[]                                                                     அன்புள்ள அப்பாவுக்கு....   தொகுப்பாசிரியர்கள் கா.சி. வின்சென்ட் அரசு கார்த்திக்   ஆரா பிரஸ். கோமாளிமேடை                                        1   அன்புள்ள அப்பாவுக்கு,                   அன்பரசு எழுதுவது. தாங்கள் நலமாக இருக்கிறீர்களா? என் உடலில் மஞ்சள் காமாலை பாதிப்பு இன்னும் முழுதாக நீங்கவில்லை. உடல் சோர்வும், மனச்சோர்வும் வாட்டுகிறது.    தினசரி சாப்பிடுவதற்கு முன்னதாக அறையில் கீழாநெல்லி பொடியை நீரில் கலக்கி குடித்து வருகிறேன். என்ன பலன் கிடைக்குமோ தெரியவில்லை. அறையில் சமையல் செய்யும் முயற்சிகள் மிக தூரத்தில் தெரியும் விளக்கு போலவே என்னை இன்னும் ஈர்த்துவருகிறது. ஆனால் அதற்கு எந்த பயனும் இல்லை. காரணம் நெருக்கடியான எனது அலுவலகப் பணிகள்தான்.                   காலையில் ஐந்து மணிக்கு எழுந்துவிட்டு சிறிதுநேரம் படிப்பேன். பிறகு, டீ குடிக்க ஜனா அண்ணனோடு செல்வேன். அவர் உறுதியாக டீ குடிப்பாரா என்று எனக்கு தெரியாது. காரணம், க்ரீன் டீ என டெட்லி டீ பாக்கெட்டுகளை வாங்கி வைத்திருந்தார். அது அவரின் ஸ்டைல். விஷயத்திற்கு வருகிறேன். ஏழரை மணிக்கு வரும் 12ஜியில் ஏறிவிடுவேன், குழாயில் நீர் வராத நாட்களில் மலம் கழிப்பது கூட தினகரன் அலுவலகத்தில்தான். எங்கள் அறையில் தண்ணீர் நிரம்பிய பக்கெட்டைப் பார்ப்பது பாலைவனத்தில் பிஸ்லரி வாட்டர் கிடைப்பதை விட அரிதானது.   நீங்கள் மருத்துவமனையில் மனம் கலங்கியபடி பேசியபோது என்னால் எந்த ஒரு ஆதரவு வார்த்தையையும் சொல்ல முடியவில்லை. பதினான்கு வயதிலிருந்து வேலை செய்து வருகிறீர்கள். அறுபது வயதை தொட்டபின்னும் உழைப்பு அலுக்கவில்லை உங்களுக்கு.   குறிப்பிட்ட காலத்திற்கு பிறகு நான் உங்களுடன் பேசவில்லை. நீங்களும்தான். காரணம், இருவருக்குமான வயது வேறுபாடு, பொதுவான விஷயங்கள் பேசுவதற்கான தடை  காலப்போக்கில் உருவாகி வளர்ந்துவிட்டது. இதன் அர்த்தம், நான் உங்களைப் புறக்கணிக்கிறேன் என்பதல்ல.   உங்களது படிக்கும் பழக்கம் இல்லையென்றால் நான் இன்று எங்கிருப்பேன்? என்றே தெரியவில்லை.   ச.அன்பரசு 8.2.2016                               2   அன்புள்ள அப்பாவுக்கு,   அன்பரசு எழுதுவது. நலமாக இருக்கிறீர்களா? தங்களுக்கு தொண்டைவலி என்று அம்மா பேசும்போது சொன்னார். சீரகம் போட்டு கொதிக்க வைத்த நீரை அருந்துங்கள். சரியாகிவிடும். இங்கு அலுவலக சூழல் பரவாயில்லை.   உடல்நிலை ஒத்துழைக்க வேண்டுமே என்பதுதான் இறைவனிடம் என் வேண்டுதல். கொரியர் அனுப்புவதில் நான் செய்த பிசகு, நீங்கள் இருமுறை அலைவது போல ஆகிவிட்டது. சான்றிதழ்களை வங்கிக்கு கொடுத்தால்தான் சம்பளக் கணக்கு தொடங்க முடியும் என்று சொல்லிவிட்டார்கள். அதனால் எனக்கு ஏற்பட்ட பதற்றம்தான் இப்பிரச்னைக்கு காரணம்.     சென்னையில் சமாளித்து வாழ்வதற்கான சம்பளத்தை இந்நிறுவனத்தில் நான் பெறவில்லை. தடுமாற்றம்தான். அதிலும் ஒரு மகிழ்ச்சி, நீங்கள் அனுப்பி தந்த 5 ஆயிரம் ரூபாய்தான். எனக்கு பெரும் உதவியாக இருந்தது. மதியம் தேடிப்பிடித்து வெரைட்டி ரைஸ் சாப்பிடுகிறேன். சுத்தம் என்பதை மறந்துவிட்டால் மட்டுமே இங்கு சாப்பிட முடியும். இரவு வீடு திரும்ப 8.30க்கு மேல் ஆகிறது. எதையும் கவனமாக படிக்க முடியவில்லை.   சனியன்றும் அலுவலகம் உண்டு. அன்று அரைநாள் வேலை. தலித் முரசு பத்திரிகையில் எனக்கு வரவேண்டிய சம்பள பாக்கி தோராயமாக இரண்டாயிரம் ரூபாய் இருக்கும்.   எனக்கு உங்களது சிறுவயதுதான் நினைவுக்கு வருகிறது. அனைத்தையும் உங்களைப் போலவே நானும் தனியாக எனக்கென உருவாக்கிக் கொள்ளவேண்டும். அதற்கான தேவை உருவாகி வருகிறது.   ச.அன்பரசு 15.2.2016                                             3   அன்புள்ள அப்பாவுக்கு,   வணக்கம். நலந்தானே?   