந்துருகி கனவுகளில் தொலைந்து விட்டேன்........! உன் பாதம் போகும் பாதைகளில் சருகுகளாய் சிதறிக்கிடக்கிறேன்..................!! யாருமற்ற போர்க்களத்தில் ஒவ்வொரு முறையும் தோற்றுத்தான் விடுகிறேன் உன் நினைவுகளின் படையெடுப்பால்............!!! [] உயிரற்ற விழிவழியே...... உணர்வற்ற கவிதை படிக்கிறேன்......... புரிந்து கொள்ள ஏதும் இல்லாத போதும் பிரிந்து செல்ல மனமின்றி கவிதை வரிகளிடையே தேங்கி விடுகிறேன்................!!!! விழுந்துவிடவில்லை என்ற போதும் எழுந்து விட முடியவில்லை............!!!!! ஏனடா வதைக்கிறாய்.......? தென்றலுக்கே சாய்ந்து விட்ட ஆலமரமாய்............ புயல் காற்றுக்கும் தலை அசைக்கா புல்வெளியாய்........... நீயின்றி நானிருக்க! இரத்தம் கூட செல்ல முடியாமல் என் இதயம் முழுவதும் நீயிருக்க எப்படி வாழ்வேனாட நீயின்றி............? கனவுகள் என் காதலே! உன் குரல் கேட்கும் போதெல்லாம் உன் விரல் பிடிக்க ஏங்கி............ மதிமுகம் பார்க்க தயங்கி.......... உனதிரு கருவிழியில் தொலைந்து போகிறேன்........ தினமும் கனவில்! என் உயிரே! காதல் ஊற்றேடுக்க...... கண்ணீர் ஓடையில்........ கவிதை கப்பலாய்........ என் கனவுகள் உனக்காய்!                                           நெருக்கத்தின் தூரம்!   உன் சுவாசம் என்னை தழுவிச்செல்லும் இடைவெளியும் உன் விரல்கள் என்னை தொட்டுவிடா நெருக்கமும் பிடிக்குதே!                                                     தாயுமானேன்! நீ மழலையென என் மடி சாய்ந்து கவிதையென சிரிக்கிறாய்.......... நான் காதல் மறந்து காமம் துறந்து தாய்மையில் திளைக்கிறேன்.......... கனவில்!                                                 தேடியே  தொலைகிறேன்! உனக்கான தேடலில்........... தொலைந்து போன என்னை தேடியே கரைகிறது.......... அந்த நிலவோடு எந்தன் இரவும்..........!                                                       காதலினாலே இளம் தென்றல் தழுவிச் செல்லும் மாலை - வேளையிலே! மஞ்சள் வெயிலிற்கு குடை பிடிக்கும் சோலை - நடுவினிலே! பசுமை கூந்தலுக்கிடையில் வகிடெடுத்து ஓடும் சாலை - முடிவினிலே! அலையாடும் சருகாய்.......... தனிமை நதியாடும் குழலாய்......... காத்திருக்கிறது இந்த பூமாலை - காதலினாலே!                                   உனக்காக இருந்தும் பயனில்லை என்று தெரிந்தும் வாழ்கிறது என் காதல் உனக்காக..............                                                         உன்னோடு மட்டும்........   என் காதலை உன்னிடம் சொல்ல ஒரு நொடி போதும் - ஆனால் எத்தனை உண்மை என்பதை காட்ட என் வாழ்வின் ஒவ்வொரு நொடியும் வேண்டும் உன்னோடு...........                                                   உனக்குமாய்......   நித்தமும் இரவில்....... விழியின் விளிம்பில்.......... நீ என்னை ஒற்றை கையில் அணைக்க நான் நம் காதலை இரு கரங்களில் சுமக்க உனது கைபேசியில் நமது குடும்ப புகைப்படம்! கனவா என்று நினைத்தேன்....... உறங்கும் முன்பே வருவது கனவா? இல்லை கற்பனைதான்...... நிஜமும் தோற்று போக நகைக்கிறேன், கற்பனையை எண்ணி அல்ல உனக்கும் சேர்த்து நானே காதலிப்பதை நினைத்து.......                                       