[] [அவனும் ஓர் உயிர் ] அவனும் ஓர் உயிர் நிர்மலா ராகவன் மின்னூல் வெளியீடு : http://FreeTamilEbooks.com சென்னை உரிமை – Creative Commons Attribution-NonCommercial-NoDerivs 3.0 Unported License. This book was produced using PressBooks.com. உள்ளடக்கம் - அவனும் ஓர் உயிர் - 1. அத்தியாயம் 1 - 2. அத்தியாயம் 2 - 3. அத்தியாயம் 3 - 4. அத்தியாயம் 4 - 5. அத்தியாயம் 5 - Free Tamil Ebooks - எங்களைப் பற்றி 1 அவனும் ஓர் உயிர் [Cover Image] அவனும் ஓர் உயிர் நிர்மலா ராகவன் nirurag@gmail.com   அட்டைப் பட வடிவமைப்பு – மனோஜ் குமார் – socrates1857@gmail.com மின்னூலாக்கம் – ஜெயேந்திரன் – vsr.jayendran@gmail.com   உரிமை – Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License. [pressbooks.com] 1 அத்தியாயம் 1 பஹாங் மாநிலத்துக்குப் பெயரும், பொருளும் ஒருங்கே சேர்க்கும் கெந்திங் மலை. பகல் பத்து மணி இருக்கும். அங்கு திரள்திரளாக தேன் நிலவு கொண்டாட வந்திருந்த புதிய தம்பதிகளின் காதல் லீலைகளால் வெட்கமுற்றவனாக, சூரியன் தலைகாட்டாது மறைந்திருந்தான். தெருவில் நடந்தால் எதிரில் வருபவர்கூட கண்ணுக்குத் தெரியாத அளவுக்கு பனிப்படலம். பார்ப்பதற்கு வெள்ளைப் போர்வை போலிருந்தது. கையில் பிடித்துப் பார்த்து, கனப்பொருளாக ஒன்றுமே அகப்படவில்லையே என்று அதிசயித்தபடி கம்பளிச் சட்டை அணிந்த சிலர் குளிரில் நடுங்கியபடி உலாவிக்கொண்டிருந்தனர். அந்தப் பெரிய ஹோட்டலின் சாப்பாட்டு அறை ஏதோ கல்யாணக் கூடம்போல் அலங்கரிக்கப் பட்டிருந்தது. ஒவ்வொரு மேசைமேலும் அழகிய பூச்சாடியில் மலர்கள். வரிசை வரிசையாக உணவுப் பண்டங்கள். ஒரு புறம் கேக், பன், ரொட்டி வகையறாக்கள், அவைகளின் ருசியைக் கூட்ட வெண்ணை, மற்றும் சிவப்பு, ஆரஞ்சு என்று பல வண்ணங்களில் ஜாம் — சின்னச் சின்னப் பாக்கெட்டுகளில். விருந்தினர்கள் ரொட்டியைத் தாமே வாட்டித் தின்ன வசதியாக மின்சாரத்தினால் இயங்கும் ‘டோஸ்டர்’ — ‘சூடு!’ என்ற அபாய அறிவிப்புடன். அடுத்த நீண்ட மேசையில் பால் — சூடானது, குளிர்ந்தது என்ற விளக்கங்களுடன். பக்கத்திலேயே சிறு பிள்ளைகள் விரும்பிச் சாப்பிடும் ‘கார்ன் ஃப்ளேக்ஸ்,’ ‘ஹனி ஸ்டார்ஸ்’ போன்றவை பிளாஸ்டிக் போத்தல்களில். ஒரு கூடையில் சீனி, சிறு போட்டலங்களில். இன்னொரு புறம் நம் நாட்டு ஸ்பெஷல் — நசி லெமாக், மீ கோரிங் இத்தியாதி. சாப்பிட இவையென்றால், முதலில் அருந்த மாம்பழச் சாறும், ஆரஞ்சுப்பழ சாறும். எல்லாவற்றையும் சாப்பிட்டு முடித்தபின், சூடான கோப்பி, டீ. இதிலும் இரு வகை — ‘தே தாரேக்’ (பால் சேர்த்த மலேசிய வகை டீ என்ற குறிப்புடன்), சைனீஸ் டீ என்று. தட்டுக்களும், கோப்பைகளும் அழகுப் பொருட்களென அடுக்கி வைக்கப்பட்டிருந்தன அருகே. மாடியிலிருந்த காசினோவில் சூதாடவென்று நாட்டின் பல பாகங்களிலிருந்தும், ஏன், அயல்நாடுகளிலிருந்தும்கூட வந்திருந்தவர்கள் இரவெல்லாம் கண்விழித்து விளையாடின அலுப்பு தீர சாப்பிட்டுவிட்டு, தமது அதிர்ஷ்டத்தைப் பரிசோதிக்க மீண்டும் விளையாடப் போய்விட்டிருந்தார்கள். குழந்தைகளுடன் வந்திருந்தவர்களோ, செலவழிக்கிற காசுக்கு இயன்றவரை அனுபவித்துவிட வேண்டும் என்று எண்ணியவர்களாக, “காலையில சீக்கிரம் எழுந்து சாப்பிட்டா, தீம் பார்க்கில நிறைய விளையாடலாம்!” என்று முதல் நாளிரவே அவசரப்படுத்தியிருந்ததில், குழந்தைகளும் பள்ளி நாட்களைப்போல தூங்கி வழியாது, சுறுசுறுப்பாக இயங்கி, வெளியே செல்லத் தயாராகி இருந்தனர். சாப்பாட்டுக் கூடத்தில் எஞ்சி இருந்தது நான்கு மேசையில் இருந்த ஜோடிகள் மட்டுமே. அதோ, நம் கதாநாயகி இந்துலேகா! எதிரில் அமர்ந்து தன்னையே ஒரு சிறு புன்னகையுடன் பார்த்துக் கொண்டிருந்த கோபியிடம் ரகசியக் குரலில் கூறினாள் இந்துலேகா: “எல்லாருமே நம்பளை மாதிரி புதுசா கல்யாணமானவங்கதான்!” “எப்படிக் கண்டுபிடிச்சே?” புன்னகை மாறாமல் கேட்டான். ‘தான் இந்தப் பேரழகியை மனைவியாக அடைந்தது எவ்வளவு பெரிய பாக்கியம்! சிறிதும் கர்வமில்லாது, எவ்வளவு அனுசரணையாக நடந்து கொள்கிறாள்!’ என்று பூரித்துக் கொண்டிருந்ததில், அவன் யாரையும் கவனிக்கவுமில்லை, பிறரைப்பற்றி நினைக்கவும் இல்லை. “எல்லாருமே வட இந்தியாவிலிருந்து வந்திருக்காங்கபோல. பாருங்க, அந்தப் பொண்ணுங்க ஒவ்வொருத்தி கையிலேயும் நாலு டஜன் கண்ணாடி வளையல். மருதாணியும் கையிலிருந்து தோள்வரை!” என்றாள் இந்து. அப்போதுதான் அவனும் கவனித்தான். ஆண்களை. “என்ன கோபி சிரிச்சுக்கறீங்க?” குசுகுசுத்தாள் புதுமனைவி. “நம்பளை மாதிரியே ராத்திரி ரொம்ப நேரம் தூங்காம, இப்ப லேட்டா எழுந்துட்டு, பத்தரைக்கு சாப்பாட்டு அறையை மூடிடுவாங்களேன்னு அரக்கப் பரக்க வந்திருக்காங்க, பாரு!” மூவரில் இருவர் கசங்கிய சட்டைகளுடன், கலைந்த தலையுடன் இருப்பதைப் பார்த்த அவளுக்கும் சிரிப்பு பொங்கியது. கூடவே வெட்கமும் எழுந்தது. நம்மைப் பார்த்தும், யாரேனும் இப்படியெல்லாம் வியாக்கியானம் செய்வார்களோ? நேற்று கணவருடன் கைகோர்த்துக்கொண்டு, சில சமயம் அவருடைய கை தனது இடுப்பைச் சுற்றியிருக்க, தான் அவரது தோள்மேல் உரிமையுடன் சாய்ந்தபடி வெளியிலிருந்த பூங்கா முழுவதிலும் சுற்றினோமே! அவர் வற்புறுத்தினார் என்று அசுர வேகத்தில் சுழன்ற ரோலர் கோஸ்டரில் ஏறிவிட்டு, இறங்கியதும், “நீங்க ரொம்ப மோசம், கோபி. நான் பயந்து சாகிறதில ஒங்களுக்கு என்ன அவ்வளவு சந்தோஷம்?” என்று முதன் முறையாகச் சண்டை பிடிக்கவில்லை? யாருக்காவது அது கேட்டிருக்குமோ? பெருமூச்சு விட்டாள் இந்து. வாழ்க்கைதான் இவ்வளவு இனிமையாக இருக்கிறது! வெளிநாட்டில் பல வருடங்கள் தங்கிப் படித்த கணவன்! கொள்ளைப் பணக்காரன். அவனது பெற்றோர் மட்டும் போன வருடம் ஒரு விமான விபத்தில் இறந்திருக்காவிட்டால், தாய்நாடு திரும்பிக்கூட இருக்க மாட்டானோ, என்னவோ! சொந்த வியாபாரத்தைக் கவனித்துக்கொள்ளவென்று வந்திருந்தவன் அவளைப் பார்த்த முதல் பார்வையிலேயே மயங்கி, மணந்தது எந்தப் பெண்ணுக்கும் சுலபமாகக் கிடைத்துவிடக்கூடிய அதிர்ஷ்டமா! அழகு மட்டும் போதாது, கூடவே படித்தால் முன்னேறலாம் என்று நினைவு தெரிந்தது முதல் அவள் உழைத்தது வீண் போகவில்லை. உயர் கல்வி அவளுக்கு ஒரு கம்பீரத்தையும், உச்சரிப்புச் சுத்தத்தையும், சுதந்திரப் போக்கையும் அளித்து, ‘பெரிய மனிதர் வீட்டுப்பெண்’ என்று பார்ப்பவர்களை மதிக்க வைத்தது அவளுக்குத் தெரிந்துதான் இருந்தது. தலைநகரின் விலையுயர்ந்த பகுதிகளில் குறிப்பிடத்தக்க ஒன்றான புகிட் பங்சாரில் பளிங்குக்கல் இழைத்த முன்னறையும், கார்பெட் விரிக்கப்பட்டு, குளிர்சாதன வசதி பொருத்தப்பட்ட பல அறைகளையும் கொண்ட பங்களாவுக்கு சொந்தக்காரி அவள், இப்போது. குன்றாகக் குவிந்த குப்பையும், நாற்றமுமாக இருக்கும் கம்பம் ஒன்றில், தாறுமாறாகக் கட்டப்பட்ட ஒரு சிறு வீட்டில்தான் அவள் வளர்ந்தாள் என்றால் நம்புவது கடினம். பிறந்த வீடு நினைவில் எழுந்ததுமே இந்துவின் முகம் சுருங்கியது. அதைத் தள்ளிவிட்டு, “போகலாமா?” என்றாள். “நீ சரியாவே சாப்பிடலியே! இந்தச் சமயத்தில் தெம்பு வேணாம்?” என்று கரிசனமும், குறும்புமாகக் கேட்டான் கோபி. அவளுக்கும் சிரிப்பு வந்தது. “இதையெல்லாம் சாப்பிட பகாசுரனுக்குத்தான் முடியும். நான் சாப்பிட்டா, அப்புறம் குண்டாகிடுவேன்!” கல்லூரியின் அழகுராணி அவள். தன் அழகினாலேயே நினைத்தும் பார்க்க முடியாத செல்வந்தனைக் கணவனாக அடைந்தவள். ‘நான் அழகை ஆராதிப்பவன்!’ என்று அவன் இந்த ஒரு வாரத்தில் எத்தனையோ முறை அவளிடம் சொல்லிவிட்டான். அந்த மூலதனத்தைக் காப்பாற்றிக்கொள்ள வேண்டாமா! “நம்ப வீட்டிலேயே ஒரு ஜிம் வைக்கணும், கோபி”. (‘அத்தான், பொத்தான் எல்லாம் வேண்டாம். சும்மா பேரைச் சொல்லியே கூப்பிடு!’ ‘ஐயையோ! மனைவி அப்படிச் செய்தா, கணவனோட ஆயுசு குறைஞ்சுடுமாம்!’ ‘அப்படிப் பாத்தா, வெள்ளைக்காரன் ஒருத்தன்கூட உயிரோட இருக்க மாட்டான்!’) “நாட்டி கர்ல். நான் குண்டா இருக்கேன்னு சொல்லிக் காட்டறியா?” கடிந்து கொள்வதுபோல் பேசினாலும், கோபியின் புன்னகை மாறவில்லை. “ஐயையோ! இல்ல, இல்ல!” அவள் பதறினாள். “நான் மாடலா இருந்தப்போ, தினமும் மூணு மணி நேரம் ஜிம்மில தேகப்பயிற்சி செய்வேன். இப்பவும் முந்திமாதிரி அலைய வேணாமேன்னுதான் கேட்டேன்!” “நீ எது கேட்டாலும், அதைச் செஞ்சு தர நான் ரெடி. அதே மாதிரி.. நான் என்ன கேட்டாலும்..,” அவன் கண்ணைச் சிமிட்டினான். அவள் முகம் சிவந்து, விழிகள் கீழ்நோக்கிப் போனதை ரசித்தான். “அடுத்தது எங்கே? நம்ப அறையா, இல்ல..?” அவனை மறுத்து ஏதோ சொல்ல வந்தவள், சும்மா தன்னைச் சீண்டுகிறான் என்பது புரிந்து, முறுவலித்தாள். “ராட்டினமெல்லாம் இன்னிக்கு வேணாம்பா. பயங்கரம்! வயத்தைப் புரட்டுது,” என்று அந்த நினைப்பிலேயே அருவருப்புடன் தோள்களை ஒயிலாகத் தூக்கியவள், “நிறைய கடைங்க இருக்கே! பாக்கலாமா?” “சரி, வா!” என்றபடி எழுந்தவனுக்குச் சட்டென தலைசுற்றியது. நின்ற நிலையில் தள்ளாடியவன், மீண்டும் நாற்காலியில் அமர்ந்துகொண்டான், விழாதகுறையாக. பக்கத்து நாற்காலியில் வைத்திருந்த சிறு சிறு மணிகள் பதித்திருந்த கைப்பையை எடுக்கத் திரும்பிய இந்துலேகா அந்த ஒரு வினாடி நாடகத்தைக் கவனிக்கவில்லை. “என்ன ஒக்காந்துட்டீங்க?” ஒரு பெரிய மூச்சை இழுத்து விட்டான் கோபி. கடந்த நாலைந்து நாட்களாகத் தான் இப்படி நடந்து கொண்டிருக்க வேண்டாம். கட்டிய மனைவிதானே, எங்கே போய்விடப் போகிறாள்! என்னமோ காய்ந்த மாடு கம்புக் கொல்லையில் விழுந்த மாதிரி… லேசான அவமானம் எழுந்தது. தனக்கென்ன, பெண் வாடை புதிதா? தான் இப்படி பெண்டாட்டி தாசனாக ஆகிவிட்டோமென்பதை மேல்நாட்டில் தன்னை நன்கு அறிந்திருந்த நண்பர்களிடம் சொன்னால், நம்பக்கூட நம்பாமல் சிரிப்பார்கள். அது எப்படி, காசுக்காக போன பெண்களிடம் இல்லாத பிடிப்பு கட்டியவளிடம் ஒரே நாளில் ஏற்பட்டது? தன்னைப் போலில்லை இவள், கை படாத மலர் என்பதை கல்யாணமான மறுநாள் காலையிலேயே உணர்ந்துகொண்டிருந்தான். கரை படிந்த அந்த பட்டு வேஷ்டியைத் துவைக்காது பத்திரப்படுத்த வேண்டும் என்று எண்ணிக்கொண்டான், பெருமையோடு. குற்ற உணர்வும் ஒருங்கே எழுந்தது. ஆண்-பெண் உறவைப்பற்றி வெளிப்படையாகப் பேசுவது பாபகரமானது என்பதுபோல் அந்தப் பேச்சையே தவிர்க்கும் குடும்பத்தில் பிறந்ததாலோ, என்னவோ, வீட்டைவிட்டுப் போன கையோடு தன்னைச் சுற்றி போடப்பட்டிருந்த கண்ணுக்குத் தெரியாத வேலியை உடைத்தெறிந்திருந்தான் கோபி. கண்டிக்கவோ, புத்தி சொல்லவோ பெரியோர் எவரும் அருகில் இல்லாது, புதிய