[] அதே நிலா நிர்மலா ராகவன், மலேசியா freetamilebooks.com Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 அதே நிலா 1. அதே நிலா 1. 0.1 முன்னுரை 2. 1 இடம்: தென்னிந்தியாவில், காவிரிக் கரையோரமாக இருந்த கிராமம் 3. 2 மலேசியத் தலைநகரமான கோலாலம்பூர், 2002 4. 3 கட்டுமரத்தில் 5. 4 வட மலேசியப் பயணம் 6. 5 ஆண்டு: 2002 7. 6 தென்கிழக்கு ஆசியா, 1080 8. 7 புஜாங் பள்ளத்தாக்கு 9. 8 தஞ்சாவூர் 10. 9 தஞ்சை 11. 10 தஞ்சை அருகில் ஒரு கிராமம் 12. 11 பூர்ணவல்லி 13. 12 ஆயிரம் ஆண்டுகளுக்குமுன், கடாரத்தில் 14. 13 தெருவெல்லாம் தங்கம் 15. 14 பேருந்து நிறுத்தம் 16. 15 சென்னை ஹோட்டல் 17. 16 தண்டச்செலவு 18. 17 மீண்டும் சந்திப்பு 19. 18 பகல் கொள்ளை 20. 19 மீண்டும் கோலாலம்பூர் 21. 20 இரட்டை அர்த்தங்கள் 22. 21 சென்னை மியூசியம் 23. 22 தடுமாற்றம் 24. 23 பினாங்கு 25. 24 லங்காவித்தீவு 26. 25 அன்புப்பரிசு 27. 26 வழக்கத்தில் மாற்றம் 1. 26.1 எங்களைப் பற்றி - Free Tamil Ebooks அதே நிலா அதே நிலா (சரித்திரப் பின்னணியுடன் ஒரு சமூக நாவல்)   நிர்மலா ராகவன்   மின்னூல் வெளியீடு : freetamilebooks.com   உரிமை : Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 கிரியேட்டிவ் காமன்ஸ். எல்லாரும் படிக்கலாம், பகிரலாம்.   அட்டைப்படம் & மின்னூலாக்கம் - லெனின் குருசாமி - guruleninn@gmail.com   This book was produced using pandoc   0.1 முன்னுரை வணக்கம். ஆஸ்ட்ரோ தொலைகாட்சி நிலையமும், மலேசிய எழுத்தாளர் சங்கமும் இணைந்து நடத்திய நாவல் போட்டியில் சிறப்புப் பரிசு பெற்றது இந்நாவல். மலேசிய நாட்டின் வடக்கிலிருக்கும் கெடா மாநிலத்தில் உள்ள புஜாங் பள்ளத்தாக்கைப்பற்றி முதன்முதலில் – சுமார் முப்பது ஆண்டுகளுக்கு முன்னர் – கெடாவில் வாழ்ந்த சீன நண்பரிடமிருந்து அறிந்தேன். காரை ஒரு குறுகிய தெருவில் நிறுத்திவிட்டு, வெகுதூரம் நடந்து போனபோது, பொட்டைக்காடாக இருந்தது அவ்விடம். பினாங்கு, சுங்கை பட்டாணி போன்ற அருகிலிருக்கும் இடங்களில் பிறந்து வளர்ந்த தமிழர்கள்கூட இந்த இடத்தைப்பற்றி எதுவுமே அறிந்திருக்கவில்லை என்பது ஆச்சரியத்தை விளைவித்தது. எங்கும் இந்து சமயக் குறிப்பீடுகளாக கல் சிற்பங்கள், சிவலிங்கம், ‘யோனி’ என்று குறிப்பிடப்பட்டு, ஆட்டுக்கல்போல் ஏதோ ஒன்று. ‘தமிழர்கள் இந்நாட்டில் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே கால் பதித்து இருக்கிறார்களே!’ என்ற பெருமிதம் எழுந்தது. இரண்டு ஆண்டுகளுக்கு முன், அங்குள்ள அருங்கலையகத்தின் வளாகத்தில் பத்து பஹாட் சண்டி (கோயில்) இருந்த இடத்தில் நின்று பாடுகையில், யாருடைய உணர்ச்சிகளின் தாக்கமோ என்னருகே பாய்ந்ததுபோல் உணர்ந்தேன். பாடவே முடியாது, குரலடைத்தது. அந்த நபர் மிக மிக வயது முதிர்ந்த ஒரு மாது, ஆடல் கலையில் வல்லவர், சொல்லவொணா சோகத்தில் இவ்வுலகைவிட்டுப் பிரிந்துபோயும், எல்லாத் தொடர்பையும் முறித்துக்கொள்ள முடியாது, அரூபமாக இங்கேயே தங்கிவிட்டிருக்கிறார் என்று ஏதேதோ எனக்குள் தோன்றின. அந்த அமானுஷ்யமான அனுபவத்தில் ஒரு பெரிய கதை பொதிந்து கிடப்பதாக உணர்ந்தேன். அதற்குப்பின், மலேசியாவின் தெற்குப்பகுதியில், ஜோகூர் மாநிலத்தில் உள்ள காட்டுக்குள் ஒரு பழமையான, பெரிய இந்துக்கோயில் கண்டுபிடிக்கப்பட்ட செய்தி வந்தது. இரண்டையும் இணைத்த முயற்சி இது. கதை தமிழகத்திலும், பண்டைய மலாயா, இன்றைய மலேஷியாவிலும் நடக்கிறது. நன்றி. நிர்மலா ராகவன் 1 இடம்: தென்னிந்தியாவில், காவிரிக் கரையோரமாக இருந்த கிராமம் காலம்: கி.பி. 1040 அந்த இடமெங்கும் சிலைகள் விரவிக் கிடந்தன. பாதி முடிக்கப்பட்டவை, குருநாதரின் ஆமோதிப்புக்குப் பிறகு, நகாசு வேலைக்காகக் காத்திருப்பவை என்று வெவ்வேறு நிலையில் இருந்தன அவைகள். அன்றைய சிற்ப வேலை துவங்க சில மணித்துளிகள் இருந்தன. இன்னும் காகம்கூடக் கரைய ஆரம்பிக்கவில்லை. சிற்பி அம்பலவாணர் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தார். அவரது தூக்கத்தைக் கலைக்கும்வண்ணம் வாயிலில் இருந்து ஒரு குரல் வந்தது: “சிற்பியாரே! சிற்பி அம்பலவாணரே!” இந்த வேளையில் யாரோ தன்னைப் பெயர் சொல்லி அழைப்பதைக் கேட்ட அம்பலவாணர், திடுக்கிட்டு எழுந்தார். தெரிந்த குரலாகத்தான் தோன்றியது. ஐம்பது பிராயத்தைக் கடந்திருந்தவர் அவர். அத்துடன், நாட்டின் இளைஞர்களுக்கு எல்லாம் சிற்பக் கலையைப் போதிக்கும் குரு. அவரைப் பெயர் சொல்லி அழைக்கும் உரிமை அரச குடும்பத்தினரைத் தவிர வேறு யாருக்கு உண்டு? குலைந்திருந்த தனது ஆடையைச் சரி செய்தபடி, அப்படி என்ன அவசர வேலையாக இந்த நேரத்தில் அரசர் வந்திருக்கிறார் என்று எண்ணமிட்டபடி, வாயிலுக்கு விரைந்தார் சிற்பி. தன்னிச்சையாக, அவரது திருவாய் காயத்ரி மந்திரத்தை உதிர்த்தது. சூரியோதயத்தின்போதும், அஸ்தமனத்தின்போதும் உச்சரிக்க வேண்டுவது. இன்று சற்று முன்னதாகவே அவர் எழுந்திருக்க நேரிட்டதால் மட்டும், பகலவனை மறந்துவிட முடியுமா, என்ன? அவர் நினைத்தது சரியாகப்போயிற்று. அரசரை வரவேற்க சிற்பி வாயைத் திறந்தபோது, தனது ஆள்காட்டி விரலை உதட்டின்மேல் பதித்து, மௌனமாக இருக்கும்படி சமிக்ஞை செய்தார் அரசர். “பேச நேரமில்லை, சிற்பியாரே! இதைப் பிடியும்!” ரகசியக் குரலாக வந்தது அரசரின் கம்பீரமான குரல். எதுவும் விளங்காமலேயே, அரசர் நீட்டிய பையை வாங்கினார் அம்பலவாணர். நல்ல கனமாக இருந்தது. பல்லை கடித்துக்கொண்டார். உடல் ஒரு புறமாகச் சாய்ந்தது. “விடிந்தால், எதிரி நாட்டவர்கள் நம் நாட்டுக்குள் நுழைந்துவிடுவார்கள். இப்போதுதான் ரகசியச் செய்தி வந்தது. இனியும் நீங்கள்..,” தொண்டையைக் கனைத்துக்கொண்டார் அரசர். “நீங்களும், உங்கள் குடும்பத்தினரும் இங்கேயே தங்கி இருந்தால், உங்கள் உயிருக்கே ஆபத்து!” வாசலில் அரசர் ஏறி வந்த குதிரையைக் காணோம் என்பதைக் குறித்துக்கொண்டார் சிற்பி. அரசர் சொல்லி முடிப்பதற்குள், அவர் கூறவந்ததை விளங்கிக்கொண்டார். தென்னகத்தின் பல குறுநாடுகளும் வடநாட்டவர்களின் படைபலத்திற்கும், சூழ்ச்சிக்கும் ஈடுகொடுக்க முடியாது, ஒவ்வொன்றாக வீழ்ந்திருந்தன. அவர்களது கோயில்கள் தரைமட்டமாக்கப்பட்டிருந்தன. அல்லது, ஒவ்வொரு சிலையும், சிற்பமும் கவனமாக மூளியாக்கப்பட்டிருந்தன. பல பெண்சிலைகளின் ஒரு கை உடைக்கப்பட்டிருந்தது. தத்தம் வீடுகளுக்கு வெளியே, அல்லது உள்ளேயே பதுங்கிக்கொண்டிருந்த பெண்கள் கற்பழிக்கப்பட்டு, ஆண்கள் சிறைப்பிடிக்கப்பட்டு! ஐயகோ! வென்றுவிட்ட எதிரியை பரிபூர்ணமாக அவமானப்படுத்துவது அவனது அன்புக்கும், பக்திக்கும் உரியவர்களைச் சிதைப்பதுதான் என்று படையெடுப்பின்போது ஒவ்வொரு மனிதனும் நினைப்பதுபோல் இருந்தது. அரசர் நல்ல கலாரசிகர்தாம். இருப்பினும், நாட்டின் தலைமைச் சிற்பியான தன்பொருட்டு மாத்திரம் அவர் அங்கு வரவில்லை, அவரது அன்புக்கும், பிரேமைக்கும் பாத்திரமாகி இருந்த தனது மகள் வசந்தபைரவி எதிரிகளால் நாசமாக்கப்பட்டு விடக்கூடாதே என்ற பரிதவிப்புதான் அவரை இந்நேரத்தில் இங்கு வரவழைத்திருக்கிறது என்று சிற்பி புரிந்துகொண்டார். சிற்பியின் எண்ண ஓட்டம் மன்னருக்கு விளங்காமல் போகுமா! கூச்சத்தை மறைக்கவென, படபடப்புடன் பேசினார்: “படகுத்துறையில் உங்களுக்காக ஒரு கட்டுமரத்தைத் தயார்நிலையில் வைத்திருக்கிறார்கள். இந்நாட்டைவிட்டு எவ்வளவு தொலைவு செல்ல முடியுமோ, அவ்வளவு தொலைவில் போய் பிழைத்துக்கொள்ளுங்கள்! கடலன்னை உங்களை பாதுகாப்பான இடத்துக்கு அழைத்துப் போவாள். இந்தப் பையில் தங்க, வைர ஆபரணங்களும், பொற்காசுகளும் இருக்கின்றன. சில வெண்கலச் சிலைகளும் வைத்திருக்கிறேன், நினைவுப்பரிசாக!” எப்போதும் புன்சிரிப்பும், நிதானமுமாக இருக்கும் அந்தப் பெருந்தகை இப்போது தடுமாட்டத்தின் எல்லையில் இருப்பதைப் பார்த்த அம்பலவாணருக்குப் பரிதாபமாக இருந்தது. கூடவே, மனமும் கிலேசமடைந்தது. தான் பிறந்து, வளர்ந்து, அளப்பற்கரிய பெயரும், புகழும் அடைவதற்குக் காரணமாக இருந்த இந்த பொன்னாட்டை விட்டுப் போவதா! “யோசிப்பதற்கு இப்போது நேரமில்லை அம்பலவாணரே!” பற்களைக் கடித்துக்கொண்டு, இறுகிய முகத்துடன் பேசினார் அரசர். “என்னப்பா, இன்று இவ்வளவு சீக்கிரம் எழுந்துவிட்டீர்கள்! யாருடன் பேசிக் கொண்டிருக்கிறீர்கள்?” என்று கேட்டபடி வந்தாள் வசந்தபைரவி. பாடகி அல்லவா? குரல் தேனாக இனித்தது. தன் மனத்திற்கினியவரை எதிர்பாராது, அந்த வேளையில் அங்கு கண்டதும் அவள் முகத்தில் மகிழ்ச்சி பரவியது. தன் கேசம் கலைந்திருக்கிறதே, ஆடை நெகிழ்ந்திருக்கிறதே என்றெல்லாம் கவலைப்பட ஆரம்பித்தாள். ஆனால், அதையெல்லாம் கவனிக்கும் மனநிலையிலா அவளது அன்பர் இருந்தார்! “வசந்தா!” அவளை நிரந்தரமாகவே பிரியவேண்டி வந்துவிடுமோ என்று எழுந்த உணர்ச்சிப்பெருக்கினால் கரகரத்த தனது குரலை, நிலைமையை உத்தேசித்து, கனைத்துக்கொண்டார் அரசர். “ஆபத்து நெருங்கிக்கொண்டிருக்கிறது. உன் தந்தையையும், தம்பியையும் அழைத்துக்கொண்டு, நீ தொலைதூரம் சென்றுவிடு. அதிர்ஷ்டம் இருந்தால், மீண்டும் சந்திப்போம்!” தன் கண்ணீரை யாரும் பார்த்துவிடுமுன் முகத்தைத் திருப்பிக்கொண்ட அரசர், “வருகிறேன் சிற்பியாரே! கால தாமதம் செய்யாதீர்கள்!” என்று கால்நடையாகவே புறப்பட்டவர், “இவைகளையும் கையோடு வைத்துக்கொள்ளுங்கள். பிரயாணத்தின்போது, எந்தத் தடங்கலும் வராது,” என்று இரு செம்புத்தகடுகளை நீட்டினார். அவைகளில் அரச இலச்சினை பொறிக்கப்பட்டிருக்கும் என்று பார்க்காமலே அம்பலவாணர் புரிந்துகொண்டார். கடவுள் பிரசாதத்தைக் கையில் ஏந்துவதுபோல, இடது உள்ளங்கையை வலது கை அடியில் வைத்து, மரியாதை காட்டும் தோரணையில், முதுகைப் பாதியாக வளைத்து, அதைப் பெற்றுக்கொண்டார். அரசரது காலடிச் சத்தம் ஓயும்வரை இருவரும் எதுவும் பேசத் தோன்றாது, அப்படியே மலைத்து நின்றிருந்தனர். வசந்தபைரவிக்குத் தொண்டையை அடைத்தது. “நம்மைக் காக்கவென, இந்த வேளையில் நடந்தே வந்திருக்கிறார் அப்பா!” என்று விம்மினாள். “ஆபத்து என்று உறுதியாக உணர்ந்ததால்தான், அரசர் தாமே நேரில் நம்மை எச்சரிக்க வந்திருக்கிறார். உன் தம்பியை எழுப்பு. நீங்கள் இருவரும், ஒரு சில ஆடைகளை எடுத்துக்கொண்டு, அந்த கட்டுமரத்தில் ஏறிக்கொண்டு, போங்கள்! காளி உங்களுக்குத் துணை இருப்பாள்!” “அப்பா! நீங்கள்?” பதட்டத்துடன் கேட்டாள் மகள். ஒரு வரண்ட சிரிப்பு சிரித்தார் தந்தை. உறுமலைப்போல தொனித்தது அந்தச் சப்தம். “இந்த தள்ளாத காலத்தில் கடல் கடந்து பயணம் செய்வதெல்லாம் என்னால் ஆகிற காரியமா, வசந்தபைரவி? வீணே ஏன் கவலைப்படுகிறாய்? பார்த்துக்கொண்டே இரு! ‘இந்தக் கிழவனால் என்ன ஆபத்து வரப்போகிறது!’ என்று பகையாளிகள் என்னை ஒன்றும் செய்யாது விட்டுவிடுவார்கள்! எதற்காக நம் இடம் தேடி வந்து, அரசர் இந்த இலச்சினையைக் கொடுத்துவிட்டுப் போயிருக்கிறார் என்று நினைத்தாய்?” என்று வலிய வரவழைத்துக்கொண்ட உற்சாகத்துடன் பேசினார். அவளைப் பார்த்து கண்ணைச் சிமிட்டினார். அதைப் புரிந்துகொள்ளாதவள்போல், “இரண்டு எதற்கப்பா?” என்று பேச்சை மாற்றினாள் மகள். முகம் சிவந்து போயிற்று. “ஒன்று தொலைந்தால், இன்னொன்று உதவட்டுமே என்றுதான்!” என்று அனுமானித்தவர், “அதுவும் நல்லதற்குத்தான். ஒன்றை நீங்கள் கொண்டுபோங்கள். மற்றொன்றை வைத்துக்கொண்டு, நான் பிழைத்துக்கொள்கிறேன். நான் இருக்கப்போவது என்னவோ இன்னும் சொச்ச காலம்! போகிற உயிர் எப்போது போனால் என்ன, எப்படிப் போனால்தான் என்ன!” என்ற வேதாந்தம் பேசினார். வசந்தபைரவி ஏதும் பேசவில்லை. தன்னைச் சுற்றிப் பார்வையை ஓடவிட்டாள். நிலவொளியில் சிற்பங்கள் புலப்பட்டன. இரவு பகலாக ஒரே நினைவாக இருந்து, தெய்வாதீனமாக மனக்கண்ணில் கண்டதையெல்லாம் பிறரது ஊனக்கண்களுக்கும் புலப்படும் வகையில் தோற்றுவித்து, தனது குழந்தைகளாகவே அவர் நேசித்த சிற்பங்களை விட்டு அப்பா எங்கும் நகரமாட்டார் – அது அவருடைய உயிரைக் காக்கவே ஆனாலும் – என்பது அவளுக்குப் புரிந்தது. தனது இயலாமையை ஒரு பெருமூச்சால் வெளிக்கொணர்ந்தபடி, தம்பியை எழுப்பப் போனாள். சூரியன் மெல்ல மெல்ல தனது தலையை நீட்டிக்கொண்டிருந்தான். எப்போதும் புத்துணர்வு ஊட்டும் அந்தப் பொழுது அன்று அவளது மனத்தைக் கனக்கவைத்தது. தந்தையையும், தாய்நாட்டையும் விட்டு, எங்கோ போகப்போகிறோம். இனி இந்த மண்ணை மீண்டும் மிதிப்போமா? தந்தையை என்று பார்க்கப்போகிறோம்? என்னதான் அரசரது அன்புக்குப் பாத்திரமானவளாக இருந்தாலும், அந்நாட்டின் எதிர்கால பட்டமகிஷியாக அவள் தன்னை என்றுமே எண்ணிப் பார்த்ததில்லை. அதற்கெல்லாம் கொடுத்து வைத்திருக்க வேண்டும். ஆட்டத்திலும், பாட்டிலும் அந்நாட்டிலேயே அவளுக்கு இணை யாரும் கிடையாது என்று அரசரே பலமுறை அவளிடம் அந்தரங்கமாகப் புகழ்ந்து கூறி இருந்தாலும், அவள் என்ன, அரசகுமாரியா, அவரை மணக்கும் பேறு பெற! அதெல்லாம் சந்தேகமறத் தெரிந்திருந்தாலும், அவரது அண்மையே ஆனந்தமாக இருந்து வந்ததே இதுவரை! இனி, அவரைப் பார்க்கும் பாக்கியம்கூட இல்லாமல் போய்விட்டதே! வசந்தபைரவி மூச்சை இழுத்து விட்டாள். அழுது, ஆர்ப்பாட்டம் செய்வது அவளைப்போன்ற குணவதிகளுக்கு அழகல்ல. அரசரும், தந்தையும் இட்ட கட்டளைப்படி நடப்பதுதான் அப்போதைக்கு அவள் செய்யக்கூடியது. கட்டுமரத்தில் ஏறியபின், தந்தையை நோக்கி கையை அசைத்தபோது, வசந்தபைரவியின் கட்டுப்பாடு தளர்ந்தது. கண்ணிலிருந்து நீர் பெருகியது. ‘வருகிறேனப்பா!’ என்று சொல்லத்தான் நினைத்தாள். ஆனால், அது பொய்யாகத் தோன்றியது. எங்கே, எப்போது போய்ச்சேரப்போகிறோம் என்பதே தெரியவில்லை! திரும்பி வருவதைப்பற்றி இப்போது என்ன பேச்சு! வாழ்நாளில் எப்போதாவது மீண்டும் இங்கு வரக்கூடிய சந்தர்ப்பம் வாய்த்தாலும், அச்சமயம் தந்தை உயிரோடு இருப்பாரா? அவள் விட்டுப்போனபடியே சுற்றுச்சூழல் எல்லாம் இருக்குமா? தந்தையை நோக்கி அவளை ஆட்டிய கரத்தில் அரசர் அளித்துச் சென்ற சாஸனம் இருந்தது. அம்பலவாணரும், மற்றொன்றை தன் கையில் பிடித்தபடி, ஆட்டினார். தான் பெற்ற செல்வங்கள் கண்ணுக்கு மறையும்வரை பார்த்திருந்துவிட்டு, கனத்த இதயத்துடன் திரும்பினார். எப்போதும்போல, பற்பல சிற்பங்கள் அவரை வரவேற்றன. ரத்தமும், சதையுமான உறவுகள் – அநேகமாக நிரந்தரமாகவே – பிரிந்தபின், பல்லாண்டுகளாகத் தன் கரங்களால் பக்தி சிரத்தையுடன் உருவாக்கப்பட்டவை வெறும் கற்களாகத்தான் தென்பட்டன. அயர்ச்சியுடன், அப்படியே தரையில் உட்கார்ந்தார் சிற்பி அம்பலவாணர். 2 மலேசியத் தலைநகரமான கோலாலம்பூர், 2002 அன்று ஞாயிற்றுக்கிழமை. சாமிநாதனின் வீட்டு வாசலில் தினமும் காலையில் வழக்கமாக பத்திரிகை போடுபவர், THE NEW STRAITS TIMES , THE STAR ஆகிய இரண்டு ஆங்கில தினசரிகளுடன், தமிழ் நேசன், மக்கள் ஓசை, மலேசிய நண்பன் என்று பல நாளேடுகளையும் ரப்பர் பேண்டால்ஒன்றாகக் கட்டிப் போட்டிருந்தார். “இந்தாங்கப்பா! பேப்பர்!” என்றபடி அவர் சாய்ந்து அமர்ந்திருந்த பிரம்பு நாற்காலியின் அருகே இருந்த மேசைமீது அந்தக் கட்டை வைத்தாள் மீனா. அடுத்த பல மணி நேரத்திற்கு அவர் அசையமாட்டார் என்பது அவள் அறிந்திருந்ததுதான். ஆகவே, “மொதல்ல பசியாறிடுங்களேன். இன்னிக்கு விடுமுறை ஸ்பெஷல் – இட்லி!” என்று வேண்டுகோள் விடுத்தாள். “என்ன சட்னிடா?” முதல் பக்கத்தில் கொட்டையாகப் போட்டிருந்த தலைப்பைப் பார்த்தபடியே கேட்டார். “புதினா போட்ட தேங்கா சட்னி. ஒங்களுக்குப் பிடிச்ச மாதிரி கொஞ்சம் துவரம்பருப்பையும் வறுத்துப் போட்டிருக்கேன். கூடவே, வெங்காய சாம்பார்!” நாவில் நீர் ஊற, “நிம்மதியா ஒரு மனுஷனை படிக்க விட மாட்டியே!” என்று விளையாட்டாக அவளைத் திட்டியபடி எழுந்தார் சாமிநாதன். இரண்டு வருடங்களுக்குமுன் தாயை ஒரு விபத்தில் இழந்துவிட்டபின், மீனா குடும்பப் பொறுப்பை வலிய ஏற்றுக்கொண்டிருந்தாள். ‘ஸ்கூலுக்குப் போற பொண்ணு நீ! இந்த வயசில எதுக்கும்மா வீட்டு வேலையையும் இழுத்து விட்டுக்கறே?’ என்று ஆரம்பத்தில் சாமிநாதன் ஆட்சேபித்துப் பார்த்தார். ஆனால், அம்மாவிடமும், பாட்டியிடமும் சமையலைக் கற்றிருந்தவளுக்கு பிறரது கைப்பக்குவம் பிடித்தமானதாக இருக்கவில்லை. வாரத்திற்கு ஒரு முறை வந்து வீட்டைச் சுத்தம் செய்ய மட்டும் ஒரு இந்தோனீசியன் ‘மெய்ட்’ போதும் என்று கண்டிப்பாகச் சொல்லிவிட்டாள். “என்னப்பா? ஒரு வாய் போட்டுக்கிட்டு, அப்படியே ஏதோ யோசிச்சுக்கிட்டு இருக்கீங்க? உப்பு அதிகமாப் போட்டுட்டேனா?” “இல்லேடா. ரொம்ப நல்லா இருக்கு. எவனுக்குக் குடுத்து வெச்சிருக்கோ!” கலீரென்று சிரித்தாள் மகள். “நான் இந்த வருஷம்தான் ஆறாவது ஃபார்ம் நுழைஞ்சிருக்கேன். இன்னும் யுனிவர்சிடி பாக்கி இருக்கு. அப்புறம் ரெண்டு வருஷமாவது வேலை பாத்து, கொஞ்சம் காசு சேத்துக்கணும்”. “எதுக்கு? வரதட்சணையா?” குறும்பாகக் கேட்டார் தந்தை. “உதை! என்னைமாதிரி அழகான, நிறைகுடமான, புத்திசாலியான ஒருத்தியை கல்யாணம் பண்ணிக்க, வர்றவன்தான் காசு குடுக்கணும். அவனுக்கு நான் எதுக்கு குடுக்கறது?” என்று வீராவேசமாகப் பேசியவள், “அதுக்கில்லப்பா. நான் வாழ்க்கையில செட்டில் ஆறதுக்கு முந்தி, நாலு எடத்தைப்போய் பாத்துட்டு வரப்போறேன்! ஒங்க மகளாப் பிறந்துட்டு, நான் மட்டும் கிணத்துத் தவளையா இருக்கலாமா?” அவருக்குப் பெருமையாக இருந்தது. இப்படி வாய்விட்டுப் பாராட்டக்கூடியவர் எத்தனை பேர்! இட்லியைப் பிய்த்து, சாம்பாரில் உருட்டியபடி, “நான் கூடிய சீக்கிரம் இந்தியா போகப்போறேன், மீனா!” என்று தெரிவித்தார். “மியூசியத்தில அனுப்பறாங்களா?” “ஊகும். என்னோட சொந்த செலவிலதான். எங்களுக்கு நிறைய பழங்கால சாமான்கள் கிடைக்குதில்ல? எல்லாத்தையும் காட்சிப்பொருளா வைக்க முடியறதுமில்ல. அப்படி உள்ளே போட்டு வெச்சிருந்த ஒண்ணுதான் என் ஆர்வத்தைத் தூண்டி விட்டுட்டுச்சு”. “நீங்கதான் இப்போ என் ஆர்வத்தைத் தூண்டறீங்க!” குற்றம் சொல்வதுபோல் கூறினாள் மகள். “அப்படி என்ன ரகசியம்? எனக்கும்தான் சொல்றது!” “ரகசியம் எல்லாம் இல்லடா. ஒரு செம்புத்தகடு. சுமார் ஆயிரம் வருஷத்துக்குமேல இருக்கும்”. “அவ்வளவுதானா!” மீனாவின் சுவாரசியம் எழுந்த வேகத்திலேயே வடிந்தது. ஓட்டை உடைசலான களிமண், பீங்கான் சாமான்கள், மூளியான கருங்கல் சிலைகள், ஏதோ பிராணியின் விறைத்த, உயிரற்ற உடல் – இப்படி உருப்படியாக இல்லாத பொருட்களில் இந்த அப்பாவுக்கு என்னதான் ஆர்வமோ என்று அலுப்பு வந்தது அவளுக்கு. “என்ன மீனா, ’அவ்வளவுதானா?’ன்னு அலட்சியமா கேட்டுட்டே? அதுமேலே கிரந்த மொழியில, அதாவது சம்ஸ்கிருதத்திலேயும், கீழே தமிழிலேயும் எழுத்துக்கள் பொறிச்சிருக்கு”. “ஆச்சரியமா இருக்கே!” மரியாதையை உத்தேசித்துப் பேச்சை வளர்த்தினாள். “அந்தக் காலத்தில ரெண்டுமே புழக்கத்தில இருந்திச்சில்ல, அதான்! இப்படித்தான் எழுதுவாங்க!” “எங்கே இருந்து கிடைச்சுச்சாம்?” “கெடாவிலதான்!” “அப்போ, ஆயிரம் வருஷத்துக்கு முந்தி மலாயாவில இந்தியர்கள் இருந்திருக்காங்க. இல்லப்பா?” அவள் குரலில் எதிர்பார்ப்பு தெரிந்தது. “அதுக்கு முன்னாலேயே! சோழர்களுக்கு முன்னாலே பல்லவ ஆட்சி நடந்தப்போ, கெடாவில இருந்திருக்காங்க என்கிறதுக்கு நிறைய அத்தாட்சி இருக்கே! அவங்க காலத்தில பாறைகளிலும், கல்தூணிலேயும் எழுதிவெச்ச எழுத்துக்களை இன்னிக்கும் பாக்கலாம்!” “நீங்க பாத்திருக்கீங்களாப்பா?” சாமிநாதன் லேசாகச் சிரித்தார். “என்னோட வேலையே அதுதானேம்மா! எத்தனை தடவை அங்க, மியூசியத்துக்கு, போயிருக்கேன்! அங்கே ஆயிரம் வருஷத்துக்கு முந்தி கட்டின கோயிலுங்ககூட இருக்கு!” பெருமையுடன் ஒலித்தது அவர் குரல். சரித்திர பூர்வமான சுவடுகளால் நாம் அறியவேண்டுவது எவ்வளவோ இருக்க, தொலைகாட்சிமுன் அமர்ந்து, அல்லது பேரங்காடிகளுக்குச் சென்று, எந்தவிதக் குறிக்கோளுமின்றி வாங்குவதற்காக வைத்திருக்கும் பொருட்களையும், அவற்றை வாங்க வந்திருப்பவர்களையும் நோட்டம் இட்டபடி பொழுதைக் கழிக்கிறவர்கள் – இவ்வாறு உபயோகமற்ற வகையில் நேரத்தைக் கழிப்பவர்கள்மேல் இரக்கம் சுரந்தது. எரிச்சலும் வந்தது சாமிநாதனுக்கு. “அந்த இடத்துக்கெல்லாம் என்னையும் கூட்டிட்டுப் போகணும்னு ஒங்களுக்குத் தோணல, பாத்தீங்களா?” குற்றம் சாட்டுவதுபோல பேசினாள் மீனா. “நானா மாட்டேன்னு சொல்றேன்? நீதான் டான்ஸ் கிளாஸ், டெஸ்டு, பரீட்சைன்னு ஏதாவது சாக்கு சொல்வே!” “இப்ப எனக்கு லீவுதானே? போகலாமா? நான் ரெடி!” “கோயில்னு நான் சொன்னதை வெச்சு, தடபுடலா ஏதோ கோபுரம், கர்ப்பக்கிரகம், பூசை எல்லாம் இருக்கும்னு நினைக்காதே. இடிபட்டு, சுவர், பிரகாரம் மட்டும்தான் இருக்கு. நான் சொல்றது புஜாங் பள்ளத்தாக்கில! கூரை கிடையாது. மூலஸ்தானத்தில விக்கிரகம்கூட இருக்காது,” என்று எச்சரித்தார். “தொல்பொருட்காட்சிசாலைன்னு சொன்னாலே பழங்காலத்து இடங்களும், சாமான்களும்தானே?” என்று அலட்சியமாக கையை வீசினாள் மீனா. “அது என்னப்பா பேரு, புஜாங்? இப்படிக் கூடவா ஒரு எடத்துக்கு பேர் வைப்பாங்க?” எதிர்பாராது விடுமுறைக்கு வெளியூர் போகப்போகும் மகிழ்ச்சியில் கலகலவென்று சிரித்தாள் . மலாய் மொழியில் ‘புஜாங்’ என்ற வார்த்தையின் அர்த்தம் பிரம்மச்சாரி என்று அவள் படித்திருந்தாள். “கெடாவுக்குப் போற வழியில, நாலு மணி நேரம், பேச ஏதாவது விஷயம் வேணுமில்ல? அப்போ சொல்றேன். நீ மொதல்ல சாப்பிடு. இன்னிக்கு இட்லி மல்லிகைப்பூ மாதிரி மெத்துமெத்துன்னு இருக்கு! சட்னியும், சாம்பாரும் ஃபர்ஸ்ட் கிளாஸ்!” என்று மனமாரப் பாராட்டியவர், “மிச்சம் இருந்தா, கையில கட்டிக்க. வடக்கே, சுங்கை பட்டாணிக்குப் போற வழியில சாப்பிட்டுக்கலாம். நான் போய் காடியைச் செக் செய்துட்டு வரேன்!” என்று எழுந்தார். “சுங்கை பட்டாணியா!” “ஆமா. கெடா மாநிலத்திலதானே இருக்கு! நீ அந்த ஊருக்குப் போனதே இல்ல, இல்லே? பினாங்கு தாண்டிப் போகணும். நெடுஞ்சாலையில பதினஞ்சே நிமிஷத்தில போயிடலாம். அப்புறம், புஜாங் பள்ளத்தாக்கு போய் சேர, சுங்கை பட்டாணிக்கு மேற்கே 26 கிலோமீட்டர், ’மெர்போக்’ங்கிற கிராமத்துக்குப் போகணும்!” என்று விவரித்தவர், “நான் போய் எல்லா பேப்பரையும் படிச்சு முடிக்கிறேன். நீ சாப்பிடுடா!” என்ற உபசரணையுடன், அந்த உரையாடலுக்கு ஒரு முற்றுப்புள்ளி வைத்தார். “ஒரு வாக்கியம் விடாம படிச்சுக்கிட்டு இருக்காதீங்கப்பா. பரீட்சையா எழுதப்போறீங்க?” என்ற மீனாவின் குரல் பேப்பரைக் கையில் எடுத்தவரின் காதில் விழுந்தது. “வெயிலுக்கு முன்னால கிளம்பணும்!” புன்னகைத்தபடி, அதை இருந்த இடத்திலேயே வைத்துவிட்டு, வீட்டுக்கு வெளியே நிற்க வைத்திருந்த புரோடான் வாஜா காரை நோக்கிப் போனார். “அப்பா! பனியனோடேயே போறீங்க!” மீனா வாயில் திணித்திருந்த இட்லியுடன் கத்தினாள். “எல்லாம் இந்த லட்சணம் போதும்! எப்படியும், வந்து குளிக்கணும்! நான் வர்றதுக்குள்ளே நீ ஒன் துணிமணிங்களை எடுத்து வெச்சுக்க! அதோட பேப்பரையும் எடுத்து வைடா! மறந்துடாதே!” 3 கட்டுமரத்தில் “என்ன, ஆழ்ந்த யோசனையில் இருக்கிறாய்? அப்பா நினைவா, அல்லது அரசரைவிட்டுத் தொலைதூரத்துக்குப் பயணம் செல்கிறோமே என்ற கவலையா?” கண்களில் குறும்புடன் கேட்ட தம்பி ஆனந்தரங்கனை முறைத்துப் பார்த்தாள் வசந்தபைரவி. “இரண்டுமில்லை,” என்றாள் சுருக்கமாக. ‘இது என்ன வயதுக்கு மீறிய பேச்சு!’ என்று எச்சரிப்பதுபோல் இருந்தது அவள் தொனி. அயர்ந்துவிடவில்லை அந்த பதின்மூன்று வயதுப் பையன். “இந்தப் பயணம் ஒரு விதத்திலே நல்லதற்குத்தான் என்று எனக்குப் படுகிறது!” அவள் ஆர்வத்தைத் தூண்ட அது போதுமானதாக இருந்தது. தலையை அவன் பக்கம் மெல்லத் திருப்பி, கேள்விக்குறியுடன் புருவத்தைத் தூக்கினாள். “நீ நம் அரசர்மேல் பைத்தியமாக இருந்தாய். உன் அனுபவமின்மையைத் தனது சுயநலத்துக்காகப் பயன்படுத்திக்கொண்டார் அவரும். அப்பாவோ, அரசர்கீழ் வேலை பார்ப்பவர். ஒன்றும் செய்ய அவரால் இயலவில்லை!” “ரங்கா!” கத்தினாள் அக்காள். “உளறாதே! உனக்கு என்ன புரியும் இந்த சமாசாரம் எல்லாம்? அரசர் என்னை ஒன்றும் செய்துவிடவில்லை. எங்கள் நட்பு புனிதமானது, தெரிந்துகொள்!” என்று சீறினாள். “உன்னைப் பைத்தியமாக அடித்திருக்கிறாரே! நீ அவரை நேசித்ததே அவருக்கு யானை பலம்! உன் மனதைக் கெடுத்துவிட்டு, நாட்டைக் காக்க, பலப்படுத்த என்று சாக்குபோக்கு கூறிவிட்டு, எவளாவது அறிவுசூன்யமான அரசகுமாரியை மணந்து, அவளைப் பட்டமகிஷியாக்கி இருப்பார். அவளுடைய குழந்தைகள்தாம் அவருடைய வாரிசாக இருக்க முடியும். நல்லவேளை, அந்தக் கொடுமையைப் பார்க்காது நீ தப்பினாய்!” “வாயை மூடு!” என்று கத்தினாள் வசந்தபைரவி. சாதாரணமாக, அவள் பேசுவதே குறைவு. எப்போதும், பாட்டிலோ, நாட்டிய முத்திரைகளிலோதான் அவள் மனம் லயித்திருக்கும். இப்போதோ வாரக்கணக்கில் நீடித்த தனிமை பயங்கரமாகப்பட, தம்பியிடம் பேசப்போய், அந்தச் சிறுவன் என்னென்னவோ உளறுகிறான்! தன்னையே நொந்துகொண்டாள் வசந்தபைரவி. “இதையெல்லாம் நான் சொல்லவில்லை. அப்பாதான் புறப்படும்போது என்னிடம் சொல்லி அனுப்பினார்!” “அப்பா ஒன்றும் அரசரைப்பற்றித் தரக்குறைவாகப் பேசி இருக்க மாட்டார்!” சீறினாள் வசந்தபைரவி. “உன்னை இனி நான்தான் பொறுப்பாகப் பார்த்துக்கொள்ள வேண்டும் என்று சொல்லி அனுப்பினார், தெரியுமா? ஏன் அப்படிச் சொல்லி இருப்பாராம்?” அழுகைக்குரலில் சொன்ன ஆனந்தரங்கனைப் பார்த்தால் பாவமாக இருந்தது அக்காளுக்கு. ‘தன் கூடப்பிறந்தவள்!’ என்று பெருமை கொண்டவன், இப்போது அவள் தன்மேல் வைத்திருந்த அன்புக்குப் பங்கு கேட்க மற்றொருவர் வந்துவிட்டாரே என்று ஆத்திரப்படுகிறான்! அப்பா சொல்லியதாக அவன் ஏதோ பிதற்றினாலும், அது உண்மைதான் என்று புரிந்து, வசந்தபைரவி வாளாவிருந்தாள். கூடவே, எதிர்மறையான எண்ணம் ஒன்றும் எழுந்தது. எதிர்காலத்தில் நடக்கப்போகும் எல்லாவற்றையும் யோசித்த பின்னரா காதல் வருகிறது? ஒவ்வொரு சாயங்காலமும் தன்னைச் சந்திக்க வந்தபோதெல்லாம், ‘இவளைக் கைவிட நேரிடும், அதனால் நம் இருவர் மனமுமே துடிக்கும்’ என்றெல்லாம் அரசர் யோசித்திருப்பாரா? அரசரும் தன்னைப்போலவே வாடுகிறாரா, அல்லது யுத்த காலமாதலால், நாட்டைப்பற்றி வேறு வழியில் அவரது சிந்தனை போய்விட்டதா என்று நினைத்துப்பார்த்தாள். அவரும் தன்னையே நினைத்து உருகுவதாக கற்பனை செய்துகொண்டாள். சற்று ஆறுதலாக இருந்தது. அக்காள் மனத்தை நோக அடித்துவிட்டோமே என்ற பச்சாதாபத்துடன், “வசந்தா!” என்று தயங்கியபடி அழைத்தான் ஆனந்தரங்கன். “என்னை இனிமேல் அப்படிக் கூப்பிடாதே, ரங்கா! நான் இனி வெறும் பைரவிதான்!” அவள் குரல் வரண்டிருந்தது தண்ணீர் பஞ்சத்தினால் அல்ல. ஏதோ கேட்கவந்தவன், சட்டென வாயை மூடிக்கொண்டான். தன் வாழ்வில் இனி என்றும் வசந்தம் வீசாது என்று சூசகமாக அவள் உணர்த்தியது அவனுக்கு மட்டும் புரியாதா, என்ன! அக்காளுடன் சமாதானமாகப் போகும் முயற்சியில், “நாம் கடலில் பிரயாணம் செய்ய ஆரம்பித்து நான்கு நாட்கள் இருக்குமா?” என்று வாய்க்கு வந்ததைக் கேட்டான். அவன் எதிர்பார்த்தபடியே, அவளுடைய முகவாட்டம் விரைவில் மறைந்தது. “என்ன பேசுகிறாய், நீ! நாம் புறப்பட்ட அன்று அமாவாசை. இப்போதோ, நிலா பாதியாக வளர்ந்துவிட்டதே! நேற்றிரவு பார்க்கவில்லை, நீ!” என்று கோபித்தாள். “அவ்வளவு நாட்களா ஆகிவிட்டன!” வலிய வரவழைத்துக்கொண்ட வியப்பைக் காட்டினான். “ஆமாம். இன்னும் எத்தனை நாட்கள் இப்படி கடலையும், அதில் துள்ளும் மீன்களையும் பார்த்துக் காலத்தைக் கழிப்பதோ! இந்தக் கட்டுமரம் நம்மை எங்கே கொண்டுபோய் விடப்போகிறதோ என்று பெருங்கவலையாக இருக்கிறது, ரங்கா! நீயோ, எந்தச் சிந்தனையும் இல்லாமல் பாடிக்கொண்டிருக்கிறாய், இல்லை ஏதாவது வரைந்துகொண்டிருக்கிறாய்!” “நடப்பதை மாற்ற முடியாது என்று தெரிந்தபின், அதை அமைதியாக ஏற்பதுதான் விவேகம், வசந்தா!” அவள் முறைத்தாள். “சரி. பைரவி”. சொல்லி முடிப்பதற்குள்ளே அவனுக்குச் சிரிப்பு பொத்துக்கொண்டு வந்தது. “பெரி..