அபிராமி அந்தாதி எளிய விளக்க உரை குமரன் அபிராமி அந்தாதி Copyright © 2014 This book was produced using PressBooks.com. உள்ளடக்கம் - நூலாசிரியர் - உரிமை - மின்னூல் ஆக்கம் - அறிமுகம் - 1. கார் அமர் மேனிக் கணபதி - 2. பாடல் 1 - அபிராமி எந்தன் விழுத்துணையே - 3. பாடல் 2- துணையும் தொழும் தெய்வமும் திரிபுர சுந்தரியே! - 4. பாடல் 3-செறிந்தேன் உனது திருவடிக்கே! - 5. பாடல் 4 - என் மனதில் எந்நாளும் தங்க வேண்டும். - 6. பாடல் 5 - வார்சடையோன் அருந்திய நஞ்சமுதாக்கிய அம்பிகை - 7. பாடல் 6 - சென்னியது உன் திருவடித்தாமரை - 8. பாடல் 7 - ததியுறு மத்தின் சுழலும் என் ஆவி - 9. பாடல் 8 - சுந்தரி எந்தை துணைவி - 10. பாடல் 9 - அம்மே வந்து என் முன் நிற்கவே - 11. பாடல் 10 - எங்கும் என்றும் நினைப்பது உன்னை - 12. பாடல் 11 - ஆனந்தமாய் என் அறிவாய் நிற்பவள் நீ - 13. பாடல் 12 - நான் முன் செய்த புண்ணியம் ஏது? - 14. பாடல் 13 - கறை கண்டனுக்கு மூத்தவளே - 15. பாடல் 14 - சிந்திப்பவர் நல்திசைமுகர் நாரணர் - 16. பாடல் 15 - மண் அளிக்கும் செல்வமோ பெறுவார்? - 17. பாடல் 16 - *நட்சத்திரம்* - இது அதிசயமே - 18. பாடல் 17 - *நட்சத்திரம்* - அதிசயம் ஆன வடிவுடையாள் - 19. பாடல் 18 - காலன் வரும்போது வெளி நிற்கவே - 20. பாடல் 19 - ஞானம் திகழ்கின்றது என்ன திருவுளமோ? - 21. பாடல் 20 - உறைகின்ற நின் திருக்கோயில் - 22. பாடல் 21 - மங்கலை செங்கலசம் முலையாள் - 23. பாடல் 22 - கொடியே இளவஞ்சிக் கொம்பே - 24. பாடல் 23 - கொள்ளேன் மனத்தில் நின் கோலம் அல்லாது! - 25. பாடல் 24 - மணியே! மணியின் ஒளியே! - 26. பாடல் 25 - இனி உன்னை யான் மறவாமல் நின்று ஏத்துவனே! - 27. பாடல் 26 - கமழ் பூங்கடம்பு சாத்தும் குழல் அணங்கே - 28. பாடல் 27 - சுந்தரி நின் அருள் ஏதென்று சொல்லுவதே - 29. பாடல் 28 - தவநெறியும் சிவலோகமும் சித்திக்குமே - 30. பாடல் 29 - புத்தியினுள்ளே புரக்கும் புரத்தை அன்றே - 31. பாடல் 30 - ஒன்றே பல உருவே அருவே என் உமையவளே - 32. பாடல் 31 - ஈன்றெடுப்பாள் ஒரு தாயும் இல்லை - 33. பாடல் 32 - ஈசர் பாகத்து நேரிழையே - 34. பாடல் 33 - உன்னையே அன்னையே என்பன் ஓடி வந்தே - 35. பாடல் 34 - ஞாயிறும் திங்களுமே - 36. பாடல் 35 - தரங்கக் கடலுள் துயில் கூரும் விழுப்பொருளே - 37. பாடல் 36 - பொருளே பொருள் முடிக்கும் போகமே - 38. பாடல் 37 - திரு உடையானிடம் சேர்பவளே - 39. பாடல் 38 - அவளைப் பணிமின் கண்டீர் - 40. பாடல் 39 - ஆளுகைக்கு உந்தன் அடித்தாமரைகள் உண்டு - 41. பாடல் 40 - முன் செய் புண்ணியமே - 42. பாடல் 41 - புண்ணியம் செய்தனமே மனமே - 43. பாடல் 42 - பனி மொழி வேதப் பரிபுரையே - 44. பாடல் 43 - இறைவர் செம்பாகத்து இருந்தவளே - 45. பாடல் 44 - எங்கள் சங்கரனார் மனை மங்கலமாம் - 46. பாடல் 45 - பொறுக்கை நன்றே பின் வெறுக்கை அன்றே - 47. பாடல் 46 - யானுன்னை வாழ்த்துவனே - 48. பாடல் 47 - வாழும் படி ஒன்று கண்டு கொண்டேன் - 49. பாடல் 48 - படரும் பரிமளப் பச்சைக்கொடி - 50. பாடல் 49 - இசை வடிவாய் நின்ற நாயகியே - 51. பாடல் 50 - நாயகி நான்முகி நாராயணி - 52. பாடல் 51 - மரணம் பிறவி இரண்டும் எய்தார் - 53. பாடல் 52 - பிறை முடித்த ஐயன் திருமனையாள் - 54. பாடல் 53 - தன்னந்தனி இருக்க வேண்டும்! - 55. பாடல் 54 - திரிபுரை பாதங்கள் சேர்மின்களே - 56. பாடல் 55 - மின் ஆயிரம் ஒரு மெய் வடிவு ஆகி விளங்குகின்றது - 57. பாடல் 56 - இவ்வுலகு எங்குமாய் நின்றாள் - 58. பாடல் 57 - பொய்யும் மெய்யும் இயம்ப வைத்தாய் - 59. பாடல் 58 - சரணாம்புயம் அன்றி ஒரு தஞ்சமும் இல்லை - 60. பாடல் 59 - தஞ்சம் பிறிது இல்லை - 61. பாடல் 60 - சால நன்றோ அடியேன் முடை நாய்த் தலையே - 62. பாடல் 62 - கோகனகச் செங்கைக் கரும்பும் மலரும் எப்போதும் என் சிந்தையதே - 63. பாடல் 63 - தேறும்படி சில ஏதுகள் காட்டுவாள் - 64. பாடல் 64 - உனக்கு அன்பு பூண்டு கொண்டேன் - 65. பாடல் 65 - ஆறுமுகன் மூதறிவின் மகன் - 66. பாடல் 66 - நின் நாமங்கள் தோத்திரமே - 67. பாடல் 67 - மின்னல் போலும் உன் திருவுருவம் - 68. பாடல் 68 - சிவகாமசுந்தரி சீறடிக்கே சாரும் தவம் வேண்டும் - 69. பாடல் 69 - தனம் தரும் கல்வி தரும் - 70. பாடல் 70 - கண் களிக்கும் படி கண்டு கொண்டேன் - 71. பாடல் 71 - அருமறைகள் பழகிச் சிவந்த பதாம்புயத்தாள் - 72. பாடல் 72 - எம் கோன் சடை மேல் வைத்த தாமரையே - 73. பாடல் 73 - அம்மை நாமம் திரிபுரை - 74. பாடல் 74 - மூவரும் போற்றும் தேவி - 75. பாடல் 75 - கொங்கிவர் பூங்குழலாள் - 76. பாடல் 76 - குறித்தேன் மனத்தில் நின் கோலம் எல்லாம் - 77. பாடல் 77 - நான்மறை சேர் திருநாமங்கள் செப்புவோம் - 78. பாடல் 78 - உன் திருவுருவம் என் கண்களில் நிறைகின்றதே - 79. பாடல் 79 - கயவரோடு இனி என்ன கூட்டு? - 80. பாடல் 80 - ஆடகத் தாமரை ஆரணங்கே - 81. பாடல் 81 - அளி ஆர் கமலத்தில் ஆரணங்கே - 82. பாடல் 82 - அளி ஆர் கமலத்தில் ஆரணங்கே - 83. பாடல் 83 - இந்திரன் ஆகும் வழி - 84. பாடல் 84 - வஞ்சகர் நெஞ்சு அடையாள்! - 85. பாடல் 85 - என் அல்லல் எல்லாம் தீர்க்கும் திரிபுரையாள் - 86. பாடல் 86 - பாலையும் தேனையும் பாகையும் போலும் பணிமொழியே - 87. பாடல் 87 - விழிக்கும் வினைக்கும் வெளிநின்ற திருவுருவம் - 88. பாடல் 88 - தரமில்லாதவன் என்று தள்ளிவிடாதே - 89. பாடல் 89 - சிறக்கும் கமலத் திருவே - 90. பாடல் 90 - இனி எனக்குக் கிடைக்காத பொருள் எதுவுமில்லை - 91. பாடல் 91 - அடியாரைத் தொழுதால் ஐராவதம் ஏறி உலா வரலாம் - 92. பாடல் 92 - முதல் தேவர் மூவரும் யாவரும் போற்றும் முகிழ்நகையே - 93. பாடல் 93 - தெய்வத்தைப் புகழ்வதெல்லாம் பெரும் நகைச்சுவை - 94. பாடல் 94 - அபிராமி சமயம் நன்றே - 95. பாடல் 95 - நான் அறிவது ஒன்றும் இல்லை நீயே எல்லாம் - 96. பாடல் 96 - ஆமளவும் தொழுதால் ஏழுலகுக்கும் அதிபர் - 97. பாடல் 97 - புண்ணியர் எண்ணிலர் போற்றுவர் தையலையே - 98. பாடல் 98 - மெய்யடியார் நெஞ்சில் புகுந்திருப்பவள் - 99. பாடல் 99 - கயிலாயருக்கு அன்று இமவான் அளித்த கனங்குழையே - 100. பாடல் 100 - நெஞ்சில் எப்போதும் உதிக்கின்றவே - 101. ஆத்தாளைத் தொழுவார்க்கு ஒரு தீங்கும் இல்லையே (அபிராமி அந்தாதி நூற்பயன்) 1 நூலாசிரியர் குமரன், kumaran.malli@gmail.com ------------ --------------------------------------------------------------------------------------------------------- தொழிற்துறை தொழில்நுட்பம் இருப்பிடம் பிறந்தது மதுரை, தற்போது Minnesota, ஐக்கிய அமெரிக்க குடியரசு அறிமுகம் அடியேன் சிறிய ஞானத்தன் அறிதல் யார்க்கும் அரியானை அடியேன் காண்பான் அலற்றுவன் இதனில் மிக்கோர் அயர்வுண்டே! ஆர்வங்கள் சங்கத் தமிழ் இலக்கியங்கள், சமய இலக்கியங்கள், வடமொழி இலக்கியங்கள் இவற்றில் ஆர்வம் உடையவன். ------------ ---------------------------------------------------------------------------------------------------------   2 உரிமை இந்த கையேடு Creative Commons License வழங்கப்பட்டதாகும். அதனடிப்படையில் எவரும் இதனை திருத்தம் செய்து மேம்படுத்திக் கொள்ளலாம். அபிராமி அந்தாதி by kumaran.malli at gmail.com is licensed under a Creative Commons Attribution 4.0 International License. You are free to: - Share — copy and redistribute the material in any medium or format - Adapt — remix, transform, and build upon the material - for any purpose, even commercially. - The licensor cannot revoke these freedoms as long as you follow the license terms. Under the following terms: - Attribution — You must give appropriate credit, provide a link to the license, and indicate if changes were made. You may do so in any reasonable manner, but not in any way that suggests the licensor endorses you or your use. - No additional restrictions — You may not apply legal terms ortechnological measures that legally restrict others from doing anything the license permits. 3 மின்னூல் ஆக்கம் மின்னூல் பற்றிய தகவல் மூலம்: http://abiramibhattar.blogspot.in/ எழுதியவர்: குமரன் அட்டைப்படம் பற்றிய தகவல்: மூலம்: https://upload.wikimedia.org/wikipedia/commons/7/7d/Abirami_Ma.jpg +----------------------------------:+-----------------------------------+ | Description | English: An image of the Goddess | | | Parvati's Tamil incarnation. | +-----------------------------------+-----------------------------------+ | Date | 1 September 2011 | +-----------------------------------+-----------------------------------+ | Source | Own work | +-----------------------------------+-----------------------------------+ | Author | JaQueeta | +-----------------------------------+-----------------------------------+ Original file ‎(1,026 × 1,600 pixels, file size: 875 KB, MIME type: image/jpeg); ([]request rotation) This file is licensed under the Creative Commons Attribution-Share Alike 3.0 Unported license. மின்னூல் ஆக்கம் : உதவி: கி. சிவ‍கார்த்திகேயன், seesiva@gmail.com படத்தொகுப்பில் உதவி: ராஜராஜ சேரன், iamnikilan@gmail.com வெளியீட்டாளர் தகவல் மின்னூல் வெளியீடு : http://FreeTamilEbooks.com வெளியீட்டாளர்: த. ஸ்ரீனிவாசன், தரை தளம் 4, சுபிக்ஷா அடுக்ககம், 42, வியாசர் தெரு, கிழக்கு தாம்பரம் சென்னை – 600 059 தொ. பே: +91 98417 95468 – tshrinivasan@gmail.com நன்றி : http://pressbooks.com 4 அறிமுகம் அபிராமி அந்தாதி (அந்தம்-முடிவு, ஆதி-துவக்கம்) அபிராமி பட்டரால் இயற்றப்பட்டது.  குமரன் அவர்களின் இந்த புத்தகம் மூலம் அபிராமி அந்தாதிக்கு ஓரு எளிய விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.   சில பாடல்களுக்கு அந்தாதித் தொடை, அருஞ்சொற்பொருள், எதுகை மற்றும் மோனையுடன் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. மேலும் ஒவ்வொரு பாடலின் முடிவிலும் அந்த பாடலினால் எற்படும் பலனும் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த மின்னூல் குறித்த உங்களின் விமர்சனங்களை எம்முடன் பகிர்ந்து கொள்ளலாம். உங்களது கருத்துகள் இதை மேலும் மேம்படுத்த உதவும்.   tshrinivasan@gmail.com [pressbooks.com] 1 விநாயகர் துணை பாடல்: தார் அமர் கொன்றையும் சண்பக மாலையும் சாத்தும் தில்லை ஊரர்தம் பாகத்து உமை மைந்தனே – உலகேழும் பெற்ற சீர் அபிராமி அந்தாதி எப்போதும் என் சிந்தையுள்ளே - கார் அமர் மேனிக் கணபதியே – நிற்கக் கட்டுரையே. பொருள்: தார் அமர் கொன்றையும் – மாலையில் அமைந்துள்ள கொன்றைப் பூ – கொன்றைப் பூ மாலையும் சண்பக மாலையும் சாத்தும் – அணியும் தில்லை ஊரர் – தில்லையில் – சிதம்பரத்தில் வாழும் நடராஜன் தம் பாகத்து – அவர் உடலில் ஒரு பாதியாய் நிற்கும் உமை – சிவகாமி – பார்வதி மைந்தனே – மகனே உலகு ஏழும் பெற்ற சீர் அபிராமி – சீர் பொருந்திய அபிராமி அன்னையின் அருளையும் அழகையும் எடுத்துக் கூறும் அந்தாதி – அந்தாதி தொடையில் அமைந்த இந்த நூல் எப்போதும் என் சிந்தையுள்ளே நிற்க கார் அமர் மேனி கணபதியே – மேகம் போல கருநிற மேனியை உடைய பேரழகு கணபதியே கட்டுரையே – அருள் புரிவாய். விளக்கம்: கொன்றை மாலையும் சண்பக மாலையும் அணியும் நடராஜனுக்கும் அவர் உடலில் ஒரு பாதியாய் நிற்கும் உமையம்மைக்கும் மைந்தனே! மேகம் போல் கரிய உடல் கொண்ட கணபதியே! உலகேழையும் பெற்ற அன்னையாம் அபிராமியின் புகழை கூறும் இந்த அந்தாதி என் சிந்தையுள் எப்போதும் நிற்க நீ அருள் புரிவாய். பாடல் 1 - அபிராமி எந்தன் விழுத்துணையே பாடல்: உதிக்கின்ற செங்கதிர் உச்சித் திலகம், உணர்வுடையோர் மதிக்கின்ற மாணிக்கம், மாதுளம் போது, மலர்க்கமலை துதிக்கின்ற மின் கொடி, மென் கடிக் குங்குமத் தோயமென்ன விதிக்கின்ற மேனி அபிராமி எந்தன் விழுத்துணையே. பொருள்: உதிக்கின்ற செங்கதிர் உச்சிதிலகம் – உதய சூரியனின் சிவந்த கதிரைப் போன்று உள்ளது அம்மை தன் நெற்றியின் உச்சியில் அணிந்திருக்கும் திலகம் உணர்வுடையோர் – பக்தியிலும், அன்பிலும், அறிவிலும், ஞானத்திலும் சிறந்தவர் மதிக்கின்ற மாணிக்கம் மாதுளம் போது – மாதுளம்பூ மொட்டு மலர்க்கமலை – தாமரையில் வீற்றிருக்கும் மலர் மகளாம் திருமகள் (மஹாலக்ஷ்மி) துதிக்கின்ற மின் கொடி – துதிக்கின்ற மின்னல் கொடி மென் கடிக் குங்குமத் தோயம் – மென்மையான வாசனை வீசும் குங்குமம் கரைத்த நீர் என்ன – போன்ற விதிக்கின்ற மேனி – விளங்குகின்ற திருவுடலைக் கொண்ட அபிராமி எந்தன் விழுத்துணையே – அபிராமி எனக்கு சிறந்த துணையாவாள். விளக்கம்:  உதய சூரியனின் சிவந்த கதிரைப் போன்று உள்ளது அபிராமி அன்னை தன் தலை வகிட்டில் அணிந்திருக்கும் திலகம். ஞானத்தில் சிறந்தவர்களால் போற்றப்படும் மாணிக்கம் போன்றவள் அபிராமி. திருமகளால் வணங்கப்படும் மின்னல் கொடி போன்றவள் அபிராமி. மென்மையான வாசனை வீசும் குங்குமம் கரைத்த நீர் போன்ற மேனியை உடையவள் அபிராமி. அந்த அபிராமி அன்னையே எனக்கு சிறந்த துணையாவாள். பாடல் 2- துணையும் தொழும் தெய்வமும் திரிபுர சுந்தரியே! பாடல்: துணையும், தொழும் தெய்வமும், பெற்ற தாயும், சுருதிகளின்  பணையும், கொழுந்தும், பதிகொண்ட வேரும் – பனி மலர்ப் பூங் கணையும், கருப்புச் சிலையும், மென் பாசாங்குசமும், கையில் அணையும், திரிபுர சுந்தரி – ஆவது அறிந்தனமே! இந்தப் பாடலின் பொருள் எளிதாய்ப் புரிய பாடலை கீழ்கண்டவாறு மாற்றி எழுதிக்கொள்ளலாம். பனி மலர்ப் பூங் கணையும், கருப்புச் சிலையும், மென் பாசாங்குசமும், கையில் அணையும், திரிபுர சுந்தரி (என்) துணையும், தொழும் தெய்வமும், பெற்ற தாயும், சுருதிகளின் பணையும், கொழுந்தும், பதிகொண்ட வேரும் ஆவது அறிந்தனமே! பொருள்: பனி மலர்ப் பூங் கணையும் – குளிர்ந்த மலர் அம்பும் கருப்புச் சிலையும் – கரும்பு வில்லும் மென் பாசாங்குசமும் – மென்மையான பாசமும், அங்குசமும் கையில் அணையும் – கையில் கொண்டு விளங்கும் திரிபுர சுந்தரி – மூவுலகிலும் மிகச் சிறந்த அழகியான அன்னை திரிபுர சுந்தரி என் துணையும் தொழும் தெய்வமும் பெற்ற தாயும் சுருதிகளின் பணையும், கொழுந்தும், பதிகொண்ட வேரும் – வேதத்தின் கிளைகளும், இலைகளும், நிலத்தில் ஊன்றி நிற்கும் வேராகவும் ஆவது அறிந்தனமே – அவள் இருப்பது அறிந்தேனே! விளக்கம்: குளிர்ந்த மலர் அம்பும், கரும்பு வில்லும், மெல்லிய பாசமும், அங்குசமும் கையில் ஏந்தியிருக்கும் அன்னை திரிபுர சுந்தரி, வேதங்களின் வேராகவும், கிளைகளாகவும், இலைகளாகவும் இருக்கிறாள். அவளே என் துணையாகவும் நான் தொழும் தெய்வமாகவும் என்னைப் பெற்ற தாயாவும் இருக்கிறாள் என்பதை நான் அறிந்து கொண்டேன். பாடல் 3-செறிந்தேன் உனது திருவடிக்கே! பாடல்: அறிந்தேன் எவரும் அறியா மறையை, அறிந்துகொண்டு செறிந்தேன் உனது திருவடிக்கே திருவே! – வெருவிப் பிறிந்தேன் நின் அன்பர் பெருமை எண்ணாத கரும நெஞ்சால் மறிந்தே விழும் நரகுக்குறவாய மனிதரையே! இந்தப் பாடலின் பொருள் எளிதாய் விளங்க பாடலைக் கீழ்கண்டவாறு மாற்றி எழுதலாம். நின் அன்பர் பெருமை எண்ணாத கரும நெஞ்சால் நரகில் மறிந்தே விழும் நரகுக்கு உறவாய மனிதரையே வெருவிப் பிறிந்தேன். (நான்) அறிந்தேன் எவரும் அறியா மறையை. அறிந்துகொண்டு செறிந்தேன் உனது திருவடிக்கே திருவே! பொருள்: நின் அன்பர் பெருமை எண்ணாத கரும நெஞ்சால் – மனிதர்கள் தங்கள் முன் வினைப் (கருமப்) பயனால், அதனால் ஏற்பட்ட வாசனைகளால் நிரம்பிய மனம் கொண்டு, உன்னிடம் அன்பு கொண்ட அடியவர் பெருமையை எண்ணி அவர்களைப் பணிந்து உன் அருள் பெறும் வழியைப் பார்க்காமல் நரகில் மறிந்தே விழும் – தீய செயல்கள் செய்து நரகத்தில் கூட்டம் கூட்டமாய் சென்று விழும் நரகுக்கு உறவாய மனிதரையே – நரகத்திற்கு உறவுக் கூட்டம் போல் இருக்கும் மனிதர்களை வெருவிப் பிறிந்தேன் – (நான்) வெறுத்து (அவர் மேல் கோபம் கொண்டு) அவர்களை விட்டு விலகி விட்டேன். அறிந்தேன் எவரும் அறியா மறையை – யாருக்கும் தெரியாத ஒரு ரகசியத்தை நான் அறிந்து கொண்டேன். (அது உன் திருவடியை அடைவதே மிக எளிதான வழி என்பது). அறிந்து கொண்டு செறிந்தேன் உனது திருவடிக்கே திருவே – அன்பர்கள் (அடியவர்கள்) விரும்பும் அனைத்தும் அருளும் செல்வமே (திருவே) – அந்த ரகசியத்தை நான் அறிந்து கொண்டு உனது திருவடிக்கே சரணமாக (அடைக்கலமாக) அடைந்தேன். விளக்கம்: அடியவர் விரும்பும் அனைத்தும் அருளும் திருவே! யாரும் அறியா மறைப்பொருளை நான் உன் அருளால் அறிந்து கொண்டு உன் திருவடிக்கே சரணம் என அடைந்தேன். கருமப்பயனால் உன் அடியவர் பெருமையை அறியாத நரகத்தில் விழக் கூட்டம் கூட்டமாய் (ஆட்டு மந்தையைப் போல்) இருக்கும் மனிதர்களை நான் வெறுத்து விலகிவிட்டேன். பாடல் 4 - என் மனதில் எந்நாளும் தங்க வேண்டும். பாடல்: மனிதரும் தேவரும் மாயா முனிவரும் வந்து சென்னி குனிதரும் சேவடிக் கோமளமே! கொன்றை வார்சடைமேல் பனிதரும் திங்களும் பாம்பும் பகீரதியும் படைத்த புனிதரும் நீயும் என் புந்தி எந்நாளும் பொருந்துகவே! பொருள்: மனிதரும் தேவரும் மாயா முனிவரும் வந்து – மனிதர்களும் தேவர்களும் என்றும் வாழும் முனிவர்களும் வந்து சென்னி குனிதரும் – தலையால் வணங்கும் சேவடிக் கோமளமே – சிறப்பு மிகுந்த சிவந்த பாதங்களை உடைய மென்மையானவளே (கோமளவல்லியே) கொன்றை வார்சடைமேல் பனிதரும் திங்களும் பாம்பும் பகீரதியும் படைத்த – கொன்றைப்பூ அணிந்த நீண்ட சடைமுடியில் குளிர்ச்சி தரும் நிலவும் பாம்பும் கங்கையும் அணிந்துள்ள புனிதரும் நீயும் என் புந்தி எந்நாளும் பொருந்துகவே – புனிதராம் உன் கணவரும் நீயும் என் புத்தியில் எந்நாளும் இருந்து அருளவேண்டும். விளக்கம்:மனிதர்களும் தேவர்களும் மரணமில்லாத பெருவாழ்வு வாழும் முனிவர்களும் வந்து தங்கள் தலையால் வணங்கும் சிவந்த பாதங்களுடைய கோமளவல்லியே. நீண்ட சடைமுடியில் குளிர்ச்சி தரும் நிலவும் பாம்பும் கங்கையும் கொன்றைப்பூவும் அணிந்துள்ள புனிதராம் சிவபெருமானும் நீயும் என் மனதில் எந்நாளும் இருந்து அருளவேண்டும். பாடல் 5 - வார்சடையோன் அருந்திய நஞ்சமுதாக்கிய அம்பிகை பாடல்: பொருந்திய முப்புரை, செப்புரை செய்யும் புணர்முலையால் வருந்திய வஞ்சி மருங்குல் மனோன்மணி, வார்சடையோன் அருந்திய நஞ்சமுதாக்கிய அம்பிகை, அம்புயமேல் திருந்திய சுந்தரி, அந்தரி பாதம் என் சென்னியதே பொருள்: பொருந்திய முப்புரை – உயிர்களிடத்தில் படைத்தல், காத்தல், அழித்தல் என்னும் மூன்று நிலைகளிலும், இறந்த காலம், நிகழ் காலம், எதிர்காலம் என்ற மூன்று நிலைகளிலும், விழிப்பு, கனவு, ஆழ்ந்த தூக்கம் என்னும் மூன்று நிலைகளிலும், பூலோகம், புவர்லோகம், சுவர்க்க லோகம் என்னும் மூன்று நிலைகளிலும், பொருந்தி இருப்பவளே. செப்புரை செய்யும் புணர்முலையால் – புகழ்ந்து பேசுவதற்கு ஏற்ப மிக்க அழகுடனும் கட்டுடனும் பெருத்தும் விளங்கும் கூடி நிற்கும் முலைகளால், அவற்றின் பாரத்தால் வருந்திய வஞ்சி மருங்குல் மனோன்மணி – வருந்திய கொடிபோன்ற இடையுடைய, அன்பர்களை ஞான நிலைக்குக் கொண்டு செல்லும் மனோன்மணியே. வார்சடையோன் அருந்திய நஞ்சமுதாக்கிய அம்பிகை – தேவர்களும் அசுரர்களும் அமுதம் அடைவதற்காக அன்று பாற்கடலைக் கடைந்த போது எழுந்த ஆலகால விஷத்தை உலகைக் காக்கும் பொருட்டு நீண்ட சடையை உடைய சிவபெருமான் அருந்தும் போது அவர் திருக்கழுத்தின் மேல் உன் திருக்கரங்களை வைத்து அந்த நஞ்சை அமுதமாக்கிய அம்பிகையே. அம்புயமேல் திருந்திய சுந்தரி – நீரில் பிறக்கும் தாமரை மலர் மேல் அழகிய உருவுடன் அமர்ந்திருப்பவளே அந்தரி பாதம் என் சென்னியதே – உலகுக்கெல்லாம் ஆதியும் அந்தமும் ஆனவளே – உன் அழகிய பாதத்தை என் தலை மேல் அணிந்துகொண்டேன். விளக்கம்: உயிர்களிடத்தில் படைத்தல், காத்தல், அழித்தல்; இறந்த காலம், நிகழ் காலம், எதிர் காலம்; விழிப்பு, கனவு, ஆழ்ந்த தூக்கம்; பூலோகம், புவர்லோகம், சுவர்க்க லோகம்; போன்ற மூம்மூன்று நிலைகளில் முப்புரையாய் பொருந்தி இருப்பவளே. மிக்க அழகுடன் கூடி, இணையாய் நிற்கும் பெருமுலைகளின் பாரத்தால் வருந்தும் கொடியிடை கொண்ட மனோன்மணியே. அன்று சிவபெருமான் உண்ட நஞ்சை அமுதாக்கிய அம்பிகையே. மென்மையான தாமரையில் அமர்ந்துள்ள உன் திருவடிகளை நான் என் தலை மேல் அணிந்து கொள்கிறேன். பாடல் 6 - சென்னியது உன் திருவடித்தாமரை பாடல்: சென்னியது உன் திருவடித்தாமரை சிந்தையுள்ளே மன்னியது உன் திருமந்திரம் சிந்துர வண்ணப் பெண்ணே! முன்னிய நின் அடியாருடன் கூடி முறை முறையே பன்னியது உந்தன் பரமாகமப் பத்ததியே! பொருள்: சென்னியது உன் திருவடித்தாமரை – எப்பொதும் என் தலையில் உள்ளது உன் தாமரை மலர்கள் போன்ற அழகிய திருவடிகள். சிந்தையுள்ளே மன்னியது உன் திருமந்திரம் – என்றும் என் நினைவினில் நிலைத்து நிற்பது உன் திருமந்திரம். சிந்துர வண்ணப் பெண்ணே! - செந்தூரம் போன்ற நிறமுடைய அழகிய தேவியே! முன்னிய நின் அடியாருடன் கூடி – நான் எப்போதும் கூடியிருப்பது உன் அடியார்களையே. என் எல்லா செயல்களையும் அவர்களை முன்னிட்டு செய்கிறேன். முறை முறையே பன்னியது – தினந்தோறும் நான் முறையுடன் பாராயணம் செய்வது உந்தன் பரமாகமப் பத்ததியே – உன்னுடைய மேலான ஆகம வழிமுறைகளையே விளக்கம்:செந்தூரம் எனச் சிவந்த திருமேனியைப் பெற்ற அபிராமி அன்னையே! உன் தாமரை போன்ற அழகிய திருவடிகளை நான் எப்போதும் என் தலையின் மேல் வைத்துள்ளேன். உன் திருமந்திரமே எப்போதும் என் நினைவில் நிலை நிற்பது. என் எல்லா செயல்களும் உன் அடியார்களை முன் வைத்தே அவர்களுக்காகவே நடக்கின்றன. நான் எப்போதும் கூடியிருப்பதும் உன் அடியார்களையே. தினந்தோறும் நான் முறையுடன் படிப்பதும் உன்னுடைய மேலான ஆகம வழிமுறைகளையே. பாடல் 7 - ததியுறு மத்தின் சுழலும் என் ஆவி பாடல்: ததியுறு மத்தின் சுழலும் என் ஆவி தளர்விலதோர் கதியுறு வண்ணம் கருது கண்டாய் கமலாலயனும் மதியுறு வேணி மகிழ்நனும் மாலும் வணங்கி என்றும் துதியுறு சேவடியாய் சிந்துரானன சுந்தரியே பொருள்: ததியுறு மத்தின் சுழலும் என் ஆவி – தயிரைக் கடையும் மத்தின் சுழற்சியில் அகப்பட்டு இங்கும் அங்கும் சுழலும் தயிரைப் போல் என் உயிரும் பிறப்பு இறப்பு என்னும் சுழலில் அகப்பட்டு மயங்குகிறது. தளர்விலது ஓர் கதியுறு வண்ணம் கருது கண்டாய் – அப்படி நான் மயங்காத வண்ணம் ஒரு நல்ல கதியை அடையும் வண்ணம் அருள் புரிவாய். கமலாலயனும் – தாமரை மலரில் வீற்றிருக்கும் பிரம்மனும் மதியுறு வேணி மகிழ்நனும் – நிலவை தன் முடியில் அணிந்திருக்கும் உன்னுடன் மகிழ்ந்திருக்கும் சிவபெருமானும் மாலும் – திருமாலும் வணங்கி என்றும் துதியுறு சேவடியாய் – என்றும் வணங்கி போற்றுகின்ற சிவந்த திருவடிகளை உடையவளே சிந்துரானன சுந்தரியே – சிந்துர திலகம் அணிந்த முகத்தை உடைய பேரழகியே! விளக்கம்: தாமரை மலரில் வீற்றிருக்கும் பிரம்மனும், நிலவை தன் முடியில் சூடும் உன் மகிழ்நனும், திருமாலும் என்றும் வணங்கி போற்றுகின்ற சிவந்த திருவடிகளை உடையவளே! சிந்துர திலகம் அணிந்த முகத்தை உடைய பேரழகியே! தயிரைக் கடையும் மத்தின் சுழற்சியில் அகப்பட்டு இங்கும் அங்கும் அலையும் தயிரைப் போல் என் உயிரும் பிறப்பு இறப்பு என்னும் சுழலில் அகப்பட்டு துன்புறுகிறது. அப்படி நான் வருந்தாத வண்ணம் ஒரு நல்ல கதியைக் கொடுத்து அருள் புரிவாய். பாடல் 8 - சுந்தரி எந்தை துணைவி பாடல்: சுந்தரி எந்தை துணைவி என் பாசத் தொடரையெல்லாம் வந்தரி சிந்துர வண்ணத்தினாள் மகிடன் தலைமேல் அந்தரி நீலி அழியாத கன்னிகை ஆரணத்தோன் கந்தரி கைத்தலத்தாள் மலர்த்தாள் என் கருத்தனவே பொருள்: சுந்தரி – அழகில் சிறந்தவளே எந்தை துணைவி – என் தந்தையாகிய சிவபெருமானின் துணைவியே என் பாசத்தொடரையெல்லாம் வந்து அரி – என்னை தொடர்ந்து வந்து துன்பம் கொடுக்கும் பாசபந்தம் எனும் தொடரை கருணை கொண்டு அறுத்துவிடுவாய். சிந்துர வண்ணத்தினாள் – சிந்துரம் அணிந்ததால் சிவந்த மேனியைக் கொண்டவளே மகிடன் தலைமேல் அந்தரி – அகந்தையின் மொத்த உருவமான மகிஷாசுரனின் தலை மேல் நின்று அவனின் இறுதிக்காலமாய் அவனை அழித்து நின்றவளே; துர்க்கையே நீலி – நீல நிற மேனியைக் கொண்டவளே அழியாத கன்னிகை – இந்த உலகனைத்துக்கும் தாயானாலும் என்றும் வாழும் கன்னிகையாய் இருப்பவளே ஆரணத்தோன் கம் தரி கைத்தலத்தாள் – வேதநூலை கையில் தாங்கும் பிரம்மதேவனின் திருமுகத்தை தரித்த கைத்தலத்தை உடையவளே மலர்த்தாள் என் கருத்தனவே – உன்னுடைய திருவடிகள் என்னும் மலர்களே என்றும் என் நினைவில் நிற்கின்றன. விளக்கம்:அழகில் சிறந்து என் தந்தையாம் சிவபெருமானின் துணைவியாய் நின்றவளே. சிந்துரம் அணிந்ததால் சிவந்த திருமேனியைக் கொண்டவளே. அகந்தையின் மொத்த உருவமான மகிஷாசுரனின் தலை மேல் அவனின் இறுதிக்காலமாய் அவனை அழித்து நின்றவளே. நீல நிற மேனியைக் கொண்ட காளியே. இந்த உலகனைத்துக்கும் தாயானாலும் என்றும் வாழும் கன்னிகையாய் இருப்பவளே. பிரம்மதேவனின் திருமுகத்தை தரித்த கைத்தலத்தை உடையவளே. உன்னுடைய திருவடி மலர்களே என்றும் என் நினைவில் நிற்கின்றன. என்னை தொடர்ந்து வந்து துன்பம் கொடுக்கும் பாசபந்தம் எனும் தொடரை கருணை கொண்டு அறுத்துவிடுவாய். பாடல் 9 - அம்மே வந்து என் முன் நிற்கவே பாடல்: கருத்தன, எந்தைதன் கண்ணன, வண்ணக் கனகவெற்பின் பெருத்தன, பால் அழும் பிள்ளைக்கு நல்கின, பேர் அருள்கூர் திருத்தன பாரமும் ஆரமும் செங்கைச் சிலையும் அம்பும் முருத்தன மூரலும் நீயும் அம்மே வந்து என் முன் நிற்கவே பொருள்: கருத்தன எந்தைதன் கண்ணன – கருப்பு நிறம் கொண்டு என் தந்தையாம் சிவபெருமானின் கருத்திலும் கண்ணிலும் நின்று விளங்குவன. வண்ணக் கனகவெற்பின் பெருத்தன – வண்ணமயமான பொன்மலையாம் மேருவை விட பெருத்து நிற்பன. பால் அழும் பிள்ளைக்கு நல்கின – நீ உயிர்களுக்கு எல்லாம் தாய் என்பதைக் காட்டுவது போல் திருஞான சம்பந்தராம் அழும் பிள்ளைக்கு நல்கி நின்றன. பேர் அருள்கூர் திருத்தன பாரமும் – இப்படிப் பெரும் கருணை கொண்ட உன் கனமான திருமுலைகளும் ஆரமும் – அதில் பொருந்தி நிற்கும் மாலைகளும் செங்கைச் சிலையும் அம்பும் – சிவந்த கைகளில் விளங்கும் வில்லும் அம்பும் முருத்தன மூரலும் – பூவின் மொட்டு அவிழ்வதைப் போல் இருக்கும் உன் அழகிய புன்னகையும் கொண்டு நீயும் அம்மே வந்து என் முன் நிற்கவே – தாயே நீ வந்து என் முன் நின்று காட்சி தரவேண்டும். விளக்கம்:அபிராமி அன்னையே. கருப்பு நிறம் கொண்டு என் தந்தையாம் சிவபெருமானின் கண்ணிலும் கருத்திலும் என்றும் நீங்காமல் நிற்பனவும், வண்ணமயமான பொன்மலையாம் மேருவை விட பெருத்து நிற்பனவும், பால் வேண்டி அழுத திருஞான சம்பந்தருக்கு நல்கி நின்றனவும் ஆன உன் கருணையைப் போல் கனமான உன் திருமுலைகளுடனும் அதில் பொருந்தி இருக்கும் மாலைகளுடனும் உன் சிவந்த திருக்கரங்களில் ஏந்திய வில்லுடனும் அம்புடனும் உன் அழகிய புன்னகையுடனும் என் முன்னே வந்து காட்சி தர வேண்டும். பாடல் 10 - எங்கும் என்றும் நினைப்பது உன்னை பாடல்: நின்றும் இருந்தும் கிடந்தும் நடந்தும் நினைப்பதுன்னை என்றும் வணங்குவது உன் மலர்த் தாள் எழுதாமறையின் ஒன்றும் அரும்பொருளே அருளே உமையே இமயத்து அன்றும் பிறந்தவளே அழியா முத்தி ஆனந்தமே பொருள்: நின்றும் இருந்தும் கிடந்தும் நடந்தும் நினைப்பது உன்னை - நான் நிற்கும் போதும் அமரும் போதும் கிடக்கும் போதும் நடக்கும் போதும் எந்த நிலையில் இருந்தாலும் நினைப்பது உன்னையே என்றும் வணங்குவது உன் மலர்த் தாள் – நான் என்றும் வணங்குவதும் உன் மலர்த்தாள்களையே எழுதாமறையின் ஒன்றும் அரும்பொருளே – யாராலும் எழுதப்படாமல் உணர்வால் அறியப்பட்ட வேதங்களில் ஒன்றி நிற்கும் அறிதற்கரிய பொருளே அருளே உமையே – அருள் வடிவான உமையே இமயத்து அன்றும் பிறந்தவளே – இமயமலைக்கரசன் மகளாய் அன்று பிறந்தவளே அழியா முத்தி ஆனந்தமே – என்றும் அழியாத முக்தி ஆனந்தமாக விளங்குபவளே விளக்கம்:அருள் வடிவான உமையே. இமயமலைக்கரசன் மகளே. எழுதப்படாத வேதங்களில் ஒன்றி நிற்கும் அரும்பொருளே. என்றும் அழியாத முக்தி ஆனந்தமாக விளங்குபவளே. நான் நிற்கும் போதும் அமரும் போதும் கிடக்கும் போதும் நடக்கும் போதும் எந்த நிலையில் இருந்தாலும் நினைப்பது உன்னையே. நான் என்றும் வணங்குவதும் உன் மலர்த்தாள்களையே. பாடல் 11 - ஆனந்தமாய் என் அறிவாய் நிற்பவள் நீ பாடல்: ஆனந்தமாய் என் அறிவாய் நிறைந்த அமுதமுமாய் வானந்தமான வடிவுடையாள் மறை நான்கினுக்கும் தானந்தமான சரணாரவிந்த தவள நிறக் கானந்தம் ஆடரங்காம் எம்பிரான் முடிக்கண்ணியதே பொருள்: ஆனந்தமாய் – எனக்கு இயற்கையாய் அமைந்த இன்பமாய் என் அறிவாய் – உன் அருளால் எனக்குக் கிடைத்த நல்லறிவாய் நிறைந்த அமுதமுமாய் – அந்த இன்பத்திற்கும் நல்லறிவுக்கும் காரணமாய் என்னுள் நிறைந்த அமுதமுமாய் வான் அந்தமான வடிவுடையாள் – மண், நீர், நெருப்பு, காற்று, வான் என்று வானைக் கடைசியாய்க் கொண்டுள்ள ஐம்பூதங்களின் வடிவானவளே. மறை நான்கினுக்கும் தான் அந்தமான சரண அரவிந்தம் – வேதம் நான்கினுக்கும் முடிவாய் விளங்குவது உன் தாமரைத் தாள்கள் தவள நிறக் கானம் – சாம்பல் நிரம்பி அதனால் வெண்மை நிறம் கொண்ட காட்டைத் தம் ஆடரங்காம் – தன் திருநடனத்திற்கு அரங்கமாய்க் கொண்ட எம்பிரான் முடிக் கண்ணியதே – என் தலைவனாம் ஈசன் முடிமேல் அணியும் மாலைகளாகும். விளக்கம்:அபிராமி அன்னையே! நீயே என் ஆனந்தமாய் என் அறிவாய் விளங்கி என்னுள் நிறைந்த அமுதமுமாய் விளங்குபவள். மண், நீர், நெருப்பு, காற்று, வான் என்னும் ஐம்பூதங்களின் வடிவானவள். வேதம் நான்கினுக்கும் முடிவாய் விளங்குவது உன் தாமரைத் தாள்கள். அவை சாம்பல் நிரம்பி அதனால் வெண்மை நிறம் கொண்ட சுடுகாட்டைத் தன் திருநடனத்திற்கு உரிய அரங்கமாய்க் கொண்ட என் தலைவனாம் ஈசன் தன் முடிமேல் அணியும் மாலைகளாகும். பாடல் 12 - நான் முன் செய்த புண்ணியம் ஏது? பாடல்: கண்ணியது உன் புகழ் கற்பது உன் நாமம் கசிந்து பக்தி பண்ணியது உன் இரு பாதாம்புயத்தில் பகல் இரவா நண்ணியது உன்னை நயந்தோர் அவையத்து நான் முன் செய்த புண்ணியம் ஏது என் அம்மே புவி ஏழையும் பூத்தவளே பொருள்: கண்ணியது உன் புகழ் – நான் எப்போதும் பாடல்கள் கொண்டு பாடுவது உன் புகழ் கற்பது உன் நாமம் – நான் எப்போதும் கற்பது உன் நாமம் கசிந்து பக்தி பண்ணியது உன் இரு பாத அம்புயத்தில் – என் மனம் கசிந்து பக்தி பண்ணுவதோ உன் இரு திருவடித் தாமரைகளில் (அம்புயம் – அம்புஜம் என்னும் வடமொழிப் பெயரின் திரிபு; அம்பு – நீர், ஜம் – பிறந்தது; நீரில் பிறந்த மலர் அம்புஜம்) பகல் இரவா நண்ணியது உன்னை நயந்தோர் அவையத்து - நான் பகலும் இரவும் விரும்பிச் சேர்ந்திருப்பது உன்னை விரும்பும் அடியார் கூட்டத்துடன். நான் முன் செய்த புண்ணியம் ஏது – இப்படி செய்ய வேண்டியவைகளையே உன் அருளால் செய்கிறேனே. நான் என்ன புண்ணியம் செய்தேன்? என் அம்மே – என் தாயே புவி ஏழையும் பூத்தவளே – ஏழு உலகையும் பெற்றவளே. விளக்கம்:ஏழு உலகையும் பெற்ற என் தாயே. அபிராமி அன்னையே. எப்போதும் என் பாடல்களின் பொருளாய் இருப்பது உனது புகழே. எப்போதும் நான் சொல்லுவதும் உனது நாமமே. என் மனம் கசிந்து பக்தி பண்ணுவதோ உன் இரு திருவடித் தாமரைகளில். நான் பகலும் இரவும் விரும்பிச் சேர்ந்திருப்பது உன்னை விரும்பும் அடியார் கூட்டத்துடன். இப்படி செய்ய வேண்டியவைகளையே உன் அருளால் செய்கிறேனே. நான் அதற்கு என்ன புண்ணியம் செய்தேன்? பாடல் 13 - கறை கண்டனுக்கு மூத்தவளே பாடல்: பூத்தவளே புவனம் பதினான்கையும் பூத்தவண்ணம் காத்தவளே பின் கரந்தவளே கறைகண்டனுக்கு மூத்தவளே என்றும் மூவா முகுந்தற்கு இளையவளே மாத்தவளே உன்னை அன்றி மற்றோர் தெய்வம் வந்திப்பதே பொருள்: பூத்தவளே புவனம் பதினான்கையும் – பதினான்கு உலகங்களையும் பெற்றவளே பூத்தவண்ணம் காத்தவளே – எப்படி அவற்றைக் கருணையுடன் பெற்றாயோ அதே போல் காப்பவளே பின் கரந்தவளே – பின் அவற்றை உன்னுள் மறைத்துக் கொள்பவளே கறைகண்டனுக்கு மூத்தவளே – பாற்கடலைக் கடைந்த போது எழுந்த ஆலகால விஷத்தை உண்டதால் கறை கொண்ட கழுத்தினை உடைய சிவபெருமானுக்கும் மூத்தவளே என்றும் மூவா முகுந்தற்கு இளையவளே – என்றைக்கும் முதுமையடையாமல் இளமையாகவே இருக்கும் முகுந்தனுக்கும் இளையவளே மாத்தவளே – மாபெரும் தவம் உடையவளே உன்னை அன்றி மற்றோர் தெய்வம் வந்திப்பதே – உன்னையன்றி மற்றோர் தெய்வத்தை நான் வணங்குவேனா? விளக்கம்: பதினான்கு உலகங்களையும் பெற்றவளே. எப்படி அவற்றைக் கருணையுடன் பெற்றாயோ அதே போல் காப்பவளே. பின் அவற்றை உன்னுள் மறைத்துக்கொள்பவளே. கறை கொண்ட கழுத்தினை உடைய சிவபெருமானுக்கும் மூத்தவளே.