தினகரனில் இணைந்துவிட்டேன். இங்கு சம்பளக்கணக்கு தொடங்குவதற்கான பணிகள் ஏறத்தாழ முடிவடைந்துவிட்டன. தலித் முரசு இதழில் வரவேண்டிய பாக்கி 2.,796 ரூபாய் உள்ளது. இதற்காக அவர்களது அலுவலகம் சென்றேன்.   ”நீங்கள் எங்கள் கணினிகளை உங்களது உபயோகத்திற்காக தவறாக பயன்படுத்தி இருக்கிறீர்கள்” என்றார் தலித் முரசு ஆசிரியர் புனித பாண்டியன். இதனைக் கண்டுபிடித்த   அரசியல் தலைவர் நெடுஞ்செழியன் பெண் உட்பட பலரது பெயரையும் சொன்னார். நான் அப்படியெல்லாம் செய்யவில்லை என்று ஒற்றை வார்த்தையில் பதில் சொல்லிவிட்டு, பணத்தை வாங்கிக்கொண்டு கிளம்பிவிட்டேன்.   இவர்களுக்கு வேலை ஆகவேண்டுமென்றால், என்ன சாதி என்பது வரை கேட்டுக்கொண்டு இளிப்பார்கள். தேவையில்லை என்றால் மயிரே என்று மதித்துப் பேசுவது. சமூகநீதியே இவர்களின் கரங்களில்தான் இருக்கிறது. என்னை கோபப்படுத்திப் பார்க்க முயன்றார்கள். நான் எந்த உணர்ச்சியையும் வெளிப்படுத்தவில்லை.   முத்தாரத்தில் என்னைப் பார்த்து பேசுகிற பலரும், யாருடைய சிபாரிசு என குறுஞ்சிரிப்புடன் கேட்கிறார்கள். ரெஸ்யூம் அனுப்பி வந்தேன் என்றால் ஒகே முருகன் சார் ஆள்னு சொல்லு என்று வாய்விட்டே ஒருவர் சொல்லிவிட்டார். வேலையில் என்னை நிரூபிப்பதே இதற்கு சரியான தீர்வாக இருக்க முடியும். என்ன, இத்தகைய ஆட்கள் சுற்றி இருக்கும்போது மன உளைச்சல்களும் கூடும். மோசமான உணவு உடல்நலத்தை கெடுக்கும் என்பதோடு மன உளைச்சலும் அதே வேலையைச் செய்யும் என்பதை நம்புகிறீர்களா?   உணவைத் தரமான இடத்தில் சாப்பிட நினைத்தாலும் கையிலுள்ள குறைந்த பணம் தடுக்கிறது. டைபாய்டோ, காலராவோ வந்தால் இன்னும் மோசமான செலவு ஏற்படும். சேமிப்பில் பணம் சேர்ந்தால் அலுவலகத்திற்கு அருகிலேயே அறை பார்க்க முடியும். 6.30க்கு பஸ்சிற்கு காத்திருந்து நெருக்கடியின்றி போக நினைத்தால் மணி 9ஆகி விடுகிறது. வறட்டு சப்பாத்தியை சாப்பிட்டுவிட்டு படுக்க வேண்டியதுதான். அடுத்தநாள் விடிய வேண்டியதுதான். நன்றி!   ச.அன்பரசு 20.2.2016                           4   அன்புள்ள அப்பாவுக்கு, நலமாக இருக்கிறீர்களா?   வேலை என்பதைப் பொறுத்தவரை நான் ஈடுபாட்டோடு செய்கிறேன். ஆனால் மயிலாப்பூரிலிருந்து கே.கே.நகர் சென்று சேர்வது மோட்சத்திற்கு தவம் இருப்பது போலவே இருக்கிறது. மாலையில் 12ஜி பஸ்ஸில் ஏறுவது அய்யப்பசாமி கோவிலின் பதினெட்டாம் படி ஏறுவது போலவே இருக்கிறது. அவ்வளவு கூட்டம்.   உடுப்பி பஸ் ஸ்டாப்பில் இறங்கும்போது, நான்கு பேர் சுற்றி நின்று அடித்து உதைத்தது போல உடல் வலிக்கிறது. துயரம்... தூங்குவதற்காக இவ்வளவு நேரம் செலவழிக்க வேண்டுமா என்று யோசனை வந்துகொண்டே இருக்கிறது. அலுவலகத்திற்கு பக்கத்தில் அறையை எடுப்பது புத்திசாலித்தனம்.   இங்குள்ள பரத் என்ற பிராமணர் மட்டுமே நெருக்கமான நண்பர். எங்கு போய் சாப்பிடலாம், பட்ஜெட் ஹோட்டல் எதுவென அடையாளம் காட்டினார். பிற ஆட்கள் எல்லாம் நெல்லை, தூத்துக்குடியைச் சேர்ந்தவர்கள். இவர்கள் யாருடனும் என்னால் ஒட்ட முடியவில்லை. சம்பளம் வந்ததும் உங்களுக்கு பணம் கட்டி முத்தாரம் இதழ் வரும்படி செய்கிறேன். இந்த புத்தகம் பெரு நகரங்களில் உள்ள கடைகளில்தான் கிடைக்கும். இருமாதங்களுக்குப் பிறகு நான்கு நாட்கள் லீவு போட்டுவிட்டு ஊருக்கு வர நினைத்துள்ளளேன்.   மஞ்சள் காமாலைக்கான சோதனை இன்னும் முடியவில்லை. இதனை பரிசோதித்தபிறகு, உணவு முறையை கவனமாகப் பின்பற்ற வேண்டும். கொடுக்கல் வாங்கலில் எனக்கு சிறிதும் திறமை இல்லை. சம்பாதிப்பதை விட அதனைக் காப்பாற்றுவது பெரும் திறமை என்று தோன்றுகிறது. நண்பர்களுக்கு எதையும் விளக்க வேண்டியதில்லை. எதிரிகள் நாம் கூறும் எதையும் ஏற்கப்போவதில்லை என்ற முன்னோர் கூற்றுதான் திடீரென நினைவுக்கு வருகிறது.   ச.