ய மனுஷன் நீ! எனக்குப் புத்தி சொல்கிறாயோ? அது போகட்டும். நாம் எந்தத் திசையில் போய்க்கொண்டிருக்கிறோம் என்பதாவது உனக்குத் தெரிகிறதா?” பைரவி கேட்டாள். “ஏன் தெரியாமல்? சூரியன் காலையில் உதித்தபோதே கணக்குப் பண்ணி வைத்துவிட்டேன். தென்கிழக்குத் திசையில் போகிறது இந்தக் கட்டுமரம்”. “நம் பயணம் எங்கு போய் முடியப்போகிறதோ, அந்த ஈசனுக்குத்தான் வெளிச்சம்! போகும் இடத்தில் நாம் பேசும் மொழி யாருக்காவது புரியுமா?” “ஒன்று மாற்றி ஒன்றாக, நன்றாகத்தான் கவலைப்பட்டாய், போ! நாம் பேசுவது புரியாவிட்டால், சைகையால் உணர்த்தத்தான் நீ இருக்கிறாயே! இல்லாவிட்டால், நான் படம் வரைந்து காட்டிவிட்டுப் போகிறேன்!” “அதிகம் முன்னேற்றம் அடையாத இடங்களில் சிலவற்றில், கொடிய விலங்குகளோடு, மனிதர்களையே கொன்று சாப்பிடும் காட்டுமிராண்டிகளும் இருப்பார்களாமே! அப்படி ஒன்றும் இல்லாமல் இருக்கவேண்டும் நான் சதா இறைவனைப் பிரார்த்திக்கொண்டு இருக்கிறேன்!” பயத்தில், ஆனந்தரங்கனது கண்கள் மேலும் அகன்றன. “மனிதர்களைச் சாப்பிடும் மனிதர்கள்கூட உண்டா இவ்வுலகத்தில்? அப்படியெல்லாம் நடக்குமா?” “ஏன் நடக்காது? தாய்நாட்டை விட்டு வெளியேறிவிட்டால், அப்புறம் நாம் இரண்டாந்தாரப் பிரஜைகள்தாம். சுதந்திரத்தையோ, பெயர், புகழையோ எதிர்பார்க்க முடியாது. கௌரவமாக மீதி நாட்களை ஓட்டினாலே பெரிய சமாசாரம்! அப்பா ஏன் நம்முடன் வர மறுத்தார் என்று நினைக்கிறாய்?” என்ற பைரவி, “நேற்று கடலிலிருந்து துள்ளிய மீன் நம் காலடியில் விழுந்து, எப்படித் துடித்தது!” என்று எங்கோ தாவினாள். “நல்லவேளை, உடனே அதை மீண்டும் தண்ணீரில் போட்டேன்!” குழந்தைபோல் மகிழ்ச்சியுடன் கூவினான் ஆனந்தரங்கன். “அந்த மீனைப் போலத்தானே எல்லா உயிர்களும்? அவரவர் இருக்குமிடம்தான் சொர்க்கம்!” “அதைச் சொல்லு! அரச கட்டளை வேறு!” பைரவிக்கு என்னவோபோல் இருந்தது. என்னமோ, கொலைக்குற்றம் செய்து, தண்டிக்கப்பட்டு, நாடுகடத்தப்பட்டதுபோல் அல்லவா பேசுகிறான் இந்தச் சிறுவன் என்று ஆத்திரப்பட்டாள். ஆனால் தான் ஏதாவது சொல்லப்போய், அரசருக்குப் பரிந்து பேசுவதாக அவன் தப்பாக எண்ணிவிட்டால் என்ன செய்வது என்று பேசாதிருந்தாள். “ஏதாவது சாப்பிடுகிறாயா, வசந்தா? ம்.. பைரவி?” அக்காள் புன்னகைத்தாள். வயதுக்குமீறி பேசிவிட்டு, அதன்பின் வருந்தி, சிறுகுழந்தையாகவே மாறிவிடுவது இவன் குணம்! “இப்போது வேண்டாம். சாப்பிடுவதையும், தூங்குவதையும் விட்டால் வேறு என்ன இருக்கிறது இங்கு! மாறுதலுக்காக ஒரு பாட்டு இயற்றலாம் என்று உத்தேசித்திருக்கிறேன். யாரோ என் காதில் பாடுவதுபோல் இருக்கிறது,” அவள் மோனநிலையிலிருந்து பேசுவதுபோல் இருந்தது. “ஏண்டா ரங்கா? நாம் நிச்சயமாக தென்கிழக்குத் திசையில்தானே போய்க்கொண்டிருக்கிறோம்?” என்று மீண்டும் கேட்டு, அவன் அதை உறுதிப்படுத்தியதும், கண்களை மூடிக்கொண்டாள். உதடுகள் மூடியே இருந்தாலும், ராகம் வெளிப்பட்டது. “மத்யம ஸ்ருதி! குந்தலவராளியா? ஆகா!” என்ற தம்பியிடம், அவசியமில்லாவிட்டாலும், தலையை மேலும், கீழுமாக அசைத்து ஆமோதிப்பைத் தெரிவித்தாள். கவனம் பாட்டிலேயே நிலைத்திருந்தது. சற்று நேரத்திற்குப்பின், “வெண்மை உந்தன் நிறமே – சந்திரா!” என்று குயிலைப் பழிக்கும் குரலில் வசந்தபைரவி மெல்லப் பாட ஆரம்பித்தாள். பாட்டிற்கேற்ப தன் விரல்களால் கட்டுமரத்தின் பக்கவாட்டில் மூன்று அட்சரங்களைக் கொண்ட ரூபக தாளம் போட ஆரம்பித்தான் ஆனந்தரங்கன். அடுத்த சில மணி நேரம் அங்கு இசையைத் தவிர வேறு ஒலி எதுவும் இல்லை. அவளுடைய வந்தனத்தை ஏற்பதுபோல, பிறைச்சந்திரன் மெள்ள மெள்ள வெளியே வந்தது. வானத்தை நோக்கித் தன் தலையைத் தூக்கி, கூடவே வரும் அந்த நிலவைப் பார்த்துக்கொண்டே மீண்டும், மீண்டும் அப்போதுதான் தன்னால் இயற்றப்பட்டிருந்த பாடலைப் பாடி, அதனை மனனம் செய்தாள் பைரவி. அதே நிலாதான் அரசரது கண்ணிலும் பட்டுக்கொண்டிருக்கும் என்ற நினைவே அவளுக்கு ஆறுதல் அளிப்பதாக இருந்தது. 4 வட மலேசியப் பயணம் “அப்பா! புஜாங் பள்ளத்தாக்குங்கிற பேரு எப்படி வந்திச்சுன்னு சொல்றதாச் சொல்லி இருக்கீங்க!” மிரட்டல் குரலில் நினைவுபடுத்தினாள் மீனா. காலை ஒன்பது மணிக்கு வடக்கு மலேசியாவுக்குப் புறப்பட்டிருந்தனர் சாமிநாதனும், மீனாவும். இரண்டு மணி நேரப் பிரயாணத்திற்குப் பிறகு, இயற்கையின் உபாதை ஏற்பட்டது. நெடுஞ்சாலையில் பயணிக்கையில் ஓய்வெடுக்கவென ‘தாப்பா’ என்ற இடத்தில், பக்கவாட்டில் நீண்ட கட்டிடத்தின் முன்னால் காரை நிறுத்தினார் சாமிநாதன். கையுடன் கொண்டு வந்திருந்த இட்லிகளைத் தின்றுவிட்டு, ஒரு ‘தமிழாள்’ கடையில் மிக இனிப்பான தேனீரும் அருந்திவிட்டு, சற்று சிரம பரிகாரம் செய்துகொண்டார்கள். சாப்பாடுக்கடைகளுக்குப் பின்னால், சற்று தொலைவில், வரிசையாக அமைக்கப்பட்டிருந்த கடைகளில் ரம்புத்தான், மங்குஸ்தான், கொட்டையில்லா கொய்யாப்பழம், மாம்பழக்கீற்றுகள் என்று நிறைய உள்நாட்டுப் பழங்களை வாங்கிக்கொண்டார்கள். அருகிலிருந்த சிறிய விளையாட்டு மைதானத்தில், பிரயாண அலுப்பின் தாக்கம் தீர, குழந்தைகள் கத்தியபடி ஊஞ்சலிலும், சறுக்கு மரங்களிலும் விளையாடிக்கொண்டிருந்ததை சில வினாடிகள் ரசித்துப் பார்த்துவிட்டு, பிரயாணத்தைத் தொடர்ந்தபோது, தெம்புடன், பழைய உற்சாகமும் கலந்து வந்திருந்தது. “அதுவா! சம்ஸ்கிருதத்திலே ‘புஜங்க’ என்கிற வார்த்தைக்கு கடல்நாகம்னு அர்த்தம். அந்தக் காலத்தில தென் கிழக்கு ஆசியாவிலேருந்து கடல் மார்க்கமா சீனாவுக்கும், மத்திய கிழக்கு நாடுகளுக்கும் போறதுக்காக அமைக்கப்பட்ட முதல் துறைமுகம் இதுதானாம். இப்பவும் ரொம்ப விஸ்தீரணமான இடம். வடக்கே ஜெராய் மலை, தெற்கே மூடா ஆறு. அந்த ஜெராய் மலையோட உயரம் என்ன தெரியுமா? 1,380 மீட்டர்! நடுவில, 224 கிலோமீட்டர் சதுரத்தில புஜாங் பள்ளத்தாக்கு! அப்போ நீயே பாத்துக்கயேன்!” “அடேயப்பா! இவ்வளவு சமாசாரங்களை விரல் நுனியில வெச்சிருக்கீங்களே!” “என்னோட வேலைடா!” என்று பெருமையுடன் புன்னகைத்தார் சாமிநாதன். “ஒரே நாளில எல்லாத்தையும் பாத்து முடிக்க முடியாது! செத்துடுவேன்!” என்று அயர்ந்தாள் மீனா. “நாம்ப போற எடத்துக்குக் கிட்டேயே தங்கற வசதி இருக்கு. தங்கினாப் போச்சு!” என்றவர், புஜாங் பள்ளத்தாக்கிலிருந்த தொல்பொருள் காட்சிசாலையைப்பற்றி விவரிக்க ஆரம்பித்தார்: “கணேஷான்னு கீழே பேர் போட்ட கருங்கல் பிள்ளையார், துர்க்கை, அப்புறம்.., சிவப்பு மண்ணிலேயும், வெண்கலத்திலேயும் புத்தர் சிலைங்கள்ளாம் நிறைய இருக்கு. 1,500 வருஷத்துக்கு முந்தி புழங்கின சாமானுங்க, கடவுள் சிலையெல்லாம் இங்கே தோண்டி எடுத்திருக்காங்க. இன்னிக்கும் கம்பத்துக்குள்ளே (kampong, அருகிலிருக்கக்கூடிய மலாய் கிராமம்) நுழைஞ்சு போனா என்னென்னமோ இருக்கும்னு சொல்றாங்க. ஆனா, அங்கேயெல்லாம் சீனவங்க செம்பனைத் தோட்டங்களா இருக்கு!” என்றவாறு தனது விசாலமான அறிவை வெளிக்காட்டிக்கொண்டார். “எல்லாத்தையும் இப்பவே சொல்லிடாதீங்க. கொஞ்சம் சஸ்பென்ஸ் வேணாம்?” என்று விளையாட்டாய் கூறியவள், “யாருப்பா இந்த எடத்தைக் கண்டுபிடிச்ச புண்ணியவான்?” என்று ஆவலுடன் கேட்டாள் மீனா. “குவாட்ரிக்-வேல்ஸ்! ஆங்கிலேய தொல்பொருள் ஆராய்ச்சியாளர்! அவர்தான் மொதமொதல்லே இங்க இருக்கிற பழங்காலத்துப் பொருள்களைத் தோண்டி எடுத்திருக்கிறதா குறிப்புங்க சொல்லுது. எப்போ தெரியுமா? 1936-லே. 2,000 வருஷத்துக்கு முன்னால இருந்த பீங்கான் சாமானுங்ககூட இங்க கிடைச்சிருக்கு”. “நிஜம்மா சொல்லுங்கப்பா! இவ்வளவு விஷயமும் ஒங்களுக்கு முன்னேயே தெரியுமா?” என்று சந்தேகத்துடன், கண்களைக் குறுக்கிக்கொண்டு கேட்ட மகளைப் பார்த்து, அட்டகாசமாகச் சிரித்தார் தந்தை. “ரொம்ப மோசம்டா நீ! நேத்து ராத்திரி பூராவும் ஹோம் ஒர்க் பண்ணினேன்! எவ்வளவு தேடித் தேடி, எல்லாத்தையும் கண்டுபிடிச்சு, உருப்போட்டேன், தெரியுமா? எல்லாம் ஒன்னை பிரமிக்க வைக்கணும்னுதான்! ஆனா, நீ கண்டுபிடிச்சுட்டே!” மீனாவும் சிரித்தாள். “சரி. பிரமிச்சுட்டேன். ஏம்பா? பீங்கான், களிமண் சாமான் எல்லாம் எடுக்கறப்போ உடைஞ்சிருக்கும், அப்புறம் ஒட்ட வைப்பாங்க, இல்லப்பா?” “ஆமா. சில சமயம், உடைஞ்ச சாமான் முழுசா கிடைக்காது. அப்படியே ஓட்டையா விட்டுவெச்சிருப்பாங்க. விரிசல்கூடத் தெரியும்”. “மலாயாவில பீங்கானில பாத்திரம் பண்ணினாங்களா, என்ன?” மீனாவின் பள்ளிக்கூட சரித்திரப்பாடம் சில நூறு ஆண்டுகளுக்கு முன்புதான் ஆரம்பமாகி இருந்தது. மலாயாவுக்கு இந்தியர்களோ, பிற நாட்டவர்களோ வியாபார நிமித்தம் வந்தார்கள், ஆண்டார்கள் என்பதெல்லாம் ஏனோ மறைக்கப்பட்டிருந்தது. “இல்ல, இல்ல,” என்றபடி அலட்சியமாகக் கையை வீசினார். “சீனாவிலிருந்து வந்தது. அப்போ இங்க சுமத்ராவோட ஸ்ரீவிஜயா ஆட்சி நடந்துக்கிட்டு இருந்திச்சு. அரேபியா, கம்போஜா, பாரசீகம், இந்தியா, சீனா எல்லா நாடுகளோடேயும் வாணிபம் நடந்திச்சே!” “சீனாக்காரங்களும் அந்தக் காலத்திலேயே இங்க இருந்தாங்கன்னு சொல்லுங்க!” “கி.பி. 671-லேயே சீன பிக்கு – அவர் பேருகூட..,” கொஞ்சம் யோசித்துவிட்டுத் தொடர்ந்தார், “ஆங்! ஞாபகம் வந்திடுச்சு. ஐட்சிங் – அதான் அவர் பேரு. அவர்கூட புஜாங் பள்ளத்தாக்குக்கு வந்திருக்காராம்”. “கோயில்னீங்களே? இந்துக் கோயிலாப்பா?” “அந்தக் காலத்தில இந்து மதம், புத்த மதம் ரெண்டு மதத்தைச் சேர்ந்தவங்களுமே இங்க வந்தாங்க மீனா. புத்த மதமும் இந்தியாவில தோன்றினதுதானே! தென்னிந்தியாவிலேருந்து மஹாயான பிரிவைச் சேர்ந்த புத்த மதத்தை அங்கேயிருந்து வந்த நம்ப வணிகர்கள் கொண்டு வந்தாங்க!” “தென்னிந்தியாவில புத்த மதமா!” அதிசயப்பட்டாள் மீனா. “குறுக்கே பேசாதே. கேளு! அதான் சொல்லிக்கிட்டிருக்கேன்ல?” என்று ஓர் ஆசிரியரைப்போல சிடுசிடுத்தவர், மீண்டும் விளக்க ஆரம்பித்தார். “இங்க நிறைய இந்துக்கோயில்களும், ஓரளவுக்கு புத்தர் கோயில்களும் கண்டுபிடிச்சு இருக்காங்க”. “இங்கேயிருந்து என்னப்பா ஏற்றுமதி பண்ணி இருப்பாங்க?” அந்த அகன்ற பாதையில் செல்லும் எல்லா கார்களுமே ஒரே திசையில் பயணித்ததால், இயந்திரம்போல இயங்க ஆரம்பித்தார்கள் காரோட்டிகள். சற்று அசிரத்தையாக இருந்தால், அனுமதிக்கப்பட்ட வேகத்தைவிட கார் அதிகமாகப் போக, காவல்துறையினரிடம் பிடிபட வேண்டும். (முன்பெல்லாம் புதர்கள் பின்னால் ஒளிந்திருப்பார்கள்!) ஆகவே, பேசினாலோ, அல்லது வானொலியில் பாட்டு கேட்டபடியே போனாலோதான் தூங்காமல், விழித்த நிலையில் இருக்கலாம், விபத்துகள் நேராது என்ற கட்டாயம். அத்துடன், பிடித்த சமாசாரம் வேறு! உற்சாகமாகப் பேசினார் சாமிநாதன். “அது என்ன அப்படிக் கேட்டுட்டே? பூமத்திய ரேகையில இருக்கிறதால, மலாயாவில வருஷம் பூராவும் மழை! அதனால அடர்த்தியான காடுங்க! காட்டில கிடைக்கிற சந்தனம், ஏலக்காய், மிளகு, கிராம்பு, பாக்கு, மஞ்சள், லவங்கப்பட்டை, அதோட தகரம் – இப்படி எத்தனை இல்லை! சித்தரத்தைகூட அயல்நாடுகளுக்குப்போயிருக்கு”. “சித்தரத்தை எதுக்குப்பா?” என்று கேட்டாள் அந்த நாகரீகமான பெண். “பாடறவங்களும், தொண்டையில எரிச்சல், இல்லே இருமல் இருக்கறவங்களும் சித்தரத்தையை இடிச்சு, தண்ணீரில கொதிக்கவெச்சு, கஷாயம் செஞ்சு குடிப்பாங்க. பாலிலேயும் கலந்துக்கலாம். தித்திப்பும், காரமுமா இருக்கும். இயற்கை மருந்து! பதிலுக்கு பட்டு, மத்த உலோகம், இன்னும் இங்கே இருந்த மக்களுக்கு என்னவெல்லாம் பிடிக்குமோ அந்த அபூர்வமான சாமான்களையெல்லாம் இங்கேயிருந்து அந்நிய நாடுங்களுக்குப் போய் வாங்கிட்டு வந்திருக்காங்க!” “அதெல்லாம் சரிதான். புஜாங் பள்ளத்தாக்குக்கு அப்படி என்னப்பா சிறப்பு? நாட்டில வேற துறைமுகமே கிடையாதா?” “கவனிச்சுக் கேக்கலியா நீ! இதுதான் நம்ப நாட்டோட மொதல் துறைமுகம்னு சொன்னேனே! அந்தக் காலத்திலே மாசக்கணக்கில கடல்ல போவாங்க இல்லியா? இப்ப மாதிரி, கப்பலுக்கு மோட்டாரா இருந்திச்சு? இந்தியாவிலேருந்து சீனா போகணும்னு வை. பருவக்காத்தை நம்பித்தான் போகணும்கிற நிலையில, ஒரே மூச்சில போயிட முடியுமா? நடுவில தங்கித்தான் ஆகணும். இது பாதுகாப்பான இடம். ’ஆனந்தமான இடம்’னு குறிச்சே வெச்சிருக்காங்க. ஆனாலும், ஒடம்போட மனசும் களைச்சுப்போயிடும். அதனால, புஜாங் பள்ளத்தாக்குக்கு வந்தவுடனே அவங்கவங்களும் புஜாங் ஆற்றை ஒட்டி சண்டி கட்டி இருக்காங்க”. “புரியறமாதிரி பேசுங்கப்பா!” செல்லமாகக் கோபித்தாள். “அது ஒண்ணுமில்லே. நாம்ப கோயில்னு சொல்றதை அந்தக் காலத்தில சண்டின்னு சொன்னாங்க. இங்க இருந்த இந்துக் கோயிலுங்க எல்லாமே சிவன், இல்லே, காளி கோயில்தான். தூண்களிலே சிவனைக் குறிக்கிற சிற்பங்கள் இப்பவும் இருக்கு,” என்றவர், “மீனா, சிவனோட சக்தி பேரு என்ன?” என்று கேட்டார். அதுவரை விரிவுரையாளர்போல் தாமே பேசி வந்தவர், திடீர் என கேள்வி ஒன்றைத் தொடுக்கவும், சற்றுத் தடுமாறிப்போனாள் மீனா. “பார்வதி?” தெரிந்த விடைதான் என்றாலும், குரல் பிசிறியது. “இன்னொரு பேரு சண்டிகாங்கிற துர்க்கை, இல்லியா?” சட்டெனப் புரிந்துகொண்டாள். “ஓ! அதனாலதான் கோயிலைச் சண்டின்னு சொன்னாங்களா?” என்றாள் உற்சாகமாக. “ஆமா. புஜாங் ஆற்றை ஒட்டி மட்டும் எழுபது சண்டிங்க இருக்கு”. “எழுபதா! அப்பாடியோவ்! அந்தக் காலத்தில அவ்வளவு பக்தி இருந்திச்சா அவங்களுக்கு?” “பக்தியோட வசதியும் இருந்திருக்கணும். நம்ப கலாசாரத்தைப் பாதுக்காக்கணும்கிற கொள்கை!” “அடேயப்பா! எத்தனை பேரோட உழைப்பு!” வியந்தாள் மீனா. “கேளேன்! மூணாவது நூற்றாண்டிலேருந்து பன்னிரண்டாவது நூற்றாண்டுவரைக்கும் வாணிபம் அமோகமா நடந்திருக்கு. அஞ்சாவது நூற்றாண்டிலேருந்து பத்தாவது நூற்றாண்டுவரைக்கும் புத்த மதத்தைச் சார்ந்தவங்களும், அதுக்குப்புறம் பதினாலாவது நூற்றாண்டுவரைக்கும் இந்துக்களும் வரப்போக இருக்க, அவங்கவங்களோட கோயில்களைக் கட்டி இருக்காங்க. சாமி கும்பிடறதுக்கு மட்டும் இல்லாம, இறந்துபோன அரச குடும்பத்தினருக்கு மரியாதை செலுத்தறதுக்கும் இந்தச் சண்டிங்கதான் தோதான இடமா இருந்திச்சு. ஆனா, அதில எட்டுதான் இப்ப அங்கே இருக்கு. அன்னிக்கு இருந்தமாதிரியே, அதே பொருள்களை வெச்சு திரும்பவும் அமைச்சிருக்காங்க”. “ஏதோ, நாம்ப பழசைப் பாத்து தெரிஞ்சுக்க இதுவாச்சும் இருக்கே!” என்று ஆறுதல் கொண்டாள் மீனா. அவளையும் தந்தையின் ஆர்வம் தொத்திக்கொண்டிருந்தது. ‘உடைந்த பொருட்களின்மீது இந்த அப்பாவுக்கு என்ன மோகமோ!’ என்று அதுவரை சலிப்புடன் எண்ணி வந்திருந்தவள், அவர் சொன்னது எல்லாவற்றையுமே கிரகித்துக்கொள்ள முடியாவிட்டாலும், அவரது ஆழ்ந்த ஆறிவை எண்ணிப் பெருமைப்பட்டாள். அப்பாவுக்காகவாவது தானும் சரித்திரத்திலும், அகழ்வாராய்ச்சியிலும் ஆர்வம் காட்ட வேண்டும் என்று நிச்சயித்துக்கொண்டாள். “பக்கத்திலேயே நீர்வீழ்ச்சி, ஆறு எல்லாம் இருக்கிற அழகான இடம்! நாம்ப குளிக்கலாம்!” கண்களில் கிறக்கத்துடன், தன்பாட்டில் பேசினார் சாமிநாதன். “அங்க போய் நின்னாலே, மனசை என்னவோ செய்யும். தரையில பசுமையான புல்லு. பெரிய, பெரிய கோயிலுங்க! நல்லவேளை, அந்தக் காலத்தில கோயிலோட அடிப்பாகத்தை கருங்கல்லாலேயோ, செங்கல்லாலேயோ கட்டினாங்க. அப்புறம், மண்டபத்துக்கு மரத்தூணுங்க. கோபுரத்துக்குப் பதிலா கூரைக்கு ஓலைதான்! அதான் நிலைக்கல!” பெரிய மனிதத் தோரணையில், “எதுவும் அழியறது இயற்கைப்பா,” என்று சமாதானப்படுத்தினாள் மீனா. “மழை, வெயில் – இப்படி எல்லாத்திலேயும் அடிபட்டா, எதுதான் நிலைக்கும்? அதுவும் நல்லதுக்குத்தான். மரங்களும், டினசோர் மாதிரியான மிருகங்களும் பூமிக்கடியில, அல்லது கடலுக்கடியில புதைஞ்சுபோனதாலதானே, பல ஆயிரம் வருஷங்களுக்கு அப்புறம் இப்போ நமக்கு பெட்ரோல் கிடைக்குது?” என்று விவரமாகப் பேசி, தனது விஞ்ஞான அறிவைக் காட்டிக்கொண்டாள். வெறும் இயற்கையின் பாதிப்பினால் மட்டும்தானா இக்கோயில்கள் அழிந்தன? இந்நாட்டில் என்ன, பூகம்பமா வருகிறது? மனிதனின் பொறாமையும், துர்ப்புத்தியும்கூட இவற்றின் அழிவுக்குக் காரணமாகி இருக்காதா? எத்தனை கருங்கல் சிலைகள், வெண்கலச் சிலைகள் மண்ணுக்கு அடியிலிருந்தும், ஆறுகளின் அடியிலிருந்தும் கிடைத்திருக்கின்றன! வேற்று மதத்தைச் சார்ந்த அந்நியப்படைகள் நாட்டுக்குள் நுழையுமுன், தத்தம் மத சம்பந்தமான பொருட்களைக் காக்கவென பக்தர்களே அவைகளை மண்ணில் புதைத்துவிட்டு, அல்லது ஆற்றில் எறிந்துவிட்டு, திரும்ப வரும்போது எடுத்துக்கொள்ளலாம் என்று பாதுகாப்பான இடங்களை நாடிப் போயிருக்க வேண்டும். ஆனால் என்ன காரணத்தினாலோ அவர்கள் திரும்பாததால், அங்கேயே பல நூற்றாண்டுகள் இந்த அரிய பொக்கிஷங்கள் கிடந்திருக்கின்றன, பற்பல இன்னும் அப்படியே கிடக்கும் என்று சாமிநாதன் உறுதியாக நம்பினார். இந்தியாவில் கனவில் சில பக்தர்களுக்கு, ‘நான் இங்கு மறைந்து கிடக்கிறேன், நீ எனக்குக் கோயில் கட்டு!’ என்று அந்த விக்கிரகங்கள் தெரிவித்ததாகத் தகவல் இருக்கிறதே! எல்லா மனிதர்களும் அடிப்படையில் ஒன்றுதான், சுகம் வந்தால் சிரிப்பு, ஏமாந்தாலோ, விரும்பியது கிடைக்காவிட்டாலோ வருத்தம், அல்லது சினம், பொறாமை. இது புரிந்து, ஒருவருக்கொருவர் ஆதரவாக இருந்து, அதனால் தாமும் முன்னேறி, பிறரையும் ஏன் வாழவைப்பதில்லை? தங்களிடமிருந்து வித்தியாசமாக இருப்பவர்களிடம் ஏனோ பயம்! அதனால் பிறர் அழிய, தாமும் அழிந்துபோக ஏதேதோ காரணங்களைக் கண்டுபிடித்து விடுகிறார்கள். அத்தியாவசியத் தேவைகளுக்கு மேலேயே இருந்தாலும் மனநிறைவு கொள்ளாது, மற்றவருடையதையும் பிடுங்கிக்கொள்ள வேண்டும் என்கிற பேராசை. அதனாலும் போர்கள் மூள்கின்றன. இந்த ரீதியில் சிந்தனை போனாலும், பழக்கத்தின் விளைவாக, காரை ஓட்டிக்கொண்டிருந்தார் சாமிநாதன். இறைவன் ஒருவன்தான் என்று அவர் உறுதியாக நம்பினார். அந்த மாபெரும் சக்தியையே பலரும் தம் அறிவு போன வழியில், வெவ்வேறு பெயரிட்டு அழைத்து, கும்பிடுகிறார்கள். தம்மைவிட மேலான அந்த சக்திக்கு அஞ்சி, பூஜை செய்து, அதனை சாந்தப்படுத்துகிறார்கள். ஆனால், பிறர் நம்பும் வழிபாட்டு முறைகளை மதிக்கத் தவறுகிறார்கள். மாறாக, அவர்களது நம்பிக்கை முறையற்றது என்பதுபோல, வழிபாட்டுத் தலங்களையும் அழிக்கிறார்கள். இன்று, நேற்றல்ல, ஆதிகாலத்திலிருந்தே மனிதனுடன் பிறந்துவிட்ட துர்க்குணம் இது. பிறர் அழிந்தால்தான் தான் வாழ முடியும் என்ற சுயநலம்! இந்த உலகத்தில் தோன்றிவிட்ட எல்லாருக்குமே பூமித்தாய் இடம் கொடுப்பாள் என்ற நம்பிக்கை ஏனோ மனிதனுக்கு இல்லாமல் போய்விட்டது என்றெல்லாம் சாமிநாதன் குமுறினார். அழகிய கோயில்கள் சின்னாபின்னமாகி விட்டதே என்ற வருத்தத்தில் எழுந்த குமுறல் அது. 5 ஆண்டு: 2002 இடம்: தென்னிந்தியாவிலுள்ள ஆயிரக்கணக்கான கிராமங்களில் ஒன்று “பாட்டி!” குழைவான குரலில் அழைத்தபடி உத்தரம் தலையை இடிக்காதபடி குனிந்து வந்தாள் தரங்கிணி. ‘பாட்டி’ என்று அழைக்கப்பட்ட பூர்ணவல்லி, கூடத்தின் உத்தரத்திலிருந்து இரும்புச்சங்கிலிகளால் தொங்கவிடப்பட்டிருந்த தேக்கு மர ஊஞ்சலில் இடுப்பு வளையாது, நிமிர்ந்து உட்கார்ந்து மெல்ல ஆடிக்கொண்டிருந்தாள். “வந்துட்டியாடிம்மா?” என்று பேத்தியை வரவேற்றாள். பிறகு, தன்போக்கில் ஏதோ ராகத்தை முனக ஆரம்பித்தாள். “நானும் வாராவாரம் வந்துண்டுதான் இருக்கேன். எனக்கும்தான் வேற போக்கிடம் ஏது!” என்று சிரித்தபடி கூறினாள் தரங்கிணி. பாட்டியைப்போலவே அவளும் நல்ல உயரமாக இருந்தாள். நடுத்தர வயதானாலும், அவளுடைய சுறுசுறுப்பும், அழகும் குறையவில்லை. அழகையே மூலதனமாகக் கொண்டு பிழைக்கவேண்டி வந்துவிட்ட கலைக்குடும்பப் பெண்களது வாரிசல்லவா அவள்! சித்திரம் தீட்டுபவராக இருந்தால், ஆத்மார்த்தமான கலைஞர்களுக்கே உரிய நீண்ட முகம், தீர்க்கமான மூக்கு, பெரிய கண்கள், சொப்பு வாய் என்று அவளை வர்ணித்திருப்பார். முழங்காலை எட்டிய அடர்த்தியான கூந்தல் ஒற்றைப் பின்னலாகத் தொங்கியது. காதருகே ஒரு சுருண்ட கத்தை. “என் காலத்திலே, என்னைமாதிரி தேவதாசிகள் கோயில்ல பட்டம் கட்டிண்டு, பக்தியோட, தனியாவே காலத்தைக் கடத்தினோம். இப்பதான் அதெல்லாம் கூடாதுன்னு சட்டமே வந்துடுத்தே! நீ எவனையாவது வளைச்சுப்போடப்போறியா, இல்ல என்னை மாதிரி இருந்துடப்போறியா?” வெண்கலத்திலான பெட்டியிலிருந்து வெற்றிலையை எடுத்து, லேசாக சுண்ணாம்பு தடவி, காம்பிலிருந்து அடிவரை நாரை இழுத்து, முனையையும் கிள்ளி எறிந்து, வாசனைப் பாக்குத்தூள் கலந்து, அதை வாயில் போட்டு, அனுபவித்து மென்றபடி பூர்ணவல்லி குசலம் விசாரித்தாள். “அசிங்கமாப் பேசாதே, பாட்டி. இந்தக் கண்ராவிக்காகத்தான் நான் கல்யாணம், கருமாதி எந்த எழவும் வேண்டாம்னு இருக்கேன்!” தான் மறக்க நினைப்பதை நினைவுபடுத்திக்கொண்டே இருக்கும் மூதாட்டிமேல் அவளுக்குக் கோபம்தான் வந்தது. “ஏண்டி? ஒனக்கென்ன அழகில்லியா? இல்ல, பாடத் தெரியாதா, ஆடத் தெரியாதா? பிள்ளை பெத்து, குளிப்பாட்டத் தெரியாதா?” “நீதான் சொன்னியே, அதெல்லாம் அந்தக் காலம்னு!” என்று சொன்ன தரங்கிணியின் குரல் கம்மி இருந்தது. “கல்யாணத்துக்கு இதெல்லாம் முக்கியமில்ல, பாட்டி. ‘ஒங்கப்பா யாரு, என்ன வேலை பாக்கறார்?’னு கேட்டா, நான் என்னத்தைச் சொல்ல? " பாட்டி சற்று நேரம் மௌனமாக இருந்தாள். பேத்தியின் வேதனை அவளுக்குப் புதிதல்ல. ’இதுதான் நமக்குக் காட்டப்பட்ட வழி,’ என்று முன்னோர்வழிப் பெண்டிர் ஏற்றுக்கொண்டதை பேத்தி ஏன் அவமானமாக நினைக்கிறாள் என்பது அந்த மூதாட்டிக்குப் புரியத்தான் இல்லை. தரங்கிணிதான் அந்த மௌனத்தைக் கலைத்தாள். “ஒங்கிட்ட சொல்றதுக்கென்ன, பாட்டி? என்னைப் பாத்து மொதல்ல மயங்கின ஒத்தன், ரெண்டுபேரும், நம்ப குடும்பத்தைப்பத்தி சாடைமாடையா விசாரிச்சுட்டு, ’ஒங்க பாட்டியும், அம்மாவும் பொட்டுக் கட்டிண்டவாளாமே!’ன்னு பயந்து ஒதுங்கிட்டான்”. “அதில என்ன கேவலம்கிறேன்! எல்லாம் கலிகாலம் படுத்தற பாடு! ஆயிரம் ஆயிரம் வருஷமா, மதிப்பும், மரியாதையுமா, கோயிலுக்குள்ளேயேதானே இருந்தோம்? சாமிக்கு முன்னாடி பாடிண்டும், ஆடிண்டும் பக்தியா இருந்தோம். நம்ப ராஜாக்களும் அதைப் புரிஞ்சுண்டு, வெளைச்சலுக்கு நெலமும், பொன்னும், மணியுமா குடுத்து, கௌரவிச்சா. நாம்ப நாட்டியம் ஆடினப்புறம்தானே சாமி பூஜையே ஆரம்பிக்கும்! சாமி ஊர்வலம் போறச்சே, அதுக்கு முன்னாடி ஆடிண்டே போற பெருமையை, அந்த சுகத்தை அனுபவிச்சுப் பாத்தாதான் புரியும்!” என்று ஏக்கத்துடன் கடந்த காலத்திய பசுமையை நினைவுகூர்ந்தாள் பூர்ணவல்லி. “அந்த மதிப்பும், மரியாதையும் இப்போ எங்க போயிடுத்து?” தெரிந்திருந்தும், வெறுப்புடன் கேட்டாள் தரங்கிணி. பூர்ணவல்லிக்குக் கோபம் வந்தது.“எல்லாம் அந்த இங்கிலீஷ்காரனால வந்த வினை! ஆத்மார்த்தமான நம்பளோட பாட்டும், டான்சும் அவனால முடியுமா? இல்ல, புரிஞ்சுக்க மூளைதான் இருந்ததா அவங்கிட்ட? என்னடா, இந்த நாட்டில இப்படி எல்லாருமே புத்திசாலியா இருக்காளேன்னு அவனுக்கு ஆங்காரம் வந்தது. பொறாமை பிடிச்சதுகள்!” என்று வைதுவிட்டு, தொடர்ந்தாள். “நம்பளை எப்படி வழிக்குக் கொண்டுவர்றதுன்னு பாத்தான். ’நீங்க பண்றதெல்லாம் அசிங்கம், தப்பு!’ன்னு சொல்லி, நம்பளைமாதிரி இருக்கறவா பிழைப்பில மண்ணை அள்ளிப்போட்டான். இவன் மட்டும் அங்க ஒண்ணு, இங்க ஒண்ணுன்னு ரெண்டு, மூணு பொண்டாட்டிகளை வெச்சிண்டிருந்தானே, அதை யாரு கேக்கறது! திடீருன்னு நெலமும், பொழைப்பும் பறிபோயிட்டா, ஒண்டிக்காரியா என்ன செய்வா ஒரு பொம்மனாட்டி?” பதிலை எதிர்பார்க்காத கேள்வி என்றாலும், அதற்குரிய பதிலை அளித்தாள் தரங்கிணி. “அழகா, இளமையா இருக்காளே, நிர்க்கதியா இருக்காளே, ஐயோ பாவம்னு நாலு தடியன்கள், ஆதரவு குடுக்கிற சாக்கில அவளை வெச்சுக்க வந்திருப்பான்கள்!” எத்தனையோ முறை பேசிய கதைதான் என்றாலும், அவர்களுக்கு அலுக்கவில்லை. தமது அவலத்தை எப்படித் துடைத்தெறிவது என்று புரியாது, தமது ஆத்திரத்தை, அது எழ காரணமாக இருந்த பிரிட்டிஷ்காரர்களை, திட்டித் தீர்க்கப்பார்த்தார்கள். எப்போதும், தொண்டைத் தண்ணீர் வற்றினதுதான் மிச்சமாக இருந்தது. குறையாத ஆத்திரமாக, வன்மமாக இருந்தது அது. பூர்ணவல்லி பாட்டி மெல்ல எழுந்தாள். “இனிமே நாம்ப பேசி, ஆகப்போறது என்ன! சரி, விடுடி,” என்று அப்போதைக்கு அந்த சமாசாரத்துக்கு முடிவு கட்டிவிட்டு, “வயத்துக்கு எதையாவது போடு, வா,” என்று அழைத்தாள். “இன்னிக்கு என்ன பண்ணியிருக்கே, அரிசி உப்புமாவா, ரவா உப்புமாவா?” கேலிக்காக கேட்கப்பட்ட கேள்வி அல்ல அது. பாட்டியால் இந்த வயதில் முடிந்தது இவ்வளவுதான் என்ற விவேகம். “ஏதோ, அதாவது பண்றேனே, இந்த வயசிலே! அடைக்கு ஊறப்போடறேன். நீ அரைச்சுக் குடு!” “சரி, பாட்டி. ஹாஸ்டல்லே தினமும் ரொட்டியும், ஜாமும்தான். நீ பேருக்கு அரை கப் அரிசி போடாதே. நான் காஞ்சுபோய் வந்திருக்கேன். ராத்திரி நாலு அடை திங்கப்போறேன்! “விளையாட்டாக சவால் விட்டாள் பேத்தி. “சனியனே! செத்துப் போயிடமாட்டியோ!” என்று அதே விளையாட்டுப் போக்குடன் அதிர்ச்சி காட்டினாள் பாட்டி. சிரித்தபடி, “தொட்டுக்க வெண்ணை, வெல்லம்! இல்லாட்டா, அவியல்! நான் தேங்கா, பச்சை மிளகா, ஜீரகம் எல்லாத்தையும் அரைச்சுத் தரேன்!” என்று சமாதானப்படுத்தினாள். “ஆஹா! ரொம்பக் கஷ்டப்பட்டு, ப்ளெண்டர்லே அரைச்சுத் தரப்போறியாக்கும்! என்னமோ, இடுப்பை வளைச்சு, அம்மியிலே அரைக்கறது மாதிரின்னா பேசறே!” சிமெண்டுத் தரையில் ஒரு சிறிய மரப்பலகைமேல் அமர்ந்தபடி, ஏற்கெனவே களைந்த அரிசியைக் கல் அரித்துக் கல்லுரலில் போட்டுக்கொண்டிருந்த தரங்கிணி, “பாட்டி! தெரியாமதான் கேக்கறேன். நான் கல்யாணம் பண்ணிண்டு கஷ்டப்படறதில ஒனக்கென்ன அவ்வளவு ஆசை?” என்று பேச்சை வளர்த்தாள். “மண்டு! கேக்கறதைப் பாரு!” பூர்ணவல்லி செல்லமாகக் கோபித்தாள். “இப்ப எனக்கு நீ, ஒனக்கு நான்னு ஆதரவா இருக்கோம். ஒனக்கும் என்னை மாதிரி– அட, ஒரு தொண்ணூறு வயசுகூட வேண்டாம், அறுபது, எழுபது வயசானா, தனியா திண்டாடப்போறியேங்கிற அஞ்ஞானம்தான்! ஆம்படையான்னு ஒருத்தன் இருக்கானோ, இல்லியோ, குழந்தை, குட்டின்னு இருந்தா, வயசான காலத்துக்கு ஆதரவா இருக்குமோன்னோ?” “அம்மாவால ஒனக்குப் பெரிசா என்ன ஆதாயம் வந்துடுத்தாம்?” “அவ தலையெழுத்து அப்படி, அல்பாயுசில போய்ச்சேர்ந்தா. ஆனா, புண்ணியவதி, ஒன்னைக் குடுத்துட்டுப் போயிருக்காளே எனக்கு! நானும் சந்தோஷமா எனக்குத் தெரிஞ்சதை எல்லாம் ஒனக்கும் சொல்லிவெச்சேன்!” நெற்றியில் வழிந்த வியர்வையையும் மீறி, தரங்கிணியின் முகத்தில் புன்னகை அரும்பியது. “அதை நான் இப்போ எங்கிட்ட பாடம் கத்துக்க வர பொண்களுக்குச் சொல்லிக்குடுக்கறேன். பாட்டி! ஒங்கிட்ட சொன்னேனோ – நம்ப தென்னாட்டுக் கோயில் எல்லாத்திலேயும் நாட்டிய சிற்பங்கள் இருக்கே, அதையெல்லாத்தையும் நான் ஆராய்ச்சி பண்ணிண்டு இருக்கேன். என்னை என்னன்னு நெனச்சே? அடுத்த வருஷம், நான் டாக்டர் தரங்கிணி!” என்று குதூகலித்தாள். அவளது பெருமையில் பங்குகொள்ளாது, “ஏம்மா தரங்கிணி! நீ தெரண்டதும், மொதமொதல்லா ஒனக்கு ஒரு பாட்டும், டான்சும் சொல்லிக் குடுத்தேனே! ஞாபகம் வெச்சிண்டு இருக்கியோன்னோ?” என்று விசாரித்தாள் பூர்ணவல்லி. “குந்தலவராளி ராகத்தில சந்திரன்மேல – அதைத்தானே கேக்கறே? சின்னக் கொழந்தைக்குக்கூட புரியறமாதிரி வார்த்தைகள். அபிநயமும் அப்பிடித்தான்! ரொம்ப சுளு! மறக்குமா, என்ன? என்னோட கிளாசில வர சின்னக்கொழந்தைகளுக்கு நான் அதைத்தான் ஆரம்பிக்கறது! சும்மா ’தை, தை’ன்னு ஆடச் சொன்னா, அதுகளுக்குப் போர் அடிச்சுப்போறது. அதுவே அர்த்தமிருக்கிற வார்த்தைகளா இருந்தா, சந்தோஷமா ஆடறா!” அவள் பெருமையைக் காதில் வாங்காது, “அரிசியை ரொம்ப மசிச்சுடாதேடி. நெறைய நல்லெண்ணை விட்டு, அடை மொறுமொறுன்னு இருந்தாத்தானே ஒனக்குப் பிடிக்கும்!” என்று, காரியத்திலும் ஒரு கண்ணை வைத்தாள் பூர்ணவல்லி. “நானும் பதினஞ்சு வயசிலேருந்து அரைச்சுண்டு வரேன். நீயும் நூறு தரம் இதையே சொல்லிட்டே!” என்றவாறு தரங்கிணி மெல்லச் சிரித்தாள். “இப்ப அந்தப் பாட்டுக்கு என்ன வந்தது, பாட்டி?” “அது ஒரு பெரிய கதை! ஆயிரம் வருஷத்துக் கதை!” என்று புதிர்போட்டபடி பாட்டி நகர்ந்தாள். “பாட்டி! கதையைச் சொல்லிட்டுப் போ!” பேத்தி கொஞ்சலாகக் கத்தினாள். “அடி போடி, போக்கத்தவளே! ஒங்கூட பேசிப் பேசி, தொண்டை தண்ணி வத்திப்போயிடறது!” என்ற குரல்தான் அவளுக்குப் பதிலாக வந்தது. (குறிப்பு: தேவதாசிகள் என்று அழைக்கப்பட்டு, கோயில் வளாகத்திலேயே வாழ்ந்த பெண்கள் அரச குடும்பத்தைச் சேர்ந்த பெண்கள், அல்லது உயர்ந்ததாகக் கருதப்பட்ட பிற சாதியைச் சேர்ந்தவர்கள். இறைபக்தி மிகுதியால், இறைவனையே மணாளனாக வரித்து, கலைவழி தொண்டு செய்ய அவர்கள் தம் வாழ்க்கையை அர்ப்பணித்துக்கொண்டனர்). 