[] [] இட ஒதுக்கீடு உரிமை - அதி அசுரன்  தொகுப்பு : அதி அசுரன் மின்னஞ்சல் முகவரி = atthamarai@gmail.com அட்டைப்படம் - ஆக்கம் - காட்டாறு குழு உரிமை விவரம் - Creative Commons Attribution-NonCommercial 4.0 International மின்னூல் வெளியீடு - FreeTamilEbooks.com   பொருளடக்கம் இட ஒதுக்கீடு உரிமை - அதி அசுரன் 2  இடஒதுக்கீட்டு உரிமை - கேள்வி பதில்கள் 4  இடஒதுக்கீட்டு உரிமை - கேள்வி பதில்கள் இட ஒதுக்கீடு என்றால் என்ன?  பல ஆயிரம் வருடங்களாக நாம் பிறந்த ஜாதியின் அடிப்படையில் நமக்குக் கல்வி மறுக்கப்பட்டது. இந்தியத் துணைக்கண்டத்தில் ஆட்சி நடத்திய அனைத்து மன்னர்களும் “சூத்திரனுக்குக் கல்வியைக் கொடுக்காதே” என்ற மனுசாஸ்திர- இந்து மதச் சட்டங்களுக்குக் கட்டுப்பட்டே ஆண்டனர். அதன் விளைவாக  நாட்டின் பார்ப்பனரல்லாத மக்கள் அனைவரும் பிற்படுத்தப்பட்டனர், தாழ்த்தப்பட்டனர்.  கல்வி மட்டுமல்ல அரசுகளில் அதிகாரப் பதவிகளும் மறுக்கப்பட்டன.   ஜாதியின் காரணமாக மறுக்கப்பட்ட கல்வியையும் வேலைவாய்ப்பையும் அதே ஜாதியின் அடிப்படையில் - உரிமை பறிக்கப்பட்ட மக்களுக்குத் திரும்ப வழங்குவதே இடஒதுக்கீடு ஆகும். வகுப்புவாரி உரிமை என்றால் என்ன?  ஒவ்வொரு ஜாதியினரும் மொத்த மக்கள் தொகையில் அவரவர்கள் வகிக்கும் சதவிகிதத்திற்குத் தக்கவாறு கல்வி, வேலை வாய்ப்பு, பதவி உயர்வு, பிரதிநிதித்துவம் போன்றவற்றில் இடங்களை ஒதுக்கி  மக்கள் தொகை சதவிகிதப்படி வாய்ப்பு பெறும் உரிமைக்குப் பெயர்தான் வகுப்புவாரி உரிமை. தற்போது இந்தியாவிலும், தமிழ்நாட்டிலும் இருப்பது இடஒதுக்கீட்டு உரிமை தான். வகுப்புவாரி உரிமை என்ற அளவில் அல்ல.  ஜாதி அடிப்படையில் இடஒதுக்கீடு வழங்குவது சரியா?  மனிதர்கள் பிறந்த நிறத்தின் அடிப்படையில், அமெரிக்காவில், கருப்பு நிறத்தில் பிறந்தவர்களுக்கு உரிமைகள் மறுக்கப்பட்டன. தற்போது அந்தக் கருப்பின மக்களுக்கு அதே நிறத்தின் அடிப்படையில் தான் உரிமைகள் வழங்கப்படுகின்றன.   இந்தியத் துணைக்கண்டத்தில் பார்ப்பனப் படையெடுப் புக்குப் பிறகு, இந்த மண்ணின் மக்கள் ஜாதி அடிப்படையில் பிரிக்கப்பட்டு, அந்த ஜாதியின் அடிப்படையிலேயே உரிமைகள் மறுக்கப்பட்டு வாழ்ந்தனர். எந்த அடிப்படையில் நாம் தாழ்த்தப்பட்டோமோ அதே அடிப்படையில் உரிமைகளைப் பெறுவதுதான் அறிவியல். அப்போதுதான் சமத்துவம் உருவாகும்.  பள்ளிகளில் மாணவர் சேர்க்கையின்போது ஜாதிச்சான்றிதழ் கேட்பது ஏன்?  நமது வீட்டில் ஒரு திருட்டு நடந்துவிடுகிறது என்று வைத்துக்கொள்வாம். காவல்துறையில் வழக்குப் பதிவு செய்யச்சொல்கிறோம். அப்போது, காவல்துறையில் பொருளை இழந்தவரின் பெயர் மற்றும் முகவரிகளைக் குறித்துக்கொண்டு, வழக்குப் பதிவுசெய்யப்படும். குற்றவாளிகள் கிடைத்தவுடன், பறிபோன பொருளை ஏற்கனவே குறித்து வைத்துள்ள நமது முகவரிக்குத் திரும்பத் தருவார்கள்.  அதுபோல ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக. கல்வி உரிமையைப் பறிகொடுத்தவர்கள் யார் என்பதை அடையாளம் காண மட்டுமே பள்ளிகளில் ஜாதிச் சான்றிதழ் கேட்கப்படுகிறது.   பள்ளிகளிலேயே ஜாதிச்சான்றிதழ் கேட்பதால் ஜாதிஉணர்வு வளர்கிறதே?  நாம் பிறக்கும் இடமே குடியான தெரு, பறத்தெரு, பள்ளத்தெரு என்று பிரிந்து கிடக்கிறது. நாம் வாழும் இடம் அக்ரஹாரம், ஊர், சேரி, காலனி எனப் பிரிந்து கிடக்கிறது.  ஒரு மாணவனின் முகவரியைக் கேட்ட உடனேயே அவனது ஜாதியைப் புரிந்து கொள்ள முடியும். இங்கெல்லாம் ஜாதிச் சான்றிதழ் பார்த்தா நமக்கு இடம் ஒதுக்குகிறார்கள்? நமது பிறவியே நம்மை அங்கு பிறக்க வைத்து விடுகிறது.  இன்னும் கிராமங்களில், டீக்கடைகளில் பிற்படுத்தப் பட்டவர்களுக்குக் கண்ணாடி டம்ளரிலும், தாழ்த்தப்பட்டவர்களுக்கு ப்ளாஸ்டிக் கப்களிலும் காபி, டீ கொடுக்கும் முறை இருக்கிறது. ஒவ்வொரு ஜாதிக்கும் தனித்தனி பெஞ்சுகள் இருக்கின்றன. டீக்கடைகளில் ஜாதிச்சான்றிதழைப் பார்த்தா டீ, காபி விற்கிறார்கள்? ஆளைப் பார்த்த உடனேயே ஜாதிக்கேற்பப் பிரித்து விடுகிறார்கள்.  “பள்ளிகளில் ஜாதிச்சான்றிதழ் கேட்பதால்தான் ஜாதி வளர்கிறது” என்று சொல்பவர்கள் அனைவரும் திருமணம் என்று வரும்போது ஜாதக நோட்டைத் தூக்கிக்கொண்டு தன் ஜாதித் தரகர்களிடம்தானே செல்கிறார்கள்? தன் ஜாதி மேட்ரிமோனி யலில்தானே துணை தேவை என விளம்பரம் கொடுக்கிறார்கள்? இந்த மஞ்சப்பை தரகர்களோ, ஆன்லைன் தரகர்களோ ஜாதிச்சான்றிதழ் பார்த்தா பதிவு செய்கிறார்கள்? நாம் செத்து சுடுகாடு போகும்போதும், சுடுகாட்டில் பிற்படுத்தப்பட்டவர் சுடுகாடு, ஆதிராவிடர் சுடுகாடு என தனித் தனி சுடுகாடுகள் இன்றும் இருக்கின்றன. சுடுகாடுகளில் ஜாதிச்சான்றிதழைப் பார்த்தா நம் பிணத்தை அனுமதிக்கிறார்கள்? இப்படி நம் பிறப்பிலிருந்து இறப்புவரை எல்லா இடங்களிலும் சான்றிதழ் பார்க்காமலேயே, கேட்காமலேயே ஜாதி இழிவு நம்மீது திணிக்கப்படுகிறது. ஒரு வேளை பள்ளிகளில் ஜாதிச் சான்றிதழ் கேட்கும் முறை வராமல் இருந்திருந்தாலும்கூட மேற்கண்ட ஜாதி - தீண்டாமைக் கொடுமைகள் இப்படியேதானே இருந்திருக்கும்? பள்ளிகளே உருவாகாத காலத்திலும் ஜாதி பள்ளிகளில் ஜாதிச்சான்றிதழ் கேட்கும் வழக்கம் அதிகப் பட்சம் கடந்த 100 ஆண்டுகளுக்குள் வந்த நடைமுறை ஆகும். நீதிக்கட்சி. சுயமரியாதை இயக்கம் போன்ற பல அமைப்புகள் இடஒதுக்கீட்டு உரிமைக்காகப் போராடியதன் விளைவாகத் தான் இடஒதுக்கீடு கிடைத்தது. அதற்காகத் தான் ஜாதிச் சான்றிதழும் கேட்கப்படுகிறது.  ஆனால் ஜாதி என்பது கி.பி 1 ஆம் நூற்றாண்டிலிருந்து கடுமையாக நடைமுறைப் படுத்தப்படுகிறது. 2000 வருடங்களாக நமக்குப் பள்ளிகளே இல்லை. கல்லூரிகளே இல்லை. ஆங்கிலேயர் ஆட்சிக்குப் பிறகுதான் நமக்குக் கல்விநிலையங்களே உருவாகின.   அப்படியானால் கடந்த 2000 ஆண்டுகளாக இந்த ஜாதியை வளர்த்தவை எவை? பள்ளிகளே இல்லாத மன்னர்கள் காலத்திலும் ஜாதி எப்படி வளர்ந்தது? என்பதை நாம் யோசித்து விடக்கூடாது என்பதற்காகவே பள்ளிகளில் ஜாதிச்சான்றிதழ் கேட்பதை மட்டும் பார்ப்பன ஊடகங்களும் - வரலாற்று அறிவில்லாத நமது ஊடகங்களும் முக்கியப் பிரச்சனையாகக் காட்டுகின்றன.  ஆவணி அவிட்டம் - கிராமத் திருவிழா - குருபூஜைகளைத் தடைசெய்! பார்ப்பன இனத்தில், பார்ப்பனச் சிறுவர்களுக்கு அவர்களது 8 வது வயதில் உபநயனம் என்ற சடங்கை நடத்து கிறார்கள். அதுவரை வெறும் முதுகோடு இருந்த சிறுவன், அன்றைய நாளில் பூணூல் அணிந்து பிராமணனாக இரண்டாவது பிறவி எடுக்கிறான். அப்படி பிராமணனாக மாறியதன் அடையாளமாகத் தான் பூணூல் அணிவிக்கப்படுகிறது. ஆவணி மாத அவிட்ட நட்சத்திரத்தில் வரும் இந்த நாளுக்கு ஆவணி அவிட்டம் என்ற பெயரில் அரசு விடுமுறையே விடப்பட்டது.   இப்படி வெளிப்படையாகத் தன்னை ‘பார்ப்பான்’ என்று அறிவித்துக்கொள்வதற்கு ஒரு விழாவே நடத்துவது தவறு என எந்தப் பார்ப்பானும் இதுவரை சொல்லவில்லை. எந்தத் தமிழனும் சொல்வதில்லை. இப்படிப் பூணூல் அணிவதே, ‘தான் இன்ன ஜாதி’ என வெளிப்படையாக, திமிராக அறிவித்துக் கொள்ளும் முறைதான்.   “பள்ளிக்கூடத்தில் ஜாதி கேட்டால் ஜாதி எப்படி சார் ஒழியும்?” என்று பெரிய ஜாதி ஒழிப்புப் போராளிகள் போல வேடம் போடும் சினிமா இயக்குநர்கள், நடிகர்கள், பத்திரிக்கைகள், தொலைக்காட்சிகள் அடிக்கடி ஒரு ட்ரெண்டாக இப்படிக் கேட்டுக்கொண்டு இருக்கிறார்கள். அவர்களில் எவரும் நியாய மாக, நேர்மையாக ஒரு பார்ப்பானிடமாவது, “நீங்கள் பூணூல் போட்டுக்கொள்வது ஜாதியை அடையாளப் படுத்தத் தானே? இதனால் ஜாதி வளராதா?” எனக் கேட்டிருக்கிறார்களா?  