அன்பரசு 28.2.2016                                             5   அன்புள்ள அப்பாவுக்கு,   நலமாக இருக்கிறீர்களா?   ராமகிருஷ்ண மட மருத்துவமனையில் சில சோதனைகளை செய்ய வேண்டியுள்ளது. மஞ்சள் காமாலைக்கான சிறப்பு சிகிச்சை தேவையா இல்லையா என்பதை முடிவு செய்ய இந்த சோதனைகள் தேவை என்று சொல்கிறார்கள். முத்தாரம் வார இதழ் இனி நம் வீட்டிற்கு வரும். அதற்கான ஏற்பாடுகளை செய்திருக்கிறேன். உங்கள் பெயரிலேயே இதழ் வரும்.   சம்பளம் 4ஆம் தேதி கிடைத்தது. உள்ளாடைகள், பழங்கள் வாங்கினேன். அறைக்கும், அலுவலகத்திற்குமான தொலைவு வருந்தும்படியான பிரச்னையாகவே இருக்கிறது. மயிலாப்பூரில் அறை கிடைக்குமா என்று பார்க்கவேண்டும். குங்குமத்தில் நான் ஏதும் எழுதவில்லை. அப்படி எழுதினால் அந்த இதழை நான் உங்களுக்கு அனுப்பி வைப்பேன்.   தலித் முரசு இதழில் மீதிப்பணம் வாங்குவதற்கு பட்ட பாடு கொஞ்ச நஞ்சமல்ல. தலித்துகளே கூட குறிப்பிட்ட நிலைக்கு வந்ததும்,  அடுத்தவர்களை சுரண்டி பிராமணர்களைப் போலவே மாறிவிடுகிறார்கள். பேசுவது சமூகநீதி என்றாலும் அவர்களின் சிந்தனைகள், பேச்சு எல்லாவற்றிலும் சாக்கடை நாற்றம் அடிக்கிறது.   ச.அன்பரசு 6.3.16                                                       6   அன்புள்ள அப்பாவுக்கு, வணக்கம்.   நீங்கள் நலமாக வாழ இறைவனை வேண்டுகிறேன்.   உங்களுடைய ராசி பற்றி எனக்குத் தெரியாது. ஆனால் கன்னி ராசி என்று கேள்விப்பட்ட வரையில் அதற்கு உருப்படியான நற்பலன்களை நான் நாளிதழ்களில் கூட படித்தது இல்லை. கடுமையான வறுமை, போராட்டங்கள், தரித்திரத்தை அனுபவித்து கடந்து வரவேண்டியிருக்கும் என்பதுதான் நான் படித்த ஜோதிட நூலில் எழுதியிருந்தது. ஜோதிடருக்கு கூட கன்னி ராசிக்காரர்கள் ஏதோ கெடுவினை செய்திருக்கிறார்கள் போல என்று நினைத்துக்கொண்டேன்.   உங்களுடைய கஷ்டங்கள், சிரமங்கள் இதெல்லாம் ராசி காரணமாகத்தான் நடந்தது என்று கூறவில்லை. படிக்காமல், கற்ற தொழில்திறனை வைத்து முன்னேற நினைக்கும் ஒருவருக்கு வாழ்க்கை வேறு எப்படி அமைய முடியும்?   நான் உங்களிடம் கற்றுக்கொண்ட விஷயமாக நேர்மையையும், ஏற்றுக்கொண்ட பொறுப்பை கவனமாக நிறைவேற்றுவதையும் முக்கியமானதாக நினைக்கிறேன்.  இன்று எனக்கு அலுவலகத்தில் கிடைக்கும் வேலைகள் பலவும் பிறரால் ஏற்கப்படாதவை. நான் முடிந்தளவு கவனமாக செய்ய முயன்று வருகிறேன்.   வாழ்க்கை முழுக்க தொடரும் சில பிரச்னைகள் கடந்து கடன் கொடுக்காமல் இருந்தால் வாழ்க்கை நன்றாக இருக்கும் என்பதற்கு ஆதாரமான சம்பவங்கள் நடந்தன. நீங்கள் அடிக்கடி பழனி முருகன் கோவில், திருப்பதி பெருமாள் கோவிலுக்கு போவது பற்றி நான் கவலைப்பட்டதேயில்லை. அந்த கோவில்களிலிருந்து எனக்கு கிடைக்கும் பிரசாத அளவு குறையும்போதுதான் ரேஷன் அரிசி கிடைக்காத குடும்பஸ்தன் போல மனம் பதறியிருக்கிறேன்.   நீங்கள் உங்கள் ராசிப்படி வணங்கவேண்டியது புதன் என்றாலும், பெருமாளை வணங்கினாலே போதுமானது. நிச்சயம் நான் பேசும் விஷயங்களை நீங்கள் முன்னமே அறிந்திருப்பீர்கள். அனைத்தையும் பட்டியலிட்டு செய்பவர் என்பதால், இந்த விஷயங்களை அறிந்து கால இடைவெளியில் பாதிப்புகளை கோவிலுக்குச் சென்று குறைத்து கொள்கிறீர்கள் என்று நம்புகிறேன்.   எட்டாம் வகுப்பு வரை படித்த உங்கள் திட்டமிடல் மற்றும் கவனத்தினால்தான் உங்கள் பிள்ளைகள் இருவரையும் பட்டப்படிப்பு வரை படிக்க வைக்க முடிந்திருக்கிறது. உங்களது உழைப்பு, நேர்மையான செயல்பாடுகளை இன்றும் நான் நினைத்துப் பார்க்கிறேன்.  தந்தை தன் மகன்களுக்கு கற்றுத்தரவேண்டியது, தாயை நேசிப்பதைத்தான் என்று கூறுவார்கள். அந்த வகையில் நான் உங்களிடம் கற்க ஏதுமில்லை.     ச.அன்பரசு 14.3.16           7     அன்புள்ள அப்பாவுக்கு, வணக்கம். நலம் வாழ இறையை வேண்டுகிறேன்.   