[]   அண்ணன்மார்சாமி கதை  ஒருபன்முகப்பார்வை   கட்டுரைகள்    கோ.ந.முத்துக்குமாரசாமி  kumaran388@hotmail.com    அட்டைப்படம் : N. Sathya - experimentsofme@gmail.com    மின்னூலாக்கம் :சீ.ராஜேஸ்வரி - sraji.me@gmail.com    வெளியீடு : FreeTamilEbooks.com    உரிமை : Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0    உரிமை – கிரியேட்டிவ் காமன்ஸ். எல்லாரும் படிக்கலாம், பகிரலாம்.                பொருளடக்கம் 1. என்னுரை 4  2. முன்னுரை 5  3. அண்ணன்மார் கதை - வடிவங்களும் வேறுபாடுகளும் 8  அண்ணன்மார் கதை - வரலாற்றுத் தடயங்கள் 18  வீரநிலைப் பாடல்கள் –அண்ணன்மார்சாமிகதை வீரநிலைப்பாட்டு’ 30  பண்பாட்டு மானுடவியல் பார்வையில் அண்ணன்மார்சாமிகதை 56  பிச்சனின் திறம் 69  அண்ணன்மார்சாமி வழிபாட்டு நெறி 88  அண்ணன்மார்சாமி கதைப்பாட்டின் மொழியமைப்பு 103  1. என்னுரை   தமிழ்க் கல்லூரிப் பாடத்திட்டத்தில், இளங்கலை இலக்கியம் தமிழ்-முதுகலை வகுப்புக்களுக்கு எண்பதுகளில் நாட்டுப்புறவியலும் நாட்டுப்புற இலக்கியமும் பாடமாக வைக்கப்பட்டன. என்னுடைய அருமை நண்பரும் பல்துறை அறிஞரும் சக ஆசிரியரும் என் முன்னேற்றத்தில் அக்கறை உடையவருமான பேரா. ந.இரா. சென்னியப்பனார் என்னை இவ்விருதுறைகளிலும் கருத்துச் செலுத்தும்படி ஊக்கினார். இந்நிலையில் கவிஞர் சக்திக்கனல் அவர்கள் பதிப்பித்த அண்ணன்மார்சாமிகதை பாடநூலாக வைக்கப்பட்டது. இந்நூலைப் படிக்கவும் கற்பிக்கவும் நேர்ந்தது. பாமரத்தனமான நாட்டுப்புறப் பாடல்களிலிருந்து அண்ணன்மார்சாமி கதை வித்தியாசப்பட்டு இருப்பது புலனாயிற்று. வாய்மொழிக் காப்பியம் தொடர்பான மேலைநாட்டறிஞர்களின் நூல்களைப் படித்தபொழுது இந்தநூலின்மீது மேலும் மதிப்பு உயர்ந்தது. என்னுடைய முனைவர் பட்டத்திற்கு இதுவே பொருளாக அமைந்தது. அண்ணன்மார்கோவில் திருவிழாவின்போது இருமுறை வீரமலை, வீரப்புர் சென்று வந்தேன். முதன்முறை வீரப்பூர் யாத்திரைக் குழுவினருடன் அவர்களில் ஒருவனாகச் சென்றமையால் , அவர்களுடைய மனநிலை, பக்தி உணர்ச்சி முதலியவற்றை அறிய வாய்ப்புக் கிட்டியது. இரண்டாம் முறை , கனடா நாட்டு மானுடவியல் பேராசிரியர் பிரெண்டா பெக்கு அம்மையாருடனும் கனடா நாட்டுத் தொலைக்காட்சிப் படக்குழுவினருடனும் சென்றமையால் திருவிழா நிகழ்ச்சிகளை நெருக்கமாக அறியக் கூடிய வாய்ப்புக் கிட்டியது. என்னுடைய நண்பரும் கொங்குநாடு கலை அறிவியல் கல்லூரித் தமிழ்த்துறைப் பேராசிரியருமாகிய முனைவர் தெ. கலியாணசுந்தரம் என்னை அம்மையாருக்கு அறிமுகப்படுத்தி, அக்குழுவினரோடு செல்வதற்கு வாய்ப்பினையும் ஏற்படுத்திக் கொடுத்து உடன்வந்தும் உதவினார். இவ்வுதவியை நன்றியுடன் நினைவு கூர்கிறேன். வீரமலை, வீரப்பூர் மட்டுமேயன்றி அண்ணன்மார் சிறப்பாகக் கோயில் கொண்டிருக்கும் மேழிப்பள்ளி, பருத்திப்பள்ளி, கக்காவேரி ஆகிய தலங்களுக்கும் சென்று வந்தேன்.பன்றி குத்துச் சடங்கு பற்றிய செய்திகளை நேரில் கண்டு திரட்டும் வாய்ப்பு இவ்விடங்களில் கிட்டியது. என் ஆய்வு முயற்சிகளை நெறிப்படுத்தி வழிகாட்டியவர் கோவை அரசு கல்லூரி முதல்வரும் , பின்னாளில் தமிழக்கக் கல்லூரிக் கல்வித்துறை இயக்குநருமாகிய பெரும் பேராசிரியர் முனைவர் கா.மீனாட்சி சுந்தரனார் அவர்கள். அவர்களுக்கு என் நன்றி என்றும் உரியது. இக்கட்டுரைகளைப் படித்துப் பார்த்துப் பாராட்டு முன்னுரை வழங்கிய கவிஞர் சக்திக்கனல் அவர்களுக்குக் கடமைப்பட்டுள்ளேன். கோவை                                                                                                      கோ.ந.முத்துக்குமாரசுவாமி                   2. முன்னுரை கவிஞர் சக்திக்கனல் ( அண்ணன்மார் சாமி கதையை ஏட்டினின்றும் பிரதி எடுத்து 1971ல் முதன்முதல் பதிப்பித்தவர்)   பழமை வாய்ந்த இதிகாசங்களான மகாபாரதமும் இராமாயணமும் நமது இந்தியக் கலாச்சாரத்தையும் பண்பாட்டையும் வழிப்படுத்தி வந்துள்ளன. இவை போன்று எண்ணற்ற காவியங்கள் இந்திய மொழிகளில் அவ்வப்போது தோன்றி வந்துள்ளன. அவைகளில் காற்றிலே மிதந்து உடுக்கையிலே ஒலித்து நாட்டுப்புறக் கலைஞர்களின் நாவிலே தவழ்ந்து வந்ததுதான் அண்ணன்மார்கதை. இதன் ஆசிரியர் பிச்சன் என்று தம்மை அவையடக்கத்தில் குறிப்பிடுவதால் முனைவர் கோ.ந.முத்துக்குமரசமி அவர்கள் ‘பிச்சன்’ என்றே அவர் பெயர் இருக்க வேண்டும் எனக் கூறுகிறார். ஊருக்கு ஊர் வேறு வேறு சமூகச் சூழல்களில் பாடப்பட்டு வரும் குன்றுடையான் கதை, அண்ணன்மார்கதை, தங்காள் கதை, பொன்னழகர் என்னும் கள்ளழகர் அம்மானை, பொன்னர்சங்கர் கதை என்று பலவடிவங்களில்குறிப்பிடப்படுகின்றது. 1971 முதல் இன்றுவரை ஏழுபதிப்புக்களைக் கண்ட அண்ணன்மார் கதையை ஆய்வு செய்யவும் வெளியிடவும் பலதமிழ் அறிஞர்கள் பங்கேற்றனர். எனினும் முனைவர் கோ.ந.முத்துக்குமாரசாமியைப்போல் ஆழ்ந்த ஆராய்ச்சியை யாரும் இதுவரை செய்யவில்லை.என்று நான் துணிந்து சொல்லமுடியும். வாய்மொழிக் காப்பியமான அண்ணன்மார்கதை கொங்கு நாட்டுச் சமூக சமய பண்பாட்டுத் தன்மைகளை இனம் கண்டு காணப் பொருத்தமான ஒருகருவூலமாக அமைந்துள்ளது என ஆசிரியர் கூறுவது எனக்கு மிகுந்த மனநிறைவை அளிக்கிறது. முனைவர் கோ.ந..முத்துக்குமாரசாமி அவர்கள் இந்நூலைத் துல்லியமாக ஆய்வு செய்து கொங்குநாட்டுமக்களின் வாழ்க்கை, கலாச்சாரம், பண்பாடு இவற்றை யெல்லாம் அடையாளம் கண்டு வெளிப்படுத்தி யுள்ளார். இக்கதையின் வேறொரு வடிவமான ’குன்றுடையாக்கவுண்டர் வம்ச வரலாற்றை’ கனடா நாட்டைச் சேர்ந்த மானுடவியலார் திருமதி பிரெண்ட பெக் ஆய்வு செய்து பல உண்மைகளை வெளியிட்டுள்ளார். இவர் வெளியிட் டுள்ள ஆய்வு பற்றிய நிறைகளையும் குறைகளையும் துல்லிய மாகவும் நாகரீகமாகவும் நமது முனைவர் கோ.ந.முத்துக்குமாரசாமி அவர்கள் சுட்டிக் காட்டியுள்ளார். இந்நூலாசிரியரின் ஆய்வு ஆழமும் விரிவும் கொண்டது. இவரது நீண்டகால உழைப்பின் பயனாகவும் கடுமையான முயற்சியாலும் பல்வேறு வடிவங்களின் ஒப்பாய்வு வாசகர் நெஞ்சில் தெளிவான பல கருத்துக்களைப் பதிய வைக்கிறது.என்பது உண்மை. இதற்காக ஆசிரியர் நீண்டகாலமாகப் பலகள ஆய்வுகளை மேற்கொண்டிருக்கிறர் என்பதும் இந்நூலின் வாயிலாகத் தெளிவாகப் புலப்படுகின்றது. அண்ணன்மார்சாமி கதையில்தேர்ந்த வடிவங்களான ‘பொன்னழகர் அம்மானை என்னும் கள்ளழகர் அம்மானை’ , ‘குன்றுடையாக் கவுண்டர் வம்ச வரலாறு’,  ‘பொன்னர்-சங்கர் கதை, ‘அண்ணன்மார்சாமிகதை’’ இவற்றை ஆய்வு செய்து இவற்றிற்கிடையே யுள்ள ஒற்றுமை வேற்றுமைகளைப் பகுப்பாய்வு செய்திருக்கின்றார்.  பொதுவாகத் தொன்மைக்கதைகள் அதீத மனநிகழ்வுகளைக் கொண்டிருப்பதல் அவற்றின் உண்மையான வடிவத்தைக் கண்டறிவது மிகமிகச் சிரமம். மானுடவியலாளராகவும் வரலாற்று ஆசிரியராகவும் சமூகவியலாளராகவும் ஆன்மீக வியலாளராகவும் இலக்கிய ஆய்வாள ராகவும் பல்வேறு நிலைகளிலிருந்து ஆய்வுகளை மேற்கொண் டிருக்கிறார். ஒவ்வொன்றிலிலும் மறைந்து உள்ளடங்கி யிருக்கும் ஆழ்ந்த பொருள் நுட்பங்களை அடையாளம் கண்டு அவற்றின் தனித்தன்மைகளை இனம் கண்டிருக்கின்றார். ஒற்றுமை வேற்றுமைகளை ஆய்வு செய்து அண்ணன்மார் சாமிகதை என்ற காவியத்தின் தனிச் சிறப்பை இனங்கண்டு ஆதாரங்களோடு தமது முடிவுகளைக் கூறியிருக்கிறர்.,ஆசிரியர்.     அண்ணன்மார் சாமி கதையில் வரும் ஒவ்வொரு நிகழ்ச்சியிலும் காணப்படும் உறவு முறைகளைத் துல்லியமாக விளக்குகின்றார். அவற்றின் சிறப்பான அம்சங்கள் இன்றும் கொங்கு நாட்டுப்பகுதிகளில் மண்சார்ந்த குடிமக்களின் வாழ்வு முறைகளுக்குள் அடங்கியிருப்பதையும் குறிப்பிட்டுக் காட்டுகிறார். அண்ணன்தங்கை உறவுமுறைகளின் மாறுபட்ட தன்மைகளை இந்த நாட்டார் வழக்கு காவியத்தில் பரவலாகவும் பின்னலாகவும் இருப்பதைத் தெளிவுபடுத்துகின்றர். ஒவ்வொரு பாத்திரத்தின் தனிப் பண்பையும் முக்கியத்துவத்தையும் ஆழமாக ஆய்வு செய்து தம்முடைய ஆணித்தரமான கருத்துக்களைத் தெளிவாக முன் வைக்கிறர். தாமரையின் கற்புநெறி பற்றித் திருமதி பிருந்தா பெக் கூறிய ஒரு கொச்சையான கருத்தை வெட்டொன்று துண்டிரண்டென மறுத்து இந்த மண்ணின் மானத்தைக் காப்பாற்றுகிறார், ஆய்வாளர். பிருந்தாபெக் ஆய்வுக்கு எடுத்துக் கொண்ட கதைக்கும் அண்ணன்மார்சாமிகதைக்கும் உள்ள வேறுபாட்டைத் தரம்பிரித்துக் காட்டுகின்றார். நாட்டார் காவியத்தில் வரும் பகைமையும் போரும் தவறான பொருளில் உரைக்கப்படுவதை மறுத்து, புதியகருத்துக்களை நிறுவுகின்றார்.. மகாபாரதமும் இராமாயணமும் உடைமைகளைக் கைப்பற்றுவதற்கான காரணங்களை அடித்தளமாகக் கொண்டு இயங்குவதைப் போலவே படுகளமும் உடைமைகளுக்காக நிகழ்த்தப்படும் போரின் வேறு வடிவமே என்ற கருத்தை நிலைநிறுத்துகிறார். மகாகாவியங்களில் காணப்படும் பங்காளிச் சண்டையே அண்ணன்மார்சாமி கதையிலும் காணப்படுவதை உணர்த்துகின்றார். ‘சாதிச்சண்டை’ என்ற எளிமையான பொருளில் இந்தக் காவியம் அமையவில்லை என்பதைப் புலப்படுத்துகிறார்.  மேலும் வேட்டுவரும் வேளாளரைப் போலவே வேளாண்மை செய்து வாழ்பவர்களென்று ம் இவர்களுக்கிடையே நிகழும்போரும் உடைமையைச் சார்ந்தே நிகழ்கிறது என்ற உயர்ந்த பொருளில் தகுந்த சான்றுகளோடு வெளிப்படுத்துகின்றார். இது இனப்போராட்டம் என்ற கொச்சையான வாதத்தைப் பின்னுக்குத் தள்ளி விடுகிறது. இந்த நிலையிலும் திருமதி பிருந்தாபெக்கின் பார்வை தவறானது என்று சுட்டிக்காட்டுகிறார். இதைப்போலவே திரு மு. அருணாசலம் அவர்களின் மதிப்பீட்டையும் மறுத்துப் புதிய பார்வையை முன் வைக்கிறார். நவீன ஆங்கில இலக்கியத்தின் விமர்சகரான திரு சி. எம். பவுரா அவர்கள் உலகமொழிகளில் காணப்படும் இதிகாசங்களை ஆழமாக ஆய்வு செய்து ஒவ்வொன்றின் தனித்தன்மைகளையும் ‘வீரநிலைப் பாட்டு (Heroic poetry) என்ற தன்னுடைய நூலில் பகுத்துக் காட்டுகின்றார். அந்நூலில் உலகின் சிறந்த இதிகாசங்களில் காணப்படும் பல்வேறு தன்மைகள் சொல்லப்பட்டுள்ளன. அவ்வாறான தனித்தன்மைகள் ‘அண்ணன்மார்  சாமிகதை’ யில் சிறப்பாகக் காணப்படுவதை நம் ஆசிரியர் ஒப்பிட்டுக் காட்டுகின்றார். வீரநிலைப்பாட்டு என்ற அம்சத்தில் இலியத், ஒடிசி போன்ற காவியங்களில் காணப்படும் பலதனித்தன்மைகள் அண்ணன்மார்சாமி கதையிலும் காணப்படுவதை அழகுடன் எடுத்துரைக்கின்றார். இது இவரது ஆய்வின் தனிச்சிறப்பாகும் கொங்கு நாட்டில் இன்றும் நிலவி வரும் திருமண உறவுகள் அடங்கிய கலாச்சாரப் பண்பாட்டுத் தன்மைகள் அண்ணன்மார்கதையில் எவ்வாறு சித்தரிக்கப் பட்டுள்ளன என்ற தெளிவான விளக்கங்கள் இவர் ஆய்வுக்கு மணிமகுடமாக விளங்குகின்றன. அண்ணன்மார் சுவாமி கதையை இயற்றியதாக இவர் கருதும் பிச்சன் என்ற பாமரக் கவிஞனின் வாழ்க்கை பற்றிய ஆழமான ஈடுபாடும் , விசாலமான ஆன்மீகப்பண்பும், சமய நோக்கும் இலைமறைகாயாக இந்தக் காவியம் முழுவதும் விரிந்து பரந்து இருப்பதைக் காவிய வரிகளை மேற்காட்டி ஆழமாக ஆய்ந்து வெளிப்படுத்துகின்றார்.. நாட்டார் தெய்வமான மதுக்கரைச் செல்லாண்டியம்மனும் சத்தித் தாயின் வடிவமாக ப் பெரியகாண்டி அம்மனும் ஒப்பிடப்படுவதை ஆய்வு செய்து பெரியக்காண்டியம்மன் சத்தியின் வடிவம் என்பதை உறுதிப்படுத்துகின்றார். முனைவர் திரு கோ.ந.முத்துக்குமாரசாமி அவர்களின் தெளிந்த நுண்ணறிவு இந்நூலின் ஒவ்வொரு வரியிலும் வெளிப்பட்டுள்ளது. .சமூகம் ஆன்மீகம் வரலாறு கலாச்சாரம் பண்பாட்டுத் தெளிவு இலக்கியத்திறன் –இவற்றில் இவருக்கு இருக்கும் உலக்ளாவிய பார்வை வாசிப்பவர்களை வியப்படையச் செய்கிறது. விருப்பு வெறுப்பில்லாமல் நிதானமாகவும் உண்மையாகவும்  இருந்து ஒருசிறந்த இலக்கிய ஆய்வைச் செய்துள்ள முனைவர் திரு கோ.ந. முத்துக்குமாரசாமி அவர்களைப் பாராட்டி வாழ்த்துவதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன். சக்திக்கனல்                                                                 கோவை 07-09- 2001                                                               3. அண்ணன்மார் கதை - வடிவங்களும் வேறுபாடுகளும்   அறிமுகம் “பொன்னர்” என்றும் “சங்கர்” என்றும் பெயருடைய ‘அண்ணன்மார்’ கொங்கு வேளாளர்களில் தூரன், செங்குண்ணி, பெருங்குடியன், விளையன் முதலிய பல கூட்டத்தாருக்கும் குலதெய்வமாகும். கொங்கு வேளாளர் சமூகத்தில் தோன்றி, இப்பகுதி வட்டார நிகழ்ச்சிகளில் பங்குகொண்டு பின் தெய்வமாக மாறிய வீரச்சகோதரர்கள், ‘அண்ணன்மார்’. இவர்களுடைய வீர வரலாறு கொங்கு நாட்டில் கதை பாடுவதைத் தொழிலாகக் கொண்டுள்ளவர்களால் உடுக்கையடிப் பாடலாக இன்றும் பாடப்பட்டுவருகின்றது. இக்கதைப்பாட்டு, பலநாட்கள் பலமணி நேரம் பாடக் கூடிய நிகழ்ச்சிப் பன்மைகள் கொண்டது. இக்கதைப்பாட்டு, கொங்குநாட்டில் கிராமதேவதைகளின் திருவிழாக்களின்போது கேளிக்கைக்காகப் பாடப்பட்டாலும் அண்ணன்மார்சாமி கோவில்களிலே வழிபாட்டுச் சடங்காகவே பாடப்படுகின்றது. வாழும் மரபுத் தொடர்ச்சியைக் கொண்டு விளங்கும் இக்கதைப்பாட்டு தமிழ்நாட்டில் வழங்குகின்ற ஏனைய கதைப் பாடல்களிலிருந்து வேறுபட்டதொரு தனித் தன்மை கொண்டுள்ளது. எந்தவொரு தொன்மரபுக்கதையும் அது தோன்றிய காலத்தில் பெற்றிருந்த அதே வடிவில் நிலையாக இருக்க முடியாது. அண்ணன்மார் கதை பலதலைமுறைகளாகக் கூறப்பட்டு வருவதால், கதை கூறுவோர் , அதனைக் கேட்போர் ஆகியோரின் பண்பாட்டுச் சூழலுக் கேற்ப வளர்ச்சி மாற்றங்கள் அடைந்துள்ளது. கதையின் அடிப்படை நிகழ்ச்சிகளில் பெரிய மாற்றங்கள் இல்லாமல், கிளை, துணை நிகழ்ச்சிகளிலும் கதை மாந்தர்களின் பண்பு நலன்களிலும் மாறுதல் நிகழ்ந்து, இந்தக் கதைப் பாடலுக்குப் பல ‘வடிவங்கள்’ தோன்றியுள்ளன. இக்கதையின் வடிவங்கள் ,”அண்ணன்மார்சாமி கதை”, “பொன்னர்-சங்கர் கதை”, “குன்னுடையான் கதை”, “குன்னுடையாக் கவுண்டன் கதை”, “அருக்காணி நல்லதங்காள் கதை” , “பொன்னழகர் என்னும் கள்ளழகர் அம்மானை” எனப் பல பெயர்களில் வழங்கி வருகிறது. அடிப்படைக் கதைக் கருக்கள் இவற்றில் வேறுபடவில்லை. அவற்றை விரிவுபடுத்திக் கூறும் முறையில் வேறுபாடுகள் காணப்படுகின்றன. எனவே, இவற்றை ஒரே கதையின் பல வடிவங்கள் எனலாம். அண்ணன்மார் கதை வடிவங்கள் பலவற்றுள்ளும் பிச்சன் என்பார் பாடிய, ‘அண்ணன்மார்சாமி கதை’யே உன்னதமான பல சிறப்புக்களைக் கொண்டுள்ளது. பிச்சன் பாமரக் கவிஞனே யென்றாலும் காப்பியக் கவிக்கு உரிய பல உத்திகளையும் கையாண்டு தன் படைப்புத் திறத்தை வெளிப்படுத்தியுள்ளார். இந்த வாய்மொழிக் காப்பியம் கொங்குச் சமூக சமயப் பண்பாட்டு ஆய்வுக்குச் சிறந்த கருவூலமாக விளங்குகிறது. ஈரோடு வட்டம், கல்வெட்டுப் பாளையம்  பெரியண கவுண்டர் எனும் பெரியவர் தம் கைப்பட எழுதி வைத்திருந்த ஏட்டிலிருந்து இக்காப்பியத்தை அச்சேற்றி வெளியிட்ட பெருமைக்கும் பாராட்டுக்கும் உரியவர், கோவை கவிஞர் சக்திக்கனல் அவர்கள். இதன் முதல்பதிப்பு 1971ல் வெளிவந்தது. அதன் பிறகு பலபதிப்புக்களைக் கண்டுவிட்டது. எழுத்து வடிவில் கிடைத்துள்ள அண்ணன்மார் கதைவடிவங்களில் இதுவே அளவில் பெரியது.; ஏறக்குறைய9,500 அடிகள் கொண்டது. ‘பொன்னழகர் அம்மானை’ என்னும் கள்ளழகர் அம்மானை’ என்னும் நூலைப் பாடிய கவிஞர் பெயர் தெரியவில்லை. இதனைப் பாடியவர் புகழேந்திப் புலவர் என்று மரபுவழிக் கூறப்படுகிறது. ‘மதுரை மீனாட்சியம்மன் திருவருள் பெற்ற பொன்னழகர் அம்மானை என்னும் கள்ளழகர் அம்மானை’ என அச்சில் பெயர் சூட்டப்பட்டிருப்பதால் , இதனை மதுரைக்கு அருகில் வழங்கிய வடிவமாகக் கொள்ளலாம். இது திருத்தமான குறள் வெண்செந்துறை யாப்பில் 4700 அடிகளில் அமைந்துள்ளது. பொன்னழகர் அம்மானை கதைத் தலைவர்களின் பெற்றோரை மதுரையுடன் தொடர்புபடுத்திக் கூறுகின்றது. இந்நூல் கதைப் பின்னல் அதிகம் இல்லாமல் எளிமையாக உள்ளது; இன்னோசையான யாப்பமைதி கொண்டது. இதில் சுருக்கமாகக் கூறப்பட்ட பல நிகழ்ச்சிகள் பிறவடிவங்களில் விரிவாகக் கூறப்பட்டுள்ளன. ‘குன்றுடையாக் கவுண்டர் வம்ச வரலாறு’ எனும் கதை எரிசினம்பாளையம் இராமசாமி என்னும் கலைஞரால் கூறப்பட்டது. இதனைத் திரட்டியவர் திருமதி பிரெண்டா பெக் எனும் கனடா நாட்டு மானுடவியல் ஆய்வாளர். பாட்டுகள் அதிகமின்றி உரைநடையில் அமைந்துள்ள இதனை அம்மையார் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து வெளியிட்டுள்ளார். அம்மையார் வெளியிட்டுள்ள இந்நூல் உரைநடையில் இருப்பதினாலும் கதை கூறுபவரின் ஆளுமைக் குறைவினாலும் வீரநிலைப் பாடல்களுக்கு உரிய கம்பீரமும் பெருமிதமும் இன்றி வெறும் நாட்டுப்புறக் கதையாகவே உள்ளது. இதில் வீரநிலைப் பாடல்களுக்கு உரிய செயலாண்மைத் திறன், போர் வருணனைகள், மானுட மேம்பாட்டினை விளக்கும் நிகழ்ச்சிகள், உரையாடல்கள் முதலியன இடம் பெறவில்லை. திருமதி பிரெண்ட பெக் இந்த வடிவத்தை அடிப்படையாகக் கொண்டு,’The Three Twins. The Telling of a South IndianFolk Epic’ என்னும் ஆய்வு நூலை எழுதி உள்ளார். ‘’பொன்னர் சங்கர் கதை’ என்னும் நூல் துவரன் குறிச்சி தமிழாசிரியர் மாரன் என்பவரால் ஏட்டிலிருந்து பிரதி செய்யப்பட்டது. இந்நூல் கையேட்டுப் பிரதியாக ஏறத்தாழ 6,900 வரிகளைக் கொண்டது. யாப்பமைதி, கதை நிகழ்ச்சிகள் முதலியன பெரும்பாலும் பிச்சனின் அண்ணன்மார் கதையை ஒத்திருந்தாலும் , பிற வடிவங்களில் இல்லாதனவும் ஆய்வாளர்களின் கவனத்துக்கு உரியனவுமாகிய வேறுபாடுகள் இதில் உண்டு. அண்ணன்மார்சாமிகதை – கதைச் சுருக்கம் வாளவந்திப் பட்டணத்தில் சிறப்புடன் வாழ்ந்து வந்த கோலாத்தாக் கவுண்டர், தம்முடைய சொத்தைக் கவரச் சூது நினைத்த தம் பதினொரு தம்பியருக்குச் சொத்தை விட்டுக் கொடுத்துவிட்டுத் தம் மனைவி பவளாத்தாக் கவுண்டச்சியுடன் காவிரித்தென்கரையில் உள்ள மதுக்கரைச் செல்லாண்டியம்மன் கோவிலை அடைகிறார். மூவேந்தரின் பாகத் தகராறைத் தீர்த்து வைத்துச் சோழமன்னரின் அன்புக்குரியவரானர். சோழன் அளித்த நிலவுரிமை, காணியாட்சி, மணியம் கணக்கு அதிகாரம் பெறுகிறார். நீண்டகாலம் குழந்தைப் பேறின்றி முதுமையில் குன்றுடையானை மகனாகப் பெறுகின்றார். குன்றுடையான் அறிவுக் கூர்மையின்றி மங்கு மசையனாக வளர்கின்றான். எனவே, பரம்பரை அலுவலாகிய மணியம் கணக்குப் பார்க்க அவன் ஆகான் எனக் கோலாத்தாக் கவுண்டர் கருதி, அவ்வதிகாரங்களை அரசனிடம் திருப்பி யளித்து விட்டு இறந்துவிடுகிறார். அவர் மனைவி பவளாத்தாக் கவுண்டச்சியும், மகன் குன்றுடையானைப் பண்ணயத்திலிருந்த தோட்டியிடம் ஒப்படைத்து, அவனுக்குத் தன் உடன்பிறந்தான் மணியன்குறிச்சி மலைக்கொழுந்தாக் கவுண்டர் மகளைத் திருமணம் செய்விக்கும்படிக் கூறி இறந்துவிடுகின்றார். தாய்தந்தையற்ற குன்றுடையானின் நிலையை அறிந்த பங்காளிகள் அவன் சொத்தைப் பிடுங்கிக் கொண்டு ஊரைவிட்டு ஓட்டிவிடுகின்றனர். குன்றுடையான் கரூர், உறையூர், ஆதிசெட்டிபாளையம் முதலிய ஊர்களில் கூலிவேலைகள் செய்து பிழைத்து வருகிறான். சில ஆண்டுகள் கழிகின்றன. குன்றுடையான், தன் தாய்மாமன் மகளை மணந்துகொண்டால் அவர் துணையோடு தாங்கள் பறித்துக் கொண்ட சொத்துக்கு உரிமை கேட்டு வந்துவிடுவானென அஞ்சிய பங்காளிகள், அந்நிலையைத் தவிர்க்க, அவர்கள், தங்களுடைய புதல்வர்களில் ஒருவருக்குப் மாமன் மகள் தாமரையைப் பெண் கேட்க வருகிறார்கள். அதனை அறிந்த தோட்டி குன்றுடையானின் இருப்பிடம் அறிந்து, பங்காளியருக்கு முந்திச் சென்று தாய்மாமன் பெண்ணை மணக்கும் தன் முன்னுரிமையைக் கூறிப் பெண் கேட்கத் தூண்டுகிறான். குன்றுடையானும் அவ்வாறே மாமனிடம் தன் உரிமையைக் கூறிப் பெண்ணை மணம் செய்து தரும்படிக் கேட்க, இருவருக்கும் இடையே உள்ள பொருளாதார வேறுபாடு காரணமாக மாமன் மறுத்து விடுகிறார். ஆனால், மாமன் மகள் தாமரை, அத்தை மகனின் உரிமையை மதித்து, அவனையே மணந்து கொள்ளத் தன் விருப்பத்தை வெளியிடுகின்றாள். மலைக்கொழுந்தாக் கவுண்டர் , அவள் விருப்பப்படியே அவளைக் குன்றுடையானுக்கு மணஞ் செய்வித்துத் தம் சொல்லை மீறி அவள் தன் விருப்பப்படி திருமணம் செய்து கொண்டதால் , அவமானப்படுத்தி, மணமக்களை வெளியேற்றுகிறார். தன்னையும் தன்கணவனையும் சிறுமைப் படுத்திய தந்தையைப் பழி வாங்குவதாகச் சபதம் செய்து கணவனுடன் தாமரை வெளியேறுகிறாள்.      பொன்னம்பலத்திற்குச் சென்று,”அம்ம்பலத்திற்கு ஆணிரண்டும் அடிக்கிளைக்குப் பெண்ணும்” பெற வரம் பெற்றாள். தாமரை கருவுற்றிருப்பதை அறிந்த பங்காளிகல், ஆண்மகவாக இருந்தால் அழித்துவிடத் திட்டமிட்டு, அதற்கென மருத்துவச்சி ஒருத்தியை அனுப்புகின்றனர்.  அவள் வருவதற்குள் சிவனருளால் ஆண்மக்கள் இருவர் , தாமரையின் விலா எலும்பு வழியே வெளியேறி, பாதாள அறையில் செல்லாண்டியம்மனால் வளர்க்கப்படுகின்றனர் ஆண்மக்கள் இருவரும் முறையே பொன்னர், சங்கர் என்றும், அண்ணன்மார் என்றும் அழைக்கப்பட்டனர். சிவனருளால் பாதாள அறியில் வாழும் அண்ணன்மார் போர்ப்பயிற்சி பெறுகின்றனர். “ஆணிரண்டு பெண்ணொன்று என வரம்பெற்று வந்தேன் –உன் அண்ண னெங்கே” எனப் பெண்ணை மடியில் கிடத்தி அரற்றும் தாயின் குரலைக் கேட்டு அண்ணன்மார் பாதாள அறையை விட்டுத் தாயிடம் வந்து சேர்கின்றனர். விளையாட்டுப் பருவத்திலேயே வேட்டுவருடன் அண்ணன்மாருக்குப் பகை விளைகின்றது. அவர்கள் அண்ணன்மாரை எவ்விதத்திலாவது அழித்துவிடத் தீர்மானிக்கின்றனர். தம் பெற்றோரைக் கொடுமைப்படுத்தித் துன்புறுத்திய பங்காளியரை அண்ணன்மார் பழிவாங்கி அவமானப்படுத்துகின்றனர். அவமானமடைந்த பங்காளியர் , இவர்களை அழித்துவிட்டால் தங்களுடைய சொத்துக்களையெல்லாம் கொடுத்துவிடுவதாக ஆசைகாட்டி வேட்டுவரை அண்ணன்மாருக்கு எதிராகத் தூண்டி விடுகின்றனர். அண்ணன்மார் தம் வளநாட்டில்கோட்டை அரண்மனை கட்டி வளமாக வாழ்கின்றன்ர். முதிய பெற்றோர்கள் இறந்து விடுகின்றனர். பெற்றோரை இழந்த துயரை மறக்கத் தங்கை கிளி, புறா முதலிய பறவைகளை வளர்க்க விரும்புகிறாள். அவற்றை வேட்டையாடிக் கொணர வீரமலைக்குச் சங்கர் சென்றபோது வேட்டுவரைச் சந்திக்க நேரிடுகிறது. சங்கர் நாட்டில் இல்லாதபோது, வேட்டுவர்கள் வளநாட்டைக் கொள்ளையிட்டு, அங்கு வாழ்ந்த ‘பச்சனா முதலிமகள் பருவமுள்ள குப்பாயி’யைச் சிறையெடுத்து வருகிறார்கள். அவளுடைய அரற்றலைக் கேட்ட சங்கர், மூத்தவர் பொன்னரின் அனுமதியோடு அவளைச் சிறை மீட்கிறார். இந்நிகழ்ச்சியால் வேட்டுவரோடு பகை மேலும் வளர்கிறது. வேட்டுவர்நாட்டுப் பன்றியொன்று சோழர் ஆளுகையில் உள்ள இரத்தினாசல மூர்த்தி கோவிலுக்குச் சேர்ந்த கிராமங்களில் விளைந்து நின்ற பயிர்களையெல்லாம் அழித்து நாசம் செய்கின்றது. பன்றியைக் கொல்லவும் வேட்டுவர் கொள்ளையிலிருந்து நாட்டினைப் பாது காக்கவும் சோழ அரசன் வாள்வீரர்களைத் தேடி அழைத்து வரப் பிரதானிகளை அனுப்புகிறார். அவர்களில் ஒருவர் வளநாடு வந்து அண்ணன்மாரின் ஆற்றலை நேரில் கண்டு அரசரின் விருப்பத்தை அறிவிக்கின்றார். அண்ணர், “ மன்னர் நேரில் வந்தால் வருவோம்- அல்லது- மன்னர் குமாரர் வந்தால் வருவோம்; பிரதானியாகிய உம்மோடு வாரோம் ” என மறுத்து விடுகின்றார். சோழர், தம் மகனை அனுப்பி, அண்ணன்மாரை அழைத்துத் தம் நாடு காவல் முழுவதையும் ஒப்படைக்கின்றார். அவர் அளித்த பட்டத்து யானை பல்லக்கு முதலிய விருதுகளுடன் அண்ணன்மார் தம் வளநாடு திரும்புகின்றனர். வரும் வழியில் தாய்மாமன் பெண்களை மணந்து கொள்கின்றனர். ஆனால், பலம் குறையுமென்று  மணந்த நாள்தொட்டு அவர்களை ஏறெடுத்தும் பார்க்காமல் இற்செறித்து வைக்கின்றனர். பொன்னர்-சங்கர் இருவரும் சேர்ந்திருக்கையில் அவர்களை வெல்ல முடியாது என அறிந்த வேட்டுவர் இருவரையும் பிரிக்கச் சதி செய்கின்றனர். அவர்களுக்குப் பொருளாசை மிக்க தட்டானொருவனின் துணை கிடைக்கின்றது. அவனுடைய சூழ்ச்சியால் பொன்னர் அவமானப்பட்டுச் சங்கரையும் தங்கையையும் விட்டுப் பிரிகையில் வேட்டுவர் வளநாடு கொள்ளையிடுகின்றனர். சங்கர் தனித்து வேட்டுவரை அழிக்கின்றார். விழுப்புண் பட்டமையால் வடக்கிருந்து உயிர் துறக்கின்றார். சங்கரின் இறுதியைக் கனவிற் காண்கிறாள் தங்கை நல்லதங்கம். இதுகாறும் தன் இல்லத்தை விட்டுப் புறம் போயறியாத தங்கை அண்ணரின் படுகளத்தினைக் காண அண்ணிமாரைத் துணைக்கு அழைக்கிறாள். திருமணவாழ்வில் இன்பம் கண்டறியாத அண்ணிமார் துணைக்குவர மறுத்ததோடு, வீட்டிற்குள் புகுந்து தாழிட்டுக் கொண்டனர். கணவன்மார் இறந்த பின்னர் தாம் உயிர் வாழ விரும்பவில்லை; ஆதலால் வீட்டோடு தம்மைக் கொழுத்தி விட்டு அண்ணன்மாரின் படுகளம் காணச் செல்லுமாறு அண்ணிமார் தங்கையைப் பணிக்கின்றனர். தங்கை அவ்வாறே செய்து முடித்து அண்ணர் கிடக்கை காண வீரமலைச் சாரலுக்குச் செல்கின்றாள். பல துன்பங்களுக்குப் பின்னர், பெரியகாண்டியம்மன் துணையால் சங்கரின் படுகளம் கண்டு, வேள்வி செய்து இறந்த சங்கரையும் மற்றையோரையும் எழுப்புகிறாள். தட்டானின் வஞ்சனைச் சூதை அறிந்து, அவனைக் கொன்றுவிட்டு, பொன்னர் வேட்டுவரைக் கருவறுத்துப்பழி வாங்குகிறார். இறுதியில் தம்பி சங்கர் இருக்கும் படுகளத்திற்கு வருகிறார். இறைவியின் துணையோடு அண்ணன்மாரும் நல்லதங்கமும் மற்றையோரும் விண்ணுலகு செல்கின்றனர். திருமணம் ஆகியும் சந்ததியின்றி இறந்தமையால் அண்ணன்மார் வீரமலையில் வாழ்ந்த ஒருவனை மகன்மை கொண்டு, தமக்குரிய பூசை வழிபாடு செய்யப் பணிக்கின்றனர் வீரப்பூரில் வாழ்ந்த கம்பைய நாய்க்கன் கனவில் தோன்றித் தமக்குக் கோயில் கட்டுமாறு பணித்தனர். அந்தக் கோவிலில் குடி கொண்டனர். ஆண்டுதொறும் வீரமலை வனத்திலும் வீரப்பூர் கோயிலிலும் திருவிழாக்கள் நடைபெறுகின்றன. அப்பொழுது வேடுபடை யழித்தலும் படுகளமும் வழிபாட்டுச் சடங்குகளாக நடைபெறுகின்றன. கதை வடிவங்களின் ஒப்பாய்வு அண்ணன்மார் கதையின் பல்வேறு வடிவங்களையும் திரட்டி அவற்றை ஒப்பாய்வது பண்பாட்டு மானுடவியல் ஆய்வுக்குப் பயன் தரும். பல்வேறு வடிவங்களுக்கும் பொதுவான கதைக்கூறுகளையும் மாறுபடும் கதைக் கூறுகளையும் பகுத்து அறிவதன் வழி , கதைப்போக்கில் விளைந்த மாறுதல்கள் தெளிவாகும்; மாற்றங்களுக்கு உரிய காரணங்கள் மானுடப் பண்பாட்டியல் ஆய்வுக்குத் துணை செய்யும். இதனால் காப்பியக் கதைக்கு உரிய அடிப்படைக் கதை நிகழ்ச்சிகளை அறிந்து கொள்ளலாம்.கதையின் அடிப்படை நிகழ்ச்சிகளைஅறிந்து கொள்வதால் மரபு வழிச் செய்திகளை இலக்கிய நயத்துடன் கதைப் பாட்டாகவும் காப்பியமாகவும் படைத்து மொழிகின்ற கலைஞனின் தனித் திறனை அறிந்து கொள்ளலாம். காப்பியத் திறனாய்வுக்கும் இலக்கியக் கோட்படுகளை உருவாக்குவதற்கும் இப்பல்வேறு வடிவங்களின் ஒப்பாய்வு பயன்படும். ஒற்றுமை மேலே கூறப்பட்ட நான்கு வடிவங்களிலும் இடம்பெறும் கதை நிகழ்சியைப் பட்டியலிட்டுப் பார்க்கும்போது அவையனைத்திலும் பொதுவாகக் காணப்படுவனவற்றை அடிப்படை நிகழ்ச்சிகளாகக் கொள்ளலாம். அவ்வாறு நான்கு வடிவங்ககளும் ஏற்றுக் கொண்ட நிகழ்ச்சிகளாவன: 1. தாமரை(அண்ணன்மாரின் தாயார்) குழந்தைப் பேறின்றி யிருத்தல் 2. .தாமரை மகப் பெறத் தவமிருத்தல். 3. வீரமலைக் காட்டில் அண்ணன்மார் கிளி, புறா வேட்டையாடல். 4. வேட்டுவரிடம் வளர்ந்த பன்றியை அண்ணன்மார் கொல்லுதல். 5. வேட்டுவர் அண்ணன்மார் மீது பகைகொண்டு வளநாடு கொள்ளையடிக்க வருதல். 6. அண்ணன்மார் முறைப் பெண்களை மணந்து இற்சிறை வைத்தல். 7. வேட்டுவருடன் சேர்ந்து தட்டான் ஒருவன் பொன்னரை வஞ்சித்துப் பிரித்துச் சத்தியத்துக் குட்படுத்தி அவமதித்தல். 8. தட்டானின் சூதை அறிந்த பொன்னர் அவனைக் கொல்லல். 9. சத்தியம் செய்யப் பொன்னர் தட்டான் பின்னர்ப் போகும்போது வேட்டுவர் வளநாடு மீது படையெடுத்து வருதல். 10. பொன்னரின் ஆணைக்குச் சங்கர் கட்டுப்பட்டு இருத்தல். 11. சங்கர் வேட்டுவருடன் சண்டை செய்யத் தனித்துப் போதல். 12. போரில் சங்கர் வீர மரணம் அடைதல் 13. தங்கை நல்லதங்கம் வருவதுரைக்கும் தெய்வீக ஆற்றலுடையவளாக இருத்தல் 14. தங்கை, அண்ணன்மார் இறந்த படுகளத்தைக் காண அண்ணியரை அழைத்தல்; அவர்கள் மறுத்துத் தங்களை அரண்மனையுடன் தீக்கொழுத்திவிட்டுச் செல்லுமாறு கூறுதல். 15. தங்கை அவ்வாறே செய்தல். 16. தங்கை அண்ணன்மார் இறந்து கிடக்கும் படுகளம் காணல்; பெரியகாண்டியம்மனைத் துணைகொள்ளுதல்; மாண்டவர்களை எழுப்புதல்; அனைவரும் விண்ணுலகு செல்லுதல். கதைக்கூறு வேறுபாடுகள் மேலே சுட்டிக் காட்டப்பட்ட ஒற்றுமை நிகழ்ச்சிகளைத் தவிர்த்து கதைக்கூறு வேறுபாடுகள் அனைத்தும் கதைநிகழ்ச்சிகளை விரிவுபடுத்தவும் கதைமாந்தர்களின் குணநலன்களைத் தெளிவுபடுத்தவும் கதைப்பாட்டுக்குக் காப்பியப் பண்பேற்றவும் துணை செய்கின்றன.. அத்துடன் கதைப்பாடகனின் ஆளுமையையும் படைப்பாற்றலையும் காட்டுகின்றன. 1. பெரியகாண்டியம்மன் கதை  அண்ணன்மார்சாமி கதையும் பொன்னர் சங்கர் கதையும் பெரியகாண்டி யம்மன் வரலாற்றை விரிவாகக் கூறுகின்றன. இப்பகுதியில் கூறப்படும் நிகழ்ச்சிகள் அண்ணன்மார் வரலாற்றில் நேரடித் தொடர்பு உடையன அல்ல. எனினும், காப்பியக் கட்டமைப்பில் பொருத்தமாக அமைகின்றன. கதைப்பாட்டினைக் காப்பியக் கட்டமைப்பு உடையதாக ஆக்கவும் அண்ணன்மார், தங்கை நல்லதங்கம் ஆகியோரின் பண்புகளுக்கு ஒளியூட்டவும் பெரியகாண்டியம்மன் வரலாறு பயன்படுகின்றது.       கள்ளழகர் அம்மானையிலும் குன்னுடையாக் கவுண்டர் வம்ச வரலாற்றிலும் பெரியகாண்டியம்மன் வரலாறு கூறப்படவில்லை. 2.கோலாத்தாக் கவுண்டர்வரலாறு; அண்ணன்மார்சாமி கதையிலும் குன்னுடையாக் கவுண்டர் வம்ச வரலாற்றிலும் மட்டுமே கோலாத்தாக் கவுண்டர் வரலாறு கூறப்படுகின்றது. கள்ளழகர் அம்மானையிலும் பொன்னர் சங்கர் கதையிலும் கோலாத்தாக் கவுண்டர் வரலாறு இல்லை. கோலாத்தாக் கவுண்டர் மதுக்கரைச் செல்லாண்டியம்மன் கோவிலில் மூவேந்தர்களின் பாகத் தகராறைத் தீர்த்து அவர்களுடைய அன்பைப் பெற்ற நிகழ்ச்சி இந்த இருவடிவங்களிலும் உளதெனினும் அதன் பின்னணி வேறுபடுகின்றது. அண்ணன்மார்சாமிகதையில் கோலாத்தக் கவுண்டர் தம்பியருக்கு அஞ்சி ஊரைவிட்டு வரும்போது மூவேந்தரின் பசியாற்றிப் பாகத் தகராறைத் தீர்த்து வைத்துக் காணியாட்சி மணியங்கணக்கு அதிகாரம் பெறுகின்றார். வறுமையுற்று வரும் தம்பியரை ஆதரிக்கின்றார். கோலாத்தாக் கவுண்டரின் மறைவுக்குப் பின் தம்பியர் அறிவு கூர்மையற்ற குன்றுடையானை ஊரைவிட்டுத் துரத்திவிட்டுச் சொத்துக்களை கவர்ந்து கொள்கின்றனர். இவ்வாறு அண்ணன்மார்சாமிகதையில் கோலாத்தாக் கவுண்டர் வரலாறு கவுண்டருடைய உயர்பண்பினையும் தம்பியரின் நன்றிகெட்ட ஈனச் செயலையும் விளக்குவதக அமைந்துளது. குன்னுடையாக் கவுண்டர் வம்ச வரலாற்றில் கோலாத்தக் கவுண்டர் வரலாறு வேறு விதமாகக் கூறப்படுகின்றது. வேளாளருக் கெதிராகக் கம்மாள சாதியினர் திரண்ட வரலாற்றை இது கூறுகின்றது. பாகத் தகராறைத் தீர்த்தற்குப் பரிசாகச் சோழமன்னர் கோலாத்தாக் கவுண்டருக்கு ‘அனியாப்பூர்’ என்ற ஊரை அளிக்கிறார். இந்த ஊரைப் பெற உள்ளூர்க் கம்மாளர்கள் போட்டியிடுகின்றனர். அரசன் வைத்த போட்டிகள் அனைத்திலும் கோலாத்தக் கவுண்டர், மாயவரின் (கிருஷ்ணர்) துணையால் வெற்றியடைந்து கிராமத்தைப் பரிசாகப் பெறுகின்றார். இதனால் கம்மாளர் இவர்மேல் பொறாமையும் பகையும் கொள்கினனர். இந்தப் பகைமை மூன்று தலைமுறைகள் தொடர்கின்றது. பொன்னருக்கு எதிராக வேட்டுவருடன் சேர்ந்து சதி செய்யக் கம்மாளரைத் தூண்டுகிறது. இவ்வாறு கம்மாளர் வேளாளர் மீது பகை கொண்டதற்கும் பொன்னரைத் தட்டான் வஞ்சித்து அவமானப் படுத்தியதற்கும் உரிய காரணத்தைக் குன்னுடையக் கவுண்டர் வம்ச வரலாறு கூறுகின்றது. 3 .குன்றுடையான் வரலாறு   அண்ணன்மாரின் தந்தை குன்றுடையானின் வரலாறு அண்ணன்மார்சாமிகதை, பொன்னர்- சங்கர் வரலாறு, குன்றுடையாக் கவுண்டர் வம்ச வரலாறு ஆகிய மூன்றிலும் காணப்படுகின்றது. கள்ளழகர் அம்மானை என்னும் பொன்னழகர் அம்மனையில் இது இல்லை. அண்ணன்மார் சாமி கதையில் குன்றுடையான் பெற்றோரின் முதிய பருவபத்தில் பிறக்கிறான். இளமையில் பெற்றோரை இழந்து பங்காளியரிடம் சொத்துக்களையும் இழந்து, கூலி வேலை செய்தும் விறகு வெட்டி விற்றும் பிழைக்கிறான். குன்றுடையாக் கவுண்டர் வம்ச வரலாற்றில், கோலாத்தாக் கவுண்டருக்கு மகப்பேறு இல்லாததால் அவருடைய சொத்துக்கள் தங்களுக்கே கிடைக்கும் என்று அவருடைய பங்காளிகள் பேராசையோடு காத்துக் கிடக்கின்றனர். முதுமையில் கோலாத்தக் கவுண்டர், தம்முடைய மேட்டுப் பூமியில் பாறைகளுக்கிடையில் ஆண் குழந்தை யொன்றைக் கண்டெடுத்து வளர்க்கின்றார். குன்றில் கிடைத்ததால் அதற்குக் குன்றுடையானெனப் பெயர் சூட்டுகின்றார். இதனால், மகப்பேறு இல்லாத கோலத்தக் கவுண்டரின் சொத்துக்கள் தமக்குக் கிடைக்கும் என எதிர்பார்த்து இருந்த பங்காளிகள் பேரதிர்ச்சி அடைகின்றனர். குன்றுடையான் குழந்தையாக இருக்கும்போதே வளர்ப்புப் பெற்றோர் இறந்துவிடுகின்றனர். குன்றுடையானின் சொத்துக்களைப் பங்காளிகள் கவர்ந்து கொள்கிறர்கள். பொன்னர் –சங்கர் கதையில் குன்றுடையன் வரலாறு பெரிதும் வேறுபடுகின்ரது. வளநாட்டில் மண்மாரி, மழைமாரி பொழிந்து நாடழிந்தது. குன்றுடையான் பெற்றோரை இழந்து அநாதையாக நாடு விட்டு வேட்டுவர் நாடாகிய தலையூர் வந்து சேர்கிறான். குழந்தைப் பேறு இல்லாத வேட்டுவர் தலைவன் காளியின் மனைவி காளி, குன்றுடையானைக் கண்டு , அழைத்து வந்து, தான் பெற்றெடுத்த மகனைப் போலவே பாசத்துடன் வளர்க்கிறாள். குன்றுடையான் வந்தபின் வேட்டுவர்குடி தழைக்கின்றது. வேட்டுவக் காளிக்குப் பொருட்செல்வமும் மக்கட் செல்வமும் பெருகியது. பின்னாளில் வேளாளர்களுடன் பகைகொள்ளும் வேட்டுவர்குடியில் அவர்களுடைய பிள்ளையாகவே அண்ணன்மாரின் தந்தை குன்றுடையான் வளர்ந்தான் எனப் பொன்னர்- சங்கர் கதை கூறுவது குறிக்கொள்ளத் தக்க வேறுபாடாகும். கள்ளழகர் அம்மானையில் குன்றுடையான் – தாமரை திருமணம் பற்றிய செய்தி இல்லை. இவர்களுடைய குடும்ப வாழ்க்கையிலிருந்தே கதை தொடங்குகிறது. அண்ணன்மார்சாமி கதையில் , குன்றுடையான் அடிமைப் பறையனின் தூண்டுதலால் தன் மாமன் மகளைப் பெண் கேட்கிறான். சொத்துச் சுகம் இல்லாத மங்கு மசையனான குன்றுடையானுக்குத் தாய் மாமன் பெண் கொடுக்க மறுத்துவிடுகிறான். ஆனால், மாயவர் செயலால், தாய் மமன் ம்கள் தாமரை, தன் அத்தை மகன் குன்றுடையானின் முன்னுரிமையை மதித்துத் தந்தையிடம் அவனுக்காகப் பரிந்து  பேசி, தந்தையின் விரோதத்தையும் பொருட்படுத்தாமல் ,அவனை விரும்பி மணந்து கொள்கிறாள். திருமணத்திற்குப் பின் தாமரையின் தந்தை மணமக்களை அவமதித்து அவர்களை விட்டை விட்டு வெளியேற்றுகிறார். குன்றுடையாக் கவுண்டர் வம்ச வரலாற்றில், குன்றுடையான் தன் சொத்துக்களைப் பங்காளியரிடம் இழந்து, வாளவந்தி நாடு வருகின்றான். உறவு என்றறியாமலேயே தாய் மாமனின் பண்ணையில் வேலைக்குச் சேருகிறான். மாயவர் சூழ்ச்சியால் பண்ணயத்து ஆளாகிய குன்றுடையானுக்கு அவனுடைய உறவினை அறியாமலேயே மைத்துனம்மார் தம்முடைய தங்கை தாமரையை மணம் முடித்துக் கொடுக்கச் சம்மதிக்கின்றனர். திருமணம் மிகவும் எளிய முறையில் நடைபெறுகின்றது.. இவ்வாறு, குன்றுடையானைத்  தாமரை தன் அத்தைமகன் என்றறி யாமலேயே மணந்து கொள்கிறாள்.. பொன்னர்- சங்கர் கதையில், குன்றுடையான் தாமரை திருமணம் முன் கூறிய வடிவங்களிலிருந்து முற்றிலும் வேறுபடுகிறது. வேட்டுவத் தலைவனின் வீட்டில் வேட்டுவப் பிள்ளைபோல் வளரும் குன்றுடையானுக்கு வேட்டுவப் பெண்ணைத் திருமணம் செய்விக்கும் முயற்சி நடைபெறுகின்றது. இதனை அறிந்த குன்றுடையானின் மாமன் மகன் தன் ஆட்களை அனுப்பித் தந்திரமாக அவனைக் கடத்தி வந்து, தன்தங்கை தாமரையைக் கலியாணம் செய்துகொள்ள வற்புறுத்துகிறான். வளர்ப்புத் தாயின் அனுமதியின்றி மணம் செய்து கொள்ள முடியாதென்று குன்றுடையான் மறுக்கின்றான். மாமன் மகன், வேட்டுவத் தாயை அழைத்து வர ஏற்பாடு செய்த்து போலப் பாவனை செய்து முகூர்த்த நேரம் கடந்து விடுமென்று வற்புறுத்தித் திருமணத்தை நடத்தி விடுகின்றான். வேட்டுவன் வீட்டில் அநாதையாக வளர்ந்தவனை மணக்க நேரிட்டதே எனத் தாமரை தன் தலைவிதியை நொந்து, பின் விதி விட்ட வழி யென்று குன்றுடையானுடன் வளநாடு வருகின்றாள். 4.  பங்காளிகள் பற்றிய கதைக்கூறு  அண்ணன்மார் குடும்பத்திற்கும் பங்காளியருக்கும் இடையே பகைமை நிகழ்ச்சிகள் பொன்னர்-சங்கர் கதை தவிர ஏஎனைய மூன்று வடிவங்களிலும் இடம் பெறுகின்றன. பொன்னர் சங்கர் கதையில் பங்காளியர் பற்றிய செய்தியே இல்லை. கள்ளழகர் அம்மானையில் பங்காளி செல்லாத்தாக் கவுண்டன் மண்ணுடையானை (குன்றுடையான்) உழுங்கடமை வசூலிக்கச் சிறை வைத்துக் கொடுமைப்படுத்துகிறான். அண்ணன்மார்,செல்லாண்டியம்மனின் துணையுடன் நிலவறையில் வாழ்ந்திருந்து தாய் தாமரையிடம் வந்து சேர்கின்றனர்; பங்காளியாகிய செல்லாத்தாக் கவுண்டனைத் தண்டித்துத் தந்தையை விடுவிக்கின்றனர். பங்காளியரின் கொடுமையும் அவர்களை அண்ணன்மார் தண்டித்த முறையும் பற்றி அண்ணன்மார்சாமிகதை விரிவாகக் கூறுகின்றது. வேட்டைக்குச் செல்ல விரும்பிய தன் மக்களை நோக்கித் தாய் தாமரை,’வேட்டைக்குப் போனால் வினைவந்து நேரும்., பங்காளி பலியெடுப்பான் தப்பாது’ எனத் தடுக்கின்றாள். பங்காளியரால் தானும் தந்தையும் பட்ட துன்பங்களை அண்ணன்மாருக்கு எடுத்துரைக்கின்றாள். சினம் பொங்கிய சங்கர், சாம்புவனை விட்டுப் பங்காளியரை வரவழைத்து, ஆண்களைச் சவுக்கால் அடித்தும் பெண்களை மரத்தாலி கட்டச் செய்தும் தண்டிக்கின்றார். சங்கர் சாம்புவனின் துணையுடன் படையெடுத்துச் சென்று பங்காளியரைக் கொன்றதாகக் குன்றுடையாக் கவுண்டர் வம்ச வரலாறு கூறுகின்றது. 5.அண்ணன்மார் திருமணம்.  அண்ணன்மார் தம்முடைய தாய்மாமன் பெண்களைத் திருமணம் செய்து கொண்டு, இல்லற இன்பத்தில் ஈடுபடாமல், அவர்களை இற்சிறை வைத்தல் அண்ணன்மார் கதையின் எல்லா வடிவங்களிலும் இடம் பெறுகின்றது. இது அண்ணன்மார் கதையின் இன்றியமையாக் கதைக் கூறாகும். ஆனால், இக்கதைக் கூறு இடம்பெறும் சூழலும் நிகழ்ச்சிகளும் நான்கு வடிவங்களிலும் வேறுபடுகின்றன.. மண்ணுடையான் அரண்மனை கட்டியபோது , புதுமனை புகு விழாவிற்குத் தாய்மாமனும் அத்தையும் வருகின்றனர். அவர்களிடம் தாய் தாமரை, பொன்னர்-சங்கருக்குப் பெண் கேட்க,அவர்கள் சம்மதத்தின் மேல் திருமணம் நடக்கின்றது. பொன்னால் விரல் செய்து கைகோர்வை கொடுப்பது, மனைவியரை இற்சிறை வைப்பது முதலிய நிகழ்ச்சிகள் அனைத்தையும் கள்ளழகர் அம்மானை நாற்பத்தைந்தே வரிகளில் கூறி முடிக்கின்றது. அண்ணன்மாரின் திருமணநிகழ்ச்சி, அண்ணன்மார்சாமி கதையில் விரிவாகவும் சிறப்பாகவும் கூறப்படுகின்றது. இதில், திருமணம் அண்ணன்மாரின் வீரவாழ்க்கைக்குப் பரிசாகக் கிடைக்கின்றது. வாள் வீரராகத் திகழ்ந்த அண்ணன்மாரைச் சோழர், தம்முடைய அரண்மனைக்கு அழைத்து நாடுகாவல் அதிகாரத்தையும் பல்லக்கு பட்டத்து யானை முதலிய விருதுகளையும் அளித்துச் சிறப்புச் செய்கின்றார். அண்ணன்மார் அரசன் அளித்த சிறப்புக்களுடன் தம்முடைய நாட்டுக்குத் திரும்பும்போது,  முன்பு தம் பெற்றோரை அவமதித்து ஊரை விட்டுத் துரத்திய தாய்மாமனின் அரண்மனை வழியே ஊர்வலம் வருகின்றனர்.மாமனுடைய பெண்களைப் பெண் கேட்டு மணந்து கொள்கின்றனர். தாய் தாமரை முன்பு உரைத்த வஞ்சினத்தின்படி மனைவியருடன் இல்லறத்தில் ஈடுபடமல் அவர்களை இற்சிறை வைக்கின்றனர். குன்றுடையாக் கவுண்டன் வம்ச வரலாற்றில் , அண்ணன்மார் திருமண நிகழ்ச்சி பாமரத் தன்மையுடன் அமைந்துள்ளது. மகப்பேறு இல்லாத தாமரை, தன் தமையனின் குழந்தைகளைக் காண வருகின்றாள். தமையனின் மனைவி தன்னுடைய குழந்தைகளை மலடியாகிய தாமரை காணலாகாது என ‘மக்கிரி’யிட்டு மூடி வைத்து விட்டுத் தாமரையை அவமானப்படுத்தி அடித்து விரட்டுகின்றாள். மூச்சுத் திணறிய குழந்தைகள் இறந்து விடுக்கின்றன. தாமரையின் தெய்வீகத் தன்மையை அறிந்திருந்த தமையன் அவளை அழைத்து வருகிறான். குழந்தைகளை உயிர்ப்பித்த தாமரை, கைம்மாறாக இருபெண் குழந்தைகளையும் வாங்கிக் கொள்கிறாள் தமையனின் பெண்கள் இருவரையும் தனக்குப் பிறக்கப் போகும் மைந்தர்களுக்கு மணம் செய்வித்துப் பழி வாங்கப் போவதாகவும் அதுவரை அப்பெண்கள் இருவரும் கற்சிலைகளாக வேண்டும் எனவும் தாமரை வஞ்சினம் கூறிச் சபிக்கிறாள். கயிலாயத்தில் 21 ஆண்டுகள் தவம் செய்து தாமரை இரு ஆண்மக்களைப் பெறுகின்றாள். மக்களுக்கு உரிய பருவம் வந்தவுடன் கற்சிலைகளைப் பெண்களாக ஆக்கித், தனக்குத் தன் தமையன் ‘ஏனோ தானோ’ எனத் திருமணம் செய்துவித்த அதே பிள்ளையார் கோவிலில் மணம் செய்விக்கின்றாள். மனைவியரை அண்ணன்மார் இற்சிறை வைத்தல் இங்கும் உண்டு.  இந்த வடிவத்தில் அண்ணன்மாரைவிட அவர்களுடைய மனைவியர் வயதில் மூத்தவர்கள் என்பது அறியத்தக்கது. பொன்னர்- சங்கர் கதையில் , தாமரை சங்கருடன் தன்னுடைய தமையனின் அரண்மனைக்குச் சென்று பெண் கேட்கிறாள். சங்கரின் ஆற்றலுக்கு அஞ்சிய மாமன் திருமணத்திற்குச் சம்மதிக்கின்றான் . பொன்விரலால் கைகோர்வை கொடுப்பதும் இற்செறிப்பதும் இங்கும் உண்டு. 6. சங்கரின் முடிவு அண்ணன்மாரில் இளையவரான சங்கர், இக்கதையின் எல்லா வடிவங்களிலும் இறுதியில் இறந்து விடுகிறார். இது எல்லா வடிவங்களுக்கும் பொதுவான நிகழ்ச்சியெனினும் ,அவருடைய வீர மரணத்துக்குரிய சூழல் ஒவ்வொரு வடிவத்திலும் வேறுபடுவது குறிப்பிடத்தக்கது. வேட்டுவரைச் சங்கரித்து, மேலும் வேடுபடை வருமென எதிர்பார்த்து நிற்கையில், சங்கருக்கு நீர்வேட்கை உண்டாகிறது. ஈசுவரனார், ‘வேங்கை மரமொன்று விதமாக உண்டாக்கிக், குளிர்ந்த நிழலாக்கிக் குடிநீரும் உண்டுசெய்து’ காத்திருந்தார். சங்கர் அங்கே மரத்தடியில் இளைப்பாறும்போது, ஈசுவரனார் அம்பு விடுகின்றார். அந்த அம்பு சங்கரின் நெற்றியில் பட்டு வடு உண்டாக்குகின்றது. வடுப்படாமேனி வடுப்பட்டு விட்டது என்று புண்ணுக்கு நாணி, சங்கர் தம்முடைய வாளால் தம்மைத் தாமே மாய்த்துக் கொள்ளுகிறார். இவ்வாறு சங்கரின் முடிவைக் கூறுகிறது, கள்ளழகர் அம்மானை. சங்கரின் ஆயுட்காலம் முடிவுற்றதனால், அவருடைய உயிரை வாங்க மாயவர் வேட்டுவனைப் போன்ற வடிவில் மறைந்திருந்து அம்பு தொடுக்கின்றார். அதனைத் தம் நேரிசத்தால் தட்டிவிட்டுச் சங்கர் கையால் பற்றிப் பார்க்கையில் , அதில் தம்முடைய ஆயுட்காலம் முடிவுற்ற தென்றறிந்து , வடக்கிருந்து உயிர் விடுகின்றார்.இவ்வாறு அண்ணன்மார்சாமி கதை கூறுகிறது. குன்றுடையாக் கவுண்டர் வம்ச வரலாற்றில், சங்கரின் முடிவு வேறு விதமாக அமைகிறது. மாயவரின் அம்பு சங்கரின் பூணூலை அறுத்துச் செல்லுகிறது. பூணுல் அறுபட்டமையால் தன் வாழ்நாள் முடிவுற்றதென சங்கர் அறிகிறார். வாளை நிலத்தில் ஊன்றி அதன்மேல் விழுந்து தம்மை மாய்த்துக் கொள்கிறார். பொன்னர் சங்கர் கதையில் சோலையில் தங்கியிருந்த சங்கரின் மீது வேட்டுவர் வடிவில் வந்த மாயவர் விட்ட அம்பு மார்புருவிச் சென்று அவரை மாள்விக்கின்றது. ஆக, கதையின் எல்லா வடிவங்களிலும் சங்கரின் உயிர் யமனாலோ வேட்டுவராலோ பறிக்கப்படுவதில்லை; சங்கர் தம்முடைய வாழ்நாளைத் தாமே முடித்துக் கொள்கிறார் அல்லது மாயவர் முடிக்கிறார் என்பது அறியத்தக்கது. 7. பொன்னரின் முடிவு  இக்கதையின் நான்கு வடிவங்களிலும் சங்கர் இறந்துவிட, பொன்னர், கள்ளழகர் அம்மானையிலும் குன்றுடையாக்கவுண்டர் வம்ச வரலாற்றிலும் மட்டுமே இறப்பதாகக் கூறப்படுகிறது. அண்ணன்மார்சாமிகதை, பொன்னர்- சங்கர் கதை இரண்டிலும் பொன்னர் உயிருடன் கயிலாயம் செல்லுகிறார்.   இது ஒரு குறிப்பிடத் தக்க  வேறுபாடாகும். கள்ளழகர் அம்மானையில் பொன்னரின் முடிவு பின் வருமாறு அமைகிறது. வெள்ளாங்குளத்தில் சத்தியம் செய்யும்போது, பொன்னர் சாம்புவனின் முரசொலியைக் கேட்கிறர். இவ்வொலியால் சங்கரின் இறுதியையும் தட்டானின் சதியையும் அறிகிறார். தட்டானைக் கொன்றுவிட்டு நாடு மீள்கிறார். போருக்குச் சென்ற மைத்துனன்மார், தம்பி சங்கர் யாரும் உயிருடன் மீளாவில்லை எனத் தங்கை கூறப் படுகளம் நோக்கி விரைகிறர். வீரமலைச் சாரலில் வேங்கைமரத்தடியில் , தம்பி சங்கர் வீரமண்டியிட்ட நிலையில் படுகளமாய் இருத்தலைக் கண்டு, வருத்தம் மிகத் தம் வாளை நாட்டி அதன்மேல் விழுந்து உயிரை விடுகிறார். அண்ணன்மார்சாமி கதையிலும் பொன்னர்- சங்கர்கதையிலும் பொன்னர் முடிவு ஒரேதன்மைத்தாக உள்ளது. சங்கரின் படுகளம் தேடி வந்த தங்கை நல்ல தங்கம்  , பெரியகாண்டியம்மன் துணையுடன் சங்கரை உயிர்ப்பிக்கின்றாள். பொன்னர் அவ்விடம் வர, சங்கரிடம் பொன்னர் , தங்கள் தாயார் தம் பிள்ளைகளுக்குப் பதினாறு வயது என வரம் வாங்கி வந்ததைக் கூறி, “மாண்டவர் எழுந்திருந்தால் – இந்த- மண்டலங்கள் கொள்ளுமா? இறந்தவர்கள் எழுந்திருந்தால் – இந்த – எல்லை இடங்கொள்ளுமா? இருந்தநாள் போதுமினி –ஈசுவரி - பாதம் சேர்ந்திடுவோம்” எனக் கூறித் தங்கை பொற்சரடு பொன்னூசி கொண்டு சங்கரின்புண்ணை மூடித் தைத்திருந்த சரட்டினை உருவிவிட்டார். சங்கர் மீண்டும் தரையில் சாய்ந்து விடுகிறார்.பொன்னர் தம் வாளை நிலத்தில் நாட்டி அதன்மேல் விழுந்தூயிரை மாய்த்துக் கொள்ள முனைகிறார். மாயவர் செயலால் ஒவ்வொருமுறை அவர் முயலும்போதும் வாள் சாய்ந்துவிடுகிறது.. இறுதியில் மாயவர் அருளால், மாண்ட சங்கர், மறுபடியும் உயிர் பெறுகிறார். அனைவரும் வைகுண்டம் சேர்கின்றனர். பொன்னரும் சங்கரும் இறப்பதில்லை என்பது ஒரு குறிப்பிடத் தக்க வேறுபாடு. 8. அண்ணன்மார் வீரப்பூரில் கோயில் கொண்டது. அண்ணன்மார் எழுவக்கரியான் என்னும் வீரப்பூர் வலையனை மகன்மை கொண்டதுவோ, வீரப்பூரில் பாளையத் தலைவன் கம்பைய நாய்க்கனை மருட்டிக் கோயில் எழுப்பச் செய்து அதில் குடி கொண்டதுவோ கள்ளழகர் அம்மானையில் இல்லை. அண்ணன்மார்சாமிகதையும் பொன்னர்-சங்கர் கதையும் இந்நிகழ்ச்சிகளை ஒரே விதமாகக் கூறுகின்றன. குன்றுடையான் வம்ச வரலாற்றில், வீரப்பூர் வலையனை அண்ணன்மார் மகன்மை முறை கொண்டதுவோ கம்பையனை மருட்டிக் கோயில் கொண்டதுவோ கூறப்படவில்லை. எனினும் வீரப்பூரில் கோயில் கொண்டு தங்கியது கூறப்படுகின்றது. அண்ணன்மாரைப் படுகளத்தில் எழுப்பிய தங்கை , அவர்களையும் சாம்புவன், பொன்னாச்சி எனும் மூளிநாய், பெரியகாண்டியம்மன் ஆகியோரையும் அழைத்துக் கொண்டு வீரப்பூர் சென்று அங்குக் கோயில் கொள்ளச் செய்து அவர்களுக்கு முதற்பூசை செய்தாள் என்று குன்றுடையாக் கவுண்டன் வம்ச வரலாறு வீரப்பூர்க் கோயில் பற்றிப் பேசுகின்றது. வளர்ச்சி நிலைகள் அண்ணன்மார் கதையின் நான்கு வடிவங்களின் கதைக் கூறுகளையும் கதை நிகழ்ச்சிகளையும் ஒப்பிட்டுக் காணும்போது , அவை பாடுவோனின் அல்லது கதை கூறுவோனின் படைப்பாற்றலுக்கும் தேவைக்கும் ஏற்பக் கதையின் அடிப்படை நிகழ்ச்சிகளிலிருந்து விரிவடைந்து செல்லுவது புலனாகும். பொன்னர்,சங்கர் என்னும் சகோதரர்கள் இருவர் வேட்டுவர் தலைவன் தலையூர்க் காளி என்பவனுடன் போரிட்டு வீரமரணம் அடைந்தமையே இக்கதையின் அடிப்படைத் தொடக்க நிகழ்ச்சி. போரில் வீரமரணம் அடைந்த அவர்களை வழிபடும் வீரவழிபாட்டுச்சடங்குப் பாட்டாக இது முதலில் தோன்றியிருக்கக் கூடும். இன்றும் அச்சண்டை நிகழ்ந்த இடமாகிய வீரமலைச் சாரலில், அவ்வீரர்களின் நினைவுநாள் சடங்காகக் கதைப் பாடகர்களால் ’படுகள’ நிகழ்ச்சிகள் விரிவாகப் பாடப்படுகின்றன. இக்கண்ணோட்டத்துடன் இக்கதையின் நான்கு வடிவங்களையும் நோக்கும்போது கள்ளழகர் அம்மானை சடங்குப் பாட்டு நிலையிலிருந்து கதைப் பாட்டு நிலையை எய்தி நிற்க, அண்ணன்மார் சாமிகதையும் பொன்னர்-சங்கர் கதையும் காப்பியச் சாயல் பெற்று விளங்குகின்றன. அம்மானையில் கதையின் அடிப்படை நிகழ்ச்சிகளே இடம் பெற்றுள்ளன.  பாத்திரப் பண்பு விளக்கும் நிகழ்ச்சிகளோ , பெருமிதமான உரையாடல்களோ,  இலக்கியச் சுவையான வருணனைகளோ அவைபோன்ற காப்பியக் கூறுகளோ இல்லை. பிச்சன் கவி பாடியுள்ள அண்ணன்மார்சாமிகதையே இத்தகைய முழுமை பெற்றுள்ளது.. மரபுவழிக் கூறப்பட்டுவரும் கதையை அடிப்படையாகக் கொண்டு நாட்டுப்புறக் கவிஞன் அழ்குணர்ச்சியுடன் காப்பியம் புனையும் பாங்கு பிச்சன் கவியின் அண்ணன்மார்சாமி கதையில் நன்கு வெளிப்படுகின்றது. வீரமலையில் நடந்த சண்டையாகிய அடிப்படை இகழ்ச்சியின் மேல் கதைப்பாடகர்கள் அவ்வப்பொழுது வேறு பல நிகழ்ச்சிகளையும்  கதை மாந்தர்களையும் இணைத்துக் கதைக்குப் பாரிய வடிவம் கொடுத்தனர். போர் நிகழ்ச்சி கதைப் பாட்டாகவும் காப்பியமாகவும் விரிவடைந்த வளர்ச்சியைப் பின்வருமாறு காணலாம். 1.முதல்நிலை – சடங்குப் பாட்டு. 1. வேளாளச் சகோதரர்கள் தம்முடைய ஆளுகைக்கு உட்பட்ட பகுதிகளைக் காப்பாற்றும் முயற்சியில் வேட்டுவருடன் சண்டையிட்டு மடிந்தனர். 2. வீரவழிபாட்டு நெறியில் அவர்கள் வேளாளர்களுக்கும் அவர்களைச் சார்ந்த பிற சாதியினருக்கும் ‘அண்ணன்மார் சாமி’ஆயினர். அவர்களின் நினைவுச் சின்னம் கோயிலாயிற்று. அண்ணன்மாரின் ‘படுகளம்’ யாத்திரத் தலமாயிற்று. நினைவுநாள் வழிபாட்டில்அவர்களுடைய வரலாறு சடங்குப் பாட்டாகப் பாடப் பெற்றது.     2     இரண்டாம் நிலை – கதைப்பாட்டு       3 .   வீரப்பூர்ப் பாளையக்காரன் கம்பைய நாய்க்கனுக்கு அண்ணன்மார்           வழிபடு தெய்வமாயினர். வீரப்பூரில் அண்ணன்மாருக்குக் கோயில்           எழுந்தது. படுகளத்தில் மட்டுமன்றி அண்ணன்மாரை வழிபடு           தெய்வ மாகக் கொண்டவர்கள் குடியேறிய இடங்களிலெல்லாம்           அண்ணன்மாருக்குக் கோவில்கள் எழுந்தன. அங்கெல்லாம்           அண்ணன்மார் கதை கூறப்பட்டமையால் அவர்களுடைய வரலாறு         தொன்மரபுக் கதையாயிற்று.      4 .   அடிப்படை நிகழ்ச்சியான சண்டையும் தலைவர்கலின் வீரமரணமும்      கேட்போர் உள்ளத்தை உருக்கும் கதைப்பாட்டு ஒன்றன்       கதைக்கருவாக அமையும் வகையில் அண்ணன்மாருக்கு      உறவுடையகதை மாந்தர்கள் (அருக்காணி நல்லதங்கம், மனைவியர்,      மைத்துனன்மார், வீரபாகுச் சாம்புவன் முதலியோர்)          சேர்க்கப்பட்டனர். 3   மூன்றாம் நிலை – காப்பியச் சாயல். 5.  