6 தென்கிழக்கு ஆசியா, 1080 அந்தக் காட்டுப் பகுதியின் எல்லா மூலைகளிலும் உளியோசை கேட்டுக்கொண்டிருந்தது. தலைமைச் சிற்பி ஆனந்தரங்கன் ஸ்தபதியார் மெதுவாக நடந்து, உருவாக்கப்பட்டுக்கொண்டிருந்த ஒவ்வொரு கற்சிலைக்குப் பின்னும் சிறிது நேரம் நின்று, உற்றுப் பார்த்துவிட்டு நகர்ந்தபடி இருந்தார். அவரது மாணாக்கர்கள் ‘குரு வேவு பார்க்கிறாரோ!’ என்ற அச்சம் சிறிதுமின்றி, தத்தம் வேலையில் கண்ணும் கருத்துமாக இருந்தனர். தனது தன்னம்பிக்கையை அவர்களிடமும் விதைத்திருந்தார் குருநாதர். ‘எனக்குத் தெரிந்ததையெல்லாம்தான் பரிபூரணமாக இவர்களுக்குக் கற்றுக்கொடுத்துவிட்டேனே! இனியும் என்ன ஐயப்பாடு!’ என்று நினைத்தாரோ, என்னவோ, நடந்தபடி இருக்கையில், அவர் முகத்தில் தென்பட்ட பெருமையுடன் கூடிய சிறு நகை மாறவேயில்லை. முதலில் அச்சத்தையும், குழப்பத்தையும் விதைக்கும் வாழ்க்கைதான் எவ்வளவு நல்ல வழிக்குக் கொண்டு வருகிறது என்ற நிறைவு ஏற்பட, பூர்த்தியாகி இருந்த லிங்க அருஉருவை இரு கரங்களையும் கூப்பி நமஸ்கரித்தார் ஸ்தபதி. நாற்பது ஆண்டுகளுக்கு முன்னர் தானும், அக்காள் வசந்தபைரவியும் கட்டுமரத்தில், காற்று போன திக்கிலெல்லாம் அலைந்து, ஒரு முறை புயலில்கூட மாட்டிக்கொண்டதை நினைவுகூர்ந்தார். அது முன்ஜன்மத்திய நினைவுபோல் மங்கலாகிப் போயிருந்தது. “அதோ பார்த்தாயா, ரங்கா! பறவைகள்!” பைரவி குதூகலித்தபோது, எதுவும் புரியாது, அவளையே நோக்கினான் ஆனந்தரங்கன். சற்றுமுன்கூட, ‘தலை சுற்றல், மயக்கமாக வருகிறதடா,’ என்று படுத்துக்கொண்ட அக்காள் இப்போது, புத்துயிர் பெற்றவளாக எழுந்து உட்கார்ந்துகொண்டு ஆர்ப்பரிப்பதைப் பார்த்த தம்பிக்கு ஆச்சரியமாக இருந்தது. “நிலம் அருகில் இருக்கிறது என்பதற்கு வேறென்ன சான்று வேண்டும்! ஆயிற்று. நம் கடல் பயணம் முற்றுப்பெறும் நாள் அதிக தூரத்திலில்லை!” அவர்கள் எதிர்பாராத, விரும்பாத கடல் பயணம் வேண்டுமானால் முடிவடையலாம். ஆனால், எந்த முடிவையும் அடுத்து மற்றொரு ஆரம்பம் இருந்தாக வேண்டுமே! அடுத்த துவக்கம் எப்படி இருக்குமோ! இது புரியாது, என்னமோ சிறு குழந்தைபோலத் துள்ளுகிறாளே! இந்தப் பெண்பிள்ளைகள்தாம் எவ்வளவு உணர்ச்சிபூர்வமானவர்கள் என்றெல்லாம் அந்தச் சிறுவனது யோசனை போக, சற்று எரிச்சல்கூட எழுந்தது. அக்காளுடைய குழந்தைத்தனத்துக்கு எதிர்மாறாக, ஆனந்தரங்கன் வளர்ந்த ஆண்பிள்ளைபோல் யோசிப்பான், சில சமயம் சந்தர்ப்பம் புரியாது பேசி, வசவுகளும் வாங்கி இருக்கிறான். ‘எதற்காக இப்படி மீன்மாதிரித் துள்ளுகிறாய்?’ என்று கேட்க வந்ததை, தன் பிராயத்தை உத்தேசித்து, அடக்கிக்கொண்டான். அக்காளுக்கும், பாவம், வெளியில் சொல்லிக்கொள்ள முடியாத எத்தனையோ கவலைகள்! இப்போது கொஞ்சம் நிதானம் இழந்தால், என்ன போய்விடப்போகிறது என்று பெரியமனது பண்ணி, விட்டுக்கொடுத்தான். அவர்கள் அந்நாள்வரை கவலைப்பட்டதெல்லாம் வீண் என்று துறைமுகத்தை அடைந்த உடனே புரிந்தது. கடல் அலைகள் சமனப்பட்டு, ஒரு ஆற்றுக்குள் துழைந்தது அவர்களது கட்டுமரம். உடல் களைப்பையும் மீறி, புதியதோர் உலகிற்கு வந்துவிட்ட உற்சாகம் இருவரையும் பற்றிக்கொண்டது. கரையில் நின்று, இவர்களையே பார்த்துக்கொண்டிருந்தவர்கள் அச்சத்தை விளைவிக்கவில்லை. மாறாக, சிலர் தமிழரைப்போன்ற முகவடிவம் கொண்டவர்களாகவும் இருந்தார்கள் என்பதை அந்தக் கலைஞன் பார்த்தவுடன் புரிந்துகொண்டான். புதிய நம்பிக்கை பிறந்தது. “பார்த்தால் நல்லவர்களாகத்தான் தெரிகிறார்கள்! நான் அவர்களுடன் பேசிச் சமாளிக்கிறேன். நீ என் பின்னால் வா!” என்று பெரிய மனிதத் தோரணையில் சொல்லியபடி, இலச்சினை வெளியில் தெரியும்படியாகப் பிடித்தபடி அவன் இறங்கினது பைரவிக்கு வேடிக்கையாக இருந்தது. சாண் பிள்ளையாக இருந்தலும் ஆண்பிள்ளை என்று சிறு வயதிலிருந்தே பிறர் சொல்லக் கேட்க வளர்ந்திருந்தவன் ஆயிற்றே! “நாங்கள் கலைஞர்கள். தமிழ்த் திருநாட்டிலிருந்து வருகிறோம். இதோ, எங்கள் அரசர் அளித்தனுப்பிய இலச்சினை!” தான் பேசுவது அவர்களுக்குப் புரியுமா, புரியாதா என்றெல்லாம் கவலைப்படாது, துணிச்சலுடன், ஒவ்வொரு வார்த்தையாகப் பிரித்துப் பேசினான் ஆனந்தரங்கன். அவனது குரல் இன்னும் ஆழமாகவில்லை. கீச்சுக்குரலுக்கும், ஆண்பிள்ளைக்குரலுக்கும் இடையே சற்றே பிசிறடிப்பதாக இருந்தது. சொல்லி வைத்தாற்போல், எல்லோரது நயனங்களும் அவன் கையில் தூக்கிப் பிடித்திருந்த பொருளில் பதிந்தன. வெறும் செப்பாலான தகடு என்று அவர்களை அலட்சியம் கொள்ள வைக்கவில்லை அது. மேலேயிருந்த அரசமுத்திரை தெளிவாகவே புலப்பட, அவர்களில் மூத்தவராக இருந்த ஒருவர் இடுப்பை வளைத்து, தம் இரு கரங்களையும் கூப்பி வணங்கினார். அவர்களை தம்முடன் வரும்படி சைகை காட்டினார். முகத்தில் சிரிப்பில்லை. ஆனால், மரியாதை தெரிந்தது. சுமார் கால் மணி நேரம் நடந்தபின், ஒரு பெரிய ஓட்டுக் கட்டடத்தின் உள்ளே வரும்படி சைகை செய்தார். வாசலில் நெடிய மரமல்லிகை மற்றும் வேப்ப மரங்களும், சிவப்பு நிற செம்பருத்திப் புதர்களும் வளர்ந்திருந்தன. அது அந்த இடத்தின் அரண்மனை என்று பின்னாளில் புரிந்தபோது, அவர்கள்தாம் எத்துணை ஆச்சரியப்பட்டார்கள்! “அரசபோகம் என்று கேள்விப்பட்டிருக்கிறோம். இது என்னடி அக்கா, இவ்வளவு எளிமையான இடத்தில் வசிக்கிறார் இந்த அரசர்! தங்கமும், வெள்ளியும் இறைந்து கிடக்கும் இந்நாட்டில்கூடவா சிக்கனம்!” என்ற ஆனந்தரங்கனை உற்றுப் பார்த்தாள் பைரவி. “என்ன அப்படிப் பார்க்கிறாய்?” நெளிந்தான் ஆனந்தரங்கன். “நான் இப்போது என்ன தப்பாகக் கேட்டுவிட்டேன்?” சிரித்தாள் பைரவி. “சிக்கனம் என்று நினைத்தாயே, அதைச் சொல்கிறேன். இது வளப்பமான நாடுதான். இயற்கையின் கருணைப் பார்வை இங்கு முழுமையாகவே பட்டிருக்கிறது. அனுதினமும் அடைமழை பொழிகிறதே! பூமியிலிருந்துதான் எவ்வளவு உலோகங்கள் கிடைக்கின்றன! ரங்கா! அரசர் விரும்பினால், பொன்னாலான சிங்காதனமும், கட்டிலும், மற்றும் பாத்திரம் பண்டங்களும் பொற்கொல்லர்களைச் செய்ய வைத்து, அனுபவித்திருக்கலாம். இவரோ, மக்கள் நலனை நாடும் உத்தமமான தலைவர். அதனால்தான், தமது தேவைகளைப் பெரிதாக நினையாது, மக்களைப்போலவே எளிமையாக வாழ்கிறார். தாமும் வாழ்ந்துகாட்டி, பிறரையும் வாழ வைக்கிறார்!” சற்றுமுன் அவள்பால் கொண்ட மனத்தாங்கலை மறந்துவிட்டு, ஆர்வத்துடன் பேசினான் ரங்கன். “எனக்கு அரசரைப் பார்த்தவுடனேயே மிகவும் பிடித்துவிட்டது. கலைக்கும், சக மனிதர்களுக்கும் இந்நாட்டு மக்கள் கொடுக்கும் மரியாதையைப் பார்த்தாயா? என்னை ‘நீ’ என்று சிறுவனை அழைப்பதுபோல் இல்லாமல், ‘நீங்கள்’ என்று மரியாதையாக அழைக்கிறார்கள்! இவர் ஆட்சியில் எல்லாரும் எவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கிறார்கள்!” “மனித வாழ்க்கை நிறைவாக அமைவதற்கு பொருள் மட்டுமே இன்றியமையாததாக ஆகிவிடாது. அந்த உண்மையை இவர்கள் நன்றாகப் புரிந்து வைத்திருக்கிறார்கள்! அரசர் ஒரு நல்ல முன்னுதாரணமாக விளங்குகிறார். கூட இருப்பவர்கள் நன்றாக இருந்தால்தான், தாமும் நன்றாக இருக்க முடியும் என்ற அரசரின் சொல்லிக்கொடுக்காத பாடம் இவர்கள் மனத்தில் பதிந்து போயிருக்கிறது. நாம் இங்கு வந்து சேர்ந்தது நம் அதிர்ஷ்டம்தான்!” “நீதான் முதலில் அஞ்சினாய், போகும் இடத்தில் காட்டுமிராண்டிகளாக இருப்பார்களோ, நாம் பேசும் மொழி அவர்களுக்குப் புரியுமோ என்றெல்லாம்!” குழந்தைத்தனமாகக் குற்றம் சாட்டிய தம்பியைப் பார்த்துப் பெரிதாக நகைத்தாள் பைரவி. “நல்லவேளை, இவர்களும் நம்மைப்போல் வடமொழிதான் பேசுகிறார்கள். கொஞ்சம் வித்தியாசம். அதனால் என்ன! நாம் பேசுவதும் இவர்களுக்கு விளங்குகிறதே!” என்றாள் திருப்தியுடன். “என்ன இருந்தாலும், நமது தாய்நாட்டு அரசருக்குக் கப்பம் கட்டுபவர் அல்லவா? அதுதான் நமக்கு அவ்வளவு மரியாதை! இலச்சினையைப் பார்த்ததும், அரசர் எவ்வளவு மகிழ்ச்சியுடன் நம்மை வரவேற்றார்!” அந்த முதல் சந்திப்பே அவனது நினைவில் திரும்பத் திரும்ப வந்து, நிறைவூட்டியது. தாய்நாட்டில்கூட யாரும் அவனை அப்படிப் பெரிய மனிதன்போல் பாவித்து நடத்தியதில்லை. “அதில் அப்படி என்ன பொறித்திருந்தது, ரங்கா?” “நீ படிக்கவில்லை? இதைக் கொண்டு வருபவர்களுக்கு பதினாயிரம் பொற்காசுகளும், விளைச்சல் நிலமும், மற்றும் சகல வசதிகளும் செய்து தரவேண்டும் என்று நமது அரசர் ஆணை இட்டிருந்தாரே!” “அதற்கு ஒரு இலச்சினை போதுமே! எதற்காக இரண்டு கொண்டுவந்து கொடுத்தார் நம் அரசர்?” என்று ஒரு ஐயப்பாட்டை எழுப்பினாள் பைரவி. காதலரைப்பற்றிப் பேசும்போதே இனித்தது. அதை உணர்ந்துகொள்ளும் மனநிலையில் இருக்கவில்லை ஆனந்தரங்கன். “அது என்னவோ! பார்த்தால் இரண்டும் ஒரே மாதிரித்தான் பட்டன எனக்கு. நம் அப்பாதான் இரண்டையும் மாறி, மாறிப் பார்த்துக்கொண்டிருந்தார். நான் கேட்டபோது, ‘ஒன்றுமில்லை,’ என்று மழுப்பிவிட்டு, இதை என்னிடம் கொடுத்துவிட்டு, தாம் மற்றதை வைத்துக்கொண்டார். அதை என்னிடம் காட்டக்கூட மறுத்துவிட்டார் என்று பார்த்துக்கொள்ளேன்! என்னவோ ரகசியம் இருக்கிறது!” “தந்தையார் தன்னிருப்பிடத்தை விட்டு நகர மாட்டார் என்று நம் அரசருக்குத் தெரிந்திருக்காதா, என்ன! வேண்டுமென்றேதான் இரண்டு இலச்சினைகளைக் கொடுத்துவிட்டுப் போயிருக்க வேண்டும். எப்படியோ, ஒரு நல்ல இடத்திற்கு வந்து சேர்ந்துவிட்டோம்,” என்று அந்தப் பேச்சை முடித்துவிட்டு, “அது சரி, இத்தனை பொற்காசுகளையும் வைத்துக்கொண்டு நாம் என்ன செய்யப்போகிறோம், ரங்கா? இன்னும் ஆயிரம் ஆண்டுகளுக்கு நாம் உயிர் வாழ்வதாக வைத்துக்கொண்டாலும், இவற்றைச் செலவழித்துத் தீர்க்க முடியாதே!” என்று ஒரு சந்தேகத்தைக் கிளப்பினாள். “இதை என்ன செய்வதாக முடிவெடுத்திருக்கிறாய் என்று என்னிடம் கூறு. நான் அதன்படி நடக்கிறேன்,” என்று பணிவுடன் கேட்டான் ஆனந்தரங்கன். அவள் ஆழ யோசித்து வந்திருந்த முடிவு அவனை உவகைக்கு உள்ளாக்கியது. அக்காளின் நல்லெண்ணத்தை எண்ணிப் பெருமிதப்பட்டான். இளைப்பாரச் சற்றே அமர்ந்த ஆனந்தரங்கன், வாழ்க்கைதான் எவ்வளவு இனிமையாகப் போய்க்கொண்டிருக்கிறது என்று திருப்தி கொண்டார். அந்த எண்ணம் எழுகையிலேயே, தனது சுயநலத்தை நினைந்து வெட்கம் உண்டாயிற்று. தன்னைப்போலவே இந்துமதத்தைச் சேர்ந்த, அந்நாட்டு மங்கை ஒருத்தியை மணந்து, அறிவும், குணமும் கொண்ட பிள்ளைச்செல்வங்களைப் பெற்றுவிட்டதில், தனது இல்வாழ்க்கை வேண்டுமானால் மகிழ்ச்சிகரமாக இருக்கலாம். ஆனால், அறியாப் பருவத்தில் மனதால் வரித்துவிட்டவரைத் தவிர வேறு ஒருவரையும் மணக்கமாட்டேன் என்று பிடிவாதமாகக் காலத்தைக் கழித்துவிட்ட அக்காள் என்ன சுகத்தைக் கண்டாள், பாவம்! ‘உன் குழந்தைகள் வேறு, என் குழந்தைகள் வேறா, ரங்கா?’ என்று, அவர் அவளுடைய கல்யாணப்பேச்சை எடுத்தபோதெல்லாம் தட்டிக்கழித்தே காலத்தைக் கடத்திவிட்டாள் வசந்தபைரவி. குழந்தைகளுக்கும் அத்தையிடம்தான் அலாதி அன்பு. தாய்மொழியான மலாயாக இருந்தாலும், அவளிடம் தமிழ் பயின்றார்கள், இசையும், நாட்டியமும் பயின்றார்கள். தமிழ், வடமொழி மந்திரங்களைக் கற்றுக்கொண்டார்கள். தமக்களிக்கப்பட்ட பொற்காசுகளைக் கடாரப் பகுதியில் ஒரு பிரம்மாண்டமான கோயிலைக் கட்டப் பயன்படுத்த வேண்டும் என்ற பொன்னான யோசனையை பைரவிக்குள் எழுப்பியிருந்தவர் ஆலயத்தில் குடியிருந்த சிவலிங்கமே ஆவார் என்றே நம்பினார் ஆனந்தரங்கன். சுயம்புவாக எழுந்திருந்த அந்த மூலவர் பைரவிக்குத் தன்னைக் காட்டிக் கொடுத்திருந்தார், பல ஆண்டுகளுக்குமுன். காலை வேளைகளில் பறவைகளின் ஒலிகளால் ஈர்க்கப்பட்டு, ஒரு முறை புஷ்பங்களைப் பறிக்க பைரவி ஆற்றோரத்துக்குச் சென்றிருந்தாள். அப்போது, கால் தடுக்கி விழ, நெற்றியில் ஏதோ இடித்து, ரத்தப்பெருக்கில் கிடந்தாள். ‘அக்காளை நீண்ட நேரமாகக் காணோமே!’ என்ற பரிதவிப்புடன் தேடி வந்த ஆனந்தரங்கன் அவளை அந்த நிலையில் கிடந்து பதறிப்போனான். “இவ்வளவு பெரிய கல் பூமியிலிருந்து நீட்டிக்கொண்டிருக்கிறது! பார்த்து நடக்க மாட்டாய்?” என்று அவள் கண்விழிக்கச் செய்தபிறகு உரிமையுடன் கோபித்தவன், தன் கையிலிருந்த உளியால் அதனை ஓங்கி அடித்தான். “இது என்ன ரங்கா, சின்னக்குழந்தை மாதிரி!’ என்று பைரவி ஆட்சேபித்ததை அவன் லட்சியம் செய்யவில்லை. அந்தக் கல்லிலிருந்து சிவப்பாக ஏதோ வடிந்தது. “ரங்கா! போதும், நிறுத்து!” என்று அவள் கூவுமுன்னரே அடிப்பதை நிறுத்திவிட்டு, பதற்றத்துடன் இருகை விரல்களால் அந்தக் கல்லைச் சுற்றித் தோண்ட ஆரம்பித்தான் ஆனந்தரங்கன். பூமிக்குள் புதைந்திருந்தது வெறும் கல் அல்ல, லிங்கம் என்று தெரிந்ததும், அவர்கள்தாம் எவ்வளவு உணர்ச்சிகளுக்கு ஆளானார்கள்! “தப்பு! தப்பு!” என்று கன்னத்தில் போட்டுக்கொண்டான் ஆனந்தரங்கன். “நீ எந்தத் தப்பும் செய்துவிடவில்லை. வீணே உன்னையே வருத்திக்கொள்ளாதே!” என்று சமாதானப்படுத்தினாள் பைரவி. “உன் அருமை அக்காளுக்குக் காயம் உண்டாக்கிவிட்டதே என்று நீ ஆத்திரப்பட்டாய். ஆனால், வேறு எப்படித்தான் தான் இங்கு மறைந்திருப்பதை இந்த லிங்கம் நமக்கு உணர்த்தமுடியும்? நாம் மிகவும் கொடுத்து வைத்தவர்கள், ரங்கா! நமக்கு இறைவனே காட்சி கொடுத்திருக்கிறார்!” என்று நெகிழ்ந்தாள். கோயிலைக் கட்டி முடித்து, பூமியில் மறைந்திருந்த மூலவரைப் பிரதிஷ்டை செய்து, அரசரின் தலைமையில் கும்பாபிஷேகம் ஆன பின்னரும், பெரும்பொருள் மிச்சமாகவிட, மேலும் சில கோயில்களையும், தொலைதூரத்திலிருந்து வந்த பயணிகள் தங்க வசதியாக மண்டபங்களையும் கட்ட முடிவெடுத்தார்கள். வசந்தபைரவி ஒவ்வொரு அபிநயமாகப் பிடித்து மணிக்கணக்கில் ஒரே நிலையில் நிற்க, அதை உருவப்படமாக வரைந்து, தாம் தயார் செய்திருந்த மாணவர்களைக்கொண்டு, சிலைகளாக வடிக்கச் செய்தார் சிற்பி. கலைநயம் மிக்க அந்த சிலைகள் மண்டபங்களை அழகுபடுத்தின. பார்ப்போருக்கு, ‘இந்த உயரிய நாட்டியக் கலையை நாமும் பயில்வோமா!’ என்ற ஏக்கத்தை விளைவித்தன. ‘இதற்காகத்தான் நான் பிறவி எடுத்தேன்!’ என்று பூரிப்படைந்தாள் வசந்தபைரவி. அப்போது அவளுக்குத் தெரிந்திருக்கவில்லை, மாறி, மாறி வரும் அல்லும், பகலையும்போல, இந்த இன்பமயமான வாழ்க்கைக்கு ஒரு முடிவு ஏற்படும் காலம் அதிதூரத்தில் இல்லை என்பது. 7 புஜாங் பள்ளத்தாக்கு மத்தியானம் சுமார் இரண்டு மணிக்கு நெடுஞ்சாலையிலிருந்து விலகி, தென் சுங்கை பட்டாணித் திருப்பத்தில் இடதுபுறம் திரும்பி, டோல் கட்டணத்தைச் செலுத்தியபின், பதின்மூன்று கிலோமீட்டர் தொலைவிலிருந்த மெர்போக் கிராமத்தை நோக்கிப் போய்க்கொண்டிருந்தார்கள் சாமிநாதனும், மீனாவும். சாலையின் இருபுறமும் தென்னை, வாழை மரங்கள் செழிப்பாக வளர்ந்திருந்தன. அகலமான ஆற்றில் மரங்களின் பச்சை பிம்பம் மிக அழகாகப் பிரதிபலித்துக்கொண்டிருந்தது கண்டு மீனா ஆர்ப்பரித்தாள். அதன்பின், சிறிது தூரத்திற்கு இரு புறமும் நெல் வயல்கள், மீண்டும் வாழை, பின்னால் தென்னை என்று பசுமை அவர்களுடன் இணைந்தே வந்துகொண்டிருந்தது. தெருவோரத்தில் பெரிது, பெரிதான பலாப்பழங்களை விற்றுக்கொண்டிருந்தார்கள். கார் பாலத்தின்மேல் ஏறியது. “அடேயப்பா! எவ்வளவு நெல் வயல்கள்!” என்று மீனா வியக்க, “அதான் கெடா மாநிலத்தை ’மலேசியாவின் அரிசிக்கோப்பை’ன்னு சொல்றாங்க!” என்றார் சாமிநாதன். கார் பாலத்தின்மேல் ஏறியது. “இதென்னப்பா, மரங்கள்லே பாதி தண்ணிக்குள்ளே இருக்கு?” “சில மரங்கள் இப்படித்தான் சேத்திலே வளரும். ஆங்கிலத்திலே”மான்க்ரோவ்“னு சொல்வோமே! இந்த உஷ்ணமான சீதோஷ்ணநிலைதான் அதுக்கு ஏத்தது!” அந்த ஆற்றுக்குள் வளர்ந்திருந்த மரங்களைச் சுற்றிச் சுற்றி, கிளைகளைத் தொட்டபடி ஒரு துடுப்புப் படகு போய்க்கொண்டிருந்ததை மீனா ஆர்வத்துடன் கவனித்தாள். பாலத்தைக் கடந்ததும், இரு புறமும் ரப்பர் மரங்களும், செம்பனைத் தோட்டங்களும் வந்தன. இவர்களுக்கு முன்னால் ஒரு லோரி வெட்டப்பட்ட பெரிய மரத்துண்டுகளை ஏற்றிப் போய்க்கொண்டிருந்தது. “இந்த ரப்பர் மரங்களுக்கு வயசாகிடுச்சு. வெட்டிட்டு, வேற புதுசா நட்டிருப்பாங்க. இந்த மரத்தில நாற்காலி, மேசைன்னு ஏதாவது சாமான் செய்வாங்க!” வழியில் புதிதாகக் கட்டப்பட்ட கல்லூரி தென்பட்டது. பெரிய வளாகம், வெளிச்சுவற்றின் உள்ளே அடர்ந்த புதர்கள் என்று அழகாக இருந்தது. ஒரு காளி கோயிலைத் தாண்டிப் போயிற்று கார். “இது அவ்வளவு பழமையான கோயில் இல்லே. இப்போதான் இருநூறு வருஷங்களுக்கு முந்தி கட்டியிருப்பாங்க!” என்றார் சாமிநாதன். சீனக் கல்லறை ஒன்றைக் கடந்தார்கள். “இந்த மாதிரி, பெரிசா, கலரெல்லாம் பூசிய கல்லறை பழங்காலத்தது! இதோ பாத்தியா? மர ஆலை!” பக்கவாட்டில் தெரிந்த ஒற்றை அடுக்கு வீடுகளைப் பார்த்தாள் மீனா. உயரமான மரங்களுக்கு நடுவே அவை வீற்றிருந்தன. “இன்னும் எவ்வளவு தூரம்?” என்று அலுப்புடன் கேட்ட மகளைப் புன்னகையுடன் திரும்பிப் பார்த்தார் சாமிநாதன். “ஆக்கப் பொறுத்தவன் ஆறப் பொறுக்கலேன்னு ஒனக்காகத்தான் சொல்லி வெச்சிருக்காங்கபோல! அஞ்சு மணி நேரமா அமைதியா இருந்த ஒனக்கு இப்ப பொறுமை போயிடுச்சா? வந்துட்டோம். அதோ, அந்த காம்பவுண்டுதான்!” நெருக்கமான மரங்களும், பூஞ்செடிகளுமாக அழகாக இருந்தது அந்த இடம். மேட்டில் சற்று திணறியபடி ஏறியது அவர்களது வாஜா. சாலையின் இருபுறமும் உயரமான சவுக்கு மரங்கள், கீழே ஊதாப்பூ நிறைந்த போகன்விலா புதர்கள், ஆரஞ்சு நிறப் பூக்களைக்கொண்ட விருட்சி, குரோட்டன் என்று பசுமை கொஞ்சியது அங்கு. பின்னணியில், பச்சை மரங்கள் அடர்ந்த மலை. ஜெராய் மலையாகத்தான் இருக்கவேண்டும் என்று ஊகித்தாள் மீனா. ஆரம்பப் பள்ளிச் சிறுவர்களும், சிறுமிகளும் சீருடை அணிந்து, வரிசை, வரிசையாக நடந்துபோக, பக்கவாட்டில் மூன்று ஆசிரியர்கள் அவர்களைக் கட்டி மேய்த்துக்கொண்டு போனார்கள். அவ்வப்போது, “பேசக்கூடாது! நாளைக்கு இதைப்பத்தி கட்டுரை எழுதணும். எல்லாத்தையும் நல்லா பாத்து, நோட்டில குறிப்பு எடுத்துக்குங்க!” என்று தமது கடமையைச் செய்துகொண்டிருந்தார்கள். அதையெல்லாம் காதில் வாங்காமல், “தாகமா இருக்குங்க, டீச்சர்!” என்று ஒரு துணிச்சலான பையன் குரலெழுப்ப, “எனக்கும், எனக்கும்,” என்று பல குரல்கள் எழுந்தன. தான் சிறுமியாக இருந்தபோது, ஆசிரியர்களைக் கண்டால் எப்படி பயந்து நடுங்கினோம் என்று எண்ணிப்பார்த்தாள் மீனா. இந்தக்காலக் குழந்தைகளின் தைரியமும் இருக்கிறதே! அவளுக்குச் சிரிப்பு வந்தது. தந்தையும் புன்னகைப்பதைப் பார்த்துக்கொண்டாள். பத்து படிகளைக் கடந்து, பக்கவாட்டில் நீண்டிருந்த ஒரு கட்டடத்திற்குள் நுழைந்தார்கள் தந்தையும், மகளும். நுழைந்தவுடனேயே, “இஸ்லாமிய ஆட்சிக்கு முன்னர் தென்கிழக்கு ஆசியாவில் ஸ்ரீவிஜய சாம்ராஜ்யம் நடத்திய மலாய அரசாட்சி, (கி.பி. 4 – 14 -ம் நூற்றாண்டு)” என்ற குறிப்பைப் பார்த்ததும், மீனாவின் களைப்பு போன இடம் தெரியவில்லை. அதிவேகமாக உள்ளே நடந்தாள். தந்தை முன்பே கூறி இருந்தாலும், கணேஷா, புத்தா, லிங்கம், யோனி என்று கீழே பெயரிடப்பட்டு, பல சிலைகள் இருந்ததைப் பார்க்க அவளுக்கு வியப்பாக இருந்தது. பெயருடன் கூடவே அவைகளின் காலமும் குறிப்பிடப்பட்டிருந்தது. ஆயிரக்கணக்கான ஆண்டுகள் கடந்திருந்தபோதும், ஒன்றரையடி கருங்கல் பிள்ளையார் விக்னமில்லாது இருந்தார். பிறருக்கே விக்கினங்கள் வராமல் தடுப்பவர் அல்லவா! தன்னைக் காத்துக்கொள்ள அவருக்குத் தெரியாதா! பக்கத்திலிருந்த துர்க்கையின் கருங்கல் சிலையிலோ, காலத்தின் சுவடு நன்றாகவே தெரிந்தது. ‘இவை ஆயிரம் ஆண்டுகாலப் பொக்கிஷங்கள்!’ என்ற நிதரிசனத்தைவிட, பல நூறு ஆண்டுகளுக்கு முன்பே நமது முன்னோர்கள் இந்நாட்டில் கால் பதித்து இருந்திருக்கிறார்கள் என்ற உண்மையே மீனாவை நெகிழவைத்தது. அவர்களுடைய சந்ததியர் என்ன ஆனார்கள் என்று அப்பாவைக் கேட்கவேண்டும் என்று முடிவு செய்துகொண்டாள். அவளுடைய மனஓட்டத்தைப் புரிந்தவராக, “சுமத்ரா நாட்டு அரசாட்சி இங்க நடந்துக்கிட்டிருந்தப்போ, இந்து மதம்தான் இருந்திச்சு. அந்த ஆட்சி மாறினப்புறம்..,” “ஏம்பா மாறணும்?” ‘இதுகூடத் தெரியாதா உனக்கு?’ என்பதுபோல் முகத்தைச் சுளுக்கினார் சாமிநாதன். “காலம் ஒரே மாதிரி இருக்குமா? பக்கத்து நாட்டிலேருந்து ஒருத்தன் படையெடுத்தான். அவனும் இந்துதான். அப்புறம்தான் வியாபாரிங்களால இங்கே இஸ்லாம் பரவிச்சு. ராஜாக்கள்தான் மொதல்ல மதம் மாறுவாங்க. அப்புறம்..!” என்று கையை விரித்தார். “ஆனா, சில பழக்கவழக்கங்களை – கைகூப்பி வரவேற்கிறது, கல்யாண சமயங்களில கையிலே மருதாணி பூசிக்கிறது, வர்றவங்களுக்குப் பன்னீர் தெளிக்கிறது, வெத்திலை குடுக்கிறது – இப்படி சிலதை இப்பவும் பாக்கலாம்!” ஏதேதோ இனம் புரியாத உணர்வுகளால் மீனாவின் மனம் கொந்தளித்தது. இமயமலைச்சாரலில் இருக்கும் நேபாளமும், இந்தோனீசியத் தீவான பாலியும் இன்றும் இருப்பதுபோல் மலாயாவும் ஒரு காலத்தில் இந்து நாடாக இருந்திருக்கிறது! அதற்குமேல் பேசினால், அந்த அமைதியான சூழலைக் கெடுப்பதுபோல் ஆகிவிடும் என்று மற்ற காட்சிப்பொருட்களை மௌனமாகப் பார்த்தார்கள். ‘பாதரசம் நிரம்பிய போத்தல்’ என்ற விளக்கத்துடன், ‘தங்கச்சுரங்களில் பயன்படுத்த பாதரசம் இறக்குமதி செய்யப்பட்டது,’ என்ற குறிப்பு ஒன்றும் இருந்தது. சீனாவிலிருந்து பட்டும், பாரசீகத்திலிருந்து கூரையில் வேயும் ஓடுகளும் இறக்குமதி செய்யப்பட்டன என்பதைப் படித்தாள் மீனா. பண்டமாற்றம் மூலம் வாணிபம் நடந்த அக்காலத்தில், மலாயாவில் அபரிமிதமாகக் கிடைத்த பொன்னைக் கொடுத்து, பதிலுக்கு இந்தியாவில் கருங்கல்லாலும், கண்ணாடியாலும் செய்த மணிகளை வாங்கி இருக்கிறார்கள் என்று நினைக்கும்போதே அவளுக்குச் சிரிப்பு பீறிட்டது. ஒரு சில வெள்ளைக்காரர்களும், கல்லூரி மாணவர்கள்போல் தென்பட்ட சிலரும்தான் அந்த இடத்தில் இருந்தார்கள். வெளியே வந்ததும், வெயிலின் கடுமை தாக்க, அருகே இருந்த ஆற்றுக்கு நடந்தார்கள். காட்டுப்பாதைபோல, கரடு முரடாகவும், செங்குத்தாகவும் இருந்தது. ஆங்காங்கே சிமெண்டினால் கட்டப்பட்டிருந்த பெஞ்சுகள். அவற்றுக்கு மேலே அழகிய கூரை. பார்வையாளர்களை வரவேற்க இம்மாதிரியான வசதிகள் அங்கு பல இருந்தன என்பதை திருப்தியுடன் கவனித்தாள் மீனா. கோலாலம்பூரின் நவநாகரிகமான வாழ்க்கையில் பழகியிருந்த கார்களின் ஓயாத சத்தமோ, தொலைகாட்சியின் அலறலோ இல்லாது, பறவைகளும், வண்டுகளும், பெயர் தெரியாத பூச்சிகளும் எழுப்பிய ஒலியும், காற்றின் ஓசையும் புத்துணர்வை அளிப்பதாக இருந்தது அவளுக்கு. நீர்வீழ்ச்சியிலிருந்து ஓடிவந்த ஆற்றின் இரு புறங்களிலும் கருங்கல் குன்றுகள். மேலே நின்றபடி மலைப்புடன் பார்த்த மீனா, “போயிடலாம்பா. கல்லெல்லாம் பாசி பிடிச்சிருக்கு. வழுக்கிடும்!” என்று பின்னே நகர்ந்தாள். வாராந்திர விடுமுறைகளில் கோலாலம்பூர் லேக் கார்டனுக்குச் சென்று, சுமார் ஒன்றரை மணி நேரம் ஜாக்கிங் செய்யும் வழக்கத்தைக் கொண்டிருந்தவர்களுக்குக்கூட இப்போது மீண்டும் அந்த மலைப்பாதையில் நடக்கும்போது இரைத்தது. உடல் களைத்திருந்தது. பயண அலுப்பினாலோ, உற்சாகத்தினால் செலவாகியிருந்த சக்தியாலோ, அல்லது மழைக்கு முன்னதாக அடிக்கும் கடும் வெயிலினாலோ மீனாவால் நடக்கவே முடியவில்லை. தடுமாறினாள். அடிக்கடி விழப்போனவளின் கையை ஆதரவாகப் பற்றிக்கொண்டார் சாமிநாதன். “உள்ளே நுழையறத்துக்கு முந்தி சூடா ஏதாவது குடிச்சிருக்கணும். வெளியே சீனவங்களின் சின்ன கிராமம் ஒண்ணு இருக்கு! மீ கோரீங் நல்லா, சுத்தமாப் போடுவாங்க!” என்று தனக்குத்தானே சொல்லிக்கொண்டார். “அதோ பாருடா! அந்தப் படிங்கமேலத்தான் ஏறிப் போகணும்!” தந்தை காட்டிய படிகளை ஆயாசத்துடன் பார்த்தாள் மீனா. அருகிலிருந்த ஆற்றிலிருந்த எடுத்திருக்க வேண்டும் அந்த வழவழப்பான கூழாங்கற்களை என்று ஊகித்தாள். “இவ்வளவு படி ஏறணுமா?” “எல்லாக் கோயிலையுமே முந்தி இப்படி மலைமேலதானே கட்டி வெச்சிருந்தாங்க! அதேமாதிரி திரும்ப அமைச்சிருக்காங்க,” என்றார், லேசாகச் சிரித்தபடி. “மெதுவா ஏறு. செங்குத்தா ஏறாம, வலதிலேருந்து இடது, இடப்பக்கத்திலேருந்து வலதுன்னு சாய்வா ஏறணும். அப்போ சுலபமா இருக்கும்,” என்று அறிவுரை வழங்கினார். தான் அணிந்திருந்த செருப்புகளைக் கையில் எடுத்துக்கொண்டு, படியாக இருந்த கூழாங்கற்களில் வெறுங்கால்களைப் பதித்து ஏறினார். “இப்படி நடந்தா, கால் நரம்புகளுக்குப் பயிற்சி குடுக்கறமாதிரி – ரிஃப்ளெக்ஸாலஜி! ரத்த ஓட்டம் அதிகரிக்கும்,” என்றார். “கால் சுடலே?” என்று பயந்தாள் மீனா. “கொஞ்சம் சூடுதான். ஆனா, அதுவும் சுகமா இருக்கு! நீயும்தான் இப்படி நடந்து பாரேன்!” மீனா அதைக் காதில் வாங்கிக்கொள்ளவில்லை. ஓய்ந்துவிட்ட கால்களுக்கு சக்தி தேடுவதுபோல், ‘ஓம்,’ ‘ஓம்’ என்று மனத்துக்குள் நினைத்தபடி ஏறினாள். மேலே கண்ட காட்சி மீனாவை மெய்சிலிர்க்க வைத்தது. சாமிநாதன் முதலிலேயே சொல்லி இருந்ததுபோல, சுமார் மூன்றடி உயரமிருந்த கல்லால் ஆன சுவர் சுற்றிலும் இருந்தது. உள்ளே வெறும் புல்தரைதான். ஊடே மினுமினுத்துக்கொண்டிருந்த வெள்ளை நிற மைக்கா லோகத்தின் மெல்லிய தகடுகள். ஆர்வத்துடன் குனிந்து, அவற்றைப் பொறுக்கிக்கொண்டாள். தனக்குள் சிரித்துக்கொண்டார் சாமிநாதன். பட்டுப்புடவைகளில் சரிகை இருக்கவேண்டும் என்பதுபோல, அது என்னவோ இந்தப் பெண்களுக்கே பளபளக்கும் பொருட்களின்மீது அதீத ஆசை! “நம்ப உடல் என்கிற கோயிலுக்குள்ளே கடவுள் இருக்கார், இல்லியா? அதனால, கோயிலையும் மனுஷ உடல்மாதிரிதான் கட்டுவாங்க!” என்ற சாமிநாதன், பக்தர்கள் நின்று வழிபடும் செவ்வகத்தை நமது மார்பு என்றும், சதுரமான வடிவம்கொண்ட கர்ப்பக்கிரகத்துக்குப் போகும் வழியிலிருந்த மூன்று, நான்கு படிகளை கழுத்து என்றும், கடவுள் சிலை இருந்த இடத்தை தலை என்றும் விவரித்தார். “கால்?” என்று வினாவெழுப்பினாள் மீனா. “கோபுரம் பாதம். அங்கேயிருந்து நுழைஞ்சு, உள்ளே வர வெட்டவெளியான இடம்தான் கால்!” “ஒங்களுக்கு எப்படிப்பா இத்தனை விஷயங்க தெரிஞ்சிருக்கு! எனக்குப் பொறாமையா இருக்கு!” சாமிநாதன் சிரித்தார். “என் வயசில ஒனக்கும் நிறையத் தெரிஞ்சுபோகும். ஆனா, அதுக்கு இப்பவே பிடிச்சு, நிறைய படிக்கணும். நாலு எடத்தைச் சுத்திப்பாத்து, எல்லாரோடேயும் நல்லாப் பழகணும்!” பழங்காலத்தில் கோயில் எப்படி இருந்ததோ, அதே வடிவில் தோண்டி எடுக்கப்பட்டிருந்த கற்களைக்கொண்டு, மீண்டும் அமைத்திருந்தார்கள். கடவுள் சிலை எதுவும் இல்லாவிட்டாலும், அந்த இடத்தில் ஏதோ அமானுஷ்யமான சக்தி இருப்பதாக மீனா உணர்ந்தாள். அது தெய்வீகமாகவும் இருந்தது, கூடவே சொல்லத் தெரியாத சோகமும் அதில் கலந்து இருப்பதாகத் தோன்றியது அவளுக்கு. தான் முறையாகக் கற்றிருந்த சிவன் பாடல் ஒன்றை முணுமுணுக்க ஆரம்பித்தாள். முடியவில்லை. தொண்டையை அடைத்தது. முகம் கோணியது. “இந்த இடத்தில ஏதோ பெரிய சோகம் இருக்குப்பா!” என்றாள். தலையை ஆட்டி ஆமோதித்தார் சாமிநாதன். “எப்ப வர்றபோதும், எனக்கும் அப்படித்தான் மீனா தோணும்”. “யாரோ இந்த இடத்தில சித்திரவதை அனுபவிச்சிருக்கணும். நம்பகிட்ட ஏதோ சொல்லப் பாக்கறாங்கப்பா! ஒங்களுக்குத் தெரியல?” சாமிநாதன் அவளைப் பார்த்தார். பேசுவதாக நினைத்துக்கொண்டு, ஏதோ உளறும் சிறுகுழந்தையைப் பாசத்துடன் பார்ப்பதுபோல் இருந்தது அவரது மென்மையான பார்வை. மீனாவுக்கு எப்போதுமே அதீதமான கற்பனை. பெற்றோருக்கு ஒரே குழந்தை ஆகையால், விளையாட எவரும் இல்லாது, தனக்குத்தானே பேசி விளையாடிக்கொண்டு இருப்பாள், ஐந்து வயதுவரை. அவளுடைய விளையாட்டுகளில் அவளே ராஜா, அவளே முகமூடி கொள்ளைக்காரன். இப்போதும் அந்தக் கற்பனைதான் உடல் களைப்போடு இணைந்து அவளை அப்படிப் பேச வைக்கிறது என்பதில் அவருக்குச் சந்தேகம் இருக்கவில்லை. இரண்டு வருடங்களுக்குமுன், ஒரு பஸ் விபத்தில் தலையில் அடிபட்டு, சில மணி நேரம் சுயநினைவிழந்து, கோமாவில் இருந்ததிலிருந்தே அவள் இப்படித்தான் ஏடாகூடமாக மாறிப்போனாள் என்று வருத்தத்துடன் நினைத்துக்கொண்டார். போகட்டும், அவளது அம்மாவைப் பலி வாங்கிய அந்த விபத்தில் இவள் உயிராவது மிஞ்சியதே என்ற அற்பதிருப்தி எழுந்தது அவருக்குள். “போகலாமாம்மா?” என்று கேட்டவரைப் பார்த்த மீனாவின் கண்களில் வேறு யாரோ தெரிந்தார்கள். “திரும்பவும் விரட்டுகிறீர்களே! இதைக் காணத்தானே இவ்வளவு நாள் காத்திருந்தேன்!” என்று செந்தமிழில் மறுத்துப் பேசினாள். அப்படியே தரையில் அமர்ந்து கண்களை மூடிக்கொண்டவளைப் பார்த்தார் சாமிநாதன். ‘ஆசை தீர உட்கார்ந்துவிட்டுப் போகட்டும்!’ என்று தானும் பக்கத்தில் அமர்ந்தார். அவளையே உற்றுப் பார்த்தார். அவள் முகத்தில் பலவித உணர்ச்சிகள் மாறி, மாறித் தோன்றியது போலிருந்தது. தசையெல்லாம் சுருங்கி, ஒரு வயோதிக மாதுவை நினைவுபடுத்தியது அம்முகம். பத்து, பதினைந்து நிமிடங்களுக்குப் பிறகு, சிறிது சிறிதாகத் தெளிந்தது. திருப்தியுடன் கூடிய ஒரு சிறிய முறுவல் அவளது அதரத்தில். வியப்புடன் அந்த மாறுதல்களைப் பார்த்தபடி இருந்தார் சாமிநாதன். மீனா கண்ணைத் திறந்து பார்த்தாள். “என்னப்பா, அப்படியே அசந்துபோய் தரையிலே ஒக்காந்துட்டீங்க? ரொம்ப ஓய்ச்சலா இருக்கா? பாவம், நீங்க!” என்று பரிதாபப்பட்டபடி, துள்ளி எழுந்தாள். “எனக்கு இந்த இடம் ரொம்பப் பிடிச்சிருக்குப்பா. இன்னொரு தடவை வரணும்!” என்றவளை அதிசயமாகப் பார்த்தார் சாமிநாதன். முகமெல்லாம் சுருங்கிப்போய், சோகத்தின் பிம்பமாய் இருந்த யாரோ பெயர் தெரியாத வயோதிக மாது அம்முகத்தில் காணப்படவில்லை. இப்போது அவர் கண்களுக்கு ஒரு பதினேழு வயது மங்கை – அவர் பெற்ற மகள்தான் – தெரிந்தாள். அடுத்து அவர்கள் போனது காளி கோயிலுக்கு. காளியின் சிலை இல்லைதான். ஆனால், காளிக்கே உரிய தாமரைப்பூ, மற்றும் கத்தி, சுருக்கு, அங்குசம், வில், அம்பு, திரிசூலம் ஆகிய அனைத்து ஆயுதங்களும் பொன்னால் செய்யப்பட்டிருந்தன என்றும், நவரத்தினக்கற்களும், வெள்ளியிலான மணியும், வெண்கலக்குதிரையும் இந்தக் கோயிலில் இருந்ததாகவும் வாசலிலிருந்த குறிப்பு தெரிவித்தது. “அவ்வளவு தங்க சாமான்களும் இப்போ எங்கே இருக்கு? மியூசியத்திலே நான் பாக்கலியே!” என்று கேட்ட மீனாவிடம், “இதைக் கண்டுபிடிச்ச வெள்ளைக்காரங்களே எடுத்துக்கிட்டாங்களோ, என்னவோ, யாரு கண்டது!” என்று அசிரத்தையாகப் பதிலளித்தார் சாமிநாதன். காரில் ஏறிய உடன், “அப்பா! பைரவி ராகம் ஒங்களுக்குப் பிடிக்குமோ?” என்று சம்பந்தம் இல்லாது, ஏதோ கேட்டாள் மீனா. “ராகம், தாளமெல்லாம் எனக்கு என்னம்மா தெரியும்!” என்று சொன்னாலும், ‘இவளுக்கு என்னமோதான் ஆகிவிட்டது! அந்த இடத்தில் ஏதாவது ஆவி, கீவி பிடித்துவிட்டதா? இப்போது இது என்ன கேள்வி!’ என்று தனக்குள் அலுத்துக்கொண்டார். 8 தஞ்சாவூர் முதல்நாள் சாயங்காலம்தான் தஞ்சைக்கு வந்து சேர்ந்திருந்தனர் சாமிநாதனும், மீனாவும். பெரிய கோயிலுக்குப் போவதாக பெயர் பண்ணியது மீனாவுக்கு மிகுந்த அதிருப்தியை விளைவித்திருந்தது. ‘ஒண்ணுமே புரியலேப்பா,’ என்று சிணுங்கினாள். ‘நாம்ப வந்தது வேற விஷயமா. கோயிலை எப்போ வேணுமானாலும் பாத்துக்கலாம்!’ என்று கண்டித்துச் சொல்லிவிட்டார் சாமிநாதன். மறுநாள் காலை ‘பசியாற’, இட்லி, வடை, பொங்கல், கேசரி என்று விதவிதமாக ஹோட்டலில் வைக்கப்பட்டிருந்த பலகார வகைகளை ஒரு கை பார்த்துவிட்டு, அவர்கள் தங்கியிருந்த ஹோட்டலின் வாசலில் இருந்த ஆட்டோ ரிக்ஷாக்காரரிடம், “இங்கே சுத்து வட்டாரத்திலே இருக்கிற எல்லா பழைய கோயிலுக்கும் கூட்டிப்போகணும்,” என்று வேண்டுகோள் விடுத்திருந்தார். ஒவ்வொரு கோயிலாகப் போனபோது, சாமிநாதன் இறங்கி ஒரு நோட்டம் பார்த்தபின், “ஊகும். இன்னும் பழசான இடமா இருக்கணும்!” என்பார். அப்படித்தான் தஞ்சாவூர் எல்லையைத் தாண்டி வந்திருந்தனர். முத்து அதிருப்தியுடன் பார்த்தார். “தஞ்சாவூரில இருக்கற பெரிய கோயில் ஒலகமெல்லாம் பிரசித்தம். நீங்க இங்க கொண்டுவிடச் சொல்றீங்க!” அந்தக் கோயில் மிகவும் சிதிலம் அடைந்து, பார்க்கவே பரிதாபமாக இருந்தது. கோபுரத்தின் சிலைகள் காலப்போக்கில் தம் நிறத்துடன், உருவையும் இழந்திருந்தன. “காத்துக்கிட்டு இருக்கீங்களா?” என்று கேட்டுக்கொண்ட சாமிநாதன், “இறங்கும்மா!” என்று மகளைப் பணித்தார். “என்னப்பா இது! மனித நடமாட்டமே ஆயிரக்கணக்கான வருஷமா இங்கே கிடையாது போல இருக்கே!” என்று ரகசியக்குரலில் சொன்னாள் மீனா. “இதைத்தான் நானும் எதிர்பாத்தேன்!” என்று முகத்தைக் கடுமையாக வைத்துக்கொண்டு சொன்னார். நினைவு எங்கோ போய்விட்டது என்று மீனா புரிந்துகொண்டாள். எதுவும் பேசாது, அவரைப் பின்தொடர்ந்தாள். பெரிய கற்சுவர் ஒன்று கோயிலைச் சுற்றி இருந்தது. உள்ளே நுழைந்தார்கள். இடுப்புயரத்துக்குப் புல்லும், முள்ளுச்செடிகளும் மண்டி இருந்தன. ஆட்டோ ரிக்ஷாக்காரர் காதில் விழாத தூரத்துக்கு வந்தபின், “ஒனக்கு ஒண்ணு சொல்றேன், மீனா. ரகசியமா வெச்சுக்க,” என்று எச்சரித்துவிட்டு, “இந்தத் தகடு – நாம்ப கொண்டு வந்தோமே, அது – நம்ப மலேசிய நாட்டிலே கிடைச்சது. எங்கேன்னு அதைப்பத்தின விவரங்கள் எதுவும் இல்ல. குப்பை மாதிரி, முக்கியமா இல்லாத பொருள்களோட கிடந்திச்சு. எழுத்துக்கள் தமிழிலேயும் இருக்கேன்னுதான் ஆசையா நான் ஆராய்ச்சியில இறங்கினேன்”. மீனா, ‘இதெல்லாம் தெரிந்ததுதானே!’ என்று கூறுவதுபோல அசுவாரசியமாக அவரையே பார்த்தாள். “இதில என்ன எழுதி இருக்குன்னு கேட்டியானா..” “கேக்கறேன். என்னப்பா எழுதி இருக்கு?” மீனா குறுக்கிட்டு கேட்டாள். அவளுடைய குறும்பை ரசிக்காமல், “குறுக்கே பேசாதே! ‘நான், இதைக் கொண்டு வர்றவங்களுக்கு சூலீஸ்வரம்னு பெயரை உடைய இடத்தில் இவ்வளவுக்கிவ்வளவு விஸ்தீரணத்திலே நிலமும், பதினாயிரம் பொற்காசுகளும் குடுக்கறேன்,’ அப்படின்னு எழுதி, ராஜ முத்திரை பதிச்சிருக்கு. அப்படி ஒரு இடம் இந்தியாவில எங்கேயும் இல்லே. நான் ரெண்டு, மூணு வருஷமா மெள்ள விசாரிச்சுப் பாத்துட்டேன்”. “பதினாயிரம் பொற்காசுகளா? அப்பாடியோவ்! எத்தனை வளையல், எத்தனை நெக்லஸ் பண்ணிக்கலாம்!” “ஸ்டுபிட்! பழங்காலத்தில, இந்தியா ரொம்ப முன்னேறி இருந்த நாடில்ல! பொன் நிறையவே இருந்திச்சு!” “அவ்வளவு காசை எப்படிப்பா செலவழிக்க முடியும்?” “இங்கேயிருந்து போனவங்க யாராவது முக்கியமானவங்களா, ராஜாவுக்கு ரொம்ப நெருக்கமானவங்களா இருந்திருக்கணும். அப்போல்லாம் கோயில்தான் பாங்க் மாதிரி இருந்திச்சு. நிறையச் செலவழிச்சு, கோயில் கட்டுவாங்க. அங்கேயே தரையிலே மீந்துபோன பொற்காசுகளைப் புதைச்சு வெச்சிருப்பாங்க! இப்பக்கூட சில கோயில்களிலே அப்படிப் பத்திரமா வெச்சிருந்தது கிடைக்குதாம்!” “நமக்கா கிடைக்கப்போகுது! விடுங்க. ஆமா, அந்த ஊர் இந்தியாவில இருந்தா, மலேசியாவுக்கு எப்படிப்பா இந்தத் தகடு போச்சு?” “பலே!” மகளின் புத்தி கூர்மையை மெச்சிக்கொண்டார் சாமிநாதன். “இதைத்தான் நான் ஒங்கிட்டேயிருந்து எதிர்பாத்தேன். சூலீஸ்வரம்கிற இடம் பழைய மலாயாவில எங்கேயோ இருந்திருக்கணும்”. “அப்போ, ஏதோ ஒரு கோயில்லே ஒரு புதையல் இருக்கணும். சரியா?” பதில் சொல்லாமல் சிரித்தார் சாமிநாதன். “தகட்டைப் பாத்தா, ஆயிரம் வருஷம்னு சொல்லுது. அந்தச் சமயத்திலே கடாரத்திலதான் தமிழவங்க வந்து, போய்க்கிட்டிருந்தாங்க வியாபார நிமித்தமா”. “கடாரம்னா, இப்போ இருக்கிற கெடா மாநிலம்தானேப்பா? அன்னிக்குப் போனோமே, புஜாங் பள்ளத்தாக்குக்கு?” “இருக்கலாம். இன்ன இடம்தான்னு எப்படிக் கண்டுபிடிக்கறது? அதுக்குத்தான், இங்க ஏதானும் துப்பு கிடைக்குமான்னு தேடவந்தேன்”. மீனாவுக்கு உற்சாகம் கரைபுரண்டோடியது. அப்பா ஒரு துப்பறியும் நிபுணர், தான் அவருடைய உதவியாள் என்று எண்ணிப்பார்த்தாள். பெருமையாக இருந்தது. “அந்த இடத்தைக் கண்டுபிடிச்சதும், என்னப்பா செய்யப்போறீங்க?” தன்னை ரொம்ப முக்கியமாகக் கற்பனை செய்துகொண்டு கேட்டாள். “மொதல்ல கண்டுபிடிக்கலாம்!” என்று கடுமையாகச் சொன்னதோடு நில்லாமல், “ஆற்றுக்கு வர்றதுக்கு முன்னாலேயே பாலத்தை எப்படிக் கடக்கிறதுன்னு யோசிக்காதே! அது முட்டாள்தனம்!” என்று கடிந்துகொண்டார். மீனாவுக்கு வருத்தமும், கோபமும் ஒருங்கே எழுந்தன. அப்பா அவளிடம் கடுமையாகப் பேசினதே கிடையாது. ஒரே அருமை மகளென்று, அம்மாவை இழந்ததிலிருந்து அவளைத் தன் தோழியாகத்தான் இதுவரை நடத்தி வந்திருந்தார். ‘இனி நானாகப்போய் இவருடன் ஏதாவது பேசுகிறேனா, பார்!’ என்று தனக்குள் கறுவிக்கொண்டாள். சாமிநாதன் அவளிடம் தோன்றியிருந்த மாறுதலைக் கவனிக்காது இருந்ததுவேறு அவளுடைய கோபத்தை அதிகரிக்கச் செய்தது. உட்பிரகாரத்தை அடைந்தபோது, உள்ளே பல கற்தூண்கள் இருப்பதைப் பார்த்தார்கள். அத்தூண்களில் மீனாவுக்குப் புரியாத ஏதேதோ வாசகங்கள் பொறிக்கப்பட்டு இருந்தன. வேறு சமயமாக இருந்திருந்தால், ‘இது என்னப்பா போர்! போயிடலாம், வாங்க!’ என்று சிணுங்கி இருப்பாள். இப்போது, இறுகிய முகத்துடன், எசமானரிடம் உதை வாங்கிய நாய்க்குட்டியைப்போல அவர் பின்னால் நடந்தாள். சாமிநாதனோ, அவள் அருகில் இருப்பதையே மறந்தவராக, ஒவ்வொன்றையும் கவனமாகப் படித்துப்பார்ப்பதுபோல் இருந்தது. மீனாவும் தன் பங்கிற்குப் படிக்க முயன்றாள். ‘ஒரு இழவும் புரியல!’ என்று கோபம்தான் வந்தது. அந்த இடத்தில் வியர்த்துப் புழுங்கியது. அவர்கள் வந்து, என்ன, ஒரு மணி நேரம் ஆகியிருக்குமா? “என்னா, ஸார்? போலாங்களா?” என்று சற்று தொலைவிலிருந்து ஆட்டோ ரிக்ஷாக்கார முத்துவின் குரல் கேட்டது. மீனாவுக்கு உயிர் வந்தது. ஆனால், “இன்னும் கொஞ்சம் வெய்ட் பண்ணுங்க, முத்து. ஒரு நாள் முழுக்க சுத்தினா ஆற மீட்டர் சார்ஜ் குடுத்துடறேன்!” என்று சாமிநாதன் பதில் குரல் கொடுக்க, அவள் தன்னையே நொந்துகொண்டாள், இந்த அப்பாவுக்கு வேலைமேல்தான் காதல் என்று தெரிந்திருந்தும், அவரைத் தொடர்ந்து வந்தோமே என்று. “மீனா! இந்த தூணைப் பாரேன்!” சாமிநாதனது குரலில் இருந்த உற்சாகம் அவளது அசமந்தமான எண்ணப்போக்கிற்கு தடை விதித்தது. “என்னப்பா?” என்றாள், வலிய வரவழைத்துக்கொண்ட உற்சாகத்துடன். சற்றுமுன் அவரிடம் கொண்டிருந்த மனத்தாங்கல் ஒரு நொடியில் மறைந்தது. “நம்ப தகட்டிலே இருக்கிற அதே வாசகம் இதிலேயும் பொறிச்சிருக்கு!” என்றார், முகமெல்லாம் விகசித்தவராக. “இதிலேருந்து என்ன தெரியுது?” ‘நானா அகழ்வாராய்ச்சி நிபுணர்? என்னைப்போய் கேட்டா?’ என்று மனத்துக்குள் எண்ணிய மீனா பதிலேதும் சொல்லவில்லை. வலதுகை ஆள்காட்டி விரல் மேலுதட்டுக்குப் போயிற்று. கஷ்டப்பட்டு யோசிப்பதுபோல் நெற்றியைச் சுருக்கிக்கொண்டாள். அவளை ரொம்பவும் சிரமப்படுத்தாது, தந்தையே பதிலும் சொன்னார்: “இங்க, கிட்டேதான் அந்தக் குடும்பத்தோட வாரிசுங்க இருக்கணும்!” “அது எப்படிப்பா மலாயாவில கிடைச்ச பொருளிலே இருக்கிறமாதிரியே இங்கேயும் எழுதியிருக்கு?” “அந்தக் காலத்தில, கடல் கடந்தும் இந்த நாட்டு ராஜாக்களோட அதிகாரம் பரவி இருந்திச்சேம்மா! ஆசியாவில பாதி இவங்க கீழேதான். அவங்க பரிசுப்பொருள்களை அனுப்புவாங்க. பதிலுக்கு, இங்கேயிருந்து இவங்க அந்த அண்டைநாடுங்களோட பாதுகாப்புக்கு வழிசெய்வாங்க! கலையில, போர்த்திறமையில, மொழி வளமையில – பொதுவா எல்லாத்திலேயும் நாம்ப ரொம்ப முன்னேறி இருந்தோம். எப்போ? ஆயிரம், ரெண்டாயிரம் வருஷத்துக்கு முந்தி. ஏன், வெள்ளைக்காரன் நானூறு, ஐந்நூறு வருஷங்களுக்கு முன்னாடி வந்தப்போகூட! அதனாலதான், வியாபாரம் செய்ய வந்தவன், இங்கேயே தங்க சூழ்ச்சி செய்துட்டான்! எல்லாத்தையும் நாசம் செய்துட்டுப் போயிட்டான்!” எப்படி இருந்த தமிழர்களாகிய நாம் இப்போது எவ்வளவு பின்னுக்குத் தள்ளப்பட்டுவிட்டோம் என்ற எண்ணம் இருவருக்குமே உதித்து இருக்க வேண்டும். சற்று நேரம் அங்கு அலாதி மௌனம் நிலவியது. “அப்புறம்? அங்கே போனவங்களைப்பத்தி ஏதாச்சும் தகவல் இருக்கா இதில?” சமாளித்துக்கொண்டு, மீனா மீண்டும் கேட்டாள். “இல்ல. ஆனா, சூலீஸ்வரம்கிற இடத்தோட பேரை வெச்சுக்கிட்டு பாத்தா.., சூல ஈச்வரம்னு பிரிக்கலாம். சூலம் தாங்கிய காளியோட ஊருன்னு வருது. ஏதாவது காளி கோயில்ல புதைச்சு வெச்சிருப்பாங்களோ?” என்று தனது ஊகத்தை வெளிப்படுத்தினார் சாமிநாதன். “அப்படி எங்கேயோ போனவங்க திரும்பி வந்தாங்களா, இல்ல அவங்க சொந்தக்காரங்க யாரும் இங்கே இன்னும் இருக்காங்களான்னு இத்தனை நூறு வருஷத்துக்கு அப்புறம் எப்படிப்பா கண்டுபிடிக்கறது? ஆகிற காரியமா!” என்று மீனா அயர்ந்தாள். “நல்ல வேளை, இந்தியாவிலே ஆயிரக்கணக்கான வருஷம் ஒரு தொழிலை அப்பாவுக்கு அப்புறம் பிள்ளை, அதுக்கு அப்புறம் அவனோட பிள்ளைன்னு பரம்பரையா செய்துக்கிட்டு வராங்க. அப்படிப் பாத்தா.., அந்தப் பரம்பரையைச் சேர்ந்தவங்க இங்கதான் இன்னும் இருக்காங்கன்னு நிச்சயமா சொல்ல முடியும்!” உறுதியாகச் சொன்னார் சாமிநாதன். அவர் கண்கள் நம்பிக்கையுடன் பளபளத்தன. 9 தஞ்சை “ஆட்டோ வருதாப்பா?” என்று அதிகாரமாகக் கேட்ட இளைஞனை அலட்சியமாகப் பார்த்தார் முத்து. “இப்பத்தான் ஒரு பெரிய சவாரி போயிட்டு வந்திருக்கேன். வேற வண்டி பாத்துக்க, ஸார்!” என்றார். “அது என்னப்பா, அவ்வளவு பெரிய சவாரி?” என்று கேலியாகக் கேட்ட ராஜனை முறைத்தபடி, “தஞ்சாவூரில இருக்கிற எல்லாப் பாழடைஞ்ச கோயிலையும் சுத்திட்டு, ஊருக்கு வெளியே இருக்கிறதையும் காட்டிட்டு வந்திருக்கேன்!” என்றார் சற்று பெருமையாக. “பாழடைஞ்ச கோயில்ல அப்படி என்ன இருக்கு?” என்றவனிடம், “ஒன் வேலையைப் பாத்துக்கிட்டு போ, ஸார்! மனுஷன் பாதி உசிரா திரும்பி வந்திருக்கேன்! இன்னும் சாப்பிடக்கூட இல்ல!” என்றார் முத்து, விரட்டாத குறையாக. “வாப்பா! நானும் சாப்பிடத்தான் புறப்பட்டேன். ரெண்டு பேரும் சேர்ந்தே சாப்பிடலாம்!” “துட்டு?” சந்தேகமாகக் கேட்ட முத்துவை, “பில்லை நான் கட்டறேன், வா!” என்று முத்துவை அழைத்துப்போனான் ராஜன். முத்து அவனுடன் சிநேகிதமாக உணர்ந்தான். “இந்த ஹோட்டலிலேருந்துதான் அவங்களும் வந்தாங்க!” என்று வலியத் தெரிவித்தான். தெரிந்தும், தெரியாதவன்போல் நடித்தான் ராஜன். “யாரு?” “யாரோ, வெளிநாட்டுக்காரங்க. அப்பாவும், பொண்ணும்போல. அவரு கோயில் தூணை எல்லாம் கவனிச்சுப் படிச்சாரு!” ராஜன் தன் பரபரப்பை வெளிக்காட்டிக்கொள்ளாது, “எந்தக் கோயில்?” “ஏதோ ஒரு சிவன் கோயில்!” ஆர்வத்தை அடக்க முடியவில்லை ராஜனால். “அப்புறம்?” “எதுக்காக இப்படி கோயில் கோயிலா தேடறாங்கன்னு நைசா போய் ஒட்டுக்கேட்டேனா! ஏதோ புதையல்னு பேசிக்கிட்டாங்க!” “ஒனக்கு ஸ்வீட் பிடிக்குமா? டயர்டா இருக்கியே! சாப்பிடு. தெம்பா இருக்கும்,” என்று உபசாரப்படுத்தி, முத்துவை பாசந்தியும், அல்வாவும் சாப்பிடவைத்தான் ராஜன். திகட்டாமல் இருக்க, கூடவே மிக்ஸ்சர், ஸ்பூன் போட்டு. “அப்புறமா அவங்க எங்கே போனாங்க?” என்று கேட்டான். பொங்கி எழுந்த ஆர்வத்தை வெளிக்காட்டாது, எங்கேயோ வேடிக்கை பார்ப்பதுபோல் பாவனை காட்டினான். “அந்தக் கோயிலுக்குப் பக்கத்திலிருந்த தள்ளிப்போன கிராமத்தில விட்டுட்டு வந்தேன்! சரியான பேஜாரு! ரோடு ஒண்ணும் ஒழுங்கா இல்ல!” “அந்த கிராமத்தோட பேரு என்ன?” “ஊரு, பேரு எல்லாம் தெரியாது. ஆனா, அங்கே போக வழி தெரியும். கொண்டுபோய் விடவா, ஸார்?” “மீட்டர் எவ்வளவு ஆகும்?” “மீட்டரைப் பாத்து காசு வாங்கினா, இந்தக் காலத்தில கட்டுப்படி ஆகுமா, ஸார்?” என்ற முத்து, “அவங்க முன்னூறு ரூபாய் குடுத்தாங்க!” என்று கொஞ்சம் மிகைப்படுத்தியே சொன்னார். “நான் கூடவே நூறு போட்டுக் குடுக்கறேன். என்னையும் அந்தக் கிராமத்திலே கொண்டுபோய் விடுங்க!” ராஜனின் திடீர் மரியாதைப்பன்மையைக் கவனிக்கும் நிலையில் இல்லை முத்து. இன்று யார் முகத்தில் முழித்தோமோ என்று மகிழ்ச்சி கொண்டார். “கொஞ்சம் இருங்க,” என்று உள்ளே போனான் ராஜன். கைத்தொலைபேசியில், யாரையோ அழைத்து, முகமன் எதுவும் கூறாது, நேரிடையாக விஷயத்துக்கு வந்தான். “மலேஷியாவிலேருந்து வந்தவங்களாம். அப்பாவும், பொண்ணுமா காசை வாரி இறைக்கறாங்க. சர்வருக்கு டிப்ஸே ஐம்பது ரூபா குடுத்தான்னா, பாத்துக்கயேன்! டைனிங் ஹாலிலே மறைவா ஒக்காந்துக்கிட்டு, காதில விழாதமாதிரி, எங்கேயோ பாத்துக்கிட்டு, அவங்க பேசறது எல்லாத்தையும் கேட்டேன். இங்க ஏதோ தகடுன்னு பேசிக்கிட்டாங்க. ஒனக்கு வேலை வெச்சிருக்கேன். நேரில வா, விவரமா சொல்றேன்!” 10 தஞ்சை அருகில் ஒரு கிராமம் இஞ்சின் போட்ட சத்தம் போதாதென்று, எவரும் தெருவில் எதிர்ப்படுகிறார்களோ, இல்லையோ, ஹார்னையும் இடைவிடாது ஒலித்துக்கொண்டு, போதாத குறைக்கு, பெரும் புகையைக் கக்கிக்கொண்டிருந்த பஸ்ஸை ஓட்டிக்கொண்டிருந்தார் ஓட்டுநர். குளிர் சாதன வசதி இல்லாத பஸ் அது. ஜன்னல் வழியே புகை உள்ளே வர, மீனா வாய் ஓயாது இருமினாள். நேரத்தை வீண்டிக்க மனமின்றி, அடுத்த நாள் முதல்பஸ்ஸிலேயே கிளம்பியிருந்ததில், இன்னும் இருள் பிரியவில்லை. “பஸ் நிக்கறப்போ, சூடா கோப்பி, இல்ல பால் வாங்கிக் குடுக்கறேன். அதைக் குடிச்சா, இப்படி இருமல் வராது. கொஞ்சம் திராட்சைப் பழம் வாங்கி வெச்சுக்கலாம். தலை சுத்தாது!” என்று கரிசனப்பட்டார் சாமிநாதன். “பிளேனில சுத்தமான காத்தே கிடையாது. ஒருத்தர் இரும ஆரம்பிச்சாலும், எல்லாருக்கும் தொத்திக்குது. வந்து ரெண்டு நாளாவது நாம்ப ஓய்வா இருந்திருக்கலாம்னு நான் அப்பவே சொன்னேன்! நீதான் ஒரே பிடிவாதமா..,” என்று அவளைக் குற்றம் சாட்டினார். அவர்களுக்குரிய நிறுத்தம் வந்தது. “இப்படியே அரை மணி போ, ஸார். எங்கேயும் வளையாம போனாக்க, நீ கேக்கற கிராமம் வரும்,” என்று கூறிவிட்டுப் போனார் கண்டக்டர். நல்ல வேளை, அந்த நிறுத்தத்திலேயே ஒரு டீ ஸ்டால் இருந்தது. அங்கே முகம் கழுவிக்கொண்டு, சூடாக ஒரு பானத்தையும் குடித்தபின், சற்று தெம்புடன் நடக்க ஆரம்பித்தனர் தந்தையும், மகளும். தார் ரோடு சீக்கிரமே முடிய, ஒற்றையடிப்பாதையில் நடந்தனர். இருபுறமும் தென்னந்தோப்புகள். மீனாவுக்கு இரைத்தது. இவ்வளவு செலவழித்துக்கொண்டு வந்ததிற்கு, பழனி, மதுரை, தஞ்சாவூர் என்று பழங்கோயில்களைச் சுற்றிப்பார்த்துவிட்டு, நாலு பட்டுப்புடவைகளும், கண்ணாடி பதித்த வளையல்களும் வாங்கிக்கொண்டு வந்த வழியே போகாமல், எதற்காக இப்படியெல்லாம் அலைகிறோம் என்று குமைந்தாள். “என்னமோ புதையலாம்! எங்கேயோ போனவங்களோட வம்சத்தை ஆயிரம் வருஷம் கழிச்சு, இப்ப தேடறதாம்! முட்டாள்தனமா இல்ல இருக்கு! அட, தெரிஞ்சிருந்தாலும், அவங்க நம்பகிட்ட சொல்லவா போறாங்க?” என்று சற்று ஆத்திரத்துடனேயே தனது அதிருப்தியை வெளிக்காட்டினாள். “இது புதையல் சம்பந்தப்பட்ட சமாசாரம் மட்டுமில்ல, மீனா,” நிதானமாகப் பேசினார் சாமிநாதன். “அப்படியே ஒரு புதையல் இருக்குன்னு வை. அது அரசாங்கத்துக்குத்தான் சொந்தம்! எனக்கு அதைப்பத்தி அக்கறை இல்ல. சரித்திரத்தைத் தெரிஞ்சுக்கிற ஆர்வம்தான். இங்க இருந்தவங்க மலாயாவுக்குத்தான் போயிருக்கணும். அப்ப சோழர்களோட ஆட்சிகாலம். தகட்டைக் குடுத்த ராஜாவுக்கு, பருவக்காத்து எந்தப் பக்கம் அடிக்கும்னு தெரிஞ்சிருக்காதா!” மீனாவுக்குப் புரிந்தமாதிரி இருந்தது. “ஓ! இங்கேயிருந்து புறப்பட்டவங்க எங்கே போவாங்கன்னு தெரிஞ்சுதான், அந்த தகடுங்க ரெண்டையும் குடுத்து அனுப்பினாரா? அதான் சூலீஸ்வரம்னு பேர்கூடப் போட்டுக் குடுத்திருக்கார்!” “ஒண்ணு மலாயா போயிருக்கு. இல்லியா? இன்னொண்ணு இங்கேதான் எங்கேயோ இருக்கு. அதைத் தேடித்தான் நாம்ப போறோம்,” என்று விளக்கினார் சாமிநாதன். “அது தெரிஞ்சு நமக்கு என்னப்பா ஆகப்போகுது?” “நடக்கறப்போ பேசாதேம்மா. இரைக்குது, பாரு!” என்று கரிசனம் காட்டுவதுபோல், அவளுடைய எதிர்மறையான கேள்விகளுக்கு ஒரு முற்றுப்புள்ளி வைத்தார். மீதி தூரம் மௌனமாகவே நடந்தார்கள். வழியில் ஒரு சிறுவன் வேப்பங்குச்சியினால் பல் விளக்கிக்கொண்டிருந்தான். ஆடு மேய்ப்பவனாக இருக்க வேண்டும் என்று நினைத்துக்கொண்டு, “தம்பி! … கிராமத்துக்கு எப்படிப் போகணும்?” என்று வினவினார். குச்சியை அவசரமாக வெளியே எடுத்துவிட்டு, மரியாதையாகப் பேசினான் சிறுவன். “கண்டக்டர் நேரா இல்ல போகச் சொன்னார்? இவன் வந்த வழியையே காட்டறானே!” என்று அவர் மீனாவிடம் முணுமுணுத்தார். “நேராவே போகலாம்பா!” என்று மீனா முடிவெடுத்தாள். அடுத்த ஐந்தாவது நிமிடத்தில் அவர்கள் தாங்கள் தேடி வந்த இடத்தை அடைந்தனர். “நல்ல வேளை, அந்தப் பையன் சொன்னதைக் கேட்டு, வந்த வழியே திரும்பிப் போகாம இருந்தோம்!” என்று மீனா சந்தோஷப்பட்டுக்கொண்டாள். “வழி தெரியாட்டி, தெரியாதுன்னு சொல்ல வேண்டியதுதானே! எதுக்காக தப்பு, தப்பா சொல்லணும்!” என்று அந்தப் பையனைத் திட்டவும் அவள் தவறவில்லை. காலையில் ஆட்டோவில் வந்தபோது, வேறு கிராமத்துக்குப் போயிருந்தார்கள். சாமிநாதன் எதிர்பார்த்து வந்தபடி, அங்கு வயதில் முதிர்ந்தவர்களாக யாரும் இருக்கவில்லை. ‘இந்த வட்டாரத்திலேயே பூர்ணவல்லிதான் ரொம்ப வயசானவங்க. பழைய சமாசாரம் எதுனா கேக்கணும்னா, அவங்களைத்தான் நீங்க பாக்கணும்!’ என்று ஒருவர் தெரிவித்தார். அவர் குறிப்பிட்ட இடம் இன்னும் தொலைவில் இருந்தது. “ஆட்டோ அங்கெல்லாம் போகாது, ஸார்! பெட்ரோல் இல்ல!” என்று முத்து சொல்லிவிடவும், இப்போதைக்கு அலைந்தது போதும் என்று ஹோட்டலுக்கே திரும்பி இருந்தார்கள். சாப்பிடும்போது, ‘திரும்பவும் அலைய என்னால முடியாதுப்பா. நீங்க மட்டும் போயிட்டு வாங்களேன்!’ என்று கெஞ்சலாக மீனா கூறியபோது, ‘யாரோ முன்னே பின்னே தெரியாத பொம்பளையைப் பாக்க நான் மட்டும் போனா, நல்லா இருக்காதும்மா!’ என்று வற்புறுத்தினார் சாமிநாதன். ‘சரி, வரேன். ஆட்டோ வேண்டாம்பா. ஒரேயடியாக் குதிக்குது. பாதியிலேயே வேற இறக்கி விட்டுடறானுங்க! பஸ்ஸிலேயே போகலாம். மத்தவங்க பேசறதை, பழகறதைக் கேட்டா, புது தினுசா சுவாரசியமாக இருக்கும்!’ ‘எனக்கென்னமோ இன்னொரு தகடு அவங்ககிட்டே இருக்கும்னு தோணுது!’ தனக்குத்தானே பேசிக்கொள்வதுபோலச் சொன்னார் சாமிநாதன். ‘தகடு கிடைச்சா, புதையலும் கிடைச்சுடும், இல்லியாப்பா?’ அவர்களது பேச்சு சுவாரசியத்தில் பின்னாலிருந்த மேசையிலிருந்த இளைஞனை அவர்கள் கவனிக்கவில்லை. 11 பூர்ணவல்லி ஒரே தெருதான் அந்த குக்கிராமம் என்று சொல்லும்படி இருந்தது. அந்த ஒற்றையடுக்கு ஓட்டு வீடுகளுக்குமுன் காம்பவுண்டு சுவரெல்லாம் இல்லை. எல்லா வீடுகளுக்கு முன்னேயும் இரு பக்கங்களிலும் திண்ணை, நாலைந்துபேர் படுத்துக்கொள்ள வசதியாக. ஒன்றுடன் ஒன்று ஒட்டிக்கொண்டு இருந்தன. நடுவில் இருந்த ஒரு வீட்டு வாசலில், அப்போதுதான் தண்ணீர் தெளிக்கப்பட்டு, சிறு மாக்கோலம் போடப்பட்டிருந்தது. “அங்கே போய் விசாரிக்கலாம், வா மீனா!” என்று தெம்புடன் முன்னால் நடந்தார் சாமிநாதன். கோலத்திற்குப் பின்னாலிருந்த மரக்கதவு திறந்தே இருந்தது. மரியாதையை உத்தேசித்து, “யாருங்க வீட்டிலே?” என்று குரல் கொடுத்தார். “யாரு?” கேட்டபடி வந்த இளம்பெண்ணுக்கு சுமார் இருபத்தெட்டு வயது இருக்கும் என்று கணக்குப்போட்டார் சாமிநாதன். ஒல்லியாக, ஒய்யாரமாக இருந்தாள். ‘மூக்கும், முழியுமாக, ரவி வர்மா படத்தைப்போல,’ என்று சாமிநாதனது ஆராய்ச்சி மனம் கூவிற்று. கண்ணுக்குக் கீழ் பூசியிருந்த மை முதல்நாள் அணிந்ததுபோலும்! சற்று தீற்றிக்கொண்டிருந்தது. அவளுடைய பெரிய கண்களை அது இன்னும் பெரிதாகக் காட்டிய விவரத்தை தான் கவனித்தது குறித்து சாமிநாதனுக்கு வெட்கம் உண்டாயிற்று. சுருண்டிருந்த கேசம் கலைந்திருந்தாலும், முன்னால் தொங்கிய பின்னல் முழங்காலைத் தொட்டதை மீனாவும் வியப்புடன் பார்த்தாள். “யாரைப் பாக்கணும்?” சற்று கடுமையாகவே வந்தது கேள்வி, இம்முறை. “நாங்க ரெண்டு பேரும் மலேஷியாவிலிருந்து வர்றோம். நீங்க.. பூர்ணவல்லியா?” ‘இவளா இந்த வட்டாரத்திலேயே வயதானவள்!’ என்று மனம் ஆட்சேபித்தாலும், சும்மா கேட்டுவைத்தார். “எங்க கேள்விக்கு நாங்க தேடிட்டு வர பதில் இங்க கிடைக்கும்னு சொன்னாங்க!” என்றும் சேர்த்துக்கொண்டார். “என்ன கேள்வி, என்ன பதில்? என்னய்யா, பாத்தா படிச்சவர் மாதிரி இருக்கீங்க! இப்படியெல்லாம் சொல்லிக்கிட்டு ஒரு வீட்டுக்குள்ளே நுழையப்பாக்கிறீங்களே!” “தரங்கிணி! யாரும்மா அது?” உள்ளேயிருந்து ஒரு குரல் வந்தது. வயோதிகக் குரல் என்று தெரிந்தாலும், கம்பீரமாக இருந்தது. “தெரியல, பாட்டி. யாரோ ரெண்டு பேர். விசாரிச்சுண்டு இருக்கேன்!” வாசலிலிருந்தபடியே குரல் கொடுத்தாள் அப்பெண். கிராமத்தின் அக்கிரகாரத்திற்கு வந்துவிட்டோமோ என்று திகைத்துப்போனார் சாமிநாதன். “என் பேர் சாமிநாதன், இது என் மக, மீனா,” என்று அறிமுகப் படலத்தை ஆரம்பித்தார். “ஹலோ!” என்று முகமன் கூறிய மீனாவை அவள் – தரங்கிணி– லட்சியமே செய்யவில்லை. ஏதோ சவால் விடுவதுபோல சாமிநாதனையே உற்றுப் பார்த்தபடி இருந்தாள். கால்களைச் சற்றே பரத்தி, கைகள் இரண்டும் நாட்டியம் ஆடத் துவங்கும் பாவனையில் இடுப்பில் வைத்திருந்தாள். “பஸ்ஸிலிருந்து எறங்கி, ரொம்ப தூரம் நடந்தே வந்திருக்கோம். ப்ளீஸ், இங்க கொஞ்சம் ஒக்காந்துக்கலாமா?” என்று கெஞ்சலாகக் கேட்டபடியே சாமிநாதன் திண்ணையில் அமர்ந்தார். “இதோ பாருங்கம்மா!” தன் கால்சட்டைப் பாக்கெட்டிலிருந்து அந்த செப்புத்தகட்டை எடுத்துக் காட்டினார். “என்னது இது? எங்கிட்ட எதுக்காக காட்டறீங்க?” இப்போது அவள் குரலில் கடுமை சற்று குறைந்திருந்தது. “எந்தக் காலத்திலேயோ தமிழ்நாட்டிலேருந்து இது மலாயாவுக்கு வந்திருக்கு. புதைபொருள் ஆராய்ச்சியில கண்டு எடுத்தோம். நான் அங்க அருங்கலையகத்தில உத்தியோகம் பாக்கறேன்”. அவள் கண்களில் கனிவு பிறந்தது. “மியூசியமா?” “ஆமா!” உற்சாகமாகத் தொடர்ந்தார் சாமிநாதன். “பத்து மைல் தூரத்தில ஒரு பாழடைஞ்ச கோயில்ல இதைப்பத்திப் பாத்தோம். பக்கத்தில இருந்த கிராமத்தில இங்க விசாரிக்கச் சொல்லி அனுப்பினாங்க”. “டீ பொண்ணே! நம்பளைத் தேடிண்டு ஆத்துக்கு வந்திருக்கிறவாளை வாசல்லேயே ஒக்கார வெச்சுப் பேசாதே! உள்ளே அழைச்சுண்டு வா!” உள்ளேயிருந்து அசரீரிபோல் குரல் மீண்டும் ஒலித்தது. “உள்ளே வாங்க. பாட்டி கூப்பிடறாங்க!” என்றபடி, முன்னால் நடந்தாள் தரங்கிணி. பாட்டியிடம் பேசும்போது ஒரு மாதிரியும், தன்னுடன் வேறு தினுசிலும் பேசுகிறாளே இவள் என்று வியந்தபடி அவள் பின்னால் போனார் சாமிநாதன். ஒரு பெண்ணின் பின்னழகை – அது எவ்வளவுதான் கவர்ச்சியாக இருந்து, பார்க்கத் தூண்டினாலும் – உற்றுப் பார்ப்பது அழகல்ல என்று, கண்களை அவளது பின்புறத்தைத் தவிர மற்ற திசைகளிலெல்லாம் சுழற்றினார், சிரமப்பட்டு! எல்லா கிராமங்களிலும் இருக்கிற வீடு மாதிரிதான் இருந்தது. நுழைந்தவுடன் கீழே இறங்க வசதியாக மூன்று படிகள். கீழ்ப்பகுதியில் பெரிய முற்றம் – வானத்தைப் பார்த்தபடி. அதில் துளசிமாடம், கிணறு. பக்கத்திலேயே பிளாஸ்டிக் வாளியும், செம்பும் இருந்தன. அவர்கள் சொல்லாமலேயே, “வா!” என்று மகளையும் அழைத்துக்கொண்டு, கால்களைக் கழுவிக்கொண்டார். பிறகு, பக்கவாட்டில் இருந்த வேறு படிகளில் ஏறி, நீண்ட தாழ்வாரத்துக்கு வந்தார். “என்னவாம்?” என்ற மூதாட்டி, அவர் கண்டிருந்த எல்லா பெண்மணிகளையும்விட முதிர்ந்தவளாகத் தோற்றம் அளித்தாள். காதுகளில் பெரிய சிவப்புக்கல் தோடு, கழுத்தில் மெல்லிய தங்கச்சங்கிலிகள் இரண்டு, நெற்றியில் அகலமான குங்குமப்பொட்டு என்று பழுத்த சுமங்கலியாகக் காட்சியளித்தாள். ஒரு சிறு எலுமிச்சையளவே இருந்தது கழுத்தில் பதிந்திருந்த அவளுடைய கொண்டை. அதில் சிறு மல்லிகைப் பூச்சரம். மர ஊஞ்சலில் முதுகு வளையாது உட்கார்ந்திருந்தாள் அந்த முதியவள். பக்கத்திலேயே வெள்ளியிலான வெற்றிலைப்பெட்டி ஒன்றும் இருந்தது. இவர்களைப் பார்த்து, அருகிலிருந்த பிரம்பு நாற்காலிகளில் அமரும்படி கையைக் காட்டிச் சைகை செய்தாள். தேர்ந்த நடனமணிபோல், அவள் கை போன இடத்துக்குக் கண்ணும் தொடர்ந்துபோயிற்று என்பதை மீனா பரவசத்துடன் கவனித்தாள். “அதை இப்படிக் குடுங்க!” என்று அவர் கையிலிருந்ததை வாங்கி, பாட்டியிடம் கொண்டுபோய்க் காட்டினாள் தரங்கிணி. பாட்டி அதைப் பிடுங்காத குறையாக வாங்கிக்கொண்டதை சாமிநாதன் பார்த்தார். பாவம், விரல்களில் பலம் இல்லை போலிருக்கிறது என்று பரிதாபப்பட்டுக்கொண்டார். “அவாகிட்டேயே திருப்பிக் குடுத்துட்டு, போயிட்டுவரச் சொல்லுடி!” பேத்தியின் குரலில் சற்றுமுன் இருந்த கடுமை இப்போது பாட்டியிடமும் வந்திருந்தது. உபயோகமாக ஏதாவது புதிய தகவல் கிடைக்கும் என்று நம்பிக்கொண்டிருந்தவருக்கு இந்த திடீர் திருப்பம் ஏமாற்றத்தை அளித்தது. “பாட்டி சொன்னதைக் கேட்டீங்கள்ல?” என்ற தரங்கிணியின் குரலில் விரோதம் தொனித்தது. “அப்பா! வாங்க போகலாம்!” என்று அவர் காதருகே குனிந்து முணுமுணுத்தாள் மீனா. “கழுத்தைப் பிடிச்சுத் தள்ளிடுவாங்க போலயிருக்கு!” அவளை லட்சியம் செய்யாது, “இல்லீங்கம்மா. இதே எழுத்துக்களிருந்த ஒரு கல்தூணைப் பாத்துட்டுதான், விசாரிச்சிட்டு இங்க வரேன்,” என்றார் மறுபடியும். “இங்க எந்த இடத்தில தோண்டினாலும், இந்தமாதிரி ஏதாவது உபயோகமில்லாத சாமான்கள் நிறையக் கிடைக்கும். எவ்வளவோ ராஜாக்கள் ஆண்ட பூமி இது!” என்றாள் தரங்கிணி அலட்சியமாக. “எங்களுக்கு இதைப்பத்தி ஒண்ணும் தெரியாது. போயிட்டு வரீங்களா?” “இதோ பாருங்கம்மா,” என்று மீண்டும் ஆரம்பித்த சாமிநாதனைக் குதறிவிடுவதுபோலப் பார்த்தாள் தரங்கிணி. “நீங்க கேட்டுக்குங்க. எங்க பாட்டி இருக்காங்களே, அவங்களுக்கு தொண்ணூறு வயசுக்குமேல ஆயிடுச்சு. ஆனா, இன்னும் நல்ல நினைவோடதான் இருக்காங்க. அவங்களே ’இது ஒண்ணுமில்லே’ன்னு சொல்லிட்டாங்க. அப்புறம் என்ன? காலங்கார்த்தால வந்து இப்படித் தொந்தரவு செய்யறது ஒங்களுக்கே நல்லா இருக்கா?” தோல்வியை ஒப்புக்கொள்ள மனமின்றி, சாமிநாதன் அயர்ச்சியுடன் எழுந்தார். “இப்ப எப்படி தஞ்சாவூருக்குப் போறதுன்னு சொல்றீங்களா? நாங்க ஊருக்குப் புதுசு!” என்றார் கெஞ்சலாக. “வந்தவழியே போறது!” என்றாள் தரங்கிணி துடுக்காக. “தரங்கிணி!” என்ற பாட்டியின் குரலில் கண்டனம் ஒலித்தது. “வீடு தேடி வரவா யாரா இருந்தாலும், மரியாதையா நடத்தணும். அவாளுக்குக் குடிக்க ஏதானும் குடு மொதல்ல. சிரம பரிகாரம் பண்ணிண்டு புறப்படட்டுமே! நமக்கென்ன போச்சு!” என்ற கிழவியை நன்றியுடன் பார்த்தார் சாமிநாதன். தரங்கிணி உள்ளே போனாள். மீனா பொழுது போகாமல், பக்கத்திலிருந்த மேசையில் ஏதோ புத்தகத்தைப் புரட்டிக்கொண்டிருந்தாள். சற்று பொறுத்து, கரைத்த மோரில் உப்பும், கருவேப்பிலையும் போட்டு தரங்கிணி கொண்டுவந்த பானம் அமிர்தமாக இருந்தது. லேசாக பெருங்காய மணமும் வீசிற்று என்று குறித்துக்கொண்டார். வெங்காயம் போடவில்லை. வீட்டில் ஆண்கள் வாடையே இல்லை என்பதை கவனித்து, ‘அதுதான் இவள் மிரள்கிறாளோ, பாவம்!’ என்று பரிதாபப்பட்டார். “ஒங்களுக்கு ரொம்ப கஷ்டம் குடுத்துட்டோம். மன்னிச்சுக்கோங்க. அப்படி ஏதாவது தகவல் தெரிவிக்கணும்னு தோணிச்சுன்னா, நாங்க தஞ்சாவூரில இந்த ஹோட்டல்லதான் தங்கி இருக்கோம். இன்னும் நாலுநாள் இருப்போம். நீங்க தொடர்பு கொள்ளலாம்!” அவர் ஒரு சிறு துண்டு காகிதத்தில் முத்திரை குத்தப்பட்டு இருந்த விலாசத்தை அவளிடம் நீட்டினார். இறுகிய முகத்துடன், “அதுக்கு அவசியம் இருக்கிறதா எனக்குப் படலே,” என்றாள். இருந்தாலும், அதை வாங்கிக்கொண்டாள். “அவங்க ரொம்ப அழகா இருக்காங்க, இல்லப்பா?” தெருவின் முனை தாண்டியதும், மீனா கேட்டாள். “யாரு, பாட்டிதானே? ஆமாம்!” என்று கேட்ட தந்தையை முறைத்தாள். “நான் அந்த தரங்கிணியைச் சொல்றேன்”. “ஏன், அந்தப் பாட்டி பூர்ணவல்லியை விட்டுட்டியே! இந்த வயசிலேயும் என்ன அதிகாரம், என்ன மிடுக்கு! வீட்டில ஆம்பளைங்க பின்னால பயந்து ஒளிஞ்சுக்கிட்டிருந்த கிராமத்துப் பொம்பளையா தெரியல! ஏதோ அல்லி அரசாணி மாதிரியில்ல இருக்காங்க!” “எனக்கென்னமோ, பாட்டியும், பேத்தியும் சேர்ந்து, ஏதோ நாடகம் ஆடினமாதிரித்தான் தெரிஞ்சிச்சு!” என்ற மீனாவை வியப்புடன் நோக்கினார் சாமிநாதன். முதன்முறையாக அவளுடைய எண்ணம் தனதுடன் ஒத்துப்போகிறதே என்று அதிசயப்பட்டவராக, “ஒனக்குமா?” என்றார். “நான் அந்தப் பாட்டியையே கவனிச்சிட்டு இருந்தேன். செப்புத் தகட்டைக் கையில் எப்படி வாங்கினாங்க பாத்தீங்களா?” “எப்படி?” “ஏதோ பூசை சாமானை வாங்கறமாதிரி, மரியாதையோட, இல்ல, இல்ல, ஒரு பக்தியோட வாங்கினமாதிரி இருந்திச்சு எனக்கு!” சாமிநாதனுக்கு சப்பென்று போயிற்று. இவள் எப்படி இல்லாததைக்கூட இருக்கிறமாதிரி சொல்கிறாள்? கற்பனைக்கும் ஒரு எல்லை கிடையாதா! இந்தப் பெண்ணிற்கு கேரளாவில் ஏதாவது மாந்திரீக சிகிச்சை அளிக்க முடியுமா என்று பார்க்க வேண்டும் என்று தீர்மானித்துக்கொண்டார். அவ்வப்போது அப்படி ஏதாவது நினைத்துக்கொள்வார், சற்று நேரத்தில் அது மறந்தும் விடும். ‘ஒங்களுக்கு வேலைதான் முதல் பெண்டாட்டி! ஒங்களை மாதிரி ஆம்பளைங்க கல்யாணமே செஞ்சுக்கிட்டிருக்கக் கூடாது!’ என்று மனைவி அடிக்கடி சண்டை பிடித்தது நினைவில் எழுந்தது. “ஏம்பா ஒருமாதிரி இருக்கீங்க? இவ்வளவு தூரம் வந்து, ஒண்ணும் பிரயோசனம் இல்லாமப் போயிடுச்சேன்னு இருக்கா?” பெருமூச்செறிந்தார் சாமிநாதன். “பின்னே என்ன மீனா? நம்பளை ஏன் அப்படி விரட்டினாங்க? அதான் எனக்குப் புரியல”. “ஏதாவது விஷயம் இருக்கும். திரும்பவும் அந்த அழகான லேடியைப் பாத்துக் கெஞ்சினாப் போச்சு!” சாமிநாதன் விளையாட்டாகப் பயந்தார். “ஐயோ! இன்னொருவாட்டி இந்த முள்ளுப்பாதையில நடக்க என்னால முடியாதுப்பா! மண்டையைக் கொளுத்தற வெயில் வேற! இந்த அத்துவானக்காட்டுக்கு எந்த ஆட்டோவும் வராது!” “அதுக்கு அவசியம் இல்லப்பா. சென்னையில, அவங்க வேலை செய்யற இடத்துக்கே போய் பாத்தா போச்சு!” மர்மமாகச் சிரித்தாள் மீனா. அவளையே பார்த்தார் சாமிநாதன். என்ன சொல்கிறது இந்தப் பெண்? “அந்த தரங்கிணி ஆன்ட்டி ..,” என்று ஏதோ ஆரம்பித்த மீனாவை புன்சிரிப்புடன் இடைமறித்தார் சாமிநாதன்: “ஒனக்கு ஆன்ட்டியா அவங்க?” “அவங்களுக்கு முப்பது, நாப்பது வயசு இருக்காது? எனக்கு இப்பத்தானே பதினேழு வயசாகுது! அதான் வயசில பெரியவங்கன்னு அப்படிச் சொன்னேன்”. ‘அவ்வளவு வயசு ஆகியிருக்குமா! அது எப்படி உடலை அவ்வளவு கட்டுக்கோப்பாக வைத்திருக்கிறாள்?’ என்ற ஆச்சரியம் எழ, ‘சீ! யாரோ முன்னேபின்னே தெரியாதவளைப்பத்தி எனக்கு என்ன யோசனை?’ என்று மனத்தைக் கட்டுப்படுத்த முயன்றார். அவரது மனப்போராட்டத்தைக் கவனியாது, மீனா தன்பாட்டில் பேசிக்கொண்டு போனாள்: “நமக்கு மோர் கொண்டுவர உள்ளே போனாங்கல்ல? அப்போ மேசையிலிருந்த புத்தகத்தைப் புரட்டிப் பாத்தேனா! அதிலதான் அவங்க பேரும், கல்லூரி பேரும் போட்டிருந்திச்சு!” “இந்த வயசில படிக்கிறாங்களா!” என்று ஆச்சரியப்பட்ட தந்தையை, முகச்சுளிப்புடன் பார்த்தாள் மீனா. “அட போங்கப்பா! அது பரதநாட்டிய சம்பந்தமான புத்தகம். இவங்க அங்கே டான்ஸ் லெக்சரரா இருக்கணும். ஏதோ கலைக்கல்லூரியாம். அதான் அவ்வளவு அழகா, பாதம் தரையிலேயே படாததுமாதிரி நடக்கிறாங்க! முடியைப் பாத்தீங்கல்ல? முழங்காலுக்குக் கீழே தொங்குது! தலைக்கு என்ன எண்ணை பாவிக்கறாங்கன்னு கேக்கவாவது இன்னொரு தடவை அவங்களைப் பாத்துப் பேசணும்! அப்போதான் நான் எங்கேயாவது டான்ஸ் ஆடறப்போ, சவுரி வெச்சுக்க வேணாம்!” சிரிப்பு வந்தது சாமிநாதனுக்கு. பெண்ணான மீனாவையே தரங்கிணி இவ்வளவு தூரம் கவர்ந்துவிட்டாள் என்றால், தான் அவளைப் பார்த்து, சஞ்சலம் அடைந்ததில் என்ன தவறு என்றெண்ணி தன்னை மன்னித்தார்! மனைவி இறந்ததிலிருந்து, வேறு எந்தப் பெண்ணின் தாக்கமும் இல்லாது, வேலையிலேயே மூழ்கிவிட்டிருந்தவர், முதல்முறை காதல் வசப்படும் விடலைப்பையனைப்போல உணர்ந்தார். மீண்டும் அந்த அழகியைப் பார்க்கப்போகிறோம் என்ற எண்ணமே உற்சாகத்தைத் தர, நடையை எட்டிப்போட்டார். 12 ஆயிரம் ஆண்டுகளுக்குமுன், கடாரத்தில் “நமக்கு ஒரே இடத்தில் நிலைத்து வாழும் பாக்கியம் இல்லை போல இருக்கிறதடா, தம்பி!” என்று கண்ணீர் மல்கக் கூறிய வசந்தபைரவியை எதிர்நோக்கிய ஆனந்தரங்கனது கண்களிலும் நீர் வழிந்தது. ‘குறுகிய இந்த வாழ்க்கையில் ஏன் இவ்வளவு குழப்பங்கள்!’ என்ற ஏக்கம் எழுந்தது. போன முறை அயல்நாடு வந்தபோதோ, நிரந்தரமாகத் தந்தையைப் பிரிந்து வந்துவிட்டோம். அதன்பிறகு, பணங்காசு இருந்தபோதும், கோயில் கட்டும் பணி முடியும்வரை அதைவிட்டு நகர முடியவில்லை. அதனுடன், தன் மனைவி, தன் குழந்தைகள் என்று புதிய உறவுகள் கிளைக்க, கொஞ்சம் கொஞ்சமாக தான் பிறந்த மண்ணைப் பிரிந்த ஏக்கம் மங்கிப் போயிற்று. இருந்தாலும், கூடவே வளர்ந்த அக்காளுக்கு என்றுமே ஆனந்தரங்கனது உள்ளத்தில் ஒரு தனி இடம் இருந்துவந்தது. இன்று ரத்த பந்தம் கொண்ட அவளையும் பிரிய வேண்டி வந்துவிட்டதே என்ற கழிவிரக்கம் ஏற்பட்டது அவருக்கு. “நான் தமிழகத்துக்குப் போய்த்தான் ஆகவேண்டுமா, பைரவி?” நாதழுதழுக்கக் கேட்டார் சிற்பி. “நீயே யோசித்துப் பார், ரங்கா! அங்கு போரினால் நமக்கு விளையக்கூடிய சிதைவுகளிலிருந்து தப்பி, ஏறக்குறைய அகதிகள் மாதிரி இந்நாட்டிற்கு வந்தடைந்த நமக்கு ராஜபோகமான வாழ்வை அமைத்துக்கொடுத்திருக்கிறார் இந்நாட்டு அரசர், ஷைலேந்திரா. இப்போது அவருடைய இளம் பிராயத்து மகனது ஆட்சியிலோ, முன்போல அமைதியும், மகிழ்ச்சியும் இல்லை. இவரது அனுபவமின்மையைத் தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திக்கொண்டு, அயல்நாட்டரசன் படையெடுத்து வரப்போவதாக நமக்குச் செய்தி கிடைத்திருக்கிறது. இந்தச் சமயத்தில் நாம் ஆற்ற வேண்டிய கடமை என்னவென்று நீயேதான் சொல்லேன், பார்ப்போம்!” அவளுடைய நீண்ட கூந்தல் முழுமையாக நரைத்திருந்தாலும், கட்டான உடலும், கூர்மையான அறிவும், பார்வையும் அப்படியேதான் இருக்கின்றன என்று சிற்பியின் எண்ணம் போயிற்று. ஒரு ராஜதந்திரியைப்போல, எவ்வளவு தெளிவாகப் பேசுகிறாள்! இவளை மனைவியாக அடையும் பாக்கியத்தை நம் அரசர் இழந்துவிட்டாரே என்ற வருத்தம்தான் எழுந்தது அவருக்கு. “நான் என்ன சொல்லிக்கொண்டு இருக்கிறேன், நீ எங்கே வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கிறாய்?” அதட்டினாள் பைரவி. நாட்டின் தலைமைச் சிற்பியாக இருந்தால் என்ன, அக்காளுக்குத் தம்பிதானே என்றும்! ஆனந்தரங்கன் மெல்லச் சிரித்தார். “உன்னை, என்றும் மாறாத உன் அழகை, பார்த்தேனா! மற்ற எல்லாமே மறந்துவிட்டன!” எதிர்பாராது விரிந்த அதரத்தைக் கட்டுப்படுத்தினாள் அந்த நாட்டியதாரகை. “போதும். போதும்!” என்று செல்லமாகக் கோபித்தாள். “உண்மையாகச் சொல்கிறேன், பைரவி. வசந்தபைரவி என்ற உனது முழுப்பெயர் வேண்டாமென நீ ஒதுக்கிவிட்டாலும், நீ என்றுமே வசந்தாதான். ஆளும் வம்சத்தில் பிறக்காவிட்டாலும், உன் அறிவு இருக்கிறதே! அபாரம்!” “ஏன், கலைஞர்களுக்கு மட்டும் அறிவு கிடையாதோ? நீ என்ன, நம்மைக் குறைத்துப் பேசுகிறாய்? கண்டதையும், காணாததையும்கூட கற்பனையில் கண்டு, அதை நம் கைத்திறமையாலும், முகபாவத்திலும், அங்க அசைவுகளாலும் வெளிப்படுத்துபவர்கள் அல்லவா நாம்?” “சரி. நமக்கு அபார மூளைதான். ஒத்துக்கொள்கிறேன். இப்போது நான் என்னதான் செய்ய வேண்டும் என்கிறாய்?” “அதைத்தானே நானும் அப்போதிலிருந்து சொல்லிக்கொண்டு இருக்கிறேன்! எப்போதுமே சமாதானத்தை நாடும் மக்கள் என்பதால், இந்நாட்டிற்கு வேண்டிய படைபலமோ, போர்வீரர்களோ கிடையாது. இது விளையாட்டுச் சமாசாரம் இல்லை. நீ தமிழகம் சென்று, நம் அரசரிடம் எல்லாவற்றையும் தெரிவித்து, போதிய படைகளை அனுப்பச் சொல்லு!” என்று கட்டளை இட்டவள், சற்று தயக்கத்திற்குப்பின், “வேண்டுமானால், நான் அனுப்பியதாகச் சொல்!” என்று முடித்தாள். ‘நல்ல பெண் இவள்!’ என்ற சலிப்பு ஏற்பட்டது ஆனந்தரங்கனுக்கு. ஒரு கணம் புத்திசாலித்தனமாக முடிவெடுக்கிறாள். மறுகணமே, தான் பேதைப்பெண்தான் என்பதை நிரூபிப்பதுபோல் உளறுகிறாள்! அரசர்களின் வாழ்வில் எத்தனையோ பெண்கள்! எப்போதோ, இளம் வயதில் இவளிடம் அரசர் ஏதாவது பிதற்றி இருக்கலாம். ஆனால், இத்தனை காலம் கடந்து, சிற்பி அம்பலவாணரின் மகளை இன்னும் நினைவில் வைத்துப் பூஜித்துக் கொண்டிருப்பாரா, என்ன! இவள்தான் மதி கெட்டு, அவரையே நினைத்து உருகி, தனது வாழ்நாளைத் தனிமையிலேயே கழிக்க முடிவெடுத்திருந்தாலும், அவரும் அப்படி இருப்பார் என்று நினைக்கலாமா? இவள் அனுப்பினதாகச் சொல்வதாம்! வேடிக்கைதான்! “தாமதம் செய்யாமல், விரைவில் சென்று,” என்றவள், அந்த வாக்கியத்தை முடிக்க முடியாது விக்கினாள். “நல்லபடியாகத் திரும்பி வா, ரங்கா!” என்று கூறியவளின் குரல் அடைத்தது. தாங்கள் இருவரும் ஒருவரையருவர் பார்ப்பதும், உரையாடுவதும் இதுதான் கடைசி முறையாக இருக்கும் என்று அவளுடைய உள்ளுணர்வு கூறியது. ஆனந்தரங்கனுக்கும் அதே எண்ணம் உதித்து இருக்கவேண்டும் என்பது அவர் அவளைக் கழிவிரக்கத்ததுடன் பார்த்த விதத்தில் தெரிந்தது. “ஒருவேளை, நான் திரும்பாவிட்டால்,” என்று ஏதோ சொல்லப்போன தம்பியை இடைமறித்துப் பேசினாள் பைரவி: “உன் குடும்பம் என் குடும்பம்! இத்தனை ஆண்டுகளுக்குப் பின்னருமா உனக்கு அந்த சந்தேகம்? குழந்தைகளை நல்லபடியே முன்னுக்குக் கொண்டு வருவேன். அவர்களைப் பிரிய நேரிடுகிறதே என்ற உன் வேதனை எனக்குப் புரிகிறது, ரங்கா. ஆனால், செஞ்சோற்றுக்கடன் என்று ஒன்று இருக்கிறதே!” “மாற்றரசன் இந்த எல்லைக்குள் துழைந்துவிட்டால் நீ எங்கே போவாய் பைரவி?” என்றொரு கேள்வியைத் தொடுத்தார். “இதென்ன கேள்வி! நாம் பார்த்துப் பார்த்துக் கட்டிய இந்தக் கோயிலில்தான் என் உயிர் பிரியும்!” “பைரவி! அக்கா!” பதறினார் ஆனந்தரங்கன். “நான் இன்னும் இளம்பெண் அல்லவே! என்னை என்ன செய்துவிடுவார்கள்! மிஞ்சி, மிஞ்சிப்போனால் என் உயிரைத்தான் எடுத்துக்கொள்ள முடியும் அவர்களால்!” எல்லாவற்றிற்கும் துணிந்தவளாகப் பேசினாள். “ஆனால், அதற்குமுன், உன் குழந்தைகளையும் பிறருடன் பத்திரமாக வெளியே அனுப்பிவிடுகிறேன். இது சத்தியம்!” என்றவளின் கண்கள் அலாதியாக மின்னின. தன் வார்த்தைகள் உண்மையாகும் நாள் விரைவில் வந்துவிடும் என்பது அவளுக்குத் தெரிந்திருந்ததோ? அதற்குமேல் பேச எதுவுமில்லை என்று தெளிந்தார் ஆனந்தரங்கன். எழ மனமின்றி, உட்கார்ந்தே இருந்தார். ஏனோ, இன்று அக்காள் முகத்தையே பார்த்துக்கொண்டிருக்க வேண்டும்போல இருந்தது. “ரங்கா! நாம் இருவரும் கட்டுமரத்தில் இங்கு வந்தபோது பாடிக்கொண்டே வந்தோமே, அந்தப் பாட்டு நினைவிருக்கிறதா உனக்கு?” என்று கேட்டாள் வசந்தபைரவி. “எது? அந்தக் குந்தலவராளி ராகப் பாடலா? சந்திரனின்மேல் இயற்றியதுதானே?” “அதேதான்! அன்று இரண்டு அடிகள்தாம் இயற்ற முடிந்தது. இப்போது, நாம் இங்கு வந்தது எப்படி நல்லவிதமாக நடந்தேறிவிட்டது என்பதையும் அதிலேயே சூசகமாகச் சேர்த்திருக்கிறேன். அத்துடன், நாம் போனவாரம் செய்த ஒரு முக்கியமான காரியத்தையும் கோடி காட்டி இருக்கிறேன். அந்தப் பாடலை இந்த ஓலைச்சுவடியில் எழுதி வைத்திருக்கிறேன். அப்போது நான் அதை ஆடிக் காட்டுகிறேன். நீ அதற்கேற்ப அபிநயங்களை ஆணியால் செதுக்கிவிடு, என்ன?” என்று கட்டளையிட்டாள். ஆனந்தரங்கனுக்குப் புரிந்தது. அரசனாக இருந்தால், கல்வெட்டுக்களில் தம் சரித்திரத்தை எழுதி வைப்பர். இந்தப் பேதையோ, தன் வாழ்க்கை இத்துடன் முடிந்துவிடக்கூடாது, இன்னும் நூற்றுக்கணக்கான ஆண்டுகளுக்குப் பின்னரும், இப்படி இருவர் நாடு விட்டு நாடு வந்து, எப்படி பெயரும், புகழுமாக, செல்வச்சிறப்புடன் விளங்கினர் என்று வருங்காலத்தவருக்குத் தெரியப்படுத்த விழைகிறாள்! “சரி. இப்போதே ஆடு!” என்று கூறியபடி, அமர்ந்துகொண்டார். தானே மெல்லிய குரலில் பாடியபடி, அபிநயம் பிடிக்க ஆரம்பித்தாள் பைரவி. முன்போல குதித்தோ, தாவியோ ஆடமுடியவில்லைதான். அதற்குக் காரணம் அவளுடைய வயது மட்டுமின்றி, உள்ளுக்குள் கொந்தளித்த உணர்ச்சிகளும்தாம் என்று தோன்றியது ஆனந்தரங்கனுக்கு. முன்னும், பின்னும் ஓரடி மட்டுமே எடுத்துவைத்து ஆடியபோதும், அவளுடைய அசைவுகளில் ஒரு முதிர்ச்சி வந்திருந்தது. கண்களிலும், முகத்திலும் சோகபாவம் வழிந்தது. வசந்தபைரவி நாட்டியம் ஆடி முடிந்ததும், அக்காள், தம்பி இருவரது கண்களிலிருந்தும் கண்ணீர் வழிந்துகொண்டிருந்தது. ஆனந்தரங்கன்தான் முதலில் பேசினார்: “இந்தப் பாட்டு சந்திரன்மேல் மட்டும் அமையவில்லை என்று கருதுகிறேன். சரிதானா? இதன் வார்த்தைகளுக்கும், இப்பாடல் உள்ளடக்கிய உணர்ச்சிக்கும் பொருத்தமில்லையே!” வரண்ட சிரிப்பொன்றை உதிர்த்தாள் பைரவி. “நீ புரிந்துகொள்வாய் என்பதை தான் எதிர்பார்த்ததுதான். நான் இனி நம் தாய்நாட்டுக்குத் திரும்ப முடியும் என்று நான் நினைக்கவில்லை. அதனால்..,” “ஏனப்படிச் சொல்கிறாய்? சண்டையெல்லாம் முடிந்து..,” என்று ஏதோ நொண்டிச் சமாதானம் சொல்லவந்த தம்பியை ஒரு கையை உயர்த்தித் தடுத்தாள். “நான் என்ன, இன்னும் சின்னக்குழந்தையா ரங்கா, நீ எனக்கு ஆறுதல் கூற! என் வயதும், அதனால் வரும் இயலாமையும் எனக்கு நன்றாகவே தெரிந்திருக்கிறது. என்னால் இன்னொரு முறை முன்போல் அந்தக் கடுமையான கடல் பயணத்தைத் தாங்கிக்கொள்ள முடியுமா, சொல்! அத்துடன், நம் குடும்பமும் இங்கேயே கிளை விட்டுவிட்டது. அங்கே யார் இருக்கிறார்கள் நமக்கு!” வெறுத்தவள்போல பேசியவளைத் துணுக்குற்றுப் பார்த்தார் ஆனந்தரங்கன். “இன்று உனக்கு என்னமோதான் வந்துவிட்டது. ஏனிப்படிப் பேசுகிறாய்? அங்கு அரசர் வேண்டுமானால் திருமணம் புரிந்துகொண்டு, வாழ்வில் எதையும் இழக்காமல், உல்லாசமாகவே இருக்கலாம். ஆனால், அவர் நமக்கு என்ன உறவுமுறை?” அக்காளின் வாழ்க்கையை முற்றிலும் நாசமாக்கிவிட்ட அரசரின்மேல் தம்பிக்கு தீரா வெறுப்பு வந்திருந்தது. “ஆனால், அத்தையும், அவர்களுடைய குழந்தைகளும் இன்னமும் அங்குதான் இருப்பார்கள் என்பதை மறந்துவிடாதே. நம்மைக் கண்டால், எவ்வளவு ஆனந்தப்படுவார்கள், தெரியுமா?” சிறுவயதில் அத்தையிடம் தான் கற்றுக்கொண்ட நாட்டியமும், மற்ற குழந்தைகளுடன் சேர்ந்து ஓடிப் பிடித்து, கண்ணாமூச்சி விளையாடியதையும் ஒரு வினாடி எண்ணிப்பார்த்தாள் பைரவி. ஏக்கப்பெருமூச்சு வந்தது. “அந்த நாட்களைப்போல இனி வராது, ரங்கா! போனது போனதுதான்!” என்றாள் நிராசையாக. உடனே தன்னை சுதாரித்துக்கொண்டு, “அதைப்பற்றி இனி பேசுவதில் புண்ணியமில்லை. அதற்காகத்தான் நான் இந்தப் பாடலில் புதிய சரணங்களைச் சேர்த்திருக்கிறேன்”. சொல்லவந்ததை அவளே சொல்லட்டும் என்று எதுவும் பேசாது, காத்திருந்தார் ஆனந்தரங்கன். மேலே பேசினாள் பைரவி. “உன் குழந்தைகள் மட்டுமின்றி, அத்தையாரின் குழந்தைகளும் நம் சந்ததியினர்தாமே? அவர்களும், அவர்களுடைய பிள்ளைகளும் நம் காலத்திற்குப் பிறகும் நம்மை அறிந்து வைத்திருக்க வேண்டாமா? அதனால்தான் நாம் இங்கு வாழ்ந்த நல்வாழ்க்கை, போர் முரசு கொட்டிவிட்ட நிலையில் இந்நகர மக்கள் அனைவரும் தம் சொத்துக்களை எல்லாம் எடுத்துக்கொண்டு கால்போனபடி எல்லா திக்குகளிலும் ஓடிவிட்டபின், நாம் கட்டிய இந்தக் கோயிலைவிட்டு நகர மனமில்லாமல், நான் மட்டும் இங்கேயே தங்கிவிட்டது எல்லாவற்றையும் குறிப்பால் உணர்த்தி இருக்கிறேன். மற்றும் நம் சொத்துக்கள் அனைத்தும்..,” அவளை மேலே பேச விடாது, குறுக்கிட்டார் ஆனந்தரங்கன்: “அதை விடு! உயிரே போய்விடும் அபாயம் காத்திருக்கிறது! நாம் எதை எடுத்துக்கொண்டு வந்தோம், கையிலிருக்கும் பொருளைப்பற்றிக் கவலைப்படுவதற்கு!” என்று கூறிவிட்டு, எழுந்து நடந்தார். “என் அபிநயங்களை எப்போது வரையப்போகிறாய்?” பின்னாலிருந்து ஒலித்த அவளுடைய குரல் கேட்டுத் தலையை மட்டும் திருப்பிப் பதிலளித்தார்: “கடல் பயணத்தின்போது செய்வதற்குத்தான் வேலை வேண்டாமா? நீ காட்டிய ஒவ்வொரு முத்திரையும் என் மனத்தில் ஆழமாகப் பதிந்திருக்கிறது. கவலையே வேண்டாம்! நம் அத்தையின் குழந்தைகள் மட்டுமில்லை, அவர்களுடைய பேத்திகளும், அவர்களுடைய சந்ததியினரும் இப்பாட்டைக் கற்று, அதற்கேற்ப நடனம் ஆடுவார்கள்! இன்னும் பல நூறு ஆண்டுகளுக்கு! அதற்கு நானாயிற்று!” என்று உறுதியளித்தார் ஆனந்தரங்கன். தான் மேற்கொள்ளப்போகும் பயணத்தின் உண்மையான காரணம் போருக்குத் தமிழ்நாட்டு அரசரின் உதவியைக் கோர அல்ல; அனேகமாக தான் போய்ச் சேருவதற்குள் இங்கு எல்லாமே முடிந்திருக்கும் என்று அவருக்குப் புரியாமல் இல்லை. தம்முடைய சந்ததியினருக்கும், தமக்கும் காலத்தால் அழியாத ஒரு இணைப்பை உண்டுபண்ணுவதே இந்த நீண்டகாலப் பயணத்தின் தலையாய நோக்கம் என்பது அக்காள், தம்பி இருவருக்குமே தெரிந்துதான் இருந்தது. 13 தெருவெல்லாம் தங்கம் “என்ன பாட்டி? அந்த ரெண்டு பேரும் போனதிலிருந்து நானும் பாக்கறேன், நீ இப்படி இடிச்ச புளி மாதிரி ஒக்காந்திருக்கே?” தரங்கிணியின் குரலில் கரிசனம். பாட்டி சாதாரணமாக எதற்கும் கலங்கி அவள் பார்த்ததில்லை. பாட்டி பூர்ணவல்லி, “அந்த மனுஷன் எங்கேயிருந்து வந்ததா சொன்னே?” என்று கேட்டாள், நெற்றியைச் சுருக்கியபடி, ஏதோ யோசித்தபடி. “மலேஷியான்னு சொன்னார். இப்ப யாரைக் கேட்டாலும், வேலைக்கு மலேஷியா, சிங்கப்பூர்தானே போறதா சொல்றா! அங்கே தெருவெல்லாம் தங்கம் இறைஞ்சு கிடக்கும்போல இருக்கு!” என்றாள் தரங்கிணி. “இன்னிக்கு நேத்திக்கு இல்லேடி, தரங்கிணி. எத்தனையோ ஆயிரம் வருஷமா நிலத்திலே பொன்னா கிடைச்ச புண்ணிய பூமி அது!” திடீரென்று பாட்டி பூகோளத்தில் ஏன் இறங்கினாள் என்று பேத்தி யோசித்தாள். ‘பாட்டிக்கு இவ்வளவு தெரியுமா!’ என்ற அதிசயமும் பிறந்தது. பாட்டி தொடர்ந்தாள்: “நமக்கு வேண்டப்பட்டவாகூட அங்கதான் இருந்தா – இப்பவும் இருக்கணும்!” தரங்கிணியின் வியப்பு எல்லை கடந்தது. “நீ சொன்னதே இல்லியே! யாரு, பாட்டி? எங்கே? எங்கே?” “யாருடி இவ, இப்போத்தான் பொறந்த கன்னுக்குட்டி மாதிரித் துள்ளிண்டு!” என்று விளையாட்டாக அலுத்துக்கொண்ட பாட்டி, “எங்கேன்னு நான் என்னத்தைடி கண்டேன்! என்னிக்கோ, ஆயிரம் வருஷத்துக்கு முன்னே போனாளாம்!” “அதை நீ நிதானமா இன்னிக்குச் சொல்றியாக்கும்!” தரங்கிணியின் ஆர்வம் எழுந்த வேகத்திலேயே வடிந்தது. “ஒன்கிட்ட யாரு சொன்னா?” “வாய் வார்த்தையா சொன்னாத்தானாடி? நம்ப பாட்டிலேயும், நாட்டியத்திலேயும்தான் பாஷை தெரியாதவாளுக்குக்கூட எல்லாத்தையும் புரிய வெச்சுடலாமே!” தரங்கிணிக்கு எதுவும் புரியவில்லை. பாட்டி இப்படிப் பேச ஆரம்பித்தால், எங்கோ போய்விடுவாள். அவளுக்குப் பொறுமை மீறியது. “கார்த்தாலே நம்ப அகம் தேடி வந்து, காரியத்தைக் கெடுத்துட்டுப் போயிட்டார் அந்த மனுஷர்! இவர் வரலைன்னு யார் அழுதா!” என்று சாமிநாதனை வைதபடி அப்பால் நகர்ந்தவளை பூர்ணவல்லியின் குரல் தடுத்து நிறுத்தியது. “நீ இன்னும் நாலு நாள் இருப்பியோ, இல்லியோடி தரங்கிணி?” பாவம், அவளுக்கும்தான் நம்மைவிட்டால் பேச்சுத்துணைக்கு யார் இருக்கிறார்கள் என்று பரிதாபம் மேலிட, மீண்டும் எதிரில் வந்து உட்கார்ந்துகொண்டாள். “இன்னிக்கு மத்தியானமே புறப்படணும், பாட்டி. என்னோட குழந்தைகள் டிவியில ஆடறா. போய், ஒத்திகை பாக்கணும்!” என்றாள் அரைமனதாக. இவள் வயிற்றில் பிறந்தால்தானா, இவளிடம் உண்மையான ஆர்வத்துடன் நாட்டியம் பயில வரும் குழந்தைள் அனைவருமே இவள் குழந்தைகள்தாமே என்ற நிறைவு ஏற்பட்டது பூர்ணவல்லி பாட்டிக்கு. காலம்தான் எப்படி சுழலுகிறது! ஒரு காலத்தில் பக்தி முறையாக இருந்து, பின் வெள்ளைக்காரனால் பழிக்கப்பட்டு, ‘கேவலமான தொழில்’ என்ற இழிவுக்கு ஆளானதால், ‘பெரிய மனிதர்கள்’ என்று சொல்லிக்கொண்டவர்களால் ஒதுக்கிவைக்கப்பட்டு, இப்போது மீண்டும் கௌரவமான, பெருமை பேசிக்கொள்ளக்கூடிய ஒரு விஷயமாக ஆகியிருக்கிறது பரதநாட்டியம்! “அந்தக் குழந்தைகளை– எட்டு வயசானா, இடுப்பைச் சுத்தி துணியால இறுக்கிக் கட்டிக்கச் சொல்லுடிம்மா. இல்லாட்டா, இடுப்பு பெருத்துப் போயிடும். நாலுபேர் பாக்க ஆடறவாளுக்கு அழகு முக்கியம்!” பழைய நினைவொன்று எழ, தரங்கிணி சிரித்தாள். “நீ எனக்கு கட்டி விடறபோதெல்லாம், ’இவ்வளவு இறுக்கிக் கட்டறியே!’