அப்படித் தனது ஜாதியை அடையாளப் படுத்த ஒரு விழாவையே நடத்துகிறார்களே, அந்த ஆவணி அவிட்டத்தைத் தடை செய்ய வேண்டும் என யாராவது இதுவரை பேசியிருக்கிறார்களா? கிராமத்தில் நடைபெறும் திருவிழாக்களில் பெரும்பாலும் ஜாதிக்கலவரங்கள் உருவாகின்றன. பசும்பொன் தேவர் குருபூஜை நடக்கும் அக்டோபர் மாதங்களில் தென்மாவட்டங்களில் கலவரங்களைத் தடுக்க 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்படுகிறது.   எனவே கிராமத் திருவிழாக்களையும், முத்துராமலிங்கத் தேவர் குருபூஜையையும் தடைசெய்ய வேண்டும் என பேசியிருக்கிறார்களா? திருமணங்களில் ஜாதி அடிப்படையில் துணை தேடக்கூடாது. மாற்று ஜாதிகளில், வெவ்வேறு ஜாதிகளில்தான் துணை தேட வேண்டும் என யாராவது பேசியதுண்டா?   ஜாதிச் சான்றிதழ் கேட்பது சமத்துவத்துக்கே பிறப்பு முதல் இறப்பு வரை ஜாதி அடிப்படையிலான பழக்க வழக்கங்களையும், பண்பாடு களையும் துளிகூடத் தவறாமல் பின்பற்றிக்கொண்டு, ஜாதியை நிலை நிறுத்திக்கொண்டு இருப்பவர்கள், பள்ளிக்கூடத்தில் மட்டும் ஜாதி கேட்கக் கூடாது என்று பேசுவது அயோக்கியத்தனம் அல்லது முட்டாள்தனம்.   பள்ளிகளில் ஜாதிச்சான்றிதழ் கேட்காவிட்டாலும் ஜாதி இருக்கத்தான் செய்யும். முக்கியமாக, மேற்கண்ட ஜாதிக் கொடுமைகள் ஒழிந்து சமத்துவ சமுதாயம் உருவாவதற்காகத் தான் பள்ளிகளில் ஜாதிச் சான்றிதழ் கேட்கப்படுகிறது. உரிமையைப் பறிகொடுத்தவர்கள் யார் என்பதை அடையாளம் காணவே பள்ளிகளில் ஜாதிச்சான்றிதழ் கேட்கப்படுகிறது. இதனால் ஜாதி வளராது. சமத்துவமே வளரும்.  இட ஒதுக்கீட்டால் தகுதி - திறமை பாழாகிறதா?     தேர்வுகளில் தோல்வியுற்றவர்களுக்கு நாம் ‘இட ஒதுக்கீடு’ வழங்குவதில்லை. பிறகு எப்படி ‘தகுதி’ ‘திறமை’ பாழாகும்? ஒவ்வொரு ஆண்டும் தமிழ்நாட்டிலுள்ள மருத்துவக் கல்லூரி களுக்கு மாணவர்களைத் தேர்ந்தெடுப்பதற்கு கட் ஆஃப் மதிப்பெண் அறிவிக்கப்படும். அந்த மதிப்பெண்ணின் அடிப்படையில் தான் மருத்துவம் படிப்பதற்கு மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள்.   2012 மருத்துவ மாணவர் அனுமதிக்குரிய கட் ஆஃப்  சென்னை ஸ்டேன்லி கீழ்ப்பாக்கம்  மருத்துவக்கல்லூரி மருத்துவக்கல்லூரி  மருத்துவக்கல்லூரி   OC 200.00 199.50 199.50 BC 199.75 199.50 199.25 BCM 199.50 199.25 199.00 MBC 199.50 199.25 199.00 SC 198.50 198.00 197.25 SCA 198.50 198.00 197.50 ST 198.00 197.25 196.00 பொதுப்போட்டியில் வரும் மாணவர்களுக்கு உரிய தகுதி மதிப்பெண்ணுக்கும், ஜாதி அடிப்படையிலான இடஒதுக்கீட்டுப் பிரிவு மாணவர்களுக்கு உரிய மதிப்பெண்ணுக்கும்  வெறும் 0. 25 அல்லது 0. 50 என்ற அளவில்தான் வேறுபாடுகள் உள்ளன. இந்த 0. 25 மதிப்பெண்ணில் எந்தத் தகுதியும் குறைந்துவிடாது என்பது அறிவுள்ளவர்களுக்குப் புரியும்.  அண்ணா பல்கலைக்கழத்தின் பொறியியல் மாணவர் அனுமதியிலும் இதே நிலைதான்.    நாம் ஏதோ தகுதி இல்லாதவர்களுக்கு வெறும் ஜாதியை மட்டுமே அடிப்படையாகக் கொண்டு இடஒதுக்கீடு கேட்கிறோம் என்பது போன்ற ஒரு தோற்றத்தை பார்ப்பனர்களும், பார்ப்பன அடிமைகளும் உருவாக்கியுள்ளனர்.  அமெரிக்காவின் மிச்சிகன் பல்கலைக்கழகமும் புதுடில்லி பல்கலைக் கழகமும் இணைந்து, Ashwin Deshpande, Thomas E Wiesskopf ஆகியோர் தலைமையில் இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை நிறுவனமான இந்தியன் ரயில்வேயில், அதன் உற்பத்தி, தரம், செயல்திறன் ஆகியவை குறித்து ஆய்வு நடத்தியது.   1980ஆம் ஆண்டு முதல் 2002 ஆம் ஆண்டு வரையிலான  முதல்நிலை மற்றும் இரண்டாம் நிலை அதிகாரிகள் நிலையில் நேரடியாக நடந்த ஆய்வின் முடிவு 2009 நவம்பரில் World Development Journal  என்ற ஆய்வு இதழில் வெளியிடப்பட்டது.   2013 ல் அமெரிக்காவில் University of massachusetts ல் - சர்வதேச அரசியல் பொருளாதார ஆராய்ச்சி நிறுவனமான PERI நடத்திய சர்வதேச அரசியல், பொருளாதாரக் கருத்தரங்கிலும் வெளியிடப்பட்டு அனைத்து முன்னேறிய நாடுகளின் கவனத்தை ஈர்த்தது.  2015 பிப்ரவரியில் இந்தியாவில் முன்னணி ஏடுகளில் இந்த ஆய்வு குறித்த தகவல்கள் வெளிவந்தன. அவற்றில் குறிப்படத் தக்கவை.  “முக்கிய முடிவுகளை எடுக்கும் உயர்பதவிகளில் இட ஒதுக்கீட்டின் மூலம் நியமிக்கப்பட்ட அதிகாரிகள் மற்றவர்களைவிடத் தங்களின் திறமையை மிகச் சிறப்பான முறையில் வெளியிடுகின்றனர்.  இடஒதுக்கீட்டின் மூலம் பணியில் சேர்ந்தோர் அதிகமாகப் பணியாற்றிய துறையில் பொதுப் பிரிவினரை விட உற்சாகமாகப் பணியாற்றி பல்வேறு துணிச்சலான முடிவு களை எடுத்து அவற்றை செயலாற்றிய காரணத்தால் ரயில்வே துறை நல்ல முன்னேற்றம் கண்டுள்ளது.” இந்த ஆய்வின் மூலம், இடஒதுக்கீட்டால் ‘தகுதி’, திறமை’ பாழாகிறது என்ற வாதம் என்பது உடைபடுகிறது.  ‘தகுதி! திறமை! அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படும் மத்திய அரசின் உயர்பதவிகளில் பார்ப்பனர்கள் பெரும் பான்மையினராக ஆதிக்கம் செலுத்தி வருவதை மண்டல் குழு அறிக்கை வெளிக்கொணர்ந்தது. அப்படியிருந்தும் இந்தியாவுக்கு வெளிநாட்டுக் கடன் 46,000 கோடி டாலர். ஒரு டாலர் சுமார் 60 ரூபாய் என்று கணக்குப் போட்டுப் பாருங்கள். இப்படி திவாலாகும் நிலைக்குக் கொண்டு சென்றது தான் பார்ப்பனர் களின் தகுதி-திறமை. இவர்கள் தான் இடஒதுக்கீட்டில் தகுதி-திறமை பற்றிப் பேசுகிறார்கள்.    இடஒதுக்கீட்டில் ‘பொருளாதார’ அடிப்படை கூடாது. ஏன்?   முதலில் இந்தச் சமுதாயத்தில் கல்வியில் எந்த அளவு கோலின் அடிப்படையில் உரிமை மறுக்கப்பட்டது என்பதை ஆராய வேண்டும். ‘சூத்திரனுக்கு எதைக் கொடுத்தாலும் கல்வியைக் கொடுக்காதே’ என்ற அயோக்கியத்தனமான ‘மனுதர்ம’ப்படி ஆண்ட சேர- சோழ - பாண்டியர் உள்ளிட்ட அரசாட்சிகள் பார்ப்பனரல்லாத அனைத்து மக்களுக்கும் கல்வியை ஜாதி என்ற அளவுகோளின் அடிப்படையில் மறுத்தன.  இன்றும் பார்ப்பனரல்லாத சமுதாய மக்களில் முதல் தலைமுறை, இரண்டாம் தலைமுறை, மூன்றாம் தலைமுறை என்ற அளவில் படிப்பவர்களே பெரும் அளவில் உள்ளனர். ‘தற்குறி’ என்ற பேச்சுக்கே இடமில்லாமல் அனைவரும் படித்தவர்களாக இருக்கும் ஒரே இனம் பார்ப்பனர்களே.  பொதுவாக உலகில் எந்த ஒரு சமுதாயத்திலும் கல்வி என்பது பணக்காரர்களின் ஆதிக்கத்தில் இருக்கும். கல்விக் கொள்கையை தீர்மானிக்கும் அமைப்புகளிலும், அரசு மற்றும் தனியார் நிறுவன உயர் பதவிகளிலும் பணக்காரக் குடும்பங்களின் ஆதிக்கத்தில் இருக்கும். ஆனால் இந்தியாவில் மட்டும் இப் பதவிகள் பணக்காரக் குடும்பங்களின் ஆதிக்கத்தில் இல்லாமல், பார்ப்பன குடும்பங்களின் ஆதிக்கத்தில் இருப்பதை மண்டல் குழு அறிக்கை உள்லிட்ட புள்ளிவிவரங்கள் நிருபித்துள்ளன.  ஒரே வேலை பார்த்து, ஒரே சம்பளம் பெறும் பார்ப்பனர் ஒருவரின் குடும்பத்தையும், பார்ப்பனரல்லாதார் ஒருவரின் குடும்பத்தையும் இன்று ஒப்பிட்டால் பின்வரும் வேறுபாடுகள் இருப்பது தெளிவாகும்.  1. பார்ப்பனர் குடும்பத்தில் எழுதப் படிக்கத் தெரியாதவர்கள் கிடையாது. கைநாட்டுகள் கிடையாது. பார்ப்பனரல்லாதார் குடும்பத்தில் குறைந்தபட்சம் உறவினர்களில் சிலராவது குறிப்பாக கிராமப் பெண்கள் ‘தற்குறி’யாக - படிக்காதவராக இருப்பார்கள். ஏராளமான கைநாட்டுகளைப் பார்க்கமுடியும். இதனால் குழந்த்தைகளின் கல்வியறிவுக்கான சூழலில் இரு குடும்பத்தின ரிடையே வேறுபாடு ஏற்படுகிறது. இந்தத் தற்குறிகளில் சிலர் வசதியுள்ளவர்களாகக் கூட இருப்பர்.  2. பார்ப்பனரின் உறவினர்கள் வடநாட்டிலோ அல்லது வளர்ந்த நாடுகளிலோ இருப்பார்கள். பார்ப்பனக் குடும்பங் களுக்குத் தேவைப்படும் கல்வி வேலைவாய்ப்புகள் பெற அவர்கள் உதவுவார்கள். பார்ப்பனரல்லாதாருக்கு அவர்களின் உறவினர்கள் வட நாட்டிலோ, வளர்ந்த நாடுகளிலோ இருப்பது அரிது.அப்படி இருந்தாலும் தமது உறவினர்களுக்கு இவர்கள் உதவுவது இல்லை.  