கதைத்தலைவர்களின் பெற்றோருடைய வரலாறு, சோழ மன்னரின் தொடர்பு, பங்காளிகளின் காழ்ப்பு, தட்டானின் சூது முதலிய நிகழ்ச்சிகள் சேர்க்கப்பட்டன. 6. அண்ணன்மாரின் பாட்டனார் வரலாறு, அவரைப் பங்காளிகள் வஞ்சித்தல், கதை நிகழும் நிலப்பகுதியில் அவருடைய குடியேற்றம்.   4. நான்காம் நிலை – புராணப் போக்கு 7.  பாரதக் கதை மாந்தர்களுடன் அண்ணன்மார் கதை மாந்தர்கள் தொடர்புறுத்தப்பட்டனர். 8. தலபுராணங்களை யொட்டி வீரமலைக்குப் பெருமை சேர்க்கும்   வகையில் பெரியகாண்டியம்மன் கதை இணைக்கப்பட்டது. காப்பியக் கட்டமைப்பில் பெரியகாண்டியம்மன் கதையின் அங்கமாக அண்ணன்மார் கதை மாற்றம் அடைந்தது. அண்ணன்மார் சாமிகதையின் முழுவளர்ச்சியை, கதையின் முழுப்பரிமாணத்தைப் பிச்சன் கவி பாடிய ‘அண்ணன்மார்சாமி கதை’யில் காணலாம்.             4. அண்ணன்மார் கதை -  வரலாற்றுத் தடயங்கள்   கதைப்பாடல்களில் வரலாறு          வட்டார வரலாற்றில் இடம்பெறத் தக்க நிகழ்ச்சிகள் , இனக்குலச் சண்டைகள், கலப்புத் திருமணம் முதலிய சமூக உறவுகள் போன்றன நாட்டுப்புறக்கதைப் பாடல்களுக்கு அடிக்கருத்தாகின்றன. அவை வரலாற்றுச் சான்றாதாரமாகுமா? இது ஆய்வுக்குரியது. கதைப் பாடகன் கதை நிகழ்ச்சிகளை உண்மையே என்று பாமர மக்கள் நம்பும் வகையில் கற்பனை வளத்துடன் உணர்ச்சி மயமாகப் பாடுகிறான். பாமரமக்கள் அவற்றில் கூறப்படும் நிகழ்ச்சிகள் அனைத்தும் உண்மையே என நம்புகின்றனர். வரலாற்றுச் சான்றாதாரமாகக் கதைப் பாடல்கள்               எழுத்துச் சான்றாதாரமில்லாத சமூகங்களின் வரலாறுகளில் கதைப்பாடல்கள் வரலாற்றுப் பதிவேடுகளாக, வரலாற்று ஆவணங்களாகக் கருதப்படுகின்றன.. நிலவுரிமை, குடிவழி, முன்னோர் வாழ்க்கை முதலியனவற்றில் வரும் ஐயங்களைக் களைய இத்தகைய நாட்டுப்புறக் கதைப் பாடல்கள் மேற்கோளாகக் காட்டப்படுகின்றன. நாட்டுப்புற மக்கள் இவற்றை வரலாறுகளாக நம்புவதால் சமூக வரலாற்று ஆசிரியர்கள் வட்டார வரலாற்றாசிரியர்கள் வட்டார வரலாற்றாய்வுகளுக்கு நாட்டுப்புற மக்களிடையே வழங்கும் கதைப் பாடல்களையும் பழமரபுக் கதைகளையும் சான்றாதாரங்களாகக் கொள்ள நேரிடுகின்றது.[Local History to an extent can be rebuilt on local traditions, folk songs and other oral evidences which hitherto have not been recorded. K.S.S. Seshan, Local History, The Latest trend, The Hindu 6.4.82] அண்ணன்மார்சாமி கதையில் வரலாற்றுச் செய்திகள்            அண்ணன்மார்சாமி கதையில் கதைத் தலைவர்களின் முன்னோர் கதை நிகழ்ச்சிகள் நடந்த பகுதிக்குக் குடியேறிய செய்தி விரிவாகப் பாடப் பெறுகின்றது. அண்ணன்மாருக்கும் வேட்டுவருக்கும் நடந்த சண்டை இக்கதைப் பாட்டின் அடிப்படை நிகழ்ச்சி. கொங்கு வேளாளரிடையே இக்கதை பெற்றிருக்கும் செல்வாக்கின் காரணமாக, மேற்கூறிய இரு நிகழ்ச்சிகளும் கொங்குவேளாளரின் சமுதாய வரலாற்றைக் குறிப்பன என்றும், அண்ணன்மார் சாமிகதை கொங்கு வேளாளச் சமுதாயக் குடியேற்ற வரலாற்றுக்கோர் ஆதாரமாகும் என்றும் கருதப்படுகின்றது. குடியேற்றம்           கொங்குநாட்டு வேளாண் குடியினரைப் பற்றி ஆய்வு நிகழ்த்திய திருமதி பிரெண்டா பெக், மேனாடு எனப்படும் கீழ்க்கொங்குப் பகுதியில் சோழ மன்னன் வேளாளர்களைக் குடியேற்றி , ஆட்சிப் பொறுப்பை அளித்ததையும் அதன் விளைவாக மேனாட்டு வேட்டுவருடன் போர்கள் விளைந்தமையும் இவ்வாய்மொழிக் காப்பியம் பேசுகின்றது என்றும், இது கொங்கு நாட்டின் வரலாற்றை உய்த்துணர உதவும் என்றும் கருதுகின்றார்.             கொங்கு வேளாளர் சோழ நாட்டிலிருந்தும் தொண்டை நாட்டிலிருந்தும் காவிரி, அமராவதி, நொய்யல், பவானியாற்றங் கரைகளின் வழியே கொங்கு நாட்டில் குடியேறியவர் என்றும், குடியேற்ற காலத்தில் இப்பகுதியின் பூர்வீகக் குடிகளாகிய வேட்டுவருடன் நடந்த போராட்டமே அண்ணன்மார் சாமி கதையின் அடிப்படை நிகழ்ச்சி என்றும் கல்வெட்டு ஆராய்ச்சியாளர் திரு. ஈரோடு செ. இராசு கருதுகிறார். (செ. இராசு. ‘கொங்கு’ திங்களிதழ் மார்ச்சு.1973. சென்னை)             தம் நாட்டின் எல்லை பிரிப்பது குறித்து மூவேந்தருக்குள் நிகழ்ந்த உடன்பாடு பற்றிக் கொங்கு நாட்டில் செவிவழிச்செய்தி யொன்று வழங்குகின்றது. முன்னொரு காலத்தில் மதுக்கரைச் செல்லாண்டியம்மன் கோயிலில் சேர சோழ பாண்டியாரசர்கள் மூவரும் கூடித் தம் நாட்டுக்கு எல்லை பிரிக்க வாது செய்து கொண்டிருக்கையில் அத்தீரா வழக்கை அங்கு வந்த கவுண்டர் ஒருவர் மூவருக்கும் நடுநிலைமையாக நின்று எல்லை பிரித்து உதவினார். அதற்கு நன்றியாக அம்மூவரும் மகிழ்ந்து கொங்கு மண்டலத்து 24 நாடுகளுக்கும் தலைமைப் பட்டத்தை அக்கவுண்டருக்கு அளித்தனர். இச்செய்தியை மிகவும் பிற்காலத்ததாகிய மதுக்கரைப் பட்டயம் எடுத்துக் கூறியது.(கொடுமுடி சண்முகம், பதிப்பாசிரியர். மதுக்கரைப்பட்டயம் தேனோலை வெளியீடு)  இச்செய்தியை கதைக்குத் தோற்றுவாயாக அண்ணன்மார்சாமி கதை எடுத்தாளுகின்றது. கதைத் தலைவர்களின் தந்தைக்குத் தந்தை கோலாத்தாக் கவுண்டர் வாளவந்திப் பட்டணத்திலிருந்து தொட்டியத்துறை வழியாகக் காவிரியாறு கடந்து மதுக்கரை வழியே வரும்போது ‘முடிமன்னர் ராஜாக்கள் பங்கு பிரிப்பதில் பாகத் தகராறு செய்திருப்பதைக் கண்டு, அவர்களுக்குப் பசியாற்றிப் பாகத் தகராறைத் தீர்த்து வைக்கிறார். அதற்கு நன்றியாக அவர்கள் விளைநிலமும், மணியம் கணக்கு அதிகாரமும் கொடுத்தனர். இது, கதைநிகழ்ந்த நிலப்பகுதிகளில் கதைத் தலைவர்கள் உரிமை பெற்ற நிகழ்சியை விளக்குகின்றது.           பொன்னழகர் அம்மானை என்னும் கள்ளழகர் அம்மானையிலும் அண்ணன்மார் சாமி கதையிலும் இக்கதையின் ஏனை வடிவங்களிலும் பயிலப்பெறும் ‘மேனாடு’,’கோனாடு’, ‘கொங்கர்’,’ஏழை வெள்ளாளன் பயல்’, வேட்டுவரைச் சங்கரிக்க’, ’கொங்கரைச் சங்கரிக்க’, முதலிய சொல்லாட்சிகள் வேளாளர் கொங்கு நாட்டில் குடியேறிய காலத்தில் நிகழ்ந்த போராட்டத்தை விளக்குவனவாகக் கருதப்படுகின்றன. இனப்போராட்டம்               “கொங்கு நாட்டு வரலாறு” நூலின் ஆசிரியர் கோவை. சி.எம் இராமச்சந்திரன் செட்டியார் அண்ணன்மார் கதை இனப்போராட்டத்தை அடிப்படையாகக் கொண்டது எனக் கருதுகிறார்.  “கொங்கு நாட்டில் சமநிலத்தில் வாழும் குடிமக்களிலே இரண்டு பெரிய தொகுதிகள் உள்ளன. இருவரும் நாட்டுப் பழங்குடிகளே. அவர்கள் நாட்டுக்கு உரிமை உள்ளவர்கள் என்று கூறும் கதைகளும் , கொள்கைகளும் பலவுண்டு. அவர்கள் வேட்டுவர், வேளாளர் என்ற இரண்டு வகுப்புப் பெயர்களைக் கொண்டவர்கள். இவ்விரு குடிமக்களும் கவுண்டர் என்ற பட்டப் பெயரை வகிப்பவர்களே. இவ்விரு வகுப்பார்களின் பெயர்களே இவர்களுடைய குணங்களையும் எடுத்துக் காட்டும். வேட்டுவர் என்றால் வேட்டையாடிப் பிழைப்பவர் என்பது பொருள். வேளாளர் என்றால் நிலத்தை அண்டிப் பிழைப்பவ்ர்கள் என்று பொருள். தற்போது இரண்டு வகுப்பாரும் நிலத்தை அண்டிப் பிழைப்பவர்களே. ஆனால், முன்னாளில் வேட்டுவர் வேட்டை ஆடுதலையே பிழைப்பாகக் கொண்டிருந்தார்கள் என்று அறிய வேண்டும். காட்டிற்கும் நாட்டிற்கும் உள்ள வேற்றுமையே வேட்டுவர்க்கும் வேளாளர்க்கும் என்றறிக. இந்த இரண்டு குலத்தார்க்கும் கருத்து வேறுபாடும் தொழில் வேறுபாடும் இருந்தன. ஆகவே, இவ்விரு வகுப்பார்க்கும் பகைமை மிகுதியாக இருந்திருக்க வேண்டுமல்லவா? பகைமையினால்  சண்டை, சச்சரவுகளும், கட்சிப் பிரதிகட்சிகளும் ஏற்பட்டுப் பெரிய கலவரங்கள் நாட்டில் விளைந்தன என்று நாட்டுக் கதைப்பாடல்கள் முழங்குகின்றன. இச்செய்தியைக் கூறும் சிறந்த நாட்டுப்பாடல் கள்ளழகர் அம்மானை என்பது.” கள்ளழகர் அம்மானை பேசும் வேட்டுவர் வேளாளர் சண்டை வகுப்புச் சண்டையே என்பது இவர் கருத்து. வலங்கை- இடங்கைப் போராட்டம்              திருமதி பிரெண்டா பெக் , கொங்கு வேளாளர் கொங்கு நாட்டில் குடியேறியவர்கள் என்ற கருத்தை மேற் கொண்டதுடன், பொதுவாகத் தமிழக மெங்கணும், குறிப்பாகச் சோழநாட்டிலும், வரலாற்றின் ஒரு காலகட்டத்தில் ஓங்கியிருந்த வலங்கை –இடங்கைப் போராட்டமாகவே வேட்டுவர் –வேளாளர் சண்டையைக் காண்கிறார். அண்ணன்மாராகிய வேளாள்ர்கட்கும் அவர்களுடைய பங்காளியர்களுக்கும் நடந்த சண்டையே ‘அண்ணன்மார்கதையின் பெரும்பகுதி என்றும், கதையின் உச்ச நிகழ்ச்சியாகிய வேட்டுவர்- வேளாளர் சண்டை, அடிப்படையில், இடங்கை- வலங்கைப் போராட்டமே என்றும் வேளாளர் வலங்கை அணியினருக்கும் வேட்டுவர் இடங்கை அணியினருக்கும் தலைமை ஏற்றனர் என்றும் கருதிகிறார். மூன்று வினாக்கள் மேலே எடுத்துக் கூறப்பட்ட செய்திகளின் மேல் மூன்று வினாக்கள் எழுகின்றன. 1. அண்ணன்மார் கதை கொங்கு வேளாளர் சோழநாட்டிலிருந்து கொங்கு நாட்டில் குடியேறியவர் என்பதற்குச் சான்றாதாரமகுமா? 2. அண்ணன்மாருக்கும் வேட்டுவர் தலைவன் காளிக்கும் நடந்த சண்டை வேட்டுவர் – வேளாளர் இனப்போராட்டம் ஆகுமா? 3. இச்சண்டைகளை வலங்கை- இடங்கைப் போராட்டமாகக் கூறலாமா? குடியேற்றம் பற்றிய கருத்து            அண்ணன்மார்சாமி கதை அண்ணன்மாரின் பாட்டனார் கோலாத்தாக் கவுண்டர் வாளவந்திப் பட்டணத்திலிருந்து வளநாடு வந்ததாகக் கூறுகின்றது. வாளவந்தி நாடென்பது நாம்க்கல் வட்டத்தின் ஒருபகுதியாகும். இன்றும் நாமக்கல் வட்டத்தில் வாளவந்தி என்னும் பேரூராட்சி உள்ளது. இது காவிரியின் வடக்கே இருப்பதால் அண்ணன்மார்சாமிகதை ‘வடக்கே வாளவந்திப் பட்டணம்’ என்கிறது. கோலாத்தாக் கவுண்டரும் அவருடைய தம்பிமாரும் ‘வடதேசம்’ விட்டுத் தொட்டியத்துறை வழியகக் காவிரியாறு கடந்து தென்தேசம் வந்தனர்.            அண்ணன்மார்சாமி கதையின்படி இக்கதைத்தலைவர்களின் முன்னோர் கீழ்க்கொங்குப் பகுதிக்குச் சோழநாட்டிலிருந்து வந்து குடியேறியவ ரல்லர். கொங்கு நாட்டின் ஒருபகுதியாகிய வாளவந்தி நாட்டினின்றும் வந்தோரே யாவர். குடியேற்றம் பற்றித்தொன்மரபுக் கதைகளின் தகுதி             அண்ணன்மாரின் முன்னோர் கீழ்க்கொங்குப் பகுதியில் அரசியல் பொருளாதாரச் செல்வாக்குடன்வாழ்ந்தார்களென்பதாலும் அது காரணமாகக் கதைப்பாடகர்கள் இவர்களின் குடியேற்றங்களைப் பாட வேண்டியது இன்றியமையாதது எனக் கருதினார்கள் போலும். ஆகவே, வாய்மொழி இலக்கியங்களை மட்டும் ஆதாரமமாக் கொண்டு குடியேற்றங்களை உறுதியாகக் கூற முடியாது.              தொன்மரபுக் கதைகளில் காணப்படும் வரலாற்றுச் சாயலுள்ள செய்திகள் குறித்து லார்டு ராக்லான் கூறும் கருத்து ஈண்டு கருதத் தக்கது. (Lord Raglan, The Hero)             ‘கல்வியறிவில்லா பல பழஞ்சமுதாயத்தினர் வரலாற்று நிகழ்ச்சிகளை நினைவு கூர்வது போன்ற பழமரபுக் கதைகளை வழங்குகின்றனர். அவை வீரத் தலைமக்களின் பயணங்கள், வெற்றிகள் முதலியவற்றைக் கூறுகின்றன. இவை கூறும் பயணங்களையும் வெற்றிகளையும் ஓரளவு முறைப்படுத்தினால் , இவை குடியேறிய வரலாறுகளையும், வெற்றி களையும் விளக்குவனவாகக் காட்டலாம். ஆனால், இவை அனைத்தும் வெறும் புனைகதைகளே”             ஆகவே, வாய்மொழிக் காப்பியங்களில் இடம்பெறும் செய்திகளைக்கொண்டு கொங்கு வேளாளர் சோழநாட்டினிறும் வேட்டுவர் பூர்வகுடியாக வாழும் கொங்கு நாட்டுப் பகுதியில் குடியேறினர் என்றும், அதன் விளைவாகத் தோன்றிய வேட்டுவர் –வேளாளர் இனப் போராட்டத்தையே அண்ணன்மார்கதை சித்தரிக்கின்றது என்றும் கூறமுடியாது. இனப்போராட்டமா?                     அண்ணன்மார்சாமி கதையில் வேட்டுவக் குடியினரும் வேளாளக் குடியினரும் பகை கொண்டு சண்டையிட்டு அழிந்தனர் என்று பாடுகின்றது. எனினும், இம்மாறுபாடு, இனப்போராட்டம் அல்லது வகுப்புச் சண்டை எனக் கூறுவது பொருத்தமாகத் தெரியவில்லை. வேட்டுவரை, அண்ணன்மாருக்குப் பகைவர்கள் என்னும் நிலையில் அவர்களை நாகரிகம் , பண்பாடு அற்றவராகக், கண்ணோட்டம் இல்லாதவராக அண்ண்ன்மார்சாமி கதை பாடினாலும், வேறுசில வடிவங்கள் வேட்டுவர்களைப் பண்பாட்டில் உயர்ந்தவர்களாகவும், அண்ணன்மாரின் தந்தை குன்றுடையானை இளமையில் ஆதரித்தவர்களாகவும் பேசுகின்றன.              இக்கதையைத் தெளிவான கண்ணோட்டத்தோடு நோக்குவாருக்குப் பங்காளிச் சண்டையே இக்கதைக்கு அடிப்படை; இனப்பூசலன்று என்பது புலனாகும். கதை கூறுவோர் கதைக்குச் சுவையும் நம்பகத் தன்மையும் ஏற்ற இக்கதை இனப்போராட்டத்தைச் சித்தரிப்பது போன்ற மாயத் தோற்றத்தை உருவாக்குகின்றனர். பாமர மக்கள் கதையை வரலாறாக நம்பி விடுகின்றனர். ‘அண்ணன்மார்சாமி கதை’ படிக்கும் இடத்திற்கு வேட்டுவர் வரலாகாது’, ‘வீரப்பூர் அண்ணன்மார்சாமி கோவில் திருவிழாவின்போது, அண்ணன்மார், அனியாப்பூரில் அம்பு தொடுத்தால் வேட்டுவர் குடியில் ஒரு பிணமாவது விழும்’, ‘அண்ணன்மார்கதையை வேட்டுவர் கேட்கவே கூடாது; ஊரில் கதை நடந்தால் வேட்டுவர் காது கேளாத தூரத்திற்குச் சென்றுவிடவேண்டும்’  என்பன போன்ற தவறான செய்திகளைப் போலியினை மெய்யென நம்பிவிடும் பாமரர், புனைந்து விடுகின்றனர். இத்தகைய புனைகதைகளை உருவாக்கிவிடுவது பாமர மக்கள் இயல்பு. ஆகவே, இவ்விலக்கியத்தை இனப் போராட்ட இலக்கியமாகக் கருதுவது அறியாமையே யாகும். இடங்கை வலங்கைப் போராட்டமா?            இக்காப்பியத்தில் வேட்டுவர்-வேளாளர் பகையைக் குறித்துத் திருமதி பிரெண்டா பெக் பின்வரும் கருத்தைத் தெரிவிக்கின்றார்.                   “கதையின் போக்கு கொங்குநாட்டு வரலாற்றின் பகுதியை உய்த்து அறிய உதவுகின்றது. சோழ அரசன் தன் ஆட்சிக்கு உட்பட்ட மேனாட்டுப் பகுதிகளில் மக்களைக் குடியமர்த்துவதி  லிருந்து கதை தொடங்குகிறது. குடியேறிய வேளாளர்கள் ஏற்கெனவே அப்பகுதியை அடுத்திருந்த வேட்டுவர்களுடன் போராட வேண்டியிருந்தது. போராட்டத்தில் வெற்றி பெற்ற வேளாளர்கள் தங்கள் குடியேற்றத்தை விரிவுபடுத்திக் கொண்டார்கள்.”                   “இந்தக் கதையில் ஒருவேளாளக் குடும்பத்தின் நில உரிமை நிறுத்தப்படுகின்றது; பகைவர்களுக்கெதிரான அவர்களின் போராட்டம் வருணிக்கப்படுகின்றது.”                   வலங்கை அணியில் கவுண்டர் சாதியினர் பலர் இக்கதையில் பேசப்பட இடங்கை அணியில் வேட்டுவரும் ஆசாரியும் மட்டுமே இடம்பெறு கின்றனர். அண்ணன்மாருக்கும் தாயாதிகட்கும் நடந்த போராட்டமாக இக்கதை இருந்தாலும் , பின்னணியில் இடங்கை வலங்கைப் போராட்டமாகவே பெரிதும் விளக்கம் பெறுகின்றது. இடங்கை, வலங்கை மாறுபாடுக்ள் சமுதாய வரலாற்று மெய்ம்மை. இது குடியேற்றம் பற்றிய தனித்ததொரு கதையைக் கூறுவதற்கு வேண்டிய பகைப் புலத்தை அளிக்கின்றது”                           பிரெண்ட பெக் , தாமாக முடிவு செய்து கொண்ட இருகோட்பாடுகளின்படி இக்கதையினை நோக்குகின்றார். கொங்கு வேளாளர் கொங்கு நாட்டில் குடியேறியவர்கள் என்றும் கதைத் தலைவர்களுக்கும் வேட்டுவர்களுக்கும் நடந்த சண்டை இனப்போராட்டமென்றும் அவர் முடிவுகட்டியமையால், கொங்கு நாட்டு வரலாற்றில் இடம்பெறாத இடங்க-வலங்கைப் போராட்டத்தை இக்கதையில் காணத் துணிந்துவிட்டார். அதன் காரணமாக வேட்டுவரை வலங்கை அணியினருக்கு மாறான இடங்கை அணியினர் எனக் கொண்டார். வலங்கை- இடங்கையினர் யார்?                     தமிழகத்தில் வலங்கை இடங்கைப் போராட்டம் பெரும்பாலும் நிலவுடைமையாளர்களுக்கு எதிராகக் கைவினைஞர்களும் வணிகர்களும் வேளாண்மையோடு தொடர்பிலாத பொருளுற் பத்தியா ளர்களும் நிகழ்த்திய போராட்டமேயாகும். நிலவுடைமையாளர்களும் வேளாண்மையைச் சார்ந்த பள்ளர் முதலியோரும் வலங்கைச் சாதியினராகவும் கைவினைஞர் வணிகர் முதலியோர் இடங்கைச் சாதியினராகவும் அணி திரண்டனர். வலங்கை இடங்கைப் போராட்டம் , பிற்காலச் சோழர்கள் காலத்திலும் தொடர்ந்து நாயக்க மன்னர்கள் ஆட்சியிலும் படையாளர்களாக இருந்த நிலவுடைமையாளர்களுக்கும் தொழில் வல்லுநர்களுக்கும் இடையே நடைபெற்ற போராட்டமே என்பது வரலாற்றறிஞர் கருத்து. (கே.கே.பிள்ளை, தமிழக வரலாறும் மக்களும் பண்பாடும். பக் 321-330. M. Arokia swamy. The Kongu Country, p 176.) வேளாளர் வலங்கையினர்,வேட்டுவர் இடங்கையினர் எனல் பொருந்துமா?                     கொங்கு வேளாளர் வேறெங்கிருந்தோ வழ்ந்து கொங்கு நாட்டில் குடியேறியவர்கள் என அம்மையார் முடிவு செய்துகொண்டமையால்தான் வேட்டுவரை இடங்கையினராகவும்  வேளாளரை வலங்கையினராகவும் வேறுபடுத்திக் காண வேண்டுவதாயிற்று.                    கொங்கு நாட்டு வேட்டுவருக்கும் வேளாளருக்கும் இடையே காணலாகும் ஒற்றுமைகள் பல. இந்நாட்டின் பழமையுடன் தொடர்புடைய அவ்வொற்றுமைகள் வேட்டுவர்- வேளாளர்களுக்கிடையே கூறப்படும் வலங்கை- இடங்கைப் பாகுபாடுகளை ஐயுறச் செய்கின்றன. இவ்விரு பிரிவினரையும் வேறு இனத்தவராகக் கொள்ளத் தேவையில்லை என வலியுறுத்தும் பொதுப்பண்புகள் இவ்விரு சமூகத்தினரிடமும் உண்டு.                       கொங்குநாட்டு வேளாளரும் வேட்டுவரும் கொங்கு நாட்டுக்கு உரிய பூர்வகுடிகளே; இவர்கள் வேறெங்கணுமிருந்து வந்து குடியேறியவரல்லர். இருசமுதாயத்தினரும் கொங்கு நாட்டுக்கு உரிமையுள்ள மண்ணின் மைந்தர்களாதலால் தமிழகத்தில் வேறெப்பகுதியிலும் வாழும் வேளாளருக்கோ வேட்டுவருக்கோ இல்லாத குலச்சின்ன அடையாளமுள்ள கூட்டப் பெயர்கள் கொங்கு வேளாளருக்கும் கொங்கு வேட்டுவருக்கும் உண்டு. கூட்டப் பெயர்கள் இருசமூகத்தினருக்கும் பொதுவாகவே உள்ளன.   வேளாளர்                                  வேட்டுவர்  அந்துவன்                                    அந்துவ வேட்டுவர் கீரன்                                          கீர வேட்டுவர் பனங்காடை                             பனங்காடை வேட்டுவர் குறுங்காடை                           குறுங்காடை வேட்டுவர். பதரை –                                     பதரை வேட்டுவர். மணியன்  -                           மணிய வேட்டுவர் பனையன்                              பனைய வேட்டுவர் புல்லன்                                  புல்ல வேட்டுவர் பூச்சந்தை                               பூச்சந்தை வேட்டுவர் வெளையன்                           வெளைய வேட்டுவர் மூலன்                                     மூல வேட்டுவர் கரையன்                            கரைய வேட்டுவர் இக்கூட்டப் பெயர்களில் காணப்படும் ஒற்றுமை இவ்விரு சமுதாயத்தின் முந்திய கால ஒற்றுமைகளைக் குறிப்பன வாகலாம். பண்பாட்டு ஒற்றுமைகள்                     கொங்கு வேட்டுவர் பாண்டிய புத்திர வர்க்கம் எனப்படுவர். கொங்கு வேளாளரில் பாண்டிய கூட்டத்தார் வேளாளருடன் ஒன்றிவிட்ட சமுதாயத்தினர் என்று கூறப்படுகின்றது.                   கொங்கு வேளாளரைப் பெருந்தாலி கட்டிகள் என்பர். கொங்கு வேட்டுவரும் வேளாளரைப் போன்றே பெருந்தாலியுடன் குலிசம் ஒன்றையும் சேர்த்து அணிவர்.                   கொங்கு வேளாளப் பெண்கள் மங்கலநாணாக ‘உட்கழுத்துச் சரடு’ என மஞ்சள் தடவிய நூலைக் கழுத்தில் அணிவர். தாலியைக் காட்டிலும் உட்கழுத்துச் சரட்டிற்கே பெருமதிப்புக் கொடுப்பர். காடுதோட்டங்களில் வேலை செய்யும் போது தாலியைக் கழற்றி வைத்து விடுவர். ஆனால் உட்கழுத்துச் சரடு எப்பொழுதும் கழுத்தில் இருக்கும். உட்கழுத்துச் சரடே மங்கல அணி. இப்பண்பு வேட்டுவப் பெண்களிடமும் உண்டு.                    ‘அப்பிச்சிமார்’ வேட்டுவரின் குலதெய்வம். கால்நடைகளைக் காப்பாற்றும் தெய்வம் ஆதலால். அப்பிச்சிமார் வேளாளருக்கும் உகப்பான தெய்வம். ‘அப்பிச்சி’ என்பது கொங்கு நாட்டில், தாய்வழிப் பாட்டனை அழைக்கும் முறைப் பெயராகும். வேளாளர், வேளாளரில் முதியோரை அப்பிச்சி என்று முறைவைத்து அழைப்பது வழக்கமென்றும் , இதனால் வேட்டுவருக்கும் வேளாளருக்கும் கலப்புகள் இருந்ததுண்டு என்றும் கூறுவர்.                          கொங்கு நாட்டில் முடமாகப் பிறந்துவிட்ட குழந்தைகளைப் பராமரிக்க ‘மொடவாண்டிகள்’ எனும் ஊழியச் சாதி உருவாக்கப்பட்டது. அச்சாதியினரை மரியாதையாக’ மொடவாண்டிக் கவுண்டர்கள்’ என அழைப்பர். தமிழகத்தில் வேறெங்கும் காணப்படாத இச்சமூகப் பாதுகாப்பு அமைப்பு கொங்கு வேளாளர் கொங்கு வேட்டுவர் இருவருக்கும் உரியதாகவே ‘மொடவாண்டிப் பட்டயம்’ கூறுகின்றது. இதுவும் இவ்விரு சமூகங்களின் பண்டைய ஒற்றுமையைக் குறிப்பதாகும்.(கொடுமுடி சண்முகம். (ப.ஆ. மொடவாண்டிப் பட்டயம், தேனோலை வெளியீடு, சென்னை )                       பெரும்பான்மையான கொங்கு வேளாளர்கள் முன்பு வேட்டுவர்களாக இருந்தவர்களே என்றும், “வேட்டுவரில் வேளாண் கரியனான மருதங்க வேளாண்’ என்னும் கல்வெட்டுத் தொடர், வேட்டுவர் வேளாளராக மாறும் நிலைமையினைத் தெரிவிக்கும் என்றும் எம். ஸ்ரீனிவாச ஐயங்கார் கருதுகின்றார். 9M.Srinivasa aiyangar, Tamil studies pp.62-63)                           இவற்றால் கொங்கு வேளாளரும் வேட்டுவரும் தொடக்கத்தில் ஓரினமாகவே இருந்தனர் என்று கருத இடமேற்படுகின்றது. ஒத்த குலமரபுச் சின்னங்களால் கொங்கு நாட்டு வேளாளரும் வேட்டுவரும் பெயர் பெறுதலால் இவர்தம் தோற்றமும் வளர்ச்சியும் வாழ்க்கையும் ஒரே இடத்தில் ஒத்த சூழ்நிலையில் இருந்திருக்க வேண்டும் என அறியலாம். வேட்டுவர் வாழ்க்கைநெறி வேளாளர்களின் பண்புகளைப் பெரும்பான்மையும் கொண்டிருத்தலினால் அவர்களையும் வலங்கையினராகவே கொள்ளுதல் வேண்டும். ஈரோடு வட்டம், வெங்கம்பூரில் உள்ள சோழீச்சுவர் கோவில் கல்வெட்டொன்று , “புல்லை வேட்டுவரில் வாணவதரையன் வலங்கை வாழ்வித்தனாய சுந்தர பாண்டிய வீரசிங்க தேவன்” (A.R.E. 236/1967-68) என்று வேட்டுவரை வலங்கையினராகவே குறிக்கின்றது.                          கொங்கு நாட்டு வரலாற்றில் வேட்டுவர்- வேளாளர் ஆதிக்கப் போராட்டமே அண்ணன்மார்சாமிகதை..                   முன்பு ஓரிடத்தில் அண்ணன்மாராகிய வேளாளருக்கும் வேட்டுவருக்கும் நடந்த சண்டை ஆதிக்கப் போராட்டமே; இனச் சண்டையன்று எனக் கூறப்பட்டது. வேட்டுவருக்கும் வேளாளருக்கும் இத்தகைய ஆதிக்கப் போராட்டம் பலகாலங்களில் பல இடங்களில் நடைபெற்றுள்ளன. (செ.இராசு. ‘கொங்கு நாட்டுச் சமுதாய வாழ்வில் வேட்டுவர் நிலை, தமிழ்நாடு மாநில வரலாற்றுக் கருத்தரங்கு, கட்டுரைத் தொகுப்பு, 1977)’                        கொங்கு வேளாளர்களப் போலவே, கொங்கு வேட்டுவர்களும் அவர்கள் பெரும்பான்மையராக வாழ்ந்த கொங்கு நாட்டின் வடக்கு, வடகிழக்குப் பகுதிகளில் நாட்டதிகாரம் உடையவர்களாகவும், அரசியல் தலைவர்களாகவும் செல்வாக்குடன் வாழ்ந்துவந்துள்ளனர். தமிழகத்தில் அவ்வப்பொழுது நிகழ்ந்த அரசியல் பொருளாதார மாற்றங்கள் கொங்கு நாட்டில் வேளாளர் –வேட்டுவர் உறவையும் பாதித்தன. அதனால் தாக்குதல்கலூம் எதிர்த் தாக்குதல்களும் அதிகார மாற்றங்களும்  கொங்கு – வேளாளர் வேட்டுவரிடையே நிகழ்ந்தன. இத்தகைய ஆதிக்கப் போரட்டங்களைக் கொங்குநாட்டுப் பட்டயங்கள் விரிவாகப் பேசுகின்றன.                           அண்ணன்மார் சாமிகதையில், கதைப்பாடகன் விரிவாகக் காட்டும் கொலை, கொள்ளைகளும் வேட்டுவரின் போர்த்தந்திரங்களும் சூழ்ச்சிகளும் கொங்கு நாட்டில் வேட்டுவர்- வேளாளர் ஆதிக்கப் போட்டியில் எங்கோ எப்போதோ நிகழ்ந்த நிகழ்ச்சிகளின் நினைவுகளே; அவற்றைக் கதைக்கு ஏற்றவாறு கதைப் பாத்திரங்களுடன் தொடர்புபடுத்திக் கதைப்பாடகன் கூறினான் எனக் கொள்ளுதல் பொருத்தமாகும்.    அரசியல் சூழலும்வேட்டுவர்-வேளாளர் ஆதிக்கப் போராட்டமும்                   அண்ணன்மார்சாமி கதை, கதைத்தலைவரின் முன்னோர் வரலாற்றைக் கூறும்போது,” துலுக்கான தேசத்தில் துருக்குப் பெருத்த” அக்காலத்தில் காராளர் பன்னிருவர் வாளவந்திப்பட்டணத்தில் வாழ்ந்தார்கள் என்கிறது. மேலும் சங்கரின் படையில் துலுக்கர்களும் மாறு பாஷைக்காரர்களும் பட்டாணி ராவுத்தன்மாரும் கன்னடியரும் பொந்திலியரும் இருந்ததாகப் பாடுகின்றது.                    துலுக்கர்கள் தென்னாட்டில் ஆதிக்கம் பெற்றது 13-14 ஆம் நூற்றாண்டுகளில்தான். துலுக்கர்களின் ஆதிக்கம் தென்னாட்டில் பரவாமல் தடுக்கக் கி.பி 15-ல் விஜயநகரப் பேரரசு தோன்றியது. விஜயநகர அரசு காலத்தில்தான் தமிழரல்லாத வேற்றுமொழி பேசுவோர் கொங்குமண்டலத்தில் பரவினர்.                   கொங்குநாட்டின் அரசியல் நிலைமையில் ஒரு குறிப்பிட்ட போக்கு எப்பொழுதும் இருந்துள்ளது. வெளிநாட்டார் இங்கு எத்தகைய அதிகாரத்தைச் செலுத்த முயன்றபோதும் உள்நாட்டு ஆட்சி அமைப்பு ஒரே நிலையாகத்தான் இருந்தது. வெளிநாட்டு அரசர்களும் இவ்வமைப்பை மாற்ற முயலவேயில்லை. 14-15-ஆம் நூற்றாண்டில் கொங்கு நாட்டின் அரசியலமைப்பைக் கோவை கிழார்.சி.எம். இராமச்சந்திரன் செட்டியார் பின்வருமாறு மதிப்பிடுகிறார்.                        “நாட்டின் அடிப்படையில் இருந்தது’ஊர்’ அல்லது ‘கிராமம்’.அதனை ஊர்த்தலைவன் கண்காணித்து வருவான். அவனுக்கு உதவியாக ஊர்ச்சபை ஆலோசனை கூறும். இவ்வாறேபலஊர்கள் உள்ள ஒரு நாட்டிற்கு நாட்டாண்மைக்காரன் முதன்மையாக இருந்துநடத்துவான். அவன் ஒழுங்காகஅரசனுக்குத் திறைகளைச் செலுத்தி விட்டால், பின்னர் யாதொரு கெடுதியும் நாட்டில் நேராது. … கொங்கு நாட்டில் 24 நாடுகளுக்கும்24 பட்டக்காரர்கள் இருந்தனர்.”                   பர்டன் ஸ்டீன் என்னும் அமெரிக்க அறிஞர் இந்நிலைமையை மேலும் விளக்குகின்றார். பிற்காலப் பல்லவர்- சோழர் ஆட்சியில் அதிகார மையம் (nuclear area)  பார்ப்பனர்-உயர்சாதி வேளாளர் ஆதிக்கத்துக்கு உட்பட்டு இருந்தது. மாவீரர்களும் இவர்களுடைய ஆதிக்கத்துக்குக் கீழ்ப்படிந்தவர்களாகவே இருந்தனர். இவ்வதிகார மையப்பகுதி காஞ்சி தஞ்சைப் பெருநகரங்களில் இருந்த உயர்குடியினரின் குடும்பங்களுடன் தொடர்புடையனவாக இருந்தது. உரிய காலத்தில் வரிசெலுத்துதல் ஒன்றே அவர்களுடைய கடமையாக இருந்தது. 14-15 நூற்றாண்டுகளில் முசுலீம் படையெடுப்பால் புதிய தற்காப்புத் தேவைகளின் காரணமாகப் பார்ப்பனர்- நிலவுடைமையாளர் அதிகார முதன்மை முறிவடைந்தது. அதிகார மையப் பகுதிகள் பகைவரைத் தடுத்து நிறுத்தப் போதுமான படைகளை வைத்திருக்கும் பெருவீரர்கள்பாற் சென்றது. அப்பெருவீரர்கள் தங்கள் ஆளுகைக்கு உட்பட்ட பகுதிகளைத் தாங்களாகவே உருவாக்கிக் கொண்டனர். விஜய நகரப் பேரரசு இவ்வாறு தாமாக உருவாகிய வட்டாரமையங்களுக்கு அங்கீகாரம் அளித்தது. வட்டார அதிகாரமையங்கள் சபைகளிலிருந்து மாவீரர்களுக்கு மாறியமை, அரசு அவர்களைத் தம் கட்டுப்பாட்டில் வைத்திருக்க இயலாத நிலைமையைத் தெளிவாகக் காட்டும். இவ்வாறு மாவீரர்கள் தாமாகப் படைத்துக் கொண்ட ஆட்சிப்பகுதிகளின் உள்விவகாரங்களில் பேரரசு தலையிடுவதில்லை. புதியதாகத் தோன்றிய வட்டார ஆட்சிகள் தனித்தனியே பேரரசுடன் தொடர்பு கொண்டிருந்தன, எனவே, இவற்றை ‘வட்டாரத் தனியரசு’ (segmentary states) என்றார் பர்டன் ஸ்டீன். இவை தம் அதிகாரதிற்கு உட்பட்ட பகுதிகளை விரிவுபடுத்த அவ்வப்பொழுது பூசலிட்டுக் கொண்டன; ஒருபகுதி மற்ற பகுதியில் கொலை, கொள்ளை ஆகிய பகைமைச் செயல்களில் ஈடுபட்டாலும், ஒழுங்காகப் பேரரசுக்கு வரிகள் செலுத்தப்பட்டு வந்தவரைக்கும் வட்டாரத் தனி அரசின் உறவுகளைப் பேரரசு கட்டுப்படுத்தவில்லை.(Burton Stein. Integration of the Agrarian Systems Of South India. Land control and Social Structures in Indian History. Pp175-216) அண்ணன்மார்சாமிகதையில் ‘வட்டாரத் தனியரசு’               கி.பி.15ன் பிற்பகுதியில் விஜயநகரப் பேரரசின் வீழ்ச்சிக்குப் பின் கொங்கு வேட்டுவரில்18 பங்காளிகள் கொங்கு நாட்டைத் தமக்குள் பங்கு போட்டுக் கொண்ட செய்தியைக் கீழைக் கலைக் கையெழுத்துப் பிரதி நூலகத்துச் சாசனம் கூறுகிறது.(D.No. 3139 of O.T.M. Library, Madras) அண்ணன்மார்சாமி கதையிலும் வேட்டுவரின் பதினெட்டு நாடுகளும் குறிப்பிடப்படுகின்றன.  எனவே, வேட்டுவர் பதினெட்டு இடங்களில் நாடாட்சி பெற்றிருந்தனர் என அறியலாம்.( ‘பதினெட்டு நாட்டுக்குத் தலையூர்க் காளி பாங்காகச் சீட்டெழுதி’)                 மேனாட்டுப் பகுதியிலும் அதனை அடுத்த சோழநாட்டுப் பகுதியிலும் குடியேறிய வேளாண்மக்கள் முதலில் ஆதிக்கப் போட்டியில் கலந்து கொள்ள விரும்பவில்லை. (‘அப்போது பொன்னாண்டார் அன்பாகச் சொல்லுகிறார், விளையாட்டுச் சண்டை யென்றல்-நாம்- விலகியே போய்விடுவோம்’). ஆனால், நிலவுடைமையாளராகிய வேளாளரின் செல்வமும் செல்வாக்கும் ஓங்க அவர்களில் வாள்வீரர்களாகத் திகழ்ந்தவர்கள் அரசின் கவனத்தை ஈர்த்தனர். வாள்வீரருக்கு அக்காலத்தில் இருந்த மதிப்பினைச் சோழர் பிரதானியிடம்  கூறியதிலிருந்து அறியலாம். (‘ இந்த திசையான சமூகமதில், நாடு விடுகிறதும் – அவர்களுக்கு – நலமான சீமையுந்தான், உப்பளந் தருவதும் உடனே அவர்களுக்கு, என்னுட, வமிசம் உள்ள மட்டும் அவர்களை –வைத்து- நடத்துறதும், களத்தூரு கம்பரசம்- அவர்களுக்கு- காணியாட்சி தந்தேன், கல்லடித்துத் தாரதும் சாசனம் கடுகியே இப்போது, வாரத்துக்குச் செலவு வகையுடனே சொல்லுகிறேன், மாம்பூண்டிக் குளமும் மானியம் விடுகிறது, எனக்குச் சரியான குலமானால் –என் சற்குணமான பெண்ணை, மூத்த குமாரத்தியை கல்யாணம் முடித்துத் தருகிறேன், இந்தப்படிக்கு பிரதானி எழுதுமென்றார் உத்தரந்தான்’)                  வாள்வீரராகிய அண்ணன்மாரை அழைத்துச் சிறப்புச் செய்து சோழர் நாட்டதிகாரம் அளிக்கின்றார். ஏற்கெனவே நாட்டதிகாரம் உடையோராகிய வேட்டுவருக்கும் புதிதாக நாட்டதிகாரம் பெற்ற வேளாளராகிய பொன்னர்- சங்கருக்கும் அரசியல் ஆதிக்கம் காரணமாகப் போராட்டம் ஏற்பட்டிருக்க வேண்டும். எனவே, அரசியல் ஆதிக்கப் போராட்டம் காரணமாக நிகழ்ந்த சண்டையின் அடிப்படையில் எழுந்ததே’ அண்ணன்மார் சாமி கதை’ என்பது தெளிவாகின்றது.                 மேலும், அரசியல் நிலைமைக்கேற்பப் புதிதாக ஆட்சி அதிகாரம் பெற்றுச் சமுதாயத் தகுதியில் உயர்நிலை பெற்ற வாள்வீரர்களின் மீது, ஏற்கெனவே நாடாட்சி செய்யும் ஊர்ச்சபையாருக்கு இருந்த காழ்ப்பும்கூட அண்ணன்மார் சாமி கதையில் வெளியாகின்றது. (  “சத்தியத்துக் குள்பட்டு பொன்னாண்டார் சம்மதித்து வாராரிப்போ, என்னுடைமை போச்சு – இனி என்செய்வேன் ஐயாவே, அந்த சபை நடுவே – தட்டான் – அழுதுமுறை செய்கையிலே, அந்தச் சபையார்தான் –அப்போது- ஏது சொல்வார்,ஏறின குதிரைவிட்டு – பொன்னர்- இறங்காமல் நிற்கிறவர், உன்னை மதிப்பாரோ- தட்டான் – உன்னுடைமை தருவாரோ”) அண்ணன்மார்சாமிகதையில் வேட்டுவத் தலைவர்கள்                கொங்குநாட்டின் நாட்டுத் தலைமை பூண்டு வாழ்ந்த வேட்டுவத் தலைவர்களை ‘வேட்டுவப் பட்டக் காரர்கள்’ என்பர். நாயக்க மன்னர்கள், இசுலாமியர், கிழக்கிந்தியக் கம்பெனியர் ஆடசிக் காலங்களில் வேட்டுவப் பட்டக்காரர்கள் பாளையக்காரர்களாக இருந்துள்ளனர். வேட்டுவப் பட்டக்காரர்களில் சாந்தப்பாடி வேட்டுவரும், தலையூர்ப் பட்டக்காரரும் அண்ணன்மார்சாமிகதையில் கூறப் பெறுகின்றனர். சாந்தப்பாடி வேட்டுவர்                  சாந்தப்பாடி வேட்டுவரை அண்ணன்மார்சாமி கதை, “மேனாடு கொடியரசு வேட்டுவரின் ராஜகுலம் சாந்தப்பாடி தனியரசு தளத்தில்  மிகுந்தவர்கள்” என்று கூறுகின்றது.’கொடியர்சு’, ‘ராஜகுலம்’, ‘தனியரசு’, ‘தனத்தில் மிகுந்தவர்கள்’ (தனம்- செல்வம்) என்ற சிறப்படைகள்,சாந்தப்பாடி வேட்டுவரின் சமுதாய உயர்வினைப் புலப்படுத்துகின்றன.              சாந்தப்பாடி வேட்டுவப் பட்டக்காரர், ‘தனத்தில் மிகுந்தவர்’ ஆதலால் தம்பொருள் மீது ஆசைப்படார் என நம்பித் தாமரையும் குன்றுடையானும் தம் பொருளை அவரிடத்திலே அடைக்கலமாக வைத்தனர். அவர் பணத்தைப் பறித்துக் கொண்டதுமல்லாமல், குன்றுடையானை நஞ்சு வைத்துக் கொன்றுவிட்டுத் தாமரையை வைப்பாட்டியாக்கிக் கொள்ளவும் நினைத்தார். தலையூர் வேட்டுவர்              தலையூர் வேட்டுவர் இக்கதையின் எல்லா வடிவங்களிலும் இடம் பெறுகின்றனர். அண்ணன்மாருடன் நேரிடையாக மாறுபடும் மேனாட்டு வேட்டுவர்கள் இவர்களே. இவர்களுடன் நடந்த சண்டையே அண்ணன்மார்சாமி கதையின் அடிப்படை நிகழ்ச்சியாக அமைகின்றது. நாட்டு வரலாற்றில் தலையூர் வேட்டுவர்.                         தலையூர் வேட்டுவத் தலைவர்கள் கொங்கு நாட்டு வரலாற்றி இடம்பெறத்தக்க சிறப்புடையவர்கள். தலைய நாடு, கொங்கு நாட்டின் 24 பிரிவுகளில் ஒன்று. தலைய நாட்டுக் காணியூர்  தலையூர். கொங்கு மேற்கரை நாட்டில் உள்ளது தலையூர். மேல்கரைத் தலைய நாட்டைக் கி.ப். 1379 முதல் வேட்டுவப் பட்டக்காரப் பரம்பரையொன்று ஏறக்குறைய 286 ஆண்டுகள் ஆண்டது. இவருள் முதற்பட்டக்காரர் நல்ல சிறுவ பெரியாக்கவுண்டர் என்பவராவர். இவரைப் பாண்டிய மன்னன் ஒருவன் பட்டக்காரராக்கினான். எனவே, சுந்தரபாண்டிய வள்ளல் பட்டக்காரர் என்றழைக்கப்பட்டார். ஒதிய அரசர்களை இவருடைய முன்னோரில் ஒருவர் கொன்றமையால் பாண்டிய வேந்தரால் சிறப்பிக்கப்பாட்டு மேல்கரைய தலைய நாட்டுப் பட்டக்காரர் என்ற உரிமையைப் பெற்றனராம்.                     தலையூரிலிருந்து ஆட்சி செய்த மற்றொரு சிறப்பு மிக்க பட்டக்காரர் ‘சுந்தர பாண்டிய தண்டெறி முத்துராஜா’ என்பவர். ‘தண்டெறி’ என்பதற்குப் பகைப்படைகளை விரட்டியடிக்கும் என்பது பொருள். இவர் குடும்பம் அற நெறியில் ஒழுகியதால் ‘அன்னதானக்காரர்’ எனப் புகழ்பெற்றது. இம்மரபினரின் பதினோராவது பாளையக்காரர் காலத்தில் இவர்களுடைய ஆட்சியிலிருந்த பாளையங்களை மைசூர் அரசர் கவர்ந்து கொண்டு சிறிது நஞ்சையும் புஞ்சையும் மகமையாக அளித்தார். இம்மரபினருள் ஒருவர் திப்புசுல்தான் காலத்தில் மீண்டும் பாளையக்காராக நியமிக்கப்பட்டாரென்றும், திப்புசுல்தானுக்குப் பின் கிழக்கிந்தியக் கம்பெனியாட்சியின்கீழ் இப்பாளையம் வந்த தென்றும் மக்கென்சியின் குறிப்புக் கூறுகின்றது. (T.V.Mahalingam.(Ed). Mackanzie Manuscripts, Madas Oriental Library) வரலாறும் கதையும் இயையாமை             மக்கன்சியீன் குறிப்புக்களை வைத்துப் பார்க்கும் பொழுது தலையூர்  வேட்டுவரும் வேட்டுவப்பட்டக்காரரும் நல்ல நாகரிக மிக்க பரம்பரையினர் என அறியலாகும். தலையூர்ப் பட்டக்காரர் பாண்டியராலும் மைசூர் உடையார்களாலும் திப்பு சுல்தானாலும் ஆதரிக்கப்பட்ட சிறந்த வட்டாரத் தலைவர்களாக விளங்கினர் எனவும் தெரிகின்றது. இத்தகையவர்களின் மரபில் வந்த தலைவரை, அண்ணன்மார்சாமிகதை பிறன்மனை விழையும் காமுகனாகவும், நம்பிக்கை கொல்பவனாகவும்  நாகரிகமற்றறவனாகவும் காட்டுகின்றது. வளநாட்டில் கொள்ளையடிக்கும் முயற்சிகளைக் கூறும்போது, வேட்டுவர்களை நாகரிகமற்ற காட்டுமிராண்டிக் கூட்டமாகவே கதைப் பாடகன் சித்தரிக்கின்றான். முறையான போர்ப் பயிற்சியில்லாத, பெருங்கூட்டமாக அலையலையாகச்  சென்று பகைவர்மேல் துடுமென விழுந்து தாக்குதல் ஒன்றையே போர்த் தந்திரமாகக் கொண்ட காட்டு மிராண்டிக்கூட்டமே வேட்டுவர்படை; அவர்கள் பரட்டைத் தலையர்கள், பம்பைத் தலையர்கள், நரைத்தலையர்கள், மொட்டைத் தலையர்களென அநாகரிகத் தோற்றம் உடையவர்கள்; அண்ணனென்றும் தம்பியென்றும் பாராமல் நம்பச் செய்து கழுத்தறுப்பவர்கள் ; தாய் பிள்ளைப் பாசம் அற்றவர்கள் என இவ்வாறெல்லாம் அண்ணன்மார்சாமி கதை வேட்டுவர் நிலையைச் சித்தரிக்கின்றது.                    இவ்வாறு வேட்டுவரைப் பற்றி அண்ணன்மார்சாமி கதை கூறுவனவெல்லாம் மக்கன்சீயின் குறிப்புக்களிலிருந்து அறிய வந்த செய்திகளுக்கு முரண்படுகின்றன.                    வேட்டுவர் வேளாளரிடம் பரிவும் பாசமும் காட்டிய நிலை அண்ணன்மார்கதையின் வேறு சில வடிவங்களில் காணப்படுகின்றது.                  பொன்னர்-சங்கர் கதையில், வேளாளனாகிய குன்றுடையான் வேட்டுவர் தலைவன் வீட்டில் அவர்களுடைய பிள்ளையாகவே வளர்கின்றான்.,தன் வளர்ப்புப் பெற்றோராகிய தலையூர்க் காளி தம்பதியரின் சம்மதத்தைப் பெறாமல், அவர்களுக்குச் செய்தியின்றியே மாமன் மகளை மணந்து கொண்டமையால் நன்றி கொன்றவனாகின்றான். வேளாளனாகிய குன்றுடையானை வேட்டுவர் தலைவர் தம்முடைய நாட்டில் குடியமர்த்திக் காப்பாற்றிய செய்தி குன்னுடையாக்கவுண்டர் வம்ச வரலாற்றில் இடம்பெறுகின்றது. கதைப்பாட்டில் வரலாற்றுக் கற்பனை.                    கதையின் பலவடிவங்களிலும் ஒன்றற்கொன்று மாறுபட்ட நிகழ்ச்சிகள் கதைப்பாடகனின் கற்பனையில் எழுந்தனவேயாதல் வேண்டும். அல்லது, எப்போதோ எங்கேயோ நிகழ்ந்த தனித்த சில நிகழ்ச்சிகளைக் கதைக்கு ஏற்றவாறு கதைமாந்தர்களுடன் தொடர்புபடுத்திக் கூறியதாதல் வேண்டும்.                         கதைப்பாட்டு வரலாறு அன்று. கதைப்பாட்டுப்பாடும் கலைஞனுக்கு வரலாற்றுண்மையைவிடக் கலைவடிவமே குறிக்கோளாக இருக்கின்றது. தன் படைப்பு நாடகப்பாங்காக இருக்க வேண்டும்; உணர்சிகரமாக இருக்க வேண்டும்; நம்பகத் தன்மையுடன் இருக்க வேண்டும் என்ற விருப்பத்தால் வரலாற்றில் இல்லாத மாந்தர்களையும் நிகழ்ச்சிகளையும் படைத்தல் உண்டு. உண்மையான மாந்தர்களுக்குக் கற்பனை நிகழ்ச்சிகளையும் யாரோ பிறருடைய செயல்களையும் ஏற்றிவிடுவதும் உண்டு. (C.M.Bowra. The Heroic Poetry. P.509) முடிவுரை            மேற்கண்ட சிந்தனைகளின் விளைவாகப் பின்வரும் முடிவுகள் உருவாகின்றன. 1. அண்ணன்மார்சாமி கதை வரலாற்றுண்மையைப் பதிவு செய்து எழுந்த வரலாற்றுக் காப்பியமன்று. 2. இது கொங்கு வேளாளரின் குடியேற்றத்திற்குச் சான்றாதாரம் ஆகாது. 3. இதில் இடம்பெறும் வேட்டுவர் –வேளாளார் சண்டை இனப்போராட்டம் அன்று. 4. அதிகார மாற்றத்தால் எழுந்த ஆதிக்கப் போட்டியே இக்கதையின் அடிப்படை நிகழ்ச்சியாகும். 5. இக்கதையைக் கூறுவோரும் கேட்போரும் பாடுவோரும் இனப்போராட்ட இலக்கியமாகவே கூறிக் கூறி இக்கதையின்மூலம் வேட்டுவர் வேளாளர் பிரிவினையை வளர்த்திவிட்டனர். 6. வேட்டுவருக்கும் வேளாளருக்கும் வேற்றுமைகளைக் காட்டிலும் பண்பாட்டு ஒற்றுமைகளே மிகுதி. 7. வேட்டுவருக்கும் வேளாளருக்கும் இனப்பண்பாட்டு ஒற்றுமைகள் மிகுதியாக இருப்பதால் , இக்கதையை வலங்கை இடங்கைப் போராட்டக் கண்ணோட்டத்தில் காண்பது பொருத்தமாகத் தோன்றவில்லை. 8. ‘அண்ணன்மார்சாமி கதை’ நடுகல் வீரவழிபாட்டுச் சடங்கிற்கு என எழுந்தது. இது சடங்குப் பாட்டாகையால் நேரான வரலாற்று நோக்குடைய தல்ல.                       5. வீரநிலைப் பாடல்கள் –அண்ணன்மார்சாமிகதை வீரநிலைப்பாட்டு’   காப்பியச் சாயல்கள்   இருவகைப் பண்பாடுகள்              சமூகப் பண்பட்டாய்வாளர்கள் மக்களின் கலை, இலக்கியப் பண்பாட்டுக் கூறுகளை இருவகையாகப் பிரித்து ஆய்வர். நகர்ப்புறம் சார்ந்த எழுத்தறிவு மிக்க மக்கள் பண்பாட்டினை ‘உயர்ந்தோர் பண்பாடு’ அல்லது ‘உயர்மரபு’ என்பர். நாட்டார் பண்பாட்டினைச் சார்ந்த வாய்மொழி மரபினைப் ‘பாமரர் பண்பாடு’ அல்லது சிறுமரபு’ என்பர். இவ்விரு பண்பாடுகளும் சமுதாயத்தின் உயர்வருக்கம், பாமரவருக்கம் என்ற சமூக அமைப்பின் அடித்தளத்தில் தோற்றம் பெற்று வளர்ந்து வருகின்றன. கல்வி செல்வம் சமூக மதிப்பு முதலியவற்றால் சிறப்புடையோர் பண்பாடு உயர்ந்தோர் பண்பாடாகவும் அவை அற்றோர் பண்பாடு பாமரர் பண்பாடாகவும் கொள்ளப்படுகின்றது.(Milton Singer. (Ed) Traditional India, Preface pp.10-12)         பண்பாட்டு அடையாளங்களான கலை இலக்கியங்களும் தத்தம் நிலங்களான இருவகைப் பண்பாடுகளைச் சார்ந்தே பிறக்கின்றன. உயர் கலை இலக்கியங்கள் உயர்ந்தோர் பண்பாடு அல்லது உயர்மரபினைச் சார்ந்தே தோற்றம் பெறுகின்றன. நாட்டார் கலை இலக்கியங்கள் பாமரர் பண்பாடு அல்லது சிறுமரபைச் சார்ந்தே தோற்றம் பெறுகின்றன.              இளங்கோவடிகளின் சிலப்பதிகாரம் உயர்மரபைச் சார்ந்ததெனில் ‘கோவிலன்கதை’ சிறுமரபைச் சார்ந்தது . ஒரே கதை இருமரபிலும் வெவ்வேறு வடிவம் பெறுகின்றது. கலை இலக்கியங்களான பண்பாட்டு அடையாளங்களின் வடிவ உள்ளடக்கங்களின் வேறுபாடுகளுக்கு அவற்றின் பிறப்பு நிலன்களான பண்பாட்டு மரபுகளே காரணம்                         சிறுமரபில் தோன்றிய இலக்கியங்கள் உயர்மரபு இலக்கியக் கூறுகளைக் கொண்டிருப்பதும் , பெருமரபில் தோன்றிய இலக்கியங்கள் சிறுமரபுக் கூறுகளையும் கொண்டு திகழ்தலும் உண்டு. சிறந்த எடுத்துக் காட்டு சிலப்பதிகாரம். இவ்விருமரபுகளும் தம்முள் கலந்து ஒரு தேசீயப் பண்பாட்டு மரபினை உருவாக்குதலைப் பண்பாட்டு ஆய்வாளர்கள் கணித்துள்ளனர். தமிழில்                  தமிழ்மொழி இலக்கிய வரலாற்றாய்வில் அண்மைக்காலம் வரையில் நாட்டுப்புற மக்களின்  இலக்கியங்கள் இடம் பெறவில்லை.  ஒரு மொழியின் இலக்கிய மரபுகளை முழுமையாக மதிப்பிட வேண்டுமாயின் இருமரபுகளிலும் தோன்றிய இலக்கியங்களையும் ஒப்பு நோக்குதல் வேண்டும். உயர் மரபில் தோன்றிய இலக்கியங்களுக்கும், இலக்கிய வகை களுக்கும் சிறுமரபின் பங்களிப்பை இக்கால ஆராய்ச்சியாளர் கண்டு உணர்த்தியுள்ளனர். அவ்வாறே, பெருமரபின் பாதிப்புக்களைச் சிறுமரபிற் றோன்றிய இலக்கியங்களில் காணலாம். இவ்வழி , தமிழிலக்கிய வரலாற்றில் விட்டுப்போன செய்திகளை நாட்டுப்புற இலக்கிய ஆய்வின் வழி நிறைவுசெய்யலாம்.(Krishna chaitnya. A history MalayAlam Literature. P5)                தமிழிலக்கியத்தில் ‘காப்பியம்’ எனும் இலக்கியவகை சிலப்பதிகாரத்தில் தான் முதன் முதலில் முழுமையாகக் கிடைக்கின்றது. தமிழில் ‘காப்பியங்கள்’ எனக் கூறப்படும் அனைத்தும் உயர்மரபில் தோன்றியவையே. உலகக் காப்பியங்களில் ஆதிக்காப்பியங்கள் அனைத்தும் சிறுபரபில் தோன்றி வளர்ச்சிபெற்றனவே. (இரா. காசிராஜன். உலகக் காப்பியங்கள். பக் 426, 22-31) தமிழிலும் சிறுமரபைச் சார்ந்த தொன்மை இலக்கியங்கள் இருந்துள்ளன எனும் உண்மையைத் தொல்காப்பியம் உணர்த்துகின்றது. (செய்யுளியல்சூ231) இன்றும் அத்தகைய இல்க்கியங்கள் உயிரோடு இருந்து வருகின்றன. அவற்றில் கொங்குநாட்டு வாய்மொழிக் காப்பியம் ‘அண்ணன்மார் சாமி கதையு’யும் ஒன்று. வாய்மொழிக் காப்பியம் (oral epic) , வீரநிலைப் பாடல் (Heroic Poetry) வகை விளக்கம்.                   “ வீர யுகம் “ என்னும் ஒருவகைக் காலகட்டத்தில் தோன்றிய இலக்கியமே “வீரநிலைபாட்டு” எனப் பொதுவாகக் கூறுவர். ஆனால், வீரநிலைப் பாடல்களை ஆராய்ந்த சி.எம். பவுரா, வீரநிலைப்பாடல்கள் இன்றும் உலகில் பற்பல இடங்களில் வழங்கி வருதலைக் கண்டறிந்து கூறினார். அவர் வீரநிலைப் பாடல்களைத் தொன்மையானவை, இக்காலத்தவை என இருவகைப்படுத்தினார்.                            சி.எம் பவுரா , “வீரநிலைப் பாடல்கள்” எனும் தம் நூலில் ஆய்ந்துள்ள ‘இக்கால’ வீரநிலைப்பாடல்களிற் பல சமகாலக் கதைப் பாடகர்களிடமிருந்து திரட்டப்பட்டனவாகும். இனக்குழுப் பண்பாட்டு மரபுகள் தேங்கியுள்ள சமுதாயங்களில் வீரநிலைப் பாடல்களைப் பாடும் கலை இன்றும் உயிரோடுள்ளது. பவுரா தாமறிந்த அளவில் இன்றும் இக்கலை வாழும் உலகநாடுகளின் பகுதிகளைக்  கூறியதோடு அமையாது, தாம் கூறிய பட்டியல் முழுமையான தன்று என்றும் இன்னும் அறிஞர்களால் பதிவு செய்யப் பெறாத வீரநிலைப் பாடல்கள் வழங்கக் கூடு மென்றும் கருத்துத் தெரிவித்தார். மேலும், இவ்வகைப் பாடல்கள் உலகில் எங்கு வழங்கினும் தமக்குள் பொதுவான ஒருவகை ஒழுங்கமைதியைக் கொண்டுள்ளன என்றும் அவர் விளக்கினார்.                    வீரநிலைப் பாடல், வாய்மொழிக் காப்பியம் இரண்டும் எடுத்துரை (Narration)  வகையைச் சார்ந்தனவே. கேட்போர் உளந்தோயும் வகையில் கதை கூறும் நெறியில் ஒரு தன்மையனவே. எனினும், வீரநிலைப்பாடல் தன் கண்ணோட்டத்தில் வேறுபடுகின்றது. அடிப்படையில் வீரநிலைப்பாடல்கள்  புறப்பொருட் பண்புடையனவாகும்.  வீரம், கொடை, போர் முதலிய புறப்பொருள் நிகழ்ச்சிகள் இவற்றில் தெளிவாக விளங்கும். புகழ்மீது நாட்டங்கொண்டு வாழ்ந்த வீரத் தலைமக்களின் வீறார்ந்த பண்புகளே இவற்றின் பாடு பொருள்களாம். வீரநிலைப் பாடல்களில் தலைவனின் ‘ மறம் வீங்கு பல்புகழ்’ பலவித சோதனைகளுக் குட்பட்டுப் புடம் போட்ட பொன் போல வெளிப்படும். வீரநிலைப் பாடல்களில் மானிடரே தலைமை இடம்பெறுவர். தெய்வங்கள் இடம் பெற்றாலும் மானுட மேம்பாடு மீக்கூறும் வீரச் செயல்களுக்கே வீரநிலைப் பாடல்களில் முதன்மையும் சிறப்பும் காணப்படும். மானுடத்தின் வெற்றியும் மானமழியாப் புகழையும் மேம்படுத்திப் போற்றும் நெறியில் வீரநிலைப் பாடல்கள் பிற கதைப்பாடல்களி னின்றும் வேறுபடுகின்றன. இப்பண்பின் காரணமாகவே இலியதம், ஒதிசியம் முதலாயின வாய்மொழிக் காப்பியங்களாக இருந்த போதிலும், அவற்றை வீரநிலைப் பாடல்கள் வகையில் பவுரா அடக்கினார்.                  வாய்மொழி வழிப் பரவும் கதைப் பாடல்களெல்லாம் வாய்மொழிக் காப்பியமே யெனினும்  வீரப்பண்பு தனித்தோங்கி மிளிரும் கதைத் தன்மையுடைய பாடல்களையே, ‘வீரநிலைப்பாடல்கள்’ எனப் பவுரா தனி வகையாகக் கொண்டார். தமிழில் வீரநிலைப்பாடல்கள்                  தம்முடைய ‘தமிழ் வீரநிலைப்பாடல்கள்’ எனும் நூலில் க.கைலாசபதி புறப்பொருளமைதி பொருந்திய சங்கத் தொகை நூற்பாடல்கள் ‘வீரநிலைப் பாடல்களே’ என்றார். வாய்மொழிப் பாடல்களின் இயல்புகளை ஆய்ந்த மில்மன்பரி, லார்டு, பவுரா , தாம்சன் முதலியோர் எடுத்துக் காட்டிய வாய்மொழி இலக்கியங்கலின் இலக்கணங்களைச் சங்கப் புறப்பாடல்கல் பெற்றுள்ளமையை அவர் விளக்கினார். ஓமர் பாட்டுக் கட்டுவதற்குப் பயன்படுத்திய அதே உத்தியைச் சங்கப் புலவர்களும் கையாண்டுள்ளனர் என்பதைச் சான்றுகளுடன் எடுத்துக் காட்டிச் சங்கப் புறப்பாடல்களும் ஓமரின் கவிதை வகையினைச் சார்ந்தனவே எனக் கூறினார்.                    சங்கப்புறப் பாடல்களை மில்மன்பரி, லார்டு, பவுரா ஆகியோர் கூறிய வாய்மொழிக் கவிதையில் அடக்கும் முயற்சியில் கைலாசபதி இரண்டு உண்மைகளைக் கவனத்தில் கொள்ளாமல் இருந்துவிட்டார்.                  மில்மன்பரியும் லார்டும் வய்மொழி இலக்கியமெனத் தம் நூல்களில் விளக்கியது, ‘காப்பியச்’ செய்யுளையே ஆகும். பலதுணைக்கதைகளும் , கிளைக்கதைகளும் பொருந்திய நீண்ட கதைப்பாடல்களியே அவர்கள் ‘வாய்மொழிக் காப்பியம்’ எனும் தொடரில் சுட்டினர்.                தமிழ்நாட்டில் இன்றும் வாய்மொழி வழியே வழங்கும் ’அண்ணன்மார் சாமி கதை’, ‘தேசிங்குராசன் கதை’, மதுரைவீரன் கதை’ போன்றனவே மில்மன்பரியும் லார்டும் கூறிய வகையில் அடங்கும்.                  புறப்பொருளில் அமைந்த சங்கப்பாடல்கள் பாட்டுடைத் தலைவனின் முன்னிலையிலோ அல்லது அவன் இறந்த பின்னோ குறிப்பிட்ட சூழ்நிலையில் எழுந்த குறும்பாட்டுக்கள் ஆகும். ஆனால், பரியும் லார்டும் விளக்கிய பாட்டுக்கள் திரளான மக்கள் கூடிய அவையின் முன்னர்ப் பலமணிநேரம் , பலநாட்கள் முன்னாயத்தம் ஏதும் இன்றிப் பாடும் காப்பியப் பாடல்களாகும். பொருளமைதியும் வடிவ அமைதியும்               சி.எம்.பவுரா ‘வீரநிலைப் பாடல்கள்’ என்ற தம்முடைய நூலில் ஆய்ந்த பாட்டுக்கள் வீரப்பொருள் அமைந்த வாய்மொழிக் காப்பியங்களே. அவற்றையே மில்மன்பரியும் லார்டும் ‘வாய்மொழிக் காப்பியங்கள்’ என ஆராய்ந்துள்ளனர். அவற்றைப் பொருள்நிலையில் பவுரா ‘வீரநிலைப்பாடல்கள்’ என்றார். பாட்டுக் கட்டும் நெறியில், புறவடிவில் லார்டும் மில்மன் பரியும் அவற்றை ‘வாய்மொழிக் காப்பியம்’ என்றனர்.                  வீரப்பண்பு நுதலிவரும் வாய்மொழிக் காப்பியங்களை வீரநிலைக் காப்பியம் எனலாம்.                  ‘அண்ணன்மார்சாமி கதை  வாய்மொழிக்காப்பியம், வீரநிலைக் காப்பியம் எனும் இருபண்புகளையும் ஏற்று விளங்குவது ஈண்டு கருதத் தக்கது. அண்ணன்மார்சாமி கதை- வீரநிலைக் காப்பியக் கதைப் போக்கு                      அண்ணன்மார்சாமி கதை வீரநிலைக் காப்பியமாவதற்குப் பின்வரும் அடிப்படையைக் கொண்டுள்ளது. 1. இக்கதை ,’மன்னர்’ என்றழைக்கப்பட்ட , மன்னரால் சிறப்புச் செய்யப்பட்ட , பெருங்குடியாளரான நிலவுடைமையாளரின் வாழ்க்கையை மையமாகக் கொண்டுள்ளது. 2. குடியேற்றம், இரு குடியினருக்குள் நீண்ட போராட்டம், அரசியல் ஆதரவு இன்னோரன்ன வட்டார வரலாற்று நிகழ்ச்சிகள் இதில் இடம்பெற்றுள்ளன 3. தெய்வீகத் தன்மை பெற்ற மாந்தர் கதையில் தலைமைத் தன்மைபெறுகின்றனர். தெய்வீகத் தன்மை பொருந்தியவரெனினும் மக்கட் பண்புங் கலந்து விளங்குவதால் , கதைத்தலைவருடைய வாழ்க்கையில் அறப் போராட்டம் நிகழ்கிறது. இப்போராட்டம் காப்பியச்சுவை அளிக்கின்றது. 4. தெய்வமாக வழிபடப் பெறும் காப்பியத் தலைவரின் நினைவுநாள் விழாவாகக் கொண்டாடப்படுகின்றது. வழிபாட்டில் இக்காப்பியக் கதை கூறுதல் வழிபாட்டுச் சடங்காக இடம் பெறுகிறது. 5. உலகெங்கும் எழுந்துள்ள வீரநிலைக் காப்பியத் தலைவர்கள் பண்புகளுடன் ஒப்பக் கூறத்தக்க பண்புநலன்கள் வாய்ந்தவராக இக்காப்பியத் தலைவர்களும் திகழ்கின்றனர். மூன்று தலைமுறை               ‘அண்ணன்மார் சாமி கதையில்’ மூன்று தலைமுறையினரின் வாழ்க்கை கதையாகப் படப்படுகின்றது.                  முதலில், அண்ணன்மாரின் பாட்டனார் கோலாத்தாக் கவுண்டரின் வாழ்க்கை இடம் பெறுகின்றது. ‘வடக்கே வடதேசம் வாளவந்திப் பட்டணத்தில்’ ஆலாத்தாக் கவுண்டரின் மக்கள் பன்னிருவரில் மூத்தவரான கோலாத்தக் கவுண்டர், பேராசை மிக்க தம் தம்பியரின் வஞ்சகச் சூழ்ச்சிக்கு அஞ்சித் தம் மனைவியையும் அழைத்துக் கொண்டு ‘வடதேசம்’ விட்டுத் ‘தென்தேசம்’ வருவதுவும்,காவிரி ஆறு கடந்து வருகையில் மதுக்கரைச் செல்லாண்டியம்மன் கோவில் மண்டபத்தில் மூவேந்தர்களைக் கண்டு , அவர்களுடைய பிணக்குத் தீர்த்து ,மணியத்துக்கு அதிகாரமும் நிலவுரிமையும் பெறுவதுவும் கதைப் பொருளாகின்றன.               இரண்டாம்பகுதி, கோலாத்தாக் கவுண்டரின் மகன் குன்றுடையான் வாழ்க்கையைக் கூறுகின்றது. ‘மங்கு மசையன்’ , ‘வெள்ளைச்சோளம்’ என வாழ்ந்த குன்றுடையான் பங்காளியரிடம் தன் சொத்துக்களை இழந்து ஆதரவற்றுத் திரிதல், தந்தையின் பண்ணையில் ஊழியம் செய்துவந்த தோட்டியின் துணையுடன் தன் தாய்மாமன் மகள் தாமரையை மணத்தல், அவளுடைய ஆற்றலாலும் தெய்வத்தின் துணையாலும் இழந்த செல்வத்தி மீட்டல், அவள் ‘அருந்தவம் செய்து, அம்பலத்துக்கு ஆணிரண்டும் அடிக்கிளைக்குப் பெண்ணும்’ பெற்றெடுத்தல், குன்றுடையான் மக்கள் பங்காளியரைப் பழி வாங்கல் என்பன இரண்டாம் பகுதியில் கதைப் பொருள் ஆகின்றன.                  