புரியவில்லை உன் பிரியம்.....   விலகி செல்ல நினைத்த பொது நெருங்கிவந்தாய்........ உன் நினைவால் நான் உருகும் நேரம் ஏனடா! என்னை மறந்துபோனாய்.........                                                 காதல் வதைகள்.......   சிதறிப்போன என் இதயம் தினமும் சிறைக்குள் சிக்கிக்கொண்டு தவிக்கிறது உன் நினைவால் மட்டும்!   உன்னை காண   ஏங்கி ஏங்கி இமைக்க கூட   மறுக்கிறது என்  இமைகள் இரண்டும்..........   உன் ஸ்பரிசம் தொட வேண்டி வேலைநிறுத்தம் செய்கிறது எனது சுவாசம்.........   விடிய மறந்திட்ட இரவுகளும் என்னை பிரிய மறுத்திட்ட உன் நினைவுகளும்......... கோர்த்து கானல் நீர்தனில்  செல்லும் காகித ஓட்டமாய் என் பாலைவன கவிதைகள்..........   எண்ண எண்ண தீரவில்லை உன் நினைவுகள்........ என்ன மருந்திட்டும் ஆறவில்லை     காதல் காயங்கள்..........             யாதுமாகினாய்…….   அழகே! உன் கடைவிழி பார்வையில் விழுந்த நொடியில் அறிந்து கொண்டேன் என்னுள் துடிக்கும் இதயம் உனதென்று! உன் பெயரினுள் அடங்கிப்போன என் உலகை மீட்டெடுக்க விரும்பவில்லை நீ இசைய வேண்டுகிறேன்............ உன் உறவாக நான் மாற அல்ல..... என் உயிராக  நீ வாழ!   எதிரே நீ நிற்க எரியும் தீயாய் இதயம் எனை வதைக்க....... என் காதல் மலரை உன் காலடியில் சமர்ப்பிக்க மொழியற்று ஏங்குகிறேன்......... உயிரே! என் காதல் மட்டும் நீயென்றால் சொல்லியிருப்பேன் காதலை மட்டும்......... நான் இமை மூடி ரசிக்கும் தென்றல்......... என் இதயம் தொட்டுச் செல்லும் மழலையின் முத்தம்........ என யாதுமாகி நீ நிற்க எப்படி உறைப்பேன் காதலை மட்டும்!   நின்று போன மலைச்சாரல் நித்தம் நினைக்க வைக்கும் சிறுபாடல் மாலை நேர செவ்வானம் அதிகாலை கேட்கும் குயில் பாட்டு என யாதுமாகி நீ நிற்க எப்படி உறைப்பேன் காதலை மட்டும்!   மறைய மறுக்கும் கதிரவன் இரவை தொலைத்த நிலவு இனிமையான வெறுப்பு கொஞ்சம் கசக்கும் அன்பு என கற்பனையில் நிறைந்து கனவுகளில் நுழைந்து என் நினைவுகள் யாவும் நீயாகி போக எப்படியடா  உறைப்பேன் காதலை மட்டும்!                                           நினைவு வீணை நித்தமும் உன் நினைவு வீணையை மீட்டும்போதெல்லாம்........ சில ஸ்வரங்கள் கவிதையாகின்றது! சொல்லில் அடங்கா என் காதல் கண்ணீராகின்றது!    []                                                   உன் நினைவோடு....... உன் வாழ்நாட்களோடு ஒட்டிக்கொள்ளும் பேராசையெல்லாம்  எனக்கில்லை.........   ஓரிரு நொடிகள் உன் அன்பில் உயிர்வாழ வேண்டும்......... பனியாய் உருகும் எந்தன் வாழ்வின் சில பொழுதுகள் உன் நிழலில் இளைப்பாற  வேண்டும்....... சாலையோர தேநீர் விடுதிகளில் சில மணித்திலயங்கள் உன்னோடு கழித்திட வேண்டும்....... ஒரே ஒரு முறையாவது உன் மடி சாய்ந்து அழுதிட  வேண்டும்.......   உன் வருகைக்காய் காத்திருக்கும் மழைக்கால மாலை வேளை வேண்டும்........ என் கவிதை வரிகள் உன் விழித்தீண்டி உயிர் பெற வேண்டும்..........   மழையோடு  சிறு நடைபயணம் விரல் பிணைப்பில் சில வியர்வைத்துளிகள் என் செவியோரம் உன் குரலில் மெல்லிசை என் இதய துடிப்பாய் உன் மென்னகை வேறென்ன வேண்டும் அன்பே! கிழிந்து போன என் வாழ்வின் பல வண்ண ஒட்டுக்களாய்   உன் நினைவுகள் - மட்டும் போதும் என்பேன்.........!         