[] []  ஆண் துணை (சிறுகதைத்தொகுப்பு)     நிர்மலா ராகவன்    nirurag@gmail.com    அட்டைப்படம் - லெனின் குருசாமி guruleninn@gmail.com   மின்னூலாக்கம் - தனசேகர் tkdhanasekar@gmail.com    மின்னூல் வெளியீடு : http://www.freetamilebooks.com  உரிமை :Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License.     பொருளடக்கம்    ஆண் துணை (சிறுகதைத்தொகுப்பு) 2   பொருளடக்கம் 3  முன்னுரை 4  ஆண் துணை 5  பழி 9  பிளவு 13  ஆபத்தான அழகு 17  காத்திருந்தவன் 21  பரத நாட்டியமும் சில பெண்களும் 25  அம்மாபிள்ளை 29  காலம் மாறவில்லை 32  மன்னிப்பு 34  யாரோ பெற்றது 38      முன்னுரை   ஒரு கதை வாசகர் மனதை ஈர்ப்பதற்கு அதன் கரு ஆழமான பிரச்னையை அலசவேண்டும். நம் இந்திய சமூகத்தில் பிரச்னைகளா இல்லை! அவற்றில் சில:   கணவனால்தான்  பெண்ணுக்குக் கௌரவம் என்று இன்றும் பல பெண்கள் நம்புகிறார்கள். அதை ஒட்டிய கதை ஆண் துணை.   பதவி வெறி ஒருவரை எவ்வளவு தூரம் ஆட்டிப்படைக்கிறது, அதன் விளைவுகள் ஆகியவை `பழி’யில்.   பாலியல் கொடுமைக்கு ஒரு சிறுமி ஆளாகும்போது, அதனால் பாதிக்கப்படுவது அவள் மட்டுமல்ல (பிளவு).   பெற்றோர் தவறு செய்துவிட்டால், அவர்களின் காலத்திற்குப் பின்னரும் விளைவுகள் தொடருமா? (ஆபத்தான அழகு)   காதலித்தவள் ஏமாற்றிவிட்டுப் போனால்? (காத்திருந்தவன்)   மனிதர்களைப்போலவே வீட்டு மிருகங்களுக்கும் உணர்ச்சிகள் உண்டு என்பதை விளக்குகிறது `யாரோ பெற்றது`.         ஆண் துணை   தெருவெல்லாம் ஒரே புகை. வழக்கம்போல் குப்பை கூளத்தை வீட்டு வாசலில் எரிந்ததால் அல்ல. சுவாசிக்கும்போது மூக்கிலும், தொண்டையிலும் எரிச்சலை ஏற்படுத்திய பட்டாசுப் புகை தீபாவளி நெருங்கி விட்டதை நினைவுபடுத்தியது.   நாசித் துவாரத்தினருகே ஒரு கையால் விசிறியபடி நடந்தான் சாமிநாதன். ஒருவழியாக வீட்டை அடைந்தபோது, உள்ளே கேட்ட ஆண்குரல் அவனைக் குழப்பியது.   யாராக இருக்கும்?   தங்கைகளில் யாராவது வந்துவிட்டார்களா, குடும்பத்துடன்? அவர்களைத் தவிர எவரும் அவ்வீட்டுக்குள் நுழைந்ததில்லை. எல்லாம், தலைவன் இல்லாத குடும்பம்தானே என்ற அலட்சியம்!   `நம்பளையெல்லாம் விட்டுட்டு எங்கேயோ போயிட்டாருடா அந்த மனுசன்!’ துக்கத்தில் ஸ்ருதி மேலே போக, அம்மா தெரிவித்தபோது அவன்  நான்காவது படிவம் படித்துக் கொண்டிருந்தான். பதினாறு வயதுக்கு இன்னும் இரண்டு மாதங்களிருந்தன.   முதல் நாள், வழக்கத்துக்கு மாறாக, அப்பாவுடன் அம்மா சண்டை பிடித்துக்கொண்டிருந்தது நினைவில் எழ, அலுப்பாக இருந்தது. தெரிந்த சமாசாரம்தான். மனைவியும், பிள்ளைகளும் இருக்கிறபோது, ஒரு மனிதனுக்கு இன்னொரு பெண்ணுடன் என்ன தொடர்பு வேண்டியிருக்கிறது!   தலைச்சன் பிள்ளையாகப் பிறந்துவிட்ட பாவம், படிக்கும் ஆசையைக் குழிதோண்டிப் புதைத்துவிட்டு, குடும்பச் சுமையை ஏற்க வேண்டியிருந்தது.   அவர் தங்கள் குடும்பத்துக்கு இழைத்த துரோகத்திற்குப் பரிகாரமாக, தனக்குப் பெண்வாடையே கூடாது என்று முடிவு செய்தான்.   `அந்த மனிதர்’ ஒரு வழியாக செத்துத் தொலைந்திருந்தால், நிம்மதியாக இருந்திருக்கும் என்று நினைத்துக் கொள்வான். இந்த இருபது வருடங்களாக, அவன் எவ்வளவோ முயன்றும் அம்மாவின் முகத்தில் சிரிப்பை மட்டும் வரவழைக்க முடியவில்லை.   நாள் தவறாது, தாலிக்கயிற்றில் மஞ்சள் அரைத்துப் பூசிக்கொள்பவளிடம் எரிச்சல்தான் மூளும் சாமிநாதனுக்கு. அத்தாலியைக் கட்டியவனே இல்லையென்று ஆகிவிட்டது. இன்னும் என்ன பதிபக்தி வேண்டியிருக்கிறதாம்!   ஆனால், வாய்திறந்து அவன் எதுவும் சொன்னதில்லை. பாவம், ஏற்கெனவே நொந்து போயிருக்கிறாள்! தான்வேறு அவள் மனத்தை மேலும் ரணமாக்க வேண்டுமா?    திறந்திருந்த கதவின்வழி உள்ளே  நுழைந்தவனுடைய கால்கள் பூமியிலேயே புதைந்து போயின.   “யாரு வந்திருக்காங்க, பாத்தியா சாமிநாதா?” அம்மாவின் புலம்பல்களையே கேட்டு வளர்ந்திருந்தவனுக்கு, அன்று அக்குரலில் தொனித்த பெருமையும், பூரிப்பும் வித்தியாசமாகக் கேட்டன.   “நம்ப சாமிநாதனா! என்னைவிட அதிகமா தலையெல்லாம் நரைச்சுப் போயிருக்கே!” என்று அட்டகாசமாகச் சிரித்தவரைக் குரோதமாகப் பார்த்தான்.   `ஒங்க பொறுப்பையெல்லாம் என் தலையில கட்டிட்டுப் போயிட்டு, கேக்க மாட்டீங்க?’ என்று சுடச்சுட கேட்க நா துடித்தது.   இவ்வளவு காலமாகப் பேசுவதையே மறந்தவனாக, கடமையிலேயே கடவுளைக் கண்டவன்போல் வாழ்ந்தாகிவிட்டது. இந்த உபயோகமற்ற மனிதருக்காக அந்தத் தவத்திலிருந்து பிறழுவானேன்! தொலைந்து போகிறார்!   அவர்களிருவரையும் பார்க்கவும் விரும்பாதவனாக, உள்ளே நடந்தான் விறுவிறுவென்று.   குளியலறைக்குள் நுழைந்தபின் தோன்றிற்று, அப்படியே வெளியே நடந்திருக்க வேண்டுமென்று.     தனக்கு நினைவு தெரிந்த நாளாய், கஷ்டத்தைத் தவிர வேறு எதுவும் அனுபவித்து அறியாத அம்மா மேலும் நோகக்கூடாது என்று தான் சின்ன வயதிலேயே வேலைக்குப் போனதென்ன, பொறுப்பாகத் தம்பி தங்கைகளுக்கெல்லாம் கல்யாணம் பண்ணி வைத்துவிட்டு, அம்மாவுக்குக் காவல் நாயாய் தன்னை மாற்றிக்கொண்டு, அதற்காகவே பிறவி எடுத்ததுபோல் வாழ்ந்து வந்ததென்ன! எல்லாவற்றுக்கும் அர்த்தமே இல்லாது போய்விட்டதே!   இனி தான் எதற்கு? அதுதான் வேறொரு ஆண்துணை கிடைத்துவிட்டதே! இப்படி ஒரு சமயத்திற்காகத்தான் அம்மா காத்திருந்தாளோ?   தலையை அளவுக்கு மீறி குனிந்துகொண்டு வெளியே வந்து, வாயிலை நோக்கி நடந்தான் சாமிநாதன்.   அம்மா எழுந்து ஓடி வந்தாள். “திரும்ப எங்கேப்பா போறே? அப்பா ஒனக்காக சாப்பிடாம காத்துக்கிட்டு இருக்காரு, பாரு!”   அம்மாவின் பரிதவிப்பான முகத்தால் சற்றே இளகிய மனத்தை இரும்பாக்கிக்கொண்டு, ஒரு தீர்மானத்துடன் வெளியே போனான்.   எல்லாரும் தூங்கியிருப்பார்கள் என்று உறுதியானதும், மீண்டும் வீட்டுக்குள் நுழைந்தான்.   கதவு திறக்கும் சப்தத்திற்காகவே காத்திருந்ததுபோல் அம்மா ஓடி வந்தாள். “சாமிநாதா..!” என்று ஏதோ சொல்ல ஆரம்பித்தாள்.   அவளைப் பார்க்கவும் மனம் இடங்கொடுக்காது, “தூக்கம் வருது!” என்று முணுமுணுத்தபடி, தன் அறைக்கு ஓடாதகுறையாகப் போய், கதவைத் தாளிட்டுக்கொண்டான் சாமிநாதன்.   சட்டையைக் கழற்றும்போது யோசனை வந்தது. அழையா விருந்தாளியாக வந்தவர் போய்விட்டாரா, இல்லை, அம்மாவின் பலவீனத்தைத் தனக்குச் சாதகமாக்கிக்கொண்டு, அங்கேயே தங்கிவிட்டாரா?   அப்படியென்றால்.., இப்போது எங்கே படுத்திருப்பார்?   அந்த எண்ணம் எழுகையிலேயே உடலெல்லாம் எரிந்தது.   வெட்கம் கெட்டவர்கள்!   இந்த  அம்மாதான், `இத்தனை வருஷங்களாக எங்கே, எவளுடன் இருந்தீர்களோ, அங்கேயே போய்த் தொலையுங்கள்!’ என்று முகத்தில் அடித்தமாதிரி சொல்லிவிட்டு, அப்படியே கதவை அவர் முகத்தில் அறைந்து சாத்தியிருக்க வேண்டாம்?   `எனக்கு நீங்கள் யாரும் தேவையில்லை!’ என்பதுபோல், சுயநலமே பெரிதென ஓடிப்போனவரை வரவேற்று, நடுக்கூடத்தில் உட்காரவைத்து உபசாரம் என்ன வேண்டியிருக்கிறது!   ஐம்பது வயதுக்கு மேலும் இந்தக் கிழவிக்குப் புருஷ சுகம் கேட்கிறதோ?   சே! தனக்கு எப்படி இவ்வளவு கேவலமான அம்மாவும், அப்பாவும் வாய்த்தார்கள்!   கஷ்டப்பட்டபோது எல்லாம் ஏதோ வைராக்கியத்துடன் இருந்து விட்டவனுக்கு அன்று முதன்முறையாகத் தன்மீதே கழிவிரக்கம் பிறந்து, அது கண்ணீராகக் கொட்டியது.   சுமார் பத்து வருஷங்களுக்குமுன் ஒரு கோடீஸ்வரர், `உங்களைமாதிரி பொறுப்பான மாப்பிள்ளையைத்தான் தேடிக்கொண்டிருந்தேன்,’ என்று, அவர் மகளை ஏற்று, வீட்டோடு தங்கும்படி காலில் விழாத குறையாகக் கெஞ்சியபோது, அவர் பின்னாலேயே போயிருக்க வேண்டும், `விட்டது சனி’ என்று. அவர் சொன்னபடி கேட்டு நடப்பது `துரோகம்’ என்று அப்போது நினைத்தது மடத்தனம். அது என்னவோ, இந்த உலகில் சுயநலம் உள்ளவர்கள்தாம் பிழைக்கிறார்கள்.   முடிவற்ற யோசனையில், எப்போது கண்ணயர்ந்தோம், எப்போது விழித்தோம் என்று ஒன்றும் புரியவில்லை சாமிநாதனுக்கு.   மறுநாள் காலையில், அறைக்கு வெளியே வருவதற்குக்கூடத் தயக்கமாக இருந்தது. விடிந்ததும் விடியாததுமாக, அந்தப் பாவி மனிதரின் முகத்தில் விழிக்க  வேண்டுமா?   அயோக்கியத்தனம்!   இளமை இருந்த நாளெல்லாம் பொறுப்புக்குப் பயந்தோடி, இப்போது முடியாத காலத்தில் ஆதரவு நாடி, சம்பாதிக்கும் மகனிடம் வந்து ஒட்டிக்கொள்ளப் பார்க்கிறார்!   என் ரத்தம்தானே, என்னைப்போலவே ரோஷம் கெட்டவனாகத்தான் இருப்பான் என்று நினைத்துவிட்டார் போலிருக்கிறது!   நான் யாரென்று இவர்களுக்கெல்லாம் காட்டுகிறேன்!   வழக்கத்துக்கு மாறாக, நீர்யானை உள்ளே புகுந்ததுபோல் மிகுதியாகச் சத்தப்படுத்தினான் குளிக்கும்போது. வேண்டுமென்றே தண்ணீர் மொள்ளும் சொம்பை இரண்டு முறை கீழே தவறவிட்டான்.   துண்டை இடுப்பில் சுற்றிக்கொண்டு வெளியே வந்தபோது, வீடு நிசப்தமாக இருந்தது. வழக்கம்போல் சமையலறைக்குப் போய், பசியாற உட்காருவதா, வேண்டாமா என்று யோசித்தபடி நின்றபோது, அம்மா வெளிப்பட்டாள்.   “நீ பயப்படாம சாப்பிடு, வா. அவர் இல்ல. போயிட்டாரு!”   அக்குரலில் சிறிதும் கோபமிருக்கவில்லை. ஆனால், அவன் இதுவரை என்றுமே கேட்டிராத சோகம் -- நிராசை -- சாமிநாதனை என்னவோ செய்தது. பரிதாபகரமாய் நின்றவளைத் தான் ஏதேதோ அசிங்கமாக நினைத்ததை எண்ணி  அவமானம் ஏற்பட்டது.   நேற்று என்றுமில்லாத கலகலப்புடன் பேசிய தாய் ஒரே இரவில் இவ்வளவு மூப்படைந்து போனது எதனால்? யாரால்?   “இத்தனை காலமா நீ போட்ட உப்பைத் தின்னுட்டு, ஒன் மனசுக்குப் பிடிக்காத காரியத்தை எதுக்குச் செய்யறது? அதான்..!” எதுவுமே நடக்காததுமாதிரி, ஒப்பிப்பதுபோல் பேசினாள் அம்மா.   அவனை அறைந்திருந்தால்கூட அவ்வளவு வேதனையாக இருந்திருக்காது என்று தோன்றியது.   அம்மாவின் முகத்தில் எப்படியாவது சிரிப்பைப் பார்த்துவிட வேண்டும் என்று முன்பு எப்போதோ தைப்பூசத்தின்போது பத்து மலையில் ராட்டினத்தில் உட்காரும்படி வற்புறுத்தியதும், இன்னொரு முறை தன் சக்திக்கு மீறி, விலையுயர்ந்த புடவை ஒன்றை வாங்கி வந்ததும் ஞாபகம் வந்தது.   எதுவுமே பலனளிக்காது போனபின், அம்மாவைப் போலவே தானும் சிரிப்பை மறந்து வாழக் கற்றுக்கொண்டதை நினைத்துக்கொண்டான்.   அம்மாவின் முகத்தில் இனியும் மலர்ச்சியை வரவழைக்க முடியுமென்றால், அது ஒருவரால்தான் முடியும். அவர் போக்கியதை அவரேதான் மீட்டுத் தர முடியும். இது புரிந்தோ, புரியாமலோ, அவர் கட்டிய தாலியை அவராகவே பாவித்து, அவ்வளவு அக்கறையாகப் பாதுகாத்து வந்திருக்கிறாள்!   கணவனால்தான் ஒரு பெண்ணின் அந்தஸ்து சமூகத்தில் நிர்ணயிக்கப்படுகிறது என்று நம் பெண்களுக்கு யார் விதித்தார்கள்! கோபம் எழுந்தது சாமிநாதனுக்கு.   அதை மீறி மேலெழுந்தது, அம்மாவின் நலத்தையே நாடிய கடமை உணர்வு.   “அப்பா எங்கே தங்கி இருக்காராம்? போய் கூட்டிட்டு வரேன்!” என்றபடி புறப்பட ஆயத்தமானான்.   `வெடி’ என்று பயந்திருந்தது புஸ்வாணமாகப் போன நிம்மதி அம்மாவின் முகமெல்லாம் பரவியது.         பழி   மோகன் ஸார்மேல் எல்லா மாணவிகளுக்குமே ஒரு `இது’.   விளையாட்டு வீரரானதால், கட்டுமஸ்தான உடல். எல்லாவற்றையுமே விளையாட்டாக எடுத்துக்  கொள்வதுபோன்ற சிரித்த முகம், அன்பு கலந்த கண்டிப்பு, அசாதாரணமான கனிவு... இவை போதாதா ஒருவர்மீது காதல் கொள்ள!   விளையாட்டுப் பயிற்சிகளால் அவருடன் நெருங்கிப் பழகும் வாய்ப்பு பிரபாவைத் தேடி வந்தது. அதனால் அத்தனை பேருடைய பொறாமைக்கும் ஆளாகியிருந்ததுபற்றி அவளுக்குக் கொள்ளைப் பெருமை. `நீதான் மாஸ்டரோட செல்லம்!’ என்று அவர்கள் கேலி செய்ததை நம்பி, இரவெல்லாம் கண்விழித்து, ஒரு காதல் கடிதம் எழுதினாளே!   பதிலுக்கு, அவளிடமே அதைக் கொடுத்து, `இதை நான் பெரிசு படுத்தப் போறதில்லே. இன்னும் ரெண்டு வருஷம் போனா, நீ இப்ப செய்திருக்கிற காரியம் எவ்வளவு பைத்தியக்காரத்தனமானதுன்னு ஒனக்கே புரியும்!’ என்று அமைதி குன்றாது அவர் கூறியபோது, அவள் அடைந்த அவமானம் மறக்குமா! அவமானம் ஆத்திரமாக மாறியது.   ஆனால், இப்போது, பழி தீர்த்துக்கொள்ள தாய் ஒரு வழி வகுத்தபோது என்னவோ, அவளுக்குத் தயக்கமாகத்தான் இருந்தது.  பொய் சொல்லலாமோ?   `நல்லொழுக்கம்’ என்று பள்ளியில் சொல்லிக் கொடுப்பது பரீட்சைகளில் தேர்ச்சி பெற மட்டும்தானா?   தன் பக்கத்தில் அமர்ந்து, கவனமாகப் பரிமாறிய தாயை மெல்ல ஏறிட்டாள் பிரபா.   ஒப்பனையற்ற முகம். பருத்திப் புடவை. `நானும் இருக்கிறேன்,’ என்பதுபோல், கண்ணுக்குத் தெரியாத அளவில் ஒரு பொட்டு.   “அம்மா..!” பிரபாவின் குரலில் தயக்கம்.   திருமணமாகாமலே பிறந்த மகள். உண்மை தெரிந்தும், `எப்பவோ நடந்ததைப்பத்தி இப்போ என்ன!’என்று பெரிய மனது காட்டுவதுபோல நடித்து, மணந்தபின், அதையே குத்திக்காட்டி, ஓயாது சந்தேகப்பட்டு வாழ்க்கையை நரகமாக்கிய கணவன். இரு ஆண்டுகளுக்குள்ளேயே திருமண முறிவு.   `பாவம், அம்மா!’  என்று பரிதாபப்பட்டாள் பிரபா. தான் பிறந்ததால்தானே இப்படி ஒரு அவல வாழ்க்கை! அதற்கு ஈடு செய்ய, அம்மா சொற்படி நடந்தால்தான் என்ன?   கடந்த ஐந்தாறு வருடங்களாகவே தனக்குக் கண்ணாமூச்சி காட்டியிருந்த பதவி உயர்வு அந்த ஆண்டு கண்டிப்பாகக் கிடைக்கும் என்று நம்பியிருந்தாள் சீதா. அதற்கேற்ப, கட்டொழுங்கு ஆசிரியையாகவும் ஆக்கப்பட்டிருந்தாள். பள்ளியே அவள் பொறுப்பில்தான் இருந்தது.   அந்தச் சமயம் பார்த்துத்தானா மோகன் அங்கு மாற்றலாகி வரவேண்டும்! தலைமை ஆசிரியை அவன்பக்கம் சாய்ந்தாள்.   புதிய மலேசிய சம்பளத் திட்டத்தின்கீழ், பதவி உயர்வு கிடைப்பது தலைமை ஆசிரியையின் சான்றிதழால்தான் என்று பிரபாவுக்குத் தெரியும். அம்மாவின் இந்தக் கனவு நிறைவேறாமல் போய்விடுமோ என்ற பயம், மோகன் ஸாரால் இப்போது வந்திருக்கிறது. `   அம்மாவை ஏமாற்றிய இரு ஆண்களினால், பிரபாவுக்கும் அந்த வர்க்கத்தின் மேலேயே துவேஷம் இருந்தது சீதாவுக்குச் சாதகமாகப் போயிற்று. என்ன பேசவேண்டும் என்று சொல்லிக்கொடுத்தாள்.   பந்தயத்தில் ஓடியபோது தான் கீழே விழுந்துவிட, மோகன் ஸார் சுளுக்கெடுத்ததை இப்போது நினைத்தாலும் சிலிர்த்தது.    தலைமை ஆசிரியை மிஸ். ராஜசிங்கம் தன்னை அவசரமாகக் கூப்பிட்டு அனுப்பியிருப்பது எதற்காக இருக்கும் என்று குழம்பியவனாக அவளுடைய அறையில் நுழைந்த மோகன், தன்னைக் கண்டதும் அவளுடைய முகத்தில் வழக்கமாகக் காணப்படும் புன்னகைக்குப் பதில் கடுமை படர்ந்திருப்பது கண்டு திகைத்தான்.   “பள்ளி சார்பிலே ஓட்டப் பந்தயத்துக்காக நேத்து மத்தியானம் மூணு பேரை கோலாலம்பூருக்கு -- இங்கேயிருந்து ஐம்பது கிலோமீட்டர்-- கூட்டிட்டுப் போனீங்க, சரி. மத்த ரெண்டு பெண்களையும் இறக்கி விட்டப்புறம், கார் ரிப்பேருங்கிற சாக்கிலே, நீங்க தகாத முறையிலே நடக்க முயற்சித்ததா பிரபா புகார் பண்ணியிருக்கா”. கோபத்தை உள்ளடக்கிய அந்தக் குற்றச்சாட்டு அவன் முகத்தில், `இது என்ன விந்தை!’ என்ற பாவத்தைத் தோற்றுவித்தது.   ஏதோ சொல்ல வாயெடுத்தவனை ஒரு கையை உயர்த்தி நிறுத்தினாள் மேலதிகாரி. “அப்படி ஏதும் நடக்கலேன்னு சொல்லப்போறீங்க. அதானே? சாயந்திரம் ஆறுமணிக்கு எல்லாப் போட்டியும் முடிஞ்சிருக்கு. இவளை வீட்டுக்குக் கொண்டு விடறப்போ, மணி பத்துக்குமேல ஆயிடுச்சுன்னு இவங்கம்மா, சீதா டீச்சர், புகார் குடுத்திருக்காங்க. விளையாட்டில தோத்துப்போனதுக்கு ஆறுதல் சொல்றமாதிரி, தோளைச் சுத்தி கை போட்டிருக்கீங்க. ராத்திரி வேளையிலே எங்கெங்கேயோ சுத்திட்டு, தொடையைத் தடவ ஆரம்பிச்சிருக்கீங்க. இதுக்கெல்லாம் என்ன அர்த்தம்? நல்லவேளை, அந்த சின்னப் பொண்ணுக்கு ஒங்களைத் தடுக்கற பலமும், தைரியமும் இருந்திருக்கு!”   மிஸ். ராஜசிங்கத்தின் பக்கத்திலேயே குனிந்த தலையோடு நின்றிருந்த பிரபாவை அதிர்ச்சியுடன் நோக்கினான் மோகன். விழுந்தவுடனேயே தான் கொடுத்த அவசரச் சிகிச்சைக்கு இந்தத் தண்டனையா!   தற்செயலாக நடந்தவைகளுக்கு வேறுவிதமான பூச்சு கொடுத்து அசிங்கப்படுத்த இவளுக்கு எப்படித் தோன்றியது?   காரைப் பழுது பார்த்தபின், அவள் வீட்டில் கொண்டுவிடும்போது ஒன்பது மணிக்குள்தானே இருக்கும்!   “இப்படி ஏதாவது நடக்கக்கூடாதுன்னுதான் எங்க ஸ்கூலிலே ஆண்களையே வேலைக்கு வைக்கக்கூடாதுன்னு இத்தனை வருஷம் கண்டிப்பா இருந்தேன்”. ஐம்பது வயதை எட்டியிருந்தவளுக்கு, அவனைவிட அதிர்ச்சியும், ஆத்திரமும் எழுந்தன. “சே! ஒங்க சிரிப்பையும், போலிப் பணிவையும் பாத்து, நான்கூட இல்லே ஏமாந்துட்டேன்!”   அந்தக் குளிர்சாதன அறையிலும் வியர்க்க, கரங்கள் தன்னிச்சையாக கழுத்தை இறுக்கியிருந்த டையைத் தளர்த்தப் போயின. இப்போது தான் எது சொன்னாலும் எடுபடப் போவதில்லை என்று புரிந்து, மௌனமாகத் தலையைக் குனிந்து கொண்டான் மோகன்.   “நல்லவேளை, சீதா டீச்சருக்கு நம்ப பள்ளிக்கூடத்தோட பேர் கெட்டுடக் கூடாதுங்கிற அக்கறை இருக்கு. அதான் எங்கிட்ட வந்து சொல்லியிருக்காங்க. அவங்க போலீஸ், கோர்ட்டுன்னு போயிருந்தா..? நெனைக்கவே கூசுது. கூடிய சீக்கிரமே ஒங்களை வேற..”.   “அதுக்கு அவசியம் இருக்காது, மிஸ். ராஜசிங்கம். நாளையோட நானே நின்னுக்கறேன்”. எவரையும் பாராது, அலாதியான அமைதியுடன் அவன் வெளியே நடந்தான்.   “தப்புப் பண்ணறதுக்கு முந்தி யோசிச்சு இருக்கணும். இப்ப ரோஷப்பட்டு என்ன புண்ணியம்?” என்று முணுமுணுத்து, அந்த இறுக்கமான சூழ்நிலையைச் சமாளிக்கப் பார்த்தாள் மிஸ். ராஜசிங்கம்.   அதற்குப்பின், பிரபாவுக்கு எதிலும் அக்கறையும், கவனமும் இல்லாமல் போயிற்று. `என்றாவது இவள் சிரித்திருப்பாளா?’ என்று காண்பவரைச் சிந்திக்க வைப்பதுபோல் ஒரு கடுமை அவள் முகத்தில் குடியேறியது. `ஒரு நல்ல மனிதர்மேல் அபாண்டமாகப் பழி சுமத்தி, அவருடைய எதிர்காலத்தையே நாசமாக்கிவிட்டேனே!’ என்று ஓயாது குமைந்தாள்.   “ஒனக்கும் பதினெட்டு வயசு ஆகிடுச்சு. நிறைய பேர் கேக்கறாங்க,” என்று தாய் அவளுடைய கல்யாணப்பேச்சை எடுத்தபோது, பிரபாவுக்கு அலற வேண்டும்போல இருந்தது.   “ஏம்மா? மோகன் ஸார்தான் என்னை ஏற்கெனவே கெடுத்துட்டாரே! மனசறிஞ்சு, இன்னொரு ஆம்பளையோட நான் எப்படிக் குடித்தனம் நடத்த முடியும்?” என்று தெளிவாகக் கேட்டு, அவள் வாயை அடைத்தாள்.   பதவி உயர்வுக்குப் பதில் சீதாவுக்குக் கிடைத்ததெல்லாம் குறைந்த ஓய்வூதியம்தான்.   `கெட்டதைப் போதிக்க நாவை உபயோகித்தாயே! இப்போது அவசியமானால்கூடப் பேச முடியவில்லை, பார்!’ என்று, பக்கவாதம் கண்ட தாயைக் குத்திக்காட்ட பிரபாவுக்குத் துடிக்கும்.   ஆனால், தாயைப் பார்க்கும்போதெல்லாம், `மிஸ்டர் மோகன் ஒன்னைக் கெடுக்கப் பாத்தாருன்னு சொல்லிடு!” என்ற போதனை இப்போதுதான் அவள் சொல்வதுபோல் ஒலிக்க, தன்னையே மன்னிக்க முடியாது, அவளருகே போவதையே தவிர்த்தாள்.   `வாழ்க்கையில் எதிர்பார்க்க இனி எந்த சுகமும் கிடையாது. இதே இயந்திர கதிதான்!’ என்ற நிதரிசனம் கனத்துப்போகும்போது மனத்தில் வெறுமை சூழும். தையல் இயந்திரத்தோடு இயந்திரமாக இயங்கி வயிற்றுப்பாட்டைக் கவனித்துக்கொண்டதாலோ, என்னவோ, முதுகு வளைந்திருந்தது.   அன்று கடையில் தைத்துக் கொண்டிருந்தபோது, தெரிந்த குரல் ஒன்று ஒலிக்க, நிமிர்ந்தாள் பிரபா.   “நீ.. பிரபா இல்லே?” அருகில் வந்தவரைக் கண்டதும் அவளுக்கு வியர்த்துப் போயிற்று.   ஐயோ! தானிருக்கும் இடத்தை எப்படிக் கண்டுபிடித்தார்?   பதினைந்து வருடங்களுக்குப் பிறகு தன்னை நியாயம் கேட்க வந்திருக்கிறாரா?   “நான்.. மோகன்!” இயல்பாகத் தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டார் வந்தவர். “இப்போ ஆஸ்திரேலியாவிலே இருக்கேன். அசிஸ்டண்ட் புரொபசர். அப்பவே அங்கே போயிட்டேன், மேல்படிப்புக்கு,” என்று பேசிக்கொண்டே போனவர், “ஆமா? நீ நல்லாப் படிச்சிட்டு இருந்தியே! மேலே படிக்கலே?” என்று கேட்டபோது, அந்தக் கனிவைத் தாங்க முடியாது, பிரபாவின் உதடுகள் துடித்தன.   அப்போது, “நீ இங்கேயா இருக்கே? ஒன்னை எங்கெல்லாம் தேடறது!” என்று செல்லக் கோபத்துடன் வந்தான் ஒரு வெள்ளைக்காரன்.  உரிமையுடன் மோகனது இடுப்பில் தன் கரத்தைப் படரவிட்டான்.   “ஓ.கே, பாக்கலாம்,” என்றபடி, அவனுடன் நடந்துபோனார் மோகன் ஸார்.   அதிர்ந்து போனவளாக, அவர்கள் சென்ற திக்கையே விறைத்தாள் பிரபா. தான் ஒவ்வொரு கணமும் எண்ணிக் கலங்கியதுபோல, அவருடைய வாழ்வு அழிந்து போகவில்லை! தன்னாலோ, ஏன், வேறு எந்தப் பெண்ணாலுமே அவரை மயக்க முடியாது!   இது புரியாமல், அவரைப் பழி வாங்கவென்று பொய் சொல்லி, அம்மாவை அடியோடு வெறுத்து, இன்னும்..படிப்பை அரைகுறையாக விட்டு..!   தன் முன்னிருந்த இயந்திரத்தின் மேலேயே தலையைக் கவிழ்த்தபடி, குலுங்கிக் குலுங்கி அழ ஆரம்பித்தாள் பிரபா, தனது நீண்டகால இழப்புகளை ஈடுகட்ட முடியாதவளாக.         பிளவு   “வர வர, சுதாவை ரொம்ப அடிக்கிறே நீ!”   `ஒன்னோட மூளையும், சுறுசுறுப்பும் அப்படியே சுதாகிட்ட வந்திருக்கு!’ என்று தனிமையில் ஓயாது தன்னைப் புகழும் கணவரிடமிருந்து இப்படி ஒரு குற்றச்சாட்டா!   பெண்ணை முதுகில் அடித்ததன் காரணத்தை இவரிடம் சொன்னால், “குழந்தைகள் என்றால், முன்னே பின்னேதான் இருக்கும்!” என்று த்த்துவம் பேசி, எரிச்சலை இன்னும் அதிகமாக்குவார்.   அன்று காலை ஞானம் குளிக்கப் போயிருந்தபோது, குளியறையில் ஒரே துர்வாசம்! சுவரெல்லாம் தீற்றியிருந்தது...!   வெளியில் வந்து, “ஒன் வேலைதானே இது?” என்று வெறி பிடித்தவள்போல் சுதாவை அடித்திருந்தாள். அவள் அழாமல் அப்படியே நின்றிருந்தது தாயின் ஆத்திரத்தை மிகையாகத்தான் ஆக்கியது.   “முந்தி மாதிரி இல்ல சுதா. என்னமோ, ரொம்பக் கெட்டுப் போயிட்டா!” என்று கணவரிடம் படபடத்தாள்.   மறுநாள் காலை ஏழு மணிக்கு, வழக்கம்போல் பள்ளிச்சீருடை அணிந்து, சாப்பாட்டு மேசையில் அமர்ந்தாள் சுதா. வெள்ளைச் சட்டைமேல் மைலோவைக் கொட்டிக்கொள்ள, அவசரத்தில் உடையை மாற்ற நேரமில்லாது போயிற்று.   