மூன்றாவதாகக் குன்றுடையான் மக்கள் பொன்னர்- சங்கர் வாழ்க்கை வரலாறு இடம்பெறுகின்றது. அண்ணன்மாருக்கும் மேனாட்டு வேட்டுவர் தலைவன் காளியின் மக்களுக்கும் விளையாட்டுப் போட்டி தீராப் பகையில் முடிதல், பகைமைத் தீயைப் பங்காளிகள் மூட்டி வளர்த்தல், அண்ணன்மார் சோழமன்னனின் நம்பிக்கைக்கு உரியராகி நாடு காவல் பூணுதல், வேட்டுவர் தலைவனின் கையாளாகிய தட்டானால் பொன்னர் வஞ்சிக்கப்படுதல், வேட்டுவருடன் நடந்த போரில் வெற்றி சூடும் தருணத்தில் வஞ்சனையால் சங்கர் உட்பட அனைவரும் கொல்லப்படுதல், தம்பி கொல்லப்பட்டதை அறிந்த பொன்னர், எதிர்ப்பட்ட வேட்டுவர் அனைவரையும் அழித்துச் சங்கரித்துச் சங்கரின் படுகளத்தைக் கண்டு தம் உயிரை மாய்த்துக் கொள்ளுதல், தங்கையுடன் மூவரும் தெய்வமாதல், வீரப்பூர் வீரமலைப் பகுதிகளில் கோவில்கள் அமைதல் ஆகிய நிகழ்ச்சிகள் மூன்றாம் பகுதியில் இடம்பெறுகின்றன.                   மூன்று தலைமுறையினரின் வரலாறு கூறப்படுவதால் கோலாத்தாக் கவுண்டர் காலத்திலேயே கொழுந்துவிட்டு எரிந்த பங்காளிப் பூசல் குன்றுடையான் காலத்திலும் தொடர்ந்து வளர்ந்து, பொன்னர்-சங்கர் காலத்தில் வேட்டுவருடன் பகையாகத் திசைமாற்றம் செய்யப்பட்டுப் பெரும்போராக முற்றி இறுதியில் பேரழிவு விளைத்ததாகிய கதைப் பின்னல் தொடக்கம், வளர்ச்சி, உச்சம்,வீழ்ச்சி என்னும் நாடகப் பண்புகளையும் கொண்டு சிறப்புற இக்காப்பியக் கதை அமைந்துள்ளது. வட்டார வரலாற்றுத் தாக்கம்                     ‘அண்ணன்மார்சாமி கதை ‘ கீழ்க்கொங்குப் பகுதியில் நிகழ்ந்த சில உள் நாட்டு வரலாற்றுச் செய்திகளை அடிப்படையாகக் கொண்டது.  பொதுயுகம் 10ஆம் நூற்றாண்டு வரைக்கும் திருச்சிராப்பள்ளி மாவட்டத்தின் கரூருக்கு மேற்கில் இருந்த பகுதி மக்கள் நெருக்கம் குறைந்த வனப்பகுதியாகவே இருந்துள்ளது. இப்பகுதியை அண்ணன்மார்சமி கதை ‘மேனாடு’ என்று பேசுகின்றது. அரசர்கள் ஊக்குவித்தமையாலும் பயிர்த்தொழிலுக்குத் தேவையான நிலம் தாராளமாகக்கிடைத்தமையாலும் வேளாண்மக்கள் சோழநாட்டிலிருந்தும் பிற பகுதியினின்றும் காவிரிப்படுகைகளின் வழியே வந்து இப்பகுதியில் குடியேறினர். மேலும், சோழன் பூர்வ பட்டயம், மதுக்கரைப் பட்டயம் போன்ற வரலாற்றுச் சார்புடைய தொன்மரபு நூல்களும் அலகுமலைக் குறவஞ்சி என்னும் ஓதாளர் குறவஞ்சியும் இத்தகைய குடியேற்றங்களைக் கூறுகின்றன. அவை இக்குடியேற்றங்கள் நிகழ்ந்தபோது குடியேறியவரும் புதிய உரிமை பெற்றவர்களும் எவ்வாறு உள்நாட்டு வேட்டுவர் முதலான பழங்குடியினரின் எதிர்ப்பையும், அதனைத் தொடர்ந்த போராட்டங்களையும் சமாளிக்க வேண்டியிருந்தது என்பனவற்றையும் தெளிவாகப் பேசுகின்றன.               கரூரை ஒட்டிய பகுதியில் கோலாத்தாக் கவுண்டரின் குடியேற்றம் சோழ அரசரின் ஆதரவுடன் நடைபெற்றதிலிருந்து அண்ணன்மார்சாமி கதை தொடங்குகின்றது. அவர் பெற்ற நிலவுரிமையும் மணியங்கணக்குப் பதவியும் அடுத்துவரும் தலைமுறைகளில் ஊராட்சி, நாடுகாவல் என வளர்கின்றது.அவ்வளர்ச்சியினால் , மேனாட்டில், ‘கொடியரசு ராசகுலம் ‘ என விருதுடன் வாழ்ந்த வேட்டுவருடன் உராய்வு ஏற்பட்டது. அவ்வுராய்வே இவ்வீரநிலைக் காப்பியம் தோன்ற அடிப்படை. காப்பியத் தலைமக்கள்               காப்பியத் தலைமக்களைத் தன்னேரில்லாதவர்களாகவும் அருளாளராகவும் தெய்வத் தன்மை யுடையோராகவும் படைப்பது காப்பிய மரபு. இதிகாசங்களில்  தெய்வங்களே மானுட அவதாரம் எடுத்துக் கதை மாந்தர்களாகின்றனர். கதை மாந்தர்களின் முற்பிறப்புத் தொடர்ச்சியாகச் சில காப்பியக் கதைகள் அமைகின்றன. அண்ணன்மார்சாமி கதையும் இம்முறையில் தெய்வீக ஆற்றல் பெற்றவர்களை, முற்பிறப்புத் தொடர்ச்சியாகக் காப்பிய மாந்தர்களாகக் கொண்டுள்ளது. மகாபாரத நாயகர்களில் தருமனும் பீமனும்முறையே பொன்னர் , சங்கராகவும் அருச்சுன நகுல சகாதேவர்கள் மைத்துனமாராகவும் திரௌபதி தங்கை நல்லதங்கமாகவும் பிறந்தனர் என அண்ணன்மார்சாமி கதை பாடுகின்றது. பூபாரம் ஒழிக்கத் தோன்றிய மாபாரதப் போரில் இறுதியாகப் போரிட வந்த வேட்டுவருடன் ‘தாட்சிணை’யாகத் தருமர் சண்டையிடாததால், பாண்டவருக்கு இப்பிறவியும் இதில் ‘வேடுபலி’யும் நேர்ந்தது என இக்காப்பிய இயைபு கூறுகின்றது.      இறந்தார் வழிபாட்டுத் தொடர்பு                    வீரநிலைக் காப்பியங்கள் இறந்தார் வழிபாட்டுடன் தொடர்புடையன. வேட்டுவர் தலைவனான காளியுடன் நடைபெற்ற போரில் வீரமரணம் அடைந்த அண்ணன்மாருக்கும் நல்லதங்கத்துக்கும் அந்தப் போர் நடந்த இடமாகிய வீரமலைச் சாரலிலே  கோவில் உள்ளது. மாசித்திங்கள் சிவராத்திரி கழிந்த ஏழாம்நாள் இங்கே ‘படுகளம்’ என்னும் விழா இறந்துபோன அண்ணன்மாரின் நினைவாகக் கொண்டாடப்படுகின்றது. இவ்விழாவில் அண்ணன்மார் சாமி கதையைப் பாடுவது சிறப்புச் சடங்காக அமைந்துள்ளது. வீரநிலைப் பாடல்களின் தோற்றம்                  கதை தழுவிய வீரநிலைப் பாடல்கள் தோன்றுவதற்கு  முன் னோடியாக இயன்மொழி வாழ்த்தும் கையறுநிலைப் பாடல்களும் அமைந்தன என்பார்,பவுரா. செய்வினை முடித்த செம்மலின் முன்னிலையில் அவனுடைய வீறார்ந்த பண்புகளையும் செயலாண்மைத் திறத்தையும் பாராட்டிப் புகழ்வது இயன்மொழி வாழ்த்தாகும்.  தலைவனின் பண்புநலன்களைப் போற்றுவதில் இயன்மொழி வாழ்த்துப் பாடல்களைக் கையறுநிலைப் பாடல்கள் ஒக்குமெனினும் தலைவனின் இறப்புக்குப் பின்னர், ‘இத்தகைய பெரியோனை இழந்தனமே’ என்ற கையறுநிலையை வெளிப்படுத்துவதால் வேறுபடுகின்றன. கையறுநிலையில் புகழ்ச்சியைக் காட்டிலும் செயலற்ற நிலையில் தோன்றிய அவலச்சுவையே விஞ்சிக் காணப்படும்.                   இயன்மொழி வாழ்த்து, கையறுநிலை இவ்விரண்டின் பண்புச் செறிவுடன் வீரன் ஒருவனின் வரலாற்றைப் பாடும்பொழுது இவ்விரண்டின் வேறுபட்ட புதியதொரு வகையான இலக்கியம் உருவாகியது. இவ்விலக்கிய வகையில் பாட்டுடைத் தலைவனின் பிறப்பு வளர்ப்பு அவன் செயற்கருஞ் செயல்களாற்றிப் புகழ்விளைத்தல், மறைவு முதலிய புறப்பொருள்கள் கதைப் பின்னலுடன் பாடப்பட்டன.                  இனமரபுக்குழுவினர்களிடையே தோன்றிய வீரநிலைப் பாடல்கள் நிலவுடைமையாளர்கள் ஆட்சியாளர்களாகவும் குறுநிலமன்னர்களாகவும் வளர்ந்தபோது அவர்களுடைய குடிப்பெருமை, வாழும் அரண்மனை கோட்டைகொத்தளங்கள் படைபரிவாரங்கள்  படைக்கலன்கள் ஊர்திகள் போர்முறைகள் செல்வச்செழிப்பு இவை போன்றன பாடுபொருள்களாக அமைந்து வீரநிலைப் பாடல்களின் பண்பை விரிவுபடுத்தின. இவை வீரநிலைப் பாடல்களில் வீரனின் புகழைப் பாடப் புதிய சூழ்நிலைகளைப் படைத்துத் தந்தன.                  தன்னுடைய இன மேம்பாட்டுக்காகவும் நன்மைக் காகவும் பாடுபட்ட தலைவன் உயிர் நீத்தபின் , அவன்.அவ்வினக் குழுவினரின் வழிபடு கடவுளாகக் கருதப்பட்டான். அவர்களுடைய வழிபாடுகளிலும் , விழாக்களிலும் , சமயச் சடங்குகளிலும் அவனுடைய வீரச் செயல்களைப் பாடி வழிபடுவதற்குரிய கடவுளாகத் தலைவன் மாற்றம் எய்தினான். தெய்வ மாக்கப்பட்ட வீரனின் வரலாற்றைப் பாடும் பாணர்கள் தங்களைஆதரிக்கும் புரவலரின் மூதாதையரின்   வரலாறு மற்றும் பாட்டுடைத் தலைவனின் மரபில் தோன்றிய ஏனையோர் வரலாறு, பழங்கதைகள் முதலியவற்றையும் திரட்டித் தம் படைப்பில் பயன்படுத்துவாராயினர். இதனால்,வீரநிலைப் பாடல்கள் இயன்மொழி வாழ்த்தாகவும் கையறுநிலைப் பாடலாகவும் பின்னர்க் கடவுள் வழிபாட்டுச் சடங்குப் பாடலாகவும் பாடப் பெற்றன. நிலவுடைமையாளர்கள் காலத்தில் வீரநிலைப் பாடல்களாகவும் வீரநிலைக் காப்பியங்களகவும் மலர்ந்தன.          புராண இதிகசக் கூறுகளுடன் உயர்வு நவிற்சியும் மிகைக்கற்பனையும் பெற்று இவ்வகை இலக்கியம் சிறப்பு அடைந்தது.                  பவுராவின் இந்தக் கருத்துத் தமிழ் நாட்டார் காப்பியங்களில் அண்ணன்மார்சாமிகதைக்குச் சாலப் பொருந்தும்.                  ‘அண்ணன்மார்சாமி கதை’ , கதை என்ற பெயரில் இருந்தாலும் நூலின் தொடக்கத்தில், ‘வீரமலைப் பாரதம்’ என்ற பெயரையும் இதன் ஆசிரியர் கூறுகிறார். பெரியகாண்டி கதை, காராளர் கதை , அண்ணன்மார் கதை எனப் பல பெயர்கள் நூலுள் வந்துள்ளன. இப்பெயர்களை நோக்கும்போது அண்ணன்மாரின் வீர வாழ்க்கையே கதையின் அடிப்படை என அறியலாம். எனினும், அதனைத் தாய் தந்தையர் வரலாறு, மூதாதையர் வரலாறு முதலியவற்றுடன் புராணச் சாயலுடைய கதை யொன்றையும் சேர்த்து விரித்துக் காப்பியமாகப் பாடுவது ஆசிரியரின் கருத்து என்பது தெளிவாகின்றது.              பாரதப் போர் நிகழ்ந்த இடம் குருச்சேத்திரம் அது இந்துக்களுக்குச் சிறப்பான யாத்திரைத் தலம். அண்ணன்மார் வேட்டுவருடன் சண்டையிட்டு மாண்டு படுகளமாயது, வீரமலையில். அவர்கள் வீரமரணம் எய்திய இடத்தில் அவர்களுக்குக் கோயில் எடுத்து விழா நடத்தப்படுகின்றது. வீரமலையில் நடைபெறும் விழாவிற்கு  வேளாளர்கள் ஆண்டுதோறும்  திரளாகச் செல்கின்றனர். எனவே, வீரமலையின் பெருமையைப் பாட வீரமலைப் புராணமாக எழுந்தது, ‘வீரமலைப் பாரதம்’ எனப்படும் அண்ணன்மார்சாமி கதை.                    வீரமலைப் போரைப் புராணமாகப் பாடுவதற்கு வாய்ப்பாகக் காப்பியத் தலைவர்களின் கதையைக் கூறுவதற்கு முன் பெரியகாண்டியம்மன் கதை  இணைக்கப் பெற்றது.   தலபுராணச் சாயல்                   தமிழில் தலபுராணங்க ளெல்லாம் காப்பியங்களே. தமிழ்ப்புராணங்கள் பலவற்றிலும் மண்ணுலக நிகழ்ச்சிகள் விண்ணுலக நிகழ்ச்சிகளிலிருந்தே தொடங்குகின்றன. அவ்வாறே அண்ணன்மார்சாமி கதையில் பெரியகாண்டியம்மன் வரலாறு கயிலாயத்திலிருந்து தொடங்குகின்றது.                 திருவிளையாடற்புராணத்தில் காஞ்சனமாலை என்னும் பாண்டியப் பேரரசியின் விருப்பத்தை நிறைவேற்ற உமையம்மை தடாதகைப் பிராட்டியாராகத் திருவவதாரம் செய்ததாகத் தலபுராணக்கதை பேசுகின்றது. இவ்வாறே வேறு பலதலபுராணங்களும் இறைவி மண்ணுலகில் வந்து பிறந்த கதையைக் கூறுகின்றன. இக்கதைகளைப் போலவே பெரியகாண்டியம்மன் கதையும் கூறப்படுகின்ற்து.                  நாகமொன்றின் விருப்பத்தை நிறைவேற்ற இறைவி, ‘பாருலகில் பெரியக் காண்டி பாலகனாக’ ப் பிறக்கின்றாள். பூவுலகில் பிறந்த இறைவி இறைவனுடன் ஒன்று கூடக் காஞ்சியில் காமாட்சியகவும் ஆனைக்காவில் அகிலாண்டேசுவரியகவும் தவமிருந்ததுபோல, இறைவி, பெரியகாண்டியாக வீரமலையில் தவமிருக்கின்றாள்                    தவத்தின் பெருமையை உலகிற்கு அறிவிக்க இறைவன் இறைவியை அவ்வத் தலங்களில் சென்று வழிபாடாற்றித் தவம் இயற்றப் பணித்தல் அவ்வத் தல புராணங்களில் காணப்படும் செய்தி. வீரமலையின் சிறப்பை உணர்த்தும் வகையில் இறைவன், அண்ணன்மார்சமி கதையில், இறைவியிடம் தவம் இயற்றுவதற்கு வடநாட்டின் தகுதியின்மையையும் வீரமலையின் சிறப்பையும் கூறி இங்கே தவமியற்றும்படிப் பணிக்கின்றார். தவத்தைச் சோதித்தல்              இறைவியின் தவத்தை இறைவன் பலவழிகளிலும் சோதித்தல் தலபுராணங்களில் காணப்படும் செய்தியாகும். காமாட்சியின் தவத்தை இறைவன் கம்பையாற்றில் வெள்ளம் பெருகச் செய்தும் பேரூரில் முதியவனாக வந்து தம்மைத்தாமே குறைத்துப் பேசியும் சோதித்தார். அது போலவே, அண்ணன்மார்சாமி கதையில் பெரியகாண்டியின் தவத்தைக் காற்றோடு பேய்மழையை அனுப்பிச் சோதிக்கிறார்.   தவத்தின் இயல்பு                 வழிபாடும் வழிபாட்டுக்குபின் தியானமுமே சிறந்த தவமாகும் என்பது தமிழ்த் தலபுராணங்களிற் காணப்படும் கொள்கை. அம்மை இறைவனைக் குறித்துச் செய்த தவமாகக் காஞ்சிப்புராணம் , திருவானைக்காப் புராணம் , திருப்பேரூர்ப் புராணம் முதலியன பூசை, பூசைக்குப் பின் தியானமாகிய இவற்றையே கூறுகின்றன. பெரிய காண்டியம்மனின் தவமும் தலபுராணங்களுக் கேற்ற முறையில் இறைவழிபாடாகவே உள்ளது. தீபதூபங்களுடன் மணி, சங்கு, செயகண்டி முழக்கி மேனியெல்லாம் திருநீறு பூசி, வேங்கைப் புலித்தோல் ஆசனத்தில் அமர்ந்து மலர் தூவிப் பெரியகாண்டி அம்மன் வழிபாடு செய்கிறாள். பெரியகாண்டியம்மன் செய்த தவத்தைச் சிவபூசை, கைலாசபூசை, தெய்வ பூசை என்றே இக்கதைப் பாடகர் கூறுகின்றார். பூசைக்குப் பின் இறைவி , ‘நட்ட கண்ணும் விட்ட செவியுமாய்’ ஐம்புலனும் ஒன்றித் தியானம் செய்கிறாள். பாரதப் படிமம்              இந்திய இலக்கியங்களில் ‘தேவாசுர ராமாயண மாபாரதப் போர்கள் ‘ பெருமை வாய்ந்தன. இம்மூன்றிலும் ‘மாபாரதப் போர் மிகச் சிறப்பு வாய்ந்தது. ஏனெனில்,தெய்வமே முன்னின்று, ’பூபாரந் தீர்க்கக்’ குருகுலத்தாரைக் கருவியாகக் கொண்டு போரை விளைவித்தது. செயிர்த் தொழில் முதியோனான கூற்றுவன் , தேவாசுரப் போரில் பதினெட்டு ஆண்டிலும், இராமாயணப் போரில் பதினெட்டு மாதத்திலும் உண்ட உயிர்த் தொகையைப் பாரதப் போரில் பதினெட்டு நாளில் உண்டான். உயிரழிவின் கொடுமையை விளக்க வேண்டிய தேவை நேர்ந்த போதெல்லாம் தமிழிலக்கியங்கள் மாபாரதப் போரை எடுத்துக் காட்டின.              அண்ணன்மார்சாமி கதையும் வேட்டுவர் – வேளாளர் சண்டையைப் ‘பாரதப்போர்’ என்றே பாடுகின்றது. தாயத்தார் சண்டை                   மாபாரதப் போருக்கு அடிப்படையான காரணம் குரு வமிசத்தாருக்குள் தொடர்ந்து இருந்து வந்த பங்காளிக் காழ்ப்பு உணர்ச்சியேயாகும். பாண்டவர், கௌரவர் ஆகிய தாயத்தாரிடையே நிலவிய ஆதிக்கப் போட்டியே மாபாரதப் போராக முடிந்தது. அண்ணன்மார்சாமிகதையிலும் பங்காளிக் காய்ச்சலே இறுதியில் போராக முடிந்தது. கோலாத்தாக் கவுண்டர் காலத்தில் சிறுசெடியாக இருந்த பங்காளிக் காய்ச்சல், அடுத்து, குன்றுடையான் காலத்தில் மரமாகிக் காய்த்து மூன்றாம் தலைமுறையாகிய அண்ணன்மார் காலத்தில் பழுத்து வெடித்தது. இறுதியில் வேட்டுவர் – வேளாளர் போராக முடிந்தது. நிகழ்ச்சி ஒற்றுமைகள்                 ‘பாரத அமரில் யாவரையும் நீறாக்கிப் பூபாரம் தீர்க்கப் புரிந்த புயல்வண்ணனே’, வேட்டுவர் – வேளாளர் போரையும் தூண்டுகின்றான். தாமரை மகப்பேறு வேண்டித் தவமிருந்தபோது , இறைவர் பொன்னர்-சங்கர் பிறப்பார் என்று வரம் கொடுத்தார். இறைவர் ஆணைப்படி மாயவர் பாண்டவர் ஐவரையும் அழைத்துப் பூவுலகில் பிறக்குமாறு பணிக்கிறார். கயிலாய பதவி அடைந்திட்ட பஞ்சவர் , பூவுலகில் மீண்டும் பிறக்கக் காரணம் வேண்டுமே; அந்தக் காரணத்தையும் மாயவர் கூறுகின்றார். பாண்டவர்கள் முடிசூடிப் பாருலகம் ஆண்டுப் பரலோகம் வருமுன் வேட்டுவர்கள் , அவர்களுடன் போர் செய்ய வந்தனர் . அவர்களுடன் போர் செய்ய ‘வீரியமும் சவுரியமும் ‘ போதாமல் பாண்டவர்கள் சண்டையிடாமல் பரலோகம் சென்று விட்டனர். . எனவே, பாருலகில் பொன்னர்- சங்கர் பிறந்து, வேட்டுவருடன் போர் செய்து, முன்னைப் பிறவியின் குறை முடித்து மீளுமாறு மாயவர் பாண்டவரிடம் கூறுகின்றார். பாத்திர ஒற்றுமை – சகுனி                 மகாபாரதத்தில் சகுனி செய்ததை அண்ணன்மார்சாமி கதையில் ‘செக்கநத்தம் புலியூரு செம்பகுல ஆசாரி’ செய்கிறான். இப்பிறப்பே யன்றி இன்னும் ஏழேழ்பிறவி எடுத்தாலும் நிதியுடைய தருமரைப் படைப்போரில் வெல்லமுடியாது என்று துரியோதனனுக்கு உணர்த்திய சகுனி, ’தப்பறச் சூதுகொண்டு சதிப்பதே கருமம்’ என்று வழிகாட்டினன்.அவ்வாறே , தருமரை வஞ்சனையால் சூதாடச் செய்து அவமதித்துக் காட்டுக்கு விரட்டினான். அத்தகைய வஞ்சனையை அண்ணன்மார்சாமி கதையில் ‘செக்கநத்தம் புலியூரு செம்பகுல ஆசாரி’ செய்கிறான். . இப்பிறப்பே யன்றி இன்னும் ஏழேழு பிறப்பெடுத்தாலும் நீதியுடைய தருமரைப் படைப்போரிலே வெல்ல முடியாது’ என்று துரியோதனனுக்கு உணர்த்திய சகுனி, ‘தப்பறச் சூது கொண்டு சதிப்பதே கருமம்’ என்று வழிகாட்டினான். அவ்வாறே , தருமரை வஞ்சனையால் சூதாடச்செய்து அவமதித்துக் காட்டுக்கு விரட்டினான். அத்தகைய வஞ்சனையை அண்ணன்மார்சாமி கதையில் தட்டான் செய்கிறான். அண்ணன்மார் இருவரும் ஒன்றாக உடனிருக்கும்போது அவர்களை வெல்லுவது முடியாது என்று உணர்ந்த தட்டான் , வேட்டுவர் தரும் பொருளுக்காகப், பொன்னரை, ‘தந்திரத்தாலே சதி சூது செய்து ‘ தலை குனியச் செய்கிறான். வேட்டுவர் வெற்றிக்கு வாய்ப்பாகச் சங்கரைத் தந்திரமாகப் பொன்னரிடமிருந்து பிரிக்கின்றான். நச்சுநீர் உண்டுமடிதல்                   பொன்னர் வள நாட்டில் இல்லாத போது, வேட்டுவர் கொள்ளையிட வருகின்றனர். ‘பாரதம்’ தொடங்குகிறது. பொன்னரின் சொற்படிக்கு, முதலில், அத்தை பிள்ளை மைத்துனன்மார் மூவரும் எதிரிலாப் பெருமாளாகிய அருச்சுனன் தலைமையில் போருக்குச் செல்கின்றனர். வேட்டுவர்படையும் வேளாளர் படையும் மோதுகின்றன. வெற்றி பெற்று மீளும்போது, ‘ஆயனுடைய காரணத்தால்’ அவர்களுக்கும் படை வீரர்களுக்கும் நீர் வேட்கை உண்டகிறது.’தண்ணீர் தண்ணிர் என்பாரும் தாகவிடாய் ஆவாரும், மேனி மயங்குவாரும் விடாய் தாக்கி வீழ்வாரும்’ என, வேளாளர் படை வருந்தும்போது, ஆயனுடைய காரணத்தால், ‘மழைபெய்து மலைநாகம் செத்து, உரம்பேறி நச்சு நீர்க்கசிவு’ பெருக்கெடுத்து வருகிறது. அனைவரும் ‘நச்சு வாரி உண்டு நல்லுயிரும் மாண்டு விட்டார்’                   மகாபாரதம் வனபருவத்தில் துவைத வனத்தை அடைந்த பாண்டவர்களில் தருமரைத் தவிர ஏனையோர் அனைவரும் நச்சுப் பொய்கையில் நீருண்டு மடிந்ததை இந்நிகழ்ச்சி நினைவூட்டுகின்றது. கர்ணனும் பொன்னரும் ஒற்றுமை                தம்முடைய ஆற்றலை மதிக்காமல் மாறுபட்ட பகைவரை ஈவு இரக்கமின்றி அழித்தொழிக்கும் தறுகண்மை உடையவர்கள் வீரத் தலைமக்கள். ஆனால், பகைவர், ‘ஈயென ‘ அடி பணிந்து இரக்குவராயின் தம் இன்னுயிரையும் ஈயத் தயங்கமாட்டார்கள். அத்தகைய வள்ளன்மையையுன் வீரத்தையும் ஒருங்கே போற்றும் பண்பை மகாபாரதக் கர்ணனிடத்தில் காண்கிறோம்.                 பதினெட்டாம் நாட்போரில் அருச்சுனனின் படைகள் கர்ணனின் உடலைத் தொளைக்கின்றன. அவனுடைய தேர் பூமியில் அழுந்தியது. தருமம் அருச்சுனனின் கணைகளைக் கர்ணன்பால் செல்லும் திறமற்ற தாக்குகின்றது. கண்ணன் போரை நிறுத்தும்படிக் கூறிவிட்டு முதிய வேதியனாக வடிவு கொண்டு கர்ணனிடம் செல்லுகின்றான். அவன் செய்த புண்ணியம் அனைத்தையும் யாசிக்கின்றான். தன்னைக் காக்கும் புண்ணியத்தைத் தானம் செய்துவிட்டால் தனக்கு இறப்பு நேரும் என அறிந்திருந்தும் கர்ணன் , தன் நெஞ்சில் தைத்திருந்த அம்பினைப் பிடுங்கி எடுத்து நெஞ்சிலிருந்து கொட்டும் குருதியில் தாரை வார்த்துத் தன் புண்ணியம் அனைத்தையும் தானம் செய்கின்றான். அவன் செய்த புண்ணியம் அனைத்தையும் கண்ணன் அங்கையில் ஏற்கின்றான். ஈகையால் உயிர் துறக்க நேரிட்டபோதும் கர்ணன் தன் ஈகைக்கொள்கை வழி நின்று புகழ் பெற்றான்.             இந்த முனைக் கருத்தைக் கதைப்பாடகர்  அண்ணன்மார்சாமி கதையில் அழகாகக் கையாண்டுள்ளார்.              பொன்னர், ‘மேனாட்டு வேடுவர்கள் எழுபது வெள்ளம் அணியணியாய்ப் போர்ப்படையைத் துணிதுணியாய்’ வெட்டி வருகிறார். வேட்டுவர் குடியே இல்லாதொழியும் நிலை ஏற்படுகிறது. அந்நிலையில், மொண்டிப்புல வேட்டுவன் என்ற தலைவன் வேண்டிக் கொண்டதனால் , பொன்னர் தாம் வெட்டிய கருவுகளையெல்லாம் தழைக்கும்படி அருளி மதுக்கரை வழி வருகிறார்.                அப்பொழுது, மாயவ்ர் புலவர் ஒருவரைப்போல வந்து, பொன்னரின் வீரியத்தைப் பாராட்டிப் புகழ்ந்து பாடுகின்றார். ‘என்ன வெகுமதிகள் வேண்டும் புலவனாரே’ ,எனப் பொன்னர் வினவுகின்றார். புலவனாக வந்த மாயவர், ‘கடதாரம் முடதாரம் கண்டசரம் போன்ற வெகுமதிகளைப் பிறர் ஏற்கெனவே தமக்கு அளித்துவிட்டமையால் ‘தலையில் மிகப்பதிந்த தங்கக் கிரீடத்தை த் தந்தாலே எம்மனது சம்மதமாகும்’ என்று இரக்கின்றார். இந்நிகழ்ச்சியால், தம்முடைய ஆயுட்காலம் நிறைவுற்றதை அறிந்து கொண்ட பொன்னர் சினம் நீங்கி மன அமைதி பெறுகின்றார். உயர்பண்பாட்டுக் கூறு                   தமிழகத்தில் மரபுவழிக் கதைப்பாட்டு நிகழ்த்துவோர் அகில இந்தியச் செல்வாக்குப் பெற்ற இராமாயண பாரதக் கதைக் கூறுகளைக் கூறுவதிலும் வல்லுநராக உள்ளனர். வட்டார மரபில் புதிய கதைகளைப் படைத்துப் பாடும்போது தம் புதிய கதைகளுக்குச் செல்வாக்கும் மதிப்பும் உண்டாக, இதிகாசக் கதைமாந்தர்களைத் தம்முடைய கதைமாந்தர்களாகப் படைத்துக் கொள்வதும் உண்டு   இந்த மரபில் படைக்கப்பட்டமையால் அண்ணன்மார்சாமி கதையில் தலபுராணச் சாயல் , பாரதப்படிமம் முதலிய காப்பியப் பண்புகள் பெருமரபினைத் தழுவி அமைந்துள்ளன. தலபுராணம் பாடிய புலவர்கள் தம் ஊர்க்கதைகளை எல்லாம் சிவனொடும் திருமாலோடும் சேர்த்துவிடுவர். அதுபோல, அண்ணன்மார்சமி கதையினைப் பாடிய பிச்சன் கவி, இதனைப் பாரதத்துடன் இணைத்துவிட்டார். இதனால் இக்கதையின் பிற வடிவங்களான பொன்னழகர் அம்மானை என்னும் கள்ளழகர் அம்மானை, குன்றுடையன்வம்ச வரலாறு ஆகியன வெறும் கதைப் பாட்டாக இருக்க ‘அண்ணன்மார்சாமி கதை’ புராணக் காப்பிய வடிவில் அமைந்திருத்தலைக் காண்கிறோம். வீரப்பண்புகள், தலைமைப் பண்புகள்                காப்பியங்களில் பொதுவாக மூவகைத் தலைமைப் பண்புகள் பேசப்படுகின்றன. அவையாவன: 1) வீரத்தலைமை. 2) அறத்தலைமை. 3) அறிவுத் தலைமை.                  வீரத்தலைமகன் குடிப்பெருமை, மறன் இழுக்கா மானம், அறஞ்சார்ந்த சினம் இவைபோன்ற பண்புகளை உடையவன்.  இவன் தன் உடல்வலிமையையும் படைக்கலன்களைக் கைகயாளுந் திறத்தையும் போற்றுபவன். போர் வீரமுடைய தலைவன் வாழ்க்கையில் தனக்கு வரும் இடையூறுகளைக் களையத் தன் உடல் வலிமையையும் போராற்றலையுமே நம்புகிறான்.                    அறத்தலைவன் உடல், படை வலிமைகளைக் காட்டிலும் தன் ஆன்மீக பலத்தையே பெரிதும் போற்றுபவன். ஆன்மீக பலத்தைக் காட்டிலும் அறிவாற்றலை இழிந்ததாகவே கருதுவான். அறிவாற்றல் சூழ்ச்சியாகவே இவனுக்குத் தோன்றுகிறது. அறச் சிக்கலில் உயிர், உடைமை அனைத்தையும் இழக்க நேரிட்டாலும் அறத்தைத் துறக்காதவரே உண்மையில் வீரராவர் என்பது இத்தகையோர் கருத்து.                “நிறப்பெரும் படைக்கலம் நிறத்தின் நேருற                 மறப்பயன் விளைக்குறும் வன்மை அன்றரோ                இறப்பினும் திருவெலாம் இழப்ப எய்தினும்                துறப்பிலர் அறமெனல் சூரராவதே”                                            (கம்ப இராமாயணம் தைலம். 563) இது இராமனுக்குச் சுமந்திரன் கூறிய அறவுரை.                   அறிவுத் தலைமை வாய்ந்தவன், “புத்தியே சகல சத்தியும்” எனத் தன் அறிவாற்றலையே நம்புபவன். இவனுக்கு அறிவே அற்றங்காக்கும் கருவி. ‘சாணக்கியத்தனம்’ எனப்படும் இப்பண்புடையவர்கள் வாழ்க்கையில் முன்னேறவும் செல்வம் அடையவும் தம்முடைய குறிக்கோளை அடையவும் தம்முடைய அறிவு காட்டும் வழியில் செல்வரே அன்றி அச்செயல்களில் அல்லது அறிவு காட்டும் சூழ்ச்சிகளில் அறநெறியும் ஆன்மீகமும் குறுக்கிட அனுமதிப்பதில்லை.                 சான்றோர் இலக்கியங்களில் இம்மூவகைத் தலைமைப் பண்புகளும் விரவி இருப்பினும் போர் வீரமும் அறிவு வீரமும் ஆன்ம வீரத்துக்கு அடங்கிய நிலையில்தான் காணப்படும். தனித்த போர் வீரமோ அறிவுத் தலைமையோ போற்றப்படுவதில்லை. நாட்டுப்புறக் காப்பியங்களில்                   பாமரக் கதைப் பாடகனின் படைப்புக்களில் சான்றோர் இலக்கியங்களில் காணப்படுவதுபோல அறம் ஆன்மீகம் ஒழுக்கநூல் கோட்பாடுகளின் தாக்கம் அதிகம் காணப்படுவதில்லை. இத்தகைய கருத்துக்கள் சில அவன் படைப்பில் காணப்படின் அவை பெரும்பாலும் ஆன்மீக அறநூற் பயிற்சியால் பெற்றதாக இருக்க முடியாது. அவன் வாழ்கின்ற சமுதாயத்தின் உணர்ச்சிகளே அவன் படைப்பில் வாழ்வியல் கோட்பாடுகள் ஆகின்றன.                  அண்ணன்மார் சாமி கதைத் தலைமைப் பாத்திரங்களைப் புரிந்து கொள்ள இப்பாகுபாடு இன்றியமையாதது. செவ்விலக்கியங்களில் தலைமைப் பண்பை அளக்குங் கருவிகள் இங்குப் பயன்படா.                 அண்ணன்மாரின் பாட்டனார் கோலாத்தாக் கவுண்டர் காலத்தில் உழுதுண்டு கால்நடையோம்பி வாழ்ந்த குடியினர் , இரண்டு தலைமுறைகளில் வலிமை வாய்ந்த நிலவுடைமையாளர்களாகவும் அரசரால் சிறப்புச் செய்யப்பட்ட நாடுகாவலராகவும் நாடாள்பவராகவும் வளர்ச்சி எய்துகின்றனர்.                    இவ்வாய்மொழிக்காப்பியம் அண்ணன்மாரின் வீரப் பண்போடு அவர்களுடைய உயர்குடிப் பிறப்பையும் கூறியே அவர்களுடைய தலைமைத் தகுதியைப் பாடுகின்றது.                    தலைமைப் பண்பும் தூய வீரமும் ஆற்றலும் பழிக்கஞ்சும் மானமும் உயர்குடியில் பிறந்தவர்களுக்கே உரியனவாக வீரநிலைக் காப்பியங்கள் பேசுகின்றன. வீரத்தலைமக்களைப் பாடும் கதைப் பாடகர்கள் அவர்களுடைய குடிமரபு, செல்வச்செழிப்பு, தறுகண்மை,பெருமிதம் , கொடை மற்றும் இவை போன்ற உயர்குடிப் பண்புகளைப் பாடத் தவறுவதில்லை.               பிச்சன்கவியும் அண்ணன்மாரின் உயர்குடிப் பண்பினைச் சிறக்கப் பாடுகின்றர். அண்ணன்மார் வட்டாரத் தலைவர்கள்; சிவசோழரின் நாட்டுக்குக் காவல் பொறுப்புப் பூண்டவர்கள்;கங்கை குலத்தவர்; சிவகோத்திரத்தவர்கள்; இவர்கள் பிறந்துள்ள காராளகுடியினர் வஞ்சனை அறியாதவர்கள்; சூதுவாது அற்றவர்கள்; கொடுக்கத் தயங்காதவர்கள்; அவர்கள் சொல்லும் பிழையாது, வாளும் பிழையாது; பொறுமையிலும் பெரியர், போரிலும் பெரியர்.         அண்ணன்மார் ,’ மாடுகட்டித் தாம்படித்தால் மாளாது என்றுசொல்லி, ஆனைகட்டித் தாம்படிக்கும் அழகுபொன்னி வளநாட்டுக்குத்’ தலைவர்கள். அவர்கள் வளநாட்டில் பத்துச் சுற்றுக் கோட்டை கட்டி வாழ்ந்தனர். அங்கு,’அரக்குத் திருமாளிகையும் அபரஞ்சிக் கோட்டைகளும் வெள்ளிப்படி பொன்னுப்படி போதவே தானிருக்கும்”.          கோட்டையிலெ தங்கைக்குத் தனி அரண்மனையுண்டு. அந்த அரண்மனை பத்துத்தளம் கொண்டது. ‘சீவி வழித்துச் சித்திரமும் தானெழுதி’ இருக்கும். சாளரங்களுக்கு விளமிச்சைத் திரையிடப்பட்டிருக்கும்.                                        பத்தாந்தளத்தில் பவழக்கால் மண்டபம் அமைந்துள்ளது. அதில்,’அன்னஊஞ்சல்,பொன்னூஞ்சலும், அதன்மேல், அரியதொரு தூங்கு மஞ்சமும், அத்தூய மஞ்சம்மேல் அஞ்சடுக்குப் பஞ்சுமெத்தையும்’ அதன்மேல் தூளிமெத்தையும் ‘ அமைந்திருக்கும். இந்தச் சொகுசு மஞ்சத்தில் உறங்கிக் கனவு கண்டே தங்கை அண்ணன்மாருக்கு வரும்பொருள் உரைத்தாள்.                      கோட்டை பகைவரால் அணுக முடியாத உயரமும் வலிமையும் உடையது. கோட்டையின் இந்தப் பண்பினை, பத்துச் சுற்றுக்கோட்டை பாம்பேறா மண்டபமும், ஏழுசுத்துக் கோட்டை எறும்பேறா மண்டபமும்’ என்று கூறப்படுகின்றது. கோட்டையில் ஆனைலாயம் குதிரைலாயம் பலவுண்டு. வேளாளர் தெரு செல்வச் செழிப்புடன் இருக்கும்.                 ‘காராளர் வீதியென்றால் அதில் கணக்கு வழக்குமில்லை, வேளாளர் வீதியென்றால் வெகுதூர மயிருக்கும்’ பலசாதியினருக்கும் தனித்தனித் தெருக்கள் இருந்தன. ‘செட்டிமார்கள் தெருவும் சேணியர்கள் தம்தெருவும் பார்ப்பர் அகமும் பந்திபந்தி யாயிருக்கும். பலபட்டறைத் தெருவும் பாங்காகத் தானிருக்கும்’.                    ஐந்துக்கு இரண்டு பங்கு மேல்வாரம் வசுலிக்கப்படும். ‘வாரமிடுவோரும் பழங்கணக்குப் பார்ப்போரும்’ என அரண்மனைத் தெருவில் மக்கள் குழுமியிருப்பர்.                   அண்ணன்மார் ‘கட்டின ஏர்க்கைந்து பணம் கடமை’ விதித்து ஆண்டனர். அவர்கள் காவலிலே களவு இல்லை; குடிமக்கள் அனைவரும் நல்லவராகவே வாழ்ந்தனர்.பகைமை யின்றி மக்கள் அன்பு கலந்து வாழ்ந்தனர்.                   காட்டு வழியில் தனியாகத் தன்னுடைய நாட்டுக்குச் செல்ல அஞ்சிய சோழப் பிரதானியிடம் பொன்னர், தன் பெயரைச் சொல்லி, இருகையிலும் பொன்னேந்திச் சென்றாலும் தீங்கு நேராது எனத் தன் நாடு காவல் திறத்தைப் பெருமையுடன் கூறுகின்றார்.                 பொன்னரின் நாடுகாவல் திறத்தால், வருவாய் இழந்த வேட்டுவப் பெண்கள், ‘கரிகாலன் சீமையெல்லாம் பொன்னர் காவல் கொண்டநாள் முதலாய், நாம், மஞ்சள் குளிக்க மறந்தோம் வயிற்றில் கருவிழந்தோம்’ எனக் கலங்குகின்றனர். அணிகலன்கள்                    சமுதாயத்தில் தலைமக்களின் செல்வத்தைக் கண்ணுக்குப் புலனாகக் காட்டுவன, அவர்கள் அணிகின்ற ஆடை அணிகலன்களே. எனவே, கதைப் போக்கில் தலைமக்களின் தலைமைத் தன்மைவெளிப்படும் செயல் நிகழ்த்தும் போதெல்லாம் அவர்கள் அணிந்திருந்த ஆடை அணிகலன்களின் சிறப்பைத் தவறாமல் கதைப்பாடகர் பாடுவது அவர்களுடைய நெறியாக இருக்கின்றது. அண்ணன்மார்சாமி கதையிலும் இந்த மரபினைக் காண்கிறோம்.               வேட்டுவருடன் ‘சாவல் கட்டுச் சண்டைக்கு’ப் போகும்போது அண்ணன்மார் இருவரும் அந்த நிகழ்ச்சிக்கு ஏற்றவாறு தம்மைப் புனைந்துகொள்கின்றனர்.                 ‘சாவல்கட்டுச் சண்டைக்கு –அண்ணர்- சதிராய்ப் பயணமென்று                 அண்ண ரிருவருந்தான் அத்தர்பன்னீர் மிகப்பூசி                  சாந்து புனுகு -பொன்னர்சங்கர்- சவ்வாது மேபூசி                   மார்பு நிறைந்தண்ணர் வச்சிரமணித் தாவடமும்                  இடுப்பில் நிறைந்த இயல்பான சோமன்கட்டி                     சிரசில் உருமாலை சீக்கிரமாய்க் கட்டி’ இவ்வாறு அலங்கரித்துக் கொண்டு செய்த சேவல்கட்டு சண்டைதான் வேட்டுவர் பகைமைக்கு வித்திட்டது.                   அண்ணருடன் பிறந்த அருக்காணி நல்லதங்கம்,பெற்றோரை இழந்த தன் தனித்துயரம் நீங்குவதற்குத் தான் விளையாடக் கிளி புறா வேண்டுமெனக் கேட்கின்றாள். அவளுக்காகச் சங்கர் வேட்டையாடிப் பறவைகளைக் கொண்டுவரும் நிகழ்ச்சி இக்கதையில் முக்கியமானதொரு கட்டமாகும். இந்த வேட்டையின்போது சங்கர் வேட்டுவரின் வேங்கைப் புலியைக் கொல்கிறார். இந்த நிகழ்ச்சி வேட்டுவரின் பகையைக் கிளறி விட்டதோடு, சங்கரின் ஆற்றலையும் வெளிப்படுத்தியது. கதையில் இந்த நிகழ்ச்சியின் சிறப்பை உணர்த்தும் வகையில் வேட்டைக்குப் புறப்பட்ட சங்கரின் அலங்காரப் புனைவு வருணனையும் அமைந்துள்ளது.                     “அரண்மனையின் உள்புகுந்து ஆனபேழை தானெடுத்து                    ஆடை விரித்தெடுத்து -அலங்காரமாய்- விரித்துக் கட்டி                    பூட்டினார் பனுதிகளைத் – தன்னுடைய – பொன்னுந்திருமேனியிலே                                                                                               மார்பு நிறைந்ததொரு வைரமணித் தாவடமும்                   மாணிக்கம் பதித்ததொரு மார்பில் பதக்கமிட்டு                     முத்துபதித் ததுவாம் மோகன மாலையிட்டு                         முத்தால் அலங்கரித்த முழுநீலத் தாவடமும்                       பச்சைக்கல் வச்சிரமும் பதித்த கடுக்கனிட்டு                       பத்து விரலுக்கு பசும்பொன் கணையாழி                      எட்டு விரலுக்கும் இசைந்த கணையாழி                      கடதாரம் முடதாரம் கண்டசரம் பூட்டியேதான்                      தங்கத்தால் இழைத்த சருகுவார்த்த நிசாருடுத்து                    அல்லிக் கயிறெடுத்து அலங்கார மாய்ப்பூட்டி                    வண்ணக்கச்சை தானெடுத்து – அதை – வாகாய் வரிந்து கட்டி                   எண்ணெய்க்கச்சை தனெடுத்து – அதைப்- பாங்காய் வரிந்து கட்டி                    ஒட்டியாணம் பூட்டெடுத்து ஒருநொடியில் தான்பூட்டி                    எட்டுக்கட்டி போட்டடித்த இரணங்கண்ட மந்திரவாள்                      இரணங்கண்ட மந்திரவாள் – அதை – இதமாய் வரிந்துகட்டி                      வாரி வலையெடுத்தார் வீரமலைவனத்தில் –வீசி-வலைபோட”             அண்ணன்மார்சாமி கதையில் சங்கர் வேட்டுவரின் வேங்கைப் புலியைக் கொல்லும் நிகழ்ச்சியின் முக்கியத்தைக் கருதிப் போலும் , சங்கர் தம்மைப் புனைந்து கொள்ளும் காட்சி இங்கு இவ்வளவு நீண்டு அமைந்துள்ளது.          சதுரங்கம் அரசர்கள் விளையாட்டுத்தான்.என்றாலும் அண்ணன்மார் சதுரங்கம் விளையாடுவதைக் கண்ட தங்கை நல்லதங்கம் , ‘அது, சிலபேருக்குத் தொழிலில்லா ஆட்டம்’ என்றும் ‘சண்டியர்கள் விளையாட்டு’ என்றும் பழிக்கிறாள். உடனே, அண்ணன்மார் வீர விளையாட்டுக்குரிய அணிகலன்களை அணிந்து, சிலம்பம் முதலிய வீர விளையாட்டுக்களில் ஈடுபடுகின்றனர்.           பொன்னர் சத்தியம் செய்யத் தட்டான் பின் செல்லும்முன், தம்மைப் பெரிதும் ஒப்பனை செய்துகொள்கிறார். அந்த ஒப்பனை நீண்டதொரு பட்டியலாக அமைகின்றது.                  “ஆடை விரித்தெடுத்த்ப் – பொன்னர் – அழகாய் வரிந்துகட்டி                பூட்டினார் பனுதியெல்லாம் – தன்னுடைய – பொன்னுத்திரு  மேனியிலே                                                                                                    பத்து விரலுக்கும் ப்சும்பொன் கனையாழி               எட்டு விரலுக்கும் இசைந்த கணையாழி               மார்பு நிறந்ததொரு வைரமணித் தாழ்வடங்கள்                 மாணிக்கம் பதித்ததொரு மார்பில் பதக்கமிட                     தும்பிப் பதக்கமிட்டு முத்துத்துராயு மிகப்பதித்து                      பொந்திக் கடுக்கனிட்டுப் பொன்னெழுத்தும் பாகுகட்டி                         தங்கத்தி னாலிழைத்த சருகை நிசாரணிந்து                       அல்லிக் கயிறெடுத்து அலங்காரம் பூட்டியேதான்                      வண்ணக் கச்சு தேனெடுத்து –அதை – வாகாய் வரிந்து கட்டி                     எண்ணெய்க்கச்சை தானெடுத்து –அதன்மேல் – இதமாய் வரிந்துகட்டி                                                                                           பட்டுச்சுங்கம் பறக்கவிட்டுப் பாங்காகச் சுங்கு விட்டு                      ஒட்டியாணம் பூட்டெடுத்து இடையில் பதிந்துமப்போ                      பதினெட்டு ஆயுதமும் பாங்காய் வரிந்துகட்டி                     பத்துக் கட்டி போட்டடித்த பாரமான கேடயமும்                    அந்த, பாரமான கேடயத்தைப் பாங்காக மேல்பூட்டி                    எட்டுக்கட்டி போட்டடித்த ரணங்கண்ட மந்திரவாள்                    இந்த, ரணக்கண்ட மந்திரவாள்-அதை – இதமாகத் தானெடுத்து”          சங்கர் போருக்குப் போகும்போதும் ஒப்பனை இதேபோல் நீண்டு விரிவாக அமைகின்றது.       மேற்கூறிய நிகழ்ச்சிகளின்போது அண்ணன்மார் புனைந்து கொள்ளும் ஆடை அணிகலன்களால் அவர்களின் உயர்நிலையும் செல்வச் செழிப்பும் வெளியகின்றன. இவ்வொப்பனைப் பட்டியல் சில இடங்களில் இருபது வரிகளுக்கும் மேல் நீளுகின்றது. வீரநிலைப் பாடல் மரபில் ஒப்பனை                   வீரநிலைப் பாடல்களில் ஆடை அணிகலன்கள் வாய்பாடு அமைப்பில் காணப்படுகின்றன. குறிப்பிடத் தக்க சூழ்நிலைகளில் அவ்வாய்பட்டு அமைப்புகள் மீண்டும்மீண்டும் வருகின்றன. இவை இவ்வாறு வருவதை ஆராய்ந்த பவுரா, கதைப் போக்கில் மாற்றத்தை நிகழ்த்தும் சம்பவத்தில் அந்த நிகழ்ச்சிகளுக்கேற்பத் தலைமக்கள் ஒப்பனை செய்து கொள்வதைச் சுட்டிக் காட்டியுள்ளார்.               அண்ணன்மார்சாமிகதையில் திருமணத்தின்போது மணமகனின் வருணனை இல்லை. ஆனால், அவர்களுடைய வாழ்க்கையில் திருமணத்தைக் காட்டிலும் வேட்டையாடல், சிலம்பம் விளையாடுதல், வேட்டுவருடன் போர், பொன்னர் தட்டான் பின்னர் சத்தியம் செய்யப் போதல் முதலிய நிகழ்ச்சிகள் அண்ணன்மாரின் தலைமைப் பண்பைப் புலப்படுத்துவன ;ஆதலாலிந்த நிகழ்ச்சிகளில் அவையினரின் கவனம் ஊன்றி நிற்குமாறு கதைப் பாடகன் ஒப்பனைப் பகுதியை விரித்துப் பாடுகிறான். இதனை, வீரநிலைப் பாடல்களின் மரபுகளில் ஒன்றாகப் பவுராவும் எடுத்துக் காட்டியுள்ளார். படைக்கலன்                   வீரநிலைக் காப்பியத் தலைவர்களுக்கு ஆடை அணிகலன்களைக் காட்டிலும் அவர்களுடைய போர்க்கருவிகளே அவர்களுக்கு மிக அணுக்கமானவை. கோதண்டமில்லாத இராமனையோ, காண்டீபமில்லாத அருச்சுனனையோ, கதை இல்லாத பீமனையோ நினைத்துப் பார்க்க முடியாது. ஏனெனில் இப்படைகலன்களே அவ்வீரர்களின் அடையாளம். எனவே, வீரநிலைப் பாடல்கள் வீரர்களின் படைக்கலன்களைச் சிறப்பாகப் பாடுகின்றன.                    சங்கர் வேட்டைக்குச் செல்லும்போதும் , அண்ணன்மார் சிலம்பம் பொருது விளையாடும்போதும், வேட்டுவர் மீது அண்ணன்மார் போருக்குப் போகும்போதும், பொன்னர் சத்தியம் செய்யப் போகும்போதும் அவர்கள் தரித்த படைக்கலன்கள் விரிவாக விவரிக்கப்படுகின்றன.     படைக்கலன்களுக்குப் பெயர்கள்                      தலைமக்களின் படைக்கலன்கள் தனிப்பெயர்களால் அடையாளம் காட்டப்படுகின்றன. சங்கரின் வாள்,’எட்டுக் கட்டி போட்டடித்த இரணங்கண்ட மந்திரவாள்’. மைத்துனர் எதிரிலாப் பெருமாளின் வில்,’ கல்தெறிக்கக் கணை பெய்யுங் காண்டீபம்’. அதில் தொடுக்கப்படும் கணைகள்,’எதிர்த்தரை ஈடழிக்கும் எமனாசுரன் கணைகள்’. என்று பெயர்கள் கூறப்படுகின்றன. படைக்கலன்களின் சிறப்பு                  தலைவர்களின் படைக்கலன்கள் மற்றவர்களின் படைக் கலன்களைப் போலக் கம்மியர்களின் தொழிலால் மட்டும் உருவானதன்று. நீண்ட கடும் உழைப்பின் பயனாகவே தலைவனின் படைக்கலன் உருவாகின்றது. தலைவனின் ஆளுமையைப் படைக்கலன் முழுமைப் படுத்துகின்றது. தலைவனின் செயலாண்மைக்குப் படைக்கலன் பெரிதும் துணை செய்கின்றது. ஆதலால், கதைப் பாடகன் தலைவனுக்கு உறுதுணையாக நிற்கும் படைக்கலத்தின் அருமை பெருமைகளை விரித்துப் பாடிக் கேட்போரை அதில் ஈடுபடுத்துகிறான். சங்கரின் ஈட்டி               அண்ணன்மார்சாமி கதையில் சங்கரின் பன்றி வேட்டை முக்கியமானதொரு திருப்பு மையமாகும். இந்த நிகழ்ச்சி, இக்கதையின் எல்லா வடிவங்களிலும் இடம் பெறுகின்றது. இந்த நிகழ்ச்சிக்குப் பின்னரே வேட்டுவருடன் பகை கடுமையாகின்றது. எனவே, அண்ணன்மார்சாமிக் கதைப் பாடகர்கள் , பன்றியின் பிறப்பைத் தெய்வத் தொடர்பை உடையதாக்கித் தெய்வத்தின் வரத்தால் பிறந்த பன்றியைக் கொல்வதற்குப் பயன்படும் கருவியையும் தெய்வத்தன்மை உடையதாகப் படைத்துக் காட்டுகின்றனர்.                   பிச்சனும் இந்த நிகழ்ச்சியைச் சிறப்பாகப் படுகிறார். சங்கர் ஆசாரியை அழைத்துப் பன்றியைக் குத்துவதற்குப் பதினைந்து பாக அகலமும் அறுபது பாக நீளமும் உள்ள வேல் வடிக்க உத்திரவு இடுகிறார். அதற்குப் புறக்கடையிற் கிடக்கும் பெரியதொரு இரும்புக் கட்டியை எடுத்துச் செல்லும்படிக் கூறுகிறார்.              அந்தக் கட்டியைத் தன்னால் எடுத்துச் சென்று உருக்கி வேல் செய்ய இயலாதென்று ஆசாரி வருந்துகின்றான். சங்கரின் ஆணைக்கு அஞ்சி இரவோடு இரவாக ஊரைவிட்டு ஓடிவிட எண்ணுகிறான். அவன் கனவில், ஆதிரெகுராமர் இந்த ஆபத்து வேளையில் இவனுக்கு உதவி செய்ய வேணுமென்று எண்ணி ஊருக்கு மேற்கில் உலையை வைக்கும்படியும் தாமே வந்து உதவுவதாகவும் கூறுகின்றார்.                  அவ்வாறே, உலைவைத்து வேல் வடித்தாயிற்று. சங்கர் அடிமைப் பறையனை அழைத்துக் கொண்டு வேலினை எடுக்கச் சென்றார். அதற்குள் மாயவர், ‘சங்கரின் சாமர்த்தியத்தைத் தானறிய வேண்டுமென்று’ பாறைமேல் வேலை நிறுத்தி ஈயத்தைக் காய்ச்சிவிட்டார்.                    வேலைக் கண்ட சங்கர் மகிழ்ந்து, அதை எடுக்க முயல்கிறார்; முடியவில்லை. “ஆக்கரித்துப் பல்கடித்து அறுபதடி பின்குதித்து”எட்டியே வேல் பிடித்து அசைத்தும் வேல் எழும்பவில்லை.சங்கருக்கு வலுக்குறைந்தது. தான் செய்த பிழை அவருக்கு நினைவுக்கு வந்தது.             “என்ன இருக்க –நாம்- என்னமதி நினைத்தோம்             தாயை மனதிலெண்ணி தன்பிறப்பை நெஞ்சிலெண்ணி             மாயன் பெருமாளை மனத்திலே தானினைத்தார்”                   தாதி கையில், தங்கை கொடுத்தனுப்பிய தீர்த்தத்தை வாங்கிச் சங்கர் வேல் மீது எறிந்தார். தீர்த்தம் பட்டவுடன் வேல் மேலே எழும்பியது. அதனைச் சங்கர் ,’இடது கையாலே எட்டியே தான்பிடித்தார்’                      இவ்வாறு படைக்கலம் தெய்வீகத் தன்மையுடன் உருவாவதைப் பாடுவது வீரநிலைப் பாடல்களின் மரபு என்று பவுரா கூறுவது இங்கு நினைவு கூரத்தக்கது. குதிரை            வீரனுக்கு அவனுடைய படைக்கலன்களைக் காட்டிலும் மிக நெருக்கமானது அவனது குதிரை. அவனுக்குக் குதிரை மதிப்பு மிக்க செல்வம் என்பதோடு உற்ற துணையும் ஆகும். தலைவனுக்குக் ‘கதழ்பரிய கலிமா’ ஏற்றத்தைக் கொடுப்பதோடு, போர்க்காலத்தில் நம்பிக்கைக்கு உரிய நண்பனாகப் பகைவர்களை  வெல்லுவதிலும், இடையூறுகளைக் கடப்பதிலும் பெரிதும் துணை நிற்கிறது. வீரநிலைப்பாடல்களில் தலைமக்களின் தலைமைப்பண்பை விளக்க அவர்களின் குதிரைகளின் சிறப்புக்களும் பாடப்படுகின்றன.                  தலைவர்கள் தம்முடைய குதிரைகளுக்குப் பெயரிட்டு அழைப்பதைச் சங்க இலக்கியங்களிலும் காண்கிறோம். சங்க கால வேளிராகிய காரி, ஓரி ஆகியோரின் குதிரைகள் அவர்களுடைய பெயர்களால் காரியென்றும் ஓரியென்றும் அழைக்கப்பட்டன. கிரேக்கக் காப்பியமான இலிதம், எக்டர் அக்கிலியசு ஆகிய வீரர்களின் குதிரைகளுக்குத் தனித்தனிப் பெயர்களைக் கூறுகிறது. இந்த மரபில் அண்ணன்மாரின் குதிரைகளும் காளி என்றும் நீலா என்றும் பெயரிட்டு அழைக்கப்பட்டன.                   தலைவர்களின் குடிச்சிறப்பு அவர்களின் ஆடைஅணிகலன்களின் வழியே புறத் தோற்றம் பெற்றாற் போலக் குதிரைகளின்சிறப்பும் அவற்றின் அணிகலன்களாகிய கல்லணை, முன்னெற்றிச் சல்லி, முகமொட்டு, கொண்டைக் கொப்பி, நெற்றிச் சுட்டி முதலியன அண்ணன்மார்சாமி கதையில் கூறப்படுகின்றன. குதிரை தலைவனின் இணைபிரியாத் தோழன்.                  வீரநிலைக் காப்பியங்களில் குதிரைகள் தலைவரை விட்டுப் பிரியாத்’ துணைவர்’களாகவே காணப்படுகின்றன. தலைவர்கள் குதிரைகளைத் தம் நம்பிக்கைக்கு உரிய துணைவர்களாகவே மதித்தனர். தம் முயற்சிகளில் துணைநின்று உதவுமாறு தலைவர்கள் குதிரைகளிடம் வேண்டுவதை வீரநிலைக் காப்பியங்களிற் காண்கிறோம். ஓமரின் கிரேக்கக் காப்பியம் இலியதில், எக்டர், தன் குதிரைகளை விளித்துத் தான் அவற்றைப் பிரியமுடன் வளர்த்த முறைகளையும் , அன்பு காட்டி நேசித்த விதத்தையும் எடுத்துக் கூறிப் போரில் வெற்றி பெற உதவி , நன்றிக் கடனைத் திரும்பச் செலுத்த வேண்டுகிறான். அக்கிலியசு, தன் குதிரையிடம் பகைவன் மெலியசைத் தோற்கடிக்க உதவ வேண்டுகிறான்.                      அண்ணன்மார்சாமி கதையிலும் குதிரைகள் தலைவர்களைப் போலவே அச்சமின்மையுடனும் நன்றியுடனும் செயல்படுகின்றன. சூழ்ச்சித் திறத்திலும் தலைவனின் உள்ளக் குறிப்பை அறிந்து செயல்படுவதிலும் மெய்த் தோழர்களாகவே அவை நடந்துகொள்கின்றன. சங்கரின் குதிரை, அவர் உள்ளம் அறிந்து, “எட்டா மதிலை ஒரேஎட்டாகத் தாண்டு’கிறது.பொன்னர் தம் மனக் குறையைக் குதிரையிடம் மனம் திறந்து கூறுகிறார்.             “என்புரவி என்பறவை என்னசெவேன் நானுமிப்போ               மண்ணிழந்தேன் மனையிழந்தேன்–தங்கை– மாணிக்கத்தை நானிழந்தேன்                                                                                                 பொன்னிழந்தேன் பொருளிழந்தேன் –புலிக்குட்டி                   சங்கரையும்- நானிழந்தேன் என்செய்வேன் “ என்று பொன்னர் ஏங்கி மனம் உருகுகின்றார்.பொன்னரின் மனநிலையை அறிந்துகொண்ட குதிரை அவருக்கு ஆறுதல் மொழி கூறி தேற்றுகின்றது.                  “அப்போ,                   தெய்வப் புரவி தானும்அனுமானித்துத் தலையசைத்திடுமாம்                   எண்ணங் கலங்க வேண்டாம் –சுவாமி – யோசனைகள் செய்ய  வேண்டாம்                                                                                                                 அங்கங் கலங்க வேண்டாம் அழவேண்டாம் அண்ணாநீ                  கடலைக் குதிக்கிறேன் –அண்ணாஉன்னைக்கொண்டு-  கருமலையத் தாண்டுகிறேன்                                                                                           விண்ணைக் குதிக்கிறேன் – உன்னைக்கொண்டு –  வேகமாய்ப் பறக்கிறேன்நான்                 தம்பி பலிவெட்டி – சுவாமிநீ- திரும்பித்தான் வருவாய்”                                                     இவ்வாறு கூறுகையில், குதிரைக்கு நன்றிப் பெருக்கால் கண்ணீர் வழிந்திடுமாம். புரவிக்குக் காட்டனைப் பலம் வந்திடுமாம். நன்றியுடைய குதிரை தலைவன் இறந்தால் அவனுக்குப் பிறகு உயிர் வாழ்வதில்லை. சங்கர் வடக்கிருந்து உயிர் துறந்ததைக் கண்ட ‘பஞ்ச வருண நீலா’க் குதிரை , உணவுண்ணாமல்,மூச்சடக்கி அசையாமல் அவர் அருகிலேயே நிற்கிறது. குதிரையேற்றப் பயிற்சி              குதிரைகள் சிறப்பான இடம்பெறும் வீரநிலைப் பாடல்களில் தலைமக்களின் குதிரை யேற்றப் பயிற்சி பற்றிய கருத்துக்களும் இடம் பெறுதல் இயல்பே. விரைந்துசெயல்படும் பொருட்டுச் சங்கர் குதிரையின் ‘அங்குவடி’ மீது கால்வைத்தேறாமல் தாவியேறிக் குதிரையைக் காலால் தட்டி விடுகிறார். காலால் தட்டுதல் குதிரைக்குக் கொடுக்கும் சமிஞ்ஞை. இது குதிரை யேற்றத்தின் ஒரு வகை.                                                   “கொடுஞ் சவுக்கு தனையட்டி – புரவியை –                            கொடுங்கணைத்துத் தாந்திருப்ப                          பட்டாணி சவுக்கெடுத்துப் பளீரென வீசி விட்டார்” இதுபோன்ற தொடர்கள் குதிரை வீரர்களின் செயல்களைப் படம் பிடித்துக் காட்டுகின்றன.               குதிரைகள், தாம் செல்லும் வழியில் தலைவனுக்கு வரவிருக்கும் ஏதங்களை அறியும் ஆற்றல் உடையன. ஒருவிதக் கனைப்பு ஒலியினால் அத்தீங்கினைத் தலைவனுக்கு உணர்த்துகின்றன. அக்குறிப்பை அண்ணன்மார்சாமி கதை ‘அனுமானித்தல்’ என்ற சொல்லால் குறிப்பிடுகின்றது. உண்டாட்டும் உணவிடுதலும்                     உண்டாட்டும் உணவிடுதலும் புறத்திணைப் பாடல்களிலும் வீரநிலைக் காப்பியங்களிலும் காணப்படும் சிறப்பான துறைகள். அரசன் தன் படைவீரர்களுடன் வேறுபாடின்றி உடனுண்ணுதலும் , உண்ணுதல் போல முகமன் செய்தலும், போருக்குப் பின் விருந்திடுதலும் , தான் போரில் பங்கு கொள்ளாமல் போரிடும் இரு படையினருக்கும் நடுநின்று உணவுவழங்குதலும் மற்றும் இவை போன்ற செய்திகள் சங்கச் சான்றோர் செய்யுள்களில் காணப்படுகின்றன.                   அண்ணன்மார்சாமி கதையிலும் ‘உணவளித்தல்’ வாய்பாட்டுத் தொடரமைப்பில் மூன்றிடங்களில் வருகின்றது. விருந்தயர்தல் பொதுவாக மகளிரின் பணியாகக் கருதப்படுகின்றது. அண்ணன்மார்சாமி கதையிலும் ‘உணவளித்தல் ‘ஆகிய விருந்தோம்பல் அண்ணரின் உடன் பிறப்புத் தங்கை நல்லதங்கத்தின் பொறுப்பாக உள்ளது. இப்பகுதிகளில் தலைமக்களின் விருந்தோம்பும் பண்பு முழுமையாக வெளிப்படுகின்றது.     உணவிடுதலில் தலைமைப்பண்பு                          உடன் உண்ணுதலும் உடன் உண்ணாமல் உணவு  மட்டும் அளித்தலும்சாதிப் படிநிலைகளில், அச்சாதியினுயர்வு, தாழ்வு, சமநிலைகளை உறுதிப்படுத்தும் பயன்பாடு உடையன என்பது மானுடவியலார் கருத்தாகும். உடன் உண்ணுதலும் தமக்குள் உணவு பரிமாறிக் கொள்ளுதலும் சமுதாயத்தில் சமநிலையில் உள்ளவர்களிடையே காணப்படும் நிகழ்ச்சி. உறவினரும் சமுதாயத்தில் சமமான சாதியின்ர் என்று கருதப்படுவோருமே உடனிருந்து உண்ணுவர். இது பழைமையில் ஊறிய சமுதாய மரபு. இன்றும், சாதி வேறுபாடற்ற சமுதாயத்தைத் தோற்றுவிக்கவும் பலதிறமக்களிடையே சமான உணர்வு தோற்றுவிக்கவும் தேசியத் திருவிழாக்களின்போது ‘சமபந்தி விருந்து’ வலியுறுத்தப்படுகின்றது.                      சாதி வேறுபாடு மலிந்துள்ள சமுதாயத்தில் உயர்ந்த சாதிக்காரன் தாழ்ந்த சாதிக்காரனுடன் சேர்ந்து உணவு உண்ணுதலில்லை, உயர்ந்த சாதிக்காரன் தாழ்ந்த சாதிக்காரனுக்கு உணவு கொடுப்பானே யன்றி, அவனிடமிருந்து உணவு ஏற்றலில்லை. உணவுப் பரிமாற்றம் அங்கு நிகழ்தலில்லை.                  சாதி வழிபட்ட சமுதாய மரபியக்க விதியொன்றினை இங்கு அறிய வேண்டும். தாழ்ந்த சாதியான் உயர்ந்த சாதியானொடு சமமக உண்ணுவதால் கீழுள்ளவன் மேனிலைக்கு உயர்கிறான். ஆனால், மேனிலையில் உள்ளவன் , தன்னைக் காட்டிலும் தாழ்ந்த சாயினனொடு சமமாக உண்ணுவதால் , சமுதாயத்தில் தன்னுயர் நிலையிலிருந்து சற்றுத் தாழ்கின்றான்.                   மனத்தள விலாவது இந்த மாற்றம் நடைபெறுகின்றது . எனவே, சமுதாயத்தில் உயர்நிலையில் உள்ளவன் தன்னில் தாழ்ந்தவனுக்கு உணவு கொடுப்பானே ய்ன்றி , அவனிடமிருந்து உணவினைப் பெறவோ, உடன் உண்ணவோ சம்மதப்படாது தவிர்த்துவிடுகிறான்.                   இந்தச் சமூகப் பண்பியக்கம் அண்ணன்மார்சாமி கதையில் நன்கு கையாளப்படுகின்றது. வேட்டுவரிடமிருந்து சிறை மீட்கப்பட்ட குப்ப நாச்சிக்கும், தம்மைத் தேடிவந்த சோழப்பிரதானிக்கும் , தம்மை உறையூருக்கு அழைத்துசெல்ல வந்த சோழ இளவரசருக்கும் அண்ணன்மார் விருந்தளிக் கின்றனர்.                     குப்ப நாச்சியை உடனிருத்தி உண்டமையால், அவளைச்சமுதாயக் கண்ணோட்டத்தில் உயர்த்தி, அவளுக்கு இருந்த, ‘ஊரைவிட்டுப் போனசிறை’ என்ற பழியைத் துடைத்து, அவளைச் சுற்றத்தார் ஏற்றுக்கொள்ளும்படிச் செய்கின்றனர். சோழப் பிரதானிக்கு உணவளித்து, உடன் உபசரித்தபின், “உன்னைச் சரிக்குசசரியா யெண்ணி – பிரதானி  உன்பிறகே வாரதில்லை சோழர்வந்தால் நான்வருவேன் –அவர்- குமாரர் வந்தால் நான்வருவேன் உன்பிறகே வாரதில்லை இனிநடடா உன்னூரே” என்று பிரதானியுடன் போக மறுத்தமையால், அண்ணன்மார் சமுதாயத்தில் தமக்கிருக்கும் உயர்நிலையை உறுதியாக்கிப் பாதுகாத்துக் கொண்டனர். சோழ இளவரசரைத் தம்முடைய இடத்திற்கு வரச் செய்து தம்முடன் இருத்தி உணவுகொள்ளச் செய்தமையால், சோழமன்னரின் நிலைக்குத் தாமும் உயர்ந்துவிடுகின்றனர்.                  இம்மூன்று நிலைகளிலும் உணவளித்தல், உடன் உண்டல், என்பனவற்றால் அண்ணன்மார் தம் தலைமைப் பண்பை நிலைநாட்டிக் கொள்கின்றனர். மானம்                   வீரக்குடிப் பிறந்தாருக்கு உரியதகக் கூறப்படும் குணங்களில் தலையாயது, மானம். மானமாவது, என்றும் எப்பொழுதும் தன்னிலையில் தாழாமை ஆகும். தன் நிலைமையில் தாழாமையுடையாருக்கே மேன்மேலும் உயர்தலாகிய பெருமை உண்டாகும். எனவே, தலைமக்கள் தாம் தாழ்தற்கு ஏதுவாவன செய்யாமல் இருப்பதில் குறியாக இருப்பர்.                       