நான் இங்கு நலமாக இருக்கிறேன் என்று சொல்ல முடியவில்லை. மஞ்சள் காமலைக்கான டெஸ்ட் எடுக்க பர்மிஷன் சொல்லிவிட்டு மருத்துவமனைக்கு ஓடிக்கொண்டிருக்கிறேன். இன்னும் ஒரு டெஸ்ட் பாக்கியுள்ளது. அதை எடுத்துவிட்டால் அம்முடிவுப்படி மருந்துகளை சாப்பிடும்படி இருக்கும்.   ஒரு ரூபாய் ஆலோசனைக் கட்டணமாக வாங்கிக்கொண்டு மருத்துவம் பார்க்கிறார்கள். உடனே நமக்கு இவர்களை பாராட்டத் தோன்றும். ஆனால் கவனமாக நோயாளிகளைக் கவனித்துப் பார்ப்பதில்லை. இலவச மருத்துவமனை என்றாலே அங்கு பணிபுரிபவர்களுக்கு உடலிலும் மனதிலும் சுண்டுவிரல் அளவுக்கு அலட்சியம் முளைத்து விடுகிறது.   வேலைகள் கூடியுள்ளதால், உடல் நலிவை மூளைச்சோர்வு இன்னும் கூட்டுகிறது. நீங்கள் அடிக்கடி இருமல் மருந்துகளை வாங்கி சாப்பிடுவீர்கள் அல்லவா? அதனை மத்திய அரசு தடைசெய்து உள்ளது. அதில் ஆபத்தான வேதிப்பொருட்கள் ஏதேனும் இருக்கலாம். தேனை மிதமான வெந்நீரில் கலந்து சாப்பிட்டால் சளி, இருமலுக்கு பயன் கிடைக்கும்.  உணவையும் கறாராக உண்டால் பிரச்னை இல்லை.   மயிலாப்பூருக்கு ரூம் பார்த்து வந்துவிட நினைத்தாலும், காசை நினைத்தால் பயமாக இருக்கிறது. கையில் காசு இல்லாமல் சென்னையில் ஒருநாள் கழிவதே கடினம். இப்போதைக்கு கே.கே.நகர் விட்டு கிளம்புவது சந்தேகம்தான்.   உடல்நலன் ஒத்துழைத்து இந்த வேலையில் தொடர்ந்து நீடிக்க முயன்றால் நன்றாக இருக்கும். இனி அடுத்து எங்கே சென்று தங்கினாலும், அந்தப் பகுதியில்தான் சிறிதுகாலம் வாழும்படி இருக்கும் என நினைக்கிறேன். எதையும் என்னால் இப்போதைக்கு உறுதியாக சொல்ல முடியவில்லை. ஆனால் உங்களுக்கு அதுபற்றிய தகவல்களைச் சொல்லுவேன்.   தலித் முரசு பத்திரிகையில் மீதிப்பணம் கிடைத்ததை, அதைத் தேடி அலைந்த நாயைப் போன்ற அலைச்சல் மறக்கடித்து விட்டது. மயிலாப்பூரிலிருந்து நுங்கம்பாக்கத்திற்கு நடந்து சென்று வாங்கினேன். ஏன் இப்படி என்கிறீர்களா? என்னமோ தோன்றியது அப்படியே நடந்துவிட்டேன். இப்பெருநகரில் பணம் தவிர்த்து எதுவும் நம்பிக்கை தருவதாக இல்லை.   ச.அன்பரசு 21.3.2016                8 அன்புள்ள அப்பாவுக்கு, வணக்கம்.   நலமாக இருக்கிறீர்களா? விபத்தினால் ஏற்பட்ட வலி இன்னும் உங்களுக்கு தொடையில் இருக்கும். நீங்கள் நலம்பெற பெருமாளை பிரார்த்திக்கிறேன். விபத்து என்பது தற்செயலானது என்பதால் அதில் நமது கட்டுப்பாடு எதுவும் கிடையாது.   விபத்து ஏற்படுவதற்கு முன்னர் முதல் அறிகுறி நேரும். நமது கவனம் குலைந்துபோவதுதான், அது.  இதற்கு நமது ஜாதகத்திலுள்ள பிரச்னைகள் முதல் காரணம். அடுத்து, நம்மைப் பார்த்து பொறாமைப்படுபவர்களின் பாதிப்பும் உண்டு. இந்த விளைவுகளை நமக்கு காட்டுவது நாம் வளர்க்கும் கால்நடைகள், செல்லப்பிராணிகள்தான். இதைத் தவிர்க்க முடியாது. ஆனால் கடுமையைக் குறைக்க குலதெய்வ வழிபாட்டைச் செய்யலாம்.   நான் சாமி கும்பிடும்போது வணங்குவது மட்டுமே செயலாகவும் எண்ணமாகவும் இருக்கிறது. எந்த வேண்டுதல்களையும் சரியாக நினைத்து சாமி கும்பிட்டதாக எனக்கு நினைவில்லை. உறவுகள் தமக்கான லாப, நஷ்டக்கணக்குகளை போட்டுக்கொண்டு வலம் வரும்போது இறைவனை மட்டுமே நம்ப முடியும். அறிவுக்கான சரியான துணையாக மனைவி அமையாதபோது ஆண் முழுக்க தனிமையிலேயே அனைத்து முடிவுகளையும் எடுக்க நேரிடும். எந்தக்கூட்டத்திலும்  தனக்கான பாதையை தானே தேர்ந்தெடுக்க நினைத்து சிந்திப்பவன் தனியாகத்தானே இருக்கமுடியும்?   நன்றி !   ச.அன்பரசு 10.4.2016                                                     9 அன்புள்ள அப்பாவுக்கு, வணக்கம்.   நான் இங்கு நலம். நீங்கள் நலமாக இருப்பீர்கள் என்று நினைக்கிறேன். வெயில் சென்ற ஆண்டைவிட இந்த ஆண்டு அதிகம் காய்கிறது. பருத்தி உடையைத் தவிர வேறெதுவும் அணிய முடியவில்லை. பருத்தியானாலும் பதினைந்து நிமிடத்தில் நனைந்து வியர்வை வாடை மூக்கைத் துளைக்கிறது.   