ஆத்திரம் பீறிட்டது பெற்றவளுக்கு. எவ்வளவு கஷ்டப்பட்டு, குனிய முடியாமல் குனிந்து, அதைத் துவைத்து, இஸ்திரி பண்ணியிருந்தாள்!   “ஒரு காரியம் ஒழுங்கா செய்யத் தெரியுதா, சனியன்!” என்று கன்னத்தில் ஓர் அறை வைக்காமல் இருக்கமுடியவில்லை அவளால்.   சிறுமி எதிர்ப்புக் காட்டாமல் நின்றது ஞானத்துக்குப் புதிய பலம் வந்ததுபோல்  இருந்தது, கூடவே குற்ற உணர்ச்சியும் ஓங்கியது.   மத்தியானம் இரண்டு மணிக்கு, பள்ளி முடிந்து வீடு திரும்பிய சிறுமி, காலையில் நடந்ததை மறந்தவளாக, “அம்மா! என்னை பேச்சுப் போட்டியில சேர்த்துக்கிட்டிருக்காங்க!’ என்று தெரிவித்தாள்.   ஞானம் புன்சிரிப்புடன் தன் கட்டை விரலை உயர்த்தினாள், மகளைப் பாராட்டும் விதமாக.   ‘தம்பி என்ன செய்யறான்?” என்று அம்மாவின் வயிற்றை அருமையாக, ஒரு விரலால், தொட்டுப்பார்த்தாள் சுதா.   அதுதான் காரணமோ?   எட்டு வருடங்களாக, ஒரே குழந்தையாக இருந்த தனக்குப்  போட்டியாக ஒரு தம்பி வந்துவிடப் போகிறானே என்ற இனம்புரியாத கலக்கமோ?   சுதாவுக்கு வயது ஏறியது. பள்ளியில் என்னதான் சிறந்து விளங்கினாலும், வீட்டில் தாய்க்கும், மகளுக்கும் சண்டைகள் பலத்தன.   பதினாறு வயதான பெண்ணை அடிக்க முடியவில்லை. வாய்வார்த்தையாகக் கண்டனம் செய்யத்தான் முடிந்த்து. “ஏண்டி! என்ன அலங்காரம் இது? குட்டைப் பாவாடை, வயிறு தெரிய சட்டை! எல்லாத்துக்கும் மேல, லிப்ஸ்டிக், உதட்டுக்கு வெளியே எல்லாம்! சே! ஒன்னைப் பாத்தா, `யாரோ’ன்னு நினைச்சுக்கப் போறாங்க!”   “நினைச்சுக்கட்டும்!” திமிராகப் பதில் வந்தது.   பள்ளியில் ஆசிரியைகள் எல்லாரும் அவளுடைய திறமைகளை, புத்திசாலித்தனத்தைக் கொண்டாடியதால் வந்த வினை என்று ஞானம் குமையத்தான் முடிந்தது.   வலிய ஏதாவது சொல்லப்போகத்தான் வாக்குவாதம் ஆரம்பிக்கிறது என்று புரிய, சுதா என்ன செய்தாலும் ஞானம் வாயே திறக்காமல் இருக்கத் தலைப்பட்டாள். தாய்க்கும் மகளுக்குமிடையே சண்டை இல்லாவிட்டாலும், கண்ணுக்குத் தெரியாத ஏதோ பிளவு.   `எனக்கு ஒரு தோசை போதும்னா விடுங்களேன்!’ என்று இரைபவளிடம் என்ன பேச முடியும்?   `பசிக்கல. சாப்பாடு வேண்டாம்!’ என்று அனேக இரவுகள் சொல்வதைவிட இது தேவலாம் என்று திருப்தி பட்டுக்கொள்ள வேண்டியதுதான்.   பன்னிரண்டு வயதுப் பெண்ணைப்போல் வளர்ச்சி குன்றியிருந்த மகளைப் பார்த்து அந்தத் தாயின் மனம் குமுறியது.   பார்ப்பவர்களுக்கு அதெல்லாம் பெரிதாகப்படவில்லை.  “ஒங்க மகளுக்கான படிப்புச் செலவையெல்லாம் அமெரிக்காவில இருக்கிற காலேஜே ஏத்துக்கிட்டிருக்காமே! பெத்தா, இப்படி ஒரு பொண்ணைப் பெத்துக்கணும்!” வெளிப்படையாகப் புகழ்ந்தாலும், முகத்தில் தோன்றிய பொறாமையை அவர்களால் மறைக்க முடியவில்லை. “ஒரே மகள்! எப்படித்தான் பிரிஞ்சு இருக்கப்போறீங்களோ!”   பத்து வருடங்களுக்கு மேலேயே மனத்தளவில் அவள் தன்னைவிட்டு விலகிவிட்டிருந்ததைப் பிறரிடம் சொல்லவா முடியும்?   தன்னை வெறுக்கும் அளவுக்கு, பெற்ற தாயையே ஒரு போட்டியாகக் கருதி, எப்போதும், எதிலும் வென்று ஜெயிக்க வேண்டும் என்று அவள் இப்படி வெறியாக அலைய தான் என்ன தப்பு செய்தோம்? இன்னும் அதிக நாட்கள் இந்தப் பாரத்தைச் சுமந்துகொண்டு வாழ முடியாது என்று பட்டது ஞானத்துக்கு.   “அம்மா! நீங்களும் என்கூட அமெரிக்கா வாங்களேன்!” அதிசயமாகத் தன்னைத் தேடி வந்திருக்கும் மகளை நம்ப முடியாமல் பார்த்தாள் ஞானம். எதற்கெடுத்தாலும் எதிர்த்துப் பேசிய பெண்ணா இது! பயந்த குழந்தை பேசுவதுபோல் இருந்தது.   `இதுதான் சமயம், கேட்டுவிடு’, என்ற உந்துதல் எழ, “ஒங்கிட்ட ஒண்ணு கேக்கணுமே, சுதா!” என்று நீட்டினாள். அவளுடைய பதிலுக்குக் காத்திராது, “ஏழு வயசுவரைக்கும் என்னையே சுத்திச் சுத்தி வருவே! எனக்கு அவ்வளவு அருமை நீ! ஆனா, நீயோ, ஓயாம அடியும், உதையும் வாங்கி, அடுத்த வேளைச் சோத்துக்கே திண்டாடற ஏழைக் குழந்தைமாதிரி ஆத்திரமும், படபடப்புமா ஆகிட்டே. நான்.. எங்கே தப்பு பண்ணினேன்?” என்று கேட்டு முடிப்பதற்குள், குரல் தழதழத்துப் போயிற்று. மூச்சு வேகமாக வந்தது.   உடனே பதில் வந்தது சுதாவிடமிருந்து. “அது.. நீங்க செஞ்ச எதனாலேயும் இல்லம்மா!”   ஞானம் ஒன்றும் விளங்காது, அவளையே பார்த்தாள்.   சிறிது நேரம் எதுவும் பேசவில்லை சுதா. அவளுடைய உதடுகள் இறுகி இறுகிப் பிரிந்தன. புருவங்கள் நெரிய, கண்கள் பயத்தையோ, வேறு எந்த உணர்வையோ காட்டின. எதையோ சொல்ல முயன்று, சொல்லவும் முடியாது, மெல்லவும் இயலாதவளாக அவள் அவதிப்படுவதைக் காண தாய்மனம் துடித்தது.   “எனக்கு அப்போ எட்டு வயசு. நீங்க மாசமா இருந்தீங்க. தினமும் சாயந்திரம் வாசல்லே ஸ்கூட்டர்ல வர்றவன்கிட்டே ரொட்டி வாங்க அனுப்புவீங்க. அப்போ.. அவன்.. என்னை..!”   அதிர்ச்சியுடன் மூச்சை உள்ளுக்கிழுத்துக் கொண்டாள் ஞானம். இரவு ஏழு மணிக்கு தெரு விளக்குகள் எரிய ஆரம்பித்ததும்தான் ரொட்டிக்காரன் தொடர்ந்து அமுக்கும் ஹார்ன் ஒலி கேட்கும். இருளில் தான் தவறு செய்தால் யாருக்குத் தெரியப்போகிறது என்ற அலட்சியமா? திமிரா? வீட்டெதிரில் பெரிய மரமும், புதரும், அதை ஒட்டினாற்போல் பெரிய பள்ளமும் இருந்ததை சாதகமாக்கிக் கொண்டானா, பாவி!   எல்லா உணவும் துவேஷமாகப் போனது இதனால்தானா?   செய்யாத தப்புக்குச் சுய தண்டனை!   ஒரேயடியாக அதிர்ந்து, “என்னோட தொப்புள் கொடி கருவில இருந்த குழந்தையோட கழுத்தைச் சுத்தியிருக்கு, ஓய்வா இருக்கணும்னு டாக்டர் சொல்லியிருந்தாரில்ல? அதான் தினமும், ரொட்டி..,” என்று வேகமாகப் பேசிக்கொண்டு போனவளை ஒரே கைவீச்சில் தடுத்து நிறுத்தினாள் மகள்.   “இத்தனை வருஷம் கழிச்சு, நீங்க எதுக்கும்மா குத்தம் செஞ்சுட்ட மாதிரி பதைபதைச்சுப் போறீங்க? எனக்கு அந்த ரொட்டிக்காரன்மேல கோபமில்ல. பாவம்! அவன் சின்னப் பையனா இருந்தப்போ யார் வதைச்சாங்களோ!”   ஆண்டுக்கணக்காய் உறுத்திக்கொண்டிருந்த முடிச்சுகள் ஒவ்வொன்றாக அவிழத் தொடங்கின.   ஞானம் மெல்லக் கேட்டாள்: “நாம்ப அம்மாவுக்குத் தெரியாம ஏதோ தப்பு பண்றோம். அதுக்காக எப்படியாவது அம்மாகிட்ட அடியோ, திட்டோ வாங்கியே தீரணும்னுதான் அப்படியெல்லாம் செஞ்சியா? மேலே மைலோவை வேணுமின்னே கொட்டிக்கிட்டு..!”   சுதா தலையசைத்த விதத்தைப் பார்த்தால், அவள் தலை திடீரென்று கனத்துவிட்டதுபோல இருந்தது. “திட்டு வாங்கணும்னு எதிர்பாத்து, வேணும்னு செய்யல. ஆனா..,” அவள் குரல் விம்மியது. “நீங்க அடிச்சாலோ, திட்டினாலோதான் எனக்கு நிம்மதியா இருக்கும்!”   என்ன நடக்கிறதென்றே புரியாத வயதில், வயதுக்கு மீறிய செயலில் பங்கெடுக்க வைக்கப்பட்டு, அது `தப்பு’ என்றவரை புரிந்து, பயம், குற்ற உணர்வு, வருத்தம் ஆகிய பலவும் அழுத்த, விடுபட வழி தெரியாது, பெரியவளாகப் போனபின், ஆத்திரத்தைத் தன் ஆயுதமாக உபயோகித்திருக்கிறாள்!   கல்லூரியில் மனோதத்துவம் படித்திருந்தும், தன்னால் வாழ்க்கைக்கு அதைப் பிரயோகிக்கத் தெரியாது போய்விட்டதே என்ற பெருவருத்தம் ஞானத்துக்குள் எழுந்தது.   பாலியல் வதைக்குள்ளான குழந்தைகள் நரகலை சுவற்றின்மேல் தீற்றுவது, `அம்மா காப்பாற்ற மாட்டேன் என்கிறார்களே!’ என்ற கோபத்தில் தாயையே எதிரியாக, போட்டியாகப் பாவிப்பது, பிற விஷயங்களிலாவது தன் வயதொத்தவரை மிஞ்சவேண்டும் என்ற வெறியோடு இயங்குவது -- தான் எப்படி இதையெல்லாம் ஒன்றுசேர்த்துப்பார்க்கவில்லை?   கேட்க இன்னும் ஒன்றுதான் பாக்கி இருந்தது. “கன்னாபின்னான்னு டிரெஸ் பண்ணிப்பியே! ஆம்பளைங்க ஒன்னைப் பாத்து பயந்து ஓடணும்னுதானே?”   சுதா கலகலவென்று சிரித்தாள் -- ஒரு வழியாக அம்மா தன்னைப் புரிந்துகொண்டார்களே என்று.   ஞானம் அவள் கையை ஆதரவுடன் வருடினாள், தாய்ப்பூனை குட்டியை நாக்கால் நக்கிக்கொடுப்பதுபோல.   எவ்வளவு கஷ்டப்பட்டிருக்கிறாள், இந்தச் சின்ன வயதுக்குள்!   பேச எதுவும் இருக்கவில்லை.   பல்லாண்டு பாரத்தை இறக்கிவைத்த நிம்மதியுடன், சுதா தாயின் தோளில் தலைசாய்த்து, விம்மத் தொடங்கினாள்.   தாயும் அவளுடன் சேர்ந்துகொண்டாள்.           ஆபத்தான அழகு   `நீ யாரை வேணுமானாலும் கல்யாணம் பண்ணிக்க. எனக்கு இருக்கிற வேலையில, ஒனக்கு எங்கே போய் மாப்பிள்ளையைத் தேடறது?’ கவிதாவுக்குப் பதினைந்து வயதானபோதே மங்களம் அப்படிக்  கூறியிருந்தாள். `அட, ஜாதகம், மத்த பொருத்தமெல்லாம் பாத்துச் செய்யற கல்யாணமெல்லாம் நல்ல விதமா அமைஞ்சுடுதா, என்ன!’   பத்துப் பொருத்தம் பார்த்து செய்த திருமணமானாலும், இரண்டே வருடங்களில் அவளைவிட்டு எங்கோ தலைமறைவாகிவிட்ட கணவனால் அவளது சிந்தனை, அணுகுமுறை வித்தியாசமாக இருந்தது.   சில பெண்களைப்போல ஒரேயடியாக இடிந்து போய்விடாது, மேற்படிப்புப் படித்து, கௌரவமான உத்தியோகத்திலும் அமர்ந்தாள். ஒழிந்த நேரத்தில் சமூக சேவை. பிறருடன் அவர்கள் பட்ட துயங்களைப் பகிர்ந்துகொண்டபோது, தனது வாழ்க்கையின் அவலம் பெரிதாகத் தோன்றவில்லை.   தாயைப்போலவே வளர்ந்தாள் கவிதாவும். உயர்வு, தாழ்வு என்ற பேதமில்லாமல், எல்லாருடனும் அனுசரணையாகப் பழகுவாள்.   எப்போதாவது தான் பார்த்தே அறியாத அப்பாவின்மேல் கோபம் எழும். `இந்த ஆண்களே சுயநலக்காரர்கள்!’ என்று ஒட்டுமொத்தமாக அவ்வர்க்கத்தின்மேலேயே வெறுப்பு வரும். இவ்வளவு நல்ல அம்மாவிடம் என்ன குறை கண்டு அவர் ஓடிப்போனார்?   “ஆம்பளைங்க எல்லாருமே மோசம். இல்லேம்மா?”   அந்த விவரம் அறியாப் பெண்ணின் மனப்போக்கைப் புரிந்து கொண்டவளாய், மங்களம் லேசாகச் சிரித்தாள். “தாத்தாவை மறந்துட்டியே!” என்று, தனக்கு ஒரு சுதந்திரமான வாழ்க்கையை அமைத்துக் கொடுத்தவரை நினைவுபடுத்தினாள்.   “ஆணோ, பெண்ணோ, நாம்ப எல்லாருமே மனுஷ ஜாதிதானே!  சாமியா? தப்பு செய்யத்தான் செய்வோம்!”   கவிதாவுக்கு அதிசயமாக இருந்தது. பெண்கள்கூட ஆண்களை வருத்துவார்களா!   அதன்பின், அவளுக்கு ஆண்களின்மேல் பொதுவாக ஏற்பட்டிருந்த கசப்பு மட்டுப்பட்டது. எந்த ஒருவரையும் அவரது செயல்களை வைத்துத்தான் எடைபோட வேண்டும் என்று நிச்சயித்தாள்.   ஆனால், ஆண்களை நம்புவதற்கும் தயக்கமாக இருந்தது. அவசரப்பட்டு யார்மேலாவது ஆசைப்பட்டுத் தொலைத்தால், அவரும் அப்பாமாதிரி பொறுப்பற்றவராக இருந்து வைத்தால், ஆயுசு பூராவும் யார் அவதிப்படுவது?   ஏதேதோ யோசித்தவள், மற்ற பெண்களைப்போல, அவளது அழகையோ, அறிவுக் கூர்மையையோ புகழ்ந்து பேசிய ஆண்களிடம் எளிதாக மயங்கிவிடவில்லை. சிந்தனை தறிகெட்டு ஓடாததால், அதை ஒருமுகமாகப் படிப்பில் செலுத்த முடிந்தது.   வேலையில் சேர்ந்து, படிப்படியாக முன்னேறிக் கொண்டிருந்தபோதுதான் சுந்தரைச் சந்தித்தாள். உத்தியோகம் சம்பந்தமான சந்தேகங்களைக் கேட்பதில் ஆரம்பித்தது அவர்கள் உறவு.   “ஒனக்காவது அப்பா மட்டும்தான் இல்லே. எனக்கு எங்க அப்பா, அம்மா ரெண்டு பேரையுமே தெரியாது,” என்று சுந்தர் சுயபரிதாபத்துடன் கூறியபோது, கவிதாவிற்குச் சிறிது குற்ற உணர்வு உண்டாயிற்று.   தாயன்பே அறியாது வளர்ந்திருந்தவனிடம் தான் சிறிது அன்பைக் காட்டினால்கூட, அவன் அதைப் பலமடங்காகத் திருப்பி அளிப்பது அவன்மேல் இரக்கத்தைத் தோற்றுவித்தது. அதே சமயம், பெருமையாகவும் இருந்தது.     தியாகராஜ ஆராதனையை ஒட்டி நடந்த இசைவிழாவில் கவிதா பங்குகொண்டு, மேடையை விட்டு இறங்குகையில், முகமெல்லாம் பூரிப்பாக அவளைப் பாராட்டினான் சுந்தர். தன்னையும் அறியாமல், அவனை உரசுவதுபோல நெருங்கியவள், “அம்மா! இவர்-- சுந்தர். எங்க ஆபீஸ்தான்!” என்று பக்கத்தில் நின்றிருந்த மங்களத்துக்கு அறிமுகப்படுத்தினாள்.   சுந்தர் தன் மகளை உரிமையுடன் பார்த்த விதத்திலிருந்ததும், அதை அங்கீகரிப்பதுபோல அவளும் சற்றே தலையைக் குனிந்து நின்றதையும் பார்த்தாள் மங்களம். தனக்குள் சிரித்துக்கொண்டாள்.   “ஒரு நாள் வீட்டுக்கு வாங்களேன்!” என்று அழைப்பு விடுத்தாள். கவிதாவின் முகம் அப்போது மலர்ந்ததையும் கவனிக்கத் தவறவில்லை.    கவிதா கொண்டுவைத்த தேனீரைப் பருகியபடி இருந்தவனிடம் மெல்ல பேச்சுக்கொடுத்தாள் மங்களம். “ஏன் சுந்தர்? ஒங்க அப்பா, அம்மா ஒங்க கூடதான் இருக்காங்களா? இல்லே, வேலை விஷயமா நீங்க மட்டும் இங்கே இருக்கீங்களா?   “நான் பாட்டி வீட்டிலே இருக்கேன், ஆன்ட்டி. அவங்கதான் என்னை வளர்த்தாங்க. எனக்கு ரெண்டு வயசா இருக்கும்போதே அப்பா, அம்மா ரெண்டுபேரும் போயிட்டாங்க!” உணர்ச்சியற்ற குரலில் தெரிவித்தான்.   “அடடா! தெரியாம கேட்டுட்டேன். இந்த கவிதாதான் மொதல்லேயே சொல்லி இருக்கக்கூடாது?” என்று பழியை மகள்மேல் திருப்பினாள் முதியவள். இருந்தாலும், அடுத்து வந்தது மற்றுமொரு கேள்வி. “நீங்க பிறந்து வளர்ந்ததெல்லாம் கே.எல்ல (கோலாலம்பூரில்) தானா?”   அக்கேள்விக்கு விடையளிக்க சுந்தர் சிறிது அவகாசம் எடுத்துக்கொண்டதுபோல் இருந்தது. “நான் பிறந்தது ஈப்போவிலே!”   அதற்குமேல் மங்களம் ஏதாவது கேட்டிருப்பாள், “போதும்மா நீங்க குறுக்கு விசாரணை செஞ்சது! வக்கீலாப் போயிருந்திருக்கலாம், பேசாம!” என்று கவிதா குறுக்கிட்டு இருக்காவிட்டால்.   “பேசாம இருந்தா, எப்படி கவிதா வக்கீல் தொழில் செய்ய முடியும்?” என்று சுந்தர் கேட்க, மூவரும் மனம்விட்டுச் சிரித்தார்கள்.   “போயிட்டு வரேன், ஆன்ட்டி,” என்று சுந்தர் கைகூப்பியபடி எழுந்தபோது, மங்களத்திற்கு சுந்தரிடம் கேட்க வேண்டியது இன்னும் ஒன்று பாக்கியிருந்தது: “ஒங்க பாட்டி பேரு என்ன? ஒரு வேளை, அவங்க எனக்குத் தெரிஞ்சவங்களாக்கூட இருக்கலாம். கோயில், கச்சேரி -- இப்படி எங்கேயாவது பாத்திருப்போம்!”   அவன் சொன்னான்.   தாயின் முகத்தைக்கூடப் பார்க்கப் பிடிக்காதவளாக, சாப்பிடாமலேயே போய் படுத்துக்கொண்டாள் கவிதா.   `எல்லா ஆண்களுமே நம்பத் தகாதவர்களில்லை,’ என்று சொல்லிச் சொல்லித் தன்னை வளர்த்த அம்மாவா இது? சந்தேகப் பிராணியாக, சுந்தர் என்னமோ குற்றவாளிக் கூண்டில் நிற்பதுபோல் பாவித்து..!   அரைமணி அவளைத் தனியே விட்டுவிட்டு, அறைக்குள் நுழைந்தாள் மங்களம். “எனக்கு ஒரு சந்தேகம். அது சரியா போச்சு!”   தாய் சொன்னது காதில் விழாததுபோல் கவிதா படுத்திருந்தாள். `மொதல்லே, யாரை வேணுமானாலும் கட்டிக்கன்னு சொல்றது. இப்போ, அருமையா வளத்த பொண்ணு தன்னைவிட்டுப் போயிடப் போறாளேன்னு பயம்!’ என்று தனக்குள் பொருமினாள்.   “என்னடா, இந்த சுந்தரை எப்பவோ பாத்த மாதிரி இருக்கேன்னு நினைச்சேன். அப்படியே அவங்கப்பாவை உரிச்சு வெச்ச மாதிரியில்ல இருக்கார்!”   சட்டென படுக்கையில் எழுந்து உட்கார்ந்துகொண்டாள் கவிதா. “சுந்தரோட அப்பாவை ஒங்களுக்குத் தெரியுமா?”   மங்களம் சற்று யோசித்தாள், விஷயத்தை எப்படிப் பக்குவமாகச் சொல்வது என்று. “அவங்கப்பாவோட போட்டோ தினமும் பேப்பரில வருமே!” சமாளிக்கப்பார்த்தாள்.   “மந்திரியா? அரசியல்வாதியா?”   “அதெல்லாமில்ல. பெண்டாட்டி வேற ஒருத்தனோட உறவு வெச்சிருந்ததால, திட்டமிட்டு அவளைக் கொலை செய்துட்டாருன்னு வழக்கு. இதோ, இந்தப் பாட்டிதான் மாப்பிள்ளைமேல கேஸ் போட்டது!”   சுந்தர் பெற்றோர் இருவரையும்  இழந்தது இப்படித்தானா! “தூக்குத் தண்டனையா?” மெல்லிய குரலில் கேட்டாள் கவிதா.   “ஊகும். `தக்க ஆதாரம் இல்லே’ன்னு அவரை விடுதலை செஞ்சாங்க. ஆனா, மனுஷன் தானே தூக்கு மாட்டிக்கிட்டு செத்தார், பாவம்!” எப்பவோ நடந்ததற்கு வருத்தப்பட்டாள். “வீட்டிலே பொம்பளை சரியா இல்லாட்டியும் கஷ்டம்தான்!” தான் சொல்ல வேண்டியதைச் சொல்லிவிட்டு, மங்களம் வெளியே நடந்தாள்.   `ஒழுங்கற்ற அம்மாவுக்குப் பிறந்தவன் மட்டும் நல்லவனாக இருக்க முடியுமா?’ இரவெல்லாம் குழம்பிக் கொண்டிருந்தாள் கவிதா.   மறுநாள். “நீங்க மொதல்லேயே எங்கிட்ட சொல்லியிருக்கணும், சுந்தர்! இப்படி, அம்மா சொல்லிக் கேக்கறப்போ, எனக்கு எவ்வளவு அவமானமா, அதிர்ச்சியா இருந்தது, தெரியுமா?” அடிக்குரலில் கேட்டுவிட்டு, கண்ணைத் துடைத்துக்கொண்டாள்.   இருவரது தேனீரும் ஆறிக்கொண்டிருந்தது.   “எதைச் சொல்லி இருக்கணும், கவி? நான் நிஜமாவே ஒழுக்கமில்லாத ஒரு அம்மாவுக்குப் பிறந்தவன்தானான்னு என் மனசில ஒரு பக்கம் உறுத்திக்கிட்டே இருக்கே, அதையா?” அவன் கோப்பையைக் கையில் எடுத்துவிட்டு, மீண்டும் கீழே வைத்தான். “அம்மா அழகுப் போட்டியில பரிசு வாங்கினவங்க. அதுவே அப்பா அவங்கமேல அவநம்பிக்கைப்பட காரணமாயிடுச்சாம். பாட்டி சொல்லிச் சொல்லி அழுவாங்க”.   வைத்த கண் வாங்காமல், அவன் வாயையே பார்த்துக்கொணிருந்தாள் கவிதா.   “ஒரு வேளை, அப்பாதான் சந்தேகப் பிராணியா இருந்து, மத்தவங்களோட அம்மா கலகலப்பா பேசிப் பழகினதை தப்பா புரிஞ்சுக்கிட்டு இருக்கலாம், இல்லியா? வார்த்தையால அப்பா ஓயாம குத்திக் குதர்றதை பொறுக்க முடியாம, அம்மா விவாகரத்துக்கு ஏற்பாடு செஞ்சாங்களாம். அதைத் தாங்கமுடியாம.., அதுக்குள்ளே..!” தான் பார்த்தேயிராத பெற்றோரைப்பற்றி நிறையவே யோசித்திருந்தான்.   “யாரை நம்பறது, யாரை வெறுக்கறதுன்னு எனக்கு ஒண்ணுமே புரியல, கவி. `எனக்கும் ஏன் எல்லாரையும்போல அப்பா, அம்மாவோட சந்தோஷமா இருக்கிறமாதிரி ஒரு நல்ல குடும்பம் அமையலே?’ன்னு நெனச்சு, நெனச்சு அழுதிருக்கேன், தெரியுமா? ஒன்னைப் பாத்தப்புறம்தான், எதிர்காலம்னு ஒண்ணு இருக்கிறதே நினைவு வந்திச்சு. இப்ப நீயும்..!” சுந்தரின் குரல் கேவியது.   அது அலுவலக காண்டீன் என்றும் பாராது, அவன் கையைத் தாவிப் பற்றினாள் கவிதா. “ஷ்..! எப்பவோ நடந்து முடிஞ்சதைப்பத்தி இப்ப என்ன!” என்று செல்லமாக மிரட்டினாள்.         காத்திருந்தவன்   “சங்கர் முந்திமாதிரி இல்லேம்மா. சிடுசிடுங்கிறாரு!”   சங்கரை அனுபமா தங்கள் வீட்டுக்கு அழைத்து வந்து அறிமுகப்படுத்தியபோது, தான் உண்மையை மறைக்காது  சொன்னது எவ்வளவு நல்லதாகப் போய்விட்டது!   ‘இவங்கப்பா காண்ட்ராக்டில வீடு கட்டற தொழிலாளியா இருந்தவரு. வேலை பாக்கிறப்போ ஒரு விபத்திலே போயிட்டாரு,’ என்று ஆரம்பித்து, வயிற்றுப் பிழைப்புக்காகத் தான் வேலை பார்க்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டதைத் தெரிவித்தாள்.   அனுபமாவின் அழகில் கிறங்கிப் போயிருந்தவனுக்கு அந்தஸ்து வித்தியாசம் ஒரு பொருட்டாகப்படாது என்று தான் எண்ணியது பொய்த்துவிட்டதே!   “விடுடி. ஏதோ, காதல், கீதல்னு நீதான் பேத்திக்கிட்டு இருந்தே! இப்பவாச்சும் புரிஞ்சுதா?” என்று மகளைச் சமாதானப்படுத்த முயன்றாலும், அத்தாயின் மனது துடித்தது.   அடுத்த காரியத்தில் இறங்கினாள். “அமெரிக்காவில இருக்கிற அந்த டாக்டர் ஒன்மேல ஆசைப்பட்டு, வலிய வந்து கேட்டான். நீதான் பிடிகுடுத்துப் பேசல. இப்ப என்ன சொல்றே?”   அனுபமாவுக்கும் அம்மா சொன்னபடி கேட்பதுதான் புத்திசாலித்தனம் என்று தோன்றிப்போயிற்று. ‘நீ சமையல்காரி மகள்தானே!’ என்று நாளைக்கே கொடுமைப்படுத்தி விட்டால்?   எப்போதும் தன்னைப் புகழ்ந்தபடியே இருந்தபோது தேவைப்பட்ட காதலனுடைய இன்னொரு முகம் தெரிந்தபோது, அதை ஏற்கும் துணிவிருக்கவில்லை அவளுக்கு.   “நான் என்ன செய்ய முடியும், சங்கர்?எனக்காகவே வாழறாங்க அம்மா. அவங்க காட்டற மாப்பிள்ளைக்குக் கழுத்தை நீட்ட வேண்டியது  கடமை இல்லையா?” என்று வசனம் பேசி, துளிக்கூட சலனமில்லாது,  மூன்று வருடப் பிணைப்பைத் துண்டித்துக்கொண்டாள்.   `இப்பவே இந்தக் கழுத்தை நெரிச்சுப் போட்டுடறேன். அப்புறம் எப்படி இன்னொருத்தனுக்கு அதை நீட்டுவே, பாக்கலாம்!’ துடித்த கரங்களையும், மனத்தையும் அடக்கினான் சங்கர்.   “வாழ்த்துகள்! கோடீஸ்வரியா மேல்நாட்டிலே வாழப்போறே! அப்போ இந்த ஏழையை எப்பவாவது நினைச்சுப் பாத்துக்க!” அடைத்த குரலில் சொல்லிவிட்டு, தலையை அதீதமாகக் குனிந்தபடி அவ்விடத்தைவிட்டு நகர்ந்தான்.   எத்தனை, எத்தனை கனவுகள்! எல்லாவற்றையுமே இல்லை குலைத்துவிட்டாள்!   (நாம்ப ரெண்டு பேருமே நல்ல அழகு. இல்லே, அனு? நான் பகுதி நேர மாடல். நீ -- கல்லூரியின் அழகு ராணி. நமக்குப் பிறக்கிற குழந்தையை அழகுப் போட்டிக்கு அனுப்பணும்!)   அழகாவது, மண்ணாவது!   அனுவின் பாராட்டுக்கென பார்த்துப் பார்த்து வளர்த்த மீசையையும், கிருதாவையும் வெறுப்புடன் பார்த்தான்.   தோற்றத்தில் கவனம் குறைய, அது வேறு திசையில் திரும்பியது.   என்னதான் படித்துப் பட்டம் வாங்கிவிட்டாலும், யோசிக்காமல் செலவழிக்க முடியாத தன் நிலையை எண்ணி, தன்னைத்தானே பார்த்துப் பரிதாபப்பட்டுக்  கொண்டான்.   மகனைப் பார்த்து லட்சுமி கலங்கினாள். “முப்பத்தி மூணு வயசு ஆகிட்டதேடா. இப்ப இல்லாம, எப்ப கல்யாணம் செய்துக்கப்போறே?” என்று அரற்றினாள்.   “எல்லாப் பொண்ணுங்களுக்கும் பணம்தாம்மா பெரிசு! அதான் ரெண்டு எடத்திலே வேலை பாத்து, குருவிபோல பணம் சேக்கறேன்!” தன்னை அழகால் மயக்கி, ஏமாற்றிய அனுபமாவைப்பற்றித் தாயிடம் தெரிவித்தான்.   “நல்ல பிள்ளைடா, நீ! இதுக்காகவா சாமியார் வேஷம் போட்டே? அந்தமாதிரி பணப்பிசாசோட குடும்பம் நடத்தினா, நல்லாவா இருந்திருக்கும்? அட, இந்தப் பொண்ணு இல்லாட்டி, ஒலகத்திலே வேற பொண்ணே கிடையாதா?”     சங்கர் சமாதானமடையவில்லை என்பதை அவன் தளர்ந்த உடலே காட்டிக்கொடுத்தது.   விடாப்பிடியாகத் தாய் தொடர்ந்தாள்: “இந்தமட்டும் காலைச் சுத்தின பாம்பு கடிக்காம விட்டுச்சேன்னு கடவுளுக்கு ஒரு கும்பிடு போடுவியா! என்னமோ.., தேவதாஸ் கணக்கா ஆடறியே!”   அவனுக்காக ஏதேதோ கூறினாலும், லட்சுமியின் மனமே ஆறுதல் அடையவில்லை.   தன் மகனை ஒரு பெண் புறக்கணிப்பதா?   வர வர, காலம் ரொம்பத்தான் கெட்டுவிட்டது. முன்பெல்லாம், `இதோ, இவர்தான் உன் புருஷன்!’ என்று கைகாட்டுவார்கள் பெரியவர்கள். முன்பின் தெரியாதவருடன், அவர் எப்படிப்பட்டவராக இருந்தாலும், சேர்ந்து வாழவில்லை நாங்களெல்லாம்?   