[] []     அகிம்சா மூர்த்தி அமேரிக்கா பாமரன்     அட்டைப்படம் : N. Sathya - experimentsofme@gmail.com  மின்னூலாக்கம் : சீ.ராஜேஸ்வரி -  sraji.me@gmail.com  வெளியீடு : FreeTamilEbooks.com    உரிமை :  Creative Commons Attribution–ShareAlike  உரிமை – கிரியேட்டிவ் காமன்ஸ். எல்லாரும் படிக்கலாம், பகிரலாம்.                            உள்ளடக்க அட்டவணை 1. நதியின் நிறம் சிவப்பு 9  2. எட்டு எட்டா மனுசன் வாழ்வ பிரிச்சுக்கோ !  17  3. வல்லவனுக்கு வல்லவன் 26  4. போலிகளைக் கண்டு ஏமாறுங்கள்! 34  5. சொன்னால் பொய் பொய்தானே! 40  6. கர்த்தரே கொஞ்சம் டாலரை நேசியும்  46  7. எல்லாம் வல்ல ஒசாமாவின் பெயரால்  53  8. அமெரிக்க 'வளர்ப்புமகன்கள்'  57  9. Coupபாண்டவரான போப்பாண்டவர்  63  10. (அமெரிக்கத் தூதர்)  ஆலயம் தொழுதல் சாலவும் நன்று ...  69                                                  'அகிம்சாமூர்த்தி' அமெரிக்கா []   பாமரன்   என்னை உயிர்ப்புடன் வைத்திருக்கும் தோழமைகளுக்கு..     []   முன்னதாக...      []   செப்டம்பர் தாக்குதல் முடிந்து சரியாக ஒரே வாரத்தில் இந்தத் தொடரில் வரும் செய்திகளையெல்லாம் சுமந்தவாறு எனது கடிதங்கள் ஒவ்வொரு பத்திரிக்கை அலுவலகத்தின் கதவையும் தட்டியபடி...  இத்தொடரை கண்ட அந்த பிரபல வார இதழ்கள் ஏதோ தங்கள் மீதே விமானத் தாக்குதல் நடந்ததைப் போல எண்ணி நடுங்கின.  ஒரு இதழின் ஆசிரியர், '.................. எழுதிக் கொண்டிருக்கிறாரே .... அது முடிந்ததும் வைத்துக் கொள்ளலாமா?' என்றார்.  இன்னொரு இதழ் கையெடுத்தே கும்பிட்டுவிட்டது. கடைசியாக ஒரு இதழின் ஆசிரியர் சொன்னார்:  ’ஒருவேளை உங்கள் தொடர் வந்து கொண்டிருக்கும் வேளையில் தப்பித் தவறி ஒசாமா ஆந்த்ராக்ஸை ஏவி பல்லாயிரம் பேர் பலியாகி Anti Sentiment ஆகிவிட்டால் என்ன செய்வது? கொஞ்ச நாள் கழித்து ஆரம்பிக்கலாமா?' என்றார். ஆனால் கண்ணை மூடித்திறப்பதற்குள் இரு நாடுகளது வான்வெளியில் அமெரிக்காவின் ஏவுகணைகள். சமாதானப் புறாவின் சிறகுகளை சுவைத்தபடி..... அந்த வருத்தம் தோய்ந்த வரலாறுதான் இன்று தமிழர் கண்ணோட்டத்தின் வாசகர்களுக்கென வலம் வர இருக்கிறது.  ''அப்பா அமெரிக்காவே தீப்பத்தி எரியுது, டீவில காட்டுறாங்க வந்து பாரு" என்று அலறினான் மகன். மேல் வீட்டு மாடியிலிருந்து.  அமெரிக்காவாவது தீப்பற்றுவதாவது?  ஒருவேளை கம்ப்யூட்டர்களில் வடிவமைக்கப்பட்ட கண்டம் விட்டு கண்டம் தாவும் ஏவுகணைகளில் ஏற்பட்ட கோளாறோ ?  அல்லது லாஸ் ஏஞ்சல்ஸில் நிகழ்ந்தது போல கருப்பர்களது மற்றுமொரு எழுச்சியோ?  பரபரப்பினூடே படிக்கட்டுகளில் பாய்ந்தோம்.  பார்த்தால்...  “அமெரிக்க பயங்கரம் குறித்த சிறப்புச் செய்திகள் இன்னும் சில நொடிகளில்..” அமெரிக்காவிலாவது.. பிறர் நாசவேலைகளில் ஈடுபடுவதாவது..? நம்ப மறுத்தது மனம்.  தனியொரு அமெரிக்கன் விமானத்தில் பாய்ந்து வளைகுடா நாடுகளையே சுற்றி வளைத்துச் சூறையாடும் "ட்ரூலைஸ்" வந்து போனது நினைவில்..  தனியொரு அமெரிக்க "ரேம்போ” ஒட்டுமொத்த அமெரிக்கப் படைகளையே தனது ரௌத்திரத்தால் துவம்சம் செய்யும் "First Blood" நினைவில் வந்து போனது...  ரஷ்யக் குத்து சண்டை வீரர்களையே பந்தாடும் சில்வர் ஸ்டோலன் வந்து போனார் நினைவில்......  "சிறப்புச் செய்திகள் : இன்று காலை 8.20 மணியளவில் நியூயார்க் நகரிலுள்ள உலக வர்த்தக மையக் கட்டிடத்தின் மீது ஒன்றன் பின் ஒன்றாக இரு விமானங்களை மோத வைத்ததில் ட்வின் டவர்ஸ் எனப்படும் அவ்விரு கட்டிடங்களுமே இடிந்து தரைமட்டமாயின இதில்.."  என விரிந்து கொண்டே போனது செய்தி. அதிர்ச்சியிலும் ஆச்சர்யத்திலும் திறந்த வாய் மூடாதிருந்தது.  எனக்கு நினைவு தெரிந்து கடந்த முப்பது வருடங்களாய்ப் பார்த்த  தி டே ஆப் த ஜேக்கால் விசிடிங் ஹவர்ஸ்  மணிரத்னத்திடமிருந்து அமெரிக்கர்கள் 'சுட்ட' கிளிப் ஏங்கர்.  இண்டிபெண்டன்ஸ் டே என அனைத்துப் படங்களுமே பொய்யாகிப் போயின நொடிப்பொழுதில்  கட்டிடத்தின் புழுதி அடங்குவதற்குள் புரளிக்கு மட்டும் பஞ்சமில்லாமல் போனது.  இச்செயலைச் செய்தது. ஜப்பானிய செஞ்சேனை.? இல்லையில்லை பாலஸ்தீனியப் படைகள்தான்... அதுவுமில்லை ... ஒசாமா பின்லேடன் தான்... கிடையாது.  நிற ஒடுக்கு முறைக்கு ஆளான உள்ளூர் ஆட்களாகவும் இருக்கலாம்...  எதுவும் புரிபடவில்லை அவ்வேளையில்...  ஒன்று மட்டும் புரிந்தது: நிறத்தின் பேராலோ... மதத்தின் பேராலோ.. தத்துவத்தின் பேராலோ... வர்க்கத்தின் பேராலோ.. ஒடுக்கப்பட்ட அல்லது 'நாகரீகமாக' வேறு வார்த்தைகளில் சொல்வதானால்... ஒடுக்கப்பட்டதாக நம்பவைக்கப்பட்ட ஒரு குழு மட்டுமே இதை செய்திருக்க முடியும் என்பதுதான்.  அது .. எது ?  அவரவர்கள் அவரவர்களது உள்ளூர் எதிரிகளுக்கேற்ப இதையொட்டி கயிறு திரித்துக் கொண்டார்கள்.  இந்தியாவுக்கு ஐ.எஸ்.ஐ. பாகிஸ்தானுக்கு ரா... வளைகுடாவுக்கு ஈராக்...  எனத் தொடங்கி தனக்குக் கடன் கொடுக்காத டீக்கடை நாயர் வரைக்கும் இதற்குத் தொடர்பு உண்டு என்ற ரீதியில் நீண்டது கயிறு.  மூன்றாம் உலக நாடுகளைப் பொறுத்தவரை தனக்கு ஒன்று போனாலும் எதிரிக்கு இரண்டு கண் போக வேண்டும்.  அவ்வளவுதான்..  அதுதான் அந்தந்த நாடுகளின் நோக்கம்... லட்சியம்... முழக்கம்... கொள்கை . குப்பை .. எல்லாம்.  ஆனால் எமக்குள் எஞ்சி நிற்கும் கேள்வியெல்லாம் இதுதான் : கொண்டாட்டங்களின் போதுகூட அருகே வராத கூட்டம் குமுறி அழும்போது துணைக்கு நிற்குமே.  ஆனால்... அவலத்தின் உச்சத்தில் நின்று அழுகுரல் எழுப்பும்போது கூட தனக்கெதிராக எவரெவர் இதை செய்திருக்கக் கூடும்? எனும் ஓராயிரம் சந்தேகங்கள் ஏன் எழுந்தன.  பல நூறு ஆண்டுகளாய் கட்டியெழுப்பப்பட்ட அமெரிக்க பிம்பம் ஏன் விழுந்தது என்பதுதான்.  எண்ணற்ற எதிரிகளைப் பெற்றிருப்பது எந்த மனிதனுக்கும் - எந்த நாட்டுக்கும் பேறாக இருக்கக் கூடாது - இருக்கமுடியாது.  ஆனால் அமெரிக்கா பெற்றது. அதைத்தான். இப்பேரழிவுகளுக்கெல்லாம் எவர் காரணம்..?  எவ்வித குரோதங்களும் அற்று அன்று காலை தங்கள் பணியைத் துவக்கிய அப்பல்லாயிரம் அப்பாவிகளா.?  அம்மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அமெரிக்க அரசா..? அல்லது அதனது அயல் உறவு(?)க் கொள்கையா?  எண்ணி ஏழே நாட்களுக்குள் புலனாய்வு நிகழ்ந்து... நீதி விசாரணை முடிந்து தீர்ப்பும் வழங்கப்பட்டாயிற்று.  ஒசாமா பின்லேடன்தான் குற்றவாளி.  அடுத்து அவரை ஆதரிக்கும் தலிபான். சொந்த மக்களின் சோகம் கண்டு அமெரிக்கத் தொலைக்காட்சிகளில் எழுந்தருளிய புஷ் சொன்னார்:  "இது இஸ்லாத்துக்கு எதிரான தாக்குதல் அல்ல"  ஆம். அதையே நாமும் நம்புகிறோம்.  அமெரிக்கா தாக்குதல் நடத்துவது இஸ்லாத்தின் மீதும் அல்ல. அதைப் போன்றே... அமெரிக்காவைத் தாக்க நினைக்கும் அனைவரும் இஸ்லாமியர்கள் மட்டுமேயும் அல்ல.  - எதை விதைத்தோமோ அதை மட்டுமே நாம் அறுவடை செய்வோம்: இது எந்தப் பாவமும் அறியாத ஒரு விவசாயிக்கான அரிச்சுவடி  பள்ளிப் பருவத்தில் பத்து மார்க் கேள்விக்கென மனப்பாடம் செய்து வைத்த அறிவியலின் அரிச்சுவடி ஒன்றும் உண்டு.  அதுதான் நியூட்ட னின் மூன்றாவது விதி: For every action, there is an opposite and equal reaction.  அதுசரி. ஆனால் அதற்கும் முன்னர் அமெரிக்கா எதை எதை எங்கெங்கு விதைத்தது..?  அதைப்பற்றிக் கொஞ்சம்  பொதுவுடமைச் சித்தாந்தத்துக்குச் சொந்தக்காரர்கள் அடக்குமுறை மூலமாகவும் அச்சுறுத்தல் மூலமாகவும் மட்டுமே ஆட்சியைக் கைப்பற்ற முடியும் என்கிற அமெரிக்க மூளையாளர்களுக்கு அடி கொடுக்கும் விதமாக பெருந்திரளான மக்கள் ஆதரவோடு ஆட்சியில் அமர்ந்தார் சிலி நாட்டினுடைய அலண்டே இது கம்யூனிச எதிர்ப்பாளர்களது அடிமடியிலேயே கை வைத்தது போலாயிற்று என்பதில் எவருக்கும் சந்தேகம் இருக்கமுடியாது.  அப்புறம் சும்மா இருக்குமா அமெரிக்கா..?  ''அதிகாரம் முழுக்க மக்களுக்கே'', என்ற அவர் இருக்கலாமா ஆட்சியில்...?  அன்றைய காலைப்பொழுதில் நடந்த படுகொலையில் 3000 பேர் இந்த உலக வாழ்வை விட்டு விடுதலையாக... ஆயிரக்கணக்கானோரது கதி அதோகதியாயிற்று.  அந்த அலண்டேயும் அந்த ஆயிரக்கணக்கான மக்களும் படுகொலைக்கு ஆளான நாள் எது தெரியுமா?  அதுவும் அதே செப்டம்பர் - 11 தான்.   (ஆனால் இனிவருவது சிலியைப் பற்றி மட்டும் அல்ல)  .    []             1. நதியின் நிறம் சிவப்பு   நீங்கள் ராஜேஷ்குமார், சுஜாதா வகையறாக்களுடைய மர்ம நாவல்களைப் படிக்காதவர்களாகவோ... பிடிக்காதவர்களாகவோ இருக்கலாம். ஆனால் அதற்காகவெல்லாம் சிலியின் வரலாற்றைப் படிக்க மாட்டேன் என்று முரண்டுபிடிப்பது கொஞ்சம் கூட நியாயமற்ற செயல்.  ஆம்..  சிலியின் வரலாறு இவர்களது மர்ம நாவல்களையும் விஞ்சும் வரலாறு.  1958 தேர்தலின் போது மூன்றே மூன்று சதவீதம்தான் மீதி இருந்தது சிலியின் அலண்டே ஆட்சியைப் பிடிப்பதற்கு, அடுத்த தேர்தல் அறுபத்தி நான்கில்தான் என்றாலும் அது வரை ஒரு குட்டி தூக்கம் போட அமெரிக்கா என்ன 'ஜான்சி வழக்கு’களை விசாரிக்கும் நீதிமன்றமா என்ன?  அப்போதே ஆரம்பித்து விட்டது அதன் வேலைகளை ... கென்னடிதான் லோககுரு அப்போதைய அமெரிக்காவுக்கு. 64ல் சிலியில் நடக்க இருக்கும் தேர்தலுக்கு 61லேயே ஒரு குழு அமைக்கப்பட்டது வெள்ளை மாளிகையில், சிலியில் நடக்க வேண்டிய சர்வ நாசப் பணிகளுக்கும் பொறுப்பேற்றுக் கொண்டது சி.ஐ.ஏ. அதைப்போலவே சிலியினது தலைநகரம் சாண்டியாகோவிலும் ஒரு குழு.    சிலி நாட்டில் அமெரிக்க தலையீடு என்பது எந்தவித ஒளிவுமறைவுமற்ற அப்பட்டமான தலையீடு.  ஏனென்றால் இத் தலையீடுகளுக்கெல்லாம் மூலகாரணம் முதலீடுதான். மார்க்சியவாதியான அலண்டே ஆட்சிக்கு வந்த மறுநொடியே செய்ய இருக்கும் செயல் அமெரிக்க முதலீடுகளை முடக்கி அனைத்தையும் நாட்டுடைமையாக்குவதுதான்.  அதுவரை அமெரிக்கா சுரண்டி வந்தது சிலி நாட்டு மக்களது செல்வங்களை மட்டுமல்ல அதனது காப்பர் சுரங்கங்களையும்தான். அப்புறம் சுரண்டலை எதிர்க்கும் கம்யூனிஸ்டுகளை எப்படிச் சகிக்கும் அமெரிக்கா? அதன் விளைவுதான் கம்யூனிஸ்டுகளையே சுரண்டிவிடுவதற்கு அமெரிக்கா எடுத்த அசாத்திய முயற்சிகள்.  வாஷிங்டனிலும் சிலியின் தலைநகரிலும் நியமிக்கப்பட்ட சி.ஐ.ஏ. ஏஜெண்டுகளது முதல் பணி சிலியினது எதிர்கட்சிகளை விலைக்கு வாங்குவது.  வாங்கினார்கள். அடுத்து...  அனைத்து எதிர்ப்பையும் ஒரு முகப்படுத்தி ஓர் அணியில் 9 திரட்டி 'கம்யூனிச பயங்கரவாதத்தை’ எதிர்ப்பது.  திரட்டினார்கள். எதிர்த்தார்கள்.  அதற்கு வசதியாக கிடைத்தவர் கிறிஸ்துவ ஜனநாயகக் கட்சியை சேர்ந்த 'சிலி நாட்டு வரதராஜ பெருமாள்’ எடூர்டோபிரை. அலண்டேவை எதிர்ப்பதற்கென்றே அமெரிக்க சட்டியில் போட்டு வணக்கப்பட்டு சி.ஐ.ஏ. எண்ணையால் 'பிரை’யாக்கப்பட்டவர்தான் இந்த எடூர்டோபிரை.  சரி, காட்டிக் கொடுப்பதற்கு ஆள் கிடைத்தாலும் ஓட்டு போடுவதற்கு ஆள் வேண்டுமே... யோசித்தது வெள்ளை மாளிகை .  அடுத்த தேர்தலுக்கான அனைத்து எதிர்கட்சிகளின் செலவையும் தானே செய்வதாக பொறுப்பேற்று கொண்டது சி.ஐ.ஏ. அதற்கான செலவு அந்தக் காலத்திலேயே 2 கோடி அமெரிக்க டாலர்கள். இத்தனை டாலர்களும் அலண்டேயின் செல்வாக்கை குறைத்ததோ இல்லையோ அமெரிக்காவின் கருவூலத்தைக் கணிசமாகக் குறைத்தது என்பதுதான் உண்மை .  இந்த இரண்டு கோடி அமெரிக்க டாலர்களும் பேனர்கள். துண்டறிக்கைகள் என பலவற்றிற்கும் போனது போக படமெடுப்பதற்கும் பத்திரிகைகளுக்கும் கூட போனது. போதாக்குறைக்குப் புதிதாக 20 வானொலி நிலையங்கள்... 44 மண்டல ஒளிபரப்பு நிலையங்கள்.. 26 புதிய வார இதழ்கள்.. நாள் தோறும் குறைந்தது 3000 சுவரொட்டிகள் என சிலியின் தலைநகர் சாண்டியாகோவை கலக்கியடிக்கத் துணை நிற்கின்றன.  மனிதகுல விடுதலைக்கான போர்கள் எந்த மண்ணில் நிகழ்ந்தாலும் விபீடணர்களுக்கா பஞ்சம் வந்துவிடப் போகிறது?  அங்கும் ஒரு விபீடணர் வந்து நின்றார்... ஆனால் அது ஒரு விபீடணி. அவரது பெயர் ஜூனிட்டா காஸ்ட்ரோ .  []   பெயரின் முன் பாதி புரியாவிடினும் பின் பாதி எங்கோ உதைப்பது போல் தோன்றினால் உங்கள் யூகம் சரியானதுதான் ஆம். அவர்தான் கியூபாவினது ஃபிடல் காஸ்ட்ரோவின் சகோதரி. வராத தேர்தலுக்கு முன்பே சிலிக்கு வந்து சேர்ந்த அவர் கேட்ட கேள்விகள் இவைதான். "சிலியினது மக்களே.. சிகப்பு சாதித்துவிட்டது என்று வைத்துக்கொண்டால் உங்களது எந்தவித மத நடவடிக்கைகளும் நகரக் கூட செய்யாது. சிலியினது தாய்மார்களே... கியூபாவில் நிகழ்ந்ததைப் போல உங்களது குழந்தைகளை கம்யூனிச கொட்டடிகளுக்குள் அடைபட அனுமதிக்கமாட்டீர்கள் என்பதை அறிவேன் நான். இருந்தாலும் கேட்கிறேன். இந்தத் தவறை நீங்களும் செய்வீர்களா?'' என்பவைதான் ஜூனிட்டா காஸ்ட்ரோவின் சுவிசேச முத்துக்கள்.  கம்யூனிச குடும்பத்திலிருந்து வந்த சகாவே 'சகோதரி’யான பிறகு... திருச்சபையிலிருந்து உதித்த போப் மட்டும் சளைத்தவரா என்ன ?  பதினொன்றாவது போப் பயஸ்ஸம் தனது பங்குக்கு சிலியின் 'கம்யூனிச பயங்கரவாதத்தைச்’ சுட்டிக்காட்டி எழுதிய கடிதம் பல்லாயிரக்கணக்கில் பட்டுவாடா செய்யப்பட்டது. எது நடக்கக்கூடாது என்று வெள்ளை மாளிகையும் அதனது உளவாளிகளும் மண்டியிட்டு பிரார்த்தனை செய்தார்களோ இறுதியில் அது நடந்தே விடுகிறது. ஆம் அலண்டேவினது யுனைடெட் பாப்புலர் கட்சி (Unidad Popular - UP) 36 சதவீத வாக்குகளை பெற்று வெற்றி பெற்றதாக அறிவிக்கப்படுகிறது. அந்த நாள் செப்டம்பர் 4-1970. சிலியினது ஜனாதிபதியாக இ. அலண்டே பொறுப்பேற்றுக் கொள்வதற்கான நாளாக அக்டோபர் 24 தீர்மானிக்கப்படுகிறது.  ஆனாலும் அமெரிக்கா அலண்டேவை அழித்தொழிப்பதற்கான வாய்ப்புகள் முற்றாக இல்லாமற் போனதாக எண்ணி துவண்டுவிடவில்லை. இன்னமும் அதற்கான வாய்ப்புகள் இருப்பதாகவே கனவு கண்டது.  வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்ட செப்டம்பர் நான்கிற்கும் பதவியேற்பு விழாவான அக்டோபர் இருபத்தி நான்கிற்குமான இடைவெளி ஏழு வாரங்கள். இந்த ஏழு வார இடைவெளியை அலண்டேவின் முடிவுரைக்கான தருணமாக ஆக்கி கொள்ளத் தீர்மானித்து முழுவீச்சில் இறங்குகிறது சி.ஐ.ஏ .  நாடாளுமன்ற வாக்கெடுப்பின்போது அலண்டேவைத் தேர்ந்தெடுக்காமல் அவருக்கு அடுத்ததாக வந்த பழமைவாத தேசிய கட்சியைச் சேர்ந்த அலெஸ்சாண்டிரியைத் தேர்ந்தெடுக்கக் கோடிக்கணக்கான பணம் பட்டுவாடா செய்யப்படுகிறது. 10 கோடி அமெரிக்க டாலர்கள் இதற்காகவென ஒதுக்கப்படுகிறது. அலண்டே ஆட்சிப் பொறுப்பேற்றால் சிலியே இருளில் மூழ்கும் என வதந்திகளும், யூகங்களும் நாடு முழுவதும் கிளப்பி விடப்படுகின்றன.  இதற்கென பத்து நாடுகளிலிருந்து பத்திரிக்கையாளர்கள் சாண்டியாகோவில் வந்து குவிகிறார்கள். இவர்கள் அனைவரும் சி.ஐ.ஏ.வின் சம்பளப் பட்டியலில் இருப்பவர்கள் என்பதை சொல்லத் தேவையில்லை. ராணுவத்தினரைக் கலகம் செய்யச் சொல்லி ஏராளமான கட்டுரைகள் வெளியிடப்படுகின்றன. இதில் சி.ஐ.ஏவினால் இயக்கப்படும் EI Mercurio பத்திரிகைக்குப் பிரதான பங்குண்டு.  சிலியின் ராணுவ அதிகாரிகளுடன் ரகசிய பேச்சு வார்த்தைகளை முடுக்கிவிடுகிறது அமெரிக்கா.  இன்னமும் இடையில் இருப்பது இரண்டே நாட்கள்தான்.  22 அதிகாலை ஏராளமான இயந்திரத் துப்பாக்கிகளையும், வெடிமருந்துகளையும் சிலி நாட்டு எல்லைக்குள் கடத்தி வருகிறது சி.ஐ.ஏ. ஆனால் எதிர்பாராத விதமாக சிலி நாட்டு ராணுவத் தளபதி ஸ்னீடர் அமெரிக்கா ஆயுதங்களால் படுகாயமடைய…  ராணுவத்தின் கொடி அணிவகுப்பு ஆரம்பமாகிறது...  சகலவித சதிகளையும் முறியடித்து அலண்டே நவம்பர் 3 சிலியின் ஜனாதிபதியாக பதவியேற்கிறார். சிலியை யாருடைய சுரண்டலுக்கும் ஆளாகாமல் சுயத்தன்மையோடு ஆட்சி செய்வது. சிலிய ஏழைகளை வறுமையிலிருந்து மீட்டெடுப்பது... போன்ற 'கொடூர’ திட்டங்களை அலண்டே வைத்திருந்ததே அமெரிக்காவின் இத்தனை கோர தாண்டவத்திற்கும் மூலகாரணம்.  அலண்டே ஆட்சிப் பொறுப்பேற்ற அடுத்த நிமிடமே, ''அலண்டேயின் ஆட்சி காலத்தில் ஒரு துரும்பு கூட சிலி நாட்டிற்குள் நுழைய அனுமதிக்கமாட்டோம்.'' என கொந்தளிக்கிறார் அமெரிக்க தூதர் எட்வர்டு.  ஆனால் சிலியின் பொருளாதாரமோ பெரும்பாலும் அமெரிக்காவை சார்ந்திருப்பது என்பதுதான் வேதனையான விஷயம்.  சிலிக்கான உதவித் திட்டங்களை 3 ஆண்டுகளுக்கு நிறுத்த உத்தரவிடுகிறது அமெரிக்கா.  அமெரிக்க ஏற்றுமதி இறக்குமதி வங்கியும், உலக வங்கியும் புதிய கடன்கள் ஏதும் இனி சிலிக்குக் கிடையாதென அறிவிக்கின்றன.  பேருந்துகள், கார்களுக்கான உதிரிப்பாகங்கள் கிடைக்காமையால் பெரும் சிக்கல் ஏற்படுகிறது. அதைப்போலவே காப்பர் - இரும்பு - பெட்ரோலிய தொழிற்சாலைகளிலும் உதிரிப்பாகங் களுக்கான தட்டுப்பாடு தலைவிரித்தாடத் தொடங்குகிறது. பொருளுக்கான முழுத் தொகையையும்  []   முன்பணமாகக் கொடுக்க சிலி வியாபாரிகள் முன்வந்தாலும் விற்க மறுக்கிறார்கள் அமெரிக்க விநியோகஸ்தர்கள்.  சிலி மக்களுக்கு பிடித்தமான உணவு சமையல் எண்ணெய்...  பழுதான தொலைக்காட்சிக்குத் தேவையான ஏதேனும் ஒரு உதிரி பாகம்...  சிகரெட்  அவ்வளவு ஏன், கழிவறைக் காகிதத்துக்குக்கூட தட்டுப்பாடு ஏற்படுத்தப்படுகிறது.  விளைவு? போராட்டம்.  உணவுப் பொருள்களுக்கு உதவி கிடைக்கிறதோ இல்லையோ போராட்டங்களுக்கு ஏக உதவி அளிக்கிறது அமெரிக்கா.  