இந்த ஞாயிறு எங்கும் வெளியில் செல்லவில்லை. அறையில் ஜனா சமைத்தார். இரவில் உள்ளே படுக்க முடிவதில்லை. கடுமையான புழுக்கம். மழை, வெயில் இரண்டையும் அப்படியே இந்த அறை அப்படியே கண்ணாடி போல பிரதிபலித்துவிடுகிறது. சில நாட்களாக மாடியில்தான் தூக்கம். நான் எழுதும் கட்டுரைகளை நீங்கள் படித்திருக்க மாட்டீர்கள். கவனிப்பீர்கள் என்று நம்புகிறேன். முத்தாரத்திற்கு எந்த விளம்பரமும் வருவதில்லை. இதனால் இதற்கு விற்பனையும் கிடையாது.   மஞ்சள் காமாலைக்காக கீழாநெல்லி மருந்தை தினசரி குடித்து வருகிறேன். வீட்டில் சமைத்த உணவை சாப்பிட்டாலே உடல் சரியாகிவிடும். முழு உடல் பரிசோதனையை நீங்கள் செய்யப்போவதாக அம்மா சொன்னார். இதற்கான சோதனைகளை மருத்துவமனைக்கு மருத்துவமனை மாற்றிச் சொல்லுகின்றனர். பொரித்தல், வறுத்தல் இல்லாத உணவுகளைச் சாப்பிட்டு, கொழுப்பு கொண்ட கறி போன்றவற்றை தவிர்த்தாலே போதும்.   நன்றி!   ச.அன்பரசு 24.4.16                                                            10 அன்புள்ள அப்பாவுக்கு, வணக்கம்.   நலமாக  இருப்பீர்கள் என்று நம்புகிறேன். நான் இங்கு மருந்துகளை விடாமல் சாப்பிட்டுக் கொண்டிருக்கிறேன். வருமானம் பற்றிய கவலை எப்போதும் இருக்கிறது. செய்யும் வேலைக்கு மதிப்பான சம்பளம் கிடைக்கவில்லை என்று படுகிறது.   திருமணம் பற்றி கேட்டிருந்தீர்கள். அது பற்றி எனக்கு எந்த யோசனையும், சிந்தனையும் இல்லை. நீங்கள் யாருக்கும் எந்த வாக்குறுதியும் கொடுக்க வேண்டாம். சகோதரரின் திருமணம் நடந்தவிதமே அதிர்ச்சியாக இருந்தது. பெரும்பாலான செலவுகளை நாமே ஏற்றுக்கொண்டதற்கு என்ன காரணம் என்று தெரியவில்லை.   உங்களுக்கு சகோதரரிடம் நிறைய பாசம் இருக்கிறது என்று நினைக்கிறேன். அவர் எப்படி யோசிப்பார் என்பதை உங்களால் தீர்மானிக்க முடியவில்லை என்பதை நான் நம்பவில்லை. இந்த வகையில் ஒப்பிட்டால் எனக்கு சில நண்பர்களே உள்ளனர். சாதி சார்ந்த உறவுகளை நான் பெரிதாக நினைப்பதில்லை. சகோதரருக்கு நீங்கள் உதவுவது பற்றி எனக்கெந்த ஆட்சேபனையும் கிடையாது. அது உங்கள் விருப்பம். சுதந்திரமும் கூட.   நன்றி!   ச.அன்பரசு 7.5.16   11   அன்புள்ள அப்பாவுக்கு, வணக்கம்.   நலமாக இருக்கிறீர்களா? நான் எனது ஜாதகம் பற்றி சில விஷயங்களை சோதித்துப் பார்த்தேன். எனக்கு பெரும்பாலும் ராசிபலன்களிலேயே நல்ல பலன்கள் கிடைத்தது கிடையாது. இதில் ஜாதகத்தில் என்ன கிடைக்கப்போகிறது? அப்படித்தான் நண்பர் ஜனாவும் சொன்னார்.   அவர் இதனை நம்புகிறார். நான் அதனை அறிவியல் முறையாக ஏற்கிறேன். அதாவது கணக்கீடுகள். நடக்கும் அனைத்திற்கும் முன்னோர் வினைதான் காரணம் என்று வருத்தப்பட்டு உட்கார்வதால் என்ன கிடைக்கும்?   உண்மையிலேயே பணம் என்பதை பொருட்டாக எடுக்காமல் சோதிடர் ஒருவர் ஜாதகம் பார்த்தால் மட்டுமே இது சாத்தியம். பூமியும் சுற்றுகிறது. பூமியிலுள்ள நாமும் அதன்படியே இயங்குகிறோம். எனவே ஜோதிடத்தில் துல்லியமான பலன்களை கண்டறிவது கடினம். அப்படியும் சரியாகச் சொல்லிவிட்டால், நமக்கு நேரும் துயரங்களைத் தடுக்க முயற்சிக்கலாம். நீங்கள் பேசும் திருமணம் சாதாரண காரியமல்ல. நிறைய சோதனைகள், நெருக்கடிகள் உள்ளன.   நன்றி   ச.அன்பரசு 26.5.16    12   அன்புள்ள அப்பாவுக்கு,   வணக்கம்.   வாழிய நலம். திருமண வாழ்க்கை நீ என்ன எதிர்பார்ப்பு வைத்திருக்கிறாயோ அதற்கு அப்படியே எதிராக இருக்கும் என்றார் நண்பர் ஜனா. அதே நேரத்தில் அவர் ஒரு பெண்ணை காதலித்துக்கொண்டிருக்கிறார். அவர் தன் அனுபவங்களிலிருந்து இப்படி சொல்லியிருக்க வேண்டும்.   