சோழப்பிரதானி, தன் அரசன் அழைப்பதாகக் கூறியபோது, ‘உன்னைச் சரியாக எண்ணி – பிரதானி – உன்பிறகே நான்வாரதில்லை’ என்று அண்ணர் கூறியதைக் கேட்ட சோழன் சினம் கொள்ளவில்லை. மாறாக, அண்ணன்மார் வேளாளர் ஆனதால் , தம் குடிப்பெருமை காரணமாக அவ்வாறு நடந்து கொண்டனர் என்று சமாதானம் கூறியதோடு, தானே சென்று, நாடு காவல் பணிக்கு அவர்களை அழைத்துவர விரும்புகிறார். வெஞ்சினமும் வஞ்சினமும்                  சினம் வீரவாழ்க்கையின் பண்பு; மானத்துடன் உறவுடையது. வீரநிலைக் காப்பியங்களில் வீரர்களின் செயல்களுக்கு நாடக நலனூட்டுவது அவர்களது சினமே. தன்னுடைய மானத்துக்குக் குறைவு நேர்ந்தபோது வீரர் சினம் கொள்ளுவதும், சினத்தால் வஞ்சினம் கூறுவதும் வீரநிலைக் காப்பியங்களில் காண்கிறோம். செங்குட்டுவனது வெஞ்சினமும் வஞ்சினமும் சிலப்பதி காரத்தில் சிறப்பான இடம் பெற்றுக் காப்பிய நிறைவுக்குக் காரணமாகின்றன. சங்கரின் சினம்             அண்ணன்மாரில் மூத்தவஆன பொன்ன, ‘பொறுமை பொறுத்தவ’ ராக இருக்க, இளையவர் சங்கர் எளிதில் சினங்கொள்பவராக உள்ளார். சினம் தோன்றும் நிலையில் சங்கரின் மெய்ப்பாடுகளும் அப்போது அவர் செயல்படும் திறமும் நாடகப் பாங்குடன் வெளிப்படுகின்றன.                   சங்கரின் கோபம் தாயென்றும் உறவென்றும் பார்ப்பதில்லை. பங்காளிப் பெண்களை, அவர்கள், தன் தாய் தாமரைக்குச் செய்த கொடுமைகளுக்குப் பழி வாங்கும் பொருட்டுத் தன் அடிமைப் பறையன் சாம்புவனை விட்டுத் தண்டித்த பின் மரத்தாலி கட்டச் சொல்லி சங்கர் ஏவுகிறர். அப்போது பங்காளிக் கவுண்டச்சிகள், “நீசன் வந்து தாலி கட்ட நீதியோ” என்று தாயார் தாமரையிடம் முறையிடுகின்றனர். ‘சொன்னதே போதுமப்பா, சும்மாவிடு அவர்களையும்’ என்று பங்காளிப் பெண்களுக்குப் பரிந்து வரவே, சங்கருக்குச் சினம் மேலும் மூண்டு, ‘அந்த மூதேவிகளை அடித்த அடிநம் தாயாரையும் அடியும்’ என்கிறார்.               சங்கரின் இந்தச் சினம் தலைமை சான்ற பெருமித வீரத்திற்கு இயையாதே என ஐயுறலாம். இந்தச் சினம் ‘சேர்ந்தாரைக் கொல்லி’, என்றும், ‘வீரத்திற்கு அணியும் அரணும் ஆகும் சினமன்று’ என்றும் மறுக்கலாம். ஏற்கெனவே சுட்டிக் காட்டியவாறு , நாட்டார் பண்பாடுகளைச் செவ்விலக்கியங்கள் கூறும் அறவியல் கோட்பாடுகளைக் கொண்டு நோக்குதலாகாது. தவறு செய்தவனைத் தண்டித்துத் திருத்தும்போது, அவனுக்குப் பரிந்து குறுக்கே வந்து விலக்குவாரையும் தண்டிக்க வேண்டும் என எண்ணுவது இன்றும் நடைமுறையில் உள்ள நாட்டார் வாழ்வியற் பார்வையல்லவா?மேலும், இந்த நிகழ்ச்சியில் இழையோடும் மெல்லிய நகைச்சுவையையும் அறிய வேண்டும்.                    காப்பியங்களில், சகோதரர்களாகிய தலைமக்களுள், தமையன் அறவுணர்வு மிக்கோனானகவும் அளவிறந்த பொறுமையுடை யவனாகவும் சத்தியத்திற்குக் கட்டுப்பட்டவனாகவும் விளங்க, இளையவன் எளிதிற் சினங் கொள்பவனாகவும் சண்டைக்கு முன்னிற்பவனாகவும் அறத்தைப் பற்றிப் பெரிதும் அக்கறைப் படாதவனாகவும், ஆனால் அண்ணன் வார்த்தைக்குக் கட்டுப்பட்டவனாகவும் படைக்கப்பட்டுள்ளதைக் காண்கின்றோம்.                                     இராமாயணத்தில் இராமன், இலக்குவன், பாரதத்தில் தருமன், பீமன், அருச்சுனன் ஆகிய வரின் குணநலன்கள் இதனைக் காட்டுகின்றன.                இம்மரபினைப் பின்பற்றியே நாட்டுப்புறக் கவிஞன் ’பொறுமை பொறுத்த’ பொன்னரின்   உடன்பிறந்த சங்கரை, எளிதில் சினங் கொள்பவ ராகப் படைக்கிறார். இந்தக் கதை மாந்தர்களை இதிகாசக் கதை மாந்தர்களான தெய்வங்களுக்குச் சமமாகக் கதை கேட்கும் பாமர மக்கள் பாவிப்பதும் ஒரு காரணமாகும். வீரப்பண்பாட்டியல் நோக்கில் கட்டற்ற சினமும் ஒரு தலைமைப் பண்பு போலும்.                   சங்கரின் இந்த மிகையான சினம், பொன்னருடன் சிலம்பம் பொருது விளையாடும்பொழுது, “மந்திரவாள் தும்புவிட்டு – அண்ணர் – வருகிறார் அப்போது கண்கள் சிவந்து – சங்கர் – கடுங்கோப மாகியேதான் நீலவிழிக் கண்ணிரண்டும் –சங்கருக்கு – நெருப்புத் தணலாகிறது வலபுறம் மீசையது வல்லமாய்ப்போர் செய்கிறது இடதுபுறம் மீசையது ஈட்டிப்போர் செய்கிறது அண்ணரைப் பார்த்து –சங்கர்- அப்போது ஏதுசொல்வார் அடா, ஒருநாளும் சொல்ல ஒருவார்த்தை சொன்னதற்கு என்னுடைய வாளாலே – உன்னை – இருதுண்டாய் வீசிடுவேன்” என்று,’ஆக்கரித்துப் பல்கடித்து வாள்சுழற்றி’ வரும்போது, வீரம் வெளிப்படுகின்றது; தன் தமையனென்றும் பாராத சங்கரின் சினம் வெளிப்படுகின்றது.                இதேபோன்று, சோழன் பொன்னரை அன்பக வரவழைத்துச் சிறை வைத்தபொழுதும், வளநாடு கொள்ளையிட வேடுபடை வந்தபொழுதும், துணையின்றிப் படுகளத்திற்குத் தனியாக வந்த தங்கையைக் கண்ட பொழுதிலும் சங்கரின் கடுஞ்சினம் வெளிப்படுகின்றது. இந்தச் சினமே சங்கரின் தலைமைப் பண்பைப் பிறரிடமிருந்து வேறுபடுத்துகின்றது. உடல் வலிமை                அஞ்சாமையும் வீரமும் உடல்வலிமையால் அமைவன. உடல்வலிமை யின்றி இவை பயனளிப்பதில்லை. உடல் வலிமையில்லாத வனது சினம் நகைப்புக்கிடமாகும் . எனவே, வீரநிலைப்பாடல்ககளில், தலைமைப்பண்பை எடுத்துக் காட்ட, வீரப்பண்போடு உடல் வலிமையும் பாடப்படுகின்றது.               பொன்னர், ‘ஒன்பதானைப்பலமுடையவர்’. தம்பியைக் காட்டிலும் அண்ணர் பலமுடையவராயினும், தம்பி சங்கரின் பலமே , கதையில், பல இடங்களில் வெளிப்படையான தோற்றம் பெறுகின்றது.                சங்கரின் உடல்வலிமை போட்டியில் வெல்லவும் பகைவரைத் தண்டிக்கவும் பயன்படுத்தப்படுகின்றது. அண்ணன்மார் இளமையில் ஆதிசெட்டிபாளையம்விட்டு வளநாடு நோக்கி வரும்போது, ‘மதுக்கரையில் குடியிருக்கும் மாகாளி செல்லாயியிடம் வாக்கு மனுக் கேட்க வருகிறார்கள். யாரோ அந்நியர் வருகின்றனர் எனக் கருதிய செல்லாயி, தலைவாசலில் காவலிலிருந்த ஒற்றைச் சடாமுனியை ஏவி விடுகிறாள். ‘வானத்துக்கும் பூமிக்கும் ஒன்றாய் வளர்ந்து’ அந்த ஒற்றைச் சடாமுனி அண்ணர் முன்னே வருகின்றது. சங்கர் சடாமுனியின் சடையைப் பிடித்திழுத்துத் தண்டிக்கின்றார். பூலோகம் தத்தளிக்கப் பூதம் அலறுகின்றது.                    வளநாட்டுக்குப் போகும் வழியில், சிறுகமணி என்னும் ஊரில் அண்ணன்மார் தங்குகின்றனர். அப்போது, ஏழைப் பிராமணர் ஒருவருக்காகச் சங்கர் தாம் ஒருவராகவே ஏழுசெய்  நெல்லையும் அறுவடை செய்கின்றார். நெல்லை அறுத்து, ஏழுகட்டாகக் கட்டி விடுகிறார். சிறுவன் எனத் தன்னைப் பழித்த பள்ளர்களைக் கட்டைத் தூக்கச் சொல்லுகிறார். எல்லோரும் கூடி, முக்கி முணகித் தூக்க முயன்றும் முடியவில்லை. அவர்கள் எல்லோரும் கூடித் தூக்க முடியாத கட்டுக்களைச் சங்கர், தம் இடது காலால் எற்றுகிறார். அவை ஏழு பனைமரம் உயரம் சென்று பின் பள்ளர் மேல் விழுகின்றது.பளுத் தாங்காமல் பள்ளர் மடிகின்றனர். ஏழுகட்டு நெல்லையும் களத்து மேட்டில் போட்டுக்’ கட்டுக்கு ஒரு அடியாய்க் கடுகி அடித்துச்  சங்கர் நெல்லு வேறு புல்லு வேறு நிமிடத்தில் பிரித்தார்’. மலைபோல் குவிந்த நெல்லை அளப்பதற்கு மரக்கால் இல்லையென்று , சங்கர், கரைமேல் நின்ற ஆலமரத்தைப் பிடுங்கிப் பெருவிரல் நகத்தால் குடைந்து மரக்கால் செய்து , நெல்லை அளக்கிறார்.             வீரநிலைப் பாடல்களில், தலைமக்கள், போரில் மட்டுமன்றி , எல்லாத் துறைகளிலும் , தொழில்வல்லுநரையும் வெல்லும் அளவுக்குத் திறம் வாய்ந்தவர்களாக உள்ளனர். பாமரமக்களின் கண்ணோட்டத்தில் தலைவன் ‘சகல கலா வல்லவன்’. அவன் எந்தத் துறையிலும் இளைத்தவன் அல்லன். அவனை யாரும் எந்தத் துறையிலும் வெல்லமுடியது.             இளமையில் , இவ்வாறு, உலகியல் செயல்களில் புலப்பட்டுத் தோன்றிய சங்கரின் உடல்வலிமை, பின் நாளில் வீரப்பண்புடன் மிளிர்கின்றது.   கோட்டையை அழித்தல்                  சோழன், பொன்னரை,’ விலங்கில்லாக் காவல் வெயில்காவல் வைத்தான்’ என்றறிந்த சங்கர் , தம்முடைய படையைத் திரட்டி உறையூர் வருகிறார். சங்கர் தன்னை வணங்கார் என்றறிந்த சோழர், கோட்டையின் தலவாசலின் வழியன்றிக் குறுகிய திட்டி வாசல்வழிஅவர் வந்தால் தலை குனிந்துதான் நுழைய வேண்டும்; அவ்வாறு குனிந்து வந்தால் அதனையே தன்னைக் வணங்கியதாகக் கொள்ளலாம் என எண்ணி த் திட்டி வாசல்வழி அவரை அழைத்துவர ஆணையிடுகிறர். அரசருடைய கருத்தை அறிந்த சங்கர் ,’ஏழு சுத்துக் கோட்டையை உதைத்தார், ‘. கோட்டை பொலபொல என்று சரிந்து விழுகிறது. யானையை அடக்கல்                        பொன்னர் பவனி வரச் சோழர் ’தங்கமுலாம் பூசிய தண்டிகையும்’, சங்கருக்கு ,’மத்தகத்து வெள்ளானை மதகரியை அலங்கரித்தும் பரிசளிக்கிறர். ‘பக்கத்துக்கு மூன்றானை பந்தம் புணைத்துக்’ கொண்டு வரப் பெற்ற மதயானையின் மேல் சங்கர் ஏறியே அதட்டுகின்றார். அந்த மதகரி, சங்கரின் அதட்டலைக் கேட்டு, அஞ்சி, ‘வால்முறுக்கி லத்திவிட்டு’ வீறிட்டுக் கத்துகிறது. சங்கர், ‘இவ்வெள்ளானையைப் பார்த்தால் – நம்- எருமைக்கன்று போலத்தான்’ என்று சிரிக்கிறார். கற்றூனைப் பிளத்தல்                 உறையூரில் அண்ணர் இருவரும் பவனி வரும்போது, தெருவில் மிகப் பெரிய கற்றூண் ஒன்றினைக் காண்கின்றனர். பொன்னர் கால் விரல் நகத்தால் தோண்டிய குழியில் சங்கர், தூணைப் ‘பெருவிரலால் தாங்கி வைத்து ‘நிறுத்தினார்’. பின்னர் ‘கல்தூணை வெட்டியிப்போ – என்மந்திரவாள் – கடுமை அறிய வேண்டும்’ என்று கூறி வீசிய வாள்வீச்சில், ‘ஆறுபாகை அகலம் அறுபது பாகை’ நீளம் ‘ உள்ளதூண் எட்டுத் துண்டுகளாக வீழ்ந்தது. சங்கரின் உடல் வலிமையைக் கண்ட சிவசோழர் ,’இப்பெரிய கல்தூணும் –சங்கருக்கு – இலவம்பஞ்சு தானாச்சு’ எனப்பாராட்டுகிறார்.                     குறைந்த உடல் பலம் கொண்டோரும் திறமையாகக் கையாளக் கூடிய சூழ்ச்சித் திறமிக்க படைக்கலன்கள் கண்டுபிடிக்கப் பெறுமுன் மக்கள் தம் உடல் பலத்தையே வெற்றிக்குப் பெரிதும் நம்பியிருந்தனர். அத்தகைய உடல்வலிமை வாய்ந்திருந்தோரை ப் பெரிதும் போற்றினர். எனவே, வீரநிலைப் பாடல்களில் தலைமக்களின் போர்த்திறமையில் படைவலியுடன் உடல்வலிமையும் சேர்த்துப் பாடப் பெறுதலைக் காண்கிறோம். பொன்னரின் சினம்                     பொன்னர் அறநெறித் தலைவனுக்கு உரிய பொறுமை, பணிவுடைமை, பிறருடைய குற்றத்தைப் பொறுத்தல், பழிபாவங்களுக்கு அஞ்சுதல் முதலிய அறப்பண்புகள் பல உடையவர். தம்பி சங்கர், தம்முடைய மிகையினால் பிறருக்கு வருத்தம் விளைத்தபோதெல்லாம், பொன்னர், தம்முடைய அறவுணர்வால் அவரைக் கட்டுப்படுத்துகிறார். இத்தகைய ‘பொறுமை பொறுத்த நல்ல பொன்னு’வுக்கும் சினம் தோன்றும். குணம் என்னும் குன்றேறி நின்ற பொன்னருக்கும் சினம் தோன்றும் என்றும், அந்தச்சினம் தாங்குதற்கு அரியது என்றும் காட்டுகின்றது, இந்த வீரநிலைக் காப்பியம்.              தன்மானத்திற்கும் குடிப்பெருமைக்கும் வஞ்சகத்தால் கேடு நேரிடும்போது, ‘பொறுமை பொறுத்த நல்ல பொன்னு’ வும் வெஞ்சினத்துடன் செயல்படுகின்றார். அந்தநிலையில் மிகக் கொடூரமாகச் செயல்படுவதும் வீரத்தலைமகனின் செயலாண்மைத் திறத்தின் பண்பாக உள்ளது. தட்டானைப் பழிவாங்கல்                   வேட்டுவருடன் மோதலைத் பொன்னர் தொடக்கத்திலிருந்தே தவிர்த்து வந்தார். வேட்டுவரின் கையாளாக வந்த தட்டானின் சதி சூதால் பொன்னர் அவமானப்படுகிறார். ‘வாக்குக்கே வேளாளர்’, ‘காராளர் அரண்மனையில் களவில்லை’, வேளாளர் மனையில் வினையில்லை’ என்ற குடிப்பெருமையும் சந்தேகத்திற்கிடமாகித் தட்டானின் சதியால் பழிக்கப்படுகின்றது. ‘வஞ்சர் தீவினைகளால் மானமணி இழந்தார்’,போலக் குமுறும் மனத்துடன், பொன்னர் தட்டானிடம், அவன் விரும்பியவாறே சத்தியம் செய்ய இசைகிறார். இந்தநிலையிலும் பொறுமையை இழக்கவில்லை.                    தட்டானுடன் தனிவழி சென்று போதாவூர் வேளாளர் நாட்டுச் சபையினர் முன் தட்டான்,                   “நான்வைத்த கருவூலத்தைப்- பொன்னர்- மனதாரக் கொள்ளையிட்டார்                                                                         கையாச்சி ஆள்வமென்று – பொன்னாண்டார்- கடத்தமனங்  கூடாமே                                                                      சத்தியத்துக் குட்பட்டுப் –பொன்னாண்டார்- சம்மதித்து   வாராரிப்போ”                                                         என்று சிறுசொல் கூறிப் பொன்னரின் புகழ்கொன்று உரைத்தபோதும் அவர் பொறுமை இழக்கவில்லை.                    ஆனால், தம்மைத் தட்டான் வஞ்சகமாகப் பிரித்துத் தனிமைப் படுத்தியதனால் தம்முடைய மைத்துனன்மாரும் அருமைத் தம்பியும் அடிமைப் பறையனும் உயிர் துறக்க நேரிட்டதே , தங்கை துணையின்றித் தனித்து விடப்பட்டாளே என்ற யதார்த்தநிலை அவருடைய உள்ளத்தைத் தாக்கியது. இந்தச் சூழ்நிலையில் பொன்னர் பொறுமையைக் கைவிட்டுப் பொங்கி எழுகிறார். சதிக்குப் பலியான அவமானத்தாலும் இழப்புணர்ச்சியாலும் தட்டானை ஒரே வீச்சில் இரண்டு துண்டாக்குகிறார். அப்பொழுதும் சினம் தணியாமல், அவனுடைய உடலைக் கூறுகூறாக்கிக் கழுகுகளுக்கும் காகங்களுக்கும் விருந்து படைக்கின்றார். வேட்டுவரைக் கருவறுத்தல்                 பொன்னர் மேனாட்டு வேட்டுவர்களைக் கொன்றழிக்கிறார்.              “வேடுதளம் உள்ளதெல்லாம் –பொன்னர் – வெட்டிக் கருவறுத்து               ஆணென்று பிறந்ததெல்லாம் –பொன்னர் – அறுத்துச் சிரமரிந்தார்               பதினெட்டு நாட்டையும் – பொன்னர் – பார்த்துக் கருவறுத்துச்                சதுராய் வருகிறார்” அப்போது- தலையூர்காளி வீட்டுப் பெண்கள், பொன்னரைப் பார்த்து ஏசுகிறார்கள்.                  “இளைக்கம்பஞ் சோறுதின்னுமேழைவெள்ளாளன் மகனே                    நாங்கள் பலியெடுக்காது போனாலும் நலமுடனே எங்களுட                    வயிற்றுக் கருவும்-உனை – வகையாய்ப் பலிவாங்கும்                  எங்கள் வயிற்றுக்கரு –உங்களை – எதிர்ப்பலி வாங்கும்” என்று வேட்டுவப் பெண்கள் பேசவே, பொன்னரின் சினம் மேலும் கொழுந்துவிட்டு எரியத் தொடங்கியது.                 “அந்தமொழிகள் சொல்ல – பொன்னருக்கு- அதிகோப   மாகியேதான்                                                                                          வாகையைத் தானிழுத்துக் – குதிரையை- வட்டமிட்டுத் தான்திருப்பி                                                                                                      திருப்பிக் குதிரைவிட்டு –ஆண்டவர்- சீக்கிரமாய் அந்நேரம்                     வயிற்றுக் கருவுகளை வகையுடனே தான்பார்த்து                   ஆண்கருவு உள்ளதெல்லாம் – பொன்னர் – அறுத்துக் கலக்கியேதான்                                                                                                      பெண்கருவு ஆனதையும் – பொன்னர் பொருத்திவைத்து” வருகிறார்.                  செவ்விலக்கியங்களில், வீரனின் செயலாண்மையைத் தூண்டி விட்டு அவனை உயர்நிலையை அடையச் செய்யும் சினம், இங்கு மாறான விளைவைத் தருகின்றது. தன்னொடு போர் செய்யாதவனையும் போர் செய்ய வலுவற்றவனையும் கொல்லுதல் வீரம் அன்று. இது வீரர்களின் போர் அறம். பொன்னர் செய்தது வீரர்களின் அறம் ஆகுமா?                   ஒருவனுடைய அறிவையும் புகழையும் கொன்றுரைத்தல் அவனைக் கொல்லுகின்ற உயிர்க்கொலையைக் காட்டிலும் கொடியது. இதனால் தோன்றும் வெகுளியைத் துறத்தல் அறவோர்க்கும் இயலாது. பொன்னருக்கு இத்தகைய சினம் தோன்றுவதற்குக் காரணத்தையும் அப்பொழுது அவருடைய மனநிலையையும் புரிந்து கொள்ள வேண்டும்.                 இனிவருவதை முன்கூட்டியே கண்டு உரைக்கும் தங்கை, தட்டான் வளநாட்டு அரண்மனைக்கு வந்தபோது, ‘குலுங்கா நகருக்குக் கோளு கொண்டுவந்து விட்டான் தட்டான், “ என்று எச்சரித்து, அவனை வெட்டிவிடக் கூறுகின்றாள். அவனை அன்றே வாளுக்கிரையாக்கி யிருந்தால் இன்று பல இழப்புக்களைத் தவிர்த்திருக்கலாம். இழப்புக்களைத் தவிர்த்திருக்கும் வாய்ப்புக்கள் இருந்தும், உரிய காலத்தில் தங்கையால் எச்சரிக்கப்பட்டும் , சதியில் ஏமாந்து உற்றார் உறவினரின் இறப்புக்குக் காரணமாகி விட்டோமே, தட்டானுக்கு நாம், ‘நன்மை செய்யக் கருமம் பலித்ததுவே’ என , ஏமாற்றப்பட்டதாலும் எளிதாக வஞ்சிக்கப் பட்டதாலும் எழுந்த அவமான உணர்ச்சி அனைத்தும் திரண்டு பொன்னரைக் கோபாவேசம்கொள்ளச்செய்தன; சினத்தீயைக் கொழுந்துவிட்டெரியச் செய்தன. அந்தச் சினத்தீ பொன்னரின் அறவுணர்வை அடக்கி மறவுணர்வினைத் தூண்டி வீரனுக்குரிய தறுகண்மையுடன் செயல்படச் செய்தது. பழி தீர்க்கும் வெறி              வீரர்களின் செயலாண்மைத்திறம் எல்லாச்சமயங்களிலும் ,’மறனிழுக்கா மானம் உடையதாக ‘இருப்பதில்லை. சில சூழ்நிலைகள் அறநெறியில் வாழும் தலைவனையும் பழி தீர்க்கும் வெறியுடையவனாக மாற்றிவிடுகின்றன. .மானமுடைமை குடிப்பிறந்தார் பண்பு. மானமணிக்குப் பகைவர்களால் ஏதம் விளைந்தபோது, வீரத்தலைமக்கள் பகைவருடைய செந்நீரைச் சிந்தினாலன்றித் தம் பழி தீராதென்று நினைக்கின்றனர். இந்த வுணர்வு வீரர்களுடைய அறமும் ஆகின்றது.             இத்தகைய மனநிலையில் அறத்தலைவனாகிய இராமபிரானிடமும் காண்கின்றோம்  நாகபாசத்தால் கட்டுண்டு இறந்தவனைப் போல மயங்கிக் கிடந்த இலக்குவனைக் கண்ட இராமபிரான் , உலகத்தையே அழித்துவிடத் துணிகிறான். பின்னர், ‘விதியன்று’ எனத் துயருறுகிறான்.               மாபாரதத்தில், பதினெட்டாம் நாட் போரில், அசுவத்தாமன் துரியோதனனுக்காக உபபாண்டவர்களின் தலைகளைக் கொய்து வந்ததற்குப் பழிவாங்கும் உணர்ச்சியே காரணம். இலியதத்திலும் இத்தகைய நிலையைக் காணுகிறோம். தன் நண்பன் பெற்றோக்கிளியசை எக்டர் கொன்றான் என்று அக்கிலியசு அறிந்தபோது இத்தகைய பழிவாங்கும் இரத்தவெறி கொள்கிறான். இந்த வெறி எக்டரைக் கொன்ற பின்னும் தீரவில்லை. தன் கண்ணிற்பட்ட அத்தனைபேரையும் கொன்று தீர்க்கிறான். எக்டரின் பிணத்தைப் பல அவமதிப்புக் குள் ளாக்குகிறன். இவன் செயலைப் பார்த்து அப்பாலோ தெய்வம் பரிதவிக்கின்றது. ‘இறந்து குளிர்ந்துவிட்ட எக்டரின் உடற்கட்டைப் பாருங்கள்.      இந்த எக்டரின் கட்டையை இவன் தரதர என்று வேகமாக இழுத்துச்         செல்வதைப் பாருங்கள்.ஒரு பிணத்தின் மீது இவன் இத்தனை வெறுப்புக் கொள்ளலாமா? இது தருமமா? இதுமுறையாகுமா? இவன்       பலவான்தான். தைரியமுடையவன்தான். என்றாலும் இவனுக்கு        நீதியிலும் நன்னெறியிலும் சிறிதேனும் பற்றோ நம்பிக்கையோ             இல்லை. இல்லவேயில்லை.மனிதநீதி முறைகளையும் தெய்வ             நியமங்களையும் இவன் அறவே புறக்கணித்து விடுகிறான்’ அப்போலோ தெய்வத்தின் இந்தக் கூற்று , வீரத்தலைவன் பழிவாங்கும் உணர்ச்சியில் எவ்வளவு தூரம் செல்லுவான் என்பதை இதனால் அறியலாம்.             இத்தகைய உணர்ச்சி பொன்னரிடமும் காணப்படுகின்றது. தன்னுடைய குடிப்பெருமை தாழவரும் செயலைச் செய்யாத வீரராக இருந்த பொன்னர், தட்டானின் வஞ்சகச் சதியால் , பழி எய்தி அவமானமடைகிறார். அவமான உணர்ச்சியாலும் இழப்பு உணர்ச்சியாலும் பழிவாங்கும் உணர்ச்சி தூண்டப்பெறுகிறர். இவ்வுணர்ச்சி மானுட வீரத்தின் இயல்பேயாகும் சினம் தணிதலில் வீரப்பண்பு எத்தகைய கொடிய சினமும் ஓரெல்லையில் முடிய வேண்டுமல்லவா? இலியதத்தில் , எக்டரைக் கொன்றும் அடங்காத சினம், அவன் தந்தை, அக்கிலியசிடம் வந்து அடிபணிந்து, கண்ணீர் விட்டு அழுது, கல்லுங் கரையும்படி பேசியபொழுதுஅடங்குகிறது. அக்கிலியசின் மனம் கரைந்தது. சினம் அடங்கிய அக்கிலியசு உரிய சிறப்புக்களைச் செய்து எக்டரின் உடலை, அவனுடைய தந்தையிடம் அளிக்கிறான். இதனைப் போன்ற காட்சி அண்ணன்மார் சாமி கதையிலும் காணப்படுகின்றது. பொன்னரின் சினம் தட்டானைக் கொன்றபின்னும் அடங்கவில்லை. அவனிக் கொன்றுகூறிட்டபின்னும் தீராமல், வேட்டுவப் பெண்களின் ஆண்கருவை அழிக்கும் வரைக்கும் நீள்கிறது. வேட்டுவச் சமுதாயமே இல்லதொழியும் என்ற நிலை ஏற்படுகிறது. அந்நிலையில்,மாயன் பெருமாள் மொண்டிப் புல வேட்டுவன் என்பவன் வடிவில் வந்து , அண்ணரின் முன்பு நின்று, அவரின் வீரத்தை நெடிது புகழ்கின்றான். புகழ்மொழி கேட்டுக் குளிர்ந்த பொன்னர் என்ன வெகுமதிகள் வேண்டும் எனக் கேட்கிறார். அதற்கு அவன், “எனக்கு வெகுமதிகள் – ஆண்டவனே- ஏதொன்னு வேண்டாமினி ஆனதொரு நாடுகள்தாம் ஆண்கருவு மில்லாமல் கருவருத்துப் போட்டதற்கு கர்த்தனே நீர்தானும் கருவுகள் உண்டாம்படி –எனக்குக்- கனத்தவரம் தரவேண்டும்”     எனக் கேட்கிறான். பொன்னரும் சினமடங்கி , கட்டை தழையுமடா கருவுகளும் உண்டாகுமினி வெட்டவெட்டத் தாந்தழைக்கும் வெத்திவெங்கல நாடுமினி” என வரமளிக்கிறார். வீரத்தின் கூர்மை                  பகைவர்மீது  கண்ணோடாது செய்யும் மறத்தைப் பேராண்மை எனப்போற்றும் போர் அறமே, அந்தப் பகைவர்களுக்கு ஒருதாழ்வு வந்ததாயின் அதனைத் தீர்த்துக் கொள்வதற்கு உதவுதலை, ‘அழியுநர் புறக்கடை அயில்வேல் ஓச்சாமை’ வீரருக்கு மானம் என்பக் கருதப்பட்டது. இந்த உயர்ந்த போர் அறத்தின் வழிநின்று , பொன்னர், மொண்டிப்புல வேட்டுவன் வேண்டுகோளுக்கு இணங்கி, வேட்டுவப் பெண்களின் வயிற்றுக் கரு தழைக்கும்படி வரமளித்துக் காத்தார். அடியோர் – தலைமக்கள்- செயலாண்மை வேறுபாடு.                  வீரநிலைக் காப்பியங்களில் செயலாண்மைத் திறத்தால் விளையும் புகழ் தலைமக்களுக்கே உரியது. தலைமக்கள் முன்னின்று நடத்தும் வீரப் போராட்டங்களில் அடியோரும் கலந்து கொண்டு எண்ணற்ற வீரச்செயல்கள் ஆற்றித்  தலைமக்களுக்காக உயிரும் துறக்கலாம். கதைப்போக்கில் அடியோரின் செயல்கள் எவ்வளவு சிறப்புடையனவாக இருந்தாலும் , வீரநிலைப் பாடல்களில், தலைமக்களின் செயலாண்மைகளுக்குக் கொடுக்கும் பெருமையை அடியோரின் வீரத்திற்குக் கொடுப்பதில்லை. அடியோரின் செயல்களும் தலைவனின் வெற்றி குறித்தே நிகழ்த்தப்படுவன. ஆகையால்,தலைவனின் செயலாண்மைகளில் அவையும் அடங்கிவிடும்.                  வஞ்சியாது எதிர்நின்று போர் செய்து வெற்றி பெறுவது தலைமக்களுக்கே உரிய சிறப்பு. இதனை ‘ஆரமர் கடத்தல்’ எனத் தமிழ் இலக்கியங்கள் கூறும். தலைமக்களின் பணியாளர்களாகிய ஏனையோருக்குத் தம் தலைவனுக்கு வெற்றி கிட்டுமாயின் ,பகைவரை ஏமாற்றி வெற்றி பெறுதலும் ஏற்புடையதாகும். காப்பியத் தலைவருக்கு அந்த நெறி சிறப்பன்று. இந்த வேறுபாட்டை அண்ணன்மார்சாமிகதை காட்டுகின்றது. அடிமைப் பறையன் வீரபாகு சாம்புவன்            அண்ணன்மாரின் அடிமைப் பறையன் போர் வீரத்திற்குத் தக்க உடல் வலிமையும் பேராற்றலும் உடையவனாக இருந்ததுடன் வஞ்சகச் சூழ்ச்சியும் வாய்ச் சாமர்த்தியமும் உடையவனாக இருந்தான். எண்ணிக்கையின் மிக்க வேட்டுவரைத் தான் ஒருவனாகவே நின்று , தன் சூழ்ச்சித் திறத்தாலும் வாய்ச்சாமர்த்தியத்தாலும் வெற்றி கொள்கிறான்.                  பொன்னர், தட்டான் பின் சத்தியம் செய்ய வெள்ளாங்குளம் போகுமுன் , வீரமலைச் சந்து வழிக் காவலைச் சாம்புவனிடம் ஒப்படைக்கின்றார். காவலில் இருந்த சாம்புவன், பரம்பரைப் பழக்கத்தால் , ‘கள்ளுச் சாராயம் கடுகவே தான்குடித்து, கஞ்சா மயக்கங்கொண்டு அனந்தல்வந்து கண்ணசந்து’ நித்திரையில் ஆழ்ந்துவிடுகிறான். அவ்வாறு அவன் உறங்கிக் கிடக்கும்போது, மேனாட்டு வேட்டுவர்கள், கோனாட்டைக் கொள்ளையிட்டுக் குமாரசங்கரைச் சிறை பிடிக்கும் நோக்கத்துடன் வருகின்றனர். வேட்டுவர் மிக அருகில் வந்துவிட்ட அரவம் கேட்டுச் சாம்புவன் விழித்துக் கொள்ளுகிறான். அண்ணர் தன்மீது கொண்டிருக்கும் நம்பிக்கைக்குக் கேடாகக் குடித்து மயங்கிக் கிடந்ததனால், ‘பால்வார்த்த வீட்டுக்குச் – சிவனே – பாதகம் நினைத்திட்டேனே’ என்று கலங்குகிறான். முன்னால் நிற்கின்ற வேட்டுவர் பலர்; தானொருவன்.எனவே, அவர்களைச் சூழ்ச்சியால் வெல்லக் கருதுகிறான்.                   தன்னுடைய வாளையும் கேடயத்தையும் மணலில் புதைத்து வைத்துவிட்டுத், ’துடைகள் தெரியவேதான்’, ஒருதுண்டுதனை உடுத்திப், ‘புல்லறுக்கும் அருவாளைப் பிறகாலே தான்சொருகிப்’ , ‘பஞ்சைப் பரதேசியைப்போல’ ச் சாம்புவன் பதுங்கி இருந்தான். வந்த வேடுபடைகள் இவனைச் சூழ்ந்துகொண்டு இடித்துத் தள்ளி வேட்டுவர் தலைவன் முன்கொண்டுபோய் விட்டனர்.  பேச்சுச் சாமர்த்தியத்தால், வேட்டுவர்களைத் தன்னை நம்பச் செய்கிறான். வேட்டுவர்களின் அறிவை மயக்கி, அவர்களுடைய ஆயுதங்களையெல்லாம் மலைபோல ஓரிடத்தில் குவிக்கச் செய்கிறான். வேட்டுவர்களை, இவ்வாறு, படைக்கலம் அற்றவர்களாகச் செய்தபின் சங்கரை சிறைபிடிக்க உதவுவது போல ஏமாற்றி, அவர்கள் சற்றும் எதிர்பாராத நேரத்தில் மறைத்து வைத்திருந்த தன் வாளால் வெட்டித் தள்ளுகிறான்.                  இக்கட்டான நேரத்தில் கடுகச் சிந்தித்துக் கணத்தில் செயல்படுவதும் தலைவனின் கட்டளைக்குச் சற்றும் பிறழாமல் நடந்து கொள்வதும் தலைவனுடன் தானும் உயிர் விடுவதும் ஆகிய செயல்கள் வீரபாகு சாம்புவனை வெறும் குதிரைக்காரனாக அன்றிச் செயலாண்மைத் திறம் பெற்றவனாக அண்ணன்மார்சாமிகதை காட்டுகிறது. வீர விளையாட்டுக்கள்                   போட்டிகளே ஒருவனின் தகுதியை அளக்குங்கோல். பகையோ ,போரோ இல்லாத காலத்தில் வீரத்தலைமக்கள் தம்முடைய தலைமைத் த்ன்மைக்கு ஏற்ற விளையாட்டுக்களில் போருக்குரிய ஈடுபாட்டுடன் ஈடுபடுவர். வீரவிளையாட்டுக்கள் பெரும்பாலான வீரநிலைக் காப்பியங்களில் இடம்பெறுகின்றன. இலியதத்தில், பெற்றோக்கிலியசின் நினைவாக அவன் ஈமச் சடங்கின்போது அக்கிலியசு விளையாட்டுப் போட்டிகளுக்கு ஏற்பாடு செய்கிறான். ஒதிசயித்தில் ஒதிசயிசத்தின் கவலையை மாற்றி உற்சாக மூட்ட விளையாட்டுப் போட்டி நடத்தப்படுகிறது. நம் நாட்டு இதிகாசங்களிலும் கூட இத்தகைய விளையாட்டுப் போட்டிகள் இடம் பெறுகின்றன.             சதுரங்கம், சொக்கட்டான் முதலியன நுண்ணறிவுக்கு வேலைதரும் ஆட்டங்களே யெனினும் அவை வீரர்களுக்கு உரிய விளையட்டுக்களாகக் கருதப்படுவதில்லை. பொன்னரும் சங்கரும் சொக்கட்டான் ஆடும்போது தங்கை அருக்காணி, வீரர்களாகிய அவர்கள் வேலையற்றவர்கள் பொழுதுபோக்க ஆடுகின்ற ஆட்டங்களில் ஈடுபடக் கூடாது என்று கண்டிக்கின்றாள்.                     தங்கை இவ்வாறு கூறவே , அண்ணன்மார் ‘கரடிகூடம்’ தன்னில், போருக்குரிய,’பதினெட்டுஆயுதமும் பாங்காகத் தானெடுத்து’ இணை சிலம்பம் பொருகின்றனர். கரடி கூடம் போர்ப்பயிற்சி பெறுமிடம். ஆகையால் ,பொன்னர் சங்கரை நோக்கி,’ வேட்டுவருடன் நடைபெறும் போரில் நீவெட்டுஞ் சவுரியத்தை உன்வீரியங்களை இன்றுநான் பார்க்க வேண்டும்’ எனக் கூறி விளையாட அழைக்கிறார். விளையாட்டின்போது ’நான் உன்னைத் தம்பி என்றும் பார்க்கவில்லை நீ என்னைத் தமைய னென்றும் பார்க்க வேண்டா’ என்று கூறி உற்சாகப்படுத்துகிறார். பொன்னரும் சங்கரும் வீரவிளையாட்டில் ஈடுபடும் காட்சியும் அவர்களிடையே அப்பொழுது நிகழும் உரையாடல்களும் நாடகப்பாங்குடன் வீரச்சுவை பயப்பனவாக இருத்தலுடன், தலைமக்களின் செயலாண்மையையும் காட்டுகின்றன.                போட்டிகள் கடுமையாக இருந்தாலும் போட்டியாளர்கள் எதிரியின் உயர்வை மறுக்க வேண்டும் என்பதில்லை. போட்டியாளனுக்குத் தானே வெற்றி பெற வேண்டும் எனும் முனைப்பு இருந்தாலும் தோற்றவனை அடியோடு அழித்தொழிக்க வேண்டும் என்னும் பகைமையோ வெறுப்போ இருப்பதில்லை. இது நல்ல போட்டியாளனின் பண்பு. வீரத்தலைமகன் தான் போட்டியில் வெற்றி பெற்றுவிட்டால், பின்னர், தோற்றவனை அவமானப்படுத்துவதோ சிறுமைப் படுத்துவதோ இல்லை. இது வீரப்பண்பாட்டின் ஒரு கூறாகும். தலைவன் தன் தகுதியையும் ஆற்றலையும் அடக்கமான முறையில் வெளியிடுவதும் அவனது தலைமைப் பண்புக்கு ஏற்றதே.             பொன்னரைத் தேடி வந்த சோழ இளவரசன், ‘வளநாடு அடைய இன்னம் வெகுநேரஞ் செல்லும் ‘ என்று வருத்தத்தோடு திரும்புகின்றான். அவனைக் கண்ட பொன்னர்,            வளநாடு திசைநாடி – நீர் – வந்ததொரு சிறுசோழர்           வந்தசிறு சோழர்நீர் மார்மூண்டு போறதென்னே” என்று கேட்டுக் குதிரையின் வாகையைப் பிடித்து இழுத்தார். தம்மை இன்னார் என்றறியாது பேசிய சிறுசோழரிடம் அண்ணனர் தம்முடைய தலைமைப் பண்பை நிலைநாட்டப் போட்டியில் இறங்க வேண்டுவதாயிற்று. பொன்னரை யாரோ ஒரு சேவகன் என்று தவறாக உணர்ந்து கொண்ட சோழ இளவரசன்,                    ”உத்தமா தேசிமுன்னே – நீ- ஓடவல்ல சேவகனா                      கட்டுங் குதிரைமுன்னே கடிவாளம் போடுவீரோ” எனக் கேட்கிறான்.                  அண்ணர் போட்டிக்குச் சம்மதிக்கிறார். தோற்றவர் வென்றவருக்குக் கொடுக்க வேண்டிய வெகுமதிகளும் உறுதி செய்யப்படுகின்றான. சோழரின் குதிரைக்கு முந்தி ஓடி ,ஓட்டப்பந்தயத்தில் அண்ணரே வெற்றி பெறுகின்றார். சோழகுமாரர் தாம் முன்பு ஒப்புக் கொண்டபடி, அவர் ஏறியிருந்த குதிரையைப் பொன்னருக்குப் பரிசாக அளிக்க முன் வருகிறார். சோழகுமாரர் குதிரையைவிட்டுக் கீழிறங்கும்போது, பொன்னர், வெற்றியில் கருவம் சிறிதுமின்றி,            “நீங்கள், பட்டம் பொறுத்ததுரை பாருலகம் ஆண்டவர்கள்              சிங்காதனம் பொறுத்து திருக்கொலுவு பெற்றவர்கள்             ஏறின குதிரை விட்டு இறங்குவது ஞாயமில்லை              நான்கொடுத்த குதிரையாகக் கூடவே வாருமினி” என்று அடக்கமாகக் கூறி , இளவரசரைக் குதிரையின்மேல் இருக்கச் செய்து அவரைத் தன் அரண்மனைக்கு அழைத்து வருகிறார்.               திருவள்ளுவர் , ‘பொறையுடைமை’ என்னும் அதிகாரத்தில் கூறும்,                         “மிகுதியான் மிக்கவை செய்தாரைத் தாம்தம்                           தகுதியான் வென்று விடல்” என்னும் குறளுக்குத் தக்க சான்றாகப் பொன்னர் விளங்குகிறார். இந்தக் குறளுக்குப் பொருள் வரைந்த பரிமேலழகர், ‘மனச் செருக்கால் மிக்கவை செய்தரை , அவரின் மேம்பட்டு வெல்வது மட்டுமல்லாமல், அவர்தம்மிகையைப் பொறுத்து , முன் செய்த இன்னாமையினால் கூசி ஒழுகுதல் தவிர்தற்குக் காரணமாகிய மெய்ப்பாடு முதலியன தன்கண் குறிப்பின்றி நிகழ, அவருக்கு இனியனாக நடத்தல்’ என்று பொருள்கூறினார். இந்தத் தலைமைப் பண்பு பொன்னரிடம் நன்கு காணப்படுகின்றது.  அண்ணன்மாரின் தலைமைப் பண்பு                    அண்ணன்மார்சாமி கதையின் தலைமக்கள் செல்வத்தாலும் சமுதாய நிலையாலும் உயர்குடிப் பிறந்தோரவர். ஆண்மையும் வீரமும் குடிப்பிறந்தோருக்கே உரியன, அண்ணன்மாரின் உயர்குடிப்பிறப்பு, ஆற்றல், வீரம், அறந்திறம்பாமை ஆகிய அகப்பண்புகளும், செல்வவளம் நாடாட்சி உரிமை முதலிய புறப்பண்புகளும் அவர்களுடைய தலைமைப் பண்பையும் செயலாண்மைத் திறத்தையும் விளக்குகின்றன. முடிவுரை                 நிலத்தில் தனியுடைமை  தோன்றி வளர்ந்த காலத்தில் விவசாயத்திற்கு உட்படுத்தப்பட்ட நிலப்பெருக்காலும் உற்பத்திப் பெருக்காலும் உற்பத்தியாகும் பொருளில் பெரும்பகுதி கோட்டை கொத்தளங்கள் அமைக்கவும் அரண்மனைகள் கட்டவும் பயன்பட்டன. இத்தகைய சமுதாயத்தில் தனிமனிதனின் உடல் வலிமை,அழகுநலன், ஆண்மை, வீரம், பெருந்தன்மை முதலிய பண்புகள் சிறப்புப் பெற்றன. அரண்மனை, கோட்டை, அணிகலன்கள்,மற்றும் இவைபோன்றவற்றால் தலைமக்களின் தலைமைப் பண்பு புறத்தோற்றம் பெற்றது. மறச்சிந்தனையும் செல்வச் சிறப்பும் வீர வாழ்க்கைக்கு  உரிய கோட்பாடுகளை உருவாக்கித் தந்தன. இவை தனிமனிதனைப் புகழ்ந்து பாடும் பாடகர் கூட்டம் ஒன்று உருவாகியது. அக்கூட்டம் உயிரோட்டமுள்ள உன்னதமான வீரநிலைப் பாடல்களைப் படைத்தது. இவற்றை உயர்குடியினரின் வீரநிலைப் பாடல்கள் என்கிறார்,சி.எம்.பவுரா. இத்தகைய உயிர்குடியினரின் வீரநிலைக் காப்பியமே அண்ணன்மார்சாமி கதை.                 6. பண்பாட்டு மானுடவியல் பார்வையில் அண்ணன்மார்சாமிகதை முன்னுரை                      நாட்டுப்புற இலக்கியத்தின் வழியே அது தோன்றிய சமுதாயத்தின் எண்ணங்கள், விருப்பங்கள், நம்பிக்கைகள் முதலிய பண்பாட்டுக் கோலங்களைத் தெளிவாக அறியலாம். இவற்றைச் சமூக அறிவியல் ஆய்வாளர்களால் பொதுவாகக் கையாளப்படும் நேர்முக உரையடல், கேள்வி- பதில் முறைகளில் அத்துணை எளிதாக அறிதல் இயலாது. வாய்மொழி இலக்கியமாகக் கதையையோ பாட்டையோ கூறுபவன் சமுதாயத்தின் அங்கமாக மற்றையோரின் கருத்துக்களையே தானும் கூறுகிறான். எனவே, தனியொருவனிடம் பெறவியலாத விளக்கங்களைச் சமுதாயத்தின் குரலாக விளங்கும் வாய்மொழி இலக்கியத்தில் பெறலாம். பொருள் உறவுகள் X இரத்த உறவுகள்                            அண்ணன்மார்சாமி கதை, சொத்துக் காரணமாக உடன் பிறந்த சகோதரர்களுக்கிடையே நிலவிய மன வேறுபாட்டிலிருந்து தொடங்குகிறது. பங்காளிக் காய்ச்சலே இக்கதையின் தொடக்கம். அண்ணன்மாரின்  பாட்டனார் கோலாத்தாக்கவுண்டர். அவருடைய உடன்பிறந்த சகோதர்கள் பன்னிருவருக்கும் மணம் முடிந்த வுடனே கூட்டுக் குடும்பத்தில் சொத்துக் காரணமாகப் பிளவு ஏற்படுகிறது. ‘தம்பிமார் அண்ணனுக்குச் சதிசூது’ செய்தார்கள். தம்பிமாரின் கெட்ட எண்ணத்தை அறிந்த மூத்தவர் கோலாத்தாக் கவுண்டர் தம்பிகளுக்காகச் சொத்துக்களைத் துறந்து ஊரைவிட்டு வெளியேறுகிறார்.                       கோலாத்தாக் கவுண்டர், மதுக்கரைச் செல்லாண்டியம்மன் கோவிலில் முடியுடை மூவேந்தர்களைக் காண்கிறார். அங்கும் பாகத் தகராறே நடந்து கொண்டிருந்தது. கவுண்டரிடம் அவர்கள்,                                 “இந்தநல்ல தேசத்தை ஆளுகிற ராஜக்கள்                                   மூவரும் அண்ணன்தம்பி முடிமன்னர் ராஜாக்கள்                                    பாகத் தகராறு பங்கு பிரிப்பதிலே                                   ஒருவருக் கொருவர் ஒற்றிமையும் இல்லாமல்                                    இருக்கிறோ மென்றுசொன்னார் இயல்பெரிய  ராஜாக்கள்”                                                                                       அரசர்களின் ‘பாகத் தகராறை’த் தீர்த்து வைத்த கவுண்டர் அவர்களுடைய அன்புக்கு ஆளாகி ,’மணியங் கணக்கு அதிகாரமும் செல்வமும் ‘ பெற்று உயர்கிறார். வஞ்சகம் செய்த தம்பியர் பஞ்சத்தில் சொத்துக்களை இழந்து கோலாத்தாக் கவுண்டரிடம் தஞ்சம் அடைகிறார்கள். அவர் தம்முடைய சொத்தில் தம்பியருக்குப் பங்கு கொடுத்து அவர்களைக் காப்பாற்றுகீறார். சந்ததியற்ற கோலாத்தாக் கவுண்டரின் சொத்து முழுமையும் தங்களுக்கே வரும் என்று நம்பியிருந்தனர். காலங் கடந்து கோலாத்தாக் கவுண்டர் குன்றுடையானைப் பெற்றவுடன் ,ஏமாற்றம் அடைந்த தம்பியர் மனம் புழுங்குகின்றனர். கோலாத்தாக் கவுண்டர் இறந்த பின்னர் ‘மங்கு மசையனா’ன குன்றுடையானைக் கொன்றுவிட்டு அவனுக்குரிய சொத்துக்களைக் கவர்ந்து கொள்ளத் திட்டமிடுகின்றனர். பங்காளியரின் தீய எண்ணத்தை அறிந்த குன்றுடையான் ஊரை விட்டே ஓடிவிடுகிறான்.                          குன்றுடையான் தன்னுடைய தாய்மாமன் மகளை மணந்துகொண்டு சொத்தை மீட்க முயலக் கூடும் என எண்ணிய பங்காளிகள் , அத்தகைய சூழ்நிலை ஏற்படாமல் தடுக்கும் பொருட்டுக் குன்றுடையானின் உரிமைப் பெண்ணை தம்முடைய பிள்ளைகளில் ஒருவனுக்கு மணம் செய்துவிடத் திட்டம் தீட்டுகின்றனர்.                             இவ்வாறு குன்றுடையானின் குடும்பத்தினருக்குப் பங்காளிகள் கொடுத்த தொல்லைகள் நிலவுடைமையாளர்களின் குடும்ப உறவு நிலைகளைப் பொதுவாகவும் கொங்குவேளாளர்களின் குடும்பவுறவுப் பண்பினைச் சிறப்பாகவும் காட்டும்.                          நிலவுரிமை காரணமாகப் பாகத் தகராறும் பங்காளிக் காய்ச்சலும் கொங்கு வேளாள சமூகத்தின் “குலப் பண்பு” என்பர். அண்மைக் காலம் வரை பாகப் பிரிவினைக்காகத் தந்தையும் தனயனும் உடன்பிறந்தோரும் நீதிமன்றம் ஏறி வழக்காடி, அடிதடி சண்டையில் இறங்கிப் பிளவு பட்டு நின்றமை, இந்த சமூக வரலாற்று உண்மை. சமூகத்தின் இப்போக்கினை அண்ணன்மார்சாமி கதை தெளிவாக எடுத்துக் காட்டுகின்றது எனலாம்.    மூத்தவர்கடமை                        பாகத் தகராறினால் குடும்பத்தில் பகைமைப் போக்கு இருந்தாலும் மூத்தவர் பொறுமையுடனும் கட்டுப்பாட்டுடனும் நடந்து கொள்ள வேண்டும் என இச் சமூகம் விரும்புகின்றது. இதனைச் செயல்படுத்தக் கொங்கு வேளாள சமூகத்தில், குடும்பச் சொத்தைப் பங்கிடும்போது ஒரு நெறிமுறை கைக்கொள்ளப்படுகின்றது. குடும்பச் சொத்தைச் சமபங்குகளாகப் பிரித்தபின் மிக இளையவன் தொடங்கிப் படிப்படியாக மூத்த ஆண்மக்கள் தமக்கு விருப்பமான பங்கைக் கொள்வர். தந்த்கை தன் பங்கைத் தனக்கு விருப்பமானவருக்குக் கொடுக்கலாம். அனைவரும் எடுத்துக் கொண்டது போக மீதமுள்ளதே மூத்தவருக்குக் கிடைக்கும். இளையவர்களின் விருப்பத்திற்கு மூத்தவர்கள் விட்டுக் கொடுக்கக் கட்டாயப்படுத்தப் படுவர். இளையோர் தவறு செய்தாலும் மூத்தோர் அதனைப் பொருட்படுத்தாது உடன்பிறந்தாரின் ஒற்றுமையையும் குடும்ப நலனையும் பேணவேண்டும் என அறிவுறுத்தப்படுவர்.                      மூத்தவராகிய கோலாத்தாக் கவுண்டர் தம் இளைய சகோதரர்களின் பொருளாசைக்கு விட்டுக் கொடுக்கிறார். தம்பியர் பஞ்சத்தில் சொத்திழந்து மூத்தவரிடம் வந்து சேர்ந்தபோது, அவர் தாம் கஷ்டப்பட்டு சேர்த்த சொத்தில் பங்கு கொடுத்து அவர்களைக் காப்பாற்றுகிறார். இது இச்சமுதாயம் குடும்பத்தில் மூத்தவரிடம் எதிர்பார்க்கும் அறப்பண்பாகும். பிதிர்க் கடனும் சொத்துரிமையும்                     சந்ததி யில்லாதாருடைய சொத்துக்களுக்கு வாரிசுகள் பற்றி வழக்காற்றுச் சட்டங்களும், ஆக்கபட்ட சட்டங்களும் பலவிதமாகப் பேசும். அண்ணன்மார்சாமி கதையில் அண்ணன்மாரும் அவர்களுடைய மனைவியர் அனைவரும் இறந்துவிட, சந்ததி யில்லாத சொத்து பங்காளிகளுக்குச் சேராமல் மனைவியரின் குடும்பத்தாரைச் சென்று சேர்கின்றது. இறந்தவர்களுக்குப் பிதிர்க்கடன்செய்வதும் அவர்களுடைய கடமையாகின்றது. பயிர்த்தொழில்                                       காடு கொன்று, பண்படுத்திச் செய்யும் காட்டு விவசாயம் அண்ணன்மார்சாமி கதையில் சிறப்பாகப் பேசப்படுகின்றது. மலைச் சாரலிலும் சமநிலத்திலும் மேற்கொள்ளப்படும் காட்டு விவசாயமுறைகள் இக்காப்பியத்தில் இடம்பெறுகின்றன.                                   பச்சை மலையாளன் பச்சைமலைக் கானகத்தில்,’ காடுவெட்டிப் புனல்பரப்பிக் கல்லுருட்டி, மேடு திருத்தித் தினை விதைத்தான்’. மலைச்சாரலில் சுற்றிலும் முள்வேலி அமைக்கப்பட்ட காட்டுக்குள் நுழைய வாயிலாகக் ‘கடவு’ அமைத்தான். கடவைத் தாண்டித்தான் உள் நுழைய முடியும்.                              கோலாத்தாக் கவுண்டரின் சேவைக்குப் பரிசாக மூவேந்தர்களும்,                “கல்லாண்டாங் காடு கருநொச்சித் தோட்டமது                எழுபதுவள்ளம் பூமி இனாமாய்க் கொடுத்தார்கள்” இப்பகுதியில் சமநிலத்தில் செய்யப்படும் காட்டு விவசாயம் பற்றிய சில செய்திகளறிய வருகின்றது.                   புன்செய்ப் பயிர் விளையும் மேட்டுப் பூமியைக் ‘காடு’ என்றும், கிணற்றுப் பாசன பூமியைத் ‘தோட்டம்’ என்றும் கொங்கு நாட்டில் வழங்கப் பெறும். ‘காடு’ நிலத்தின் இயல்பாலும், ‘தோட்டம்’ அங்குள்ள மரம் முதலியவற்றாலும் பொதுவாகப் பெயர் பெறும்.  அவ்வாறே கோலாத்தாக் கவுண்டர் பெற்ற பூமி ‘கல்லாண்டாங்காடு’ என்றும் ‘கருநொச்சித் தோட்டம்’ என்றும் பெயர் பெற்றது.                 விளைநிலத்தை இத்தனை ‘வள்ளபூமி’ என்று வழங்குவது கொங்கு நாட்டு வழக்கு. ஒரு வள்ள பூமி என்பது, 4 ஏக்கர் பரப்புடையநிலத்தைக் குறிக்கும். முகத்தல் அளவைப் பெயரால் நிலப்பரப்பு குறிக்கப்படுகிறது. நிலப்பரப்பை முகத்தல் அளவையால் குறித்தல் கல்வெட்டுக்களிலும் காணப்படுகின்றது. ‘குறுணி விதைப்பாடு’ என்பது அத்தகைய ஒன்றாம். ஒருவள்ளம் விதையை 4 ஏக்கர் நிலம் ஏற்றுக் கொள்வதால் இப்பெயர் வந்தது போலும்.                 சோழமன்னன் அளித்த மணியம் கணக்குப் பதவியைக் கவுண்டர் பார்க்க, ‘மனைவி பவளாத்தாக் கவுண்டச்சியும் சோளந்தோட்டியும் அவனுடைய மனைவியுமாய்க் காடுபயிர்செய்து காரியமுந்தான்’ பார்த்து வந்தனர்.பெண்கள் விவசாயப் பொறுப்பை மேற்கொள்ளுதல் கொங்கு நாட்டில் மிகுதியும் உண்டு. கொங்கு வேளாளப் பெண்களின் கடின உழைப்பும் சிக்கனமும் மேனாட்டார் கவனத்தையும் ஈர்த்துள்ளன.    “The Vellalars like the highland on which the ‘dry* grains are grown. With many of the crops they plant cotton in ridges, which is picked after the harvest by their families', cleaned, spun at home, and sold at the nearest market. They breed cattle, and often pay the assessment on their land with the sale of young stock ; whilst the dairy produces plenty of ghee or clarified butter, which is used by the natives in great quantities. They are a very hardworking race, and, however rich they may be, the women of the family are not allowed to sit idle. The wives of the wealthiest men may be seen at the markets far and near, selling their thread, curds, ghee, and the produce of the kitchen-garden. “ The Pallis, on the other hand, love to deal with irrigation. Low wet rice grounds are almost always cultivated by these men, or else by the Pullers, who resemble them in disposition, but are a somewhat inferior caste. Their women do not work, if they can help it; and this race generally does not share in the industrious habits of the Vellalars.                       கல்லாண்டாங் காட்டைப் பண்படுத்தும் முறையையும் அண்ணன்மார்சாமி கதை கூறுகின்றது. ‘கொப்பி கட்டும் கவை’யினைப் பயன்படுத்திச் சீத்தை முள்வனத்தை வெட்டி, காடுவெட்டி, செடி களைந்து, செடி முள்ளுக்குத் தீ வைத்து நீறாக எரிப்பதும், சாம்பற்புழுதிக் காட்டில் மழை பெய்தபின் உழவோட்டி விதைப்பதும் காடழித்துப் பண்படுத்தி விவசாயம் செய்யும் முறையாகும்.                         கால்நடை வளர்ப்புக்காட்டு விவசாயம், தோட்ட விவசாயம் இவ்விரண்டினொடும் நெருங்கிய தொடர்புடையது. வயல்வெளிகளைக் காட்டிலும் மேட்டாங்காடுகளில் மேயும் கால்நடைகள் செழிப்பாக வளரும். கொங்கு நாட்டு மேட்டாங்காட்டுப் பூமிகள் அண்ணன்மார்சாமிகதையில் ‘கல்லாண்டாங்காடு’ எனப்படுவது போல, வெள்ளோடைக் காடு, சல்லிக்காடு, சாம்பற்காடு, இளமணற்காடு என வகைப்படுத்தப்பட்டுப் பெயர் பெறும். இப்பூமியில் ‘கொழுக்கட்டை’ என்றொருவகைப் புல் செழித்து வளருகின்றது. இப்புல் சிறந்த மாட்டுத் தீவனமாகும். இப்புல் வளர்ச்சிக்கு அதிக உழைப்போ மழையோ தேவையில்லை. மழை இல்லாத போதிலும் இவ்வகைப் புல காய்ந்து போகாது. மழை பெய்தவுடன் தழைத்து வளரும். இப்புல்லை மேயும் மாடு பால்வளத்திலும் உடல் பலத்திலும் உயர்ந்து விளங்கும். இக்காரணத்தால் கல்லாங்காட்டுப் பூமியில் வேளாண்மை செய்வோரே ஆக்கமான முறையில் கால்நடை வளர்த்தலையும் உடன் செய்வர்.                     இத்தகைய பொருளாதாரநிலையைக் குன்றுடையான் தாமரை வாழ்க்கையிலும் காண்கிறோம். சீத்த முள்வனத்தைத் திருத்தி, மேட்டாங்காட்டுப் பூமியில் சோளம் பயிர் செய்யுங் காலத்தில்தான் அவர்களுக்குப் பசுக்களும் ஆடுகளும் பெருகின. வீடு நிறைய வெண்ணெய் தயிர் மோர் பால் பொங்கிப் பெருகின.                ‘குலவிச்சை கல்லாமல் பாகம்படும்’ என்றபடி, கொங்கு வேளாளர் இயல்பாகவே கால்நடைவளர்க்கும் தொழிலில் மேம்பட்டு விளங்கினர். ‘பால் கறக்க நிற்பதில்லை’ எனக் கழிக்கப்பட்ட பசு, கோலாத்தாக்கவுண்டரிடம் வந்து சேர்கிறது. கால்நடையிடம் அவர் கொண்ட அன்பு நிலை அப்பசுவிடம் வெளிப்படுகின்றது. .’பால்கலயம் கையிலெடுத்துப் பால்கறக்கப் போகையிலே, கவுண்டரைக் கண்டவுடன் மாடு கால்தூக்கி நின்றிடுதே’ எனக் கவிஞர் கூறுவது, பழக்கப் பட்ட கறவையின் அன்புநிலையைக் காட்டுகிறது. ‘மாடுகால் தூக்கி நிற்றல்’ என்பது, பால்கறப்பதற்கு எளிதாகப் பசு காலகற்றி நிற்பதைக் குறிக்கின்ற கொங்குநாட்டு வழக்காற்றுச் சொல்லாகும்.                     கொப்பிகட்டும் கவை, கொங்கணக் கம்பளி (கொங்காடை) போர்த்துக் கொண்டு காலை வேளையிலே காட்டுக்குப் போதல், பயிரைப் பறவை அழிக்காமல் காவல்செய்யப் பரண் அமைத்தல். கதிர், பக்கம்பெருத்து வளர்வதைப் ‘பொடை’ கட்டி வளர்வதாகக் கூறல், அறுவடைக்குக் கூலியாகத் தானியத்தை அளந்துபோடல், தாம்படித்தல், பொதியளத்தல், களஞ்சியம் போடல், நிலத்தின் பரப்பை இத்தனை வள்ளப் பூமியெனல், காட்டுக்குப் பெயரிட்டு அழைத்தல், முள்வெட்டுதலைச் ‘சிறையெடுத்தல்’ எனல், இணுங்குச் சோளம் குத்தல், ஏர்ச்சாலினை ‘விளா’ எனல், சோளப் பயிரைத் ’தட்டு’ எனல்- இவை போன்ற கொங்குநாட்டுக் காட்டுவெள்ளாமைச் செய்திகள் பல அண்ணன்மார்சாமி கதையில் அறிய வருகின்றன   குடிப்பண்புகள்                      கொங்கு வேளாளர்கள் கடின உழைப்பாளிகள். ‘காராள வம்சத்தில் கபடு தெரியாது வேளாளர் வமிசத்தில் விபரம் தெரியாது’. என்கிறது அண்ணன்மார்சாமிகதை. இந்தக் குடிப்பண்பே, கோலாத்தாக் கவுண்டரை , சொத்தெல்லாம் இழந்து அவர் வறுமையுற்ற நிலையிலும் , வலியச் சென்று மூவேந்தர்களின் வருத்தத்தைத் தீர்க்கத் துண்டிற்று. ‘மனைதேடி வந்த’ தட்டான் வஞ்சகன் என்றறிந்தும் வீடுதேடி வந்த அவனுக்கு அடைக்கலம் அளிக்கப் பொன்னரைத் தூண்டிற்று.  ஒப்புரவு                  சங்க கால வள்ளல்களின் அரண்மனைகள் இரவலர்க்கு அடையா வாயிலை உடையன என அறிவோம். அவ்வாறே, இரந்து வந்தவர் வஞ்சகரே யாயினும் அவருக்கும் அடையாத வாயிலைக் கொண்டது காராளர் வீடு. காராளர் பிச்சை யென்று வந்தவரை தடுத்து விலக்குவதில்லை.                   தன்னுடைய முறைப்பெண்,மாமன்மகள் மீது தனக்கு இருக்கும் உரிமையை நிலைநாட்ட அந்தப்புரம் வரைக்கும் குன்றுடையான் செல்ல வேண்டும் எனத் தூண்டுகின்றான், அவனுடைய அடிமைப் பறையன், சோளந்தோட்டி. அரண்மனையின் அந்தப்புரத்தில் எவ்வாறு நுழைவது? சோளந்தோட்டி கூறுகிறான். :                “உன்மாமன் வீட்டுக்கு உத்தமரே நீர்போயீ                  கம்புகம்பு என்று கடுகியே போனாயானால்                  பிச்சைக் காரனென்று –உன்னைப் – பேசாமல் விட்டிடுவார்” என்றான். இந்த அறிவுரைப்படியே குன்றுடையானும்,                 “கம்புகம்பு என்றுசொல்லிக் கதறியே வருகையில்                    காவலிலே நின்றவர்கள் – இவனைக் – கண்டுமே விட்டுவிட்டார்”                                                                                  இந்த நிகழ்ச்சிகள் வேளாளரின் ஈகைப் பண்பினை விளக்குகின்றன. பிச்சைக்காரர்கள் பிச்சை கேட்டுப் பெண்கள் வாழும் பின்கட்டு வரையிலும் செல்லலாம். கொடுத்துப் பழகிய வேளாளப் பெண்டிர்கள் பிச்சையென வந்தவரை வெறுங்கையுடன் அனுப்பமாட்டார்கள். தம்முடைய தேவைக்குப் போக மிஞ்சிய மோர் முதலிய உணவுப் பொருள்களை விலைக்கு விற்கமாட்டார்கள். தேவைக்குப் போக மிஞ்சியவற்றை வீட்டின் முற்றத்தில் வைத்திருப்பார்கள். அவற்றை ஏழை எளியவர்கள் யாருடைய அனுமதியையும் எதிர்பார்த்துக் காத்திராமல் வேண்டிய அளவு எடுத்துச் செல்வார்கள். இந்த அறவுணர்வைக் கொங்கு நாட்டுக் கிராமங்களிலே பழமரபைக் கைக்கொண்டு வாழும் உயர்குடி வேளாளர் இல்லங்களில் இன்றும் காணலாம். காலப்போக்கில் இப்பண்புகளில் மாற்றம் நேர்ந்திருப்பினும்,வேளாள சமூகம் எதிர்பார்க்கும் இப்பண்புகள் அண்ணன்மார்சாமி கதையில் பதிவு செய்யப்பட்டுள்ளன. விருந்தோம்பல்                    அரண்மனையோ, குடிசையோ எங்கும் விருந்தோம்பும் கடமை, கொங்கு நாட்டில் பெண்களுக்கே உரியது. அண்ணன்மார்சாமி கதை இதை நன்கு விளக்குகின்றது.                  மணமானவுடன் தந்தையால் விரட்டப்பட்ட தாமரை, வளநாடு வருகிறாள். வரும் வழியில் பசிபசி என்று பரிதவித்த கணவனின் பசி தீர்க்கச் சோறு சமைக்கிறாள். ‘காட்டிலே முளைத்திருக்கும் பசுங்கீரையுடன் , மரக்கால் அரிசியினை வட்டித்துத் தான்படைத்தாள்’. அப்போது ஆயிரந் தாதரைப்போல் அரிராமர் வடிவெடுத்துவந்து சோறுகேட்கிறார். அவரைக் கண்ட குன்றுடையான், ‘மரக்கால் அரிசிச்சோறு உன்வயிற்றுக்கே பத்தாது, இத்தனை பேருக்கும் எப்படித்தான் சோறிடுவாள்’ எனக் கூறி அடித்து விரட்டுகிறான். ஆனால், தாமரை அவரைக் கைபிடித்து, ‘வயிறு குளிர்ந்திடவே –சாமி- வளமாக உண்டிடுவீர்’ என்று கூறி எல்லார்க்கும் அன்னமிடுகிறாள். ‘எடுக்க எடுக்கக் குறையவில்லை இவள்சமைத்த அன்னமிது’. பிற்காலத்தில் குன்றுடையானுடைய செல்வச் செழிப்பிற்குத் தாமரையின் விருந்தோம்பும் இந்தப் பண்பே காரணம் எனக் கவிஞர் காட்டுகிறார்.                    தாமரையின் இந்தச் சிறந்த பண்பு அவளுடைய மகள் நல்லதங்கத்திடமும் காணப்படுகின்றது. திருமணம் ஆகாத இளம்பெண்ணாகக் கன்னி மாடத்தில் வாழ்பவளே யென்றாலும் , தங்கை அருக்காணி நல்லதங்கம், விருந்து பேணும் காலத்தில், மறைந்து ஒழுகுவதில்லை. விருந்தாக வந்திருக்கும் ஆடவர் , அறிமுகம் இல்லாதவராக இருந்தாலும், அவரைப், பாசமுடன் ‘அண்ணா’ என்று முறை வைத்தழைத்து, பதினாறு வகைக் கறிகளுடன் பெருவிருந்தினைப் படைக்கின்றாள். ஆயினும்,அடக்கத்துடன், ‘பட்டிக்காட்டுக் குடியானவர்கள் நாங்கள் , எங்களுக்குப் பலகறியும் சிக்காது, வழக்கமாக உங்கள் வீட்டில் உண்ணும் சிறப்பான உணவாக ஏற்று இதனை உண்ண வேண்டும்’ என்று முகமன் கூறி உண்பிக்கும் பண்பாடு நல்லதங்கம் வாயிலாக உணர்த்தப்படுகின்றது.                       விருந்து உபசரிக்கும் முறையும் அண்ணன்மார்சாமி கதையில் நன்கு சித்தரிக்கப்படுகிறது.  விருந்தினர், நல்லெண்ணெய் சீயக்காய் நன்றாய் நலுக்கமிட்டுக், கொப்பரையில் நீர்வைத்து நீராட்டப்படுகின்றனர்; உடம்பு முழுதும் மணமிக்க சந்தனக் கலவை பூசப்படுகிறது. விருந்தினர் உண்ணத் தலைவாழையிலை போடப்படுகின்றது. விருந்தினர் உண்ணும் முன்னும் , உண்ட பின்னும் கைகழுவத் தாதிமார் கரத்தில் நீர் வார்க்கின்றனர். பிரப்புப்பெட்டிக் கூடையில் போசனங்கள் கொண்டு வந்து பரிமாறாப்படுகிறது.  