என்றைக்கும் இளமையாகவே இருக்கும் முகுந்தனுக்கும் இளையவளே. மாபெரும் தவம் உடையவளே. உன்னையன்றி மற்றோர் தெய்வத்தை நான் வணங்குவேனா? பாடல் 14 - சிந்திப்பவர் நல்திசைமுகர் நாரணர் பாடல்: வந்திப்பவர் உன்னை வானவர் தானவர் ஆனவர்கள் சிந்திப்பவர் நல்திசைமுகர் நாரணர் சிந்தையுள்ளே பந்திப்பவர் அழியாப் பரமானந்தர் பாரில் உன்னைச் சந்திப்பவர்க்கு எளிதாம் எம்பிராட்டி நின் தண்ணளியே பொருள்: வந்திப்பவர் உன்னை வானவர் தானவர் ஆனவர்கள் – உன்னை என்றும் வணங்குபவர்கள் வானில் வாழும் தேவர்களும் தானவர்களான அரக்கர்களும் சிந்திப்பவர் நல்திசைமுகர் நாரணர் சிந்தையுள்ளே – உன்னை என்றும் தியானத்தில் வைத்துச் சிந்திப்பவர் நான்கு திசைகளிலும் நான்கு முகங்களைக் கொண்ட பிரம்மதேவனும் நாரணனுமே பந்திப்பவர் அழியாப் பரமானந்தர் – உன்னைத் தன் அன்பால் கட்டிப்போடுபவர் என்றும் அழியாத பரமானந்தப் பொருளான சிவபெருமானே பாரில் உன்னைச் சந்திப்பவர்க்கு எளிதாம் எம்பிராட்டி நின் தண்ணளியே – ஆனால் இவர்கள் எல்லாரையும் விட்டுவிட்டு இந்த உலகத்தில் உன்னை வணங்கு தரிசனம் செய்பவர்களுக்கு அல்லவா உன் கருணை எளிதாகக் கிடைக்கிறது. எங்கள் தலைவியே. அது வியப்பிற்குரியது. விளக்கம்:எங்கள் தலைவியே. உன்னை என்றும் வணங்குபவர்கள் வானில் வாழும் தேவர்களும் தானவர்களான அரக்கர்களும். உன்னை என்றும் தியானத்தில் வைத்துச் சிந்திப்பவர் நான்கு திசைகளிலும் நான்கு முகங்களைக் கொண்ட பிரம்மதேவனும் நாரணனுமே. உன்னைத் தன் அன்பால் கட்டிப்போடுபவர் என்றும் அழியாத பரமானந்தப் பொருளான சிவபெருமானே. ஆனால் இவர்கள் எல்லாரையும் விட்டுவிட்டு இந்த உலகத்தில் உன்னை வணங்கு தரிசனம் செய்பவர்களுக்கு அல்லவா உன் கருணை எளிதாகக் கிடைக்கிறது. அது வியப்பிற்குரியது. பாடல் 15 - மண் அளிக்கும் செல்வமோ பெறுவார்? பாடல்: தண்ணளிக்கு என்று முன்னே பல கோடி தவங்கள் செய்வார் மண்ணளிக்கும் செல்வமோ பெறுவார் மதி வானவர் தம் விண்ணளிக்கும் செல்வமும் அழியா முக்தி வீடும் அன்றோ பண்ணளிக்கும் சொல் பரிமள யாமளைப் பைங்கிளியே பொருள்: தண்ணளிக்கு என்று முன்னே பல கோடி தவங்கள் செய்வார் – உன் குளிர்ச்சியான திருவருள் பெறுவதற்காக பல கோடி தவங்கள் செய்பவர் மண்ணளிக்கும் செல்வமோ பெறுவார் – இந்த மண்ணுலகம் கொடுக்கும் செல்வங்களை மட்டுமா பெறுவார்? மதி வானவர் தம் விண்ணளிக்கும் செல்வமும் – சிறந்த வானவர் தம் விண்ணுலகம் தன்னில் வாழ்ந்து அனுபவிக்கும் செல்வமும் அழியா முக்தி வீடும் அன்றோ – என்றும் அழியாத இன்பம் தரும் முக்தி எனும் வீடு பேறும் அன்றோ பெறுவார். பண்ணளிக்கும் சொல் பரிமள யாமளைப் பைங்கிளியே – இசையின் பிறப்பிடமாகும் சொற்களைச் சொல்லும், நறுமணம் வீசும், ஈசனின் தோழியான பசுங்கிளியே. விளக்கம்:இசையின் பிறப்பிடமாகும் சொற்களைச் சொல்லும், நறுமணம் வீசும், ஈசனின் தோழியான பைங்கிளியே. அபிராமி அன்னையே. உன் குளிர்ச்சியான திருவருள் பெறுவதற்காக பல கோடி தவங்கள் மிகுந்த முயற்சியுடன் செய்பவர், இந்த மண்ணுலகம் கொடுக்கும் செல்வங்களை மட்டுமா பெறுவார்? வானவர் தம் விண்ணுலகம் தன்னில் வாழ்ந்து அனுபவிக்கும் செல்வமும், என்றும் அழியாத இன்பம் தரும் முக்தி எனும் வீடு பேறும் அன்றோ பெறுவார். பாடல் 16 - *நட்சத்திரம்* - இது அதிசயமே பாடல்: கிளியே கிளைஞர் மனத்தே கிடந்து கிளர்ந்து ஒளிரும் ஒளியே ஒளிரும் ஒளிக்கு இடமே எண்ணில் ஒன்றும் இல்லா வெளியே வெளி முதல் பூதங்கள் ஆகி விரிந்த அம்மே அளியேன் அறிவு அளவிற்கு அளவானது அதிசயமே பொருள்: கிளியே – அழகிய கிளி போன்றவளே! கிளைஞர் மனத்தே கிடந்து கிளர்ந்து ஒளிரும் ஒளியே – உன்னை எப்போதும் சூழ்ந்திருக்கும் அடியார்களின் மனத்தில் எப்போதும் இருந்து சுடர் விட்டு ஒளிரும் ஒளியே! ஒளிரும் ஒளிக்கு இடமே – அப்படி ஒளிக்கும் ஒளிக்கு இடமானவளே! எண்ணில் ஒன்றும் இல்லா வெளியே – எண்ணிப்பார்த்தால் சூன்யமாய் இருக்கும் வெட்ட வெளியானவளே! வெளி முதல் பூதங்கள் ஆகி விரிந்த அம்மே – வெட்ட வெளியாகிய வானம் முதலாய் உள்ள ஐம்பூதங்களாய் (விண், மண், காற்று, தீ, நீர்) விரிந்து நின்ற தாயே! அபிராமியே! அளியேன் அறிவு அளவிற்கு அளவானது அதிசயமே - கருணையுள்ளவனும் எளியவனும் ஆன என் அறிவுக்கும் எட்டும் அளவாய் நீ நின்றது அதிசயமே! அது உன் கருணையன்றி வேறு என்ன? விளக்கம்:அழகிய கிளி போன்றவளே! உன்னை எப்போதும் சூழ்ந்திருக்கும் அடியார்களின் மனத்தில் எப்போதும் இருந்து சுடர் விட்டு ஒளிரும் ஒளியே! அப்படி ஒளிக்கும் ஒளிக்கு இடமானவளே! எண்ணிப்பார்த்தால் சூன்யமாய் இருக்கும் வெட்ட வெளியானவளே! வெட்ட வெளியாகிய வானம் முதலாய் உள்ள ஐம்பூதங்களாய் (விண், மண், காற்று, தீ, நீர்) விரிந்து நின்ற தாயே! அபிராமியே! கருணையுள்ளவனும் எளியவனும் ஆன என் அறிவுக்கும் எட்டும் அளவாய் நீ நின்றது அதிசயமே! அது உன் கருணையன்றி வேறு என்ன? பாடல் 17 - *நட்சத்திரம்* - அதிசயம் ஆன வடிவுடையாள் பாடல்: அதிசயம் ஆன வடிவுடையாள் அரவிந்தம் எல்லாம் துதிசய ஆனன சுந்தரவல்லி துணை இரதி பதி சயமானது அபசயமாக முன் பார்த்தவர்தம் மதி சயமாக அன்றோ வாம பாகத்தை வவ்வியதே பொருள்: அதிசயம் ஆன வடிவுடையாள் – அபிராமி அன்னை மிகவும் அதிசயமான அழகான உருவத்தை உடையவள். அரவிந்தம் எல்லாம் துதிசய ஆனன சுந்தரவல்லி – அரவிந்தமாகிய தாமரை மலரை முதற்கொண்டு எல்லா அழகிய மலர்களும் துதி செய்யக்கூடிய வெற்றி பொருந்திய திருமுகத்தை உடைய அழகிய கொடி போன்றவள் துணை இரதிபதி சயமானது அபசயமாக முன் பார்த்தவர் – அவளின் கணவனோ இரதியின் கணவனாம் மன்மதனின் வெற்றிகளெல்லாம் தோல்வியாக நெற்றிக்கண்ணால் அவனை எரித்தவர். தம் மதிசயமாக அன்றோ வாம பாகத்தை வவ்வியதே – அப்படி மன்மதனை வென்றவர் தம் மனத்தையும் நீர் போல் குழையச்செய்து வெற்றிகொண்டு அவருடைய இடது பாகத்தையும் கவர்ந்து கொண்டாளே. அது பெரும் அதிசயம். ஆனனம் – திருமுகம். எடுத்துக்காட்டுகள்: கஜானனன் – யானைமுகன்; ஷடானனன் – ஆறுமுகன்; பஞ்சானனன் – ஐந்துமுகன் (சிவன்). சயம் – ஜெயம் – வெற்றி அபசயம் – அபஜெயம் – தோல்வி மதி சயம் – மதி ஜலம் – மதி நீர் மதி சயம் – மதியை வெற்றி விளக்கம்:அபிராமி அன்னை மிகவும் அதிசயமான அழகான உருவத்தை உடையவள். தாமரை மலரை முதற்கொண்டு எல்லா அழகிய மலர்களும் துதி செய்யக்கூடிய வெற்றி பொருந்திய திருமுகத்தை உடைய அழகிய கொடி போன்றவள். அவளின் கணவனோ இரதியின் கணவனாம் மன்மதனின் வெற்றிகளெல்லாம் தோல்வியாக நெற்றிக்கண்ணால் அவனை எரித்தவர். அப்படி மன்மதனை வென்றவர் தம் மனத்தையும் நீர் போல் குழையச்செய்து வெற்றிகொண்டு அவருடைய இடது பாகத்தையும் கவர்ந்து கொண்டாளே. அது பெரும் அதிசயம். பாடல் 18 - காலன் வரும்போது வெளி நிற்கவே பாடல்: வவ்விய பாகத்து இறைவரும் நீயும் மகிழ்ந்திருக்கும் செவ்வியும் உங்கள் திருமணக்கோலமும் சிந்தையுள்ளே அவ்வியம் தீர்த்து என்னை ஆண்ட பொற்பாதமும் ஆகி வந்து வெவ்விய காலன் என் மேல் வரும் போது வெளி நிற்கவே. பொருள்: வவ்விய பாகத்து இறைவரும் நீயும் மகிழ்ந்திருக்கும் செவ்வியும் – உன்னால் கவர்ந்து கொண்ட இடப்பாகத்தைக் கொண்ட இறைவராம் சிவபெருமானும் நீயும் மகிழ்ந்திருக்கும் செம்மையான தோற்றத்துடனும், உங்கள் திருமணக்கோலமும் – உங்கள் திருமணக் கோலத்துடனும் சிந்தையுள்ளே அவ்வியம் தீர்த்து என்னை ஆண்ட பொற்பாதமும் ஆகி வந்து – என் சிந்தனையுள் இருக்கும் அசுத்தங்களைத் தீர்த்து என்னை அடிமை கொண்ட பொற்பாதங்களுடனும் வந்து வெவ்விய காலன் என் மேல் வரும் போது வெளி நிற்கவே – கோபத்துடன் என் உயிரைக் கவர என் மேல் யமனாகிய காலன் வரும் போது தோன்றி அருள வேண்டும் அபிராமி அன்னையே! விளக்கம்: உன்னால் கவர்ந்து கொண்ட இடப்பாகத்தைக் கொண்ட இறைவராம் சிவபெருமானும் நீயும் மகிழ்ந்திருக்கும் செம்மையான தோற்றத்துடனும், உங்கள் திருமணக் கோலத்துடனும், என் சிந்தனையுள் இருக்கும் அசுத்தங்களைத் தீர்த்து என்னை அடிமை கொண்ட பொற்பாதங்களுடனும் வந்து, கோபத்துடன் என் உயிரைக் கவர என் மேல் யமனாகிய காலன் வரும் போது தோன்றி அருள வேண்டும். பாடல் 19 - ஞானம் திகழ்கின்றது என்ன திருவுளமோ? பாடல்: வெளிநின்ற நின் திருமேனியைப் பார்த்து விழியும் நெஞ்சும் களிநின்ற வெள்ளம் கரைகண்டதில்லை கருத்தினுள்ளே தெளிநின்ற ஞானம் திகழ்கின்றது என்ன திருவுளமோ? ஒளிநின்ற கோணங்கள் ஒன்பதும் மேவி உறைபவளே பொருள்: வெளிநின்ற நின் திருமேனியைப் பார்த்து – நான் வேண்டியவுடன் வானவெளியில் வந்து நின்ற உனது திருமேனியைப் பார்த்து (நான் வேண்டியவுடன் அம்மை அப்பனாக மாதொருபாகனாக திருமணக் கோலத்துடன் தோன்றிய நின் திருமேனியைப் பார்த்து) விழியும் நெஞ்சும் – பெரும்பேறு பெற்ற என் விழிகளும் நெஞ்சமும் களிநின்ற வெள்ளம் கரைகண்டதில்லை – அடைந்த ஆனந்தம் என்னும் வெள்ளம் கரையின்றிப் பெருகி நின்றது. கருத்தினுள்ளே தெளிநின்ற ஞானம் திகழ்கின்றது – உலக இன்பங்களில் மனம் மகிழ்ந்தால் அப்போது கருத்தழியும்; மனம் மயங்கும்; தெளிவு கெடும். உன்னைக் கண்டதால் விழிகளிலும் நெஞ்சிலும் பெருகும் மகிழ்ச்சி வெள்ளம் அத்தகைய விளைவுகளை ஏற்படுத்தவில்லை. கருத்தில் தெளிவான ஞானம் திகழ்கின்றது. என்ன திருவுளமோ? – உன் அருள் இவ்வளவு பெருமை வாய்ந்ததா? ஆனந்தத்தையும் அறிவையும் சேர்த்து அளித்த உன் திருவுளத்தின் பெருமையே பெருமை. ஒளிநின்ற கோணங்கள் ஒன்பதும் மேவி உறைபவளே – அருள் ஒளியும் ஞான ஒளியும் வீசுகின்ற நவகோண சக்கரத்தில் நவசக்தியாய் என்றும் நிலைத்து வாழ்பவளே விளக்கம்:நவசக்தியாய் விளங்கும் அபிராமி அன்னையே. நான் வேண்டியவுடன் வான வெளியில் மாதொருபாகனாக திருமணக் கோலத்தில் தோன்றிய உன் திருமேனியைக் கண்டு என் விழிகளும் நெஞ்சமும் அடைந்த மகிழ்ச்சி வெள்ளத்திற்கு அளவேயில்லை. கருத்தினுள்ளும் தெளிவான ஞானம் திகழ்கின்றது. ஆனந்தத்தையும் அறிவையும் ஒருங்கே அளித்த உன் அருள் திறம் தான் என்னே? பாடல் 20 - உறைகின்ற நின் திருக்கோயில் பாடல்: உறைகின்ற நின் திருக்கோயில் நின் கேள்வர் ஒரு பக்கமோ அறைகின்ற நான்மறையில் அடியோ முடியோ அமுதம் நிறைகின்ற வெண்திங்களோ கஞ்சமோ எந்தன் நெஞ்சகமோ மறைகின்ற வாரிதியோ பூரணாசல மங்கலையே பொருள்: உறைகின்ற நின் திருக்கோயில் – அபிராமி அன்னையே. நீ உறைகின்ற திருக்கோயிலாவது நின் கேள்வர் ஒரு பக்கமோ – உன்னுடன் ஈடுஇணையில்லாத நட்பினைக் கொண்டுள்ள உன் தோழராம் சிவபெருமானின் இடப் பக்கமோ? அறைகின்ற நான்மறையின் அடியோ முடியோ – ஓதப்படுகின்ற நான்கு வேதங்களின் தொடக்கமோ? இல்லை அவற்றின் முடிவோ? அமுதம் நிறைகின்ற வெண்திங்களோ – அமுதம் போல் குளிர்ந்த நிலவொளியை வீசும் வெண்மையான சந்திரனோ? கஞ்சமோ – தாமரை மலரோ? எந்தன் நெஞ்சகமோ – என்னுடைய நெஞ்சமோ? மறைகின்ற வாரிதியோ – எல்லாவிதமான செல்வங்களும் மறைந்திருக்கும் பாற்கடலோ? பூரணாசல மங்கலையே – எங்கும் பூரணமாய் நிறைந்து நிலையாய் நிற்கும் மங்கல வடிவானவளே! விளக்கம்:எங்கும் நீக்கமற நிறைந்து நிலையாய் நிர்கும் மங்கல வடிவான அபிராமி அன்னையே. நீ உறைகின்ற திருக்கோயிலாவது உன் தோழராம் சிவபெருமானின் இடப் பக்கமோ? ஓதப்படுகின்ற நான்கு வேதங்களின் தொடக்கமோ? இல்லை அவற்றின் முடிவோ? அமுதம் போல் குளிர்ந்த நிலவொளியை வீசும் வெண்மையான சந்திரனோ? தாமரை மலரோ? என்னுடைய நெஞ்சமோ? எல்லாவிதமான செல்வங்களும் மறைந்திருக்கும் பாற்கடலோ? நீ எங்கும் நிறைந்தவளானாலும் மேலே சொன்னவிடங்களில் நீ மகிழ்ந்து உறைகின்றாய் போலும். பாடல் 21 - மங்கலை செங்கலசம் முலையாள் பாடல்: மங்கலை செங்கலசம் முலையாள் மலையாள் வருணச் சங்கலை செங்கைச் சகலகலாமயில் தாவு கங்கை பொங்கலை தங்கும் புரிசடையோன் புடையாள் உடையாள் பிங்கலை நீலி செய்யாள் வெளியாள் பசும் பெண்கொடியே பொருள்: மங்கலை – மங்கல உருவானவளே. என்றும் சுமங்கலியே. செங்கலசம் முலையாள் – செம்மையான கலசம் போன்ற முலைகளை உடையவளே. மலையாள் – மலைமகளே. இமயத்தரசன் மகளே. வருணச் சங்கு அலை செங்கைச் சகலகலாமயில் – வருணனின் இருப்பிடமான கடல் தந்த சங்குகளால் ஆன வளையல்கள் அணிந்து அவை அங்கும் இங்கும் அலையும் செம்மையான கைகளை உடைய எல்லா கலைகளும் அறிந்த மயிலே தாவு கங்கை பொங்கு அலை தங்கும் புரிசடையோன் புடையாள் – பாய்கின்ற கங்கையின் பொங்குகின்ற அலைகள் தங்கும் மேல்தூக்கி முடித்த சடையை உடையவனின் பகுதியானவளே உடையாள் – எல்லோருக்கும் தலைவியே. எல்லோரையும் எல்லாவற்றையும் உடையவளே. பிங்கலை – பொன்னிறத்தவளே. நீலி – நீல நிறத்தவளே. கரு நிறத்தவளே. செய்யாள் – சிவந்தவளே. வெளியாள் – வெண்மை நிறம் கொண்டவளே. பசும் பெண்கொடியே – பச்சை நிறம் கொண்ட பெண் கொடியே. விளக்கம்: இந்தப் பாடல் முழுக்க முழுக்க தோத்திரமாகவே அன்னையில் புகழைப் பாடுவதாகவே அமைந்திருக்கிறது. உலகத்தில் எத்தனையோ குணநலன்கள் இருக்கின்றன. ஒவ்வொன்றிற்கும் ஒவ்வொரு நிறம் தந்து உருவகித்துப் பேசுவது மரபு. அந்த எல்லா குணநலன்களும் அன்னையே; அவளிடமிருந்து தோன்றியவையே என்று குறிப்பால் உணர்த்தும் முகமாக அபிராமி பட்டர் அன்னையை ‘பிங்கலை நீலி செய்யாள் வெளியாள் பசும் பெண் கொடியே’ என்கிறார் போலும். பாடல் 22 - கொடியே இளவஞ்சிக் கொம்பே பாடல்: கொடியே இளவஞ்சிக் கொம்பே எனக்கு வம்பே பழுத்த படியே மறையின் பரிமளமே பனி மால் இமயப் பிடியே பிரமன் முதலாய தேவரைப் பெற்ற அம்மே அடியேன் இறந்து இங்கு இனிப் பிறவாமல் வந்து ஆண்டு கொள்ளே. பொருள்: கொடியே – கொடி போன்றவளே! இளவஞ்சிக் கொம்பே – இளமையான வஞ்சிக் கொம்பே! எனக்கு வம்பே பழுத்த படியே – தகுதியில்லாத எனக்குத் தானே காலமில்லாத காலத்தில் பழுத்த பழம் போல் அருள் செய்தவளே! மறையின் பரிமளமே – வேதங்களின் மணமே! பனி மால் இமயப் பிடியே – பனி உருகும் இமயத்தில் இருக்கும் பெண் யானையே! பிரமன் முதலாய தேவரைப் பெற்ற அம்மே – பிரமன் முதலிய தேவர்களைப் பெற்ற அன்னையே! அடியேன் இறந்து இங்கு இனிப் பிறவாமல் வந்து ஆண்டு கொள்ளே – அடியேன் இப்பிறவி முடிந்து இறந்த பின் மீண்டும் இங்கே வந்து பிறக்காத படி உன் அடி நிழலைத் தந்து ஆட்கொள்ள வேண்டும். இப்பாடலை தொடர்ந்து பாராயனம் செய்தால் 'பிறவி பிணி தீரும்'. பாடல் 23 - கொள்ளேன் மனத்தில் நின் கோலம் அல்லாது! பாடல்: கொள்ளேன் மனத்தில் நின் கோலம் அல்லாது அன்பர் கூட்டம் தன்னை விள்ளேன் பரசமயம் விரும்பேன் வியன் மூவுலகுக்கு உள்ளே அனைத்தினுக்கும் புறம்பே உள்ளத்தே விளைந்த கள்ளே களிக்கும் களியே அளிய என் கண்மணியே பொருள்: கொள்ளேன் மனத்தில் நின் கோலம் அல்லாது – உன் திருவுருவத்தை அன்றி வேறு உலக விதயங்களை என் மனத்தில் கொள்ளேன் அன்பர் கூட்டம் தன்னை விள்ளேன் – உன் அன்பர்கள் கூட்டத்தை விலகமாட்டேன் (விலக்கமாட்டேன்) பரசமயம் விரும்பேன் – உன்னைத் துதிப்பதன்றி உலக விதயங்களைத் துதிக்கும் பர சமயங்களை விரும்ப மாட்டேன். வியன் மூவுலகுக்கு உள்ளே – மூன்று உலகங்களுக்கும் உள்ளே நின்று அனைத்தையும் இயக்குபவளே அனைத்தினுக்கும் புறம்பே – இவற்றையும் தாண்டி இந்த பிரபஞ்சம் எல்லாம் தாண்டியும் இருப்பவளே (அணுவிற்குள் அணுவாய் அப்பாலுக்கு அப்பாலாய் இருப்பவளே) உள்ளத்தே விளைந்த கள்ளே – உள்ளத்தில் விளைந்த அமுதமே களிக்கும் களியே – எல்லாவிதமான இன்பததையும் அனுபவிக்கும் ஆனந்தவடிவானவளே அளிய என் கண்மணியே – எளியேன் மேல் கருணை கொண்ட என் கண்மணி போன்றவளே இப்பாடலை தொடர்ந்து பாராயனம் செய்தால் 'மனச் சஞ்சலம் உண்டாகாதிருக்கும்'. பாடல் 24 - மணியே! மணியின் ஒளியே! [] பாடல்: மணியே மணியின் ஒளியே ஒளிரும் மணி புனைந்த அணியே அணியும் அணிக்கழகே அணுகாதவர்க்குப் பிணியே பிணிக்கு மருந்தே அமரர் பெருவிருந்தே பணியேன் ஒருவரை நின் பத்ம பாதம் பணிந்த பின்னே பொருள்: மணியே – மாணிக்க மணியே! மணியின் ஒளியே – மாணிக்க மணியின் ஒளியே! ஒளிரும் மணி புனைந்த அணியே – ஒளி வீசும் அந்த மாணிக்கங்கள் இழைத்த அணிகலனே! அணியும் அணிக்கு அழகே – அணியும் அந்த அணிகலனுக்கு அழகாகத் திகழ்பவளே! அணுகாதவர்க்குப் பிணியே – நின்னை வணங்காதவர்களுக்கு அவரவர் வினைப்பயன் படி பிணியாக நிற்பவளே! பிணிக்கு மருந்தே – உன்னை வணங்குபவர்களுக்கு அவரவர் வினைப்பயனால் ஏற்படும் பிணிகளைத் தீர்க்கும் மருந்தாகி நிற்பவளே! அமரர் பெருவிருந்தே – அமரர்கள் என்றும் வணங்கி ஏத்தி மகிழும் படி அமைந்தவளே! பணியேன் ஒருவரை நின் பத்ம பாதம் பணிந்த பின்னே – உன் திருமலர்ப் பாதங்களைப் பணிந்த பின் வேறெந்த உலக இன்பத்தையும் வேண்டி நில்லேன். விளக்கம்: உலக இன்பம் வேண்டி அல்லவா இறையை அன்றி மற்றவற்றையும் மற்றவர்களையும் பணிவது? உன்னைப் பணிந்த பின் மற்றவரைப் பணியேன் என்றது உலக இன்பங்கள் உன்னைப் பணிந்தததால் தானே கிடைக்கும்; அதனால் இறையைத் தவிர மற்றவரைப் பணியும் தேவை இல்லை என்பதைச் சொல்லியது.  இப்பாடலை தொடர்ந்து பாராயனம் செய்தால் ‘தீராத வியாதிகள் தீரும்’. பாடல் 25 - இனி உன்னை யான் மறவாமல் நின்று ஏத்துவனே! [] பாடல்: பின்னே திரிந்து உன் அடியாரைப் பேணி பிறப்பு அறுக்க முன்னே தவங்கள் முயன்று கொண்டேன் முதல் மூவருக்கும் அன்னே உலகுக்கு அபிராமி என்னும் அருமருந்தே என்னே இனி உன்னை யான் மறவாமல் நின்று ஏத்துவனே பொருள்: பின்னே திரிந்து உன் அடியாரைப் பேணி பிறப்பு அறுக்க முன்னே தவங்கள் முயன்று கொண்டேன் – உன் அடியவர்களின் பின்னால் திரிந்து அவர்களை அடி பணிந்து அவர்களுக்குப் பணிவிடை செய்து என் பிறப்பிறப்புத் துன்பத்தை அறுத்துக் கொள்ளும் பாக்கியத்தை பலகாலமாக செய்தத் தவங்களின் பயனால் அடைந்தேன். முதல் மூவருக்கும் அன்னே - முதல் மூவரான மும்மூர்த்திகளுக்கும் அன்னையே! உலகுக்கு அபிராமி என்னும் அருமருந்தே – அபிராமி அன்னை என நிற்கும் உலகத் துன்பங்களுக்கெல்லாம் கிடைத்தற்கு அரிய மருந்தே என்னே – என்னே உன் பெருமைகள். இனி உன்னை யான் மறவாமல் நின்று ஏத்துவனே – இனியும் உன்னை நான் மறக்காமல் தொழுது கொண்டிருப்பேன். இப்பாடலை தொடர்ந்து பாராயனம் செய்தால் ‘நினைத்த காரியம் இடயீறின்றி ஈடேறும் பாடல் 26 - கமழ் பூங்கடம்பு சாத்தும் குழல் அணங்கே [] பாடல்: ஏத்தும் அடியவர் ஈரேழ் உலகினையும் படைத்தும் காத்தும் அழித்தும் திரிபவராம் கமழ் பூங்கடம்பு சாத்தும் குழல் அணங்கே மணம் நாறும் நின் தாளிணைக்கு என் நாத்தங்கு புன்மொழி ஏறியவாறு நகையுடைத்தே பொருள்: ஏத்தும் அடியவர் ஈரேழ் உலகினையும் படைத்தும் காத்தும் அழித்தும் திரிபவராம் – உன்னை என்றும் போற்றிப் புகழ்பவர்கள் யார் என்று கேட்டால் இந்த ஈரேழு பதினான்கு உலகங்களையும் படைத்தும் காத்தும் அழித்தும் திரிகின்ற மும்மூர்த்திகளான பிரம்ம விஷ்ணு மஹேஸ்வரர்கள். கமழ் பூங்கடம்பு சாத்தும் குழல் அணங்கே – மணம் கமழும் கடம்ப மாலையை கூந்தலில் சூடிக் கொண்டிருக்கும் அழகில் சிறந்த தெய்வப்பெண்ணே! மணம் நாறும் நின் தாளிணைக்கு – தேவர்களில் எல்லாம் சிறந்தவர்களான மும்மூர்த்திகளாலும் போற்றிப் புகழப்பட்டு அந்தப் புகழ் மணம் கமழும் உன் இணைத்தாள்களுக்கு என் நாத்தங்கு புன்மொழி ஏறியவாறு நகையுடைத்தே – என் நாவில் இருந்து தோன்றிய கீழான சொற்கள் புகழ்ச்சியாகப் போனது நல்ல நகைச்சுவை. விளக்கம்:முதல் மூவரும் போற்றும் திருவடிகளுக்கு கீழான எனது பாடல்களும் அணிகலன்களாகப் போனது தான் என்ன வியப்பு? அன்னையின் எளிவந்த தன்மை தான் என்னே? என்று வியக்கிறார் பட்டர். இப்பாடலை தொடர்ந்து பாராயனம் செய்தால் ‘சொல்வன்மையும் செல்வாக்கும் பெருகும். பாடல் 27 - சுந்தரி நின் அருள் ஏதென்று சொல்லுவதே [] பாடல்: உடைத்தனை வஞ்சப்பிறவியை உள்ளம் உருகும் அன்பு படைத்தனை பத்ம பதயுகம் சூடும் பணி எனக்கே அடைத்தனை நெஞ்சத்து அழுக்கை எல்லாம் நின் அருட்புனலால் துடைத்தனை சுந்தரி நின் அருள் ஏதென்று சொல்லுவதே பொருள்: உடைத்தனை வஞ்சப்பிறவியை – என்னை வஞ்சிக்கும் ஆறுவித எதிரிகளான ஆசை, சினம், மயக்கம், பேராசை, செருக்கு, வெறுப்பு ஆகியவற்றை அழித்து அவற்றால் தோன்றிய பிறவிப் பிணிப்பை உடைத்தாய். உள்ளம் உருகும் அன்பு படைத்தனை – உன்னையும் உன் அன்பையும் எண்ணி எண்ணி உருகும் அன்பினை என்னுள் உண்டாக்கினாய். பத்ம பதயுகம் சூடும் பணி எனக்கே அடைத்தனை – தாமரை போன்றை உன் இரு திருவடிகளையே பணிந்து கொண்டிருக்கும் பணியே பணியாய் எனக்கு அளித்தாய். நெஞ்சத்து அழுக்கை எல்லாம் நின் அருட்புனலால் துடைத்தனை – என் உள்ளத்தே இருந்த அழுக்குகளை எல்லாம் உன் அருள் எனும் நீரால் துடைத்தாய். சுந்தரி நின் அருள் ஏதென்று சொல்லுவதே – அழகியே! இப்படி அடியேனை தானாக வந்து ஆட்கொண்ட உன் அருளை என்னவென்று புகழுவேன்? இப்பாடலை தொடர்ந்து பாராயனம் செய்தால் ‘மனநோய் தீரும்’. பாடல் 28 - தவநெறியும் சிவலோகமும் சித்திக்குமே [] பாடல்: சொல்லும் பொருளும் என நடம் ஆடும் துணைவருடன் புல்லும் பரிமள பூங்கொடியே நின் புதுமலர்த்தாள் அல்லும் பகலும் தொழும் அவர்க்கே அழியா அரசும் செல்லும் தவநெறியும் சிவலோகமும் சித்திக்குமே பொருள்: சொல்லும் பொருளும் என – ஒவ்வொரு சொல்லிலும் அந்தச் சொல்லின் பொருள் எப்படி இயைந்து இணைந்து கூடி இருக்கிறதோ அது போல் நடம் ஆடும் துணைவருடன் புல்லும் பரிமள பூங்கொடியே – ஆனந்த நடனமாடும் உன் துணைவராம் சிவபெருமானுடன் இணைந்து ஓருடலாய் நிற்கும், மணம் வீசும் அழகிய பூங்கொடி போன்றவளே! நின் புதுமலர்த்தாள் – அன்றலர்ந்த தாமரை போன்ற உனது இரு திருவடிகளை அல்லும் பகலும் தொழும் அவர்க்கே – இரவும் பகலும் எப்போதும் தொழும் அடியார்களான அவர்களுக்கே அழியா அரசும் – என்றும் அழியாத அரச போகமும் செல்லும் தவநெறியும் – உன் திருவடிகளை அடைந்து முக்தி பெறும் வழியான தவநெறியும் சிவலோகமும் சித்திக்குமே – அந்தத் தவத்தின் பயனான சிவலோக முக்தியும் கிடைக்கும். விளக்கம்:இப்பாடலை தொடர்ந்து பாராயனம் செய்தால் ‘இகபர சுகங்களைப் பெறலாம்’.  இகம் என்றால் இவ்வுலக வாழ்க்கை. பரம் என்றால் இறையுலக வாழ்க்கை. இப்பிறப்பு, மறுபிறப்பு என்று கூட இகபரத்திற்கு விளக்கம் சொல்வார்கள். இகம் என்ற சொல்லும் பரம் என்ற சொல்லும் வடமொழியில் பயின்று வரும்.ஆக இந்தப் பாடலில் அழியா அரசும் என்ற இவ்வுலக வாழ்க்கையில் சிறந்த சுகமும் சிவலோகம் என்ற பரவாழ்க்கையின் சிறந்த சுகமும் சொல்லப்பட்டதால் இந்தப் பாடலைப் பாராயணம் (திரும்பத் திரும்ப ஓதுதல்) செய்தால் இகபர சுகம் கிடைக்கும் என்பது நம்பிக்கை. பாடல் 29 - புத்தியினுள்ளே புரக்கும் புரத்தை அன்றே பாடல்: [] சித்தியும் சித்தி தரும் தெய்வம் ஆகித் திகழும் பரா சக்தியும் சக்தி தழைக்கும் சிவமும் தவம் முயல்வார் முத்தியும் முத்திக்கு வித்தும் வித்தாகி முளைத்து எழுந்த புத்தியும் புத்தியினுள்ளே புரக்கும் புரத்தை அன்றே பொருள்: சித்தியும் – எல்லா நலன்களும் கிடைக்கும் சித்தியும் சித்தி தரும் தெய்வம் ஆகித் திகழும் பராசக்தியும் – அப்படி எல்லா சித்திகளையும் தரும் தெய்வமாக விளங்குகின்ற பராசக்தியும் சக்தி தழைக்கும் சிவமும் – பராசக்தியாகிய உன்னிலிருந்து தழைக்கும் சிவமும் தவம் முயல்வார் முத்தியும் – தவம் புரிபவர்களுக்கு இந்த பிறப்பிறப்பு என்ற சுழலில் இருந்து விடுதலையும் முத்திக்கு வித்தும் – அந்த விடுதலைக்கு காரணமும் வித்தாகி முளைத்து எழுந்த புத்தியும் – விடுதலைக்குக் காரணமாக மனத்தில் தோன்றிய நினைவும் புத்தியினுள்ளே புரக்கும் புரத்தை அன்றே - அந்த மனத்தின் உள்ளே நின்று எல்லா எண்ணங்களையும் தோற்றுவித்துக் காக்கும் திரிபுரசுந்தரி தானே. இப்பாடலை தொடர்ந்து பாராயனம் செய்தால் ‘அணிமாதி அஷ்ட சித்திகளைப் பெறலாம்’. அணிமாதி அஷ்ட சித்திகள்’ என்பதற்கான விளக்கம்: தவ முயற்சியில் ஈடுபடுபவர்களுக்கு எட்டுவிதமான சித்திகள் கிடைக்கும் என்பது சித்த மரபில் வரும் ஒரு நம்பிக்கை. அந்த எட்டு சித்திகள்: அணிமா (அணு அளவிற்கு சிறிய உருவை எடுத்துக் கொள்ளுதல்), மஹிமா (பிரபஞ்சத்தின் அளவிற்கு உருவை பெரிதாக்கிக் கொள்வது), கரிமா (அதிக எடையைக் கொண்டிருப்பது), லஹிமா (இலகுவான எடையைக் கொண்டிருப்பது), ப்ராப்தி (நினைத்த இடத்திற்கு நினைத்த நேரத்தில் செல்வது), ப்ராகாம்யா (எண்ணியதெல்லாம் அடைதல்), ஈசித்வா (எல்லா பொருட்கள் மேலும் ஆதிக்கம் செலுத்துவது), வசித்வா (எல்லா பொருட்களையும் எல்லாரையும் வசப்படுத்துவது). இந்த விளக்கங்களிலிருந்தே தெரியும் இவையெல்லாம் உடையவன் இறைவன் ஒருவனே என்பது. சித்தர்கள் இறைவனின் இந்த குணங்களையெல்லாம் தவ வலிமையால் அடைவார்கள் என்பது நம்பிக்கை. இப்பாடலை தொடர்ந்து பாராயனம் செய்தால் 'அணிமாதி அஷ்ட சித்திகளைப் பெறலாம்'. பாடல் 30 - ஒன்றே பல உருவே அருவே என் உமையவளே [] பாடல்: அன்றே தடுத்து என்னை ஆண்டு கொண்டாய் கொண்டதல்ல என்கை நன்றே உனக்கு இனி நான் என் செயினும் நடுக்கடலுள் சென்றே விழினும் கரையேற்றுகை நின் திருவுளமோ ஒன்றே பல உருவே அருவே என் உமையவளே பொருள்: அன்றே தடுத்து என்னை ஆண்டு கொண்டாய் – நான் ஒன்றும் அறியா சிறு குழந்தையாக இருக்கும் போதே நான் புண்ணிய பாவங்களைச் செய்து சுழலில் சிக்கிக் கொள்ளாமல் என்னைத் தடுத்து என்னை நீ அடியவனாக ஏற்றுக் கொண்டு என்னை ஆண்டு கொண்டாய். கொண்டதல்ல என்கை நன்றே உனக்கு? – அப்படி என்னை அடிமையாகக் கொண்டுவிட்டு பின்னர் உன் உடைமையான என்னை இல்லை என்று சொல்வது உனக்கு ஏற்புடைத்தாகுமோ? இனி நான் என் செயினும் – இனிமேல் நான் என் செய்தாலும் நடுக்கடலுள் சென்றே விழினும் – அறிவில்லாமல் நடுக்கடலுள் சென்று விழுந்தாலும் கரையேற்றுகை நின் திருவுளமோ – என்னைக் காத்துக் கரையேற்றுவது உன் திருவுள்ளம் தானே?! ஒன்றே பல உருவே அருவே என் உமையவளே – இறை என்னும் போது ஒன்றாகவும், அவரவர் தம் மனத்திற்கு ஏற்ற வகையில் வணங்கும் பல உருவங்களாகவும், இறைவனுக்கு உருவம் இல்லை என்று உருவமற்ற இறைவனை வணங்குபவர்களுக்கு அருவமாகவும் இருக்கும் என் அன்னை உமையவளே! விளக்கம்:உன் உடைமையான நான் புலன் வழியே சென்று முட்டாள்த்தனமாக என்ன செய்தாலும், நடுக்கடலில் சென்று விழுந்தாலும் என்னைக் காக்க வேண்டியது உடையவளான உன் பொறுப்பு என்கிறார் பட்டர். பிறவி என்பது பெருங்கடல். அதில் ஓடங்கள் நாம். செலுத்துகிறவன் இறைவன். துடுப்பு நமது மனம். அந்த மனதின் வழியாக நல்வழியிலோ தீவழியிலோ செலுத்துகிறவன் அந்த நல்ல தீய வினைகளிலிருந்து நம்மைக் காப்பான். அதைத்தான் அபிராமி பட்டர் சொல்கிறார். இறைவன் காப்பான் என்ற நம்பிக்கை ஒன்று இருந்தால் போதும் பிறவிக் கடலை நீந்திடலாம். இப்பாடலை தொடர்ந்து பாராயனம் செய்தால் ‘அடுத்தடுத்து வரும் ஆபத்துக்கள் நீங்கும்’. பாடல் 31 - ஈன்றெடுப்பாள் ஒரு தாயும் இல்லை [] பாடல்: உமையும் உமையொரு பாகனும் ஏக உருவில் வந்து இங்கு எமையும் தமக்கு அன்பு செய்ய வைத்தார் இனி எண்ணுதற்குச் சமையங்களும் இல்லை ஈன்றெடுப்பாள் ஒரு தாயும் இல்லை அமையும் அமையுறு தோளியர் மேல் வைத்த ஆசையுமே பொருள்: உமையும் உமையொரு பாகனும் ஏக உருவில் வந்து – உமையன்னையும் சிவபெருமானும் ஒரே உருவாக வந்து இங்கு எமையும் தமக்கு அன்பு செய்ய வைத்தார் – இங்கே இந்த உலகிலேயே மிக கீழான என்னையும் அவர்களுக்கு அன்பு செய்யும் படி அருள் புரிந்தார்கள் இனி எண்ணுதற்குச் சமையங்களும் இல்லை – இனி நான் எண்ணி பின்பற்ற வேண்டிய சமயங்களும் இல்லை (இறை அருள் பெறுவதற்கு பக்தி செய்ய வேண்டுமா, ஞானவழியில் செல்வதா, யோகவழியில் செல்வதா, கருமவழியில் செல்வதா என்று எண்ணிப்பார்க்கத் தேவையில்லை) ஈன்றெடுப்பாள் ஒரு தாயும் இல்லை – (பிறப்பிறப்புச் சுழலில் இருந்து விடுபட்டுவிட்டதால் இனி எனக்குப் பிறவிகள் இல்லை. அதனால்) என்னை பெற்றெடுக்க ஒரு தாயும் இல்லை அமையும் அமையுறு தோளியர் மேல் வைத்த ஆசையுமே – அழகிய தோள் உடைய பெண்கள் மேல் வைத்த ஆசையும் தானாகவே அமைதியுற்றது. விளக்கம்:அம்மையும் அப்பனுமாக ஒரே உருவமாக வந்து அவர்கள் அருளால் அவர்கள் தாளை வணங்க வைத்துவிட்டதால் இனி எந்த வழியில் செல்ல வேண்டும் என்று நான் எண்ணிக் குழம்ப வேண்டாம்; அவர்களே அவர்களின் கருணையால் வழியைக் காட்டிவிட்டார்கள்; பிறப்பிறப்புப் பிணியும் தீர்ந்தது; பெண்களின் மேல் வைத்த ஆசையும் (பெண்களுக்கு ஆண்கள் மேல் வைத்த ஆசை) தானாக அமைதியுற்றது; அதனால் புதிதாகவும் எந்த பந்த பாசமும் தோன்றாது. அமைதி பெற ,சம்சார பந்தம் தொல்லை கொடுக்காமல் இருக்க இந்தப் பாடலைப் படிக்க சொல்லிக் கேட்டிருக்கிறேன். இப்பாடலை தொடர்ந்து பாராயனம் செய்தால் ‘மறுமையில் இன்பம் உண்டாகும்’. பாடல் 32 - ஈசர் பாகத்து நேரிழையே பாடல்: [] ஆசைக்கடலில் அகப்பட்டு அருளற்ற அந்தகன் கைப் பாசத்தில் அல்லற்பட இருந்தேனை நின் பாதம் என்னும் வாசக் கமலம் தலை மேல் வலிய வைத்து ஆண்டு கொண்ட நேசத்தை என் சொல்லுகேன் ஈசர் பாகத்து நேரிழையே பொருள்: ஆசைக்கடலில் அகப்பட்டு – ஆசையெனும் பெருங்கடலில் அகப்பட்டு அருளற்ற அந்தகன் கைப் பாசத்தில் அல்லற்பட இருந்தேனை – கொஞ்சமும் கருணையில்லாத கூற்றுவனின் (யமனின்) பாசக்கயிற்றால் கட்டப்பட்டு எல்லா துன்பங்களும் அடைய இருந்த என்னை நின் பாதம் என்னும் வாசக் கமலம் – உன் திருவடிகள் என்னும் மணம் மிகுந்த தாமரைமலர்களை தலை மேல் வலிய வைத்து – என் தலை மேல் நீயே வலிய வந்து வைத்து ஆண்டு கொண்ட நேசத்தை – என்னை உன் அடியவனாக ஏற்றுக் கொண்ட உன் அன்பினை என் சொல்லுகேன் – எப்படி புகழ்வேன்? ஈசர் பாகத்து நேரிழையே – சிவபெருமானின் இடப்பாகத்தில் இருக்கும் அழகிய அம்மையே! விளக்கம்:மிக எளிமையான பாடல். அந்தகன் என்றால் எமன். அவன் தம்பியின் பெயர் மந்தன். மந்தகன் இல்லை. அண்ணன் தம்பி சண்டையில் அண்ணன் தம்பியின் காலில் அடிக்க அவன் காலை விந்தி விந்தி மெதுவாக நடந்து வருவதால் அவன் மந்தன். அதனாலேயே ஒவ்வொரு இராசியிலும் அவன் இரண்டரை வருடங்கள் நடக்கிறான்; ஏழரை நாட்டான் என்ற பெயரையும் பெற்றான். இப்பாடலை தொடர்ந்து பாராயனம் செய்தால் ‘அகால மரணமும் திமரணமும் உண்டாகாதிருக்கும்’. அருளற்ற அந்தகன் கைப் பாசத்தில் அல்லற்பட இருந்தேனை ஆண்டு கொண்டாய் என்றதால் இந்தப் பாடலைப் பாராயணம் செய்தால் ‘அகால மரணமும் அதி மரணமும் நிகழா’ என்ற பயன் பொருத்தம். பாடல் 33 - உன்னையே அன்னையே என்பன் ஓடி வந்தே [] பாடல்: இழைக்கும் வினை வழியே அடும் காலன் எனை நடுங்க அழைக்கும் பொழுது வந்து அஞ்சல் என்பாய் அத்தர் சித்தம் எல்லாம் குழைக்கும் களபக் குவிமுலை யாமளைக் கோமளமே உழைக்கும் போது உன்னையே அன்னையே என்பன் ஓடி வந்தே பொருள்: அத்தர் சித்தம் எல்லாம் குழைக்கும் களபக் குவிமுலை யாமளைக் கோமளமே – அத்தனாம் (தந்தையாம்) சிவபெருமானுடைய சித்தம் எல்லாம் குழையும் படி செய்யும் மணம் வீசும் குவிந்த முலையை உடைய இளையவளே! மென்மையானவளே!