நாட்டில் தனிமை வாட்ட, புதுப்புது அனுபவங்கள் கிறக்கத்தை ஊட்ட, வாழ்க்கையை முழுமையாக அனுபவித்தான். ஆனால், இளமை சற்றே மறைய, முப்பத்தைந்து வயதில் முன் நெற்றியில் வழுக்கை தோன்றியதும், கட்டுப்பாடற்ற அந்த வாழ்க்கை அலுக்க ஆரம்பித்தது. தனக்கென ஒரு பெண், அவள்மூலம் சில குழந்தைகள் வேண்டும் என்ற நியாயமான ஆசை எழுந்தது. மனைவியாக வருபவள், தன் பணத்திலேயே குறி வைத்து, வெளியே தன் ஸ்பரிசத்துக்காகவே ஏங்குவதுபோல் நடித்த விலைமாதர்களைப்போல் இல்லாது, தன்னை தனக்காகவே விரும்பும் பெண்ணாக இருக்க வேண்டும். பணக்காரியாக இருக்க வேண்டுமென்பதில்லை. தனக்கில்லாத சொத்தா! ஆனால், சிறு வயதில் எந்த ஒரு பொருளையும் பக்கத்திலிருந்தவனுடையதுடன் ஒப்பிட்டு, தான் வைத்திருப்பதே மேலானது என்று எழுந்த கர்வம் இப்போதும் ஒரு நிபந்தனை விதித்தது: தனக்கு மனைவியாக வருபவள் கண்டவர் மயங்கும் பேரழகியாக இருக்க வேண்டும். இந்த எண்ணங்களோடு மலேசியா திரும்பியவன் கண்டெடுத்த மாணிக்கம் இந்துலேகா. இந்த ஒரு வாரத்தில் அவளுடன் கழித்த ஒவ்வொரு நிமிடமும் அவன் நெஞ்சில் பதிந்து போயிருந்தது. கடந்தவை கடந்தவையாகவே இருந்துவிட்டுப் போகட்டும். மனத்தாலும் இவளுக்குத் துரோகம் செய்யக்கூடாது என்று உறுதி செய்துகொண்டான். கொஞ்சம் நிதானமாக இருந்திருக்கலாம். இப்போது தலை சுற்றாமல் என்ன செய்யும்! கோபி எழுந்தான். தலை என்னமோபோல் இருந்தது. வலியா, சுற்றலா என்று புரியவில்லை. தூக்கம் குறைவானதாலோ? ராட்டினத்தின் கைங்கரியமா? அல்லது, தூக்கம் விழிக்கும் எண்ணத்தோடு ராத்திரி சாப்பாட்டுக்குப் பின்னர் வழக்கத்துக்கு விரோதமாக இரண்டு கோப்பை கோப்பி குடித்ததாலோ? “ரொம்ப களைப்பா இருக்கு இந்து. கொஞ்சம் படுத்துக்கலாம்னு தோணுது,” என்றான் கெஞ்சலாக. “தெரியுமே ஒங்களை!” என்று கேலி செய்தாள் அவள். “சுத்திச் சுத்தி, ஒரே இடத்துக்குத்தான் வருவீங்க!” இவன் தன்னை இவ்வளவு தூரம் நாடுகிறானே என்ற பெருமை இருந்தது அந்தக் கேலியில். “நெஜமாத்தான்! நீ கடைங்களை சுத்திப் பாத்துட்டு, என்ன வேணுமோ வாங்கிட்டு வா. நான் கொஞ்சம் தூங்கறேன், என்ன?” சற்று ஏமாற்றத்துடனேயே இந்து அவனைத் தனியே விட்டுப்போனாள். ஹோட்டல் அறைக்கு வெளியே இருந்த நடைபாதையில் அழகிய வண்ணங்கள் கொண்ட மெத்துமெத்தென்ற கார்பெட். எதையும் கவனிக்கும் மனநிலையில் இருக்கவில்லை கோபி. இயந்திரத்தனமாய், அட்டை போலிருந்த பிளாஸ்டிக் சாவியை கதவில் செருகப்போனவன் தன் கையைப் பார்த்து கலக்கமுற்றான். இதென்ன சொறி சொறியாய்? தலை வேறு எந்த நிமிடமும் வெடித்து விடும்போல இருந்தது. உள்ளே போனதுமே ஸப்ரிங் கட்டிலின் மேலிருந்த ஓரடி உயர மெத்தையில் விழுந்தவனால் கண்ணயர முடியவில்லை. ஏதேதோ எண்ணங்கள் சுழன்று சுழன்று மேலெழுந்தன. எப்போதுமே கார உணவை விரும்பிச் சாப்பிடும் தன்னால் இப்போது சாப்பாட்டில் சிறிதளவு மிளகாய் சேர்த்தாலும் ஏன் சாப்பிட முடியவில்லை? வேகமாகச் சுழலும் ராட்டினத்தால் தலை வேண்டுமானால் சுற்றலாம். வாயின் உட்பகுதியில் புண்ணும், உடலில் சொறியும் எப்படி உண்டாகும்? சட்டென ஏதோ நினைப்பு எழ, கோபியின் உடல் அதிர்ந்தது. சுமார் பத்து, பன்னிரண்டு வருடங்களுக்கு முன்னர், அமெரிக்காவில் ஹாஸ்டலில் தங்கிப் படித்துக் கொண்டிருந்தபோது, அவனுடன் ஒரே அறையில் தங்கியிருந்த பெஞ்சி — பெஞ்சமின் — அவன் நினைவில் வந்து போனான். அவனுக்கும் இதே போன்ற உபாதைகள்தாமே முதலில் இருந்தன? கோபி அந்த நினைவை ஒதுக்க முயன்றவனாக, தலையைச் சிலுப்பிக்கொண்டான். “எனக்கு ஹெச் ஐ வியாம்!” மருத்துவப் பரிசோதனைக்குப் பிறகு பெஞ்சமின் வந்து அழுதது இன்னமும் கோபியின் காதில் ஒலித்தது. “நான் இப்படி ஆனது யாரோட தப்பு? எங்கம்மாவை ஓயாம அடிச்சு, மிரட்டி, குறுக்கிட விடாம என்னையும் பயமுறுத்தி வைச்சிருந்தாரே, எங்கப்பா! அவரைக் கொல்ல நினைச்சு, எதிர்க்கக்கூட தைரியமில்லாததாலதானே நான் இப்படி பொம்பளைமாதிரி, இன்னொரு ஆம்பளைகூட சேர்ந்திருக்கேன்! பாக்கப்போனா, எங்கப்பாவுக்கில்ல வந்திருக்கணும் இந்த வியாதி! அந்தப் பாவி செஞ்ச தப்புக்கு எனக்குத் தண்டனையா!” என்று எப்படியெல்லாம் அழுதான்! விஷயம் பரவி விடுவதற்குள், படிப்பை அரைகுறையாக விட்டுவிட்டு, கண்காணாமல் போனான். இரண்டு வருடங்கள் கழித்து, யாரோ சொன்னார்கள் பெஞ்சி எய்ட்ஸ் கண்டு இறந்துவிட்டதாக. அவனுக்கும் இப்படித்தானே, தலைவலி, காய்ச்சல், வாயில் புண், சொறி, சிரங்கு என்று ஆரம்பித்தது! ‘பிறருடைய செக்ஸ் வாழ்க்கையில் தனக்கென்ன சம்பந்தம்!’ என்று என்னமோ பெரிய மனது பண்ணுவதாக நினைத்துக்கொண்டு, அவனுடன் ஒரே அறையில் தங்க சம்மதித்தது தன் தவறு என்று இப்போது காலங்கடந்து தன்னை நொந்துகொண்டான் கோபி. எவ்வளவு தடவை இருவரும் ஒரே தட்டிலிருந்து பீட்சாவை முள் கரண்டியால் குத்திக் குத்தித் தின்றிருக்கிறார்கள்! அவர்கள் அப்படிச் செய்வதைப் பார்த்திருந்தால், ‘எச்சில்’ என்று அவனது பாட்டி பழித்திருக்கக் கூடும். மேல் நாட்டினர் என்ன செய்தாலும் அது தப்பாக இருக்க முடியாது என்று கண்மூடித்தனமாக நம்பும் அவனைப்போன்ற ஏமாளிகள் இருக்கும்வரை உலகம் இப்படித்தான் மெல்ல மெல்ல அழிந்து போகும். தூங்க முடியாமல், உண்மையைச் சீரணிக்கவும் முடியாமல் பாடுபட்டான் கோபி. அழுகை வந்தது. தான் ஆண்பிள்ளை, அழக்கூடாது என்ற பல ஆண்டு கால கட்டுப்பாட்டையும் மீறி, வாய்விட்டு அழ ஆரம்பித்தான். 2 அத்தியாயம் 2 “எங்கேடி புறப்பட்டே?” பாதரசத்தை இழந்து பரிதாபமாக இருந்த கண்ணாடியின்முன் நின்றபடி, தன் புருவ ரோமத்தை ஒவ்வொன்றாக நீக்கி, புருவத்தை வில்லாகவே வளைத்து அழகுபடுத்திக் கொண்டிருந்த பத்மநாதன் தன்னை நோக்கி எழுந்த அக்கேள்விக்குப் பதில் சொல்லவில்லை. ‘மொதல்ல ஒரு புது கண்ணாடி வாங்கற வழியைப் பாக்கணும்!’ என்று தனக்குள் எண்ணமிட்டான். உடனே எதிர்மறையான வேறொரு எண்ணமும் எழாமலில்லை. ‘ஆமா! புதுசா எது ஒண்ணை வாங்கறதுக்கு ஏது காசு! இப்ப இருக்கிற இருப்பில.. சாப்பாடே ஒரு வேளைதான். வர்ற எல்லாக் காசையும் சாமி உண்டியல்ல போடறமாதிரி பக்தியோட சேர்த்து வைக்கறேன். என்னிக்குத்தான் ‘அதுக்கு’ தேவையான தொகை சேரப்போகுதோ!’ பத்மநாதன் தான் பத்மாவதியாக ஆகப்போகும் புண்ணிய தினத்துக்காகத்தான் வாழ்க்கை நடத்துகிறான். ஆயிற்று, அவனுக்கும் முப்பத்து ஐந்து வயதாகிவிட்டது. தான் மற்ற ஆண் பிள்ளைகளைப்போல் இல்லை என்பதென்னவோ மூன்று வயதிலேயே அவனுக்குத் தெரிந்துவிட்டது. “ஏண்டா, எல்லாரும் பிக்னிக் போறோம். நீர்வீழ்ச்சியில குளிக்கலாம், வெளியில சாப்பிடலாம். நீ வரலே?” அம்மா அதிசயப்பட்டு கேட்டபோது, அக்குழந்தையின் பிஞ்சு உதடுகள் அழுகையில் கோணின. வெளியில் போய் உல்லாசமாகக் கழிப்பதைவிட முக்கியமான வேலை ஒன்று அவனுக்கு இருந்தது. “நான் பாட்டிகூட இருக்கேன்!” என்ற குழந்தையை வீட்டிலேயே விட்டுவிட்டுப் போனார்கள். பாட்டி உட்கார்ந்தபடியே டி.வி எதிரில் தூங்க, அந்தமாதிரியான சந்தர்ப்பத்தை எதிர்பார்த்துக் காத்திருந்த குழந்தை பத்மநாதன் அம்மாவின் உள்பாவாடையை எடுத்து அணிந்துகொண்டான். சிரிப்பு பொங்கியது. தான் போட்டிருந்த டி.ஷர்ட்டை அருவருப்புடன் கழற்றிப் போட்டுவிட்டு, வெற்று மார்பில் அம்மாவின் ப்ராவை வைத்து அழகுபார்த்தான். மனத்துள் ஆனந்தம் கிளர்ந்தெழுந்தது. எப்போதும் இப்படி உடை அணிய முடிந்தால், எவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கும்! எதற்காக இப்படி ஆண்பிள்ளை அணிவதுபோல அரை நிஜாரும், முழுக்கை சட்டையும் வாங்கிப் போடுகிறார்கள் என்று அம்மாமேல் கோபம் எழுந்தது. தனது கையாலாகாத்தனத்தை எண்ணி உரக்க அழ ஆரம்பித்தவன், பாட்டி எழுந்து விடுவார்களே என்று பயந்து, வாயில் கட்டை விரலை வைத்துக் கடித்தான். சிறிது நேரத்தில் தரையில் படுத்து, அப்படியே தூங்கியும் போனான். யாரோ உலுக்கினாற்போலிருந்தது. “எத்தனை நாளா இப்படி நடக்குது?” என்று உறுமியபடி நின்றிருந்தார் அப்பா. “சின்னப்பிள்ளை! என்ன செய்யறோம்னு புரியாம என்னமோ செஞ்சிருக்கான். விடுவீங்களா!” என்ற அம்மாவின் சமாதானம் அவர் காதில் ஏறியதாகத் தெரியவில்லை. இடுப்பிலிருந்த பெல்டை உருவினார். அம்மாவும், பாட்டியும் கெஞ்சக் கெஞ்ச, அவரது ஆத்திரம் அதிகரித்தது. தந்தையின் வழக்கத்துக்கு மாறான கோபம் அச்சத்தை விளைவிக்க, பெரிய பிள்ளைகள் இருவரும் அறைக்குள் ஒளிந்துகொண்டனர். “இனிமே இப்படிச் செய்வியா? இப்படிச் செய்வியா?” என்று விளாசினார். பத்மநாதன் உதடுகளை இறுக்கியபடி நின்றிருந்தான். “அழறானா, பாரு! அவ்வளவு திமிரு! எல்லாம் நீ குடுக்கற செல்லம்!” கை ஓய்ந்துபோனதும், அப்பா அம்மாவைத் திட்டிவிட்டு, மகனை முறைத்தபடி அப்பால் அகன்றார். “ஏண்டா ராஜா அப்படிச் செய்தே?” என்றபடி அணைக்க வந்த அம்மாவின் கைக்குள் அடங்காது, ஓடினான் சிறுவன். இனம் புரியாத எதுவோ அவனைப் பெண்களின் ஆடைகளை விரும்பி அணிந்துகொள்ள வைத்தது. காரணத்தை ஆராயும் வயதில்லைதான். ஆனாலும், அப்பாவின் அடிக்குப் பயந்து அந்தப் பழக்கத்தை விடுவதைவிட, இனி பரம ரகசியமாக அம்மாவின், அக்காளின் உடைகளை அணிந்து அழகு பார்க்க வேண்டும் என்று தோன்றிப்போயிற்று. மறுநாள் எட்டு வயதான அண்ணன் வேலு, “ஐயையே! பொம்பளை மாதிரி டிரெஸ் பண்ணிக்கத்தானே ஒனக்குப் பிடிக்குது! போண்டான்!” என்று பழிக்க, அவனை எதிர்க்கத் தெம்பில்லாமல், அழ ஆரம்பித்தான் குழந்தை. நேற்றுவரை அவனுடன் சேர்ந்து விளையாடிய அண்ணாவே இப்படியென்றால், பிறரைப்பற்றிக் கேட்கவா வேண்டும்! அப்போதே அவனுக்குப் புரிந்துவிட்டது, தான் தன் அண்ணனைப் போலவோ, அக்காளைப் போலவோ இல்லை, இனி என்றுமே இருக்க முடியாது என்று. பதின்மூன்று வயதில் மீசை அரும்ப ஆரம்பித்தது பத்மநாதனின் முகத்தில். அவனைவிட இரண்டு வயது பெரியவளான அக்காவின் உடலில் மட்டும் எவ்வளவு அழகான வளைவுகள்! தனக்குக் கொடுத்து வைக்கவில்லையே என்ற ஏக்கம் பிறந்தது அவனுக்குள். இரவில் வேண்டாத கனவுகள் வேறு வந்து, அவனை விழிப்படையச் செய்தன. ‘நீ ஒரு ஆண்!’ என்று அவை சொல்லாமல் சொல்வதுபோல் உடலில் எழுச்சியை உண்டாக்கின. அந்த அதிர்ச்சி தாங்காது, ‘இப்படி வாழறதுக்கு சாவறதே தேவலை,’ என்று முடிவெடுத்தான். ஆனால், ‘கடைக்குட்டி’ என்று அவன்மேல் உயிரையே வைத்திருந்த அம்மாவை நினைத்தால் பாவமாக இருந்தது. அக்கம்பக்கத்தில் தெரிந்தவர்கள் யாராவது இறந்தால்கூட, அந்த துக்கத்தைத் தாங்கமுடியாமல், மணிக்கணக்காக அழும் இளகிய மனம் கொண்ட அம்மா இவனைப் பறிகொடுத்தால், அந்த துக்கத்தை எப்படித் தாங்குவாள் என்று யோசித்தபோது, தற்கொலை செய்துகொள்ளும் எண்ணம் எழுந்த வேகத்திலேயே மறைந்து போனது. ஆனால், ஒவ்வொரு இரவு தூங்கப்போகும்போதும், ‘கண்ட கண்ட கனவுகள் வந்து தொலைத்துவிடுமே!” என்ற பயம் எழ, ஒரு நீண்ட துணியால் தனது ஆண்மையை இறுகக் கட்டிக் கொண்டான். ஒருவித நிம்மதி ஏற்பட்டது. அப்பாவோ அவனுடன் பேசுவதையே விட்டுவிட்டார். ‘ஆணுமில்லாம, பொண்ணுமில்லாம, இப்படி ஒரு அரைகுறைச் சனியன் எனக்குப் பிள்ளையா வந்து பிறந்து தொலைச்சிருக்கணுமா!’ என்று அவர் ஒரு முறை அம்மாவிடம் அரற்றியதை ஒட்டுக் கேட்க நேரிட்டபின், அந்தக் குடும்பத்தினரிடம் எந்த ஒட்டுதலும் இல்லாமல் போயிற்று பத்மநாதனுக்கு. தானுண்டு, தன் படிப்புண்டு என்று இருந்தான். தன்னை ஏதோ மிருகத்தைப் பார்ப்பதுபோல் அதிசயமும், அருவருப்புமாகப் பார்க்கும் ஜீவன்கள் அடங்கிய அந்தக் குடும்பத்தில் தான் அதிக காலம் சேர்ந்து இருக்க முடியாது என்றவரை அவனுக்குப் புரிந்தது. படித்துவிட்டு, ஒருவழியாக எங்காவது தொலைந்துவிடலாம், அப்போதாவது தன் மனம் விழைந்தபடி அலங்காரம் செய்துகொள்ள முடியாதா என்று தீர்க்கமாக யோசித்தான். ஆனால், நிம்மதியாகப் படிக்கவும் முடியாது போயிற்று. ஒரு நாள், “பத்மநாதன்! ஏன் விரலுக்கு மருதாணி பூசியிருக்கே?” என்று சிறு நகையோடு ஆசிரியர் அவன் கையைத் தன் கையில் எடுத்துக்கொண்டவராய்க் கேட்டபோது, வகுப்பு மாணவர்கள் எல்லாரும் கொல்லென்று சிரித்தார்கள். “அவன் ஆம்பளை இல்லைங்க, ஸார்!” என்றான் ஒருவன் துடுக்காக. “எனக்குப் பிடிக்கும், ஸார்!” என்ற பத்மநாதனின் குரலில் திமிரில்லை. ஒருவித கெஞ்சல்தான் இருந்தது. வகுப்பு முடிந்ததும், “இந்த நோட்டுப் புத்தகங்களை எடுத்திட்டு வாடா!” என்று அவனைப் பணித்தார் ஆசிரியர். அவரது அறைக்குள் நுழைந்ததும், அவன் சற்றும் எதிர்பாராதவண்ணம், அவன் கன்னத்தில் முத்தமிட்டார். அவரது கை போகக் கூடாத இடத்துக்குப் போயிற்று. புத்தகங்களைக் கீழே தவறவிட்டு, தலைதெறிக்க வெளியே ஓடினான் மாணவன். ‘என்னைப் பார்த்தால் எல்லாருக்கும் ஏன் இப்படி நடந்துகொள்ளவேண்டும்போல இருக்கிறது!’ என்று தனிமையில் அழத்தான் முடிந்தது அவனால். உடன் படித்த மாணவர்களும் அதுபோன்ற சேட்டைகளை ஆரம்பித்திருக்க, பத்மநாதனின் தனிமை அதிகரித்தது. வயதுக்கு மீறிய குழப்பங்களும், வேதனைகளும் சூழ்ந்ததில், படிப்பிலும் மனம் போகவில்லை. பதினாறு வயதில் எல்லாவற்றையும் உதறிவிட்டு, கோலாலம்பூர் மஸ்ஜிட் இந்தியாவில் இருந்த இந்த அடுக்குமாடிக்குக் குடி வந்த பிறகுதான் பிறரால் ஏற்றுக்கொள்ளப்படுவது, நட்பு, நிம்மதி இதற்கெல்லாம் அர்த்தம் புரிய ஆரம்பித்தது பத்மநாதனுக்கு. தன்னைப்போல் பிறப்பினாலேயே வித்தியாசமான பிறர்! இவர்கள் எல்லாருக்குமே இளமைப்பருவம் கசப்பாகத்தான் இருந்திருக்கிறது. இந்த நிதரிசனங்களே ஒருவித பலத்தை அளிக்க, அவர்கள் காட்டிய பாதையை மறுபேச்சின்றி ஏற்றான். அன்றொரு நாள், அறியாப்பருவத்தில் ஆசிரியர் காட்டிய அதே வழி. ஆனால், வேறு வழியில்லை என்ற நிலையில், இன்று அதனால் அச்சமோ, அவமானமோ உண்டாகவில்லை. “ஏண்டி பத்மா? ராத்திரி பூராவும் வாய் ஓயாம இருமறியே! ஏதாவது மருந்து வாங்கி சாப்பிடக்கூடாது?” அதே புறாக்கூண்டில் வசித்த புல்புல் கரிசனத்துடன் கேட்டான். புல்புல் — அது அவனாக வைத்துக்கொண்ட பெயர். அவனுடைய இயற்பெயர் யாருக்குமே தெரியாது. கேட்டாலும், “பேரு வெச்ச அப்பா, அம்மாவுக்கே வேண்டாதவனாப் போயிட்டேன். இப்ப அவங்க வெச்ச பேரு மட்டும் யாருக்கு வேணுமாம்?” என்றுவிடுவான். “புல்புல்ங்கிறது ஒரு பறவை இனம். பேரளவிலேயாவது சுதந்திரமா இருந்துட்டுப் போறேனே!” என்பான், வரண்ட சிரிப்புடன். பத்மநாதன் சூள் கொட்டினான். இந்தத் தொழிலில் ஈடுபட்டுவிட்டு, வியாதிக்குப் பயந்தால் முடியுமா? ‘ஆணுறை உபயோகியுங்கள்!’ என்ற வாசகத்தைத் தாங்கிய அட்டையை சுவற்றில் மாட்டிவிட்டு, கெஞ்சலாக அதைக் காட்டியதும், ஒரு வாடிக்கைக்காரன்தான் எவ்வளவு ஆத்திரம் அடைந்தான்! “ராஸ்கல்! எனக்கே புத்தி சொல்ற அளவுக்குப் போயிட்டியா?” என்று என்ன அடி அடித்தான்! இந்த அவலத்துக்கெல்லாம் ஒரு முடிவுக்கு வரவேண்டுமானால், தான் அறுவைச் சிகிச்சைமூலம் காணவும் பொறுக்காத உறுப்புகளை அகற்றிவிட்டு, பெண்ணுக்கான உடலமைப்பை உண்டாக்கிக்கொள்ள வேண்டும். ஹார்மோன்களால் அக்காளுக்கு இருப்பதுபோல் கவர்ச்சியாக மார்பகம் வளரும், குரலும் பெண்மைக்குரிய இனிமையுடன் இருக்கும். என்னதான் புருவத்தைச் சீர்படுத்திக்கொண்டு, வளை, சங்கிலி, கொலுசு என்று உடல்கொள்ளாத நகைகளும், புடவையும் அணிந்தாலும், அந்தக் கட்டைக்குரல் ஒன்றே போதுமே தன் லட்சணத்தை உலகுக்குப் பறைசாற்ற! யார் கண்டது! உடலளவிலும் பெண்ணானால், தன் ஐந்தடி எட்டங்குல உருவில், மூக்கும், முழியுமான முகத்தழகில் மயங்கி, யாராவது தன்னை மணக்க வரமாட்டார்களா அப்போது! வாழ்க்கையில் முழுமையான பெண்ணாக ஆவது ஒன்றே பத்மநாதனது குறிக்கோளாக ஆயிற்று. இந்திய ரூபாயோ, தாய்லாந்து பாட்டோ, சிங்கப்பூர் டாலரோ, எதுவானாலும் தன் உடலைப் பூரணமாக மாற்றிக்கொள்ள அவரவர் காசில் பத்தாயிரம் ஆகுமாமே! வாழ்வில் ஒரு நாளாவது அப்படிப்பட்ட பெண்ணாக இருக்க வேண்டுமானால், அந்த இன்பத்தை அனுபவிக்க எத்தனை விலை கொடுத்தாலும் தகும் என்ற உறுதியுடன், உடலை முதலாக வைத்துச் சம்பாதித்த பணத்தில் கடுமையாக மிச்சம் பிடிக்க ஆரம்பித்தான். அடிக்கடி உடல் உபாதைகள் தோன்றின. அலட்சியப்படுத்தினான். அப்படியே ‘வேலை’க்குப் போனான். ‘இவன்களைப்போல எவனோ ஒருத்தனாலதானே நான் இன்னிக்கு இப்படி சீரழிஞ்சு இருக்கேன்!’ என்று எழுந்த ஆத்திரத்தில், தன் அணைப்பில் இன்பம் காண வருபவர்களும் ஒரு நாள் நோய்வாய்ப்பட்டுப் போவார்கள் என்ற எண்ணமே ஒரு குரூர திருப்தியை உண்டாக்கியது அவனுக்குள். பத்மநாதனுக்கு அடிக்கடி களைப்பு உண்டாக ஆரம்பித்தது. காய்ச்சல், தலைவலி என்றால் எப்படியோ சமாளித்து விடலாம். இப்போதோ பாதங்களில் கட்டிகள். மூக்கும் சேர்ந்துகொண்டு, ஓயாது ஒழுக ஆரம்பித்திருந்தது. போதாத குறைக்கு, எதற்குமே சக்தியின்றி வேறு இருந்தது. முன்பெல்லாம் இப்படியா! இரவெல்லாம் பிறரைத் திருப்தி செய்துவிட்டு, பகலில் பெரும்பகுதியை ஆட்டபாட்டங்களில் செலவழிக்கவில்லை? “புல்புல்! எனக்குப் பயமா இருக்குடி”. அந்தக் கட்டிடத்தில் குடியிருந்தவர்கள் ஒருவரையொருவர் ‘வாடி’ ‘போடி’ என்று கூப்பிட்டுக் கொள்வது வழக்கமாக இருந்தது. வயதில் பெரிய ஆண்கள் அக்கா, அல்லது ஆன்ட்டி ஆனார்கள். அப்படி அழைக்கப்படும்போது, தாங்கள் பெண்தாம் என்று ஒரு அற்ப சந்தோஷத்தை அனுபவித்தார்கள். “என்னாடி, பத்மா?” “தினமுமே இப்படி இருமலும், சளியுமா வாட்டுதே! நான் சேர்த்து வெச்ச பணத்துக்கு உபயோகமே இல்லாம போயிடுமோ?” என்று தன் சந்தேகத்தைத் தெரிவித்தான் பத்மநாதன். “இருமல் யாருக்குத்தான் வரல?” என்று அலட்சியமாகப் பேசி, சமாதானப்படுத்தப்பார்த்தான் புல்புல். “நான் சீக்கிரம் செத்துட்டாக்கூட பரவாயில்ல. இந்த ரெண்டுங்கெட்டானுக்காக அழ யார் இருக்காங்க?” அவனது தன்னிரக்கத்தைத் தடுக்க ஏதோ சொல்லப்போன தோழனை கையமர்த்திவிட்டுத் தொடர்ந்தான் பத்மநாதன்: “அப்படி நான் செத்துட்டா, என் உண்டியல்ல இருக்கிற பணத்தை நீ எடுத்துக்க. ஐயாயிரம் தேறும். அதிர்ஷ்டம் இருந்தா, நீயாவது ஆபரேஷன் செய்துக்கலாமில்ல! தாய்லாந்து பக்கம்தான். ரயில்ல போகலாமாம்”. புல்புல்லுக்கு வருத்தமாக இருந்தது. “ஒனக்கு இன்னிக்கு என்னமோதான் ஆயிடுச்சு. மொதல்ல ஒன்னை டாக்டர்கிட்ட காட்டணும். வா, சொல்றேன்!” அந்த ஆதரவு பத்மநாதனுக்கு வேண்டியிருந்தது. இருந்தாலும் உபசாரமாக, “நீ வேலைக்குப் போக வேணாம்?” என்று ஒரு கேள்வியை எழுப்பினான். புல்புல் கசப்புடன் ஒரு சிரிப்பை உதிர்த்தான். “பெரிய வேலை! எந்தப் புருசன்காரன் இந்த பொண்டாட்டியைக் காணாம ஏங்கப்போறான்!” டாக்டர் பராங்குசம் தன்னெதிரில் நின்ற இரு இளைஞர்களையும் பார்த்தார். முழு நீள கால்சட்டை, மேலே பெண்கள் அணிவது போன்ற குர்த்தா. தீட்டப்பட்ட புருவம். ஒரு கையில் வளையல்கள். உதடுகளில் சிவப்புச்சாயம். தட்டையான, அகன்ற மார்பும், அதற்குச் சற்றும் பொருத்தமில்லாத குறுகிய இடையும் அவர்களைப்பற்றி அவருக்கு எதையோ உணர்த்தின. புல்புல் பேசினான்: “டாக்டர்! இது என் தங்கச்சி. கொஞ்ச நாளா அடிக்கடி காய்ச்சல், சளி, இருமல்னு சொல்லிட்டிருக்கு..” பத்மநாதனின் காதுமடல்களில் இருந்த கட்டிகளை பார்த்த டாக்டர், ‘இது மேக நோய் கேஸ்!’ என்று முடிவெடுத்தார். “இதுக்கு முந்தி எந்த டாக்டர்கிட்ட போனீங்க?” என்று பத்மநாதனிடம் விசாரித்தார். ஏதோ பெரிய ஹாஸ்யத்தைக் கேட்டுவிட்டதுபோல் அவன் சிரித்தான். “அதுக்கெல்லாம் எனக்கு ஏது டாக்டர் வசதி! இப்பகூட, என்னை ‘பாக்சா’ பண்ணி புல்புல் — எங்கக்கா — கூட்டிட்டு வந்ததாலதான் வந்தேன்”. “என்ன படிச்சிருக்கீங்க?” ‘இதென்ன, சம்பந்தமில்லாமல் ஏதோ கேட்கிறாரே!’ என்று ஒரு கோபம் சுர்ரென்று எழுந்தது பத்மநாதனுக்குள். யார் தன்னைப் படிக்க விட்டார்கள்! ஆணுமில்லை, பெண்ணுமில்லை என்று ஆகிவிட்ட நிலையில், அடையாளக் கார்டும் எடுக்க முடியாது. அதனாலேயே கௌரவமான எந்த வேலைக்கும் போகவும் முடியாது இருந்தது. இந்த பாழாய்ப்போன பூமியில் பிறந்துவிட்ட தோஷத்துக்காக ஏதாவது சாப்பிட்டுத் தொலைக்க வேண்டியிருக்கிறது. அதற்காகவாவது சம்பாதிக்க வேண்டி இருக்கிறதே! இந்த கஷ்டமெல்லாம் யாருக்குப் புரிகிறது! நண்பனுடைய முகம் போன போக்கைப் பார்த்த புல்புல், அவன் ஏறுமாறாக ஏதாவது பேசி விடப்போகிறானே என்று பயந்தவனாக, “நாங்க யாருமே ஏழு கிளாஸ்கூட படிச்சதில்ல, டாக்டர்!” என்றான் பணிவாக. டாக்டர் பராங்குசம் பெருமூச்சு விட்டார். புராணங்களில் வரும் நாரதரும், காந்தர்வர்களும் இப்படிப்பட்டவர்கள்தானாம். இசை, நடனம் இரண்டு கலைகளிலும் மேலோங்கியவர்கள் அவர்கள். அக்காலத்தில், ஏன், அதற்குப் பிறகும் அரசர்கள் ஆண்ட காலத்தில் இப்படிப்பட்டவர்களுக்குப் ஒரு தனி கௌரவம் இருந்து வந்திருக்கிறது. இன்றோ, படிப்போ, வழிகாட்டலோ இல்லாமல் சீரழிகிறார்கள், பாவம்! “ரத்தப் பரிசோதனை செய்யணும்,” என்று முணுமுணுத்தவராக, ஊசியை எடுக்கும் சாக்கில் கீழே குனிந்தார். அவரது கண்கள் பனித்திருந்தன. 3 அத்தியாயம் 3 இந்துலேகாவுக்கு எதுவும் பிடிபடவில்லை. கோபிக்குத் தன்மேல் என்ன கோபம்? அன்று கெந்திங் மலையில் தனியே கடைகளைப் பார்க்கச் சென்றது அவருக்குப் பிடிக்கவில்லையோ? அவர்தானே அனுப்பிவைத்தார்? அவள் திரும்பியபோது, வெறித்த பார்வையுடன் கட்டிலில் கால் நீட்டி உட்கார்ந்திருந்தான் கோபி. “நீங்க இன்னும் தூங்கலியா?” என்று அவள் சாதாரணமாகக் கேட்டபோது, “நீ சந்தோஷமா ஊர் சுத்தியாச்சில்ல? இப்போ உன் வேலையைப் பாத்துட்டுப் போ!” என்று எரிந்து விழுந்தான். சற்றுமுன் யோசனையின்றி செலவு செய்ததால் உண்டான பெருமகிழ்ச்சி அப்படியே வடிந்தது. அவளிடம் இதுவரை யாரும் அவ்வளவு கடுமையாக நடந்துகொண்டதில்லை. அப்பாவின் நினைப்பு எழுந்தது தன்னிச்சையாக. எப்போதும் அதை விரட்டப் பார்ப்பவள், இன்று அதில் லயித்துப்போனாள். அம்மாவைப்பற்றி அத்தை சொல்லித்தான் தெரியும் அவளுக்கு. “ஒங்கம்மா ஒன்னைமாதிரியேதான் இருப்பா. ரொம்ப அழகு. ஒரு தடவை ஒங்கப்பா பாசாக்கடையிலேருந்து மோதிரம் வாங்கி, எட்டு விரல்லேயும் மாட்டிக்கிட்டு, கப்பல்லே ஈண்டியா போனாரு. அப்போ சும்மா ஹீரோ கணக்கா இருப்பாரா! மலேசியாவில பெரிய பணக்காரரு போலயிருக்குன்னு ஒங்கம்மா மயங்கிட்டா. கட்டிக்கிட்டா இவரைத்தான் கட்டிப்பேன்’னு ஒத்தைக்காலில நின்னு, சாதிச்சுக்கிட்டா,” கதைபோல் விவரிப்பாள் அத்தை. “இங்க வந்ததும்தான் இவன் யோக்கியதை தெரிஞ்சிச்சு. ‘என்னை ஏமாத்திட்டீங்க!’