குத்துப் பருப்புமிட்டிக் குடத்தோடு நெய்சொரிந்து, பதினாறு வகைக்கறியும் பாங்குடனே பரிமாறப்படுகின்றது. உண்டு கைகழுவியபின் விருந்தினருக்கு வெற்றிலை பாக்கு அளிக்கப்படுகின்றது.                    ‘நலுக்கமிடல்’, ‘கொப்பறையில்’ நீர் வைத்தல்,’தலைவாழையில் ‘உணவு இடல், ‘பிரம்புப் பெட்டிக் கூடையில் உணவு எடுத்துப் பரிமாறல், இவையனைத்தும் கொங்குநாட்டு வழக்கு.                   பசித்து வந்தவரின் களைப்பைப் போக்குவதோடு , சிறப்பு நாட்களில் ஊரை அழைத்து உணவிடுவதும் உண்டு. அவ்வாறு ‘ஊர்ச்சனங்களுக்கும் உண்டான பேர்களுக்கும்’ உணவிடும்போது, பரிமாறும் பொறுப்பைக் கூலியாளர்களுக்கு விட்டுவிடாமல், கவுண்டச்சியே மேற்கொள்ளுகின்றாள். இதுவும் கொங்கு வேளாளக் குடிப்பண்பு. வேளாளரின் சமுதாயச் செல்வாக்கு                           நிலவுடைமையாளராகிய வேளாளர்கள் தம் உழவுத் தொழில் காரணமாகச் சமுதாயத்தின் பலநிலைகளிலும் உள்ளவரோடு கலந்து பழக வேண்டியுளது. பிறரால் தீண்டத் தகாதவர் என்று கருதப்படும் தோட்டி முதலிய சாதியினருடனும் வேற்றுமையின்றி, ஆனால், பெருமிதத்துடன் பழகுவதாலும் தம்மை அண்டினவருக்குக் கொடுத்து உதவத் தேவையான உணவுப் பொருள்களை உற்பத்தி செய்து உற்ற சமயத்தில் உதவுவதாலும் சமுதாயத்தின் எல்லாப் பிரிவினரிடமும் வேளாளர்களின் செல்வாக்குப் பரவுகின்றது.                         ஊர்ப்பெரியவரான கவுண்டர் மேற்கொள்ளும் பொதுக்காரியங்கள் அனைத்திலும் ஊர்ப்பொதுமக்கள் தாமாகவே திரண்டு வந்து கலந்து கொள்கின்றனர். துணைநிற்கின்றனர். கோலாத்தாக் கவுண்டர் ,’வெள்ளாங்குளம் வெட்டி விநாயகரும் வைப்போம்’ என்று கூறியவுடன் மக்கள் அனைவரும் அவருடைய விருப்பத்தை அறிந்து செயல்படுவது அண்ணன்மார்கதையில் அழகாகச் சித்தரிக்கப்படுகின்றது. சில நம்பிக்கைகள்                       பிள்ளைப் பேற்றுக்குச் செய்யும் தவங்கள் பலவற்றை நாட்டுப்புற இலக்கியங்கள் பேசுகின்றன. புண்ணிய தீர்த்தமாடுதல், கோவில் முற்றத்தில் நிறைநாழி வைத்து வழிபடுதல், தரை மெழுகி உண்ணல் என்பன அத்தகைய தவங்கள். பிள்ளை இல்லாதவர்கள் செல்லப் பிராணிகளை வளர்ப்பதனாலும் , சிறு குழந்தைகளுக்குத் தின்பண்டங்கள், உடைகள் கொடுத்து அன்பை வெளிப்படுத்துவதனாலும் குழந்தைப் பேறடையலாம் என்றும் நம்பப்படுகிறது.                  தாமரையும் இவற்றைச் செய்கிறாள். பன்றிக் குட்டிகள் இரண்டை மீனாட்சி , சொக்கன் எனப் பெயரிட்டு அன்போடு வளர்க்கிறாள். பங்காளிகளின் குழந்தைகளுக்குத் துணிமணிகள் தின்பண்டங்கள் கொடுத்துத் தன் பாசத்தை வெளிப்படுத்துகிறாள். இவற்றிற்குமேல் அவள் செய்வன , அவள் செய்கின்ற உண்மையான தவம்.                தாமரை தான தருமங்கள் செய்கிறாள். மதுக்கரைச் செல்லாண்டியம்மனுக்குத் தேர்த் திருவிழ நடத்துகிறாள். ஓடாத தேரை ஓடச் செய்யத் தன்னையே நரபலி கொடுக்கவும் முன் வருகிறாள். இறுதியாகப் பொன்னம்பலம் (சிதம்பரம்) சென்று வழிபட்டால் குழந்தை பிறக்கும் என்று நம்பி அங்குச் செல்கிறாள்.               அங்கு ஒரு சந்நியாசியைக் கண்டு,                   “அட்டம் பணிகள்செய்து அடிவணங்கித் தெண்டனிட்டுப்                  பன்னீர்ச் செம்பெடுத்துச் சன்னாசியார் பாதம் கழுவியேதான்                  புஷ்பங்கள் தானெடுத்துச் சன்னியாசியார் பொற்பாதத்தில் போட்டு”                                                                                       வழிபடுகிறாள். சிவனடியாரை வழிபடுகின்ற மாகேசுவர பூசையே சிறந்த தவம் என்று இக்கதையைப் பாடும் பிச்சன் தம்மை இங்கே வெளிப்படுத்திக் கொள்கின்றார்.                  தவத்தின் இறுதியில் துறவியொருவரோ, கடவுளோ தோன்றி,’ மந்திரம் உச்சரித்து மாங்கனி தருவது’, ‘புற்றுமண்ணும் விபூதியும் தருவது’ போன்ற செய்திகள் வாய்மொழி இலக்கியங்களில் காணப்படுகின்றன. அவ்வாறே, அண்ணன்மார்சாமி கதையிலும்  சந்நியாசியார் சுவாமி கழுத்தில் சூடிய திருமாலையை எடுத்துக் கொடுக்கிறார். அதைத் தாமரை வாங்கி மடியில் கட்டிக் கொள்கிறாள்; கருப்பந் தரிக்கிறாள். கன்னிமை                              அண்ணன்மார்சாமி கதையிலும் வேறு பிற வாய்மொழிக் கதைப் பாடல்களிலும் கொங்குநாட்டுத் தல புராணங்களிலும் கன்னிமார் எழுவர் பற்றிய செய்திகள் வருகின்றன. அண்ணன்மாரின் தங்கை அருக்காணி நல்லதங்கம் கன்னியாகவும் தெய்வீக சக்தி வாய்ந்தவளாகவும் அண்ணன்மார்சாமி கதை பேசுகின்றது. தங்கை திருமணம் செய்து கொள்ளாமைக்குக் காரணம் இக்கதையில் கூறப்படவில்லை.                       கன்னியாக வாழ்ந்த அவளை, ‘உத்தமாபத்தினி’, ‘ஒருசொல்லு வாசகி’,’அவள் கண்ட கனா கூறிய சொல் ஒருநாளும் பிழையாது’ என்று இக்கதை இவளைப் பலவாறு துதிக்கின்றது.  இவளை நினையாமல் அண்ணன்மார் ஒரு செயலும் செய்வதில்லை. செய்தாலும் அவை அவர்களுக்கு வெற்றி அளிப்பதுமில்லை. நல்லதங்கம், அவளுடைய கன்னிமை காரணமாகத் தெய்வங்களுக்கும் மேலாகப் போற்றப்படுகிறாள். நாட்டுத் தெய்வமாகிய செல்லாண்டியம்மனையும் வென்ற பெரியகாண்டியம்மன் கன்னியாகிய நல்லதங்கத்தின் துணையால் ஈடேறுகிறாள்.                             தங்கை நல்லதங்கம் தன்னைப் ‘பத்தினி’ என்று குறிப்பிட்டுக் கொள்வது எண்ணத்தக்கது. அண்ணியர் கேட்டுக்கொண்டபடி அவர்கள் வாழ்ந்த அரண்மனைக்குத் தீயிட்டுக் கொளுத்துகையில், தங்கம், “பத்தினியும் நானாகில் நான்போடும் பூப்பந்து பக்கமெல்லாம் போகாமல் உத்தமியும் நானானால் போடும் பூப்பந்து ஒருபக்கம் போகாமல் வெந்து தணியட்டுமே வேதனையும் தீரட்டுமே” என்று அழுதுகூறிக் கொண்டே கண்ணீரை வழித்து எறிந்தாள். அரண்மனைமீது விழுந்த கண்ணீர்த்துளி அக்கினிப் பந்தாக மாறி மாளிகையை எரிக்கிறது.வெந்து தணிந்தபின் தங்கை மழையை வருவித்துத் தனலை அவிக்கின்றாள்.                         நல்லதங்கத்தின் இச்செயலைப் பத்தினித் தெய்வமாம் கண்ணகியின் செயலுடன் ஒப்பிட்டுக் காணலாம். ‘பட்டாங்கு யானுமோர் பத்தினியே யாமாகில் ஒட்டேன் அரசோடு ஒழிப்பேன் மதுரையையும்’ என்று கண்ணகி வஞ்சினம் உரைத்ததைப் போலத் தாமரையும் ‘பத்தினியும் நானாகில்’ எனத் தன் ஆற்றலை எடுத்தியம்புகின்றாள்.                      கண்ணகியின் கற்பின் சக்திக்கு அவள் திருகி எறியும் நகில் குறியீடாக அமைகிறது. தங்கத்தின் கன்னிமைக் கற்பின் சக்திக்கு அவள் வழித்து எறியும் கண்ணீர் குறியீடாக அமைகிறது.                           கண்ணகி,’பார்ப்பார் அறவோர் பசுப்பத்தினிப் பெண்டிர் மூத்தோர் குழவியெனும் இவரைக் கை விட்டுத் தீத்திறத்தார் பக்கமே சேர்க’ என்று அழலை ஏவியது போலவே தங்கமும்,’பக்கமெல்லாம் போகாமல்’ ஒருபக்கமும் போகாமல்’ என்று நெருப்புக்கு எல்லை வகுக்கின்றாள்.                              மற்றொன்றும் இங்குக் காண வேண்டும். அண்ணன்மாரின் மனைவியர் அவர்களுடைய தாய்மாமன் பெண்களே. அவர்கள் திருமணமாகியும் கன்னி கழியாதவர்கள். அவர்கள் தங்கத்தைப் போலக் கன்னிமைக்கு உரிய சக்தியைப் பெற்றிருக்கவில்லை.                              இந்த நிலைக்கு மேனாட்டு மானுடவியலார் ஒரு விளக்கம் அளிக்கின்றனர். ஒருபெண் திருமணமாகாமல் இருப்பதால் மட்டுமே அவள் கன்னிமைக்கு உரிய சக்தியைப் பெற்றுவிடுவாள் எனக் கூற இயலாது. திருமண விருப்பத்துடன் இருப்பின் கன்னிக்கு உரிய சக்தியைப் பெற இயலாது. அண்ணன்மாரின் மனைவியர், தங்கை நல்லதங்கத்தைப் போலக் கன்னிமைச் சக்தி பெறாமைக்குக் காரணம் , அண்ணன்மார் இருவரும்’பூமியைப் பார்த்தமுகம் பெண்ணின்முகம் பாராமல்’  பிரம்மச்சரியத்தைக் காத்திருக்க, அவர்களுடைய மனைவிமார் இல்லறவின்பத்தில் ஈடுபடும் ஏக்கம் உடையவராக இருந்தமையால் போலும். இந்த விளக்கம் ஆராய்வதற் குரியது.    கொங்கு வேளாளர் திருமண அமைப்பியல் திருமணம்                       மக்கட் சமுதாயத்தில் திருமணம் என்ற அமைப்பு மிகவும் நுட்பமானது. இணைவிழைச்சு மக்களுக்கும் ஏனைய உயிர்களுக்கும் இயற்கையில் அமைந்ததே. இனவிருத்தி நாட்டமும் அத்தகையதே. ஆயினும், மனிதகுல நாகரிக வளர்ச்சியின் அங்கங்களாகிய குடும்ப வாழ்விலும் பொருளாதர அமைப்பிலும் திருமணம் பெரும்பங்கு வகிக்கிறது. திருமணம் மக்களிடையே அறவொழுக்கக் கட்டுப்பாடுகளை உருவாக்குவதோடு வாரிசுகளுக்குச் சட்டபூர்வமான உரிமைகளையும் படைத்தளிக்கின்றது. சொத்துரிமைச் சமுதயத்தில் குடும்பத்தினரின் உறவுகளை நிர்ணயிப்பது சொத்துக்கு உரிமைதான். இயற்கையான இணைவிழைச்சால் நிகழ்ந்த தாம்பத்திய உறவுகள் மறைந்து, மணமகன் அல்லது மணமகள் பெறக்கூடிய சொத்தின் அடிப்படையில் நிச்சயிக்கப்படும் திருமணவுறவுகள் சொத்துரிமைச் சமுதாயத்தின் அமைப்பாகும். சொத்துக்கு உரிய வாரிசை உறுதிப்படுத்தும் வகையில் சந்ததியரின் கால்வழியையும் பெண் அல்லது ஆண், தான் பிறந்த குடும்பத்தை விட்டு வேறு குடும்பத்திற்குப் பெயர்ந்து வாழும் விதிமுறைகளையும் திருமணம் உருவாக்குகின்றது.                      கொங்கு வேளாளர் சமுதாயத்தில் திருமணம் சொத்து அடிப்படையில் அமைந்தது. இதன் விளைவுகள் ஆழமானவை.                  திருமணத்தைப் பொருத்தவரையில், உலகத்து நாடுகள் அனைத்திலும் மக்களிடத்தில் செல்வாக்குப் பெற்றுள்ள வழக்கங்களே திருமணச் சட்டங்களாக ஆகிவிட்டன. திருமண உறவுக்குத் தகுதி, திருமணச் சடங்குகள், திருமண உறவால் தோன்றும் உரிமைகள், கடமைகள், வாரிசு முதலிய எல்லாவற்றிலும் சமுதாயம் கைக்கொண்டொழுகிய வழக்காறுகளே எழுதாச் சட்டங்களாக இருந்து வந்துள்ளன. அரசுகள் சமுதாயப் பழக்க வழக்கங்களை மதித்து அவற்றிற்கேற்பவே நீதிநெறிகளை முறைப்படுத்தின. தரும சாத்திரங்களும் திருமண அமைப்பும்                         பாரத நாட்டில் தரும சூத்திரங்களும் சாத்திரங்களும் அறங்களை விதித்ததுடன், நான்கு வருணத்தாருக்கும் தொன்றுதொட்டு இருந்து வருகின்ற ஆசார ஒழுக்கங்களையும் திரட்டிக் கூறுகின்றன. வாழ்க்கையின் பல்வேறு நிலையில் உள்ள பல்வேறு சாதியினருக்கும் உரிய கடமைகளை வரையறுத்து அவற்றிற்குரிய ஒழுக்கங்களை உணர்த்துவதே தரும சூத்திரங்களின் நோக்கமாகும்.                       இத்தரும சூத்திரங்கள் உயர்ந்தோருக்காகாத அநாகரிகமான திருமண முறைகள் இரண்டினைக் குறிப்பிட்டு, அவை எத்தகைய இழிவுடையனவாக இருப்பினும் வழக்கத்தில் இருப்பதால் அவையும் அரசனால் பாதுகாக்கத் தக்க ஒழுக்கங்களே எனக் கூறுவதாகப் பேரா. கானெ எடுத்துக்காட்டுகின்றார்.                                அவர் குறிப்பிடும் திருமணங்களாவன 1. அத்தை – மாமன் மக்கள் திருமணம். 2. குடும்பத்திற்குப் பொதுவாக ஒருகன்னியைக் கொண்டு வருதல்; அல்லது சகோதரனின் விதவையை மணத்தல் (P.V. Kane, History of Dharma Sastras vol II page 462 – 555) அண்ணன்மார்சாமி கதையில் திருமண முறை                      இவற்றுள் அத்தை – மாமன் பிள்ளை அல்லது முறைப்பெண் திருமணமே அண்ணன்மார்சாமி கதையில் இடம் பெற்று, இங்கு ஆய்வுக்கு உரியதாகின்றது.                   தாயின் உடன்பிறந்தானின் மகள் அல்லது தந்தையின் உடன்பிறந்தாளின் மகள் கொங்கு வேளாள மரபில் முறைப்பெண் எனப்படுவாள். முறைப்பெண்ணை மணத்தல் கொங்கு வேளாள மரபில் ஒருவித புனிதத்தன்மையோடு போற்றப்பட்டது.                     அண்ணன்மார்சாமி கதையில், முறை மாப்பிள்ளையாகிய குன்றுடையானிருக்கத் தன்னைப் பெண்கேட்டு அவனுடைய பங்காளிகள் வந்த போது,தாமரை. முறை மாப்பிள்ளையின் உரிமையை, “என், அத்தை மகனிருக்க அயல்நாட்டார் வந்ததென்ன என், மாமன் மகனிருக்க் எனக்கு, மறுநாட்டான் வந்ததென்ன?’ எனக் கேட்டு வலியுறுத்துகிறாள்.   முறைப்பெண் மணத்தின் செல்வாக்கு                    கொங்கு வேளாளரின் மாமன் மகன், அத்தை மகளை மணந்துகொள்ள முன்னுரிமையுண்டு. அவன் வேறிடத்தில் பெண்கொண்டாலோ அல்லது தன்னுடைய உரிமையை வலியுறுத்தாமல் விட்டுவிட்டாலோதான் பெண்ணுக்கு வேறிடத்தில் மாப்பிள்ளை தேடலாம். முறை மாப்பிள்ளையின் கருத்தைத் தெளிவாகத் தெரியும்வரை அந்தப் பெண்ணை வேறு யாரும் மணம் பேசச் சற்றுத் தயங்குவார்கள். இதேபோன்று அத்தை மகனுக்கும் மாமன்மகளைப் பெண் கேட்க முன்னுரிமையுண்டு.  இந்த உரிமை ‘இணைச்சீர்’ எனும் சடங்கின் வழிப் புனிதமான ஒப்பந்தமாக மாற்றப்படுகின்றது. (Dr.K.M. Meenakshi Sundaram,Marriage Systems of the Kongu Vellala community. Journal of Tamil studies.6th Dec 1974)                        சகோதரனின் திருமணத்தின்போது, உடன்பிறந்த சகோதரி ‘இணைச்சீர்’ எனப் பெயரிய சீர் ஒன்றைச் செய்வாள். இணைச்சீர் செய்த சகோதரியின் பையனுக்குத் தனக்குப் பிறக்கும் பெண்ணைக் கொடுப்பதாகத் திருமணத்தின்போது சகோதரன் இச்சடங்கு மூலம் வாக்குக் கொடுக்கிறான். இந்தச் சீரினால் உருவான புனித வாக்குறுதியை நிறைவேற்றாமல் தவறிழைக்கும் சகோதரனைச் சபிக்கும் உரிமையும் உடன்பிறந்தாளுக்கு உண்டு. (நா.வானமாமலி, தமிழர் நாட்டுப் படல்கள் , பக்386)                             முறையாக மணம் செய்து தராவிடில் முறை மாப்பிள்ளை யென்னும் உரிமையால், பெண்ணை ‘மகன் சிறையெடுத்துச்’ சென்றுவிடுவான் எனச் சகோதரி வஞ்சினம் கூறுவதும் உண்டு.                          ஏழையான தங்கையின் மகன் குன்றுடையான் பெண்கேட்டு வந்துவிடுவான் என்று தாய்மாமன் மணியங்குறிச்சிக் கவுண்டன்,                  “உரிமைக்காரன் தானும் ஒளிந்திருந்து வந்திடுவானென                    நாலுதலை வாசலுக்கும் நலமான காவல்வைத்துக்                    காவலும் வைத்துக் கட்டுத்திட்டம்” செய்கிறான். அவன் மகள் தாமரை, முறை மாப்பிள்ளையான் குன்றுடையானின் உரிமையை மதித்து அவனைத் திருமணம் செய்துகொள்கிறாள். தன்னையும் கணவனையும் அவமதித்த தந்தையிடம் தன் வயிற்றில் சிங்கம்போல ஆண்பிள்ளைகள் இருவர் பிறப்பரென்றும் அவர்கள் சகோதரனின் பெண்கள் இருவரையும் ‘கண்டுசிறை போடாமல் கொண்டுசிறை போடுவார்கள்’என்றும் சபதம் செய்கிறாள்.                     இந்த நிகழ்ச்சி, கொங்கு நாட்டுப்புற வழக்கிலிருந்த முறைப்பெண் திருமண முறையினைக் காட்டுகின்றது. முறைப்பெண் திருமணம் பற்றித் தரும சாத்திரங்கள்                       முறைப்பெண்ணை மணத்தல் என்னும் வழக்கத்தினைப் பிரகஸ்பதி , மனு முதலியோர் கடுமையாகக் கண்டிக்கின்றனர். சபிண்டர்கள் (பிதிரர்களுக்குப் பிண்டம்போடும் கடமை உடையவர்கள்) தமக்குள் மணவுறவு கொள்ளக் கூடாது எனும் ஒழுக்கநெறிக்கு மணப்பெண்ணை மணக்கும் முறை விரோதமக உள்ளது என்பது இந்த மணவொழுக்கம் கண்டிக்கப்பட்டதற் கொரு காரணம். அத்தை- மாமன் மக்கள் திருமண உறவு உயர்ந்தோருக்கு ஆகாது என்றும், இது தகாப்புணர்ச்சியாகிய பாவமென்றும் ஸ்மிருதிகளும் தரும சாத்திரங்களும் கண்டித்து ஒதுக்கின. இவ்வாறு, அத்தை-மாமன் மகளைத் திருமணம் செய்து கொண்டவர்களுக்கு, மனு, சாந்திராயனம் என்னும் கழுவாய்ச் சடங்கினை விதித்ததோடு , அத்தகைய மணம் செய்துகொண்டவன் சாதியிலும் தாழ்ந்துவிடுவான் என எச்சரிக்கின்றார்.                     தருமசாத்திரங்கள் அத்தை-மாமன் மக்கள் திருமணத்தைத் தந்தை வழியில் நோக்குகின்றன. ஒருவனின் அத்தை மகளாக இருந்தாளும் மாமன் மகளாக இருந்தாலும் இருவரிடத்திலும் தன் தாய்தந்தையரின் இரத்தக் கலப்பு இருப்பதால் , அவர்கள் ஆறு தலைமுறைக்கு ஒருகால் வழியினரே எனத் தரும சாத்திரங்கள் அத்தகைய திருமணங்களை ஒதுக்குகின்றன. பிதிரர்களுக்கு பிண்டம் கொடுக்கும் கடமை பெண்வழியிலும் ஆறு தலைமுறைக்கு இருப்பதால் மேற்கூறிய திருமுறைகள் ஆகா எனக் கண்டித்தன.                  ஆனால் முறைப்பெண் திருமணம் தாய்வழிச் சமூகத்தைச் சார்ந்தது. தாய்வழிச் சமுதாயப் பண்புகள் தங்கிவிட்ட சமுதாயங்களிலேல்லாம் முறைப்பெண் திருமணங்களும் இருந்து வருகின்றான எனலாம் (Debiprasad Chattobatyaya, Lokayata. P219). பிதிரர்களுக்குப் பிண்டம் வழங்கும் வைதிக நெறி கொங்கு வேளாளர் சமுதாயத்தில் வற்புறுத்தப்படுவதில்லை. மாறாகக் கூரைக்குச் சோறு போடுதல், மற்றும் நீத்தார் வழிபாடாகத் ‘திவசமே’மேற்கொள்ளப்படுகின்றது எனவே, இச்சமூகத்தில்’முறைப்பெண்’ வழக்குப் பொதுவாகவும் ‘உரிமைப் பெண்’ வழக்குச் சிறப்பாகவும் பின்பற்றப்பட்டது.   முறைப்பெண் திருமணச் செல்வாக்கின் காரணம்                முறைப்பெண் திருமணவழக்கம் பொருளாதார அடிப்படையில் தோன்றியதெனலாம்.                 நிலவுடைமைச் சமுதாயத்தில் சொத்து குடும்பத்தைவிட்டுப் போய்விடக் கூடாதென்ற அக்கறை மிகுதியாகக் காணப்படும். குடும்பத்தை விட்டுப் பிரிந்த சொத்தை மீண்டும் தம் குடும்பத்திற்கே கொண்டுவர, ’முறைப்பெண்’ திருமணமுறை வேளாளக் குடும்பங்களில் மேற்கொள்ளப்படுகின்றது.                         மரபுவழிக் கொங்கு வேளாண் குடியில் பெண் தன்னுடைய திருமணத்தின்போது, குடும்ப சொத்திலிருந்து ஒருபகுதியை நகைதுணிமணிக ளாகவும் பாத்திரம் பண்டங்களாகவும் கால்நடைகளாகவும் , மேலும்புதுக் குடித்தனத்துக்கு வேண்டுவதனைத்து மாகவும் கொண்டு செல்லுகின்றாள். திருமணத்தின் பின்னும் சீர்வரிசைகளாகவும் குடும்பத்தின் அசையும் சொத்தில் ஒருபகுதி பெண்ணுக்குச் சென்று விடுகிறது. சகோதரியின் மகளைத் தன்மகனுக்குத் திருமணம் செய்து தன் வீட்டுக்கு அழைத்துக் கொள்ளும்போது  பிரிந்த சொத்து மீண்டும் குடும்பத்திற்கு வந்து சேருகின்றது.                  அத்தை பெண்ணை மனக்கும் உரிமை, குடும்ப்த்தை விட்டுச் சென்ற சொத்தை மீண்டும் பெறும் அடிப்படையில் தோன்றிய ‘மரபுரிமை’யாகும்.                     இதனைச் செயற்படுத்தக் கோரும் உரிமை மாமன் மகனுக்கே உரியது. அவன், இவ்வுரிமையை வலியுறுத்தலும் செய்யலாம்; வலியுறுத்தாமலும் போகலாம். வலியுறுத்தினால் அத்தை வீட்டினர் இந்த உரிமைக்குத் தக்க மதிப்புக் கொடுக்கக் கடமைப்பட்டுள்ளனர்.                         தன் மகனுக்குச் சகோதரனின் மகளைக் கேட்கும் உரிமை கொங்கு வேளாள சமுதாயத்தில் பெண்ணுக்குச் சடங்கு மூலமாக அளிக்கப்பட்ட புனிதமான உரிமையாகும்.                      தந்தைக்குப் பின் சகோதரியையும் அவள் குடும்பத்தாரையும் வறுமைப்பட்டுப் போகாமல் காக்கும் கடமை உடன்பிறந்த சகோதரர்களுக்கு உண்டு. திருமணத்துடன் பெண்ணின் பிறந்த வீட்டுத் தொடர்பு அற்றுப்போய் விடுவதில்லை. பாசமும் பற்றும் நீங்கி விடுவதில்லை. அவை மேலும் தொடர்கின்றன. ஆண்மகன் , தான் திருமணம் செய்துகொண்டு குடும்பதிற்கு வேறொரு பெண்ணைக் கொண்டு வந்து, தன் அன்பைப் பங்கிட்டாலும் , உடன்பிறந்தாளைக் காக்கும் கடமையில் தவறேன் எனத் திருமணத்தின்போது ‘இணைச்சீர்’ அல்லது ‘கைகோர்வை’ எனும் சடங்கின் மூலம் உறுதியளிக்கின்றான்.                      ‘கைகோர்வை’ச் சீரால் தோன்றிய ஒப்பந்தத்தை வலியுறுத்தும் உரிமை சகோதரிக்கே உண்டு. சகோதரனுக்கு உள்ள இந்தக் கடமையின் அடிப்படையில்தான் , அண்ணன்மார் சாமி கதையில் பவளாத்தாக் கவுண்டச்சி, தன்மகன் குன்றுடையானுக்குத் தன்னுடன் பிறந்தான் வீட்டில் பெண்கேட்கச் செல்கிறாள்.  தாமரை, தன் மக்களாகிய பொன்னர்- சங்கர் ஆகியோருக்குத தன் தந்தையின் மகன் வழிப் பேத்தியரை (சகோதரனின் பெண்களை) ப் பெண் கேட்கிறாள். அண்ணன்மார்சாமி கதையில் நடைபெறுகின்ற இத்திருமணங்கள் இரண்டும் மாமன் மகளை மணக்கின்ற திருமணங்களே. “அத்தை மகன்- மாமன் மகன்” கருத்தில் ஒருவரே                  தாமரை, குன்றுடையானின் உரிமையை வலியுறுத்தும்போது, “மாமன் மகனிருக்க மறுநாட்டார் வந்ததென்ன, அத்தை மகனிருக்க அயல்நாட்டார் வந்ததென்ன?” என்று கேட்கிறாள். அதாவது, குன்றுடையான் ஒருவனையே மாமன்மகன் என்றும் அத்தை மகன் என்றும் முறை கூறுகிறாள். இங்கு, கொங்கு வேளாண்குடியின் பழமையான பண்பாட்டுக் கூறுகள் சில வெளிப்படுகின்றன.                 கொங்கு வேளாள சமூகத்தில் ‘மாமன்’, ‘மச்சான்’, ‘அத்தை’ எனும் உறவுப் பெயர்கள் வழங்குகின்றன. ‘மாமி’, ‘அத்தான்’, ‘அத்திம்பேர்’, ‘அம்மாஞ்சி’ போன்ற உறவுப் பெயர்கள் வழங்கப் பெறுவதில்லை.’அத்தை’ என்ற உறவுப் பெயர் , தந்தையின் சகோதரிக்கும், மாமன் மனைவிக்கும் பொதுவாகவே வழங்கப்படுகிறது. அவ்வாறே, ‘மாமன்’ எனும் உறவுப்பெயர், அத்தையின் கணவனுக்கும் தாயின் சகோதரனுக்கும் வழங்கப்படுகின்றது. கொங்கு வேளாள சமுதாயத்தின் உறவுப் பெயர்களில்காணப்படும் குறிப்பிடத்தக்க இந்த வேறுபாடு மேலைநாட்டு மானுடவியலார் கருத்தையும் ஈர்த்துள்ளது. ( The right sub-castes make no distinction between the terms for mother’s brother and father’s sister’s husband nor between the terms for matriarchal  and patriarchal cousins. Brenda E.F. Beck. Peasant Society of Kongu Country, p 13)   ஒருவரையே ‘அத்தைமகன்’ என்றும் ‘மாமன்மகன்’ என்றும் முறைப்பெயர் வைத்து அழைத்தலால் , அத்தைமகனே மற்றொருவகையால் மாமன் மகன் என்பது குறிப்பால் பெறப்படுகிறது.                   அதாவது, தாய் மாமனே அத்தையின் கணவன்; தாயின் உடன்பிறந்தான் தந்தையின் சகோதரியின் கணவன் என்ற உறவுமுறை புலப்படுகின்றது.                குன்றுடையான் உண்மையில் தாமரைக்கு அத்தைமகன் உறவாக இருக்க, அவனை, அத்தை மகன் என்றும் மாமன் மகன் என்றும் இருமுறையிலும் உறவு கொண்டாடியது,கொங்கு வேளாளசமூகம்                           குலங்களாகவும் குடிகளாகவும் (clans and tribes) வாழ்ந்த காலத்தில் நடைமுறையில் இருந்த தொன்மையான மணமுறையினை எடுத்துக் காட்டும் எச்சமாகவும் கொள்ளலாம்.              குலங்களாகவும் குடிகளாகவும் இருந்த சமுதாயம் நாகரிக வளர்ச்சியால் , ‘ஒருகுலத்தார்’ அல்லது ‘ஒருகூட்டத்தார்’ அனைவரையும் ஒருதாய் மக்கள் என்றும் அக்கூட்டத்தார் அனைவரும் உடன்பிறந்த முறை உடையவர் என்றும் கருதியது. எனவே, அக்கூட்டத்துக்குள் மணவுறவு கொள்வது தகாது என விலக்கப்பட்டது.  தன் கூட்டம் அல்லாத பிற கூட்டத்திலேயே மணவுறவு கொள்ளப்படுகிறது. ஒருவர் எந்தக் கூட்டத்தைச் சேர்ந்தவரோ அந்தக் கூட்டத்தினரொடு சகோதர உறவும் மற்றக் கூட்டத்தினருடன் மணவுறவும் அமைவதால் அந்தக் கூட்டத்தினைச் சேர்ந்தவர் அனைவரையும் ஒரேமுறைப் பெயரால் அழைக்கின்றனர். இந்த முறையில், தாய்வழியில் வந்த அடுத்த கூட்டத்து ஆண்கள் எல்லாம் மாமன் மைத்துனன்மாராகவும்  தந்தை வழியில் அடுத்த கூட்டத்துக்குச் சென்ற பெண்கள் எல்லாம் அத்தைகளாகவும் அத்தை பெண்களகவும் ஆகின்றனர். (cross-cousins marriage is the form of marital relations that results from the intermarriage in each  generatiom of two groups , all relatives are classified according to the speaker’s own goup orto the other.  Thompson ,Studies in Ancient Greek society, quoted in Lokayata)               கொங்கு வேளாளர் திருமணங்களில், திருமணம் முடிந்த பின்னர், மணமகளின் தாய்த்தார் இன்ன கூட்டத்துப் பெண்ணை இன்ன கூட்டத்துக்குக் கொடுத்தோம் என்றும், மணமகனின் தாயத்தார் இன்ன கூட்டத்துப் பெண்ணை இன்ன கூட்டத்துக்குக் கொண்டோம் என்றும் கூறுவதை ஈண்டு அவதானிக்க வேண்டும்.              இருகூட்டங்களுக்குள் மட்டுமே நடைபெற்று வந்த இந்தத் திருமணவுறவு பிறகூட்டங்களுடனும் விரிவடைந்தபோதும் பழையவுறவுப் பெயர்களே பயன்படுத்தப்பட்டன.இந்த முறையே இன்றும் கொங்கு வேளாள சமூகத்தில் கைக்கொள்ளப்படுகிறது.               ‘உரிமைப்பெண்- முறைமாப்பிள்ளை’த் திருமணம் வழக்காற்று நெறியில் வலியுறுத்தப் பெறும் சமூகங்களில் , தாய் மக்கள் குடும்பவுறவு சில பாதிப்புக்களைப் பெறுகிறது. அந்தப் பாதிப்புக்களை அண்ணன்மார்சாமி கதையிலும் காணலாம். தாய் –மக்கள் குடும்ப உறவில் பாதிப்பு                  குடும்ப வாழ்வில் தாய்க்கும் மகனுக்கும் உள்ள  பாசப் பிணைப்பையும் விட நெருக்கமான உறவு வேறில்லை. தந்தை குடும்பத் தலைவனாக இருந்தாலும் , குடும்பத்தின் அன்றாட நடைமுறைகள் தாயை மையமாகக் கொண்டே நடைபெறுகின்றன. குடும்பத்திலிருந்து தந்தை ஒதுங்கியிருந்தால் மக்கள் வளர்ச்சியில் தாயின் பாதிப்பே மிகுதியாக இருக்கும். அன்னதொரு பண்பு அண்ணன்மார் வாழ்விலும் காணப்படுகின்றது.                      மாமன் மகளை மணப்பதில் அத்தை மகனுக்கு முதலுரிமை உண்டு. இது கொங்கு வேளாள சமூகத்தின் மரபு நியதி. சமூக நியதியை மதித்துத் தாமரை மங்கு மசையனான குன்றுடையானை மணந்து கொள்கிறாள். தகுதியில் குறைவானவனைத் திருமணம் செய்து கொண்டதனால், அவள், தன் தந்தையால் அவமானப்படுகிறாள். குடும்பத்தின் பொருளாதார முன்னேற்றத்திற்கு இவளே கடுமையாக உழைக்க வேண்டியிருந்தது. மகப்பேறு இல்லையென்ற தன்மனக்குறையைத் தணித்துக் கொள்ளப் பங்காளி வீட்டிற்குச் சென்று அவமதிப்புக் குள்ளா கின்றாள். அழகற்ற கணவனுடன் தாமரையைக் கண்ட வேட்டுவப் பட்டக்காரன், ‘இழித்தவாய்க் கிழவனை’ போலிருந்த குன்றுடையானைக் கொன்றுவிட்டு அவளை வைப்பாட்டியாக்கிக் கொள்ள நினைக்கிறான். இவையெல்லாம் ஆணின்ஆதிக்கச் செயலென்று தாமரையின் அடிமனதில் பதிந்தது போலும். ஆண் இனத்தால் விளைந்த இந்த அவமானங்களைப் போக்கிக் கொள்ளத் தன் கருத்துக்கு இசைந்த ஆண்மக்களைப் பெற்றெடுக விரும்புகிறாள்.           அவள், தன் தந்தையுடனும், பங்காளியருடனும், வேட்டுவத் தலைவனுடனும் ‘ என்வயிற்றில் வீரியர் இருவர் பிறப்பர், அவர்கள் முன்பழியும் பின்பழியும் முப்பழியும் தீர்ப்பர்’ என வஞ்சினம் உரைக்கும் போது, தன்மனக் குறையைத் தீர்த்து வைக்கும் ஆண்மக்களைப் பெறுவதில் அவளுக்கிருந்த தீவிர வேட்கை உருவம் பெறுகின்றது.                   ஆண்மக்களைப் பெற வேண்டும் என்ற தீவிர வேட்கையால் ,’மேனிதளர்ந்து மெத்த வயதான பின்பும்’ பிள்ளைப் பேற்றுக்காகத் தாமரை தவம் செய்கிறாள். அண்ணன்மார் , அவளறியாமல் பிறந்து நிலவறையில் வளர்ந்து கொண்டிருக்கும்போது, மூன்றாவதாகப் பிறந்த பெண்குழந்தையிடம், ‘மண்ணாள இரண்டு ஆணும் மனையாளப் பெண்ணொருருத்தி, மூன்று பிள்ளை வரம் வாங்கி வந்தேன், நான், உத்தமியே, மனையாள நீபிறந்தாய், மண்ணாள அண்ணரெங்கே’ என்று புலம்புகின்றாள்.                 அண்ணன்மார் வளர்ந்து ஆளானபோது, தாமரை தன் சபதங்களை உணர்ச்சி பொங்கக் கூறி, அவற்றை நிறைவேற்றி வைக்குமாறு அவர்களைத் தூண்டுகிறாள்.                  தாமரை மக்கள் மீது பாசமுடையவ ளானாலும்,அடிமனதில் அவளுக்கு இருந்த மனக்குறை, மக்களின் வளர்ச்சியைப் பாதித்தது. அந்தப் பாதிப்புஅண்ணன்மாரின் வாழ்க்கையைப் போராட்டமாக மாற்றியது. அண்ணன்மாரின் குடும்ப வாழ்க்கையைக் கானல் நீராக்கியது. ‘தாலிகட்டும் தோஷமுண்டு தவிக்கவிட்டார் எங்களையும்’ என்று குடும்ப வாழ்க்கை யையும் கணவனின் அன்பையும் ஒருசேர இழந்த அண்ணியரைப் பரிதவிக்கச் செய்தது.             தாய் தன் பிள்ளைகள்மீது அளவிலாப்பாசமும் அதே சமயம் குடும்ப வாழ்க்கையில் தான் இழந்ததைத் தன் மக்கள் மூலமக ஈடு செய்துகொள்ளவும் தனக்குக் கேடு செய்தவர்களைப் பழிவாங்கவும் நினைத்தால் , அவளுடைய மக்களின் வாழ்க்கை எப்படி இருக்கும்? அண்ணன்மாருடைய வாழ்க்கையைப் போலத்தானிருக்கும்.            பெண், தன் குடும்பத்தில் தமையன், தந்தை, கணவன் முதலிய ஆண்களின் செயல்களால் மனக்குறை யுடையவளாக இருந்து, அவர்களைத் தன் மனநிலைக்கும் விருப்பத்திற்கும் மாற்ற முடியாதவளாக  இருக்கும் நிலையில், மகனொருவனைப் பெற்றுத் தன் ஆதிக்கத்திலுள்ள அவனைத் தன்னுடைய விருப்பப்படி வளர்த்துவதில் நிறைவுகொள்கிறாள். அவள் மகனைப் பெற்றுக் கொண்டது இனவிருத்தியாகிய இயற்கை விதித்த கடமையைச் செய்வதற்கு மட்டுமேயன்றி, தன் அகமனத்தில் தங்கி, வெளிப்படாமல் ஊறிக் கிடக்கும் உரிமை வேட்கையைச் செயல்படுத்தவும் காரணமாக அமைகிறது.              மகனை வளர்த்துவதில் தாய் இருநிலையில் செயல்படுகிறாள். மகன்மீது பாசத்தைக் கொட்டிப் பாச மூட்டையாக அவனை வளர்த்துகின்ற தாய், தன்மகன் தனக்கே உரியவனாகத் தன் குறைகளைத் தீர்ப்பவனாக விளங்க வேண்டும் என்றும் விரும்புகின்றாள். தாயின் எண்ணங்களும் விருப்பங்களும் மனக்குறைகளும்    கொஞ்சம் கொஞ்சமாக வளரும் மகனின் மனத்தில் ஆழமாகப் பதிகின்றன.                   திருமணமாகும் முன் தந்தை வீட்டில் மகளாகவும், கணவன் வீட்டில் மருமகளாகவும் மனைவியாகவும்  தான் இழந்திருந்த தற்சுதந்திரத்தையும் உரிமைகளையும் , அவள், ஒருமகனுக்குத் தாயாகி அவன் மூலம் இழந்தவற்றை அடைய முனைகிறாள்.               தன் கடந்த கால வாழ்க்கையில் இழந்தவற்றை ஈடு செய்து கொள்ளும் வேட்கையுணர்வு ,மகனை ஆண்மையுள்ளவனாகவும் வீரனாவும் வளர்க்கத் தூண்டுகின்றது. அவ்வாறு வளர்த்து அவனைத் தன்விருப்பத்தை நிறைவேற்றும் கருவியாக்கிக் கொள்கிறது. மகனை இவ்வாறு வளர்ப்பதில் , அவளிடத்தில் உயர்ந்த தாயன்புடன் பொறாமையும் பழிதீர்க்கும் உணர்வும் கூடவே செயல்படுகின்றன.             பெண்ணின் மிக நுணுக்கமான மனவுணர்வினைப் பாமரக் கவிஞன் எத்துணைத் துல்லியமாகத் தெரிந்து தாமரைப் பாத்திரத்தைப் படித்துள்ளான்!. இவனா பாமரக் கவிஞன்.!                                                            7. பிச்சனின் திறம்                   அண்ணன்மார்சாமி கதையைப் பாடிய கவிஞர்,  ‘பிச்சன்’ எனத் தம்முடைய பெயரைத் தெரிவிக்கின்றார். பொதுவாக, படைப்பாளி இன்னார் என்று அறிய முடியாத நிலைமை வாய்மொழி இலக்கியத்தின் இயல்பாகக் கூறப்படுகின்றது. பாடலைத் திரட்டுவோன் படைப்பாளியைப் பற்றிய குறிப்பொன்றையும் தராவிடில் அவன் பெயர் மறைந்து விடுகிறது. பெரும்பாலும் அவையினரின் முன் , கதையை பாடும் பாடகன் தன்னுடைய பெயரைச் கூறிக் கொள்ளுவதில்லை. அவையினர் அவர்களின் முன்னிலையில் கதைபாடும் கலைஞன் இன்னான் என முன்னரே அறிவர்; அதனால் தன் பெயரைக் கூறி அறிமுகப்படுத்ஹிக் கொள்ள வேண்டிய தேவை அவனுக்கில்லை. கதைப் பாட்டைப் பொருத்தவரையில் ஆசிரியன் பெயரை அறிய இயலாமைக்குத் திரட்டுவோனின் கவனக் குறைவே காரணமாகும்.                 படைப்பாளரின் பெயருடன் வாய்மொழி இலக்கியம் நமக்குக் கிடைக்கும்போது நாம் அடையும் பயன் பெரிது. தொழில்முறை வல்லுநர் படைப்பு                    கதைப்பாட்டு கதைபாடுதலைக் குலமரபுத் தொழிலாகக் கொண்ட வல்லுநர்களின் படைப்பு. தொழில்முறை வல்லுநர்களால் படைக்கப்படும் எந்தப் படைப்பும் நயநேர்த்திகளில் பிறரின் படைப்பை விஞ்ச முனைதல் இயல்பே.                       கதைப்பாடகனின் தனித்த பண்பு அவன் படைப்பின் தரத்தை உயர்த்துகிறது. கதைப்பாடகன் பிறந்து வளர்ந்த சமுதாயத்தின் பண்பாடு, சமய அறிவு, உலகியலறிவு முதலியன அவனுடைய தனித்த பண்பை உருவாக்குகின்றன. கலைஞன் வாழும் சமுதாயச் சூழல் , கற்ற நூல்கள், பழக்க வழக்கங்கள் முதலியன அவனுடைய சிந்தனையைப் பண்படுத்து வதோடு, மொழிநடையையும் கதை கூறும் திறத்தையும் உயர்த்துகின்றன.   பிச்சனின் சமய அறிவு                        பிச்சனின் சமய நம்பிக்கையும் சமய அறிவும் அண்ணன்மார்சாமி கதையின் தகுதியை மிகவும் உயர்த்துகின்றன. பிச்சன் இக்கதையைப் பரமர் செயலாலே பாடுவதாகவும், இவ்வாறு பாடுகின்ற தனக்குத் ‘தொல்லைப் பிறப்பதனைத் தொலைத்து நல்ல பதவியைஇறைவன் அளிக்க வேண்டும்’ எனவும் இவர் வேண்டுவது இவரது சமயச் சிந்தனைத் தெளிவைக் காட்டுகின்றது. சீரியதத்துவச் சிந்தனைகளும் வாழ்க்கையின் குறிக்கோளும் ஏட்டுப் படிப்பினாலோ உயர்குலப் பிறப்பினாலோ வந்து விடுவதில்லை. பூர்வபுண்ணியத்தினால்தான் அவற்றைப் பெற  முடியும் என்பது சமயச் சான்றோர் கருத்து. அத்தகைய புண்ணியம் பிச்சனுக்கு நிறையவே இருந்துள்ளது. இந்த உண்மை இந்தக் காப்பியத்தில் சமயத் தொடர்பாக அவர் வெளியிடும் கருத்துக்களிலிருந்து நன்கு தெரிய வருகின்றது.             முழுமுதற் கடவுளான இறைவனுக்குப் பிறப்பிறப்பில்லை எனச் சித்தாந்த சாத்திரங்கள் கூறுகின்றன. சிலப்பதிகாரமும் ‘பிறவா யாக்கைப் பெரியோன்’ எனச் சிவனைக்கூறுகின்றது. இவ்வரிக்கு அடியார்க்கு நல்லார் ‘என்றும் பிறவாத யாக்கையை உடைய இறைவன்’ என்றும், ‘யாக்கையில் பிறவாப் பெரியோன்’ பொருள் கூறுவார். சிவபெருமான் யாக்கையில் பிறவாப் பெரியோன் என்னும் நிலையைப் பிச்சன் கதை கூறும் நிலையில் வலியுறுத்துகின்றார்.                 பிள்ளைப்பேறு வேண்டி நாகம் ஒன்று தவம் செய்ய, அதற்கு மனமிரங்க வேண்டுமென இறைவி இறைவனிடம் வேண்டுகின்றாள். இறைவன் , தானே நாகத்திற்கு மைந்தனாகப் பிறப்பதாகக் கூறுகின்றார். பரம்பொருளான இறைவன் மண்ணுலகில் மகவாகப் பிறக்க வொண்ணாது  என இறைவி கூறுகின்றாள். “என்ன இருக்க –சுவாமி – என்னமொழி சொன்னீரிப்போ உம்மை நினைத்து உலகத்தில் மானிடர்கள் ஐஸ்வரியம் வேணுமென்று அருந்தவசு செய்கின்றார்கள் மைந்தனார் வேணுமென்று மாதவசு செய்கின்றார்கள் ஆருக்கெலாம் மைந்தனாகப் பிறந்து அருங்கவலை தீர்க்கிறது உலகு வகுத்தீரே உயிராத்துமா செய்தீரே எறும்புகடை யானைமுதல் எண்பத்துநான்கு லட்சம் சீவனுக்கும் படியளக்கும் கர்த்தாவே -நீங்கள்- பாலகனாய்த்தான் பிறந்தால் பூமி பொறுக்குமோ –சுவாமி- பூலோகம் தாங்கிடுமோ” என இறைவி கேட்கிறாள்.                         உயிர்கள் எண்பத்து நான்கு நூறாயிரம் யோனி பேதம் கொண்டவை என்பது சித்தாந்த சாத்திரக் கொள்கை. ‘எண்பத்து நான்குநூ றாயிரமாம் யோனி பேதம் நிரைசேரப் படைத்து அவற்றின் உயிர்க்குயிராய்’ அங்கங்கே இறைவன் தங்கியுள்ளான் என்பது திருஞானசம்பந்தர் வாக்கு. உயிருக்குயிராக இருந்து எல்லாஉயிர்களையும் இயக்கும் இறைவன் ஒரு உயிருக்கு மகவாகப் பிறந்தால், பிற உயிர்களின் கதி என்னாவது என இறைவி வினவுவது, பிச்சன் கவியின் சமயம் சார்ந்த தத்துவச் சிந்தனையின் வெளிப்பாடு                             இறைவி பிறந்ததாகக் கூறும்போதும், யோனியில் பிறவாமல் , குழந்தையாய் மண்ணுலகில் தோன்றி அழுத சத்தத்திக் கேட்டு நாகம் எடுத்து வளர்த்ததாகக் கூறுகிறார்.                           பிச்சன் சிவசாதனங்களாகிய திருநீற்றையும் ஐந்தெழுத்தையும் பெரியகாண்டி இறைவனை வழிபடும் இடத்திலும் நல்லதங்கம் அண்ணரை உயிர்ப்பிக்க வேள்விசெய்யும் இடத்திலும் எடுத்துக் கூறுகிறார். ‘சிவசிவ’ என்பது அதிசூக்கும பஞ்சாக்கரம். திருநீறு அணியும்போது பஞ்சாக்கரம் கூறி அணிய வேண்டும் என்பது விதி. ‘சிவாயநம வென்று நீறணிந்தேன்’ என்பது அப்பர் வாக்கு. பெரிய காண்டியம்மனும், “அரகரா வென்ற சத்தம் -அரனே- யென்றசொல் மறவாமல் சிவசிவா என்றுசொல்லி சிவக்கருத்தை நெஞ்சிலேற்றி அரகரா என்று தாயார் அணிந்தாளே வெண்ணீறு” பிச்சன் வைதிக சம்பிதாயமான வேள்வி முறைகளையும் அறிந்திருந்தார். நல்லதங்கம் வேள்விசெய்தலைக் கூறுமிடத்தில் இதனை வெளிப்படுத்து கிறார்.                    வேதம் ஓதுவதும் வேள்விசெய்வதும் பிறப்பால் அந்தணருக்கே உரியன. அந்தணர்களிலும் பெண்கள் இவற்றிற்கு உரியரல்லர். ஆயினும், நல்லதங்கம் தெய்வீகசக்தி படைத்தவ ளாதலால், ‘வேதப் பிராமணத்தி’ எனப்படுகிறாள்/ வேள்வி செய்வதற்கு இவள் உரிமையுடையவளாகப் பிச்சன் கூறுகிறார். வேள்வி செய்யும் தகுதி இவளுக்கு உள்ளதாயென பெரியகாண்டி அம்மன் வினவுகிறாள். அதற்குநல்லதங்கம், “ ஓமம் வளர்க்கவம்மா- ஓம – சாத்திரங்கள் நனறிவேன் வேதங்கள் சொல்லுவேன் –வேத – சாஸ்திரங்கள் நானறிவேன் அஞ்செழுத்தின் பஞ்சாங்கம் –எனக்கு – அறிவு தெரியுமம்மா” எனத் தன் தகுதியை உரைக்கின்றாள்.                வேள்விக்குரிய தூய்மையான தளவாடங்களாக அத்தி, அரசு, ஆலாஞ்சமித்து, கானகத்துக் காரைக் கரம்பை, கருங்காலி சுப்பி, நாயுருவி, பொரசமரச் சுப்பி முதலியன வேண்டுமென நல்லதங்கம் கேட்கிறாள். வேள்விக்குரிய தளவாடங்களைத் தேடிக் கொண்டுவரும் பணியை ஒப்புக் கொண்ட பெரியகாண்டியம்மன், அவை தன்னுடைய வனத்தில் கிடைக்காதாகையால், அதற்குப் பதிலாக, “நம்மமலையில் மஞ்சட்சுனைநீரும் வாமலையின் தெர்ப்பைப்புல்லும் குறிஞ்சிவகைக் கொம்புத் தேனும் வேள்விக் காகாதோ?” எனக் கேட்கிறாள் அதற்குத் தங்கம்,தேன் தேனீயின் எச்சில் , ஆதலால் ஆகாது என்கிறாள். அதற்குப் பெரியகாண்டியம்மன், “ஈக்கூட்டும் தேனுமது – தாயே- எச்சமென்று சொன்னதினால் தவளை குடிக்கிறது –காவேரி தீர்த்தம்- தண்ணீரும் எச்சமது மச்சங்கள் வாழ்கிறது-அதிலே- மலஜலம் விடுகிறது காராவின் பாலிலேதான் – அதிலே- கன்றின்வாய் வைக்கறது சுத்தங்கள் பார்த்தாயானால்-அதிலே- குற்றங்கள் மெத்த மெத்த” என்று கூறுகிறாள்.                          வேதவேள்விகள் பெண்கள் உட்படச் சாதி வேறுபாடு இன்றி தகுதி உடைய அனைவருக்கும் உரியதென்றகருத்தை உடைய பிச்சன், இந்த உரையாடலின் வழி, சமய வாழ்க்கைகும் சடங்குகளுக்கும் சிரத்தையும் ஆர்வமும்முக்கியமே யன்றிப் போலியான சுத்தம் அன்று என்ற தம்முடைய கருத்தினையும் வெளிப்படுத்துகின்றார்.                     ‘நெஞ்சார அஞ்செழுத்தோதி’ ஓமம் வளர்த்ததாகக் கூறுவதால் , ஓமத்துக்குரிய மந்திரம், சிவமந்திரமாகிய திருவைந்தெழுத்தே என்பது பிச்சன் கருத்து.                    பிராமணர் அல்லாதாரின் வேதக்கல்வி முதலிய வைதிகநெறி பற்றிப் பிராமணர் பொறாமையும் காழ்ப்பும் கொள்ளுவது இயல்பே. அவர்களுடைய செயல்களைப் பிச்சன் எள்ளுகிறார். மாயவர் பஞ்சாங்க வேதியர் வடிவத்தில் வந்து, “ஓமமும் சாஸ்திரமும் உனக்கேது உத்தமியே வேதமும் சாஸ்திரமும் வேதியர்க் கல்லாமல் உனக்கு ஓமப்புகை ஏது உத்தமியே” என்று கேட்கிறார். நல்லதங்கம் கலங்கிப் பாதியிலே எழுகின்றார். உடனே வேதியர்,                      “ஓமத்துக் குண்டானது வேதியர்க்கு உள்ள வினை                      முன்னெவையும் வேதங்கள் சொல்லி வேத சாச்திரங்கள்  செய்தபின்பு                                                                                                                   வேதத்துக் குண்டானது வேதியர்க்கு முன்னே வையும்” என்று ‘தக்ஷிணை’யைக் கேட்கின்றார். ஐயருக்குத் கொடுக்க வேண்டியவற்றைக் கொடுத்தபின் தங்கம், வேள்வி செய்யத் தொடங்குகின்றாள். வேள்வி முடிந்தபின் ஐயர் மீண்டும் ‘பிச்சை’ கேட்டு வழக்காடி நிற்கிறார். தங்கை தான் பூண்டிருந்த நகைகளில் ‘புதுப்பனுதி’ பார்த்தெடுத்துப் பிச்சை இடுகிறாள்.                       வைதீக நெறியில் பிற சமூகத்தவர் அடையும் முன்னேற்றம் கண்டு பார்ப்பனர் கொள்ளும் கலக்கமும் பிராமணப் புரோகிதரின் பணத்தாசையும் பிச்சனால் நன்கு எடுத்துக் காட்டப்படுகின்றன.                    அண்ணன்மார்சாமி கதையின் இறுதி நிகழ்ச்சிகள் நடைபெற்ற  வீரப்பூர் வீரமலைக்கு அண்மையில், குழித்தலை வட்டத்தில், குழித்தலை – மணப்பாறைசாலையில் 6-கல் தொலைவில் இரத்தினகிரி என்றொரு குன்றுளது. இந்தக் குன்றின் மீது ஒருசிவன் கோவில் உள்ளது. இங்குக் கோவில் கொண்டிருக்கும் இறைவனின் பெயர் ‘இராஜலிங்கம்’. இந்தமலைக்கு ஐயர்மலை, வாட்போக்கி, இரத்தினாசலம், சிவாயமலை எனப்பல பெயர்கள் உண்டு.                             இரத்தினாசலத்தின் மீதும் இரத்தினாசல மூர்த்தியின் மீதும் பிச்சனுக்கு மிகுந்த பற்றுண்டு. அதனை அண்ணன்மார்சாமி கதையில் பல இடங்களில் வெளிப்படுத்துகின்றார்.                         பெரியகாண்டியம்மன் காவிரியாறு கடந்து வீரமலை தேடிப் போகும்போது இரத்தினகிரிக்குச் சென்று இராஜலிங்க ஐயாவைப் பார்க்க வேண்டும் என்ற தன் விருப்பத்தைக் கன்னிமாரிடத்துத் தெரிவிக்கின்றாள். தேரை அடிவாரத்தில் நிறுத்திவிட்டு, அனைவரும் தெய்வமலைமீது ஏறி , பன்னீரால் சுவாமிக்கு அபிஷேகம் செய்கின்றனர். புஷ்பத்தைக் கொண்டு வந்து சுவாமியின் பொற்பாதத்தில் குவிக்கின்றனர். சுவாமியை வலமாகச் சுற்றிவந்து பெரியகாண்டியும் கன்னியரும் வாக்கு மனுக் கேட்கிறார்கள். அதற்கு இராஜலிங்க சுவாமி,             “ என்மலைக்கு இணைமலையாய்- பெரியகாண்டி- இணையாக     வாழ்ந்திருப்பாய்               எனக்குச் சரிக்குச் சரியா யிருப்பாய் சரிமலைமேல்    வாழ்ந்திருப்பாய்”                                                               என்று வாக்குமனுக் கொடுக்கிறார். அதன்பின், தாமிருந்த கொலுவு விட்டு எழுந்திருந்து, மந்திர  வாளெடுத்துத் தாமிருக்கும் மலையைப் பிளந்து பெரிய காண்டிக்கு இருக்க இடம் கொடுத்தார். சுவாமி   கொடுத்த அந்தக் குன்றின் மீது தங்கியிருந்து பின்னர் அனைவரும் வீரமலை அடைகின்றனர்.                                                                                இவ்வாறு, பெரியகாண்டி இராஜலிங்கசுவாமியைத் தரிசனம் செய்ததாகப் பாடுவதின் மூலம் இத்தலத்து மூர்த்தியின் மீது தமக்குள்ள  பத்தியைப்பிச்சன் வெளிப்படுத்துகிறார்.               பொதுவக, அண்ணன்மார்கதையைக் கூறுவோர், வேட்டுவரின் பன்றி சோழநாட்டு அல்லது வளநாட்டு வயல்களை அழித்தது என்றே கூறுவர். பிச்சன், வேட்டுவரின் பன்றி இரத்தினாசல மூர்த்தியின் அபிஷேகக் கட்டளைக்கு விடப்பட்ட பயிர் நிலங்களைப் பாழ்படுத்தியது என்றதோடு, அவை எந்தெந்த கிராமங்களில் உள்ளன என்றும் கூறுகின்றார்.               “ஐயர் திருப்பணிக்கு -ரெத்தினாசல மூர்த்தி- அபிஷேகக்   கட்டளைக்குச்                     சிவசோழர் விட்ட கோவில் கிராமத்துக் குடியானவர்க ளெல்லாம்                                     திருக்காம் புலியூரு தேன்கொழித்த நன்னாடு                  செக்கநத்தம் புலியூரு பழைய செயங்கொண்ட சோழபுரம்                   அம்மான் கருப்பதூர் ஆனபதி மணத்தட்டை                                                                                                                        கூத்தாளை நன்னாடு”                                                         என்று அவற்றின் பெயர்களையும் கூறுகிறார்.                                  குடிமக்கள் வாயிலாகவும் சோழமன்னனின் கூற்றாகவும்பிச்சன் இரத்தினாசல மூர்த்திமீது தாம் கொண்டிருந்த பத்தியைப் புலப்படுத்துகிறார்.. வேட்டுவர் கொள்ளை கொண்டுபோன செய்தியை மன்னனுக்கு அறிக்கையிட வேண்டுமென மக்கள் பேசிக்கொண்டு இருக்கையிலே குடியானவன் ஒருவன் தான் கண்ட கனவினைக் கூறும் முகமாக, ‘ரத்தினாசலமூர்த்தி ரொம்பவுந்தான் நம்மபங்கில் இருந்து அனைவரயும் இயல்பாக இரட்சிப்பார்’, எனத் தம்முடைய நம்பிக்கையையும் மக்கள் நம்பிக்கையையும் கவிஞர் வெளிப்படுத்துகிறார்.              இத்தலத்தின் அற்புதங்கள் குறித்து மக்களிடையே வழங்கிவரும் கதைகள் இத்தலத்தின் தலபுராணத்தில் உள்ளன. அவற்றைப் பிச்சன் தகுந்த இடத்தில் கூறித் தம் வாய்மொழி இலக்கியத்தைச் சிறக்கச் செய்கிறார்.                     இரத்தினசலத்திற்குச் சிவாயமலை, இரத்தினகிரி, ஐயர்மலை, மணிகிரி, வாட்போக்கி எனப்பல பெயர்கள் வழங்கின. யாவருக்கும் தலைவனான பெருமான் வீற்றிருக்கும் காரணத்தால் ஐயர்மலை எனப்பட்டது. ஆரியமன்னன் பெருமானது முடியில் வாளை வீசித் தழும்பு உண்டாக்கியதால் வாட்போக்கி எனப்பட்டது. சிவமந்திரமாகிய ஐந்தெழுத்தின் பருவடிவமாக இருப்பதால் சிவாயமலை எனப்பட்டது. இங்குள்ள இறைவர் ஆரிய மன்னனால் வழிபடப்பட்டமையால் இராஜலிங்கர் என்றும், மன்னன் வாளால் உண்டாக்கிய தழும்பை முடியில் உடைமையால் முடித்தழும்பர் என்றும் இறைவர் வழங்கப்படுகிறார்.            பொசிவாசி ஐயர்’ என்பது இத்தல இறைவனுக்கு வழங்கப் பெறும் திருநாமங்களில் ஒன்று இப்பெயர்க் காரணத்தைத் தலபுராணக் கதை கூறுகின்றது. சிறந்த சிவபக்தனான ஆரிய அரசன் ஒருவன் ‘மங்கலமாநகர்’ என்னும் நகரிலிருந்து ஆண்டு வந்தான். அவன் தரித்து வந்த மணிமுடி அவனறியாமல் மறைந்து விட்டது. அரசன் மிகுந்த வருத்தமுற்றான். தன்னைச் சார்ந்தவர்களை விசாரித்தும் பெற முடியவில்லை.அப்போது, பெருமானொரு மறையவரைப் போலத் தோன்றி , ‘உனது திருமுடி இரத்தினகிரியில் உள்ளது; போய்ப் பெற்றுக்கொள்’ என்று கூறி மறைந்தார். அரசன் பலதலங்களையும் தரிசித்துக் கொண்டு இரத்தினகிரி வந்து சேர்ந்தான். பெருமான் மீண்டும் வேதியன் வடிவில் வந்து , ஒரு கொப்பரையைக் கட்டி , ‘இந்தக் கொப்பரையில் காவிரி நீரைக் கொண்டுவந்து நிரப்பினால் உன் திருமுடி கிடைக்கும்’ என்று கூறினார். அரசனும் பலகுடம் காவிரிநீர் கொண்டு வந்து கொட்டியும் கொப்பரை நிறையவில்லை. நாள் முழுவதும் நீர் கொண்டு வந்து கொட்டியும் கொப்பரை நிறையாமைக்குக் காரணத்தை ஆய்ந்தபொழுது, கொப்பரையின் ஒருபுறத்தில் நீர் கசிவதைக் கண்டு கோபம் கொண்டான். தன் வாளால் வேதியனை முடியில் வெட்டினான். வேதியன் சடுதியில் மறைந்தான். வெட்டு சிவலிங்கத்தின்மீது விழுந்து வடு உண்டாக்கியது. அரசன் தன் பிழை பொறுக்க வேண்டினான். பெருமான் அருளினால் அரசன் மணிமுடியைப் பெற்றான். அரசனுடைய வாளைப் போக்கித் தன் முடியில் வாள் தழும்பு காட்டியமையால் வாட்போக்கி எனப் பெருமானுக்கும் தலத்துக்கும் பெயராயிற்று. கொப்பரையில் நீரைப் பொசித்துக் காட்டியதால் இறைவனுக்குப் ‘பொசிவாசி’ என்ற பெயர் ஏற்பட்டது.                   பொசிவாசி ஐயர் இப்பகுதி மக்களுக்குக் கோரிக்கைத் தெய்வமாகும். இந்த நம்பிக்கையினைப் பின்பற்றி அண்ணன்மார்சாமி கதைத் தலைமை மாந்தரும் பொசிவாசி ஐயரை மனத்தில் நினைத்து வழிபட்ட பின்னரே செயல்படுகின்றனர். படைப்புத் திறன்                   மரபுவழி சொல்லப்பட்டு வந்த கதையே பிச்சனின் படைக்கும் திறனால் காப்பிய வடிவம் எய்திற்று. காலந்தோறும் அண்ணன்மார் கதையிற் கூறப்பட்டு வருகின்ற கதை நிகழ்ச்சியே காப்பியச் சந்திகளுக்கேற்ப விரிவுபடுத்தி நூலின் வடிவ அமைப்பிலும் பாத்திரப் பண்பிலும்செய்துள்ள மாற்றங்கள் பிச்சனின் படைப்புத் திறனுக்குச் சான்றாக விளங்குகின்றன.   காப்பியத் தொடக்கம்                    கதைத் தொடக்கம் வேறு; காப்பியத் தொடக்கம் வேறு. கதை தலவனின் பிறப்பிலிருந்து தொடங்குகிறது. தஞ்சைப் பெருவுடையார் கோவில் கட்டுவதற்கு இராசராசன் சாரப்பள்ளம் அமைத்தது போலக் கதையுடன் அவ்வளவு அவயவ சம்பந்தம் இல்லாத போதிலும் , கதையின் பின் நிகழ்வுகளுக்கு ஏற்ற சூழ்நிலையைத் தொடக்கத்தில் புனைந்து காட்டித் தொடங்குவது காப்பிய மரபு.                       கள்ளழகர் அம்மானை அண்ணன்மாரின் பிறப்பிலிருந்து தொடங்குகிறது. அண்ணன்மார்சமி கதை , காப்பியமாதலால் பெரியகாண்டியம்மன் வீரமலையில் தவசு நிகழ்த்த வருவதிலிருந்து தொடங்குகிறது. கதை, அண்ணன்மாரின் தந்தைவழிப் பாட்டனார் (அப்பாரு) கோலாத்தாக் கவுண்டர் வரலாற்றிலிருந்து தொடங்குகின்றது. பெரியகாண்டியம்மன் கதை அண்ணன்மார்சாமி கதையுடன் அவயவசம்பந்தம் உடையதன் றெனினும் காப்பிய உறுப்பாக வேண்டப்படுகின்றது காப்பியப் புலவனின் முழுப்பார்வை                            புலவனின் படைப்பு முழுவதையும் உளங்கொண்டு அவன் பார்வையில் நோக்குவதே முழுப்பார்வை. சில நிகழ்ச்சிகளைக் காப்பியப்புலவன் இந்த முழுமையைக் காப்பியம் பெற வேண்டும் என்றே அமைத்துக் கொள்வான்.                   கள்ளழகர் அம்மானையில், வெள்ளாங்குளத்தேரி மேனாட்டு வேட்டுவருக்குச் சொந்தமனது. இதற்குக் காவலாக இருந்த வேங்கைப்புலியை அண்ணன்மார் கொன்று விட்டதால் வேட்டுவருக்கும் அண்ணன்மாருக்கும் பகை தோன்றுகின்றது.                    இதற்கு வேறுபட்ட  நிலையில் அவயவ சம்பந்தத்துடன் வெள்ளாங்குளத்தேரி பற்ரிய செய்திகளை அண்ணன்மார் சாமி கதையில் காண்கிறோம்.                  அண்ணன்மாரின் அப்பாரு (தந்தைவழிப் பாட்டனார்) கோலாத்தாக் கவுண்டர் பிள்ளைப்பேறு வேண்டி , மிகச்சிறப்பான முறையில் வீரமலைத் தென்கிழக்கில் வெள்ளாங்குளம் வெட்டி அதன் கரையில் விநாயகர் கோயிலும் அமைத்துக் கும்பாபிடேகமும் செய்து நாள் பூசனைக்கு மானியமும் விடுகிறார். இந்த நிகழ்ச்சி கதையின் தோற்றுவாயாக அமைகிறது.             கதையின் பிற்பகுதியில், வஞ்சகத் தட்டான் வெள்ளாங்குளத்தில் மூழ்கித் தனக்குச் சத்தியம் செய்து தர வேண்டும்  என்று பொன்னரை வற்புறுத்து கின்றான். பொன்னர் ஏரியின் உட்குமுழி புகுந்து நீரினுள் சத்தியம் செய்து விட்டு புறக்குமுழி வழி வரும்போது , அவர் தலைமீது போட்டு அவரைக் கொல்லத் தட்டான் கல்லொன்றைத் தேடினான். கல் கிடைக்காமல் போகவே பிள்ளையாரை அசைத்தெடுக்க முயல்கிறான். வந்து தொட்ட தட்டானைப் பிள்ளையார் மல்லாக்கத் தள்ளிவிட்டார். பிள்ளையார் தன்செயலுக்குப் பயன்படாமல் போகவே தட்டான் ஏரியின் தோரணக் கல்லைப் பிடுங்கிப் பயன்படுத்தினான்.                         இந்தக் கதையின் பிற வடிவங்களில் வெள்ளாங்குளத்தேரி பேசப்படுகிறதெனினும்  அதை வெட்டியவர் யாரெனக் கூறப்படவில்லை. தட்டான் பொன்னரைக் கொல்லப் பாறை ஒன்றத் தூக்கி நின்றதைப் புறக்குமுழி வழிவரும் பொன்னர் பார்த்துவிட்டதாகத்தான் கூறப்படுகிறது.                   இங்குப் பிச்சன் தம்முடைய கற்பனையால் செய்த மாற்றம் அவருடைய முழுப்பார்வைக்குச் சான்றாக விளங்குகிறது.                 