போகிறது! ஏதோ சிறு பெண். பகட்டுக்கு ஆசைப்பட்டிருக்கலாம். அவளுடைய தாய்க்கு புத்தி எங்கே போயிற்று? பெண்ணைக் கண்டித்து இருக்க வேண்டாம்?   இப்போதிருக்கும் பெண்களுக்கு வெட்கம், மானம் எதுவும் கிடையாது. நாலு பேர் பார்க்க கைகோர்த்துக்கொண்டு, கண்டவனுடன் ஊர் சுற்றுவது, அவன் அலுத்தவுடன் வேறு ஒருத்தனை தேடிப்போவது! சீ!   தான் பார்த்தேயிராத அனுபமாவின்மேல் துவேஷத்தை வளர்த்துக்கொண்டாள் லட்சுமி. மகனைத் தன்னிடமிருந்து பிரிக்கப் பார்த்தவள் என்ற குரோதமும் அதில் கலந்திருந்தது.   மகனும் தன்னைப்போல் அவளை வெறுக்கத் தொடங்கியிருப்பான் என்று நம்பியிருந்தவளை அயரவைத்தான் சங்கர்.   “அம்மா! இன்னிக்கு அனுவைப் பாத்தேன். அவளுக்கு இன்னும் கல்யாணம் ஆகலே!” அவன் முகத்திலிருந்த பரவசம் அவளுக்கு ஆத்திரமூட்டியது.   “அதைப்பத்தி நமக்கென்ன! ஒன்னை `வேணாம்’னு திமிராப் போனவ இல்லே! அவ பேச்சு இனிமே எதுக்கு?”   சங்கருக்கு இருந்த மனநிலையில் தாயின் உணர்வுகளைப் புரிந்துகொள்ள முடியவில்லை.   “அந்தப் பணக்காரன் இருந்தானே, அவனுக்குக் குணமோ, அழகோ கிடையாதாம். அனு எங்கிட்ட, `அந்த ஆளு ஒங்க கால்தூசுகூட பெற மாட்டாரு, சங்கர்!’ அப்படின்னு அழமாட்டாக்குறையா சொன்னா!”   “இப்பத்தான் புத்தி வந்திச்சாமா?”   “கேளுங்களேன்! அவனோட காதலிங்களைப்பத்தி இவகிட்டேயே அளந்திருக்கான். இவ கலங்கிப்போயிருக்கா, பாவம்! `அங்க இதெல்லாம் சகஜம்! படிச்ச பொண்ணுங்கிறே, நீ என்ன இப்படி பத்தாம்பசலியா இருக்கியே!’ன்னு கேலி செஞ்சானாம்!”   “இப்போ அவனையும் விட்டுட்டு நிக்கறாளா?” லட்சுமியின் குரலிலிருந்த ஏளனத்தை அவன் கவனிக்கவில்லை.   “அதுவும் நல்லதுக்குத்தான். இல்லேம்மா? `நம்ப ரெண்டு பேருக்கும்தான் முடிபோட்டிருக்கு. அதை யாராலே மாத்த முடியும்?’ அப்படின்னு சொல்லிட்டு வந்தேன்”.   லட்சுமிக்குப் எரிச்சல் பிறந்தது. `இந்த ஆம்பளைங்களுக்கே மானம், ரோஷம் எதுவும் கிடையாது. காணாமப்போன பந்து கிடைக்கிறமாதிரியான சமாசாரமா காதலும், கல்யாணமும்? வேணாம்னு போனவ, இப்ப இவன் கையில நாலு காசு சேர்ந்திருக்கிறது தெரிஞ்சு போய், திரும்பி வந்திருக்கா. இவனுக்கு எங்கே போச்சு புத்தி? நாளைக்கே கல்யாணமாகி, இதைவிடப் பணக்காரனா ஒருத்தனைப் பாத்தா, என்ன செய்வாளாம்? இவ நாலு வருஷம் சங்கரோட சுத்திட்டு, வேற  ஒருத்தனைக் கட்டிக்க சரிங்கலாம். அந்த ஆம்பளை மத்த பொண்ணுங்களோட பழகினது மட்டும் தப்பாப் போயிடுச்சா?’ என்று, பொதுவாக எல்லா ஆண்களையும், அனுபமாவையும் மனதுக்குள் திட்டித் தீர்த்தாள்.    நீண்ட கைவிரல்களின் நுனியில் சிவப்புத்தொப்பிபோல் அழகாகச் சிவந்திருந்த மருதாணியைப் பார்த்தாள் அனுபமா. புன்னகை பிறந்தது.   தனித்திருக்கும்போது சங்கர் என்ன சொல்வார்? அவளுடைய அழகை எவ்வளவு புகழ்ந்தாலும் அலுக்காதே அவருக்கு!   பக்கத்தில் அமர்ந்திருந்த சங்கர், ஏதோ போட்டியில் வெற்றி பெற்றதுபோல் மிதப்பாக இருந்தான்.   மாலையும், கழுத்துமாக கணவருடன் சேர்ந்து மாமியாரை முதலில் நமஸ்கரித்த அனுபமா, ஆசீர்வாதத்திற்காகக் காத்திருந்தாள்.   அவளுக்கு மட்டும் கேட்கும் விதத்தில், “இன்னும் நீ சின்னப்பிள்ளை இல்ல. நிமிஷத்துக்கு நிமிஷம் எதை எதையோ நினைச்சு ஆசைப்படற புத்தியை இதோட விட்டுட்டு, பொறுப்பா நடந்துக்கப்பாரு!” என்ற வார்த்தைகள் வந்தன லட்சுமியின் உதட்டிலிருந்து.   சற்றும் எதிர்பாராத அந்தக் கண்டனத்தைக் கேட்டு, அனு மயங்கி விழுந்தாள்.   திருமணத்துக்கு வந்திருந்தவர்களுக்கு ஒரே குழப்பம். காதல் கல்யாணம் என்றார்களே!  ஒரு வேளை, மசக்கையோ?   `என்ன சீக்கோ உள்ளுக்குள்ளே! ஒடம்பு தளதளன்னு இருக்கிறதாலே மயங்கிட்டான்!’ என்று முணுமுணுத்தபடி, இரண்டு பெண்களின் உதவியோடு அனுபமாவைப் படுக்கையில் கிடத்தினாள் லட்சுமி.   ஒன்றும் புரியாது, பிரமையாக நின்றிருந்த மகனைப் பார்த்ததும், `என் பேச்சைக் கேட்டானா? நன்றாகப் படட்டும்!’ என்று கறுவத்தான் முடிந்தது அவளால்.   கசமுசா என்று எழுந்த குரல்கள் சங்கரின் காதிலும் விழாது போகவில்லை. அவனுக்குத் தலைகுனிவாய் இருந்தது.   `நல்லா யோசிச்சியாப்பா?’ என்று, கல்யாணத்துக்குமுன் அம்மாதான் எத்தனை தடவை கேட்டாள்?   அப்போதே யோசித்திருக்க வேண்டும். இனி என்ன செய்ய முடியும்!   `செய்து காட்டுகிறேன்!’ என்று கறுவிக்கொண்டான்.   அப்போது கண்விழித்த அவனது புது மனைவி, “மணிக்கணக்கில ஹோமப்புகையில ஒக்காந்திருந்தது! தலையை சுத்திக்கிட்டு வந்திடுச்சு!” என்றாள், மெல்லிய குரலில். கால் தடுக்கி, கீழே விழுந்த குழந்தை, அம்மா கவனிக்கிறார்கள் என்று தெரிந்ததும், பெரிதாக அழுதபடி இரக்கத்தைத் தேடுமே, அந்த மனப்பக்குவம்தான் அவளுக்கு இருந்தது.   சங்கர் பல்லைக் கடித்துக்கொண்டான். எங்கே தான் அவளை நெருங்கிவிடுவோமோ என்று வந்த வார்த்தைகள்!   “பெரிய பணக்காரனோட வாழப்போறோம்னு கனவு கண்டுக்கிட்டு இருந்தவ, இல்ல? யாரையோ மனசில வெச்சுக்கிட்டு, இன்னொருத்தனோட வாழ முடியுமா, என்ன!”   சங்கர் தன்மேல் கொண்டிருந்த காதலோ, எதுவோ, இன்னொருவனை நாடித் தான் போனபோதே அழிந்துவிட்டது! இப்போது குரோதமும், பழிவாங்கும் எண்ணமும்தான் அவ்விடத்தில்!   தன்மேலும் தவறு இல்லையா?   மனம் இடித்துக்காட்ட, அனுபமாவின் இன்பக்கனவுகள் பொடிப்பொடியாக நொறுங்கின.   நரகமான ஒரு வாழ்க்கையை எப்படித் தவிர்ப்பது என்று குழம்ப ஆரம்பித்தாள்.       பரத நாட்டியமும் சில பெண்களும்   “அம்மா! டான்ஸ் கிளாஸ் போகணும்!” காலில் செருப்பணிந்து, வெளியே கிளம்பத் தயாராக நின்ற லதா கையாலாகாதவளாய் முனகினாள். வன்செயல்களின் கூடாரமாக இருந்த அந்தப் புறம்போக்குப் பகுதியில் ஒரு பதின்மூன்று வயதுப்பெண் தனியாக நடக்க முடியாது.   மகளின் ஆர்வத்தைத் தடை செய்வதா, அல்லது கணவனின் இச்சைக்கு உடன்படுவதா என்று தேவகி குழம்பினாள்.   உள்ளே உட்கார்ந்திருந்தவனின் குரல் இரைச்சல்போல் கேட்டது: “எங்க இவ்வளவு சீக்கிரமா கிளம்பிட்டே, அதுவும் ஞாயித்துக்கிழமை காலையில?” நேரம், காலமின்றி, எப்போது வேண்டுமானாலும் மனைவியுடன் சல்லாபிக்கலாம் என்ற பேராவலுடன் வாராந்திர விடுமுறையை எதிர்நோக்கிக் கொண்டிருந்தவனது கேள்வியில் ஏமாற்றம், அதனால் எழுந்த கோபம்  தொக்கியிருந்தது.   முதல் நாளிரவு ஏதோ படத்தைப் பார்த்துவிட்டு, இருவரும் ஆட்டம் போட்டதை தேவகியும் நினைத்துப்பார்த்தாள். அந்த நெகிழ்ச்சியில் மயிர்க்கால்கள் குத்திட, உடலெங்கும் சிலிர்த்தது. அதன் எதிரொலியாக, இன்று பகலிலும் அந்த நிகழ்வு தொடரும் என்பதை அவள் அனுபவத்தில் அறிந்ததுதான்.   “வந்து.., லதா.. டான்ஸ்..,” என்று தயங்கினாள்.   “டான்ஸ் கத்துக்கறாளாம், டான்ஸ்! பெரிய சிம்ரன், பாரு, இவ! ஒம்பொண்ணு மேடையேறினா, பாக்கறவங்க சிரிப்பாங்க. மேடையே இடிஞ்சு விழுந்துடாதா!” என்றெல்லாம் இளக்காரமாகச் சொல்லிப் போனவன், “ எனக்குக் காலெல்லாம் குடையுது. ஒங்களுக்காகத்தானே  ஒரு நாளைக்குப் பன்னிரண்டு மணி நேரம் டாக்சி ஓட்டறேன்! சொந்தமா காடி வாங்கவும் விடமாட்டறாங்க. கிடைக்கிறதெல்லாம் ஓனருக்குக் குடுக்க வேண்டியதிலேயே சரியாப்போயிடுது!” என்று தன் விதியை மீண்டும் நினைவுபடுத்தினான்.   லதா உள்ளே வந்தாள். “சரிம்மா. நான் போகலே. அப்பா பாவம்! நீங்க அப்பா கால்லே எண்ணை தேய்ச்சுவிடுங்க!”   இந்த அறியாப்பெண்ணுக்கு எவ்வளவு தூரம் உண்மை புரிந்திருக்கிறது என்ற குழப்பம் எழுந்தது தேவகிக்கு. குற்ற உணர்ச்சியும், அவமானமும் ஒருங்கே எழுந்தன. “டீச்சர் ஏசமாட்டாங்க?”   லதா அதற்குப் பதில் சொல்லவில்லை. பள்ளியிலும் அவர்கள் இனத்திற்குத் திட்டு. நாட்டில் சிறுபான்மையினர். அதனால்,  எங்கும் மரியாதை கிடைப்பதில்லை. மலாய், சீனர், இந்தியர் என்று, வித்தியாசமில்லாது எல்லா ஆசிரியைகளும் திட்டுகிறார்கள். ஏன், இந்த டான்ஸ் டீச்சர்கூட, `வாயில விரல் போடாதேன்னு எவ்வளவு தடவை சொல்றது!’ என்று திட்ட, எல்லா மாணவிகளும் சிரிக்கவில்லை? ஏனோ, அவளைப் பார்த்தால் எல்லாருக்கும் திட்டத் தோன்றுகிறது!   சில மாதங்களுக்குமுன், `இன்னிக்கு டி.வியில நல்ல படம் ஓடுது!’ என்ற அவளது மறுப்பைமீறி, தாய் அவளை அந்த பரதநாட்டிய வகுப்பில் சேர்த்திருந்தாள் -- அருகிலிருந்த கோயிலில் இலவசமாகக் கற்றுக்கொடுக்கிறார்கள் என்பது ஒரு காரணம். அத்துடன், அந்த ஆறு மாடிப்பகுதியிலிருந்த எல்லா பெண்களும் நாட்டியம் பயிலப் போனார்கள்.   தொலைகாட்சி அருகிலேயே அமர்ந்து, வாய் நாட்டியம் நல்ல உடல்பயிற்சி என்று பக்கத்துவீட்டு அம்மாள் கூற, தேவகிக்கு ஆசை பிறந்தது. பெரிய எதிர்பார்ப்புடன் மகளை அவ்வகுப்பில் கொண்டு விட்டிருந்தாள், `என் மக கொஞ்சம் குண்டு, டீச்சர். கத்துக்குடுப்பீங்களா, டீச்சர்?’ என்ற கெஞ்சலுடன். (ஓயாது முறுக்கு, மிக்ஸ்சர், கச்சான் (நிலக்கடலை) என்று கொரித்தபடி இருந்ததால் லதா பெயருக்கு ஏற்றபடி கொடியாக இல்லை).   சில மாதங்களிலேயே, மகளின் வாய்க்குள்ளேயே இருந்த வலது கை  கட்டைவிரல் மற்ற விரல்களுடன் இணைந்து முத்திரைகள் பழகுவதைக் கண்டு தேவகிக்குக் கொள்ளை மகிழ்ச்சி.   இப்போது நாலைந்து வாரங்களாக, அவளை அழைத்துப்போக முடியவில்லை. வீட்டில் யாருக்காவது உடம்புக்கு ஏதாவது வந்துவிடும். இல்லை, உறவினர் யாராவது இறந்திருப்பார்கள். ஏதோ ஒரு காரணம்!   இந்தக் கஷ்டங்கள் டான்ஸ் பழகிக்கொடுக்கும் டீச்சருக்குப் புரிகிறதா! `போன வாரம் ஏன் வரவில்லை?’ என்று திட்டுவாள்.    “எல்லாரும் வந்திருக்கீங்களா?”   பல மாணவிகள் ஒரு குரலில் பதிலளித்தார்கள்: “லதா வரல்லே, டீச்சர்!”   தலையே ஒரு முறை பக்கவாட்டில் ஆட்டிக்கொண்ட நடன ஆசிரியை, “நீங்க ஒழுங்கா வந்தாத்தான் பொங்கலுக்கு நம்ப கோயில்ல ஆடமுடியும்!” என்றபடி, கருமமே கண்ணாக, தலைக்கோலை இரண்டு தட்டு தட்டினாள். பூமியை வணங்கிவிட்டு, ஆடத்தொடங்கினார்கள் அப்பெண்கள்.    “தேவகி! ஒங்க மகளும் பொங்கலுக்கு ஆடப்போகுதா?” அவசரமாக தேத்தூள் வாங்க கீழே இருந்த கடைக்குப் போனபோது, அங்கு யாரோ கேட்டார்கள்.   நான்கு பேருக்கு முன்னால் ஆடும் அளவுக்கு மற்ற பெண்கள் தேர்ந்துவிட்டார்களா?   தேவகி மாடிப்படிகளில் தாவி ஏறினாள். “லதா! புறப்படு சீக்கிரம்! இன்னிக்கு டான்ஸ் கிளாஸ் இருக்கில்ல?”   லதா காதில் விழாதமாதிரி இருந்தாள். இன்று பள்ளிக்கூடமும் இல்லை. டீச்சர்களிடம் ஒரு நாளாவது திட்டு வாங்காமல் இருக்கலாம் என்று பார்த்தால், இந்த அம்மா ஒன்று!   இந்தப் பெண் ஏனிப்படி எதிலும் பிடிப்பின்றி இருக்கிறாள் என்ற ஆயாசத்துடன், “குளிச்சுட்டு, புறப்படு சீக்கிரம்!” என்று துரிதப்படுத்தினாள் தாய்.   அப்படியும் லதா எழுந்திருக்கவில்லை.   “நல்ல பொண்ணில்ல! வாம்மா! கமலா, ரேவதி எல்லாரும் ஆடப்போறாங்களாம். யார்கிட்டயாவது கேட்டு, ஒனக்கும் ஜிமிக்கி, கழுத்துக்கு முத்து மாலை எல்லாம் வாங்கித் தரேன். டீச்சர் பளபளான்னு பட்டு மாதிரி இருக்கிற டிரெஸ் வாங்கிக் குடுப்பாங்க!”   “படம் முடிஞ்சுடும்,” என்று முணுமுணுத்தபடியே எழுந்தாள் லதா.   அவர்கள் போனபோது வகுப்பு ஆரம்பித்திருந்தது. தரையையும், ஆசிரியையும் தட்டிக் கும்பிட்டுவிட்டு, பிற பெண்களுடன் சேரப்போனாள் லதா.   “இங்க இருக்கு வீடு! இவ்வளவு லேட்டா வந்திட்டு, எங்க பாதி டான்ஸில..? கொஞ்சம் இரு!” டீச்சரின் எரிச்சலான குரலைவிட பிற பெண்களின் பரிதாபப் பார்வைதான் அவளால் பொறுக்க முடியாததாக இருந்தது. அவளைச் சமாதானப்படுத்த கட்டை விரல் வாயை நாடியது.   `வாயிலே விரல் போடாதேன்னு எத்தனை தடவை சொல்லியிருக்கேன்? அதுவும் கோயில்லே!’ என்று எப்போதும் கண்டிக்கும் ஆசிரியை அன்று அவளை அலட்சியப்படுத்தினாள்.   `எவ்வளவு முயன்றாலும் சிலபேரைத் திருத்த முடியாது. அவர்களுக்காகச் செலவிடும் நேரத்தில் உபயோகமாக வேறு ஏதாவது செய்யலாம்!’ என்று முடிவெடுத்தவள்போல், பிற மாணவிகளிடம் தன் கவனத்தைச் செலுத்தினாள்.   “சிரிச்ச முகமா இருக்கணும். மொறைச்சுக்கிட்டு ஆடினா, யாருக்கு ஒங்களைப் பாக்கப் பிடிக்கும்? அதுக்காக, புலித்தோலுன்னு காட்டற இடத்தில சிரிச்சு வைக்காதீங்க. எத்தனை பேர் புலி சிரிச்சு பாத்திருக்கீங்க?”   சிரிப்பை அடக்க முடியாது தோழிகள் ஆடியபோது, லதாவுக்கு மட்டும் அழுகை வந்தது. மூக்கை உறிஞ்சினாள்.   மகளைப் பார்த்த தேவகியின் குற்ற உணர்ச்சி இன்னும் அதிகரிக்க, “டீச்சர்!” என்று மெள்ள அழைத்தாள்.   “ஷ்..! கொஞ்சம் இருங்க. ஒத்திகை நடக்குது!”   “விழாவில லதாவும் ஒரு மூலையில நின்னு ஆடட்டுமே,  டீச்சர்!”   முகத்தை நன்றாகத் திருப்பி, தேவகியைப் பார்த்தாள் ஆசிரியை. முகத்தில் கடுமை. “நான் வீட்டில கைப்பிள்ளையை விட்டுட்டு, இருபதும் இருபதும் நாப்பது மைல் கார் ஓட்டிட்டு, இருக்கிற ஒரு லீவு நாளிலேயும் இங்க வரேன். எதுக்கு? ஒங்க குழந்தைங்க முன்னுக்கு வரணும்னு. ஆனா, இங்க, பக்கத்திலே, இருக்கிற இவளுக்கு ஒழுங்கா வர முடியல!” லதாவைச் சுட்டிக் காட்டியபடி பொரிந்தாள்.   “அவங்கப்பாவுக்கு..,” மேலே எதை, எப்படிச் சொல்வது என்று விழித்தாள் தேவகி.   `நிறுத்துங்கள்!’ என்பதுபோல் டீச்சரின் கை பாவனை காட்டியது. “அடுத்தடுத்து என்ன வருதுன்னு தெரியாம, லதா மத்தவங்களைப் பாத்துப் பாத்து ஆடறா. அப்படி அரைகுறையா ஆடினா, பாக்கறவங்க என்னைப்பத்தி என்ன நினைப்பாங்க?” படபடப்பில் குரல் ஓங்கியது. `ஓசிக்கிளாசுன்னா, மட்டமாத்தான் இருக்கணுமா?”   பிறகு, அவர்கள் அங்கிருப்பதையே மறந்தவளாக, “கோகிலா! `ஆதிமூலமே’ங்கிற இடத்திலே இடது காலை இன்னும் கொஞ்சம் நீட்டும்மா!” பேசுவது அவளேதானா என்று சந்தேகம் எழுமளவுக்கு குரல் குழைந்திருந்தது.   தொடர்ந்து அவள், “கோகிலாவைப் பாத்து மத்தவங்க கத்துக்கணும்!” என்றது யாருக்காகச் சொல்லப்பட்டது என்று எல்லாரும் நன்றாகவே புரிந்தது.   சிறு வயதிலேயே போலியோவால் பாதிக்கப்பட்டு, சற்று விந்தி நடந்த பெண் கோகிலா. `தினமும் காலையில முளைவிட்ட சுதேசிக் கச்சானை பச்சையாகவே சாப்பிடு,’ என்ற டீச்சரின் அறிவுரையைப் பின்பற்றியதில், தசைகள் வலுவடைந்திருந்தன. வாரந்தவறாது, நாட்டிய வகுப்புக்கு வந்தாள். இப்போது தன்னம்பிக்கையும் வந்திருந்தது. தன் உடல் குறையையும், அதன் பாதிப்பான உணர்ச்சிப்பெருக்கையும் மறந்தாள். நிமிர்ந்து நிற்க முடிந்தது.   அவளது துணிவை, ஊக்கத்தை, பாராட்டும் விதமாக, முன்வரிசையில் நின்று ஆடும் வாய்ப்பை அவளுக்கு வழங்கியிருந்தாள் டீச்சர்.   கோகிலாவையே பொறாமையுடன் வெறித்தாள் லதா.   உதடுகள் பிதுங்க, வீட்டுக்கு நடந்தாள். “கோகிலாவுக்கு சரியாவே நடக்க முடியாதும்மா. அவகூட ஆடறா. என்னை மட்டும்..டீச்சர்..!” மீதியை அவளுடைய விம்மல் சொல்லிற்று.   வீட்டை அடைந்ததும், “என்னை அம்போன்னு விட்டுட்டு, மகாராணி எங்கே போயிட்டீங்க?” என்று வேடிக்கையாகக் கேட்ட கணவனிடம், “ஒங்களுக்கு வேற வேலை என்ன? எப்பவும் படுக்கையும்,  தூக்கமும்தான்!” என்று எரிந்து விழுந்தாள் தேவகி.   அத்துடன் நிறுத்திக்கொள்ளாமல், “அதான் நாம்ப இப்படியே சீரழிஞ்சுக்கிட்டு இருக்கோம்!” என்று சொல்லியபடி தானும் அழ ஆரம்பித்தாள்.         அம்மாபிள்ளை   பூங்கோதையினருகே சிறியதொரு மரக்கட்டிலில் கண்ணை மூடிப் படுத்திருந்தது அவனது முதல் சிசு.   `அது இனி கண்ணைத் திறந்தாலும் ஒன்றுதான், மூடினாலும் ஒன்றுதான்!’ என்று நினைக்கும்போதே ஏதோ நெஞ்சை அடைத்துக்கொண்டது.   “ஒங்களுக்கு நான் என்ன கொறை வெச்சேன்? இப்படிப் பண்ணிட்டீங்களே!” யாராவது ஏதாவது கேட்டால், ஓரிரு வார்த்தைகள் மட்டும் பேசும் பூங்கோதை அன்றுதான் முதன்முதலாக அவ்வளவு ஆக்ரோஷத்துடன், சுயமாகப் பேசினாள். அதுவும் கணவனிடமே!   அவளுக்கு விடையளிக்கும் திறனின்றி, தங்கராசு தலைகுனிந்தபடி, ஆஸ்பத்திரி அறையைவிட்டு வெளியேறினான்.   அறைக்கு வெளியே நின்றிருந்த கோமளம் கண்ணில் வேதனையுடன் வெளிநடந்த மகனைப் பார்த்தாள்.   `ஒன்னை எவ்வளவு ஒசத்தியா நினைச்சிருந்தேன்! சீ!’ அவள் மனதில் நினைத்தது அவனுக்குக் கேட்டது.   மனைவி இருக்கையிலேயே கேடுகெட்ட  பெண்களை தேடிப் போயிருக்கிறான்!   பத்து வயதுவரை தன் மடியிலேயே வைத்துக் கொஞ்சிய மகன்!       “ஒங்கப்பாமாதிரி நீயும் என்னை விட்டுட்டுப் போயிடாதே, தங்கம்!” சிறுவயதில் அம்மா ஓயாது அரற்றியது அவனுக்குப் புரியத்தான் இல்லை. அப்பா அவர்களுடன்தானே இருந்தார்?   குழப்பத்தினூடே, தனக்கு ஒவ்வொன்றையும் பார்த்துச் செய்யும் அம்மாவின்மேல் பரிதாபம் உண்டாயிற்று. அவளுடைய கழுத்தை இறுகக் கட்டிக்கொண்டான்.   எல்லாரும் கடவுளுக்குப் படையல் செய்தால், அம்மாவுக்கு அவன்தான் தெய்வம். அவள் எது சமைத்தாலும், அவன் சாப்பிட்டுப் பார்த்ததும், `பிடிச்சிருக்கா தங்கம்?’ என்று பல முறை கேட்டு, தன் சம்மதத்தைக் காட்ட அவன் தலையாட்டினால்தான் இன்னொரு முறை அதைச் செய்வாள்.   ஒரு முறை, ஏதோ நூதனமான உணவுப் பண்டத்தைத் தயாரித்து, அதை இவன், `நல்லாவேயில்லையே!’ என்று சொல்லிவிட, அவள் துடித்ததைப் பார்த்து, இனி அம்மா மனம் நோக எதையும் சொல்லக்கூடாது என்று நிச்சயித்துக்கொண்டான்.   அன்றையிலிருந்து, எது சொல்வதற்கு முன்பும், `நான் இப்படிச் சொன்னால், அம்மா எப்படி எடுத்துக்கொள்வாள்?’  என்று யோசித்துப் பேச ஆரம்பித்தான். அதனால் பேசுவதே அபூர்வமாகிப் போயிற்று.   தட்டில் அம்மா என்ன போட்டாலும், எவ்வளவு போட்டாலும், சாப்பிட்டான். `குண்டு’ என்று சகமாணவர்கள் கேலி செய்தபோது, `எங்கம்மாவுக்கு நான் இப்படி இருந்தாத்தான் பிடிக்கும்!’ என்று மறுமொழி அளிப்பான், வீம்பாக.   அதிசயமாக ஒருமுறை, “எங்க ஸ்கூல்ல எல்லாரையும் உல்லாசப் பயணம் கூட்டிட்டுப் போறாங்கம்மா. நாலு நாள்! நானும் போறேனே!” என்று அம்மாவின் கழுத்தைக் கட்டிக் கொஞ்சியபோது, “என்னைத் தனியா விட்டுட்டுப் போக ஒனக்கு அவ்வளவு ஆசையா, தங்கம்?” என்று அழுகைக்குரலில் கேட்ட கோமளம், அன்று பூராவும் எதுவும் பேசாது, எதையோ பறிகொடுத்ததுபோல வெறித்துப் பார்த்துக்கொண்டிருந்தாள்.   மறுநாள் எல்லா மணவர்களும் பெயரைப் பதிவு செய்யும்போது, “ஏன் தங்கராசு, நீ வரலே?” என்று அதிசயப்பட்டுக் கேட்டாள் ஆசிரியை.   “அவன் அவங்கம்மாவைவிட்டு எங்கேயும் வரமாட்டான், டீச்சர்!” யாரோ ஒருவன் துடுக்காகச் சொல்ல, எல்லாரும் சிரித்தார்கள்.   இந்த மாதிரி ரௌடிகளுடன் ஊர் சுற்றுவதற்கு, வீட்டு வாசலில் தனக்கென்று அம்மா வாங்கிப் போட்டிருந்த ஊஞ்சலில் உட்கார்ந்து பொழுதைக் கழிக்கலாம்!   இவன் ஒதுங்க ஒதுங்க, மற்ற பையன்களின் தொல்லை அதிகமாயிற்று. போதாத குறைக்கு, இப்போதெல்லாம் அப்பாவும் சேர்ந்துகொண்டார்.   தானுண்டு, தன் நண்பர்கள் உண்டு என்றிருந்தவருக்கு அப்போதுதான் தனக்கு ஒரு மகன் இருக்கிறான் என்ற பிரக்ஞையே வந்திருந்தது.   “இந்தா! அவனை அவன் வயசுப் பசங்களோட பழக விடு. இப்படி, வீட்டிலேயே பிடிச்சு வெச்சுக்கிட்டு!” பொங்கிய ஆத்திரத்தில் பல்லைக் கடித்துக்கொள்ள, முணுமுணுப்பாக வந்தது குரல்.   அதுவே பொறுக்கவில்லை கோமளத்திற்கு. “எல்லாம் எனக்குத் தெரியும். வீட்டிலேயே தங்காம, கூட்டாளிங்களோடேயே பொழுதைக் கழிக்க.., ஒவ்வொருத்தரைப்போல, என் மகன் ஒண்ணும் சூதாடியோ, குடிகாரனோ இல்லே!”   சூதாட்டம் தந்த போதையில், `இதைவிட வேறு சுகமில்லை!’ என்று தோன்றிப் போயிருந்தது அவருக்கு. திருமணமாகிய சில வருடங்களிலேயே, மனைவியை நாடுவதில் நாட்டம் அறவே போயிற்று. அதனாலேயே அவளுடைய ஏளனத்துக்கும், வெறுப்புக்கும் தான் பாத்திரமாகியிருந்தது அவருக்குத் தெரிந்துதான் இருந்தது.   இப்போது தான் அதிகம் பேசினால், தன் குறையை உரக்க விமர்சித்துவிடுவாளோ என்ற பயம் எழ, வாய் அடைத்துப்போயிற்று. `அம்மாவும், பிள்ளையும் எப்படியோ தொலையட்டும்!’ என்று கைகழுவிவிட்டார்.    மகனையொத்த இளைஞர்கள் காதல், கீதல் என்று அலைந்து, தான்தோன்றித்தனமாக எவளையோ கல்யாணம் செய்துகொண்டு பெற்றோரைப் புறக்கணித்துவிட்டுப் போவதைப் பார்க்கையில், கோமளத்திற்கு அவனைப்பற்றி அபாரப்பெருமை எழும்.   `எங்க தங்கத்தைப்போல உண்டா! படிச்சான், வேலையில சேர்ந்தான். `இந்தாங்கம்மா,’ன்னு அப்படியே சம்பளப் பணத்தை என் கையில குடுத்துடறான். ஒரு சிகரெட்டு பிடிச்சிருப்பானா, இன்னிவரைக்கும்!’ எதிரில் யாரும் இல்லாவிட்டாலும்கூட தானே மகன் பெருமையைப் பேசிக்கொண்டிருப்பாள், சலிக்காது.   தங்கராசு நிச்சலனமாக இருந்தான். அம்மா சொன்னால் மகன் முடி வெட்டிக்கொள்ளப் போனான். எந்தக் கடையில் எப்படிப் பேரம் பேசி சாமான் வாங்க வேண்டும் என்று ஒவ்வொரு முறையும் உபதேசம் நடக்கும்.   அம்மா இல்லாத ஒரு உலகத்தைக் கற்பனை செய்யக்கூட தங்கராசுவுக்குப் பயமாக இருந்தது. அம்மாவே பார்த்து முடித்த பெண்ணின் கழுத்தில் தாலி கட்டினான், அசட்டுச்சிரிப்போடு.   அவனுக்குத் தெரியாது, பலரும் கோமளத்திடம், `ஒனக்கு வயசாகலே ஒரு மருமக வந்தா ஒனக்கு நல்லதுதானே?’ என்று கேட்டதன் விளைவு அது என்று.   மகனுடைய அன்புக்காக மருமகளுடன் போட்டி போட வேண்டியிருக்குமே என்று முதலில் பயந்த கோமளம், மிகவும் சாதாரணமான ஒருத்தியைத் தேர்ந்தெடுத்தாள்.   பூங்கோதை அம்மா மாதிரியே தெரிந்தாள்  தங்கராசுவுக்கு.   முரட்டுத்தனமாகப் பேசியோ, நடந்தோ அவளை நோகடிக்கக்கூடாது என்று தோன்றிப்போயிற்று. ‘வேறொரு பெண்ணை -- என்னதான் அவள் மனைவியாக இருந்தாலும் -- நான் நாடினால், அம்மாவுக்கு வருத்தமாக இருக்காது? என்ற குழப்பம் வேறு எழுந்தது.   கல்யாணமாகி இரண்டு வருடங்களுக்குப் பிறகுதான் தன்னிடம் ஏதோ குறை இருக்கக்கூடும் என்ற சந்தேகம் எழுந்தது. ஏதோ வேகத்தில், உடன் வேலை செய்யும் ராமுவிடம் சொல்ல, மன்மதக்கலையைத் தொழிலாகக் கொண்டிருந்த பெண்களின் அறிமுகம் கிடைத்தது. அந்த அனுபவம் அளித்த வேகத்தில் மனைவிக்குக் கணவனாக இயங்க முடிந்தது.   