ன்னு ஒங்கம்மா புலம்புவா. அதுவே அப்புறம் ஓயாத அழுகையா மாறிடிச்சு. அப்போ நீ வயத்தில. வெறிச்சுப் பாத்துக்கிட்டு, ரெண்டு, மூணு நாளு படுக்கையிலேயே கெடப்பா. பாத்தாலே பயமா இருக்கும். குளிக்கவோ, சாப்பிடவோ மாட்டா. எல்லா சொந்தக்காரங்களையும் விட்டுட்டு நாடு விட்டு நாடு வந்ததை அவளால தாங்கிக்க முடியலன்னு நினைச்சோம். ஒன்னை ஒரு தடவைகூட தொட்டுத் தூக்க குடுத்து வைக்கலியே அந்தப் பாவிமகளுக்கு!’ பொய் சொல்லி அம்மாவைக் கொன்ற ஏழைத் தொழிலாளி அப்பாவின்மேல் இந்துவுக்கு ஆத்திரம் ஏற்பட்டது. அப்போதுதான் அவரிடமிருந்து மனத்தளவில் விலகினாள். தானாவது பெரிய படிப்பு படித்து, பணக்காரியாக ஆனால்தான் அம்மா துன்பப்பட்டதற்கு ஈடு செய்ய முடியும் என்று தானே ஏதோ குருட்டுக்கணக்கு போட்டு, அதில் வெற்றியும் கண்டுவிட்டாள். அப்படித்தான் நினைத்து மகிழ்ந்திருந்தாள், அன்றுவரை. ஆனால், அன்பின் மொத்த உருவாக இருந்த கணவன் திடீரென்று மௌனம் சாதிப்பது எதனால்? கேட்டாலும் சிடுசிடுக்கிறார். இந்துவுக்கு அழுகை வந்தது. அவளைப் பார்த்த கோபிக்குப் பரிதாபமாக இருந்தது. அவனால் அவளுடைய மனப்போராட்டத்தைப் புரிந்துகொள்ள முடிந்தது. அதிக அனுபவமில்லாத குழந்தை அவள் என்று இந்த சொற்ப காலத்தில் புரிந்துகொண்டிருந்தான் அவன். ‘உன்னைப் பார்க்கும்போதெல்லாம் குற்ற உணர்ச்சி என்னை வதைக்கிறது!’ என்று அவளிடம் எப்படிச் சொல்வான்! டாக்டரிடம் போய் பரிசோதனை செய்துகொண்டதில், அவனுடைய பயம் நிஜம்தான் என்று புரிந்தது. “ரொம்ப ஸாரி, மிஸ்டர் கோபி. ஒங்களுக்கு ஹெச் ஐ வி பாஸிடிவ். ரொம்ப வருஷம் அயல் நாட்டில இருந்திருக்கீங்க. ஊசியால போதைப்பொருள் உபயோகிச்சு இருக்கீங்களா? அப்படியானா, ஒரே ஊசியை ஒங்க நண்பர்களோட பகிர்ந்துக்கிட்டிருக்கீங்களா?” அவன் முகத்தில் கோபத்தின் சாயல் படரவும், “தப்பா நினைக்காதீங்க. இந்த விஷக்கிருமிகள் பரவ இதுவும் ஒரு வழி. அதான் கேட்டேன்!” என்று சப்பைக்கட்டு கட்டினார். “எனக்கு என்னிக்குமே போதைப்பழக்கம் கிடையாது!” ஆத்திரத்துடன் பதிலளித்தான் கோபி. உடனே, சமாதானத் தொனியில், “இதைப்பத்தி எனக்கு அதிகம் தெரியாது, டாக்டர். தினசரியிலும், பத்திரிகையிலும் அடிக்கடி போடுவாங்க, பாத்திருக்கேன். ஆனா, எப்பவுமே சாவும், வியாதியும் மத்தவங்களுக்குத்தான் வரும், இல்லியா? அதனால, நான் அதிகம் ஆர்வம் எடுத்துக்கல,” என்று உண்மையை ஒத்துக்கொண்டான் கோபி. “இந்த நோய் எந்த பறவை, இல்ல மிருகத்திலிருந்து பரவுது?” என்று காலங்கடந்து விசாரித்தான். “இது மனுஷங்களுக்கு மட்டும்தான் வருது. மிருகங்களில, வாலில்லாக் குரங்குகளுக்கு இதேமாதிரி ஒரு வைரஸ் இருந்ததாம். ஆனா இதுவேயில்ல” என்று ஆரம்பித்த டாக்டரை இடைமறித்தான் கோபி: “சிம்பான்ஸி?” “ஆமா. அதுவும் எங்கே? ஆப்பிரிக்காவில. அங்க இருக்கிற கிராமத்து ஜனங்க இந்த மிருகங்களைச் சாப்பிடுவாங்களாம். கொஞ்சம் கொஞ்சமா, குரங்கில இருந்த கிருமிங்க அவங்க ஒடம்பில பூந்து, பெருக ஆரம்பிச்சிடுச்சு”. “ஆயிரக்கணக்கான வருஷத்துக்கு முந்தியா?” “இல்ல. சமீபத்திலதான். 1926-லிருந்து 1946-வரைக்கும்னு விஞ்ஞானிங்க ஆராய்ச்சி செஞ்சு, கண்டுபிடிச்சிருக்காங்க. அப்பக்கூட வெளியில அதிகமா பரவலே. அறுபதுகளிலே ஜனங்க கிராமப்புறத்திலிருந்து நகர்ப்புறங்களுக்கு குடியேறினப்போ, ஆப்பிரிக்கா கண்டம் பூராவும் பரவிச்சாம். 1959-ல செத்துப்போன ஒருத்தனோட ரத்தத்தைப் பரிசோதனை செய்து பாத்ததில, அவன் எய்ட்ஸ் நோயால பாதிக்கப்பட்டு, அதனால செத்திருக்கணும்னு முடிவு செய்திருக்காங்க. இது காங்கோவில”. “உலகம் சிறுத்துக்கிட்டு வருதுன்னு பெருமையா சொல்லிக்கிறாங்க. அதனால இப்போ தொற்று நோய்களும் சுலபமா பரவுதே! இது எந்த விதத்தில முன்னேற்றம்!” என்றான் கோபி, தனக்கு ஏற்பட்ட கசப்பை மறைக்கமுடியாது. “நல்லாச் சொன்னீங்க! ஜனங்க படிப்பு, இல்ல வேலை சம்பந்தமா நாடு விட்டு நாடு போனதில, அமெரிக்காவில 1978-ல முதன்முதலா ஹெச் ஐ வி கண்டுபிடிக்கப்பட்டிருக்கு. இதுவும் தொற்று நோயைப் பரப்பற ஒரு விஷக்கிருமி. நம்பளோட எதிர்ப்புச்சக்தியைக் குறைச்சிடுது. அதனால மத்த வியாதிங்க சுலபமா நம்பளைத் தாக்க முடியுது”. கோபி என்னமோ யோசித்தான். “டாக்டர்! என்கூட ஒரே அறையில தங்கின நண்பனுக்கு இது இருந்திருக்கு. ஆனா, அவனுக்கே தெரியாது..” “அதான் இதில ஒரு கஷ்டம். சளி, இருமல்னு சாதாரணமா நாம்ப எடுத்துக்கறோம். ரெண்டு வருஷம்வரை ஒடம்பிலே சமர்த்தா இருந்திட்டு, அப்புறம்தான் தன் வேலையை ஆரம்பிக்குது!” அவர் குறுக்கே பேசியது அவனுக்குப் பிடிக்கவில்லை என்பது அவன் முகத்திலேயே தெரிந்தது. “நான் கேக்க வந்தது.. நாங்க ரெண்டு பேரும் ஒரே ஐஸ்க்ரீமை மாத்தி மாத்திச் சாப்பிட்டிருக்கோம். எச்சிலாவது, மண்ணாவதுன்னு அப்ப அலட்சியமா இருந்தேன். என்னமோ, இதெல்லாம் நாகரீகம்னு நினைச்சுட்டேன்”. “எச்சிலால சில கிருமிங்க பரவும்தான். ஆனா இந்தக் கிருமிகள் பரவறது கிடையாது”. டாக்டர் ஆணித்தரமாகச் சொன்னார். பிறகு, சற்றுத் தயங்கி, “நான் சொல்றதைத் தப்பா எடுத்துக்காதீங்க. நீங்க சமீபத்தில கல்யாணமானவர்னு சொன்னீங்க. அதுக்கு முந்தி, தனியா இருக்கிறப்போ.. ஒங்களுக்கு பொம்பளைங்க சகவாசம் இருந்திருக்கும்னு நினைக்கிறேன்!” கோபியால் உடனே பதில் சொல்ல முடியவில்லை. ஆண்மைத்தனம், பெருமை என்றெல்லாம் நினைத்து செய்த காரியம் இப்படி ஒரு பயங்கரமான நிலையைக் கொண்டுவந்துவிட்டதே என்று அயர்ந்திருந்தான். அவன் பதில் சொல்ல வேண்டியிருக்கவில்லை. அவனது குனிந்த தலையும், முகத்தில் படர்ந்த வேதனையுமே டாக்டருக்கு நடந்தவைகளை உணர்த்தின. “ஏன் இப்படி ஆகிடுச்சுன்னு இனிமே யோசிச்சு என்ன பிரயோசனம்? நடக்கிறதைப் பாப்போம்,” என்று அந்த உரையாடலுக்கு ஒரு முடிவு கட்டப்பார்த்தார். ஆனால், கோபி விடுவதாக இல்லை. “எனக்கு எய்ட்ஸ் வந்துடுமா, டாக்டர்?” “சிகிச்சை எதுவும் எடுத்துக்காட்டி வரும் — ரெண்டு வருஷத்துக்குள்ளே. அப்புறம் ஒண்ணும் செய்ய முடியாது. அங்கதான் போகணும்!” கண்ணால் மேல்திசையைக் காட்டி, ‘சாவுதான் முடிவு’ என்பதைக் குறிப்பால் உணர்த்தினார். “நம்ப ஒடம்பில இயற்கையா இருக்கிற தடுப்புச்சக்தி சுத்தமா இல்லாமபோய், எல்லாவித வியாதியும் வந்து சேர்ந்துடும். அதைத்தான் எய்ட்ஸ் என்கிறோம்”. “மருந்து சாப்பிட்டா..?” என்று ஈனஸ்வரத்தில் விசாரித்தான் கோபி. “தகுந்த சிகிச்சையை கெடு தவறாம எடுத்துக்கிட்டு, பத்து, பதினஞ்சு வருஷம்கூட நல்லா இருக்கிறவங்களையும் நான் பாத்திருக்கேன்,” என்று டாக்டர் சொன்னது நம்பிக்கை அளிப்பதாக இருந்தது. “சில பேர் அலட்சியமா இருந்துடுவாங்க — அவங்க பெரிசு பண்ணாட்டி, இந்த வியாதி தானே போயிடும்கிறமாதிரி. இவங்களைத்தான் எய்ட்ஸ் சீக்கிரம் தாக்கும்”. ‘பெஞ்சி மாதிரி!’ என்று எண்ணினான் கோபி. அவனுக்கு ஒன்றுதான் புரிந்தது. தான் உடனே இறக்கப்போவதில்லை. ஆனால், இனியும் மனமறிந்து இந்துவுடன் ஒரே படுக்கையைப் பகிர்ந்துகொள்ள முடியாது. அது அவளுக்குச் செய்யும் நம்பிக்கைத் துரோகம். தன் வினை தன்னுடன் போகட்டும். அவளுக்கும் அதில் பங்கு வேண்டாம். ஆனால், ஒரே வீட்டில் தங்கிக்கொண்டு, அவளிடமிருந்து விலகி இருப்பது எப்படி சாத்தியம்? கோபி ஒரு முடிவுக்கு வந்தான். “எங்கே கோபி கிளம்பறோம்?” கணவன் தன் துணிமணிகளை எல்லாம் ஒரு பெரிய சூட்கேஸில் அடைத்துக்கொண்டிருப்பதைக் கண்ட இந்து சற்று ஆச்சரியத்துடன் கேட்டாள். காதில் விழாதவன்போலிருந்தான் கோபி. அவள் திரும்ப, சற்று உரத்த குரலில் கேட்கவும், “அமெரிக்கா போறேன். பிசினஸ் சம்பந்தமா,” என்றான், பெட்டியை நோக்கிக் குனிந்தபடி. அவளைத் திரும்பிப் பார்க்க அவனுக்குத் துணிவிருக்கவில்லை.. “நீங்க மட்டுமா?” அதிர்ச்சியுடன் கேட்டாள் மனைவி. “அப்போ நான்?” “அங்க நான் நிறைய அலைய வேண்டியிருக்கும். ஒங்கூட சுத்த முடியாது. அதான் ஹனிமூன் முடிஞ்சிடுச்சில்ல!” அவளுக்கு அவமானமாக இருந்தது. வெறும் படுக்கைக்குத்தானா மனைவி? அதை வெளியே காட்டிக்கொள்ளாமல், “நான் அடுக்கி வைக்கறேன், தள்ளுங்க. என்ன இப்படி குப்பைமாதிரி அடைக்கறீங்க?” என்று உரிமையுடன் கோபித்தாள். அவனருகே சென்றாள். கோபி தன்னை சுருக்கிக்கொண்டான். எங்காவது தன்னை தொட்டு வைக்கப்போகிறாளே! வெறும் தொடுதலால் இந்த வியாதி பரவாது என்று டாக்டர் சொல்லி இருந்தாலும், பயமாக இருந்தது. “எல்லாம் எனக்குத் தெரியும். ஒன்னை நம்பியா பொறந்தேன்?” என்று எரிந்து விழுந்தான். இந்துவுக்கு வாயடைத்துப்போயிற்று. மோகம் முப்பது நாள் என்பார்கள். இந்த பத்துப் பதினைந்து நாட்களிலேயே தான் கணவருக்கு அலுத்து விட்டோமா? அவள் முகம் போன போக்கைப் பார்த்து கோபிக்கு அவளை அணைத்துச் சமாதானப்படுத்த வேண்டும்போல இருந்தது. பெரும் பிரயத்தனத்துடன் கட்டுப்படுத்திக்கொண்டான். இந்துவோ எல்லாரையும்போல, தனக்கும் அம்மா, அப்பா இருவரும் இருந்திருந்தால், இந்தமாதிரி சமயங்களில் என்ன செய்ய வேண்டும் என்று புரிந்திருக்கும் என்று தன்னையே நொந்துகொண்டு, “எப்போ கிளம்பறீங்க?” என்று அடைத்த குரலில் கேட்டாள். “அவசரமாப் போறேன்னு சொன்னேனில்ல? இன்னிக்கு ராத்திரிதான்!” வலிய வரவழைத்துக்கொண்ட கடுமையுடன் பேசினான் கோபி. வேறு எதுவும் கேட்டு விடுவாளோ என்று பயந்தவனாக, எழுந்து பாத்ரூமுக்குள் போனான். பழக்கம் காரணமாக, சுவற்றில் மாட்டப்பட்டிருந்த கண்ணாடியில் கண்கள் பதிந்தன. கெந்திங்கிலிருந்து திரும்பிய இந்த நாலைந்து நாட்களில் தான்தான் எப்படி உருக்குலைந்து போய்விட்டோம்! தூக்கமில்லாததாலோ, ஓயாத வெற்று யோசனைகளாலோ, கண்களைச் சுற்றி கருவளையம். கன்னம் இடுங்கிப் போயிருந்தது. பல மாதங்கள் படுக்கையில் விழுந்திருந்தவனைப்போல் இருந்தான். கவலையை மறக்க, மனைவிக்குத் தெரியாமல் மதுவில் மூழ்கினான். ஆனால் போதை தெளிந்ததும் புரிந்தது, தனது பிரச்னை துளிக்கூடக் குறையவில்லை என்பது. தன்னை ஆட்டுவிப்பது இன்னது என்று எப்படி அவளிடம் விளக்குவது? இல்லை, விளக்கத்தான் முடியுமா? ஏதோ கடவுள் என்று நினைத்து, தன்னிடம் மதிப்பும், மரியாதையுமாக இருப்பவள் அப்புறம் தன்னை கிஞ்சித்தாவது மதிப்பாளா? ‘உனக்கெல்லாம் பெண்டாட்டி ஒரு கேடா?’ என்று எட்டி உதைக்க மாட்டாள்? இல்லை, அவள் அனுதாபத்தைத்தான் தன்னால் தாங்க முடியுமா? ஒரு முடிவுடன் வெளியே வந்தான் கோபி. கழுவியிருந்த முகத்தில் கண்ணீரின் சாயல் மறைந்திருந்தது. “நீ ஏர்போர்ட்டுக்கு வரவேண்டாம். ஊருக்கு வெளியே கட்டி வெச்சிருக்காங்க. அங்க போய்ச் சேர்றதுக்கே ஒரு மணி நேரத்துக்குமேல ஆகுது!” என்றவனைப் புரிந்துகொள்ள முடியாது வெறித்தாள் இந்துலேகா. ஏன் இப்படித் தன்னை ஒதுக்கப்பார்க்கிறார்? அந்த அளவுக்குத் தான் என்ன குற்றம் செய்தோம்? சமீப காலமாக தினசரிகளில் வந்துகொண்டிருந்த அதிரடிச் செய்தி ஒன்று நினைவில் எழுந்தது. அரபு நாட்டுப் பணக்காரர்கள் தம் மதத்தைச் சேர்ந்த, வயதில் சிறிய பெண்களைக் கல்யாணம் செய்துகொள்ள, ஏழ்மையில் வாடும், படிப்பறிவு அற்ற அவர்களுடைய தந்தைகளுக்கு ஐயாயிரம் ரூபாய் வரதட்சணையாகக் கொடுப்பார்களாம். வட இந்தியாவில் நடந்தது இது. கல்யாணம் முடிந்தவுடன், ஒரு வாரம் அந்தப் பெண்களை ஏதாவது ஒரு பெரிய ஹோட்டலில் வைத்து அனுபவித்துவிட்டு, சொந்த நாட்டுக்குத் திரும்பிவிடுவார்களாம், யாருக்கும் தெரியாது. கற்பு சூறாடப்பட்டநிலையில், வேறு ஒருவரை மணக்க முடியாது, அண்டை அயலாரின் கண்டனத்தைத் தாங்கவும் சக்தியின்றி, அந்த மனைவிகள் — பன்னிரண்டு, பதின்மூன்று வயதே ஆன சிறுமிகள் –, பிழைக்க வேறு வழியின்றி செக்ஸ் தொழிலுக்குத் தள்ளப்படுகிறார்களாம். இப்போது கோபி செய்வது மட்டும் எந்த விதத்தில் நியாயம்? தோள்களைத் தூக்கி, ‘நீ என்னைக் கல்யாணம் செய்துகொள்ள மறுத்திருந்தால்..? ஐயோ!’ ‘நான் எப்பவோ, யாருக்கோ ஏதாவது கொஞ்சம் நல்லது செஞ்சிருப்பேன். அந்த புண்ணியத்தாலதான் நீ எனக்குக் கிடைச்சிருக்கே!’ என்றெல்லாம் வசனம் பேசிய அதே கோபி! தன் மகிழ்ச்சியை மனைவியுடன் பகிர்ந்துகொண்ட கணவனால், மனக்குழப்பத்தை மட்டும் ஏன் தன்னுடன் கலந்து பேசி, ஆறுதல் அடையத் தோன்றவில்லை? ஒரு வேளை, அங்கு வேறு ஒரு பெண்ணை வைத்திருக்கிறாரோ? 4 அத்தியாயம் 4 கோபி புறப்பட்டுப் போய் விளையாட்டுப்போல் இரண்டு மாதங்களாகிவிட்டன. அவனிடமிருந்து ஒரு தகவலும் இல்லை. யாரை, என்ன கேட்பது, அவனுடைய நெருங்கிய நண்பர்கள், உறவினர்கள் யார் என்று தெரியவில்லையே என்று இந்து குழம்பினாள். கெந்திங்கிலிருந்து திரும்பினதுமே, தனது பெயரிலிருந்த வங்கிக்கணக்கில் அவளுக்கும் சரிசமமான பங்கு அளித்திருந்தான் கோபி. பல லட்சங்கள் இருந்தன கோபியின் பெயரில். இப்போது அவளும் அதில் உரிமை கொண்டாடி, விருப்பப்படி செலவிடலாம். அந்தவரையில் கணவன் நல்லவன்தான். அரபு ஷேக்குகளைப்போல் அந்தரத்தில் கைவிட்டுப் போகவில்லை! நிம்மதியையும் மீறி, அவள் உடல் நிலையில் ஏதோ பாதிப்பு ஏற்பட்டிருப்பது புரிந்தது இந்துலேகாவுக்கு. எப்போதுமே தேவைக்குக் குறைவாகச் சாப்பிட்டு, உடல் பருக்காமல் பார்த்துக்கொண்டதாலோ, என்னவோ, அவளுடைய ரத்த அழுத்தம் குறைந்துவிடுவது வழக்கமாக இருந்தது. அதனால்தான் இப்போது தலைசுற்றலோ? இப்படி வீண் யோசனையுடன் தூக்கம் வராது தவிப்பதற்கு டாக்டரிடம் போகலாம் எஙன்று முடிவெடுத்தாள். “வாழ்த்துகள்! நீங்க அம்மாவாப் போறீங்க!” அவளைப் பரிசோதித்த பெண் டாக்டர் சுந்தரி முகமெல்லாம் சிரிப்பாய் கூறினார். ரத்தப் பரிசோதனையை முடித்த டாக்டரின் அதிர்ச்சி நிரம்பிய குரல் அவளை அச்சுறுத்தியது: “இதென்னம்மா? ஒங்களுக்கு எப்படி இது வந்தது? இப்பல்லாம் ‘எப்படி எப்படியோ’ இருக்கிற பொம்பளைங்களைவிட கல்யாணமானவங்களுக்குத்தான் நாலு மடங்கு அதிகமா இது வருது. மலேசியாவில மட்டும் கடந்த பத்து வருஷத்தில கிட்டத்தட்ட ஐயாயிரம் பேருக்கு ஹெச் ஐ வி, இல்ல எய்ட்ஸ் வந்திருக்கு! ஆம்பளைங்க கண்டபடி ஊர் மேயறதால, வீட்டிலேயே இருக்கிற மனைவிங்களுக்கு…” டாக்டர் பேசிக்கொண்டே போனார். கோபியின் தலைசுற்றல், மண்டையிடி, பராமுகம் எல்லாவற்றுக்கும் புதிய அர்த்தம் தெரிந்தது இப்போது. பாவி! பணத்தைக் காட்டி மயக்கி, தனக்கு அந்த வியாதி இருக்கிறதென்பதை மறைத்து, அவளுடன் உறவு கொண்டாடி, அவளையும் அதற்கு இரையாக்கிவிட்டுத் தலைமறைவாகிவிட்டானே! இந்துவுக்கு ஆத்திரம் பெருகியது. ‘இந்த லட்சணத்தில் குழந்தை ஒன்றுதான் குறைச்சல்!’ எரிச்சல் மூண்டது அவளுக்குள். உடனே, அவளுடைய தாய்மை விழித்துக்கொண்டது. தன்னிடமிருந்து இந்த ஆட்கொல்லி கருவிலிருக்கும் பிள்ளையையும் பாதிக்காதோ? பாவம், அது! அப்பா, அம்மா இருவரையும் விவரம் புரியாத வயதிலேயே பறிகொடுத்துவிட்டு, அதே வியாதியுடன் போராடிக்கொண்டு அனாதையாக நிற்க வேண்டுமா? ஒரு வேளை, டாக்டர் சொன்னது தப்பாக இருந்தால்? சில தினங்கள் தீவிரமாக யோசிக்க, புதிய நம்பிக்கை கிளர்ந்தது. எதற்கும் நன்கு பரிச்சயமான வேறொரு டாக்டரிடம் போய் பரிசோதனை பண்ணிக்கொண்டுவிடலாம் என்று நிச்சயித்தாள். அவரும் உறுதிப்படுத்தியபின், “இந்த பிள்ளை பிறக்கக்கூடாது, டாக்டர்! நீங்கதான் அதுக்கு ஒரு வழி செய்யணும்!” என்று கதறினாள். அவளுடைய உணர்ச்சிக் கொந்தளிப்பை அமைதியாகக் கேட்டுக்கொண்டிருந்த டாக்டர், “அவசரப்படாதீங்க. அம்மா மருந்துங்களை ஒழுங்கா, சாப்பிட்டு வந்தா, குழந்தைக்கும் இந்த வியாதி தொத்திக்கும்கிற கட்டாயமில்ல. ஒண்ணு மட்டும் நீங்க நினைவில வெச்சுக்கணும் — ஒங்க ஆரோக்கியம் ஒங்களைக் கட்டுப்படுத்த விடாதீங்க. அதை நீங்க கட்டுப்படுத்தணும்”. எப்பவும்போல், உடற்பயிற்சி பண்ண வேண்டும், வரைய வேண்டும் என்று நிச்சயித்துக்கொண்டாள் இந்துலேகா. வெறுமனே குருட்டு யோசனை செய்தால், உடல்நிலை இன்னும் கெட்டுத்தான் போகும் என்று டாக்டர் சொல்லாமல் சொல்லியது அவளுக்குப் புரிந்தது. டாக்டர் தன்பாட்டில் பேசிக்கொண்டு போனார்: “நல்ல வேளை, ஆரம்பத்திலேயே வந்திருக்கீங்க. நம்பளோட தடுப்புச் சக்திக்கும், ஹெச் ஹ வி நோய்க்கிருமிகளுக்கும் நடக்கற போரில, மொதல்ல இதோட கடுமை கொஞ்சம் கொறைஞ்சமாதிரி இருக்கும். அதனால, பல வருடங்கள் தனக்கு இப்படி ஒரு வியாதி இருக்குங்கறதே பல பேருக்குத் தெரியறதில்ல”. அப்படியும் இருக்குமா? கோபிக்குத் தனக்கு இந்த வியாதி இருப்பதே தெரியாதுதான் கல்யாணம் செய்துகொண்டாரா? இந்துவுக்கு மாறி, மாறி கோபியின்மேல் ஆத்திரமும், அன்பும் பெருகின. “நம்ப ஒடம்பில இருக்கிற தடுப்புச் சக்தி வெள்ளை ரத்த அணுக்களை உற்பத்தி செய்து, எப்படியோ உள்ளே புகுந்துட்ட எதிரியை, அதாவது கிருமிங்களை, ஒழிக்கப்பார்க்கும். அப்பதான் காய்ச்சல், தொண்டைக்கட்டு எல்லாம் வரும். ஆனா, இந்த கிருமி கில்லாடி! தன்னோட சண்டைக்கு வர்ற ரத்த அணுக்களோட செல்லிலேயே ஒளிஞ்சுக்கும். ஒரு நாளில பத்து கோடி தடவை பெருகும்னா பாத்துக்குங்க! ரெண்டரை நாளிலே ரத்த அணுவோட செல்லும் அழிஞ்சிடும்”. செல். உயிரணு. அது அழிந்தால், எப்படி உயிர் வாழ முடியும்? இந்துவுக்குப் புரிந்தமாதிரி இருந்தது. “வேண்டாத விருந்தாளி நம்ப வீட்டுக்கு வந்து, நம்பளையே விரட்டி விடறமாதிரி!” டாக்டரின் முகம் மலர்ந்தது. “படிச்சவங்க இல்லியா! அதான் சுலபமா புரிஞ்சுக்கிட்டீங்க!” என்று பாராட்டினார். தன் தாயைப்போல் தானும் எளிதில் துவளாது, எந்த இன்னலையும் எதிர்நோக்க வேண்டும் என்பதில் சிறு வயதிலிருந்தே இந்து கவனமாக இருந்து வந்திருந்தாள். அவள் சேர்ந்த எந்தப் பந்தயத்திலுமே பரிசு வாங்காமல் இருந்ததில்லை இதுவரை. அந்த முரட்டுத்தனம், ஜெயிக்க வேண்டும் என்ற வெறி இப்போதும் எழுந்தது. “இந்த ஹெச் ஐ வியை ஒரு கை பாத்துடறேன். இப்போ நான் என்ன செய்யணும், டாக்டர்?” “மருந்து ஒழுங்கா சாப்பிடுவீங்க — அதில எனக்கு சந்தேகமில்ல. நிறைய தூங்கணும். குழந்தை பிறந்ததும், அதுக்குத் தாய்ப்பால் கூடாது. பாலிலிருந்தும் இந்தக் கிருமி பரவுது. மத்தபடி, குழந்தையைத் தொட்டுத் தூக்கலாம். வியர்வை, மூத்திரம் இதனால எல்லாம் பரவாது”. டாக்டரிடம் வீறாப்பாகப் பேசிவிட்டாலும், வீட்டையடைந்ததும் இந்துவுக்கு அயற்சியாக இருந்தது. யாரிடமாவது தன் அவல நிலையைப் பகிர்ந்துகொள்ள வேண்டும்போல இருந்தது. எந்த ஒரு நெருங்கிய தோழியிடம் சொன்னாலும், இந்தமாதிரி விஷயம் பரவ நேரமாகாது. அதிலும், அவள் அழகிலும், பணக்காரக் கணவனை அடைந்துவிட்ட அதிர்ஷ்டத்திலும் எல்லாரும் பொருமிக்கொண்டு இருக்கிற இந்த வேளையில் இப்படி ஒரு உண்மை வெளி உலகிற்குத் தெரியவந்தால், சிரிப்புக்கு இடமாகிவிடாதா! தன் நலனில் உண்மையான அக்கறை கொண்டவர் ஒரே ஒருவர்தான். அப்பா! ‘பொய் சொல்லி, அம்மாவை ஏமாற்றியவர்!” என்று அவரை நினைக்கும்போதே முகத்தைச் சுளித்தாலும், அவரிடமிருந்து எவ்வளவு விலகி, விலகிப் போனாலும், அவளைப் பார்க்கும்போது கண்ணிலேயே அன்பைக் காட்ட அப்பா ஒருவரால் மட்டும்தான் முடியும். தான் கண்டே அறியாத அம்மாவுக்கு ஏதோ கெடுதல் செய்துவிட்டார் என்று சிறுபிள்ளைத்தனமாக கோபித்துக்கொண்டிருந்தோமே! அதனால் யாருக்கு இழப்பு? ஒரு சிறு அதிர்ச்சியைத் தாங்கமுடியாது, புத்தி பேதலித்துப்போன அம்மாவைப்போல் தானும் ஆகிவிடக்கூடாது. தனக்கு ஒரு ஆதரவு வேண்டும். “என்னம்மா, நீ மட்டும் வந்திருக்கே? மருமகப்பிள்ளையைக் கூட்டி வந்திருக்கக்கூடாது?” அந்த பாசமான குரலைக் கேட்டதுதான் தாமதம், இந்து அடக்கி வைத்திருந்த துக்கமெல்லாம் பெருகியது. “நான் மோசம் போயிட்டேம்பா!” என்று கதறினாள். அவள் சொல்லி முடிக்கும்வரை அமைதியாகக் கேட்டுக்கொண்டிருந்துவிட்டு, “நம்ப கோயில் பூசாரி மந்திரிச்சா எந்த வியாதியும் பயந்து ஓடிப்போயிடும். சாயந்திரம் போகலாம், என்ன!” தந்தையின் பேதமை அவளுக்குச் சிரிப்பை வரவழைத்தது. “ரெண்டு டாக்டர்கிட்ட காட்டிட்டேம்பா. இதுக்குத் தனியா சிகிச்சைமுறை இருக்கு. நம்ப இஷ்டத்துக்கு எதையாவது செய்தா, முத்திடும்,” என்று அந்த சமாசாரத்துக்கு ஒரு முடிவு கட்டினாள். அதற்குமேல் அவர் ஒன்றும் சொல்லவில்லை. அந்த நோயைப்பற்றி அதிகம் அறிந்திராதலால், கவலையும் படவில்லை. “மருந்தை எல்லாம் ஒழுங்காச் சாப்பிடும்மா. கவலையில்லாம இரு. பணக்கஷ்டமோ இல்லங்கறே. ஒன் வீட்டுக்காரரு எங்கே போயிடுவாரு! மனசு ஆறினதும், தானே ஒங்கிட்ட வரப்போறாரு, பாத்துக்கிட்டே இரு!” “எப்படிப்பா அவ்வளவு நிச்சயமா சொல்றீங்க?” “அவரு மனசு தங்கம். ஒங்க கல்யாணம் முடிஞ்சதும், எங்கிட்ட வந்து, ‘மாமா! நீங்களும் எங்ககூட வந்துடுங்களேன். இந்த குக்கிராமத்தில அப்படி என்ன இருக்கு?’