அண்ணன்மாரின் முன்னோர் வரலாற்றைக் கூற வந்த பிச்சன், வெள்ளாங்குள்த்தேரியையும் பிள்ளையார் கோவிலையும் கோலாத்தாக் கவுண்டர் அமைத்தார் என்று கதையின் தொடக்கத்தில் கூறுவதும், கதையின் உச்சத்தில், பாட்டனார் அமைத்த வெள்ளாங்குளமே பொன்னர் சத்தியம் செய்து அவமானப்படும் இடமாயிற்று என்றும், பாட்டன் நிறுவிய பிள்ளையாரைக் கொண்டே தட்டான் பொன்னரைக் கொல்ல நினைத்தான் என்றும் நிகழ்ச்சிகளைப் பிணைப்பு உடையனவாக அமைத்துக் கொண்டதும் காப்பியத்தின் அவல உணர்ச்சியைத் தூண்டுவதோடு புலவனின் முழுப்பார்வையையும் காட்டுவதாக அமைகின்றது. அதாவது, வெள்ளாங்குளத்தின் முன் நிகழ்ச்சியும் பின் நிகழ்ச்சியும் அண்ணன்மார்சாமி கதையில் தனித்தனி நிகழ்ச்சிகளாக அன்றி அவயவ சம்பந்தம் உடைய உறுப்பு நிகழ்ச்சிகளாகப் பிச்சன் அமைத்துக் கொண்டது , அவருடைய முழுப்பார்வைக்குத் தக்க சான்றாம். பாவிகம்                    காப்பியம் முழுவதையும் தனித்தனி நிகழ்ச்சிகளாகக் காணமல் அவை அனைத்தையும் இணைத்து அவற்றில் ஊடுருவி நிற்கும் அடைப்படைக் கருத்தைக் கண்டு , அது எவ்வாறெல்லாம் காப்பியத்தைப் பலநிலைகளில் நடத்திச் செல்கிறது என்பது காப்பிய ஆராய்ச்சியின் ஒரு நோக்கமாம். இதனைக் காப்பியத்தின் கட்டுக்கோப்புத் திறன் எனலாம். இதனைத் தண்டியலங்காரம் எனும் அணியிலக்கண நூல்  ‘பாவிகம்’ என்ற சொல்லால் குறிக்கின்றது. அண்ணன்மார்சாமி கதையில் தாமரையின் நான்கு வஞ்சினங்களின் வாயிலாக இத்தகைய கட்டுக் கோப்பினைப் பிச்சன் படைக்கிறார். தாமரை கூறிய வஞ்சினங்களின் விளைவே இக்கதை எனும்படிப் பிச்சன் இந்தக் காப்பியத்தை நடத்திச் செல்கிறார்.                  தாமரையின் முதற் சபதம் அவள் பிறந்த குடும்பத்திற்கு எதிரானது. அத்தை மகனின் உரிமையை மதித்து ஏழைக் குன்றுடையானை மணந்து கொண்ட காரணத்தால் தாமரை அவளுடைய தந்தையால் அவமானப் படுகிறாள். பாதிக்கலியாணம் முடிந்தவுடனே அவளுடைய தந்தை, ‘ஒற்றைக் கொம்பு மாடும் ஓட்டைச்சொம்பும்’ சீராகக் கொடுத்து வீட்டைவிட்டு விரட்டுகிறார். அவமானம் பொறாத தாமரை தந்தையைப் பழிவாங்கச் சபதமிடுகிறாள்.               தாமரையின் இரண்டாவது சபதம் பங்காளியருக் கெதிரானது. திருமணத்திற்குப் பின் குன்றுடையான் பங்காளியரிடம் சொத்தில் தன் பாகத்தைக் கேட்க  அவர்கள் அவனைக் கருவேலா மரத்திற் கட்டிச் சவுக்கால் அடிக்கிறார்கள். அப்பொழுது தாமரை,                   “கண்டாளே பத்தினியும் கண்சிவந்து மெய்சிலிர்த்து                    கட்டுக்களைத் தானவிழ்த்து கடுகியவள் முள்பிடுங்கி                    வாங்களாடா பாதகரே வகையாக உங்களையும்                    பழிக்குப் பழியெடுப்பேன் பத்தினியாள் சபதமிது                    முன்பழியும் பின்பழியும் முப்பழியும் தீர்ப்பேன்” என்று சபதமிடுகிறாள்.                        தாமரையின் மூன்றாவது சபதம் பங்காளிக் கவுண்டச்சிகளுக் கெதிரானது. பிள்ளைபேறு இல்லாத தாமரை தன் மனக்குறையைப் பங்காளியரின் குழந்தைகளைக் கண்டு போக்கிக் கொள்ளக் குழந்தைகளுக்குப் பரிசுப்பொருள்களுடன் அவர்கள் வீட்டுக்கு வந்தாள். மலடி நிழல்பட்டால் மக்களுக்கு ஆகாதென்று சொல்லி பங்காளிக் கவுண்டச்சிகள் தாமரையை முடிபிடித்து அடித்து விரட்டுகிறார்கள். அப்போது தாமரை,                  “வருமடி சக்கள்த்தி எனக்குவாள் வீரரிருவர் பிறப்பர்                   பழிக்குப்பழி தீர்ப்பர் பாதகத்தி உங்களையும்                  முன்பழியும் பின்பழியும் முப்பழியும் தீர்ப்பர்” என்று சபதமிடுகிறாள்                   தாமரையின் நான்காவது வஞ்சினம் மேனாட்டு வேட்டுவத் தலைவனுக்கு எதிரானது. பிள்ளைவரம் வாங்கப் பொன்னம்பலத்துக்குத் தவம் செய்யப் போக விரும்பி த் தாமரையும் குன்றுடையானும் தங்களுடைய ஐங்கலத் திரவியத்தையும் மேனாட்டு வேட்டுவப் பட்டக்காரனிடம் அடைக்கலம் வைக்கக் கருதி வந்தனர். மேனாட்டுப் பட்டக்காரன் குன்றுடையானைப் பார்த்தால், ‘இளித்தவாய்க் கிழவனைப்போல்’ இருப்ப்தைக் கண்டு அவனைக் கொன்றுவிட்டு, ‘ஆதிமகா லட்சுமியைப் போல’ இருக்கும் தாமரையையை வைப்பாட்டியாக வைத்துக் கொள்ளச் சூழ்ச்சி செய்தான். இதனை அறிந்த தாமரை ஊருக்குத் திரும்பிட எண்ணித் தான் அடைக்கலமாகக் கொடுத்த பொருளைத் திருப்பித் தரக் கேட்டாள். பட்டக்காரன்,’ பணமேது காசேது – இவளைப்- பதற அடியுமென்றான், காசேது பணமேது –இவளைக்- கட்டியடியு மென்றன்’ கட்டியடி எனக் கேட்டதுமே தாமரை, கனலாகித் தீயாகி,                 “என்பணத்தை நீபறித்து என்னை அடிக்கச் சொன்னாய்                   பணத்துக்குப் பதிலாக மேனாடு கருவறுப்பேன்                  காசுக்குப் பதிலாகமேனாடு கருவறுப்பேன்”     என்று சபதமிடுகிறாள்.                     தாமரையின் சபதங்கள் நான்கும் அவளுடைய பிள்ளைகளாகிய அண்ணன்மாரால் நிறைவேற்றப்படுகின்றன. அதுவே, அண்ணன்மாரின் வரலாறாகின்றது.                   பங்களியரைத் தண்டித்தல், மனைவியரை இற்செறித்தல், வேட்டுவரை அழித்தலாகிய நிகழ்ச்சிகள் மரபாக இக்கதையின் அனைத்து வடிவங்களிலும் கூறப்படுகின்றன. அவை காரண காரிய இயல்பின்றித் தனித்த நிகழ்ச்சிகளாகவோ அல்லது வேறு காரணங்களின் விளைவுகளகவோ கூறப்படுகின்றன. இந்த நிகழ்ச்சிகளைக் காரண காரிய இயைபுக்கு உட்படுத்தி, இவற்றைத் தாமரை கூறிய வஞ்சினங்களின் விளைவுகளே எனக் காட்டியமை பிச்சனின் தனித் திறமையாகும். நிகழ்ச்சிகளுக்குச் சூழல் அமைத்தல்                    இன்றியமையாக் கதைக் கூறுகளை உரிய சந்தர்ப்பங்களில் தக்க சூழ்நிலை அமைத்துக் கூறுவதிலும் பிச்சன் தம்முடைய தனித்திறனைக் காட்டியுள்ளார். தாய்மாமன் பெண்களை அண்ணன்மார் திருமணம் செய்துகொள்வதும் பின்னர் அவர்களை இற்சிறைவைப்பதும் இன்றியமையாக் கதைக் கூறுகளாக இக்கதையின் எல்லா வடிவங்களிலும் உள்ளன . இருப்பினும், வடிவங்கள்தோறும் இக்கதைக் கூறு இடம்பெறும் சூழலும் நிகழ்ச்சிகளும் வேற்படுகின்றன.                  கள்ளழகர் அம்மானையில், குன்றுடையான் கட்டிய அரண்மனையின் புதுமனை புகுவிழாவுக்கு அண்ணன்மாரின் தாய்மாமனும் அத்தையும் வருகின்றனர். அவர்களிடம் பெண்கேட்டு அவர்களின் ஒப்புதலுடன் திருமணம் நடைபெறுகின்றது. ‘பெண்ணாவி’ பட்டால் தம் பலம் குறைந்து விடுமென்று , திருமணத்திற்குப்பின், அண்ணன்மார் மனைவியரை ஏறெடுத்தும் பாராமல் இற்சிறை வைக்கின்றனர். இந்த நிகழ்ச்சி கள்ளழகர் அம்மானையில் கதையின் தொடக்கத்திலேயே இடம்பெறுகின்றது.                குன்றுடையாக் கவுண்டர் வம்ச வரலாற்றில், இந்தத் திருமண நிகழ்ச்சி வேறு விதமாகக் கூறப்படுகிறது. தாமரை தனக்குப் பிள்ளை இல்லாத மனக்குறையைத் தீர்த்துக் கொள்வதற்குத் தன்னுடைய தமையன் வீட்டுக்குச் செல்கிறாள். அவளுடைய அண்ணிமார் மலடியுடைய பார்வை குழந்தைகள்மேல் பட்டுவிடக் கூடாதென்று அவர்களை மக்கிரிக் கூடை போட்டு மூடிவிட்டு , தாமரையைக் குடுமி பிடித்து அடித்து விரட்டி விடுகின்றனர். கூடையில் மூடப்பட்டிருந்த குழந்தைகள் மூச்சுப் பிடித்து இறந்துவிடுகின்றன. செய்தீயை அறிந்து வருந்திய தமையன் , தாமரையை அழைத்து வந்து குழந்தைகளை உயிர்ப்பிக்க வேண்டுகிறான். ஈஸ்வரன் அருளால் தாமரை குழந்தைகளை உயிர்ப்பிக்கின்றாள். கைம்மாறாகத் தமையனின் பெண்குழந்தைகள் இருவரை வாங்கிக்கொள்கிறாள். பெண்கள் இருவரையும் ஒரு பாறைமேல் நிறுத்தி , மாயவரை நினைத்துத் தனக்குத் திருமணம் நடந்த அதே பிள்ளையார் கோவிலில் தனக்குப் பிறக்கப் போகும் மைந்தர்களுக்கும் இந்தப் பெண்களுக்கும் திருமணம் செய்யப்போவதகவும் அதுவரைக்கும் இந்தப் பெண்கள் கற்சிலைகளாக இருக்க வேண்டும் எனவும் கூறிச் சபிக்கிறாள். அதன்பின், தாமரை கயிலாயத்தில் 21 வருடங்கள் தவமிருந்து அண்ணன்மாரைப் பெற்றெடுக்கிறாள். உரிய பருவம் வந்தபின் கற்சிலைகளைப் பெண்களாக்கி அண்ணன்மாருக்குத் திருமணம் செய்விக்கின்றாள். இவ்வடிவத்தில் அண்ணன்மாருக்குப் பல ஆண்டுகளுக்கு முன்னரே அவர்களுடைய மனைவியர் பிறந்தோராவர். அண்ணன்மாருக்கும் அவர்களுடைய மனைவியருக்கும் இடையேயுள்ள வயது வித்தியாசத்தை அவதானிக்க வேண்டும்.                 பொன்னர்- சங்கர் கதையில் இந்த நிகழ்ச்சி வேறுவிதமாகக் காணப்படுகிறது. தாமரை தன் தமையனைன் குழந்தைகளைக் கண்டு தன் பிள்ளையில்லக் கவலையைத் தணித்துக் கொள்ளத் தமையனின் வீட்டுக்குச் செல்கிறாள். அங்குத் தமையனும் அவனுடைய மனைவியும் தாமரையை அவமானப்படுத்தி விரட்டுகின்றனர். தாமரை தன் தமையனை நோக்கி,                “அறிவேனடா உந்தன் ஆண்பிள்ளைத்தத்துவமும்                  கொண்டையுடன் நீபிறந்தாய் கொசுவத்துடன் நீபிறந்தாய்                 உன்னைச்சிறை போடாட்டி உன்பெண்ணைக் கொண்டுசிறை போடுறேண்டா” என வஞ்சினம் உரைக்கின்றாள்.                                                                                                    அண்ணன்மார் பிறந்து உரிய பருவம் வந்தவுடன், தாமரை சங்கருடன் சென்று தமையனை அச்சுறுத்தி, அவன் பெண்களைத் தன் மைந்தருக்கு மணம் செய்வித்துத் தன் சபதத்தை நிறைவேற்றுகின்றாள். கள்ளழகர் அம்மானையில் அண்னன்மாரின் திருமணம் கதைத் தொடக்கத்திலேயே நடைபெறுகின்றது. இத் திருமணம் அண்ணன்மாரின் வீரத்திற்குப் பரிசாகவோ அன்றி தாயின் வஞ்சினத்தின் வெற்றியாகவோ அல்லாமல் , அவர்கள் வாழ்வில் மிகச் சாதாரணமான நிகழ்ச்சியாகவே அமைகிறது. குன்றுடையக் கவுண்டன் வம்ச வரலாற்றிலும் பொன்னர்- சங்கர் கதையிலும் , கதை ஓரளவு வளர்ச்சி பெற்ற பின்னரே , அண்ணன்மாரின் திருமணம் நடைபெறுகின்றது.இந்த இரண்டு வடிவங்களிலும் திருமணம் நிறைவேறுவதில் தாய் தாமரையின் முயற்சியே மிகுதி.  இத் திருமணம் தாய் தாமரையின் வஞ்சின வெற்றிக்கு அடையாளமாக உள்ளதேயன்றி எந்த விதத்திலும் அண்ணன்மாரின் பாத்திரப் பண்பு வளர்ச்சிக்கு அது துணை புரியவில்லை.                       எனவே, பிச்சன் அண்ணன்மார்சாமி கதையில் திருமண நிகழ்ச்சியைக் கதையின் உச்ச கட்டத்தில் அமைத்துவிட்டார். ஏழையை மணந்து கொண்டதால் தன்னை அவமானப்படுத்திய தந்தைக்கு எதிராக வஞ்சினம் உரைத்த தமரை தன்னுடைய முயற்சியாலும் இறையருளாலும் குன்றுடையானின்  குடும்பத்தை வளப்படுத்துகிறாள். அவளுடைய பிள்ளைகள் இருவரும் வாள்வீரராக , சமூக ச் செல்வாக்குப்பெற்றவராக வளருகின்றனர். வட்டாரத் தலைவர்களாக விளங்கிய அவர்களை உறையூர்ச் சோழன் தன் அரண்மனைக்கு வரவழைத்துப் பல்லக்கு, பட்டத்து யானை முதலிய விருதுகளையும் நாடுகவல் அதிகாரத்தையும் அளித்துச் சிறப்புச் செய்கிறான். சிவசோழன் பொன்னரிடம்,             “என்சீமையில் எந்தமனுக் கேட்டாலும் அந்தமனு உன்னதுதான்              நாடும் உன்னதுதான் –நல்ல –துரைத்தனமும் உன்னதுதான்             நீரிருக்கிறது உறையூரு உனக்குள்ளே நன்குடியிருப்பு’ என்று சொல்லி அண்ணரைத் தனக்குச் சமமாக் உயர்த்துகின்றான். தன்மகளையும் மணமுடித்துக் கொடுக்க முன் வருகிறான்.              சோழமன்னன் அளித்த விருது முதலிய சிறப்புக்களுடன் அண்ணர் இருவரும் உலாப்புறம் சென்றுவிட்டுத் தங்கள் ஊருக்குத் திரும்பும்போது தாய்மாமன் மணியங்குறிச்சி மலைக்கொழுந்தாக் கவுண்டன் அரண்மனை வழியே வருகின்றனர். ‘சித்தாடை கொய்துடுத்தி சின்னமுச்சி கொண்டேதான் , மண்சோறு மரக்கறிகள்’ படைத்து விளையாடும் மாமனின்  இளம்பெண்களைக் கண்டு, பெண்கேட்டு மணந்து கொள்கிறார்கள். இந்தத் திருமணத்தின்போது தாமரை உடன் இல்லை என்பது ஒரு கதைவடிவ வேறுபாடு. திருமணத்தின் பின்னர்த் தாய் தாமரைமுன்னர் உரைத்த சூளுரையை நிறைவேற்ற அண்ணன்மார் மனைவியரை இற்சிறை வைக்கின்றனர்.               அண்ணன்மார்சாமிகதையில் திருமண நிகழ்ச்சி, தாமரை தந்தைக்கு எதிராகக் கூறிய வஞ்சினம் வெற்றி பெற்றதற்கு அடையாளமாதலுடன் , அண்ணன்மார் பாத்திரப் பண்பின் வளர்ச்சியையும் எடுத்துக் காட்டுவதாகச் சிறப்பாக அமைந்துள்ளது. கள்ளழகர் அம்மானையில், அண்ணன்மாரின் திருமண நிகழ்ச்சி 49 வரிகளில் கூறப்பட்டிருக்க, பிச்சன் அதனை 350 வரிகளில் விவரிக்கின்றார். இதனல் இந்நிகழ்ச்சிக்கு இவர் எத்துணை முக்கியத்துவம் கொடுக்கிறார் என அறியலாம்.   இதுவும் பிச்சனின் தனித்திறனுக்கு மற்றுமோர் சான்றாம். பாத்திரப்படைப்பு   குன்றுடையான்                         கள்ளழகர் அம்மானையில் அண்ணன்மாரின் தந்தையைப் பற்றிய வரலாறு இல்லை. குன்றுடையாக் கவுண்டர் வம்ச வரலாறும் பொன்னர் – ச்ங்கர் கதையும் குன்றுடையான் வரலாற்றை இருவேறு நிலைகளில் கூறுகின்றன. கோலாத்தக் கவுண்டர் சிவனருளால், தம்முடைய மேட்டாங்காடுப் பூமியில் பாறைகளுக்கிடையே கண்டெடுத்து வளர்த்த குழந்தையே குன்றுடையான் என்கிறது, குன்றுடையாக் கவுண்டர் வம்ச வரலாறு.                   குன்றுடையான் வேட்டுவக்காளியின் வளர்ப்புமகன் என்கிறது, பொன்னர்-சங்கர் கதை. இந்த இரண்டு வடிவங்களும் குன்றுடையானை அறிவும் செயல் திறனும் உடையவனாகவே காட்டுகின்றன. குன்றுடையாக் கவுண்டன் வம்ச வரலாறு குன்றுடையானுக்குச் சோழன் மகுடாபிஷேகம் செய்த நிகழ்ச்சியை விரிவாகக் கூறுகின்றது.                     குன்றுடையான் ஒரு சிற்றரசனென்றும் அமராவதி நதிக்கரையில் வாங்கல் கிராமத்தில் வாங்கலாயி கோவிலைக் கட்டினானென்று கூறும் கதையும் உண்டு.                   அண்ணன்மார்சாமி கதையில் பாத்திரங்களின் பண்புகள் தாமரைக்கு ஏற்றம் தரும் வகையில் அமைந்துள்ளன. தாமரையின் கடுமையான உழைப்பிற்கும் தவத்திற்கும் தெய்வக் கற்புக்கும் பெருமை சேர்க்கும் வகையில் , அவளுடைய இந்தப் பண்புகள் ஒளிவீசத் தக்க பின்புலமாகத்தான் ஏனைய கதைமாந்தர்களையும் பிச்சன் படைத்துள்ளார். அண்ணன்மார்சமி கதையில் குன்றுடையான் ‘மங்குமசையன்’, ஊமை செவிடு ஊதாத சங்கு’, ‘மசச்சாமி’ ‘ஐந்து வயதாகியும் அப்பா அம்மா என்று அழைக்கத் தெரியாதவன்’ என்று குன்றுடையானின் மந்த புத்தியினையும் அறிவு தெளிவற்ற நிலையையும் விளக்கும் பலநிகழ்ச்சிகள் அண்ணன்மார்சாமி கதையில் கூறப்படுகின்றன,. அவை, தாமரையின் பெருமையை எடுத்துக் காட்டப் பிச்சன் மேற்கொண்ட உத்திகளே.                      மந்தனாகிய அசடன் குன்றுடையானைக் கலியாணம் செய்துகொண்டு, பெருங்குடியன் குடும்பத்தை ஈடேற்றத் தாய் தாமரை பட்ட பாட்டை நினைத்துக் கவிஞரே கண்ணீர் விடுகிறார்.               “வெளுத்த தெல்லாம் பாலென்பான் வீரமகன் குன்றுடையான்                  பழுத்தகிழ மாகிவிட்டான் பரமனையே எண்ணுகின்றான்                 கல்லுக்கும் வாயிருந்தால் கண்ணீர்விட் டேயழுமாம்                 நல்ல எங்கள்தாமரைத்தாய் நாளெல்லாம் பட்டதுன்பம்                மங்கு மசையனுக்கு வாழ்க்கைப் பட்ட நாள்முதலாய்                எங்கள்தாய் பட்டதுன்பம் எடுத்துரைக்கக் கூடிடுமோ                 ஒன்றா யிரண்டா ஒருநூ றாயிரமா                 அன்றுமுதல் இன்றுவரை அவள்பட்ட துன்பம் சொல்ல”                     அண்ணன்மார், தந்தையின் பாதிப்புச் சற்றும் இன்றி, தாய் தாமரையின் பாதிப்பே முழுவதும் உடையவர்களாக வளர்ந்தனர் என்று காட்டவும் அவர்களுடைய மனந்தளரா வீரப்பண்பும் தலைமை நலமும் தாய் தாமரை அவர்களை வளர்த்த செல்வாக்கால் உருவாகிய நிலையை வெளிப்படுத்தவும் கவிஞர் பிச்சன் குன்றுடையானைப் புத்தி மழுங்கியவன், அறிவு வளராத மங்குமசையன் என்றே படைத்துவிட்டார்.             இவ்வாறு, பிச்சன் படைப்பாகிய குன்றுடையான் ஏனைய வடிவங்களின் குன்றுடையானிலிருந்து பண்பால் முழுவதும் வேறுபடுகிறான். தாமரை             அண்ணன்மார்சாமி கதையில் தாமரை, இந்துப் புராணங்களில் காணப்படும் பெண்களை ஒட்டி அமைந்திருத்தல் வெளிப்படை. கணவனின் குற்றங் குறைகளைக் கண்டுகொள்ளாமல் அவள் குடும்பநலனையும் கணவனின் நலனையும் போற்றலே கற்புடைய மங்கையின் கடமை என்னும் பண்பு, தாமரை பாத்திரப்படைப்பில் புலனகிறது.                  அண்ணன்மார்சமி கதையில், குன்றுடையான் – தாமரை திருமணம் காப்பியப் போக்கில் ஒரு திருப்பு மையம். குன்றுடையானை விரும்பி மணந்துகொண்டதனால் கதைப் போக்கைத் திருப்பிவிடுபவள் தாமரையே. அவளுடைய தந்தை குன்றுடையானின் ஏழ்மையான நிலைமையையும் மங்குமசையனாக இருத்தலையும் அவனுடைய பங்காளிகளுடைய செல்வ வளத்தோடு ஒப்பிட்டுப் பார்க்கிறார். வளமாக வாழும் பங்காளியின் மகனுக்கே தாமரையைக் கொடுக்க விரும்புகிறார். தந்தையின் எண்ணத்தை அறிந்த தாமரை முறைமாப்பிள்ளையாகிய குன்றுடையானை மணந்துகொள்ள உறுதி கொள்கிறாள். குன்றுடையானைக் கணவனாக வரித்து(சுயம்வரம் போல) அவனுக்குப் போட்டியாக வந்த பங்காளியரை விரட்டிவிடுகிறாள். அழகு, அறிவு எதிலும் பொருத்தமில்லாத குன்றுடையானை மணந்தும், தன் கற்பில் உறுதி பூண்டு, சோதனைகள் பலவற்றிலும் வெற்றிபெற்றுக் குடிப்பெருமையினைத் தாமரை காப்பாற்றுகிறாள்.                           பிச்சனின் படைப்பில் தாமரை,வேளாள சமூகமரபை யொட்டி மங்குமசையனான குன்றுடையானை விரும்பி மணந்து கொள்கிறாள். ஆனால் பிறவடிவங்களில்குன்றுடையானை மணந்து கொள்ளும் நெருக்கடிக்குத் தாமரை உந்தித் தள்ளப்படுகிறாள்.                  குன்றுடையாக் கவுண்டர் வம்ச வரலாற்றில் , தாமரையின் சகோதரர்கள் , குன்றுடையானிடம் பெற்றுக் கொண்ட உதவிக்காக, அவளை அவனுக்குத் திருமணம் செய்து கொடுக்கின்றார்கள். இத்திருமணம் தாமரையின் விருப்புவெறுப்பினைப் பொருட்படுத்தாமலேயே நடைபெறுகிறது.                 பொன்னர்- சங்கர் கதையில் வேட்டுவன் வீட்டில் அநாதையாக வளர்ந்த குன்றுடையானை மணக்க நேரிட்டதே யென்று தாமரை தன்னுடைய தலைவிதியை நோகின்றாள்.                           “வளரும் நிலமறிந்து வாழையைப் பதிக்காமல்                             பூக்கும் நிலமறிந்து பெண்ணைப் பதிக்காமல்                            கூலிக் காரனுக்குக் கூட்டியாந்து தந்தாயடா                             இந்தவிதிக்கு நானென்ன செய்வேனென் றழுதாள்” இவ்வாறு பிறவடிவங்களில் , தாமரை, குன்றுடையானைத் தாழ்வாக மதிப்பிட்டே  வேறு வழியின்றி மணந்து கொள்ள, பிச்சன் குன்றுடையானை அவனுடைய உரிமையை மதித்துத் தாமரை அவனை மணந்து கொண்டதாகப் படைத்துள்ளார். பொன்னர் – சங்கர்.                          பாண்டவர்களில் மூத்தவராகிய தருமர் பொன்னராகவும் வீமன் சங்கரராகவும் பிறந்ததாக மரபுவழி கதை கூறப்படுகிறது.      அதற்கு ஏற்பப் பொன்னரைப் ‘பொறுமை பொறுத்த நல்ல பொன்னு’ எனவும் சங்கரைச் ‘ சிறுபுலி குமார சங்கு’ எனவும் அண்ணன்மார்சாமி கதை கூறுகின்றது.                 சங்கரின் முன்கோபத்தையும் செயல்வேகத்தையும் மிகைப்படுத்திக் காட்ட , பாத்திரப் பண்புகளைப் புரிந்துகொண்டு புனைய அறியாத நாட்டுப்புறக் கவிஞர்கள், பொன்னரைச் செயல்திறம் அற்றவராகவும் வீரமில்லாத கோழையாகவும் காட்டுவது உண்டு. அத்தகைய பொன்னரைக் குன்றுடையாக் கவுண்டன் வம்ச வரலாற்றில் காண்கிறோம். இதில் வீரச் செயல் அனைத்திற்கும் உரியவர் சங்கரே.             குன்றுடையாக் கவுண்டர் வம்ச வரலாற்றில் பங்காளிகளைத் தண்டிக்கவும் வேட்டுவரின் பன்றியை வேட்டையாடவும் அழைக்கவும் செல்லும் சங்கர் தன்னுடைய வீரச் செருக்கால் பொன்னரைப் பலமுறை சிறுமைப்படுத்து கிறார்.             பிச்சன் படைப்பில் பொன்னர் ‘பொறுமை பொறுத்த’வராக இருத்தலோடு மிக்க வீரமும் விவேகமும் நிறைந்தவரகவும் படைக்கப்பட் டுள்ளார். சண்டையால் விளையும் கேடு கருதி வேட்டுவருடன் பகையைத் தவிர்த்து வந்தாரெனினும், செயல்பட வேண்டிய தருணத்தில் தம்பியை ஏவியும் தாமே செயல்பட்டும் தம்முடைய தலைமைப் பண்பினை வெளிப்படுத்துகின்றார். இறுதி நிகழ்ச்சியாகிய வேட்டுவர் சங்கரிப்பைப் பொன்னரே நிகழ்த்துகிறார். ‘சிறுபுலி குமாரசங்கு’ அண்ணார் பொன்னருடைய கட்டளைக்குக் கட்டுப்பட்டு அடங்குகிறார். பிச்சனின் படைப்பில் பொன்னர் அறத்திலும் மறத்திலும் சிறந்து விளங்குகின்றார். வீரமரணம்                 தன்னிகரிலாத் தலைவன், உண்மையில், ஒரு கீழ்மகனின் வஞ்சகத்தால் அழிந்திருந்தாலும் , காப்பியக் கவிஞன், அச்செய்தியை அவ்வாறு கூறுவதில்லை. காப்பிய அறத்தின்படி, அறத்தை மறம் வென்று அழித்துவிட முடியாது.  தன்னேரில்லாத் தலைவனை மானுடர்கள் யாரும் வென்றழித்திட முடியாது. எனவே, காப்பியத் தலைவனின் வீழ்ச்சிக்குக் காரணமாகக் கவிஞன் வேறு ஏதாவதொன்றைப் படைத்துக் கூறுகின்றான்.              அண்ணன்மாரின் இறுதியைக் கள்ளழகர் அம்மானை யதார்த்த நிலையில் பாடுகின்றது. சங்கர் வேட்டுவப் படைகளையெல்லாம் வெட்டிக் குவித்துவிட்டு, இன்னும் படைகள் வருமென்றுவீரமலைச் சாரலில் தங்கியிருக்கிறார். நீர்வேட்கை உண்டாகி நன்னீர்ச்சுனை தேடி வீரமலைக் கானலில் அலையும்போது , தலையூர்க்காளி தப்பித் தடுமாறி , சங்கருக்குச் சிக்காமல் வந்துகொண்டிருந்தான். சங்கர் தண்ணீர் பருகிக் களைப்புத் தீர ஒரு வேங்கைமரத்தடியில் இருக்கும்போது, காளி மறைந்திருந்து விட்ட அம்பு சங்கரின் நெற்றியில் பட்டு உருவியது. சினத்துடன் வாளையுருவிக் கொண்டு தன்மீது அம்ம்பு தொடுத்தவனைத் தேடும்போது , வேட்டுவனைக் கண்டு வேட்டுவனை வாளால் வீசினார். ‘வேங்கி மரமும் வேட்டுவன் தலையும் ஒன்றாக உருண்டதே வீரமலைக் கானகத்தில்’.  மறைந்திருந்து வேட்டுவன் காயப்படுத்தும் அளவுக்கு ஏமாந்து விட்டோமே என்ற அவமானமும் சினமும் வேட்டுவக் காளியைக் கொன்றும் தீரவில்லை.’ கோபம் பொறுக்காமல் குத்தினார் கல்லுகளை’. தன்னுடைய ‘மாசுபடா மேனியிலே மறுப்பட்டுப் போனதினால்’ சங்கர் வடக்கிருந்து உயிர்விடத் துணிகிறார்.                   வேட்டுவனின் வங்சகத்தால் சங்கர் சாக நேர்ந்தது என்ற உண்மை நிலையினைச் சொல்ல விரும்பாத காப்பியக் கவிஞர் பிச்சன் அதற்கு வேறு ஒரு காரணத்தைக் கற்பிக்கின்றார்.                                   அண்ணன்மார்சாமி கதையில் சங்கரின் முடிவு வேட்டுவக் காளியால் அன்றி அவனைப்போல வேடமிட்டுவந்த மாயவரால் நிகழ்கின்றது..            வேட்டுவர் மேல்சென்ற மைத்துனன்மார் நீர்வேட்கையால் நச்சு நீர் உண்டு மடிந்த செய்தியைக் கேட்டு சங்கர் குதிரைமீது மணப்பாறைக் கணவாய் வழியே வருகிறர். அப்பொழுது அவருடைய உயிரைப் பறிக்க மாயவர் திட்டமிடுகிறார்.                 “பதினாறு முடிந்ததுவே –சங்கருக்கு – பாரதம் முடிக்க வேணும்                  மாத்தாளைப் போலநின்று – சங்கரை- மடிந்தகளம் செய்யவேணும்                 எதிராளிபோல நின்று –சங்கரை- மடிந்தகளம் செய்யவேணும்                  தம்பிபலிக்கா பதினெட்டு நாட்டையும் பொன்னர் கருவறுப்பார்” என்று மனதில் கபடுடைய வராகிய மாயவன் எதிராளிபோல வடிவம் எடுத்தார். தலையூர்க்காளி போலத் ‘ தங்கத்தினா லிழைத்த சருகை வார்த்த குல்லாயினைச் சாய்ந்த கொண்டை மேலணிந்து’ நின்றர். சங்கரின் உயிரைப் பறிக்கும் படைக்கலம் சாதாரணமனதொன்றாக இருக்கலகாதென்று, ‘வாழைத்தண்டை வில்லாக மல்லிகைப்பூ கணையாகச் சிலைவளைத்து’ எய்தார், மாயவனார் . இவ்வாறு நின்ற மாயவனார் சங்கரின் பார்வையில்,             ‘வில்லும் கையில்பிடித்து –சுவாமி – வேடனைப்போல  வடிவெடுத்தார்                     சல்லிகட்டும் வில்லெடுத்தரர் தலையூர்க்காளிபோல                                                                                வெள்ளிக்கட்டு வில்லெடுத்து- சுவாமி- வேட்டுவனைப்போலானார்’ கவிஞர் , இவ்வாறு மும்முறை அடுக்கிக் கூறியது, சங்கரைக் கொன்றது, வேட்டுவனல்ல , வேட்டுவன் வடிவில் வந்த மாயவரே என வலியுறுத்த வேண்டியாகும். மாயவர் மறைந்து நின்று அம்பு தொடுத்தார்.                 “விட்டாராம் அம்பாகி விரைந்து கடல்குமுறி                  மின்னல் ஒளிபோல வெளிச்சமிட்டுக் கண்பறித்து                 ஆவிதணல் வீசி அறுபது வேங்கை மரம்கருகி                 வீரமரம் தட்டுருவி விரைந்துமது” சங்கரின் நெற்றிக்கு நேராக வந்தது. சங்கர் அதனை எளிதாக நேரிசத்தால் தட்டி விட்டுக் கையால் பற்றினார். அம்பு வந்த திசையை நோக்கிக் குதிரையைத் திருப்பினார், சங்கர். வேட்டுவனைக் கண்டு கடுங்கோபம் கொண்டு, தம்முடைய மந்திர வாளுருவி ,’ வேடா நீ எதிர்த்துப் போர்செய்யாமல் ஒளிந்திருந்து அம்பு விட்டாய், என்னைக் கள்ளம்பு கொண்டு கலங்கவே எய்தாயே’ எனக் கூறி, வாளை வீசினார். மாயன் வாள் வீச்சுக்குத் தப்பி எட்டிக் குதித்தர். ‘விலகிக் குதிக்க – நீ - வெகுசமர்த்தனடா வேட்டுவனே’ என்று கூறியவாறே சங்கர் மீண்டும் வாளைவீசினார். மறுபடியும் வாள்வீச்சுக்குத் தப்பிய வேட்டுவன் வேடத்திலிருந்த மாயவர், வேங்கை மரத்தின் மறைவில் மண்டியிட்டுப் பதுங்கிக் கும்பிட்டுப் பணிமொழிகள் பேசத் தொடங்கினார்.                    ‘கும்பிட்டாரை வெட்டத குருகுலத்து வங்கிசம் நீ                    உன்னுடன் எதிர்த்தவரை வெட்டினல் ஏற்கும் சவுரியந்தான்                    விழுந்தவரை வெட்டினால்- உனக்கு- வீரியமும் ஏற்குமோடா’ என்ற இந்தப் பணிந்த மொழிகளைக் கேட்டு,                      ‘மானுட சீவனென்றால் மந்திரவாளுக்குத்தப்பி மறுவார்த்தை  பேசுறதா                                 மானுடச் சீவனல்ல –சுவாமி- மாயவனுமாய்க் காணுமிவர்’                                                              எனத் தெளிகிறார். மாயவரை வணங்கிப் பணிசெய்யக் குதிரையை விட்டிறங்கியவுடன் அங்கு மாயவரைக் காணாமையால் , சங்கர் தம்முடைய கையில் இருந்த அம்பினை நோக்கினார். அதில்,                       ‘பதினாறு போதுமென்று –உங்களையர்- பாலன்வரம் வாங்கி  வந்தார்                              பதினாறு முடிந்ததினி பரமகதி சேரவேணும்                                                                                                   எழுத்து முடிந்ததினி –நீங்கள்- இங்கிருக்கக் கூடாது’  என எழுதியிருந்ததைக் காணுகிறார். இது பரமன் செயலெனத் தெளிந்தார். இதனை உறுதி செய்ய ஒரு சோதனை நிகழ்த்துகிறார்.                        மாயவனார் அம்பென்றல் –இது – மாயமாய்த்  தானுமினி                  நெற்றியிலே பட்டு நேராகத் தானுமிப்போ                  வன்னிமரம் வைரமரம் வாகாகத் தட்டுருவி                   வேங்கைமரம் வீரமரம் விதமகத் தான்பாய்ந்து                  திருப்பாற் கடல்மூழ்கி தினதீர்த்தம் தானாடி                   செங்கணையின் அம்பு சீருடனே எந்தனிடம்                   வரவேணும்”  என்று சொல்லி சங்கர் அம்பைக் கைவிடுகிறார். அம்பு அவ்வாறே அவர் நெற்றியிலே பாய்ந்து வடு உண்டாக்கித் தீர்த்தங்களாடி மீண்டு வந்தது. எனவே, இது மாயவரின் அழைப்பெனத் தெரிந்த சங்கர் , உலக வாழ்க்கையைவிட்டு நீங்கத் துணிந்தார். குதிரையின் மீது போட்டிருந்த  குங்குமப் பட்டை யெடுத்துப் பாறைமீது விரித்து அதன்மேல் வலது காலை ஊன்றி இடதுகால் மண்டியிட்டு (இது வீரமண்டி) எனப்படும்) கேடயத்தை மார்பில் பதித்து வாளினை வலக்கையினிற் பற்றி வடக்கு முகம் பார்த்து. ‘கைலாசம் பார்த்த கண்ணு –குமாரசங்கு – கண்ணுறக்கமாகி விட்டார்’.                       வீரநிலைக் காப்பியத் தலைவர்கள் மரணத்தை வென்றவர்கள். அவர்கள் பிற மானுடர்கள் சாவதைப் போன்ற முடிவை அடைவதில்லை. அவர்கள் கூற்றுவனும் அஞ்சும் திறனுடையவர்கள். எனவே, அவர்களுடைய வாழ்வின் எல்லையில், அனைத்து உயிரையும் கூற்படுத்தும் கடமையுடைய கூற்றுவன், ‘செற்றன்றாயினும் செயிர்த்தன் றாயினும் ‘ தலைமகனுடைய உயிரைக் கொள்ளாது, ‘கைதொழுது ஏத்தி இரந்தே’ (புறநானூறூ 226)  கொல்லுவதற்கு உரியன். இந்த நிலையை இதிகாசங்களிலும் காணலாம். இராமபிரான் தன்னுடைய அவர்தாரக்குறிக்கோளாகிய அரக்கர் வதம் முடித்து, முடி சூடி நாடாளுகையில், உரிய காலக்கழிவுக்குப்பின், யமன் , வேதியன் வடிவம் பூண்டு, அரசவைக்கு வந்து, இராமாவதாரப் பயனைக் கூறி, ‘அவ்வாறு முடித்தனை யாதலின் மெய்வானுலகம் எய்தல் வேண்டும்’ என இரக்கின்றான். அவ்வழி இராமனும் உயிர் துற்க்கின்றான். இந்த வழியைப் பின் பற்றியே,மாயவனும் .’பதினாறு முடிந்ததினி-பரமகதி சேரவேணும்’, என இரந்து வேண்டி, சங்கரை உயிர் துறக்கச் செய்கின்றான். வீரநிலைப் பண்பினை நன்கு அறிந்த கவிஞர்பிச்சன், சங்கரின் வாழ்நாள் இறுதியைக் கூறும் இடத்து, வீரநிலைக் காப்பிய மரபினைப் பின்பற்றிப் பிற வடிவங்களினின்றும் முழுவதும் வேறுபடுகின்றார்.                      கள்ளழகர் அம்மானையிலும் குன்றுடையான் வம்ச வரலாற்றிலும் சங்கர் இறந்த பின்னர் பொன்னர், துயரம் தாங்க முடியமல் தற்கொலை செய்து கொள்கிறார். இந்த இரண்டு வடிவங்களிலும் வேட்டுவரை அழித்தலில் பெரும்பங்கு சங்கருக்கே உரியதாகக் கூறப்படுகிறது.                          பிச்சன் இந்த இரண்டு நிலைகளிலும் மாறுதலைச் செய்துவிட்டார். அண்ணன்மார்சமி கதையில் வேட்டுவருடன் இறுதிக்கட்டப் போரைக் காப்பியத்தலைவராகிய பொன்னரே நிகழ்த்துகிறார். வேட்டுவரை கருவறுக்கும் பெருமை அண்ணருக்கே உரிமையுடையதாகக் கவிஞர் பிச்சன் பாடுகிறார்.                             வேட்டுவரைஅழித்து மீளும்போது, புலவனைப்போல வந்த மாயவன்,’தலையில் மிகப்பதித்த தங்கக் கிரீடமதைத் தந்தாலே என்மனது சம்மதம் ஆகும்’, என்று தானம் கேட்க , இரப்பவன் புலவனல்லன்; மாயவனே நம் ஆயுட்காலம் நிறைவுற்றதை இவ்வாறு உணர்த்துகிறார் என்றறிந்து, பொன்னர் உயிர் துறக்கத் தயாராகிறார்.                     படுகளத்தில் தங்கை வேள்வி செய்து உயிர்ப்பித்த சங்கரைக் கண்டுக்  பொன்னர்,                   ‘மாண்டவர்கள் எழுந்திருந்தால் – இந்த- மண்டலங்கள்  கொள்ளுமா                              இருந்தநாள் போதுமினி – நாம் – ஈஸ்வரர் பாதம் சேர்ந்திடுவோம்                                                                                    வாழ்ந்த நாள் போதுமினி – மாயனுடைய பதவி – வைகுந்தம் சேர்ந்திடுவோம்’             என்று கூறி, உயிர் துறக்கத் தூண்டுகிறார். சங்கர், ஏற்கெனவே உயிர்விட்டவர் ஆகையால், தனக்கு முன்னர் மீண்டும் உயிர் துறக்கத் தூண்டி, தாம் தம்பியைத் தொடர்ந்து வருவதாகக்கூறுகிறார்.           ‘அண்ணர்வர மாட்டாரென்று – தம்பி- மனதிலே எண்ணாதே           இருந்திடுவார் என்றுசொல்லி – தம்பி – யோசனைகள் செய்ய   வேண்டாம்                                                                                                   முன்போக பின்வாரேன் – தம்பி-முன்னே நடவுமடா’ என இவ்வாறு கூறி, தங்கை பொருத்தின காயத்தை உருவி விட்டார். பொருத்தின தையல் பிரித்தவுடன் உயிர் உடலைவிட்டுப் பிரிகிறது. தன்னுடைய வாள் வேட்டுவரை அழித்ததில் பழுதுபட்டுப் போனதால் சங்கரின் வாளை நட்டு அதன்மேல் விழுந்து தன்னுடைய உயிரை மாய்த்துக் கொள்ளப் பொன்னர் முற்படுகிறார். மாயவர் செயலால் ஒவ்வொருமுறையும் வாள் சாய்ந்துவிடுகிறது. மாயவர் வானுலகம் சென்ற சங்கரின் உயிரை அழைத்துவருகிறார். அண்ணரின் சொற்படிக்குத் தங்கை வேள்விநீர் தெளித்துப் படுகளத்தில் மாண்டவர்கள் அனைவரையும் உயிர்பெறச் செய்கிறாள். அனைவரும் மாயவரின் அருளால் உயிருடன் வைகுந்தம் சேர்கின்றனர்.                       அண்ணன்மார்சாமி கதையில் பொன்னர் சாவதில்லை. இது பிச்சன் செய்துகொண்ட மாற்றம். மாயவரின் பயன்பாடு                    அண்ணன்மார் சாமிகதையில் , மாயவர் என்னும் பாத்திரத்தைப் படைத்து, காப்பியக் கதையைக் கொண்டு செலுத்தும் உத்தியாக அதைப் பிச்சன் கையாளும் முறை அற்புதமக உள்ளது.                          ‘திக்கற்றவருக்குத் தெய்வமே துணை’ என்னும் மக்களின் நம்பிக்கைக் கேற்ப,’மங்கு மசையனான ‘ குன்றுடையானுக்குத் துன்பம் நேரும்போதெல்லாம் அவனைக்காப்பாற்ற தெய்வம் ஓடோடி வருகின்றது. குன்றுடையான் தன்னுடைய பொறுப்புக்களில் சோர்ந்து நிற்கும்போ தெல்லாம் மாயவர் வேற்று வடிவெடுத்து வந்து உதவுகிறார். யோசனைகள் சொல்லித் தருகிறார். பங்காளியர் அழித்துப் போட்ட நிலத்தில் குன்றுடை யானுக்காக மாயவரே உழுது பயிர் செய்கிறார். ‘மாயன் கிருபையினால் அவர்கள் குடியீடேற , பசுக்கள் மிகப்பெருகி பாக்கியங்கள் உண்டாச்சு’. இவ்வாறு மாயவர் உதவுவது இக்கதையின் எல்லா வடிவங்களிலும் உண்டு. பிச்சன், மாயவர் பாத்திரத்தைக் கதைப் போக்கிற்கு மட்டுமன்றிக் காப்பியக் கட்டுக்கோப்பிற்கும் பயனுறக் கையாளுகிறார்.                       குன்றுடையானின் முறைப்பெண் தாமரையைப் பங்காளிகள் பெண்கேட்க வருகின்றனர். தாமரையின் தந்தையும்  அவர்களுடைய பொருளாதார உயர்வை மனதில் கொண்டு இந்தச் சம்பந்தத்தை விரும்புகிறார். மாயவர், தாமரையைக் குன்றுடையான் பெண்கேட்க வாய்ப்பாக அமையும் வகையில், ‘பஞ்சாங்க வேதியர் போல் பங்காளிகள் முன்வந்து, ‘திங்கட் கிழமை- இன்று- நல்ல முகூர்த்தமில்லை,விநாயகர் கோவிலிலே மாப்பிள்ளை –விடுதி- விடுங்கள்’ என்று காலம் தாழ்க்கும்படி செய்கிறார். இதனால் , தனக்கு உள்ள முன்னுரிமையை முதலில் வலியுறுத்தும் வாய்ப்பினை மாயவர் குன்றுடையானுக்கு அமைத்துத் தருகிறார்.                             இதுபோலக் காப்பியக் கதை வளர்ச்சிக்கு மாயவர் துணை செய்வதைக் காப்பியம் நெடுகிலும் காணலம்.                   மக்களைக் கொண்டு காப்பியத்தை ந்டத்தமுடியதபோது புலவன் தெய்வத்தின் உதவியை நாடிப் பெற்றுவிடுகிறான். குன்றுடையான் தாமரையை மணக்காது போயிருந்தால் காப்பியக் கதை நடவாது. குன்றுடையானை மணப்பதில் தனக்குள்ள விருப்பத்தைத் தாமரை தானே வெளியிட்டால், அதனைச் சமூகம் ஏற்காது. பெண், திருமணத்தில் தனக்குள்ள விருப்பத்தைத் தானே வெளிப்படுத்துதல், பெண்மைக் குணத்துக்கு இழிவு எனச் சமுதாயம் ஒழுக்கத்தை வரையறை செய்து வைத்துள்ளது. இந்தச் சிக்கல் நேராதபடி, தாமரையின் முடிவை அனைவரும் ஏற்றுக்கொள்ளும் வண்ணம் கதையை நடத்த மாயவர் பிச்சனுக்குக் கைகொடுக்கிறார்.                      காப்பியக் கவிஞன் உலகத்தில் நிகழும் மோதல்களைக் கொண்டே காப்பியம் படைக்கிறான். உல்கத்தார் போற்றும் நடைமுறை ஒழுக்கங்களும் வழக்கங்களுக்கும் மாறான ஒன்றை அவன் வெளிப் படையாகப் படைத்துவிடச் சமுதாயம் இடங் கொடுக்காது . கதைப் பாடகனுடைய தொழில் சமுதாயத்தைச் சார்ந்தே உள்ளது. சமுதாயத்தின் ஒழுக்கநெறிக் கொள்கையுடன் கதைப் போக்கு மாறுபடும்போது , காப்பியத்தை நடத்தக் கவிஞன் வேறுபல உத்திகளைக் கையாளுகின்றான். அண்ணன்மார் சாமி கதையில் இந்த உத்தியாக மாயவர் உதவி புரிகின்றார். மாயவரின் அறிவுரையின்படி , தாமரை, இவ்வாறு தந்தையின் விருப்பத்துக்கு எதிராக நடந்துகொண்டாள் என்று கவிஞன் காட்டும்போது, அவள், தந்தை சொல்லை மீறிக் கலியாணம் செய்து கொண்டாள் என்று அவள்மீது கோபம் தோன்றுவதற்கு மாறாக க் கதை கேட்பவர்களுக்குக் குன்றுடையான் - தாமரை மீது பரிவும் அன்பும் தோன்றுகிறது. அவர்களை அவமானப்படுத்திப் பாதிக்கலியாணம் முடிந்தவுடன் விரட்டிவிட்ட அவளுடைய தந்தையின்மீது சினம் தோன்றுகின்றது. ‘மாதவி பாடிய காதற்பாணி கனகவிசயர் முடித்தலை நெறித்தது’ . அதுபோல , கதையின் பின்நிக்ழ்ச்சிகளுக்கெல்லாம் தன்னுடைய தந்தைக்கு எதிராகத் தாமரை கூறிய வஞ்சினமே காரணமாகிறது. தாமரையின் மக்களான பொன்னர்- சங்கர் இருவரின் திருமணவாழ்க்கை அறவே இல்லாது ஒழிந்து போனதற்கும் அவளுடைய வஞ்சினமே காரணம். இத்னால், கதை கேட்பவருக்கு இயல்பாகத் தாமரையின்மேல் எழும் வெறுப்பை மாயவரின் தலையீடு மாற்றிவிடுகிறது.                   இதுபோலக் காப்பியக் கதைப்போக்கின் திருப்பங்களைத் தெய்வங்கள் அல்லது இயற்கை இறந்த நிகழ்ச்சிகளைக் கொண்டு காப்பியக் கவிஞன் புனைவதைக் காப்பியத் திறனாய்வாளர்கள் ‘காப்பிய வழுவமைதி’ என்பர்.                  பிச்சன் பெண்பாத்திரங்களை, குறிப்பாகத் தாமரையைச் சமுதாயத்தின் பார்வையில் மிகுந்த மரியாதைக்கு உரியதாகப் படைக்க விரும்புகிறார். பாத்திரத்தின் ஒழுக்கநெறியில் எவரும் ஐயங்கொள்ளாத வகையில் நிகழ்ச்சிகளைப் புனைய முனைகிறார். இங்கும் மாயவரே கவிஞருக்குத்  துணை செய்கிறார்.                    மங்கு மசையனான குன்றுடையானை மணந்து கொண்ட தாமரையின் இல்வாழ்க்கை குழப்பமின்றி நடக்குமா எனக் கதை கேட்பவர்க்கு ஐயம் எழக்கூடும். ஏதோ உணர்ச்சி வசத்தால் சம்மதப்பட்டு நடைபெற்ற திருமணம் என்றால், பிற்காலத்தில் வேறுபாடு நிகழலாமே; பெண் சபலபுத்தி உடையவள் என்பது உலகத்தவர் கருத்தாயிற்றே; எனவே, கவிஞர் தாமரையின் உள்ளத்து உறுதியையும்கற்பு நிலையையும் எடுத்துக் காட்ட விரும்புகிறார். அதனைப்  பாத்திரங்களின் கூற்றாகவோ அல்லது வெறும் கருத்துரையாகவோ அல்லாமல் காப்பிய நிகழ்ச்சியுடன் சம்பந்தப் படுத்திக் காட்ட விரும்புகிறார். இங்கும் மாயவரே துணைசெய்கிறார்.                 தாமரையும் குன்றுடையானும் திருமணத்திற்குப் பின் தங்களுடைய வளநாடு நோக்கி வருகின்றனர். இவர்கள்மேற் கொண்ட பரிவால் மாயவருக்கு ஒரு சந்தேகம் வருகிறது. மாயவருக்குத் தோன்றிய சந்தேகம் , இவர்கள் இருவரையும் ஒருசேரப் பார்த்த எவருக்கும் இயல்பாக எழக்கூடிய சந்தேகமே.                     ‘இவளழகைப் பார்த்தாலோ லட்சுமியைத் தோற்கடிக்கும்                     அவனையே பார்த்தாலோ ஆடுமேய்க்கும் பேய்க்கருப்பன்                      எப்படித்தான் ஒன்றாக இணங்கி யிருப்பாரோ’ என ஐயுறுகிறார். சந்தேகம் நீங்கச்  சோதனை ஒன்று செய்கிறார். . மாயவர் அழகிய வாலிபன் வடிவெடுத்துத் தாமரையின் கண்ணில் படும்படி அவள்முன் நடை பயில்கிறார். அந்த வடிவு தாமரையின் மனத்தில் எந்தப் பாதிப்பையும் எய்யத இயலவில்லை. ‘தாமரையாள் குன்றுடையான் தன்பிறகே தான்வாராள், கால்தரையைப் பார்த்துக் கடுகியே வழிநடந்தாள்’ தாமரையின் திண்ணிய கற்பைக் காட்ட அழகிய இளைஞர்களைப் படைத்து அவர்களால் தாமரையின் மனம் பேதலிக்கவில்லை என்று காட்டக் கவிஞர் விரும்பவில்லை. அவ்வாறு கூறுவது அந்தப் பாத்திரத்தின் தகுதிக்கும் தூய்மைக்கும் இழுக்கு என்று அவர் கருதினார். என்றாலும் இத்தகைய சோதனையினால்தான் பாத்திரத்தின் மனஉறுதியை விளக்க முடியும் என்று கருதியதால் மாயவரை இதற்க்குக் கவிஞர் பயன்படுத்திக் கொண்டார். காப்பியப் போக்கிலும் இந்தச் சோதனை பின்னால் நிகழும் நிகழ்ச்சிக்கு முரண் நிகழ்ச்சியாக அமைந்து காப்பியப் பயன் உடையதாக அமைகிறது.                         பிள்ளை வரம் பெறப் பொன்னம்பலத்துக்குப் போகும் முன் தங்கள் சொத்துக்களையெல்லாம் திரட்டித் தாமரையும் குன்றுடையானும் ,’மேனாடு கொடியரசு வேட்டுவராஜகுலம் சாந்தப்பாடி தனியரசு தனத்தில் மிக்கவர்களாகிய’ வேட்டுவர் தலைவனிடம் அடைக்கலமாகக் கொடுக்க வந்தார்கள்.பொருள்களை வாங்கிப் பொக்கிஷத்தில் போடும்படிக் கூறிய வேட்டுவப் பட்டக்காரன், ‘அவளையே பார்த்தாலே ஆதிமகாலட்சுமிபோல், இவனைபயே  பார்த்தாலே இளித்தவாய்க் கிழவனைப்போல்’, என்று நினைத்து, ’மருந்து வைத்துக் குன்றுடையானின் வல்லுயிரை வாங்கிவிட்டு, வைப்பாட்டியாகவேதான் வைத்திடுவோம்  தாமரையை’ என்று திட்டமிடு கிறான்.                     அவனுடைய கெட்ட எண்ணத்தை அறிந்த தாமரை அவனை அழிக்கச் சபதமிட்டு ஊர் திரும்புகிறாள்                   பட்டக்காரனுடைய பணத்திற்கும் பதவிக்கும் மயங்காத் தாமரையின் உள்ளத்துறுதி ,கற்பென்னும் திண்மை யாகியவற்றை விளக்க மாயவர் நடத்தியதாக முன்னர் புனைந்து காட்டிய சோதனை நிகழ்ச்சி சிறந்ததொரு முரண் புலத்தைப் படைத்துத் தருகிறது. இந்தநிகழ்ச்சிகள் மரபுவழிக் கூறப்படும் அண்ணன்மார் கதையில் இல்லை. இவை பிச்சன் கற்பனைத் திறனின் விளைவே. ஒத்துணர்வுப் பின் புலம்                                 கவிஞர்களுக்கு இயற்கை தலையாய பாடுபொருள் . இயற்கையை வருணித்தல் வாயிலாக மனிதனின் உள்ளத்து உணர்ச்சிகளை. மனநெகிழ்வுகளைப் பாங்குறக் காட்டல் சிறந்த கவிஞர்களின் இயல்பு. வாய்பேசாத மரமும் மேகமும் போன்ற அஃறிணைகளும் சொல்லாடுவன போலவும் தலைமக்களின் உணர்ச்சிகளைப் பகிர்ந்து கொள்வன போலவும் சங்கச் சான்றோர் பாடல்களில் காணப்படும் கூற்றுக்களை வழுவமைதிக  ளாகக் கொண்டார் தொல்காப்பியர். இத்தகைய வழுவமைதிகள் வீரநிலைப்பாடல்களிலும் உண்டு.                           மாவீரனை இழந்த உலகத்தின் இழப்பு இயற்கையையும் தாக்குகின்றது. இயற்கையின் இயங்கு திணையும் இயங்காத்திணையும் வீரனை இழந்து கலங்குவதாகக் கவிஞன் கற்பனை செய்கிறான். காப்பியக் கவிஞன் தன்னுடைய அகவுணர்வுகளை இயற்கை நிகழ்ச்சிகளின் மேலேற்றிக் கூறுகிறான். இயற்கை வருணனையில் இத்தகைய ஒத்துணர்வு தோற்றத்தைப் பின்புலமாகக் காட்டுவதன் வாயிலாக அவையினரின் மனத்தில் கதைப்பாடகன் அவலவுணர்வு முழுமையாகக் கவரும்படிச் செய்கிறான்.                   அவலவுணர்வுப் படைப்புக்கு வாய்மொழிக்கவிஞன் கைக்கொள்ளும் இந்த உத்தி எக்காலத்திற்கும் எந்த இடத்திற்கும் பொதுமையனது. இந்த உத்தியைப் பிச்சனும் பயன்படுத்தி அவலச்சுவையை விரிவடையச் செய்கிறார்.                       அண்ணன்மாரின் படுகளத்தைத் தேடி நல்லதங்கம் புலம்பிக்கொண்டு வீரமலை வருகிறாள்.அவள் நிலையைக் கண்டு இயற்கையே செயலற்று நிற்கிறது.                           ‘நல்லதங்கை குரல் கேட்டு:                            ‘வீரமலை நல்லதொரு பட்சியெல்லாம்                           உத்தமியாள் குரல் கேட்டு பறவை இரையெடுக்கதாம்                           ஆடுகளும் மேயாதாம் –உத்தமியாள் குரல் கேட்டு- மரங்கள்    இலை யாடாதாம்                                  பட்சியிரை எடுக்காது பசுங்கன்று ஊட்டாது’                                                                                           நல்லதங்கம் தான் பிறந்து செல்லமாக வளர்ந்து , இப்பொழுது தனித்துயரில் இருக்கும் சோகக் கதையைக் கேட்ட,                                  ‘பூத்தமரம் அத்தனையும் பூவுதிர்ந்து கேட்டிடுமாம்                                காய்த்தமரம் அத்தனையும் காயுதிர்ந்தே போய்விடுமாம்                           பழுத்தமரம் அத்தனையும் பழமுதிர்ந்தே போய்விடுமாம்  காட்டில் கொடிய விலங்குகளை நல்லதங்கம் காண்கிறாள். வறண்ட கானகத்தில் அவை துன்பப்பட்டுக் கொண்டு இருப்பதைக் கண்டு , அவையும் தன்னைப்போலவே உடன்பிறப்புக்களை இழந்தமையால் துன்பப்படுகின் றனவோ என ஐயுறுகின்றாள்.                    ‘மூங்கில்வனம் பார்க்க உத்தமி மிதித்தேறி வாராளே                          மூங்கில் நெறுநெறுங்க முதுகரடி அபயமிட                  எண்ணாதும் எண்ணியே என்னசொல்வாள் நல்லதங்கம்                    என்னைப்போல் கொள்ளைகொடுத்தே –நீ- குடிசேதப் பட்டாயோ                   அண்ணனையும் பறிகொடுத்தே அழுது புலம்பினையோ                     கொடியாள் புலம்புகையில் –முதுகரடி- தானும் புலம்பிடுமாம்                     தங்கம் புலம்புகையில் கரடிதானும் புலம்பிடுமாம்’                                                                        தனிவழி நடக்கும் தனக்குத் துணை வரத் தங்கை தெய்வத்தை வேண்டுகிறாள். சிவனார் சித்தமிரங்கிக் காட்சி தந்தார் பலவழிகளில் அவளுடைய நலிவகற்ற இயற்கை முற்படுகின்றது.                     ‘உத்தமியாள் வாரவழி –அதுசுத்தி- ஓடிநிழல் விழுகும்                                     பத்தினியாள் வாரவழி அதுபாதை தடமாகும்                     முன்னேயோடி வழிவிலகி – உத்தமிக்கு – பின்னே யோடி    வளரும்                                             முன்னிருக்கும்  மரங்கள் செடிகள் எல்லாம் மல்லிகைப்பூப்      பூத்திருக்கும்’                                                                           தங்கையின் தனித்துயர் கண்டு கண்டோரும் கேட்டோரும் மனங்கலங்கிக் கண்ணீர் உகுத்து அழுவது போல இயற்கையும் அழுகிறது. இவ்வாறு, ஒத்துணர்வு பின்புல வருணனை வாயிலாகச் சுற்றுச்சூழல் முழுவதையும் பிச்சன் அவலவுணர்வில் அமிழ்த்திவிடுகிறார்.தங்கை அண்ணரின் படுகளம் தேடி வரும் பகுதி முழுவதிலும்  இத்தகைய உணர்ச்சி வழுவமைதி காணப்படுகின்றாது. இதனைக் காப்பியத்தின் அவலச் சுவையைத் தீவிரப்படுத்தும் உத்தியாகப் பிச்சன் கையாண்டு வெற்றியடைகிறார்.                    தங்கையின் புலம்பல் கனகத்தின் அமைதியைக் கெடுத்துப் பெரியகாண்டியின் தவத்திற்கு இடையூறு செய்கின்றது. சிவத்தியானதிற்கு இடையூறு விளைக்கும் தங்கையைக் கொல்லப் பெரியகாண்டி மந்தியண்ணன், வேங்கைப்புலி, நாகம், யானை, மகாமுனி முதலியவற்றை அனுப்புகிறாள்.  அவை நல்லதங்கத்தின் அவலத்தினைக் கண்டு,                   ‘சிவசிவா எப்பாவம் செய்தாலும் இப்பாவ மாகாது                  பெண்பாவம் கொள்ளையிட்டால் – நமக்கு-ப் பிழைதீர  நாள்செலுமே’                            என்று அவளுக்குப் பணிவிடை செய்து அவளுடைய நலிவை அகற்றுகின்றன.                                                                                            இந்தப் பகுதியில் பிச்சன் இயற்கையைக் கையாண்டு அவலச்சுவையில் நம்மை நீள நெடிது தோயச் செய்கிறார்.                  வழிவழியாகக் கூறப்பட்டுவரும் கதையைப் பிச்சன் , மரபினைப் பின்பற்றியே கூறினும் தன் தனிக்கவித்திறத்தால் அண்ணன்மார்சாமி கதையைக் கலைப்பண்புடன் படைத்துத் தந்துள்ளார். ‘ஏதுமறிஉஏன் பாட்டில் ஏதுவகை நானறியேன் ‘ என்று சொன்னாலும் , ஆயி பெரியக்காண்டி யருளால் பெருங்காப்பியங்களுக்கு உரிய அமைப்புக்கள் பலவற்றையும் திறம்படக் கையாண்டு இவ்வாய்மொழி வீரநிலைக் காப்பியம் படைத்துள்ள பிச்சனின் கவித்துவம் போற்றுதலுக்கு உரியது.                                                           8. அண்ணன்மார்சாமி வழிபாட்டு நெறி நடுகல் வழிபாடு                         போரில் வீரம் விளைத்து மாண்ட வீரர்களுக்கு நடுகல் நட்டு விழாவெடுத்து வழிபடுதல் தமிழகத்தில் தொன்மையான வழிபாட்டு நெறியாகும். நடுகல்லான வீரர்கள் நாளடைவில் அவர்களுடைய சந்ததியினருக்கும் பிறருக்கும் குலதெய்வம் அல்லது வழிபடும் தெய்வம் ஆகின்றனர். அவர்கள் மாண்ட இடத்தில் மட்டுமன்றி  அவர்களைக் குலதெய்வமாக வழிபடுவோர் குடியேறிய வேறுபல இடங்களிலும் அவர்களுக்கு நினைவுச் சின்னங்கள் எழுந்து காலப்போக்கில் அவை கோயிலாயின. தமிழகத்தில் மட்டுமன்றி வீரர்களைப் போற்றும் எல்லா நாடுகளிலும்  இத்தகைய கோயில்கள் உண்டு. அண்ணன்மார் கோவில்கள்                    அண்ணன்மாருக்கு அவர்கள் மாண்ட படுகளமாகிய வீரமலைச் சாரலிலும் அதற்கு அடுத்த வீரப்பூரிலும் கோவில்கள் உள்ளன. இக்கோவில்களின் வரலாறு அண்ணன்மார்சாமி கதையில் கூறப்படுகிறது. இந்த இரு இடங்களில் மட்டுமேயன்றி கோயமுத்தூர் , ஈரோடு, சேலம், திருச்சிராப்பள்ளி,மாவட்டங்களிலும் அண்ணன்மாருக்குப் பல கோவில்கள் உள்ளன. அண்ணன்மார் கோவில் எனப்பட்டாலும் இக்கோவில்களில் தலைமைத்தெய்வம் பெரியகாண்டியம்மனே. இக்கோவில்களில் அண்ணன்மாருக்கும் தங்கை அருக்காணிநல்லதங்கத்துக்கும்  தனித்தனி உட்கோவில்கள் உண்டு. கன்னிமார், மகாமுனி, கருப்பராயன் , வீரபாகுச் சாம்புவன் முதலிய பரிவார தேவதைகளுக்கும் சன்னதிகள் உண்டு. வைதிக மதத் தாக்கத்தால் வீரப்பூர்க் கோவிலில் பிள்ளையாரும் முருகனும் கூட அமைக்கப்பட்டுள்ளனர். சிறப்பான சில அண்ணன்மார் கோவில்கள்   ஊர் பூசாரி குலம் - காணி      மேழிப்பள்ளி       சாணார்    செங்குண்ணி     பருத்திப்பள்ளி        வேட்டுவர்      செல்லன்     கருங்கல்பட்டி              வேட்டுவர்        செல்லன்     முறங்கம்                   வேட்டுவர்         ஆந்தை    வெள்ளோடு             உப்பிலியர்            சாத்தந்தை    எழுமாத்தூர்              வேட்டுவர்          செல்லன், காரி     கொளாநல்லி        வேளாளர்          கண்னன், தூரன்    சத்தியமங்கலம்        வேட்டுவர்             புல்லர்   வல்லியரச்சல்       வேளாளர்         செல்லன் ஆந்தை ஓதாளன் ஈஞ்சன் தூரன்   பார்ப்பனி           மூப்பன்            தோடை கண்ணந்தை கீரன் வண்ணக்கன்  பரஞ்சேரிவழி   வேளாளர்             பயிரன் செம்பன் ஓதாளன் ஈஞ்சன் தூரன்   வாங்கல்          வேளாளர் தூரன்            பெருங்குடி        மேழிப்பள்ளி அண்ணன்மார் கோவில்              அண்ணன்மார்சாமி கோவில்களில் மேழிப்பள்ளிக் கோவில் குறிப்பிடத் தக்க சிறப்பினையுடையது. இங்கு ஒவ்வொரு மாதமும் அமாவாசை நாளிரவு சிறப்புவழிபாடு நடைபெறுகிறது. சுற்றுப்புறக் கிராமங்களிலிருந்து திரளான மக்கள் கூடுகின்றனர். பொழுது சாய்ந்தபின் பேய்க்கோட்பட்ட இளம்பெண்கள் மகாமுனிக்கு முன் தாமாகவே ஆடுகின்றனர். அவர்கள் இரு கையினையும் கூப்பி நடுவிரல்களுக்கிடையில் ஊதுபத்திகளைப் பற்றிக் கொண்டு மகாமுனிக்கு முன் நிற்கின்றனர். சிறிது நேரத்தில் அவர்களுடைய கண்கள் செருகுகின்றன. கூந்தல் அவிழ்கின்றது. தம்மை மறந்த நிலையில் ஆடத் தொடங்குகின்றனர். இரவு நேரம் செல்லச் செல்லப் பேயாடுவோர் எண்ணிக்கைபெருகுகின்றது. பேயாடுதல் மட்டுமன்றிச் சாமியாடுதலும் உண்டு. சாமியாடுவோர் பெரியகாண்டி சன்னதி முன்னால் தங்களை வணங்கி நிற்பவர்களுக்கு, எலுமிச்சம்பழம் மந்திரித்துக் கொடுத்துக் குறி சொல்லுகின்றனர்.                 விடியற்காலை 3-00 மணிக்குப் பொன்னர் குதிரை மீதும் சங்கர் யானைமீதும் கோவிலைச் சுற்றிப் பவனி வருகின்றனர். (செப்புத்திரு மேனிகள்தாம்) கோவில் பூசாரிகள் மூவர் விநோதமன உடையணிந்து கொண்டு சுவாமிக்கு முன்னர் அண்ணன்மார்சாமி கதையைச் சொல்லிக்  கொண்டு வருவர். தலைமைப் பூசாரி கையில் பெரிய வேலொன்றை ஏந்தி க்கொண்டு கதை கூறிவர, மற்றைய இருவரும் கதைக்கு ’உம்’ கொட்டி வருவர்.  தாரை தப்பட்டை, பறை, மத்தளம்,முதலிய வாத்தியங்கள்   முழங்கும்.. அதற்கு ஏற்ப மூவரும் சுழன்று சுழன்று ஆடி வருவர். நடுவில் இருப்பவர் கையில் வேலும் மற்றைய இருவர் கையில் தீப்பந்தங்களும் இருக்கும். அவர்கள் சுழன்று சுழன்று ஆடிவருவது எதையோ தேடி அலைவது போலத் தோன்றும்.                    இவ்வாறு கதை கூறுதலும் ஆடுதலும் ஒருசேர நடைபெறும். கோவிலின் முன் வாசலின் முன் சுவாமி வருவதற்கும் கதையில் பன்றி வேட்டை நிகழ்ச்சியின் கட்டம் வருவதற்கும் சரியாக இருக்கும்.    