அதில் முக்கியமான ஒன்று தனியார் லாரி உரிமையாளர்களது போராட்டம். நாட்டையே குலுக்கும் இந்த வேலை நிறுத்தத்திற்குப் பின்னணியில் இருந்து முடுக்கிவிடுகிறது. சி.ஐ.ஏ. போராட்டத்தில் ஈடுபடுபவர்களுக்கு ஆடம்பரமான உணவும் மது வகைகளும் தங்கு தடையின்றி கிடைக்கின்றன.  "இவ்வளவு வசதிகளையும் யார் உங்களுக்குச் செய்து தருகிறார்கள்?" என்று கேட்கிறார் ஒரு நிருபர்.  "வேறு யார்? சி.ஐ.ஏ தான்!” என்று சிரித்தபடி பதிலளிக்கிறார் ஒரு லாரி உரிமையாளர்.  ஆக...  சோசலிசம் சிலிக்குப் பொருந்தாது என்ற பல்லவியைப் பாடுகின்றன பத்திரிகைகள்.  இவ்வளவு போராட்டங்களுக்கு இடையிலும், உருண்டோடிவிட்ட மூன்றாண்டுகளுக்குப் பிறகு மீண்டும் வருகிறது தேர்தல்.  முகவரியற்றுப் போய்விடுவார் அலண்டே என்கிற ஏகப்பட்ட கருத்துக்கணிப்புகளைத் தவிடு பொடியாக்கிவிட்டு 1973 மார்ச்சில் மீண்டும் அமோக வெற்றி பெறுகிறார் அந்த மக்கள் தலைவர். இந்தமுறை அவருக்கு கிடைத்த வாக்கு கடந்த தேர்தலை விட எட்டு சதவீதம் அதிகம்.  அட இனியும் மூன்றாண்டுகளா?  சிலியின் எதிர்கட்சிகள் தங்களுக்குக் கிடைத்த மேலும் மூன்றாண்டு தண்டனைக்கு எதிராக சிலிர்த்தெழுகின்றன.  அலண்டேவுக்கு அதிகரித்துவிட்ட மக்கள் செல்வாக்கைக் கண்டு ஆத்திரத்தின் உச்சிக்குச் செல்கிறது அமெரிக்கா.  சிலியின் எதிர்க்கட்சியான Partia y Liberated நேரடியாக சி.ஐ.ஏ.வுடன் கரம் கோர்த்துக் களம் குதிக்கிறது.  மீண்டும் லாரி ஸ்டிரைக் தொடரும் தட்டுப்பாடு  கூடவே கொஞ்சம் படுகொலைகள்!  1973 ஜூன் - ஜூலை - ஆகஸ்ட் - செப்டம்பர் ஆகியவை சிலியின் வரலாற்றில் ரத்தக்கறை படிந்த மாதங்கள்.  சிலியின் ராணுவத்துக்குள் ஊடுருவிய சி.ஐ.ஏ. பல மேஜர் ஜெனரல்களை விலைக்கு வாங்குகிறது.  பலர் மர்மமான முறையில் கொல்லப்படுகிறார்கள்.  உச்சகட்டத் தட்டுப்பாட்டின் விளைவாக கள்ள மார்க்கெட் விற்பனை கொடி கட்டிப் பறக்கிறது.  தனியார் பேருந்துகள் நிறுத்தப்படுகின்றன.  சத்துணவு பற்றாக்குறையின் விளைவாக 6 லட்சம் குழந்தைகள் மனநிலை பாதிப்புக்கு ஆளாகியிருப்பதாக டாக்டர் அலண்டே அறிவிக்கிறார்.  கியூபாவினது நுண்ணறிவுப் பிரிவின் ஆலோசனையின் பேரில் ராணுவத்தில் பெரிய களையெடுப்பு நடக்க இருக்கிறது எனவும்  சோவியத் யூனியனது நீர்முழ்கித்தளம் அமையப் போகிறது சிலியில் எனவும் அவதூறை அள்ளி வீசுகின்றன சி.ஐ.ஏ. ஊதியம் பெரும் பத்திரிகைகள்.  ஆனால் அலெண்டே செய்த மாபெரும் தவறு எல்லாச்சதிகளையும் சட்டத்தின் மூலமாக மட்டுமே அணுக வேண்டும் என்று சிலியினது அரசமைப்புச் சட்டத்தை மட்டுமே நம்பிக்கொண்டிருந்ததுதான்.  அதே நேரத்தில் ஆட்சியைக் கவிழ்க்க பகிரங்கமாக ராணுவத்துக்கு அழைப்பு விடுக்கிறது EL Mercurio பத்திரிகை.  ஆட்சிக் கவிழ்ப்பு நடந்து விட்டால்... யார் யாரைக் கைது செய்வது... யார் யாரைப் பாதுகாப்பது.  அலெண்டேவை ஆதரிக்கும் சில அமெரிக்கர்களது பட்டியலையும் தயாரித்துக் கொடுக்கிறது சி.ஐ.ஏ.  அதை நிறைவேற்றுவதற்கான 'புனித நாளாக' ஒரு நாளைத் தேர்ந்தெடுத்துக் கொடுக்கிறது வெள்ளை மாளிகை.  அது செப்டம்பர் 11.  செப்டம்பர் 11.  அதிகாலை டாக்டர் அலண்டேயின் ஆட்சிக் கவிழ்ப்புக்கான      ஃபிடல் காஸ்ட்ரோவுடன் அலண்டே []   தொடக்கமாக தூண்டிவிடப்பட்ட சிலியின் கடற்படைப் பிரிவு ஒன்று பசிபிக் துறைமுகத்திலுள்ள 'வால்பறைசோ'விலிருந்து புறப்படுகிறது.  575ரக அமெரிக்க விமானங்கள் சிலி நாட்டின் வான்வெளியில் வட்டமிடுகின்றன.  சிலி நாட்டு எல்லையின் மிக நெருக்கத்தில் உள்ள மெண்டோசாவிலும்…  அர்ஜண்டைனாவிலும் 32 அமெரிக்கப் போர் விமானங்கள் தரை இறங்குகின்றன.  சாண்டியாகோவின் தெருக்களில் டாங்கிகள் வலம் வருகின்றன.  சிலிக்கும் உலகத்துக்குமான தொடர்பு முற்றாகத் துண்டிக்கப்படுகிறது.  குடியரசுத் தலைவர் மாளிகை முற்றுகையிடப்படுகிறது.  சிலி நாட்டுத் தெருக்களிலும் மைதானங்களிலும் அப்பாவி மக்களது உடல்கள் கேட்பாரற்று கிடக்க... நதியின் நிறம் சிவப்பாகிறது.  []   சிவப்புக்கு எதிரான யுத்தமாயிற்றே...! []   சித்திரவதைக் கூடங்கள் திறக்கப்பட்டு அப்பாவி மக்களுக்கான ’முதல் மரியாதைகள்’ அரங்கேற்றப்படுகின்றன.  கூலிப்படையினர் சிலி நாட்டுப் பெண்களது பாவாடைகளைத் தூக்கிப் பார்த்து...  "அட... இந்த நாட்டுப் பெண்களுக்கு உள்ளாடை அணியும் பழக்கம் கூட இருக்கிறது." என்று கைகொட்டிச் சிரிக்கிறார்கள்.  குடியரசுத் தலைவர் மாளிகையை முற்றுகையிட்ட கவிழ்ப்புப் படை உள்ளே நுழைகையில் தனது துப்பாக்கியின் இறுதித் தோட்டாவையும் சிலி நாட்டு மக்களது நலனுக்காக செலவழித்துவிட்டு மண்ணில் சாய்கிறார் டாக்டர் அலண்டே  வாஷிங்டனில் உள்ள மனிதர்கள் தங்களது வியாபாரத்தை அமோகமாகத் துவக்க பழையபடி தங்களது காசோலைப் புத்தகங்களைத் திறக்கிறார்கள்.  ஏழை எளிய மக்கள் வேறு வழியின்றி தங்களது வழமையான வாழ்க்கைக்குத் திரும்புகின்றார்கள்.  சல்வடார் அலண்டேவினது மரணம் சொல்லும் சேதி ஒன்றே ஒன்றுதான்:  மக்களது விடுதலையை நேசிக்கும் ஒரு மார்க்சியவாதி  முகச்சவரம் செய்யும் போது கூட ரத்தம் வருவதை விரும்பாத ஒரு மனிதாபிமானியாக ஏன் இருக்கக்கூடாது என்பதைத்தான்!  (ஆனால் இனி வருவது வியத்நாமைப் பற்றி மட்டும் அல்ல)   மேலே உள்ள புகைப்படங்கள் இடமிருந்து வலம்: ஜூனைட்டா காஸ்ட்ரோ - ஃபிடலின் சகோதரி, கென்னடி, வரதராஜபெருமாள், எடூர்டோ ஃபிரை    []                             2. எட்டு எட்டா மனுசன் வாழ்வ பிரிச்சுக்கோ !    Ho Ho Ho Chi Minh We shall Fight We shall Win - ஒரு வியட்நாமிய முழக்கம்  தமிழகத்தின் பெருந்திரளான மக்களுக்குத் தெரிந்தது. சுந்தரத்தையும் அவர் இயக்கிய வியட்நாம் வீட்டையும்... அவரது பிரஸ்டீஜ் பத்மநாபனைப் பற்றியும்தான்! ஆனால் எவ்வித எல்லையோரப் பிரச்சனைகளுமின்றி ஏழுகடல் தாண்டி ஏழுமலை தாண்டி அத்து மீறி வந்து அமெரிக்கப் படைகள் கொன்றொழித்த 35,000 அப்பாவி மக்களைப் பற்றியோ...  ஏறக்குறைய முப்பதாண்டுகள் வரைக்கும் நடந்த ஒரு ஆக்கிரமிப்புப் போர் பற்றியோ ...  பூஜ்யம்தான்!  வியட்நாம் மக்கள் பிரெஞ்சுக் காலனியாளர்களிடம் அடிமைப்பட்டிருந்த நேரத்தில் பிரெஞ்சுக்காரர்களுக்கு உதவுகிறேன் என்கிற போர்வையில் மூக்கை உள்ளே நுழைத்தது அமெரிக்கா.  50களின் துவக்கத்தில் வந்த அது.  சென்றது என்னவோ முப்பது ஆண்டுகளுக்குப் பின்னர். வியட்நாமின் மண்ணையும் விண்ணையும் நீரையும் நஞ்சாக்கிவிட்டு..  இந்தியாவைப் போலவே நூற்றாண்டு காலம் அந்நியரிடம் அடிமைப்பட்டுக் கிடந்த மண்தான் வியட்நாம்.  ஆனால் அவர்களை ஆக்கிரமித்திருந்தவர்கள் ஆங்கிலேயர்கள் அல்ல. பிரெஞ்சுக்காரர்கள்.  அந்தப் பிரெஞ்சுக்காரர்களுக்கான அனைத்து ஆலோசனைகளையும், உதவிகளையும் அளித்து வந்தது அமெரிக்கா மட்டுமே. அளித்த உதவியும் ஆதாயமின்றி அல்ல. அவர்கள் எதிர்பார்த்த ஆதாயம் என்பது வியட்நாமை விட்டு பிரான்ஸ் எக்காலத்திலும் விலகாதிருத்தலே.  []     ஆனாலும் அடுத்தடுத்து வந்த எதிர்ப்பலைகளால் துவண்டுதான்  போயிற்று பிரான்ஸ் . இதற்கிடையில் வந்தது இரண்டாம் உலகப் போர். விரட்டிய து ஜப்பான் பிரான்ஸை வடக்கிலிருந்து. தெற்கிலோ பிரிட்டன் . ஜப்பான் வசம் வடக் கு வீழ்ந்ததும், அதிகாரம் வியட்நாமியப் போராளிகள் வசம் வந்து சேர்ந்தது. தெற்கைப் பிடித்த பிரிட்டனோ மீண்டும் பிரெஞ்சுக்காரர்கள் வசமே ஒப்படைத்து விட்டு ஊர் திரும்பியது.  திரும்ப வந்த பிரெஞ்சுத் தளபதி சொன்னார்: "நான் இந்தோசீனாவிற்குத் திரும்ப வந்திருப்பது இந்தோசீனாவை இந்தோசீனர்களுக்கு சீதனமாகக் கொடுக்க அல்ல. எங்கள் நோக்கம் இந்த உலகை கம்யூனிசப் பிடியிலிருந்து விடுவிப்பதே!"  என்று உதிர்த்தார் முத்துக்களை…  இது போதாதா அமெரிக்காவிற்கு... பிரெஞ்சுக்கான நிதி உதவியை ஒருகோடி டாலருக்கு உயர்த்தியது அது.  1954 வாக்கில் அதனது உதவித் தொகை ஒரு கோடியே நாலு லட்சம் டாலர். அது பிரான்சின் யுத்த பட்ஜெட்டில் 78 சதம். இவ்வாறாக அது வியட்நாமின் விவகாரங்களில் நேரடியாக மூக்கை நுழைத்த கதை துவங்குகிறது.  1945-46வாக்கில் நம்மைப் போல பல பகிரங்கக் கடிதங்கள் எழுதிக் கொண்டிருந்தவர்தான் ஹோ சி மின்.  ஆனால் அவர் எழுதியது சோவியத்-சீனா - அமெரிக்கா - பிரிட்டன் என நான்கு வல்லரசுகளுக்கு..  பிரெஞ்சுப் பிடியிலிருந்து விடுவிக்கக் கோரியும், ஐ.நா.வில் இது குறித்த தீர்மானங்களை முன்மொழியக் கோரியும்தான். ஆனாலும் அமெரிக்கா அவரை ஒரு உண்மையான தேசியத் தலைவராக அங்கீகரிக்கவில்லை. மாறாக அது அவரை சர்வதேச கம்யூனிச வலைப் பின்னலின் ஒரு சக்தியாகவே தீர்மானித்தது.  போராடிச் சலித்த பிரான்ஸ் ஒரு கெளரவமான பின்வாங்குதலுக்கே காத்துக் கிடந்தது. அதற்கேற்றாற்போல் 1952 வாக்கில் ஒரு அமைதிப் பேச்சுவார்த்தை. அதற்கான இடமும் பர்மா என குறிக்கப்பட்டாயிற்று.  ஆனால் வியட்நாமில் அமைதியா? அனுமதிக்கவே முடியாது. இனி பிரான்சுக்கான சகல உதவிகளும் நிறுத்தப்படும். இராணுவ உதவிகளும் கிடையாதென எச்சரித்தது அமெரிக்கா.  இதற்கிடையில் வியட்நாமின் 'டென் புன் பூ' பகுதிக்கு சி.ஐ.ஏ.வின் பிரத்தியேக விமானங்களில் கொண்டு செல்லப்பட்ட 16,000 பிரெஞ்சுப் படையினர் சுற்றி வளைக்கப்படுகின்றனர் வியட்நாமியப் போராளிகளால் இந்த 'டென் புன் பூ’தான் பிரெஞ்சுப் படைகளின் தோல்விக்கான உச்சகட்டம் . தடுமாறுகிற பிரெஞ்சுப் படைகளுக்கு தோள் கொடுக்கின்றன அமெரிக்க சி.ஐ.ஏ.வினது விமானப் படைகள்.  கண்ணுக்கெட்டிய தூரத்தில் தென்படும் தோல்வியைத் தவிர்த்து அமைதிப் பேச்சின் மூலமாக வெளியேறிவிடலாம் எனத்துடிக்கிறது பிரான்ஸ். அதற்கும் அனுமதிக்க மறுக்கிறது அமெரிக்கா.  அமெரிக்காவினது தேசியப் பாதுகாப்புக் குழு அன்றைய ஜனாதிபதி ஐஸ்னோவருக்கு ஒரு குறிப்பு அனுப்புகிறது. அக்குறிப்பு சொன்ன சேதி இதுதான்:  ''பாரீசுக்குச் சொல்லுங்கள்... இந்தோசீனாவில் வலுப்பெறும் கம்யூனிஸ்ட்டுகளது செல்வாக்குக்கு மிரண்டு நிபந்தனையற்ற பேச்சுவார்த்தைக்கு உடன்படுவது உலகின் மூன்று வல்லரசுகளில் ஒன்றான பிரான்சுக்கு தகுதியிழப்பு…    []   தகுதி இழந்த தேசத்துக்கான அமெரிக்க உதவி என்பது ஒரு நிறைவேறாத கனவு  என்று ."  ஆனால் நேரடி யாக வியட்நாம் விஷயத்தில் ஊடுருவ அமெரிக்காவிற்கும் இரு சிக்கல்கள் இருக்கவே செய்தன.  1. அமெரிக்க காங்கிரசின் ஒப்புதல்  2. உலக நாடுகளின் ஒத்துழையாமை  1954 இல் "அமெரிக்க செயலர் டல்லஸ் வாய்விட்டே புலம்பினார் அமெரிக்கக் கேபினட் கூட்டத்தில்  ”கம்யூனிஸ்ட்டுகளது பிடி இறுகுவது எவ்வளவு ஆபத்தானது என்பதை உலகின் பல நாடுகள் உணரவே இல்லை"  அதே ஆண்டு மே மாத இறுதியில் அமெரிக்காவினது ரெட் போர்டு என்பவர் இந்தோசீனாவில் அமெரிக்கா மேற்கொள்ளவேண்டிய நடவடிக்கைகள் குறித்த ஆய்வு ஒன்றினை அளிக்கிறார் அரசுக்கு. அந்த ஆய்வின் அரிய கண்டுபிடிப்புதான் கம்யூனிசம் வேறெங்கும் பரவாது அதன் காலடித் தடங்களை ஒட்டுமொத்தமாக பொசுக்கும் செயலாக அணு ஆயுதங்களைப் பயன்படுத்துவது.  அதற்கான ஆயத்தமாக, டென் புன் பூவைப் பாதுகாக்க வட வியட்நாமின் டோன்கின் வளைகுடாவை நோக்கிப் புறப்படுகின்றன அமெரிக்காவின் இரு ஆயுதந்தாங்கிக் கப்பல்கள். ஆனால் பிரெஞ்சுத் தளபதி ஜார்ஜஸ் பிடால்ட்டோ அலறுகிறார், "மிக நெருக்கத்தில் போராடும் பிரெஞ்சுப் படையினரையும் அணு ஆயுதத் தாக்குதல்கள் பதம் பார்த்து விடும்." என்று.  ஐ.நா.வின் அமைதிப் பேச்சுக்கான நாள் நெருங்கிக் கொண்டிருக்கிறது.  அமைதிக்கும் அமெரிக்காவிற்கும் ஆகாப் பொருத்தம்தானே அன்றிலிருந்து இன்றுவரை. அமைதி என்றவுடனே சூடு பிடிக்கிறது சி.ஐ.ஏ.வின் புளுகுப் பிரச்சாரம்.  சீனாவின் ஆயுத உதவி ஆரம்பமாகிவிட்டது.  போராடுகின்ற வியத்மின்களுக்கு சர்வதேச கம்யூனிச வலைப்பின்னலுக்குள் தொடர்பு இருக்கிறது.  என்றெல்லாம் முடுக்கி விடுகிறது தனது பிரச்சாரத்தை. ஏனெனில் அடுத்து வர இருக்கிற ஐ.நா.வின் ஜெனீவாக் கூட்டத்தில் கம்யூனிசத்தைச் சாராத நாடுகளைப் பிரித்தாள் இது உதவி செய்யும் என்கிற நம்பிக்கையில்...  1954 ஜூனில் வியட்நாம் அமைதிக்கான அமர்வுகள் ஜெனீவாவில் நடந்து கொண்டிருக்கும் வேளையிலேயே வியட்நாமில் பல பக்கம் பிரிந்திருக்கும் தனது துணை ராணுவத்தை ஒன்றிணைக்கத் துவங்குகிறது அமெரிக்கா.  பிரிந்திருந்த படைகள் ஆகஸ்டு வாக்கில் சரியான இடத்தில்...  சரியான நேரத்தில் ஒன்றிணைகின்றன.  யுத்தத்தை முடிவுக்குக் கொண்டுவரும் ஜெனீவா ஒப்பந்தத்தை அமெரிக்கா மட்டும் ஒற்றை ஆளாக எதிர்க்கின்றது.  கைப்பற்றப் போன பிரான்சும் அடிமைப்பட்ட வியட்நாமும் அமைதிக்கு உடன்பட்டாலும் ஒத்துக்கொள்ள மறுக்கிறது அமெரிக்கா.   []   (இ ந் த  வேளையில் உங்களுக்கு இந்திய அமைதிப் படை நினைவுக்கு வந்தால் அதற்கு நான் எந்த விதத்திலும் பொறுப்பாக முடியாது.)   வேளையில்தான் பிலிப்பைன்சில் தனது 'திருப்பணிகளை’ முடித்து - விட்டுத் திரும்புகிறான் லேண்ஸ்டேல். சி.ஐ.ஏ.வின் முன்னணி ஆசாமி. இந்த ஆசாமியை வைத்து பல நாவல்கள் எழுதப்பட்டிருக்கின்றன. அதில் ஒன்றுதான் The Ugly American.  வியட்நாமில் அவர் ஆற்றிய ’சமூகப் பணிகளை’ எட்டே எட்டு விஷயங்களில் அடக்கிவிடலாம்.  1. "இயேசுகிறிஸ்து வடக்கிலிருந்து புறப்பட்டுவிட்டார். தெற்கு வியட்நாமை நோக்கி..” "கன்னி மேரி கிளம்பி விட்டார் வடக்கிலிருந்து.." என சமய நோய் பீடித்திருந்த கிருஸ்துவர்களை நோக்கி  எண்ணற்ற பிரசுரங்களை விநியோகித்தது.  2. "கம்யூனிச ஆட்சிக்கு மக்கள் எவ்விதம் அடிபணிய வேண்டும்" என அச்சுறுத்தல்களைச் சுமந்த வண்ணம் பல்லாயிரம் துண்டுப் பிரசுரங்கள் பொய்யாக வட வியட்நாமிலிருந்து கம்யூனிஸ்டுகளின் பேரால் அளித்தது.  3. தெற்கு வியட்நாமிலிருந்து வடக்குக் குடிபெயர்பவர்களைக் கூடாது என எச்சரிக்கும் எண்ணற்ற துண்டுப்பிரசுரங்கள்  4. அதே வேளையில் ’வடக்குதான் எங்களது நிம்மதியான வாழ்விடம்' என்கிற போர்வையில் அமெரிக்காவின் உளவாளிகளை மக்கள் வேடத்தில் குடியேற வைத்தது...  5. ஹனாயில் உள்ள பேருந்து கம்பெனிகளுக்கு பெட்ரோல் கொண்டு செல்லும் குழாய்களை பாழ்படுத்தி காலப்போக்கில் அதனது எஞ்சின்களை செயல்படாது சேதப்படுத்தியது...  6. வடவியட்நாமினது இருப்புப்பாதைகளை ஜப்பானில் முகாமிட்டிருந்த சி.ஐ.ஏ.வின் தொழில் நுட்பக் குழுவைப் பயன்படுத்தி படிப்படியாகத் தூர்ந்து போகச் செய்தது.  7. சீனர்கள் குறித்த பொய்யான வதந்திகளை வட வியட்நாமியரிடையே பரப்பியது. (கொலை - கொள்ளை - பாலியல் வன்முறை என...)  8. தெற்கு வியட்நாமியருக்கு ஆயுதமும், ராணுவப் பயிற்சியும் அள்ளி வழங்கியது.  என எட்டு எட்டாக மனித வாழ்க்கையைப் பிரித்துக் கொண்ட 'மகான்’தான் லேண்ஸ்டேல்.  அதே நேரத்தில் சர்வதேச நாடுகளது மேற்பார்வையில் வட வியட்நாமையும், தென் வியட்நாமையும் இணைத்து அதற்கான ஒரு தலைவரைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் நாளை . நிச்சயிக்கிறது ஐ.நா. உள்ளூர தேர்தலை வெறுத்தாலும் ஒப்புக்கு: வரவேற்கிறது அமெரிக்கா.  ஆனால் தென் வியட்நாமை அமெரிக்காவின் உதவியோடு ஆதிக்கம் செலுத்தி வரும் அதன் ஜனாதிபதி 'நிகோ டின் டியம்' மட்டும் தேர்தலுக்கு ஒப்புகொள்ள முரண்டு பிடிக்கிறார். அமெரிக்க ஜனாதிபதி ஐஸ்னோவர் தொடங்கி தென் வியட்நாமின் நிகோடின் டியம் வரையிலும் புரிந்திருந்த உண்மை - தேர்தல் என்று வந்துவிட்டால் ஹோ சி மின்னது வெற்றி என்பது எந்தக் கொம்பானாலும் தடுக்க முடியாது என்பதுதான். அதற்குப் பிறகும் வருமா தேர்தல்?  பிரெஞ்சுக்கு அடுத்தபடியாக ஆக்கிரமித்த அமெரிக்கர்கள் அள்ளி வீசிய வாசகம் 'உலகப் புகழ்’ பெற்றது. அது  "உங்கள் இதயங்களையும்... மூளைகளையும் எங்களிடம் கொடுங்கள். உங்கள் மண்ணைப் பொன்னாக்கிக் காட்டுகிறோம்."  ஆனால் அந்த அமெரிக்க வெற்றிக்குத் தேவைப்பட்டது ஒன்றே ஒன்றுதான்.    அதுதான் சமூக மாற்றம். அதற்கு இன்னொரு பெயரும் உண்டு, அதன் பெயர்: சோசலிசம்.    'போப் ஆக நினைப்பவன் புரட்சி செய்யமாட்டான் புரட்சி செய்ய நினைப்பவன்  போப் ஆக மாட்டான்' என்கிற ஊரறிந்த பழமொழி ஒன்று உண்டு. சமூக மாற்றம் நிகழவா அமெரிக்கா அங்கே அடி எடுத்து வைத்தது?  சங்கராச்சாரிக்கும் சமூக நீதிக்கும் எவ்வாறு சம்பந்தமேயில்லையோ, அவ்வாறே சமூக மாற்றத்திற்கும் அமெரிக்காவுக்கும்..  சீனர்கள். பிரெஞ்சுக்காரர்கள்.  ஜப்பானியர்கள்..  மீண்டும் பிரெஞ்சுக்காரர்கள் என ஆண்டாண்டு காலமாய் அடிமைப்பட்டுக் கிடந்த வியட்நாமிய மக்களுக்குத் தெரியும் . தங்களது விடுதலைக்கான விலை என்னவென்று. விடுதலைக்கான "வழியை” அமெரிக்காவும் ஓரளவுக்குக் காட்டத்தான் செய்தது தனது பீனிக்ஸ் தாக்குதல்களின் (Phoenix Program) மூலம்.  ஒட்டு மொத்தமாக வியட்நாமியக் கிராமங்களைச் சுற்றி வளைத்து மக்களைக் கைது செய்வது...  விரல்களில் தொங்க விட்டு சித்ரவதை செய்வது... (Airplane Ride)  விரைகளை இடுக்கியால் பிடித்து இழுத்துக் கதற வைப்பது.  நகங்களை விரல்களில் இருந்து ஒவ்வொன்றாக பிடுங்கி எடுப்பது  உடல் உறவு உறுப்புகளை வெட்டிச் சிதைப்பது ... ஓரினச் சேர்க்கையில் கட்டாயமாக ஈடுபட வைப்பது.  என்பன அமெரிக்கர்கள் கண்டுபிடித்த ஒட்டுமொத்த 'விடுதலைக்கான’ வழிகள்.  