3. பார்ப்பனக் குடும்பத்தில் உறவினர்கள் அரசு மற்றும் தனியார் துறை உயர் பதவிகளில் இருப்பதன் காரணமாக மேற்படிப்பு - வேலை வாய்ப்பிற்கு பார்ப்பனருக்குச் சாதகமான சுழல் உள்ளது. பார்ப்பனரல்லாத குடும்பத்திற்கு பொருளாதார வசதி இருந்தும் கூட இச்சாதகமான சூழல் இல்லை.  4. பார்ப்பனக் குடும்பத்தில் எவ்வளவு வறுமை ஏற்பட்டாலும் ஏர் பிடித்தல், கல்லுடைத்தல், மூட்டை தூக்குதல் போன்ற கடுமையான உடலுழைப்பு தொழிலில் ஈடுபடும் பார்ப்பனரைக் காண முடியாது. வறுமை காரணமாக இத்தகைய கடுமையான உடலுழைப்புத் தொழிலில் ஈடுபடும் அனைவருமே பார்ப்பனரல்லாதவராக உள்ளனர்.  மேற்சொன்ன வேறுபாடுகள் பொருளாதார அடிப்படையில் உள்ளவை அல்ல. மாறாக  சமூக அடிப்படையில் உள்ளவை. இவ்வேறுபாடுகளின் அளவு பார்ப்பனரல்லாத ஜாதிகளில் வெவ்வேறு அளவாக உள்ளன. எனவே தான் ஜாதிவாரி மக்கள் தொகைக் கணக்கெடுப்பும் அதனடிப்படையில் வழங்கப்படும் ஜாதிவாரி இடஒதுக்கீடுமே மேற்சொன்ன வேறுபாடுகளைக் களைந்து சமூகநீதியை வழங்கும் ஏற்பாடாக அமையும். தற்போது அமுலில் உள்ள அரசாணைப்படி, ஊக்கப்பணம் (ளுஉாடிடயசளாயீை) பெறும் மாணவர்களுக்கு பொருளாதார அளவுகோல் வைக்கப்பட்டுள்ளது. பணக்கார தாழ்த்தப்பட்ட பிற்படுத்தப் பட்ட சமுதாய மாணவர்களுக்கு இந்த ஊக்கத்தொகை கிடையாது. இத்தகைய பொருளாதார ரீதியிலான பலன்களுக்கு பொருளாதார அளவுகோல் சரியே.   அரசுப் பணியாளர்களைத் தவிர்த்து மற்றவர்கள் போலிச் சான்றிதழ்கள் மூலம் இந்த அளவுகோலை அர்த்தமற்றதாக்கி வருகிறார்கள். இயற்கையோடு நடத்தும் சூதாட்டமாக உள்ள விவசாயம் மற்றும் நிலையற்ற தொழில் காரணமாக அரசுப் பணியாளர்களைத் தவிர்த்து மற்றவர்களில் பெரும்பாலோரின் ஆண்டு வருமானம் பெரும் ஏற்ற இறக்கங்களுக்கு உட்படுவதாகும். எனவே இப்போது ஊக்கப்பணத்திற்கான பொருளாதார அளவுகோல் நடைமுறையில் சரியாகச் செயல்படவில்லை. எனவே இட ஒதுக்கீட்டுப் பிரச்சனையைத் திசை திருப்பவே பொருளாதார அளவுகோல் வாதம் வைக்கப்படுகிறது. தற்போதைய ஜாதி அடிப்படையிலான இடஒதுக்கீட்டிற்கு எதிராகக் கூக்குரலிடும் பார்ப்பனர்களும், பார்ப்பன அடிவருடி களும் ஜாதி அடிப்படையிலான இடஒதுக்கீட்டினால் தகுதி திறமை பாழாகிறது என்ற வாதத்தை முன்வைக்கிறார்கள். அதே நபர்கள் இடஒதுக்கீட்டிற்கு பொருளாதார அளவுகோல் வேண்டும் என்கிறார்கள். அப்போது மட்டும் தகுதி-திறமை பாழாகாதா? ஜாதி அடிப்படையில் உரிமை பாதிப்புகள் இருக்கும் வரை ஜாதி அடிப்படையில் இடஒதுக்கீடு நிடிக்கவேண்டும். இதுவே அறிவியல் அணுகுமுறையிலான சமூக நீதியாகும். இந்திய அரசியல் அமைப்புச்சட்டம் 16(4)ன் படியும் சரியாகும்.  நிறத்தின் அடிப்படையில் அமெரிக்க இடஒதுக்கீடு அமெரிக்கச் சமூகத்தில் கருப்பின மக்களுக்கு அவர்களது நிறத்தின் அடிப்படையில் உரிமைகள் மறுக்கப்பட்டன. பிற்காலத்தில் கருப்பின மக்களுக்கு மறுக்கப்பட்ட உரிமைகள் திரும்ப வழங்கப்படும்போது - அதே நிறத்தின் அடிப்படையில் தான் வழங்கப்பட்டன. அதுபோல ஜாதியின் அடிப்படையில் மறுக்கப்பட்ட நமது உரிமைகளை அதே ஜாதியின் அடிப்படையில் திரும்பப் பெறுவதே அறிவியல் அணுகுமுறையாகும். சமூகநீதியுமாகும். இங்கு பணக்கார தாழ்த்தப்பட்டவரை ஏழை பார்ப்பனர் களுடன் ஒப்பிடுவது போல் மேற்சொன்ன நாடுகளில் உள்ள பணக்காரராக உள்ள கருப்பரை, ஏழை வெள்ளைக் காரனுடன் ஒப்பிடும் முட்டாள்தனத்தைச் செய்ய மாட்டார்கள். அந்நாடு களில் உள்ள மக்கள் வறுமை ஒழிப்புத் திட்டங்களையும் இன ஒதுக்கீடு திட்டங்களையும் குழப்பிக் கொள்வது கிடையாது.    ஆதலால் நிற அடிப்படையில் உருவான கருப்பர் இனப் பிரச்சனையிலும் ஜாதி அடிப்படையில் உருவான தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்டோர் இடஒதுக்கீட்டுப் பிரச்சனையிலும் பொருளா தார அளவுகோலைப் பயன் படுத்துதல் சமூகநீதிக்கு எதிரானது மட்டுமல்ல, அறிவியல் அணுகுமுறைக்கு முரணானதும் கூட.  இடஒதுக்கீட்டால் வேலை இல்லாத் திண்டாட்டம் ஒழியுமா?  இடஒதுக்கீடு என்பது பொருளாதார முன்னேற்றத்திற்காக வகுக்கப்பட்ட திட்டம் அல்ல. நிர்வாகங்களில் அனைத்து மக்களுக்கும் சம உரிமை வழங்க உருவாக்கப்பட்ட திட்டம். இடஒதுக்கீட்டால் வேலை இல்லாத்திண்டாட்டம் ஒழியாது. நாட்டில் உள்ள வேலைவாய்ப்புகள் 90 சதவீதம் தனியார் துறைகளில் இருப்பதாலும், அவற்றின் இட ஒதுக்கீடு இல்லாததாலும் வறுமையும் வேலையின்மையும் பார்ப்பனருக்கு ஒரு நிலையாகவும், பார்ப்பனரல்லாதோருக்கு  வேறுநிலையாகவும் இருக்கிறது.   பார்ப்பன வறுமை, பிளாட்பாரங்களில் வாழும் பார்ப்பனக் குடும்பத்தைத் தோற்றுவிக்கவில்லை. பார்ப்பனரைக் கல்லுடைக்கவும், ஏர் பிடிக்கவும், மூட்டை தூக்கவும், கடுமையான உடலுழைப்பிலான எந்தத் தொழிலையும் மேற்கொள்ளவும் நிர்பந்திக்கவில்லை.   இடஒதுக்கீட்டால் வேலையில்லாத் திண்டாட்டத்தில் உள்ள இந்த வருணாசிரமத் தன்மை ஒழியும், அதேசமயம் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக அடிமைப்படுத்தப் பட்டுள்ள பார்ப்பனரல்லாத ஒடுக்கப்பட்ட மக்களுக்கு இட ஒதுக்கீடு மூலம் கிடைக்கும் வேலை வாய்ப்புகள் சமூக உளவியல்  மாற்றங்களுக்கு வழிவகுக்கிறது. ‘நம் சாதிக்கு கல்வி வராது’ என்ற பார்ப்பனிய  ஆதிக்கம் உருவாக்கிய மனோரீதியான பிற்போக்குத்தனம் இட ஒதுக்கீட்டின் மூலம் உடைபடுகிறது.  சாதியை ஒழிக்க வேண்டும் என்று கூறும் இயக்கம் சாதி அடிப்படையிலான இட ஒதுக்கீட்டை ஆதரிக்கலாமா? இட ஒதுக்கீடு எவ்வளவு காலத்திற்கு நீடிக்க வேண்டும்?       வர்க்கமற்ற சமுதாயத்தை உருவாக்கப் பாடுபடும் உண்மையான கம்யூனிஸ்ட்டு இயக்கம் ஒரு வர்க்கத்தின் அடிப்படையில், சில உரிமைகளைப் பெற  போராடலாமா? அது வர்க்கத்தை வளர்க்காதா? என்று கேட்கலாம் வர்க்கமற்றச் சமுதாயத்தை உருவாக்கும் வரை வர்க்கம் இருக்கும். வர்க்கம் இருக்கும் வரை வர்க்கத்தின் அடிப்படையில் சில உரிமைகள் பெறப் போராட்டங்கள் தொடரும்.   அதேபோல் சாதி இருக்கும் வரை சாதியின் அடிப்படையில் உரிமைப் போராட்டங்கள் தொடர்வது சரியான நடைமுறை யாகும். பார்ப்பனர்களைப் போல் ஒடுக்கப்பட்ட மக்களும் கல்வி வேலை வாய்ப்பு உள்ளிட்ட அனைத்துத் துறைகளிலும் தமது மக்கட்தொகை விதத்திற்கு ஏற்ற இடங்களை இட ஒதுக்கீட்டின் துணையில்லாமல் பெறும் நிலை வரும்வரை இட ஒதுக்கீடு தொடரும். இடஒதுக்கீட்டை ஒழுங்காக அமுல்படுத்தினால் இட ஒதுக்கீடு தானாகவே ஒழிந்துவிடும் எடுத்துக்காட்டாகத் தமிழ்நாட்டில் மருத்துவம் பொறியியல் போன்ற படிப்புகளுக்குத் திறந்தபோட்டி, பிற்படுத்தப்பட்டோர் தாழ்த்தப்பட்டோர் ஆகிய மூன்று பிரிவினரின் அனுமதிக்கானக் குறைந்தபட்ச மதிப் பெண்களுக்கு இடையிலான வேறுபாடு பெருமளவு குறைந்து வருகிறது. எம்.பி.பி.எஸ், பி.ஈ., படித்துவந்த, படித்துவரும் மாணவர்களை விசாரிப்பதன்மூலம் இதனை நன்கு தெளிவாகத் தெரிந்து கொள்ளலாம்.   ஆனால் இந்தச் சாதனை வேலைவாய்ப்புகளில் கிடையாது. ஏனெனில் நாட்டில் உள்ள வேலைவாய்ப்புகள் 90 சதவீதம் தனியார் துறைகளில் உள்ளது. இதில் இட ஒதுக்கீடு கிடையாது. இட ஒதுக்கீடு இருக்கும் வேலைவாய்ப்புகளிலும், இட ஒதுக்கீடு ஒழுங்காகக் கடைப்பிடிக்கப்படுவதில்லை. எனவே அரசுத்துறைகளிலும், தனியார் துறைகளிலும் இடஒதுக்கீட்டைக் கல்வி வேலைவாய்ப்பு களில் ஒழுங்காக அமுல்படுத்துவதன் மூலம் அதனை மிகக் குறுகிய காலத்தில் ஒழிக்க முடியும்.  இடஒதுக்கீட்டால் அந்தச் சாதியில் உள்ள மேல் தட்டு மக்களே பயன்பெறு கிறார்கள் என்றும், கீழ்தட்டு மக்கள் பலனடைய வில்லை என்பதும் சரியா?  