வாழ்க்கையை சுமுகமாக நடத்திச்செல்ல  தேவையானவை கிடைத்தால் சரி. தினமும் வீட்டில் போர் புரிந்துவிட்டு வெளியில் செல்வது சாத்தியமாகாதுதானே? இதற்கு உதாரணமாக உங்கள் திருமண வாழ்க்கையைச் சொல்லலாம். உறவை முறித்துக்கொள்ளாமல் நீங்களும், அம்மாவும் ஒன்றாக இருக்க சில காரணங்கள் இருக்கலாம். ஆனால் இன்று புதிய தலைமுறையினர் தங்களது சுதந்திரத்தை மட்டுமே முக்கியமாக கருதுகின்றனர். யாரும் உங்கள் அளவுக்கு சகிப்புத்தன்மையோடு இருப்பதில்லை. அதற்கு அவசியமும் இல்லை என்கிறார்கள்.   பெண் தனக்கான பொருளாதாரத் தேவையை நிறைவு செய்துகொள்ளும் தன்னம்பிக்கையை திருமணத்தில் பெற முடியுமா என்று தெரியவில்லை. நீங்கள் சில விஷயங்களைப் பகிர்ந்துகொள்ள துணை வேண்டும் என்றால் திருமணம் செய்துகொள்ளலாம். ஆனால் சமூக அழுத்தம் காரணமாக திருமணம் செய்கிறேன் என்றால் அது வறண்ட கிணற்றில் தெரிந்தே குதிப்பது போல. சரியாக அமையும் வாய்ப்பு குறைவு. உடல்ரீதியாக ஏற்படுத்திக்கொள்ளும் பந்தம் அவ்வளவு எளிதில் முறிக்க கூடியது அல்ல. மறக்கவும் முடியாது. பரஸ்பர எதிர்பார்ப்புகள், லாபங்கள் இன்றி திருமணங்கள் நடக்கிறதா என்று எனக்கு தெரியவில்லை. நன்றி.   ச.அன்பரசு 10.5.16                                                   13   அன்புள்ள அப்பாவுக்கு, நலம் வாழ வாழ்த்துகிறேன்.   நான் சென்னைக்கு கிளம்ப ஊரில் பேருந்து நிறுத்தத்தில் நின்றேன். ஆச்சரியமாக நீங்கள் வந்து பேசிய பத்து நிமிடங்களை என்னால் மறக்க முடியாது.   இறுதியில் மனம்தான் எல்லாம் என்பதை நீங்கள் சொன்னதை என்னால் ஏற்க முடியவில்லை. ஜோதிடரீதியாக தோஷம் என்பது வேறு. குறிப்பிட்ட பெயரில் வரும் தோஷம் என்பது வேறு. இரண்டுக்குமே பரிகாரம் என்ற பெயரில் செய்வது முழுமையான தீர்வு கிடையாது. கடுமையைக் குறைக்கலாம். அல்லது உங்களுக்கு அதனை சமாளித்துவிடலாம் என்ற நம்பிக்கையை மனதில் உருவாக்குவதாகவும் இருக்கலாம். இதில் திட்டவட்டமான பதில் ஏதும் கூறமுடியாது.   கடுமையாக முயன்று சில வெற்றிகளை பெறுபவரும், அதே நிலையில் இருப்பவர் மிகச்சில முயற்சிகளிலே உச்சிக்கு செல்வதும் நடப்பது எப்படி? நிச்சயம் இதை உங்களுடைய அனுபவத்தில் நீங்கள் பார்த்திருப்பீர்கள். உங்களுக்கும் மனதில் கேள்வி வந்திருக்கும். இதெல்லாம் தற்செயல் என நிச்சயம் நீங்கள் எண்ணியிருக்க மாட்டீர்கள்.   நான் ஏறத்தாழ 27 வயதில்தான் நம்மைச் சுற்றி நடக்கும் விஷயங்களின் தொடர்பை புரிந்துகொண்டிருக்கிறேன். முன்னமே தெரிந்திருந்தால் சில விஷயங்களுக்கு வீணாக வருந்திருக்க மாட்டேன். சில சம்பவங்களுக்கு குற்றவுணர்ச்சி கொண்டிருக்க மாட்டேன். சில இடங்களில் மகிழ்ச்சியை அனுபவித்திருப்பேன்.   தனியாக வாழ்வது என்று திருமணமாகதவர்களைப் பற்றி சொல்லுகிறார்கள். அவர்கள் சமூகத்துடன்தான் இருக்கிறார்கள். அவர்களின் உதவிகளைப் பெற்றும் இவர்கள் பிறருக்கு உதவியும்தான் வாழ்க்கை நகர்கிறது. தனியாக யார் இங்கு என்ன செய்துவிட முடியும். நடக்கும் விஷயங்கள் அதனதன் போக்கில் நடக்கட்டும். நாம் அப்படியே அதில் மிதக்கும் படகாவோம்.   நன்றி!   ச.அன்பரசு 19.6.16                                     14   அன்புள்ள அப்பாவுக்கு,   நலம் வாழ வாழ்த்துகிறேன். அலுவலகத்தில் புதிய வேலைகளை முத்தாரத்தின் வேலைகளோடு சேர்த்து கொடுத்துள்ளனர். குங்குமத்தின் வேலைகள்தான் அவை. இப்போதைக்கு எழுதுவது மட்டுமே நிம்மதியாக இருக்கிறது. முடிந்தால் காசு சேர்த்து லேப்டாப் ஒன்று வாங்கவேண்டும். ஏதாவது சுயமாக எழுத முயற்சி செய்யலாம். உடல்நலம் அனைத்துக்கும் ஆதாரம். அது சரியாக இருந்தால் காணும் கனவு கைகூடும்.   இன்று அலுவலக நண்பர் ஒருவரின் குழந்தைக்கு பிறந்தநாள் விழா. போகமுடியுமா என்று தெரியவில்லை. இரைச்சல், ஃபோகஸ் விளக்குகள் என்றாலே மனம் கலவரமாகி விடுகிறது. என்னால் அங்கு சில நிமிடங்கள் நின்றாலே நெருப்பின் மீது நிற்பது போலாகி விடுகிறது. அங்கு நின்று சக ஊழியர்களோடு பேசவும் முடியாது.   