அப்பொழுது வாத்திய முழக்கின் வேகம்  அதிகரிக்கும். வட்டமாகச் சுழன்று சுழன்று ஆடியபின் , கூட்டத்தில் ஒருவரைச் சுழன்றாடி வருகின்ற பூசாரி  கையைப் பற்றி இழுப்பார். பற்றப்படுபவர் பெரும்பாலும் பூசாரியைச் சேர்ந்தவராகவே இருப்பர். அவர், கூட்டத்தின் நடுவில் கைகளையும் முழங்கால்களையும் நிலத்தில் ஊன்றிப் பன்றி போல நிற்பார். கையில் வேலேந்தி வரும் தலைமைப் பூசாரை அவரைப் பன்றியாகப் பாவித்துப் பலமுறை குத்துவது போல நடிப்பார். பன்றி குத்துக்குப் பின் பூசை முடிவுபெறும். அத்துடன் அன்றைய சிறப்பு வழிபாட்டு நிகழ்ச்சிகள் முடிவுறும். இது ஒவ்வொருமாதமும் அமாவாசை யன்று இரவு நடைபெறும் நிகழ்ச்சி. இதே நிகழ்ச்சி மாசிமாதம் சிவராத்திரியன்று மிகச் சிறப்பாகக் கொண்டாடப்படும்.   பிற இடங்களில் பன்றிக்குத்து                   மொடவாண்டி சத்தியமங்கலத்திலும் மற்றும் சக்கிலியர் பறையர்களுக்குச் சொந்தமான அண்ணன்மார்சாமி கோவில்களிலும் உண்மையான பன்றியே குத்தப் பெறும். இதற்கென உயரினப் பன்றிகளை மைசூர்ப் பகுதிகளிலிருந்து வாங்கி வந்து வளர்த்து, நேர்ச்சிக் கடனாக விடுப்பர். அண்ணன்மார்சாமிகதையில் பன்றிவேட்டையாடிப் பின் கறியைப் பலருக்கும் கூறிட்டதுபோல இங்கும் கூறிட்டூண்பது சிறப்பாகக் கருதப்படுகின்றது.                      மேழிப்பள்ளியிலும் உண்மையான பன்றியைக் குத்துவது ஒருகாலத்தில் நடைபெற்றிருக்கலாம். அது அநாகரிகம் எனக் கருதிய காலத்தில் இப்பொழுது நிகழ்வது போன்றதொரு மாற்றம் ஏற்பட்டிருக்கலாம்.                     சிறுதெய்வ வழிபாட்டில் பன்றிவேட்டை சடங்காக இந்திய நாட்டின் பிறவிடங்களிலும் நடைபெறுகின்றது. நாட்டுப்பன்றி, பொதுவாக அருவருக்கத் தக்க விலங்காகக் கருதப்படுகின்றது. ஆனால் காட்டுப்பன்றி புனிதமான விலங்காகக் கருதப்பட்டு,இராஜபுதனத்தில், கௌரிபூசையின் போது வேட்டை ஆடப்படுகின்றது. வேட்டைக்குப் பின் பன்றிக் கறி பிரசாதமாக உண்ணப்படுகின்றது.                  ‘பில்’ (Bill) என்னும் பழங்குடியினரின் ஒரு பிரிவினரின் கூட்டம் பன்றியின் பெயரால் அமைந்தது. அவர்கள் காட்டுப் பன்றியைக் கொல்ல மாட்டார்கள். பன்றிக் கறியை அவர்கள் உண்ணுவதில்லை. அவர்கள் தங்களுடைய திருமணத்தின்போது பன்றியின் உருவத்தைவழிபடுகின்றனர். மத்தியப் பிரதேசத்தில் .கொருகுசு’ (korkus) ‘கொர்மிசு’ (kurmis) எனும் பழங்குடியினர் காட்டுப்பன்றியைத் தெய்வமாகத் தொழுகின்றனர்.. பன்றியின் பெயரால் சூள் உரைக்கின்றனர்.                  கொங்கு நாட்டு வேட்டுவரில் , வராக வேட்டுவர் அல்லது பன்றி வேட்டுவர் எனப் பெயருடைய ஒரு கூட்டத்தினர் உள்ளனர். இவர்களுக்குப் பன்றி குலக்குறிச் சின்னம். பயிரை அழிக்க வந்த பன்றியை வேளாளர் கொன்றுவிட்டதால், பன்றியைத் தெய்வமகக் கும்பிடும் வேட்டுவருக்கும் வேளாளருக்கும் சண்டை நடந்திருக்கலாம். அது பின்னர் அண்ணன்மார்சாமி வழிபாட்டுச் சடங்கிலும் கலந்துவிட் டிருக்கலாம்.                   துளுநாட்டிலும் காட்டுப்பன்றி சமயச் சிறப்புப் பெறுகின்றது.  ‘பஞ்சரோலி’ (காட்டுப்பன்றி)  குலச்சின்னமாக இருத்தலோடு , ‘பெருமேரு’ (Berumeru) என்னும் வனதேவதைக்கு விசுவாசமுள்ள சேவகனாகவும் உள்ளது. அந்தத் தெய்வம் கிராம மக்கள் தனக்குப் பலிப்பூசை கொடுக்கும் வரை, தன்னுடைய வைரனான காட்டுப்பன்றியை ஏவிப் பயிர் நிலங்களைப் பாழ்படுத்தியும் கால்நடைகளுக்குப் பிணியூட்டியும் தொல்லைதரும். இவ்வாறு கூறுகின்ற கதைகள் பல துளுமொழியில் உண்டு.               பயிர்களைப் பன்றிகள் நாசம் செய்யும் இடங்களில் அவற்றை அழிக்கச் சமுதாயத்தின் ஒட்டு மொத்த ஒத்துழைப்பைப் பெற வேண்டிப் ‘பன்றிக்குத்து’ கிராமதேவதைக் கோவில் திருவிழாச் சடங்காக நடந்திருக்கக் கூடும். பன்றிக் குத்துச் சடங்கு , கொங்கு நாட்டில் சிலபகுதிகளில் ‘சலகை குத்தல்’ எனும் பெயரில் நடைபெறுகின்றது. படுகளம் யாத்திரை               ஆண்டுக்கு ஒருமுறை மாசிமாதம் அமாவாசை,சிவராத்திரி கழிந்த ஏழாம் நாள் இரவு, அண்ணன்மாரின் படுகள விழா வீரமலைச் சாரலில் கொண்டாடப் பெறுகின்றது. இந்தத் திருவிழாவில் கலந்துகொள்ளப் பெருந்திரளாக மக்கள் இத்தலத்திற்கு யாத்திரையாக வருகிறார்கள். அண்ணன்மாரைக் குலதெய்வமாகவும் வழிபடு தெய்வமகவும் கொண்டவர்கள் அவரவர் கிராமங்களில் உள்ள அண்ணன்மார்சாமி கோவில்களில் அபிஷேகம் செய்து வழிபட்டு வண்டிகளிலும் ஒப்பந்த ஊர்திகளிலும் குழுக்களாகப் புறப்படுகின்றனர். பயணக்கட்டணத்துடன் யாத்ரிகர் ஒவ்வொருவரும் பொங்கலுக்கென ஒருபடி அரிசியும் கொடுக்க வேண்டும். அத்துடன் மகாமுனிக்குப் பலிகொடுக்க வெள்ளாட்டையும் கொண்டு செல்லுகின்றனர்.                    ‘படுகளம்’ நோக்கிச் செல்லுகின்றவழியில், யாத்ரிகர்கள் அண்ணன்மார்கதையில் இடம்பெறும் இடங்களையும் கண்டு செல்வது வழக்கம். இந்தமுறையில் முதலில் தரிசிக்கப்படுவது, மதுக்கரைச் செல்லாண்டியம்மன் கோவில். இக்கோவில் கரூரிலிருந்து திருச்சிராப்பள்ளி செல்லும் பாதையில் 22 கி.மீ. தொலைவில் உள்ள மாயனூருக்கருகே காவிரியாற்றங்கரையில் உள்ளது.                          இங்குதான் அண்ணன்மாரின் பாட்டனார் கோலாத்தாக் கவுண்டர் மூவேந்தர்களின் பங்குத் தகராறைத் தீர்த்து வைக்கிறார். செல்லாயிக்கு அபிடேகமும் தேர்த்திருவிழாவும் நடத்தி வைக்கிறார். தாமரை, பிள்ளை வரம் வேண்டி, மதுக்கரைச் செல்லாயி அம்மனுக்குத் தேரோட்டி வைக்கிறாள். தேரில் தன்னையே பலிகொடுக்கவும் துணிகிறாள். இந்தத் தேர்த்திருவிழாவில் குன்றுடையான் தாமரை இருவருடைய உயிரையும் பறித்துக் கொள்வது போலச் செல்லாண்டி நடந்துகொள்வதால் ,அரிராமர் ‘இதிலிருந்து உந்தனுக்கு ஏழுஏழு சென்மத்துக்கும் தேரும் நடக்காது; திருவிழாவும் கூடாது’ என்று சாபம் கொடுத்தார். இன்றும் இக்கோவிலில் நாள் வழிபாடு நடக்கின்றதே யன்றி , தேரோட்டம் முதலிய திருவிழாக்கள் நடைபெறுவதில்லை.                             அண்ணன்மார் ஆதிசெட்டி பாளையத்திலிருந்து வளநாடு திரும்பும்போது, மதுக்கரைச் செல்லாயி கோவிலுக்கு வருகின்றனர்.                    செல்லாயி ஏவியதனால் அண்ணன்மாரைக் காவல்தெய்வம் ‘ஒற்றைசடாமுனி குங்கிலினாப்பூதம்’ மறிக்கிறது. அதனைச் சங்கர் கடுமையாகத் தண்டிக்கிறார். அதன் பிறகு செல்லாயி அண்ணன்மாருக்குப் பல சமயங்களில் உறுதுணையாகிறாள்.மேனாட்டு வேட்டுவர்,வளநாட்டை வெற்றியுடன் கொள்ளை யிடுவதற்காக வளநாட்டு எல்லைத்க்காவல் பூண்டு நிற்கும் மதுக்கரைச் செல்லாண்டியம்மனுக்கும் களித்தின்னும் மல்லனுக்கும் கனபூசை நடத்துகின்றனர்.                        மதுக்கரைச்செல்லாண்டியம்மன் கோவிலிருக்குமிடம் அண்ணன்மார்சாமி கதையில் கூறப்படுவது போன்றே ‘திருக்காம்புலியூர்’ என்று இன்றும் வழங்கப்படுகிறது. சங்கர்மலை                  திருக்காம்புலியூர் தாண்டி, திருச்சிப் பாதையில் மாயனூர் இரயில் வண்டி நிலையத்திற்கு வடக்கே 3கி.மீ தூரத்தில் சங்கர் மலை என்ற சிறு குன்றுளது. இந்தக் கோவிலில் சங்கர் திருமணம் செய்து கொண்டதாகக் கூறுவர். அண்ணன்மார்சாமி கதையில் இவ்வாறு கூறப்படவில்லை. ஐயர்மலை, தோகைமலை                ஐயர்மலை அண்ணன்மார் வரலாற்றில் இடம் பெறாவிட்டாலும் பிச்சனின் அண்ணன்மார்சாமிகதையில் சிறப்பாகப்பேசப்படுகிறது. பெரியகாண்டியம்மன் இங்கு வழிபட்டு இறைவனின் அருள் பெற்றதைப் பிச்சன் பாடுகிறார். தோகைமலை ஐயர் மலைக்குப் பக்கத்தில் உள்ளதொரு குன்று. இதன்மேல் மூருகன் கோவில் உள்ளது. படுகள யாத்திரை செல்பவர்கள் இந்தத்தலங்களுக்கும் செல்கின்றனர். படுகளம்                 மேற்கூறிய தலங்களைத் தரிசித்துவிட்டு, யாத்ரிகர்கள் இரவு படுகளம் வந்து சேகின்றனர். படுகளத்தில் பொன்னர்-சங்கர், நல்லதங்கம், வீரபாகு சாம்புவன் ஆகியோருக்குத் தனித்தனிக் கோவில்கள் உள்ளன. இவை கோவில்கள் எனப்பட்டாலும் இறந்தவர்களின் கல்லறையின் மீது கட்டப்படும் மாடங்களைப் போலவே அமைந்துள்ளன. இந்த நினைவுச் சின்னங்களைச் சுற்றிக் கற்பதுக்கை போலக் கற்கள் அடுக்கப்பெற்றுள்ளன. பெரியகாண்டிக்கும் கன்னிமாருக்கும் தனிக்கோவில் உள்ளது.                                                  அண்ணன்மார் வடக்கு முகமாக இருக்க, பெரியகாண்டி கிழக்குப் பார்த்து உள்ளாள். இந்தச் சந்நிதிகளுக்கு எதிரில் ‘மந்திரம் கேட்ட மகாமுனி’யின் சுதைவடிவம் வானுற உயர்ந்து மேற்குப் பார்த்த வண்ணம் அமைந்துள்ளது.                           ‘படுகளம்’ கரூர்- மணப்பாறை வழியில், கொட்டப்பட்டி யிலிருந்து மேற்கே 5 கி.மீ தொலைவில் உள்ளது. இச்சாலை காட்டுவழியில் அமைந்த மண்சாலை. தண்ணீர், விளக்கு முதலிய வசதிகள் எதுவுமற்ற இந்தத் திறந்த வெளியில் பெருந்திரளாக மக்கள் கூடுகின்றானர். இரவு முழுவதும் அங்கங்கே, அண்ணன்மார்கதை உடுக்கையடிப் பாட்டாகவும் கூத்தாகவும் பாடியாடப்படுகின்றது. அண்ணன்மார் கதையைப் பாடுவதைத் தொழிலாகக் கொண்டவர்கள் படுகளத்தன்று அங்குக் கதை கூறுவதைத் தங்கள் தொழில்முறைக் கடமையாகக் கருதுகின்றனர். படுகளம் வீழ்தல்                  படுகளம் விழுதல் அண்ணன்மார் கோவில்களில் நிகழும் ஒரு வழிபாட்டுச் சடங்காகும்.                    அண்ணன்மார்கதையின் இறுதிப்பகுதியாகிய படுகள நிகழ்ச்சியைக் கதைப்பாடகர் ஆவேசத்துடனும் உணர்ச்சிகரமகவும் பாடும்போது கதையை ஊன்றிக் கேட்கும் பாமரமக்கள் தம் நினைவிழந்து மெய்ம்மறந்த நிலையில் கதைநிகழ்ச்சிகளை மீட்டுருவாக்கம் செய்வதில் விருப்பம் கொள்கின்றனர். கதைப்பாடகர் சங்கர் ‘படுகளம்’ ஆகியிருக்கும் காட்சியினை உணர்ச்சியுடன் உளம் நெகிழும்படி வருணித்துப் பாடுகிறர். வடக்கிருந்து  சங்கர்  உயிர் நீத்தல், உயிர் நீங்கும்போது சங்கரின் தோற்றப் பொலிவு, சங்கரின் இறப்பில் இயற்கையும் பாதிப்புற்ற நிலைமை, தங்கை தனியாகப் படுகளம் தேடிப்புலம்பிக் கொண்டு வரும் துயரம், வீட்டு வாசலைத் தாண்டியறியாத அவள் கானகத்தில் தனியாக அலையும் அவலம், அண்ணன்மாரின் அருளுள்ளமும் ஆற்றலும், தனித்து வழிநடக்கும் தங்கை தனித்துயர் உறுதல் இவை போன்ற செய்திகளைக் கதைப்பாடகர் ஆவேசமாக உணர்ச்சி பொங்கப் பலவிதப் படிமங்கள் தற்குறிப்பேற்றம் , குறிப்புப் பொருள் முதலியன தோன்றப் பாடுவார். பலமணிநேரம் இந்த நிகழ்ச்சிகளையே பன்னிப்பன்னிக் கூறும்  முறையில் கதை பாடுவது அமைந்திருக்கும். கதை நிகழ்ச்சி நீண்டநேரம் இந்தக் கட்டத்தில் மையம் கொண்டிருக்கும்; இதைத் தாண்டி மேலே செல்லாது.                  இந்த நிகழ்ச்சியைக் கேட்பவர்களில் மென்மையான உள்ளம் கொண்டோர் , உணர்ச்சி வயப்பட்டுத் தம் நினைவு இழக்கின்றனர். தங்களுடைய உணர்ச்சி வழியே அண்ணன்மாரின் சமகாலத்திற்குச் சென்று விடுகின்றனர். கதை கேட்கும் அவையினரில் இவ்வாறு உணர்விழக்கும் ஆண்களைக் காப்பியத் தலைவர்களின் ஆவி ஆட்கொள்வதாக மக்கள் நம்புகின்றனர்.                           படுகளம் விழுவோர் உணர்ச்சியால் பற்றப்படுதல் அண்ணன்மாரின் அருள் என்கின்றனர். இந்த ‘மருள்நிலை’ தங்களுக்குக் கிடைக்க வேண்டும் என்று வேண்டிக்கொண்டவருக்கே கிடைக்கும். இவ்வாறு படுகளம் வீழ்வோர் 18 வயதிற்கு மேல் 40 வ்யதுக்கு உட்பட்ட ஆண்மக்களே. படுகளம் வீழ்ந்தோர் உடல் மரக்கட்டை போன்ற விறைப்புத் தன்மை பெற்றுவிடுகின்றது.                    படுகளம் வீழ்ந்தோரின் உடல்கள் சங்கரின் கோவிலுக்கு எடுத்து வரப்படுகின்றன, வடக்கு முகமக இருக்கும் சன்னதி முன்னால், இந்த உடல்கள் கிடத்தப்படுகின்றன. கால்கள் கிழக்குத் திசையில் இருக்கும்படி கிடத்தப்படுகின்றன. அவை உயிரற்ற சடலங்களாகக் கருதப்பட்டு வெள்ளாடையால் மூடப்படுகின்றன. மூடும் துணிக்குக் ‘கௌசனை’ என்ற பெயர் வழங்கப்படுகிறது. படுகளம் எழுப்பல்                             கதைப்பாடகன் , இக்கட்டத்தில் , நல்லதங்கம் அண்ணரை உயிர்ப்பிக்க பெரியகாண்டியம்மனின் அருளை வேண்டுதல், பெரியகாண்டி வேள்வி செய்யத் தங்கையைத் தூண்டுதல், வேள்வியில் தங்கைக்குப் பெரியகாண்டியும் கன்னிமாரும் உதவுதல், தங்கை வேள்விசெய்தல், வேள்வித் தீர்த்தம் தெளித்துத் தங்கை மாண்டவர்களை உயிர்ப்பித்தல் ஆகிய நிகழ்ச்சிகளை விரிவாகப்பாடுகின்றான்.                    இந்தநிகழ்ச்சிகளைப் பாடும்போது, படுகளத்திலிருந்து 2 கி.மீ தூரத்திலிருந்து முத்துப்பல்லக்கில் பெரியகாண்டியம்மனின் ஊர்வலம் வருகிறது. பெரியகாண்டியம்மன் படுகளம் வந்து சேரும்போது கதைப்பாடகன் வேள்வி நிகழ்ச்சிகளைச் சொல்லும் கட்டத்தில் உள்ளான். மீதிக்கதையையும் கூறி முடித்தவுடன் பெரியகாண்டியம்மனின் பல்லக்கிலிருந்து தீர்த்தத்தை எடுத்து வந்து படுகளம் கிடப்பவர்களின் மேல் தெளிக்கின்றனர். அவர்கள் மீண்டும் உயிர் பெற்றதைப் போல எழுகின்றனர். படுகளத்தில் நல்லதங்கத்தின் புலம்பலும் மந்திரச்சடங்கும் படுகளத்தில் நல்லதங்கம் அழுது புலம்புவது வடிவத்தாலும் பொருளடக்கத்தாலும் உடன்பிறந்தாரின் இறப்புக் குறித்த ஒப்பாரியே..                  இந்தப் புலம்பல் மூன்று நிலைகளில் அமைந்துள்ளது. 1. அண்ணன்மார் சாவைத் தான் அறிந்தபோது புலம்புவது. 2. படுகளத்தில் மாண்டுகிடக்கும் சங்கரைக் கண்டபோது புலம்புவது. 3. படுகளத்தில் மாண்டவர்களை உயிரெழுப்ப மந்திரச் சடங்காகப் புலம்புவது. மந்திரச் சடங்குப் புலம்பல்                   பெரியகாண்டியம்மன் அருளால், வேள்வி முடிந்தபின், நல்ல தங்கம், தீர்த்தத்தைத் தெளித்து இறந்து போனவர்களை ‘எழுக’ எனக் கூவுகின்றாள். இப்பகுதியில் தொடர்கள், ‘அடுக்கிக் கூறல்’ என்னும் ஏவல் வியங்கோள் முடிவைக் கொண்டுள்ளனவாகவும் வேண்டுதல்களகவும் அமைந்துள்ளன. இத்தொடர்களில் கதைநிகழ்ச்சிகளே யில்லை. கருத்தொன்றே மீண்டும் மீண்டும் அடுக்கியடுக்கிக் கூறப் பெற்று வலியுறுத்தப் பெறுகின்றது.                படுகளத்தில் தங்கை புலம்பும் பகுதியும் அழகிய புராணப் படிமங்கள், வருணனைகள் சொல்லடுக்குகள் நிறைந்து கேட்போரை வசப்படுத்துகின்றன. உடுக்கை இசையுடன் உணர்ச்சி பொங்கக் கூறும்போது கேட்போரின் உள்ளம் கதையின் அந்தப்பகுதியில் ஊன்றி நிற்கிறது. கதைப்பாடகன் கூறும் அந்த அடுக்குமொழிகள் மந்திரங்களைப் போலக் கேட்போரைத் தன்னிலை இழக்கச் செய்கின்றன. வீரப்பூர் யாத்திரை                படுகளத்தைத் தரிசித்த மக்கள் கூட்டம் மறுநாள் பொழுது புலருமுன் வீரப்பூரை நோக்கிச் செல்லுகின்றது. வீரப்பூருக்கும் படுகளத்திற்கும் குறுக்கு வழியிற் சென்றால் 5 அல்லது 6 கி.மீ தூரமே இருக்கும். ஆனால், மக்கள் கூட்டம் மலைவழியில் செல்லுவதையே விரும்புகின்றது. ஏனெனில், மலைமீது காட்டினூடே செல்லும் நெடு வழியே நல்லதங்கம் அண்ணன்மாரைத் தேடிப் படுகளம் சென்ற வழி என்றும் அந்த வழிச் செல்லும்போது நல்லதங்கம் அடைந்த உடல் வருத்தத்தைத் தாங்களும் அனுபவிப்பது ஒரு புண்ணியச் சடங்கு என்றும் கருதுகின்றனர். ‘தங்கா தங்கா’ என்று கூவிக்கொண்டு வழி நடப்பதை மரபாகக் கொண்டுள்ளனர். மலைப்பாதை நெடுக நிழல்தரும் மரங்கள் ஏதுமில்லை; முள்மரங்களே மிகுந்துள்ளன. ஒதுங்க நிழல் காண்பதரிது.            வழியின் கொடுமையை நல்லதங்கம்,              “ ஆனைநெரிஞ்சு முள்ளு –அண்ணா- அதிலே- அடிவைக்கப் பயமாகுதிப்போ                    குதிரை நெருஞ்சி முள்ளு –அண்ணா- கூடநடக்கப் பயமாகுதிப்போ                 நரிமிரட்டி முள்ளு –அதிலே நடக்கப் பயமாகுதிப்போ                 புலிமிரட்டி முள்ளு அண்ண- வனத்தில்பூதப் பய மாகுதிப்போ அண்ணா,                                                                                      ஆனைநெருஞ்சி முள்ளு அடிவைக்கப் போவதில்லை                      செப்புநெருஞ்சி முள்ளு என்னச் சேதப் படுத்து தண்ணா                          இண்டம் புதையல்லவோ கோர்த்திழுத்துக் குத்து தண்ணா                      கோரிரண்டம் முள்ளுமங்கே கோர்த்திழுத்துக் குத்துதண்ணா                          காரிருண்ட முள்ளுமங்கே –அண்ணா- கடித்தே  இழுக்குதிப்போ”                                                                                  என்று கூவிப் புலம்புவதை இன்றும் இவ்வழி நடப்பவர்கள் மெய்யெனக் காண்பர். இவ்வாறு மலைவழியில் காலை சூரியன் உதிக்கும் முன் புறப்பட்டால் மாலை 5 மணியளவில் வீரப்பூர் போய்ச் சேரலாம். கூவண்டாம் பள்ளம்                        படுகளத்திலிருந்து 3 அல்லது 4 கி.மீ வடக்கே சென்றவுடன் அங்கு நிழல்தரும் சோலைஒன்று உள்ளது. அதன் நடுவே ஒரு சிறிய பள்ளம் உள்ளது. இதற்குக் கூவண்டாம் பள்ளம் எனப் பெயர். படுகளம் தேடி வரும் தங்கம், நீர் வேட்கையால் கூவியபோது, மாயவர் அருளால் தோன்றிய பள்ளமாதலால் இந்தப் பெயர் பெற்றதென்று கூறுகின்றனர்.                   அண்ணன்மார்சாமிகதையில் இச்செய்தி இல்லை. ஆனால், நல்லதங்கம் வேள்வி செய்வதற்குக் கன்னிமார் கூவண்டாம்பள்ளத்து மஞ்சள் சுனைநீர், தர்ப்பை முதலியன சேகரித்துக் கொடுத்ததாக இக்கதையில் வருகிறது. கூவண்டாம் பள்ளத்து நீர் புனித தீர்த்தம் என மக்கள் செம்புகளில் நிறைத்துக் கொள்கின்றனர். கால்நடைகளின் மீது தெளித்தால் அவற்றை நோய்நொடிகள் அண்டா என நம்புகின்றனர்.  வெண்முடி                            வீரமலைத் தொடரில் அமைந்துள்ள நான்கு சிகரங்களில் உயரமானது வெண்முடி. இதனை அண்ணன்மார்சாமிகதை,                                        ’தெற்கேதான் தோணுமலை தென்னாட்டின் வீரமலை               நாலுபக்கம் சதுரகிரி நடுவிருக்கும் வீரமலை              சுத்தி வளைந்தமலை தொடர்விழுந்த வீரமலை              வீரமலைமேலே ஒருவெண்முடியுந் தானுமுண்டு’ என்றும், பெரியகாண்டியம்மன் வடக்கிருந்து தென்னாடு வந்து முதலில் தங்கித் தவம் செய்தது இந்த வெண்முடியில்தான் என்றும் பாடுகின்றது.                              வெண்முடியில் பெரியகாண்டிக்கும் கன்னிமாருக்கும் கோவிலுண்டு. இங்குச் சிலர் முடியெடுத்துப் பொங்கலிட்டு வழிபாடு செய்கின்றனர். தவசுநிலை             நண்பகலில் மக்கள் கூட்டம் தவசுநிலை வந்து சேர்கிறது. ஒருகுன்றின் சிகரத்தில் 30அடி உயரத்திற்கு பெரியதூணும் அதன்மேல் ஒரு அகன்ற விளக்கும் உள்ளன. விளக்கு குண்டம்போல எரிந்து கொண்டே உள்ளது. இதனைத் ‘தவசுக் கம்பம்’ என்றும், இந்த இடத்தைத் ‘தவசுநிலை’  என்றும் கூறுகின்றனர். இந்தத் தவசு நிலையே பெரியகாண்டியம்மன் தவமிருந்த இடம் எனக் கூறப்படுகிறது. மக்கள் குண்டத்தில் கற்பூரம் , எண்ணெய்த்திரி முதலியன இட்டு வழிபாடு செய்து , ஓய்வெடுத்துப் பின் வழிநடை தொடருகின்றனர்.              நீண்ட நடைக்குப் பின்னர் மாலையில் வீரப்பூர் வந்து சேர்கின்றனர். அவர்கள் வீரப்பூர் வந்து சேரும் நாளில் அங்குள்ள பெரியகாண்டியம்மன் கோவிலில் எட்டாம் நாள் திருவிழா நடைபெற்றுக் கொண்டிருக்கும். வீரப்பூர் பெரியகாண்டியம்மன் கோவில்               வீரப்பூர் பெரியகாண்டியம்மன் கோவில் திருவிழா வருடந்தோறும் மாசிமாதம் சிவராத்திரியன்று தொடங்கப்பெற்று பத்துநாட்கள் நடைபெறும். ‘ப்டுகளம்’ நிகழ்ச்சிகள் முழுவதும் ‘தொன்மைத் தன்மை’ கொண்டது. வீரப்பூர்த் திருவிழா வைதிகத் தாக்கமும் கொண்டுள்ளது.                வீரப்பூர்க் கோவில்பகுதிகள் இரு திறத்தனவாக அமைந்துள்ளன. ஒருபகுதி பழமையான சிறுமரபைச் சார்ந்தது. மற்றொன்று, வைதிக சமயத்தின் சாயல் பெற்று அமைந்து ‘பிராமணச் சடங்’களுடன் கூடியது.  கற்கட்டிடமாக அமைந்துள்ள இக்கோவில் , பிற்காலத்தில் பெருந்தெய்வக் கோவில்களைப் போல அமைத்துக் கொள்ளப்பட்டது கருவறையில் பெரியகாண்டியம்மனும் கன்னிமாரும் கற்சிலை வடிவில் உள்ளனர். அர்த்த மண்டபத்தில் விநாயகர் உள்ளார். மகாமண்டபத்தில் உற்சவ மூர்த்திகளாகப் பெரியகாண்டியம்மன், கன்னிமார், பொன்னர்-சங்கர், நல்லதங்கம் ஆகியோருள்ளனர்.யானை, குதிரை ஆகிய வாகனங்கள் வெளியே உள்ள மண்டபத்தில் வைக்கப்பட்டுள்ளன.கோவிலுக்கு வெளியே கொடிக்கம்பத்துடன் கூடிய கல்மண்டபம், சிதைந்துபோன நீராழி மண்டபத்துடன் கூடிய குளம் ஆகியன காணப்படுகின்றன.                       பெரியகாண்டியம்மன் கோவிலுக்கு 2 கி.மீ வடக்கிழக்கே சுதையில் அமைந்த நீண்ட நெடிய மகாமுனியும் அதன் அருகே குதிரை மீது பொன்னரும் வீரபாகுச் சாம்புவனும் அவனுடைய காளை வாகனமும்  அமைந்துள்ளன. அருகில் ஒரு பெட்டை நாயும் உள்ளது. இவற்றின் எதிரில் ஒரு சிதிலமான பழைய மண்டபம் உள்ளது அதில் குன்றுடையான் தாமரை இருவரின் சுதை வடிவங்களும் மறைவில் சங்கிலியால் கட்டப்பட்ட சங்கரின் உருவமும் உள்ளன. இம்மண்டபத்திற்குப் பின்புறம் கறுப்பண்ணசாமி கோவில் உள்ளது.                 விழாக்காலம் முழுவதும் மகாமுனியின் முன் ஆடு பலியிட்டுப் பொங்கல் வைப்பதும் பேயாடுவதும் நடந்து கொண்டே யிருக்கும்.                       பெரியகாண்டியம்மன் கோவிலில் 8ஆம் நாள் திருவிழாவின்போது நூற்றுக் கணக்கான ஆடுகள் வெட்டப்பட்டு மகாமுனியின் கோவில்முற்றம் செங்களமாகக் காட்சியளிக்கும்.வெட்டப்பட்ட ஆட்களின் தலைகளை வரிசையாக வைத்து மகாமுனிக்குப் பூசை செய்யப்படுகிறது.                        மகாமுனியின்முன் பலியிடுதல், பேயாடுதல் , பேயோட்டல் , பொங்கல் வைத்தல் போன்ற பூசை முறைகள் வைதிகத் தாக்கம் சிறிதுமின்றிச் சிறுமரபினைச் சார்ந்தே அமைந்துள்ளன. திருவிழா நிகழ்ச்சிகள்.                       வீரப்பூர் பெரியகாண்டியம்மன் கோவிலில் மாசிமாதம் சிவராத்திரியன்று தொடங்கும் திருவிழவில் ஒவ்வொரு நாளும் சிறப்பு வழிபாடுகள் ஊர்வலம் முதலியன வைதிக முறையில் நடை பெறுகின்ரன. முதல் நாள் கொடியேற்றம். முதல் நாளன்று , அண்ணன்மார் அருள்பெற்ற கம்பைய நாயக்கர் மரபில் வந்த வீரப்பூர் ஜமீந்தார் , அவர் இக்கோவில் காணியாளராகையால் ,காப்புக் கங்கணம் கட்டி விரதம் தொடங்குகிறார். அன்று தொடங்கி சிறப்பு வழிபாடுகள் நடைபெறும். நாள்தோறும் இரவில் பெரியகாண்டியம்மன் கன்னிமாருடன் அன்னம், காளை, குதிரை, பாம்பு, யானை சிங்கம் ஆகிய வாகனங்களில் நகர் வலம் வருவாள். எட்டாம் நாள் ‘வேடர்’ பறி என்ற உற்சவம் நடக்கும். அன்று மாலை கோவிலிலிருந்து அண்மையில் உள்ள அனியாப்பூர் என்ற ஊருக்கு ஊர்வலம் புறப்படும்.                          பெரியகாண்டியம்மன் கன்னிமாருடன் பல்லக்கிலும் பொன்னர் குதிரை வாகனத்திலும் புறப்படுவர். பொன்னரின் குதிரை முன்னும் பின்னும் அசைந்து ஆடுவது பாய்ந்து பாய்ந்து செல்லுவதுபோலக் கட்சியளிக்கும். ஊர்வலத்தின் முன் வீரபாகுச் சாம்புவன் வழித் தோன்றிய ஒருவன் காளை மாடொன்றின் மீதமர்ந்து முரசறைந்து கொண்டு செல்லுவான். கோவில் எல்லையை விட்டதும் இவ்வூர்வலம் வேகமாக அனியாப்பூர் செல்லும்.                        இந்த ஊர்வலத்தில் பொன்னர் முதலியோர் செப்புத் திருமேனிகளாகப் பங்கு கொள்ள, வீரபாகுச் சாம்புவனாக அவன் மரபில் வந்த ஒருவன் கலந்து கொள்கிறான்.                       அனியாப்பூர் செல்லும் வழியில் பாதிதூரத்தில் உள்ளதொரு மண்டபத்தில் (விடையாற்றி மண்டபம்) பெரியகாண்டியும் பரிவாரங்களும் தங்கிவிடுகின்றனர். பொன்னர் மட்டும் குதிரை வகனத்தில் சாம்புவன் பின் தொடரக் குறிப்பிட்ட இடத்திற்குச் செல்கிறார். அனியாப்பூரில் உள்ளதொரு ஆலமரத்தை மும்முறை சுற்றி வந்து அதில் பொன்னர் அம்பு தொடுக்கின்றார். இச்செயலைப் பொன்னர் சார்பாகப் பூசாரி யொருவர் செய்கிறார். அதிர்வேட்டுக்கள் எழுப்பப்படுகின்றன. முதல் அதிர்வேட்டுக் கேட்டவுடன்  வேட்டுவன் ஒருவன் சுருண்டு விழுந்து சாவான் என்று பேசப்படுகின்றது. இந்த நிகழ்ச்சிக்குப் பின் பொன்னரும் சாம்புவனும் பெரியகாண்டி இருக்கும் மண்டபத்தை அடைகின்றனர். இரவு முழுதும் வழிபாடுகளை ஏற்றுக் கொண்டு அங்குத் தங்கி மறு நாள் (9ஆம் நாள்) விடியலில் கோவில் வந்தடைகின்றனர்.                        ஒன்பதாம் நாள் நண்பகல் தெர்த்திருவிழ நடைபெறுகின்றது. பெரிய தேரில் பெரியகாண்டியம்மன் கன்னிமாருடன் கோவிலைச் சுற்றி வலம் வருகிறாள் பெரியகாண்டியம்மனுக்குப் பூசை செய்பவர் அம்பலக்கரர் என்னும் பட்டமுடைய வலையர் இனத்தவர். எனினும் தேருக்குப் ‘புண்ணியாவாசனம்’ செய்து அம்மனை எழுந்தருளச் செய்வது பிராமணக் குருக்களே. வீரப்பூர் ஜமீந்தார் வடந்தொட மக்கள் தேரிழுக்கின்றனர். தேரோட்டத்துடன் சிறப்பு நிகழ்ச்சிகள் அனைத்தும் முடிவடைகினன. பத்தாம் நாள் மஞ்சள் நீராட்டுவிழா. அத்துடன் வீரப்பூர்க் கோவில் திருவிழா நிகழ்ச்சிகள் நிறைவு பெறுகின்றன. அண்ணமார்சாமி வழிபாட்டில் பெரியகாண்டியின் இடம்.                        அண்ணன்மார் வாழ்வில் பெரியகாண்டியம்மனுக்கு நேரடித் தொடர்பு கிடையாது. அவள் வீரமலையில் தவம் செய்யும்நிலையைக் கூட அண்ணன்மார் அறியார். இருந்தாலும் அண்ணன்மார்சாகி கதை யில் பெரியகாண்டியம்மன் வரலாறு சிறப்பிடம் பெறுகிறது.                                          பெரியகாண்டியம்மன் கதை இணைப்பு வீரநிலைப் பாட்டாக இருந்த அண்ணன்ப்மார்கதையைக் காப்பியப் பாங்குடையதாக மாற்றுகின்றது. வழிபாட்டு அமைப்பியல் அடிப்படையில் பெரியகாண்டியம்மனுக்கும் அண்ணன்மாருக்கும் உள்ள தொடர்பைப் பின்வருமாறு விளக்கலாம்.                         பெரியகாண்டியம்மன் , தலபுராணங்களில் காணப்படுமாறு , உமையம்மனின் ஓரவதரமே. வடக்கே கயிலைமலையை அடுத்ததொரு சுனையில்வாழும் ஐந்துதலை நாகத்தின் பிள்ளையில்லாக் குறையை நீக்க இறைவன் கட்டளையால் மகவாகப் பிறந்த இறைவி மீண்டும் இறைவனுடன் சேரக் கடுந்தவம் புரிகிறாள். இறைவன் தென்னாட்டில் வீரமலையில் தவம் புரியக் கட்டளையிடுகிறார். வீரமலைக்கு வரும் வழியில் பெரியகாண்டி நல்லாரைக் காத்தும் பொல்லாரைத் தண்டித்தும் அறக்கருணையும் மறக்கருணையும் விளங்க அற்புதங்கள் பல நிகழ்த்துகின்றாள்.                                பாம்புக்கு மகவாகப் பிறந்தாலும் பாலகனாக மனிதவடிவில்தான் பெரியகாண்டி பிறக்கிறாள்.             “சடையு முடியுமாய் –சுவாமி- சதாசிவனப்போல்வடிவாய்              ஏகவேஷ்டி பூணூலும் –சுவாமி- ஈஸ்வரரைப் போல்வடிவாய்              பஞ்சு படர்ந்தசடை –ஈஸ்வரி – பாலன் உருவாகக்             குஞ்சு சடைமுடியும் –அம்மன் – குழந்தையாய்ப் பிறந்தழுதாள் இவ்வாறு பிரம்மச்சாரி கோலத்துடன் பெரியகாண்டி பிறந்ததாகக் கதை கூறுகின்றது. பெண்ணாகத் தவம் செய்ததைக் கூறுமிடத்திலும் , ‘ஆயி பெரியகாண்டி ஆண்மாரும் பெண்ரூபம்’ என்று கதை பேசுகின்ற்து. இவளைச் சிவரூபமாகவே காண வேண்டும் என்பது,             ‘என்னைப்போல் சரியாயிருந்து நீ- சதிருடன் வாழ்ந்திருப்பாய்             மாதவசு முடிதீர்ந்து – வெண்முடியில்- மகாபூசை செய்ததினால்                 அப்போ சிவசொரூபம் அல்லவரும் தானறிய                சிவசொரூப மாகவேதான் திருக்கொலுவு வீற்றிருப்பாய்” என இரத்தினாசல மூர்த்தியின் ஆணையால் பெறப்படுகின்றது. ‘கன்னியென்று வடிவெடுத்து நீ காரணமாய் விளங்குமினி’ என்று இரத்தினாசல மூர்த்தி உத்திரவு இட்டமையால் இன்று பெரியகாண்டி வீரமலையில் பெண்வடிவில் விளங்குகின்றாள்.                     பெரியகாண்டி வீரமலைக் கானகத்தில் கோவில் கொண்டுள்ள சிறுமரபுத் தெய்வம். வீரமலைச் சாரலில் சண்டை நடைபெற்று அண்ணன்மார் படுகளமாகி வழிபடும் தெய்வமாக மாறியபோது, வீரமலைப் பெரியகாண்டியும் பிரபலம் அடையத் தொடங்கினாள். அண்ணன்மாரைப் படுகளத்தில் கொண்டாடியவர்கள் பெரியகாண்டியையும் சேர்த்துக் கொண்டாடினர். இதனால் அண்ணன்மாரும் பெரியகாண்டியும் ஒருமரபில் இணைந்தனர். அண்ணன்மாருக்கும் தங்கை நல்லதங்கத்திற்கும் உயர்ந்த தெய்வநிலை கொடுக்க முனைந்த கதைப்பாடகர் கள் பெரியகாண்டி வழிபாட்டை அண்ணன்மார் வழிபாட்டுடன் இணைத்துக் கதை புனைந்துவிட்டனர். தனித்தனி வழிபாடுகளாக இருந்த அண்ணன்மார் வீர வழிபாடும் பெரியகாண்டியம்மன் சிறுதெய்வ வழிபாடும் கலைஞனின் காப்பியப் பார்வையில் இணைந்தன. அண்ணன்மாரைத் தேடி நல்லதங்கம் படுகளம் செல்லுவது, அங்குப் பெரியகாண்டியைச் சந்திப்பது, மாண்டவர்களை மீட்க ப் பெரியகாண்டியின் உதவியைப் பெறுவது, ‘மாண்டவர் மீண்டால் தங்களுக்கு மண்டலத்தில் பூசையுண்டு  அப்பொழுது முந்தினபூசை முதற்பூசை உன்னதம்மா’ என்று பெரியகாண்டியிடம் நல்லதங்கம் சொல்லுவது, இவ்வாறு அண்ணன்மார் வழிபாட்டில் பெரியகாண்டிக்கு முதலிடம் கொடுப்பது எனும் இவையெல்லாம் அண்ணன்மாரை வழிபடும் நெறியும் பெரியகாண்டியை வழிபடும்நெறியும் ஒருங்கிணைந்த நெறிமுறைகளை விளக்குவனவாகும். தனித்தனிச் சிறுமரபு வழிபாட்டுநெறிகள் ஒருங்கிணைந்து பெருமரபுச் சாயல் பெறுதலுக்கு இதுவோர் நல்ல சான்றாகும். கன்னிமார் வழிபாடு                         கோவை, ஈரோடு, சேலம், தருமபுரிமாவட்டங்களில் கிணற்றுப் பாசனமும் வாய்க்காற் பாசனமும் உள்ள தோட்டங்களிலும் புன்செய் நிலங்களிலும் வேம்பு, புளி அல்லது வேறு ஏதாவது மரத்தடியில் சற்று உயர்ந்த மேடையின் மீது ஏழு சிறுகற்களும் சற்றுப்பெரிய கல்லொன்றும் நடப்பெற்றிருப்பதைக் காணலாம். சிறுகற்கள் கன்னிமாரென்றும் பெரிய கல் கறுப்பராயன் என்றும் வழிபடப் பெறுகின்றன. கறுப்பராயனும் கன்னிமாரும் பெரும்பாலும் எல்லா விளை நிலங்களிலும் நிரந்தரமாக அல்லது விதைப்பு அல்லது அறுவடைக் காலங்களில் தற்காலிகமாக எழுந்தருளச் செய்யப் பெறுவர். நதிக்கரைகளிலும் குளக்கரைகளிலும் கன்னிமார் நாகர்களுடன் இருப்ப்துமுண்டு.                 கொங்கு நாட்டில் கன்னிமாரின் செல்வாக்கிற்கு அண்ணன்மார்சாமி கதையும் ஒருகாரணமெனலாம். கன்னிமார் மண்ணுலகிற்கு வந்த கதையை இக்காப்பியம் பெரியகாண்டியம்மன் வரலாறுடன் சேர்த்துக் கூறுகின்றது.                 நாகத்துக்குப் பாலகனகப் பிறந்த ஈசுவரி மீண்டும் இறைவனுடன் கூடுவதற்குத் கடுந்தவம் புரியும் எண்ணத்துடன் மண்ணுலகிற்கு வருகிறாள். அவள் வழிபாட்டில் மகிழ்ந்த இறைவன் கன்னியர் ஏழுபேரையும் அழைத்துச்,’சிவனைப்போல பூசைசெய்யும் ஈசுவரிக்குச் சிஷ்யர்களாகப் பூமண்டலம்’செல்லுமாறு உத்திரவு செய்கிறார். நூலேணி வழியாகக் கன்னிமார்தாயார் பூசை செய்யும் இடத்திற்கு வருகின்றனர். பூசை முடியும் வரை காத்திருக்கின்றனர். பூசை முடிந்தபின் , தன் பொன்னுந் திருமேனியில் பொலிந்திடும் வியர்வையைத் தாயார் வழித்தெரிந்தார். விட்டெறிந்த வியர்வை ஏழுபொட்டாகத் தெரித்தது. அவற்றினின்றும் ஏழுகன்னியரும் எழுந்தனர்                          பெரியகாண்டியம்மனின் தென்னாட்டு ப்பயணத்தில் கன்னிமார் துணையாக வருகின்றனர். பெரிய்காண்டித் தாயாரின் பூசைக்கும் உணவுக்கும் வேண்டிய பொருள்களைத் தேடிக் கொடுத்துப் பணிவிடை செய்கின்றனர். கொல்லிமலைப் பச்சைமலையாளனுக்குத் தாயார் அருள் செய்யும்போது,                  ‘செய்ய தினைப்புனத்தில் தெவ கன்னியருக்குப்பொங்கல் வைத்து                                                                                                     காதோலை கருகுமணி கருவளையல் வாங்கிவைத்து                பானையோடே இளங்கரகம்’ வைத்துக் கன்னியரை வழிபட்டால் ‘ஒன்று பத்தாக விளையும்’ என்று கன்னியரின் பெருமையினை எடுத்துக் கூறுகிறாள். கன்னியரை வழிபடுவோரையும் அவர்களுடைய குடும்பத்தையும் தானடிமை கொண்டு காப்பாற்றுவதாக உறுதி கூறுகிறாள்.             அவ்வாறே தொட்டியத்துறை மண்ணுடையானிடமும்,                   ‘கன்னியர்கள் பூசையென்று கனபூசை செய்யவேணும்                   தேவியர்கள் பூசையென்று தெய்வபூசை செய்யவேணும்                    பிறக்கும் குழந்தைக்குஎன்பேரு வைக்க வேணும்                     வருஷமொரு கிழமையுங்கள் வாசலிலே பொங்கல் வைத்து                     கன்னிமார் பொங்கலென்று –நீங்கள்- கடுகியே  வைத்துநீங்கள்                        கும்பிட்டு வந்தாலே உங்கள் குடிகாப்போம்’ என்று தாயார் பெரியகாண்டி அருளுகிறார்.                     கன்னிமாருக்குப் பொங்கல் வைத்துக் காதோலை கருகுமணி கருவளையல் வைத்து வழிபடுதலாகியதொல்வழக்கு அண்ணன்மார்சாமி கதையில் வெளியாகின்றது. கேடு நினைத்த ஓடக்காரனையும் மாவலையனையும் ஈசுவரி கடுமையாகத் தண்டித்தபோது, அவர்களுடைய துன்பத்தைக் காணச்சகியாது அவர்களுக்காகப் பரிந்து பேசி, அருள் செய்தது, கன்னிமாரின் மென்மையான உள்ளத்தைச் சுட்டும்.               கொங்கு வேளாளக் கூட்டங்களிலொன்றான’ கனவாள்’கூட்டத்தார் கன்னிமாரைச் சிறப்பாக வழிபடுகின்றனர். கன்னியம்மாள் என்று பெண்களுக்கும் கன்னியப்பன் என்று ஆண்களுக்கும் பெயர் வைப்பதுண்டு. இக்கூட்டத்தாருக்கு உரிய கன்னிமார்கோயில் ஈரோடுமாவட்டம் காங்கயத்திற்கு அண்மையில் கன்னபுரத்திலும் தாயம்பாளையத்திலும் உள்ளது.                     கன்னிமார் யார்? திருமணமாவதற்கு முன் கன்னிப் பருவத் திலேயே இறந்துவிட்ட இளம் மகளிரிடம் தெய்வத்தன்மை உளதாக உணர்ந்து அவரனைவரையும் ஒருசேர வழிபடுவதே கன்னிமார் வழிபாடு என்றும் இது வளமைச் சடங்கின் பாற்பட்டது என்றும் கூறுவர். சிறுதெய்வங்களில் , பொதுவாக, கன்னிமார் இரக்கமும் மென்மையான உள்ளமும் கொண்டவராகக் கருதப்படுகின்றனர்.                   கன்னிமாரும் சப்தமாதரெழுவரும் ஒருவரா ? ஒருவரே என்று சிலர் கருதுகின்றனர்.                     சப்தமாதர் பிறப்புப் பற்றி ஒருகதை வழங்கிவருகிறது. காசிப முனிவருக்குத் திதி என்னும் மனைவி மூலமாக இரு ஆண்மக்கள் பிறந்தனர். ஒருவன் ஹிரண்யாக்ஷன்; மற்றவன் ஹிரண்யகசிபு. திருமால் வராக அவதாரம் எடுத்து ஹிரண்யாக்ஷனையும் நரசிம்மமாக ஹிரண்ய கசிபுவையும் கொன்றுவிட்டார். அவர்களுக்குப் பின்னர் அசுரர்களுக்கு அரசனான அந்தகாசுரன் தன்னுடைய தவத்தின் பயனாகப் பிரமனிடம் பலவரங்கள் பெற்றான். வரத்தின் பலத்தால் தேவர்களைத் துன்புறுத்தலாயினன். சிவன், தேவர்களின் முறையீடுகளைக் கேட்டுக் கொண்டிருக்கும்போதே பார்வதியைத் தூக்கிச் செல்ல அந்தகாசுரன் கயிலைக்கே வந்துவிட்டன். சிவனுக்கும் அசுரனுக்கும் போர் மூளுகிறாது. ஏனைத் தேவர்களெல்லாம் ஓடிவிட, சிவன் மட்டும் நின்று அம்புமாரி பொழிந்தார். அந்தகாசுரன் உடலிலிருந்து ஒழுகிய இரத்தத் துளி ஒவ்வொன்றிலிருந்தும் பல அந்தகாசுரர்கள் தோன்றினர். சிவன் தமது திரிசூலத்தால் அந்காசுரனைகுத்தித் தூக்கினார்.அசுரனின் உடலிலிருந்து வரும் இரத்தம் கீழே நிலத்தில் வீழாமல் தடுக்கச் சிவன் தம்முடைய வாயிலிலிருந்து வரும் தீயிலிருந்து ‘யோகேஸ்வர்’ எனும் சக்தியை உருவாக்கினார். ஏனைத்தேவர்களும் தத்தம் சக்திகளை சக்திகளைப் பெண்களாக உருவாக்கி அசுரன் உடம்பிலிருந்து பெருகும் இரத்தத்தை நிலத்தில் விழாதவாறு தடுத்தனர்.                   தேவர்கள் படைத்த பெண்சக்திகளும் அவர்களுடைய குணங்களும் வழிபடப் பெறும் பயனும் பின்வருமாறு கூறப்படுகிறது.                 சிவன்          யோகேஸ்வரி     காமத்தை வெல்ல                 பிரமன்       பிராமணி             அகந்தையை வெல்ல               மகேஸ்வரன்      மகேஸ்வரி          குரோதத்தை அடக்க               குமரன்              கௌமாரி            மோகத்தை வெல்ல               விஷ்ணு              வைஷ்ணவி         உலோபத்தை வெல்ல                வராகர்             வாராகி               அசூயையை வெல்ல              இந்திரன்           இந்திராணி           மாற்சரியத்தை வெல்ல                யமன்                 சாமுண்டி             பொய்ம்மையை வெல்ல      சப்தமாதர் ஆண்தெய்வங்களின் சக்திகளாதலால், ஆண்தெய்வங்கள் செய்த வீரச்செயல்களை அவர்களுடைய சக்திகளுக்கு உரிமையாக்கிக் கூறுவதுண்டு. சப்தமாதர்களுக்குத்தனித்தனிப் பெயரும் குறியும் குணமும் செயலும் கூறப்படுவது போல மேதி அன்னம் பேய் மயில் காளை கழுகு வேழம் என்ற தனித்தனிக் கொடியும் கூறப்படும். வாகனமும் உண்டு.                            முறைப்படுத்தப்பட்ட திருவுருவங்களும் வழிபாட்டு முறைகளும் சப்தமாதருக்கு உண்டு. சப்தமாதரை அமைக்கும்போது, சிவனின் உருவம் யோகேஸ்வரராவோ வீரபத்திரரகவோ ஒருபுறமும்  மற்றோர் புறம் விநாயகரும் நடுவில் சப்தமாதர் உருவங்களுமாக அமைக்கப்படும். தாய்மார் எழுவரையும் ஒரு சேரவழிபடுவதுமுண்டு; தனித்தனியாக வழிபடுவதும் உண்டு.;பலன் நோக்கி வரிசையை மாற்றி அமைத்துக் கொள்வதுமுண்டு. எடுத்துக் காட்டாக, எதிரிகளை முறியடிக்க பிராமியையும் , ஊரில் மக்கள்தொகையை அதிகரிக்கச் சாமுண்டியையும் நடுவில் வைத்து வழிபட வேண்டும்.                 சப்த மாதர்கள் பற்றிய இந்த விளக்கங்களால் சப்தமாதர் வழிபாடு வேறு; கன்னிமார் வழிபாடு வேறு என அறியலாம். சப்தமாதர் வழிபாடு வைதிகத் தொடர்பானது. தேவி பாகவதம் போன்ற வடமொழிப் புராணச் செல்வாக்காலும் பிறமொழியினரின் கலப்பாலும் தமிழகத்தில் பரவிய சக்தி வழிபாட்டு முறையே அது. கன்னிமார் வழிபாடு மிகத் தொன்மையனது. வளமைச் சடங்கை அடிப்படையாகக் கொண்டது. பழங்குடிமக்களின் சமய நம்பிக்கை வழிபாட்டுச் சடங்குகளுடன் தொடர்புடையது. கன்னிமார் வழிபாட்டிற்குத் தனி மந்திரங்களோ வழிபாட்டுச் சடங்குகளோ இல்லை. அவர்களுக்குச் சப்த மாதர்களைப்போலத் தனித்தனிப் பெயரோ, குணமோ இல்லை. கன்னிமார் மணமாகாத இளங்கன்னியரே. எனவே, இணையான ஆண்தெய்வம் கூறப்படுவதில்லை. சப்தமாதர் வழிபாட்டில் உயிர்ப்பலியுண்டு. ஆனால் கன்னிமாருக்குச் சாத்துவிகப் பூசையே நடைபெறும். கருப்பராயனுக்குப் பலியிடும்போது அவனுக்கும் கன்னிமாருக்கும் இடையே திரையிடப்படும். வீட்டில் கன்னிமார்பூசை செய்யும் முறையை திருச்செங்கோட்டுப் பள்ளு என்னும் சிற்றிலக்கியம் விரிவாகக் கூறுகிறது.                        கன்னிவழிபாடு வேறு; கன்னிமார் வழிபாடு வேறு. கன்னிவழிபாடு குமரிபூசை என்றும் சொல்லப்படும். குமரிபூசை திருமணப் பருவமுள்ள இளங்கன்னியை மானுட வடிவெடுத்த சக்தியாகவே வழிபடுதலாகும். இது தாந்திரீக வழிபாட்டு முறையைச் சார்ந்தது. பிறந்த மேனியளான இளங்கன்னி யொருத்தியை உயர்ந்த பீடத்திலிருத்தி அவளுடைய பாலுறுப்பின் மீது மலரிட்டு சக்தியாகப் பாவித்து வழிபடுதல் ‘குமரிபூசை’ யாகக் கூறப்படுகிறது. இத்தகைய குமரிபூசையை ஆத்யகாளீ ஸ்வரூப ஸ்தோத்திரம், பைரவ பத்மாவதி கல்பம், மகா நிர்வாணதந்திரம் முதலிய வடமொழி நூல்கள் விளக்குகின்றன. (கன்னடமொழியில் பைரப்பா என்பவர் தம்முடைய ‘சாத்தர்’ என்னும் நாவலில் இப்பூசையை எழுதியுள்ளார்)                         சிலப்பதிகாரம் வேட்டுவவரியில், வேட்டுவர்கள், வேட்டுவக் குமரி ஒருத்தியை ‘ஐயை குமரி’ யாக அலங்கரித்து வழிபட்டமையும் அவள் வேட்டுவருக்கு அருளிய நிலையும் விரிவாகக் காட்டப்பட்டுள்ளது. இதுவே , தமிழகத்தில் ‘குமரி பூசை’ நடைமுறையில் இருந்தமைக்குக் கிடைக்கும் பழைய சான்றாகும்.                    வைதிக வழிபாட்டு நெறியில் குமரிபூசையோ கன்னிமார் பூசையோ இடம்பெறுவதில்லை. குமரி பூசை தாந்திரிக நெறியில் சிறப்பாகப் பேசப்படுகிறது. கன்னிமார் வழிபாட்டிற்கும் கன்னி பூசைக்கும் தொடர்பில்லை. கன்னிமார் வழிபாடு பழங்குடியினரான இருள்ர், கானக வேட்டுவர் , கானக இடையர், உழவர்கள், வலையர்கள் முதலிய சமூகத்தாரிடம் இன்றும் காணப்படுகிறது. வாதுக் கருப்பண்ணன்                      பெரியகாண்டியம்மனுக்குத் துணையகத் தென்னாடு செல்லும் ஆண்காவல் தெய்வம் வாதுக் கருப்பண்ணன். கன்னிமாரின் பிறப்புக்குக் கூறியது போன்றே கருப்பண்னனின் பிறப்புக்கும் அண்ணன்மார்சாமி கதை, நாட்டார் மரபில் வழங்கும் புராணக்கதை ஒன்றைக் கூறுகின்றது. காவிரியாற்றைக் கடக்கும்போது தங்களிடம் தகாத முறையில் நடந்து  கொண்ட ஓடக்காரனைத் தண்டித்தபின் , ஈஸ்வரி , ஆண்துணை யின்றித் தனித்துப் பயணம் செல்லல் ஆகாது என்று சிவனைத் தியானிக்கின்றாள். மகாதேவர் மாயவரை அழைத்துக் கன்னியருக்குத் துணையாகக் காவல் அனுப்ப வேண்டும் என்கிறர். மாயவர் பாற்கடலைத் தயிர்ப்பானையாகவும் கருமலையை மத்தாகவும் நாகத்தைப் பாசக்கயிறாகவும் கொண்டு கடையும்போது தயிரில் தினையளவு கருப்புக் கண்டார். அதனைக் கையில் எடுத்து பூமியில் விட்டெறிய அதிலிருந்து வாதுக்கருப்பண்ணன் பூமிக்கும் விண்ணுக்குமாகத் தோன்றினார். வாதுக் கருப்பண்னரை நோக்கி அரிராமர்,’கன்னியருக்குக் காவலாகக் கருத்தாக நீயிருந்து , பெண்ணுக்குப் பின்துணையாகப் போகவேண்டும்’ எனப் பணித்தார். வாதுக்கருப்பண்ணன் கன்னியருக்கு ஆண்துணையாகமட்டுமன்றி , ஈஸ்வரிக்குப் பூந்தேர் செலுத்தும் சாரதியகவும் பணியாற்றினார். இவ்வாறு, திருமால் பாற்கடலைக் கடைந்த புராண நிகழ்ச்சியையும் பார்த்தனுக்குத் தேரோட்டிய பாரத நிகழ்ச்சியையும் அண்ணன்மார்சமிகதை கருப்பண்னசாமிக்கு ஏற்றிக் கூறுகின்றது.                    கொங்கு நாட்டுக் கிராமங்களிலுள்ள அம்மன் கோவில்களிலும் விளைநிலங்களிலும் கன்னிமாரும்கருப்பரயனும் சேர்ந்தே காணப்படுவர். கன்னிமார் வளமைத்தெய்வம். ஆதலால் நிலத்தில் விதைப்பதற்கு முன்னும், கறுப்பராயன் காவல் தெய்வமாதலால் அறுவடைக்குப் பின்னும் இவர்களுக்குச் சிறப்புப் பூசனைகள் நடைபெறும். கன்னிமாருக்குப் பொங்கல் வைத்துச் சாத்துவிக பூசையும் கருப்பராயனுக்குக் கடாவெட்டிப் பலிப்பொங்கல்  பூசையும் செய்வது வழக்கம்.கருப்பராயனுக்குக் கடாவெட்டும்போது கன்னியர் முன்னர் திரையிடப்படும். கன்னியர் மென்மையன உள்ளம் கொண்டவராகையால் உயிர்ப்பலியைக் காணச் சகியார். கருப்பராயன் பொங்கல், கிராமங்களில், உற்றார் உறவின்ர் கலந்து மகிழும் இனிய நிகழ்ச்சியாகும்.                மழுங்கலான ஒற்றைக்கல்லே பெரும்பாலும் கிராமியக் கோவில்களில் கருப்பண்ணனைக் குறிக்கும். இதன் இருபுறங்களிலும் இருதடிகள் தொங்க விடப்பட்டிருக்கும். இதன் வடிவை யாய்ந்த அறிஞர்கள் கருப்பு, கருப்பண்னன், கருப்புசாமி என்று பக்தர்களால் போற்றப்படும் வடிவம் பழங்காலத்தில் கருப்பையுயும் சினைப்பையையும் அவை சார்ந்த சினைப்பைக் குழாயையும் குறிப்பதக அமைந்திருந்தது என்பர்.(டாக்டர் . முருகப்பா, காவல்தெய்வம், முத்தாரம், சென்னை, 14-8-83) கரு முழுமையாய் வளரும்வரை அதனைக் காத்துக் காவல் புரிந்துவரும் உறுப்பாகக் கருப்பை இருப்பதால் அதனைக் காவல் தெய்வத்தின் வடிவமாகக் கொண்டு கருப்பண்ணசாமி என்ற பெயரில் வழிபட்டனர் என்று கூறுவர். மந்திரம் கலித்த மகாமுனி                        பெரியகாண்டியம்மனின் பரிவார தேவதைகளில் மகாமுனி ஒன்று. இது காவல் தெய்வம். மந்திர ஆற்றல் மிக்க மகாமுனியின் முன்னிலையில் பேய்கள், பிசாசுகள் பீடிக்கப்பட்டவரை விட்டு விலகியோடும். இவர் விண்ணுக்கும் மண்ணுக்குமாக நெடிது வளர்ந்தவர். பெரியகாண்டியம்மன் கோவில்களீல் மகாமுனிக்கே பலிகள் இடப்படும்.   செல்லாத்தாள்                          செல்லாத்தாள், செல்லாண்டி என வழங்கப்பெறும் இத்தெய்வம் கொங்கு வேளாளர்களின் முக்கிய குலதெய்வங்களுள் ஒன்று. செல் என்றால்மேகம். எனவே, செல்லாண்டி பயிர்த்தொழிலுடன் தொடர்பு உடைய தெய்வம்.                        அண்ணன்மாருக்கும் குலதெய்வம். செல்லாத்தாளே. அண்ணன்மாரைக் குழந்தைப் பருவத்தில் நிலவறையில் வைத்து வளர்த்துப் பங்காளியர்களிடமிருந்து காப்பாற்றியவள். அண்ணன்மார் அவளை நினைந்தபோதெல்லாம் அவள் அவர்களுக்கு முன்தோன்றி உதவுகிறாள். பெரியகாண்டிக்கும் செல்லாத்தாளுக்கும் கரகப் போட்டி.                                பெரியகாண்டி தென்னாடு வரும்போது காவிரியாறு கடந்து மதுக்கரை வந்து சேர்கிறாள். மதுக்கரைச் செல்லாயி, ‘என்னுடைய காவலிலே –நீ- இங்கு வந்த காரிய மென்ன? என மறித்து வாதாடுகிறாள். பெரிய காண்டி அடக்கத்துடன் தான் வீரமலை நாடிச் செல்வதைக் கூறுகிறாள். செல்லாயி   அம்மன்மீது அக்கினினிப் பந்தை வீசுகிறாள். அம்மன் தன்னுடைய சிவதியானத்தால் அக்கினிப்பந்தை நீறாக்கி விடுகிறாள். அதன் பின் இருவருக்கும் கரகப் போட்டிநடைபெறுகிறது. இருவரும் தத்தம் கரகங்களைச் சோடித்து க் காவிரியாற்றில் விடவேண்டும், யாருடைய கரகம் , ‘திருப்பாற்கடல்மோதி – அதை- சுற்றிவந்து மூணுதரம், முக்காலும் மூணுதரம் மூழ்கி எழுந்திருந்து , மகாதீர்த்தமாடி வருகின்றதோ’ அந்தக் கரகத்துக்கு உரியவளே வென்றவள் என்று இருவரும் உறுதி செய்கின்றனர். மும்முறை நடைபெற்ற இந்தப் போட்டியில் பெரியகாண்டியே வெற்றி பெறுகிறாள். செல்லாயி , பெரிய காண்டியைப் பார்த்து, ‘நீயே பெரியவள்தான் – தாயே- உனக்கட்மை யானேனம்மா உன்னில் பெரியவள்தான் – தாயே- உலகத்தில் யாருமில்லை’ என்று வணங்கிப் பணிவிடைகள் செய்வதற்குத் தானும் வருவதாகக் கூறுகின்றாள். பெரியகாண்டி அதற்கு மறுத்து, ‘என், மாதவமுன் தீர்ந்து மண்டலங்கள் பூசையானால் உன்னை மறவாமல் – தாயே- ஒக்கவைத்து நானுமுண்பேன் இருந்த பதியைவிட்டு என்பிறகே வாராதே’ எனக்கூறி விலக்குகிறாள்.                           இந்த நிகழ்ச்சி, காணித் தெய்வங்கள் மீது வைதிகக் கடவுளர் செல்வாக்குப் பெற்ற வரலாற்றினை விளக்கும்.                                                                      இதுபோன்ற செயல்களைச் ‘சோழன் பூர்வ பட்டயம்’ என்ற வரலாற்றுச் சார்புடைய தொன்மரபு நூலிலும்காணலாம். சோழன் கரிகாலன் கிழக்கே உறையூர் முதல் மேற்கே முட்டம் வரை நொய்யலாற்றங்கரையில் சைவசமய முதலியினுதவிகொண்டு வைதிக சைவத்தைப் பரப்புகிறான். ஒவ்வொருமுறையும் காடழித்துச் சிவன் கோயில் கட்டும்போதும் உள்ளூர்ப் பெண்தெய்வம் தடுக்கிறாது. நரபலி முதல் முப்பலி கொடுத்துப் பெண்தெய்வத்தைச் சமாதனப்படுத்தியபின் இருவருக்கும் இடையில் ஒரு உடன்படிக்கை ஏற்படுகிறது. அதன்படி, சிவன்கோவில் விழா நிகழ்வதற்கு முன் நாடுகாணி பெண்தெய்வத்திற்கு முதற்பூசை நடைபெறும். இந்த முதற்பூசை , காணித்தெய்வம் தன் அதிகாரத்தை வைதிகக் கடவுளுக்கு விட்டுக் கொடுத்ததற்குப் பெற்ற பரிசாகும்.                   சோழன் பூர்வபட்டயம் காட்டும் இந்தச் செய்தியின் வழியே செல்லாண்டியம்மன் – பெரியகாண்டியம்மன் போட்டியினையும் , பெரியகாண்டியின் வெற்றியினையும் அதன்பின் இருவருக்கும் ஏற்பட்ட சமாதான உடன்படிக்கையையும் நோக்க , சமய வழிபாட்டு வரலாற்று உண்மைகள் சில தெரியவரும். இன்றும் கிராமங்களில் கூறப்படும் அண்ணன்மார்கதைகளில் காணித் தெய்வமாகிய செல்லாண்டியே சிறப்பிடம் பெறுகிறாள். வாய்மொழிக் கதைப் பாட்டு இலக்கியத் தன்மை பெறும்போது அதில் கூறப்பெறும் வழிபாட்டு உணர்வும் மாற்றம் அடைகிறது. இந்த மாற்றம் விளையும்முன் தோன்றும் போராட்ட உணர்வினையே செல்லாண்டி – பெரிய காண்டிக்கிடையே நடைபெற்ற போட்டிகள் தெரிவிக்கின்றன. இந்தப் போராட்டத்தில் , வைதிக நெறி தன்னுள் பழமையான சிறுநெறியை அகப்படுத்திக் கொண்டாலும் , பெருந்தெய்வ வழிபாடு சிறுதெய்வ வழிபாட்டினையும் தழுவி ஏற்றுக் கொண்டது. காணித்தெய்வமான செல்லாண்டிக்கு பெரியகாண்டியம்மன் வழிபாட்டில் உரிய இடம் உண்டு என்ற நிலைமையை,’மாதவம் தீர்ந்து மண்டலங்கள்பூசையானால், உன்னை மறவாமல் –தாயே – ஒக்க வைத்து நானுமுண்பேன்’ என்ற பெரியகாண்டியம்மன் கூற்று வெளிப்படுத்துகின்றது. அண்ணன்மார் வழிபாட்டில் பெரியகாண்டியம்மன் வழிபாட்டே தலைமைச் சிறப்பைப் பெற்றாலும் அண்ணன்மாரின் காணித் தெய்வமன செல்லாண்டியம்மனும் உடன்வழிபடப்படுகின்றாள். தனக்குரிய தலைமையிடத்தைச் செல்லாண்டியம்மன் வைதிகக் கடவுளான பெரிய்காண்டிக்கு விட்டுக் கொடுத்த வரலாறே அண்ணன்மார் கதையில் இடம்பெறும் கரகப் போட்டி எனலாம். பண்பாட்டிணைப்பில் அம்மன் வழிபாடு                       சிறுதெய்வ வழிபாட்டு மரபுக்கும் வைதிக மரபுக்கும் இடை நின்று இவ்விரண்டு நெறிகளையும் இணைக்கும் பணியை ‘அம்மன் வழிபாடு ‘ அல்லது ‘ பெண்தெய்வ வழிபாடு’ செய்கிறது. அண்ணன்மார்சாமிகதையில் இவ்விரு சிறுமரபும் பெருமரபும் கலந்தே விளங்குகின்றன.                      பெரியகாண்டியம்மனின் பிறப்பு, வடிவம், தவநெறி, பூசனைகள், இறைவனிடம் மீண்டும் சேருதல், அறக்கருணை, மறக்கருணை ம்உதலிய பண்புகள்வைகத்தைச் சுட்டுகின்றன. பெரியகாண்டிக்குப் பூசை செய்பவர் பிராமணர் அல்லர். வீரப்பூரில் அம்பலகாரரும் பிறவிடங்களில் சாணார், பண்டாரம், உடையார் முதலிய பிராமணர் அல்லாதாருமே யாவர்.பெரியகாண்டி உயிர்ப்பலி அல்லாத சாத்துவிக பூசையே கொள்வதால் பிராமணத் தெய்வம் எனப்படுகிறாள். இருப்பினும் இவளுடைய பரிவாரங்கள் அனைத்தும் சிறுமரபுத் தெய்வங்களே. இச்சிறுமரபுத் தெய்வங்களைப் பெருமரபாகிய வைதிக நெறியில் இணைக்கும் பாலமாகப் பெரியகாண்டி விளங்குகிறாள். சிறுதெய்வ வழிபாடு நாளடைவில் பெருந்தெய்வ வழிபாட்டமைப்பில் அடையும் போக்கு வைதிக நெறிக்கு இயல்பாகும். பாரதநாட்டில் வழங்கிய தொன்மையான வழிபாட்டு நெறிகள் அனைத்தும் இம்முறையிதான் வைதிகப் பெருநெறியி;ல் இணைந்துவிட்டன. இந்த வளர்ச்சி மாற்றத்தினை பெரியகாண்டியம்மன் வழிபாடும் உறுதி செய்கின்றது.                           சிறுமரபில் பெண்தெய்வங்களே மிகுதி. இந்தப் பெண்தெய்வங்களுக்குக் கணவன்மாராகத் ஆண்தெய்வங்கள் கூறப்படுதலில்லை. வைதிக நெறியில் பெண்தெய்வத்தைத் தனியாக வைத்து வழிபடுதல் இல்லை. ஆண்தெய்வத்தின் பிரிக்க முடியாத அருட்சக்தியே பெண் தெய்வமாகக் கொள்ளப்ப்டுகிறது. சிறுமரபைச் சார்ந்த காளி, துர்க்கை, கொற்றவை முதலிய பெண்தெய்வங்கள் பெருமரபைச் சேர முதற்படியாக, அவை, ‘சக்தி’யின் அம்சமாகக் கருதப்பட்டன. சிவபெருமானின் அருட்சத்தியே அவனுடைய மனைவி. அவளே பார்வதி. அந்த அருட்சத்தியே அசுரர் முதலிய தீயசத்திகளை அழிக்கும்பொருட்டுக் காளி, துர்க்கை என அழிக்கும் ஆற்றலுடன் தோன்றியதாகவும் ,அந்தப்பணி முடிந்தவுடன் மண்ணுலகில் சிவனால் அடக்கப் பெற்று மணந்துகொள்ளப் பெற்றதாகவும் புராணக் கதைகள் எழுந்தன. இந்த முறையில் சிறுமரபைச் சார்ந்த பெண்தெய்வங்கள் முதலில் சத்தியுடன் தொடர்புபடுத்தப்பட்டுச் சிவனுக்கு மனவியராயினர். இதன் விளைவாகப் பெருமரபாகிய வைதிகத் தொடபுற்றனர்.                  