இட ஒதுக்கீட்டில் கல்வி, வேலைவாய்ப்பு மறுக்கப்பட்டச் சாதிகளில் ஒரு சிலருக்குக் கல்வி, வேலைவாய்ப்பு கிடைக்கச் செய்வதில் இட ஒதுக்கீட்டில் உடனடி பலன்கள் அந்தச் சாதியில் மேல்தட்டுப் பிரிவினருக்கே போய்ச்சேரும் என்பது சமூகவியல் உண்மையாகும். முதல் தலைமுறையாக படிப்பவர், கிராமப்புறப் பள்ளிகளில் படிப்பவருக்கு முன்னுரிமைக் கொடுப்பதன் மூலம் இட ஒதுக்கீட்டுப் பலன்களைப் பரவலாக்க முடியும்.   இது தவிர தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்களின் மனங்களில் உள்ள சமுதாய பிற்போக்குத் தனத்தை எதிர்த்துப் போரிடுவதன் முக்கியத்துவத்தை நாம் உணர வேண்டும். தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட இனத்தைச் சேர்ந்த ஒருவர் கலெக்டராகவோ அல்லது போலீஸ் சூப்பிரண்டாகவோ ஆகும்போது, அதனால் அவர் பெறும் பொருளாதாரப் பலன்கள் அவர் குடும்பத்து உறுப்பினர்களுக்கு மட்டுமே போய் சேரும்.   ஆனால், அந்நிகழ்ச்சியால் ஏற்படும் மனோரீதியான தாக்கம் மிகப் பெரியதாகும். அவர் சார்ந்துள்ள தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்டச் சாதியினர் அனைவருமே சமுதாயத்தில் உயர்ந்து விட்டதாக உணருகின்றனர். அச்சாதியினருக்கு இவரால் எந்த வகைப் பொருளாதாரப் பலன்களும் இல்லை என்றாலும் ‘நமது ஆள்’ ‘ஆட்சி பீடத்தில்’ இருக்கின்றார் என்ற உணர்வு அவர்களுக்கு உற்சாக ஊக்கமாகச் செயல்படுகிறது.  ‘நம் சாதிக்குக் கல்வி வராது’ என்ற பார்ப்பனீய ஆதிக்கம் உருவாக்கிய மனோரீதியான பிற்போக்குத்தனம் உடைபடுகிறது. இவ்வாறு மனவியல் அடிமைத்தனம் உடைபடுவது சமுதாய புரட்சிக்கே அடிகோலும்.  பார்ப்பனர்களுக்கும் முன்னேறியதாகச் சொல்லப்படும் ஜாதி யினருக்கும் இட ஒதுக்கீடு செய்யலாமா?  அய்யர், அய்யங்கார், ரெட்டியார், செட்டியார், முதலியார் அனைத்து ஜாதி மக்களுக்கும் அவரவர் எண்ணிக்கை விகிதத்திற் கேற்ப இட ஒதுக்கீடு வழங்குவதுதான் சமுதாய நீதியாகும்.   ஆனால் மக்கள் தொகையில் 3 சதவீதம் உள்ள பார்ப்பனர்கள் தற்சமயம் 70 முதல் 90 சதவீதம் வரை மொத்த கல்வி, வேலை வாய்ப்புகளில் ஆதிக்கம் செலுத்தி வருகிறார்கள்.   முன்னேறியதாகச் சொல்லப்படும் ஜாதிப் பட்டியலில் உள்ள திறந்த போட்டியில் வரும் செட்டியார், முதலியார், ரெட்டியார் போன்ற சாதியினர் பார்ப்பனர்களைப் போல் இட ஒதுக்கீட்டில் ஆதிக்கம் செலுத்தவில்லை இவர்களும் தங்களுடைய சாதிக்கேற்ற இட ஒதுக்கீட்டிற்காகப் போராடுவது நியாயமாகும்.   இடஒதுக்கீட்டால் தாழ்த்தப்பட்டவர்களுக்கு மட்டுமல்ல. பிற்படுத்தப்பட் டோருக்கும் நன்மை தான். விளக்கம் தர முடியுமா?  பொதுவாக இடஒதுக்கீடு என்றாலே அது தாழ்த்தப் பட்டவர்களுக்கு மட்டும்தான் என்ற கருத்து பிற்படுத்தப்பட்டவர்களிடையே பரப்பப்பட்டுள்ளது. கல்வி நிலையங்களில் ஸ்காலர்ஷிப் போன்ற பொருளாதார உதவிகள் தாழ்த்தப்பட்ட மாணவர்களுக்கு மட்டுமே வழங்கப்படுகின்றன.–இலவச விடுதிகள் தாழ்த்தப்பட்ட மாணவர்களுக்கு மட்டுமே உள்ளன என்பவை போன்ற பல தவறான தகவல்கள் பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தினரிடையே பரப்பப் பட்டுள்ளது.   பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தில் உள்ள பொருளாதார ரீதியாகப் பின்தங்கிய மாணவர்களுக்கும் கல்வி உதவித் தொகைகள் வழங்கப்படுகின்றன. சமுதாயத்தில் பிற்படுத்தப்பட்டோருக்கு உள்ள பல அதிகாரங்கள் தாழ்த்தப்பட்டோருக்குக் கிடையாது. நில உரிமை, தொழில் நடத்தும் வாய்ப்புகள் போன்ற பல காரணங்களால் பிற்படுத்தப்பட்டவர்கள் பெரும்பாலும் பொருளாதார ரீதியாக வசதியாக உள்ளனர். அதாவது தாழ்த்தப்பட்டவர்களைவிட வசதியாக உள்ளனர். அவ்வளவுதான். தாழ்த்தப்பட்டவர்கள் பெரும்பாலும் பொருளாதார ரீதியிலும் பின்தங்கியே உள்ளனர்.  எனவே, தாழ்த்தப்பட்ட மாணவர்கள் அதிகமாக கல்வி உதவித்தொகைகளைப் பெறுகின்றனர். பிற்படுத்தப்பட்ட மாணவர்கள் சற்று குறைவான எண்ணிக்கையில் கல்வி உதவித் தொகைகளைப் பெறுகின்றனர்.  அதேசமயம் இலவச விடுதிகள் என்ற நிலையில், பிற்படுத்தப் பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மாணவர்கள் அனைவருக்குமே அரசு சார்பில் மாணவர் விடுதிகள் இயக்கப்பட்டுக்கொண்டிருக் கின்றன. அரசு மற்றும் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சகங்களின் இணையதளங்களில் இவை பற்றிய ஆதாரங்களைக் காணலாம். http://www.tn.gov.in/ta/department/4  பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை நடத்தும் இலவச மாணவர் விடுதிகளின் எண்ணிக்கை 721 மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர்  நலத்துறை நடத்தும் இலவச மாணவர் விடுதிகளின் எண்ணிக்கை 580 சிறுபான்மையினர் நலத்துறை நடத்தும் இலவச மாணவர் விடுதிகளின் எண்ணிக்கை 14 மேலும் கள்ளர் சமுதாயத்தைச் சேர்ந்த மக்களுக்காக திண்டுக்கல், தேனி, மதுரை ஆகிய மூன்று மாவட்டங்களில் மட்டும் மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர்  நலத்துறை சார்பில் 290 கள்ளர் சீரமமைப்புப் பள்ளிகள் இயங்கி வருகின்றன.  தாழ்த்தப்பட்ட சமுதாயத்துக்கு மட்டுமே அரசாங்கம் உரிமைகளைத் தருகிறது என்பது போன்ற தவறான எண்ணங் களை பிற்படுத்தப்பட்ட சமுதாயம் மாற்றிக்கொள்ள வேண்டும்.   இரண்டு பிரிவினரும் இணைந்து போராடினால் தான் நமது உரிமைகளை மீட்டெடுக்க முடியும். இருக்கும் உரிமைகளைப் பாதுகாக்க முடியும். அந்த ஒற்றுமை உருவாகிவிடக்கூடாது என்ற நோக்கத்தில் பார்ப்பன - பார்ப்பன அடிமைகளால் பரப்பப்படும் தவறான பிரச்சாரங்களில் நாம் வீழ்ந்துவிடக் கூடாது. கிறித்தவ, இசுலாமிய மாணவர்களுக்கும் மட்டுமே அரசின் சலுகைகள் கிடைக்கின்றன. இந்து மாணவர்களுக்கும் சலுகைகள் வழங்கப்படுவதில்லை என ஆர்.எஸ்.எஸ் கூறுகிறதே? அண்மைக்காலமாக ஆர்.எஸ்.எஸ் மற்றும் அதன் முன்னணி அமைப்புகளால் பரப்பப்படும் ஒரு பொய்ப்பிரச்சாரம் இது. தமிழ்நாடு அரசு, மற்றும் மத்திய அரசுகளின் பிற்படுத்தப் பட்டோர் நலத்துறை, தாழ்த்தப்பட்டோர் நலத்துறை, மனிதவளமேம்பாட்டு அமைச்சகம் போன்றவற்றின் அதிகாரப் பூர்வ இணையதளங்களிளேயே ஆர்.எஸ்.எஸ் அமைப்புகளின் பொய்ப்பிரச்சாரத்தை அம்பலப்படுத்தும் உண்மைகள் இடம்பெற்றுள்ளன.  எடுத்துக்காட்டாக தமிழ்நாடு அரசின் பிற்படுத்தப் பட்டோர் நலத்துறையின் இணையதளத்தில் உள்ள அதிகாரப் பூர்வத் தகவலையே பார்ப்போம். மேலே உள்ள கேள்விக்கான பதிலில் அத்தகவல் உள்ளது. பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை நடத்தும் இலவச மாணவர் விடுதிகளின் எண்ணிக்கை 721 மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர்  நலத்துறை நடத்தும் இலவச மாணவர் விடுதிகளின் எண்ணிக்கை 580 சிறுபான்மையோருக்கு 14 விடுதிகள்தான் நடத்தப்படுகின்றன.   பிற்படுத்தப்பட்டோர், மற்றும் தாழ்த்தப்பட்டோர் விடுதிகள் 1301 உள்ளன. இந்த 1301 விடுதிகளில் தங்கிப் படிப்பவர்கள் அனைவரும் இந்து மதத்தில் உள்ளவர்கள் தான்.   தமிழ்நாடு அரசு பிற்படுத்தப்பட்டோர், தாழ்த்தப் பட்டோருக்கு வழங்கும் இடஒதுக்கீட்டு உரிமைகளில் பலன் பெறும் 69 சதவீத மக்களில் 3. 5 சதவீத சிறுபான்மையினர் ஒதுக்கீட்டைத் தவிர 65. 5 சதவீத மக்களும் இந்துக்கள் தான். அனைவரும் இந்து சமுதாயத்தைச் சார்ந்த மாணவர்கள்தான். இவற்றைப் பள்ளி, கல்லூரிகளில், அரசு அலுவலகங்களில் நேரடியாகவே நாம் காணலாம். பி.ஜே.பி, ஆர்.எஸ்.எஸ் கூறுவது மிகவும் அயோக்கியத்தனமான பொய்.  ஐஐடி போன்ற உயர்கல்வி நிறுவனங்களில்கூட ஜாதி அடிப்படையில் இடஒதுக்கீடு தேவையா?  இந்திய விடுதலைக்குப் பிறகு 23. 11. 1954 ல் மத்திய கல்வி அமைச்சகம் இந்தியாவில் உள்ள அனைத்து மாநில தலைமைச் செயலகங்களுக்கும் தாழ்த்தப்பட்டோருக்கு கல்வி, வேலை வாய்ப்புகளில் உரிய பிரதிநிதித்துவம் வழங்கக்கோரி ஆணை பிறப்பித்தது.  