சில நேரங்களில் மனிதாபிமானத்தோடு நடந்துகொண்ட அமெரிக்கர்களும் சிலர் உண்டு. அவர்கள் மற்றவர்களைப் போல் சித்திரவதை செய்யாமல் பறந்து கொண்டிருக்கும் விமானங்களில் நீதி விசாரணை நடத்தி 3000 அடியோ 4000 அடியோ வானிலிருந்து 'குற்றவாளிகளை’ வெளியேற்றி விடுவார்கள். []   இந்த பீனிக்ஸ் நடவடிக்கைகளில் 20,587 பேர் மட்டுமே கொல்லப்பட்டதாக ஒப்புக் கொள்கிறார் அப்போது வியட்நாமிலிருந்த சி.ஐ. ஏ. அதிகாரி வில்லியம் கோல்பை. அதில் 85 சதவீதம் பேர் கொல்லப்பட்ட பிறகு வியட்நாமியப் போராளிகள் என்று அடையாளம் கண்டுபிடிக்கப்பட்டவர்கள். வெறும் 40,944 (நாற்பதாயிரத்து தொள்ளாயிரத்து நாற்பத்தி நான்கு மட்டும்) பேர்தான் இம்மண்ணுலக வாழ்விலிருந்து விடுதலை அடைந்தவர்கள் என்கிறது தென் வியட்நாம் அரசு பொய்ப் பிரச்சாரங்கள்... அச்சுறுத்தல்கள்... சித்ரவதைகள்... படுகொலைகள்... விஷவாயுத் தாக்குதல்கள் என அனைத்தையும் மீறி அமெரிக்கப் படைகளை பந்தாடுகிறது வியட்நாமின் மக்கள் படை!  விண்ணில் பறந்த அமெரிக்க விமானங்களை வீழ்த்தி வீதியில் இழுத்து விளையாடுகிறார்கள் வியட்நாமியச் சிறுவர்கள்.  வட வியட்நாமினது அஞ்சல் தலையே அமெரிக்க விமானங்களை வீழ்த்தும் படங்களோடு அச்சாகிறது.  ஒடுக்குமுறைகளை மீறி எழுந்து நிற்கிறது மக்கள் எழுச்சி.  உலக வரலாற்றிலேயே முதல் முறையாக தோல்வியைத் தொட்டுப்பார்க்கிறது அமெரிக்கா. தங்களுக்கான புதைமணலாக வியட்நாம் மண் மாறியிருப்பதைக் கண்டு மிரட்சியுடன் யோசிக்கத் தொடங்குகிறது.  விளைவு? மிகச் சரியாக 1973ம் ஆண்டு ஜனவரி 27  வியட்நாம் மக்களது அமைதிக்கு வழிவிடும் முகமாக போரை முடிவுக்குக் கொண்டு வரும் ஜெனீவா ஒப்பந்தத்தில் கையெழுத்திடுகிறது அமெரிக்கா.  அதற்கு அடுத்து ஐந்தாவது நாள் அமெரிக்க ஜனாதிபதி நிக்சனிடமிருந்து ஒரு கடிதம் வட வியட்நாம் பிரதமருக்கு வந்து சேருகிறது.  1. எந்தவொரு அரசியல் நிபந்தனைகளுமற்று போருக்குப் பிந்தைய மறு சீரமைப்புப் பணிகளுக்கு உதவக் காத்திருக்கிறது அமெரிக்கா (அன்றிலிருந்து இன்றுவரை இதேதான் இவனுகளுக்குப் பொழப்பு)  2. போரினால் ஏற்பட்ட இழப்புகளுக்கு ஈடுகட்டும் முகமாக 320 கோடி அமெரிக்க டாலர்களை தர ஒப்புக் கொள்கிறது.  ஆக கடிதம் என்னவோ பெரிதாக எழுதிக் கிழித்தாலும் காலணா கூட கொடுக்கவில்லை அமெரிக்கா. ஆனால் எழுச்சி நடைபெற்ற காலத்தில் வியட்நாமை விட்டு வெளியேறி பிற்பாடு சதி வேலைகளுடன் திரும்பிய கூலிப்படைகளுக்கு டன் கணக்கில் டாலர்களைக் கொடுத்தது அமெரிக்கா. போதாக்குறைக்கும் பொருளாதாரத் தடையை முன்னெப்போதையும் விட அழுத்தமாக அமுல்படுத்தத் தொடங்கியது அது. போர் முடிந்த பிறகு வியட்நாமுக்கான பால் பவுடர் ஏற்றுமதிக்குக் கூட தடைவிதித்தார் 'இங்கிலாந்தின் அன்னை தெரசா‘ மார்க்க்ரட் தாட்சர்    []   இருப்பினும் நண்பர்களே ...  அமெரிக்கா வியட்நாம் மண்ணை விட்டு அகன்றாலும் அது தூவிச் சென்ற டன் கணக்கிலான தரவரக் கொல்லிகள் இன்னமும் அதன் பணியை செய்து கொண்டுதான் இருக்கின்றன.  அது வியட்நாமிய மக்களிடையே புற்று நோயாகவும், குறிப்பாக ஈரல்களை தாக்கும் புற்று நோயாகவும், பல சந்ததிகளுக்கும் ஊறு விளைவிக்கும் மரபணு நோய்களாகவும், நரம்புத் தளர்ச்சி நோய்களாகவும் உலவிக் கொண்டுதான் இருக்கின்றன.  அதிலும் அமெரிக்கா வியட்நாமிய மக்களுக்கு அளித்த மிகப்பெரும் 'கொடையான' டைஆக்ஸினது பங்கு மகத்தானது. இந்த டைஆக்ஸினில் 3 அவுன்ஸ் மட்டும் போதுமானது நியூயார்க் நகரின் மொத்த மக்கள் தொகையையே கண்மூட வைப்பதற்கு.  இரண்டாம் உலகப்போரில் நிகழ்ந்த கொடுமைகளை ஜெர்மனியிலுள்ள நியூரம்பர்க் தீர்ப்பாயம் விசாரித்த போது.. "ஆணைக்குக் கட்டுப்படச் சொன்னார்கள். அதை மட்டுமே செய்தோம். மன்னித்து விடுங்கள்'' என்று கதறினார்கள் ஜெர்மானிய வீரர்கள்.  "மனித குலத்தில் நீங்களும் ஒருவர். ஆணைக்குக் கட்டுப்பட மறுத்திருக்க வேண்டும். அனுபவியுங்கள் தண்டனையை!" என்றது தீர்ப்பாயம்.  ஆனால் அமெரிக்க நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்ட டேவிட் மிட்ச்செல் என்ற இளைஞரது வழக்கு கொஞ்சம் வினோதமானது.  வியட்நாமிய மக்களைக் கொல்ல மறுத்ததால், ஆணைக்கு அடிபணியவில்லை என்கிற குற்றச்சாட்டின் பேரில் அவரை சிறையில் அடைக்கிறது அமெரிக்க அரசு.  அங்கோ ஆணைக்குக் கட்டுப்பட்டதற்கு தண்டனை. இங்கோ ஆணைக்குக் கட்டுப்பட மறுத்ததற்கு தண்டனை. இதுதான் அமெரிக்கபாணி 'நீதி'.  வியட்நாம் மீதான ஆக்கிரமிப்பு யுத்தத்தைப் பொறுத்தவரை அமெரிக்க எழுத்தாளர் 'வில்லியம் பிளம்’மிற்கு எழும் ஆதங்கம் ஒன்றே ஒன்றுதான்.    []   "ஏறக்குறைய அறுபது ஆண்டுகளுக்கும் மேலாக நாஜிகளது பேரழிவு வேலைகளை - நாவல்களாக.. திரைப்படங்களாக செய்திப் படங்களாக தொலைக்காட்சி நிகழ்ச்சிகளாக சர்வ மொழிகளிலும் வெளியிட்டு மக்களை என்றும் மறக்க விடாமல் செய்து கொண்டிருக்கும் மேற்கத்திய நாடுகள், வியட்நாமிய மக்கள் குறித்து மட்டும் வாயையே திறக்க மறுக்கிறார்களே ஏன்?  தங்களது வாழ்க்கையே இருள்மயமாகிப்போன அந்த வியட்நாமிய ஏழைகளின் குரலை யார் கேட்கப் போகிறார்கள்?  கொடும் சித்ரவதைகளுக்கு இலக்கான வியட்நாமிய அறிவு ஜீவிகளின் ஓலத்திற்கு யார் செவி சாய்க்கப் போகிறார்கள்?"  []   அது சரி... இன்றைய தலைமுறை கேட்க நினைப்பதெல்லாம்... வியட்நாமா.. அது எங்கிருக்கிறது? என்றுதானே.. பாவம் வியட்நாம்.  (ஆனால் இனிவருவது லிபியாவைப் பற்றி மட்டும் அல்ல)  மேலே உள்ள புகைப்படங்கள் இடமிருந்து வலம்: ஐஸ்னோவர், லேண்ஸ்டேல், நிகோ டின் டியம், மார்கரெட் தாட்சர்    []                               3. வல்லவனுக்கு வல்லவன்   லிபியப் பாலைவனத்தின் கூடாரமொன்றில் மும்மர் கடாஃபி பிறந்தபோது தெரியாது, பிற்காலத்தில் இந்தக் குழந்தை உலகின் வல்லரசையே ஒரு ஆட்டு ஆட்டப் போகிறதென்று. 1942 இல் பிறந்த கடாஃபி லிபியப் பல்கலைக்கழகத்தில் பட்டம் பெறும்போது வயது 21. அத்தோடு அவர் எந்த வேலை வாய்ப்பு அலுவலகத்திலாவது பெயரைப் பதிவு செய்ய வரிசையில் நின்றிருந்தால் எந்த வம்பும் வந்திருக்காது அமெரிக்க ஆளும் வர்க்கத்திற்கு. பட்டம் முடித்தவர் அடுத்துப் போய்ச் சேர்ந்தது லிபியாவின் இராணுவ அகாடமியில். அங்கு கற்றுக் கொள்ள வேண்டியதைக் கற்றுக் கொண்ட பிறகு வெளியில் வந்த கடாஃபி செய்த முதல் காரியம் லிபியாவை ஆண்டு வந்த மன்னர் இத்ரிஸை ஆட்சியிலிருந்து அகற்றியதுதான். லிபியாவின் தலைமைப் பீடத்தில் அமர்ந்த கடாஃபியின் ஆரம்பக்கால ஆட்சி அமெரிக்காவுக்கு எந்த விதத்திலும் உறுத்தலாக இல்லை என்றாலும், அடுத்தடுத்து வந்த ஆண்டுகள் அமெரிக்காவுக்கு ஆறுதலளிக்கக் கூடியதாகவும் இல்லை. 1970ல் கடாஃபி கலிபியாவில் முகாமிட்டிருந்த அமெரிக்க பிரிட்டிஷ் தளங்களை அங்கிருந்து காலி செய்து வெளியேற்றியது. திறந்த வீட்டிற்குள் நுழைவதைப் போல நுழைந்திருந்த எண்ணற்ற இத்தாலியர்கள், யூதர்களை வழியனுப்பி வைத்தது... என அவர் அடுக்கடுக்காக எடுத்த நடவடிக்கைகள் அமெரிக்காவுக்கு மட்டுமல்ல மேற்கத்திய நாடுகள் பலவற்றுக்கும் எரிச்சலைத்தான் ஊட்டின. []   போதாக்குறைக்கு அந்நியர்களுக்குச் சொந்தமான பல எண்ணெய் நிறுவனங்களை நாட்டுடைமை ஆக்கியது. லிபிய மக்களுக்கான வளங்களை லிபியர்களே அனுபவிக்க வேண்டும். அந்நியர்கள் அதன் பலனைக் கொண்டு செல்வது இறைவனுக்கு எதிரான செயல்.. என்று இஸ்லாமிய நம்பிக்கையின் ஊடாகப் பல கருத்துகளை மக்களிடம் கொண்டு சென்றது என்பனவெல்லாம் அமெரிக்காவிற்கு எந்த விதத்திலும் மகிழ்ச்சி அளிக்கக்கூடிய விடயங்களல்ல. அவர் என்னதான் இஸ்லாமிய நம்பிக்கைகளின் ஊடாகப் பல தத்துவங்களைச் சொன்னாலும் மேற்கத்திய உலகு அதற்கு மார்க்சியம் என்றே பெயரிட்டிருந்தது.  கடாஃபி கொஞ்சம் வேடிக்கையான மனிதரும் கூடத்தான்.  ''நபிகள் நாயகம்.... இயேசு ... இவர்களுக்கு பிறகு பாலைவனத்திலிருந்து புறப்பட்டு வந்த இறைத்தூதன் நான்தான்." என்றுகூடக் கூறியிருக்கிறார். ஆனால் அவர் எதை எதையோ கூறினாலும் எதை மறந்தும் கூடக் கூறக்கூடாது என்பதில் வெகு கவனமாக இருந்தார். அவரது கடுமையான எழுத்துக்களையும், உணர்வுகளைப் பிரதிபலிக்கும் ஆணித்தரமான பேச்சுக்களையும் கவனிக்கும்போது அவர் எந்த வேளையிலும் மறந்தும் கூட அமெரிக்கா போன்ற மேற்கத்திய நாடுகளை முன்னிலைப்படுத்திப் பேசியதேயில்லை. இதுதான் அவரை இன்றைக்கும் எந்த விதத்திலும் கணிக்க இயலாத ஒரு மர்மமான மனிதராகவே வைத்திருக்கிறது.  மும்மர் கடாஃபி மேற்கத்திய எதிரியா? ஆதரவாளரா? சோவியத்தின் நண்பரா? பகைவரா?  பொதுவுடைமைச் சித்தாந்தத்திற்கு ஆதரவா? எதிர்ப்பா? அவர் யார்? அவரது குணாம்சம் என்ன? எவருக்கும் தெரியாது.  1977 ஆம் ஆண்டு அவர் வெளியிட்ட பசுமைநூல் (Green Book) உலகப் புகழ் பெற்றது என்பதைக் காட்டிலும் உலகின் பல நாடுகளில் இன்றைக்கும் தடை செய்யப்பட்டுள்ள நூல்களில் இதுவும் ஒன்று என்பதே சரியானது. சோசலிசத்திற்கும் முதலாளித்துவத்துக்கும் இடையில் மூன்றாவதாக இருக்கும் ஒருபாதைதான் எனது பாதை... என்று அவர் கூறுவதைக் கேட்பவர்களுக்கு அண்ணாயிசம் கண்டுபிடித்த எம்.ஜி.ஆரின் நினைவுகூட வரலாம். லிபியாவின் சிறு நிறுவனங்களைத் தனியார்களது ஆளுகைக்கும், பெரு நிறுவனங்களை அரசினது ஆளுகைக்கும் உட்படுத்துவது அவரது பசுமைப் புத்தகத்தின் முக்கியக் கருத்துகளில் ஒன்று. "இங்கு எவராவது பட்டினியில் இறந்தார்கள் என்றோ ... சூதாட்ட விடுதிகளைக் கண்டார்கள் என்றோ நிரூபிக்கட்டும் பார்க்கலாம்...'' என்ற கடாஃபியின் லிபியாவில் மதுவுக்கும் தடைவிதிக்கப்பட்டிருக்கிறது என்பது ஆச்சர்யமான ஒன்றுதான்.  இவைகள் இப்படி இருக்க... எந்த இடத்தில் வந்தது இவருக்கும் அமெரிக்காவிற்குமான நேரடி மோதல் என்கிறீர்களா?  அமெரிக்கர்களது எண்ணெய் நிறுவனங்களில் கடாஃபி கை வைத்த போது எழுந்த முணுமுணுப்பு.  அவர்களது ராணுவத் தளங்களைக் காலி செய்தபோது சலசலப்பாக உருமாறி..  பாலஸ்தீன விடுதலை இயக்கங்களுக்கும். ஐரிஷ் குடியரசு படைகளுக்கும் ... பிற போராளி அமைப்புகளுக்கும் எல்லா முறையிலும் உதவத் துவங்கியபோது அது கைகலப்பாக வடிவெடுத்தது.  ' பயங்கரவாதிகளை ஆதரிக்கிறார் மும்மர் கடாஃபி..' என ஓலமிட்டார் அமெரிக்க சனாதிபதி ரொனால்ட் ரீகன்.  பயங்கரவாதிகளை ஆதரித்தார் கடாஃபி என்பதைக் காட்டிலும் அமெரிக்கா ஆதரித்த பயங்கரவாதிகளுக்கு எதிரான பயங்கரவாதிகளை ஆதரித்தார் என்பதுதான் பொருத்தமாக இருக்கும்.  நிகரகுவாவில் அமெரிக்கா தூண்டிவிட்ட காண்ட்ரா கலகக்காரர்களை ஆதரிக்காது, அதன் மக்கள் தலைவர் டேனியல் ஒர்ட்டேகாவை ஆதரித்தார்.  அங்கோலாவை அலைக்கழித்து வந்த UNITAவை ஆதரிக்காமல்...    []   அங்கோலா அரசினை ஆதரித்தார்.  மியாமியில் இருந்து கொண்டு கியூபாவிற்குத் தொடர்ந்து தொந்தரவு கொடுத்து வந்த நாடு கடத்தப்பட்டவர்களை ஆதரிக்காது... பிடல் காஸ்ட்ரோவிற்குத் தோள் கொடுத்தார். இவை போதாதா?  'மத்தியக் கிழக்கின் மட நாய்’ என்று உறுமினார் ரீகன்.  ஆனால் மும்மர் கடாஃபிக்கு இருந்த சமூக விழிப்புணர்வில் ஒரு கூறாவது ரொனால்ட் ரீகனின் மரபணுவில் இருந்திருக்குமா என்பது சந்தேகம்தான். ஆனால் 'பயங்கரவாதி கடாஃபி நிகரகுவாவின் ஆட்சியைப் பாதுகாக்க 40 கோடி அமெரிக்க டாலர் ஆயுதங்களை கொடுத்திருக்கிறார்’ என்று கூக்குரலிட்டார் ரீகன்.  1981 ஆகஸ்ட் 19 அன்று அமெரிக்க விமானங்கள் லிபிய வான் எல்லைக்குள் 240 கிலோமீட்டர் உள்ளே அத்துமீறி நுழைந்து இரண்டு லிபிய ஜெட் விமானங்களை சுட்டு வீழ்த்துகிறது.  ''இதுதான் உண்மையான சர்வதேச பயங்கரவாதம்"  என்கிறார் கடாஃபி  கடாஃபியைக் கொல்வதுதான் எங்களது ஒரே நோக்கம் என்கிறது அமெரிக்கா.  1981 பிப்ரவரியிலேயே கடாஃபியைக் கொல்ல திட்டமிடுகிறது பிரெஞ்சு உளவுப்படை - அமெரிக்காவின் ஆசியோடு. ஆனால் எதிர்பாராதவிதமாகப் பிரான்ஸ் நாட்டினது குடியரசு தலைவர் தேர்தலில் கிஸ்கார்டு (Giscard) தோற்றுப்போக, அந்தத் திட்டம் கைவிடப்படுகிறது. 1984இல் சி.ஐ.ஏ. அளித்த செயற்கைக்கோள் புகைப்படங்களையும், தொலைத்தொடர்பு உதவிகளையும் பெற்றுக்கொண்டு கடாஃபியைக் கொல்லும் முயற்சியில் இறங்கிய பிரெஞ்சு உளவுப் பிரிவுக்கு இருமுறையும் தோல்வியே கிட்டுகிறது.  அதே ஆண்டு ரோமிலும், வியன்னா விமான நிலையத்திலும் நடந்த இரு குண்டு வெடிப்புகளுக்கு அபுநிடல் தலைமையிலான பாலஸ்தீனக் குழுவே காரணம் எனினும் அந்தப் பட்டியலில் லிபியாவையும் சேர்க்கச் சொல்லி 'கமல்த்தனம்' பண்ணுகிறது சி.ஐ.ஏ . அப்புறம் என்ன வழக்கம்போல் மீண்டும் லிபியா நாட்டின் மீது வான்வெளித் தாக்குதல்தான். இத்தகைய தாக்குதல்களை எல்லாம் தனது சினிமா படப்பிடிப்புப் போலவே நினைத்துக் கொண்டார் முன்னாள் நடிகர் ரீகன்.  ரொனால்ட் ரீகன்தான் இப்படிப்பட்ட வீர விளையாட்டுகளில் ஈடுபட்டார். அதற்கு முன்னர் இருந்த ஜிம்மி கார்ட்டரோ நாகரீகத்தின் நவீன வடிவம்.  மிகச்சரியாக 27 ஜூன் 1980. மத்திய தரைக்கடல் மீது பறந்து கொண்டிருந்த இத்தாலிய பயணிகள் விமானம் ஒன்றினைக் குறிவைத்து நெருங்குகிறது ஒரு ஏவுகணை . என்ன செய்வது... ஏது செய்வது என விமானி யோசித்து 5 முடிப்பதற்குள் ஏவுகணையின் பணி நிறைவேறி 87 பேர்களது உயிரைக் குடித்து முடிக்கிறது அது.  அதே வேளையில் சற்றுத் தள்ளி பறந்து கொண்டிருக்கிறது ஒரு விஐபி யின் விமானம். அந்த விமானத்தின் பெயரும் வி.ஐ.பி.56 என்பதுதான். பயணிகள் விமானத்தைச் சுக்கு நூறாக்கிய ஏவுகணை எந்த நாட்டிற்குச் சொந்தமானது? அதன் மிக அருகே   சென்று கொண்டிருந்த விஐபி விமானத்தில் அமர்ந்திருந்த விஐபி யார்? என்றெல்லாம் விசாரணைகள் முடுக்கிவிடப்படும் போதுதான் உண்மை வெளியாகிறது. பயணிகள் விமானத்தைத் தாக்கிய ஏவுகணை நேட்டோ நாடுகளுக்குச் சொந்தமானது என்றும். அதுவும் இத்தாலிக்கே சொந்தமானது என்றும் தவறான வழி காட்டுதலில் அது இலக்கு மாறித் தாக்கிவிட்டது என்றும் புரிய வருகிறது.  அதே வேளையில் அதே பகுதியில் பறந்து கொண்டிருந்த அந்த விஐபி விமானத்தில் பயணம் செய்து கொண்டிருந்தது வேறு யாருமல்ல லிபியாவின் தலைவர் மும்மர் கடாஃபிதான் என்றும் புரியவர தேள் கொட்டிய திருடனைப் போல விழிக்கின்றன மேற்கத்திய நாடுகள் (இந்தப் படுகொலை நடந்த அன்றே இந்த முட்டாள்தனமான தாக்குதலுக்குப் பின்னணியில் அமெரிக்கா இருக்கிறது என்று முதலில் சொன்னவர் கடாஃபிதான் என்பது வேறு விஷயம்) ஆக ஜிம்மி கார்ட்டரின் சாமர்த்தியம் சந்தி சிரித்ததற்குப் பிறகு அரியணை ஏறியவர்தான் ரீகன் []   1986 ஏப்ரல் 5ஆம் தேதி மேற்கு பெர்லினில் உள்ள ஒரு சூதாட்ட இரவு விடுதி குண்டு  வெடிப்புக்கு உள்ளாகிறது . அமெரிக்க இராணுவத்தினர் இருவர் கொல்லப் படுகின்றனர்.  வழக்கம் போல் தனது கார் அமெரிக்காவின் சித்தரிப்பு பல்லவியை ஆரம்பிக்கிறார் ரீகன். லிபியாதான் இதற்குப் பின்னணி. அதற்கான அசைக்க முடியாத ஆதாரம் எங்கள் வசம் இருக்கிறது என்கிறார் ரீகன். ஆனால் அந்த ஆதாரமும் வழக்கம் போல் உலக நாடுகளுக்குக் காட்டப்படுவதில்லை.  இந்த முறை கொல்லாமல் விடுவதில்லை கடாபியை எனச் சீறுகிறது அமெரிக்கா. 'வாய்ஸ் ஆப் அமெரிக்கா’ வானொலி "கடாபி உங்களது சோகச்சுமை. அவரைப் பாதுகாக்கும் எவரும் எங்களது எதிரிதான்" என்று தொடர்ந்து ஒலிபரப்புகிறது. ஏப்ரல் 14இல் அமெரிக்க விமானங்கள் குறிவைத்து தாக்கிய குண்டுகளுக்கு 65 பொதுமக்களும் கடாபியின் வளர்ப்பு மகளும் இரையாகிறார்கள். இந்தக் கொடூரக் கொலைகளைக் கண்டித்து மும்மர் கடாபியின் இரு குழந்தைகள் அமெரிக்க நீதிமன்றத்தில் தாக்கல் செய்கின்ற ரிட் மனு தள்ளுபடி செய்யப்படுகிறது. அடுத்து இதில் பலியான 65 பேர்களது குடும்பத்தினரும் குற்றவாளிகளை தண்டிக்கக்கோரி மனு தாக்கல் செய்கிறார்கள். ஆனால் 2000 பவுண்டு எடையுள்ள குண்டுகளை வீசி அப்பாவி மக்களைக் கொன்ற அமெரிக்க விமானப்படைகளுக்கு 158 பதக்கங்களை அணிவித்து மகிழ்கிறது அமெரிக்க அரசு.  குண்டு வெடிப்போ ... ஏவுகணைத் தாக்குதலோ.. கலவரங்களோ எதுவாயினும் அதற்குப் பின்னணியில் லிபியாதான் இருக்கிறது என்று தனது மக்களை மூளைச்சலவை செய்து வைத்திருக்கிறது அமெரிக்கா. சலவை செய்ய அவர்களுக்கு ஏது மூளை? என்று நீங்கள் கேட்கக் கூடாது. அமெரிக்கர்கள் எல்லோருமே ரீகன்களோ, கார்ட்டர்களோ, புஷ்களோ அல்ல என்பதையும் நாம் கவனத்தில் கொண்டாகத்தான் வேண்டும்.  இவையெல்லாம் விட வேடிக்கையான சம்பவத்தைப் பற்றிக் குறிப்பிட்டேயாக வேண்டும். அதுதான் பான்ஆம் 103 (Pan Am103) விமானத் தகர்ப்பு. 1988 திசம்பரில் 270 பயணிகளோடு 3  லாக்கர்பி மீது பறந்து கொண்டிருந்த பான்ஆம் 103 ரக விமானம் நடுவானில் வெடித்துச் சிதறுகிறது. அதில் பாதிப் பேருக்கு மேல் அமெரிக்கர்கள். துப்பறியும் நாய்களான சி.ஐ.ஏ வினர் இந்த நாசவேலைக்கான காரணத்தை உடனடியாகக் கண்டறிந்து வெளியிடுகிறார்கள். 'என்றோ தாங்கள் தெரியாத்தனமாகத் தகர்த்த ஈரானிய பயணிகள் விமானத் தாக்குதலுக்கு பதிலடியாக இன்றைக்கு பாலஸ்தீனிய விடுதலைக்கான வெகுசன மக்கள் முன்னணியைச் சார்ந்த ஜிப்ரில் குழுவினரைக் கூலிக்கு அமர்த்திக் கொன்றிருக்கிறது ஈரான்' என அறிவிக்கிறது சிஐஏ. ஜிப்ரில் குழுவினரின் தளம் அமைந்திருப்பது சிரியாவில் எனத் தனது புலனாய்வில் வெளியிடுகிறது அமெரிக்கா, அந்த நேரம் பார்த்துத்தானா சதாம் உசேன் குவைத்தைப் பிடிக்க வேண்டும்?  []   சதாமை ஒடுக்குவதென்றால் எல்லையோர நாடான ஈரானின் உதவியும், ஏற்கெனவே பணயக்கைதிகளாக லெபனானில் உள்ள மேற்கத்திய நாடுகளது முக்கிய நபர்களை விடுவிக்க சிரியாவினது உதவியும் தான் திறவுகோல்கள் எனக் காலம் கடந்து யோசிக்கத் துவங்குகிறது அமெரிக்க அரசு. அப்படியானால் லாக்கர்பி விமானத் தகர்ப்பு வழக்கை யார் தலையில் போடுவது?    