பெரியகாண்டியம்மன் சிறுமரபைச் சார்ந்த பெண்தெய்வமே. காடுகிழாள் போல மலையிலே கோயில் கொண்டவள். இவளுடைய கோவில் ஆண்தெய்வத்திற்கு இடமில்லை. வீரப்பூர்க் கோவிலில் இவளுடைய திருவுருவம் கொற்றவை போன்றே அமைந்துள்ளது.   அண்ணன்மார் சாமி கதையிலும் இவளுடைய பண்பாக எளிதில் கோபம் கொண்டு தண்டிக்கும் இயல்பும் பழிவாங்கும் போக்கும் இடையூறு செய்பவரை அழித்தொழிக்கும் செயலும் வெளிப்படுகின்றன. இவை சிறுமரபைச் சேர்ந்த பெண்தெய்வங்களின் பண்புகள்                    பெருமரபைச் சார்ந்த புராணங்களில் இறைவி , மண்ணுலகில் வழிபாடு முறையை வெளிப்படுத்தவோ பரப்பவோ வேதாகமங்களின் சிறப்பை வெளிப்படுத்தவோ அறியாமல் உயிர்களுக்குச் செய்துவிட்ட இடுக்கணுக்குக் கழுவாய் தேடவோ மண்ணுலகில் தோன்றி புண்ணியத் தலமொன்றில் தவமியற்றி மீண்டும் இறைவனிடம் கூடியதாகக் கதைகள் காணப்படுகின்றன. இந்த அமைப்பினைப் பின்பற்றிப் பிச்சனும் அண்ணன்மார்சாமிகதையில் பெரியகாண்டியை பெருமரபுத் தெய்வச் சாயல் பெற வைக்கிறார். பெரியகாண்டி வழிபாடும் அண்ணன்மார்சாமி வழிபாடும் ஒருகாலத்தில் தனித்தனியாக இருந்து பின்னர் இணைந்திருக்கக் கூடும். நல்லதங்கத்தின்அருமை பெருமைகளைப் பெரிதுபடுத்திக் காட்டப் பின்புலமாகப் பெரியகாண்டியம்மன் வரலாறு இணைக்கப்பெற்றிருக்கலாம். பெரியகாண்டியம்மன் தெய்வமாதலால் அண்ணன்மாரை வழிபடும் நெறியிலும் அண்ணன்மார் கோவிலிலும் முதன்மையிடம் பெறுகிறாள்.                  9. அண்ணன்மார்சாமி கதைப்பாட்டின் மொழியமைப்பு                             கதைப்பாடகன் தன் தொழிற்கல்வியைப் பரம்பரை முறையில் பெறுகிறான். மரபுவழிப் பயின்ற சொற்களையும் தொடர்களையும் சமகாலக் கருத்துக்களை விளக்கும் சமகால மொழிவழக்குகளுடன் வழங்குகிறான். எனவே, பொதுமக்களுக்கு அறிமுகமானசொற்களும் தொடர்களும் அவ்விலக்கி யங்களில் மிகுதியும் இடம்பெறும். கதைப்பாட்டு பேச்சுமொழியில் இருப்ப தால் வட்டாரக் கிளைமொழி சொல்லமைப்பாலும் உச்சரிப்பாலும் இலக்கண அமைப்பாலும் பொதுமொழியிலிருந்து, வேறுபடுவதுபோல வட்டாரக் கதைப்பாட்டின் மொழியமைப்பும் வேறுபடும். வாய்மொழிக்காப்பிய ஆய்வுக்கு வட்டார மொழியறிவு பெரிதும் வேண்டப்படுகிறது. அவ்வறிவு இல்லாது போனால், நாட்டார் வழக்கினைப் பிழைபட உணர்ந்துகொள்ள நேரிடும்.                      திருமதி பிரெண்டா பெக், ‘அண்ணன்மார்சாமி கதையை’ ஆங்கிலக்கல்வி கற்ற நகரப் பெண்மணிகள் மூவரின் துணைகொண்டு படித்தார். அவர்கள் நாட்டுப்புறத்தாரின் மொழிநடை, சொல்லடைவுகளைப் பற்றி ஏதும்ம் அறியாதவர்கள். எனவே, அவ்வம்மையார், அண்ணன்மார்சாமியை’த் தவறாகப் புரிந்துகொண்டது மட்டுமன்றி வேடிக்கையான மொழிபெயர்ப்புகளையும் விளக்கங்களையும் தந்துள்ளார்.                    தட்டான், தன்னுடைய நாழியைப் பொன்னர் வஞ்சித்து விட்டார் எனப் புலம்பும் பகுதியைக் கவிஞர், ‘கய்யாச்சி ஆண்டபொருள் – சிவனே- கடத்த மனங்கூடுமோதான்’ என மாரடித்துப் புலம்பியதாகக் கூறினார்.இதேதொடர் பின்னொரு இடத்தில் ,’கையாச்சி ஆள்வமென்று – பொன்னாண்டார்- கடத்தமனங் கூடாமே’ என்றும் வருகிறது..                         ‘கையாட்சி’ என்னும் செஞ்சொல் நாட்டுப்புறக் கவிஞன் நாவில்’கையாச்சி’ கையாச்சி’ எனப் பலவகை ஒலிவடிவம் கொள்கிறது. அகரத்தின் பின் யகரம் ஐகாரமாக ஒலிக்கும். (அய்யர்- ஐயர்)எனவே, ‘கை’ நாட்டுப்புறபாடகன் நாவில் ‘கய்’ என வடிவெடுக்கிறது. ஆளுதல் என்ற பொருள் தரும் ஆட்சி எனும் சொல் ‘ஆச்சி’ என ஒலித்திரிபு அடைகிறது. (ட்ச்>ச்ச்) ‘ட்’ எனும் வளைநாவொலி ‘ச்’ எனும் அண்ணவொலியாகத் திரிதல் ‘ஓரினமாதல்’  எனும் ஒலித்திரிபு விதிக்கு முற்றும் இயந்ததே. நாட்டுப்புற மக்களின் பேச்சுமொழியில் இத்திரிபொலியே பெரிதும் இடம் பெறும். கட்சி>.கச்சி    மீனாட்சி> மீனாச்சி என்பது போல.                                அடைக்கலமாகக் கொடுத்த பொருளை வஞ்சித்துக் கவரும் வலிய மனத்தை எவ்வாறு ஒருவன் அடையக் கூடும் என்பதுதான், ‘ கையாச்சி ஆண்டபொருள் கடத்த மனங்கூடுமோதான்’  எனும் தொடருக்குப் பொருள். கையாட்சி ஆண்ட பொருள் – அடைக்கலமாகக் கையில் பெறப்பட்ட பொருள். பெக் அம்மையார்,’ஆச்சி’ என்னும் சொல்லைப் பெண்பாற் சொல்லாகப் பிழைபட உணர்ந்து, அது தட்டானின் மனைவியைக்  குறித்ததாகக் கொண்டு, ‘பிறனொருவன்  மனைவியாகிய பொருளைக் கவர்ந்து கொள்ள எவ்வாறு மனம் வரும் எனப் புலம்பியதாகக் கூறினார் அதோடு நில்லாமல், தட்டானின் இப்புலம்பலில் ஏதோபாலியல் குற்றச் சாட்டு இருப்பதாகவும் குறிப்பிடுகிறார். (How can one bear the thought of having stolen and enjoyed by a goldsmith’s wife. At the same time he introduces a subtle sextual accusation, implying that the hero took some thing   once enjoyed by another man’s wife. (The Three Twins P114)                       மற்றுமோர் இடத்தில் ‘கனத்தமுடிக் காராளன்’ என்னும் தொடரை ‘heavy head of hair’ என்று மொழிபெயர்த்துள்ளார். ‘கனம்’ என்ற சொல்லுக்குப் பெருமை என்று பொருள். கனத்தமுடி என்றால் பெருமைமிக்க மகுடம் என்பது பொருள். மகுடமாகிய முடியை தலை மயிராகிய முடியாகப் பொருள் கொண்டார் அம்மையார்.தமிழின் பேச்சு வழக்கு, இலக்கிய வழக்கு பற்றிய தெளிவின்மையே இப்பிழைக்குக் காரணம்.                      தமிழில் சொற்களஞ்சியம் திரட்டுவோர் நாட்டுப்புறக் காப்பியங்களையும் கருத்தி லிருத்தித் திரட்டினால், தமிழுக்கு மேலும் பல அரிய சொற்கள் , புதிய பொருளாற்றலுடன் கிடைக்கும் என நம்பலாம். அண்ணன்மார் சாமி கதையின் பிச்சன்கவி ஆண்டுள்ள நாட்டுப்புற சொல்வழக்குகள் இங்கு திரட்டித் தரப்பட்டுள்ளன. அவை ஆளப்பட்டுள்ள தொடர்களும் உடன்தரப்பட்டுள்ளன. இவை  கொங்கு நாட்டு வழக்கு அகோரம்: அ+கோரம். நாட்டார் வழக்கில் கொடுமை, உக்கிரம் எனப்                               பொருள் படும். ‘அக்கினிப்பந்துமது அகோரமாய்த்தான்                  வருகுதே’ அங்கம்:  எலும்பு. இலக்கிய வழக்கு. ‘அங்கம் பொறுக்கியேதான் –உத்தமி-                புதுக்கும்பம் தனிலடக்கி’ அங்குவடி: குதிரை யேறுவோர் காலூன்றப் பயன்படுத்துவது.stirrup.                   ‘அங்குவடி பொன்னாலே – குதிரைக்கு- ஆபரணம் பொன்னாலே,                    ‘அங்குவடி மிதித்து அப்புரவி மீதேறி’ அட்டாலி: வீடுகளில் இருசுவர்களுக்குமேல் பலகை பரப்பி அமைக்கப்படும்                  பரண். பொருள்கள் வைக்கப் பயன்படுவது. Loft. ‘அட்டாலி                  மேலிருக்கும் சட்டப்பூனை தான்மலடு’ அடசல்: நெருக்கம் அப்பனை: உத்தரவு.ஆணை. ஆக்ஞை என்னும் வடசொல்லின் திரிபு.                  ‘அப்பனைகள் செய்தபின்பு குடியானவர்கள் எல்லோரும்                   வாரார்கள்’ அனந்தல்: உறக்கம். அனுச்சி: அனுசரித்தல் ஆதரித்தல். ‘ இந்தநல்ல தேசத்திலே எவருமே                குன்றுடையானை அனுச்சி செய்யக்கூடா தென்றடித்தான்                தவில்முரசு’ அனுமானம் : குதிரை கனைப்பு. ஆசாரம்: முற்றம் Entrance hall of a palace or mansion; ஆசாரவாசல்.                   ’அரண்மனைக்கு வந்திப்போ ஆசாரம் போயிருந்து’ ஆதேசம்: கனவு. ‘அனந்தல்வந்து கண்னயர்ந்து ஆதேசம் கண்டு வந்தேன்’. ஆலாப்போலே: பரபரப்புடன், மன அமைதியின்றிச் செயல்படலைக்                       குறிக்கும். சோத்துக்கு ஆலாப் பறந்தான் என்பது                                                 கொங்கு நாட்டு வழக்கு. ‘காலாலே தட்டி விட்டான் குதிரை                       ஆலாப்போலே பறந்து அதிவேகமாய் வருகுதே’ ஆராட்டம்: மிக்கதுன்பம். ‘அனலும் தணியுமினி அவனுடைய ஆராட்டம்                                                      நீங்குமினி’ இணுங்கு: கொத்திலிருந்து பிய்த்து எடுத்தலைக் கொங்கு நாட்டார்                  இணுங்குதல் என்பர். ‘கீரை இணுங்கு’ என்பதைப்போல.                                    ‘இணுங்கு சோளம் எடுத்து இடிக்கச் சொல்லுவார்கள்’.                 சோளத்தட்டின் கணுவில் முளைக்கும் ஊனில்லாத சோளக்                 கதிருக்கு இணுங்கு சோளம் என்பது பெயர். முற்றாத சோளம்                    தாம்படித்த பின்னரும் கதிரிலிருந்து விடுபடாது. அதைக் கையால்                 பிரித்தெடுத்தலால் ‘இணுங்கு சோளம் ‘ என்பர். அதை எத்தணை                    இடித்தாலும் மாவு வராது. உத்திரம்: மறுமொழி. உத்தாரம் உத்திரம் எனத் திரிந்தது. ‘ஓலைச்சுரு                             ளெடுத்துச் சிவனுடைய உத்திரத்தைத் தான்பார்த்து”                      முந்தானை’ – உத்தரியம், உத்திரியம் எனத் திரிந்தது.   ‘                       உத்திரத்தைப் பிடித்து உங்களண்ணரிடம் ஒதுங்கியே                                     நின்னாலும் ஏனென்று கேளாரே’                          விட்டம்- ‘சோழர் ஆயிரக்கால் மண்டபத்துக்கு இரண்டு                                      உத்திரமு மாகுமினி’ உத்தரித்தல்: உதரம் – வயிறு. உத்தரித்தல். பிறத்தல்.’ புத்தரியுமாக                               உத்தரித்துப் போகுமம்மா’ உறவுமுறை: உறவின்முறையினர். பேச்சுவழக்கில்’ஒறம்பறை’                                                     ’வந்த உறவுமுறையை –மாமன்- வாவென்று தான்கேட்டு’ உறக்கிணறு – உறைகிணறு.பணற்பாங்கான நிலங்களில் மண் அல்லது                      சிமெண்ட் வளையங்களைப் பதித்து அமைக்கப்படும் கிணறு.                                ‘உறக்கிணறுக் குள்ளிருக்கும் ஊர்க்குருவி தான்மலடு’   ஒட்டாரம்: அக்கிரமம். தீங்கு stubbornness; perversity; பிடிவா தம். ‘ஓடுகின்ற                        தண்ணியிலே – ஓடக்காரா- ஒட்டாரம் செய்யாதே’ ஐயன், ஐயர்: தந்தை. முறைப்பெயர்.’ஆடுமேய்த்து –உங்களையன்- அன்பாய்                   வருகையிலே’, ‘கோலாத்தாக் கவுண்டர் மகன்தாயே-                      எங்களையன்  குன்றுடையான்’   ஓடுகாலி: ஊரைவிட்டுப் போனவன். ‘ஊரைவிட்டுப் போன ஓடுகாலி                உந்தனுக்கு’ கடவு: சிறுவழி stile நூழை என்பது இலக்கிய்ச்சொல்.  புஞ்செய்க் காட்டினை            வளைத்து முள்வேலியிட்டு மக்கள் மட்டும் நுழைவதற்கு ஏதுவாக ஒரு              கவை நட்டு வைத்திருப்பர். அதற்குக் கடவு என்பது பெயர். ‘நுழையக்            கடவு    மில்லை’ கடிங்காளை: கடிங்கோல், கடிப்பு, குணில் என்பன இலக்கிய வழக்கு.                  முரசறையும் கோல். ‘கடிங்காளைத் தானெடுத்துக் கடுகியே                   அடித்தான் தவில் முரசு’ கண்ணசந்து- கண் அயர்ந்து. களைப்பால் வரும் உறக்கம். ‘அனந்தல்வந்து                         கண்ணசந்து ஆதேசம் கண்டுவந்து’ கணிங்கோல்: கணக்கன் தன் பதவிச் சின்னமாய்க் கையில் வைத்திருக்கும்                       கோல் Baton கப்பி: வேள்விக்குபயன்படும் சமித்துக் குச்சிகள் கம்மல்: மழைமேகம் கவிதல் கரடிகூடம்: மல்யுத்தம், சிலம்பு பயிலுமிடம். கருமம்: தீமை. ‘நன்மைசெய்யக் –கருமம்- நமக்குப் பலித்ததிப்போ.’   களரி: ஆரவாரம். ‘அப்போது களரியெல்லாம் அடக்கிவைத்து ராஜாவும்’          ,’ஆடல்பாடல் களரியைத்தான் அப்போது கையமர்த்தி’ ‘கட்டுச்சோறு              கட்டுமென்றால் களரியிங்கே கூட்டுகின்றாய்’ கனகதண்டி : பல்லக்கு கனம் கூறுதல்: பாராட்டி முகமன் கூறுதல்.‘கண்கள்களி கூர்ந்தவர்க்கும் கனம்                      சொல்லுவர் காராளர்’ கல்லணை – சேணம்.saddle. ‘ குதிரைசவாரிக்குப் பூட்டப்படும் அணி.                       ‘கல்லணியும் கட்டியேதான்கடிவாளம் பூட்டி’ கிட்ட – அருகில். இடம். ஏழாம் வேற்றுமை உருபு.’எங்கள்கிட்ட வந்துநீர்                எனக்கறியச் சொல்லுமென்றார்’ கிராக்கி: தேவை. தட்டுப்பாடு. கொங்கணக் கம்பளி: கொங்குநாட்டில் நெய்யப்படும் முரட்டுக்கம்பளம்.               ஆடுமேய்ப்பவர்கள் மழைக்கும் பனிக்கும் பாதுகாப்பாக இதை த்                தலைமுதல் கால்வரை மூடிப் போர்த்துக் கொள்வர்.இவ்வாறு மூடிக்               கொள்ளும் முறை ‘கொங்காடை’ எனப்படும். ‘கொங்காடையால்’                உடல் மூடப் பெற்றிருக்கக் கைகள் புறத்தே எளிதாகத்                      தொழில்படும்.’கொப்பிகட்டும் கவையெடுத்து பொட்டெனவே                தானூன்றிக், கொங்கணக் கம்பளியைத் தோள்மேலே                   போட்டுக்கொண்டு’. கொட்டம்: வினைச்சொல். அட்டூழியம் செய்தலைக் கொட்டமடித்தல்                  என்பர்.’மேனாட்டுக் காளியவன் மேன்ன்மையாய் வளர்த்த பன்றி,                  கோனாட்டுக்கேகி உறையூரு கொட்டமிட்டசேதி’  கொப்பிகட்டும் கவை: கொப்பு – மரக்கிளை. கவை. ஆடுமாடுகளுக்குத்                    தழை ஒடித்துப் போடப்பயன்படும் நீண்ட கம்பு. முனையில்                     சிறியகொடுவாள் பொருத்தப்பட்டிருக்கும். ‘கொப்பிகட்டும்                   கவையெடுத்துக் கோளாறாய்த் தானடந்து’ , ‘கொப்பிகட்டும்                                      கவையெடுத்துப் பொட்டெனவே தானூன்றி’ கோந்தை : தலைமுடி. கூந்தல். ‘கோந்தை இளஞ்சடையைத் –தாயார் –                  கூட்டிமுடிந் தாளப்போ’ கோதை என்றும் வழங்கப்படுகிறது. கோளாறு: பலபொருள்களில் வழங்குகிறது. ‘சாமான்களை இறக்கும்                 சடுதியிலே வாரனென்று கூழைநாச்சிக் கவுண்டர் கோளாறாய்த்                 தானடந்து’,‘கொப்பி கட்டும் கவையெடுத்துக் கோளாறாய்த்                  தானடந்து’ ‘குங்குமக் கட்டை கொண்டு கோளாறாய்த் தானடுக்கி’ கெடு: காலம். ‘ வாரகெடு ஆச்சுதென்று மகாசுனையில் நானிருந்தேன்’ குமுழி: ஏரி, மதகு நீர் செல்லும் வழி. Sluice. குண்டு, குறுணி: பழங்காலத்து முகத்தல் அளவைகள். கௌசனை: மறைப்புத்துணி. பிணத்துக்கிடுவது. ‘ கௌசனையைத்                       தான்போர்த்திக் கண்ணீர்தனைச்சொரிந்து’. சகலாத்து: பட்டாடைவகை. ‘செம்பரிசைச் சிறவும் –சின்னண்ணருக்குச்-               சேர்ந்த சகலாத்தொழிவும்’ .‘சகலாத்து ஒளிர்வும்’ என்பது ஒழிவும்                    எனப் பாமரக் கவிஞன் நாவில் திரிந்தது. இவ்வாறு, திருத்தமாக                   உச்சரிப்பதாக நினைத்துக்கொண்டு பிழைபட உச்சரித்தலை                           ’மிகைதிருத்தம்’ என்பர்,மொழிநூலார். சங்கடித்தல் : சிங்குவைக் கடித்தல். சிங்குவை – நாக்கு. சினத்தின்                        மெய்ப்பாடுகளில் ஒன்று நாவினைக் கடித்தல். ‘                         சின்னாண்டார் அப்போது  சினத்திலே சங்கடித்தார்’ சஞ்சுவம்: விருதுகள்.’இங்கு போர்க்கருவிகளைக்குறித்தது. சமர்த்து: ஆற்றல். திண்மை. ‘என்சமர்த்தும் உன்சமர்த்தும் காண வேணும்’             ‘வேடுபடை தத்தளிக்க – ஆனால் – வெட்டுமினி உம்சமர்த்து’ சமுசு : வஞ்சனை.சூது. ‘கட்சி பிரித்தார்கள் கனசமுசு வைத்தார்கள்’ சவுரியம்: ஆற்றல், பலம், வீரம். ‘சவுரியம் பத்தாமே – நீங்கள் –               தாட்சணையாக வந்தீர்கள்’ ‘தாண்டி எழுந்திருக்கவே  சவுரியங்கள்                கொஞ்சமிப்போ’ ‘வெட்டும் சவுரியத்தை –நானுன் – வீரியங்கள்                பார்க்க வேணும்’ சனம்: ஜனம். மக்கள். சலகிருது: ‘சலகை எருது’ இப்படி மருவிற்றுப் போலும். தைப்பொங்கலுக்குப்                  பின் நல்ல வலிவுள்ள காளைகளைக் கொம்பு சீவி, வண்ணம்                  தீட்டி, புதிய தலைக்கயிறு, முதலியன மாற்றித், தொட்டியர்,                  பறையர் முதலிய பண்ணைத் தொழிலாளர்கள், கையில்                   கோலுடன் வீடு, தோட்டம் அனைத்திற்கும் ஓட்டிச் செல்வர்.                 தானியம் காசு முதலியவற்றை வாங்கி வருவர். அவ்வாறு                ஓட்டிச்செல்லப்படும் அக்காளைக்குச் ‘சலகிருது’ என்று பெயர்.                    சலகை calakai, n. perh. šlāghya. Visiting presents;                    காணிக்கைப்பொருள். சலாம்:    வணக்கம். ‘பட்டாணி ராவுத்தமார் பணிந்துசலாம் செய்துநிற்க’ சாடு:      முகத்தல் அளவை. ‘கரிசாட்டுப் பொன்னளக்கும் கரிகாலச் சோழர்’ சாரிவருதல் : உலாப்போதல். ‘காளிபன்றிக் குத்திக்காராளர் சாரி வாரார்’ சாவல் ;  சேவல். சிக்குதல்: கிடைத்தல். சிக்காமல்- கிடைக்காமல். ‘வேலையாள் சிக்காமல்                 வேகமாக ஓடிவந்தார்’ சிறை: சிரை, சிரைத்தல்- குறைத்தல். முள்வேலி, தென்னை, பனை                      முதலியவற்றின் பன்னாடை போன்ற மிகையான                         உறுப்புக்களைக் குறைத்தலைச் சிறை யெடுத்தல் என்பர்.                                ‘சீதமுள்ளு வனமதனைச் சிறையெடுத்தா னப்போது’ சீனி: குதிரைச் சேணம். saddle ‘அலங்காரந் தானுஞ்செய்து அதன்மேலே                  சீனிவைத்து’ சுங்கு: உருமாலையின் தொங்கல். ‘சந்திரகாவி உருமாலை சுங்குவிட்டுத்                    தான்துலங்க’ சோடி: அலங்காரம்செய். ‘எங்கரகம் சோடிக்கிறேன் உங்கரகம் சோடி                  யென்றாள்’  இணை. ‘புள்ளி சிறுசோழர் தன்சோட்டுப்                                பெண்களுடன்’ சோணகிரி: சோணகிரி: எளிதில் ஏமாறுபவன். ‘கோட்டைத் தலைவாசல்                    காக்கும் சோணகிரி வில்லியர்கள்’  சோலி: ஜோலி என்பதன் திரிபு. வேலை, கடமை. ‘உன்குதிரை வருவதற்கே              இன்னேரம் சோலியென்னே’ ஞாயம்: நீதி முறை, நியாயம் நீ>ஞா . ‘போகிறதே யல்லாமல் பொருந்திவரப்               போவதில்லை,என்றுதான் பல்லியது இதமாகச் சொல்லுகுறி               போகிறது நியாயமல்ல புண்ணியரே சொல்லுகிறேன்’ தட்டு: சோளப்பயிரின் தாள். ‘ஒருதட்டைத் தான்பிடுங்கி உரித்துமே               பார்க்கையிலே’  தடம் : வழி. ‘பாதித்தடம் வந்தபின்பு பார்த்தானே சம்புவனும்’ தலைக்குசரம்: தலைக்கு உசரம். தலையணை. ‘தலைக்குசரம் வேணுமென்று                       தானெழுந்து இங்கே வந்தேன்’ தவடை: தாடை. ‘தலைமயிரைத் தான்பிடித்து தவடையிலே தானடித்தான்’ தன்பிறப்பு: உடன்பிறந்தார். ‘தாயை மனதிலெண்ணித் தன்பிறப்பை                       நெஞ்சிலெண்ணி’ தாட்டிமை: பெருமிதம். ‘தந்தப் பல்லக்கேறி –பொன்னம்பலசாமி-                      தாட்டிமையாய் வாராரே’ திட்டிவாசல்: பெரியமதிற்கதவில் அமைந்திருக்கும் குறுகிய வாயில். ‘கோட்டை                      வாசல் சாத்தி திட்டிவாசல் திறந்து விட்டார்’ திருஷ்டிக்குட்டி : கண்ணேறு கழிக்கப் பழியிடப்படும் ஆட்டுக்குட்டி. ‘தேரு                    வடம்பிடிக்கத் திருஷ்டிக்குட்டி வெட்டினார்கள்’ துருசு: துரிசு என்றும் வழங்கப்படும். விரைவு. ‘சொல்லுமையா என்று சங்கர்                துருசாகக் கேட்டாரே’ , ‘சோளந்தோட்டி யவனும் துரிசாக                    ஓடிவந்து’ துவண்ட கிழம்” துவன்ற> துவண்ட  தொண்டுக்கிழம்’தொண்ணூறும் பத்தும்                சென்ற துவண்டகிழமானார்’ நலுக்கமிடல்: தலையில் அழுந்தத் தேய்த்தல். ‘நல்லெண்ணெய் சீயக்காய்                       நன்றாய் நலுக்கமிட்டு’ நாமள்: தன்மை ஒருமையாயினும் தன் தகுதிகுறித்துப் பன்மை வாய்பாட்டில்              வழங்கும். நாங்கள்> நாம்கள்> நாமள்.’நாமள் நமக்குச் சரியாக              வைத்துன்னை’   நிகுதி: நியதி. நிர்ணயம். உறுதி. ‘ஏர்க்கு ஐந்து பணம் கடமை நிகுதி பண்ணி’. நிர்ணயம் – சத்தியம். ‘உனக்கென்ன நிர்ணயங்கள் செய்துதர வேனுமடா’ பகடை, பந்து- தாயன், சொக்கட்டான் விளையாட்டில் உத்திகள். ‘பகடை                        விழுகாமல் பந்துவிழுந்ததுதான்’ பதனம் : பத்திரம். எச்சரிக்கை. ‘தம்பி பதனம் காண்தார்வேந்தன்               பத்திரம்காண்’., ‘கோட்டை பதனமடா கொத்தளங்கள் எச்சரிக்கை                பதனம் பதனமென்று பத்தவில்லை: போதவில்லை. ‘மரக்கால் அரிசிச்சோறு உன்வயிற்றுக்கே                      பத்தாது’. ‘வெகுநாள் தவசிருந்து – எனக்கு – வீரியங்கள்                      பத்தவில்லை.‘ பலபட்டரை: கலப்புச்சாதியினர்.. இழிசொல். ‘பலபட்டரைத் தெருவும்                     பாங்காகத் தானிருக்கும்.’ பள்ளயம்: மொச்சை, அவரை, கொண்டைக்கடலை, தட்டைப்பயறு                  முதலியவற்றை அவித்துச் செய்த உப்புப் போடாத சுண்டல். ‘                  பள்ளயமும் போட்டுப் பாங்காய் அடச லென்று’ பாவாடை: பந்தலில் கட்டப்படும் மேற்கட்டி. ‘பந்தல் விளக்கிப்                   பாவாடைமேற்கட்டி’ பிறகாலே: பின்புறம். ‘புல்லறுக்கும் அரிவாளைப் பிறகாலே தான்சொருகி.’ பூப்பெட்டி: வழிபாட்டுக்குரிய மலர்களைக் கொய்து வைக்கத் தென்னை                    ஓலையால் முடையப்பட்ட கூடை.  ‘திருப்பூக்குடலை                   திருப்பெட்டி தோள்போட்டு’ ,பூப்பெட்டி தோள்போட்டுப்                      பொன்னம்பலம் தேடி’ பொந்தி: பொம்மல். மிகுதி. பெருமை. ‘பொந்திக்கடுக்கனிட்டு’                                புத்தி>புந்தி.அறிவு, புத்தி. ‘இப்போ யாரை நினைத்தாய் அளவற்ற                  புந்தியிலே’   பொந்திக்கோல்: துறவியரும் முக்காலமும் அறிந்த அறிவர்களும் கையில் ஏந்திவரும் பிரம்புக்கோல். ‘பிரம்பும் ஒருகையில் பிரப்பம் பொந்திக்கோலும் ஒருகையிலே’ பொடை: புடை. பக்கம். சோளம், தினை முதலிய கதிர்கள் பக்கம் பெருத்து வளர்தலைப் புடை பெருத்தல் என்பர். ‘பயிரும் பொடைகட்டிப் பாங்காக வளர்ந்து நிற்க.’ போகி: பல்லக்குச் சுமப்போர். ‘பல்லக்குப் போகிகளைப் பாங்காக நீர்கூட்டி’. மடக்கலப்பானை: மடைக்கலப்பானை. மடை- சோறு. கொங்குநாட்டுத்திருமணச் சீர்களில் வழங்கப்படும் பொருள்களில் ஒன்று. ‘மடக்கலப் பானையில் மரக்கால் அரிசியிட்டு’ மறுசேதி : மறுபேச்சு. ‘சோழர்வந்தழைக்கையில் மறுசேதி சொல்லக்கூடுமோ?’. மனு: உத்தரவு. ஆணை. ‘என்சீமையில் எந்தமனுக் கேட்டாலும் அந்தமனு உன்னதுதான்’. ‘மண்டலங்கள் பூசைகொள்ள – சுவாமி- வாக்குமனு வேணுமென்று’ மாளாது: இயலாது. மணியங் கணக்குப் பார்க்க மாளாது’. தீராது. ‘மாடு கட்டித் தாம்படித்தால் மாளாது என்றுசொல்லி’ மார்மூண்டு: ஏங்கி. மனக்குறைப்பட்டு. ‘முழுகி எழுந்திருந்து ஆயிகரகம் –முழுக்கு நீராடியேதன் மார்மூண்டு தான்திரும்பி வருகுது அந்நேரம்’ ‘வந்தவழி பார்த்து குதிரையை மார்மூண்டு திருப்புகிறார்’. முச்சி: சிறுமிய விளையாடப் பயன்படுத்தும் சிறிய முறம். ‘சித்தாடை கொய்துடுத்தி சின்னமுச்சி கொண்டேதான்’ முடுக்கு: விரட்டு. ‘எந்தவீடு போய்க்கஞ்சி கேட்பினுமில்லியென முடுக்கிவிட்டார்’. ‘சொந்தநல்ல வூரிலேதான் என்னையும் முடுக்கி விட்டீர்’. மூக்கறை: முகமற்ற. ‘மூக்கறைப் பிள்ளையாரை எடுத்துப் பொன்னர் முடிமேலே போடவென்று’ மூதாக்கள்: பிதிரர்கள். முன்னோர். ‘நீங்கள்மூதாக்கள் சீர்பாதம் சேருமினென்று’ மேலாள்: முகவர். ‘மேனாட்டு வேட்டுவர்க்கு –இவன் – மேலாளாய் வந்தவன்’. லத்தி: யானையின் சாணம். ‘வால்முருக்கி லத்தியிட்டு வெள்ளானை வீறிட்டு வாரபோது’ லாகை: லாகுதல்- குதித்தல். தாக்குதலினின்றும் தப்பித்துக் கொள்ளும் முறைகளில் ஒன்று.’ஆக்கரித்துப் பல்கடித்து ஔபதடி பின்குதித்து முன்லாகை பின்லாகை முப்பத்திரண்டு லாகையும்’ வலுக்காரம்: வல்லமை. செருக்கு. கர்வம். ‘வாரதில்லை  என்று வலுக்காரம் பேசுகிறார்கள். வருதி: வரும்செய்தி. ‘வந்த சனத்துக் கெல்லாம் வருதிகளைச் சொல்லி விட்டார்’ வளப்பம்: தகுதி. ‘ஓடக்காரனை அழைத்து அவனுட வளப்பமினிப் பார்ப்போம்’ வாசல்: சமூகம் என்பது போல உயர்ந்தாரைச் சுட்டும்பணிமொழி. ‘வாசல் பிரதானி’ வாகை: குதிரையின் கடிவாளம். ‘வாகையைத் தான்பிடித்துக் குதிரையை மல்லாக்கத் தானிழுத்தான்’ விசனம்: வசனம். ‘வாய் விசலம். வாய்ச்சொல். ‘வீரமலை என்றுசொல்ல –அண்ணா நான் விசனமாய்க் கேட்டிருந்தேன்’. ‘வாமலை என்றுசொல்லி –இதனை- வாய்விசலம் கேட்டிருந்தேன்’ விபரம்: கபடுசூது. ‘வேளாளர் வமிசத்தில் விபரம் தெரியாது காராளர் வமிசத்தில் கபடம் தெரியாது’ விளக்கம். ‘மேனாட்டு வேட்டுவர் விபரமது கேட்கிறார்கள்’ விழா: விளா. ஏர் சென்ற சால் ‘ஏரும் உழுதாச்சு கடைசி விழா தானிருக்க’ மிகைதிருத்தச் சொல். விரசு: விரைவு. ‘தன்னுடைய மெல்லியவாள் விரசுடனே தும்புவிட்டுப் பின்னோக்கி’ விருது: வாணவகைகள். ‘ராக்கெட்’ வெடிபோல. ‘அனுமந்தபால் விருது சூரிய பகவான் விருது வசவகடல விருது’ வெட்டிவேலை: கூலியில்லாத வேலை. வேலை செய்தவனுக்கு எவ்விதப் பயனும் இல்லாமல் பிறருக்குச் செய்தவேலை. ‘வீணான வீண்வேலை பொன்னாண்டார் –வெட்டிவேலை வாங்குகிறார்’ வேகாள் : வேவு+ஆள் ‘மேனாட்டு வேட்டுவருக்கு –நீ- வேகாளாய் வந்தவன்தான்’ ஆபரணங்கள், ஆடைகள் அல்லிக்கயிறு, உருமால், சோமன், த்ங்கதால் சருகுவார்த்த நிசார், பாகுகட்டி, வாகுவலயம். தும்பிப்பதக்கம்(வண்டின் வடிவாய் செய்யப்பட்ட பதக்கம்). துத்துத் துராய் (உருதுச்சொல்) முத்து முதலியவற்றால் செய்யப்பட்ட தலயணி வகை) . சல்லி(முத்துக்களாலான தொங்கல். வச்சிரமணித் தாவடம் (தாழ்வடம்) . வைரமணித் தாவடம். மாணிக்கப் பதக்கம். முத்துத் தாவடம். முத்துப் பதித்தமோகனமாலை. பச்சைக்கல் கடுக்கன். பசும்பொன் கணையாழி . கடதாரம். உடதாரம். கண்டசரம். வர்ணக்கச்சை. எண்ணெய்க்கச்சை. பட்டுச்சுங்கம். ஒட்டியாணம் பச்சிலைக்கடகம் பச்சை வடம் துப்பட்டி சால்வை. பனுதி. வீரதண்டை. .கச்சைமணி. கால்சிலம்பு. சூரியகாந்திப்பட்டு. படைக்கலன்கள் அம்பராத் தூணி(அம்பறாத்தூணி), வாங்குபிடி சூரி,  வளைதடி, சக்கரம், ஈட்டிக்கோல், வல்லயம், குறிஞ்சிக்கட்டி வல்லயம், எரியீட்டி, நேரிசம், பட்டா. சூரவாள்.  கேடயம். பரிசை. சீரா. சுருட்டு முஹ்துப்பட்டாசு. சம்புகத்தி. சமுதாடு(உருதுச் சொல்)ஜமேதார் என்னும் இராணுவ அதியாரிப்பெயர்த்திரிபு. சமுக்குலப் பட்ட (உருதுச் சொல். சமுக்குலா என்பது தொலைநோக்குக் கண்ணாடி. ) பட்டா தொலைதூரம் சென்று தாக்கி மிளும் சுருள் கத்தி. கண்டர்கோடாலி. கனதுண்டு தடி..    இசைக்கருவிகள் தம்பட்டம்: இது ‘நல்லெருது தம்பட்டம்’ என்பதால் எருஹின் மீது வைத்து முழக்கப்பெறும் ஒருவகை முரசு போன்ற தோற்கருவி. நாகசுரம்: நல்லெருத்துத் தம்பட்டம் நாகசுரம் பேரிகையும்’ நகரா என்ப்ஹு ஒருவகை முரசு. பேரிகை: யானையின்மேல் வைத்து முழக்கப் பெறுவது. ‘யானையின்மேல் பேரிகை அதிர்ந்து முழங்கினர்’ கிடுமுடி: ‘கொட்டும் கிடுமுடியும்’ ‘கடமடா’ என்னும் மகாராஷ்டிரச் சிறுபறை. கோவில்மேளதாளம்: புல்லாங்குழல், கொட்டு. எக்காளம்: சின்னம் Trumpet. நகார்: ஒட்டகை நகாரும்.’ ஒட்டகத்தின்மீதுவைத்துமுழக்கப்பெறும். ராயகெடி : ஒருவகை முரசு. ‘கெடி’ என்றால் கோட்டை. எனவே, இது கோட்டை மதில்மேல் வைத்து முழங்கப்பெரும் முரசு. கதை சொல்லும் பாங்கு                     நாட்டுப்புறக் கதைப் பாடகனின் சொற்களஞ்சியம் புலமைக் கவிஞனுடையதைப் போன்று அகன்று விரிந்ததன்று. என்றாலும், வளமானது. எளிய பேச்சு வழக்கிலுள்ளசொற்களைக் கையாண்டு நுண்ணிய கருத்துகளை வெளிப்படுத்துவதில் கதைப்பாடகனின் சொல்லாட்சித் திறன் சிறப்படைகிறது. கதைப்பாடகன் தன்முன்னிருக்கும் அவையினருக்காகவே கதை சொல்கிறான். எனவே, அவன் தன் கருத்துக்களைத் தன்முன் உட்கார்ந்து இருப்பவர்கள் அனைவருக்கும் தெளிவாகும் வகையில் அவர்கள் அறிந்த சொற்களில் கூறுகிறான்.  எனவே, சிலசமயங்களில் சொற்களின் நேர்பொருள் ஒன்றாகவும் அவை தொடரில் நிற்கும்பொழுது தொடராற்றலால் விளையும் பொருள் செறிவு மிக்க வேறொன்றாகவும் காணப்படுதலில் வியப்பில்லை.                  மனம் அடங்கி ஒருமைப்பட்ட தவநிலையைப் புலவர்கள் பல்வேறு திறத்தில் வெளிப்படுத்திப் பாடியுள்ளனர். தில்லையில் சுந்தர மூர்த்தி நாயனார் வழிபட்டபோது, ஐம்புலனுமடங்கிக் கருவிகரணங்கள் சேட்டையற்று ஒற்றுமைப்பட்டு நின்ற நிலையை, ‘ஐந்து பேரறிவும் கண்களே கொள்ள அளப்பருங் கரணங்கள் நான்கும் சிந்தையேயாக’ எனச் சேக்கிழார் எடுதுதுக் காட்டுகிறார். ‘ஒருமையுள் ஆமைபோல் ஐந்தடக்கல்’ என்று இந்நிலையைஉவமித்தார் திருவள்ளுவர். பெரியகாண்டியம்மன் தவமிருக்கையில் கண்ணின் புலனும் செவியின் புலனும் புறச்செயல் ஒன்றுமின்றி ஒற்றுமைப்பட்டு அடங்கி நின்ற தவநிலையைப் பிச்சன், ‘நட்ட கண்ணும் விட்ட செவியும் நாலுகையுமா யிருந்தாள்’ என்னும் தொடரில் உணர்த்திவிடுகிறார்.                    எடுத்துரைக்கும் பாங்கில் கதை நிகழ்ச்சிகளைமட்டும் கூறும் போது வெறும் கருத்து வாக்கியங்களையே கையாளும் கதைப்பாடகன், ’நெஞ்சுகொளின்’ அல்லது வெளிப்படையாகக் கூறுவதற்கு அரிய  உணர்ச்சிகளை வெளிப்படுத்த உருவகங்கள் அல்லது படிமங்களைக் கையாளுகிறார்.. திருமணமாகிப் பலவருடங்கள் கழிந்து, அறங்கள் பலசெய்து, தவமிருந்து , அருமையாகக் கிடைத்த பாலகன் குன்னுடையான் மூன்று வயதாகியும் ‘அம்மா அப்பா’ என்றுஅழத் தெரியாமலும் , ஐந்து வயதாகியும் அறிவு விளக்கமில்லாமலும்  இருத்தலைக் கண்ட கோலாத்தாக்கவுண்டர் தம்முடைய மகனின்நிலையை ‘ஊமைசெவிடு இது ஊதாத சங்கு’ என்கிறார். பையனின் பயனற்ற பிறப்பையும் தந்தையின் சொல்லரிய துயரத்தையும் இச்சிறு தொடரில் கதைப்பாடகர் உணர்த்தி விடுகிறார். ‘மங்குமசையன்’ என்ற சொல் கொங்கு நாட்டு வழக்கு ‘சூதுவாது கபடம் அறியாதவன்’ , அறிவு கூர்மையற்றவன்’ எனும் பொருளைத் தருவதாகும்.இதனைக் குன்றுடையானின் இயல்புணர்த்தும் இயற்சொல்லாகவும் , செல்லமாய்க் கடிந்து கொள்ளும் இரக்கக் குறிப்புடைய சொல்லாகவும் , பகைவர் கூறும் இழிசொல்லாகவும் கவிஞர் கையாளுகிறார். இதுவும், ஒரே சொல்லை இடம்நோக்கிக் கையாண்டு வேறுபட்ட பொருளுணர்ச்சிகளை வெளியிடும் கதைப்பாடகனின் கவியாற்றலுக்குச் சான்றாகும்.                       குடும்பத்தில் ஆண்குழந்தையும் பெண்குழந்தையும் பெறும் சிறப்புக்களைக் கவிஞர், ‘அம்பலத்துக்கு ஆணும் அடிக்கிளைக்குப் பெண்ணும்’ எனும் தொடரால் உணர்த்துகின்றார். ஆண், பொதுவாழ்வுக்கும் தலைமைச் சிறப்புக்கும் உரியவன். பெண், குடும்ப உறவுச் சிறப்புக்களுக்உ உரியவள். அடியிலிருந்து கிளைக்கும் தூறுகளால் புல்பூண்டுகள் பரவிப் படர்தல்போல் பெண்ணால் உறவுகள் படர்ந்து விரியும். உறவுகள் பந்த பாசத்துடன் பின்னிப் பிணைப்புண்டிருக்க வேண்டும். இதனைக் கொங்குநாட்டார் , ‘ஆல்போல் தழைத்து அருகுபோல் வேரூன்றி’ எனத் திருமணத்தின்போது மணமக்களை வாழ்த்தி வெளியிடுவர். குடும்பப் பிணைப்புக்கு ஆண், பெண் இருபால் குழந்தைகளும் தேவை எனும் உண்மை, ‘அம்பலத்துக்கு ஆணும் அடிக்கிளைக்குப் பெண்ணும்’ எனும் தொடரால் உணர்த்தப்படுகிறது.                  தாமரை, தானும் கணவனும் மூத்துவிட்ட நிலையைக் ‘காய்ந்த சருகானோம், கதிர்பழுத்த கம்பானோம்’ என்று கூறுகிறாள். இழிந்த வனான தட்டான் பின்னர் சத்தியத்துக்குக் கட்டுப்பட்டுப் போகும் நிலையைப் பொன்னர், ‘சிக்கினேண்டா உன்கையில் –ஒருவாக்கினால் – சிரசு உட்பட்டேனடா, கட்டுப்பட்ட மான்போலே சிக்குப்பட்டுப் போனேண்டா’ என்கிறர். இவைபோன்ற உருவகங்கள் உவமைகள் வாயிலாகப் பாத்திரங்களின் உணர்ச்சிகளை வெளிப்படுத்தலில் கவிஞரின் ஆற்றல் நன்கு வெளிப்படுகிறது.                 ‘ஆனிஅரையாரு தலையாடி முழப்பெருக்கு’, ‘தவிடுவிற்கும் செட்டியவன் தனக்கோடி யாகிவிட்டான்’, இவளழகைப் பார்த்தாலோ ஆதிலட்சுமியைத் தோற்கடிக்கும் அவனைப் பார்த்தாலே ஆடுமேய்க்கும் பேய்க்கருப்பன்’, , அவன் ஆணாய்ப் பிறந்ததினால் அதிகவினை தானினைந்தான் நாம்பெண்ணாய்ப் பிறந்ததினால் – தாயே- பொறுக்கயினி வேண்டுமம்மா’, ‘நாடுகொள்ளை போனால் நமக்கென்ன போகிறது’, ‘வலிய உறவுபண்ணி வம்புசண்டை கொள்ளாதே’, விதிகளையும் வென்றுதான் விலக்கவும்கூடுமோ’,’ என நாட்டுப்புறமக்களீன் பட்டறிவு பழமொழிகளாக இக்காப்பியத்தில் ஆளப்பட்டுள்ளன.            குற்றம் செய்தவனைக் கையோடு பற்றிவர ஏவும்போது, ‘அங்கே பிடிக்கும்சிகை இங்கே கொண்டுவாடா’, எனல், மகிழ்ச்சியால் பூப்பதை,’ ஒருபுஜம் இருபுஜமாய்’, எனல்,பணிக்கு ஆண்கள் அனைவரும் வரவேண்டும் என ஆணையிடும்போது,’ அரைஞாண் கட்டும் ஆண்பிள்ளையுள்ள தெல்லாம் ‘ எனல்,சத்தியம் முன்ன்முறை கூறுதல்,’ ஒருதரம் சத்தியந்தான் உலகத்துக் கேற்காது’ எனல், போட்டியில் முதலாட்டத்தைப் ‘பிள்ளையார் ஆட்டம்’ எனல், பிராமணருக்குக் கெடுதி செய்தலாகாது என்பதனை,’ ஐயர் பாவம் பொல்லாது’ எனல்,தொல்லை கொடுக்கும் வீரமற்ற கும்பலைக், ‘காக்காக் கூட்டம்’ எனல், இவைபோன்ற நாட்டார் சொல்வழக்குகள் இக்காப்பியதிற்குச் சுவை கூட்டுகின்றன.               நாட்டுப்புற மக்களிடம் வழங்காத அரிய சொல்லாட்சிகளும் இக்காப்பியத்தில் உள்ளன. தெய்வாவேசம் வந்து மயங்கிய சங்கர் மீது போர்த்திய துணி ‘கௌசனை’ எனப் பெயர் கூறப்படுகிறது. ஆடை அணிகலன்களின் பெயர்கள் , அரசனளிக்கும் விருதுகள், சடங்குமொழிகள் முதலியன இக்காலத்து வழக்கில் இல்லாதன. சஞ்சுவம், சலகிருது போன்ற சொற்களும் அரியனவே.                      மங்கல வழக்குப் புணர்த்தல் கவிஞனுடைய சிறப்புக்களில் ஒன்றாகும். தீயவற்றைத் தம் வாயால் சொல்லப் பெரியோர் அஞ்சுவர். அதைச் சொல்லியாக வேண்டிய தருணத்தில், அதற்குரிய சொல்லால் சொல்லாமல் வேறு தக்க சொல்லால்  அக்கருத்தைப் புலப்படுத்தி விடுதல்ஆன்றோர் மரபு. குன்றுடையானும் தாமரையும் தன்னிடம் கொடுத்திருந்த அவர்களுடைய சொத்துக்களைக் கவர்ந்துகொண்டு, தாமரையை வைப்பாட்டியாகக் கவர வேட்டுவப் பட்டக்காரன் திட்டமிட்டுச் செயல்படுகிறான். இந்தப் பழைய நிகழ்ச்சியைத் தாமரை தன் பிள்ளைகளாகிய அண்ணன்மாரிடம் கூறுகிறாள். அப்போது வேட்டுவன் செயலை அதற்குரிய சொல்லாற் கூறக் கூசி, ‘பணத்தை எடுத்துக் கொண்டு பாதகம் செய்துவிட்டான்’ என்று மட்டும் கூறுகிறாள். பொன்னர் உறங்கும்போதுஅவர்தலைமேல் கல்லைப் போட்டுக் கொன்றுவிடத் தட்டான் எண்ணுவதை ,அதற்குரிய சொல்லாற் கூறாது, ‘பொன்னருட பூமுடிக்குப் பூச்சூட’ அவன் எண்ணினான் என்று கவிஞர் கூறுகிறார். மங்கல வழக்குப் புணர்த்தலில் நாட்டுப்புறக் கவிஞனுக்கு இருந்த நம்பிக்கை நம் நாட்டுக் கவிமரபின் வழி வந்ததல்லவா?                               புதிய கருத்தை வெளியிடப் புதிய சொற்களைப் படைத்துக் கொள்ளும் ஆற்றலையும் இக்கவிஞனிடம் காண்கிறோம். பொன்னரைச் சோழன் ,’விலங்கில்லாக் காவல் வெயில்காவல்’ வைத்தானாம். சிறையில் வைத்துப் பூடாமல் ,’விலங்கில்லாக் காவல் வெயில் காவல்’ வைத்ததாகக் கூறுவது திறந்தவெளிச் சிறைச் சாலையை நினைவூட்டுகின்றது அல்லவா?                   14ஆம் நூற்றாண்டில் விஜயநகரப் பேரரசு நிறுவப் பெற்று, அதன் செல்வாக்குத் தென்னகம் முழுவதும் பரவியது. தெலுங்கு மொழி நாயக்கமன்னர்களின் ஆட்சியில் அரசியல் மொழியாகவும் விளங்கியது. மராட்டியர்கள் தமிழகத்தில் 1766 முதல் 1800 வரை ஆண்டனர். இவ்வாறு முகமதியர், நாயக்கர்கள், மராட்டியர் முதலிய பிற மொழியாளர் ஆட்சிக் காலங்களில் கதைப்பாடல்கள் மக்கள் இலக்கியங்களாக மக்கள் மொழியில் வடிவெடுத்தமை தமிழ் இலக்கிய வரலாற்று உண்மை. எனவே, அக்காலத்தில் வழக்கிலிருந்த பிறமொழிச் சொற்கள் பல நாட்டார் இலக்கியத்திலும் கலந்து விட்டன. ‘அண்ணன்மார்சாமி கதை’ நாடாட்சி உரிமையுடன் வாழ்ந்த மேற்குடிமக்களின் காப்பியமாதலின் இதில் இடம்பெற்றுள்ள பிறமொழிச் சொற்கள் பலவும் அக்கலத்து மேற்குடி மக்களின் உடை, அணிகலன், அதிகாரம், கோட்டைகொத்தளம், சாதிப்பெயர்கள் போன்றனவேயாம்.                         வாய்பாடு அடுக்குகள் , மீள்கருத்துக்கள் (Repetitions and themes)                        அண்ணன்மார்சாமிகதையில் பூசனை வழிபாடுகள், காற்று மழை வருணனை, நாடு மலை வருணனை , நாடு மலை கடந்து செல்லல், பிள்ளைப் பேறு, பிள்ளை வளர்த்தல், வஞ்சினம் கூறுதல், ஆடைஅணிகலன் பூணல்., படைக்கலம் தரித்தல் சண்டை நிகழ்ச்சிகள், பெரியோரை நினைத்துச் செயல்படுதல், பெரியோரை வணங்குதல், விருந்து உபசாரம் இவைபோன்ற வருணனைகளும் நிகழ்ச்சிகளும் பலமுறை இடம்பெறுகின்றன. இந்த நிகழ்ச்சிகளும் ஒத்த சொல்லமைப்பில் வாய்பாட்டுத் தொடர்களாலேயே அமைந்துள்ளன. இவைவாய்பாட்டுத் தொடர்களால் பலமுறை கூறப்படுதலால்  மீள்கருத்துக்கள்  (themes)என்று குறிக்கலாம்.                  ஒருசெய்யுளில் முன்னர் வந்த சொல்லாவது பொருளாவது பின்னர்ப் பலவிடத்தும் வந்தால் அதனைப் ‘பின்வருநிலை அணி’ எனும் அலங்காரமக அணி இலக்கண நூலர் கூறுவர். சொற்பொருட் பின்வருநிலை அணியும் அண்ணன்மார்சாமிகதையில் இடம்பெறும் வாய்பாடு/அடுக்குகள், மடக்குகள் ஆகியன தோற்றத்தி ஒற்றுமை உடையன போலக் காணப்படினும் இவற்றினிடையே அடிப்படை வேறுபாடு உண்டு. புலமைக் கவிஞரின் அறிவார்ந்த திட்டத்திபடி தீட்டப்பெறுவன அணிநலத் தொடர்கள். பாமரக் கதைப் பாடகனின் படைப்பில் ‘அழகு’, ‘அணி’ என்ற முன் திட்டம் எதுவும் இல்லை. அவையினருக்குக் கதை கேட்பதில் இயல்பாக அமைவனவே வாய்பாடுகளாகிய அடுக்குகளும் மடக்குகளும்.                     மீள்கருத்துகளும் மடக்கு/ அடுக்குகளும் வாய்பாட்டுத் தொடர்களால் அமையப்பெற்றனவே யெனினும்  இவ்விரண்டும் வேறு வேறு இயல்புடைய உறுப்புக்களாகும்.                   மடக்கு/ அடுக்கு வாய்பாடுகள் யாப்படியுடன் தொடர்புடையன. யாப்படியை நிறைத்தலே இவற்றின் பயன்பாடு. ஆனால் மீள்கருத்து யாப்படியைக் குறித்ததன்று; பாடுபொருள் குறித்தது. இது பாடும் கவிஞனின் ஆற்றலுக்கும் தேவைக்கும் சூழலுக்கும் ஏற்ப விரிந்தும் குறுகியும் அமையும். மீள்கருத்து ஆட்சி                            அண்ணன்மார்சாமி கதையில் காணப்படும் மீள்கருத்துக்க்ள் யாவற்றையும் தொகுத்துக் காட்ட வேண்டிய தேவையில்லை. ஆனால், அவற்றைக் கதைப்பாடகன் எவ்வாறு தன்படைப்பில் கையாளுகிறான் , அவை எவ்வாறு கதைப் பாடகர் அனைவருக்கும் உரிய பொதுச் சொத்தாகிறது என்பதனை அறிய வேண்டும்.                        அண்ணன்மார்சாமி கதையின் பொன்னி வளநாட்டுவளம் வருணனை ஒரு மீள்கருத்தாக அமைந்துள்ளது. இதனை, இந்தக் கதையின் வேறுமூன்று வடிவங்களுடன் ஒப்பிட்டுப் பார்க்கும்போது. வேறு விவரங்களும் அறிய வருகின்றன.  1. இந்த நான்கு வடிவங்களிலும்நாட்டுவளம் கூறுதல் மீள்கருத்தாக உள்ளது. 2. சிலவரிகள் நான்குவடிவங்களிலும் ஒத்துள்ளன. 3. சிலவரிகள் அரையடிமட்டுமே ஒத்துள்ளன.  4. சிலவரிகள் முழுவதும் வேறுபடுகின்றன.            மலட்டுத்தனம், பிள்ளைப்பேறு பற்றிய மீள்கருத்துக்கள் அண்ணன்மார்சாமி கதையில் மூன்றிடங்களில் வருகின்றன. தாமரை தன்னுடைய குறையைக் கணவனிடம் கூறும்போதும், தாமரையை அண்டி வாழும் அனைத்துயிரும் மலடாகக் காணப்படுதலைக் கவிஞர் தம்முடைய கூற்றாகக் கூறும்போதும், தாமரையும் குன்றுடையானும் எத்தகைய தானதருமங்களைச் செய்தும் குழந்தைப்பெறு அடையாமைக்குத் தாங்கள் வருந்தும்போதும்  இம்மீள்கருத்துக்கள் கொண்டபகுதிகள் வருகின்றன. பொன்னர் சங்கர் கதையில் மூன்றிடங்களில் 16 வரிகளிலும் பொன்னழகர் அம்மானை என்னும் கள்ளழகர் அம்மானையில் 7 வரிகளிலும் இக்கருத்துக்கள் வருகின்றன.                    இந்த மீள்கருத்துஅமைந்த தொடர்களுடன் ஒத்ததொடர்கள்சில இக்கதைக்குச் சற்றும் தொடர்பில்லாத அல்லியரசாணிமாலை வன்னியராசன் கதை, வன்னியடி மறவன்கதை ஆகியவற்றிலும் உள்லன. நாட்டுவளமும் கதைத்தலைவர்களின் பிறப்புக்கு முன் தாயின் மலட்டு நிலையும் பிள்ளைப்பேறும் தமிழ்நாட்டுக் கதைப்பாடல்கள் பலவற்றிலும் காணப்படும் பொதுவான மீள்கருத்துக்களாகலின், இவை கால, நில எல்லைகளைக் கடந்து தமிழகம் முழுவதும் பரவியிருந்தன எனலாம். மேலும் , கதைப்பாடகர் எந்தக் கதையைப் பாடினாலும் உரிய சூழலில் எல்லாக்கதைகளுக்கும் பொதுவான இந்தத் தொடர்களை எடுத்தாண்டு கொண்டனர் என்பதையும் அறிந்துகொள்ளலாம்.                  அண்ணன்மார்சாமி கதையைப் பாடிய பிச்சன், மீள்கருத்துக்களைத் திறம்பட எடுத்தாளுவதில் தம்முடைய தனித்தன்மையைக் காட்டுகிறார்.                  அண்ணன்மார்சாமிகதையில் , மலடு பற்றிய மீள்கருத்து, தாமரை, தனக்குப் பிள்ளையில்லாக் குறையை நினைந்து ஏங்குதல்,  தன்னுடைய மனக்குறையைக் கணவனிடம் கூறி வருந்துதல், செல்லப்பிரானிகளை வளர்த்தால் மகப்பேறு கிட்டும் என்ற நம்பிக்கையில் பன்றிக் குட்டிகளை வளர்த்தல், பங்காளியரின் குழந்தைகளைக் கண்டு தன் மனக்கவலையைப் போக்கிக் கொள்ளலாம் என்னும் எண்ணத்தால் அவர்களிடம் சென்று அவமானப்படல், வீட்டில் தன்னைச் சுற்றியிருக்கும் உயிர்கள் அனைத்தும் மலடாகக் காணல், மதுக்கரைச் செல்லாயிக்குத் தேரோட்டம் நடத்தினால் மகப்பேறு கிட்டும் என்று தேரோட்டம் நடத்துதல், தேரோட்டத்திற்குத் தடையேற்படல், என்னதருமம் செய்தும் பிள்ளையில்லையே என்னபாவம் செய்தேமோ என்று கலங்கல், பொன்னம்பலதிற்குச் சென்று தவம் இருந்தால் பிள்ளைப்பேறு கிட்டும் எனப் பஞ்சாங்க வேதியர் ஒருவர் கூறல், தாமரைத் தம்பதியர் பொன்னம்பலம் சென்று சன்னாசியார் ஒருவரைக் கண்டு பாதம் பணிந்து தொண்டு செய்தல், சன்னாசியார் வரமளித்தல்,மகப்பேறு எய்தல் எனக் கதைப்போக்கோடு விரிந்து நீண்டு செல்லுகின்றது. இது கதைப் பாடகனின் கதை சொல்லும் திறமைக்குச் சான்றாக விளங்குகின்றது                          கதைப்பாட்டை நீட்டுவதற்கு வாய்பாட்டமைதி கொண்ட மீள்கருத்துக்கள் பெரிதும் பயன்படுவதை அண்ணன்மார்சாமி கதையில் காணலாம்.                    தங்கை வீரமலையில் அண்ணரின் படுகளத்தைத் தேடிப் புலம்பிக்கொண்டு வருகிறாள். அவளுடைய புலம்பல் அங்குத் தவமிருக்கும் பெரியகாண்டியின் அமைதியைக் குலைக்கின்றது.சினங்கொண்ட பெரியகாண்டி தன் தியானத்தைக் கலைத்தவரைக் கொல்ல எண்ணுகிறாள். முதலில் மலைவனத்தில் வாழுகின்ற மந்தியண்ணன் வருகின்றான். பெரியகாண்டி தங்கையைக் கொல்ல மந்தியண்ணனை ஏவுகின்றாள். பெரியகாண்டியின் தவத்தைக் கலைத்தவரைக் கொல்லக் கடுஞ்சினத்துடன் மந்தியண்ணன் விரைகிறான். தங்கை புலம்புவது மந்தியின் தாழ்செவிக்குக் கேட்கிறது. உடனே, ‘எப்பாவம் செய்தாலும் இப்பாவம் ஆகாது பெண்பாவம் கொன்றால் நமக்குப் பிழைதீர நாட்செலுமே’ என மனம் இரங்குகின்றான். தங்கையின்மேல் பரிதாபம் கொண்டு அவள் நடந்துவரும் வழியைக் ‘குழைமுறித்துத் தூர்த்துத்’ தூய்மையாக்குகின்றான். மந்தி திரும்பி வராததைக் கண்டு, பெரியகாண்டி வேங்கை, வரிப்புலி, நாகப்பாம்பு, யானை, வீரமகாமுனி ஆகியவற்றை அனுப்புகிறாள். அவையும் மந்தியண்ணனைப் போலவே தங்கையிடம் பரிவு கொண்டு பணிவிடை செய்கின்றன. அம்மன் இவற்றை ஏவும் மொழிகளும், அவை  சினத்துடன் தங்கையைக் கொல்ல விரைவதும், தங்கையின் இரங்கத் தக்க கோலமும் , அவளைக் கண்டு இவை இரக்கம் கொள்வதும் , அவளுடைய உடற் களைப்பைப் போக்க அவை அவளுக்குப் பணிவிடை செய்வதுவும் மீள்கருத்தாகவும் வாய்பாடமைதி கொண்டனவாகவும் அமைந்துள்ளன தேவைப்பட்டால் முன் கூறிய விலங்குகளேயன்றி இன்னும் சிங்கம், கரடி முதலிய விலங்குகளை அனுப்பியதாகவும் அவையும் தங்கை மேல் இரக்கம் கொண்டு அவளைக் கொல்லாது விட்டதோடு பணிவிடை செய்தன என்று முன் கூறிய வாய்பாட்டுத்தொடர்களை வைத்துக் கொண்டே கதைப்பாடகன் கதையோட்டத்தைத் தடுத்து நிறுத்தலாம். அல்லது, இவற்றை முழுமையாக விலக்கிவிட்டாலும் கதையோட்டத்திற்குக் குறையொன்றும் ஏற்படுவ தில்லை. எனவே, மீள்கருத்துக்களும் மடக்குகளான வாய்பாடுகளும் கதையோட்டத்தை ஒருகுறிப்பிட்ட கட்டத்தில் நிறுத்துதற்கே கதைப்பாடகனால் பயன்படுத்தப்படுகின்றன என்பது தெளிவாகும்.               கதைப்பாட்டில் மீள் கருத்து எத்தகைய இடத்தைப் பெறுகின்றது என்பதை மற்றுமொரு சான்று கொண்டும் விளக்கலாம். குமரிமவட்டத்தில் வழங்கும் வன்னியடிமறவன்கதை 452 வரிகளைக்கொண்டது. இதில், முதல் முப்பத்திரண்டு வரிகள் காப்பு, நாட்டுவளம், கதைத் தலைவனின் பெற்றோர், அவர்களின் திருமணம். ஆகியன கூறப்படுகின்றன. 23 முதல் 424 அடிவரை குழந்தைப் பேறு பற்றி வாய்பாடு அமைப்பில் அமைந்த மீள்கருத்தே விரிவாக அமைந்துளது. 425முதல் 452 வரிகள் முடிய 27 வரிகளில்தான் கதையின் நிகழ்ச்சி கூறப்படுகின்றது. எனவே, திறமை மிக்க கதைப் பாடகனுக்கு மீள்கருத்தை நீட்டி விரித்துப் பாடியே கதையை நீட்டி நிறைவு செய்ய இயலும் என அறிந்து கொள்ளலாம் வாய்மொழி காப்பியம் (Oral Epic).                             அண்ணன்மார்சாமிகதையில் காணப்படும் வாய்பாட்டு அமைப்புகளான மீள்கருத்துக்கள், மடக்குகள்/அடுக்குகள் இந்நூலின் தோற்றப் பண்பினை நன்கு விளக்குவன. இவை வாய் மொழி இலக்கியத்திற்கே உரியன; செம்மை இலக்கியத்தில் காணப்பெறாதன என்பதோடு, கூறியது கூறல், மற்றொன்று விரித்தல்,மிகைபடக் கூறல் முதலிய குற்றங்களாகவும் கருதப்படும்.               வாய்மொழிக் காப்பியம் இவற்றை முழுமையாகப் பயன்படுத் துவதற்குக் காரணம் உண்டு. இவற்றால்தான் வாய்மொழிக் காப்பியம் படைக்கப்படுகின்றது. இதனை விளக்குவதே ‘வாய்மொழி வாய்பாட்டுக் கொள்கை’.இக்கொள்கையின்படி, ‘வாய்மொழிக் காப்பியம் ‘ என்னும் சொல்லாட்சி சிறப்பான தனிப்பொருள் உடையது. பாடும்போதே படைக்கப்படும் இலக்கிய வகையைத்தான் இச்சொல்லாட்சி குறிக்கின்றது. பாடும்போதே படைப்பதற்குக் கதைப்பாடகனுக்குத் துணை புரிவது, வாய்மொழிக் காப்பியத்தின் யாப்பமைதியேயாகும். கதை பாடுவதை தம் குலத்தொழிலாகக் கொண்ட கதைப் பாடகர்களால் மாபு வழி உருவாக்கப்பட்ட ‘பாட்டுக் கட்டும்’ முறையே வாய்மொழிக் காப்பியத்தின் யாப்பமைதியை உருவாக்குகின்றது.               பாமரக்கதைப் பாடகனின் பாட்டுக் கட்டும் முறை உலகெங்கும் இரண்டு இயல்புகளைப் பொதுவாகக் கொண்டிருத்தலை ஆய்வாளர்கள் கண்டுள்ளனர். அவையாவன: 1. வாய்பாடுகளால் யாப்படியைப் படைத்தல். 2. மீள்கருத்துக் களை வாய்பட்டுத் தொடர்களால் அமைத்துக் கதை வடிவத்தை விரிவுபடுத்துதல். 1960ல் ஏ.பி. லார்டு தம் “கதைப்பாடகர்” எனும் நூலில், கதைபாடுவதைக் குலத்தொழிலாகக் கொண்ட கதைப்பாடகர்கள், தாம் நினைத்த மாத்திரத்தில் ‘ஆசுகவி’ களாகக் கதைப்பட்டைப் பாடும்போதே க்அட்டும் வல்லமை படைத்தவர்களாக இருத்தலையும் அவர்கள் அவ்வாறு இருசெயல்களையும் ஒருசேரச் செய்வதற்குக் கையாண்ட உத்திகளையும் கண்டு தெளிந்து வெளியிட்டார்.வாய்மொழிக் காப்பியங்களாய்வுக்கு அடிப்படையான ‘வாய்மொழி வாய்பட்டுக்கொள்கையை’ வகுத்து வெளியிட்டவர் இவரே. சங்கச் சான்றோரின் புறப்பாடல்களை ஆய்ந்த க. கைலாசபதியும் , தோடர்களின் வாய்மொழி இலக்கியத்தை ஆய்ந்த எமனோவும் லார்டு உருவாக்கிய ‘வாய்மொழி வாய்பாட்டுக்கொள்கையையே’ கருவியாகக் கொண்டனர்.                 அண்ணன்மார்சாமி கதை மேற்கூறிய சான்றுகளின் அடிப்படையில்,  ‘வாய்மொழி வாய்பாட்டுக் கொள்கை’க்கு முற்றிலும் பொருந்தி வருதலினால் , ஒருகாலத்தில் பிச்சன்கவியால் வாய்மொழி வழியே படைக்கப் பட்டுப் பின்னர் , ஆர்வமுடைய ஒருவரால் ஏட்டில் எழுதிவைக்கப் பெற்றது என முடிவு செய்யலாம். வாய்பாட்டமைப்புக்களின் நடைமுறைப் பயன்              வாய்பாட்டமைப்புகள், மீள்கருத்துக்களாகியன காப்பிய அமைப்புடன் ஒட்டியிருந்தாலும் , கதைப் போக்கிற்கு இன்றியமையாதன அல்ல; இவையின்றியும் கதை நடக்கும். எனினும், இவை கதைப்பாடக னுக்கும் கேட்போருக்கும் நடைமுறைப்பயன் தருவனவாக இருக்கின்றன. செம்மை இலக்கியம் போலவன்றி, வாய்மொழிக் காப்பியம் அவையினர் முன் படைக்கப்படுகின்றது. கதைப்பாடகனே காப்பியத்தைப் படைப்ப வனாகவும் பாடுவோனாகவும் நடிப்பவனாகவும் உள்ளான். தன் படைப்பை எந்த அளவுக்கு ‘உணர்ச்சி பாவத்துடன்’ மெய்ப்பாடுகள் தோன்ற வெளியிடுகின் றானோ அந்த அளவுக்கு அவன் திறமையான கலைஞன் எனப் பாராட்டுப் பெறுவான். ஆரவாரமும் பரபரப்புமான அவையினரைக் கதைகூறும் தன்னுடைய ஆற்றலினாலேயே கதைப்பாடகன் ஒருமுகப்படுத்துகிறான்.               மனித மனம் நீண்ட நேரம் ஒருபொருளில் ஆழ்ந்திருக்க முடியாது. என்வே, தன் கூற்று வழி அவையோரின் கவனத்தை நீண்ட நேரம் பற்றி நிறுத்தல் கதைப்பாடகனுக்குச் சிரமமான பணியாகும். அதோடு, ஒருமுறைக்கு மூன்று அல்லது நான்குமணிநேரம் தொடர்ந்து புதிதகப் படைத்துக் கொண்டே யிருத்தல் திறமையான கலைஞனுக்கும் அரிதே.   எனவே, அவன் தன் தொடர்ந்த படைப்பு முயற்சிக்குச் சற்று ஓய்வளிக்கும் வகையில் தக்க இடங்களில் வாய்பாட்டமைப்பில் அமைந்த கூற்றுக்கள், தொட்ர்கள், மீள்கருத்துக்கள் முதலியவற்றைபயன்படுத்திக் கொள்கிறான். இந்த இடைவெளிக்குப் பின் மீண்டும் படைக்கும் செயலில் ஈடுபடுகிறான்.அவையின்ரும் வாய்பாட்டமைவுகளால் பயன் பெறுகின்றனர்.                  வாய்மொழிக் காப்பியத்தில் மீண்டும் மீண்டும் தோன்றும் மீள்கருத்துக்களும் தொகுப்புக்களும் பட்டியல்களும் அவற்றை உருவாக்கும் வாய்பாட்டுத் தொட்ர்களும் கதையோட்டத்தைச் சற்று நிறுத்தி, அவையினரைப் பாத்திர வருணனையிலும் நிகழ்ச்சி வருணனையிலும் தோயச் செய்கிறது. பலமுறை கதை கேட்டுப் பழகியவருக்கு இவ்வாய்பாட்டமைப்புகள் ஏற்கேனவே அறிமுகம் ஆனவையே. இந்த நிலையிலும் இவர்களுக்கு ஒரு பயன்பாடு உண்டு. இவர்கள் கதையில் செல்லும் தங்கள் கவனத்தைச் சற்று தளர்த்தி, நினைவுக்குச் சற்று ஓய்வளிக்கிறார்கள். பின் மீண்டும் கதையில் முழுக்கவனம் செலுத்துகிறார்கள்.                 மக்கள் கதையைப் பலமுறை கேட்ட பழக்கத்தால், ஏற்கெனவே தாம் அறிந்து வைத்துள்ள சொற்றொடர்களையும் மீள்கருத்துக்களையும் கதைப் பாடகன் பாடக் கேட்டு மகிழ்கின்றனர்.அவற்றை நன்கு அறிந்தவர்கள் , கதைப்பாடகன் பாடும்போது தாமும் அவனோடு உடன்பாடி மகிழ்கின்றனர். மற்றையோர் அவற்றை நினைவுகொள்வதில் ஒருவகை உற்சாகம் அடைகின்றனர். இவ்வாறு வாய்பாட்டமைப்புகள் அவையினரின் முனைப்பான கவனத்திற்குச் சற்று ஓய்வளித்தாலும் , கதைப்பாடகனின் பிடிப்பிலிருந்து முழுதும் அகன்று விடாமல் தடுத்து மீண்டும் தன் வயப்படுத்திக் கொள்ள அவனுக்கு உதவுகின்றது.