1982 முதல் உயர்கல்வி நிறுவனங்களிலும், மத்திய அரசுப் பல்கலைக்கழகங்களிலும் தாழ்த்தப்பட்டோருக்கு 22.5 ( 15 + 7.5) சதவீத இடஒதுக்கீடு அமுல்படுத்தப்பட்டது. கல்வி மட்டு மின்றி அங்குள்ள வேலைவாய்ப்புகளிலும் 22.5 சதவீத இட ஒதுக்கீடு வழங்க ஆணைகள் உள்ளன.    அது போல, கடந்த 2006 ஆம் ஆண்டு அப்போதைய இந்திய மத்திய அரசின் மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் அர்ஜூன்சிங் அவர்கள் 05. 04. 2006 ல் பாராளு மன்றத்தில், உயர்கல்வி நிறுவனங்களில் பிற்படுத்தப்பட்டோருக்கு 27 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்படும் என்ற அறிவிப்பை வெளியிட்டார். கடுமையான எதிர்ப்புகளுக் கிடையே 03. 01. 2007 அந்த அறிவிப்பு அரசாணையாக வெளியிடப்பட்டது.  அப்படி 1982 லிருந்து தாழ்த்தப்பட்டோருக்கு கல்வி, வேலை வாய்ப்புகளில் இடஒதுக்கீடு இருந்தும் - 2007 ல் இருந்து இந்தியாவில் உள்ள ஐஐடி, ஐஐஎம் மற்றும் மத்திய அரசுப் பல்கலைக்கழகங்களில் பிற்படுத்தப்பட்டோருக்கு இடஒதுக்கீடு வழங்கவேண்டும் என்று அரசே உத்தரவிட்ட பிறகும் பல உயர் கல்வி நிறுவனங்கள் அந்த ஆணையை நடைமுறைப்படுத்தவில்லை.   இந்தியாவின் மிகமுக்கியப் பல்கலைக்கழகமான புது டில்லியில் உள்ள ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் பணி யாற்றும் 612 பேராசிரியர் மற்றும் இணைப் பேராசிரியர்களில் பிற்படுத்தப்பட்டோர் ஒருவர்கூட இல்லை. அப்பணியிடங் களுக்கு பிற்படுத்தப்பட்டோர் இடஒதுக்கீடு அமுல்படுத்தப் படவே இல்லை. 08.12.2015 இல் கிரண்குமார் என்பவர் ஆர்.டி.ஐ யின் கீழ் பெற்ற தகவல்கள் இதை உறுதிப்படுத்துகின்றன.   2009 ல் தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின்படி பெறப் பட்ட தகவல்களைப் பார்க்கலாம். உயர்கல்வி நிறுவனங்களில் பணியாற்றும் தாழ்த்தப்பட்டோர் குறித்த தகவல்கள் இவை.  பல்கலைக் பேராசிரியர் + இணைப்பேராசிரியர் கழகம் மொத்தம் SC / ST   பனாரஸ் இந்து 346 + 680 0 + 0   டெல்லிப் பல்கலை 305 + 644 0 + 0   ஜவஹர்லால் நேரு 161 + 288 0 + 0   அலகாபாத் 59 + 151 0 + 1  பாண்டிச்சேரி 69 + 138 0 + 1  இந்தியாவில் முக்கிய உயர்கல்வி நிறுவனங்களான மும்பை ஐஐடி, புதுடெல்லி ஐஐடி, லக்னோ ஐஐஎம் போன்றவற்றில் பணியாற்றும் பிற்படுத்தப்பட்டோர் குறித்த தகவல்கள் இவை. தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் வழியாக 12. 09. 2012 ல் பெறப்பட்ட தகவல்கள்.  கல்வி நிறுவனம் பேராசிரியர் + இணைப்பேராசிரியர் மொத்தம் OBC  மும்பை ஐஐடி 778 6  புதுடெல்லி ஐஐடி 578 5  மெட்ராஸ் ஐஐடி 359 39  ஜவஹர்லால் நேரு 612 0  IIM Lucknow - Non-Teaching Group A 40 1  Group B 152 10 அண்மையில் மத்தியஅரசின் மனிதவள மேம்பாட்டு அமைச்சரகமும், உயர்கல்வித்துறையும் இணைந்து அகில இந்திய அளவில் கல்விநிலையங்கள் பற்றிய ஒரு விரிவான ஆய்வை நடத்தி அதன் முடிவுகளை வெளியிட்டுள்ளனர்.   2014 ஆம் ஆண்டு செப்டம்பர் 30 லிருந்து 757 பல்கலைக் கழகங்கள், 38,056 கல்லூரிகள், 11,922 தன்னாட்சி கல்வி நிறுவனங்களில் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டிருக்கிறது. மத்திய அரசு பல்கலைக் கழகங்கள், உயர்கல்வி நிறுவனங்கள், மாநில அரசுப் பல்கலைக் கழகங்கள், நிகர்நிலைப் பல்கலைக் கழகங்கள், தனியார் பல்கலைக் கழகங்கள், தனியார் கல்லூரிகள், அரசு உதவி பெறும் தனியார் கல்லூரிகள் என அனைத்து இடங்களிலும் ஆய்வு மேற்கொள்ளப் பட்டுள்ளது.   அகில இந்திய அளவில் பல்கலைக்கழகப் பேராசிரியர் பணியிடங்களில் தாழ்த்தப் பட்டோர், பழங்குடியினர், பிற்படுத்தப்பட்டோர் நிலை  Total SC ST OBC   14,18,389 1,02,534 30,076 3,52,160 TOTAL : 14,18,389   SC + ST + OBC TOTAL : 4,84,770  Source: All India Survey on Higher Education 2014–2015, MHRD  இந்தியாவின் ஒட்டுமொத்த மக்கள் தொகையில் சுமார் 90 சதவீதமாக உள்ள தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்கள் பல ஆண்டுகாலமாக இடஒதுக்கீட்டு உரிமைகள் வழங்கப் பட்டிருந்தும் கல்வி, வேலைவாய்ப்புகளில் 30 சதவீதம் அளவுக்குக் கூட உரிமைகளைப் பெற முடியவில்லை.   வெறும் 10 சதவீதம் மக்கள் தொகை கொண்ட பார்ப்பன மற்றும் முன்னேறிய ஜாதிகள் அனைத்துப் பதவிகளையும், அதிகாரங்களையும், கல்வி  உரிமைகளையும் தட்டிப் பறித்துள்ளதை புள்ளிவிபரங்கள்  காட்டுகின்றன. இந்தச் சூழலில் அனைத்து உயர்கல்வி நிறுவனங்களிலும் இடஒதுக்கீட்டைத் தீவிரமாக நடைமுறைப்படுத்த வேண்டிது தான் தற்போதைய தேவை.   உயர்கல்வி நிறுவனங்களில் நமக்கு உரிய இடஒதுக்கீடு எவ்வளவு? அந்த உரிமையைக் காப்பது எப்படி?  மத்திய அரசில் உள்ள இட ஒதுக்கீட்டு அளவு: தாழ்த்தப் பட்டோர் 15%, பழங்குடியினர் 7.5%, பிற்படுத்தப்பட்டோர் 27%   இந்தியாவில் மொத்தம் 16 ஐஐடிக்களும், 8 ஐஐஎம் களும், 20 என்.ஐ.டி க்களும், 10 ஐஐஐடி க்களும் உள்ளன. 2016 ல் புதிதாக 7 ஐஐடி க்கள் தொடங்கப்பட உள்ளன. இவற்றில் அனுமதி பெறுவதற்கான தேர்வு வழிமுறைகள், மாணவர் அனுமதியில் இடஒதுக்கீடு பின்பற்றப்படுகிறதா என்பவை போன்ற முழு தகவல்களும் மத்திய அரசின் மனிதவள மேம்மாட்டுத்துறை இணையதளத்தில் உள்ளன. அதன் இணைப்பு:http://mhrd.gov.in/iits  இணையதளங்களில் சென்று தேவையான தகவல்களைப் பெறவேண்டும். நமது அடுத்த தலைமுறைக்கு அவற்றைத் தெரிவிக்க வேண்டும். இடஒதுக்கீட்டு முறையைக் கண்காணிக்க தகவல் அறியும் உரிமைச் சட்டத்தைப் பயன்படுத்த வேண்டும். நமது உரிமைகள் பறிக்கப்பட்டிருந்தால் அதற்காகப் போராடும் திராவிடர் இயக்கங்களுக்குத் தகவல் தெரிவித்து உடன் இணைந்து போராட முன்வரவேண்டும். அமெரிக்கா போன்ற முன்னேறிய நாடுகளில் இடஒதுக்கீடு இருக்கிறதா? உலகில் முன்னேறிய நாடுகள் பலவற்றிலும் இடஒதுக்கீட்டு முறை நடைமுறையில் உள்ளது. அமெரிக்க இடஒதுக்கீடு Affirmative Action   இங்கிலாந்து இடஒதுக்கீடு Equality Act    கனடா இடஒதுக்கீடு   Employment Equity Act   சீனா இடஒதுக்கீடு  Affirmative - Minority Nationality Act   நார்வே இடஒதுக்கீடு Affirmative - Women Act   தென் ஆப்பிரிக்கா இடஒதுக்கீடு - Employment Equity Act   இந்தியாவில் ஜாதி அடிப்படையில் பல ஆயிரம் ஆண்டுகளாக தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு உரிய கல்வி, வேலைவாய்ப்பு உரிமைகள் மறுக்கப் பட்டன. எனவே எந்த அடிப்படையில் உரிமையை இழந்தோமோ அதே ஜாதியின் அடிப்படையில் உரிமைகள் வழங்கப்படுகின்றன.  அதுபோல உலகின் பல நாடுகளில் எந்தெந்த அடிப்படையில் அங்குள்ள மக்களுக்கு உரிமைகள் மறுக்கப் பட்டனவோ, அந்தந்த அடிப்படையிலேயே இடஒதுக்கீட்டு உரிமைகள் வழங்கப் படுகின்றன.       தனியார் துறையிலும் இடஒதுக்கீடு தேவையா?   அரசுத்துறைகளில் உள்ள வேலைவாய்ப்புகள் வெறும் இரண்டு ( 2% ) சதவீதம்தான். எனவே மீதமுள்ள அனைத்து வேலைவாய்ப்புகளிலும் இடஒதுக்கீடு மிகவும் அவசியம்.   இந்த இரண்டு சதத்திலும் பெருமளவு  வேலைவாய்ப்பு களைக் கொண்டவை பொதுத்துறை நிறுவனங்களாகும். அந்தப் பொதுத்துறை நிறுவனங்கள் அனைத்தும் நட்டத்தில் இயங்கு வதாகக் காட்டித் தனியாருக்குத் தாரை வார்க்கப்பட்டு விட்டன. ஓரிரு நிறுவனங்கள்தான் அரசின் நிர்வாகத்தில் உள்ளன.  அப்படித் தனியாருக்குத் தாரை வார்க்கப்பட்ட பொதுத்துறை நிறுவனங்களில் ஏற்கனவே நடைமுறையில் இருந்த இடஒதுக்கீடு முற்றிலும் நீக்கப்பட்டுவிட்டது. புதிதாகத் தொடங்கப்படும் தனியார் நிறுவனங்களில் இடஒதுக்கீட்டு முறையே கிடையாது. எனவே நமது வேலை வாய்ப்புகள் முழுவதுமாகப் பறிபோய்விட்டன. அமெரிக்காவில் தனியார்துறையிலும் இடஒதுக்கீடு: உலகின் முன்னேறிய நாடாகக் காட்டப்படும் அமெரிக்காவில் தனியார் துறையில் கருப்பின மக்களுக்கு இடஒதுக்கீடு வழங்கப் படுகிறது. வேலைவாய்ப்பில் மட்டுமல்லாமல் தனியார் நிறுவனங் களின் வியாபார ஒப்பந்தங்கள், வியாபாரக் கொள்முதல் என அனைத்திலும் கருப்பின மக்களுக்கு இடஒதுக்கீடு உள்ளது.  