உன்னையே அன்னையே என்பன் – உன்னையே என் அன்னை என்பேன். இழைக்கும் வினை வழியே அடும் காலன் எனை நடுங்க அழைக்கும் பொழுது – நான் இழைக்கும் (செய்யும், செய்த, செய்யப் போகும்) நல்வினைத் தீவினைகளுக்கேற்ப எனை தண்டிக்கும் கால தேவன் (எமன்) நான் நடுங்கும்படி என்னை அழைக்கும் போது உழைக்கும் போது – அப்போது உயிரும் உடலும் ஊசலாடி நான் மரண வேதனையில் துன்புறும் போது ஓடி வந்தே (வந்து) அஞ்சல் என்பாய் – என் முன்னே ஓடி வந்தே அஞ்சாதே என்று சொல்வாய். அப்போதைக்கு இப்போதே சொல்லி வைக்கிறார் பட்டரும் பட்டர் பிரானைப் போல. விளக்கம்: இப்பாடலை தொடர்ந்து பாராயணம் செய்தால் ‘மரண அவஸ்தையிலும் அம்பிகையின் நினைவு அகலாதிருக்கும்’. அத்தனின் சித்தம் குவிமுலையால் கலங்குவதில்லை. எப்போதும் சித்தம் கலங்குவதில்லை. ஈண்டு(இங்கு) குழைதல் என்பதற்கு “நெகிழ்ந்து ஒன்றாதல்” எனப்பொருள் கொள்ளவேண்டும். பாடல் 34 - ஞாயிறும் திங்களுமே [] பாடல்: வந்தே சரணம் புகும் அடியாருக்கு வானுலகம் தந்தே பரிவொடு தான் போய் இருக்கும் சதுர்முகமும் பைந்தேன் அலங்கல் பருமணி ஆகமும் பாகமும் பொற் செந்தேன் மலரும் அலர் கதிர் ஞாயிறும் திங்களுமே பொருள்: வந்தே சரணம் புகும் அடியாருக்கு வானுலகம் தந்தே பரிவொடு – தன் திருவடிகளை வந்தடைந்த அடியார்களுக்கு அன்னையின் பரிவோடு வானுலகம் தந்து தான் போய் இருக்கும் – (அன்னை அபிராமி) என்றும் இருக்கும் (இடங்கள்): சதுர்முகமும் – வேதங்களை ஓதி உலகங்களை எல்லாம் படைக்கும் நான்முகனின் திருமுகங்கள் (கலைமகளாக). பைந்தேன் அலங்கல் பருமணி ஆகமும் – நறுந்தேன் நிரம்பிய மலர்களால் ஆன மாலைகளும் பெரிய மாணிக்க மாலைகளும் விளங்கும் திருமாலின் நெஞ்சகமும் (திருமகளாக) பாகமும் – சிவபெருமானின் உடலில் ஒரு பாகமும் பொற் செந்தேன் மலரும் – பொன்னிறத்துடன் நறுந்தேனை உடைய தாமரை மலரும் அலர் கதிர் ஞாயிறும் – அன்றாடம் சுடர் வீசித் திகழும் கதிரவனும் திங்களுமே – நிலவுமே. விளக்கம்: இப்பாடலை தொடர்ந்து பாராயனம் செய்தால் ‘பயிர் செய்ய ஏற்ற சிறந்த நிலபுலங்கள் கிடைக்கும்’. பாடல் 35 - தரங்கக் கடலுள் துயில் கூரும் விழுப்பொருளே பாடல்: [] திங்கட் பகவின் மணம் நாறும் சீறடி சென்னி வைக்க எங்கட்கு ஒரு தவம் எய்தியவா எண் இறந்த விண்ணோர் தங்கட்கும் இந்தத் தவம் எய்துமோ தரங்கக் கடலுள் வெங்கட் பணி அணை மேல் துயில் கூரும் விழுப்பொருளே பொருள்: திங்கட் பகவின் மணம் நாறும் சீறடி சென்னி வைக்க எங்கட்கு ஒரு தவம் எய்தியவா? – திங்களை முடி மேல் சூடிய இறைவனின் நறுமணம் வீசும் சிறந்த திருவடிகள் எங்கள் தலைமேல் வைக்க எங்களுக்கு இந்த தவம் எப்படி எய்தியது? எண் இறந்த விண்ணோர் தங்கட்கும் இந்தத் தவம் எய்துமோ? – எண்ணிக்கையில் அளவில்லாத விண்ணில் வாழும் விண்ணவர்கள் தங்களுக்கும் இந்த தவம் கிடைக்குமா? தரங்கக் கடலுள் – அலைவீசும் கடலில் வெங்கட் பணி அணை மேல் – வெம்மையான கண்களையுடைய பாம்பு படுக்கையின் மேல் துயில் கூரும் விழுப்பொருளே – துயில் கொள்ளும் பரம்பொருளே! (விஷ்ணு ரூபிணியான வைஷ்ணவியே) ! (பெருமாளும் அன்னையின் உருவம் என்று பட்டர் இந்தப் பாடலில் சொல்கிறார்) விளக்கம்:படத்தில் இருக்கும் அன்னை சங்கு, சக்கரம், கதை ஏந்தி கருடனின் மேல் அமர்ந்திருக்கும் வைஷ்ணவி தேவி.  அலைகள் புரண்டெழும் பாற்கடலின் மீது ஆதிசேஷனாகிய பாம்பணை மீது பள்ளி கொண்டு துயிலும் மேலான பொருளே! ஈசனின் திருமுடியிலுள்ள பிறைச்சந்திரனின் மணம் கமழ்கின்ற உன்னுடைய சிற்றடியை, எளியவர்களான எங்களைப் போன்றோரின் சிரங்களின் மீது வைத்தருள்வதாயின் எங்கள் ஒப்பற்ற தவத்தின் சிறப்புத்தான் என்னே என வியக்கிறோம். எண்ணற்ற தேவர்களுக்கும் கூட இத்தகைய சிறந்த பாக்கியம் கிட்டுமோ? கிட்டாது.  இப்பாடலை தொடர்ந்து பாராயனம் செய்தால் ‘கடிமணம் நிகழும்’. பாடல் 36 - பொருளே பொருள் முடிக்கும் போகமே [] பாடல்: பொருளே பொருள் முடிக்கும் போகமே அரும் போகம் செய்யும் மருளே மருளில் வரும் தெருளே என் மனத்து வஞ்சத்து இருள் ஏதும் இன்றி ஒளி வெளி ஆகி இருக்கும் உந்தன் அருள் ஏது அறிகின்றிலேன் அம்புயாதனத்து அம்பிகையே பொருள்: பொருளே – பொருட்செல்வமாகித் திகழ்பவளே! பொருள் முடிக்கும் போகமே – அந்தப் பொருட் செல்வத்தால் அடையப்படும் போகங்களாகி நிற்பவளே! அரும் போகம் செய்யும் மருளே – அந்த போகங்களை அனுபவிக்கும் போது ஏற்படும் மயக்கமாகித் திகழ்பவளே! மருளில் வரும் தெருளே – அப்படி மயக்கம் வந்த பின் அதில் இருந்து விடுபடும் வண்ணம் ஏற்படும் தெளிவே! என் மனத்து வஞ்சத்து இருள் ஏதும் இன்றி ஒளி வெளி ஆகி இருக்கும் உந்தன் அருள் ஏது – என் மனதில் என்னை வஞ்சிக்கும் மாயை இருள் ஏதும் இன்றித் திகழும் படி ஒளிவெள்ளமாக உன் அருள் வந்தது. அதன் பெருமையை நான் எப்படி சொல்வது? அறிகின்றிலேன் – சொல்லும் வழி அறியேன். அம்புயாதனத்து அம்பிகையே – தாமரை ஆசனத்தில் அமர்ந்திருக்கும் அம்பிகையே விளக்கம்:பொருட் செல்வம் கெட்டதன்று. அந்தப் பொருட் செல்வத்தால் உலகில் நன்மை விளைகின்றது. ஆனால் அந்தப் பொருட் செல்வத்தை அந்த நல்ல வழியில் பயன்படுத்துவது எல்லோராலும் இயலாததொன்று. அந்தப் பொருட் செல்வத்தைப் போகத்தின் பால் செலவழிக்கவே எல்லார் மனமும் விழைகிறது. அப்படிப் பெறப்படும் போகங்களும் கெட்டதல்ல. இடைவிடாத மகிழ்வு (ஆனந்தம்) என்பதே எல்லோருடைய குறிக்கோளும். தனக்குள்ளேயே அந்த ஆனந்தம் இருப்பதாக அறிந்தவர் கூறுகின்றார்கள். ஆனால் பெரும்பான்மையினர் அந்த மகிழ்ச்சியைப் போகங்களில் தானே தேடுகிறோம்.அந்த போகங்கள் அவைகளாகவே கெட்டவை இல்லை. ஆனால் அவை மருளை ஏற்படுத்துகின்றன. மயக்கத்தில் ஆழ்ந்துவிட்டால் பின்னர் பிழைப்பது அரிது. அன்னையின் அருள் தானே வந்தால் அன்றி அந்தச் சுழலில் அகப்பட்டவர் அகப்பட்டவரே. ஆனால் அதே நேரத்தில் அந்த மயக்கமே அன்னையின் அருளை இழுத்து வருவதற்கும் பல நேரங்களில் காரணமாக இருக்கிறது. கீதையின் முதல் அத்தியாயம் ‘அர்ச்சுன விஷாத யோகம் – அருச்சுனனின் மயக்கம் என்ற யோகம்’. அருச்சுனனின் மயக்கம் எப்படி யோகமாக இருக்க முடியும் என்பதற்குப் பெரியவர்கள் சொல்லும் பொருள் இது தான் – அந்த மயக்கம் வந்ததால் தான் அவனால் கண்ணன் சொல்லும் நல்வார்த்தைகளை உணர்ந்து தெளிவு பெற முடிந்தது. அங்கேயும் மயக்கத்தில் இருந்து தெளிவு பிறந்தது. அருணகிரியாரும் போகத்தில் ஆழ்ந்து அமிழ்ந்து மயக்கம் உற்று அந்த மயக்கத்தில் தன் உயிரை மாய்த்துக் கொள்ள விழைந்த போது தானே முருகனின் அருள் வந்து தெளிவு தந்தது. இப்படி பல எடுத்துக்காட்டுகளைச் சொல்லலாம். அதனால் மயக்கமும் நல்லதே என்பது விளங்கிற்று. அந்த மயக்கத்தில் இருந்து தோன்றும் தெளிவும் நல்லதே. அந்தத் தெளிவு நம் முயற்சியால் ஏற்படுவதன்று. அன்னையின் அருளால் ஏற்படுவது. நல்லவரைக் காப்பதென்னவோ எளிது. ஆனால் கெட்டவரைக் காப்பது தானே பெருமை? மனத்தில் வஞ்சத்து இருள் கொண்டு இருந்த என்னிடம் அந்த இருள் நீங்கி ஒளி வெள்ளமாய்த் திகழும் படி செய்த அன்னையின் அருளையும் அந்த அருளின் பெருமையையும் சொல்லி முடியுமா? போகத்தை அனுபவிக்க உதவும் பொருளை அள்ளி வழங்குபவளும் அவளே, பொருளாகவும் பொருளால் பெறப்படும் போகமாகவும் இருப்பவளும் அவளே. அதிகமான போகத்தில் ஈடுபடும்போது அதுதான் உண்மைப்பொருள் என்ற மாயை (மருள் ) உண்டாகும். “பொருளல்ல வற்றைப் பொருளென்று உணரும் மருளானாம் மாணாப் பிறப்பு” -திருக்குறள். அந்த மாயயும் அவளே .அந்த மாயையை ஏற்படுத்துபவளும் அவளே. “மஹா போகா ” என்றும் “மஹா மாயா” “ஸர்வ மோஹினி” என்றும் அறியப்படுபவள். மருளால் அகம் பேரிருளானது. அந்த இருளைப் போக்கி மெய்யுணர்வளிக்கும் அருட்பெருஞ்சுடரும் அவளே. “இருள்நீங்கி இன்பம் பயக்கும் மருள்நீங்கி மாசறு காட்சி யவர்க்கு” இப்பாடலை தொடர்ந்து பாராயனம் செய்தால் ‘தொல்வினைகள் தொலைந்து போகும்’. பாடல் 37 - திரு உடையானிடம் சேர்பவளே பாடல்:  [] கைக்கே அணிவது கன்னலும் பூவும் கமலம் அன்ன மெய்க்கே அணிவது வெண் முத்துமாலை விட அரவின் பைக்கே அணிவது பன்மணிக் கோவையும் பட்டும் எட்டுத் திக்கே அணியும் திரு உடையானிடம் சேர்பவளே பொருள்: கைக்கே அணிவது கன்னலும் பூவும் – கைகளுக்கு அணிகலங்களாக நீ அணிந்து கொள்வது கரும்பும் பூக்களும் கமலம் அன்ன மெய்க்கே அணிவது வெண் முத்துமாலை – தாமரை போன்ற திருமேனிக்கு அணிகலங்களாக அணிவது வெண்ணிற முத்துமாலைகள் விட அரவின் பைக்கே அணிவது பன்மணிக் கோவையும் பட்டும் – நல்ல பாம்பின் படம் எடுத்த தலையைப் போல் இருக்கும் இடைக்கு அணிந்து கொள்வது பலவிதமான மாணிக்கங்களால் ஆன மாலைகளும் பட்டுத்துணியும் எட்டுத் திக்கே அணியும் திரு உடையானிடம் சேர்பவளே – எட்டுத் திக்குகளையே (திசைகளையே) ஆடையாக அணிந்து கொண்டிருக்கும் எல்லா செல்வங்களையும் உடைய (ஐஸ்வர்யம் உடையவன் ஈஸ்வரன்) சிவபெருமானின் இடப்பாகம் சேர்பவளே. இப்பாடலை தொடர்ந்து பாராயனம் செய்தால் ‘நவரத்தினம் அடையும் நல்லூழ் பெறலாம்’. பாடல் 38 - அவளைப் பணிமின் கண்டீர் [] பாடல்: பவளக் கொடியில் பழுத்த செவ்வாயும் பனி முறுவல் தவளத் திருநகையும் துணையா எங்கள் சங்கரனைத் துவளப் பொருது துடியிடை சாய்க்கும் துணை முலையாள் அவளைப் பணிமின் கண்டீர் அமராவதி ஆளுகைக்கே பொருள்: பவளக் கொடியில் பழுத்த செவ்வாயும் – பவளக் கொடியில் பழுத்த பவளம் போல் இருக்கும் செவ்விதழ்களும் பனி முறுவல் தவளத் திருநகையும் – குளிர்ந்த முறுவலும் முத்து போன்ற பற்கள் தெரிய செய்யும் புன்னகையும் துணையா – துணையாகக் கொண்டு எங்கள் சங்கரனைத் – எங்கள் (தலைவனாம்) சங்கரனைத் துவளப் பொருது – துவண்டு போகும்படி போரிட்டு துடியிடை சாய்க்கும் – உடுக்கையைப் போன்ற இடையை கீழே சாய்க்கும் துணை முலையாள் – ஒன்றிற்கு ஒன்று துணையான முலைகளை உடையவள் அவளைப் பணிமின் கண்டீர் அமராவதி ஆளுகைக்கே – அவளைப் பணியுங்கள் தேவருலகாம் அமராவதியை ஆளுவதற்கு. இப்பாடலை தொடர்ந்து பாராயனம் செய்தால் ‘வேண்டிய பொருளை வேண்டியபடியே அடையலாம்’. பாடல் 39 - ஆளுகைக்கு உந்தன் அடித்தாமரைகள் உண்டு [] பாடல்: ஆளுகைக்கு உந்தன் அடித்தாமரைகள் உண்டு அந்தகன்பால் மீளுகைக்கு உந்தன் விழியின் கடை உண்டு மேல் இவற்றின் மூளுகைக்கு என் குறை நின் குறையே அன்று முப்புரங்கள் மாளுகைக்கு அம்பு தொடுத்த வில்லான் பங்கில் வாணுதலே பொருள்: ஆளுகைக்கு உந்தன் அடித்தாமரைகள் உண்டு – என்னை ஆள்வதற்கு உந்தன் திருவடித்தாமரைகள் உண்டு அந்தகன்பால் மீளுகைக்கு உந்தன் விழியின் கடை உண்டு – எமனிடமிருந்து மீள்வதற்கு உந்தன் கடைக்கண்ணின் கருணைப்பார்வை உண்டு மேல் இவற்றின் மூளுகைக்கு என் குறை நின் குறையே அன்று – இவை இருந்தும் உன் திருவடித்தாமரைகள் என்னை ஆளாமலும் உன் கடைக்கண் பார்வை என் மேல் விழாமலும் இருப்பதற்குக் காரணம் என் குறையே; அது உன் குறை இல்லை முப்புரங்கள் மாளுகைக்கு அம்பு தொடுத்த வில்லான் பங்கில் வாணுதலே – முப்புரங்கள் அழியும் படி அம்பு தொடுத்த வில்லை உடைய சிவபெருமானின் இடப்பாகத்தில் வாழும் ஒளி பொருந்திய நெற்றியை உடையவளே! (கடைசி இரண்டு அடிகளுக்கு வேறு வகையிலும் பொருள் சொல்வதுண்டு. மேல் இவற்றின் மூளுகைக்கு என் குறை நின் குறையே – இவை இருந்தும் உன் திருவடித்தாமரைகள் என்னை ஆளாமலும் உன் கடைக்கண் பார்வை என் மேல் விழாமலும் இருப்பதற்குக் காரணம் என் குறையாக இருக்கலாம்; ஆனால் அது உன் குறையும் கூட (ஏனெனில் நான் உன் பிள்ளை; உன் அடியவன்/அடியவள். என்னைக் காப்பது உன் கடன்) அன்று முப்புரங்கள் மாளுகைக்கு அம்பு தொடுத்த வில்லான் பங்கில் வாணுதலே – முன்பு முப்புரங்கள் அழியும் படி அம்பு தொடுத்த வில்லை உடைய சிவபெருமானின் இடப்பாகத்தில் வாழும் ஒளி பொருந்திய நெற்றியை உடையவளே!) பாடல் 40 - முன் செய் புண்ணியமே [] பாடல்: வாணுதற் கண்ணியை விண்ணவர் யாவரும் வந்து இறைஞ்சிப் பேணுதற்கு எண்ணிய எம்பெருமாட்டியை பேதை நெஞ்சில் காணுதற்கு அண்ணியள் அல்லாத கன்னியை காணும் அன்பு பூணுதற்கு எண்ணிய எண்ணமன்றோ முன் செய் புண்ணியமே பொருள்: வாணுதற் கண்ணியை – ஒளி பொருந்திய நெற்றிக்கண்ணை உடையவளை, விண்ணவர் யாவரும் வந்து இறைஞ்சிப் பேணுதற்கு எண்ணிய எம்பெருமாட்டியை – விண்ணில் வாழும் தேவர்கள் யாவரும் வந்து வணங்கிப் போற்றுதற்கு விருப்படும் எங்கள் தலைவியை, பேதை நெஞ்சில் காணுதற்கு அண்ணியள் அல்லாத கன்னியை – ஒன்றுமறியா பேதை நெஞ்சில் காணுவதற்கு எளிதில்லாத கன்னியை காணும் அன்பு பூணுதற்கு எண்ணிய எண்ணமன்றோ முன் செய் புண்ணியமே – காணும் அன்பு கொள்ளவேண்டும் என்று எண்ணினேனே. அந்த எண்ணம் நான் முன்பு செய்த புண்ணியப் பயன் தானே. அருஞ்சொற்பொருள்: அண்ணியள் – அண்மையில் இருப்பவள்; எளிதானவள் இப்பாடலை தொடர்ந்து பாராயனம் செய்தால் ‘பூர்வ புண்ணியம் தடையின்றிப் பலன்தரும்’. இந்தப் பாடலில்  முதல் சீரில் இருக்கும் எதுகையோடு இரண்டாவது சீரிலும் எதுகை வரும்படி இருக்கிறது. வாணுதல், பேணுதல், காணுதல், பூணுதல் என்று முதல் சீரில் எதுகையோடும் கண்ணியை, எண்ணிய, அண்ணியள், எண்ணிய என்று இரண்டாவது சீரில் எதுகையோடும் அமைந்திருக்கிறது. மோனையின் எடுத்துக்காட்டு விரும்புபவர்களுக்கு: வாணுதல் – விண்ணவர் – வந்து, யாவரும் – இறைஞ்சி, பேணுதல் – பேதை, எண்ணிய – எம்பெருமாட்டி, காணுதல் – கன்னியை – காணும், அண்ணியள் – அல்லாத – அன்பு, பூணுதல் – புண்ணியம், எண்ணிய – எண்ணம். இப்படி ஒவ்வொரு வரியை மட்டுமின்றி ஒவ்வொரு சொல்லையும் சுவையோடு அமைத்திருக்கிறார். அபிராமி அந்தாதி முழுவதையுமே இப்படி இரசிக்கலாம். பாடல் 41 - புண்ணியம் செய்தனமே மனமே []பாடல்: புண்ணியம் செய்தனமே மனமே புதுப் பூங்குவளைக் கண்ணியும் செய்ய கணவரும் கூடி நம் காரணத்தால் நண்ணி இங்கே வந்து தம் அடியார்கள் நடு இருக்கப் பண்ணி நம் சென்னியின் மேல் பத்ம பாதம் பதித்திடவே பொருள்: புண்ணியம் செய்தனமே மனமே – ஆகா. என்ன பாக்கியம். என்ன பாக்கியம். புண்ணியம் செய்திருக்கிறாய் மனமே. புதுப் பூங்குவளைக் கண்ணியும் செய்ய கணவரும் கூடி – இப்போதே மலர்ந்த கருங்குவளைப்பூவைப் போன்ற கண்களை உடைய நம் அன்னையும் சிவந்த அவளது கணவரும் இணைந்து நம் காரணத்தால் நண்ணி – நம்மை ஆண்டு அருள்வதற்காக விரும்பி இங்கே வந்து – நாமிருக்கும் இடமான இங்கே வந்து தம் அடியார்கள் நடு இருக்கப் பண்ணி – தம் அடியவர்களின் கூட்டத்தின் நடுவே நம்மை இருக்கும்படி அருள் செய்து நம் சென்னியின் மேல் பத்ம பாதம் பதித்திடவே – நம் தலையின் மேல் தங்களின் தாமரைத் திருவடிகளை நிலையாக நிறுத்திடவே. விளக்கம்: அம்மையும் அப்பனுமாக இணைந்து இருப்பதே நிலையானது. அதுவே அருள் செய்யும் நிலை. இதனை புதுப் பூங்குவளைக் கண்ணியும் செய்ய கணவரும் கூடி என்று சொல்கிறார்.அம்மையின் அடியவர் என்பதால் அம்மையை முன்னிலைப் படுத்தி அவளின் கணவர் என்று பெருமானைச் சொல்கிறார். என்னை அறிந்தவர்கள் என் தந்தையைக் குமரனின் தந்தை என்பதும் என் தந்தையை அறிந்தவர்கள் என்னை நடராஜன் மகன் என்பதும் போல. தாமே நமக்காக விரும்பி வந்தார்கள் என்பது நாம் செய்த ஏதோ ஒரு நல்வினைக்காக என்று இல்லாது அவர்களின் கருணையாலே நமக்கு அருள் செய்ய விரும்பி வந்தார்கள் என்று காட்டுவதற்காக. இங்கே வந்து என்றது நல்லதும் தீயதும் நிறைந்து இன்பமும் துன்பமும் மாறி மாறி வரும் இந்த உலகத்தில் இருக்கும் நமக்காக அவர்கள் கீழிறங்கி வந்தார்கள் அவர்களின் கருணையால் என்று சொல்வதற்காக. அடியவர்கள் குழுவுடன் இணைந்து காலத்தைப் போக்கினால் பந்த பாசங்கள் நீங்கும்; பந்த பாசங்கள் நீங்கினால் மயக்கம் தீரும்; மயக்கம் தீர்ந்தால் நிலை தடுமாறா மனநிலை கிடைக்கும்; அந்த மனநிலை கிடைத்தால் இங்கேயே விடுதலை கிடைக்கும்; என்று ஆன்றோர் சொன்ன நிலை கிடைக்கும் படி அடியவர் கூட்டத்தின் நடுவில் இருக்கப் பண்ணினாள். இதெல்லாம் அவள் திருவடிகளின் பெருமை. அம்மையப்பர்களின் பொற்றாமரைத் திருவடிகள் நம் சென்னியில் பதித்திடவே என்ன தவம் செய்தோமோ மனமே என்று வியக்கிறார். அந்தாதித் தொடை: முன் செய் புண்ணியமே என்று சென்ற பாடல் முடிந்தது. இந்தப் பாடல் புண்ணியம் செய்தனமே மனமே என்று தொடங்கி புண்ணியம் என்ற சொல்லைக் கொண்டு அந்தாதித் தொடையைத் தொடுக்கிறார். பதித்திடவே என்று இந்தப் பாடல் நிறைந்து அடுத்தப் பாடல் இடம் கொண்டு என்று தொடங்கி ‘இடம்’ என்ற சொல்லைக் கொண்டு தொடுக்கப்பட்டிருக்கிறது. அணி நலம்: புண்ணியம், கண்ணியும், நண்ணி, பண்ணி என்று நான்கு அடிகளிலும் எதுகையை அமைத்திருக்கிறார். புண்ணியம் – புது – பூங்குவளை, கண்ணி – கணவர் – காரணம், நண்ணி – நடு, பண்ணி – பத்ம – பாதம் – பதித்திடவே என்று நான்கு அடிகளிலும் மோனைச் சுவையைக் காட்டுகிறார். செய்தனமே மனமே என்ற இடத்தில் ஒன்று போல் ஒலிக்கும் சுவைநலத்தையும் காட்டுகிறார். இப்பாடலை தொடர்ந்து பாராயனம் செய்தால் ‘அடியார் உறவு பெறலாம்’ பாடல் 42 - பனி மொழி வேதப் பரிபுரையே [] பாடல்: இடங்கொண்டு விம்மி இணை கொண்டு இறுகி இளகி முத்து வடங்கொண்ட கொங்கை மலை கொண்டு இறைவர் வலிய நெஞ்சை நடங்கொண்ட கொள்கை நலம் கொண்ட நாயகி நல் அரவின் படம் கொண்ட அல்குல் பனி மொழி வேதப் பரிபுரையே பொருள்: இடங்கொண்டு விம்மி - தகுந்த இடத்தில் இருந்து கொண்டு பெருமிதத்தால் விம்மி இணை கொண்டு – ஒன்றிற்கொன்று இணையென்னும்படியாக அமைந்து இறுகி இளகி – இறுகியும் அதே நேரத்தில் மென்மையுடன் இளகியும் முத்து வடங்கொண்ட – முத்து மாலையை அணிந்தும் இருக்கும் கொங்கை மலை கொண்டு – மலைகள் என்னும் படியான கொங்கைகளைக் கொண்டு இறைவர் வலிய நெஞ்சை நடங்கொண்ட – நம் தலைவராம் சிவபெருமானின் எதற்கும் அசையாத வலிய நெஞ்சையும் உன் எண்ணத்திற்கு ஏற்ப ஆடம் படி செய்த கொள்கை நலம் கொண்ட நாயகி – பிள்ளைகளான எங்களுக்கு அருள் செய்யும் நல்ல கொள்கை நலம் கொண்ட தலைவியே நல் அரவின் படம் கொண்ட அல்குல் – நல்ல பாம்பு படமெடுத்ததைப் போல் இருக்கும் அல்குலைக் கொண்ட பனி மொழி வேதப் பரிபுரையே – குளிர்ந்த பேச்சினையுடைய வேதங்களைக் காலில் சிலம்பாய் அணிந்தவளே. விளக்கம்: அந்தாதித் தொடை: இடவே என்று சென்ற பாடல் நிறைந்தது; இந்தப் பாடல் இடம் கொண்டு என்று தொடங்கியது. இந்தப் பாடல் பரிபுரையே என முடிகிறது; அடுத்தப் பாடல் பரிபுரச் சீறடி என்று தொடங்குகிறது. எதுகை: இடம் கொண்டு, வடம் கொண்ட, நடம் கொண்ட, வடம் கொண்ட என்று இரண்டிரண்டு எதுகைகளாக அமைத்திருக்கிறார். மோனை: இடம் – இணை – இறுகி – இளகி, வடம் – வலிய, ந்டம் – நலம் – நாயகி – நல், படம் – பனி – பரிபுரை. மற்றைய அணிகள்: கொண்டு/கொண்ட என்ற சொல்லை மீண்டும் மீண்டும் அழகுறப் பயன்படுத்தியுள்ளார். வலிய நெஞ்சைப் பொருதுவதற்கு மலை தானே வேண்டும். அதனையும் சொல்கிறார். இறுகி இளகி என்று முரண் தொடையைக் காட்டுகிறார். அம்மையின் அழகைப் போற்றும் இந்தப் பாடல் முழுதுமே அழகு. இது குணா படத்தில் இடம்பெற்ற பாடல். சங்கிலியால் பிணையப்பட்டு, எரிதழலால் பீடிக்கப்படும் போதும் எப்படி தான் இவ்வளவு செய்ய முடிகிறதோ. என்னே அவளருள். இப்பாடலை தொடர்ந்து பாராயனம் செய்தால் ‘உலகம் நமக்கு வசியப்பட்டிருக்கும்’. பாடல் 43 - இறைவர் செம்பாகத்து இருந்தவளே [] பாடல்: பரிபுரச் சீறடிப் பாசாங்குசை பஞ்சபாணி இன்சொல் திரிபுரசுந்தரி சிந்துர மேனியள் தீமை நெஞ்சில் புரிபுர வஞ்சரை அஞ்சக் குனி பொருப்புச் சிலைக்கை எரிபுரை மேனி இறைவர் செம்பாகத்து இருந்தவளே பொருள்: பரிபுரச் சீறடிப் பாசாங்குசை - சிலம்பினை அணிந்த அழகிய சிறிய திருவடிகளை உடையவளே; பாசத்தையும் அங்குசத்தையும் ஏந்தியவளே பஞ்சபாணி – ஐந்து வித மலர்களால் ஆன அம்புகளை (பாணங்களை) ஏந்தியவளே இன்சொல் திரிபுரசுந்தரி – இனிய சொற்களையுடைய மூவுலகங்களிலும் அழகில் சிறந்தவளே சிந்துர மேனியள் – சிந்துரத்தை மேனியெங்கும் அணிந்தவளே தீமை நெஞ்சில் புரி புர வஞ்சரை – தீய நெஞ்சத்தைக் கொண்டிருந்த திரிபுர அசுரர்களை அவர்கள் அஞ்சக் குனி பொருப்புச் சிலைக் கை – அஞ்சும்படியாக மேருமலையால் ஆன வில்லை வளைத்தக் கையினை உடைய எரிபுரை மேனி – எரியும் நெருப்பினை ஒத்த மேனியைக் கொண்ட இறைவர் செம்பாகத்து இருந்தவளே – நம் தலைவராம் சிவபெருமானின் சரிபாதியாக இருந்தவளே விளக்கம்: இறைவர் செம்பாகத்து இருந்தவளே என்று இறந்த காலத்தில் கூறியது காலம் காலமாக அவள் இறைவரின் செம்பாகத்தில் இருக்கிறாள் என்பதைக் காட்டுவதற்காக – மதுரையில் பிறந்த நாள் முதல் வாழ்ந்தவன் நான் என்று மதுரையில் தற்போதும் வாழ்கின்றவர் சொன்னால் அது அவர் என்றைக்கும் மதுரையில் வாழ்ந்தவர்; இப்போதும் வாழ்கின்றவர் என்ற பொருளை வழங்குவதைப் போல. அருஞ்சொற்பொருள்: பரிபுரம்: சிலம்பு சீறடி: சிறிய அடி பொருப்பு: மலை (இங்கே மேரு மலை) சிலை: வில் குனித்தல்: வளைத்தல் எரி: நெருப்பு அந்தாதித் தொடை: சென்ற பாடலை நிறைத்த பரிபுரையே என்ற சொல்லை ஒட்டி இந்தப் பாடல் பரிபுர என்று தொடங்கியது. இந்தப் பாடலை நிறைக்கும் இருந்தவளே என்ற சொல்லை ஒட்டி தவளே என்று தொடங்கும் அடுத்தப் பாடல். எதுகை: பரிபுர, திரிபுர, புரிபுர, எரிபுரை என்று இந்தப் பாடலிலும் இரண்டிரண்டு எதுகைகளாக இருக்கின்றன. மோனை: பரிபுர – பாசாங்குசை – பஞ்ச – பாணி, திரிபுர – சிந்துர – தீமை (சகரமும் தகரமும் மோனைகளாக அமையும்), புரிபுர – பொருப்பு, எரிபுரை – இறைவர் – இருந்தவளே (எகரமும் இகரமும் மோனைகளாக அமையும்) சுந்தரி சிந்துர என்ற இடத்திலும் வஞ்சரை அஞ்ச என்ற இடத்திலும் ஒரே ஓசைகள் வரும்படி அழகுடன் அமைந்திருக்கிறது. எரிகின்ற நெருப்பில் செம்மை எது? ஒளி. நெருப்பிற்கு உரிய பண்புகள் வெப்பமும் ஒளிச்சுடரும். வெப்பத்திற்கு நிறமில்லை. ஆனால் ஒளிச்சுடருக்கு? அது செம்மைதானே? அப்படி வெளிச்சமும் வெப்பமும் சேர்ந்திருப்பதுதான் அம்மையப்பன். பிரிக்க முடியாதது. எரிபுரை என்ற சொல்லை அருணகிரியும் பயன்படுத்தியுள்ளார். “தரணியில் அரணிய” என்ற பாடலில் “எரிபுரை வடிவினள்” என்று அம்மையை விளிக்கிறார். ’தீமை நெஞ்சில் புரிபுர வஞ்சரை அஞ்சக் குனி பொருப்புச் சிலைக்கை’ என்பதால் இப்பாடலை தொடர்ந்து பாராயனம் செய்தால் ‘தீமையெல்லாம் ஒழியும்’. இட்டிருக்கும் படம்..தஞ்சைப் பெரிய கோயிலின் சுற்று மண்டபத்து ஓவியம். அழகான ஓவியம். பாடல் 44 - எங்கள் சங்கரனார் மனை மங்கலமாம் [] பாடல்: தவளே இவள் எங்கள் சங்கரனார் மனை மங்கலமாம் அவளே அவர் தமக்கு அன்னையும் ஆயினள் ஆகையினால் இவளே கடவுளர் யாவர்க்கும் மேலை இறைவியும் ஆம் துவளேன் இனி ஒரு தெய்வம் உண்டாக மெய்த் தொண்டு செய்தே பொருள்: தவளே இவள் எங்கள் சங்கரனார் மனை மங்கலமாம் – நமக்குத் தாயான இவளே எங்கள் சங்கரனாரின் மனை மங்கலம் – இல்லத்திற்கு நன்மையைச் சேர்ப்பவள். அவளே அவர் தமக்கு அன்னையும் ஆயினள் – அவளே ஆதிபராசக்தி என்னும் உருவில் சங்கரனாருக்கு அன்னையும் ஆயினள். ஆகையினால் இவளே கடவுளர் யாவர்க்கும் மேலை இறைவியும் ஆம் – ஆதலால் இவளே கடவுளர் எல்லாருக்கும் மேலான தலைவியானவள் துவளேன் இனி ஒரு தெய்வம் உண்டாக மெய்த் தொண்டு செய்தே – இனி மேல் வேறு தெய்வங்களைத் தொழுது தொண்டு செய்து அயர்சி அடையமாட்டேன். விளக்கம்: அன்னை ஆதிபராசக்தியே ஆதிப்பரம்பொருள்; அவளே மும்மூர்த்திகளையும் படைத்து அவர்கள் படைத்தல், காத்தல், அழித்தல் என்னும் முத்தொழில்களையும் செய்யும் வண்ணம் அவர் தம் சக்தியராய் தானே அமர்ந்தாள் என்பது சாக்த மரபு. அதனை இங்கே சொல்கிறார் பட்டர். ஒரே நேரத்தில் அன்னை சங்கரனாருக்கு மனைவியாகவும் அன்னையாகவும் இருக்கிறாள். அவள் எல்லா தெய்வங்களுக்கும் மேலை இறைவியும் ஆவாள். வேறு தெய்வங்கள் தரும் பயன்கள் எல்லாவற்றையும் அவர்களுக்கு ஆதியான அன்னை அருள்வாள்; அவற்றிற்கு மேலாக முக்தியையும் அவள் அருள்வாள் என்பதால் வேறு தெய்வங்களைப் பணிய வேண்டிய தேவை இல்லை என்பதையும் கடைசி அடியினில் சொல்கிறார். அந்தாதித் தொடை: இருந்தவளே என்று சென்ற பாடல் நிறைவுற்றது. இந்தப் பாடல் தவளே என்று தொடங்கியது. இந்தப் பாடல் தொண்டு செய்தே என்று நிறைவுறுகிறது. அடுத்தப் பாடல் தொண்டு செய்யாது என்று தொடங்கும். எதுகை: தவளே, அவளே, இவளே, துவளேன் என்று அமைந்திருக்கிறது. மோனை: தவளே – சங்கரனார் (தகரமும் சகரமும் மோனைகளாக அமையும்), அவளே – அவர் – அன்னை – ஆயினள் – ஆகையினால், இவளே – யாவர்க்கும் – இறைவியும் (இகரமும் யகரமும் மோனைகளாக அமையும்), துவளேன் – தெய்வம் – தொண்டு – செய்தே.  இப்பாடலை தொடர்ந்து பாராயனம் செய்தால் ‘பேதபுத்தி நீங்கும்’. பாடல் 45 - பொறுக்கை நன்றே பின் வெறுக்கை அன்றே [] பாடல்: தொண்டு செய்யாது நின் பாதம் தொழாது துணிந்து இச்சையே பண்டு செய்தார் உளரோ இலரோ அப்பரிசு அடியேன் கண்டு செய்தால் அது கைதவமோ அன்றிச் செய்தவமோ மிண்டு செய்தாலும் பொறுக்கை நன்றே பின் வெறுக்கை அன்றே பொருள்: தொண்டு செய்யாது – உனக்கும் உன் அடியார்களுக்கும் தொண்டு செய்யாமல் நின் பாதம் தொழாது – உன் திருவடிகளை வணங்காமல் (உன் திருவடிகளான அடியார்களை வணங்காமல்) துணிந்து இச்சையே பண்டு செய்தார் உளரோ இலரோ – துணிவுடன் தங்கள் மனம் விரும்பியதையே பழங்காலத்தில் செய்தவர்கள் இருக்கிறார்களோ இல்லையோ (அவர்கள் உன் அருளைப் பெற்று என்றும் நிலையான வாழ்வை அடைந்தார்களோ இல்லையோ) அப்பரிசு அடியேன் கண்டு செய்தால் அது கைதவமோ அன்றிச் செய்தவமோ – அவர்கள் செய்ததை அடியேன் கண்டு அதனைப் போல் செய்தால் அது நல்லதோ கெட்டதோ மிண்டு செய்தாலும் பொறுக்கை நன்றே பின் வெறுக்கை அன்றே – அப்படியே நான் உன் மனம் விரும்பாததைச் செய்தாலும் என்னை வெறுக்காமல் பொறுத்தருள வேண்டும். விளக்கம்:பக்தி வழியில் நிற்காமல் ஞானவழியிலும் கர்மவழியிலும் நின்று கடமைகளைச் செய்த முன்னோர்கள் பலர் உண்டு; அவர்களை ‘தொண்டு செய்யாது நின் பாதம் தொழாது துணிந்து இச்சையே பண்டு செய்தார் உளரோ இலரோ’ என்கிறார். இங்கே இச்சை என்றது அவளது இச்சைவழி வந்த கடமைகளை. கடமை புரிவார் இன்புறுவார்; அவற்றை மட்டுமே தவறாமல் செய்தால் போதும்; இறைவியை வணங்கத் தேவையில்லை – என்று அந்த கர்ம மீமாம்சை வழி நின்றவர்கள் முன்னொரு காலத்தில் இருந்தார்கள். அவர்கள் உன் அருள் பெற்று நிலையான வாழ்வு அடைந்தார்களோ இல்லையோ. அதனை நான் அறியேன் என்கிறார். உன் அடியவன் ஆன நான் அவர்களைக் கண்டு உன்னை விட என் கடமைகளே பெரியது என்று எண்ணிச் செயல்பட்டால் அது நல்லதோ கெட்டதோ; அதனைத் தவமாகக் கொள்வாயோ குற்றமாகக் கொள்வாயோ; அதனை அறியேன். ஆனால் எப்போதாவது அப்படி நான் செய்தால் நீ பொறுத்துக் கொள்ள வேண்டும்; குற்றம் செய்தேன் என்று என்னைத் தள்ளிவிடாதே என்கிறார். அந்தாதித் தொடை: தொண்டு செய்தே என்று சென்ற பாடல் நிறைவுற்றது. இந்தப் பாடல் தொண்டு செய்யாது என்று தொடங்கிற்று. வெறுக்கை அன்றே என்று நிறைந்தது இந்தப் பாடல். அடுத்தப் பாடல் வெறுக்கும் தகைமைகள் என்று தொடங்கும். எதுகை: தொண்டு செய்யாது, பண்டு செய்தார், கண்டு செய்தால், மிண்டு செய்தாலும் என்று இரண்டிரண்டு எதுகைகள் அமைந்திருக்கின்றன. மோனை: தொண்டு – செய்யாது – தொழாது – துணிந்து, பண்டு – பரிசு, கண்டு – கைதவம், மிண்டு – பொறுக்கை – பின் (பகரமும் மகரமும் மோனைகளாக அமையும்) உளரோ இலரோ, கைதவமோ செய்தவமோ, நன்றே அன்றே – இந்த இடங்களில் முரண் தொடை அமைந்திருக்கிறது. கைதவம் என்றால் வஞ்சனை, பொய், சூது எனவும், செய்தவம் என்றால் செய்கின்ற தவம், தவம் செய்தல் என்வும் வரும்.  