காதலா கருணையா? திக்கு முக்காடி சுவாசத்திற்கு ஏங்கும் என் இதயத்திடம் சொல்லிவிட்டு போ....... உன் வருகை காதல் அல்ல கருணை என்று!         எரிந்தும் உருகாத மெழுகாய்.........   உயிரில் உறைந்து உதிரம் கலந்த என் மொத்த காதலையும் கரைத்துவிடவே.......... கவிதை கொண்டு காவியம் செய்தேன்!   கனவை சிறைபிடித்து கற்பனைக்கு கடிவாளமிட்டேன் உணர்வை உடைத்தெறிந்து விழியோர ஏக்கங்களை தூக்கிலிட்டேன் தூரம் சென்றுவிட்ட தூக்கத்தில் என்னை தொலைத்து விட எத்தனித்தேன்.........   இதயம் துறந்து பிரிவின் துணையால் பிழையின்றி படைத்துவிட்ட இறுதி அத்தியாயம்......... ஏனோ! வைத்து விட்ட முற்றுப்புள்ளி வால் முளைத்து எண்ணில் முகாமிடும் உன் நினைவுகளில் மீண்டும் துளிர்விடும் காதலை என் செய்வேன்........!   கண்ணாளனே கண்ணாக வா! அழகே! உன் நினைவோடு மலரும் மாலை......... இரவோடு இருளாய் கனவுகள்..... விடிந்தும் விடியாத பொழுதுகள்...... கரையும் நொடிகளில் தேடுகிறேன்......... விழியால் அல்ல என் விழியாய் உன்னை! நினைவு அணை........ நீ என்னோடு விட்டுச்சென்ற தனிமையை இன்னும் கட்டிக்காத்து கொண்டிருக்கிறது உன் நினைவுகள்..........                                                     திரும்பி பார்க்கிறேன்!   சொல்லில் அம்பெடுத்து வில் வளைக்கும் எந்தன் கண்கள் பேசும் கவிதை படித்த முதல் ஆண்மகன் நீ........   இசை அற்ற பாடலாய் என் மௌனதை வாசித்த கள்வன் நீ.......   கர்வம் பூண்டு அலைந்த எந்தன் கபடம் உடைத்து பெண்மை மொழி பேச வைத்த பேரலை நீ........   என் அன்பே! சொற்கள் மறந்து மௌனம் கடந்து என் பெண்மை உணர்ந்த தருணம்........   உலகம் மறந்து உன் விழியோடு கரைந்து போன மாயம் மீண்டும் தொடருமா? கண்ணீர் யுத்தம்........ பகலில் மறைந்து இரவில் வெளிவரும் சந்திரனாய் உன் நினைவுகள் இருளில் எனை துரத்த விடியும் வரை முடிவதில்லை கண்ணீர் யுத்தங்கள் கனவிலும்.........!                                                    முப்பொழுதும் நீயே.......   விழுந்து சிதறும் மணித்துளிகளை எண்ணி எண்ணி பிரிந்துவிடும் கடிகார முட்களாய்.......... தவற விட்ட தருணங்களின் சிதறிப்போன நினைவுகளை சேகரித்தே நகர்கிறது எனது காலம்!                                                 கண்ணீராய்......... என்னை மறுக்கவோ மறக்கவோ உன்னில் என் மீது காதல் இல்லை........   உன்னை மறுக்கவோ மறக்கவோ நீ என் காதல் மட்டும் இல்லை.........   உன்  பிரிவை நினைக்கும் ஒவ்வொரு நொடியும் கரைபுரண்டு ஓடுகிறது  காதல் என் விழியோரம் கண்ணீராய்...........!                                     என்ன தருவாய் உன்னை கேட்டேன் நினைவுகள் தந்தாய்.......... காதல் கேட்டேன் காயங்கள் தந்தாய் ............ எதிர்பார்ப்புகள் யாவும் ஏமாற்றங்களாக............. இறுதியில் உன்னிடம் தொலைந்து போன என் உள்ளதை கேட்கிறேன் இப்போது என்ன தருவாய்?                                             தேடல்....... என் பார்வை....... உன் இமைகளுக்குள் தத்தி தழும்பும் காதலிலும்....... என் இதயம் முழுதும் நிறைந்திருக்கும் உன்னிலும்....... நிலைத்துவிட!   