அமெரிக்க, ஐரோப்பிய நாடுகளைச் சேர்ந்த பன்னாட்டு நிறுவனங்களில் இடஒதுக்கீடு  உலகின் மிகப்பெரிய, பணக்கார பன்னாட்டு நிறுவனமான ‘மைக்ரோசாஃப்ட்’ நிறுவனத்தில் இடஒதுக்கீடு வழங்கப்படுகிறது. உலகின் மிகப்பெரிய சங்கிலித்தொடர் உணவகங்களை நடத்தும் ‘மெக்டொனால்ட்’ நிறுவனத்திலும் இடஒதுக்கீடு வழங்கப் படுகிறது. ஸ்வீடன் நாட்டைச் சேர்ந்த கார் நிறுவனமான ‘வால்வோ’ நிறுவனத்திலும் இடஒதுக்கீடு நடைமுறையில் உள்ளது.   அமெரிக்காவில் தனியார்துறை இடஒதுக்கீடு    Fortune 500 Companies Managers / Officers Ford Motors 18.20% General Motors 23% Exxon Mobile 16.90% IBM 21.56% Boeing US Based 18%   HARVARD UNIVERSITY   1994 1999 Researchers 28.30% 33.90% Proffessors 9.54% 13.67% Trainees 30.31% 37.50%   JOURNALS Wall Street 17.10% USA Today 18.70% NewYork Times 16.20% Washington Post 19.50% Los Angels Times 18.70% source: Tehelka June 19.2004 இந்தியாவில், 1000 முன்னணி கார்ப்பரேட் கம்பெனிகளில் இடஒதுக்கீடு இல்லாததால் பார்ப்பன ஆதிக்கம்    Total 9052 Category Board Members Percentage பார்ப்பனர்கள் & 8387 92.7%  உயர்ஜாதிகள்   பிற்படுத்தப்பட்டோர் 346 3.8%  தாழ்த்தப்பட்டோர் 319 3.5%  Source: EPW August 2012 உலகில் வளர்ந்த நிலையில் உள்ள முன்னணி நிறுவனங் களான பெரும்பாலான பன்னாட்டு நிறுவனங்களில் அந்தந்த நாடுகளில் இடஒதுக்கீட்டை வழங்குகின்றன என்பதை ஆதாரப்பூர்வமாகப் பார்த்தோம். இந்தியாவில் மத்தியஅரசு நிர்வாகத்தில்  முக்கிய முடிவு களை எடுத்துச் செயல்படுத்தும் அதிகார மய்யங்கள் முற்றிலும் பார்ப்பன உயர்ஜாதிகளின் அக்ரஹாரமாக இருப்பதைப் பார்ப்போம்.    மத்திய அரசில் உள்ள 55 துறைகளில், அமைச்சரகங்களில் தகவல் அறியும் உரிமைச் சட்டப்படி 01.01.2013 ல் பெறப்பட்ட தகவல்கள்.  Group Total OBC SC ST   Group A 74,866 8,316 10,434 4,354 (11.11%) (13.94%) (5.82%)   Group B 1,88,776 20,069 29,373 12,073 (10.63%) (15.56%) (6.4%)  இந்தியாவில் பன்னாட்டு நிறுவனங்களின் முடிவெடுக்கும் அதிகார மய்யங்களிலும், மத்திய அரசின் அதிகார மய்யங்களிலும் பார்ப்பனர்களும், முன்னேறிய உயர்ஜாதி களும் ஆதிக்கம் செலுத்தி வருகின்றன. எனவே வெளிநாடுகளில் இடஒதுக்கீட்டைச் செயல்படுத்தும் பன்னாட்டு நிறுவனங்கள் - இந்தியாவில் மட்டும் இடஒதுக்கீட்டைச் செயல்படுத்துவதில்லை. செயல்படுத்த இங்கிருக்கும் பார்ப்பன அதிகார வர்க்கம் அனுமதிப்பதில்லை.  இந்தியாவின் தொழிற்துறையில் ஆதிக்கம் செலுத்தும் முக்கிய தொழில் மற்றும் வர்த்தக அமைப்புகளான FICCI, CII, ASSOCHAM இந்தியாவில் தனியார்துறையில் இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை எதிர்த்துள்ளன. தனியார் துறைகளில் இடஒதுக்கீடு வழங்கமுடியாது என்று அறிவித்துள்ளன.  தனியார்துறைகளில் வெளிநாடுகளில் இடஒதுக்கீட்டைச் செயல்படுத்தும் பன்னாட்டு கார்ப்பரேட் நிறுவனங்கள் இந்தியா விலும் இடஒதுக்கீட்டை வழங்கவேண்டும். பறிபோகும் நமது கல்வி, வேலைவாய்ப்பு உரிமைகள் மீட்டெடுக்கப்பட வேண்டும்.    தனியார் நிறுவனங்கள் அவர்களே முதலீடு போட்டுத் தொழில் நடத்தும் போது அவர்களிடம் இடஒதுக்கீடு கேட்பது நியாயமா?  இது தவறான பார்வை. அனைத்துத் தனியார் கார்ப்பரேட் நிறுவனங்களும் தங்களுடைய சொந்த முதலீட்டை மட்டும் முதலாகப் போட்டுத் தொழில் தொடங்குவதில்லை. இந்தியாவில் அனைத்துத் தரப்பு மக்களிடம் கோடிக்கணக்கில் பங்குகளை வெளியிட்டு, பங்குத்தொகை வாங்கித்தான் தொழில் தொடங்கு கின்றன.   அதுமட்டுமல்லாமல் அரசிடம் இருந்து( SEZ ) சிறப்புப் பொருளாதார மண்டலம் என்ற பெயரில் அடிமாட்டு விலைக்கு ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்களையும், கோடிக்கணக்கில் ஏற்றுமதி, இறக்குமதி வரிச்சலுகைகளையும், வருமானவரிச் சலுகை களையும், மின்சாரம், குடிநீர் கட்டணச் சலுகைகளையும் பெற்றுத்தான் தொழில் தொடங்குகின்றன.   நமது பங்கு முதலீடுகளாலும், நமது வரிப்பணத்தைப் பெறும் அரசினுடைய பெரும் பங்கிலும் தான் தொழில்கள் தொடங்கப்படுகின்றன. எனவே நாம் தனியார் துறைகளில் இடஒதுக்கீடு கோருவது எவ்வகையிலும் தவறல்ல.     இது முதலாளித்துவத்துக்கு ஆதரவான நிலை அல்லவா?  இந்திய அரசுமுறையை கம்யூனிஸ்ட்டுகள் ஏற்பதில்லை. இந்த அரசு பாட்டாளி வர்க்கத்தின் அரசு அல்ல. ஏகாதிபத்திய அரசு - தரகு முதலாளித்துவ அரசு - கார்ப்பரேட் அரசு என்றுதான் வரையறுப்பார்கள். ஆனால் அந்த ஏகாதிபத்திய அரசில் பங்கேற்க தேர்தலில் போட்டியிடுகிறார்கள். மாநிலங்களில் வென்று  அரசுகளை அமைக்கிறார்கள். தேர்தலில் பங்கேற்காத அமைப்புகள்கூட இந்த கார்ப்பரேட்  அரசின் சட்டதிட்டங்களுக்குக் கட்டுப்பட்டுத் தான் வாழ்கிறார்கள். இந்தத் தரகு முதலாளித்துவ அரசின் நீதிமன்றங்கள், அரசு அலுவலகங்களைப் பயன்படுத்திக் கொண்டுதான் இருக்கிறார்கள். அதற்காக இந்த அரசுமுறைகளை அனைத்து கம்யூனிஸ்ட்டுகளும் ஏற்றுக்கொண்டார்கள் என்று பொருள் அல்ல.  அதுபோல நாம் தனியார்துறையில் இடஒதுக்கீடு கோருவதாலோ, தனியார் நிர்வாகங்களில் பங்கேற்பதாலோ பன்னாட்டு நிறுவனங்களின் கொள்ளைகளை ஏற்றுக்கொண்டோம் என்று பொருள் அல்ல.  வசதி படைத்தவர்களையும், நன்கு படித்த குடும்பத்தினரையும் அடையாளம் கண்டு - அவர்களுக்கு இடஒதுக்கீட்டை நீக்கும் க்ரீமிலேயர் முறை அறிவுக்குப் புறம்பானது. எப்படி?   தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்களில்,  பொருளாதார வசதி படைத்தவர்களையும், நன்கு படித்த குடும்பத்தினரையும் அடையாளம் கண்டு அவர்களை இடஒதுக்கீட்டுப் பட்டியலில் இருந்து நீக்கும் முறைக்கு ‘க்ரீமிலேயர்’           (Creamy layer) என்று பெயர். ஆண்டுக்கு 2.5 ( இரண்டரை) இலட்சம் வருமானம் பெறுபவர்களை வசதி படைத்தவர்களாகக் கருதி அவர்களது குழந்தைகளுக்கு இடஒதுக்கீட்டைப் பறிக்க உருவாக்கப்பட்ட திட்டம் இது.     ‘க்ரீமிலேயர்’ கிருஷ்ணய்யர்  1975 லேயே இந்த மோசடியான திட்டத்தை முதலில் செயல்படுத்தியது கேரளா தான். கேரள அரசு எதிர் என். எம். தாமஸ் என்ற வழக்கில் 19. 09. 1975 ல் மனிதநேயம் மிக்கவர் என்று புகழப்படும் நீதிபதி வி.ஆர்.கிருஷ்ணய்யர்தான் இந்த முறையைத் தொடங்கி வைத்தார். இதற்கான உத்தரவைப் பிறப்பித்தார்.  மத்திய அரசில்,  2007 ல், இரண்டரை இலட்சம் என்ற வரையறை வைக்கப்பட்டது. பிறகு ஆண்டுக்கு ஆறு இலட்சம் என வருமான வரம்பு உயர்த்தப்பட கருத்துத்தெரிவிக்கப்பட்டுள்ளது.  தற்போது தேசிய பிற்படுத்தப் பட்டோர் ஆணையம் க்ரீமிலேயருக்கான ஆண்டு வருமானம் 15 இலட்சம் என உயர்த்த வேண்டுமென அரசுக்குக் கோரிக்கை விடுத்துள்ளது.  நாடு விடுதலை பெற்ற காலத்திலிருந்து, மத்திய அரசின் கல்வி, வேலைவாய்ப்புகளில் தாழ்த்தப்பட்டோருக்கு 22.5 சதம் இடஒதுக்கீடு வழங்கப்பட்டு வருகிறது. ஆனால் இன்னும் இட ஒதுக்கீட்டைப் பெற்றவர்கள் சதவிகித அளவில் 10 சதவிகிதத்தைக் கூட எட்டவில்லை.  கடந்த 20 வருடங்களாக மத்திய அரசு நிர்வாகங்கள் மற்றும் உயர்கல்வி நிறுவனங்களில் பிற்படுத்தப்பட்டோருக்கு 27 சதவிகித இடஒதுக்கீடு வழங்கப்பட்டு வந்தாலும், கல்வி, வேலை வாய்ப்புகளில் இன்னும் 5 சதவிகித அளவைக்கூட அவர்கள் எட்டவில்லை. இந்தத் தகவல்களை நாம் ஏற்கனவே விளக்கமாக புள்ளி விபரங்களுடன் விளக்கிவிட்டோம்.   