[] [அன்னையைத் தேடும் ஆன்மாக்கள்] அன்னையைத் தேடும் ஆன்மாக்கள் அன்னையைத் தேடும் ஆன்மாக்கள் நிர்மலா ராகவன் மின்னூல் வெளியீடு : http://FreeTamilEbooks.com சென்னை Creative Commons Attribution-ShareAlike 4.0 International License You are free: to Share — to copy, distribute and transmit the work; to make commercial use of the work Under the following conditions: Attribution — You must attribute the work in the manner specified by the author or licensor (but not in any way that suggests that they endorse you or your use of the work). No Derivative Works — You may not alter, transform, or build upon this work. காப்புரிமை தகவல்: நூலில் எந்த ஒரு மாறுதலும் செய்ய அனுமதியில்லை என்ற நிபந்தனையின் கீழ் பதிப்புரிமை வழங்கப் படுகிறது. இதனை விலையில்லாமல் விநியோகிக்கவோ, அச்சிட்டு வெளியிடும் செலவினை ஈடுகட்டும் விதமாக கட்டணம் வசூலித்து விற்பனை செய்யவோ முழு உரிமை வழங்கப்படுகிறது. This book was produced using PressBooks.com. உள்ளடக்கம் - அன்னையைத் தேடும் ஆன்மாக்கள் (சிறுகதைத் தொகுப்பு) - முன்னுரை - 1. அன்னையைத் தேடும் ஆன்மாக்கள் - 2. அந்த முடிவு - 3. தப்பித்தேன் - 4. பரம்பரை பரம்பரையாக - 5. இரண்டு பெண்களும், இன்னொருத்தியும் - 6. ஒரு விதி -- இரு பெண்கள் - 7. யார் உலகம்? - 8. சிதம்பர ரகசியம் - 9. மறக்க நினைத்தது - 10. பெரிய மனசு - Free Tamil Ebooks – எங்களைப் பற்றி - உங்கள் படைப்புகளை வெளியிடலாமே 1 அன்னையைத் தேடும் ஆன்மாக்கள் (சிறுகதைத் தொகுப்பு) [Cover Image] அன்னையைத் தேடும் ஆன்மாக்கள் (சிறுகதைத் தொகுப்பு) வகை – சிறுகதை உருவாக்கம்: நிர்மலா ராகவன், மலேசியா வெளியீடு: http://FreeTamilEbooks.com மின்னஞ்சல்: nirurag@gmail.com மேலட்டை உருவாக்கம்: மனோஜ் குமார் மின்னஞ்சல்: socrates1857@gmail.com மின்னூலாக்கம் : சிவமுருகன் பெருமாள் மின்னஞ்சல் : sivamurugan.perumal@gmail.com உரிமை – Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License. உரிமை – கிரியேட்டிவ் காமன்ஸ். எல்லாரும் படிக்கலாம், பகிரலாம். 2 முன்னுரை எழுத்தாளராக இருப்பதில் ஒரு சௌகரியம். ஆண்களோ, பெண்களோ, தாமே வலிய வந்து தம் கதையைச் சொல்லி, “ நான் என்ன செய்ய வேண்டும் என்பதை ஒரு கதையாக எழுதுங்கள், ” என்று என்னிடம் கேட்டுக்கொள்வதில், வித விதமான கருக்கள் அமைகின்றன.   சிதம்பர ரகசிய ம், பெரிய மனசு — இந்த இரண்டு கதைகள் நீங்கலாக மற்ற எல்லாவற்றிலுமே பெண்கள்தாம் முன்னணியில் நிற்கிறார்கள். எல்லாவற்றையும் தொகுத்தபின்தான் இதைக் கவனிக்கிறேன்.   ` பெண்களைப்பற்றியே எழுதுகிறார்! ’ என்று என்னைப்பற்றிய குற்றச்சாட்டு மலேசியாவில் உண்டு. பெண்களது மனநிலை எனக்குப் புரிவதாலோ, இல்லை, அனாதரவாக இருக்கும் பலருக்கு ஏதோ என்னால் முடிந்த உதவியென்று அவர்களின் நிலையைப்பற்றி விளக்குவதாலோ இப்படி எழுதி வருகிறேன் என்றே தோன்றுகிறது.   இதில் வரும் எல்லா கதாநாயகிகளையும் நான் சந்தித்திருக்கிறேன். தாம் எவ்வளவுதான் துன்பத்தை அனுபவித்தாலும், ` பெண்ணாகப் பிறந்துவிட்டோமே! ’ என்ற ஒரு நம்பிக்கையின்மையுடன், அவர்கள் எதையும் ஏற்கத் தயாராக இருப்பது எனக்கு எப்போதுமே எரிச்சலைத் தருகிறது. ஆனால், அவர்கள் நிலையில் நான் இருந்தால் இப்படித்தான் இருந்திருப்பேனோ என்று எண்ணுகையில், அனுதாபம் பிறக்கிறது. என்னையே அமைதிப்படுத்திக்கொள்ளும் முயற்சியில், என் உணர்ச்சிகளை எழுத்தில் வடிக்கிறேன். நன்றி. நிர்மலா  ராகவன் [pressbooks.com] 1 அன்னையைத் தேடும் ஆன்மாக்கள் “எனக்குப் பொறந்த பிள்ளைக்கு அப்பாவா! அந்த நாலு பேத்தில எவனோ ஒருத்தன்!” இடது கையை வீசி, அலட்சியமாகச் சொன்ன  அந்தப் பெண் காளிக்குப் பதினாறு வயது என்றாளே இல்லத் தலைவி, மிஸ்.யியோ (YEO)! கூடவே நான்கைத் தாராளமாகச் சேர்த்துக்கொள்ளலாம் என்று தோன்றியது சங்கீதாவுக்கு. சிறகு முளைக்குமுன் பறக்க ஆசைப்பட்டு, கூட்டிலிருந்து தரையில் விழுந்து, பூனை வாயில் மாட்டிக்கொள்ளும் பறவைக் குஞ்சுபோல்தான் இவளும்! இவளுடைய நல்ல காலம், உடலெல்லாம் குருதியாக, நிலைகுலைந்த ஒற்றை ஆடையுடன் இலக்கின்றி தெருவில் ஓடிக்கொண்டிருந்தவளை காவல் துறையினர் பார்க்க நேரிட்டது. பதினெட்டு வயதுக்குட்பட்ட பெண்களுக்குப் பாதுகாப்பு அளிக்கும் அவ்விடம் கோலாலம்பூரின் மையப்பகுதியில் இருந்தது. பெரிய வளாகத்துக்குப் பொருத்தமில்லாத சிறு வீடு. ஆனால், தனி வீடு. வாசலில் பெரிய மரம் ஒன்றின்கீழ் பிள்ளையார் வீற்றிருந்தார். மூன்றடி உயரத்தில் கம்பீரமான, கருங்கல் பிள்ளையார். இப்பெண்கள் திருந்தி, நல்வாழ்வு வாழவென அவரவர் மதப்படி பூசை நடத்துகிறார்கள். “எங்கப்பா ரொம்ப மட்டம்! அம்மா — அதைவிட!” தானே தெரிவித்தாள் காளி, தான் சீரழிந்ததை நியாயப்படுத்துவதுபோல். கற்பு வன்முறையில் சூறையாடப்பட்டிருந்த பெண்கள் திக்பிரமையாக நிற்பார்கள், அல்லது ஒரேயடியாக அழுது புலம்புவார்கள் என்றெல்லாம்தான் சங்கீதா படித்திருந்தாள். ஆனால் இந்தப் பெண்ணோ, தனக்கு நடந்தது சாதாரணமாக எல்லாரும் அனுபவிப்பதுதான் என்ற தோரணையில் அல்லவா பேசுகிறாள்! “நான் இப்படித்தான் போவேன்னு எனக்குப் பன்னண்டு வயசிலேயே தெரியும்,” என்று தொடர்ந்தாள் காளி. “ஒருக்கா பக்கத்து வீட்டிலே எங்கம்மாவையும், அந்த வீட்டு ஆம்பளையையும் பாயில ஒண்ணா பாத்தேனா? அப்பவே தோணிப்போச்சு, இந்தமாதிரி அம்மாவுக்குப் பொறந்த நாம்பளும் கெட்டுத்தான் போவோம்னு!” `சேற்றில் செந்தாமரை பூப்பதில்லையா?’ என்று இவளிடம் காலங்கடந்து கேட்டு என்ன பயன்! பெருமூச்சை அடக்கிக்கொண்டு, அவள் சொல்லிக்கொண்டே போனதைக் கேட்கத் தயாரானாள் சங்கீதா. “எங்கப்பா வெஷம் கலந்த சம்சுத் தண்ணியைக் குடிச்சுட்டு, உசிரை விட்டாரு. `சனியன் விட்டுச்சு’ன்னு, தெகிரியமா அம்மா அநியாயம் பண்ண ஆரம்பிச்சாங்க. அதைப் பொறுக்கமுடியாம, பக்கத்து வீட்டு சொர்ணாக்கா அவங்க சோத்துக் கையை அதோ, இங்க வெட்டிட்டாங்க!” முழங்கைக்குக் கீழே காட்டினாள். சங்கீதா மூச்சை உள்ளுக்கிழுத்துக்கொண்டாள். இவ்வளவு பயங்கரமான நிகழ்வுகளை இந்தப் பெண்ணால் எப்படி உணர்ச்சியற்ற குரலில் சொல்ல முடிகிறது? ஒரு வேளை, இந்தச் சின்ன வயதுக்குள் அளவுக்கு மீறிய துன்பத்தை அனுபவித்ததால், உணர்வுகள் மரத்துப்போய்விட்டனவோ! மரத்தடி பிள்ளையாருக்கு ஆராதனையாகக் காட்டப்படும் கற்பூரத்தை கண்ணில் ஒற்றிக்கொள்வதற்குப் பதில், அதை அவசரமாக எடுத்து, வாயில் போட்டுக்கொள்வாளாமே காளி! `அது ஒரு வித போதை! இவளுக்கு அந்தப் பழக்கம் இருந்திருக்கிறது!’ என்றாள் மிஸ்.யியோ. அப்பழக்கத்தால்தான் எதையும் அசாதாரணமாக ஏற்க முடிகிறதோ இவளால்? கதை நாராசமாக இருந்தது. ஆனால், வித்தியாசமான ஒன்றைக் கேட்கத்தானே இத்தனை பிரயாசைப்பட்டு, விசேட அனுமதி வாங்கி இந்த இடத்துக்கு வந்திருக்கிறோம்! “அப்புறம்?” என்று ஊக்கினாள். “கை போனதும், அம்மா செஞ்சுக்கிட்டிருந்த தோட்ட (ரப்பர் எஸ்டேட்) வேலையும் போயிடுச்சு. எங்க மாமா வந்து, எங்க ரெண்டு பேத்தையும் டவுனுக்குக் கூட்டிட்டு வந்துட்டாரு!” அடுத்து, அவள் ஒரு தொழிற்சாலையில் வேலைக்குச் சேர்ந்ததைப்பற்றிச் சொல்லும்போது, காளியின் முகத்தில் சிறிது பிரகாசம் தோன்றியதைக் கவனித்தாள் சங்கீதா. அந்த வயதில் தான் எந்தக் கவலையும் இல்லாது, பள்ளிக்கூடம், நீச்சல், சினிமா, பாட்டு கிளாஸ் என்று உல்லாசமாக வாழ்வைக் கழித்தது நினைவில் எழுகையில், சிறிது குற்ற உணர்வுகூட ஏற்பட்டது. ஓர் ஆன்மா இவ்வுலகில் பிறக்குமுன், தான் சேரவேண்டிய அன்னையைத் தேடுமாம். அதனால்தான், இயற்கையிலேயே பெற்றோரின் ஆற்றலைக் கொண்டிருப்பார்கள் சில குழந்தைகள். காளியின் ஆன்மா எதற்காக இப்படிப்பட்ட பெற்றோரைத் தெரிவு செய்தது? மீண்டும் இவ்வுலகிற்கு வரவேண்டும் என்ற ஆசை ஒன்றே பிரதானமாக இருக்க, எதுவுமே யோசிக்காது, கிடைத்த கருவுக்குள் அவசரமாகப் புகுந்துகொள்ளும் கோடானுகோடி உயிர்களுள் அவளுடையதும் ஒன்றோ? சற்றுமுன் மலர்ந்திருந்த காளியின் முகம் மீண்டும் வாடியது. “அம்மாவும் மாமாவும் எப்பவும் என்னை ஏசிக்கிட்டே இருப்பாங்க. வேலை முடிஞ்சதும், நான் பஸ் பிடிச்சு, வீட்டுக்கு வரணும். அன்னாடம், மாமா வாசல்லேயே நின்னுக்கிட்டு, `எவனோடடி கும்மாளம் போட்டுட்டு வர்றே?’ன்னு கத்துவாரு!” குரல் விம்மியது. “நீ எல்லாரோடேயும் கலகலப்பா பழகுவியா?” நாமும் ஏதாவது கேட்டால்தானே இவள் தொடர்ந்து பேசுவாள் என்று ஏதோ கேட்டுவைத்தாள் சங்கீதா. “ஊகும், எனக்கு ரொம்ப பயம்! யார்கூடவும் பேசமாட்டேன்!” “பின்னே.. ஏன் ஒங்க மாமா அப்படி..?” “அதான் எனக்கும் தெரியல. வீட்டுக்கு ஏன் வர்றோம்னு இருக்கும்”. `அந்த மாமாப்பயலுக்கு இந்த அறியாப் பெண்மீது ஒரு கண்ணாக இருக்குமோ?’ என்று சங்கீதாவின் எண்ணம் ஓடிற்று. “எங்கேயாவது ஓடிப் போயிடலாம்னு பாத்தா, அதுக்கும் பயம்! அப்பதான் ஆன்ட்டியைப் பாத்தேன்!” காளியின் முகத்தில் ஒரு சிறு ஒளிக்கீறல். `ஐயோ!’ என்றது சங்கீதாவின் உட்குரல். “தினமும் பஸ் ஸ்டாப்புக்கு வருவாங்க. என்மேல ரொம்ப இஷ்டம் அவங்களுக்கு. ரிப்பன், மணிமாலை எல்லாம் வாங்கிக் குடுப்பாங்க!” அவள் கூறாமலேயே மேலே என்ன நடந்திருக்கும் என்று சங்கீதாவால் ஊகிக்க முடிந்தது. முன்பின் தெரியாதவள் ஒரு பருவப்பெண்மீது பரிவு காட்டுவது — தனக்கே இரையாகப்போகும் ஆட்டுக்கு இரை போடும் கரிசனம்தான். “ஆன்ட்டிக்கு என் வயசில ஒரு பொம்பளைப்புள்ள இருந்து, செத்துப்போச்சாம். அதான் என் கையைப் பிடிச்சுக்கிட்டு, ஆசை ஆசையா பேசுவாங்க. என்னைப் பாக்கிறப்போ எல்லாம், `எங்க வீட்டுக்கே வந்துடேன்’னு கூப்பிடுவாங்க. அம்மாகிட்டேயும், மாமாகிட்டேயும் ஏச்சுப்பேச்சு கேக்கறதுக்கு, இந்த ஆன்ட்டிகூடப் போனா, நல்லாயிருக்கும்னு தோணிச்சு. ஒரு நாள், வேலைக்குப் போகாம, அவங்ககூடப் போயிட்டேன்!” காளி சிரித்தாள், அபூர்வமாக. “ஆன்ட்டி வீட்டில நல்லா இருந்திச்சு”. சங்கீதா மௌனமாக இருந்தாள். இந்தப் பெண்ணா வாயே திறக்காது என்றாள் இல்லத்தலைவி?! “பேப்பர்ல என்னோட போட்டோ போட்டு, `காணும்’னு விளம்பரம் குடுத்தாங்க எங்க வீட்டில. ஆன்ட்டிதான் காட்டினாங்க. `என்னை அங்க அனுப்பிடாதீங்க, ஆன்ட்டி’ன்னு அழுதேன். நான் இல்லாம, அம்மாவுக்கும், மாமாவுக்கும் ஏச ஆள் கிடைக்கலபோல!”என்று வெறுப்பைக் கொட்டியவள், “ஆன்ட்டி வீட்டில ஏதாவது சாப்பிடக் குடுத்துக்கிட்டே இருப்பாங்க,” என்றாள், முகமலர்ச்சியுடன். `அதில்தான் போதை மருந்து கலந்திருப்பார்களோ?’ “எப்பவும் யாராச்சும் என்கூடவே..!” தப்பித்துப் போகாமலிருக்க காவல்! இதுகூடப் புரியாமல், இந்த அப்பாவிப்பெண் சந்தோஷப்படுகிறாள்! அடைத்துக்கொண்ட குரலைக் கனைத்துச் சரிசெய்ய முயன்று, தோல்வியுற்றவளாக, “எப்படி இங்கே வந்தே?” என்று கேட்டாள் சங்கீதா. “நாலுபேர் ஒத்தர் மாத்தி ஒத்தரா என்மேல விழுந்தாங்களா..?” “ஆன்ட்டி வீட்டிலேயா?” “இல்ல. அங்க நெறைய்..ய மரங்க இருந்திச்சு,” என்றுதான் காளிக்குச் சொல்லத் தெரிந்தது. “நானும் அந்த தடியன்களோட சண்டை போட்டுப் பாத்தேன். முடியல. கத்த பயம். ஒருத்தன் கத்தியைக் காட்டிக்கிட்டு நின்னான்!” பயத்தில் இப்போதும் அவள் உடல் நடுங்கியது. “அப்புறமா, கைலியை எம்மேல தூக்கிப் போட்டுட்டு அவங்க ஓடிட்டாங்க. நானும் ஒரு பெரிய தெருவில ஓடினேன். போலீஸ் என்னைப் பிடிச்சு, சொந்தக்காரங்க எங்கே இருக்காங்கன்னு திரும்பத் திரும்பக் கேட்டாங்க. நான் சொல்லல”. தான் மறக்க முயல்வதையே எல்லாரும் ஏனோ கேட்கிறார்களே என்ற பரிதவிப்பு அவளுடைய பேச்சின் வேகத்தில் தெரிந்தது. மூச்சுவிடாமல் பேசிவிட்டு, சற்று நிறுத்தினாள். “ஆன்ட்டிதான் இங்க வந்து என்னைப் பாக்கறாங்க!” “இங்கேயும்வர்றாங்களா!” அவளடைந்த அதிர்ச்சி புரியாது, காளி உற்சாகமாகத் தலையாட்டினாள். “கேட்டுக்குள்ளே யாரையும் விடமாட்டாங்க. அதனால, நான் ஆசுபத்திரிக்கு காடியில போறப்போ, அவங்க தெருவுக்கு அந்தப் பக்கம் நின்னுக்கிட்டு கையாட்டுவாங்க!” ஒருவர் மனந்திறந்து பேசும்போது அவரது போக்கிற்கே விட்டுவிட வேண்டும், நம் விருப்பு வெறுப்பை அவர்மீது திணிக்கக்கூடாது என்ற மனோதத்துவ நியதியை தாற்காலிகமாக மறந்தாள் சங்கீதா. “அவங்களை நம்பிப் போனதால, நீ பட்டதெல்லாம் போதாதா? இன்னும் என்ன, ஆன்ட்டி?” என்று படபடத்தாள். “அங்கே ஏன் போறே?” “வேற எங்கே போறது! அவங்களுக்கு எம்மேல ரொம்ப இஷ்டம்!” மீண்டும் அதையே சொன்னாள். “ஐயோ, வேணாம்மா!” தன்னை மறந்து கத்தினாள் சங்கீதா. “ஒங்கம்மாகிட்ட போ!” “அங்க எதுக்குப் போறது? அம்மாவுக்கு ஏசத்தான் தெரியும்!” என்று ஆங்காரமாகச் சொன்னவளின் குரல் தழதழத்தது. “இனிமே என்னை யார் கட்டிக்குவாங்க? இந்த ஒடம்பு இருக்கிறவரைக்கும் ஆன்ட்டிக்கு ஒழைச்சுப் போட்டுட்டுப் போறேன்!” தான் செய்யபோவது என்ன தொழில் என்று அவளுக்குத் தெரிந்தே இருந்தது வேதனையாக இருந்தது சங்கீதாவுக்கு. “ஒன் பிள்ளை?” “அந்தச் சனியனை யார்கிட்டயோ குடுத்துட்டாங்க!” அந்த இல்லத்தின் வெளியே காரைச் செலுத்திக்கொண்டு போகையில், சங்கீதாவின் மனம் கனத்திருந்தது. தன் முதல் பிரசவம் ஆகுமுன்னரே எவ்வளவு எதிர்பார்ப்புடன் தானும், கணவரும் குழந்தைக்கு வேண்டிய தொட்டில், சட்டைகள் என்று பார்த்துப் பார்த்து வாங்கினோம்! காளி ஏன் இப்படி? தாய்ப்பாசம் தெரியாது வளர்ந்திருந்ததால், தன் குழந்தைமீது அன்பு சுரக்கவில்லையோ? அல்லது, அதற்கு உயிர் கொடுத்த, முகம் தெரியாத காமுகன்மேல் கொண்ட வெறுப்பு அவளை இப்படிப் பேசவைக்கிறதோ என்று யோசித்தாள் சங்கீதா. தான் உருவான சூழ்நிலையில் அன்போ, இன்பமோ இல்லாது பிறக்கும் குழந்தை மகிழ்ச்சியோடு வளருமோ? பெற்ற தாய்க்கே வேண்டாதவனாக, தன்மேலேயே வெறுப்புகொண்டு..! இன்னொரு கர்ணனா? பிறந்தது பெண்ணாக இருந்தால், காளி செய்ததுபோல், தான் வழிதவறிப் போவதை நியாயப்படுத்துமோ? பிறப்பின் அதிர்ச்சியை, பரம்பரைக் குணத்தை வளர்ப்பால் மாற்றி அமைக்க முடியுமா? ஓயாத எண்ண அலைகளால் அலைக்கழிக்கப்பட்டவளாக, இரண்டு தவறான திருப்பங்களுக்குப்பின் சங்கீதா வீடு திரும்பினாள். தோட்டத்தைக் கொத்திக்கொண்டிருந்த கணவர், அவளை வரவேற்கும் விதமாக, “தீபாவளி இதழுக்குக் கேட்டிருக்காங்கன்னு யாரையோ பேட்டி எடுக்கப் போனியே! கதை கிடைச்சுதா?”