டிஜே என்று ஒருவர் வந்து நின்று டிப்பு சிக்கு டிப்பு சிக்கு என்று இசையை மாற்றி மாற்றி போட்டு வயிறு பேதியாக வைத்துவிடுகிறார். ஏதாவது கோவிலுக்கு செல்ல நினைக்கிறேன். தற்போது உள்ள பகுதியில் கோவில்கள் ஏதும் இல்லை.   சகோதரோடு பேசினேன். பணப்பிரச்னை இருக்கும் போல. என்னிடம் பணம் கேட்டார். நான் வாங்கும் சம்பளத்திற்கு வட்டி பிசினஸ் எப்படி செய்யமுடியும்? என்னிடம் இல்லை என்று சொல்லிவிட்டேன். மஞ்சள் காமலை பாதிப்பிற்கு கீழாநெல்லி பொடியை நீரில் கலக்கி குடித்து வருகிறேன். வெளியிடங்களில் சாப்பிடக்கூடாது. ஆனால் எனக்கு வேறு வழியில்லை.   ச.அன்பரசு 22.6.16                                                       14   அன்புள்ள அப்பாவுக்கு, வணக்கம்.   நலமாக இருக்க இறையை வேண்டுகிறேன். இதோ சென்னையில் இப்போது இதை எழுதும் வேளையில் மழை பெய்துகொண்டிருக்கிறது. போனமுறை வீட்டுக்கு தினகரன் ஆன்மிகப்பலன் புத்தகத்தை கொண்டு வர நினைத்தேன். ஆனால் பை நிறைய பொருட்களை வாங்கியதால் கனமாகிவிட்டது. இதனால் புத்தகங்களை அடுத்தமுறை வரும்போது கொண்டுவருகிறேன்.   தற்போது அலுவலகத்தில் நிதி சார்ந்த ஒருவர் விடுமுறை எடுத்துக்கொண்டிருக்கிறார். அதனால் அவரின் வேலைகளையும் என்னைப் பார்க்கச் சொல்லியிருக்கிறார்கள். இதனால் வேலைகள் இருகை தோள்களையும் துவளச்செய்கின்றன. தினகரனில் காசு குறைவுதான். சொன்ன நேரத்திற்கேனும் சம்பளம் வந்துவிடுகிறது. இப்படி ஒரு நிறுவனத்தைக் கண்டறிய ஆறு ஆண்டுகள் தேவைப்பட்டது எனக்கு.   உங்களுடைய உடல் உபாதைகளையும், என்னுடைய திருமணத்தையும் போட்டு குழப்பிக்கொள்ளாதீர்கள். இரண்டும் வேறுவேறு. இதனை யாரும் திட்டமிட்டு நடத்திக்கொள்ள முடியாது. நான் வாங்கும் சம்பளத்தில் ஒரு பிளேட் பீப் பிரியாணி வாங்கிச் சாப்பிடவே தயங்கிக் கொண்டிருக்கிறேன்.  என் நலன்களைத் தாண்டி பிறர் நலன்களின் மீது அக்கறை காட்டும் குணம் எனக்கு இன்னும் வரவில்லை.   மற்றவர்களின் வாழ்க்கையும் இதோடு தொடர்புபடுத்தப்படுவதால் கவனமாக இருக்கவேண்டும். பெருமாள் கோவிலின் பிரகாரத்தில் உட்கார்ந்துகொண்டு எழுதுகிறேன். மழைத்துளி கோவிலின் கற்பாளங்களில் பட்டு சிதறி, வெள்ள நீராய் சேர்ந்த கோவிலின் குளம் நோக்கிபாய்கிறது.   ச.அன்பரசு 29.6.16                                               15   அன்புள்ள அப்பாவுக்கு,   நலமாக இருக்கிறீர்களா? கோவை, பொள்ளாச்சி நகரங்களில் தேங்காய் விலை வீழ்ச்சி என்று செய்தி படித்தேன். நம் பகுதிகளிலும் அதன் பாதிப்பிருக்கிறதா?   பால் பொருட்களை சாப்பிடுவதால் சளி பிடிக்கிறதா என்று தெரியவில்லை. இரவுகளில் என்னால் மூச்சுவிடவே முடியவில்லை. நெஞ்சில் சளி இப்போது அதிகம் கட்டுகிறது. வாயால்தான் பெரும்பாலான நேரங்களில் மூச்சு விடுகிறேன். பால், தயிர், மோர் என எதையும் இப்போது சாப்பிடவே பயமாக இருக்கிறது. இதற்கு மருந்தாக பால் பொருட்களில் மிளகு தூவி சாப்பிடச் சொல்கிறார்கள். இது எந்தளவு சாத்தியம் என்று எனக்குப் புரியவில்லை.   உடலின் நோய் எதிர்ப்பு சக்தி மோசமாக இருக்கிறது. எனவே, நெல்லிக்காய் லேகியம் சாப்பிட்டு வருகிறேன. நோயைத் தீர்த்தே உடலின் உயிர்சக்தி தீர்ந்துவிட்டது போலத் தோன்றுகிறது.  என்ன செய்வது அனைத்து கனவுகளுக்கும் அடிப்படை உடல்தான். அஸ்திவாரம் ஆட்டம் கண்டுவிட்டால் கட்டிடம் எப்படி நிலத்தில் நிற்கும்?     இப்போது அலுவலகத்தில் முத்தாரம் வேலைகளோடு குங்குமத்தின் வேலைகளையும் செய்து வருகிறேன். அதில் படைப்புகளை அனுப்புபவர்களுக்கு பணத்தை அனுப்பும் வேலை. சிறப்பாக பணிபுரிய முயல்கிறேன்.   ச.