இதை ஔவையார் அழகாகச் சொல்லியிருக்கிறார், கொன்றைவேந்தனில்! “32. செய்தவம் மறந்தால் கைதவம் ஆளும்.” நல்ல செயல்கள், தவம் செய்வதை மறந்தால், வஞ்சனையும், சூதும் மேலோங்கும். “செய்தவம் ஈண்டு முயலப்படும்” என வள்ளுவரும் சொல்லுகிறார்[265] //தொண்டு செய்யாது நின் பாதம் தொழாது துணிந்து இச்சையே பண்டு செய்தார் உளரோ இலரோ // இந்த வரிகளுக்கு நீங்கள் கூறியதுபோல ஞான வழியிலும், கர்ம வழியிலும் நின்று கடமைகளை செய்த பெரியோர்களைக் குறிப்பதாகக் கொள்ளலாம். அல்லது பக்தி மார்க்கத்தில் சென்று, சரியை, கிரியைகளைக் கடந்து அனுபூதியடைந்து அன்னையை “நெஞ்சகமே கோயில், நினைவே சுகந்தம், அன்பே மஞ்சனநீர்” என்று அல்லும் பகலும் பூசிக்கும் முக்தர்களைக் குறிப்பதாகக் கொள்ளலாம். ஆன்மசமர்ப்பண பாவனையால் அவர்கள் இயல்பாகப் பேசும் பேச்செல்லாம் அவள் துதிகள் ஆகின்றன. அவர்கள் நடக்கும் நடையெல்லாம் அவள் ஆலயத்தை வலம் வருதல் ஆகின்றன. அவர்கள் செய்யும் செயல்களெல்லாம் பூசை முறைகளாகின்றன. படுப்பதும் அவளை விழுந்து வணங்குவதாகிறது. இந்த தாயுமானவர் பாடலைப் பாருங்கள் “துள்ளுறியா மனது பலிகொடுத்தேன் கர்ம துட்டதேவதைகளில்லை துரியநிலை சாந்ததேவதையாம் உனக்கே தொழும்பன் அன்பு அபிடேக நீர் உள்ளுறையில் என் ஆவி நைவேத்தியம் பிராணன் ஓங்குமதி தூபதீபம் ஒருகால மன்றிது சதாகால பூசையா ஒப்புவித்தேன்” //அப்பரிசு அடியேன் கண்டு செய்தால் அது கைதவமோ அன்றிச் செய்தவமோ // அன்னையின் ஓளிமயமான உருவத்தை அல்லும் பகலும் மனக்கண்ணில் காணும் மயக்கத்தால் மன்னன் என்ன திதி என்று கேட்டபோது அமாவாசை அன்று “பௌர்ணமி” என்று கூறிய பட்டர் அன்னையை இவ்வாறு கேட்கத் தேவையே இல்லை. 10 ஆவது பாடலிலேயே “நின்றும் இருந்தும் கிடந்தும் நடந்தும் நினைப்பது உன்னை, என்றும் வணங்குவது உன் மலர்த் தாள்” என்று சொல்லிவிட்டாரே. இதை நமக்காகக் கேட்கிறார் என்று கொள்ளலாம். பாடல் 46 - யானுன்னை வாழ்த்துவனே [] பாடல்: வெறுக்கும் தகைமைகள் செய்யினும் தம் அடியாரை மிக்கோர் பொறுக்கும் தகைமை புதியது அன்றே புது நஞ்சை உண்டு கறுக்கும் திருமிடற்றான் இடப்பாகம் கலந்த பொன்னே மறுக்கும் தகைமைகள் செய்யினும் யானுன்னை வாழ்த்துவனே பொருள்: வெறுக்கும் தகைமைகள் செய்யினும் – வெறுக்கும் செயல்களைச் செய்துவிட்டாலும் தம் அடியாரை – தம் அடியவர்களை மிக்கோர் பொறுக்கும் தகைமை புதியது அன்றே – பெரியவர்கள் பொறுத்துக் கொள்ளும் செயல் புதியது இல்லையே. புது நஞ்சை உண்டு கறுக்கும் திருமிடற்றான் இடப்பாகம் கலந்த பொன்னே – அப்போதே தோன்றிய ஆலால விடத்தை உண்டு அதனால் கறுக்கும் திருத்தொண்டையை உடைய சிவபெருமானின் இடப்பாகத்தில் கலந்த பொன்மகளே மறுக்கும் தகைமைகள் செய்யினும் யானுன்னை வாழ்த்துவனே – நான் தகாத வழியில் செல்பவன்; ஆயினும் யான் உன்னை எப்போதும் வாழ்த்துவேனே. விளக்கம்: பொருள் விளக்கம் தேவையில்லை. மிக எளிமையான பாடல் இது. அந்தாதித் தொடை: சென்ற பாடல் வெறுக்கை அன்றே என்று முடிந்தது. இந்தப் பாடல் வெறுக்கும் தகைமைகள் என்று தொடங்கியது. இந்தப் பாடல் வாழ்த்துவனே என்று முடிகின்றது. அடுத்தப் பாடல் வாழும்படி என்று தொடங்கும். எதுகை: வெறுக்கும், பொறுக்கும், கறுக்கும், மறுக்கும். மோனை: வெறுக்கும் – மிக்கோர், பொறுக்கும் – புதியது – புது, கறுக்கும் – கலந்த, மறுக்கும் – வாழ்த்துவனே. இப்பாடலை தொடர்ந்து பாராயனம் செய்தால் ‘எல்லாவிதமான நடத்தை தோஷங்களும் தீரும்’. பாடல் 47 - வாழும் படி ஒன்று கண்டு கொண்டேன் [] பாடல்: வாழும் படி ஒன்று கண்டு கொண்டேன் மனத்தே ஒருவர் வீழும் படி அன்று விள்ளும் படி அன்று வேலை நிலம் ஏழும் பருவரை எட்டும் எட்டாமல் இரவு பகல் சூழும் சுடர்க்கு நடுவே கிடந்து சுடர்கின்றதே பொருள்: வாழும் படி ஒன்று கண்டு கொண்டேன் மனத்தே – என்றும் நிலைத்து வாழும் வகையை என் மனத்தில் கண்டு கொண்டேன் ஒருவர் வீழும் படி அன்று – அந்த வழியைக் கண்டவர் யாரும் அழிவதில்லை விள்ளும் படி அன்று – அந்த வழியைக் கண்டவர்கள் மற்றவர்களுக்கு அதனைச் சொல்லுவதும் எளிதில்லை வேலை நிலம் ஏழும் – கடலால் சூழப்பட்ட ஏழு தீவுகளும் பருவரை எட்டும் – எட்டு உயர்ந்த மலைகளும் எட்டாமல் – எட்டாமல் (அப்பாலுக்கு அப்பாலாய்) இரவு பகல் சூழும் சுடர்க்கு நடுவே கிடந்து சுடர்கின்றதே – இரவில் வரும் நிலவென்னும் சுடர், பகலில் வரும் பகலவன் என்னும் சுடர் இவ்விரண்டு சுடர்களிலும் ஒளியாக நின்று சுடர்கின்றது அந்தப் பேரொளி. விளக்கம்:நிலையான பேரின்ப வாழ்வை அடையும் வழியை அன்னையின் அருளால் கண்டு கொண்டவர் அந்தப் பேரொளி உலகங்களுக்கெல்லாம் எட்டாமல் சுடரிரண்டிலும் சுடர்கின்றது என்று மட்டுமே சொல்ல முடிகிறது என்கிறார். கண்டவர் விண்டிலர்; விண்டவர் கண்டிலர் என்ற முதுமொழியையும் அணுவிற்குள் அணுவாய் அப்பாலுக்கு அப்பாலாய் என்ற ஆன்றோர் மொழியையும் சூரிய சந்திர மண்டலத்தில் வசிப்பவள் என்ற வேதமொழியையும் இந்தப் பாடலில் காணமுடிகின்றது. அருஞ்சொற்பொருள்: விள்ளுதல் – பிரித்துப் பிரித்து விளக்கமாகச் சொல்லுதல் வேலை – கடல் பரு வரை – பெரிய (பருத்த) மலை அந்தாதித் தொடை: சென்ற பாடல் வாழ்த்துவனே என்று நிறைந்தது. இந்தப் பாடல் வாழும்படி என்று தொடங்கியது. இந்தப் பாடல் சுடர்கின்றதே என்று நிறைந்தது. அடுத்தப் பாடல் சுடரும் என்று தொடங்கும். எதுகை: வாழும், வீழும், ஏழும், சூழும் மோனை: வாழும் – ஒன்று – மனத்தே – ஒருவர், வீழும் – விள்ளும் – வேலை, ஏழும் – எட்டும் – எட்டாமல் – இரவு, சூழும் – சுடர்க்கு – சுடர்கின்றதே. வாழும்படி – வீழும்படி, எட்டும் – எட்டாமல், இரவு பகல், போன்ற இடங்களில் முரண் தொடை அமைந்துள்ளது. இப்பாடலை தொடர்ந்து பாராயனம் செய்தால் ‘யோகசித்தி பெறலாம்’. பாடல் 48 - படரும் பரிமளப் பச்சைக்கொடி பாடல்: [] சுடரும் கலைமதி துன்றும் சடைமுடிக் குன்றில் ஒன்றி படரும் பரிமளப் பச்சைக்கொடியைப் பதித்து நெஞ்சில் இடரும் தவிர்த்து இமைப்போது இருப்பார் பின்னும் எய்துவரோ குடரும் கொழுவும் குருதியும் தோயும் குரம்பையிலே பொருள்: சுடரும் கலைமதி துன்றும் சடைமுடிக் குன்றில் – சுடர் வீசும் நிலாத்துண்டு தங்கி வாழும் சடைமுடியை உடைய சிறு குன்று போன்ற சிவபெருமானின் மேல் ஒன்றிப் படரும் பரிமளப் பச்சைக்கொடியைப் – ஒன்றிப் படர்கின்ற மணம்வீசும் பச்சைக் கொடியைப் போன்ற அம்மையை பதித்து நெஞ்சில் – மனத்தில் நிலையாகக் கொண்டு இடரும் தவிர்த்து – இன்ப துன்பங்கள் என்ற இடர்களைத் தவிர்த்து இமைப்போது இருப்பார் – இமைப்பொழுதாகிலும் தியானத்தில் இருப்பார் பின்னும் எய்துவரோ குடரும் கொழுவும் குருதியும் தோயும் குரம்பையிலே – குடலும் இறைச்சியும் குருதியும் தோயும் இந்த உடம்பை மீண்டும் எய்துவார்களா? மாட்டார்கள். விளக்கம்:ஐயன் சிவந்தவன். உயர்ந்தவன். சடைமுடியை உடையவன். நிலவை அணிந்தவன். இவற்றை எல்லாம் பார்த்தவுடன் அபிராமிபட்டருக்கு கொடுமுடியில் நிலாப்பிறையைக் கொண்ட சிறு குன்று நினைவிற்கு வந்தது போலும். அந்தக் குன்றில் படர்ந்த மணம்வீசும் பச்சைக் கொடி போல் அம்மை இருக்கிறாள். பொருத்தமான உவமைகள். அழகிய காட்சிகளை மனத்தில் நிறுத்துவது எளிது. சிறு குன்றில் படர்ந்த பச்சைக் கொடி என்பது மிக அழகிய காட்சி தானே. அந்த அழகிய காட்சியை ஒரு நொடியேனும் மனச்சலனமின்றி மனத்தில் நிறுத்த வல்லார்கள் மீண்டும் பிறப்பிறப்பு என்ற சுழலில் அகப்பட மாட்டார்கள் என்பது பட்டரின் அறிவுரை. செவி சாய்ப்போம். அருஞ்சொற்பொருள்: துன்றும் – தங்கும் பரிமளம் – நறுமணம் குடர் – குடல் கொழு – இறைச்சி குருதி – இரத்தம் குரம்பை – உடல் அந்தாதித் தொடை: சுடர்கின்றதே என்று நிறைந்தது சென்ற பாடல். சுடரும் என்று தொடங்கிற்று இந்தப் பாடல். குரம்பையிலே என்று முடிந்தது இந்தப் பாடல். குரம்பை அடுத்து என்று தொடங்கும் அடுத்தப் பாடல். எதுகை: சுடரும், படரும், இடரும், குடரும் மோனை: சுடரும் – துன்றும் – சடைமுடி, படரும் – பரிமள – பச்சைகொடி – பதித்து, இடரும் – இமைப்போது – இருப்பார் – எய்துவரோ, குடரும் – கொழுவும் – குருதியும் – குரம்பையிலே. இப்பாடலை தொடர்ந்து பாராயனம் செய்தால் ‘சரீரப் பற்று நீங்கும்’. பாடல் 49 - இசை வடிவாய் நின்ற நாயகியே பாடல்: குரம்பை அடுத்து குடிபுக்க ஆவி வெங்கூற்றுக்கு இட்ட வரம்பை அடுத்து மறுகும் அப்போது வளைக்கை அமைத்து அரம்பை அடுத்த அரிவையர் சூழ வந்து அஞ்சல் என்பாய் நரம்பை அடுத்து இசை வடிவாய் நின்ற நாயகியே பொருள்: குரம்பை அடுத்து குடிபுக்க ஆவி – உடலை அடிப்படையாகக் கொண்டு அதனில் குடிவந்த உயிர் வெங்கூற்றுக்கு இட்ட வரம்பை அடுத்து மறுகும் அப்போது – வெம்மையுடைய கூற்றுவன் (யமன்) வரும் கால அளவினை அடையும் போது வளைக்கை அமைத்து – வளையல்கள் அணிந்த உன் திருக்கரங்களை அசைத்து அரம்பை அடுத்த அரிவையர் சூழ வந்து – அரம்பையைப் போன்ற பெண்கள் சூழ வந்து அஞ்சல் என்பாய் – அஞ்சாதே என்று கூறுவாய் நரம்பை அடுத்து இசை வடிவாய் நின்ற நாயகியே – நரம்பைக் கொண்டு இசை எழுப்பும் வீணையைப் போன்ற இசைக்கருவிகளின் இசை வடிவாய் நிற்கும் தலைவியே. விளக்கம்: உடலில்லாமல் உயிர் இல்லை; உயிரில்லாமல் உடல் இல்லை. உடலை அடிப்படையாகக் கொண்டே உயிர் இயங்குகிறது. அந்த உடலும் உயிரும் இணைந்திருக்க ஒரு கால அளவு விதிக்கப்படுகிறது. அந்தக் கால வரம்பு வரை காலன் வருவதில்லை. அந்தக் கால வரம்பு முடிந்தவுடன் காலன் வரும் நேரத்தில் உயிர் இந்த உடலை விட்டுச் செல்ல பயந்து மறுகுகிறது. அந்த நேரத்தில் ஒரு நல்ல இசை கேட்டால் உயிருக்கு அந்த மரண வேதனை குறையும். இசையே வடிவாய் நிற்கும் அபிராமி அன்னை அந்த நேரத்தில் அழகில் சிறந்த மகளிர் சூழ வந்து தன் திருக்கரங்களை அசைத்து அஞ்சாதே என்று சொன்னால்? அந்த மரண பயமும் மரண வேதனையும் சொல்லாமல் கொள்ளாமல் ஓடுமில்லையா? அதனால் அப்போதைக்கு இப்போதே சொல்லி வைக்கிறார் அபிராமி பட்டர். அந்தாதித் தொடை: சென்ற பாடல் குரம்பையிலே என்று முடிந்தது. இந்தப்பாடல் குரம்பை அடுத்து என்று தொடங்கியது. இந்தப் பாடல் நாயகியே என்று முடிகிறது. அடுத்தப் பாடல் நாயகி என்று தொடங்கும். அடுத்த பாடல் பலருக்கும் தெரிந்த மிகப் பிரபலமான பாடல். எதுகை: முதல் இரண்டு சொற்களும் எதுகையாக அமைத்திருக்கிறார். குரம்பை அடுத்து – வரம்பை அடுத்து – அரம்பை அடுத்த – நரம்பை அடுத்து. மோனை: குரம்பை – குடி – கூற்றுக்கு, வரம்பை – மறுகும் – வளைக்கை, அரம்பை – அடுத்த – அரிவையர் – அஞ்சல், நரம்பை – நின்ற – நாயகியே. இப்பாடலை தொடர்ந்து பாராயனம் செய்தால் ‘மரணாவஸ்தை இல்லது ஒழியும்’. பாடல் 50 - நாயகி நான்முகி நாராயணி [] பாடல்: நாயகி நான்முகி நாராயணி கை நளின பஞ்ச சாயகி சாம்பவி சங்கரி சாமளை சாதி நச்சு வாயகி மாலினி வாராகி சூலினி மாதங்கி என்று ஆயகியாதி உடையாள் சரணம் அரண் நமக்கே பொருள்: நாயகி – உலகனைத்துக்கும் தலைவி நான்முகி – நான்முகனான பிரம்மதேவரின் சக்தி நாராயணி – நாராயணனின் சக்தி கை நளின பஞ்ச சாயகி – தாமரை போன்ற திருக்கரங்களில் ஐந்து மலரம்புகளைத் தாங்கியவள் சாம்பவி – சம்புவான சிவபெருமானின் சக்தி சங்கரி – இன்பம் அருள்பவள் சாமளை – பச்சை வண்ணமுடையவள் சாதி நச்சு வாய் அகி – கொடிய நச்சினை வாயில் உடைய பாம்பை அணிந்தவள் மாலினி – பலவிதமான மாலைகளை அணிந்தவள் வாராகி – உலகங்கள் காக்கும் வராக ரூபிணி சூலினி – திரிசூலம் ஏந்தியவள் மாதங்கி – மதங்க முனிவரின் திருமகள் என்று ஆய கியாதி உடையாள் சரணம் அரண் நமக்கே – என்று பலவித புகழ்களை உடையவளின் திருப்பாதங்கள் நமக்கு காவலாகும். விளக்கம்: அம்மையின் திருப்பெயர்கள் பலவற்றைக் கூறி அவளைத் துதித்து அவள் திருவடிகளே நமக்குக் காவல் என்கிறார். அருஞ்சொற்பொருள்: நளினம் – வடமொழியில் தாமரை பஞ்ச – வடமொழியில் ஐந்து சாயகம் – வடமொழியில் அம்பு சம்பு, சங்கர – சம் = இன்பம்; பு = பிறப்பிடம்; கர = செய்பவன்; ஆக சம்பு, சங்கரன் என்னும் போது இன்பத்தின் பிறப்பிடம், இன்பத்தைத் தருபவன் என்று பொருள்; சாம்பவி, சங்கரி அவற்றிற்குப் பெண்பால். இவையும் வடசொற்களே. சாமளை – ஷ்யாமளை என்னும் வடசொல் – பச்சைநிறத்தவள் கியாதி – க்யாதி என்னும் வடசொல் – புகழ். அந்தாதித் தொடை: நாயகியே என்று சென்ற பாடல் நிறைவடைந்தது. நாயகி என்று இந்தப் பாடல் தொடங்கியது. அரண் நமக்கே என்று இந்தப் பாடல் நிறைகிறது. அரணம் என்று அடுத்தப் பாடல் துவங்கும். எதுகை: நாயகி, சாயகி, வாயகி, ஆயகியாதி மோனை: நாயகி – நான்முகி – நாராயணி – நளின, சாயகி – சாம்பவி – சங்கரி – சாதி, வாயகி – வாராகி – மாதங்கி, ஆய – அரண். இப்பாடலை தொடர்ந்து பாராயனம் செய்தால் ‘அம்பிகையை நேரில் தரிசிக்கலாம்’. பாடல் 51 - மரணம் பிறவி இரண்டும் எய்தார் [] பாடல்: அரணம் பொருள் என்று அருள் ஒன்றும் இலாத அசுரர் தங்கள் முரண் அன்று அழிய முனிந்த பெம்மானும் முகுந்தனுமே சரணம் சரணம் என நின்ற நாயகி தன் அடியார் மரணம் பிறவி இரண்டும் எய்தார் இந்த வையகத்தே பொருள்: அரணம் பொருள் என்று - தாங்கள் கட்டிய திரிபுரம் என்னும் தங்கம், வெள்ளி, இரும்பினால் ஆன கோட்டைகளை நிலையென்று நினைத்து அருள் ஒன்றும் இலாத - யார் மேலும் கருணை என்பதே இல்லாமல் கொடுமைகள் செய்து திரிந்த அசுரர் தங்கள் - திரிபுர அசுரர்களின் முரண் அன்று அழிய - பகை முன்னொரு நாள் அழிந்து போகும் படி முனிந்த பெம்மானும் - சினம் கொண்டு சிரித்து எரி கொளுத்திய சிவபெருமானும் முகுந்தனுமே - அவருக்குத் துணையாக அம்பாகி நின்ற முகுந்தனும் சரணம் சரணம் என நின்ற நாயகி - சரணம் சரணம் என்று அடிபணிய நிற்கும் தலைவியான அம்மையே! தன் அடியார் மரணம் பிறவி இரண்டும் எய்தார் இந்த வையகத்தே - அவள் தம் அடியவர்கள் மரணமில்லா பெருவாழ்வை எய்துவார்கள். இந்த உலகில் மீண்டும் இறப்பு, மீண்டும் பிறப்பு என்ற சுழலுக்குள் அகப்படமாட்டார்கள். அருஞ்சொற்பொருள்:  அரணம்: கோட்டை, மதில் முரண்: முரண்பாடு, பகைமை முனிதல்: சினம் கொள்ளுதல் அந்தாதித் தொடை: சென்ற பாடல் அரண் நமக்கே என்று நிறைந்தது. இந்தப் பாடல் அரணம் என்று தொடங்கியது. இந்தப் பாடல் வையகத்தே என்று முடிகிறது. அடுத்தப் பாடல் வையம் என்று தொடங்கும். எதுகை: அரணம், முரண், சரணம், மரணம் மோனை: அரணம் – அருள் – அசுரர், முரண் – முனிந்த – முகுந்தனுமே, சரணம் – சரணம் – தன், இரண்டும் – இந்த சரியான பலன் தொடர்ந்து பாராயனம் செய்ய ‘மோகம் நீங்கும்’.     பாடல் 52 - பிறை முடித்த ஐயன் திருமனையாள் [] பாடல்: வையம் துரகம் மதகரி மாமகுடம் சிவிகை பெய்யும் கனகம் பெருவிலை ஆரம் பிறை முடித்த ஐயன் திருமனையாள் அடித் தாமரைக்கு அன்பு முன்பு செய்யும் தவமுடையார்க்கு உளவாகிய சின்னங்களே பொருள்: வையம் – ஆளுவதற்குப் பெரும் பூமி  துரகம் – ஏறி ஊரையும் நாட்டையும் வலம் வர அழகிய குதிரைகள்  மதகரி – பெரிய பெரிய யானைகள்  மாமகுடம் – உயர்ந்த மணிமுடிகள்  சிவிகை – அழகிய பல்லக்கு  பெய்யும் கனகம் – சிற்றரசர்கள் வந்துப் பணிந்து, கப்பமாகக் கொட்டும் தங்கம்  பெருவிலை ஆரம் – விலை மதிப்பு வாய்ந்த மணி மாலைகள்  பிறை முடித்த ஐயன் திருமனையாள் – நிலாத்துண்டைத் திருமுடியில் சூடிய ஐயனின் மனையாளாகிய அன்னையின்  அடித் தாமரைக்கு – திருவடித்தாமரைகளுக்கு  அன்பு முன்பு செய்யும் தவமுடையார்க்கு – பக்தி முன்பொரு நாள் செய்யும் பாக்கியமுடையவர்களுக்கு  உளவாகிய சின்னங்களே – கிடைக்கும் அடையாளங்கள். இவையெல்லாம் பேரரசர்களின் சின்னங்கள். அன்னையைப் பணியும் பாக்கியம் பெற்றவர்கள் பேரரசர்கள் ஆவார்கள் என்பது பாடலின் பொருள். விளக்கம்: அந்தாதித் தொடை: சென்ற பாடல் வையகத்தே என்று நிறைந்தது. இந்தப் பாடல் வையம் என்று தொடங்குகிறது. இந்தப் பாடல் சின்னங்களே என்று நிறைகிறது. அடுத்தப் பாடல் சின்னஞ்சிறிய என்று தொடங்கும். எதுகை: வையம், பெய்யும், ஐயன், செய்யும் மோனை: வையம் – மதகரி – மாமகுடம், பெய்யும் – பெருவிலை – பிறைமுடித்த, ஐயன் – அடி – அன்பு, செய்யும் – தவம் – சின்னங்களே. இப்பாடலை தொடர்ந்து பாராயனம் செய்தால் ‘இம்மையில் பெருஞ்செல்வம் உண்டாகும்’. பாடல் 53 - தன்னந்தனி இருக்க வேண்டும்! [] பாடல்: சின்னஞ்சிறிய மருங்கினில் சாத்திய செய்யபட்டும் பென்னம்பெரிய முலையும் முத்தாரமும் பிச்சி மொய்த்த கன்னங்கரிய குழலும் கண் மூன்றும் கருத்தில் வைத்துத் தன்னந்தனியிருப்பார்க்கு இது போலும் தவமில்லையே  பொருள்: சின்னஞ்சிறிய மருங்கினில் சாத்திய செய்யபட்டும் – உன் சின்னஞ்சிறிய இடையில் அணிந்திருக்கும் சிவந்த பட்டாடையையும்  பென்னம்பெரிய முலையும் – உன் பெரிய முலைகளையும்  முத்தாரமும் – அந்த முலையின் மேல் இருக்கும் முத்து மாலையையும்  பிச்சி மொய்த்த கன்னங்கரிய குழலும் – பிச்சிப்பூ சூடியிருக்கும் கரிய கூந்தலும்  கண் மூன்றும் – மூன்று கண்களையும்  கருத்தில் வைத்துத் – மனத்தில் நிறுத்தி  தன்னந்தனியிருப்பார்க்கு – மற்ற எந்த நினைவுகளும் இன்றித் தன்னந்தனியாக இருப்பவர்களைப் போல்  இது போலும் தவமில்லையே – தவத்தில் சிறந்தவர்கள் வேறு எவருமில்லை.   விளக்கம்: தாய்ப்பால் உண்ணும் குழந்தையின் கவனமெல்லாம் தாயின் முலை மீதே இருக்கும். அபிராமி அன்னையின் தவப்புதல்வனான அபிராமி பட்டரின் கவனமும் தாயின் பெரிய முலைகள் மீதே இருக்கிறது. தன்னந்தனியாக மற்ற யாரும் இல்லாமல் இருப்பது தவமாகாது. பலவிதமான எண்ணக் கூட்டங்களுடன் இருக்கும் வரை தன்னந்தனியாக யாரும் இருப்பதில்லை. வேறு வித எண்ணங்கள் எதுவுமின்றி அன்னையின் திருவுருவம் ஒன்றே மனத்தில் நிற்கும் போது தான் தன்னந்தனியாக இருப்பது சாத்தியமாகிறது; அப்படி இருப்பவர்களை விட தவத்தில் சிறந்தவர் வேறு எவரும் இல்லை. ‘சின்னஞ்சிறு பெண் போலே’ என்று தொடங்கும் பாடல் இந்தப் பாடலின் எதிரொலி போல் எனக்குத் தோன்றுகிறது. ‘சிற்றாடை இடை நிறுத்தி’ என்னும் போதும் ‘பிச்சிப்பூ சூடி நிற்பாள்’ என்னும் போதும். அந்தாதித் தொடை: சென்ற பாடல் சின்னங்களே என்று நிறைந்தது. இந்தப் பாடல் சின்னஞ்சிறிய என்று தொடங்குகிறது. இந்தப் பாடல் தவமில்லையே என்று நிறைகிறது. அடுத்தப் பாடல் இல்லாமை சொல்லி என்று தொடங்கும். எதுகை: சின்னஞ்சிறிய, பென்னம்பெரிய, கன்னங்கரிய, தன்னந்தனி. மோனை: சின்னஞ்சிறிய – சாத்திய – செய்யபட்டும், பென்னம்பெரிய – முலையும் – முத்தாரமும் – பிச்சி, கன்னங்கரிய – குழலும் – கண் – கருத்தில், தன்னந்தனி – தவமில்லையே. இப்பாடலை தொடர்ந்து பாராயனம் செய்தால் ‘மாயை அகலும்’. பாடல் 54 - திரிபுரை பாதங்கள் சேர்மின்களே பாடல்: இல்லாமை சொல்லி ஒருவர் தம்பால் சென்று இழிவுபட்டு நில்லாமை நினைகுவிரேல் நித்தம் நீடு தவம் கல்லாமை கற்ற கயவர் தம்பால் ஒரு காலத்தும் செல்லாமை வைத்த திரிபுரை பாதங்கள் சேர்மின்களே பொருள்: இல்லாமை சொல்லி – வறுமையைச் சொல்லிக் கொண்டு ஒருவர் தம்பால் சென்று – முன்பின் தெரியாத ஒருவரிடம் (தெரிந்திருந்தாலும் உதவி கேட்க வருவதால் தெரியாதவர் போல் நடந்து கொள்ளும் ஒருவரிடம்) சென்று உதவி கேட்டு இழிவுபட்டு – அவரால் அவமானப்படுத்தப்பட்டு நில்லாமை நினைகுவிரேல் – நிற்கும் நிலையை அடையாமல் இருக்க நினைப்பீர்களானால் நித்தம் நீடு தவம் – எப்போதும் பெருமை மிக்க தவத்தை கல்லாமை கற்ற கயவர் தம்பால் – செய்யாமல் இருப்பது எப்படி என்று நன்கு கற்ற கயவர்கள் தம்மிடம் ஒரு காலத்தும் செல்லாமை வைத்த – எந்தக் காலத்திலும் சென்று நிற்கும் நிலையை எனக்கு ஏற்படுத்தாத திரிபுரை பாதங்கள் சேர்மின்களே – மூன்று உலகங்களையும் உடையவளின் திருவடிகளைத் தொழுங்கள். விளக்கம்: முன்பின் தெரியாத அல்லது அப்படிக் காட்டிக் கொள்ளும் உறவினரோ அல்லாதவரோ அவர்களிடம் உதவி கேட்டு நிற்பது மிக்க அவமானம் அல்லவோ? அதனால் யாரோ ஒருவரிடம் என்று பொருள் படும் படி ‘ஒருவர் தம்பால்’ என்கிறார். பொருட்செல்வமும் வேண்டும் அருட்செல்வமும் வேண்டும் என்பது பொய்யாமொழி வாக்கு. அதனால் பொருள் வேண்டுவோரும் அன்னையைத் தொழவேண்டும்; அருள் வேண்டுவோரும் அவளைத் தொழவேண்டும் என்று இந்தப் பாடலில் சொல்கிறார். ஒரு காலமும் தப்பித் தவறிக் கூட இறைவனை வணங்கமாட்டேன் என்று இருப்பவரை ‘கல்லாமை கற்றவர்’ என்று நயம்பட சொல்கிறார். அந்தாதித் தொடை: முந்தையப் பாடல் தவமில்லையே என்று நிறைந்தது. இந்தப் பாடல் இல்லாமை சொல்லி என்று தொடங்குகிறது. இந்தப் பாடல் சேர்மின்களே என்று நிறைய அடுத்தப் பாடல் மின்னாயிரம் என்று தொடங்குகிறது. எதுகை: இல்லாமை, நில்லாமை, கல்லாமை, செல்லாமை மோனை: இல்லாமை – இழிவுபட்டு, நில்லாமை – நெஞ்சில் – நினைகுவிரேல் – நித்தம் – நீடுதவம், கல்லாமை – கற்ற – கயவர் – காலத்திலும், செல்லாமை – திரிபுரை – சேர்மின்களே. இப்பாடலை தொடர்ந்து பாராயனம் செய்தால் ‘கடன் தொல்லைகள் தீரும்’. பாடல் 55 - மின் ஆயிரம் ஒரு மெய் வடிவு ஆகி விளங்குகின்றது [] பாடல்: மின்னாயிரம் ஒரு மெய் வடிவு ஆகி விளங்குகின்றது அன்னாள் அகம் மகிழ் ஆனந்தவல்லி அருமறைக்கு முன்னாய் நடு எங்குமாய் முடிவாய முதல்வி தன்னை உன்னாது ஒழியினும் உன்னினும் வேண்டுவது ஒன்றில்லையே பொருள்: மின்னாயிரம் ஒரு மெய் வடிவு ஆகி விளங்குகின்றது அன்னாள் – ஆயிரம் மின்னல்கள் ஒரே நேரத்தில் உண்மை வடிவாகி விளங்குவதைப் போல் ஒளியுடையத் திருமேனி கொண்டவளை அகம் மகிழ் ஆனந்தவல்லி – என்றும் உள்ளத்தில் மகிழ்ச்சியே கொண்டிருக்கும் ஆனந்த வடிவானவளை அருமறைக்கு முன்னாய் நடு எங்குமாய் முடிவாய முதல்வி தன்னை – எல்லா வேதங்களுக்கும் தொடக்கமாகவும் நடுவாகவும் முடிவாகவும் மற்ற எந்த நிலையாகவும் நிற்கின்ற முதல்வியானவளை உன்னாது ஒழியினும் உன்னினும் வேண்டுவது ஒன்றில்லையே – உலக மக்கள் நினையாது விட்டாலும் நினைத்தாலும் அவளுக்கு ஆக வேண்டியது ஒன்றும் இல்லையே! விளக்கம்: அந்தாதித் தொடை: சென்ற பாடல் சேர்மின்களே என்று முடிவுற இந்தப்பாடல் மின்னாயிரம் என்று தொடங்கியது. இந்தப் பாடல் ஒன்றில்லையே என்று நிறைய அடுத்தப் பாடல் ஒன்றாய் அரும்பி என்று தொடங்கும். இப்படி ஒரு பாடலின் இறுதிச் சொல் அடுத்தப் பாடலின் முதல் சொல்லாக அமையத் தொடுத்துப் பாடுவது அந்தாதித் தொடை. எதுகை: மின்னாயிரம், அன்னாள், முன்னாய், உன்னாது மோனை: மின்னாயிரம் – மெய் – வடிவு – விளங்குகின்றது, அன்னாள் – அகம் – ஆனந்தவல்லி – அருமறைக்கு, முன்னாய் – முடிவாய – முதல்விதன்னை, உன்னாது – ஒழியினும் – உன்னினும் – ஒன்றில்லையே. இப்பாடலை தொடர்ந்து பாராயனம் செய்தால் ‘விருப்பு வெறுப்பற்ற மோனநிலை எய்யலாம்’. பாடல் 56 - இவ்வுலகு எங்குமாய் நின்றாள் பாடல்:[] ஒன்றாய் அரும்பி பலவாய் விரிந்து இவ்வுலகு எங்குமாய் நின்றாள் அனைத்தையும் நீங்கி நிற்பாள் என்றன் நெஞ்சினுள்ளே பொன்றாது நின்று புரிகின்றவாறிப்பொருள் அறிவார் அன்று ஆலிலையில் துயின்ற பெம்மானும் எம் ஐயனுமே பொருள்: ஒன்றாய் அரும்பி – ஒரே பொருளாய் முதலில் அரும்பி பலவாய் விரிந்து – பல பொருட்களாய் விரிந்து இவ்வுலகு எங்குமாய் நின்றாள் – இவ்வுலகம் எங்கும் இருக்கும் பொருட்கள் எல்லாமும் ஆகி நின்றாள் அனைத்தையும் நீங்கி நிற்பாள் – அவை எல்லாவற்றையும் தாண்டியும் நிற்பாள் (அப்பாலுக்கு அப்பாலாய்) என்றன் நெஞ்சினுள்ளே பொன்றாது நின்று புரிகின்றவாறு – (அப்படிப்பட்டவள் சிறியேனான) என் நெஞ்சினுள்ளே எப்போதும் நீங்காது நின்று எல்லாவற்றையும் நடத்துகின்றாள். இப்பொருள் அறிவார் – (அவ்வளவு பெரியவள் இந்தச் சிறியவனின் நெஞ்சில் நின்று, அணுவிற்கு அணுவாய் இருந்து, எல்லாவற்றையும் நடத்தும்) இதன் மாயம் அறிவார்கள் அன்று ஆலிலையில் துயின்ற பெம்மானும் எம் ஐயனுமே – பிரபஞ்சங்கள் தோன்றும் முன் அவற்றைத் தன் வயிற்றில் வைத்துக் கொண்டு சிறு பாலகனாய் ஆலிலையில் துயின்ற மாயவனும் என் ஐயனான சிவபெருமானுமே. விளக்கம்: அந்தாதித் தொடை: சென்ற பாடல் ஒன்றில்லையே என்று நிறைய இந்தப் பாடல் ஒன்றாய் அரும்பி என்று தொடங்கியது. இந்தப் பாடல் ஐயனுமே என்று நிறைய அடுத்தப் பாடல் ஐயன் அளந்தபடி என்று தொடங்கும். இப்படி ஒரு பாடலின் இறுதிச் சொல் அடுத்தப் பாடலின் முதல் சொல்லாக அமையத் தொடுத்துப் பாடுவது அந்தாதித் தொடை. எதுகை: ஒன்றாய், நின்றாள், பொன்றாது, அன்றாலிலை. மோனை: ஒன்றாய் – உலகெங்குமாய், நின்றாள் – நீங்கி – நிற்பாள் – நெஞ்சினுள்ளே, பொன்றாது – புரிகின்றவாறு – பொருள், அன்று – ஆலிலை – ஐயனுமே. இப்பாடலை தொடர்ந்து பாராயனம் செய்தால் ‘யாவரையும் வசிகரிக்கும் ஆற்றல் உண்டாகும்’. பாடல் 57 - பொய்யும் மெய்யும் இயம்ப வைத்தாய் []பாடல்: ஐயன் அளந்த படி இரு நாழி கொண்டு அண்டம் எல்லாம் உய்ய அறம் செயும் உன்னையும் போற்றி ஒருவர் தம் பால் செய்ய பசுந்தமிழ்ப் பாமாலையும் கொண்டு சென்று பொய்யும் மெய்யும் இயம்ப வைத்தாய் இதுவோ உந்தன் மெய்யருளேஐயன் பொருள்: அளந்த படி இரு நாழி கொண்டு – சிவபெருமான் அளந்த இரு நாழி அரிசி நெல்லைக் கொண்டு அண்டம் எல்லாம் உய்ய – உலகம் எல்லாம் உய்யும் படி அறம் செயும் – அறங்கள் செய்யும் உன்னையும் போற்றி – உன்னைப் போற்றிப் பாடிவிட்டு ஒருவர் தம் பால் – பின் வேறொருவரிரம் சென்று செய்ய பசுந்தமிழ்ப் பாமாலையும் கொண்டு சென்று – நல்ல பசுந்தமிழ்ப் பாமாலையைக்கொண்டு சென்று பொய்யும் மெய்யும் இயம்ப வைத்தாய் – உண்மை இல்லாததையும் உண்மையையும் சொல்ல வைத்தாயே! இதுவோ உந்தன் மெய்யருளே – இது தான் உந்தன் மெய்யருளா? விளக்கம்: உலக மக்கள் எல்லோருக்கும் படி அளப்பவளாக இருக்கும் உன்னைப் பாடிப் புகழ்ந்து கொண்டிருந்தேன். அப்படி இருந்த என்னை வேறொருவரிடம் சென்று படி அளக்கச் சொல்லிக் கேட்க வைக்கலாமா? அவர்களைப் புகழ்ந்து பொய்யாக நான் பாடலாமா? இப்படி வைப்பது உனக்கு அழகா? அந்தாதித் தொடை: சென்ற பாடல் ஐயனுமே என்று நிறைய இந்தப் பாடல் ஐயன் என்று தொடங்கியது. இந்தப் பாடல் அருளே என்று நிறைய அடுத்தப் பாடல் அருணாம்புயத்தும் என்று தொடங்கும். இப்படி ஒரு பாடலின் இறுதிச் சொல் அடுத்தப் பாடலின் முதல் சொல்லாக அமையத் தொடுத்துப் பாடுவது அந்தாதித் தொடை. எதுகை: ஐயன், உய்ய, செய்ய, மெய்யும் மோனை: ஐயன் – அளந்த – அண்டம், உய்ய – உன்னையும் – ஒருவர், செய்ய – சென்று, மெய்யும் – மெய்யருளே. இப்பாடலை தொடர்ந்து பாராயனம் செய்தால் ‘வறுமை ஒழியும்’. பாடல் 58 - சரணாம்புயம் அன்றி ஒரு தஞ்சமும் இல்லை [] பாடல்: அருணாம்புயத்தும் என் சித்தாம்புயத்தும் அமர்ந்திருக்கும் தருணாம்புயமுலைத் தையல் நல்லாள் தகை சேர் நயனக் கருணாம்புயமும் வதனாம்புயமும் கராம்புயமும் சரணாம்புயமும் அல்லால் கண்டிலேன் ஒரு தஞ்சமுமே பொருள்: அருணாம்புயத்தும் – அருணனாம் பகலவனைக் கண்டு வைகறையில் மலரும் தாமரையிடத்தும் என் சித்தாம்புயத்தும் – என் மனமெனும் தாமரையிடத்தும் அமர்ந்திருக்கும் தருண அம்புய முலைத் தையல் நல்லாள் – அமர்ந்திருக்கும் இளமையான, தாமரை போன்ற முலைகளையுடைய பெண்களில் சிறந்த அன்னையின் தகை சேர் நயனக் கருண அம்புயமும் – பெருமையுடைய திருக்கண்கள் என்னும் கருணைத் தாமரைகளும் வதன அம்புயமும் – திருமுகம் என்னும் தாமரையும் கர அம்புயமும் – திருக்கரங்கள் என்னும் தாமரைகளும் சரண அம்புயமும் – திருவடிகள் என்னும் தாமரைகளும் அல்லால் கண்டிலேன் ஒரு தஞ்சமுமே – அன்றி வேறு எந்த கதியையும் அறியேன் விளக்கம்:அன்னையின் திருவுருவம் தாமரைப் பொய்கையை ஒத்து இருக்கிறது போலும். அம்புயம் என்பது அம்புஜம் என்னும் வடசொல்லின் திரிபு என்பர். அம்பு – நீர்; ஜ: – பிறந்தது; நீரில் பிறந்தது என்று பொருள். அந்தாதித் தொடை: சென்ற பாடல் அருளே என்று நிறைய இந்தப் பாடல் அருணாம்புயம் என்று தொடங்கியது. இந்தப் பாடல் தஞ்சமுமே என்று முடிய அடுத்தப் பாடல் தஞ்சம் பிறிது இல்லை என்று தொடங்கும். இப்படி ஒரு பாடலின் இறுதிச் சொல் அடுத்தப் பாடலின் முதல் சொல்லாக அமையத் தொடுத்துப் பாடுவது அந்தாதித் தொடை. எதுகை: அருணாம்புயம், தருணாம்புயம், கருணாம்புயம், சரணாம்புயம் மோனை: அருணாம்புயம் – அமர்ந்திருக்கும், தருணாம்புயம் – தையல் – தகை, கருணாம்புயம் – கராம்புயம், சரணாம்புயம் – தஞ்சமுமே. இப்பாடலை தொடர்ந்து பாராயனம் செய்தால் ‘இறையுணர்வால் மன அமைதி பெறலாம்’. பாடல் 59 - தஞ்சம் பிறிது இல்லை []பாடல்: தஞ்சம் பிறிது இல்லை ஈது அல்லது என்று உன் தவநெறிக்கே நெஞ்சம் பயில நினைக்கின்றிலேன் ஒற்றை நீள்சிலையும் அஞ்சு அம்பும் இக்கு அலராகி நின்றாய் அறியார் எனினும் பஞ்சு அஞ்சு மெல்லடியார் அடியார் பெற்ற பாலரையே பொருள்: தஞ்சம் பிறிது இல்லை ஈது அல்லது என்று – உன் திருவடிகளைத் தவிர்த்து வேறு கதி இல்லை என்று அறிந்திருந்தும் உன் தவநெறிக்கே நெஞ்சம் பயில நினைக்கின்றிலேன் – உன் திருவடிகளைப் பற்றி உய்யும் தவநெறிக்கே நெஞ்சத்தைப் பயிற்றுவிக்க நான் நினைக்கவில்லை. ஒற்றை நீள்சிலையும் அஞ்சு அம்பும் இக்கு அலராகி நின்றாய் – பெருமை மிக்க (நிகரில்லாத) நீண்ட வில்லாக்க கரும்பையும் ஐந்து அம்புகளாக மலர்களையும் கொண்டு நின்றவளே! அறியார் எனினும் பஞ்சு அஞ்சு மெல்லடியார் அடியார் பெற்ற பாலரையே – பஞ்சைப் போன்ற மெல்லிய பாதங்களை உடைய தாய்மார்கள் அவர்கள் பெற்ற பிள்ளைகள் அறியாமல தவறு செய்தாலும் அவர்களை தண்டிக்க மாட்டார்கள் (அடிக்க மாட்டார்கள்) அல்லவா? அது போல் நீயும் என்னை தண்டிக்காதே. விளக்கம்:அபிராமி அன்னையிடம் நான் எத்தனை தவறு செய்திருந்தாலும் நீ பொறுத்துக் கொள்ள வேண்டும் என்று வேண்டுகிறார். மானிடப் பெண்களே தங்கள் குழந்தைகளிடம் இவ்வளவு கருணையுடன் இருக்கும் போது எல்லா உலகிற்கும் தாயான அன்னையே நீ எவ்வளவு கருணையுடன் இருப்பாய் என்று தெரிகிறதே என்கிறார். அருஞ்சொற்பொருள்: சிலை: வில் ஒற்றை நீள்சிலை: நிகரில்லாத என்று சொல்ல ஒற்றை என்ற சொல்லைப் பயன்படுத்துவார்கள். ஏகம் அத்விதீயம் (ஒன்றே இரண்டில்லாதது – தனக்கு நிகராக இன்னொன்று இல்லாதது) என்று வேதங்களும் சொல்கின்றன. அஞ்சு அம்பும் – மற்றவர் அஞ்சுகின்ற படி இருக்கும் அம்புகளும் எனலாம்; ஐந்து அம்புகளும் எனலாம். ஐந்து மலர்க்கணைகளை அன்னை தாங்கியிருக்கிறாள் என்பது மற்ற இடங்களில் சொல்லப்பட்டது. ஐந்து என்பதன் பேச்சு வழக்கான அஞ்சு என்ற சொல்லை இங்கே புழங்குகிறார் அபிராமி பட்டர். இக்கு – கரும்பு அலர் – மலர் மெல்லடியார் அடியார் – சிலேடை; மெல்லிய பாதங்களை உடையவர் என்று முதற்சொல்லிலும் அடிக்க மாட்டார்கள் என்று இரண்டாம் சொல்லிலும் அடியார் என்ற சொல்லைப் புழங்குகிறார். *** அந்தாதித் தொடை: சென்ற பாடல் தஞ்சமுமே என்று நிறைய இந்தப் பாடல் தஞ்சம் பிறிதின்றி என்று தொடங்கியது. இந்தப் பாடல் பாலரையே என்று முடிய அடுத்தப் பாடல் பாலினும் என்று தொடங்குகிறது. இப்படி ஒரு பாடலின் இறுதிச் சொல் அடுத்தப் பாடலின் முதல் சொல்லாக அமையத் தொடுத்துப் பாடுவது அந்தாதித் தொடை. எதுகை: தஞ்சம், நெஞ்சம், அஞ்சம்பும், பஞ்சஞ்சு மோனை: தஞ்சம் – தவநெறிக்கே, நெஞ்சம் – நினைக்கின்றிலேன் – நீள்சிலையும், அஞ்சம்பும் – அலராகி – அறியார், பஞ்சஞ்சு – பாலரையே. இப்பாடலை தொடர்ந்து பாராயனம் செய்தால் ‘துர்நடத்தை உள்ள பிள்ளை நல்லவனாக’. பாடல் 60 - சால நன்றோ அடியேன் முடை நாய்த் தலையே [] பாடல்: பாலினும் சொல் இனியாய் பனி மாமலர்ப் பாதம் வைக்க மாலினும் தேவர் வணங்க நின்றோன் கொன்றை வார்ச்சடையின் மேலினும் கீழ் நின்று வேதங்கள் பாடும் மெய்ப்பீடம் ஒரு நாலினும் சால நன்றோ அடியேன் முடை நாய்த் தலையே பொருள்: பாலினும் சொல் இனியாய் – பாலை விட இனிமையான பேச்சினை உடையவளே! பனி மாமலர்ப் பாதம் வைக்க – உன் குளிர்ந்த தாமரை போன்ற திருவடிகளை வைக்க மாலினும் – திருமாலை விட தேவர் வணங்க நின்றோன் கொன்றை வார்ச்சடையின் மேலினும் – எல்லாத் தேவர்களும் வணங்க நின்றவனாம் சிவபெருமானின் கொன்றை மலர் அணிந்த அழகிய சடை முடியை விட கீழ் நின்று வேதங்கள் பாடும் மெய்ப்பீடம் ஒரு நாலினும் – கீழே நின்று உன் புகழ் பாடும் நான்கு வேத பீடங்களை விட சால நன்றோ அடியேன் முடை நாய்த் தலையே – நாயேனாகிய அடியேனின் முடை நாற்றம் வீசும் தலை சால நன்றாகியதோ? (விரும்பி என் தலை மேல் உன் திருவடிகளை வைத்தாயே?!) விளக்கம்: அந்தாதித் தொடை: சென்ற பாடல் பாலரையே என்று நிறைவு பெற்றது. இந்தப் பாடல் பாலினும் என்று தொடங்கியது. இந்தப் பாடல் நாய்த்தலையே என்று நிறைய நாயேனையும் என்று அடுத்தப் பாடல் தொடங்குகிறது. இப்படி ஒரு பாடலின் இறுதிச் சொல் அடுத்தப் பாடலின் முதல் சொல்லாக அமையத் தொடுத்துப் பாடுவது அந்தாதித் தொடை. எதுகை: பாலினும், மாலினும், மேலினும், நாலினும் மோனை: பாலினும் – பனி – பாதம், மாலினும் – வணங்க – வார்சடையின், மேலினும் – மெய்ப்பீடம், நாலினும் – நன்றோ – நாய்த்தலையே இப்பாடலை தொடர்ந்து பாராயனம் செய்தால் ‘மெய்யுணர்வு தோன்றும்’. பாடல் 61 - செங்கண்மால் திருத்தங்கச்சியே [] பாடல்: நாயேனையும் இங்கு ஒரு பொருளாக நயந்து வந்து நீயே நினைவின்றி ஆண்டு கொண்டாய் நின்னை உள்ள வண்ணம் பேயேன் அறியும் அறிவு தந்தாய் என்ன பேறு பெற்றேன் தாயே மலைமகளே செங்கண்மால் திருத்தங்கச்சியே பொருள்: நாயேனையும் - நாயை விட ஈனனான என்னையும் இங்கு ஒரு பொருளாக நயந்து வந்து - இங்கு ஒரு பொருட்டாக விரும்பி வந்து நீயே நினைவின்றி ஆண்டு கொண்டாய் - என் முயற்சி சிறிதும் இன்றி நீயே உன் கருணையினால், என்னைப் பற்றிய நினைவே எனக்கு இல்லாதபடி, என்னை ஆண்டு கொண்டாய் நின்னை உள்ள வண்ணம் பேயேன் அறியும் அறிவு தந்தாய் - எந்தக் காரணமும் பார்க்காத கருணையில் சிறந்தவள் நீ என்ற உன் உன்மை நிலையையும் உள்ள வண்ணம் அறியும் அறிவினையும் பேயேனாகிய எனக்குத் தந்தாய் என்ன பேறு பெற்றேன் - இந்த அறிவினை உன் அருளால் பெற என்ன பேறு பெற்றேன் தாயே மலைமகளே செங்கண்மால் திருத்தங்கச்சியே - என் தாயே! மலையரசன் மகளே! அடியார்களுக்கு அருளும் கருணையால் சிவந்த கண்களையுடைய திருமாலவனின் திருத்தங்கச்சியே! விளக்கம்: அந்தாதித் தொடை: சென்ற பாடல் நாய்த்தலையே என்று நிறைய இந்தப் பாடல் நாயேனையும் என்று தொடங்கியது. இப்படி ஒரு பாடலின் இறுதிச் சொல் அடுத்தப் பாடலின் முதல் சொல்லாக அமையத் தொடுத்துப் பாடுவது அந்தாதித் தொடை. எதுகை: நாயேனையும், நீயே, பேயேன், தாயே மோனை: நாயேனையும் - நயந்து, நீயே - நினைவின்றி - நின்னை, பேயேன் - பேறு - பெற்றேன், தாயே - திருத்தங்கச்சியே.  