ன்னாரு. எனக்குத்தான் ஒங்கம்மா இருந்த வீட்டை விட்டு வர மனசில்ல!” இந்துவுக்கு ஆச்சரியமாக இருந்தது. அவ்வளவு நல்லவரையா தான் மணந்திருக்கிறோம்? தன்னிடம் இதைப்பற்றி மூச்சுகூட விடவில்லையே கோபி! அப்பாவுக்குத்தான் அம்மாவின்மேல் எவ்வளவு அன்பு என்று வேறொரு எண்ணமும் தோன்றியது. வெகு நாட்களாகக் கேட்க எண்ணி, ‘மரியாதைக் குறைவாக இருக்குமோ?’ என்று யோசித்து, கேட்காமல் விட்டதை ஒருவழியாகக் கேட்டாள்: “நீங்க எப்படிப்பா அம்மாவைக் கட்டிக்கிட்டீங்க?” “அதுவா?” சிந்தனையில் ஆழ்ந்தார். “நான் வெளிநாட்டுக்காரன், அவசரமா திரும்பிப் போகணுங்கிறதை சாதகமா பயன்படுத்தி, என்னை ஏமாத்திட்டாங்க!” “யாருப்பா?” “ஒங்கம்மாவோட அப்பா, மத்த சொந்தக்காரங்க எல்லாரும்தான். அவளுக்கு பதினஞ்சு வயசிலே ஏதோ அசம்பாவிதம் நடந்திருக்கு. ஆம்பளை சமாசாரம். எனக்கு விவரமெல்லாம் தெரியாது. ஆனா, அதுக்குப்புறம் அவ பிரமை பிடிச்சமாதிரி, இல்ல, ‘என்னை ஏமாத்திட்டீங்க!’ன்னு திரும்பத் திரும்பப் புலம்பி அழுதுக்கிட்டு, தாறுமாறா இருந்திருக்கா. ஏதோ காதல் தோல்விபோல! கல்யாணமானா, சரியாப் போயிடும்னு நினைச்சிருக்காங்க”. ‘அடப் பாவிங்களா!” என்று மனத்துக்குள் வைதாள் இந்துலேகா. “உள்ளூரில விவரம் தெரிஞ்ச எவன் அவளைக் கட்டுவான்! நான் மாட்டிக்கிட்டேன்,” என்று தொடர்ந்த அப்பாவின் குரலில் வருத்தமில்லை. உலகின் போக்கை எண்ணி லேசாகச் சிரித்துக்கொண்டார். “அழகும், பணமுமா ஒரு பொண்ணு வந்தா கசக்குமா? மலேசியாவுக்கு கூட்டிவந்துட்டேன். அப்பப்ப தெளிவா இருப்பா, அன்பும், அழகுமா! அந்த மைதிலியைத்தான் நான் இன்னும் நினைப்பில வெச்சிருக்கேன். ஆனா, நாள் கணக்கில அவ கட்டையா கிடக்கிறதைப் பாக்கறப்போ எல்லாம் அடிவயிறு கலங்கும். இவளுக்கு ஆறுதலா இருக்க முடியலேன்னு மனசு கிடந்து அடிச்சுக்கும். கடைசியா, அவ போனதே மேலுன்னு ஆகிப்போச்சு!” அப்பா சொல்வதை வைத்துப் பார்த்தால், அம்மாவுக்கு ஹிஸ்டீரியா வியாதி. பௌர்ணமியின்போதும், மாதாந்திர தீட்டு சமயங்களிலும் இந்த மனநோய் உக்கிரமாக ஆகும் என்றவரை இந்துவுக்குப் புரிந்தது. அதனால்தான் மற்ற சமயங்களில் சாதாரணமாக நடந்து வந்திருக்கிறாள் போலும்! நடந்தைப் புரிந்துகொள்ளும் அக்கறையோ, அறிவோ இல்லாது, தன் கற்பனைப்படி சுவாரசியமாக மாற்றிச் சொல்லிய அத்தைமேல் கோபம் வந்தது இந்துவுக்கு. அப்பாவியான அப்பாவை எப்படியெல்லாம் பழித்திருக்கிறாள்! ‘இறந்தவர்களிடம் என்ன வன்மம்?’ என்று உடனே தன்னைக் கட்டுப்படுத்திக்கொண்டாள். பாவம்! படிக்காத பாமரப்பெண். ‘வாய் புளிக்குமோ, மாங்காய் புளிக்குமோ’ என்று தான் பொறுப்பில்லாமல் பேசியது இந்துவின் வாழ்க்கையை எவ்வளவு தூரம் பாதிக்கக்கூடும் என்று புரிந்துகொள்ளும் அளவுக்கு அத்தைக்கு விவேகம் இருக்கவில்லை. அப்பாவைப்போன்ற பாட்டாளிக்கோ, அதற்கு உரிய வைத்தியம் பார்க்கக்கூடத் தெரியவில்லை. அந்த மனநோயாளியை அப்படியே தவிக்கவிட்டு, அவளுடன் தாமும் துடிதுடித்து… இந்துலேகாவின் சிந்தனையில் ஏதோ தடுக்கியது. தனக்கும்தான் இதைவிடப் பெரிய வியாதி ஒன்று வந்திருக்கிறது. ஆனால், தான் படித்திருக்கிறோம். ஆகையால், நோயின் கடுமை புரிகிறது. அப்பா சொன்னதுபோல், சிகிச்சை பெற பொருள் வசதியும் இருக்கிறது. எல்லாவற்றுக்கும் மேலாக, அனுசரணையாக நடந்துகொள்ள ஒருவர். இது எதுவுமே இல்லாமல், இவ்வளவு கடுமையான வியாதியுடன் வேறு போராட நேர்ந்தால்… அப்பப்பா! எவ்வளவு பயங்கரம்! இந்த உலகில் எட்டு சதவிகிதத்தினர்தான் குடியிருக்க வீட்டுடன், அடுத்தவேளைச் சாப்பாட்டுக்கு என்ன செய்வது என்ற கவலை இல்லாது, காலை கண்விழித்ததும் எந்தவித உடல் உபாதையுமின்றி இருக்கிறார்களாம். இந்த கணக்கெடுப்பை முதன்முதலாக ஒரு பத்திரிகையில் படித்தபோது, இந்துவுக்குப் பெருமையாக இருந்தது — தான் எவ்வளவு கொடுத்து வைத்தவள் என்று. இப்போதோ, அதில் ஒன்றை இழந்து, இனி எந்தெந்த உபாதைகளுக்கு ஆளாகப் போகிறோமோ என்ற பயம் அனுதினமும் எழ, இதில் எதையுமே பெறக் கொடுத்துவைக்காத துரதிர்ஷ்டசாலிகளின்மேல் அவள் கவனம் சென்றது. அன்று டாக்டரே பேச்சுவாக்கில் சொல்லவில்லை, “போன வாரம் பாருங்க, ஒரு செக்ஸ் தொழிலாளி — படிப்பு, பணம் ரெண்டுமில்ல. ஆணுமில்ல, பெண்ணுமில்லன்னு வீட்டிலேயும் சேர்க்கிறதில்லையாம். நோயை முத்தவிட்டு.. பாவம்! இப்ப எய்ட்ஸ்! இன்னும் ரெண்டு வருஷம் உசிரோட இருக்கிறதே சந்தேகம்!” என்று? தன்னைப்போல் ஒரு ஜீவன்! ஆனால், பிறந்ததிலிருந்தே அதிர்ஷ்டம் இல்லாத பிறவி. முகம் தெரியாத அந்த ஆத்மாவின்மேல் இரக்கம் சுரந்தது இந்துவுக்கு. குடும்பத்தினரும் ஆதரவு காட்டவில்லை, சம்பாதிக்கவும் வழியில்லை. பிறர் மயங்க அலங்கரித்துகொள்வதும், கண்மூடித்தனமாக செலவழிப்பதும்தான் வாழ்வெடுத்ததன் பயன் என்பதுபோல் தான் இவ்வளவு காலமும் இருந்துவிட்டது அவளுக்கே வெட்கமாக இருந்தது. அதற்கு எப்படிப் பரிகாரம் தேடுவது? “இதோ பாரு, பத்மா! என்மேல கோபப்படாதே. ஒனக்கு எய்ட்ஸ் இருக்குன்னு தெரிஞ்சப்புறம், நாம்ப ரெண்டு பேரும் எப்படி ஒரே அறையில இருக்கிறது? எனக்குத் தொத்திக்கிட்டா? எல்லாருக்கும் உண்மை தெரிஞ்சு ஒன்னை தொரத்தறதுக்குள்ளே நீயே எங்கேயாவது போயிடு,” கண்டிப்பாகப் பேசினான் புல்புல். பத்மநாதன் அழுதான்: “நீங்களே என்னை இப்படி விரட்டலாமாக்கா? நான் எங்கே போவேன்? எனக்கு யார் இருக்கா?” “அதான் பணம் சேர்த்து வெச்சிருக்கேல்ல? அதை எடுத்துக்கிட்டு, எங்கேயாவது போய் தங்கிக்க, போடி!” உலகம் தன்னிடம் காட்டிய குரூர முகத்தைத் தோழனிடம் காட்டினான். “அடுத்த ஜன்மத்திலேயாவது முழுசா பொறக்கணும்னு சாமியை வேண்டிக்க!” அப்போது அறை வாசலிலிருந்து ஒரு இனிய குரல் கேட்டது: “இங்க பத்மநாதன்னு..!” அந்த இடத்துக்குச் சற்றும் பொருத்தமில்லாது, நாகரீகமாக, பணக்காரியாகத் தோற்றம் அளித்தாள் அங்கு நின்றிருந்த இளம்பெண். 5 அத்தியாயம் 5 இந்துலேகாவைப் பார்த்த மலைப்பு விலகாமலேயே, “பத்மநாதனா? இதோ!” என்று தன் பக்கத்தில் கண்ணீர் பெருக நின்று மன்றாடிக் கொண்டிருந்த பத்மநாதனைக் காட்டினான் புல்புல். எலும்புக்கூடாக இருந்த அந்த உருவத்தைப் பார்த்ததும் ஏற்பட்ட திகைப்பைவிட, ‘அப்பாடா! ஒரு வழியாக இந்த இடத்தைக் கண்டுபிடித்துவிட்டோம்!’ என்ற நிம்மதியே பெரிதாக இருந்தது இந்துவுக்குள். பிறரது துன்பத்தில் பங்கு கொண்டால், தன் கஷ்டம் பெரிதாகத் தெரியாது என்ற ஞானோதயம் பிறந்திருந்தது அவளுக்கு. மகாத்மா சொல்லி இருக்கவில்லை, ‘கடவுள் நமக்குத் துன்பத்தைக் கொடுப்பது நாம் பிறரது இன்னல்களைப் புரிந்துகொள்ளவே,’ என்று? இரண்டாவது முறை டாக்டரிடம் பரிசோதனைக்குப் போனபோது, “ஒரு எய்ட்ஸ் நோயாளியைப்பத்தி சொன்னீங்களே — போக இடமில்லாத துர்ப்பாக்கியசாலின்னு. அவரோட விலாசத்தைக் குடுக்கறீங்களா, டாக்டர்?” என்று வலிய வரவழைத்துக்கொண்ட தைரியத்துடன் கேட்டுவிட்டாள். கேட்பது தவறு என்று அவளுக்கே தெரிந்துதான் இருந்தது. டாக்டரோ, “ஒங்களுக்கு ஒரு ஆறுதலா இருக்கட்டுமேன்னு, சும்மா, பேர் சொல்லாம, பொதுவா சொன்னேன். அதெப்படி ஒரு நோயாளியைப்பத்தின விவரங்களை நான் ஒங்ககிட்ட சொல்ல முடியும்?” என்று அதிர்ந்தார். “எங்க தொழில் தர்மத்துக்கே விரோதமில்ல!” இந்துலேகா முகத்தைப் பரிதாபமாக வைத்துக்கொண்டாள். ‘வேண்டாம்!’ என்று சூலில் சுமந்த அன்னையே வெறுத்ததாலோ, என்னவோ, அவள் வயிற்றில் வளர்ந்த கரு, வளராமலேயே வெளியாகி இருந்தது. ‘தந்தை போன இடம் தெரியவில்லை.. நானும் சீக்கிரத்திலேயே இறந்துவிட நேரலாம். அனாதையாக இந்த உலகத்தில் அல்லாடுவதைவிட அது இறந்ததே மேல்!’ என்று தனது பிறவாத குழந்தையின்மேலிருந்த அன்பால் நிம்மதியே அடைந்தாலும், இப்போது அதை வெளியில் காட்டிக்கொள்ளவில்லை அவள். தனக்கு இல்லாத துக்கத்துடன் மன்றாடியதில், டாக்டரின் மனம் கரைந்தது. அப்படித்தான் பத்மநாதனைப் பற்றிய விவரங்களை அறிந்துகொண்டு, அவனது இருப்பிடத்தைத் தேடி வந்திருந்தாள் இந்து. அடுக்குமாடிக் கட்டிடம். கீழ்த்தளத்தில் கடைகள் — வாசனைத் திரவியங்கள், துணிமணிகள், காகிதப்பூக்கள், தங்க நகை, சி.டி — என்று பலவகைப் பொருட்களை அலங்காரமாகப் பரப்பி வைத்துக்கொண்டு. தலைநகரின் மத்தியிலிருந்த அந்த நீண்ட தெரு பூராவிலும் அதேபோன்ற கடைகள்தாம் இருந்தன. தெருவின் குறுக்கே இருந்த சந்துகளில் மலிவான உணவுப்பண்டங்கள். ஏதாவது சாமான் வாங்கவோ, அல்லது வெளியிலிருந்தே வேடிக்கை பார்க்கவோ வந்து குவிந்திருக்கும் ஜனப்பெருக்கம், அவர்கள் அயர்ந்திருக்கும் சமயம் பார்த்து, பர்ஸையோ, கைப்பையையோ அபகரிக்கும் நோக்கத்துடன், கள்ளப்பார்வையுடன் நிதானமாக நடந்தபடி ஒரு சில அயல்நாட்டுக்காரர்கள் என்று அத்தெரு விழாக்கோலம் பூண்டிருந்தது. இவ்வளவு நெரிசலில் அனாமதேயமாக வாழ்க்கை நடத்துவது பத்மநாதன் போன்றவர்களுக்கு கடினமாக இருந்திராது. வாடிக்கை பிடிப்பதும் எளிதாகவே இருந்திருக்கும் — அன்றுவரை என்று இந்துலேகாவுக்குப் புரியவே செய்தது. பத்மநாதனின் அடைசலான அறைக்குள் நுழைந்த மறுகணமே அவள் நிச்சயித்துக்கொண்டாள்: இந்த அபாக்கியசாலியை தகுந்த இடத்தில் சேர்ப்பித்துவிட வேண்டும். இவர்களைப் போன்றவர்களுக்காகவேதான் அரசாங்க சார்பற்ற நிறுவனங்கள் செயல்படுகின்றனவே! இதுவரை தினசரியில் அவற்றைப்பற்றிப் படித்ததுதான். இனி தானும் அவர்களுடன் இணைந்து, தன்னால் இயன்றவரை பிறருக்கு உதவ வேண்டும். செயலால் முடியாதபோது, பணத்தால். தன்னை இவ்வளவு நல்ல நிலையில் வைத்துவிட்டுப்போன கணவனின்மேல் இந்துவுக்கு நன்றி சுரந்தது. பாவம், அவருக்கு என்ன நெருக்கடியோ! அப்பா சொன்னதுபோல், என்றாவது ஒரு நாள் தன்னிடம் வராமல் போக மாட்டார். நம்பிக்கையுடன், தனது வாழ்க்கையில் இன்னுமொரு புதிய பாதையில் அடியெடுத்து வைத்தாள் இந்து. “வா, தங்கச்சி!” படுக்கையிலிருந்த பத்மநாதன் இந்துலேகாவின் வருகையால் மகிழ்வுடன் சிரித்தான். அவனது முன்பற்கள் நான்கும் விழுந்திருந்ததை இந்து முதல்நாளே கவனித்திருந்தாள். பாவம்! இந்த நோய் கண்டபின், மூன்று மாதங்களுக்கு ஒரு முறை பல் வைத்தியரிடம் பரிசோதனைக்குப் போகவேண்டும் என்று அவனிடம் யாரும் சொல்லவில்லை போலும்! ‘ஆமாம், டாக்டர் எச்சரித்திருந்தால் மட்டும் பல் டாக்டரிடம் போயிருக்கப்போகிறானா! ஒரு வேளையே உணவு உட்கொண்டு, எஞ்சிய காசையெல்லாம் அறுவைச் சிகிச்சை செய்துகொள்ளும் கனவுடன் சேமித்தவன், பாவம்!’ என்று உடனே எதிர்க்குரல் எழும்பியது. அவனைக் கனிவுடன் பார்த்தாள். எதுவும் பேசத் தோன்றவில்லை. கடந்த இரு மாதங்களில் தன் அவலக்கதையை அவளிடம் சொல்லி இருந்தான் பத்மநாதன். எந்தவித உணர்ச்சியுமின்றி, யாருக்கோ நடந்ததுபோல் அவன் சொல்லிக்கொண்டே போனபோது, இந்துவுக்கே துக்கத்தில் தொண்டையை அடைத்தது. இப்படியும் ஒரு பிறவியா! எவ்வளவு கஷ்டப்பட்டிருக்கிறான், பாவம்! மனிதப் பிறவி எடுப்பவர்களைப்பற்றி அவளுக்கு இயற்கையாக எழுந்த ஆர்வத்துடன் அவள் நிறையப் படித்திருந்தாள். எந்த ஒரு உயிரும் தாயின் கருவில் நுழையும் முன்னர், தான் இந்தப் பெண்ணின் உடலில் நுழைந்தால் இத்தகைய வாழ்வை அடைவோம் என்று அதற்குத் தெரியுமாம். தான் செய்த பாவ புண்ணியங்களுக்கு ஏற்ப, தனக்கு வேண்டிய தாயை, அல்லது குடும்பத்தைத் தானே தேர்ந்தெடுத்துக்கொள்கிறது அந்த உயிர். பரம்பரையாக ஒரு வித்தையோ, திறனோ அமைவதுகூட அதனால்தான். புண்ணிய ஆத்மாக்கள் மறுபிறவி எடுக்க வேண்டிய அவசியம் இல்லாவிட்டாலும், உலகிற்கு நல்லது செய்ய வேண்டும் என்ற குறிக்கோளுடன் பிறப்பெடுப்பார்களாம். அன்னை தெரஸாவைப்போல் தம்மை வருத்திக்கொண்டு பிறருக்கு உபகாரம் செய்யும் பெயர் தெரியாத எத்தனையோ பேர் இப்படித்தான் நம் மத்தியில் வந்து பிறந்திருக்க வேண்டும் என்று நினைத்திருக்கிறாள் இந்து. தாம் செய்த பாவத்தில் சிறிதளவையாவது இந்தப் பிறவியில் கழிக்கும் நோக்கத்துடன்தான் பெரும்பான்மையான உயிர்கள் பிறப்பெடுக்குமாம். ஒரு சில ஆத்மாக்களோ ஒரே பிறவியில் எல்லா பாவத்தையும் தொலைத்துவிட, மூளைக்கோளாறுடனோ, மற்ற அங்கக் குறைபாடுகளுடனோ பிறக்குமாம். இதனால், அவர்களுக்கு மட்டுமின்றி, அவர்களைச் சேர்ந்த நெருங்கிய உறவினர்களுக்கும் பாவம் கரையக்கூடும் என்பது ஆராய்ச்சியாளர்களின் நம்பிக்கை. ‘அப்படி என்ன பாவம் செய்திருப்பான் இந்த அப்பாவி?’ என்ற உபயோகமற்ற யோசனை எழுந்தது இந்துவுக்குள். அவசரமாக அதை அகற்றினாள். “இப்போ எப்படி இருக்கு?” அனாவசியமாகக் கேட்டாள். அவன் உயிருடன் இருப்பதே பெரிய விஷயம் என்பதுபோல் பரிதாபமாக இருந்தான். அவள் குசலம் விசாரித்ததைக் காதில் வாங்கவில்லை பத்மநாதன். “இந்து! எனக்கு இப்போ கடவுள் பக்தி வந்திடுச்சு!” என்று பிரகாசமான முகத்துடன் தெரிவித்தான். பதில் ஒன்றும் சொல்லாமல், இந்து புன்னகைத்தாள் — வருத்தம் தேங்கிய புன்னகை. அவன் நிலையில் யார் இருந்தாலும், தெய்வ நிந்தனைதான் செய்திருப்பார்கள் என்று அவள் சிந்தனை போயிற்று. பெற்றோரால் புறக்கணிக்கப்பட்டு, சமூகமும் ஏற்காமல், சட்ட விரோதமான தொழிலைச் செய்தாலே ஒழிய வயிறு வளர்க்க முடியாது என்ற இழி நிலைக்குத் தள்ளப்பட்டவன் இவன். நிராகரிப்பு, அவமானம், துன்பம் இவைகள்தாம் இவன் இதுவரை அறிந்தவை. மனிதர்களைப் பகைத்துக்கொள்ள முடியாத நிலையில், அவனுடைய கோபத்துக்கும், கசப்புக்கும் வடிகால் கடவுள் நிந்தனைதான் என்று அவளுக்கு நன்றாகவே புரிந்தது. “எப்படின்னு கேக்க மாட்டியா?” பொக்கை வாயைத் திறந்து சிரித்தான். “ஒன்னை எனக்குக் காட்டினாரு, இல்ல?” இந்துவின் கண்களில் நீர் மல்கியது. எவ்வளவு குழந்தை மனசு இவனுக்கு! எப்படி சாத்தியமாயிற்று? யாருடனும் அதிக நெருக்கத்துடன் பழகாது, தனித்தே இருந்ததாலோ? “எனக்கு எப்படி சாமி கும்பிடறதுன்னு எல்லாம் தெரியாதுப்பா. சும்மா, ‘தாங்க் யூ, தாங்க் யூ’ன்னு சாமிகிட்ட சொல்லிக்கிட்டே இருக்கேன். என்னை இங்க கொண்டுவந்து விட்டதோட நிக்காம, நீ இப்ப நாள் தவறாம வந்து பாத்துக்கறே. வேளாவேளைக்கு சாப்பாடும், மருந்தும் கிடைக்குது. வேற என்ன வேணும், சொல்லு!” ஒரு சிலருக்கு வானமே எல்லை — எதைக் கொடுத்தாலும் அவர்களுக்குப் போதாது. இவனோ, இந்தச் சிறு உபகாரத்துக்கே நெகிழ்ந்து போகிறான்! தன் பூஞ்சையான உடலை ஒரு முறை குலுக்கிக்கொண்டான் பத்மநாதன். “நல்ல வேளை, தப்பிச்சேன்! அந்தப் பாவி புல்புல் என்னைக் கொலையே பண்ணியிருப்பா!” புல்புல் சுயநலம் காட்டியதில் என்ன தப்பு? தமது வாழ்க்கையை எப்படிச் சமாளிப்பது என்றே புரியாமல் தடுமாறுபவர்களால் பிறரது பிரச்னைகளைப் புரிந்துகொண்டு, அதில் பங்கேற்க முடியாது என்பது இந்துவுக்கு நன்றாகவே விளங்கியது. “என்ன தங்கச்சி யோசிக்கிறே? சாகிற சமயத்திலேயாவது இதுக்கு கடவுள் நம்பிக்கை வந்திடுச்சேன்னு பாக்கறியா? அதனாலதான் எனக்கு இப்ப சாவு அவ்வளவு பயங்கரமா தெரியல. ‘எல்லாத்தையும் பாத்துக்க நமக்குமேல ஒருத்தன் இருக்கான்,’னு அவன்மேல பாரத்தைப் போட்டுட்டேன்,” என்றவன், ஏதோ நினைவு வந்தவனாக, தயாராக வைத்திருந்த ஒரு துணிப்பையை அவள் கையில் கொடுத்தான். “என் மொத்த பணத்தையும் நீ எடுத்துக்க, தங்கச்சி!” என்றான். அணையுமுன் பிரகாசமாக எரிந்து மறையும் சுடரைப்போல் அவன் முகம் பிரகாசித்தது. “இப்ப, ‘வாடி பத்மா!’ன்னு யமனை வந்து கூப்பிடச் சொல்லு! நான் தயார். என்ன, ஒன்னை விட்டுட்டுப் போகணுமேன்னுதான் வருத்தமா இருக்கு!” இந்துவின் கண்களிலிருந்து கண்ணீர் தாரைதாரையாக வழிந்தது. எதுவும் பேசத் தோன்றாமல், பத்மநாதனின் மெலிந்திருந்த கரத்தை ஆதரவுடன் தடவினாள். அவன் ஆணா, பெண்ணா என்பது அந்த நிலையில் பெரிதாகத் தோன்றவில்லை. அவனும் ஓர் உயிர். அது போதும் அவனை ஏற்க. அது போதும் அவன்மேல் அன்பு செலுத்த. தன்மேல் உண்மையான கருணை காட்டும் ஒருத்தியை முதன்முதலாகப் பார்த்துவிட்ட மகிழ்வுடன், அவளையே பக்திப் பரவசத்துடன் பார்த்துக்கொண்டிருந்தான் பத்மநாதன். வைத்த கண்ணை எடுக்காமல், அவளது கண்களையே உற்று நோக்கினான். “தாங்க் யூ, சாமி!” என்று முணுமுணுத்தான். ஒரு விக்கல். அவ்வளவுதான். அவன் தலை சாய்ந்தது. மலேசியாவில் மட்டும் எய்ட்ஸ் நோயால் இறந்த ஏழாயிரம் ஆண்களில் பத்மநாதனும் ஒருவன். எய்ட்ஸ் கண்டு இறந்த 582 பேரில் ஒரு பெண் இந்தப் பத்மா. அழக்கூடத் தோன்றாமல், எப்படியோ ஒருவாறாக வீட்டை அடைந்தாள் இந்து. ‘இனிமேலாவது ஒனக்கு நிம்மதி கிடைக்கட்டும், பத்மா!’ என்று அவள் மனம் வேண்டியது. வீட்டு வாசலிலேயே, வாயெல்லாம் பல்லாக நின்றிருந்தார் அவளுக்குத் துணையாக வந்து தங்கியிருந்த அப்பா. “நான் சொன்னது பலிச்சிடுச்சு, இந்து!” என்று என்னமோ தெரிவித்தார். இந்துவிற்கு இருந்த மனநிலையில் எதுவும் புரியவில்லை. சுரத்தில்லாது தன் அறைக்குள் நுழைந்தாள். இழவு வீட்டிலிருந்து வந்திருக்கிறோம், தலைக்குக் குளிக்க வேண்டும் என்பது உறைக்க, குளியலறைக் கதவைத் திறக்கப்போனவள், திடுக்கிட்டாள். அதன் உள்ளே தாளிடப்பட்டிருந்தது. யார் வந்திருப்பார்கள்? அப்போது கதவைத் திறந்துகொண்டு வந்தது — சாட்சாத் கோபியேதான்! “ஹை! என்ன இவ்வளவு குண்டாயிட்டே!” என்றான் ஆரவாரமாக. அடுக்கடுக்காக நிகழ்ந்த அதிர்ச்சிகளால் இந்துலேகா மரத்துப்போனவளாக நின்றிருந்தாள். சிறிது பொறுத்து, மெல்லிய குரலில், ” நீங்க வந்துட்டீங்க!” என்றாள். “வராம? ஒன்னை நிர்க்கதியா விட்டுட்டுப் போயிட்டேன்னு நினைச்சியா?” அதிசயமாக அவளைப் பார்த்தான் கோபி. “ஏதோ கொஞ்சம் குழப்பம். தனியாப் போய் யோசிக்கணும்னு போனேன்,” நிதானமாகப் பேசினான். “இப்போ குழப்பம் தீர்ந்துடுச்சா?” இவள் என்ன இப்படிப் பிடிகொடுக்காமல் பேசுகிறாள்? கல்யாணமான கையோடு தனியாக விட்டுவிட்டுப் போய்விட்டாரே என்ற ஊடலா? குரலைத் தணித்துக்கொண்டான். “ஒங்கிட்ட முக்கியமான சமாசாரம் ஒண்ணு சொல்லணும், இந்து. அதைக் கேட்டுட்டு, நீ விவாகரத்து கேட்டாலும், குடுக்க நான் தயார்!” அவன் குரலிலிருந்த கெஞ்சல் அவளை சுயநிலைக்குத் திரும்பச் செய்தது. “நீங்க ஒண்ணும் சொல்ல வேண்டாம், கோபி. நாம்ப எதுக்காகவும் இனி பிரியப்போறதில்ல. ஒங்களை விடமாட்டேன்!” அவள் குரலில் உறுதி இருந்தது. “எனக்கு..,” மேலே சொல்ல வாயெழாது, சுயபச்சாதாபத்துடன் கோபி தலையைக் குனிந்துகொண்டான். “ஹெச் ஹ வி பாசிடிவ்! சுலபமாப் பரவற வகை! அதைத்தானே சொல்ல வர்றீங்க?” அலட்சியமாகக் கேட்டாள் இந்துலேகா. “ஒனக்கு.. எப்படி?” கேட்க ஆரம்பித்தவனுக்குச் சட்டென புரிந்தது. தனக்கு வந்த நோயால் மனைவியும் பாதிக்கப்பட்டு இருக்கிறாள்! அந்த நோய்க்கான மருந்துகளால்தான் அவள் உடல் பருத்திருந்தது! தலையைப் பிடித்துக்கொண்டு, “மை காட்!” என்று அரற்றினான். “எனக்கு அப்போ தெரியாது, இந்து. மொதல்லேயே தெரிஞ்சிருந்தா, சத்தியமா நான் ஒன்னோட வாழ்க்கையையும் அழிச்சிருக்க மாட்டேன்!” “அதெல்லாம் யாரும் யாரோட வாழ்க்கையையும் அழிக்க முடியாது. எல்லாம் அவங்கவங்க வாங்கிட்டு வர்ற வரம்!” சற்று நேரத்திற்குமுன் சாவின் எல்லையிலிருந்த ஒரு உயிரிடம் காட்டிய அதே பரிவு அவள் முகத்தில் தெரிந்தது. ‘நான் என்ன பாக்கியம் பண்ணினேனோ இவளை அடைய!’ என்று நெகிழ்ந்தான். “இந்து!” என்று அவள் கையைப் பற்றினான். அதில் சத்தியமாக மோகமோ, காமமோ இருக்கவில்லை. அவனது உணர்ச்சிப்பெருக்கைக் கவனியாதவள்போல், “நான் எங்கே போயிட்டு வரேன் தெரியுமா, கோபி?” என்று சாவதானமாக ஆரம்பித்தாள் மனைவி. ஒரு பத்மநாதன் இல்லாவிட்டால் என்ன? சிகிச்சையே இல்லாத இந்தப் பாழும் நோயால் பீடிக்கப்பட்டு, ஆதரவும் இல்லாமல் துன்பப்படுபவர்களுக்கா பஞ்சம், இந்த உலகில்? “நாம்ப ரெண்டு பேரும் சேர்ந்து பண்ண வேண்டிய காரியம் எத்தனையோ இருக்கு, கோபி,” என்றாள் இந்துலேகா, தெளிவான குரலில். 