யோசித்து யோசித்துப் பார்த்த தில்... அட..  இருக்கவே இருக்கிறது லிபியா 5 என்று உடனே ஒரு முடிவுக்கு வந்தது அமெரிக்கா.  வளைகுடாப் போருக்கு ஈரானையும், சிரியாவையும் துணைக்கு வைத்துக் கொண்ட மாதிரியும் ஆயிற்று. வழக்கம் போல் லிபியாவை பலிகடா ஆக்கியது மாதிரியும் ஆயிற்று. என முடிவு செய்து பான்ஆம் 103 தாக்குதலின் உண்மையான குற்றவாளிகள் என இரு லிபியர்களைக் கைது செய்கிறது அமெரிக்கா. அதற்கு ஆதாரமாக அவர்களிடம் இருந்து கைப்பற்றிய ஆணித்தரமான சாட்சியாகச் சுண்டு விரலளவு இரு இரும்புத் துண்டுகளைக் காண்பிக்கிறது அது. (கேக்கிறவன் கேணப்பயல்ன்னா எருமை கூட ஏரோப்பிளேன் ஓட்டும்பானுக அமெரிக்காக்காரனுக) ஆனால் விபத்து நடந்து மூன்றாண்டுகளுக்குப் பிறகு இலண்டன் பிபிசி வேறு சில உண்மைகளைப் புட்டு புட்டு வைக்கிறது.  அமெரிக்க அரசு கைப்பற்றியதாகக் காட்டிய மின்னணு நேரக் கணிப்புக் கருவி (Electronic Timing Device) சுவிச்சர்லாந்தில் தயாரிக்கப்பட்டது என்றும்  அதை வாங்கிச் சென்றது கிழக்கு ஜெர்மனி அரசு என்றும்.  கிழக்கு ஜெர்மனது இரகசியப் போலீசுக்கும் பாலஸ்தீன விடுதலைக்கான வெகுசன மக்கள் முன்னணிக்கும் உள்ள உறவு கர்நாடகத்துக்கும் ரஜினிக்கும் உள்ள உறவைப் போன்றது என்றும்...  அம்பலப்படுத்துகிறது பி.பி.சி. மொத்தத்தில் ஈரானையும் - சிரியாவையும் சந்தேகப்பிடியிலிருந்து தப்புவிக்க லிபியாவைப் பலியாக்கி இருக்கிறது அமெரிக்கா என்கிற உண்மை* உலகுக்குத் தெரியவருகிறது.  இந்தத் தாக்குதல் என்றில்லை எந்தத் தாக்குதல் உலகின் மூலையில் எங்கு நடந்தாலும் அதற்குக் காரணம் லிபியாதான் என்கிற பொய்ப் பிரச்சாரம் உலக நாடுகளிடையே ஓரளவுக்கு எடுபடத்தான் செய்தது.  லிபியாவின் எண்ணெய் வருமானத்தில் பெரும்பகுதி பல்வேறு முற்போக்கு இயக்கங்கள்... ஆக்கிரமிப்புப் படைகள் பயங்கரவாத இயக்கங்கள்... எனப் பலவற்றுக்கும் பணமாக, ஆயுதமாக அளிக்கப்படுகிறது. மத்தியக் கிழக்கில் உள்ள சிறுபான்மை இயக்கங்கள்... ஆப்பிரிக்காவிலும் ஆசியாவிலும் உள்ள பல்வேறு இயக்கங்கள்... ஐரிஷ் குடியரசுப்படை. தென் ஆப்பிரிக்காவின் நிறவெறிக்கு எதிராகப் போராடும் அமைப்புகள். ஜப்பானிய செஞ்சேனை. இத்தாலிய சிவப்பு இராணுவம் எனப் பலவற்றுக்கும் லிபியாவின் ஆதரவு உண்டு என அமெரிக்கா அலறியது. ஆனால் இதில் ஓரளவு உண்மையும் இருக்கத்தான் செய்தது.  இதைச் சாக்கிட்டு அமெரிக்காவின் அருவருப்பான பிரச்சாரமோ எல்லை மீறிப் போனது.  'கடாஃபி போதை மருந்துகளுக்கு அடிமை..! 'உச்ச கட்ட ஆண்/பெண் பித்தர்..'  'பெண்களின் உடையை ரகசியமாக விரும்பி அணிந்து ம கொள்பவர்  * மாறுதலுக்கு உட்பட்டது  ‘கையில் கரடி பொம்மையை மன நோயாளிகளைப் போல சுமந்து கொண்டிருப்பவர்’  'வலிப்பு நோய்க்காரர்..'  என மனம் போன போக்கிலெல்லாம் தரக்குறைவாக விமர்சிக்கத் தயங்கவில்லை அமெரிக்க அரசும் அதனது நாளேடுகளும்.  எது எப்படியோ - அமெரிக்க ஆக்கிரமிப்புகளுக்கு எதிரான லிபியாவின் யுத்தம் என்பது எவரையும் வியக்க வைக்கும் ஒன்றுதான்.  அவரது அமெரிக்க எதிர்ப்பு 90களுக்குப் பிற்பாடு கொஞ்சம் வலுவிழக்கத்தான் செய்தது.  அதற்குக் காரணம் கடாஃபி என்பதை விடவும் 90களின் துவக்கத்தில் ஏற்பட்ட எண்ணெய் விலை வீழ்ச்சி ...  அமெரிக்காவைப் பகைத்துக் கொள்ள பயந்து பிற அரேபிய நாடுகள் பின்வாங்கியது....  இவை எல்லாவற்றை விடவும் சோவியத்து யூனியன் சிதறிப்போனது.  என பலவற்றை சொல்லலாம்.    []   அவர் உலகெங்கிலும் மக்கள் விடுதலைக்காகப் போராடிய இயக்கங்களுக்குத்  தேவைப்பட்ட உதவிகளை தானே முன்வந்து செய்தார் என்றாலும் போராளி இயக்கங்கள் எது? பயங்கரவாத இயக்கங்கள் எது? என்பதை ஓரளவு பகுத்தறியத் தவறியிருக்கிறார் என்பதையும் கணக்கில் கொள்ள வேண்டும். அவர் ஆதரித்த அநேக விடுதலை இயக்கங்கள் அவர் எதிர் பார்த்த அளவுக்கு இலக்கை அடையாததும் கடாஃபி பின்னோக்கி நகர ஒரு முக்கிய காரணம்.    []   1969இல் இருந்து இன்று வரையிலும் 34 ஆண்டுகளாய் மேற்கத்திய நாடுகளின் பல்வேறு தாக்குதல்கள்... பொய்ப்பிரச்சாரங்கள் எனப் பலவற்றைத் தாக்குப் பிடித்துத் துணிந்து நிற்கும் லிபியப் பாலைவனத்தின் அந்தக் கிழச்சிங்கம் ஒரு நல்ல தருணத்திற்காகவே பதுங்கிக் கிடக்கிறது என்பதுதான் எதார்த்தமான உண்மை.  (ஆனால் இனி வருவது ஈக்வடாரைப்பற்றி மட்டும் அல்ல)    மேலே உள்ள புகைப்படங்கள் இடமிருந்து வலம் : விமானத் தாக்குதல், ரொனால்ட் ரீகன், மன்னர் இத்ரிஸ்,  ஃபிரான்ஸ் அதிபர் கிஸ்கார்ட்      []                 4. போலிகளைக் கண்டு ஏமாறுங்கள்!   தென் அமெரிக்காவிலுள்ள மிகச்சிறிய நாடான ஈக்வடார் ஸ்பெயினிடமிருந்து விடுதலை பெறும்போது ஆண்டு 1822. இக்குட்டி நாடான ஈக்வடார் அண்டை நாடுகளிடம் இழந்தவை ஏராளம். அதனது பக்கத்து நாடான பெரு நாட்டோடு ஏற்பட்ட எல்லையோரச் சிக்கல் தீர்ந்து மூன்று வருடங்கள்தான் ஆகிறது. ஈக்வடாரின் கடந்த காலத்தைப் புரட்டிப் பார்க்கும் எவருக்கும் இந்தியாவின் நினைவும் ஆங்காங்கே எழுவது தவிர்க்க முடியாதது. உத்தரப் பிரதேசத்தில் கட்சி தாவுவதை தேசிய உரிமையாக எப்படிக் கருதுகிறார்களோ அப்படி ஈக்வடாரில் ஆட்சி மாற்றங்களையும் பார்க்கிறார்கள். அதன் தற்போதைய குடியரசுத் தலைவர் லூசியோ கட்றிஸ். முன்னாள் தலைவர் நபோவா பல்வேறு விசாரணைக் கமிஷன்களில் சிக்கிக் கொண்டு கம்பி எண்ணப்போகும் நாட்களுக்காகக் காத்துக்கொண்டிருக்கிறார். ஒருவேளை ’தீர்ப்பு தேதி குறிப்பிடாமல்’ தள்ளி வைக்கப்பட்டால் தப்பிப்பதற்கு வாய்ப்பு இருக்கிறது. அந்நியக் கடன் குளறுபடிகளில் அவர் சுட்டது அதிகமில்லை ஜெண்டில்மேன்.. மன்னிக்க... கனவான்களே வெறும் 900 கோடிதான். அவரும் இங்குள்ளவர்களைப் போலவே சி.பி.ஐ. விசாரணை வேண்டும். சி.பி.எம். விசாரணை வேண்டும்... என்று குரல் கொடுத்துக் கொண்டிருப்பதோடு டொமினிகன் குடியரசிடம் அரசியல் தஞ்சமும் கோரியிருக்கிறார். சரி... இனி நாம் நிகழ்காலத்திடமிருந்து சற்று விடைபெற்று கடந்த காலங்களில் இந்த ஈக்வடார் 'உலக அமைதிக்காக’ போரிட்டுக் கொண்டிருக்கும் அமெரிக்க மாமாக்களால் எந்தெந்த வழிகளில் சிக்கிக் கொண்டு தவித்தது என்பதைப் பார்ப்போம்.    அமெரிக்கா என்றாலே அது அந்த நாட்டின் மீது படை எடுத்தது... அது இந்த நாட்டின் மீது குண்டு போட்டது என்பது மட்டுமல்லாமல்... இவை எல்லாவற்றுக்கும் முன்னர் அவைகளை நியாயப்படுத்த அது எதை எதைச் செய்யும்... எத்தகைய நரித்தனமான செயல்களில் ஈடுபடும் என்பதுதான் இனி நாம் கவனிக்க வேண்டிய விஷயம்.  'சிறீ ஜெயேந்திர சரஸ்வதி ஜகத்குரு சங்கராச்சாரியார் ஸ்வாமிகள்' தீண்டாமை குறித்துப் பேசும் போது உங்களுக்கு எதில் சிரிக்கலாம் என்று தோன்றும்?  அரேபியப் பெட்ரோல் ரதத்தில் யாத்திரை வரும் சுதேசி புகழ் குருமூர்த்தி ’WTOவை விட்டு பாரதமே வெளியேறு' என்று முழங்கும் போது எதில் சிரிப்பீர்கள் நீங்கள்?  அப்படித்தான்... 'வறுமையை ஒழிப்போம்..! 'முதலாளித்துவம் ஒழிக..' 'அமெரிக்கா ஒழிக..  என்று அமெரிக்க சி.ஐ.ஏ.வாலேயே உருவாக்கப்பட்ட போலிப் பொதுவுடைமை இயக்கங்கள் ஈக்வடாரில் குரல் கொடுத்தன. ஆனால் சிரிக்கத்தான் ஆளில்லை. உண்மை தெரிந்தாலல்லவா சிரிக்க?  ஒரு சதவீதம் மக்கள் மட்டும் வசதியான நிலையிலும் மற்றவர்கள் மாதம் 500 ரூபாய்க்கும் கீழான சம்பாத்தியத்திலுமே வாழ்ந்தனர். இத்தகைய ஏழை எளிய மக்களால் ஆட்சிக்கு வந்த வெலாஸ்கோ இபாரா கெடுபிடிகளற்ற சுதந்திரமான ஆட்சியையே விரும்பினார். பாகுபாடற்று எல்லா வித பிரிவினருக்கும் ஏதாவது பயன் விளைவிக்கும் விதமாக அவரது ஆட்சி நகர்வதற்கே ஆசைப்பட்டார்.  சுருக்கமாகச் சொன்னால் பிடல் காஸ்ட்ரோவைப் போல துணிந்து அமெரிக்காவை எதிர்ப்பவரும் அல்ல அல்லது அவர் ஒரு சோசலிசவாதியும் அல்ல.  ஆனாலும் அடங்குமா அமெரிக்கா?  புதிதாகப் பொறுப்பேற்ற இபாராவின் ஈக்வடார் அரசு இப்படித்தான் இருக்க வேண்டும் என இரு கணக்குகள் போட்டது அது:  ஒன்று : கியூபாவுடனான உறவுகளை ஈக்வடார் துண்டித்துக் கொள்ள வேண்டும்.  இரண்டு : ஈக்வடாரில் உள்ள பொதுவுடைமைவாதிகளை அடக்கி ஒடுக்கி வைக்க வேண்டும்.  []   வெலாஸ்கோ இபாரா இரண்டையும் செய்யவில்லை இபாரா.  இவ்விரு அமெரிக்கக் 'கொள்கை’களையும் ஈக்வடாரில் செயல்படுத்துவதற்கான வாய்ப்பு முதல் மூன்றாண்டுகளில் மிகக் குறைவாகவே இருந்தது சி.ஐ.ஏ.வுக்கு. ஆனாலும் அதற்காக சும்மாவும் இருக்கவில்லை சி.ஐ.ஏ. அதனது தலைமறைவு நடவடிக்கைகள் தொடர்ந்தன. என்னென்ன நடவடிக்கைகளில் சி.ஐ.ஏ. ஈடுபட்டது என்பதை உலகம் உணர்ந்து கொண்டது பிலிப் அகி மூலமாகத்தான். சி.ஐ.ஏ.விலிருந்து வெளிவந்த இந்த உளவாளி எழுதிய Inside the Company என்கிற நூல் ஈக்வடாரில் அது என்னென்ன லீலைகளைச் செய்தது என்பதை புட்டுப்புட்டு வைத்தது. ஏனெனில் ஈக்வடாரின் தலைநகர் குய்ட்டோவில் தங்கியிருந்து தலைமறைவு வேலைகளைச் செய்ய அனுப்பப்பட்டவர்தான் இந்த பிலிப் அகி.  சி.ஐ.ஏ வின் முதல் திட்டம் கண்ணுக்குத் தெரிந்த எல்லா அரசியல் இயக்கங்களிலும் ஊடுருவுவது.  அது இடதுசாரிகளாக இருந்தாலும் சரி... அது வலதுசாரிகளாக இருந்தாலும் சரி...  இந்த ஊடுருவல் கீழ்மட்டத்தில்தான் என்றில்லை, அவைகளது தலைமைப் பீடம் வரையிலும் நடக்க ஆரம்பித்தது. ஊடுருவுவதற்கு இடதோ வலதோ எந்த இயக்கங்களும் இல்லாத இடங்களில் வெறுமனே திண்ணையில் படுத்துத் தூங்கிக்கொண்டிருக்கும் என்று நீங்கள் எண்ணினால் நீங்கள் ஒரு சுத்த...  அப்படியெல்லாம் சும்மாயிருக்க அதுவென்ன தமிழக காங்கிரஸ் கட்சியா என்ன? ஊடுருவ இயக்கமே கிடைக்காத இடங்களில் அதுவே ஒரு புது இயக்கத்தை ஆரம்பித்துவிடும். அதுவும் 'தேசத்தின் நலனில் மாளாத அக்கறை கொண்ட குடிமகன்கள்' என்ற போர்வையில் ... இந்த லெட்டர்பேட் இயக்கத்திற்கு வக்காலத்து வாங்க உள்ளூர் பிரபலங்களில் ஓரிருவரை வளைத்துப் போடும் சி.ஐ.ஏ. இவர்களது ஒரே வேலை "கியூபாவின் திட்டமிடுதலின்படி அரசாங்கத்தில் இடதுசாரிகள் ஊடுருவிவிட்டார்கள்" என்று ஊளையிடுவதுதான்.  வேறு சில பிரபலங்களோ அமெரிக்க உளவுப்பிரிவால் தயாரிக்கப்பட்ட உரையை அப்படியே திருப்பி வாந்தி எடுப்பார்கள்...  வாந்தி எடுத்ததை அப்படியே வாரி எடுத்து ஒரு பத்திரிக்கையின் ஆசிரியரோ பிரபல கட்டுரையாளரோ பாராட்டி பக்கம் பக்கமாக எழுதித் தள்ளுவார்கள்.  (இந்த இடத்தில் சோ. இராமஸ்வாமி போன்றோர் நினைவுக்கு வரவே கூடாது. தோழர்களே... அது மகாதப்பு.)  இந்த நேரத்தில் உலகத் தமிழர்களின் ஒரே தலைவர்…  பலகோடித் தமிழர்களது நெஞ்சில் என்றும் நிலைத்து நிற்கும் ஒரே தலைவர்...  ஒரே தொண்டர் சுப்ரமண்யன் ஸ்வாமியின் நினைவு வருவது மட்டும் தவிர்க்க முடியாததாகிறது. அதை சி.ஐ.ஏ. உளவாளி என்ற எவரோ குற்றம் சாட்டியபோது திருப்பிச் சொன்னது அது:    []   "என்னை சி.ஐ.ஏ. என்பவர்களும் நிச்சயம் சி.ஐ.ஏ. வாகத்தான் இருக்க முடியும் . ஏனென்றால் ஒரு சி.ஐ.ஏ.வுக்கு தான் இன்னொரு சி.ஐ.ஏ.வைத் தெரியும்" என்று.  ஆனால் ஈக்வடாரைப் பொறுத்த வரை கதையே வேறு. தலைநகர் குய்ட்டோவில்  முகாமிட்டிருந்த சி.ஐ.ஏ. உளவாளி பிலிப் அகி அன்று தூங்கி எழுந்து சோம்பல் முறித்து வழக்கம்போல் செய்தித்தாளைப் பிரிக்கிறார். செய்தித்தாளைப் பார்த்தவர் தலை சுற்றிக் கீழே விழாத குறையாக திடுக்கிட்டுப் போகிறார். காரணம் அதில் வந்திருந்த ஒரு விளம்பரம்தான். 'ஈக்வடாரின் கம்யூனிச எதிர்ப்பு முன்னணி' எனும் இயக்கத்தின் பெயரில் அது வெளியாகி இருந்தது. இதற்கு ஏன் அவர் அதிர வேண்டும்? அதற்கும் காரணம் இருக்கிறது. ஏனெனில் உளவாளி பிலிப் அகி நடத்திவந்த டுபாக்கூர் இயக்கத்தின் பெயரும் ஈக்வடாரின் கம்யூனிச எதிர்ப்பு முன்னணிதான்.  சி.ஐ.ஏ. உளவாளிக்குத் தெரியாமலேயே மற்றொரு உளவாளி..  அதுவும் ஒரு உளவாளி நடத்தி வந்த இயக்கத்தின் பெயரிலேயே மற்றொரு இயக்கம்.  சத்தமே போடாமல் தனது இயக்கத்தின் பெயரை மாற்றிக் கொள்கிறார் பிலிப் அகி, வேறு வழி?  சி.ஐ.ஏவைப் பொறுத்தவரை உழைக்கும் மக்களைக் குழப்பி அடிக்க அ முதல் மன்னிக்க... A முதல் Z முடிய புதுப்புது அமைப்புகளை உருவாக்குவது...  மாற்றுவது பலவற்றை இணைப்பது... சிலவற்றை இழுத்து மூடுவது...  அர்ப்பணிப்பு மிக்க புரட்சிகர இயக்கங்களில் ஊடுருவுவது...  வீரியமிழக்கவைப்பது...  அப்படியும் துணிவோடு நிற்பவர்களைக் களைந்தெறிந்துவிட்டு புதிய போலிகளை அதில் பொறுப்பேற்க வைப்பது போன்றவைதான் அதன் திருப்பணிகள்.  இந்த உளவுக் கும்பல் தனது திருவிளையாடல்களைச் செயல்படுத்த மூன்று முக்கியமான இலக்குகளைத் தேர்ந்தெடுத்திருந்தது.  1. பத்திரிகைகள் 2. அரசுத்துறைகள் 3. இராணுவம்  பத்திரிகைகளைப் பொறுத்தவரை லத்தீன் அமெரிக்க நாடுகள் என அழைக்கப்படும் பொலிவியா - பெரு - மெக்ஸிகோ  போன்ற நாடுகளில் வெளியான கம்யூனிஸ்டுகளைப் பற்றிய வதந்திகள், பொய்கள் போன்றவற்றை ஈக்வடாரிலும் மறுபிரசுரம் செய்வது...  சி.ஐ.ஏ. அதிகாரிகளால் தயாரிக்கப்பட்ட கம்யூனிச எதிர்ப்புப் பிரச்சாரங்கள் பெயரிடப்படாத தலையங்கங்களாக பத்திரிக்கைகளில் வெளியாகும். இதையே உண்மை என்று நம்பி வேறு பத்திரிக்கைகளில் துணுக்குகளாக எழுதிக்குவிக்கும் துணுக்கு எழுத்தாளர்களும் உண்டு. எது எப்படியாயினும் சி.ஐ.ஏ வின் எண்ணங்களைப் பிரதிபலிக்கும் துணுக்கு எழுத்தாளர்கள் வரைக்கும் உளவுத் துறையிடமிருந்து துட்டு   போகாமலில்லை (Paid on a piece-work basis).  அரசுத் துறையைப் பொறுத்தவரை சி.ஐ.ஏ.வின் முதல் கவனம் அஞ்சல் துறைதான். ஈக்வடாரின் அஞ்சல்துறைத் தலைமை அதிகாரியையே தனது வலைக்குள் இழுத்துப் போடுகிறது சி.ஐ.ஏ. அவருக்கும் அவருக்குக் கீழுள்ளோருக்கும் அது இட்ட கட்டளை கியூபாவிலிருந்தும், சோவியத் யூனியனில் இருந்தும் வரும் கடிதங்களைப் பிரித்துப் படித்து வேவு பார்ப்பது.  அடுத்து -  விமான நிலையங்களில் உள்ள சுங்கவரி அதிகாரிகளை வளைத்துப் போட்டு கியூபாவிற்குச் செல்வோரையும் வருவோரையும் கண்காணிப்பது... சி.ஐ.ஏவிடம் இருந்து கண் ஜாடை கிடைத்ததும்... 'கியூபா - சோவியத் யூனியனின் சதித்திட்டத்தின் படி ஈக்வடாருக்குள் பயங்கரவாதத்தை விளைவிக்க ஊடுருவிய நபர் கையும் களவுமாகக் கைது' என்று அறிவிப்பார்கள் அந்த அதிகாரிகள். பிறகு ஏற்கனவே சி.ஐ.ஏ தயாரித்து வைத்திருந்த ஆவணங்கள் விமானத்திலிருந்து இறங்கிய நபரிடம் கண்டுபிடிக்கப்பட்டதாக அறிவிக்கப்படும். இதற்குக் கைமாறாக பெரும் தொகையும், அவர்கள் அறியாமலேயே பதவி உயர்வும் வந்து சேரும்.  ஈக்வடாரில் யார் யார் என்னென்ன பதவிகளில் இருக்க வேண்டும்.  யார் யார் இருக்கக் கூடாது என்கிற துல்லியமான பட்டியல் குடியரசுத் தலைவரிடம் இருந்ததோ இல்லையோ ஆனால் சி.ஐ.ஏ தலைமையகத்திடம் இருந்தது.  குடியரசுத் தலைவர் வெலாஸ்கோ இபாராவிற்கு ஏழைகள் பெருமளவில் வாக்களித்திருந்தாலும் அடிப்படையில் மத நம்பிக்கைகளில் ஈடுபாடு உள்ளவர்கள். 'கியூபா உறவும், நாத்திக கம்யூனிசமும் நாசம் விளைவித்து விடும்' எனும் மதப்பழைமைவாதிகளது பிரச்சாரம் ஓரளவுக்கு இபாராவின் செல்வாக்கைக் குறைக்கத்தான் செய்தது. போதாக்குறைக்கு சர்ச்சுகளைக் குண்டுவைத்துத் தகர்த்து விட்டு பழியை கம்யூனிஸ்டுகள் மீது போடுகிறது சி.ஐ.ஏ. கடுமையான வேதனைக்கு உள்ளாகிறார் இபாரா. இச்செயல்களால் குடியரசுத் தலைவர் பாதிக்கப்பட்டிருக்கிறாரா இல்லையா என்பதை வேவு பார்க்க சி.ஐ.ஏ.வுக்குக் கிடைத்த மற்றொரு உளவாளிதான் டாக்டர் ஓவலே. இவர் வேறுயாருமல்ல... குடியரசுத் தலைவரின் தனி மருத்துவர். தனது நோயாளி கடுமையான மன உளைச்சலுக்கு ஆளாகி இருப்பதாகத் தகவல் தருகிறார் ஓவலே.  வெலாஸ்கோ இபாராவின் தேர்தல் பிரச்சார ஊர்வலங்களில் ஊடுருவி பாதுகாப்புக்கு நிற்கும் ராணுவத்துக்கு எரிச்சலும் கோபமும் உண்டாக்கும் வகையில் முழக்கங்களையும் சைகைகளையும் காட்டுகிறது சி.ஐ.ஏ. கும்பல். உச்சகட்டமாக தேர்தல் பிரச்சார ஊர்வலத்தில் சி.ஐ.ஏ.வால் விலைக்கு வாங்கப்பட்ட இரண்டு தளபதிகள் திட்டமிட்டு ஊடுருவி கலகத்தைத் தூண்டிவிட்டு தேசிய காவல் துறையினரை தேவையின்றி துப்பாக்கிச் சூடு நடத்த ஆணை பிறப்பிக்கின்றனர். விளைவு? வெலாஸ்கோ இபாராவின் ஐந்து ஆதரவாளர்கள் பலியாகிறார்கள். இபாரா பதவிப் பிரமாணம் எடுத்த கையோடு முதல் வேலையாக அந்த இரண்டு தளபதிகளையும் கைது செய்வதோடு கலகத்தை முன்னணியில் நின்று தூண்டிக் கொண்டிருந்த சி.ஐ.ஏ., அதிகாரி பாப் வெதர்வாக்ஸ் என்பவரை உடனடியாக நாடு கடத்துகிறார். (உள்ளூர் கலவரங்களுக்குப்  பின்னணியில் சி.ஐ.ஏ. இருக்கிறது என முன்னரே கியூபத் தூதரகம் எச்சரிக்கை விடுத்திருந்தது) []     கடைசியாக நவம்பர் 1961 இல் ராணுவம் தலையிடுகிறது.  வெலாஸ்கோ இபாரா வேறு வழியின்றி பதவி விலக வேண்டிய கட்டாயத்திற்கு ஆளாகிறார். அவருக்கு அடுத்தாக இருந்த அரோஸ் மனா குடியரசுத் தலைவர் நாற்காலியில் அமருகிறார். அவரும் சி.ஐ.ஏக்கு ஒத்துழைக்காததால் எரிச்சல் மேலிட ராணுவம் எச்சரிக்கை விடுக்கிறது. 72 மணி நேரத்திற்குள் தொழிலாளர் நல அமைச்சர் வீட்டுக்கு அனுப்பப்பட வேண்டும். ஈக்வடாரில் உள்ள கியூபா நாட்டினர் வெளியேற்றப்பட வேண்டும்' என கெடு விதிக்கிறது. அவரும் வேறு வழியே இன்றி இதற்குச் சம்மதிக்கிறார். சி.