இப்பாடலை தொடர்ந்து பாராயனம் செய்தால் 'மாயை அகன்று உண்மை உணர்வு உண்டாகும்'.   பாடல் 62 - கோகனகச் செங்கைக் கரும்பும் மலரும் எப்போதும் என் சிந்தையதே [] பாடல்: தங்கச் சிலை கொண்டு தானவர் முப்புரம் சாய்த்து மத வெங்கண் கரி உரி போர்த்த செஞ்சேவகன் மெய்யடையக் கொங்கைக் குரும்பைக் குறியிட்ட நாயகி கோகனகச் செங்கைக் கரும்பும் மலரும் எப்போதும் என் சிந்தையதே பொருள்: தங்கச் சிலை கொண்டு – பொன்மலையாம் மேரு மலையே வில்லாகக் கொண்டு தானவர் முப்புரம் சாய்த்து – திரிபுர அசுரர்களின் முப்புரங்களையும் சிரித்தெரி கொளுத்தி மத வெங்கண் கரி உரி போர்த்த – மதத்தால் சிவந்த கண்களைக் கொண்ட யானையின் தோலை உரித்துப் போர்த்திக் கொண்ட செஞ்சேவகன் – சிவந்தவனாம் சிவபெருமானின் மெய்யடையக் – திருமேனியை அடைய கொங்கைக் குரும்பைக் குறியிட்ட நாயகி – கொங்கையெனும் அம்பினைக் குறி வைத்த தலைவியே! கோகனகச் செங்கைக் கரும்பும் மலரும் எப்போதும் என் சிந்தையதே – சிறந்த பொன்னைப் போல் சிவந்தத் திருக்கையில் இருக்கும் கரும்பு வில்லும் மலர்க்கணைகளும் எப்போதும் என் தியானத்தில் இருக்கின்றன. விளக்கம்: திரிபுர அசுரர்களின் முப்புரத்தை மேரு எனும் பொன் வில் கொண்டு சிரித்தெரிக் கொளுத்தியும் கஜமுகாசுரனைக் கொன்று தோலை உரித்து அணிந்தும் பெருமை கொண்ட சிவந்தவன் உன் கையில் இருக்கும் மதனின் கரும்பு வில்லிலும் மலர் அம்புகளிலும் அந்த அம்புகளை விட மென்மையான உன் கொங்கைகள் எனும் மலர்க் கணையால் உன்னை தன் திருவுடலின் பாதியாகக் கொண்டான். அப்படிப் பெருமை கொண்ட உன் கையில் இருக்கும் கரும்பிலும் மலரிலும் என் மனம் நிற்கிறது. அந்தாதித் தொடை: சென்ற பாடல் தங்கச்சியே என்று நிறைய இந்தப் பாடல் தங்கச்சிலை என்று தொடங்கியது. இந்தப் பாடல் சிந்தையதே என்று நிறைய அடுத்தப் பாடல் தேறும்படி என்று தொடங்கும். இப்படி ஒரு பாடலின் இறுதிச் சொல்லோ எழுத்தோ அடுத்தப் பாடலின் முதல் சொல்லாக/ எழுத்தாக அமையப் பாடுவது அந்தாதித் தொடை. எதுகை: தங்கச்சிலை, வெங்கண், கொங்கை, செங்கை மோனை: தங்கச்சிலை – தானவர், கொங்கை – குரும்பை – குறியிட்ட – கோகனக, செங்கை – சிந்தையதே. இப்பாடலை தொடர்ந்து பாராயனம் செய்தால் ‘எத்தகைய அச்சமும் அகலும்’. பாடல் 63 - தேறும்படி சில ஏதுகள் காட்டுவாள் [] பாடல்: தேறும்படி சில ஏதுவும் காட்டி முன் செல்கதிக்குக் கூறும் பொருள் குன்றில் கொட்டும் தறி குறிக்கும் சமயம் ஆறும் தலைவி இவளாய் இருப்பது அறிந்திருந்தும் வேறும் சமயம் உண்டு என்று கொண்டாடிய வீணருக்கே தேறும்படி சில ஏதுவும் காட்டி முன் செல்கதிக்குக் கூறும் பொருள்: பொருள் – சென்று அடைய வேண்டிய இடத்திற்கு தேறிச் செல்லும் படி சில வழிகள் காட்டுபவள் அபிராமி அன்னை சமயம் ஆறும் தலைவி இவளாய் இருப்பது அறிந்திருந்தும் – அப்படி அவள் காட்டிய வழிகளில் ஆறு சமயங்கள் முதன்மையானவை. அவற்றை அருளி அவற்றின் தலைவியாய் இவள் இருப்பது அறிந்திருந்தும் வேறும் சமயம் உண்டு என்று கொண்டாடிய வீணருக்கே – வேறு சமயம் உயர்ந்தது என்று கொண்டாடும் வீணர்கள் செய்வது குன்றில் கொட்டும் தறி குறிக்கும் – மலையை ஒரு சிறு தடி கொண்டு தகர்க்க முயல்வார்களை ஒத்தது. விளக்கம்: ஆறு சமயங்களாவன: சூரியனை வணங்கும் சௌரம், குமரனை வணங்கும் கௌமாரம், சிவனை வணங்கும் சைவம், விஷ்ணுவை வணங்கும் வைஷ்ணவம், சக்தியை வணங்கும் சாக்தம், கணபதியை வணங்கும் காணபத்யம் அந்தாதித் தொடை:சென்ற பாடல் சிந்தையதே என்று நிறைய இந்தப் பாடல் தேறும்படிக்கு என்று தொடங்குகிறது. இந்தப் பாடல் வீணருக்கே என்று நிறைய அடுத்தப் பாடல் வீணே என்று தொடங்கும். இப்படி ஒரு பாடலின் இறுதிச் சொல்லோ எழுத்தோ அடுத்தப் பாடலின் முதல் சொல்லாக/ எழுத்தாக அமையப் பாடுவது அந்தாதித் தொடை. எதுகை: தேறும், கூறும், ஆறும், வேறும் மோனை: தேறும் – சில – செல்கதிக்கு, கூறும் – குன்றில் – கொட்டும் – குறிக்கும், ஆறும் – அறிந்திருந்தும், வேறும் – வீணருக்கே வீணருக்கு – தேறும்படி என்று சொல்வதால்! இப்பாடலை தொடர்ந்து பாராயனம் செய்ய ‘நல்லறிவு உண்டாகும்’. 65 பாடல் 64 - உனக்கு அன்பு பூண்டு கொண்டேன் [] பாடல்: வீணே பலி கவர் தெய்வங்கள் பால் சென்று மிக்க அன்பு பூணேன் உனக்கு அன்பு பூண்டு கொண்டேன் நின் புகழ்ச்சி அன்றிப் பேணேன் ஒரு பொழுதும் திருமேனி ப்ரகாசம் அன்றிக் காணேன் இரு நிலமும் திசை நான்கும் ககனமுமே பொருள்: வீணே பலி கவர் தெய்வங்கள் பால் சென்று மிக்க அன்பு பூணேன் – தம்மை வணங்குபவர்களிடமிருந்து கையுறைகளை (காணிக்கைகளை) விரும்பிக் கவர்ந்து கொண்டு ஆனால் அவர்கள் விரும்பியதை அருளாத, அருளும் வலு இல்லாத தெய்வங்களிடம் சென்று அவர்களிடம் அன்பு பூண மாட்டேன் உனக்கு அன்பு பூண்டு கொண்டேன் – இந்தக் குறைகள் இல்லாத உன்னிடம் அன்பு பூண்டு கொண்டேன் நின் புகழ்ச்சி அன்றிப் பேணேன் ஒரு பொழுதும் – என்றும் எப்போதும் உன் புகழையே போற்றிப் பாடுவேன் திருமேனி ப்ரகாசம் அன்றிக் காணேன் இரு நிலமும் திசை நான்கும் ககனமுமே – நீண்ட நெடிய இந்த உலகத்திலும் நான்கு திசைகளிலும் வானத்திலும் எங்கு நோக்கினும் உன் திருமேனி திருவொளி அன்றி வேறெதுவும் காணேன். விளக்கம்: தாம் வணங்கும் தெய்வத்தை அன்றி மற்ற தெய்வங்களை ‘வீணே பலி கவர் தெய்வங்கள்’ என்று சொல்வது ஒவ்வொரு பக்தரின் இயற்கை. ‘சர்வ தர்மான் பரித்யஜ்ய’ என்று கீதையில் கண்ணன் சொல்லுவதையே இங்கு அபிராமி பட்டர் சொல்கிறார் என்று என் ஆசிரியர் ஒருவர் சொல்வார். திருப்பாவையிலும் ‘மற்றை நம் காமங்கள் மாற்று’ என்று ஆண்டாள் சொல்வதும் இதுவே. அந்தாதித் தொடை: சென்ற பாடல் வீணருக்கே என்று நிறைய இந்தப் பாடல் வீணே என்று தொடங்கியது. இந்தப் பாடல் ககனமுமே என்று நிறைய அடுத்தப் பாடல் ககனமும் என்று தொடங்கும். இப்படி ஒரு பாடலின் இறுதிச் சொல்லோ எழுத்தோ அடுத்தப் பாடலின் முதல் சொல்லாக/ எழுத்தாக அமையப் பாடுவது அந்தாதித் தொடை. எதுகை: வீணே, பூணேன், பேணேன், காணேன் மோனை: வீணே – மிக்க, பூணேன் – பூண்டுகொண்டேன் – புகழ்ச்சி, பேணேன் – பொழுதும் – ப்ரகாசம், காணேன் – ககனமுமே. இப்பாடலை தொடர்ந்து பாராயனம் செய்தால் ‘பக்தி பெருகும்’. பாடல் 65 - ஆறுமுகன் மூதறிவின் மகன் [] பாடல்: ககனமும் வானும் புவனமும் காண விற்காமன் அங்கம் தகனம் முன் செய்த தவப்பெருமாற்கு தடக்கையும் செம் முகனும் முந்நான்கு இருமூன்று எனத் தோன்றிய மூதறிவின் மகனும் உண்டாயது அன்றோ வல்லி நீ செய்த வல்லபமே பொருள்: ககனமும் வானும் புவனமும் காண – பூமியில் வாழ்பவர்களும், வானுலகில் வாழ்பவர்களும், இடைப்பட்ட உலகங்களில் வாழ்பவர்களும் என எல்லோரும் கண்டு வியக்கும்படி விற்காமன் அங்கம் தகனம் முன் செய்த தவப்பெருமாற்கு – கரும்பு வில்லை ஏந்திய மன்மதனின் உடலை எரித்த தவத்தில் சிறந்த சிவபெருமானுக்கு தடக்கையும் – நீண்ட வலிய கைகளையும் செம்முகனும் – சிவந்த திருமுகமும் முந்நான்கு – பன்னிரு கரங்களும் இருமூன்று – ஆறுமுகங்களும் எனத் தோன்றிய மூதறிவின் மகனும் உண்டாயது – என்று பல விதங்களிலும் பெருமை கொண்ட தகப்பன் சுவாமியான திருமுருகன் மகனாக உண்டாக்கும் வல்லமை அமைந்தது அன்றோ வல்லி நீ செய்த வல்லபமே – அம்மையே உன்னுடைய வல்லமையால் தானே?! விளக்கம்: மன்மத லீலையை வென்றார் உண்டோ என்று எல்லோரும் மயங்கி இருக்கும் போதில் அந்த மன்மதனை எல்லோரும் காணும் படி வென்றதைத் தான் எல்லோரும் வியக்கும் படி தகனம் செய்தார் என்று கூறுகிறார். அப்படி மன்மதனைத் தகனம் செய்த தவப்பெருமானே அந்த மன்மதனை விஞ்சும் அழகுடைய திருக்குமரனைப் பெற்றார் என்று வியக்கிறார். அப்படிப் பெறும் வல்லமையும் அம்மையே உன்னால் தான் ஏற்பட்டது என்று அன்னையைப் போற்றுகிறார். ஒரே கல்லில் மூன்று மாங்காய். அழகில் சிறந்தவன் திருமுருகன் என்று மகனைப் போற்றியாயிற்று; யாராலும் வெல்ல இயலாத மன்மதனைத் தகனம் செய்தார் என்று அப்பனைப் போற்றியாயிற்று; அந்த அப்பனுக்கும் சக்தி வந்தது அம்மையே உன்னால் தான் என்று அன்னையையும் போற்றியாயிற்று. காமன் அழிந்து போகவில்லை. அவன் உடல் மட்டுமே காணாமல் போனது. அவன் உடலற்றவனாக அனங்கனாக் (அ+அங்கன்) வாழ்கிறான் என்பதை ‘காமன் அங்கம்’ தகனம் செய்யப்பட்டது என்று குறிப்பால் உணர்த்துகிறார். எல்லோரும் வானில் வாழ்பவர்களையும் மண்ணில் வாழ்பவர்களையும் மட்டும் சொல்லும் போது அபிராமி பட்டர் ககனத்தில் இருப்பவர்களையும் சொல்கிறாரே யாரவர்கள் என்றால் மண்ணில் பந்தத்தில் உழன்று மண்ணோடு நெருங்கியிருப்பவர்கள், வானில் எல்லா பந்தங்களும் விடுபட்டு முக்தி நிலை பெற்றவர்கள் என்று மண்ணவரையும் விண்ணவரையும் கூறிவிட்டு, பந்தங்களிலிருந்து விடுபட்ட பின்னரும் மக்களின் மேல் கருணை கொண்டு உலகத்தில் வாழும், ககன மார்க்கத்தில் உலாவும் சித்தர் பெருமான்களைச் சொல்கிறார் ‘ககனம்’ என்பதன் மூலம். *** அந்தாதித் தொடை: சென்ற பாடல் ககனமுமே என்று நிறைய இந்தப் பாடல் ககனமும் என்று தொடங்கியது. இந்தப் பாடல் வல்லபமே என்று நிறைய அடுத்தப் பாடல் வல்லபம் என்று தொடங்கும். எதுகை: ககனமும், தகனம், முகனும், மகனும் மோனை: ககனமும் – காண – காமன், தகனம் – தவப்பெருமாற்கு – தடக்கையும், முகனும் – முந்நான்கு – மூன்று – மூதறிவின், மகனும் – வல்லி – வல்லபமே. இப்பாடலை தொடர்ந்து பாராயனம் செய்தால் ‘புத்திர பாக்கியம் உண்டாகும்’. பாடல் 66 - நின் நாமங்கள் தோத்திரமே  [] பாடல்: வல்லபம் ஒன்றறியேன் சிறியேன் நின் மலரடிச் செம் பல்லவம் அல்லது பற்றொன்றிலேன் பசும் பொற்பொருப்பு வில்லவர் தம்முடன் வீற்றிருப்பாய் வினையேன் தொடுத்த சொல் அவமாயினும் நின் திருநாமங்கள் தோத்திரமே பொருள்: வல்லபம் ஒன்றறியேன் – பெரும் செயல்கள் செய்யும் வல்லமையும் சாமர்த்தியமும் உடையவன் இல்லை. சிறியேன் – மிகச் சிறியவன் நின் மலரடிச் செம் பல்லவம் அல்லது பற்று ஒன்று இலேன் – சிவந்த தளிர் போன்ற உன் மலர்த் திருவடிகளைத் தவிர்த்து வேறு ஒரு பற்றுதல் இல்லாதவன் நான். பசும்பொற்பொருப்பு வில்லவர் தம்முடன் வீற்றிருப்பாய் – பசும்பொன்னால் ஆன மேருமலையை வில்லாக எடுத்த சிவபெருமானுடன் அமர்ந்திருப்பவளே வினையேன் தொடுத்த சொல் அவமாயினும் நின் திருநாமங்கள் தோத்திரமே – தீவினைகள் பல புரிந்துள்ள நான் தொடுத்துத் தரும் இந்த சொற்கள் உன் பெருமைக்கு ஏற்புடைத்தாக இல்லாமல் இருந்தாலும் அவை உன் திருநாமங்களைச் சொல்லித் துதிக்கும் துதிகள் என்று ஏற்றுக் கொள்ள வேண்டும். *** விளக்கம்:நாம் என்ன தான் புகழ்ந்தாலும் அது நம்மை வைத்துப் பார்க்கும் போது பெரிய செயல்களாக இருந்தாலும் இறைச்சக்தியின் பெருமைக்கு முன்னர் அது மிக மிக சாதாரணமானதொன்றாக இருக்கும். அதே போன்ற கருத்தினை நம்மாழ்வாரும் சொல்லியிருக்கிறார். இப்படி நாங்கள் பேசப்போகின்றோம் என்பது அன்றைக்கே அபிராமி பட்டருக்குத் தெரிந்துவிட்டது போலும். இந்தப் பாடலில் ‘வினையேன் தொடுத்த சொல் அவமாயினும்’ என்று அந்தக் கருத்தை அவரே சொல்லிக் கொள்கிறார். அன்னையின் பெருமைக்கு முன்னர் நாம் என்ன தான் அவளைப் போற்றிப் பாடினாலும் அவை எல்லாம் மிகச் சாதாரணமே என்பதை ‘சொல் அவமாயினும்’ என்பதன் மூலம் சொல்கிறார். *** அருஞ்சொற்பொருள்: வல்லபம்: சாமர்த்தியம், வல்லமை பல்லவம்: தளிர், அம்பு. இங்கே தளிர் என்னும் பொருள் பொருந்துகின்றது. *** அந்தாதித் தொடை: சென்ற பாடல் வல்லபமே என்று நிறைய இந்தப் பாடல் வல்லபம் என்று தொடங்கியது. இந்தப் பாடல் தோத்திரமே என்று நிறைய அடுத்தப் பாடல் தோத்திரம் என்று தொடங்கும். இப்படி ஒரு பாட்டின் முடிவு அடுத்தப் பாட்டின் தொடக்கமாக அமைத்துத் தொடுத்துப் பாடுவது அந்தாதித் தொடை. எதுகை: வல்லபம், பல்லவம், வில்லவர், சொல்லவம் மோனை: வல்லபம் – மலரடி, பல்லவம் – பற்று – பசும் – பொற் – பொருப்பு, வில்லவர் – வீற்றிருப்பாய் – வினையேன், சொல் – திரு – தோத்திரமே. இப்பாடலை தொடர்ந்து பாராயனம் செய்தால் ‘கவி பாடும் ஆற்றல் பெறலாம்’. பாடல் 67 - மின்னல் போலும் உன் திருவுருவம் [] பாடல்: தோத்திரம் செய்து தொழுது மின் போலும் நின் தோற்றம் ஒரு மாத்திரைப் போதும் மனத்தில் வையாதவர் வண்மை குலம் கோத்திரம் கல்வி குணம் குன்றி நாளும் குடில்கள் தொறும் பாத்திரம் கொண்டு பலிக்கு உழலா நிற்பர் பார் பொருள்: எங்குமேதோத்திரம் செய்து தொழுது – உன் துதிகளைப் பாடி உன்னைத் தொழுதுமின் போலும் நின் தோற்றம் – மின்னலைப் போன்ற உன் திருவுருவத்தை ஒரு மாத்திரைப் போதும் மனத்தில் வையாதவர் – ஒரு மாத்திரைப் பொழுதும் மனத்தில் வைத்து தியானிக்காதவர்கள் வண்மை குலம் கோத்திரம் கல்வி குணம் குன்றி – அவர்களின் வள்ளல் தன்மை, பிறந்த குலம் கோத்திரம், பெற்ற கல்வி, வளர்த்த நற்குணங்கள் எல்லாம் குறைவு பெற்று நாளும் – தினந்தோறும் குடில்கள் தொறும் – வீடுகள் தோறும் பாத்திரம் கொண்டு – பாத்திரத்தைக் கையில் ஏந்திக் கொண்டு பலிக்கு உழலா நிற்பர் – பிச்சைக்குத் திரிவார்கள் பார் எங்குமே – உலகமெங்குமே விளக்கம்:இந்தப் பாடலைப் படிக்க கொஞ்சம் பயமாகத் தான் இருக்கிறது. சாபம் இடுவது போன்ற தொனி. அருஞ்சொற்பொருள்: வண்மை – வள்ளன்மை; வன்மை என்பதற்கும் வண்மை என்பதற்கும் உள்ள வேற்றுமையை அறிய வேண்டும். வன்மை என்பது வலிமை என்ற பொருள் தரும். வண்மை வள்ளல்தன்மையைக் குறிக்கும். அந்தாதித் தொடை: சென்ற பாடல் தோத்திரமே என்று நிறைய இந்தப் பாடல் தோத்திரம் என்று தொடங்கியது. இந்தப் பாடல் பாரெங்குமே என்று நிறைய அடுத்தப் பாடல் பாரும் என்று தொடங்கும். இப்படி ஒரு பாடலில் இறுதியில் வரும் சொல் அடுத்தப் பாடலில் தொடக்கத்தில் வருமாறு அமைத்துப் பாடுவது அந்தாதித் தொடை. எதுகை: தோத்திரம், மாத்திரை, கோத்திரம், பாத்திரம் மோனை: தோத்திரம் – தொழுது – தோற்றம், மாத்திரை – மனத்தில், கோத்திரம் – கல்வி – குலம் – குணம் – குன்றி – குடில்கள், பாத்திரம் – பலிக்கு – பார். இந்த பாடலை பாரயனம் செய்தால் பகை அகலும் பாடல் 68 - சிவகாமசுந்தரி சீறடிக்கே சாரும் தவம் வேண்டும் பாடல்: [] பாரும் புனலும் கனலும் வெங்காலும் படர்விசும்பும் ஊரும் முருகுசுவை ஒளி ஊறு ஒலி ஒன்றுபடச் சேரும் தலைவி சிவகாம சுந்தரி சீறடிக்கே சாரும் தவம் உடையார் படையாத தனம் இல்லையே பொருள்: பாரும் புனலும் கனலும் வெங்காலும் படர்விசும்பும் – உலகமும், நீரும், நெருப்பும், காற்றும், எங்கும் படர்ந்திருக்கும் ஆகாயமும் ஊரும் முருகுசுவை ஒளி ஊறு ஒலி ஒன்றுபடச் – இவற்றின் தன்மையாக நிற்கும் நறுமணம், சுவை, ஒளி, உணர்வு, ஒலி இவை எல்லாம் ஒன்றுபட்டுச் சேரும் தலைவி சிவகாம சுந்தரி சீறடிக்கே – சேரும் சிறிய திருவடிகளை உடைய எங்கள் தலைவி சிவகாம சுந்தரியின் திருவடியிலேயே சாரும் தவம் உடையார் படையாத தனம் இல்லையே – சார்ந்து நிற்கும் புண்ணியம்/பாக்கியம் உடையவர்கள் பெறாத செல்வம் எதுவும் இல்லை.   விளக்கம்:இந்தப் பிரபஞ்சத்தில் உள்ள ஐம்பூதங்களாகவும் அவற்றின் தன்மைகளான ஐம்புலன் உணர்வுகளாகவும் ஒன்று பட்டு நிற்கும் அன்னையின் திருவடிகளை அடைந்த பின் இந்தப் பிரபஞ்சம் எல்லாமும் கிடைத்ததாகுமே. அதனால் தான் அவர் பெறாத தனம் பிறிதில்லை என்கிறார். *** அருஞ்சொற்பொருள்: பார் – உலகம் புனல் – நீர் கனல் – நெருப்பு கால் – காற்று விசும்பு – ஆகாயம் முருகு – நறுமணம் ஊறு – உணர்வு (தொடுதல் உணர்வு) சீறடி – சிறிய அழகிய திருவடி அந்தாதித் தொடை: சென்ற பாடல் பாரெங்குமே என்று நிறைய இந்தப் பாடல் பாரும் என்று தொடங்கியது. இந்தப் பாடல் தனமில்லையே என்று நிறைய அடுத்தப் பாடல் தனம்தரும் என்று தொடங்கும். இப்படி ஒரு பாடலில் இறுதியில் வரும் சொல் அடுத்தப் பாடலில் தொடக்கத்தில் வருமாறு அமைத்துப் பாடுவது அந்தாதித் தொடை. எதுகை: பாரும், ஊரும், சேரும், சாரும் மோனை: பாரும் – புனலும் – படர்விசும்பும், ஊரும் – ஒளி – ஊறு – ஒலி – ஒன்றுபடச், சேரும் – சிவகாமசுந்தரி – சீறடிக்கே, சாரும் – தவம் – தனம். இந்த பாடலை பாரயனம் செய்தால் நிலம்,வீடு செல்வம் கிடைக்கும். பாடல் 69 - தனம் தரும் கல்வி தரும் [] பாடல்: தனம் தரும் கல்வி தரும் ஒரு நாளும் தளர்வு அறியா மனம் தரும் தெய்வ வடிவும் தரும் நெஞ்சில் வஞ்சம் இல்லா இனம் தரும் நல்லன எல்லாம் தரும் அன்பர் என்பவர்க்கே கனம் தரும் பூங்குழலாள் அபிராமி கடைக்கண்களே பொருள்: தனம் தரும் – எல்லாவிதமான செல்வங்களும் தரும் கல்வி தரும் – எல்லாவிதமான கல்வியையும் தரும் ஒரு நாளும் தளர்வு அறியா மனம் தரும் – என்றும் சோர்ந்து போகாத மனமும் தரும் தெய்வ வடிவும் தரும் – தெய்வீகமான உருவத்தையும் தரும் நெஞ்சில் வஞ்சம் இல்லா இனம் தரும் – உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசாத நண்பர்களைத் தரும் நல்லன எல்லாம் தரும் – இன்னும் என்ன என்ன நன்மைகள் எல்லாம் உண்டோ அவை அனைத்தையும் தரும் அன்பர் என்பவர்க்கே க்னம் தரும் – எல்லோரிடமும் அம்மையிடமும் அன்புடன் இருக்கும் அன்பர்களுக்கு எல்லா பெருமையையும் தரும் பூங்குழலாள் அபிராமி கடைக்கண்களே – பூவினைச் சூடிய கூந்தலையுடைய அபிராமி அன்னையின் கடைக்கண் பார்வையே. விளக்கம்:மிகவும் பிரபலமான பாடல் இது. அபிராமி அந்தாதி பாடல் என்று தெரியாமலேயே பலருக்கும் இந்தப் பாடல் தெரிந்திருக்கும். அருமையான பாடலும் கூட. அந்தாதித் தொடை: சென்ற பாடல் தனமில்லையே என்று நிறைய இந்தப் பாடல் தனம்தரும் என்று தொடங்கியது. இந்தப் பாடல் கடைக்கண்களே என்று நிறைய அடுத்தப் பாடல் கண்களிக்கும்படி என்று தொடங்கும். இப்படி ஒரு பாடலில் இறுதியில் வரும் சொல் அடுத்தப் பாடலில் தொடக்கத்தில் வருமாறு அமைத்துப் பாடுவது அந்தாதித் தொடை. எதுகை: தனம், மனம், இனம், கனம் மோனை: தனம் – தரும் – தளர்வு, மனம் – வடிவும் – வஞ்சம், இனம் – என்பவர்க்கே, கனம் – கடைக்கண்களே. இதில் இன்னொரு தத்துவ முத்தும் ஒளிந்துள்ளது. தனம், கல்வி, வடிவம், இனம்-ன்னு உலக வாழ்வுக்கு வேண்டிய எல்லாம் சொல்லிவிட்டு இறுதியில்… அன்பர் என்பவர்க்”கே” கனம் தரும் என்கிறார் பாருங்கள்! எதற்கு இங்கு மட்டும் ஏகாரம்? அன்பை சதா சர்வ காலமும் வைக்காத பக்தர்களுக்கு மற்றதை எல்லாம் தருபவள், பெருமையை (கனத்தை) மட்டும் தரமாட்டாளா என்ன? இங்கு கனம் என்பது பெருமை என்னும் பொருளில் மட்டும் வரவில்லை! கனமான பொருள் பறக்காது. ஒரு பொருளின் மீது கனத்தை வைத்தால் அந்தப் பொருளும் பறக்காது! அன்பர் ஆகி விட்டவர்களுக்கு இந்தக் கனத்தையும் தருகிறாள் அன்னை! பறக்காத மனத்தை, சிந்தையை அருளுகிறாள்! அன்புடைய அடியார்களுக்கே உரிய குணமான நிலைபெற்ற மனத்தையும் இங்கே குறிக்கிறார் அபிராமி பட்டர்! கேடும் ஆக்கமும் கெட்ட திருவினார் ஓடும் செம்பொனும் ஒக்க நோக்குவார் என்ற அடியார் இலக்கணத்தின் படி, அன்பர் என்பவர்க்கே கனம் தருகிறாள் அன்னை! \ இந்த பாடலை பாரயனம் செய்தால் சகல சொக்கியங்களும் கிடைக்கும். பாடல் 70 - கண் களிக்கும் படி கண்டு கொண்டேன் [] பாடல்: கண் களிக்கும் படி கண்டு கொண்டேன் கடம்பாடவியில் பண் களிக்கும் குரல் வீணையும் கையும் பயோதரமும் மண் களிக்கும் பச்சை வண்ணமும் ஆகி மதங்கர் குலப் பெண்களில் தோன்றிய எம்பெருமாட்டி தன் பேரழகே பொருள்: கண் களிக்கும் படி கண்டு கொண்டேன் – என் கண்கள் மகிழ்வு எய்திக் களிக்கும் படி நான் கண்டு கொண்டேன் கடம்பாடவியில் – கடம்ப வனத்தில் பண் களிக்கும் குரல் – இசை விரும்பி உறைகின்ற குரலையும் வீணையும் கையும் – வீணையை ஏந்திய கைகளையும் பயோதரமும் – அழகிய திருவயிற்றையும் மண் களிக்கும் பச்சை வண்ணமும் – மண்மகள் விரும்பி மகிழும் பச்சை நிறமும் ஆகி – பெற்று மதங்கர் குலப் பெண்களில் தோன்றிய எம்பெருமாட்டி தன் பேரழகே – மதங்கர குலத்தில் தோன்றிய என் தலைவியின் பேரழகையே.அம்மையின் திருமேனி அழகைப் போற்றுகிறார்  விளக்கம்:இந்தப் பாடலில். பச்சை நிறம் செழுமையின் வண்ணமாதலால் மண்களிக்கும் வண்ணம் என்கிறார். பண் பாடும் குரல் என்று சொல்வார்கள்; இவரோ பண்ணே களிக்கும் குரல் என்கிறார். கடம்பவனத்தையும் பச்சை நிறத்தையும் சொன்னதால் இது மீனாட்சியம்மையைப் போற்றும் பாடல்.  அந்தாதித் தொடை: சென்ற பாடல் கடைக்கண்களே என்று நிறைய இந்தப் பாடல் கண்களிக்கும்படி என்று தொடங்கியது. இந்தப் பாடல் பேரழகே என்று நிறைய அடுத்தப் பாடல் அழகுக்கு என்று தொடங்கும். இப்படி ஒரு பாடலில் இறுதியில் வரும் சொல் அடுத்தப் பாடலில் தொடக்கத்தில் வருமாறு அமைத்துப் பாடுவது அந்தாதித் தொடை. எதுகை: கண், பண், மண், பெண் மோனை: கண் – களிக்கும் – கண்டு – கொண்டேன் – கடம்பாடவி, பண் – பயோதரமும், மண் – மதங்கர், பெண் – பெருமாட்டி – பேரழகே. இந்த பாடலை பாரயனம் செய்தால் நுன் கலைகள் சித்திக்கும் பாடல் 71- அருமறைகள் பழகிச் சிவந்த பதாம்புயத்தாள் [] பாடல்: அழகுக்கு ஒருவரும் ஒவ்வாத வல்லி அருமறைகள் பழகிச் சிவந்த பதாம்புயத்தாள் பனிமாமதியின் குழவித் திருமுடிக் கோமள யாமளைக் கொம்பிருக்க இழவுற்று நின்ற நெஞ்சே இரங்கேல் உனக்கு என் குறையே பொருள்: அழகுக்கு ஒருவரும் ஒவ்வாத வல்லி – இவளுடைய அழகிற்கு ஒப்புமையாக யாரும் எதுவும் இல்லாதபடி பெரும் பேரழகு கொண்டிருக்கும் தலைவி அருமறைகள் பழகிச் சிவந்த பதாம்புயத்தாள் – அரிய திருமறைகள் இவளது திருப்பாதங்களைத் தொடர்ந்து எப்போதும் போற்றுவதால் அவற்றின் புகழ்ச்சியில் பழகிப் பழகி சிவந்த தாமரைப்பாதங்கள் உடையவள் பனிமாமதியின் குழவித் திருமுடிக் கோமள யாமளைக் கொம்பு இருக்க – குளிர்ந்த நிலவின் குழந்தையை (இளம்பிறையை) திருமுடியில் தாங்கியிருக்கும் மென்மையான பச்சை நிறத்தவளாக அன்னை இருக்க இழவுற்று நின்ற நெஞ்சே இரங்கேல் உனக்கு என் குறையே – உலக வாழ்க்கையில் எதையோ இழந்து நின்றாலும் அந்த இழவை நினைந்து இரங்காமல் இருப்பாய் நெஞ்சே; அன்னையிருக்க ஒரு குறையும் உனக்கு இல்லை. விளக்கம்: மனத்தில் ஏதேனும் குறை ஏற்படும் போது இந்தப் பாடலைப் படிக்கலாம் போலிருக்கிறது. அந்தாதித் தொடை: சென்ற பாடல் பேரழகே என்று நிறைய இந்தப் பாடல் அழகுக்கு என்று தொடங்கியது. இந்தப் பாடல் என் குறையே என்று நிறைய அடுத்தப் பாடல் என் குறை தீர என்று தொடங்கும். இப்படி ஒரு பாடலில் இறுதியில் வரும் சொல் அடுத்தப் பாடலில் தொடக்கத்தில் வருமாறு அமைத்துப் பாடுவது அந்தாதித் தொடை. எதுகை: அழகுக்கு, பழகி, குழவி, இழவுற்று மோனை: அழகுக்கு – அருமறைகள்; பழகி – பதாம்புயத்தாள் – பனிமாமதியின், குழவி – கோமளயாமளை – கொம்பிருக்க, இழவுற்று – இரங்கேல் – என்குறையே இப்பாடலை தொடர்ந்து பாராயனம் செய்தால் ‘மனக்குறை தீர்ந்து மகிழ்ச்சி பெருகும்’. பாடல் 72 - எம் கோன் சடை மேல் வைத்த தாமரையே [] பாடல்: என் குறை தீர நின்று ஏத்துகின்றேன் இனி யான் பிறக்கின் நின் குறையே அன்றி யார் குறை காண் இரு நீள் விசும்பின் மின் குறை காட்டி மெலிகின்ற நேரிடை மெல்லியலாள் தன் குறை தீர எம் கோன் சடை மேல் வைத்த தாமரையே பொருள்: என் குறை தீர நின்று ஏத்துகின்றேன் – என் குறை தீர இங்கே நின்று உன்னைப் போற்றிப் பரவுகின்றேன் இனி யான் பிறக்கின் – இனியும் எனக்கு ஒரு பிறவி வந்தால் நின் குறையே அன்றி யார் குறை காண் – அது உன் குற்றமே அல்லாமல் வேறொருவர் குற்றமில்லை இரு நீள் விசும்பின் – நீண்டு பரந்த வானத்தில் தோன்றும் மின் குறை காட்டி மெலிகின்ற நேரிடை மெல்லியலாள் – மின்னலைக் காட்டிலும் மெல்லிய சிறந்த இடையினை உடையவளே தன் குறை தீர எம் கோன் சடை மேல் வைத்த தாமரையே – தனது குறைகள் எல்லாம் தீரும் படி எங்கள் சங்கரனார் தன் சடை மேல் வைத்து மகிழும் தாமரைப் பாதங்களையே விளக்கம்: தாமரைப் பாதங்களையே ஏத்தி வணங்குகிறேன் என்று கூட்டிப் பொருள் கொள்ள வேண்டும். அந்தாதித் தொடை: சென்ற பாடல் என் குறையே என்று நிறைய இந்தப் பாடல் என் குறை தீர என்று தொடங்கியது. இந்தப் பாடல் தாமரையே என்று நிறைய அடுத்தப் பாடல் தாமம் கடம்பு என்று தொடங்கும். இப்படி ஒரு பாடலில் இறுதியில் வரும் சொல் அடுத்தப் பாடலில் தொடக்கத்தில் வருமாறு அமைத்துப் பாடுவது அந்தாதித் தொடை. எதுகை: என் குறை, நின் குறை, மின் குறை, தன் குறை மோனை: என் குறை – ஏத்துகிறேன் – இனி – யான், நின் குறை – நீள்விசும்பின், மின்குறை – மெலிகின்ற – மெல்லியலாய், தன்குறை – தாமரையே இப்பாடலை தொடர்ந்து பாராயனம் செய்தால் ‘பிறவிப்பிணி தீரும்’. பாடல் 73 - அம்மை நாமம் திரிபுரை [] கடம்ப மாலை முருகப் பெருமானுக்கும் கடம்பவனம் அம்மைக்கும் என்று கேட்டிருக்கிறோம். அம்மை கடம்பமாலையும் அணிந்தவள் என்கிறாள் பட்டர் இந்தப் பாடலில். பாடல்: தாமம் கடம்பு படை பஞ்சபாணம் தனுக் கரும்பு யாமம் வயிரவர் ஏத்தும் பொழுது எமக்கு என்று வைத்த சேமம் திருவடி செங்கைகள் நான்கு ஒளி செம்மை அம்மை நாமம் திரிபுரை ஒன்றோடு இரண்டு நயனங்களே பொருள்: தாமம் கடம்பு – நீ அணியும் மாலை கடம்ப மாலை படை பஞ்சபாணம் – நீ ஏந்திய படை ஐந்து மலர்க்கணைகள் தனுக் கரும்பு – வில்லோ கரும்பு வில் யாமம் வயிரவர் ஏத்தும் பொழுது – உன்னை வணங்கும் பக்தர்கள் உன்னை ஏத்தும் பொழுது நள்ளிரவு எமக்கு என்று வைத்த சேமம் திருவடி – எமக்கு என்று நீ வைத்திருக்கும் பாதுகாப்பு / செல்வம் உன் திருவடிகள் செங்கைகள் நான்கு – செம்மையுடைய திருக்கைகள் நான்கு ஒளி செம்மை – உன் திருமேனி ஒளி செம்மை அம்மை நாமம் திரிபுரை – அம்மையே உன் திருநாமம் திரிபுரசுந்தரி ஒன்றோடு இரண்டு நயனங்களே – திருக்கண்களோ நெற்றிக்கண் ஒன்றோடு சேர்த்து மூன்று நயனங்கள். விளக்கம்: அந்தாதித் தொடை: சென்ற பாடல் தாமரையே என்று நிறைய இந்தப் பாடல் தாமம் கடம்பு என்று தொடங்கியது. இந்தப் பாடல் நயனங்களே என்று நிறைய அடுத்தப் பாடல் நயனங்கள் என்று தொடங்கும். இப்படி ஒரு பாடலில் இறுதியில் வரும் சொல் அடுத்தப் பாடலில் தொடக்கத்தில் வருமாறு அமைத்துப் பாடுவது அந்தாதித் தொடை. எதுகை: தாமம், யாமம், சேமம், நாமம் மோனை: தாமம் – தனுக்கரும்பு, யாமம் – ஏத்தும் – எமக்கு – என்று, சேமம் – செங்கைகள் – செம்மை, நாமம் – நயனங்களே. இப்பாடலை தொடர்ந்து பாராயனம் செய்தால் ‘பெண்களுக்கு கர்ப்பம் உண்டாகும்’. பாடல் 74 - மூவரும் போற்றும் தேவி [] பாடல்: நயனங்கள் மூன்றுடை நாதனும் வேதமும் நாரணனும் அயனும் பரவும் அபிராமவல்லி அடி இணையைப் பயன் என்று கொண்டவர் பாவையர் ஆடவும் பாடவும் பொன் சயனம் பொருந்தும் தமனியக் காவினில் தங்குவரே? பொருள்: நயனங்கள் மூன்றுடை நாதனும் – முக்கண் முதல்வனும் வேதமும் – வேதங்களும் நாரணனும் – எங்கும் நிறை நாராயணனும் அயனும் – எல்லா உலகங்களையும் படைக்கும் பிரம்மனும் பரவும் – போற்றும் அபிராமவல்லி அடி இணையைப் – அபிராமவல்லியின் திருவடி இணைகளைப் பயன் என்று கொண்டவர் – பெரும் பயன் என்று பற்றிக் கொண்டவர்கள் பாவையர் ஆடவும் பாடவும் – தேவப் பெண்கள் பாடி ஆடி மகிழ்விக்க பொன் சயனம் பொருந்தும் – பொன்னால் ஆன படுக்கையை உடைய தமனியக் காவினில் தங்குவரே? – பாரிஜாதக் காட்டினில் தங்கி மகிழும் பயனை வேண்டுவாரோ? மும்மூர்த்திகளே வணங்கும் திருவடிகளைப் பயன் என்று கொண்ட பின்னர் இந்திர போகமும் வேண்டாம் என்கிறார். அச்சுவை பெறினும் வேண்டேன் என்று மற்றொரு அருளாளர் சொன்னதைப் போல்.