1 Free Tamil Ebooks - எங்களைப் பற்றி மின்புத்தகங்களைப் படிக்க உதவும் கருவிகள்: மின்புத்தகங்களைப் படிப்பதற்கென்றே கையிலேயே வைத்துக் கொள்ளக்கூடிய பல கருவிகள் தற்போது சந்தையில் வந்துவிட்டன. Kindle, Nook, Android Tablets போன்றவை இவற்றில் பெரும்பங்கு வகிக்கின்றன. இத்தகைய கருவிகளின் மதிப்பு தற்போது 4000 முதல் 6000 ரூபாய் வரை குறைந்துள்ளன. எனவே பெரும்பான்மையான மக்கள் தற்போது இதனை வாங்கி வருகின்றனர். ஆங்கிலத்திலுள்ள மின்புத்தகங்கள்: ஆங்கிலத்தில் லட்சக்கணக்கான மின்புத்தகங்கள் தற்போது கிடைக்கப் பெறுகின்றன. அவை PDF, EPUB, MOBI, AZW3. போன்ற வடிவங்களில் இருப்பதால், அவற்றை மேற்கூறிய கருவிகளைக் கொண்டு நாம் படித்துவிடலாம். தமிழிலுள்ள மின்புத்தகங்கள்: தமிழில் சமீபத்திய புத்தகங்களெல்லாம் நமக்கு மின்புத்தகங்களாக கிடைக்கப்பெறுவதில்லை. ProjectMadurai.com எனும் குழு தமிழில் மின்புத்தகங்களை வெளியிடுவதற்கான ஒர் உன்னத சேவையில் ஈடுபட்டுள்ளது. இந்தக் குழு இதுவரை வழங்கியுள்ள தமிழ் மின்புத்தகங்கள் அனைத்தும் PublicDomain-ல் உள்ளன. ஆனால் இவை மிகவும் பழைய புத்தகங்கள். சமீபத்திய புத்தகங்கள் ஏதும் இங்கு கிடைக்கப்பெறுவதில்லை. எனவே ஒரு தமிழ் வாசகர் மேற்கூறிய “மின்புத்தகங்களைப் படிக்க உதவும் கருவிகளை” வாங்கும்போது, அவரால் எந்த ஒரு தமிழ் புத்தகத்தையும் இலவசமாகப் பெற முடியாது. சமீபத்திய புத்தகங்களை தமிழில் பெறுவது எப்படி? சமீபகாலமாக பல்வேறு எழுத்தாளர்களும், பதிவர்களும், சமீபத்திய நிகழ்வுகளைப் பற்றிய விவரங்களைத் தமிழில் எழுதத் தொடங்கியுள்ளனர். அவை இலக்கியம், விளையாட்டு, கலாச்சாரம், உணவு, சினிமா, அரசியல், புகைப்படக்கலை, வணிகம் மற்றும் தகவல் தொழில்நுட்பம் போன்ற பல்வேறு தலைப்புகளின் கீழ் அமைகின்றன. நாம் அவற்றையெல்லாம் ஒன்றாகச் சேர்த்து தமிழ் மின்புத்தகங்களை உருவாக்க உள்ளோம். அவ்வாறு உருவாக்கப்பட்ட மின்புத்தகங்கள் Creative Commons எனும் உரிமத்தின் கீழ் வெளியிடப்படும். இவ்வாறு வெளியிடுவதன் மூலம் அந்தப் புத்தகத்தை எழுதிய மூல ஆசிரியருக்கான உரிமைகள் சட்டரீதியாகப் பாதுகாக்கப்படுகின்றன. அதே நேரத்தில் அந்த மின்புத்தகங்களை யார் வேண்டுமானாலும், யாருக்கு வேண்டுமானாலும், இலவசமாக வழங்கலாம். எனவே தமிழ் படிக்கும் வாசகர்கள் ஆயிரக்கணக்கில் சமீபத்திய தமிழ் மின்புத்தகங்களை இலவசமாகவே பெற்றுக் கொள்ள முடியும். தமிழிலிருக்கும் எந்த வலைப்பதிவிலிருந்து வேண்டுமானாலும் பதிவுகளை எடுக்கலாமா? கூடாது. ஒவ்வொரு வலைப்பதிவும் அதற்கென்றே ஒருசில அனுமதிகளைப் பெற்றிருக்கும். ஒரு வலைப்பதிவின் ஆசிரியர் அவரது பதிப்புகளை “யார் வேண்டுமானாலும் பயன்படுத்தலாம்” என்று குறிப்பிட்டிருந்தால் மட்டுமே அதனை நாம் பயன்படுத்த முடியும். அதாவது “Creative Commons” எனும் உரிமத்தின் கீழ் வரும் பதிப்புகளை மட்டுமே நாம் பயன்படுத்த முடியும். அப்படி இல்லாமல் “All Rights Reserved” எனும் உரிமத்தின் கீழ் இருக்கும் பதிப்புகளை நம்மால் பயன்படுத்த முடியாது. வேண்டுமானால் “All Rights Reserved” என்று விளங்கும் வலைப்பதிவுகளைக் கொண்டிருக்கும் ஆசிரியருக்கு அவரது பதிப்புகளை “Creative Commons” உரிமத்தின் கீழ் வெளியிடக்கோரி நாம் நமது வேண்டுகோளைத் தெரிவிக்கலாம். மேலும் அவரது படைப்புகள் அனைத்தும் அவருடைய பெயரின் கீழே தான் வெளியிடப்படும் எனும் உறுதியையும் நாம் அளிக்க வேண்டும். பொதுவாக புதுப்புது பதிவுகளை  உருவாக்குவோருக்கு அவர்களது பதிவுகள்  நிறைய வாசகர்களைச் சென்றடைய வேண்டும் என்ற எண்ணம் இருக்கும். நாம் அவர்களது படைப்புகளை எடுத்து இலவச மின்புத்தகங்களாக வழங்குவதற்கு  நமக்கு அவர்கள் அனுமதியளித்தால், உண்மையாகவே அவர்களது படைப்புகள் பெரும்பான்மையான மக்களைச் சென்றடையும். வாசகர்களுக்கும் நிறைய புத்தகங்கள் படிப்பதற்குக் கிடைக்கும் வாசகர்கள் ஆசிரியர்களின் வலைப்பதிவு முகவரிகளில் கூட அவர்களுடைய படைப்புகளை தேடிக் கண்டுபிடித்து படிக்கலாம். ஆனால் நாங்கள் வாசகர்களின் சிரமத்தைக் குறைக்கும் வண்ணம் ஆசிரியர்களின் சிதறிய வலைப்பதிவுகளை ஒன்றாக இணைத்து ஒரு முழு மின்புத்தகங்களாக உருவாக்கும் வேலையைச் செய்கிறோம். மேலும் அவ்வாறு உருவாக்கப்பட்ட புத்தகங்களை “மின்புத்தகங்களைப் படிக்க உதவும் கருவிகள்”-க்கு ஏற்ற வண்ணம் வடிவமைக்கும் வேலையையும் செய்கிறோம். FreeTamilEbooks.com இந்த வலைத்தளத்தில்தான் பின்வரும் வடிவமைப்பில் மின்புத்தகங்கள் காணப்படும். PDF for desktop, PDF for 6” devices, EPUB, AZW3, ODT இந்த வலைதளத்திலிருந்து யார் வேண்டுமானாலும் மின்புத்தகங்களை இலவசமாகப் பதிவிறக்கம்(download) செய்து கொள்ளலாம். அவ்வாறு பதிவிறக்கம்(download) செய்யப்பட்ட புத்தகங்களை யாருக்கு வேண்டுமானாலும் இலவசமாக வழங்கலாம். இதில் நீங்கள் பங்களிக்க விரும்புகிறீர்களா? நீங்கள் செய்யவேண்டியதெல்லாம் தமிழில் எழுதப்பட்டிருக்கும் வலைப்பதிவுகளிலிருந்து பதிவுகளை எடுத்து, அவற்றை LibreOffice/MS Office போன்ற wordprocessor-ல் போட்டு ஓர் எளிய மின்புத்தகமாக மாற்றி எங்களுக்கு அனுப்பவும். அவ்வளவுதான்! மேலும் சில பங்களிப்புகள் பின்வருமாறு: 1. ஒருசில பதிவர்கள்/எழுத்தாளர்களுக்கு அவர்களது படைப்புகளை “Creative Commons” உரிமத்தின்கீழ் வெளியிடக்கோரி மின்னஞ்சல் அனுப்புதல் 2. தன்னார்வலர்களால் அனுப்பப்பட்ட மின்புத்தகங்களின் உரிமைகளையும் தரத்தையும் பரிசோதித்தல் 3. சோதனைகள் முடிந்து அனுமதி வழங்கப்பட்ட தரமான மின்புத்தகங்களை நமது வலைதளத்தில் பதிவேற்றம் செய்தல் விருப்பமுள்ளவர்கள் freetamilebooksteam@gmail.com எனும் முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பவும். இந்தத் திட்டத்தின் மூலம் பணம் சம்பாதிப்பவர்கள் யார்? யாருமில்லை. இந்த வலைத்தளம் முழுக்க முழுக்க தன்னார்வலர்களால் செயல்படுகின்ற ஒரு வலைத்தளம் ஆகும். இதன் ஒரே நோக்கம் என்னவெனில் தமிழில் நிறைய மின்புத்தகங்களை உருவாக்குவதும், அவற்றை இலவசமாக பயனர்களுக்கு வழங்குவதுமே ஆகும். மேலும் இவ்வாறு உருவாக்கப்பட்ட மின்புத்தகங்கள், ebook reader ஏற்றுக்கொள்ளும் வடிவமைப்பில் அமையும். இத்திட்டத்தால் பதிப்புகளை எழுதிக்கொடுக்கும் ஆசிரியர்/பதிவருக்கு என்ன லாபம்? ஆசிரியர்/பதிவர்கள் இத்திட்டத்தின் மூலம் எந்தவிதமான தொகையும் பெறப்போவதில்லை. ஏனெனில், அவர்கள் புதிதாக இதற்கென்று எந்தஒரு பதிவையும்  எழுதித்தரப்போவதில்லை. ஏற்கனவே அவர்கள் எழுதி வெளியிட்டிருக்கும் பதிவுகளை எடுத்துத்தான் நாம் மின்புத்தகமாக வெளியிடப்போகிறோம். அதாவது அவரவர்களின் வலைதளத்தில் இந்தப் பதிவுகள் அனைத்தும் இலவசமாகவே கிடைக்கப்பெற்றாலும், அவற்றையெல்லாம் ஒன்றாகத் தொகுத்து ebook reader போன்ற கருவிகளில் படிக்கும் விதத்தில் மாற்றித் தரும் வேலையை இந்தத் திட்டம் செய்கிறது. தற்போது மக்கள் பெரிய அளவில் tablets மற்றும் ebook readers போன்ற கருவிகளை நாடிச் செல்வதால் அவர்களை நெருங்குவதற்கு இது ஒரு நல்ல வாய்ப்பாக அமையும். நகல் எடுப்பதை அனுமதிக்கும் வலைதளங்கள் ஏதேனும் தமிழில் உள்ளதா? உள்ளது. பின்வரும் தமிழில் உள்ள வலைதளங்கள் நகல் எடுப்பதினை அனுமதிக்கின்றன. 1. www.vinavu.com 2. www.badriseshadri.in 3. http://maattru.com 4. kaniyam.com 5. blog.ravidreams.net எவ்வாறு ஒர் எழுத்தாளரிடம் Creative Commons உரிமத்தின் கீழ் அவரது படைப்புகளை வெளியிடுமாறு கூறுவது? இதற்கு பின்வருமாறு ஒரு மின்னஞ்சலை அனுப்ப வேண்டும். <துவக்கம்> உங்களது வலைத்தளம் அருமை [வலைதளத்தின் பெயர்]. தற்போது படிப்பதற்கு உபயோகப்படும் கருவிகளாக Mobiles மற்றும் பல்வேறு கையிருப்புக் கருவிகளின் எண்ணிக்கை அதிகரித்து வந்துள்ளது. இந்நிலையில் நாங்கள் http://www.FreeTamilEbooks.com எனும் வலைதளத்தில், பல்வேறு தமிழ் மின்புத்தகங்களை வெவ்வேறு துறைகளின் கீழ் சேகரிப்பதற்கான ஒரு புதிய திட்டத்தில் ஈடுபட்டுள்ளோம். இங்கு சேகரிக்கப்படும் மின்புத்தகங்கள் பல்வேறு கணிணிக் கருவிகளான Desktop,ebook readers like kindl, nook, mobiles, tablets with android, iOS போன்றவற்றில் படிக்கும் வண்ணம் அமையும். அதாவது இத்தகைய கருவிகள் support செய்யும் odt, pdf, ebub, azw போன்ற வடிவமைப்பில் புத்தகங்கள் அமையும். இதற்காக நாங்கள் உங்களது வலைதளத்திலிருந்து பதிவுகளை பெற விரும்புகிறோம். இதன் மூலம் உங்களது பதிவுகள் உலகளவில் இருக்கும் வாசகர்களின் கருவிகளை நேரடியாகச் சென்றடையும். எனவே உங்களது வலைதளத்திலிருந்து பதிவுகளை  பிரதியெடுப்பதற்கும் அவற்றை மின்புத்தகங்களாக மாற்றுவதற்கும் உங்களது அனுமதியை வேண்டுகிறோம். இவ்வாறு உருவாக்கப்பட்ட மின்புத்தகங்களில் கண்டிப்பாக ஆசிரியராக உங்களின் பெயரும் மற்றும் உங்களது வலைதள முகவரியும் இடம்பெறும். மேலும் இவை “Creative Commons” உரிமத்தின் கீழ் மட்டும்தான் வெளியிடப்படும் எனும் உறுதியையும் அளிக்கிறோம். http://creativecommons.org/licenses/ நீங்கள் எங்களை பின்வரும் முகவரிகளில் தொடர்பு கொள்ளலாம். e-mail : freetamilebooksteam@gmail.com  FB : https://www.facebook.com/FreeTamilEbooks G +: https://plus.google.com/communities/108817760492177970948 நன்றி. மேற்கூறியவாறு ஒரு மின்னஞ்சலை உங்களுக்குத் தெரிந்த அனைத்து எழுத்தாளர்களுக்கும் அனுப்பி அவர்களிடமிருந்து அனுமதியைப் பெறுங்கள். முடிந்தால் அவர்களையும் “Creative Commons License”-ஐ அவர்களுடைய வலைதளத்தில் பயன்படுத்தச் சொல்லுங்கள். கடைசியாக அவர்கள் உங்களுக்கு அனுமதி அளித்து அனுப்பியிருக்கும் மின்னஞ்சலைfreetamilebooksteam@gmail.com எனும் முகவரிக்கு அனுப்பி வையுங்கள். ஓர் எழுத்தாளர் உங்களது உங்களது வேண்டுகோளை மறுக்கும் பட்சத்தில் என்ன செய்வது ? அவர்களையும் அவர்களது படைப்புகளையும் அப்படியே விட்டுவிட வேண்டும். ஒருசிலருக்கு அவர்களுடைய சொந்த முயற்சியில் மின்புத்தகம் தயாரிக்கும் எண்ணம்கூட இருக்கும். ஆகவே அவர்களை நாம் மீண்டும் மீண்டும் தொந்தரவு செய்யக் கூடாது. அவர்களை அப்படியே விட்டுவிட்டு அடுத்தடுத்த எழுத்தாளர்களை நோக்கி நமது முயற்சியைத் தொடர வேண்டும். மின்புத்தகங்கள் எவ்வாறு அமைய வேண்டும்? ஒவ்வொருவரது வலைத்தளத்திலும் குறைந்தபட்சம் நூற்றுக்கணக்கில் பதிவுகள் காணப்படும். அவை வகைப்படுத்தப்பட்டோ அல்லது வகைப்படுத்தப் படாமலோ இருக்கும். நாம் அவற்றையெல்லாம் ஒன்றாகத் திரட்டி ஒரு பொதுவான தலைப்பின்கீழ் வகைப்படுத்தி மின்புத்தகங்களாகத் தயாரிக்கலாம். அவ்வாறு வகைப்படுத்தப்படும் மின்புத்தகங்களை பகுதி-I பகுதி-II என்றும் கூட தனித்தனியே பிரித்துக் கொடுக்கலாம். தவிர்க்க வேண்டியவைகள் யாவை? இனம், பாலியல் மற்றும் வன்முறை போன்றவற்றைத் தூண்டும் வகையான பதிவுகள் தவிர்க்கப்பட வேண்டும். எங்களைத் தொடர்பு கொள்வது எப்படி? நீங்கள் பின்வரும் முகவரிகளில் எங்களைத் தொடர்பு கொள்ளலாம். - email : freetamilebooksteam@gmail.com - Facebook: https://www.facebook.com/FreeTamilEbooks - Google Plus: https://plus.google.com/communities/108817760492177970948 இத்திட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் யார்? - Shrinivasan tshrinivasan@gmail.com - Alagunambi Welkin alagunambiwelkin@fsftn.org - Arun arun@fsftn.org -  இரவி Supported by - Free Software Foundation TamilNadu, www.fsftn.org - Yavarukkum Software Foundation http://www.yavarkkum.org/