முதலில் தாழ்த்தப்பட்டோரின் 22. 5 சதவிகிதமும், பிற்படுத்தப் பட்டோரின் 27 சதவிகிதமும் முழுவதுமான நிரப்பப்பட வேண்டும்.  இன்னும் தொடக்க நிலையிலேயே - வெறும் 1 சதவிகிதம், 5 சதவிகிதம் என்ற அளவிலேயே கல்வி, வேலைவாய்ப்புகளைப் பெற்றுக் கொண்டிருக்கும் சமுதாயத்தினரை - அந்த 1 சதவிகிதத் திலிருந்தும் வெளியேற்றி, விரட்டிவிடத் துடிப்பவர்கள் தான் இதுபோன்ற ‘க்ரீமிலேயர்’ கருத்துக்களைப் பேசுகின்றனர்.   முக்கியமாக, ஒட்டு மொத்த இந்தியாவிலும் நிர்வாகப் பதவி களையும், கல்விநிறுவனங்களில் அனுமதிகளையும் பலநூறு வருடங்களாக அனுபவித்து வரும் பார்ப்பனர்களையும், சில முன்னேறிய ஜாதிகளையும் ‘க்ரீமிலேயர்’களாகக் கருதி அவர்களை எந்தப் பதவியிலும், எந்தப் படிப்பிலும் அனுமதிக்கக் கூடாது என்று அறிவிக்க வேண்டும்.  அதுதான் மிகச் சரியான க்ரீமிலேயர் ஆகும். இந்தக் கேள்வியைக் கேட்பவர்கள் அதைச் செய்யத்தயாரா? இட ஒதுக்கீட்டைப் பார்ப்பனர்கள் எதிர்ப்பதில் அறிவு நாணயம் உண்டா?  கிடையாது. கல்வி வேலைவாய்ப்புகளில் தகுதி - திறமை காரணம் கூறிப் பார்ப்பனர்கள் இட ஒதுக்கீட்டை எதிர்க்கிறார்கள்.  ஆனால் கோவில் அர்ச்சகர் பணியில் மட்டும் தகுதி திறமையைப் பற்றிக் கவலைப்படாமல் ‘பார்ப்பனர்களுக்கு மட்டுமே’ அந்த வேலை என்று கூறுகிறார்கள்.   2016 ஆம் ஆண்டிலும், உச்சநீதிமன்றம் வரை சென்று தமது ஜாதி அடிப்படையிலான உரிமைக்குப் போராடுகிறார்கள். எனவே இட ஒதுக்கீட்டைப் பார்ப்பனர்கள் எதிர்ப்பதில் அறிவு நாணயம் இல்லை.  “இடஒதுக்கீடே வேண்டாம்” “வாழ்க்கையில் முன்னேற தொழிற்துறையில் இறங்க வேண்டும்” என தேவேந்திரகுல வேளாளர் களைத் திசைதிருப்பும் ஆர்.எஸ்.எஸ் ஸின் போக்கு ஆபத்தானது. எப்படி?  இடஒதுக்கீட்டால் தங்களது ஆதிக்கத்தில் சிறு தளர்வைக் கண்டிருக்கும் பார்ப்பனர்கள். 2014 ஜனவரியில் திருச்சியில் நடை பெற்ற பிராமணர் சங்க இளைஞர் அணியின் மாநில மாநாட்டிலும், தொடர்ச்சியாக பல மாவட்ட மாநாடுகளிலும் கல்வி, வேலை வாய்ப்புகளில் தங்களுக்கு 10 சதவீதம் இடஒதுக்கீடு வேண்டும் என கோரிக்கை எழுப்பியுள்ளனர்.  அகில இந்திய அளவில் பொருளாதாரத்தில் மிகப்பெரிய அளவில் வளர்ந்துள்ள ஜாதி படேல் ஜாதி ஆகும். எண்ணற்ற இந்தியதேசிய முதலாளிகளையும் - பல பன்னாட்டு நிறுவன உரிமையாளர்களையும் கொண்டவர்கள் படேல் ஜாதியினர். முதல் அமைச்சர், அமைச்சர்கள், சட்டமன்ற, பாராளுமன்ற உறுப்பினர்கள் என சமூக, அரசியல், பொருளாதார பலத்தைக் கொண்டிருக்கும் படேல்களே - தங்களுக்கு ஜாதிவாரி இட ஒதுக்கீடு தேவை என்று கடுமையாகப் போராடிக் கொண்டிருக் கிறார்கள்.  ஆந்திர மாநிலத்தின் பொருளாதாரத்தில் மிகப்பெரும் சக்தியாக விளங்கும் காப்பு, பலிஜா, கவரா, ஒண்டாரி, தெலகா ஜாதி மக்கள் தங்களது மக்கள்தொகைக்கு ஏற்ப கல்வி, வேலை வாய்ப்புகளில் 22.4 சதவீதம் இடஒதுக்கீடு வேண்டும் என்றும், தங்களைப் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்க்க வேண்டும் என்றும் போராடி வருகின்றனர். 2013 ஆம் ஆண்டிலிருந்தே இந்தப் போராட்டங்கள் நடந்து வருகின்றன.   தமிழ்நாட்டில் சிறு வணிகத்தில் குறிப்பிடத்தகுத்த அளவில் வளர்ந்துள்ள நாடார்கள் தங்களுக்கு உள் ஒதுக்கீடு வழங்க வேண்டும் எனக் கோரியிருக்கிறார்கள். சாணார், கிராமணி போன்ற நாடார் உட்பிரிவு ஜாதிகளுக்கு 10 சதவீதம் உள் ஒதுக்கீடு வேண்டும் என 2010 ம் ஆண்டிலிருந்தே, நாடார் சங்கப் பொதுச் செயலாளர் கரிக்கோல்ராஜ் கோரிக்கை விடுத்து வருகிறார்.  வேட்டுவக் கவுண்டர்கள் தங்களுக்கு தனி இடஒதுக்கீடு வழங்கக் கோரியுள்ளனர்.  பிள்ளைமார், வேளாளர், செங்குந்த முதலியார் ஜாதியினர் தங்களுக்கு 20 சதவீதம் இடஒதுக்கீடு வேண்டுமெனக் கோரியுள்ளனர்.  இவ்வாறு அகில இந்திய அளவிலும், தமிழ்நாட்டிலும் தாழ்த்தப்பட்ட சமுதாயத்தினரைவிட நல்ல பொருளாதார நிலையில் உள்ள - அரசியல், பொருளாதார பலத்துடன் உள்ள அனைத்து ஜாதியினரும் தற்போது இடஒதுக்கீடு கோரிப் போராடத் தொடங்கியுள்ளனர்.   வணிகத்துறையில் உச்சங்களைப் பெற்றவர்களே - அந்தப் பொருளாதார ஆதிக்கத்துக்கு மேலும் வலுவூட்ட - அரசு நிர்வாகங்களிலும் ஆதிக்கத்தை ஏற்படுத்தப் போராடி வருகின்றனர். ஆனால் பொருளாதார ரீதியாகவோ, கல்வி ரீதியாகவோ, அரசியல் பலம் என்ற அடிப்படையிலோ, அரசு நிர்வாகங்களில் பிரதிநிதித்துவம் என்ற அடிப்படையிலோ எந்தப் பலமும் இல்லாதவர்கள் பள்ளர்கள்.   நீதிக்கட்சி ஆட்சிகாலம் தொடங்கி திராவிட இயக்கங் களின் ஆட்சி காலத்தில் தாழ்த்தப்பட்ட மக்களுக்குக் கிடைத்து வரும் ஜாதி அடிப்படையிலான இடஒதுக்கீட்டால் தற்போது தான் நாம் குறிப்பிடத்தக்க அளவு கல்வி, வேலை வாய்ப்புகளில் முன்னேறி வருகிறோம்.   65 ஆண்டுகளாக இந்திய அரசு நிர்வாகங்களில் தாழ்த்தப் பட்டோருக்கு 15 சதவீதம் இடஒதுக்கீடு நடைமுறைப்படுத்த வேண்டும் என்ற சட்டங்கள் இருந்தும் -இன்றும் அதிகார மய்யங்கள் முழுவதும் பார்ப்பனமயமாகவே உள்ளன. இந்தச் சூழலில் இடஒதுக்கீடு வேண்டாம் எனத் திரும்புவது பார்ப்பன ஆதிக்கத்துக்குச் சிறிதும் பாதிப்புவரக்கூடாது என்று நினைப்ப வர்கள் பேச வேண்டிய கருத்தாகும்.  மத்தியஅரசின் மனிதவள மேம்பாட்டு அமைச்சரகமும், உயர்கல்வித்துறையும் இணைந்து அகில இந்திய அளவில் கல்விநிலையங்கள் பற்றி நடத்திய ஒரு விரிவான ஆய்வின் புள்விவிபரங்களை ஏற்கனவே பார்த்தோம்.    அதில் குறிப்பிடத்தக்க தகவல் என்னவென்றால், இந்தியாவின் மற்ற மாநிலங்களைவிட இடஒதுக்கீட்டைச் சிறப்பாகப் பின்பற்றும் முதல் மாநிலமாகத் தமிழ்நாடு திகழ்கிறது.  தமிழ்நாடு அளவில் பல்கலைக்கழக பேராசிரியர் பணியிடங்களில் தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர், பிற்படுத்தப்பட்டோர் நிலை  Total SC ST OBC     2,03,223 17,284 619 1,18,540 Source: All India Survey on Higher Education 2014–2015, MHRD  இடஒதுக்கீட்டால் தாழ்த்தப்பட்டோர் மிக அதிகமாகப் பயன்பெற்றது தமிழ்நாட்டில் மட்டுமே ஆகும்.  அடுத்து மகாராஷ்ட்ராவும், 3 வது இடத்தில் தெலுங்கானாவும் இருக்கின்றன.   அதேபோல பிற்படுத்தப்பட்டோரிலும் அதிகமானவர்கள் பயன்பெற்றது தமிழ்நாட்டில் மட்டுமே ஆகும். அடுத்தபடியாக தெலுங்கானா பிற்படுத்தப்பட்டோர் பயன் பெற்றுள்ளனர்.       பல்கலைக்கழக பேராசிரியர்கள் பணியிடங்களில் தாழ்த்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோர் இடஒதுக்கீட்டில் முதலிடம் வகிக்கும் தமிழ்நாடு  State SC OBC தமிழ்நாடு 17,284 1,18,540   தெலுங்கானா 11,426 41,852  மகாராஷ்ட்ரா 15,120 25,747  Source: All India Survey on Higher Education  2014–2015, MHRD  இந்தப் பட்டியலில் மேற்கண்ட மாநிலங்களுக்கு அடுத்து மிகவும் பின்தங்கிய நிலையில்தான் மற்ற மாநிலங்கள் இட ஒதுக்கீட்டைப் பயன்படுத்தியுள்ளனர். வேலைவாய்ப்பில் மட்டுமல்லாமல் கல்வி நிலையங்களில் மாணவர் சேர்க்கையிலும் இதேநிலைதான் உள்ளது. இந்த நிலையை முற்றிலும் ஒழிப்பதற்காகத்தான் தமிழ் நாட்டில் உள்ள தாழ்த்தப் பட்ட மக்களையே கருவியாக மாற்ற ஆர்.எஸ்.எஸ் முயற்சி எடுத்துள்ளது. தமிழ்நாட்டில் தங்கள் ஜாதிக்காரர்கள் மட்டுமே ஒன்றிணைந்து தனியாக ஒரு வங்கியையே (தமிழ்நாடு மெர்க்கண்டைல் பேங்க்) நடத்தும் நாடார்களே தங்களுக்கு இட ஒதுக்கீடு வேண்டும் என்கிறார்கள். ஆனால் பொருளாதாரத்திலும், அரசியலிலும், சமுதாய ரீதியிலும் மிகவும் ஒடுக்கப்பட்டு வாழும் - இலட்சக்கணக்கான அடித்தட்டு மக்களைக் கொண்ட பள்ளர்களை இடஒதுக்கீடு வேண்டாம் என திசை திருப்புவது - பள்ளர்களின் வளர்ச்சியையும் சுயமரியாதையான வாழ்வையும் அழிக்கும் செயலாகும்.       