என்று கேட்டார். காளியின் கதையைச் சீரணிக்க இன்னும் இரண்டு வருடங்களாவது ஆகும் என்று தோன்ற, அசுவாரசியமாகச் சூள் கொட்டிவிட்டு, உள்ளே போனாள் சங்கீதா. (மக்கள் ஓசை, 2005– வேறு தலைப்பில்) 2 அந்த முடிவு “இந்த அநியாயத்தைக் கேட்டீங்களா?” தொலைகாட்சிப் பெட்டியிலிருந்து தன் கவனத்தைக் கஷ்டப்பட்டு மனைவியிடம் திருப்பினார் அம்பலம். முப்பது வருட தாம்பத்தியத்தில் அவர் கற்றுக்கொண்ட ஒரு பாடம், மனைவி பேச்சுக்கு எதிர்பேச்சு பேசாதிருந்தால் வாழ்வில் அமைதி நிலவும் என்பதுதான். ஆறு மாதத்திற்குமுன் மணமாகிப் போன கடைக்குட்டி பார்வதி அன்று சாயங்காலம் திடுதிப்பென்று வந்திருந்தாள். அதுவும் தனியாக. ஏதோ புருஷன் பெண்டாட்டி சண்டையாக இருக்கும் என்று இவரும் எதுவும் கேட்கவில்லை. இப்போது, எல்லாரும் சாப்பிட்டு முடிந்து, தூங்கப்போகும் சமயத்தில் அவள் வரவின் காரணத்தை மனைவி ஒன்றுக்குப் பத்தாகக் கூற வந்திருப்பாள் என அசுவாரசியமாகப் பார்த்தார். “ஏங்க? எதுக்காக கல்யாணம் பண்ணிக்கறது? இல்ல, எதுக்காகன்னு கேக்கறேன்!” நான்கு பிள்ளைகளைப் பெற்றபின் அவளுக்கு ஏன் இப்படி ஒரு சந்தேகம் எழுந்தது? அம்பலத்திற்குச் சிரிப்பு வந்தது. மனைவியின் கோபத்தை உத்தேசித்து அடக்கிக் கொண்டார். “அட, கேக்கறேன், இல்லே?” என்று முடுக்கினாள். வாயில் வந்தது எதையாவது சொல்லித் தொலைத்தாலே ஒழிய இவள் அப்பால் நகர மாட்டாள் என்று, “ஏதோ.. பிள்ளை குட்டி பெத்து, கடைசி காலத்தை அவங்க நிழல்லே..,” என்ற் மென்று முழுங்கினார். இந்த விஷயங்களை எல்லாம் வெளிப்படையாகப் பேசுவார்களா யாரேனும்! “இவரு கடைசி காலத்துக்குப் போயிட்டாரு! இங்க மொதலுக்கே மோசமா இருக்காம்!” நொடித்தபடி அவள் சொல்லாமல் சொன்னது லேசாகப் புரிய, அதை நம்ப முடியாது, திகைப்புடன் அவளைப் பார்த்தார். அவர் கண்ணில் தேங்கியிருந்த கேள்விக்கு அதே ரீதியில் பதிலளித்தாள் மனைவி. “ஏதுடா, தங்கமானவங்களா இருக்காங்களே சம்பந்தி வீட்டுக்காரங்க; `ஒங்க பொண்ணை எங்களுக்கு ரொம்ப பிடிச்சுப் போச்சு. நீங்க செய்யறதைச் செய்யுங்க’ன்னு அவங்க தேனாப் பேசினதில நான்கூட இல்ல ஏமாந்துட்டேன்!” ஆண்மை இல்லாத ஒருவனைத் தங்கள் பெண் தலையில் கட்டிவிட்டார்களே என்ற ஆத்திரத்தில் குமுறினாள் பொன்னம்மா. “இனிமே என்ன செய்ய முடியும்?” “என்ன இப்படிக் கேட்டுட்டீங்க? இனிமேதான் செய்யணும். `இந்த மாதிரி இருக்கு. எனக்கு அவரோட சேர்ந்து வாழ விருப்பமில்லே!’ அப்படின்னு பார்வதி கோர்ட்டில அடிச்சுச் சொன்னா, விவாகரத்து வாங்கிடலாம். ஜீவனாம்சம்கூட கிடைக்கும்!”. அம்பலத்துக்கு குழப்பம் அதிகரித்தது. “எதுக்கு அவசரம், பொன்னம்மா? மாப்பிள்ளை அம்மாவுக்கு ஒரே பிள்ளை! இன்னும் சின்னக் குழந்தைன்னே நினைச்சு, அருமையா நடத்தி இருப்பாங்க! அதான் இப்படி..! கொஞ்சம் விட்டுப் பிடிச்சா..!” மனைவியை எதிர்த்து, ஒரே மூச்சில் அவர் இவ்வளவு பேசியதே அதிகம். அப்போது அவரே எதிர்பாராதவண்ணம் மகள் புயலென சீறியபடி உள்ளேயிருந்து வந்தாள். “நான் இனிமே அந்த வீட்டுக்குப் போக மாட்டேம்பா. எங்க வீட்டுக்காரருக்கு சாப்பாடு போடக்கூட விடறதில்ல அவங்கம்மா. அவரும், `ஒரே களைப்பா இருக்கு. என்னைத் தொந்தரவு செய்யாதே’ன்னு தினமும் கட்டிலைவிட்டுக் கீழே படுத்துக்கிறாரு!” தன் இளமையும், பெண்மையும் கட்டியவருக்குக்கூட ஒரு பொருட்டாகப் படவில்லையே என்ற அவமான உணர்வில் அழுகை பொங்கியது அவளுக்கு. மகளுடைய துயரம் தாயையும் பாதிக்க, “இன்னும் என்ன கதை கேக்கறீங்க? பேசாம, நான் சொலறபடி செய்யுங்க!” என்று ஆணை பிறப்பித்துவிட்டு, “நீ வாடா, கண்ணு! யாரோ செய்யற தப்புக்கு நாம்ப எதுக்கு அழணும்?” என்று மகளை அணைத்தபடி உள்ளே அழைத்துப் போனாள்.   நீதிமன்றத்தில் பேசவும் வாயெழாது, அவமானத்துடன் தலைகுனிந்த வண்ணம் பிறர் தன்னை விமர்சிப்பதைக் கேட்டு, அங்கமெல்லாம் சுருங்கியவனாக நின்றிருந்த மாப்பிள்ளை கிருஷ்ணனின் நிலை பொன்னம்மாவைப் பாதிக்கவில்லை. `இவ்வளவு பெரிய விஷயத்தை மறைத்ததற்கு என்ன தண்டனை கொடுத்தாலும் தகும்!’ என்று நினைத்துக் கொண்டாள். அப்போது அவள் எதிர்பார்க்கவில்லை, தான் பெற்ற பிள்ளைகளே தன் முடிவை வன்மையாக எதிர்ப்பார்கள் என்று. “எங்களையும் ஒரு வார்த்தை கேக்கணும்னு ஒங்களுக்குத் தோணலியா? ஒரு பொண்ணுக்குக் கல்யாணம் ஆவறதே பெரும் பாடு. ஜாதி, ஜாதகம், சீருன்னு ஆயிரம் பிடுங்கல்! நம்ப மாப்பிள்ளைக்கோ நல்ல வேலை! பாக்கவும் லட்சணமா இருக்காரு!” என்று மூத்த மகன் இன்னொரு ஆண்மகனுக்குப் பரிந்து பேசியபோது, பொன்னம்மாவுக்குப் பற்றிக்கொண்டு வந்தது. தன்னை ஒருவன், அதிலும் தன் வயிற்றில் பிறந்த மகன், தட்டிக் கேட்பதாவது! “அழகும், பணமும் இருந்தா மட்டும் ஒருத்தன் ஆம்பளையாகிட முடியுமா?” என்று விரசமாகக் கத்தினாள். தங்கள் குடும்பத்துடன் இருந்த உறவை முறித்துக்கொண்டு பெற்ற பிள்ளைகளே போனபோதும் கலங்கவில்லை.`என் மகளுக்கு படிப்பிருக்கு. சுயமா நிக்கற தெம்பிருக்கு!’ என்று திமிராகச் சொல்லிவந்தாள். பார்வதியும் அதை நம்பினாள். ஆனால், இடையில் எதுவும் நடக்காததுபோல, பழையபடியே வேலைக்குப் போய் சம்பாதிக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டபோது, தான் எதையோ இழந்துவிட்டது போன்றதொரு வெறுமை ஏற்பட்டது அவளுக்கு. தன்னையொத்த பெண்கள் கணவன்மாரோடு உரசியபடி நடப்பதைப் பார்க்கும்போதும், தாம் பெற்ற குழந்தைகளைக் கொஞ்சுவதைப் பார்க்கும்போதும் அவளுக்குத் தன்மேலேயே பரிதாபம் மிகும். எல்லாருக்கும் சர்வசாதாரணமாகக் கிடைக்கும் இன்பங்கள் தனக்கு மட்டும் ஏன் அரிதாகப் போய்விட்டன? உலகத்தைச் சரிவரப் புரிந்து கொண்டிருக்காத வயதில் அம்மா சொற்படி கேட்டு நடந்தது தவறோ? இந்த அப்பாதான் ஆகட்டும், குடும்பத் தலைவராய் லட்சணமாய், யோசித்து ஒரு முடிவு எடுத்திருக்கக் கூடாதா! `என்ன முடிவு?’ என்று உடனே விரக்தி எழும். கணவருடன் சேர்ந்து இருந்திருந்தால், உலகை வேண்டுமானால் ஏமாற்றி இருக்கலாம். ஆனால், தனக்குள் பொங்கிப் பொங்கி எழுந்த அவமான உணர்ச்சியையும், விரக தாபத்தையும் எப்படி சகித்து இருக்க முடியும்! ஆரம்பத்தில் அனுசரணையாக இருந்த அம்மாகூட, தெரிந்தவர்களும், உறவினர்களும் காட்டிய பராமுகத்தால் மாறிப்போனாள். `துக்கிரி! எந்த வேளையில் பிறந்திச்சோ! இதுக்கு ஒரு நல்லது செய்யப்போய், எனக்கு யாருமே இல்லாம போயிட்டாங்க!’ என்று மகளைக் கரிக்க ஆரம்பித்தாள். இப்படி ஒரு அம்மாவுடன் காலமெல்லாம் எப்படித் தள்ளப் போகிறோம் என்ற மலைப்பு எழுந்தது பார்வதிக்கு. ஆயிற்று, இப்போதே முப்பத்தி இரண்டு வயதாகிவிட்டது. இன்னும் இப்படியே இருபது இல்லை, முப்பது வருடங்கள் தள்ளிவிட்டு.. நினைக்கும்போதே அயர்ச்சியாக இருந்தது. வயிற்றுப்பாடு ஒரு பிரச்னையாக இல்லைதான். ஆனால், தனிமை? படைத்தவன் மனிதர்களுக்குத் துன்பத்தைத் தருவதே அவர்களைத் தன்பால் ஈர்த்துக் கொள்ளத்தானாம். பார்வதி அடிக்கடி கோயிலுக்குப் போக ஆரம்பித்தாள். ஒவ்வொரு முறையும் வெவ்வேறு கோயில். அங்கெல்லாம் அம்மாவின் ஓயாத புலம்பலைக் கேட்காமல் இருப்பதே நிம்மதியாக இருந்தது.   அன்று கோலாலும்பூர், ஈப்போ ரோடிலிருந்த தண்டாயுதபாணி கோயிலுக்கு வந்திருந்தாள். சிறுவயதில் அண்ணன்மார்களுடன் ஓடிப் பிடித்து விளையாடிய மகிழமரம் ஒரு சிறு நெகிழ்ச்சியை உண்டடுபண்ணியது. ஆலமரத்தடியில் அக்கடா என்று இருந்த பிள்ளையார் இப்போது ஒரு சிறு கோயிலுக்குள். கலை, இந்து மத சம்பந்தமான நிகழ்ச்சிகள் நடக்கும் பெரிய `செட்டியார் ஹால்’. அழகாக அலங்கரிக்கப்பட்டிருந்த முருகனைப் பிரார்த்தித்துவிட்டு, பிரதட்சணம் செய்யப்போனாள். நீண்ட உட்பிராகாரம், வெளிப் பிராகாரம் இரண்டின் தரையிலும் சலவைக்கல் பதிக்கப்பட்டு இருந்தது. “பாப்பா! ஓடாதே!” எங்கோ கேட்ட குரலாக இருக்கவே, திரும்பினாள். அவளைப் பார்த்துச் சற்றே துணுக்குற்றவன், “நல்லா இருக்கீங்களா?” என்று விசாரித்தான், உபசாரமாக. இனியும் தன் மனைவியாக இல்லாதவளை ஒருமையில் விளிப்பது மரியாதை இல்லை என்ற அவனது பண்பு பார்வதியை என்னவோ செய்தது. “ம்!” என்றாள் முனகலாக. அவள் பார்வை எல்லாம் கிருஷ்ணனின் பிடியிலிருந்து திமிற முயற்சித்துக் கொண்டிருந்த குழந்தையிடமே பதிந்து இருந்தது. “என் பெண்!” அவன் குரலில் எக்காளம் இல்லை. சாதாரணமாகத்தான் சொன்னான். ஆனால், அது அவளுடைய கன்னத்தில் அறைந்ததுபோல் இருந்தது. `தீர யோசியாது, விளக்கம் தர எனக்கொரு சந்தர்ப்பமே அளிக்காது, பலபேர் முன்னிலையில் என்னை அவமானப்படுத்தினாயே!’ என்று கூறாமல் கூறுகிறாரோ? “அத்தை..ம்.. ஒங்கம்மா நல்லா இருக்காங்களா?” பேச்சை மாற்றினாள். “கேசில தீர்ப்புச் சொன்னதுமே அம்மா இருதய நோயாளியா ஆகிட்டாங்க. அவங்க போய் பத்து வருஷமாயிடுச்சு!” எதையோ சொல்லலாமா, வேண்டாமா என்று தயங்கியவனாய், முன்னாள் மனைவியையே பார்த்தான் கிருஷ்ணன்.  பின், ஒரு முடிவுக்கு வந்தவனாக, வேகமாகப் பேசினான்: “இப்ப நினைச்சா, அதிசயமா இருக்கு — இருபத்து நாலு வயசிலே நான்தான் எவ்வளவு ஜடமா இருந்திருக்கேன்! அப்பாவைத்தான் தெரியுமே! சினிமாப் பாட்டே வீட்டிலே கேக்கக்கூடாது, ஆண்-பெண் விவகாரம் எல்லாம் வாய்விட்டுப் பேசற விஷயம் இல்லே, அப்படி, இப்படின்னு ஏகக் கண்டிப்பு! பதினஞ்சு வயசில, நான் ஒரு பொம்பளை படம் வரைஞ்சதுக்காக கையை மடக்கச் சொல்லி, இரும்புத் தடியால போட்டிருக்காரு பாரு, ஸாரி, பாருங்க!” `உரிமையுடன், ஒருமையில் பேசுங்களேன்!’ என்று கதறவேண்டும்போல இருந்தது பார்வதிக்கு. “அம்மாதான் ரொம்ப அழுதாங்க. `எனக்கு இப்படி ஒரு கொறைன்னு நீ சொல்லவே இல்லியேடா! வீணாலும் ஒரு கல்யாணத்தைச் செஞ்சுவெச்சு, அந்தப் பொண்ணோட பாவத்தைக் கொட்டிக்கிட்டோமே!’ன்னு! தாயின் நினைவில் சற்று நேரம் மௌனித்திருந்தவன், தொடர்ந்து பேசினான். “ரொம்ப ஒருஷம் சிகிச்சை குடுத்தாங்க எனக்கு. ஒடம்பு, மனசு எல்லாத்துக்கும்தான். நான் ஆம்பளைதான்னு உறுதியானதும், உன்கிட்ட ஓடி வந்து அதைச் சொல்லணும்போல இருந்திச்சு. நீதான் அந்த சந்தோஷத்தை என்கூட பங்கிட்டுக் கொள்ளணும்னு ஒரு வெறி. ஆனா, அதே சமயத்திலே தயக்கமாவும் இருந்திச்சு!” எப்பேற்பட்ட இழப்பு அவளுடையது! எங்கே அவனெதிரே அழுதுவிடப் போகிறோமோ என்று பயந்தவளாக, “இருட்டப் போகுது. போகணும்,” என்று முணுமுணுத்தாள் பார்வதி. “வா பாப்பா!” என்றபடி, கிருஷ்ணன் நடக்க, அடக்க முடியாது கேட்டாள் பார்வதி. “இவங்கம்மா வரலியா?” திரும்பியவன், ஒரு வரட்சியான சிரிப்பை உதிர்த்தான். “எனக்குப் பொண்டாட்டி ராசி இல்ல போலிருக்கு. இந்தக் குழந்தையைப் பெத்துப் போட்டுட்டு, இவங்கம்மாவும் போயிட்டாங்க. அதாவது, செத்துப் போயிட்டாங்க!” `உன்னை மாதிரி, உயிரோடேயே கொண்டவனை நிர்க்கதியாக விடவில்லை!’ என்று அவன் மறைமுகமாக பழிப்பதாக எடுத்துக்கொண்டு, குன்றிப்போனாள் பார்வதி. `வீட்டுக்கு வாங்க,’ என்று அவனை அழைக்க ஆசையாக இருந்தது. ஆனால், எந்த முகத்துடன் அழைப்பது? “யாருப்பா இது?” என்ற குழந்தையின் கேள்விக்கு, “ரொம்ப வருஷத்துக்கு முந்தி எனக்குத் தெரிஞ்சவங்கம்மா,” என்று மாஜி கணவன் அளித்த விடையிலேயே அவன் அவளைவிட்டுத் தொலைதூரம் சென்றுவிட்டது தெரிந்தது.   (நயனம் –மலேசியா, 1998) 3 தப்பித்தேன் தீபாவளிக்கு இன்னும் ஒரு வாரம்தான் இருந்தது. கோலாலம்பூரில் `லிட்டில் இண்டியா’ என்று அழைக்கப்பட்ட பிரிக்ஃபீல்ட்ஸ் பகுதியின் கடைவீதி கலகலப்பாக இருந்தது. கடைகளுக்கு வெளியே மேசைகளின்மேல் கண்கவர் வண்ணங்களில் வாழ்த்து அட்டைகள், (பட்டாசு வெடிக்க அரசாங்க அனுமதி இல்லாததால்) கேப், கம்பி மத்தாப்பு, சட்டி வாணம் போன்றவை. கடைசி நிமிட நெரிசலை வேடிக்கை பார்க்க வந்தவர்களை இரண்டு இனமாகப் பிரிக்கலாம் என்று தோன்றிது சங்கரனுக்கு. ஸாரோங் கெபாயா, குட்டைக் கவுன் அல்லது பாவாடை என்று விதவிதமாக உடுத்தியிருந்த மலாய், சீன, வெள்ளைக்காரப் பெண்கள், பேரம் பேசிக்கொண்டிருந்த, இடுப்பில் கைலியுடன் இடுப்புக்கீழ் தொங்கிய சட்டையோ, அல்லது முழுநீள கால்சட்டையோ அணிந்திருந்த தமிழ்ப்பெண்கள் (இவர்களில் வெகு சிலர் புடவையும் கூட!) சங்கரன் தன் முழுநிஜாரின் பின்பக்கத்திலிருந்த பாக்கெட்டைத் தொட்டுப் பார்த்துக்கொண்டான். அதிலிருந்த பர்ஸ் பிதுங்கவில்லை. ஆனால், பல ஆயிரம் ரிங்கிட்டை யோசியாமல் செலவழிக்க கிரெடிட் கார்டு இருந்தது புதிய பலம் வந்தது போலிருந்தது. வாழ்த்து அட்டைகளின் உள்ளிருந்த கவிதைகளைச் சுவாரசியமாகப் படித்துக்கொண்டிருந்தவனுக்குகழுத்தின்பின்னால்குறுகுறுப்புஏற்பட்டது. ஒரே சாரியாக கார்களும், பஸ்களும் விரைந்துகொண்டிருக்க, தெருவின் எதிர்ப்புறம் நின்றிருந்த குண்டுப் பெண்மணி ஒருத்தி தன்னையே பார்த்துக் கொண்டிருப்பது தெரிந்தது. அவள்தானா? `யாராக இருந்தால் என்ன!’ என்று தன்னையே கடிந்துகொண்டான். இந்த வருடமாவது சுதாவுக்கு நல்லதாக ஏதாவது வாங்க வேண்டும். இவளும் தன்னை, `ஒன்றுமில்லாதவன்’ என்று எண்ணிவிடக் கூடாது. முப்பத்தைந்து வயதுவரை பிரம்மச்சாரியாகவே இருந்த தன்னைத்தான் நண்பர்கள் எப்படிப் பரிகாசம் செய்தார்கள்! `பிச்சைக்காரனுக்குக்கூட துணையும், சுகமும் வேண்டியிருக்கு! ஒரு வேளை, ஒன் கவனம் வேற பக்கம் திரும்பிடுச்சா?’ என்று அவன் பிற ஆண்களை நாடுபவன் என்ற பொருள்பட ஏசினார்கள். அவனுக்கா பெண்களைப் பிடிக்காது! ஒவ்வொரு நாளும், எவ்வளவு பூரிப்புடன் பூமாவைப் பூங்காவில் சந்திக்கப் போவான்! திடீரென்று அவள் வருகை நின்றது. தொலைபேசியையும் அவள் எடுக்கவில்லை. பதிலுக்கு அவளது திருமண அழைப்பிதழ் வந்தது — தபாலில். பத்திரிகையைக் கிழித்துப்போடவேண்டும் என்ற ஆவேசத்தைக் கட்டுப்படுத்திக்கொண்டு, அதைப் பிரித்தான். அவன் பெயர் இருக்க வேண்டிய இடத்தில் யாரோ அமெரிக்க மாப்பிள்ளை! கடைசியில், இவளுக்குப் பணம்தானே பெரிதாகப் போய்விட்டது! தன்னை ஒரு விளையாட்டுக் கருவியாகத்தானே உபயோகப்படுத்தி இருக்கிறாள்! இன்னொரு முறை இப்படி ஏமாறக்கூடாது. கைநிறையச் சம்பாதிக்க வேண்டும். அதன்பின்தான் கல்யாணத்தைப்பற்றிய யோசனை என்றெல்லாம் தீர்மானம் செய்துகொண்ட பின்னரும் மனம் சமாதானமாகவில்லை. முப்பத்தாறு வயது மணமகனாக அவன். பக்கத்தில், அவனைவிட ஒரே வயது இளைய சுதா. சோடாபுட்டிக் கண்ணாடியும், குடமிளகாய் மூக்காகவும் இருந்த அவளுக்கு அதுவரை கல்யாணம் ஆகாததில் அதிசயமில்லை என்று தோன்றிற்று அவனுக்கு. அவனைப் பொறுத்தவரை, சதா கேலி செய்த நண்பர்களிடமிருந்து தப்பிக்கத்தான் அந்தக் கல்யாணம். மனைவி எப்படி இருந்தால் என்ன! சுதாவை மணந்தபின்னர், பழைய துடிப்பு வற்றியிருந்தது அவனுக்கே தெரிந்தது. `இதுவே அந்தப் பாவி பூமாவாக இருந்தால், இப்படியா இயந்திரம்போல இருப்பேன்!’ என்று அவனது எண்ணம் போக, வருத்தம்தான் மிஞ்சியது. அந்தக் குண்டுப் பெண்மணி தெருவைக் கடந்து, அவனை நோக்கி வந்துகொண்டிருந்தாள், உதடுகளை விரித்து புன்னகை செய்தபடி. பூமாவா இவள்? இவளை நினைத்தா உருகினேன்! எல்லா அழகும் எங்கே போயிற்று? “ஹலோ சங்கரன்! நீ அப்படியேதான் இருக்கே!” `பின்னே, எல்லாருமா ஒன்னைப்போல ஓயாம தின்னு தின்னு கொழிச்சிருப்பாங்க?’ என்று சுடச்சுட — கேட்கவில்லை, நினைத்துக்கொண்டான். “நான் தீபாவளிக்கு வந்தேன், சும்மா பத்து நாளைக்கு!” ஆறாயிரம் ரிங்கிட் செலவழித்துக்கொண்டு வந்திருக்கிற பெருமை அவள் குரலில். “நீ மட்டும்தான் வந்திருக்கியா?” ஏதாவது பேசினால்தான் மரியாதையாக இருக்கும் என்று நினைத்துக்கேட்டான். “தனியாத்தான்வந்தேன். என்ஹஸ்பண்ட்ரொம்பவசதியாவாழ்ந்துபழகிட்டாரில்ல, அவருக்குஇங்கேசரிப்படாது!” மலேசியத்தலைநகரைஏதோஒருசிற்றூரைப்பழிப்பதுபோலச்சொல்லிச்சிரித்தாள். “எங்ககல்யாணத்தும்போதேஆயிரம்குறைசொன்னவரு!” அவளும், அவளுடைய பணப்பெருமையும்! வெறுப்பாக இருந்தது சங்கரனுக்கு. `தப்பிச்சேன்!’ தன்னுடைய நல்ல காலத்தை எண்ணி மகிழ்வும், நிம்மதியும் ஒருங்கே எழுந்தன. மனத்தைவிட பணத்தை மேலாக மதிப்பவர்களுடன் வாழ்வதில் என்ன சுகம் இருக்க முடியும்? விடை பெறும் தோரணையில் தலையை மட்டும் ஆட்டிவிட்டு, “மனைவிக்குப் புடவை வாங்க வந்தேன்,” என்று புளுகியபடி நடந்தான். தன்னையுமறியாமல், மனைவியுடன் அவளை ஒப்பிட்டுப் பார்த்தான். இன்றுவரையில், தன் வாய்திறந்து ஏதாவது கேட்டிருப்பாளா சுதா? தான் எவ்வளவு சம்பாதிக்கிறோம், என்ன செலவு செய்கிறோம் — ஊகும். அவனுடைய அலட்சியப் போக்கால் சற்றும் மனங்கலங்காது, எவ்வளவு பணிவாக இருந்தாள்! அவனுக்குக் குற்ற உணர்ச்சியும், தன்மேலேயே கோபமும் எழுந்தது. தன்னைவிட பணக்காரனான ஒருவனை காதலி தேடிப் போய்விட்டாளே என்ற தாழ்வு மனப்பான்மையில் மனைவியின் நல்ல குணத்தைப் புரிந்துகொள்ளத் தவறிவிட்டோமே! அழகுதான் எல்லாமா? அது அழியும் என்று ஏன் தனக்குத் தோன்றாமல் போயிற்று? படிப்பது எல்லாம் மனதில் படிவதில்லையோ? பூமாவிடம் சொன்ன பொய்யை நிசமாக்க வேண்டும். சுதாவுக்கு என்ன வாங்குவது — தங்க நகையா, பட்டுப்புடவையா? எதுவாக இருந்தாலும், அவளையும் கடைக்கு அழைத்து வரவேண்டும். அவளது அமைதியான முகம் விகசிப்பதைப் பார்க்க வேண்டும். தடை விதிக்கப்பட்டிருந்ததை பொருட்படுத்தாமல், யாரோ துணிச்சலாக ஊசிப் பட்டாசை வெடித்துக் கொண்டிருந்தார்கள். அந்தச் சரவெடிச் சத்தத்தைக் கேட்டு, எல்லோர் முகத்திலும் புன்னகை மலர்ந்தது. `இப்பவே தீபாவளி வந்திடுச்சு!’ என்று கூட்டத்தில் யாரோ சொல்லிப்போனது தனக்காகவே சொன்னது போலிருந்தது சங்கரனுக்கு. 4 பரம்பரை பரம்பரையாக கணவனின் குரல் கேட்டு கண்விழித்தாள் வேணி. மெலிந்திருந்த உடலுக்குள் ஏதோ ஒன்று பரவிந்து — வரண்ட நிலத்தில் குளிர்ந்த நீர் படர்ந்தாற்போல். அவள் படுத்திருந்த கட்டிலுக்கு அருகே வைக்கப்பட்டிருந்த முக்காலிமேல் சுடுநீர் போத்தல், கோப்பை, `டிஷ்யூ’ பேப்பர். கீழே குப்பைக்கூடை. அந்தச் சிறிய அறை மலிவானதொரு ஆஸ்பத்திரியை நினைவுபடுத்தியது. அவளது கட்டிலின் மேல் அமர்ந்துகொண்ட முகுந்தன் நெற்றியில் கைவைத்துப் பார்த்தான். “பிள்ளைபோனாப்போகட்டும்! ஒனக்குஏதாவதுஆகியிருந்தா! ஐயோ!” தன்மேல்தான் கணவருக்கு எவ்வளவு அன்பு! வேணிக்குப் பெருமிதமாக இருந்தது. `புருஷன் வீட்டிலே எல்லாரையும் அனுசரிச்சுக்கிட்டுப் போகணும், வேணி. வீட்டில நடக்கிறது எதுவும் நாலு சுவத்துக்குள்ளதான் இருக்கணும். எல்லாத்தையும், எல்லார்கிட்டேயும் சொல்லிக்கிட்டு இருக்காதே!’ திருமணம் ஆவதற்குமுன் அம்மா அளித்த அந்த உபதேசம் அனாவசியம் என்று தோன்றியது. கணவரைப்பற்றி தப்பாகச் சொல்ல என்ன இருக்கிறதாம்! அம்மாவின் உபதேசப்படி அவள் நடந்துகொண்டிருந்தாள். அதுதான் அவள் தவறு. எங்கிருந்தோ வந்த பெண், ஒருநாள் கூத்தில் தன்னை வாழ்நாள் முழுவதும் அவனுடன் இணைத்துக்கொண்டு, அதற்காகவே இப்பிறவி எடுத்ததுபோல் நடந்துகொண்டது முகுந்தன் தன்னைப்பற்றிக் கொண்டிருந்த மதிப்பை அபாயகரமான நிலைக்கு உயர்த்தியது. `ஆண் என்பவன்தான் எவ்வளவு மேலான பிறவி!’ என்று தோன்றிப் போயிற்று. தன் மனைவி, இதிகாச புராசங்களில் வரும் ரிஷிபத்தினிகள் மாதிரி தன் தேவைகளை எப்படிக் குறிப்பாலேயே நிறைவேற்றுகிறாள், எப்படித் தன் வாக்கையே வேதமாக எடுத்துக் கொள்கிறாள் என்று நண்பர்களிடம் பெருமை அடித்துக்கொண்டான். அவர்களும், `ஒனக்கென்னப்பா! நீ கிழிச்ச கோட்டைத் தாண்டாத மனைவி! இப்படி அமைய புண்ணியம் பண்ணியிருக்கணும்,’ என்று மேலும் உசுப்பேற்றினார்கள். அதிகாரமே அது ஒரு போதையாக, அதன்     அளவு மிகையாகப் போயிற்று. வெறித்தனமான இந்த ஆக்கிரமிப்பில், மனைவிக்கும் ஒரு மனம் இருக்கும், உணர்ச்சிகள் இருக்கும் என்பதே அவனுக்குப் பெரிதாகப் படவில்லை. கணவன் எப்படி ஆட்டுவித்தாலும், அதை பெரிதுபடுத்தாது அமைதியாக ஏற்றுக்கொண்டாள் வேணி. அவளுக்குக் குறைப்பிரசவம் ஆனது தன்னால்தான்; அவளது உடல்நிலையைப்பற்றி கிஞ்சித்தும் நினைத்துப் பார்க்காது, தான் இழுத்த இழுப்புக்கெல்லாம் அவள் வளைந்து கொடுத்ததுதான் என்ற குற்ற உணர்வு அலைக்கழைக்க, அவளிடம் அன்பைப் பொழிவதுபோல் நடந்துகொண்டான் முகுந்தன். உடல் தேறி, வேணி மறுபடியும் நடமாட ஆரம்பித்ததும், பழைய நிலை திரும்பியது. அவள் செய்தது எல்லாமே குற்றமாகப்பட்டது. ஓயாமல் அவளை விரட்ட ஆரம்பித்தான். திடீரென கிடைத்த கணவரின் அன்பும், பரிவும் மாறியது ஏன் என்று வேணிக்குப் புரியவில்லை. அடிக்கடி ஆரோக்கியம் கெட்டது. அப்போதாவது கணவனின் அன்பு திரும்புமா என்ற ஏக்கம் பிறந்தது. முகுந்தனுக்கோ, ஆத்திரம்தான் எழுந்தது. “அப்பவே எல்லாரும் தலைபாடா அடிச்சுக்கிட்டாங்க, ஒனக்கு இந்தப் பொண்ணு ஏத்ததே இல்லடான்னு. அதைக் கேட்டிருந்தா, இப்படி ஓயாம பொண்டாட்டிக்கு நர்சா ஆகவேண்டி இருக்குமா? வெளியழகைப் பாத்து மயங்கினதுக்கு எனக்கு நல்லா வேணும்!’ என்று அவன் தலையில் அடித்துக்கொண்டபோது, வேணிக்கு அவமானமாக இருந்தது. “என்னமோ, இப்பத்தான் இப்படி ஒண்ணு மாத்தி ஒண்ணா வருது. கல்யாணத்துக்கு முந்தி நல்..லா இருந்தேன்!’ என்று ஈனஸ்வரத்தில் அவள் பதிலளித்தது அவனுடைய ஆத்திரத்தை அதிகரித்தது. “ஒன்னை என்ன, இங்க பட்டினி போட்டுக் கொல்றாங்களா?” என்று கத்திவிட்டு, “என்னை மாதிரி ஒரு நல்ல புருஷன் கிடைக்க நீ குடுத்து வெச்சிருக்கணும், தெரிஞ்சுக்க!” என்றபடி நகர்ந்தவனையே பார்த்தபடி இருந்தாள் வேணி. பணிவுக்குப் பதில் இப்போது அவனிடம் பயம் வந்தது. பாட்டியும், அத்தையும் அடிக்கடி அவளது நினைவில் வந்து போனார்கள். `ஒங்க தாத்தாவுக்கு ஊரறிய நானும், இன்னொருத்தியும். அதைத் தவிர, பேட்டைக்கு ஒருத்தி. இதையெல்லாம் நான் பெரிசு பண்ணியிருந்தா, ஆறு பிள்ளைங்களை என் ஒருத்தியால எப்படி வளர்த்திருக்க முடியும்! பிச்சை எடுக்கத்தான் போயிருக்கணும்!’ என்று, தினம் ஒரு முறையாவது பாட்டி தன் பத்தினித்தனத்தை நிலைநாட்டிக் கொள்வாள். இந்தமாதிரி நீதி போதனைகளைக் கேட்டு வளர்ந்திருந்த அத்தையோ, கட்டியவரின் சூதாட்டத்துக்கும், பெண் பித்துக்கும் கேட்டபோதெல்லாம் தயங்காது நகைகளைக் கழற்றிக் கொடுத்துவிட்டு, அதற்குப் பரிசாக காம நோயைப் பெற்றுக்கொண்டவள். கணவர் அவளை அதிகம் சோதிக்காமல், அல்பாயுசில் போனபிறகு, அண்ணன் வீட்டுக்கே நிரந்தரமாக வந்துவிட்டிருந்தாள். தான் வாழ்ந்த விதம்தான் பெண்களுக்குப் பெருமை தேடித் தரும் என்பதுபோல், பிறருக்கும் உபதேசிக்க ஆரம்பித்தாள். சிறு வயது முதலே அப்பெண்கள் இருவரும் ஓயாது பேசியதைக் கேட்டு வளர்ந்திருந்த வேணிக்கு, முதன்முறையாகச் சந்தேகம் வந்தது. கணவரைப் பிற பெண்களுடன் பங்கு போட்டுக்கொள்ள நேரிட்டதுபற்றி பாட்டிக்குக் கொஞ்சமேனும் வருத்தமோ, கோபமோ இருந்திருக்காதா? அத்தை மட்டுமென்ன! `நான் இவ்வளவு கஷ்டப்பட்டு இருக்கும்போது, மற்றவர்கள் மட்டும் ஏன் நன்றாக இருக்கவேண்டும்?’ என்ற வயிற்றெரிச்சலில்தான் தன்னை தியாகத்தின் சின்னமாகக் காட்டிக்கொண்டாளோ? படுத்தபடி ஓயாது யோசித்ததில், வேணிக்கு ஒன்று மட்டும் புரிந்தாற்போலிருந்தது. தங்கள் வாழ்க்கை மகிழ்வானதாக இல்லை என்று எவருமே ஏற்க விரும்புவதில்லை. அது தமது தோல்வியை ஒத்துக்கொள்வதுபோல் ஆகிவிடுமே! பிற பெண்களும் இன்னல் அனுபவிப்பதை உணர்கையில், பாட்டி, அத்தை போன்ற பெண்களுக்கு தங்கள் கட்சி பலம் அடைந்துவிட்டதைப்போல ஒரு அல்ப சந்தோஷம். `பெண்ணாகப் பிறந்தாலே இப்படித்தான்!’ என்று நியாயம் கற்பிக்க முடியுமல்லவா! முகுந்தன் வேலை முடிந்து, வீடு திரும்பும் வேளை. `இன்று எதற்காக என்னிடம் ஆத்திரப்படப்போகிறாரோ!’ இருந்தாற்போலிருந்து, வேணிக்குப் படபடப்பாக இருந்தது. மூச்சு இளைத்தது. அந்த நிலையிலும் ஒரு தெளிவு: மனத்தின் இறுக்கத்திற்கு இவர்தானா காரணம்! `கட்டினவன் சொன்னதுக்காக, நெருப்பிலகூட குதிச்சதாலதானே ராமாயணக் காலத்திலேருந்து இப்போவரைக்கும் சீதாவைக் கொண்டாடறாங்க!’ அசரீரிபோல் பாட்டியின் குரல் ஒலித்தது. அலட்சியமாக உதடுகளைச் சுழித்தாள் வேணி. ஒருவேளை, ஸ்ரீராமச்சந்திரமூர்த்திமாதிரி கணவன் அமைந்தால், பொறுமையாக, கணவன் சொல் தட்டாத பத்தினியாக இருக்கலாமோ, என்னவோ! மருந்து போத்தல்களைத் திரட்டி வீசினாள். பக்கத்திலேயே இருந்த குப்பைக்கூடையில் அவை ஐக்கியமாயின. சில உடைந்து, பல்வேறு நிறங்களில் திரவப்பொருட்கள் ஒழுகின. வேணி சிரிக்க ஆரம்பித்தாள். (நயனம், 1993) 5 இரண்டு பெண்களும், இன்னொருத்தியும் அந்தப் பகுதியில் எல்லாமே பிஸ்கோத்துகளை அடுக்கி வைத்ததுபோல, ஒரே மாதிரியான சிறிய வீடுகள், ஒன்றுடன் ஒன்று ஒட்டியபடி. இரு தெருக்களின் இடையே ஒரு சிறு சந்து. அதன் நடுவில் கோணல் மாணலாக சதுர வடிவிலான பாறாங்கற்கள், `எங்கள்மேல் காலை வைத்தால், பதம் பார்த்துவிடுவோம்` என்று மிரட்டுவதுபோல். இரு புறமும் புதர்கள், சிறு குன்றுகளைப்போல். வெவ்வேறு தெருக்களில் இருந்தாலும், பின்வீட்டிலிருந்து ஒரு ஆண் இரையும் சத்தமும், அதற்குப் பதிலாக ஒரு பெண் அழுகைக் குரலில் ஏதோ பதிலளிப்பதும், அவ்வப்போது அலறுவதும் கேட்காமல் போகவில்லை திலகாவுக்கு. முதலில் அதிர்ச்சி. பின், சலிப்பு. ஒரு நாளா, இரண்டு நாளா! கடந்த ஒரு வாரமாக நடந்துகொண்டிருந்த கதை அது. என்ன பெண் இவள், இப்படியா எதிர்ப்பு காட்டாமல், எல்லா துறைகளிலும் முன்னேறி இருக்கும் இந்த நாகரிகமான காலத்திலும் ஒருத்தி வதைபடுவாள்! பள்ளி விடுமுறை ஆயிற்றே, ஏதாவது உருப்படியாக செய்யலாம் — தோட்டத்தை நன்றாகக் கொத்தி புதிய செடிகள் வாங்கிவந்து நடலாம், சமையலறைச் சுவற்றுக்கு ஏதாவது வெளிர் நிறத்தில் வண்ணம் பூசலாம் என்றெல்லாம் திட்டம் போட்டிருந்தாள் அவள். எல்லாம் பாழ். தான் இப்போது செய்ய வேண்டியது தன் வீட்டுக்கில்லை, சமூகத்துக்கு என்று தோன்ற, கார் சாவியை எடுத்துக்கொண்டு வாசலுக்கு விரைந்தாள். “எங்கே திலகா போறே?” தந்தையின் குரல் பலவீனமாக ஒலித்தது. அவள் பதில் கூறமாட்டாள் என்று தெரிந்தும் கேட்டார். `இவருடன் என்ன பேச்சு வேண்டியிருக்கிறது!` என்று நினைத்தவளாக, அவர் கேட்டது காதில் விழாததுபோல் திலகா வெளியே நடந்தாள்.   அவர் அம்மாவை நடத்திய லட்சணம் தெரியாதா! பிறரிடம் கணவரை விட்டுக் கொடுக்க விரும்பாது, எல்லாத் துன்பங்களையும் அனுபவித்தவள் அம்மா. அப்போது, அக்கம்பக்கத்தில் யாராவது — இப்போது தான் செய்யத் துணிந்ததுபோல் — சமூக பிரக்ஞையோடு குறுக்கிட்டிருந்தால், அம்மா ஆண்டுக்கணக்கில் அடி, உதைகளையும், ஏச்சுப்பேச்சுகளையும் தாங்கி இருக்க வேண்டாமே! பதின்மூன்று வயதிலிருந்தே ஹாஸ்டலில் தங்கிப் படித்துக் கொண்டிருந்து விட்டு, விடுமுறைக்கு மட்டும் திலகா வீடு வருவது வழக்கமாக இருந்தது. அப்போதெல்லாம், தன் உண்மை சொரூபம் மகளுக்குத் தெரியாதவண்ணம் அப்பா புத்திசாலித்தனமாக நடந்துகொண்டிருந்தார். மனைவியிடம் அன்பைப் பொழிந்தார். அவளைத் தூக்கிவைத்துப் பேசினார். தான் எது செய்தாலும், அதற்கு அவளுடைய அபிப்ராயத்தைக் கேட்டார். `அப்பா ரொம்ப நல்லவரு, இல்லம்மா? நீங்க அதிர்ஷ்டசாலி!“ என்று திலகா பாராட்டவும், தாய் விழித்துக்கொண்டாள். தான் பட்டதெல்லாம் போதும்; மகளாவது ஓயாது வதைபடாது இருக்கவேண்டும் என்று நிச்சயித்தாள். யாரும் இல்லாவிட்டால், அவருடைய நடத்தை நேர்மாறாக மாறிப் போகும். அன்பு இருந்த இடத்தில் அடி, வசவு. முதுகில் வரிவரியாகிருந்ததைக் காட்டினாள். புகழ்ந்து பேசிய அதே வாய் அவள் எது செய்தாலும் குற்றம் கண்டுபிடித்து, ஏளனம் செய்தது என்று, தன் அவல வாழ்க்கையைப் பகிர்ந்துகொண்டாள். `என்னை யார் கேட்பது! நான் ஆண்பிள்ளை!