ஐ.ஏ. பரிந்துரை செய்யப்பட்ட புதிய அமைச்சரவை திணிக்கப்படுகிறது.  []   வெற்றி விழா என்ற பெயரில் ராணுவத்தினரும் சி.ஐ.ஏ.வினரும் சேர்ந்து கொண்டு ஈக்வடார் தலைநகர் குய்ட்டோவில் மதுவும் மங்கையுமாய் கும்மாளம் இடுகின்றனர். ராணுவ ஆதிக்கத்தால் எரிச்சல் அடைந்த மக்கள் ஈக்வடாரின் தெருக்களில் கையில் கிடைத்த ஆயுதங்களோடு திரள்கிறார்கள். ஆனால் போதிய அனுபவமும் பயிற்சியும் இல்லாத அவர்கள் சில மணி நேரங்களிலேயே பணிய வைக்கப்படுகிறார்கள்.  1963 ஜூலை 11 அன்று குடியரசுத் தலைவர் மாளிகையை முற்றுகை இடுகிறது ராணுவம்.  அடுத்த சில நிமிடங்களிலேயே கலகக் கும்பலின் தலைவன் அரியணையில், அரோஸ்மனா தெருவில் தெருக்களில் திரண்ட மக்கள் சுற்றிவளைக்கப்பட்டு சிறையில் தள்ளப்படுகிறார்கள். தேர்தல்கள் ரத்து செய்யப்படுகின்றன. மனித உரிமைகளோ ராணுவத்தின் கால்களுக்குக் கீழே.  'வீதியில் திரண்ட மக்கள் அன்னிய நாட்டில் ஆயுதப் பயிற்சி பெற்றவர்கள். இது ஈக்வடார் கம்யூனிஸ்டுக் கட்சியால் ஒரு மாதம் முன்னரே தீட்டப்பட்ட திட்டம்' என வழக்கமான பல்லவியை தொடங்குவதன் மூலம் தங்களது பத்திரிகா தர்மத்தைப் பாதுகாத்துக் கொள்கின்றன பத்திரிக்கைகள்.  பிற லத்தீன் அமெரிக்க நாடுகளில் கேட்ட 'கம்யூனிச பயங்கரம்' குறித்த அதே கட்டுக்கதைகள் ஈக்வடாரிலும் மெள்ள மெள்ள எதிரொலிக்கத் தொடங்குகின்றன.  (ஆனால் இனி வருவது ஈரானைப் பற்றி மட்டுமல்ல)  மேலே உள்ள புகைப்படங்கள் இடமிருந்து வலம்: பிலிப் அகி, இன் சைட் த கம்பெனி புத்தகம், சுப்பிரமணியம் சுவாமி, அரோஸ்மனா    []     5. சொன்னால் பொய் பொய்தானே!    “ஆக… இப்படியாகத்தான் அந்தப் பைத்தியக்கார மொசாடேவின் தொல்லைகளிலிருந்து நாம் தப்பித்தாக வேண்டும்...” என்று அமெரிக்க உள்துறையைச் சேர்ந்த டல்லஸ் சொல்லி முடித்தபோது அங்கு அமர்ந்திருந்த எவரும் மூச்சுக்கூட காட்டாது அமர்ந்திருந்தனர்.  டல்லஸ் குறிப்பிட்ட மொசாடே ஈரானின் பிரதமர்.  டல்லஸ் விவாதித்தது அவரை ஆட்சியை விட்டு வெளியேற்றுவது குறித்தது. ஆண்டு 1953. ஆனால் அமெரிக்கா இப்படிச் சீறுவதற்கு முன்னமே ஈரானிடம் சீறி வாலறுந்த நரியும் ஒன்று இருந்தது. அதன் பெயர் கிரேட் பிரிட்டன். ஆம் பிரிட்டிஷ்காரர்கள். சூரியன் மறையாத தேசத்துக்குச் சொந்தக்காரர்கள். அங்கும் ஒரு எண்ணெய் நிறுவனம் வைத்திருந்தார்கள். அதனது பெயர் ஆங்கிலோ ஈரான் எண்ணெய் நிறுவனம் (Anglo-Iran Oil Company E - A10C). அப்போது அங்கிருந்த ஒரே எண்ணெய் நிறுவனமும் அதுதான். மிகச் சரியாகச் சொன்னால் 1951 மார்ச் மாதத்தில் பாராளுமன்றத்துக்கு உறுப்பினராகப் போன மொசாடே பயணப் படிகளையும்,  பஞ்சப்படிகளையும் வாங்கிக் கொண்டு சும்மாயிருக்காமல் ஈரானியரது வளத்தைச் சுரண்டும் அந்த நிறுவனத்தை நாட்டுடைமை ஆக்கு என்ற ஒரு மசோதாவைக் கொண்டு வருகிறார். அது நிறைவேறுகிறது. ஏப்ரலில் வந்து தொலைத்த தேர்தலிலோ எவரும் எண்ணிக் கூடப் பார்க்கமுடியாத பெரும்பான்மையில் வெற்றியும் பெற்றுப் பிரதமர் நாற்காலியில் அமர்கிறார் மொசாடே அமர்ந்தவர் மற்றவர்களைப் போல வாக்குறுதிகளைக் காற்றில் பறக்க விடாமல் மே மாதம் ஒன்றாம் தேதி சொன்னபடியே அதை நடைமுறைக்கும் கொண்டு வந்துவிடுகிறார்.  நாட்டுடைமை ஆக்கப்பட்ட அந்த நிறுவனத்திற்கு வந்த லாபத்தில் 25 சதவீதத்தை நட்ட ஈடாகவும் அளிக்க முன் வருகிறார் மொசாடே ஆத்திரத்தின் உச்சிக்குப் போன பிரிட்டிஷ் பேரரசோ அதுவெல்லாம் முடியாது ’எங்களுக்குத் தேவை மொசாடேவின் தலை' என்கிறது. போதாக்குறைக்கு ஈரானுக்கு எதிராகப் பொருளாதாரத் தடையும் விதிக்கிறது.   []   அப்போது பிரிட்டிஷ் பிரதமராயிருந்த சர்ச்சில் சி.ஐ.ஏ. உளவாளியான கெர்மிட் ரூஸ்வெல்ட்டினைச் சந்திக்க ஆள் அனுப்புகிறார். (இந்த ரூஸ்வெல்ட் வேறு எவருமல்லர். அமெரிக்க ஜனாதிபதியாக இருந்த ரூஸ்வெல்ட்டின் பேரன்தான்) சர்ச்சில் அனுப்பிய நபரிடம் "அமெரிக்க அதிபர் ட்ரூமெனின் ஆட்சி முடியும் தருவாயில் இருப்பதால் அடுத்து வருகிற குடியரசுக் கட்சியினரை வைத்துச் சாதித்துக் கொள்ளலாம் அதுவரை பொறுங்கள்." என்று எடுத்துச் சொல்லக் காரியம் ஆகாமல் வந்த வழியே திரும்புகிறார் அந்த பிரிட்டிஷ் ஆசாமி.  ஆனால் அமெரிக்க உள்துறைச் செயலர் டல்லசின் கணக்கோ வேறு மாதிரி இருக்கிறது. இப்போதைக்கு மொசாடேவை வீட்டுக்கு அனுப்பினால் ஈரானிய கம்யூனிசக் கட்சி அந்த இடத்திற்கு வந்துவிடும். அப்புறம் தங்கத் திரவமாய்ச் சுண்டியிழுக்கும் எண்ணெய்ச் சுரங்கங்களைச் சுரண்டுவது பற்றி எண்ணிக்கூடப் பார்க்கமுடியாது. எனவே இப்போதைக்கு மொசாடேவே இருக்கட்டும் என்பது டல்லசின் கருத்து.  ஆனால் சி.ஐ.ஏவி.னது ரூஸ்வெல்ட்டின் கருத்தோ அதற்கு நேர் எதிர். ஈரானிய கம்யூனிசக் கட்சியான டியுடேவுக்கும் பிரதமருக்கும் இரகசியத் தொடர்பு இருக்கிறது. அதைப்போலவே டியுடேவுக்கும் சோவியத்து யூனியனுக்கும் தொடர்பு இருக்கிறது என்பது ரூஸ்வெல்ட்டின் அசைக்க முடியாத கருத்து.  அதைவிட டியுடே கட்சியோ 'பிரதமர் மொசாடே ஒரு கிறுக்குப் பிடித்த, பணம் கொழுத்த, ஏகாதிபத்தியத்திற்கு எதிரா அல்லது ஆதரவா என்று கணிக்க முடியாத ஒரு நிலப்பிரபு’ என்பதாக இருக்கிறது.  ஆனால் உண்மையில் மொசாடே யார்?  அவரது கூட்டணியான தேசிய முன்னணியில் மதவாதிகளும் இருந்தார்கள். கம்யூனிசத்தைக் கடுமையாக எதிர்க்கும் வலதுசாரிகளும் இருந்தார்கள்.  மற்றொரு புறத்திலோ 1949லேயே தடை செய்யப்பட்ட டியுடேவின் ஆதரவாளர்கள் பலர் அரசினது பெரிய பெரிய பொறுப்புகளிலும் இருந்தார்கள்.  டியுடே மீதான தடையை விலக்காவிட்டாலும் அவர்கள்  வெளிப்படையாகச் செயல்படுவதற்கு எந்தத் தடையும் விதிக்கவில்லை மொசாடே. ஆனால் வலதுசாரிகளோ மதவாதிகளோ - எவரோ - எவராயினும் பிரதமர் மொசாடேவை ஆதரிப்பதற்கு மற்றொரு சிறப்புக் காரணம் இருந்தது. அதுதான் அவரது நேர்மை. எண்ணெய் வளத்தை நாட்டினது உடைமை ஆக்குவதற்கு அவர் காட்டிய துணிச்சல்.  அமெரிக்க அரசின் உள்துறை ஈரான் அரசு பற்றி எந்தக் கணிப்பில் இருந்தாலும் சி.ஐ.ஏ. ரூஸ்வெல்ட்டின் எண்ணம் மட்டும் மொசாடே ஆட்சியைக் கவிழ்ப்பதிலேயே இருந்தது. ஆதாரமற்ற பொய்களை அள்ளி வீசுவதில் வல்லவர் இந்த ரூஸ்வெல்ட் இவரது அபத்தங்களின் சிகரமாக விளங்குவது அவர் எழுதிய எதிர்ப்புரட்சி (Counter Coup) என்கிற நூல். முழுப்பொய்யர் ரூஸ்வெல்ட்டுக்குக் கிடைத்த மற்றொரு கூட்டாளிதான் ஹென்டர்சன். இந்தப் பேர்வழி அப்போது ஈரானில் இருந்த அமெரிக்க தூதர். வேலிக்கு ஓணான் சாட்சி கதையாக இந்த இருவரும் 1953 ஜூலையில் உள்துறைச் செயலர் டல்லசைச் சந்திக்கும்போது டல்லஸ் ஒரு இன்ப அதிர்ச்சியை அளிக்கிறார் இருவருக்கும். "உங்கள் எண்ணப்படியே மொசாடேவைக் கவிழ்க்கும் பணி தொடங்கப்பட்டுவிட்டது'' என்பதே அது.  இது போதாதா ரூஸ்வெல்ட்டிற்கு?  ஏற்கனவே பிரதமரோடு பனிப்போரில் இருந்த மன்னர் ஷா "ஆயுதப்படையினரைக் கட்டுப்படுத்தி வைக்க வேண்டும்... அரசரது நீதிமன்றத்திற்கு ஆகும் வீண் செலவுகளைக் குறைக்க வேண்டும்” எனப் பிரதமர் மொசாடே வலியுறுத்துவதைக் கேட்டு மேலும் கடுப்பாகிறார்.  பொய்யைத் தவிர வேறு ஏதும் தெரியாத ரூஸ்வெல்ட்டோ மன்னர் ஷாவிடம் "அதிகாரத்தைக் கைப்பற்றுங்கள். உங்களுக்குப் பின்னணியில் அமெரிக்க அதிபர் ஐசனோவரும் பிரிட்டிஷ் பிரதமர் சர்ச்சிலும் இருக்கிறார்கள். அத்தோடு அரசியல், இராணுவ தளவாடங்கள் என எல்லாவித உதவிகளையும் அளிக்கத் தயாராக இருக்கிறார்கள்." என அவிழ்த்துவிடுகிறார். ஆனால் உண்மையில் அவ்விருவரும் அதைப்பற்றி அறிந்திருந்தார்களா என்பது ரூஸ்வெல்ட்டுக்கே வெளிச்சம். சும்மாவே ஆட்டம் போடும் மன்னர் ஷா ரூஸ்வெல்ட் கொடுத்த கள்ளையும் குடித்துவிட்டுச் சும்மாவா இருப்பார்?  ரூஸ்வெல்ட் கொடுத்த தைரியத்தில் மன்னர் ஷா பிரதமரைப் பதவியிலிருந்து வெளியேற்ற ஆணை பிறப்பிக்கிறார். ஆனால் அந்த ஆணையை மயிரளவுக்குக் கூடப் பொருட்படுத்தாமல் தனது வேலையாளை விட்டு வாங்கச் சொல்கிறார் மொசாடே. அத்தோடு டெக்ரான் வானொலியில் 'அந்நியக் கைக்கூலியாகச் செயல்படும் மன்னர் ஷாவுக்கு என்னைப் பதவி நீக்கும் உரிமை கிடையாது. அந்த உரிமை பாராளுமன்றத்திற்குத் தான் இருக்கிறது. எனக்குப் பதிலாக நியமிக்கப்பட்ட சாஹிடியைக் கைது செய்ய உத்திரவிடுகிறேன்' என அறிவிக்கிறார்.  பிரதமர் மொசாடேவுக்குப் பதிலாக நியமிக்கப்பட்ட சாஹிடி வேறுயாருமல்லர் ஜெர்மன் நாஜிகளோடு கூட்டுச் சேர்ந்து படுகொலைகளைச் செய்ததாகப் பிரிட்டிஷாரால் சிறைவைக்கப்பட்டவர்தான் இந்த சாஹிடி.  பிரதமரின் கைது அறிவிப்பைக் கேட்டதும் சாஹிடியை அமெரிக்கத் தூதரகத்தில் மறைத்து வைக்கிறார் ரூஸ்வெல்ட்  []     பலலட்சம் மக்கள் கொதித்தெழுந்து ஈரானியத் தலைநகர் டெக்ரானில் மன்னருக்கு எதிராக வலம் வருகிறார்கள். மக்கள் சக்தியை கண்டு மிரண்டுபோய் மன்னர் ஷா தனது ராணியுடன் ரோம் நகருக்கு ஓடுகிறார். ஈரானிய கம்யூனிசக் கட்சியான டியுடே பல்வேறு போராட்டங்களை மன்னருக்கு எதிராகவும், அமெரிக்கச் சதி வேலைகளுக்கு எதிராகவும் அறிவிக்கிறது. அதே நேரத்தில் ஈரானை ஒரு சனநாயகக் குடியரசாக அறிவிக்கக் கோரியும் எதிர்ப்புரட்சியைத் தடுத்து நிறுத்த மக்களுக்கு ஆயுதம் . வழங்கக் கோரியும் ... பிரதமர் மொசாடேவுக்கு வேண்டுகோள் விடுக்கிறது டியுடே.  ஆனால் பிரதமர் இதற்குச் சம்மதிக்க மறுக்கிறார். மூக்கறுபட்ட அமெரிக்க நரிகள் மேலும் வெறிகொண்டு பல்வேறு சதிவேலைகளில் இறங்குகின்றன. மன்னர் ஷாவின் ஆணையைப் பல பிரதிகள் எடுத்து ஈரானிய ராணுவ தளபதிகளுக்கு அனுப்புகிறான் ரூஸ்வெல்ட். அதில் ஒரு சிலர் ஆசை வார்த்தைகளுக்குப் பலியாகவும் செய்கின்றனர்.  "டியுடேவின் ஆர்ப்பாட்டங்களால் ஈரானில் வாழும் அமெரிக்கர்களது உயிருக்கு ஆபத்து" என அலறுகிறார் தூதர் ஹெண்டர்சன். பிரதமர் இது தனக்குச் சர்வதேச அளவில் அவமானத்தைத் தேடித் தந்துவிடும் என்று டியுடேவின் போராட்டங்களைப் போலீசைக் கொண்டும் இராணுவத்தைக் கொண்டும் நிறுத்தக் கட்டளை இடுகிறார் மொசாடே.   அவர்களுக்கு முழுப்பாதுகாப்பையும் அரசு அளிக்கும் என கெஞ்சாத குறையாக ஹெண்டர்சனிடம் கூறுகிறார்.  டியுடேவும் தனது ஆர்ப்பாட்டங்களை நிறுத்திக் கொள்கிறது.  ஆனாலும் அடங்குவதில்லை சி.ஐ.ஏ. ரூஸ்வெல்ட்டும் அமெரிக்க அரசும் மொசாடேவை வெளியேற்றியே தீருவது என இறுதி முடிவு எடுத்து 19 இலட்சம் அமெரிக்க டாலர்களை அனுப்பி வைக்கிறது அமெரிக்கா. இந்த பணம் கூட்டத்தைச் சேர்க்கவும் ஈரானிய எம்.பிக்களை விலைக்கு வாங்கவும்தான். பணம் ஈரானுக்கு வந்து சேர்ந்ததும் இராணுவத்தில் இருந்த தளபதிகள் சிலர் தெருக்களில் அணிவகுப்பு ஆரம்பிக்கிறார்கள்.  பணத்தால் கூட்டப்பட்ட கூட்டம் பின்னே நடக்க சர்க்கஸ் கலைஞர்களும்... விளையாட்டு வீரர்களும் முன்னே வித்தை காண்பித்துக் கொண்டு நகரத் துவங்குகின்றனர். இவர்களால் ஈர்க்கப்பட்ட மக்களில் சிலர் பேரணியோடு சேர்ந்து கொள்கின்றனர். பேரணியின் இரு புறங்களிலும் மன்னர் ஷாவினது உருவப்படம் பொறித்த ரூபாய் நோட்டுக்கள் (புதிதாக அச்சிடப்பட்டு) விநியோகிக்கப்படுகின்றன. பேரணி வருகின்ற வழியெல்லாம் பிரதமர் மொசாடேவின் படங்களுக்கு தீ வைத்தபடியும் அவரது ஆதரவுப் பத்திரிக்கை அலுவலகங்களைக் கொளுத்தியபடியும் செல்கின்றனர். டியுடே கட்சியின் அலுவலகங்களும் இதற்குத் தப்புவதில்லை. அதே வேளையில் டெக்ரான் வானொலியைக் கைப்பற்றிய ரூஸ்வெல்ட் “மொசாடே டிஸ்மிஸ் செய்யப்பட்டு விட்டார். அவரது இடத்தில் புதிய பிரதமர் சாஹிடி அமர்ந்தாயிற்று” என அறிவிக்கச் செய்கிறார். []   ஆனால் ரூஸ்வெல்ட்டின் பொய்தான் உலகப்பிரசித்தி பெற்றதாயிற்றே . வானொலி அறிவிப்புக்குப் பின்னரே சென்று கொண்டிருக்கிற ஊர்வலத்தை நோக்கி ஓடுகிறார். எதற்கு? மன்னர் ஷா வாழ்க என முழக்கம் போடவா? அது தான் இல்லை. ஊ ர் வ ல த் தி ல் போய்க்கொண்டிருந்த விலை போன தளபதியைச் சந்திக்க அந்தத் தளபதியை தேடிக் கண்டுபிடித்து டாங்கியோடு அமெரிக்கத் தூதரகத்துக்குப் போ.. அங்குள்ள சாஹிடியை   கூட்டிக் கொண்டு பிரதமர் அலுவலகத்துக்கு வந்து நாற்காலியில் அமரச் செய்" என அலறுகிறார்.  அவர் வானொலியில் முன்னர் அறிவித்ததெல்லாம் பின்னரே நடக்கிறது.  கதை சொல்லுவதில் வல்லவரான ரூஸ்வெல்ட் சொல்லிய கதைகள் ஏராளம்.  அந்த சி.ஐ.ஏ. உளவாளி சொல்ல மறந்த உண்மைகள் சில உண்டு.  அதுதான் மொசாடே அகற்றப்படுவதற்கு முன்னர் தலைநகர் டெக்ரானில் தெருவுக்குத் தெரு நிகழ்ந்த சண்டையும்  பிரதமரது அலுவலகத்தை நெருங்குவதற்கு முன்னர் நடந்த 9 மணிநேர யுத்தமும்...  மொசாடே ஆட்சியைக் காப்பாற்ற முன்னூறு பேர் உயிரைத் தியாகம் செய்த வரலாறும்  பல நூறு பேர் இரத்தத்தில் மிதந்த துயரமும்தான் அது. ஈரான் மக்களின் வளத்தை அயலார் சுரண்டலிலிருந்து காப்பாற்றிய, அனைத்துத் தரப்பினரது அன்பையும் மரியாதையையும் அளவற்றுப் பெற்ற மொசாடே கற்றுக்கொள்ள மறுத்த பாடமும் ஒன்று உண்டு.  அந்தப் பாடம் ஈரானிய கம்யூனிசக் கட்சியான டியுடே ஏற்கெனவே சொன்ன பாடம்தான்.  மக்கள் சக்தியை ஆயுதமாக பயன்படுத்தினால் மட்டும் போதாது.  மக்களையும் ஆயுதபாணியாக்க வேண்டும் என்கிற பாடமே அது.   (ஆனால் இனி வருவது நிகரகுவாவைப் பற்றி மட்டுமல்ல)      []   பின் குறிப்பு:   பிரதமர் மொசாடேவிற்குப் பின்னர் அரியாசனத்தில் அமர்ந்த மாமன்னர் ஷாவினது 25 ஆண்டு 'பொற்கால’ ஆட்சி குறித்தும்  சி.ஐ.ஏ - இஸ்ரேல் துணையோடு ஈரானில் உருவாக்கப்பட்ட உளவுப்படை 'சேவக்’ குறித்தும்...  அப்படை ஈரானிலிருந்து வெளியேறிவர்களை எல்லாம் தேடிக்கண்டுபிடித்துப் படுகொலைகளை நடத்தியது குறித்தும்  மொசாடேவை அகற்றத் துணை நின்ற சி.ஐ. ஏ. ரூஸ்வெல்ட்டுக்குச் சீதனமாக வளைகுடா எண் ணெய் நிறுவனத்தின் ஆலோசகர் பதவியையும், ஆண்டுக்கு 1,16,000 அமெரிக்க டாலர் வருமானத்தையும் அள்ளி வழங்கியது குறித்தும்..  மக்கள் தொகைக்குச் சமமாக ஈரானின் இராணுவத்தைப் பெருக்கி மனித உரிமைகளைக் காலில் போட்டு நசுக்கிய கதைகள் குறித்தும்…  எழுதிக் கொண்டே போனால் 'மொத்த தமிழர் கண்ணோட்டத்தையும் பாமரனே குத்தகைக்கு எடுத்துக் கொண்டாரா?' என எவராவது வாசகர் கடிதம் எழுத வேண்டி வரும்.    மேலே உள்ள புகைப்படங்கள் இடமிருந்து வலம்: கெர்மிட் ரூஸ்வெல்ட், ஜான் ஃபாஸ்டர் டல்லஸ், மன்னர் ஷா        []                               6. கர்த்தரே கொஞ்சம் டாலரை நேசியும்    ஒரு முன்கதைச் சுருக்கம்: ''நிகரகுவாவில் உள்ள புரட்சியாளர்களுக்கு எங்கெங்கே எவ்வளவு ஆயுதங்களும் தளவாடங்களும் இறக்குமதி செய்யப்பட்டிருக்கின்றன என்பதெல்லாம் எங்களுக்குப் புள்ளி விவரமாகத் தெரியும். ஆனால் அதன் உள்நாட்டு விவகாரங்களில் தலையிட அமெரிக்கா விரும்பவில்லை. அதே சமயம் மத்திய அமெரிக்காவில் உள்ள மிக நல்ல அரசைக் கவிழ்ப்பதற்கு அந்நிய சக்திகள் ஈடுபடுமாயின் அதை அமெரிக்கா வேடிக்கை பார்த்துக் கொண்டும் இருக்காது.”  சொன்னவர் : அமெரிக்க ஜனாதிபதி கூலிட்ஜ்  ஆண்டு : 1927  நல்ல அரசு: பழமைவாதக் கட்சி  புரட்சியாளர்கள்: தாராளவாதக் கட்சியினர்  அந்நிய சக்தி: சோவியத்து யூனியன்.  இந்தக் கூலிட்ஜ்தான் பின்னால் வந்த அமெரிக்க ஜனாதிபதி ரோனால்ட் ரீகனுக்கான முன்மாதிரி வீரத் துறவி. எது எப்படியோ ஒரு வழியாக 1933 இல் அமெரிக்கா நிகரகுவாவை விட்டு வெளியேறும் போது நினைவுப் பரிசாக ஒரு தேசிய பாதுகாப்புப் படையை நிறுவிவிட்டே சென்றது. அந்த தேசிய பாதுகாப்புப் படையின் ஆதரவோடு ஆட்சியில் அமர்ந்தவர்தான் 43 ஆண்டுகளாக நிகரகுவாவை ஆட்டிப்படைத்த சொமோசா. இந்த சொமோசாவின் பரம்பரை ஆட்சி நிகரகுவாவைத் தனது அந்தப்புரமாகவே கருதியது. அவர்களது முழுநேரப் பணி ராணுவச் சட்டத்தின் உதவியோடு எண்ணற்றவர்களைக் கொன்று குவிப்பது - சிறையில் தள்ளுவது... எதிர்கட்சியினரைப் படுகொலை செய்வது கிடைத்த பெண்களை எல்லாம் பாலியல் பலாத்காரம் செய்வது... நாட்டின் சொத்துக்களைக் கூறுபோட்டு அடிமாட்டு விலைக்கு வாங்கிக் கொள்வது என பீடு நடை போட்டது.  இவர்களது அட்டூழியங்களைச் சகிக்க இயலாமல் மக்கள் பொங்கி எழுந்து 1979இல் ஆட்சியைத் தூக்கி வீசியபோது அமெரிக்காவிலுள்ள மியாமிக்குத் தப்பி ஓடினான் சொமோசா, ஓடியபோதும் சும்மா ஓடவில்லை. 1000 மில்லியன் அமெரிக்க டாலரோடு ஓடினான் சொமோசா. ஆனால் நிகரகுவா மக்களில் மூன்றில் இரண்டு பங்கு பிரிவினருக்கு ஆண்டு வருமானமே 300 டாலர்தான்.   []   சொமோசா வீழ்த்தப்பட்ட வேளையில் அமெரிக்காவில் ஆட்சியில்  இருந்தது ஜிம்மி. இந்த ஜிம்மியினது ஆட்சி, சர்வாதிகாரியைத் துரத்தி அடித்த சாண்டினிஸ்டா படையினருக்கு மூச்சுவிட்டுக் கொள்வதற்கான ஒரு இடைவேளையைக் கொடுத்தது.  இனி...  ஜிம்மி கார்ட்டரின் அரசு ரீகனது அரசைப்போல வெற்றி பெற்ற சாண்டினிஸ்டாக்களை பகிரங்கமாக எதிர்க்கவில்லையே தவிர அதற்காக ரத்தினக்கம்பள வரவேற்பும் அளித்து விடவில்லை. சாண்டினிஸ்டா அரசில் சிலரைச் சேர்க்கச் சொல்லி வாஷிங்டன் வற்புறுத்தியபோது "வேலையை பார்...” என்று முகத்தில் அறைந்து கூறினர் சாண்டினிஸ்டாக்கள். அடுத்து வந்த ரொனால்ட் ரீகன் முழங்கினார் வேண்டாத அரசு என்றாலும் கூட நிதியை அள்ளி வழங்கும் அமெரிக்க அரசினது பெருந்தன்மையை எவரேனும் சந்தேகிக்க முடியுமா?" என்று. உண்மைதான்... அமெரிக்காவினது தாராளமனத்தையும்... பெருந்தன்மையையும் எவரும் சந்தேகித்துவிட முடியாதுதான். ஆனால் தாராள அமெரிக்கா நிதியை அள்ளி வழங்கியது யார் யாருக்குத் தெரியுமா? சி.