ன்னு சிணுங்குவேன். தளர்த்திக் கட்டிக்க விடமாட்டியே!” “அதான் இன்னிக்கும் இருபது வயசு பொண்ணு மாதிரி இருக்கே!” என்றாள் பாட்டி, பெருமிதத்துடன். பிறகு, ஏதோ நினைவு வந்தவளாக," தலைக்கு என்ன எண்ணை வெச்சுக்கறே?" என்று கேட்டாள். “நீ ஏதாவது சொல்லி, நான் அதும்படி நடக்காம இருந்திருக்கேனா, பாட்டி?” என்று கொஞ்சலாகச் சொன்ன தரங்கிணி, “அங்க, நம்பாத்தில வேலியோரமா மருதாணி போட்டிருக்கேன். அக்கம்பக்கத்தில இருக்கிற பொண்கள் எல்லாம் வியாழன் தவறாம வந்து பறிச்சுண்டு போகும் – கைக்கு வெச்சுக்க. அந்த இலையைத் தண்ணி தெளிக்காம, அம்மியில வெச்சு வழுமூனா அரைச்சு, அடை தட்டி வெயில்ல காய வெச்சுடுவேன். காஞ்சதும், தேங்காய் எண்ணை, நல்லெண்ணை, விளக்கெண்ணை மூணையும் சரிசமமா கலந்து, அதில போட்டு, நன்னா ஒரு வாரம், பத்து நாள் ஊறினதும் தலைக்கு தேய்ச்சுப்பேன். விவரம் தெரிஞ்ச நாளா அதானே! ஒரு தடவை ஏதோ ஹேர் ஆயில்காரா விளம்பரத்துக்கு என்னைக் கூப்பிட்டான்னாப் பாத்துக்கோயேன்!” “அந்தக் கர்மத்துக்கெல்லாம் போகாதேடி. எல்லார் கண்ணும் ஒரேமாதிரி இருக்காது. கண்ணு பட்டுடும்!” சற்று நேரத்துக்குமுன் வந்துவிட்டுப் போனவர்களையும், அவர்களால் விளைந்த குழப்பங்களும் தாற்காலிகமாக அவர்களிடமிருந்து விலக, பாட்டியும், பேத்தியும் தம்மை மறந்து சிரித்தார்கள். 14 பேருந்து நிறுத்தம் ஒருவழியாக பேருந்து நிறுத்தத்துக்கு வந்திருந்தனர் சாமிநாதனும், மீனாவும். “தஞ்சாவூருக்குப் போற பஸ் எப்போ வருங்க?” “என்னங்கய்யா? இப்பத்தான் போனீங்க? ஒடனே திரும்பிட்டீங்க போலயிருக்கே! இளநீர் வெட்டட்டுங்களா?” இளநீரைக் காதருகே வைத்து ஆட்டி, அதற்குள் நிறைய நீர் இருப்பதை உறுதி செய்தபடி பேசினார் வியாபாரி. அந்த வெயிலுக்கு இளநீர் பருகுவது என்பதே சுகமான எதிர்பார்ப்பாக இருந்தது. தலையாட்டினார் சாமிநாதன். இடுப்பில் பாதியாக மடித்துக் கட்டிய வேட்டி மட்டும்தான் அணிந்திருந்தார் இளநீர் விற்பவர். தலையில் முண்டாசு. எழுபது வயதுக்கு மேலிருக்கும் என்பதை நரம்போடிய அவரது மெலிந்த கரங்களும், பொக்கை வாயும் உறுதி செய்தன. நரைத்த மீசையாக இருந்தாலும், வஞ்சனை இல்லாமல் வளர்ந்திருந்தது, அல்லது வளர்த்திருந்தார். “பாக்கப் போனவங்களைப் பாத்துட்டோம். அதான்!” என்றபடி சீவப்பட்டிருந்த இளநீரை வாங்கி, மீனாவிடம் கொடுத்தார் சாமிநாதன். “ஸ்ட்ரா?” என்று அவள் திணறலாக விழித்ததும், “கொழா கேக்கறீங்களா? இங்கேயெல்லாம் அப்படியே தலையை அண்ணாந்துக்கிட்டு, வாய்க்குள்ளே ஊத்திக்கிட்டாதான் ருசிம்பாங்க!” என்றபடி, மெலிதான ஒன்றைத் தேடிக் கொடுத்தார். “யாரைப் பாக்கப் போனீங்க?” இன்னொருவரின் விவகாரங்களை அறிந்துகொண்டு, வம்பளக்கும் எண்ணத்துடன் இவர் கேட்கவில்லை, வேற்றூர்க்காரராக இருக்கிறாரே என்று உதவி செய்யும் நல்லெண்ணத்துடன் பேச்சை வளர்க்கிறார் என்று தோன்றியது சாமிநாதனுக்கு. “ஒரு பாட்டியும், பேத்தியும் இருப்பாங்களே,” என்று அவர் சொல்ல ஆரம்பிப்பதற்குள், “யாரு? அந்த டான்ஸ் டீச்சர் வீட்டுக்கா போனீங்க?” என்று வியப்புடன் கேள்வி வந்தது. சாமிநாதனுக்கும் ஆச்சரியம் எழுந்தது. “ஒங்களுக்குத் தெரியுமா அவங்களை?” என்று கேட்கும்போதே, ‘மீனா சொன்னதுபோல, டான்ஸ் ஆடுபவளா! அதுதான் அவ்வளவு ஒயிலாக இருக்கிறது அவள் நடையும், பாவனையும்!’ என்று நேர்கோடாக மற்றொரு எண்ணம் போயிற்று. “அதென்னங்க அப்புடிக் கேட்டுப்புட்டீங்க! வாராவாரம் இங்க வந்துதானே பஸ் ஏறி, பட்டணம் போகும் அந்தப் பிள்ளை!” என்றவர், மேலும் எந்தக் கேள்வியும் வராததால், தானே பேசினார். “அதோட அம்மா சின்ன வயசிலேயே தவறிட்டாங்க. இந்தப் பாட்டிதான் வளர்த்தாங்க. நான் சின்னப்பையனா இருந்தப்போ, தெருவோட சாமி ஊர்கோலம் வருமில்ல? அதுக்கு முன்னால பாட்டி ஆடிட்டு வருவாங்க. என்னா ஆட்டம்! என்னா ஆட்டம்! இப்ப சினிமாவில ஆடறவ எல்லாம் பிச்சை வாங்கணும்!” எதற்கும், எதற்கும் முடிச்சு போடுகிறார் இந்தக் கிழவர் என்று சற்று எரிச்சல் உண்டாயிற்று, அவர்களிடையே நடந்த உரையாடலைக் கேட்டுக்கொண்டிருந்த மீனாவுக்கு. சிறு பிராயத்திலிருந்தே நாட்டியத்தை முறையாகக் கற்று, கடவுளுக்குமுன் பக்திப்பெருக்குடன் ஆடுவதும், முன்னே பின்னே ஆடிப் பழக்கம் இல்லாவிட்டாலும், சினிமாக்காரர்கள் தரும் காசுக்காக ஆடைக்குறைப்புச் செய்து, பார்ப்பவரின் மனத்தில் சலனம் ஏற்படும் வகையில் உடம்பைக் குலுக்கி கவர்ச்சி என்ற பெயரில் ஆபாசமாக ஆடுவதும் ஒன்றாகிவிடுமா! “இந்தக் காலத்திலதான் சாமி ஊர்வலத்துக்கு முன்னால ஆடறதெல்லாம் கிடையாதே!” என்று சற்று கோபமாகவே சொன்னாள் அவள். தன் மனத்தில் லேசான சலனம் ஏற்படுத்திவிட்ட தரங்கிணியின் குடும்பப் பின்னணியைக் கேட்டு, சாமிநாதன் என்னவோ எந்தவித பாதிப்புக்கும் ஆளாகவில்லை. காலம் மாறிக்கொண்டே வரும்போது, சமூகச் சூழலும் எப்படி எப்படியோ மாறித்தான் ஆகும் என்பது அவர் அறியாததா! “அந்த மாதிரிக் கலைக்குடும்பங்கள்ல பிறந்தவங்க அப்புறம் சினிமாவிலே சேர்ந்து, இல்லே, மேடையில பாட்டுக்கச்சேரி செஞ்சு, நாலுபேர் மதிக்கிற மாதிரி பெரிய மனுஷங்களா ஆயிட்டாங்க!” என்று தனக்குத்தானே சொல்லிக்கொள்வதுபோலப் பேசினார். தரங்கிணியின் இனம்புரியாத கோபத்திற்குக் காரணம் புரிந்ததுபோல இருந்தது. எங்கே தங்கள் குடும்பப்பின்னணியைக் கேட்டு, ஆண்கள் தன்னை அவமதிப்புடன் நடத்தி விடுவார்களோ என்ற அச்சத்தில் இருக்கிறாள், பாவம்! அதை மறைக்கத்தான் அந்த ஆத்திரமும், படபடப்பும். பாட்டியோ, வாழ்ந்துகெட்டவளாக இருக்க வேண்டும். வயது முதிர்ந்துவிட்டதில், தன் வாழ்க்கையோடு போராட முடியாமல், வருவதை அப்படியே ஏற்றுக்கொண்டிருக்க வேண்டும். “பாட்டி ரொம்ப பக்தி! சாமிக்கே தன்னை அர்ப்பணிச்சுட்டாங்க. அந்தக் காலத்தில கோயில்ல வெச்சு, குறியெல்லாம் சொல்லுவாங்க! ஆம்பளைத் துணையே வேண்டாம்னு சாமியாரிணி மாதிரி இருந்துட்டாங்க!” படித்தவர்களாகத் தென்படும் இவர்களைவிட தனக்கு நிறைய தெரிந்திருக்கிறதே என்ற பெருமிதத்துடன் பேசினார் இளநீர் வியாபாரி. “பின்னே பேத்தி எப்படி வந்திச்சு?” அவளே எதிர்பார்க்காமல், மீனாவின் வார்த்தைகள் கிளம்பின. குற்ற உணர்வுடன், நாக்கைக் கடித்துக்கொண்டாள். ‘இதென்ன வயதுக்கு மீறிய பேச்சு?’ என்று கண்டனம் செய்வதுபோல் அப்பா முறைத்ததைத் தாங்கமுடியாது, மீனாவின் குனிந்த முகம் வேறு பக்கம் திரும்பிக்கொண்டது. சுவாரசியமாக மீனாவைப் பார்த்தார் வியாபாரி. “அப்படிக் கேளுங்கம்மா! டீச்சர் அவங்க சொந்தப் பேத்தி இல்ல. தங்கச்சி பொண்ணுக்குப் பிறந்தது!” சாமிநாதனும், மீனாவும் தத்தம் சிந்தனைகளில் ஆழ்ந்தார்கள். பெண்கள் பக்தி சிரத்தையுடன், கோயில் பணிகளுக்கே தங்களை அர்ப்பணித்துக்கொள்ள வேண்டும், திருமணம் செய்துகொள்ளக்கூடாது, ஏனெனில் அவர்கள் இறைவனையே நாயகனாக வரித்துவிட்டவர்கள். ஆரம்பத்தில் அப்படி ஒரு பக்தி மார்க்கமாக ஆரம்பித்தது பரம்பரையாக ஆகிவிட்டது. ஒரு சிலர் திருமணம் செய்துகொள்ள முடியாத நிலையில், வம்ச விருத்திக்கு ஆசைப்பட்டு, ஆண்களுக்கு ஆசைநாயகியாகி இருந்திருக்கலாம். சமூகத்தில் அவர்களுக்கு நல்லதொரு அந்தஸ்து கிடையாது. அக்குடும்பங்களில் பிறந்த ஆண்களுக்கோ அந்தக் கட்டுப்பாடு எல்லாம் கிடையாது! உலகத்தைத் தங்கள் கட்டுப்பாட்டில் ஆண்கள் வைத்திருந்த நிலையில், பெண்களைத்தாம் எவ்வளவு துன்பங்களுக்கு ஆளாக்கி இருக்கிறார்கள்! “பாட்டி இங்க தனியாவா இருக்காங்க?” என்று எதையோ எண்ணி விசாரித்தார் சாமிநாதன். “ஆமாங்க. எப்பவாச்சும் சில பொண்ணுங்க வந்து, அவங்ககிட்ட டான்ஸ் கத்துக்கும். சில சமயம், வெளிநாட்டில இருந்துகூட வருவாங்க. இப்பல்லாம் அவங்கமாதிரி ஆட யாரு இருக்காங்க!” என்று பெருமூச்சுவிட்டார் இளநீர் வியாபாரி. “அதான் ஆயிரம் ஆயிரமா கொட்டிக் குடுக்கறாங்க!” 15 சென்னை ஹோட்டல் “மெரீனா பீச் பாக்கணும்னு ரொம்ப ஆசைப்பட்டியே, மீனா! இன்னிக்குப் போகலாமா?” சாமிநாதனும், மகளும் பிருகதீஸ்வரர் ஆலயத்தில் உறைந்த பெரிய சிவலிங்கம் மற்றும் நந்தி மட்டுமில்லாது, திருச்சியில் மலைகோட்டைப் பிள்ளையார், சிதம்பரம் நடராஜர் ஆகிய மூர்த்திகளையும் நிதானமாகவே தரிசித்துவிட்டு, மீண்டும் தஞ்சாவூருக்கே வந்திருந்தனர். நேராகவே சென்னைக்குப் போயிருக்கலாம். ஆனால், சாமிநாதனுக்கு ஒரு நப்பாசை – தான் அந்த ஹோட்டல் விலாசத்தைக் கொடுத்துவிட்டு வந்திருக்கிறோமே, ஒரு வேளை, தரங்கிணி அங்கு வருவாளோ என்று. ஆனால் அவள் வரவேயில்லை. தனக்குள் எழுந்த ஏமாற்றத்தை மறைக்க முடியாது, “நாம்ப இந்தத் தடவை இந்தியாவுக்கு வந்தது கோயில்களைச் சுத்திப்பாக்கதான்னு விட வேண்டியதுதான்!” என்று விட்டேற்றியாக மீனாவிடம் கூறினார் சாமிநாதன். மீனாவுக்கு அப்பாவைப் பார்த்தால் பாவமாக இருந்தது. அந்த தரங்கிணியின் அழகிலும், நிமிர்ந்த நடையிலும் சொக்கிப்போய், அவளை மீண்டும் பார்க்க முடியாது போலிருக்கிறதே என்ற ஏமாற்றத்தில் பேசுகிறாரா, இல்லை அந்தச் செப்புத்தகட்டின் மர்மத்தை அறியாது மலேசியா திரும்ப வேண்டியிருக்கிறதே என்ற வருத்தமா என்று அவளால் நிர்ணயிக்க முடியவில்லை. முன்பே யோசித்து வைத்திருந்ததை இப்போது கூறினாள். “சென்னைக்குப் போய், ஒரு வாரம் தங்கப்போறோமில்ல! அங்க விசாரிச்சுக்கிட்டு, தரங்கிணி ஆன்ட்டி வேலை பாக்கற அந்த காலேஜூக்குப் போனாப் போச்சு!” என்று ஆலோசனை வழங்கினாள். தந்தையின் முகம் மலர்ந்ததைக் குறித்துக்கொண்டாள். இது வேலை குறித்த மகிழ்ச்சியாக இருக்க முடியாது என்று – காதல் நாவல்களை விரும்பிப் படிக்கும் – அந்தப் பதினேழு வயது மங்கை முடிவெடுத்தாள். அவர்களுக்கு விருப்பம் இருக்கிறதோ, இல்லையோ, தோழிகளை உடன் படிக்கும் ஆண்களுடன் இணைத்துப் பேசிச் சிரித்து, அதிலும் ஒரு ஆனந்தத்தைக் காண்பதுபோல், அப்பாவுடன் ஒரு அழகியை இணைத்து யோசிப்பது அவளுடைய இளமைக்கு வேண்டித்தான் இருந்தது. ‘அம்மாவின் நினைவுக்குத் துரோகம் செய்கிறாரே!’ என்று சாதாரணமாகப் பிற பெண்களுக்கு எழக்கூடும் வருத்தமோ, ஆத்திரமோ அவளுக்கு உண்டாகவில்லை. தான் மேல்படிப்புக்காகவோ, வேலை நிமித்தமாகவோ வீட்டைவிட்டு வெளியே எங்காவது செல்லவேண்டி வந்துவிட்டால், அப்பா தனிமையாகி விடுவாரே என்று கொஞ்சகாலமாகவே மீனா யோசனையில் ஆழ்ந்திருந்தாள். இந்த தருணத்தில், ஒரு பெண்ணால் அவர் மனதில் மீண்டும் இளமையும், இனிமையும் கிளர்ந்தால், அது நல்லதுதான் என்றே பட்டது அவளுக்கு. ஆனால், சென்னை திரும்பியதும், தரங்கிணியைச் சந்திக்க எந்த முயற்சியும் எடுக்காது, தான் ஆசைப்பட்ட இடத்துக்கு அழைத்துச் செல்லவே தந்தை ஆர்வம் காட்டியது அவளுக்கு விநோதமாக இருந்தது. ‘நாற்பது வயதுக்குமேல் இது என்ன பெண்பிள்ளை சபலம்!’ என்று சாமிநாதன் தனது ஆசைக்கு ஒரு பூட்டு போட்டுக்கொண்டு விட்டதைப்போல் தோன்றியது. “கடற்கரையைச் சாயந்திரம் பாத்துக்கலாம்! எங்கே ஓடிடப் போகுது! மொதல்ல, சாப்பிட்டுட்டு, தரங்கிணி ஆன்ட்டியோட காலேஜ்! அப்புறம்தான் மத்ததெல்லாம்!” மிரட்டலாகக் கூறிவிட்டு, அதிர்ந்துபோன தந்தையின் முகத்தைப் பார்த்துக் கனிவுடன் சிரித்தாள் மீனா. டெலிஃபோனில் தேடிக் கண்டுபிடித்த நம்பரை அழைத்து, அந்தக் கல்லூரியின் விலாசத்தை அறிந்துகொண்டார்கள். மீனாதான் உற்சாகமாக இருந்தாள். வாடகைக்கார் பிடித்து, அங்கே சென்றதும், சாமிநாதனுக்குத்தான் கலவரம் உண்டாயிற்று. வீட்டுக்குப் போனபோதே கழுத்தைப் பிடித்துத் தள்ளாத குறையாக துரத்தியவள்! இப்போது என்ன தைரியத்தில், பொது இடத்தில் அவளைப் பார்க்க வந்திருக்கிறோம்! அவரது தயக்கத்தை உணர்ந்தவளாக, “இவ்வளவு தூரம் வந்தாச்சு. இனிமே என்னப்பா யோசனை!” என்று பெரிய மனிதத் தோரணையுடன் சொல்லியபடி, அவர் கரத்தைப்பற்றி அந்தக் காம்பவுண்டுக்குள் அழைத்துப்போனாள் மீனா. கல்லூரி முதல்வரிடம் போய், தன்னை அறிமுகப்படுத்திக்கொண்டார் சாமிநாதன். அயல்நாட்டுக்காரர் என்பதை அறிந்ததும், ஆரவாரமாக வரவேற்றுவிட்டு, தரங்கிணியை அழைத்துவர ஆள் அனுப்பினார் முதல்வர், “டான்ஸ் மிஸ்ஸைப் பாக்க ஒருத்தர் வந்திருக்காருன்னு சொல்லிக் கூட்டிவாங்க!” என்றபடி. அதிசயமாகத் தன்னை யார் பார்க்க வந்திருக்கிறார்கள், எந்த விஷயமானாலும், அதைத் தெரிவிக்க இப்போதுதான் தொலைபேசியும், கணினியும் இருக்கிறதே என்று குழம்பியவளாய் வந்த தரங்கிணி, சாமிநாதனைப் பார்த்தாள். முகம் இறுகியது. கல்லூரி முதல்வரின் எதிரில் எதையும் காட்டிக்கொள்ள விரும்பாதவளாக, “வணக்கம்!” என்று ஆத்திரத்தை அடக்கிய குரலில் கூறிவிட்டு, “வாங்க!” என்று தன் அறைக்கு அழைத்துப்போனாள். அங்கு ஒரு மேசையின் பின்னாலிருந்த நாற்காலியில் அவள் உட்கார்ந்துகொண்டாள். தன்னை உட்காரச் சொல்லவில்லை என்பதைக் கவனித்தார் சாமிநாதன். அதைப் பொருட்படுத்தாது, தானாக அவளெதிரே ஒரு நாற்காலியை இழுத்துப் போட்டுக்கொண்டு அமர்ந்தார். அவர்களுடைய மௌன நாடகத்தைப் பார்த்து, மீனாவுக்குச் சிரிப்பு வந்தது. “ஸார்! அன்னிக்கே சொல்லிட்டேன். நீங்க இப்படி என்னைத் துரத்திட்டு வர்றது நல்லாவா இருக்கு!” தரங்கிணியின் குரல் கெஞ்சலாக ஒலித்தது. ஒரு ஆண்மகன் தன்னைத் தேடி வந்தால், தன் நற்பெயருக்குக் களங்கம் வந்துவிடுமோ என்று அவள் அஞ்சுவது அவருக்குப் புரிந்தது. “மன்னிக்கணும். இது என்னோட மகளோட யோசனை. நீங்க தலைக்கு என்ன தைலம் பாவிக்கிறீங்கன்னு கேக்கணும்னு அவதான் துடிச்சா! நான் சும்மா, அவகூட துணைக்கு வந்தேன்! அவ்வளவுதான்!” தரங்கிணியின் முகத்தில் சட்டென புன்னகை அரும்பியது. அது அளித்த தைரியத்தால், மேலே தொடர்ந்தார் சாமிநாதன். “ஒங்க வீட்டிலே, டான்ஸ் புத்தகம் ஒண்ணிலே இந்த விலாசத்தைப் பாத்தாளாம். அவதான் பிடிவாதமா..” மீனாவும் தன் பங்குக்கு, “ஆமா, ஆன்ட்டி. நான் மலேஷியாவில டான்ஸ் கத்துக்கறேன். நீங்க கிளாஸ் நடத்தறதைப் பாக்க ஆவலா இருந்திச்சு!” என்று அளந்தாள். தரங்கிணி சமாதானம் அடைந்தவளாகத் தோன்றினாள். “ஒன் பேரு என்னம்மா? படிக்கிறியா?” என்று விசாரித்தாள். “மீனா, ஆன்ட்டி. இங்கே ப்ளஸ் டூன்னு சொல்றாங்களே, அதுதான்!” கைக்கடிகாரத்தைப் பார்த்தபடி, “சரி மீனா. இன்னும் இருபது நிமிஷத்திலே எனக்குக் கிளாஸ் இருக்கு. அதுக்குள்ளே காண்டீனுக்குப் போகலாம், வாங்க!” என்று அழைத்தாள். அவள் முதலில் போக, பின்தொடர்ந்த மீனா தனது கட்டை விரலை உயர்த்தி, அப்பாவிடம் வெற்றியைத் தெரிவித்தாள். “வடை எவ்வளவு நல்லா இருக்கு. இல்லப்பா?” என்று பாராட்டிய மீனாவுக்கு தரங்கிணி பதிலளித்தாள்: “அரைச்ச மாவில கொஞ்சம் ரவையைக் கலந்துடுவாங்க. அதான் மொறுமொறுன்னு இருக்கு! இதான் எங்க காண்டீன் ஸ்பெஷல்! இன்னும் ரெண்டு வடை எடுத்துக்க மீனா!” “தாங்க் யூ, ஆன்ட்டி!” என்ற மீனாவிடம், மெல்லச் சிரித்தபடி, “ஆன்ட்டின்னா, ரொம்ப வயசாகிட்ட மாதிரி இருக்கு,” என்று அழகாக மூக்கைச் சுளித்தபடி புகார் செய்தாள். “அப்போ, அக்கான்னு கூப்பிடலாமா? இல்ல, சித்தி?” சட்டென அவளைத் திரும்பிப் பார்த்து முறைத்தார் சாமிநாதன். அவருக்குத் தர்மசங்கடமாகப் போயிற்று. எதுவும் சொல்லாது, உதடு பிரியாது சிரித்தாள் தரங்கிணி. ‘சிரிச்சா, நீங்க எவ்வளவு அழகா இருக்கீங்க, தெரியுமா? எதுக்காக அடிக்கடி கோபப்பட்டு, ஒங்க அழகை நீங்களே கெடுத்துக்கறீங்க?’ என்று அவளைக் கேட்க வேண்டும்போல இருந்தது சாமிநாதனுக்கு. மரத்தடியில் நடந்தது வகுப்பு. அருகிலிருந்த ஆற்றிலிருந்து காற்று வீசியது. பத்து மாணவிகள்தாம் இருந்தார்கள். முழங்காலுக்குச் சற்றுக் கீழே புடவை தொங்க, உள்ளே புடவையின் வண்ணத்திலேயே பைஜாமா அணிந்திருந்தார்கள். எல்லாரும் ஒற்றைப்பின்னல், குங்குமப்பொட்டு என்று சம்பிரதாயமாக அலங்காரம் செய்துகொண்டிருந்தார்கள். பார்த்தால், இறைபக்தி மிகுந்தவர்களாகத் தோன்றியது. பக்தியையும் இங்குள்ள ஆசிரியர்கள் போதிக்கிறார்களோ என்று யோசித்தார் சாமிநாதன். அவர்களுக்குச் சொல்லிக்கொடுக்க ஆரம்பித்ததும், தரங்கிணி அவர்கள் அங்கிருப்பதையே மறந்தவளாக, ஏன், தன்னையே மறந்தவள்போல் தோன்றினாள். வேலையில்தான் இவளுக்கு எவ்வளவு ஈடுபாடு என்று, அர்த்தமில்லாத மகிழ்ச்சி ஏற்பட்டது சாமிநாதனுக்கு. அந்த செப்புத்தகடு சம்பந்தமாக பேசி, இதுவரைக்கும் நல்லவிதமாக நடந்துகொள்பவளை மீண்டும் ஆத்திரப்படுத்த வேண்டுமா என்று யோசித்துவிட்டு, புறப்படும் சமயம், “ஒங்க மாணவிகளைக் கூட்டிக்கிட்டு, மலேஷியாவுக்கு ஏதாவது நிகழ்ச்சி நடத்த வந்தா, கண்டிப்பா எங்க வீட்டுக்கு வரணும். மீனா நல்லாவே சமைப்பா!” என்று நட்புடன் கூறிவிட்டு, தனது பெயரும், விலாசமும் தாங்கிய அட்டையை அவளிடம் நீட்டினார் சாமிநாதன். பிறகு, அப்போதுதான் நினைவு வந்ததுபோல், “அந்தக் காலத்திலே மலாயாவுக்கு சீனாவிலேருந்து பட்டுத்துணி, பீங்கான் இந்த மாதிரி சாமானுங்க கப்பல்லே வந்திருக்காம். விற்பனை ரசீதை – கப்பல்லே இருந்தது – நான் பாத்தேன். அதுக்கான பணத்தை தமிழ்நாட்டு ராஜாதான் குடுத்திருக்கார்!” என்று ஏதோ தெரிவித்தார். “ஏன்?” என்று ஒன்றும் புரியாதவளாக தரங்கிணி கேட்டதே அவருக்குப் போதுமாக இருந்தது. “ஒங்களுக்குத் தெரிஞ்சிருக்கும், மலாயா இங்க உள்ள ராஜாவோட ஆதிக்கத்திலதான் இருந்திச்சு. அதனால ரெண்டு நாடுகளுக்கு மத்தியிலும் நிறையப் போக்குவரத்து இருந்திருக்கு!” “என்னிக்குமே எனக்கு சரித்திரத்திலே அவ்வளவா ஈடுபாடு இல்லே,” என்று தரங்கிணி கூறினாலும், வேறு ஒரு நினைவு எழுந்தது அவளுக்குள். ‘நம்ப சொந்தக்காரா மலேயாவுக்குப் போயிருக்கா,’ என்று பாட்டி பூர்ணவல்லி பேச்சுவாக்கில் கூறவில்லை? எதை வைத்துக்கொண்டு அவ்வளவு உறுதியாகச் சொல்லி இருப்பாள் என்ற கேள்வி எழுந்தது அவளுக்குள். ஆனால், அதைப்போய் இந்த மூன்றாம் மனிதரிடம் சொல்வானேன் என்று வாளாவிருந்தாள். சாமிநாதனும், மீனாவும் விடைபெற்றுக்கொண்டுபோய், நெடுநேரமாகியும் தரங்கிணியின் குழப்பம் தணியவில்லை. ஏதோ கெடுதல் அவளைச் சூழ்ந்திருப்பதைப்போல பிரமை எழுந்துகொண்டே இருந்ததை அவளால் தவிர்க்க முடியவில்லை. தான் வயதுக்கு வந்த பிறகு, முதல் பாட்டாக, பாட்டி சொல்லிக்கொடுத்த “வெண்மை உந்தன் நிறமே” என்ற பாடல் அவள் நினைப்பில் வந்துபோனது. எவ்வளவு கவனமாக ஒவ்வொரு அசைவையும் சொல்லிக்கொடுத்தாள்! இரண்டு, இரண்டு வரியாக மொத்தம் பன்னிரண்டு வரிகள்தாம். ஒரே மாதிரி மெட்டே திரும்பத் திரும்ப வரும். ‘இது சுலபமாத்தானே இருக்கு, பாட்டி? எதுக்கு இவ்வளவு மெனக்கெட்டு சொல்லிக் குடுக்கறே?’ என்று இவள் கேட்டபோது, ‘ஒனக்கு இப்போ புரியாதுடி. நாம்ப வாழ்ந்த வாழ்க்கையைப் பத்தி இதுல நிறைய விஷயம் இருக்கு!’ என்று புதிராகச் சொன்னதும் இப்போது அவள் நினைவுக்கு வந்துபோயிற்று – சம்பந்தம் இல்லாமல். எப்போதும் இல்லாமல், அன்று ஏன் அதைப்பற்றி விசாரித்தாள் பாட்டி? திரும்பவும் அதை ஒரு முறை தானே பாடி, ஆடிப் பார்க்க வேண்டும் என்று நிச்சயித்துக்கொண்டாள் தரங்கிணி. ஆனால், அதற்கான சந்தர்ப்பம்தான் வாய்க்கவில்லை. 16 தண்டச்செலவு அந்த இடத்தை நெல்வயல் வியாபித்து இருந்தது. தூரத்தே சிறிய கிராமம். ராஜன் சுற்றுமுற்றும் பார்த்தான். பக்கத்தில் நின்றிருந்த ஆட்டோவின் அருகே குனிந்து, “நிச்சயமாத் தெரியுமா? இங்கேயா அவங்களை இறக்கி விட்டே?” என்று கேட்டான். “ஆமா, ஸார்”. “அப்புறம் எங்கே போனாங்க?” “இப்பவே காசு குடு, ஸார். பெட்ரோல் போடணும்”. எரிச்சலுடன் பேசிய காசைக் கொடுத்தான் ராஜன். “அதோ, அப்படிக்கா போய் திரும்பி, அந்த சந்துக்குள்ளே போய் விசாரிச்சாங்க”. “அப்புறம்?” “ஒடனே திரும்பி வந்து, வேற ஒரு எடத்துக்குப் போகச் சொன்னாங்க. நான் வண்டியில பெட்ரோல் தீர்ந்துடுச்சுன்னு கப்ஸா விட்டு சமாளிச்சுட்டு, அவங்க ஏறின எடத்திலேயே கொண்டுவிட்டுட்டேன்”. “முட்டாள்!” என்று உரக்கத் திட்டினான், ராஜன். “நீதானே ஸார் அவங்க போன எடத்துக்கு ஒன்னையும் இட்டுகினு போவச் சொன்னே?” என்று அவன்மேலேயே பாய்ந்தார் முத்து. அவரைப் பகைத்துக்கொள்வது அறிவீனம் என்று உணர்ந்தான் ராஜன். பணத்தை வேறு கொடுத்துத் தொலைத்தாயிற்று. “இங்கே எந்த எடத்துக்குப் போனாங்க? பாத்தியா?” அவன் கேட்டதை லட்சியம் செய்யாது, செருப்பைக் கழற்றிவிட்டு, கால் நகத்தை ஆராய்ந்துகொண்டிருந்தான் முத்து. “இந்தா! இப்போ சொல்லு!” என்று மேலும் ஒரு பத்து ரூபாய் தாளை நீட்டினான் ராஜன். இந்த மடையனுக்குப்போய் தண்டம் அழ வேண்டி இருக்கிறதே என்று ஆத்திரம் பொங்கியது. போகட்டும்! கோடி கோடியாகப் பொன் கிடைக்கப்போகிறது. ஐந்துக்கும், பத்துக்கும் கணக்குப் பார்த்துக் கொண்டிருப்பார்களா என்று உடனே தன்னைத்தானே சமாதானமும் செய்துகொண்டான். “அதை யாரு பாத்தாங்க? நீ போய் அந்த தெருவில விசாரிச்சிக்க!” என்று கோபம் தணியாமல் முத்து பேசவும், ராஜன் நடையைக்கட்டினான், “இரு. இப்போ வந்துடறேன்!” என்றுவிட்டு. ஆனால், அவன் திரும்பி வருவதற்குள், ஆட்டோ பறந்திருந்தது! தன் விதியே நொந்தபடி, கால்நடையாகவே நடந்தான் பஸ் ஏதாவது வருகிறதா என்று பார்த்தபடி. 17 மீண்டும் சந்திப்பு சென்னை ஹோட்டலில் பகல் சாப்பாடு ஆனதும், அறைக்கு வெளியில் எங்கும் செல்ல மனமின்றி, கட்டிலின் தலைமாட்டில் ஒரு தலையணையைச் சாய்த்து, கால்களை நீட்டியபடி உட்கார்ந்து, ஒரு புத்தகத்தைக் கையில் எடுத்தார் சாமிநாதன். படிக்க முயன்று தோல்வியுற்றார். கோலாலம்பூர் திரும்ப இன்னும் இரு தினங்களே இருக்கின்றன என்ற நிதரிசனம் அவரை அலைக்கழைத்தது. கடந்த சில நாட்களாக, தரங்கிணியும் இதே ஊரில்தான் இருக்கிறாள் என்று அவ்வப்போது நினைத்துக்கொண்டு, அந்த நினைவில் ரகசியமாக ஆனந்தப்பட்டுக்கொண்டிருந்தார் அவர். இனி, அதற்கும் வழி இல்லாமல் போய்விடும்! யாரோ கதவைத் தட்டினார்கள். “கதவில சின்ன கண்ணாடி பதிச்சிருக்கு, பாரு! யாருன்னு பாத்துட்டு, அப்புறம் கதவைத் திற, மீனா!” என்று எச்சரித்துவிட்டு, புத்தகத்தில் மீண்டும் கண்ணை ஓட்டினார் சாமிநாதன். “அப்பா! யார் வந்திருக்காங்க, பாருங்க!” என்று அட்டகாசமாக மீனா இரைந்ததும், அவர் நிமிர்ந்து உட்கார்ந்தார். தரங்கிணி! ‘அட, ஒங்களைப்பத்தித்தான் நினைச்சிட்டிருந்தேன்!’ இந்த உண்மையை இவளிடம் எப்படிச் சொல்வது? சொன்னால்தான் மரியாதையாக இருக்குமா? படுக்கையிலிருந்து குதித்து எழுந்தார். “வாங்க! வாங்க!” என்று பலமாக வரவேற்றவர், அவளுடைய கண்களைப் பார்த்துத் திடுக்கிட்டுப் போனார். “சம்திங் ராங் (ஏதேனும் தவறு நடந்துவிட்டதா)?’ என்று உண்மையான பரிவுடன் கேட்டார். “பாட்டி..” அவள் குரல் விக்கியது. “பாட்டி தவறிட்டாங்க!” “ஒக்காருங்கக்கா!” அனுதாபத்துடன் சொன்னவள் மீனா. தனக்கு அதுகூடத் தோன்றவில்லையே என்று சாமிநாதன் தன்னைத்தானே நொந்துகொண்டார். தொண்ணூறு வயதில் ஒருத்தி இறந்துபோவதில் என்ன ஆச்சரியம் இருக்கிறது? ‘கல்யாணச்சாவு’ என்பார்களே, அந்தமாதிரி இல்லையோ இது என்று எண்ணமிட்டார். வெளிப்படையாக தான் நினைப்பதை தொட்டாச்சிணுங்கியான இவளிடம் சொல்லலாமா, வேண்டாமா என்று அவர் யோசித்துக்கொண்டிருக்கையிலேயே தரங்கிணி தொடர்ந்தாள்: “பாட்டி இந்த வயசில போனது பெரிசில்லதான். ஆனா, இயற்கையா செத்திருக்கலாம்”. அவள் பூடகமாகச் சொன்னது எதையோ உணர்த்த, “என்ன சொல்றீங்க?” என்று கத்தாத குறையாகக் கேட்டார் சாமிநாதன். “பாட்டியை..,” மூச்சை இழுத்துக்கொண்டாள். “யாரோ கொலை செய்துட்டாங்க”. “திருட்டா?” “அவங்க போட்டிருந்த ரெண்டு சங்கிலியும் கழுத்திலேயே இருந்திச்சு. வந்த கொலைகாரன் மூணு ஜோடி வளையையும் எடுத்துக்கலே. திருட்டில்ல, கொலைதான்!” என்றவளை, “பின்னே எதுக்கு..?” என்று இழுத்தார் சாமிநாதன். “நீங்கதான் சொல்லணும். நீங்க வந்த அன்னிக்கு மறுநாள் இன்னொருத்தன் ஒங்களைமாதிரியே ஏதோ செப்பு தகட்டைப்பத்திக் கேட்டுட்டு வந்தானாம். பாட்டி அவனை நல்லா திட்டி அனுப்பி இருக்காங்க. வழக்கம்போல, நான் அவங்களைப் பாக்கப் போனபோது சொன்னாங்க”. சாமிநாதன் தன் விரல்களை அடர்த்தியான முடியில் செலுத்திக்கொண்டார். “புரியலியே!” “நான்கூட, ’ஒனக்கு இங்கே இருக்கப் பயமா இருந்தா, எங்கூட வந்துடேன், பாட்டி! இவ்வளவு நகைநட்டைப் போட்டுண்டு ஏன் இப்படி தனியாத் தவிக்கிறே?’ன்னு சொன்னேன். பாட்டியாவது, இன்னொருத்தர் சொல்றதைக் கேக்கறதாவது!” என்றவள், “நான் பிடிவாதமா இங்கே அழைச்சிண்டு வந்திருக்கணும்!” என்றாள். கண்களில் பெருகி வழிந்த கண்ணீரைத் துடைத்துக்கொள்ள அவள் எந்தவித முயற்சியும் எடுக்கவில்லை. “அன்னிக்கு நான் ஒங்ககிட்ட அப்படி முரட்டுத்தனமா பேசி இருக்கக்கூடாது!” என்றாள் மன்னிப்புக் கேட்கும் தோரணையில். “இப்போ கேக்கறேன், சொல்லுங்க, ஸார். அந்த செப்புத்தகட்டில அப்படி என்னதான் எழுதி இருந்தது, ஒரு நல்ல ஆத்மாவைக் கொலை செய்யற அளவுக்கு?” சாமிநாதன் ஆரம்பித்தார் – ஆயிரம் ஆண்டுகளுக்குமுன் தமிழ்நாட்டிலிருந்து அரசன் ஒருவனால் அனுப்பப்பட்ட கலைஞர்கள், அவர்களிடம் அரசன் கொடுத்து அனுப்பி இருந்த செப்புத்தகடு, அதன்மூலம் அவர்களுக்கு சூலீஸ்வரம் என்ற இடத்தில் அளிக்கப்பட்ட விலைமதிப்பற்ற பொன், பொருள், இவற்றைப்பற்றி தான் அறிந்தது, எல்லாவற்றையும் விவரமாகச் சொல்லச் சொல்ல, தரங்கிணி அவ்வப்போது சந்தேகம் கேட்டு, தெளிவு படுத்திக்கொண்டாள். கடைசியாக, அப்படிப் பெயர்கொண்ட இடம் எங்கே இருக்கிறது என்று தற்காலத்தில் யாருக்கும் தெரியாவிட்டாலும், அது மலாயாவில்தான் இருந்திருக்க வேண்டும் என்று தான் நம்புவதையும் தெரிவித்தார். “எப்படி அவ்வளவு உறுதியா சொல்றீங்க?” என்று கேட்டாள் தரங்கிணி. “அன்னிக்கு ஒங்களை காலேஜில பாத்தப்போ சொன்னேனே! மலாயாவுக்குச் சீனாவிலேருந்து சாமானுங்க கப்பல்லே வந்திருக்காம். அதுக்கான விற்பனை ரசீதை நான் பாத்தேன். பணத்தை என்னவோ தமிழ்நாட்டு ராஜாதான் குடுத்திருக்கார்! வியாபாரிங்களும், மத்தவங்களும்..” “மத்தவங்கன்னா?” “கட்டிட, சிற்பக்கலைஞர்கள். இவங்கல்லாம் ’திரைகடலோடியும் திரவியம் தேடு’ங்கிறதில நம்பிக்கை வெச்சோ, இல்லே.., ராஜா அனுப்பினதாலேயோ மலாயா வந்திருக்காங்க! தமிழவங்கதான் போற எடத்தில எல்லாம் நம்ப கோயிலைக் கட்டிடுவாங்களே! பணக்காரனா இருந்தா, கருங்கல், இல்ல செங்கல்லால் ஆன பிரகாரம், கருங்கல் சிலைன்னு ஒரு மாதிரி பெரிய கோயில். ஏழையா இருந்தா, ஒரு குழவி மாதிரி கல்லிலே மஞ்சள் துணியைக் கட்டி, அதுதான் சாமின்னு கும்பிட்டாங்க. இங்கிலீஷ்காரன் ரப்பர் காடுங்களுக்கு அவங்களைக் கூட்டிட்டு வர்றப்போ, அப்படித்தான் செஞ்சாங்களாம்”. நீண்ட யோசனைக்குப் பிறகு, “அப்போ.., ஆடல், பாடலையும் வெளிநாட்டிலே பரப்பி இருப்பாங்க. இல்லியா?” என்று கேட்டாள் தரங்கிணி. அவளது கேள்வியின் நோக்கம் புரியாது, அவளையே நோக்கினார் சாமிநாதன். “எங்க வீட்டிலகூட நீங்க காட்டின மாதிரி ஒரு தகடு இருந்தது”. மெல்ல ஒத்துக்கொண்டாள். சாமிநாதன் நிமிர்ந்து உட்கார்ந்துகொண்டார். “பாட்டி அதைப் பத்திரமா கள்ளிப்பொட்டியில பூட்டி வெச்சிருந்தா. நான் அதைப்பத்திப் பெரிசா ஒண்ணும் நினைக்கலே. பழங்காலத்துச் செல்லாக்காசு மாதிரி ஏதோன்னு அலட்சியமா இருந்துட்டேன். நீங்க போனப்புறம்தான், ’நம்பளோட பரம்பரைச் சொத்து! அப்போ இருந்த ராஜாவே நம்ப முன்னோரில ஒருத்தருக்குக் குடுத்திருக்கார்,’ன்னு பெருமையாச் சொன்னா,” என்ற தரங்கிணி, “அதை எடுக்கத்தான் யாரோ வந்திருக்கணும். பாட்டி மறிச்சிருப்பா. அதனால, இரும்பு ஒலக்கையால மண்டையில போட்டுட்டான்!” மீண்டும் விம்மல் வந்தது. “இப்போ அதைக் காணும்! நன்னா தேடிப் பாத்துட்டேன்! பொட்டிப் பூட்டை உடைச்சிருக்காங்க!” ‘இதை முன்பே என்னிடம் சொல்லி இருந்தால், இன்று உன் பாட்டியைப் பறிகொடுத்துவிட்டு, இப்படித் துடிக்க வேண்டாமே!’ என்று எண்ணினார் சாமிநாதன். ஆனால் அவள்மேல் அவரால் ஆத்திரம் கொள்ள முடியவில்லை. ஓசையின்றி சிறிது நேரம் அழுதவளை நேராகப் பார்க்காமல், தர்ம சங்கடத்துடன், வேறு எங்கோ தன் பார்வையை ஓட விட்டார். தரங்கிணியை ஒருவித கர்வத்துடன் பார்த்தே பழகி இருந்த காரணத்தால், இப்போதைய நிராதரவான அவளது நிலை அவரது ஆண்மைக்குச் சவால் விட்டது. அவள் கழுத்தைச் சுற்றித் தன் இரு கைகளையும் போட்டு, இறுக அணைத்துக்கொள்ள வேண்டும் என்று அவர் கைகள் பரபரத்தன. விரல்களை வயிற்றின்மேல் கோர்த்துக்கொண்டு, தன்னைக் கட்டுப்படுத்திக்கொள்ள முயன்றார். “கொஞ்சம் தண்ணி குடிங்கக்கா. சூடா ஏதாவது கொண்டுவரச் சொல்லட்டுமா?” என்று ஒரு டம்ளருடன் அவளை நெருங்கினாள் மீனா. வரட்டு உபசாரம் செய்துகொள்ளாமல், “பூஸ்ட்!” என்று தரங்கிணி கோரிக்கை விடுத்தது சாமிநாதனுக்குப் பிடித்திருந்தது. “பூஸ்டா?” என்று விழித்த மகளிடம், “ஹார்லிக்ஸ் மாதிரி!” என்று விளக்கிவிட்டு, அவர் தலையசைக்க, அங்கிருந்தே தொலைபேசியில் ஆர்டர் கொடுத்தாள். குடித்துவிட்டு, கண்களைத் துடைத்துக்கொண்டு, சாமிநாதனை நேராகப் பார்த்தாள் தரங்கிணி. “எப்பவோ ஆயிரம் வருஷத்துக்கு முன்னால நடந்து முடிஞ்ச கதை. மத்தவங்களுக்கு இப்போ அதில என்ன இண்ட்ரெஸ்ட்?” “இந்தக் காலத்தில நாம்ப நினைச்சுக்கூட பாக்க முடியாத அளவுக்கு தங்கமும், வைரமும் அப்போ அவங்ககிட்டே இருந்திருக்கு. அதை எல்லாம் எப்படி செலவழிச்சு இருக்க முடியும்?” “என்ன செய்வாங்க? தங்களோட சந்ததிகளுக்குக் குடுத்திருப்பாங்க!” என்றாள் தரங்கிணி. வருத்தமாக இருந்தபோது, உணர்ச்சிப்பெருக்கில், தன்னையும் அறியாது, அவள் பாட்டியுடன் பேசிய அதே முறையில் பேசினாள், இப்போது மாறிவிட்டது என்பதை சாமிநாதனது ஆராய்ச்சி செய்யும் மூளை கவனித்துக்கொண்டது. “அவங்க அங்கே போய் நாப்பது, ஐம்பது வருஷம் கழிச்சு, ஒரு யுத்தம் வந்திருக்கு. அந்தமாதிரி சமயங்களிலே பொன்னையும், மத்த விலைமதிப்பில்லாத சாமானுங்களையும், பெரிய பாத்திரத்தில போட்டு, மண்ணுக்கு அடியில புதைச்சு வைச்சுடுவாங்க. அதைத்தான் நாம்ப இப்ப புதையல்னு சொல்றோம்! சில சாமி விக்கிரங்கள் இப்படித்தான் மண்ணிலேருந்து நமக்கு இன்னிக்கும் கிடைச்சிட்டிருக்கு. வெச்சவங்க அதை திரும்ப எடுத்துக்காட்டி, இன்னும் அந்தப் பொற்காசுகள் அங்கேயேதான் இருக்கணும்! யாருக்கோ, எப்படியோ அதுபத்தி தெரிஞ்சிருக்கு. அந்த இடத்தைப்பத்தின விவரம் தகட்டிலேதான் இருக்கணும்னு அனுமானிச்சு, ஒங்க பாட்டி வீட்டுக்கு வந்திருக்காங்க!”“கடவுளே!” என்று பெருமூச்செறிந்தாள் தரங்கிணி. மலாயாவிற்குப் போன தனது மூதாதையர்களை எண்ணி ஆத்திரப்பட்டாள். இறந்தும் கெடுத்தார்களே! ஒருவரையும் சாராது, கடவுளுக்குத் தொண்டு செய்தே வாழ்நாளெல்லாம் கழித்த பாட்டிக்கு இப்படி ஒரு கொடூரமான சாவா? மெள்ள எழுந்தாள். “வரேன், ஸார்!” என்றாள் அடைத்த குரலில். அவள் தன்னை விட்டுப் போவதை விரும்பாது, “போலீஸ் என்ன சொல்றாங்க?” என்று கேட்டுவைத்தார் சாமிநாதன். “நீங்க வேற!” என்று அலுத்தபடி, மீண்டும் உட்கார்ந்தாள். “பாட்டி என்ன, நாட்டில முக்கியமான அரசியல்வாதியா, இல்ல சினிமா நடிகையா? சேதி கேட்டதும், போலீஸ் சும்மா பேருக்கு வந்துட்டுப் போனாங்க, எனக்குத் தெரிவிச்சாங்க. அவ்வளவுதான்! அவங்களைப் பொறுத்த மட்டில, வயசான ஒரு அம்மா இறந்து, நாட்டில ஜனத்தொகை குறைஞ்சா நல்லதுதான்!” என்றாள் தரங்கிணி, கசப்புடன். “எங்கிட்டேயே, ’எப்படியும் சாகிற வயசுதானேம்மா! தொண்ணூறு வயசிலகூட சாகக்கூடாதுன்னா எப்படி? இதுக்குப்போய், இந்த அழுகை அழறீங்களே!’ங்கறாங்க!” தான் ஏன் அந்தப் பேச்சை எடுத்தோம், ’போகிறேன், ’என்று புறப்பட்டவளை பேசாமல் விட்டிருக்கக்கூடாதா என்று நொந்துபோனார் சாமிநாதன். தரங்கிணியுடன் ஹோட்டல் வாயில் கதவுவரை வந்த மீனா, “கண்டிப்பா மலேஷியாவுக்கு நீங்க வந்து ஆடணும்! ஒங்களுக்கு நல்ல வரவேற்பு இருக்கும். அன்னிக்கு கிளாசிலே நீங்க ஆடினது என் கண் முன்னாலேயே நிக்குதுக்கா,” என்று கொஞ்சினாள், அசந்தர்ப்பமாக. அவளுடைய குழந்தைத்தனம் தரங்கிணியின் முகத்தில் புன்சிரிப்பை வரவழைத்தது. 18 பகல் கொள்ளை “என்னடா? கிடைச்சுதா?” ஆர்வத்துடன் விசாரித்தான் ராஜன். ‘பிடித்துத் தருபவர்களுக்கு வெகுமதி’ என்று போலீஸ் ஸ்டேஷனில் போர்டில் எழுதிவைத்து, மேலே புகைப்படத்தையும் போட்டிருப்பார்களே, அதை ஒத்திருந்தது எதிரில் நின்றிருந்தவன் முகம். “நீ வேற நைனா! நான் பாங்கிலே கொள்ளை அடிக்கிறவன்! இது என்ன பிரமாதம்! இப்பவோ, அப்பவோன்னு இருக்கிற கெழவி. அவளையா சமாளிக்க முடியாது? ஒரே தட்டு – மண்டையில!” என்று பெருமையாகச் சொன்னான். அவள் தலையில் அடித்ததை சைகையால் காட்டினான். “உசுரு போயிடுச்சா?” பதறினான் ராஜன். பெருமையுடன் தலையாட்டினான் எதிரில் இருந்தவன். “அடப்பாவி! திருடிட்டு வாடான்னா, கொலையே செய்திட்டு வந்து நிக்கறியே!” என்று அலறினான். “ஒனக்கின்னா? போலீஸ் வந்து விசாரிக்கச்சொல்லோ, நானும் அங்கதான் இருந்தேன். ’இதெல்லாம் ஒரு கேசு!’ன்னு இன்ஸ்பெட்டர் சலிச்சுக்கிட்டது எனக்கும் கேட்டுச்சு. ஒண்ணும் ஆக்ஷன் எடுக்க மாட்டாங்க!” என்றான் நம்பிக்கையுடன். பின், “இந்தா!” என்று தான் தரங்கிணி வீட்டிலிருந்த எடுத்த பொக்கிஷத்தை நீட்டினான். ராஜன் அதை வாங்கப்போனபோது, மீண்டும் கையை இழுத்துக்கொண்டான். “பேசின பேச்சுக்கு மேல ஐயாயிரம்!” என்றான் கறாராக. “இது அநியாயம்!” ராஜன் அலறினான். “எப்படியாவது கொணாந்துடுன்னியா! அதான் அப்பிடி ஆய்ப்போச்சு. ’நீதாண்டா இந்தக் கொலையைச் செஞ்சவன்’னு போலீஸ் என்னைப் பிடிச்சு ஜெயில்ல போட்டா, நாளைக்கு நீயா என் பொண்டாட்டி பிள்ளைங்களுக்கு சாப்பாடு போடுவே?” இந்தமாதிரி கீழ்த்தரமான மக்களுடன் சகவாசம் வைத்துக்கொள்ள வேண்டி இருக்கிறதே என்று ராஜனுக்கு ஆத்திரமாக வந்தது. செய்வதோ சட்ட விரோதம். வேறு வழி? பணக்காரன் ஆகிவிட்டால், யாரும் எதையும் கண்டுகொள்ள மாட்டார்கள் என்று விடவேண்டியதுதான். அந்தப் போக்கிரி கேட்ட தொகையைக் கொடுத்தான். மங்கிக் கிடந்த செப்புத்தகட்டை அவனிடமிருந்து பிடுங்காத குறையாக வாங்கிக் கொண்டபோது, ராஜனுக்கு சொர்க்கமே கண்ணுக்குத் தெரிந்தது. ஒரே இடமாக அவ்வளவு தங்கக் காசுகளையும் விற்கக்கூடாது. கரன்சி நோட்டுகளாக மாற்றிக்கொண்டு, நாட்டை விட்டே போய்விடவேண்டும். ஸ்விட்சர்லாந்தில் பாங்கில் போட்டு வைத்தால், ஒரு பயல் நம்மை அசைக்க முடியாது. இப்போது ‘தண்டச்சோறு’ என்று திட்டுகிற மாமா அப்புறம் இவனைக் கொண்டாடுவார். ராஜனது மனக்கோட்டை மேலே மேலே எழும்பிக்கொண்டிருந்தது. 19 மீண்டும் கோலாலம்பூர் சாமிநாதன் பழையபடி காலை எழுந்ததும், தினசரியை அலசுவதும், வேலையிலேயே மூழ்குவதுமாகக் கழித்தார். விடுமுறை முடிந்துவிட, மீனாவுக்கும் படிப்பதற்கே நேரம் சரியாக இருந்தது. வாரத்தில் மூன்று நாட்கள் மட்டும் நிறைய சமைத்துவிட்டு, மிகுந்ததை ஐஸ்பெட்டியில் வைத்து, சூடாக்கிச் சாப்பிடும் வழக்கம் வந்தது. கடந்த சில வாரங்களின் பரபரப்பு அடியோடு மறைந்து, அந்த இடத்தை ஒருவித மந்த நிலை ஆக்கிரமித்துக்கொண்டிருந்தது. “அப்பா! இன்னிக்கு பேப்பரில பாத்தீங்களா? ஒரு நாட்டிய நிகழ்ச்சிக்காக தரங்கிணி இங்க வர்றாங்க!” என்று கூவியபடி அவர் அருகே வந்து உட்கார்ந்துகொண்டாள் மீனா. “நீ போயிட்டு வா!” பட்டுக்கொள்ளாமல் பேசினார் சாமிநாதன். “நீங்க?” “எனக்கு இந்த டான்ஸ் எல்லாம் படுபோர். சும்மா, சும்மா கையை, காலை ஆட்டுவாங்க. ஒரு மண்ணும் புரியாது. அந்த நேரத்தில டி.வியில டிஸ்கவரி பாத்தா, ஏதாவது புதுசா கத்துக்கலாம்!” “டான்ஸ் புரியாட்டி போகுது! தெரிஞ்சவங்க! அவங்களைப் பாத்துப் பேசறதுக்காகவாவது போகலாம். வாங்கப்பா!” “சும்மா தொணதொணக்காதே, மீனா! ஒரு தடவை சொன்னா புரியாது?” அவர் இப்படி ஆத்திரப்பட்டுக் கத்தும்படி தான் என்ன சொல்லிவிட்டோம் என்று மீனாவுக்குப் புரியவில்லை. அவளும் பார்த்துக்கொண்டுதானே இருக்கிறாள்! முன்போல், அப்பாவுக்கு எதிலும் பிடிப்பில்லை. இரண்டு நாட்களுக்குமுன் அவள் சமைத்து வைத்ததைச் சுடவைத்து அவள் பரிமாறினாலும், கவனிக்காது, விழுங்கி விடுகிறார். முன்பெல்லாம் இப்படியா இருந்தார்! எப்படி இட்லி, சாம்பார், சட்னி என்று ஒவ்வொன்றையும் வாயாரப் புகழ்வார்! பழைய அப்பாவாக அவரை மாற்றவேண்டும். அதற்கு என்ன செய்யலாம் என்று யோசிக்க ஆரம்பித்தாள் மீனா. 20 இரட்டை அர்த்தங்கள் யாரோ சில பெண்கள் தரங்கிணியின் அலுவலக அறைக்கு வெளியே பேசிக்கொண்டு போனார்கள். “இந்தக் காலத்துத் தமிழ்ப்படங்களே பாடாவதி! வசனத்திலே ரெண்டு அர்த்தம் வர்றமாதிரி எழுதறாங்க!” “அதைச் சொல்லு! மேலாகப் பாத்தா, சாதாரணமாக இருக்கும். ஆனா, மறைமுகமா கெட்ட வார்த்தை”. “அதான் எங்கப்பா இப்பல்லாம் படங்களே பாக்கறதில்ல!” அவளுக்கு ஏதோ தட்டுப்பட்டது. சினிமா வசனத்தில் மட்டுமா, ஒரு நடனமணி அபிநயம் பிடிக்கையிலும் வெவ்வேறு அர்த்தங்கள் வரும்படி பாடலை அமைக்க முடியுமே! ‘நம்ப பாட்டிலேயும், நாட்டியத்திலேயும்தான் பாஷை தெரியாதவாளுக்குக்கூட எல்லாத்தையும் புரிய வெச்சுடலாமே!’ பாட்டி பூர்ணவல்லி என்றோ கூறியது இப்போது தரங்கிணியின் நினைவிலெழுந்தது. பாட்டியால் அவளுக்குக் கற்பிக்கப்பட்டிருந்த “வெண்மை உந்தன் நிறமே” என்ற சந்திரன்மேல் அமைந்த பாடலும், ‘இதோட அபிநயத்தைக் கொஞ்சம்கூட மாத்திடாதே!’ என்ற எச்சரிக்கையுடன் அதற்கேற்ற நடனமும், சமீபத்தில் அதைப்பற்றி பாட்டி கேட்டதும், அவர்களது உறவினர்கள் மலேயாவில் இருந்ததுபற்றி ஏதோ தற்செயலாகத் தோன்றியதுபோலக் கூறியதும், ஒரு காசுக்குக்கூட பிரயோசனப்படாத அந்த செப்புத்தகட்டை என்னமோ பாரம்பரியச் சொத்துபோல பத்திரப்படுத்தி வைத்திருந்ததும் – எல்லாமே எதையோ மனத்தில் வைத்துக்கொண்டுதான் என்று இப்போது தோன்றியது தரங்கிணிக்கு. ஏன் தன்னிடம் எந்த விவரத்தையும் முழுமையாகத் தெரிவிக்காது போய்விட்டாள் என்ற கோபம் எழுந்தபோதே, தரங்கிணிக்குப் பாட்டியின் நோக்கம் புரிந்தது. ஒரு புதிர் போட்டு, அதற்கான விடையைக் கண்டுபிடிக்க சில துப்புகளும் கொடுத்துப்போயிருக்கிறாள் – தானே தன் அறிவை உபயோகித்து, புதிரை அவிழ்க்க வேண்டும் என்பதற்காக. தரங்கிணிக்கு பாட்டியின் மேல் இருந்த கோபம் மறைந்து, அது இருந்த இடத்தில் உற்சாகம் பற்றிக்கொண்டது. ‘நான் கண்டுபிடிச்சுக் காட்டறேன், பாரு!’ என்று மனத்துக்குள்ளேயே நிறைந்திருந்த பாட்டியிடம் சவால் விட்டாள். உவகையில் உதடுகள் விரிந்தன. தான் அடுத்து செய்ய வேண்டியது என்ன என்பதைப்பற்றிய தெளிவும் பிறந்தது. 21 சென்னை மியூசியம் சென்னை மியூசியம் அதிகாரி பரமசிவம் தன் மைத்துனன் கடந்த வாரம் கொடுத்துவிட்டுப் போயிருந்த தகட்டை வாங்கிப்பார்த்தார். புகைபிடிக்கும் பழக்கத்தினால் கருநீலமாக ஆகியிருந்த தன் உதட்டைப் பிதுக்கினார். “ஏன் மாமா? இது அசல் இல்லியா?” பொங்கி எழுந்த ஏமாற்றத்தைத் தவிர்க்க முடியாது கேட்டான் ராஜன். இந்த ஒரு வாரமாக பல தூக்கமற்ற இரவுகளைக் கழித்திருந்தது அவனுக்குத்தானே தெரியும்! “ஒரிஜினல்தான். ஒனக்கு இது எங்கேடா கிடைச்சிச்சு?” “அதைப்பத்தி ஒங்களுக்கு என்ன? யாரோ தன் வீட்டிலே ரொம்ப நாளா இருந்திச்சுன்னு சொல்லி..” “ஒன்னை வற்புறுத்திக் கொடுத்தாங்களாக்கும்!” என்று முடித்தார் கேலியாக. “யாருகிட்ட கதை விடறே? திருடினியா?” “சேச்சே! என்ன மாமா, நீங்க! அதுக்கெல்லாம் தைரியம் எனக்குப் பத்தாதுன்னு ஒங்களுக்குத் தெரியாது?” நிம்மதியுடன் புன்னகைத்தார் பரமசிவம். நிதானமாகப் பேசினார்: “ராஜன்! பழங்காலத்து சாமானுங்க எல்லாமே விலை மதிப்பில்லாததுன்னு நினைச்சுடக்கூடாது. இந்த தகட்டுலே ஒரு பெரிய தப்பு இருக்கு”. “தப்பா?” “ஆமாம். இன்ன வருஷம், இன்ன மாசம், அமாவாசை அன்னிக்குப் புறப்பட்டு சூலீஸ்வரம் போனவங்ககிட்ட..” “சூலீஸ்வரமா?” “சும்மா, சும்மா குறுக்கே பேசாதே. அது ஒரு ஊரோட பேரு. இப்போ எங்கே, எந்தப் பேரில இருக்கோ! இல்ல, சுனாமியில, முந்தி மகாபலிபுரம் அழிஞ்சமாதிரி, கடலுக்குள்ளே போயிடுச்சோ!” அலட்சியமாகச் சொன்னார். “என்னமோ தப்புன்னீங்களே மாமா?” “அவசரக்குடுக்கை! அதைத்தானே சொல்ல வரேன்! வருஷத்தோட, ஒரு தேதியும் குறிப்பிட்டிருக்காங்க, பாரு. அங்கதான் தப்பு”. “என்ன தப்பு?” “அன்னிக்கு அமாவாசை இல்ல. வேணுமின்னே குழப்பறதுக்காகச் செஞ்சதுன்னுதான் எனக்குத் தோணுது!” “எதுக்காக அப்படி?” “யாரு கண்டாங்க! தேதியும், வருஷமும் பொருந்தலே. அதை வெச்சுப் பாக்கறப்போ, இதில இருக்கிறது எல்லாமே பொய்யா இருக்கணும்னுதான் தோணுது!” என்றார் அலட்சியமாக. “இப்ப இதனால ஒரு காசுக்கும் பிரயோசனம் இல்லே! இது தெரிஞ்சுதான் தாராளமா ஒங்கிட்ட குடுத்திருக்காங்க!” ராஜனின் மனக்கோட்டை மணல்கோட்டை ஆயிற்று. ‘அந்த மலேஷியாக்காரர் மட்டும் என் கையில கிடைச்சா,’ என்று கருவிக்கொண்டான். காட்டிலும், மேட்டிலும் தன்னை அலைக்கழித்தவர், தன்னை ‘அம்போ’ என்று பாதியில் விட்டுவிட்டுப்போன ஆட்டோக்காரன், இந்த உபயோகமற்ற பொருளைத் திருட, அதற்காகக் கொலையும் செய்த பாவிக்கு அழுத பல ஆயிரங்கள்..! ராஜனுக்குப் படபடப்பாக இருந்தது. “நானும் கரடியா கத்திட்டிருக்கேன். நீதான் காதிலேயே வாங்கறதில்ல. இப்படி நேரத்தை வேஸ்ட் பண்ணறதுக்குப் பதிலா, ஏதானும் உருப்படியா செய், போ! தண்டச்சோறு! தண்டச்சோறு!” ராஜன் சரேலென எழுந்து வெளியே போனான். அக்கா புருஷன்மேல் எழுந்த ஆத்திரத்தைவிட அவமானம்தான் மிகுந்திருந்தது. 22 தடுமாற்றம் “அப்பா! நான் ஒண்ணு கேப்பேன். நீங்க கோவிச்சுக்கக் கூடாது!” என்ற பீடிகையுடன் எதிரில் வந்து அமர்ந்துகொண்ட மகளைப் பார்த்தார் சாமிநாதன். “எத்தனை பணம் வேணும்? எங்கேயாவது பிக்னிக் போகப்போறியா?” என்று கேட்டார், புன்னகையுடன். “அதெல்லாம் இல்லைப்பா. இது கல்யாணத்தைப்பத்தி!” “இன்னும் பட்டப்படிப்பையே ஆரம்பிக்கலே. அதுக்குள்ளே அவசரமா ஒனக்கு?” செல்லமாக முறைத்தபடி கோபித்தார். “யாரு மாட்டினான் ஒங்கிட்ட?” “அட, போங்கப்பா. என் கல்யாணம் இல்ல, ஒங்களோடது!” “என்ன ஒளர்றே?” கண்களைச் சுருக்கிக்கொண்டு அவளைப் பார்த்தார். மகளின் விளையாட்டுப்புத்தியை இந்த விஷயத்தில் ரசிக்க முடியவில்லை. மரியாதை இல்லாமல் பேசுகிறாளோ? “நான் ஒங்களை நல்லா புரிஞ்சுக்கிட்டுத்தாம்பா பேசறேன். தரங்கிணியை ஒங்களுக்கு ரொம்பப் பிடிச்சிருக்கில்ல?” சாமிநாதனுக்கு அதிர்ச்சியில் நாவெழவில்லை. தன் உணர்ச்சிகளை இறுகப் பூட்டித்தானே வைத்துக்கொண்டிருந்தோம்! இவளுக்கு எப்படித் தெரிந்தது? ஒருவேளை, எந்த ஆதாரமும் இல்லாமல், தன் வாயைப் பிடுங்கப்பார்க்கிறாளா? தடுமாட்டத்துடன், “பிடிக்கறவங்களை எல்லாம் கல்யாணம் பண்ணிக்க முடியுமா?” என்று மழுப்பினார். “ஏம்பா? தரங்கிணிக்கு அழகில்லையா? நல்லவங்களாத்தானே தெரியுது?” மீனாவின் பிடிவாதம் அவருக்குத் தெரிந்ததுதான். தான் பிடிகொடுத்துப் பேசாது இருந்தால், விஷயத்தை அத்துடன் விட்டுவிட மாட்டாள் என்று புரிந்து, தர்க்கத்தில் இறங்கினார். “மீனா! ஒனக்கே தெரியும், நான் பாக்கற உத்தியோகம் எனக்கு எவ்வளவு முக்கியம்னு. ஏதாவது ஆராய்ச்சியிலே இறங்கிட்டா, எனக்கு சாப்பாடு, தூக்கம் எல்லாமே மறந்துடும். இந்த பழக்கத்தாலேயே ஒங்கம்மா என்கூட எவ்வளவு நாள் சண்டை பிடிச்சிருக்காங்கன்னும் ஒனக்குத் தெரியும். என்னை நம்பி வீட்டிலே ஒரு மனைவி இருந்தா, தினமும் அவளோட பேச, அவளை அங்கே, இங்கே கூட்டிட்டுப் போக நேரத்தை ஒதுக்கியாகணும். இந்த வயசிலே அதெல்லாம் நடக்கிற காரியமில்லை. எனக்கு இப்போதான் சுதந்தரமா இருக்கு,” என்றார். உண்மையில், தரங்கிணியின் அழகுக்குத் தான் ஏற்றவனா, அவள் இரண்டாந்தாரமாகத் தன்னை ஏற்பாளா என்ற பயமே அவரது நிராகரிப்புக்குக் காரணம். அதை மகளிடம் சொல்ல முடியுமா! “அவங்க ரொம்ப அழகு. இல்லப்பா?” விடாப்பிடியாகத் திரும்பவும் கேட்டாள். எப்படியாவது தன்னை மடக்குவதென்று இவள் வந்திருக்கிறாள்! தனக்குள் எழுந்த சிரிப்பை அடக்கிக்கொண்டு நிதானமாகப் பேசினார் சாமிநாதன். “நீ ஒரு பொண்ணு. நீயே ‘தரங்கிணி அழகு’ ன்னு ஒத்துக்கிட்டா, அப்புறம் நான் சொல்ல என்ன இருக்கு?” “நேரா ஒத்துக்க மாட்டீங்களே!” சாமிநாதன் வாய்விட்டுச் சிரித்தார். “சரி. தரங்கிணி அழகுதான். நான் இதுவரை பாத்திருக்கிற பொண்களிலேயே ரொம்ப அழகு. அவங்களைப் பாக்கறப்போ..,” பெற்ற மகளிடம் எவ்வளவு செல்வது என்று சிறிது தயங்கிவிட்டு, ‘இவள் இன்னும் சின்னக்குழந்தை இல்லை. அறிவுபூர்வமாகப் பேசிப்பார்க்கலாம்,’ என்ற முடிவுடன், “ஒரு ஷர்ட் வாங்கப் போதுமானதாக இல்லாத அரையிருட்டிலேகூட ஒரு பொண்ணைப் பாத்தா, எந்த ஆம்பளையும் மயங்கிடுவான்!னு யாரோ புத்திசாலி சொல்லி வெச்சிருக்கான்”. “சொன்னது ஒரு லேடி!” சிரிப்புடன் திருத்தினாள் மீனா. “அவங்களுக்குத்தான் இந்த காதல் சமாசாரம் எல்லாம் அத்துப்படி!” “ஆணோ, பெண்ணோ, யாரோ ஒருத்தர்! விடு! ஆணுக்குப் பொண்ணைப் பாத்து ஏற்படறது கவர்ச்சி. அதுக்காக நம்பளைக் கவர்றவங்களை எல்லாம் கல்யாணம் செய்துக்க முடியுமா?” “நீங்க எல்லாரையும் பண்ணிக்குங்கன்னு நான் கேக்கல. தரங்கிணியைப்பத்தித்தான் இப்போ பேச்சு!” மிரட்டினாள் மீனா. சாமிநாதன் மௌனம் சாதித்தார். சிறிது மௌனத்திற்குப் பிறகு, மீனாவின் குறும்பு மறைந்தது. முகத்தில் இறுக்கத்துடன், “அவங்க குடும்பப் பின்னணியைப் பத்தி யோசிக்கிறீங்களாப்பா?” என்று மெள்ளக் கேட்டாள். சாமிநாதன் அதிர்ச்சியுடன் எழுந்தேவிட்டார். “சீ! என்ன மீனா!” என்றார் கோபமாக. “என்னை நீ புரிஞ்சுக்கிட்டது இவ்வளவுதானா? ஆண்களோட வக்கிரப்புத்திக்கு இந்தமாதிரி குடும்பங்க அநியாயமா பலியாகிடுச்சு. அம்பை எய்தவங்களை விட்டுட்டு, அம்பையா நோகறது?” “பின்னே என்னப்பா?” என்றாள் மீனா, விடாப்பிடியாக. “இன்னிக்குக் காலையிலேயே என்னை தொணதொணக்கிறதுன்னு வந்துட்டியா! சரி, கேட்டுக்க,” என்று விளையாட்டுப் பெருமூச்சுடன் பேசினார் சாமிநாதன். “எனக்கு தரங்கிணியைப் பிடிச்சிருக்கு. ரொம்ப அழகுன்னு நீ சொன்னா, நான் அதை மறுக்கப்போறதில்லே. ஆனா, அவங்களும் முப்பது, முப்பத்தஞ்சு வயசு வரைக்கும் தனியா, எந்த ஆம்பளைக்கும் பணிஞ்சுபோகாம இருந்து பழகிட்டாங்க. அவங்க வீட்டில ஆண்துணையே கிடையாது. அவங்களுக்கு அப்படி ஒரு துணை இனிமே அவசியமான்னு கேப்பாங்கன்னுதான் எனக்குப் படுது,” என்றார். “அப்படியெல்லாம் கேக்க மாட்டாங்கப்பா. அதுக்கு நான் உத்தரவாதம்!” “என்ன, என்னென்னமோ பேசறே?” “அக்கா! நீங்க அப்படிக் கேப்பீங்க?” என்று உள்ளே பார்த்துக் கத்தினாள் மீனா. சாமிநாதனுக்கு ஒரு வினாடி மூச்சு நின்றுவிடும்போல இருந்தது. ஏனெனில், சாட்சாத் தரங்கிணியே உள்ளேயிருந்து அவளுக்கே உரிய அன்னநடை நடந்து வந்தாள். “நீங்களா..!” “நானேதான்!” அவள் சிறு முறுவலுடன் கூறினாள். கண்களும் சிரித்தன. “மீனா நேத்து எங்க டான்ஸ் ப்ரோக்ராமுக்கு வந்திருந்தாளே! அப்போதான் என்னை ஒங்க வீட்டுக்கு வரச்சொல்லி கூப்பிட்டா. ஆனா, இது அப்பாவுக்குத் தெரியக்கூடாதுன்னு ப்ராமிஸ் வாங்கிக்கிட்டா!” அவரை ஏமாற்றிவிட்ட மகிழ்ச்சியில், இரு பெண்களும் இணைந்து சிரித்தார்கள். “இது அநியாயம்! எப்போ வந்தீங்க?” குற்றம் சாட்டுவதுபோல பேசினாலும், சாமிநாதனின் உற்சாகம் கரைபுரண்டோடியது. சிரிப்பை மறைக்கப் பாடுபட்டார். “நேத்து ராத்திரியே வந்துட்டேனே!. இவகூடதான். ’ஒங்க வீட்டில ஒண்ணும் சொல்ல மாட்டாங்களா?’ன்னுகூட மீனாகிட்ட கேட்டேன்,” தயங்கியபடி பேசினாள் தரங்கிணி. தனக்கு மனைவி இல்லாததை அறிந்துதான் தன் வீட்டுக்குள் வரத் துணிந்திருக்கிறாள் என்று அவள் சுற்றிவளைத்துப் பேசுவதாக நினைத்தார் சாமிநாதன். தரங்கிணியே கலகலப்பாகத் தொடர்ந்தாள்: “நல்ல வேளை, நீங்க மீனாவுக்காக காத்துக்கிட்டு இருக்கலே. பயந்துகிட்டேதான் வந்தோம். ராத்திரி பூரா பேசிக்கிட்டு இருந்தோமே! ஒங்களுக்குக் கேக்கலே?” “அப்பா தூங்கறப்போ, அவர்மேலே வண்டி ஏறினாக்கூட தெரியாதுக்கா!” என்ற மீனா, சாமிநாதன் பக்கம் திரும்பி, “இப்போ என்ன சொல்றீங்கப்பா?” என்று கேட்க, அவர் திக்குமுக்காடிப்போனார். “இதெல்லாம் அப்படி அவசரப்பட்டு செய்யற காரியம் இல்ல, மீனா!” என்றார். தரங்கிணியை ஏறெடுத்தும் பார்க்க முடியாது, முகத்தைத் திருப்பிக்கொண்டார். தனது தடுமாற்றத்தை மறைக்க, உரக்கச் சிரிக்க வேண்டும்போல இருந்தது. முகத்தில் அசடு வழிகிறதோ? மீனாவின்மேல் கோபம் வந்தது. இப்படியா தந்தையை விட்டுக்கொடுப்பாள் ஒருத்தி? மீனா தந்தையை அதற்குமேலும் துன்புறுத்த விரும்பாது, “அப்பா! அக்காவை நான் எதுக்குக் கூட்டி வந்திருக்கேன், தெரியுமா? இவ்வளவு தூரம் மலேசியாவுக்கு வந்து, ஒரு இடத்தையும் பாக்காம போகலாமா? அதான் நாங்க ரெண்டு பேரும் சேர்ந்து நாலு நாள் புஜாங் பள்ளத்தாக்கு, பினாங்கு எல்லாம் போகப்போறோம்!” தன்னையும் வரும்படி அழைக்கவில்லையே என்று மனத்தாங்கலுடன், “எப்படிப் போவீங்க?” என்று கேட்டார். “பஸ்ஸிலேதான்!” “பஸ்ஸிலேயா? செத்துடுவீங்க! நான் எதுக்கு இருக்கேன்? எங்கிட்ட ஒரு வார்த்தை சொன்னா, காரிலே கூட்டிட்டுப் போகமாட்டேனா?” தலைக்குப் பின்புறம் மீனா கட்டைவிரலை உயர்த்தி தரங்கிணியிடம் சைகை காட்டியதை அவர் கவனிக்கவில்லை. 23 பினாங்கு வழியில் தரங்கிணி அதிகமாகப் பேசவில்லை என்பதைக் கவனித்தார் சாமிநாதன். அவள் சுபாவமே அப்படித்தானோ, இல்லை, மீனா தங்களிருவரையும் சேர்த்துவைக்க முயற்சிகள் எடுத்துக்கொண்டிருக்கிறாள் என்பதைப் புரிந்துகொண்டதும், அவளுக்கும் வெட்கம் வந்துவிட்டதோ என்று ஊகிக்க முயன்றார். அவராலும் முன்போல் சகஜமாக அவளுடன் பேச முடியவில்லை. புஜாங் பள்ளத்தாக்கைச் சுற்றிப் பார்த்துவிட்டு, அங்கிருந்து மீண்டும் தெற்கே வந்து, பட்டர்ஒர்த்தில் கார் சகிதம் ஃபெர்ரியில் ஏறி, பன்னிரண்டு நிமிடங்களில் கடலைக் கடந்து, பினாங்குத் தீவை அடைந்து இருந்தனர். “பினாங்கு என்றால், வெத்தலையோட போடற பாக்கா!” என்று தரங்கிணி அதிசயித்தாள். “ஆமாம். இங்கே இயற்கையாவே பாக்கு மரங்கள் வளருமாம்! அதான் அந்தப் பேரையே ஊருக்கும் வெச்சிருக்காங்க!” என்று சாமிநாதன் கூறினார், அவர்களுடைய உரையாடல் பொது விஷயங்களைத் தொடுவதால் உண்டான நிம்மதியுடன். ஆனால், பேச்சு அத்துடன் முடிவடைந்தது. அதன்பின், தன்பாட்டில் ஒரே பாட்டை முணுமுணுத்தபடி இருந்தாள் தரங்கிணி. எப்போதும் ஏதோ யோசனையில் இருப்பதுபோல் காட்சியளித்த அவளுடன் மீனாகூடப் பேசத் துணியவில்லை. “நல்லா இருக்கே! என்ன பாட்டுக்கா அது?” என்று ஒரு முறை மீனாதான் மௌனத்தைக் கலைத்தாள். “குந்தல வராளியில சந்திரனைப்பத்தி ஒரு பாட்டு. எங்க பாட்டி ’ரொம்ப ஸ்பெஷல்’னு சொல்லிக்குடுத்தது!” “அப்படி என்ன ஸ்பெஷல் அதிலே?” கேட்டுவிட்டு, நாக்கைக் கடித்துக்கொண்டாள் மீனா. ஆனால், தரங்கிணி அதைப் பொருட்படுத்தவில்லை. “அதைத்தான் நானும் கண்டுபிடிக்கப் பாக்கறேன். பிடிபட மாட்டேங்கறது. இதிலே ஒவ்வொரு வார்த்தைக்கும் வெவ்வேற விதமான அபிநயம் வருது. ’மாத்திடாதே’ன்னு பாட்டி திரும்பத் திரும்பச் சொன்னா. அது ஏன்னுதான் யோசிச்சுண்டு இருக்கேன்!” இவள் அப்பாவுக்கு ஏற்றவள்தான் என்று மீனா நினைத்துக்கொண்டாள். ஒரு குழப்பம் என்று வந்தால், எப்படி ஒரே மாதிரி அதிலேயே மூழ்கி, விடை காண முயலுகிறார்கள் இருவரும்! அவர்களுடன் மூன்று நாட்கள் பினாங்கில் தங்கி, அங்கிருந்த இந்து, புத்தர் கோயில்களை ஆவலுடன் பார்த்தாள் தரங்கிணி. எலித்தீவிற்கு (புலாவ் டிகுஸ்) போகும் வழியில் இருந்த சயாம் புத்தர் கோயிலில் பத்மாசனத்தில் (காலை மடித்து, உட்கார்ந்த நிலையில்) இருந்த புத்த பிக்குவின் சமாதி நிலையை விளக்கினார் அங்கிருந்த ஒருவர். “இந்த பிக்கு இறந்துபோய் பல நூறு ஆண்டுகள் ஆகிவிட்டன. ஆனா, அவரோட உடம்பு அழியல,” என்று அவர் சொல்லக் கேட்டு, “கண்ணைப் பாருங்களேன்! இப்பவும் நம்பளைப் பாக்கிறமாதிரி இருக்கு!” என்று பயந்தாள் தரங்கிணி. சாமிநாதன் மட்டும் ஒரு ரிங்கிட்டுக்கு ‘தங்கக் காகிதம்’ வாங்கி, அந்த உருவத்தின்மேல் சார்த்தினார். தரங்கிணி அஞ்சி, மறுத்துவிட, எவ்வளவு உணர்ச்சிபூர்வமானவள் இவள் என்று வியந்துகொண்டார். மறுநாள், கேக் லோக் ஸி என்ற இன்னொரு புத்தர் கோயிலுக்குப் போனார்கள். “இந்த இடத்துக்குப் பேரு ‘அயர் ஹிதாம்’. அதாவது, கறுப்புத் தண்ணி! இங்கே இருந்த ஆத்தில மரம், தழைகளோட, கண்ட கழிவுப்பொருள்களும் சேர்ந்து, ஆத்துத்தண்ணியை கறுப்பா மாத்தி, குடிக்க முடியாம ஆக்கிடுச்சாம். அதான்!” என்று சாமிநாதன் விளக்கியபோது, “இதை நீங்க எங்கிட்ட சொன்னதே இல்லப்பா!” என்று சிணுங்கினாள் மீனா. “பினாங்கு மியூசியத்திலே எழுதி இருந்திச்சே, நீ பாக்கலே?” என்று அவளைத் திருப்பிக்கேட்டாள் தரங்கிணி. சாமிநாதனின் முகம் போன போக்கைப் பார்த்து, “ஆனா, அப்போ எனக்கு ஒண்ணும் புரியல,” என்றாள், அவரைச் சமாதானப்படுத்தும் வகையில். கார் மலையேறி, இருமருங்கும் மரங்கள் அடர்ந்த வளைந்த பாதையில் சிரமப்பட்டுக்கொண்டு சென்றது. மேலே இருந்த வெட்டவெளியில் அதை நிறுத்திவிட்டு, ஐந்து ரிங்கிட் ‘பார்க்கிங்’ டிக்கட்டை வாங்கிக்கொண்டு சாமிநாதன் வந்தார். புத்தரையும், கருணைத் தெய்வம் என புகழப்படும் குவான் இன் சிலையையும் அவர்களுக்குக் காட்டிவிட்டு, காரை நோக்கி நடந்தபோது, “அக்கா! கீழே போக அகலமான படிக்கட்டுங்க இருக்கு. ரெண்டு பக்கமும், நிறைய கடைங்க. பினாங்கிலேயே இங்கதான் எல்லாமே ரொம்ப மலிவா கிடைக்கும்!” என்று ஆசை காட்டினாள் மீனா. “அதையும் பாத்துட்டே போகலாமே!” என்று தரங்கிணி ஆசைப்பட, இந்தப் பெண்களுடன் தன்னால் ஈடு கொடுக்க முடியுமா என்று அயர்ந்தார் சாமிநாதன். “நீங்க ரெண்டு பேரும் போங்க. அரைமணி கழிச்சு, காடியைக் கீழே கொண்டு வரேன்!” என்று பெரிய மனது