தான் தகப்பனாகப் போகிறோம்! தங்கராசுவுக்குள் ஒரு நிறைவு. முதன்முறையாக, அம்மா சொல்லிக் கொடுக்காமல் ஒரு காரியத்தைச் செய்திருக்கிறோம்!   ஆனால், அந்தப் பெருமையும், பூரிப்பும் நிலைக்கவில்லை.   “குழந்தைக்குப் பிறவியிலேயே பார்வையில்லை. கருவிலேயே காம நோயால் பாதிக்கப்பட்டு..,” என்று டாக்டர் கூறிக்கொண்டே போனபோது, தங்கராசுவுக்கு ஒன்றுதான் புரிந்தது. தன்னால் எதையுமே உருப்படியாகச் செய்ய முடியாது.   “எனக்கு ஒண்ணுமே தெரியாதும்மா. ராமுதான் சொல்லிக்குடுத்தான்!” என்று சிறுபிள்ளையாகவே ஆகி, பயத்தில் திக்கியபடி அவன் கூறியபோது, கோமளத்தின் இதழ்களில் ஒரு சிறு புன்னகை.   மகனைப் பிறரிடம் இழந்து, தனிமைக்கு ஆளாகிவிடுவோமோ என்ற பயம் இனி கிடையாது. அவன் என்றும் அவள் குழந்தைதான்!         காலம் மாறவில்லை   ஏற்கெனவே பஞ்சடைந்திருந்த கண்கள் பசியிலும், தாகத்திலும் இன்னும் மங்கலானது போலிருந்தன. அதற்கு மேலும்   தாக்குப்பிடிக்க முடியாது, “அம்மா சுசீலா!” என்று ஈனஸ்வரத்தில் அழைத்தாள் முதியவள்.   உரக்க அழைத்தாலே வராத மருமகள் இப்போது மட்டும் காதில் வாங்கிக்கொள்வாளா, என்ன!   “குடிக்க கொஞ்சம்..,” அதற்குமேல் பேச முடியாது இருமல் அவளை அலைக்கழைத்தது.   தனது பெரிய உடலைத் தூக்கமுடியாது தூக்கிக்கொண்டு வந்த சுசீலாவுக்கு ஏக எரிச்சல். “அதான் கொஞ்சம் பேசினலே இருமுதில்ல? வாயை மூடிக்கிட்டு இருக்கிறது!”   “என்னோட..!” மீண்டும் இருமல்.   “என்ன?” உறுமல்.   `என்னோட பென்சனுக்காக என்னை ஒன் வீட்டிலே வெச்சுக்கிட்டு இருக்காம, மகள் வீட்டுக்கு அனுப்பிடேன்!’ என்று கேட்கத்தான் நினைத்தாள் முதியவள்.   ஆனால் பயத்தில் சொல்லவந்தது மறந்தே போயிற்று.   மகள் வீடுதான் சிறியது. மனமோ விசாலமானது. அங்கு போனால், சாப்பாட்டுக்கும், குடிநீருக்கும் காசு கேட்கமாட்டாள். பணம் கொடுத்தாலும் வாங்கமாட்டாள். `நான் சின்னப்பிள்ளையா இருக்கிறப்போ, எங்கிட்ட காசு வாங்கிட்டா சோறு போட்டீங்க?’ என்று முகத்தைச் சுருக்கி, செல்லமாய் முறைப்பாள். வாய் திறந்து தாய் எதுவும் கேட்பதற்குமுன், பக்திப் புத்தகங்கள் வாங்கி, அதை பேரப்பிள்ளைகளை விட்டுப் படிக்கவும் வைப்பாள்.   ஆனால், அவளை நெருங்கவிடாது செய்து, `நடமாட முடியாத மாமியாரை வைத்துக் காப்பாற்றுகிறேன்!’ என்று தன் பெருந்தன்மையை நான்குபேரிடம் மருமகள் பெருமை பேச, தான் அங்குதான் அல்லல்பட்டாக வேண்டும் என்பது முதியவளுக்குப் புரியவில்லை.    35 ஆண்டுகளுக்குப்பின்   “அம்மா எங்கே, சாரு?”   அலட்சியமாக வந்தது பதில். “அவங்க ரூமில ஒக்காந்து, ஏதாவது குருட்டு யோசனை செய்துக்கிட்டிருப்பாங்க!”   “டி.விதான் ஓடுதில்ல? கூப்பிடேன். பாத்துட்டுப் போகட்டும், பாவம்!”   “பாவமென்ன பாவம்! பிள்ளைங்க ஆசையா கார்ட்டூன் பாக்கறாங்க. இவங்க விடுவாங்களா! தமிழிலே இருக்கிற கண்ராவி தொடரையெல்லாம் ஒண்ணு விடாம பாத்தாகணும்!”   “அவங்களுக்கு அதானே புரியுது!”   “இப்ப வர்றதெல்லாம் சின்னப்பிள்ளைங்க பாக்கறமாதிரியா இருக்கு? பெரியவங்க - சின்னவங்க மரியாதை இல்லாம ஒருத்தரை ஒருத்தர் அடிச்சுக்கிறாங்க, வாயில வந்தபடி கெட்ட வார்த்தை பேசறாங்க. அதையெல்லாம் பாத்து தானும் கத்துக்கிட்டு, அத்தையும் இதுங்களோட சண்டைக்கு நிப்பாங்க, `எனக்குப் பிடிச்சதைப் போடுங்கடா’ன்னு!”   மனைவியின் புகாரைக் கேட்டதும், மகனுக்கும் தாயின்மேல் ஆத்திரம் வந்தது. “இவங்களோட பெரிய தொல்லையாப் போச்சு. வயசானா, ராமாயணம், மகாபாரதம்னு எதையாவது படிச்சு, போற வழிக்குப் புண்ணியம் தேடிக்கணும். அம்மாவுக்கோ புத்தகங்களைக் கையால் தொடவே பிடிக்கல. அட, அவங்ககிட்ட காசு பணமா இல்ல? சொந்தத்திலே ஒரு டி.வி வாங்கி, ரூமில வெச்சுக்கறதுக்கு என்ன!”   சாரு உதட்டைச் சுழித்தாள். “ஒங்கம்மாதானே? கேக்காம இருப்பாங்களா? நான்தான் கூடவே கூடாதுன்னுட்டேன்”.   “ஏன் சாரு?”   “புரியாம பேசறீங்களே! இந்தப் பசங்க பாட்டி ரூமூக்குப்போய் கண்டதையும் பாத்து, இளிச்சுக்கிட்டு நிக்கறதுக்கா? இப்பவே வீட்டுப்பாடம் ஒழுங்காப் பண்ணறதில்லே!”   கணவன் அடங்கிப்போனான்.   “அதான் நான் கண்டிப்பா சொல்லிட்டேன், `பேசாம ஒங்க ரூமிலேயே ஓய்வா இருங்கத்தை. சாப்பாட்டையும் அங்கேயே அனுப்பறேன்’னு!”   “அதுவும் சரிதான்!” என்று ஒத்துப்பாடினான் சுசீலாவின் மகன்.   தனது அ(சி)றையில் சுவற்றையே வெறித்தபடி அமர்ந்திருந்த பாட்டிக்கு, “அம்மா சுசீலா! குடிக்க கொஞ்சம் தண்ணி கொண்டு வாயேன்!” என்று எங்கிருந்தோ மாமியாரின் குரல் கேட்டது.         மன்னிப்பு   காலை ஏழு மணிக்குள் தலைக்குக் குளித்துவிட்டு, ஈரத்தலையில் ஒரு துண்டைச் சுற்றிக்கொண்டு, வாசலில் கிடந்த மலேசிய நண்பனை எடுக்க வந்தாள் பாரு.   தொலைபேசி அழைத்தது.   `யார் இவ்வளவு சீக்கிரம்?’ என்ற யோசனையுடன் உள்ளே போய், `ஹலோ, வணக்கம்!’ என்றாள் அசுவாரசியமாக.   முகமன் சொல்லாது, “துர்கா போயிட்டாளாம்!” என்ற குரல் -- தோழி கமலினியுடையது.   “எங்கே?” என்று வாய்வரை வந்த கேள்வியை அடக்கிக்கொண்டு, எதுவும் பேசத் தோன்றாது வெறித்தாள் பாரு.   `தொலைந்தாள்!’ என்று ஒரு அலாதி நிம்மதி எழுந்தது.   அடுத்து ஏதேதோ பேசிக்கொண்டே போன கமலினியின் குரலில் மனம் பதியவில்லை.   தன் ஆருயிர்த்தோழி என்றெண்ணிய துர்கா! அப்படி ஒரு துரோகம் நினைப்பாளா தனக்கு?   வாரம் ஒருமுறை கணவருடன் சிவன் கோயிலுக்குப் போகும்போதெல்லாம், அருகிலிருந்த அவள் வீட்டுக்குப் போவாளே! அப்போதெல்லாம் சிரித்துச் சிரித்துப் பேசியதெல்லாம் நாடகமா?   “இனிமே அதோட வீட்டுக்கு என்னைக் கூப்பிடாதே!” என்று கண்டிப்பான குரலில், அதுவும் அஃறிணையில் கணவர் கூறியபோது ஆச்சரியமாக இருந்தது பாருவுக்கு. தொடர்ந்து, “க..டை!” என்ற கெட்ட வார்த்தையை அவர் பிரயோகித்தபோது, அப்படியெல்லாம் யாரையும் துச்சமாகப் பேசுபவர் இல்லையே என்று அவள் யோசனை போயிற்று. “ஏன்?”   அவள் கேள்விக்கு அவர் பதில் சொல்லவில்லை. “கூப்பிடாதே. அவ்வளவுதான்!” என்று முரட்டுத்தனமாகக் கூறிவிட்டு அப்பால் விரைந்தார்.   பாரு, துர்கா இருவரும் ஆண்டு தவறாது, தியாகராஜ ஆராதனையை ஒட்டி நடக்கும் விழாவில் பஞ்சரத்ன கிருதிகளைப் பாடுவார்கள்.   ஒருமுறை, துர்காவின் பாட்டில் விளையாட்டாய் ஏதோ தப்பு கண்டுபிடித்துச் சிரித்துவிட்டாள் பாரு.   துர்காவுக்கு வந்ததே ஆங்காரம்! “பேசாம பாடறதுன்னா பாடு. இல்லாட்டா, வாயை மூடிண்டு வீட்டிலேயே இரு!” என்று கட்டைக்குரலில் அலறிவிட்டு அவள் வெளியேறியபோது, கூடப் பாடுபவர்கள், நிகழ்ச்சியை நடத்துபவர்கள் எல்லாருமே விதிர்விதிர்த்துப் போனார்கள்.   முதலில் அவமானமாக உணர்ந்த பாருவுக்கு, கணவர் அவளைக் கவனிப்பதேயில்லை, அவருடைய உத்தியோகம்தான் அவருக்கு மனைவி என்றெல்லாம் துர்கா தன்னிடம்  குறைப்பட்டுக் கொண்டது நினைவிலெழுந்தது. `பாவம்! என்னிடம் அந்த ஆத்திரத்தைக் காட்டியிருக்கிறாள்!’ என்று, கொந்தளித்த மனதை சமாதானப்படுத்திக் கொண்டாள்.   அதற்கடுத்த மாதம் ஒரு கச்சேரியில் துர்காவைப் பார்த்ததும், புன்னகையுடன் அவள் அமர்ந்திருந்த இடத்துக்கு விரைந்தபோது, தரையில் ஏதோ தேடுவதுபோல குனிந்து, அவளை தவிர்த்தது ஏன்?   அடுத்தடுத்து பல முறை அதேபோல் நடக்க,  “துர்காவுக்கு ஏனோ என்னைப் பிடிக்காம போயிடுத்து!” என்று குழந்தைபோல் கணவரிடம் முறையிட்டபோது, அவர் நிதானமாக, “அது நீ செஞ்ச எதனாலேயுமில்லே!” என்றார்.   அடுத்து அவர் கூறியது!   இவளா? இவளா!   எவ்வளவு உயர்வாக எண்ணியிருந்தோம் தோழியைப்பற்றி!   “நாம்ப கடைசியா அவ வீட்டுக்குப் போனோமே, அப்போ..,” முகத்தில் வேதனையும், அவமானமும் ஒருங்கே கொப்பளிக்க, அன்று நடந்ததை நினைவு கூர்ந்தார் அவர்.   அடுத்த பல நாட்கள் அவருடைய வார்த்தைகளையே அசைபோட்டாள் பாரு.   அந்தப் பாவி சிரித்து சிரித்துப் பேசியதெல்லாம் தன்னைப் பார்த்த பூரிப்பில் இல்லையா? தன் கணவரை வசப்படுத்தத்தானா?   `மடியாகப் பூஜை செய்கிறேன் பேர்வழி’ என்று ரவிக்கை போடாது அரைகுறையாக உடுத்து, பரிமாறும்போது ஒரு கையால் லேசாகப் புடவையை விலக்கி, கண்ணால் வேறு சமிக்ஞை செய்வாளா ஒருத்தி?   பாருவால் நம்ப முடியவில்லை. நம்பப் பிடிக்கவில்லை.   “ஒரு வேளை புடவை நெகிழ்ந்துபோனதை நீங்கதான் தப்பா,” என்று, தானே நம்ப முடியாத ஒரு காரணத்தைக் கற்பித்துக்கொண்டபோது, “ஒங்கிட்டபோய் சொல்றேனே!” என்று கத்தினார் கணவர். “எனக்கென்ன அவ்வளவுகூடத் தெரியாதா? நமக்குக் கல்யாணமாகி எத்தனை வருஷம் ஆச்சு! கிளிபோல நீ பக்கத்திலேயே இருக்க..! அந்தக் கழுதை என்னை என்னன்னு நினைச்சிண்டது?”   `இதை நீங்க எப்பவோ சொல்லியிருந்தா, நான் அவ்வளவு வேதனைப் பட்டிருக்க மாட்டேனே!’ என்று சொல்ல நினைத்து, தன்னை அடக்கிக்கொண்டாள் பாரு.   முன்பே சொல்லியிருந்தால், `அவ அப்படி நடந்துக்கற அளவுக்கு நீங்க என்ன பண்ணினேள்?’ என்று தான் கேட்டுவிடுவோமோ என்று பயந்திருக்கலாம். இப்போது, மனைவி படும் வேதனையைப் பொறுக்காது உண்மையைச் சொல்லியிருக்கிறார், பாவம்!   ஒரு ஆண் பெண்ணிடம் தப்பாக நடக்க முயற்சித்தாலும், பெண் ஆணிடம் அப்படி நடந்தாலும், அதை ரசித்து ஏற்க முடியாதவருக்கு ஆத்திரமும், அவமானமும், பயமும் ஏற்படுவது இயற்கைதானே!   அதற்குப் பிறகு பாருவும் எந்த இசை நிகழ்ச்சியிலும் கலந்துகொள்ளவில்லை. தற்செயலாக அவளைப் பார்க்க நேர்ந்தாலும், அவமானத்தால் இறுகிய உதட்டுடன் துர்கா விலகிவிடுவாள்.   அப்படி ஒரு சந்திப்பின்பிறகு, “அந்தக் கழுதை அப்படியேதான் இருக்கு. வயசானதில கொஞ்சம் புத்தி வந்திருக்கலாம்!” என்று பாருவிடம் எகத்தாளமாகச் சொன்னவர், “என்னைப் பாத்துட்டு ஓடி வந்தா ஒன் சிநேகிதி. `ஐயோ! ஒங்களைப் பாத்து எவ்வளவு நாளாச்சு!ன்னு என் கையைப் பிடிக்க வந்தா!” அந்த நிகழ்ச்சியை நினைக்கும்போதே ஏற்பட்ட அருவருப்பில் உடலைச் சிலிர்த்துக்கொண்டார். “அப்போ நீ எங்கிட்ட வர்றதைப் பாத்தாளா? பயந்து ஓடிட்டா,” என்று சிரித்தார். “நல்லவேளை, நான் தப்பிச்சேன்!”   “அவ ஹஸ்பண்ட் வேலை முடிஞ்சா கிளப், குடின்னு இருக்கிறவர். நீங்களோ, ஜாகிங், ஜிம் அப்படின்னு போய், இந்த அம்பது வயசிலேயும் ஒடம்பை சின்னப்பையனாட்டம் வெச்சிண்டு இருக்கேள்!” என்று புகழ்வதுபோல், தன் அதிர்ஷ்டத்தை மெச்சிக்கொண்டாள் பாரு. “எதுவுமே தனக்குக் கிடைக்காட்டாதான் அது ஒஸ்தியாத் தோணும்!”   “ஒனக்கு நான் சுலபமா கிடைச்சுட்டேனே! அதான் ஒனக்கு என்னோட அருமை புரியலியாக்கும்!” புன்சிரிப்புடன் அவளைச் சீண்டினார்.   இந்தமாதிரி எவ்வளவு சின்னஞ்சிறு நிகழ்வுகள், நினைத்து நினைத்து ரசிப்புடன் லயிக்கும் வண்ணம்! இதையெல்லாம் தன்னிடமிருந்து பறிக்கப்பார்த்தாளே, துர்கா!   பல வருடங்களாகியும், பாருவின் ரணம் பூரணமாக ஆறவில்லை.   அந்தத் தோழிதான் இறந்துவிட்டாளாம்.   