அன்பரசு 11.7.16                                                     16   அன்புள்ள அப்பாவுக்கு,   நலமாக இருக்கிறீர்கள் என்று நம்புகிறேன். நேற்றிரவு வலுவான மழை. இன்று காலையிலும் கூட அந்த ஈரப்பதம் காற்றில் உள்ளது. மூக்கு கண்ணாடி துருப்பிடித்து உடைந்து விட்டது. இதனால் வேறு கண்ணாடி வாங்க கடைக்குச் சென்றேன். பிரேம் மட்டும் 850, லென்ஸ் 4 ஆயிரம் ரூபாய் வருகிறது. நான் நடுத்தரமான ரகம் ஒன்றைத் தேர்ந்தெடுக்க இருக்கிறேன். கடைக்காரர் கண்ணாடி மெலிதாக இருக்கும் என்று சொல்லி பத்தாயிரம் வரைக்கும் பில் போடப் பார்த்தார். அதையும் சமாளித்தேன்.   தயிர், பாலில் செய்த இனிப்பு ஏதாவது சாப்பிட்டால் உடனே கடுமையாக இருமல் வருகிறது.  எனவே பால் பொருட்களை முடிந்தளவு தவிர்த்து வருகிறேன். உங்களது கண்பார்வை எப்படி இருக்கிறது? பார்வைத் தெளிவில் ஏதேனும் சிக்கல் இருக்கிறதா? அப்படி இருந்தால் உடனே சிகிச்சை எடுத்துக்கொள்வது நல்லது. கண்களில் இருக்கும் அழுக்கை நீக்கும் மருந்து காரணமாக, நான்கு மணி நேரங்களுக்கு கண் கூசுகிறது. எழுத்துகள், கடிகாரம் நேரம் ஆகியவற்றை பார்ப்பது கடினம். இம்மருந்து ஊற்றப்பட்டால் வண்டி ஓட்டுவது கடினம். நான் ஆகஸ்ட் 2வது வாரம் ஊருக்கு வருவேன் என்று நினைக்கிறேன்.   ச.அன்பரசு 20.7.16   17   அன்புள்ள அப்பாவுக்கு,   வணக்கம். நீங்கள் நலமாக வாழ பிரார்த்திக்கிறேன். எந்தவொரு வேலையிலும் நான் சகோதரரைப் போல நம்பிக்கையை தந்ததில்லை. நோயுடன் போராடுவதிலேயே இளமையில் பாதியை செலவழித்துவிட்டேன். பிற நேரங்களை தாயுடன் செலவழித்தேன். இதனால் நிறைய பிரச்னைகளில் அறிவுப்பூர்வமான யோசனைகளை விட உணர்ச்சிப்பூர்வமான செயல்களே முன்னால் வருகின்றன. இப்போதைக்கு வேறு எதுவும் எழுதவில்லை. வேலையில் மட்டுமே கவனம் செலுத்தி வருகிறேன்.   அருகிலுள்ள பெருமாள் கோவிலுக்கு மட்டும் சென்று வருகிறேன். இந்த ஆண்டும் நிறைய வேலைகளும் பொறுப்புகளும் அளிக்கப்படும் என நினைக்கிறேன். வேலையை கவனமாகவும் தீவிரமாகவும் செய்ய முயல்கிறேன்.   அலுவலகத்திலிருந்து இரண்டு பேர் வேறு நிறுவனத்திற்கு பணிமாறி செல்கிறார்கள். தற்போது குங்குமத்தின் 144 பக்கங்களில் எனது பங்கேற்பு இரண்டு பக்கங்கள்தான். ஆனால் நிலைமை அப்படியே இருக்காது. விரைவில் இந்த இதழிலும் நான் கட்டுரைகளை எழுதுவேன் என்று தோன்றுகிறது.   கொடுத்த வேலையை கவனமாகவும் பொறுப்பாகவும் செய்யவேண்டும் என்று நான் கற்றுக்கொண்டது தங்களிடம்தான். அதனை மீண்டும் நினைவுபடுத்திக்கொள்கிறேன்.   நன்றி!   ச.அன்பரசு 24.7.16                                                     18   அன்புள்ள அப்பாவுக்கு,   நீங்கள் நலமாக வாழ பிரார்த்திக்கிறேன். காமாலை உடலில் அதிகம் பரவவில்லை என்று நினைக்கிறேன். இதற்கு மாறாக பாதிக்கப்பட்டு நான் இறந்தாலும் என் கர்மா அவ்வளவுதான் என நினைத்துக்கொள்ள வேண்டியதுதான். வாழ்நாள் முழுக்க எவ்வளவு கவனமாக உணவுப்பொருட்களை சாப்பிட்டு உயிர்வாழ வேண்டும் என்று நினைத்தாலே தலை சுற்றுகிறது.   ஏதோ சில விஷயங்களுக்காகத்தான் நான் இதையெல்லாம் செய்து என்னைக் காப்பாற்றி வருகிறேன் என்று நினைக்கிறேன். எனது மீதி நாட்களை நான் சென்னையிலேயே கழித்துவிட முடியும் என்று நினைக்கவில்லை. உங்களைப் பார்க்க நான் ஈரோடு வரவேண்டியுள்ளது, உறவுகளின் பெரிய ஆதரவு நமக்கு என்றுமே கிடையாது. நான் செய்யும் தவறுகளை அனுபவங்களை எடுத்துக்கொண்டு கற்றுக் கொள்கிறேன்.   தற்போது கூடுதல் வேலையாக தினகரனில் வரும் கல்விமலர் வேலையையும் கொடுத்துள்ளனர். இத்தனை செய்தும் சம்பளம் உயருமா என்று தெரியவில்லை. எனக்கு இந்த வேலை பிடித்திருக்கிறது. அதனால் சற்று இளிச்சவாய்த்தனமாகவும் கூட வேலையைச் செய்து வருகிறேன். தற்போதைக்கு வேறு எண்ணமில்லை. நன்றி!     ச.அன்பரசு 24.8.16   இதற்கெல்லாம் என் அப்பா என்ன பதில் சொல்லியிருப்பார் என்று நினைக்கிறீர்கள். லெட்டர் வந்துடா தம்பி... என்பார். அவ்வளவுதான்.   நிறைவு பெற்றது.     நன்றி   கணியம் சீனிவாசன் பிரதிலிபி தமிழ் பாலபாரதி மெய்யருள் கதிரவன் கருணாநிதி கார்ட்டூன் கதிர்