ஐ.ஏவின் முன்னணி அமைப்பான American Institute for Free Labour Development (AIFLD)க்கும்... ஓடிப்போன சொமோசாவின் படைகளை காண்ட்ராக்கள் (Contras) என ஞானஸ்நானம் செய்து வைத்து நிகரகுவாவைத் தாக்குவதற்கும்தான்.  இந்த தாராள மனதைப் புரிந்து கொள்ளாமல் 'சண்டியர்த்தனம்' செய்தனர் சாண்டினிஸ்டாக்கள். அமெரிக்கா பெருந்தன்மையோடு 50 லட்சம் டாலர்களை ரோமன் கத்தோலிக்க சபைகளுக்கு மனமுவந்து அளிக்க முன்வந்தபோது "இந்த பைபிள் பாலிடிக்ஸ் எல்லாம் எங்ககிட்ட வெச்சுக்காதே" எனத் திருப்பி அனுப்பியது சாண்டினிஸ்டா அரசு. 1985 வரை கார்டினல் ஆக இருந்த ஓபேன்டோவுக்கும் கத்தோலிக்க ஆலயங்களுக்கும் ஆயிரமாயிரம் அமெரிக்க டாலர்களை மறைமுகமாக அளித்து வந்தது அமெரிக்கா. கார்டினல் ஓபேன்டோ ஓப்பனாகவே மன்னிக்க... பகிரங்கமாகவே சொன்னார். "ஆம் அளித்தது உண்மை . ஆனால் அது மதக்கல்விக்காக வந்த பணம்."  இந்தக் கார்டினல் ஓபேன்டோவுக்கும் ... கத்தோலிக்க சபைகளுக்கும். இயேசு மீது விசுவாசம் இருந்ததோ இல்லையோ ஆனால் டாலர்கள் மீதான விசுவாசம் மிக அதிகம். சாண்டினிஸ்டாக்களிடம் பைபிள் பாச்சா பலிக்காது என்பதைப் புரிந்து கொண்ட அமெரிக்கா நேரடியான யுத்தத்தைக்  கட்டவிழ்த்துவிட்டது. நிகரகுவாவின் மீது பொருளாதாரத் தடை விதித்ததன் மூலம்.  பொருளாதாரத் தடையின் முதற்கட்டமாக நிகரகுவாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் 90 சதவீத சர்க்கரையை ஏற்றுக்கொள்ள மறுக்கிறது அமெரிக்கா. அடுத்து உலக வங்கியும், ஐ.எம்.எப்.ம். கடன் தர மறுக்கின்றன. நிகரகுவா மீனவர்களுக்கு  படகுகளை வழங்க அய்டிபி வங்கியும் மறுக்கிறது. அதற்கு அய்டிபி. சொன்ன காரணம். 'அப்படகுகளை இயக்க உங்களிடம் பெட்ரோல் கிடையாது என்பதுதான். ஏனென்றால் அதற்குச் சில நாட்களுக்கு முன்னர்தான் அமெரிக்க உதவியோடு நிகரகுவா துறைமுகமான கொரிண்டோவில் இருந்த எண்ணெய்க் கிடங்கைத் தகர்த்திருந்தார்கள் காண்ட்ரா கலகக்காரர்கள்.  நிகரகுவாவின் எண்ணெய்ப் பொருளாதாரத்தையே சீர்குலைக்கும் முகமாக கிடங்குகளைக் குறிவைத்து தாக்குவது. எல்லையோர நாடான ஹோண்டுராஸில் இருந்துகொண்டு பைப் லைன்களை வெடிவைத்துத் தகர்ப்பது. துறைமுகங்களில் எண்ணெய் இறக்கும் டாங்கர்களை வெடிவைத்து தகர்ப்பது. வெளிநாடுகளிலிருந்து கடல் வழியாக வரும் கப்பல்களை ராக்கெட் தாக்குதல் மூலம் சிதற அடிப்பது என சகல திட்டங்களையும் காண்ட்ராவுக்குக் கற்றுக் கொடுக்கிறது அமெரிக்கா.  இதன் விளைவாக பன்னாட்டு நிறுவனமான எஸ்ஸோ தனது கச்சா எண்ணெயை நிகரகுவாவிற்கு அளிப்பதை நிறுத்திக் கொள்கிறது. அதைப் போன்றே ஸ்டேண்டர்டு ப்ரூட் கம்பெனி நிகரகுவாவின் வாழைப்பழ ஏற்றுமதியை ஏற்றுக் கொள்ள மறுக்கிறது. இந்நிறுவனத்துடனான ஒப்பந்தம் மேலும் மூன்று ஆண்டுகளுக்கு இருந்தாலும் அதை அப்பட்டமாக மீறுகிறது அந்த நிறுவனம், விளைவு?  4000 பேருக்கு உடனடி வேலை இழப்பு.  வைத்திருக்கவும் இயலாமல், சந்தையில் விற்கவும் இயலாமல் இருந்த 6 லட்சம் பெட்டி வாழைப்பழம் வீணாகிறது.  அமெரிக்கா நிகரகுவாவின் அண்டை நாடான ஹோண்டுராசில் படைகளோடு வந்து இறங்கும் வரை காண்ட்ரா கலகக்காரர்கள் மறைந்திருந்து தாக்கிவிட்டு ஓடுவது... அங்கொன்றும் இங்கொன்றுமாக ஓரிருவரைக் கொலை செய்வது. என்பதாகத்தான் இருந்தார்கள். ஆனால் 1982 இல் படைகளோடு கால் பதித்த பிறகு அவர்கள் காட்டில் அடைமழைதான்.  நவீன ரேடார் சாதனங்கள், தொலைத்தொடர்பு கருவிகள் காண்ட்ராக்களுக்குக் கிடைக்கிறது. ஹோண்டுராஸ் நாட்டோடு ராணுவக் கூட்டுப் பயிற்சி என்கிற போர்வையில் விமானங்கள் நிகரகுவாவின் வான் எல்லைக்குள் பிரவேசித்து குண்டு வீசுவதற்கும். நாசவேலைகளுக்கும் பொருத்தமான இடங்களைப் படமெடுப்பது... சாண்டினிஸ்டா படைகளின் நடமாட்டத்தைக் கண்காணிப்பது... போன்ற வேலைகளில் ஈடுபடுகின்றன. அங்கிருந்த ஒரு சி.ஐ.ஏ. ஆய்வாளன் சொன்னது: "எங்களது புலனாய்வுப் பணிகள் நிகரகுவாவைப் பொறுத்தவரை வெகு சிறப்பானவை. அதன் தலைநகர் மனாகுவாவின் கழிப்பறை ஒன்றில் திறந்து விடப்படும் நீரின் ஓசைகூட எங்களது காதுகளுக்குத் தப்பாது.''  வழக்கமான அமெரிக்கபாணி லீலைகள் தொடர்ந்து கொண்டிருக்க நிகரகுவாவின் பொதுத்தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்படுகிறது. இத்தேர்தலில் எவர் வெற்றி பெறுவார், எவர் தோல்வி அடைவார் என எவரும் அறியும் முன்பே எவர் வெற்றிபெறக் கூடாது என்பதைத் தீர்மானிக்கிறது அமெரிக்கா சி.ஐ.ஏ. அப்படி வெற்றி பெறக்கூடாது என்று வெள்ளை மாளிகை மண்டியிட்டு பிரார்த்தனை செய்தது டேனியல் ஓர்ட்டேகாவை நினைத்துத்தான். நாற்பதே வயதான டேனியல் ஒர்ட்டேகாவின் கனவுலக நாயகன் வேறு எவருமல்ல கியூபாவினது பிடல் கேஸ்ட்ரோதான். இன்றைக்கும் சாண்டினிஸ்டாவின் தலைமைப் பொறுப்பில் இருப்பவர்தான் டேனியல் ஒர்ட்டேகா. இவர் தேர்தலில் போட்டியிடுகிறார் என்றதுமே கிலி கிளம்பிவிடுகிறது அமெரிக்காவுக்கு. ஊருக்கு பத்து பேர் கூட தேறாத கட்சிகளையெல்லாம் ஒருங்கிணைத்து    []   ஒரு கூட்டணியை உருவாக்குகிறது வெள்ளை மாளிகை வட்டாரம். அந்தக் கூட்டணியின் பெயர் ஜனநாயக ஒருங் கிணைப்பிற்கான கூட்டணி   (Democratic Co-ordinating Alliance - DCA). இக்கூட்ட ணியின் தலைவராக ஜோஸ்குரூஸ் நியமிக்கப்படுகிறார்.  நவம்பரில் தேர்தல் என பிப்ரவரியிலேயே அறிவித்தாலும் ஒன்பது மாத இடைவெளி போதாதென முரண்டு பிடிக்கிறார் ஜோஸ்குரூஸ். அடுத்து தேர்தலில் போட்டியிடுவதற்கு ஏழு கட்சிகள் பதிவு செய்தாலும் டி. சி.ஏ. பதிவு செய்வதில்லை. அமெரிக்கத் துணையோடு கலகம் செய்யும் காண்ட்ராக்களோடு பேச்சு வார்த்தை நடத்தினால்தான் பதிவு செய்வேன் என அறிவிக்கிறார் ஜோஸ்குரூஸ். ஆனால் பேச்சுவார்த்தைக்கு காண்ட்ராக்கள் மறுத்துவிடுகின்றனர். மறுபடியும் பல்டி அடிக்கிறது டி.சி.ஏ. தேர்தலில் போட்டியிடுவதற்கான பதிவுத் தேதியை நீடிக்க வேண்டும் என அறிவிக்கிறது ஜனநாயக ஒருங்கிணைப்பிற்கான கூட்டணி. சாண்டினிஸ்டா அரசு முதலில் மறுத்தாலும் கெடு தேதியை நீட்டிக்கிறது. அப்போதும் பதிவு செய்வதில்லை அக் கூட்டணி.  இந்த முறை தேர்தலையே நவம்பரிலிருந்து ஜனவரிக்குத் தள்ளி வைக்க வேண்டும் என்கிறது டி.சி.ஏ. இக்கூட்டணியின் இத்தனை லூட்டிக்கும் காரணம் தேர்தலில் போட்டியிட்டால் டெபாசிட் கூடக் கிடைக்காது என்கிற தோல்வி பயம்தான். அதன் உச்சகட்டமாக சாண்டினிஸ்டாக்களின் ஒற்றுமையைக் குலைக்கும் முகமாக வெனிசுலா, பனாமா நாடுகளின் நாளிதழ்களில் "எங்களுக்கு ஒர்ட்டேகாவும் வேண்டாம்... குரூஸ்சும் வேண்டாம்... தாமஸ் போர்கேவை வெற்றிபெறச் செய்யுங்கள்" என முழுபக்க []   விளம்பரங்கள் வெளியாகின்றன. இந்த தாமஸ் போர்கே சாண்டினிஸ்டா விடுதலை முன்னணியை உருவாக்கிய முன்னணித் தோழர்களில் ஒருவர். அமெரிக்காவின் இத்தகைய பிரித்தாளும் சூழ்ச்சிகளில் எதுவும் பலனளிக்காது, 63சதவீத வாக்குகளைப் பெற்று ஆட்சியில் அமர்கிறார் டேனியல் ஒர்ட்டேகா. இந்த வெற்றியைச் சகிக்காது, "தேர்தலில் தில்லு முல்லு'' என ஊளையிடுகிறது வெள்ளை மாளிகை வட்டாரம். ஆனால் 40 நாடுகளில் இருந்து வந்த 400 பிரதிநிதிகள் முன்னிலையில் நடந்த தேர்தலை உலக நாடுகள் அனைத்தும் ஒத்துக்கொள்ள வேறு வழியின்றி ஒப்பாரியை நிறுத்துகிறது அமெரிக்கா.  1985 இல் பதவிக்கு வந்த சாண்டினிஸ்டா தலைவர் ஒர்ட்டேகாவைச் சகிக்க முடியாமல் தன் திருவிளையாடல்களை மேலும் மூர்க்கத்தோடு தொடர்கிறது அமெரிக்கா. முன்பைக்காட்டிலும் பொதுமக்களையும் அரசு அதிகாரிகளையும் கொன்று குவிக்கிறார்கள் காண்ட்ரா கலகக்காரர்கள். அவர்களது முதல் இலக்கே சாண்டினிஸ்டா அரசினது சமூக மேம்பாட்டு மையங்களை சீர்குலைத்து மக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்துவதுதான்.  சுகாதார நிலையங்கள்…. வேளாண் கூட்டுறவு நிறுவனங்கள்…. சமுதாயக் கூடங்கள்..  பள்ளிகள் என அனைத்தும் தரைமட்டம் ஆக்கப்படுகின்றன. லண்டனிலிருந்து வெளியாகும் தி கார்டியன் பத்திரிக்கை எழுதியது:  "முதலில் அவர்கள் ரோசாவினது மார்பகங்களை அறுத்து வீசினார்கள். பிறகு நெஞ்சைப் பிளந்து இதயத்தை வெளியே எடுத்துக் கொன்றார்கள். ஆண்களையோ முதலில் கை கால்களை துண்டு துண்டாக வெட்டினார்கள். அவர்களது விரைகளை வெட்டி எடுத்தார்கள். கண்கள் தோண்டப்பட்டன. இறுதியாக தொண்டையைப் பிளந்து நாக்கை வெளியே உருவி எடுத்துக் கொன்றார்கள்."  இப்படி படுகொலைக்கு ஆளானவர்களில் 8000 பேர் பொதுமக்கள் ... 910பேர் அதிகாரிகள். அமெரிக்க ஜனாதிபதி இப்படுகொலையாளிகளை விடுதலைப் போராளிகள் என்றார். போதாக்குறைக்கு காண்ட்ராக்களுக்கு அறிவுரை வேறு.  "மக்களிடம் சொல்லுங்கள், எங்கள் போர் மக்களுக்கு எதிராக அல்ல. அது ரஷ்ய ஏகாதிபத்தியவாதிகளுக்கு எதிராக என்று. இது விவசாயிகளின் ஆதரவையும் கரிசனத்தையும் பெற்றுத்தரும். அது நம்மில் ஒருவராக அவர்களை உணரவைக்கும்"  இத்தகைய ஒரு முழக்கத்தை மாவோ கூட இவ்வளவு அழகாகச் சொல்ல முடியாது.   []   1987 இல் சோவியத் அதிபர் மிகயில் கோர்ப்பச்சேவ் மிகத் தெளிவாகச் சொன்னார்: ''காண்ட்ரா கலகக்காரர்களுக்கான ஆயுத உதவிகளை அமெரிக்கா நிறுத்திக் கொள்ளுமானால்...  நிகரகுவாவிற்கு அளிக்கிற ஆயுத உதவிகளை நாங்களும் நிறுத்திக் கொள்ளத் தயார்" என்று.  இதற்கிடையில் நிகரகுவாவின் வெளியுறவு அமைச்சர் எஸ்காட்டோவுக்கு  மதுவில் தாலியம் நஞ்சைக் கலந்து கொல்ல முற்படும் வேளையில் மூன்று அமெரிக்க தூதரக அதிகாரிகள் கையும் தாலிய முமாக பிடிபட்டு வெளியேற்றப்படுகிறார்கள். ஆத்திரத்தின் உச்சிக்கே போகிறது அமெரிக்கா. வதந்திகளை வாரி இறைக்க ஆரம்பிக்கிறது அது.  இதோ சோவியத்தின் மிக் விமானங்கள் நிகரகுவாவில் தரையிறங்கி விட்டன.  தொழிற்சாலைகளுக்கு விரைவில் மூடுவிழா...  நிகரகுவா மருத்துவர்களுக்கு பதிலாக கியூப் மருத்துவர்கள் நிரப்பப்படப் போகிறார்கள்.    மக்கள் கொஞ்சம் குழப்பத்திற்கு ஆளாகிறார்கள். அதிர்ச்சிக் குழுக்கள் எனப்படும் குழுக்கள் நிகரகுவாவில் நடக்கும் பற்பல ஊர்வலங்களில் ஊடுருவுகிறார்கள். இக்குழுக்கள் கைகளில் ஊர்வலத்திற்கான பதாகைகளும் முழக்க அட்டைகளும் இருந்ததோ இல்லையோ ஆனால் இரும்புத் தடிகள், சங்கிலிகள், கையெறி குண்டுகள் கட்டாயம் இருந்தன. சி.ஐ.ஏ. 'விடுதலைப் போராளிகளுக்கான கையேடு’ (Freedom Fighters Mannual) ஒன்றை காண்ட்ரா கலகக் கும்பலுக்கு அளிக்கிறது. அதில் விடுதலைக்கான 40 வழிகள் குறிப்பிடப்பட்டிருக்கின்றன. அந்த 'இனியவை நாற்பதில்’ சிலவற்றைப் பார்ப்போம்.  1. கழிவறை ஓட்டைகளைப் பஞ்சுகளைக் கொண்டு அடைத்து வையுங்கள்.  2. வாயுக்கிடங்குகளில் குப்பைகளைக் கொட்டுங்கள்.  3. ஆணிகளைக் குவியல் குவியலாக நெடுஞ்சாலைகளில் தூவிவிட்டுச் செல்லுங்கள்.  4. தீயணைப்புத் துறைக்குத் தொடர்ந்து தவறான தகவல்களைத் தொலைபேசியில் சொல்லிக்கொண்டேயிருங்கள்.  5. மின்சாரத்தை அடிக்கடி தடைப்படுத்துங்கள். 6. வதந்திகளைப் பரப்பிக் கொண்டே இருங்கள்.  என்பன உள்ளிட்ட நாற்பது விதிமுறைகளை காண்ட்ராக்களுக்கு அளிக்கிறது. சதிகளும் - சீர்குலைவுகளுமாய் நாட்கள் உருண்டோடி அடுத்த தேர்தலே அருகில் வந்து விடுகிறது. எப்படி இருந்தாலும் இந்த முறை டேனியல் ஓர்ட்டேகாவை தோற்கடித்தே தீர வேண்டும் என்கிற முடிவில் களம் இறங்குகிறது சி.ஐ.ஏ.  இதற்கிடையில் நண்பர்கள் யார்? எதிரிகள் யார்? என்றே அடையாளம் காணத்தெரியாமல் தத்தளிக்கிறது சாண்டினிஸ்டா  அரசு.  அரசுக்கு எதிராக தொடர்ந்து வதந்திகளைப் பரப்பிவரும் லா பிரென்சா (La Prensa) பத்திரிக்கை இழுத்து மூடப்படுகிறது - அரசால், மனித உரிமை ஆர்வலர்களின் கண்டனத்திற்கு ஆளாகிறது அரசு. ஆயினும் இந்த பத்திரிக்கையின் ஆசிரியர்களில்  ஒருவர் காண்ட்ராக்களின் மறைமுக அமைப்பொன்றின் உறுப்பினர் என்பதும் காண்ட்ராக்களுக்கு ஆதரவாக அமெரிக்காவில் பலமுறை பயணம் மேற்கொண்டவர் என்பதும் அநேகருக்குத் தெரிந்துதான் இருந்தது. 1990இல் வர இருக்கும் தேர்தலுக்காக எதிர்க்கட்சிகள் ஒருங்கிணைக்கப்படுகின்றன. அரசியல் கட்சிகள் தொழிற்சங்கங்கள்... செய்தித்தாள்கள் சாண்டினிஸ்டா எதிர்ப்பு அரசியல் தலைவர்கள்... கத்தோலிக்க சபைகள் என அனைத்திற்கும் கோடிக்கணக்கான பணம் கொட்டப்படுகிறது.  அமெரிக்கப் பணமும் ஆயுதமும் வெள்ளமெனப் பெருக்கெடுக்க அரசுக்கோ கல்விக்கும், மருத்துவத்திற்கும் போதுமான நிதி ஒதுக்கப்படாமல் ராணுவத்துக்கே அதிக நிதி ஒதுக்க வேண்டிய கட்டாயம் நேருகிறது.  தேர்தல் நெருங்க நெருங்க காண்ட்ரா கலகக் கும்பலுக்கான ஆயுதங்களும் நிதியும் பெருமளவு குவியத் தொடங்குகின்றன. தென் ஆப்பிரிக்க நிறவெறி அரசோ காண்ட்ரா  []   கலகக் கும்பலின் தலைவன் எடன் பாஸ்ட்ரோவுக்கு ஆயுதம் வாங்க 2,00,000 பவுண்டுகளை அள்ளி வழங்குகிறது.  அமெரிக்காவோ தனது கோப்புகளின் முதல்பக்கத்தில் பயங்கரவாதி என குறிப்பிடப்பட்டுள்ள  []   ரோமிலும், வியன்னாவிலும் கிருஸ்துமஸ் படுகொலைகளை நடத்திய... மன்சர் அல் கசார் எனப்படும் நபரின் வாயிலாக பெருமளவு ஆயுதங்களை அனுப்பி வைக்கிறது.  சாண்டினிஸ்டா ராணுவம் தொடரான தாக்குதலின் மூலமாக பலவீனமான நிலைக்குத் தள்ளப்படும் வேளையில் டேனியல் ஒர்ட்டேகா தோற்கடிக்கப்படுகிறார். இவரை எதிர்த்து அமெரிக்க ஆதரவோடு போட்டியிட்ட வயலோட்டோ சமாரோ என்கிற பெண் 55 சதவீத வாக்குகளோடு வெற்றி பெறுகிறார். (இது ஜனநாயகத்திற்கு கிடைத்த வெற்றி என்கிறது வெள்ளை மாளிகை)  இந்த ஜனநாயகக் காவலர்கள் ஓர்ட்டேகாவை வீழ்த்த வாடகைக்கார்களுக்கு மட்டும் நாளொன்றுக்கு செலவு செய்த தொகை 2 லட்சம் அமெரிக்க டாலர்கள். டேனியல் ஒர்ட்டேகா பதவியை விட்டு இறங்கி வீட்டிற்குப் புறப்படும் வேளையில் ஒரு நிகரகுவா பெண்மணி சொன்னார்:  "ஒர்ட்டேகா மிக நல்லவர்தான், நியாயத்திற்காகவே போராடினார் என்பது எங்களுக்குத் தெரியும். ஆனாலும் எனது குழந்தையின் வயிற்றை எத்தனை நாளைக்குத்தான் வெறுமையாகவே வைத்திருப்பது? எங்களுக்குத் தேவை அமைதி"  ஆம்.  அமைதி. இறுதியில் அமெரிக்கா அதைச் சாதித்தே விட்டது. பிணங்களின் மீதான அமைதியை,  (ஆனால் இனிவருவது சூடானைக் குறித்து மட்டும் அல்ல)      மேலே உள்ள புகைப்படங்கள் இடமிருந்து வலம்: ஜிம்மி கார்ட்டர், கூலிட்ஜ், ஜோஸ்குரூஸ், வயலோட்டோ சமாரோ      []     7. எல்லாம் வல்ல ஒசாமாவின் பெயரால்    ஒரு கவன ஈர்ப்புத் தீர்மானம்:  தமிழக வாசகர் சபையில் இப்படியொரு தீர்மானத்தை அவசர அவசரமாகக் கொண்டு வருவதற்கு அப்படியென்ன அவசியம் வந்துவிட்டது என வியப்போடு வினவலாம் நீங்கள். காரணம் இல்லாமல் இல்லை நண்பர்களே. அந்தர் பல்டி என்பது ஏதோ தமிழக அரசுக்கும் இந்திய அரசுக்கும் மட்டுமேயான ஏகபோக உரிமை என்பதான மூடநம்பிக்கை எவருக்கும் இருக்க வேண்டியதில்லை என்பதற்காகத் தான் இத்தீர்மானம். இத்தொடரில் ஒவ்வொன்றாக நாம் எழுதிக் கொண்டு வரும் நாடுகள் அனைத்தும் ஏதோ அமெரிக்காவிற்கு எதிரான போரில் அணிதிரண்டு நிற்பதைப் போலவும் ... சர்வதேசப் பாட்டாளி வர்க்கத்திற்கு ஆதரவாகத் தோள் கொடுத்து நிற்பதைப் போலவும் கற்பனை செய்து த கொள்ளத் தேவையில்லை. ஒரு காலக்கட்டத்தில் அமெரிக்காவின் வெறித்தாக்குதலுக்கு உள்ளான ஒரு நாடு மற்றொரு வேளையில் அதனது அடிவருடியாகவே அவதாரம் எடுக்கும் அதிசயங்களும் உலக அரசியல் அரங்கில் நிகழ்ந்து கொண்டுதான் இருக்கின்றன. அதற்கு சமீபத்திய உதாரணம் லிபியா. எனவே நமது வேலை எந்தவொரு நாட்டிற்கும் ஏகாதிபத்திய எதிர்ப்புத் தரச் சான்றிதழ் வழங்குவதன்று. பல்வேறு காலக் கட்டங்களில் நிகழ்ந்த மனித உரிமை மீறல்களை உள்ளதை உள்ளவாறே முன் வைப்பதுதான் நமது பணி. எவருடைய பல்டிக்கும் நிர்வாகம் பொறுப்பல்ல.  ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான சூடான் குறித்துச் சூடான் என்ன சொல்கிறது என்பதை விடவும் சிஐஏவின் இணையத்தளம் என்ன சொல்கிறது என்பதுதான் நாம் கவனிக்க வேண்டிய விடயம் இதோ இனி அமெரிக்க சிஐஏவின் பார்வையில்  சூடான்.  பிரிட்டனிலிருந்து விடுதலை 1956 எல்லையோர நாடுகள் லிபியா, எகிப்து, கென்யா, எத்தியோப்பியா  பரப்பளவு 25,05,810 ச.கி.மீ விளைநிலம் 19,460 ச.கி.மீ இயற்கையின் அச்சுறுத்தல் புழுதிப்புயல்  மக்கள் தொகை  மூன்று கோடியே அறுபது லட்சம் இனப்பிரிவு கருப்பர்கள் 52% அராபியர் 39% பேஜா 6% வெளிநாட்டவர் 2%  மற்றவர் 1% மதப்பிரிவுகள்   சன்னி இஸ்லாமியர் 70%  மரபு வழியினர் 25% கிருத்தவர்கள் 5%   மாநிலங்கள் 26  குடியரசுத்தலைவர் உமர்பஷீர் வேலைவாய்ப்பின்மை  4%   நாணயம்  தினார் தொலைபேசி உபயோகிப்பாளர்கள்  4,00,000 வானொலி வைத்திருப்பவர்கள்  7,00,000 தொலைக்காட்சி நிலையங்கள் 3 தொலைக்காட்சி வைத்திருப்பவர்  இருபது லட்சம் இருப்புப் பாதை  5,311 கி.மீ குறுகிய இருப்புப் பாதை  4,595 கி.மீ அகல இருப்புப் பாதை  716 கி.மீ நெடுஞ்சாலை  11,900 கி.மீ விமான நிலையங்கள் 61 இராணுவத்தில் பணிபுரிவோர்  84,36,732 (15லிருந்து 49வயதிற்குள்)    இப்படிச் சூடானின் மூலை முடுக்குகள் குறித்தெல்லாம் தனது சுண்டுவிரலில் வைத்திருக்கும் அமெரிக்காவிற்குத் தெரியாமல் போனது ஒன்றே ஒன்றுதான் என்றால் நம்ப முடிகிறதா உங்களுக்கு?  எது அந்த ஒன்று?  