*** விளக்கம்:எல்லாவற்றிற்கும் அடிப்படையான ஒரு பொருளைப் பெற்றவர்கள் வேறு ஒன்று பெற தனி முயற்சி செய்யவும் வேண்டுமா? மரத்தின் வளர்ச்சிக்கு நீர் வார்க்க நினைப்பவர்கள் மரத்தின் ஒவ்வொரு இலையிலும் பூவிலும் காயிலும் கனியிலும் காம்பிலும் நீரைத் தெளிக்காமல் மரத்தின் வேரில் தானே நீரை வார்ப்பார்கள். வேரில் இட்ட நீர் மரத்தின் எல்லா பகுதிக்கும் சென்று மரத்தைத் தழைக்க வைக்குமே. அப்படி எது வேண்டும் என்று நினைத்தாலும் எல்லாவற்றிற்கும் அடிப்படையான ஒரு பொருளை வேண்டினால் நினைப்பவை எல்லாம் கிடைக்குமே. ஆனால் அதில் ஒரு பிரச்சனை உண்டு. எல்லாவற்றிற்கும் அடிப்படையான ஒன்றை வேண்டி அதனைப் பற்றியதும் மற்ற எதுவுமே தனக்குப் பொருளில்லை என்ற நிலையை அல்லவா ஒருவர் அடைந்துவிடுகிறார்?! அந்த நிலையைத் தான் இங்கே அபிராமிபட்டர் பாடியிருக்கிறார். அந்தாதித் தொடை: சென்ற பாடல் நயனங்களே என்று நிறைய இந்தப் பாடல் நயனங்கள் என்று தொடங்கியது. இந்தப் பாடல் தங்குவரே என்று நிறைய அடுத்தப் பாடல் தங்குவர் என்று தொடங்கும். இப்படி ஒரு பாடலில் இறுதியில் வரும் சொல் அடுத்தப் பாடலில் தொடக்கத்தில் வருமாறு அமைத்துப் பாடுவது அந்தாதித் தொடை. எதுகை: நயனங்கள், அயனும், பயன், சயனம் மோனை: நயனங்கள் – நாதனும் – நாரணனும், அயனும் – அபிராமவல்லி – அடியிணையை, பயன் – பாவை – பாடவும் – பொன், சயனம் – தமனிய – தங்குவரே. இப்பாடலை தொடர்ந்து பாராயனம் செய்தால் ‘செய்தொழில் தலைமை எய்யலாம்’. பாடல் 75 - கொங்கிவர் பூங்குழலாள் [] பாடல்: தங்குவர் கற்பகத் தாருவின் நீழலில் தாயர் இன்றி மங்குவர் மண்ணில் வழுவாய் பிறவியை மால் வரையும் பொங்கு உவர் ஆழியும் ஈரேழ் புவனமும் பூத்த உந்திக் கொங்கிவர் பூங்குழலாள் திருமேனி குறித்தவரே பொருள்: தங்குவர் கற்பகத் தாருவின் நீழலில் – பிறப்பிறப்பில்லாத அன்னையின் உலகத்தில் கற்பக மரத்தின் நிழலில் வாழுவார்கள் தாயர் இன்றி மங்குவர் மண்ணில் வழுவாய் பிறவியை – குற்றம் நிறைந்த பிறவிகள் இன்றியும் பிறவிகள் இல்லாததால் பெற்றெடுக்கும் தாயர் இன்றியும் மண்ணில் மங்கிப் போவாரக்ள் (மீண்டும் பிறக்க மாட்டார்கள்) மால் வரையும் – மலைக்க வைக்கும் பெரிய மலைகளையும் பொங்கு உவர் ஆழியும் – அலைகளால் பொங்கும் உவர்ப்புச் சுவை கூடிய கடல்களையும் ஈரேழ் புவனமும் – பதினான்கு உலகங்களையும் பூத்த உந்திக் – தன் திருவயிற்றினில் பெற்ற உலக அன்னையாம் கொங்கிவர் பூங்குழலாள் திருமேனி குறித்தவரே – தேன் சொரியும் பூக்களை அணிந்த கூந்தலையுடைய அபிராமி அன்னையின் திருமேனியைத் தொழுதவர்களே.*** விளக்கம்:முதல் வார்த்தையில் பாராட்டிவிட்டு இரண்டாவது வார்த்தையில் சபிப்பதைப் போல் பாடியிருப்பதைப் பார்த்திருக்கிறீர்களா? இந்தப் பாடலைப் பாருங்கள். உண்மையில் அந்த சாபமும் வாழ்த்து தான் என்பது கொஞ்சம் நெருங்கிப் பொருளைப் பார்த்தால் புரிகிறது. அந்தாதித் தொடை: சென்ற பாடல் தங்குவரே என்று நிறைய இந்தப் பாடல் தங்குவர் என்று தொடங்கியது. இந்தப் பாடல் குறித்தவரே என்று நிறைய அடுத்தப் பாடல் குறித்தேன் என்று தொடங்கும். இப்படி ஒரு பாடலில் இறுதியில் வரும் சொல் அடுத்தப் பாடலில் தொடக்கத்தில் வருமாறு அமைத்துப் பாடுவது அந்தாதித் தொடை. எதுகை: தங்குவர் – மங்குவர் – பொங்குவர் – கொங்கிவர் மோனை: தங்குவர் – தாருவின் – தாயர், மங்குவர் – மண்ணில் – மால்வரையும், பொங்குவர் – புவனமும் – பூத்த, கொங்கிவர் – குழலாள் – குறித்தவரே. இப்பாடலை தொடர்ந்து பாராயனம் செய்தால் ‘வலிமை மிக்க விதியையும் வெல்லலாம்’. பாடல் 76 - குறித்தேன் மனத்தில் நின் கோலம் எல்லாம் [] பாடல்: குறித்தேன் மனத்தில் நின் கோலம் எல்லாம் நின் குறிப்பு அறிந்து மறித்தேன் மறலி வருகின்ற நேர் வழி வண்டு கிண்டி வெறித் தேன் அவிழ் கொன்றை வேணிப் பிரான் ஒரு கூற்றை மெய்யில் பறித்தே குடிபுகுதும் பஞ்ச பாண பயிரவியே பொருள்: குறித்தேன் மனத்தில் நின் கோலம் எல்லாம் – எல்லா நேரங்களிலும் உன் திருவுருவங்களையே மனத்தில் நினைத்துக் கொண்டிருக்கிறேன். நின் குறிப்பு அறிந்து – உன் திருவருளைத் துணையாகக் கொண்டு மறித்தேன் மறலி வருகின்ற நேர் வழி – யமன் வரும் வழியினை அடைத்துவிட்டேன். இனி எனக்கு மரணம் இல்லை. வண்டு கிண்டி வெறித் தேன் அவிழ் கொன்றை வேணிப் பிரான் – வண்டுகளால் துளைக்கப்பட்டு வெறியூட்டும் தேன் சொட்டுகின்ற கொன்றைப்பூக்களைச் சூடிய திருமுடியை உடைய சிவபெருமானின் ஒரு கூற்றை மெய்யில் பறித்தே குடிபுகுதும் – உடம்பில் ஒரு பாகத்தை உன் உரிமையாகக் கொண்டு அங்கே குடிபுகுந்தாய் பஞ்ச பாண பயிரவியே – ஐந்து மலர்க்கணைகளைக் கொண்டு உலக நடப்பை எல்லாம் நடத்தும் அம்மையே விளக்கம்: அந்தாதித் தொடை: சென்ற பாடல் குறித்தவரே என்று நிறைய இந்தப் பாடல் குறித்தேன் என்று தொடங்கியது. இந்தப் பாடல் பயிரவியே என்று நிறைய அடுத்தப் பாடல் பயிரவி என்று தொடங்கும். இப்படி ஒரு பாடலில் இறுதியில் வரும் சொல் அடுத்தப் பாடலில் தொடக்கத்தில் வருமாறு அமைத்துப் பாடுவது அந்தாதித் தொடை. எதுகை: குறித்தேன், மறித்தேன், வெறித்தேன், பறித்தே மோனை: குறித்தேன் – கோலம் – குறிப்பு, மறித்தேன் – மறலி, வெறித்தேன் – வேணிப்பிரான், பறித்தே – பஞ்ச – பாண – பயிரவியே. இப்பாடலை தொடர்ந்து பாராயனம் செய் ‘தனக்குரிய பொருள் தப்பாமல் வந்துசேரும்’. பாடல் 77 - நான்மறை சேர் திருநாமங்கள் செப்புவோம் [] பாடல்: பயிரவி பஞ்சமி பாசாங்குசை பஞ்சபாணி வஞ்சர் உயிர் அவி உண்ணும் உயர் சண்டி காளி ஒளிரும் கலா வயிரவி மண்டலி மாலினி சூலி வராகி என்றே செயிர் அவி நான்மறை சேர் திருநாமங்கள் செப்புவரே பொருள்: பயிரவி – கொடியவர்களுக்கு அச்சம் தரும் வடிவை உடையவளே பஞ்சமி – ஐந்து தொழில்கள் உடையவளே பாசாங்குசை – பாசமும் அங்குசமும் ஏந்தியவளே பஞ்சபாணி – ஐந்து மலர்க்கணைகள் தாங்கியவளே வஞ்சர் உயிர் அவி உண்ணும் உயர் சண்டி – வஞ்சகர்களின் உயிரை காணிக்கையாக ஏற்று உண்ணும் உயர் சண்டிகையே காளி – மகாகாளியே ஒளிரும் கலா வயிரவி – ஒளிவீசும் கலைகளைத் தருபவளே மண்டலி – சூரிய, சந்திர மண்டலங்களிலும் வழிபடுவோர் உருவாக்கும் சக்கர மண்டலங்களிலும் வசிப்பவளே மாலினி – மாலைகள் சூடியவளே சூலி – சூலத்தை ஏந்தியவளே வராகி – வராக உரு கொண்டவளே என்றே – என்றென்றே அடியார்கள் செயிர் அவி நான்மறை சேர் – குற்றங்குறைகளைத் தீர்க்கும் நான்மறைகளில் கூறப்பட்ட திருநாமங்கள் செப்புவரே – உனது திருநாமங்களைச் சொல்லுவார்கள். விளக்கம்: அந்தாதித் தொடை: சென்ற பாடல் பயிரவியே என்று நிறைய இந்தப் பாடல் பயிரவி என்று தொடங்கியது. இந்தப் பாடல் செப்புவரே என்று நிறைய அடுத்தப் பாடல் செப்பும் என்று தொடங்கும். இப்படி ஒரு பாடலில் இறுதியில் வரும் சொல் அடுத்தப் பாடலில் தொடக்கத்தில் வருமாறு அமைத்துப் பாடுவது அந்தாதித் தொடை. எதுகை: பயிரவி, உயிரவி, வயிரவி, செயிரவி மோனை: பயிரவி – பஞ்சமி – பாசாங்குசை – பஞ்சபாணி, உயிரவி – உண்ணும் – உயர்சண்டி – ஒளிரும், வயிரவி – வராகி, செயிரவி – சேர் – செப்புவரே. இப்பாடலை தொடர்ந்து பாராயனம் செய்தால் ‘பகைவைகளால் உண்டாகும் அச்சம் நீங்கும்’. பாடல் 78 - உன் திருவுருவம் என் கண்களில் நிறைகின்றதே [] பாடல்: செப்பும் கனக கலசமும் போலும் திருமுலைமேல் அப்பும் களப அபிராம வல்லி அணி தரளக் கொப்பும் வயிரக் குழையும் விழியின் கொழுங்கடையும் துப்பும் நிலவும் எழுதிவைத்தேன் என் துணை பொருள்: விழிக்கேசெப்பும் கனக கலசமும் போலும் திருமுலைமேல் – புகழ்ந்து பேசத்தக்க பொற்குடம் போன்ற உன் திருமுலைகளின் மேல் அப்பும் களப அபிராம வல்லி – பூசப்பட்ட சந்தன மணம் கமழும் அபிராமவல்லியே! அணி தரளக் கொப்பும் – நீ அணிகின்ற முத்துக் கொப்பும் வயிரக் குழையும் – வைரத் தோடுகளும் விழியின் கொழுங்கடையும் – அருளைச் சிந்தும் உன் கடைக்கண் பார்வையையும் துப்பும் நிலவும் – அன்பைச் சிந்தும் நிலவு போன்ற திருமுகமும் எழுதிவைத்தேன் என் துணை விழிக்கே – என் இரு விழிகளிலும் நிலைத்து நிற்கும் வண்ணம் செய்துவைத்தேன். விளக்கம்: அந்தாதித் தொடை: சென்ற பாடல் செப்புவரே என்று நிறைய இந்தப் பாடல் செப்பும் என்று தொடங்கியது. இந்தப் பாடல் விழிக்கே என்று நிறைய அடுத்தப் பாடல் விழிக்கே என்று தொடங்கும். இப்படி ஒரு பாடலில் இறுதியில் வரும் சொல் அடுத்தப் பாடலில் தொடக்கத்தில் வருமாறு அமைத்துப் பாடுவது அந்தாதித் தொடை. எதுகை: செப்பும், அப்பும், கொப்பும், துப்பும் மோனை: செப்பும் – திருமுலைமேல், அப்பும் – அபிராமவல்லி – அணிதரள, கொப்பும் – குழையும் – கொழுங்கடையும், துப்பும் – துணைவிழிக்கே. இப்பாடலை தொடர்ந்து பாராயனம் செய்தால் ‘சகல போக சௌபாக்கியங்கள் உண்டாகும்’. பாடல் 79 - கயவரோடு இனி என்ன கூட்டு? [] பாடல்: விழிக்கே அருள் உண்டு அபிராமவல்லிக்கு வேதம் சொன்ன வழிக்கே வழிபட நெஞ்சு உண்டு எமக்கு அவ்வழி கிடக்க பழிக்கே சுழன்று வெம்பாவங்களே செய்து பாழ் நரகக் குழிக்கே அழுந்தும் கயவர் தம்மோடு என்ன கூட்டினியே பொருள்: விழிக்கே அருள் உண்டு அபிராமவல்லிக்கு – அபிராமவல்லியின் திருவிழிகளுக்கு எம் மேல் தனிப்பட்ட அருள் கட்டாயம் இருக்கிறது. வேதம் சொன்ன வழிக்கே வழிபட நெஞ்சு உண்டு எமக்கு – நமக்கோ வேதங்கள் காட்டுகின்ற வழிகளிலேயே அவளை வழிபட மனம் உண்டு. அவ்வழி கிடக்க – அப்படிப்பட்ட நல்வழிகள் இருக்கும் போது பழிக்கே சுழன்று – தேவையின்றி கெட்ட வழியிலேயே திரிந்து வெம்பாவங்களே செய்து – கொடிய பாவங்களையே செய்து பாழ் நரகக் குழிக்கே அழுந்தும் – பாழும் நரகக் குழியிலேயே அழுந்தி வாடும் கயவர் தம்மோடு என்ன கூட்டு இனியே – கெட்டவர்கள் தம்மோடு இனி என்ன தொடர்பு?*** விளக்கம்:எல்லாம் வல்ல தெய்வத்தை வழிபட விரும்பும் மனம் நமக்கு இருக்கிறது. அப்படி இருந்தும் தெய்வத்தை நம்பாமல் கிண்டலும் கேலியும் பேசி பழி பாவங்களே செய்து நரக வழியிலேயே செல்ல விரும்பும் கயவர்களோடு நமக்கு ஏன் கூட்டு மனமே? அந்தாதித் தொடை: சென்ற பாடல் விழிக்கே என்று நிறைய இந்தப் பாடல் விழிக்கே என்று தொடங்கியது. இந்தப் பாடல் கூட்டினியே என்று நிறைய அடுத்தப் பாடல் கூட்டியவா என்று தொடங்கும். இப்படி ஒரு பாடலில் இறுதியில் வரும் சொல் அடுத்தப் பாடலில் தொடக்கத்தில் வருமாறு அமைத்துப் பாடுவது அந்தாதித் தொடை. எதுகை: விழிக்கே, வழிக்கே, பழிக்கே, குழிக்கே மோனை: விழிக்கே – உண்டு – வல்லிக்கு – வேதம், வழிக்கே – வழிபட – உண்டு – வழிகிடக்க, பழிக்கே – பாவங்களே – பாழ்நரக, குழிக்கே – கயவர் – கூட்டினியே இப்பாடலை தொடர்ந்து பாராயனம் செய்தால் ‘பந்தம் அறுக்கும்’. பாடல் 80 - ஆடகத் தாமரை ஆரணங்கே [] பாடல்: கூட்டியவா என்னைத் தன் அடியாரில் கொடிய வினை ஓட்டியவா என் கண் ஓடியவா தன்னை உள்ள வண்ணம் காட்டியவா கண்ட கண்ணும் மனமும் களிக்கின்றவா ஆட்டியவா நடம் ஆடகத் தாமரை ஆரணங்கே பொருள்: கூட்டியவா என்னைத் தன் அடியாரில் – என்னை உன் அடியார் கூட்டத்தில் சேர்த்ததையும் கொடிய வினை ஓட்டியவா – எனது கொடிய வல்வினைகளை ஓட்டியதையும் என் கண் ஓடியவா – என்னை நோக்கி ஓடி வந்து அருள் செய்ததையும் தன்னை உள்ள வண்ணம் காட்டியவா – உனது மெய்யுருவை உள்ளவண்ணம் காட்டியதையும் கண்ட கண்ணும் மனமும் களிக்கின்றவா – அப்படித் திருவுருவைக் கண்ட கண்ணும் மனமும் களிக்கின்றதையும் ஆட்டியவா நடம் – அந்தக் களிப்பில் என்னை நடம் ஆட்டிவைப்பதும் (என்னே உன் கருணை?) ஆடகத் தாமரை ஆரணங்கே – பொற்றாமரையில் வீற்றிருக்கும் பேரழகானவளே விளக்கம்:முதலில் அடியார் கூட்டத்தில் சேர்தல்; அந்த சேர்தலையே காரணமாகக் கொண்டு இறைவியின் திருவருள் வருதல்; அந்தத் திருவருளால் அவளது திருவுருவைக் காட்டுதல்; அப்படிக் கண்ட காட்சியில் கண்ணும் மனமும் களித்தல்; அந்தக் களிப்பில் நடம் ஆடுதல் – என்று இப்படி தொடர்ச்சியாக நடைபெறும் எல்லாமே அன்னையின் கருணையின் அடிப்படையிலேயே நடக்கிறது. அவன் அருளாலே அவன் தாள் வணங்கி என்று அருளாளர்கள் சொன்னதைப் போல். இந்தப் பாடலில் கூட்டியவாறும், ஓட்டியவாறும், ஓடியவாறும், காட்டியவாறும், களிக்கின்றவாறும், ஆட்டியவாறும் என்ற சொற்கள் ஈறு கெட்டு கூட்டியவா, ஓட்டியவா, ஓடியவா, காட்டியவா, களிக்கின்றவா என்று நின்றன. அந்தாதித் தொடை: சென்ற பாடல் கூட்டினியே என்று நிறைய இந்தப் பாடல் கூட்டியவா என்று தொடங்கியது. இந்தப் பாடல் ஆரணங்கே என்று நிறைய அடுத்தப் பாடல் அணங்கே என்று தொடங்கும். இப்படி ஒரு பாடலில் இறுதியில் வரும் சொல் அடுத்தப் பாடலில் தொடக்கத்தில் வருமாறு அமைத்துப் பாடுவது அந்தாதித் தொடை. எதுகை: கூட்டியவா, ஓட்டியவா, காட்டியவா, ஆட்டியவா மோனை: கூட்டியவா – கொடியவினை, ஓட்டியவா – ஓடியவா – உள்ளவண்ணம், காட்டியவா – கண்ட – கண்ணும் – களிக்கின்றவா, ஆட்டியவா – ஆடக – ஆரணங்கே. இப்பாடலை தொடர்ந்து பாராயனம் செய்தால் ‘நிலையான மனமகிழ்ச்சி உண்டாகும்’. பாடல் 81 - வஞ்சகரோடு இணங்க மாட்டேன்!  [] பாடல்: அணங்கே அணங்குகள் உன் பரிவாரங்கள் ஆகையினால் வணங்கேன் ஒருவரை வாழ்த்துகிலேன் நெஞ்சில் வஞ்சகரோடு இணங்கேன் எனது உனது என்று இருப்பார் சிலர் யாவரொடும் பிணங்கேன் அறிவு ஒன்றும் இலேன் என் கண் நீ வைத்த பேரளியே பொருள்: அணங்கே - ஒரே தெய்வமே அணங்குகள் உன் பரிவாரங்கள் ஆகையினால் - எல்லாத் தெய்வங்களும் உன் பரிவாரங்கள் ஆகையினால் வணங்கேன் ஒருவரை - இன்னொருவரை வணங்க மாட்டேன் வாழ்த்துகிலேன் நெஞ்சில் - நெஞ்சிலும் மற்றவரை வாழ்த்த மாட்டேன் வஞ்சகரோடு இணங்கேன் - வஞ்சகர்களோடு இணங்க மாட்டேன் எனது உனது என்று இருப்பார் சிலர் - தங்களுடையது எல்லாம் உன்னுடையது என்று இருப்பார்கள் சிலர் யாவரொடும் பிணங்கேன் - அவர்கள் யாராயிருந்தாலும் அவர்களோடு பிணக்கு கொள்ள மாட்டேன். அறிவு ஒன்றும் இலேன் - அறிவு ஒன்றுமே இல்லாதவன் நான் என் கண் நீ வைத்த பேரளியே - என் மேல் நீ வைத்தப் பெருங்கருணையை என்ன என்று போற்றுவேன்? விளக்கம்:சில நேரங்களில் சில மனிதர்கள் வஞ்சகர்கள் என்று தெரிந்திருந்த போதிலும் அவர்களுடன் இணங்கி இருக்க வேண்டிய நிலைமை உண்டாகிறது. சுயநலத்தால் எல்லோருமே அப்படி செய்வது அவரவர் அனுபவமாக இருக்கும். அன்னையின் அருளிருந்தால் அப்படி வஞ்சகரோடு இணங்கியிருக்க வேண்டிய தேவையிருக்காது என்பதை அபிராமி பட்டர் அருமையாகக் கூறுகிறார். அறிவு ஒன்றும் இல்லாதவன் நான். என் மேல் நீ வைத்த பெருங்கருணையை என்ன என்று சொல்லுவேன்? தெய்வங்களில் சிறந்தவளே. எல்லா தெய்வங்களும் நின் பரிவாரங்கள். நீயே என் மேல் கருணை கொண்டு விட்டதால் எதற்காகவும் எந்த நோக்கத்திற்காகவும் உலகத்தில் உன்னையன்றி மற்றவரை நான் வணங்க வேண்டியதில்லை; அதனால் வணங்கேன். அவர்களை நெஞ்சில் வாழ்த்தவும் தேவையில்லை; அதனால் வாழ்த்துகிலேன். வஞ்சகர்களோடு இணங்க வேண்டிய தேவையும் இல்லை; அதனால் இணங்கேன். தம்முடையது எல்லாம் அன்னையே உன்னுடையது என்று இருக்கிறார்களே சில மெய்யடியார்கள் அவர்கள் வெகு சிலரே; அப்படிப்பட்டவர்களோடு எந்தக் காரணத்தாலும் சண்டை போட மாட்டேன். பிணங்கேன். அந்தாதித் தொடை: சென்ற பாடல் பேரளியே என்று நிறைய இந்தப் பாடல் அளியார் என்று தொடங்கியது. இந்தப் பாடல் விரகே என்று நிறைய அடுத்தப் பாடல் விரவும் என்று தொடங்கும். இப்படி ஒரு பாடலில் இறுதியில் வரும் சொல் அடுத்தப் பாடலில் தொடக்கத்தில் வருமாறு அமைத்துப் பாடுவது அந்தாதித் தொடை. எதுகை: அளியார், ஒளியாக, களியாகி, வெளியாய் மோனை: அளியார் – ஆரணங்கே – அகிலாண்டமும், ஒளியாக – ஒளிர் – உள்ளுந்தொறும், களியாகி -கரணங்கள் – கரைபுரண்டு, வெளியாய் – விரகினையே. அருஞ்சொற்பொருள்: அளி – கருணை (சென்ற பாடலில் பயன்படுத்திய பொருள்), வண்டு (இந்தப் பாடலில் பயன்படுத்திய பொருள்) விரகு – பேரறிவு. இப்பாடலை தொடர்ந்து பாராயனம் செய்தால் ‘கவனசக்தி பெருகும்’. பாடல் 82 - அளி ஆர் கமலத்தில் ஆரணங்கே []பாடல்: அளி ஆர் கமலத்தில் ஆரணங்கே அகிலாண்டமும் நின் ஒளியாக நின்ற ஒளிர் திருமேனியை உள்ளுந்தொறும் களியாகி அந்தக்கரணங்கள் விம்மி கரை புரண்டு வெளியாய்விடில் எங்ஙனே மறப்பேன் நின் விரகினையே பொருள்: அளி ஆர் கமலத்தில் ஆரணங்கே - வண்டுகள் தேனினை உண்ண மொய்க்கும் தாமரையில் அமர்ந்திருக்கும் அழகிய பெண்ணே. அகிலாண்டமும் நின் ஒளியாக நின்ற – எல்லா உலகங்களும் உன்னிலிருந்து வீசும் ஒளியாக நின்றது. ஒளிர் திருமேனியை உள்ளுந்தொறும் – அப்படிப்பட்ட ஒளி வீசும் உன் திருமேனியை நினைக்கும் போதெல்லாம் களியாகி – பெருமகிழ்ச்சி பெருகி அந்தக்கரணங்கள் விம்மி – உள்ளுறுப்புகள் எல்லாம் விம்மி கரை புரண்டு – உள்ளே பெருகிய மகிழ்ச்சி கரை புரண்டு வெளியாய்விடில் – வெளியேயும் பெருகி நிற்கின்றது. எங்ஙனே மறப்பேன் நின் விரகினையே – உனது பேரறிவினை எப்படி மறப்பேன் விளக்கம்:இறைச்சக்தி உருவமற்றது. அதற்கு உருவம் ஏற்படுத்திக் கொண்டு வணங்கிக் கொண்டிருக்கிறார்கள் இந்த பக்தர்கள். என்னே இவர்களின் அறிவீனம்? – இப்படியெல்லாம் தத்துவ ஆராய்ச்சி செய்து மிகப்பெரியவர்கள் என்று தங்களை எண்ணிக் கொள்பவர்கள் பேசுகிறார்கள். இன்னும் சிலரோ உருவமற்ற இறைசக்தியை வணங்குவது உயர்கல்வியைப் போன்றது; உருவத்தில் இறைசக்தியை வணங்குதல் தொடக்கக் கல்வியைப் போன்றது; அவரவர் ஆன்மிக முன்னேற்றத்திற்கு ஏற்ப இறைசக்தியை வணங்கிக் கொள்ளலாம் என்றெல்லாம் சொல்கிறார்கள். இது சரி தானா, உண்மை தானா என்று எப்படி எனக்குத் தெரியும்? இந்தப் பாடலில் அபிராமி பட்டரோ வேறு மாதிரி சொல்கிறார். அன்னையின் திருவுருவத்தை நினைக்கும் போதெல்லாம் ஆன்மிக அனுபவங்களில் மிக உயர்ந்த அனுபவம் கிட்டுகிறதாம். உருவத்தை வணங்கும் இவர் தொடக்ககல்வி நிலையில் இருக்கிறாரா உயர்கல்வி நிலையில் இருக்கிறாரா அனைத்துக் கல்வியையும் கற்று மிகத் தேர்ந்தவராக இருக்கிறாரா தெரியவில்லை. அந்தாதித் தொடை: சென்ற பாடல் பேரளியே என்று நிறைய இந்தப் பாடல் அளியார் என்று தொடங்கியது. இந்தப் பாடல் விரகே என்று நிறைய அடுத்தப் பாடல் விரவும் என்று தொடங்கும். இப்படி ஒரு பாடலில் இறுதியில் வரும் சொல் அடுத்தப் பாடலில் தொடக்கத்தில் வருமாறு அமைத்துப் பாடுவது அந்தாதித் தொடை. எதுகை: அளியார், ஒளியாக, களியாகி, வெளியாய் மோனை: அளியார் – ஆரணங்கே – அகிலாண்டமும், ஒளியாக – ஒளிர் – உள்ளுந்தொறும், களியாகி -கரணங்கள் – கரைபுரண்டு, வெளியாய் – விரகினையே. அருஞ்சொற்பொருள்: அளி – கருணை (சென்ற பாடலில் பயன்படுத்திய பொருள்), வண்டு (இந்தப் பாடலில் பயன்படுத்திய பொருள்) விரகு – பேரறிவு. *** இப்பாடலை தொடர்ந்து பாராயனம் செய்தால் ‘கவனசக்தி பெருகும்’. பாடல் 83 - இந்திரன் ஆகும் வழி உலகத்தில் இருக்கும் எல்லா இயற்கை சக்திகளும் தேவர்களின் கட்டுப்பாட்டில் இருக்கிறது. அந்த தேவர்கள் தேவர்களின் தலைவனான இந்திரனின் கட்டுப்பாட்டில் இருக்கிறார்கள். அப்படிப்பட்ட இந்திர பதவி இந்த உலகத்தில் கிடைக்கும் இன்பங்களுக்கெல்லாம் உயர்ந்த இன்பம் என்பது வெள்ளிடைமலை. அப்படிப்பட்ட இந்திர பதவியை வேண்டி அடைய வேண்டாதபடி என்றைக்கும் உடையவராக ஒருவர் இருந்தால் அவர் எப்படிப்பட்டவராக இருப்பார் என்பதை இந்தப் பாடலில் சொல்கிறார் அபிராமி பட்டர்.   விரவும் புது மலர் இட்டு நின் பாத விரைக்கமலம் இரவும் பகலும் இறைஞ்ச வல்லார் இமையோர் எவரும் பரவும் பதமும் அயிராவதமும் பகீரதியும் உரவும் குலிசமும் கற்பகக் காவும் உடையவரே விரவும் புது மலர் இட்டு – தேன் சிந்தும் புதிய மலர்களை இட்டு நின் பாத விரைக்கமலம் – மணம்மிக்க உன் திருவடித் தாமரைகளை இரவும் பகலும் இறைஞ்ச வல்லார் – இரவும் பகலும் வணங்கும் வல்லமையுடையவர்கள் இமையோர் எவரும் பரவும் பதமும் – தேவர்கள் எல்லாம் போற்றி வணங்கும் இந்திர பதவியையும் அயிராவதமும் – வெள்ளையானையாம் ஐராவதத்தையும் பகீரதியும் – ஆகாய கங்கையையும் உரவும் குலிசமும் – வலிமையுடைய வஜ்ஜிராயுதத்தையும் கற்பகக் காவும் -வேண்டியதை எல்லாம் தரும் கற்பகச் சோலையையும் உடையவரே – இயல்பாகவே உடையவர்கள் (வருந்தி அடைய வேண்டாம்). *** அந்தாதித் தொடை: சென்ற பாடல் விரகே என்று நிறைய இந்தப் பாடல் விரவும் என்று தொடங்கியது. இந்தப் பாடல் உடையவரே என்று நிறைய அடுத்தப் பாடல் உடையாளை என்று தொடங்கும். இப்படி ஒரு பாடலில் இறுதியில் வரும் சொல் அடுத்தப் பாடலில் தொடக்கத்தில் வருமாறு அமைத்துப் பாடுவது அந்தாதித் தொடை. எதுகை: விரவும், இரவும், பரவும், உரவும் மோனை: விரவும் – விரைக்கமலம், இரவும் – இறைஞ்ச – இமையோர், பரவும் – பதமும் – பகீரதியும், உரவும் – உடையவரே. இப்பாடலை தொடர்ந்து பாராயனம் செய்தால் ‘ஏவலர் பலர் உளராகும்’. பாடல் 84 - வஞ்சகர் நெஞ்சு அடையாள்! [] பாடல்: உடையாளை ஒல்கு செம்பட்டுடையாளை ஒளிர்மதிச் செஞ் சடையாளை வஞ்சகர் நெஞ்சு அடையாளை தயங்கு நுண்ணூல் இடையாளை எங்கள் பெம்மான் இடையாளை இங்கு என்னை இனிப்படையாளை உங்களையும் படையா வண்ணம் பார்த்திருமே பொருள்: உடையாளை – உலகங்களையும் உயிர்களையும் உடைமைகளாகக் கொண்டவளை ஒல்கு செம்பட்டுடையாளை – ஒளிவீசும் சிவந்த பட்டு உடையை அணிந்தவளை ஒளிர்மதிச் செஞ்சடையாளை – ஒளிரும் நிலவை அணிந்த செம்மையான சடையை உடையவளை வஞ்சகர் நெஞ்சு அடையாளை – வஞ்சகர்களின் நெஞ்சில் தங்காதவளை தயங்கு நுண்ணூல் இடையாளை – தயங்கித் தயங்கி அசையும் நுண்ணிய நூல் போன்ற இடையை உடையவளை எங்கள் பெம்மான் இடையாளை – எங்கள் தலைவரான சிவபெருமானின் இடப்பாகத்தில் இருப்பவளை இங்கு என்னை இனிப் படையாளை – இந்த உலகத்தில் இனி என்னைப் படைக்காதவளை உங்களையும் படையா வண்ணம் பார்த்திருமே – உங்களையும் இனிப் பிறக்காமல் செய்யும் வண்ணம் வணங்குங்கள் விளக்கம்: அந்தாதித் தொடை: சென்ற பாடல் உடையவரே என்று நிறைய இந்தப் பாடல் உடையாளை என்று தொடங்கியது. இந்தப் பாடல் பார்த்திருமே என்று நிறைய அடுத்தப் பாடல் பார்க்கும் என்று தொடங்கும். இப்படி ஒரு பாடலில் இறுதியில் வரும் சொல் அடுத்தப் பாடலில் தொடக்கத்தில் வருமாறு அமைத்துப் பாடுவது அந்தாதித் தொடை. எதுகை: உடையாளை, சடையாளை, இடையாளை, படையாளை மோனை: உடையாளை – ஒல்கு – உடையாளை – ஒளிர்மதி, சடையாளை – தயங்கு, இடையாளை – எங்கள் – இடையாளை – இங்கு – என்னை – இனி, படையாளை – படையாவண்ணம் – பார்த்திருமே. இப்பாடலை தொடர்ந்து பாராயனம் செய்தால் ‘இக்கட்டான நிலைகள் நீங்கும்’. பாடல் 85 - என் அல்லல் எல்லாம் தீர்க்கும் திரிபுரையாள் [] பாடல்: பார்க்கும் திசைதொறும் பாசாங்குசமும் பனிச்சிறை வண்டு ஆர்க்கும் புதுமலர் ஐந்தும் கரும்பும் என் அல்லல் எல்லாம் தீர்க்கும் திரிபுரையாள் திருமேனியும் சிற்றிடையும் வார்க்குங்கும முலையும் முலைமேல் முத்து மாலையுமே பொருள்: பார்க்கும் திசைதொறும் – நான் பார்க்கின்ற திசையிலெல்லாம் தெரிவது பாசாங்குசமும் – அன்னை ஏந்திய பாசமும் அங்குசமும் பனிச்சிறை வண்டு ஆர்க்கும் புதுமலர் ஐந்தும் – பனியைப் போன்ற மெல்லிய சிறகுகளை உடைய வண்டுகளால் மொய்க்கப்பட்டிருக்கும் வாடாத ஐந்து மலர்க்கணைகளும் கரும்பும் – கரும்பு வில்லும் என் அல்லல் எல்லாம் தீர்க்கும் திரிபுரையாள் திருமேனியும் – என் அல்லல்களை எல்லாம் தன் கருணையால் தீர்க்கும் திரிபுரசுந்தரியின் திருமேனியும் சிற்றிடையும் – சிறு இடையும் வார்க்குங்கும முலையும் – கச்சை அணிந்த குங்குமம் அப்பிய முலைகளும் முலைமேல் முத்து மாலையுமே – அந்த முலைகளின் மேல் அணிந்த முத்து மாலைகளுமே. விளக்கம்:காக்கைச் சிறகினிலே நந்தலாலா என்று தொடங்கி பாரதியார் பாடிய பாடல் நிறைய பேருக்குத் தெரியும். வாசுதேவ ஸர்வமிதி ச மஹாத்மா சுதுர்லப என்று கண்ணன் கீதையில் சொல்லிய படி இறைவனே எல்லாம் இங்கு என்று இருக்கும் மகாத்மாக்கள் ஒரு சிலரேனும் உண்டு இங்கே. ‘உண்ணும் சோறும் பருகு நீரும் தின்னும் வெற்றிலையும் எல்லாமும் கண்ணனே’ என்று சொல்லுவார் நம்மாழ்வார். பார்க்கும் திசை தொறும் இறைவியின் திருக்காட்சியையே காண்கிறார் அபிராமி பட்டர். தான் கண்ட காட்சியை நாம் எல்லாம் காண இந்தப் பாடலில் வடித்துத் தருகிறார். அந்தாதித் தொடை: சென்ற பாடல் பார்த்திருமே என்று நிறைய இந்தப் பாடல் பார்க்கும் என்று தொடங்கியது. இந்தப் பாடல் மாலையுமே என்று நிறைய அடுத்தப் பாடல் மாலயன் என்று தொடங்கும். இப்படி ஒரு பாடலில் இறுதியில் வரும் சொல் அடுத்தப் பாடலில் தொடக்கத்தில் வருமாறு அமைத்துப் பாடுவது அந்தாதித் தொடை. எதுகை: பார்க்கும், ஆர்க்கும், தீர்க்கும், வார்க்குங்கும மோனை: பார்க்கும் – பாசாங்குசமும் – பனிச்சிறை, ஆர்க்கும் – ஐந்தும் – அல்லல், தீர்க்கும் – திரிபுரையாள் – திருமேனியும், வார்க்குங்கும – முலையும் – முலை – மேல் – முத்து – மாலையுமே. இப்பாடலை தொடர்ந்து பாராயனம் செய்தால் ‘அல்லல் எல்லாம் அகலும்’. பாடல் 86 - பாலையும் தேனையும் பாகையும் போலும் பணிமொழியே [] பாடல்: மால் அயன் தேட மறை தேட வானவர் தேட நின்ற காலையும் சூடகக் கையையும் கொண்டு கதித்த கப்பு வேலை வெங்காலன் என் மேல் விடும் போது வெளி நில் கண்டாய் பாலையும் தேனையும் பாகையும் போலும் பணிமொழியே பொருள்: மால் அயன் தேட – திருமாலவனும் பிரம்மனும் தேட மறை தேட – வேதங்கள் தேட வானவர் தேட – வானவர் தேட நின்ற காலையும் – நிற்கும் திருப்பாதங்களையும் சூடகக் கையையும் கொண்டு – வளையல்கள் சூடிய திருக்கைகளையும் கொண்டு கதித்த கப்பு வேலை – பல கிளைகளை கொண்ட வேலை (சூலத்தை) வெங்காலன் என் மேல் விடும் போது – வெம்மையுடைய காலன் என் மேல் விடும் போது வெளி நில் கண்டாய் – முன் வந்து நின்று அருள்வாய் பாலையும் தேனையும் பாகையும் போலும் பணிமொழியே – பாலைப் போன்ற, தேனைப் போன்ற, பாகைப் போன்ற இனிமையான திருக்குரலை உடையவளே. விளக்கம்: அந்தாதித் தொடை: சென்ற பாடல் மாலையுமே என்று நிறைய இந்தப் பாடல் மாலயன் என்று தொடங்கியது. இந்தப் பாடல் பணிமொழியே என்று நிறைய அடுத்தப் பாடல் மொழிக்கும் என்று தொடங்கும். இப்படி ஒரு பாடலில் இறுதியில் வரும் சொல் அடுத்தப் பாடலில் தொடக்கத்தில் வருமாறு அமைத்துப் பாடுவது அந்தாதித் தொடை. எதுகை: மாலயன், காலையும், வேலை, பாலை. மோனை: மாலயன் – மறை – வானவர், காலை – கையை – கொண்டு – கதித்த – கப்பு, வேலை – வெங்காலன் – விடும்போது – வெளிநில், பாலையும் – பாகையும் – போலும் – பணிமொழியே. இப்பாடலை தொடர்ந்து பாராயனம் செய்தால் ‘ஆயுதங்களால் உண்டாகும் அச்சம் நீங்கும்’. பாடல் 87 - விழிக்கும் வினைக்கும் வெளிநின்ற திருவுருவம் [] பாடல்: மொழிக்கும் நினைவுக்கும் எட்டாத நின் திருமூர்த்தம் எந்தன் விழிக்கும் வினைக்கும் வெளிநின்றதால் விழியால் மதனை அழிக்கும் தலைவர் அழியா விரதத்தை அண்டம் எல்லாம் பழிக்கும் படி ஒரு பாகம் கொண்டு ஆளும் பராபரையே பொருள்: மொழிக்கும் நினைவுக்கும் எட்டாத நின் திருமூர்த்தம் – எத்தனை தான் சொன்னாலும் உன் பெருமை சொல்லி முடியாது என்ற வகையில் மொழிக்கு எட்டாமலும், எந்த வகையில் நினைத்தாலும் உன் திருவுருவை எண்ணி முடியாது என்ற வகையில் நினைவுக்கு எட்டாமலும் இருக்கும் உன் திருவுருவம் எந்தன் விழிக்கும் வினைக்கும் வெளிநின்றதால் – என்னுடைய முன்வினைகளின் தடைகளையும் மீறி எந்தன் விழிகள் காணும்படி என் முன் நிற்கின்றதே! இது என்ன வியப்பு?! விழியால் மதனை அழிக்கும் தலைவர் – தன்னுடைய நெற்றிக்கண்ணால் மன்மதனை அழித்த எங்கள் தலைவராம் சிவபெருமானின் அழியா விரதத்தை – என்றும் தீராத தவமென்னும் விரதத்தை அண்டம் எல்லாம் பழிக்கும் படி ஒரு பாகம் கொண்டு ஆளும் பராபரையே – உடம்பின் இடப்புறத்தில் ஒரு பாகத்தையே கொண்டு இந்த அம்மை நிற்க அதன் பின்னரும் தவம் செய்வாரும் உளரோ என்று உலகம் எல்லாம் பழிக்கும் படி நிற்கின்ற பரதெய்வத்திற்கும் பரதெய்வமானவளே. விளக்கம்:அம்மையே உன் திருவுருவம் மொழிக்கும் நினைவுக்கும் எட்டாத திருவுருவம். அந்தத் திருவுருவத்தின் பெருமைச் சொல்லி முடியாது. மன்மதனை நெற்றிக்கண்ணால் எரித்த சிவபெருமானின் தவத்தையே உலகோர் பழிக்கும் படி செய்யும் பேரழகுடைய திருவுருவம் நின் உருவம். அப்படிப் பட்ட வாக்குக்கும் மனத்திற்கும் எட்டாத நின் திருவுருவம் என்னுடைய முன்வினைப்பயன்கள் என்னும் தடைகளையும் மீறி என் கண்களுக்கு முன்னர் வந்து நிற்கின்றது என்றால் அது என்னுடைய முயற்சியாலும் தவத்தாலும் ஏற்பட்டது இல்லை. உன்னுடைய அளவில்லாத பெருங்கருணையாலே மட்டும் நடக்கின்றது. அந்தாதித் தொடை: சென்ற பாடல் பணிமொழியே என்று நிறைய இந்தப் பாடல் மொழிக்கும் என்று தொடங்கியது. இந்தப் பாடல் பராபரையே என்று நிறைய அடுத்தப் பாடல் பரமென்று என்று தொடங்கும். இப்படி ஒரு பாடலில் இறுதியில் வரும் சொல் அடுத்தப் பாடலில் தொடக்கத்தில் வருமாறு அமைத்துப் பாடுவது அந்தாதித் தொடை. எதுகை: மொழிக்கும், விழிக்கும், அழிக்கும், பழிக்கும் மோனை: மொழிக்கும் – மூர்த்தம், விழிக்கும் – வினைக்கும் – வெளி – விழியால், அழிக்கும் – அழியா -அண்டம், பழிக்கும் – பாகம் – பராபரையே. இப்பாடலை தொடர்ந்து பாராயனம் செய்தால் ‘செயற்க்ரிய செயல்களைச் செய்து புகழ் பெறலாம்’. பாடல் 88 - தரமில்லாதவன் என்று தள்ளிவிடாதே [] பாடல்: பரம் என்று உனை அடைந்தேன் தமியேனும் உன் பத்தருக்குள் தரம் அன்று இவன் என்று தள்ளத் தகாது தரியலர்தம் புரம் அன்று எரியப் பொருப்புவில் வாங்கிய போதில் அயன் சிரம் ஒன்று செற்ற கையான் இடப்பாகம் சிறந்தவளே பொருள்: பரம் என்று உனை அடைந்தேன் தமியேனும் உன் பத்தருக்குள் – உன்னையே கதி என்று அடைந்த உன் பக்தர்களின் நடுவினில் இழிந்தவனான நானும் உன்னையே கதி என்று அடைந்தேன் தரம் அன்று இவன் என்று தள்ளத் தகாது – தகுதி இல்லாதவன் இவன் என்று எண்ணி இழிந்தவனான என்னைத் தள்ளாதே தரியலர்தம் புரம் அன்று எரியப் பொருப்புவில் வாங்கிய – தகாதவற்றைச் செய்த திரிபுராசுரர்களின் முப்புரங்களும் எரியும் படி மேரு மலையை வில்லாக ஏந்திய போதில் அயன் சிரம் ஒன்று செற்ற கையான் – தாமரை மலரில் பிறந்த பிரம்மனின் ஐந்தாவது தலையை சினம் கொண்டு அறுத்த கையை உடையவனான சிவபெருமானின் இடப்பாகம் சிறந்தவளே – இடப்பாகத்தில் நீங்காமல் நிலை பெற்றவளே. தகாதன செய்த திரிபுராசுரர்களைக் கொன்றவனும் தகாதன பேசிய பிரம்மனின் ஐந்தாவது தலையை அறுத்தவனும் ஆன சிவபெருமானின் இடப்பாகத்தில் சிறந்து விளங்கும் நீயும் ‘தகாதன செய்தவன் இவன்; நம் பத்தருக்குள் இருக்கத் தகுதி இல்லாதவன்’ என்று என்னைத் தள்ளக் கூடாது. நானும் உன்னையே கதி என்று அடைந்தேன். விளக்கம்:ஈருயிர் ஓருடல் என்று உலகவழக்கில் ஒற்றுமையைக் குறிக்கச் சொல்லுவார்கள். இங்கோ ஒரே உடலில் ஒரு பக்கம் ஐயனும் ஒரு பக்கம் அம்மையுமாகக் காட்சி தருகிறார்கள். ஐயனோ தகுதியில்லாதவர்கள் என்றால் தண்டிக்காமல் விடமாட்டான். அப்படிப் பட்டவனைச் சரணடைந்தாலும் நான் செய்த குற்றங்களை மனத்தில் கொண்டு என்னைத் தண்டித்துவிடுவான் என்று அன்னையே உன்னைச் சரணடைந்தேன். ஆனால் நீயோ அவன் உடலில் ஒரு பாகத்தில் சிறப்பாக விளங்குகிறாய். நீயும் அவனைப் போலவே தகுதியில்லாதவர்களைத் தண்டித்துவிடுவாயோ? அன்னையே நீ அப்படி செய்யக் கூடாது. உன்னையன்றி மற்றோர் கதி இல்லை என்று உன்னையே அடைந்துவிட்டேன். தரியலர் என்று தகாதன