பண்ணினார். “அரை மணியில பாத்து முடிக்க முடியாதுப்பா. வழியில ஆமைக்குளம் வேற இருக்கு. நானும், அக்காவும் அங்கே ஆமைங்களுக்கு கீரை வாங்கிப் போடுவோம்! ஒரு மணி கழிச்சு வாங்க,” என்றாள் மீனா. பத்து செண்டிமீட்டர் உயரத்தில்(!) கோலாலம்பூருக்குப் பெருமை சேர்க்கும் இரட்டைக்கோபுரத்தை தரங்கிணி ஒரு முறைக்கு இரு முறையாகப் பார்த்ததும், படிக்கட்டுக் கடையிலிருந்த சீன வியாபாரி, “இருபத்தெட்டு ரிங்கிட்தான். பதினேழு? பத்து? எட்டு?” என்று தானே விலையைக் குறைத்துக்கொண்டே போவதைக் கண்டு தரங்கிணி சிரித்தாள். “எவ்வளோ சிநேகிதமாப் பழகறாங்க! கோயில்லேயே இருக்கறவங்க, இல்லியா, அதான்!” என்று பாராட்டியபடி, அதை வாங்கிக்கொண்டாள். அத்துடன், தன் மாணவிகளுக்காக வேடிக்கையான வாசகங்கள் அச்சடிக்கப்பட்ட டீ-சட்டைகளையும், கல் மோதிரங்களையும் திருப்தியுடன் வாங்கிக்கொண்டாள். கார் மீண்டும் புறப்பட்டது. “பினாங்கைத்தவிர, இங்க– கிட்டே – வேற எதாவது தீவு இருக்கா?” ஏதோ யோசனையுடன் தரங்கிணி கேட்டபோது, சாமிநாதன் விரைவாக, “லங்காவின்னு ஒரு இடம். பாக்கப்போனா, சின்னச் சின்னதா தொண்ணூத்தொம்பது தீவுங்க அங்கே இருக்கு! பெரிசா இருக்கிற ஒண்ணு, ரெண்டிலதான் மக்கள் இருக்காங்க. மூணு ராத்திரி தங்கினா, ரொம்ப மலிவா சாமானுங்க வாங்கலாம். அப்படி சிகரெட்டும், மதுவும் வாங்கிப்போக நிறைய பேர் வருவாங்க! உள்நாட்டு, வெளிநாட்டு டூரிஸ்டுங்க விரும்பிப் பாக்கற எடம்! அழகா இருக்கும்! காரில போகமுடியாது. ஆனா, அங்கே போனதும், வாடகைக்கு கார் எடுக்கலாம்!” என்று வேகமாகவும், விரிவாகவும் விளக்கி, ஆசைகாட்டினார். இன்னும் சிலநாட்கள் அவளுடன் சேர்ந்திருக்கலாமே என்ற சுயநலம் அதில் கலந்திருந்தது புரிய, மீனா சிரித்துக்கொண்டாள். அவருக்கு நேரிடையாகப் பதில் சொல்லாது, “அன்னிக்கு மீனாகிட்ட சந்திரன்னு ஒரு பாட்டைப்பத்திச் சொல்லிக்கிட்டிருந்தேனே?” என்று சம்பந்தம் இல்லாத கேள்வி ஒன்றை எழுப்பினாள் தரங்கிணி. “எனக்கும் கேட்டுச்சு,” என்ற சாமிநாதனுக்கு ஒரே குழப்பம். எதற்கும், எதற்கும் முடிச்சுப் போடுகிறாள் இவள்? “அதிலே வெளிப்படையா நிலாவுக்குப் பிடிச்ச நிறம் வெள்ளை, அப்பா, அம்மா பேரு – இப்படி வருது. ஆனா, அபிநயத்தை வெச்சுப்பாத்தா, அந்தப் பாட்டை எழுதினவங்க புறப்பட்ட இடத்திலேருந்து தென்கிழக்கு திசையில தீவு ஒண்ணு இருக்குன்னு அர்த்தம் வருது!” “சூலீஸ்வரம்!” என்று ஒரே குரலில் கூவினார்கள் சாமிநாதனும், மகளும். “அங்கே விலைமதிக்க முடியாத ஏதேதோ பொருள்கள் புதைச்சு வெச்சிருக்கப்பட்டிருக்கு! பாட்டை எழுதினவங்க எங்க முன்னோர்களில் ஒருத்தர். நாட்டியப்பாடலா அமைச்சதிலேருந்து, ஒரு தேர்ந்த நட்டுவனார், இல்லே நாட்டியம் கத்துக்குடுக்கற பெண்மணி இதை எழுதி இருக்கணும்னு தோணுது. இப்பல்லாம் குடும்ப வளர்ச்சியை மரமா, அதிலயிருந்து விடற கிளைகளா எழுதறாங்க இல்லியா? அதேமாதிரித்தான் வரப்போற சந்ததிகளுக்காக இந்தப் பாட்டை எழுதிவெச்சுட்டு, இந்தியாவிலிருக்கிற எங்க குடும்பத்துக்கும் எப்படியோ தெரியப்படுத்தி இருக்காங்க”. “புதையலை ஒங்க குடும்ப வாரிசில ஒருத்தர் எடுத்துக்கணும்னுதானே?” மீனா கேட்டாள். “இல்லே மீனா. அவங்க கலைஞர்கள். பணத்தைப் பெரிசா நினைச்சிருந்தா, அதைப் புதைச்சு வெச்சிருக்க மாட்டாங்க. எங்கேயாவது கட்டித் தூக்கிட்டுப் போயிருப்பாங்க,” என்றாள் தரங்கிணி. “இப்போ என்ன செய்யறது? லங்காவி போகலாமா?” “ஏதோ எனக்கு மனசிலே பட்டதைச் சொன்னேன். அங்கே நூத்துக்கணக்கிலே இருக்கிற தீவுங்கள்லே எங்கே போய் தேடறது! லீவு முடிஞ்சு, சென்னை திரும்ப, பிளேன் டிக்கட்டை வேற உறுதி செஞ்சுட்டேனே!” என்றாள் தரங்கிணி. அவள் அந்த விஷயத்தில் அதிக அக்கறை காட்டாதது சாமிநாதனுக்கு ஏமாற்றமாக இருந்தது. அவள் புறப்படுவதற்கு முதல்நாள் கேட்டார்: “எனக்கு டான்ஸைப்பத்தி ஒண்ணுமே தெரியாது. ஒவ்வொரு அபிநயத்துக்கும் ரெண்டு அர்த்தம் இருக்கா?” “நாப்பதுகூட இருக்கு,” என்று அவரை அதிரவைத்தாள் தரங்கிணி. “நீங்க அந்த அர்த்தங்களை எல்லாம் எனக்குச் சொல்லி குடுத்திட்டுப் போறீங்களா?” என்ற அவரை வினோதமாகப் பார்த்தாள்.“விடமாட்டீங்களா?” “எப்படிங்க விடறது? ஆராய்ச்சின்னு எடுத்துக்கிட்டா, அது புரியறவரைக்கும் அதிலேயே மூழ்கித்தானே கிடக்கணும்?” 24 லங்காவித்தீவு தரங்கிணி சென்னைக்குத் திரும்பிப்போனதும், மீண்டும் பழைய மந்த நிலைக்குத் தள்ளப்பட்டிருந்தார் சாமிநாதன். போனதுமே தொலைபேசியில் அழைத்து, நன்றி தெரிவித்ததோடு சரி. அதற்குப்பின் அவளிடமிருந்து எவ்விதத் தகவலும் இல்லை. அந்தக் காலத்தின் பருவ நிலையை மனத்தில் கொண்டு, அட்சரேகை, தீர்க்க ரேகை என்று பூமத்திய ரேகையிலிருந்து ஒரு இடத்தின் தூரத்தைக் கண்டுபிடித்தாக வேண்டும். தென்னிந்தியாவிலிருந்து புறப்பட்ட கப்பல், அல்லது படகு எந்த திசைக்கு கொண்டு செல்லப்படும் என்று ஆராய்வது எளிதான காரியம் இல்லை. சிலர் பத்து, பன்னிரண்டு ஆண்டுகள்கூட எடுத்துக்கொண்டிருக்கிறார்கள். தனியாகச் செய்யும் வேலையும் இல்லை. சாமிநாதன் ரொம்ப யோசித்து, தன்னுடன் வேலை செய்யும் ஒருவருடன் கலந்து பேசினார். `கடல் சூழ்ந்த இடம் என்றால், அது தெற்குத்திசையிலும் இருக்கலாமே!’ என்று அவர் கூறியபோதுதான் உறைத்தது. சிங்கப்பூர் அருகிலிருந்த மலேசியாவின் தென்முனையில் அடர்ந்த காடுகள் இருந்தனவே! சில ஆண்டுகளுக்குமுன் தன்னைப்போல ஓர் ஆராய்ச்சியாளர் அந்தக் காட்டில் ஒரு புராதனமான இந்துக்கோயிலைக் கண்டுபிடித்திருப்பதாக ஒரு பரபரப்பான செய்தி தினசரிகளில் வெளியாகி, வந்த வேகத்திலேயே அடங்கிவிட்டதையும் நினைவுகூர்ந்தார். உற்சாகம் பீறிட, அந்த ஆவணங்களைத் தேடத் துவங்கினார். 25 அன்புப்பரிசு தன் பெயருக்கு, தான் வேலைபார்க்கும் இடத்துக்கே யார் அப்படி ஒரு பார்சல் அனுப்பியிருக்கிறார்கள் என்ற குழம்பியவளாய், தரங்கிணி அதைப் பிரித்தாள். மிகவும் பத்திரமாக சுற்றப்பட்டிருந்தது. முழுவதும் பிரிப்பதற்குள், அதைத் தடவிப் பார்த்தாள். இன்னதென்று புரிய, முகத்தில் சிரிப்பு படர்ந்தது. அவள் நினைத்தாற்போலவே, அரையடியில் வெண்கல நடராஜர் சிலை ஒன்று உள்ளே இருந்தது. இடதுகாலைத் தூக்கி ஆடும் சிவன்! அவளைப் போன்ற நாட்டியமணிகள் மனத்தில் வைத்து வணங்கும் தெய்வம்! உள்ளே ஒரு துண்டுக் காகிதம் மடித்து வைக்கப்பட்டிருந்தது. பிரித்துப் படித்தாள். ‘நீங்கள் முன்பு இங்கு விட்டுப்போனதைப் பத்திரமாக அனுப்பி இருக்கிறேன்’. அன்புடன், சாமிநாதன் 26 வழக்கத்தில் மாற்றம் “அப்பா! இப்போ ஆஸ்ட்ரோ பாடல் திறன் போட்டி நடக்குதில்ல? அதுக்கு நீதிபதியா யார் வர்றாங்க, சொல்லுங்க பார்ப்போம்!” சாமிநாதன் அசுவாரசியமாக மகளைப் பார்த்தார். “விளையாட்டைப்பத்தி ஏதாவது கேட்டா, சொல்லலாம். எனக்குச் சம்பந்தம் இல்லாததை எல்லாம்..,” என்று முணுமுணுத்தார். தான் அனுப்பிய சாமான் கிடைத்ததைப்பற்றி தரங்கிணி ஒரு நன்றிகூடத் தெரிவிக்கவில்லையே என்ற வருத்தத்தில் இருந்தார் அவர். “சம்பந்தம் இருக்குப்பா. தரங்கிணி அக்கா வர்றாங்க! இந்தியாவிலேருந்து!” “எதுக்குன்னு சொன்னே?” சாமிநாதன் புத்துயிர் பெற்றவராகக் கேட்டது மீனாவுக்குப் பாவமாக இருந்தது. தங்களையே ஏமாற்றிக்கொண்டு, எதற்காக இத்தனை காலம் இப்படி ஒரு நாடகம் ஆடுகிறார்கள் இருவரும்? “பாட்டுப் போட்டிக்கு நீதிபதியா வந்திருக்கேன்னு பேரு,” வாசலிலிருந்து குரல் எழுந்தது. “ஆனா, முக்கியமா ஒங்களைப் பாக்கத்தான் வந்தேன்!” சிரித்தபடி உள்ளே வந்த தரங்கிணியின் அழகு முன்பு பார்த்ததிற்கு இப்போது கூடியிருப்பதாகப் பட்டது சாமிநாதனுக்கு. அவர் முகம் மலர்ந்தது. “என்னங்க நீங்க, கடவுள் பக்தனுக்குத் தரிசனம் தர்றமாதிரி, இப்படி திடீர், திடீருன்னு வந்து கலாட்டா பண்ணறீங்க!” என்று செல்லமாகக் கோபித்தார். “பின்னே என்ன செய்யறது? நான் இங்கே வந்து போனபிறகு நீங்கதான்..!” என்று சொல்ல ஆரம்பித்தவள், அப்போதுதான் மீனாவும் அங்கே இருப்பதைப் பார்த்தவள்போல், “மீனா! நீ உள்ளே போ! இது பெரியவங்க சமாசாரம்!” என்று மிரட்டினாள். பொங்கிவந்த சிரிப்பை அடக்கமுடியாது, வாயைப் பொத்தியபடி மீனா உள்ளே போனாள், அப்பாவைக் கடைக்கண்ணால் பார்த்தபடி. சாமிநாதனுக்கு வியர்த்துவிட்டது. சற்று நேரம் இருவருமே ஒன்றும் பேசாது, எங்கோ பார்த்தபடி இருந்தார்கள். தரங்கிணி ஆரம்பித்தாள்: “கடைசியிலே ஒருவழியா, சூலீஸ்வரத்தைக் கண்டு பிடிச்சுட்டீங்களாக்கும்!” சாமிநாதன் தலையை மட்டும் ஆட்டினார். “நடராஜர் சிலையோட வேற என்னல்லாம் இருந்திச்சு?” “தெரியாது!” “என்ன ஸார்!” அவநம்பிக்கை அவள் குரலில். ‘ஸார்’ என்று அழைத்து, இவள் தன்னைத் அந்நியமாக்கப் பார்க்கிறாளே என்ற எரிச்சல் எழுந்தது சாமிநாதனுக்கு. “ஒங்களுக்கு ரொம்ப மகிழ்ச்சியா இருக்கும்னு தோணிச்சு!” என்றார் விறைப்பாக. “அதோட, இந்த நாலு வருஷமா, ரகசியமாத்தான் அந்த இடத்திலே வேலை செய்ய முடிஞ்சது. ஏதோ, ஞாபகார்த்தமா இதை மட்டும் எடுத்தேன்”. “இதிலே ரகசியம் என்ன?” “ஆதி காலத்திலேருந்து தமிழ்நாட்டைச் சேர்ந்த இந்துக்கள் இங்க இருந்திருக்காங்கன்னு யாருக்கும் தெரியக்கூடாதாம். சரித்திரப் பாடங்களிலேகூட அந்தப் பகுதி கிடையாது. அப்புறம் நாம்பளும் சிறப்புச்சலுகை கேட்டா என்ன பண்றது!” என்றார், ஆழ்ந்த கோபத்துடன். “விடுங்க!” “அதைப்பத்தி இனி யாரும், எதுவும் பேசக்கூடாதுங்கிறமாதிரி ஒரு நிலை இங்கே! ஒங்க முன்னோர்கள் அழகான ஒரு கோயில் கட்டி, அதிலே புதைச்சு வெச்ச புதையல்! அதில என்னென்ன இருக்குமோ! புதுசா குழப்பம் வேணுமான்னும் நினைச்சேன்!” தனது முன்னோர்களின் உடைமைக்கு அவர் அளித்த மரியாதை அவளுக்குப் பிடித்திருந்தது. “குழப்பம்னு ஏதோ சொன்னீங்களே?” என்று நினைவுபடுத்தினாள். “இந்தியாவில பாப்ரி மசூதியை சில இந்து தீவிரவாதிங்க இடிச்சாங்களே! கேட்டா, ’எங்க கடவுள் ராமர் கோயில் இருந்தது இது!’ன்னு பதில் வருது. அதேமாதிரி, ஆஃப்கானிஸ்தானத்திலே இருந்த புத்தர் சிலையை..!” “புரியுது. பழங்காலத்துப் பொக்கிஷம்னு இதை யாரும் பாக்க மாட்டாங்க! மதம்தான் எல்லாத்துக்கும் முன்னே வரும்!” “அதேதான்! இப்ப இஸ்லாம், பௌத்தம், கிரிஸ்துவம், இந்து – இப்படி பல மதங்களைச் சேர்ந்தவங்களும் இங்கே ஒண்ணா இருந்துக்கிட்டு இருக்காங்க!” என்று கூறியவர், ஏதோ யோசனையில் ஆழ்ந்தார். “ஆனா, கம்போடியாவில பாருங்க, அங்கோர் வாட் மாதிரி அங்கே இருக்கிற பழமையான இந்துக் கோயில்களை இன்னிக்கும் நல்லா பராமரிச்சுக்கிட்டு வர்றாங்க. அதைப் பாக்க சுற்றுப்பயணிகள் வந்துக்கிட்டே இருக்காங்க!” தன் கண்டுபிடிப்பை உலகறியச் சொல்ல முடியவில்லையே என்ற அவரது ஆத்திரமும், வேதனையும் அவளுக்குப் புரிந்தது. அவரை அப்படியே விட்டுப்போக அவளுக்கு மனம் வரவில்லை. அவளுக்குள் இருந்த தாய்மை விழித்துக்கொண்டது அவளுக்கே புதிய, இனிமையான அனுபவமாக இருந்தது. “விடுங்க!” மீண்டும் சொன்னாள்.”ஒரு வழியா துப்பு துலக்கிட்டோமேங்கிற திருப்தியாவது ஒங்களுக்கு மிஞ்சிச்சே! இல்லாட்டி, அதையே நினைச்சு, தூக்கம் வராம குழம்பிட்டு இருந்திருப்பீங்க!" என்றாள் ஆறுதலாக. “ஏதோ, நான் பாடுபட்டதுக்கு அடையாளமா, ஒரு நினைவுச்சின்னத்தை எடுத்துக்கிட்டா தப்பில்லேன்னு நினைச்சுத்தான்..!” “அரசாங்கத்துக்குச் சொந்தமான அந்த சிலையை அடிச்சுக்கிட்டு வந்தீங்களாக்கும்!” சிரித்தாள் தரங்கிணி. சாமிநாதனுக்குச் சிரிப்பு வரவில்லை. இவளுக்கு அன்புப் பரிசாக கொடுப்பதற்கென்று தான் பாடுபட்டு எடுத்து வந்தால், அதை பாராட்டாமல், கேலி செய்கிறாளே என்று குமைந்தார். சில நிமிடங்கள் அங்கு மௌனம் நிலவியது. அதன்பின், “எங்க குடும்பத்தைப்பத்தி ஒங்களுக்குத் தெரியும். ஒரு பொண்ணுமேல ஆசைப்பட்டா, ஆண்கள்தான் வந்து கேப்பாங்க!” என்று ஆரம்பித்தாள் தரங்கிணி. இதை எதற்கு இப்போது நம்மிடம் சொல்கிறாள் என்று அவளையே உற்றுப் பார்த்தார் சாமிநாதன். அவரைப் பார்த்துக் கனிவுடன் சிரித்தாள் தரங்கிணி. “எனக்கு எப்பவுமே எங்க குடும்ப பழக்கவழக்கங்கள் பிடிச்சதில்லே. அதனால, அதை மாத்தறதா இருக்கேன்,” என்றவள், தைரியம் வரவழைத்துக்கொள்ளவேபோல் ஒரு பெரிய மூச்சை உள்ளுக்கிழுத்துக்கொண்டாள். “நான் பெண்ணாயிருந்தாலும், நம்ப கல்யாணப்பேச்சை எடுக்கறதிலே தப்பில்லேன்னு நினைக்கிறேன். நீங்க..,” அதற்கு மேலும் பொறுக்க முடியாது, மீனா வேகமாக உள்ளேயிருந்து வந்தாள். “அப்பா சார்பிலே நான் பதில் சொல்லிடறேன், அக்கா!” தவறாகச் சொல்லிவிட்டோமே என்று கையை உதறினாள். “ சித்தி! இல்லே, இல்லே, அம்மா! ஒங்களைக் கல்யாணம் பண்ணிக்கிறதிலே அப்பாவுக்குப் பரிபூரண திருப்தி. எப்படி இந்தப் பேச்சை ஆரம்பிக்கிறதுன்னு அவர் தவிச்சுக்கிட்டு இருந்தது எனக்கில்லே தெரியும்! ஆனா, ஒரு குறைதான்!" “என்ன மீனா?” மனம் லேசாக, புன்சிரிப்புடன் கேட்டாள் தரங்கிணி. “இதைச் சொல்லிக்க, ஏன் ரெண்டு பேரும் அனாவசியமா, இவ்வளவு பொறுமையா இருந்து, வாழ்க்கையை வீணடிச்சிருக்கீங்க? அதான் எனக்குப் புரியலே” என்றாள் மீனா. “நீ சும்மா போடா!” என்று அவளைச் செல்லமாக விரட்டினார் சாமிநாதன். “நீங்க போங்க!” என்று வழக்கம்போல் எதிர்வார்த்தையாடிய மீனா, சற்று திகைத்துவிட்டு, “ஹனிமூனுக்கு!” என்று சேர்த்துக்கொண்டாள். பிறகு, தான் சொன்னதை அவர்கள் தப்பாக எடுத்துக்கொண்டிருப்பார்களோ என்று சிறிது அச்சத்துடன் அவர்களைப் பார்த்தாள். தான் சொன்னது எதுவுமே அவர்கள் காதில் விழவேயில்லை என்பது புரிய, அவள் முகத்தில் நிம்மதியுடன் கூடிய மென்னகை அரும்பிற்று. காதலர்கள் இருவரும்தான் ஒருவரையொருவர் தத்தம் கண்களாலேயே விழுங்கிக்கொண்டிருந்தார்களே! 26.1 எங்களைப் பற்றி - Free Tamil Ebooks மின்புத்தகங்களைப் படிக்க உதவும் கருவிகள்: மின்புத்தகங்களைப் படிப்பதற்கென்றே கையிலேயே வைத்துக் கொள்ளக்கூடிய பல கருவிகள் தற்போது சந்தையில் வந்துவிட்டன. Kindle, Nook, Android Tablets போன்றவை இவற்றில் பெரும்பங்கு வகிக்கின்றன. இத்தகைய கருவிகளின் மதிப்பு தற்போது 4000 முதல் 6000 ரூபாய் வரை குறைந்துள்ளன. எனவே பெரும்பான்மையான மக்கள் தற்போது இதனை வாங்கி வருகின்றனர். ஆங்கிலத்திலுள்ள மின்புத்தகங்கள்: ஆங்கிலத்தில் லட்சக்கணக்கான மின்புத்தகங்கள் தற்போது கிடைக்கப் பெறுகின்றன. அவை PDF, EPUB, MOBI, AZW3. போன்ற வடிவங்களில் இருப்பதால், அவற்றை மேற்கூறிய கருவிகளைக் கொண்டு நாம் படித்துவிடலாம். தமிழிலுள்ள மின்புத்தகங்கள்: தமிழில் சமீபத்திய புத்தகங்களெல்லாம் நமக்கு மின்புத்தகங்களாக கிடைக்கப்பெறுவதில்லை. ProjectMadurai.com எனும் குழு தமிழில் மின்புத்தகங்களை வெளியிடுவதற்கான ஒர் உன்னத சேவையில் ஈடுபட்டுள்ளது. இந்தக் குழு இதுவரை வழங்கியுள்ள தமிழ் மின்புத்தகங்கள் அனைத்தும் PublicDomain-ல் உள்ளன. ஆனால் இவை மிகவும் பழைய புத்தகங்கள். சமீபத்திய புத்தகங்கள் ஏதும் இங்கு கிடைக்கப்பெறுவதில்லை. எனவே ஒரு தமிழ் வாசகர் மேற்கூறிய “மின்புத்தகங்களைப் படிக்க உதவும் கருவிகளை” வாங்கும்போது, அவரால் எந்த ஒரு தமிழ் புத்தகத்தையும் இலவசமாகப் பெற முடியாது. சமீபத்திய புத்தகங்களை தமிழில் பெறுவது எப்படி? சமீபகாலமாக பல்வேறு எழுத்தாளர்களும், பதிவர்களும், சமீபத்திய நிகழ்வுகளைப் பற்றிய விவரங்களைத் தமிழில் எழுதத் தொடங்கியுள்ளனர். அவை இலக்கியம், விளையாட்டு, கலாச்சாரம், உணவு, சினிமா, அரசியல், புகைப்படக்கலை, வணிகம் மற்றும் தகவல் தொழில்நுட்பம் போன்ற பல்வேறு தலைப்புகளின் கீழ் அமைகின்றன. நாம் அவற்றையெல்லாம் ஒன்றாகச் சேர்த்து தமிழ் மின்புத்தகங்களை உருவாக்க உள்ளோம். அவ்வாறு உருவாக்கப்பட்ட மின்புத்தகங்கள் Creative Commons எனும் உரிமத்தின் கீழ் வெளியிடப்படும். இவ்வாறு வெளியிடுவதன் மூலம் அந்தப் புத்தகத்தை எழுதிய மூல ஆசிரியருக்கான உரிமைகள் சட்டரீதியாகப் பாதுகாக்கப்படுகின்றன. அதே நேரத்தில் அந்த மின்புத்தகங்களை யார் வேண்டுமானாலும், யாருக்கு வேண்டுமானாலும், இலவசமாக வழங்கலாம். எனவே தமிழ் படிக்கும் வாசகர்கள் ஆயிரக்கணக்கில் சமீபத்திய தமிழ் மின்புத்தகங்களை இலவசமாகவே பெற்றுக் கொள்ள முடியும். தமிழிலிருக்கும் எந்த வலைப்பதிவிலிருந்து வேண்டுமானாலும் பதிவுகளை எடுக்கலாமா? கூடாது. ஒவ்வொரு வலைப்பதிவும் அதற்கென்றே ஒருசில அனுமதிகளைப் பெற்றிருக்கும். ஒரு வலைப்பதிவின் ஆசிரியர் அவரது பதிப்புகளை “யார் வேண்டுமானாலும் பயன்படுத்தலாம்” என்று குறிப்பிட்டிருந்தால் மட்டுமே அதனை நாம் பயன்படுத்த முடியும். அதாவது “Creative Commons” எனும் உரிமத்தின் கீழ் வரும் பதிப்புகளை மட்டுமே நாம் பயன்படுத்த முடியும். அப்படி இல்லாமல் “All Rights Reserved” எனும் உரிமத்தின் கீழ் இருக்கும் பதிப்புகளை நம்மால் பயன்படுத்த முடியாது. வேண்டுமானால் “All Rights Reserved” என்று விளங்கும் வலைப்பதிவுகளைக் கொண்டிருக்கும் ஆசிரியருக்கு அவரது பதிப்புகளை “Creative Commons” உரிமத்தின் கீழ் வெளியிடக்கோரி நாம் நமது வேண்டுகோளைத் தெரிவிக்கலாம். மேலும் அவரது படைப்புகள் அனைத்தும் அவருடைய பெயரின் கீழே தான் வெளியிடப்படும் எனும் உறுதியையும் நாம் அளிக்க வேண்டும். பொதுவாக புதுப்புது பதிவுகளை உருவாக்குவோருக்கு அவர்களது பதிவுகள் நிறைய வாசகர்களைச் சென்றடைய வேண்டும் என்ற எண்ணம் இருக்கும். நாம் அவர்களது படைப்புகளை எடுத்து இலவச மின்புத்தகங்களாக வழங்குவதற்கு நமக்கு அவர்கள் அனுமதியளித்தால், உண்மையாகவே அவர்களது படைப்புகள் பெரும்பான்மையான மக்களைச் சென்றடையும். வாசகர்களுக்கும் நிறைய புத்தகங்கள் படிப்பதற்குக் கிடைக்கும் வாசகர்கள் ஆசிரியர்களின் வலைப்பதிவு முகவரிகளில் கூட அவர்களுடைய படைப்புகளை தேடிக் கண்டுபிடித்து படிக்கலாம். ஆனால் நாங்கள் வாசகர்களின் சிரமத்தைக் குறைக்கும் வண்ணம் ஆசிரியர்களின் சிதறிய வலைப்பதிவுகளை ஒன்றாக இணைத்து ஒரு முழு மின்புத்தகங்களாக உருவாக்கும் வேலையைச் செய்கிறோம். மேலும் அவ்வாறு உருவாக்கப்பட்ட புத்தகங்களை “மின்புத்தகங்களைப் படிக்க உதவும் கருவிகள்”-க்கு ஏற்ற வண்ணம் வடிவமைக்கும் வேலையையும் செய்கிறோம். FreeTamilEbooks.com இந்த வலைத்தளத்தில்தான் பின்வரும் வடிவமைப்பில் மின்புத்தகங்கள் காணப்படும். PDF for desktop, PDF for 6” devices, EPUB, AZW3, ODT இந்த வலைதளத்திலிருந்து யார் வேண்டுமானாலும் மின்புத்தகங்களை இலவசமாகப் பதிவிறக்கம்(download) செய்து கொள்ளலாம். அவ்வாறு பதிவிறக்கம்(download) செய்யப்பட்ட புத்தகங்களை யாருக்கு வேண்டுமானாலும் இலவசமாக வழங்கலாம். இதில் நீங்கள் பங்களிக்க விரும்புகிறீர்களா? நீங்கள் செய்யவேண்டியதெல்லாம் தமிழில் எழுதப்பட்டிருக்கும் வலைப்பதிவுகளிலிருந்து பதிவுகளை எடுத்து, அவற்றை LibreOffice/MS Office போன்ற wordprocessor-ல் போட்டு ஓர் எளிய மின்புத்தகமாக மாற்றி எங்களுக்கு அனுப்பவும். அவ்வளவுதான்! மேலும் சில பங்களிப்புகள் பின்வருமாறு: ஒருசில பதிவர்கள்/எழுத்தாளர்களுக்கு அவர்களது படைப்புகளை “Creative Commons” உரிமத்தின்கீழ் வெளியிடக்கோரி மின்னஞ்சல் அனுப்புதல் தன்னார்வலர்களால் அனுப்பப்பட்ட மின்புத்தகங்களின் உரிமைகளையும் தரத்தையும் பரிசோதித்தல் சோதனைகள் முடிந்து அனுமதி வழங்கப்பட்ட தரமான மின்புத்தகங்களை நமது வலைதளத்தில் பதிவேற்றம் செய்தல் விருப்பமுள்ளவர்கள் freetamilebooksteam@gmail.com எனும் முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பவும். இந்தத் திட்டத்தின் மூலம் பணம் சம்பாதிப்பவர்கள் யார்? யாருமில்லை. இந்த வலைத்தளம் முழுக்க முழுக்க தன்னார்வலர்களால் செயல்படுகின்ற ஒரு வலைத்தளம் ஆகும். இதன் ஒரே நோக்கம் என்னவெனில் தமிழில் நிறைய மின்புத்தகங்களை உருவாக்குவதும், அவற்றை இலவசமாக பயனர்களுக்கு வழங்குவதுமே ஆகும். மேலும் இவ்வாறு உருவாக்கப்பட்ட மின்புத்தகங்கள், ebook reader ஏற்றுக்கொள்ளும் வடிவமைப்பில் அமையும். இத்திட்டத்தால் பதிப்புகளை எழுதிக்கொடுக்கும் ஆசிரியர்/பதிவருக்கு என்ன லாபம்? ஆசிரியர்/பதிவர்கள் இத்திட்டத்தின் மூலம் எந்தவிதமான தொகையும் பெறப்போவதில்லை. ஏனெனில், அவர்கள் புதிதாக இதற்கென்று எந்தஒரு பதிவையும் எழுதித்தரப்போவதில்லை. ஏற்கனவே அவர்கள் எழுதி வெளியிட்டிருக்கும் பதிவுகளை எடுத்துத்தான் நாம் மின்புத்தகமாக வெளியிடப்போகிறோம். அதாவது அவரவர்களின் வலைதளத்தில் இந்தப் பதிவுகள் அனைத்தும் இலவசமாகவே கிடைக்கப்பெற்றாலும், அவற்றையெல்லாம் ஒன்றாகத் தொகுத்து ebook reader போன்ற கருவிகளில் படிக்கும் விதத்தில் மாற்றித் தரும் வேலையை இந்தத் திட்டம் செய்கிறது. தற்போது மக்கள் பெரிய அளவில் tablets மற்றும் ebook readers போன்ற கருவிகளை நாடிச் செல்வதால் அவர்களை நெருங்குவதற்கு இது ஒரு நல்ல வாய்ப்பாக அமையும். நகல் எடுப்பதை அனுமதிக்கும் வலைதளங்கள் ஏதேனும் தமிழில் உள்ளதா? உள்ளது. பின்வரும் தமிழில் உள்ள வலைதளங்கள் நகல் எடுப்பதினை அனுமதிக்கின்றன. 1. vinavu 2. badriseshadri.in 3. maattru 4. kaniyam 5. blog.ravidreams.net எவ்வாறு ஒர் எழுத்தாளரிடம் Creative Commons உரிமத்தின் கீழ் அவரது படைப்புகளை வெளியிடுமாறு கூறுவது? இதற்கு பின்வருமாறு ஒரு மின்னஞ்சலை அனுப்ப வேண்டும். துவக்கம் உங்களது வலைத்தளம் அருமை [வலைதளத்தின் பெயர்]. தற்போது படிப்பதற்கு உபயோகப்படும் கருவிகளாக Mobiles மற்றும் பல்வேறு கையிருப்புக் கருவிகளின் எண்ணிக்கை அதிகரித்து வந்துள்ளது. இந்நிலையில் நாங்கள் http://www.FreeTamilEbooks.com எனும் வலைதளத்தில், பல்வேறு தமிழ் மின்புத்தகங்களை வெவ்வேறு துறைகளின் கீழ் சேகரிப்பதற்கான ஒரு புதிய திட்டத்தில் ஈடுபட்டுள்ளோம். இங்கு சேகரிக்கப்படும் மின்புத்தகங்கள் பல்வேறு கணிணிக் கருவிகளான Desktop,ebook readers like kindl, nook, mobiles, tablets with android, iOS போன்றவற்றில் படிக்கும் வண்ணம் அமையும். அதாவது இத்தகைய கருவிகள் support செய்யும் odt, pdf, ebub, azw போன்ற வடிவமைப்பில் புத்தகங்கள் அமையும். இதற்காக நாங்கள் உங்களது வலைதளத்திலிருந்து பதிவுகளை பெற விரும்புகிறோம். இதன் மூலம் உங்களது பதிவுகள் உலகளவில் இருக்கும் வாசகர்களின் கருவிகளை நேரடியாகச் சென்றடையும். எனவே உங்களது வலைதளத்திலிருந்து பதிவுகளை பிரதியெடுப்பதற்கும் அவற்றை மின்புத்தகங்களாக மாற்றுவதற்கும் உங்களது அனுமதியை வேண்டுகிறோம். இவ்வாறு உருவாக்கப்பட்ட மின்புத்தகங்களில் கண்டிப்பாக ஆசிரியராக உங்களின் பெயரும் மற்றும் உங்களது வலைதள முகவரியும் இடம்பெறும். மேலும் இவை “Creative Commons” உரிமத்தின் கீழ் மட்டும்தான் வெளியிடப்படும் எனும் உறுதியையும் அளிக்கிறோம். http://creativecommons.org/licenses/ நீங்கள் எங்களை பின்வரும் முகவரிகளில் தொடர்பு கொள்ளலாம். e-mail : freetamilebooksteam@gmail.com FB : https://www.facebook.com/FreeTamilEbooks G +: https://plus.google.com/communities/108817760492177970948 நன்றி. முடிவு மேற்கூறியவாறு ஒரு மின்னஞ்சலை உங்களுக்குத் தெரிந்த அனைத்து எழுத்தாளர்களுக்கும் அனுப்பி அவர்களிடமிருந்து அனுமதியைப் பெறுங்கள். முடிந்தால் அவர்களையும் “Creative Commons License”-ஐ அவர்களுடைய வலைதளத்தில் பயன்படுத்தச் சொல்லுங்கள். கடைசியாக அவர்கள் உங்களுக்கு அனுமதி அளித்து அனுப்பியிருக்கும் மின்னஞ்சலைfreetamilebooksteam@gmail.com எனும் முகவரிக்கு அனுப்பி வையுங்கள். ஓர் எழுத்தாளர் உங்களது உங்களது வேண்டுகோளை மறுக்கும் பட்சத்தில் என்ன செய்வது ? அவர்களையும் அவர்களது படைப்புகளையும் அப்படியே விட்டுவிட வேண்டும். ஒருசிலருக்கு அவர்களுடைய சொந்த முயற்சியில் மின்புத்தகம் தயாரிக்கும் எண்ணம்கூட இருக்கும். ஆகவே அவர்களை நாம் மீண்டும் மீண்டும் தொந்தரவு செய்யக் கூடாது. அவர்களை அப்படியே விட்டுவிட்டு அடுத்தடுத்த எழுத்தாளர்களை நோக்கி நமது முயற்சியைத் தொடர வேண்டும். மின்புத்தகங்கள் எவ்வாறு அமைய வேண்டும்? ஒவ்வொருவரது வலைத்தளத்திலும் குறைந்தபட்சம் நூற்றுக்கணக்கில் பதிவுகள் காணப்படும். அவை வகைப்படுத்தப்பட்டோ அல்லது வகைப்படுத்தப் படாமலோ இருக்கும். நாம் அவற்றையெல்லாம் ஒன்றாகத் திரட்டி ஒரு பொதுவான தலைப்பின்கீழ் வகைப்படுத்தி மின்புத்தகங்களாகத் தயாரிக்கலாம். அவ்வாறு வகைப்படுத்தப்படும் மின்புத்தகங்களை பகுதி-I பகுதி-II என்றும் கூட தனித்தனியே பிரித்துக் கொடுக்கலாம். தவிர்க்க வேண்டியவைகள் யாவை? இனம், பாலியல் மற்றும் வன்முறை போன்றவற்றைத் தூண்டும் வகையான பதிவுகள் தவிர்க்கப்பட வேண்டும். எங்களைத் தொடர்பு கொள்வது எப்படி? நீங்கள் பின்வரும் முகவரிகளில் எங்களைத் தொடர்பு கொள்ளலாம். email : freetamilebooksteam@gmail.com Facebook: https://www.facebook.com/FreeTamilEbooks Google Plus: https://plus.google.com/communities/108817760492177970948 இத்திட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் யார்? Shrinivasan tshrinivasan@gmail.com Alagunambi Welkin alagunambiwelkin@fsftn.org Arun arun@fsftn.org இரவி Supported by Free Software Foundation TamilNadu, Yavarukkum Software Foundation http://www.yavarkkum.org/ உங்கள் படைப்புகளை வெளியிடலாமே உங்கள் படைப்புகளை மின்னூலாக இங்கு வெளியிடலாம். 1. எங்கள் திட்டம் பற்றி - http://freetamilebooks.com/about-the-project/ தமிழில் காணொளி - http://www.youtube.com/watch?v=Mu_OVA4qY8I 2. படைப்புகளை யாவரும் பகிரும் உரிமை தரும் கிரியேட்டிவ் காமன்ஸ் உரிமம் பற்றி - கிரியேட்டிவ் காமன்ஸ் உரிமை - ஒரு அறிமுகம் http://www.kaniyam.com/introduction-to-creative-commons-licenses/ http://www.wired.co.uk/news/archive/2011-12/13/creative-commons-101 https://learn.canvas.net/courses/4/wiki/creative-commons-licenses உங்கள் விருப்பான கிரியேட்டிவ் காமன்ஸ் உரிமத்தை இங்கே தேர்ந்தெடுக்கலாம். http://creativecommons.org/choose/ 3. மேற்கண்டவற்றை பார்த்த / படித்த பின், உங்கள் படைப்புகளை மின்னூலாக மாற்ற பின்வரும் தகவல்களை எங்களுக்கு அனுப்பவும். நூலின் பெயர் நூல் அறிமுக உரை நூல் ஆசிரியர் அறிமுக உரை உங்கள் விருப்பான கிரியேட்டிவ் காமன்ஸ் உரிமம் நூல் - text / html / LibreOffice odt/ MS office doc வடிவங்களில். அல்லது வலைப்பதிவு / இணைய தளங்களில் உள்ள கட்டுரைகளில் தொடுப்புகள் (url) இவற்றை freetamilebooksteam@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்பவும். விரைவில் மின்னூல் உருவாக்கி வெளியிடுவோம். நீங்களும் மின்னூல் உருவாக்கிட உதவலாம். மின்னூல் எப்படி உருவாக்குகிறோம்? - தமிழில் காணொளி - https://www.youtube.com/watch?v=bXNBwGUDhRs இதன் உரை வடிவம் ஆங்கிலத்தில் - http://bit.ly/create-ebook எங்கள் மின்னஞ்சல் குழுவில் இணைந்து உதவலாம். https://groups.google.com/forum/#!forum/freetamilebooks நன்றி !