அதுதான் அல்ஷிபா (AI-Shifa). மிகச்சரியாக ஆகஸ்ட் 20. 1998 ஆம் ஆண்டு .    []   சூடானை  நோக்கி அமெரிக்க ஏவுகணைகள் இருந்து பயணப்படுகின்றனர்.  அவைகள் குறிப்பிடப்பட்டிருந்த இலக்கை அடைந்ததும் வெடித்துச் சிதறுகிறது அங்கிருந்த தொழிற்சாலை.  அந்தத் தொழிற்சாலை மனித குலத்திற்கே அழிவைத் தரும் இரசாயன ஆயுதங்களைத் தயாரித்து வந்ததாகவும். அதற்கும் ஒசாமா பின்லேடனுக்கும் மிக நெருங்கிய தொடர்பு உண்டு என்றும் அறிவிக்கிறது அமெரிக்கா.  இத்ரிஸ் என்கிற தனியார் ஒருவருக்குச் சொந்தமான அந்தத் தொழிற்சாலை ஆப்பிரிக்கக் கண்டத்திலுள்ள மிகப் பெரியனவற்றுள் ஒன்று.  அமெரிக்காவின் ஏவுகணைத் தாக்குதலையும் அறிக்கைகளையும் தொலைக்காட்சியில் கண்ணுற்ற ஹென்றி அதிர்ச்சியால் உறைந்து போகிறார். காரணம் அவர்தான் அத்தொழிற்சாலையை வடிவமைத்த பொறியியலாளர். அந்த அல்ஷிபா தொழிற்சாலை உண்மையில் ஒரு மருந்துத் தொழிற்சாலை எனவும் அதுவும் மலேரியா, காசநோய் போன்றவற்றிற்கு மருந்துகள் தயாரிக்கும் நிறுவனம் எனவும் தான் வடிவமைக்கும் போது இரசாயன ஆயுதத் தயாரிப்பிற்கான சிந்தனை குறித்து ஒரு நொடிகூட யோசிக்கவில்லை எனவும் பொங்கி எழுகிறார்.  அதன் உரிமையாளர் இத்ரிஸ் உடைய அமெரிக்க சொத்துகள் முடக்கப்படுகின்றன வெள்ளை மாளிகையால்.  1992 முதல் 96 வரை அந்த மருந்துத் தொழிற்சாலையின்  தொழில் நுட்ப மேலாளராக இருந்த டாம், "அது முழுக்க முழுக்க ஆப்பிரிக்க மக்களது மருந்துத் தேவையைப் பூர்த்தி செய்கின்ற அத்தியாவசியமான தொழிற்சாலை... அதைத் தரை மட்டமாக்கியதன் விளைவாக சூடானது கிராமப்புற மக்களது வாழ்க்கை ஒரு கேள்விக்குறியாகி விட்டது" என்று பேட்டி அளித்தார்.  []   அமெரிக்காவினது குற்றச்சாட்டைப் புலனாய்வு செய்த சர்வதேசப் புகழ்பெற்ற க்ரால் அசோசியேட்ஸ் (Kroll Associates) நிறுவனம் முழுப்பொய் என்று உலகுக்கு அறிவிக்கிறது. அமெரிக்கப் புலனாய்வில் மாபெரும் சறுக்கல் என்கிறது வாஷிங்டன் போஸ்ட் பத்திரிக்கை.  []   அல்ஷிபாவில் இரசாயன ஆயுதங்கள் தயாரிக்கப்படுகின்றன என்பதற்கு ஆதாரமாக ஒன்றைக்கூட உலகின் முன் வைக்கவில்லை அமெரிக்கா.  சூடானும் பிற நாடுகளும் ஐக்கிய நாடுகள் அவையில் இப்பிரச்சனையை எழுப்பியபோது பதிலளிக்க மறுத்துவிட்டது அமெரிக்கா.  இறுதியில் வேண்டாவெறுப்பாக அது ஆதாரமாக அளித்தது. அத்தொழிற்சாலையில் இருந்து எடுத்து வரப்பட்ட மண்ணின் மாதிரிதான்.  அம்மண்ணில் 'எம்ப்டா ' (Empta) கலந்திருப்பதாகச் சொன்னது வெள்ளை மாளிகை. இந்த எம்ப்டா இரசாயன ஆயுதத் தயாரிப்பிற்கான ஒரு மூலப் பொருள். அப்படி தான் கைப்பற்றிய மண்ணின் மாதிரியை உலகின் வல்லுநர் குழு எவர் முன்பும் அது சமர்ப்பிக்கவில்லை என்பதுதான் அனைவரையும் யோசிக்க வைத்தது.  ஐ.நா. பாதுகாப்புக் கவுன்சிலில் உலக நாடுகள் நெருக்கடியை ஏற்படுத்தியதன் விளைவாக அத் தொழிற்சாலையின் உரிமையாளரது முடக்கப்பட்ட சொத்துக்களை விடுவிக்கிறது அமெரிக்கா.  சொத்து முடக்கம் நீக்கப்பட்டது சரி.  ஆனால் அத் தொழிற்சாலை தரைமட்டமாக்கப்பட்டதற்கான நிவாரணமோ..  வேலை பறிபோனவர்களுக்கான இழப்பீடோ..  உயிர்காக்கும் மருந்துகளுக்கு ஏற்பட்ட தட்டுப்பாடு குறித்த வருத்தமோ...  சூடான் மக்களிடம் மன்னிப்போ .. கேட்பதற்கு அமெரிக்கா என்ன வள்ளலாரின் வாரிசா நண்பர்களே?  (ஆனால் இனி வருவது பனாமாவைப் பற்றி மட்டும் அல்ல)    மேலே உள்ள புகைப்படங்கள்: அல்-ஷிபா தகர்ப்பு          []               8. அமெரிக்க 'வளர்ப்புமகன்கள்'    1989 டிசம்பர் மாத இரவுப் பொழுதொன்றில் பனாமா நகரின் மிகப் பெரிய குடியிருப்பில் உறங்கிக் கொண்டிருந்தவர்கள் கனவிலும் நினைத்திருக்க மாட்டார்கள் தங்கள் மீது இப்படியொரு கொலை வெறித் தாக்குதல் நிகழும் என்று. மிகக் குறைந்த வாடகையில் ஏறக்குறைய 20000 பேர் வசிக்கும் மிகப் பெரிய குடிமனை அது. பத்து மணி நேரம் தொடர்ந்து நடந்த தாக்குதலில் இருந்து தப்பிக்க மாடியின் ஜன்னலைத் திறந்து கொண்டு குதித்தவர்கள் - குழந்தைகளை அணைத்துக் கொண்டு தெருவுக்கு ஓடி வந்தவர்கள் - ஓடிவரும் போதே குண்டுகளுக்கு இரையானவர்கள் - எதிர்வரும் டாங்கிகளால் தரையோடு தரையாகத் தேய்க்கப்பட்டவர்கள். அங்கங்கள் துண்டு துண்டாகப் பிய்த்தெறியப்பட்டவர்கள் என பனாமா நகரின் தெருக்கள் ரத்தத்தால் கழுவப்பட்டுக் கொண்டிருந்தது. 15000 பேர் வீடிழந்தனர். 500 பேர் உயிரிழந்தனர். 3000 5 பேர் படுகாயம் அடைந்தனர் என்றன புள்ளிவிவரங்கள்.  அது சரி எதற்காக அம்மக்கள் மீது இத்தகைய கொலை வெறித் தாக்குதல்? டுவின் டவர்ஸ் மீது விமானங்களை விட்டார்களா? அல்லது வெள்ளை மாளிகைக்கு வெடி   வைத்தார்களா? எதுவுமில்லை.  அந்த அப்பாவி மக்கள் மீது தாக்குதல் நடத்தியதற்கான காரணம் வேறு.  பத்திரிக்கையாளர்கள் அப்போதைய அமெரிக்க ஜனாதிபதி புஷ்ஷைப் பார்த்துக் கேட்டனர்.  நொரீகா என்கிற ஒரு மனிதனைப் பிடிப்பதற்காக இத்துணை உயிர்களைப் பலி கொடுக்கத்தான் வேண்டுமா?  புஷ்: ஒவ்வோர் உயிரும் விலைமதிப்பற்றதுதான். ஆனால் அதைவிடவும் நொரீகா எங்களுக்கு மிக முக்கியம்.  யார் இந்த நொரீகா? அவருக்கும் அமெரிக்காவிற்கும் அப்படி என்ன பங்காளிச் சண்டை? பொதுவுடமைச் சித்தாந்தத்தைச் செயலாக்கப் புறப்பட்ட புரட்சிகரப் போராளியா? அல்லது சோவியத்து யூனியனின் கண்ணசைவிற்குக் கட்டுப்பட்டவரா? உண்மையில் நொரீகா ஈடு இணையற்ற மாபெரும் போதை மருந்துக் கடத்தல்காரன். காட்டிக் கொடுப்பதற்கே பிறந்தவன் என்கிற வாசகம் எவருக்குப் பொருந்துகிறதோ இல்லையோ நொரீகாவுக்குப் பொருந்தும். தனது இளவயதில் அங்கம் வகித்த சோசலிஸ்டுக் கட்சியில் யார் யாரெல்லாம் கொள்கைப் பிடிப்பும் போராட்ட குணமும் கொண்டவர்கள் என்கிற பட்டியலை அமெரிக்க உளவுத் துறைக்கு அன்றே அனுப்பிக் கொண்டிருந்தவர்தான் இந்த இம்மானுவேல் அண்டோனியா நொரீகா.  இப்படிப்பட்ட மனிதர் எதிர்பாராவிதமாக ராணுவத்தில் சேர்ந்துவிட... பனாமாவின் தேசியப் படையில் ஜெனரலாக  இருக்கும் டோரிஜோஸ் என்பவரது பார்வை நொரீகாவின் மீது  விழ... தேசியப் படையில் சேர்த்துக் கொள்ளப்படுகிறார். இடைப்பட்ட வேளையில் இரக்கமற்ற இரண்டு பாலியல் வல்லுறவு குற்றச்சாட்டுகளில் நொரீகா சிக்கிக் கொள்ள அவற்றிலிருந்தும் தப்புவிக்கிறார் டோரிஜோஸ்.  1968 அக்டோபரில் நடந்த ஆட்சிக் கவிழ்ப்பில் அதிகாரத்தைக் கைப்பற்றுகிறார் டோரிஜோஸ். இலத்தீன் அமெரிக்க நாடுகளது அளவுகோள்களின் படி பார்த்தால் டோரிஜோஸ் ஒரு கொலை வெறிபிடித்த சர்வாதிகாரி அல்லர்.    கொஞ்சம் தாராள மனப்பான்மையும் சீர்திருத்த எண்ணங்களும் கொண்டவர்.  பழமைவாத எண்ணம் கொண்ட ராணுவ அதிகாரிகள் அடுத்த இரண்டு மாதத்திலேயே ஆட்சிக் கவிழ்ப்பில் ஈடுபட தோல்வியில் முடிகிறது அம்முயற்சி. ஆட்சிக் கவிழ்ப்பிற்கு அமெரிக்கா ஆசி வழங்குவதோடு சிறையில் சிக்கிக் கொண்ட  சகாக்களை மீட்க அதிநவீன கமாண்டோத் தாக்குதலில் ஈடுபட்டுத் தப்பிக்கவும் வைத்து மியாமி நகரில் அடைக்கலமும் தருகிறது.  ஆட்சிக் கவிழ்ப்பு நடவடிக்கைகளின் போது தனக்கு விசுவாசமாக இருந்ததற்கான பரிசாகத் தேசியப் படையின் நுண்ணறிவுப் பிரிவின் தலைவராக நொரீகாவை நியமிக்கிறார் டோரிஜோஸ். சரியான இடத்தில் சரியான ஆள். பனாமாவில் அவரது பதவி உயர உயர அதற்கேற்ப வருமானமும் உயருகிறது.   []   1971 ஆம் ஆண்டு பெரும் போதை மருந்துக் கடத்தல்களில் நொரீகா ஈடுபட்டதற்கு அசைக்க முடியாத ஆதாரங்கள் இருப்பதாக அமெரிக்காவின் பயங்கர போதை மருந்து தடுப்புத் துறை அறிவிக்கிறது. ஆனாலும் அமெரிக்கா நடவடிக்கை எடுப்பதற்குச் சட்டச் சிக்கல்களும் ராஜதந்திர உறவுகளும் தடையாக இருப்பதாக அது எண்ணுகிறது. அப்படி யென்ன ராஜ தந்திரம்..... உறவு... எனக் குழப்பிக்  கொள்ள வேண்டியதில்லை நாம், நொரீகாவின் சகல லீலைகளுக்கும் பின்னணியில் படியளந்து கொண்டிருந்தது சி.ஐ.ஏ. தான். இந்த விவரங்கள் புரியாத போதை மருந்து தடுப்புத் துறையில் இருந்த சில கத்துக் குட்டிகளது அறிவிப்புதான் முன்னர் வெளியான அறிவிப்பு. []   அமெரிக்க அரசின் பணம் சி.ஐ.ஏ. மூலமாக நொரீகாவின் வங்கிக் கணக்கில் ஒருபுறம் ஏறிக் கொண்டே இருக்க... மறுபுறம் போதை மருந்துக்கு எதிரான அமெரிக்காவின் முழக்கம் தொடர்ந்து கொண்டேதான் இருந்தது. 1976ம் ஆண்டு சி.ஐ.ஏ.வின் இயக்குநராக ஜார்ஜ் புஷ் இருந்த போது ஆண்டுக்கு 100000 அமெரிக்க டாலர்களுக்கு மேல் நொரீகாவின் கணக்கில் குவிந்து கொண்டிருந்தது.  1981 ஆம் ஆண்டு ஒரு விமான ’விபத்தில்’ டோரிஜோஸ் இறந்து போக ஆட்சியைக் கைப்பற்றிய குழுவில் முக்கிய இடம் பிடிக்கிறார் நொரீகா. அக்குழுவில் பெற்றிருந்த மற்றொரு ஆள் இறந்துபோன டோரிஜோசின் தம்பி. பொறுப்பிற்கு வந்தவுடன் அவர் அறிவித்த ஒன்று அனைவரையும் அதிர வைக்கிறது. அது "டோரிஜோஸ் விமான விபத்தில் இறக்கவில்லை. மாறாக விமானத்தில் வைக்கப்பட்டிருந்த ட வெடிகுண்டுதான் அவரது மரணத்திற்கு காரணம். இச்சதியில் நொரீகா - சி.ஐ . ஏ . அமெரிக்கத் தளபதி வாலஸ் நட்டிங் போன்றவர்களுக்குத் தொடர்பு இருக்கிறது.'' என்கிறார் டோரிஜோஸின் தம்பி.  ஆனால் அவரது குரல் எவரிடமும் எடுபடாமல் போகிறது. 1983 ஆகஸ்டில் தன்னைத்தானே தேசியப் படையின் தலைவராக அறிவித்துக் கொள்கிறார் நொரீகா. தேசியப் படையின் பெயரையும் பனாமா பாதுகாப்புப் படை என்று மாற்றி அமைக்கிறார். இப்போது அவர் அந்நாட்டின் மிக முக்கியப் பிரிவின் முதன்மையான மனிதர். ஆக மீண்டும் ’பொறுப்பு’க்குத் தக்கபடி சம்பளப் பணம் உயருகிறது. பனாமாவில் அல்ல அமெரிக்காவில் அமெரிக்காவின் அரவணைப்பையும் அன்பளிப்பையும் பெறுவதற்காக அவர் பல பணிகளில் ஈடுபடுகிறார்.  ஒருபுறம் பிடல் காஸ்ட்ரோவையும் ... நிகரகுவாவின் டேனியல் ஒர்ட்டேகாவையும் சந்திக்கிறார்.  மறுபுறம் ஈரானிலிருந்து துரத்தப்பட்ட ஷாவுக்கு அடைக்கலம் தருகிறார். அமெரிக்க உளவுக் கருவிகளைப் பனாமாவில் நிறுவ அனுமதி அளிக்கிறார்.  எல்சல்வடாரின் கலகக்காரர்களுக்கு எதிராகவும் நிகரகுவாவின் மக்கள் அரசுக்கு எதிராகவும் அமெரிக்காவிற்கு உதவி செய்கிறார். அமெரிக்க விமானங்கள் பனாமாவில் வந்து தரையிறங்கச் சிவப்புக் கம்பள வரவேற்பு அளிக்கிறார்.  எவ்வளவு செய்து என்ன பயன்?  திருடன் திருடனை நம்புவானா? நமக்குத் தகவல்கள் தந்து கொண்டிருப்பதைப் போலவே ஒரு வேளை பிடல் காஸ்ட்ரோவுக்கும் ... நிகரகுவாவின் டேனியல் ஒர்ட்டேகாவுக்கும் நம்மைப் பற்றிய தகவல்களைச் சொல்ல மாட்டார் என்பதற்கு என்ன உத்தரவாதம்? என அமெரிக்கா எண்ணியதன் விளைவு?  சரியாக ஜூன் 12, 1986 நியூயார்க் டைம்ஸ் பத்திரிக்கையில் முதல் பக்கக் கட்டுரை.  நொரீகாவின் போதை மருந்துக் கடத்தல்கள் பற்றியும். கறுப்புப் பணப் பதுக்கல்கள் பற்றியும் ... எதிர்க்கட்சித்தலைவர்களை படுகொலை செய்யத் தீட்டிய திட்டங்கள் குறித்தும் விலாவாரியாக விவரிக்கப்பட்டிருந்தது அதில் பாம்பின் கால் பாம்பறியும் நொரீகாவுக்குத் தெரியும் வெள்ளை மாளிகையின் ஆசி இல்லாமல் அச்சேறி இருக்காது இக்கட்டுரை என்று.அமெரிக்க ஊடகங்கள் அலறிய அலறலில் அதல பாதாளத்துக்குப் போனது நொரீகாவின் மதிப்பு. அப்படியானால் இதற்கு மாற்று?   சாண்டினிஸ்டா தலைவர்களைப் படுகொலை செய்யவும் நிகரகுவாவில் அமெரிக்கா நடத்தும் அட்டூழியங்களுக்கு ஆதரவாகவும் முன்பைவிடப் பலமடங்கு ஆதரவு தர முன்வருகிறார் நொரீகா. நொறுங்கிப்போன தனது மதிப்பை மீட்டெடுக்க அமெரிக்க உளவுப் பிரிவின் ஆலிவர் நார்த்திடம் ஆலோசனை கேட்க, அவரும் சில ’அரிய' வழிகளைச் சொல்லித் தருகிறார். இருவரது சந்திப்பும் நியூமார்க் டைம்ஸ் கட்டுரை வெளிவந்த ஓரிரு மாதங்களில் இலண்டனில் நடக்கிறது.  சந்திப்பின் விளைவாக நியூயார்க் டைம்ஸ் மீண்டும் ஒரு முதல் பக்கக் கட்டுரையை வெளியிடுகிறது. இம்முறை அது நொரீகாவின் மனமாற்றம் பற்றியும்... போதை மருந்துத் தடுப்பு நடவடிக்கைகளில் நொரீகாவின் மனமுவந்த ஆதரவுப் பணிகளையும்... சர்வதேச கடல் எல்லையில் பனாமாவின் கொடி பறக்கும் கப்பல்களில் ஏறிச் சோதனை இட அனுமதித்த பெருந்தன்மை குறித்தும் அலசுகிறது அக்கட்டுரை.  ஆனாலும் காற்று நொரீகாவுக்கு எதிராகவே வீசுகிறது. உண்மையில் நொரீகா தன் பெயரைக் காப்பாற்றிக் கொள்ளப் படாதபாடு பட்டாலும் நிலைமை அவருக்கு எதிராகவே இருக்கிறது. அவருக்கு ஆதரவாக இருந்த ஆலிவர் நார்த் பணிகளில் இருந்து விடுவிக்கப்படுகிறார். உளவுப்பிரிவின் அவரது மற்றொரு அனுதாபி கேஸி இறந்து போகிறார். அமெரிக்காவின் போதை மருந்து தடுப்புப் பிரிவே இரண்டு பிரிவாக உடைந்து போகிறது. ஒரு பிரிவு நொரீகாவை இரக்கமற்ற கிரிமினலாகவும் மற்றொரு பிரிவு அமெரிக்காவின் அனுசரணையாளராகவும் பார்க்கிறது. நொரீகாவைத் தனக்குத் தெரியவே தெரியாது எனச் சப்பைக்கட்டு கட்டும் ஜார்ஜ் புஷ் பிற்பாடு அவருடனான பல சந்திப்புக்களை ஒத்துக் கொள்கிறார்.  1987 அக்டோபர் 3ஆம் தேதி பனாமாப் பாதுகாப்புப்படையின் ஒரு பிரிவு நொரீகாவுக்கு எதிரான ஆட்சிக் கவிழ்ப்பில் ஈடுபடுகிறது. சுற்றி வளைக்கப்படும் நொரீகாவைக் கைது செய்ய அமெரிக்க உதவியைக் கோருகிறது அக்குழு. சாலைகள் தடுக்கப்பட்டும். கட்டிடங்கள் சுற்றி வளைக்கப்பட்டும் இருந்த வேளையில் நொரீகா குறித்து எந்த ஒரு முடிவையும் அமெரிக்கா தெரிவிக்காது மௌனம் சாதிக்கிறது. பனாமாவில் தனது தொலைத் தொடர்பு சாதனங்கள் சரியாக வேலை செய்யவில்லை என்கிறது அமெரிக்கா. இறுதியில் தோல்வியில் முடிகிறது  அக்கவிழ்ப்பு நடவடிக்கை.  காரணம்?  ஆட்சிக் கவிழ்ப்பில் பிறரது பங்கைவிடத் தனது பங்கே மேலோங்கியதாக இருக்க வேண்டும் என முடிவெடுக்கிறது உளவுத்துறை  போதை மருந்து கடத்தல் குற்றச்சாட்டுக்களுக்காக அதிகாரத்தில் இருந்து இறங்கச் சொல்கிறது அமெரிக்கா. மறுக்கிறார் நொரீகா.  உண்மையில் நொரீகா அச்செயல்களில் ஈடுபட்ட வேளைகளில் ஆசீர்வதித்த அது,  குறைத்துக் கொண்ட வேளைகளில் குரைக்கத் தொடங்குகிறது.  மிகச் சரியாக டிசம்பர் 20 அன்று நள்ளிரவு 1 மணிக்குப் பனாமாவின் மீது தனது தாக்குதலைத் தொடுக்கிறது அமெரிக்கா. அதுவும் போதை மருந்து கடத்தல்-கறுப்புப் பணப் பதுக்கல் போன்றவைகளுக்காக அன்று. காரை நிறுத்தாமல் சென்ற ஒரு அமெரிக்கரைப் பனாமாவின் பாதுகாப்புப் படையினர் சுட்டு விட்டதற்காக, மிகச் சிறிய ராணுவ பலத்தைக் கொண்ட பனாமாவைத் தனது முழுக் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வருகிறது அமெரிக்கா.  பிறகென்ன?  []     பனாமா வங்கிகளது சட்டங்கள் மாற்றப்படுகின்றன. பணம் போடுபவர் யார்?  எப்படிச் சம்பாதித்தார்கள்? போதை மருந்திலா? கொள்ளையடித்தா?   []     இவற்றையெல்லாம் வங்கிகள் இனிக் கேட்கக் கூடாது  எனப் புதிய திருத்தங்கள்,  ஒரே வரியில் சொல்வதானால்...  போதை மருந்து கடத்தல் சட்ட விரோதம் அமெரிக்காவில்.  போதை மருந்து கடத்தல் சட்டபூர்வம் அது பனாமாவில்,  []   ஆட்சிக் கவிழ்ப்பில் ஈடுபட்டவர்கள் நொரீகாவைக் கைது செய்யச் சொன்ன போதும் சம்மதிக்காத அமெரிக்கா... ஒரு அமெரிக்க ஆசாமியைச் சுட்டு விட்டதற்காகச் சுற்றி வளைத்ததன் மூலம் சொல்லாமல் சொன்ன  சேதி இதுதான்: "ஒரு மிகச் சிறிய நாட்டை ஊடுருவுவதோ... அதன் இறையாண்மையில் மூக்கை நுழைப்பதோ ... அந்நாட்டின் தலைவர்  ஒருவரைப் பிடித்து வைத்து விசாரணை நடத்துவதோ...  எதுவாயினும் நாங்கள் சட்டப்படியே செய்வோம்... என்கிற மாயத் தோற்றத்தினை நீதித்துறை - உள்துறை - பாதுகாப்புத்துறை  என எல்லாத் துறையினரது மனங்களிலும் பதிய வைப்பதுதான்.  சுருக்கமாக - தமிழ் சினிமாவின் மொழியில் சொல்வதானால்...  இதுதாண்டா அமெரிக்க பாணி ஜனநாயகம்.    (ஆனால் இனி வருவது ஹெய்ட்டி குறித்து மட்டும் அல்ல)      மேலே உள்ள புகைப்படங்கள் இடமிருந்து வலம்: சீனியர் புஷ், டிசம்பர் மாதத் தாக்குதல், வாலஸ் நட்டிங்        []           9. Coupபாண்டவரான போப்பாண்டவர்    பல நாட்கள் எனது கனவில் அரிஸ்டைட் என்னும் மனிதரே சுற்றிச் சுற்றி வந்தார். இந்த அரிஸ்டைட் வெறும் சாதாரண தந்தை கிடையாது, 'அருட்தந்தை', ஆங்கிலத்தில் சொல்வதானால் பாஃதர் அரிஸ்டைட் அவரை ஹெய்ட்டியின் மக்கள் ழான் பெர்ட்ராண்ட் அரிஸ்டைட் என்று அழைத்தார்கள்.  இந்த 'அருட்தந்தை' வெறுமனே இயேசு ஜீவிக்கிறார்... டீ விக்கிறார். பரலோக சாம்ராஜ்யம் பத்தே கிலோ மீட்டரில் உள்ளது.... என்று உளறிக் கொண்டு தேவாலயச் சோற்றில் தொந்தியைப் பெருக்கிக் கொண்டே போன தந்தை கிடையாது. பாஃதர் அரிஸ்டைட் பரப்ப வந்தது விடுதலை இறையியலை. அதென்ன விடுதலை இறையியல் என்கிறீர்களா?  "ஓ... பாவிகளே! இயேசு உங்களுக்காகவே உயிர் துறந்தார்" என்று ஓலமிட்டுக் கொண்டிருப்பதைவிட பாவிகள் உருவாகாமல் தடுப்பது எவ்விதம்? பெரும் பணக்காரர்களது பிடியில் சிக்கிக் கொண்டு தவிக்கும் ஏழைகளை மீட்பது எவ்விதம்? இயேசு எத்தகைய ஏழை எளியவர்களுக்காக உழைத்ததாகச் சொல்கிறார்களோ அத்தகைய ஏழை எளியவர்களை எவ்விதம் ஒருங்கிணைப்பது? என்றெல்லாம் சிந்தித்துச் செயல்படுவதற்காக ஏற்படுத்திக் கொண்ட விதிமுறைதான் விடுதலை இறையியல், இந்த அரிஸ்டைட் பற்றியும் விடுதலை இறையியலைப் பற்றியும் நாம் அறிந்து கொள்வதற்கு முன்னர் ஹெய்ட்டியின் சுருக்கமான வரலாற்றை அறிந்து கொள்வது மிக அவசியம்.  