` என்று வெளிப்படையாக வதை செய்பவன் தேவலாம், ஆனால் அப்பா செய்தது ஏமாற்றுவித்தை என்று ஆத்திரம் கொண்டாள் திலகா. `அப்பா இந்தமாதிரின்னு ஏம்மா முன்னாலேயே எங்கிட்ட சொல்லல?’ என்று கறுவிய மகளிடம், `இப்பக்கூட சொல்லி இருக்க மாட்டேன். ஆனா, நீயும் எங்கேயாவது ஒங்கப்பாவைப்போல வெளியில இனிமையாப் பேசிட்டு, யாரும் பாக்காதப்போ கொடுமைப்படுத்தறவன் எவன்கிட்டேயாவது மயங்கிடப் போறியோன்னு பயந்துதான் சொல்றேன்,` என்றாள் அம்மா, நிதானமாக. பெண்ணாய்ப் பிறந்ததே துன்பம் அனுபவிக்கத்தான் என்பதுபோல் அம்மாவை ஒத்த சிலர் எல்லாவிதக் கொடுமைகளையும் தாங்கியது அவநம்பிக்கையோடு, ஆத்திரத்தையும் அளித்தது திலகாவிற்கு. சற்று யோசித்தபோது, பெண்கள் ஒவ்வொரு செலவுக்கும் கொண்டவனின் கையை எதிர்பார்த்து வந்திருப்பதால்தான் பலமிழந்து போய்விட்டார்கள் என்று புரிந்தது. அந்தப் பதினாறு வயதிலேயே ஒரு முடிவை எடுத்தாள்: தன் வாழ்க்கையைச் சுதந்திரமாக, எந்த ஆணுக்கும் அடிபணியாது கழிக்கவேண்டும். நிறையப் படித்து, சொந்தக் காலிலேயே நிற்க ஆரம்பித்தும்கூட அவள் உறுதி மாறவில்லை.   திலகாவிற்கு முப்பத்தைந்து வயதானபோது, அப்பா படுக்கையில் விழுந்தார். அப்போதும் தள்ளாமையுடன் அம்மா அவரைக் கரிசனத்துடன் கவனித்துக்கொண்டது எரிச்சலைத்தான் உண்டுபண்ணியது. `நீங்க அவர்கூட சந்தோஷமா இருந்தது என்ன தட்டுக்கெட்டு போச்சு? இப்படி ராஜோபசாரம் செய்யணுமா?` என்று சிடுசிடுத்தாள். ` ஏதாவது கிளினிக்கில கொண்டு சேர்த்துடலாம்மா. ராத்திரி பகலா கவனிச்சுப்பாங்க. செலவை நான் பாத்துக்கறேன்!` என்று ஒரு வழியும் காட்டினாள். தாய் ஏற்கவில்லை. `ஒரு மனைவியின் கடமை,` என்றாள் சுருக்கமாக. அவளது குடும்பத்திலிருந்த பெரியம்மா, அத்தை போன்ற `பெரிய பெண்டிர்` கூறிய அறிவுரைகள், பழைய தமிழ் படங்களின் தாக்கம், அவள் படித்திருந்த சிறுகதைகள் போன்ற பலவும் அவளுடைய எண்ணப்போக்கை செதுக்கி இருந்தன. ஆனால், அம்மாவின் மனதிலிருந்த உறுதி உடலில் இருக்கவில்லை. வேலைப்பளு தாங்கமுடியாதுபோக, சில மாதங்களிலேயே அப்பாவிடமிருந்து அம்மாவுக்கு நிரந்தர விடுதலை கிடைத்தது. திலகா ஒரு முடிவுக்கு வந்தாள். சற்றும் யோசியாது, அவரை யாழ்ப்பாண இளைஞர்கள் சிலர் இணைந்து நடத்திய இல்லத்தில் கொண்டுபோய் சேர்த்தாள். அப்போது அவர் கண்களில் தெரிந்த வேதனை அவளைப் பாதிக்கவில்லை. `நானோ வேலைக்குப் போறவ. ஒங்களைப் பாத்துக்க ஆள் போட்டா, வீட்டில இருக்கிற எல்லாத்தையும் சுருட்டிக்கிட்டுப் போயிடுவாங்க!` எங்கோ பார்த்தபடி சொன்னாள். ஆனால் அப்பாவுக்கு உண்மை தெரிந்துதான் இருந்தது. பெற்றவளைத் தான் நடத்தியதற்கு மகள் வஞ்சம் தீர்த்துக் கொள்கிறாள்! ஓரிரு ஆண்டுகளுக்குப் பின்னர், அப்பா சுயமாக நடக்க ஆரம்பித்ததும், வேறு வழியின்றி வீட்டுக்கு அழைத்துவந்தாள் திலகா. அவளைக் கண்டிக்கும் விதமாக அவர் ஏதோ குற்றம் கண்டுபிடிக்க ஆரம்பிக்க, இவருக்கு இடம் கொடுத்தால், தானும் அடிமை வாழ்க்கைதான் வாழ வேண்டியிருக்கும் என்ற பயம் அவளிடம் தலைதூக்கியது. `நானும் அம்மா இல்ல,` என்று முரட்டுத்தனமாகக் கூறி, அவர் வாயை அடைத்தாள். அப்பா அடங்கிப் போனார். இந்தவரைக்கும் தங்க இடமும், வேளாவேளைக்கு சாப்பாடும் கிடைக்கிறதே என்று திருப்தி பட்டுக்கொண்டார். அவருக்கென்று இருந்த அறையிலேயே காலத்தைக் கழிக்கலானார். கடந்த சில நாட்களாக பின்வீட்டில் நடக்கும் நாடகம் அவருக்கும் தெரிந்துதான் இருந்தது. அந்த முகம் தெரியாத ஆடவனைப்போல் தானும் எப்படியெல்லாம் மனைவியை ஆட்டுவித்தோம் என்ற எண்ணம் எழுகையில், அந்த நாட்கள் இனிமையானவை, தனக்கு எவ்வளவு அதிகாரம் இருந்தது என்றெல்லாம் எண்ணி ஏக்கப் பெருமூச்சுவிடத்தான் அவரால் முடிந்தது.   விரைவிலேயே திலகா திரும்பிவந்தாள். கூடவே காவல்துறை அதிகாரிகள் இருவர். அவள் சொன்னதையெல்லாம் கேட்டுவிட்டு, `இது அவங்க குடும்ப விவகாரம். நாங்க எப்படி தலையிடறது?` என்று தயங்கினார்கள். `இதைப்போய் பெரிசு பண்றீங்களே! ஒங்களை ஒங்க புருஷன் அடிச்சதில்லையா, என்ன!` என்று அவர்களில் இளைஞனாக இருந்தவன் கேட்டபோது, அவளுக்குப் பற்றிக்கொண்டுவந்தது. அந்த அதிகப்பிரசங்கித்தனத்திற்குப் பதில் சொல்லாமல், `இப்படியே விட்டா, அவங்களை அடிச்சே கொன்னுடுவான் அந்த மனுசன்!` என்று அரற்றினாள். `அடிபட்ட காயங்களோட அந்தம்மாவை டாக்டரைப் பாக்கச் சொல்லுங்க. டாக்டர் போலீசில புகார் கொடுக்கட்டும்,` என்று ஒரு உபாயத்தைத் தெரிவித்துவிட்டு, அவர்கள் எழுந்தனர்.   அன்று சாயந்திரம், காலார உலாவப் போவதுபோல் பின்தெருவுக்குப் போனாள் திலகா. அந்தப் பெண்ணின் வீட்டிலிருந்து எந்த அரவமும் இல்லை. சற்று யோசித்துவிட்டு, வெளிச்சுவற்றில் பொருத்தப்பட்டிருந்த அழைப்பு மணியை அழுத்தினாள். கதவு திறக்கப்பட்டது. “யாரு?” தலையை மட்டும் நீட்டிப் பார்த்த பெண்மணியை திலகாவுக்குப் பரிச்சயமில்லை. புதிதாகக் குடி வந்திருக்கவேண்டும். அவளிடம் என்ன சொல்வது? எப்படிச் சொல்வது? சற்றே தயங்கிய திலகா, தன்னை சுதாரித்துக்கொண்டு, “சில நாளா.. இந்த வீட்டிலேருந்து ஏதோ.. யாரோ அடிக்கிறாங்க, ஒடனே ஒரு பொண்ணு கூவி அழறமாதிரி கேட்டுச்சு. அதான்.. விசாரிச்சிட்டுப் போகலாம்னு..,” என்று இழுத்தாள். “அதுவா?” அப்பெண் சிரித்தாள். வலிய வரவழைத்துக்கொண்ட, உயிரற்ற சிரிப்பு. “நான்தான் வீடியோ பாத்துக்கிட்டிருந்தேன். நீங்க, பாவம், அதைக் கேட்டுட்டு..! சாரி!” பேசியபடியே கதவை அதிகபட்ச சத்தத்துடன் சார்த்தினாள் அப்பெண். நாட்டில் பெண்களைப் பாதுகாக்கும் சட்டங்கள் போட்டு என்ன பயன்! இந்தத் தலைமுறையிலும் அம்மாவைப் போன்ற பத்தாம்பசலிகள் இருக்கிறார்கள் என்ற நிதரிசனம் திலகாவுக்குள் கசப்பை விளைவித்தது. தளர்ந்த நடையுடன் வீடு திரும்பினாள். சிறிது நேரத்திற்குப்பின், “இப்ப வந்திட்டுப் போச்சே, அதுக்கு இன்னும் கல்யாணமே ஆகலியாம். அதான், பொழுது போகாம, எங்கடா வம்புன்னு கெடந்து அலையுது!” என்று சற்றுமுன் கேட்ட பெண்குரல் யாரிடமோ சொல்லிக் கொண்டிருந்தது நன்றாகவே கேட்டது. “ஒவ்வொருத்தர் வீட்டிலேயும் ஆயிரம் இருக்கும். அதைக் கேக்க இவ யாருங்கறேன்!” (மக்கள்ஓசை,2013) +-----------------------+-----------------------+-----------------------+ |   |   | | | | | | |   | | | +-----------------------+-----------------------+-----------------------+ 6 ஒரு விதி -- இரு பெண்கள் “என் கணவர் என்னை நல்லா பாத்துக்கிறார். இவர் எனக்கு மூணாவது!” எண்ணையைத் தடவி, என் உடலைப் பிடித்துவிடும்போது, தன்போக்கில் பேசினாள் அய்னுல். அவள் சொன்னவிதம் எப்படி சாதாரணமாக இருந்ததோ, அதேபோல் நானும் அதை ஏற்றுக்கொண்டேன். அதிர்ச்சியோ, அருவருப்போ ஏற்படவில்லை. “மத்த ரெண்டு பேர்?” என்று கேட்டேன். இரண்டு மணி நேரம் போகவேண்டுமே! அத்துடன், எனக்கு ஒரு புதிய உலகத்தைப் பார்ப்பது போலிருந்தது. “நம்பர் ஒன் இறந்து போயிட்டார். ரெண்டாவது ப்ளே பாய்! அப்படின்னா ஒங்களுக்குத் தெரியுமா?” `இப்படியும் ஒரு அப்பாவியா!’ என்று வியந்துகொண்டு, “உம்” என்றேன். “அவர் ரொம்ப அழகா இருப்பார். மாடல்!” “மாடல்மாதிரியா?” “மாடலேதான். அழகான பொண்ணுங்க பணக்காரியாவும் இருந்துட்டா, விடமாட்டார். அவங்களை மயக்கிடுவார். அவங்க நிறைய காசு குடுப்பாங்க! அவர் வேற வேலை எதுவும் செய்யல”. எனக்குச் சில தமிழ் நடிகர்கள் ஞாபகம் வந்தது. “எங்கிட்ட அந்தக் காசைக் குடுப்பார். ஆனா, எனக்கு வாங்கப் பிடிக்கலே. என் கையிலே தொழில் இருக்கு. கெட்ட வழியில வர்ற காசு எதுக்கு! அவரை விவாகரத்து பண்ணலாம்னு பாத்தேன். ஆனா அவர் விடலே”. பேசிக்கொண்டே போனாள். நானும் சுவாரசியமாகக் கேட்டேன். “கல் ரொம்ப சூடா இருந்தா சொல்லுங்க, மாம்!” என்றபடி, கொதிக்கும் நீரில் அமிழ்ந்துகிடந்த எரிமலைக் கற்களை என் கால்களில் மேலிருந்து கீழே தேய்த்தாள். இதமாக இருந்தது. கைகள் அவள் போக்கில் பழகிய வேலை செய்ய, தன் கதையைத் தொடர்ந்தாள். “என் ஃப்ரெண்ட் ஒருத்தி, என்னை ஒரு போமோகிட்ட (BOMOH, MALAY VILLAGE MEDICINE MAN) கூட்டிட்டுப் போனா — “ஒன் புருஷனோட நடத்தையை இவரால மாத்த முடியும்’னு! இப்ப அந்த `இந்தோன்’தான் என்னோட மூணாவது புருஷன்!” எனக்குச் சிரிப்பு வந்தது. அடக்கிக்கொண்டேன். “அவரோ, “நீ கட்டியிருக்கிற ஆளு BLACK MAGIC பயன்படுத்தறான். அவனை மாத்த முடியாது. ஆனா, ஒன்னை மாத்த முடியும்,’னு சொன்னார். அந்த ப்ளே பாய் ஒருவழியா எனக்கு விவாகரத்து குடுத்தார்!” “எத்தனை வருஷமாச்சு நீ இந்த..?” நான் கேள்வியை முடிப்பதற்குள், “ரெண்டு வருஷம். அவர்தான் முதலில் கேட்டார். நான் ரொம்ப யோசிச்சேன். என் மூத்த மகன் ஹலீம்தான், `இந்தோனீசியரா இருந்தா என்ன? அவரும் மனுசன்தானே!’ன்னு புத்தி சொன்னான். அவனுக்கும் கல்யாணமாகி, ரெண்டு பிள்ளைங்க ஆகிடுச்சு. நாளைக்கே, நாலு பிள்ளைங்களும் தனித் தனியா போயிட்டா, என்னை யாரு பாத்துப்பாங்க? அதான், சரின்னுட்டேன்”. பேச்சு சுவாரசியத்தில் ரொம்ப சூடாக இருந்த கல்லை அய்னுல் என் வயிற்றுப் பகுதியில் வைக்க, “ஆ!” என்று அலறினேன். உணர்ச்சியற்ற குரலில் மன்னிப்பு கேட்டபடி (வழக்கமாகச் செய்வதுதானோ?) தொடர்ந்தாள். “இவர் என்னை நல்லா பாத்துக்கிறார், மாம். சம்பாதிக்கிறதை அப்படியே எங்கிட்ட குடுத்துடறார்! பக்கவாதம் வந்தவங்களுக்கு, அவங்க வீட்டுக்கே போய் சிகிச்சை குடுக்கறார்!” என்றவள், எதையோ பகிர்ந்து கொள்ளலாமா என்று சற்று யோசித்துவிட்டுத் தொடர்ந்தாள். “எங்க மாநில சுல்தானோட அம்மாவுக்கு இவர்தான் மஸாஜ் செய்வார். அவங்க ஸ்ட்ரோக் வந்து, படுத்தபடுக்கையா கிடந்தவங்க. இப்ப நல்லா நடக்கிறாங்க!” என்று பெருமையுடன் தெரிவித்தாள். அவளுடைய பூரிப்பைப் பகிர்ந்துகொண்ட விதத்தில், ஏதேனும் சொல்ல வேண்டும்போல இருந்தது எனக்கு. “நீ இன்னும் அழகா இருக்கியே! அதான் ஒனக்காக போட்டி போட்டுக்கிட்டு வர்றாங்க!” என்றேன். அவளுக்கு ஐம்பது வயதுக்குமேல் என்று தெரியும். “நெசமாவா?” என்றாள். குரலில் அப்படி ஒன்றும் மகிழ்ச்சி இல்லை. பல பேர் புகழ்ந்திருப்பார்கள். அதனால், அதை அவள் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை என்று நினைத்தேன். ஒருவேளை, முக அழகு இயற்கையில் அமைந்ததுதானே, இதில் தான் பெருமைப்பட என்ன இருக்கிறது என்று நினைத்திருக்கலாம். மஸாஜ் முடிந்ததும், வாய்வு விலக, துருவிய இஞ்சியை பழுப்புச் சீனியுடன் கொதிநீரில் போட்ட டீ கொடுப்பார்கள். ஊதிக் குடித்தபடி, ஆற அமர உட்கார்ந்து யோசித்தேன். கும்பகோணத்தில் நடந்த அக்கல்யாணத்திற்கு நான் போய் மூன்று வருடங்கள் ஆகியிருக்குமா? கல்யாண சத்திரத்தில், மாப்பிள்ளையின் பெரியம்மா, விசாலி, ஏதோ சாமானை ஒழுங்காக அடுக்கப்போக, மணமகளின் தகப்பனார், “நீங்க தொடாதீங்கோ!” என்று அலறியதை எப்படி மறக்க முடியும்! ஐம்பது பிராயத்தைத் தாண்டியிருந்த விசாலி, தன் கையிலிருந்ததை மெதுவாகக் கீழே போட்டுவிட்டு, உள்ளே போனாள். அவள் முகத்தில் காணப்படாத அதிர்ச்சி அப்போது என் முகத்தில் அப்பி இருந்திருக்கும். முப்பது வயதுக்குள் கணவனை இழந்து, இரண்டு குழந்தைகளுடன் தனித்து விடப்பட்டவள், பாவம்! பிற ஆண்களுடன் யாராவது பெண் சிரித்துப் பேசினாலே, இரண்டு சாராருக்கும் கள்ளத்தொடர்பு இருக்கலாம் என்பதுபோல் இவள் ஏன் வம்பு பேசுகிறாள் என்று பலமுறை வியந்திருக்கிறேன். ஆண்களுக்கும், பெண்களுக்கும் உடல் உறவைத் தவிர, வேறு எந்தவிதமான தொடர்பும் இருக்க முடியாது என்று ஆணித்தரமாக விசாலியை நம்பவைத்தது சமூகத்தின் கட்டுப்பாடுகளா? அதனால் உடைந்த உள்ளத்தின் எதிரொலியா? கட்டுப்பாட்டை எதிர்க்கத் துணிவின்றி, அடங்கிப்போவதுபோல் காட்டிக்கொண்டாலும், உணர்ச்சிகள் அடங்கிவிடுமா, என்ன! இம்மாதிரியான பேச்சுதான் இவளுக்கு வடிகாலோ? பிற சமுதாயங்களில் பெண்கள் எந்த வயதிலும் துணை தேடிக்கொண்டு, எப்படி நிறைவோடு இருக்கிறார்கள் என்பதை அவளுக்குப் புரியவைக்க வேண்டும். அடுத்த முறை அய்னுல்லின் கதையை விசாலியிடம் சொல்லவேண்டும் என்று தீர்மானித்துக்கொண்டேன். அதை எப்படி ஏற்பாள்? தன் பாடு மட்டும் இப்படி ஆகிவிட்டதே என்று நொந்துகொள்வாளோ? ஊகும்! `கஷ்டகாலம்! சில பேருக்கு கல்யாணம்னா கத்திரிக்காய் வியாபாரம்!’ என்று தலையில் அடித்துக்கொள்வாள் என்றுதான் தோன்றியது. (வல்லமை, 2014) 7 யார் உலகம்? பத்திரிகை ஆசிரியர் கூப்பிட்டனுப்பினார். “நீங்கதான் பேசணும்னு வருந்தி வருந்தி அழைச்சிருக்காங்க, சிங்கப்பூரிலேருந்து!” மல்லிகாவால் அவருடைய உற்சாகத்தில் பங்குகொள்ள முடியவில்லை. “இங்க வேலை தலைக்குமேல கிடக்கே, ஸார்,” என்று தப்பிக்கப் பார்த்தாள். “என்னிக்குமா நமக்கு வேலை இல்ல? அதை யாராவது பாத்துப்பாங்க. நீங்க போறீங்க!” உரிமையாக மிரட்டினார். “ஒங்களுக்குக் கைவந்த தலைப்பு — இது ஆண்களின் உலகம்!” ஆசிரியர் சிரித்தார். “வீட்டில..,” “அட! நீங்க மத்த பொண்ணுங்க மாதிரியா? டாக்டர் வாசன் ரொம்ப நல்ல மனுசரில்ல! ஒங்களைப்பத்தி எவ்வளவு பெருமையாப் பேசுவார்! நானே அவருக்குக் `கால்’ அடிச்சுச் சொல்லிடறேன். போன தடவைகூட, பினாங்குக்கு அவர்தானே கூட்டிட்டுப் போனார்!” அவர் அழைத்துப் போனதுதான் பிறருக்குத் தெரியும். போகிறபோதும், திரும்புகிறபோதும், ஏன் விழா மண்டபத்துக்குள் நுழையும்வரை வாய் ஓயாது அவளை ஏசிப் பேசியது அவளுக்குத்தானே தெரியும்! பெண்கள் என்றாலே `ஏளனம்’ என்றிருந்தவர், தன்னைவிட ஒரு பெண் பிரபலமாக விளங்குவதா என்றே அவளை மனைவியாகத் தேர்ந்தெடுத்திருக்க வேண்டும். சிறுகச் சிறுக அவளை அடக்கி, தன் அதிகாரத்தை நிலைநிறுத்திக்கொள்ள உத்தேசித்திருந்தாரோ என்று காலங்கடந்து மல்லிகா யோசித்தாள். இல்லாவிட்டால், முதலிரவன்றே, “நான் சொந்தமா கிளினிக் வெச்சிருக்கேன். நீயும் வேலைக்குப் போனா, வீட்டையும், என்னையும் யாரு கவனிச்சுப்பாங்க? அதனால, ஒன் வேலையை விட்டுடு,” என்று கண்டிப்பான தொனியில் ஆரம்பித்திருப்பாரா? அவரது கோரிக்கையை அவள் உடனே நிராகரித்தாள். “படிக்கிறதும், எழுதறதும்தான் என் உயிர் மூச்சு. இன்னொரு தடவை இந்தப் பேச்சை எடுக்காதீங்க!” அவர் முகம் இறுகிப்போனது இன்றும் மல்லிகாவின் கண்முன் நின்றது. அது என்னவோ, அவள் மேடைகளில் பேசும்போது கணவரும் உடன் வந்தார். `மனைவிக்கு எத்தனை பக்கபலமாக இருக்கிறார்! இவருக்கு ஒரு பலத்த கைதட்டல் குடுங்க,’ என்று நிகழ்ச்சி ஏற்பாட்டாளர் –அனேகமாக, ஒரு பெண் — ஆரவாரமாக ஒலிபெருக்கியில் கூறுவாள். முகங்கொள்ளாப் பூரிப்புடன் எழுந்து நின்று, கூப்பிய கரங்களுடன் ஒரு வட்டமடித்துவிட்டு உட்காருவார். உள்ளத்தில் எழும் உணர்ச்சிகளை எல்லாம் வெளிக்காட்ட முடியாது, ஒரு சிறு புன்னகையுடன் அமர்ந்திருப்பாள் ஆதர்ச மனைவி. இந்த அவலத்தையெல்லாம் ஆசிரியருடன் பகிர்ந்துகொள்ள முடியுமா? அவரும் ஆண்தானே! வரண்ட புன்னகை ஒன்றைச் சிந்தினாள் மல்லிகா. அவளுடைய சம்மதத்திற்கு அறிகுறி அது என்று எடுத்துக்கொண்ட ஆசிரியர், “இந்த வாரத்துக்கான கேள்வி-பதிலை முடிச்சுட்டீங்களா?” என்றபடி, நடையைக் கட்டினார். பெண்கள் அதிகமாகப் படிக்கும் அப்பத்திரிகையில் ஒரு தனிப்பகுதியை அவள் நிர்வகித்தாள். குழந்தைகள், மாமியார் கொடுமை என்று ஆரம்பித்தது, சமீப காலமாக வேலை செய்யும் இடங்களில் ஆண்களால் வதை, பிற பெண்களின் குத்தல் பேச்சு, கணவன்மார்களின் அதிகாரம் என்று விரிவடைந்திருந்தது. பாதி படித்திருந்த கேள்வியை மீண்டும் எடுத்தாள் மல்லிகா. ஒரு நீண்ட கட்டுரையைப்போல, தனது திருமண வாழ்க்கை என்னும் `நரகத்தை’ (அவள் எழுதியிருந்தது) விவரித்திருந்தாள் அப்பெண். அதில் கலந்திருந்த உணர்ச்சிப்பெருக்கு மல்லிகாவை அவளுடன் பேசும்படி தூண்டியது. மல்லிகாவின் குரலைக் கேட்டு மகிழ்ந்தே போனாள் அப்பெண்மணி. “எங்க மாநில சுல்தான் எங்க வீட்டுக்காரருக்கு டத்தோ(DATO) பட்டம் குடுத்திருக்காரா! பூவோட சேர்ந்த நார் மாதிரி, எனக்கும் டத்தின்கிற பட்டம். கலை நிகழ்ச்சிகளுக்குத் தலைமை வகிக்க என்னைக் கூப்பிடறாங்க. காசு குடுத்தா, என்னதான் செய்ய முடியாது! சொந்தமா காரும், டிரைவரும் ஏற்பாடு செய்திருக்காரு எங்க வீட்டுக்காரர்!” அவள் மூச்சு விட்டுக்கொண்டபோது, மல்லிகாவிற்கு ஆச்சரியம் ஏற்பட்டது. இவளைப்போன்ற பெண்களுக்கு என்ன மனக்குறை இருக்க முடியும்? இன்னும் எதுவும் தேவையில்லை என்ற நிலையே மனத்துள் வெறுமையை உண்டுபண்ணிவிடுமோ என்று அவள் யோசனை போயிற்று. “வீட்டில நடக்கறது யாருக்குத் தெரியும்? அவர் நில்லுன்னா நிக்கணும், வந்து படுன்னா படுக்கணும்!” சற்று மாற்றிச் சொன்னாள். “இல்லாட்டி, அடி, ஒதை, இன்னும் கேக்கக்கூடாத வசவு. இவர் என்னை நடத்தற லட்சணத்தைப் பாத்து, என் மூணு பிள்ளைங்களும் பயந்துட்டாங்க. `கல்யாணம் கட்டிட்டு, ஒங்களைமாதிரி அடிமையா இருக்க என்னால முடியாதும்மா,’ன்னு மக வெளிப்படையாவே சொல்லிட்டா”. “எத்தனை வயசுப் பிள்ளைங்க?” மல்லிகா கேட்டுவைத்தாள், அவள் சொல்வதைக் கவனமாகக் கேட்டுக்கொண்டுதான் இருக்கிறோம் என்று உணர்த்துவதைப்போல. “எல்லாருக்கும் முப்பத்தஞ்சு வயசுக்குமேல ஆயிடுச்சு. ஆனா, இன்னிக்கும் அப்பாவைக் கண்டா நடுங்குவாங்க!” மல்லிகா சமூக இயலில் முதுகலை பட்டம் பெற்றவள். இருப்பினும், இவளை எப்படிச் சமாளிப்பது என்று அயர்ந்தவளாக, “ஒங்க கேள்வியைச் சொல்லலியே?” என்று கேட்டாள். “அதிகாரம் செலுத்தினாதான் ஆம்பளைன்னு இவங்களுக்கு யார் சொல்லிக் குடுத்தாங்க? ஒரு பொண்ணு என்ன படிச்சாலும், எவ்வளவு பெரிய வேலை பாத்தாலும், அவளோட நிலைமை ஏன் இன்னும் மாறலே? இதான் என்னோட கேள்வி!” ஒரு பக்கத்தில் விடை காணக்கூடிய பிரச்னையா இது? காலம் காலமாக நடந்து வருவது! யாரால், எப்படி, இந்த நிலைமை மாறும்? மாற விடுவார்களா ஆண்கள்? வீட்டுக்குப் போன பிறகும், மல்லிகாவின் மனதில் இக்கேள்விகள் சுழன்று சுழன்று வந்தன. “என்னைப் பேசச் சொல்லி, சிங்கப்பூரில கூப்பிட்டிருக்காங்க,” உணர்ச்சியற்ற குரலில் கணவரிடம் தெரிவித்தாள். “வேற வேலையில்ல,” வெடித்தார் வாசன். “யாராவது கூப்பிட்டா, ஈன்னு இளிச்சுக்கிட்டு, ஒடனே அவங்க பின்னாலேயே ஓடிடுவியே! ஆம்பளைங்களோட சேர்ந்து இருந்தாத்தானே ஒனக்கு ஆனந்தம்!” அவர் கூறியதில் உண்மை இல்லை என்று அவளுக்குத் தெரியும். ஆனாலும், மனம் என்னவோ நொந்துபோனது. கனத்த இதயத்துடன் அப்பால் நகர்ந்தாள். மேடையில் நின்று தான் உரையாற்றுகையில், பலரது கண்களில் தோன்றப்போகும் ஒளிப்பொறியை நினைத்தவுடன் எழும் உற்சாகமோ, ஆர்வமோ இப்போது எழவில்லை. புறப்பட இரண்டே நாட்கள் இருந்தன. குறிப்பாவது எடுத்துக்கொள்ளலாம் என்று காகிதத்துடன் உட்கார்ந்தவளுக்கு அழுகைதான் வந்தது. இருபத்தி ஐந்து வருடம்! போலி மணவாழ்க்கை. `ஆதர்ச தம்பதிகள்!’ என்று இவர்களை உலகமே கொண்டாடுகிறது! மல்லிகா உட்கார்ந்திருந்தாலும், நடந்து கொண்டிருந்தாலும், ஏதாவது வேலை செய்தபோதும் எண்ணங்கள் முடிவற்றுச் சுழன்றன. ஏதோ பிறந்தோம், இருக்கப்போவது சில ஆண்டுகள். இன்றோ, நாளையோ நமக்கு மரணம் நேரலாம். எப்போது என்றுகூடத் தெரியாது. இவ்வளவு அநித்தியமான வாழ்க்கையில் தானும் நிம்மதியாக, மகிழ்ச்சியாக இருந்து, பிறரையும் அப்படியே வைத்துக்கொள்ள சிலருக்கு ஏன் தெரிவதில்லை? ஆணுக்கும், பெண்ணுக்குமிடையே ஏன் இவ்வளவு சச்சரவு? வேலைக்குப் போய் வீடு திரும்பியதும், குழந்தைகளுக்கு வீட்டுப்பாடம் சொல்லிக் கொடுப்பதோ, சமைப்பதோ இன்றும் பெண்ணின் கடமையாகத்தானே இருக்கிறது! ஆண், தான் வேலை பார்க்கும் இடத்தில் ஏதேனும் குழப்பம் என்றால், வீட்டிலிருக்கும் அப்பாவிப் பெண்ணைச் சாடுவானாம். உடல் உபாதைகள், வேலைப்பளுவுடன், அதையும் அவள் தாங்க வேண்டும். ஏனென்றால், அவள் பொறுமையின் சிகரம் என்று வர்ணிக்கப்பட்டிருக்கிறாளே! வாழ்வின் ஒவ்வொரு கட்டத்திலும் வாங்கும் அடிதான் ஒருவரை தத்துவ ஞானி ஆக்குகிறது என்று எண்ணம் போக, மல்லிகாவால் சிரிக்கக்கூட முடிந்தது. ஒரே வீட்டில் இரு அந்நியர்கள்! கடந்த ஒரு மாதமாக.., தன்னைப் பேசும்படி அயல் நாட்டுக்காரர்கள்கூட அழைத்திருக்கிறார்கள் என்று அவள் தெரிவித்த அன்றையிலிருந்து.., தானும், கணவரும் ஒரு வார்த்தைகூடப் பேசிக் கொள்ளவில்லையே! ஆரம்பத்தில் விறைப்பாக இருந்தவர், போகப் போக, எதையோ இழந்தவராய், இருந்த இடத்தைவிட்டு நகராது, ஒரே இடத்தை வெறித்தபடி இருந்தாரே! முன்பெல்லாம் அதை அலட்சியப்படுத்தினாலும், இப்போது அதற்கு அர்த்தம் புரிந்தது. தனது அதிகாரம் இனி செல்லுபடியாகாது என்று சந்தேகமறப் புரிந்தவுடன், ஒரு விரக்தி ஏற்பட்டிருக்கிறது. ஆக, ஆணின் பலம் பெண்ணின் கையில்தான் இருக்கிறது! வெளிப்பார்வைக்கு, இது ஆண்களின் உலகமாகத் தெரியலாம். ஆனால், பிறர் அடித்தாலோ, தடுக்கி விழுந்தாலோ, அழுதபடி தாயைத் தேடி ஓடும் சிறுவனைப்போல், எல்லா நிலைகளிலும் ஒவ்வொரு ஆணுக்கும் ஒரு பெண் தேவைப்படுகிறாள்! பாவம் அவன்! உணர்ச்சியளவில் தன் பலகீனத்தை மறைக்கவே உடல் பலத்தையும், உரத்த குரலையும் பெரிதாகக் காட்டிக்கொள்கிறான். இது புரிந்தே, பெண்ணும் அவனுக்கு விட்டுக்கொடுப்பதுபோல் சாமர்த்தியமாக நாடகம் ஆடுகிறாள்! ஏனெனில், அவள்தான் இவ்வுலகில் சக்தி! மேடையில் தான் என்ன பேச வேண்டும் என்று இப்போது தெளிவு பிறந்தது. “வாங்கம்மா,” என்று சிரித்த முகத்துடன் வரவேற்ற விழா ஏற்பாட்டாளர் –ஒரு ஆண் –, “ஆம்பளைங்களை ஒரு சாத்து சாத்துங்க!” என்றார் விளையாட்டாக. “சேச்சே!”என்றுமறுத்தாள்மல்லிகா. (தமிழ் நேசன், 2011) 8 சிதம்பர ரகசியம் தனக்கும் பிள்ளை, குட்டி என்றிருந்தால், தான் இப்படி ஓயாது மனைவியிடம் `பாட்டு’ கேட்க வேண்டியிருக்காதே என்று ஆயிரத்தோராவது முறையாக சிதம்பரம் தன்னைத்தானே நொந்து கொண்டார். `புத்தகத்தை எடுத்து வெச்சுக்கிட்டு படிங்களேண்டா! எப்போ பாத்தாலும், என்ன விளையாட்டு வேண்டிக்கிடக்கு?’ என்று, எல்லா அம்மாக்களும் தொணதொணப்பதுபோல, தான் பெற்ற செல்வங்களை விரட்டியபடி இருந்திருப்பாள் சிவகாமி. இந்தப் பெண்களுக்கு பொழுது போகத்தான் ஆண்டவன் பிள்ளைகளைக் கொடுக்கிறானோ என்று ஒரு கேள்வி அவர் மனதில் உதித்தது. இதையே கருவாக வைத்து ஒரு கதை புனைந்தால் எப்படி இருக்கும்? மேசை டிராயரை இழுத்து, உள்ளே பத்திரமாக வைத்திருந்த கோடு போட்ட காகிதக் கத்தையை எடுத்துக்கொண்டார். சிவகாமிக்கு எப்படித்தான் மூக்கில் வியர்க்குமோ, உடலதிர உள்ளேயிருந்து வந்தாள். அவளைக் கண்டதும், முகத்தைச் சுளிக்காமல் இருக்க பெரும் பிரயத்தனப்பட்டார் சிதம்பரம். சமைப்பதும், சாப்பிடுவதுமே இப்பிறவி எடுத்ததன் பயன் என்றிருப்பவளின் உடல் சுற்றளவைப் பற்றி குறை கூற என்ன இருக்கிறது! கையில் எப்போதும் ஒரு கரண்டி–ஏதோ அம்மன் கை சூலம் மாதிரி. தகுந்த ஆடை அணிந்து, உடலைச் சற்று பார்க்கும்படியாக வைத்துக்கொள்வாளா என்று பார்த்தால், அதற்கும் வழியைக் காணோம். இரவு, பகல் என்றில்லை, எப்போதுமே கூடாரத்தை நினைவூட்டும் ஒரு அங்கி, குதிகால்வரை. தோள்வரையே நீண்டிருந்த தலைமுடியை ரப்பர் பாண்ட் போட்டுக் கட்டி, `தேங்காய் குடுமி`யாக முடித்திருந்தாள். `கண்ணுக்கு லட்சணமா புடவை கட்டிக்கயேன்!’ என்று சொல்லிப் பார்த்திருக்கிறார். `அதான் கல்யாணம் ஆகிடுச்சே! இன்னும் என்ன அழகு வேண்டிக்கிடக்குதாம்!’ என்று முரட்டுத்தனமாகச் சொல்வதோடு நில்லாமல், வேலை நிறுத்தம் வேறு செய்வாள் — சமையல், வீட்டைச் சுத்தப்படுத்துதல், இன்னும் எல்லா சமாசாரங்களிலும். “ஆரம்பிச்சுட்டீங்களா? இப்படி எழுதி, எழுதி என்னத்தைக் கண்டீங்க? பெருமையா சொல்லிக்கிற மாதிரி ஒரு விருது, பட்டம், பணமுடிப்பு ஏதானும் வாங்கியிருக்கீங்களா? இப்படி கிறுக்கற நேரத்தில நாலு பசங்களுக்கு பாடம் சொல்லிக் குடுத்தாலாவது பணம் பாக்கலாம்!” ஓயாது கத்தியோ, அல்லது நாற்பது வயதைத் தாண்டியதால் பெண்களுக்கான சுரப்பி தகறாறு செய்ததாலோ, குரலும் ஆண்பிள்ளைத்தனமாக இருந்தது. வழக்கமான பல்லவிதான். இருந்தாலும், அவளுக்கு ஏதாவது பதில் சொல்லியாக வேண்டும். இல்லாவிட்டால், லேசில் உள்ளே போகமாட்டாள். பெரரியலோ, குழம்போ தீய்ந்து போயிருக்கும். வேறு வழியில்லாமல், அதைத்தான் சாப்பிட்டாக வேண்டும். கற்பனையில் அவளை திட்டித் தீர்ப்பதோடு அவருடைய வீரம் தணிந்துவிடுவதால், நேரில் பார்க்கும்போது குழைவார். இரவு நேரம் என்று ஒன்று வந்து தொலைக்கிறதே! “நான் என்ன செய்யறது, சிவகாமி? மாசத்துக்கு ஒண்ணு, ரெண்டு கதையோ, கட்டுரையோ பத்திரிகையில வந்துகிட்டுத்தானே இருக்கு! நானும் நாப்பது வருசமா  எழுதறேன். அதுக்காக எவன் காலிலேயாவது விழுந்து, `பட்டம் குடுங்க. வீட்டில ரொம்ப குறைப்படறாங்க’ன்னு கெஞ்சச் சொல்றியா? இல்லே, சம்பந்தப்பட்டவங்களைக் கட்டிப் பிடிச்சுக்கிட்டு அழட்டுமா?” “பத்திரிகையில போடறாங்கன்னு பீத்திக்கறீங்களே! அதில கை நிறைய காசு கிடைக்குதா?” சிதம்பரம் வாளாவிருந்தார். இந்த சமாசாரத்தைப்பற்றி ஏற்கெனவே அவளுடன் அலசியாகி விட்டது. இப்போது அவருடைய வாயைக் கிண்டி, சண்டை பிடித்து பொழுதைப் போக்கவென மீண்டும் அதைக் கிளப்புகிறாள்! அவருடன் வேலைக்குச் சேர்ந்த பட்டதாரி ஆசிரியர்கள் `டியூஷன் செண்டர்’ என்ற பலகையை வீட்டின்முன் தொங்கவிட்டு, இரண்டு மாடி வீடுகளுக்குச் சொந்தக்காரர்களானது அவருக்குத் தெரியாததல்ல. ஆனால், பணமோ, பரிசோ பெரிதில்லை, எழுதும் தருணங்களே மகிழ்ச்சி பொதிந்தவை என்ற எண்ணப்போக்கு கொண்ட அபூர்வ மனிதர் அவர். சிதம்பரத்தைப் பொறுத்தவரை, எழுதுவது என்பது மூச்சு விடுவதுபோல. ஒவ்வொரு எழுத்துப் படிவத்தாலும் மனித வாழ்க்கையும், மனிதர்களின் மனவக்கிரங்களும் புரிந்துபோவதாக அவர் நினைத்தார். அத்துடன், நாடு முழுவதும் நம் எண்ணங்கள் பரவுகின்றனவே என்ற நிறைவே அவருக்குப் போதும். சிவகாமிக்கு இதெல்லாம் புரியாது. என்றாவது ஒரு  நாள் தானும் ஒரு நல்ல எழுத்தாளர்தான் என்பதை அவள் ஒப்புக் கொள்வாள். அதற்கான காலம் வராமலா போய்விடும்!   சிதம்பரம் எதிர்பார்த்த காலம் விரைவிலேயே வந்தது — ஒரு கடித ரூபத்தில். `உங்களைப் போன்ற அனுபவம் மிக்க எழுத்தாளர்..’ என்று ஆரம்பித்திருந்தது கடிதம். நம் கூடவே இருப்பவர்களுக்குத்தான் நமது அருமை புரிவதில்லை என்ற மனத்தாங்கலுடன், “சிவகாமி!” கூவினார். அடித்துப் பிடித்துக்கொண்டு வந்த மனைவியிடம், கடிதத்தை வீசிக் காட்டினார். “என் எழுத்தைப்பத்தி என்னமோ சொன்னியே! இப்போ பாத்தியா?” அவள் கண்கள் விரிந்தன. “ஏதானும் முதல் பரிசு கிடைச்சிருக்கா? ஆயிரமா, ரெண்டாயிரமா?” “அதைவிடப் பெரிசு!” என்றார் கர்வத்துடன் தலையை நிமிர்த்தியபடி. “ஒரு சிறுகதைப் போட்டிக்கு என்னை நீதிபதியா இருக்கும்படி கேட்டிருக்காங்க!” தண்ணீர் தெளித்ததும் அடங்கிப்போகும் கொதிக்கும் பாலைப்போல், சிவகாமியின் உற்சாகம் அடங்கியது. “இவ்வளவுதானா? என்னமோன்னு நினைச்சு ஓடி வந்தேன்!” “சாதாரணமா சொல்றியே! என்னை எவ்வளவு பெரிய எழுத்தாளன்னு மதிச்சா, இப்படி ஒரு வாய்ப்பைக் குடுப்பாங்க! நாடு தழுவிய போட்டி, தெரிஞ்சுக்க!” “எவ்வளவு பணம் குடுப்பாங்க?” “அடி யாருடி இவ, காசிலேயே கண்ணா இருக்கா! எனக்கு வர்ற சம்பளம் நம்ப ரெண்டு பேருக்கு தாராளமா இருக்கு. இன்னும் என்ன பேராசை?” என்று அடித்துப் பேசியவருக்கு, தனக்கு எப்படி இவ்வளவு துணிச்சல் வந்ததென்ற ஆச்சரியமும் எழாமலில்லை. தானும் ஒரு திறமையான எழுத்தாளன்தான் என்று யாரோ ஒப்புக்கொண்டிருக்கிறார்கள்! வேறு என்ன வேண்டும்! இரண்டு நாட்கள் கனவிலேயே மிதந்தார் சிதம்பரம். ஒரு நாள் இரவு, தொலைபேசி அழைப்பு வந்தது. அவருடைய பால்யத்தோழன், சத்யா. இப்போது ஒரு பிரபலமான தினசரியில் ஆசிரியராக இருக்கிறார். எப்போதாவது பொது நிகழ்ச்சிகளில் பார்க்கையில், தலையசைப்புடன் சரி. இடுப்பே மறைந்து, நெஞ்சுக்குக்கீழ் எல்லா இடத்தையும் பருத்த வயிறு ஆக்கிரமித்துக்கொண்டு, பணத்தைத் `தண்ணி’யாகச் செலவழிக்கும் அவருடைய `பெரிய மனித’ப் பழக்கம் ஒன்றை பறைசாற்றிக் கொண்டிருந்தது. அப்போதெல்லாம், இவரும் தன்னை மதிக்கவில்லையே என்ற வருத்தம் எழும் சிதம்பரத்திற்கு. `பெரிய ஆளாயிட்டாரு. நம்பளை மதிச்சுப் பேசுவாரா!’ என்று தன்னைத்தானே சமாதானப்படுத்திக் கொள்வார். அந்த சத்யாதான் வலியக் கூப்பிடுகிறார்! அன்பு சொட்டச் சொட்ட குசலம் விசாரித்துவிட்டு, கடந்த கால நினைவுகளையும் இடிச்சிரிப்புடன் அசை போட்டுவிட்டு, “நீங்க அந்தப் போட்டிக்கு நீதிபதியாமே?” என்று விஷயத்துக்கு வந்தார் சத்யா. இது ரகசியமாக வைத்திருக்க வேண்டிய சமாசாரம் அல்லவோ? இவருக்கு எப்படித் தெரிந்தது என்று ஒரு சந்தேகம் உதித்தது சிதம்பரத்தின் மனதில். “கேட்டிருக்காங்க,” என்றார், பட்டும் படாமலும். தயங்கித் தயங்கி, நிறைய பேசினார் பால்ய நண்பர். இறுதியில், “கதையோட தலைப்பு, தர்ம யுத்தம். மறக்காதீங்க!” அத்துடன், பசித்த முயலுக்கு காரட்டை நீட்டுவதுபோல் வேறொன்றும் சொன்னார். அவருக்குப் பிடி கொடுக்காது, “படிச்சுப் பாக்கறேன்!” என்று சொல்லி, ஒரு வழியாக அந்த உரையாடலை முடித்தார் சிதம்பரம். மூச்சை அடைப்பதுபோல் இருந்தது. சாதனை என்று தான் நினைத்தது சோதனையாக முடிந்திருக்கிறதே! “யாருங்க?” என்று விசாரித்தாள் துணைவி. “ஒனக்கு ஒண்ணுமில்ல!” அவருடைய குழப்பம் ஆத்திரமாக வெளிப்பட்டது. போட்டிக்கு வந்திருந்தவைகளில் பதினைந்து கதைகளைப் பொறுக்கி அவருக்கு அனுப்பி இருந்தார்கள். தர்ம யுத்தம்! அந்தக் கதையை எழுதினவர் பெயர் இல்லைதான். ஆனால், சத்யா தான் இவருக்கு முன்னரே தெரிவித்திருந்தாரே — அவருடைய மனைவியின் கைவண்ணமென்று! மாதாந்திரப் போட்டியில் பரிசுத்தொகை ஒன்றும் பெரிதில்லை என்றாலும் பெருமைதான். மேலும், நிரந்தர நோயாளியான மனைவிக்கு எவ்வகையிலாவது மகிழ்ச்சி ஊட்ட வேண்டும் என்ற தீவிர முனைப்புடைய `நல்ல` கணவராக இருந்தார் சத்யா. தான் பட்ட நன்றிக்கடனைத் தீர்க்க,   சத்யாவின் தினசரியின் ஞாயிறு பதிப்பு விரைவில் அறிவிக்கப்போகும் நாவல் போட்டியின் முதல் பரிசான ஐயாயிரம் வெள்ளி  சிதம்பரத்துக்குத்தான் என்று ம் அடித்துக் கூறியிருந்தார். குறிப்பிட்ட கதையை அடியில் வைத்துவிட்டு, பிற கதைகளை ஊன்றிப் படித்தார் சிதம்பரம். ஒன்று தேறியது. `கதாசிரியர் சிந்தனை வளமுடையவர், மாறுபட்ட கோணத்தில் சிந்திக்கிறார், ஆட்டுமந்தைகளாக வாழ்வதிலேயே நிறைவு கொள்ளும் மனிதர்களை நையாண்டி செய்கிறார்,` என்று விமரிசனம் எழுதினார். ஒப்புக்காக சத்யா குறிப்பிட்டிருந்ததையும் படித்துவைத்தார். சிபாரிசு இருந்தால் பரிசு கொடுக்கலாம் என்ற ரகம். சிதம்பரத்துக்கு யோசனை பிறந்தது. தான் அதைத் தேர்ந்தெடுத்தற்கான காரணத்தை விமரிசனத்தில் எழுதினால், யாரும் தட்டிக் கேட்கப் போவதில்லை. முன்பின் தெரியாத எவருக்கோ பரிசு கிடைக்க வழி செய்வதைவிட, தெரிந்த பெண்ணின் கதையைப் புகழ்ந்துவைத்தால், தான் இன்னும் எழுதவே ஆரம்பிக்காத நாவல்வழி ஐயாயிரம் வெள்ளி கிடைக்கக் கூடும். பரிசு நிச்சயம் என்றானபின், கருப்பொருள் சம்பந்தமான ஆராய்ச்சி எதுவும் செய்யாது, நடை, பாத்திர வர்ணனை என்று மெனக்கிடாது, எப்படி வேண்டுமானாலும் எழுதி வைக்கலாம். இப்படி எண்ணம் போகையிலேயே சிதம்பரத்துக்கு அவமானமாக இருந்தது. `எல்லாராலும் ஒங்களைமாதிரி எழுதிட முடியுமா, சார்? சரஸ்வதி கடாட்சம் ஒங்களுக்குப் பரிபூரணமா கிடைச்சிருக்கு!’ என்று அதிகம் பழகியிராதவர்கள்கூட எவ்வளவு முறை அவரிடம் கூறியிருக்கிறார்கள்! அப்போதெல்லாம், நம்பிக்கை இல்லாது, `அப்படியா சொல்றீங்க? நான் ஒண்ணும் பெரிசா –பரிசோ, பட்டமோ — வாங்கலியே!’ என்று கேட்டது நினைவுக்கு வந்தது. `அதெல்லாம் பேசி வெச்சுக்கிட்டு குடுக்கறாங்க! விடுங்க! அதுவா முக்கியம்!’ என்ற பதில் இப்போது நினைவில் எழுந்தது. எத்தனையோ போட்டிகளில் தான் கலந்துகொண்டும், முதல் பரிசு மட்டும் கைக்கெட்டாத கனியாகவே இருந்ததன் ரகசியம் இப்போது புரிந்தது. ஏற்பாட்டாளர்களின் நெருங்கிய உறவினர்களும், பத்திரிகைகளில் தொடராக விஞ்ஞானப் பகுதி, கல்வி, மருத்துவம் என்று சம்பளம் எதுவும் வாங்காது எழுதுபவர்களுமே அதைப் பெற தகுதி உடையவர்களாகத் தேர்ந்தெடுக்கப்பட்டு இருந்தார்கள்! தான் பெற்ற ஏமாற்றம் இன்னொரு நல்ல எழுத்தாளர் அடையக்கூடாது. தனக்கு வாய்த்ததுபோல் அவருக்கும் ஒரு மனைவி இருந்து, `உபயோகமா ஏதாவது செய்யுங்களேன். இப்படி எழுதி, எழுதி எதைச் சாதிச்சீங்க?’ என்று தூபம் போட்டு, அவர் எழுத்துலக ஈடுபாட்டுக்கே இருட்டடிப்பு செய்துவிட்டால்?   அடுத்த முறை தனது பழைய நண்பர் சத்யாவை ஓர் இலக்கிய நிகழ்ச்சியில் கண்ட சிதம்பரம் அவரை நோக்கிப்போனார். முகத்தை தொண்ணூறு  பாகை அளவில் திருப்பியபடி, அவரைக் கடந்தார் மாஜி நண்பர். சிதம்பரத்தின் கற்பனை விரிந்தது. அதில் சத்யா மனைவியிடம் மாட்டிக்கொண்டு விழித்தார். `என்னோட கதைக்குத்தான் பரிசுன்னு அடிச்சுச் சொன்னீங்களே! நீங்க ஒரு பத்திரிகை ஆசிரியரா இருந்து என்ன புண்ணியம்?’ (mintamil@googlegroups), 2014 9 மறக்க நினைத்தது “ஏம்பா? கல்யாணமாகி இத்தனை வருமாயிடுச்சு, இன்னும் இவ வயிறு திறக்கவே இல்லியே! ஒடம்பில ஏதாவது கோளாறோ, என்ன எழவோ! டாக்டர்கிட்ட காட்டிப் பாரேன்!” பக்கத்திலேயே மருமகள் மேசையைப் பளப்பளப்பாகத் துடைத்துக் கொண்டிருந்ததை சட்டை செய்யாது, கரிசனமாகக் கேட்டாள் தாய். “இவ மலடி இல்லேம்மா!” அதை வாய்விட்டுச் சொல்லவா முடியும்! கடைக்கண்ணால் மனைவியைப் பார்த்தான். சுருங்கிய முகத்துடன், தன்னுடைய படபடப்பை அடக்கவென, வேகமாக இயங்கிய அவளது கரங்களும் கண்ணில் பட்டன. அவள்மீது இரக்கமும், கூடவே கோபமும் எழுந்தது. அப்போதைக்குத் தாயிடமிருந்து தப்பித்தால் போதுமென்று, பேச்சை மாற்றினான்: “காஞ்சனா! நாம்ப ரெண்டுபேரும் லேக் கார்டனுக்குப் போகலாமா? போய் ரொம்ப நாள் ஆயிடுச்சில்ல?” வலிய வரவழைத்துக்கொண்ட அவனுடைய கலகலப்புக்கு அவளிடமிருந்து பதிலில்லை. கசப்புடன் உதட்டைச் சுழித்துக் கொண்டாள் காஞ்சனா. எங்கே போனால்தான் நிம்மதி! ஒரு காலத்தில், எவரும் அறியாவண்ணம், அந்தி மயங்கிய வேளையில், ஒருவரையொருவர் சந்திப்பதற்கென்றே அவர்கள் துடிப்புடன் காத்திருந்தது நினைவு வந்தது. அப்போதுதான் எத்தனை எத்தனை கனவுகள்! எல்லாம் கனவாகவே அல்லவா நின்றுவிட்டன! கணவன் காரை ஓட்டிச் செல்ல, பக்கத்தில் விறைப்பாக அமர்ந்திருந்தாள் காஞ்சனா. உடல்கள் அருகருகே இருந்தும், உறவில் நெருக்கமில்லை. ஆனால், சொல்லி வைத்தாற்போல, இருவருடைய  எண்ணங்களும் அந்த ஒரு சந்திப்பை நோக்கி ஓடின. “ஏய்! கல்யாணத்துக்கு இன்னும் ஒரு மாசம்தான் இருக்கு. மூஞ்சியை ஏன் இப்படி முழ நீளம் வெச்சுக்கிட்டிருக்கே?’ மூன்றாண்டுகளாகப் பழகி, தங்கள் உறவில் வெறும் நட்பைத் தவிர வேறு எதுவோ ஒரு பிணைப்பும் இருந்ததை இருவருமே உணர்ந்து, முதலில் எதிர்ப்புத் தெரிவித்த கதிர்வேலின் தாயும் ஒருவாறாக இணங்கிவிட, எதிர்காலமே தன் கையில் இருப்பதைபோல் ஒரு பெருமிதம் கதிர்வேலுக்கு. ஆனால், காஞ்சனா மட்டும் ஏன் இப்படி இருக்கிறாள்? பிரயாசையுடன், தன் கண்களை அவனை நோக்கி நிமிர்த்தினாள். “நான் சொல்லப்போறதைக் கேட்டா, என்னை.. என்மேல..,” அவள் இழுக்க, முதன்முறையாக கதிர்வேலுக்குப் பயம் எழுந்தது. “காஞ்சனா?” “நாம்ப அவசரப்பட்டுட்டோம்!” தங்கள் கல்யாணத்துக்கு நந்தியாக வழிமறித்த அம்மா ஒரு வழியாக விலகிக்கொண்டதும் உண்டான தாங்க முடியாத ஆனந்தத்தில் ஒரு கணம் இருவருமே தங்களை மறந்தது நினைவுக்கு வந்தது. தன்னையும் மீறி, அவனுள் ஒரு பூரிப்பு. “ம்..?” இன்னும் சில மாதங்களில் பருத்துவிடப்போகும் காதலியின் வயிற்றில் பதிந்தது. அவள் தலையை மேலும் தாழ்த்திக்கொண்டாள். புன்னகையுடன், “நல்லதுதானே நடந்திருக்கு! நான் என்னமோ ஏதோன்னு பயந்துட்டேன், போ!” “கல்யாணமாகி, ஏழுமாசத்திலேயேநான்ஒருபிள்ளையைப்பெத்தெடுத்தா, ஒங்கம்மாஎன்னைஎன்னநினைப்பாங்க?” அலட்சியமாகச் சூள் கொட்டினான், அவளுக்கு ஆறுதல் அளிக்கும் வகையில். “இது நம்ப குழந்தை! அதான் முக்கியம்,” என்று சொன்னாலும், அவனுக்கும் பயம் பிடித்துக்கொண்டது. `ஏழைப்பெண்’ என்ற காரணம் காட்டி, காஞ்சனாவை ஏற்க மறுத்த அம்மா! இப்போதோ, எப்படியாவது தன் மகனை வளைத்துப்போட வேண்டும் என்று எதற்கும் துணிந்துவிட்டவள் என்றல்லவா நினைப்பாள்! 92 ஹெக்டேர் பரப்பில், 1,888-லேயே ஆங்கிலேயர் ஒருவரால் அமைக்கப்பட்ட மலர்ப் பூங்கா வந்தது. அதனுள் நடந்தாலே செண்பகப்பூ வாசம் ஆளைத் தூக்கும். ஆர்கிட், செம்பருத்தி மலர்களுக்குத் தோட்டம். பறவைகள், வண்ணத்துப்பூச்சி மற்றும் மான்களுக்கென தனித்தனி பூங்கா. அவர்களிருவரும் இருந்த நிலையில், எதுவும் மனதில் பதியவில்லை. பழக்கத்தின் காரணமாக, எப்போதும்போல், ஏரிக்கரையிலிருந்த புல் தரையில் அமர்ந்துகொண்டார்கள். அருகே ஒரு பாலம். அதன்மேல் நின்றிருந்த சில சிறுவர்கள் ரொட்டியைத் துகளாகச் செய்து, நீரில் தூவ, அதற்குப் போட்டியிட்டுக்கொண்டு நூற்றுக்கணக்கான சிறு மீன்கள் ஒரேயிடத்தில் குழுமின. பின், யாரோ இரு கைகளையும் ஓங்கித் தட்ட, சேர்ந்த வேகத்திலேயே அம்மீன்கள் பிரிவதைப் பார்த்து ஆர்ப்பரித்துக்கொண்டிருந்தனர். அம்மீன்களைப்போல்தான் சில பெண்களும் என்று காஞ்சனாவுக்குத் தோன்றியது. ரொட்டி இருந்த இடத்தில் ஓர் ஆடவன் — கதிர்வேல்! அவள் கணவன்! அவளுக்கு மட்டுமே சொந்தமாக இருக்க வேண்டியவன் ஏன் அப்படிப் பிற பெண்களை ஈர்க்கிறான்? `முன்பெல்லாம் இவர் இப்படியா இருந்தார்!’ மனம் பொருமியது. `பெண்டாட்டியே உலகம்னு இருந்த இந்த கதிர்வேல்தான் எவ்வளவு லூசாப் போயிட்டான்!’ என்று நாலுபேர் அவள் காதுபடவே பேசும் அளவுக்கு…சே! தான் ஒதுங்கிப் போனால் மட்டும், ரொம்பத்தான் நொந்து போய்விட்டதுபோல் காட்டிக்கொள்வது! தற்செயலாகக் கணவன் பக்கம் திரும்பியவள், அவன் பார்வை எங்கோ நிலைகுத்தி இருப்பதைப் பார்த்தாள். “ஐயையோ! இவ்வளவு வேகமா வேணாம். பிள்ளை பயந்துப்பான்!” என்ற ஒரு தாயின் குரலை லட்சியம் செய்யாது, ஊஞ்சலை வீசி ஆட்டி, அதனால் தன் மகனுக்குக் கிடைத்த ஆனந்தத்தைத் தானும் பகிர்ந்துகொண்டிருந்தான் ஓர் இளைஞன். காஞ்சனாவின் ஊடல் போன இடம் தெரியவில்லை. எல்லாம் நல்லபடி நடந்திருந்தால், தானும் இப்படி, ஒரு குழந்தையுடன் குழந்தையாக, ஆகியிருக்கலாமே என்ற ஏக்கமா இவருக்கு! `நாம்ப ஏதோ வெறியில செஞ்ச தப்பை ஆயுசு பூராவும் நினைவுபடுத்திக்கிட்டு இருக்கும் இத!’ வயிற்றைத் தொட்டுக் காட்டினாள் அன்று. `அப்படியாவது இது எதுக்குங்க? தானே வேற பிள்ளைங்க பிறக்காமலா போயிடும்!’ என்று மன்றாடியபோது, `இவள் முகத்தில் மலர்ச்சி வந்தாலே போதும்,’ என்ற ஒரே எண்ணம்தான் கதிர்வேலுக்கு. தான் உருவாக்கியதை அழிக்கவும் உடனிருந்தான். மனச்சாட்சிக்குப் பயப்படாதவன், மலேசியாவில் கருக்கலைப்பு சட்டவிரோதம் ஆயிற்றே என்ற அஞ்சி, அண்டைநாட்டுக்கு அழைத்துப் போனான், தான் மணக்க இருந்தவளை. எதை அடியோடு மறக்க வேண்டும் என்று நினைத்தார்களோ, அது என்றென்றும் உறுத்திக்கொண்டே இருக்க வேண்டும் என்பது விதியின் முடிவாக இருந்த்து. மிகுந்த பிரயாசையுடன், சிலமுறை தனக்குள் ஒத்திகை பார்த்துக்கொண்ட பின்னர், மெதுவாக ஆரம்பித்தாள்: “இதோ பாருங்க! நடந்த்து நடந்திடுச்சு. அதையே நினைச்சுக்கிட்டு, இருக்கிற சின்னப்பிள்ளைங்களை எல்லாம் பாத்து நீங்க எதுக்கு ஏங்கறீங்க?” தனக்குள் தோன்றிய வெறுப்பை மறைக்க முயலாமல், கதிர்வேல் அவளைப் பார்த்தான். “ஒனக்கு எப்படிப் புரியும் என் வேதனை?” உதட்டைக் கடித்துத் தன் உணர்ச்சிகளை அடக்கிக்கொண்டாள் காஞ்சனா. தனக்கு மட்டும் துக்கமில்லையா, என்ன! “மத்தவங்க என்னைப் பழிச்சுப் பேசறது ஒனக்கு என்ன தெரியும்! `ஒரு பிள்ளையைப் பெத்துக்கக்கூட ஒனக்கு யோக்கியதை இல்லியே! நீயும் ஒரு ஆம்பளை!’ அப்படின்னு பாக்கற எடத்தில எல்லாம் கேலி பண்ணறாங்க, காஞ்சனா!” குரல் விக்க, குழந்தைபோல் சொன்னான். தங்களில் ஒருவனை புண்படுத்துகிறோமே என்ற நுண்ணிய உணர்வு கிஞ்சித்துமின்றி, பரிகாசப் பேச்சினால் கணவனைக் குத்திக் குதறும் பிற ஆண்களின்மேல் ஆத்திரம் பொங்கியது காஞ்சனாவுக்கு. ‘எத்தனைக்கெத்தனை அதிகமாகப் பிள்ளைகளை உருவாக்குகிறார்களோ, அதற்கேற்ப பிறர் மதிப்பில் அவர்கள் ஆண்மையும் உயருகிறது என்று எண்ணி, அல்ப சந்தோஷம் அடையும் அறிவிலிகள்!’ என்று ஆண்கள் வர்க்கத்தையே மனதுக்குள் திட்டிக்கொண்டாள். திடீரென வெளிச்சம் தெரிந்தது. `என் ஆண்மை அறவே செத்துவிடவில்லை!’ என்று எப்படித்தான் உலகிற்கு அறிவிப்பது? `என்னாலும் ஒரு குழந்தைக்கு உயிர் கொடுக்க முடியும். கொடுத்துமிருக்கிறேன்!’ கதிர்வேலின் அந்தராத்மாவின் அவலக்கூவல்தான் மேலே எழும்ப முடியாதே! கணவனுக்குச் சமீப காலமாக ஏற்பட்ட அதீத பெண் மோகத்திற்கு உண்மையான காரணம் புரிய, காஞ்சனாவிற்கு அவன்மீது பரிதாபம் உண்டாயிற்று. தனது நிம்மதியை அவனுடன் பகிர்ந்துகொள்ளும் முயற்சியில், அவனது கையைப் பிடித்து அழுத்தினாள். “நாம்ப பெத்தாதான் பிள்ளையா? ஒரு பிள்ளையை த்த்து எடுத்துக்கலாம், என்ன!” அடிபட்ட குழந்தையிடம் பேசுவதுபோல, கொஞ்சலும், சமாதானமுமாகக் கேட்ட மனைவியை நன்றியுடன் பார்த்தான் கதிர்வேல். `எதிர்காலம் அவ்வளவு மோசமாக இருக்காது,’ என்ற எதிர்பார்ப்பிலேயே மனம் லேசாக, தன் விரல்களை அவளுடையதோடு கோர்த்துக்கொண்டு, அவைகளை இறுகப் பற்றிக்கொண்டான். (தமிழ் நேசன், 1985) 10 பெரிய மனசு “ பெரிய மனசு பண்ணுங்க மண்ட !”           பினாங்கு துறைமுக நகரத்தில் அதிக நடமாட்டம் இல்லாத ஒரு கோடி . அதில் இருந்தது பழைய உலோகப் பொருட்களை வாங்கி அடைக்கும் அந்த இடம் . கடையென்று சொல்ல முடியாது . உயர்ந்த சுவற்றுக்குள் ஒரு பெரிய வளாகம் . அவ்வளவுதான் . அதன் நடுவே ஒரு சிறு அலுவலகம் . அதனுள்ளே அகன்ற நாற்காலியில் உட்கார்ந்திருந்த நடுத்தர வயதினரைக் கெஞ்சிக்   கொண்டிருந்தான் வாட்டசாட்டமாக இருந்த அந்த பதின்ம வயதுப் பையன் : “ பெரிய மனசு பண்ணுங்க மண்ட !”             ` ஏண்ணே அவரை மண்டன்னு கூப்பிடறீங்க ?’ அவன் பத்து வயதிலேயே அந்த குண்டர் கும்பலில் சேர்ந்து , அப்போது   மூன்று ஆண்டுகள் கழிந்திருந்தன . அன்றுதான் தலைருடன் முதன் முதலான சந்திப்பு . அவனைப் புல்லரிக்க வைத்த தருணம் . அவ்வளவு சுலபமாக யாரும் அவரைப் பார்த்துவிட முடியாதாமே !           ` அவருதாண்டா நம்ப பாஸ் . ஆனா , அப்படிக் கூப்பிட்டா , நாம்ப என்ன இங்கிலீஷ்காரங்களான்னு சத்தம் போடுவாரு . அதான் ..`     புரிந்துகொண்ட பாவனையில் , சிறுவன் தலையை ஆட்டினான் , மேலும் , கீழுமாக .   தலைவரைத் தலை என்று அழைக்காமல் , மண்டை என்கிறார்கள் .           ` நீதான் புதுப் பையனா ?` குரலைப் போலவே உருவமும் பெரிதாக இருந்தது . கரகரத்த குரல் இயல்பானதா , இல்லை , பிறரை நடுங்க வைக்கவென அவர் சுயமாகப் பழகிக் கொண்டதா என்று அவன் யோசனை போயிற்று .   தமிழில்தான் பேசினார் என்றாலும் , அவருடைய தாய்மொழியான ஹக்காவைப்போல் ஒலித்தது .           ` பேரு என்ன ? ’ தெரிந்திருந்தும் கேட்டார் .           “ ஜோ – ஜோசப் , ” சற்று பெருமையுடன் , தலையை நிமிர்த்தி அவன் சொன்ன விதம் அவருக்குப் பிடித்திருந்தது .           ` என்ன படிக்கிறே ஜோ ?`           ` · பார்ம் ஒன் !`           ` இவனைப் பாத்தா பதிமூணு வயசுப் பையனாட்டாமாவா இருக்கு ? பதினேழு , பதினெட்டு சொல்லலாம் . இல்ல ?` பக்கத்திலிருந்தவனைப் பார்த்துக் கேட்டார் .           அவனும் தலையாட்டி வைத்தான் .           ` ஒன்னோட வேலை என்னதெரியுமா ?` மெய்மறந்துபோய் , அவர் முகத்தையே பார்த்தான் சிறுவன் .           ` நம்ப கும்பலுக்கு புதுப் புது ஆளுங்க சேர்க்கறது !` அவர் பக்கத்திலிருந்தவன் முந்திரிக்கொட்டையாய் பதிலளித்தான் .           ` இருடா . பையன் பயந்துக்கப் போறான் !’ என்று எச்சரித்துவிட்டு , சின்னப் பிள்ளையிடம் பேசுவதுபோல , கொஞ்சலாகப் பேசினார் :   ` எல்லாம் ஒங்கூடப் படிக்கிறவங்கதான் ஜோ . படிப்பில நாட்டம் இல்லாதவங்க , வீட்டில சுகமில்லாதவங்க , ஏழைங்க – இப்படி இருப்பாங்கல்ல ?’           ` என்னைப்போல !` பையன் சிரித்தான் . அவனுக்கு அப்பா இல்லை . அழுமூஞ்சியான அம்மா மட்டும்தான் . இருப்பிடமோ , பன்றிகளும் , நாய்களும் சர்வசாதாரணமாகப் புழங்கும் புறநகர்ப் பகுதி .           ` புத்திசாலிப் பையன் !’ என்று பாராட்டிவிட்டு , ` அவங்ககிட்டே காசு கேளு .   கொடுக்க மறுத்தா , அடி . நம்பளோட சேர்ந்தா அவங்களும் மத்தவங்களை அடிக்கலாம்னு   ஆசை காட்டு !’ உசுப்பேற்றினார் . ` எல்லாம் சொல்லிக் கொடுக்கிறோமில்ல , அதுக்கு சம்பளமா , மாசாமாசம் கொஞ்சம் காசு கட்டணும் , அவ்வளவுதான் !’ ஜோ பெரிதாகத் தலையாட்டினான் . தன்னை நம்பி ஒரு வேலை கொடுக்கிறார் . அதை எப்படியாவது செய்து காட்ட வேண்டும் என்ற துடிப்பு பிறந்தது அவனுள் .           ஓரிரு முறை அவர் சொன்னமாதிரி செய்து , மாட்டிக் கொண்டான் . பள்ளியின் வாராந்திர பொதுக்கூட்டத்தின்போது , எல்லா மாணவர்களின் முன்னாலும் பிரம்படி வாங்கினான் .           தலைவரிடம் போய் , ` அடிக்கிறாங்க மண்ட !’ என்று பரிதாபமாகச் சொன்னபோது , அவர் பெரிதாகச் சிரித்தார் . ` மத்தவங்க முன்னால அடி வாங்கினா , வெக்கமாடா ஒனக்கு ?’ என்று இன்னும் பலக்கச் சிரித்தார் .           ` இல்ல , மண்ட . எல்லாரும் கூட்டாளிங்கதானே !’           அவர் யோசித்தார் . ` நீதான் அடிச்சேன்னு அவங்க காட்டிக் கொடுத்தாதானே மாட்டிக்குவே ? இப்படிச் செய் – மொதல்ல அவங்க தலைமேல ஒரு பிளாஸ்டிக் பையைக் கவுத்துடு . பாக்கெட்டிலேருந்து பணத்தை எடுத்துட்டு , ஓடியே போயிடு !’           தான் அப்போதே பெரிய வீரனாகி விட்டது போன்ற உணர்வு ஏற்பட , சந்தோஷமாகச் சிரித்தான் ஜோ .           அப்படியும் , செய்த குற்றத்தைச் சரியாகச் செய்யத் தெரியாதுபோக ,   அல்லது அவன்மேல் சந்தேகம் ஏற்பட ,   தண்டனை பெற்றான் . ஆனால் , தான் திரட்டிய பணத்தைத் தலைவரிடம் கொடுத்து , அவருடைய ஆரவாரமான பாராட்டுதலுக்கு ஆளானபோது , எல்லாம் மறந்துபோயிற்று .           ` ஒங்கப்பாமாதிரி தறுதலையா போகப்போறியாடா !’ பெற்றவள் புலம்பினாள் . ` நீயாவது நல்லாப் படிச்சு , கடைசிக் காலத்தில என்னை வெச்சுக் காப்பாத்துவேன்னு நம்பிக்கிட்டு இருந்தேனேடா ! ஒங்க பள்ளிக்கூடத்திலே என்னைக் கூப்பிட்டு , ஒன்னைப்பத்தி ஏதேதோ சொல்றாங்களே !` என்றவள் , ‘ தவமிருந்து , நாப்பது வயசில பெத்த பிள்ளை ! இப்படியா சீரழிஞ்சு போவணும் ! யாரு குடுத்த சாபமோ !` என்று தனக்குள்ளேயே முனகியபடி , மேல் துண்டால் கண்ணைத் துடைத்துக் கொண்டாள் .           அவளை , அவளுடைய கண்ணீரை , நம்பிக்கையை அலட்சியப்படுத்தினான் .           பதின்மூன்று வயதே ஆகியிருந்த அவனை ` பெரிய மண்ட ‘   சரிசமமாகப் பக்கத்தில் உட்கார வைத்துக்கொண்டு , இருவருமாக பியர் குடித்தபோது , அவனுக்கும் அவருடைய பராக்கிரமத்தில் பங்கு கிடைத்ததுபோல பெருமிதம் உண்டாயிற்று .           ` என்னடா இப்படி நேரங்காலமில்லாம தூங்கறே ! படிக்கக்கூடாது ?’ என்ற அம்மாவின் அரற்றலைத் தாங்க முடியாது , இன்னும் குடித்தான் . வயதுக்கு மீறிய பழக்கத்தால் , தலையே வெடித்துவிடும்போல வலி பிறக்க , அதனை மறக்க , அதற்குக் காரணமாக இருந்த மதுவையே மேலும் நாடினான் .     அடியும் , குடியுமே வாழ்க்கை என்று ஆகிப்போனது . அவர் கொடுத்த விலாசத்தில் உள்ள நபர்களை அடித்துத் துன்புறுத்தி ஏதாவது சமாசாரத்தைக் கறப்பது , இல்லை , ஒரேயடியாகப் ` போட்டுத் தள்ளுவது ` என்று பதினாறு வயதுக்குள் முன்னேறியபோது , இதுவரை சமூகத்தில் அவனுக்குக் கிடைக்காத மரியாதை , அந்தஸ்து , இல்லை ஏதோ ஒன்று கிடைத்தது விட்டதாகப் பெருமிதம் கொண்டான் . எல்லாவற்றையும்விட , அவன் அரிவாளை ஓங்கியபோது , எதிரே நிற்கும் நபரின் கண்ணில் தெரிந்த மரணபயம் அவனுக்குப் போதை ஊட்டுவதாக இருந்தது .           படிப்பை விட்டு விடலாமா என்றுகூட நினைத்தான் ஆனால் , படிக்காமலே ஒவ்வொரு வருடமாக அடுத்த வகுப்புக்குச் சென்றதால் , ` ஸ்கூலுக்குப் போகாம , வீட்டிலேயே இருந்தா தினமும்   கிழவியோட அழுகையைக் கேட்டுக்கிட்டில்ல இருக்கணும் ,’ என்ற எண்ணமெழ , அந்த யோசனையைக் கைவிட்டான் .           ஒவ்வொரு நாளும் , முதலிரண்டு பாடங்களுக்குப்பின் சுவரேறிக் குதித்து , ` பெரிய மண்ட ` யைப் பார்க்கப் போய்விட்டு . பள்ளி இறுதி மணி அடிக்கும்போது , மீண்டும் வந்துவிடுவது என்பதை வழக்கமாக வைத்துக் கொண்டான் . நாற்பது , ஐம்பது மாணவர்களில் ஒருவன் குறைந்தால் , யார் கவலைப்படப் போகிறார்கள் !           பள்ளியை விடாததும் நல்லதிற்குத்தான் என்று பிறகு தோன்றியது . இல்லாவிட்டால் , அந்தப் பாதிரியாரின் உரையைக் கேட்டிருக்க முடியுமா !             ` சுய முன்னேற்றம் ‘ என்ற தலைப்பில் உரையாற்ற   வருகை புரிந்திருந்தார் அந்தப் பாதிரியார் .           பள்ளி இறுதியாண்டுப் பரீட்சைகள் முடிந்திருந்தன . ஆனாலும் ,   விடுமுறை ஆரம்பிக்க இன்னும் சில வாரங்கள் இருக்க , மாணவர்கள் அந்தப் பொழுதை உபயோகமான முறையில் கழிக்கவென ,   கல்வியதிகாரிகள் , காவல்துறையினர் என்று பல தரப்பினான் கலந்துரையாடல்களுக்கு ஏற்பாடு செய்திருந்தனர் பள்ளி நிர்வாகிகள் . ` இளமைப் பருவம் ஒருவரின் வாழ்வில் மிக முக்கியமானது . இப்போது நீங்கள் என்ன செய்கிறீர்கள் , எப்படி யோசிக்கிறீர்கள் என்பதுதான் உங்கள் எதிர்காலத்தை நிர்ணயிக்கும் . ஆங்கிலத்தில் ஒரு பழமொழி உண்டு – இளமை என்பது முட்டாள்தனம் , நடுத்தர வயது – தாங்க முடியாத இடர்கள் , முதுமை – தன்னைத்தானே நொந்துகொள்ளல் என்று . ` இப்படி நடந்திருக்கலாமோ ?` என்று காலங்கடந்து யோசிப்பதால் எந்தப் பயனுமில்லை ,’ என்று வெள்ளாடை அணிந்த பாதிரியார் சொல்லிக்கொண்டே போனபோது , அவனுக்குள் எதுவோ அசைந்தது . தாயின் கண்ணீருக்கு மசியாதவனை பிற உயிர்களை ஆழமாக நேசித்தவரின் சுயநலமற்ற அறிவுரை தடுமாறச் செய்தது .           எப்போதும் இல்லாத அதிசயமாக , வாரத்திற்கு ஒருமுறை மாதா கோயிலுக்குப் போனான் . பாதிரியாருடன்   தனிமையில் பேசினான் .           ` நான் நிறையத் தப்பு பண்ணியிருக்கேன் , · பாதர் !` என்று தலை குனிந்தபடி ஒத்துக்கொண்டபோது , அவனுக்குத் தன்மேலேயே வெறுப்பு வந்தது . எது சொன்னாலும் புன்னகை மாறாது அவர் கேட்டுக் கொண்டிருந்து , உடனுக்குடன் அவன் தப்பைச் சுட்டிக் காட்டாதது அவனை மனந்திறந்து பேச வைத்தது . தன் கடந்த காலத்தை அலசினான் . பாவ மன்னிப்பு என்றில்லை . தான் தேர்ந்தெடுத்திருந்த பாதை சரியானதுதானா என்ற சந்தேகம் . ஒருவரைக் கொல்லும் தருணத்தில் , அவர் முகத்தில் தென்படும் மரண பயத்தைக் கண்டு முன்போல தன்னால் ஆனந்தப்பட முடியாதது ஏன் என்ற குழப்பம் . குழப்பம் ஏற்பட்டபோது , எடுத்துக்கொண்ட காரியத்தில் தெளிவு இல்லை . பிடிபட்டு , சிறைக்குப் போனான் . ` பெரிய மண்ட ‘ யின் தலையீட்டால் விரைவிலேயே வெளியே வந்தவன் , மீண்டும் பாதிரியாரை நாடிப் போனான் . ` ஒங்கப்பாவைப்போல நீயும் தறுதலையா ஆகிடாதேடான்னு சொல்லிச் சொல்லியே எங்கம்மா என்னைக் கெடுத்துட்டாங்க , · பாதர் !’ என்று பழியை வேறு பக்கம் திருப்பினான் . பாதிரியாரின் பழுத்த முகத்தில் மென்மையான முறுவல் .           ‘ நீ நல்லா இருந்தா   யாருப்பா அவங்களைவிட அதிகமா சந்தோசப்படப் போறாங்க ! நீ தப்பான வழியில போறேன்னு அவங்க உள்ளுணர்வு சொல்லி இருக்கு . ஆனா , அதை எப்படித் தடுக்கிறதுன்னுதான் தெரியல ,’ என்று விளக்கினார் . பிறகு , ஏதோ தோன்றியவராய் , ` ஆமா , ஒங்கம்மா எப்பவாவது ஒன்னை அடிச்சிருக்காங்களா ?’ என்று வினவினார் .           சற்றும் எதிர்பாராத அந்தக் கேள்வி அவனை யோசிக்கவைத்தது .           அம்மா !           படிப்பறிவு அறவே இல்லாததால் , பிறர் வீட்டில் வேலை செய்து பிழைக்க வேண்டிய நிலை .   அதில் கிடைக்கும் சொற்ப சம்பளத்தில் தன் தேவைகளைக் குறுக்கிக்கொண்டு , மகனுடைய   ஆசைகளைப் பூர்த்தி செய்தவள் !           மகனைப் பற்றிய நடத்தையில் சந்தேகம் எழுந்த பின்னரும் , அன்றுவரை அவனை அடித்ததோ , திட்டியதோ கிடையாது ! கெஞ்சலுடன் சரி .           கூடாத சகவாசமே அப்பாவின் உயிருக்கு யமனாக வந்திருந்தது என்றவரை அவனுக்குத் தெரியும் . தானும் அதே வழியில் செல்லக்கூடாது என்று எச்சரிக்கையாக இருந்திருக்கிறாள் , பாவம் ! இது ஏன் தனக்கு இதுவரை புரியவில்லை ?           அந்த அம்மாவையா மிரட்டிப் பணம் பறித்தான் , தனது ஆடம்பரச் செலவுகளுக்கு ? அவனது சுய வெறுப்பு அதிகரித்தது . அவனது ஒவ்வொரு மூச்சும் மன அதிர்வுக்கு ஏற்ப பெரிதாக வெளிவந்தது .           ` நீ நல்லாப் படிச்சாதானே கைநிறைய சம்பளம் கிடைக்கும் , சௌகரியமா வாழ்க்கை நடத்தலாம் ? எல்லாரையும் மாதிரி கல்யாணம் கட்டி , ஒனக்குப் பிறக்கப்போற பிள்ளைங்களை நல்லபடியா வளர்த்து – இன்னும் நீ செய்ய வேண்டியது எவ்வளவோ இருக்குப்பா . ஒன் எதிர்காலத்தை முளையிலேயே கிள்ளி எறிஞ்சிடாதே !’ அவனுடைய நல்வாழ்வுக்காக பாதிரியார் கெஞ்சினார் . ` இப்படியே போனா , இன்னும் பத்து வருஷத்திலே எப்படி இருக்கப் போறோம்னு கொஞ்சம் யோசிச்சுப் பாரு ! நாளைக்கு வீடும் , நாடும் ஒன்னால பெருமைப்பட வேண்டாம் ? ’ ‘           கத்தி எடுத்தவன் கத்தியாலதான் சாவான் ! பல முறை கேட்டிருந்ததுதான் என்றாலும் , பாதிரியாரின் கம்பீரக் குரலில் கேட்டபோது , அதில் பொதிந்திருந்த உண்மை அவனை அதிர வைத்தது . உடல் பின்னோக்கிப் போயிற்று .           தான் நன்றாக இருக்க வேண்டும் என்பதில்தான் எத்தனை பேருக்கு உண்மையான அக்கறை ! அது புரியாது , ` பெரிய மண்ட ` யுடன் ஒன்றாக அமர்ந்து சாப்பிடுவதும் , குடிப்பதும் , கெட்ட ஜோக் சொல்லிச் சிரிப்பதுமே பிறவி எடுத்ததன் பயன் என்று இருந்து விட்டோமே ! இப்படியே காலத்தைக் கடத்தினால் , பத்து வருடங்கள் என்ன , அதற்கு முன்பே காவல் துறையினரிடமோ , அல்லது எதிரிகளின் கும்பலிடமோ அகப்பட்டு , அல்பாயுசில் சாகப்போவது நிச்சயம் .           அப்போது அம்மாவின் கதி ? தானும் அம்மாவை நிர்க்கதியாக ஆக்கிவிடுவோமோ ? அவன் மனக்கண்முன் எதிர்காலக் காட்சி ஒன்று விரிந்தது – உடலும் , மனமும் தளர்ந்து , ‘ தறுதலையான மகனைப் பெற்றவள் ‘ என்ற அக்கம் பக்கத்தினரின் ஏளனத்தைப் பொறுத்துக்கொண்டு , அம்மா யார் யார்   வீ £ டுகளிலோ துணி துவைக்கிறாள் ,   நாற்றமடிக்கும் கழிப்பறைகளைக் கழுவுகிறாள் .           அதுவரை எதற்குமே பயப்படாதவனுக்கு , மரணம் நிச்சயம் என்று புரிந்து போன பிறர் அடைந்த பயத்தைக் கண்டு குரூரமான மகிழ்ச்சி பெற்றவனுக்கு , அன்று முதன்முதலாகப் பயம் வந்தது .           அடுத்து என்ன செய்ய வேண்டும் என்பதையும் பாதிரியாரே சொல்லிக் கொடுத்தார் .           அதன் விளைவுதான் ,` பெரிய மனசு பண்ணுங்க மண்ட ,’ என்ற கெஞ்சல் .           தன் காதில் விழுந்ததை நம்ப முடியாதவராக அவனைப் பார்த்தார் அந்த கும்பலின் தலைவர் . “ என்னை விட்டுப் போகணுமா ? ஏண்டா ? ஒனக்கு நான் என்ன கொறை வெச்சேன் ?” சிறிய நயனங்கள் மேலும் சிவந்தன .           அவன் வாளாவிருந்தான் , தனக்கு அடுத்த இடத்தை அவர் அவனுக்குக் கொடுத்திருந்தது உண்மைதான் என்பதை ஒத்துக்கொள்பவனாக .           ‘ பாத்துக்குங்கடா . என் வாரிசு இவன் .   எனக்கப்புறம் ஒங்க பெரிய மண்ட ! பயம்னா என்னான்னே தெரியாது இவனுக்கு !` என்று அவனே வெட்கத்தால் கூசிப்போகும் அளவுக்கு , பிசுபிசுவென்று முடி வளர்ந்திருந்த அவனுடைய முகவாயைத் தன் கையில் பிடித்துக்கொண்டு கொஞ்சி இருக்கிறார் .           உடனே , பாதிரியாரின் குரல் அவன் செவிகளில் அப்போதுதான் ஒலிப்பதுபோலக் கேட்டது .   ` நீ உன் இளமையைத் தொலைத்துச் சம்பாதித்துக் கொடுத்த பணத்தில் , உன் தலைவர் பாங்கிலே பல லட்சமும் , பென்ஸ் காரும் வைத்திருக்கிறார் . நீயோ ..!`           நான் யார் ?           யோசித்தான் .           உள்மனம் அளித்த பதில் பயங்கரமாக இருந்தது .           அவன் –   கொலைகாரன் . வெறும் குப்பை , சமூகத்தின் சாக்கடை .             தீர்க்கமான ஒரு முடிவுக்கு வந்தான் . “ எனக்கு எங்கப்பாமாதிரி போலீஸ் கையால , துப்பாக்கி குண்டு பட்டு சாக விருப்பமில்லீங்க , மண்ட . படிச்சு , எங்கம்மாவை நல்லபடியா வெச்சு காப்பாத்தணும் . அவங்க என்னால சுகப்பட்டதே இல்ல , மண்ட !”   குரல் தழுதழுத்தது .         “ நீ என்னா கேக்கறேன்னு புரிஞ்சுதான் பேசறியா ?” ஆத்திரத்துடன் கத்தினார் .   “ என்னை பத்து தடவை தூக்கில போட வைக்கற அளவுக்கு ஒனக்கு நாம்ப செஞ்சதெல்லாம் தெரியும் ,” என்றவரின் சுருதி இறங்கியது . “ சே ! ஒன்னை என் மகனாவே நினைச்சு பாசம் வெச்சிருந்தேனே !” என்று தன்னைத் தானே நொந்துகொண்டார் . மனதைக் கட்டுப் படுத்திக் கொண்டான் ஜோ . “ மண்ட ! நானும் .. ஒங்களை ..,” குரல் தழுதழுத்தது . “ என்னோட அப்பாவையே நான் காட்டிக் கொடுப்பேனாங்க ?”           சுலபமாக எதற்கும் அதிராத அவர் , திடுக்கிட்டவராக அவனைப் பார்த்தார் . திருமணமே செய்துகொள்ளாது , பெரும்பொருளை மிகக் குறுகிய காலத்தில் எவ்வழியிலாவது ஈட்டுவதே பிறப்பின் லட்சியம் என்று அன்றுவரை நினைத்திருந்தவரை எதுவோ உலுக்கியது . தனக்கும் ஒரு மகன் இருந்திருந்தால் , அவனுடைய நல்வாழ்வுக்காக எது வேண்டுமானாலும் செய்யத் துணிய மாட்டோமா ?           சிறிது யோசிப்பவர்போல் பாவனை செய்துவிட்டு , தனது வலக்கரத்தை நீட்டினார் .           வாய்கொள்ளாச் சிரிப்புடன் தன் கரத்தால் அதைப் பிடித்துக் குலுக்கினான் ஜோ .           “ நீ என்னைப் பாக்க வர்றது இதுவே கடைசித் தடவையா இருக்கட்டும் . என் மனசு மாறுகிறதுக்குள்ளே இங்கேயிருந்து ஓடிடுறா , தடிப்பயலே !”           ஒரு வினாடி இருவரின் கண்களும் கலந்தன . தத்தம் பலத்தில் , ஆண்மையில் , கர்வம் கொண்டிருந்த இருவரும் ஒருவர் கண்ணீரை மற்றவர் பார்த்துவிடக் கூடாது என்று அவசரமாக முகங்களைத் திருப்பிக் கொண்டனர் .           மௌனமாக வெளியே நடந்தவன் காதில் பின்னாலிருந்து வந்த குரல் அசரீரிபோல் ஒலித்தது . “ நீ எதுக்கும் கவலைப்படாதே , ஜோ . நல்லாப் படிச்சு , முன்னுக்கு வரணும் , என்ன !”           திரும்பினால் , மனம் தளர்ந்துவிடுவோமோ என்ற அச்சம் ஏற்பட , தலையை மட்டும் ஆட்டிவிட்டு நடந்தான் ஜோ .           ( தென்றல் அமெரிக்கத் தமிழ் மாத இதழ் ( www.tamilonline.com/thendral ) சிறுகதைப் போட்டியில் சிறப்புத் தேர்வு பெற்றது ) 1 Free Tamil Ebooks – எங்களைப் பற்றி மின்புத்தகங்களைப் படிக்க உதவும் கருவிகள்: மின்புத்தகங்களைப் படிப்பதற்கென்றே கையிலேயே வைத்துக் கொள்ளக்கூடிய பல கருவிகள் தற்போது சந்தையில் வந்துவிட்டன. Kindle, Nook, Android Tablets போன்றவை இவற்றில் பெரும்பங்கு வகிக்கின்றன. இத்தகைய கருவிகளின் மதிப்பு தற்போது 4000 முதல் 6000 ரூபாய் வரை குறைந்துள்ளன. எனவே பெரும்பான்மையான மக்கள் தற்போது இதனை வாங்கி வருகின்றனர். ஆங்கிலத்திலுள்ள மின்புத்தகங்கள்: ஆங்கிலத்தில் லட்சக்கணக்கான மின்புத்தகங்கள் தற்போது கிடைக்கப் பெறுகின்றன. அவை PDF, EPUB, MOBI, AZW3. போன்ற வடிவங்களில் இருப்பதால், அவற்றை மேற்கூறிய கருவிகளைக் கொண்டு நாம் படித்துவிடலாம். தமிழிலுள்ள மின்புத்தகங்கள்: தமிழில் சமீபத்திய புத்தகங்களெல்லாம் நமக்கு மின்புத்தகங்களாக கிடைக்கப்பெறுவதில்லை. ProjectMadurai.com எனும் குழு தமிழில் மின்புத்தகங்களை வெளியிடுவதற்கான ஒர் உன்னத சேவையில் ஈடுபட்டுள்ளது. இந்தக் குழு இதுவரை வழங்கியுள்ள தமிழ் மின்புத்தகங்கள் அனைத்தும் PublicDomain-ல் உள்ளன. ஆனால் இவை மிகவும் பழைய புத்தகங்கள். சமீபத்திய புத்தகங்கள் ஏதும் இங்கு கிடைக்கப்பெறுவதில்லை. எனவே ஒரு தமிழ் வாசகர் மேற்கூறிய “மின்புத்தகங்களைப் படிக்க உதவும் கருவிகளை” வாங்கும்போது, அவரால் எந்த ஒரு தமிழ் புத்தகத்தையும் இலவசமாகப் பெற முடியாது. சமீபத்திய புத்தகங்களை தமிழில் பெறுவது எப்படி? சமீபகாலமாக பல்வேறு எழுத்தாளர்களும், பதிவர்களும், சமீபத்திய நிகழ்வுகளைப் பற்றிய விவரங்களைத் தமிழில் எழுதத் தொடங்கியுள்ளனர். அவை இலக்கியம், விளையாட்டு, கலாச்சாரம், உணவு, சினிமா, அரசியல், புகைப்படக்கலை, வணிகம் மற்றும் தகவல் தொழில்நுட்பம் போன்ற பல்வேறு தலைப்புகளின் கீழ் அமைகின்றன. நாம் அவற்றையெல்லாம் ஒன்றாகச் சேர்த்து தமிழ் மின்புத்தகங்களை உருவாக்க உள்ளோம். அவ்வாறு உருவாக்கப்பட்ட மின்புத்தகங்கள் Creative Commons எனும் உரிமத்தின் கீழ் வெளியிடப்படும். இவ்வாறு வெளியிடுவதன் மூலம் அந்தப் புத்தகத்தை எழுதிய மூல ஆசிரியருக்கான உரிமைகள் சட்டரீதியாகப் பாதுகாக்கப்படுகின்றன. அதே நேரத்தில் அந்த மின்புத்தகங்களை யார் வேண்டுமானாலும், யாருக்கு வேண்டுமானாலும், இலவசமாக வழங்கலாம். எனவே தமிழ் படிக்கும் வாசகர்கள் ஆயிரக்கணக்கில் சமீபத்திய தமிழ் மின்புத்தகங்களை இலவசமாகவே பெற்றுக் கொள்ள முடியும். தமிழிலிருக்கும் எந்த வலைப்பதிவிலிருந்து வேண்டுமானாலும் பதிவுகளை எடுக்கலாமா? கூடாது. ஒவ்வொரு வலைப்பதிவும் அதற்கென்றே ஒருசில அனுமதிகளைப் பெற்றிருக்கும். ஒரு வலைப்பதிவின் ஆசிரியர் அவரது பதிப்புகளை “யார் வேண்டுமானாலும் பயன்படுத்தலாம்” என்று குறிப்பிட்டிருந்தால் மட்டுமே அதனை நாம் பயன்படுத்த முடியும். அதாவது “Creative Commons” எனும் உரிமத்தின் கீழ் வரும் பதிப்புகளை மட்டுமே நாம் பயன்படுத்த முடியும். அப்படி இல்லாமல் “All Rights Reserved” எனும் உரிமத்தின் கீழ் இருக்கும் பதிப்புகளை நம்மால் பயன்படுத்த முடியாது. வேண்டுமானால் “All Rights Reserved” என்று விளங்கும் வலைப்பதிவுகளைக் கொண்டிருக்கும் ஆசிரியருக்கு அவரது பதிப்புகளை “Creative Commons” உரிமத்தின் கீழ் வெளியிடக்கோரி நாம் நமது வேண்டுகோளைத் தெரிவிக்கலாம். மேலும் அவரது படைப்புகள் அனைத்தும் அவருடைய பெயரின் கீழே தான் வெளியிடப்படும் எனும் உறுதியையும் நாம் அளிக்க வேண்டும். பொதுவாக புதுப்புது பதிவுகளை  உருவாக்குவோருக்கு அவர்களது பதிவுகள்  நிறைய வாசகர்களைச் சென்றடைய வேண்டும் என்ற எண்ணம் இருக்கும். நாம் அவர்களது படைப்புகளை எடுத்து இலவச மின்புத்தகங்களாக வழங்குவதற்கு  நமக்கு அவர்கள் அனுமதியளித்தால், உண்மையாகவே அவர்களது படைப்புகள் பெரும்பான்மையான மக்களைச் சென்றடையும். வாசகர்களுக்கும் நிறைய புத்தகங்கள் படிப்பதற்குக் கிடைக்கும் வாசகர்கள் ஆசிரியர்களின் வலைப்பதிவு முகவரிகளில் கூட அவர்களுடைய படைப்புகளை தேடிக் கண்டுபிடித்து படிக்கலாம். ஆனால் நாங்கள் வாசகர்களின் சிரமத்தைக் குறைக்கும் வண்ணம் ஆசிரியர்களின் சிதறிய வலைப்பதிவுகளை ஒன்றாக இணைத்து ஒரு முழு மின்புத்தகங்களாக உருவாக்கும் வேலையைச் செய்கிறோம். மேலும் அவ்வாறு உருவாக்கப்பட்ட புத்தகங்களை “மின்புத்தகங்களைப் படிக்க உதவும் கருவிகள்”-க்கு ஏற்ற வண்ணம் வடிவமைக்கும் வேலையையும் செய்கிறோம். FreeTamilEbooks.com இந்த வலைத்தளத்தில்தான் பின்வரும் வடிவமைப்பில் மின்புத்தகங்கள் காணப்படும். PDF for desktop, PDF for 6” devices, EPUB, AZW3, ODT இந்த வலைதளத்திலிருந்து யார் வேண்டுமானாலும் மின்புத்தகங்களை இலவசமாகப் பதிவிறக்கம்(download) செய்து கொள்ளலாம். அவ்வாறு பதிவிறக்கம்(download) செய்யப்பட்ட புத்தகங்களை யாருக்கு வேண்டுமானாலும் இலவசமாக வழங்கலாம். இதில் நீங்கள் பங்களிக்க விரும்புகிறீர்களா? நீங்கள் செய்யவேண்டியதெல்லாம் தமிழில் எழுதப்பட்டிருக்கும் வலைப்பதிவுகளிலிருந்து பதிவுகளை எடுத்து, அவற்றை LibreOffice/MS Office போன்ற wordprocessor-ல் போட்டு ஓர் எளிய மின்புத்தகமாக மாற்றி எங்களுக்கு அனுப்பவும். அவ்வளவுதான்! மேலும் சில பங்களிப்புகள் பின்வருமாறு: 1.ஒருசில பதிவர்கள்/எழுத்தாளர்களுக்கு அவர்களது படைப்புகளை “Creative Commons” உரிமத்தின்கீழ் வெளியிடக்கோரி மின்னஞ்சல் அனுப்புதல் 2.தன்னார்வலர்களால் அனுப்பப்பட்ட மின்புத்தகங்களின் உரிமைகளையும் தரத்தையும் பரிசோதித்தல் 3.சோதனைகள் முடிந்து அனுமதி வழங்கப்பட்ட தரமான மின்புத்தகங்களை நமது வலைதளத்தில் பதிவேற்றம் செய்தல் விருப்பமுள்ளவர்கள் freetamilebooksteam@gmail.com எனும் முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பவும். இந்தத் திட்டத்தின் மூலம் பணம் சம்பாதிப்பவர்கள் யார்? யாருமில்லை. இந்த வலைத்தளம் முழுக்க முழுக்க தன்னார்வலர்களால் செயல்படுகின்ற ஒரு வலைத்தளம் ஆகும். இதன் ஒரே நோக்கம் என்னவெனில் தமிழில் நிறைய மின்புத்தகங்களை உருவாக்குவதும், அவற்றை இலவசமாக பயனர்களுக்கு வழங்குவதுமே ஆகும். மேலும் இவ்வாறு உருவாக்கப்பட்ட மின்புத்தகங்கள், ebook reader ஏற்றுக்கொள்ளும் வடிவமைப்பில் அமையும். இத்திட்டத்தால் பதிப்புகளை எழுதிக்கொடுக்கும் ஆசிரியர்/பதிவருக்கு என்ன லாபம்? ஆசிரியர்/பதிவர்கள் இத்திட்டத்தின் மூலம் எந்தவிதமான தொகையும் பெறப்போவதில்லை. ஏனெனில், அவர்கள் புதிதாக இதற்கென்று எந்தஒரு பதிவையும்  எழுதித்தரப்போவதில்லை. ஏற்கனவே அவர்கள் எழுதி வெளியிட்டிருக்கும் பதிவுகளை எடுத்துத்தான் நாம் மின்புத்தகமாக வெளியிடப்போகிறோம். அதாவது அவரவர்களின் வலைதளத்தில் இந்தப் பதிவுகள் அனைத்தும் இலவசமாகவே கிடைக்கப்பெற்றாலும், அவற்றையெல்லாம் ஒன்றாகத் தொகுத்து ebook reader போன்ற கருவிகளில் படிக்கும் விதத்தில் மாற்றித் தரும் வேலையை இந்தத் திட்டம் செய்கிறது. தற்போது மக்கள் பெரிய அளவில் tablets மற்றும் ebook readers போன்ற கருவிகளை நாடிச் செல்வதால் அவர்களை நெருங்குவதற்கு இது ஒரு நல்ல வாய்ப்பாக அமையும். நகல் எடுப்பதை அனுமதிக்கும் வலைதளங்கள் ஏதேனும் தமிழில் உள்ளதா? உள்ளது. பின்வரும் தமிழில் உள்ள வலைதளங்கள் நகல் எடுப்பதினை அனுமதிக்கின்றன. 1. www.vinavu.com 2. www.badriseshadri.in 3. http://maattru.com 4. kaniyam.com 5. blog.ravidreams.net எவ்வாறு ஒர் எழுத்தாளரிடம் Creative Commons உரிமத்தின் கீழ் அவரது படைப்புகளை வெளியிடுமாறு கூறுவது? இதற்கு பின்வருமாறு ஒரு மின்னஞ்சலை அனுப்ப வேண்டும். <துவக்கம்> உங்களது வலைத்தளம் அருமை [வலைதளத்தின் பெயர்]. தற்போது படிப்பதற்கு உபயோகப்படும் கருவிகளாக Mobiles மற்றும் பல்வேறு கையிருப்புக் கருவிகளின் எண்ணிக்கை அதிகரித்து வந்துள்ளது. இந்நிலையில் நாங்கள் http://www.FreeTamilEbooks.com எனும் வலைதளத்தில், பல்வேறு தமிழ் மின்புத்தகங்களை வெவ்வேறு துறைகளின் கீழ் சேகரிப்பதற்கான ஒரு புதிய திட்டத்தில் ஈடுபட்டுள்ளோம். இங்கு சேகரிக்கப்படும் மின்புத்தகங்கள் பல்வேறு கணிணிக் கருவிகளான Desktop,ebook readers like kindl, nook, mobiles, tablets with android, iOS போன்றவற்றில் படிக்கும் வண்ணம் அமையும். அதாவது இத்தகைய கருவிகள் support செய்யும் odt, pdf, ebub, azw போன்ற வடிவமைப்பில் புத்தகங்கள் அமையும். இதற்காக நாங்கள் உங்களது வலைதளத்திலிருந்து பதிவுகளை பெற விரும்புகிறோம். இதன் மூலம் உங்களது பதிவுகள் உலகளவில் இருக்கும் வாசகர்களின் கருவிகளை நேரடியாகச் சென்றடையும். எனவே உங்களது வலைதளத்திலிருந்து பதிவுகளை  பிரதியெடுப்பதற்கும் அவற்றை மின்புத்தகங்களாக மாற்றுவதற்கும் உங்களது அனுமதியை வேண்டுகிறோம். இவ்வாறு உருவாக்கப்பட்ட மின்புத்தகங்களில் கண்டிப்பாக ஆசிரியராக உங்களின் பெயரும் மற்றும் உங்களது வலைதள முகவரியும் இடம்பெறும். மேலும் இவை “Creative Commons” உரிமத்தின் கீழ் மட்டும்தான் வெளியிடப்படும் எனும் உறுதியையும் அளிக்கிறோம். http://creativecommons.org/licenses/ நீங்கள் எங்களை பின்வரும் முகவரிகளில் தொடர்பு கொள்ளலாம். e-mail : freetamilebooksteam@gmail.com FB : https://www.facebook.com/FreeTamilEbooks G +: https://plus.google.com/communities/108817760492177970948   நன்றி. 2 உங்கள் படைப்புகளை வெளியிடலாமே உங்கள் படைப்புகளை வெளியிடலாமே   உங்கள் படைப்புகளை மின்னூலாக வெளியிடலாம். 1. எங்கள் திட்டம் பற்றி – http://freetamilebooks.com/about-the-project/ தமிழில் காணொளி  – http://www.youtube.com/watch?v=Mu_OVA4qY8I 2.  படைப்புகளை யாவரும் பகிரும் உரிமை தரும் கிரியேட்டிவ் காமன்ஸ் உரிமம் பற்றி – http://www.wired.co.uk/news/archive/2011-12/13/creative-commons-101 https://learn.canvas.net/courses/4/wiki/creative-commons-licenses உங்கள் விருப்பான கிரியேட்டிவ் காமன்ஸ் உரிமத்தை இங்கே தேர்ந்தெடுக்கலாம். http://creativecommons.org/choose/ 3. மேற்கண்டவற்றை பார்த்த / படித்த பின், உங்கள் படைப்புகளை மின்னூலாக மாற்ற பின்வரும் தகவல்களை எங்களுக்கு அனுப்பவும். 1. நூலின் பெயர் 2. நூல் அறிமுக உரை 3. நூல் ஆசிரியர் அறிமுக உரை 4. உங்கள் விருப்பான கிரியேட்டிவ் காமன்ஸ் உரிமம் 5. நூல் – text / html / LibreOffice odt/ MS office doc வடிவங்களில்.  அல்லது வலைப்பதிவு / இணைய தளங்களில் உள்ள கட்டுரைகளில் தொடுப்புகள் (url) இவற்றை freetamilebooksteam@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்பவும். விரைவில் மின்னூல் உருவாக்கி வெளியிடுவோம். ——————————————————————————————————– நீங்களும் மின்னூல் உருவாக்கிட உதவலாம். மின்னூல் எப்படி உருவாக்குகிறோம்?  – தமிழில் காணொளி – https://www.youtube.com/watch?v=bXNBwGUDhRs இதன் உரை வடிவம் ஆங்கிலத்தில் – http://bit.ly/create-ebook எங்கள் மின்னஞ்சல் குழுவில் இணைந்து உதவலாம். https://groups.google.com/forum/#!forum/freetamilebooks நன்றி !