செய்த திரிபுரர்களைக் குறித்தார் பட்டர். மேருமலையை வில்லாகக் கொண்டு திரிபுர அசுரர்களுடன் போருக்குச் சென்றதனால் பொருப்பு வில் வாங்கிய என்றார் பட்டர். திருமாலின் உந்திக் கமலத்தில் தோன்றிய பிரமன் தன்னைப் படைத்தவர் திருமால்; அவனும் சிவபெருமானும் ஓருருவானவர்கள் என்பதை மறந்துவிட்டு, தனக்கும் ஐந்து தலைகள் சிவனுக்கும் ஐந்து தலைகள் – அதனால் தானும் சிவனும் ஒரே தரத்தவர் என்று தகாதன பேசினான். அதனால் சினந்த சிவபெருமான் அவன் ஐந்தாவது சிரத்தை அறுத்தார். திருமாலின் உந்தியில் பிறந்தவர் என்பதைக் குறிக்க ‘போதில்’ என்றார் பட்டர். சினம் கொண்டு சிரத்தை அறுத்தான் சிவன் என்பதைக் குறிக்க ‘செற்ற’ என்றார் பட்டர். அப்படி சினம் கொண்டு அறுத்த சிரம் சிவபெருமானின் கைகளிலேயே ஒட்டிக்கொண்டதைக் குறிக்க ‘கையான்’ என்று சொன்னார் பட்டர். இப்படி திரிபுராசுரர்களைப் போல் தகாதன செய்தும் பிரம்மனைப் போல் தகாதன பேசியும் திரிந்த என்னையும் அவர் அவர்களைத் தண்டித்தது போல் தண்டித்துவிடாதே என்கிறார் பட்டர். அந்தாதித் தொடை: சென்ற பாடல் பராபரையே என்று நிறைய இந்தப் பாடல் பரமென்று என்று தொடங்கியது. இந்தப் பாடல் சிறந்தவளே என்று நிறைய அடுத்தப் பாடல் சிறக்கும் என்று தொடங்கும். இப்படி ஒரு பாடலில் இறுதியில் வரும் சொல் அடுத்தப் பாடலில் தொடக்கத்தில் வருமாறு அமைத்துப் பாடுவது அந்தாதித் தொடை. எதுகை: பரமென்று, தரமன்று, புரமன்று, சிரமொன்று மோனை: பரம் – பத்தருக்குள், தரம் – தள்ளத் – தகாது – தரியலர் – தம், புரம் – பொருப்புவில் – போதில், சிரம் – செற்ற – சிறந்தவளே. இப்பாடலை தொடர்ந்து பாராயனம் செய்தால் ‘அம்பிகையின் அருள் எப்போதும் கிடைக்கும்’. பாடல் 89 - சிறக்கும் கமலத் திருவே [] பாடல்: சிறக்கும் கமலத் திருவே நின் சேவடி சென்னி வைக்கத் துறக்கம் தரும் நின் துணைவரும் நீயும் துரியம் அற்ற உறக்கம் தர வந்து உடம்போடு உயிர் உறவு அற்று அறிவு மறக்கும் பொழுது என் முன்னே வரல் வேண்டும் வருந்தியுமே  பொருள்: சிறக்கும் கமலத் திருவே – தாமரை மலர் மேல் வீற்றிருக்கும் திருமகளே! சிறப்பான செல்வ வடிவானவளே! நின் சேவடி சென்னி வைக்க – உன் சிறந்த திருவடிகளை என் தலை மேல் வைத்து அருள துறக்கம் தரும் நின் துணைவரும் நீயும் – உயர்ந்த வானுலகத்தை அருளும் தரும் உன் துணைவராம் இறைவரும் நீயும் துரியம் அற்ற உறக்கம் தர வந்து – தன்னைத் தான் அறியும் நான்காவது நிலையையும் தாண்டிய என்றும் நிலைத்த உறக்கமாம் சாக்காட்டைத் தர வந்து உடம்போடு உயிர் உறவு அற்று – உடம்போடு உயிர் உறவு இல்லாமல் பிரிந்து அறிவு மறக்கும் பொழுது – அறிவு மயக்கம் ஏற்படும் போது என் முன்னே வரல் வேண்டும் – என் முன்னே வர வேண்டும் வருந்தியுமே – வருந்தி அழைக்கின்றேன். விளக்கம்: தாமரை மலர் மேல் வீற்றிருக்கும் உயர்ந்த செல்வ வடிவானவளே! அபிராமி அன்னையே! உயர்ந்த வானுலகத்தை அருள்பவர்கள் நீயும் உன் துணைவரான இறைவரும். விழிப்பு, கனவு, ஆழ்ந்த உறக்கம் என்ற இயற்கையான மூன்று நிலைகளிலும் வேறுபட்ட நான்காவது நிலையான ‘தன்னைத் தான் அறிதல்’ என்னும் ஞான நிலையாம் துரியமும் கடந்த நிலை என்றும் நீங்காத் துயில் கொண்டு நீயும் இறைவரும் அருள வானுலகம் அடைதல். அந்த நிலையை அடைந்த பின் மீண்டும் பிறப்பிறப்புச் சுழற்சி இல்லை. என் உடம்போது உயிர் உறவு அறும் போது, மதி மயக்கம் ஏற்படும் போது உன்னை நினைப்பது எளிதில்லை. அதனால் இப்போதே வருந்தி வேண்டுகிறேன். அந்த நிலையில் நீயும் உன் துணைவரும் உங்கள் திருவடிகளை என் சென்னி மேல் வைக்க என் முன்னே வரல் வேண்டும். அந்தாதித் தொடை: சென்ற பாடல் சிறந்தவளே என்று நிறைய இந்தப் பாடல் சிறக்கும் என்று தொடங்கியது. இந்தப் பாடல் வருந்தியுமே என்று நிறைய அடுத்தப் பாடல் வருந்தாவகை என்று தொடங்கும். இப்படி ஒரு பாடலில் இறுதியில் வரும் சொல் அடுத்தப் பாடலில் தொடக்கத்தில் வருமாறு அமைத்துப் பாடுவது அந்தாதித் தொடை. எதுகை: சிறக்கும், துறக்கம், உறக்கம், மறக்கும் மோனை: சிறக்கும் – சேவடி – சென்னி, துறக்கம் – தரும் – துணைவரும் – துரியம், உறக்கம் – உடம்பொடு – உயிர் – உறவு, மறக்கும் – முன்னே. இப்பாடலை தொடர்ந்து பாராயனம் செய்தால் ‘யோகசித்தி பெறலாம்’. பாடல் 90 - இனி எனக்குக் கிடைக்காத பொருள் எதுவுமில்லை [] பாடல்: வருந்தாவகை என் மனத்தாமரையில் வந்து புகுந்து இருந்தாள் பழைய இருப்பிடமாக இனி எனக்குப் பொருந்தாது ஒரு பொருள் இல்லை விண் மேவும் புலவருக்கு விருந்தாக வேலை மருந்தானதை நல்கும் மெல்லியலே பொருள்: வருந்தாவகை என் மனத்தாமரையில் வந்து புகுந்து – நான் பிறப்பிறப்பு சூழலில் தொடர்ந்து வருந்தாத வகையில் என் மனத்தையே அவள் வீற்றிருக்கும் தாமரையாகக் கொண்டு அவளாக அவள் கருணையினால் வந்து புகுந்து இருந்தாள் பழைய இருப்பிடமாக – பல நாட்களாகப் பழகிய பழைய இருப்பிடத்தைப் போல் நிலையாக அமர்ந்துக் கொண்டாள் இனி எனக்குப் பொருந்தாது ஒரு பொருள் இல்லை – இனி எனக்குக் கிடைக்க வேண்டிய பொருள் வேறெதுவும் இல்லை. நான் அப்படியே விரும்பினாலும் கிடைக்காத பொருள் எதுவும் இல்லை. விண் மேவும் புலவருக்கு – விண்ணில் வாழும் அறிவில் சிறந்த புலவராம் தேவர்களுக்கு விருந்தாக வேலை மருந்தானதை நல்கும் மெல்லியலே – விருந்தாக கடலில் விளைந்த மருந்தான அமுதத்தைப் பெற்றுத் தரும் மென்மையான இயல்புடையவளே.கிடைத்தற்கு அரியது கடல் மருந்தான அமுதம். அதனையே அன்னை விண்ணவர்களுக்குப் பெற்றுத் தந்தாள்.  விளக்கம்:மோகினி உருவமாக பெருமாள் அந்த அமுதத்தைத் தேவர்களுக்குத் தந்ததாகப் புராணம் சொல்லும். அந்த மோகினி இந்த அபிராமி தான் என்கிறார் பட்டர். அப்படி கிடைத்தற்கரிய அமுதத்தையே பெற்றுத் தருபவள் என் மனத்தாமரையில் பழைய இருப்பிடம் போல் பல நாள் பழகிய இருப்பிடம் போல் வந்து அமர்ந்த பின்னர் எனக்கு வேறு ஏது குறை? அந்தாதித் தொடை: சென்ற பாடல் வருந்தியுமே என்று நிறைய இந்தப் பாடல் வருந்தாவகை என்று தொடங்கியது. இந்தப் பாடல் மெல்லியலே என்று நிறைய அடுத்தப் பாடல் மெல்லிய என்று தொடங்கும். இப்படி ஒரு பாடலில் இறுதியில் வரும் சொல் அடுத்தப் பாடலில் தொடக்கத்தில் வருமாறு அமைத்துப் பாடுவது அந்தாதித் தொடை. எதுகை: வருந்தாவகை, இருந்தாள், பொருந்தாது, விருந்தாக மோனை: வருந்தா – வகை – வந்து, இருந்தாள் – இருப்பிடமாக – இனி, பொருந்தாது – பொருள் – புலவருக்கு, விருந்தாக – வேலை. இப்பாடலை தொடர்ந்து பாராயனம் செய்தால் ‘பிரிந்த தம்பதிகள் மனம் ஒன்றி மகிழ்ந்து கூடலாம்’. பாடல் 91 - அடியாரைத் தொழுதால் ஐராவதம் ஏறி உலா வரலாம் [] பாடல்: மெல்லிய நுண் இடை மின்னனையாளை விரிசடையோன் புல்லிய மென்முலைப் பொன்னனையாளை புகழ்ந்து மறை சொல்லிய வண்ணம் தொழும் அடியாரைத் தொழுமவர்க்கு பல்லியம் ஆர்த்தெழ வெண்பகடு ஊரும் பதம் தருமே பொருள்: மெல்லிய நுண் இடை மின்னனையாளை – மென்மையும் நுண்மையும் உடைய இடையைக் கொண்ட மின்னலைப் போன்றவளை விரிசடையோன் புல்லிய மென் முலைப் பொன்னனையாளை – விரிசடைக்கடவுளாகிய சிவபெருமானால் அணைக்கப்பட்ட மெல்லிய முலையை உடைய பொன் போன்றவளை புகழ்ந்து மறை சொல்லிய வண்ணம் தொழும் – புகழ்ந்து வேதங்கள் சொன்ன முறைப்படி தொழுகின்ற அடியாரைத் தொழுமவர்க்கு – அடியவர்களைத் தொழும் அடியார்க்கடியாருக்கு பல்லியம் ஆர்த்தெழ – பலவித இசைக்கருவிகள் முழங்கி வர வெண்பகடு ஊரும் பதம் தருமே – வெள்ளையானையாம் ஐராவதத்தின் மேல் ஏறி ஊர்ந்து வரும் பதவியாகிய இந்திரப் பதவியைத் தருவாள்.அடியவர்களுக்கு அன்னை அருளும் பதங்களைச் சொல்லிக் கொண்டிருந்த பட்டர் இந்தப் பாடலில் அந்த அடியவரைத் தொழுபவர்களுக்கு என்ன பதம் கிடைக்கும் என்று சொல்கிறார்.  விளக்கம்:மெல்லிய நுண்ணிய இடையும், இறைவரால் அணைக்கப்பட்ட மென்முலையும் கொண்ட மின்னலையும் பொன்னையும் ஒத்த இறைவி, அவளை முறைப்படித் தொழும் அடியவர்களைத் தொழுபவர்களுக்கு, இந்திர பதவி முதலிய செல்வங்களை அருளுவாள். அந்தாதித் தொடை: சென்ற பாடல் மெல்லியலே என்று நிறைய இந்தப் பாடல் மெல்லிய என்று தொடங்கியது. இந்தப் பாடல் பதந்தருமே என்று நிறைய அடுத்தப் பாடல் பதத்தே என்று தொடங்கும். இப்படி ஒரு பாடலில் இறுதியில் வரும் சொல் அடுத்தப் பாடலில் தொடக்கத்தில் வருமாறு அமைத்துப் பாடுவது அந்தாதித் தொடை. எதுகை: மெல்லிய, புல்லிய, சொல்லிய, பல்லியம் மோனை: மெல்லிய – மின்னனையாளை, புல்லிய – பொன்னனையாளை – புகழ்ந்து, சொல்லிய – தொழும் – தொழுமவர்க்கு, பல்லியம் – பகடூரும் – பதந்தருமே. இப்பாடலை தொடர்ந்து பாராயனம் செய்தால் ‘அரசாங்க காரியங்களில் வெற்றி உண்டாகும்’. பாடல் 92 - முதல் தேவர் மூவரும் யாவரும் போற்றும் முகிழ்நகையே [] பாடல்: பதத்தே உருகி நின் பாதத்திலே மனம் பற்றி உந்தன் இதத்தே ஒழுக அடிமை கொண்டாய் இனி யான் ஒருவர் மதத்தே மதி மயங்கேன் அவர் போன வழியும் செல்லேன் முதல் தேவர் மூவரும் யாவரும் போற்றும் முகிழ்நகையே பொருள்: பதத்தே உருகி – உன் திருப்பெயர்களையும் உன் புகழையும் கூறும் சொற்களிலே ஒரு சொல் சொன்னவுடனேயே உருகி நின் பாதத்திலே மனம் பற்றி – உன் திருவடிகளிலே மனத்தை நிலைபெறச் செய்து உந்தன் இதத்தே ஒழுக – உந்தன் திருவுளத்திற்கு இதமான படி செயல்பட அடிமை கொண்டாய் – என்னை அடிமையாகக் கொண்டாய். இனி யான் ஒருவர் மதத்தே மதி மயங்கேன் – இனி மேல் நான் வேறொருவர் கருத்திலும் அறிவினை இழக்க மாட்டேன். அவர் போன வழியும் செல்லேன் – அவர்கள் சென்ற வழியிலும் செல்ல மாட்டேன். முதல் தேவர் மூவரும் யாவரும் போற்றும் முகிழ்நகையே – மும்மூர்த்திகளும் மற்ற எல்லோரும் போற்றும் அழகான புன்னகையை உடையவளே விளக்கம்:தேவரும் யாவரும் போற்றும் அழகிய புன்னகையை உடையவளே! உன் பெயரைச் சொன்னாலே உருகி, உன் திருவடிகளிலேயெ மனத்தை வைத்து, உன் மனத்திற்கு இசைந்தபடி நான் நடந்து கொள்ளுமாறு என்னை நீ அடியவனாக ஏற்றுக் கொண்டாய். எல்லோருக்கும் அடிப்படையான நீயே என்னை ஏற்றுக் கொண்ட பின்னர் இந்த உலகத்தில் வாழும் யாருடைய கருத்தையும் நான் கேட்டு அவர்கள் வழி செல்லவும் வேண்டுமோ? தேவையில்லை. நீயே முதல் மூவருக்கும் யாவருக்கும் முதன்மையான பொருள். அந்தாதித் தொடை: சென்ற பாடல் பதந்தருமே என்று நிறைய இந்தப் பாடல் பதத்தே என்று தொடங்கியது. இந்தப் பாடல் முகிழ்நகையே என்று நிறைய அடுத்தப் பாடல் நகையே என்று தொடங்கும். இப்படி ஒரு பாடலில் இறுதியில் வரும் சொல் அடுத்தப் பாடலில் தொடக்கத்தில் வருமாறு அமைத்துப் பாடுவது அந்தாதித் தொடை. எதுகை: பதத்தே, இதத்தே, மதத்தே, முதத்தேவர் மோனை: பதத்தே – பாதத்திலே – பற்றி, இதத்தே – இனி, மதத்தே – மதி – மயங்கேன், முதல் – மூவரும் – முகிழ்ந்கையே. இப்பாடலை தொடர்ந்து பாராயனம் செய்தால் ‘மனப்பக்குவம் உண்டாகும்’. பாடல் 93 - தெய்வத்தைப் புகழ்வதெல்லாம் பெரும் நகைச்சுவை  []நகையே இது இந்த ஞாலம் எல்லாம் பெற்ற நாயகிக்கு முகையே முகிழ் முலை மானே முதுகண் முடிவுயில் அந்த வகையே பிறவியும் வம்பே மலைமகள் என்பதும் நாம் மிகையே இவள் தன் தகைமையை நாடி விரும்புவதே நகையே இது – பெரும் நகைச்சுவை இது. இந்த ஞாலம் எல்லாம் பெற்ற நாயகிக்கு – இந்த உலகங்களை எல்லாம் பெற்ற நாயகிக்கு முகையே முகிழ் முலை – முகிழ்த்தெழுந்த முலை மலர் மொட்டு போல் இருக்கிறது என்றும் மானே முதுகண் – அழகிய நீண்ட கண்கள் மானைப் போல் இருக்கிறது என்றும் முடிவுயில் அந்த வகையே பிறவியும் – சொல்லி முடியாத அளவிற்கு இருக்கும் வடிவங்களை உடைய இவளை மலைமகள் என்பதும் – மலையரசனுக்கு மட்டுமே பிறந்தவளைப் போல் மலைமகள் என்பது வம்பே – இப்படி இவளைப் புகழ முயல்வதெல்லாம் தேவையில்லாத செயல்களே மிகையே இவள் தன் தகைமையை நாம் நாடி விரும்புவதே – இப்படி இவளது அறிய இயலாத பெருங்குணங்களை நாடித் தெரிந்து கொள்ள விரும்புவதும் முயல்வதும் நம் தகுதிக்கு மிகையே. இறைவியின் பெருமைகளைப் பேசப் புகுந்து போற்றுதலாகச் சொல்லும் சொற்களெல்லாம் அவளது பெருமையின் முன் எவ்வளவு சிறுமையானது என்பதை ‘தன்னைத் தானே நகைத்துக் கொள்ளும்’ வகையில் சொல்கிறார் பட்டர். உலகத்து அழகெல்லாம் அவள் அழகாக இருக்க அதில் ஏதோ ஒரு பூவின் மொட்டினைப் போல் அவள் திருமுலை இருக்கின்றது என்பதுவும், எல்லாக் கண்களும் அவள் கண்களாக இருக்க அதில் ஏதோ ஒரு வகைக் கண்களைப் போல் அவள் திருக்கண்கள் இருக்கின்றன என்பதுவும் எல்லாப் பிறவிகளாகவும் அன்னையே இருக்க அவள் மலைமகள் மட்டுமே என்பதுவும் உலகங்களை எல்லாம் ஈன்ற நாயகியின் திருக்குணங்களை சிறியோர்கள் அறிய விரும்பி முயல்வதும் மிகையானது தானே; நகைப்பதற்கு உரியது தானே. அடியேன் சிறிய ஞானத்தன் என்று தொடங்கும் நம்மாழ்வாரின் பாசுர வரிகளை அடியேனின் பதிவு முகவுரையில் இட்டிருக்கிறேன். அங்கும் நம்மாழ்வார் சொல்லுவது இதே கருத்தினைத் தான். *** அந்தாதித் தொடை: சென்ற பாடல் முகிழ்நகையே என்று நிறைய இந்தப் பாடல் நகையே என்று தொடங்கியது. இந்தப் பாடல் விரும்புவதே என்று நிறைய அடுத்தப் பாடல் விரும்பி என்று தொடங்கும். இப்படி ஒரு பாடலில் இறுதியில் வரும் சொல் அடுத்தப் பாடலில் தொடக்கத்தில் வருமாறு அமைத்துப் பாடுவது அந்தாதித் தொடை. எதுகை: நகையே, முகையே, வகையே, மிகையே மோனை: நகையே – நாயகிக்கு, முகையே – முகிழ் – முலை – மானே – முதுகண் – முடிவு, வகையே – வம்பே – மலைமகள், மிகையே – விரும்புவதே. இப்பாடலை தொடர்ந்து பாராயனம் செய்தால் ‘உள்ளத்தே உண்மை ஒளி உண்டாகும்’. பாடல் 94 - அபிராமி சமயம் நன்றே [] பாடல்: விரும்பித் தொழும் அடியார் விழி நீர் மல்கி மெய் புளகம் அரும்பித் ததும்பிய ஆனந்தம் ஆகி அறிவு இழந்து கரும்பின் களித்து மொழி தடுமாறி முன் சொன்ன எல்லாம் தரும்பித்தர் ஆவர் என்றால் அபிராமி சமயம் நன்றே பொருள்: விரும்பித் தொழும் அடியார் – அபிராமி அன்னையை விரும்பித் தொழும் அடியவர்கள் விழி நீர் மல்கி – கண்களில் கண்ணீர் மல்கி மெய் புளகம் அரும்பி – மெய் சிலிர்த்து ததும்பிய ஆனந்தம் ஆகி – மகிழ்ச்சி பெருகித் ததும்பி அறிவு இழந்து – அறிவு மயக்கம் உற்று கரும்பின் களித்து – இனிய கரும்பினை உண்டது போல் களித்து மொழி தடுமாறி – சொற்கள் தடுமாறி முன் சொன்ன எல்லாம் தரும் பித்தர் ஆவர் என்றால் – இப்படி இங்கே முன்னர் சொல்லப்பட்டவை எல்லாம் பெறும் பித்தரைப் போல் ஆகிவிடுவார்கள் என்றால் அபிராமி சமயம் நன்றே – அபிராமியை வணங்கும் இந்தச் சமயத்துறை மிக நன்றே.அபிராமி அன்னையை வணங்கும் அடியார்களுக்கு ஏற்படும் மெய்யுணர்வுகளைப் பற்றி இங்கே சொல்கிறார் பட்டர்.  விளக்கம்:கண்ணீர் மல்கி, மெய் சிலிர்த்து, மகிழ்ச்சி பெருகி, அறிவிழந்தவர் போல் சொற்குழறி பித்தரைப் போல் அன்னையின் மேல் அன்பு பெருகி வணங்குவது அடியார்களின் பக்திக்கு அடையாளங்கள். அந்தாதித் தொடை: சென்ற பாடல் விரும்புவதே என்று நிறைய இந்தப் பாடல் விரும்பி என்று தொடங்கியது. இந்தப் பாடல் நன்றே என்று நிறைய அடுத்தப் பாடல் நன்றே என்று தொடங்கும். இப்படி ஒரு பாடலில் இறுதியில் வரும் சொல் அடுத்தப் பாடலில் தொடக்கத்தில் வருமாறு அமைத்துப் பாடுவது அந்தாதித் தொடை. எதுகை: விரும்பி, அரும்பி, கரும்பின், தரும்பித்தர் மோனை: விரும்பி – விழிநீர், அரும்பி – ஆனந்தம் – ஆகி – அறிவு, கரும்பின் – களித்து, தரும் – சமயம். இப்பாடலை தொடர்ந்து பாராயனம் செய்தால் ‘பைத்தியம் தெளியும்’. பாடல் 95 - நான் அறிவது ஒன்றும் இல்லை நீயே எல்லாம் [] பாடல்: நன்றே வருகினும் தீதே விளைகினும் நான் அறிவது ஒன்றேயும் இல்லை உனக்கே பரம் எனக்கு உள்ளதெல்லாம் அன்றே உனது என்று அளித்து விட்டேன் அழியாத குணக் குன்றே அருட்கடலே இமவான் பெற்ற கோமளமே பொருள்: நன்றே வருகினும் – எனக்கு நன்மைகளே விளைந்தாலும் தீதே விளைகினும் – தீமைகளே விளைந்தாலும்   நான் அறிவது ஒன்றேயும் இல்லை – நன்மை தீமை என்று நான் பிரித்து அறிவது ஒன்றுமே இல்லை உனக்கே பரம் – உனக்கே அது தெரியும்; உனக்கே அடைக்கலம். எனக்கு உள்ளதெல்லாம் – என்னுடையது என்று இருப்பவற்றை எல்லாம் அன்றே உனது என்று அளித்து விட்டேன் – எப்போதோ உன்னுடைய உடைமை என்று கொடுத்து விட்டேன். அழியாத குணக்குன்றே – என்றுமே மறையாத நற்குணங்களின் குன்றே  அருட்கடலே – அந்த நற்குணங்களிலேயே சிறந்ததான அருளின் கடலே இமவான் பெற்ற கோமளமே – இமயமலைக்கரசன் பெற்ற மென்மையானவளே.அபிராமி அன்னையே! நானும் என் உடைமைகளும் உனக்கே அடைக்கலம் என்று என்றைக்கோ கொடுத்துவிட்டேன்.  விளக்கம்:இனி மேல் எனக்கு நன்மைகளே வந்தாலும் தீமைகளே வந்தாலும் நான் அவற்றைப் பிரித்து அறிய மாட்டேன். அவை அனைத்துமே உன் அருளால் வருவதால் எல்லாமே எனக்கு நன்மையாகத் தான் இருக்க வேண்டும். அவற்றைப் பிரித்துப் பார்த்து நடத்திக் கொள்வதெல்லாம் உன் பரம்; உன் கடமை. அன்பு, அறிவு, அருள் போன்ற நற்குணங்களின் குன்றே. அவற்றுள்ளும் சிறந்த அருளின் கடலே. மலைமகளே. அந்தாதித் தொடை: சென்ற பாடல் நன்றே என்று நிறைய இந்தப் பாடல் நன்றே என்று தொடங்கியது. இந்தப் பாடல் கோமளமே என்று நிறைய அடுத்தப் பாடல் கோமளவல்லியை என்று தொடங்கும். இப்படி ஒரு பாடலில் இறுதியில் வரும் சொல் அடுத்தப் பாடலில் தொடக்கத்தில் வருமாறு அமைத்துப் பாடுவது அந்தாதித் தொடை. எதுகை: நன்றே, ஒன்றேயும், அன்றே, குன்றே மோனை: நன்றே – நான், ஒன்றேயும் – உனக்கே – உள்ளம், அன்றே – அளித்துவிட்டேன் – அழியாத, குன்றே – கோமளமே. இப்பாடலை தொடர்ந்து பாராயனம் செய்தால் ‘அனைத்தையும் துறக்கும் மனதிலை பெறலாம்’. பாடல் 96 - ஆமளவும் தொழுதால் ஏழுலகுக்கும் அதிபர் []பாடல்: கோமளவல்லியை அல்லியந்தாமரைக் கோயில் வைகும் யாமளவல்லியை ஏதம் இலாளை எழுதரிய சாமள மேனிச் சகலகலாமயில் தன்னை தம்மால் ஆமளவும் தொழுவார் எழு பாருக்கும் ஆதிபரே பொருள்: கோமளவல்லியை – இளமையும் மென்மையும் கொண்ட கொடி போன்றவளை அல்லியம் தாமரைக் கோயில் வைகும் – அழகிய அல்லி, தாமரை மலர்களால் ஆன திருக்கோவிலில் வாழும் யாமளவல்லியை – இறைவருடன் இரட்டையாக நிற்கும் தேவியை ஏதம் இலாளை – குற்றமொன்றில்லாதவளை எழுத அரிய – வரைவதற்கு எளிதில்லாத சாமள மேனிச் சகலகலாமயில் தன்னை – அழகான கருநிற திருமேனி கொண்ட எல்லா கலைகளிலும் வல்ல மயில் போன்றவளை தம்மால் ஆமளவும் தொழுவார் – தம்மால் முடிந்த அளவும் தொழுபவர்கள் எழு பாருக்கும் ஆதிபரே – சென்ற இடத்தில் எல்லாம் பெருமை பெறுவார்கள்.அன்னை இறைவரின் திருமேனியில் ஒரு பகுதியாக அவனுடன் இரட்டைப் பிறவியைப் போல் இருப்பதால் யாமளா என்ற திருப்பெயர் கொள்கிறாள். விளக்கம்:வரையவோ வடிக்கவோ எளிதில் இயலாத திருமேனி அழகைப் பெற்றவள். மிகவும் மென்மையான கொடியைப் போன்றவள். தாமரைத் திருக்கொவிலில் உறைபவள். குற்றம் குறை என்று ஒன்றுமே இல்லாதவள். அப்படிப்பட்டவளை தம்மால் எந்த அளவிற்கு முடியுமோ அந்த அளவில் குறையாமல் தொழுதால் அவர்கள் ஏழு உலகங்களையும் உடையவர்கள் ஆவார்கள்; எழு பார் என்பதற்கு அவர் எழுகின்ற/செல்லுகின்ற இடம் என்று பொருள் கொண்டால் அவர்கள் கால் பட்ட இடத்திற்கெல்லாம் உரிமையாளர்களாக அவர்கள் ஆவார்கள். அந்தாதித் தொடை: சென்ற பாடல் கோமளமே என்று நிறைய இந்தப் பாடல் கோமளவல்லியை என்று தொடங்கியது. இந்தப் பாடல் ஆதிபரே என்று நிறைய அடுத்தப் பாடல் ஆதித்தன் என்று தொடங்கும். இப்படி ஒரு பாடலில் இறுதியில் வரும் சொல்லோ எழுத்தோ அடுத்தப் பாடலில் தொடக்கத்தில் வருமாறு அமைத்துப் பாடுவது அந்தாதித் தொடை. எதுகை: கோமளவல்லியை, யாமளவல்லியை, சாமளமேனி, ஆமளவும் மோனை: கோமளவல்லியை – கோயில், யாமளவல்லியை – ஏதம் – இலாளை – எழுதரிய, சாமளமேனி – சகலகலாமயில் – தன்னை – தம்மால், ஆமளவும் – ஆதிபரே. *** சேலம் ஸ்கந்தாஸ்ரமத்தில் உறையும் அன்னையின் திருவுருவப் படத்திற்கு நன்றி: திரு.ஜாக்கி சேகர் தம்மால் ஆமளவும் தொழுவார் எழு பாருக்கும் ஆதிபரே என்பதால் இப்பாடலை தொடர்ந்து பாராயனம் செய்தால் ‘எங்கும் தலைமையும் புகழும் பெறலாம்’. பாடல் 97 - புண்ணியர் எண்ணிலர் போற்றுவர் தையலையே பாடல்: [] ஆதித்தன் அம்புலி அங்கி குபேரன் அமரர் தம் கோன் போதிற் பிரமன் புராரி முராரி பொதியமுனி காதிப் பொருபடை கந்தன் கணபதி காமன் முதல் சாதித்த புண்ணியர் எண்ணிலர் போற்றுவர் தையலையே பொருள்: ஆதித்தன் – அதிதியின் மகனான கதிரவன் அம்புலி – நீரைப் போல் குளிர்ந்த நிலவன் அங்கி – தீக்கடவுளாம் அக்கினி குபேரன் – செல்வத்திற்குத் தலைவனாம் குபேரன் அமரர் தம் கோன் – மரணமிலாதவராம் விண்ணவர்கள் தம் தலைவன் இந்திரன் போதிற் பிரமன் – தாமரைப்பூவில் பிறந்த/வாழும் பிரமன் புராரி – திரிபுரங்களை அழித்த சிவன் முராரி – முராசுரனை அழித்த திருமால் பொதியமுனி – பொதிகை மலையில் வாழும் அகத்தியர் காதிப் பொருபடை கந்தன் – போரிட்டு அழிக்கும் படைக்கலம் கொண்ட கந்தன் கணபதி – கணங்களின் தலைவன் கணபதி காமன் – மன்மதன் முதல் சாதித்த புண்ணியர் எண்ணிலர் – முதலான சாதனை புரிந்தவர் எண்ணற்றவர் போற்றுவர் தையலையே – எப்போதும் அன்னையைப் போற்றுவார்கள். விளக்கம்:அன்னையைப் போற்றிப் புகழ்ந்து புண்ணியம் செய்து அந்தப் புண்ணியத்தால் புண்ணியர் என்ற பெருமையைப் பெற்று அதனை பயனால் உயர்ந்த இடத்தைப் பெற்று சாதித்தவர்கள் எண்ணற்றவர்கள். எல்லோரையும் பட்டியலிட முடியாவிட்டாலும் முடிந்தவரை செய்யலாம் என்று தொடங்கினார் போலும் அபிராமி பட்டர். அப்படி எண்ணியவுடன் கண்ணெதிரே தோன்றினான் கதிரவன். அவனைச் சொன்னார் முதலில். அவன் தன் ஒளியையும் வெம்மையையும் பெற்றது அன்னையிடம். அவனைச் சொன்னவுடன் அம்புலி நினைவிற்கு வந்தான். அவனையும் சொன்னார். அவன் குளுமையைப் பெற்றது அன்னையிடம். உலகத்தில் முச்சோதி என்று புகழப்படும் கதிரவன், நிலவன், தீ என்ற மூவரில் அடுத்ததாக அக்கினி நினைவிற்கு வந்தான். அவனையும் சொன்னார். அவன் தன் திறனையெல்லாம் பெற்றது அன்னையிடம். அக்கினி தேவர்களில் ஒருவனாகவும் இருப்பதால் அடுத்து இரு தேவர்கள் நினைவிற்கு வந்தார்கள். குபேரனையும் இந்திரனையும் சொன்னார். குபேரன் செல்வத்திற்கெல்லாம் அதிபதியாக இருப்பதும் இந்திரன் தேவர்களுக்கெல்லாம் தலைவனாய் இருப்பதும் அன்னையின் அருளால். தேவர்களின் தலைவன் என்று இந்திரனைச் சொன்ன பிறகு அவனுக்கும் மேலான முப்பெரும்தேவர்கள் நினைவிற்கு வந்தார்கள். பூவில் பிறந்த பிரமனையும், சிவனையும், திருமாலையும் சொன்னார். இம்மூவரும் தத்தம் படைத்தல், அழித்தல், காத்தல் என்ற தொழில்களைச் செய்யும் வல்லமை பெற்றது அன்னையின் திருவருளால். அடுத்து யார் என்று சிந்திக்க பொதிய முனி நினைவிற்கு வந்தார். அகத்தியர் தமிழைப் பெற்று வளர்த்ததும் அன்னையின் திருவருளால். தமிழ் என்றதும் காதிப்பொருபடை கந்தன் நினைவிற்கு வந்தான். அவனையும் சொன்னார். அன்னையின் சக்தியே உருவான சக்திவேலைக் கொண்டு தானே கந்தன் போரிடுகிறான். அந்தச் சக்தி வேலை குறிப்பாகச் சொல்லுவது போல் காதிப்பொருபடை என்ற அடைமொழியைக் கந்தனுக்குத் தந்தார். தம்பியைச் சொன்னவுடன் அண்ணன் நினைவு வந்தது. அவனையும் சொன்னார். எல்லோரையும் சொன்ன பின்னர் ‘அடடா மிக முக்கியமான ஒருவனை விட்டுவிட்டோமே. அன்னையின் திருவருளால் அன்றோ இவன் காமேஸ்வரனையும் வெல்ல முடிகிறது’ என்று எண்ணி காமனையும் சொன்னார். இனி சொல்லி முடியாது என்று எண்ணிலர் என்று நிறைவு செய்தார். *** அந்தாதித் தொடை: சென்ற பாடல் ஆதிபரே என்று நிறைய இந்தப் பாடல் ஆதித்தன் என்று தொடங்கியது. இந்தப் பாடல் தையலையே என்று நிறைய அடுத்தப் பாடல் தைவந்து என்று தொடங்கும். இப்படி ஒரு பாடலில் இறுதியில் வரும் சொல்லோ எழுத்தோ அடுத்தப் பாடலில் தொடக்கத்தில் வருமாறு அமைத்துப் பாடுவது அந்தாதித் தொடை. எதுகை: ஆதித்தன், போதிற்பிரமன், காதிப்பொருபடை, சாதித்த மோனை: ஆதித்தன் – அம்புலி – அங்கி – அமரர், போதில் – பிரமன் – புராரி – பொதியமுனி, காதிப்பொருபடை – கந்தன் – கணபதி – காமன், சாதித்த – தையலையே எல்லா தேவர்களும் பெற்ற புகழ்/சாதனை பற்றி சொல்வதால் இப்பாடலை தொடர்ந்து பாராயனம் செய்ய ‘புகழும் தர்மமும் வளரலாம்’. பாடல் 98 - மெய்யடியார் நெஞ்சில் புகுந்திருப்பவள் பாடல்: [] தை வந்து நின் அடித் தாமரை சூடிய சங்கரற்கு கை வந்த தீயும் தலை வந்த ஆறும் கரந்ததெங்கே மெய் வந்த நெஞ்சின் அல்லால் ஒரு காலும் விரகர் தங்கள் பொய் வந்த நெஞ்சில் புகல் அறியா மடப்பூங்குயிலே பொருள்: தை – தையலே; பெண்களில் சிறந்தவளே. வந்து நின் அடித் தாமரை சூடிய சங்கரற்கு – நின் முன்னர் வந்து உன்னுடைய திருவடித் தாமரைகளைத் தலையில் சூடிய சிவபெருமானுக்கு கை வந்த தீயும் – கையிலிருந்த தீயும் தலை வந்த ஆறும் – திருமுடி மேல் இருந்த கங்கையும் கரந்ததெங்கே – மறைந்ததெங்கே? மெய் வந்த நெஞ்சின் அல்லால் – உண்மை தங்கும் நெஞ்சில் அன்றி ஒரு காலும் – ஒரு போதும் விரகர் தங்கள் – வஞ்சகர்களில் பொய் வந்த நெஞ்சில் – பொய் தங்கும் நெஞ்சில் புகல் அறியா மடப்பூங்குயிலே – புகுந்து தங்காத பூங்குயில் போன்றவளே விளக்கம்:திருக்கல்யாணத்தின் போது சிவபெருமானின் திருக்கையில் இருந்த தீயும் திருமுடியிலிருந்த கங்கையும் தானாக மறைந்தது என்று இந்தப் பாடலுக்கு ஒரு பொருள் சொல்லப்படுகின்றது. அன்னையுடன் கூடிய ஊடலைத் தணிப்பதற்காக ஐயன் தாள் பணியும் போது கைகளில் நெருப்பிருந்தால் அன்னையின் திருவடிகளுக்கு வெம்மை தந்து ஊடலைக் கூட்டும் என்பதாலும் தலையில் கங்கையிருந்தால் மாற்றாளைக் கண்டு அன்னையின் ஊடல் மிகும் என்பதாலும் அவை தானாக மறைந்தன என்றொரு பொருளும் சொல்லப்படுகின்றது. அந்தாதித் தொடை: சென்ற பாடல் தையலையே என்று நிறைய இந்தப் பாடல் தைவந்து என்று தொடங்கியது. இந்தப் பாடல் பூங்குயிலே என்று நிறைய அடுத்தப் பாடல் குயிலாய் என்று தொடங்கும். இப்படி ஒரு பாடலில் இறுதியில் வரும் சொல்லோ எழுத்தோ அடுத்தப் பாடலில் தொடக்கத்தில் வருமாறு அமைத்துப் பாடுவது அந்தாதித் தொடை. எதுகை: தைவந்து, கைவந்த, மெய்வந்த, பொய்வந்த மோனை: தைவந்து – தாமரை, கைவந்த – கரந்தது, மெய்வந்த – விரகர், பொய்வந்த – புகலறியா – பூங்குயிலே. இப்பாடலை தொடர்ந்து பாராயனம் செய்தால் ‘வஞ்சகர் செயலால் வருத்தம் உண்டாதிருக்கும்’. பாடல் 99 - கயிலாயருக்கு அன்று இமவான் அளித்த கனங்குழையே [] பாடல்: குயிலாய் இருக்கும் கடம்பாடவியிடை கோலவியன் மயிலாய் இருக்கும் இமயாசலத்திடை வந்து உதித்த வெயிலாய் இருக்கும் விசும்பில் கமலத்தின் மீது அன்னமாம் கயிலாயருக்கு அன்று இமவான் அளித்த கனங்குழையே பொருள்: குயிலாய் இருக்கும் கடம்பாடவியிடை – கடம்பங்காட்டின் நடுவே குயிலாக இருப்பாள் கோல வியன் மயிலாய் இருக்கும் இமயாசலத்திடை – குளிர் நிறைந்த இமய மலையில் வியக்கத்தக்க அழகுடன் கூடிய மயிலாய் இருப்பாள் வந்து உதித்த வெயிலாய் இருக்கும் விசும்பில் – வானத்தில் வந்து உதித்த கதிரவனாக இருப்பாள் கமலத்தின் மீது அன்னமாம் – தாமரையின் மீது அமர்ந்திருக்கும் அன்னத்தைப் போன்றவள் கயிலாயருக்கு அன்று இமவான் அளித்த கனங்குழையே – கயிலாயத்தில் வாழும் சிவபெருமானுக்கு இமயமலையரசனான இமவான் முன்னர் அன்புடன் அளித்த அழகிய காதணிகளை அணிந்த அம்மை. விளக்கம்:கடம்ப மலர்கள் அம்மைக்கும் பிடிக்கும் அறுமுகனுக்கும் பிடிக்கும். கடம்ப மலர்கள் சூடி மகிழ்கிறான் குமரன். அந்த கடம்ப வனத்திடை வசித்து மகிழ்கிறாள் அன்னை. கடம்பவனம் எங்கும் இருக்கலாம். ஆனால் பொதுவாக ‘கடம்பவனம்’ என்றதும் நினைவிற்கு வருவது மதுரை. மீனாட்சி திருக்கோவிலின் தல மரமும் கடம்பமே. இந்தக் கடம்பவனத்திலே வசிப்பவள் பச்சை நிறம் கொண்டவள். கிளியைக் கையில் கொண்டவள். அவளது இன்னொரு பெயர் மாதங்கி. அவள் இசையில் வல்லவள். அவளை வணங்குபவர்களுக்கு இசையை அருள்பவள். இசையின் உருவகம் குயில். இசையை அருள்வதாலும் இசையில் வல்லவள் என்பதாலும் கடம்ப மரத்தின் மேல் வசிக்கும் குயிலென அன்னையைக் கூறினார் போலும். குயிலுக்கு குரல் அழகு உண்டு. மேனி அழகு இல்லை. மயிலுக்கோ குரல் அழகு இல்லை. மேனி அழகு உண்டு. அன்னையோ குரல் அழகும் கொண்டவள்; வியக்கத்தக்க மேனி அழகும் கொண்டவள். அதனால் தான் குயிலைப் போலும் இருக்கிறாள்; மயிலைப் போலும் இருக்கிறாள் என்றார் போலும். ஹிம என்றால் குளிர் என்று பொருள். குளிர் மிகுதியாகக் கொண்ட மலையாதலால் ஹிமயம், ஹிமாசலம், ஹிமாலயம் என்ற பெயர்கள் அந்த மலைத்தொடருக்கு உண்டானது. அந்தக் குளிர்ந்த இமயாசலத்தில் அழகிய மயிலாக இருக்கிறாள் அன்னை. காலையில் செங்கதிராம் உச்சி வேளையில் வெண்கதிராம் மாலையில் பொன்கதிராம் பராசக்தி நீலவானத்தினிலே என்று பாடினான் ஒரு புலவன். அபிராமி பட்டர் அன்னையை ‘விசும்பில் வந்துதித்த வெயில்’ என்று சொன்னதை வைத்துத் தான் பாடினான் போலும் அந்தப் புலவனும். உலகங்களுக்கெல்லாம் ஒளி தரும் சோதிகளாக இருப்பவள் அன்னை. அறிவும் தெளிவும் தருபவள் அன்னை. [] தாமரை மலருக்கும் அன்னத்திற்கும் நெருங்கிய தொடர்புண்டு. ஆன்மிக மலர்ச்சிக்குத் தாமரையை குறியீடாகச் சொல்லுவார்கள். ஆன்மிக மலர்ச்சி அடைந்த அறிவும் தெளிவும் நிறைந்த ஆன்றோர்களை அன்னப்பறவையாகச் சொல்வார்கள். ஹம்ஸர்கள் என்றும் பரமஹம்ஸர்கள் என்றும் அவர்களை அழைப்பார்கள். அப்படிப்பட்ட பரமஹம்ஸர்களைக் குறிக்க தாமரையின் மேல் அமர்ந்திருக்கும் அன்னப்பறவை குறியீடாக அமையும். இராமகிருஷ்ண இயக்கத்தின் குறியீடாகவும் அதனைக் காணலாம். அப்படி பரமஹம்ஸர்களின் மொத்த உருவமாக அமர்பவள் அன்னை. அந்தாதித் தொடை: சென்ற பாடல் பூங்குயிலே என்று நிறைய இந்தப் பாடல் குயிலாய் என்று தொடங்கியது. இந்தப் பாடல் கனங்குழையே என்று நிறைய அடுத்தப் பாடல் குழையை என்று தொடங்கும். இப்படி ஒரு பாடலில் இறுதியில் வரும் சொல்லோ எழுத்தோ அடுத்தப் பாடலில் தொடக்கத்தில் வருமாறு அமைத்துப் பாடுவது அந்தாதித் தொடை. எதுகை: குயிலாய், மயிலாய், வெயிலாய், கயிலாயருக்கு மோனை: குயிலாய் – கடம்பாடவி – கோலவியன், மயிலாய் – வந்து, வெயிலாய் – விசும்பில், கயிலாயருக்கு – கனங்குழையே. இப்பாடலை தொடர்ந்து பாராயனம் செய்தால் ‘அருள் தன்மை வளரும்’ பாடல் 100 - நெஞ்சில் எப்போதும் உதிக்கின்றவே [] பாடல்: குழையைத் தழுவிய கொன்றையந்தார் கமழ் கொங்கைவல்லி கழையைப் பொருத திருநெடுந்தோளும் கருப்பு வில்லும் விழையப் பொரு திறல் வேரியம் பாணமும் வெண் நகையும் உழையைப் பொரு கண்ணும் நெஞ்சில் எப்போதும் உதிக்கின்றவே பொருள்: குழையைத் தழுவிய கொன்றையந்தார் கமழ் கொங்கைவல்லி – காதில் அணிந்துள்ள குழைகளைத் தொடும் படியாகத் தொடுக்கப்பட்டிருக்கும் கொன்றை மாலையை அணிந்து அந்த மாலையால் மணம் கமழும் கொங்கைகளைக் கொண்டுள்ள அன்னையே கழையைப் பொருத