தேடல் ஏனோ....... உன் இதழ்கள் சொல்ல மறுக்கும் காதலிலும்....... உன் இதய  ஓரம் ஒழிந்துகொண்டிருக்கும் என்னிலும்......... அலைகிறது!                                       கண்ணீர் இரவுகள் என்றுமே உன்னை சேர போவதில்லை......... இரவின் இருளில் நிலவின் மௌனம் கொண்டு என் தலையணை முழுதும் எழுதப்பட்ட.......... கண்ணீர் கவிதைகள்..........!                                                 இனிக்கும் விஷம்.....   விட்டு செல்ல நினைக்கையில் மனதை தொட்டு நிறுத்தும் மழலையின் அழுகை தான் உன் காதல்........!                                                       கண்ணீராய்     திகைத்துதான் போகிறேன்...... உன்னில் இருந்து மீண்டு மீளாத தூரம் சென்றபிறகும் என் இமையோரம் கண்ணீராய் உறவாடும் உன் காதலால்............!                                                   அமாவாசை நிலவு.... கவிதைச் சரம் தொகுத்து........ கட்டுரை போட்டிக்கு சமர்பித்துவிட்டு பரிசிற்க்காய்  காத்திருக்கும் மாணவனாய்......... காத்திருக்கிறேன் உன் காதலுக்காய்!                                                     மறந்துவிட்டேன் மறப்பதற்கே   மறந்துவிட்டேன் உன்னை........  மறப்பதற்கே! உன்னை இழந்து விட்ட போதும் என் உடல் இறந்து விட்ட போதும்  என் நெஞ்சில் பதிந்து விட்ட காதல் கரை தொட்டு கடல் சேரும் அலையாய் எப்பொழுதும் வாழும் உனக்காய்..........!                                           வேண்டுமொரு ஜென்மம்   கனவுகள் மட்டும் வாழ்க்கை என்றால் இரவுகள் மட்டும் போதும் அன்பே......... நினைவுகள் தான் வாழ்க்கை என்றால் நிமிடங்கள் ஒவ்வொன்றும் ரணங்கள் என்பேன்......... கனவுகள் ஏனோ கலைந்து செல்ல இரவுகள் யாவும் இம்சைகளாகின உன் நினைவுகளால்............... போதும் உயிரே! உனக்காக வாழ்ந்த இந்த ஜென்மம் உன்னோடு வாழ வேண்டுமொரு ஜென்மம்......!                                           உயிரை தொலைத்தேன் எப்போது.......... உன்னில் தொலைந்தேன் என்று தெரியவில்லை! எங்கு........... உன்னை தொலைத்தேன் என்றும் தெரியவில்லை! இப்போது......... யாரை தேட நான் தொலைத்த உன்னையா? இல்லை உன்னில் தொலைந்த என்னையா?                                             என்னுயிர் கள்வனே.......!   பிழை ஏதும் இன்றி பிரம்மன் படைத்த முதல் மனிதன் நீ தானோ!   விழி முழுதும் காதல்....... நுனி மூக்கில் கோபம்......... இதழ் நிறையும் புன்னகை....... அவ்வப்போது இருக்கும் தாடை..... என கற்பனைக்கும் எட்டாத காவியம் நீயடா!   சொல்லில் அடங்கா கவிதையே உன் விழியோடு என் விழி சேர்கையில் காற்றில் கரைந்து உன் நாசியில் சுவாசமாகிறேன்! இதயம் வரை அனுமதி தந்தாள் அதுபோதுமே....... என் உயிரே........! உந்தன் உயிர் துடிப்பில் எந்தன் ஜென்மம் நீளுமே!    நீ நான் பேருந்து நிலையம் காத்திருப்பு என்னவோ அதே பேருந்து நிலையத்தில் தான்! இருந்தும் சில வேறுபாடுகள்........ அன்று நீ....... இன்று நான்...... நான் வருவதால் காத்திருந்தாய் நீ........ நீ வரப்போவதில்லை என்று தெரிந்தும் காத்திருக்கிறேன் நான்........ கையில் எனக்கான பரிசுடன் காத்திருந்தாய் நீ..... நெஞ்சம் முழுதும் உனக்கான காதலுடன் மட்டும் காத்திருக்கிறேன் நான்......... ஐந்து நிமிட சந்திப்பிற்காய் காத்திருந்தாய் நீ........ அதே ஐந்து நிமிடத்திற்காய் நானும் காத்திருக்கிறேன்........ உன் நினைவோடும் அசைவின்றி தூங்கும் கடிகார முட்களோடும்!                           எதிர்...... எதிரே...... உச்சி முதல் பாதம் வரை ஒவ்வொன்றாய் வடித்தெடுத்தேன்...... ஒரு நூறு கனவுகள் ஓராண்டு குறிப்புக்கள் என் எதிர்கால கணவனுக்காய்......... ஓராயிரம் கற்பனைகள்!   நான் வகுத்த நெறிமுறையில் ஒன்று கூட உன் வழிமுறை இல்லை...... ஒற்றை பார்வையில் உடைத்தெறிந்தாய் என் உள்ளக் கதவுகள் யாவும்....... இதுதான் காதலா?    கரையும் என் நொடிகள் உன் கரங்களில் சிறைப்பட ஏங்கினேன்......... ஏனோ! ஒளிரும் உன் அன்பில் மெழுகாய் உருகினேன்........   இரவில் நிலவாய் உனை தேட இருளில் நிழலாய் ஏன் வந்தாய்.............?                    காதலுடன் காத்திருப்பேன்   இருவிழியின் கருவிழியில் நமக்காய் சேமித்த கனவுகள் யாவும் [] உடைந்த பனியாய் கரைகிறது கண்ணீராய்...........! என்னுள் உன்னோடு நான் பேச சேகரித்த வார்த்தைகள் யாவும் மொழியற்று சிதறிக்கிடக்கிறது எனதறை முழுதும் மௌனங்களாய்.........! பாடல் வரிகளாய் என்னுடன் நீயிருந்த மணித்துளிகள் யாவும் நகர மறுத்து தேங்கிக்கிடக்கிறது சாலை ஓரங்களில் சருகுகளாய்...............! ஸ்ரீ ராமா ஜெயம் - போல் உன் பெயரை எழுதும் என் பேனா முனைகள் ஏனோ சித்தாந்தம் பேசுகிறது கவிதையாய்.............!   மொழியற்ற கண்ணீர் உயிரற்ற மௌனம் வளமற்ற சருகு பொருளற்ற கவிதை இவையே என் வாழ்க்கையானது............! நீயில்லாமல் நித்தமும் இறக்கிறேன் நீ வருவாய் என்ற எண்ணத்தில் மீண்டும் பிறக்கிறேன்..........! விட்டில் சுற்றும் விளக்கின் சுடராய் நீ இருக்க உன்னை தொடாமல் தொட்டு செல்லும் தென்றலாய் நானிருக்க விடையில்லா விடயம் ஒன்றை கொடுத்துவிட்டு விடைபெற்று நீ செல்ல விடியும் வரை அல்ல என் வாழ்வு முடியும் வரை காத்திருப்பேன் உனக்காய்............ காதலோடு...........!                                                         உனக்கொரு கேள்வி ........? பகலின் நொடிகள் யாவையும் இரவுகளில் எண்ணித்தீர்க்கிறேன்! விழிநீர் கவி எழுதி விரல் நுனியில் கிழித்தெறிகிறேன்!! நான் கொண்ட மொத்தக் காதலையும் மௌனமாய் மொழிபெயர்க்கிறேன்!!! இதயமாய் என்னுள் துடிக்கும் உன் நினைவை எழுத்துக்களாய் கரைக்கிறேன்!!!!   இருந்தும் உன்னை விலக எடுத்து வைத்த ஒவ்வொரு காலடியும் உன் திசை நோக்கியே பயணிக்க..........   இதுதான்  என்று புரியும் முன்பே என் நெஞ்சில் இவன் தானென்று பொரித்து விட்ட உன் பெயரில் நிலைத்து விட்ட  என் வாழ்வை எப்படி மீட்பேனடா? []    உங்கள் பொன்னான நேரத்தை என் கவிதைகளுடன் செலவிட்டமைக்கு நன்றி. []   இந்த புத்தகம் எனது முதல் முயற்சி. உங்கள் கருத்துக்கள் குறைகளை களையவும், திறமையை மேம்படுத்தவும் உதவும். உங்கள் விமர்சனத்திற்காய் மின்அஞ்சல்  மீது விழி வைத்து காத்திருக்கிறேன்.  Mail ID: idhayathinidhayam@yahoo.com   நன்றி.   உங்கள் கவிதா காசிமணி.