தேவவேந்திர குல வேளாளர் சமுதாயத்தில் உள்ள சிலரைக் கருவியாகக் கொண்டு ஆர்.எஸ்.எஸ் நடத்திவரும் இந்த ஆபத்தான பிரச்சாரத்தை பள்ளர்களும் - இடஒதுக்கீட்டில் பலன் அடையும் அனைத்து சமுதாயமும் இணைந்து முறியடிக்க வேண்டும். பார்ப்பன ஆதிக்கம் இன்றும் இருக்கிறதா?  இந்தியா முழுவதிலும் உள்ள தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப் பட்ட மக்களின் பிறப்பு முதல் இறப்பு வரையிலான அனைத்துப் பண்பாட்டு நடவடிக்கைகளிலும் பார்ப்பனர்களே ஆதிக்கம் செலுத்துகிறார்கள்.  பிறவி அடிப்படையில் பார்ப்பனர் உயர்ந்த சாதியினர் என்ற நிலை அரசியல் சட்டபடி இன்றும் உள்ளது.  ஆகமம் விதிகளின்படி கோயிலில் அர்ச்சகராகும் உரிமை பார்ப்பனர்களுக்கு மட்டுமே உண்டு என்று உச்ச நீதிமன்றம் 2016 ஆண்டிலும் தீர்ப்பளித்துள்ளது.   அரசு நிர்வாகம், பன்னாட்டு நிறுவனங்களின் நிர்வாகம், நீதித்துறை அதிகாரங்கள், அரசியல் அதிகாரம், ஊடகத்துறை என அனைத்திலும் உள்ள பார்ப்பன ஆதிக்கங்கள் பற்றிப் பார்ப்போம்.        அதிகார பீடம் மத்திய அரசில் உள்ள 55 துறைகளில் - அமைச்சரகங்களில் நாட்டின் போக்கை திட்டமிடும் அதிகாரம் படைத்த பதவிகளில் பார்ப்பன ஆதிக்கம்  Group Total OBC SC ST Group A 74,866 8,316 10,434 4,354 (11.11%) (13.94%) (5.82%)   Group B 1,88,776 20,069 29,373 12,073 (10.63%) (15.56%) (6.4%) தகவல் அறியும் உரிமைச் சட்டப்படி 01.01.2013 ல் பெறப்பட்டவை  இந்தியாவின் 1000 முன்னணி கார்ப்பரேட் கம்பெனிகளின் நிர்வாகத்தில் பார்ப்பன ஆதிக்கம்   Total 9052   பார்ப்பனர் & 8387 92.7 %  உயர்ஜாதிகள் பிற்படுத்தப்பட்டோர் 346 3.8 %  தாழ்த்தப்பட்டோர் 319 3.5 %  Source: EPW August 2012         நீதித்துறை: நீதிபதி பதவிகளில் பார்ப்பன ஆதிக்கம் CASTE 1950 -70 Years 1971 - 89 Years   பார்ப்பனர் 40% 45.2%  முன்னேறிய ஜாதிகள் 57.1% 42.9%  தாழ்த்தப்பட்டோர் 0 % 4.6 %  பழங்குடியினர் 0 % 0 %  பிற்படுத்தப்பட்டோர் 2.9 % 6.8 %  2011 ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட சர்வேயின்படி, இந்தியா முழுவதும் இருந்த 21 உயர்நீதிமன்றங்களில் 14 உயர்நீதி மன்றங்களில் தாழ்த்தப்பட்ட, பழங்குடியினத்தைச் சேர்ந்த நீதிபதிகள் ஒருவர்கூட இல்லை. உச்சநீதிமன்றத்தில் 31 நீதிபதிகளில் ஒரே ஒருவர் மட்டுமே தாழ்த்தப்பட்டவர். அதுவும் சுதந்திரம் பெற்று 59 ஆண்டுகழித்து, 2007 ஆம் ஆண்டில்தான் தலைமை நீதிபதியாகப் பொறுப்பேற்க முடிந்தது. தமிழ்நாட்டில் உயர்நீதிமன்ற நீதிபதியாக 1973 ல் தாழ்த்தப்பட்ட சமுதாயத்தின் அ.வரதராஜன் அவர்கள் நியமிக்கப்பட்டார்.  தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் பார்ப்பன ஆதிக்கம் General Managers Dy.General Managers Total OBC SC ST Total OBC SC ST 436 5 14 7 1216 14 72 16 (1.1% 3.2% 1.6%) (1.15% 5.9% 1.3%)   Source: RTI Act as on 01.10.2015 அரசியல் அதிகார மய்யங்களில் பார்ப்பன  ஆதிக்கம் விடுதலை அடைந்த 1947 முதல் 2014 வரை 67 ஆண்டுகளில்  51 ஆண்டுகள் பார்ப்பனர்களே பிரதம மந்திரிகளாக ஆண்டிருக்கிறார்கள்.   இந்திய அளவில் பார்ப்பனர்களின் மக்கள்தொகை 5.6 கோடி வெறும் 5 சதவீதம். ஆனால் இந்தியாவின் அதிகார மய்யமான கேபினட் அமைச்சர்களில் 5 பேர் பார்ப்பனர்கள்.    2014 ஆம் ஆண்டு உருவான நரேந்திரமோடி அரசில் கேபினட் அமைச்சர்களில் பார்ப்பன ஆதிக்கம்  மொத்தம் பார்ப்பன, உயர்ஜாதி OBC SC ST  24 12 5 2 1 Source: Times of India, Indian Express 27.05.14 ராஜ்புத்திரர், காயஸ்தா போன்ற ஆதிக்கஜாதிகளையும் சேர்த்து 12 பேர் உள்ளனர். ஒட்டுமொத்தமாக பார்ப்பன உயர்ஜாதிகளின் மக்கள் தொகை 16 சதம். ஆனால் கேபினட் அமைச்சரவையில் 50 சதவீதம் பதவிகளைப் பெற்றுள்ளனர்.  Source: The sunday Standard 11.05.14, Outlook 04.06.2007   ஊடகத்துறையில் பார்ப்பன ஆதிக்கம் இந்தியாவின் ஊடகத்துறையில் முன்னணியில் உள்ள 315 மூத்தபத்திரிகை யாளர்களிடம் 2006 ல் ஒரு சர்வே நடத்தப்பட்டது. நமக்கு எந்தச் செய்தி வர வேண்டும், இன்று தொலைக் காட்சிகளில் எந்தச் செய்தி விவாதிக்கப்பட வேண்டும் என்பதை நிர்ணயிப் பவர்கள் இந்த மூத்த பத்திரிக்கையாளர்கள். ஆங்கில, இந்தி மொழிகளில் வெளியாகும் அச்சு, காட்சி, இணையதளம் என அனைத்து துறைசார்ந்தும் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.   Centre for the Study of Developing Societies (CSDS) என்ற புது டில்லியில் உள்ள நிறுவனம் பேராசிரியர் யோகேந்திர யாதவ் தலைமையில் இந்த ஆய்வை நடத்தியது. பேராசிரியர் யோகேந்திரா அவர்கள் University Grants Commission and   National Advisory Council (NAC) on Right to Education Act (RTE) போன்றவற்றில் பணியாற்றியவர்.  பார்ப்பன உயர்ஜாதி OBC SC/ST Muslims Cristians  88 %     4% 0% 3% 2.3%  rSource: CSDS, The Hindu 05.06.2006  இந்த ஆய்வில் மக்கள் தொகையில் 5 சதவீதம் மட்டும் உள்ள பார்ப்பனர்கள் 49 சதவீதம் ஆதிக்கம் செலுத்துகின்றனர்.  ராஜ்புத்திரர், காயஸ்தா போன்ற ஆதிக்கஜாதி களையும் சேர்த்து 88 சதவீதம் உள்ளனர். குறிப்பாக ஆங்கில செய்தி ஊடகங்களில் பிற்படுத்தப்பட்டவர்கள் வெறும் 1 சதவீதம் தான் இருக்கின்றனர். தாழ்த்தப் பட்டவர்கள் அதுவும் இல்லை.   இந்தியாவின் அரசியல், பொருளாதாரம், அரசு நிர்வாகம், நீதித்துறை, ஊடகத்துறை, வங்கித்துறை என அனைத்திலும் இந்த 2016 ஆம் ஆண்டிலும் பார்ப்பனர்கள் தான் ஆதிக்கச் சக்திகளாக இருக்கிறார்கள் என்பதை ஆதாரங்களுடன் விளக்கிள்ளோம். இன்னும் அணுசக்தித்துறை, இராணுவம், அறிவியல் ஆராய்ச்சித் துறை போன்ற பல துறைகள் முற்றிலும் பார்ப்பன மயமாகவே உள்ளன.  பிற்படுத்தப்பட்டவர்கள் தங்களது எதிரிகளாகத் தாழ்த்தப் பட்டவர்களைக் கருதுவதும், தாழ்த்தப்பட்டவர்கள் தங்களது எதிரிகளாகப் பிற்படுத்தப்பட்டவரைக் கருதுவதும் - அதன் அடிப்படையில் நாமே ஒருவருக்கொருவார் மோதிக் கொண்டு இருப்பதும் தொடரும் வரை இந்தப் பார்ப்பன ஆதிக்கத்துக்கு முடிவே கிடையாது.  தமிழ்நாட்டில் நடைமுறையில் உள்ள இடஒதுக்கீட்டின் அளவு என்ன? அதன் நிலை என்ன?  தமிழ்நாட்டில் கல்வி மற்றும் அரசு வேலை வாய்ப்புகளில் பிற்படுத்தப்பட்டவருக்கு (BC) 26.5% , பிற்படுத்தப்பட்ட இசுலாமியருக்கு (BCM) 3.5%,  மிகவும் பிற்படுத்தப் பட்டவருக்கு (MBC) 20%, பட்டியல் சாதியினருக்கு (SC) 15%, அருந்ததியருக்கு (SCA) 3%, பட்டியல் பழங்குடியினருக்கு (ST) 1% என இடஒதுக்கீடு உள்ளது.  ஆனால் பார்ப்பன மற்றும் இடஒதுக்கீட்டு எதிர்ப்பாளர் களின் சதியால் ஒவ்வொரு ஆண்டும்  இந்த 69 சத இடஒதுக்கீடு முழுமையாகப் பின்பற்றப்படுவதில்லை. உச்சநீதிமன்றம் இதில் தலையிட்டு நமது உரிமைகளைத் தடுத்து வருகிறது.  தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட, சிறுபான்மை சமுதாய மக்களும், தலைவர்களும், திராவிட, திராவிடர் இயக்க, தலித் இயக்கத் தலைவர்களும் தோழர்களும் ஒன்றிணைந்து - தமிழ்நாட்டு அளவிலும், அகில இந்திய அளவிலும் நமக்குள்ள உரிமைகளை மீட்டெடுக்கத் தொடர்ந்து போராட வேண்டும்.    சான்றுகள்: பெரியார் மய்யம், திராவிடர் கழகம், Indian Institute of Dalit Studies, National Commission for Scheduled Castes and Scheduled Tribes, National Commission for Backward Classes, All India Federation of Backward Classes வெளியீடுகள், காட்டாறு ஏடு, Forward  Press, Telegraph, The Hindu, Outlook, Indian Express, Times Of India ஏடுகள், தமிழ்நாடு அரசு BC, MBC, Minorities கொள்கை விளக்கக் குறிப்பு 2015.  []