திருநெடுந்தோளும் – மூங்கிலுடன் போட்டியிடும் அழகிய நீண்ட திருத்தோள்களும் கருப்பு வில்லும் – திருக்கையில் ஏந்திய கரும்பு வில்லும் விழையப் பொரு திறல் வேரியம் பாணமும் – கலவிப் போரில் விழைவைக் கூட்டும் மணம் வீசும் மலர்ப்பாணங்களும் வெண் நகையும் – வெண்மையான முத்துப்பல் புன்சிரிப்பும் உழையைப் பொரு கண்ணும் – மானுடன் போட்டியிடும் அழகிய திருக்கண்களும் நெஞ்சில் எப்போதும் உதிக்கின்றவே – உன் அருளால் என் நெஞ்சில் எப்போதும் அப்போதே உதித்த செங்கதிர் போல் விளங்குகின்றன. விளக்கம்:அபிராமி அந்தாதியின் இறுதிப் பாடல் இது. முதல் வாசிப்பில் அன்னையை மட்டுமே அவளின் திருத்தோற்றத்தை மட்டுமே புகழ்வது போல் தோன்றினாலும் கொஞ்சம் ஆழ்ந்து நோக்கினால் அன்னையையும் அப்பனையும் அவர்கள் இணைந்திருக்கும் திருக்கோலத்தையும் புகழ்வது தெரிகிறது. முதல் வாசிப்போடு நிறுத்தாமல் ஆழ்ந்த நோக்கையும் தந்தருளியதற்கு அன்னையின் திருவடிகளுக்கு எல்லையில்லாத கோடி வணக்கங்கள். குழை என்றால் தழை, மெல்லிய இலை என்பது முதற்பொருள். இலை தழைகளை அழகுடன் காதணியாக அணிந்து கொண்ட நாட்களில் இச்சொல் காதணிக்கும் பெயர் ஆகி தற்போது குழை என்றால் காதணியென்றே பொருள் தருகின்றது. குழையைத் தழுவும் கொன்றை மாலை என்னும் போது அழகிய மெல்லிய இலைகளையும் சேர்த்துக் கட்டிய கொன்றை மாலை என்றும் பொருள் கொள்ளலாம். குழை என்றால் காதணி என்ற பொருளைக் கொண்டால் கழுத்திலும் தோளிலும் போட்டுக் கொண்டிருக்கும் மாலை காதில் அணிந்துள்ள குழைகளுடன் கொஞ்சிக் கொண்டிருக்கின்றது என்று பொருள் கிடைக்கிறது. அப்படி குழைகளைத் தழுவ வேண்டும் என்றால் அந்த மாலை மிகவும் நெருக்கமாகவும் நிறைய மலர்களையும் வைத்து மிகச் சிறப்பாகத் தொடுக்கப் பட்டிருக்க வேண்டும். அபிராமி பட்டரின் திருவுள்ளத்தில் உதிக்கும் அன்னை அப்படிப்பட்ட மாலையை அணிந்து கொண்டிருக்கிறாள். இப்படி முதல் பார்வையில் தோன்றிய முதல் வரி ஆழ் நோக்கில் பார்க்கும் போது வேறு ஆழ்ந்த பொருளைத் தருகிறது. தார் என்பது ஆண்டாள் மாலை என்பார்களே அது போல் இருபுறமும் இணையாமல் தொடுக்கப்பட்டிருக்கும் ஒரு வகை மாலை. அது ஆண்களுக்கு உரியது. வட்டவடிவில் தொடுக்கப்படுவது பெண்களுக்கும் வட்டமாகத் தொடுக்காமல் கழுத்தைச் சுற்றி அணிந்து தொடை, முழங்காலைத் தொடும் படி அமைப்பது ஆண்களுக்கும் என்று இலக்கணம் அமைத்திருக்கிறார்கள். கண்ணனுக்கு எனத் தொடுக்கப்பட்ட ‘தார்’ என்னும் மாலையை அணிந்து ஆண்டாள் அழகு பார்க்கிறாள். அவளுக்கு என்று தொடுக்காததால் அது வட்ட வடிவமாக அமையவில்லை. ஆண்டாள் அன்று அந்தத் தாரை அணிந்து அழகு பார்த்த நாள் முதல் பெண்களுக்கும் சிறப்பாக கோதைக்கு உரிய மாலை இது என்று ஆகி அதற்கே ‘ஆண்டாள் மாலை’ என்று பெயர் அமைந்துவிட்டது. இங்கே அபிராமி பட்டர் மாலை என்று சொல்லாமல் தார் என்று சொல்கிறாரே என்று ஒரு நொடி தயங்கும் போது அந்தத் தாரும் கொன்றையந்தார் என்று பார்த்து ‘ஆகா. இதனையா சொல்கிறார் பட்டர்’ என்ற வியப்பு தோன்றிவிடுகிறது. இதற்கு மேலும் ஆராய்ச்சி தேவையா? கொன்றை மலர் யாருக்குரியது? ஐயனுக்கு உரியதன்றோ? கொன்றை மலரால் தொடுக்கப்பட்ட தாரை அணிந்தவர் சிவபெருமான் தானே. அந்தக் கொன்றையந்தார் இப்போது அன்னையின் திருமேனியின் மேல். வந்தது எப்படி? அவன் அணிந்து இவளுடன் இணையும் போது தந்தான் போலும். இல்லையேல் இவளும் ஆண்டாளைப் போல் அவன் அணிவதற்கு முன்னால் அணிந்து கொண்டாள் போலும். இல்லையேல் அவன் அணிந்திருப்பது இவளது குழையைத் தழுவி இவள் கொங்கைகளை மணக்க வைக்கும் படி இருவரும் இணைந்திருக்கிறார்கள் போலும். மன்மதனுக்கு வெற்றியைத் தரும் கரும்பு வில்லையும் மலர்க்கணைகளையும் ஏந்திய திருவுருவத்தை இங்கே சொன்னதால் ஐயனும் அம்மையும் இணைந்திருக்கும் திருக்கோலத்தைத் தான் பட்டர் சொல்கிறார் என்று தோன்றுகிறது. மூங்கிலை விட மென்மையான அழகிய திருத்தோள்களும் மானை வெல்லும் மருண்ட திருக்கண்களும் திருக்கைகளில் ஏந்திய கரும்பு வில்லும் ஐம்பாணங்களும் அடியார்களுக்கு ஆதரவு தரும் புன்னகையும் பட்டர் திருவுள்ளத்தில் எப்போதும் உதிப்பதைப் போல் அடியோங்கள் உள்ளங்களிலும் எப்போதும் உதிக்கட்டும். அந்தாதித் தொடை: சென்ற பாடல் கனங்குழையே என்று நிறைய இந்தப் பாடல் குழையை என்று தொடங்கியது. இந்தப் பாடல் உதிக்கின்றவே என்று நிறைய இந்தப் பாடல் அபிராமி அந்தாதியின் இறுதிப் பாடல் என்பதால் அபிராமி அந்தாதியின் முதல் பாடல் உதிக்கின்ற என்று தொடங்கியது. ஒரு பாடலின் இறுதியில் வரும் சொல்லோ எழுத்தோ அடுத்தப் பாடலில் தொடக்கத்தில் வருமாறு அமைத்துப் பாடுவது அந்தாதித் தொடை. அப்படி அமைக்கும் போது இறுதிப் பாடலின் இறுதிச் சொல்/எழுத்து முதல் பாடல் தொடங்கிய சொல்லாகவோ எழுத்தாகவோ அமைக்கும் போது முழுப்பனுவலும் ஒரு மாலையைப் போல் அமைந்துவிடுகிறது. அந்த வகையில் இந்த அபிராமி அந்தாதி பனுவல் அன்னையின் திருமேனியில் திகழ்கின்ற மாலையாகிறது. எதுகை: குழையை, கழையை, விழைய, உழையை மோனை: குழையை – கொன்றை – கமழ் – கொங்கை, கழையை – கருப்புவில்லும், விழைய – வேரியம் – வெண் நகை, உழையை – உதிக்கின்றவே. இப்பாடலை தொடர்ந்து பாராயனம் செய்தால் ‘அம்பிகையின் திருவுருவைமனத்தில் எப்போதும் காணாலம்’. அபிராமி அந்தாதி நூற்பயன்  [] பாடல்: ஆத்தாளை எங்கள் அபிராமவல்லியை அண்டம் எல்லாம் பூத்தாளை மாதுளம் பூ நிறத்தாளை புவி அடங்கக் காத்தாளை ஐங்கணைப் பாசாங்குசமும் கரும்புவில்லும் அங்கை சேர்த்தாளை முக்கண்ணியைத் தொழுவார்க்கு ஒரு தீங்கும் இல்லையே பொருள்: ஆத்தாளை – அம்மா என்று அழைப்பதற்குத் தகுதியுள்ள ஒரே அன்னையை எங்கள் அபிராமவல்லியை – எங்கள் அபிராமியை அண்டம் எல்லாம் பூத்தாளை – எல்லா உலகங்களையும் பெற்றவளை மாதுளம் பூ நிறத்தாளை – மாதுளம் பூ நிறம் கொண்டவளை புவி அடங்கக் காத்தாளை – எல்லா உலகங்களும் தன் ஆளுகையின் கீழ் கொண்டு அவற்றைக் காப்பவளை ஐங்கணைப் பாசாங்குசமும் கரும்புவில்லும் அங்கை சேர்த்தாளை – உலக இயக்கத்திற்கு அடிப்படையான ஐந்து மலர்க்கணைகளையும் கரும்பு வில்லையும், அவற்றுடன் பாசத்தையும் அங்குசத்தையும் அழகிய திருக்கைகளில் ஏந்தியிருப்பவளை முக்கண்ணியைத் தொழுவார்க்கு ஒரு தீங்கும் இல்லையே – மூன்று திருக்கண்களைக் கொண்டவளைத் தொழுபவர்களுக்கு ஒரு தீங்கும் இல்லை. விளக்கம்:அபிராமி அந்தாதிப் பனுவலின் நூற்பயன் பாடல் இது. என்ன பெயர் கொண்டு அழைத்தாலும் ஆத்தா என்றோ அம்மா என்றோ அவளை அழைப்பதில் தானே நமது எல்லா உணர்வுகளும் இணைந்து இயங்கி வருகின்றன. அந்தச் சொல்லைக் கொண்டு இந்தப் பாடல் தொடங்குகிறது. தொடர்ந்து அன்னையின் திருவுருவ தியானம் நடைபெறுகிறது. அத்துடன் அவள் மும்மூர்த்திகளின் வடிவமாக இருக்கிறாள் என்பதால் ‘அண்டம் எல்லாம் பூத்தாளை’ என்பதன் மூலம் பிரம்ம ஸ்வரூபிணியாக இருப்பதையும் ‘புவியடங்கக் காத்தாளை’ என்பதன் மூலம் விஷ்ணு ரூபிணியாக இருப்பதையும் ‘முக்கண்ணியை’ என்பதன் மூலம் சிவஸ்வரூபிணியாக இருப்பதையும் இந்தப் பாடல் சொல்கிறது. அவை அப்படியே முன்பொரு பாடலில் ‘பூத்தவளே புவனம் பதினான்கையும் பூத்த வண்ணம் காத்தவளே பின் கரந்தவளே’ என்று சொன்னதன் பிரதிபலிப்பு போல் இருக்கிறது. அப்படிப்பட்ட அன்னையைத் தொழுவோர்க்கு இது கிடைக்கும் அது கிடைக்கும் என்று சிற்சில பயன்களைச் சொல்லாமல் ஒரேயடியாக ஒரு தீங்கும் இல்லை என்று சொல்லி எல்லா விதமான நன்மைகளும் கிடைக்கும் என்பதை இந்தப் பாடல் சொல்லிவிட்டது. எதுகை: ஆத்தாளை, பூத்தாளை, காத்தாளை, சேர்த்தாளை மோனை: ஆத்தாளை – அபிராமவல்லியை – அண்டமெல்லாம், பூத்தாளை – பூ – புவியடங்க, காத்தாளை – கரும்புவில்லும், சேர்த்தாளை – தொழுவார்க்கு – தீங்கும்.   எங்கள் அபிராமி தரிசனம் காண வாரீரே! (அபிராமி அந்தாதி நிறைவு) அபிராமி அந்தாதிப் பொருளுரை நிறைவாகும் இந்த நல்வேளை! இதுவும் ஒரு வகையில் அப்த பூர்த்தி தான்! Oct 2005-இல் துவங்கிய தேர், பதிவு வீதிகளில் ஆடி ஆடி, இதோ நிலைக்கு வருகிறது! நிறைவுக்கு வருகிறது! சஷ்டி+அப்த+பூர்த்தி = அறுபது+ஆண்டு+நிறைவு! அந்தாதிப் பொருளுரையோ, த்ரியப்த பூர்த்தி=மூன்றாண்டு நிறைவு! இது அப்த பூர்த்தி மட்டுமில்லை! ஆப்த பூர்த்தியும் கூட! விரும்பிய எல்லாம் நிறைவேற்றித் தரும் தமிழ்ப் பனுவல்!  நெருப்பின் நடுவே பாடிய நூறு பாடல்கள்! ஆபத்து காலத்தில் OMG என்றோ, Gotcha-ன்னோ அடியேன் வாய்க்கு வருகிறதா? இத்தனைக்கும் பீட்டர் விட்டே பழகிய வாய்! :) அடக் கடவுளே-ன்னோ, அம்மா-ன்னோ தானே வருகிறது!அதே போல் அபிராமி பட்டருக்கு, நெருப்பின் நடுவிலே, தாய் மொழியில், தெய்வத் தமிழ் மொழியில், துதியும் பனுவலும் இயல்பாகவே வந்து விட்டது! இத்தனைக்கும் அவர் வடமொழி வித்தகர்! சகல சாஸ்திர பண்டிதர்! இருப்பினும் அம்மா என்று அழைக்கும் போது, அம்மா மொழியில் தானே அழைக்க முடியும்! விழிக்கே அருள் உண்டு அபிராமவல்லிக்கு வேதம் சொன்ன வழிக்கே வழிபட நெஞ்சு உண்டு என்று பாடி விட்டார் பட்டர்! தோன்றி விட்டாள் அன்னை! விழிக்கே அருள் உண்டு என்ற.... பாட்டை எடுத்த போது தான், அன்னைத் தோட்டை எடுத்தாள்! வீசினாள், முக வானிலே சந்திரனைப் பூசினாள்! ஒரே நேரத்தில், தை அமாவாசையில், பூமிக்கு இரண்டு சந்திரன்கள்! பட்டருக்கோ அக நிலவிலே அவள் முக நிலவு! மற்றவர்க்கோ வானிலே புற நிலவு! சாட்சி கேட்கும் புற நிலவு தேய்ந்து விடும்! ஆனால் நம் அக நிலவும் முக நிலவு மட்டும் தேயவே தேயாது! வாருங்கள் அபிராமி அந்தாதி பொருளுரையின் இந்த அப்த பூர்த்திக்கு, திருக்கடையூர் சென்று அம்மாவைச் சேவிப்போம்! தார் அமர் கொன்றையும் சண்பக மாலையும் சார்த்தி அழகு பார்ப்போம்! மயிலாடுதுறை-நாகப்பட்டினம் சாலையில் உள்ள தலம் திருக்கடவூர்! திருக்கடையூர் என்றும் சொல்லலாம்! கடம்=பானை, கலம்! கடை=கடைதல்! எனவே ரெண்டுமே சரி தான்! கடலைக் கடைந்த போது, அமுதம் கிடைத்த பாத்திரத்துக்குப் பேரு தான், அமிர்த கடம்! நம் போன்ற உயிர்களுக்கு வேண்டிய அமுதம்/இன்பம் எல்லாம் இருக்கும் கடம் எதுங்க? இறைவன்! இறைவன் தான் கொள்கலம்! அதில் தான் அமுதம்/இன்பம் கொள்ளும்! நமக்கு வேண்டும் போது மட்டும், அதில் இருந்து இன்பங்களை எடுத்துக் கொள்கிறோம்! பின்னர் கலத்தை மறந்து விடுகிறோம்! மீண்டும் அடுத்த முறை ஏதாவது நிறைக்க வேண்டி இருக்கும் போது தான, நமக்குக் கலம் தேவைப்படுகிறது!:) அவரவர் பாப புண்ணியங்களுக்கு ஏற்றவாறு, அமுதம் வழங்கும் அதிகாரி சிவபெருமான்! அதான், ஈசனே கொள்கலமாய், அமிர்தம் கொண்டுள்ள கடமாய் வந்தான்! தன்வந்திரிப் பெருமாள் கைகளிலும், மோகினியின் கைகளிலும் தவழ்ந்தான்! அந்த அமிர்த கடமே பின்னர் லிங்கமாய் மாறி விட்டது! அதனால் தான் அமிர்த கட ஈஸ்வரர்! அவர் தர்ம பத்தினி அபிராமி அன்னை! பார்த்தீர்களா? பாற்கடல் கடைந்த போது தான் எத்தனை எத்தனை தத்துவங்கள்! எத்தனை எத்தனை தெய்வ வடிவங்கள்! கூர்மாவதாரம், நீலகண்டன், அலைமாகள் ஸ்ரீ மகாலக்ஷ்மி, மோகினித் திருக்கோலம், தன்வந்திரிப் பெருமாள், அமிர்த கடம், அமிர்த கட ஈஸ்வரர், அருள்வாமி அபிராமி! - இப்படி தெய்வத் திருவுலா! சரி, ஏன் அறுபதாம் கல்யாணம், மணி விழா, சஷ்டி அப்த பூர்த்தியைத் திருக்கடையூரில் செய்து கொள்ள நினைக்கிறார்கள்? இது மார்க்கண்டேயனுக்காக, யமனை வென்ற தலம்! சிரஞ்சீவித் தலம்! அதான், என்றும் சீரஞ்சீவி-சுமங்கலியாக வாழ்ந்து, இல்லறம் நடாத்த, இங்கு செய்து கொள்கிறார்கள்! கணவரின், 59 முடிந்து 60 துவக்கம் = அர்த்த ரத சாந்தி 60 முடிந்து 61 துவக்கம் = சஷ்டி அப்த பூர்த்தி 69 முடிந்து 70 துவக்கம் = பீம ரத சாந்தி 79 முடிந்து 80 துவக்கம் = சதாபிஷேகம்! யமனை வென்ற ஈஸ்வரன் மிருத்யுஞ் ஜெய ஈஸ்வரன்! பாலாம்பிகை! அட, அம்பிகை இங்கே எதற்கு வந்தாள்? யமனை வெல்லும் போது கூட அருகில் துணைவி வேண்டும்! துணையை எதிலுமே ஒதுக்குவதில்லை! அழித்தலிலும் இருப்பாள்! ஆக்கத்திலும் இருப்பாள்!! இப்படி, இந்தத் தலத்தில் இப்படி இரண்டு ஈஸ்வரர்கள்! இரண்டு அம்பிகைகள்! மிருத்யுஞ்ஜயேஸ்வரர்-பாலாம்பிகை! அமிர்தகடேஸ்வரர்-அபிராமி!! அறுபதாம் கல்யாணம் செய்து கொள்ள திருக்கடையூர் தான் போக வேணுமா? அவசியம் இல்லை! அவரவர் நிலைமையைப் பொறுத்தது தான்! நித்ய கல்யாணமாய் இருக்கும் பல ஆலயங்களிலும் செய்து கொள்ளலாம்! தினமும் கல்யாணம் நடந்து கொண்டே இருக்கும் தலங்கள் பல! நித்ய சுமங்கலித் தலங்கள் அவை! சென்னைக்கு அருகே திருவிடந்தை, திருப்பதி திருமலை இங்கெல்லாம் நித்யமும் கல்யாணம் தான்! ஸ்ரீசைலம் மல்லிகார்ஜூன ஈஸ்வரனுக்கும் நித்ய கல்யாணம்! அவரவர் இல்லத்திலும் செய்து கொள்வார்கள்! எங்கு செய்து கொண்டாலும், அது பெருமாள் கோயிலோ, சிவன் கோயிலோ, வீட்டிலோ, அங்கு மிருத்யுஞ்ஜயேஸ்வரர்-பாலாம்பிகை ஆகிய இருவரையும், மந்திரப் பூர்வமாகக் கும்பத்தில் ஆவாஹனம் செய்து வைப்பார்கள்! எப்பவுமே, சங்கரன்-சங்கரிகள் ஆசியோடு தான் இந்த விழா! வாருங்கள்... அதோ கோயில் யானை மாலையுடன் வரவேற்கிறது! கஜ பூஜை முடித்து, பின்னர் கோ பூஜையில் அன்னை மகாலஷ்மியை வளமுடன் வேண்டிக் கொள்வோம்! ஆலயத்துக்குள் நுழைந்து விட்டோம்! கள்ள வாரணப் பிள்ளையாரைத் தரிசித்து, பின்னர் மிருத்யுஞ்ஜயேஸ்வரர்-பாலாம்பிகையைச் சேவிப்போம்! நீண்ட ஆயுளுடன், நிறைந்த ஆயுளையும் அருள வணங்கி மகிழ்வோம்! இதோ அப்பனின் சன்னிதி! அமிர்த கடேஸ்வரன் குடம் போலவே தெரிகிறான்! வழியில் இது என்ன இம்புட்டு மல்லிக் கொடிகள்? ஜாதி மல்லி தான் தல விருட்சம்! மோகினித் திருக்கோலத்துக்கு உகந்த மலர் ஜாதி மல்லி அல்லவா? மலர்கள் சுவாமிக்கு மட்டுமே சார்த்தப்படுகின்றன! தேவார மூவரும் அப்பனைப் பாடி உள்ளார்கள்! திருநீற்றுப் பிரசாதம் தரித்துக் கொண்டு, அம்மாவைப் பார்க்கச் செல்லலாமா? இதோ வந்து விட்டோம்! அழகிய கண்ணாடி வேலைப்பாடுகள் கொண்ட அபிராம சுந்தரி சன்னிதி! சாயரட்சை என்னும் மாலை நேரப் பூசை! சன்னிதி எங்கும் மின்னி மினுக்கும் தீபங்கள்! சாம்பிராணி அகிற் புகை! செண்டை, கொம்பு, கோல், சங்கு, நாதசுர மங்கல வாத்தியங்கள் முழங்குகின்றன! மேடையில் அம்பாளுக்குச் செய்ய இருக்கும் சோடஷ உபசாரம்! பதினாறு வகையான உபசரிப்புகள்! தீபகலசம் முதலான பூசைப் பொருட்கள்! இதோ திரை விலகுகிறது! ஜகத்ஜோதி, ஜோதி ஸ்வரூபிணியாய், மதிவதன பிம்பமாய் அம்பாள் ஜொலிக்கின்றாளே! ஆத்தாளை! எங்கள் அபிராம வல்லியை! அண்டம் எல்லாம் பூத்தாளை! மாதுளம் பூ நிறத்தாளை! புவி அடங்கக் காத்தாளை! ஐங்கணைப் பாசாங்குசமும் கரும்புவில்லும், அங்கை சேர்த்தாளை! முக்கண்ணியைத் தொழுவார்க்கு ஒரு தீங்கில்லையே! ஐந்தடக்கு தீபத் தட்டு அன்னையின் திருமேனிப் பிரதிட்சணமாய்ச் சுழல்கிறது! எல்லாரும் கூடி இருந்து, குளிர்ந்தேலோ-ன்னு சேவித்துக் கொள்ளுங்கள்! பாதபத்ம பீடம்! தாமரைத் திருவடிகள்! வெள்ளி மெட்டி பிஞ்சு விரல்களில் கொஞ்சுகிறது! காற்சிலம்பு மின்னுகிறது! அம்மாவின் பாதங்களிலே, சேலையின் விசிறி மடிப்பு அருவியாய் வந்து விழுகிறது! அண்ணனைப் போலவே பச்சைத் திருமேனி! அந்தப் பச்சை மேனியிலே, அரக்குச் சிவப்பிலே, பட்டுச் சீலையிலே பார்வதி ஜொலிக்கின்றாள்! (பாதாரவிந்த தீப சேவை) அண்ணன் அபிராமன்! தங்கை அபிராமி! அவர்களின் தரிசனமே அபி என்னும் இன்பம் கொடுத்து, ரமிக்க வைக்கிறதே! அபிராம இங்கு வருக! மைந்த வருக! மகனே இனி வருக! என்கண் வருக! எனது ஆருயிர் வருக! வருகவே! அபய ஹஸ்தம் = அஞ்சேல் எனுமொரு கரம்! வரத ஹஸ்தம் = வா, தந்தேன் எனுமொரு கரம்! கரங்களிலே கலகலவென வளை குலுங்க, புறங்களிலே ஜிலுஜிலுவென பூமாலை தொங்க, மார்பணியும், கழுத்தணியும், அத்தாணிப் பூணும், அட்டிகையும் தவழ்ந்திலங்க, பின்னிரு கைகளிலே சக்கரமும், சங்கும் ஏந்திச் சேவை சாதிக்கின்றாள்! நமஸ்தேஷூ மகாமாயே, ஸ்ரீபீடே, சுர பூஜிதே! சங்கு சக்ர கதா ஹஸ்தே, மகாலக்ஷ்மீ, நமோஸ்துதே! (கரதல கமல தீப சேவை) அம்மாவின் சக்கரத் தோளிலே பச்சைக்கிளி! சங்குத் தோளிலே செங்கரும்பு! நித்ய சுமங்கலியின் பச்சைக் கழுத்திலே திவ்யத் திருமாங்கல்யம்! தம்பதிகளும், காதலரும், இன்னும் எல்லாரும் கண்ணாரச் சேவித்துக் கொள்ளுங்கள்! சுவாசினிப் ப்ரியே மாதே, செளமாங்கல்ய விவர்தினீ! மாங்கல்யம் தேஹீ மே நித்யம்! ஸ்ரீ அபிராமீ நமோஸ்துதே!! (மாங்கல்ய பலப் ப்ரத தீப சேவை) சர்வ மங்கள மாங்கல்யே! சிவே! சர்வார்த்த சாதிகே! சரண்யே! த்ரயம்பகே! கெளரீ! நாராயணி நமோஸ்துதே!! அன்னையின் திருமுக தரிசனம்! கோடி சந்திரக் குளிர் பிரகாசம்! இவள் தாடங்கம் வீசித் தானா நிலவு உதிக்க வேண்டும்? உதிக்கின்ற செங்கதிர், உச்சித் திலகம், நெற்றியிலே விபூதிச் சுட்டி! கருவிழிக் கண்கள் கடாட்சித்து நிற்க, மீன-அக்ஷி, காம-அக்ஷி, விசால-அக்ஷி என்று அனைத்து அன்னையரின் கடைக்கண் பார்வையும், எங்கள் அபிராமியின் கருவிழியிலே! (நேத்ரானந்த தீப சேவை) காதிலே தாடங்கம் மின்ன, ஒய்யாரக் கொண்டையிலே ஆண்டாள் கொண்டை அலங்கரிக்க, திருவாசி மாலைகள் பின்னே திகழ, அபிராம வல்லியின், அருள் கோலம் காணீர்! அருள் கோலம் காணீர்! சந்திர மண்டல மத்யஸ்தே, மஹா திரிபுர சுந்தரீ! ஸ்ரீ சக்ர ராஜ நிலையே! ஸ்ரீ அபிராமீ நமோஸ்துதே!! (பாதாதி கேச பரிமள நீராஞ்சன கர்ப்பூர தீப சேவை) 01. கலையாத கல்வியும் 02. குறையாத வயதும் 03. ஓர் கபடு வாராத நட்பும் 04. கன்றாத வளமையும் 05. குன்றாத இளமையும் 06. கழுபிணியிலாத உடலும் 07. சலியாத மனமும் 08. அன்பகலாத மனைவியும் 09. தவறாத சந்தானமும் 10. தாழாத கீர்த்தியும் 11. மாறாத வார்த்தையும் 12. தடைகள் வாராத கொடையும் 13. தொலையாத நிதியமும் 14. கோணாத கோலும் 15. ஒரு துன்பமில்லாத வாழ்வும் 16. துய்யநின் பாதத்தில் அன்பும் உதவிப் பெரிய தொண்டரொடு கூட்டு கண்டாய்!!!!! அலையாழி அறிதுயில் மாயனது தங்கையே ஆதிகடவூரின் வாழ்வே! அமுதீசர் ஒருபாகம் அகலாத சுகபாணி அருள்வாமி! அபிராமியே!! அபிராமியம்பிகா திவ்ய சரணார விந்தயோஹோ, தீப மங்கள கர்ப்பூர நீராஞ்சனம் தரிசயாமி! அருள்வாமி அபிராமி திருவடிச் சரணங்களிலே, திவ்ய மங்கள கர்ப்பூரத் தீப தரிசனம் காண்மின்களே! இதோ, கர்ப்பூர ஆரத்தியை ஒற்றிக் கொள்ளுங்கள்! அபிராமி அம்மன் திருவடிகளே சரணம் சரணம்!! நண்பர் குமரன் பணிவோடு சமர்ப்பித்த அபிராமி அந்தாதிப் பொருளுரை சம்பூர்ணம்! (வரும் புரட்டாசி மாதத்தில், நியூயார்க்கில் இருந்து, திருக்கடவூர் அபிராமவல்லியைத் தரிசிக்க இந்தியப் பயணத் திட்டம்! அம்மா-அப்பாவின் அப்த பூர்த்தி! ஆசி கூறுவீர்! சுபம்) ************************************************** அடியேனின் வேண்டுகோளுக்கு இணங்க அபிராமி அந்தாதி பொருளுரையின் நிறைவாக அன்னையின் தெய்வீகத் திருவுருவ தரிசனத்தை நாமெல்லாம் பெறும்படி செய்த நண்பர் இரவிசங்கர் கண்ணபிரானுக்கு அடியேனின் பல நூறு வணக்கங்கள். அன்னையின் ஆரத்தி பாடலை தந்துதவிய கவிநயா அக்காவிற்கு அடியேனின் பணிவான வணக்கங்கள். வாழ்க வளமுடன்! *************************************************   Free Tamil Ebooks - எங்களைப் பற்றி மின்புத்தகங்களைப் படிக்க உதவும் கருவிகள்: மின்புத்தகங்களைப் படிப்பதற்கென்றே கையிலேயே வைத்துக் கொள்ளக்கூடிய பல கருவிகள் தற்போது சந்தையில் வந்துவிட்டன. Kindle, Nook, Android Tablets போன்றவை இவற்றில் பெரும்பங்கு வகிக்கின்றன. இத்தகைய கருவிகளின் மதிப்பு தற்போது 4000 முதல் 6000 ரூபாய் வரை குறைந்துள்ளன. எனவே பெரும்பான்மையான மக்கள் தற்போது இதனை வாங்கி வருகின்றனர். ஆங்கிலத்திலுள்ள மின்புத்தகங்கள்: ஆங்கிலத்தில் லட்சக்கணக்கான மின்புத்தகங்கள் தற்போது கிடைக்கப் பெறுகின்றன. அவை PDF, EPUB, MOBI, AZW3. போன்ற வடிவங்களில் இருப்பதால், அவற்றை மேற்கூறிய கருவிகளைக் கொண்டு நாம் படித்துவிடலாம். தமிழிலுள்ள மின்புத்தகங்கள்: தமிழில் சமீபத்திய புத்தகங்களெல்லாம் நமக்கு மின்புத்தகங்களாக கிடைக்கப்பெறுவதில்லை. ProjectMadurai.com எனும் குழு தமிழில் மின்புத்தகங்களை வெளியிடுவதற்கான ஒர் உன்னத சேவையில் ஈடுபட்டுள்ளது. இந்தக் குழு இதுவரை வழங்கியுள்ள தமிழ் மின்புத்தகங்கள் அனைத்தும் PublicDomain-ல் உள்ளன. ஆனால் இவை மிகவும் பழைய புத்தகங்கள். சமீபத்திய புத்தகங்கள் ஏதும் இங்கு கிடைக்கப்பெறுவதில்லை. எனவே ஒரு தமிழ் வாசகர் மேற்கூறிய “மின்புத்தகங்களைப் படிக்க உதவும் கருவிகளை” வாங்கும்போது, அவரால் எந்த ஒரு தமிழ் புத்தகத்தையும் இலவசமாகப் பெற முடியாது. சமீபத்திய புத்தகங்களை தமிழில் பெறுவது எப்படி? சமீபகாலமாக பல்வேறு எழுத்தாளர்களும், பதிவர்களும், சமீபத்திய நிகழ்வுகளைப் பற்றிய விவரங்களைத் தமிழில் எழுதத் தொடங்கியுள்ளனர். அவை இலக்கியம், விளையாட்டு, கலாச்சாரம், உணவு, சினிமா, அரசியல், புகைப்படக்கலை, வணிகம் மற்றும் தகவல் தொழில்நுட்பம் போன்ற பல்வேறு தலைப்புகளின் கீழ் அமைகின்றன. நாம் அவற்றையெல்லாம் ஒன்றாகச் சேர்த்து தமிழ் மின்புத்தகங்களை உருவாக்க உள்ளோம். அவ்வாறு உருவாக்கப்பட்ட மின்புத்தகங்கள் Creative Commons எனும் உரிமத்தின் கீழ் வெளியிடப்படும். இவ்வாறு வெளியிடுவதன் மூலம் அந்தப் புத்தகத்தை எழுதிய மூல ஆசிரியருக்கான உரிமைகள் சட்டரீதியாகப் பாதுகாக்கப்படுகின்றன. அதே நேரத்தில் அந்த மின்புத்தகங்களை யார் வேண்டுமானாலும், யாருக்கு வேண்டுமானாலும், இலவசமாக வழங்கலாம். எனவே தமிழ் படிக்கும் வாசகர்கள் ஆயிரக்கணக்கில் சமீபத்திய தமிழ் மின்புத்தகங்களை இலவசமாகவே பெற்றுக் கொள்ள முடியும். தமிழிலிருக்கும் எந்த வலைப்பதிவிலிருந்து வேண்டுமானாலும் பதிவுகளை எடுக்கலாமா? கூடாது. ஒவ்வொரு வலைப்பதிவும் அதற்கென்றே ஒருசில அனுமதிகளைப் பெற்றிருக்கும். ஒரு வலைப்பதிவின் ஆசிரியர் அவரது பதிப்புகளை “யார் வேண்டுமானாலும் பயன்படுத்தலாம்” என்று குறிப்பிட்டிருந்தால் மட்டுமே அதனை நாம் பயன்படுத்த முடியும். அதாவது “Creative Commons” எனும் உரிமத்தின் கீழ் வரும் பதிப்புகளை மட்டுமே நாம் பயன்படுத்த முடியும். அப்படி இல்லாமல் “All Rights Reserved” எனும் உரிமத்தின் கீழ் இருக்கும் பதிப்புகளை நம்மால் பயன்படுத்த முடியாது. வேண்டுமானால் “All Rights Reserved” என்று விளங்கும் வலைப்பதிவுகளைக் கொண்டிருக்கும் ஆசிரியருக்கு அவரது பதிப்புகளை “Creative Commons” உரிமத்தின் கீழ் வெளியிடக்கோரி நாம் நமது வேண்டுகோளைத் தெரிவிக்கலாம். மேலும் அவரது படைப்புகள் அனைத்தும் அவருடைய பெயரின் கீழே தான் வெளியிடப்படும் எனும் உறுதியையும் நாம் அளிக்க வேண்டும். பொதுவாக புதுப்புது பதிவுகளை  உருவாக்குவோருக்கு அவர்களது பதிவுகள்  நிறைய வாசகர்களைச் சென்றடைய வேண்டும் என்ற எண்ணம் இருக்கும். நாம் அவர்களது படைப்புகளை எடுத்து இலவச மின்புத்தகங்களாக வழங்குவதற்கு  நமக்கு அவர்கள் அனுமதியளித்தால், உண்மையாகவே அவர்களது படைப்புகள் பெரும்பான்மையான மக்களைச் சென்றடையும். வாசகர்களுக்கும் நிறைய புத்தகங்கள் படிப்பதற்குக் கிடைக்கும் வாசகர்கள் ஆசிரியர்களின் வலைப்பதிவு முகவரிகளில் கூட அவர்களுடைய படைப்புகளை தேடிக் கண்டுபிடித்து படிக்கலாம். ஆனால் நாங்கள் வாசகர்களின் சிரமத்தைக் குறைக்கும் வண்ணம் ஆசிரியர்களின் சிதறிய வலைப்பதிவுகளை ஒன்றாக இணைத்து ஒரு முழு மின்புத்தகங்களாக உருவாக்கும் வேலையைச் செய்கிறோம். மேலும் அவ்வாறு உருவாக்கப்பட்ட புத்தகங்களை “மின்புத்தகங்களைப் படிக்க உதவும் கருவிகள்”-க்கு ஏற்ற வண்ணம் வடிவமைக்கும் வேலையையும் செய்கிறோம். FreeTamilEbooks.com இந்த வலைத்தளத்தில்தான் பின்வரும் வடிவமைப்பில் மின்புத்தகங்கள் காணப்படும். PDF for desktop, PDF for 6” devices, EPUB, AZW3, ODT இந்த வலைதளத்திலிருந்து யார் வேண்டுமானாலும் மின்புத்தகங்களை இலவசமாகப் பதிவிறக்கம்(download) செய்து கொள்ளலாம். அவ்வாறு பதிவிறக்கம்(download) செய்யப்பட்ட புத்தகங்களை யாருக்கு வேண்டுமானாலும் இலவசமாக வழங்கலாம். இதில் நீங்கள் பங்களிக்க விரும்புகிறீர்களா? நீங்கள் செய்யவேண்டியதெல்லாம் தமிழில் எழுதப்பட்டிருக்கும் வலைப்பதிவுகளிலிருந்து பதிவுகளை எடுத்து, அவற்றை LibreOffice/MS Office போன்ற wordprocessor-ல் போட்டு ஓர் எளிய மின்புத்தகமாக மாற்றி எங்களுக்கு அனுப்பவும். அவ்வளவுதான்! மேலும் சில பங்களிப்புகள் பின்வருமாறு: 1. ஒருசில பதிவர்கள்/எழுத்தாளர்களுக்கு அவர்களது படைப்புகளை “Creative Commons” உரிமத்தின்கீழ் வெளியிடக்கோரி மின்னஞ்சல் அனுப்புதல் 2. தன்னார்வலர்களால் அனுப்பப்பட்ட மின்புத்தகங்களின் உரிமைகளையும் தரத்தையும் பரிசோதித்தல் 3. சோதனைகள் முடிந்து அனுமதி வழங்கப்பட்ட தரமான மின்புத்தகங்களை நமது வலைதளத்தில் பதிவேற்றம் செய்தல் விருப்பமுள்ளவர்கள் freetamilebooksteam@gmail.com எனும் முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பவும். இந்தத் திட்டத்தின் மூலம் பணம் சம்பாதிப்பவர்கள் யார்? யாருமில்லை. இந்த வலைத்தளம் முழுக்க முழுக்க தன்னார்வலர்களால் செயல்படுகின்ற ஒரு வலைத்தளம் ஆகும். இதன் ஒரே நோக்கம் என்னவெனில் தமிழில் நிறைய மின்புத்தகங்களை உருவாக்குவதும், அவற்றை இலவசமாக பயனர்களுக்கு வழங்குவதுமே ஆகும். மேலும் இவ்வாறு உருவாக்கப்பட்ட மின்புத்தகங்கள், ebook reader ஏற்றுக்கொள்ளும் வடிவமைப்பில் அமையும். இத்திட்டத்தால் பதிப்புகளை எழுதிக்கொடுக்கும் ஆசிரியர்/பதிவருக்கு என்ன லாபம்? ஆசிரியர்/பதிவர்கள் இத்திட்டத்தின் மூலம் எந்தவிதமான தொகையும் பெறப்போவதில்லை. ஏனெனில், அவர்கள் புதிதாக இதற்கென்று எந்தஒரு பதிவையும்  எழுதித்தரப்போவதில்லை. ஏற்கனவே அவர்கள் எழுதி வெளியிட்டிருக்கும் பதிவுகளை எடுத்துத்தான் நாம் மின்புத்தகமாக வெளியிடப்போகிறோம். அதாவது அவரவர்களின் வலைதளத்தில் இந்தப் பதிவுகள் அனைத்தும் இலவசமாகவே கிடைக்கப்பெற்றாலும், அவற்றையெல்லாம் ஒன்றாகத் தொகுத்து ebook reader போன்ற கருவிகளில் படிக்கும் விதத்தில் மாற்றித் தரும் வேலையை இந்தத் திட்டம் செய்கிறது. தற்போது மக்கள் பெரிய அளவில் tablets மற்றும் ebook readers போன்ற கருவிகளை நாடிச் செல்வதால் அவர்களை நெருங்குவதற்கு இது ஒரு நல்ல வாய்ப்பாக அமையும். நகல் எடுப்பதை அனுமதிக்கும் வலைதளங்கள் ஏதேனும் தமிழில் உள்ளதா? உள்ளது. பின்வரும் தமிழில் உள்ள வலைதளங்கள் நகல் எடுப்பதினை அனுமதிக்கின்றன. 1. www.vinavu.com 2. www.badriseshadri.in 3. http://maattru.com 4. kaniyam.com 5. blog.ravidreams.net எவ்வாறு ஒர் எழுத்தாளரிடம் Creative Commons உரிமத்தின் கீழ் அவரது படைப்புகளை வெளியிடுமாறு கூறுவது? இதற்கு பின்வருமாறு ஒரு மின்னஞ்சலை அனுப்ப வேண்டும். <துவக்கம்> உங்களது வலைத்தளம் அருமை [வலைதளத்தின் பெயர்]. தற்போது படிப்பதற்கு உபயோகப்படும் கருவிகளாக Mobiles மற்றும் பல்வேறு கையிருப்புக் கருவிகளின் எண்ணிக்கை அதிகரித்து வந்துள்ளது. இந்நிலையில் நாங்கள் http://www.FreeTamilEbooks.com எனும் வலைதளத்தில், பல்வேறு தமிழ் மின்புத்தகங்களை வெவ்வேறு துறைகளின் கீழ் சேகரிப்பதற்கான ஒரு புதிய திட்டத்தில் ஈடுபட்டுள்ளோம். இங்கு சேகரிக்கப்படும் மின்புத்தகங்கள் பல்வேறு கணிணிக் கருவிகளான Desktop,ebook readers like kindl, nook, mobiles, tablets with android, iOS போன்றவற்றில் படிக்கும் வண்ணம் அமையும். அதாவது இத்தகைய கருவிகள் support செய்யும் odt, pdf, ebub, azw போன்ற வடிவமைப்பில் புத்தகங்கள் அமையும். இதற்காக நாங்கள் உங்களது வலைதளத்திலிருந்து பதிவுகளை பெற விரும்புகிறோம். இதன் மூலம் உங்களது பதிவுகள் உலகளவில் இருக்கும் வாசகர்களின் கருவிகளை நேரடியாகச் சென்றடையும். எனவே உங்களது வலைதளத்திலிருந்து பதிவுகளை  பிரதியெடுப்பதற்கும் அவற்றை மின்புத்தகங்களாக மாற்றுவதற்கும் உங்களது அனுமதியை வேண்டுகிறோம். இவ்வாறு உருவாக்கப்பட்ட மின்புத்தகங்களில் கண்டிப்பாக ஆசிரியராக உங்களின் பெயரும் மற்றும் உங்களது வலைதள முகவரியும் இடம்பெறும். மேலும் இவை “Creative Commons” உரிமத்தின் கீழ் மட்டும்தான் வெளியிடப்படும் எனும் உறுதியையும் அளிக்கிறோம். http://creativecommons.org/licenses/ நீங்கள் எங்களை பின்வரும் முகவரிகளில் தொடர்பு கொள்ளலாம். e-mail : freetamilebooksteam@gmail.com  FB : https://www.facebook.com/FreeTamilEbooks G +: https://plus.google.com/communities/108817760492177970948   நன்றி. மேற்கூறியவாறு ஒரு மின்னஞ்சலை உங்களுக்குத் தெரிந்த அனைத்து எழுத்தாளர்களுக்கும் அனுப்பி அவர்களிடமிருந்து அனுமதியைப் பெறுங்கள். முடிந்தால் அவர்களையும் “Creative Commons License”-ஐ அவர்களுடைய வலைதளத்தில் பயன்படுத்தச் சொல்லுங்கள். கடைசியாக அவர்கள் உங்களுக்கு அனுமதி அளித்து அனுப்பியிருக்கும் மின்னஞ்சலைfreetamilebooksteam@gmail.com எனும் முகவரிக்கு அனுப்பி வையுங்கள். ஓர் எழுத்தாளர் உங்களது உங்களது வேண்டுகோளை மறுக்கும் பட்சத்தில் என்ன செய்வது? அவர்களையும் அவர்களது படைப்புகளையும் அப்படியே விட்டுவிட வேண்டும். ஒருசிலருக்கு அவர்களுடைய சொந்த முயற்சியில் மின்புத்தகம் தயாரிக்கும் எண்ணம்கூட இருக்கும். ஆகவே அவர்களை நாம் மீண்டும் மீண்டும் தொந்தரவு செய்யக் கூடாது. அவர்களை அப்படியே விட்டுவிட்டு அடுத்தடுத்த எழுத்தாளர்களை நோக்கி நமது முயற்சியைத் தொடர வேண்டும். மின்புத்தகங்கள் எவ்வாறு அமைய வேண்டும்? ஒவ்வொருவரது வலைத்தளத்திலும் குறைந்தபட்சம் நூற்றுக்கணக்கில் பதிவுகள் காணப்படும். அவை வகைப்படுத்தப்பட்டோ அல்லது வகைப்படுத்தப் படாமலோ இருக்கும். நாம் அவற்றையெல்லாம் ஒன்றாகத் திரட்டி ஒரு பொதுவான தலைப்பின்கீழ் வகைப்படுத்தி மின்புத்தகங்களாகத் தயாரிக்கலாம். அவ்வாறு வகைப்படுத்தப்படும் மின்புத்தகங்களை பகுதி-I பகுதி-II என்றும் கூட தனித்தனியே பிரித்துக் கொடுக்கலாம். தவிர்க்க வேண்டியவைகள் யாவை? இனம், பாலியல் மற்றும் வன்முறை போன்றவற்றைத் தூண்டும் வகையான பதிவுகள் தவிர்க்கப்பட வேண்டும். எங்களைத் தொடர்பு கொள்வது எப்படி? நீங்கள் பின்வரும் முகவரிகளில் எங்களைத் தொடர்பு கொள்ளலாம். - email : freetamilebooksteam@gmail.com - Facebook: https://www.facebook.com/FreeTamilEbooks - Google Plus: https://plus.google.com/communities/108817760492177970948 இத்திட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் யார்? - Shrinivasan tshrinivasan@gmail.com - Alagunambi Welkin alagunambiwelkin@fsftn.org - Arun arun@fsftn.org -  இரவி Supported by - Free Software Foundation TamilNadu, www.fsftn.org - Yavarukkum Software Foundation http://www.yavarkkum.org/