இந்தியாவில் சுதந்திரத்திற்கு முன்னர் எப்படி குவாலியர் ஆட்சியோ அப்படி ஹெய்ட்டியில் டுவாலியர் ஆட்சி. அப்பா பிராங்காய்ஸ் 1957ல் இருந்து 71வரை ஆட்டிப்படைத்தார் ஹெய்ட்டியை மகன் கிளாட் 71இல் இருந்து 86வரை தந்தைவிட்ட பணியைத் தொடர்ந்தார். மொத்தத்தில் முப்பது ஆண்டுகள் எங்கெங்கு காணினும் சித்ரவதைகள்... படுகொலைகள்... பாலியல் பலாத்காரங்கள்தான். இத்தகைய திருப்பணிகளுக்கு ஆசி வழங்கியது 'உண்மையான கிருஸ்துவர்களால்' (True Christians) நிரம்பி வழியும் அமெரிக்காதான்  டுவாலியர் குடும்ப ஆட்சியின் அநீதிகளைத் தட்டிக் கேட்ட ஒரே பாதிரி அரிஸ்டைட் குடிசை வாழ் மக்களது  []   கவர்ச்சிமிகு கதாநாயகனாகவே ஆகிப்போனார் இந்த முப்பத்தி ஏழே வயதான அருட்தந்தை. எதிர்ப்புகளைச் சமாளிக்க இயலாது பிரான்சுக்குப் பறக்கிறார் மகன் கிளாட். ஒருவழியாக 1986இல் முப்பதாண்டு கால டுவாலியர் ஆட்சி முடிவுக்கு வருகிறது.  'கொல்பவனும் நானே... கொல்லப்படுபவனும் நானே' என்கிற கீதா உபதேசத்தை அமெரிக்காவும் படித்துத் தொலைத்திருக்கிறதோ என்னவோ. டுவாலியர் ஆட்சிக்கு ஆசி அளித்த அதே அமெரிக்கா, அவர்களை வெளியேற்றிய புதிய ஆட்சியாளர்களுக்கும் அள்ளிக் கொடுக்க முன்வருகிறது. டுவாலியர்கள் வெளியேறிய மூன்றே வாரத்தில் ஹெய்ட்டியின் பொருளாதார இராணுவ உதவிக்கு 2.5 கோடி டாலர்களை அளிக்கிறது அமெரிக்கா. அடுத்த சில வாரங்களில் ஹெய்ட்டியின் தகவல் தொடர்புகளுக்கும் பயிற்சிக்கும் என மேலும் 40லட்சம் டாலர்களை வாரி வழங்குகிறது அமெரிக்கா. இதற்கெல்லாம் காரணம் 1987 நவம்பரில் வர இருக்கும் தேர்தல்தான். ஹெய்ட்டியின் முக்கிய தொழிற்சங்கத் தலைவர் ரிச்சர்ட், கிராமப்புற மக்கள் இடதுசாரித் தலைவர்களை இனங்கண்டு தோற்கடிக்கச் செய்வதற்காகத்தான் பணத்தை அள்ளி வீசுகிறது அமெரிக்கா எனக் குற்றம் சாட்டுகிறார்.  இராணுவ ஆக்கிரமிப்பின் கீழ் நடைபெறும் தேர்தலைப் புறக்கணிக்குமாறு அறிவிக்கிறார் பாதிரியார் அரிஸ்டைட், இராணுவமே நமது முதல் எதிரி என முழங்கும் அரிஸ்டைடின் பிரச்சாரம் அமெரிக்க அதிகார வட்டத்தை எரிச்சலுக்கு உள்ளாக்குகிறது.  மக்கள் நலப் பிரச்சினைகளைக் கையிலெடுத்துக் கொண்டு போராடும் இத்தகைய விடுதலை இறையியல் கோட்பாட் டாளர்களை சி.ஐ.ஏவுக்கு தெரிந்திருந்ததோ இல்லையோ ரோமன் கத்தோலிக்கர்களது 'புனித’ நகரமான வாட்டிகனுக்குத் தெரிந்திருந்தது.  எனவேதான் அன்றாடம் படுகொலைகளையும் பாலியல் வல்லுறவுகளையும் அரங்கேற்றிய டுவாலியர் குடும்ப ஆட்சிக்கு அருளாசிகளை அள்ளி வழங்கியது வாட்டிகன். தொடரான வன்முறையின் விளைவாக நவம்பர் 87ல் நடக்க இருந்த தேர்தல் ஜனவரி 1988க்குத் தள்ளி வைக்கப்படுகிறது. தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களில் யார் யாருக்கு எவ்வளவு பணம் கொடுத்தது சி.ஐ.ஏ. என்று புரியாமல் அமெரிக்க செனட்டே குழம்பிப் போகிறது. இராணுவத்தின் தில்லுமுல்லுகளால் ஜெனரல் அவ்ரில் ஆட்சித் தலைவராக நியமிக்கப்படுகிறார். ஊழலும் அடக்கு முறையும் தலைவிரித்தாடிய தேர்தலை ஏற்றுக் கொள்ள மறுக்கிறார்கள் ஹெய்ட்டியின் மக்கள். விளைவு? இரண்டு ஆண்டுகள் தொடரான வன்முறை, குழப்பம், ஆட்சி கவிழ்ப்பு முயற்சிகள்  ஒடுக்கு முறையும் இத்தகைய கட்டுப்பாடற்ற குழப்பமும் தனது அந்தப்புர நாட்டில் அரங்கேறுவது அமெரிக்காவுக்கு ஏற்புடையதே இல்லை.  []   ஏனெனில் இத்தகைய குழப்பங்கள் தனது கட்டுப்பாட்டைத் தாண்டிச் சென்று  விடக்கூடும். இத்தகைய குழப்பங்கள் தனது வர்த்தகங்களுக்கு உகந்ததும் அன்று.  இத்தகைய குழப்பங்களுக்கு மத்தியில் அடுத்து யார் உச்சத்திற்கு வருவார்கள் என கணித்து விடவும் இயலாது.  ஒரு வேளை இத்தகைய குழப்பங்களின் ஊடே உயர்மட்டப் பதவிக்கு வரக்கூடியவர் இன்னொரு பிடல் காஸ்ட்ரோவாகக் கூட அமைந்துவிடும் சாத்தியங்கள் இருக்கிறது. என்றெல்லாம் அமெரிக்கா சிந்தித்ததன் விளைவு?  ''நீங்கள் ஓய்வு பெற இதுவே சரியான தருணம். உங்களுக்கான சகல வசதிகளும் தயார். நல்ல பிள்ளையாக நம் நாட்டிற்கு வந்து விடுங்கள்'' என ஜெனரல் அவ்ரிலுக்கு அமெரிக்கா எடுத்துச் சொல்ல, ஹெய்ட்டியை விட்டு வெளியேறுகிறார் ஜெனரல் அவ்ரில். ஹெய்ட்டியில் உள்ள அமெரிக்கத் தூதரகம் விரைவில் தேர்தல் தேதியை அறிவிக்குமாறு நெருக்குகிறது. அந்தத் தேர்தலில் 'அருட்தந்தை' அரிஸ்டைட் போட்டியிடுவார் என்பது அமெரிக்கத் தூதரகத்திற்குத் தெரியாது. அவ்வளவு ஏன் அது அரிஸ்டைட்டுக்கே தெரியாது. வர்க்க விடுதலைக்கான புரட்சியை, விடுதலை இறையியல் முலாம் மூலமாக மூடி மறைக்கப் பார்க்கிறார் அரிஸ்டைட் என அவரை மத நீக்கம் செய்திருந்தது வாட்டிகன்.  இத்தகைய சூழலில் தான் குடியரசுத் தலைவருக்கான வேட்பாளராக முன்மொழியப்படுவோம் என நினைத்துக்கூடப் பார்க்கவில்லை பாதிரி அரிஸ்டைட் மக்களின் ஆதரவோடும் சிற்சில சீர்திருத்தக் குழுக்களின் ஆதரவோடும் கூட்டணிக் கட்சியின் வேட்பாளராக நிறுத்தப்படுகிறார் பாதர் அரிஸ்டைட்  ஆயிரக்கணக்கான ஐ.நா. பார்வையாளர்கள்... அமெரிக்க நாடுகளது தேர்தல் பார்வையாளர்கள்... என எண்ணற்றவர் மேற்பார்வையில் நடந்த தேர்தலில் 675 சதவீத வாக்குகளைப் பெற்று குடியரசுத் தலைவராக ஆட்சியில் அமர்கிறார் அரிஸ்டைட்  ''பத்துக்கும் மேற்பட்ட முதலாளித்துவக் கட்சி வேட்பாளர்களுக்கு இடையே அரிஸ்டைட் பெற்ற வெற்றி என்பது குறைத்து மதிப்பிடக் கூடியது அல்ல. அவரது மாபெரும் வெற்றிக்குப் பின்னே இருந்தது அரிஸ்டைட்டின் மனம் திறந்த பேச்சுத்தான், பழமைகளுக்கும், மூடநம்பிக்கைகளுக்கும் எதிரான அவரது சமரசமற்ற பேச்சுதான் மக்கள் அவரைத் தேர்வு செய்ததற்கான பிரதான காரணம்'' என்கிறார். []     அமெரிக்காவிலுள்ள ஹெய்ட்டிக்கான நிபுணர்.  பிப்ரவரி 1991இல் குடியரசுத் தலைவராக இருக்கையில் அமர்ந்த பாதிரியார் அரிஸ்டைட் முதலில் செய்தது, அவர் மாதந்தோறும் சம்பளமாகப் பெற்று வந்த 10 ஆயிரம் டாலர்களை சமூக சேவை அமைப்புகளுக்கே அளித்துவிட்டதுதான்.  அரிஸ்டைட் குறிப்பான பொருளாதாரத் திட்டங்கள் எதையும் அறிவிக்காவிடினும் தான் முதலில் செய்ய வேண்டிய வேலை எது என்பதில் தெளிவாக இருந்தார். அதுதான் ஒரு சிலரது கரங்களில் மட்டுமே குவிந்திருந்த செல்வ வளத்தினை அனைவரது கரங்களிலும் சேரும் வண்ணம் மறுவிநியோகம் செய்வது.  ''என்னிடம் குறிப்பிடும்படியான பொருளாதாரத் திட்டங்கள் இல்லை  என்று குற்றம் சாட்டலாம் சிலர். ஆனால் மக்கள் தங்களுக்கான திட்டங்களை தங்கள் கைவசமே வைத்திருக்கிறார்கள் என்பது தான் உண்மை .  அவை: சுயமரியாதை  ஒளிவு மறைவற்ற எளிமை  பங்களிப்பு.  இந்த மண் ணின் செல்வங்களை அபகரித்து  வைத்திருக்கும் பணக்காரர்கள் இதை உணர முடியாது''  []     என்று அறிவித்தார் அரிஸ்டைட் ஹெய்ட்டியின் குடியரசுத் தலைவருக்கும் வானளாவிய அதிகாரங்கள் ஏதுமில்லை. எனினும் கல்வி வளர்ச்சி... விவசாய சீர்திருத்தங்கள்... மூன்று டாலருக்கும் குறைவாக இருந்த கூலித் தொழிலாளர்களது கூலியினை உயர்த்தி அளித்தது. புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கியது என பலவற்றைச் செய்தார்.  இவை எல்லாவற்றையும்விட இராணுவத்தில் அத்துமீறி நடந்து கொண்டவர்களைக் கைது செய்தது மக்களை நிம்மதிப்பெருமூச்சுவிட வைத்தது.  அதே வேளையில் இவரது நடவடிக்கைகள் வர்த்தகர்களது நலன்களுக்கும் எதிராகப் போய்விடவில்லை. அந்நிய முதலீட்டாளர்களுக்கும், அமெரிக்க அதிகாரிகளுக்கும் அநேக விஷயங்களில் அனுசரணையாக நடந்து கொண்டதும், ஐ.எம்.எப். இன் கட்டளையை ஏற்று அரசுப் பணியாளர்களை வேலையை விட்டு நீக்கியதும் நெருடலான விஷயங்கள்தான்.  இராணுவத்தின் அதிகாரத்தைக் குறைத்ததும், அவர்களது போதை மருந்துக்  கடத்தல்களைக் கண்டறிந்து கைது செய்ததும் அரிஸ்டைடின் ஆட்சிக்கு அபாய மணியை ஒலிக்கச் செய்தன. விரக்தி அடைந்த இராணுவத்தினரோடு ஹெய்ட்டியின் கோடீஸ்வரர்களும் இணைந்து கொள்ள, சரியாக செப்டம்பர் 29ம் தேதி 1991 ஆம் ஆண்டு தூக்கி எறியப்படுகிறது அவரது ஆட்சி. அவரது நூற்றுக்கணக்கான ஆதரவாளர்கள் தெருக்களில் வெட்டி வீசப்படுகிறார்கள். ஆயிரக்கணக்கானோர் டொமினிகன் குடியரசில் தஞ்சமடைகிறார்கள்... தேவாலயத்தில் பிரசங்கம் செய்து கொண்டிருக்கும் வேளையில் அரிஸ்டைடை உயிரோடு கொளுத்தும் முயற்சியில் ஈடுபடுகிறார்கள் கலகக்காரர்கள் ... பிரான்ஸ் தூதுவரது பெரும் முயற்சியினால் உயிர் பிழைக்கிறார் பாதிரி அரிஸ்டைட்  இத்தகைய படுகொலைகளையும் சித்ரவதைகளையும் இரு கரங்களையும் அகல விரித்து வரவேற்கிறது -  []   'சகோதரத்துவத்தை' இந்த பூமிக்குப் புகட்ட வந்த வாட்டிகன்,  பின்குறிப்பு:  []   ஆட்சிக் கவிழ்ப்புக்குப் பின் அரிஸ்டைட் வாஷிங்டனில் தஞ்சமடைந்ததும்...  அவரை மனநோயாளி என சி.ஐ.ஏ. குற்றம் சாட்டியதும்  மக்கள் போராட்டத்திற்குப் பணிந்து ஐ நா . பேச்சுவார்த்தை நடத்தியதும்...  உலக வங்கியும், சர்வதேச நிதி நிறுவனமும் விதித்த நிபந்தனைகளை ஏற்றுக்கொண்டு அதே அரிஸ்டைட் சமரசத்திற்கு ஒப்புக் கொண்டதும்...  புதிய அமைச்சரவையில் தீவிர இடதுசாரியான தனது தோழி கிளாடட்டை பன்னாட்டு நிறுவனங்களது வற்புறுத்தலுக்கு இணங்க ஏற்றுக் கொள்ள மறுத்ததும்...  1993இல் மீண்டும் பதவிக்கு வந்ததும்...  1994இல் கவிழ்க்கப்பட்டதும்  ஐந்தே மாதத்தில் மீண்டும் ஆட்சிக்கு வந்ததும்... 1996 பிப்ரவரியில் மீண்டும் கவிழ்க்கப்பட்டதும்  []   ஐந்து வருடம் கழித்து 2001இல் ஆட்சியில் அமர்ந்ததும்...  2004 பிப்ரவரியில் மற்றுமொருமுறை ஆட்சிக் கவிழ்ப்புக்கு ஆளானதும்...  ஆகிய இவற்றைக் கவனிப்பவர்களுக்கு நம்மூர் விக்ரமாதித்தன் கதை நினைவுக்கு வருவது எந்த விதத்திலும் தவிர்க்க முடியாதது.  மொத்தத்தில் ழான் பெர்ட்ரண்ட் அரிஸ்டைட் நல்லவரா? கெட்டவரா என எவரேனும் கேட்டால்....  தெரியலயேப்பா.... என நாயகன் கமல்ஹாசனது பாணியில்தான் நம்மால் பதில் அளிக்க இயலும் என்பதே உண்மை.  (ஆனால் இனி வருவது இந்தியாவைப் பற்றி மட்டும்)    மேலே உள்ள புகைப்படங்கள் இடமிருந்து வலம் : டுவாலியர்கள், ஜெனரல் அவ்ரில், ஹெய்ட்டி கலகம்,  சர்வாதிகாரி க்ளாட் இன் மனைவியுடன் தெரசா    []                       10.  (அமெரிக்கத் தூதர்)  ஆலயம் தொழுதல் சாலவும் நன்று ...    நாம் இதுவரை பார்த்த நாடுகளைப் போலன்று இந்தியா. ஏகாதிபத்தியம் ஒழிக என்று ஓங்கிக் குரல் எழுப்பவும் செய்யாது... கம்யூனிசம் வாழ்க என்று கரம் கோர்க்கவும் செய்யாது. சுருக்கமாகச் சொன்னால் காந்தியார் கனவு கண்ட 'ராம ராஜ்ஜியம்' போல்தான் இதனது ராஜ்ஜியக் கொள்கைகளும். அதாவது பசுவும்-புலியும் ஒரே ஓடையில் நீர் அருந்தும் ராஜ்ஜியம். ஆனால் எதார்த்தம் என்னவென்றால் பசு புலியின் வயிற்றுக்குள் இருந்தபடி நீர் குடித்துக் கொண்டிருக்கிறது என்பதுதான்.  பொக்ரானில் தனது அணு வெடிப்பினை இந்தியா நடத்தியபோது அதிர்ந்து போனது அமெரிக்கா. இந்தியாவின் அணுவெடிப்புச் சோதனை தனது புலனாய்வின் தோல்வி என்று அப்பட்டமாக ஒப்புக்கொண்டது சி.ஐ.ஏ. இந்தத் தோல்வியை ஆராய டேவிட் ஜெர்மையா தலைமையில் ஒரு விசாரணையை நடத்திய பின்,  'இந்தியாவை கண்காணிக்கப் போதுமான  பயிற்சி சி.ஐ.ஏ.வுக்குத் தேவை. இன்னும் அதிகமான உளவாளிகளும் பயிற்சியாளர்களும் இந்திய மண்ணில் மிக அவசியம் என்றது அக்குழுவின் அறிக்கை.  இந்திய மண்ணில் அதிக உளவாளிகள் தேவை என்பது அமெரிக்காவின் கருத்தாக இருக்கலாம். ஆனால் அதே இந்திய மண்ணின் மைந்தர்களில் பெரும்பாலானோருக்கோ அமெரிக்க மண் என்பது அவர்களது வாழ்வின் இறுதி நொடியிலாவது மிதித்தாக வேண்டிய புனிதத்தலம் என்பதாகத்தான் இருக்கிறது.  முதல் முறையாகக் கணிப்பொறியில் தனது கரங்களைப் பதிக்கும் ஓர் இந்திய இளைஞனுக்கு அமெரிக்க விசா பெறுவதுதான் தனது வாழ்நாள் இலட்சியம்.  ஒரு விஞ்ஞானிக்கோ - ஒரு தொழில் நுட்ப வல்லுநருக்கோ ஒருமுறையாவது அமெரிக்கப் பயணம் என்பதுதான் தனது வாழ்நாள் இலட்சியம்.  ஓர் அரசியல் தலைவருக்கோ குறைந்த அளவு சிகிச்சைக்காக வேணும் அமெரிக்க மண்ணை மிதித்தாக வேண்டும் என்பதுதான் வாழ்நாள் இலட்சியம்.  []     ஏனெனில் விஞ்ஞானத் துறையாகட்டும் தொழில்நுட்பத்துறையாகட்டும்  பெரும்பாலான இவர்களது ஆய்வுகளுக்கான அடிப்படையே அமெரிக்கத் தொழில்நுட்பங்களைச் சார்ந்திருப்பதுதான்.  தற்சார்பற்ற தொழில் நுட்பமும் அதையொட்டிய ஐ இவர்கள் ஆய்வுகளும் பலரை அமெரிக்கத் தூதரகத்தின் முன்னால் மண்டியிட வைத்துள்ளன.  ஊடுருவல் என்பது அதி நவீன ஆயுதங்களோடு நில... நீர் வான். வெளிகளில் ஊடுருவுவது மட்டுமன்று.  தொழில்நுட்பத்தில்…  வேளாண் ஆய்வுகளில்... கணிப்பொறி விஞ்ஞானத்தில்... உணவு முறைகளில்…  கலாச்சாரத்தில்...  எனச் சகல மட்டங்களிலும் நீக்கமற நிறைந்திருப்பதும் ஊடுருவல்தான்.  தமிழர்களது கண்ணோட்டத்தில் யார் இந்தியர் என்பது ஒருபுறம் இருந்தாலும் படித்த வர்க்கத்திலுள்ள பெரும்பாலானோர் தங்களது கடவுச்சீட்டில் (Passport) மட்டுமே இந்தியர்களாக இருக்கிறார்கள் என்பதுதான் உண்மை.  (ஆங்கிலேயர்களிடமிருந்து அதிகாரம் மாற்றப்பட்ட பிறகு வந்த ஆட்சியாளர்கள் குறித்தோ ...  நடைமுறையிலிருக்கும் அமைப்புமுறை எத்தகைய வர்க்கத்தவர்களின் நலன்களைப் பிரதிபலிக்கும் அமைப்புமுறை என்பது குறித்தோ...  தெலுங்கானா - நக்சல்பாரி உட்பட பல பகுதிகளில் கிளர்ந்தெழுந்த மக்களது போராட்டங்களில் அமெரிக்க எதிர்ப்புணர்வும் அடங்கியிருக்கிறது என்பது குறித்தோ…  இங்கு நான் விரிவாகச் சொல்லவில்லை.) ஆக...  காஷ்மீரில் இருந்து களியக்காவிளை வரையிலுள்ள நடுத்தர படித்த வர்க்கத்தில் உள்ள பலர் அமெரிக்க தாசர்களாகவே உலா வரும்போது உளவுத்துறைக்கென தனியாக ஆட்கள் தேவையா என்ன அமெரிக்காவுக்கு?  அப்படி அண்மையில் மாட்டிக் கொண்டவர்தான் ரபிந்தர்சிங்.  அமெரிக்க சி.ஐ.ஏ.வுக்கும் இஸ்ரேலிய மொசாத்துக்கும் அளப்பரிய தகவல்களை அள்ளிக் கொடுத்த வள்ளல்தான் இந்த  ரபிந்தர்சிங்.  இந்திய உளவுத்துறையின் மிக முக்கியக் கோப்புகளைத் தெற்கு டில்லியிலுள்ள 'ரா' (Research and Analysis Wing - RAW) தலைமையகத்திலிருந்து லவட்டிக் கொண்டு கடந்த ஏப்ரலில் அமெரிக்காவுக்குப் பறந்தார் ரபிந்தர் சிங்.  செப்டம்பர் 11 தாக்குதலுக்குப் பிறகு அமெரிக்காவோடும் இஸ்ரேலோடும் போர்த் தந்திர உறவு ஏற்படுத்திக் கொண்ட இந்தியாவுக்குக் கை மேல் கிடைத்த பலனாகக் கூடக் கருதலாம் இதை.  போதாக்குறைக்கு ... இன்றில்லாவிட்டாலும் 2008இல் அமெரிக்க ஏவுகணைகள் இந்தியாவைக் குறி பார்ப்பது நிச்சயம் எனக் குறி சொல்கிறார் ஓய்வு பெற்ற இராணுவத் தளபதி பத்மநாபன் தனது The Writing on the Wall புத்தகத்தில், 2008 கிடக்கட்டும் 1955லேயே ஜவகர்லால் நேருவைக் கொல்ல குறி வைத்திருந்தது சி.ஐ. ஏ. என்கிறது இன்னொரு புத்தகம்.  []   உள்ளூரில் உள்ள மக்களை ஓட ஓட உதைத்தாலும் அயலுறவுக் கொள்கையில் கொஞ்சம் கவனமாகத்தான் இருந்தது இந்தியா. பாலஸ்தீன விடுதலைக்கு ஆதரவு... சிலியின் சர்வாதிகார ஆட்சிக்கு எதிர்ப்பு...  டிகொ கார்சியாவிலுள்ள அமெரிக்கக் கடற்படைத்தளத்தை மாற்றக் கோரியது.  அமெரிக்க ஆசியோடு நிறவெறிக் கொள்கையை கடைபிடித்த தென் ஆப்பிரிக்காவுக்கு எதிர்ப்பு...  என அணி சேரா நாடுகளது அமைப்பில் பிரதான பாத்திரம் வகித்தபோது அதனது கொள்கைகள் கொஞ்சம் மெச்சும்படிதான் இருந்தது.  []   பின்னர் வந்த அயலுறவுக் கொள்கை வகுப்பாளர்களது ’அதீத புத்திசாலித்தனங்களின்’ விளைவாக..  எதிரிகளைக் கூட நண்பர்களாக்கும் இராஜதந்திரம் விடை பெற்று..  நண்பர்களைக் கூட எதிரிகளாக்கும் 'இராஜதந்திரம்' நடைமுறைக்கு வந்தது.  (அதன் இன்னொரு உதாரணம்தான் ஈழம்)  அமெரிக்காவுடனான கூட்டு இராணுவப் பயிற்சிகள் உலகின் பிற நாடுகளில் எத்தகைய துயரமான ஆட்சிக் கவிழ்ப்புகளுக்கும். ஊடுருவலுக்கும் இலக்காகி இருக்கின்றன என்பதை வரலாற்றின் பக்கங்களைப் புரட்டிப் பார்ப்பவர்களுக்குத் தெரியும்.  அமெரிக்கத் தொழில் நுட்பத்தில் இந்தியாவை அணுகுவது என்பது விஞ்ஞானத்திற்கும், வேளாண்மைக்கும் எத்தகைய பேரழிவைத் தரும் என்பது மக்கள்  அறிவியலாளர்களுக்குத் துல்லியமாகத் தெரியும்.  ஆனால் அயல்நாட்டுக் கடன்... அயல்நாட்டு முதலீடு அயல்நாட்டு தொழில் நுட்பம் அயல்நாட்டு வாழ்க்கைமுறை...  எனப் பிறரிடம் ஏற்கனவே மண்டியிட்டுக் கிடக்கும் இந்தியாவைப் போன்ற எந்தவொரு நாட்டிற்கும் எதிராகப் போர் தொடுக்க  நாசகார அணு ஆயுதங்களோ..  நவீன ஏவுகணைகளோ அவசியப்படாது அமெரிக்காவிற்கு.  அதற்குத் தேவை ஒரே ஒரு விரலசைப்பு அவ்வளவுதான்.   மேலே உள்ள புகைப்படங்கள் இடமிருந்து வலம்: பொக்ரான் அணுவெடிப்பு, உலகமயமாக்கல் குறித்த கேலிச்சித்திரம், டேவிட் ஜெர்மையா    பங்களிப்பைப் பகிர்ந்துகொண்டவர்கள்  தோழர் பெ. மணியரசன் சிவக்குமார், AIMS  ஆசிரியர், கோவை 'தமிழர் கண்ணோட்டம்' ராஜேஸ்வரி சண்முகசுந்தரம்  ஹி. பாலசுப்ரமணியன் கோவை  பெங்களூர் டாக்டர் குணசேகரன் சி. பால்ராஜ் கோவை  சென்னை யாழ்மொழி ந. அசோக் கோவை  மலேசியா ஞா. ஜெயராஜ் சார்லஸ் மோ. அருண்குமார் கவின் தொழில்நுட்பவியலகம், டெட்ராய்ட், அமெரிக்கா கோவை  ம. மகேஷ் தி. சிவக்குமார் மேரிலேண்ட், அமெரிக்கா கலிஃபோர்னியா, அமெரிக்கா  சங்கர் பிரபு முனைவர் மு. பிரபு  ஜெர்மனி கோவை முனைவர் சிவசுப்ரமணியன் பிருத்திவிராஜ்  கோவை CARE - கோவை பொறியாளர் தே. ரவிக்குமார் சுதேசமித்திரன்  சேலம் எழுத்தாளர், கோவை    மற்றும் சென்னை - பெங்களுர் - கோவை தோழர்கள்.