இன்னும் ஒரே ஒரு சந்தேகம் பாக்கி இருந்தது.   “எப்படி?” தொலைபேசியில் பேசிக்கொண்டிருந்தவளிடம் விசாரித்தாள்.   “ப்ரெஸ்ட் கான்சர்!”   வலி உயிர் போயிருக்குமே! உடலில் எத்தனையோ அங்கங்கள் இருக்க, சொல்லிவைத்தாற்போல் மார்பில் புற்றுநோய் வருவானேன்!   `எங்களைத் தவறாகப் பயன்படுத்தத் துணிந்த உன்னிடம் நாங்கள் இருக்கமாட்டோம்!’ என்றுதான் அவை பழுதாகிவிட்டனவோ?   துரோகத்திலேயே மிகக் கொடிது மித்திரத் துரோகம் எனபார்களே! ஒரு வேளை, அதன் விளைவோ?   பாருவின் எண்ணப்போக்கில் ஒரு முட்டுக்கட்டை.   முதலில் நெறிகெட்ட ஆசை, அது நிறைவேறாத ஆத்திரம், நெருங்கிப் பழகிய அப்பாவி சிநேகிதியின் வாழ்வைக் கலைக்கப்பார்த்தோமே என்ற குற்ற உணர்வு, இறுதியாக, இவர்களுக்குத் தன் உண்மை சொரூபம் தெரிந்துவிட்டதே என்ற அவமானம்.   அதனால்தானே அவள் அப்படி விலகி, விலகிப் போனாள்!   மனக்குமுறலைப் பிறரிடம் சொல்லி ஆற்றிக்கொள்ளவும் வழியில்லாதுபோக, உள்ளுக்குள்ளேயே குமைந்திருப்பாள். வடிகால் இல்லாத உணர்ச்சிகள் அவள் உடலையே அரித்தெடுத்திருக்க வேண்டும்.   `பாவம், துர்கா!’ வாய்விட்டு வந்தன அவ்வார்த்தைகள்.   பாருவுக்கு ஏதோ தோன்ற, மீண்டும் குளியலறைக்குப் போனாள். ஏற்கெனவே ஈரமாக இருந்த தலையில் தண்ணீரை மொண்டு விட்டுக்கொண்டாள்.   “எத்தனை தடவை குளிப்பே?” வெளியிலிருந்த கணவர் குரல்கொடுத்தார்.   “வேணுங்கிறவா செத்துப்போயிட்டா!” என்று தெளிவான குரலில் மறுமொழி கேட்டது மறுபுறத்திலிருந்து.         யாரோ பெற்றது   “அம்மா! என்னை இப்பவும் பாட்டி வீட்டிலேயே விட்டுட்டுப் போகப் போறீங்களா? ஒங்ககூட கூட்டிட்டுப் போகமாட்டீங்க?” குரல் ஏக்கத்துடன் வெளிப்பட்டது.   அதற்கு நேரிடையாகப் பதில் கூறாது, “இங்கதான் நல்லா இருக்கே, மஞ்சு! பூனை இருக்கு. சீக்கிரமே ரெண்டு, மூணு குட்டி போடப்போகுது. அதோட விளையாடலாம். சிங்கப்பூரில ரொம்ப சின்ன வீடு. இங்க இருக்கிறமாதிரி தோட்டம் கிடையாது. அதோட, தாத்தாவோட பீச்சுக்குப் போய் குளிக்கலாம்,” என்று சமாதானப்படுத்துவதில் இறங்கினாள்.   பெற்றோர் கோலாலம்பூருக்கு தெற்கே அறுபது கிலோமீட்டர் தொலைவிலிருந்த  போர்ட் டிக்சன் என்ற கடற்கரைப் பகுதியிலிருக்க, உத்தியோக நிமித்தம் அருணா சிங்கப்பூரில் இருந்தாள். மூன்றரை மணிப் பயணம்.   மகளைப் பிரிந்து அவ்வளவு தூரம் போக முதலில் தயக்கம் ஏற்பட்டாலும், மோகனைச் சந்திக்க கடவுளே இப்படி ஒரு வாய்ப்பை அமைத்துக் கொடுத்தார் என்ற புளகாங்கிதம்தான் எழுந்தது.   ஆறு வருடங்களாக ஆண்துணை இல்லாமல் தனித்து வாழ்ந்திருந்தாள். இப்போதுதான் சற்று வெளிச்சம் வாழ்வில்.   `இந்தக் காலத்திலே யார் இப்படி, பொட்டில்லாம இருக்காங்க! கல்யாணத்துக்கு முந்தியே, குட்டிப் பொண்ணா இருக்கிறப்போவே பொட்டும், பூவும் வெச்சுக்கலே? சும்மா அழகா டிரெஸ் பண்ணிக்குங்க,’ என்று ஊக்கின சக கூழியன் அவளுக்குக் கடவுளாகவே தெரிந்தான். அவள் முகத்தில் நிரந்தரமாகத் தங்கிவிட்ட சோகம் மறைந்தது. மீண்டும் கலகலப்பானாள்.   தான் பிறப்பதற்கு முன்பே ஒரு கார் விபத்தில் இறந்துவிட்ட தந்தையை மஞ்சு பார்த்திராததும் நல்லதாகப் போயிற்று. இப்போது, `இவர்தான் ஒன்னோட அப்பா!’ என்று மோகனைக் காட்டிவிடலாம். ஒரு முழுமையான குடும்பமாக வாழலாம். வயதான அப்பாவும், அம்மாவும் சாசுவதமா?   ஒரு முறை, `ஒனக்கு இன்னும் இருபத்து அஞ்சு வயசுகூட ஆகலியா? நம்ப ரெண்டு பேருக்கும் அஞ்சு வயசுதான் வித்தியாசம்!’ என்று கையைத் தட்டினான் உற்சாகமாக.   “ஒருத்தரை ஒருத்தர் பிடிச்சிருக்கு. கல்யாணம் பண்ணிக்கிட்டா என்ன?”  என்றவன், தொடர்ந்து, அவள் சற்றும் எதிர்பாராத நிபந்தனை ஒன்றையும் விதித்தான்: “ஒன் மக எப்பவும்போல, தாத்தா பாட்டிகூடவே இருக்கட்டும்!’   எப்போது விடுமுறை வரும், மகளைப் பார்க்கலாம் என்று ஏங்கிக்கொண்டிருக்கும் தன்னால், இனியும் அப்படி, மாதம் தவறாமல், போக முடியுமா? அருணாக்கு வாயடைத்துப் போயிற்று.   `யோசிச்சுப் பாரு, அருணா. ஒனக்கு ஒரு குழந்தை இருக்குன்னு தெரிஞ்சும் நான் ஒன்னைக் கல்யாணம் செய்துக்கத் தயாரா இருக்கேன். ஆனா, ஒன் மகளைப் பாக்கறபோதெல்லாம், `என் மனைவி இன்னொருத்தனோட இருந்தவ’ அப்படின்னு உறுத்திக்கிட்டே இருக்குமே!’   அருணாவால் ஒரு முடிவுக்கு வரமுடியவில்லை. வழக்கம்போல் தாய்வீடு திரும்பியபோது, பெற்றோருடன் கலந்து ஆலோசித்தாள்.   “ஒங்க மோகன் சொல்றது சரிதாம்மா. `மஞ்சுவை என் மகளா ஏத்துக்கறேன்’னு மொதல்லே வசனம் பேசிட்டு, அப்புறம் செத்துப்போன மனுஷனோட ஏதோ போட்டி, ஆத்திரம்னு வந்து, குழந்தையை அடிச்சா என்ன செய்யறது?” அப்பாவுக்கு இன்னொரு ஆணின் மனவக்கிரங்கள் புரிந்தன.   “அவளைப் பாத்துக்கறதிலே எங்களுக்கு ஒரு கஷ்டமும் இல்லே,” என்று அம்மாவும் ஒத்துப் பாடினாள், தான் பெற்ற மகள் எப்படியோ சந்தோஷமாக இருந்தால் போதும் என்ற எண்ணத்துடன்.   ஒவ்வொரு தடவை அவள் வரும்போதும், `அம்மா! நானும் ஒங்ககூடவே வர்றேனே!’ என்று கெஞ்சும் மகளை இனி எப்படிச் சமாதானப்படுத்துவது என்ற குழப்பத்தில் ஆழ்ந்தாள் அருணா. எத்தனையோ முறை, `அடுத்த தடவை. ஓ.கே?’ என்று கொஞ்சி, சமாதானம் செய்தாயிற்று.   விளையாட்டுச் சாமான்களால் சமாதானம் அடைந்துவிடும் பருவம் இப்போது. நாளைக்கே, விவரம் புரிந்தால், `உனக்கு என்னைவிட அந்த மோகன்தானே பெரிசாப் போயிட்டாரு?’ என்று சண்டை பிடிப்பாளோ? ஒரு வேளை, அம்மாவுக்கே வேண்டாதவளாகப் போய்விட்டோமே என்று உள்ளுக்குள்ளேயே அழுது, எதிலும் பற்றின்றி ஆகிவிடுவாளோ?   மஞ்சு! மோகன்! யாரைத் தேர்ந்தெடுப்பது, யாரை விட்டு விலகுவது?   அருணாக்குத் தற்காலிகமாக சிந்தனைகளிலிருந்து விடுதலை கிடைத்தது, பூனையால்.   “மஞ்சு! பெரிய பூனைகிட்ட போகாதே. குட்டியைத்தான் தூக்க வரேன்னு நினைச்சுக்கிட்டு, ஒன்னைப் பிராண்டிடும்,” என்று மகளை ஓயாது கவனிக்க வேண்டியிருந்தது.   “அம்மா! மூணில ஒரு குட்டிதாம்மா இருக்கு! இன்னும் ரெண்டு எங்கேம்மா?”   பூனை, பூனை! அருணாவுக்கு அலுப்பாக இருந்தது. “அதான் ஒண்ணு இருக்கில்ல? போதும். நீ அதுக்கு சாப்பிடக் குடு. தாத்தா அந்த டப்பாவிலே வெச்சிருக்காரு, பாரு”.   `தெருவிலே போற பூனையா இருந்தா என்ன! அதுக்கு மட்டும் பசிக்காதா? அதுவும் இந்த சமயத்திலே!’ என்று சொல்லிவிட்டு, பூனைக்கும், மிகுந்திருந்த ஒரு குட்டிக்கும் கடையிலிருந்து சிக்கன் கலந்து, சிறு சிறு கட்டிகளாக இருந்த உணவை அப்பா வாங்கி வந்திருந்தார்.    “அம்மா! பாருங்களேன்! அம்மாபூனை ரொம்ப நாட்டி! குட்டியோட மங்கிலே இருக்கிறதைச் சாப்பிடுது. குட்டி, பாவம்! ஒதுங்கி நிக்குது!”   `குழந்தைகளுக்கு எல்லாமே வேடிக்கைதான். பெரியவர்களானபின்தான் வேதனை எல்லாம்!’ என்று எண்ணமிட்டாள் அருணா. தனக்குப் பால் சுரக்க வயிறு நிறைய சாப்பிட வேண்டும் என்று தாய்ப்பூனைக்கு இயற்கையாகவே தெரிந்திருக்கிறது. இதை மஞ்சுவிடம் சொன்னால் புரியுமா?   அன்று சாயங்காலம் பள்ளியிலிருந்து திரும்பிய குழந்தை ஓடி வந்தாள், “அம்மா! தாத்தா!” என்று அலறியபடி.   பதறிப்போனார்கள் இருவரும். “என்னம்மா? என்ன ஆச்சு?”   “குட்டியைக் காணும்!”   “அவ்வளவுதானே! எங்கேயாவது காருக்கடியில, செடிக்குள்ளே ஒளிஞ்சுக்கிட்டு இருக்கும். போய்த் தேடு”.   “நான் நல்லாப் பாத்துட்டேம்மா. காணும்!” மஞ்சுவுக்கு அழுகை வந்தது.   “எங்கேயாவது ஓடிப் போயிருக்குமா?” தன்னைத்தானே கேட்டுக்கொள்வதுபோல் கேட்டாள் அருணா.   “பூனைக்குட்டி தானே ஓடாது,” என்றார் அப்பா, அவளுக்கு மட்டும் கேட்கும்படி.   இரண்டு நாட்கள் கழிந்தும், பூனைக்குட்டி போன இடம் தெரியவில்லை.   அருணா தோட்டத்துக்கு வரும்போதெல்லாம், தாய்ப்பூனை ஏக்கமாக ஓலமிட்டபடி அவளைச் சுற்றிச் சுற்றி வந்தது அவளுக்குள் எதையோ அசைத்தது..   “ஒன் பேபி காணுமாடா? வந்துடும்,” என்று அதனுடன் பேசி, ஆறுதல் அளிக்க முயன்றாள். மடியில் தூக்கி வைத்துக்கொண்டாள். ஆதரவுடன் அதன் உடலின் மேற்பகுதியைத் தடவிக்கொடுத்தாள்.   அவளுடைய அன்பான வார்த்தைகள் அதற்குப் புரியவில்லையோ, அல்லது தன் வேதனை இன்னொரு தாய்க்குப் புரிகிறதே என்றோ, அதே நடத்தை தொடர்ந்தது. தானே அவள் மடியில் வந்து உட்கார்ந்துகொண்டது. பூனையின் ரோமம் ஒவ்வாமை உண்டாக்க, உடனே கையிலும், காலிலும் சருமம் தடித்துவிட்டது..   “இப்போ எதுக்கு அந்த கர்மத்தைத் தூக்கி மடியில் வெச்சுக்கிட்டுக் கொஞ்சறே?” என்று அம்மா ஆட்சேபித்தாள். கொஞ்ச காலம் இருந்துவிட்டுப் போகப் போகிற மகளுடைய உடல் நலம் பாதிக்கப்படுகிறதே என்ற ஆதங்கத்தில் வார்த்தைகள் சற்றுக் கடுமையாகவே வந்தன.   அப்பா எதுவும் சொல்லாது, மரவள்ளிக்கிழங்கு மாவை நீரில் குழைத்து, “போட்டுக்க. அலர்ஜி சரியாகிடும்,” என்று அவளிடம் நீட்டினார்.   ஆனால், குட்டியை விட்டுவிட்டு, தான் மட்டும் சாப்பிடுவதா என்று நினைத்தது போல், பூனை ஆகாரத்தைத் தொடவில்லை.   `ஒரு வேளை, சாப்பிட்டால் பால் சுரக்கும்; இனி யாருக்குக் கொடுக்கப்போகிறேன் என்ற விரக்தியோ அதற்கு?’ என்ற சந்தேகம் எழுந்தது அருணாவுக்கு.   மஞ்சுவும் ரொம்பவே ஏங்கிப்போனாள். உற்சாகம் குன்றி, சாப்பிடப் பிடிக்காமல்..!   “சீக்கிரமே இன்னும் நிறைய குட்டி போடப்போகுது பெரிசு!” என்று அவளுக்கு நம்பிக்கை அளிக்கப் பார்த்தார் அப்பா.   “அதோட வயத்தைப் பாத்தியா? எவ்வளவு பெரிசு! அதுக்குள்ளேதான் குட்டி எல்லாம் இருக்கு!” என்றாள் அம்மா, தன் பங்குக்கு.   அப்படியும் சமாதானமாகாமல், மஞ்சு அழுதபடியே தூங்கப்போனதும், “பூனைக்குட்டி அப்படி எங்கதாம்பா போயிருக்கும்?” என்று தந்தையைக் கேட்டாள் அருணா. இருவரும் வாசலிலிருந்த சிமெண்டு பெஞ்சில் உட்கார்ந்திருந்தனர்.   “இப்போ பெரிசு கர்ப்பமா இருக்கில்லே? அதுக்குக் காரணமாயிருந்த ஆண்பூனை இந்தக் குட்டியைக் கொன்னிருக்கும், இது தன் குட்டி இல்லேன்னு!” என்றோ படித்ததை சற்றும் உணர்ச்சி இல்லாத குரலில் அப்பா விவரித்தார்.   அருணா அடைந்த அதிர்ச்சியைப் பார்த்து, “பூனை உலகத்திலே இது சகஜம்தான்! என்றார், கையை ஒருமுறை அலட்சியமாக வீசியபடி.   சட்டென, அருணாவின் நினைவில் எழுந்தான் மோகன்.   அவனுக்கும், அந்த ஆண் பூனைக்கும் என்ன வித்தியாசம்?   பூனைக்கு சிந்திக்கும் திறனில்லை. அதனால், உடனுக்குடனே கொன்று விடுகிறது. போட்டி மனப்பான்மை என்னவோ ஒன்றுதான்.   “மோகன்கிட்ட ஒன் சம்மதத்தைச் சொல்லிடு,” அப்பா ஊக்கினார். “மஞ்சு இல்லாட்டி எங்களுக்கும் வெறிச்சுனு இருக்கும்!”   தன் சுகத்துக்காக மோகனை மணந்து, சுமந்து பெற்றதை இழந்து, அந்த வேதனையைப் பொறுக்க முடியாது, தான் எதையோ, யாரையோ சுற்றிச் சுற்றி வருவதுபோல பிரமை எழுந்தது அருணாவுக்குள்.   “எனக்கு இன்னொரு கல்யாணம் வேண்டாம்பா! மஞ்சுதான் வேணும்!” என்றாள் அருணா. குரல் தெளிவாக இருந்தது.